ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு அயோத்தி

மூலவர் -ஸ்ரீ ராமன் -சக்கரவர்த்தி திருமகன் -ராகு நாயகன் -வீற்று இருந்த திருக் கோலம் -வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -சீதா பிராட்டி
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -பரம பத ஸத்ய புஷ்கரிணி -சரயூ நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார் -பெரியாழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஸ்ரீ ராமர் திரு வவதாரம் -அயோத்யா -அபராஜிதா -முக்தி தரும் க்ஷேத்ரம் –
ஸ்ரீ வைகுண்ட அம்சமான ஒரு சிறு பகுதியை பகவான் பிரமனுக்குக் கொடுக்க -அவன் ஸ்வயம்புவ மனுவுக்குக் கொடுத்தார்
அதை சரயூ நதியின் தெற்குக் கரையில் எழுந்து அருள பண்ணினார் -சரஸ் யூ –பிரமனின் மனமே உருகி பெரிய நதியாக மாறியது –
ஸ்ரீ ராம ஜென்ம பூமி -கனகசரயு நதி கரையில் கோ தானம் பிரசித்தம்
ராம ஜென்ம பூமி -கனக பவன் -சீதா ராமர் அந்தப்புரம் -பரத பவன் -குப்தார்காட் -லஷ்மண் காட் சேவிக்க வேண்டும்
பஜரேன்பாலி ஹனுமான் காவல் தெய்வம்
வால்மீகி பவன் -24000 ஸ்லோகங்கள் கல் வெட்டு -லவ குசர்
அம்மாஜீ மந்திர்
நந்தி கிராமம் -பரதன் இருந்த இடம்

மூலவர் ஸ்ரீராமன், ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன், ஸ்ரீ ரகு நாயகன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் வடக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ சீதாபிராட்டி
தீர்த்தம் ஸ்ரீ பரமபத ஸத்ய புஷ்கரணி, ஸ்ரீ சரயு நதி
விமானம் ஸ்ரீ புஷ்கல விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தர பிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ லக்னோ
நாமாவளி ஸ்ரீ ஸீதா ஸமேத ஸ்ரீ ரகு நாயகாய நமஹ

————–

ஸ்ரீ பெரியாழ்வார் -6-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

மொத்தம் –13-பாசுரங்கள் மங்களாசாசனம்

———-

ஸ்ரீ பெரியாழ்வார் -6-பாசுரங்கள் மங்களாசாசனம் –

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.–3-9-6-

தார்க்கு இளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற.–3-9-8-

காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள ரசீந்த
ஆராவமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.–3-9-10-

வாரணிந்த முலை மடவாய்! வைதேவீ! விண்ணப்பம்
தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ! கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓரடையாளம்.–3-10-4-

மைத் தகு மா மலர்க் குழலாய்! வைதேவீ! விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடனிருந்து நினைத்தேட
அத்தகு சீரயோத்தியர் கோன் அடையாளமிவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே.–3-10-8-

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோ த்தம னிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரைமரஞ் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே. –4-7-9-

———————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்

சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல் கான மடைந்தவனே!
அற்றவர்கட் கருமருந்தே! அயோத்தி நகர்க் கதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா! தாலேலோ.–8-6-

ஆலினிலைப் பாலகனாய் அன்றுலக முண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக் களித்தவனே!
காலின் மணி கரை யலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க் கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.–8-7-

அங்கணெடு மதிள் புடை சூழயோத்தி யென்னும்
அணி நகரத் துலகனைத்தும் விளக்கும்சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண் முழுது முயக் கொண்ட வீரன் தன்னை
செங்கணெடுங் கரு முகிலை யிராமன் தன்னைத்
தில்லை நகர்த் திருச் சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை யெம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிரக் காணும் நாளே. –10-1-

அம்பொனெடு மணி மாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன் வாய்த்தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதைக் கேட்டு மிதிலைச் செல்வி
உலகுய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர்த் திருச் சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதை மதியோ மன்றே.–10-8-

——————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங் குழலோசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய விசை திசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம், இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய வடு திறல் அயோத்தி யெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 4-

———————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

கவள யானை பாய் புரவி தேரோட ரக்கரெல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடயோத்திக் காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர் குழ மணி தூரமே–10-3-8-

—————————

ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி யொன் றின்றியே
நற்பால யோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே. –7-5-1-

புராணங்கள் யாவற்றிலும், எண்ணற்ற இலக்கியங்களிலும், கணக்கிலடங்கா நூல்களிலும் இந்த அயோத்தி விரித்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்காந்த புராணத்தில் மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று வர்ணிக்கப்படும் அயோத்தி வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம்
பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. “செங்கண்மால் பிறந்து தனிச் சிறப்புடன் ஆண்டு அளப்பருங்காலம் திருவின் வீற்றிருந்தான்” என்கிறான் கம்பன்.
திருவயோத்தியென்றும் அயோத்தி நகர் என்றும் மாந்தி மகிழ்வர்கள் ஆழ்வார்கள்.

பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வயம்புவான் என்பவனுக்கு ஸ்ரீநாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும்
பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார்
என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதுவே பல நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி
மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன்
வைகுந்தத்தை முதலிலேயே இங்கு இறக்கிவைத்துவிட்டாரோ என்னவோ.  இத்தகைய அயோத்தியின் இன்றைய நிலைமை எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றாகும். இன்றைய அயோத்தியே பாரத மண்ணில் பக்தி மணத்தைக் கமழச் செய்து கொண்டிருக்கிறதென்றால் திரேதாயுகத்தின் அயோத்தி எப்படி
இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையிலேயே வைகுந்தமாகவே இருந்திருக்கும்.

மூலவர்–  ஸ்ரீராமன், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன், வடதிசை நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்- சீதா பிராட்டி
தீர்த்தம்–   சரயூ நதி, பரமபத புஷ்கரணி
விமானம்–   புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்–   பரதாழ்வான், தேவர்கள், முனிவர்கள், திரேதாயுகத்து அயோத்தி நகர்வாசிகள்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் ஒன்றான இந்த அயோத்தியில் திரேதாயுகத்தில் உதித்த ராமநாமம் இந்தியா முழுவதும், ஏன் உலகம்
முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும், சங்கீதங்களிலும், மனிதர்களின் பெயர்களிலும், புராண இதிகாச இலக்கியங்கள் மூலமாகவும்,

கோவில்களிலும் இந்த நாமம் ஒலிக்காத நாளும், ஒலிக்காத நேரமும் இல்லை என்று சொல்லலாம். ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி
விரித்துரைக்கும் தன்மையதன்று. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டெரிக்கவல்லது. திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள் ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள் இம்மண்ணுள்ளவரை அழியா மகத்துவம் பெற்றவைகளாகும். ராம நாமம் ஜென்ம ரட்சக மந்திரம் என்றார் போல் ராம நாமத்தை உலகிற்குப் பயந்த சிறப்பே அயோத்தியின் தனிச் சிறப்பும், தலையாய சிறப்புமாகும்.

இட்சுவாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை
தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இட்சுவாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி
கொண்டது. பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவன் பூவுலகிற்கு வந்து
முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான்.
திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிடவும் முடியுமோ.

சூரிய வம்சத்து மன்னர்களால் ஆளப்பட்டு 7 புண்ணிய மோட்ச புரிகளில் முதன்மை பெற்றதும், சரித்திர கோசல ராஜ்யத்தின் தலைநகரமாக
விளங்கியதும் மனு என்னும் மன்னரால் கட்டப்பட்டதுமான இந்த அயோத்தியை, மாந்தாதா, அரிச்சந்திரன், பாகீ ரதன், தீலிபன், ரகு, போன்ற
புகழ்பெற்ற சூரிய வம்சத்து மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.

இந்த அயோத்தியை (அதாவது அன்றைய அயோத்தியா ராஜ்யத்தை) ராமன் தனது புதல்வர்களான லவ குசனுக்கும், பரதனின் குமாரர்களான தசு-
புஷ்கலனுக்கும், லட்சுமணனின் புதல்வர்களான அங்கத, சந்திர கேசனருக்கும், சத்துருக்கன் புதல்வர்களான சூரஸேன, சூடாஹி ஆகியோருக்கும் 8
பாகங்களாகப் பகிர்ந்து கொடுத்தார்.

இங்கு ராம, லட்சுமண, சீதை, அனுமார் ஆகியவர்கட்கும் எண்ணற்ற சின்னஞ்சிறு கோவில்கள் உண்டு. எங்கு நோக்கினும் ராமபிரான் சந்நிதிகளே.
பைசாபாத் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி வரும் வழியில் எண்ணற்ற ஆஞ்சநேயர் கோவில்கள் ஆங்காங்கே வழி நெடுக இருப்பது நம்மை
ஆஞ்சநேயரே ராமபிரானிடம் அழைத்துச் செல்வதுபோல் உள்ளது.

இங்கு அமைந்துள்ள கனகமந்திர் என்னும் மண்டபத்தில் (மந்திர் என்றால் இந்தியில் கோவில் என்று பொருள்) கனகமந்திர் என்னும் இவ்விடம்
ஒரு மண்டபம் போல் காட்சியளிப்பதால் மண்டபம் என்றே எடுத்தாண்டுள்ளோம். இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் கனக மந்திர் என்னும் பெயருண்டாயிற்று. இங்கு
துறவிகள் இருவர் நடத்திக் கொண்டிருக்கும் ராம பஜனை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் பேரழகு பொருந்தியதாகும்.

இராம சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். சீதாதேவி தினமும் துளசி பூஜை செய்த
துளசி மாடம், இராமபிரானுக்கும் அவரது தம்பிகட்கும் திருமணம் நடந்த இடம், ராமன் பட்டாபிசேகம் செய்த இடம் (இந்த இடம் இன்று ஒரு
நந்தவனம் போல் உள்ளது) சீதையின் தகப்பனார் ஜனகர் தங்கியிருந்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப்பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர்
ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களைக் காணும் போது இராமாயண காலத்தோடு கலந்து ஒன்றிவிட்ட உணர்வு
ஏற்படுகிறது.

பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும்வரை காத்திருந்த நந்திகிராமம் (நந்திகிராமம் அயோத்தியிலிருந்து 20 மைல்)
லகட்மண்டி என்றழைக்கப்படும் இடமான தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம், அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கனகபவனம்
என்றழைக்கப்படும் கைகேயியின் அரண்மனை ஆகிய ஒவ்வொன்றையும் காணும்போது ராமாயண காலத்தில்  வாழ்ந்தது போன்று உணர்வுகள் தலைதூக்கும்.

அயோத்தியென்றதும் சரயு நதிதான் சடக்கென்று நினைவுக்கு வரும். இந்நதி இமயத்திற்குள் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது.
அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காளி என்னும் நதி கலந்துறவாடுகிறது. இப்போது இதனை கோக்ரா என்று அழைக்கின்றனர். இந்த சரயு நதியில்
உள்ள ராம்காட் என்னுமிடத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.
மேலும் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய தீர்த்தங்களாகும்.

ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுற்றதை எமதர்மன் ஒரு தபசியின் ரூபத்தில் வந்து இராமனுக்கு நினைவு படுத்த ராமன் இந்தச் சரயு
நதிக்குச் சென்று தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

ராமன் தனது சரீரத்தைக் களைந்து பூத உடலைத் துறந்து இந்தச் சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கையில் இங்கு
வருவோரனைவரும் இதில் நீராடுவர்.

அநுமான்கடி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. ஐம்பது
படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடினதாக கம்பீரத்தோற்றத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. இந்த ஆலயத்தின்
சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் ராமாயணம் படித்துக்கொண்டிருக்கும் பக்தர்களைக் காணும்போது இந்து
மதத்தின் தார்மீக வளர்ச்சியை எவரும் அசைத்துவிட முடியாது என்று சொல்லாமற் சொல்வது போல் உள்ளது.

சரயு நதிக்கருகில் அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது. தென்னிந்திய கோவில்களின் பாணியில் கட்டப்பட்டுள்ள
இத்தலத்தில் தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ள இத்தலம் புராதன
காலந்தொட்டு இதே இடத்தில் எச்சிதைவு இல்லாது அமைந்துள்ளது.

இராமகாதையின் தாக்கம் இந்தியாவின் எண்ணற்ற இலக்கியங்களில் பிரதிபலிக்கிறது. தமிழிலக்கியம் பலவற்றில் இராமாயணம் இழைந்தோடுகிறது.
சிலப்பதிகாரத்தில் இராமாயணத்தின் தாக்கம் அதிகம் என்றும், சிலம்பு பயந்த இளங்கோவடிகள் பல மதக் கருத்துக்களையும் தம் நூலில்
கூறிப்போந்துள்ளாரெனினும் வைணவ கருத்துக்களையும், இராம காதையின் நிகழ்ச்சிகளையும் அதிகமாக எடுத்தாண்டுள்ளார் என்பதை சிலம்பைக் கற்றவர்கள் யாரும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வோம்.

கோவலன் புகார் நகரைவிட்டுப் பிரிந்து செய்திக்கு உவமானம் கூறவந்த இளங்கோவடிகள் ராமன் அயோத்தியை விட்டுப் பிரிந்ததை நினைவு கூர்கிறார்.
ராமன் அயோத்தியை விட்டுப் பிரியும்போது மக்கள் எவ்வாறு அலமந்தனரோ அதுபோல் புகார் நகரத்தினர் துயருள்ளாயினர் என்கிறார்.

பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும் -என்கிறார்

ராமகாதையில் இளங்கோவடிக்கு இருந்த ஈடுபாடு தன் காவியத்தில் ராம நிகழ்ச்சியைப் புகுத்த வேண்டுமென்ற தாக்கம்
இவ்வுவமானமாக மிளிர்ந்தது.
அதேபோல் கோவலன் புகாரை விடுத்து மதுரை நோக்கி வரும் வழியில் “அறியா தேயத்து ஆரிடை உய்ந்து சிறுமையுற்றேன்” என்று
கோவலன் வருந்தியபோது அவனுக்கு ஆறுதல்மொழி பகர்ந்த கவுந்தி அடிகள்.

தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங்க கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வ பயந்தோன் என்பது
நீயறிந்திலையோ நெடுமொழியன்றோ – என்கிறார்.
தந்தையின் கட்டளைப்படி வனமேகிய ராமன் சீதையைப் பரிந்து கடுந்துயறுற்றதை நீ அறியவில்லையா உலகோ ரனைவரும் அறிந்த நெடு மொழியல்லவா? அது என்று கூறி கோவலனைத் தேற்றுகிறார்.

ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்
திரு ஐ யோதிப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஒத்தின் பொருளை ஓர் –98–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
இது – (யான்சொல்லுகின்ற) இவ்விஷயம்,
ஆர்க்கும் நன்று – எல்லோர்க்கும் நல்லதே;
தீது ஆனாலும் – (ஒருகால்அதனால்) தீமையேநேர்வதானாலும், – நீ -,
பார்க்கும் பல கலையும் – (உலகத்திற்) காணப்படுகின்ற பலவகைச்சாஸ்திரங்களையும்,
பன்னாது – கண்டபடி கற்காமல்,
சீரிய மெய் ஞானத்து உருவை – சிறந்த தத்துவஞான சொரூபியானவனும்,
ஓத்தின் பொருளை – வேதத்தின் அர்த்தமாகி யிருப்பவனுமாகிய.
சீர்க்கும் திரு ஐயோத்தி புயலை – சிறப்புப்பொருந்திய திருவயோத்தியென்னுந்திவ்வியதலத்தி லெழுந்தருளிய
காளமேகம்போலக் கருநிறமுடைய ஸ்ரீராமபிரானை,
ஓர் – தியானிப்பாயாக; (எ – று.)

தர்க்கம் வியாகரணம் முதலிய உலகத்துச்சாஸ்திரங்கள் பலவற்றையும் படித்துப் பழுதே பலபகலும்போக்காமல்,
தத்துவஞானஸ்வரூபியாகிய கடவுளையே தியானஞ் செய்வாயாக என்று மனத்திற்கு உபதேசித்தனரென்க.
உலகத்துவழங்குகின்ற சாஸ்திரங்களிற் பயிலுதல் வேதத்தின்நுண்ணியபொருளை உணர்தற்பொருட்டே யாதலாலும்,
வேதப்பொருளாகிய கடவுளையறியாது மற்றைச்சாஸ்திரங்களிற் பயில்வது பயனற்றதாதலாலும் அதனை விட்டு
வேதப்பொருளாகிய கடவுளைத் தியானித்தலே சிறந்த செயலாகுமென்பதாம்.
அன்றியும், கலைகளிற்பயிலுதல் மிகவும்வருத்தமாயிருத்தலோடு புத்தியில்நிஷ்கர்ஷம் தோன்றாமல்
புத்திசலித்தற்குங் காரணமாயிருத்தலால் அதனைநீத்து, கடவுளை உபதேசத்தினா லுணர்ந்து வழிபடுக வென்று போதித்தன ரென்க;
“ஸாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஸம் – புத்தே: சலநகாரணம் : உபதேஸாத் ஹரிம் புத்வா – விரமேத்ஸர்வகர்மஸு” என்ற
மேற்கோள் இங்கு உணரத்தக்கது. கடவுளைத் தியானித்தலென்பது அனைவர்க்குங்கடமை யாதலால்
‘ஆர்க்கும் இதுநன்று’ என்றும், அவ்வாறு செய்தலில் தீதுஒன்றுமில்லை யென்பதை வற்புறுத்துதற்பொருட்டு
‘தீதானாலும்’ என்றும் கூறினர்.
திருவயோத்தியென்பது – திரிபுநோக்கி, திருவையோத்தி என வந்தது. ஓதப்படுதலினால், வேதத்திற்கு ‘ ஓத்து’ எனப்பெயர்.

அயோத்தி – பகைவர்களாற் போர்செய்து வெல்லமுடியாதது எனப்பெயர் பெறும்: அரண்
முதலியவற்றால் மிக்கபாதுகாவலையுடையது என்பது கருத்து;
இது, ஸ்ரீராமபிரானது திருவவதாரஸ்தலம்: முத்திதரும் நகரமேழனுள் ஒன்று.

————-——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading