ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -48-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நீர் சொல்லுகிறவை எல்லாம்
நாம் அறிகிறிலோமீ-என்ன
பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர்
என்கிறார் –

—————————————————————————————

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

பதவுரை

நீர் ஏற்று–(மாவலிபக்கல்) உதக தானம் வாங்கி
உலகம்–உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே–திருவடியாலளந்தவன் நீயன்றோ?
நின்று–ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக் கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே–மேய்த்தவனும் நீயன்றோ?
மா–குதிரை வடிவு கொண்டு வந்த கேசி யென்னுமசுரனுடைய
வாய் உரம்–வாயின் வலிமையை
பிளந்து–ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய்–பெரிய இரட்டை மருத மரங்கனினிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம்–தேவரஸுர யுத்தத்திலே
செற்று–(அசுரர்கள்) அழியச் செய்து
பொருதாய் நீ அன்றே–போர் செய்தவனும் நீயன்றோ?

——————————————————————————————

வியாக்யானம் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் –
உன்னுடைமை பெருகைக்கு
மகா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
நீரேற்று ஜகத்தை யடைய
உன் திருவடிகளாலே அளந்து கொண்டே நீ அன்றோ

நானோ இது செய்தேன்
அன்றியே இந்தரனோ –

நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் –
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
கோலைக் கொண்டு
பசுக்களின் இன்னே போய்
அவற்றை மேய்த்தாய் நீ அன்றோ
இவ்வோபாதி கீழில் அதுவும் –

நீ யன்றே மாவா யுரம் பிளந்து –
நீ அன்றோ கேசி வாயைக் கிழித்துப் பொகட்டாய்
மாவாயுரம் பிளந்து -கேசி வாய் வலி குலையும் படி
அத்தைக் கிழித்துப் பொகட்டான் ஆய்த்து
பசு மேயா நிற்க
வந்த துரிதத்தைப் போக்கின படி  –

மா மருதினூடு போய்த் –
பெரியவான யமளார்ஜுனங்களின் நடுவே
அவை வேர் பறிந்து விழும்படி தவழ்ந்து போய்
அவற்றைத் தப்பினாய் –

தேவாசுரம் பொருதாய் செற்று –
ஜ்ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கின அதுவேயோ
சேதனரான விரோதி களையும் போக்கிற்று இலையோ
தேவாசூர சம்ப்ரமத்திலே அசூர வர்க்கத்தை
முடித்துப் பொருதாய் நீ அன்றோ

திரிபுர தஹனம் பண்ணின ருத்ரனை
இவருக்கு தோற்றுகிறது இல்லை
ஸ்ரீ விஷ்ணு ராத்மா பகவத -என்கிற அதுவே  காணும் தோற்றுகிறது-

————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading