திரு நெடும் தாண்டகம்–9–வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

தாம் இருந்த இடம் திருக் கோவலூராகப் பெறாமையாலும்-
அவன் தாம் இருந்த இடம் வந்து முகம் காட்டாமையாலும் –
அவன் வந்து முகம் காட்டுகைக்கு ஹேதுவான ஸ்வ பாவங்களை பற்றிக் கூப்பிட்டாராய் நின்றார் கீழ்

இதில் –
திரு உலகு அளந்து அருளின போதை செவ்வியை அனுபவிக்க வேணும் என்று
ஆசைப்பட்டவருக்கு அச் செவ்வியோடு திருக் கோவலூரிலே வந்து
நின்ற படியைக் காட்டிக் கொடுத்தோம் ஆகில் சாபேஷரான தாம்
நம் பக்கலிலே வந்து அனுபவிக்கும் அத்தனை அன்றோ
என்று நினைத்து இருந்தானோ வென்றும்
நாம் அயோக்யர் என்று முகம் தாராது இருந்தானோ என்றும் சங்கித்து –

அவன் படியைப் பார்த்தால்
ஆசாலேசம் உடையார் இடத்தே சென்று முகம் கொடுக்குமவன்
யோக்யதை அயோக்யதை பாராதே முகம் கொடுக்குமவன்
ஆகையால் அக்குறை அவனுக்கு உண்டாக மாட்டாது –
இனி இழைக்கைக்கு அடி என் பாபம் இறே

(ந மந்த்ராய–ந ராகவஸ்ய மத் பாப மாத்ர நிமித்த ஆஸீத் -நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை என்னாமல் இசைகையே நாம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம்)

ஆகையால் யாதனா சரீரம் போலே முடியவும் பெறாதே
தரிக்கவும் பெறாதே
கிடந்தது உழையா நிற்கும் இதுவே யாய்விட்டது என் கார்யம்
என்று தம் அவஸ்தையை அனுசந்தித்து
விஷண்ண்ர் ஆகிறார் –

(அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-)

——————————————————————————————————

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே

பதவுரை

வங்கத்தால்–கப்பல்களினால்
மா மணி–சிறந்த ரத்னங்களை
வந்து–கொண்டு வந்து
உந்து-தள்ளுமிடமான
முந்நீர்-கடற்கரையிலுள்ள
மல்லையாய்–திருக்கடன் மல்லையில் வாழ்பவனே!
மதிள் கச்சி ஊராய்–மதிள்களை யுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே!
பேராய்-திருப்பேர் நதராளனே!
கொங்குஆர்–தேன் நிறைந்ததும்
வளம்–செவ்வி பெற்றதுமான
கொன்றை அலங்கல்- கொன்றை மாலையை
மார்வன்-மார்விலே யுடையனும்
குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான்-பர்வதராஜ புத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை
பங்கத்தாய்-(வலது) பக்கத்திலுடையவனே!
பால் கடலாய்-திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே!
பாரின் மேலாய்-ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே!
பனி வரையின் உச்சியாய்-குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே
எங்கு உற்றாய்-எங்கிருக்கிறாய்?
பவளவண்ணா-திருப்பவள வண்ணனே!
எம்பெருமான்-எம்பிரானே!
ஏழையேன்-மிகவும் சபலனாகிய அடியேன்
உன்னை நாடி –உன்னைத் தேடிக்கொண்டு–
இங்ஙனமே -இவ்வண்ணமாகவே–
உழிதருகேன்–அலைச்சல் படாநின்றேன்.

மரக்கலங்களாலே பெரு விலையனான ரத்னங்களைக் கொண்டு வந்து தள்ளா நின்றுள்ள கடல் கரையில் உள்ள
திருக்கடல் மல்லையிலே நித்ய வாஸம் பண்ணுமவனே
திரு மதில்களை யுடைய கச்சி நகரிலே வர்த்திப்பவனே
திருப்பேரிலே வர்த்திப்பவனே
தேனையும் மிக்க பரிமளத்தையும் யுடைத்தான கொன்றை மாலையை மார்விலே யுடையவனாய்
ஸ்லாக்யனான பர்வத ராஜன் புத்ரியான பார்வதியை இடது பக்கத்தில் உடையனான ருத்ரனை வலது பக்கத்திலே யுடையவன்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுமவனே
பூமியில் உல்லார்க்கு நன்மை செய்வதற்காக திரு அவதாரம் செய்து அருளினவனே
குளிர்ச்சியை யுடைய திரு மலையிலே நின்று அருளின திருவேங்கடமுடையானே
பவளம் போல் போக்யமான காஞ்சி நகரில் இருக்கும் பவள வண்ணனே
எங்கே புக்காய்
எனக்கு ஸ்வாமியானவனே
உன்னை அதி சபலனான நான் தேடிக்கொண்டு இவ்வண்ணமாக அலையா நிற்கிறேன் –

——————————————————————————————————-

வங்கத்தால் மா மணி வந்துந்து –
ஓர் ஆஸ்ரயன் இக் கரையிலே திருப் பள்ளித் தாமத்தை சமைத்து
இச் செவ்வி மாறுவதற்கு முன்பே போய்ச் சாத்த வேணும் என்று நினைத்து
கடல் வற்றினால் அல்லது நமக்கு வழி போக ஒண்ணாது என்று கடலை இறைக்கத் தொடங்க
இவனுடைய ஆதர அதிசயத்தைக் கண்டு கடல்கரையிலே இவன் ஆக்கின திருவிளை ஆடல் சூழலுக்கு உள்ளே வந்து
தரைக் கிடந்த இடமாய்த்து –திருக் கடல் மலை –

ஆனால் முந்நீர் மல்லை -என்ன அமைந்து இருக்க
கீழில் விசேஷணங்களுக்கு பிரயோஜனம் என் என்னில் –
மரக்கலம் ஆகிறது த்வீபாந்தர வஸ்துவை த்விபீந்தாரத்திலே வந்து தள்ளும் அது இறே –
அப்படியே பரமபத நிலயனான தன்னை லீலா விபூதியிலே கொடு வந்து பொகட்டது ஆய்த்து ஆஸ்ரித வாத்சல்யம் –

இதுக்கு –மரக்கல ஸ்தாநீயம் -ஆஸ்ரித வாத்சல்யம்
மா மணி -மகார்க்கமான மணி –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -என்றும்
வானவர் உச்சி வைத்த பெரு மணி -என்றும்
சொல்லுகிற மாணிக்கத்தை இறே கொடு வந்து தள்ளிற்று –

(கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே ! என்று என்று
பொய்யே கைமை சொல்லிப் புறமே புறமே யாடி
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் ?
ஐயோ ! கண்ணா பிரான் ! அறையோ ! இனிப் போனாலே–5-1-1)

(கரு மணி பூண்டு  வெண்ணாகணைந்து  காரி இமில்  ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி  வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்–9-5-4-)

வந்துந்தும் –
கொள்வார் அற்று இருக்கிற கடல்கரையிலே வந்து தள்ளிக் கிடக்கிறபடி –
மாணிக்கத்தின் சீர்மை அறிந்து கிழிச் சீரையிலே இட்டு ஆளுமா போலே
ஸூரி போக்யமான வஸ்து கடல்கரையிலே கிடக்கிறது -என்று
வாசி அறிந்து பேணுவார் அற்று இருக்கச் செய்தே
கிடீர் கண் வளர்ந்து அருளுகிறது –
கிட்டினாலும் பிரயோஜனத்தை கொடுபோமது ஒழிய தன்னை
ஆசைப் படுவார் இல்லையே-

முந்நீர் -மல்லையாய்-
மகார்க்கமான த்விபாந்தர சரக்கு –
த்விபாந்தரத்திலே வந்து விலை உண்ணாதே போக சோம்பாதே கடல்கரையிலே கிடக்கிறபடி –
அநந்த சாயி -கிடீர் -அவனை விட்டு ஆஸ்ரிதனுக்காக தரை கிடை கிடக்கிறான்
நித்ய அநபாயினி யான பிராட்டியையும் விட்டுக் கிடீர் ஓர் ஆஸ்ரிதனுக்காக தனியே வந்து கிடக்கிறது –
இவ் விசேஷணங்களால் அவன் சீர்மை அறிந்து பேணுவார் இல்லை என்று
இத் தேசத்தின் உடைய தண்மையைச் சொல்கிறது –
ஆஸ்ரிதன் இருந்த இடத்தே வந்து முகம் காட்டும் வத்சலன் கிடீர்
என் ஆற்றாமைக்கு முகம் காட்டாது ஒழிகிறான் –

மதிட் கச்சி யூராய்-
கீழ் சொன்ன திருப்பதிகளை இங்கே சொன்னார் ஆகிலும்
பிரயோஜன பேதத்தாலே புனர் உக்தி தோஷம் இல்லை –
திருக் கடல் மல்லை போலே பேணுவார் அற்று இருக்கை அன்றியே
இவ் விஷயத்தின் உடைய சீர்மையை அறிந்து சில தார்மிகர் மதிள் இட்டு நோக்கப் பெற்றோம் -இறே என்கிறார்
அங்கு -இழவைப் பற்றிக் கூப்பிட்டார்
இங்கு -பரிகிறார்

இழவிலும் அத்தலைக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று பரிய வேண்டும்படி இறே ஸ்வரூபம் இருப்பது –
அதவா
பிரதிகூலர் கிட்டாமைக்கு இட்ட மதிள் என்று இருந்தோம் –
அது போய் அனுகூலர் கிட்டாமைக்கு இட்ட மதிளாய் இருந்ததீ –என்கிறார் என்னவுமாம் –

மல்லையாய் மதிள் கச்சி ஊராய் –
ஒரு துறையிலே வந்து இறங்கினது ஒரு நகரத்திலே விலை பெறுவது
அப்படியே திருக் கடல் மல்லைத் துறையிலே இறங்கி
காஞ்சீபுரத்திலே வந்து விலை பெற்றபடி –
அத்தலையிலே சௌகுமார்யத்தைப் பார்த்து பரிகையும்
தனிமையைப் பார்த்து கிலாக்கையும்
இரண்டும் ஆத்மா தர்மம் இறே –

(“கானத்தின் கடல் மல்லை“ என்றபடி காட்டு நிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்னத்தைப் பேணுவார் இல்லாமையாலும்
ரத்னம் விலை போவது மஹா நகரங்களிலாகையாலும் அந்தக் கப்பலானது அந்த ரத்னத்தை அங்கிருந்து கொணர்ந்து
காஞ்சீபுரத்திலே திருவெஃகாத்துறையிலே தள்ளிற்றாம்- என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது.
ஆழ்வார் தாமும் இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம் பற்றியே பெரியதிருமொழியில்
திருக்கடல்மல்லைப் பதிகத்திலும் ”கச்சிக்கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்” என்றருளிச் செய்தது.)

பேராய் –
ஆஸ்ரிதரைக் கிட்டுமோ என்று அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியை இறே -கீழே சொல்லிற்று
இங்கு –
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
-என்றபடியே –
விமுகரையும் உட்பட மடி மாங்காய் இட்டு விஷயீ கரிக்க வந்து இருக்கிறவன் கிடீர்
தன்னை ஒழியச் செல்லாத என்னை வந்து விஷயீ கரிக்காமல் இருக்கிறானே -என்கிறார் –

(திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-)

(அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூரணை -186-)

இத்தால்
ஆஸ்ரிதர் உகந்த இடத்தில் தானே வந்து முகம் கொடுக்கும் படியைச் சொல்லுகிறது –

மேல் அயோக்யதை பாராதே முகம் கொடுக்கும் படியைச் சொல்லுகிறது –
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன் –
நாயே கொள் பேயே கொள் -என்கிற வடிவு கிடீர்
அவ் வடிவை ஒழிய செல்லாத எனக்கு அரித்தாய்த்து என்கிறார் –

தேனையும் பரிமளத்தையும் செவ்வியையும் உடைத்தான
கொன்றை மாலையாலே அலங்க்ர்தமான மார்பை உடையவன் –
கொங்கு -தேன் ஆர் மிகுதி –வளம் -அழகு –
புஷ்பத்துக்கு அழகு -செவ்வி பெற்று இருக்கையும்- பரிமளிதமாய் இருக்கையும் இறே —

குல வரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் –
பார்வதியை தனக்கு பார்யையாக உடையவன்
ருத்ரனுக்கு பார்ஸ்வத்தைக் கொடுத்து -என்ன அமைந்து இருக்க
இவனை இங்கனே திருநாள் எழுந்து அருளி இருக்கிறது –
குவாலாக விசேஷணங்கள் சொல்லுகிறது
இவனுடைய துர்மானம் தோற்றுகைக்காக
திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தனாய்
ஸ்ரீ ய பதியாய் இருக்கிற -சர்வேஸ்வரன் உடன் சமமாக கொன்றை மாலை இட்டு
ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற துர்மாநிக்கு கிடீர் உடம்பு கொடுத்தான் என்று தோற்றுகைக்காக –

கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்பன் –
தண் துழாய் மாலை மார்பனுக்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –
ஈஸ்வரன் ஜகத் ரஷணத்திலே தனி மாலை இட்டு இருக்கிறபடியைக் கண்டு
நமக்கும் ஈஸ்வர சித்தி உண்டாம் போதைக்கு ஒரு மாலை வேணும் என்று பார்த்து
கொன்றையை மாலையாக இட்டு இருக்கிறபடி —

குல வரையன் மடப் பாவை –
மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகளுக்கு எதிர் தட்டாய் இருக்கிற படி –
அவன் ஸ்ரீய பதியாய் இருந்தானே
நமக்கும் அனுசந்திக்கும் போது ஒரு மிதுனமாய் இருக்க வேணும் என்று பார்த்து உமாபதியாய் இருக்கிறபடி –

இடப் பால் கொண்டான் –
வல மார்பினில் வாழ்கின்ற மங்கைக்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி-

பங்கயத்தாய் –
கூறாளும் தனி உடம்பன் -என்கிறபடியே
பெரிய பிராட்டியாரோடு வழக்கு பேசி இருக்கும் படி இறே உடம்பு கொடுத்தது –
நித்ய அநபாயினி யான பிராட்டிக்குக் கொடுத்த உடம்பை கிடீர்
அந்ய பரனாய் –ஈஸ்வரோஹம் -என்று
இருக்குமவனுக்கும் கொடுத்தது –
அவன் படியையும் இவள் படியையும் அன்று காண்பது -சம்பந்தத்தை யாய்த்துப் பார்ப்பது –
ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற துர்மாநிகளுக்கும் கொடுத்த வடிவு கிடீர்
பரதந்த்ரனாய் அத்தை ஒழிய செல்லாத எனக்கு அரிதாய்த்து -என்கிறார் –

(ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-)

பாற்கடலாய்-
குண ஷதன்யாயமாய் ருத்ரன் ஒருவனுக்கு உடம்பு கொடுத்த அளவேயோ –
ப்ரஹ்மாதிகளுக்கு ஒரு ஆபத்து வந்த போது ரஷகரான நாம்
தூரஸ்தனாக ஒண்ணாது என்று
பரம பதத்தை கால் கடைக் கொண்டு ஷீராப்தியில் வந்து கண் வளர்ந்து அருளுகிறவனே
அபேஷா நிரபேஷனாக வந்து முகம் கொடுக்கிறவன் கிடீர்
அபேஷை உடைய எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் –

பாரின் மேலாய் –
ஆசூர ராஷசராலே குடி இருப்பு இழந்து சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர
ராம கிருஷ்ணாதி  ரூபத்தாலே தன்னை அழிய மாறி வந்து ரஷித்த படியைச் சொல்கிறது –

(வேண்டித் தேவர் இரக்க இத்யாதி -ஸாஷாத் நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுராம் புரீம் -மனிசர்க்காகப் படாதன பட்டு)

ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞ்ஞே விஷ்ணுஸ் சனாதன –
தச் சப்தம் பிரக்ருத பராமர்ச்சி இறே –
பபூவ குண வத்தர -என்று இறே கீழ் சொல்லிற்று –
அப்படிப் பட்ட குணாதிகன் ஆகையால்
பிறந்தான் -என்கிறார்
அநந்ய பிரயோஜனர்க்காக பிறக்கை குணம் அன்று இறே –

ஹி-சப்தம் – ஹேதுவிலே
தேவை -வந்து பிறந்தது –
திருவடி திரு வநந்த ஆழ்வான் அர்த்திக்கவோ –
பிரயோஜனாந்த பரராய் ஈஸ்வரோஹம் என்று இருக்கிற துர்மானிகள் அர்த்தித்த கார்யம் செய்யக் கிடீர்
கார்யம் கொண்ட சமனந்தரம் எதிர் அம்பு கோக்குமவர்கள் இறே –

உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி –
தன்னுடைய செருக்காலே லோகத்தை அடைய அழித்துக் கொண்டு திரியும் ராவண நிரசன அர்த்தமாக
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க
அர்த்திக்கிறவர்கள் பிரயோஜனாந்த பரராய் இருக்க
அவர்களை அழியச் செய்கைக்காக கிடீர் பிறந்தது –

அர்த்தித
இது இவர்கள் பண்ணின தபஸ் ஸூ –

மானுஷே லோக
தேவதைகளும் அகப்பட கீழ் நோக்கி முகம் காட்டாத தேசத்திலே கிடீர் வந்து பிறக்கிறது

ஜஜ்ஞ்ஞே –
நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாஸம் பண்ணுவார் ஆகில்
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிக் கிடீர் பிறக்கிறது –

விஷ்ணு –
வ்யாபக வஸ்து கிடீர் வ்யாப்ய ஏக தேசதத்துக்கு சேஷமாய் பிறந்தது

சனாதன
நித்ய வஸ்து கிடீர் பிறந்தான் என்னும்படி
ஒருத்தனுக்கு புத்ரனே வந்து பிறந்தது

இப்படி
பிரயோஜனாந்த பரருக்கும் அகப்பட தன்னை அழிய மாறி கார்யம் செய்கிறவன் கிடீர்
அநந்ய பிரயோஜனான எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் -என்கிறார் –

(குண பூர்ணன் -பிரயோஜனாந்தர பரர்களுக்கு -ராவணாதிகளை நிரசிக்க -ஆர்த்தித்த மாத்ரம்
தேவர்களும் கால் வைக்க கூசும் -12 மாதங்கள் கர்ப்ப வாசம்
எங்கும் நிறைந்தவன் இங்கு பாரின் மேல் -ஆஸ்ரித பரதந்த்ரனாக –
இப்படி எட்டு விஷயங்கள் இந்த ஸ்லோகத்தில் -அப்படிப்பட்டவன் எனக்கு முகம் காட்டாமல் ஒழிவதே

பரமபதம் வ்யூஹம் விபவம் சொல்லி மேல் அர்ச்சை )

பனி வரையின் உச்சியாய் –
பிரயோஜனாந்த பரர்க்கு முகம் கொடுத்த அளவேயோ
கானமும் வானரமும் வேடும் உடை வேங்கடம் –என்கிறபடியே
நிஹீன ஜாதிக்கும் அகப்படம் முகம் கொடுக்க திருமலையில் வந்து நிற்கிறவன் கிடீர்
எனக்கு முகம் கொடாது ஒழிகிறான் –

(நன் மணி வண்ணன் ஊர்* ஆளியும் கோளரியும்*
பொன் மணியும்* முத்தமும் பூமரமும்* பன்மணி நீ
ரோடு பொருது உருளும்* கானமும் வானரமும்*
வேடும் உடை வேங்கடம். –நான்முகன் -47)

பவள வண்ணா-
அதுவுமாம் இறே
க்ரம பிராப்தியை சஹித்து இருக்கலாம் வடிவு படைத்தான் ஆகில்
அப்படிப் பெற்றோம் ஆகில் வேண்டின போது முகம் கொடுக்கிறான் என்று ஆறி இருக்கலாம் இறே –
ஸ்வரூபத்தை அனுசந்தித்து ஆறி இருக்கும்படி அன்றே
அவன் வடிவு படைத்தது

பவள வண்ணா எங்குற்றாய் –
வடிவின் போக்யதையை அனுசந்தித்து கண்ணான் சுழலை இட்டு
முன்னாடி தோற்றாமையாலே –எங்குற்றாய் -என்கிறார் –

(பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவு படைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம் )

ராமம் மே அநுகதா த்ர்ஷ்டி ரத்யாபிந நிவர்த்ததே
நத்வா பஸ்யாமி கௌசல்யே சதுமா பாணினா ஸ்பர்ச –

மே த்ர்ஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய கண்ணானது அபிராமதையைப் பற்றி பெருமாள் பின்னே போய்த்து –
ஆஸ்ரயத்தை விட்டு விஷயத்தின் பின்னே போய்த்து
பிறந்தகத்தில் சம்பந்தம் விஷயம் பெரும் அளவே காணும்

மே த்ர்ஷ்டி
என்று கண்ணைக் கொண்டாடுகிறான் –
நான் விஸ்லேஷத்தாலே தளர்ந்து தரைப் பட்டுக் கிடந்தேன்
கண் கூடப் போகப் பற்றது இறே –
கர்த்தாவாய் இராதே கரணமாக பெற்றிலேன் என்கிறான்

(கண்ணுக்கு உரியவனாக இல்லாமல் பார்க்கும் கண்ணாகவே இருந்து பேறு பெறாது இழந்தேனே)

அத்யாபிந நிவர்த்ததே –
இவ்வளவும் மீண்டது இல்லை –
உன்னுடைய தர்சனத்தாலே ஆஸ்வசிப்பிக்க யோக்யதை உண்டான தசையிலும் மீண்டது இல்லை –

நத்வா பஸ்யாமி –
ஆஸ்ரயமான நீர் இங்கே இருக்க
கண் அவர் பின்னே போகை யாவது என்னில்
காரணத்தைக் கொண்டு கார்யத்தை கற்ப்பித்தேன் -என்கிறான்
வந்து நிற்கிற உன்னைக் காணப் பெற்றிலேனே -அத்தாலே சொல்லுகிறேன் -என்கிறான்

நித்ய அனுமேயமாய் இறே இந்த்ரியங்கள் இருப்பது –
பதார்த்த தர்ஸனத்தாலே இந்த்ரியங்கள் உண்டு என்று அறிகையும்
அவை தோற்றாத போது இல்லை என்று அறிகையுமாய் இறே இருப்பது –

கௌசல்யே
கைகேயியாய் இட்டு காணாது ஒழிகிறேன் அன்றே

சதுமா பாணி நா ஸ்பர்ச –
என்னுடைய அதிக்ரமத்தை நினையாதே
துர்கதியைப் பார்த்து ஐயோ என்று இரங்கி
உன் கையால் என்னை ஸ்பர்சி என்கிறான்

அபிஷேகத்தைப் பாரித்து
காப்பைக் கட்டி வந்து ஏறப் போக விட்டேன் என்று பாராமல்
அவனைப் பிரிந்து முடியும்படியாய் விட்டதே என்று இரங்கி
ஸ்பர்சியாய் -என்கிறான்

கண்ணானது அவன் பின்னே போய்த்து
த்வக் இந்த்ரியம் போய்த்தோ இல்லையோ என்று அறியும்படி
உன் கையாலே தடவிப் பாராய் என்கிறான் -என்று
அருளிச் செய்வர் பட்டர் –

பவள வண்ணா எங்குற்றாய்
பக்தாநாம் -என்கிற வடிவைக் கொண்டு எங்கே புக்காய்
வடிவின் வைலஷண்யத்தை பிரகாசிப்பித்தது அவ் வடிவைக் கொண்டு ஒளிக்கவோ

அதவா
எங்குற்றாய்
சர்வதா இவ் வாற்றாமையாலே அவன் வாராது ஒழியான் என்றும்
தம்முடைய ஆற்றாமையே செப்பேடாக வரும் என்று நினைத்து
எங்குற்றாய் -என்று கையை நீட்டுகிறார் -என்னவுமாம் –

கையை நீட்டினவாறே கைக்கு எட்டும்
பிடித்துக் கொள்ளலாம் -என்று இருக்கிறார்
உபக்நம் பெறாத கொடி போலே தரைப் பட்டு கிடக்கிறவர் ஆகையாலே உபக்நம் தேட்டமாய் இறே இருப்பது
படர் கொடியாய் இறே இருப்பது
படர் கொடி இறே ஆத்ம வஸ்து ஆகிறது –

எம்பெருமான் -எங்குற்றாய் –
உன்னுடைய உடைமை நோவு படா நிற்க
உடையை நீ எங்கே புக்கு இருக்கிறாய் –
உடைமை இருந்த இடத்தே உடையவன் வந்து முகம் காட்டும் இத்தனை ஒழிய
உடையவன் இருந்த இடத்தே உடைமை செல்ல வற்றோ –
சோறு இருந்த இடத்தே பசியன் செல்லலும் இத்தனை ஒழிய
பசியன் இருந்த இடத்தே சோறு செல்ல வற்றோ -(அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -சோறு தானே ஜீவாத்மா )

(அடியார்களுக்காகவே திருப்பதிகளில் ஸந்நிதி பண்ணியிருந்தும் பாவியேனுக்குத் தோற்றா தொழிவது என்னோ;
“வருந்தி நான் வாசக மாலை கொண்டு, உன்னையே யிருந்திரந்து எத்தனை காலம் புலம்புவனே” என்றாற்போலே
உன்னைக் கூவிக் கூவிக் கதறுவதே எனக்குப் பணியாயிற்றே!, என்படியைக் கண்டாயோ;
இன்னமும் இரங்கியருளத் திருவுள்ளமில்லையோ? என்றாராயிற்று.)

உன்னை நாடி
நிரதிசய போக்யனுமாய்
பிராப்யனுமாய் இருக்கிற உன்னைத் தேடி
பிராப்தியும் த்வரைக்கு உடலாய் இருக்கிறது இறே இவருக்கு

அதவா
உன்னை நாடி
அநாதி காலம் எதிர் சூழல் புக்குத் தேடித் திரிந்த உன்னை –
நான் தேடும் படி ஆவதே –

ஓடினேன் ஓடி -என்கிறபடியே
விஷயாந்தரங்களிலே  கை கழிந்த எனக்கு
நீயே மேல் விழுந்து முறையை உணர்த்தி
உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணி
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்னும்படி பண்ணி
உன் பேறாக என் தலையிலே உன் திருவடிகளை வைத்தது
இன்று உன்னை பிரிந்து நிறைவு பட-
வந்து முகம் காட்டாது ஒழிகைக்கோ –

அழகிது -நாம் மேல் விழுந்து கார்யம் செய்தோம் என்னும்படி அறிந்தீர் ஆகில்
பின்னை மேல் உள்ளதும் நாமே செய்த படி கண்டு
தத் தஸ்ய சத்ர்சம்பவேத் -என்று இருக்கை அன்றோ பிராப்தம்
இங்கனம் த்வரிக்க கடவீரோ என்ன –

ஏழையேன் –
அது செய்ய ஒட்டுகிறது இல்லை என்னுடைய சாபல்யம்

அதி சபலன் நான் என்கிறார் –
நீ செய்தததை அனுசந்தித்து மேலும் தானே செய்கிறான் என்று ஆறி இருக்க ஒட்டுகிறது இல்லை –

இங்கனே யுழி தருகேனே –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் அல்லன் என்ன ஒண்ணாது
அவன் யோக்யதை பார்த்து முகம் தருவான் என்ன ஒண்ணாது –
இனி இழக்கைக்கு அடி என் பாபம் இறே-
இப்படி கிலேசித்து போம் இத்தனை இறே –

இங்கனமே –
ஏஹி பஸ்ய சரீராணி -என்று ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகள் ராஷசர்கள் தின்ற
சரீரத்தைக் காட்டினால் போலே விரஹம் தின்ற வுடம்பைக் காட்டுகிறார் –

யுழி தருகேனே  –
யாதனா சரீரம் போலே விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார் –

யுழி தருகேனே  –
யாதனா சரீரம் போலே முடியவும் பெறாதே
தரிக்கவும் பெறாதே
துக்க அனுபவமே யாத்ரையாம் படி பண்ணுவதே -என் கார்யம் -என்கிறார் –
ஒன்றில் பகவத் விஷயத்தை அனுபவிக்கப் பெற்றிலேன்

ஒன்றில் ஸ்வரூபத்தை அனுசந்தித்து –தத் தஸ்ய ஸ்த்ர்சம் பவேத் -என்று இருக்கப் பெற்றிலேன் –
ஒன்றில் சிந்தயந்தியையும் சக்ரவர்த்தியையும் போலே முடியப் பெற்றிலேன் –
எனக்கு கூறு- விரஹ கிலேச அனுபவமே யாய் விடுவதே-என்கிறார் –

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading