திரு நெடும் தாண்டகம்–12–நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

கடல்வண்ணர் -என்று கட்டுவிச்சி திரு நாமம் சொல்லுகையாலும்
அத்தை திருத் தாயார் அனுபாஷித்தும்
வினவ வந்தார்க்கு சொல்லியும்
இவள் தான் வாய் வெருவினாள் போலே –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -என்று
தன் வாயாலே திரு நாமத்தை சொல்லுகையாலும்
பூர்வ அவஸ்தையில் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்து
அவ்வளவிலும் அபிமதன் வந்து முகம் காட்டாமையாலே
அதுவும் ஆற்றாமைக்கு உடலாய் -இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்-
அத்தை வினவ வந்தார்க்கு சொல்லி இன்னாதாகிறாள் –

இவளுடைய கிலேசம் நின்ற நிலை இது –
ஸ்வரூப ஹானி நின்ற நிலை இது –
எனக்கு அபவ்யையான படி இது –
இத்தனைக்கு அடி என் பாபம் இறே என்று -அவர்களுக்குச் சொல்லி இன்னாதாகிறாள் –

லோக அபவாதம் பரிஹரிக்க சொல்லுகிறாள் இத்தனை போக்கி
அகவாயில் இவ்விஷயத்தில் இவளுடைய அவகாஹனம்
தனக்கு அநிஷ்டமாய் இருக்கிறது அன்று இறே

(கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை
“நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி.)

——————————————————————————

நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா வென்னும்
அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்தோர் பழி படைத்தேன் ஏ பாவமே–12-

பதவுரை
(இப் பெண்பிள்ளை)
நெஞ்சு-மனமானது
உருகி-நீர்ப்பண்டமா யுருகி
கண் பனிப்ப நிற்கும்-கண்ணீர் பெருக நிற்கின்றாள்;
சோரும்-மோஹிக்கின்றாள்;
நெடிது உயிர்க்கும்-பெரு மூச்சு விடுகின்றாள்;
உண்டு அறியாள்-போஜனம் செய்தறியாள்;
உறக்கம் பேணாள்-உறங்க விரும்புகின்றிலன்;
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்-விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரை புரிகின்ற நம்பீ! என்கின்றாள்;
வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்-பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்ய யுவாவே! என்கிறாள்;
அம் சிறைய புள் கொடியே ஆடும்-அழகிய சிறகை யுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்;
பாடும்-பாடுகின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்;
என் சிறகின் கீழ் அடங்கா–என் கைக்கடங்காத
பெண்ணை பெற்றேன்-பெண் மகளைப் பெற்ற நான்
இரு நிலத்து-விசாலமான இப் பூமண்டலத்திலே
ஓர் பழி படைத்தேன்-ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்;
ஏபாவம்–அந்தோ!.

மனஸ்ஸானது நிர்ப் பண்டமாக உருகி கண்களின் நின்றும் தாரை தாரையாக விழ அசைவற்று நிற்கிறாள்
மோஹங்கதை யாகிறாள்
நெடு மூச்சு விடா நின்றாள்
போஜனம் செய்து அறியாள்
உறக்கத்தை ஆதரியாள்
விஷத்தை உமிழா நின்றாள்
திருவனந்த ஆழ்வான் மேல் யோக நித்திரை பண்ணுகிற பூர்ணனே -என்று சொல்லா நின்றாள்
பரிமளம் மிக்கு இருந்துள்ள புஷ்பங்களை யுடைய வயல்கள் சூழ்ந்த திருவாலியில்
எழுந்து அருளி இருக்கும் நித்ய யுவாவானவனே என்று சொல்லா நின்றாள்
அழகிய சிறகை யுடைத்தான கருட த்வஜத்தை அநு கரிக்கும்
காநம் பண்ணும்
என் உயிர்த் தோழியே சம்சாரத்துக்கு ஆபரணமான கோயிலிலே போய்
அவனுடன் ஸம்ஸ்லேஷிக்கப் பெறுவோமோ என்று சொல்லா நின்றாள்
என் கைக்கு அடங்காத பெண்ணைப் பெற்றேன்
இந்த மஹா பிருத்வியிலே ஒப்பற்ற பழியை லபித்தேன் நான் செய்த பாபமே –

————————————————————————

நெஞ்சு இத்யாதி –
கீழ் பாட்டில் இரங்கும் -என்ற இரக்கத்தின் உடைய வகைகள் இருக்கிறபடி –

நெஞ்சுருகி –
நிரவயவமான மனஸ் தத்வம் நீர்ப் பண்டமாகா நின்றது –
அக்னி சகாசத்தியிலே மெழுகு போலே விரஹ அக்நியாலே த்ரவ த்ரவ்யமாகா நின்றது –
லௌகிக அக்னிக்கு உருகா நின்றால் விரஹ அக்னிக்கு உருகாது ஒழியுமோ –
விரஹ அக்னிக்கு உருகாத போது ஜ்ஞானப் பிரசர த்வாரம் இன்றியிலே ஒழியக் கடவது இறே –

(ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-)

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருமாள் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் ?
தெரு வெல்லாம் காவி கமல் திரு காட் கரை
மருவிய மாயன் தன மாயம் நினைதொறே–9-6-1

(நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-)

(வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

(வேம்  எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட-10-3-7-)

கண் பனிப்ப –
அது உள்ளடங்காமையாலே பரீவாஹ ரூபத்தாலே புறப்படுகிறபடி –
அந்த கரணம் உருகி பாஹ்ய கரணத்தாலே புறப்படுகிற படி –

நிற்கும் சோரும் –
அவை இரண்டின் உடைய கார்யம் இருக்கிறபடி –
க்ர்த்ய அக்ர்த்ய விவேகம் பண்ண மாட்டாமையாலே ஸ்தப்தையாய் நிற்கும் –
க்ர்த்ய அக்ர்த்ய விவேகத்துக்கு அடியான நெஞ்சு அழிகையாலே
ஒரு வியாபார ஷமை அன்றியே இருக்கும்

சத்ருக்னோ நந்தர ஸ்தித -என்னக் கடவது இறே –
ஸ்வாமி தரைப் பட்டுக் கிடந்தது ப்ரலாபியா நிற்க -சேஷ பூதன் தரித்து நின்றான் என்கை ஓர் அர்த்தம் அன்றே –
க்ர்த்ய அக்ர்த்ய விவேகம் பண்ண மாட்டாமையாலே ஸ்தப்தனாய் நின்றான் -என்கை –
இவனுடைய பிரலாபத்தை தவிர்க்க மாட்டான்
பெருமாளை அழைக்க மாட்டான் –
ஆகையால் ஸ்ப்தனனாய் நின்றான் என்கை

(சத்ருக்னோ அநந்தர ஸ்தித-ஸ்தம்பித்து நின்றானே -குகன் பெருமாள் தரைக் கிடந்த இடத்தைக் காட்டி
சொல்வதைக் கேட்டு பரதன் நினைவு இழந்து கீழ் விழ
அறிவு இழந்து அழுது -செய்வது இன்னது செய்யத்தக்கதது என்று அறிய மாட்டாமையால் அசைவற்று நிலையாக நின்றானே)

சோரும் –
ஓர் ஆலம்பனம் பெறில் இறே ஸ்த்தியாய் நிற்கலாவது –
அது இல்லாமையாலே மோஹம் கதை யானாள் –
க்ர்த்த்ய அக்ர்த்த்ய விவேகம் இன்றியிலே ஒழிந்தாலும் ஒரு ப்ரிவ்ருத்தி பண்ணலாவது
கண்ணாறு உண்டாகில் இறே -அது அழிகையாலே மூச்சு அடங்கினாள் –

நெடிது உயிர்க்கும்
உள் உண்டான சோகாவேசத்தாலே நெடு மூச்சு எறியா நிற்கும்
கோடாரித்தில் பற்றின அக்னி போலே அந்த கரணத்தை உருக்கி விடும் அளவன்றியே –
தச் சேஷம் நெடு மூச்சாய்ப் புறப்படா நின்றது –
தஹந்தீ மிவ நிஸ் வாஸை வ்ர்ஷான் பல்லவ தாரிண – என்னக் கடவது இறே –
திருவடி லௌகிக அக்னியால் ஊரைச் சுட்டான் –
இவள் விரஹ அக்னியால் அசோக வநிகையைச் சுட்டாள் –

(தஹந்தீ மிவ நிஸ்வாஸை வ்ர்ஷான் பல்லவ தாரிண – –
பிராட்டியின் மூச்சுக் காற்றின் வெப்பத்தால் அசோக வனத்தில் தளிர்களுடன் கூடிய மரங்களும் எரிந்தன )

உண்டு அறியாள் உறக்கம் பேணாள் –
தன் கார்யம் தலைக் கட்டின படி இது –
என் கார்யத்தில் இவள் நின்ற நிலை இது –
இவளுடைய ஊணும் உறக்கமும் போலே காணும் -தனக்கு உத்தேச்யம் –

உண்டு அறியாள் –
உண்கிறிலள் -என்கை அன்றிக்கே
முதலிலே ஊணை மறந்தாள் என்கிறாள் சம்ச்லேஷ தசையில் –
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -என்றும்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்றும் இருக்கையாலே
ஊண் இல்லை –
தத் விஸ்லேஷத்தில் உபவாச க்ர்சையாய் இருக்கையாலே ஊண் இல்லை –

(கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாம வேதம் நாள் மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை  தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – பெரியாழ்வார் திருமொழி-5-1-6-)

(உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-)

உறக்கம் பேணாள் –
நித்ரையைக் கால் கடைக் கொள்ளா நின்றாள் –
பட்டுடுக்கும் -என்று அவன் ஆதரித்த வுடை என்று அன்றோ
நீ அவ்வுடை உடுக்கத் தொடங்கிற்று –
அவ்வோபாதி அவன் ஆதரித்த உடம்பு அன்றோ உன் உடம்பு
அவன் வந்து முகம் காட்டினால் அதின் போக்கியம் அழிந்தது என்று
விஷண்ணன் ஆகாதபடி -உன் சௌகுமார்யத்துக்கு அனுகூலமாக வருந்தி யாகிலும்
உறங்க வேணும் காணும் என்ன அவற்றையும் அநாதாரியா நின்றாள் –

பேணாள் -என்ற இது
வருந்தி யாகிலும் உறங்க வேணும் என்று சொன்னத்தை காட்டுகிறது இறே –
அநாதி மாயயா ஸூப்த – (சாந்தோக்யம் )என்கிறபடியே-
பகவத் விஷயத்தை கிட்டுவதற்கு முன்பு உணர்த்தி அறியாதா போலே
பகவத் விஷயத்தை கிட்டினாலும் உறக்கம் அறியாது இருக்கக் கடவது இறே-

நஞ்சு இத்யாதி –
தன் பிரயோஜனமும் கிடக்க -என் பிரயோஜனமும் கிடக்க
ஸ்வரூபம் அழிந்தபடி பார்க்கலாகாதோ -என்கிறாள் –
அபிமத வ்யோகத்தால் வந்த ஆற்றாமையாலே அகவாய் அழியா நிற்கச் செய்தேயும்
அத்தைப் பிறர் அறியாதபடி அடக்கி பொரி புறம் தடவி
எதிர்தலையை அழிப்பிக்கை இறே -ஸ்த்ரீத்வ லஷணம்
அது தவிர்ந்து வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள் –

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –
என்று அத்தை வாய் வெருவினாள் என்று நினைந்து இருந்தோம் –
அது போய் இடைவிடாமல் வாய் புலத்த தொடங்கினாள் –
முன்பு –திருவரங்கம் -என்று ஊரைச் சொன்னாள் –
கட்டுவிச்சி –கடல் வண்ணர் -என்று பெரிய பெருமாளைச் சொன்னாள்
இப்போது படுக்கையைச் சொல்கிறாள் –
முதல் படுக்கை கோயில் போலே காணும் இவளுக்கு –

நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் –
தான் அழியா நிற்க –
எதிர் தலையைப் பேணா நின்றாள் –
நஞ்சரவு –
பிரதி கூலர்க்கு கிட்ட ஒண்ணாத படுக்கையாக பெறுவோமே –

(“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தை இங்கு அநுஸந்திப்பது.
பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற
திருவனந்தாழ்வானுடைய தன்மைக்குத் தான் உகந்தமை தோற்ற ‘நஞ்சரவு‘ என்றாளாயிற்று.)

அரவு –
படுக்கைக்கு சம்பாத்தியமான லஷணங்கள் ஸ்வத சித்தமாக பெற்றோமே –
மென்மை குளிர்த்தி நாற்றம் என்கிற இவை ஜாதி பிரயுக்தமாய் இறே சர்ப்பத்துக்கு இருப்பது –
சேதனமான படுக்கையைப் பெற்றோமே –
பிரக்ர்ஷ்ட விஜ்ஞான பலை கதா மனி -என்கிறபடியே –
அவஸ்தா அனுகுணமாக குழைய வேண்டும் இடத்தில் குழைந்து –
உறைய வேண்டும் இடத்தில் உறைந்து -கொடுக்கும் படுக்கையாகப் பெற்றோமே –

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–)

துயில் அமர்ந்த –
1-படுக்கை வாய்ப்பாலே வீசி வில் இட்டு எழுப்பினாலும் எழுந்து இராத படி யாய்த்து படுக்கை வாய்ப்பு இருக்கிறபடி –
2-நிர் பயமாக கண் வளரப் பெற்றோமே
3-போக ரூபமாக கண் வளரப் பெற்றோமே –

நம்பீ -என்னும் –
திரு வநந்த ஆழ்வான் மடியில் சாய்ந்த பின்பு தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
அழகால் வந்த பூர்த்தியைச் சொல்லுகிறது –
சமயா போதிதஸ் ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப – என்று
ஆலத்தி வழிக்க வேண்டும்படி இறே
உறங்கும் போதை அழகு இருப்பது –

(பையத் துயின்ற பரமன் -தூங்கும் போதும் பரமன் போல் இங்கும்)

அதவா
நஞ்சு -இத்யாதி –
ப்ரணய ரோஷம் தோற்ற வாய்விடா நின்றாள் -என்கிறாள் ஆகவுமாம் –
நஞ்சரவு
பிரதிகூலர் கிட்டாமைக்கு நஞ்சை உமிழ்கிறான் என்று இருந்தோம் –
அது ஒரு வ்யாஜமாய்
அவ் வஸ்துவை ஒழிய செல்லாதார் கிட்டாதபடி நஞ்சை உமிழும்படி ஆவதே –

படுக்கையின் ஸ்வ பாவம் –
அவனோடு இன்னாதாம் ஒழிய படுக்கையோடு இன்னாதாவான் என் என்னில் –
அவனோடு தான் இன்னாதாகைக்கு ஹேது அவர்ஜநீய சம்பந்தமும் போக்யதையும் அன்றோ –
அவ்வோபாதி ததீயரோடும் அவர்ஜநீய சம்பந்தமும் போக்யதையும் உண்டானால் கிலாய்க்கத் தட்டில்லை இறே –
அவனுடைய அனன்யார்ஹ சேஷத்வத்தில் அந்தர் பூதம் இறே ததீயர் உடைய போக்யதையும் –
ஆகையாலே படுக்கையோடு கிலாய்க்கை பிராப்தம் –

துயில் அமர்ந்த –
இருவர்க்கு படுத்த படுக்கை ஒருவருக்குப் பொருந்துவதே –
பரம பிரயணியிகளாய் இருக்கிற தம்முடைய
பிரணயித்வத்துக்கு நமஸ்காரம் -என்கிறாள் –

நம்பீ என்னும்
இத்தலை வெறும் தரையாய் இருக்க அத்தலை குறைவற்று இருக்கிறபடி

வம்பார் பூம் வயலாலி மைந்தா வென்னும் — –
அப் படுக்கையோடு சேருகைக்கு பாணி க்ரஹணம் பண்ணின தேசத்தை சொல்கிறது –
பரிமள பிரசுரமான பூவை உடைத்தான வயல் –
அவனுடைய யுவத்வம் நித்யமானாப் போலே வயலும் நித்ய வசந்தமாய் இருக்கிறபடி –
தம்முடைய அரும்பினை அலரை -என்கிற பருவத்துக்கு அனுகூலமாக நித்ய வசந்தமாக வயலைப் பெறுவோமே

(யுவா குமார யுவதிஸ்ய குமாரிணி)

அதவா
நான் இருக்கிற தேசம் நீரும் பூவும் பரிமளமும் இன்றிக்கே வறண்டு தரையாய் கிடக்க
தான் இருக்கிற தேசம் அகப்பட தளிரும் முறியும்படி ஆவதே –
அவனுடைய செந்தலிப்பே இறே அத்தேசத்துக்கும் செந்தலிப்பு –
அப்படியே தன் செந்தலிப்பாய் இருக்கும் தேசம் ஆகையாலே
தான் உறாவுகையாலே
அத் தேசமும் உறாவிக் கிடக்கிறது இறே-(செந்தலிப்பு -குளிர்த்தி)

மைந்தா என்னும் –
என்னை உபேஷிக்கப் பார்த்தாய் ஆகில் பருவத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹை ஆக்குவான் என் என்னில்
அடியிலே நான் விஷய பிரவணனாய் திரிய
வாடினேன் -என்று சொல்லும்படி உன்னுடைய போக்யதையைக் காட்டி
புறம்பு உள்ள துவக்கை அறுத்து உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணிற்று என்னைக் கை விடுகைக்கோ –

அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும் –
பாணி க்ரணம் பண்ணி வைக்க கொண்டு வந்த விச்வாமித்ரனை சொல்கிறது –
அழகிய சிறைகை உடைய பெரிய திருவடி ஆகிற த்வஜத்தை அனுகரியா நின்றாள்
வந்தால் பிரியப் படுக்கை அன்றியிலே வருகிறான் என்று தூரத்தில் கண்டால்
விஸ்வசிக்கும்படி இறே பெரிய திருவடி உடைய ஔதார்யம் இருப்பது –
பெரிய திருவடி தூரத்தில் தோற்றி ஆஸ்வசிக்கும் படியை
நினைத்துக் கொண்டு இருந்தாள் –
அவன் வரக் காணாமையாலே அவனை அனுகரிக்கத் தொடங்கினாள் -(ஆடுகை -அனுகரிக்கை )
விடாய்த்தார் ஹஸ்த முகத்தாலே தண்ணீர் வேண்டுமா போலே அவன் வரவில்
தனக்கு உண்டான ஆகாங்க்ஷை தோற்ற அவன் வரும்படியை பாவிக்கத் தொடங்கினாள் –

புட்கொடியே யாடும் –
பெரிய திருவடி முதுகில் அவன் தான் வரும்படியை பாவிக்கை அன்றியே
கொடியையே பாவியா நின்றாள் –

பாடும் –
அவனை அனுகரிக்கையாலே பிறந்த ஆஸ்வாசத்தாலே வாய் திறக்க வல்லளாய் ஆர்த்தி தோற்ற கூப்பிடத் தொடங்கினாள் –

பாட்டாவது
கண்ணும் கண்ணீருமாய் கொண்டு கால் தாழ்ந்து இருக்கும்படியான த்வனி இறே –
அப்படியே இவளும் உரக்க -ஆர்த்த நாதத்தாலே
மரங்களும் இரங்கும் வகை -என்கிறபடியே
பிறர் கால் தாழ்ந்து கண்ணும் கண்ணீருமாய் இருக்கையாலே

(இரங்கி நாள் தொறும் வாய்வெரீஇ* இவள் கண்ண நீர்கள் அலமர,*
மரங்களும் இரங்கும் வகை* ‘மணி வண்ணவோ!’ என்று கூவுமால்,*
துரங்கம் வாய் பிளந்தான் உறை* தொலை வில்லி மங்கலம் என்று,* தன்
கரங்கள் கூப்பித் தொழும்* அவ் ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.)

பாடும் -என்கிறது
சோக ரசத்தோடு போக ரசத்தோடு வாசி இல்லை இறே -பிறரைக் கால் தாழப் பண்ணுகைக்கு-

அணி யரங்கம் -இத்யாதி –
இவளுடைய ஆர்த்த நாதத்தைக் கேட்ட தோழி -தாயானவள் கடக்க நின்று ஹிதம் சொல்லுமவள் ஆகையாலே
ஆஸ்வாச கரையாக மாட்டாள் –
நம்முடைய சந்நிதி ஆஸ்வாச ஹேதுவாமோ என்று பார்த்து –
ஏகம் துக்கம் சுகஞ்சனௌ-என்று இருக்குமவள் ஆகையாலே
காய்ந்த தலையும் க்ர்சமான வடிவும் உறாவின முகமாய்க் கொண்டு
தன் ஆர்த்தி எல்லாம் வடிவிலே தோற்றும்படி முன்னே வந்து நின்றாள் –

(த்வம் வயஸ்ய அஸி ஹ்ருதய மே ஹி ஏகம் துக்கம் சுகம் நௌ சுக்ரீவோ ராகவம் வாக்யம் …)

அவள் முகத்தை பார்த்து -தோழி நம் கோயிலிலே போய் பெரிய பெருமாளை அனுபவிக்க வல்லோமோ -என்கிறாள் –
ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோஸ்மி- க்ரீஷ்மே சீதமிவ ஹ்ர்தம்-(மஹா பாரதம் கோடையில் குளிர்ந்த குளத்தில் நீராடுவது போல்)  -என்று ஈஸ்வரனை தடாகமாக சொல்லக் கடவது இறே –
தாப த்ரயாதுரர்க்கு தாப ஹரமாய் இருக்கையாலும்
விரஹ தாபாதுரர்க்கு விரஹ தாப சமநமாய் இருக்கையாலும் ஆடுதுமோ – என்கிறாள் –

(‘ஆடுதும்‘ என்றது
கலவி செய்ய விருப்பத்தைக் கூறியவாறு. தமிழர் கலவியைச் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ எனனுமாற்றாற் கூறுவர்!

“பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றளென்மகள்“ என்பர் மேலும்
“தயாதன் பெற்ற மரதக மணித் தடம்“ என்கிறபடியே எம்பெருமான் தடாகமாகச் சொல்லப் பட்டிருந்தலுங்காண்க.)

அணி அரங்கம் ஆடுடுமோ
தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர் -என்று
கல்லைப் பொய்கையாக சொல்ல வல்லவர்கள்
ஆற்றைப் பொய்கையாக சொல்லச் சொல்ல வேணுமோ –
அனன்யார்ஹராய் -அநந்ய போக்யராய் இருப்பார்க்கு இறே இவ் ஊரில் புகுந்தால்
ஒரு மடுவிலே புகுந்தாப் போலே ஸ்ரமஹரமாய் இருப்பது –

(உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பிலராய்,இவளைப்
பெருகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறுகின் றிலர் தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தால் இவளாகம்,மெல்லாவி எரி கொள்ளவே! –திரு விருத்தம்)

தோழி -என்னும் –
அவள் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு
நாம் போல் கோயிலிலே அனுபவித்து நம் முகம் பண்டு போலே
செந்தலித்து (குளிர்ந்து )இருக்க நாம் காண்பது எப்போதோ -என்னும் –

உன் வயிற்றில் பிறந்தவளை ஸ்வரூப ஹாநியாலே இழியப் புக்கால் நியமிக்கக் குறை என் -என்னில் –
என் சிறகின் கீழ் அடங்காப் பெண் பெற்றேன் –
என் கைக்கு அடங்காதபடி ஆனாள் –
ஆஸ்ரயண தசையில் அவன் மேல் விழுந்து ஆஸ்ரயிப்பிக ஆஸ்ரயித்த்வோபாதி
போக தசையிலும் அவன் செய்தபடி கண்டு இருக்கை தான் ஸ்வரூபம்
நீ மேல் விழுகைக்கு ஸ்த்ரீத்வத்துக்கு போராது காண் என்று
நான் அறிந்ததைச் சொன்னாலும் அத்தை கால் கடை கொள்ளா நின்றாள் –

என் சிறகு –
என் பஷத்தில் – என் அபிமானத்திலே -என்றபடி –
அவன் அபிமானத்தில் அடங்கினவள் ஆகையாலே என் அபிமானத்தை விட்டாள் இறே –
ஸ்வரூபத்தை நோக்கினாள் அல்லள்
என் அபிமதம் செய்தாள் அல்லள் –
எனக்கு பவ்யை ஆனாள் அல்லள் –

பெற்றேன் –
இவை எல்லாம் இவள் குற்றம் ஆகாதே பெற்ற தன் குற்றம் ஆக்குகிறாள் –

இரு நிலத்து ஒரு பழி படைத்தேன் –
இவளைப் பெற்ற தான் உண்டான பேறு இதுவே இறே –
பஞ்சாசத்கோடி விஸ்தீர்ணையான பூமிப் பரப்பு அடங்கலும் வ்யாப்தமாம் படியான பழியைப் படைத்தேன் –
தன் கார்யத்தே ப்ரவர்த்திக்கை குடி பழியாம் படி இறே இக் குடியின் ஏற்றம் இருப்பது –

ஓர் பழி –
அத்விதீயமான பழி –

(இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள்.
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞான விபாக கார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று
உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.)

(‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற் போலே பிறர் சொல்லும் படியாகவும்
‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை‘ என்றாற் போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும்
மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி,
பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள்.)

ஏ பாவமே
இவள் குறையும் அன்று
அவன் குறையும் அன்று
நான் பண்ணின பாபமே இதுக்கு ஹேது என்கிறாள் –

ந மந்தராயா -இத்யாதி –
இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதை மந்தரை என்று நினையா -அவளுடைய தோஷம் அன்று
அவள் வார்த்தை கேட்ட கைகேயி தோஷம் என்று நினைத்தான்

ந ச மாதுரஸ்ய-இவளுடைய தோஷமும் அன்று –
இவள் வார்த்தையைக் கேட்ட சக்கரவர்த்தி தோஷம் என்று நினைத்தான் –

தோஷோ ந ராஜ்ஞா-ராஜாவுக்கு ஒரு தோஷம் இல்லை
அவன் வார்த்தை கேட்டு -தமக்கு வகுத்த அபிஷேகத்தை பொகட்டு காட்டிலே போன அவர் குற்றமே இத்தனை –

ந ச ராகவஸ்ய -அவருக்குத் தான் குற்றம் என்
அவர் அபிஷிக்தராய் அனுகூல வ்ருத்தி பண்ண கடவனாய் இருக்க
அதுக்கல்லாத என் பாபமே இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதம் –

வனப்ரவேச ரகு நந்தனஸ்ய -இக்குடி வாழப் பிறந்த செல்வப் பிள்ளை
வனவாசம் பண்ணுகைக்கு நிமித்தம் என் பாபமே யாம் இத்தனை –
கூனி சொன்னது கைகேயி கேட்க வேண்டா
அவள் சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டா
அவன் சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டா

கூனி சொன்னது கேட்க வேண்டாது ஒழிகிறது-அடியாத்தி யாகையாலே
கைகேயி சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில்
ஸ்திரீ புத்திர வாத்சல்யத்தாலே சொன்ன வார்த்தையை
பர்த்தாவுக்கு கேட்க வேணுமோ –

சக்கரவர்த்தி சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில் –
தர்ம ஆபாசத்தை ஆலம்பனம் ஆக்கிக் கொண்டு
ஸ்திரீ பாரதந்த்ர்யத்தாலே பிரமித்து சொன்ன வார்த்தையை பெருமாளுக்கு கேட்க வேணுமோ
தம்முடைய அந்ய வ்யதிரேகங்களில் நான் படும் பாடு அறிவர் தாம் ராஜ்ய ப்ராப்தர் என்னும் இடம் அறிவர்
ஆன பின்பு அவனைக் கட்டி இட்டு வைத்து ராஜ்யத்தை ஆளத் தட்டேன் –
அவன் சொன்ன வசனத்தை அநாதரித்து -ராஜ்யத்தை ஆண்டார் ஆகில்
தம்முடைய வ்யதிரேகத்தில் நான் முடியாத படி ரஷித்தார் ஆகில் ஆயத்தே
ஆகையால் என் பாபமே இதுக்கு நிமித்தம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான் —

(நானே தான் ஆயிடுக
இல்லாத குற்றத்தை இருப்பதாக ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே இருப்பதாக இசைவதே
நாம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்)

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading