திரு நெடும் தாண்டகம்–10–பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

ஆஸ்ரிதர் இருந்த இடத்தே சென்று முகம் கொடுக்குமவனாய்
யோக்யதை அயோக்யதை பாராதே முகம் கொடுக்குமவனாய் இருக்க
சர்வதா நமக்கு முகம் காட்டாது ஒழிந்தது –
அடியிலே –
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் –என்று சொன்னவர் –
சாதனத்தில் அந்வயித்து வந்து முகம் காட்டாது ஒழிந்தானாக வேணும் என்று சங்கித்து

சம்பந்த ஜ்ஞாபகமான திரு மந்த்ரத்தை உபகரணமாகக் கொண்டு –
இங்கே அனுபவிப்பார்க்கு அங்கே யாவதாத்மபாவி அனுபவிக்கலாம் என்று
கால ஷேப அர்த்தமாக சொன்ன இத்தனை ஒழிய

பிராப்யம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறியில் அன்றோ –
பிராபகம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறிவது –
நான் என் அறிவன் -என்கிறார்

மந்தரத்தால் -என்கையாலே -ஒரு சாதன பாவமும்
மறவாது வாழ்தியேல் -என்கையாலே -ஒரு கர்த்தவ்யமும் –
வாழலாம் -என்கையாலே -(வேறே )ஒரு பலமுமாய்த் தோற்றும் இறே –

இவருடைய நோற்ற நோன்பு இருக்கிறபடி –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்று
ஆகிஞ்சன்யத்தைச் சொல்லி யாகிலும்
இனி உன்னை விட்டு ஓன்று மாற்ற கிற்கின்றிலேன் -என்று
ருசியில் குறைவற்று இருக்கிறபடியையும்
அருளிச் செய்தார் இறே –

(நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-)

(தமக்கு ருசியில் குறைவற்று இருக்கிறபடியையும்-கீழ் 4 -பாசுரத்தில் அருளிச் செய்து
இதில் ஆகிஞ்சன்யத்தை வெளியிட்டு அருளுகிறார்)

———————————————————————————————-

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-

பதவுரை

உலகம் ஏத்தும்-உலகமடங்கலும் துதிக்கத் தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே!
வட ஆனாய்-வட திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே!
குட பால் ஆனாய்–மேற்றிசையில் (கோயிலில் திருக் கண் வளர்ந்தருளுகிற) யானை போன்றவனே!
குண பால மதம் யானாய்–கீழ்த் திசையில் (திருக் கண்ணபுரத்தில்) மத யானை போன்றவனே!
என்றும்–எக் காலத்திலும்
இமை யோர்க்கு முன்னானாய்-நித்ய ஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே!
பின்னானார் வணங்கும் சோதி–அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத் தக்க சோதியாக
திரு மூழிக் களத்து ஆனாய்–திரு மூழிக் களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
முதல் ஆனாய்–முழு முதற் கடவுளே!
பொன் ஆனாய்–பொன் போன்றவனே!
பொழில் ஏழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்–ஸப்த லோகங்களையுங் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே!
இகழ்வு ஆய தொண்டனேன் ஏழையேன் நான்–இகழ்வையே வடிவாக வுடைய தொண்டனாய் அறிவிலியான நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னால் அல்லால்–என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுமித்தனையல்லது
என் அறிவன்-வேறு என்ன வென்று சொல்ல அறிவேன்?

லோகத்தார் ஸ்துதிக்கத் தக்கதான தென் திருமாலிருஞ்சோலை மலையிலே நின்று அருளினவனே
வட திருவேங்கடத்திலே நின்று அருளினவனே
மேற்குத் திக்கில் கோயிலிலே கண் வளர்ந்து அருளுமவனே
கீழ்த் திசையிலே திருக் கண்ண புரத்தில் மத யானை போல் செருக்குத் தோன்ற நின்றவனே
நித்ய ஸூரிகளுக்கு எக்காலத்திலும் கண்ணால் கண்டு அனுபவிக்கலாம் படி முன்னே இருப்பவனே
அவதாரத்துக்குப் பிற்பட்டவர்கள் ஆஸ்ரயிக்கத் தக்கதாக தேஜோ மயனாய் திரு மூழிக் களத்திலே வர்த்திக்கிறவனே
ஜகத் காரண பூதனே
பொன் போலே எப்படியாலும் எனக்கு உபகரிக்குமவனே
ஸப்த லோகங்களையும் ரஷிக்கையால் வல்ல குண பிரதையை யுடையவனே
இகழவையே வடிவாக யுடைய தாஸ பூதனான நான்
என்னுடைய ஆனாய் என்னுடைய ஆனாய் என்று சொல்லும் அத்தனை அல்லது
உன் விஷயத்தில் அதி சபலனான நான்
உன்னுடைய குண சேஷ்டிதங்களிலே எத்தை அறிவேன் –

————————————————————————————————-

பொன்னானாய் –
எனக்கு பிராப்யன் ஆனவனே –
1-ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் -என்றும்
2-அவயயோநிதி (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்-30-ஆபத் தனம் )-என்றும் –
3-வைப்பாம் -என்றும்
ஸ்ருதி-ஸ்மரதி-இதிகாச புராணங்களிலே
நிதி சப்தத்தாலே பிராப்யத்தை சொல்லக் கடவது இறே –

(பிரசாசிதாரம் சர்வேஷாம் அணீயாம் சமணீயசாம்
ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்–மனு ஸ்ம்ருதி -12–122-)
( பரம புருஷனை எல்லாவற்றையும் நியமிக்கப்படுகின்றவனாகவும் சூஷ்மமானத்தைக் காட்டிலும் சூஷ்மமானவனாயும்
ஓடவைத்த பொன்னிறம் யுடையவனாகவும் கனவில் உள்ள புத்தி போன்ற யோகத்தால் அடையத் தக்கவனாயும் அறிதல் வேண்டும் )

(வைத்த மா நிதி -தனம் மதியம் தவ பாத பங்கஜம் -நிதியினை பவளத்தூணை)

தனம் ஆவது
1-ஆபத் சகமாய் –
2-உண்டு என உயிர் நிற்கும்படியாக
3-சர்வ அனுபாவ்யமாய் -இறே இருப்பது –

இப்போது இது சொல்கிறது -உன்னை ஒழிய வேறு ஒரு பிராப்யம் உண்டு என்று அறியில் அன்றோ
உன்னை ஒழிய வேறு ஒரு பிராபகம் உண்டு என்று அறிவதற்காக என்கைக்காக –

(பொன்னானாய்! =
பொன் போன்றவனே! எம்பெருமானைப் பொன்னாகக் கூறுவதற்குப் பல பொருத்தஞ் சொல்லலாம்;
அதாவது-
பொன்னானது தன்னைப் பெற்றவர்களையும் பெற விருப்பமுடையாரையும் இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது;
எம்பெருமான் படியும் அப்படியே;
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பு முமுக்ஷுக்களை உறங்கவெட்டான்;
கண்ட பின்பும் * ஸதாபச்யந்தி யாகையாலே நித்ய முக்தர்களை உறங்கவொட்டான்.
பொன்னானது தன்னையிழந்தவனைக் கதறிக் கதறி யழப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே: ஸ்ரீராமபிரானை யிழந்த பரதாழ்வான் ஸபையிற் புரண்டு கதறிழுதமை ஸ்ரீராமாயணாதிப்ரஸித்தம்.
“பழுதே பலபகலும் போயின” வென்று கதறியழுவர் விவேகமுடையார்.
“இன்பத்தை யிழந்த பாவியேனெனதாவி நில்லாதே”
“எழில்கொள் நின் திருக்கண்ணினை நோக்கந் தன்னையுமிழந்தேனிழந்தேனே”
“உன்னைக் காண்பான் நானலப்பாய் ஆகாசத்தை நோக்கியழுவன் தொழுவனே” என்றிப்படியெல்லாங் கதறுவர்கள்.
பொன்னானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்; தன்னை யுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே; “எனக்காரும் நிகரில்லையே”
“மாறுளதோவிம்மண்ணின் மிசையே”
“எனக்கென்னினி வேண்டுவதே”
“இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்களிறே எம்பெருமானையுடையார் –
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.)

அங்கன் அன்றிக்கே –
பிராபக அபேஷை உள்ளது -பிராப்ய சித்திக்கே இறே –
அத்தைப் பற்றி சொல்லிற்று ஆகவுமாம்

பொழில் ஏழும் காவல் பூண்ட
வைப்பாம் மருந்தாம் -என்றார் இறே நம் ஆழ்வார்
மேல் சொல்கிற சாதனம் –அநந்ய சாத்யே-என்கிற சாத்தியத்துக்கு அனுரூபமாக
பிரதமத்திலே உபாதானம் பண்ணுகிறது ஆகவுமாம் –

(வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-)

(அநந்ய சாத்யே மஹா விசுவாச பூர்வகம் ததேக உபாயதாயாஞ்ச பிரபத்தி சரணாகதி)

ஆனாய் –
நான் விஷய பிரவணனாய் திரியா நிற்க
உன்னுடைய வினை கேட்டாலே நீயே மேல் விழுந்து
எனக்கு ருசியைப் பிறப்பித்து -பிராப்யன் ஆனாய் –
இத்தனை அன்றோ செய்தது-

பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் –
இத்தால் –பிராபகமும் நீயே என்கிறார் –
லீலா விபூதிக்கு ரஷகன் ஆனவனே –

பொழில் எழும் -என்று
சப்த லோகங்களையும் சொல்கிறது –

இத்தால் கீழ் உள்ள லோகங்களையும் உபலஷிக்கிறது
ஈத்ர்சாநாம் -என்கிற அண்டாந்தரங்களுக்கும் உப லஷணம்
பொழில் -லோகம்

காவல் பூண்ட –
ராஜாவாக அபிஷேகத்தை பண்ணி இருந்து ஆளிட்டு ரஷிக்கை இன்றிக்கே
கையிலே ஆயுதத்தை எடுத்து ஓர் ஊரை நோக்குவாரைப் போலே அன்றோ
சகல லோகங்களையும் அவதானம் பண்ணி ரஷிப்பது –

பூண்ட –
ரஷண பிரதிபந்தகம் உண்டானாலும் -அதில் குறையாது இருக்கை
அதாவது எத்தைனையேனும் அந்தரங்கமான மகா ராஜ பிரதிபத்திகளும்
வத்யதாம் -என்றாலும்
நத்யஜேயம் -என்னும்படி இறே ரஷகத்வத்தில் பூட்சி இருப்பது –
அபயம் சர்வ பூதேப்யோ -என்கிறபடியே
தன் கையில் தன்னைக் காட்டிக் கொடாதே இறே ரஷிப்பது

(வத்யதாம் ஏஷ தண்டேந தீவ்ரேண ஸசிவைஸேஹ. ராவணஸ்ய ந்ருபஸம்ஸஸ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண:.

மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபிதஸ்ய சியாத் ஸதாம்ஏதத் …

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே| அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம …)

இத்தால் –
என்னுடைய அவித்யா கர்மா வாசனா ருசிகளைப் போக்கி
ரஷித்தாய் நீயே அன்றோ -என்கிறார் –

அதவா –
பூண்ட –போக்யதை இறே -வஸ்துவுக்கு வேஷம்
உபாயம் ஆகிறது கதி சூன்யதையால் இறே –
பால் பித்த ஹரமானாலும் கஷாயம் ஆகாது இறே –

இத்தால் –
நீயே மேல் விழுந்து அன்றோ எனக்கு பிராபகனாய் ஆயத்து என்கிறார்-

புகழானாய் —
இப்படி ரஷிக்கையால் வந்த குண ப்ரதையை உடையவனே –
யசஸ் சைக பாஜனம்
உலப்பில் கீர்த்தி அம்மானே -என்னக் கடவது இறே
யானி நாமானி கௌனானி -என்கிறபடியே
ரஷண தர்மத்தால் வந்த குண சேஷ்டிதங்களுக்கு வாசகமமாய் இறே திரு நாமம் இருப்பது –

(நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபன்னாம் பராம் கதிம் யசஸ்  ச ஏக  பாஜனம் (புகழுக்கு ஒரே இருப்பிடமாய் இருப்பவன்)

(உலகம் உண்ட பெருவாயா!* உலப்பு இல் கீர்த்தி அம்மானே,*
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!* நெடியாய் அடியேன் ஆர் உயிரே,*
திலதம் உலகுக்கு ஆய் நின்ற* திருவேங்கடத்து எம் பெருமானே,*
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.-6-10-1)

(யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||)

இகழ்வாய தொண்டனேன் நான் –
இத்தால் பிராப்ய பிராபகங்களை பிராபிக்க வுரிய அதிகாரி ஸ்வரூபத்தை சொல்கிறது –
உனக்கு புகழே வடிவாய் இருக்கிறாப் போலே அன்றோ
எனக்கு இகழ்வே வடிவாய் இருக்கிறபடியும் –

(குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்)

ஆகிஞ்சன்யம் இறே அதிகாரம்
ஸ்வ தோஷம் சம்பாதிக்க வேண்டியது இல்லை –
ஜ்ஞாபனமே-அபேக்ஷிதம் –

அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலயா –
ராவணோ நாம துர் வ்ருத்த –
அமர்யாதா சூத்திர -என்கிற இடங்களிலும்
ஜ்ஞாபனமே இறே உள்ளது –
சாத்தியம் ஆகிஞ்சன்யம் இறே –

(அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அநந்ய கதி -த்வமேவ உபாய பூதோ மே பவ –
பிரார்த்தனா மதி மாம் சரணாகதிர் இத்யுக்தா -சா -தேவேஸ்மின் பிரயுஜ்யதாம்-(அஹிர் புத்தி சம்ஹிதை பிரமாணம்)

(ராவணோ நாம துர் வ்ருத்த ராக்ஷசோ ராக்ஷஸேஸ்வர –)

(அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 62 –)

தொண்டனேன் நான் -(இத்தால் உறவும் ருசியும் சொல்லிற்று )
உன் பக்கலில் அதி சபலனான நான் –
இத்தால் –பிராப்ய ருசியைச் சொல்லுகிறது –
பிராபகப் பிரார்த்தனைக்கு -ஆகிஞ்சன்யமும் -ஸ்வ தோஷ ஜ்ஞாபனமும் வேண்டினவோ பாதி
பிராப்யப் பிரார்த்தனைக்கு பிராப்ய ருசி வேணும் இறே –
ஆகிஞ்சன்யமும் அவனை ஒழிய செல்லாமையும் இறே
த்வயத்துக்கு அதிகாரம் –

அதவா
இகழ்வாய தொண்டனேன் நான் –
ஒரு கட தாசி சார்வ பௌமனை ஆசைப்பட்டால் நாட்டார் இகழுமா போலேயும்
மௌஷ்டிகன் அபிஷேகத்தை ஆசைப் பட்டால் இகழுமா போலேயும் அன்றோ
நித்ய சம்சாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது-

(‘இகழ்வாய்‘ என்பதை, ‘இகழ்வு ஆய‘ என்றும் ‘இகழ் வாய‘ என்றும் பிரிக்கலாம்;
அடைவே, நீசனாகிய என்றும்,
இகழத் தக்க வாய் மொழியை யுடையேனான என்றும் பொருள் காண்க.
தண்ணீர்க்குடமெடுக்கும் தாஸியொருத்தி ஸார்வ பௌமனை ஆசைப் படுதல் போலவும்
பிச்சை யாண்டி பட்டாபிஷேகத்தை விரும்புதல் போலவுமன்றோ நித்ய ஸம்ஸாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது என்கிறார்.)

என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
இத்தால் -இவ்வதிகாரி உடைய கால ஷேபம் சொல்கிறது –
கால ஷேபத்துக்காக உன்னுடைய குணங்களை அனுபவித்தேன் இத்தனை ஒழிய
என் ஆற்றாமையை சாதனமாக நினைந்து இருந்தேனோ –

(ஆனை என்பது ஈறு திரிந்த விளியாய் ‘ஆனாய்‘ என்றாயி்ற்று;
‘என்னுடைய மத்த கஜமே! என்னுடைய மத்த கஜமே!‘ என்று ஏதோ வாய் வெருவுகின்றேனத்தனை யொழிய
ஸாதநாநுஷ்டானமாகச் சொல்லும் முறைமை யொன்றுமறியே னென்றவாறு.)

ஆனையினுடைய ஸ்வபாவங்கள் ஈஸ்வரனுக்கும் உண்டு ஆகையாலே
அந்த ஸ்வபாவங்களை பற்ற –என்னானாய் -என்கிறார் –
1-ஆனையானது -ஒரு நாள் கண்டோம் -என்று இருக்க ஒண்ணாத படி
நித்ய ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-பெரிய செருக்கை உடைத்தாய் இருக்கையும்
3-தான் நினைத்த பொது கைக்கு எட்டினாரை எடுத்து கழுத்தில் வைத்து கொள்ள கடவதாய் இருக்கும் –
4-தான் உகவாதவரை கீண்டு பொகட்டால் ஆராய்ச்சி இன்றிக்கே இருக்கையும் –
5-தன்னைக் கட்ட கயிறு தானே கொடுக்கக் கடவதாய் இருக்கையும் -இறே இருபது –

அப்படியே
1-நித்ய ஸ்பர்ஹணீயமான வடிவு அழகும்
2-செருக்கால் பலித்த சமாதிக ரஹீத்வமும்
3-ராஜா ஒரு பாணிச்சியை தனக்கு மகிஷி ஆக்கி வைத்தால்
நிவாகரரில்லாதாப் போலே
ஒரு நித்ய சம்சாரிக்கும் தன் பக்கல் ந்யச்த பரதையே ஹேதுவாக தன்னைக் கொடுத்தால்
நிவாரகர் இன்றியிலே இருக்கும் படியான ஸ்வா தந்த்ர்யமும் –
4-ஆனை தன் மேலே ஏறப் படிந்து கொடுக்குமா போலே
சாதநாந்தர நிஷ்டருக்கு
நேதாவாய் இருக்கிற சீலமும்
5-ஆஸ்ரித விரோதிகளை சம்பந்தம் கிடக்கச் செய்தே அழியச் செய்தாலும்
நிவாரகர் இல்லாத படியான விரோதி நிரசன சீலமும்
6-போக உபகரணமான பக்தியை தானே கொடுக்கக் கடவதான ருசி ஜனகத்வம் ஆகிற
இஸ் ஸ்வபாவங்கள் ஆய்த்து -இவருக்கு கால ஷேபத்துக்கு விஷயம் –

எட்டினோடு இரண்டு என்னும் கயிறு -என்று பக்தியை கயிறாகச் சொல்லக் கடவது இறே –
ஈஸ்வரனை புறம்பு போக ஒட்டாதபடி –
மனஸ் ஆகிற ஸ்தம்பத்தோடே
பக்தி யாகிற கயிறாலே இறே கட்டுவது –

(மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –திருச்சந்த விருத்தம் -83-)

வீப்சையாலே –
அவ்வ ஸ்வபாவங்களே கால ஷேபத்துக்கு விஷயமாய் இருக்கை –
நிவர்த்தி துச்சகம்
விஷயாந்தரங்களிலே இழிய ஒண்ணாது –
அவற்றுக்கு அஞ்சிப் புகுந்தவர் ஆகையாலே –
சாதனாந்தரங்களில் இழிய ஒண்ணாது –
வேறு ஒன்றை சாதனமாக சஹியாத உபாயத்தை பரிக்ரஹிக்கையாலே –
இனி இவ் விஷயம் தன்னை முகாந்தரத்தாலே அனுபவிக்கை இறே உள்ளது –

(உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -உபாயம் சரணாகதி இரண்டையும் பொறுக்காது -ஈஸ்வரன் தன்னைப் பொறுக்கும்)

என்னால் அல்லால் –
இப்படி தேவரீர் படிகளை அனுசந்தித்து
கால ஷேபம் பண்ணினேன் இத்தனை ஒழிய

என்னறிவேன்-
நான் அடைவு பட -சாஸ்திர க்ரமத்திலே -ஓன்று அறிவேனோ –

1-அமாநித்வாத்யாத்ம குணங்களை அறிவேனோ(ஸ்ரீ கீதை 13-7 ஸ்லோகம் தொடங்கி-13-11-வரை -20 ஆத்ம குணங்கள் )
2-கர்ம யோகத்தை அறிவேனோ
3-ஜ்ஞான யோகத்தை அறிவேனோ
4-உபய சாத்யமான பக்தி யோகத்தை அறிவேனோ –
நான் எத்தை அறிந்தேன் –

உறங்குகிறவனுக்கு விடிந்தால் போலே விஷயாந்தரங்களை ஒழியவே ஓன்று அறியாதே திரியச் செய்தே
உன்னுடைய வைலஷண்யத்தைக் காட்டக் கண்டேன் இத்தனை போக்கி –
சாதனாந்தரங்களை எங்கே கண்டேன் -என்கை –

(1-அமாநித்வம் = கர்வமின்மை
2-அதம்பித்வம் = தற்பெருமை இன்மை
3-அஹிம்ஸா = துன்பம் செய்யாமை
4-க்ஷாந்தி = பொறுமை
4-ஆர்ஜவம் = எளிமை, நேர்மை
5-ஆசார்யோபாஸநம் = ஆசாரியனை வழிபடுதல்
6-ஸௌசம் = தூய்மை
7-ஸ்தைர்யம் = உறுதி
8-ஆத்மவிநிக்³ரஹ = சுய கட்டுப்பாடு-ஆத்ம சப்தம் இங்கு மனசைச் சொன்னவாறு
9-இந்த்ரிய அர்தேஷு வைராக்யம் ச-இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை,
10-அநஹங்கார: ஏவ-அகங்காரம் இல்லாமை,–ஏவ ச -பிரதர்சனார்த்தம் முக்கியம்
12-ஜந்ம ம்ருத்யு-பிறப்பு, இறப்பு, ஜரா வ்யாதி-நரை, நோய்,து:க தோஷ-துக்கம், தோஷம்,
13-அநுதர்ஸநம்-இவற்றின் கண் இசைந்த காட்சியுடைமை.
14-புத்ர தார க்ருஹாதிஷு-மகனையும் மனைவியையும், வீட்டையும்,
அஸக்தி-பற்றின்மை, அநபிஷ்வங்க:-தன்னுடைமையெனக் கருதாமை,
ச-மேலும், இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு – விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே,
நித்யம் ஸமசித்தத்வம்-எப்போதுமே சமசித்தமுடைமை.)

நாமே பிராப்ய பிராபகங்கள் என்று அறிந்தீர் ஆகில்
உம்முடைய கையில் முதல் இல்லை என்று அறிந்தீர் ஆகில் –
நாம் செய்த படி கண்டு இருக்கை அன்றோ பிராப்தம் –
முகம் காட்டாது ஒழிவதே என்று கூப்பிடக் கடவீரோ -என்ன –

ஏழையேன்-
சாபல ப்ரேரிதன் ஆனால் நான் செய்வது என் –
அத்யந்த சபலன் ஆனேன் –

விஷயாந்தரங்களில் எனக்கு ஓர் அடைவு உண்டாகில் அன்றோ
இவ்விஷயத்திலும் எனக்கு ஓர் அடைவு உண்டாவது –

பிராப்த அப்ராப்த விவேகம் பண்ண ஒட்டாத என்னுடைய
சாபல அதிசயத்தாலே கண்டவற்றிலே கால் தாழ்ந்து போனேன் –
இத்தனை அன்றோ செய்தது –

ஆற்றாமையை சாதனம் என்று பழி இட்டு விடப் பார்க்கில்
நித்ய ஸூரிகளை முற்பட விட்டு பின்னை அன்றோ என்னை விடுவது –

ஆனையின் ஸ்வபாவங்கள் நமக்கு உண்டு என்று அறிந்தது சாஸ்திர முகத்தாலேயோ –
ஆசார்ய முகத்தாலேயோ என்னில் –
உகந்து அருளின நிலங்களிலே கண்டு அறிந்தேன் -என்கிறார் –

உலகமேத்தும் -இத்யாதி –
திருமங்கை மன்னன் கட்டின திக் விஜயங்கள் இருக்கிறபடி –

உலகமேத்தும் தென்னானாய் –
உபய விபூதியும் வந்து ஆஸ்ரயிக்கும் படி தெற்குத் திருமலையிலே நின்று அருளினவனே –
இருந்ததே குடியாக தெற்கு திக்கில் உள்ளார் வாழ்க்கை அன்றிக்கே –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்கிறபடியே –
நித்ய ஸூரிகளும் ஏற்று அங்கு அக்கம் உண்ண (சிறந்த விருந்து ஸுலப்யம் அனுபவிக்க )வரும் படி இறே திரு மலையிலே நின்று அருளிற்று
தெற்கு திக்கில் ஆனாய்

(வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-)

(உலகமேத்தும்) வடவானாய் –
அப்படியே இறே வடக்குத் திக்கிலும் நின்று அருளிற்று –
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –என்றும்
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும் -சொல்லுகிறபடியே
நித்ய ஸூரிகளோடு -ப்ரஹ்மாதிகளோடு -மனுஷ்யர்களோடு வாசி அற வாழும் படி
இறே திருவேங்கடமுடையான் நின்று அருளிற்று –

(எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2-)

(சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-)

(உலகமேத்தும்)குடபாலனாய் –
கீழ்ச் சொன்ன ஆனைகளைப் போலே நிற்கை அன்றியே
மேலைத் திக்கிலே ஒரு மத ஹஸ்தி சாய்ந்தாப் போலே ஆய்த்து –
கோயிலிலே வந்து பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி –
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய -என்கிறபடியே
சகல லோகங்களும் அனுபவித்து சத்தை பெறும்படி இறே கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

(வன் பெரு வானகம் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய, மண்ணுலகில் மனிசர் உய்ய,
துன்ப மிகு துயர் அகல, அயர்வொன்றில்லாச் சுகம் வளர, அகமகிழுந் தொண்டர் வாழ,
அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்,
இன்ப மிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே”-பெருமாள் திருமொழி )

(உலகமேத்தும்)குண பால மதயானாய் –
பெரிய முதலியார் பக்கல் தமக்கு உண்டான ஆதரத்தாலே
மன்னாருடைய வடிவு அழகையும் செருக்கையும் நிலை அழகையும் பற்ற
உடையவர் மன்னாரை அருளிச் செய்வர் –

(அருளிச் செயல்களைக் காட்டி அருளவே நாதமுனிகளையும் ஆளவந்தாரையும் கடாக்ஷித்து அருளிய மன்னார் அன்றோ)

(உலகமேத்தும்) குண பால மதயானாய் –
த்ர்தீயம் கிர்ஷ்ண நகரம் -என்கிறபடியே
பஞ்ச ஷேத்ரத்திலே த்ர்தீய ஷேத்ரமாகச் சொல்லுகையாலும்
கரு வரை போல் நின்றானை கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ -என்றும்
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
கற்றார் சேர் கண்ண புரம் -என்றும்
இவர் தாம் அத் தேசத்தில் மண்டி இருக்கையாலும்
திருக் கண்ண புரத்தை அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –
உலகம் ஏத்தும் -என்றது இங்கும் அந்வயிக்கக் கடவது –

(பஞ்ச கிருஷ்ண ஷேத்தரங்கள் -திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர் )

இமையோர் -இத்யாதி –
இத்தால் -பிராப்ய ஸ்தானத்தையும்
பிராபக ஸ்தானத்தையும்
அருளிச் செய்கிறார் –

இமையோர்க்கு என்றும் முன்னானாய் –
நித்ய ஸூரிகளுக்கு என்றும் ஒக்க பிரத்யஷ விஷயமாய் இருக்கிறவனே -(ஸதா பஸ்யந்தி ஸூரயா )

பின்னானார் -இத்யாதி –
பரம பதத்தோடு
ஷீராப்தியோடு
அவதாரங்களோடு
அர்ச்சாவதாரங்கள் உடன் வாசி அற –
பிற்பட்டாருக்கும் ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு
திரு மூழிக் களத்திலே-வர்த்திக்கிறவனாய்
நாஸ்திக்ய பிரசுரர் ஆனவர்களுக்கும், ஆஸ்ரயணீயனாகைக்கு இறே
மேலை சமுத்ரக் கரையிலே நித்ய வாசம் பண்ணுகிறது –

அதவா –
த்ரை வர்ணிக்க அதிகாரமாய் இருத்தல் –
சதுரத்த வர்ண அதிகாரமாய் இருத்தல் செய்கை இன்றியே
இனி இல்லை என்னும்படி நிஹீன ஜன்மத்திலே பிறந்தவர்களுக்கும்
ஆஸ்ரயணீயனாக இருக்கும் படியைச் சொல்லிற்றாகவுமாம் –

(மலையாள தேசம் மதம் மாறுபவர்கள் நிறைந்தவர்கள் என்று காட்டி அருளுகிறார்)

பின்னானார் வணங்கும்
தேச காலங்களால் விப்ரக்ர்ஷ்டரானாரோடு
ஜன்மத்தால் விப்ரக்ர்ஷ்டனாரோடு
வாசி அற சர்வ சமாஸ்ரயணீயன் -என்கை-

சோதி -திரு மூழிக் களத்தனாய் –
அந்தகாரத்தில் தீபம் போலே
நிஹீன ஜன்மாக்களும் ஆஸ்ரயிக்கலாம் படி நிற்கையாலே
சர்வ சமாஸ்ரயணீயத்தால் வந்த ஔஜ்வல்யம் –

திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை -என்றும்
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -என்றும் –
சொல்லக் கடவது இறே –

(‘திருமூழிக் களத்துறையு மொண் சுடர்‘ என்றும்
‘முனியே திருமூழிக்களத்து விளக்கே” என்றும்
“மூழிக்களத்து விளக்கினை” என்றும் சுடர்ப் பொருளாக அருளிச் செய்தல் குறிக் கொள்ளத் தக்கது:
அவ்வாறே இங்கும் “பின்னானார் வணங்குஞ் சோதி திருமூழிக்களம்” எனப்பட்டது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது;
அத் திருக்குணம் இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே;
அது தன்னிலும், கேவலம் அறிவிலிகளானவர்கட்கே காட்சி தருமிடமாகிய திருமூழிக்களத்தில்
அக்குணம் மிகமிக வொளிப்பெற்று விளங்குதலால்
‘ஒண்சுடர்‘ என்றும்
‘விளக்கு‘ என்றும்
‘சோதி‘ என்றும் இத் திருப்பதிக்குச் சிறப்பாகச் சொல்லுதல் ஏற்குமென்ப.
ஸகல ஜாதிகளிலும் பிற்பட்டவர்களைப் பின்னானார் என்கிற சொல்லாற் கொள்ளவுமாம்.
அர்ச்சாவதாரங்களில் புறப்பாடு வியாஜத்தினால் மிகத் தண்ணியர்களுக்கும் காட்சி தருவதுண்டே.)

முதலானாயே –
1-இவை எல்லா வற்றுக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம்  ஆனவனே –
த்வத் பாத கமலாத் அந்யம் நேம் ஜன்மாந்தரேஷ் வபி நிமித்தம் குசலஸ் யாஸ்தி-(ஜிதந்தே-)
முதல் புண்ணியம் உனது திருவடிகளே -வேறே ஒன்றும் இல்லையே – என்னக் கடவது இறே –
 என்னக் கடவது இறே –

2-அங்கன் அன்றியே –
ஜகத் காரணத்வத்தை -சொல்லவுமாம்-

அதவா
3-முதலானாயே –
அழகிதாக உத்பாதகன் ஆனாய் -என்று –
கிலாய்ப்போடே தலைக் கட்டுகிறார் –

(தானான தன்மை போய் திருத்தாயார் பேச்சு உண்டே -ஞானத்தில் தன் பேச்சு -பிரேமத்தில் பெண் பேச்சு)

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading