அவதாரிகை –
இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம்
பண்ணினவன் கிடீர்
நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான்
என்கிறார் –
ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ
ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி
பரமபதத்திலே செல்ல நடத்துவான் அவனே
என்கிறார் –
சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது
முதலாக விச்செயல்கள் –
——————————————————————————————
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-
பதவுரை
அரு வரையால்–ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்
ஆநிரைகள்–பசுக் கூட்டங்கள்
காத்தான்–ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர்–அப்பெருமானை யாவன்,
அணி மருதம்–அழகாக நின்று கொண்டிருந்த இரட்டை மருத மரங்களை
சாய்த்தான்–முறித்துத் தள்ளினவனும்
அவனே கண்டீர்–அப் பெருமானே யாவன்,
எய்து–அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம்–லங்கா பட்டணத்தை
எரித்தான்–எரிய விட்டவனான
அவனே–அப்பெருமானே
கலங்கா பெருநகரம்–ஒருவகைக் கலக்கமுமில்லாத பரம பதத்தை
காட்டுவான்–காட்டித் தருவான்.
——————————————————————————————–
வியாக்யானம் –
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் –
ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாத மலையைத்
தரித்துக் கொண்டு நின்று
பசுக்களுக்கும் இடையருக்கும்
ஒரு நோவு வாராதபடி நோக்கினவன்
கிடீர் -என்கிறார்
வர்ஷத்தால் நோவுபட்ட
பசுக்கள் ஆதல்
இடையர் ஆதல்
தங்கள் உடைய ரஷணத்துக்கு ப்ரவர்த்தித்தார் உண்டோ –
அப்போது
அவ்விடையரிலே யாதல் பசுக்களிலே யாதல்
சிலர் வந்து ஒரு தலை பற்றின்மை இல்லை -கிடீர்
மலைக் கீழ் ஒதுங்கோம் என்னாத மாத்ரமே –
இவற்றுக்குச் செய்யல் யாவது இல்லை
அவனுக்குச் செய்ய வேண்டுவது இல்லை
ரஷ்ய ரஷக பாவம் தப்பாமையே வேண்டுவது-
அவனே அணி மருதம் சாய்த்தான் –
பருவம் நிரம்பா இருக்கச் செய்தே
தன்னிலே சேர்ந்து நின்ற
யமளார்ஜூனங்களைத் தள்ளினான் அவனே கிடீர்
அப்போது யசோதாதிகளும் ஒருவர் கூட்டுப் பட்டார் இல்லையே
இத்தால்
எல்லா ரஷைக்கும் தானே கடவனாய் இருக்க
அவளுடைய சகாயம் ஒழியவே
தன்னுடைய ரஷையை நடத்தினான் –
என்றபடி –
அவனே -என்று
சஹகாரி நைரபேஷயத்தைச் சொல்லுகிறது –
அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் –
நாம் கண்டு ஓரடி இடலாம் என்று
பிரமித்த இடத்துக்கும் அவனே வேண்டின பின்பு –
நமக்குத் தெரியாத இடத்துக்கு
அவனே என்னும் இடம் சொல்ல வேணுமோ –
அவனே கிடீர் நம் பேற்றுக்கு
சஹாயாந்தர நிரபேஷமான சாதனமும் –
இத் தலையிலும் ஓன்று கண்டல்ல கிடீர் –
கலங்கா பெரு நகரம் –
ஒருவர் கூறை
எழுவர் உடாத தேசம் –
காட்டுவான் கண்டீர் –
ஏஷா சாத்ருச்யதே -யுத்த -123-55-என்று
அவன் காட்டக் காண்கையிலே
அந்வயம்-
ஸ்வ யத்னத்தாலே காண்பாருக்கு காணப் போகாது –
இலங்கா புரம் எரித்தான் எய்து –
ப்ரஹ்மாதிகள் உடைய அஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை
மூலையடியே அம்பு பறக்கும் படி பண்ணிப்
பின்பு அழியச் செய்தவனும் அவனே -கிடீர் –
இலங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் -அவனே
அவள் ஓர் அம்பு எய்தாளோ-
அறிவில்லாத பசுக்களோடு
அறிவுடைய பிராட்டியோடு
வாசி இல்லை –
அறிவுக்குப் பிரயோஜனம்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-40-என்கைக்கு உடலாயிற்று
அவற்றின் உடைய அஜ்ஞ்ஞதை –
ஆபன் நிவாரணத்தை விலக்காமைக்குப் பரிகரம் ஆயிற்று –
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply