(ராஜ குமாரனுக்கு பிடி தோறும் நெய் போல் இவருக்கு அடி தோறும் அர்ச்சை
கூரத்தாழ்வானுக்கு திருச்செவியில் த்வயம் ஓதச் சொல்லி உடையவர் அருளிச் செய்த வார்த்தை)
அவதாரிகை –
திருத் தாயார் -இவள் திரு நாமத்தை தன் வாயால் சொல்லா நின்றாள் –
திருநாமம் சாத்மிக்கும் தசை போலே இருந்தது என்று பார்த்து -இவள் வார்த்தை கேளாதே –
உறாவிக் கிடக்கிற கிளியை இவள் கண் முகப்பே வைத்து திரு நாமத்தை சொல்லுவிக்க –
இவளுக்கு ஆஸ்வாசம் பிறக்கும் என்று நினைத்து –
இவள் முன்பே கிளியைக் கொண்டு விட்ட இடத்திலும் அது பேசாதே இருக்க
இவள் திரு நாமத்தை சொல்லீர் -என்றாள் –
இவள் தசையைக் கண்டு உறாவி இருக்கையாலும்
சேஷ பூதரான நாம் இவள் கற்பித்தவையே யாகிலும்
இவள் சந்நிதியில் சொல்லக் கடவோம் அல்லோம் -என்னும்
நினைவாலும் பேசாமல் இருந்தது –
ஆச்சார்யன் போதித்தனவையே யாகிலும் தத் சந்நிதியில் சொல்லக் கடவது அல்ல என்கிற சாஸ்திர
அர்த்தம் இவ்விடத்தில் வெளிப்படுத்தப் படுகிறது –
நான் உச்சரிக்க
அநந்தரம்
உனக்கு உச்சரிக்கலாமே -என்ன
அடியிலும் கற்பித்த பிரகாரம் அது வாகையாலே அதுக்கு இசைய
தான் ஆதி க்ரஹணம் பண்ண -அநந்தரம் -சொன்னவாறே
இது ஒரு முகத்தாலே -ஆபத்சகம் முதலான வ்ர்த்த முகத்தாலே -சாத்மிகாமையாலே
தளர்ந்தாள் -என்கிறாள் –
திருநாமம் சாத்மிக்கும் தசை என்றும் சாத்மியாத தசை என்றும் ஓன்று உண்டோ -என்னில் –
திருநாமம் தான்–1- ஓர் அவஸ்தையிலே பாவனமுமாய்
2-ஓர் அவஸ்தையிலே போக்யமுமாய்-
3-ஓர் அவஸ்தையிலே சம்சார பய நிவர்தகமுமாய் –
4-ஓர் அவஸ்தையிலே சாதனமுமாய் –
5-ஓர் அவஸ்தையில் தாரகமுமாய்-
6-ஓர் அவஸ்தையில் நஞ்சுமுமாய் –இருக்கும் –
தேக ஆத்மா அபிமானிகளுக்கு அன்னம் -இத்தனையும் -ஆகா நின்றது இறே –
ஆகார சுத்தௌ சத்வ சுத்தி -என்கிறபடியே
1-அன்னம் பாவனமாயும் இருக்கும் –
2-தாரகமாயும் இருக்கும்
3-போக்யமுமாயும் இருக்கும்
4-தாநாதி முகத்தாலே –புருஷார்த்த சாதனமாயுமாய் இருக்கும் –
5-அதிசயித்தவாறே நஞ்சுமுமாயும் இருக்கும் -இறே –
(ஸம்ஸார பய நிவர்த்தகம் இதுக்கு இல்லையே -ஸம்ஸாரம் ஈடுபடுத்தவே ஹேதுவாகும்)
அப்படியே பர சேஷம் ஆத்மா என்று இருக்கிறவனுக்கு –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே -என்கிறபடியே பிரதமத்தில் பாவனமாய் இருக்கும்
அநந்தரம்
புண்யா நாமபி புண்யோ சௌ-என்கிறபடியே உஜ்ஜீவன சாதனமாயும் இருக்கும் –
மங்களாநாஞ்ச மங்களம் -என்கிறபடியே பிராப்யமுமாய் இருக்கும் –
யன் நாம சந்கீர்தனதோ மஹா பயாத் விமோஷநம் ஆப்நோதி ந சம்சயம் நர -ஸர்வ லோகம் -ந்ரு கேஸரி
எனக்கு மங்களம் அளிக்கட்டும் ம்ருத்யோர் ம்ருத்யு -என்கிறபடியே சம்சார பய நிவர்த்தகமுமாய் இருக்கும்
இது ரிஷிகள் கோஷ்டியில் பரிமாற்றம்
(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் -உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே)
ஆழ்வார்கள் கோஷ்டியில் ஒன்றாய்த்து –திருநாமம்
1- போக்கியம் என்றும்
2-தாரகம் என்றும்
3-பாவனம் என்றும்
4-நஞ்சு என்றும் சொல்லுகிற இது –
1-அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -என்று திரு நாமம் போக்யமாம் இருக்கிற படியை சொன்னார்கள்
2-நின் நாமம் கற்ற ஆவலிப்பு -என்று பாவனம் என்னும் இடம் சொன்னார்கள் –
3-கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் -என்று தாரகம் என்னும் இடம் சொன்னார்கள்
4-கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பிழைப்பில் பெரும் பெயர் -என்றும் நஞ்சு என்னும் இடத்தைச் சொன்னார்கள்
பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.-திருமாலை -2-
காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.–திருமாலை -1-
ஒளிவண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே–நாச்சியார் -8-3-
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –திருவாய் -9-5-8-
(அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து –இரண்டாம் திருவந்தாதி —50-)
திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை அனுசந்திக்கப் புக்கால் பிழைக்க அரிதாய்
அத்தாலே அரை ஷணம் விடப் போகாத திரு நாமங்களைச் சொல்லி –
(பிழைப்பில் -தோஷம் அற்ற பெயர் என்று கொள்ளலாமே யாகிலும் பிரகரண ஸ்வா ரஸ் யத்தாலே அனுசந்தித்தாருக்குப் பிழைக்க ஒண்ணாத என்று பொருள் கொள்ளக் கடவது –
பெரும் பெயரே பேசி -நாராயணாதி பரத்வ பரம் இன்றிக்கே ஸுலப்யாதி குணங்களை அன்றோ பேச அடுத்து -கோவிந்த பட்டாபிஷேகத்துக்குப் பின் –
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தாநவ அஹம் வோ பந்தவோ ஜாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-12- என்றவன் அன்றோ அவன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -1-3-4-
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
திருவாய்ப்பாடியிலே பெண்களுக்கு மனம் இரங்கினால் போலே நம்மிடமும் இரங்குவான் என்று கூப்பிடா நின்றேன்
நெஞ்சிலும் முற்பட்டு அழைப்பேன்)
—————————————————————————————————
கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-
பதவுரை
(இப் பெண் பிள்ளை)
கல் மாரி–(இந்திரன் பெய்வித்த) கல் மழையை
கல் எடுத்து–ஒரு மலையை யெடுத்துப் பிடித்து
காத்தாய் என்றும்–தடுத்தவனே! என்றும்,
காமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்-விரும்பத் தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும்,
அட்டாய் என்றும்–ஒழித்தவனே! என்றும்
மா கீண்ட–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த
கைத் தலத்து–திருக் கைகளை யுடைய
என் மைந்தா என்றும்–எனது மைந்தனே! என்றும்
தன் கிளியை–தன்னுடைய கிளியை நோக்கி
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்-வில்லை முறித்துப் பிராட்டியைக் கைப் பிடித்தவனே! என்றும்,
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்–திரு வெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும்,
அன்று–முன்பொரு காலத்தில்
மல்லரை–மல்லர்களை
மல் அடர்த்து–வலிமை யடக்கி
சொல் எடுத்து–திருநாமத்தின் முதற் சொல்லை யெடுத்துக் கொடுத்து
சொல் என்று–(மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி,
(அது சொல்லத் தொடங்கினவாறே)
துணை முலை மேல்–உபயஸ்தரங்களிலும்
துளி சோர–கண்ணீர் பெருகப் பெற்று
சோர்கின்றாளே.–துவளா நின்றாள்.
இந்திரன் வர்ஷித்த கல் வர்ஷத்தை மலையை எடுத்துத் தடுத்து ரஷித்தவனே -என்கிறாள்
ஆசைப்படத்தக்கதாய் அழகியதாய் இருந்துள்ள காஞ்சீ புரத்திலே திரு ஊரகத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனே -என்கிறாள்
ஜனகராஜன் பல பரீஷார்த்தமாக வைத்த வில்லை முறித்து ம்ருது ஸ்வ பாவையான பிராட்டியுடைய புஜங்களோடு ஸம்ஸ்லேஷித்தவனே என்கிறாள்
திரு வெஃகாவிலே கண் வளர்ந்து அருளுகிற ராஜாவானவனே என்கிறாள்
கம்சன் தன்னை நலிகைக்காக மல்லரை வாசலிலே காவலாக வைத்த அன்று அவர்கள் பலத்தைப் போக்கி
சாணூர முஷ்டிகர்களாகிய மல்லர்களை நிரசித்தவனே என்கிறாள்
குதிரை வடிவை யுடைய கேசி என்னும் அஸுரனுடைய வாயைக் கிழித்துப் பொ கட்ட புஜ பலத்தை யுடையவனாய் யுவா வானவன் என்கிறாள்
இப்படி பலவகையாகக் கூப்பிட்டு தன்னுடைய கிளியைப் பார்த்து அதுக்குத் திரு நாமத்தின் முதலையை எடுத்துக் கொடுத்து
மேல் உள்ளதை நீயே சொல் என்று சொல்லி
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான ஸ்தனங்களில் கண்ணீர் துளிகள் பாயத் துவளா நின்றாள் –
—————————————————————————————————–
தான் ஆபன்னையாய் இருக்கையாலே
ஆபன் நிவர்த்தகமான திரு நாமங்களை
எடுத்து யாய்த்து -அவற்றைச் சொல்லச் சொல்லுகிறது –
கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
ரஷகனாய் வைத்த இந்த்ரன் பாதகனாக
ரஷ்ய வர்க்கம் அவன் கையிலே பாத்யமாக நிற்க
நிருபாதிக ரஷகன் ரஷித்த படியைச் சொல்கிறது –
திருவாய்ப்பாடியில் உள்ளார் வர்ஷார்த்தமாக இந்த்ரனை ஆராதிக்கப் புக –
கிருஷ்ணன் அத்தை நிஷேதித்து –
நமக்கு ரஷகம் காடும் மலையும் ஆய்த்து -அவற்றை ஆராதிக்க அமையும் -என்று சொல்ல –
அவர்களும் அப்படியே மலையை ஆராதிக்க
மலைத் தெய்வமாய் இருந்து அத்தை அமுது செய்தான் ஆய்த்து –
தன் அபிமானத்தில் கிடந்தவர்கள் தேவதாந்திர பஜனம் பண்ணுகையாகிற இது –
ஸ்வ ஸ்திரீயை பிறருக்கு கொடுத்தால் போலே இருந்த தாய்த்து ஈஸ்வரனுக்கு –
இவ்வளவிலே -நமக்கு என்று நிவேதித்ததை அபிமான உபஹதம் என்று பாராதே அமுது செய்யப் பெறுவதே
என்று அவர்களை வாங்கி வர பிராப்தமாய் இருக்க
கிருஷ்ணனை அண்டை கொண்டு நம்முடைய யாக பங்கத்தைப் பண்ணினார்கள்
இடையர் என்று குபிதனாய்
சம்வர்த்த கணங்களை அழைத்து -கல் வர்ஷமாக சொரிந்து
திருவாய்ப் பாடியை அழித்து பொகடுங்கள் என்ன
திரு வாய்ப்பாடியில் உள்ளாறும்
கோ கோபி ஜன சங்குலம் அதீவர்த்தம் –என்கிறபடியே
ஆபன்னராக அத்தசையிலே
மலையை ஆராதித்தோம் -கிருஷ்ணன் ரஷித்தான் – என்ன ஒண்ணாது என்று பார்த்து
இவர்கள் ஆராதித்த மலை தன்னையே எடுத்து ரஷித்த படி –
கல்லெடுத்து
அவன் எடுத்தது –சோலை சூழ் குன்றாய் இருக்க –
கல்லெடுத்து -என்று ஒரு சிலா மாதரத்தை எடுத்தால் போலே
ஒசழக்காகச் சொல்கிறாள் –
(பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-)
(கல்லெடுத்து–அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி.
“கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில,
வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க.
வீரபத்நியாகை யாலே “பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க.)
ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்த போதை அநாயாசத்தை கண்டு இருந்தவள் ஆகையாலே
இந்த சக்தி இறே இவள் ஹ்ர்தயத்தில் கிடப்பது –
கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே என்று இருக்குமவள் இறே –
அசக்தாதிகாரம் இது சக்தாதிகாரம் இது -சாதனாந்தரங்கள் -என்கிற வார்த்தைகள்
நம் ஆச்சார்யர்கள் கோஷ்டியில் புகுரக் கடவது அன்றியே இறே இருப்பது –
சக்தரோடு அசக்தரோடு வாசி இல்லை –ஈஸ்வர சக்தியைக் கொண்டு
தலை எடுக்கைக்கு என்று இருக்கும் கோஷ்டி இறே
சீதோ பவஹா நூமத -என்கிற சக்தி ஸ்வ ஆஸ்ரயத்தில் கிடக்க –
நரவண சஹாஸ்ரம்மே யுத்தே பிரதிபலம் பவேத் -என்கிற சக்தி உடையவன் சஹகாரியாக
தனக்கு ஓர் ஆற்றாமை அதிசயித்து இருக்க
தத் தஸ்ய ததர்சம் பவேத் -என்று இறே பிரதம ஆச்சார்யையான பிராட்டி இருந்தது –
கல் மாரியாலே கல்லை எடுத்து ரஷித்தான்
நீர் மாரியாகில் கடலை எடுத்து ரஷிக்கும் காணும் -என்று பட்டர் அருளிச் செய்வர்
இத்தால்-இன்னத்தைக் கொண்டு இன்ன கார்யம் செய்யக் கடவோம் என்னும் நியதி இல்லை –
சர்வ சக்தன் என்கை –
1-பிறரால் வந்த ஆபத்திலோ ரஷிக்கலாவது –
உன்னால் வந்த ஆபத்தில் ரஷிக்கல் ஆகாதோ –
2-கல் வர்ஷத்தில் அகப்பட்டாரையோ ரஷிக்கலாவது
பஹூத சந்தத துக்க வர்ஷிணி –என்று
துக்க வர்ஷத்தில் அகப்பட்டாரை ரஷிக்கல் ஆகாதோ
(அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்க வர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 49 –
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)
3-ஒரு ஊராக அகப்பட்ட நோவு பட்டாலோ ரஷிக்கலாவதோ
அவ் ஊராக அகப்பட்ட நோவை ஒருத்தி பட்டால் ரஷிக்கலாகாதோ
4-என்னுடைய ரஷணத்துக்கும் மலை எடுக்க வேணுமோ –
மலையை எடுத்த தோளைக் காட்ட அமையாதோ –
காமரு பூமி -இத்யாதி –
அக்காலத்தில் பிற்பட்டார்க்கு முன்னை சர்வ ஸ்வாதானம் பண்ணுகைக்கு அன்றோ
திரு ஊரகத்திலே வந்து நின்று அருளிற்று –
திரு ஊரகத்தில் த்ரிவிக்ரம ஆபதான வேஷத்தோடு வந்து நிற்க
கிருஷ்ணன் வந்து நின்றானாக பேசுவான் என் என்னில் –
வரையாதே எல்லாரையும் தீண்டுகையும்
தன் பேறாக கார்யம் செய்கையும் -இரண்டு அவதாரத்துக்கும் நிரூபகமாய் இருக்கையாலே
தத் சாம்யத்தை பற்ற அபிபின்னமாக பேசா நிற்பார்கள் –
காமரும் பூம் கச்சி –
ஆதரிக்கப் படுவதாய்
தர்ச நீயமாக இருக்கை –
போக்யங்களாலும் போக உபகரணங்களாலும் சம்ர்த்தமான காஞ்சிபுரம் என்கை –
திருப்பதிகளால் ச்ம்ர்த்தமாய் இருக்கையாலே போக்யங்களால் சம்ர்த்தமான தேசம் என்கிறது
படை வீடு ஆகையாலே போக உபகரணங்களாலே சம்ர்த்தமான தேசம் என்கை
பரம பதத்துக்கும் ஏற்றம் இதுவே இறே –
விமுகர்களுக்கும் ஸூலபமான திருவடிகள்
ஆற்றாமையை உடைய எனக்கு துர்லபம் ஆவதே -என்கிறாள் –
அந்த தூளிதானம் தான் ப்ராதேசிகமாய் தான் ஆறி இருக்கிறேனோ –
அக் காலத்தில் பிற்பட்டாருக்கும் உதவ வந்து நிற்க அக் காலத்துற்கு பிற்பட்டேன் என்று ஆறி இருக்கிறேனோ –
ஒன்றில் அவதாரங்களைச் சேர அனுபவிக்கிறிலர்-
ஒன்றில் திருப்பதிகளை சேர அனுபவிக்கிறிலர் –
கலசி யாய்த்து அனுபவிக்கிறார் ஆய்த்து –
அதுக்கு ஹேது என் என்னில்
பிடிதோரும் நெய் வார்ப்பாரைப் போலே
திருப்பதிகளை ஒழிய தமக்குச் செல்லாத படியாலே –
திருப்பதிகளின் உடைய அடிப்பாடு வேண்டுகையாலே இறே அவதாரத்தில் இழிகிறது –
அல்லாத ஆழ்வார்களுக்கும் இவருக்கும் உண்டான வாசி இதுவே இறே –
அவர்கள் மேன்மையை அனுபவிக்கும் போது பர அவஸ்தையை பேசுவார்கள்
நீர்மையை அனுபவிக்கும் போது அவதாரங்களைப் பேசுவார்கள் –
அந்நீர்மையை சாஷாத் கரிக்கைக்கு திருப்பதிகளில் இழிவார்கள் –
இவர் மேன்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே
நீர்மை அனுபவிப்பதும் திருப்பதிகளில்
அத்தை சாஷாத் கரிப்பதும் திருப்பதிகளிலே –
வில் இறுத்து இத்யாதி –
பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து –
அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி
பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷிதவனே
ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று
பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு
வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து
அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக
ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து
பெண் தேடி வந்தோமோ நாங்கள் –
அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும்
வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி –
அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆயத்து
தோள் தோய்ந்தான் என்னும் –
விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி –
அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –
இத்தால் –
நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும்
உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி –
சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும்
ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே
ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது –
உன்னைப் பிரிந்து தனி இருப்பாருடைய ஆபத்தை போக்கின
நீ என் தனிமையால் வந்த ஆபத்தை போக்காது ஒழிவதே –
வெக்காவில் துயில் இத்யாதி
பிராட்டியை பாணிக்ரஹனம் பண்ணி வந்து கிடந்த தேசம் திரு வெக்கா வாய்த்து –
வேந்தே -என்னும் –
ஒரு ராஜ குமாரன் வந்து கிடக்கிறான் என்று பிரத்யபிஞ்ஞை பண்ணலாம் படி ஆயத்து
திரு வெக்காவில் நாயனார் வந்து கண் வளர்ந்து அருளும் படி –
இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே
நோவு படுகிற எனக்கும் அச் சேர்த்திக்கும் என்ன சங்கதி உண்டு –
மல்லடர்த்த -இத்யாதி –
சாணூர முஷ்டிகர்களை நிரசித்த போது பிரதமத்திலே அவர்கள் மிடுக்கை அழித்து
பின்னை ஆய்த்து அவர்களை நிரசித்து
ம்ர்கமத்யே யதாசிதம் ஹௌ சர்வ லீலா விநோதி நௌ-என்கிறபடியே
குவலயா பீடத்தை நிரசித்து அதனுடைய கொம்பை இருவரும் கையிலே
கையிலே பிடித்துக் கொண்டு சத்ரு பஷம் என்று மதியாதே
குரு வேர்ப்பும் தாங்களுமாய் பெரிய செருக்கோடு ரங்க மத்யத்திலே புகுந்து போது
ஒரு மான் குழாத்தின் நடுவே இரண்டு சிம்ஹம் புக்கப் போலே இருக்கையாலே
தர்சித்த போது மிடுக்குப் போய்த்து
பின்னை ஆஸ்ரயத்தை அழித்து விட்டான் ஆய்த்து
அங்கன் அன்றியே –
மல்லடர்த்து-
வரும் மல்லரை நிரசித்தபடியைச் சொல்லுகிறது என்னவுமாம் –
திருத் தோள்களின் மிடுக்கு தான் குமரிருந்து போம் இத்தனையோ –
என் தினவு தீர விஷயம் காட்ட வேணும் என்ன நெருக்கி விஷய்ம் காட்டிக் கொடுத்த படி-
அன்று இத்யாதி –
அன்றும் இன்றும் போலே காணும் ஆபத்து உள்ளது –
ஸ்ரீ வசு தேவரும் தேவகிப் பிராட்டியாரும் பிறந்த அன்று கண்டு விட்டோம் –
சமாப்தி வேளை யாகிலும் பிள்ளை முகத்தில் விழிக்க வல்லோமே
என்று ஆபன்னராய்க் கிடக்க
அவர்கள் ஆபத்துக்கு தன் ஆபத்து நிதர்சனமாய் இருக்கையாலே -அன்று -என்கிறாள் –
இவர்கள் முகத்தில் விழித்து பின்னை விரோதி நிரசனம் பண்ணப் பிராப்தமாய் இருக்க -அது செய்யாது ஒழிந்தது-
விரோதி கிடக்கச் செய்தே சென்று விழிக்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்னும் நினைவாலே –
விரோதி நிவர்த்தக பூர்வகமாக விறே பிராப்ய சித்தி இருப்பது –
மல்லரை அன்று அட்டாய் என்னும் –
மாதா பிதாக்களுக்கு வந்த ஆபத்தோ போக்கலாவது –
பிரணயிநிக்கு வந்த ஆபத்தை போக்கலாகாதோ –
மகா பாபிகளான சாணூர முஷ்டிகர் பெற்ற தோள் -அத் தோளை ஒழிய செல்லா எனக்கு அரியது ஆவதே -என்கிறாள்
நான் இவ் வாற்றாமையை விட்டு -பிரதிகூல வேஷத்தைக் கொண்டு வந்தேன் ஆகில்
தோளை அனுபவிக்கலாமே -என்கிறாள் –
மா கீண்ட -இத்யாதி –
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கும் தன்னை அனுபவிக்கையில் வருகிற
வழியில் உண்டான வன்னியம் அறுத்து கொடுத்தபடியைச் சொல்லுகிறது –
கம்ச ப்ரீரிதனாய் வந்த கேசி இவனுடைய பருவத்தையும் சுகுமார்யத்தையும் கண்டு
இவன் ஒரு பொருளோ -எடுத்து விழுங்குகிறோம் -என்று வாயைத் திறந்து கொண்டு வர
சிறு பிள்ளைகள் த்வாரம் கண்ட இடத்தில் கையை நீட்டக் கடவர்கள் ஆகையாலே கையை நீட்ட
ரஷகன் உடைய கை ஆகையாலே ரஷன தர்மம் பெற்றவாறே வளர்ந்து கொடுத்தது –
வெள்ளரிப் பழம் விரிந்தால் போலே விரிந்து கிடந்தான் இத்தனை இறே –
என் மைந்தா என்னும் –
திருவாய்ப்பாடி பெண்களை வசீகரித்த பருவத்தைக் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே என்னும் –
இப்படி ஆபத் சகமான திரு நாமங்களை ஆதி க்ரஹணம் பண்ணி –
சொல்லெடுத்து –
சப்தோச்சாரணம் மலை எடுத்தால் போலே இருக்கிறது காணும் இவளுக்கு
அவன் மலை எடுக்கிற போதை அவனுடைய சக்தியை நினைந்து –கல்லெடுத்து –என்றாள் –
தன் அளவில் வந்தவாறே வாய் விடுகைக்கும் சக்தி அற்று இருந்தபடி –
தன் கிளியை
தான் விரும்பி வளர்த்த கிளியை –
பாவை பேணாள் -என்றது போக்யமாக தோற்றினவாறே பாவையை அநாதரித்தாள் –
இதுக்கு திருநாம ஸ்பர்சம் உண்டாகையாலே ஆதரிக்கிறாள்
பரிக்ரஹங்களில் வந்தால் ஸ்வரூபேண த்யாஜ்யம் இல்லை -ஸ்வரூபேண- உபாதேயமும் இல்லை இறே
பிரதிகூலம் ஆன போது சர்வமும் த்யாஜ்யமாகக் கடவது
அனுகூலமான போது சர்வமும் உத்தேச்யமாகக் கடவது இறே –
சொல்லே என்று
திரு நாமத்தை சொல்லீர் என்று ஆதி க்ரஹணம் பண்ணிக் கொடுத்தாள் –
அநந்தரம் அது சொல்லத் தொடங்கிற்று –
துணை முலை இத்யாதி –
கேட்பாரைப் பெற்றது இல்லை என்கிறாள் –
ஸ்த்ரீத்வ பாவனை ஒழிய ச்மச்ரு வ்யோகமும் பிறந்து ஸ்தன உத்போதமும் பிறந்ததோ என்னில்
ஸ்மஸ்ரு ஸ்வதந்திர லஷணம்
ஸ்தனம் பரதந்திர லஷணம்
அந்த ஸ்வா தந்த்ரத்ய நிவ்ருத்தியையும் பார தந்த்ரத்தையும் சொல்லுகிறது –
ஸ்திரீகளுக்கு போக உபகரணம் இறே முலை
சேஷ பூதனுக்கு முலை என்கிற இத்தால் –பக்தியை -நினைக்கிறது –
இவனுக்கும் போக உபகரணம் பக்தி
அவனுக்கும் போக உபகரணம் பக்தி
நராணாம் –பக்தி க்ரீதன்–(ஸ்ரீ விஷ்ணு தர்மம்) இறே –
(சம்சாரி நர கர்மத்தால் தூண்டப்பட்டு உழன்று இருக்க – ஹஸ்த ஆலம்பனம்-கைபிடித்து வழிகாட்டுவான் -ஜனார்த்தனன்
அவன் இடம் பக்தி கொண்டவர் அவனை -விற்கவும் வாங்கவும் பெறுவார்கள்)
துணை முலை –
போக்தாவுக்கு போக உபகரணம் இறே துணை முலை ஆவது -அங்கன் இன்றிக்கே
ஒரு முலைக்கு ஒரு முலை துணையாம் இத்தனை ஒழிய -வேறு ஒப்பு இன்றிக்கே இருக்கை –
அவனுடைய திருவடிகளைப் போலே யாய்த்து இவளுடைய முலையும் இருப்பது –
அல்லாத ஆழ்வார்களைப் போல் அன்றியே ஸூ குமாரராய் இறே திருமங்கை ஆழ்வார் இருப்பது –
மலையாளர் ஒரு மாசத்துக்கு ஒருக்காலே உண்ணவும் வல்லராய்
ஒரு மாசம் பட்டினி விடவும் வல்லர்க்களுமாய் இருக்குமா போலே
சம்ஸ்லேஷ தசையில் நெடுநாள் தரித்து அனுபவிக்கவும் வல்லர்களாய்
விஸ்லேஷத்தில் நெடுநாள் தரிக்கவும் வல்லர்களாய் இறே மற்றைய ஆழ்வார்கள் இருப்பது –
சம்ஸ்லேஷிக்கவும் மாட்டாதே விஸ்லேஷிக்கவும் மாட்டாதே யாய்த்து இவருடைய சௌகுமார்யம் இருப்பது –
இவர் உண்ணவும் மாட்டார் பட்டினி விடவும் மாட்டார் –
நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை –என்னக் கடவது இறே –
(சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே!)
துணை முலை மேல் துளி சோர –
ஸ்பர்ச இந்த்ரியமும் த்ர்ஷ்டியும் -ஸ்வ போகங்களை இழந்து –
தன்னிலே கட்டிக் கொண்டு கிடந்து கதறுகிறாப் போலே இருக்கிறபடி
கண்ணீர் அல்லாத பிரதேசங்களிலே விழாமல் முலையிலே விழுகையாலே
கண்ணும் முலையும் தன்னிலே கட்டிக் கொண்டு கிடந்து கதறுகிறாப் போலேஇருக்கிறது யாய்த்து –
சோர்கின்றாளே-
போக உபகரணமான ஞான பக்திகள் அழிகையாலே தானும் சோரா நின்றாள்
முன்பு திருநாமம் சொல்லுகையாலே ஆஸ்வாசம் பிறந்தது –
ஆகையாலே திரு நாமம் ஆஸ்வாச ஹேது வாமோ என்று பார்த்து அத்தை சொல்லுவிக்கத் தொடங்கினாள-
அதுக்கு உள்ளீடான வர்த்தத்தை யனுசந்தித்து மோஹம்கதை யானாள்-
ஆபத் சகனானவன் ஆபன்னையான எனக்கு -உதவாது ஒழிவதே -என்று
மோஹம் கதை யானாள் என்கை –
———————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –