அவதாரிகை –
திரு உலகு அளந்து அருளின படியை –
தத் காலத்தில் அனுபவிக்கப் பெற்றிலோம் என்று -விஷண்ணராய்-
அச் செவ்வியோடு திருக் கோவலூரிலே வந்து நின்றோம் –
அனுபவியீர் என்ன –
தம்முடைய திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு அனுபவிக்க இழிந்தவர் –
ஆயனுடைய சௌர்ய வீர்யாதிகளையும் விஸ்மரித்து தம்முடைய அனுபவத்தையும் விஸ்மரித்தும்
முகப்பிலே சௌகுமார்யத்தை அனுசந்தித்தும்
தேச ஸ்வபாவத்தை அனுசந்தித்தும்
இவ்விஷயத்துக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று பீதரானார் –
அவ்விஷயத்தில் ஆசை பிறக்கையும் அங்குத்தைக்கு பரிகையும் ஆத்ம தர்மம் இறே –
அவன் தன்னுடைய சக்த்யாதிகளைக் காட்டி தெளிவிக்க
திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு
அனுபவத்தில் உத்யோகித்தாராய் நின்றார் கீழில் –
இதில் –
திருக் கோவலூர் போய் அனுபவிக்க ஒருப்படுகிறார் –
தாமாகையாலே போக வென்று ஒருப்பட்ட அளவிலே ஸ்ரீ பாதம் பேர்ந்தது இல்லை –
ஆயனுடைய சௌந்தர்யாதிகளை அனுசந்தித்து
(பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்,-நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல் வினை யெம் பால் கடியும்,
நீதியாய்! நிற் சார்ந்து நின்று.)
காலாளும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்கிறபடி
கரணங்கள் சிதிலமாகையாலும்
ஸ்வரூப அனுசந்தானத்தாலே வந்த அப்ராப்தியாலும்
ஆஸ்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி அற அவன் மேல் விழுந்து
ஆஸ்ரயிப்பிக்க ஆஸ்ரயிக்கையும்
அவன் மேல்,விழுந்து புஜிபிக்க புஜிக்கையும் இறே ஸ்வரூபம்
கூவுதல் வருதல் செய்யாய் – –
என் திறம் சொல்லார் –
என்னக் கடவது இறே –
(கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)
(கூவிப் பணி கொள்ளாய் -குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -கிரியதாம் வத
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே–8-3-7-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் –காட்டி அருளிய பின்பு அவையே சரணாகக் கொண்ட ஆழ்வார்
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் 5-7-10-
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!-5-8-9-
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்–5-8-10-)
ஆக
கரண சைல்யத்தாலும் -அப்ராப்தியாலும் தாம் போக மாட்டிற்று இலர் –
தாம் இருந்த இடம் திருக் கோவலூராகப் பெற்றிலர் –
கூப்பிடத் தொடங்கினார் –
திருக் கோவலூரை அனுபவிக்கப் பாரித்தவர் -திருப் பதிகளைப் பற்றிக் கூப்பிடுவான் என் என்னில்
கதிர் பொறுக்கிக் கூட்டுவாரைப் போலே
ஆயனுடைய ஸ்வ பாவம் திருப் பதிகளிலே
பிரகாசிக்கையாலே -அத்தைப் பற்றிக் கூப்பிடுகிறார் –
விஷ்ணு நா சத்ர்சோ வீர்யே-என்னுமா போலே-
(இவர் 86 திவ்ய தேசங்கள் மங்களா ஸாஸனம் செய்துள்ளார் அன்றோ
இவர் மட்டுமே 47 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
67 திவ்ய தேசங்கள் ஒரே ஆழ்வாரால் மங்களா ஸாஸனம்
நம்மாழ்வார் -பெரியாழ்வார் -திருமழிசை ஆழ்வார் -போழ்வாரால் மற்ற 20 திவ்ய தேசங்கள்
இப் பாசுரத்தில் ஒன்பது திவ்ய தேசங்கள் மங்களா ஸாஸனம் –
கார் வானத்து உள்ளாய் கள்வா–திருக் கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே! -கள்வனே!-ஒன்றாகக் கொண்டு
பெருமான் -என்று திருக் கோவலூர்
ஒரே பாடலால் -16 திவ்ய தேசங்களால் மங்களா ஸாஸனம்-ஐந்து திவ்ய தேசங்கள் இப் பாசுரத்தாலே திவ்ய தேசங்கள் ஆயின
ஒன்பது விழிச் சொற்கள் -திவ்ய தேச எம்பெருமானைக் குறித்தும் –
உள்ளுவார் உள்ளதாய் -என்றும் பேராது என் நெஞ்சின் உள்ளாய் -இரண்டு விழிச் சொற்கள் இப்பாசுரத்தில் உண்டே )
————————————————————————————————
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –
பதவுரை
நீரகத்தாய்-நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!
நெடு வரையின் உச்சி மேலாய்–திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!
நிலாத் திங்கள் துண்டத்தாய்–நிலாத் திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!
நிறைந்த கச்சி ஊரகத்தாய்–செழிப்பு நிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருப்பதியிலுள்ளவனே!
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்–அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
உள்ளுவார் உள்ளத்தாய்–சிந்திப்பாருடைய நெஞ்சிலுறைபவனே!
உலகம் ஏத்தும் காரகத்தாய்–உலகமெல்லாம் துதிக்கும்படியான திருக்காரகத்திலுள்ளவனே;
கார் வானத்து உள்ளாய்–திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!
கள்வா-கள்வனே!
காமரு–விரும்பத் தக்கதாய்
பூ–அழகியதான
காவிரியின்–திருக்காவேரியினது
தென் பால்-தென் புறத்திலே
மன்னு-பொருந்தி யிருக்கிற
பேரகத்தாய்-திருப்பேர் நகரில் உறை பவனே!
என் நெஞ்சில் பேராது உள்ளாய்-எனது ஹ்ருதயத்திலே பேராமலிருப்பவனே!
பெருமான்-ஸர்வ ஸ்வாமி யானவனே!
உன் திரு அடியே-உனது திருவடிகளையே
பேணினேன்-ஆசைப்படா நின்றேன்.
திரு நீரகத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனே
உயர்ந்த திருமலையின் சிகரத்திலே நின்று அருளினவனே
ஸகல கலைகளாலும் பூர்ணனான சந்திரனைப் போலே தாபத்தைப் போக்குமவனாய்
பூமியிலே ஒரு கண்டமான நில்லாத திங்கள் துண்டம் என்கிற திருப்பதியில் நின்று அருளினவனே
அழகு நிறைந்த காஞ்சீ புரத்திலே திரு ஊரகத்திலே நின்று அருளினவனே
அழகிய தடாகத்தின் கரையிலே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுமவனே
உன்னை சேஷி என்று அனுசந்திப்பாருடைய மனஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணுமவனே
லோகத்தார் எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணும்படி திருக் காரகத்திலே நின்று அருளுமவனே
திருக் கார் வானத்திலே வர்த்திக்குமவனே
ஆஸ்ரிதர்களுக்காக இருக்கிற திரு மேனியை அவர்களுக்கு காட்டாத கள்வனே
மிக்க அழகை யுடைத்தான காவேரியின் தென் கரையிலே திருப் பேரகத்திலே பொருந்தி எழுந்து அருளி இருப்பவனே
என் நெஞ்சிலே பேராது இருப்பவனே
ஸர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளையே காண வேணும் என்கிற ஆசையாலே கூப்பிடா நின்றேன் –
————————————————————————————————–
நீரகத்தாய்-
திரு நீரகத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறவனே –
நீரின் உடைய ஸ்வ பாவத்தை உடையவன் வர்த்திக்கையாலே
தத் சம்பந்த நிபந்தனமாக –நீரகம் -என்று திருப்பதியைச் சொல்லுகிறது –
(மூலவர் இல்லை -உத்ஸவர் -ஜெகதீஸ்வரர் -தாயார் நிலமங்கை வல்லித்தாயார் –
உலகு அளந்த பெருமாள் இரண்டாம் பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில் இந்த ஸந்நிதி உள்ளது )
ஆத்ம ஸ்வரூபம் ஏக ரூபமாய் இருக்கச் செய்தே
கர்ம அனுகுணமாக -தேவாதி ஜாதி பேதம் உண்டாய் –
ஜாத்ய அனுகுணமான புத்தி பேதமும் உண்டாய் –
தந் அனுகுணமாக ஜீவன பேதங்கள் உண்டானாலும்
சர்வ உபஜீவ்யமாய் இறே ஜலம் இருப்பது –
(நீரின் ஸ்வ பாவங்கள் அவனுக்கும் உண்டே
1-பள்ளத்தில் பாயும் -மேட்டில் ஏறுவது அருமை
ஜாதி இத்யாதிகளால் குறைந்தோர் பக்கம்
பாண்டவ தூதன் பீஷ்மர் துரோணர் துரியோதனன் விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகை அமுது செய்து அருளினான்
பள்ளத்தே ஓடி பெரும் குழியே தங்கும் இயல்வு உண்டே
2-நீர் இல்லாமல் கார்யம் இல்லை
லோகோ பின்ன ருசி யாக இருந்தாலும் எல்லாரும் நீரை விரும்புவது போலே எம்பெருமானும்
3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை– சூடு வந்தேறி
இவனுக்கும் தண்ணளி இயற்கை -சீற்றம் வந்தேறி
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் -முமுஷூப்படி திவ்ய ஸ்ரீ ஸூக்தி
4- நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேணும்
எம்பெருமான் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –
5-நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரியதாய் இருக்கும்
ஆண்டாள் சூடிக் களைந்த மாலையாலே விலங்கிட்டு வைத்து புஜிக்க- நின்றான்
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது நடந்தான்
6-நீர் மற்ற பண்டங்கள் சமைக்க வேணும் –
தனிப்பட தானே குடிக்கவும் தக்கதாய் இருக்கும்
அவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் இரண்டு ஆகாரங்களும் உண்டே
அவனும் ஸ்வயம் புருஷார்த்தம்
7-அன்னம் போன்றதுக்கு பிரதி நிதி உண்டு
நீருக்கு பிரதிநிதி இல்லையே
குண அனுசந்தானத்தாலும் போது போக்க அரிது
ஒரு நாள் காண வாராயே -அடியேன் தொழ வந்து அருளாயே -என்று பிரார்தித்து பெற்றே தீர வேணும்
8-சோறு உண்ணும் போது நீர் வேணும்
நீர் வேறு ஒன்றை அபேஷிக்காது
உபாயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேணும்
எம்பெருமான் இதர நிரபேஷன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
9-கொள்ளும் பாத்ரங்கள் தார தம்யம் அன்றி நீர் தானே குறைய நில்லாது
எங்கும் நிரம்பவற்று
எம்பெருமானும் கொள்ளக் குறைவிலேன்
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்ளக் குறையே அத்தனை
ஐஸ்வர்யம் போதுமே கைவல்யம் போதுமே
10- நீர் ஐந்து வகைப் பட்டு இருக்கும்
பூமிக்கு உள்ள பதுங்கிக் கிடக்கும் நீர் /ஆவரண ஜலம் /பாற் கடல் நீர் /பெருக் காற்று நீர் /தடாகங்களில் தேங்கும் நீர்
அவனும் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
விடாய்த்தவனுக்கு வேறு இடம் தேடித் போக வேண்டாத படி நிற்கிற இடத்திலே உண்டாய் இருக்கச் செய்தேயும்
கொட்டும் குத்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக் கிடையாத பூமிக்குள் பதிந்த நீர் போலே அந்தர்யாமித்வம்
கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு ஹிருதயத்தில் இருக்கச் செய்தேயும்
கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அஷ்டாங்க யோகம் யத்னத்தால் காண வேணுமே
விடாய்தவனுக்கு அண்டத்துக்கு வெளியே பெருகிக் கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆயிற்று
கண்டு பற்ற வேண்டும் என்று இருக்குமவனுக்கு லீலா விபூதிக்கு அப்பால் உள்ள பரத்வம்
அப்படி அதி தூரஸ்தம் அன்றியே அண்டத்துக்கு உட்பட்டு இருக்கச் செய்தேயும்
விடாய்தவனுக்கு கிட்ட அரிதான பாற் கடல் போலே வ்யூஹம்
சமீஸ்தமாய் இருந்தும் தத் காலத்தில் இருந்தவர்களுக்கு மாத்ரம் உபயோகமாய் யோக்யமாய்
பிற்பட்டார்க்கு அரிதான பெருக்காறு போலே ஆயிற்று விபவம் -ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்
விடாய்தவனுக்கு விடாய் தீரலாம்படி பெருக்காரிலே தேங்கின மடுக்கல் போலே யாயிற்று
கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லார் கண்ணுக்கும் இலக்காம்படி அர்ச்சாவதாரம்
11- நீரானது ஸ்வத பரிசுத்தமாயினும் ஆஸ்ரய வசத்தாலே த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும்
அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் த்யாஜ்யனாயும்
கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள எம்பெருமான் உபாதேயம்
12-தோண்ட தோண்ட சுரக்கும் நீர்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும்
13-நீர் தனக்கு ஒரு பிரயோஜனமும் இன்றியே பரார்த்தமாகவே இருக்கும்
எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும்
14-நீர் தானே பெய்ய வேணும் அன்றி ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது
எம்பெருமான் படியும் அப்படியே
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேஷை கஞ்சித் கதாசன
15 நீர் கடலில் இருந்து காள மேகம் வழியாக வந்தால் அன்று உபஜீவிக்க உரியது ஆகாது
எம்பெருமானும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆசார்யர் முகமாகவே வந்தே உபஜீவ்யன் ஆகிறான்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூல் கடல் சொல் இவர் வாயனவாயத் திருந்தினவாறே
சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆமே
16-வசிஷ்ட சண்டாள விபாகம் அற ஒரே துறையிலே படிந்து குடைந்தாடலாம் நீரில்
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
பெரியார் சிறியார் வாசி அற ஆஸ்ரயிக்கலாம்
17-நீர் சிறிது த்வாரம் கிடைத்தாலும் உட் புகுந்து விடும்
எம்பெருமானுக்கு சிறிது வ்யாஜ்யமே போதும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறைய வந்து புகுந்தான்
18-தீர்த்த விசேஷங்களிலே நீருக்கு மகாத்மயம் அதிகம்
எம்பெருமானுக்கு கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திருப்பதிகள் விசேஷம்
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் ஏறட்டு கொள்வது
முதுகில் கொட்டுவது உள்ளில் இழிச்சுவது குடைந்து நீராடுவது
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் ஸ்ரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி -எம்பெருமானை விழுங்குவார்கள்
20-நீர் வேண்டியவன் துளி நுனி நாக்கு நனைத்தால் போதும் என்பான்
கூராழி வெண் சங்கு ஏந்தி –ஒரு நாள் காண வாராயே
21-நீரில் சிறிய கல்லும் அமிழும் பெரிய தெப்ப மரமும் மிதக்கும்
ப்ரஹ்மாவாய் இழந்து போதல் இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யக் காண்போம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
சிறு மா மனிசர் அமிழ்தலும்
ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்றலும் காண்போம்
இங்கனே பலவும் உண்டே)
அப்படியே திரு நீராக நாயனாரும் சர்வ உபஜீவ்யராய் இருக்கை –
திரு உலகு அளந்த திருவடிகள் சர்வ உஜ்ஜீவ்யமாய் இறே இருப்பது –
இஸ் ஸ்வ பாவம் இத் திருப்பதியிலே பிரகாசிக்கையாலே
வரையாதே எல்லார்க்கும் அனுபாவ்யனான நீ
எனக்கு முகம் காட்டாது ஒழிவதே -என்கிறார் –
நெடு வரையின் உச்சி மேலாய் –
பூமியில் உள்ளார் அனுபவிக்கை அன்றிக்கே
ஊர்த்தவ லோகங்களிலும் உள்ளாரும் அனுபவிக்கலாம் படி
திரு மலையிலே நின்று அருளினவனே
வானவர் வானவர் கோனுடன் நமன்று எழும் திருவேங்கடம் -என்னக் கடவது இறே
ஊர்த்த்வ லோகங்களை அளந்த திருவடிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறது ஆய்த்து -திருமலையின் -நிலை –
ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்கும் அகப்பட முகம் கொடுக்கக் கடவ நீ
எனக்கு முகம் காட்டாது ஒழிவதே –
(எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2-
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7-
புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–நான்முகன் திருவந்தாதி -45-
மந்திபாய் வட வேங்கட மா மலை -வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -)
நிலாத் திங்கள் துண்டத்தாய் –
இதுவும் நாயனார் ஸ்வ பாவத்தைப் பற்ற திருப்பதிக்கு திரு நாமம் ஆகிறது –
சகல கலைகளாலும் பூர்ணனான சந்தரனைப் போலே
தாப த்ரயாதுரர்கு தாப ஹரனாயும்
அனுபவிப்பார்க்கு போக்யமுமாய் -இருக்கிறவனே –
ஸூர்யாம் சுஜநிதம் தாபம் நின்யேதாராபதிஸ் சமம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே
ஆதித்ய கிரணங்களாலே தப்தரான சேதனர்க்கு சாந்தி ஹேதுவாயும் –
ஆஹ்லாத கரனுமாயும் இறே சந்தரன் இருப்பது –
(பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள ஸந்நிதி
சந்த்ர சூட பெருமாள் என்றும் சொல்வார் –
மூலவர் நிலாத் திங்கள் துண்டத்தான், நின்ற திருக்கோலமாக மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
பேர் ஒருவர் இல்லா வல்லித்தாயார் -நிலாத் திங்கள் துண்டத்தாய்த் தாயார் –
அலங்கார பூஷிதனாக அழகுத் தோற்றம் காட்டும் நிலாத் துண்டப் பெருமாள், நோய் தீர்க்கும் நாயகன் என்றும் போற்றப்படுகிறார்.
பார்வதி அருகே உள்ள வாமனர்தான் மாமரத்தை தழைக்க வைத்த பெருமாள் என்றும் கூறுவர்.)
நிலாத் திங்கள்
கலை குறைந்த நாளில் நிலா மழுங்கி இருக்கையாலே -நிலாத் திங்கள் -என்கிறது –
பூமியிலே ஒரு கண்டம் இறே திருப்பதி யாகிறது –
அத்தைப் பற்ற –துண்டம் -என்கிறது –
(திங்கள் என்று மட்டும் அல்லாமல் நிலா விசேஷணத்துக்கு வியாக்யானம் )
இத்தால்
அல்லாத தேசங்களில் காட்டில் இதுக்கு உண்டான வ்யாவர்த்தி தோற்ற சொல்கிறது –
திரு உலகு அளந்து அருளின போதை வடிவில் ஸ்ரமஹரதைக்கும் போக்யதைக்கும் ஸ்மாகரமாய் இருக்கிறது –
சர்வர்க்கும் ஸ்ரமஹரனாய் ஆஹ்லாத கரனாய் இருக்கிற நீ
எனக்கு முகம் காட்டாது ஒழிவதே –
நிறைந்த கச்சி ஊரகத்தாய் –
அழகாலும் சீலத்தாலும் காஞ்சிபுரம் இத்தனையும் நிரம்பி
சுழி யாறு படும்படி
திரு ஊரகத்தில் நின்று அருளினவனே
திரு உலகு அளந்து அருளினமையை பிரத்யபிஞ்ஞை பண்ணலாம் படி இறே அங்கு நிற்பது –
(உலகு அளந்த பெருமாள் -அம்ருத வல்லித் தாயார்)
நிறைந்த கச்சி
சோபயன் தண்டகாரண்யம் -என்னுமா போலே
திருக் கச்சி அடைய இவர் நிழலீட்டாலே நிரம்பி இருக்கை –
திருப்பதிகளிளாலே நிறைந்த கச்சி -என்னவுமாம்-
ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய் -(வேகா சேது ஸ்தோத்ரம் தேசிகன் -வேகா அணை வேகவதிக்கு அணை -வெக்கணை -வெக்கா )
திரு வெக்காவில் அழகிய துறையைப் பற்றி கண் வளர்ந்து அருளினவனே –
அல்லாத துறைகளைப் போல் அன்றியே
ஆழ்வார் திரு மழிசைப் பிரான் இழிந்து தீர்த்தம் ஆடின துறை யாகையாலே –
அழகிய துறை -என்கிறது -(யதோ யுக்த காரி சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -)
தத் சம்பந்தத்தாலே இறே அத்துறையைப் பற்றிக் கிடக்கிறது –
ஆஸ்ரிதன் போன போது அவன் பின்னே போயும்
அவன் வந்தவாறே வந்து
கால் கடை தலை மாடாக கிடந்தும் -இப்படி இறே
அங்குத்தை ஆஸ்ரிய பாரதந்த்ர்யம் இருப்பது –
(ஓர் இருக்கை –கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி, மணி வண்ணா! நீ கிடக்க வேண்டா-
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்.”-
“கணி கண்ணன் போக்கொழிந்தான் காமரூ பூங் கச்சி, மணி வண்ணா! நீ கிடக்க வேண்டும் –
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந் நாகப் பாய் படுத்துக் கொள்.” )
என்ற விடுதிப் பாசுரங்களைத் திருமழிசைப்பிரான் வைபவத்திற் காண்க.-)
இருந்த வூரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ –என்று
வைஷ்ணவன் இருந்த தேசம் வைஷ்ணவனுக்கு உத்தேச்யமாக இருக்குமா போலே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள ஒரு துறையும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –
வாசல் கடை கழியா வுள் புகாகா மாமரு பூம் கோவலிடைகழியே பற்றி இனி – என்று
அவர்களோடு கூட நெருக்கிக் கொண்டு புகுந்து இருந்து
அவர்கள் போன இடத்திலும்
அவ்விடத்தை விடாதே இருந்த படிக்கு
ஸ்மாரகமாய் இருக்கிறது ஆய்த்து திரு வெக்காவில் நாயனார் ஸ்வ பாவம்
ஆஸ்ரிதரோடு கால் கடை தலை மாடாக இறே பரிமாறிக் கிடக்கிறது –
(பக்த பராதீனன் திசை மாற்றி கண் வளர்ந்து சொன்ன வண்ணம் செய்தமையைக் காட்டி அருளவே )
(நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —முதல் திருவந்தாதி -86-புலவர் நெருக்கு உகந்த பெருமாள் )
சொன்ன வண்ணம் செய்தார்
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளது ஒன்றை விடாதே இருக்கிற நீ
உன்னை ஒழிய செல்லாத எனக்கு
முகம் காட்டாது ஒழிவதே-
உள்ளுவார் உள்ளத்தாய்-
சேஷி ஒருவன் உண்டு என்று அனுசந்திப்பார் உடைய ஹிர்தயத்தில் நித்ய வாஸம் பண்ணுமவனே –
திருப்பதிகள் நிலையம் ஓர் ஆஸ்ரிதன் உடைய ஹ்ர்தயத்தை கணிசித்து இறே –
(உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -முதல் திருவந்தாதி-99-)
நின்ற எந்தை -இத்யாதி –
ஆசாலேசம் உடையவர் ஹ்ருதயத்தில் குடி இருக்கக் கட நீ
உன்னை ஒழிய செல்லாத எனக்கு
முகம் காட்டாது ஒழிவதே –
யுலகமேத்தும் காரகத்தாய் –
லோகம் அடங்க -ஏத்தும்படியாக
திருக் காரகத்திலே நின்று அருளினவனே
(கருணாகரப் பெருமாள் -பத்மா மணித் தாயார் ரமா மணித் தாயார்
மூலவர் : கருணாகரப் பெருமாள்
தாயார் : பத்மாமணி நாச்சியார்
கோலம் : நின்ற கோலம்
விமானம் : வாமன விமானம்
தீர்த்தம் : அக்ராய தீர்த்தம்
ஆதிசேஷன் குடை பிடிக்கப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்)
லோக விக்ராந்த சரனௌ -என்றும்
சர்வ லோகங்களும் வழக்கு பேசி ஆஸ்ரயிக்கலாம் படி
த்ரை விக்கிரம அபதானம் பண்ணின ஆயனுடைய
சர்வ சமாஸ்ரயணீ யதைக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி –
சர்வ சமாஸ்ரயணீயனான நீ எனக்கு முகம் காட்டாது ஒழிவதே –
கார் வனாத்துள்ளாய்-
வர்ஷூக வலாஹம் போலே -திருக் கார்வனத்திலே வர்த்திக்கிறவனே
இத் திருப்பதிக்கு திரு நாமம் இந் நாயனார் ஸ்வ பாவத்தை பற்றி இறே ஆய்த்து –
(கார்வானத்துள்ளாய் கள்வா என்று இத்தலத்து எம்பெருமானின்
பெயரையும் சேர்த்தே ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.
திருவூரகத்திற்குள்ளே இருக்கும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் மற்ற
இருவருக்குமில்லா தனிச் சிறப்பாகும் இது. நீரகத்தாய் என்றும், காரகத்தாய்
என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த திருமங்கை இந்த
திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது மட்டும் எம்பெருமானின்
பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.
திருக்கள்வனூர் என்ற ஒரு திவ்யதேசம் காஞ்சியில் உண்டு. ஆனால்
அந்த திவ்ய தேச எம்பெருமானுக்கு ஆதிவராகன் என்பது திருநாமம். இந்தக்
கார்வானத்து எம்பெருமானுக்குத்தான் கள்வர் என்றும் திருநாமமாகும்.
கார்வானத்துள்ளாய் கள்வா என்னும் மங்களாசாசனத்தால் கார்வானம் என்னும் திவ்யதேசத்தில் உள்ள எம்பெருமானாகிய கள்வனைத்தான் மங்களாசாசனம் செய்ததாகக் கொள்ள வேண்டும்.
இதில் உள்ள கள்வா என்னும் சொல் காஞ்சியில் காமாட்சியம்மன்
கோவிலுக்குள் உள்ள ஆதிவராகப் பெருமாளை மங்களாசாசனம் செய்ததாகக்
கொண்டு அத்தலத்திற்கும் தலைப்பிட்ட இப்பாடலையே மங்களாசாசனப்
பாடலாக நம் முன்னோர்கள் எடுத்தாண்டுள்ளனர்.)
மூலவர்–கள்வர், வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- கமலவல்லி, தாமரையாள்
தீர்த்தம்- கௌரீ தீர்த்தம், தராதர தீர்த்தம்
விமானம்– புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்- பார்வதி)
மேகம் பிரயோஜன நிரபேஷமாய் ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே வர்ஷிக்குமா போலே
அர்த்தித்வ நிரபேஷமாக எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த
ஆயனுடைய ஔதார்யத்துக்கு ஸ்மாரகமாய் இருக்கிறது –
அபேஷா நிரபேஷமாக ஔதார்யம் பண்ணக் கடவ நீ
என் பக்கலில் ஔதார்யம் பண்ணாது ஒழிவதே –
மேகம் போன்ற ஸ்வ பாவம் உடையவனே
1-பெய்ய வேண்டிய இடம் அளவும் சென்று பெய்யும்
வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
2- மின்னல் உள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும்
பிராட்டி உடன் இருந்தால் கிருபா ரசம் விஞ்சி இருக்கும்
இவள் சந்நிதியால் காகம் தலைப் பெற்றது அது இல்லாமையால் ராவணன் முடிந்தான்
3- மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்
தனக்கு உபதேசித்தார்க்கும் உபதேசிப்பான்
சித்ர கூடத்தில் வசிஷ்டன் பெருமாள் இடத்திலே சில சூஷ்ம தர்மங்கள் கேட்கப் பெறலாயிற்று
4-பெய்யப் பெறாத காலத்திலே வரைக்கும் மேகம்
நெஞ்சு உலர்ந்து பேசினான் இறே திரௌபதிக்கு ஆபத்திலே நேரிலே வந்து உதவப் பெறாமையாலே
5-இன்ன காலத்தில் மேகம் பெய்யும் என்று அறுதியிட வல்லார் யாரும் இல்லை
வந்தாய் போலே வாராதே வாராதே போலே வருவானே
திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான்
அபேஷியாது இருக்கவே தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்டான்
6- வனத்திடை ஏரியாக வெட்டி யாயிற்று நீ மழை பெய்தாக வேணும் என்று வளைப்பிட ஒண்ணாது
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்தனன்
7- ஜல ஸ்தல விபாகம் இன்றியே பெய்யும் மழை
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம்
இடையர் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -பகவத் விஷயீ காரம் பெற்றவர்கள்
8-மேகம் சரத் காலத்திலே கர்ஜித்து போய் விடும் மழை பெய்யாது பெய்யும் காலத்தில் ஆடம்பரம் அறப் பெய்யும்
எம்பெருமான் குசேலருக்கு அருள் செய்தபடி
9- விராட பர்வ கால ஷேபத்துக்கு வரும் மேகம்
பகவத் விஷய கால ஷேபத்துக்கு வந்து நிற்கும் எம்பெருமான்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் என்று வந்தான் இறே ஸ்ரீ ரெங்க நாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே
10- சுக்திகளில் பெய்து முத்தாக்கும் மேகம்
அடியாருக்கு இன்ப மாரியாகிய எம்பெருமான் கடாஷ தாரையும்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் இடத்தே பிரவஹித்து மிக்க பயன் தரும்
11-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் -இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்
இவனும் இன்னார் தூதன் என நின்றான்
கோதை வேலை ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் இறே
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்
எருக்கலை போல்வன வீழ்ந்து ஒழியும்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய்
தாயார் மகிழ ஒன்னார் தளர
13- எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் பைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் -வேறு புகல் அற்று
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -அநந்ய கதிகளால்
14-துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை -என்கிறபடி
அன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேது வாகையாலே போக ஸ்தானமாயும்
விடாய் தீர பருகுகையாலே ஸ்வயம் போக்யமாயும் இருக்கும்
பிராப்யனும் பிரபகனுமாய் இறே இவனும் இருப்பது
15-எத்தனை கண்ணீர் விட்டாலும் விருப்பம் இல்லாத அன்று வாளா இருக்கும் மேகம்
பரதாழ்வான் பலருடன் சித்ர கூட பரிசரத்திலே போந்து கண்ணநீரை விழ விட்டு வேண்டினவிடத்தும்
ஸ காம மன வாப்யைவ -என்று மநோ ரதம் பெறாமல் வீண்டான் இறே)
கள்வா-
அபஹாரகனே
நாம் -கள்வா -என்ன மாட்டோமே-இவரோபாதி பந்தம் இல்லாமையாலே(பக்தி பாரவஸ்யத்தாலே திரு நாமம் சாத்துகிறார் )
அபஹாரமாவது -ஒருவனுக்காய் இருக்கும் அத்தை அவனுக்கு ஆகாதபடி மறைக்கை –
ஆஸ்ரிதனுக்கு அனுபாவ்யமான வடிவை அவனுக்கு கொடாது ஒழிகை இ றே ஈஸ்வரனுக்கு அபஹாரம் ஆவது –
அது இறே சேதனனுக்கு ஆத்மா அபஹாரம் ஆகிறது –
ததர்த்தம் ஸ்வ ரூபமாய் இருக்க –
அத்தை இசையாதே ஸ்வ தந்த்ரோஹம் -என்கை இறே அபஹாரம் ஆகிறது –
என்னுடைய ஆத்மா அபஹாரத்தை தவிர்த்தது
உன்னுடைய ஆத்மாவை அபஹரிக்ககவோ
தாதர்யத்தை ஜீவிப்பித்தது –பக்தாநாம் -என்கிற இத்தை அழிக்கைக்கோ –
(இதில் உள்ள கள்வா என்னும் சொல் காஞ்சியில் காமாட்சியம்மன்
கோவிலுக்குள் உள்ள ஆதிவராகப் பெருமாளை மங்களாசாசனம் செய்ததாகக்
கொண்டு அத்தலத்திற்கும் தலைப்பிட்ட இப்பாடலையே மங்களாசாசனப்
பாடலாக நம் முன்னோர்கள் எடுத்தாண்டுள்ளனர்.)
(ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–-ஜிதந்தே ஸ்தோத்ரம் -5-)
(பண்டே யுன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே
மண்டத்தோர் புள் வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக் கள்வா
என்று ஓதுவது என் கண்டு)
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் –
ஸ்பர்ஹணீயமான அழகை உடைய
காவிரியின் தென் பார்ஸ்வத்திலே
திருப் பேரிலே
நித்ய வாஸம் பண்ணுகிறவனே
கோயிலை -நடுவே வுடைத்தாய் ஆகையால் -காமரு பூம் காவேரி -என்கிறார்
ரஷ்ய ரஷக விபாகம் அற இரண்டு தலைக்கும் உத்தேயமாய் இறே கோயில் இருப்பது –
(ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு))
தென் பால் –
கரையே வழி போவார் உண்டோ என்று கரையைப் பற்றி கிடக்கிற படி –
ஜீவன அர்த்தமாக கரையைப் பற்றி இருப்பாரைப் போலே
ரஷகத்வ சித்திக்காக கரையைப் பற்றி கிடக்கிற படி –
மன்னு –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்போம் என்று கிடக்கிற படி இறே –
ஆரோ நம்மை வந்து கிட்டுவார் என்று அவசர ப்ரதீஷனாய் கிடக்கிற நீ எனக்கு முகம் காட்டாது ஒழிவதே –
இதுவும் ஆஸ்ரிதனை ஒழிய செல்லாது இருக்கிற ஆயனுக்கு ஸ்மாகரமாய் இருக்கிறது –
பேராது என் நெஞ்சின் உள்ளாய் –
உன்னை சஷூர் விஷயம் ஆக்காது ஒழிந்தால்
மனஸ்ஸூக்கு விஷயம் ஆக்கவும் வேணுமோ –
அகவாய் பெரிய திருநாளாய் செல்லும்படி பண்ணினால்
புறம்பு ஊத்தும் சுவடும் அற்று கிடக்கவும் வேணுமோ –
நெஞ்சுக்கு விஷயம் ஆக்காது ஒழிந்தாய் ஆகில்
மறந்து பிழைத்தல் ஆய்த்தே –
கண்டு பிழைத்தல் ஆய்த்தே
1-கண்டு பிழைக்கப் பெற்றிலேன்
2-மறந்து பிழைக்கப் பெற்றிலேன்
3-முடிந்து பிழைக்கப் பெற்றிலேன் –
கண்டு பிழைக்கப் பெற்றிலர் -காட்சி அவன் பக்கலது- ஆகையாலே
மறந்து பிழைக்க மாட்டிற்று -இலர் -விஷய வைலஷண்யத்தாலே –
முடிந்து பிழைக்கப் பெற்றிலர் இன்னம் ஒருக்கால் காணலாம் என்னும் நசையாலே
பிரிந்தாலும் -அது அது -என்று கிடக்கும் படி இறே விஷய வைலஷண்யம் இருப்பது
விஷயாந்தராங்கள் ஆகில் இறே நாளோட்டத்திலே மறந்து பிழைக்கல் ஆவது –
நாள் செல்லச் செல்ல ஆற்றாமை மிகுக்கும் விஷயம் இறே –
முடிந்து பிழைக்க மாட்டு கிறிலர் -சத்தை அவன் ஆதீனம் ஆகையாலே
பிராட்டிக்கு ஆற்றாமை மீதூர்ந்து வேண் யுத்க்ரனத்திலே
ஒருப்பட்ட இடத்திலும் முடியப் போய்த்து இல்லையே
தான் பிறர் சரக்கு ஆகையாலே
உயிரினால் குறைவிலம் -என்ற இடத்திலும் முடியாமையாலே
சாமாறே -பணி -என்று அவனை இரக்க வேண்டிற்று இறே-
(உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை யென்ன உலகியற்கை?,
கண்ணாளா கடல் கடைந்தாய் உன் கழற்கே வரும் பரிசு,
தண்ணாவா தடியேனைப் பணி கண்டாய் சாமாறே. –4-9-1-)
பெருமான் –
இப்படிப் பட்ட திருப்பதிகளுக்கு தொகை இல்லாதவனே
ஆயன் -ஸ்வ பாவத்துக்கு ஸ்மாகாரமான திருப்பதிகளுக்கு தொகை இல்லாமையாலும்
அவை எல்லாவற்றையும் பேச தமக்கு சக்தி இல்லாமையாலும்
அனுக்தமான திருப்பதிகளை சமுச்சியிக்கிறார் –
அதவா
பெருமான்
சேஷியானவனே –
முறை அறிந்து என்ன கார்யம் செய்தேன் -என்கிறார் –
முறை அறிந்திலேன் ஆகையாலே சம்சாரிகளைப் போலே விஷய பிரவணனாய் கழித்து திரியல் ஆய்த்து —
தாபத் த்ரய தப்தரான சம்சாரிகளைப் போலே யாகப் பெற்றிலேன் என்பான் என் என்னில்
அஹங்கார மமகாரங்கள் அடியாக வரும் துக்கத்தை பொறுக்கலாம்
அது போல் அன்றே விரஹ தாபம் –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றது சுக ஹேது என்று இருந்தோம் –
துக்க ஹேதுவாய் தலைக் கட்டிற்றீ என்கிறார் –
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் ஸ்வரூப அனுரூபமான ஜீவனம் பெற்றால் இறே -சுகம் உள்ளது
அல்லாத போது துக்க ஹேதுவாம் இத்தனை இறே –
மாந்த்யம் உடையவனுக்கு இறே பசி உத்தேச்யமாவது –
பசியனுக்கு சோறு பெறாத போது பசி தானே துக்க ஹேதுவாய் இறே இருப்பது –
ஒன்றில் சம்சாரிகளைப் போலே விஷய அனுபவத்தில் களித்தேன் அல்லேன் –
முக்தரைப் போலே பகவத் அனுபவத்தில் களித்தேன் அல்லேன்
முமுஷூக்களைப் போலே ஸ்வரூபத்தை உணர்ந்து
தத் தஸ்ய த்ர்தசம் பவேத் -என்று இருந்தேன் அல்லேன் –
இவை ஒரு கோடியிலும் அன்வயிதாய் இருப்பதொரு புடை உண்டாவதே –எனக்கு என்கிறார் –
(அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-)
தேகாத்ம அபிமாநிகளாய்-விஷய பிரவணராய் திரிகிற உமக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை அறிவிப்பித்து –
நம்மோட்டை சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே சுக துக்க ரூபமாம் படி புகுர நிறுத்தி
இப்படி நாம் பண்ணின உபகாரங்கள் எல்லாம் கிடக்க
க்ர்தக்னரைப் போலே
நீர் கூப்பிடுவான் என் என்னில் –
உன் திருவடியே பேணினேனே –
செய்த அம்சத்தில் க்ர்தக்னனாய் கூப்பிடுகிறேன் அல்லேன் –
அவ்வம்சத்தில் க்ர்தஞ்ஞன்
உன் திருவடிகளை காண வேணும் என்கிற ஆசையினால் கூப்பிடுகிறேன் -என்கிறார் –
நாட்டாரில் காட்டில் ஒரு வ்யாவர்த்தியோ எனக்கு புருஷார்த்தம்
உன்னைக் கண்ணால் கண்டு அனுபவிக்கை அன்றோ எனக்கு புருஷார்த்தம்
உன் திருவடியைக் காட்டாத படியால் நீ பண்ணின க்ர்ஷியும்
துக்க ஹேதுவாய் விட்டது இத்தனை
உன் திருவடி –
பிராப்யமும் பிராபகமுமான உன் திருவடி
அநேகம் திருப் பதிகளைச் சொல்லி
உன் திருவடி -என்கையாலே –
ஆயன் படியையே திருப்பதிகளிலும் அனுபவிக்கிறார்
என்னும் இடம் தோற்றுகிறது
உன் திருவடி –
ஏவம் விதமான -ஸ்வ பாவத்தை உடைய உன் திருவடி
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply