மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -50-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின
வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை
என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில்

ஓர் ஆனைக்காக
பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே
பண்ணிற்றிலனோ -என்று
ஆஸ்ரித பஷபாதத்தை
யருளிச் செய்கிறார் –

————————————————————————————

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்தப் பெற்றுள்ள
துழாய் அலங்கல்–திருத்துழாய் மாலையாலே
சோதி–புகர் பெற்ற
மணி முடி–மணிமயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீலம வண்ணத்தவன்–அழகிய நீல நிறத்தை யுடையனாயுமிருக்கிற
மால்–ஸர்வேச்வரன்,
தாழ்ந்த அருவி தடவரை வாய்–பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருகிகளையுடைய பெரிய மலையின் கணுள்ள
ஆழ்ந்த மணி நீர் சுனை–ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே
வளர்ந்த–(சாபத்தினால்) வளர்ந்து கொண்டிருந்த
மா முதலை–பெரிய முதலையை
கொன்றான்–முடித்தொழித்தான்.

—————————————————————————————–

வியாக்யானம் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் –
சாத்தின திருத் துழாய் மாலையையும்
ஆதிராஜ்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும்
உடைய சர்வேஸ்வரன் –

சூழ்ந்த துழாய் அலங்கல் –
ஆக முதலியாக இட்ட
திருத் துழாய் மாலை –

சோதி மணி முடி –
மிக்க தேஜஸ்சை உடைத்தான
மணிகளை யுடைய முடி –

மால் –
சர்வேஸ்வரன் –

தாழ்ந்த வருவித் தட வரை வாய் –
பூமி யளவும்   வரத் தாழ்ந்த வருவிகளை யுடைத்தான
மலையினுடைய
தாழ்வரை இடத்தே –

ஆழ்ந்த மணி நீர்ச் சுனை   வளர்ந்த –
ஆழ்ந்து நிர்மலமான நீரை உடைத்தாய் இருந்துள்ள
சுனையிலே வளர்ந்த –
பழையதான நீரை உடைத்தான
மடுவிலே
மனுஷ்யர் முகம் காணாத படி வளர்ந்த –

மா முதலை கொன்றான் –
பெரிதான முதலையை நீர்ப் புழு என்று பாராதே
சினத்தோடு கொன்றான் –
பீஷ்மாதிகள் மேலும் விடாத
திரு வாழியை இறே-ஒரு முதலையின் மேலே விட்டது –
அதுக்கடி
ஆஸ்ரித வாத்சல்யம் -இருந்தபடி –

அணி நீல வண்ணத்தவன் –
இத்தை முடித்துப் பின்னை
தன்னிறம் பெறுகிறான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்றது என்று
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –

அணி நீல வண்ணத்தவன் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விடாய் தீர்த்த படி –

கொன்றான் –
தன் விடாய் தீர்ந்தான் –

ஆபரண ரூபமான
நீல நிறத்தை யுடையனாய்ச் –
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடியை உடையனான –
சர்வேஸ்வரன்-
மா முதலை கொன்றான் –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading