அவதாரிகை –
வடதள சாயி வ்ருத்தாந்தத்தோடு
சேரச் சொல்லலாம் படியான
கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை
அனுபவிக்கிறார் –
———————————————————————————–
தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-
பதவுரை
சகடம்–சகடாஸுரனை
தாளால்–திருவடியாலே
உதைத்து–உதைத் தொழித்தவனாயும்
பகடு–(குவலயாபீட மென்கிற) யானையை
உந்தி–உதைத்துத் தள்ளினவனாயும்
மருது இடைபோய்–மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று
கீளா–(அம்மரங்களை) முறிந்துவிழச் செய்தவனாயும்
கேழல் ஆய்–வராஹரூபியாய்க் கொண்டு
மீளாது–காரியம் தலைக்கட்டாமல் திரும்பி வருவதில்லை யென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று
அகலம் மண்கீண்ட–அகன்ற பூமியை (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித் தெடுத்தவனாயும்
ஓர் மாது உகந்த மார்வற்கு–ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பி யிருக்கின்ற திருமார்பை யுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
பெண் அகலம்–பூமிப் பிராட்டியினுடைய திருமேனியில்
காதல்–ஆசையானது
பெரிது–கரை புரண்டிருப்பது.
—————————————————————————————
வியாக்யானம் –
தாளால் சகட்முதைத்துப் –
திருவடிகளாலே சகடாசூர பஞ்ஜனம் பண்ணி –
திருவடிகள் அளவும் வந்து கிட்டின
சகடத்தை
திருவடிகளாலே தள்ளி –
பகடுந்தி –
குவலயா பீடம் நிரசனம் பண்ணின படி –
கையளவும் வந்து கிட்டின குவலயா பீடத்தை
கையாலே விழ விட்டு –
வழி போக்குக்கு விரோதியான சகடத்தை திருவடிகளாலே தள்ளி –
புகுவாய் நின்ற போதகம் -பெரிய திருமொழி -6-5-6-என்னும் படி –
போய்ப் புகுகிற போதைக்கு இடைஞ்சலாய் நின்ற
குவலயா பீடத்தையும் கையாலே தள்ளினான் ஆய்த்து –
கீளா மருதிடை போய்க்-
நிர் விவரமான மருதுகளின் நடுவே
வழி கண்டு போய்-
அன்றிக்கே
மரத்தைக் கிழித்துக் கொண்டு போனான் -என்னவுமாம் –
கேழலாய் -மீளாது-
சர்வாதிகனான தான் வராஹ வேஷத்தைக் கொண்டால்
பின்பு அவ்வளவிலே
பர்யவசிக்க இறே அடுப்பது
அதுக்கு மேலே
கேழலாய்த் தன்னை உணர்ந்தான் –
ஸ்ரீ யபதி என்று உணர்ந்தால் செய்யப் போமோ-
மீளாது மண்ணகலம் கீண்டு –
என்று மேலே கூட்டி
மீளாத படிக்கு ஈடாக
பூமியைக் கொண்டு என்றுமாம் –
அங்கோர் மண்ணகலம் கொண்டு –
அவ்விடத்தே பிரளயம் கொண்ட பரப்பை
உடைத்தான பூமியைக் கொண்டு
ஏறினான் ஆய்த்து –
மாதுகந்த மார்வற்குப் –
பெரிய பிராட்டியார் விரும்பும்படியான
மார்வை உடையவன் –
பெண்ணகலம் காதல் பெரிது –
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம்
சாலக் கரை புரண்டு இருந்தது –
பெண்ணகலம் -என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை -சிறிய திரு மடல் -என்னக் கடவது இறே –
காதல் பெரிது –
ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலே
பிச்சேறி இருக்கும் படி –
தன்னை யாசைப் படுவார் விடாயிலும்
மிக்கு இருப்பதே
தான் ஆசைப் படுவார் பக்கல் விடாய் –
அவாப்த சமஸ்த காமன் மகா வராஹமாய்
அண்ட பித்தியில் நின்றும்
பூமியை ஒட்டு விடுவித்து எடுத்து-
பெண்ணகலம் காதல் பெரிது –
அவள் பக்கல் காதலாலே இறே
அவள் அபிமானித்த
பூமியை எடுத்தது -என்கை –
————————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –