மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -46-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

திருமலையிலே வந்து
சந்நிஹிதன் ஆனவன்
பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர்
என்கிறார் –

—————————————————————————————

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் –  ——46–

பதவுரை

பிண்டம் ஆய் நின்ற பிரான்-(ஜகத்துக்கு) மூலகாரணமாக நின்ற எம்பெருமான்,
அன்று–முன்பொரு காலத்தில்,
முகடு மலை–சிகரத்தை யுடைத்தான மந்தர மலையை
மேல் வைத்து–(கூர்ம ரூபியான தன்னுடைய முதுகின் மேலே) வைத்து
வாசுகியை சுற்றி–(அதிலே) வாஸுகி நாகத்தைக் கடை கயிறாக)ச் சுற்றி
தலை முகடு–அதன் தலைப் பாகத்தை
தான் ஒரு கை பற்றி–தான் ஒரு கையாலே பற்றிக் கொண்டு
அலை நீர்–அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப–அண்டத்தின் மேற்சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான்–கடலைக் கடைந்தான்.

—————————————————————————————–

வியாக்யானம் –

மலை முகடு மேல் வைத்து-
ஓங்கின சிகரத்தை யுடைத்தான
மலையைத் தன் மேல் வைத்து

வாசுகியைச் சுற்றித் –
வாசுகி என்கிற பாம்பை அதின் நடுவே கடை கயிறாகச் சுற்றி –

தலை முகடு தான் ஒரு கை பற்றி –
கீழ்க் கடைகிற மலை ஆழாத படி
ஆமையாயத் தாங்கினாப்   போலே
அம்மலை மேல் கொந்தளியாத படியாக
அதின் தலையை ஒரு கையை இட்டு அமுக்கி –

அலை முகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்-
கடைகிற போதை
அலையானது அண்ட பித்தியினுடைய உச்சியிலே சென்று தெறிக்கும் படி
அலை மேல் நீர் அண்ட பித்தியிலே போய்த் தெறிப்ப
அன்று கடலைக் கலக்கினவன் –

பிண்டமாய் நின்ற பிரான் –
இதுக்கு பரம காரணம் ஆனவன் –
கட சராவாதி கார்யங்களுக்கு முன்பில் அவஸ்தை யான
மிருத் பிண்டம் போலே
ஏகோஹவை நாராயண ஆஸீத் -என்னும்படியே –

பிரான் –
கார்யமான இவை அழிந்து
தானே யான அன்று
இவற்றுக்கு அடங்க ஹிதம் பார்க்கும் உபகாரகன்
ஜகத் காரண பூதனான பரிவன் -என்றபடி –

பிண்டமாய் நின்ற பிரான் –  கடைந்தான் –
பெற்ற பாவிக்கு ஜீவனம் தேடி விட வேண்டாவோ

பிரான் –
சங்கல்ப்பத்தாலே ரஷிக்கலாய் இருக்க
உடம்பு நோவக் கடல் கடைவதே
என்ன சௌலப்யம் தான் –

——————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading