அவதாரிகை –
ஆற்றாமையோடு –முதலானாய் -என்றார் –
அந்த வெக்காயத்தோடே –ஆண் பெண்ணாய் –
அது தன்னிலும் தன் வாயாலே சொல்லுகைக்கு யோக்யதை இல்லாதபடி – மோஹங்கதையாய் –
வைத்து வாயாலே கூப்பிடும்படியாய்ச் செல்கிறது மேல் –
அதாகிறது-
இயற்கையிலே புணர்ந்து பிரிந்து பிரிவு ஆற்றாதாள் ஒரு பிராட்டி
மோஹம் உணர்த்தியும் -இவை முதலான தசா விசேஷங்களும் ஒருகால் பிறக்கையும்
அது தானும் அக்ரமாக பிறக்கையுமாக செல்லா நிற்க
பந்து வர்க்கத்தில் உள்ளாறும் யுக்த அயுக்த நிரூபணம் பண்ண மாட்டாதே இருக்க
இந் நோவுக்கு நிதானம் அறியாதே
பேஷஜ குசலரும் மந்திர வாத குசலரும் புகுந்து பிரவர்த்தியா நிற்கும் அளவிலே
பகவத் பரையாய் இருக்குமவள் ஒரு கட்டுவிச்சி(கட்டு விடுவிப்பவள் கட்டு விச்சி )
இவளுடைய நோவுக்கு நிதானம் அறிகிலிகோள்-
இவளுக்கு எம்பெருமான் அடியாக வந்த நோவு –
இது அவனாலே பரிஹ்ர்தமாக வேணும் என்று
அவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட திருத் தாயார் –
வினவ வந்தார்க்கு இப் பெண் பிள்ளை உடைய பிரவ்ர்த்தியையும்
கட்டுவிச்சி சொல்லுகிற வார்த்தையையும்
சொல்லுகிற பாசுரத்தாலே
தம் தசையை அருளிச் செய்கிறார் –
(கடல் வண்ணர் இது செய்தார்-இங்கு ஒரே அடையாளம் -திருமடல் போல் பல விசேஷணங்கள் இங்கு இல்லையே)
இவர் பிராட்டி தசையை பிராபிக்கை யாகிறது -அனுபபன்னம் அன்றோ -என்னில் –
உபபன்னம் –
பிராட்டிமார்க்கும் இவருக்கும் அனன்யார்ஹ சேஷத்வம்
ஆகிற சம்பந்தம் ஒத்து இருக்கையாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -என்கிறபடி
போகம் சமானமாய் இருக்கை யாலும் –
(அக் குளத்தில் மீன் போல்- ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹம் அபி ராகவா )முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்ர்தௌ -என்று
இளைய பெருமாள் பிராட்டியோடு ஏக பிரக்ருதியாய் தம்மைச் சொல்லுகையாலே –
வியதிரேகத்தில் ஆற்றாமை ஒத்து இருக்கையாலும்
பிராட்டி தசையைப் பிராபிக்க தட்டில்லை –
(நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?-4-5-8-)
ஆனாலும் தான் ஸ்திரீ என்கிற புத்தி பிறக்கக் கூடுமோ என்னில் –
ஸ்வாமித்வ ஆத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி நோ குணா
ஸ்வேப்யோ தாசஸ்த்வ தேஹத்வ சேஷித்வ ஸ்த்ரீத் வதாயின -என்கிறபடியே
புருஷோத்தமன் உடைய பும்ஸ்த்வம் ஆவது எதிர்தலைக்கு ஸ்த்ரீத்வதயாய் இருக்கையாலே-
நான் ஸ்திரீ என்று புத்தி பிறக்க தட்டில்லை –
(ஸ்வாமித்வ -ஆத்மத்வ- சேஷித்வ -பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி- நோ குணா–ஸ்வேப்யோ தாசஸ்த்வ தேஹத்வ சேஷித்வ- ஸ்த்ரீத்வதாயின -என்கிறபடியே
ஜீவனை ஸ்த்ரீ லிங்கம் -பாரதந்த்ரம் உத்தேச்யம் காட்ட -காகுத்தன் வாரானால் -பெண் பிறந்தேன் -மாயும் வகை அறியேன் )
ஸ்திரீ என்ற புத்தி பிறக்கை யாவது -தான் ஸ்திரீகளோடே ஆகார சாம்யத்தாலே பிறக்கும் புத்தி யல்ல-
புருஷ விஷயத்தில் ஸ்திரீகளுக்குப் பிறக்கும் அனுராக விசேஷ புத்தி பிறக்கை-–
சஜாதீய விஷயத்தில் விஜாதிய புத்தி பிறக்க எங்கே கண்டோம் என்னில்
பாஞ்சால்யா பத்ம பத்ராஷாயா ச் ஸ்னாயந்த்யா ஜகனம் கனம்
யாஸ்த்ரியோ த்ரஷ்ட வத்யஸ்தா பும்பாவம் மானசா யயு – என்று
எதிர் தலையில் வைலஷண்யத்தாலே சஜாதிகளான ஸ்திரீகளுக்கு
ஸ்திரீகளைக் கண்டால் புருஷர்க்கு பிறக்கும் அனுராக புத்தி
பிறந்தது இறே
(திரௌபதியைக் கண்ட பெண்களுக்கும் பெருமாளைக் கண்ட ரிஷிகளும் ஆசைப்பட்டதும் உண்டே)
அப்படியே -புருஷோத்தம விஷயமாக இவருக்கு பிறக்கும் அனுராக விஷயம் பிறக்க தட்டில்லை –
எதிர் தலையில் வை ஷண்யம் இறே விஜாதீய புத்திக்கு உத்பாதகம் –
ஆகையாலே ஒரு பிராட்டி தசையை பிராபிக்கிறார் –
இன்னமும் இயற்கையில் புணர்ச்சி என்கிற இதுவுக்கு நினைவு என் என்னில்
சர்வேஸ்வரனுக்கு சேதன விஷயத்திலே ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக விஷயீ கரிக்கும்
நிர்ஹேதுக விஷயீ காரத்தை சொல்லுகை –
எங்கனே என்னில்
பாஹ்ய உபவனத்தில் ஒரு பிராட்டி புறப்பட்டு புஷ்பாபசம் பண்ணுகிற சமயத்தில்
அபிமதனான காந்தனும் ம்ர்க வியாஜத்தாலே வர
தோழிமார்களும் அந்ய பரைகளாய் இருக்கிற தசையிலே
தர்மி பிரயுக்தமான ஸ்த்ரீத்வ பும்ஸ்த்வங்களே ஹேதுவாக
ஜ்ஞாபகரும் இன்றிக்கே
கடகரும் இன்றிக்கே
இருக்க –சம்ஸ்லேஷிக்கை இறே -இயற்க்கை புணர்ச்சி ஆகிறது-
ஆசார்ய க்ர்த்ய்த்தையும் புருஷகார க்ர்த்யத்தையும் தானே ஏறிட்டுக் கொண்டான் –
ஸ்த்ரீத்வம் ஆகிறது ஒரு விஷயத்துக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கை இறே –
எதிர் தலையில் பும்ஸ்த்வம் ஆவது -வகுத்த விஷயமுமே -சர்வ வித ரஷகமுமாய் -இருக்கை இறே –
ஆகையால் நிர்ஹேதுக விஷயீகாரத்தை சொல்லுகிறது –
ஆனால் ஜ்ஞாபகராய் இருப்பார் சில ஆச்சார்யர்களும்
பொறுப்பித்து சேர்ப்பிக்கைக்கு சில புருஷகார பூதரும் வேண்டி அன்றோ இருப்பது
ஈஸ்வர விஷயீ காரம் இருப்பது என் என்னில் –
அப்போதும் ஆசார்யன் ஜ்ஞாபகன் ஆகிறதும் -இந்த சேஷ சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேகத்தில் ஆத்ம புத்தியையும் -தத் சம்பந்த நிபந்தனமான ஸ்வாதந்த்ர்யத்தையும் நிவர்த்திப்பிக்கை இறே –
புருஷகார பூதையான பிராட்டியும் பூர்வ வர்த்தத்தை ஷமிப்பிபதும் இஸ் சம்பந்தத்தையும்
இதன் அடியாக வரும் வாத்சல்யத்தையும் முன்னிட்டு இறே –
இன்னமும் பிராட்டியினுடைய நோவுக்கு நிதானம் அறியாதே
மந்திர ஔஷாதிகளால் வியாபிக்கிறார் சிலரும்
அத்தை நிஷேதிக்கிறாள் ஒரு கட்டு விச்சி வார்த்தையும் ஆக செல்லுகிற இதுக்கு கருத்து யாது என்னில் –
விஷயாந்தர பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –
சாதநாந்தர நிவ்ர்த்த்யம் –
பகவத் பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –
அதுக்கு ஹேது பூதனாய் இருந்துள்ள ஈஸ்வரன் தானே வந்து முகம் காட்டிப் போக்க வேணும் –
தத் சம்ஸ்லேஷம் யாவதாத்மபாவி யாகையாலும்
இந்த பிரேமாதிசயம் ஸ்வரூப பிராப்தம் ஆகையாலும் -அநிவர்த்யம் –
ஸ்வ வாக்யத்தோபாதி-திருத் தாயார் வார்த்தையாலும் பேசுகிறார் தாமாய் இரா நின்றது –
இது சங்கதம் ஆகிறபடி எங்கனே என்னில் –
ஒரு ஆறு பெருகிப் போகா நின்றால் கரையைப் பற்றி போம் அளவு அன்றிக்கே –
பெருக்கு மிக்கு இருந்தால் கைவாய்க்கால்களாப் போம் போக்கும் நிரம்பிப் போகா நிற்க –
தானும் குறையாதே சென்று கடலிலே புகுமாறு போலே –
இவருடைய பிரேமாதிசயத்தாலே –
திருத் தாயார் வார்த்தையும் குறைவற்று செல்லா நிற்க செய்தே
தம் வார்த்தையும் குறைவற்று செல்லுகை யாகிறது -இது சங்கிதம் –
இன்னமும் பெண் பிள்ளை மோஹங்கதையாய் இருக்க-
புருஷ வ்யாக்ர ஸதா -வ்யாசநேஷு மனுஷ்யாணாம் பர்ஸ்வம் பவதி துக்கித -என்று அவளிலும் தான் அவ சன்னையாய் இருக்க –
பிராப்தமாய் இருக்க தெளிந்து வார்த்தை சொல்லுகிற இது யுக்தமாமோ வென்னில்
பிராட்டியைப் பிரிந்த சமயத்தில் சக்கரவர்த்தி திருமகனாருக்கு பிறந்த அவசாதத்தில் காட்டில்
இளைய பெருமாளும் அவருடைய அவசாதால் வந்ததும்
தம்முடைய காவல் சோர்வால் வந்த அவசாததுமாய்க் கொண்டு
அவசாதம் இரட்டித்து இருக்க –
அவற்றைப் பொறுத்து தெளிந்து வார்த்தை சொல்ல வேண்டும் சமயம் அறிந்து
பெருமாளைத் தேற்றினாப் போலே
இவளும் இப் பெண் பிள்ளையினுடைய உஜ்ஜீவன அர்த்தமாக தெளிந்து இருக்கையும் உக்தமே-
ரஷய பூதர் அவசன்னராய் இருக்க வமையும் –
அவசாதம் ஒத்து இருக்கச் செய்தேயும் அத்தை அறிந்து பொறுத்து தெளிந்து இருந்து வார்த்தை
சொல்ல வேண்டும் அருமை உண்டு இறே -ரஷகருக்கு
இவளுடைய வார்த்தை இவளுக்கு ஜீவன ஹேது ஆனபடி என் என்னில்
கட்டுவிச்சி வார்த்தை பகவத் பரமாய் இருக்கையாலும்
இவள் தன்னுடைய வியாபாரம் விரக்தி பரமாய் இருக்கையாலும்
இவள் அழகில் அவன் படும் பாட்டை இவள் படுவதே -என்று அவனை பிரசங்கிக்கையாலும் –
தீர்ப்பாரை யாமினியில் கட்டுவிச்சி போல் அன்றியே –
திருமடலில் கட்டுவிச்சி போலே-
மகா பாகவதையாள் இருப்பாள் ஒருத்தி – யாகையாலே
நோவு தீர்க்கை அன்றியே –
வர்த்திக்கிலும் அவள் ஸ்பர்சமம் அமையும் என்னும்படி இருக்கிறவனை பிரசங்கிக்கையாலும்-
ஆஸ்வாச ஹேதுவாகத் தட்டு இல்லை –
இன்னமும் முதல் பத்து -இவர் தம்முடைய வார்த்தை –
இரண்டாம் பத்து -திருத் தாயார் வார்த்தை –
மூன்றாம் பத்து -பிராட்டியார் வார்த்தை –
மச் சித்தா -மத் கத ப்ராணா – போதயந்த பரஸ்பரம் -என்றபடியே
மூன்று பத்துக்கும் மூன்று வாக்யார்த்தம் –
மச் சித்தா –
விஷயாந்தரம் கலசாத படி -அனந்யார்ஹராய் அநந்ய போக்யராய் -இருக்கிறபடியை
பேசுகையாலே முதல் பத்து -ஜ்ஞான பரம் -(மறவாது வாழுதியேல் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-ஞானத்தில் தன் பேச்சு )
இரண்டாம் பத்து -அந்த ஜ்ஞான கார்யமான –வைராக்ய பூர்வகமாக
பகவத் பிராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது -(பக்தி பாரவஸ்யம் -பரமாத்மா ரக்த-மற்றவற்றில் விரக்தி பூர்வகம்-பிரேமத்தில் பெண் பேச்சு இவள் பேசும் நிலை தவிர்ந்து திருத்தாயார் பேச்சு )
பிரேம பூர்வகமானால் பிராப்தி அளவும் செல்ல நிலவரோடே கால ஷேபம் பண்ணும்படியைச் சொல்லுகிறது -மூன்றாம் பத்து -(போதயந்த பரஸ்பரம்)
இரண்டாம் பத்து –மத் கத ப்ராணா -என்றது இறே –
தன் மூச்சடங்க தாயார் வார்த்தையாகச் செல்லுகையாலே
போத யந்த பரஸ்பரம் -என்றது இறே தோழி யோடு வ்ர்த்த கீர்த்தனம் பண்ணுகையாலே-
(ஞானம் -பக்தி -கால ஷேபம் மூன்றையும் சொன்னவாறு)
இதில் -முதல் பாட்டில் –
திருத் தாயார் இவளுடைய விரக்தியையும் கட்டுவிச்சி சொன்ன வார்த்தையையும் வினவ வந்தார்க்கு சொல்லுகிறாள் –
அவர்களுக்கு சொல்லுகிற வார்த்தை ஒன்றும் –
தன்னுடைய பாவ வ்ர்த்தி என்றும் ஆய்த்து இருக்கிறது –
விஸ்லேஷத்தில் இப்படி அவசன்னையாம்படி –பிரணயத்தில் தேசிகை யாவதே –
என்கிற உகப்பு ஆய்த்து உள் வாயில் தனக்குச் செல்லுகிறது -(கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே )
தனக்கு அபிமதமாய் இருந்தால் அது தன்னை இவர்களுக்கு சொல்ல குறை என் என்னில் –
இயற்கையில் புணர்ச்சி யாகையாலே அவர்களுக்கு சொல்ல மாட்டுகிறிலள் –
கடகர் அடியாக பிறந்த சம்பந்தம் ஆகில் இறே சொல்வது –
ஆசார்ய உபதேச பூர்வகமாக பகவத் சம்பந்தம் உக்தனாகில் இறே -நமக்கு கொண்டாடல் ஆவது –
அஜ்ஞான கார்யமான கலக்கம் யதா ஜ்ஞானத்தாலே நிவர்த்த்யம்
யதாஞ்ஞான கார்யமான கலக்கம் -யாவதாத்மபாவி அநிவிர்த்யம்-என்னும் அது இறே
இப் பாட்டில் பிரகாசிக்கிறது –
—————————————————————————————————————————————–
பட்டுடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடும் கண்ணீர் ததும்ப பள்ளி கொள்ளாள்
எட்டுணைப் போது என் குடங்காலில் இருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மடமானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே –
பதவுரை
பள்ளி கொள்ளான்–உறங்குகின்றிலன்;
என் துணை போது-ஒரு நொடிப் பொழுதும்
என் குடங்கால் இருக்க கில்லாள்-என் மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்;
எம்பெருமான்-எம்பெருமானுடைய
திரு அரங்கம்-ஸ்ரீரங்கக்ஷத்ரம்
எங்கே என்னும்-எங்கிருக்கின்றது? என்கிறாள்;
மணி வண்டு-அழகிய வண்டுகள்
மட்டு விக்கி-(உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ் செய்யப் பெற்ற
கூந்தல்-கூந்தலை யுடையவளான
மட மானை-அழகிய மான் போன்ற இப் பெண் பிள்ளையை
இது செய்தார் தம்மை-இப்படிப்பட்ட நிலைமை யடைவித்தவர் இன்னாரென்பதை,
கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவளே!
மெய்யே சொல் என்ன-உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்)
கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள்-‘கடல் போன்ற நிறத்தை யுடையரான பெருமாள்
இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்;
நங்காய்-நங்கைமீர்களே!,
ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு)
காப்பார் ஆரே-இவ் வாபத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறு யாருளர்?.
என் பெண்ணானவள்
பட்டுச் சீரைகளை அரையிலே தரியா நின்றாள்
மோஹித்து அலமரா நின்றாள்
மரப்பாச்சியை ஆதரியாள்
குளிர்ந்து நீண்ட கண்களில் சோகா ஸ்ருக்கள் துளும்பும் படி நின்றாள்
உறங்குகிறிலள்
க்ஷண காலம் கூட மடியில் உட்க்கார்ந்து இருக்கவும் க்ஷமை ஆகிறிலள்
என்னை அநந்யார்ஹை யாக்கின ஸர்வேஸ்வரனுடைய திருவரங்கமானது எங்கே என்று வாய் வெருவா நின்றாள்
அழகிய வண்டுகள் தேனைப் பாநம் பண்ணி -விடாயின் மிகுதியால் விக்கி ஆலாபனை பண்ணா நின்றுள்ள
மயிர் முடியை யுடையவளாய் மடப்பத்தையும் மான் போன்ற கண்களையும் யுடையளான என் பெண்ணை
இப்படி ஆக்கினவரை கட்டுசிச்சியே உண்மையாகச் சொல் என்று சொல்ல
கடலின் நிறம் போலே ஸ்ரமஹராமான திரு நிறத்தை யுடைய ஸர்வேஸ்வரன்
இப்படிச் செய்தாராகச் சொன்னாள்
என்னுயிர் தோழியே இத்தைப் பரிஹரிக்க வல்லார்கள் வேறே யார் இருக்கிறார்கள் –
————————————————————————————
பட்டுடுக்கும்-
இதுவும் மேல் சொல்கிற அவஸ்தைகளோபாதி
ஆற்றாமையிலே ஒரு அவஸ்தா விசேஷம் –
அவன் சம்ஸ்லேஷ தசையில் -அவயவ சோபையைக் காட்டிலும் -சமுதாய சோபையைக் காட்டிலும் –
உடை அழகிலே ஈடுபட்டு-
இது ஒரு உடை அழகு இருக்கும்படியே -என்று அதிலே சக்தனாய் இருக்கும் படியைக் கண்டு
அவன் வருகிறதற்கு சாதனா அனுஷ்டானம் பண்ணுகிறாள் –
புடைவை வுடுக்கத் தொடங்கினாள் –
அவ் வுடையை உடுக்க -இத்தை இழக்க ஒண்ணாது என்று வரும் –
என்று அத்தை உடுக்கத் தொடங்கினாள் –
உடுக்கும் –
அவன் ஆதரிக்கும் உடை அவன் வரும் அளவும் அழிப்பது உடுப்பது ஆகிற படி –
அவனுக்கு உறுப்பாக தன் உடம்பை அலங்கரிக்கையும் பிராப்தம் இறே –
சேஷிக்கு அபிமான போது சேஷித்வமும் உத்தேஸ்யமாய் இறே இருப்பது —
அயர்த்து –
உடை வாய்த்தவாறே அவன் வரும் என்று சந்துஷ்டயாய் இருந்தாள்-
அவ்வளவிலும் வரக் காணாகையாலே மோஹங்க தையானாள்-
அவன் வருகைக்கு உறுப்பாக அலங்கரித்தாள்-
அதிலும் அவன் வரக் காணாமையாலே ஸ்வார்த்த்தமாய் விழுந்தது –
ஸ்வரூப ஹாநியாலே மோஹங்க தையானாள்-
ஆற்றாமையால் வரும் மோஹம் போல் அன்றே
ஸ்வரூப ஹாநி வந்தால் வரும் மோஹம் –
இரங்கும் –
ப்ரலாபஸ் ததா சம்மோஹா -என்று
இரக்கத்துக்கு பின்பு மோஹம் வர பிராப்தமாக இருக்க –
அக்ரமமாக சொல்லும்படி இறே இவ் விஷய வைலஷண்யம் இருப்பதும் –
இவளுடைய ஆற்றாமையின் உடைய வைலஷண்யம் இருப்பதும் –
இரக்கம் -ஆவது
அவனை அணைய வேண்டும் என்னும் த்வரையாலே வரும் அலமாப்பு –
மோஹம் ஸ்வஸ்த தசை என்னும் படி இறே -இந்த அலமாப்பு இருப்பது –
அதவா –
பட்டுடுக்கும் -நக்னமாய் திரிகிறது -லஜ்ஜாவஹமாய்
பட்டுடுக்கும் படியான பருவம் கிடீர் -என்கிறாள் –
பட்டு –
வஸ்த்ர சாமான்யத்துக்குப் பேர் –
பொத்திப் புலி வுகிர்ப்பட்டு -என்றால் போலே வஸ்த்ர விசேஷத்துக்கும் பேர் –
உடுக்கும்
அரையிலே ஒருங்காதபடியாலே எடுப்பது உடுப்பது ஆகிறபடி –
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ வரையில்லை -இவள் பரமே -என்று இறே ஒரு திருத் தாயார் வார்த்தை
(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – திரு விருத்தம் -60-)
அயர்த்து -பருவம் இதுவாக இருக்க வ்யதிரேகத்தில்
மூச்சு அடங்கும்படி இறே
பிரணயத்தில் தேசிகை யானபடி -(பிஞ்சாய் பழுத்தாள்-பகவத் பக்திக்கு பிறருக்கு வழி காட்டியான ஆண்டாளைப் போலே )
இரங்கும்
அது தான் ஸ்வஸ்த தசை என்னும்படி
மோஹம் கதையான தசையிலே
ஜ்ஞானம் வந்து குடி புகுந்து அவனை நினைத்து அணை
ரதியாகச் செல்லா நின்றது ஆய்த்து –
மோஹத்தில் ஜ்ஞானம் நடையாடாத படியாலே துக்கம் இல்லை இறே –
பாவை பேணாள்-
இவளுடைய தசா விசேஷத்தைக் கண்டு இவளை தரிப்பிக்கைக்கு விரகு ஏதோ என்று –
பண்டு ஊண் உறக்கம் இல்லாதபடி பாவையை உடன் போது போக்க காண்கையாலே
பாவையைக் கொண்டு வந்து காட்டினாள் –
அது -த்ருஷ்ட்டி விஷம் போலே ஆய்த்து –
பாவையை ஒழியச் செல்லாதவள் கிடீர் பாவையை அநாதரிக்கிறாள் –
போக உபகரணங்களோடு தோற்றும்படி கிடீர் ஒரு விஷயத்தில் அவஹாகித்த படி
இத்தால் -பகவத் விஷயத்தில் அவஹாகித்த படி –
இத்தால் -பகவத் விஷயத்தில் அவஹகித்தார்க்கு விஷயாந்தரங்கள்
த்ருஷ்ட்டி விஷம் போல் இருக்கும் என்னும் அர்த்தத்தை வெளியிடுகிறார் –
பகவத் விஷயத்தில் பிராவண்யம் -பகவத் பிரசாத சித்தமானவோபாதி
விஷயாந்தரங்களில் விரக்தியும் பகவத் பிரசாத பலம் இறே-
பள்ளி கொள்ளாள்-உறக்கமும் குடி போய்த்து –
பனி நெடும் கண்ணீர் ததும்ப –
ஆனந்தா ஸ்ருவுக்கு இலக்கான கண்
சோகா ஸ்ருவுக்கு இலக்காவதே –
ஸூஷேத்ரம் வெள்ளம் கொண்டால் போலே
ஈஸ்வர போக்யமான கண் படும் எளி வரவே இது –
(பனி நெடும் கண்ணீர் ததும்ப பள்ளி கொள்ளாள்-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் -அங்கு மாற்றி)
பனி நெடும் கண் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -(“ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:-ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிறபடியே
சம்ஸ்லேஷ தசையிலே கண்ணீர் சீதளமாய் இறே இருப்பது –
நெடும் கண் –
அல்லாத அவயவங்களில் காட்டில் கண் அழகிலே ஈடுபடும் படி இறே கண்ணின் போக்யதை இருப்பது –
ஏகைககுணாவ தீப்சையா -சதாஸ்தி தாகிர -(நூறு நூறு மடங்கி மேலே கூட்டித் திரும்புவது போல் )என்கிறபடியே
பகவத் குணங்களில் ஒரோ குணங்களே அவதி காண ஒண்ணாதா போலே யாய்த்து-
விபுவாய் சர்வஞ்ஞனாய் சர்வசக்தியாய் ஈஸ்வரனுக்கும்
இவள் கண்ணின் போக்யதை பரிச்சேதிக்க ஒண்ணாத படி –
அவன் ஸ்வரூபத்தால் அபரிச்சின்னன்
இவள் போக்யதையால் அபரிச்சின்னை –
அதவா –
நெடும் கண் –
உபய விபூதி உக்தனையும் கூட ஒரு புடையிலே
அடக்க வற்றான கண் என்னவுமாம் –
இத்தால் ஜ்ஞான வைபவத்தை சொல்கிறது –
(ஸ்வாபதேசத்தில் கண் என்று ஞானத்தைச் சொன்னபடி.
எம்பெருமானைச் சேரப் பெறாத வருத்தத்தினால் ஞானக் கலக்கமுண்டானமை கூறியவாறு.)
நீர் ததும்ப –
சோக ஸ்ருவாலே தளும்புகையாலே
பள்ளி கொள்ளாள் –
உறங்குகிறிலள்
சம்ஸ்லேஷ தசையில் ஆனந்த ஸ்ருவாலே உறங்கப் பெறாள் –
விஸ்லேஷ தசையில் சோக ஸ்ருவாலே உறங்கப் பெறாள் –
சம்ஸ்லேஷ தசையில் அவன் உறங்க மாட்டான் –
விஸ்லேஷ தசையில் விரஹம் உறங்க ஒட்டாது –
(“தொல்லைமாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள்துஞ்சுதல்“ என்றபடியே
கண்ணுறங்க ப்ரஸக்தியுண்டோ?
கூடிக் களிக்குங்கால் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்று உறங்கப் பெறாள்.
பிரிந்து படுங்கால் சோகக் கண்ணநீராலே உறங்கப்பெறாள்.
ஸம்ச்லேஷதசையில் அவன் உறங்கவொட்டான்;
விச்லேஷதசையில் விரஹவேதனை உறங்க வொட்டாது.)
தன் வயிற்றில் பிறந்த இவள் உறங்காள் -என்ன அமைந்து இருக்க
பள்ளி கொள்ளாள் -என்பான் என் என்னில் –
வயிற்றில் பிறந்தவளே யாகிலும் ராஜ மகிஷி யாகப் பட்டம் கட்டினால்
ஆழ்வார் என்று இறே சொல்லுவது –
அப்படியே புத்ரனோடு சிஷ்யனோடு வாசி அற
அவர்களுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் –
உத்தேச்யத்தை தோற்ற பூஜ்ய வாசி சப்தங்களால்
சொல்லக் கடவது என்று
பூர்வாச்சார்கள் அனுஷ்டித்துப் போந்த சாஸ்தரார்த்ததுக்கு அடி இது இறே –
இவளுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -உறங்காது ஒழிவதே -என்கிறாள்
எட்டுணைப் போது என் குடங்காலில் இருக்க கில்லாள் –
இவள் உறங்கக் காணாமையாலே
முன்பு தன் மடியிலே உறங்கிப் போகக் கண்ட வாசனையாலே
தன் மடியைக் கொடுத்தாள் –
அது நெருப்பிலே அணைந்தால் போலே இருக்கையாலே துணுக என எழுந்து இருந்தாள் –
எட்டுணைப் போது –
சர்வ காலமும் என் மடி ஒழிய செல்லாத வளுக்கு கிடீர்
ஷண காலமும் பொருந்தாது ஒழிகிறது –
(‘எட்டுணை‘ ‘எட்டணை‘ என்பன பாடபேதங்கள். (எள்Xதுணை= எட்டுணை.) எள் X தணை, எட்டணை.)
எள் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறுபொழுதும் – க்ஷண காலமும் என்றபடி.)
என் குடம் கால் –
பெற்ற தாயான என் மடி
பொருந்தாத படி துச் சிஷையைப் பண்ணினவன் ஆனாரோ என்கிறாள் –
ரஷ்யதையோடு ரஷகத்வத்தோடு வாசி அற சம்பந்தம் அற்றபடி
அபிமத விஷயங்களோடு பூஜ்ய விஷயங்களோடு வாசி அற சம்பந்தம் அற்றபடி –
இருக்க கில்லாள் –
உறங்குகை அபேஷிதம் அல்லாமையாலே எழுந்து இருந்து ஆகிலும் இருக்குமோ என்னும் நசையாலே
அணைத்து மடியிலே இருத்தப் பார்த்தாள் –
அதுவும் பொருந்திற்று இல்லை –
கில்லாள் –
சக்தை யாகிறிலள் –
என் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு இருக்கத் தேடினாலும் அதுக்கு சக்தை யாகிறிலள் –
ஏதேனும் அளவிலும் தன் மகளை குறை சொல்லுமவள் அன்றே
நெருப்பில் கிடக்க ஆசை உண்டானாலும் மடியில் கிடக்கப் போகாது இறே-
இத்தால் பிரகிருதி பிராக்ருதங்களில் -விரக்தி ஜ்ஞாநதையா வந்தது அன்று –சத்தா பிரயுக்தம் -என்கை –
பகவத் பிரேமம் சத்தா பிரயுக்தமானவோபாதி
இதர விஷயத்தில் விரக்தியும் சத்தா பிரயுக்தமாயே இறே இருப்பது –
அவ்வளவேயோ -என்னை அனன்யார்ஹை ஆக்கினவன் கோயில் எங்கே -என்கிறாள் –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –
பாவையோடு தாயின் மடியோடு வாசி அற புறம்பு உள்ள துவக்கை அறுத்தவனூர் எங்கே -என்னா நின்றாள் –
இன்னார் உடைய கோயில் எங்கே என்று பேரைச் சொல்லாதே
எம்பெருமான் -என்பான் என் என்னில் –
இயற்கைப் புணர்ச்சி யாகையாலே
ஸ்த்ரீத்வ பும்ஸ்வத்தங்களே ஹேதுவாக கலந்தது -இத்தனை
ஜ்ஞாபகர் உண்டாய் கலக்கில் இறே பேர் அறியல் ஆவது –
அவனூர் கோயில் என்று அறிந்தபடி எங்கனே என்னில்
சம்ஸ்லேஷ தசையில் பிரிவை நினைந்து
பிரியேன் -பிரியில் தரியேன் -என்று பிரிவை பிரசங்கிக்கிற அளவிலே
இவள் தரித்து இருக்க வேணும் என்று
நம்மூர் கோயில் -என்று ஊரை பிரசங்கித்தான் –
அத்தாலே ஊர் கோயில் –என்கிறாள் –
எம்பெருமான் –
எனக்குத் தன்னை எழுதித் தந்து என்னை எழுதிக் கொண்டவன்
(மா மாயன் -வசீகர புத்தியால் தான் தோற்று நம்மை அடிமை கொள்பவன்)
திருவரங்கம் எங்கே என்னும் –
கோயில் மேற்கே என்று அறியுமே –
எங்கே என்பான் என் என்னில்
ஆற்றாமையாலே கண்ணும் சுழலை இட்டு திக் பிரமம் பிறந்தால் பின்னை
திக்குத் தேட வேண்டி இறே இருப்பது-
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மடமானை இது செய்தார் –
அவனை இப்படி படுத்தக் கடவ மயிர் முடியை உடையவள் கிடீர்-
அத்தலை இத்தலையாய் இப்படி நோவு படுகிறாள் –
செவ்வைப் பூசலிலே -இவள் அழகு நெஞ்சிலே படுகை -இறே அவன் நோவு படுவது
வஞ்சனத்தே -அவள் அழகு தன் நெஞ்சில் படாமல் –
தன் அழகு இவள் நெஞ்சில் படும் படி -அகப்பட்டாளாம் இத்தனை -என்கிறாள் –
மட்டு விக்கி –
1-பெரிய அபிநிவேசத்தோடே மது பானம் பண்ண இழிந்து
விடாயின் மிகுதியாலே விக்கின படியைச் சொல்லுதல்
2-மதுவை கழுத்தே கட்டளையாக பானம் பண்ணின இடத்திலும்
அபிநிவேசம் மாளாத படியாலே தரித்து -இழிய அவகாசம் இல்லாத படியாலே -விக்கின படியைச் சொல்லுதல் –
3-சாரஸ்யத்தாலே உள் இழியவும் மாட்டாமல் உமிழவும் மாட்டாதே
நடுவே நாக்கடியிலே வைத்து இருக்கிறபடியைச் சொல்லுதல் –
4-மனுஷ்யர்க்கு அன்ன பானாதிகள் இரண்டும் தாரகம் ஆகையாலே
அன்னத்தாலே விக்கினால் நீராலே சமாதானம் பண்ணலாம் –
மதுவ்ரதம் ஆகையாலே மதுவினால் விக்கினால்
மதுவை இட்டு ஆஸ்வசித்தல் தவிருதல்-செய்யும் இத்தனை ஒழிய
த்ரவ்யாந்தரத்தால் ஆஸ்வசிப்பிக்க ஒண்ணாது இறே –
பதிம் விஸ்வஸ்ய -(தைத்ரியம் நாராயண வல்லி)
என்கிறபடியே பதி வ்ரதைக்கு வந்த ஆபத்தை
பதி தானே போக்குமது ஒழிய விஷயாந்தரங்களால் பரிஹரிக்க ஒண்ணாதே இறே-
(மது விரதைக்கு வந்த நோய் -பதி விரதைக்கு வந்த ஆபத்தை பதியே போக்க வேண்டுமே)
மணி வண்டு –
ரசாயன சேவை பண்ணின படியாலே –நரை திரை மூப்பு அற்று இருக்கிறபடி –
அரும்பினை அலரை -என்கிற விஷயத்துக்கு ஸ்மாரகமாய் இருக்கிறத்கு ஆய்த்து –
இவளுடைய மயிர் முடியைக் கண்டு –
தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -என்கிறபடியே
ஒரு தெய்வ வண்டு படும் அலமாப்புக்கு ஸ்மாரகமாய் இருக்கிறது ஆய்த்து –
இவள் குழலிலே மதுவாலே வண்டுகள் படும் அலமாப்பு –
(பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-)
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)
முரலும் –
மதுவை கழுத்தே கட்டளையாக பானம் பண்ணின ப்ரீதி பிரகர்ஷத்தாலே
இருந்த இடத்திலே இருக்க மாட்டாமையாலும்
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாமையாலும்
ஆளத்தி வைக்கிறபடி –
மடமானை –
எனக்கு பவ்யையானவள் கிடீர் இப்போது அபவ்யையாய் இருக்கிறாள் –
அங்கன் அன்றியே
மடப்பம் என்று -ஸ்த்ரீத்வமாய்-நிருபாதிக ஸ்த்ரீதவத்தை உடையவள் என்னவுமாம் –
தனக்கு ஆற்றாமை மீதூர்ந்தாலும் அது தெரியாதபடி அடக்கி -அவிக்ரிதையாய் இருந்து
எதிர்தலையை விக்ரதமாக்கக் கடவள் இவள் கிடீர் –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே -என்று வாய் விட்டுக் கூப்பிடுகிறாள் –
இது செய்தார் தம்மை –
இவளுடைய தசா விசேஷம் பாசுரம் இட்டு சொல்லப் போகாமையாலே
கடலைக் காட்டுமா போலே -இது -என்று -கையாலே காட்டுகிறாள் –
இது செய்தார் –
பண்டு நான் ஒப்பித்து விட்டால் -அவ் ஒப்பனை குறி அழியாதே வரும் –
இப்போது இக் குழலை ஆற்ற சாரம் ஆக்கினவர் ஆரோ -என்கிறாள்
அங்கன் அன்றியே
இவள் மயிரில் பூவை சருகாக்கி
வண்டுகளை பட்டினி கொண்டவன் ஆரோ -என்னுதல்
தம்மை –
இவளுடைய அவசாதத்தைக் கொண்டு அவனுடைய வைலஷண்யத்தை -நிலை இடுகிறாள் –
இவளை இப்பாடு படுத்தின சௌபாக்யத்தை உடையவரும் ஒருவரே –
தம்மை –
இது என்ன சௌபாக்யம் –
அவர் எம் மடுவில் வளர்ந்தாரோ
தம்மை –
இவளை இப்படி பிரணயித்வத்தில் தேசிகை ஆக்கின பரம பிரணியயார் யாரோ -என்கிறாள்
இவ்வாற்றாமை விளைப்பித்தது அசஹ்யம் ஆகில் இது செய்தவனைச் சொல் என்ன வேணும்
அது தமக்கு அபிமதம் என்னும் இடம் பிரகாசிக்கிறது ஆய்த்து -தம்மை -என்கையாலே
மெய்யே கட்டுவிச்சி சொல் –
யதார்த்தைச் சொல் –
கட்டுவிச்சி சத்தியவாதி என்று பிரசித்தையாய் இருக்க
யதார்த்தத்தை சொல் என்பான் -என் என்னில்
இயற்கைப் புணர்ச்சி ஆகையாலே நேராகச் சொல்ல ஒண்ணாது என்று இராதே
இது எனக்கு அபிமதம் -உள்ளபடி சொல் -என்கிறாள் –
கிஞ்சித் காரம் சித்திக்கும் போது உள்ளபடி அறிய வேணுமே
சொல் எனச் சொன்னாள் –
நெடுநாள் அனுவர்த்தித்து கேட்கும் வார்த்தை ஏவச் சொன்னாள்
எம்பெருமானாரைப் போலேயும்
கீதோபநிஷத் ஆச்சார்யனைப் போலேயும் காணும்
இக் கட்டுவிச்சி வைபவம் இருப்பது –
செவி தாழ்ந்தார்க்கு எல்லாம் வார்த்தை சொல்லிப் போந்தார் உடையவர் –
ருசியைப் பிறப்பித்து வார்த்தை சொல்லிப் போந்தான் கீதோபநிஷத் ஆச்சார்யன் –
(ஓராண் வழியாய் யுபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில்
ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் -உபதேச ரத்ன மாலை –37-)
சொன்னாள் –
தென்றலும் சிறு துளியும் போலே இதுக்கு ஓர் அர்த்தம் வேணுமோ –
இப் பாசுரமே அமையாதோ என்னும்படி -காணும் வார்த்தை சொன்ன சீர்மை இருந்தபடி –
(செவிக்கு இனிய செஞ்சொல் என்று மதுர கவி ஆழ்வாரே ஈடுபட்டால் போலேயும்
மதுரா மதுரா லாப -என்று பெருமாள் ஈடுபட்டால் போலேயும்)
சொன்னாள் –
எனக்கு கேட்கை தேட்டமானாப் போலே காணும் இவளுக்கு சொல்லுகை தேட்டமாய் சொன்னபடி –
ஆசார்யனுக்கு பகவத் அனுபவ ப்ரீதிக்கு பரிவாஹா அபேஷை உண்டாகையாலே
ஆள் தேட்டமாய் இறே இருப்பது –
சிஷ்யன் கேட்டுத் தரிக்கக் கடவன் –
ஆசார்யன் சொல்லித் தரிக்கக் கடவன்
இவனுக்கு கேட்கை உஜ்ஜீவன ஹேது
அவனுக்கு சொல்லுகை போக ஹேது –
நங்காய்-
அவள் சொன்ன வார்த்தை சொல்லலாம்படி புறம்பு கை ஒழிந்து இருக்கும்படியான பூர்த்தி உண்டு இறே –
அவளுக்கு நான் தேட்டமானாப் போலே காண் எனக்கு நீ தேட்டமான படி –
அவள் சொன்ன வார்த்தை தான் எது என்ன -சொல்லுகிறாள் –
கடல் வண்ணர் இது செய்தார் –
எம்பெருமான் திருவரங்கமே -என்றாள் அவள்
இவள் கடல் வண்ணர் -என்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள் –
இங்கு கடலின் ஸ்வபாவத்தை சொல்லுகிறது அன்று –நிறத்தைச் சொல்லுகிறது –
ஸ்வரூபத்திலே புகாதே -குணத்திலே புகாதே -வாய்கரையிலே அழுந்தினாள் என்கிறாள் –
ஒருக்கால் அணைத்து விட்டான் போலே காணும் அவ் வடிவிலே அகப்பட்டாள் –
ஸ்வரூபத்திலே இழிந்தாருக்கு குணங்களிலே இழிய வேணும்
உபயத்துக்கும் பிரகாசகமான விக்ரஹத்தில் இழிந்தாருக்கு புறம்பு போக வேண்டா விறே –
ருசி ஜனகமாய் இருப்பதுவும் வடிவே –
ஆஸ்ரயணீயமாய் இருப்பதும் வடிவே –
போக்யமாய் இருப்பதுவும் வடிவே -இறே –
இது செய்தார்
தீரா நோய் செய்தார்
இது
நீர் ஏறுண்டு மோஹித்தாரை வடிவிலே தெரியுமா போலே நோய் இவள் வடிவிலே தோற்றுகிறபடி –
இந்நோய் பெரும் பேறு என்னும் இடம் தோற்ற –இது -என்கிறாள்
தெய்வ நந்நோய் இறே –
தெய்வம் அடியாக வந்த நோயாகையாலே விலஷணமான நோய் இறே
நாட்டார் புருஷார்த்தம் என்று சாதிக்கிற இத்தை நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே பெற்றவள் அன்றோ இவள் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ இத்யாதியில் சொல்லுகிறபடியே-
(ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதபி நராணாம் ஷீண பாப நாம் கிருஷ்ண பக்தி )
சாதனாந்தர நிஷ்டருக்கு அநேக ஜன்ம சாத்யையான பக்தி இவளுக்கு நிர்ஹேதுக
பகவத் பிரசாதத்தாலே சித்தித்தது இறே –
உபாசகனுக்கு சாதனத்தின் உடைய மேல் எல்லையாய்
பிரபன்னனுக்கு பிராப்யத்தின் உடைய முதலடியாய் இறே பக்தி இருப்பது –
கடல் வண்ணர் இது செய்தார் –
ஒரு வடிவைக் காட்டி ஒரு வடிவைக் கொண்டார்
நஜீவேயம் ஷணம் அபி -என்கிற வடிவைக் காட்டி
ஊர்த்தம் மாஸான் ந ஜீவிஷ்யே -என்கிற வடிவைக் கிடீர் கொண்டது –
காப்பாராரே –
ரஷகனால் வந்த ஆபத்தை உங்கள் யாவராலும் பரிஹரிக்கப் போமோ –
விஷயாந்தரங்களால் வந்த நோவு பகவத் விஷயத்தை கிட்டிப் போக்கலாம்
பகவத் விஷயமடியாக வந்த நோவு ஸ்வரூப பிராப்தம் ஆகையாலே
யாவதாத்மபாவி அநிவர்த்யம் இறே –
(கீழ் கட்டு விச்சி வார்த்தை கடல் வண்ணர் இது செய்தார் என்றும்
காப்பார் யாரே -திருத்தாயார் வார்த்தை யாகவும் கொண்டு
மேல் முழுவதுமே கட்டு விச்சி வார்த்தையாகக் கொண்டு அருளிச் செய்கிறார்)
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யார் –
கடல் கொண்ட வஸ்துவை கடலிலே வீச வேண்டாவோ –
காப்பார் ஆரோ –
இவளால் பரிஹரிக்கப் போமோ –
உன்னால் பரிஹரிக்கப் போமோ –
பிறரால் பரிஹரிக்கப் போமோ –
வேலியே பயிரை அழித்தால் வேலி தான் நோக்கும் இத்தனை ஒழிய பயிரால் நோக்கிக் கொள்ளப் போமோ –
இத்தால்
ஸ்வாபதேசம் ஆய்த்து –
நிர்ஹேதுக விஷயீ காரம்
தத்கார்யமான ப்ரேமாதிசயம்
தத் கார்யமான விரக்தி –
ஆசார்ய உபதேச பூர்வகமாக ஜ்ஞான சித்தி ஆகிற இவை –
(ஆக இப்பாசுரத்தால்,
எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் ஆழ்வார்க்கு வாய்த்தபடியும்,
இது நித்ய கைங்கரியத்திற்கு உறுப்பாகமல்
ஆற்றங்கரை வாழ் மரம்போல் அஞ்சும்படியாக இவ்விபூதியிலே இருக்க வைக்கையாலே நோயாகச் சொல்லப்படுகிற தென்பதும்,
இது தான் ஆத்ம ஸ்வரூபாநு பந்தியாகையாலே ஆத்மா உள்ளவரைக்கும் நிலைத்திருக்கக் கூடிய தாய் அபரிஹார்யமான தென்றும்,
இவ்வுண்மையை ஜ்ஞாநாதிகரான பாகவதர்கள் அறிவார்களென்றும் சொல்லிற்றாயிற்று.)
(கொங்குங் குடந்தையுங் கோட்டியூறும் பேரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
கண்டியூராங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
மண்டியே திருவேனை யாரிங்கழைத்த்தூஉ,
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடமும்
மண்ணகரம் மாமட வேளுக்கை தென்குடந்தை
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்துதூஉ,
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
வேங்கடமும் விண்ணவரும் வெஃகாவு மஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!“
என்று தெருவேறக் கூவிக்கொண்டு தானாகவேவந்து சேர்ந்தாள்,
அவளை நோக்கித் தாயானவள்
“மட்டுவிக்கி மணிவண்டு முரலுங்கூந்தல் மடமானை யிருசெய்தார்தம்மை மெய்யே கட்டுவிச்சி! சொல்“ என்றாள்.
குறிசொல்லுகிற குறத்திக்குக் கட்டுவிச்சி யென்று பெயர்
திருவாய்மொழியில் “இது காண்மினன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற் கொண்டு“ என்றும்,
சிறிய திருமடலில் “அது கேட்டுக் காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சிகட்டேறி“ என்றும் வருவன காண்க.
ஐயங்கார் திருவரங்கக் கலம்பதத்தில் –
“காலமுணர்ந்த குறத்தி நான் கருதினை யொன்றது சொல்லுவேன்,
பாலகனுச்சியி லெண்ணெய்வார் பழகியதோர் கலை கொண்டுவா,
கோலமலர்க்குழன் மங்கை! நின்கொங்கை முகக்குறி நன்றுகாண
ஞாலமுவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே‘ என்று கட்டுவிச்சியின் பாசுரமாகப்
பாடியுள்ள செய்யுளும் குறிக்கொள்ளத்தகும்.)
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply