திரு நெடும் தாண்டகம்–6-அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை –

மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் -என்று
திருமந்த்ரத்தை பிரமாணத்தாலே கண்டு போகை  அன்றிக்கே
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து அவதரித்து எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறையால் உணர்த்தின
சம்பந்தத்தையும்(மண் முழுதும் அகப்படுத்தி )
தத் காலத்தில் செவ்வியையும்(மலர் புரையும் திருவடி )
அதுக்கு பிற்பாடர் ஆகையாலே அனுபவிக்கப் பெற்றிலோம் என்று – விஷண்ணராக–

அவதாரத்துக்கு பிற்பட்டாரை அனுபவிப்பைக்கு உறுப்பாக அன்றோ
நாம் செவ்வியோடு திருக் கோவலூரிலே வந்து நின்றோம் என்று
உகந்து அருளின தேசத்தைக் காட்டிக் கொடுக்க
நெஞ்சே -நமக்கு வாய்த்தது -அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –

திருமந்த்ரார்தத்துக்கு எல்லை உகந்து அருளின நிலங்கள் இறே –
திரு மந்த்ரத்தை பிரதம பிரபந்தத்திலே லபித்தது
அதின் அர்த்தத்தை அனுபவிக்கிற இடத்தில்
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்று அன்றே அனுபவித்தது –

(ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே யொழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-)

ஆனால் –புலம் புரந்து பொன் விளைக்கும் பொய்கை வெளி பூம் கோவலூர் தொழுதும் -என்ன அமையாதோ
கீழ் எல்லாம் சொல்ல வேண்டுவான் என் என்னில்
உகந்து அருளின நிலங்கள் உடைய அடிப்பாடு சொல்லுகிறது
மேன்மையும் நீர்மையும் போலே காணும் நாராயண சப்தார்த்தம் ஆகிறது –

(நாரங்களுக்கு இருப்பிடம் -மேன்மை-பரமாத்மா -நாரங்களைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டவன் -அந்தர்யாமித்வம் நீர்மை

முதல் மூன்று அடிகளால்-அமரர் வேந்தன் -புட் பாகன் மேன்மையைச் சொல்லி -மேல் அர்ச்சாவதார நீர்மை சொல்லிற்று

தேவப் பெருமாளையே சொன்னவாறு -அர்த்தி தார்த்த வரத ராஜன் )

———————————————————————————–

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –

பதவுரை

அலம் புரிந்த–போதும் போதும் என்று சொல்லும்படி கொடுக்க வல்ல
நெடு தட கை–நீண்ட பெரிய திருக் கைகளை யுடையனாய்
அமரர் வேந்தன்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
அம் சிறை புள் தனி பாகன்–அழகிய சிறகை யுடைய பெரிய திருவடிக்குத் தனிப் பாகனாய்
அவுணர்க்கு–ஆஸுர ப்க்ருதிகளுக்கு
என்றும்–எக் காலத்தும்
சலம் புரிந்து–சீற்றங்கொண்டிருந்து
அங்கு–அவர்கள் விஷயத்திலே
அருள் இல்லா தன்மை ஆளன் தான்-இரக்க மற்றிருக்கை யாகிற தன்மையை யுடையனான் எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கிற
ஊர் எல்லாம்–திருப்பதிகளிலெல்லாம்
தன் தாள் பாடி–அவனுடைய திருவடிகளைப் பாடி,
நிலம் பரந்து வரும் கலுழி–பூமி முழுதும் வியாபித்து வருகின்ற பெரு வெள்ளத்தை யுடைய
பெண்ணை–பெண்ணை யாறானது
ஈர்த்த-(வெள்ளத்தில்) இழுத்துக் கொண்டு வருகிற
நெடு வேய்கள்-பெரிய மூங்கில்களினின்றும்
படு-உண்டாகிற
முத்தம்-முத்துக்களை
உந்த–வயல்களிலே கொண்டு தள்ள
உந்தி–(உழவர்களாலும் தங்கள் பயிர்க்குக் களையென்று) தள்ளப்பட்டு
புலம் பரந்து–கழனிகளெங்கும் பரவி
பொன் விளைக்கும்–பொன்னை விளைக்குமிடமாயும்
பொய்கை வேலி–நீர் நிலைகளைச் சுற்றிலும் உடையதாயுமுள்ள
பூ கோவலூர்–திருக் கோவலூரை
தொழுதும்–ஸேவிப்போம்;
நெஞ்சே போது–நெஞ்சே! வா.

இரப்பாளர் போதும் போதும் என்னும்படி கொடா நிற்பதாய்
நீண்டு பரந்து இருந்துள்ள திருக்கைகளை யுடையவனாய்
நித்ய ஸூரி நிர்வாஹகனாய்
அழகிய சிறகை யுடைத்தான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகனாய்
ராக்ஷஸர்களுக்கு எந்தக் காலத்திலும் தீங்கு இழைக்குமவனாய்
அவர்கள் விஷயத்தில் தயை இன்மையையே ஸ்வபாவமாக யுடையனான ஸர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்களில் எல்லாம் அவனுடைய திருவடிகளை பாடி
பூமி எங்கும் வியாபித்து வருமதாய் கலக்கத்தை யுடைத்தான தக்ஷிண பிநகிநி யானது
இழுத்துக் கொண்டு வருகிற பெரிய மூங்கில்களில் உண்டாகிற முத்துக்களை கழனிகளிலே கொண்டு தள்ள
கர்ஷகர் தங்கள் பயிருக்குக் களை என்று தள்ளப்பட்டு
கழனிகள் எங்கும் பரவி இருக்குமதாய்
பொன்னை விளையா நின்றுள்ள தடாகங்களை சுற்றும் உடைத்தாய்
தர்ச நீயமான திருக்கோவலூரை மனஸ்ஸே அனுபவிப்போம் வருவாயாக –

—————————————————-

அலம் புரிந்த நெடும் தடக்கை –
இட்டு நீண்ட கை -என்கிறார் –
அர்த்திகள் –அலம் -(போதும் )என்னும்படியாக (புரிகை )கொடுக்கை –

இத்தால் –
ஈஸ்வரனைப் பற்றி இருக்கிறவன் வ்யதிரிக்த விஷயங்களில் சாபேஷன் அல்லன் –
என்னும் இடம் சொல்லுகிறது -(ஸர்வ லாப கேஸவ)

அதவா –
அலம் புரிந்த –
ஔதார்யம் பண்ண உத்யோகித்தால் -அவன் அமையும் -என்று வாறே
மீளும் இத்தனை போக்கித் தன் கொடைக்கு அவதி இன்றியிலே இருக்கை –

உழக்கிலே பதக்கை பொகட ஒண்ணாமையாலே மீளும் இத்தனை –
இவனுடைய ஔதார்யத்தைப் பார்த்தால்
அவனுடைய மனோ ரதம் கடலில் குளப்படி போலே இறே இருப்பது –

புரிகை -கொடுக்கையும் மீளுகையும்

அலம் என்ன கொடுக்கை யாவது –
பின்னை ஒருத்தன் பக்கலிலும் சாபேஷன் ஆகாதபடியாய் கொடுக்கை –

(ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே––ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -2)

அநந்ய பிரயோஜனனுக்கு தன்னையும் தன் உடைமையையும் கொடுத்தால்
பின்னை தனக்கு கொடுக்க விரகு இல்லை –
அவனும் அபேஷிக்க வேண்டுவது இல்லை –
அவனும் அனுபவத்தில் இழியும் இத்தனை –
இவனும் -என் செய்வேன் என்றே இருந்து போம் இத்தனை-

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–பெரிய திருவந்தாதி -53-)

(என்னிடமும் எனது அடியார்கள் இடமும் ஒன்றும் இல்லை -கிருஷ்ணன் ருக்மிணித் தாயார் இடம் சொன்னானே
யதா ஸ்ருதி கிரஹணம் –
இனி மேல் அடைய வேண்டியது ஒன்றும் இல்லை அதனால் ஏழை அவாப்த ஸமஸ்த காமன்
அடியார்கள் என்னையே பெற்றதால் இனி வேறே ஒன்றுமே வேண்டியது இல்லை
கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே)

நெடும் கை
கொடுக்கையே விளை நீராக வளர்ந்த கை –
ரஷகனுக்கு வ்ருத்தி ரஷண தர்மத்தாலே இறே –
ஔதார்யத்தை பரிச்சேதிக்க ஒண்ணாத கை -என்னவுமாம் –
அர்த்திகள் இருந்த அளவும் செல்ல நீண்ட கை என்னவுமாம் –

(திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்-உறையூர் வரை -குணதிசை பாதம் நீட்டி -திருமண்டங்குடி வரை)

தடக்கை
பஹூஸ் சாயாம் அவஷ்டப்த்த யஸ்ய லோகோ மஹாத்மாந -என்கிறபடியே
லோகம் அடங்க ஒதுங்கினாலும் விஞ்சி இருக்கும்படியான தோள் -(பெருமாள் பற்றி திருவடி பிராட்டி இடம்)

(லோக -அனைவரும் ஒதுங்கும் படி -தடக்கை -அனைவருக்கும் புகலிடம் -தானே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொடுப்பவன் மஹாத்மனா
அமலன் விமலன் நிமலன் நின்மலன் போல் இங்கும்)

சர்வாதிகாரமுமாய் –
ஆஸ்ரயணீயமுமாய் –
தானே பிரயோஜனமாமுமாய் -இருக்கும் கை

தடக்கை -பரந்த கை –

யமரர் வேந்தன் –
இந்த ஔதார்யத்தை உப ஜீவிக்குமவர்களைச் சொல்லுகிறது –

அமரர் -மரண தர்மம் இல்லாதவர்கள் –
நித்ய ஸூரிகளுக்கு மரண பிரசங்கம் உண்டோ என்னில் –
போக விச்சேதத்தில் மூச்சு அடங்குமவர்கள் ஆகையாலே
மரண பிரசங்கம் உண்டு –
அது இல்லாமையாலே –அமரர் -என்கிறது –
அனுபவம் நித்யம் ஆனவாறே அவர்களும் நித்யம் ஆனார்கள் இத்தனை இறே –

வேந்தன் –
அவர்களை அடிமை கொள்ளுவதாக முடி கவித்து இருக்குமவன் –

வேந்தன் -அரசன் –
அவன் அடிமை கொள்ளுகையிலே அபிஷிக்தனாய் இருக்கும்-
இவர்கள் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று
தாஸ்யத்திலே அபிஷிக்தர்களாய் இருப்பார்கள்
அபிஷேகம் இருவருக்கும் ஒக்கும் –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னக் கடவது இறே-

(பவாமஸ்து ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ஸ தே -அயோத்யா -31-2)

(குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-)

அஞ்சிறைப் புள் தனிப்பாகன் –
அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு த்ர்ஷ்டாந்தமாக
ஒரு வ்யக்தியைப் பேசுகிறார் –

அழகிய சிறையை உடைத்தான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகன் –

வினை உள்ள போது அன்றோ வாகன அபேஷை உள்ளது -என்னில்
வினை இல்லாத போதும் ராஜாக்கள் அழகு செண்டேறக் கடவதாய் இறே இருப்பது
ஓடும் புள்ளேறி -என்னக் கடவது இறே –

(ஓடும் புள்ளேறி சூடும் தன் துழாய்
நீடு நின்று அவை ஆடும் அம்மானே –1-8-1)

பெரிய திருவடி உடைய செல்லாமையாலும்
தன் செல்லாமையாலும்
நித்ய ஸூரிகளை அனுபவிப்பிக்காகவும்
அழகு செண்டேறக் கடவதே இறே இருப்பது –
செழும் பறவை தான் ஏறித் திரிவான் -என்னக் கடவது இறே –

(வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே-10-6-5-)

அம் சிறை –
பெரிய திருவடியை மேல் கொண்டால்
திரிப் பரியட்டத்தைக் கொய்து சாத்தினாப் போலே அங்குத்தைக்கு அலங்காரமாய் இருக்கை –

அதவா
அழகு செண்டேறும் போதை ஆயாசத்துக்கு ஆலவட்டம் பணி மாறினாப் போலே
இரண்டு திருச் சிறகாலும் ஆஸ்வாச கரனாய்  இருக்கிறபடியைச் சொல்லுகிறது –
வ்யஜனம் த்ரயீ மய-என்னக் கடவது இறே –

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய்)

அங்கன் அன்றியே
பரத்வத்தை ஆஸ்ரிதர் உடைய கால் கடையிலே கொண்டு வந்து சேர்க்கைக்கு
அடியான-பரிகரத்தை உடையவன் -என்னுதல்-

புள் –
(தர்ம ஸாஸ்த்ரம் -காயிக கைகளால் அபசாரம் -ஞானம் இல்லாத -ஸ்தாவரமாக பிறப்பார்கள் – வாசிக அபசாரத்தால் -பறவை பிறப்பு என்று சொல்லுமே )

பாப யோநியான ஜன்மம் அவர்களுக்கு உண்டோ என்னில் –
பிராட்டியும் சர்வேஸ்வரனும் திருத் திரைக்கு உள்ளே இருந்தால்
நிலா தென்றல் சஞ்சரிக்கும் போது பிற்காலிக்க வேண்டும்படி இறே அப்போதை ஐகாந்தம் இருப்பது –
அவஸ்தா அனுகுணமாக கூனர் குறளர்(நபுபும்சகர் )சஞ்சரிக்குமா போலே
அந்தரங்க சேவைக்கு அனுகூலமான வடிவை பரிகிரஹிப்பர்கள் -என்கை –
ஸ்ரீ சர்ப்ப ஜாதியோடு பஷி ஜாதியோடு ஸ்தாவர ஜாதியோடு வாசி அற பரிகிரஹிப்பர்கள்
சம்சாரி கர்ம பல அனுகுணமாக சரீர பரிக்ரஹம் பண்ணக் கடவன் –
அவன் அவஸ்தா அனுகுணமாக சரீர பரிக்ரஹம் பண்ணக் கடவன் –

(அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம்-அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தம் அற்றவர்கள் -இச்சா க்ருஹீதம்

நித்ய ஸூரிகள் -அநந்தன் -பெரிய திருவடி -துளஸீ கேசவ ப்ரிய -ஸூத்த ஸத்வ மயம் )

தனிப் பாகன்
பாகன் -என்கையாலே
அவனுக்குத் தான் பவ்யனாய்
தனக்கு அவன் பவ்யனாய் இருக்கிறபடியும் தோற்றுகிறது –
ஆனையைத் தன் நினைவிலே நடத்தக் கடவனாயும்
அதுக்கு சேஷனாயும் இறே பாகன் இருப்பது-

பெரிய திருவடி முதுகிலே நல் தரிக்க இருந்து அவனை நடத்துகை இறே சர்வாதிக லஷணம்
அது புறம்பு இல்லாமையாலே அத்விதியீத்வம்(வேதாத்மா விஹஹேஸ்வரன் )

(சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ -வாஹனம் கொடி -சங்க காலம்சேவல் -ஆண் பறவை பெரிய திருவடியைச் சொன்னவாறு)

அதவா
தனிப் பாகன்
நித்ய ஸூரிகளுக்கு அத்விதீய நிர்வாஹகன் -என்னவுமாம் –
அயர்வறும் அமரர்கள் என்னக் கடவது இறே –

அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் –
இத்தால் -அத்தேசத்தில் விரோதி பிரசங்கம் இல்லாமையாலே
ராம க்ர்ஷ்ணாதி ரூபத்தாலே
சாது பரித்ராணார்த்தமாக அவதரித்து –
தத் விரோதி நிரசனம் பண்ணின படியைச் சொல்லுகிறது –

அவதாரத்துக்கு பிரயோஜனம் விரோதி நிரசனம் பண்ணுகையோ என்னில் –
பிரதானம் விரோதி நிவர்தனம் ஆகையாலே சொல்லுகிறது –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்னக் கடவது இறே –
சஹஜ கைங்கர்யம் ஆகையாலே ஆவிர்பாவம் இறே உள்ளது –

சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்லாமல்
இத்தை -விரோதி நிவர்த்தியைச் -சொல்லி
அத்தை -கைங்கர்யத்தை -ஸூசிப்பது போலே
சாத்தியம் விரோதி நிவர்த்தி இறே –
ஆகையால் இறே இத்தை இட்டு அத்தை உபேஷிக்கிறது –

அவுணர்
இத்தால் அசுர ஜாதியைச் சொல்லுகிறது அன்று –
அஹங்கார மமகார உக்தராய் –ந நமேயம் -என்று இருக்குமவர்களைச் சொல்லுகிறது –

ஸ்ரீ பிரஹலாதனை ஜன்மம் அதுவாய் இருக்கச் செய்தே –
உபமானம் அசேஷாநாம் சாதூநாம்  – என்கையாலும் –

(ப்ரஹ்லாதாழ்வான் அஸுரயோனியிற் பிறந்தவனாயிருக்கச் செய்தேயும்
“உபமாநமசேஷாணாம் ஸாதூநாம்யஸ் ஸதாபவத்“ எனும்படி ஸாதுக்களுக்கு உபமாநமா யிருந்தான்.)

ராஜஸ ஜென்மமாய் இருக்கச் செய்தே
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை-விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித -என்கையாலும்

தேவ யோநியாய் இருக்கச் செய்தே ஜெயந்தன் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கு ஆகையாலும் –
ஜாதி பரம் அன்று -ஸ்வ பாவ பரம் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ் ததாம் ஸூர (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )-என்னக் கடவது இறே –

(த்வௌ பூத சர்க்கௌ லோகேச்மின் தைவ ஆசூர ஏவ ச
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாயா சூரி மதா-ஸ்ரீ கீதை)

என்றும் சலம் புரிந்து –
அவர்களுக்கு ந நமேயம் -என்று இருக்கை -வ்யவஸ்திதம் ஆனால் போலே யாய்த்து
அவர்கள் திறத்தில் இவனுக்கும் க்ரோதம் வ்யவஸ்திதமாய் இருக்கும் படி-

புரிந்து
ஈஸ்வரனை கிட்டினார்க்கு வெறுமன் போக வேண்டாம் காணும்
ஔதார்யத்தைப் பெற்று போதல்
குரோதத்தைப் பெற்று போதல் -செய்யும் இத்தனை போக்கி
பிரயோஜன சூன்யமாய் இராது –

ஸ்வ விநாசம் பிரயோஜனமாக இருக்குமோ வென்னில் –
அவர்கள் நினைவாலே பிரயோஜனம் அன்றிலே இருந்ததே யாகிலும்
அது தான் அவர்களுக்கு ஹிதமாக தலைக் கட்டா நின்றது இறே –

ஒருவன் தலையை அறுத்துக் கொள்ளப் புக்கால் கையில் வாளை வாங்குகை ஹிதமாய் இருக்குமா போலே –
பகவத் பாகவத நிந்தைக்கு உபகரணமான கரணத்தை போக்குகை உபகாரமாகக் கடவது –
தலையை அறுப்பது ரஷகனுடைய வியாபாரம் ஆகையாலே
சர்வமும் ரஷணமாய் இருக்கும் இறே –

ராம பாணாச நஷிப்த மா வஹத் பரமாங்கதிம் (வெற்று அரசை தம்பிக்கு ஈந்து வீட்டு அரசை அளித்தாயே -வாலி )-என்றும்
தலையை ஆங்கே அறுப்பதே கர்மம் -என்றும் -சொல்லக் கடவது இறே

(வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில், போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில், கூடுமேல், தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே! –திருமாலை–8)

புரிகை -யாவது
குரோத கார்யமான நிரசனத்தை பண்ணுகை
புரிதல் -செய்தல் தமிழர்
சலத்தை பண்ணி -என்றபடி –
புரிதல் -செய்தாலும் கொடுத்தாலும் –

அங்கு அருள் இல்லா தன்மையாளன் –
ஆஸ்ரித விஷயத்தில் தயை வ்யவஸ்த்திதமாய் இருக்குமா போலே
அவர்கள் விஷயத்தில் நிர்த்தயத்வம் வ்யவஸ்திதமாய் இருக்கும் –

(வரம் தருபவர்களில் ராஜா வானவரையே -க்ருபா சிந்துவை -பக்த வத்சலனை -அருளாத நீர் -திரு நாமம் சாத்தினாரே ஆழ்வாரும்)

சீற்றமும் தயையும் வ்ருத்த தர்மம்(சீறி அருளாதே )
ஏக ஆஸ்ரயத்தில் வர்த்திகலாம் இறே விஷய விபாகத்தாலே –
அசேதனமாய் இருப்பதொரு கல்லு -சந்திர சந்நிதியிலே நீராகவும்
அசந்நியிலே கல்லாகவும் காணா நின்றோம் இறே –

தன்மையாளன் –
இதுவே தனக்கு -ஸ்வ பாவமாக -உடையவன் –
ஆஸ்ரித விஷயத்தில் உதாரனாய் -தயாவானாய் -இருக்கையும் –
தத் விரோதிகள் பக்கல் க்ருத்தனாய் நிர்த்தயனாய் இருக்கையுமே ஸ்வ பாவனாய் இருக்கும்-

தான் உகந்த ஊர் –
அமரர் வேந்தன் தான் உகந்த ஊர் –
அங்கு அருள் இல்லாத தன்மை யாளன் தான் உகந்த ஊர் –
நிரதிசய போக்யன் வர்த்திக்கும் ஊர் –
விரோதி நிரசன சீலன் வர்த்திக்கும் ஊர் –
நித்ய ஸூரிகளும் தானுமாக வுகந்த தேசம் இறே பரமபதம் –
சம்சாரிகள் விமுகராய் இருக்க தானே உகந்த தேசம் இறே இது –
உடைமை நசியாமைக்காக தானே ஆதரித்து வந்து நிற்கிற தேசம் இறே இது –
இத்தால்
உகந்து அருளின நிலங்களே ஆஸ்ரயணீயமும் பிராப்யமும் -என்கை –

அமரர் வேந்தன் –என்கையாலே ஸ்வாமித்வம் கண்டோம் –
அத் தேசத்தை கால் கடைக் கொண்டு
தோஷ பூயிஷ்டமான இத் தேசத்திலே வந்து நிற்கையாலே சௌலப்யம் கண்டோம் –
நித்ய ஸூரிகள் ஏற்று அம்மம் உண்ண இங்கே வருகையாலே ப்ராப்ய பௌஷ்கல்பம் உள்ளது இங்கே இறே உள்ளது –
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -என்றார் இறே நம் ஆழ்வார்
வானவர் வானவர் கோன் உடன் -அடி அறப் போந்த படி –
எல்லாரையும் போக விட்டு அகம் பார்த்து இருக்கிறாப் போலே காணும் -ஸ்ரீ வைகுண்ட நாதன் –

(குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்-நிகரில் புகழாய் –வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்-உலகம் மூன்று உடையாய் ஸ்வாமித்வம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்–திருவேங்கடத்தானே -ஸுலப்யம்)
விலாகாமைக்கு ஸுசீல்யம்அர்ச்சக பராதீனன் -ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி வைக்கையாலே ஸுசீல்யம்-என்னை ஆள்வானே -ஸுசீல்யம்-
நான்கையும் காட்டி அருளுகிறார் திவ்ய தேசங்களிலே -)

(எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2-)

தான் உகந்த ஊர் –
அவன் உகந்ததாக அமையும் போல் காணும் இவர் ஆதரிக்கைக்கு –

ஊரெல்லாம் –
ஜ்ஞானம் பிறப்பதற்கு முன்பு –
அவரவர் பணை முலை துணையா -என்று
ஜாதி நியதி இன்றியிலே வரையாதே உத்தேச்யம் ஆனால் போலே
ஜ்ஞானம் பிறந்த பின்பு திருப்பதிகள் எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –

அனுபவிக்கப் போகிறது –திருக் கோவலூராய் இருக்க –
ஊரெல்லாம் -என்பான் என் என்னில்
ஓர் ஊருக்குப் போகும் பொழுது நீர் சாய்வையும் நிழல் சாய்வையும் பற்றிப் போவாரைப் போலே
திருப்பதிகளிலே ஒதுங்கப் போகிறார் –

வாசுதேவ தருவை அனுபவிக்கப் போம் பொழுது வாசு தேவ தருச் சாயையிலே ஒதுங்கிப் போவது
சர்வம் வசதீதி வாசுதேவ -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் வஸ்தவ்ய பூமி இறே –
தத் வ்யதிரிக்த பூமிகளை மரு பூமியாக இறே நினைத்து இருப்பது –
தரு -பிராப்யம் நிழல் பிராபகம் -உபாய உபேயம் அவனே என்றபடி –

எல்லாம் தன் தாள் பாடி –
வழி போவார்க்கு பாதேயம் வேணும் இறே –
பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தன அம்ர்தம் -என்னக் கடவது இறே –
பிராப்ய பிராபகங்கள் இரண்டுமான தன் திருவடிகளை -(பரமன் அடி பாடி -பொற்றாமரை அடி போற்றும் பொருள் கேளாய் )

தன்னைப் பாடி -என்னாதே
தாள் பாடி -என்கையாலே
கீழ் –ஒரு கால் நிற்ப ஒரு காலும் -என்ற திருவடிகள் ஆய்த்து இவருக்கு பாதேயம்

பாடி
ப்ரீதி ப்ரேரிரதராய்-கொண்டு பாடி –

நிலம் இத்யாதி
பெண்ணையைக் காண்பதற்கு முன்பே போலே காணும் திருவடிகளைப் பாடுவது –
பெண்ணையைக் கண்டவாறே திருவடிகளை மறந்து இத்தைக் கவி பாடத் தொடங்கினார் –
அதுக்கு ஹேது என் என்னில்
அத் தேசத்தில் தமக்கு ஆதரம் உண்டாகையாலே
அத் தேசத்தை ஆதரிப்பாரும் தமக்கு துணையாய் இருப்பார் இறே –

நிலம் பரந்து வரும் –
புருஷோத்தமனை ஒரு ஸ்திரீ அனுபவிக்க பிரார்த்திக்கிறாள் ஆகையாலே
அத்யாதரத்தோடே வாய்த்து போகிறது

(தெண்ணீர் பொன்னி -தெளிவிலாக் கலங்கல் காவேரி -ஸூத்த ஸத்வம் -அநுபவ த்வரையால் கலங்கியும் இருக்குமே)

திருக் கோவலூரை அனுபவிக்கப் போகிற ப்ரீதி பிரகர்ஷத்தாலே கரைக்கு மீதே வழிந்து
குடியிருப்புகளை அழித்து – கரையில் நிற்கிற வேய்களை
பீட் கன்ற்றாக-கீழ்க்கன்றோடே – வேர் பற்றோடு குத்தி எடுத்து இழுத்துக் கொண்டு
பெரிய கிளர்த்தியோடே வருகிறபடி –

கலுழி –
கலக்கமும் கானாரும்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே கலங்கிப் போகிற படி —

பகவத் விஷயத்தை அனுபவிக்கப் போம் போது-அவன் விபூதியை அழித்துக் கொண்டு போகலாமோ -என்னில் –
விபூதியின் அழிவு பாரான் –இவள் ஆதரத்தை இறே அவன் பார்ப்பது –

கண்டா கர்ணன் ரிஷி பிணம் இப்போது கொன்றது இத்தை இப்போதே அமுது செய்து அருள வேணும் என்றான் இறே

பிராட்டியைக் கண்ட ப்ரீதி பிரகர்ஷத்தாலே முதலிகள் மது வனத்தை அழிக்க
அத்தை வந்து மகா ராஜற்கு சொல்ல
நம் கார்யம் க்ர்தக்ர்த்யம் ஆயிற்று என்று உகந்தார்கள் இறே –
மகா ராஜரும் -ராஜ குமாரர்களும் –
த்ரஷ்டா சீதா -என்ன வேண்டுவது இல்லை –

எம்பார் -இவ்விடத்தில் -நடுவே மதுவனம் ஓன்று இல்லை யாகில் முதலிகளுடைய
கிளர்த்தி ராஜ குமாரர்கள் முதுகோடு போம் இத்தனை – காண் என்று அருளிச் செய்வர் –

பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் –
ஆசன்ன பிரசவைகளான கர்ப்பிணிகளை மயிரைப் பிடித்து இழுத்தால்
அதுவே ஹேதுவாக பிரசவிக்குமா போலே
வேர் பற்றிலே குத்தி எடுத்து அலைத்துக் கொண்டு போகப் புக்க வாறே
வேய்கள் உடைந்து முத்தை ஈன்றபடி

நெடு வேய்கள்
திரு உலகு அளந்து அருளின படிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறதாய்த்து வேய்களின் ஒக்கம் –

உந்த உந்தி –
பெண்ணையானது ப்ரீதி பிரகர்ஷத்தாலே முத்தை கொடு சென்று வயல்களிலே தள்ள
கர்ஷகர் தங்கள் பயிர்களுக்கு களைகள் என்று தள்ள –
அவர்களால் நோக்க ஒண்ணாதபடி தள்ளி வயல்கள் எங்கும்
பரந்தது ஆய்த்து முத்து –
விளைவது பொன்னாய் முத்து களையாம் படி இறே தேசத்தின் போக்யதை –
பொன் படு குட்டம் இறே
பொன்னானாய் -என்கிற வஸ்துவை விளைக்கும் தேசம் போலே காணும்

பொய்கை வேலி-
இப்படிப் பட்ட வயல்களையும் தடாகங்களையும் சுற்றிலே உடைத்தாய் இருக்காய் –
நதீஸ் தடா காநி ச பூரயித்வா -என்கிறபடியே
வர்ஷம் நிறைக்கை அன்றிக்கே ஆறு நிறைக்கக் கடவதான பொய்கைகள் இறே –

பூம் கோவலூர் –
அவன் தன பாடு போக வேண்டாதபடி
தேசம் தானே போக்யமாம் இருக்கிறபடி –

தொழுதும் போது நெஞ்சே –
நெஞ்சே அனுபவிக்கப் போராய் –
தொழுவோம் -என்னும் அளவும் அமைந்து இருக்க
தொழுவோம் போது -என்றது
ஆற்றின் உடைய ஆதரத்தையும் ஊரின் போக்யதையும் சொல்லக் கேட்ட போதே
திரு உள்ளம் கட்டணம் கட்டி எடுக்க வேண்டும்படி தரைப் பட்டுக் கிடந்தது –

அன்றியே
தன் தாள் பாடி -என்று
திருவடிகளைப் பாடுகையாலே
திருவடிகளின் போக்யதையும் மிடற்று ஓசையும் வருத்தி திரு உள்ளம் தளர்ந்த படி ஆகவுமாம் –
கையைக் கொடுத்து போராய் என்கிறார் –

தொழுதும் –
நம இத்யே வாதிந  -என்றார் கீழ்
இதில் –பத்தாஞ்சலி புடா -என்கிறார்
இரண்டும் முக்தர் உடைய அனுபவம் இறே –

(முக்தானாம் லக்ஷணம்- நித்ய அஞ்சலி ஸ்புட ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -சாந்தி பர்வம்)

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading