Archive for October, 2025

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஆஸ்ரமவாஸிக பர்வம்-ஸ்ரீ ஆஸ்ரமவாஸ உப பர்வம்-ஸ்ரீ திருதராஷ்டிர நீதி உப பர்வம்-

October 19, 2025

யுதிஷ்டிரனின் அரசாட்சி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 01-யுதிஷ்டிரன் அரசாட்சி; காந்தாரியிடம் குந்தி கொண்ட மதிப்பு; பீமனைத் தவிர ஏனையோர் யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்றுத் திருதராஷ்டிரனை மதித்தது…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “என் பாட்டன்மார்களான பாண்டவர்கள், தங்கள் நாட்டை அடைந்த பிறகு, உயர் ஆன்ம மன்னனான திருதராஷ்டிரனிடம் எவ்வாறு நடந்து கொண்டனர்?(1) உண்மையில், மகன்களும், அமைச்சர்களும் கொல்லப்பட்டவனும், புகலிடமேதும் அற்றவனும், செல்வாக்கை இழந்தவனுமான அந்த மன்னன் எவ்வாறு நடந்து கொண்டான்? பெரும்புகழைக் கொண்டவளான காந்தாரி எவ்வாறு நடந்து கொண்டாள்?(2) உயர் ஆன்மாக்களான என் பாட்டன்மார்கள் எத்தனை வருடங்கள் நாட்டை ஆண்டனர்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தங்கள் பகைவர்கள் அனைவரையும் கொன்று, தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்ற அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு பூமியை ஆண்டனர்.(4) விதுரன், சஞ்சயன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், திருதராஷ்டிரனின் வைசிய மனைவிக்குப் பிறந்த மகனுமான யுயுத்சு ஆகியோர் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடை செய்தனர்.(5) அனைத்துக் காரியங்களிலும், பாண்டவர்கள் அந்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} கருத்தைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உண்மையில், பதினைந்து வருட காலம் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனின் ஆலோசனையின் பேரிலேயே அனைத்துக் காரியங்களையும் செய்தனர்.(6) அந்த வீரர்கள், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிக்கடி சென்று, அவனது பாதங்களை வழிப்பட்டு, அவன் அருகில் அமர்ந்தனர்.(7) தங்கள் தலைகளை அன்புடன் முகர்ந்து பார்க்கும் திருதராஷ்டிரனின் ஆணையின் பேரிலேயே அவர்கள் அனைத்தையும் செய்தனர்.

குந்திபோஜனின் மகளும் {குந்தியும்} அனைத்துக் காரியங்களிலும் காந்தாரிக்குக் கீழ்படிந்தாள்.(8) திரௌபதி, சுபத்திரை மற்றும் பாண்டவப் பெண்கள் பிறரும், அந்த முதிர்ந்த மன்னனும், ராணியும் தங்கள் மாமனாரும், மாமியாருமாக இருப்பதைப் போல அவர்களிடம் நடந்து கொண்டனர்.(9) அரச பயன்பாட்டுக்குத் தகுந்த மேன்மையான வகையைச் சேர்ந்தவையும், விலைமதிப்புமிக்கவையும், படுக்கைகள், ஆடைகள், ஆபரணங்கள், உணவு, பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பிற பொருட்கள்(10) மன்னன் யுதிஷ்டிரனால் திருதராஷ்டிரனுக்குக் கொடுக்கப்பட்டன. அதே போலக் குந்தியும் மூத்தோரிடம் நடந்து கொள்வதைப் போலக் காந்தாரியிடம் நடந்து கொண்டாள்.(11) ஓ! குரு குலத்தோனே, மகன்கள் கொல்லப்பட்டவனான அந்த முதிர்ந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} விதுரன், சஞ்சயன், யுயுத்சு ஆகியோர் பணிவிடை செய்தனர்.(12) மிக மேன்மையான பிராமணரான துரோணரின் அன்புக்குரிய மைத்துனரும், வலிமைமிக்க வில்லாளியுமான கிருபரும் மன்னனைக் கவனித்துக் கொண்டார்.(13) புனித வியாசரும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அடிக்கடிச் சந்தித்து, பழங்கால முனிவர்கள், தெய்வீகத் தவசிகள், பித்ருக்கள் மற்றும் ராட்சசர்களின் வரலாறுகளை அவனுக்குச் சொல்லி வந்தார்.(14)

திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் விதுரன், அறத்தகுதிகளுக்குரிய செயல்கள் அனைத்தையும், நீதி நிர்வாகம் தொடர்புடைய அனைத்தையும் கண்காணித்துவந்தான்.(15) விதுரனுடைய சிறந்த கொள்கையின் மூலமாக {நல்ல நீதியினால்}, நிலப்பிரப்புகள் மற்றும் தொண்டர்களிடம் {ஸாமந்தர்களிடம் / பக்கத்து நாட்டரசர்களிடம்} இருந்து ஏற்புடைய எண்ணற்ற தொண்டுகளைச் சொற்ப செல்வத்தைச் செலவாகக் கொண்டே பாண்டவர்கள் பெற்றனர்.(16) மன்னன் திருதராஷ்டிரன், கைதிகளை விடுவித்து, மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னித்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இதில் ஒருபோதும் எதனையும் சொல்லாமல் இருந்தான்.(17) அம்பிகையின் மகன் {திருதராஷ்டிர்ன} இன்பச் சுற்றுலாக்களுக்குச் சென்ற சந்தர்ப்பங்களில், பெரும் சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் அனுபவிக்கத் தகுந்த இன்பொருட்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்தனுப்பினான்.(18) ஆராலிகர்கள், பழச்சாறு செய்பவர்கள் {ஸூபகாரர்கள்}, ராககாண்டவர்கள் {ராகஷாடவிகர்கள்} ஆகியோர் முன்பு போலவே மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடைகளைச் செய்தனர்[1].(19)பாண்டுவின் மகன்கள், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், பல்வேறு வகை மாலைகளையும் திரட்டி அவற்றை முறையாகத் திருதராஷ்டிரனுக்கு அளித்தனர்.(20) அந்த முதிர்ந்த மன்னன் செழிப்புடன் இருந்த காலத்தைப் போலவே, மைரேய மது வகைகளையும்[2], பல்வேறு வகை மீன்களையும், நறும்பானங்கள் மற்றும் தேனையும், (பல்வேறு பொருட்களைக்) கலந்து பல்வேறு இனிய வகை உணவுகளையும் செய்து அவனுக்குக் கொடுக்கச் செய்தனர்.(21) அங்கே அடுத்தடுத்து வந்த பூமியின் மன்னர்களும், முன்பு போலவே முதிர்ந்த குரு ஏகாதிபதிக்குக் காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(22)குந்தி, திரௌபதி, பெரும்புகழைக் கொண்ட சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, பாம்புத் தலைவனின் மகளான உலூபி, ராணி சித்ராங்கதை,(23) ஓ! மனிதர்களின் தலைவா, திருஷ்டகேதுவின் தங்கை, ஜராசந்தனின் மகள் ஆகியோரும், இன்னும் பல பெண்களும்,(24) அனைத்துப் பணிகளையும் செய்யும் பணிப் பெண்களைப் போலச் சுபலனின் மகளிடம் {காந்தாரியிடம்} காத்திருந்தனர் {பணிவிடை செய்து கொண்டிருந்தனர்}. தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த திருதராஷ்டிரன் எக்காரியத்தினாலும் வருத்தமடையக் கூடாது,(25) என்பதையே யுதிஷ்டிரன் தன் தம்பிகளிடம் எப்போதும் கவனிக்கச் சொல்வான். அவர்களும் தங்கள் பங்குக்கு, மன்னன் யுதிஷ்டிரனிடம் இருந்து பெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணைகளைக் கேட்டு, அந்த முதிர்ந்த மன்னனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருந்தனர்.(26) எனினும், ஒரேயொரு விதிவிலக்கு இருந்தது. {அந்த விதிவிலக்கு} அது பீமசேனனைத் தழுவியது. திருதராஷ்டிரனின் தீய புத்தியின் மூலம் நடந்த பகடையாட்டத்தைப் பின்தொடர்ந்து நடந்த அனைத்தும் அந்த வீரனின் இதயத்தில் இருந்து மறையவில்லை. (அவன் இன்னும் அந்த நிகழ்வுகளைத் தன் நினைவில் கொண்டிருந்தான்)” என்றார் {வைசம்பாயனர்}.(27)

திருதராஷ்டிரன் ப்ரீதி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 02-அபரிமிதமாகக் கொடையளித்த திருதராஷ்டிரனும், காந்தாரியும்; தன் பிள்ளைகளிடம் போலவே பாண்டவர்களிடம் நடந்து கொண்ட காந்தாரி; துரியோதனின் தீய நடத்தையை முற்றிலும் மறந்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனை மேம்போக்காக வணங்கிய பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களால் இவ்வாறு வழிபடப்பட்ட அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்} முனிவர்களால் மதிக்கப்பட்டு முன்பு போலவே மகிழ்ச்சியாகத் தன் காலத்தைக் கழித்தான்.(1) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான அவன் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முதன்மையான காணிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்} அப்பொருட்களை எப்போதும் திருதராஷ்டிரனின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.(2) வன்மமற்றவனான மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் தன் பெரிய தந்தையிடம் அன்புடன் நடந்து கொண்டான். தன் தம்பிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, “மன்னர் திருதராஷ்டிரர் என்னாலும், உங்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். உண்மையில், எவன் திருதராஷ்டிரரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவானோ அவன் என் நலன் விரும்பியாவான்.(4) மறுபுறம், எவன் அவரிடம் வேறுவகையில் நடந்து கொள்கிறானோ அவன் என் பகைவனாவான். அத்தகைய மனிதன் நிச்சயம் என்னால் தண்டிக்கப்படுவான்” என்றான். பித்ருக்களுக்கென விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யும் நாட்களிலும், தன் மகன்கள் மற்றும் தன் நலன்விரும்பிகள் அனைவருக்குமான சிராத்தங்களைச் செய்யும் போதிலும், உயர் ஆன்ம குரு மன்னனான திருதராஷ்டிரன், பிராமணர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தகுந்த வகையிலும், தான் விரும்பியவாறும் பெருமளவு செல்வத்தைக் கொடையாக அளித்தான்.(5,6)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் அவனுடைய ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றினர்.(7) மகன்கள் மற்றும் பேரன்கள் கொல்லப்பட்டதால் பீடிக்கப்பட்டிருந்த அந்த முதிய மன்னன், பாண்டவர்களாகிய தங்களால் ஏற்பட்ட அந்தத் துயரத்தால் இறந்துவிடாத வகையில் அவர்கள் எப்போதும் அவனைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.(8) உண்மையில், அந்தக் குரு வீரன், தன் மகன்கள் வாழ்ந்த போது அனுபவித்த அனைத்துப் பொருட்களையும், அந்த மகிழ்ச்சியையும் அவன் இழந்துவிடாத வகையில் பாண்டவர்கள் அவனைப் பார்த்துக் கொண்டனர்.(9) பாண்டுவின் மகன்களான அந்த ஐந்து சகோதரர்களும், திருதராஷ்டிரனின் ஆணையின் கீழ் வாழ்ந்து இவ்வாறே அவனிடம் நடந்து கொண்டனர்.(10) அவர்கள் பணிவாக இருப்பதையும், தன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதையும், ஆசானிடம் சீடர்கள் நடந்து கொள்வதைப் போலத் தன்னிடம் நடந்து கொள்வதையும் கண்ட திருதராஷ்டிரன், ஓர் ஆசான் அன்புடன் நடந்து கொள்ளும் நடத்தையைப் பதிலுக்கு அவர்களிடம் கடைப்பிடித்தான்.(11) காந்தாரி, கொல்லப்பட்ட தன் பிள்ளைகளுக்குப் பல்வேறு சிராத்தச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், பிராமணர்களுக்குப் பல்வேறு இன்பொருட்களைக் கொடையளிப்பதன் மூலமும் அவர்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபட்டாள்.(12) இவ்வாறே அறவோரில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் சேர்ந்து மன்னன் திருதராஷ்டிரனை வழிபட்டான்”.(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருஞ்சக்தி கொண்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், முதிர்ந்த மன்னனுமான திருதராஷ்டிரனால், யுதிஷ்டிரனிடம் எந்தத் தீய எண்ணத்தையும் காண முடியவில்லை.(14) ஞானிகளாகவும், அறவொழுக்கம் ஒழுகுபவர்களாகவும் உயர் ஆன்மப் பாண்டவர்கள் இருப்பதைக் கண்டவனும், அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன் அவர்களிடம் நிறைவடைந்தான்.(15) சுபலனின் மகளான காந்தாரி, (கொல்லப்பட்ட) தன் பிள்ளைகளைக் குறித்த கவலையனைத்தையும் கைவிட்டு, பாண்டவர்களையே தன் பிள்ளைகளாகக் கருதி அவர்கள் மீது பேரன்பைக் காட்டத் தொடங்கினாள்.(16) பெருஞ்சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், விசித்ரவீரியனின் அரச மகனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஏற்பில்லாத எதையும் ஒருபோதும் செய்தானில்லை. மறுபுறம், அவன் எப்போதும் அவனுக்கு மிக ஏற்புடைய வழியிலேயே நடந்து கொண்டான்.(17) மன்னன் திருதராஷ்டிரனாலோ, ஆதரவற்றவளான காந்தாரியினாலோ சொல்லப்படும் கடினமான அல்லது கடினமற்ற செயல்கள் எதுவாக இருந்தாலும்(18) அவை அனைத்தையும், பகைவீரர்களைக் கொல்பவனான பாண்டவ மன்னன் பெரும் மதிப்புடன் நிறைவேற்றினான்.(19)

யுதிஷ்டிரனின் இத்தகைய ஒழுக்கத்தால் அந்த முதிர்ந்த மன்னன் உயர்வான நிறைவை அடைந்தான். உண்மையில், அவன் தன் தீய மகனை {துரியோதனனை} நினைத்து வருந்தினான்.(20) ஒவ்வொரு விடியலிலும் எழுந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஜபங்களைச் செய்து, பாண்டவர்கள் போரில் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி ஆசி கூறினான்.(21) பிராமணர்களுக்குரிய வழக்கமான கொடைகளைக் கொடுத்துவிட்டு, அவர்களை ஆசி கூறச் செய்யும் அந்த முதிய மன்னன், பாண்டவர்களின் நீண்ட வாழ்நாளை வேண்டி புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான்.(22) உண்மையில் அந்த மன்னன், பாண்டவர்களிடம் எப்போதும் தனக்குக் கிட்டும் மகிழ்ச்சியைத் தன் மகன்களிடம் இருந்து ஒருபோதும் பெற்றதில்லை.(23) அந்தக் காலத்தில் மன்னன் யுதிஷ்டிரன், தன் நாட்டினில் வாழ்ந்த பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களும், பல்வேறு கூட்டங்களாக இருந்த வைசிய மற்றும் சூத்திரர்களுக்கும் மிக ஏற்புடையவனாக இருந்தான்.(24) திருதராஷ்டிரன் மகன்களால் அவனுக்கு செய்யப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் மன்னன் யுதிஷ்டிரன் மறந்து தன் பெரிய தந்தையை வணங்கினான்.(25)

எந்த மனிதனாவது அம்பிகையின் மகனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஏற்பில்லாத எதையும் செய்தால் குந்தியின் புத்திசாலி மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அவன் வெறுப்புக்கான பொருளாக ஆனான்.(26) உண்மையில் யுதிஷ்டிரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் துரியோதனன் அல்லது திருதராஷ்டிரனின் தீச்செயல்களை எவராலும் பேச முடியவில்லை.(27) குற்றங்களைப் பொறுத்து, மன்னன் அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} காட்டிய பெருந்தன்மையில் காந்தாரி மற்றும் விதுரன் ஆகிய இருவரும் பெரும் நிறைவுடன் இருந்தனர். எனினும், ஓ! பகைவரைக் கொல்பவனே, அவர்கள் பீமனிடம் அவ்வளவு மகிழ்ச்சியடையவில்லை.(28) தர்மனின் மகனான யுதிஷ்டிரன் உண்மையில் தன் பெரிய தந்தைக்குக் கீழ்ப்படிந்தவனாக இருந்தான். எனினும், பீமனோ திருதராஷ்டிரனைப் பார்த்தவுடனேயே உற்சாகத்தை இழந்தான்.(29) பகைவரைக் கொல்பவனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} அந்த முதிய மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்குவதைக் கண்டு, விருப்பமில்லாத இதயத்துடன் அவன் {பீமன்} மேம்போக்காகவே அவனை  {திருதராஷ்டிரனை} வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(30)

திருதராஷ்டிரன் தீர்மானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 03-பீமனின் நிந்தனை; காந்தாரியுடன் காட்டுக்குச் செல்லத் துணிந்த திருதராஷ்டிரன்; நண்பர்களையும், யுதிஷ்டிரனையும் அழைத்துத் தன் தீர்மானத்தைத் தெரிவித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குரு நாட்டில் வாழ்ந்த மக்கள், மன்னன் யுதிஷ்டிரனுக்கும் மற்றும் துரியோதனனின் தந்தை {திருதராஷ்டிரன்} ஆகியோருக்கிடையில் இருந்த நல்லுறவில் எந்த மாறுபாட்டையும் கவனிக்கத் தவறினர்.(1) குரு மன்னன் (திருதராஷ்டிரன்) தன் தீய மகனை நினைவுகூர்ந்த போதெல்லாம் தன் இதயத்தில் அவனால் பீமனிடம் நட்புணர்வற்ற நிலையை உணராமல் இருக்க முடியவில்லை.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தீயதாகத் தோன்றிய இதயத்தால் தூண்டப்பட்டவனான பீமசேனனாலும் மன்னன் திருதராஷ்டிரனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) விருகோதரன் {பீமன்} கமுக்கமாக அந்த முதிர்ந்த மன்னனுக்குப் {திருதராஷ்டிரனுக்குப்} பிடிக்காத செயல்கள் பலவற்றைச் செய்தான். வஞ்சகமான பணியாட்களைக் கொண்டு அவன் தன் பெரிய தந்தையின் கட்டளைகளை மீறச் செய்தான்.(4) பீமன், ஒரு நாள், தன் நண்பர்களுக்கு மத்தியில் கக்கங்களின் அறைந்துகொண்டு, திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரி கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அந்த முதிர்ந்த மன்னனின் தீய ஆலோசனைகளையும், அவனுடைய செயல்கள் சிலவற்றையும் நினைவுகூர்ந்தான்.

கோபம் நிறைந்தவனான விருகோதரன் {பீமன்}, தன் பகைவர்களான துரியோதனன், கர்ணன் மற்றும் துச்சாசனனை நினைவுகூர்ந்து,(5,6) தன்னாவலுக்கு வழி கொடுத்து, இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னாள்: {பீமன்}, “பல்வேறு வகை ஆயுதங்களுடன் போரிடவல்லவர்களான அந்தக் குருட்டு மன்னின் மகன்கள் அனைவரையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பான என்னுடைய இந்த இரு கைகளாலேயே மறு உலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.(7) உண்மையில், இரும்பு கதாயுதங்களைப் போலத் தெரிபவையும், பகைவர்களால் வெல்லப்பட முடியாதவையுமான என்னுடைய இந்த இரு கைகளின் அணைப்புக்குள்ளேயே திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் அழிவை அடைந்தனர். யானையின் துதிக்கைக்கு ஒப்பானவையும், உருண்டு நன்கு திரண்டவையுமான என் இரு கைகள் இவையே. இவற்றின் அணைப்புக்குள்ளேயே திருதராஷ்டிரரிடன் மூட மகன்கள் அனைவரும் அழிவைச் சந்தித்தனர்.(9) சந்தனக் குழம்பு பூசப்பட்டவையும், அந்த அலங்காரத்திற்குத் தகுந்தவையுமான என்னுடைய இந்த இரு கைகளாலேயே துரியோதனனும், அவனுடைய மகன்களும், உற்றார் உறவினரும் மறுஉலகத்திற்கு அனுப்பப்பட்டனர்” {என்றான்}.(10)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருகோதரன் சொன்ன இவற்றையும், உண்மையில் ஈட்டிகளுக்கு ஒப்பான இன்னும் வேறு சொற்களையும் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் உற்சாகத்தை இழந்து, கவலையடைந்தான்.(11) எனினும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், காலம் தன் போக்கில் கொண்டு வருபவற்றை அறிந்தவளுமா ராணி காந்தாரி அவற்றைப் பொய்யெனக் கருதினாள்[1].(12) ஓ! ஏகாதிபதி, பதினைந்து வருடங்கள் கடந்திருந்தபோது, பீமனின் சொல்லீட்டிகளால் (தொடர்ந்து) பீடிக்கப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், மனந்தளர்ச்சியினாலும், துன்பத்தாலும் துளைக்கப்பட்டான்.(13) எனினும், குந்தியின் மகனான யுதிஷ்டிரனோ, வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனோ, குந்தியோ, பெரும்புகழைக் கொண்ட திரௌபதியோ, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களும், திருதராஷ்டிரனின் விருப்பங்களைக் கேட்ட பிறகே எப்போதும் செயல்படுபவர்களுமான மாத்ரியின் இரு மகன்களோ {நகுல சகாதேவர்களோ} இதை அறிந்தார்களில்லை.(14) மன்னன் சொல்வதைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரட்டையர்கள் ஒருபோதும் அந்த முதிர்ந்த மன்னனுக்கு ஏற்பில்லாத எதையும் சொல்வார்களில்லை. அப்போது திருதராஷ்டிரன் ஒருநாள் நம்பிக்கையுடன் தன் நண்பர்களைக் கௌரவித்தான். கண்ணீர் நிறைந்த கண்களுடன் பேசிய அவன், அவர்களிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(15)திருதராஷ்டிரன், “குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} எவ்வாறு அழிவு ஏற்பட்டது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். என் ஆலோசனைகள் அனைத்தையும் கௌரவர்கள் அங்கீகரித்திருந்தாலும், நான் செய்த குற்றத்தாலேயே அவை அனைத்தும் நடந்தன.(16) மூடனான நான், தீய மனம் கொண்டவனும், உற்றாரின் அச்சத்தைப் பெருக்குபவனுமான துரியோதனனை குருக்களின் ஆட்சியாளனாக நிறுவினேன்.(17) வாசுதேவன் {கிருஷ்ணன்}, “தீய புத்தி கொண்ட இந்த இழிந்தவனும், அவனுடைய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்” என்று என்னிடம் சொன்னான்[2]. பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சொற்களுக்கு நான் செவிமடுக்கவில்லை. ஞானிகள் அனைவரும் அதே நல்லாலோசனையையே எனக்குச் சொன்னார்கள். விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரும் அதையே சொன்னார்கள். புனிதரும், உயர் ஆன்மா கொண்டவருமான வியாசரும், சஞ்சயனும், காந்தாரியும் அதையே சொன்னார்கள். எனினும், பெற்ற பாசத்தில் மூழ்கிய நான் அந்த ஆலோசனையைப் பின்பற்றவில்லை. அப்போது அதைப் புறக்கணித்ததற்காக இப்போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.(18-20)தந்தைமார், பாட்டன்மாரிடம் இருந்து அடைந்த சுடர்மிக்கச் செல்வத்தை, அனைத்துத் தகுதிகளும்வாய்ந்த உயர் ஆன்ம பாண்டவர்களிடம் கொடுக்காததற்கும் நான் மனம் வருந்துகிறேன்.(21) கதனின் அண்ணன் மன்னர்களின் அழிவை முன்பே கண்டான் {உணர்ந்தறிந்தான்}; எனினும் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அந்த அழிவே உயர்ந்த நன்மையெனக் கருதினான்[3].(22) என்னுடைய துருப்புகளின் பல அனீகங்கள் {அனீகினிகள்} அழிவையடைந்தன. ஐயோ, இந்த விளைவுகள் அனைத்தாலும் என் இதயம் ஆயிரம் ஈட்டிகளால் பிளக்கப்படுகிறது.(23) தீய புத்தி கொண்டவனான நான், பதினைந்து வருடங்கள் கழிந்த பிறகு என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் போகிறேன்.(24)இப்போது, நாளின் நான்காம் காலத்திலோ, சில வேளைகளில் எட்டாம் காலத்திலோ முறையான நோன்புடன் தாகத்தை {பசியைத்} தணித்துக் கொள்வதற்காக மட்டுமே சிறிதளவு உணவை உண்கிறேன். காந்தாரி இதையறிவாள்.(25) என் பணியாட்கள் அனைவரும் நான் உண்கிறேன் என்று கருதுவார்கள். யுதிஷ்டிரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக மட்டுமே நான் என் செயல்களை மறைத்தேன். ஏனெனில், பாண்டுவின் மூத்தமகன் என் நோன்பை அறிய நேர்ந்தால், பெருந்துன்பத்தை அடைவான்.(26) தோலாடை உடுத்திக் கொண்டு, தரையில் சிறிதளவு குசப் புற்களைப் பரப்பி, அதில் கிடந்து அமைதியான ஜபங்களில் நான் என் காலத்தைக் கழிக்கிறேன் பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் இதே போன்ற நோன்புகளில் தன் காலத்தைக் கழிக்கிறாள்.(27) போரில் புறமுதுகிடாதவர்களான நூறு மகன்களை இழந்த நாங்கள் இவ்வாறே நடந்து வருகிறோம். எனினும், என் பிள்ளைகளுக்காக நான் வருந்தவில்லை. க்ஷத்திரியக் கடமைகளை நோற்றே அவர்கள் அனைவரும் இறந்திருக்கின்றனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.(28)

இந்தச் சொற்களைச் சொன்ன அந்த முதிர்ந்த மன்னன், மீண்டும் குறிப்பாக யுதிஷ்டிரனிடம், “யதுகுல இளவரசியின் மகனே {குந்தியின் மகனே}, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக.(29) ஓ! மகனே, இவ்வளவு வருடங்களும் உன்னால் பேணி வளர்க்கப்பட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். (உன் உதவியைக் கொண்டு) நான் பெரும் அளவு கொடைகளைக் கொடுத்திருகிகறேன், மீண்டும் மீண்டும் சிராத்தங்களைச் செய்திருக்கிறேன்[4].(30)ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, என்னால் முடிந்த அளவுக்குப் பெரிதான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறேன். இந்தக் காந்தாரி, மகன்களை இழந்தவளாக இருப்பினும், என்னைப் பார்த்துக் கொண்டே பெரும் கௌரவத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறாள்.(31) திரௌபதியிடம் பெருங்குற்றமிழைத்தவர்களும், உன் செழிப்பைக் களவாடியவர்களுமான அந்தக் கொடிய பாவிகள் அனைவரும் தங்கள் வகைக்கான நடைமுறைக்கு ஏற்புடைய வகையிலேயே போரில் கொல்லப்பட்டு இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டனர்.(32) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நான் அவர்களுக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை. போரை நோக்கிய முகங்களுடன் கொல்லப்பட்ட அவர்கள் ஆயுததாரிகளுக்கான உலகங்களை அடைந்துவிட்டனர்.(33) நான் இப்போது எனக்கும், காந்தாரிக்குமான நன்மை மற்றும் புண்ணியங்களை அடைய வேண்டும். ஓ! பெரும் மன்னா, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்.(34) அறவோர் அனைவரிலும் முதன்மையானவன் நீ. மன்னனே உயிரினங்கள் அனைத்திற்கும் ஆசானாவான். அதற்காகவே நான் இவ்வாறு சொல்கிறேன்.(35)

ஓ! வீரா {யுதிஷ்டிரா}, ஓ! மன்னா, உன் அனுமதியுடன், கந்தலையும், மரவுரியையும் தரித்துக் கொண்டு, காந்தாரியுடன் சேர்ந்து காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(36) நான் காட்டில் வாழ்ந்தவாறு உனக்கு எப்போதும் ஆசிகூறிக் கொண்டு இருப்பேன். ஓ! மகனே, முதுமை நேரும் போது அரசுரிமையைத் தங்கள் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு, காட்டு வாழ்வுமுறையைப் பின்பற்றிச் செல்வது நம் குலத்தவரின் வழக்கம். ஓ! வீரா, அங்கே காற்றை மட்டுமே உண்டு, உணவனைத்தையும் கைவிட்டு, என் மனைவியுடன் சேர்ந்து நான் கடுந்தவங்களைச் செய்வேன்.(37,38) ஓ! மகனே, நீ மன்னனாக இருப்பதால் அந்தத் தவங்களில் உனக்கும் பங்குண்டு. மன்னர்களுக்குத் தங்கள் நாட்டில் நடைபெறும் மங்கல மற்றும் மங்கலமற்ற செய்லகளில் பங்குண்டு[5]” என்றான் {திருதராஷ்டிர்ன}.(39)யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நீர் இவ்வாறு துயருறுகையின் அரசுரிமை எனக்கு உவப்பாகவே இல்லை. தீய புத்தி கொண்டவனும், ஆட்சி இன்பங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், உண்மையான காரியங்களில் கவனமற்றவனுமான எனக்கு ஐயோ.(40) ஐயோ, நீர் இவ்வளவு காலம் துன்பத்தில் பீடிக்கப்பட்டவராக, உணவைத் தவிர்த்து உண்ணா நோன்புகளினால் மெலிந்து வெறுந்தரையில் படுத்துக் கிடப்பதை நானும் என் தம்பிகளும் அறியாமல் இருந்தோம்.(41) ஐயோ, எனக்கு நம்பிக்கையை அளித்துப் பின்பு இவ்வளவு துயரத்தை அடைந்திருக்கும் ஆழ்ந்த புத்தியுடைய உம்மால் மூடனான நான் வஞ்சிக்கப்பட்டேன்.(42) ஓ! மன்னா, நீர் இவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கும்போது, எனக்கு நாட்டினாலோ, அனுபவிக்கத் தகுந்த பொருட்களினாலோ பயனென்ன? வேள்விகளினாலும், மகிழ்ச்சியினாலும் பயனென்ன?(43) நான் என் நாட்டைப் பிணியாகவும், என்னைப் பீடிக்கப்பட்டவனாகவும் கருதுகிறேன். நான் துயரில் மூழ்கியிருந்தாலும், நான் உம்மிடம் சொல்லும் இந்தச் சொற்களால் பயனென்ன?(44) எங்கள் தந்தை நீர், எங்கள் தாயும் நீர்; எங்கள் பெரியோரில் முதன்மையானவர் நீர். நீர் இல்லாமல் நாங்கள் எவ்வாறு வாழப் போகிறோம்?(45)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே, உம் மடியில் பிறந்த யுயுத்சுவோ, நீர் விரும்பும் வேறு எவரோ மன்னனாகட்டும்.(46) நான் காட்டுக்குச் செல்கிறேன். நீர் நாட்டை ஆள்வீராக. புகழ்க்கேட்டினால் ஏற்கனவே எரிந்திருக்கும் என்னை மேலும் எரிப்பது உமக்குத் தகாது.(47) நான் மன்னனல்ல. நீரே மன்னன். நான் உமது விருப்பத்தைச் சார்ந்தே இருக்கிறேன். என் ஆசானான உமக்கு நான் அனுமதியளிக்க எவ்வாறு துணிவேன்?(48) ஓ! பாவமற்றவரே, சுயோதனனால் {துரியோதனனால்} எங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக நான் என் இதயத்தில் எவ்வித மனக்கசப்பையும் வளர்த்ததில்லை. இவ்வாறு நடக்க வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கிறது. நாங்களும், பிறரும் (விதியால்) திகைப்படையச் செய்யப்பட்டோம்.(49) துரியோதனனையும், பிறரையும் போலவே நாங்களும் உமது பிள்ளைகளே. குந்தியைப் போலவே காந்தாரியும் எங்கள் தாய் என்பதே என் நம்பிக்கை.(50)

ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, நீர் எங்களை விட்டுக் காட்டுக்குச் சென்றால், நானும் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன். என் ஆன்மாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன்.(51) கடல்களைக் கச்சையாகக் கொண்டதும், இவ்வளவு செல்வம் நிறைந்ததுமான பூமியானது {திருதராஷ்டிரராகிய} நீரில்லாமல் எனக்கு இன்பமளிக்காது.(52) இவை யாவும் உமக்குரியவை. நான் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்கிறேன். ஓ! மன்னர்களின் மன்னா, நாங்கள் அனைவரும் உம்மைச் சார்ந்திருப்பவர்கள். உமது இதயத்தில் இருக்கும் நோய் விலகட்டும்.(53) ஓ! பூமியின் தலைவா, உமக்கு நேர்ந்த இவையாவும் விதியால் நேர்ந்தவையே. நற்பேற்றினால் உமக்குப் பணிவிடை செய்வதாலும், உமது ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைச் செயற்படுத்துவதாலும் உமது இதயத்தில் இருக்கும் நோயில் இருந்து உம்மை விடுவித்து விடலாம் என நான் எண்ணினேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(54)

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! மகனே, என் மனம் தவத்தில் நிலைத்திருக்கிறது. ஓ! பலமிக்கவனே, நான் காட்டுக்கு ஓயச் செல்வது நம் குல வழக்கமாகும்.(55) ஓ! மகனே, நான் உன் பாதுகாப்பின் கீழ் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நான் பல வருடங்கள் மதிப்புடன் உன்னால் தொண்டாற்றப்பட்டேன். இப்போது நான் வயது முதிர்ந்தவன். ஓ! மன்னா (காட்டை வசிப்பிடமாகக் கொள்ள) எனக்கு அனுமதியளிப்பதே உனக்குத் தகும்” என்றான்”.(56)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இச்சொற்களைச் சொன்னவனும், அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், நடுங்கிக் கொண்டே தன் கைகளைக் கூப்பி, உயர் ஆன்ம சஞ்சயனிடமும், பெருந்தேர்வீரரான கிருபரிடமும், மேலும் இந்தச் சொற்களைச் சொன்னான்: {திருதராஷ்டிரன்}, “நான் உங்கள் மூலமாக மன்னனை வேண்ட விரும்புகிறேன்.(57,58) என் வயதின் பலவீனத்தாலும், களைத்துப் பேசிக் கொண்டிருப்பதாலும், என் மனம் உற்சாகமிழக்கிறது, என் வாய் உலர்கிறது” என்றான்.(59) இவ்வாறு சொன்னவனும், செழிப்பால் அருளப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான அந்த முதிர்ந்த மன்னன், காந்தாரியின் மீது சாய்ந்து, திடீரென உயிரையிழந்தவனைப் போலத் தெரிந்தான்.(60) பகைவீரர்களைக் கொல்பவனுமான குந்தியின் அரச மகன்{யுதிஷ்டிரன்}, நினைவிழந்த ஒருவனைப் போல இவ்வாறு அமர்ந்திருக்கும் அவனை {திருதராஷ்டிரனைக்} கண்டு கடுங்கவலையடைந்தான்.(61)யுதிஷ்டிரன் , “ஐயோ, நூறாயிரம் யானைகளுக்கு இணையான பலத்தைக் கொண்ட மன்னர், ஐயோ இன்று பெண் மீது சாய்ந்து அமர்ந்திருக்கிறார்.(62) ஐயோ, முன்பொரு சந்தர்ப்பத்தில் பீமனின் இரும்புச் சிலையைத் துண்டுகளாகக் குறைத்த ஒருவர் இன்று பலவீனமான பெண்ணின் மீது சாய்ந்திருக்கிறார்[6].(63) அறமற்ற எனக்கு ஐயோ. என் புத்திக்கு ஐயோ. என் சாத்திர அறிவுக்கு ஐயோ. இந்தப் பூமியின் அதிபதி இந்நிலையில் கிடக்கக் காரணமான எனக்கு ஐயோ.(64) நானும் என் ஆசானைப் போல உண்ணா நோன்பிருக்கப் போகிறேன். உண்மையில், இந்த மன்னரும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் உணவைத் தவிர்த்தால் நான் உண்ணா நோன்பிருப்பேன்” என்றான்”.(65)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்துக் கடமைகளையும் அறிந்த பாண்டவ மன்னன், அப்போது தன் கையாலேயே குளிர்ந்த நீரை எடுத்து அந்த முதிர்ந்த ஏகாதிபதியின் மார்பிலும், முகத்திலும் மென்மையாகத் தேய்த்தான்.(66) மங்கலமானதும், நறுமணமிக்கதும், நகைகளையும் {ரத்தினங்களையும்}, மருத்துவ மூலிகைகளையும் {ஔஷதிகளையும்} கொண்டதுமான அந்த மன்னனுடைய கைகளின் தீண்டலால் {அந்த பாணிஸ்பரிசத்தால்} திருதராஷ்டிரன் தன்னுணர்வுகள் {பிரஜ்ஞை} மீண்டான்[7].(67)திருதராஷ்டிரன், “ஓ! பாண்டுவின் மகனே, உன் கையால் மீண்டும் என்னைத் தீண்டுவாயா, நீ என்னைத் தழுவுவாயாக. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, உன் கையின் மங்கலத் தீண்டலால் என்னுணர்வுகள் மீண்டன.(68) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் தலையை முகர விரும்புகிறேன். உன் கைகளின் அரவணைப்பு எனக்கு உயர்ந்த நிறைவை அளிக்கின்றன.(69) இது நாளின் எட்டாம் காலமாகும், நான் உணவு உண்ணும் காலமாகும். ஓ! குரு குலத்தின் குழந்தாய், நான என் உணவை உண்ணாததால் நகர முடியாத அளவுக்குப் பலவீனமாக இருக்கிறேன்.(70) உன்னிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்ததில் நான் மிகவும் களைத்திருக்கிறேன். ஓ! மகனே, அதனால் உற்சாகமிழந்தவனாகி மயக்கமடைந்தேன்.(71) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உயிர்ப்பூட்டும் விளைவுகளில் அமுதத்துக்கு ஒப்பான உன் கைகளின் தீண்டலைப் பெற்றவுடன் நான் என் உணர்வுகளை மீண்டும் பெற்றேன்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(72)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா, தன் தந்தையின் அண்ணனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அன்பினால் அவனது உடலெங்கும் மென்மையாகத் தீண்டினான்.(73) உயிர் மூச்சுகள் மீண்ட மன்னன் திருதராஷ்டிரன் தன் கைகளால் பாண்டுவின் மகனை ஆரத் தழுவி கொண்டு அவனது தலையை முகர்ந்தான்.(74) விதுரனும், பிறரும் பெருந்துயரால் உரக்க அழுதனர். எனினும், கடுங்கவலையின் விளைவால் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனிடமோ, பாண்டுவின் மகனிடமோ ஏதும் சொல்லாதிருந்தனர்.(75) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரி, மனவுரத்தால் நிறைந்த தன் இதயத்தில் கவலையைப் பொறுத்துக் கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள்.(76) வேறு பெண்களும், அவர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியும் பெரிதும் துன்புற்றனர். அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு அதிகமான கண்ணீரைச் சொரிந்து அழுதனர்.(77)

அப்போது திருதராஷ்டிரன், மீண்டும் யுதிஷ்டிரனிடம் இந்தச் சொற்களில், “ஓ! மன்னா, தவம் பயில எனக்கு நீ அனுமதியளிப்பாயாக.(78) ஓ! மகனே, தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் என் மனம் பலவீனமடைகிறது. ஓ! மகனே, இதற்குப் பிறகும் எனைத் துன்புறுத்துவது உனக்குத் தகாது” என்றான்.(79)

குரு குலத்தில் முதன்மையான அவன் {திருதராஷ்டிரன்}, யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொன்னபோது, அங்கிருந்த போர்வீரர்கள் அனைவரிடம் இருந்தும் உரத்த ஓலம் எழுந்தது[8].(80) பெருங்காந்தியைக் கொண்டவனான தன் அரசத் தந்தை மெலிந்து மங்கியவனாக இருப்பதையும், விரும்பத்தகாத நிலைக்குக் குறைக்கப்பட்டிருப்பதையும், உண்ணா நோன்புகளால் சிதைந்திருப்பதையும், தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூட்டைப் போலத் தெரிவதையும் கண்டு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன் துயரால் கண்ணீர் சிந்தி, மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னான்.(81,82) {யுதிஷ்டிரன்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, வாழ்வையும், பூமியையும் நான் விரும்பவில்லை. ஓ! பகைவரை எரிப்பவரே, உமக்கு ஏற்புடையதைச் செய்வதில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன்.(83) நான் உமது ஆதரவுக்குத் தகுந்தவனென்றால், நான் உமக்கன்பானவன் என்றால் ஏதாவது உண்பீராக. அப்போதே நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவேன்” என்றான்.(84)பெரும் சக்தி கொண்ட திருதராஷ்டிரன் அப்போது யுதிஷ்டிரனிடம், “ஓ! மகனே, நான் உன் அனுமதியுடன் கொஞ்சம் உணவை உண்ண விரும்புகிறேன்” என்றான்.(85) திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் இந்தச் சொற்களைச் சொன்னபோது, சத்யவதியின் மகனான வியாசர் அங்கே வந்து பின்வருமாறு சொன்னார்” {என்றார் வைசம்பாயனர்}.(86)

வியாசரின் வலியுறுத்தல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 04-திருதராஷ்டிரன் தீர்மானத்தை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; யுதிஷ்டிரன் ஏற்றுக் கொண்டது…

வியாஸர், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, குரு குலத்தின் திருதராஷ்டிரன் சொல்வதைத் தயங்காமல் செய்வாயாக.(1) இந்த மன்னன் முதியவன். மேலும் அவன் மகனற்றவனாக ஆக்கப்பட்டவன். அவனால் தன் துயரை அதிகக் காலம் தாங்க இயலும் என நான் நினைக்கவில்லை.(2) பெரும் ஞானம், அன்பான பேச்சு மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரி, தன் மகன்களின் இழப்பால் உண்டான அதீத துயரத்தை தன் மனவுரத்தால் பொறுத்துக் கொள்கிறாள்.(3) (முதிர்ந்த மன்னன் சொல்வதையே) நானும் சொல்கிறேன். என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. முதிய மன்னன் உன் அனுமதியைப் பெறட்டும். அவன் வீட்டில் மகிமையற்ற முறையில் இறக்க வேண்டாம்.(4) பழங்கால அரச முனிகள் அனைவரும் சென்ற பாதையையே இம்மன்னனும் பின்பற்றட்டும். உண்மையில் அரச முனிகள் அனைவரும் இறுதியாகக் காடுகளுக்குள்ளே தான் ஓய்வார்கள்” என்றார் {வியாசர்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசரால் அந்நேரத்தில் இவ்வாறு சொல்லப்பட்ட போது, வலிமையும், சக்தியும் படைத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் பெருந்தவசியிடம் இச்சொற்களில்,(6) “புனிதரான உம்மிடம் நாங்கள் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருக்கிறோம். நீர் மட்டுமே எங்கள் ஆசானாயிருக்கிறீர். நீர் மட்டுமே எங்கள் நாட்டுக்கும், எங்கள் குலத்திற்கும் புகலிடமாக இருக்கிறீர்.(7) நான் உமது மகன். ஓ! புனிதமானவரே, நீர் என் தந்தை. நீர் எங்கள் மன்னன், நீர் எங்கள் ஆசான். கடமைகள் அனைத்திற்கும் ஏற்புடைய வகையில் ஒரு மகன் எப்போதும் தன் தந்தையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், வேதங்களை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், புலவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், யுதிஷ்டிரனிடம் இச்சொற்களைச் சொன்னார்,(9) {வியாசர்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இஃது இவ்வாறே இருக்கிறது. ஓ! பாரதா, இது நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. இந்த மன்னன் முதிய வயதை எட்டியிருக்கிறான். மேலும் இப்போது இவன் தன் வாழ்வின் இறுதி நிலையில் இருக்கிறான்.(10) பூமியின் தலைவனான இவன், என்னாலும், உன்னாலும் அனுமதிக்கப்பட்டுத் தன் காரியங்களைச் செய்து கொள்ளட்டும். அவனது வழியில் நீ தடையாக நிற்காதே.(11) ஓ! யுதிஷ்டிரா, அரச முனிகளின் உயர்ந்த கடமை இதுவேயாகும். அவர்கள் போர்க்களத்தில் மரணம் அடைய வேண்டும், அல்லது சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் காடுகளில் மரணம் அடைய வேண்டும்.(12)

ஓ! மன்னர்களின் மன்னா, உன்னுடைய அரசத் தந்தை பாண்டு, தன் ஆசானை மதிக்கும் ஒரு சீடனைப் போல இந்த முதிர்ந்த மன்னனை மதித்தான்.(13) (அந்தக் காலத்தில்) இவன் செல்வங்கள் மற்றும், ரத்தினங்களின் மலைகளுடன் கூடிய அபரிமிதமான கொடைகளுடன் பெரும் வேள்விகள் பலவற்றில் தேவர்களைத் துதித்து, தன் குடிமக்களை நல்ல முறையில் பாதுகாத்துப் பூமியை ஆண்டு வந்தான்.(14) பெரும் சந்ததியையும், பெருகும் நாட்டையும் அடைந்த இவன் {திருதராஷ்டிரன்}, நீங்கள் நாடுகடத்தப்பட்டிருந்த பதிமூன்று வருடங்கள் பெருஞ்செல்வாக்கை அனுபவித்து, பெருஞ்செல்வத்தைக் கொடையாக அளித்தான்.(15) ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! பாவமற்றவனே, நீயும், உன் பணியாட்களும், ஆசானிடம் சீடன் தயாராகக் கீழ்ப்படிவதைப் போலவே இந்த மன்னன் மற்றும் புகழ்பெற்ற காந்தாரியைத் துதித்துக் கொண்டிருந்தீர்கள்.(16) நீ உன் தந்தைக்கு அனுமதி கொடுப்பாயாக. அவன் தவம் பயில்வதற்கான காலம் வந்துவிட்டது. ஓ! யுதிஷ்டிரா, அவன் உனக்கெதிரான சிறு கோபத்தையும் வளர்த்தவனில்லை” என்றார் {வியாசர்}”.(17)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைச் சொல்லி அந்த முதிர்ந்த மன்னனை வியாசர் தேற்றினார். அப்போது யுதிஷ்டிரன், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தான். பிறகு அந்தப் பெருந்தவசி அந்த அரண்மனையை விட்டுக் காட்டை நோக்கிச் சென்றார்.(18)

புனிதரான வியாசர் சென்ற பிறகு, பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, முதியவனான தன் தந்தையைப் பணிந்து வணங்கி,(19) “புனித வியாசர் சொன்னதையும், உமது காரியத்தையும் பெரும் வில்லாளியான கிருபர் சொன்னதையும், விதுரர் வெளிப்படுத்தியதையும்,(20) யுயுத்சு மற்றும் சஞ்சயர் ஆகியோர் கேட்டுக் கொண்டதையும் விரைவாக நான் நிறைவேற்றுவேன். இவர்கள் அனைவரும் நம் குலத்தின் நலம்விரும்பிகள் என்பதால் என் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருக்கின்றனர்.(21) எனினும், ஓ!மன்னா, நான் தலைவணங்கி உம்மிடம் இதை இரந்து கேட்கிறேன். முதலில் உண்பீராக. பின்பு உமது காட்டு ஆசிரமத்திற்குச் செல்வீராக” என்றான்{யுதிஷ்டிரன்}.(22)

திருதராஷ்டிர நீதி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 05-யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னனின் {யுதிஷ்டிரனின்} அனுமதியைப் பெற்றவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான திருதராஷ்டிரன் அப்போது காந்தாரியால் பின்தொடரப்பட்டுத் தன் அரண்மனைக்குச் சென்றான்.(1) பலம் குறைந்தவனும், மெதுவாக நகர்பவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, ஒரு யானைக் கூட்டத்தின் வயது முதிர்ந்த தலைவனைப் போலப் பெருஞ்சிரமத்துடன் நடந்தான்.(2) பெரும் கல்விமானான விதுரன், தேரோட்டியான சஞ்சயன்சரத்வானின் மகனும், பெரும் வில்லாளியுமான கிருபர் ஆகியோரால் அவன் பின்தொடரப்பட்டான்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் காலைச் சடங்குகளைச் செய்து, முதன்மையான பிராமணர்கள் பலரை நிறைவடையச் செய்த பிறகு, சிறிது உணவு உண்டான்.(4) ஓ! பாரதா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரியும், பெரும் நுண்ணறிவு கொண்ட குந்தியும், பல்வேறு பொருட்களைக் கொண்டு தங்கள் மருமகள்களால் வழிபடப்பட்ட பிறகு, சிறிதளவு உணவை உண்டனர்.(5) திருதராஷ்டிரன் உண்ட பிறகு, விதுரனும், பிறரும் அதையே செய்தனர், பாண்டவர்களும் தங்கள் உணவை முடித்துக் கொண்டு அங்கே வந்து அந்த முதிய மன்னனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(6)

அப்போது, ஓ! ஏகாதிபதி, அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்}, தன் அருகில் அமர்ந்திருந்த குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} முதுகைத் தன் கையால் தொட்டு,(7) “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, எட்டு அங்கங்களைக் கொண்ட உன் நாட்டுடன் தொடர்புடைய அனைத்திலும், நீதிமான்களின் கேள்விகளை {அறத்தை / தர்மத்தை} முதன்மையானவையாகக் கொண்டு, எப்போதும் கவனக்குறைவின்றி நீ செயல்பட வேண்டும்[1].(8) ஓ! குந்தியின் மகனே, நீ புத்திமானாகவும், கல்விமானகவும் இருக்கிறாய். ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, நாட்டை நீதியுடன் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, கல்வியில் முதிர்ந்தவர்களாக இருப்போரை {கற்றறிந்த பெரியோரை} நீ எப்போதும் கௌரவிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு, எந்த ஐயுணர்வுமின்றி அதன்படியே நீ செயல்பட வேண்டும்.(10) ஓ! மன்னா, விடியலில் எழுந்து முறையான சடங்குகளுடன் அவர்களை வழிபட்டு, செயற்பாட்டுக்குரிய காலம் வரும்போது உன் செயல்களை (நீ நினைத்திருக்கும் செயல்களைக்) குறித்து அவர்களோடு ஆலோசிக்க வேண்டும்.(11) ஓ! மகனே, ஓ! பாரதா, உன் நடவடிக்கைகளால் உனக்கு என்ன நன்மை கிட்டும் என்பதை நீ அறிய விரும்பும்போது நீ அவர்களைக் கௌரவித்தால், அவர்கள் எப்போதும் உனக்கான நன்மையை அறிவிப்பார்கள்.(12)நீ உன் குதிரைகளைப் பாதுகாப்பதைப் போலவே உன் புலன்களையும் எப்போதும் பாதுகாப்பாயாக. அப்போது வீணாகாத செல்வம் போல அவை உனக்கு நன்மைபயக்கும்.(13) நேர்மைக்கான சோதனைகளில் தேர்ச்சியடைந்தவர்களையும் (பற்றுறுதி {விசுவாசம்}, அக்கறையின்மை, தன்னடக்கம், துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும்) பரம்பரை பரம்பரையாக நாட்டின் அதிகாரிகளாக இருப்பவர்களும், தூய ஒழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், தொழிலில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துபவர்களும், அறவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்களையே நீ அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(14) பல்வேறு வேடங்களில் இருப்பவர்களும், நம்பிக்கை சோதனைக்கு உட்பட்டவர்களும், உன் நாட்டைச் சேர்ந்தவர்களும், பகைவரால் அறியப்படாதவர்களுமான ஒற்றர்கள் மூலம் நீ எப்போதும் தகவல்களைத் திரட்ட வேண்டும்.(15) உன் கோட்டையானது, வலுவான சுவர்கள், வளைவுகளைக் கொண்ட வாயில்கள் மூலம் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். சுவர்களின் அனைத்துப் பக்கங்களிலும், ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ள கண்காணிப்புக் கோபுரங்களின் மேல் பக்கத்துக்குப் பக்கம் நடந்து கொண்டிருக்கும் அறுவரை நீ நியமிக்க வேண்டும்[2].(16) வாயில்கள் போதுமான அளவுக்குப் பெரியதாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும். சரியான இடங்களில் நிறுவப்படும் அந்த வாயில்களை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்[3].(17) எந்த மனிதர்களின் குடும்பங்கள் மற்றும் ஒழுக்கம் நன்கறியப்பட்டிருக்கிறதோ, அவர்களையே நீ உன் காரியங்களில் நியமிப்பாயாக. ஓ! பாரதா, உண்ணும் உணவு, அணியும் மாலைகள், கிடக்கும் படுக்கைகள் தொடர்பான காரியங்களிலும், விளையாடும் மற்றும் உண்ணும் நேரங்களிலும் நீ எப்போதும் மிகக் கவனமாக உன் மேனியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.ஓ! யுதிஷ்டிரா, உன் குடும்பத்துப் பெண்மணிகள், நன்னடத்தைக் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், கல்விமான்களும், முதியவர்களும், நம்பிக்கைகுரியவர்களுமான ஊழியர்களால் கவனிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.(18,19) கல்விமான்களும், பணிவுள்ளவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், அறம்பொருள் அறிந்தவர்களும், எளிமையான நடத்தையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான பிராமணர்களை நீ அமைச்சர்களாக்கிக் கொள்ள வேண்டும்.(20) நீ அவர்களுடன் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும். எனினும், நீ பலருடன் ஆலோசிக்கக்கூடாது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், உன் மொத்த அவையினரோடோ, பகுதி பேருடனோ ஆலோசிக்கலாம். (ஊடுருவல்காரர்களிடம் இருந்து) நன்கு பாதுகாக்கப்பட்ட ஓர் அறை அல்லது இடத்திற்குள் {மந்திரகிரஹத்தில்} நீ உன் ஆலோசனைக்கூட்டங்களை நடத்த வேண்டும். புல்லற்ற காட்டிலும் நீ ஆலோசனைக்கூட்டம் நடத்தலாம். நீ ஒருபோதும் இரவு வேளையில் ஆலோசிக்கக்கூடாது[4].(22) மனிதர்கள் செய்வதைச் செய்து காட்டும் {சொல்வதைச் சொல்லிக் காட்டும்} குரங்குகள், பறவைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும், மூடர்கள் முடவர்கள் மற்றும் வாத நோயாளிகள் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அறையில் விலக்கப்பட வேண்டும்.(23) மன்னர்களின் ஆலோசனைகள் வெளிப்படுவதால் உண்டாகும் தீமைககள் தீர்க்கப்பட முடியாதவை என்று நான் நினைக்கிறேன்.(24) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஆலோசனைகள் வெளிப்படுவதால் எழும் தீமைகளையும், அவற்றை முறையாகப் பாதுகாப்பதால் உண்டாகும் நன்மைகளையும் உன் அமைச்சர்களுக்கு மத்தியில் நீ மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டும்.(25)ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் நற்செயல்களையும், குற்றங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் நீ செயல்பட வேண்டும்.(26) ஓ! மன்னா, உன் சட்டங்கள் அதற்கான பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளவர்களும், மனநிறைவுடையவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களுமான நம்பிக்கைக்குரிய நீதிபதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். அவர்களுடைய செயல்களும் ஒற்றர்கள் மூலம் உன்னால் கண்டறியப்பட வேண்டும்.(27) ஓ! யுதிஷ்டிரா, நீதித்துறையைச் சார்ந்த உன்னுடைய அதிகாரிகள், குற்றங்களின் ஆழத்தைக் கவனமாக உறுதி செய்த பிறகு, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனைகளை வழங்க வேண்டும்[5].[28) கையூட்டு {பரிதானம் / லஞ்சம்} பெறும் மனநிலை கொண்டவர்கள், பிறர் மனைவியரின் கற்புக்குக் களங்கம் விளைவிப்பவர்கள், கடுந்தண்டனைகளைக் கொடுப்பவர்கள், பொய் {போலிநியாயம்} பேசுவபவர்கள், தூற்றுபவர்கள் {வைபவர்கள்}, பேராசையால் களங்கமடைந்தவர்கள் {களவு செய்பவர்கள்}, கொலைகாரர்கள், முரட்டுச் செயல்களைச் செய்பவர்கள்,(29) சபைகளுக்கும், பிறரின் விளையாட்டுகளுக்கும் {இன்பத் தேடல்களுக்குத்} தொந்தரவு கொடுப்பவர்கள், வர்ணக் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரை இடம் மற்றும் காலத்தைக் கருத்தில் கொண்டு அபராதங்களாலோ, மரணத்தாலோ தண்டிக்க வேண்டும்[6][7].(30)காலையில், நீ வழங்க வேண்டியவற்றைக் கொடுப்பதில் {உனக்குப் பிரியமானதைச் செய்வதில்} ஈடுபடுபவர்களை நீ காண வேண்டும். அதன்பிறகே நீ காலைக் கடன்களையும், அதற்கும்பிறகு உன் உணவையும் பார்க்க வேண்டும்.(31) அதன்பிறகு நீ உன் படைகளை மேற்பார்வையிட்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அவர்களை மகிழ்விக்க வேண்டும். உன்னுடைய மாலைப் பொழுதுகள் தூதர்களுக்காகவும், ஒற்றர்களுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும்.(32) பகலில் செய்யப்பட வேண்டிய செயல்களைத் தீர்மானிக்கப் பின்னிரவை நீ அர்ப்பணிக்க வேண்டும். நள்ளிரவுகளும், நடுப்பகல்களும் உனது கேளிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். எனினும், அனைத்துக் காலங்களிலும் நீ உன் காரியங்களை நிறைவேற்றக்கூடிய வழிமுறைகளேயே நினைக்க வேண்டும்.(33) உரிய காலத்தில் உன் மேனியை அலங்கரித்துக் கொண்டு, அபரிமிதமாகக் கொடையளிப்பதற்காக நீ அமர வேண்டும். ஓ! மகனே, பல்வேறு செயல்களின் சுழற்சி, சக்கரங்களைப் போல நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது.(34) நீ நியாயமான வழிமுறைகளின் மூலம் பல்வேறு வகைச் செல்வங்களைக் கொண்டு உன் கருவூலத்தை நிறைக்க எப்போதும் முயற்சிக்க வேண்டும். முடிவில் நியாயமற்ற வழிமுறைகள் அனைத்தையும் நீ புறக்கணிக்க வேண்டும்.(35)

உன்னுடைய தாமதங்களைக் காண விரும்பும் உன் பகைவர்களை உன் ஒற்றர்கள் மூலம் கண்டறிந்து, நம்பிக்கைக்குரிய நபர்களைக் கொண்டு தொலைவில் இருந்தே அவர்களை அழிக்க வேண்டும்.(36) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒழுக்கத்தை ஆய்வு செய்த பிறகே உன் பணியாட்கள் நியமிக்கப்பட வேண்டும். உரிய காரியத்திற்கு நியமிக்கப்பட்ட பணியாட்களைக் கொண்டோ, அவற்றுக்காக நியமிக்கப்படாத பணியாட்களைக் கொண்டோ நீ உன் செயல்கள் அனைத்தையும் செய்வாயாக[8].(37) உன் படைத்தலைவன், ஒழுக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், துணிவுமிக்கவனாகவும், கடினமான சூழ்நிலைகளைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவனாகவும், பற்றுறுதி {விசுவாசம்} கொண்டவனாகவும், உன் நன்மையில் அர்ப்பணிப்பு உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.(38) ஓ! பாண்டுவின் மகனே, உன் மாகாணங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பசுக்களையும், கழுதைகளையும் போல உன் செயல்களை எப்போதும் செய்ய வேண்டும்[9].(39) ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய காரிய தாமதங்களையும் {ரந்திரங்கள் / பலவீனங்களையும்}, பகைவர்களின் காரிய தாமதங்களையும் நீ கவனமாக உறுதி செய்து கொள்ள வேண்டும். உன்னுடையவர்களின் காரிய தாமதங்களையும், பகைவருடையவர்களின் காரிய தாமதங்களையும் நீ உறுதி செய்து கொள்ள வேண்டும்.(4) தங்கள் தங்கள் தொழில்களில் திறம்பெற்றவர்களும், உனது நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான உன் நாட்டைச் சேர்ந்தவர்கள், போதுமான வாழ்வாதாரங்களின் மூலம் உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும்.(41) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஞானமுள்ள மன்னன் ஒருவன், சாதித்திருக்கும் தன் குடிமக்களின் சாதனைகள் பாதுகாக்கப்படுவதை எப்போதும் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்கள், தங்கள் திறனில் இருந்து வீழாதிருப்பதைக் கண்டு உன்னிடம் உறுதியான அர்ப்பணிப்புடன் திகழ்வார்கள்[10]” {என்றான் திருதராஷ்டிரன்}.(42)

கொடியோர் – ஆததாயிகள்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 06-யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்; எழுபத்திரண்டு மண்டலங்கள் குறித்துச் சொன்னது; எந்தெந்த பகைவரை எவ்வாறு கையாள வேண்டுமெனச் சொன்னது…

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, உனக்குரிய மண்டலங்களையும், உன் பகைவர்கள், நடுநிலையாளர்கள், உன்னிடமும், பகைவரிடமும் ஒரே மனநிலையைக் கொண்டவர்கள் ஆகியோரின் மண்டலங்களையும் நீ எப்போதும் உறுதி செய்து கொள்ள வேண்டும்[1].(1) ஓ!பகைவரை நொறுக்குபவனே, பகைவர், ஆததாயிகள் {கொலையிற்கொடியார்} என்றழைக்கப்படுபவர்கள், கூட்டாளிகள், பகைவரின் கூட்டாளிகள் ஆகிய நால்வகைப் பகைவரின் மண்டலங்களையும் நீ வெவ்வேறாக அறிந்து கொள்ள வேண்டும்[2].(2) ஓ!குருகுலத்தில் முதன்மையானவனே, நாட்டின் அமைச்சர்கள், மாகாணங்களின் மக்கள், கோட்டைகளின் காவல்படையினர், படைவீரர்கள் ஆகியோர் {பகைவரால்} கெட்டோ, கெடாமலோ இருக்கலாம். (எனவே, அவர்கள் உன் எதிரிகளின் மூலம் கெடாமல் இருக்கும் வகையில் நீ நடந்து கொள்வாயாக).(3) (மேலே பட்டியலிடப்பட்ட) பன்னிருவரே[3] மன்னனின் முதன்மையான அமைப்பினராக இருக்கின்றனர். இந்தப் பன்னிருவரும், அமைச்சர்களை முதன்மையானவர்களாகக் கொண்ட அறுபதுபேரும் {ஆக மொத்தம் 72 பேரும்} மன்னனால் கவனிக்கப்பட வேண்டும்[4].(4)அரசியல் அறிந்த ஆசிரியர்கள் {நீதிசாஸ்திரமறிந்த ஆசார்யர்கள்} இவற்றை {இந்த எழுபத்திரண்டையே} மண்டலங்கள் என்ற பெயரில் அழைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, (அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்தம், வேற்றுமை விதைத்தல், சமாதானம் ஆகிய) ஆறு நிகழ்வுகள் இவற்றையே {இந்த எழுபத்திரண்டையே} சார்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வாயாக[5].(5) வளர்ச்சியும், சிதைவும், நிலையாக நிற்கும் நிலையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஆறு வகை நிகழ்வுகளின் குணங்கள், (ஏற்கனவே பட்டியலிடப்பட்ட) எழுபத்திரண்டைச் சார்ந்திருக்கின்ற என்பதையும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(6) ஓ! குந்தியின் மகனே, ஒருவன் சார்ந்திருக்கும் தரப்பு பலமானதாகவும், பகைவனின் தரப்பு பலவீனமானதாகவும் இருக்கும் போதுதான் அவன் பகைவனை எதிர்த்து போரிட்டு வெற்றியடைவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.(7) பகைவன் வலுவாகவும், தன் தரப்பு பலவீனமாகவும் இருக்கும்போது, அந்தப் பலவீனமான மன்னன் புத்திசாலியாக இருந்தால் அந்தப் பகைவனுடன் சமாதானம் செய்து கொள்ள முனைவான்.(8)ஒரு மன்னன் (படையின் உணவுத்துறைக்கு வேண்டிய) பொருட்களைப் பெரிய அளவில் திரட்ட வேண்டும். ஓ! பாரதா, படையெடுக்க இயன்றவனாகும்போது, அவன் ஒருபோதும் தாமதிக்கக்கூடாது.(9) அதைத்தவிர, அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் வேறு எந்தக் கருத்தினாலும் அசைக்கப்படாமல், தன்னுடையவர்களை அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும். (தன் ஆட்சிப்பகுதிகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது) அவன் அதிகம் பயிர் விளையாத நிலங்களை மட்டுமே தன் எதிரிக்குக் கொடுக்க வேண்டும்.(10) (செல்வத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது) அவன் அற்ப உலோகம் கலக்கப்பட்ட தங்கத்தையே கொடுக்க வேண்டும். (தன் படையில் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது) பலமற்ற மனிதர்களையே அவன் கொடுக்க வேண்டும். உடன்பாடுகள் செய்வதில் திறம் பெற்றவன், நிலத்தையோ, தங்கத்தையோ, மனிதர்களையோ தன் எதிரியிடம் இருந்து பெறும்போது, இதற்கு நேர்மாறான குணங்களை உடையவற்றையே பெற வேண்டும்[6].(11) ஓ! பாரதர்களின் தலைவா, அமைதி உடன்பாடுகள் செய்யப்படும்போது, (வீழ்த்தப்பட்ட) மன்னனின் மகனைப் பிணையாகக் கேட்க வேண்டும். ஓ! மகனே, இதற்கு முரணான நடத்தை நன்மை பயக்காது.ஒரு மன்னனுக்குப் பேரிடர் நேர்தால்,(12) வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளில் உள்ள தன் அறிவை அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்[7]. ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஒரு மன்னன், தன் மக்களில் உற்சாகமற்றவர்கள், (பார்வையற்றோர், காது கேளாதோர், ஊமைகள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட) ஆதரவற்றவர்களைப் பராமரிக்கவேண்டும்.(13) தன் நாட்டைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வலிமைமிக்க மன்னன், ஒன்றன்பின் ஒன்றாகவோ, ஒரே நேரத்திலோ பகைவரை எதிர்க்கும் தன் முயற்சிகள் அனைத்தையும் செய்து கொண்டே வேண்டும். அவன் அவர்களைப் பீடித்துத் தடுத்து, அவர்களது கருவூலத்தை வற்றச் செய்ய வேண்டும்.(14) தன் வளர்ச்சியை விரும்பும் மன்னன், தன் ஆளுகையின் கீழ் உள்ள துணை நிலைத் தலைவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது. ஓ! குந்தியின் மகனே, மொத்த பூமியையும் வெல்ல விரும்பும் மன்னனிடம் நீ ஒருபோதும் {நேரடியாகப்} போரிட முயலாதே.(15) உன் அமைச்சர்களின் துணையுடன் அவனது உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துணைநிலைத் தலைவர்களுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி அதன் மூலம் நீ {உன் நாட்டுக்கு} நன்மை பெற முயல வேண்டும்.(16)பலமிக்க மன்னன் ஒருவன், பலவீனமான மன்னர்களை அழிக்க முற்படக்கூடாது. ஏனெனில் அவர்களே {உன் ஆளுகைக்குட்பட்டு} நல்லோரைப் பேணி பாதுகாத்து, தீயோரைத் தண்டித்து உலகத்திற்கு நன்மை செய்வார்கள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, நீ ஒரு பிரம்பின் {நாணல் / நீர்நொச்சியின்} நடத்தையைப் பின்பற்ற வேண்டும்[8].(17) பலமிக்க மன்னன் ஒருவன் பலவீனமானவனை எதிர்த்து முன்னேறினால், பின்னவன், சமாதானம் மற்றும் பிற வழிமுறைகளைப் பின்பற்றி அவனைத் தடுக்க வேண்டும்.(18) படையெடுத்து வருபவனை இவ்வழியில் தடுக்க முடியவில்லையெனில், அவனும், அவனுக்கு நன்மை செய்யும் மனநிலை கொண்டவர்களும், பகைவனை எதிர்த்துப் போரிட வேண்டும். உண்மையில், அவன் {தன்னை எதிர்த்துப்} படையெடுத்து வருபவனுக்கு எதிராக, {தனது} அமைச்சர்கள், குடிமக்கள் ஆகியோருடனும், கருவூலத்துடனும் சேர்ந்து பலத்தைப் பயன்படுத்த {போரிட} வேண்டும்.(19) பகைவனோடு போரிடுவது நம்பிக்கையளிக்கவில்லையெனில் அவன் தனது ஆதாரங்களை ஒவ்வொன்றாகத் துறந்து வீழ்ச்சியடைய வேண்டும். இவ்வகையில் உயிரைக் கைவிடும் அவன் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறுவான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(20)

அறத்தின் ஆட்சி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 07-போரும் அமைதியும்; செல்வம், கூட்டாளிகள் ஆகியவற்றின் பலங்கள்; இயந்திர மற்றும் வணிக வர்க்கத்தினரின் பலம்; மன்னர்களின் பேரிடர்கள்; நூறு குதிரை வேள்விகளும் அறம்சார்ந்த ஆட்சியும் ஒரே பயனை உண்டாக்கும் என்பது…

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஓ! யுதிஷ்டிரா, போர் மற்றும் அமைதி குறித்தும் நீ முறையாகச் சிந்திக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் இருவகைகளைக் கொண்டவை. பல்வேறு வழிமுறைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் மூலம் போரும், அமைதியும் உண்டாகின்றன[1].(1) ஓ! குரு குலத்தோனே, நீ உன்னைப் பொறுத்தவரையில் (பலம் மற்றும் பலவீனம் என்ற) இரண்டையும் குறித்து நீ அமைதியாகச் சிந்திக்க வேண்டும். நிறைவடைந்தவர்களும், உடல்நலமிக்கவர்களும், புத்திசாலிகளுமான படைவீரர்களைக் கொண்ட பகைவனை எதிர்த்து நீ திடீரெனப் படையெடுக்கக்கூடாது. மறுபுறம், அவனை வெல்லும் வழிமுறைகளைக் குறித்து நீ கவனமாகச் சிந்திக்க வேண்டும்[2].(2) நிறைவடைந்தவர்களும், உடல்நலம் சிறந்திருப்பவர்களுமான போராளிகள் இல்லாத பகைவனை எதிர்த்தே நீ படையெடுக்க வேண்டும். அனைத்தும் சாதகமாக இருக்கும்போதுதான் பகைவனை வீழ்த்த முடியும். எனினும், அதன்பிறகு வெற்றியாளன் ஓய்ந்து (பலமான நிலையில் நீடித்து) இருக்க வேண்டும்.(3) அடுத்ததாக அவன் தன் பகைவனைப் பல்வேறு துன்பங்களில் மூழ்கடித்து, அவனுடைய கூட்டாளிகளுக்கு மத்தியில் வேற்றுமையை விதைக்க வேண்டும். அவன், பகைவனைப் பீடித்து, அவனது இதயத்திற்கு அச்சமூட்டி, அவனைத் தாக்கி அவனது படைகளைப் பலவீனப்படுத்த வேண்டும்.(4)சாத்திரங்களை அறிந்த மன்னன், பகைவனை எதிர்த்துப் படையெடுக்கும்போது, மூன்று வகைப் பலங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும், உண்மையில் தன் பலத்தையும், பகைவனின் பலத்தையும் அவன் சிந்திக்க வேண்டும்[3].(5) ஓ! பாரதா, எந்த மன்னன், சுறுசுறுப்பு {உத்ஸாகசக்தியுடனும்}, ஒழுக்கம் {பிரபுசக்தியுடனும்}, ஆலோசனைகள் {மந்திரசக்தி} ஆகிய சக்திகளுடன் இருக்கிறானோ, அவனே பகைவரை எதிர்த்துப் படையெடுக்கலாம். அவனுடைய நிலை வேறு வகையில் இருந்தால், அவன் தாக்குதலைத் தவிர்க்க வேண்டும்[4].(6) மன்னனானவன், செல்வத்தின் பலம் {மௌலபலம்}, கூட்டாளிகளின் பலம் {மித்ரபலம்}, காட்டுவாசிகளின் பலம் {அடவீபலம்}, ஊதியம் பெறும் படைவீரர்களின் பலம் {பிருதபலம்}, இயந்திர மற்றும் வணிக வர்க்கங்களின் பலம் {ஸ்ரேணீபலம்} ஆகியவற்றுடன் இருக்க வேண்டும்[5].(7) இவையனைத்திலும் கூட்டாளிகள் பலமும், செல்வபலமும் எஞ்சியவற்றைவிட மேன்மையானவை. வர்க்கங்களின் பலமும் {ஸ்ரேணீபலமும்}, நிலையான படையின் பலமும் {பிருதபலமும்} நிகரானவையாகும்.(8)மேற்கண்ட இரண்டு பலங்களையும் பயன்படுத்த வேண்டிய வேளைவரும் பல சந்தர்ப்பங்களில், அவை இரண்டிற்கும் இணையாக ஒற்றர்களின் பலமே செயல்திறன் கொண்ட பலமாக மன்னனால் கருதப்படும்.(9) ஓ! மன்னா, ஆட்சியாளர்களை மூழ்கடிக்கும் பேரிடர் {ஆபத்து} என்பது, பல வடிவங்களைக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, அந்தப் பல்வேறு வடிவங்கள் யாவை என்பதைக் கேட்பாயாக.(10) உண்மையில், ஓ! பாண்டுவின் மகனே, பேரிடர் {ஆபத்துகள்} பல்வேறு வகைகளைச் சார்ந்தவையே. ஓ! மன்னா, அவற்றின் வடிவங்களைத் தனித்தனியாகக் கண்டு, (சோம்பலில் அவற்றை மறைக்காமல்) சமரசம் மற்றும் நன்கறியப்பட்ட பிற வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றைச் சந்திக்க வேண்டும்.(11) ஓ! பகைவரை எரிப்பவனே, மன்னன் நல்ல படையைக் கொண்டிருக்கும்போது (பகைவனை எதிர்த்து) படையெடுக்க வேண்டும். படையெடுக்கத் தயாராகும்போது, காலம், இடம், தான் திரட்டியிருக்கும் படை, (பிற காரியங்களில்) தன்னுடைய சாதகங்கள் ஆகியவற்றை அவன் கருத்தில் கொள்ள வேண்டும்.(12)

தன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கவனமுள்ள மன்னன், உற்சாகமிக்கவர்களும், உடல்நலமிக்கவர்களுமான போர்வீரர்களுடன் ஆயத்தமான பிறகே படையெடுக்க வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, அவன் பலமடையும்போது, பருவகாலம் சாதகமற்றிருந்தாலும் கூட, அவன் படையெடுக்கலாம்.(13) அம்பறாத்தூணிகளையே கற்களாகக் கொண்டதும், குதிரைகளையும், தேர்களையும் ஓடையாகக் கொண்டதும், கொடிமரங்களைக் கரைகளில் நிற்கும் மரங்களாகக் கொண்டதும் காலாட்படைவீரர்களையும், யானைகளையும் சகதியாகக் கொண்டதுமான ஓர் ஆற்றை மன்னன் உண்டாக்க வேண்டும். அத்தகைய ஆற்றையே {படையையே} மன்னன் தன் பகைவனை அழிக்கப் பயன்படுத்த வேண்டும்.(14) உசானஸ் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியலுக்கு ஏற்புடைய வகையில், பகைவரோடு போரிட சகடம், பத்மம் மற்றும் வஜ்ரம் என்றழைக்கப்படும் வியூகங்களை அமைக்க வேண்டும்[6].(15) பகைவனின் பலம் குறித்த அனைத்தையும் ஒற்றர்களின் மூலம் அறிந்து, தன் பலத்தையும் ஆய்வு செய்து கொண்டு, ஒரு மன்னன் தன் ஆட்சிப்பகுதிக்குள்ளோ, பகைவரின் ஆட்சிப்பகுதிக்குள்ளோ போரைத் தொடங்க வேண்டும்[7].(16)மன்னன் எப்போதும் தன் படையை நிறைவடையச் செய்து, (பகைவனை எதிர்த்து) தன்னுடைய பலமிக்கப் போர்வீரர்களை ஏவ வேண்டும். முதலில் தன்னுடைய நாட்டின் நிலையை உறுதி செய்து கொண்டு, சமரசத்தையோ, நன்கறியப்பட்ட வேறு வழிமுறைகளையோ ஒருவன் பயன்படுத்த வேண்டும்.(17) ஓ! மன்னா, ஒருவன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இம்மையிலும், மறுமையிலும் பெறப்போகும் உயர்ந்த நன்மைக்காக அவன் அதைச் செய்ய வேண்டும்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னன் இவ்வழிமுறைகளில் முறையாக நடந்து கொள்வதன் மூலம், இவ்வுலகில் அறம்சார்ந்த தன் குடிமக்களை ஆண்டபிறகு, மறுமையில் சொர்க்கத்தை அடைகிறான்.(19) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஈருலகங்களையும் அடைவதற்காக இவ்வாறே நீ உன் குடிமக்களின் நன்மையை எப்போதும் நாட வேண்டும்[8].(20)ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பீஷ்மர், கிருஷ்ணன், விதுரன் ஆகியோர் மூலம் ஏற்கனேவே கடமைகள் அனைத்தம் உனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தாலும், நான் உன் மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாக இந்த நெறிமுறைகளை உனக்குச் சொன்னேன்.(21) வேள்விகளில் அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே, இவை யாவற்றையும் நீ முறையாகச் செய்ய வேண்டும். இவ்வழியில் உன்னை நடத்திக் கொண்டு உன் குடிமக்களின் அன்புக்குரியவனாகி சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவாயாக.(22) நூறு குதிரை வேள்விகளில் தேவர்களைத் துதித்தவனும், அறம்சார்ந்து தன் குடிமக்களை ஆண்ட மன்னனும் நிகரான தகுதியையே அடைகிறார்கள்” என்றான் {திருதராஷ்டிரன்}.(23)

குடிமக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 08-ருதராஷ்டிரனைத் தூண்டிய காந்தாரி; நாட்டு மக்களை அழைத்துத் தான் காட்டுக்குச் செல்ல அனுமதி வேண்டிய திருதராஷ்டிரன்…

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, நீர் சொன்னதை நான் செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, எனக்கு நீர் மேலும் கற்பிக்க வேண்டும்.(1) பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்ந்துவிட்டார். மதுசூதனன் (துவாரகைக்குச்) சென்றுவிட்டான். விதுரரும், சஞ்சயரும் (உம்மோடு காட்டுக்குச்) சென்று விடுவார்கள். எனவே, உம்மைத் தவிர வேறு யார் எனக்குக் கற்பிக்க முடியும்?(2) ஓ! பூமியின் தலைவா, நீர் என் நன்மையை விரும்பி இன்று சொன்ன அனைத்தையும் நான் நிச்சயம் பின்பற்றுவேன். ஓ! மன்னா, இது குறித்து நீர் உறுதி கொள்வீராக[1]” என்றான்”.(3)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரசமுனி திருதராஷ்டிரன், (காட்டுக்கு ஓய்ந்து செல்ல) மன்னனின் அனுமதியைப் பெற விரும்பினான்.(4) அவன், “ஓ! மகனே, நிற்பாயாக {இரு}. நான் அதிகமாக உழன்றிருக்கிறேன்” என்றான்[2]. இதைச் சொன்ன அந்த முதிய மன்னன் காந்தாரியின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(5)அறவொழுக்கம் கொண்டவளும், காரிய சாதனைகள் அனைத்தையும் அறிந்தவளுமான காந்தாரி, உயிரினங்களின் இரண்டாவது தலைவனைப் போலிருந்த தன் கணவனிடம், அந்தக் காலத்திற்குப் பொருத்தமான சொற்களில்,(6) “பெரும் முனிவரான வியாசரிடமே நீர் அனுமதியைப் பெற்றுவிட்டீர். எனினும், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் நீர் எப்போது காட்டுக்குச் செல்லப் போகிறீர்?” என்று கேட்டாள்.(7)

திருதராஷ்டிரன், “ஓ! காந்தாரி, உயர் ஆன்மா கொண்ட என் தந்தையிடம்  {வியாசரிடம்} நான் அனுமதியைப் பெற்றுவிட்டேன். (அடுத்துப் பெறப்போகும்) யுதிஷ்டிரனின் அனுமதியுடனும் நான் விரைவில் காட்டுக்கு ஓயப்போகிறேன்.(8) எனினும், கொடிய பகடைக்கு அடிமையாக இருந்த என் மகன்கள் அனைவருக்காகப் பிரேத நிலையைப் பின்பற்றிச் செல்லவல்ல கொஞ்சம் செல்வத்தை நான் கொடையளிக்க விரும்புகிறேன். உண்மையில், என் மாளிகைக்கு மக்கள் அனைவரையும் அழைத்து அக்கொடைகளை அளிக்க நான் விரும்புகிறேன்” என்றான்“[3].(9)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(காந்தாரியிடம்) இவ்வாறு சொன்ன திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனுக்கும் சொல்லி அனுப்பினான். பின்னவன் {யுதிஷ்டிரன்}, தன் பெரியப்பாவின் ஆணையின் பேரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்தான்.(10) குருஜங்காலத்தில் வசித்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும், வைசியர்கள் பலரும், சூத்திரர்கள் பலரும், நிறைவடைந்த இதயங்களுடன் திருதராஷ்டிரனின் மாளிகைக்கு வந்தனர்.(11) அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, அவர்கள் அனைவரையும், அங்கே கூடியிருந்த தன் குடிமக்களை அனைவரையும் கண்டான்.(12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், அங்கே திரண்டிருந்த குடிமக்கள், மாகாணத்துவாசிகள், தன் நலம் விரும்பிகள், பல்வேறு நாடுகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த பிராமணர்கள் ஆகியோரைக் கண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்.(13,14)

{திருதராஷ்டிரன்}, “நீங்களும் குருக்களும் {கௌரவர்களும்} நீண்ட பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும், ஒருவருக்கொருவர் நன்மை செய்வதில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறீர்கள்.(15) இப்போது வந்திருக்கும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு நான் சொல்வதை ஆசான்களின் சொற்களை நிறைவேற்றும் சீடர்களைப் போல நீங்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.(16) காந்தாரியைத் துணையாகக் கொண்டு காட்டுக்குள் ஓய்ந்து செல்வதில் நான் என் இதயத்தை நிலைநிறுத்தியிருக்கிறேன். வியாசரும், குந்தியின் மகனும் {யுதிஷ்டிரனும்} இதை ஏற்றிருக்கின்றனர்.(17) உங்கள் அனுமதியும் எனக்குக் கிடைக்கட்டும். இதில் தயக்கமேதும் கொள்ளாதீர். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எப்போதும் நீடித்திருக்கும் நல்லெண்ணத்தை,(18) வேறு நாடுகளை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையில் காண முடிவதில்லை. இவ்வளவு காலம் என் தலையில் இருக்கும் இந்தச் சுமையால் நான் களைத்திருக்கிறேன். நான் பிள்ளைகளை இழந்தவனாகவும் இருக்கிறேன்.(19) பாவமற்றவர்களே, காந்தாரியுடன் சேர்ந்து நோற்கும் உண்ணாநோன்புகளால் நான் மெலிந்திருக்கிறேன். அரசாட்சி யுதிஷ்டிரனுக்குச் சென்ற பிறகும், நான் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தேன்.(20) மனிதர்களில் முதன்மையானவர்களே, துரியோதனனின் அரசில் நான் எதிர்பார்க்கக்கூடிய மகிழ்ச்சியைவிட அது பெரிதாக இருந்ததாக நான் நினைக்கிறேன். முதிர்ந்தவனும், பிள்ளைகளை இழந்தவனும்மான எனக்குக் காடுகளை விடச் சிறந்த புகலிடம் வேறு எது இருக்க முடியும்? உயர்வாக அருளப்பட்டவர்களே, நான் வேண்டும் அனுமதியை எனக்குக் கொடுப்பதே உங்களுக்குத் தகும்” என்றான் {திருதராஷ்டிரன்}.(21)

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட குருஜங்காலவாசிகள் அனைவரும், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(22) பெருஞ்சக்தி கொண்ட திருதராஷ்டிரன், துயரில் பீடிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் மேலும் சிலவற்றைச் சொல்ல விரும்பி, மீண்டும் அவர்களிடம் பேசத்தொடங்கிப் பின்வருமாறு சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(23)

அடைக்கலம் ஒப்படைப்பு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 09-தான் செய்த தவறுகளைப் பொறுக்கும்படி மக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் காட்டுக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டது…

திருதராஷ்டிரன், “சந்தனு இந்தப் பூமியை முறையாக ஆண்டார். அதே போல, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட விசித்திரவீரியரும் உங்களை ஆண்டார். நிச்சயம் இவை யாவும் நீங்கள் அறிந்தது.(1) என் தம்பி பாண்டு, எனக்கும், உங்களுக்கும் எவ்வளவு அன்புக்குரியவனாக இருந்தான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவனும் உங்களை முறையாகவே ஆண்டான்.(2) பாவமற்றவர்களே, நானும் உங்களுக்குத் தொண்டாற்றியிருக்கிறேன். அத்தொண்டுகள் தேவையான அளவுக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், கவனக்குறைவின்றி நான் என் கடமைகளைச் செய்திருப்பதால் என்னை மன்னிப்பதே உங்களுக்குத் தகும்.(3)

துரியோதனனும் தன் தரப்பில் ஒரு முள்ளுமின்றி {பகைவரெவருமின்றி} இந்நாட்டை அனுபவித்தான். அவன் தீய புத்தி கொண்டவனாகவும், மூடனாகவும் இருந்தாலும், உங்களுக்கு எத்தீங்கையும் செய்ததில்லை.(4) எனினும், தீய புத்தி கொண்ட அந்த இளவரசனின் குற்றத்தாலும், அவனது செருக்காலும், என்னுடைய அநீதியினாலும் அரச வகையைச் சேர்ந்த மனிதர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது.(5) அக்காரியத்தில் நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறாகச் செயல்பட்டிருந்தாலும், அது குறித்து உங்கள் இதயங்களில் இருக்கும் நினைவுகளை அகற்றிவிடுமாறு கூப்பிய கரங்களுடன் நான் உங்களை வேண்டுகிறேன்.(6)

“இவன் முதியவன்; இவன் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தவன்; இவன் துன்பத்தால் பீடிக்கப்பட்டவன்; இவன் நம் மன்னன்; இவன் முந்தைய மன்னர்களின் வழித்தோன்றல்” என்பன போன்ற கருத்துகள் என்னை மன்னிக்கும்படி உங்களைத் தூண்ட வேண்டும்.(7) காந்தாரியும் உற்சாகமற்றவளாகவும், முதியவளாகவும் இருக்கிறாள். அவளும் தன் பிள்ளைகளை இழந்து ஆதரவற்றவளாக இருக்கிறாள். மகன்களை இழந்த துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளும் என்னுடன் சேர்ந்து உங்களை வேண்டுகிறாள்.(8) எங்கள் இருவரையும் முதியவர்களாகவும், பீடிக்கப்பட்டவர்களாகவும், பிள்ளைகளை இழந்தவர்களாகவும் அறிந்து கொண்டு நாங்கள் வேண்டும் அனுமதியை எங்களுக்குக் கொடுப்பீராக.(9)

குரு {குருஜங்காலத்தின்} மன்னனும், குந்தியின் மகனுமான இந்த யுதிஷ்டிரன், செழிப்பிலும், வறுமையிலும் உங்கள் அனைவராலும் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும்.(10) அளவில்லா ஆற்றல் கொண்ட நான்கு சகோதரர்களைத் தன் ஆலோசகர்களாகக் கொண்ட அவன் ஒருபோதும் துன்பத்தில் வீழமாட்டான். அறம், பொருள் இரண்டையும் அறிந்தவர்களான அவர்கள் அனைவரும், லோகபாலர்களுக்கு ஒப்பானவர்களாவர்.(11) வலிமையும், சக்தியும் கொண்ட இந்த யுதிஷ்டிரன், அண்டத்தின் உயிரினங்களுடைய தலைவனான சிறப்புமிக்கப் பிரம்மனைப் போலவே உங்களை ஆள்வான்.(12)

நிச்சயம் சொல்லப்பட வேண்டியதையே நான் இப்போது சொன்னேன். நான் உங்களிடம் இந்த யுதிஷ்டிரனை அடைக்கலமாக ஒப்படைக்கிறேன். இந்த வீரனிடம் உங்களையும் அடைக்கலமாக ஒப்படைக்கிறேன்.(13) இப்போது உயிரோடு இல்லாத என் மகன்களாலோ, உண்மையில் என்னைச் சார்ந்தவர்கள் எவராலோ உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கெதனையும் மன்னித்து மறப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்.(14) முன்னர் எச்சந்தர்ப்பத்திலும் நீங்கள் எனக்கு எதிரான கோபத்தை ஒருபோதும் வளர்த்ததில்லை. மாறாப்பற்றிற்கு {விசுவாசத்திற்கு} புகழ்பெற்ற உங்கள் முன் நான் என் கைகளைக் கூப்புகிறேன். இதோ நான் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.(15) பாவமற்றவர்களே, சஞ்சல புத்தி கொண்டவர்களும், பேராசையெனும் களங்கமுடையவர்களும், ஆசைகளுடைய தூண்டலின்படியே எப்போதும் செயல்பட்டவர்களுமான என் மகன்களால் செய்யப்பட்ட எதற்காகவும் நானும், என் அருகில் இருக்கும் காந்தாரியும் உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறோம்” என்றான் {திருதராஷ்டிரன்}.(16)

அந்த முதிய ஏகாதிபதியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குடிமக்கள் மற்றும் மாகாணத்துவாசிகள் அனைவரும், கண்ணீரால் நிறைந்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே ஒன்றும் பேசாதிருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

குடிமக்களின் ஒப்புதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 10- ஒரு பிராமணர் மூலம் திருதராஷ்டிரனைத் தேற்றி, காட்டுக்குச் செல்வதற்குப் பெரும் வருத்தத்துடன் அனுமதி கொடுத்த குருஜாங்கலத்தார்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குரு குலத்தோனே, முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குடிமக்களும், மாகாணவாசிகளும், நினைவிழந்த மனிதர்களைப் போலச் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.(1) அவர்கள் துயரால் அடைக்கப்பட்ட தொண்டைகளுடன், அமைதியாக இருப்பதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரன், மீண்டும் அவர்களிடம்,(2) “மனிதர்களில் சிறந்தவர்களே, இந்நாட்டில் அறம் சார்ந்து வசிப்போரே, முதிர்ந்தவனும், மகனற்றவனும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனுமான நான், என் மனைவியுடன் {காந்தாரியுடன்} சேர்ந்து பல்வேறு வகை புலம்பல்களில் ஈடுபட்டு(3) காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தில், என் தந்தையும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} மற்றும் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான யுதிஷ்டிரன் ஆகியோரின் அனுமதியைப் பெற்றேன்.(4) பாவமற்றவர்களே, நானும், காந்தாரியும் தலை வணங்கி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு அனுமதி அளிப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, குரு மன்னன் சொன்ன இந்தப் பரிதாபத்திற்குரிய சொற்களைக் கேட்டு, அங்கே கூடியிருந்த குருஜாங்கலவாசிகள் அனைவரும் அழத் தொடங்கினர்.(6) தங்கள் கரங்களாலும், மேலாடைகளாலும் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்ட அம்மனிதர்கள் அனைவரும், (தங்களை விட்டு நிரந்தரமாகச் செல்லப்போகும் அன்புக்குரிய மகனைக் காணும்) தந்தைமாரையும், தாய்மாரையும் போல எரியும் துயருடன் நெடுநேரம் அழுதனர்.(7) திருதராஷ்டிரன் இவ்வுலகைவிட்டு செல்ல விரும்புகிறான் என்ற கவலையை எண்ணங்கள் ஏதுமற்ற தங்கள் இதயங்களில் சுமந்திருந்த அவர்கள், நினைவை இழந்து நிற்கும் மனிதர்களைப் போலத் தெரிந்தனர்.(8)

காட்டுக்குச் செல்லும் விருப்பத்தைத் திருதராஷ்டிரன் அறிவித்ததன் மூலம் உண்டான இதயக்கலக்கத்தைத் தடுத்து, படிப்படியாகத் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை அவர்கள் அடைந்தனர்.(9) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் சொற்களைச் சுருக்கமாக்கி, அவற்றை ஒரு பிராமணரிடம் சொல்லி, அவரை அந்த முதிர்ந்த ஏகாதிபதிக்கு மறுமொழி கூறச் செய்தனர்.(10) கல்விமானும், நன்னடத்தைக் கொண்டவரும், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அனைத்துக் காரியங்களையும் அறிந்தவரும், ரிக்குகள் {ரிக் வேத மந்திரங்கள்} அனைத்திலும் திறம்பெற்றவரும், சாம்பன் என்ற பெயரைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் அப்போது பேச முனைந்தார்.(11)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தன் திறன்களை நன்கறிந்தவரும், கல்விமானுமான அந்தப் பிராமணர் {சாம்பன்}, மொத்த சபையின் முழுச் சம்மதத்தையும், அனுமதியையும் பெற்றுக் கொண்டு, இச்சொற்களை அந்த மன்னனிடம் சொன்னார்:(12) {பிராமணர் சாம்பன்}, “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்தச் சபை உரைக்க வேண்டிய பதில் என் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது. ஓ! வீரரே, அதற்கே நான் குரல் கொடுக்கப் போகிறேன். ஓ! மன்னா, நீர் கேட்பீராக.(13) ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! பலமிக்கவரே, நீர் சொல்வதனைத்தும் உண்மையே. இதில் பொய் சிறிதளவும் கிடையாது. நாங்கள் உமது நலன் விரும்பிகளாக இருப்பதைப் போலவே, நீரும் எங்கள் நலவிரும்பியாக இருக்கிறீர்.(14) உண்மையில், இந்தக் குலத்தைச் சேர்ந்த மன்னர்களில், தன் குடிமக்களிடம் செல்வாக்கில்லாமல் ஆண்டவன் எவனும் இல்லை.(15) நீர் தந்தைமாரைப் போலவோ, சகோதரன்மாரைப் போலவோ எங்களை ஆண்டீர். மன்னன் துரியோதனனும் எங்களுக்கு எதிராக எக்குற்றத்தையும் இழைத்ததில்லை.(16)

ஓ! மன்னா, சத்தியவதியின் மகனும், அற ஆன்மா கொண்டவருமான அந்தத் தவசியின் {வியாசரின்} சொற்களின்படியே செயல்படுவீராக உண்மையில் அவரே எங்களுக்கு முதன்மையான குரு ஆவார்.(17) ஓ! ஏகாதிபதி, உம்மால் விடப்படும் நாங்கள், உமது நூற்றுக்கணக்கான நற்குணங்களின் நினைவுகளால் நிறைந்து, எங்கள் நாட்களைத் துன்பத்திலும், கவலையிலும் கழிக்கப் போகிறோம்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னர் சந்தனு, சித்திராங்கதன், பீஷ்மரின் ஆற்றலால் பாதுகாக்கப்பட்ட உமது தந்தை {விசித்திரவீரியன்} ஆகியோரையோ, உமது ஆலோசனையின்படியே தன் செயல்கள் அனைத்தையும் செய்தவனும், பூமியின் ஆட்சியாளனுமான பாண்டுவையோ போலவே, மன்னன் துரியோதனனும் எங்களை நன்கு பாதுகாத்து ஆட்சி செய்தான்.(19,20)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, ஒருபோதும் சிறு குற்றத்தையும் எங்களுக்கெதிராக இழைத்ததில்லை. நாங்கள் எங்கள் தந்தையை நம்புவதைப் போலவே, அந்த மன்னனைச் சார்ந்து வாழ்ந்தோம்.(21) (அந்த ஆட்சியாளனின் கீழ்) நாங்கள் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை நீர் அறிவீர். ஓ! ஏகாதிபதி, அதே போலவே பெரும் நுண்ணறிவும், ஞானமும் கொண்ட குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} ஆட்சியின் கீழும் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்துவருகிறோம்[1].(22) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்யும் இந்த அறம் சார்ந்த மன்னன், உமது குலத்தைச் சேர்ந்தவர்களும், புண்ணியச் செயல்களைச் செய்தவர்களும், குரு, சம்பரன் {சம்வர்ணன்}[2], பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரதன் உள்ளிட்ட பழங்கால அரசமுனிகளின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறான்.(23,24)ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த யுதிஷ்டிரனின் ஆட்சியில், நிந்திக்கத்தக்க காரியமென்று எதுவும் சிறிதளவுமில்லை. உம்மால் பாதுகாக்கப்பட்டும், ஆளப்பட்டும் நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் வாழ்கிறோம்.(25) உமக்கும் உமது மகனுக்கும் எதிராகச் சிறு குறையையும் சொல்ல இயலாது. உற்றார் உறவினருக்குப் பேரழிவை ஏற்படுத்திய காரியத்தில் துரியோதனனைக் குறித்து நீர் சொன்னதைப் பொறுத்தவரையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்வபரே, (நான் சொல்வதை நீர் கேட்க வேண்டுமென) நான் இரந்து கேட்கிறேன்” என்றார் {பிராமணர் சாம்பன்}.(26,27)

பிராமணர் {சாம்பன்} தொடர்ந்தார், “குருக்களுக்கு நேர்ந்த அழிவு துரியோதனனால் கொண்டுவரப்பட்டதல்ல. உம்மாலும் அது கொண்டுவரப்படவில்லை. கர்ணன் மற்றும் சுபலனின் மகனாலும் {சகுனியாலும்} அது கொண்டுவரப்படவில்லை.(28) எதிர்க்கப்பட இயலாத விதியால் அது கொண்டுவரப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம். உண்மையில், மனித முயற்சியால் ஒருபோதும் விதியைத் தடுக்க முடியாது.(29) ஓ! ஏகாதிபதி, பதினெட்டு அக்ஷௌஹிணி துருப்புகள் ஒன்றாகத் திரட்டப்பட்டன. பதினெட்டு நாட்களில் அந்தக் கூட்டமானது, குருவீரர்களில் முதன்மையான பீஷ்மர், துரோணர், கிருபர், உயர் ஆன்மக் கர்ணன், வீரனான யுயுதானன் {சாத்யகி}, திருஷ்டத்யும்னன்,(30,31) பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் உள்ளிட்ட பாண்டுவின் நான்கு மகன்கள் ஆகியோரால் அழிக்கப்பட்டது. ஓ! மன்னா, விதியின் ஆதிக்கமின்றி (பயங்கரமான) இந்தப் பேரழிவு நடந்திருக்க முடியாது.(32) குறிப்பாக க்ஷத்திரியர்களால் பகைவர்கள் போரில் கொல்லப்பட வேண்டும், மரணம் ஏற்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை[3].(33)ஆயுத அறிவியலும், வலிமையும் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானவர்களால், பூமியானவள் தன் குதிரைகளையும், தேர்களையும், யானைகளையும் இழந்தாள்.(34) அந்த உயர் ஆன்ம மன்னர்களின் பேரழிவுக்கு உமது மகன் காரணமல்ல. நீரோ, உமது பணியாட்களோ, கர்ணனோ, சுபலனின் மகனோ {சகுனியோ} காரணமல்ல.(35) குருகுலத்தின் முதன்மையானவர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான மன்னர்களின் அழிவானது விதியாலேயே கொண்டுவரப்பட்டது என்பதை அறிவீராக. இதில் எவனாலும் வேறென்ன சொல்ல முடியும்?(36) நீரே குருவாகவும், மொத்த உலகத்தின் உரிமையாளராகவும் கருதப்படுகிறீர். எனவே, உமது முன்னிலையிலேயே நாங்கள் உமது மகன் அற ஆன்மா கொண்டவன் எனக் கொள்கிறோம்.(37) அந்த மன்னன் {துரியோதனன்}, தன் தோழர்களுடன் சேர்ந்து, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடையட்டும். அவன், முதன்மையான பிராமணர்களால் அனுமதிக்கப்பட்டுச் சொர்க்கத்தில் அருள்நிறைந்தவனாக விளையாடட்டும்.(38) நீரும் அறம்பிறழாத உறுதியுள்ளவராகப் பெரும் புண்ணியத்தை ஈட்டப் போகிறீர். ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, வேதங்களில் குறிப்பிடப்படும் கடமைகளை முழுமையாகப் பின்பற்றுவீராக.(39) நீரோ, நாங்களோ பாண்டவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொர்க்கங்களையே ஆள இயன்றவர்கள் எனும்போது, பூமியைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(40)

ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, ஒழுக்கத்தையே தங்கள் ஆபரணமாகக் கொண்ட பாண்டவர்களுக்கு நாங்கள் செழிப்பிலும், வறுமையிலும் கீழ்ப்படிந்திருப்போம்.(41) வேள்விகளிலும், ஈமச் சடங்குகளிலும் மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களுக்கு எப்போதும் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு மிக்கக் கொடைகளைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பழங்காலத்தின் பெரும் மன்னர்கள் வழியிலேயே அளித்து வருகிறான்.(42) உயர்ந்த மனம் கொண்ட இந்தக் குந்தியின் மகன், மென்மையானவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும், இரண்டாம் வைஸ்ரவணனை {குபேரனைப்} போலவே எப்போதும் செலவு செய்யும் மனநிலையிலும் இருக்கிறான். அவனைக் கவனித்துக் கொள்ளப் பெரும் அமைச்சர்களும் இருக்கின்றனர்.(43) அவன் தன் பகைவர்களிடமும் கருணை கொண்டவனாக இருக்கிறான். உண்மையில், அந்த முதன்மையான பாரதக் குலத்தோன், தூய ஒழுக்கம் கொண்டவனாக இருக்கிறான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன், தன் காரியங்களில் முற்றிலும் வெளிப்படையாக இருந்து, ஒரு தந்தை தன் பிள்ளைகளைக் காப்பது போல எங்களைக் காத்து ஆட்சி செய்கிறான்.(44) ஓ! அரச முனியே, தர்மனின் மகனுடன் ஏற்படும் தொடர்பால் பீமனும், அர்ஜுனனும், பிறரும் எங்களுக்கு ஒரு போதும் சிறு குற்றத்தையும் இழைத்ததில்லை.(45)

ஓ! குரு குலத்தைச் சேர்ந்தவரே, மென்மையானவர்களிடம் மென்மையாகவும், கடுமையானவர்களிடம் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்று கடுமையானவர்களாகவும் அவர்கள் நடந்து கொள்கின்றனர். பெருஞ்சக்தி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் எப்போதும் மக்களின் நன்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.(46) குந்தியோ, (உமது மருமகள்) பாஞ்சாலியோ, உலூபியோ, சாத்வதகுல இளவரசியோ {சுபத்திரையோ}, இந்த மக்களுக்குச் சிறு குற்றத்தையும் செய்யமாட்டார்கள்[4].(47) எங்களிடம் நீர் காட்டிய பரிவும், யுதிஷ்டிரன் கொண்டிருக்கும் அன்பும், இந்த நகரத்து மற்றும் மாகாணத்து மக்களால் ஒருபோதும் மறக்கமுடியாத அளவுக்குப் பெரிய அளவில் இன்னும் நீடித்திருக்கின்றன.(48) குந்தியின் மகன்களும், அறக்கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இந்த மக்கள் அறமற்றவர்களாக இருப்பினும் அவர்கள் பாதுகாத்துப் பேணி வளர்ப்பார்கள்.(49) எனவே, ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, யுதிஷ்டிரன் குறித்து உமது இதயத்தில் இருக்கும் கவலைகள் அனைத்தையும் விலக்கி, புண்ணியச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் உம்மை நிறுவிக் கொள்வீராக” என்றார் {பிராமணர் சாம்பன்}”.(50)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்தச் சபையில் இருந்தோர் ஒவ்வொருவரும், அறமும், தகுதியும் நிறைந்த அந்தப் பிராமணரின் சொற்களைக் கேட்டு, அங்கீகரித்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவற்றைத் தன்னுடைய சொற்களாகவே ஏற்றனர்.(51) திருதராஷ்டிரனும், அந்தச் சொற்களை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, தன் குடிமக்களுக்கு மெதுவாக விடை கொடுத்தனுப்பினான்.(52) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அவர்களால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, அவர்களது மங்கலப் பார்வைகளைப் பெற்ற அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் கைகளைக் கூப்பி அவர்கள் அனைவரையும் பதிலுக்குக் கௌரவித்தான்.(53) அதன் பிறகு அவன் காந்தாரியுடன் தன் மாளிகைக்குள் நுழைந்தான். அந்த இரவு கழிந்ததும் அவன் என்ன செய்தான் என்பதை இனி கேட்பாயாக” {என்றார் வைசம்பாயனர்}.(54)

பீமனின் கோபம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 11-பீஷ்மர் முதலியோருக்குச் சிராத்தஞ்செய்யப் பொருள் வேண்டிய திருதராஷ்டிரன்; கொடுக்க மறுத்த பீமன்; அர்ஜுனன் கொடுக்க வேண்டும் என்று சொன்னது; அர்ஜுனனை மெச்சிய யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் கோபமாகப் பேசிய பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த இரவு கடந்ததும், அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு விதுரனை அனுப்பினான்.(1) பெருஞ்சக்தி கொண்டவனும், நுண்ணறிவு பெற்ற மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான விதுரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு வந்து, மனிதர்களில் முதன்மையானவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த மன்னனிடம், இந்தச் சொற்களில்,(2) “மன்னர் திருதராஷ்டிரர், காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய தொடக்கச் சடங்குகளைச் செய்ய வேண்டும். ஓ! மன்னா, கார்த்திகை மாதம் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் அவர் {திருதராஷ்டிரர்} காட்டுக்குப் புறப்பட இருக்கிறார்[1].(3) ஓ! குருக்களில் முதன்மையானவனே, அவர் உன்னிடம் இருந்து சிறிது செல்வத்தை வேண்டுகிறார். உயர் ஆன்ம கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, துரோணர், சோமதத்தன், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பாஹ்லீகர், கொல்லப்பட்ட அவருடைய அனைத்து மகன்கள் மற்றும் நலன்விரும்பிகள், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளனுக்கும் {ஜெயத்ரதனுக்கும்} சிராத்தம் செய்ய விரும்புகிறார்” என்றான்.(5)விதுரனின் இந்தச் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன் மற்றும் சுருள்முடி கொண்டவனான அர்ஜுனன் ஆகிய இருவரும் அவற்றை உயர்வாக மெச்சினர்.(6) எனினும், பெருஞ்சக்தி கொண்டவனும், தணிக்க இயலாத கோபத்தைக் கொண்டவனுமான பீமன், துரியோதனனின் செயல்களை நினைவுகூர்ந்தவனாக விதுரனின் அந்தச் சொற்களை நல்லூக்கத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை. கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, பீமசேனனின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, சற்றே தன் தலையைக் கீழே தொங்கப்போட்டவாறு, மனிதர்களில் முதன்மையானவனான அவனிடம் இந்தச் சொற்களில் பேசினான்: “ஓ! பீமரே, வயதில் முதிர்ந்தவரான நமது அரசத் தந்தை காட்டுக்கு ஓய்ந்து செல்லத் தீர்மானித்திருக்கிறார்.(7-9) கொல்லப்பட்டவர்களான தமது உற்றார் உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மறுமையில் அடையும் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்காக அவர் கொடையளிக்க விரும்புகிறார். ஓ! குருகுலத்தைச் சார்ந்தவரே, உம்மால் வெல்லப்பட்டு உமக்குரியதாக இருக்கும் செல்வதை அவர் கொடையளிக்க விரும்புகிறார்.(10)

உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அந்த முதிர்ந்த மன்னர் பீஷ்மர் மற்றும் பிறரின் நிமித்தமாக இந்தக் கொடைகளை அளிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு நம்மால் இரந்து கேட்கப்பட்டவர், இப்போது நம்மிடம் இரந்து கேட்பது நற்பேற்றினாலேயே நேர்கிறது. காலம் கொண்டு வந்த மாற்றத்தைப் பாரும். எந்த மன்னன் முன்பு மொத்த பூமியின் தலைவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்தோரோ,(11,12) எவருடைய உற்றார் உறவினர் மற்றும் துணைவர்கள் பகைவர்களால் கொல்லப்பட்டனரோ, அவர் இப்போது காடுகளுக்குச் செல்ல விரும்புகிறார். ஓ! மனிதர்களின் தலைவா, கேட்கப்படும் அனுமதியைக் கொடுப்பதிலிருந்து உமது கருத்து விலக வேண்டாம்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மறுப்பது புகழ்க்கேட்டையும், பாவத்தையும் கொண்டுவரும். இக்காரியத்தில் நீர், அனைவருக்கும் தலைவரும், நமது அண்ணனுமான மன்னனிடமிருந்து கற்பீராக.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மறுப்பதைவிடக் கொடுப்பதே உமக்குத் தகும்” என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு சொன்ன பீபத்சுவை {அர்ஜுனனை} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மெச்சினான்.(15)

கோபவசப்பட்ட பீமசேனன், இந்தச் சொற்களில், “ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீஷ்மர், மன்னர் சோமதத்தர், பூரிஸ்ரவஸ், அரசமுனியான பாஹ்லீகர், உயர் ஆன்ம துரோணர் மற்றும் பிறர் அனைவரின் ஈமச்சடங்குகளுக்காக நாம் கொடையளிக்கலாம்.(16,17) நம் அன்னை குந்தி, கர்ணனுக்கான ஈமக்காணிக்கைகளை அளிப்பாள். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தச் சிராத்தங்களைத் திருதராஷ்டிரர் செய்ய வேண்டாம்.(18) இதையே நான் நினைக்கிறேன். நமது பகைவர்கள் மகிழ வேண்டாம். துரியோதனனும், பிறரும் மேலும் மேலும் படு பயங்கர நிலைக்குள் மூழ்கட்டும்.(19) ஐயோ, குலத்தில் இழிந்தவர்களான அவர்களே மொத்த பூமியையும் அழித்தவர்கள். பனிரெண்டு வருடங்கள் நீண்ட கடுங்கவலையையையும்,(20) திரௌபதிக்குத் துன்பம் நிறைந்ததாக அமைந்த ஒருவருட தலைமறைவு வாழ்வையும் உன்னால் எவ்வாறு மறக்க முடிந்தது? திருதராஷ்டிரர் நம்மிடம் கொள்ளும் இந்த அன்பு அப்போது எங்கிருந்தது?(21)

கருப்பு மான்தோலை உடுத்தி, உன் ஆபரணங்கள் அனைத்தையும் அகற்றி, பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} அழைத்துக் கொண்டு நீ இந்த மன்னனை {யுதிஷ்திரரைப்} பின் தொடர்ந்து செல்லவில்லையா?(22) அப்போது பீஷ்மரும், துரோணரும் எங்கிருந்தனர்? சோமதத்தர் எங்கிருந்தார்? நீ பதிமூன்று வருடங்கள் காட்டு விளைச்சலை உண்டு வாழ வேண்டிருந்ததே.(23) உன்னுடைய பெரிய தந்தை, அப்போது தந்தைக்குரிய அன்புக்கண்களுடன் உன்னைப் பார்க்கவில்லையே. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பகடையாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, விதுரரிடம், “வெல்லப்பட்டதென்ன?” என்று நம் குலத்தில் இழிந்தவரும், தீய புத்தி கொண்டவருமான இவர்தான் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதை நீ மறந்துவிட்டாயா?” என்றான் {பீமன்}. இவ்வளவு வரை கேட்டுக் கொண்டிருந்தவனும், குந்தியின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனை {பீமனை} அதட்டி, அமைதியாக இருக்கும்படி சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(24,25)

யுதிஷ்டிரனின் ஒப்புதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 12-சிராதத்தத்துக்குப் பொருள் கொடுக்க மறுத்த பீமன்; தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுமாறு திருதராஷ்டிரனுக்குச சொல்லி அனுப்பிய யுதிஷ்டிரன்…

அர்ஜுனன், “ஓ! பீமரே, நீர் என் அண்ணனாகவும், எனக்குப் பெரியவராகவும், ஆசானாகவும் இருக்கிறீர். நான் ஏற்கனவே சொன்னதைவிட அதிகம் சொல்லத் துணியேன். அரசமுனியான திருதராஷ்டிரர் அனைத்து வகையிலும் நம் மதிப்புக்குத் தகுந்தவர்.(1) நல்லோரும், பொதுவான மட்டத்திற்கு மேலே புகழடைந்தவர்களும், நல்லதைக் குறிக்கும் வேறுபாடுகளை உடைக்காதவர்களும், தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை மட்டுமே நினைப்பதில்லை, தாங்கள் அடைந்த நன்மைகளையும் நினைப்பர்” என்றான்.(2)

உயர் ஆன்ம பல்குனனின் இந்தச் சொற்களைக் கேட்டவனும், அற ஆன்மா கொண்டவனும், குந்தியின் மகனமான யுதிஷ்டிரன், விதுரனிடம் இந்தச் சொற்களில்,(3) “ஓ! க்ஷத்ரி, குரு மன்னரின் மகன்கள், பீஷ்மர், அவரது நலன் விரும்பிகள், அவருக்கு நன்மை செய்தவர்கள் மற்றும் பிறருக்கான ஈமச்சடங்குகளுக்குத் தேவையான செல்வத்தை என் கருவூலத்தில் இருந்து நான் கொடுப்பேனென நான் சொன்னதாக அவரிடம் {திருதராஷ்டிரரிடம்} சொல்வீராக. இதில் பீமன் உற்சாகமிழக்க வேண்டியதில்லை” என்றான்”.(4,5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்தச் சொற்களைச் சொன்னவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனனை உயர்வாக மெச்சினான். அதே வேளையில் பீமசேனன் தனஞ்சயன் மீது தன் கோபப்பார்வைகளை வீசத் தொடங்கினான்.(6) அப்போது, பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன், மீண்டும் விதுரனிடம், “மன்னர் திருதராஷ்டிரர் பீமசேனனிடம் கோபம் கொள்வது அவருக்குத் தகாது.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான இந்தப் பீமன், காட்டில் வசித்தபோது, குளிர், மழை, வெப்பம் ஆகியவற்றால் பெரிதும் பீடிக்கப்பட்டவனாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான துன்பங்களை அடைந்தவனாகவும் இருக்கிறான். இவை யாவும் நீர் அறியாதனவல்ல.(8) எனினும், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, என் வீட்டில் இருந்து மன்னர் விரும்பும் பொருட்களை, அவர் விரும்பும் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வீராக.(9)

பெரிதும் துன்பமடைந்த பீமன் வெளிப்படுத்தும் செருக்கை அவரது இதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நீர் அம்மன்னருக்குச் சொல்ல வேண்டும்.(10) நான் கொண்டிருக்கும் செல்வமெதற்கும், அர்ஜுனன் வீட்டில் இருக்கும் எதற்கும் மன்னர் திருதராஷ்டிரரே உரிமையாளராவார். இதையும் நீர் அவருக்குச் சொல்ல வேண்டும்.(11) மன்னர், பிராமணர்களுக்குக் கொடைகளை அளிக்கட்டும். அவர் விரும்பிய அளவில் பெரிதாகச் செலவு செய்யட்டும். அவர் தமது மகன்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடட்டும்.(12)

அதையும் தவிர, ‘ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்னுடைய இந்த உடலும், நான் கொண்டிருக்கும் செல்வம் அனைத்தும் உமதே. இதை அறிவீராக. இதில் ஐயமேதும் கொள்ள வேண்டும்’ என்றும் அவரிடம் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(13)

நிறைவடைந்த திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 13-பொருள் கொடுப்பதற்கு யுதிஷ்டிரன் சம்மதித்ததைத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்த விதுரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வாறு மன்னன் யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான விதுரன், திருதராஷ்டிரனிடம் சென்று, சிறந்த பொருள்ள இந்தச் சொற்களை அவனிடம் சொன்னான்.(1) {விதுரன்}, “முதலில் நான் மன்னன் யுதிஷ்டிரனிடம் உமது செய்தியைச் சொன்னேன். உமது சொற்களைக் குறித்துச் சிந்தித்து, அவற்றை உயர்வாக மெச்சினான்.(2) பெருஞ்சக்தி கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, தன் மாளிகைகள், தன் உயிர் மூச்சு உட்பட அவற்றிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் உமது வசம் வைத்திருக்கிறான்.(3) ஓ! அரச முனியே {திருதராஷ்டிரரே}, உமது மகனான மன்னன் யுதிஷ்டிரனும், தன் நாட்டையும், உயிர் மூச்சையும், செல்வத்தையும், தனக்குரிய அனைத்தையும் உமக்குக் கொடுக்க முன் வருகிறான்.(4)

எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், எண்ணற்றவையான தன் கவலைகள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, பெருமூச்சுகள் பலவற்றை விட்டபடியே பெருஞ்சிரமத்துடன் தன் சம்மதத்தை அளித்தான்.(5) ஓ! ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, உம்மிடம் நல்லுறவைப் பேணும்படி அறமன்னனாலும் {யுதிஷ்டிரனாலும்}, பீபத்சுவாலும் {அர்ஜுனனாலும்} வேண்டவும், தூண்டவும்பட்டான்.(6) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பழைய பகைமைகளை நினைவுகூர்ந்து பீமன் வெளிப்படுத்தும் முறையற்ற நடத்தையினால் சோர்வடைய வேண்டாம் என உம்மை வேண்டிக் கேட்டுக் கொண்டான்.(7)

{யுதிஷ்டிரன்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே, இதுவே போரில் பொதுவாக க்ஷத்திரியர்களின் நடத்தையாகும், இந்த விருகோதரன் {பீமன்}, போரிலும், க்ஷத்திரிய நடைமுறைகளிலும் அர்ப்பணிப்புள்ளவன் ஆவான்.(8) ஓ! மன்னா, நானும், அர்ஜுனனும் சேர்ந்து விருகோதரனை மன்னிக்குமாறு உம்மை மீண்டும் மீண்டும் இரந்து கேட்கிறோம். எங்களுக்கு அருள் புரிவீராக. நீரே எங்கள் தலைவராவீர். ஓ! பூமியின் ஆட்சியாளரே நாங்கள் கொண்டுள்ள செல்வத்தில் நீர் விரும்புவனவற்றை நீர் கொடையளிக்கலாம். ஓ! பாரதரே, இந்த நாட்டிற்கும், இதில் வாழும் அனைவருக்கும் நீரே தலைவராவீர்” {என்று உம்மை வேண்டிக் கொண்டான்}.(9,10)

{பிறகு என்னை நோக்கி}, குரு குலத்தில் முதன்மையான அவர் {திருதராஷ்டிரர்}, தமது மகன்களின் ஈமச் சடங்குகளுக்காகப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய முதன்மையான கொடைகள் அனைத்தையும் கொடுக்கட்டும். உண்மையில், எங்கள் மாளிகைகளில் இருந்து ரத்தினங்கள், பசுக்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை எடுத்துக் கொண்டு அந்த மறுபிறப்பாள வகையினருக்குக் கொடைகளை அளிக்கட்டும். அவர் ஈகைக்கெனத் தான் விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுத்து, ஏழைகள், பார்வையற்றோர், பெருந்துயரில் இருப்போர் ஆகியோருக்குக் கொடையளிக்கட்டும்.(11,12)

ஓ! விதுரரே, அபரிமிதமாகத் திரட்டப்பட்ட உணவு, பல்வேறு சுவைகளைக் கொண்ட பானங்கள் ஆகியவற்றுடன் கூடிய பெரிய அரங்கங்கள் கட்டப்படட்டும். பசுக்கள் குடிப்பதற்கான தொட்டிகளும் கட்டப்பட வேண்டும், புண்ணியம் தரும் பிற வேலைகளும் செய்யப்பட வேண்டும் {என்று யுதிஷ்டிரன் என்னிடம் சொன்னான்}. இவையே மன்னனாலும், பிருதையின் மகனான தனஞ்சயனாலும் எனக்குச் சொல்ல்லப்பட்ட சொற்களாகும். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {விதுரன்}.(14)

ஓ! ஜனமேஜயா, விதுரன் இச்சொற்களைச் சொன்ன பிறகு, அவற்றில் தன் நிறைவை வெளிப்படுத்திய திருதராஷ்டிரன், கார்த்திகை மாத முழு நிலவு நாளில் பெருங்கொடைகளை அளிப்பதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(15)

தானயஜ்ஞம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 14-சிராத்தம் செய்து, உணவு மற்றும் பானத்தால் பிராமணர்களை நிறைவடையச் செய்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரன் கேட்டதைவிடப் பத்து மடங்கு கொடுத்த யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி, இவ்வாறு விதுரனால் சொல்லப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் மற்றும் ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்}  செயல்களால் உயர்வான நிறைவையடைந்தான்.(1) பீஷ்மருக்காகவும், தன் மகன்கள் மற்றும் நண்பர்களுக்காகவும், உரிய சோதனைகளுக்குப் பிறகு தகுந்த பிராமணர்களை அழைத்து, மேன்மையான முனிவர்களையும் அழைத்து,(2) பெரும் அளவிலான உணவையும், பானத்தையும் தயாரிக்கச் செய்து, தேர்கள், வாகனங்கள், துணிமணிகள், தங்கம், ஆபரணங்கள், ரத்தினங்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், விரிப்புகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களைத் திரட்டி,(3) கிராமங்கள், வயல்கள் மற்றும் பிறவகைச் செல்வங்களைத் தயாராக வைத்துக் கொண்டு, யானைகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் ஆகியவற்றையும், பெண்களில் சிறந்த அழகிய கன்னிகைகளையும்,(4) இறந்து போனோரின் பெயர்களைச் சொல்லி அவர்களின் முன்னேற்றத்திற்காக அந்த மன்னர்களில் முதன்மையானவன் {திருதராஷ்டிரன்} கொடையளித்தான். துரோணர், பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகர்,(5) மன்னன் துரியோதனன் மற்றும் தன்னுடைய வேறு மகன்கள் ஒவ்வொருவரின் பெயரையும், ஜெயத்ரதன் முதலிய தன் நலன்விரும்பிகள் அனைவரின் பெயர்களையும் சொல்லி உரிய முறையில் அந்தக் கொடைகள் அளிக்கப்பட்டன.(6)

யுதிஷ்டிரனின் அனுமதியின் பேரில் நடந்த அந்தச் சிராத்தவேள்வியில், பெருமளவிலான செல்வங்கள் மற்றும் அபரிமிதமான ரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் வேறு வகைச் செல்வங்கள் கொடையளிக்கப்பட்டன.(7) அந்தச் சந்தர்ப்பத்தில் யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் கணக்கர்கள் மற்றும் எழுத்தர்கள் ஆகியோர், அந்த முதிர்ந்த மன்னனிடம் இடையறாமல்,(8) “ஓ! ஏகாதிபதி, இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள் என்னென்ன என்று ஆணையிடுவீராக. அனைத்துப் பொருட்களும் இங்கே தயாராக இருக்கின்றன” என்று கேட்டுக் கொண்டிருந்தனர். மன்னன் சொன்னதும், அவனால் சொல்லப்பட்டதை அவர்கள் கொடுத்தார்கள்[1].(9) குந்தியின் அரச மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} ஆணையின் பேரில், நூறு பெற இருந்தவன் ஆயிரம்பெற்றான், ஆயிரம் பெற இருந்தவன், பத்தாயிரம் பெற்றான்[2].(10)மேகங்கள் தாங்கள் பொழியும் மழையால் பயிர்களை விளையச் செய்வதைப் போல அந்த அரச மேகமும், செல்வமெனும் மழையைப் பொழிந்ததன் மூலம் பிராமணர்களை நிறைவடையச் செய்தது.(11) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தக் கொடைகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகு, நான்கு வகையைச் சேர்ந்தவர்களும், அங்கே கூடியிருந்தவர்களுமான விருந்தினர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் உணவையும், பல்வேறு சுவைகளுடன் கூடிய பானங்களெனும் பெரும் வெள்ளத்தில் அவர்களை மூழ்கும்படி செய்தான்.(12)

உண்மையில், அந்தத் திருதராஷ்டிரப் பெருங்கடலானது, ரத்தினங்களை உயர்ந்து பெருகும் நீராகக் கொண்டும், கிராமங்கள் மற்றும் விளைநிலங்களை வளமாகவும், வேறு முதன்மையான கொடைகளைத் தன் முன்னணித் தீவுகளாகவும், விலைமதிப்புமிக்கப் பல்வேறு வகைப் பொருட்களின் குவியல்களை வளமிக்கக் குகைளாகவும், யானைகளையும், குதிரைகளையும் தன் முதலைகளாகவும், சுழிகளாகவும், மிருதங்க ஒலிகளைத் தன் ஆழ்ந்த முழக்கமாகவும், துணிமணிகள், செல்வம் மற்றும் விலைமதிப்பு மிக்கக் கற்களைத் தன் அலைகளாகவும் கொண்டு பூமியை மூழ்கடித்தது.(13,14) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே அந்த ஏகாதிபதி, மறுமையில் உள்ள தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், பித்ருக்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும், தனக்காகவும் காந்தாரிக்காகவும் கொடைகளை அளித்தான்.(15)

இறுதியாக, இவ்வளவு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் பணியில் அவன் களைப்படைந்தபோது, அந்தப் பெரும் கொடை வேள்வி ஒரு முடிவுக்கு வந்தது.(16) இவ்வாறே அந்தக் குருகுலத்தின் மன்னன் தன் கொடை வேள்வியை {தானயஜ்ஞத்தைச்} செய்தான். அந்தச் சந்தர்ப்பத்தில் நடிகர்களும், நடனக்கலைஞர்களும் தொடர்ந்து ஆடிப்பாடி அங்கே இருந்த விருந்தினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தனர்.(17) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு பத்து நாட்கள் கொடையளித்த அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்குத் தான் பட்ட கடன்களில் இருந்து விடுபட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(18)

திருதராஷ்டிரன் புறப்பாடு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 15-திருதராஷ்டிரன் காந்தாரியின் தோளையும், காந்தாரி குந்தியின் தோளையும் பற்றிக் கொண்டு காடு நோக்கிப் புறப்பட்டது; அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காடுகளுக்குத் தான் புறப்பட வேண்டிய நேரத்தைத் தீர்மானித்த அம்பிகையின் அரச மகன் திருதராஷ்டிரன், வீரர்களான பாண்டவர்களை அழைத்தான்.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி, காந்தாரியுடன் சேர்ந்து அந்த இளவரசர்களை அழைத்தான். கார்த்திகை மாதத்தின் முழுநிலவு நாளான அன்று வேதங்கள் அறிந்த பிராமணர்களைச் சிறு சடங்குகளைச் செய்ய வைத்த அவன்,(2) தான் தினமும் வழிபடும் நெருப்பை எடுத்து வரச் செய்தான். தன் வழக்கமான ஆடைகளைக் கைவிட்டு மான்தோலையும், மரவுரியையும் அணிந்து கொண்டு, தன் மருமகள்கள் துணையுடன் அந்த மாளிகையைவிட்டுப் புறப்பட்டான்.(3)

விசித்திரவீரியனின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு புறப்பட்ட போது, பாண்டவ மற்றும் கௌரவப் பெண்மணிகளும், கௌரவக் குலத்தைச் சேர்ந்த வேறு பெண்மணிகளும் உரக்க ஓலமிட்டனர்.(4) மன்னன், தான் வாழ்ந்த அந்த மாளிகையைப் பொரி மற்றும் பல்வேறு வகைகளிலான சிறந்த மலர்களைக் கொண்டு வழிபட்டான். மேலும் அவன் செல்வக்கொடைகளால் தன் பணியாட்கள் அனைவரையும் கௌரவித்து, அந்த வசிப்பிடத்தைவிட்டு வெளியே வந்து பயணத்தில் புறப்பட்டான்.(5)

அப்போது, ஓ! மகனே, மன்னன் யுதிஷ்டிரன், மேனியங்கும் நடுங்கியவாறு, கண்ணீரால் தடை பட்ட உரத்த குரலுடன் இந்தச் சொற்களைச் சொன்னான், “ஓ! அறம்சார்ந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் எங்கே செல்லபோகிறீர்?” என்று சொல்லி மயக்கமடைந்து கீழே விழுந்தான்.(6)

பெருந்துன்பத்தில் எரிந்து கொண்டிருந்த அர்ஜுனன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். பாரதக் குல இளவரசர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, இவ்வாறான முறையில் நடந்து கொள்ளக்கூடாது என்று யுதிஷ்டிரனிடம் சொல்லி உற்சாகமற்றவனாகவும், துன்பத்தில் மூழ்கிய இதயம் கொண்டவனாகவும் நின்று கொண்டிருந்தான்.(7) விருகோதரன் {பீமன்}, வீரப் பல்குனன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் {நகுல சகாதேவன்}, விதுரன், சஞ்சயன், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரனுக்குப் பிறந்த மகன் {யுயுத்சு}, கிருபர், தௌமியர் மற்றும் பிற பிராமணர்கள் அனைவரும், துயரால் தடைபட்ட குரல்களுடன் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைப் பின்தொடர்ந்து சென்றனர்.(8) கண்களைக் கட்டிக் கொண்டு நடந்த காந்தாரியின் கைகளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு குந்தி முன் சென்றாள். மன்னன் திருதராஷ்டிரன், தன் கைகளைக் காந்தாரியின் தோள்களில் வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் நடந்தான்[1].(9) துருபதன் மகள் கிருஷ்ணை {திரௌபதி}, சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, சமீபத்தில் தாயான கௌரவர்களின் மருமகள் உத்தரை[2]சித்திராங்கதை மற்றும் அரச குடும்பத்தின் மற்ற பெண்கள் ஆகியோர் அனைவரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியுடன் {திருதராஷ்டிரனுடன்} சென்றனர்.(10)ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் துன்பத்தால் ஏற்பட்ட அவர்களது ஓலம், பெண் அன்றில் {குரரி பறவை} கூட்டத்தின் உரத்த கதறல்களுக்கு ஒப்பானதாக இருந்தது. அப்போது, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் அடங்கிய குடிமக்களின் மனைவிமாரும் அனைத்துப் புறங்களில் இருந்தும் தெருவுக்கு வந்தனர்.(11) ஓ! மன்னா, ஹஸ்தினாபுரத்தின் குடிமக்கள அனைவரும், பழங்காலத்தில், பகடையாட்டத்தில் தோற்றுப் பாண்டவர்கள் புறப்பட்ட போது துயரடைந்ததைப் போலவே திருதராஷ்டிரன் புறப்பட்ட போதும் துயரடைந்தனர்.(12) சூரியனையோ, சந்திரனையோ ஒருபோதும் கண்டிராத பெண்களும், மன்னன் திருதராஷ்டிரன் பெருங்காட்டை நோக்கிச் சென்ற போது, அந்தச் சந்தர்ப்பத்தில் பெருந்துயரத்துடன் தெருவுக்கு வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(13)

பின்தொடர்ந்த குந்தி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 16-திருதராஷ்டிரன் காட்டுக்குப் புறப்படும்போது, விதுரனும், சஞ்சயனும் உடன் புறப்பட்டது, யுதிஷ்டிரனும், பீமனும் தடுத்தும் குந்தியும் அவர்களுடன் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, அந்த நேரத்தில் பூமியிலோ, மாளிகைகளின் மாடியிலோ {உப்பரிகைகளிலோ} நின்று கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் செய்த முழக்கம் பெரிதாக இருந்தது.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, கைகளைக் கூப்பி, பலவீனத்தால் நடுங்கி, இரு பாலினத்தாராலும் நிறைந்திருந்த முக்கிய வீதியின் {ராஜமார்க்கத்தின்} வழியே சிரமத்துடன் நடந்து சென்றான்.(2) யானையின் பெயரால் அழைக்கப்பட்ட {ஹஸ்தினாபுரம்} நகரத்தின் முக்கிய வாயில் வழியே வெளியேறி, மக்கள் கூட்டத்தினரிடம் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொன்னான்.(3) மன்னனுடன் {திருதராஷ்டிரனுடன்} செல்வதில் விதுரன் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். கவல்கணன் மகனும், திருதராஷ்டிரனின் முதல் அமைச்சருமான சூதன் சஞ்சயனும் அதே இதயம் கொண்டவனாகவே இருந்தான்![1].(4)மன்னன் திருதராஷ்டிரன், தன்னைப் பின்தொடர்வதிலிருந்து கிருபரையும், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சுவையும் தடுத்தான். அவர்களை யுதிஷ்டிரனின் கைகளில் ஒப்படைத்தான்.(5) திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் குடிமக்கள் அந்த ஏகாதிபதியைப் பின்தொடர்வதை நிறுத்திய பிறகு, மன்னன் யுதிஷ்டிரனும், தன் குடும்பத்துப் பெண்களுடன் சேர்ந்து நிற்கத் தயாரானான்.(6)

தன் தாயான குந்தியும் காட்டுக்கு ஓய்ந்து செல்வதற்கு விரும்புவதைக் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அவளிடம், “முதிய ஏகாதிபதியை நான் பின்தொடர்ந்து செல்வேன். நீ நிற்பாயாக.(7) ஓ! ராணி, உன் மருமகள்களான இவர்கள் துணையுடன் நீ நகரத்திற்குத் திரும்புவதே உனக்குத் தகும். இந்த ஏகாதிபதி, தவம்பயில்வதென உறுதியாகத் தீர்மானித்துக் காட்டுக்குச் செல்கிறார்” என்றான்.(8) மன்னன் யுதிஷ்டிரன் கண்ணீரில் குளித்த கண்களுடன் அவளிடம் இந்தச் சொற்களைச் சொன்னாலும், அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல், காந்தாரியைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறினாள் குந்தி.(9)

{சிறிது நேரத்திற்குப் பிறகு}, குந்தி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, சகாதேவனிடம் ஒருபோதும் அலட்சியம் காட்டாதே. ஓ! ஏகாதிபதி, அவன் எப்போதும் என்னிடமும், உன்னிடமும் மிகுந்த பற்று கொண்டவன்.(10) போரில் ஒருபோதும் புறமுதுகிடாதவனான கர்ணனை நீ எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும். என் அறிவின்மையால் அந்த வீரன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்.(11) என் மகனே, சூரியனுக்குப் பிறந்த அந்தப் பிள்ளையைக் காணாமல் இருந்தும் நூறு துண்டுகளாகச் சிதறாத என் இதயம் நிச்சயம் இரும்பாலானது.(12) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, இவ்வாறிருக்கையில் நான் என்ன செய்வது? சூரியனின் பிள்ளை பிறந்ததைக் குறித்த உண்மையை அறிவிக்காததால் பழி முழுவதும் என்னையே சாரும்.(13) ஓ! பகைவரை நொறுக்குபவனே, நீ உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து சூரியனின் மகனுக்காகச் சிறந்த கொடைகளை அளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.(14) ஓ! பகைவரை வெட்டுபவனே, நீ எப்போதும் திரௌபதிக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். பீமசேனன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவனையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, குரு குலத்தின் சுமை இப்போது உன் மேல் இருக்கிறது.(15) நான் என் மாமனாருக்கும், மாமியாருக்கும் செய்யும் தொண்டில் என்னை அர்ப்பணித்துக் கொண்டும், உடலில் புழுதி பூசப்பட்டவளாகக் கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டும், காந்தாரியுடன் சேர்ந்து காட்டில் நான் வாழப் போகிறேன்[2]” என்றாள் {குந்தி}”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவளால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், அற ஆன்மா கொண்டவனும், ஆசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து பெருந்துயரில் மூழ்கியவனானான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த மன்னன் ஒரு சொல்லும் சொல்லாதிருந்தான்.(17) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், சிறிது நேரம் சிந்தித்து, உற்சாகமற்றவனாக, கவலையிலும், துன்பத்திலும் மூழ்கியவனாகத் தன் அன்னையிடம் {குந்தியிடம்},(18) “உண்மையில், இதில் உன் நோக்கமென்ன? இதை நீ செய்வது உனக்குத் தகாது. என்னால் ஒருபோதும் உனக்கு அனுமதியளிக்க முடியாது. நீ எங்களிடம் கருணை காட்டுவதே உனக்குத் தகும்.(19) ஓ! இனிய குணங்களைக் கொண்டவளே, முன்பு நாங்கள் ஹஸ்தினாபுரத்திலிருந்து காடுகளுக்குச் செல்லப் புறப்பட்ட போது, விதுலை தன் மகனுக்கு அறிவரை சொன்ன கதையைச்[3] சொல்லி எங்களை முயற்சியில் ஈடுபடத் தூண்டியவள் நீயே. இப்போது எங்களைக் கைவிடுவது உனக்குத் தகாது.(20) வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன உன்னுடைய ஞானச் சொற்களால் வழிநடத்தப்பட்டுப் பூமியின் மன்னர்களைக் கொன்று இந்த அரசுரிமையை வென்றிருக்கிறேன்.(21) வாசுதவேனிடம் இருந்து நான் கேள்விப்பட்ட உன்னுடைய புத்தி இப்போது எங்கே? நீ எங்களுக்குக் கற்பித்த க்ஷத்திரிய நடைமுறைகளில் இருந்து நீ வீழ விரும்புகிறாயா?(22) எங்களையும், இந்த நாட்டையும், பெரும்புகழைக் கொண்டவளும், உன்னுடைய மருமகளுமான இவளையும் கைவிட்டு, அடைதற்கரிதான காடுகளில் நீ எவ்வாறு வாழ்வாய்? மனம் இரங்குவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(23)கண்களில் கண்ணீருடன் குந்தி தன் மகனின் இந்தச் சொற்களைக் கேட்டாலும் தன் வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது பீமன் அவளிடம்,(24) “ஓ! குந்தியே, அரசுரிமை வெல்லப்பட்டு, உன் பிள்ளைகளால் அடையப்பட்ட அந்த அரசுரிமையை நீ அனுபவிக்கும் காலத்தில், நீ செய்ய வேண்டிய அரச கடமைகள் காத்திருக்கும்போது, உன் மனத்தைப் பற்றியிருக்கும் இந்த ஆசை எங்கிருந்து வந்தது?(25) பின் ஏன் எங்களைப் பூமியை அழிக்க ஏவினாய்? அனைவரையும் விட்டுவிட்டு  காடுகளையே உன் வசிப்பிடமாக்கிக் கொள்ள நீ விரும்புவதற்கான காரணமென்ன?(26) நாங்கள் காடுகளில்தானே பிறந்தோம். நாங்கள் பிள்ளைகளாக இருந்தபோது காடுகளில் இருந்து எங்களை நீ ஏன் {இங்குக்} கொண்டுவந்தாய்? கவலையிலும், துன்பத்திலும் மூழ்கியிருக்கும் மாத்ரியின் இரு மகன்களைப் பார்.(27) ஓ! தாயே, மனம் இரங்குவாயாக. ஓ! பெரும்புகழைக் கொண்டவளே {குந்தியே}, இப்போது நீ காட்டுக்குச் செல்லாதே. வலிமையால் அடையப்பட்டு, இன்று யுதிஷ்டிரருடையதாக இருக்கும் செழிப்பை நீ அனுபவிப்பாயாக” என்றான் {பீமன்}.(28)

காட்டுக்குள் ஓய்வதை உறுதியாகத் தீர்மானித்திருந்த குந்தி, தன் மகன்களின் இந்தப் புலம்பல்களை அலட்சியம் செய்தாள்.(29) சுபத்திரையுடன் கூடியவளும், உற்சாகமற்ற முகத்தைக் கொண்டவளுமான திரௌபதி, காட்டுக்குச் செல்லும் விருப்பத்துடன் பயணப்பட்டுக் கொண்டிருந்த தன் மாமியாரை அழுதுகொண்டே பின்தொடர்ந்து சென்றாள்.(30) பெரும் ஞானம் கொண்டவளும், உலகத்தில் இருந்து ஓயும் உறுதியான தீர்மானம் கொண்டவளுமான அந்த அருளப்பட்ட மங்கை {குந்தி}, அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள்.(31) பாண்டவர்கள், தங்கள் மனைவியர் மற்றும் பணியாட்கள் அனைவருடனும் அவளைப் பின்தொடர்வதைத் தொடர்ந்தனர். அப்போது அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தன் பிள்ளைகளிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

குந்தியின் சமாதானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17-பாண்டவர்களுக்குச் சமாதானம் கூறிய குந்தி…

குந்தி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ சொல்வது உண்மைதான். மன்னர்களே, நீங்கள் உற்சாகமற்றிருந்தபோது, அவ்வாறே நான் உங்கள் அனைவரையும் தூண்டினேன்.(1) பகடையாட்டத்தில் உங்கள் நாடு உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்டும், நீங்கள் மகிழ்ச்சியை இழந்ததைக் கண்டும், உங்கள் உற்றார் உறவினரின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களாக உங்களைக் கண்டும், துணிவையும், உயர்ந்த எண்ணங்களையும் நான் உங்கள் மனத்தில் செலுத்தினேன்.(2) மனிதர்களில் முதன்மையானவர்களே, பாண்டுவின் மகன்கள் வீழ்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும், அவர்கள் புகழை இழந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நான் உங்களுக்கு ஊக்கமளித்தேன்.(3)

நீங்கள் அனைவரும் இந்திரனுக்கு இணையானவர்கள். நீங்கள் தேவர்களுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்கள். பிறரின் முகங்களை எதிர்பார்த்து நீங்கள் வாழக்கூடாது என்பதற்காகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்[1].(4) அறவோர் அனைவரிலும் முதன்மையானவனும், வாசவனுக்கு நிகரானவனுமான நீ மீண்டும் காட்டுக்குச் சென்று துன்பத்தில் வாழக்கூடாது என்பதற்காகவே நான் உன் இதயத்தில் துணிவைச் செலுத்தினேன்.(5) பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், ஆற்றலுக்காகவும், ஆண்மைக்காகவும் பரந்து அறியப்பட்டவனுமான இந்தப் பீமன், சிறப்பின்மை மற்றும் அழிவுக்குள் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(6)பீமசேனனுக்கு அடுத்துப் பிறந்தவனும், வாசவனுக்கு இணையானவனுமான இந்த விஜயன் {அர்ஜுனன்} உற்சாகமிழந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(7) பெரியோரிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களான நகுலனும் சகாதேவனும் பலவீனமடைந்து, பசியால் உற்சாகமற்றவர்களாகிவிடக் கூடாது என்பதற்காக நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(8) வாளிப்பானவளும், அகன்ற விழிகளைக் கொண்டவளுமான இந்தப் பெண் {திரௌபதி}, பொதுச் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பழிவாங்காமல் இருந்து, அதைப்பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(9)

ஓ! பீமா, பகடையில் வெல்லப்பட்டதும், தன் மாதவிடாய் காலத்தில் வாழை மரத்தைப் போல நடுங்கிக் கொண்டிருந்த இவளை {திரௌபதியை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே(10) ஓர் அடிமையை {இழுத்துச் செல்வதைப்} போலத் தன் மடமையின் மூலம் இழுத்துச் சென்றான் துச்சாசனன். இவை யாவற்றையும் நான் அறிவேன். உண்மையில், பாண்டுவின் குலம் (பகைவர்களால்) அடக்கப்பட்டது.(11) பாதுகாப்பை விரும்பும் பெண் அன்றிலைப் போல அவள் உரக்கக் கதறியபோது, என் மாமனார் {பீஷ்மர்} மற்றும் பிறர் உள்ளிட்ட குருக்கள் உற்சாகமற்றவர்களாக இருந்தனர்.(12)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அற்ப புத்தி கொண்ட பாவியான துச்சாசனனால் கூந்தல் பற்றப்பட்டு இவள் {திரௌபதி} இழுத்துச் செல்லப்பட்ட போது, நான் என் புலனுணர்வுகளை இழந்தேன் {மூர்ச்சையடைந்தேன்}.(13) ஓ! என் மகன்களே, உங்கள் சக்தியைப் பெருக்கவே விதுலையின் சொற்களைச் சொல்லி உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(14) ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் பிரதிபலிக்கப்படும் பாண்டுவின் குலம் அழிந்துபோகக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(15)

ஒரு குலத்திற்குப் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் மனிதனின் மகன்களும், பேரர்களும் ஒருபோதும் நல்லுலகங்களை அடைவதில் வெல்லமாட்டார்கள். உண்மையில், கௌரவக் குலத்தின் மூதாதையர்கள், தங்களுடையவையாக இருந்த இன்பலோகங்களை இழக்கும் ஆபத்தில் இருந்தனர்.(16) ஓ! என் மகன்களே, என்னைப் பொறுத்தவரையில், இதற்கு முன்பே நான் என் கணவரால் அடையப்பட்ட அரசுரிமையின் பெருங்கனிகளை அனுபவித்திருக்கிறேன். நான் பெருங்கொடைகளை அளித்திருக்கிறேன். நான் வேள்வியில் முறையாகச் சோமச்சாற்றைப் பருகியிருக்கிறேன்[2].(17) நான் எனக்காக வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கிளர்ந்தெழச் செய்யும் விதுலையின் சொற்களைச் சொல்லித் தூண்டவில்லை. அந்த ஆலோசனையைப் பின்பற்றுமாறு உங்களுக்காகவே நான் உங்களை தூண்டினேன்.(18)ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் வெல்லப்பட்ட அரசுரிமையின் கனிகளில் எனக்கு விருப்பமில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே. என் கணவரால் அடையப்பட்ட இன்பலோகங்களை நான் என் தவங்களின் மூலம் அடைய விரும்புகிறேன்.(19) ஓ! யுதிஷ்டிரா, காடுகளையே தங்கள் வசிப்பிடமாக்கிக் கொள்ள விரும்பும் என் மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவருக்கும் கீழ்ப்படிந்து தொண்டாற்றுவதன் மூலமும், எனத் தவங்களின் மூலமும் நான் என் உடலை உலர்த்த {உடலைவிட்டு விடுபட} விரும்புகிறேன்.(20) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீயும், பீமனும், பிறரும் என்னைப் பின்தொடர்வதை நிறுத்துவீராக. உன் புத்தி எப்போதும் அறத்திலேயே அர்ப்பணிப்புடன் இருக்கட்டும். உன் மனம் எப்போதும் பெரியதாகவே இருக்கட்டும்” என்றாள் {குந்தி}”.(21)

குந்தியைத் தடுத்த திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18-பாண்டவர்கள் வருத்தத்துடன் திரும்பியது; திருதராஷ்டிரன் முதலியோர் கங்கைக் கரையில் மாலைக் கடன்களைச் செய்து இரவைக் கழித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாவமற்ற பாண்டவர்கள், குந்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெட்கமடைந்தனர். எனவே, அவர்களும், பாஞ்சால இளவரசியும் {திரௌபதியும்} அவளைப் பின்தொடர்வதை நிறுத்தினர்[1].(1) குந்தி காட்டுக்குச் செல்வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரக்கக் கதறினர்.(2) பிறகு, பாண்டவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம் வந்து அவனை முறையாக வணங்கினர். அதன்பிறகு, திரும்பி வருவதற்குப் பிருதையை {குந்தியைச்} சம்மதிக்க வைக்கத் தவறிய அவர்கள் மேலும் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.(3)அப்போது, பெரும் சக்தி கொண்டவனும், அம்பிகையின் மகனும், காந்தாரி மற்றும் விதுரனால் தாங்கப்பட்டவனுமான திருதராஷ்டிரன், அவர்களிடம்,(4) “யுதிஷ்டிரனின் அரசத்தாய் நம்மோடு வர வேண்டாம். யுதிஷ்டிரன் சொன்ன அனைத்தும் உண்மையே.(5) மகன்களின் பெருஞ்செழிப்பைக் கைவிட்டு, தன்னுடையவையாகக்கூடிய உயர்ந்த பயன்களையும் கைவிட்டு, புத்தியற்ற ஒருத்தியைப் போலத் தன் பிள்ளைகளை விட்டுவிட்டு அடைதற்கரிதான காட்டுக்குள் இவள் ஏன் செல்ல வேண்டும்?(6) இவள் அரசுரிமையை அனுபவித்துக் கொண்டே, தவங்களைப் பயின்று, கொடைகளின் உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ இயன்றவளே.(7) ஓ! காந்தாரி, என்னுடைய மருமகளான இவளுடைய {குந்தியினுடைய} தொண்டில் நான் மிகவும் நிறைவடைந்திருக்கிறேன். கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான உனக்கு அவளைத் திரும்பிச் செல்லுமாறு ஆணையிடுவதே தகும்” என்றான்.(8)

இவ்வாறு தன் தலைவனால் சொல்லப்பட்ட சுபலனின் மகள் {காந்தாரி}, ஆழ்ந்த பொருளுள்ள தன் சொற்களையும் சேர்த்து முதிர்ந்த மன்னனின் அந்தச் சொற்கள் அனைத்தையும் குந்தியிடம் மீண்டும் சொன்னாள்.(9) எனினும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவளும், கற்புடைய பெண்ணுமான குந்தி காட்டைத் தன் வசிப்பிடமாகக் கொள்வதில் உறுதியாகத் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருந்ததால் அவளைத் தடுப்பதில் அவள் தவறினாள்.(10) காட்டுக்கு ஓய்ந்து செல்வதில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருந்த அவளைப் புரிந்து கொண்ட குரு பெண்மணிகள், குரு குலத்தின் முதன்மையானவர்கள் (தங்கள் கணவர்கள்) அவளைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்திவிட்டதைக் கண்டு, உரக்க ஓலமிட்டு அழுதனர்.(11) பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும், பெண்மணிகள் அனைவரும் தங்கள் சுவடுகளைப் பின்பற்றிச் சென்ற பிறகும் பெரும் ஞானம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் காடுகளை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.(12)

பெரிதும் உற்சாகமற்றிருந்த பாண்டவர்கள், துயரிலும், கவலையிலும் பீடிக்கப்பட்டவர்களாகத் தங்கள் மனைவியருடன் தங்கள் தேர்களில் நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(13) முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட மொத்த மக்களுடன் கூடிய ஹஸ்தினாபுர நகரம் அந்நேரத்தில் உற்சாகமற்றதாகவும், கவலையில் மூழ்கியதாகவும் இருந்தது.(14) துயரால் பீடிக்கப்பட்டிருந்த பாண்டவர்கள் சக்தியேதுமற்றவர்களாக இருந்தனர். குந்தியால் கைவிடப்பட்ட அவர்கள் தாயற்ற கன்றுகளைப் போல ஆழ்ந்த துயரில் பீடிக்கப்பட்டிருந்தனர்.(15)

அதே நாளில் திருதராஷ்டிரன் அந்நகரத்தில் இருந்து அகன்று ஓரிடத்தை அடைந்தான். பலமிக்கவனான அந்த ஏகாதிபதி இறுதியாகப் பாகீரதி ஆற்றின் கரையை அடைந்து இரவில் அங்கேயே ஓய்ந்திருந்தான்.(16) வேதங்களை அறிந்த பிராமணர்கள், அந்தத் தவசிகளின் ஆசிரமத்தில் புனித நெருப்புகளை மூட்டினர். அந்த முதன்மையான பிராமணர்களால் சூழப்பட்டிருந்த அந்தப் புனித நெருப்புகள் அழகில் சுடர்விட்டெரிந்தன. அந்த முதிய மன்னனின் {திருதராஷ்டிரனின்} புனித நெருப்பும் மூட்டப்பட்டது.(17) தன்னுடைய நெருப்பின் அருகில் அமர்ந்த அவன், உரிய சடங்குகளின் படி அதில் ஆகுதிகளை ஊற்றி, ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் மறையும் வேளையில் அவனை வழிபட்டான்.(18)

விதுரனும், சஞ்சயனும் குசப்புற்கள் சிலவற்றைப் பரப்பி மன்னனுக்குப் படுக்கையை அமைத்தனர். அந்தக் குரு வீரனின் படுக்கைக்கு அருகிலேயே காந்தாரிக்கும் மற்றொன்றை அமைத்தனர்.(19) சிறந்த நோன்புகளை நோற்பவளும், யுதிஷ்டிரனின் தாயுமான குந்தி, காந்தாரிக்கு மிக அருகிலேயே மகிழ்ச்சியாகப் படுத்துக் கொண்டாள்.(20) கேட்கும் தொலைவில் விதுரனும், பிறரும் உறங்கினர். யாஜக பிராமணர்களும், மன்னனைப் பின்தொடர்ந்து வந்த பிறரும், தங்கள் தங்களுக்குரிய படுக்கைகளில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(21)

அங்கே இருந்த முதன்மையான பிராமணர்கள் பலர் புனித மந்திரங்களை உரக்கச் சொன்னார்கள். வேள்வி நெருப்புகள் சுற்றிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. எனவே, அந்த இரவு பிராம்மீ இரவைப் போல அவர்களுக்கு இனிமையாகத் தெரிந்தது[2].(22) அந்த இரவு கடந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் படுக்கைகளில் இருந்து எழுந்து, தங்களுக்குரிய காலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதன் பிறகு புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.(23) குரு நாட்டின் மாகாணங்களிலும், நகரங்களிலும் வசிப்பவர்களால் வருத்தமடைந்தவர்களும், துக்கமடைந்த இதயங்களைக் கொண்டவர்களுமான அவர்களுக்கு, காட்டில் முதல் நாள் அனுபவம் துன்பம் நிறைந்ததாக இருந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(24)

சதயூபாஸ்ரமம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 19-திருதராஷ்டிரனும், விதுரனும் குருக்ஷேத்திரம் சென்று சதயூபனுடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றது; வியாசரின் முன்னிலையில் வானப்ரஸ்தாஸ்மரத்திற்கு தீக்ஷை பெற்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விதுரனின் ஆலோசனையைப் பின்பற்றி மன்னன் {திருதராஷ்டிரன்}, புனிதமானதும், அறவோருக்காக ஒதுக்கப்பட்டதுமான பாகீரதியின் கரைகளில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(1) அங்கே காடுகளில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் பலரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைக் காண அங்கே வந்தனர்.(2) அவன் அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, தன் சொற்களின் மூலம் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான். சீடர்களுடன் கூடிய பிராமணர்களை முறையாக வழிபட்ட அவன், பிறகு அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினான்.(3)

மாலை வேளை வந்ததும், மன்னனும் {திருதராஷ்டிரனும்}, பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும், பாகீரதியின் ஓடைக்குள் இறங்கித் தங்களைத் தூய்மை செய்து கொள்வதற்கான சடங்குகளை முறையாகச் செய்தனர்.(4) ஓ! பாரதா, அரசன், அரசி, விதுரன் மற்றும் பிறரும் அந்தப் புனித ஓடையில் நீராடி வழக்கமான தங்கள் அறச்சடங்குகளைச் செய்தனர்.(5) மன்னன் நீராடலின் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்ட பிறகு, குந்திபோஜனின் மகள் {குந்தி}, தன் மாமனாரான அவனுக்கு வழிகாட்டியவாறே, அவனையும், காந்தாரியையும் நீரிலிருந்து உலர்ந்த கரைக்கு இட்டுச் சென்றாள்.(6)

யாஜகர்கள் அங்கே மன்னனுக்காக ஒரு வேள்விப்பீடத்தை அமைத்திருந்தனர். வாய்மைக்கு அர்ப்பணித்திருந்த பின்னவன் {திருதராஷ்டிரன்}, அப்போது நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான்.(7) அந்த முதிர்ந்த மன்னன் பாகீரதியின் கரையில் இருந்து தன் தொண்டர்களுடன் சேர்ந்து நோன்புகளை நோற்றபடியே, கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி முன்னேறினான்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, பெரும் ஞானியும், அரச முனியுமான சதயூபனின் ஆசிரமத்தை அடைந்து, அவனுடன் உரையாடினான்.(9)

ஓ! பகைவரை எரிப்பவனே, சதயூபன் கேகயர்களின் பெரும் மன்னனாக இருந்தவனாவான். அவன் தன் நாட்டின் அரசுரிமையைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டுக் காட்டுக்கு வந்திருந்தான்.(10) அந்தச் சதயூபன், மன்னன் திருதராஷ்டிரனை உரிய சடங்குகளுடன் வரவேற்றான். அவனுடன் {சதயூபனுடன்} சேர்ந்து பின்னவன் {திருதராஷ்டிரன்} வியாசரின் ஆசிரமத்திற்குச் சென்றான்.(11) வியாசரின் ஆசிரமத்தை அடைந்த அவன், காட்டு வாழ்வுமுறைக்கான {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்கான} தொடக்கத்தை {தீக்ஷையைப்} பெற்றான். அங்கிருந்து திரும்பிய அவன் சதயூபனின் ஆசிரமத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(12)

உயர் ஆன்ம சதயூபன், வியாசரின் ஆணையின் பேரில் திருதராஷ்டிரனுக்கு காட்டு வாழ்வுமுறையின் சடங்குகள் அனைத்தையும் கற்பித்தான்.(13) இவ்வாறு உயர் ஆன்ம திருதராஷ்டிரன் தவப் பயிற்சியில் தன்னை நிறுவிக் கொண்டு, தன் தொண்டர்கள் {தன்னைப் பின்பற்றியவர்கள்} அனைவரையும் அதே ஒழுக்கத்தைப் பின்பற்றச் செய்தான்.(14) ஓ! ஏகாதிபதி, குந்தியுடன் கூடிய ராணி காந்தாரியும், மரவுரியையும், மான்தோலையும் அடையாகக் கொண்டு, தன் தலைவன் நோற்கும் அதே நோன்புகளையே தானும் நோற்றாள்.(15)

அவர்கள் எண்ணம், சொற்கள், செயல்கள் மற்றும் கண்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினர்[1].(16) மனத்தில் குழப்பமேதுமற்றவனான மன்னன் திருதராஷ்டிரன், ஒரு பெரும் முனிவனைப் போலத் தலையில் சடாமுடி தரித்து, மேனியில் மரவுரியும், தோலும் தரித்து, நோன்புகளையும், தவங்களையும் பயிலத் தொடங்கி, தசையை வற்றச் செய்து எலும்பும் தோலுமாகத் தன் உடலைச் சுருக்கினான்.(17) அறத்திற்கான உண்மை விளக்கங்களை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான விதுரனும், சஞ்சயனும், அந்த முதிர்ந்த மன்னனுக்கும், அவனுடைய மனைவிக்கும் காத்திருந்தனர் {பணி செய்தனர்}. ஆன்மக்கட்டுப்பாடுடையவர்களான விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகிய இருவரும் மரவுரியையும், கந்தலையும் உடுத்தித் தங்களைச் சுருக்கிக் கொண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18)

குபேரலோகம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 20-திருதராஷ்டிரனைக் காண வந்த நாரதர்; அந்த வனம் ராஜரிஷிகளுக்கு ஸ்வர்க்கம் தந்ததையும், அவர்களுக்கும் அது ஸித்தியைத் தரும் என்பதையும், திருதராஷ்டிரன் அடையப்போகும் கதியையும் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தவசிகளில் முதன்மையான நாரதர், பர்வதர் மற்றும் கடுந்தவங்களைக் கொண்ட தேவலர் ஆகியோர் மன்னன் திருதராஷ்டிரனைக் காண அங்கே வந்தனர்.(1) சீடர்களுடன் கூடியவரும், தீவில் பிறந்தவருமான வியாசரும், பெரும் ஞானம் கொண்டவர்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான பிறரும், முதிர்ந்த வயதையும், பெரும் புண்ணியங்களையும் கொண்ட அரச முனி சதயூபனும் அங்கே வந்தனர்.(2) ஓ! மன்னா, குந்தி அவர்களை உரிய சடங்குகளுடன் வழிபட்டாள். அந்தத் தவசிகள் அனைவரும் தங்களுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டில் பெரும் நிறைவை அடைந்தனர்.(3) அந்தப் பெரும் முனிவர்கள், உயர் ஆன்மா கொண்ட திருதராஷ்டிரனிடம் அறம் மற்றும் நீதி குறித்து உரையாடி அவனை மகிழ்வித்தனர்.(4) அவர்களுடைய உரையாடலின் முடிவில் தெய்வீக முனிவரான நாரதர், அனைத்துப் பொருட்களையும் நேரடியாகக் கண்களில் கண்டு, பின்வரும் சொற்களைச் சொன்னார்.(5)

நாரதர், “பெருஞ்செழிப்பைக் கொண்டவனும், முற்றிலும் அச்சமற்றவனுமாகக் கேகயர்களில் ஓர் ஆட்சியாளன் இருந்தான். இந்தச் சதயூபனின் பாட்டனான அவனது பெயர் சஹஸ்ரசித்யன் என்பதாகும்.(6) அந்தச் சஹஸ்ரசித்யன் பேரளவு அறம் கொண்ட தன் மூத்த மகனிடம் தன் நாட்டை ஒப்படைத்துவிட்டு, காட்டிற்கு ஓய்ந்து சென்றான்.(7) பெருங்காந்தியைக் கொண்ட அந்தப் பூமியின் தலைவன் {சஹஸ்ரசித்யன்} சுடர்மிக்கத் தவத்தின் எல்லையைக் கடந்து புரந்தலோகத்தை அடைந்து அங்கே அவனுடைய {புரந்தரனின்} தோழமையில் தொடர்ந்து வாழ்ந்தான்.(8) ஓ! மன்னா, இந்திரலோகத்திற்கு நான் சென்ற பல சந்தர்ப்பங்களில், தவங்களின் மூலம் பாவங்களனைத்தையும் எரித்து இந்திரனின் வசிப்பிடத்தில் வசித்துக் கொண்டிருக்கும் அந்த ஏகாதிபதியை {சஹஸ்ரசித்யனைக்} கண்டிருக்கிறேன்.(9)

அதே போலவே, பகதத்தனின் பாட்டனான மன்னன் சைலாலயனும் தன் தவங்களின் சக்தியை மட்டுமே கொண்டு இந்திரலோகத்தை அடைந்திருக்கிறான்.(10) ஓ! ஏகாதிபதி, அங்கே வஜ்ரதாரிக்கே ஒப்பானவனும், பிருஷத்ரன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அந்த மன்னனும் தன் தவங்களின் மூலம் பூமியில் இருந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(11) ஓ! மன்னா, இதே காட்டில், பூமியின் தலைவனும், மாந்தாத்ரியின் {மாந்தாதாவின்} மகனுமான புருகுத்ஸன் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12) ஆறுகளில் முதன்மையான நர்மதை இம்மன்னனின் மனைவியானாள். பூமியின் ஆட்சியாளனான அவன், இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து, சொர்க்கத்திற்குச் சென்றான்.(13) உயர்ந்த அறவோனும், சசலோமன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அவனும் இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(14)

ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டிற்கு வந்திருக்கும் நீயும், தீவில் பிறந்தவரின் {வியாசரின்} அருளால், உயர்ந்ததும், அடைதற்கரிதானதுமான ஓர் இலக்கை அடைவாயாக.(15) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, காந்தாரியின் துணையுடன் கூடிய நீயும் உன் தவங்களின் முடிவில், பெருஞ்செழிப்பை அடைந்து, அந்த உயர் ஆன்மாக்கள் அடைந்த இலக்கை அடைவாயாக.(16) பகனைக் கொன்றவனின் முன்னிலையில் வசிக்கும் பாண்டு எப்போதும் உன்னைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஓ! ஏகாதிபதி, நீ செழிப்பை அடைவதற்கு அவன் நிச்சயம் உனக்குத் துணை புரிவான்.(17) பெரும் புகழைக் கொண்டவளும், உன் மருமகளுமான இவள் {குந்தி}, உனக்கும், காந்தாரிக்கும் தொண்டு செய்வதன் மூலம் மறுமையில் தன் கணவனுடன் வசிக்கும் இடத்தை அடைவாள்.(18) இவள் நித்திய தர்மமான யுதிஷ்டிரனின் தாயாவாள். ஓ! மன்னா, இவை யாவற்றையும் நாங்கள் எங்கள் ஆன்மப் பார்வையில் கண்டோம்.(19) விதுரன் உயர் ஆன்ம யுதிஷ்டிரனுக்குள் நுழைவான். சஞ்சயனும் தியானத்தின் மூலம் இந்த உலகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்வான்” என்றார் {நாரதர்}”.(20)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மா கொண்டவனும், கல்வி கற்றவனுமான அந்தக் குருகுலத் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மனைவியுடன் சேர்ந்து நாரதரின் சொற்களைக் கேட்டு, அவற்றைப் புகழ்ந்து, இதற்கு முன் இல்லாத கௌரவங்களால் நாரதரை வழிபட்டான்.(21) ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பிராமணர்களின் கூட்டம் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து மன்னன் திருதராஷ்டிரனை மகிழ்வடையச் செய்ய விரும்பி அளவிடற்கரிய வெகுமதிகளால் நாரதரை வழிபட்டனர்.(22) மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர்கள் நாரதரின் சொற்களையும் புகழ்ந்தனர்.

அப்போது அரசமுனியான சதயூபன் நாரதரிடம்,(23) “ஓ! பெரும் காந்தியைக் கொண்டவரே {நாரதரே}, புனிதமானவரான நீர் இந்தக் குரு மன்னன் மற்றும் இங்கிருக்கும் மக்கள் மற்றும் நான் என அனைவரின் பக்தியையும் அதிகரித்திருக்கிறீர்.(24) எனினும், நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் கேட்கிறேன் நீர் சொல்வீராக. ஓ! தெய்வீக முனிவரே, அஃது உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படும் மன்னன் திருதராஷ்டிரன் தொடர்புடையது.(25) நீர் அனைத்துக் காரியங்களின் உண்மையையும் அறிந்தவராவீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, தெய்வீகப் பார்வையுடன் நீர் மனிதர்கள் அடையும் பல்வேறு கதிகளைக் காண்கிறீர்.(26) நீர் சொன்னவர்களும், தேவர்களுடைய தலைவனின் தோழமையைக் கொண்டவர்களுமான மன்னர்களின் கதி என்னவென்பதை நீர் சொன்னீர். எனினும், ஓ! பெரும் முனிவரே, இந்த மன்னனால் எந்தந்தெந்த உலகங்கள் அடையப்படும் என்பதை நீர் சொல்லவில்லை.(27) ஓ! பலமிக்கவரே, அரசன் திருதராஷ்டிரனால் எந்த உலகம் அடையப்படும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான் சதயூபன்.(28)

அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், தெய்வீகப் பார்வையையும், கடுந்தவங்களையும் கொண்ட நாரதர், அந்தச் சபைக்கு மத்தியில் அனைவரின் மனங்களுக்கும் உயர்வானவையும், ஏற்புடையவையுமான இந்தச் சொற்களைச் சொன்னார்.(29) நாரதர், “நான் என் விருப்பத்தின் பேரில் சக்ரனின் மாளிகைக்குச் சென்று, ஓ! அரசமுனியே, அங்கே சச்சியின் தலைவனான சக்ரனைக் கண்டேன், மேலும் அங்கே நான் மன்னன் பாண்டுவையும் கண்டேன்.(30) ஓ! ஏகாதிபதி, இந்தத் திருதராஷ்டிரனையும், இவன் செய்து வரும் கடுந்தவங்களையும் குறித்த பேச்சு அங்கே எழுந்தது.(31) அங்கே சக்ரனின் உதடுகளின் மூலமே நான் இந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஒதுக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் காலம் இன்னும் மூன்று வருடங்கள் என்பதைக் கேட்டறிந்தேன்.(32) அதன் பிறகு, மன்னன் திருதராஷ்டிரன், தன் மனைவி காந்தாரியின் துணையுடன் குபேரலோகத்திற்குச் சென்று அங்கே அந்த மன்னர்களின் மன்னனால் {குபேரனால்} உயர்வாகக் கௌரவிக்கப்படுவான். இவன் தன் மேனியெங்கும் தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு தன் விருப்பத்தின் பேரில் நகரும் தேரில் அங்கே செல்வான்.(33) இவன் ஒரு முனிவரின் மகனாவான்; இவன் உயர்வான அருளைக் கொண்டவனாவான்; இவன் தன் தவங்களின் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்திருக்கிறான். அற ஆன்மா கொண்ட இவன் தான் விரும்பியவாறு தேவ, கந்தர்வ, ராட்சச உலகங்களில் திரிந்து வருவான். நீ எதைக் குறித்துக் கேட்டாயோ அது தேவர்களிடம் உள்ள ஒரு புதிராகும் {ரகசியமாகும்}. உங்களிடம் கொண்ட அன்பினால் நான் இந்த உயர்ந்த உண்மையை {உங்களுக்கு} அறிவித்தேன்.(34,35) நீங்கள் அனைவரும் ஸ்ருதிகளைச் செல்வமாகக் கொண்டவர்களாகவும், தவங்களின் மூலம் உங்கள் பாவங்கள் அனைத்தையும் எரித்தவர்களாகவும் இருக்கிறீர்கள்” என்றார் {நாரதர்}”.(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அங்கே கூடியிருந்த அனைவரும், மன்னன் திருதராஷ்டிரனும், அந்தத் தெய்வீக முனிவரின் இந்த இனிய சொற்களைக் கேட்டு, பெரிதும் உற்சாகமடைந்தவர்களாகவும், உயர்ந்த நிறைவை அடைந்தவர்களாகவும் இருந்தனர்.(37) பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரனை இத்தகைய பேச்சின் மூலம் உற்சாகமடையச் செய்த அவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டோருக்கு உரிய பாதையின் வழியே அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

பாண்டவர்கள் துயரம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 21-குந்தியின் பிரிவினாலும், அபிமன்யுவின் மரணத்தினால் உண்டான துக்கத்தினாலும் பாண்டவர்கள் தங்கள் வேலைகளை நன்கு பாராமலிருந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்} காட்டுக்குள் ஓய்ந்து சென்ற பிறகு, பாண்டவர்கள் தங்கள் தாயின் {குந்தியின்} நிமித்தம் துன்பத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் உற்சாகமற்றவர்களானார்கள்.(1) ஹஸ்தினாபுரக் குடிமக்களும் ஆழ்ந்த கவலையில் இருந்தனர். பிராமணர்கள் எப்போதும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} குறித்துப் பேசினர்.(2)

{அவர்கள்}, “முதிர் வயதினனான மன்னன் {திருதராஷ்டிரன்}, {ஆளரவமற்ற} தனிமையான காட்டுக்குள் எவ்வாறு வாழ்வான்? உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியும், குந்திபோஜனின் மகளான பிருதையும் {குந்தியும்} அங்கே எவ்வாறு வாழ்வார்கள்?(3) அந்த அரசமுனி {திருதராஷ்டிரன்} எப்போதும் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவன். அவனுடைய நிலை நிச்சயம் பரிதாபகரமானது. காட்டுக்குள் சென்றவனும், பார்வையற்றவனுமான அந்த அரசகுல வழித்தோன்றலின் இப்போதைய நிலையென்ன?(4) மகன்களிடம் இருந்து பிரிந்ததன் மூலம் குந்தி செய்யற்கரிதான அருஞ்செயலைச் செய்திருக்கிறாள். ஐயோ, அவள் அரச செழிப்பைக் கைவிட்டு காட்டு வாழ்வைத் தேர்ந்தெடுத்தாளே.(5) மேலும், தன் அண்ணனுக்குத் தொண்டு செய்வதில் எப்போதும் அரப்பணிப்புள்ள விதுரனின் நிலையென்ன? தன் தலைவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட உணவுக்கு நன்றியுணர்வுமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனுமான கவல்கணன் மகன் {சஞ்சயன்} எவ்வாறு இருக்கிறான்?” {என்று பேசிக் கொண்டனர்}.(6) உண்மையில், உரிய வயதை எட்டாதவர்கள் உள்ளிட்ட குடிமக்களும், ஒருவரையொருவர் சந்திக்கும்போது இதே கேள்விகளையே கேட்டுக் கொண்டனர்.(7)

துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களான பாண்டவர்களும், தங்கள் முதிய தாய்க்காக வருந்தி தங்கள் நகரத்தில் வாழ இயலாதவர்களாக இருந்தனர்.(8) முதிய தந்தையும், தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தவனுமான மன்னனையும், உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட விதுரனையும் நினைத்துக் கொண்டிருந்த அவர்கள் மன அமைதியை அனுபவிக்கத் தவறினார்கள்.(9) அரசுரிமையிலோ, பெண்களிலோ, வேத கல்வியிலோ அவர்களுக்கு இன்பமேதும் இருக்கவில்லை.(10) ஆன்மாவைத் துளைத்த துன்பத்தோடு அவர்கள் முதிய மன்னனையும், தங்கள் உற்றார் உறவினரின் பயங்கரப் படுகொலைகளையும் நினைத்தனர்.(11) உண்மையில் இளைஞனான அபிமன்யு, போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான கர்ணன், திரௌபதியின் மகன்கள், மற்றும் பிற நண்பர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து நினைத்த அந்த வீரர்கள் பெரிதும் உற்சாகத்தை இழந்தனர்.(12,13)

பூமியானவள், தன் வீரர்கள் மற்றும் செல்வம் ஆகிய இரண்டையும் இழந்தால் என்பதை மீண்டும் மீண்டும் நினைத்த அவர்கள் மனத்தில் அமைதியை அடைய தவறினார்கள்.(14) திரௌபதி தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தாள், அழகிய சுபத்திரையும் பிள்ளைகளற்றவளாக இருந்தாள். அவர்களும் உற்சாகமற்ற இதயங்களுடனும், பெரிய துன்பத்துடனும் இருந்தனர்.(15) எனினும், விராடன் மகளின் {உத்தரையின்} மகனான உமது தந்தை பரிக்ஷித்தைக் கண்ட உமது பாட்டன்கள் ஏதோ ஒருவாறு தங்கள் உயிர்மூச்சுகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(16)

சகாதேவன் புலம்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22-குந்தியைக் காண்பதற்காகப் புலம்பிய சகாதேவன் மற்றும் திரௌபதி; திருதராஷ்டிரன் முதலியோரைக் காண தம்பிமாருடனும், நகரமக்களுடனும் காட்டுக்குச் சென்ற யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மனிதர்களில் முதன்மையானவர்களும், தங்கள் தாயை மகிழ்ச்சியடையச் செய்பவர்களுமான வீரப் பாண்டவர்கள் துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தனர்.(1) முன்பு எப்போதும் அரச அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள், அந்நேரத்தில் தங்கள் தலைநகரத்தில் எந்தச் செயல்களையும் கவனிக்காமல் இருந்தனர்.(2) துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள், எதனிலிருந்தும் இன்பத்தை ஈட்டத் தவறினார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் கேட்டாலும் எந்தப் பதிலையும் அவர்கள் சொல்லவில்லை.(3) தடுக்கப்பட முடியாதவர்களான அந்த வீரர்கள் பெருங்கடலைப் போன்ற ஆழமான ஈர்ப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், துன்பத்தால் தாங்கள் தங்கள் ஞானத்தையும், புலன் உணர்வுகளையும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.(4)

பாண்டுவின் மகன்கள், தங்கள் தாய் அந்த முதிர்ந்த தம்பதியருக்குத் தொண்டாற்றி எவ்வளவு மெலிந்திருப்பாள் என்பதை நினைத்துக் கவலையில் நிறைந்தார்கள்.(5) {அவர்கள்}, “உண்மையில், மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவரும், எந்தப் புகலிடமும் இல்லாதவருமான அந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, இரைதேடும் விலங்குகள் நடமாடும் காட்டுக்குள், தமது மனைவியுடன் மட்டும் எவ்வாறு தனியாக வாழ்கிறார்?(6) ஐயோ, உயர்வாக அருளப்பட்டவளும், தன் அன்புக்குரிய அனைவரும் கொல்லப்பட்டவளுமான ராணி காந்தாரி அந்தத் தனிமையான காட்டில் எவ்வாறு தன் குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்வாள்?” {என்று கேட்டனர்}.(7) பாண்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வெளிப்பட்ட கவலைகள் இவ்வாறே இருந்தன. பிறகு அவர்கள், மன்னனை {திருதராஷ்டிரனை} அவனுடைய காட்டு ஆசிரமத்தில் காண்பதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்.(8)

அப்போது, சகாதேவன் மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, “நம் தந்தையை {பெரியப்பாவான திருதராஷ்டிரரைக்} காண்பதில் உமது இதயம் நிலைத்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.(9) எனினும், நான் உம்மீது கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாக, நாம் காட்டுக்குப் புறப்படும் காரியத்தில் என்னால் விரைவாக வாயைத் திறக்க முடியவில்லை. அந்தப் பயணத்திற்கான காலம் இப்போது வந்துவிட்டது.(10) குச {தர்ப்பை} மற்றும் காச {நாணல்} புற்களில் உறங்கி மெலிந்தவளும், கடுந்தவங்களைப் பயில்பவளும், தலையில் சடாமுடி தரித்தவளும், தவங்களை நோற்று வாழ்பவளுமான குந்தியை நற்பேற்றினால் நான் காணப் போகிறேன்.(11) அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் வளர்க்கப்பட்ட அவள், அனைத்து வகை வசதிகள் மற்றும் ஆடம்பரத்துடன் பராமரிக்கப்பட்டவளாவாள். ஐயோ, களைத்தவளும், பெரும் துயரில் மூழ்கியவளுமான என் அன்னையை நான் எப்போது காணப் போகிறேன்?(12) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, பிறப்பால் இளவரசியான குந்தி, இப்போது காட்டில் துன்பத்தில் வாழ்ந்து வருவதால், மனிதர்களில் கதி பெரிதும் நிலையற்றதென்பதில் ஐயமில்லை” என்றான் {சகாதேவன்}.(13)

சகாதேவனின் இந்தச் சொற்களைக் கேட்டவளும், பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளுமான ராணி திரௌபதி, உரிய முறையில் மன்னனை வணங்கி மதித்து,(14) “ஐயோ, ராணி பிருதையை {குந்தியை} நான் எப்போது காணப் போகிறேன்? உண்மையில், அவள் இன்னும் உயிரோடு இருப்பாளா? ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இன்னும் ஒருமுறை அவளைக் காண்பதில் நான் வென்றால் என் வாழ்வு வீணாகக் கழிக்கப்படவில்லை என்று நான் கருதிக் கொள்வேன்.(15) இந்த வகையிலான புத்தி எப்போதும் உம்மில் நிலைத்திருக்கட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, எங்களுக்கு உயர்ந்த வரத்தை அளிக்க விரும்பும் இத்தகைய அறம் செய்வதில் உம்முடைய மனம் எப்போதும் இன்புறட்டும்.(16) ஓ! மன்னா, உமது இல்லத்துப் பெண்மணிகளான இவர்கள் அனைவரும், குந்தி, காந்தாரி மற்றும் என் மாமனாரை {திருதராஷ்டிரரைக்} காண விரும்பி செல்லும் பயணத்திற்காகத் தங்கள் பாதங்களை உயர்த்திக் காத்திருக்கின்றனர் என்று அறிவீராக” என்றாள்.(17)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, “ராணியான திரௌபதியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {யுதிஷ்சிரன்}, தன் படைத்தலைவர்கள் அனைவரையும் தன் முன்னிலைக்கு அழைத்து அவர்களிடம்,(18) “தேர்களும், யானைகளும் நிறைந்த என் படையை அணிவகுக்கச் செய்யுங்கள். இப்போது காட்டில் வாழ்ந்துவரும் மன்னர் திருதராஷ்டிரரை நான் காணப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(19)

மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பெண்களின் காரியங்களைக் கண்காணிப்போரிடம் {அந்தப்புரக் காவலர்களிடம்}, “பல்வேறு வகை வாகனங்களும், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்னுடைய பல்லக்குகளும் ஆயதம் செய்யப்படட்டும்.(20) வண்டிகள், பொருள் களஞ்சியங்கள், உடையலமாரிகள், கருவூலங்கள் ஆகியவையும், கைவினைசர்களும் ஆயத்தமாகி, வெளியே வரட்டும், கைவினைஞர்களும் வெளியே வரட்டும். கருவூல அதிகாரிகள், குருக்ஷேத்திரத்தில் உள்ள தவசியின் {சதயூபனின்} ஆசிரமத்திற்குச் செல்லும் பாதையில் செல்லட்டும்.(21) குடிமக்களில் மன்னனைக் காண விரும்பும் எவரும் எத்தடையும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள். அவன் {அத்தகையவன்} முறையான பாதுகாப்புடன் செல்லட்டும்.(22) சமையற்காரர்கள், சமையலறை கண்காணிப்பாளர்கள் {பௌரோகவர்கள்} ஆகியோரும், சமையலுக்கான மொத்த அமைப்பு, பல்வேறு வகை உணவு மற்றும் பான வகைகள் ஆகியவையும் வண்டிகள் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்லப்படட்டும்.(23) நாம் நாளை புறப்படுகிறோம் என்பது அறிவிக்கப்படட்டும். உண்மையில், (இந்த ஏற்பாடுகளைச் செய்வதில்) காலதாமதமேதும் நேரவேண்டாம். வழியில் பல்வேறு வகை அரங்குகளும், ஓய்வில்லங்களும் அமைக்கப்படட்டும்” என்று ஆணையிட்டான் {யுதிஷ்டிரன்}.(24)

தம்பிகளுடன் கூடியவனான பாண்டுவின் மூத்த மகன் இட்ட ஆணைகள் இவையே. ஓ! ஏகாதிபதி, காலை வந்ததும், மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்கிய பெரிய பரிவாரத்துடன் புறப்பட்டான்.(25) தன் நகரைவிட்டு வெளியே வந்த மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்கள் தன்னோடு வருவதற்கு ஏதுவாக ஐந்து நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு காட்டை நோக்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

யுயுத்சுவின் பாதுகாப்பில் ஹஸ்தினாபுரம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 23-ஹஸ்தினாபுரத்தைப் பாதுகாக்க யுயுத்சுவும், தௌமியரும்; திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றும் விதுரனைக் காணப் புறப்பட்ட பாண்டவக்கூட்டம் சென்ற வகை; காட்டுக்குள் நுழைந்து சதயூபனின் ஆசிரமத்தைத் தொலைவிலேயே அவர்கள் கண்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனன் தலைமையிலானவர்களும், அண்டத்தைக் காப்பவர்களுக்கு {லோகபாலர்களுக்கு} ஒப்பானவர்களுமான வீரர்களால் பாதுகாக்கப்பட்டவையுமான தன் துருப்புகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான்.(1) உடனடியாக, குதிரைகளை ஆயத்தம் செய்து அணிவகுக்கச் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குதிரை வீரர்களுக்கு மத்தியில், “ஆயத்தமாவீர், ஆயத்தமாவீர்” என்ற சொற்கள் அடங்கிய பேராரவாரம் எழுந்தது.(2) சிலர் பல்லக்குகளிலும் {யானங்களிலும்}, சிலர் வாகனங்களிலும், சிலர் பெருவேகம் கொண்ட குதிரைகளிலும், சிலர் சுடர்மிக்க நெருப்பின் காந்தியுடன் கூடியவையும் தங்கத்தாலமைந்தவையுமான தேர்களிலும் சென்றனர்.(3) சிலர் பெரும் யானைகளிலும், ஓ! மன்னா, சிலர் ஒட்டகங்களிலும் சென்றனர். சிலர் புலிநகங்களோடு கூடிய போராளி வகையினுக்குரிய முறையில் கால்நடையாகவே சென்றனர்[1].(4)திருதராஷ்டிரனைக் காண விரும்பிய குடிமக்கள், மாகாணவாசிகள் ஆகியோர் பல்வேறு வகை வண்டிவாகனங்களில் மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(5) கோதம {கௌதமர்} குலத்தைச் சார்ந்தவரும், படைகளின் பெருந்தலைவரும், ஆசானுமான கிருபரும், மன்னனின் ஆணையின் பேரில் படைகளை அழைத்துக் கொண்டு அந்த முதிய ஏகாதிபதியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்.(6) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் சூழ, சூதர்கள், மாகாதர்கள் மற்றும் வந்திகளின் பெருங்கூட்டம் அவனுடைய புகழைப் பாடிக் கொண்டுவர, தலைக்கு மேல் வெண்குடையுடனும், தன்னைச் சுற்றிலும் பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடனும் பயணம் புறப்பட்டான்.(7,8)

காற்று தேவனின் மகனான விருகோதரன் {பீமன்}, நாண்பூட்டப்பட்ட வில்லுடனும், இயந்திரங்களுடனும், தாக்குதல் மற்றும் தடுத்தலுக்குரிய ஆயுதங்களுடனும் மலைபோன்ற ஒரு பெரிய யானையில் சென்று கொண்டிருந்தான்.(9) மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல சகாதேவன்}, கவசம்பூண்டு, நன்கு பாதுகாக்கப்பட்டவர்களாகவும், பதாகைகள் தரித்தவர்களாகவும் வேகமாகச் செல்லும் இரு குதிரைகளில் சென்றனர்.(10) வலிமையும், சக்தியும் கொண்டவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவனுமான அர்ஜுனன், சிறந்த வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், சூரியப் பிரகாசத்துடன் கூடியதுமான ஒரு சிறந்த தேரில் சென்றான்.(11) திரௌபதியின் தலைமையிலான அரச குடும்பத்துப் பெண்கள், பெண்களைக் கண்காணிப்பவர்களால் பாதுகாக்கப்பட்டவர்களாக, மூடப்பட்ட பல்லக்குகளில் சென்றனர். அவ்வாறு அவர்கள் சென்ற போது அபரிமிதமான செல்வமாரியைப் பொழிந்தனர்.(12)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், எக்காள முழக்கம் மற்றும் வீணைகளின் இசையை எதிரொலித்ததுமான அந்தப் பாண்டவக் கூட்டம் பேரழகுடன் சுடர்விட்டது.(13) ஓ! ஏகாதிபதி, அந்தக் குருகுலத் தலைவர்கள், இனிமைமிக்க ஆறுகள் மற்றும் தடாகங்களின் கரைகளில் ஓய்ந்திருந்து, மெதுவாகச் சென்றனர்.(14) வலிமையும், சக்தியும் கொண்ட யுயுத்சுவும், புரோகிதரான தௌமியரும், யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் நகரத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.(15)

மெதுவாக அணிவகுத்துச் சென்ற மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரத்தை அடைந்த பிறகு, உயர்ந்ததும், புனிதமானதுமான யமுனையாற்றைக் கடந்து,(16) ஓ! குரு குலத்தோனே, பெரும் ஞானம் கொண்ட அரச முனி {சதயூபன்} மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோருடைய ஆசிரமத்தைத் தொலைவிலிருந்தே கண்டான்.(17) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மகிழ்ச்சியில் நிறைந்த மனிதர்கள் அனைவரும், தங்கள் மகிழ்வொலிகளால் காட்டை நிறைத்தபடியே அதனுள் விரைவாக நுழைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18)

அன்னையைக் கண்ட சகாதேவன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 24-சதயூபாஸ்ரமத்தை அடைந்த பாண்டவர்கள்; அங்கே திருதராஷ்டிரனைக் காணாமை; யமுனைக்குச் சென்றிருந்த அவர்களைக் கண்ட பாண்டவர்கள்; தாயைக் கண்டு அழுத சகாதேவன்; ஆசிரமம் திரும்பிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தொலைவிலேயே தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய பாண்டவர்கள், மன்னனின் ஆசிரமத்திற்குப் பணிவுடன் கால்நடையாக நடந்து சென்றார்கள்.(1) போராளிகள் அனைவரும், நாட்டின் குடிமக்கள் மற்றும் குரு தலைவர்களின் மனைவிமார் அனைவரும், கால்நடையாகவே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(2) பிறகு பாண்டவர்கள், மான்கூட்டங்கள் நிறைந்ததும், வாழைமரங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான திருதராஷ்டிரனின் புனித ஆசிரமத்தை அடைந்தனர்.(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் பலர், ஆவலால் நிறைந்தவர்களாக, அந்த ஆசிரமத்திற்கு வந்திருக்கும் பாண்டவர்களைக் காண அங்கே வந்தனர்.(4)

மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் கண்களில் கண்ணீருடன், அவர்களிடம், “குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரான என் பெரிய தந்தை {திருதராஷ்டிரர்} எங்கே?” என்று கேட்டான்.(5)ஓ! ஏகாதிபதி, அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காகவும், மலர்களும், நீரும் கொணர்வதற்காகவும் யமுனைக்குச் சென்றிருப்பதாக அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.(6) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பாதையின் வழியே நடந்து சென்ற பாண்டவர்கள் சற்றுத் தொலைவிலேயே அவர்கள் அனைவரையும் கண்டனர்.(7) தங்கள் தந்தையைச் சந்திக்க விரும்பிய அவர்கள் வேகமாக நடையுடன் நடந்து சென்றனர். அப்போது சகாதேவன், பிருதை {குந்தி} வந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(8) அவன், அவளது பாதத்தைத் தீண்டி உரக்க அழத் தொடங்கினான். கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீருடன் அவள் தன் அன்புக்குரிய பிள்ளையைக் கண்டாள்.(9) தன் மகனை எழச் செய்து, அவனைத் தன் கரங்களால் ஆரத்தழுவி கொண்ட அவள், காந்தாரியிடம் சகாதேவனின் வரவைச் சொன்னாள்.(10)

பிறகு, மன்னன் {யுதிஷ்டிரன்}, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் நகுலன் ஆகியோரையும் கண்ட பிருதை {குந்தி} அவர்களை நோக்கி வேகமாகச் செல்ல முயற்சித்தாள்.(11) பிள்ளைகளற்ற அந்த முதிர்ந்த தம்பதியருடன் நடந்து கொண்டிருந்த அவள் அவர்களைத் தன்னோடு இழுத்துச் சென்றாள். பாண்டவர்கள், அவளைக் கண்டதும் பூமியில் விழுந்தார்கள்.(12) பலமிக்கவனும், உயர் ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, அவர்களுடைய குரல்கள் மற்றும் தீண்டலின் மூலம் அவர்களை அடையாளம் கண்டு, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.(13) கண்ணீர் சிந்திய அந்த உயர் ஆன்ம இளவரசர்கள், அந்த முதிர்ந்த மன்னனையும் {திருதராஷ்டிரனையும்}, காந்தாரியையும் உரிய நடைமுறையின்படி அணுகினர்.(14) உண்மையில், தங்கள் புலன் உணர்வுகளை இழந்திருந்த பாண்டவர்கள், தங்கள் தாயின் மூலம் மீண்டும் ஆறுதலை அடைந்து, மன்னனும், பெரியன்னையும், தங்கள் தாயும் சுமந்துவந்த நீர் நிறைந்த குடங்களை வாங்கிக் கொண்டு தாங்களே சுமந்து சென்றனர்.(15)

மனிதர்களில் சிங்கங்களான அவர்களது பெண்களும், அரச குடும்பத்தின் பெண்கள் அனைவரும், நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் அனைவரும் அப்போது அந்த முதிர்ந்த மன்னனைக் கண்டனர்.(16) மன்னன் யுதிஷ்டிரன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக மன்னனுக்கு அடையாளங்காட்டி அவர்களது பெயர்களையும், குலங்களையும் மீண்டும் மீண்டும் சொன்ன பிறகு, தன் பெரிய தந்தையை மதிப்புடன் வழிபட்டான்.(17) அவர்கள் அனைவராலும் சூழப்பட்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, மகிழ்ச்சிக்கண்ணீரில் குளித்த கண்களுடன், மீண்டும் தான் யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரில் {ஹஸ்தினாபுரத்தில்} வசித்துக் கொண்டிருப்பதாகக் கருதினான்.(18) கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைமையிலான தன் மருமகள் அனைவராலும் மதிப்புடன் வணங்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காந்தாரியுடனும், குந்தியுடனும் சேர்ந்து இன்பத்தில் நிறைந்தான்.(19) பிறகு அவன், சித்தர்களாலும், சாரணர்களாலும் மெச்சப்பட்டதும், எண்ணற்ற நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் போல அவனைக் காணவிரும்பிய மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்ததுமான அந்தக் காட்டு ஆசிரமத்தை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

அடையாளங்காட்டிய சஞ்சயன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 25- யுதிஷ்டிரன் முதலியோரைக் காட்டி அவர்களுடைய பெயர்களையும் சொல்லி அவர்களைத் தவசிகளுக்கு அறிமுகம் செய்த சஞ்சயன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான தன் தம்பிகள் அனைவருடன் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்} தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்தில் அமர்ந்தான்.(1) அங்கே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களுமான தவசிகள் பலர் பரந்த மார்பைக் கொண்டவர்களும், குருகுலத் தலைவர்களுமான பாண்டவர்களைக் காணும் விருப்பத்தில் அவனைச் சுற்றி அமர்ந்தனர்.(2)

அவர்கள், “இவர்களில் யுதிஷ்டிரன் யார்? பீமனும், அர்ஜுனனும் யார் யார்? இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} யார்? பெரும்புகழைக் கொண்ட திரௌபதி யார்?” என்று கேட்டனர்.(3)

அப்போது சூதன் சஞ்சயன், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலாகப் பாண்டவர்கள், திரௌபதி, குரு குடும்பத்துப் பெண்கள் பிறர் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.(4)

சஞ்சயன், “பசும்பொன்னைப் போன்ற நல்ல நிறம் கொண்டவனும், முழுதும் வளர்ந்த ஒரு சிங்கத்தைப் போலத் தெரியும் உடலைக் கொண்டவனும், மீன் போன்ற நீண்ட மூக்கைக் கொண்டவனும், அகலமான பெரிய தாமிர நிறக் கண்களைக் கொண்டவனுமான இவனே குரு மன்னனாவான் {யுதிஷ்டிரனாவான்}.(5) மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடை கொண்டவனும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறம் கொண்டவனும், அகன்ற பெரிய உடல்வடிவம் கொண்டவனும், நீண்டு பருத்திருக்கும் கைகளைக் கொண்டவனுமான இவன் விருகோதரனாவான் {பீமனாவான்}. இவனை நன்றாகப் பாருங்கள்.(6) இவனுக்கு அருகில் அமர்ந்திருப்பவனும், கரிய நிறம் மற்றும் இளமை வடிவத்துடன் கூடியவனும், யானை மந்தையின் தலைவனுக்கு ஒப்பானவனும், சிங்கத்தைப் போன்ற உயர்ந்த தோள்களுடையவனும், விளையாடிக் கொண்டிருக்கும் யானையைப் போல நடப்பவனும், தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான இவன் அர்ஜுனன் என்று அழைக்கப்படும் வீரனாவான்.(7) குந்தியின் அருகில் அமர்ந்திருக்கும் முதன்மையான மனிதர்களான இவர்கள் இருவரும் விஷ்ணுவுக்கும், மஹேந்திரனுக்கும் ஒப்பான இரட்டையர்களாவர்.(8)தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவளும், வாழ்வின் நடு வயதை நெருங்கியவளாகத் தெரிபவளும், நீலோத்பலத்துக்கு {கருங்குவளை மலருக்கு} ஒப்பான நிறம் கொண்டவளும், சொர்க்கத்தின் தேவியைப் போலத் தெரிபவளுமான இந்தப் பெண்மணி, செழிப்பின் தேவியுடைய {லக்ஷ்மியின்} உடல்வடிவமாகத் திகழும் கிருஷ்ணை {திரௌபதி} ஆவாள்.(9) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவளுக்கு அருகில் அமர்ந்திருப்பவளும், பசும்பொன் நிறத்தவளும், வேறு பெண்களுக்கு மத்தியில் சந்திரக் கதிர்களின் உடல்வடிவமாகத் தெரிபவளுமான இவள் ஒப்பற்ற வீரனான சக்கரபாணியின் {கிருஷ்ணனின்} தங்கையாவாள் {சுபத்திரையாவாள்}.(10) பசும்பொன் நிறத்தில் இருக்கும் மற்றொருத்தி, பாம்புத் தலைவனின் மகளும், அர்ஜுனனின் மனைவியுமாவாள் {உலூபியாவாள்}. பசும்பொன், அல்லது மதுக {இலுப்பை} மலர்களின் நிறத்தைக் கொண்டிருக்கும் இவள்[1] இளவரசி சித்ராங்கதையாவாள்.(11)

நீலோத்பல மலர்க்கூட்டத்தின் நிறத்தைக் கொண்ட இவள், கிருஷ்ணனை எப்போதும் அறைகூவி அழைக்கும் வழக்கத்தைக் கொண்டவனும், படைத்தலைவனுமான ஏகாதிபதியின் {சல்லியன் / திருஷ்டத்யும்னன் / சிசுபாலனின்} தங்கையாவாள். இவள் விருகோதரனின் {பீமனின்} முதன்மையான மனைவியாவாள்[2].(12)சம்பக மலர்க்கூட்டத்தின் {சம்பக மலர்மாலையின் மஞ்சள்} நிறத்தைக் கொண்ட இவள் ஜராசந்தன் என்ற பெயரில் அறியப்பட்ட மகதமன்னனின் மகளாவாள். இவள் மத்ராவதியின் இளைய மகனுடைய {சகாதேவனின்} மனைவியாவாள்.(13)நீலோத்பல மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவளும், இதோ பூமியில் அமர்ந்திருப்பவளும், தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட வழிகளைக் கொண்டவளுமான இவள் மத்ராவதியின் மூத்த மகனுடைய {நகுலனின்} மனைவியாவாள் {சிசுபாலனின் மகள் கரேணுமதியாவாள்}.(14) புடம்போட்ட தங்கத்தைப்போன்ற நல்ல நிறம் கொண்டவளும், மடியில் பிள்ளையுடன் அமர்ந்திருப்பவளுமான இந்தப் பெண்மணி மன்னன் விராடனின் மகளாவாள் {உத்தரையாவாள்}. இவள், தேரற்றவனாக இருந்தபோது தேரில் இருந்து போரிட்ட போர்வீரர்களாலும் துரோணராலும் கொல்லப்பட்ட அபிமன்யுவின் மனைவியாவாள்[3].(15)வகிடற்ற தலைமுடி கொண்டவர்களும், வெள்ளுடை உடுத்தியவர்களுமான இவர்கள் கொல்லப்பட்ட திருதராஷ்டிர மகன்களின் {மனைவிகளான} விதவைகளாவர். இந்த முதிய மன்னனின் மருமகள்களும், இவருடைய நூறு மகன்களின் மனைவிமாருமான இவர்கள், தற்போது வீரப் பகைவர்களால் கொல்லப்பட்ட கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்தவர்களாக இருக்கிறார்கள்.(16) நான் இவர்களை முன்னுரிமை வரிசையின்படி சுட்டிக்காட்டினேன். பிராமணர்களிடம் இவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் விளைவால், இவர்களது புத்தியும், இதயமும் அனைத்து வகைக் கபடங்களும் அற்றவையாக இருக்கின்றன. தூய ஆன்மாவைக் கொண்ட இந்தக் கௌரவக் குடும்பத்து இளவரசிகள் அனைவரும் உங்கள் கேள்விக்கான பதிலாக என்னால் சுட்டிக்காட்டப்பட்டனர்” என்றான் {சஞ்சயன்}”.(17)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே குரு குலத்தைச் சேர்ந்தவனும், வயதால் முதிர்ந்தவனுமான அந்த மன்னன், மனிதர்களில் தேவர்களான தன் மகன்களைச் சந்தித்து, தவசிகள் அனைவரும் சென்ற பிறகு அவர்களுடைய நலத்தை விசாரித்தான்.(18) பாண்டவர்களுடன் வந்த போர்வீரர்கள், அந்த ஆசிரமத்தை விட்டகன்று, தங்கள் தேர்களில் இருந்தும், தாங்கள் செலுத்திய விலங்குகளில் இருந்தும் இறங்கி சற்றுத் தொலைவில் அமர்ந்தனர். உண்மையில், பெண்கள், முதியவர்கள், பிள்ளைகள் உள்ளிட்ட அந்தக் கூட்டமனைத்தும் அமர்ந்த பிறகு, அவர்களிடம் பேசிய முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, வழக்கமான மென் விசாரிப்புகளைச் செய்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(19)

விதுரப்பிரவேசம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 26-ஒருவரையொருவர் நலம் விசாரித்த திருதராஷ்டிரனும், யுதிஷ்டிரனும்; கூட்டத்தைக் கண்டு விதுரன் விலகிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரன்; விரைந்து சென்ற யுதிஷ்டிரனுக்குள் யோகத்தால் பிரவேசித்த விதுரன்; இந்த அதிசயத்தைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன யுதிஷ்டிரன்…

திருதராஷ்டிரன், “ஓ! யுதிஷ்டிரா, நீ உன் தம்பிகளுடனும், நகர மற்றும் மாகாணவாசிகளுடனும் அமைதியாகவும், இன்பமாகவும் இருக்கிறாயா?(1) உன்னைச் சார்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? உன் அமைச்சர்கள், பணியாட்கள், பெரியோர், ஆசான்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?(2) உன் ஆட்சிப்பகுதிகளில் வாழ்வோர் அச்சமின்றி இருக்கிறார்களா? மனிதர்களின் ஆட்சியாளர்கள் பின்பற்றும் பழைமையானதும், மரபுசார்ந்ததுமான ஒழுக்கத்தை நீ பின்பற்றுகிறாயா?(3) நீதி மற்றும் நேர்மையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்யாமல் நீ உன் கருவூலத்தை நிரப்புகிறாயா? பகைவர்கள், நடுநிலையாளர்கள், கூட்டாளிகள் ஆகியோரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறாயா?(4)

(வேள்விகளுக்காகவும், அறச் சடங்குகளுக்காகவும் விதிக்கப்படும்) முதற்கொடைகளை அளித்துப் பிராமணர்களை முறையாகக் கவனித்துக் கொள்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, உன் பகைவரே உன் நடத்தையால் நிறைவடைந்திருக்கும்போது குடிமக்கள், உன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! மன்னர்களின் மன்னா, பித்ருக்களையும், தேவர்களையும் அர்ப்பணிப்புடன் நீ துதிக்கிறாயா?(5,6) ஓ! பாரதா, விருந்தினர்களுக்கு உணவும், பானமும் கொடுத்து நீ அவர்களை வழிபடுகிறாயா? உன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள பிராமணர்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் அறப்பாதையில் நடக்கிறார்களா?(7) உன் நாட்டுக்குள் இருக்கும் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மற்றும் உன் உறவினர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நோற்கிறார்களா? உன் குடிமக்களில் பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள் ஆகியோர் (துன்பமான சூழ்நிலையில்) வருந்தாமல், (வாழ்வின் தேவைகளுக்காக) பிச்சை எடுக்காமல் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், உன் வீட்டில் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களா? ஏகாதிபதி, அரசமுனிகளுக்குரிய இந்தக் குலமானது உன்னைத் தங்கள் மன்னனாக அடைந்து, புகழ் மற்றும் மகிமையில் இருந்து வீழாதிருக்கிறது என நான் நம்புகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன அந்த முதிர்ந்த மன்னனிடம் அறநெறியையும், நீதியையும் நன்கறிந்தவனும், செயல்கள் மற்றும் வாக்கில் நன்கு திறம்பெற்றவனுமான யுதிஷ்டிரன், தன் நலம் குறித்த சில கேள்விகளை முன்வைத்துப் பினவருமாறு பேசினான்.(10)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உமது அமைதியும், தற்கட்டுப்பாடும், இதய அமைதியும் வளர்கின்றனவா? என் தாயான இவள் களைப்பும், தொல்லையுமின்றி உமக்குத் தொண்டாற்ற இயன்றவளாக இருக்கிறாளா?(11) ஓ! மன்னா, இவளது காட்டுவாசம் கனியை {பயனை} விளைவிக்குமா? குளிர் மற்றும் காற்று ஆகியவற்றாலும் {ஆகியவற்றுக்கு வெளிப்பட்டும்}, நடப்பதனால் உண்டாகும் களைப்பாலும் மெலிந்திருப்பவளும், இப்போது கடுந்தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்பு மிக்கவளாக இருப்பவளும், என் பெரியன்னையுமான இந்த ராணி {காந்தாரி} வலிமையும், சக்தியும் மிக்கவர்களும், க்ஷத்திரிய வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களுமான இவளது பிள்ளைகளை எண்ணி இன்னும் வருந்தாமல் இருக்கிறாளா?(12,13) இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான இழிந்த பாவிகளான எங்களை இவள் குற்றஞ்சாட்டுகிறாளா? ஓ! மன்னா, விதுரர் எங்கே? எங்களால் அவரை இங்குக் காண முடியவில்லையே. நோன்புகளை நோற்பவரான சஞ்சயர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என நான் நம்புகிறேன்” என்றான்”.(14)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட திருதராஷ்டிரன், மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பதிலளிக்கும் வகையில், “ஓ! மகனே, விதுரன் நன்றாக இருக்கிறான். அவன் உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்டு, கடுந்தவங்களைச் செய்து வருகிறான். அவன் மெலிந்திருக்கிறான், அவனது தமனிகளும், நரம்புகளும் புலப்படுகின்றன. இந்த வெறுங்காட்டில் சில வேளைகளில் பிராமணர்களால் அவன் பார்க்கப்படுகிறான்” என்றான்.(16)

திருதராஷ்டிரன் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, தொலைவில் விதுரன் தென்பட்டான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்து, வாயில் சரளைக் கற்களை வைத்துக் கொண்டு, மிக மிக மெலிந்தவனாகக் காணப்பட்டான். அவன் {விதுரன்} முற்றிலும் நிர்வாணமாக இருந்தான். அவனது உடல் முழுவதும் புழுதியும், காட்டு மலர்களின் சாறும் படிந்திருந்தன.(17) க்ஷத்ரி {விதுரன்} தொலைவில் தென்பட்ட போது, அந்தச் செய்தி யுதிஷ்டிரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஓ! மன்னா, திடீரென நின்ற விதுரன், (பல மனிதர்கள் நிறைந்திருந்த) ஆசிரமத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்தினான் (அவர்களைக் கண்டான்).(18) மன்னன் யுதிஷ்டிரன் தனியனாக அவனைப் பின்தொடர்ந்து சென்றபோது, ஆழ்ந்த காட்டுக்குள் நுழைந்த அவன் {விதுரன்}, பின்தொடர்ந்து வருபவனுக்குச் சிலவேளைகளில் தென்படுபவனாகவும், சில வேளைகளில் தென்படாதவனாகவும் ஓடினான்.(19)

அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! விதுரரே, ஓ! விதுரரே, நான் உமக்குப் பிடித்தவனான மன்னன் யுதிஷ்டிரன் வந்திருக்கிறேன்” என்று உரக்கச் சொன்னான். யுதிஷ்டிரன், இவ்வாறு கூச்சலிட்டவாறே பெரும் முயற்சியுடன் விதுரனைப் பின்தொடர்ந்தான்.(20)

நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான விதுரன், அந்தக் காட்டில் தனிமையான ஓரிடத்தை அடைந்து, மரமொன்றில் சாய்ந்து கொண்டு அசையாமல் நின்றான்.(21) அவன் மிக மிக மெலிந்திருந்தான். (சிறப்பியல்புகள் அனைத்தும் மொத்தமாக மறைந்த நிலையில்) அவன் {விதுரன்} மனிதன் என்ற வடிவத்தை மட்டுமே தக்க வைத்திருந்தான். எனினும் (இத்தகைய மாற்றங்கள் இருந்தாலும்), பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன் அவனை அடையாளம் கண்டு கொண்டான்.(22)யுதிஷ்டிரன், அவனுக்கு எதிரில் நின்று கொண்டு, “நான் யுதிஷ்டிரன் வந்திருகிறேன்” என்றான். உண்மையில், விதுரனை முறையாக வழிபட்டு, விதுரன் கேட்கும் வகையில் யுதிஷ்டிரன் இந்தச் சொற்களைச் சொன்னான்.(23) அதே வேளையில் விதுரன் நிலைத்த கண்களுடன் மன்னனைப் பார்த்தான். மன்னன் மீது இவ்வாறு பார்வையைச் செலுத்திய அவன் யோகத்தில் அசைவற்றவனாக நின்று கொண்டிருந்தான்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் {விதுரன்} அப்போது (தன் யோக சக்தியின் மூலம்) அங்கங்களுடன் அங்கங்களை இணைத்து யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான். அவன் தன் உயிர் மூச்சை மன்னனுடைய உயிர் மூச்சுடனும், தன் புலன்களை மன்னனின் புலன்களுடனும் கலந்தான்.(25) உண்மையில், சுடர்மிக்க சக்தியுடன் கூடிய விதுரன், யோக சக்தியின் துணையுடன் இவ்வாறு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான்.(26)

அப்போது விதுரனின் உடல், நிலைத்த பார்வை கொண்ட கண்களுடன் மரத்திலேயே சாய்ந்திருந்தது. அதிலிருந்து உயிர் தப்பிவிட்டது என்பதை மன்னன் விரைவில் கண்டான்.(27) அதே வேளையில் அவன் {யுதிஷடிரன்} தான் முன்பைவிடப் பலசாலியாகவும், முன்பைவிடக் கூடுதலான நற்பண்புகள் மற்றும் சிறப்புகளுடன் இருப்பதாகவும் உணர்ந்தான். ஓ! ஏகாதிபதி, பெருங்கல்வியும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தான் மனிதர்களின் மத்தியில் பிறப்பதற்கு முன்பு இருந்த நிலையை நினைத்துப் பார்த்தான்[1]. வலிமையும், சக்தியும் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, வியாசரின் மூலம் யோகப் பயிற்சி குறித்துக் கேள்விப்பட்டிருந்தான்.(28, 29)பெருங்கல்வி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யவும், அதை முறையாக எரிக்கவும் {தகனம் செய்யவும்} விரும்பினான். அப்போது காட்சிக்குப் புலப்படாத குரல் ஒன்று,(30) “ஓ! மன்னா, விதுரன் என்றழைக்கப்படுபவனுக்குரிய இவ்வுலடல் எரிக்கப்படக்கூடாது. இவனில் உன்னுடலும் இருக்கிறது. இவன் அறத்தின் நித்திய தேவனாவான்.(31) ஓ! பாரதா, ஸாந்தானிகம் என்ற பெயரால் அறியப்படும் இன்பலோகம் இவனுடையதாகும்[2]. இவன் யதிகளின் கடமைகளை நோற்றவனாவான். ஓ! பகைவரை எரிப்பவனே, இவனுக்காக நீ வருந்தலாகாது” என்றது.(32)இவ்வாறு சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தது அனைத்தையும் விசித்திரவீரியனின் {திருதராஷ்டிரனிடம்} அரசமகனிடம் தெரிவித்தான்.(33) பெருங்காந்தி கொண்ட அந்த மன்னனும் {திருதராஷ்டிரனும்}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும், பீமசேனனும் பிறரும் இதைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(34)

நடந்ததைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் நிறைவடைந்தவனாகத் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “நீர், கிழங்குகள் மற்றும் கனிகள் உள்ளிட்ட இந்தக் கொடைகளை நீ என்னிடம் இருந்து பெறுவாயாக. ஓ! மன்னா, ஒருவனுடைய விருந்தினன் அவன் உண்பதையே தானும் உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது” என்றான்.(35) இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, “அவ்வாறே ஆகட்டும்” என்று மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குப்} பதிலளித்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கொடுத்த கனிகளையும், கிழங்குகளையும் உண்டான்.(36) பிறகு அவர்கள், அந்த முதிர்ந்த மன்னனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, நீரைப் பருகிய பிறகு ஒரு மரத்தினடியில் தங்கள் படுக்கைகளை விரித்து அந்த இரவைக் கழித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(37)

வியாசரின் வருகை! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 27-திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பெரும் முனிவர்களின் ஆசிரமங்களைப் பார்த்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரன் இருந்த ஆசிரமத்திற்கு வந்த சதயூபனும், வியாசரும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, அறம்சார்ந்தவர்களான அந்தத்தவசிகளின் ஆசிரமத்தில், மங்கல நட்சத்திரக்கூட்டத்தின் சிறப்பியல்பைக் கொண்ட அந்த இரவை இவ்வாறே அவர்கள் கழித்தனர்.(1) அப்போது அங்கே நிகழ்ந்த உரையாடல் அறநெறி மற்றும் செல்வம் குறித்த பல சிந்தனைகளைக் கொண்டதாக இருந்தது. ஸ்ருதிகளில் இருந்து பல்வேறு குறிப்புகளையும், இனிமை நிறைந்த சொற்களையும் கொண்டதாக அஃது இருந்தது.(2) ஓ! மன்னா, பாண்டவர்கள் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளைவிட்டு, வெறும் தரையில் தங்கள் தாயின் அருகில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(3)

உண்மையில், அந்த வீரர்கள், உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரனுடைய உணவை உண்டு அந்த இரவைக் கழித்தனர்.(4) அந்த இரவு கடந்ததும், தன் காலைச் செயல்கள் அனைத்தையும் செய்த மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளின் துணையுடன் அந்த ஆசிரமத்தை ஆய்வு செய்தான்.(5) அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில், தன் குடும்பத்துப் பெண்கள், பணியாட்கள் மற்றும் புரோகிதருடன், அந்த ஆசிரமத்திற்குள் தான் விரும்பிய அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தான்.(6)

சுடர்மிக்க நெருப்புகளுடன் கூடிய வேள்விப் பீடங்கள் பலவற்றையும், அவற்றில் அமர்ந்திருந்தவர்களும், தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆகுதிகளை ஊற்றித் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்பவர்களான பல தவசிகளையும் அங்கே கண்டான்.(7) அந்தப் பீடங்கள் காட்டின் கனிகள் மற்றும் கிழங்குகளாலும், மலர்க்குவியல்களாலும் நிறைந்திருந்தன. தெளிந்த நெய்யின் புகை அவற்றில் இருந்து சுருண்டு மேலெழுந்தது. அதுதவிர, அவை வேதங்களின் உடல்வடிவங்களைப் போலத் தெரிந்த உடல்களைக் கண்ட தவசிகள் பலரும், சகோதரத்துவம் கொண்ட பலரும் அங்கே நிறைந்திருந்தனர்.(8)

மான்கூட்டங்கள் அனைத்து வகை அச்சத்தில் இருந்தும் விடுபட்டு அங்கேயும் இங்கேயும் ஓய்ந்து, மேய்ந்து கொண்டிருந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இனிய இசையொலிகளை எழுப்புவதில் ஈடுபடும் எண்ணற்ற பறவைகளும் இருந்தன.(9) மயில்கள், தாத்யூகங்கள், கோகிலங்களின் {குயில்களின்} இசையொலி மற்றும் வேறு குருவிகளின் இனிய பாடல்களும் மொத்த காட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(10) சில இடங்களில் கல்விமான்களான பிராமணர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தன. சில இடங்கள், காட்டில் திரட்டப்பட்ட கனிகள் மற்றும் கிழங்குகளின் பெருங்குவியல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(11)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், அந்தத் தவசிகளுக்காகத் தான் கொண்டு வந்திருந்த தங்கத்தாலான அல்லது தாமிரத்தாலான குடுவைகளையும்,(12) ஓ! பாரதா {ஜனமேஜயா}, மான்தோல்கள், விரிப்புகள் {கம்பளங்கள்}, மரத்தாலான வேள்விக்கரண்டிகள் {ஸ்ருக்குகள், ஸுர்வங்கள்}, கமண்டலங்கள், மரத்தாலான தட்டுகள் {ஸ்தாலிகள்}, குடங்கள் மற்றும் பாத்திரங்களை அவர்களுக்குக் கொடுத்தான்.(13) இரும்பாலான பல்வேறு வகைப் பாத்திரங்கள், சிறு பாத்திரங்கள், வெவ்வேறு அளவிலான குடுவைகள் ஆகியனவும், தவசிகளில் ஒவ்வொருவரும் எவ்வளவு விரும்பினார்களோ அவ்வளவும் மன்னனால் கொடுக்கப்பட்டன.(14) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், காட்டுக்குள் இவ்வாறு உலவி, தவசிகளின் பல்வேறு ஆசிரமங்களைக் கண்டு, பல கொடைகளைக் கொடுத்து, தன் பெரிய தந்தை {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கே திரும்பி வந்தான்.(15)

அவன் {யுதிஷ்டிரன்} பூமியின் தலைவனான மன்னன் திருதராஷ்டிரன், தன் காலைச் சடங்குகளைச் செய்து முடித்து, தன்னருகில் காந்தாரியுடன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(16) அற ஆன்மா கொண்ட ஏகாதிபதி, பணிவுடன் தலைகுனிந்திருக்கும் ஒரு சீடரைப் போல அந்த இடத்தின் அருகில் அமர்ந்திருக்கும் தன் தாயான குந்தியையும் கண்டான்.(17) அவன் தன் பெயரை அறிவித்துக் கொண்டு அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்கினான். அந்த முதிய மன்னன், “அமர்வாயாக” என்ற சொற்களைச் சொன்னான். திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, குசப்புல்லாலான ஒரு பாயில் யுதிஷ்டிரன் அமர்ந்தான்.(18) ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, பீமனும், பாண்டுவின் பிற மகன்களும், அந்த மன்னனை வணங்கி, அவனது பாதத்தைத் தீண்டி, அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு கீழே அமர்ந்தனர்.(19) அவர்களால் சூழப்பட்ட அந்த முதிர்ந்த குரு மன்னன் மிக அழகானவனாகத் தெரிந்தான். உண்மையில் அவன் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிருஹஸ்பதியைப் {Vrihaspati} போன்ற வேத காந்தியில் ஒளிவீசினான்.(20)

அவர்கள் அமர்ந்ததும், குருக்ஷேத்திரவாசிகளான சதயூபன் உள்ளிட்ட பெரும் முனிவர்கள் பலரும் அங்கே வந்தனர்.(21) சிறப்புமிக்கவரும், கல்விமானும், பெருஞ்சக்தி கொண்டவரும், தெய்வீக முனிவர்களாலேயே கூட மதிக்கப்படுபவருமான வியாசர், தம்முடைய எண்ணற்ற சீடர்களுக்குத் தலைமை தாங்கியவராக யுதிஷ்டிரனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.(22) குரு மன்னன் திருதராஷ்டிரன், பெருஞ்சக்தி கொண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், பீமசேனன் மற்றும் பிறரும் எழுந்து நின்று, சில அடிகள் முன்னோக்கி நகர்ந்து அந்த விருந்தினர்களை வணங்கினார்கள்.(23)

சதயூபன் மற்றும் பிறரால் சூழப்பட்டிருந்தவரும், அருகில் நெருங்கி வந்தவருமான வியாசர் திருதராஷ்டிரனிடம், “அமர்வாயாக” என்றார்.(24) அதன்பிறகு சிறப்புமிக்க வியாசர் கருப்பு மான்தோலில் வைக்கப்பட்ட குசப்புற்களாலானதும், பட்டுத் துணியால் மூடப்பட்டதுமான ஒரு சிறந்த இருக்கையில் அம்ரந்தார். அவர்கள் அவருக்காக அந்த இருக்கையை ஒதுக்கியிருந்தனர்.(25) வியாசர் அமர்ந்ததும், தீவில் பிறந்தவரான அந்தத் தவசியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பெருஞ்சக்தி கொண்ட அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள் அனைவரும் அமர்ந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

வியாசரின் உறுதிமொழி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 28-திருதராஷ்டிரனின் நலம் விசாரித்த வியாசர்; விதுரனின் உண்மை வடிவம் முதலியவற்றைக் கூறியது; மற்ற முனிவர்களால் செய்ய முடியாத திருதராஷ்டிரனுடைய விருப்பத்தைச் செய்வதாக உறுதிமொழி அளித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்ததும், சத்தியவதியின் மைந்தனான வியாசர்,(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, உன்னால் தவங்கள் செய்ய முடிந்ததா? ஓ! மன்னா, காட்டில் வசிப்பதில் உன் மனம் நிறைவடைகிறதா?(2) போரில் உன் மகன்கள் கொல்லப்பட்டதில் பிறந்த உன் துயரம் உன் இதயத்தில் இருந்து மறைந்ததா? ஓ! பாவமற்றவனே, உன் கருத்துகள் அனைத்தும் இப்போது தெளிவடைந்துள்ளனவா?(3) உன் இதயத்தை உறுதியாகச் செய்து கொண்டு காட்டு வாழ்வுக்கான விதிமுறைகளை நீ பின்பற்றுகிறாயா? என் மருமகளான காந்தாரி, துயரில் மூழ்கத் தன்னை அனுமதித்துக் கொள்கிறாளா?(4) அவள் பெரும் ஞானம் கொண்டவளாவாள். புத்தியுள்ள அந்த ராணி {காந்தாரி}, அறம், பொருள் ஆகிய இரண்டையும் புரிந்து கொண்டவளாவாள். செழிப்பு மற்றும் வறுமை ஆகிய இரண்டுக்கும் தொடர்புடைய உண்மைகளை அவள் நன்கறிந்தவளாவாள். அவள் இன்னும் வருந்துகிறாளா?(5)

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பின் விளைவால் தன் பிள்ளைகளை விட்டகன்ற குந்தி, உன் தேவைகளைக் கவனித்துப் பணிவுடன் உனக்குத் தொண்டாற்றுகிறாளா?(6) உயர்ந்த மனம் கொண்டவனும், உயர் ஆன்மாவும், தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் போதுமான அளவுக்குத் தேற்றப்பட்டனரா?(7) இவர்களைக் கண்டதில் நீ மகிழ்ச்சியடைகிறாயா? அனைத்துக் களங்கங்களில் இருந்தும் உன் மனம் விடுபட்டிருக்கிறதா? ஓ! மன்னா, ஞானம் பெருகியதன் விளைவால் உன் மனோநிலை தூய்மையடைந்ததா?(8) ஓ! மன்னா, ஓ! பாரதா, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை, வாய்மை மற்றும் கோபத்தில் இருந்து விடுதலை என்ற இந்த முத்தொகை காரியங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(9) உன்னுடைய இந்தக் காட்டு வாழ்க்கை இன்னும் உனக்குத் துன்பத்தைத் தருகிறதா? காட்டின் விளைச்சலில் இருந்து உன் சொந்த முயற்சியின் மூலமே உனக்கான உணவை உன்னால் ஈட்டிக் கொள்ள முடிகிறதா? உண்ணா நோன்புகள் இப்போது உனக்குத் துன்பத்தைத் தருகின்றனவா?(10)

ஓ! மன்னா, தர்மனின் சுயமாக இருந்த உயர் ஆன்ம விதுரன் எவ்வாறு இவ்வுலகிவிட்டு அகன்றான் என்பதை நீ அறிந்தாயா?(11) மாண்டவ்யரின் {ஆணிமாண்டவ்யரின்} சாபத்தின் மூலம் அறத்தேவன் விதுரனாகப் பிறந்திருந்தான். அவன் {விதுரன்} பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாக இருந்தான். உயர்ந்த தவங்களையும், உயர்ந்த ஆன்மாவையும், உயர்ந்த மனத்தையும் கொண்டவனாக அவன் இருந்தான்.(12) தேவர்களுக்கு மத்தியில் பிருஹஸ்பதியும், அசுரர்களுக்கு மத்தியில் சுக்ரனும் கூட இந்த முதன்மையான மனிதனைப் போல இத்தகைய நுண்ணறிவைக் கொண்டிருந்ததில்லை.(13) முனிவர் மாண்டவ்யர் நெடுங்காலம் ஈட்டிய தன் தவச் சக்தியை அழித்து அறத்தின் நித்திய தேவனை {தர்மதேவனை} கலங்கடித்தார் {சபித்தார்}[1].(14) பெரும்பாட்டனின் ஆணையின் பேரிலும், என் சொந்த சக்தியின் மூலமும், விசித்ரவீரியனுக்கு உரிய நிலத்தில் பெரும் நுண்ணறிவுமிக்க விதுரன் என்னால் உண்டாக்கப்பட்டான்.(15)ஓ! மன்னா, நித்தியமான தேவர்களுக்குத் தேவன் {தர்மன்} உன் தம்பியாக இருந்தான். அவனுடைய {விதுரனின்} தாரணை மற்றும் தியான பயிற்சிகளின் விளைவால் கல்விமான்கள் அவனைத் தர்மனாக அறிந்தனர்[2].(16) வாய்மை, தற்கட்டுப்பாடு, இதய அமைதி, கருணை மற்றும் கொடைகளுடன் சேர்ந்து அவன் {தர்மன்} வளர்கிறான். எப்போதும் தவங்களில் ஈடுபடும் அவன் நித்தியமானவனாவான்.(17) அந்த அறத் தேவனின் யோக பலத்தின் மூலமே குரு மன்னன் யுதிஷ்டிரனும் தன் பிறப்பை எடுத்தான். எனவே, யுதிஷ்டிரன், பெரும் ஞானமும், அளவிலா நுண்ணறிவும் கொண்ட தர்மனாக இருக்கிறான்.(18) தர்மன் இம்மையிலும், மறுமையிலும் இருக்கும் நெருப்பையோ, காற்றையோ, நீரையோ, நிலத்தையோ, வெளியையோ போன்றவனாவான்.(19) ஓ!மன்னர்களின் மன்னா, அவன் எங்கும் செல்ல வல்லவனாகவும் மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்தவனாகவும் இருக்கிறான். முதன்மையான தேவர்கள், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோரால் மட்டுமே காணப்படக்கூடியவனாக அவன் இருக்கிறான்.(20)தர்மனே விதுரனாவான்; விதுரனே பாண்டுவின் (மூத்த) மகனாவான் {யுதிஷ்டிரனாவான்}. ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகனை உன்னால் காண முடியும். அவன் உன் முன்னிலையில் ஒரு பணியாளாக இருக்கிறான்.(21) பெரும் யோக பலம் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், உயர் ஆன்மாகக் கொண்டவனுமான உன் தம்பி {விதுரன்}, குந்தியின் மகனான உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் கண்டு அவனது மேனிக்குள் புகுந்துவிட்டான்.(22) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உனக்கும் நான் பெரும் நன்மையைச் செய்வேன். ஓ! மகனே, நான் உன் ஐயங்களை விலக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(23) வேறு எந்தப் பெரும் முனிவராலும் இதற்கு முன்பு செய்யப்படாத அருஞ்செயலையும், என் தவங்களின் விளைவால் ஏற்படும் சில ஆச்சரியங்களையும் நான் உனக்குக் காட்டப் போகிறேன்.(24) ஓ! மன்னா, என்னிடம் இருந்து எதை நீ அடைய விரும்புகிறாய்? எதைப் பார்க்கவோ, தீண்டவோ, கேட்கவோ விரும்புகிறாய் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே, நான் அதை நிறைவேற்றுவேன்” என்றார் {வியாசர்}.(25)

ஆஸ்ரமவாஸ உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அஸ்வமேத பர்வம்-ஸ்ரீ அநு கீதை உப பர்வம்–

October 19, 2025

துவாராவதிக்குத் திரும்பிய கிருஷ்ணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 52-ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்ட கிருஷ்ணார்ஜுனர்கள்; கிருஷ்ணனைப் புகழ்ந்து துதித்த அர்ஜுனன்; ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் முதலியோரை வணங்கிய கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் முதலியோரிடம் விடைபெற்றுக் கொண்டு சுபத்திரையை அழைத்துக் கொண்டு துவாரகைக்குப் புறப்பட்ட கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதன்பிறகு கிருஷ்ணன் தாருகனை அழைத்து, “என் தேர் பூட்டப்படட்டும்” என்று ஆணையிட்டான். மிகக் குறுகிய காலத்திற்குள் தாருகன் (தன் தலைவனிடம்), “பூட்டப்பட்டது” என்று சொன்னான்.(1) அப்போது தன் பணியாட்கள் அனைவரையும் அழைத்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, “ஆயத்தமாகி தயாராக இருப்பீராக. நான் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்படப் போகிறோம்” என்றான்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு சொல்லப்பட்ட துருப்பினர், கவங்களைப் பூட்டியவர்களாக, அளவற்ற சக்தி கொண்ட அந்தப் பிருதையின் மைந்தனிடம் {அர்ஜுனனிடம்}, “அனைத்தும் ஆயத்தமாக இருக்கிறது” என்று சொன்னார்கள்.(3) அப்போது, கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய அன்பிற்கினிய நண்பர்கள் இருவரும் தங்கள் தேரில் ஏறி, இனிமை நிறைந்த உரையாடல்களில் ஈடுபட்டபடியே பயணம் செய்தனர்.(4)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேரில் அமர்ந்திருந்த வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, பெருஞ்சக்தி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(5) “ஓ! விருஷ்ணி குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உன் அருளின் மூலமே மன்னர் {யுதிஷ்டிரர்} வெற்றியை அடைந்தார். அவரது பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர், மேலும் அவர் ஒரு முள்ளுமின்றித் தன் நாட்டை மீட்டார்.(6) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பாண்டவர்கள் உன் மூலம் ஒரு பலமிக்கப் பாதுகாவலனை அடைந்தார்கள். உன்னை எங்கள் படகாகக் கொண்டே நாங்கள் குருக்களெனும் {கௌரவப்}பெருங்கடலைக் கடந்தோம்.(7) ஓ! அண்டத்தையே உன் கைவண்ணமாகக் கொண்டவனே {விஷ்வகர்மாவே}, ஓ! அண்டத்தின் ஆன்மாவே {விஷ்வாத்மாவே}, ஓ! அண்டத்தில் உள்ள அனைத்துள்ளும் சிறந்தவனே {விஷ்வஸத்தமனே}, நான் உன்னை வணங்குகிறேன். உன்னால் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு நான் உன்னை அறிவேன்[1].ஓ! மதுசூதனா, ஒவ்வொரு உயிரினத்தின் ஆன்மாவும் எப்போதும் உன் சக்தியில் இருந்தே பிறக்கின்றன. (படைத்தல், காத்தல், அழித்தல் என்ற வடிவிலான) விளையாட்டு {லீலை} உன்னுடையதே. ஓ! தலைவா, பூமி, வானம் ஆகியவை உன் மாயையே .(9) அசையும் மற்றும் அசையாத பொருட்களை உள்ளடக்கிய இந்த மொத்த அண்டமும் உன்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. {ஈன்று பிறப்பவை, முட்டையிட்டுப் பிறப்பவை, கழிவில் இருந்து பிறப்பவை, காய்கறிகள் என்ற) நான்கு வகை உயிரினங்களையும், மாற்றத்தின் மூலம் நீயே படைக்கிறாய்.(10) ஓ! மதுசூதனா, பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றை நீயே படைத்தாய். களங்கமற்ற சந்திர ஒளி உன் புன்னகையாகும். பருவகாலங்கள் உன் புலன்களாகும்.(11) எப்போதும் வீசும் காற்று உன் மூச்சாகும், நித்தியமானதாக இருக்கும் மரணம் உன் கோபமாகும். உன் அருளிலேயே செழிப்பின் தேவி இருக்கிறாள். உண்மையில், ஓ! உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனே, ஸ்ரீ உன்னிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கிறாள்.(12)

(உயிரினங்கள் ஈடுபடும்) விளையாட்டு நீயே; அவற்றின் மனநிறைவு நீயே; அவற்றின் புத்தி நீயே; அவற்றின் பொறுமை நீயே; அவற்றின் விருப்பங்கள் நீயே; அவற்றின் அழகும் நீயே. அசையும், மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட அண்டம் நீயே. ஓ! பாவமற்றவனே, யுக முடிவில் அழிவு என்றழைக்கப்படுபவன் நீயே.(13) நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும் உன் குணங்கள் அனைத்தையும் சொல்லவல்லவனாக நான் இல்லை. ஆத்மாவும், பரமாத்மாவும் நீயே. ஓ! தாமரையை (தாமரை இதழ்களைப்) போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உன்னை வணங்குகிறேன்.(14)

ஓ! தடுக்கப்பட முடியாதவனே, நாரதர், தேவலர், தீவில் பிறந்தவர் (வியாசர்) மற்றும் குருக்களின் பாட்டன் {பீஷ்மர்} ஆகியோரிடம் இருந்து, இவை அனைத்தும் (இந்த அண்டம் அனைத்தும்)(15) உன்னையே சார்ந்திருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கிறேன். உயிரினங்கள் அனைத்தின் ஒரே தலைவன் நீயே. ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா, எனக்கு உன் அருளைக் கொடுக்கும் நிமித்தமாக நீ அறிவித்ததை,(16) ஓ! ஜனார்த்தனா, நான் முழுமையாக நிறைவேற்றுவேன். எங்களுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி பேரற்புதத்தைச் செய்திருக்கிறாய்;(17) போரில் திருதராஷ்டிரர் மகனான கௌரவனுக்கு (இளவரசனுக்கு) {துரியோதனனுக்கு} அழிவை ஏற்படுத்தினாய். (அடுத்தடுத்து) போரில் நான் வீழ்த்திய அந்தப் படை ஏற்கனவே உன்னால் எரிக்கப்பட்டதாகும்.(18) நீ செய்த சாதனையின் விளைவால் வெற்றி எனதானது. உன் புத்தியின் சக்தி மூலமே, போரில் துரியோதனன், கர்ணன், சிந்துக்களின் பாவம் நிறைந்த ஆட்சியாளன் {ஸைந்தவன் / ஜெயத்ரதன்} மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோர் முறையாக அழிக்கப்பட்டனர்.(19,20)

ஓ! தேவகியின் மைந்தா {கிருஷ்ணா}, என்னிடம் நிறைவடைந்து எனக்கு அறிவித்த அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். இதில் எந்த ஐயத்திற்கும் நான் இடமளிக்க மாட்டேன்.(21) ஓ! பாவமற்றவனே, ஓ! அனைத்துக் கடைமைகளையும் அறிந்தவனே, நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரரிடம் சென்று, உனக்கு விடையளிக்குமாறு அவரைத் தூண்டுவேன்.(22) ஓ! தலைவா, நீ துவாரகைக்குப் புறப்படுவதை நானும் ஏற்கிறேன். ஓ! ஜனார்த்தனா, நீ விரைவில் என் தாய் மாமனை {வசுதேவரைக்} காண்பாய்.(23) தடுக்கப்பட முடியாதவரான பலதேவரையும் {பலராமரையும்}, விருஷ்ணி குலத்தின் வேறு தலைவர்களையும் நீ காண்பாய்” என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவ்விருவரும் யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்தனர்.(24)

அப்போது அவர்கள் உற்சாகமிக்க இதயங்களுடன், எந்தக் கவலையுமின்றி, சக்ரனின் மாளிகைக்கு ஒப்பாக இருந்த திருதராஷ்டிரனின் அரண்மனைக்குள் நுழைந்தனர்.(25) பிறகு, ஓ! ஏகாதிபதி, அவன் மன்னன் திருதராஷ்டிரனையும், பெரும் நுண்ணறிவுமிக்க விதுரனையும், மன்னன் யுதிஷ்டிரனையும்,(26) தடுக்கப்பட முடியாதவனான பீமசேனனையும், பாண்டுவின் மூலம் மாத்ரிக்குப் பிறந்த இரு மகன்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்டனர். அமர்ந்திருந்த மன்னன் திருதராஷ்டிரன்; வெல்லப்படாத யுயுத்சு {27); பெரும் ஞானியான காந்தாரி, பிருதை {குந்தி}, அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, மேலும் சுபத்திரை முதலான பாரதப் பெண்மணிகள் பிறரையும் அவர்கள் கண்டனர்.(28)

காந்தாரிக்குப் பணிவிடை செய்யும் பெண்கள் அனைவரையும்கூட அவர்கள் கண்டார்கள். பிறகு, பகைவர்களைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று(29) தங்கள் பெயர்களை அறிவித்து, அவனது பாதங்களைத் தீண்டினர். உண்மையில் அந்த உயர் ஆன்மாக்கள் இருவரும், காந்தாரி மற்றும் பிருதையின் பாதங்களையும்,(30) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் பீமனின் பாதங்களையும் தீண்டினர். விதுரனைத் தழுவி கொண்ட அவர்கள், அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(31) அந்த மனிதர்கள் அனைவரின் துணையுடன் கூடிய அர்ஜுனனும், கிருஷ்ணனும் (மீண்டும்) மன்னன் திருதராஷ்டிரனை அணுகினர். இரவு வந்ததும், பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் திருதராஷ்டிரன் அவரவர் தங்கள் தங்கள் அறைகளில் ஓய்வெடுக்கும் வகையில் குரு குலத்தைத் தழைக்கச் செய்யும் அனைவருக்கும், ஜனார்த்தனனுக்கும் விடைகொடுத்து அனுப்பினான். மன்னனால் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய அறைகளுக்குள் நுழைந்தனர்.(32,33)

பெருஞ்சக்தி கொண்ட கிருஷ்ணன், தனஞ்சனின் {அர்ஜுனனின்} அறைக்குச் சென்றான். முறையாக வழிபடப்பட்டவனாக, அனைத்து வகை வசதி மற்றும் இன்பங்களுடன் கூடியவனாக,(34) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தனஞ்சயனின் துணையுடன் மகிழ்ச்சியாக உறங்கி அந்த இரவைக் கழித்தான். இரவு கடந்து காலை விடிந்ததும் அவ்விரு வீரர்களும்,(35) தங்கள் காலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, முறையாகத் தங்கள் மேனிகளை அலங்கரித்துக் கொண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் மாளிகைக்குச் சென்றனர். அங்கே பெரும் வலிமை கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் தன் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தான்.(36)

நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் நுழைந்த அந்த உயர் ஆன்மாக்கள் இருவரும், தேவர்கள் தலைவனை {இந்திரனைக்} காணும் அஸ்வினி இரட்டையர்களைப் போல நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டனர்.(37) அம்மன்னனைச் சந்தித்த அந்த விருஷ்ணி குலத்தோனும் {கிருஷ்ணனும்}, குரு குல வீரர்களில் முதன்மையானவனும் {அர்ஜுனனும்}, தங்களிடம் பெரும் நிறைவை அடைந்திருந்த யுதிஷ்டிரனின் அனுமதியைப் பெற்று கீழே அமர்ந்தனர்.(38) அப்போது, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த நண்பர்கள் இருவருரையும் கண்டு, அவர்களிடம் பேச விருப்பம் கொண்டான். பேசுபவர்களில் முதன்மையான அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், விரைவில் பின்வரும் சொற்களில் அவர்களிடம் பேசினான்.(39)

யுதிஷ்டிரன், “வீரர்களே, யது மற்றும் குரு குலத்தில் முதன்மையானவர்களே, நீங்கள் இருவரும் என்னிடம் ஏதோ சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. உங்கள் மனத்தில் இருப்பதைச் சொல்வீராக. நான் அதை விரைவில் நிறைவேற்றுவேன். தயங்காதீர்” என்றான்.(40)

இவ்வாறு சொல்லப்பட்டதும், வாக்கை நன்கறிந்தவனான பல்குனன் {அர்ஜுனன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பணிவுடன் அணுகி, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(41) அவன் {அர்ஜுனன்}, “ஓ! மன்னா, பேராற்றலைக் கொண்ட இந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீண்ட நாட்களாக வீட்டில் இல்லாமல் இருக்கிறான். இவன் உமது அனுமதியுடன் தன் தந்தையைக் காண விரும்புகிறான்.(42) உமக்கு விருப்பமிருந்தால் இவனை ஆனர்த்தர்களின் நகரத்திற்குச் செல்ல அனுமதிப்பீராக. ஓ! வீரரே, இவனுக்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்” என்றான்.(43)

யுதிஷ்டிரன், “ஓ! தாமரைக் கண்ணா, நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ! மதுசூதனா, ஓ! பலமிக்கவனே, சூர குலத்தில் முதன்மையானவரை {வசுதேவரைக்} காண இன்றே நீ துவாராவதி நகரத்திற்குச் செல்வாயாக.(44) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, உன் புறப்பாடு என்னால் அனுமதிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக என் தாய் மாமனையும் {வசுதேவரையும்}, தேவகி தேவியையும் காணாமல் இருக்கிறாய்.(45) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, ஓ! பெரும் ஞானியே, என் தாய்மாமனைச் சந்தித்து, பலதேவரிடமும் சென்று, அவர்களுக்குத் தகுந்தவாறு என் வார்த்தைகளால் அவ்விருவரையும் வழிபடுவாயாக[2].(46) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, என்னையும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான பீமனையும், பல்குனனையும் {அர்ஜுனனையும்}, நகுலனையும், சகாதேவனையும் நாள்தோறும் நீ நினைப்பாயாக.(47) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, ஆனர்த்தர்களையும், உன் தந்தையையும், விருஷ்ணிகளையும் கண்ட பிறகு என் குதிரை வேள்விக்கு மீண்டும் திரும்பி வருவாயாக.(48) பிறகு பல்வேறு வகை ரத்தினங்களையும், பல்வேறு வகைச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு நீ செல்வாயாக. ஓ! சாத்வத குல வீரா, நீ விரும்பும் எதையும் நீ எடுத்துச் செல்வாயாக.(49) ஓ! கேசவா, மொத்த பூமியும் எங்கள் ஆட்சிப்பகுதியானதும், எங்கள் பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும் உன் அருளாலேயே நடந்தன” என்றான் {யுதிஷ்டிரன்}.(50)குருகுலத்தின் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு சொன்னபோது, மனிதர்களில் முதன்மையான வாசுதேவன் {கிருஷ்ணன்} (மறுமொழியாக) இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(51)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பொன், ரத்தினங்கள் அனைத்தும், செல்வமனைத்தும், மொத்த பூமியும் உம்முடையவையே, அவை உம்முடையவை மட்டுமே ஆகும். ஓ! தலைவா, என் இல்லத்தில் இருக்கும் செல்வம் எதனுக்கும் நீரே உரிமையாளர் ஆவீர்” என்றான்.(52)

தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அவனிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, பெருஞ்சக்தியுடன் கூடியவனான கதனின் அண்ணனை (கிருஷ்ணனை) முறையாக வழிபட்டான். வாசுதேவன் அப்போது தன் அத்தையிடம் ({தன் தந்தையின் சகோதரியான குந்தியிடம்) சென்றான். முறையாக அவளைக் கௌரவித்த அவன் அவளை வலம் வந்தான்.(53) பிறகு அவளால் பதிலுக்கு முறையாக அணுகப்பட்டான்; பிறகு விதுரனை முதலாகக் கொண்ட பிறர் அனைவரும் அவனை அணுகினர். நான்கு கரங்களைக் கொண்டவனும், கதனின் அண்ணனுமான அவன், அப்போது தன் சிறந்த தேரில் நாகபுரத்தை {ஹஸ்தினாபுரத்தை} விட்டுப் புறப்பாட்டான்[3].(54)வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ஜனார்த்தனன், யுதிஷ்டிரன் மற்றும் தன் அத்தை (குந்தி) ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன் சகோதரியான பெண்மணி சுபத்திரையைத் தன் தேரில் அமர்த்திக் கொண்டு, பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களின் துணையுடன் புறப்பட்டுச் சென்றான். முதன்மையான குரங்கைத் தன் கொடியில் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, சாத்யகி, மாத்ராவதியின் இரு மகன்கள், அளவிலா நுண்ணறிவைக் கொண்ட விதுரன், யானைகளின் இளவரசனுக்கு ஒப்பான நடையைக் கொண்ட பீமன் ஆகியோர் அனைவரும் மாதவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(56) வலிமையும் சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், குரு நாட்டை விரிவுபடுத்து அவர்களை அனைவரையும், விதுரனையும் திரும்பச் செய்து, தாருகன் மற்றும் சாத்யகியிடம், “குதிரைகளை விரைவாகத் தூண்டுவீராக” என்று சொன்னான்.(57) பிறகு, பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனும், பேராற்றல் கொண்டவனுமான ஜனார்த்தனன், சினி குலத்தின் முதன்மையான சாத்யகியின் துணையுடன் தன் பகைவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, சொர்க்கத்திற்குச் செல்லும் நூறு வேளைவியைச் செய்தவனை {இந்திரனைப்} போல ஆனர்த்தர்களின் நகரத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(58)

உதங்கர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 53-துவாரகைக்குச் செல்லும் வழியில் உதங்கரைக் கண்ட கிருஷ்ணன்; கௌரவர்கள் அழிக்கப்பட்டதற்காகச் சபிக்கப் போவதாகச் சொன்ன உதங்கர்; உதங்ருக்கு உண்மையைச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} துவாரகைக்குப் புறப்படும்போது, பகைவர்களைத் தண்டிப்பவனும், பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனும் ஆனவன் {அர்ஜுனன்} அவனைத் தழுவி கொண்டு, தன் பணியாட்களுடன் சேர்ந்து திரும்பினான்.(1) விருஷ்ணி வீரனை மீண்டும் மீண்டும் தழுவிய பல்குனன் {அர்ஜுனன்}, அவன் தன் பார்வையின் வரம்புக்குள் உள்ள வரை மீண்டும் மீண்டும் தன் கண்களை அவனை நோக்கிச் செலுத்தினான்.(2) கோவிந்தன் மேல் விழுந்த தன் பார்வையைப் பெருங்கடினத்துடன் பிருதையின் மகன் {அர்ஜுனன்} விலக்கினான். வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனும் அவ்வாறே செய்தான் (அதையே செய்தான்).(3) அந்த உயர் ஆன்மா புறப்படும்போது வெளிப்பட்ட அறிகுறிகளை {சகுனங்களை} நான் உனக்கு விரிவாகச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(4)

தேருக்கு முன் பெருவேகத்துடன் வீசிய காற்றானது, பாதையில் இருந்து மணற்துகள்கள், புழுதி மற்றும் முட்களை அகற்றியது.(5) வாசவன் {இந்திரன்}, அந்தச் சாரங்கதாரிக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு நறுமணமிக்க தெய்வீக மலர்மாரியைப் பொழிந்தான்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது, நீரில்லாத பாலைவனத்தை அடைந்தான். அங்கே அளவற்ற சக்தி கொண்டவரும், உதங்கர் என்ற பெயரைக் கொண்டவருமான முதன்மையான தவசியைக்[1] கண்டான்.(7) பெரிய கண்களையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} அந்தத் தவசியை வணங்கினான். பதிலுக்கு அந்தத் தவசியாலும் வணங்கப்பட்டான். அப்போது வாசுதேவன் அவரது நலத்தை விசாரித்தான்.(8)பிராமணர்களில் முதன்மையானவரானவரும், மாதவனால் மென்மையாக விசாரிக்கப்பட்டவருமான உதங்கர், முறையாக {பதிலுக்கு} அவனைக் கௌரவித்து, இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(9) அவர் {உதங்கர்}, “ஓ! சௌரியே, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் மாளிகைகளுக்குச் சென்று சகோதரர்களுக்கிடையில் நீடிக்க வேண்டிய நீடித்த புத்தியை நிறுவுவதில் வெற்றி கண்டாயா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(10) ஓ! கேசவா, ஓ! விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனே, உன் உறவினர்களும், உனக்கு எப்போதும் அன்பானவர்களுமான அவர்களை அமைதியடையவும், ஒற்றுமையடையவும் செய்தாயா?(11) ஓ! பகைவர்களை எரிப்பவனே, பாண்டு மகன்கள் ஐவரும், திருதராஷ்டிரன் பிள்ளைகளும் இவ்வுலகில் இன்பமாக உன்னுடன் விளையாடினார்களா?(12) கௌரவர்கள் உன்னால் தணிக்கப்பட்டதன் விளைவால் மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் நாடுகளில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்களா?(13) ஓ! மகனே, நான் உன்னிடம் கொண்ட நம்பிக்கை கௌரவர்களைப் பொறுத்தவரையில் கனி கொடுத்ததா {பயனளித்ததா}?” என்று கேட்டார்.(14)

அருளப்பட்ட அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “கௌரவர்களைப் பொறுத்தவரையில் {அவர்களுக்கு} நல்ல புத்தியைக் கொண்டு வருவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முதலில் நான் முயன்றேன். எவ்வழிமுறையினாலும் அவர்களில் அமைதியை நிறுவச் செய்ய முடியாதபோது,(15) உற்றார் உறவினருடன் கூடிய அவர்கள் அனைவரும் மரணமடைய நேர்ந்தது. புத்தியாலோ, பலத்தாலோ விதியைக் கடப்பது சாத்தியமல்ல.(16) ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, இதுவும் நீர் அறியாததல்ல. என்னைக் குறிப்பிட்டு பீஷ்மர் மற்றும் விதுரர் செய்த ஆலோசனைகள் அனைத்தையும் அவர்கள் (கௌரவர்கள்) மீறினர்[2].(17) ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட அவர்கள் யமனுடைய வசிப்பிடத்திற்கு விருந்தினர்களாகச் சென்றனர். நண்பர்கள் அனைவரும், பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே. பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்” என்றான் {கிருஷ்ணன்}.(18)கிருஷ்ணன் இந்தச் சொற்களைச் சொன்ன போது, உதங்கர் கோபத்தில் நிறைந்தவராக, சினத்தில் கண்களை அகல விரித்தவராக இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(19)

உதங்கர், “ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களும், உனக்கன்பானவர்களுமான குரு குலத்தின் முதன்மையானவர்களைக் காக்க இயன்றவனாக இருந்தும் நீ மீட்கவில்லை என்பதால் நான் நிச்சயம் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(20) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, வலுக்கட்டாயமாகப் பொறுத்துச் செல்லுமாறு அவர்களை நீ வற்புறுத்தாததால் கோபத்தில் நிறைந்திருக்கும் நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(21) ஓ! மாதவா, குருக்களில் முதன்மையான அவர்களைக் காக்க முழுமையாக இயன்றவனாக இருந்தும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, கபடத்தில் மூழ்கி, அவர்களிடம் நீ அக்கறையற்றவனாக இருந்ததால்தான் அவர்கள் அனைவரும் அழிவை அடைந்திருப்பதாகத் தெரிகிறது” என்றார்.(22)

வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, “ஓ! பிருகு குலக் கொழுந்தே, நான் விரிவாகச் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லும் சமாதானங்களையும் நீர் ஏற்பீராக. ஓ! பிருகு குலத்தவரே {பார்க்கவரே} நீர் ஒரு தவசியாவீர்.(23) ஆன்மா தொடர்புடைய என் சொற்களைக் கேட்ட பிறகு நீர் என்னைச் சபிக்கலாம். அற்பமான தவத்தகுதியைக் கொண்டு எந்த மனிதனாலும் என்னை அவமதிக்க முடியாது.(24) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது தவங்கள் அனைத்தும் அழிவடைவதைக் காண நான் விரும்பவில்லை. நீர் பெருமளவில் சுடர்மிக்கத் தவங்களைச் செய்தவராவீர். நீர் உமது ஆசான்களையும், பெரியோர்களையும் நிறைவடையச் செய்துள்ளீர்[3].(25) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர் குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சரிய விதிகளை நோற்று வருவதை நான் அறிவேன். எனவே, பெரும் துன்பத்துடன் தவங்களின் மூலம் நீர் அடைந்தவற்றுக்குக் குறைவு ஏற்படவோ, உமது தவங்கள் அழிவடையவோ நான் விரும்பவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(26)

பரிதாப முறையீடு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 54-தன் மகிமையை உதங்கருக்கு உணர்த்திய கிருஷ்ணன்; தன்னுடைய சொல்லைக் கேட்காததால் கௌரவர்கள் அழிந்தனர் என்று சொன்ன கிருஷ்ணன்…

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா, களங்கமற்ற அத்யாத்மத்தை எனக்குச் சொல்வாயாக. உன் உரையைக் கேட்டப் பிறகு, ஓ! ஜனார்த்தனா உனக்கு நன்மையானதை விதிப்பேன், அல்லது உன்னைச் சபிப்பேன்” என்றார்.(1)

வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, “இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பின் {சத்வ} குணங்கள் மூன்றும் என்னையே தங்கள் புகலிடமாகக் கொண்டு என்னையே சார்ந்திருக்கின்றன என்பதை அறிவீராக. ஓ! மறுபிறப்பாளரே, ருத்திரர்களும், வசுக்களும் என்னிலிருந்தே உண்டாகினர் என்பதை அறிவீராக.(2) என்னில் அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன; அனைத்து உயிரினங்களிலும் நான் இருக்கிறேன்; இதையும் அறிவீராக. இது குறித்து உமது மனத்தில் ஐயமேதும் எழவேண்டாம்.(3) ஓ! மறுபிறப்பாளரே, தைத்தியர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள், நாகர்கள், அப்சரஸ் கூட்டங்கள் அனைவரும் என்னில் இருந்தே உண்டாகினர் என்பதையும் அறிவீராக.(4)

இருப்பு, இல்லாமை, வெளிப்பட்டவை, வெளிப்படாதவை, அழியத்தக்கவை, அழிவில்லாதவை என்று எவையெல்லாம் அழைக்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் என்னையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(5) ஓ! தவசியே, (நான்கு) வாழ்வுமுறைகளுடன் தொடர்புடையதாக அறியப்படும் நான்கு வகைக் கடமைகளும், வேதக் கடமைகள் அனைத்தும் என்னையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(6) அண்டமாக அமைந்திருக்கும் இல்லாதவை, இருந்தும் இல்லாதவை, இருப்பு இல்லாமையைக் கடந்தவை ஆகிய அனைத்தும் என்னில் இருந்தே உண்டானவையாகும். தேவர்களுக்கும் நித்திய தேவனான என்னையும் விட உயர்ந்தது (என்னைக் கடந்திருப்பது) வேறு எதுவும் கிடையாது[1].(7)ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, ஓம்! (என்ற மூல எழுத்துடன்) தொடங்கும் வேதங்கள் அனைத்தும் என்னுடன் அடையாளங்காணப் படுபவை என்பதை அறிவீராக. ஓ! பிருகு குல மைந்தரே, வேள்வித்தம்பம் நானே; (வேள்விகளில் பருகப்படும்) சோமம் நானே; (தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதற்கு வேள்விகளில் சமைக்கப்படும்) சாரு நானே; (செய்யப்படும்) ஹோமம் நானே; தேவர்களை நிறைவடையச் செய்ய வேள்வி செய்பவர்கள் செய்யும் செயல்கள் நானே; வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவன் {ஹோதா} நானே; ஊற்றப்படும் ஹவி அல்லது ஆகுதியும் {ஹவ்யம்} நானே என்பதை அறிவீராக. அத்யர்யு நானே. கல்பகன் நானே; புனிதம் நிறைந்த வேள்வி ஹவியும் நானே. பெரும் வேள்விகளில் உத்காத்ரி {உத்காதா} தன் பாடலொலிகளில் என்னையே பாடுகிறார். ஓ! பிராமணரே, ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பரிகாரச் சடங்குகள் அனைத்திலும் மங்கல மந்திரங்களையும், அமைதி நிறைந்த ஆசிகளையும் சொல்பவர்கள், அண்டத்தின் கைவினைஞனான என் புகழையே பாடுகின்றனர்.(8-10)

ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, ஓ! கல்விமானான பிராமணரே, அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையையே தன் சாரமாகக் கொண்டவனும், என் மனத்தில் இருந்து உதித்தவனுமான தர்மன் என்னுடைய மூத்த மகன் என்பதை அறிவீராக.(11) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் மகனை ஆதரிப்பதற்காக இடையறாமல் என்னை மாற்றிக் கொண்டு, இவ்வுலகில் உள்ள அல்லது இவ்வுலகை விட்டுச்சென்ற மனிதர்களின் துணையுடன் பல்வேறு கருவறைகளில் நான் பிறக்கிறேன் {அவதரிக்கிறேன்}. உண்மையில், அறத்தைப் பாதுகாக்கவும், அதை நிறுவுவதற்காகவுமே நான் இவற்றைச் செய்கிறேன்.(12) ஓ! பிருகு குல மைந்தரே, இந்த நோக்கத்திற்காக நான் ஏற்கும் வடிவங்களில் விஷ்ணு, பிரம்மன் மற்றும் சக்ரன் {இந்திரன்} என்று மூவுலகங்களிலும் அறியப்படுகிறேன்.(13)

இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நானே, அவற்றை அழிப்பவனும் நானே. மாற்றமடையாதவனான நானே பாவம் நிறைந்த தன்மையுடன் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கிறேன்.(14) ஒவ்வொரு யுகத்திலும், என் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் பல்வேறு வகைக் கருவறைகளில் நுழைந்து அறத்தின் பாலத்தைச் செப்பனிடுகிறேன்.(15) ஓ! பிருகு குல மைந்தரே, தேவ வகையில் வாழும்போது உண்மையில் நான் ஒரு தேவனுக்குரிய அனைத்து வழிமுறைகளிலும் செயல்படுவேன்.(16)

ஓ! பிருகு குல மைந்தரே, கந்தர்வ வகையில் வாழும்போது கந்தர்வனுக்குரிய அனைத்து வழிமுறைகளிலும் நான் செயல்படுவேன்.(17) நாகர்களின் வகையில் வாழும்போது நாகனாகச் செயல்படுவேன், யக்ஷர்கள் அல்லது ராட்சசர்களின் வகையில் வாழும்போது அந்தந்த வகைக்குரிய வழியிலேயே நான் செயல்படுவேன்.(18) இப்போது மனித வகையில் பிறந்திருக்கும் நான் மனிதருக்குரிய வழிமுறையிலேயே செயல்பட வேண்டும். நான் அவர்களிடம் (கௌரவர்களிடம்) மிகப் பரிதாபகரமான வகையில் முறையிட்டேன். ஆனால், மூடர்களான அவர்கள் மதி கலங்கியவர்களாக என் சொற்களை ஏற்க மறுத்தனர்.(19)

கோபத்தில் நிறைந்த நான், (என் செய்தியைப் புறக்கணிப்பதன் விளைவால் ஏற்படப்போகும்) பெரும் பயங்கரத்தைச் சொல்லி அவர்களை அச்சுறுத்தினேன். ஆனால் மீண்டும் அவர்களுக்கு என் வழக்கமான (மனித) வடிவையே காட்டினேன்.(20) மறத்திற்கு {அதர்மத்திற்கு} வசப்பட்டவர்களும், காலமெனும் அறத்தால் {தர்மத்தால்} தாக்கப்பட்டவர்களும், போர்க்களத்தில் நியாயமாகக் கொல்லப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தார்கள் என்பதில் ஐயமில்லை.(21) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, பாண்டவர்களும் பெரும்புகழை அடைந்திருக்கிறார்கள். நீர் கேட்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.(22)

பாலைவன நீர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 55-உதங்கருக்கு விஷ்வரூப தரிசனம் அளித்த கிருஷ்ணன்; உதங்கர் பெற்ற வரம்; சண்டாள வடிவில் வந்த இந்திரன் கொடுத்த அமிர்தத்தை மறுத்த உதங்கர்; பாலைவனத்திலும் நீர்கிடைக்கும் வரத்தை உதங்கருக்கு அளித்த கிருஷ்ணன்…

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஜனார்த்தனா, அண்டத்தைப் படைத்தவன் நீ என்பதை நான் அறிவேன். நீ என்னிடம் கொண்ட கருணையின் விளைவே இந்த ஞானம் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, என் மனம் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பதால் உற்சாகம் நிறைந்து அமைதியின் வசப்பட்டதாக இருக்கிறது. ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, இதற்கு மேலும் என் இதயம் உன்னைச் சபிக்க விரும்பவில்லை என்பதை அறிவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, அற்பக் கருணையையாவது உன்னிடம் அடையத்தகுந்தவனாக நான் இருந்தால், உன் இறை வடிவை {விஷ்ணு ரூபத்தை} எனக்கு ஒருமுறை காட்டுவாயாக” என்று கேட்டார்”.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவரிடம் நிறைவடைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} கண்ட நித்தியமான வைஷ்ணவ வடிவை உதங்கருக்குக் காண்பித்தான்.(4) உதங்கர், உயர் ஆன்ம வாசுதேவனை வலிமைமிக்கக் கரங்களுடன் கூடியவனாக அண்ட வடிவில் கண்டார். அந்த வடிவின் பிரகாசம் சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, ஆயிரம் சூரியர்களைப் போன்றோ இருந்தது. அது {அவ்வடிவம்} வெளிமுழுவதையும் நிறைத்தபடி அவரது முன்பு நின்றது. அனைத்துப் பக்கங்களிலும் முகங்களைக் கொண்டிருந்தது.(5) அந்தப் பிராமணர் உதங்கர், உயர்ந்ததும், அற்புதம் நிறைந்ததுமான விஷ்ணுவின் அந்த வைஷ்ணவ வடிவைக் கண்டு, உண்மையில் (அத்தோற்றத்தில்) பரமனையே கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தார்.(6)

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! அண்டத்தையே கைவினையாய் கொண்டவனே, ஓ! அண்டத்தின் ஆன்மாவே, ஓ! அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமே நான் உன்னை வணங்குகிறேன். உன் பாதத்தால் மொத்த பூமியையும் மறைத்தும், தலையால் ஆகாயத்தை நிறைத்தும் இருக்கிறாய்.(7) பூமிக்கும், ஆகாயத்திற்கும் இடையில் இருப்பதை உன் வயிறு நிறைத்திருக்கிறது. திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவை யாவும் நீயே.(8) சிறப்பானதும், அழிவற்றதுமான இந்த வடிவை விலக்குவாயாக. நான் இப்போது உன்னை நித்தியமான (மனித) வடிவில் காண விரும்புகிறேன்” என்றார்”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, நிறைவடைந்த ஆன்மாவைக் கொண்ட கோவிந்தன், அவரிடம் {உதங்கரிடம்}, “வரம் ஏதும் கேட்பீராக” என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

எனினும் உதங்கர்,(10) “ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னுடைய இந்த வடிவைக் கண்டதே எனக்குப் போதுமான வரமாகும்” என்றார்.(11)

எனினும், கிருஷ்ணன் மீண்டும் அவரிடம், “இக்காரியத்தில் தயங்காதீர். இது செய்யப்பட வேண்டும். என் வடிவைக் கண்டது கனியற்றதாகக் கூடாது” என்றான்.(12)

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தலைவா, எது செய்யப்பட வேண்டுமென நீ நினைக்கிறாயோ, அதை நான் நிறைவேற்ற வேண்டும். நான் எங்கெல்லாம் நீரை விரும்புவேனோ அங்கெல்லாம் அஃதை அடைய விரும்புகிறேன். இத்தகைய பாலைவனங்களில் நீர் கிடைப்பது அரிதாகும்” என்றார்.(13)

அந்தச் சக்தியை விலக்கிக் கொண்ட பரமன், அப்போது உதங்கரிடம், “எங்கெல்லாம் உமக்கு நீர் தேவைப்படுகிறதோ, அங்கே என்னை நினைப்பீராக” என்று சொன்னான். இவ்வாறு சொல்லிவிட்டு அவன் துவாரகையை நோக்கிச் சென்றான்.(14)

அதன் பிறகு ஒரு நாள் சிறப்புமிக்கவரான உதங்கர், பாலைவனத்தில் மிகுந்த தாகத்துடன் நீர் வேண்டித் திரிந்தார். அவ்வாறு திரியும்போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நினைத்தார்.(15) அப்போது, அந்த நுண்ணறிவுமிக்க முனிவர் {உதங்கர்}, அந்தப் பாலைவனத்தில், உடல்முழுவதும் புழுதி படர்ந்தவனும், நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டவனுமான, (சண்டாள வகையைச் சேர்ந்த) ஒரு நிர்வாண வேடனை {புலையனைக்}[1] கண்டார்.(16) மிகக் கடுந்தோற்றத்தில் இருந்த அவன், ஒரு வாளையும், வில்லையும், கணைகளையும் தரித்திருந்தான். அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், அந்த வேடனின் சிறுநீர் உறுப்பில் இருந்து {காலருகில் உள்ள தோற்பையில்} அபரிமிதமான நீர் வருவதை {இருப்பதைக்} கண்டார்[2].(17)உதங்கர் கிருஷ்ணனை நினைத்ததும், அந்த வேடன் சிரித்துக் கொண்டே அவரிடம், “ஓ! உதங்கரே, ஓ! பிருகு குலத்தவரே, இந்த நீரை என்னிடம் இருந்து நீர் பெறுவீராக.(18) தாகத்தால் பீடிக்கப்பட்ட உம்மிடம் பெருங்கருணை கொள்கிறேன்” என்றான்.

வேடனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த நீரை ஏற்கும் விருப்பம் எதையும் அந்தத் தவசி வெளிக்காட்டவில்லை.(19) நுண்ணறிவுமிக்க உதங்கர், மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நிந்திக்கவும் தொடங்கினார். எனினும் அந்த வேடன் மீண்டும் மீண்டும் அம்முனிவரிடம் “பருகுவீராக” என்றான்.(20) அந்தத் தவசி, இவ்வாறு அளிக்கப்பட்ட நீரைப் பருக மறுத்தார். மறுபுறம், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்ட அவர் கோபவசப்பட்டார். ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மா முனிவரின் தீர்மானத்தால் அவமதிக்கப்பட்ட அந்த வேடன், தன் நாய் கூட்டத்துடன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். (அற்புதம் நிறைந்த) அந்த மறைதலைக் கண்ட உதங்கர் நாணத்தால் நிறைந்தார்.(22) அவர், பகைவர்களைக் கொல்பவனான கிருஷ்ணனால் (அவன் கொடுத்த வரத்தால்) தாம் வஞ்சிக்கப்பட்டதாகவும் நினைத்தார்.

மிக விரைவில், சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்} அந்த (வேடன் வந்த) வழியிலேயே உதங்கரிடம் வந்தான். கிருஷ்ணனிடம் பேசிய அந்தப் பிராமணர் {உதங்கர்}, “ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! தலைவா, பிராமணர்களில் முதன்மையான ஒருவனுக்கு ஒரு வேடனின் சிறுநீர் வடிவில் {தோற்பையிலுள்ள} நீரை அளிப்பது முற்றிலும் தகாததாகும்” என்றார்[3].பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன், இச்சொற்களைச் சொன்ன உதங்கருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மென்மையான சொற்கள் பலவற்றைச் சொல்லி, “எந்த வடிவில் நீரை உமக்கு அளிப்பது முறையோ அந்த வடிவிலேயே உமக்கு நீர் அளிக்கப்பட்டது. ஐயோ, ஆனால் நீர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உமக்காக வஜ்ரதாரியான புரந்தரன் என்னால் வேண்டிக்கொள்ளப்பட்டான்.(23-27)

பலமிக்க அந்தத் தேவனிடம், “நீரின் வடிவில் உதங்கருக்கு அமுதத்தை அளிப்பாயாக” என்பதே நான் சொன்ன சொற்களாகும். அப்போது தேவர்களின் தலைவன் என்னிடம், “இறக்கக்கூடிய ஒருவன் இறவாதவன் {அமரன்} ஆவது முறையாகாது.(28) உதங்கருக்கு வேறேதும் வரத்தைக் கொடுப்பாயாக” என்றான்.

ஓ! பிருகுவின் மகனே, இச்சொற்களே மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லப்பட்டன. எனினும், “உதங்கருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டும்” என்ற இந்தச் சொற்களால் மீண்டும் சச்சியின் தலைவன் {இந்திரன்} என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டான்.(29)

தேவர்களின் தலைவன், எனக்கு ஆறுதலளிக்கும் வகையில், “ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, அவருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டுமெனில்,(30) நான் ஒரு வேடனின் வடிவை ஏற்று உயர் ஆன்மா கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்துக்கு அதைக் கொடுப்பேன். அவ்வாறே அந்தப் பிருகுவின் மைந்தர் அதை ஏற்றுக் கொள்வாரெனில்,(31) ஓ! தலைவா, நான் அவருக்கு அதைக் கொடுக்கச் செல்வேன். எனினும், அவர் அலட்சியத்தால் என்னைத் திருப்பி அனுப்பினால் எக்காரணத்தினாலும் நான் அவருக்கு அதைக் கொடுக்க மாட்டேன்” என்றான்[4].(32)என்னிடம் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்ட வாசவன் {இந்திரன்}, அமுதத்தைக் கொடுப்பதற்காகவே அந்தத் தோற்றத்தில் உம் முன் தோன்றினான். எனினும், அந்தச் சிறப்புமிக்கவன் சண்டாளத் தோற்றத்தில் இருப்பதைக் கொண்டு நீர் அவனை அலட்சியம் செய்து அனுப்பிவிட்டீர். உமது பிழை பெரியதாகும். உமது விருப்பத்தைப் பொறுத்தவரையில் என் அதிகாரத்திற்கு உட்பட்டு என்னால் செய்ய முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உண்மையில், துன்பம் நிறைந்த உமது தாகத்தைத் தணிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே, நீர் நீரை விரும்பும் நாட்களில்,(33-35) நீருண்ட மேங்கங்கள் இந்தப் பாலைவனத்தில் எழும். ஓ! பிருகு குல மைந்தரே, அந்த மேகங்கள் உமக்குச் சுவைமிக்க நீரை அளிக்கும். உண்மையில், அம்மேகங்கள் உதங்க மேகங்கள் என்று உலகில் அறியப்படும்” என்றான் {கிருஷ்ணன்}.(36)

கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், மகிழ்ச்சியால் நிறைந்தார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த நாள் வரையிலும் வறண்ட பாலைவனங்களில் உதங்க மேகங்கள் (தோன்றி) மழையைப் பொழிகின்றன” {என்றார் வைசம்பாயனர்}.(37)

குருதக்ஷிணை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 56-முதுமையைக் கண்டு வருந்திய உதங்கர்; உதங்கருக்கு இளமையைக் கொடுத்துத் தமது மகளைத் திருமணம் செய்து கொடுத்த கௌதமர்; உதங்கரிடம் அஹல்யை கேட்ட குருதக்ஷிணை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வலிமைகள் அனைத்திற்கும் பிறப்பிடமான விஷ்ணுவையே சபிக்க விரும்பும் அளவுக்கு உயர் ஆன்ம உதங்கர் செய்த தவங்கள் என்ன?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, உதங்கர் கடுந்தவங்களைச் செய்தவராவார். அவர் தமது ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார். பெரும் சக்தி கொண்ட அவர், வேறு எவரையும் வழிபடுவதைத் தவிர்த்தார்.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, உதங்கரின் அர்ப்பணிப்பைப் போலத் தாங்கள் ஆசானிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் பெரியதாக இருக்க வேண்டுமென முனிவர்களின் பிள்ளைகள் அனைவரும் விரும்பினர்.(3) ஓ! ஜனமேஜயா, கௌதமர், தமது எண்ணற்ற சீடர்களுக்கு மத்தியில் உதங்கரிடம் நிறைவும் அன்பும் கொண்டிருந்தார்.(4) உண்மையில், உதங்கரின் தற்கட்டுப்பாடு, தூய ஒழுக்கம், மற்றும் ஆற்றலுக்கேற்ப அவர் ஆற்றிய தொண்டு ஆகியவற்றில் கௌதமர் உயர்வான நிறைவை அடைந்திருந்தார்.(5)

ஒருவர்பின் ஒருவராக ஆயிரக்கணக்கான சீடர்கள், தங்கள் (கல்வியின் காலம் முடிவடைந்து) ஆசானின் அனுமதியைப் பெற்றுத் தங்கள் தங்களுக்குரிய வீடுகளுக்குத் திரும்பினர். எனினும், உதங்கரிடம் கொண்ட பேரன்பால் கௌதமரால் அவரைத் தமது ஆசிரமத்தை விட்டு அனுப்ப இயலவில்லை.(6) ஓ! மகனே, காலப்போக்கில் பெருந்தவசியான உதங்கர் முதுமையை அடைந்தார். எனினும், தமது ஆசானிடம் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் அத்தவசி அதனை உணரவில்லை.(7) ஓ! ஏகாதிபதி, ஒருநாள் அவர் தமது ஆசானுக்காக விறகு கொண்டு வரச் சென்றார். விரைவில் பெருஞ்சுமை கொண்ட விறகை உதங்கர் கொண்டு வந்தார்.(8)

ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, உழைப்பால் களைத்தவரும், பசித்தவரும், தன் தலையில் சுமந்த சுமையால் பீடிக்கப்பட்டவருமான அவர், ஓ! மன்னா, அந்தச் சுமையைப் பூமியில் போட்டார்.(9) அவரது சடாமுடியில் வெள்ளிக்கு ஒப்பாக இருந்த ஒரு மயிர் {சடை} அந்தச் சுமையுடன் சிக்கியிருந்தது. அந்தச் சுமை வீசப்பட்ட போது, அதனுடன் சேர்ந்து அந்தச் சடாமுடியும் பூமியில் விழுந்தது.(10) ஓ! பாரதா, அந்தச் சுமையால் ஒடுக்கப்பட்டவரும், பசியில் மூழ்கியவருமான உதங்கர், முதிய வயதுக்கான அந்த அறிகுறியைக் கண்டு பெரும் துன்பத்துடன் உரக்க அழத் தொடங்கினார்.(11)

அப்போது, கடமைகள் அனைத்தையும் அறிந்தவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், உருண்டு திரண்ட இடை கொண்டவளும், கீழ் நோக்கும் முகத்துடன் கூடியவளுமான அவரது ஆசானின் {கௌதமரின்} மகள், தன் தந்தையின் ஆணையின் பேரில் உதங்கரின் கண்ணீரைத் தன் கைகளில் ஏந்தினாள். அவள் ஏந்திய கண்ணீர்த்துளிகள் அவளது கைகளில் எரிவதாகத் தெரிந்தது. அதற்கு மேலும் அதைத் தாங்க முடியாததால் அவள் அதைப் பூமியில் போடும்படி நேர்ந்தது.(12,13) உதங்கரின் கண்ணீர் துளிகளைப் பூமாதேவியாலேயே தாங்க முடியவில்லை.

நிறைவடைந்த இதயத்துடன் கூடிய கௌதமர், மறுபிறப்பாளரான உதங்கரிடம்,(14) “ஓ! மகனே, உன் மனம் ஏன் இன்று துயரத்தால் இவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கிறது? ஓ! கல்விமானான முனிவா, நான் விரிவாகக் கேட்க விரும்புவதால் என்னிடம் மென்மையாகவும், அமைதியாகவும் சொல்வாயாக” என்றார்.(15)

உதங்கர் {கௌதமரிடம்}, “உம்மிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்ட மனத்துடன், உமக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்யும் விருப்பத்தில், என் இதயப் பக்தியை உம்மிடம் திருப்பி, என் எண்ணங்களை முழுமையாக உம்மில் வசிக்கச் செய்து,(16) முதுமை எனக்கு நேர்வதை (அது நேரும்வரை) முற்றிலும் அறியாது இருந்திருக்கிறேன். இன்பமெதையும் நான் அறிந்தவனில்லை. உம்முடன் நூறு வருட காலம் வசித்திருப்பினும் நான் செல்வதற்கான அனுமதியை நீர் தரவில்லை.(17) எனினும், எனக்கு இளையவர்களான உமது சீடர்கள் பலர் உமது அனுமதியைப் பெற்றுத் திரும்பிவிட்டனர். உண்மையில், ஞானத்துடன் கூடிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முதன்மையான பிராமணர்கள் (உமது ஆசிரமத்தை விட்டுச் செல்வதற்கும், தாங்கள் ஆசானாவதற்கும்) உமது அனுமதியைப் பெற்றனர்” என்றார்.(18)

கௌதமர் {உதங்கரிடம்}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவனே, உன்னிடம் கொண்ட அன்பு மற்றும் பாசத்தாலும், கடமையுணர்வுடன் நீ எனக்குச் செய்த தொண்டின் விளைவாலும் நான் இதை அறிந்து கொள்ளாமலே நீண்ட காலம் கடந்துவிட்டது.(19) எனினும், ஓ! பிருகு குலத்தவனே, இந்த இடத்தைவிட்டுச் செல்ல நீ விரும்பினால், எந்தத் தாமதமுமின்றி என் அனுமதியுடன் செல்வாயாக” என்றார்.(20)

உதங்கர் {கௌதமரிடம்}, “நான் என் ஆசானுக்கு என்ன தர வேண்டும்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இதை எனக்குச் சொல்வீராக. ஓ! தலைவரே, அதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, உமது அனுமதியுடன் நான் இங்கிருந்து செல்வேன்” என்றார்.(21)

கௌதமர் {உதங்கரிடம்}, “ஆசானின் மனநிறைவே இறுதிக் கட்டணம் என நல்லோர் சொல்கின்றனர்[1]. ஓ! மறுபிறப்பாளனே, உன் ஒழுக்கத்தில் நான் நிச்சயம் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன்.(22) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, இதன் காரணமாக நான் மிகவும் மனம் நிறைந்தவனாக இருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நீ இன்று பதினாறு வயது இளைஞனானால்,(23) என் மகளையே உனக்கு மனைவியாகத் தருவேன். உன் சக்தியைப் பொறுக்கும் வல்லமை இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணுக்கும் கிடையாது” என்றார்.(24)கௌதமரின் இந்தச் சொற்களால் உடனடியாக இளைஞனாக மாறிய உதங்கர், அந்தப் புகழ்பெற்ற கன்னிகையைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார். தமது ஆசானின் அனுமதியைப் பெற்ற அவர், தம் ஆசானின் மனைவியிடம் {குருபத்னியிடம்},(25) “என் ஆசிரியையான உமக்கு இறுதிக் கட்டணமாக {குருதக்ஷிணையாக} நான் என்ன கொடுக்க வேண்டும்? எனக்கு ஆணையிடுவீராக. உமக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் செல்வத்தைக் கொண்டோ என் உயிரைக் கொண்டோ நிறைவேற்ற விரும்புகிறேன்.(26) இவ்வுலகில் பெரும் மதிப்பிற்குரியதும், அற்புதம் நிறைந்ததும் எந்த ரத்தினத்தையும் என் தவத்தின் உதவியால் உமக்கு நான் கொண்டு வருவேன். இதில் எனக்கு ஐயமேதுமில்லை” என்றார் {உதங்கர்}.(27)

அஹல்யை, “ஓ! கல்விமானான பிராமணா, ஓ! பாவமற்றவனே, உன் தடங்கலற்ற அர்ப்பணிப்பில் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். இதுவே போதுமானதாகும். நீ அருளப்பட்டிருப்பாயாக. விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக” என்றாள்”.(28)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “எனினும், ஓ! ஏகாதிபதி, உதங்கர் மீண்டும் அவளிடம், “ஓ! தாயே, எனக்கு ஆணையிடுவீராக. உமக்கு ஏற்புடைய ஏதாவதொன்றை நான் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்” என்றார்.(29)

அஹல்யை, “நீ அருளப்பட்டிருப்பாயாக, சௌதாஸனின் மனைவி அணிந்திருக்கும் தெய்வீகக் காது குண்டலங்களை எனக்குக் கொண்டு வருவாயாக. அப்போது, நீ உன் ஆசானுக்குரியதை நன்கு கொடுத்ததாகும்” என்றாள்.(30)

ஓ! ஜனமேஜயா, “அவ்வாறே ஆகட்டும்” என்று அவளிடம் சொன்ன உதங்கர், தமது ஆசானின் மனைவிக்கு ஏற்புடையதைச் செய்வதற்கு அந்தக் காது குண்டலங்களைக் கொண்டுவரத் தீர்மானித்தார்.(31) பிராமணர்களில் முதன்மையானவரான உதங்கர், (வசிஷ்டரின் சாபத்தால்) மனிதவூனுண்ணியாக மாறி இருந்த சௌதாஸனிடம் அந்தக் காதுகுண்டலங்களை வேண்டிப் பெற எந்தத் தாமதமுமின்றிச் சென்றார்[2].(32)அதேவேளையில் கௌதமர், தமது மனைவியிடம், “இன்று உதங்கனைக் காணவில்லையே” என்று கேட்டார். இவ்வாறு கேட்கப்பட்ட அவள் (சௌதாஸனுடைய ராணியின்) காதுகுண்டலங்களைப் பெற அவர் சென்றிருப்பதைக் குறித்து அவரிடம் சொன்னாள்.(33)

இதன்பேரில் கௌதமர், “நீ விவேகத்துடன் செயல்படவில்லை. (வசிஷ்டரால்) சபிக்கப்பட்ட (மனித ஊனுண்ணியாக மாறியுள்ள) அந்த மன்னன் {சௌதாஸன்} நிச்சயம் உதங்கனைக் கொல்லப் போகிறான்” என்றார்.(34)

அஹல்யை, “ஓ! புனிதமானவரே, இதை அறியாமல் நான் இப்பணியில் உதங்கனை ஈடுபடுத்தினேன். எனினும், உமது அருளால் அவன் எந்த ஆபத்துக்கும் உள்ளாக மாட்டான்” என்றாள்.(35)

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமர், “அப்படியே ஆகட்டும்” என்றார். அதே வேளையில் உதங்கர், ஓர் ஆளரவமற்ற காட்டில் மன்னன் ஸௌதாஸனைச் சந்தித்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(36)

காதுகுண்டலங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 57- உதங்கரை உண்ண முயன்ற ஸௌதாஸன்; குருதக்ஷிணை அளித்துவிட்டுத் திரும்ப வருவதாகச் சொல்லி அவனது மனைவியின் குண்டலங்களை வேண்டிய உதங்கர்; குண்டலத்தின் சிறப்பைச் சொல்லி சௌதாசனின் அனுமதியை வேண்டிய ராணி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, பிராமணரான உதங்கர், பயங்கரம் நிறைந்த முகத்தோற்றத்துடனும், மனிதக் குருதியால் நனைந்திருந்த நீண்ட தாடியுடனும் கூடிய மன்னனைக் {ஸௌதாஸனை} கண்டும் கலக்கமடையவில்லை.(1) ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அச்சத்தைத் தூண்டுபவனும் இரண்டாவது யமனைப் போலத் தெரிந்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, எழுந்திருந்து உதங்கரிடம்,(2) “ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் நான் உணவு தேடிக் கொண்டிருக்கும்போது நற்பேற்றினாலேயே நீ என்னிடம் வந்தாய்” என்றான்.(3)

உதங்கர் {ஸௌதாஸனிடம்}, “ஓ! மன்னா, நான் என் ஆசானின் நிமித்தமாகத் திரிந்து கொண்டிருக்கும்போது இங்கே வந்தேன் என்பதை அறிவாயாக. ஒருவன் தன் ஆசானின் நிமித்தமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அவனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்று ஞானிகள் சொல்கின்றனர்” என்றார்.(4)

மன்னன் {ஸௌதாஸன்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் எனக்கான உணவு விதிக்கப்பட்டிருக்கிறது. நான் பசித்திருக்கிறேன். எனவே, இன்று நான் உன்னைத் தப்பவிட இயலாது” என்றான்.(5)

உதங்கர், “ஓ! மன்னா, அவ்வாறே ஆகட்டும். என்னுடன் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வாயாக. என் ஆசானுக்காகத் திரிவதை நான் நிறுத்திய பிறகு, நான் மீண்டும் உன்னிடம் வந்து, என்னை உன் ஆளுகையில் வைப்பேன்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, என் ஆசானுக்காக நான் வேண்டும் பொருள் உன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். எனவே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் அதை உன்னிடம் வேண்டுகிறேன்.(7) நீ மேன்மையான பிராமணர்களுக்கு நாள்தோறும் முதன்மையான ரத்தினங்களைக் கொடையளிக்கிறாய். ஓ! மனிதர்களின் தலைவா, கொடைகளை எவரிடம் இருந்து ஏற்கலாமோ அந்தக் கொடையாளியாக நீ இருக்கிறாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் முன் இருக்கும் நானும் ஈகைக்குத் தகுந்தவனே என்பதை அறிவாயாக.(8) ஓ! மன்னா, உன் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பொருளை என் ஆசானுக்கான கொடையாக ஏற்றுச் சென்று,(9) என் உடன்பாட்டின் விளைவால் மீண்டும் உன்னிடமே வந்து என்னை நான் உன் ஆதிக்கத்தின் கீழ் நிறுத்திக் கொள்வேன். இதை நான் உண்மையாகவே உனக்கு உறுதி கூறுகிறேன். இதில் பொய்ம்மையேதுமில்லை. கேலிக்காகக் கூட நான் இதற்கு முன் எப்போதும் பொய்யேதும் பேசியவனில்லை. அவ்வாறிருக்கையில் பிறந்த சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?” என்றார் {உதங்கர்}.(10)

ஸௌதாஸன், “உன் ஆசானுக்காக நீ வேண்டும் பொருளை என்னால் உன் கரத்தில் வைக்க முடியுமென்றால், கொடையேற்கத் தகுந்தவனாக நீ கருதப்படுகிறாய் என்றால், அந்தப் பொருள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)

உதங்கர், “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! சௌதாஸா, கொடைகளை எவரிடம் இருந்து பெறலாமோ என் கணிப்பின்படி அதற்கு மிகத் தகுந்தவன் நீ. எனவே, நான் (உனது ராணி அணிந்திருக்கும்) காது குண்டலங்களை இரந்து பெற உன்னிடம் வந்திருக்கிறேன்” என்றார்.(12)

ஸௌதாஸன், “ஓ! கல்விமானும், மறுபிறப்பாளனுமான முனிவா, அந்தக் காது குண்டலங்கள் என் மனைவிக்கு உரியவை. அவற்றை அவளிடமே கேட்க வேண்டும். எனவே, நீ என்னிடம் இருந்து வேறு ஏதாவது கேட்பாயாக. ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உனக்கு அதைக் கொடுப்பேன்” என்றான்.(13)

உதங்கர், “நமக்கு ஏதும் அதிகாரம் இருக்குமெனக் கருதப்பட்டால், இந்தச் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்துவாயாக. அந்தக் காது குண்டலங்களை எனக்குக் கொடுப்பாயாக. ஓ! மன்னா, வாக்கில் வாய்மை நிறைந்தவனாக இருப்பாயாக” என்றார்”.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன், மீண்டும் உதங்கரிடம், “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, என் சொல்லின் அடிப்படையில் மதிப்புமிக்க என் ராணியிடம் சென்று,(15) “கொடுப்பாயாக” என அவளிடம் கேட்பாயாக. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, தூய நோன்புகளைக் கொண்டவளான அவள் இவ்வாறு உன்னால் கேட்கப்பட்டால், என் ஆணையின் பேரில் அந்தக் காதுகுண்டலங்களை நிச்சயம் உனக்குக் கொடுப்பாள்” என்றான்.(16)

உதங்கர், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் ராணியை எங்கே சந்திக்க இயலும்? ஏன் நீயே அவளிடம் செல்லாமல் இருக்கிறாய்?” என்று கேட்டார்.(17)

ஸௌதாஸன், “நீ இப்போது அவளை ஒரு காட்டாற்றின் அருகில் காணலாம். நாளின் ஆறாவது காலமாகையால் என்னால் இன்று அவளைக் காண முடியாது” என்றான்”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் அந்த இடத்தை விட்ட அகன்றார். மதயந்தியைக் கண்டு, இக்காரியம் குறித்து அவளுக்குச் சொன்னார்.(19)

சௌதாஸனின் ஆணையைக் கேட்டவளும், அகன்ற கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண்மணி, ஓ! ஜனமேஜயா, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட உதங்கரிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்,(20) “ஓ! மறுபிறப்பாளரே, இஃது இவ்வாறே இருக்கிறது. எனினும், ஓ! பாவமற்றவரே, நீர் பொய் சொல்வதில்லை என்று எனக்கு உறுதிகூற வேண்டும். என் கணவரிடம் இருந்து ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவதே உமக்குத் தகும்.(21) மதிப்புமிக்க ரத்தினங்களால் செய்யப்பட்ட இந்தத் தெய்வீகக் காது குண்டலங்கள், அபகரித்துச் செல்லும் வாய்ப்புக்காகத் தேவர்கள், யக்ஷர்கள் மற்றும் பெரும் முனிவர்களாலும் எப்போதும் கண்காணிக்கப்படுவையாக இருக்கின்றன.(22) இந்த மதிப்புமிக்கப் பொருளை எந்தக் காலத்திலும் கீழே வைத்தால் நாகர்களால் இது களவாடப்படும். உண்பதன் விளைவால் தூய்மையற்றிருக்கும் ஒருவரால் அணியப்பட்டால் அது யக்ஷர்களால் எடுத்துக் கொள்ளப்படும். (இந்த மதிப்புமிக்கக் காதுகுண்டலங்களில் கவனம் இல்லாமல்) இவற்றை அணிந்திருப்பவர் உறங்கினால் தேவர்கள் அபகரித்துச் செல்வர்.(23) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அத்தகைய வாய்ப்புகள் அமையும்போது, விழிப்புணர்வற்றவர்களால் அணியப்பட்டால் தேவர்கள், ராட்சசர்கள் மற்றும் நாகர்களாலும் களவாடப்படக்கூடியவையா இந்தக் காது குண்டலங்கள் இருக்கின்றன.(24)

ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தக் காதுகுண்டலங்கள், இரவும் பகலும் தங்கத்தை உற்பத்தி செய்கின்றன. இறவில் நட்சத்திர மற்றும் விண்மீன் கூட்டங்களின் கதிர்களை ஈர்க்கும் வகையில் அவை பிரகாசமாக ஒளிர்கின்றன.(25) ஓ! புனிதமானவரே, இவற்றை அணிபவர் எவரும், பசி, தாகம் மற்றும் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவர். இந்தக் காது குண்டலங்களை அணிபவர், நஞ்சு, நெருப்பு மற்றும் அனைத்து வகை ஆபத்துகளில் எழும் அச்சங்களில் இருந்தும் விடுபடுவர்.(26) குட்டையான ஒருவர் அணிந்தால் இவை சிறியனவாகும். நெட்டையான ஒருவன் அணிந்தால் இவை அளவில் வளரும்.(27) என்னுடைய இந்தக் காது குண்டலங்கள் இத்தகைய குணங்களைக் கொண்டவையாகும். இவை எங்கும் புகழவும், மதிக்கவும் படுகின்றன. உண்மையில், இவை மூவுலகங்களில் அறியப்பட்டிருக்கின்றன. எனவே, (என் கணவரிடமிருந்து) ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவீராக” என்றாள் {மதயந்தி}.(28)

நாகலோகம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 5-அடையாளம் பெற்று வந்து ராணியிடம் கொடுத்துக் குண்டலங்களைப் பெற்ற உதங்கர்; குண்டலங்களைக் கவர்ந்து சென்ற நாகன்; இந்திரனின் துணையால் நாகலோகம் சென்று அவற்றைப் பெற்றது; அஹல்யையிடம் குண்டலங்களைக் கொடுத்த உதங்கர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}“உதங்கர், தன் நண்பர்களிடம் எப்போதும் நல்ல மனநிலையில் உள்ள மன்னன் சௌதாஸனிடம் திரும்பி, (தாம் உண்மையில் மன்னனிடம் இருந்தே வந்தார் என்று மதயந்தியை நம்பச் செய்ய) ஏதாவதொரு அடையாளத்தைத் தருமாறு வேண்டினார். இக்ஷாகு குலத்தில் முதன்மையான அவன் ஓர் அடையாளத்தை அவரிடம் கொடுத்தான்.(1)

ஸௌதாஸன், “என்னுடைய தற்போதைய நிலை பொறுக்கமுடியாததாகும். வேறெந்த புகலிடத்தையும் நான் காணவில்லை. என் விருப்பம் இதுவென அறிந்து காதுகுண்டலங்களை நீ கொடுப்பாயாக[1]” என்றான்.(2)மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் ராணியிடம் சென்று, அவளுடைய தலைவனின் சொற்களைச் சொன்னார். இந்தச் சொற்களைக் கேட்ட ராணி உதங்கரிடம் தன் காது குண்டலங்களைக் கொடுத்தாள்.(3) காது குண்டலங்களைப் பெற்றுக் கொண்ட உதங்கர் மன்னனிடம் {ஸௌதாஸனிடம்} திரும்ப வந்து அவனிடம், “ஓ! ஏகாதிபதி, ராணிக்கு அடையாளமாக நீ சொல்லி அனுப்பிய அந்தப் புதிரான சொற்களின் பொருளை நான் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(4)

ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “படைப்பின் தொடக்கத்திலிருந்தே க்ஷத்திரியர்கள் பிராமணர்களை மதிப்பது காணப்படுகிறது. எனினும், (க்ஷத்திரியர்களின் பங்கிற்கு) பிராமணர்களிடம் பல குற்றங்களும் எழுகின்றன.(5) என்னைப் பொறுத்தவரையில் நான் எப்போதும் அவர்கள் முன்பு பணிவுடன் இருந்தேன். நான் ஒரு பிராமணரின் மூலமே துன்பத்தில் மூழ்கினேன். மதயந்தியைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை.(6) உண்மையில், ஓ! உயர்ந்த இலக்கைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, சொர்க்கத்தின் வாயில்களை அடைவதற்கோ, இங்கே தொடர்வதற்கோ வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை.(7) பிராமணர்களுடன் பகைமை பாராட்டும் மன்னன் இம்மையில் தொடர்ந்து வாழ்வதும், மறுமையில் இன்பத்தை அடைவதும் சாத்தியமற்றதாகும்.(8) எனவே நான் உன்னால் விரும்பப்படும் காதுகுண்டலங்களை உனக்குக் கொடுத்தேன்[2]. நீ இன்று என்னுடன் செய்து கொண்ட உடன்பாட்டைக் காப்பாயாக” என்றான் {சௌதாசன்}.(9)உதங்கர் {சௌதாசனிடம்}, “ஓ! மன்னா, நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியின்படியே நிச்சயம் நடப்பேன். நான் உண்மையில் திரும்பி வந்து என்னை உன் ஆளுகையின் கீழ் நிறுத்திக் கொள்வேன். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி உண்டு” என்றார்.(10)

ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “ஓ! கல்விமானான பிராமணா, உன் மனத்தில் இருப்பதைச் சொல்வாயாக. உன் சொற்களுக்கு நிச்சயம் நான் மறுமொழி கூறுவேன். உன் மனத்தில் இருக்கும் ஐயம் எதையும் நான் விலக்குவேன். இதில் எனக்குத் தயக்கமேதும் இல்லை” என்றான்.(11)

உதங்கர் {சௌதாசனிடம்}, “கடமைகளின் விதிகளில் திறம்பெற்றோர், பிராமணர்கள் கட்டுப்பாடுடைய வாக்கைக் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். நண்பர்களிடம் தவறாக நடந்து கொள்பவன் கள்வனைப் போன்ற ஒரு தீயவனாகக் கருதப்படுகிறான்[3].(12) ஓ! மன்னா, நீ இன்று என் நண்பனானாய். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனையை எனக்குச் சொல்வாயாக.(13) என்னைப் பொறுத்தவரையில் நான் என் விருப்பங்கள் கனிந்த நிலையை அடைந்துவிட்டேன். நீயோ மனித ஊனுண்ணியாக இருக்கிறாய். நான் உன்னிடம் திரும்பி வருவது முறையா? திரும்பி வராமல் போவது முறையா?” என்று கேட்டார்.(14)ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “ஓ! மேன்மையான பிராமணர்களில் முதன்மையானவனே, நீ கேட்டதை (நான்) முறையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, நீ என்னிடம் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று உனக்குச் சொல்வேன்.(15) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, இவ்வாறு செயல்படுவதன் மூலம், நீ உனக்கு நன்மையானதை அடைவாய். ஓ! கல்விமானான பிராமணா, நீ திரும்பி வந்தால் நிச்சயம் மரணத்தையே அடைவாய்” என்றான்”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நுண்ணறிவுமிக்க மன்னனால் இவ்வாறு தமக்கு நன்மையானது சொல்லப்பட்ட உதங்கர், அந்த ஏகாதிபதியிடம் இருந்து அகன்று அஹல்யையிடம் செல்லப் புறப்பட்டார்.(17) தமது ஆசானின் மனைவிக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய அவர் தம்முடன் காதுகுண்டலங்களை எடுத்துக் கொண்டு கௌதமரின் ஆசிரமத்தை அடைவதற்காகப் பெரும் வேகத்துடன் சென்றார்.(18) மதயந்தி சொன்ன முறையிலேயே அவற்றைக் கருப்பு மான்தோலில் {கிருஷ்ணாஜினத்தில்} மடித்துக் கட்டி {முடிந்துக்} கொண்டு பாதுகாப்புடன் தன் வழியில் சென்றார்.(19) சிறிது தொலைவு சென்றதும் அவர் பசியால் பீடிக்கப்பட்டார். அங்கே (கனிந்த) கனிகளின் எடையால் வளைந்திருந்த ஒரு வில்வ மரத்தை அவர் கண்டார். அவர் அந்த மரத்தில் ஏறினார்.

ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், தன்னுடைய மான்தொலை ஒரு கிளையில் தொங்கவிட்டு, சில கனிகளைப் பறிக்கத் தொடங்கினார்.(21) கனிகளில் கண்களைச் செலுத்தி அவற்றைப் பறிப்பதில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா, அவற்றில் சில அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் கவனமாகக் கட்டி வைக்கப்பட்டதும், காது குண்டலங்களோடு கூடியதுமான அந்த மான்தோல் மீதும் விழுந்தன. அந்தக் கனிகளால் அடிக்கப்பட்டு அதன் முடி தளர்ந்தது.(22,23) திடீரெனக் காதுகுண்டலங்களோடு கூடிய அந்த மான்தோல் கீழே விழுந்தது. முடி அவிழ்ந்து மான்தோல் கீழே விழுந்தபோது, அங்கே இருந்த ஒரு பாம்பு அந்தக் காது குண்டலங்களைக் கண்டது.(24) அந்தப் பாம்பு ஐராவதன் குலத்தைச் சேர்ந்ததாகும். பேராவலுடன் தன் வாயில் காது குண்டலங்களைக் கவ்வி கொண்டு அஃது {பாம்பு}  ஓர் எறும்புப்புற்றுக்குள் நுழைந்தது.

அந்தப் பாம்பால் காது குண்டலங்கள் அபகரிக்கப்பட்டதைக் கண்ட உதங்கர்,(25,26) கோபத்தில் நிறைந்து, மனத்தில் பெருங்கவலையுடன் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். தன் தடியை எடுத்துக் கொண்டு அந்த எறும்புப்புற்றை அவர் துளைக்கத் தொடங்கினார்.(27) கோபத்திலும், பழிவாங்கும் விருப்பத்திலும் எரிந்து கொண்டிருந்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், முப்பத்தைந்து நாட்கள் தம்மை அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.(28) உதங்கருடைய கைத்தடியின் சக்தியைப் பொறுக்க முடியாத பூமாதேவி அதனால் உடல்கிழிந்தவளாக மிகவும் துன்புற்றாள்.(29) நாகர்கள் வசிக்கும் பாதாள லோகத்திற்குப் பாதையை அமைக்கும் விருப்பத்தில் பூமியைத் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருந்த அந்த மறுபிறப்பாள முனிவர் இருந்த இடத்திற்கு,(30) வஜ்ரதாரியான தேவர்களின் தலைவன் {இந்திரன்} பச்சைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் வந்தான். பெரும் சக்தியுடன் கூடிய அவன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரைக் கண்டு அங்கே அமர்ந்தான்”.(31)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உதங்கரின் துன்பத்தால் பீடிக்கப்பட்ட ஒரு பிராமணராக வேடம் தரித்துக் கொண்டு தேவர்களின் தலைவன் அவரிடம், “இது (உமது காரியம்) நிறைவேற்றப்பட இயலாதது.(32) நாகர்களின் உலகம் இவ்விடத்தில் இருந்து ஆயிரம் யோஜனைகளுக்கு அப்பால் இருக்கிறது. உமது கைத்தடியைக் கொண்டு இக்காரியத்தைச் சாதிக்க இயலாதென நான் நினைக்கிறேன்” என்றான்.(33)

உதங்கர், “ஓ! பிராமணரே, ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நாகலோகத்தில் இருந்து என்னால் அந்தக் காதுகுண்டலங்களை மீட்க முடியாமல் போனால் உமது கண்களுக்கு முன்னிலையிலேயே நான் என் உயிர் மூச்சுகளைக் கைவிடுவேன்” என்றார்”.(34)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “வஜ்ரதாரியான இந்திரன், உதங்கரைத் தமது நோக்கத்தில் இருந்து திசைத்திருப்பத்தவறி போது, அவரது கைத்தடியில் வஜ்ரத்தின் சக்தியை இணைத்தான்.(35) அப்போது, ஓ! ஜனமேஜயா, வஜ்ரத்தின் சக்தியுடன் கூடிய அந்தத் தாக்குதலால் திறந்த பூமி, நாகர்கள் வசிக்கும் (பாதாள) உலகங்களுக்குச் செல்ல வழிகொடுத்தது.(36) அந்தப் பாதையின் மூலம் உதங்கர் நாகலோகத்திற்குச் சென்றார். அந்த உலகம் அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான யோஜனைகள் விரிந்திருப்பதை அவர் கண்டார்.(37) உண்மையில், ஓ! அருளப்பட்டவனே, உண்மையில் அது பசும்பொன்னால் அமைக்கப்பட்டவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பல சுவர்களுடன் கூடியதாக இருந்தது.(38)

தூய ஸ்படிகத்தால் அமைக்கப்பட்ட படிகளுடன் கூடிய பல சிறந்த தடாகங்களும், தூய, தெளிந்த நீரைக் கொண்ட பல ஆறுகளும் அங்கே இருந்தன. பல்வேறு வகைப் பறவைகள் அமர்ந்திருக்கும் பல மரங்களையும் அவர் அங்கே கண்டார்.(39) பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரான அவர், முழுமையாக ஐந்து யோஜனைகள் உயரமும், நூறு யோஜனைகள் அகலமும் கொண்ட அந்த உலகத்தின் வாயிலைக் கண்டார்.(40) நாகர்களின் உலகத்தைக் கண்ட உதங்கர் உற்சாகமிழந்தவரானார். உண்மையில், காதுகுண்டலங்களைத் திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர் மனத்தளர்ச்சியடைந்தார்.(41) அப்போது வெள்ளை வால் கொண்ட ஒரு கருப்புக் குதிரை அவர் முன்பு தோன்றியது. ஓ! குரு குலத்தவனே {ஜனமேஜயா}, அதன் முகமும் கண்களும் தாமிர வண்ணத்தில் இருந்தன. அது சக்தியால் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(42)உதங்கரிடம் பேசிய அஃது, “என்னுடலின் அபானக் குழாயில் {குதத்தில்} ஊதுவாயாக. ஓ! கல்விமானான பிராமணா, அப்போது ஐராவத குலத்தின் வழித்தோன்றலால் அபகரிக்கப்பட்ட உன் காதுகுண்டலங்களை நீ மீண்டும் பெறுவாய்.(43) ஓ! மகனே, நான் சொல்வதைச் செய்வதில் வெறுப்படைய வேண்டாம். முற்காலத்தில், கௌதமரின் ஆசிரமத்தில் நீ இதையே அடிக்கடி செய்துவந்தாய்” என்றது.(44)

உதங்கர், “என் ஆசானின் ஆசிரமத்தில் நான் எவ்வாறு உன்னை அறிந்தேன்? உண்மையில், நீ இப்போது செய்யச் சொன்னதை அந்தக் காலத்தில் நான் எவ்வாறு செய்தேன் என்பதைக் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(45)

அந்தக் குதிரை, “ஓ! கல்விமானான பிராமணா, நானே ஜாதவேதஸ் (நெருப்பின் தேவன் {அக்னி}) என்பதால், உன் ஆசானின் ஆசான் நானே என்பதை அறிவாயாக. உன் ஆசானின் நிமித்தமாக நீ அடிக்கடி என்னை வழிபட்டாய்.(46) ஓ! பிருகு குலத்தின் குழந்தாய், தூய இதயம் மற்றும் உடலுடன் முறையாக நீ அதைச் செய்தாய். அந்தக் காரணத்தினாலேயே நான் உனக்கான நன்மையைச் செய்யப் போகிறேன். தாமதமில்லாமல் நான் சொன்னதைச் செய்வாயாக” என்றது.(47)

நெருப்பின் தேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், அவன் சொன்னவாறே செய்தார். அவரிடம் நிறைவடைந்த அந்தத் தேவன் அனைத்தையும் விழுங்குவதற்குச் சுடர்விட்டு எரிந்தான்.(48) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவனது உடலின் துளைகளில் இருந்து, அவனது இயல்பின் விளைவால், நாகலோகத்தையே அச்சுறுத்தும் அடர்த்தியான புகை எழுந்தது.(49) ஓ! பாரதா, பரந்துவிரியும் அந்தப் பெரும் புகையால் அனைத்தும் இருளுக்குள் மூழ்கின. ஓ! மன்னா, நாகலோகத்தில் அதற்கு மேல் எதையும் காணமுடியவில்லை.(50) ஓ! ஜனமேஜயா, ஐராவதர்களின் மாளிகைகள் முழுவதிலும் வாசுகியின் தலைமையிலான நாகர்களின் துன்ப ஓலம் கேட்டது.(51)

ஓ! பாரதா, அந்தப் புகையால் சூழப்பட்ட மாளிகைகளை அதற்கு மேலும் காண முடியவில்லை. அவை அடர்பனியில் மூழ்கியிருந்த காடுகளுக்கும், மலைகளுக்கு ஒப்பாக இருந்தன.(52) நெருப்பின் தேவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்டவர்களும், அந்தப் புகையின் விளைவால் கண்கள் சிவந்தவர்களுமான நாகர்கள், என்ன காரியம் என்பதை உறுதி செய்வதற்காகப் பிருகு குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்ம மைந்தரிடம் வந்தனர்.(53) அளவற்ற சக்தி கொண்ட அந்தத் தவசியிடம் இருந்து காரியத்தைக் கேட்ட நாகர்கள் அனைவரும் தங்கள் கண்களில் அச்சம் தெரிய, உரிய வடிவில் தங்கள் வழிபாட்டை அவருக்குக் காணிக்கையாக்கினர்.(54) உண்மையில், முதியவர்களையும், குழந்தைகளையும் தங்கள் முன் நிறுத்திக் கொண்ட நாகர்கள் அனைவரும் அவருக்குத் தலைவணங்கிக் கூப்பிய கைகளுடன், அவரிடம், “ஓ! புனிதமானவரே, எங்களிடம் நிறைவடைவீராக” என்றனர்.(55) அந்தப் பிராமணரை நிறைவடையச் செய்து, அவரது பாதங்களைக் கழுவி கொள்ள நீர் கொடுத்து, (அவரைக் கௌரவிக்க) அர்க்கிய உட்பொருட்களையும் கொடுத்து, தெய்வீகமானவையும், உயர்ந்த புகழைக் கொண்டதுமான அந்தக் காதுகுண்டலங்களையும் நாகர்கள் அவரிடம் கொடுத்தனர்.(56)பேராற்றல் கொண்ட உதங்கர், அவர்களால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, நெருப்பின் தேவனை வலம் வந்து, தமது ஆசானின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்.(57) உண்மையில், ஓ! மன்னா, கௌதமரின் ஆசிரமத்திற்கு விரைவாகத் திரும்பிய அவர், ஓ! பாவமற்றவனே, தமது ஆசானின் மனைவியிடம் அந்தக் காதுகுண்டலங்களைக் கொடுத்தார்.(58) அந்தப் பிராமணர்களில் சிறந்தவர் வாசுகி மற்றும் பிற நாகர்கள் குறித்தும், முன் நேர்ந்தவை குறித்தும் தமது ஆசானிடம் தெரிவித்தார்.(59) ஓ! ஜனமேஜயா, இவ்வாறே உயர் ஆன்ம உதங்கர் மூவுலகங்களிலும் திரிந்து (தமது ஆசானின் மனைவிக்காக) அந்தக் காது குண்டலங்களைக் கொண்டு வந்தார்.(60) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவசியான உதங்கர் இத்தகைய ஆற்றலைக் கொண்டவராவார். அவ்வளவு கடுமையான தவங்களை அவர் செய்தவராவார். நீ கேட்டதை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}[4].(61)

ரைவதகத் திருவிழா! – அஸ்வமேதபர்வம் பகுதி – 59-ரைவதக மலைக்குச் சென்ற கிருஷ்ணன்; அங்கு நடந்த விளையாட்டுகள்; துவாரகைக்கு வந்து பெற்றோரை வணங்கிய கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உதங்கருக்கு வரமளித்த பிறகு வலிமைமிக்கக் கரங்களையும், பெரும்புகழையும் கொண்ட கோவிந்தன் அடுத்து என்ன செய்தான்?” என்று கேட்டான்.(1)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}“உதங்கருக்கு வரமளித்த கோவிந்தன், சாத்யகியின் துணையுடன், பெரும் வேகம் கொண்ட பெரிய குதிரைகளால் இழுக்கப்பட்ட தன் தேரில் துவாரகைக்குச் சென்றான்.(2) தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் மலைகளைக் கடந்து சென்ற அவன், இறுதியாக இனிமை நிறைந்த துவாராவதி நகரத்தை அடைந்தான்.(3) ஓ! மன்னா, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} தன் தோழனான சாத்யகியுடன் ரைவதகத்திற்கு வந்த நேரத்தில் அங்கே திருவிழா {ரைவதக உற்சவம்} தொடங்கியிருந்தது.(4) ஓ! மன்னா, அந்த ரைவதக மலை பல அழகிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்டும், ரத்தினங்களால் செய்யப்பட்ட பல்வேறு கோஷங்களால் {கவசங்களால்} மறைக்கப்பட்டும் பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(5)

அந்த உயர்ந்த மலை, சிறந்த தங்க மாலைகளாலும், அழகிய மலர்த்தோரணங்களாலும், இந்திரனின் தோட்டத்தில் உள்ள கல்ப மரங்களைப் போலத் தெரிந்த பெரும் மரங்கள் பலவற்றாலும்,(6) பகலும் இரவும் அழகுடன் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்ட தங்கத் தூண்கள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குகைகள் மற்றும் அருவிகள் இருந்த இடங்கள் பகல் நேரத்தைப் போல எப்போதும் பேரொளியுடன் திகழ்ந்தன.(7) அனைத்துப் பக்கங்களிலும் சிறு மணிகளுடன் கூடிய அழகிய கொடிகள் தொடர்ந்து கிங்கிணி ஒலியுடன் காற்றில் பறந்து கொண்டிருந்தன. மொத்த மலையும் ஆண்கள் மற்றும் பெண்களின் மெல்லிசைப் பாடல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) ரைவதகம் அனைத்து ரத்தினங்களுடன் மேரு போன்று மிகக் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. ஓ! பாரதா, மகிழ்ச்சியில் நிறைந்தத் திளைப்பில் இருந்த ஆண்களும், பெண்கள் உரக்கப் பாடினார்கள்.(9) 

அந்த முதன்மையான மலையில் இவ்வாறு எழுந்த இசைப் பெருக்கம் சொர்க்கங்களையே எட்டுவதாகத் தோன்றியது. உற்சாகத்தின் அனைத்து நிலைகளிலும் இருந்த மனிதர்களின் ஒலிகளும், உரத்த குரல்களும் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தன.(10) ஆயிரக்கணக்கான குரல்களின் கொக்கரிப்பு அந்த மலையை இனிமை நிறைந்ததாகவும், அழகானதாகவும் ஆக்கியது. பல்வேறு உணவுப் பொருட்களும், அனுபவிக்கத்தகுந்த பொருட்களும் நிறைந்த பல கடைகள் மற்றும் நிலையங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(11) துணிகள் மற்றும் மாலைகளின் குவியல்களும் ஆங்காங்கே கிடந்தன, வீணைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் இசை எங்கும் கேட்கப்பட்டன. பல்வேறு வகை மதுபானங்கள் {கள் மற்றும் சாராயம்} கலந்த உணவு ஆங்காங்கே தேக்கப்பட்டிருந்தன.(12) 

துன்பமடைந்தவர்கள், குருடர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இடைவிடாமல் கொடைகள் வழங்கப்பட்டன. இவையாவற்றின் விளைவால் அந்த மலையின் திருவிழா மங்கலம் நிறைந்ததாக இருந்தது.(13) ஓ! வீரா, அறச்செயல்கள் செய்யும் மனிதர்கள் பலர் வசிப்பதற்குரிய புனித வசிப்பிடங்கள் பலவும் அந்த மலையின் சாரலில் கட்டப்பட்டிருந்தன. இவ்வாறே ரைவதகத் திருவிழாவில் விருஷ்ணி குல வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.(14) அந்த மாளிகைகளுடன் கூடிய அந்த மலை இரண்டாவது சொர்க்கத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வந்ததும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா,(15) அந்த மலைகளின் இளவரசன் இந்திரனின் அருளப்பட்ட வசிப்பிடத்திற்கு ஒப்பானது.

(தன் உறவினர்களால்) வழிபடப்பட்டவனான கிருஷ்ணன் ஓர் அழகிய மாளிகைக்குள் நுழைந்தான். சாத்யகியும் திளைத்த ஆன்மாவுடன் தன் பகுதிக்குள் நுழைந்தான். தானவப் படைக்கு மத்தியில் வாசவனைப் போலப் பெருங்கடின சாதனைகளை நிறைவேற்றிய கோவிந்தன், நீண்ட காலம் இல்லாத பிறகு தன் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான். போஜ, விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வீரர்கள் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} வரவேற்க முன்னேறும் தேவர்களைப் போல அந்த உயர் ஆன்மாவை {கிருஷ்ணனை} வரவேற்க முன்வந்தனர்.(16-18) 

பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான அவன், பதிலுக்கு அவர்களைக் கௌரவித்து, அவர்களுடைய நலம் குறித்து விசாரித்தான். நிறைவடைந்த இதயத்துடன் கூடிய அவன் {கிருஷ்ணன்} தன் தாயையும் தந்தையையும் வணங்கினான்.(19) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன் அவர்கள் இருவரையும் தழுவிக் கொண்டு (எண்ணற்ற அன்புச் சான்றுகளின் மூலம்) அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் செய்தான். பிறகு அவன், தன்னைச் சூழ்ந்து அமர்ந்திருந்த விருஷ்ணிகளுடன் சேர்ந்து அமர்ந்தான்.(20) தன் கால்களைக் கழுவி களைப்பை விலக்கியவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான கிருஷ்ணன் அங்கே அமர்ந்த போது, தன் தந்தையால் {வசுதேவரால்} தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்தப் பெரும்போரின் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

போர்ச்சுருக்கம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 60- போர் குறித்த விபரம் கேட்ட வசுதேவர்; பதினெட்டு நாட்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரை மிகச் சுருக்கமாகச் சொன்ன கிருஷ்ணன்; வருத்தமடைந்த விருஷ்ணிகள்.

வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, (குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற) அற்புதம் நிறைந்த போரைக் குறித்து மனிதர்கள் பேசுவதை நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.(1) எனினும், ஓ! வலிமைநிறைந்த கரங்களைக் கொண்டவனே, நீ உன் கண்களாலேயே அதைக் கண்டிருக்கிறாய். எனவே, ஓ! பாவமற்றவனே, அந்தப் போரைக் குறித்து விரிவாக நீ விளக்குவாயாக.(2) உண்மையில், (ஒரு தரப்பில் இருந்த) உயர் ஆன்ம பாண்டவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர், சல்லியன் மற்றும் பிறர் ஆகியோருக்கிடையிலும்,(3) உண்மையில் முகத்தோற்றம் மற்றும் ஆடைகளில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற வெவ்வேறு க்ஷத்திரியர்களுக்கிடையிலும் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார் {வசுதேவர்}”.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, தன் தாயாரின் {தேவகியின்} முன்னிலையில், தன் தந்தையால் {வசுதேவரால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், போரில் கௌரவ வீரர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை உரைத்தான்.(5)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களால் அடையப்பட்ட சாதனைகள் உயர்ந்த அற்புதம் நிறைந்தவையாகும். பெரும் எண்ணிக்கையில் இருந்ததன் விளைவால், நூறு வருடங்களானாலும் அவர்களைப் பட்டியலிட இயலாது.(6) எனினும், நான் அவர்களில் முதன்மையானோரைக் குறித்து மட்டுமே சொல்லப் போகிறேன். எனவே, ஓ! தேவரைப் போன்ற காந்தியைக் கொண்டவரே, பூமியின் மன்னர்களால் அடையப்பட்ட அந்தச் சாதனைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(7)

தேவர்ப்படையில் வாசவனைப் போல, குரு குலத்தின் பீஷ்மர், பதினோரு பிரிவுகளாக {அக்ஷௌஹிணிகளாக}[1] இருந்த கௌரவ இளவரசர்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட படைத்தலைவரானார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சிகண்டி, அருள்நிறைந்த அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்டவனாகப் பாண்டு மகன்களின் ஏழு பிரிவுகளுக்கு {அக்ஷௌஹிணிகளுக்குத்} தலைவனானான்.(9) (இந்தத் தலைவர்களின் கீழ்) குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது பத்து நாட்கள் நீடித்தது. அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையானதாக இருந்தது.(10) பிறகு, பெரும்போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} துணையைக் கொண்ட சிகண்டி, துணிவுடன் போரிட்டுக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எண்ணற்ற கணைகளைக் கொண்டு வீழ்த்தினான்.(11) வீரரான பீஷ்மர், தெற்கு நோக்கிய பாதையில் இருந்து சூரியன் வடக்குப் போக்கில் நுழையும் வரை ஒரு தவசியைப் போலக் கணைப்படுக்கையில் காத்திருந்து தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டார்.(12)பிறகு, ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், தைத்தியர்களின் தலைவனுக்குக் காவியரை {சுக்கிராச்சாரியரைப்} போன்றவரும், துரியோதனனின் கீழ் இருந்த மனிதர்களில் பெரியவருமான துரோணர் படைத்தலைவரானார்.(13) போரில் தமதாற்றல் மீது எப்போதும் செருக்கு கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், கௌரவப்படையில் எஞ்சியிருந்த ஒன்பது அக்ஷௌஹிணிகளாலும் ஆதரிக்கப்பட்டு, கிருபர், விருஷன் {கர்ணன்} மற்றும் பிறரால் பாதுகாக்கப்பட்டார்.(14) வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பாண்டவர்களின் தலைவனானான். மித்ரனால் பாதுகாக்கப்பட்ட வருணனைப் போல அவன் பீமரால் பாதுகாக்கப்பட்டான்.(15) தன் பலத்தை எப்போதும் துரோணருடன் அளவிட விரும்பும் அந்த உயர் ஆன்ம வீரன் {திருஷ்டத்யும்னன்}, (எஞ்சியிருந்த) பாண்டவப் படையால் ஆதரிக்கப்பட்டு, தன் தந்தைக்கு (பாஞ்சாலர்களின் மன்னனான துருபதனுக்குத் துரோணரால்) இழைக்கப்பட்ட குற்றங்களை நிறைவு கூர்ந்து, போரில் பெரும் சாதனைகளைச் செய்தான்.(16) துரோணருக்கும், பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலில் பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து அங்கு திரண்டிருந்த மன்னர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டனர்.(17) அந்தக் கடும்போர் ஐந்து நாட்கள் நீடித்தது. அந்தக் காலத்தின் இறுதியில் திருஷ்டத்யும்னனிடம் துரோணர் வீழ்ந்தார்.(18)

அதன்பிறகு, துரியோதனனின் படைக்குக் கர்ணன் படைத்தலைவனானான். கௌரவப் படையில் எஞ்சியிருந்த ஐந்து அக்ஷௌஹிணிகளால் போரில் அவன் ஆதரிக்கப்பட்டான்.(19) பாண்டவர்களிடம் அப்போது மூன்று அக்ஷௌஹிணிகள் இருந்தன. எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனனால் பாதுகாப்பட்ட அவர்கள் போரிட வந்தனர்.(20) சூதனின் மகனான கர்ணன், சீற்றமிகு போர்வீரனாக இருப்பினும், சுடர்மிக்க நெருப்புடன் மோதும் ஒரு பூச்சியைப் போல இரண்டாம் நாளில் தன் முடிவை அடைந்தான்.(21)

கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு உற்சாகத்தை இழந்த கௌரவர்கள் தங்கள் சக்தி அனைத்தையும் இழந்தனர். எண்ணிக்கையில் மூன்று அக்ஷௌஹிணிகளாக இருந்த அவர்கள், மத்ர ஆட்சியாளனை {சல்லியனைச்} சூழ்ந்து திரண்டனர்.(22) தேர்வீரர்கள் பலரையும், யானைகளையும், குதிரைவீரர்களையும் இழந்து எண்ணிக்கையில் ஓர் அக்ஷௌஹிணியாக எஞ்சியிருந்த பாண்டவப் படை உற்சாகத்தை இழந்தவர்களாக (தங்கள் தலைவரான) யுதிஷ்டிரரை ஆதரித்தனர்.(23) குரு மன்னனான யுதிஷ்டிரர், தொடர்ந்து நடந்த போரில் செயற்கரிய சாதனைகளைச் செய்து, அரை நாளுக்கு முன்பே மத்ரர்களின் மன்னனை {சல்லியனைக்} கொன்றார்.(24)

சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட உயர் ஆன்ம சகாதேவன், (பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில்) சச்சரவை உண்டாக்கிய சகுனியைக் கொன்றான்.(25)

சகுனியின் வீழ்ச்சிக்குப் பிறகு, பேரிழப்பை அனுபவித்த படையைக் கொண்டவனும், அதன் காரணமாக உற்சாகத்தை இழந்தவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரரின் அரச மகன் {துரியோதனன்} களத்தைவிட்டுத் தப்பி ஓடினான்.(26) அப்போது பேராற்றலைக் கொண்ட பீமசேனர், கோபத்தால் நிறைந்து அவனைத் தொடர்ந்து சென்று துவைபாயனத் தடாகத்தின் நீருக்கடியில் அவனைக் கண்டுபிடித்தார்.(27) எஞ்சியிருந்த தங்கள் படையுடன் கூடிய பாண்டவர்கள் அந்தத் தடாகத்தைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக நீருக்குள் மறைந்திருந்த துரியோதனனிடன் போரிட்டனர்.(28) அவர்களுடைய சொற்கணைகள் நீருக்குள் ஊடுருவிச் சென்று துரியோதனனைத் துளைத்தன. அந்தத் தடாகத்தில் இருந்து எழுந்த அவன் {துரியோதனன்}, போரிட விரும்பியவனாகக் கதாயுதம் தரித்துப் பாண்டவர்களை அணுகினான்.(29) அப்போது தொடர்ந்து நடந்த பெரும்போரில் பல மன்னர்களின் முன்னிலையில் பேராற்றலை வெளிப்படுத்திய பீமசேனரால் திருதராஷ்டிரரின் அரச மகன் கொல்லப்பட்டான்.(30)

அதன்பிறகு எஞ்சியிருந்த பாண்டவப் படையினர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்தபோது, (திருஷ்டத்யும்னன் கைகளால்) தன் தந்தை கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ளப்பட முடியாத துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} அந்த இரவு நேரத்தில் கொல்லப்பட்டனர்.(31) மகன்கள் கொல்லப்பட்டவர்களும், படைகள் கொல்லப்பட்டவர்கள், நண்பர்கள் கொல்லப்பட்டவர்களுமான பாண்டவர்கள் ஐவரும், நானும், யுயுதானனும் {சாத்யகியும்} மட்டுமே உயிருடன் இருக்கிறோம்.(32) கௌரவப்படையில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்கள், கிருபர், போஜ இளவரசனான கிருதவர்மன்மற்றும்துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}ஆகியோராவர். திருதராஷ்டிரரின் மகனான யுயுத்சுவும் பாண்டவர்களின் தரப்பை ஏற்றதால் கொல்லப்படாமல் தப்பினான்.(33)

கௌரவ மன்னன் (சுயோதனன்) தன் தொண்டர்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்ட பிறகு, விதுரரும், சஞ்சயனும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் முன்னிலைக்கு வந்தனர்.(34) இவ்வாறே, ஓ! தலைவரே, அந்தப் போர் பதினெட்டு நாட்கள் நீடித்தது. பூமியின் மன்னர்கள் பலர் அங்கே கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்” என்றான் {கிருஷ்ணன்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரக் கதையைக் கேட்ட விருஷ்ணிகள், துயரம், சோகம் மற்றும் வருத்தத்தால் நிறைந்தனர்”.(36)

சுபத்திரையின் ஒப்பாரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 61-அபிமன்யு கொல்லப்பட்டதைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட சுபத்திரை; அபிமன்யு வதத்தைக் கேட்டு மயக்கமடைந்த வசுதேவர்; வசுதேவரைத் தேற்றிய கிருஷ்ணன்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பேராற்றல் கொண்ட உயர் ஆன்மாவான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தந்தையின் {வசுதேவரின்} முன்னிலையில் பாரதர்களின் பெரும்போரைச் சொல்லி முடித்த பிறகு, அபிமன்யு கொல்லப்பட்டதை அந்த வீரன் {கிருஷ்ணன்} சொல்லாமல் கடந்து செல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. இனிமையற்ற எதையும் தன் தந்தை கேட்க வேண்டாம் என்பதே அந்த உயர் ஆன்மாவின் நோக்கமாக இருந்தது.(1,2) உண்மையில், தன் தந்தையான வசுதேவர், தமது மகளின் {சுபத்திரையின்} மகனுடைய மரணத்தைச் சொல்லும் பயங்கரச் செய்தியைக் கேட்டு கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்படுவதை நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணன் விரும்பவில்லை.(3)

(அவனது தங்கையான) சுபத்திரை, தன் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்டது சொல்லப்படாததைக் கண்டு தன் அண்ணனிடம், “ஓ! கிருஷ்ணா {அண்ணா}, என் மகன் இறந்ததைச் சொல்” என்று சொல்லி விட்டு (மயங்கி) பூமியில் விழுந்தாள்.(4) வசுதேவர், தம் மகள் பூமியில் விழுவதைக் கண்டார். அதைக் கண்டதும் அவரும், துயரத்தில் மதி மயங்கியவராகக் கீழே விழுந்தார்.(5)

(உணர்வுகள் மீண்ட) வசுதேவர், தமது மகளின் மகனுடைய {தம் பேரனுடைய} இறப்பால் உண்டான துயரத்தால் பீடிக்கப்பட்டவராகக் கிருஷ்ணனிடம்,(6) “ஓ! தாமரைக்கண்ணா, வாக்கில் வாய்மை வாய்ந்தவனாக நீ பூமியில் புகழ்பெற்றிருக்கிறாய். எனினும், ஓ! பகைவரைக் கொல்பவனே, என் மகளின் மகனுடைய மரணத்தைக் குறித்து நீ ஏன் இன்று எனக்குச் சொல்லவில்லை?(7) ஓ! பலமிக்கவனே, உன் தங்கையின் மகன் கொல்லப்பட்டதைக் குறித்து விரிவாக எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உன்னைப் போலவே கண்களைக் கொண்ட அவன் போரில் பகைவர்களால் எவ்வாறு கொல்லப்பட்டான்?(8) ஓ! விருஷ்ணி குலத்தோனே, நூறு துண்டுகளாய்ப் பிளக்காமல் இருப்பதால், வேளை வராத போது மனிதர்களுடன் சேர்ந்து இதயமும் அழிவதில்லை என்று தெரிகிறது.(9) ஓ!… வீழ்ந்த நேரத்தில், தன் தாயைக் குறிப்பிட்டு அவன் சொன்ன சொற்கள் என்னென்ன? ஓ! தாமரைக்கண்ணா, ஓய்வற்ற கண்களைக் கொண்டவனும், என் அன்புக்குரியவனுமான அவன் எனக்குச் சொன்னது என்ன?(10) போரில் புறமுதுகிட்டு ஓடும்போது அவன் பகைவர்களால் கொல்லப்படவில்லை என நான் நம்புகிறேன் {அவன் புறமுதுகிடவில்லையல்லவா?}. ஓ! கோவிந்தா, போரிடும்போது அவனது முகம் உற்சாகத்தை இழக்கவில்லை என நான் நம்புகிறேன் {அவன் உற்சாகம் இழக்கவில்லையல்லவா?}.(11) ஓ! கிருஷ்ணா, வலிமையும், சக்தியும் நிறைந்தவனாக அவன் இருந்தான். பலமிக்க அந்த வீரன், தன் சிறுபிள்ளைத்தனத்தால், என் முன்னிலையில் (தன் ஆற்றலைத்) தற்புகழ்ந்து, (போரில்) தன் திறனைக் குறித்து என்னிடம் பேசுவானே.(12) அந்தப் பிள்ளை, துரோணர், கர்ணன், கிருபர் மற்றும் பிறரால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டுப் பூமியில் கிடக்கவில்லை என நான் நம்புகிறேன் {அவர்களால் வஞ்சகமாகக் கொல்லப்படவில்லையல்லவா?}. இவை யாவற்றையும் எனக்குச் சொல்வாயாக.(13) என் மகளுடைய மகன் {என் பேரனான அபிமன்யு}, போரில் பீஷ்மரையும், வலிமைமிக்கப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கர்ணனையும் எப்போதும் அறைகூவி அழைப்பானே” என்றார் {வசுதேவர்}.(14)

துயரம் மேலிட இத்தகைய புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தன் தந்தையிடம், அவரைவிட அதிகம் பீடிக்கப்பட்டவனான கோவிந்தன் {கிருஷ்ணன்} இந்தச் சொற்களால் பதிலளித்தான்,(15) “போரின் முன்னணியின் நின்று போரிட்ட அவனது முகம் ஒருபோதும் உற்சாகத்தை இழக்கவில்லை. அந்தப் போர் கடுமையானதாக இருந்தாலும் அவன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(16) பூமியின் மன்னர்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று துரோணருக்கும், கர்ணனுக்கும் துயரைக் கொண்டு வந்த அவன் இறுதியில் துச்சாசனன் மகனிடம் வீழ்ந்தான்.(17) ஓ! தலைவா, ஒற்றைக்கு ஒற்றையாக இடைவெளியே இல்லாமல் அவனுடன் போரிட்டிருந்தாலும் வஜ்ரதாரியாலும் {இந்திரனாலும்} போரில் அவனைக் கொல்ல முடியாது.(18)அவனுடைய தந்தையான அர்ஜுனன் (தன்னுடன் தனியாகப் போரிட அறைகூவியழைத்த) சம்சப்தகர்களால் மையப்பகுதியில் இருந்து விலகிச் சென்ற போது, போரில் துரோணரின் தலைமையிலானவர்களும், சீற்றத்துடன் கூடியவர்களுமான கௌரவவீரர்களால் அபிமன்யு சூழப்பட்டான்.(19) ஓ! தந்தையே, பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொன்ற பிறகே உமது மகளின் மகன் {பேரன் அபிமன்யு} இறுதியாகத் துச்சாசனன் மகனிடம் வீழ்ந்தான்[1].(20)அவன் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, உம்முடைய இந்தத் துயரத்தைக் கொல்லும். தெளிவான புத்தி கொண்டவர்கள் துயரமேதும் அடையும்போது ஒருபோதும் அவர்கள் நலிவடைவதில்லை.(21) வலிமையில் இந்திரனுக்கு நிகரான வீரர்களான துரோணரையும், கர்ணனையும், பிற வீரர்களையும் எதிர்த்தவனான அவன், ஏன் சொர்க்கத்திற்கு உயராமல் இருக்கப் போகிறான்?(22) ஓ! தடுக்கப்பட முடியாதவரே, நீர் உம்முடைய இந்தத் துயரத்தைக் கொல்வீராக. கோபத்தின் ஆளுகைக்குள் கிடந்து துன்புறாதீர். பகை நகரங்களை வெல்பவனான அவன், ஆயுத முனையில் அடையும் மரணத்தைச் சார்ந்த புனித இலக்கை அவன் அடைந்துவிட்டான்.(23)

அந்த வீரன் {அபிமன்யு} வீழ்ந்த பிறகு துயரால் பீடிக்கப்பட்ட என்னுடைய தங்கையான இந்தச் சுபத்திரை, குந்தியைக் கண்டபோது பெண் அன்றிலை {குரரிபக்ஷியைப்} போல உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டாள்.(24)

துயரத்தில் இருந்த அவள் திரௌபதியிடம், “ஓ! மதிப்புக்குரிய பெண்ணே {அம்மா}, நம் மகன்கள் அனைவரும் எங்கே? நான் அவர்களைக் காண விரும்புகிறேன்” என்றாள்.(25)

அவளுடைய ஒப்பாரியைக் கேட்ட கௌரவப் பெண்மணிகள் அனைவரும் அவளைத் தழுவிக்கொண்டு அவளைச் சூழ்ந்து அமர்ந்து அழுதனர்.(26)

(தன் மருமகளான) உத்தரையைக் கண்ட அவள், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவன் எங்கே சென்றுவிட்டான்? அவன் திரும்பி வரும்போது, ஒருக்கணமும் தாமதிக்காமல் அது குறித்து எனக்குத் தெரிவிப்பாயாக.(27) ஐயோ, ஓ! விராடன் மகளே {உத்தரையே}, என் குரலைக் கேட்ட உடனேயே ஒரு கணமும் தாமதிக்காமல் தன் அறையில் இருந்து அவன் வெளி வருவான். உன் கணவன் இன்று ஏன் வரவில்லை?(28) ஐயோ, ஓ! அபிமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் தாய்மாமன்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள். போருக்கு ஆயத்தமாக இங்கே நீ வருவதைக் காணும்போதெல்லாம் அவர்கள் உன்னை வாழ்த்தினார்கள்.(29) ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, முன்பு போலவே இன்று போரில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் எனக்குச் சொல்வாயாக. ஓ! இவ்வாறு அழுது புலம்பும் எனக்ககு நீ ஏன் பதிலளிக்காமல் இருக்கிறாய்” என்று சொல்லி அழுதாள் {சுபத்திரை}.(30)

விருஷ்ணி குலமகளின் இந்த ஒப்பாரியைக் கேட்ட பிருதை {குந்தி}, ஆழ்ந்த துயரத்தில் பீடிக்கப்பட்டவளாக அவளிடம் மெதுவாக,(31) “ஓ! சுபத்திரா, வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் தன் தந்தை {அர்ஜுனன்} ஆகியோரால் பாதுகாக்கப்பட்டாலும், இளைஞனான உன் மகன் கொல்லப்பட்டிருக்கிறான். இந்தக் கொலை காலத்தின் ஆதிக்கத்தால் நேர்ந்திருக்கிறது.(32) ஓ! யதுகுல மகளே, உன் மகன் இறவாதவனாக {அமரனாக} இருந்தான். வருந்தாதே. போரில் தடுக்கப்பட முடியாதவனான உன் மகன் உயர்ந்த இலக்கை அடைந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை.(33) உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் உயர் குலத்தில் பிறந்தவள் நீ. ஓ! ஓய்வற்றபார்வை கொண்டவளே, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட பெண்ணே, வருந்தாதே.(34) குழந்தையைக் கருவில் சுமக்கும் உத்தரையின் மேல் உன் விழிகளைச் செலுத்துவாயாக. ஓ! அருளப்பட்ட மங்கையே, துயரத்தின் வசப்படாதே. இந்த மங்கலப் பெண் {உத்தரை}, விரைவில் அந்த வீரனுக்கு {அபிமன்யுவுக்கு} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்” என்றாள் {குந்தி}.(35)

ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே {வசுதேவரே}, ஓ! தடுக்கப்பட முடியாதவரே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான குந்தி, இவ்வழியில் அவளுக்கு ஆறுதலளித்து, தன் துயரத்தைக் கைவிட்டு, ஆற்றலில் யமனுக்கு ஒப்பானவர்களான மன்னர் யுதிஷ்டிரர், பீமர், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்) ஆகியோரின் ஏற்புடன் அபிமன்யுவின் ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தாள். பிராமணர்களுக்குக் கொடையளித்த அவள்,(36,37) ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, அவர்களுக்குப் பல பசுக்களையும் கொடுத்தாள்.

பிறகு அந்த விருஷ்ணி வீரமகள் (குந்தி), சிறு ஆறுதல் அளிக்கும் வகையில் விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(38) “ஓ! விராடனின் குற்றமற்ற மகளே, நீ வருந்தலாகாது. ஓ! உருண்ட இடைகளைக் கொண்டவளே, உன் கணவனுக்காக உன் கருவறையில் உள்ள பிள்ளையைப் பாதுகாப்பாயாக” என்றாள்.(39)

ஓ! பெருங்காந்தி கொண்டவரே, இச்சொற்களைச் சொன்னதுடன் குந்தி நிறுத்திக் கொண்டாள். அவளுடைய {குந்தியின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, சுபத்திரையை இங்கே நான் அழைத்து வந்தேன்.(40) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, இவ்வாறே, உமது மகளின்{சுபத்திரையின்} மகன்{அபிமன்யு} தன் மரணத்தை அடைந்தான். ஓ! தடுக்கப்பட முடியாதவரே, எரியும் துயரைக் களைவீராக. உண்மையில், கவலையில் உமது இதயத்தை நிறுவாதீர்” என்றான் {கிருஷ்ணன்}”.(41)

அஸ்வமேதயாகம் செய்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 62-அபிமன்யுவுக்கு ஸ்ராத்தஞ்செய்த வசுதேவர்; ஹஸ்தினாபுரம் வந்து உத்தரையைத் தேற்றிய வியாசர்; யுதிஷ்டிரனை அஸ்வமேத வேள்வி செய்யத் தூண்டியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தம்மகன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சொற்களைக் கேட்டவரும், நீதிமிக்க ஆன்மா கொண்டவருமான அந்தச் சூர குல வழித்தோன்றல் {வசுதேவர்}, தமது துயரத்தைக் கைவிட்டு (அபிமன்யுவுக்குச்) சிறந்த ஈமக் காணிக்கைகளை அளித்தார் {ஸ்ராத்தஞ்செய்தார்}.(1) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தன் தந்தையின் அன்புக்குரியவனும், தன் மருமகனுமான அவன் {அபிமன்யு} (சொர்க்கத்திற்கு) உயர்வதற்கான அந்தச் சடங்குகளைச் செய்தான்.(2) பெருஞ்சக்தி கொண்டவனான அவன் {கிருஷ்ணன்}, அறுபது லட்சம் பிராமணர்களுக்கு ஏற்புடைய அனைத்துக் குணங்களுடன் கூடிய உணவைப் படைத்தான்.(3) அவர்களுக்குத் துணிமணிகள் பலவற்றைக் கொடுத்த கிருஷ்ணன், அந்தப் பிராமணர்களின் செல்வ தாகத்தைத் தணித்தான். கொடையளிக்கப்பட்ட பொற்குவியல்களும், பசுக்கள், படுக்கைகள், துணிமணிகளின் எண்ணிக்கையும் ஆச்சரியகரமானவையாக இருந்தன. அந்தப் பிராமணர்கள், “(கிருஷ்ணனின் செல்வம்) பெருகட்டும்” என்று உரக்க அறிவித்தார்கள்.(4,5)

பிறகு, தசார்ஹ குலத்தோனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, பலதேவன் {பலராமன்}, சாத்யகி, சத்யகன் ஆகியோர் ஒவ்வொருவரும் அபிமன்யுவுக்கான ஈமச் சடங்குகளை {சிராத்தம்} செய்தனர்.(6) துயரால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர்கள் ஆறுதலேதும் அடையத் தவறினர். யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} பாண்டு மகன்களின் நிலையும் இவ்வாறே இருந்தது.(7) ஓ! ஏகாதிபதி, விராடனின் மகள் {உத்தரை}, தன் கணவனின் இறந்த துயரத்தால் மிகவும் பீடிக்கப்பட்டவளாக மொத்தமாக உணவனைத்தையும் தவிர்த்தாள். இதனால் அவளது உறவினர்கள் அனைவரும் பெருந்துயரத்தில் மூழ்கினர்.(9)

அப்போது தமது ஆன்மப் பார்வையால் அனைவரின் நிலைகளையும் அறிந்த வியாசர் அங்கே வந்தார். உயர்ந்த நுண்ணறிவையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த முனிவர், (அரண்மனைக்கு வந்து), நீண்ட கண்களைக் கொண்ட பிருதையிடம் {குந்தியிடம்} பேசிவிட்டு,(10) உத்தரையிடம், “இத்துயரைக் கைவிடுவாயாக. ஓ! புகழ்பெற்ற பெண்ணே, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பலத்தாலும், என் சொல்லாலும் பெருஞ்சக்தி கொண்ட மகன் ஒருவன் {பரீக்ஷித்} உனக்குப் பிறப்பான். அந்த மகனே பாண்டவர்களுக்குப் பிறகு (அவர்கள் பூமியை விட்டுச் சென்ற பிறகு} பூமியை ஆள்வான்” என்றார்.(12)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அவர் {வியாசர்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கையில், தன் சொற்களால் அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில்,(13) “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் பேரன் ஓர் உயர் ஆன்ம இளவரசனாவான். கடலின் விளிம்பு வரையுள்ள மொத்த பூமியையும் அவன் நீதியுடன் ஆட்சி செய்வான்.(14) எனவே, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவரை வெட்டுபவனே, இத்துயரைக் களைவாயாக. இதில் ஐயங்கொள்ளாதே. உண்மையில் இது நடக்கும்.(15) முன்பு விருஷ்ணி வீரனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்டது நிச்சயம் நடக்கும். வேறு வகையில் நினைக்காதே.(16) அபிமன்யுவைப் பொறுத்தவரையில், அவன் தன் செயல்களால் வென்ற தேவ லோகங்களுக்குச் சென்றிருக்கிறான். அந்த வீரனுக்காக நீயோ, குருக்களில் பிறரோ வருந்தலாகாது” என்றார் {வியாசர்}.(17)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு தன் பாட்டனால் {வியாசரால்} சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் துயரைக் கைவிட்டு, உற்சாகம் நிறைந்தனவாக ஆனான்.(18) ஓ! இளவரசே, ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான உன் தந்தை {பரீக்ஷித்}, வளர்பிறைச் சந்திரனைப் போல {உத்தரையின்} அந்தக் கருவறையில் வளர்ந்தான்.(19) பிறகு வியாசர், தர்மனின் அரச மகனிடம் குதிரை வேள்வி செய்வதற்குத் தூண்டினார்[1]. இவ்வாறு சொன்ன அவர் அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(20) நுண்ணறிவுமிக்கவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வியாசரின் சொற்களைக் கேட்டு, (வேள்விக்கான) செல்வத்தைக் கொண்டு வரும் பயணத்தில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

இமயப்பயணம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 63-வியாசரின் ஆணைப்படி தம்பிமாருடன் ஆலோச்சித்த யுதிஷ்டிரன்; வேள்விக்குத் தேவையான செல்வத்தைக் கொண்டு வர இமய மலைக்குச் சென்றது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, குதிரை வேள்வி குறித்து உயர் ஆன்ம வியாசரால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?(1) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மருத்தன் பூமிக்கடியில் புதைத்து வைத்த செல்வத்தை அடைவதில் மன்னன் வென்றது எவ்வாறு?” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தீவில் பிறந்த தவசியின் {வியாசரின்} சொற்களைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளான அர்ஜுனன், பீமசேனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய அனைவரையும் உரிய நேரதில் அழைத்து, அவர்களிடம் (பின்வரும் சொற்களில்),(3) “வீரர்களே, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவரும், உயர் ஆன்மாவுமான கிருஷ்ணர் {வியாசர்}[1]குருக்களிடம் கொண்ட நட்பின் நிமித்தமும், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பியும் சொன்ன சொற்களைக் கேட்டீர்கள். உண்மையில், அபரிமிதமான தவங்களைச் செய்தவரும், நண்பர்களுக்குச் செழிப்பை வழங்கவல்லவரும்,(4,5) நேர்மையான ஒழுக்கம் கொண்ட ஆசானும், அற்புதச் செயல்களைச் செய்தவருமான அந்தப் பெருந்தவசியால் {வியாசரால்} சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டீர்கள்.பீஷ்மர் சொன்னதையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்} சொன்னதையும் நீங்கள் கேட்டீர்கள்.(6) பாண்டுவின் மகன்களே, அச்சொற்களை நினைவுகூரும் நான் அவற்றுக்கு முறையாகக் கீழ்ப்படிய விரும்புகிறேன். அவர்களுடைய சொற்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்கள் அனைவருக்கும் பேரருள் கிட்டும்.(7) பிரம்மத்தை ஓதுபவர்களால் சொல்லப்படும் சொற்கள் (அந்தச் சொற்களுக்குக் கீழ்ப்படிவது) குறிப்பிடத்தக்க நன்மையை நிச்சயம் கொண்டு வரும். குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்களே, பூமாதேவி செல்வத்தை இழந்தவளாக இருக்கிறாள்.(8) எனவே மன்னர்களே, (பூமிக்குள் புதைந்து கிடக்கும்) மருத்தனின் செல்வத்தைக் குறித்து வியாசர் நமக்குச் சொன்னார். அந்தச் செல்வம் அதிகமானது, அல்லது போதுமானது என நீங்கள் நினைத்தால்,(9) அதை நாம் (நமது தலைநகருக்குக்) கொண்டு வருவது எவ்வாறு? ஓ! பீமா, இது குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, மன்னன் இச்சொற்களைச் சொன்ன போது,(10) பீமசேனன் தன் கரங்களைக் குவித்து, மறுமொழியாக இந்தச் சொற்களில், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வியாசரால் குறிப்பிடப்பட்டச் செல்வத்தைக் கொண்டு வருவது குறித்து நீர் சொன்ன சொற்களை நான் ஏற்கிறேன். ஓ! பலமிக்கவரே, அவிக்ஷித்தின் மகனால் {மருத்தனால்} அங்கே வைக்கப்பட்ட செல்வத்தை அடைவதில் நாம் வென்றால்,(11,12) ஓ! மன்னா, அப்போது நம்மால் கருதப்படும் இந்த வேள்வியை எளிதாக நடத்தலாம். இதையே நான் நினைக்கிறேன். எனவே, நாம் உயர் ஆன்ம கிரீசனுக்கு {சிவனுக்கு} தலைவணங்கி,(13) அந்தத் தேவனுக்கு உரிய காணிக்கையளித்து, அந்தச் செல்வத்தைக் கொண்டுவருவோம். நீர் அருளப்பட்டிருப்பீராக. தேவர்களுக்குத் தேவனையும் {சிவனையும்}, அவனது தோழர்கள் மற்றும் தொண்டர்களையும் {பூதகணங்களையும்}, சொல்லாலும், எண்ணத்தாலும், செயலாலும் நிறைவடையச் செய்து, நிச்சயம் நாம் அந்தச் செல்வத்தை அடையப் போகிறோம். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தப் பெருந்தேவன் {சிவன்} நம்மிடம் நிறைவடைந்தால், அந்தப் புதையலைப் பாதுகாக்கும் பயங்கர முகத்தோற்றம் கொண்ட கின்னரர்களும் நிச்சயம் நம் வசப்படுவார்கள்” என்றான்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, பீமனால் சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்டவனும்,(14-16) தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன் உயர்வான நிறைவை அடைந்தான். அதே நேரத்தில், அர்ஜுனனின் தலைமையிலான பிறரும் {மற்ற தம்பிகளும்}, “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(17)

அந்தச் செல்வத்தைக் கொண்டு வருவது எனத் தீர்மானித்த பாண்டவர்கள், துருவ நட்சத்திரம் மற்றும் அதே பெயரால் {துருவம் என்ற பெயரால்} அழைக்கப்படும் நாளில் தங்கள் படைகளை அணிவகுக்க ஆணையிட்டனர்[2].(18) அந்தப் பாண்டுவின் மகன்கள், பிராமணர்களைத் தங்களுக்கு ஆசிகூற {ஸ்வஸ்திவாசனம் செய்யும்படிச்} செய்து, பெருந்தேவனான மஹேஸ்வரனை முறையாக வழிபட்டு (தங்கள் காரியத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(19) மோதகங்கள், பாயஸம், இறைச்சியால் செய்யப்பட்ட பிண்டங்கள் {மாம்ஸம், ஆபூபங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அந்த உயர் ஆன்ம தேவனை நிறைவடையச் செய்த பாண்டுவின் மகன்கள், உற்சாகமிக்க இதயங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(20)அவர்கள் அவ்வாறு புறப்பட்டுச் சென்றபோது, குடிமக்களும், பிராமணர்களில் முதன்மையானோர் பலரும், உற்சாகமிக்க இதயங்களுடன் (அவர்களுடைய தலைகளில் {கைவைத்து}) மங்கல ஆசிகளைக் கூறினர்.(21) பாண்டவர்கள், தங்கள் தங்கள் நெருப்புகளை நாள்தோறும் வழிபடும் பிராமணர்கள் பலரை வலம் வந்து, அவர்களுக்குத் தலைவணங்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.(22) மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்த மன்னன் திருதராஷ்டிரன், அவனது ராணி (காந்தாரி) மற்றும் நீண்ட கண்களைக் கொண்ட பிருதை {குந்தி} ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு,(23) திருதராஷ்டிரன் மகனான கௌரவ இளவரசன் யுயுத்சுவை தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} நிறுவிய அவர்கள், குடிமக்களாலும், பெரும் ஞானம் கொண்ட பிராமணர்கள் பலராலும் வழிபடப்பட்டுப் புறப்பட்டுச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

இமய முகாம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 64-இமயம் நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள்; இடத்தை அடைந்து முகாமை அமைத்தது; பிராமணர்களின் தொடக்கச் சடங்குகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது அவர்கள் உற்சாகம் நிறைந்த இதயங்களுடனும், இணையான உற்சாகம் நிறைந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் துணையுடனும் {இமயத்தை நோக்கி} புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த பூமியையும் நிறைத்தனர்.(1) துதிபாடிகள், சூதர்கள், மாகதர்கள் மற்றும் வந்திகளால் புகழ்பாடப்படவும், தங்கள் படையின் ஆதரவுடனும் சென்ற அவர்கள் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பல ஆதித்தியர்களைப் போலத் தெரிந்தனர்.(2) தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட வெண்குடையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இரவில் நட்சத்திரங்களின் தலைவன் முழுமையாக இருப்பதை {இரவில் முழுநிலவைப்} போன்ற அழகுடன் ஒளிர்ந்தான்.(3)

மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டு மகன்களில் மூத்தவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் வழியில் செல்லும்போது மகிழ்ச்சி நிறைந்தவர்களான தன் குடிமக்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் உரிய வடிவில் ஏற்றுக் கொண்டான்.(4) மன்னனைப் பின்தொடர்ந்த படைவீரர்களைப் பொறுத்தவரையில், குழப்பமான அவர்களது முணுமுணுப்புகள் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது. அந்தப் படை பல தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் இன்பத்தோட்டங்களைக் கடந்து சென்றது. இறுதியாக அவர்கள் அந்த மலையை {இமய மலையை} அடைந்தனர்.(6)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தச் செல்வம் புதைக்கப்பட்ட பகுதியை அடைந்த அரசன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் கூடிய துருப்புகளுடன் தன் முகாமை அமைத்தான்.(7) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அக்காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி முற்றிலும் சமமானதாகவும், மங்கலமானதாகவும் இருந்தது. ஓ! குரு குலத்தோனே, அங்கே, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தவம், கல்வி மற்றும் தற்கட்டுப்பாட்டுடன் கூடிய பிராமணர்களையும்,(8) வேதங்கள் மற்றும் அதன் கிளைகளை நன்கறிந்தவரான தன் புரோகிதர் ஆக்நிவேஷ்யரையும் {தௌமியரையும்} முன்னிலையில் கொண்டு தன் முகாமை அமைத்தான்[1]. அதன் பிறகு, பாண்டுவின் அரச மகன்களும், (அந்தப் பயணத்தில் உடன் சென்ற) பிற மன்னர்களும், வேள்விச் சடங்குகளில் நன்கு திறம்பெற்றவர்களான பிராமணர்களும், புரோகிதர்களும் முறையாகத் தொடக்கச் சடங்குகளைச் செய்து அந்த இடமெங்கும் பரவியிருந்தார்கள். மன்னனையும், அவனது அமைச்சர்களையும் நடுவில் கொண்டு,(9,10) ஆறு சாலைகள் மற்றும் ஒன்பது பிரிவுகளையும் {கண்டங்களையும்} அமைத்து அங்கே அந்தப் பிராமணர்கள் முகாமை அமைத்தனர்[2]. மன்னன் யுதிஷ்டிரன், தன் படையுடன் கூடிய மதங்கொண்ட யானைகளுக்கென ஒரு தனி முகாமை அமைக்கச் செய்தான்.அனைத்தும் நிறைவடைந்தபோது, அவன் {யுதிஷ்டிரன்}, பிராமணர்களிடம், “முதன்மையான பிராமணர்களே, “நடக்க இருக்கும் காரியத்தைக் கருத்தில் கொண்டு செய்யப்படவேண்டியவை என்று நீங்கள் நினைப்பவற்றைச் செய்வீராக. உண்மையில், ஒரு மங்கல நாளையும், நட்சத்திரத்தையும் அதற்காகத் தேர்ந்தெடுப்பீராக. நாம் இங்கே ஆவலில் தவித்துக் காத்திருக்கும்போது, நீண்ட காலம் கழிந்துவிடக்கூடாது. கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவர்களே, இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, இதன் பிறகு என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்றான்.(11-13)

மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், அங்கிருந்தவர்களில் அறச்சடங்குகள் செய்வதில் திறம்பெற்றவர்களுமான பிராமணர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி,(14) “இன்றே நட்சத்திரமும், நாளும் மங்கலமானவையாக இருக்கின்றன. எனவே, நாங்கள் கருதும் அந்த உயர்ந்த சடங்குகளை நிறைவேற்ற {இன்றே} முனைவோம். ஓ! மன்னா, இன்று நாங்கள் நீரை மட்டுமே பருகி வாழ்வோம். நீங்களும் இன்று உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பீராக” என்றனர்.(15)

அந்த முதன்மையான பிராமணர்களின் சொற்களைக் கேட்ட பாண்டுவின் அரச மகன்கள், உணவனைத்தையும் தவிர்த்து, வேள்வியில் சுடர்விடும் நெருப்பைப் போலக் குசப்புல் படுக்கைகளில் நம்பிக்கையுடன் கிடந்து அவ்விரவைக் கழித்தனர்.(16) கல்விமான்களான (பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய) பிராமணர்களின் உரையாடல்களை அவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோதே இரவு கழிந்தது. மேகமற்ற காலைவேளை உதித்த போது, பிராமணர்களில் முதன்மையான அவர்கள் தர்மனின் அரச மகனிடம் (பின்வருமாறு) பேசினர்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

அகழப்பட்ட புதையல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 65- பூதகணங்களுடன் கூடிய சிவனைக் காணிக்கைகளால் நிறைவடையச் செய்த யுதிஷ்டிரன்;.இமயத்தில் இருந்து செல்வத்தை எடுத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பியது…

பிராமணர்கள், “உயர் ஆன்மாவான முக்கண் மஹாதேவனுக்குக் காணிக்கைகள் அளிக்கப்படட்டும். ஓ! மன்னா, அந்தக் காணிக்கைகளை முறையாக அர்ப்பணித்த பின்னர் நாம் நமது நோக்கத்தை ஈட்ட முனைவோம்” என்றனர்.(1)

அந்தப் பிராமணர்களின் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன், மலைச்சாரலில் கிடக்க விரும்பும் அந்தத் தேவனுக்கு {சிவனுக்கு} காணிக்கைகளை முறையாக அளிக்கச் செய்தான்.(2) விதிப்படி (ஆகுதியான) புனித நெய்யால் (வேள்வி) நெருப்பை நிறைவடையச் செய்த புரோகிதர் (தௌமியர்) மந்திரங்களின் உதவியால் சருவைச் சமைத்து தேவையான சடங்குகளைச் செய்தார்.(3) ஓ! மன்னா, அவர் மலர்கள் பலவற்றை எடுத்து மந்திரங்களால் அவற்றைப் புனிதப்படுத்தினார். மோதகங்கங்கள், பாயஸம் மற்றும் இறைச்சியை அவர் அந்தத் தேவனுக்குக் காணிக்கையளித்தார்.(4) வேதங்களில் நன்கு திறம்பெற்ற தௌமியர், பல்வேறு வகை மலர்கள், மிக மேன்மையான வகைச் சார்ந்த பொரிகள் ஆகியவற்றைக் கொண்டு எஞ்சிய சடங்குகளை {ஸ்விஷ்டகிருத் என்னும் ஹோமத்தை முழுதும் விதிப்படி} செய்தார்.(5)

அடுத்ததாக அவர் மஹாதேவனின் அணிவகுப்பில் அமையும் கிங்கரர்களுக்கு விதிப்படியான காணிக்கைகளை அளித்தார். அடுத்ததாக யக்ஷர்களின் தலைவனான குபேரனுக்கும், மாணிபத்ரனுக்கும் காணிக்கைகள் வழங்கப்பட்டன.(6) அந்தப் புரோஹிதர் {தௌமியர்}, உணவு, கிருஸரம், இறைச்சி மற்றும் எள்ளுடன் கலந்த நிவாபங்கள் {தர்ப்பண நீர்} ஆகியவற்றைப் பல குடங்களில் நிறைத்து, வேறு யக்ஷர்களுக்கும், மஹாதேவனின் தோழர்களான பூதங்களில் முதன்மையாவர்களுக்கும் {பூதபதிகளுக்கும்} முறையான வழிபாட்டைக் காணிக்கையாக்கினார். மன்னன் {யுதிஷ்டிரன்} பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தான்.(7,8)

அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, (மஹாதேவனுடன் வாழும்) இரவுலாவிகளுக்கு {கணங்களுக்கு} உரிய சடங்குகளின்படி காணிக்கைகளை அளிக்கச் செய்தான். தூப மணத்தால் பரவியிருந்ததும், மலர்களின் நறுமணத்தால் நிறைந்திருந்ததும்,(9) தேவர்களின் தேவனுக்குப் புனிதமானதுமான அந்தப் பகுதி இனிமை நிறைந்ததாக ஆனது. ருத்திர வழிபாடு மற்றும் கணங்கள் அனைத்திற்குமான வழிபாடுகளைச் செய்த பிறகு,(10) வியாசரை முன்னிலையில் நிறுத்திய மன்னன் {யுதிஷ்டிரன்}, புதையல் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். பல்வேறு வகை மலர்கள், பிண்டங்கள் மற்றும் கிருஸரம்[1] ஆகியவற்றைக் கொண்ட மதிப்புடனும் அவனை வணங்கி, மீண்டும் கருவூலங்களின் தலைவனை முறையாக வழிபட்டு, சங்கம் மற்றும் நிதி என்ற முதன்மையான ரத்தினங்களையும், ரத்தினங்களின் தலைவர்களான அந்த யக்ஷர்களையும் வழிபட்டு[2],(11,12) பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபட்டு, அவர்களை ஆசி கூற {ஸ்வஸ்திவாசனம் செய்யச்} செய்த பெரும் பலம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களின் சக்தி மற்றும் மங்கல ஆசிகளின் மூலம் வலுவடைந்து,(13) அந்த இடத்தை அகழ {தோண்டச்} செய்தான்.பல்வேறு இனிய வடிவங்களிலான எண்ணற்ற  பாத்திரங்கள்,(14) பிருங்காரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்தமானகங்கள், அழகிய வடிவிலான எண்ணற்ற பாஜனங்கள் {அன்னப்பாத்திரங்கள், சிறிய குடங்கள், கரண்டிகள், குடங்கள், அண்டாக்கள்,  பானைகள்} ஆகியவை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அகழ்ந்து {தோண்டி} எடுக்கப்பட்டன. இவ்வாறு அகழப்பட்ட செல்வங்கள், பாதுகாப்புக்காகப் பெரிய கரபூதங்களில் {மடக்குகளில்} வைக்கப்பட்டன[3].(15,16) அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி, தராசின் இருமுனைகளைப் போன்ற மரக்கூடைகளுடன் கூடிய தடித்த மர நிலுவைகளில் மனிதர்களின் தோள்களில் சுமக்கச் செய்யப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டு மகனின் அந்தச் செல்வத்தைச் சுமந்து செல்வதற்கு வேறு வழிமுறைகளிலான செல்கலன்களும் {விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகளும்} இருந்தன[4].(17) ஓ! ஏகாதிபதி, அங்கே அறுபதாயிரம் ஒட்டகங்களும், ஒருலட்சத்து இருபதாயிரம் குதிரைகளும், ஒரு லட்சம் யானைகளும் இருந்தன.(18) அதே அளவு {ஒரு லட்சம்} தேர்களும், அதே அளவு வண்டிகளும், அதே அளவு பெண் யானைகளும் இருந்தன. கோவேறு கழுதைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை சொல்ல {எண்ண} முடியாததாக இருந்தது.(19)யுதிஷ்டிரனால் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்தச் செல்வம் அவ்வளவு அதிகமானதாக இருந்தது. ஒவ்வொரு ஒட்டகத்தின் முதுகிலும் பதினாறாயிரம்; ஒவ்வொரு தேரிலும் எட்டாயிரம்; ஒவ்வொரு யானையிலும் இருபத்து நான்காயிரம்; (அதேவேளையில், குதிரைகள், கழுதைகளின் முதுகுகளிலும், மனிதர்களின் முதுகுகள், தோள்கள் மற்றும் தலைகளிலும் மேற்கண்ட எண்ணிக்கையின் விகிதாச்சார அளவில்) {பொன்} நாணயங்கள் வைக்கப்பட்டன[5].(20) இந்த வாகனங்களை அந்தச் செல்வத்தால் நிறைத்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பெருந்தேவனான சிவனை வழிபட்ட பிறகு, தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} அனுமதியுடனும், தன் புரோகிதரான தௌமியரை முன்னணியில் விட்டும், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான். மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டுவின் அரச மகனுமான அவன், ஒரு கோயுதத்தால் (4 மைல்கள் {6.5 கி.மீ.}) அளக்கப்படும் குறுகிய பயணங்களையே ஒவ்வொரு நாளும் மேற்கொண்டான்[6].(21,22) ஓ! மன்னா, சுமந்த சுமையால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள் அனைவரின் இதயங்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில், அந்தச் செல்வத்தைச் சுமந்து கொண்டு, தலைநகரம் {ஹஸ்தினாபுரம்} நோக்கித் திரும்பியது” என்றார் {வைசம்பாயனர்}.(23)

கிருஷ்ணனிடம் வேண்டிய குந்தி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 66-சுபத்திரை, பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; இறந்த குழந்தையை உத்தரை ஈன்றது; குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனை வேண்டிய குந்தி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதேவேளையில், விருஷ்ணிகளுடன் கூடிய பெருஞ்சக்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(1) தன் சொந்த நகரமான துவாரகை திரும்புவதற்காக அந்த நகரத்தைவிட்டுச் சென்ற போது, மீண்டும் திரும்பி வருமாறு தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அவன் வேண்டப்பட்டான். எனவே, குதிரை வேள்விக்கெனக் குறிக்கப்பட்ட வேளை வருவதை அறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் (குரு தலைநகரத்திற்குத்) திரும்பி வந்தான்.(2) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, யுயுதானன் {சாத்யகி}, சாருதேஷ்ணன், சாம்பன், கதன், கிருதவர்மன், சாரணன், நிசடன், உன்முகன் ஆகியோருடனும், சுபத்திரையுடனும், அணிவகுப்பின் தலைமையில் பலதேவனுடனும் வாசுதேவன் {கிருஷ்ணன்} வந்தான்.(4)

உண்மையில் திரௌபதி, உத்தரை, பிருதை {குந்தி} மற்றும் தங்கள் பாதுகாவலர்களை இழந்த புகழ்பெற்ற க்ஷத்திரியப் பெண்மணிகளுக்கு ஆறுதலளிப்பதற்காக அந்த வீரன் {கிருஷ்ணன்} வந்தான்.(5) அந்த வீரர்கள் வருவதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரனும் அவர்களை உரிய கௌரவத்துடன் வரவேற்றனர்.(6) மனிதர்களில் முதன்மையானவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான கிருஷ்ணன், விதுரன் மற்றும் யுயுத்சுவால் நன்கு துதிக்கப்பட்டு, குருவின் தலைநகரில் வசித்து வந்தான்.(7) ஓ! ஜனமேஜயா, ஓ! மன்னா, அவ்வாறு விருஷ்ணி வீரர்கள் குருவின் நகரில் வசித்துக் கொண்டிருந்தபோதுதான் உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்தான்.(8)

ஓ! ஏகாதிபதி (அஸ்வத்தாமனின்) பிரம்ம ஆயுதத்தால் பீடிக்கப்பட்ட அரசன் பரிக்ஷித், கருவறையை விட்டு வெளியே வந்தபோது, உயிரற்றவனாக இருந்த காரணத்தால் அசைவற்றுக் கிடந்தான். தனது பிறப்பால் குடிமக்கள் அனைவருக்கும் அவன் மகிழ்ச்சியூட்டியிருந்தாலும் மிகவிரைவில் அவர்களைத் துயரில் ஆழச் செய்தான்.(9) இளவரசன் பிறந்ததைக் கேட்ட குடிமக்கள் சிங்க முழக்கம் செய்தனர். கிட்டத்தட்ட திசைப்புள்ளிகள் ஒவ்வொன்றின் விளிம்புகளையும் அவ்வொலி அடைந்தது. எனினும் விரைவில் (இளவரசன் உயிரற்றவனாக இருப்பதை அறிந்தபோது) அவ்வொலி அடங்கியது.(10) கணிசமான அளவுக்கு உணர்வுகளும், மனமும் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், யுயுதானனுடன் {சாத்யகியுடன்} கூடியவனாக, அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(11) தன் அத்தை (குந்தி) உரக்க அழுதுகொண்ட மீண்டும் மீண்டும் தன்னை {கிருஷ்ணா ஓடிவா என்று} அழைத்துக் கொண்டே வருவதை அவன் கண்டான்.(12) அவளுக்குப் பின்னால், திரௌபதி, புகழ்பெற்ற சுபத்திரை, பாண்டவர்களுடைய உறவினர்களின் மனைவிமார் ஆகியோர் பரிதாபகரமாக அழுது கொண்டிருந்தனர்.(13)

ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, போஜ குல மகளான குந்தி கிருஷ்ணனைச் சந்தித்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனிடம் இந்தச் சொற்களில்,(14) “ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன்னை {கருவறையில்} சுமந்ததன் மூலம் தேவகி சிறந்த தாயாகக் கருதப்படுகிறாள். எங்கள் புகலிடமும், எங்கள் மகிமையும் நீயே. (பாண்டுவின்) இந்தக் குலம் தன் பாதுகாவலனாகக் கொண்ட உன்னையே சார்ந்திருக்கிறது.(15) ஓ! யாதவ வீரா, ஓ! பலமிக்கவனே, உன் தங்கை {சுபத்திரை} மகனுடைய இந்தக் குழந்தை கருவறையில் இருந்து அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டு வெளியே வந்திருக்கிறான்.(16) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! பலமிக்கவனே, அஸ்வத்தாமன், வலிமைமிக்க சக்தி கொண்ட பிரம்மாயுதத்தைப் புல்லில் ஈர்த்தபோது, நீ ஏற்ற உறுதி மொழி இதுவே. ஓ! கேசவா, நீ சொன்ன சொற்கள் இவையே. இந்தக் குழந்தை கருவறையில் இருந்து இறந்து பிறந்தால், நான் அவனை உயிர்ப்பிப்பேன் என்று நீ சொன்னாய்.(17)

ஓ! மகனே, அந்தக் குழந்தை இறந்து பிறந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனைப் பார். ஓ! மாதவா, உத்தரை, சுபத்திரை, திரௌபதி ஆகியோரையும், என்னையும், தர்மனின் மகனையும் (யுதிஷ்டிரனையும்), பீமன், பல்குனன் {அர்ஜுனன்}, நகுலன், தடுக்கப்பட முடியாதவனான சகாதேவன் ஆகியோரையும் நீயே காக்க வேண்டும்.(18,19) பாண்டவர்களின் உயிர்மூசும் மற்றும் என் உயிமூச்சும் இந்தக் குழந்தையிலேயே பிணைந்திருக்கின்றன. ஓ! தாசார்ஹ குலத்தோனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, {என் கணவரான} பாண்டு, என் மாமனார் {விசித்திரவீரியன்} ஆகியோரின் ஈமப்பிண்டமும்,(20) உனக்கு மிகப் பிடித்தவனான உன் அன்புக்குரிய மருமகன் அபிமன்யுவின் ஈமப்பிண்டமும் இவனையே சார்ந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் நன்மையானதை நீ இன்று செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, நான் உன்னை உள்ளார்வத்துடன் தூண்டுகிறேன்.(21)

ஓ! பகைவரைக் கொல்பவனே, உத்தரை தன்னிடம் அபிமன்யு சொன்ன சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஓ! கிருஷ்ணா, அந்தச் சொற்கள் அவளுக்கு நிச்சயம் மிக இனிமையானவை.(22) ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, விராடனின் மகளிடம் {உத்தரையிடம்}, “ஓ! அருளப்பட்ட பெண்ணே {கல்யாணி}, உன் மகன், என் தாய்மாமன்களிடம் செல்லப் போகிறான்.(23) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வசிப்பிடத்திற்குச் செல்லும் அவன், அங்கே ஆயுத அறிவியலையும் {தனுர் வேதத்தையும்}, உண்மையில் அற்புதம் நிறைந்த ஆயுதங்களையும் {விசித்திரமான அஸ்திரங்களையும்}, அரசியல் மற்றும் அறநெறிகள் குறித்த மொத்த அறிவியலையும் {நீதி சாஸ்திரங்களையும்} அடைவான்” என்று சொல்லியிருக்கிறான்.(24)

ஓ! மகனே, பகைவீரர்களைக் கொல்பவனும், தடுக்கப்பட முடியாத வீரனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உத்தரையிடம் கொண்ட அன்பினால் இந்தச் சொற்களை அவளிடம் சொல்லியிருக்கிறான்.(25) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, அபிமன்யுவின் அந்தச் சொற்கள் உண்மையாக நாங்கள் உன்னை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். காலத்தைக் கருத்தில் கொண்டு உயர்ந்த நன்மையை நீ செய்வாயாக” என்றாள் {குந்தி}.(26)

அகன்ற கண்களைக் கொண்ட குந்தி, விருஷ்ணி குல வீரனிடம் {கிருஷ்ணனிடம்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, மற்ற பெண்களுடன் சேர்ந்து தன் இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியவாறு பூமியில் விழுந்தாள்.(27)

கண்ணீரால் கலங்கிய கண்களுடன் கூடிய அவர்கள் {அந்தப் பெண்கள்} அனைவரும், “ஐயோ, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மருமகன் இறந்தே பிறந்தான்” என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(28)

குந்தி இவ்வாறு சொன்னதும், அவளைத் தன் கரங்களில் பற்றி, பூமியில் இருந்து மெல்ல உயர்த்தி, பின்வருமாறு அவளைத் தேற்றினான்” {என்றார் வைசம்பாயனர்}.(29)

கிருஷ்ணனிடம் வேண்டிய சுபத்திரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 67-குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய சுபத்திரை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தி அமர்ந்த பிறகு, தன் தமையனைக் {கிருஷ்ணனைக்} கண்ட சுபத்திரை பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டு உரக்க அழத் தொடங்கி,(1) “ஓ! தாமரைக் கண்ணா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அர்ஜுனரின் பேரனைப் பார். ஐயோ, இளைத்தவனும், இறந்தவனுமான ஒரு குழந்தையால் குரு குலம் நசிந்திருக்கிறது.(2) பீமசேனருக்கு அழிவை ஏற்படுத்த துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} உயர்த்தப்பட்ட (பெருந்திறன் கொண்ட ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருந்த) புல் {இஷீகாஸ்திரம்}உத்தரையின் மீதும், விஜயர் {அர்ஜுனர்} மீதும், என் மீதும் விழுந்தது[1].(3) ஐயோ, ஓ! கேசவா, அந்தப் புல் என் இதயத்தைத் துளைத்த பிறகும், ஓ! தடுக்கப்பட முடியாத வீரா, என் மகனுடன் சேர்த்து இந்தப் பிள்ளையையும் நான் காணாமல் இருப்பதால், அஃது (இன்னும் பிடுங்கப்படாமல்) என்னிலேயே இருக்கிறது.(4)நீதிமானும், அற ஆன்மாவுமான மன்னர் யுதிஷ்டிரர் என்ன சொல்வார்? பீமசேனர், அர்ஜுனர் மற்றும் மத்ராவதியின் இரு மகன்களும் என்ன சொல்வார்கள்?(5) ஓ! விருஷ்ணி குலத்தோனே, அபிமன்யுவின் மகன் பிறந்து இறந்தான் என்பதைப் பாண்டவர்கள் கேட்டால், அஸ்வத்தாமனால் வஞ்சிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுவார்கள்.(6) ஓ! கிருஷ்ணா, அபிமன்யு நிச்சயம் பாண்டவச் சகோதர்கள் அனைவருக்கும் பிடித்தமானவன். துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்தால் வெல்லப்பட்டோம் என்ற செய்தியை அறிந்தால் அந்த வீரர்கள் என்ன சொல்வார்கள்?(7) ஓ! ஜனார்த்தனா, அபிமன்யுவின் மகன் பிறந்து, இறந்தான் என்பதைவிடப் பெரிய துயரம் வேறென்ன இருக்க முடியும்?(8)

ஓ! கிருஷ்ணா, உன்னை நிறைவடையச் செய்ய நான் இன்று உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இங்கே நிற்கும் பிருதை {குந்தி}, திரௌபதி ஆகிய இருவரையும் பார்.(9) ஓ மாதவா, ஓ பகைவரைக் கலங்கடிப்பவனே, பாண்டவர்களுடைய பெண்களின் கருவறைகளில் உள்ள கருக்களையும் அழிக்கத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} முயன்றபோது, நீ கோபத்துடன் அந்தத் துரோணர் மகனிடம் (இந்தச் சொற்களில்),(10) “ஓ! பிராமணர்களில் இழிந்தவரே, ஓ! மனிதர்களில் தீயவரே, உமது விருப்பத்தை நான் நிறைவேறாமல் செய்வேன். நான் கிரீடியின் {அர்ஜுனனின்} மகனுடைய மகனைக் காப்பேன்” என்று சொன்னாய்[2].(11)ஓ! தடுக்கப்பட முடியாத வீரா, உன்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டவளும், உன் பலத்தை நன்கறிந்தவளுமான நான் உன்னை நிறைவடையச் செய்ய முனைகிறேன். அபிமன்யுவின் மகன் உயிர் மீளட்டும்.(12) ஏற்கனவே உறுதிமொழி ஏற்ற நீ மங்கலமான இந்நோன்பை நிறைவேற்றாமல் போனால், ஓ! விருஷ்ணி குலத் தலைவா, நிச்சயம் என் உயிரை நான் விடுவேன் என்பதை அறிவாயாக.(13) ஓ! வீரா, ஓ! தடுக்கப்பட முடியாதவனே, நீ உயிரோடு அருகில் இருக்கும்போது, அபிமன்யுவின் மகனான இவன் {பரிக்ஷித்} உயிர் மீளாமல் போனால், உன்னால் எனக்கு வேறு என்ன பயன் இருக்க முடியும்?(14) எனவே, ஓ! தடுக்கப்பட முடியாதவனே, (களத்தில் உள்ள) உயிரற்ற பயிருக்கு உயிரூட்டும் மழை நிறைந்த மேகத்தைப் போலவே அபிமன்யுவைப் போன்றே கண்களைக் கொண்டவனும், அவனது மகனுமான இவனை நீ மீட்பாயாக.(15) ஓ! கேசவா, அற ஆன்மா கொண்ட நீ, வாய்மை நிறைந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமாவாய். ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, உன் சொற்களை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(16)

மூவுலகங்கள் (மூவுலகங்களில் இருப்போர்) இறந்தாலும், நீ விரும்பினால் உன்னால் உயிர்மீட்க முடியும். எனில், பிறந்தும் இறந்த உன் தங்கை மகனின் அன்புக்குரிய இந்தக் குழந்தையைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(17) ஓ! கிருஷ்ணா, நான் உன் பலத்தை அறிந்தே உன்னை வேண்டுகிறேன். பாண்டவர்களுக்கு நீ இந்தப் பெருஞ்சலுகையைச் செய்து காட்டுவாயாக.(18) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, தன் மகனை இழந்த ஒரு தாய் என்றோ, உன் பாதுகாப்பில் தன்னை நிறுத்திக் கொண்டவள் என்றோ நினைத்து உத்தரைக்கோ, உன் தங்கையான எனக்கோ இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்” என்றாள் {சுபத்திரை}”.(17)

கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 68-குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, (தங்கையாலும், பிறராலும்) இவ்வாறு சொல்லப்பட்டதும், கேசியைக் கொன்றவனான அவன் {கிருஷ்ணன்}, பெருந்துயரில் பீடிக்கப்பட்டவனாக, “அப்படியே ஆகட்டும்” என்றான். போதுமான உரப்புடன் சொல்லப்பட்ட இந்தச் சொற்கள், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(1) பலமிக்கவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், வியர்வையால் பீடிக்கப்பட்டவன் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவதைப் போல இந்தச் சொற்களைச் சொன்னதன் மூலம், அங்கே இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்தான்.(2) பிறகு அவன் {கிருஷ்ணன்}, உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்த அந்தப் பேற்றறைக்குள் {பிரசவ அறைக்குள்} விரைவாக நுழைந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, வெண்மலர் மாலைகள் பலவற்றால்;(3) அனைத்துப் பக்கங்களிலும் முழுவதும் நிறைந்த பல நீர்க்குடங்கள்; ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நெய்யில் ஊறிய திந்துக மரக்கரி மற்றும் கடுகு;(4) அனைத்துப் பக்கங்களிலும் உரிய முறையில் அடுக்கப்பட்ட ஒளிரும் ஆயுதங்கள் மற்றும் பல நெருப்புகள் ஆகியவற்றால் அது {அந்தப் பிரசவ அறை} புனிதப்பட்டிருந்தது. (உன் பாட்டிக்கு {உத்தரைக்குப்} பணிவிடை செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த இனிய மூதன்னைகள் பலர் அங்கே இருந்தனர்.(5)

ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, நன்கு திறம்பெற்ற புத்திசாலி மருத்துவர்களால் அது சூழப்பட்டிருந்தது. பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், ராட்சசர்களை அறிந்த மனிதர்களால் அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உன் தந்தை பிறந்த பேற்றறை இவ்வாறு ஆயத்தமாக இருப்பதைக் கண்ட ரிஷிகேசன், மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நன்று, நன்று” என்று சொன்னான்.(6,7)

விருஷ்ணிகுலத்தோன் இவ்வாறு சொல்லி, மகிழ்ச்சிநிறைந்த தன் முகத்தைக் காட்டிய போது, அங்கே பெரும் வேகத்துடன் வந்த திரௌபதி, விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(8) “ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவனின் தாய்மாமனும், சிந்தனைக்கு எட்டாத ஆன்மா கொண்ட புராதன முனிவனும், வெல்லப்பட முடியாதவனுமான மதுசூதனன் {கிருஷ்ணன்} வந்திருக்கிறான்” என்றாள்.(9)

தன் கண்ணீரை அடக்கிக் கொண்ட விராடன் மகள் {உத்தரை}, துயரால் அடைபட்ட குரலில் இந்தச் சொற்களைச் சொன்னாள். அந்த இளவரசி, முறையாகத் தன்னை மறைத்துக் கொண்டு, கிருஷ்ணனுக்காக மதிப்புடன் காத்திருக்கும் தேவர்களைப் போலவே காத்திருந்தாள்.(10) துயரில் கலங்கிய இதயத்துடன் இருந்த ஆதரவற்றவளான அந்தப் பெண், கோவிந்தன் வருவதைக் கொண்டு இவ்வாறு ஒப்பாரி வைத்தாள்.(11) அவள், “ஓ! தாமரைக் கண்ணரே, பிள்ளையை இழந்த எங்கள் இருவரையும் பாரும். ஓ! ஜனார்த்தனரே, {என் கணவர்} அபிமன்யுவும், நானும் ஒன்றாகக் கொல்லப்பட்டோம்.(12) ஓ! விருஷ்ணிகுலத்தவரே, ஓ! மதுசூதனரே, ஓ! வீரரே, உமக்குத் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். துரோணர் மகனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்ட என்னுடைய இந்தக் குழந்தையை மீட்பீராக.(13)

ஓ! தாமரைக் கண்ணரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரோ, பீமசேனரோ, நீரோ அந்தச் சந்தர்ப்பத்தில்,(14) “(அஸ்வத்தாமனால் பிரம்ம ஆயுதமாக ஈர்க்கப்பட்ட) இந்தப் புல், தன்னினைவற்ற தாயை அழிக்கட்டும்” என்று சொல்லியிருந்தால், ஓ! பலமிக்கவரே, நான் அழிந்திருப்பேன், இந்த (துயர நிகழ்வும்) நடந்திருக்காது.(15)

ஐயோ, துரோணரின் மகன், தன் பிரம்மாயுதத்தால், கருவறையில் உள்ள குழந்தையை அழிக்கும் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ததன் மூலம் அறுவடை செய்த நன்மையென்ன?(16) ஓ! பகைவரைக் கொல்பவரே, அதே தாயான நான் இப்போது தலைவணங்குவதன் மூலம் உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். ஓ! கோவிந்தரே, இந்தக் குழந்தையை மீட்க முடியாமல் போனால் நிச்சயம் நான் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்.(17) ஓ! அறம் சார்ந்தவரே, பல எதிர்பார்ப்புகளை நான் அவனில் வைத்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, துரோணர் மகனால் அவை கெடுக்கப்பட்ட போது, எனக்கு உயிரின் சுமையைச் சுமக்கும் தேவையென்ன இருக்கிறது?(18)

ஓ! கிருஷ்ணரே, ஓ! ஜனார்த்தனரே, மடியில் குழந்தையுடன் நான் உம்மை மதிப்புடன் வணங்குவேன் என்ற நம்பிக்கையை நான் வளர்த்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, அந்த நம்பிக்கை அழிந்தது.(19) ஓ! அனைத்திலும் முதன்மையானவரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யுவின் வாரிசான இவன் இறந்ததும், என் நெஞ்சில் இருந்த நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்தன.(20) ஓ! மதுசூதனரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யும் உமது பெரும் அன்புக்குரியவராக இருந்தார். அவருடைய {அபிமன்யுவினுடைய} மகனான இவன் பிரம்மாயுதத்தால் கொல்லப்பட்டதைப் பாரும்.(21)

பாண்டவர்களின் செழிப்பையும், செல்வாக்கையும் அலட்சியம் செய்து யமலோகம் சென்றதன் மூலம் இந்தக் குழந்தையும் அவனது தந்தையைப் போலவே நன்றியற்றவனாகவும், இதயமற்றவனாகவும் இருக்கிறான்.(22) ஓ! கேசவரே, ஓ! வீரரே, போர்க்களத்தில் அபிமன்யு வீழ்ந்தால், தாமதமில்லாமல் நானும் அவரைப் பின்தொடர்வேன் என்று நான் உறுதிமொழியேற்றிருந்தேன்.(23) எனினும், உயிர் மீது அன்பு கொண்ட கொடுமைக்காரியான நான், என் உறுதிமொழியைக் காக்கவில்லை. இப்போது நான் அந்தப் பல்குனர் மகனிடம் {அர்ஜுனர் மகனான அபிமன்யுவிடம்} சென்றால், உண்மையில் அவர் என்ன சொல்வாரோ?” என்று கேட்டாள் {உத்தரை}”.(24)

குழந்தையை உயிர்ப்பித்த கிருஷ்ணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 69-குழந்தையைப் பார்த்து ஒப்பாரியிட்ட உத்தரை; குழந்தையின் உயிர் மீட்ட கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஆதரவற்றவளான உத்தரை, தன் குழந்தையைத் திரும்பப் பெற விரும்பி, இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டு அறிவற்ற ஓர் உயிரினத்தை {பயித்தியம் பிடித்தவளைப்} போலத் துன்பத்துடன் பூமியில் விழுந்தாள்.(1) தன் மகனை இழந்த அந்த இளவரசி {உத்தரை}, மறைக்கப்படாத உடலுடன் பூமியில் கிடப்பதைக் கண்ட குந்தியும், பாரதப் பெண்மணிகள் (பிறர்) அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் உரக்க அழத் தொடங்கினர்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒப்பாரிக் குரலை எதிரொலித்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் மாளிகை, விரையில் எவரும் இருக்க முடியாத துக்கமாளிகையானது[1].(3)ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகனின் இழப்பால் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்ட விராடனின் மகள் {உத்தரை}, துக்கத்தாலும், மனவாட்டத்தினாலும் மூர்ச்சையடைந்தவளாகத் தெரிந்தாள்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நனவு மீண்ட உத்தரை தன் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு, இந்த வார்த்தைகளில்,(5) “அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரின் {அபிமன்யுவின்} குழந்தை நீ. விருஷ்ணி குலத்தில் முதன்மையானவரான இவரைக் கண்டும் நீ வணங்காமல் இருப்பதால் பாவத்தை இழைக்கிறாய் என்ற உணர்வு உனக்கில்லையா?(6)

ஓ! மகனே {பரீக்ஷிதே}, உன் தந்தையிடம் {அபிமன்யுவிடம்} சென்று, “என் கணவரான உம்மை இழந்தும், இப்போது என் குழந்தையை இழந்தும், மங்கலமான மற்றும் மதிப்புமிக்க ஏதும் இல்லாத நான் சாகாமல் வாழ்ந்திருப்பதால், உயிரினங்கள் தங்கள் வேளை வருவதற்கு முன் இறப்பது கடினமானதே.(7,8) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அனுமதியுடன் நான் ஏதேனும் கடும்நஞ்சை விழுங்கப் போகிறேன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் என்னை விடப்போகிறேன்.(9) ஓ! ஐயா, கணவரையும், குழந்தையையும் இழந்திருந்தாலும் என் இதயம் ஆயிரம் துண்டுகளாகப் பிளக்காமல் இருப்பதால் என் இதயம் அழிவடைவது கடினமே” என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வாயாக.(10)

ஓ! மகனே, எழுவாயாக, உன் பூட்டி {உன் தந்தையின் பாட்டியான குந்தி} துயருறுவதைக் காண்பாயாக. கண்ணீரில் குளித்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவள், பெரும் மனவாட்டம் கொண்டவளாகச் சோகக் கடலில் மூழ்கியிருக்கிறாள்.(11) மதிப்புக்குரிய பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்}, ஆதரவற்ற சாத்வத குல இளவரசியையும் {சுபத்திரையையும்} காண்பாயாக. வேடனால் துளைக்கப்பட்ட மானுக்கு ஒப்பாகத் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்டிருக்கும் என்னைக் காண்பாயாக.(12) ஓ! குழந்தாய், எழுவாயாக, பெரும் ஞானம் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவரும், ஓய்வற்ற பார்வை கொண்ட உன் தந்தைக்கு {அபிமன்யுவுக்கு} ஒப்பானவருமான இந்த உலகங்களின் தலைவருடைய {கிருஷ்ணரின்} முகத்தைக் காண்பாயாக” என்றாள் {உத்தரை}.(13)

இவ்வாறு ஒப்பாரியில் ஈடுபட்டுப் பூமியில் விழுந்த உத்தரையைக் கண்ட அந்தப் பெண்கள் அனைவரும் அவளை உயர்த்தி அமரச் செய்தனர்.(14) மத்யர்களின் மன்னனுடைய {விராடனின்} மகளான அவள், எழுந்து அமர்ந்ததும், பொறுமையை வரவழைத்துக் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} வணங்குவதற்காக, மதிப்புடன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, தன் தலையால் பூமியைத் தீண்டினாள்.(15) இதயம் பிளக்கும் அவளுடைய ஒப்பாரிகளைக் கேட்ட அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்}, நீரைத் தீண்டி {ஆஸமனஞ்செய்து}, அந்தப் பிரம்மாயுதத்தை (அதன் சக்தியை} திரும்பப் பெற்றான் {விலக்கினான் / உபஸம்ஹாரம் செய்தான்}[2].(16)தசார்ஹ குலத்தைச் சேர்ந்த மங்கா மகிமை கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, அந்தக் குழந்தைக்குத் தன் உயிரைக் கொடுப்பதாக உறுதியளித்தான். அதன் பிறகு, தூய ஆன்மா கொண்ட அவன் மொத்த அண்டமே கேட்கும் வகையில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17) {கிருஷ்ணன்}, “ஓ! உத்தரா, ஒருபோதும் நான் பொய் சொல்லேன். என் சொற்கள் உண்மையாகும். அனைத்து உயிரினங்களின் முன்னிலையிலும் நான் இக்குழந்தையின் உயிரை மீட்பேன்.(18) இதற்கு முன் எப்போதும் கேலிக்காகக் கூடப் பொய் பேசியவனல்லன். போரில் ஒருபோதும் புறமுதுகிட்டவனல்லன். (அந்தச் செயல்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம்) இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்.(19) அறம் எனதன்புக்குரியதாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, பிராமணர்கள் பேரன்புக்குரியவர்களாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, இறந்தே பிறந்த இந்த அபிமன்யு மகனின் உயிர் (என்னுடைய அந்த மனநிலையின் தகுதியால் {புண்ணியத்தால்}) மீளட்டும்.(20)

எனக்கும், என் நண்பனான விஜயனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் ஒருபோதும் கருத்துவேறுபாடு எழுந்ததில்லை. இறந்த இக்குழந்தையின் உயிர் அந்த உண்மையின் மூலம் மீளட்டும்.(21) வாய்மையும், அறமும் எப்போதும் என்னில் நிறுவப்பட்டிருப்பதைப் போல {நிறுவப்பட்டிருப்பது உண்மையானால்} அபிமன்யுவின் இந்த இறந்த குழந்தையுடைய உயிர் (அந்தத் தகுதிகளால் {புண்ணியங்களால்}) மீளட்டும்.(22) கம்சனும், கேசியும்  என்னால் அறம்சார்ந்து கொல்லப்பட்டதைப் போல {அறம் சார்ந்து கொல்லப்பட்டது உண்மையானால்}, அந்த உண்மையினால் இன்று இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.(23)

ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இந்தச் சொற்கள் சொல்லப்பட்ட பிறகு, அந்தக் குழந்தை {பரீக்ஷித்} உயிரூட்டம் பெற்றுப் படிப்படியாக {மெல்ல மெல்ல} அசையத் தொடங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}[3].(24)

அபிமன்யுவின் வாரிசு – பரிக்ஷித்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 70-: காரணத்துடன் குழந்தைக்குப் பெயர் சூட்டிய கிருஷ்ணன்; பொற்சுமையுடன் பாண்டவர்கள் வந்து கொண்டிருப்பதைக் கேட்டு வரவேற்கச் சென்ற கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனால் பிரம்மாயுதம் விலக்கப்பட்ட {உபஸம்ஹாரம் செய்யப்பட்ட} அந்த நேரத்தில், உன் தந்தையின் {பரிக்ஷித்தின்} சக்தியால் அந்தப் பேற்றறை {பிரசவ அறை} ஒளி பொருந்திற்று.(1) (அங்கே வந்திருந்த) ராட்சசர்கள் அனைவரும் அந்த அறையைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் {ராட்சசர்களில்} பலர் அழிவையும் அடைந்தனர். ஆகாயத்தில் ஒரு குரல், “நன்று, ஓ! கேசவா, நன்று” என்று சொல்வது கேட்டது.(2) சுடர்மிக்க அந்தப் பிரம்மாயுதம் (உலகங்கள் அனைத்தின்) பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} திரும்பிச் சென்றது. ஓ! மன்னா, உன் தந்தை தன் உயிர்மூச்சைத் திரும்பப் பெற்றான்.(3)

அந்தக் குழந்தை தன் சக்தி மற்றும் வலிமைக்குத் தகுந்தபடி அசைந்தது. பாரதப் பெண்மணிகள் அனைவரும் இன்பத்தால் நிறைந்தனர்.(4) கோவிந்தனுடைய ஆணையின் பேரில், பிராமணர்கள் ஆசிகள் கூறினர் {ஸ்வஸ்திவாசனம் செய்தார்கள்}. இன்பத்தில் நிறைந்திருந்த பெண்கள் அனைவரும் ஜனார்த்தனனைப் புகழ்ந்தனர்.(5) உண்மையில், பாரதச் சிங்கங்களின் மனைவியரான குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை, உத்தரை ஆகியோரும் மற்றும் மனிதர்களில் சிங்கங்களாகத் திழ்ந்தவர்களின் மனைவிமாரும், (உடைந்த கப்பலிலிருந்து) படகை அடைந்து, கரையை எட்டியவர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(6)

அப்போது மல்லர்கள் {மற்போர்புரிபவர்கள்}, நடிகர்கள் {நடர்கள்}, கணிகர்கள் {சோதிடர்கள்}, (இளவரசர்களின்) உறக்கத்தைக் குறித்து விசாரிப்பவர்கள்,(7) சூதர்கள், மாகதர்கள், துதிபாடிகள் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, குரு குலத்தின் புகழால் நிறைந்த நல்லாசிகளைக் கூறியபடியே ஜனார்த்தனனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தனர்.(8) தன் கைகளில் தன் குழந்தையைச் சுமந்தபடி தகுந்த காலத்தில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எழுந்த உத்தரை, யதுகுலத்தைத் திளைக்கச் செய்பவனை {கிருஷ்ணனை} மதிப்புடன் வணங்கினாள்.(9)

பெரிதும் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன், மதிப்புமிக்க ரத்தினங்கள் பலவற்றைக் குழந்தைக்குப் பரிசாக வழங்கினான். விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த வேறு தலைவர்களும் அதையே செய்தனர். அப்போது, ஓ! ஏகாதிபதி, பலமிக்கவனும், வாய்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவனுமான ஜனார்த்தனன், உன் தந்தையான அந்தக் குழந்தைக்கு ஒரு பெயரைச் சூட்டினான். {கிருஷ்ணன்}, “அபிமன்யுவின் குழந்தையான இவன், தன் குலம் கிட்டத்தட்ட அழிந்து போகும் நேரத்தில் பிறந்ததால்,(10,11) இவனது பெயர் பரிக்ஷித் என்றிருக்கட்டும்” என்றான்[1]. இதையே அவன் சொன்னான். பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதா, உன் தந்தை வளரத் தொடங்கி,(12) மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான்.ஓ! வீரா {ஜனமேஜயா}, உன் தந்தை {பரிக்ஷித்} ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது, அபரிமிதமான செல்வத்துடன் பாண்டவர்கள் தங்கள் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பி வந்தனர். பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட விருஷ்ணி குலத்தில் முதன்மையானவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றனர்.(14) குடிமக்கள், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தை {ஹஸ்தினாபுரத்தைப்} பெரும் எண்ணிக்கையிலான மலர்மாலைகளாலும், அழகிய கொடிகளாலும், பல்வேறு வகையான கொடிக்கம்பங்களாலும் அலங்கரித்தனர்.(15)

ஓ! மன்னா, அந்தக் குடிமக்கள் தங்கள்தங்களுக்குரிய மாளிகைகளையும் அலங்கரித்தனர். பாண்டு மகன்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பிய விதுரன், கோவில்களில் நிறுவப்பட்டிருந்த அந்தந்த {கோவில்} தெய்வங்களுக்குப் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்யும்படி ஆணையிட்டான். நகரத்தின் முக்கிய வீதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.(16,17) உண்மையில், தொலைவில் உள்ள கடல் அலைகளின் மென்முழக்கங்களுக்கு ஒப்பான ஆயிரங்குரல்களின் ஹுங்காரத்தால் அந்த நகரம் {ஹஸ்தினாபுரம்} நிறைந்திருந்தது. தங்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆடற்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் குரலுடன் கூடியதாக இருந்த அந்த (குரு) நகரம்},(18) அப்போது வைஸ்ரவணனின் {குபேரனின்} மாளிகைக்கு ஒப்பானதாக இருந்தது[2].ஓ! மன்னா {ஜனமேஜயா}, அழகிய பெண்களுடன் கூடிய வந்திகள் மற்றும் துதிபாடிகள்,(19) அந்த நகரத்தின் பல்வேறு இடங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொடிகள், அடிவானத்தின் தெற்கு மற்றும் வடக்குத் திசைப்புள்ளிகளைக் காண்பிப்பதைப் போல, காற்றால் இனிமையான மிதக்கச் செய்யப்பட்டன. அரசு அலுவலர்கள் அனைவரும், ரத்தினர்கள் மற்றும் பிற மதிப்பு மிக்கப் பொருட்களைக் கொண்டு வரும் பணியில் வெற்றியடைந்ததன் குறியீடாக மொத்த நாட்டுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய நாளாக அது விளங்குவதாக உரக்க அறிவித்தனர் {பறையறிவித்தனர்}” {என்றார் வைசம்பாயனர்}.(20,21)

குரு நீயே! – அஸ்வமேதபர்வம் பகுதி – 71-யுதிஷ்டிரனை எதிர்கொண்டழைத்த கிருஷ்ணன்; அஸ்வமேத யாகம் செய்ய அனுமதித்த வியாசர்; கிருஷ்ணன் செய்யட்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மறுத்து யுதிஷ்டிரனைச் செய்யச் சொன்ன கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பகைவரை அழிப்பவனான வாசுதேவன், பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு, அவர்களைக் காணத் தன் அமைச்சர்களுடன் புறப்பட்டுச் சென்றான்.(1) அப்போது, ஓ! மன்னா, வழக்கமான நடைமுறைகளின்படி விருஷ்ணிகளுடன் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} பாண்டவர்கள் நுழைந்தனர்.(2) குரல்களின் ஹுங்காரம், பெரும்படையின் தேர்களுடைய சடசடப்பொலி ஆகியவற்றுடன் கூடிய பூமி மற்றும் ஆகாயம் என்ற மொத்த வெளியே அவற்றால் {அவ்வொலிகளால்} மொத்தமாக நிறைந்தது.(3) மகிழ்ச்சிகரமான இதயங்களுடன் கூடிய பாண்டவர்கள், தங்கள் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் துணையுடன், செல்வக்கருவூலத்தைத் தங்கள் முன்னணியில் வைத்துக் கொண்டு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்.(4)

வழக்கத்திற்கு ஏற்புடைய வகையில் அவர்கள் முதலில் மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று, தங்களுடைய பெயர்களை அறிவித்துக் கொண்டு, அவனது பாதங்களை வழிபட்டனர்.(5) பிறகு, ஓ! மன்னர்களின் தலைவா, பாரதக் குலத்தில் முதன்மையான அவர்கள், சுபலனின் மகளான காந்தாரிக்கும், குந்திக்கும் தங்கள் மதிப்புமிக்க வணக்கங்களைச் செலுத்தினர்.(6) அடுத்ததாக (தங்கள் சிறிய தந்தையான) விதுரரை வழிபட்டு, திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகனான யுயுத்சுவைச் சந்தித்தனர். அப்போது, ஓ! மன்னா, அவர்கள் பிறரால் வழிபடப்பட்டு அழகுடன் பிரகாசித்தனர்.(7) அதன்பிறகு, ஓ! பாரதா, அந்த வீரர்கள், அற்புதம் நிறைந்தவையும், ஆச்சரிகரமானவையும், மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவையுமான உன் தந்தை {பரிக்ஷித்} குறித்த செய்திகளைக் கேட்டனர்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் சாதனையைக் கேட்ட அவர்கள் அனைவரும், தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவனும், அனைத்து வகை வழிபாட்டிற்கும் தகுந்தவனுமான கிருஷ்ணனை வழிபட்டனர்.(9)

அதன்பிறகு, சிறிது நாள் கழித்து, பெருஞ்சக்தி கொண்டவரும், சத்தியவதியின் மகனுமான வியாசர், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தார்.(10) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள், வழக்கமான நடைமுறையின்படி அந்தப் பெரும் முனிவரை வழிபட்டனர். உண்மையில், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் முதன்மையான இளவரசர்களான அந்த வீரர்கள், தங்கள் துதிகளை அத்தவசிக்குச் செலுத்தினர்.(11) பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய பிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், வியாசரிடம்,(12) “ஓ! புனிதமானவரே, உம் அருளால் இங்கே கொண்டுவரப்பட்ட இந்தப் பொக்கிஷத்தைக் குதிரை வேள்வி {அஸ்வமேதயாகம்} என்ற பெயரால் அழைக்கப்படும் பெரும் வேள்விக்கு அர்ப்பணிக்க நான் விரும்புகிறேன்.(13) ஓ! தவசிகளில் சிறந்தவரே, உமது அனுமதியைப் பெற நான் விரும்புகிறேன். ஓ! முனிவரே, உமக்கும், உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கும் நாங்கள் அனைவரும் வசப்பட்டவர்கள்” என்றான்.(14)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். எது முதலில் செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியைச் செய்வதன் மூலம் நீ முறையாகத் தேவர்களை வழிபடுவாயாக.(15) ஓ! மன்னா, குதிரை வேள்வி அனைத்துப் பாவங்களையும் தூய்மைப்படுத்தும். அந்த வேள்வியின் மூலம்தேவர்களை வழிபடுவதால் அனைத்துப் பாவங்களும் நிச்சயம் தூய்மையடையும் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிட} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, இவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான குரு மன்னன் யுதிஷ்டிரன், குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்குத்} தேவையான ஆயத்தங்களைச் செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(17) பெரும் நாநயமிக்க அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, இவை யாவற்றையும் தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} சொல்லிவிட்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} அணுகி,(18) “ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னால் தேவகிதேவி, தாய்மார்களில் பெரும் பேறு பெற்றவளெனக் கருதப்படுகிறாள். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உனக்குச் சொல்லப் போவதைச் செய்வாயாக.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நாங்கள் அனுபவிக்கும் பல்வேறு இன்பங்கள் யாவும் உன் பலத்தின் மூலமே அடையப்பட்டன. உன் ஆற்றல் மற்றும் புத்தியின் மூலமே மொத்த பூமியும் வெல்லப்பட்டது.(20) எனவே, தொடக்கச் சடங்குகளை நீயே செய்வாயாக {உன்னை தீக்ஷையுள்ளவனாகச் செய்வாயாக}. எங்களது உயர்ந்த ஆசானும், குருவும் நீயே. ஓ! தசார்ஹ குலத்தோனே, இவ்வேள்வியை நீ செய்தால், நான் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவேன்.(21) வேள்வியானவன் நீயே. அழிவற்றவன் நீயே. இவை யாவுமாக இருப்பவன் நீயே. அறம் நீயே. பிரஜாபதி நீயே. அனைத்து உயிரினங்களின் இலக்கும் {கதியும்} நீயே. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்” என்றான்.(22)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, இவ்வாறு சொல்ல {செய்ய} நீரே தகுந்தவர். நீரே அனைத்து உயிரினங்களின் இலக்காயிருக்கிறீர் {அறமெனும் கதியாயிருக்கிறீர்}. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்.(23) குரு குல வீரர்களுக்கு மத்தியில், உமது அறத்தின் விளைவால் நீர் இன்று பெரும் மகிமையில் ஒளிர்கிறீர். ஓ! மன்னா, அவர்கள் யாவரின் மீதும் நீர் உமது நிழலை விழச் செய்தீர். நீரே எங்கள் மன்னன், நீரே எங்களுக்குப் பெரியவர்.(24) தாராளமாக வழங்கப்படும் என் அனுமதியுடன், இவ்வேள்வி பரிந்துரைக்கும் தேவர்களைத் வணங்குவீராக. ஓ! பாரதரே, நீர் விரும்பும் பணிகளில் எங்களை நியமிப்பீராக. உண்மையில், ஓ! பாவமற்றவரே, நிறைவேற்றச் சொல்லி நீர் இடும் ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன்.(25) இவ்வேள்வியை நீர் செய்யும்போதே, பீமசேனர், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் மகன்கள் {நகுல சகாதேவன்} இருவரும் செய்தவர்களாவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”.(26)

யாகக் குதிரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 72-யாகக் குதிரையைச் சுற்றவிடும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; குதிரையைக் காக்க அர்ஜுனனை நியமித்த யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி இச்சொற்களைச் சொன்னான்:(1) “நீர் உண்மையில் அறிந்தவாறு சடங்குக்கு உரிய நேரத்தில் என்னைத் தொடங்கச் செய்வீராக. என்னுடைய இவ்வேள்வி முழுமையாக உம்மைச் சார்ந்தது” {என்றான்}.(2)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, நான், பைலன், யாஜ்ஞவல்கியன் ஆகியோர் ஒவ்வொரு சடங்கையும் அதனதனுக்குரிய நேரத்தில் நிச்சயம் செய்வோம்.(3) {வேள்வியைச் செய்வதற்குரிய} உனக்கான தொடக்கச் சடங்கு, சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} செய்யப்படும்[1]. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, வேள்விக்குத் தேவையான அனைத்தையும் தயாராக இருக்கட்டும்.(4) குதிரை அறிவியலை நன்கறிந்த சூதர்கள், அதை அறிந்த பிராமணர்கள் ஆகியோர், ஆய்வு செய்த பிறகு, உன் வேள்வி நிறைவடைவதற்குரிய தகுந்த குதிரையைத் தேர்வு செய்யட்டும்.(5) ஓ! மன்னா, சாத்திரத் தீர்மானங்களின்படி அவிழ்த்துவிடப்படும் அவ்விலங்கு, சுடர்மிக்க உன் மகிமையை வெளிப்படுத்தும் வகையில் கடல்களையே கச்சையாகக் கொண்ட மொத்த பூமியில் அது சுற்றித் திரியட்டும்” என்றார் {வியாசர்}”.(7)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(அம்முனிவரால்) இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனும், பூமியின் தலைவனுமான யுதிஷ்டிரன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பிரம்மம் ஓதுபவர் சொன்ன அனைத்தையும் செய்தான்.(7) ஓ! மன்னா, வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் முறையாகத் திரட்டப்பட்டன.(8) அளவற்ற ஆன்மா கொண்ட தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தேவையானவை அனைத்தையும் திரட்டிவிட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} அது குறித்துச்ச ஒன்னான்.(9)

அப்போது பெரும் சக்தி கொண்டவரான வியாசர், தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “எங்களைப் பொறுத்தவரையில், வேள்வியின் நோக்கில் உன்னைத் தொடங்கச் செய்ய நாங்கள் அனைவரும் ஆயத்தமாகவுள்ளோம். ஓ! குரு குலத்தோனே, ஸ்பியம் {கத்தி}, கூர்ச்சம் ஆகியனவும், உன் வேள்விக்குத் தேவையான வேறு பொருட்கள் அனைத்தும் பொன்னால் செயப்படட்டும்[2].(11) சாத்திர விதிகளுக்கு ஏற்ப இன்று அந்தக் குதிரை பூமியில் சுற்றித்திரிய அவிழ்த்து விடப்படட்டும். அந்த விலங்கு, முறையாகப் பாதுகாக்கப்பட்டுப் பூமியில் திரியட்டும்” என்றார் {வியாசர்}.(12)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் குதிரையை அதன் விருப்பப்படி பூமியின் மீது அலைந்து திரிவதற்கு ஏதுவாக இதை அவிழ்த்துவிடுவதற்குரிய ஏற்பாடுகள் உம்மால் செய்யப்படட்டும்.(13) ஓ! தவசியே, இந்தக் குதிரை பூமியில் தன் விருப்பப்படி சுதந்திரமாகத் திரியும்போது அதை எவன் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்”.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (மன்னன் யுதிஷ்டிரனால்) இவ்வாறு சொல்லப்பட்ட தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, “பீமசேனனுக்குப் பின் பிறந்தவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும்,(15) ஜிஷ்ணு என்றழைக்கப்படுபவனும், பெரும்பொறுமை கொண்டவனும், தடைகள் அனைத்தையும் கடக்கவல்லவனும் எவனோ, அவனே இந்தக் குதிரையைப் பாதுகாப்பான். நிவாதகவசர்களை அழிந்தவனான அவனே மொத்த பூமியையும் வெல்லத்தகுந்தவன் ஆவான்.(16) தெய்வீக ஆயுதங்கள் அனைத்தும் அவனிடம் உள்ளன. அவனுடைய உடல், தாங்கும் சக்தியில் ஒரு தேவனுடைய உடலைப் போன்றதாகும். அவனுடைய வில்லும், அம்பறாதூணியும் தெய்வீகமானவை. அவனே இந்தக் குதிரையைப் பின்தொடரட்டும்.(17) அறம், பொருள் ஆகிய இரண்டையும் அவன் நன்கறிந்தவன். அறிவியல்கள் அனைத்திலும் அவன் தேர்ச்சிபெற்றவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அவன் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்தக் குதிரையைச் சுதந்திரமாக மேயவும், திரியவும் வைக்கட்டும்.(18) 

கரிய நிறம் மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இந்த இளவரசன் {அர்ஜுனன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனாக இருக்கிறான். அபிமன்யுவின் தந்தையான இந்த வீரன் குதிரையைப் பாதுகாப்பான்.(19) பீமசேனனும் பெருஞ்சக்தி கொண்டவனே. குந்தியின் மைந்தனான அவன் அளவற்ற வலிமையைக் கொண்டவனாவான். ஓ! ஏகாதிபதி, நகுலனின் துணையுடன் அவன் {பீமன்} நாட்டைப் பாதுகாக்கத் தகுந்தவனாவான்.(20) ஓ! குரு குலத்தோனே, பெரும் நுண்ணறிவையும், புகழையும் கொண்ட சகாதேவன், உன் தலைநகருக்கு அழைக்கப்பட்டிருக்கும் உறவினர்கள் அனைவரையும் முறையாகக் கவனிப்பான்” என்றார் {வியாசர்}.(21) அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், ஒவ்வொரு ஆணையையும் முறையாக நிறைவேற்றி, குதிரையைக் கவனிக்கப் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(22)

யுதிஷ்டிரன், “ஓ! அர்ஜுனா, ஓ! வீரா, வருவாயாக, இந்தக் குதிரை உன்னால் பாதுகாக்கப்படட்டும். இதைப் பாதுகாக்க நீ மட்டுமே தகுந்தவன்; வேறு எவனும் அல்ல.(23) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, ஓ! பாவமற்றவனே, உன்னுடன் மோத முன் வரும் மன்னர்களிடம் போரைத் தவிர்க்க உன்னால் முடிந்தவரை முயற்சிப்பாயாக.(24) மேலும் நீ அவர்களை என்னுடைய வேள்விக்கு அழைக்கவும் வேண்டும். உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவர்களுடன் நட்புறவை நிறுவ முயற்சிப்பாயாக[3]” என்றான்”.(25)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியான சவ்யசாச்சினிடம் {அர்ஜுனனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பீமன் மற்றும் நகுலனிடம் நகரத்தைப் பாதுகாக்க ஆணையிட்டான்.(26) மன்னன் திருதராஷ்டிரனின் அனுமதியுடன் அவன், போர்வீரர்களில் முதன்மையான சகாதேவனை, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரையும் கவனிக்கும் காரியத்தில் நிறுவினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

வடக்கிலிருந்து கிழக்கே திரும்பிய குதிரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 73-யாகக் குதிரையைப் பின்தொடர்ந்து வடக்குத் திசைக்குச் சென்று, கிழக்கில் திரும்பிய அர்ஜுனன்; அங்கே எதிர்த்த மன்னர்களை வென்றது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{அவ்வேள்வித்} தொடக்கத்திற்கான வேளை வந்தபோது, குதிரை வேள்வியைக் கருத்தில் கொண்ட பெரும் ரித்விஜர்கள் அனைவரும், மன்னனை {யுதிஷ்டிரனை} முறையாக அதைத் தொடங்கச் செய்தனர் {யுதிஷ்டிரனுக்கு அஸ்வமேத யாகத்திற்கான தீக்ஷையை விதிப்படி செய்வித்தனர்}.(1) பாண்டுவின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேள்வி விலங்குகளைக் கட்டும் சடங்குகளை நிறைவேற்றி {வேள்வியின்} தொடக்கம் {தொடக்கச் சடங்கு} முடிந்தவுடன் ரித்விஜர்களுடன் சேர்ந்து பெரும் காந்தியுடன் ஒளிர்ந்தான்.(2) குதிரை வேள்விக்காகக் கொண்டுவரப்பட்ட குதிரை சாத்திர விதிகளுக்கு ஏற்புடைய வகையில் அளவிலா சக்தி கொண்டவரும், பிரம்மதை ஓதுபவருமான வியாசரால் அவிழ்த்துவிடப்பட்டது.(3) ஓ! ஏகாதிபதி, கழுத்தைச் சுற்றிலும் தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், {வேள்விக்கான} தன் தொடக்கத்திற்குப் பிறகு சுடர்மிக்க நெருப்பைப் போல அழகில் ஒளிர்ந்தான்.(4) கருப்பு மான்தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், கையில் தண்டத்தைக் கொண்டவனும், வெண்பட்டு உடுத்தியவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பிரஜாபதியைப் போல ஒளிர்ந்தான்.(5)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவனது ரித்விஜர்கள் அனைவரும் அதே போன்ற ஆடைகளையே உடுத்தியிருந்தனர். அர்ஜுனன் சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான்.(6) ஓ! மன்னா, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், கருப்பு மானின் நிறத்தில் இருந்த அந்தக் குதிரையைப் பின்தொடர்வதற்கு முறையாகத் தயாரானான்.(7) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, காண்டீவம் என்ற பெயரைக் கொண்ட தன் வில்லை மீண்டும் மீண்டும் இழுத்து, உடும்புத் தோலாலான தன் கையுறையைப் பூட்டி, உற்சாகமிக்க இதயத்துடன் அந்தக் குதிரையைப் பின்தொடர ஆயத்தமானான்.(8) ஓ! மன்னா, குழந்தைகள் உள்ளிட்ட ஹஸ்தினாபுரத்தோர் அனைவரும், குருக்களில் முதன்மையான தனஞ்சயனின் பயணத்தின் தொடக்கத்தில் அவனைக் காண விரும்பி அந்த இடத்திற்கு வந்தனர்.(9) குதிரையையும், அதைப் பின்தொடர்ந்து செல்லப்போகும் இளவரசனையும் {அர்ஜுனனையும்} காண வந்த பார்வையாளர்களின் உடல்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவால் நெருப்புண்டாகிவிடும் எனத் தோன்றும் அளவுக்கு அக்கூட்டம் அடர்த்தியாக இருந்தது.(10)

குந்தியின் மகனான தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காண அங்கே கூடியிருந்த மனிதக் கூட்டத்திலிருந்து எழுந்த உரத்தவொலி, திசைப்புள்ளிகள் அனைத்தையும், மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாக இருந்தது.(11) அவர்கள், “குந்தியின் மகன் அதோ போகிறான், சுடர்மிக்க அழகுடன் கூடிய குதிரை அதோ இருக்கிறது. உண்மையில் அந்த வலிமைமிக்க வீரன் தன் சிறந்த வில்லைத் தரித்துக் கொண்டு அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து செல்கிறான்” என்றனர்.(12) உன்னதமான நுண்ணறிவுடன் கூடிய ஜிஷ்ணு கேட்ட சொற்கள் இவையே. மேலும் அந்தக் குடிமக்கள், “அருள் உனதாகட்டும். ஓ! பாரதா, பாதுகாப்புடன் சென்று திரும்புவாயாக” என்று ஆசி கூறினர்.(13) ஓ! மனிதர்களின் தலைவா, வேறு சிலர், “அர்ஜுனனைக் காண முடியாத அளவுக்கு {கூட்ட} நெருக்கடி அதிகமாக இருக்கிறது. எனினும், அவனது வில் நமக்குத் தெரிகிறது.(14) பயங்கர நாணொலியைக் கொண்டதும் கொண்டாடப்படும் வில்லுமான காண்டீவம் அதுவே. {என்று சொல்லிவிட்டு, அர்ஜுனன் கேட்கும் வகையில்} நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் பாதையில் உள்ள ஆபத்துகள் அனைத்தும் தப்பி ஓடட்டும் {விலகிச் செல்லட்டும்}. எங்கும் உனக்கு அச்சம் ஏற்பட வேண்டாம் {என்று உரக்கச் சொல்லி, மீண்டும் தங்களுக்குள்}.(15) இவன் நிச்சயம் திரும்பிவருவான், அவ்வாறு திரும்பும்போது நான் இவனைக் காணலாம்” என்றனர்.

ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உயர் ஆன்ம அர்ஜுனன், ஆண்களும், பெண்களும் சொல்லும் இதே போன்ற சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டான். வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்தவனும், வேதங்களில் முழுத் தேர்ச்சி பெற்றவனுமான யாஜ்ஞவல்கியரின் சீடன் ஒருவன், பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சாதகமாக மங்கலச் சடங்குகளைச் செய்து கொண்டே அந்த வீரனுடன் {அர்ஜுனனுடன்} சென்றான். ஓ! மன்னா, நீதிமானான யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், வேதங்களை நன்கறிந்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும் அந்த உயர் ஆன்ம வீரனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(16-19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களின் சக்தி மூலம் ஏற்கனவே வென்ற பூமியில் தான் விரும்பிய இடமெல்லாம் அந்தக் குதிரைச் சுற்றித் திரிந்தது.(20)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை அவ்வாறு திரிந்து சென்ற போது, அர்ஜுனனுக்கும், மன்னர்கள் பலருக்கும் இடையில் அற்புதம் நிறைந்த பெரிய போர்கள் பல நேரிட்டன. அவற்றை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(21) ஓ! மன்னா, அந்தக் குதிரை பூமி முழுவதும் சுற்றித் திரிந்தது. ஓ! ஏகாதிபதி, வடக்கிலிருந்து அது கிழக்கி நோக்கித் திரும்பியது என்பதை அறிவாயாக.(22) ஏகாதிபதிகள் பலரின் நாடுகளைக் கலங்கடித்தபடியே அந்தச் சிறந்த குதிரை திரிந்து கொண்டிருந்தது. வெண்குதிரைகளைக் கொண்ட பெருந்தேர்வீரனான அர்ஜுனனால் அது மெதுவாகப் பின்தொடரப்பட்டது.(23) ஓ! ஏகாதிபதி, குருக்ஷேத்திரக் களத்தில் தங்கள் உற்றார் உறவினரை இழந்திருந்தவர்களும், அந்தச் சந்தர்ப்பத்தில் அர்ஜுனனிடம் போரிட்ட {பதினாயிரக்கணக்கில் இருந்த} மன்னர் கூட்டமும், கணக்கற்றவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் விதியைச் சந்தித்தனர்.(24)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, எண்ணற்ற கிராதர்களும், சிறந்த வில்லாளிகளான யவனர்களும், (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே பாண்டவர்களால்) வீழ்த்தப்பட்டவர்களான மிலேச்சர்களின் பல்வேறு இனக்குழுக்களும்,(25) பெரும் வேகம் கொண்ட படைவீரர்களையும், விலங்குகளையும் கொண்டவர்களும், போரில் தடுக்கப்பட முடியாதவர்களான ஆரிய {உன்னதமான} மன்னர்கள் பலரும், அந்தப் பாண்டு மகனுடன் போரிட்டனர்.(26) ஓ! ஏகாதிபதி, இவ்வாறு அர்ஜுனனுக்கும், அவனோடு மோத வந்த பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் எண்ணற்ற போர்கள் நிகழ்ந்தன.(27) ஓ! பாவமற்ற மன்னா, அவன் போரிட்டவற்றுள் பெருஞ்சீற்றத்துடன் நடந்தவையும், முக்கியமான போர்களையும் மட்டுமே நான் உனக்குச் சொல்லப் போகிறேன்” {என்றார் வைசம்பாயனர்}.(28)

காண்டீவம் நழுவியது! – அஸ்வமேதபர்வம் பகுதி – 74-திரிகர்த்தர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் மூண்ட போர்; இளைஞனான திருதவர்மனின் போர்த்திறனைக் கண்டு வியந்த அர்ஜுனன்; காண்டீவம் நுழுவியது; மூர்க்கத்துடன் போரிட்ட அர்ஜுனன்; அடிபணிந்த திரிகர்த்தர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஏற்கனவே பாண்டவர்களுடன் பகை பூண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாக நன்கறியப்பட்டவர்களுமான திரிகர்த்தர்களின் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்தவனுக்கும் (அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு போர் நடந்தது.(1) வேள்விக்காக அனுப்பப்பட்ட முதன்மையான குதிரை தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் வந்ததை அறிந்த அவ்வீரர்கள் {திரிகர்த்தர்கள்}, கவசம்பூண்டவர்களாக அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! மன்னா, நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் ஏறி, தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணியுடன் கூடிய அவர்கள் அந்தக் குதிரையைச் சூழ்ந்து கொண்டு, அதைக் கைப்பற்ற முயற்சித்தனர்.(3) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், அவர்களுடைய முயற்சிகளை எண்ணிப் பார்த்து, சமாதானப் பேச்சுகளின் மூலம் அந்த வீரர்களைத் தடுத்தான்.(4) அர்ஜுனனின் செய்தியை அலட்சியம் செய்த அவர்கள் தங்கள் கணைகளைக் கொண்டு அவனைத் தாக்கினர். கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், இருள் மற்றும் ஆசையின் {தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களின்) ஆதிக்கத்தில் இருந்த அந்தப் போர்வீரர்களைத் தடுத்தான்.(5)

ஜிஷ்ணு {அர்ஜுனன்} புன்னகைத்தபடியே, “அறமற்றவர்களே, விலகுவீராக. உயிரானது (வீசியெறியப்படக்கூடாத) நன்மையான ஒன்றாகும்” என்றான். அவன் புறப்பட்ட வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே உறவினர்கள் கொல்லப்பட்டவர்களான க்ஷத்திரியர்களைக் கொல்ல வேண்டாம் எனத் தடையாணை விதித்திருந்தான்.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய இந்த ஆணைகளை நினைவுகூர்ந்த அர்ஜுனன், திரிகர்த்தர்களைத் திரும்புமாறு கேட்டான். ஆனால் அவர்கள் அர்ஜுனனின் தடையாணையை அலட்சியம் செய்தனர்.(8) அதன்பிறகு அர்ஜுனன், அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே திரிகர்த்த மன்னன் சூரியவர்மன் மீது எண்ணற்ற கணைகளை ஏவி அவனை வென்றான்.(9) எனினும், தேர்கள் மற்றும் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடியே தனஞ்சயனை நோக்கித் திரிகர்த்தப் போர்வீரர்கள் விரைந்தனர்.(10)

அப்போது, பெரும் கரநளினத்தை வெளிப்படுத்திய சூரியவர்மன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, நூற்றுக்கணக்கான நேரான கணைகளால் தனஞ்சயனைத் துளைத்தான்.(11) மன்னனைப் பின்தொடர்ந்து வந்தவர்களும், தனஞ்சயனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பியவர்களுமான பிற பெரிய வில்லாளிகள் அனைவரும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(12) ஓ! மன்னா, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வில்லின் நாணிலிருந்து எண்ணற்ற கணைகளை ஏவி அந்தக் கணைமேகத்தை வெட்டி வீழ்த்தினான்.(13) சூரியவர்மனின் தம்பியும், இளமையின் சீற்றத்தைக் கொண்டவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேதுவர்மன், பெரும் புகழ் கொண்ட பாண்டு மகனை {அர்ஜுனனைத்} தன் அண்ணனுக்காக எதிர்த்தான்.(14) போரில் தன்னை நோக்கி வரும் கேதுவர்மனைக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, கூர்முனை கொண்ட கணைகள் பலவற்றால் அவனைக் {கேதுவர்மனைக்} கொன்றான்.(15)

கேதுவர்மன் வீழ்ந்தபிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான திருதவர்மன், தன் தேரில் ஏறி அர்ஜுனனை நோக்கி வரைந்து சென்று, அவன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(16) இளைஞனான திருதவர்மனின் கரநளினத்தைக் கண்டவனும், வலிமை, சக்தி மற்றும் பேராற்றலைக் கொண்டவனுமான குடாகேசன் {அர்ஜுனன்}, அவனிடம் பெரும் நிறைவையடைந்தான்.(17) அந்த இளம் போர்வீரன் எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது வில்லின் நாணில் அவற்றைப் பொருத்தித் தன் மீது குறி பார்த்தான் என்பதை இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} காண முடியவில்லை. அவன் காற்றில் பறந்து வரும் கணைமாரியை மட்டுமே கண்டான்.(18) குறுகிய காலம் வரை {ஒரு முகூர்த்த காலம்} அர்ஜுனன் தன் எதிரிக்கு மகிழ்ச்சியை அளித்து, அவனுடைய வீரத்தையும் திறனையும் கண்டு வியந்தான்.(19) சிரித்துக் கொண்டே இருந்த அந்தக் குருவீரன் {அர்ஜுனன்}, கோபம்நிறைந்த பாம்புக்கு ஒப்பான அந்த இளைஞனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} திருதவர்மனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்ததால் அவனது உயிரை எடுக்காதிருந்தான்.(20)

எனினும், அளவற்ற சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, திருதவர்மனின் உயிரை எடுக்க விரும்பாது அவனுடன் மென்மையாகப் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் சுடர் மிக்கக் கணையொன்றை அவன் மீது ஏவினான்.(21) அக்கணையால் ஆழத்துளைக்கப்பட்ட விஜயன் {அர்ஜுனன்} திகைப்படைந்தான், அவனது வில்லான காண்டீவம் திடமான பிடியில் இருந்து நழுவி பூமியில் விழுந்தது.(22) ஓ! மன்னா, அர்ஜுனனின் பிடியில் இருந்து விழுந்த போது அந்த வில்லின் வடிவம் (மழைக்குப் பின் ஆகாயத்தில் தோன்றும்} இந்திரனின் வில்லுக்கு {வானவில்லுக்கு} ஒப்பானதாகத் தெரிந்தது.(23) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமானதும், பெரியதுமான அந்த வீல் போரில் கீழே விழுந்தபோது திருதவர்மன் உரக்க நகைத்தான்.(24) இதனால் சினம் தூண்டப்பட்டவனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தன் கரத்தில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டு, மீண்டும் தன் வில்லை எடுத்துக் கொண்டு சரியான கணைமாரியைப் பொழிந்தான்.(25)

அப்போது, தனஞ்சயனின் அந்தச் சாதனையை மெச்சிய பல்வேறு உயிரினங்களின் குழப்பான {கல கலவென்ற} உரத்த ஒலி, ஆகாயத்தை நிறைத்து, சொர்க்கங்களையே தொட்டது.(26) சினத்தில் தூண்டப்பட்டு, யுகத்தின் முடிவில் தோன்றும் யமனைப் போலத் தெரிந்த ஜிஷ்ணுவைக் கண்ட திரிகர்த்த போர்வீரர்கள், திருதவர்மனைக் காக்கும் விருப்பத்தில் தங்கள் நிலைகளில் இருந்து விரைந்த வந்து வேகமாக அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். தன் பகைவர்களால் சூழப்பட்டவனாகத் தன்னைக் கண்ட அர்ஜுனன் முன்பைவிட அதிகக் கோபம் கொண்டான்.(27,28) அவன் விரைவில், பெரும் இந்திரனின் கணைகளுக்கு ஒப்பானவையும், வாரப்பிரும்பாலானவையுமான கணைகள் பலவற்றால் அவர்களில் முதன்மையான போர்வீரர்களான பதினெட்டு பேரை விரைவாகக் கொன்றான்.(29) அப்போது திரிகர்த்தப் போர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர். அவர்கள் பின்வாங்குவதைக் கண்ட தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றைப் பெரு வேகத்துடன் அவர்கள் மீது ஏவி உரக்கச் சிரித்தான்.(30)

தனஞ்சயனின் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், உற்சாகமிழந்த இதயத்துடன் திசைகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(31) அப்போது அவர்கள், (குருக்ஷேத்ரப் போர்க்களத்தில்) சம்சப்தகக் கூட்டத்தைக் கொன்ற அந்த மனிதர்களில் புலியிடம் {அர்ஜுனனிடம்}, “நாங்கள் உமது அடிமைகள். நாங்கள் உமது வசப்படுகிறோம்[1].(32) ஓ! பார்த்தரே, எங்களுக்கு ஆணையிடுவீராக. மிக அடக்கமான உமது பணியாட்களைப் போல நாங்கள் இங்கே காத்திருக்கிறோம் பாரும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நாங்கள் உமது ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்” என்றனர்.(33) அடிபணிவதை வெளிப்படுத்தும் இச்சொற்களைக் கேட்ட தனஞ்சயன், அவர்களிடம், “ஓ! மன்னர்களே, உங்கள் உயிரைக் காத்துக் கொண்டு, என் ஆட்சிப்பகுதியை ஏற்றுக் கொள்வீராக” என்றான்”.(34)

பகதத்தத்தன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 75-பிராக்ஜோதிஷ நாட்டுக்குச் சென்ற குதிரை; குதிரையைக் கைப்பற்றிய வஜ்ரதத்தன்; அர்ஜுனனுக்கும், வஜ்ரதத்தனுக்கும் இடையில் நடந்த போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த முதன்மையான குதிரை பிராக்ஜோதிஷ நாட்டுக்குள் சென்று அங்கே திரியத் தொடங்கியது. போரில் வீரமிக்கவனான பகதத்தனின் மகன் இதைக் கண்டு (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) வெளியே வந்தான்.(1) ஓ! பாரதர்களில் தலைவா, மன்னன் வஜ்ரதத்தன் {யஜ்ஞதத்தன்}, தன் நாட்டுக்குள் வந்த (வேள்விக்) குதிரையைக் கண்டு, (அதைப் பிடிப்பதற்காகப்) போரிட்டான்.(2) பகதத்தனின் அரசமகன், தன் நகரத்தைவிட்டு வெளியே வந்து, அங்கே வந்த குதிரையைப் பீடித்து (அதைக் கைப்பற்றி) தன் இடத்தை {பட்டணத்தை} நோக்கித் திரும்பிச் சென்றான்.(3) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குருகுலத் தலைவன் {அர்ஜுனன்} இதைக் கண்டு, விரைவாகத் தன் காண்டீவத்தை வளைத்துத் திடீரெனத் தன் பகைவனை நோக்கி விரைந்தான்.(4) காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகளால் திகைப்படைந்த பகதத்தனின் வீர மகன் {வஜ்ரதத்தன்}, குதிரையை விட்டுவிட்டுப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடினான்[1].(5)போரில் தடுக்கப்பட முடியாதவனான அந்த முதன்மையான மன்னன் {வஜ்ரதத்தன்}, மீண்டும் தன் தலைநகருக்குள் நுழைந்து, கவசம் பூண்டு, யானைகளின் இளவரசனான தன் யானையில் ஏறி வெளி வந்தான்.(6) அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், தன் தலைக்கு மேல் வெண்குடையைக் கொண்டிருந்தான், அவனுக்குப் பால்போன்ற நிறத்தில் இருந்த வெண்சாமரம் வீசப்பட்டது.(7) சிறுபிள்ளைத்தனம் மற்றும் மூடத்தனத்தால் அவன், பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், போர்க்களத்தில் பயங்கரச் செயல்களுக்காகப் புகழ்பெற்றவனுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போர்புரிய அவனை அறைகூவியழைத்தான்.(8) சினம் தூண்டப்பட்ட அந்த இளவரசன், முழு மலைக்கு ஒப்பானதும், மதப்பெருக்குள்ள கன்னப்பொட்டுகளும், வாயும் கொண்டதுமான தன் யானையை அர்ஜுனனை நோக்கித் தூண்டினான்.(9) உண்மையில் அந்த யானை, மழைபொழியும் பெரும் மேகத்திரளைப் போலத் தன் மதத்தைப் பெருக்கியது. தன் இனத்தைச் சேர்ந்த படையின் சாதனைகளைத் தடுக்க வல்ல அது, (போர் யானைக்குரிய) உடன்பாட்டுவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. போரில் தடுக்கப்படமுடியாததான அது, கட்டுப்பாட்டைக் கடந்த மதங்கொண்டிருந்தது.(10)

இரும்பு அங்குசத்தைக் கொண்டு அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்தப் பெரும் யானை, (பறந்து வரும் மலையைப் போல) ஆகாயத்தையே பிளப்பது போல (முன்னேறிச் செல்வதாகத்) தெரிந்தது. ஓ! மன்னா, ஓ! பாரதா, தன்னை நோக்கி முன்னேறிவரும் அதனைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சினத்தில் நிறைந்தவனாகப் பூமியில் நின்றபடியே, அதன் முதுகில் இருந்த இளவரசனோடு மோதினான்.(12) கோபத்தில் நிறைந்திருந்த வஜ்ரதத்தன், நெருப்பின் சக்தியைக் கொண்டவையும், (காற்றில் செல்லும்போது) வேகமாகப் பறக்கும் வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பானவையுமான பெரும் எண்ணிக்கையிலான தோமரங்களை அர்ஜுனனை நோக்கி ஏவினான்.(13) எனினும், அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு அந்தத் தோமரங்களில் சிலவற்றை இரண்டாகவும், சிலவற்றை மூன்றாகவும் வெட்டினான். ஆகாயத்தில் பறக்கும் தன் கணைகளைக் கொண்டே அவன் அவற்றை ஆகாயத்திலேயே வெட்டினான்.(14) இவ்வாறு தன் தோமரங்கள் வெட்டப்பட்டதைக் கண்ட பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்}, எண்ணற்ற பிற கணைகளைத் தொடர்ச்சரமாக அர்ஜுனனை நோக்கி ஏவினான்.(15)

இதனால் சினம் கொண்ட அர்ஜுனன், தங்கச் சிறகுகளுடன் கூடிய நேராகச் செல்லும் எண்ணற்ற கணைகளைப் பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்} மீது முன்னைவிட வேகமாக ஏவினான்.(16) பெருஞ்சக்தி கொண்ட வஜ்ரதத்தன், சீற்றமிக்க மோதலில் பெரும் பலத்துடன் தாக்கப்பட்டு, அந்தக் கணைகளால் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான். எனினும், நனைவுநிலை அவனைக் கைவிடவில்லை {அவனுக்கு நினைவு தவறவில்லை}.(17) வெற்றியை விரும்பும் பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்}, அந்தப் போருக்கு மத்தியில் மீண்டும் யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது ஏறி, மிக நிதானமாக எண்ணற்ற கணைகளை அர்ஜுனன் மீது ஏவினான்.(18) கோபத்தால் நிறைந்த ஜிஷ்ணு, நெருப்பின் சுடர்மிக்கத் தழல்களைப் போலத் தெரிந்தவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றைப் போலத் தெரிந்தவையுமான எண்ணற்ற கணைகளை அந்த இளவரசன் மீது ஏவினான்.(19) அவற்றால் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க யானை, பெருமளவிலான குருதியைச் சிந்தி, செஞ்சுண்ண நிறத்தில் நீரை வெளியிடும் சிற்றோடைகள் பலவற்றைக் கொண்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தது[2]” {என்றார் வைசம்பாயனர்}.(20)

வீழ்ந்தான் வஜ்ரதத்தன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 76-பகதத்தன் மகனான வஜ்ரதத்தனை வென்ற அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதர்களின் தலைவா, நூறு வேள்வி செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, விருத்திரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அர்ஜுனனுக்கும், அந்த இளவரசனுக்கும் {வஜ்ரதத்தனுக்கும்} இடையில் நடந்த போர் இவ்வாறே மூன்று நாள் நீடித்தது.(1)

நான்காம் நாளில், பெரும் வலிமை கொண்ட வஜ்ரதத்தன் உரக்கச் சிரித்துக் கொண்டே அர்ஜுனனிடம், “ஓ! அர்ஜுனா, நில், நிற்பாயாக. உன்னால் உயிருடன் தப்ப இயலாது. உன்னைக் கொன்று என் தந்தைக்கு {பகதத்தருக்குச்} செய்ய வேண்டிய நீர்ச்சடங்கை {தர்ப்பணத்தை} முறையாக நான் செய்யப் போகிறேன்.(3) உன் தந்தையின் நண்பரும், வயது முதிர்ந்தவருமான என் தந்தை பகதத்தர், அவருடைய முதுமையின் விளைவால் உன்னால் கொல்லப்பட்டார். எனினும், சிறுவனான என்னுடன் நீ போரிடுவாயாக[1]” என்றான்.(4)ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் வஜ்ரதத்தன், சினத்தில் நிறைந்தவனாகப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நோக்கித் தன் யானையைத் தூண்டினான்.(5) பெரும் நுண்ணறிவுமிக்க வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், ஆகாயத்தையே வெட்ட விரும்பி செல்வதைப் போலத் தனஞ்சயனை நோக்கி விரைந்தது.(6) அந்த யானைகளின் இளவரசன், மழையால் ஒரு மலையை நனைக்கும் நீல மேகத் திரளைப் போலத் தன் துதிக்கையின் முனையில் வெளிப்பட்ட நீரைப் பொழிந்து {ஜலத்திவலையால்} அர்ஜுனனை நனைத்தது.(7) உண்மையில் அம்மன்னனால் தூண்டப்பட்ட அந்த யானை, ஒரு மேகத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டே, தன் வாயில் வெளிப்பட்ட ஆழ்ந்த ஒலியுடன் பல்குனனை நோக்கி விரைந்தது.(8)

உண்மையில் வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், வலிமைமிக்கக் குருக்களின் தேர்வீரனை நோக்கி விரைவாக நகர்ந்து, தன் நடையால் மகிழ்ச்சியில் ஆடுவதைப் போலத் தெரிந்தது.(9) வஜ்ரதத்தனின் அந்த விலங்கு தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், பகைவர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான தனஞ்சயன், தன் காண்டீவத்தைச் சார்ந்து, அச்சத்தால் நடுங்காமல் தன் நிலையில் நின்றான்.(10) தன் பணியை நிறைவேற்றத் தடையாக இருக்கும் வஜ்ரதத்தனை நினைத்து, (பாண்டவர்களிடம் பிராக்ஜோதிஷ) வீடு கொண்ட பழைய பகையையும் நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன், கோபத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக அந்த மன்னனை எதிர்த்தான்.(11) சினத்தால் நிறைந்தவனான தனஞ்சயன், பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தன் கணைப்பொழிவின் மூலம் அந்த விலங்கின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(12)

அழுகுடன் கூடிய (வடிவம் கொண்ட) அந்த யானைகளின் இளவரசன், அர்ஜுனனால் இவ்வாறு தடுக்கப்பட்டு, முள் சிலிர்த்த முள்ளம்பன்றியைப் போலப் பல கணைகளால் உடல் துளைக்கப்பட்டுத் தன் முன்னேற்றத்தை நிறுத்தியது.(13) தன் யானையின் முன்னேற்றம் தடைபட்டதைக் கண்ட பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, சினத்தால் மதியிழந்தவனாகக் கூர் முனை கணைகள் பலவற்றை அர்ஜுனன் மீது ஏவினான்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், பகைவரைக் கொல்லும் தன் கணைகள் பலவற்றால் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். இந்த அருஞ்செயல் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(15)

கடுஞ்சினத்தால் தூண்டப்பட்ட பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {வஜ்ரதத்தன்}, ஒரு மலைக்கு ஒப்பான தன் யானையை மீண்டும் அர்ஜுனனுக்கு எதிராக வலுக்கட்டாயமாகத் தூண்டினான்.(16) மீண்டும் தன்னை நோக்கி முன்னேறிவரும் அவ்விலங்கைக் கண்ட அர்ஜுனன், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி கொண்டதுமான ஒரு கணையைப் பெரும்பலத்துடன் ஏவினான்.(17) ஓ! மன்னா, பாண்டுவின் மகனால் முக்கிய அங்கங்கள் ஆழமாகத் தாக்கப்பட்ட அந்த விலங்கு, வஜ்ரத்தால் தளர்ந்த மலைச் சிகரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தது.(18) தனஞ்சயனின் கணையால் தாக்கப்பட்ட அந்த யானை பூமியில் கிடந்த போது, இந்தரின் வஜ்ரத்தால் {இடியால்} தளர்ந்து பூமியில் விழுந்து கிடக்கும் ஒரு பெரும் மலைப் பாறையைப் போலத் தெரிந்தது.(19)

வஜ்ரதத்தனின் யானை பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த போது, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, யானையுடன் சேர்ந்து விழுந்து கிடந்த அந்த மன்னனிடம், “அஞ்சாதே.(20) உண்மையில், வலிமையும், சக்தியும் கொண்ட யுதிஷ்டிரர், என்னை இந்தப் பணியில் நிறுவும்போது இந்தச் சொற்களையே சொன்னார், “ஓ! தனஞ்சயா, (உன்னுடன் போரில் ஈடுபடும்) மன்னர்களை நீ கொல்லாதே.(21) ஓ! மனிதர்களில் புலியே, பகை மன்னர்களை முடக்கிவிட்டாலே உன் பணி நிறைவடைந்ததாக நீ கருத வேண்டும். ஓ! தனஞ்சயா, உன்னுடன் போரிட வரும் அந்த மன்னர்களின் போர்வீரர்களையும் நீ கொல்லாதே.(22) உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருடன் யுதிஷ்டிரனின் குதிரை வேள்விக்கு வருமாறு அவர்களை அழைப்பாயாக” {என்றார்}.(23)

ஓ! மன்னா, என் அண்ணனின் இந்த ஆணைகளைக் கேட்டிருக்கும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். எழுவாயாக; அச்சம் உனதாக வேண்டாம்; ஓ! பூமியின் தலைவா, பாதுகாப்பாகவும், நலமாகவும் உன் நகரத்திற்குத் திரும்புவாயாக.(24) ஓ! பெரும் மன்னா, சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ரா பௌர்ணமியில்} நடைபெறும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அவ்வேள்விக்கு நீ வருவாயாக” என்றான்.(25)

இவ்வாறு அர்ஜுனனால் சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவனுமான அந்தப் பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

மீண்டும் நழுவிய காண்டீவம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 77-சைந்தவர்களுடன் போர்புரிகையில் மீண்டும் காண்டீவம் நழுவியது; தெய்வீக முனிவர்களின் ஜபத்தால் புதிய பலம் பெற்றுக் கடும் போர்புரிந்த அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்) தங்கள் குலம் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கில் எஞ்சி வாழ்ந்த சைந்தவர்களுக்கும், கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நேர்ந்தது[1]. வெண்குதிரைகளைக் கொண்டவன் தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் {சைந்தவர்கள்}, பாண்டுகுலத்தின் முதன்மையான அவனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனை எதிர்த்து வெளியே வந்தனர்.(2) கடும் நஞ்சைப் போன்ற அந்தப் பயங்கரப் போர்வீரர்கள், அந்தக் குதிரையைத் தங்கள் நாட்டுக்குள் கண்டு, பீமசேனனின் தம்பியான பார்த்தனிடம் எந்த அச்சமும் கொள்ளாமல் அதைக் கைப்பற்றினர்.(3) கையில் வில்லுடன் தரையில் நின்று குதிரையைக் காத்துக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} எதிர்த்த அவர்கள் அருகில் சென்று அவனைத் தாக்கினர்.(4)ஏற்கனவே போரில் வீழ்த்தப்பட்டவர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், வெற்றியடையும் ஆசையால் உந்தப்பட்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவனைச் சூழ்ந்து கொண்டனர்.(5) தங்கள் பெயர்கள், குடும்பங்களின் பெயர்கள் மற்றும் பல்வேறு சாதனைகளை அறிவித்துக் கொண்ட அவர்கள், பார்த்தன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(6) பகை யானைகளையும் தடுக்கவல்ல கடுஞ்சக்தி கொண்ட கணைமாரியைப் பொழிந்த அந்த வீரர்கள், குந்தியின் மகனைப் போரில் வெல்ல விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(7) கடுஞ்சாதனைகளைச் செய்த அர்ஜுனன் தரையில் நிற்க, தேரில் அமர்ந்திருந்த அவர்கள் அவனோடு போரிட்டனர்.(8)

நிவாதகவசர்களைக் கொன்றவனும், சம்சப்தகர்களை அழித்தவனும், சிந்துக்களின் மன்னனை {ஜெயத்ரதனைக்} கொன்றவனுமான அந்த வீரனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்கள் தாக்கத் தொடங்கினர்.(9) ஆயிரம் தேர்கள் மற்றும் பத்தாயிரம் குதிரைகளுடன் கூட்டுக்குள் அடைத்ததைப் போல அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.(10) ஓ! குரு குலத்தவனே, போரில் தனஞ்சயனால் ஜெயத்ரதன் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த அவர்கள், கடும் மழை பொழியும் மேகத் திரளைப் போல அந்த வீரன் மீது கடும் கணை மாரியைப் பொழிந்தனர். அந்தக் கணைமாரியில் மறைந்த அர்ஜுனன், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலத் தெரிந்தான்.(11,12)

ஓ! பாரதா, இரும்புக்கூட்டுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பறவைக்கு ஒப்பாக அந்தப் பாண்டுவின் முதன்மையான மகன் {அர்ஜுனன்}, கணை மேகங்களுக்கு மத்தியில் இருந்தான்.(13) குந்தியின் மகன் இவ்வாறு கணைகளால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, ஓ! என்றும் ஐயோ என்றும் கதறல்கள் மூவுலகங்களிலும் கேட்டன, சூரியன் தன் காந்தியை இழந்தான்.(14) அப்போது, ஓ! மன்னா, கடுங்காற்று வீசத் தொடங்கியது, அதே வேளையில் சூரியன், சந்திரன் இருவரையும் ராஹு விழுங்கினான்.(15) எரிகொள்ளிகள் பல சூரிய வட்டிலைத் தாக்கி பல்வேறு திசைகளில் விழுந்தன. மலைகளின் இளவரசனான கைலாஸம் நடுங்கத் தொடங்கிற்று.(16)

ஏழு (தெய்வீக) முனிவர்களும், சொர்க்கத்தின் வேறு முனிவர்களும், அச்சமடைந்தவர்களாக, துன்பம் மற்றும் கவலையால் பீடிக்கப்பட்டு வெப்பப் பெருமூச்சுகளை விட்டனர்.(17) அந்த எரிகொள்ளிகள் ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு சந்திர வட்டிலிலும் விழுந்தன. திசைப்புள்ளிகள் அனைத்தும் புகையால் நிறைந்து விசித்திரமான தன்மையை ஏற்றன.(18) தங்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருந்த மின்னல் கீற்றுகளுடன் கூடியவையும், பக்கத்துக்குப் பக்கம் எல்லையாக இந்திரவில்லைக் கொண்டவையுமான சிவந்த மேகங்கள், திடீரென ஆகாயத்தை மறைத்துக் கொண்டு, பூமியில் இறைச்சியையும், குருதியையும் பொழிந்தன.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, கணைமாரியில் மூழ்கிய போது இயற்கை இத்தன்மையையே அடைந்தது. உண்மையில், பாரதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, இவ்வாறு பீடிக்கப்பட்ட போது இந்த அதிசயங்கள் தோன்றின.(20)

அடர்த்தியான கணை மேகத்தில் மூழ்கிய அர்ஜுனன் திகைப்படைந்தான். அவனது வில்லான காண்டீவம், அவனது உறுதியான பிடியில் இருந்து தளர்ந்து விழுந்தது, அவனது தோலுறையும் நழுவியது.(21) தனஞ்சயன் மயக்கமடைந்தபோது, சைந்தவ வீரர்கள் சற்றும் தாமதிக்காமல், உணர்வற்ற அந்தப் போர்வீரன் மீது எண்ணற்ற வேறு கணைகளை மீண்டும் ஏவினர்.(22) பிருதையின் மகன் {அர்ஜுனன்} நினைவிழந்ததை அறிந்த தேவர்களின் இதயமும் அச்சத்தால் பீடிக்கப்பட்டதால், அவர்கள் பல்வேறு ஆசிகளைக் கூறி அவனது நலத்தை நாடத் தொடங்கினர்.(23) அப்போது தெய்வீகமான ஏழு முனிவர்களும், மறுபிறப்பாள முனிவர்களும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருதையின் மகனுக்கு வெற்றியைக் கொடுக்க விரும்பி அமைதியான ஜபத்தில் ஈடுபட்டனர்.(24)

இறுதியாக, சொர்க்கவாசிகளின் அந்தச் செயல்களின் மூலம் பார்த்தனின் சக்தி சுடர்ந்தெழுந்தபோது, உயர்திறன் தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {அர்ஜுனன்} ஒரு மலையைப் போல அசையாமல் நின்றான்.(25) பிறகு, குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் தன் தெய்வீக வில்லை இழுத்தான். அவன் மீண்டும் மீண்டும் நாண்கயிற்றை இழுத்த போது, அதனைப் பின்தொடர்ந்து எழுந்தவொலி ஏதோவொரு பெரும் இயந்திரத்தின் உரத்த ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது[2].(26) மழையைப் பொழியும் புரந்தரனைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன் தன் வில்லில் இருந்து இடையறாத கணைமாரியைத் தன் பகைவரின் மீது பொழிந்தான்.(27) அக்கணைகளால் துளைக்கப்பட்ட சைந்தவப் போர்வீரர்கள், வெட்டுக்கிளிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போல மறைந்துபோனார்கள்.(28)அவர்கள் காண்டீவத்தின் ஒலியினாலேயே அச்சமடைந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதயத் துயரினால் அவர்க்ள கண்ணீர் உதிர்த்து, பேரொலியுடன் புலம்பினார்கள்.(29) வலிமைமிக்கவனான அந்தப் போர்வீரன், ஒரு நெருப்புச் சக்கரத்தைப் போன்ற வேகத்துடன் பகைவரின் கூட்டத்திற்கு மத்தியில் திரிந்து, எப்போதும் தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களைத் துளைத்தான்.(30) வஜ்ரதாரியான பெரும் இந்திரனைப் போலப் பகைவர்களைக் கொல்பவனான அர்ஜுனன், தன் வில்லில் இருந்து அனைத்துத் திசைகளிலும் ஏவிய கணைமாரியானது (மனித வகையைச் சாராத) மாயக் காட்சிக்கு ஒப்பாக இருந்தது.(31) அந்தக் கௌரவ வீரன், பலமிக்கக் கதிர்களால் மேகங்களை விலக்கும் கூதிர் காலச் சூரியனைப் போல, பிரகாசமாகத் தெரிந்த கணை மாரியால், பகைவரின் கூட்டத்தைத் துளைத்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

ஜெயத்ரதன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 78-மீண்டும் திரண்டு அர்ஜுனனைத தாக்கிய சைந்தவர்கள்; அர்ஜுனன் செய்த பெரும்போர்; அர்ஜுனனைச் சந்தித்த துச்சலை; சமாதானத்துக்கு மன்றாடியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “போரிட்டுக் கொண்டிருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, போர்க்களத்தில் இமயத்தைப் போல அசைக்க முடியாதவனாக நின்றான்.(1) மீண்டும் அணிதிரண்ட சைந்தவப் போர்வீரர்கள், பெரும் கோபத்துடன் மீண்டும் மீண்டும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன், மீண்டும் அணிதிரண்டு வந்திருப்பவர்களும், மரணத்தின் விளிம்பில் நிற்பவர்களுமான தன் பகைவர்களைக் கண்டு சிரித்து, அவர்களிடம் மென்மையான சொற்களில்,(3) “உங்கள் சக்திக்கு முடிந்த அளவில் என்னுடன் போரிட்டு என்னை வெல்ல முயற்சிப்பீர். எனினும், உங்கள் அனைவருக்கும் பேராபத்துக் காத்திருப்பதால், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்துவிடுவீராக.(4) உங்கள் கணை மேகங்கள் அனைத்தையும் கலங்கடித்து நான் உங்கள் அனைவருடன் போரிடுவதைக் காண்பீர். போரில் விருப்பம் உள்ள நீங்கள் சற்றே பொறுப்பீராக. நான் விரைவில் உங்கள் செருக்கைத் தணிப்பேன்” என்றான்.(5)

காண்டீவதாரி {அர்ஜுனன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோபத்தில் இச்சொற்களைச் சொன்னாலும், தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} சொற்களை நினைவுகூர்ந்தான்.(6) அச்சொற்கள், “ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, போரில் உன்னை எதிர்த்து வரும் க்ஷத்திரியர்களை நீ கொல்லாதே. எனினும் அவர்கள் உன்னால் வெல்லப்பட வேண்டும்” என்பனவாகும். மனிதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, பேரான்மாவும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறே சொல்லி அனுப்பப்பட்டான். எனவே அவன் தனக்குள், “என் அண்ணனால் இவ்வாறே நான் சொல்லி அனுப்பப்பட்டேன். என்னை எதிர்த்து வரும் போர்வீரர்களைக் கொல்லக்கூடாது.(7,8) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் சொற்களைப் பொய்யாக்கும் வகையில் நான் செயல்படக்கூடாது” எனச் சிந்திக்கத் தொடங்கினான்.(9)

இத்தீர்மானத்திற்கு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, போரில் சீற்றத்துடன் இருந்த சைந்தவர்கள் அனைவரிடமும், இந்தச் சொற்களில்,(10) “நான் உங்களுக்கு நன்மையானதைச் சொல்லப் போகிறேன். நீங்கள் எனக்கு எதிரில் நின்றாலும், நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. உங்களில் எவன் என்னிடம் என்னால் வெல்லப்பட்டதாகவும், அவன் என்னுடையவன் என்றும் சொல்கிறானோ, அவன் என்னால் விடப்படுவான்.(11) என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டு, உங்கள் நன்மைக்கு எது சிறந்ததோ அவ்வகையில் என்னிடம் செயல்படுவீராக. வேறு வகையில் செயல்படுவதன் மூலம் நீங்கள் உங்களைப் பேராபத்தான நிலையில் நிறுத்திக் கொள்வீர்[1]” என்றான்.(12)அந்தக் குருக்களின் தலைவன் {அர்ஜுனன்}, வீரமிக்கப் போர்வீரர்களிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு, அவர்களுடன் போரிடத் தொடங்கினான். அர்ஜுனன் கோபத்தால் தூண்டப்பட்டான். வெற்றியை விரும்பிய அவனது பகைவர்களும் இணையாகச் சினமூண்டிருந்தார்கள்.(13) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சைந்தவர்கள் காண்டீவதாரியின் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நேர்க்கணைகளைத் தொடுத்தனர்.(14) தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், பயங்கரமான கூர்முனைகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் தன்னிடம் வருவதற்கு முன்பே கூர்த்தீட்டப்பட்ட தன் கணைகளைக் கொண்டு அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(15) கங்க இறகுகளைக் கொண்ட அந்தக் கூரிய கணைகளை வெட்டி வீழ்த்திய அர்ஜுனன், தன்னை எதிர்த்த ஒவ்வொரு வீரனையும் கூர்த்தீட்டப்பட்ட ஒரு கணையால் துளைத்தான்.(16) தனஞ்சயனே {அர்ஜுனனே} தங்கள் மன்னன் ஜயத்ரதனைக் கொன்றான் என்பதை நினைவுகூர்ந்த அந்தச் சைந்தவ க்ஷத்திரியர்கள், அவன் மீது பராஸங்களையும், ஈட்டிகளையும் பெரும் சக்தியுடன் ஏவினர்.(17)

கிரீடம் தரித்தவனும், பெரும் வலிமை கொண்டவனுமான தனஞ்சயன், அந்த ஆயுதங்கள் எவையும் தன்னை அடைவதற்கு முன்பே அவை அனைத்தையும் துண்டித்து அவர்களது நோக்கத்தைக் கலங்கடித்தான். இப்படியே நீண்ட காலமானதில் பாண்டுவின் மகன் பெருங்கோபம் கொண்டான்.(18) வெற்றியடையும் விருப்பத்தில் தன்னை நோக்கி விரைந்து வரும் போர்வீரர்களின் தலைகளை அவன் நாராசங்களாலும், பல்லங்களாலும் வீழ்த்தினான்.(19) பலர் தப்பி ஓடினர், பலர் அர்ஜுனனை நோக்கி விரைந்தனர்; பலர் அசையாமல் இருந்தனர்; எனினும் அவர்கள் அனைவரும் பெருங்கடலின் முழக்கத்திற்கு ஒப்பான பேரொலியுடன் கதறினர்.(20) அளவிலா வலிமைகொண்ட பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} தங்கள் பலத்திற்கும், ஆற்றலுக்கும் தகுந்தபடி போரிட்டுக் கொண்டிருந்த அவர்கள் அவனால் கொல்லப்பட்டனர்.(21) அந்தப் போரில் களைத்துப் போன  விலங்குகள் மேலிருந்த போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளின் மூலம் உணர்விழக்கச் செய்வதில் பார்த்தன் {அர்ஜுனன்} வென்றான்.(22)

அப்போது, அவர்களுடைய {சைந்தவர்களின்} ராணியும், திருதராஷ்டிரன் மகளுமான துச்சலை, அர்ஜுனனால் அவர்கள் உற்சாகமிழப்பதை அறிந்து, தன் கரங்களில் தன் பேரனை எடுத்துக் கொண்டு அர்ஜுனனிடம் வந்தாள்.(23) அந்தக் குழந்தை (ஜெயத்ரதனின் மகனான) சுரதனின் {ஸுரதனின்} மகனாவான். அந்தத் துணிச்சல்மிக்க இளவரசன் {சுரதன்}, சைந்தவப் போர்வீரர்கள் அனைவரின் பாதுகாப்புக்காக, தன் தேரில் தன் தாய்மாமனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான்.(24) தனஞ்சயனிடம் வந்த ராணி {துச்சலை}, கவலையால் அழத் தொடங்கினாள் பலமிக்கவனான தனஞ்சயன் அவளைக் {துச்சலையைக்} கண்டதும் தன் வில்லைக் கீழே போட்டான்[2].(25) தன் வில்லைக் கைவிட்ட பார்த்தன், தன் தங்கையை {துச்சலையை} முறையாக வரவேற்று, தன்னால் அவளுக்கு என்ன செய்ய முடியும் என்பதை விசாரித்தான். அந்த ராணி {துச்சலை} அவனிடம், (26) “ஓ!பாரதர்களின் தலைவா, இந்தக் குழந்தை உன் தங்கை மகனின் மகனாவான். ஓ! பார்த்தா, இவன் உன்னை வணங்குகிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவனைப் பார்ப்பாயாக” என்றாள்.(27)அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட பார்த்தன், தன் மருமகனை {சுரதனைக்} குறித்து விசாரிக்கும் வகையில் “அவன் எங்கே?” என்று கேட்டான்.(28) துச்சலை, “தன் தந்தையின் படுகொலையால் துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், இந்தக் குழந்தையின் வீரத்தந்தையுமான அவன் {சுரதன்} பெரும் இதயத் துயரில் இறந்தான். அவன் எவ்வாறு மரணமடைந்தான் என்பதைக் கேட்பாயாக.(29) ஓ! தனஞ்சயா, ஓ! பாவமற்றவனே, அவனுடைய தந்தையான ஜெயத்ரதர் உன்னால் கொல்லப்பட்டார் என்பதை அவன் ஏற்கனவே கேட்டிருந்தான். இதனால் பெரும் துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவன், வேள்விக் குதிரையைப் பின்தொடர்ந்து, அதைப் பாதுகாப்பவனாக நீ வந்திருப்பதைக் கேட்ட உடனேயே கீழே விழுந்து தன் உயிர்மூச்சை விட்டான். உண்மையில், பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவன், உன் வருகையைக் கேட்டவுடனேயே தன் உயிரை விட்டான். ஓ தலைவா, அவன் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்டு, உன்னிடம் பாதுகாப்பை விரும்பிய நான், அவனுடைய குழந்தையை {சுரதனின் மகனை} அழைத்துக் கொண்டு உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தாள் {துச்சலை}. இந்தச் சொற்களைச் சொன்ன திருதராஷ்டிரன் மகள் பெரும் துன்பத்தால் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.(30-33)

அர்ஜுனன், பெரிதும் உற்சாகமிழந்த இதயத்துடன் அவள் முன்பு நின்றான். உற்சாகமிழந்திருந்த அந்தத் தங்கை {துச்சலை}, உற்சமிழந்திருந்த தன் அண்ணனிடம் {அர்ஜுனனிடம்}, இந்தச் சொற்களில், “உன் தங்கையைப் பார். உன் தங்கை மகனின் குழந்தைப் பார்.(34) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒவ்வொரு கடமையையும் முழுமையாக அறிந்தவனே, குரு இளவரசனையும் (துரியோதனனையும்), தீயவரான ஜெயத்ரதரையும் மறந்து, இந்தக் குழந்தைக்குக் கருணை காட்டுவதே உனக்குத் தகும்.(35) பகைவீரர்களைக் கொல்பவனான பரிக்ஷித் அபிமன்யுவுக்குப் பிறந்திருப்பதைப் போலவே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், என் பேரனுமான இந்தக் குழந்தையும் சுரதனில் இருந்து பிறந்திருக்கிறான்.(36) ஓ! மனிதர்களின் தலைவா, போர்வீரர்கள் அனைவரின் பாதுகாப்பை விரும்பியே இவனை அழைத்துக் கொண்டு நான் உன்னிடம் வந்திருக்கிறேன். நான் சொல்லும் இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(37)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா {அர்ஜுனரே}, தீயவரான உன்னுடைய பகைவருடைய இந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு நான் இப்போது வந்திருக்கிறேன். எனவே, இந்தக் குழந்தையிடம் இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்.(38) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, இந்தக் குழந்தை உனக்குத் தலைவணங்குவதன் மூலம் உன்னை நிறைவடையச் செய்ய விரும்புகிறான். இவன் உன்னிடம் அமைதியை {சமாதானத்தை} வேண்டுகிறான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, அமைதியை ஏற்படுத்துவாயாக.(39) ஓ! ஒவ்வொரு கடமையையும் அறிந்தவனே, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை இழந்தவனும், என்ன நடந்தது என்ற எதையும் அறியாதவனுமான இந்தக் குழந்தையிடம் நிறைவடைவாயாக. கோபவசப்படாதே.(40) உன்னை மிகவும் புண்படுத்தியவரும், அவமதித்தவரும், கொடூரமானவரும், உங்களுக்குப் பெரும் குற்றத்தை இழைத்தவருமான இவனுடைய பாட்டாவை {ஜெயத்ரதரை} மறந்து, இந்தக் குழந்தைக்கு இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்” என்றாள் {துச்சலை}.(41)

ராணி காந்தாரியையும், மன்னன் திருதராஷ்டிரனையும் நினைத்துப் பார்த்துத் துயரில் பீடிக்கப்பட்ட தனஞ்சயன், தன்னிடம் இவ்வாறு சொன்ன துச்சலையிடம் க்ஷத்திரிய நடைமுறைகளை நிந்தித்துக் கொண்டே,(42) “அற்பனும், நாட்டாசை கொண்டவனும், பகட்டு நிறைந்தவனுமான துரியோதனனுக்கு ஐயோ. ஐயோ, அவனுக்காகவே உன் உற்றார் உறவினர் அனைவரும் என்னால் யமனுலகுக்கு அனுப்பப்பட்டனர்” என்றான்.(43) இவ்வாறு சொல்லி தன் தங்கைக்கு ஆறுதலளித்த தனஞ்சயன், அமைதியை ஏற்படுத்திக் கொள்ள இணங்கினான். உற்சாகத்துடன் அவளைத் தழுவி கொண்டு, அவளிடம் அரண்மனைக்குத் திரும்பிச் செல்லுமாறு சொல்லி அவளுக்கு விடை கொடுத்தான்.(44) துச்சலைத் தன் போர்வீரர்கள் அனைவரையும் பெரும்போரில் இருந்து விலக்கி, பார்த்தனை வழிபடச் செய்தாள். அழகிய முகம் கொண்ட அவள், தன் சுவடுகளைப் பின்பற்றித் தன் வசிப்பிடத்திற்குச் சென்றாள்.(45)

இவ்வாறு அந்தச் சைந்தவ வீரர்களை வென்ற தனஞ்சயன், விரும்பியவாறு திரியத் தொடங்கிய குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான்.(46) ஆகாயத்தில் மானை {மானின் வடிவில் தப்பிச் சென்ற வேள்வியைப்} பின்தொடர்ந்த தெய்வீக பினாகபாணியை {சிவனைப்} போலவே வீர அர்ஜுனனும் அந்தக் குதிரையை முறையாகப் பின்தொடர்ந்தான்.(47) அந்தக் குதிரை, அர்ஜுனனின் அருஞ்செயல்களைப் பெருக்கிய வண்ணம், தன் விருப்பப்படி ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு நாடுகளில் திரிந்தது.(48) விருப்பப்படி திரிந்த அந்தக் குதிரை, ஓ! மனிதர்களின் தலைவா, பாண்டு மகனால் பின்தொடரப்பட்டுக் காலப்போக்கில் மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாஹனனின்} ஆட்சிப்பகுதியை அடைந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(49)

வீழ்ந்தான் அர்ஜுனன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 79-மணிபுரம் வந்த அர்ஜுனன்; மதிப்புடன் வரவேற்ற பப்ருவாஹனன்; கோபித்துக் கொண்ட அர்ஜுனன்; உலூபியின் தூண்டலால் கணை ஏவிய பப்ருவாஹனன்; அர்ஜுனன் வீழ்ந்தது; மயங்கி விழுந்த பப்ருவாஹனன்; நடுங்கியவாறு போர்க்களம் வந்த சித்திராங்கதை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மணிப்புரத்தின் ஆட்சியாளனான பப்ருவாஹனன், தன் தந்தையான அர்ஜுனன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் மற்றும் செல்வத்தை முன்னணியில் கொண்டு பணிவுடன் {அர்ஜுனனை வரவேற்பதற்காக} வெளியே புறப்பட்டுச் சென்றான்.(1) எனினும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்வாறு வந்த மணிப்புர ஆட்சியாளனைக் கண்டு, அதை அங்கீகரிக்காமல் இருந்தான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, கோபத்துடன், “இவ்வொழுக்கம் உனக்குத் தகாது. நீ நிச்சயம் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து விழுந்துவிட்டாய்.(3) யுதிஷ்டிரருடைய வேள்விக் குதிரையின் பாதுகாவலனாக நான் இங்கே வந்துள்ளேன். ஓ! மகனே, உன் நாட்டுக்குள் நான் வந்திருப்பதைக் கண்டும் என்னுடன் ஏன் நீ போரிடாமல் இருக்கிறாய்?(4) ஓ! மூடப் புத்தி கொண்டவனே, உனக்கு ஐயோ!, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட உனக்கு ஐயோ!. உன்னுடன் போர்புரிவதற்காக நான் இங்கு வந்திருந்தாலும், அமைதிநிறைந்தவனாக என்னை வரவேற்கும் உனக்கு ஐயோ!(5) இவ்வாறு அமைதிநிறைந்தவனாக வரவேற்பதன் மூலம் நீ ஒரு பெண்ணைப் போலச் செயல்படுகிறாய். ஓ! இழிந்த புத்தி கொண்டவனே, நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு வந்திருந்தால்,(6) ஓ! மனிதர்களில் இழிந்தவனே, அப்போது உன்னுடைய இந்த நடத்தை தகுந்ததாக இருந்திருக்கும்” என்றான்.

பாம்பு மன்னனின் மகளான உலூபி, தன் கணவனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட சொற்களை அறிந்து, அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பூமியைத் துளைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.[1] அவள், தலையைத் தொங்கப்போட்டவாறு, முற்றிலும் உற்சாகம் இழந்தவனாக அங்கே நின்று கொண்டிருக்கும் தன் மகனைக் {பப்ருவாஹனனைக்} கண்டாள்.(7,8) ஓ! ஏகாதிபதி, உண்மையில் அந்த இளவரசன், தன்னுடன் போரிட விரும்பும் தன் தந்தையால் மீண்டும் மீண்டும் நிந்திக்கப்பட்டான். அழகான அங்கங்களைக் கொண்டவளும்,(9) பாம்பின் மகளுமான உலூபி, அறம் மற்றும் கடமையை அறிந்த அந்த இளவரசனிடம், அறம் மற்றும் கடமைகளுக்கு இணக்கமான இச்சொற்களில், “பாம்பின் மகளான நான் உனது அன்னையான உலூபி என்பதை அறிவாயாக.(10) ஓ! மகனே, நான் சொல்வதைச் செய்தால், நீ பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவாய். குரு குலத்தில் முதன்மையானவரும், போரில் தடுக்கப்பட முடியாத வீரருமான உன் தந்தையுடன் போரிடுவாயாக.(11) அப்போது அவன் நிச்சயம் உன்னிடம் நிறைவடைவார்” என்றாள்.-இவ்வாறு மன்னன் பப்ருவாஹனன், தன் (மாற்றந்) தாயால் {உலூபியால்}, தன் தந்தைக்கு எதிராகத் தூண்டப்பட்டான்.(12) இறுதியாக, ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட அவன், தனஞ்சயனுடன் போரிடுவதற்குத் தன் மனத்தைத் தயார் செய்து கொண்டான். பிரகாசமான தன் கவசத்தையும், ஒளிமிக்கத் தன் தலைக்கவசத்தையும் பூட்டிக் கொண்ட அவன்,(13) நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகள் ஆயத்தமாக இருந்த ஒரு சிறந்த தேரில் ஏறினான். அந்தத் தேரானது, போருக்குத் தேவையானவற்றுடனும், மனோவேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டும் இருந்தது.(14) அது சிறந்த சக்கரங்களுடனும், பலமிக்க உபஷ்கரங்களுடனும் இருந்தது. அனைத்து வகைப் பொன்னாபரணங்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அழகிய இளவரசனான பப்ருவாஹனன், பொன்னாலான தங்கச் சின்னம் பொறிக்கப்பட்டதும்[2], மிக அழகிய வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தன் கொடிக்கம்பத்தை உயத்திக் கொண்டு, தன் தந்தையை எதிர்த்துப் போரிடச் சென்றான்.(15)அந்த வீர இளவரசன் {பப்ருவாஹனன்}, பார்த்தனால் பாதுகாக்கப்படும் வேள்விக் குதிரையிடம் வந்து, குதிரை சாத்திரத்தை நன்கறிந்த மனிதர்களால் அதைக் கைப்பற்றச் செய்தான்.(16) குதிரை கைப்பற்றப்பட்டதைக் கண்ட தனஞ்சயன் மகிழ்ச்சியால் நிறைந்தான். பூமியில் நின்று கொண்டிருந்த அந்த வீரன், தேரில் முன்னேறி வரும் தன் மகனைத் தடுக்கத் தொடங்கினான்.(17) அந்த மன்னன் {பப்ருவாகனன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கூர்த்தீட்டப்பட்ட முனைகளைக் கொண்டவையுமான கணைகளை அந்த வீரன் {அர்ஜுனன்} மீது மீண்டும் மீண்டும் மழையாகப் பொழிந்தான்.(18) தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த போர் ஒப்பற்றதாக இருந்தது. பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக அஃது இருந்தது. அவர்களில் ஒவ்வொருவனும், மற்றவனை எதிராளியாக அடைந்ததில் நிறைவடைந்தான்.(19) பப்ருவாஹனன், சிரித்துக் கொண்டே, மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனின் தோளை {தோள்பூட்டில்} நேரான ஒரு கணையால் {பதிவான கணுக்களுள்ள பாணத்தால்} துளைத்தான்.(20)

இறகுகளுடன் கூடிய அந்தக் கணை, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்பைப் போல அர்ஜுனனின் உடலுக்குள் ஊடுருவியது. குந்தியின் மகனைத் {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்ற அக்கணை பூமிக்குள் ஆழமாகச் சென்றது.(21) கடும் வலியை உணர்ந்த நுண்ணறிவுமிக்கத் தனஞ்சயன், தன் சிறந்த வில்லால் தன்னைத் தாங்கிக் கொண்டு சற்றே ஓய்வெடுத்தான். தன் தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி நின்று கொண்டிருந்த அவன், வெளிப்புறத் தோற்றத்தில் உயிரிழந்த ஒருவனைப் போலத் தெரிந்தான்[3].(22) நினைவு மீண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், தன் மகனை உயர்வாகப் புகழ்ந்தான். பெருங்காந்தி கொண்டவனான அந்தச் சக்ரனின் மகன் {அர்ஜுனன்},(23) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நன்று, ஓ! சித்ராங்கதையின் மைந்தனே, நன்று. ஓ! மகனே, உனக்குத் தகுந்த இந்த அருஞ்செயலைக் கண்டு நான் உயர்வான நிறைவடைகிறேன்.(24) ஓ! மகனே, நான் இப்போது உன் மீது இக்கணைகளை ஏவப் போகிறேன். (ஓடாமல்) போரிட நிற்பாயாக” என்றான். பகைவரைக் கொல்பவனான அவன், இச்சொற்களைச் சொல்லிவிட்டு, அந்த இளவரசன் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(25)எனினும், மன்னன் பப்ருவாகனன், {அர்ஜுனனின்} காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், காந்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையுமான அந்த நாராசங்கள் அனைத்தையும் தன் பல்லங்களைக் கொண்டு இரண்டாகவும், மூன்றாகவும் வெட்டி வீழ்த்தினான்.(26) அப்போது தங்கப் பனை மரத்திற்கு ஒப்பாகவும் பொன்மயமாகவும் அந்த மன்னனின் தேரில் இருந்த கொடிமரமானது, சிறந்த கணைகள் சிலவற்றைக் கொண்டு பார்த்தனால் வெட்டி வீழ்த்தப்பட்டது.(27) சிரித்துக் கொண்டே இருந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அடுத்ததாக, பெரிய அளவைக் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான மன்னனின் {பப்ருவாகனனின்} குதிரைகளை கொன்றான்.(28) இதனால் சினத்தால் தூண்டப்பட்ட மன்னன், தன் தேரில் இருந்து இறங்கி, தன் தந்தையுடன் தரையில் நின்று போரிட்டான்.(29) பிருதையின் மகன்களில் முதன்மையானவனும், வஜ்ரதாரியின் மகனுமான அவன் {அர்ஜுனன்}, தன் மகனின் ஆற்றலில் நிறைவடைந்தவனாக அவனைப் பெரிதும் பீடிக்கத் தொடங்கினான்[4].(30)வலிமைமிக்கப் பப்ருவாஹனன், தன் தந்தையால் இதற்கு மேலும் தன்னை எதிர் கொள்ள முடியாது என்று நினைத்துக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றால் அவனை மீண்டும் பீடித்தான்[5].(31) மேலும் அவன், தன் சிறுபிள்ளைத்தனத்தால் கூராக்கப்பட்டதும், சிறந்த சிறகுகளைக் கொண்டதுமான ஒரு கணையைக் கொண்டு தனது தந்தையின் மார்பில் மிகத் திடமாகத் துளைத்தான்.(32) ஓ! மன்னா, பாண்டு மகனின் உடலுக்குள் ஊடுருவிய அந்தக் கணை, அவனது உயிர்நிலையை அடைந்து அவனுக்குப் பெரும் வலியை உண்டாக்கியது. குருக்களைத் திளைக்கச் செய்பவனான தனஞ்சயன், தன் மகனால் ஆழத் துளைக்கப்பட்டு,(33) ஓ மன்னா {ஜனமேஜயா}, மயக்கமடைந்து பூமியில் விழுந்தான்.குருக்களின் சுமைகளைச் சுமப்பவனான அந்த வீரன் {அர்ஜுனன்} விழுந்தபோது, சித்ராங்கதையின் மகனும் {பப்ருவாஹனனும்} தன் உணர்வுகளை இழந்தான். போரில் பெரும் முயற்சிகளைச் செய்ததாலும், தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட துயரத்தாலும் அவன் மயங்கி விழுந்தான்.(34,35) அவனும் அர்ஜுனனின் கணை மேகங்களால் ஆழத் துளைக்கப்பட்டிருந்தான். எனவே, அவன் போரின் முன்னணியில் பூமியைத் தழுவியபடி கீழே விழுந்து கிடந்தான்.(36) கணவன் கொல்லப்பட்டான் என்றும் தன் மகன் பூமியில் விழுந்து கிடக்கிறான் என்பதையும் கேள்விப்பட்ட சித்ராங்கதை, மனத்தில் பெருங்கலக்கத்துடன் போர்க்களத்திற்கு வந்தாள்.(37) கவலையில் எரியும் இதயத்துடன் மிகப் பரிதாபகரமாக அழுது கொண்டும், நடுங்கியவாறும் வந்த மணிப்புர ஆட்சியாளனின் {பப்ருவாகனனின்} அன்னை {சித்ராங்கதை}, தன் கணவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

எழுந்தான் அர்ஜுனன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 80-கணவனும், தனயனும் விழுந்து கிடப்பதைக் கண்டு புலம்பி, மயங்கி விழுந்து, தெளிந்து உலூபியை நிந்தித்த சித்ராங்கதை; நினைவு திரும்பி நொந்து பிராயோபவேசம் செய்த பப்ருவாஹனன்; ஸஞ்சீவன மணியைக் கொண்டு அர்ஜுனனை எழுப்பிய உலூபி; சித்ராங்கதை களத்திற்கு வந்த காரணத்தைக் கேட்ட அர்ஜுனன்; உலூபியைக் கேட்கச் சொன்ன பப்ருவாகனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சித்ராங்கதை}, துயரில் எரிபவளாக ஒப்பாரியில் ஈடுபட்டு, இறுதியாகத் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள்.(1)

தெய்வீக அழகுடைய ராணி சித்ராங்கதை, தன் நினைவு திரும்பியதும், பாம்புத் தலைவனின் மகளான உலூபியைக் கண்டு, அவளிடம் இந்தச் சொற்களில்,(2) “ஓ! உலூபி, எப்போதும் வெற்றியடைபவரான நம் கணவர் {அர்ஜுனர்}, இளம் வயதைக் கொண்ட என் மகனால் {பப்ருவாஹனனால்} உன் மூலம் போரில் கொல்லப்பட்டதைப் பார்.(3) நீ {பெரியோரின தர்மத்தை,} மதிக்கத்தக்க நடைமுறைகளை அறிந்தவளில்லையா? நீ உன் தலைவருக்கு அர்ப்பணிப்புள்ள மனைவியில்லையா {பதிவிரதையில்லையா}? உன் கணவர் {அர்ஜுனர்} உன் செயலாலேயே போரில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்.(4) தனஞ்சயர் {அர்ஜுனர்} எவ்வகையிலாவது உனக்குக் குற்றமிழைத்திருந்தால் இவரை மன்னிப்பாயாக {இவர் உனக்கு என்ன தீங்கு செய்தார்? அப்படி இருந்தால் இவரை மன்னிப்பாயாக}. இந்த வீரரின் உயிரை மீட்குமாறு {ஜீவிக்கும்படி செய் என} நான் உன்னிடம் வேண்டுகிறேன்.(5) ஓ! அறம் சார்ந்த பெண்ணே {தர்மத்தை அறிந்தவளே}, நீ பக்தியை அறிந்தவள். ஓ! அருளப்பட்டவளே, (உன் நற்குணங்களுக்காக) நீ மூவுலகங்களிலும் அறியப்பட்டவள். உன் மகனைக் கொண்டு உன் கணவரைக் கொல்லச் செய்தும் நீ துயரில் ஈடுபடாமல் இருப்பது எவ்வாறு?(6) ஓ! பாம்புத் தலைவனின் மகளே {உலூபியே}, நான் கொல்லப்பட்ட என் கணவனுக்காக வருந்தவில்லை. என் மகனால் இவ்வாறான விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட்ட என் கணவருக்காகவே துன்புறுகிறேன்” என்றாள் {சித்ராங்கதை}.(7)

சிறப்புமிக்கவளான சித்ராங்கதை, பாம்புத் தலைவனின் மகளும், ராணியைப் போன்றவளுமான {தேவியுமான} உலூபியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு, பூமியில் கிடக்கும் தன் கணவனிடம் {அர்ஜுனனிடம்} சென்று, அவனிடம்,(8) “ஓ! அன்புத் தலைவா, எழுவீராக. குரு மன்னரின் (யுதிஷ்டிரரின்) அன்புக்குரியவர்களில் முதன்மையான இடத்தில் நீரே இருக்கிறீர். உமது குதிரை இங்கே இருக்கிறது. அஃது என்னால் சுதந்திரமாக விடப்படுகிறது.(9) உண்மையில், ஓ! பலமிக்கவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் இந்த வேள்விக் குதிரை உம்மால் பின்தொடரப்பட வேண்டுமே. நீர் ஏன் இன்னும் பூமியில் கிடக்கிறீர்?(10) குருக்களைத் திளைக்கச் செய்பவரே, என் உயிர் மூச்சு உம்மையே சார்ந்திருக்கிறது. மற்றவர்களுக்கு உயிரைக் கொடுப்பரான நீர் இன்று என்ன காரணத்தால் உயிரை விட்டீர்?(11)ஓ! உலூபி, தரையில் நெடுஞ்சாண் கிடையாக உன் கணவர் கிடக்கும் காட்சியை நன்றாகப் பார். சொற்களால் தூண்டி உன் மகன் மூலமாக அவரைக் {அர்ஜுனரைக்} கொல்லச் செய்தும் நீ துயருறாமல் இருப்பது எவ்வாறு?(12) இந்தச் சிறுவன் மரணத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கித் தன் தந்தையின் அருகில் தரையில் கிடப்பது தகும். ஓ…! சிவந்த கண்களைக் கொண்ட வீரரும், குடாகேசர் என்று அழைக்கப்படுபவருமான இந்த விஜயர் {அர்ஜுனர்} உயிர் திரும்பட்டும்.(13) ஓ!அருளப்பட்ட பெண்ணே, பல மனைவிகளைக் கொள்வது ஆடவரின் குற்றமில்லை. ஒரு கணவருக்கு மேல் கொள்ளும் பெண்களே குற்றமிழைப்பவர்களாவர். எனவே, (பழி வாங்கும்) இத்தகைய எண்ணங்களுக்கு இடமளிக்காதே.(14) இந்த உறவு {இந்தக் காதல்} விதிசமைக்கும் பரமனால் விதிக்கப்பட்டதாகும். அதைத் தவிர, அது நித்தியமானதும், மாற்றமில்லாததுமாகும். அந்த உறவைக் கவனிப்பாயாக. (தனஞ்சயருடனான) உன் உறவு உண்மையானதாகட்டும்[1].(15) உன் மகனைக் கொண்டு, உன் கணவரைக் கொல்லச் செய்த நீ, இன்று என் கண்களுக்கு முன்பாக இவரைப் பிழைக்கச் செய்யவில்லையெனில், நான் இப்போதே என் உயிர் மூச்சைக் கைவிடுவேன்.(16) ஓ! மதிப்புக்குரிய பெண்ணே {தேவி}, கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரையும் இழந்து துயரடைந்திருக்கும் நான், இன்று நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே இங்கேயே பிராயத்தில் அமர்வேன் {பிராயோபவேசம் செய்யப் போகிறேன்}. இதில் ஐயமில்லை” என்றாள் {சித்ராங்கதை}.(17) {சித்ரவாஹனனின் மகளான} இளவரசி சைத்ரவாஹினி {சித்ராங்கதை}, அர்ஜுனனுடனான {அர்ஜுனனின் மனைவியான} தனக்குச் சக்களத்தியான {ஸபத்னியான} பாம்புத் தலைவனின் மகளிடம் {உலூபியிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பேச்சை அடக்கிப் பிராயத்தில் அமர்ந்தாள்[2]“.(18)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உற்சாகமிழந்த அந்த ராணி {சித்ராங்கதை}, புலம்புவதை நிறுத்தி, தன் கணவனை மடியில் கிடத்திக் கொண்டு, பெருமூச்சு விட்டபடியும், தன் மகனின் உயிரை மீட்க விரும்பியும் அங்கே அமர்ந்திருந்தாள்[3].(19)நினைவு மீண்ட மன்னன் பப்ருவாஹனன், போர்க்களத்தில் அக்கோலத்தில் அமர்ந்திருக்கும் தன் தாயை {சித்ராங்காதையைக்} கண்டு, அவளிடம்,(20) “ஆடம்பரமாக வளர்க்கப்பட்ட என் அன்னை, தரையில் நெடுஞ்சாண் கிடைகாயாகக் கிடக்கும் தன் வீரக் கணவரின் அருகில் வெறுந்தரையில் அமர்ந்திருப்பதைக் காண்பதைவிடத் துன்பம் தரக்கூடிய காட்சி வேறென்ன இருக்க முடியும்?(21) ஐயோ, பகைவர் அனைவரையும் கொல்பவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான இவர் போரில் என்னால் கொல்லப்பட்டார். மனிதர்கள் தங்கள் வேளை வரும் வரை இறப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது[4].(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், அகன்ற மார்பைக் கொண்டவருமான தன் கணவர் இறந்து தரையில் கிடப்பதைக் கண்டும், இந்த இளவரசியின் இதயம் பிளக்காமல் இருப்பதால் அது மிகக் கடினமானதாகத் தெரிகிறது.(23) நானோ, என் தாயோ (இத்தகைய காட்சியைக் கண்ட பிறகும்) உயிரை இழக்காமல் இருப்பதால், ஒருவனுக்கு வேளை வரும் வரை அவன் இறப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.(24)ஐயோ, ஐயோ, மகனான என்னால் தெரிந்தே கொல்லப்பட்டுக் கிடக்கும் இந்த முதன்மையான வீரரின் பொற்கவசம், அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுத் தரையில் கிடக்கிறதே[5].(25) ஐயோ, பிராமணர்களே, மகனால் கொல்லப்பட்டு, வீரர்களின் படுக்கையில் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் என் வீரத்தந்தையைப் பார்ப்பீராக.(26) குரு குலத்தில் முதன்மையானவரும், போரில் என்னால் கொல்லப்பட்டவருமான இவர் குதிரையைப் பின்தொடர்வதில் ஈடுபடுத்தப்பட்ட போது, இந்த வீரரைக் கவனிக்க நியமிக்கப்பட்ட பிராமணர்களால் இவருக்கு என்ன நன்மை நேர்ந்தது?(27) போரில் தன் தந்தையையே கொன்ற இழிந்தவனும், பாவம் நிறைந்தவனும், கொடூரனுமான என்னால் செய்யப்பட வேண்டிய பரிகாரச் சடங்குகளைப் பிராமணர்கள் சொல்லட்டும்.(28) என் தந்தையைக் கொன்ற கொடூரனான நான், அவருடைய தோலால் {அர்ஜுனனின் தோலால்} என்னை மறைத்துக் கொண்டு, அனைத்து வகைத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இந்தப் பூமியில் திரிய வேண்டும்.(29) தந்தையைக் கொன்றதற்கு எனக்குப் பரிகாரமேதும் கிடையாது என்பதால் இன்று என்னிடம் என் தந்தையுடைய தலையின் இரு பகுதிகளைக் கொடுங்கள் (அந்தக் காலம் {பனிரெண்டு ஆண்டுகள்} வரை அதைக் கொண்டு {பிச்சையெடுத்த உணவை அதில் கொண்டு உண்டு} இந்த உலகில் திரிவேன்)[6].(30)ஓ! பாம்புகளில் முதன்மையானவரின் மகளே {உலூபியே}, என்னால் கொல்லப்பட்டுக் கிடக்கும் உன் கணவரைப் பார். உண்மையில், போரில் அர்ஜுனரைக் கொன்றதன் மூலம் உனக்கு ஏற்புடையதையே நான் நிறைவேற்றியிருக்கிறேன்.(31) நான் இன்று என் தந்தை சென்ற பாதையைப் பின்பற்றப் போகிறேன். ஓ! அருளப்பட்டவளே {கல்யாணி}, என்னால் என்னைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை.(32) ஓ! தாயே, நானும், காண்டீவதாரியும் என இருவரும் இன்று மரணத்தைத் தழுவுவதைக் கண்டு நீ மகிழ்ச்சியடைவாயாக. (என் உயிர்மூச்சைக் கைவிடுவேன் என்று) வாய்மையின் மீது ஆணையாக நான் உறுதியேற்கிறேன்” என்றான் {பப்ருவாஹனன்}.(33)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இச்சொற்களைச் சொன்ன மன்னன் {பப்ருவாஹனன்}, துன்பத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, நீரைத் தொட்டுக் கவலையுடன்,(34) “அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் நான் சொல்வதைக் கேட்கட்டும். ஓ! தாயே, நீயும் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! பாம்புகளின் மகள்கள் அனைவரிலும் சிறந்தவளே {உலூபியே}, நான் உண்மையைச் சொல்கிறேன்.(35) மனிதர்களில் சிறந்தவரும், என் தந்தையுமான இந்த ஜயர் {அர்ஜுனன்} எழவில்லையெனில், போர்க்களத்தில் அமர்ந்தவாறே நான் என் உடலை மெலியச் செய்வேன்.(36) தந்தையைக் கொன்றவனான எனக்கு (அந்தக் கொடும் பாவத்தில் இருந்து) தப்பிக்கும் வழியேதும் கிடையாது. தந்தையைக் கொன்ற பாவத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நான், நிச்சயம் நரகத்திலேயே மூழ்குவேன்.(37) வீர க்ஷத்திரியனைக் கொன்ற ஒருவன், நூறு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான். எனினும் தந்தையைக் கொன்றதன் மூலம் உண்டான கொடும்பாவத்தில் இருந்து நான் தப்பித்தல் சாத்தியமேயில்லை.(38) பாண்டுவின் மகனான இந்தத் தனஞ்சயர், வலிமையும், சக்தியும் நிறைந்த ஒரே வீரராவார். அற ஆன்மாவைக் கொண்ட அவரே, என் ஆசிரியருமாவார். அவரைக் கொன்ற என்னை எவ்வாறு காத்துக் கொள்ள இயலும்?” என்றான் {பப்ருவாஹனன்}.(39) இவ்வாறு புலம்பியவனும், தனஞ்சயனின் உயர் ஆன்ம மகனுமான மன்னன் பப்ருவாஹனன், நீரைத் தீண்டி, மரணம் வரை பட்டினி கிடப்பதாக உறுதியேற்று அமைதியடைந்தான்”.(40)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பகைவரைத் தண்டிப்பவனான மணிப்புர மன்னன் {பப்ருவாகனன்}, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாகத் தன் தாயுடன் சேர்ந்து மரணம் வரை பட்டினி இருக்க அமர்ந்த போது,(41) இறந்த மனிதனின் உயிரை மீட்கும் திறன் கொண்ட ஒரு ரத்தினத்தை {ஸஞ்சீவனம் எனும் மணியைக்} குறித்து உலூபி நினைத்தாள். பாம்புகளின பெரும்புகலிடமான அந்த ரத்தினம், இவ்வாறு நினைக்கப்பட்ட உடனேயே அங்கே வந்தது.(42) பாம்புகளின் இளவரசனுடைய மகள் {உலூபி} அதை எடுத்துக் கொண்டு, போர்க்களத்தில் நின்ற போராளிகளுக்கு உயர்ந்த மகிழ்ச்சியை அளிக்கும் இச்சொற்களைச் சொன்னாள்.(43)

{உலூபி}, “ஓ! மகனே {பப்ருவாஹனா}, எழுவாயாக. வருந்தாதே. ஜிஷ்ணு உன்னால் வீழ்த்தப்படவில்லை {கொல்லப்படவில்லை}. இந்த வீரர், மனிதர்களாலும், வாசவனைத் தலைமையில் கொண்ட தேவரகளாலும் வீழ்த்தப்பட முடியாதவராவார்.(44) மனிதர்களில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவருமான உன் தந்தையின் நன்மைக்காக, உன் புலன்களை வஞ்சிக்கும் {மோஹினி எனும்} இந்த மாயையை நான் வெளிக்காட்டினேன்.(45) ஓ! குரு குலத்தோனே, ஓ! மன்னா, பகைவீரர்களைக் கொல்பவரான இவர், தன் மகனான உன்னுடைய ஆற்றலை உறுதிசெய்து கொள்ள விரும்பியே உன்னுடன் போரிட இங்கே வந்தார்.(46) ஓ! மகனே, அதன் காரணமாகவே போரிடும்படி என்னால் நீ தூண்டப்பட்டாய். ஓ! பலமிக்க மன்னா, ஓ! மகனே, இந்த அறைகூவலை ஏற்றதன் மூலம், அணுவளவு பாவத்தையேனும் இழைத்துவிட்டாய் என ஐயுறாதே.(47) அவர் நித்தியமான, அழிவற்ற பெரும் ஆன்மாவைக் கொண்ட ஒரு முனிவராவார். ஓ! அன்பு மகனே, போரில் இவரை வீழ்த்த சக்ரனாலேயே முடியாது.(48) ஓ! மன்னா, இந்தத் தெய்வீக ரத்தினத்தை நான் வரவழைத்திருக்கிறேன். இஃது எப்போதும் பாம்புகள் இறக்க, இறக்கப் பிழைக்கச் செய்கிறது.(49) ஓ! பலமிக்க மன்னா, {ஸஞ்சீவனம் என்ற} இந்த ரத்தினத்தை உன் தந்தையின் மார்பில் வைப்பாயாக. பாண்டுவின் மகன் உயிர்பெறுவதை நீ காண்பாய்” என்றாள் {உலூபி}.(50)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாவமேதும் இழைக்காதவனுமான அந்த இளவரசன், தன் தந்தையின் மீது கொண்ட அன்பினால், அளவிலா சக்தி கொண்ட பிருதையின் மைந்தனுடைய மார்பில் அந்த {ஸஞ்சீவன} ரத்தினத்தை வைத்தான்.(51) மார்பில் ரத்தினம் வைக்கப்பட்டதும், வீரனும், பலமிக்கவனுமான ஜிஷ்ணு உயிர்பெற்றான். நீண்ட காலம் உறங்கிய ஒருவனைப் போலச் சிவந்திருந்த கண்களைத் திறந்து அவன் எழுந்தான்.(52) பெருஞ்சக்தி கொண்ட வீரனான தன் தந்தை நினைவு திரும்பி சுகமாக இருப்பதைக் கண்ட பப்ருவாஹனன் அவனை மதிப்புடன் வழிபட்டான்.(53) ஓ! பலமிக்கவனே, அந்த மனிதர்களில் புலி, வாழ்வின் மங்கலக் குறிகளுடன், மரண உறக்கத்தில் இருந்து எழுந்தபோது, பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} தெய்வீக மலர்களைப் பொழிந்தான்.(54) யாராலும் அடிக்கப்படாமலேயே, துந்துபிகள், மேகங்களைப் போன்ற முழக்கத்துடன் கூடிய ஆழ்ந்த இசையை உண்டாக்கின. “நல்லது, நல்லது” என்ற சொற்கள் அடங்கிய ஒரு பெருமுழக்கம் ஆகாயத்தில் கேட்டது.(55)

நல்ல சுகத்துடன் எழுந்திருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான தனஞ்சயன், பப்ருவாகஹனனைத் தழுவிக் கொண்டு, அவனது தலையை முகர்ந்தான்.(56) துயரால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனின் அன்னை {சித்ராங்கதை}, தன் மகனிடம் இருந்து தொலைவாக உலூபியுடன் அமர்ந்திருப்பதை அவன் கண்டான். தனஞ்சயன்,(57) “போர்க்களத்தில் உள்ள யாவரும், ஏன் துயரம், ஆச்சரியம் மற்றும் இன்பத்தின் குறியீடுகளைச் சுமந்தபடி இருக்கின்றனர்? ஓ! பகைவரைக் கொல்பவனே, காரணத்தை நீ அறிந்திருந்தால், அதை எனக்குச் சொல்வாயாக.(58) போர்க்களத்திற்கு உன் அன்னை ஏன் வந்தாள்? பாம்புகளின் இளவரசருடைய மகளான உலூபியும் ஏன் இங்கே வந்தாள்?(59) என் ஆணையின் பேரில் நீ என்னுடன் போரிட்டாய் என்பதை நான் அறிவேன். பெண்கள இங்கே வந்த காரணம் யாது என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(60)

மணிப்புரத்தின் நுண்ணறிவுமிக்க மன்னன் {பப்ருவாஹனன்}, தனஞ்சயனால் இவ்வாறு கேட்கப்பட்ட போது, மதிப்புடன் தலைவணங்கி அவனை நிறைவடையச் செய்த பிறகு, “உலூபியிடம் கேட்பீராக” என்றான் {பப்ருவாஹனன்}.(61)

அர்ஜுனன் சாபவிமோசனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 81-சித்ராங்கதை போர்க்களத்திற்கு வந்ததற்கும், அர்ஜுனன் தன் மகனிடம் தோற்றதற்கும் காரணம் கூறிய உலூபி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குரு குலத்தின் (மரு)மகளே, உன்னை இங்கே கொண்டு வந்த காரியம் என்ன? மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாகனனுடைய} அன்னை {சித்ராங்கதை} போர்க்களத்திற்கு வருவதற்கான காரணம் என்ன?(1) ஓ! பாம்பின் மகளே {உலூபியே, பன்னக கன்னிகையே}, இந்த மன்னனின் நட்பு நாடி வந்தாயா? ஓ! ஓய்வற்ற பார்வைகளைக் கொண்டவளே, எனது நன்மையை விரும்பி வந்தாயா?(2) ஓ! பருத்த இடை கொண்டவளே {உலூபியே}, ஓ! அழகிய பெண்ணே, நானோ, இங்கே இருக்கும் இந்தப் பப்ருவாஹனனோ தெரியாமல் உனக்கு எத்தீங்கையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்.(3) சித்திரவாஹன குலத்தின் வழித்தோன்றலும், களங்கமற்ற அங்கங்களைக் கொண்டவளுமான சித்ராங்கதை உனக்கு எத்தீங்கையும் இழைத்தாளா?” என்று கேட்டான்.(4)

பாம்புகளுடைய இளவரசனின் மகள் {உலூபி}, அவனிடம் சிரித்துக் கொண்டே, “நீரும் எனக்குக் குற்றம் ஏதும் இழைக்கவில்லை, பப்ருவாஹனனும் எனக்குத் தீங்கேதும் செய்யவில்லை.(5) பணிப்பெண் போல எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்திருக்கும் இந்த இளவரசனின் தாயும் {சித்ராங்கதையும்} எத்தீங்கையும் செய்யவில்லை. இவை யாவற்றையும் எவ்வாறு செய்தேன் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(6) நீர் என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. உண்மையில், மதிப்புடன் தலைவணங்கி நான் உம்மை நிறைவடையச் செய்வதை நாடுகிறேன். ஓ! குரு குலத்தவரே, ஓ! பலமிக்கவரே, இவை அனைத்தையும் உமது நன்மைக்காகவே என்னால் செய்யப்பட்டன.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயரே, நான் செய்தவை அனைத்தையும் கேட்பீராக. பாரத இளவரசர்களின் பெரும்போரில் சந்தனுவின் அரச மகனை {பீஷ்மரை} நீதியற்ற வழிகளில் நீர் கொன்றீர். நான் என்ன செய்தேனோ, அஃது உமது பாவத்துக்குப் பரிகாரமாகிறது. பீஷ்மர் உம்முடன் போரிடும்போது நீர் அவரை வீழ்த்தவில்லை[1].(8-10)அவர் {பீஷ்மர்} சிகண்டியுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். உமக்கு உதவியாக இருந்த அவனைச் சார்ந்தே நீர் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} வீழச் செய்தீர். உமது பாவத்திற்குப் பரிகாரம் செய்யாமல் நீர் இறந்திருந்தால்,(11) நீர் செய்த அந்தப் பாவம் நிறைந்த செயலின் விளைவால் நிச்சயம் நரகத்தில் விழுந்திருப்பீர். உமது மகனிடம் இருந்து அடைந்த நிலை அந்தப் பாவத்திற்கான பரிகாரமாகும்.(12) ஓ! பூமியின் ஆட்சியாளரே, ஓ !பெரும் நுண்ணறிவுமிக்கவரே, கங்கையுடன் வசுக்கள் இருந்தபோது இதைக் கேட்டேன்.(13) சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்த பிறகு, தேவர்களான வசுக்கள், கங்கைக் கரைக்கு வந்து, அந்த நீரில் நீராடி, அந்த ஓடையின் தேவியை அழைத்து, அந்தப் பாகீரதியின் அனுமதியுடன் கூடிய இந்தப் பயங்கரச் சொற்களைச் சொன்னார்கள்.

{வசுக்கள்}, “சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், தனஞ்சயனால் கொல்லப்பட்டான்.(14,15) உண்மையில் ஓ! தேவி, அப்போது பீஷ்மன் {இவனுடன்} போரிடுவதை நிறுத்தி, வேறொருடவனுடனை போரிட்டுக் கொண்டிருந்தான். இந்தக் குற்றத்தின் காரணமாக நாங்கள் இன்று தனஞ்சயனைச் சபிக்கப் போகிறோம்” என்றனர்.(16)

இதைக் கேட்ட கங்கா தேவியும், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி உடனே சம்மதித்தாள். இச்சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்பமடைந்த நான், பாதாள லோகத்திற்கு ஊடுருவிச் சென்று என் தந்தையிடம் அனைத்தையும் சொன்னேன்.(17) அவர் வசுக்களிடம் சென்று உமக்காக வேண்டினார்,(18) தன் சக்திக்கு வாய்த்த அனைத்து வழிகளிலும் அவர்களை மீண்டும் மீண்டும் நிறைவடையச் செய்ய முயன்றார். அப்போது அவர்கள் அவரிடம், “உயர்ந்த அருளைக் கொண்டவனும், மணிப்புரத்தின் ஆட்சியாளனாகவும், இளமையுடன் கூடியவனாகவும் தனஞ்சயனுக்கு ஒரு மகன் இருக்கிறான்.(19) அவன் {பப்ருவாகனன்} போர்க்களத்தில் நின்று தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பூமியில் சாய்ப்பான். ஓ! பாம்புகளின் இளவரசே, இது நடக்கும்போது, அர்ஜுனன் எங்கள் சாபத்திலிருந்து விடுபடுவான்.(20) நீ செல்லலாம்” என்றனர்.

வசுக்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவர் திரும்பி வந்து நடந்தவற்றை எனக்குச் சொன்னார். ஓ! வீரரே, இவை யாவற்றையும் அறிந்த நான், இவ்வழியில் வசுக்களின் சாபத்தில் இருந்து உம்மை விடுவித்தேன்.(21) தேவர்களின் தலைவனாலும் உம்மைப் போரில் வீழ்த்த இயலாது. மகன் என்பவன் உமது சுயமே {தானே மகனாகிறான் என்று கருதப்பட்டிருக்கிறது}. இதன் காரணமாகவே நீர் அவனால் வீழ்த்தப்பட்டீர்.(22) ஓ! பலமிக்கவரே, என் மீது எக்குற்றத்தையும் சுமத்த முடியாது. உண்மையில், என்னை நிந்திக்கத்தகுந்தவளாக எவ்வாறு நீர் கொள்வீர்?” என்று கேட்டாள்.(23)

(உலூபியால்) இவ்வாறு சொல்லப்பட்டதும், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கூடிய விஜயன் {அர்ஜுனன்}, அவளிடம், “ஓ! தேவி {உலூபியே}, நீ செய்த இவை யாவும் எனக்கு மிக இனியவையாகும்” என்றான்.(24) அதன் பிறகு, மணிப்புர ஆட்சியாளனான தன் மகனிடம் பேசிய ஜயன் {அர்ஜுனன்}, குரு குடும்பத்தின் (மரு) மகளான சித்ராங்கதை கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவனிடம்,(25) “வருகின்ற சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} யுதிஷ்டிரரின் குதிரை வேள்வி நடக்க இருக்கிறது. ஓ! மன்னா {பப்ருவாகனா}, உன் அன்னை, உன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அங்கே வருவாயாக” என்றான்[2].(26)பார்த்தனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் பப்ருவாஹனன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன் தந்தையிடம் இச்சொற்களில்,(27) “ஓ! அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உமது ஆணையின் பேரில் நிச்சயம் நான் அந்தப் பெரும் குதிரை வேள்விக்கு வந்து, மறுபிறப்பாளர்களுக்கு உணவு வழங்கும் பணியை ஏற்றுக் கொள்வேன்.(28) எனினும், என்னிடம் இரக்கம் காட்டும் வகையில் உமது மனைவியர் இருவருடனும் நீர் உமது நகருக்குள் {பப்ருவாகனனான எனது தலைநகருக்குள்} வரவேண்டும். ஓ! அனைத்துக் கடமைகளையும் முழுமையாக அறிந்தவரே, இதைப் பொறுத்தவரையில் ஐயுணர்வேதும் உமக்கு வேண்டாம்.(29) ஓ! தலைவா, ஓ! வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையானவரே, உமது மாளிகையில் மகிழ்ச்சியுடன் ஓரிரவு வாழ்ந்துவிட்டு, அதன் பிறகு குதிரையைப் பின்தொடர்ந்து செல்வீராக” என்றான்.(30)

தன் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரங்குக் கொடியோனுமான குந்தியின் மைந்தன், சித்திராங்கதையின் பிள்ளையிடம்,(31) “ஓ! வலிமைமிக்கக் கரத்தோனே, நான் என்ன நோன்பை நோற்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! அகன்ற கண்களைக் கொண்டவனே, நான் நோற்கும் இந்த நோன்பு முடிவடையும் வரை என்னால் உன் நகருக்குள் நுழைய முடியாது.(32) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்த வேள்விக் குதிரை தன் விருப்பப்படி சுற்றித் திரியும். (நான் எப்போதும் அதைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்). அருள் உனதாகட்டும். நான் செல்ல வேண்டும். சிறிது காலம் கூட ஓய்ந்திருக்கக்கூடிய இடம் எனக்கு ஒன்றுமில்லை” என்றான் {அர்ஜுனன்}.(33)

பாகனைத் தண்டிப்பவனின் மகன் {அர்ஜுனன்}, தன் மகனால் முறையாக வழிபடப்பட்டு, தன் மனைவியரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று தன் வழியில் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

ஜராசந்தன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 82-ஜராசந்தன் பேரனும், சகாதேவன் மகனுமான மேகசந்தியை அர்ஜுனன் வென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெருங்கடலால் சூழப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த அந்த (வேள்விக்) குதிரை, நின்று, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கித் தன் முகத்தைத் திருப்பியது. அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற கிரீடம் தரித்த அர்ஜுனனும், குரு தலைநகரத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான். விருப்பப்படி திரும்பிய அந்தக் குதிரை ராஜகிருஹ நகருக்கு வந்தது.(2) ஓ! ஏகாதிபதி, அவன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கண்டவனும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமான சகாதேவன் மகன் {ஜராசந்தனின் பேரனான மேகசந்தி}அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான்.(3) தன் தேரில் ஏறி, வில் மற்றும் கணைகளையும், தோலாலான கையுறையும் தரித்துக் கொண்டு தன் நகரத்தைவிட்டு வெளியே வந்த மேகசந்தி, தரையில் நின்று கொண்டிருந்த தனஞ்சயனை நோக்கி விரைந்தான்.(4)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட மேகசந்தி, தனஞ்சயனை அணுகி, எந்தத் திறனும் இல்லாத சிறுபிள்ளைத்தனத்தின் மூலம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(5) {மேகசந்தி அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதா, உம்முடைய குதிரை பெண்களால் மட்டுமே பாதுகாக்கப்பட்டுச் செல்வதைப் போலத் தெரிகிறது. நான் இந்தக் குதிரையை அபகரித்துச் செல்வேன். அதை விடுவிக்க நீர் முனைவீராக.(6) என் தந்தைமார் உமக்குப் போரில் விருந்தோம்பல் கடமைகளைப் போதிக்க வில்லையெனினும் நான் அவற்றை உமக்குக் கற்பிப்பேன். நான் உம்மைத் தாக்குவேன், நீர் என்னைத் தாக்குவீராக” என்றான்.(7)

இவ்வாறு சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே அவனிடம், “எனக்கு இடையூறு செய்பவனைத் தடுக்க வேண்டும் என்ற நோன்பை என் அண்ணன் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். ஓ! மன்னா, இதை நீ நிச்சயம் அறிவாய். உன் சக்திக்குச் சிறந்த வகையில் என்னைத் தாக்குவாயாக. எனக்குக் கோபமேதும் இல்லை” என்றான்.(8,9)

இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, ஆயிரங்கண் இந்திரன் கனத்த மழையைப் பொழிவதைப் போலத் தன் கணைகளைப் பொழிந்து பாண்டுவின் மகனை முதலில் தாக்கினான்.(10) ஓ! பாரதக் குலத் தலைவா {ஜனமேஜயா}, அப்போது வீரனான காண்டீவதாரி, தன் சிறந்த வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, தன் எதிராளியால் கவனமாக ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(11) இவ்வாறு அந்தக் கணை மேகங்களைக் கலங்கடித்தவனும், குரங்குக் கொடியைக் கொண்டவனுமான அந்த வீரன், நெருப்பு வாயுடன் கூடிய பாம்புகளுக்கு ஒப்பான சுடமிக்கக் கணைகள் எண்ணற்றவற்றைத் தன் எதிரியின் மீது ஏவினான்.(12) அவன் {அர்ஜுனன்} தன் எதிரி மற்றும் அவனது தேரோட்டியின் உடலை மட்டும் விட்டுவிட்டு அவனுடைய கொடி, கொடிக்கம்பம், தேர், துருவங்கள், நுகம் மற்றும் குதிரைகளின் மீது இந்தக் கணைகளை ஏவினான்.(13) இடது கையாலும் (வலது கையாலும்) வில்லைப் பயன்படுத்தவல்ல பார்த்தன், மகத இளவரசனின் உடலைத் துளைக்காமல் விட்டதால், அவன் தன் ஆற்றலின் மூலமே தன் உடல் பாதுகாக்கப்படுவதாகக் கருதி, பார்த்தன் மீது கணைகள் பலவற்றை ஏவினான்.(14)

மகத இளவரசனால் ஆழத் துளைக்கப்பட்ட காண்டீவதாரி, வசந்த காலத்தில் மலரும் பலாசத்தை {புரசு மரத்தைப்} போல ஒளிர்ந்தான்.(15) அர்ஜுனனுக்கு மகத இளவரசனைக் கொல்லும் விருப்பமேதும் இல்லை. அவன் பாண்டுவின் மகனைத் தாக்கினாலும், இதன் காரணமாகவே அந்த முதன்மையான வீரனின் முன்னால் எஞ்சியிருப்பதில் அவனால் வெல்ல முடிந்தது.(16) கோபமடைந்த தனஞ்சயன் பெரும் பலத்துடன் தன் வில்லை வளைத்துத் தன் எதிராளியின் குதிரைகளைக் கொன்று அவனுடைய தேரோட்டியின் தலையையும் கொய்தான்.(17) அவன் ஒரு க்ஷுரத்தைக் கொண்டு, அழகானதும், பெரியதுமான மேகசந்தியின் வில்லையும், அவனுடைய தோல் கையுறையையும் வெட்டி வீழ்த்தினான். அதன் பிறகு அவனது கொடியையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தி, அவற்றை விழச்செய்தான்.(18) பெரிதும் பீடிக்கப்பட்ட அந்த மகத இளவரசன், தன் குதிரைகள், வில் மற்றும் சாரதியை இழந்து, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, குந்தியின் மகனை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(19) அப்போது அர்ஜுனன், பிரகாசமான பொன்னலானதும், முன்னேறிவரும் தன் பகைவனுக்குரியதுமான அந்தக் கதாயுதத்தைக் கழுகின் இறகுகளுடன் கூடிய கணைகள் பலவற்றைக் கொண்டு துண்டுகளாக வெட்டினான்.(20) இவ்வாறு துண்டுகளாக வெட்டப்பட்டதும், ரத்தினப்பூட்டுகள் சிதறியதுமான அந்தக் கதாயுதம், யாரோ ஒருவனால் வீசியெறியப்பட்ட ஆதரவற்ற பெண் பாம்பைப் போலப் பூமியில் விழுந்தது.(21)

தன் பகைவன், தனது தேர், வில், கதாயுதம் ஆகியவற்றை இழந்தபோது, நுண்ணறிவுமிக்கவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன் அவனைத் தாக்க விரும்பவில்லை.(22) குரங்குக் கொடி கொண்ட அந்த வீரன், உற்சாகமிழந்திருந்தவனும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றியவனுமான தன் பகைவனிடம், இந்தச் சொற்களில்,(23) “ஓ! மகனே, க்ஷத்திரியக் கடமைகளில் போதுமான பற்றை நீ வெளிப்படுத்தினாய். இப்போது செல்வாயாக. ஓ! மன்னா, வயதால் மிக இளையவனாக இருப்பினும் போரில் நீ சாதித்த அருஞ்செயல்கள் பெரியனவாகும்.(24) என்னை எதிர்க்கும் மன்னர்கள் கொல்லப்படக்கூடாது என்பது நான் யுதிஷ்டிரரிடம் இருந்து பெற்ற ஆணையாகும். ஓ! ஏகாதிபதி, போரில் நீ எனக்குக் குற்றமிழைத்திருந்தாலும் அதன் காரணமாகவே நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய்” என்றான்.(25)

இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, வெல்லப்பட்டவானகவும், தப்பவிடப்பட்டவனாகவும் தன்னைக் கருதினான். அர்ஜுனனை வழிபடுவது கடமையென நினைத்த அவன், கூப்பிய கரங்களுடன் முறையாக அவனை அணுகி வழிபட்டான். மேலும் அவன், “நான் உன்னால் வெல்லப்பட்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் போரைத் தொடரத் துணியேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக. நீ கேட்பது ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுவாயாக” என்றான்.(27)

அவனை மீண்டும் தேற்றி அர்ஜுனன், மீண்டும் அவனிடம், “சைத்ரமாத முழு நிலவில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னனின் குதிரை வேள்விக்கு நீ வர வேண்டும்” என்றான்.(28) அவனால் இவ்வாறு சொல்லப்பட்ட சகாதேவன் மகன் {ஜராசந்தன் பேரனான மேகசந்தி}, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, அந்தக் குதிரையையும், போர்வீரர்களில் முதன்மையான பல்குனனையும் முறையாக வழிபட்டான்.(29) அழகிய பிடரியுடன் கூடிய அந்த வேள்விக் குதிரை, கடற்கரையோரமாகவே சென்று, வங்கர்கள், புண்ட்ரர்கள் மற்றும் கோசலர்களின் நாட்டுகளுக்குச் சென்றது.(30) அந்த நாடுகளில், தனஞ்சயன் தன் காண்டீவத்தைக் கொண்டு எண்ணற்ற மிலேச்ச படைகளை ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

சிசுபாலன் மற்றும் ஏகலவ்யனின் வாரிசுகள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 83-அர்ஜுனனை வரவேற்ற சிசுபாலனின் மகன் சரபன்; காசி, அந்தகம், கோசலம், கிராதம், தங்கணம் ஆகிய நாடுகளில் வரவேற்பைப் பெற்ற அர்ஜுனன்; தசார்ண மன்னன் சித்ராங்கதனை, நிஷாத மன்னனான ஏகலவ்யன் மகனை வென்றது; திராவிடம், ஆந்திரம், மாஹிஷம் மற்றும் கோல்வ மலை ஆகியவற்றில் அர்ஜுனன் பெற்ற வெற்றி; துவாரகையில் வசுதேவர் மற்றும் உக்ரசேனரால் வரவேற்கப்பட்ட அர்ஜுனன்; பஞ்சநதம் சென்று அங்கிருந்து காந்தாரம் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், “மகத ஆட்சியாளனால் {மேகசந்தியால்} வழிபடப்பட்டவனும், தேரில் வெண்குதிரைகளைப் பூட்டியவனுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்த (வேள்விக்) குதிரையைப் பின்தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றான்.(1) விருப்பப்படி திரிந்து கொண்டிருந்த அது {வேள்விக் குதிரை}, கிளிஞ்சல்களின் {சிப்பியின்} பெயரால் அழைக்கப்படுவதும், சேதிகளுக்கு உரியதுமான அழகிய நகரத்தை {சுக்திமதியை}[1] நோக்கித் திரும்பி வந்தது. பெரும்பலம் கொண்டவனும், சிசுபாலனின் மகனுமான சரபன், முதலில் அர்ஜுனனுடன் போரிட்டு அதன் பிறகு, உரிய மதிப்புடன் அவனை வழிபட்டான்.(3) ஓ! மன்னா, அவனால் வழிபடப்பட்டு அந்தச் சிறந்த குதிரை, அதன் பிறகு, காசிகள், அங்கர்கள், கோசலர்கள், கிராதர்கள் மற்றும் தங்கணர்களின் நாடுகளுக்குச் சென்றது.(4)அந்த நாடுகள் அனைத்திலும் உரிய மதிப்புடன் வரவேற்கப்பட்ட தனஞ்சயன் தன் வழியில் சென்று கொண்டிருந்தான். உண்மையில் அந்தக் குந்தியின் மகன், அடுத்ததாகத் தசார்ணர்களின் நாட்டுக்குச் சென்றான்.(5) பெரும் பலம் கொண்டவனும், பகைவரை நொறுக்குபவனுமான சித்ராங்கதன் அம்மக்களின் ஆட்சியாளனாக இருந்தான். அவனுக்கும், விஜயனுக்கும் இடையில் மிகப் பயங்கரமான போர் ஒன்று நேர்ந்தது.(6) அவனைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், ஏகலவ்யனின் மகனான நிஷாத மன்னனின் நாட்டிற்குச் சென்றான்.(7) ஏகலவ்யன் மகன் போரில் அர்ஜுனனை வரவேற்றான். அந்தக் குரு வீரனுக்கும், நிஷாதர்களுக்கும் இடையில் நடந்த மோதல் மயிர்ச் சிலிர்க்கும் வகையில் சீற்றமிக்கதாக இருந்தது.(8)

போரில் வெல்லப்பட இயலாதவனான குந்தியின் வீரமிக்க மகன், வேள்விக்குத் தடையாக இருந்த அந்த நிஷாத மன்னனை வீழ்த்தினான் ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் மகனை அடக்கி இந்திரனின் மகன், நிஷாதர்களால் முறையாக வழிபடப்பட்டு, தெற்குக் கடலை நோக்கி முன்னேறிச் சென்றான்.(10) அந்தப் பகுதிகளில் திராவிடர்கள், ஆந்திரர்கள், மாஹிஷகர்கள், கோல்வ மலையில் {கோல்லகிரியில்} உள்ள மனிதர்கள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்த வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர்கள் நடைபெற்றன.(11) அருஞ்செயல் ஏதும் செய்யாமல் அந்த இனக்குழுக்களை அடக்கிய அர்ஜுனன், குதிரையால் வழிநடத்தப்பட்டுக் கால்நடையாகவே ஸுராஷ்ட்டிரர்களின் {சௌராஷ்டிரர்களின்} நாட்டுக்குச் சென்றான்.(12)கோகர்ணத்தை அடைந்த அவன், அங்கிருந்து பிரபாஸத்திற்குச் சென்றான். அடுத்ததாக விருஷ்ணிகுல வீரர்களால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரத்திற்குச் சென்றான்.(13) குரு மன்னனின் அழகிய வேள்விக் குதிரை துவாராவதியை அடைந்தபோது, யாதவ இளைஞர்கள் அந்தக் குதிரைக்கு எதிராகத் தங்கள் பலத்தைப் பயன்படுத்தினர்.(14) எனினும், மன்னர் உக்ரசேனர் புறப்பட்டுச் சென்று அக்காரியத்தைச் செய்வதில் இருந்து அந்த இளைஞர்களைத் தடுத்தான். அதன்பிறகு, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் ஆட்சியாளர் {உக்ரசேனர்}, தன் அரண்மனையில் இருந்து வெளியே வந்து,(15) அர்ஜுனனின் தாய்மாமனான வசுதேவரின் துணையுடன் உற்சாகமாக அந்தக் குரு வீரனைச் சந்தித்து, உரிய சடங்குகளுடன் அவனை வரவேற்றார்.(16)

வயது முதிர்ந்தவர்களான அந்தத் தலைவர்கள் இருவரும், அர்ஜுனனை முறையாகக் கௌரவித்தனர். அந்தக் குரு இளவரசன் அவர்களின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தான் பின்பற்றிச் சென்ற குதிரை வகுத்த வழியில் சென்றான்.(17) அந்த வேள்விக் குதிரை மேற்குக் கடலின் கரையோரமாகச் சென்று இறுதியாக ஐந்து நீர்நிலைகளைக் கொண்டதும், மக்கள் தொகையிலும், செழிப்பிலும் பெருகி இருந்ததுமான நாட்டை அடைந்தது.(18) அங்கிருந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை காந்தாரர்களின் நாட்டுக்குச் சென்றது. அங்கே சென்று அது, குந்தியின் மகனால் பின்தொடரப்பட்டு விருப்பப்படி சுற்றித் திரிந்தது.(19) சகுனியின் மகனும், பாண்டவர்களிடம் தன் தந்தை கொண்டிருந்த கடும் வெறுப்பை நினைவில் கொண்டிருந்தவனுமான காந்தார ஆட்சியாளனுக்கும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்}  இடையில் கடும்போர் ஒன்று நேர்ந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(20)

சகுனியின் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 84-அர்ஜுனனுடன் போரிட்ட சகுனியின் மகன்; அவனைத் தடுத்து அறிவுறுத்திய அர்ஜுனன்; தன் மகனைக் காக்க வந்த சகுனியின் மனைவி; சகுனியின் மகனைக் கொல்லாமல் விட்ட அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனியின் வீர மகன்[1], ஒரு பெரும்படையின் துணையுடன் சுருள் முடி கொண்ட குரு வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான். அந்தப் படையில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன. மேலும் அப்படை கொடிகள் மற்றும் பதாகைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(1) தங்கள் மன்னனான சகுனி கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அதற்குப் பழிதீர்க்கும் வஞ்சத்தில் எரிந்து கொண்டிருந்தவர்களும், விற்களுடன் கூடியவர்களுமான அந்தப் போர்வீரர்கள் ஒன்றுசேர்ந்தவர்களாகப் பார்த்தனை நோக்கி விரைந்தனர்.(2) அற ஆன்மா கொண்டவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, அவர்களிடம் அமைதியாகப் பேசினாலும், (அர்ஜுனன் மூலமாகச் சொல்லப்பட்ட) யுதிஷ்டிரனின் நல்ல வார்த்தைகளை அவர்கள் ஏற்க விரும்பவில்லை.(3) இனிய சொற்களைக் கொண்டு பார்த்தனால் தடுக்கப்பட்டாலும், அவர்கள் கோபவசப்பட்டவர்களாக அந்த வேள்விக் குதிரையைச் சூழ்ந்தனர். இதனால் பாண்டுவின் மகன் கோபத்தில் நிறைந்தான்.(4)அப்போது அர்ஜுனன், காந்தியில் சுடர்விடுபவையும், காண்டீவத்தில் இருந்து அலட்சியமாக {அதிக முயற்சியின்றி} ஏவப்பட்டவையும், கத்தியைப் போன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகளால் {க்ஷுரங்களால்} காந்தாரப் போர்வீரர்கள் பலரின் தலைகளைக் கொய்தான்.(5) ஓ! மன்னா, பார்த்தனால் இவ்வாறு காந்தாரர்கள் கொல்லப்பட்ட போது, பெரிதும் துன்பமடைந்த அவர்கள் குதிரையை விடுவித்து விட்டு, அச்சத்தால் போரை விட்டு விலகிச் சென்றனர்.(6) எனினும், அதற்கு மேலும் அனைத்துப் பக்கங்களிலும் தன்னைச் சூழ்ந்திருந்த காந்தாரப் போராளிகளால் தடுக்கப்பட்டாலும், பெரும் சக்தி கொண்டவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவர்களில் பலரின் பெயர்களை முன்பே சொல்லிவிட்டு அவர்களின் தலைகளைக் கொய்தான்.(7) அந்தப் போரில் அவனைச் சுற்றிலும் இருந்த காந்தாரப் போர் வீரர்கள் இவ்வாறு கொல்லப்பட்ட போது, சகுனியின் அரசமகன், அந்தப் பாண்டுவின் மகனைத் தடுக்க முன்வந்தான்.(8)

க்ஷத்திரியக் கடமையால் உந்தப்பட்ட அர்ஜுனன், தன்னுடன் போரிட்டுக் கொண்டிருந்த காந்தார மன்னனிடம், “யுதிஷ்டிரரின் ஆணைகளின் விளைவாக, நான் என்னுடன் போரிடும் மன்னர்களைக் கொல்ல நினைப்பதில்லை. ஓ! வீரா, என்னுடன் போரிடுவதை நிறுத்துவாயாக. தோல்வி உனதாக வேண்டாம்” என்றான்.(9,10) இவ்வாறு சொல்லப்பட்ட சகுனியின் மகன், அறியாமையில் மதிமயங்கி, அந்த ஆலோசனையை அலட்சியம் செய்து, போர்ச்சாதனைகளில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனான அந்தக் குரு வீரனை வேகமாகச் செல்லும் கணைகள் பலவற்றால் மறைத்தான்.(11) அப்போது பார்த்தன், பிறைவடிவக் கணையொன்றால் {ஒரு அர்த்தச்சந்திர பாணத்தால்} தன் பகைவனின் தலைப்பாகையை வெட்டி வீழ்த்தினான். அளவிலா ஆன்மாகக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தான் வெட்டி வீழ்த்திய) ஜெயத்ரதன் தலையைப் போலவே அந்தத் தலைப்பாகையையும் நெடுந்தொலைவு தள்ளி விழச் செய்தான்.(12)

இந்த அருஞ்செயலைக் கண்ட காந்தாரப் போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அர்ஜுனன் தானாகவே தங்கள் மன்னனை உயிருடன் விட்டான் என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டனர்.(13) அப்போது, அந்தக் காந்தாரர்களின் இளவரசன், அச்சமடைந்த மான் கூட்டத்திற்கு ஒப்பான தன் போர்வீரர்கள் அனைவருடன் சேர்ந்து களத்தைவிட்டுத் தப்பி ஓடத் தொடங்கினான்.(14) அச்சத்தால் உணர்விழந்த காந்தாரர்கள், தப்ப இயலாதவர்களாகக் களத்திலேயே திரிந்து கொண்டிருந்தனர். அர்ஜுனன், அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு அவர்களில் பலரின் தலைகளை வெட்டி வீழ்த்தினான்.(15) அர்ஜுனனுடைய கணைகளின் விளைவால் பலர் தங்கள் கைகளை இழந்திருந்தாலும், அந்த உறுப்பை இழந்ததைக் கூட அறியாத வண்ணம் அவர்கள் அச்சத்தால் திகைத்திருந்தனர். உண்மையில், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பார்த்தனின் நெடுங்கணைகளால் அந்தக் காந்தாரப் படை பெரிதும் பீடிக்கப்பட்டது.(16)

அச்சமடைந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைக் கொண்டதும், போர்வீரர்கள் பலரையும் விலங்குகள் பலவற்றையும் இழந்திருந்ததும், கற்கட்டாகக் குறைக்கப்பட்டதும், முறியடிக்கப்பட்டதுமான அந்தப் படை, மீண்டும் மீண்டும் களத்திற்குள்ளேயே சுழன்று திரியத் தொடங்கியது.(17) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் பகைவருக்கு மத்தியில், அருஞ்சாதனைகளுக்காப் புகழ்பெற்றவனான அந்தக் குருவீரனுக்கு எதிரில் எவனும் நிற்பது காணப்படவில்லை. தனஞ்சயனின் ஆற்றலையைத் தாங்கக்கூடிய எவரும் அங்கே காணப்படவில்லை.(18) அப்போது, காந்தாரர்களின் ஆட்சியாளனுடைய தாயானாவள் {சகுனியின் மனைவி}, அச்சத்தால் நிறைந்தவளாக, தன் நாட்டின் முதிர்ந்த அமைச்சருகளுடன் சேர்ந்து, அர்ஜுனனுக்காகச் சிறந்த அர்க்கியத்துடன் தன் நகரத்தைவிட்டு வெளியே வந்தாள்.(19) உறுதியான இதயம் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான தன் மகனை மேலும் போரிடுவதில் இருந்து தடுத்து, உழைப்பால் ஒருபோதும் களைப்படையாதவனான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நிறைவடையச் செய்தாள்.(20)

பலமிக்கவனான பீபத்சு {அர்ஜுனன்}, காந்தாரர்களுக்குக் கருணை காட்ட விரும்பி அவளை வழிபட்டான். சகுனியின் மகனைத் தேற்றும் வகையில் அவன்,(21) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன் இதயத்தில் இவ்வளவு வெறுப்பை நிறுவியிருப்பதன் மூலம் நீ எனக்கு ஏற்புடையதைச் செய்யவில்லை. ஓ! வீரர்களைக் கொல்பவனே, ஓ! பாவமற்றவனே, நீ என் மைத்துனனாவாய்[2].(22) என் தாயான காந்தாரியை நினைத்தும், திருதராஷ்டிரரின் நிமித்தமாகவும் நான் உன் உயிரை எடுக்கவில்லை. ஓ! மன்னா {சகுனியின் மகனே}, அதன் காரணமாகவே நீ இன்னும் உயிருடன் வாழ்கிறாய். எனினும், உன் தொண்டர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(23) இனிமேலும் இவ்வாறு நிகழ வேண்டாம். பகைமைகள் தொடர வேண்டாம். உன் புத்தி மீண்டும் இவ்விதமாகச் செல்ல வேண்டாம். சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னரின் குதிரை வேள்விக்கு நீ நிச்சயம் வர வேண்டும்” என்றான் {அர்ஜுனன்}”.(24)

யாகசாலை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 85-அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து கொண்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த யுதிஷ்டிரன்; பிராமணர்களை வரச்செய்து பீமனை யாகசாலை அமைக்கச் செய்தது; பல நாடுகளில் இருந்து வந்த மன்னர்களும், மக்களும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்தச் சொற்களைச் சொன்ன பார்த்தன் {அர்ஜுனன்}, விருப்பப்படி திரியும் அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான். அந்த வேள்விக் குதிரை, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கிச் செல்லும் சாலையில் திரும்பியது.(1) குதிரை திரும்பியதைச் செய்தி சுமப்பவர்களின் {தன் சாரர்களின் / ஒற்றர்களின்} மூலம் யுதிஷ்டிரன் கேள்விப்பட்டான். அர்ஜுனன் நலமாகவும், உற்சாகத்துடனும் இருப்பதையும் கேட்டு அவன் மகிழ்ச்சியால் நிறைந்தான்[1].(2) காந்தாரர்களின் நாட்டிலும், பிற நாடுகளிலும் விஜயனால் செய்யப்பட்ட அருஞ்செயல்களைக் கேட்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(3) அதே வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், மாக மாதத்தின் வளர்பிறை பனிரெண்டாம் நாள் வந்ததைக் கண்டு, சாதகமான நட்சத்திரமும் {மாகமாஸத்திய [மாசி மாதத்து] துவாதசியும், புஷ்ய [பூசம்] நக்ஷத்திரமும் கூடிய தினம்} இருப்பதைக் கண்டு,(4) பீமன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய தன் சகோதர்கள் அனைவரையும் அழைத்தான்.ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்டவனும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மன்னன் {யுதிஷ்டிரன்} இந்தச் சொற்களை உரிய காலத்தில் சொன்னான். உண்மையில், பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தாக்குபவர்கள் அனைவரிலும் முதல்வனான பீமனிடம்,(5,6) “ஓ! பீமசேனா, உன் தம்பி (அர்ஜுனன்) குதிரையுடன் திரும்பி வருகிறான். அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்ற மனிதர்களிடம் இருந்து இதை நான் அறிந்தேன்.(7) (வேள்விக்கான) காலம் வந்துவிட்டது. வேள்விக் குதிரையும் அருகில் வந்துவிட்டது. மாக மாதத்து முழு நிலவு நாள் நடந்து கொண்டிருக்கிறது. ஓ! விருகோதரா, இம்மாதம் கடக்க இருக்கிறது {இன்னும் ஒரு மாதகாலம்தான் இருக்கிறது}.(8) எனவே, கல்விமான்களும், வேதங்களை அறிந்தவர்களுமான பிராமணர்கள், குதிரை வேள்வியை வெற்றிகரமாக நிறைவேற்ற தகுந்த இடத்தைப் பார்க்கட்டும்” என்றான்.(9)

இவ்வாறு சொல்லப்பட்ட பீமன் அந்த அரச ஆணைக்குக் கீழ்ப்படிந்தான். சுருள் முடி கொண்ட அர்ஜுனன் திரும்பி வருவதைக் கேட்டு அகமகிழ்ந்தான்.(10) பிறகு பீமன், வேள்விச்சாலைகள் வகுப்பதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும் உரிய விதிகளை நன்கறிந்த எண்ணற்ற மனிதர்களுடன் வெளியே புறப்பட்டுச் சென்றான். அவன் தன்னுடன், வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்த பிராமணர்கள் பலரை உடன் அழைத்துச் சென்றான்.(11) ஓர் அழகிய இடத்தைத் தேர்ந்தெடுத்த பீமன், வேள்விச்சாலைக்கான மதில்களை அமைப்பதற்காக அதை முறையாக அளந்தான். அதில் எண்ணற்ற வீடுகளும், மாளிகைகளும் கட்டப்பட்டன, அகலமான நெடுஞ்சாலைகளும் அதில் அமைக்கப்பட்டன.(12) அந்தக் கௌரவ வீரன் மிக விரைவில் அந்தச் சாலையை நுற்றுக்கணக்கான சிறந்த மாளிகைகளால் நிரம்பியதாக்கினான். அதன் பரப்பு சமன்படுத்தப்பட்டு, தங்கம் மற்றும் ரத்தினங்களால் பளபளப்பாக்கப்பட்டு, பொன்னாலான பல்வேறு அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டது.(13)

பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், உயர்ந்தவையுமான தூண்களும், அகலமான வெற்றி வளைவுகளும் அந்த வேள்விச்சாலைக்குள் கட்டப்பட்டன. இவையாவும் பசும்பொன்னால் செய்யப்பட்டன.(14) அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனான அந்த இளவரசன் {பீமன்}, பெண்கள் தங்குவதற்கும், பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்களும், தங்கள் இருப்பால் வேள்வியைச் சிறப்பிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களுமான எண்ணற்ற மன்னர்கள் தங்குவதற்கும், உரிய அறைகளைச் செய்தான்.(15) அந்தக் குந்தியின் மகன், பல்வேறு நாடுகளில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் பிராமணர்களுக்கும் உரிய மாளிகைகள் பலவற்றையும் கட்டினான்.(16)

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், மன்னனின் ஆணையின் பேரில், பூமியின் பெரும் மன்னர்களிடம் தூதர்களை அனுப்பினான்.(17) அந்தச் சிறப்புமிக்க மன்னர்களும், குரு ஏகாதிபதிக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக அவனுடைய குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்கு} வந்தனர். மேலும் அவர்கள் தங்களுடன் ரத்தினங்களையும், பெண் பணியாட்கள் பலரையும், குதிரைகள் மற்றும் ஆயுதங்கள் பலவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.(18) அந்த அரங்கிற்குள் வசித்த உயர் ஆன்ம மன்னர்கள் எழுப்பியச் சொர்க்கத்தையே எட்டிய ஒலிகள், முழங்கும் பெருங்கடலால் உண்டாக்கப்படும் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தன.(19) குருக்களைத் திளைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்விக்கு வந்திருந்த ஏகாதிபதிகளுக்கு உரிய பல்வேறு உணவு மற்றும் பான வகைகளையும், தெய்வீக அழகுடைய படுக்கைகளையும் ஒதுக்கினான்.(20)

பாரதர்களின் தலைவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பல்வேறு வகைப் பயிர்கள், கரும்பு மற்றும் பால் ஆகியவற்றுடன் நன்கு நிரம்பிய பல்வேறு கொட்டகைகளை (விருந்தினர்களுடன் வரும்) விலங்குகளுக்கென ஒதுக்கினான்.(21) உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய அந்தப் பெரும் வேள்விக்குப் பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தனர்.(22) உண்மையில், ஓ! பூமியின் தலைவா, அப்போது வாழ்ந்து வந்தவர்களில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் தங்கள் சீடர்களுடன் அந்த வேள்விக்கு வந்தனர். குரு மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்கள் அனைவரையும் வரவேற்றான்.(23) பெரும் சக்தி கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், செருக்கனைத்தையும் கைவிட்டு, தன் விருந்தினர்கள் அனைவரையும் பின்தொடர்ந்து அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அரங்குகளுக்குச் சென்றான்.(24) அப்போது வேள்விக்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவேற்றிய கைவினைஞர்களும் {ஸ்தபதிகளும்}, பொறியாளர்களும் {சிற்பிகளும்} அது குறித்து மன்னன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தனர்.(25) அனைத்தும் ஆயத்தமாக இருப்பதைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விழிப்பும், கவனமும் நிறைந்தவனாகத் தன்னை முறையாக மத்திக்கும் தன் தம்பிகள் அனைவருடன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்”.(26)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “யுதிஷ்டிரனுடைய அந்தப் பெரும் வேள்வி தொடங்கிய போது, நாநயமிக்கச் சொல்லேர் உழவர்கள் {வித்வான்கள்} பலர், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, பல்வேறு முன்மொழிவுகளைத் தொடங்கி வைத்து, அவற்றில் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்[2].(27) ஓ! பாரதா, (அங்கே அழைக்கப்பட்டிருந்த) மன்னர்கள், தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} வேள்விக்கே ஒப்பானதும், பீமனால் செய்யப்பட்டதுமான அந்த வேள்விக்கான சிறந்த ஏற்பாடுகளைக் கண்டனர்.(28)அவர்கள், பொன்னாலான வெற்றி வளைவுகள் {வாயில்கள்} பலவற்றையும், அனுபவிக்கத்தகுந்த ஆடம்பரப் படுக்கைகள், இருக்கைகள் மற்றும் பிற பொருட்கள் பலவற்றையும், பல்வேறு இடங்களில் இருந்து அங்கே திரண்டிருந்த மனிதக்கூட்டத்தையும் அங்கே கண்டனர்.(29) அங்கே அவர்கள், கொள்கலன்கள், பாத்திரங்கள், கொப்பரைகள், நீர்க்கலன்கள், மூடிகள் மற்றும் விரிப்புகள் {குடங்கள், பாத்திரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்த்தமானங்கள்} ஆகியவற்றைக் கண்டனர். அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்கள் பொன்னாலாகாத எதையும் அங்கே காணவில்லை.(30) சாத்திர வழிகாட்டுதலின் படி மரத்தாலும், பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட வேள்வித்தம்பங்கள் {யூபங்கள்} பலவும் அமைக்கப்பட்டன. பெரும் பிரகாசத்துடன் கூடிய அவை, (சாத்திர மந்திரங்களால்) அர்ப்பணிக்கப்பட்டு முறையாக நிறுவப்பட்டன.(31) மண்ணுக்குரிய விலங்குகள் அனைத்தும், நீருக்குரியவை அனைத்தும் அச்சந்தர்ப்பத்தில் அங்கே திரட்டப்பட்டிருப்பதை அம்மன்னர்கள் கண்டனர்.(32)

பசுக்கள் பலவும், எருமைகள் பலவும், வயது முதிர்ந்த பெண்கள் பலரும், நீர்வாழ் விலங்குகள் பலவும், இரை தேடும் விலங்குகள் பலவும், பறவை இனங்கள் பலவும். ஈன்று பெறும் உயிரினங்கள், முட்டையிட்டு குஞ்சு பெறும் உயிரினங்கள், அழுக்கு மற்றும் கழிவில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் பலவும், தாவர வகைப் பலவும் மலைகளில் வளரும் விலங்குகள் மற்றும் செடிகள் பலவும் அங்கே இருப்பதை அவர்கள் கண்டனர்.(33,34) பாகிலிடப்பட்ட விலைமதிப்புமிக்க இன்பண்டங்கள் பிராமணர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய இருவருக்காகவும் குவியல் குவியல்களாக அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்தன. நூறாயிரம் {ஒரு லட்சம்} பிராமணர்கள் உண்டதும், துந்துபிகளும், கைத்தாளங்களும் ஒலிக்கப்பட்டன.(36) துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலிகள் அடிக்கடி கேட்கும் வண்ணம் அங்கே உணவு உண்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தது. உண்மையில், நாளுக்கு, நாள் அவ்வொலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.(37)

பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வி இவ்வாறே நடந்து கொண்டிருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அச்சந்தர்ப்பத்தில் உணவு மலைகள் அர்ப்பணிக்கப்பட்டன. தயிர் மற்றும் நெய்யாலான பெரிய குளங்களும், தடாகங்களும் அங்கே காணப்பட்டன.(38) ஓ! ஏகாதிபதி, ஜம்புத்வீபத்தில் உள்ள நாடுகள் மற்றும் மாகாணங்களில் இருந்த மொத்த மக்கள் தொகையும் ஒன்றுதிரண்டு வந்த அந்தப் பெரும் வேள்வியில் இருப்பதாகத் தெரிந்தது.(39) ஆயிரக்கணக்கான நாட்டைச் சேர்ந்தவர்களும், இனங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தனர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பொன்னாலான பிரகாசமான காது வளையங்களை அணிந்தவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் தங்கள் கரங்களின் எண்ணற்ற பாத்திரங்களை ஏந்தி, மறுபிறப்பாள வகையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவைப் பரிமாறினர்.(40,41) மன்னர்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உகந்த மிக மதிப்புமிக்கப் பல்வேறு வகை உணவு மற்றும் பானங்களைப் பாண்டவர்களின் பணியாட்கள் பிராமணர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(42)

அர்ஜுனனின் சொல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 86-பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணன்; அர்ஜுனனின் சொற்களை யுதிஷ்டிரனிடம் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பூமியின் தலைவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான மன்னர்கள் வந்ததைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், பீமனிடம்,(1) “ஓ! மனிதர்களின் தலைவா, மனிதர்களில் முதன்மையானவர்களான இந்த மன்னர்கள் அனைவரும் உயர்ந்த மதிப்புக்குரியவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய முறையான கௌரவங்கள் அளிக்கப்படட்டும்” என்றான்.(2) பெரும் புகழைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன், இரட்டையர்களின் {நகுல சகாதேவனின்} துணையுடன் அவ்வாறே செயல்பட்டான்.(3)

மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தன் முன்னணியில் பலதேவனுடனும், விருஷ்ணிகள் துணையுடனும் அங்கே வந்தான்.(4) அவனுடன் யுயுதானன் {சாத்யகி}, பிரத்யும்னன், கதன், நிசடன், ஸாம்பன், கிருதவர்மன் ஆகியோரும் வந்தனர்.(5) வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன் அவர்களுக்கு மதிப்புமிக்க வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். அதன் பிறகு அந்த இளவரசர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அரண்மனைகளுக்குள் நுழைந்தனர்.(6)

மதுசூதனன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடனான உரையாடலின் இறுதியில், பல போர்களின் விளைவால் அர்ஜுனன் மெலிந்திருப்பதைக் குறிப்பிட்டான்.(7) குந்தியின் மைந்தன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனனைக் குறித்துப் பகைவரைத் தண்டிப்பவனான கிருஷ்ணனிடம் மீண்டும் மீண்டும் கேட்டான். அண்டத்தின் தலைவன் {கிருஷ்ணன்}, தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, சக்ரனின் மகனான ஜிஷ்ணு குறித்துப் பேசத் தொடங்கினான்.(8) {கிருஷ்ணன்}, “ஓ! மன்னா, துவாரகையில் வசிப்பவனும், நம்பிக்கைக்குரியவனுமான என்னுடைய மனிதன் {ஒற்றனாக இருக்கலாம்} ஒருவன், என்னிடம் வந்தான். அவன் பாண்டு மகன்களில் முதன்மையான அர்ஜுனனைக் கண்டு வந்திருந்தான். உண்மையில், பல போர்களினால் களைத்திருக்கும் பின்னவன் {அர்ஜுனன்} மிகவும் மெலிந்திருக்கிறான் {என்றும்}.(9) ஓ! பலமிக்க ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கவன் {அர்ஜுனன்} நமக்கு மிக அருகில் இருக்கிறான் என்றும் என்னுடைய மனிதன் எனக்குத் தெரிவித்தான். உமது குதிரை வேள்வியை நிறைவேற்றுவதில் உம்மை நிறுவிக் கொள்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(10)

அவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, நற்பேற்றினாலேயே அர்ஜுனன் பாதுகாப்பாகத் திரும்பி வருகிறான்.(11) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, பாண்டு மகன்களில் வலிமைமிக்க வீரனான அவன் இக்காரியம் குறித்து என்ன சொல்லி அனுப்பியிருக்கிறான் என்பதை உன்னிடம் உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றான்.(12)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் தலைவனுமான அவன் {கிருஷ்ணன்}, அற ஆன்மா கொண்ட அந்த ஏகாதிபதியிடம் இச்சொற்களைச் சொன்னான்,(13) {கிருஷ்ணன்}, “ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, என்னுடையவனான அந்த மனிதன், பார்த்தனின் சொற்களை நினைவுகூர்ந்து, “ஓ! கிருஷ்ணா, வேளை வரும்போது என்னுடைய இந்தச் சொற்களை யுதிஷ்டிரரிடம் சொல்வாயாக” என்று சொன்னான்.(14) {யுதிஷ்டிரிடம்} ஓ! கௌரவர்களின் தலைவா, (உமது வேள்விக்கு) மன்னர்கள் பலர் வருவார்கள். அவர்கள் வரும்போது அவர்கள் உயர்வாகக் கௌரவிக்கப்பட வேண்டும். உண்மையில், அதுவே நமக்குத் தகும் {என்ற தன் சொற்களைச் சொல்லுமாறு அர்ஜுனன் சொல்லி அனுப்பியிருக்கிறான்}.(15)

{மேலும், என்னுடைய [கிருஷ்ணனின்] மனிதனிடம் அர்ஜுனன்}, “ஓ!கௌரவங்களை அளிப்பவனே, (ராஜசூய வேள்வி நடந்தபோது) அர்க்கியம் அளிக்கும் நேரத்தில் நடந்ததற்கு ஒப்பான இடரேதும் நிகழாமல் தவிர்ப்பதற்குரிய தகுந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் மன்னரிடம் {யுதிஷ்டிரரிடம்} தெரிவிப்பாயாக. கிருஷ்ணனும் இஃதை அங்கீகரிக்கட்டும்” {என்றும் அர்ஜுனன் சொல்லி அனுப்பியிருக்கிறான்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} மன்னர்களின் பகையுணர்வுகளால் மக்கள் கொல்லப்படாதிருக்கட்டும்.(16,17) என்னுடையவனான அந்த மனிதன், தனஞ்சயனின் சொற்களை மேலும் சொன்னான். அவற்றை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பீராக.(18)

{அர்ஜுனனின் சொற்களில்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மணிப்புர ஆட்சியாளனான என் அன்புக்குரிய மகன் பப்ருவாஹனன், வேள்விக்கு வருவான்.(19) எனக்காக நீர் அவனைக் கௌரவிப்பீராக. ஓ! பலமிக்கவரே, அவன் எப்போதும் என்னிடம் பற்று கொண்டவனாகவும், ஆழமான அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருக்கிறான்” {என்று அர்ஜுனன் தன் மனிதனிடம் சொல்லியனுப்பி இருப்பதாகக் கிருஷ்ணன் சொன்னான்}.(20) இச்சொற்களைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் அவற்றை அங்கீகரித்துப் பின்வருமாறு சொன்னான்”.(21)

லக்ஷணக் குறை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 87-பாண்டவர்களில் மற்ற நால்வரைவிட அர்ஜுனனுக்குப் பெரும் அலைச்சல் நேரிடும் வகையில் அவன் உடலில் உள்ள லக்ஷணக் குறை எதுவெனக் கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அதைக் கூறிய கிருஷ்ணன்; குதிரையுடன் திரும்பி வந்த அர்ஜுனன்…

யுதிஷ்டிரன், “ஓ! கிருஷ்ணா, உன்னுடைய இனிமையான சொற்களை நான் கேட்டேன். அவை உன்னால் பேசத் தகுந்தனவாக இருந்தன. அவை மகிழ்ச்சி நிறைந்தவையாகவும், அமுதத்தைப் போல இனிமையாகவும் இருந்தன. உண்மையில், ஓ! பலமிக்கவனே, அவை என் இதயத்தைப் பேரின்பத்தால் நிறைத்தன.(1) ஓ! ரிஷிகேசா, பூமியின் மன்னர்களுடன் விஜயனுக்கு நேர்ந்திருக்கும் போர்கள் எண்ணற்றவையென நான் கேட்டிருக்கிறேன்.(2) சுகத்தில் {வசதி வாய்ப்புகளில்} இருந்து எப்போதும் தொடர்பறுந்தவனாகப் பார்த்தன் இருப்பதன் காரணம் யாது? விஜயன் பெரும் நுண்ணறிவு பெற்றவனாக இருக்கிறான். எனவே, இஃது என் இதயத்திற்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது.(3) ஓ! ஜனார்த்தனா, தொழிலில் இருந்து விலகியிருக்கும்போதெல்லாம் நான் குந்தியின் மகனான ஜிஷ்ணுவையே {அர்ஜுனனையே} நினைக்கிறேன். பாண்டுக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவனான அவன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.(4) அவனுடைய உடலில் அனைத்து மங்கலக் குறிகளும் இருக்கின்றன. எனினும், ஓ! கிருஷ்ணா, அவன் {அர்ஜுனன்} எப்போதும் துன்பத்தையும், வசதியின்மையையும் அனுபவிக்கக் காரணமான அந்தக் குறியீடு யாது?(5) குந்தியின் மகனான அவனே, துன்பத்தில் பெரும்பகுதியைச் சுமக்கிறான். அவன் உடலில் நிந்திக்கத்தக்க குறியீடு {கெட்ட லக்ஷணம்} எதையும் நான் காணவில்லை. இதைக் கேட்க நான் தகுந்தவனெனில் எனக்கு அதை விளக்கிச் சொல்வாயாக” என்று கேட்டான்.(6)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், போஜ இளவரசர்களின் மகிமையை அதிகரிப்பவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, பின்வருமாறு பதிலளித்தான்:(7) “மனிதர்களில் சிங்கமான இவனது தாடையெலும்புகள் சற்றே உயர்ந்திருப்பதைத் தவிர நிந்திக்கத்தக்க இயல்பு வேறு எதையும் நான் காணவில்லை.(8) இதன் விளைவாகவே மனிதர்களில் முதன்மையான இவன் எப்போதும் சாலைகளிலேயே இருக்கிறான். இவன் மகிழ்ச்சியற்றவனாக இருப்பதற்கு வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை[1]” என்றான்.(9)பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மனிதர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், அந்த விருஷ்ணிகளின் தலைவனிடம் அவ்வாறே இருப்பதாகச் சொன்னான்.(10) எனினும், (அர்ஜுனனுக்கு களங்கமேதும் கற்பிக்கப்படுதைப் பொறுத்துக் கொள்ள முடியாத) இளவரசி திரௌபதி, கிருஷ்ணனை நோக்கி கோபத்துடன் சாய்வாகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவனான ரிஷிகேசன், தன் நண்பரான பாஞ்சால இளவரசி (தன் நண்பனிடம் {அர்ஜுனனிடம்}) வெளிப்படுத்திய அன்பின் {காதலின்} குறியீட்டை அங்கீகரித்தான்[2].(11)குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற அர்ஜுனனின் இனிமையான வெற்றிகளைக் கேட்ட பீமசேனனும், வேள்விப் புரோகிதர்கள் உள்ளிட்ட பிற குருக்களும் {கௌரவர்களும்} உயர்வான மகிழ்ச்சியை அடைந்தனர்.(12) அவர்கள் அர்ஜுனனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த உயர்ஆன்ம வீரனிடம் இருந்து ஒரு தூதன் செய்தியைச் சுமந்து வந்தான்.(13) அந்தப் புத்திசாலியான தூதன், குரு மன்னனின் முன்னிலைக்கு வந்து, மதிப்புடன் தலை வணங்கி, மனிதர்களில் முதன்மையான பல்குனனின் வரவைத் தெரிவித்தான்.(14) அந்தச் செய்தியைப் பெற்றதும், மகிழ்ச்சிக் கண்ணீர் மன்னனின் கண்களை மறைந்தது. தூதன் கொண்டு வந்த இனிய செய்திக்காக அவனுக்குப் பெருங்கொடைகள் வழங்கப்பட்டன.(15)

அன்றிலிருந்து இரண்டாவது நாள், மனிதர்களில் முதன்மையான அந்தக் குருக்களின் தலைவன் வந்த போது பேராரவாரம் கேட்டது.(16) அர்ஜுனனுக்கு அருகில் நடந்து வந்த அந்தக் குதிரையின் குளம்படிகளில் இருந்து எழுந்த புழுதியானது, தெய்வீகக் குதிரையான உச்சைஸ்ரவத்தால் எழுப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(17)

அர்ஜுனன் முன்னேறி வந்தபோது, குடிமக்களால் சொல்லப்படும் மகிழ்ச்சி நிறைந்த சொற்கள் பலவற்றைக் கேட்டான். {அவர்கள்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நற்பேற்றினாலேயே நீ ஆபத்துகளில் இருந்து விடுபட்டாய். மன்னன் யுதிஷ்டிரனுக்குப் புகழுண்டாகட்டும்.(18) உலகம் முழுவதும் குதிரையைச் சுற்றித் திரியவிட்டு, போரில் மன்னர்க்ள அனைவரையும் வென்று திரும்ப அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(19) சகரனாலும், பழங்காலத்தின் உயர் ஆன்ம மன்னர்களாலும் இத்தகைய அருஞ்செயல் செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(20) ஓ! குருத்தில் முதன்மையானவனே, நீ அடைந்த இந்தச் சாதனையை எதிர்கால மன்னர்களாலும் ஒருபோதும் அடைய முடியாது” {என்றனர்}.(21)

குடிமக்கள் சொன்ன காதுக்கினிய இத்தகைய சொற்களைக் கேட்டபடியே உயர் ஆன்ம பல்குனன் {அர்ஜுனன்}, வேள்விச்சாலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது மன்னன் யுதிஷ்டிரனும், அவனுடைய அமைச்சர்கள் அனைவரும், யதுக்களைத் திளைக்கச் செய்பவனான கிருஷ்ணனும், திருதராஷ்டிரனைத் தங்கள் முன்னணியில் கொண்டு, தனஞ்சயனை வரவேற்க வெளியே சென்றனர்.(23) அவன், தன் தந்தையின் (திருதராஷ்டிரனின்) பாதங்களையும், பெரும் ஞானியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களையும் வணங்கி விட்டு, பீமனையும், பிறரையும் வழிபட்டு, கேசவனை {கிருஷ்ணனை} ஆரத் தழுவிக் கொண்டான்.(24)

அவர்கள் அனைவரால் வழிபடப்பட்டு, உரிய சடங்குகளின்படி அவர்களை வழிபட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, உடைந்த கப்பலில் இருந்த மனிதன் அலைகளால் அலைக்களிக்கப்பட்டுக் கரையை அடைந்து ஓய்ந்ததைப் போல அந்த இளவரசர்களின் துணையுடன் ஓய்ந்திருந்தான்.(25) அதே வேளையில் பெரும் ஞானம் கொண்ட பப்ருவாஹனன், தன் அன்னையரின் (சித்ராங்கதை மற்றும் உலூபியின்} துணையுடன் குருவின் தலை நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த இளவரசன், குரு குலத்தின் பெரியோர் அனைவரையும், அங்கே இருந்த பிற மன்னர்களையும் முறையாக வணங்கி அவர்கள் அனைவராலும் பதிலுக்குக் கௌரவிக்கப்பட்டான். அதன் பிறகு அவன், தன் பாட்டியான {பிதாமஹியான} குந்தியின் சிறந்த வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

பஹுஸுவர்ணகம்-அஸ்வமேதயாகம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 88-வியாசரின் ஆணையின் பேரில் அஸ்வமேத யாகத்தைத் தொடங்கிய யுதிஷ்டிரன்; யாகத்தில் செய்யப்பட்ட சில சடங்குள்; யூபங்களில் கட்டப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை; யாகத்தை ஒட்டிய அழகிய சூழ்நிலை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களின் அரண்மனைக்குள் நுழைந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இளவரசன் {பப்ருவாஹனன்}, ஆறுதல் தரும் இனிய சொற்களால் தன் பாட்டியை {பிதாமஹியை} வணங்கினான்.(1) அப்போது, ராணி சித்ராங்கதை, கௌரவ்யன் (என்ற பாம்பின்) மகள் (உலூபி) ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பிருதையையும் {குந்தியையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} பணிவோடு அணுகினர். அதன் பிறகு அவர்கள் உரிய வழக்கத்தின்படி சுபத்திரையையும், குரு குலத்தின் பிற பெண்மணிகளையும் சந்தித்தனர்.(2) குந்தி அவர்களுக்கு ரத்தினங்கள் பலவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்தாள். திரௌபதி, சுபத்திரை மற்றும் குரு குலத்தின் பிற பெண்மணிகள் ஆகியோர் அனைவரும் அவர்களுக்குப் பரிசுகளை அளித்தனர்.(3) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதைச செய்யும் விருப்பத்துடன் கூடிய குந்தியால் அன்புடனும், மதிப்புடனும் நடத்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும், மதிப்புமிக்கப் படுக்கைகளுடனும், இருக்கைகளுடனும் அங்கேயே வசித்தனர்.(4)

(குந்தியால்) முறையாகக் கௌரவிக்கப்பட்டவனும், பெரும் சக்திமிக்கவனுமான மன்னன் பப்ருவாஹனன், உரிய சடங்குகளின்படி திருதராஷ்டிரனைச் சந்தித்தான்.(5) அதன் பிறகு மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றுப் பிற பாண்டவர்களிடம் சென்றவனும், வலிமைமிக்கவனுமான அந்த மணிப்புர இளவரசன் அவர்கள் அனைவரையும் பணிவுடன் வணங்கினான்.(6) அவர்கள் அனைவரும் அவனைப் பேரன்புடன் தழுவிக் கொண்டு முறையான மதிப்பை அளித்தனர். அவனிடம் பெரும் நிறைவடைந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அவனுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்தனர்.(7) அதன் பிறகு, அந்த மணிப்புர மன்னன், தந்தையை அணுகும் இரண்டாம் பிரத்யும்னனைப் போலச் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்த வீரனான கிருஷ்ணனைப் பணிவுடன் அணுகினான்.(8) கிருஷ்ணன் அந்த மன்னனுக்கு {பப்ருவாஹனனுக்குப்} பெரும் மதிப்புமிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதுமான சிறந்த தேரைக் கொடுத்தான்.(9) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், பல்குனன், இரட்டையர்கள் ஆகியோரும் தனித்தனியாக அவனைக் கௌரவித்து விலைமதிப்புமிக்கப் பரிசுப்பொருட்களை அளித்தனர்.(10)

மூன்றாம் நாளில், நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்யவதியின் மகனுமான வியாசர், யுதிஷ்டிரனை அணுகி,(11) “ஓ! குந்தியின் மகனே, இந்நாளில் இருந்து உன் வேள்வி தொடங்கட்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. தொடங்குவதற்கான கணம் அருகில் இருக்கிறது. புரோஹிதர்கள் உன்னைத் தூண்டுகிறார்கள்.(12) எந்த அங்கமும் பழுதுபடாதவண்ணம் இந்த வேள்வி செய்யப்படட்டும். இந்த வேள்விக்குப் பெரும் அளவிலான தங்கம் தேவைப்படுவதன் விளைவால், அபரிமிதமான தங்க வேள்வி {பஹுஸுவர்ணகம்} என்று இஃது அழைக்கப்படுகிறது[1].(13) ஓ! பெரும் மன்னா, இந்த வேள்விக்கு ஆணையிட்ட தக்ஷிணையைவிட மூன்று மடங்கு கொடுப்பாயாக. பிராமணர்கள் இக்காரியத்தில் திறம்பெற்றவர்களாவர்[2].(14) ஓ! மன்னா, அபரிமிதமான கொடைகளுடன் கூடிய மூன்று குதிரை வேள்விகளைச் செய்த பலன்களை அடைவதன் மூலம் நீ உன் உற்றார் உறவினரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபடுவாய்.(15) ஓ! ஏகாதிபதி, குதிரைவேள்வியின் நிறைவில் ஒருவன் செய்யும் நீராடல் உயர்ந்த தூய்மையை அளிப்பதும், உயர்ந்த புண்ணியத்தை உண்டாக்குவதுமாகும். ஓ! குரு குலத்து மன்னா, அந்தப் பலன் {புண்ணியம்} உன்னுடையதாகும்” என்றார் {வியாசர்}.(16)அளவிலா நுண்ணறிவைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நீதி மிக்க ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட யுதிஷ்டிரன், குதிரைவேள்வி செய்வதற்கான தீக்ஷைக்கு உட்பட்டான்[3].(17) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அபரிமிதமான கொடைகளுடனும், உணவுக் கொடையுடனும் கூடியதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை எட்டச் செய்வதும், அனைத்துப் புண்ணியங்களையும் உண்டாக்கக்கூடியதுமான பெரும் குதிரை வேள்வியைச் செய்தான்.(18) வேதங்களை நன்கறிந்தவர்களான புரோகிதர்கள், முறையாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டே அனைத்து சடங்குகளைச் செய்தனர். அவர்கள் அனைவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(19) அங்கே விதிப்பிறழ்வுகள் ஏதும் நடக்கவில்லை, முறையற்ற வகையில் ஏதும் செய்யப்படவில்லை. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவர்கள், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, எந்த {சாத்திரப்} பரிந்துரையும் இல்லாத இடங்களில் எவ்வாறு செய்ய வேண்டுமோ அவ்வாறே செய்தனர்[4].(20)ஓ! மன்னா {ஜனமேஜயா}, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான அவர்கள், தர்மம் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுவதும், பிரவர்க்யம் என்றும் அழைக்கப்படுவதுமான சடங்கை முதலில் செய்து, அதன் பிறகு அபிஷவம் எனும் சடங்கையும் முறையாகச் செய்தனர்[5].(21) சோமத்தைப் பருகுபவர்களின் முதன்மையான அவர்கள், ஓ! ஏகாதிபதி, சோமச்சாற்றைப் பிரித்தெடுத்த பிறகு, சாத்திரங்களின் ஆணைகளைப் பின்பற்றி ஸவனச் சடங்கைச்[6] செய்தனர்.(22) அந்த வேள்விக்கு வந்தோரின் மத்தியில் உற்சாகமற்ற எவரையும், வறுமையில் உள்ள எவரையும், பசியில் உள்ள எவரையும், துயரில் மூழ்கிய எவரையும், மோசமாகத் தெரிபவர் எவரையும் காணமுடியவில்லை.(23) மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையின் பேரில், வலிமையும், சக்தியுமிக்கப் பீமசேனன், உண்ண விரும்புவோருக்கு மத்தியில் இடையறாமல் உணவைப் பரிமாறச் செய்தான்.(24) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், அனைத்து வகை வேள்விச் சடங்குகளையும் நன்கறிந்தவர்களுமான புரோஹிதர்கள், ஒவ்வொரு நாளும் அந்தப் பெரும் வேள்வி நிறைவடைவதற்குத் தேவையான செயல்களை அனைத்தையும் செய்தனர்.(25)பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுடைய சத்யஸ்களுக்கு மத்தியில், (வேத) கல்வியின் ஆறு கிளைகளை நன்கறியாத எவரும் இல்லை. அவர்களுக்கு மத்தியில், நோன்புகளை நோற்காத எவரும், உபாத்யாயராக இல்லாத எவரும், இயங்கியல் சர்ச்சைகளை நன்கறியாத எவரும் இல்லை.(26) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வேள்வித் தூணை {யூபத்தை} நிறுவதற்கான வேளை வந்தபோது, வில்வத்தாலான {பில்வத்தாலான} ஆறு வேள்வித் தூண்களும், காதிரத்தாலான {செங்கருங்காலியாலான} ஆறும், சர்வவர்ணினாலான {பலாசத்தாலான / புரசாலான} ஆறும் அமைக்கப்பட்டன.(27) குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} அந்த வேள்வியில் தேவதாருவாலான இரண்டு வேள்வித்தூண்களும் {யூபங்களும்}, சிலேஷ்மாதகத்தாலான {இலுப்பையாலான} ஒன்றும் புரோகிதர்களால் அமைக்கப்பட்டன.(28) மன்னனின் ஆணையின் பேரில், தங்கத்தாலான வேள்வித்தூண்கள் சில அழகின் நிமித்தமாக மட்டுமே பீமனால் அமைக்கப்பட்டன.(29) அந்த அரசமுனியால் கொடுக்கப்பட்ட அழகிய துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த வேள்வித் தூண்கள் ஒவ்வொன்றும், தேவர்களும், தெய்வீக முனிவர்கள் எழுவரும் சூழ்ந்த நிற்க சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்திரனைப் போலிருந்தன.(30)

அங்கே சயனத்தைக் கட்டுவதற்காக எண்ணற்ற தங்கக் கற்கள் உண்டாக்கப்பட்டன. அந்தச் சயனமும் உயிரினங்களின் தலைவனான தக்ஷனுக்காக (அவன் தன் பெரு வேள்வியைச் செய்து கொண்டிருந்த போது) அமைக்கப்பட்ட சயனத்திற்கு ஒப்பான அழகுடன் திகழ்ந்தது.(31) பதினெட்டு முழம் அளவு கொண்ட அந்தச் சயனம் நான்கு அறைகள் அல்லது குகைகளைக் கொண்டிருந்தது. அப்போது {அந்த அறைகளில்} முக்கோணங்களில் கருடனின் வடிவிலான தங்கப் பறவை ஒன்று அமைக்கப்பட்டது[7].(32) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், பெரும் கல்வியாளர்களுமான புரோகிதர்கள், அந்த {இருபத்தோரு} வேள்வித்தூண்களில் {யூபங்களில்} விலங்குகள் மற்றும் பறவைகளைக் கட்டி அவற்றில் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட தேவனுக்கென ஒதுக்கினர்[8].(33) வேள்வி நெருப்புத் தொடர்பான சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட காளைகளும், நீர்வாழ் விலங்கினங்களும் அந்த வேள்வித்தூண்களில் {யூபங்களில்} முறையாகக் கட்டப்பட்டன.(34) உயர் ஆன்மக் குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனின்} வேள்வியில், அந்த முதன்மையான குதிரை {வேள்விக் குதிரை} உட்பட முன்னூறு விலங்குகள் அந்த வேள்வித்தூண்களில் கட்டப்பட்டன[9].(35)தெய்வீக முனிவர்களுடனும், பாடிக்கொண்டிருக்கும் கந்தர்வர்கள் மற்றும் இன்பத்தில் ஆடிக் கொண்டிக்கும் அப்ரசரஸ்களின் பல்வேறு இனக்குழுவினருடனும் இருப்பது போல அந்த வேள்வி மிக அழகானதாகத் தெரிந்தது.(36) அங்கே கிம்புருஷர்களும் நிறைந்திருந்தனர், கின்னரர்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை {அந்த வேள்விச் சாலையைச்} சுற்றிலும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் வசிப்பிடங்கள் இருந்தன.(37) மறுபிறப்பார்களில் முதன்மையானவர்களும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் தொகுப்பவர்களும், வேள்விச் சடங்குகளை நன்கு அறிந்தவர்களுமான வியாசரின் சீடர்கள் அங்கே தினமும் காணப்பட்டனர்.(38) அங்கே நாரதரும், பெருங்காந்தி கொண்ட தும்புருவும் இருந்தனர். இசையில் திறம்பெற்றவர்களான விஸ்வாவசு, சித்திரசேனன் மற்றும் பிறரும் அங்கே இருந்தனர்.(39) வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், இசையில் திறம் பெற்றவர்களும், நடனத்தை நன்கறிந்தவரகளுமான அந்தக் கந்தர்வர்கள், வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களுக்கு மகிழ்வூட்டினர்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

செல்வப்பகிர்வு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 89-யாகம் முடிந்த பின் மன்னர்களைக் கௌரவித்து ஊருக்கனுப்பிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முறையான சடங்குகளின் படி பலிகொடுக்கப்பட்ட வேறு சிறந்த விலங்குகளைச் சமைத்தபிறகு {பசனம் [சமையல் வழிபாடு] செய்த பிறகு}, (உலகம் முழுவதும் திரிந்து வந்த) அந்தக் குதிரையைப் புரோகிதர்கள் பலி கொடுத்தனர்.(1) அவர்கள், சாத்திர வழிகாட்டலுக்கு இணக்கமாக அந்தக் குதிரையைத் துண்டுகளாக வெட்டிய பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், மந்திரங்கள், பொருட்கள், அர்ப்பணிப்பு என்ற மூன்று கலைகளைக் கொண்டவளுமான திரௌபதியைப் பகுக்கப்பட்ட அந்த விலங்கின் அருகில் அமரச் செய்தனர்,(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தண்மனங்களைக் கொண்ட பிராமணர்கள், அந்தக் குதிரையின் மஜ்ஜையை {வபையை} எடுத்து, அதை முறையாகச் சமைத்தனர்.(3) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் இவ்வாறு சமைக்கப்பட்ட மஜ்ஜையிலிருந்து எழுவதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்கவல்லதுமான அந்தப் புகையை முகர்ந்தான்.(4) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரையின் எஞ்சிய உறுப்புகள், பெரும் ஞானத்தைக் கொண்ட பதினாறு வேள்விப் புரோகிதர்களால் நெருப்பில் ஊற்றப்பட்டன {அவற்றை அவர்கள் அக்னியில் ஹோமம் செய்தார்கள்}[1].(5)சக்ரனின் சக்தியுடன் கூடிய அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} வேள்வியை இவ்வாறு நிறைவடையச் செய்தவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தமது சீடர்களுடன் சேர்ந்து அந்த மன்னனைப் பெரிதும் புகழ்ந்தார்.(6) அப்போது யுதிஷ்டிரன், பிராமணர்களுக்கு {ஸதஸ்யர்களுக்கு} ஆயிரங்கோடி பொன் நிஷ்கங்களையும், வியாசருக்கு மொத்த பூமியையும் கொடையாக அளித்தான்[2].(7) சத்யவதியின் மகனான வியாசர், பூமியை ஏற்றுக் கொண்ட பிறகு, பாரதக் குலத்தவரில் முதன்மையானவனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(8) “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ எனக்குக் கொடுத்த பூமியை, நான் உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன். (பூமியால் பயனில்லாதவர்களும்) செல்வத்தை விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பதற்காக, இதை {இந்தப் பூமியை} வாங்குவதற்குரிய விலையை எனக்குக் கொடுப்பாயாக” என்று கேட்டார்.(9)பெரும் நுண்ணறிவைக் கொண்டனும் உயர் ஆன்மாவுமான யுதிஷ்டிரன், வேள்விக்கு அழைக்கப்பட்ட மன்னர்களுக்கு மத்தியில் தன் தம்பிகளுடன் இருந்து கொண்டு, அந்தப் பிராமணர்களிடம்,(10) “பெரும் குதிரை வேள்வியைச் செய்வதற்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தக்ஷிணை பூமியே ஆகும். எனவே, இந்த வேள்விப்புரோகிதர்களுக்கு அர்ஜுனனால் வெல்லப்பட்ட பூமியை நான் கொடுத்தேன்.(11) பிராமணர்களில் முதன்மையானவர்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். நீங்கள் இந்தப் பூமியை உங்களுக்குள் பகிர்ந்து கொள்வீர்களாக. உண்மையில், சதுர்ஹோத்ர வேள்வியில் செய்வது போலப் பூமியை உங்களுக்குள் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்வீராக.(12) மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களே, இப்போது பிராமணர்களுக்கு உரியவையாக இருப்பவற்றை நான் அபகரிக்க விரும்பவில்லை.(13) கல்விமான்களான பிராமணர்களே, என்னாலும், என் தம்பிகளாலும் எப்போதும் பேணி வளர்க்கப்படும் கருத்து இதுவேயாகும்” என்றான். மன்னன் இச்சொற்களைச் சொன்னபோது, அவனுடைய தம்பிகளும், திரௌபதியும், “ஆம். இதுவேதான்” என்றனர். இந்த அறிவிப்பால் உண்டான உணர்வுக் கிளர்ச்சி பெரியதாக இருந்தது.(14)

அப்போது, ஓ! பாரதா, ஆகாயத்தில் வடிவமற்ற ஒரு குரல், “நன்று, நன்று” என்று சொல்வது கேட்டது. பேசிக்கொண்டிருந்த பிராமணக் கூட்டத்தில் அவ்வாறே முணுமுணுப்புகளும் எழுந்தன.(15) தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அவனை உயர்வாகப் புகழ்ந்து, பிராமணர்களின் முன்னிலையில் யுதிஷ்டிரனிடம் மீண்டும்,(16) “பூமியானவள் உன்னால் என்னிடம் கொடுக்கப்பட்டாள். எனினும், நான் உன்னிடம் அவளைத் திருப்பித் தருகிறேன். நீ இந்தப் பிராமணர்களுக்குப் பொன்னைக் கொடுப்பாயாக. பூமி உனதாகட்டும்” என்றார்.(17)

அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், “சிறப்புமிக்க வியாசர் சொல்வது போலச் செய்வதே உமக்குத் தகும்” என்றான்.(18)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தில் முதன்மையானவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் அனைவருடனும் சேர்ந்து ஆன்ம மகிழ்ச்சியடைந்து, குதிரை வேள்விக்கென விதிக்கப்பட்ட தக்ஷிணையில் மூன்று மடங்கான கோடிக்கணக்கான பொன் நாணயங்களைக் கொடையளித்தான்.(19) மருத்தனுக்குப் பிறகு அந்த சந்தர்ப்பத்தில் குரு மன்னனால் நிறைவேற்றப்பட்டதை வேறு எந்த மன்னனாலும் நிறைவேற்ற முடியாது.(20) தீவில் பிறந்த தவசியும், பெரும் கல்விமானுமான கிருஷ்ணர் {வியாசர்}, அந்தச் செல்வத்தை ஏற்றுக் கொண்டு, அதை நான்கு பகுதிகளாக்கி, வேள்விப் புரோகிதர்களுக்குக் கொடுத்தார்.(21) பூமிக்கான விலையாக அந்தச் செல்வத்தைக் கொடுத்தவனும், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், சொர்க்கத்தை உறுதி செய்து கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் மகிழ்ந்திருந்தான்.(22) அளவற்ற செல்வத்தை அடைந்த அந்த வேள்விப் புரோகிதர்கள், பெறுபவரின் விருப்பத்திற்கேற்ப அதைப் பிராமணர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாகப் பகிர்ந்தளித்தனர்.(23) அந்தப் பிராமணர்கள், வேள்விச்சாலைக்குள் இருந்த வெற்றி வளைவுகள், வேள்வித் தண்டுகள், குடுவைகள் மற்றும் பல்வேறு வகைப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தங்க ஆபரணங்களையும் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடைய வகையில் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.(24)

பிராமணர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்ட பிறகு எஞ்சிய செல்வமானது, க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் மிலேச்சர்களில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.(25) இவ்வாறு பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனால் கொடுக்கப்பட்ட கொடையால் நிறைவடைந்த பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி சென்றனர்.(26) புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தனக்குரிய பெரிய அளவிலான பங்காக வந்த தங்கத்தைக் குந்தியிடம் மதிப்புடன் கொடுத்தார்.(27) தன் மாமனாரிடம் {வியாசரிடம்} இருந்து அந்தக் கொடையை அன்புடன் பெற்றுக் கொண்ட பிருதை, இதய மகிழ்ச்சி கொண்டவளாகப் பல்வேறு புனிதச் செயல்களைச் செய்வதற்கு அதை அர்ப்பணித்தாள்.(28)

மன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்வியின் நிறைவில் நீராடிவிட்டு, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாகச் சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் உள்ள தேவர்களின் தலைவனைப் போலத் தன் தம்பிகளுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(29) அங்கே கூடியிருந்த மன்னர்களால் சூழப்பட்ட பாண்டுவின் மகன்கள், ஓ! மன்னா, நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள கோள்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(30) அவர்கள் அந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்கள், தங்கங்கள், யானைகள், குதிரைகள், தங்க ஆபரணங்கள், பெண் பணியாட்கள், துணிகள், பெருமளவிலான தங்கம் ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.(31) உண்மையில், ஓ! மன்னா, அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைப் பகிர்ந்தளித்த பிருதையின் மகன், கருவூலத் தலைவனான வைஸ்ரவணனை {குபேரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32) அடுத்ததாக வீர மன்னன் பப்ருவாஹனனை அழைத்த யுதிஷ்டிரன், பல்வேறு வகையான அபரிமிதமான செல்வத்தைக் கொடுத்து, அவன் தன் இல்லம் திரும்பிச் செல்வதற்கு அனுமதி அளித்தான்.(33)

அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தங்கையான துச்சலையை நிறைவடையச் செய்வதற்காக, அவளுடைய பேரனை, அவனுடைய தந்தை வழி நாட்டில் {மன்னனாக} நிறுவினான்.(34) தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், அங்கே கூடியிருந்தவர்களும், முறையாக வகுக்கப்பட்டவர்களும்[3], தன்னால் கௌரவிக்கப்பட்டவர்களுமான மன்னர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.(35) பகைவரைத் தண்டிப்பவனும், சிறப்புமிக்கவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, உயர் ஆன்ம கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பெரும் வலிமை கொண்ட பலதேவனையும் {பலராமனையும்}, பிரத்யும்னனை முதல்வனாகக் கொண்ட வேறு விருஷ்ணி வீரர்கள் ஆயிரக்கணக்காணோரையும் முறையாக வழிபட்டான். தன் தம்பிகளிடன் துணையுட்ன கூடிய அவன் அவர்கள் துவாரகை திரும்புவதற்கு விடை கொடுத்தனுப்பினான்.(36,37)அபரிமிதமான உணவு, செல்வம், ரத்தினங்கள், மற்றும் பல்வேறு வகையான {ஸுரை [கள்] மற்றும் [மரத்தில் இருந்து உண்டாகும்] மைரேயம் போன்ற} மது வகைகளின் பெருங்கடல்கள் ஆகியற்றுடன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் அந்த வேள்வி இவ்வாறே கொண்டாடப்பட்டது.(38) நெய்யையே சகதியாகவும், உணவையே மலைகளாகவும் கொண்ட தடாகங்கள் அங்கிருந்தன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஆறு வகைச் சுவைகளைக் கொண்ட பானங்களெனும் சேறுகளுடைய ஆறுகளும் அங்கிருந்தன.(39) காண்டவராகங்கள் என்றழைக்கப்படும் பாகிலிடப்பட்ட இன்பண்டங்களைச் செய்வதிலும் உண்பதிலும் ஈடுபட்ட மனிதர்கள் முடிவற்றவர்களாகவும், உணவுக்காகக் கொல்லப்பட்ட விலங்குகள் முடிவற்றவையாகவும் இருந்தன[4].(40) மதுவெறி கொண்ட மனிதர்களால் நிறைந்ததும், இன்பத்தில் நிறைந்த இளம்பெண்களுடன் கூடியதுமான அந்தப் பரந்த வெளி இருந்தது. மிருதங்க ஒலிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்கள் ஆகியவற்றை அந்தப் பரந்த சாலை எதிரொலித்துக் கொண்டிருந்தது. இவை யாவற்றுடன் அந்த வேள்வி மிக மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.(41)‘இனிய பொருட்கள் கொடுக்கப்படட்டும்”, ’இனிய உணவு உண்ணப்படட்டும்’ என்ற ஒலிகளே அந்த வேள்வியில் பகலும், இரவும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தன. மகிழ்ச்சி நிறைந்தவர்களும், மன நிறைவு கொண்டவர்களுமான மனிதர்கள் நிறைந்த ஒரு பெரும் விழாவாக அது தெரிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த வேள்வியைக் குறித்து இந்த நாள் வரை {பாண்டவர்களுக்குப் பின் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு வந்த ஜனமேஜயனின் காலம் வரை} பேசிக் கொண்டிருக்கின்றனர்.(42) செல்வத்தையும், ஆசைக்குரிய பல்வேறு பொருட்களையும், ரத்தினங்களையும், பல்வேறு வகைப் பானங்களையும் தாரைகளாகப் பொழிந்த பிறகு, பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, தன் நோக்கம் நிறைவேறியவனாகத் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(43)

பொன்மயமான கீரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 90-உடலின் ஒரு பக்கத்தை பொன் நிறமாகக் கொண்ட ஒரு கீரி வந்தது; வேள்வியை அவமதித்து உஞ்சவ்ருத்தி பிராமணர் ஒருவர் தர்மதேவதைக்கு ஒரு படி மாவைக் கொடுத்த மகிமையைச் சொல்லி மறைந்த கீரி …

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“என் பாட்டன்களின் வேள்வியில் நடந்த அற்புத நிகழ்ச்சி எதனையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களின் தலைவா, ஓ! பலமிக்க ஏகாதிபதி, அந்தப் பெரும் குதிரை வேள்வியின் {அஸ்வமேத யாகத்தின்} நிறைவில் நேர்ந்த அற்புதமிக்க நிகழ்வொன்றைக் கேட்பாயாக.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்களில் முதன்மையானோரும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும், ஏழைகள், குருடர்கள், ஆதரவற்றோர் அனைவரும் நிறைவடைந்த பின்னர்,(3) அபரிமிதமாகக் கொடுக்கப்பட்ட கொடைகளைக் குறித்து அனைத்துப் பக்கங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, உண்மையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலையில் மலர்மாரி பொழிந்து கொண்டிருந்தபோது,(4) ஓ! பாவமற்றவனே, உடலின் ஒரு பக்கம் தங்கமாக மாறியிருந்த நீலக்கண் கீரியொன்று அங்கே வந்து, இடியைப் போன்ற ஆழமான உரத்த குரலில் பேசியது.(5)

மீண்டும் மீண்டும் இத்தகைய ஆழ்ந்த ஒலிகளால் விலங்குகள் மற்றும் பறவைகளை அச்சுறுத்தியதும், பொந்துக்குள் வசிப்பதும், செருக்குடன் கூடியதும், பேருடல் படைத்ததுமான அது {கீரி}, மனிதக் குரலில்,(6) “மன்னர்களே, இந்தப் பெரும் வேள்வியானது, குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்தவரும், உஞ்ச நோன்பை நோற்றுக் கொண்டிருந்தவரும், தாராளமானவருமான பிராமணர் கொடையாக அளித்த ஒரு பிரஸ்த {ஒரு படி} வாற்கோதுமை {யவம்} மாவுக்கு ஈடாகாது” என்றது.(7)

ஓ! மன்னா, அந்தக் கீரியின் சொற்களைக் கேட்ட முதன்மையான பிராமணர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(8) அந்தக் கீரியை அணுகி, அதனிடம் அவர்கள், “நல்லோரும் பக்திமான்களும் நிரம்பிய இந்த வேள்விச் சாலைக்கு நீ எங்கிருந்து வந்தாய்?(9) உன் வலிமையின் அளவென்ன? உன் கல்வி என்ன? உன் புகலிடமெது? எங்கள் வேள்வியை இவ்வாறு நிந்திக்கும் உன்னை நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?(10) சாத்திரங்களின் எந்தப் பகுதியையும் அலட்சியம் செய்யாமல், சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையிலும், அறிவுக்கு ஏற்புடைய வகையிலும் பல்வேறு வேள்விச் சடங்குகளின் துணையுடன் செய்யப்பட வேண்டிய அனைத்தும் இங்கே செய்யப்பட்டன.(11) சாத்திரங்கள் சுட்டிக்காட்டும் வழியில் வழிபடத்தகுந்தவர்கள் இங்கே முறையாக வழிபடப்பட்டனர். உரிய மந்திரங்களின் துணையுடன் புனித நெருப்புக்குள் ஆகுதிகள் ஊற்றப்பட்டன. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதுவும் செருக்கில்லாமல் கொடுக்கப்பட்டது.(12) மறுபிறப்பாள வகையினர் பல்வேறு வகைக் கொடைகளின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். க்ஷத்திரியர்கள் நியாயமான முறைகளில் செய்யப்பட்ட போர்களின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். பாட்டன்கள், சிராத்தங்களின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர்.(13)

வைசியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். முதன்மையான பெண்டிர் பலர், அவர்களது ஆசைகளை நிறைவேற்றியதன் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். சூத்திரர்கள், அன்பான பேச்சுகளின் மூலமும், பிறர் இங்கே திரட்டப்பட்ட அபரிமிதமான செல்வத்தில் எஞ்சியவற்றின் மூலமும் நிறைவடையச் செய்யப்பட்டனர்[1].(14) உற்றார் உறவினர், எங்கள் மன்னன் வெளிப்படுத்திய தூய நடத்தையின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். தேவர்கள், தெளிந்த நெய்யாலான ஆகுதிகளின் மூலமும், புண்ணியச் செயல்களின் மூலமும், சார்ந்திருப்பவர்கள் மூலமும், பாதுகாப்பைப் பின்தொடர்பவர்கள் மூலமும் நிறைவடையச் செய்யப்பட்டனர்.(15) எனவே, எது உண்மையோ அதை இந்தப் பிராமணர்களுக்கு உண்மையாக அறிவிப்பாயாக. உண்மையில், அறிந்து கொள்வதில் ஆவலாக இருக்கும் இந்தப் பிராமணர்களால் கேட்கப்பட்டு, சாத்திரங்களுக்கும், உண்மை அனுபவத்திற்கும் ஏற்புடைய வகையில் நீ அறிவிப்பாயாக.(16) உன் சொற்கள் நம்பத்தகுந்தவையாகத் தெரிகின்றன. நீ ஞானியாக இருக்கிறாய். நீ தெய்வீக வடிவத்தைக் கொண்டிருக்கிறாய். நீ கல்விமான்களான பிராமணர்களுக்கு மத்தியில் வந்திருக்கிறாய். நீ சொல்வதை விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்” என்றனர் {பிராமணர்கள்}.(17)அந்த மறுபிறப்பாள மனிதர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட கீரியானது, சிரித்தபடியே பின்வருமாறு பதிலளித்தது. அது {கீரி}, “மறுபிறப்பாளர்களே, நான் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல. மேலும் நான் செருக்கிலும் பேசவில்லை.(18) நான் சொன்னதை நீங்கள் அனைவரும் கேட்டிருக்கக்கூடும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஒரு பிரஸ்த {ஒரு படி} வாற்கோதுமை மாவைக் கொடையளித்த புண்ணியத்திற்கு இந்த வேள்வி ஈடாகாது.(19) பிராமணர்களில் முதன்மையானவர்களே, இதை நான் ஐயமறச் சொல்ல வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் சொல்கிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பீராக.(20) அற்புதம் நிறைந்த சிறந்த நிகழ்வாக அது நேர்ந்தது. அந்த நிகழ்வு, குருக்ஷேத்திரத்தில் வசிப்பவரும், உஞ்ச நோன்பு நோற்பவரும், தாராளமானவருமான ஒரு பிராமணரின் தொடர்புடையதாகும்.(21) மறுபிறப்பாளர்களே, அந்நிகழ்வின் விளைவால் அவர், தமது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சொர்க்கத்தை அடைந்தார். அப்போது நடந்த நிகழ்வின் விளைவாக என் உடலின் பாதி அளவு பகுதி பொன்னாக மாறியது”.(22)

கீரி தொடர்ந்தது, “மறுபிறப்பாளர்களே, நான் இப்போது நியாயமான முறையில் அடையப்பட்டதும், மிகக் குறைந்த அளவைக் கொண்டதும், அந்தப் பிராமணரால் வழங்கப்பட்டதுமான அந்தக் கொடையின் {கொடையாக வழங்கப்பட்ட மாவின்} சிறந்த கனியை {பலன் என்ன என்பதை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(23) அறம் சார்ந்தோர் பலர் வசிப்பதும், குருக்ஷேத்திரம் என்ற பெயரில் அறியப்படுவதுமான அறம்சார்ந்த இடத்தில், உஞ்சம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்கும் பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த வாழ்வுமுறையானது ஒரு புறாவைப் போன்றதாகும்[2].(24) அவர் அங்கே தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து தவம் செய்து வந்தார். அற ஆன்மாவும், முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் கூடியவருமான அவர் ஒரு கிளியால் பின்பற்றப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்றினார்.(25) அற்புத நோன்புகளைக் கொண்ட அவர், ஒவ்வொரு நாளும் ஆறாம் காலத்தில் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3]. நாளின் ஆறாம் காலத்தில் உண்பதற்கு ஏதும் கிடைக்கவில்லையெனில் அந்தச் சிறந்த பிராமணர், அந்த நாளில் உண்ணா நோன்பிருந்து அடுத்த நாளின் ஆறாம் காலத்தில் உண்பார். பிராமணர்களே ஒரு சந்தர்ப்பத்தில், அந்த நிலத்தில் பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் அறம்சார்ந்த அந்தப் பிராமணரின் வசிப்பிடத்தில் எதுவும் சேமித்து வைக்கப்படவில்லை. செடிகொடிகள் அனைத்தும் காய்ந்து மொத்த நாடும் உணவுப் பொருட்கள் ஏதுமற்றதாக இருந்தது.(26-28)உண்பதற்கான வழக்கமான காலம் வந்தபோது, அந்தப் பிராமணர் உண்பதற்கு ஏதுமில்லை. நாளுக்கு நாள் இதுவே நேர்ந்தது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியால் பீடிக்கப்பட்டனர், ஆனால் தங்களால் முடிந்தவரை நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(29) ஜெய்ஷ்ட மாதத்தில் {ஆனி மாதத்தில்} ஒரு நாள், சூரியன் உச்சிப் பொழுதை அடைந்திருந்தபோது, அந்தப் பிராமணர் தானியங்களைப் பொறுக்கச் சென்றார். சூட்டாலும், பசியாலும் பீடிக்கப்பட்ட அவர் இந்தத் தவத்தையே செய்து கொண்டிருந்தார்.(30) தானியங்களை அடைய முடியாத அவர், பசியாலும், உழைப்பாலும் களைத்தார். உண்மையில், அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உண்ண உணவேதும் கிட்டவில்லை.(31) அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், தன் நாட்களைப் பெரும் துன்பத்தில் கழித்தார். ஒருநாள், ஆறாம் காலம் வந்த பிறகு, அவர் ஒரு பிரஸ்தம் வாற்கோதுமையை {ஒரு படி யவதான்யத்தை} அடைவதில் வென்றார்.(32) ஸக்து என்றழைக்கப்படும் ஒன்றைச் செய்வதற்காக அந்த வாற்கோதுமையானது {யவதானியமானது} அந்தத் தவசிகளால் {பிராமணர் மற்றும் அவரது குடும்பத்தாரால்} மாவாகப் பொடி செய்யப்பட்டிருந்தது. அந்தத் தவசிகள், அமைதியான ஜபங்களையும், நாள்தோறும் செய்யும் பிற சடங்குகளையும் செய்த பிறகு, புனித நெருப்புக்கு முறையாக ஆகுதிகளை ஊற்றிய பிறகு,(33) சிறிதளவே இருந்த அந்த வாற்கோதுமை மாவை ஒரு குடவம் அளவுக்குத் தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பிரித்துக் கொண்டனர்[4]. அவர்கள் உண்பதற்காக அமரப் போகும்போது, அங்கே அவர்களது வசிப்பிடத்திற்கு ஒரு விருந்தினர் வந்தார்.(34)விருந்தினராக வந்த மனிதரைக் கண்ட அவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையில், அவரை வணங்கிய அவர்கள், அவரது உடல்நலம் குறித்த வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(35) அவர்கள் தூய மனங்களையும், தற்கட்டுப்பாட்டையும், நம்பிக்கையையும் கொண்டவர்களாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். வன்மத்தில் இருந்து விடுபட்டவர்களான அவர்கள், கோபத்தை வென்றவர்களாக இருந்தனர். பக்தி நிறைந்த அவர்கள், அடுத்தவரின் மகிழ்ச்சியைக் கண்டு ஒருபோதும் துன்புறாதவர்களாக இருந்தனர்.(36) அவர்கள் செருக்கையும், அகந்தையையும், கோபத்தையும் கைவிட்டவர்களாக இருந்தனர். மறுபிறப்பாளர்களே, உண்மையில் அவர்கள், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் விருந்தினரிடம் தங்கள் தவங்கள், தாங்கள் சேர்ந்த குலம் மற்றும் குடும்பத்தைச் சொல்லி, பதிலுக்கு அவரிடம் இருந்தும் குறிப்புகளைப் பெற்று, பசித்து வந்த தங்கள் விருந்தினரைத் தங்கள் குடிலுக்குள் அழைத்துச் சென்றனர்.அவர்கள் அவரிடம், “இதுவே உமக்கான அர்க்கியம். இந்த நீர் உமது கால்களைக் கழுவிக் கொள்வதற்கானது. ஓ! பாவமற்றவரே, நீர் அமர்வதற்கான இருக்கையாகக் குச {தர்ப்பைப்} புற்கள் இருக்கின்றன.(37,38) ஓ! பலமிக்கவரே, நியாயமான முறையில் அடையப்பட்டதும், தூய்மையானதுமான ஸக்து {வாற்கோதுமை மாவு} இங்கே சிறிதளவு இருக்கிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, எங்களால் கொடுக்கப்படும் இஃதை ஏற்றுக் கொள்வீராக” என்றனர்.(39)

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு குடவம் வாற்கோதுமை மாவை முழுமையாக உண்டார். ஆனால், ஓ! மன்னா, அவர் உண்டதைக் கொண்டு அவரால் தன் பசியைத் தணித்துக் கொள்ள முடியவில்லை.(40) தன் விருந்தினரின் பசி தணியாததைக் கண்டவரும், உஞ்ச நோன்பை நோற்பவருமான அந்தப் பிராமணர், அவரை நிறைவடையச் செய்வதற்கு வேறு எந்த உணவைக் கொடுக்கலாம் என நினைக்கத் தொடங்கினார்.(41)

அப்போது அவரது மனைவி, “என் பங்கு அவருக்குக் கொடுக்கப்படட்டும். மறுபிறப்பாளர்களில் முதன்மையான இவர் நிறைவடைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்” என்றாள்.(42)

கற்புடையவளான தன் மனைவியும் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவரால், அவளுடைய பங்கான வாற்கோதுமை மாவை விருந்தினருக்குக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை.(43) உண்மையில், கல்விமானான அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், வயது முதிர்ந்த, உழைப்பால் களைத்த, உற்சாகமற்ற தன் நிலையில் இருந்து(44) ஆதரவற்ற தன் மனைவியின் பசிப்பிணியை அறிந்து கொண்டு, எலும்பும் தோலுமாக மெலிந்து நடுங்கிக் கொண்டிருந்த அவளிடம், “ஓ! அழகியவளே, விலங்குகள், புழுக்கள் மற்றும் பூச்சிகளில் கூட,(45) மனைவிகள் உணவூட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே, நீ இவ்வாறு சொல்வது உனக்குத் தகாது. ஒரு மனைவி தன் கணவனை அன்புடன் நடத்தி, அவனுக்கு உணவூட்டி, அவனைப் பாதுகாக்கிறாள்.(46) அறம், இன்பம் மற்றும் பொருள் தொடர்புடைய அனைத்தும், குலத்தைத் தழைக்கச் செய்யச் சந்ததியை உண்டாக்கிக் கவனமாக வளர்ப்பதும் என அனைத்தும் மனைவியைச் சார்ந்ததே. உண்மையில், ஒரு மனிதனின் புண்ணியங்களும், இறந்து போன அவனுடைய மூதாதையர்களும் அவளையே சார்ந்திருக்கின்றனர்.(47) ஒரு மனைவி தன் தலைவனை, அவனது செயல்களால் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில், தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறும் மனிதன், இம்மையில் பெரும் புகழ்க்கேட்டை ஈட்டி, மறுமையில் நரகிற்குச் செல்கிறான். அத்தகைய மனிதன் பெரும் புகழ்பெற்ற நிலையில் இருந்தாலும், மறுமையில் இன்பலோகங்களை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்” என்றார்.(48)

இவ்வாறு சொல்லப்பட்ட அவள், அவருக்குப் பதிலளிக்கும் வகையில், “ஓ! மறுபிறப்பாளரே, நமது {நம்மிருவரின்} அறச்செயல்களும், செல்வமும் ஒன்றே. இந்த வாற்கோதுமையில் நான்கில் ஒரு பங்கை நீர் எடுத்துக் கொள்வீராக. உண்மையில், என்னிடம் நிறைவடைவீராக.(49) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நற்குணங்களின் மூலம் பெண்களால் அடையத்தக்க வாய்மை, இன்பம், அறச் செயல், சொர்க்கம் முதலியவையும், அவர்களுடைய ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தும் கணவரையே சார்ந்திருக்கின்றன.(50) சந்ததியை உண்டாக்குவதில் தாயானவள் தன் குருதியைக் காணிக்கையாக்குகிறாள். தந்தையானவர் தன் வித்தைக் காணிக்கையாக்குகிறார். கணவரே மனைவியின் உயர்ந்த தேவனாவார் {கணவனே கண்கண்ட தெய்வம்}[5]. கணவரின் அருளின் மூலம் பெண்கள் இன்பம் மற்றும் சந்ததி ஆகிய இரண்டையும் வெகுமதிகளாக அடைகின்றனர்.(51) நீர் எனக்கு அளிக்கும் பாதுகாப்பால், எனது பதி {தலைவர்} ஆகிறீர். நீர் எனக்கு அளிக்கும் வாழ்வாதாரத்தால் எனது பர்த்ரி {பர்த்தாவாக} ஆகிறீர். மேலும் எனக்கு மகனை அளிப்பதன் விளைவால் வரமளிப்பவரும் ஆகிறீர். எனவே, (இவ்வளவு உதவிகளுக்குச் செய்யும் பதில் உதவியாக} இந்த வாற்கோதுமையில் என் பங்கை எடுத்து இந்த விருந்தினருக்குக் கொடுப்பீராக.(52) முதுமையில் மூழ்கியிருக்கும் நீர் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறீர். பசியால் பீடிக்கப்பட்டு மிகப் பலவீனமாகவும் இருக்கிறீர். உண்ணாநோன்புகளால் அயர்ந்து மிக மெலிந்திருக்கிறீர். (நீரே உமது பங்கைக் கொடுக்கும்போது, நான் ஏன் என் பங்கைக் கொடுக்கக்கூடாது?)” என்று கேட்டாள்.(53)இவ்வாறு சொல்லப்பட்ட அவர், அவளுடைய பங்கான வாற்கோதுமை மாவை எடுத்து, தன் விருந்தினரிடம், “ஓ! மறுபிறப்பாளரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இந்த வாற்கோதுமை மாவையும் ஏற்பீராக” என்றார்.(54)

அந்த அளவு மாவை ஏற்றுக் கொண்டு உடனே அதை உண்டாலும், அவரது பசி தணியவில்லை. உஞ்ச நோன்பு நோற்று வந்த அந்தப் பிராமணர் அவர் நிறைவடையாததைக் கண்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.(55)

அப்போது அவருடைய மகன், “ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் பங்கான வாற்கோதுமை மாவை விருந்தினருக்குக் கொடுப்பீராக. என்னுடைய இந்தச் செயல் பெரும் புண்ணியம் கொண்டது என்று கருதுகிறேன். எனவே, இதை நான் செய்கிறேன்.(56) உம்மை நான் பெருங்கவனத்துடன் பராமரித்துக் கொள்ள வேண்டும். தந்தையைப் பராமரிப்பதே நல்லோரால் விரும்பப்படும் கடமையாகும்.(57) தந்தையை அவரது முதுமையில் பராமரிப்பது மகனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமையாகும். ஓ! கல்விமானான முனிவரே, மூவுலகிலும் நடைமுறையில் உள்ள நித்திய ஸ்ருதி (திறன்காணல்) இதுவே ஆகும்.(58) வெறுமனே உயிர்வாழ்வதன் மூலமே நீர் தவம் செய்ய வல்லவராவீர். உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் வசிக்கும் பெருந்தேவன் உயிர் மூச்சே ஆகும்[6]” என்றான்.(59)அதற்கு அந்தத் தந்தை, “நீ ஆயிரம் வருட வயதை எட்டினாலும், எனக்குச் சிறு பிள்ளையாக மட்டுமே தெரிவாய். ஒரு மகனைப் பெற்றதன் மூலம் அந்தத் தந்தை அவன் மூலம் வெற்றியை அடைகிறான் {கிருதகிருத்யனாகிறான்}.(60) ஓ! பலமிக்கவனே, குழந்தைகளுக்குப் பசி மிக அதிகம் என்பது எனக்குத் தெரியும். நான் வயது முதிர்ந்தவன். நான் எவ்வாறேனும் என் உயிர் மூச்சைப் பிடித்துக் கொள்வேன். ஓ! மகனே, (உன் பங்கான உணவை உண்டு) பலமடைவாயாக.(61) ஓ! மகனே, வயதும், முதுமையும் அடைந்த என்னைப் பசி அரிதாகவே பீடிக்கும். மேலும் நான் பல வருடங்களாகத் தவம் பயில்கிறேன். எனக்கு மரணத்தில் அச்சமில்லை” என்றார்.(62)

மகன், “நான் உமது குழந்தையாவேன். ஒருவனுடைய குழந்தை, அவனைக் காப்பதனால் புத்ரன் என்று அழைக்கப்படுகிறான் என ஸ்ருதி அறிவிக்கிறது. மேலும், ஒருவனுடைய சுயமே, அவனுடைய மகனாகப் பிறப்பெடுக்கிறது {ஒருவன் தானே மகனாகப் பிறப்பதாகக் கருதப்படுகிறான்}. எனவே, (உமது மகனின் வடிவில் இருக்கும்) உம்மைக் கொண்டு உம்மைப் பாதுகாத்துக் கொள்வீராக” என்றான்.(63)

தந்தையானவர், “வடிவத்தில் நீ என்னைப் போன்றவனே. ஒழுக்கத்திலும், தற்கட்டுப்பாட்டிலும் நீ என்னைப் போன்றவனே. பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் உன்னைச் சோதித்திருக்கிறேன். எனவே, ஓ! மகனே, நான் உன் பங்கான இந்த வாற்கோதுமையை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.(64)

மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர் இதைச் சொல்லிவிட்டு, மிக உற்சாகமாகத் தன் மகனின் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு, புன்னகையுடன் அதைத் தன் மறுபிறப்பாள விருந்தினருக்கு அளித்தார்.(65) அந்த வாற்கோதுமையை உண்டும், அந்த விருந்தினரின் பசி அடங்கவில்லை. உஞ்ச நோன்பை நோற்பவரும், அற ஆன்மா கொண்டவரும், விருந்தோம்பல் செய்பவருமான அவர் (மேலும் கொடுக்கத் தன்னிடம் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தால்) வெட்கமடைந்தார்.(66)

அவருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய அவருடைய மருமகள், அப்போது தன் பங்கான வாற்கோதுமையைக் கொண்டு வந்து அவரை அணுகி,(67) “ஓ! கல்விமானான பிராமணரே, உமது மகனின் மூலம் நான் ஒரு மகனைப் பெறுவேன். எனவே, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்து இந்த விருந்தினருக்குக் கொடுப்பீராக.(68) உமது அருளால், எண்ணற்ற இன்பலோகங்கள் நித்தியமாக எனதாகும். ஒரு பேரனின் மூலம் ஒருவன் எவ்வகைத் துன்பமும் இல்லாத உலகங்களை அடைகிறான்.(69) அறம் முதலிய முத்தொகை, அல்லது புனித நெருப்பின் முத்தொகையைப் போல எப்போதுமிருக்கும் சொர்க்கங்களின் முத்தொகையானது, மகன், பேரன் மற்றும் கொள்ளுப்பேரன் ஆகியோரைச் சார்ந்திருக்கிறது.(70) மகன், தன் தந்தையைக் கடனிலிருந்து விடுவிப்பதால் புத்ரன் என்றழைக்கப்படுகிறான். ஒருவன், தன் மகன்கள் மற்றும் பேரன்களின் மூலம், பக்திமான்கள் மற்றும் நல்லோருக்கு ஒதுக்கப்படும் உலகங்களின் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறான்” என்றாள்.(71)

{அதற்கு அவளது} மாமனார், “ஓ! சிறந்த நோன்புகளையும், ஒழுக்கத்தையும் கொண்டவளே, காற்றாலும், சூரியனாலும் சிதைக்கப்பட்டு, நிறத்தை இழந்தவளாக, மெலிந்தவளாக, பசியின் மூலம் கிட்டத்தட்ட நினைவிழந்தவளாகக் காணப்படும் உன்னைக் கண்டும், உன் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு, அற விதிகளை மீறுபவனாக நான் எவ்வாறு நடந்து கொள்வேன்? ஓ! மங்கலக் காரிகையே {கல்யாணி}, ஒவ்வொரு குடும்பமும் எட்ட வேண்டிய மங்கல விளைவுகளுக்காக இவ்வாறு நீ சொல்வது தகாது[7].(72,73) ஓ! மங்கலக் காரிகையே {கல்யாணி}, நாளின் இந்த ஆறாம் காலத்திலும் உணவைத் தவிர்த்து நோன்பு நோற்கும் உன்னை நான் எவ்வாறு காண்பேன்? தூய்மையும், நல்லொழுக்கமும், தவங்களும் கொண்டவள் நீ. ஐயோ, நீயும் இவ்வளவு துன்பங்களுடன் உன் நாட்களைக் கடத்த வேண்டி வந்ததே. பசியால் பீடிக்கப்பட்டவளும், மென்மையான பாலினத்தைச் சேர்ந்தவளுமான நீ ஒரு சிறுமி ஆவாய். நீ எப்போதும் என்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஐயோ, ஓ! உன் உற்றாரைத் திளைக்கச் செய்பவளே, உண்ணாமல் களைத்துப் போனவளாக நான் உன்னைக் காண வேண்டியுள்ளதே” என்றார்.(75)மருமகள், “நீர் என் தெய்வத்துக்கு தெய்வமாகவும், மூத்தவர்களுக்கும் மூத்தவராகவுமிருக்கிறீர். நீர் நிச்சயம் என் தேவருக்கும் தேவராவீர். எனவே, ஓ! பலமிக்கவரே, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்துக் கொள்வீராக.(76) என் உடல், உயிர்மூச்சுகள், அறச் சடங்குகள் ஆகிய அனைத்தும் எனக்கு மூத்தோருக்குத் தொண்டாற்றும் ஒரு காரியத்திலேயே அடங்கியிருக்கிறது. ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளால் நான் மறுமையில் இன்பலோகங்கள் பலவற்றை அடைவேன்.(77) நான் உம்மால் பார்த்துக் கொள்ளப்படத் தகுந்தவள். ஓ! மறுபிறப்பாளரே, நான் உம்மிடம் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டவள் என்பதை அறிவீராக. என் மகிழ்ச்சியே உமது கவலை என்ற இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்துக் கொள்வதே உமக்குத் தகும்” என்றாள்.(78)

மாமனார், “ஓ! கற்புடைய பெண்ணே, நோன்புகள் நோற்பவளாகவும், அறச் சடங்குகளில் உறுதியுள்ளவளாகவும், பெரியோரிடம் நோற்கப்பட வேண்டிய ஒழுக்கத்திலேயே எப்போதும் கண்கள் கொண்டவளாகவும் இருக்கும் உன்னுடைய இத்தகைய ஒழுக்கத்தின் விளைவால் நீ எப்போதும் மகிமையில் ஒளிர்ந்து கொண்டிருப்பாய்.(79) எனவே, ஓ! மருமகளே, நான் உன் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொள்கிறேன். உன்னுடைய நற்குணங்கள் அனைத்தையும் சொல்லி என்னால் வஞ்சிக்கத்தகாதவள் நீ. ஓ! அருளப்பட்ட காரிகையே, உண்மையில், அறக்கடமைகளை நோற்கும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவள் நீயே” என்றார்.(80)

அவளிடம் இவ்வாறு சொன்ன அந்தப் பிராமணர் அவளுடைய பங்கான வாற்கோதுமையை எடுத்து தன் விருந்தினருக்குக் கொடுத்தார். இப்போது அந்த விருந்தினர், பெரும் பக்தி கொண்ட அந்த உயர் ஆன்ம பிராமணரிடம் நிறைவடைந்தார்.(81) பெரும் நாநயம் மிக்கவரும், மனித வடிவில் வந்த அறத்தெய்வமுமான {தர்மதேவனுமான} அந்த முதன்மையான மறுபிறப்பாளர், நிறைவடைந்த ஆன்மாவுடன், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரிடம்,(82) “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நியாயமான வழிமுறைகளின் மூலம் அடையப்பட்டதும், அறவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் கொடுக்கப்பட்டதும், தூய்மையானதுமான உம்முடைய இந்தக் கொடையால் நான் பெரிதும் நிறைவடைந்திருக்கிறேன்.(83) உண்மையில், உம்முடைய இந்தக் கொடை சொர்க்கத்தின் இன்பலோகவாசிகளால் உரக்கப் புகழப்படுகிறது. ஆகாயத்தில் இருந்து பூமியில் பொழியப்படும் மலர்களைக் காண்பீராக.(84) தெய்வீக முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், தேவர்களுக்கு முன் நடப்பவர்கள், தேவதூதர்கள் ஆகியோர் அனைவரும் உமது கொடையால் ஆச்சரியமடைந்து உம்மைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.(85)

பிரம்மலோகத்தில் வசிக்கும் மறுபிறப்பாள முனிவர்கள், தங்கள் தேர்களில் அமர்ந்தவாறு உமது காட்சி கிட்டுவதற்காக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, சொர்க்கத்திற்குச் செல்வீராக.(86) பித்ரு லோகத்தில் வசிக்கும் உமது பித்ருக்கள் அனைவரும் அவர்களால் காக்கப்பட்டனர். பித்ருக்கள் என்ற நிலையை அடையாத பிறரும் எண்ணற்ற யுகங்களுக்கு உம்மால் காக்கப்பட்டிருக்கின்றனர்.(87) உமது பிரம்மச்சரியம், உமது கொடைகள், உமது வேள்விகள், உமது தவங்கள், தூய இதயத்துடன் உம்மால் செய்யப்பட்ட நற்செயல்கள் ஆகியவற்றின் மூலம் நீர் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறீர்.(88) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, நீர் பேரர்ப்பணிப்புடன் தவங்களைப் பயின்றீர். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது கொடைகளால் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்திருக்கின்றனர்.(89) பெருங்கடின காலத்தில், தூய இதயத்துடன் இந்தக் கொடையை அளித்திருக்கும் உம்முடைய இந்தச் செயலின் மூலம் நீர் சொர்க்கத்தை வென்றுவிட்டீர்.(90)

பசியானது, ஒருவனுடைய ஞானத்தை அழித்து, அவனது அறம்சார்ந்த புத்தியைப் பிறழச் செய்யும். பசியால் வெல்லப்பட்ட புத்தியைக் கொண்டவன் தன் மனவுரம் அனைத்தையும் கைவிடுகிறான்.(91) எனவே, எவன் பசியை வெல்வானோ அவன் நிச்சயம் சொர்க்கத்தை வெல்வான். ஒருவன் கொடைகளை அளிக்கும் விருப்பத்தை வளர்க்கும் வரை, அவனது அறம் ஒருபோதும் அழிவடையாது.(92) மகனிடம் கொண்ட அன்பை அலட்சியம் செய்து, தன் மனைவியிடம் கொண்ட அன்பை அலட்சியம் செய்து, அறத்தையே முதன்மையானதாக அறிந்த நீர் இயற்கையான ஏக்கங்களில் {ஆசைகளில்} ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.(93) செல்வத்தை அடைவது அற்ப தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும். தகுந்த மனிதனுக்கு அளிக்கும் கொடையே பெருந்தகுதியை {பெரும் புண்ணியத்தைக்} கொண்டதாகும். (உரிய சரியான) காலத்தில் கொடையளிப்பது இன்னும் பெரிய தகுதியைக் கொண்டதாகும். இறுதியாக (கொடையளிப்பதில்) அர்ப்பணிப்புக் கொள்வது மிக உயர்ந்த தகுதியாகும்.(94) சொர்க்கத்தின் வாயிலைக் காண்பது மிக அரிது. அக்கறையின்மையால் மனிதர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். சொர்க்கத்தின் வாயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தடையானது, பேராசையைத் தன் வித்தாகக் கொண்டதாகும். அந்தத் தடையானது, ஆசை மற்றும் பற்றால் கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் சொர்க்கத்தின் வாயில் அணுகப்பட முடியாததாகும்.(95)

கோபத்தை அடக்கி, தங்கள் ஆசையை வென்ற மனிதர்களும், தவங்களுடன் கூடிய பிராமணர்களும், தங்களால் இயன்ற அளவு கொடை அளிப்பவர்களும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(96) ஆயிரம் இருந்து நூறு கொடுப்பவனும், நூறு இருந்து பத்து கொடுப்பவனும், செல்வம் ஏதும் இல்லாதிருந்தும் கைநிறைய நீரைக் கொடுப்பவனும் என இவர்கள் அனைவரும் நிகரான தகுதியை ஈட்டுகின்றனர்.(97) மன்னன் ரந்திதேவன், தன் செல்வம் அனைத்தையும் இழந்திருந்தபோதும், தூய இதயத்துடன் சிறிதளவு நீரைக் கொடையளித்தான். ஓ! கல்விமானான பிராமணரே, இந்தக் கொடையின் மூலம் அவன் சொர்க்கத்திற்குச் சென்றான்.(98) அறத்தேவன், மதிப்பற்றதும், நியாயமான முறையில் அடையப்பட்டதும், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் அளிக்கப்பட்டதுமான கொடைகளில் நிறைவடைவதைப் போல, விலை மதிப்புமிக்கப் பெரிய கொடைகளாலும் நிறைவடைவதில்லை.(99) மன்னன் நிருகன் மறுபிறப்பாள வகையினருக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையாக அளித்தான். தனக்கு உரிமையில்லாத ஒரே ஒரு பசுவைக் கொடுத்ததன் மூலம் அவன் நரகில் வீழ்ந்தான்.(100)

சிறந்த நோன்புகளைக் கொண்டவனும், உசீநரன் மகனுமான சிபி, தன் உடலின் தசையைக் கொடையளித்ததன் மூலம் அறலோகங்களை அடைந்து சொர்க்கத்தில் இன்புற்றிருக்கிறான்.(101) செல்வம் மட்டுமே தகுதியாகி {புண்ணியமாகி} விடாது. நல்ல மனிதர்கள், தங்கள் சிறந்த சக்தியைப் பயன்படுத்தி நல்ல வழிமுறைகளின் துணையுடன் முயன்று, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகின்றனர். நியாயமாக ஈட்டப்பட்ட சொற்ப அளவு செல்வத்தைக் கொண்டு ஈட்டப்படும் தகுதியைப் போல ஒருவனால் பல்வேறு வேள்விகளைச் செய்வதன் மூலம் கூட ஈட்ட முடியாது.(102) கொடைகளின் கனிகள் {பயன்கள்} கோபத்தின் மூலம் அழிவடைகின்றன. ஒருவன் பேராசையின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்வதில் தவறுகிறான். கொடையின் தகுதிகளை அறிந்தவனும், நியாயமான ஒழுக்க நடைமுறையைப் பின்பற்றுபவனுமான ஒருவன், தவங்களின் மூலம் சொர்க்கத்தை அனுபவிப்பதில் வெல்கிறான்.(103) ஓ! பிராமணரே, உம்மால் அளிக்கப்பட்ட இந்தக் கொடையின் (ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவின்) கனியானது {பயனானது}, அபரிமிதமான கொடைகளுடன் ராஜசூய வேள்விகள் பலவற்றையோ, குதிரை வேள்விகள் பலவற்றையோ செய்ததன் மூலம் ஒருவன் ஈட்டுவதை {ஈட்டும் பலனை} விட மிகப் பெரியதாகும்.(104)

வாற்கோதுமை மாவின் இந்த ஒரு பிரஸ்தத்தை {ஒரு படியைக்} கொண்டு நீர் நித்தியமான பிரம்மலோகத்தை வென்றுவிட்டீர். ஓ! கல்விமானான பிராமணரே, இருளின் களங்கமற்ற பிரம்மலோகத்திற்கு நீர் மகிழ்ச்சியுடன் செல்வீராக.(105) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உங்கள் அனைவருக்காக ஒரு தெய்வீகத் தேர் {விமானம்} இங்கே வந்திருக்கிறது. உங்கள் விருப்பப்படி அதில் ஏறுவீராக. ஓ! பிராமணரே, நானே அறத்தேவனாவேன் {தர்மதேவனாவேன்}. என்னைப் பார்ப்பீராக.(106) நீர் உமது உடலைப் பாதுகாத்தீர். உமது சாதனையின் புகழ் இந்த உலகம் உள்ள வரை நீடித்திருக்கும். உமது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் சேர்ந்து நீர் சொர்க்கத்திற்குச் செல்வீராக” என்றார் {பிராமண விருந்தினராகத் தர்ம தேவன்}. அறத்தேவன் இந்தச் சொற்களைச் சொன்னதும், அந்தப் பிராமணர், தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(108)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், கல்விமானுமான அந்தப் பிராமணர் இவ்வாறு தன் மகன், மருமகள் மற்றும் நான்காவதாகத் தன் மனைவியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்த பிறகு, நான் என் பொந்துக்குள் இருந்து வெளியே வந்தேன்.(109) அங்கே அந்த வாற்கோதுமை மாவின் மணத்துடன், (அந்தப் பிராமணர் தன் விருந்தினருக்குக் கொடுத்த) நீரினால் உண்டான சகதியுடன், அங்கே பொழிந்திருந்த தெய்வீக மலர்களுடன், அந்த நல்ல மனிதன் கொடுத்த வாற்கோதுமை மாவின் துகள்களுடன் (என் உடல்) கொண்ட தொடர்பாலும்,(110) அந்தப் பிராமணரின் தவத்தாலும் என் தலை பொன்னாக மாறியது. வாய்மையிலும், தவங்களிலும் உறுதியாக இருந்த அந்தப் பிராமணருடைய கொடையின் விளைவால் என்னுடைய உடலில் பாதிக்கும் அதிகமான பகுதி பொன்மயமானதைக் காண்பீராக.(111,112)

மறுபிறப்பாளர்களே, அப்போது முதல் என் உடலில் எஞ்சியிருக்கும் பகுதியையும் பொன்னாக மாற்றிக் கொள்வதற்காக, தவசிகளின் ஆசிரமங்களுக்கும், மன்னர்களால் செய்யப்படும் வேள்விகளுக்கும் உற்சாகமிக்க இதயத்துடன் நான் மீண்டும் மீண்டும் செல்கிறேன்.(113) பெரும் ஞானியான குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்த வேள்வியைக் குறித்துக் கேள்விப்பட்டு, பெரும் நம்பிக்கையுடன் நான் இங்கே வந்தேன். எனினும் நான் பொன்மயமாகவில்லை.(114) பிராமணர்களில் முதன்மையானவர்களே, அந்த ஒரு பிரஸ்த வாற்கோதுமை மாவோடு {கொடையாகக் கொடுக்கப்பட்ட அந்த ஒருபடி மாவோடு} இந்த வேள்வியை எவ்வழியிலும் ஒப்பிடமுடியாது என்ற சொற்களை இதற்காகவே சொன்னேன்.(115) ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவின் தூளால் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் பொன்மயமாக மாற்றப்பட்டேன். எனினும், இந்தப் பெரும் வேள்வி அந்தத் தூளுக்கு நிகராகாது. இதுவே என் கருத்தாகும்” என்றது {அந்தக் கீரி}.(116)

பிராமணர்களில் முதன்மையான அவர்கள் அனைவரிடமும் அந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு அந்தக் கீரி அவர்களின் பார்வையில் இருந்து மறைந்து போனது. பிறகு அந்தப் பிராமணர்கள் தங்கள் தங்களுக்குரிய இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்”.(117)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகை நகரங்களை வெல்பவனே, அந்தப் பெரும் வேள்வியில் நிகழ்ந்த அற்புத நிகழ்வு குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(118) ஓ! மன்னா, நீ வேள்வி குறித்து உயர்வாக நினைக்கக்கூடாது. கோடிக்கணக்கான முனிவர்கள் தங்கள் தவங்களின் துணையால் மட்டுமே சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(119) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, மனநிறைவு, ஒழுக்கம், நேர்மை, தவம், தற்கட்டுப்பாடு, வாய்மை, கொடை ஆகியன ஒவ்வொன்றும் வேள்வித்தகுதிக்கு நிகரானவையாகும்” {என்றார் வைசம்பாயனர்}.(120)

யாகம், தானம், தவம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 91-தானம் மற்றும் தவங்களால் ஸ்வர்க்கம் முதலியன கிட்டுமென்றும், ஜீவ ஹிம்ஸைக்குக் காரணமான யாகம் சிறந்ததல்ல என்றும் சொன்ன வைசம்பாயனர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பலமிக்க முனிவரே, மன்னர்கள் வேள்விகளில் பற்றுள்ளவர்கள். பெரும் முனிவர்கள் தவங்களில் பற்றுள்ளவர்கள். கல்விமான்களான பிராமணர்கள், மன அமைதி, அமைதியான நடத்தை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயில்கின்றனர்.(1) எனவே, வேள்விகளின் கனிகளுடன் ஒப்பிடத்தக்க வகையில் இவ்வுலகில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதுவே என் தீர்மானமாகும். மேலும் அந்தத் தீர்மானமும், ஐயமின்றிச் சரியானதாகத் தெரிகிறது.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, எண்ணற்ற மன்னர்கள், வேள்விகளில் தேவர்களை வழிபட்டு இம்மையில் உயர்ந்த புகழையும், மறுமையில் சொர்க்கத்தையும் அடைந்தனர்.(3) பெரும் சக்தியையும், ஆயிரம் கண்களையும் கொண்டவனும், தேவர்களின் பலமிக்கத் தலைவனுமான இந்திரன், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தே தேவர்களின் மீதான அரசுரிமையை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைந்தான்.(4) மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடியவராக, செழிப்பிலும், ஆற்றலிலும் தேவர்களின் தலைவனுக்கு ஒப்பானவனாக இருக்கும்போது,(5) அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் பெரும் குதிரை வேள்வியை அந்தக் கீரி ஏன் சிறுமைப்படுத்தியது?” என்று கேட்டான்.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, ஓ! பாரதா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, வேள்வி தொடர்பான சிறந்த விதிகளையும், வேள்வி விளைவிக்கும் கனிகளையும் {பலன்களையும்} நான் உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(7) முன்பொரு காலத்தில் சக்ரன் {இந்திரன்} ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்தான். அந்த வேள்வியின் அங்கங்கள் திரட்டப்பட்ட போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு சடங்குகளைச் செய்வதில் {விஸ்தாரமான யாககர்மாவில்} ரித்விஜர்கள் மும்முரமடைந்தனர்.(8) அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரான ஆகுதிகளை ஊறுப்பவர் {ஹோதா}, தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றுவதில் ஈடுபட்டார். பெரும் முனிவர்கள் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். பெரும் கல்விமான்களும், மனநிறைவடைந்தவர்களுமான பிராமணர்கள், சாத்திர மந்திரங்களை இனி குரல்களில் சொல்லி தேவர்களை ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் செய்து கொண்டிருந்த காரியத்தில் களைப்படையாதவர்களான அத்வர்யுக்களில் முதன்மையானவர்கள், யஜுர் வேத மந்திரங்களை மெல்லிய குரல்களில் ஓதிக் கொண்டிருந்தனர்.(9,10)

விலங்குகளைக் கொல்வதற்கான காலம் வந்தது. ஓ! மன்னா, வேள்விக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகள் பிடிக்கப்பட்ட போது, அவற்றிடம் பெரும் முனிவர்கள் கருணை கொண்டனர்.(11) அந்த விலங்குகள் அனைத்தும் உற்சாகமிழந்ததைக் கண்டவர்களும், தவங்களையே செல்வமாகக் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள், சக்ரனை அணுகி, அவனிடம், “வேள்வியின் இந்த நடைமுறை மலங்கமானதல்ல.(12) பெருந்தகுதிகளை அடைய விரும்பும் உனக்கு வேள்வியுடன் எந்த அறிமுகமுமில்லை என்பதற்கான குறியீடு இது[1]. ஓ! புரந்தரா, வேள்விகளில் கொல்லப்படுவதற்காக விலங்குகள் விதிக்கப்படவில்லை.(13) ஓ! பலமிக்கவனே, நீ செய்யும் இந்த ஆயத்தங்கள் தகுதியை {புண்ணியத்தை} அழிப்பதற்குரியவை ஆகும். இந்த வேள்வி அறத்திற்கு இணக்கமானதல்ல. உயிரினங்களை அழிப்பதை ஒருபோதும் அறச்செயலெனச் சொல்ல முடியாது.(14) நீ இதை விரும்பினால், உன் புரோகிதர்கள், ஆகமத்தின்படி உன் வேள்வியைச் செய்யட்டும். ஒரு வேள்வியைச் சாத்திர விதிகளின் (உண்மையான கருத்தின்) படி செய்வதன் மூலம் உன்னால் அடையப்படும் தகுதி பெரியதாக இருக்கும்.(15) ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, மூன்று வருடங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தானிய வித்துகளைக் கொண்டு வேள்வியைச் செய்வாயாக. ஓ! சக்ரா, இதுவே பேரறம் நிறைந்ததாகவும், உயர்ந்த செயல்திறனைக் கொண்ட கனிகளை விளைவிப்பதாகவும் இருக்கும்” என்றனர்.(16)எனினும், செருக்கின் ஆதிக்கத்தில் இருந்தவனும், மூடத்தனத்தில் மூழ்கியவனுமான நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, அந்த முனிவர்களின் இந்தச் சொற்களை ஏற்கவில்லை.(17) ஓ! பாரதா, அப்போது, சக்ரனின் அந்த வேள்வியில், அசையும் உயிரினங்களைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டுமா? அசையாத பொருட்களைக் கொண்டு அவை செய்யப்பட வேண்டுமா? அவை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்துத் தவசிகளுக்கிடையில் ஒரு பெருஞ்சர்ச்சை எழுந்தது.(18) அந்தச் சர்ச்சையில் அவர்கள் அனைவரும் களைப்பை அடைந்தனர். அப்போது, உண்மையைக் காண்பவர்களான முனிவர்கள், (நடுவராக இருக்கும் காரியத்தைக் குறித்து) சக்ரனுடன் ஒரு புரிந்துணர்வைச் செய்து கொண்டு மன்னன் வசுவிடம்,(19) “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, வேள்விகள் குறித்த வேத தீர்மானமென்ன? விலங்குகளைக் கொண்டு வேள்விகளைச் செய்வது விரும்பத்தக்கதா? வித்துகள் மற்றும் சாறுகளைக் கொண்டு செய்வது விரும்பத்தக்கதா?” என்று கேட்டனர்[2].(20)அந்தக் கேள்வியைக் கேட்ட மன்னன் வசு, இரு தரப்பின் வாதங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களைத் தீர்மானிக்காமலேயே, “இருவகைகளில் எது ஆயத்தமாக இருக்கிறதோ அதைக் கொண்டு வேள்விகள் செய்யப்படலாம்” என்றான்.(21) அந்தக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துவிட்டு அவன் பாதாள லோகத்திற்குச் சென்றான். உண்மையில் பலமிக்கவனான அந்தச் சேதிகளின் ஆட்சியாளன் {உபரிசர வசு}, பொய் சொன்னதன் காரணமாகத் துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருந்தது.(22) எனவே, ஓர் ஐயம் எழும்போது, எந்த மனிதனும், அவன் எவ்வளவு ஞானம் கொண்டவனாக இருப்பினும், பலமிக்கவனும், சுயம்புவுமான உயிரினங்களின் தலைவனாக அவன் இல்லாவிட்டால், அக்காரியத்தில் எதையும் தனியாகத் தீர்மானிக்கக்கூடாது.(23) தூய்மையற்ற புத்தியைக் கொண்ட ஒரு பாவியால் அளிக்கப்படும் கொடைகள் எவ்வளவு பெரியனவாக இருப்பினும் தொலைந்தே போகும். அத்தகைய கொடைகளால் ஆவதொன்றும் இல்லை.(24)

நியாயமற்ற ஒழுக்கம் கொண்டவனும், பாவம் நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனும், அழிவைச் செய்பவனுமான ஒரு மனிதனால் அளிக்கப்படும் கொடைகளின் மூலம் இம்மையிலோ, மறுமையிலோ நியாயமான புகழை ஒருபோதும் அடைய முடியாது.(25) தகுதியை ஈட்டும் விருப்பத்தின் மூலம், நியாயமற்ற வழிகளில் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்யும் அற்ப புத்தி கொண்ட மனிதன், தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் ஒருபோதும் வெல்வதில்லை.(26) பாவம் நிறைந்த ஆன்மாவைக் கொண்ட அந்த இழிந்த பாவி, பாசாங்குத்தனத்துடன் அறவோனின் வேடத்தை ஏற்றுப் பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் (உண்மையில் தகுதி எதனையும் ஈட்டாமல்) தன் சொந்த அறத்தைக் குறித்து மனிதர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை மட்டுமே உண்டாக்குவான்.(27) ஆசை மற்றும் அறியாமையில் மூழ்கி பாவம் நிறைந்த செயல்களின் மூலம் செல்வத்தை ஈட்டும் கட்டுப்பாடற்ற ஒழுக்கம் கொண்ட பிராமணன், இறுதியில் பாவம் நிறைந்தவர்களின் இலக்கையே {கதியையே} அடைகிறான்.(28)

பேராசை மற்றும் மூடத்தனத்தில் மூழ்கும் ஒருவன், செல்வத்தைச் சேமிக்க விரும்புகிறான். பாவம் நிறைந்த, தூய்மையற்ற புத்தியினால் தூண்டப்பட்ட அவன் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கிறான்.(29) அத்தகைய வழிமுறைகளின் {தீங்கிழைப்பதன்} மூலம் செல்வமீட்டிய ஒருவன், அதைக் கொண்டு கொடைகளை அளித்தாலோ, வேள்விகளைச் செய்தாலோ, நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் அச்செல்வத்தினை ஈட்டியதன் விளைவால் அவன் மறுமையில் அந்தக் கொடைகள், அல்லது வேள்விகளின் கனிகளை ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(30) தவங்கள் எனும் செல்வத்துடன் கூடிய மனிதர்கள், தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, களங்களில் {வயல்களில்} இருந்து திரட்டப்பட்ட தானியங்கள், அல்லது கிழங்குகள், அல்லது கனிகள், அல்லது கீரைகள், அல்லது நீர், அல்லது இலைகள் ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டி, சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்.(31) இத்தகைய கொடைகளே அறம் நிறைந்தவையாகவும், உயர்ந்த தவங்களுக்கு நிகரானவையாகவும் ஆகின்றன. அத்தகைய கொடைகளும், உயிரினங்கள் அனைத்திடம் கொள்ளும் கருணையும், பிரம்மச்சரியமும், பேச்சில் வாய்மையும், அன்புடைமையும், உளவலிமையும், மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்},(32) அழிவற்ற அறத்தின் நித்திய அடித்தளங்களாக அமைகின்றன.

விஷ்வாமித்ரர் மற்றும் பழங்கால மன்னர்கள் பிறரைக் குறித்தும் நாம் கேள்விப்படுகிறோம்.(33) விஷ்வாமித்ரர், அசிதர், மன்னர் ஜனகர், கக்ஷஸேநர், ஆர்ஷ்டிஷேணர், மன்னர் ஸிந்துத்வீபர் ஆகிய இவர்களும்,(34) தவங்களையே செல்வமாகக் கொண்ட இன்னும் பல மன்னர்களும், நியாயமாக ஈட்டிய பொருட்களைக் கொடையாகக் கொடுத்து உயர்ந்த வெற்றியை அடைந்தனர்.(35) ஓ! பாரதா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களில் தவங்களைச் செய்பவர்களும், கொடைகள் மற்றும் பிற அறச் செயல்களின் மூலம் தங்களைத் தூய்மை செய்து கொள்பவர்களும் சொர்க்கத்தை அடைகிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(36)

கீரியின் வரலாறு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 92-தியானம் மற்றும் தவம் மூலம் யாக பலன் கிட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அகஸ்தியர் யாகம் செய்த கதையைச் சொன்னது; கீரியின் வரலாறு…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, சொர்க்கமானது நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட செல்வத்தின் கனியெனில் அது குறித்து முழுமையாக எனக்குச் சொல்வீராக. இக்காரியத்தை நீர் நன்கறிந்தவரெனவே, அதை விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! மறுபிறப்பாளரே, உஞ்ச வாழ்வுமுறையின்படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர் வாற்கோதுமை மாவைக் கொடையளித்ததன் மூலம் அடைந்த உயர்ந்த கனியென்ன என்பதை எனக்குச் சொல்லியிருக்கிறீர். நிச்சயம் நீர் சொன்னவை அனைத்தும் உண்மையே.(2) எனினும், வேள்விகள் அனைத்தையும் காட்டிலும் அந்தக் கதியை அடைந்தது உயர்ந்ததென எவ்வகையில் கொள்ளப்படுகிறது? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விளக்கங்கள் அனைத்துடன் இதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, முற்காலத்தில் அகஸ்தியரின் பெரும் வேள்வியில் என்ன நடந்தது என்பது குறித்த இந்தப் பழங்கதையில் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(4) ஓ! மன்னா, பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்டவரும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவருமான அகஸ்தியர், பனிரெண்டு வருடங்கள் நீண்ட தீக்ஷைக்குள் நுழைந்தார்[1].(5) உயர் ஆன்ம முனிவருடைய அந்த வேள்வியில் சுடர்மிக்க நெருப்புகளுக்கு ஒப்பான காந்தியைத் தங்கள் உடல்களில் கொண்ட ஹோத்ரிகள் {ஹோதாக்கள்} பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் கிழங்குகளையோ, கனிகளையோ உண்டு வாழ்பவர்களும், தங்கள் தானியங்களை இரண்டு கற்களை மட்டுமே நசுக்கி உண்பவர்களும் {அஸ்மகுட்டர்களும்}, (சந்திரக்) கதிர்களை மட்டுமே உண்டு வாழ்பவர்களும் {மரீசிபர்களும்} இருந்தனர்.(6) அவர்களில், உண்ணுமாறு பிறரால் வேண்டப்பட்டுத் தங்கள் முன் வைக்கப்படுவதைத் தவிர வேறு உணவேதும் உண்ணாதவர்களும் {பரிப்ருஷ்டிகர்களும்}, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு முதலில் படைக்காமல் எதையும் உண்ணாதவர்களும் {வைகஸிகர்களும்}, தாங்கள் உண்ட உணவைக் கழுவாதவர்களும் {வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்பவர்களான ப்ரஸங்கியனர்களும்} இருந்தனர். ஓ! மன்னா, அவர்களுக்கு மத்தியில் யதிகளும், பிக்ஷுக்களும் கூட இருந்தனர்[2].(7)அவர்கள் அனைவரும் அறத் தேவனின் உடல் வடிவத்தைக் கண்டவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கோபத்தை அடக்கியவர்களாகவும், தங்கள் புலன்களின் மீது முழுக் கட்டுப்பாட்டை அடைந்தவர்களாகவும் இருந்தனர். தற்கட்டுப்பாட்டைப் பயின்று வாழ்ந்த அவர்கள், செருக்கில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களாக இருந்தனர்.(8) அவர்கள் எப்போதும் தூய ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்களாகவும், (தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில்) தங்கள் புலன்களால் ஒருபோதும் தடுக்கப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அந்த வேள்விக்கு வந்திருந்த அந்தப் பெரும் முனிவர்கள் அதற்குரிய பல்வேறு சடங்குகளை நிறைவேற்றினர்.(9) அந்தச் சிறப்புமிக்க முனிவர் (அகஸ்தியர்), அந்த வேள்விக்குத் திரட்டப்பட வேண்டிய உணவைத் தன் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, நியாயமான முறையில் போதுமான அளவுக்கு அடைந்தார்.(10) அதே காலத்தில் வேறு எண்ணற்ற முனிவர்களும் பெரும் வேள்விகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், அகஸ்தியர் தமது வேள்வியில் ஈடுபட்ட போது,(11) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஆயிரங்கண் இந்திரன், (பூமியில்) மழை பொழிவதை நிறுத்தினான்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களுக்கு மத்தியில் உயர் ஆன்ம அகஸ்தியர் குறித்த இந்தப் பேச்சு எழுந்தது, {அவர்கள்}, “வேள்வியில் ஈடுபடும் இந்த அகஸ்தியர், செருக்கும், பகட்டும் இன்றி {மாத்ஸர்யமின்றி} உணவுக் கொடைகளை அளித்து வருகிறார்.(12,13) எனினும், மேகங்களின் தேவன் {பர்ஜன்யன் / இந்திரன்}, மழை பொழிவதை நிறுத்திவிட்டான். உண்மையில் உணவு எவ்வாறு வளரும்? பிராமணர்களே, அந்த முனிவரின் இவ்வேள்வி பனிரெண்டு வருடங்கள் நீளும் பெரிய வேள்வியாகும்.(14) அந்தத் தேவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழை பொழிய மாட்டான். இதைச் சிந்தித்துப் பார்த்து, கடுந்தவங்களுடன் கூடியவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான இந்த முனிவருக்கு ஏதாவது உதவியைச் செய்வதே உங்களுக்குத் தகும்” என்றனர்.

இச்சொற்கள் சொல்லப்பட்ட போது, பேராற்றல் கொண்ட அகஸ்தியர்,(15,16) தலைவணங்கியவராக அந்தத் தவசிகள் அனைவரையும் நிறைவடையச் செய்து, “வாசவன் அந்தப் பனிரெண்டு வருடங்களும் மழை பொழியவில்லையெனில்,(17) நான் மனோ வேள்வியைச் செய்வேன். இதுவே நித்ய விதியாகும். வாசவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழைபொழியவில்லையெனில்,(18) நான் ஊறு வேள்வியைச் செய்வேன். இதுவே நித்திய வேள்வியாகும். வாசவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழையைப் பொழிவில்லையெனில்,(19) நான் என் உழைப்பனைத்தையும் செலுத்தி, மிகக் கடுமையானவையும், கடும் நோன்புகளைக் கொண்டவையுமான வேறு வேள்விகளைச் செய்வதற்கு ஆயத்தமாவேன். வித்துகளை {விதைகளைக்} கொண்டு செய்யப்படும் என்னுடைய இந்த வேள்வி, பல வருடங்கள் நீளும் உழைப்புடன் கூடியதாக என்னால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது[3].(20) வித்துகளைக் கொண்டே நான் அதிக நன்மையைச் செய்வேன். இடையூறேதும் எழாது. என்னுடைய இந்த வேள்வி கலங்கடிக்கப்பட முடியாததாகும்.(21)அந்தத் தேவன் {இந்திரன்} மழையைப் பொழிவதோ, பொழியாமல் இருப்பதோ இதில் அதிக முக்கியமற்றதாகும். உண்மையில், இந்திரன் தன் விருப்பப்படியே எனக்கு மதிப்பேதும் அளிக்கவில்லையெனில்,(22) நானே இந்திரனாக மாறி அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்வேன். ஒவ்வொரு உயிரினமும், முன்பு போலவே தான் எப்போதும் உண்டு வளரும் உணவையே உண்டு வளரும்.(23) பல்வேறு வகைப் பொருட்களையும் நான் மீண்டும் மீண்டும் உண்டாக்குவேன். தங்கமும், இன்னும் என்னவெல்லாம் செல்வமுண்டோ அவை அனைத்தும் இந்த இடத்திற்கு இன்று வந்து சேரட்டும்.(24) மூன்று உலகங்களிலும் உள்ள செல்வம் அனைத்தும் இன்று தாமே இங்கு வந்து சேரட்டும். அப்சரஸ்களின் தெய்வீக இனக்குழுக்கள், கின்னரர்களோடு கூடிய கந்தர்வர்கள்,(25) விஸ்வாவசு மற்றும (அவ்வகையைச்) சார்ந்த பிறரும் என்னுடைய இந்த வேள்விக்கு வந்து சேரட்டும். வட குருக்களுக்கு மத்தியில் இருக்கும் செல்வமனைத்தும்,(26) இந்த வேள்விகளுக்குத் தாமே வந்து சேரட்டும். சொர்க்கமும், சொர்க்கத்தைத் தங்கள் இல்லமாகக் கொண்ட அனைவரும், தர்மனும் இங்கே வந்து சேரட்டும்” என்றார் {அகஸ்தியர்}.(27)

சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான மனத்தைக் கொண்டவரும், இயல்புக்கு மீறிய சக்தியைக் கொண்ட தவசியுமான அகஸ்தியர் இந்தச் சொற்களைச் சொன்னதும், அவரது தவங்களின் விளைவால் அவர் விரும்பியது அனைத்தும் நடந்தன.(28) அங்கே இருந்த முனிவர்கள், தவத்தின் சக்தியைக் கண்டு இதயம் மகிழ்ந்தனர். ஆச்சரியத்தில் நிறைந்த அவர்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(29) அந்த முனிவர்கள், “நீர் சொன்ன சொற்களால் நாங்கள் பெரிதும் நிறைவடைந்தோம். எனினும், உமது தவத்திற்கு எந்தக் குறையும் நேரக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். நியாயமான வழிமுறைகளின் மூலம் செய்யப்படும் இந்த வேள்விகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம்[4].(30) நியாயமான வழிமுறைகளில் எங்கள் உணவை ஈட்டி, எங்களுக்குரிய கடமைகளை நோற்று வேள்விக்கான தொடக்கங்களில் ஈடுபட்டு, நாங்கள் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி பிற அறச்சடங்குகளையும் செய்யப் போகிறோம்.(31) நியாயமான வழிமுறைகளின் மூலம் பிரம்மச்சரியம் பயின்று நாங்கள் தேவர்களைத் துதிக்கப் போகிறோம். பிரம்மச்சரிய காலத்தை நிறைவேற்றி, நியாயமான வழிமுறைகளை நோற்று எங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியே வரப் போகிறோம். பிறருக்கு எவ்வகையிலும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்து விடுபட்ட புத்தியையே நாங்கள் அங்கீகரிக்கிறோம்.(32,33) ஓ! பலமிக்கவரே, வேள்விகள் அனைத்திலும் தீங்கிழையாமையை நீர் எப்போதும் பாராட்ட வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அப்போது நாங்கள் உயர்வான நிறைவை அடைவோம். உமது வேள்வி நிறைவடைந்த பின்னர், உம்மால் விடைகொடுத்து அனுப்பப்படும்போது நாங்கள் {இந்த ஸத்ரத்திலிருந்து} இந்த இடத்தை விட்டுச் செல்வோம்” என்றானர்.(34)அவர்கள் இந்தச் சொற்களைச் சொல்லிக் கொண்டிஉரக்கும்போது, தேவர்களின் தலைவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான புரந்தரன், அகஸ்தியருடைய தவங்களின் சக்தியைக் கண்டு மழையைப் பொழிந்தான்.(35) உண்மையில், ஓ! ஜனமேஜயா, அளவிலா ஆற்றல் கொண்ட அந்த முனிவரின் வேள்வி முடியும் வரை, மழையின் தேவனான அவன் மழையைப் பொழிந்து, அளவிலும், காலத்திலும் மனிதர்களின் விரும்பங்களை நிறைவேற்றினான்.(36) ஓ! அரச முனியே, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பிருஹஸ்பதியைத் தன் முன் கொண்டு அங்கே வந்து, அகஸ்திய முனிவரை நிறைவடையச் செய்தான்.(37) அகஸ்தியர் அந்த வேள்வியின் முடிவில் மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரையும் முறையாக வழிபட்டு, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினார்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பொன் தலை கொண்டதும், மனிதக் குரலில் அந்தச் சொற்கள் அனைத்தையும் பேசியதுமான அந்தக் கீரி {கீரியின் வடிவில் இருந்தது} யார்? என்னால் கேட்கப்படும் இதை எனக்கு நீர் சொல்வீராக” என்றான்.(39)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நீ முன்பே என்னைக் கேட்காததால் நான் அதை உனக்குச் சொல்லவில்லை. அந்தக் கீரி யார் என்பதையும், அதனால் மனிதக் குரலை எவ்வாறு ஏற்க முடிந்தது என்பதையும் சொல்கிறேன் நீ கேட்பாயாக.(40) முன்பொரு காலத்தில், ஜமதக்னி முனிவர் ஒரு சிராத்தத்தைச் செய்யக் கருதினார். அவரது ஹோமப் பசு அவரிடம் வந்தாள், அந்த முனிவர் அவளிடம் பாலைக் கறந்தார்.(41) அவர் புதியதும், உறுதியானதும், தூய்மையானதுமான ஒரு பாத்திரத்தில் அந்தப் பாலை வைத்தார். தர்மதேவன், கோபத்தின் வடிவை ஏற்று அந்தப் பால் பாத்திரத்திற்குள் நுழைந்தான்.(42) உண்மையில் தர்மன், அந்த முனிவர்களில் முதன்மையானவர் தமக்குத் தீங்கு நேர்வதைக கண்டு என்ன செய்வார் என்பதைக் காண விரும்பினான்.(43) தமது பாலைக் கெடுத்தது கோபமே என்பதை அறிந்த தவசி, அவனிடம் சினமேதும் அடையவில்லை. பிறகு கோபமானவன், ஒரு பிராமணப் பெண்ணின் வடிவத்தை ஏற்றுத் தன்னை அந்த முனிவரிடம் வெளிப்படுத்திக் கொண்டான்.(44)

உண்மையில் கோபமானவன், பிருகு குலத்தில் முதன்மையான அவர் {ஜமதக்னி} தன்னை வென்றுவிட்டதைக் கண்டு, அவரிடம், “ஓ! பிருகு குலத் தலைவரே, நான் உம்மால் வெல்லப்பட்டேன். பிருகுக்கள் பெரும் கோபக்காரர்கள் என்ற சொல் மனிதர்களுக்கு மத்தியில் உண்டு. நான் உம்மால் அடக்கப்பட்டதால், அச்சொல் பொய்யென்பதை நான் இப்போது கண்டுகொண்டேன்.(45) பேரான்மா கொண்டவர் நீர். மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடிவர் நீர். நான் இன்று உமது ஆளுகையின் கீழ் இங்கே நிற்கிறேன். ஓ! அறம் சார்ந்தவரே, நாம் உமது தவங்களுக்கு அஞ்சுகிறேன். ஓ! பலமிக்க முனிவரே, நீர் எனக்குக் கருணை காட்டுவீராக” என்றான் {பிராமணப் பெண் வடிவில் வந்த கோபமான தர்மன்}.(46)

ஜமதக்னி, “ஓ! கோபமே, உடல் வடிவத்துடன் கூடிய உன்னை நான் கண்டிருக்கிறேன். எந்தக் கவலையுமின்றி நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. நீ எனக்கு இன்று எந்தத் தீங்கையும் இழைக்கவில்லை. உனக்கெதிரான மனவெறுப்பு ஏதும் என்னிடம் இல்லை.(47) யாருக்கு நான் இந்தப் பாலை வைத்திருந்தேனோ அந்தப் பித்ருக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாவர். நீ அவர்களிடம் சென்று {உன் கருத்தை அவர்களிடம் சொல்லி} அவர்களது கருத்துகளை {அச்சம் என்றால் என்ன என்பதை} உறுதி செய்து கொள்வாயாக[5]” என்றார்.(48)இவ்வாறு சொல்லப்பட்டதும், அச்சமடைந்த கோபமானவன் {தர்மன்}, அந்த முனிவரின் பார்வையில் இருந்து மறைந்து போனான். அந்தப் பித்ருக்களின் சாபம் மூலம் அவன் {தர்மன்} ஒரு கீரியானான்.(49) பிறகு அவன், தனக்கேற்பட்ட சாபத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வர பித்ருக்களை நிறைவடையச் செய்யத் தொடங்கினான். அவனிடம் அவர்கள், “தர்மத்தை {தர்மனை} அவமதித்துப் பேசுவதன் மூலம் நீ அடைந்திருக்கும் சாபத்தின் முடிவை அடைவாய்” என்றனர்.(50)

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அது, பெரும் வேள்விகளை நிந்தித்தவாறு, வேள்விகளைச் செய்யும் இடங்களிலும், புனித இடங்களிலும் திரிந்து கொண்டிருந்தது. அந்தக் கீரியே மன்னன் யுதிஷ்டிரனின் பெரும் வேள்விக்கு வந்தது.(51) ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவைக் குறிப்பிட்டதன் மூலம் தர்மனின் மகனை இகழ்ந்த அந்தக் கோபமானது {கீரியானது}, யுதிஷ்டிரன் தர்மனின் சுயம் (தர்மனின் மகன்) என்பதால் தன் சாபத்தில் இருந்து விடுபட்டது.(52) அந்த உயர் ஆன்ம மன்னனின் வேள்வியில் நடந்தது இதுவே. அந்தக் கீரி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கேயே அப்போதே மறைந்து போனது” {என்றார் வைசம்பாயனர்}.(53)

 அநுகீதா உப பர்வம் முற்றும்

அஸ்வமேத பர்வம் முற்றிற்று 

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ ஸ்வர்க்காரோஹணிக  உப பர்வம்–

October 18, 2025

உத்தராயணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 167-உத்தராயணம் வந்ததும் பீஷ்மரிடம் சென்ற யுதிஷ்டிரன்; பீஷ்மர் இவ்வுலகை விட்டுச் சென்று வசுக்களை அடைய அனுமதித்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தன் குடிமக்களையும், தன் மாகாணத்தில் வசிப்போரையும் முறையாகக் கௌரவித்து, அவர்களுக்குரிய இல்லங்களுக்கு அனுப்பி வைத்தான்.(1) பிறகு, போரில் தங்கள் வீரக் கணவர்களையும், மகன்களையும் இழந்த பெண்களுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்து அவர்களுக்கு ஆறுதலளித்தான்.(2) பெரும் ஞானியான யுதிஷ்டிரன், தன் நாட்டை மீட்டு, அரியணையில் முறையாகத் தன்னை நிறுவிக் கொண்டான். பிறகு அந்த மனிதர்களில் முதன்மையானவன், நல்விருப்பத்தின் படியான பல்வேறு செயல்களைச் செய்வதாகத் தன் குடிமக்கள் அனைவருக்கும் உறுதியளித்தான்.(3) அப்போது அறவோரில் முதன்மையான அவன், பிராமணர்கள், படை அதிகாரிகளில் முதன்மையானோர், முன்னணி குடிமக்கள் ஆகியோரின் பெருவாரியான ஆசிகளை ஈட்டுவதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(4)அருள் நிறைந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} ஐம்பது இரவுகளைக் கழித்த பிறகு, தன் பாட்டன் {பீஷ்மர்} இவ்வுலகில் இருந்து செல்வதற்கான காலமெனக் குறிப்பிட்ட நேரத்தை நினைவுகூர்ந்தான்.(5) சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதை நிறுத்தி, வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதைக் கண்ட அவன், பெரும் எண்ணிக்கையிலான புரோகிதர்களின் துணையுடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றான்.(6) குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரின் உடலுக்கு எரியூட்ட தன்னுடன் பெரும் அளவிலான தெளிந்த நெய், மலர் மாலைகள், நறுமணப் பொருட்கள், பட்டுத் துணிகள், சிறந்த சந்தனம், கறுப்பும், வெளுப்புமான அகிற்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். விலைமதிப்புமிக்கப் பல்வேறு வகை மாலைகளும், ரத்தினங்களும் அந்தச் சேகரிப்பில் இருந்தன.(7,8)திருதராஷ்டிரன், நற்பண்புகளுக்காகக் கொண்டாடப்படும் ராணி காந்தாரி, தன் தாயான குந்தி, தன் தம்பிகள் அனைவரையும் முன்னணியில் நிறுத்திய பெரும் நுண்ணறிவுமிக்க யுதிஷ்டிரன்,(9) கிருஷ்ணன் மற்றும் பெரும் ஞானியான விதுரன் ஆகியோர் துணையுடனும், யுயுத்சு மற்றும் யுயுதானனுடனும்,(10) வேறு உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடனும் கூடிய ஒரு பெரிய வரிசையில், வந்திகளும், பாணர்களும் தன்னைத் துதிக்கப் பின் சென்றான். பீஷ்மரின் வேள்வி நெருப்புகளும் ஊர்வலத்தில் சுமந்து செல்லப்பட்டன.(11) இவ்வாறான துணையுடன் மன்னன் தன் நகரத்தில் இருந்து தேவர்களின் இரண்டாவது தலைவனைப் போலப் புறப்பட்டுச் சென்றான். விரைவில் அவன் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} தமது கணைப்படுக்கையில் கிடந்த இடத்தை அடைந்தான்.(12)

பெரும் நுண்ணறிவுமிக்கவரும், பராசரரின் மகனுமான வியாசர், நாரதர், தேவலர், அசிதர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து திரண்டவர்களும், கொல்லப்படாமல் எஞ்சியவர்களுமான மன்னர்கள் ஆகியோர் தம் பாட்டனுக்கு மதிப்புடன் பணிவிடை செய்து கொண்டிருப்பதை அவன் கண்டான். உண்மையில் அந்த மன்னன், பாதுகாக்கும் கடமையில் நியமிக்கப்பட்ட போர்வீரர்களால் அனைத்துப் புறங்களிலும் நன்கு பாதுகாக்கப்பட்ட வீரர்களின் படுக்கையில் கிடக்கும் தன் உயர் ஆன்ம பாட்டனைக் கண்டான். தன் தேரில் இருந்து இறங்கிய மன்னன் யுதிஷ்டிரன், பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவரான தன் பாட்டனைத் தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து வணங்கினான். தீவில் பிறந்தவரான வியாசரைத் தலைமையாகக் கொண்ட முனிவர்களையும் அவர்கள் வணங்கினார்கள். தாங்களும் அவர்களால் பதிலுக்கு வணங்கப்பட்டனர்.(13-16) மங்கா புகழ் கொண்டவனான யுதிஷ்டிரன், பெரும் பாட்டன் பிரம்மனுக்கே ஒப்பானவர்களான தன் புரோகிதர்கள் துணையுடனும், தன் தம்பிகளுடனும் சேர்ந்து, இந்த மதிப்புமிக்க முனிவர்கள் சூழ கணைப்படுக்கையில் பீஷ்மர் கிடக்கும் இடத்திற்குச் சென்றான்.(17)

அப்போது தன் தம்பிகளுக்குத் தலைமையில் நின்றிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அப்படுக்கையில் கிடந்தவரும், கங்கையாற்றின் மைந்தருமான அந்தக் குருகுலத்தில் முதன்மையானவரிடம் {பீஷ்மரிடம்},(18) “ஓ! மன்னா, நான் யுதிஷ்டிரன். ஓ! ஜானவி ஆற்றின் மைந்தரே, உம்மை வணங்குகிறேன். ஓ! நீர் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால், நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக.(19) ஓ! மன்னா, உமது வேள்வி நெருப்புகளைச் சுமந்து கொண்டு, நீர் குறிப்பிட்ட காலம் வரை உமக்குப் பணிவிடை செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன். கல்வியின் அனைத்துக் கிளைகளையும் சார்ந்த ஆசான்கள், பிராமணர்கள், ரித்விஜர்கள் ஆகியோரும், என் தம்பிகள் அனைவரும்,(20) உமது மகனான பெருஞ்சக்தி கொண்ட மன்னன் திருதராஷ்டிரரும், என் அமைச்சர்களும், பேராற்றல் கொண்ட வாசுதேவன் ஆகியோரும் இங்கிருக்கின்றனர்.(21) கொல்லப்படாமல் எஞ்சிய போர்வீரர்களும், குருஜாங்கலத்தில் வசிப்போர் அனைவரும் இங்கே இருக்கின்றனர். ஓ! குரு குலத்தின் தலைவா, உமது கண்களைத் திறந்து அவர்களைக் காண்பீராக.(22) இந்தச் சந்தர்ப்பத்திற்குத் தேவையான அனைத்தையும் நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். உண்மையில், நீர் குறிப்பிட்ட இந்தக் காலத்திற்கான அனைத்துப் பொருட்களும் ஆயத்தமாக இருக்கின்றன” என்றான் {யுதிஷ்டிரன்}”.(23)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் நுண்ணறிவைக் கொண்ட குந்தியின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட கங்கையின் மைந்தர், தன் கண்களைத் திறந்து, அங்கே தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த பாரதர்கள் அனைவரையும் கண்டார்.(24) அப்போது வலிமைமிக்கப் பீஷ்மர், யுதிஷ்டிரனின் வலிய கரங்களைப் பிடித்துக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழமான குரலில் அவனிடம் பேசினார்.(25)

சொற்களை முற்றிலும் ஆள்பவரான அவர், “ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, நற்பேற்றின் மூலமே, நீ உன் அமைச்சர்கள் அனைவருடனும் இங்கே வந்திருக்கிறாய். நாள் சமைக்கும் ஆயிரங்கதிரோனான புனிதமான சூரியன், தன் வடக்கு நோக்கிய போக்கைத் தொடங்கிவிட்டான்.(26) நான் என் படுக்கையில் எண்பத்தைந்து நாட்கள் கிடந்திருக்கிறேன். இந்தக் கூர்முனைக் கணைகளில் நீட்டிக் கிடந்த நான், இந்தக் காலத்தை நூறு ஆண்டுகளாக உணர்ந்தேன்.(27) ஓ! யுதிஷ்டிரா, மாகச் சந்திர மாதம் {மாசி மாதம்} தொடங்கிவிட்டது. மேலும் இது வளர்பிறைக் காலமாகும், (என் கணக்கீடுகளின்படி) இதில் நான்கில் ஒருபகுதி முடிந்திருக்க வேண்டும்[1]” என்றார்.(28)தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொன்ன கங்கையின் மகன் பீஷ்மர், திருதராஷ்டிரனை வணங்கி, அவனிடம் பின்வருமாறு சொன்னார்.(29)

பீஷ்மர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நீ கடமைகளை நன்கறிந்தவனாக இருக்கிறாய். பொருளியல் தொடர்பான உன் ஐயங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டன. பெருங்கல்வி கொண்ட பல பிராமணர்களுக்கு நீ பணிவிடை செய்திருக்கிறாய்.(30) வேதங்களுடன் தொடர்புடை நுண்ணறிவியல்களையும், அறக்கடமைகள் அனைத்தையும், முழுமையாக நான்கு வேதங்களையும் நீ நன்கறிந்திருக்கிறாய்.(31) எனவே, ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரனே}, நீ வருந்தாதே. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. இது வேறு வகையில் ஆகாது. தேவர்கள் தொடர்பான புதிர்களை {ரகசியங்களை} தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து நீ கேட்டிருக்கிறாய்.(32) யுதிஷ்டிரனும், அவனுடைய தம்பிமாரும், பாண்டுவின் மகன்களாவதைப் போலவே நியாயமாக உனக்கும் மகன்களாவர். அறக்கடமைகளை நோற்கும் நீ அவர்களைப் பேணி வளர்த்துப் பாதுகாப்பாயாக. அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களாவர்.(33) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தூய ஆன்மா கொண்டவனாவான். அவன் எப்போதும் உனக்குக் கீழ்ப்படிந்திருப்பான். கருணையறம் {கொல்லாமை} அல்லது தீங்கிழையாமையில் அவன் அர்ப்பணிப்புடன் இருப்பதை நான் அறிவேன். பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அவன் அர்ப்பணிப்புமிக்கவனாவான்.(34) உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராவர். அவர்கள் கோபமும், பேராசையும் கொண்டவர்களாக இருந்தனர். பொறாமையில் மூழ்கிய அவர்கள் அனைவரும் தீய நடத்தை கொண்டிருந்தனர். அவர்களுக்காக வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {பீஷ்மர்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் ஞானியான திருதராஷ்டிரனிடம் இவ்வளவும் சொன்ன அந்தக் குரு வீரர் {பீஷ்மர்}, பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினார்.(36)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! புனிதமானவனே, ஓ! தேவர்கள் அனைவருக்கும் தேவா, ஓ! தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனே, ஓ! மூன்று அடியால் மூவுலகங்களையும் மறைத்தவனே, ஓ! சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவனே உன்னை வணங்குகிறேன்.(37) வாசுதேவன் நீயே, பொன்னுடல் நீயே, ஒரே புருஷன் (அல்லது ஒரே செயல்படும் இயக்கம்) நீயே, (அண்டத்தைப்) படைத்தவன் நீயே, பேரளவு கொண்டவன் நீயே. ஜீவன் நீயே. நுட்பமானவன் நீயே. நித்தியமான பரமாத்மா நீயே.(38) ஓ! தாமரைக் கண்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே என்னைக் காப்பாயாக.(39) ஓ! கிருஷ்ணா, ஓ! பரமானந்தமே, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே இவ்வுலுகில் இருந்து செல்வதற்கு எனக்கு அனுமதி அளிப்பாயாக. பாண்டுவின் மகன்களை எப்போதும் நீ பாதுகாக்க வேண்டும். உண்மையில், ஏற்கனவே ஒரே புகலிடமாக அவர்களுக்கு இருப்பவன் நீயே.(40)

முன்பொரு சமயம், தீய புத்தி கொண்ட மூடனான துரியோதனனிடம்எங்கே அறம் இருக்குமோ அங்கே கிருஷ்ணன் இருப்பான், எங்கே அறம் இருக்குமோ அங்கேயே வெற்றியும் இருக்கும் என்று சொன்னேன்.(41) மேலும் நான் அவனிடம் வாசுதேவனையே புகலிடமாகக் கொண்டு அவனைச் சார்ந்திருந்து பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை கூறினேன். உண்மையில் நான் அவனிடம் மீண்டும் மீண்டும், “அமைதியை ஏற்படுத்திக் கொள்ள உனக்கு இதுவே தகுந்த நேரம்” என்று சொன்னேன்.(42) எனினும், தீய புத்தி கொண்ட மூடனான துரியோதனன், நான் சொன்னதைக் கேட்டானில்லை. அவன் {துரியோதனன்}, பூமியில் ஒரு பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டு தன் உயிரையும் விட்டுவிட்டான்.(43) ஓ! சிறப்புமிக்கவனே, பதரி ஆசிரமத்தில் நரனின் துணையுடன் பல ஆண்டுகள் வசித்த பழைமையான சிறந்த முனிவன் நீ என்பதை நான் அறிவேன்.(44) தெய்வீக முனிவர் நாரதரும், கடுந்தவங்களைச் செய்த வியாசரும் இதை எனக்குச் சொல்லியிருக்கின்றனர். அவர்களே இதை எனக்குச் சொன்னார்கள். நீயும், அர்ஜுனனும், பழங்காலத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருந்த நாராயணன் மற்றும் நரன் என்ற முனிவர்களாவீர்.(45) ஓ! கிருஷ்ணா, நான் என் உடலைக் கைவிடப் போகிறேன் எனக்கு விடை அருள்வாயாக. உன்னால் அனுமதிக்கப்பட்டு நான் உயர்ந்த கதியை அடையப் போகிறேன்” என்றார் {பீஷ்மர்}.(46)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பீஷ்மரே, நான் உமக்கு விடைகொடுக்கிறேன். ஓ! மன்னா, நீர் வசுக்களின் நிலையை அடைவீராக. ஓ !பெரும் காந்தி கொண்டவரே, இவ்வுலகில் ஒரே ஒரு மீறலையும் செய்த குற்றமுள்ளவரில்லை.(47) ஓ! அரசமுனியே, நீர் உமது தந்தையிடம் பக்தி கொண்டவராவீர். எனவே, நீர் இரண்டாவது மார்க்கண்டேயனைப் போன்றவராவீர். இதன் காரணமாகவே உம் விருப்பப்படியே யமன், உமது விருப்பத்தைப் படிக்க எதிர்பார்த்து உமது அடிமையாகக் காத்திருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}”.(48)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன கங்கையின் மைந்தர், திருதராஷ்டிரன் தலைமையிலான பாண்டவர்களிடமும், வேறு நண்பர்களிடமும், தன் நலம் விரும்பிகளிடமும் மீண்டும் பேசினார்.(49) {அவர்}, “நான் என் உயிர்மூச்சைக் கைவிட விரும்புகிறேன். நீங்கள் எனக்கு விடை கொடுப்பதே தகும். வாய்மையை அடைய நீங்கள் முயல வேண்டும். வாய்மையே உயர்ந்த பலமாக இருக்கிறது.(50) தவங்களில் அர்ப்பணிப்புடனும், எப்போதும் கொடூர நடத்தைகளைக் கைவிட்டும், ஆன்மாக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் அறமொழுகும் பிராமணர்களுடனே நீங்கள் எப்போதும் வாழ வேண்டும்” என்றார்.(51)

தன் நண்பர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன நுண்ணறிவுமிக்கப் பீஷ்மர் மீண்டும் யுதிஷ்டிரனிடம்,(52) “ஓ! மன்னா, பிராமணர்கள் அனைவரும், குறிப்பாக ஞானம் கொண்டோரும், ஆசான்களும், வேள்விகளில் துணைபுரியவல்ல புரோகிதர்களும் உன் மதிப்பீட்டின்படி துதிக்கத்தக்கவர்களாகவே இருக்கட்டும்” என்றார் {பீஷ்மர்}”.(53)

கங்கையின் துயரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 168-யோகத்தில் நிலைத்து தமது உயிரைப் பிரித்த பீஷ்மர்; பீஷ்மரின் ஈமச் சடங்குகள்; கங்கையின் துயரம்; கங்கையைத் தேற்றிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, குருக்கள் அனைவரிடமும் இவ்வாறு சொன்ன சந்தனுவின் மகன் {பீஷ்மர்} சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(1) அவர் யோகத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அடுத்தடுத்து தன் உடற்பாகங்களில் இருந்து உயிர் மூச்சுகளை நிறுத்தினார். அந்த உயர் ஆன்மாவின் உயிர் மூச்சுகள் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மேல் நோக்கி எழுப்பப்பட்டது.(2) யோகத்தை ஏற்றிருந்ததன் விளைவால் உயிர்மூச்சுகள் மேல்நோக்கிச் செல்லும்போது, சந்தனு மகனின் {பீஷ்மரின்} உடற்பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வலியற்றவையாகின.(3) ஓ! மன்னா, வியாசரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் உள்ளிட்ட உயர் ஆன்ம மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் காட்சி வியப்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.(4) குறுகிய காலத்திற்குள் பீஷ்மரின் மொத்த உடலும் கணையற்றதாகவும், வலியற்றதாகவும் ஆனது. வாசுதேவனின் தலைமையிலான புகழ்பெற்ற மனிதர்களும், வியாசருடன் கூடிய தவசிகள் அனைவரும் இதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(5) கட்டுப்படுத்தப்பட்டவை, எந்த வழியிலும் வெளியேற இயலாதவையுமான உயிர்மூச்சுகள், இறுதியாக உச்சந்தலையைத் துளைத்துக் கொண்டு சொர்க்கத்தை நோக்கிச் சென்றது.(6)

தேவதுந்துபிகள் முழங்கத் தொடங்கின, மலர்மாரி பொழிந்தது. சித்தர்களும், மறுபிறப்பாள முனிவர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொன்னார்கள்.(7) உச்சந்தலையைப் பிளந்து சென்ற பீஷ்மரின் உயிர்மூச்சுகள் பெரும் எரிகல்லைப் போல ஆகாயத்தில் சென்று விரைவில் புலப்படாமல் போனது.(8) ஓ! பெரும் மன்னா, பாரதக் குலத்தின் தூணாகத் திகழ்ந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, இவ்வாறு தம்மை நித்தியத்தோடு கலந்தார்.(9)

பிறகு, உயர் ஆன்ம பாண்டவர்களும், விதுரரும் பெரும் அளவிலான விறகுகளையும், பல்வேறு வகை நறுமணப் பொருட்களையும் கொண்டு ஈமச்சிதையை அமைத்தனர்.(10) யுயுத்சுவும் பிறரும் அந்த ஆயத்தங்களைக் கண்காணிதனர். அப்போது யுதிஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரரும்,(11) பீஷ்மரின் உடலை, பட்டுத் துணியாலும், மலர் மாலைகளாலும் போர்த்தினர். யுயுத்சு ஒரு சிறந்த குடையை அதன் மேல் ஏந்தினான்.(12) பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் தங்கள் கரங்களில் தூய வெண்ணிறத்திலான சாமரங்களை ஏந்தினர். மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் தங்கள் கரங்களில் இரண்டு கிரீடங்களைக் கொண்டிருந்தனர்.(13) யுதிஷ்டிரனும், திருதராஷ்டிரனும் உடலின் {பீஷ்மருடைய சடலத்தின்} கால்மாட்டில் நின்றனர். குருக்களின் தலைவனுடைய மனைவிமார், பனையோலை விசிறிகளை எடுத்து, உடலைச் சுற்றிலும் நின்று மெதுவாக விசிறத் தொடங்கினர்.(14) உயர் ஆன்ம பீஷ்மரின் பித்ரு வேள்வி முறையாகச் செய்யப்பட்டது. புனித நெருப்பில் ஆகுதிகள் பல ஊற்றப்பட்டன. சாமங்களைப் பாடுவோர் பல சாமங்களைப் பாடினர்.(15)

கங்கையின் மகனுடைய உடலை சந்தனம், மரமஞ்சள் மற்றும் காரகில் கட்டைகளாலும், நறுமணமிக்க வேறு விறகுகளாலும் மறைத்து, அதற்கு நெருப்பிட்டு, அச்சிதைக்கு வலப்புறத்தில் திருதராஷ்டிரனுடன் கூடிய குருக்கள் நின்று கொண்டிருந்தனர்.(16,17) குரு குலத்தில் முதன்மையானோரான அவர்கள், இவ்வாறு கங்கையின் மகனுடைய உடலை எரித்து, முனிவர்கள் துணையுடன் புனித பாகீரதிக்கு {கங்கைக்குச்} சென்றனர்.(18) அந்த இடத்திற்கு வியாசர், நாரதர், அசிதர், கிருஷ்ணன், பாதர குலத்தின் பெண்கள், ஹஸ்தினாபுரவாசிகள் ஆகியோர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(19) அந்தப் புனித ஆற்றுக்கு வந்தடைந்த அனைவரும், உயர் ஆன்ம கங்கைமைந்தருக்கு நீர்க்காணிக்கைகளை முறையாகச் செலுத்தினர்.(20)

பாகீரதி தேவி, தன் மகனுக்கான நீர்க்காணிக்கைகள் செலுத்தப்பட்ட பிறகு, கவலையால் உடைந்தவளாக அழுது கொண்டே அந்த ஓடையில் இருந்து எழுந்தாள்.(21) அவளது புலம்பல்களுக்கு மத்தியில் குருக்களிடம் அவள், “பாவமற்றவர்களே, (என் மகனுக்கு) நேர்ந்ததனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன்; கேட்பீராக.(22) அறவொழுக்கம் மற்றும் இயல்புகளைக் கொண்டவனும், உயர்ந்த பிறவியையும், ஞானத்தைக் கொண்டவனுமான என் மகன், தன் குலத்துப் பெரியவர்கள் அனைவருக்கும் நன்மை செய்பவனாக இருந்தான். அவன் தன் தந்தையிடம் பக்தி கொண்டவனாகவும், உயர்ந்த நோன்புகளைக் கொண்டவனாகவும் இருந்தான்.(23) பெருஞ்சக்தியுடன் கூடிய தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ஜமதக்னி குல ராமரால் {பரசுராமராலும்} வெல்லப்பட முடியாதவனாக அவன் இருந்தான். ஐயோ, அந்த வீரன் சிகண்டியால் கொல்லப்பட்டானே.(24) மன்னர்களே, என் மகன் போனதைக் கண்டும் பிளாக்காமல் இருக்கும் என் இதயம் இரும்பாலானது என்பதில் ஐயமில்லை.(25) காசியில் நடந்த சுயம்வரத்திற்குத் தனியாக ஒற்றைத் தேரில் சென்று, அங்கே கூடியிருந்த க்ஷத்திரியர்களை வீழ்த்தி, (தன் சகோதரனுக்காக) மூன்று இளவரசிகளை அபகரித்து வந்தான்.(26) அவனது வலிமைக்கு இணையாக இந்தப் பூமியில் எவனும் இல்லை. ஐயோ, அவ்வாறு இருந்த என் மகன் சிகண்டியால் கொல்லப்பட்டான் என்று கேட்டும் என் இதயம் பிளக்காமல் இருக்கிறதே” என்று சொல்லி புலம்பினாள்.(27)

பலமிக்கக் கிருஷ்ணன், பேராறாக ஓடும் அந்தத் தேவியின் புலம்பல்களைக் கேட்டு, ஆறுதலான பல சொற்களைச் சொல்லி அவளைத் தேற்றினான். கிருஷ்ணன், “ஓ! இனியவளே, ஆறுதலடைவாயாக. ஓ அழகிய பண்புகளைக் கொண்டவளே, வருந்தாதே. உன் மகன் இன்பம்நிறைந்த உயர்ந்த உலகத்திற்குச் சென்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.(28-30) அவர் வசுக்களில் பெருஞ்சக்தி கொண்டவராக இருந்தார். ஓ! அழகிய பண்புகளைக் கொண்டவளே, ஒரு சாபத்தின் மூலம் அவர் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தார். அவருக்காக வருந்துவது உனக்குத் தகாது.(31) க்ஷத்திரியக் கடமைகளுக்கு ஏற்புடைய வகையில், போர்க்களத்தில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் தனஞ்செயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டார். ஓ! தேவி, அவர் சிகண்டியால் கொல்லப்படவில்லை.(32) பீஷ்மர் தம் கரத்தில் வில் வளைத்து நின்றால், தேவர்களின் தலைவனாலும் அவரைக் கொல்ல முடியாது.(33) ஓ! அழகிய முகம் கொண்டவளே உன் மகன் இன்பமாகச் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார். தேவர்கள் அனைவரும் கூடியிருந்தாலும் அவரைப் போரில் கொல்ல முடியாது.(34) எனவே, ஓ! கங்கா தேவி, குரு குலத்தின் மகனுக்காக நீ வருந்தாதே. ஓ! தேவி, அவர் வசுக்களில் ஒருவராவார். உன் மகன் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார். உன் இதய நோய் அகலட்டும்” என்றான் {கிருஷ்ணன்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளான அவள் {கங்கை}, ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ணனாலும், வியாசராலும் இவ்வாறு சொல்லப்பட்டதும், தன் துயரைக் கைவிட்டு உள்ளச் சமநிலையை அடைந்தாள்.(36) ஓ! ஏகாதிபதி, அங்குக் கிருஷ்ணனின் தலைமையில் இருந்த மன்னர்கள் அனைவரும், முறையாக அந்தத் தேவியைக் கௌரவித்து, அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவளது கரையில் இருந்து அகன்று சென்றனர்”.(37)

ஸ்வர்க்காரோஹணிக உப பர்வம் முற்றும்

அநுசாஸன பர்வம் முற்றிற்று 

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ தான தர்ம உப பர்வம்-பகுதி -2-ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-ஸ்ரீ சாவித்ரி -ஸ்ரீ காயத்ரி-மந்திரம்!-

October 18, 2025

க்ஷத்ரபந்துவும், சண்டாளனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 101-பிராமணர்களின் பொருளைக் கவர்வதனால் உண்டாகும் பாவத்தைக் குறித்து க்ஷத்ரபந்துவுக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களின் தலைவரே, பிராமணர்களுக்குச் சொந்தமான பொருட்களைக் களவாடவோ, அபகரிக்கவோ செய்யும் மூடர்களும், அற்பர்களும், பாவம் நிறைந்தவர்களுமான மானிடர்கள் எங்கே செல்கிறார்கள்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக ஒரு சண்டாளனுக்கும், ஓர் இழிந்த க்ஷத்திரியனுக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் குறிப்பிடப்படுகிறது[1].(2)அரச வகையைச் சார்ந்த அம்மனிதன் {க்ஷத்ரபந்து}, “ஓ! சண்டாளா, நீ வயதில் முதிர்ந்தவனாகத் தெரிந்தாலும், நடத்தையில் சிறுவனாகவே தெரிகிறாய். நாய்கள் மற்றும் கழுதைகளால் எழுப்பப்பட்ட புழுதியால் உன் உடல் பூசப்பட்டிருந்தாலும், அப்புழுதியைக் கவனத்தில் கொள்ளாமல், உன் உடலில் விழுந்த நோய்தடுக்கும் பாலின் சிறு துளிகளைக் குறித்துக் கவலைப் படுகிறாய்.(3) சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இத்தகைய செயல்கள் அறவோரால் நிந்திக்கப்படுக்கின்றன என்பது வெளிப்படை. உண்மையில், உன் உடலில் இருந்து பால்துளிகளை நீ ஏன் கழுவ முயல்கிறாய்?” என்று கேட்டான்[2].(4)சண்டாளன் {க்ஷத்ரபந்துவிடம்}, “ஓ! மன்னா, முன்பொரு காலத்தில் ஒரு பிராமணருடைய குறிப்பிட்ட பசுக்கள் களவாடப்பட்டன. அவ்வாறு அவை அபகரிக்கப்படும் போது, அவற்றின் மடியில் இருந்து சிந்திய பால் சாலையோரத்தில் வளர்ந்த சில சோமக் கொடிகளில் விழுந்தது. பால்படிந்த அந்தச் செடிகளின் சாற்றைக் குடித்த பிராமணர்களும்,(5) அந்தச் சோமம் பருகப்பட்ட வேள்வியைச் செய்த மன்னனும் நரகில் மூழ்கினார்கள். உண்மையில், ஒரு பிராமணனுக்கு உரிய ஏதோவொன்றை அபகரித்தால் மன்னனும், அவனுக்குத் துணைபுரிந்த பிராமணர்கள் அனைவரும் நரகிற்குச் செல்ல வேண்டும்.(6) பிராமணனின் பசுக்களைக் களவு செய்த அரண்மனையில் உள்ள பால், நெய், தயிர் ஆகியவற்றைப் பருகிய மனிதர்க்ள அனைவரும், நரகத்தில் வீழ்வார்கள்.(7) களவு செய்யப்பட்ட பசுக்களும், தாங்கள் பெருங்கவனத்துடன் கவனிக்கப்பட்டாலும் தங்கள் உடல்களை அசைத்து, தங்களைக் களவு செய்தோரின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளையும், மன்னன் மற்றும் ராணியையும் தங்கள் பாலால் கொன்றுவிடுகின்றன.(8) ஓ! மன்னா, என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்வாறு களவு செய்யப்பட்ட பசுக்களை வைத்திருந்த இடத்தில் பிரம்மச்சரிய நோன்பை நோன்று வாழ்ந்து வந்தேன். நான் இரந்து பெற்ற உணவில் அந்தப் பசுக்களின் பால் தெளிக்கப்பட்டது.(9) ஓ! அரச வகையைச் சார்ந்தவனே, அந்த உணவை உண்டதால் நான் இப்பிறவியில் சண்டாளனானேன். ஒரு பிராமணனின் பசுக்களைக் களவு செய்த மன்னனும் புகழ்க்கேட்டுக்குரிய கதியையே அடைந்தான்.(10)

எனவே, எவனும் பிராமணனுக்குச் சொந்தமான எதையும் களவிடவோ, அபகரிக்கவோ கூடாது. ஒரு பிராமணனுக்குச் சொந்தமான பால் தெளிக்கப்பட்ட உணவை உண்டதன் விளைவால் நான் என்ன நிலையை அடைந்திருக்கிறேன் என்பதைக் காண்பாயாக.(11) இதன் காரணமாகவே ஞானம் கொண்ட மனிதனால் சோமக் கொடிகள் {சோமலதை} விற்கப்படக்கூடாது. சோமச்செடியை {சோமலதை} விற்பவனை ஞானிகள் நிந்திக்கிறார்கள்.(12) உண்மையில், ஓ! மகனே, சோமத்தை விற்பனை செய்பவன், வாங்குபவன் ஆகிய இருவரும் இவ்வுலகத்தில் இருந்து அகன்று யமலோகம் செல்லும்போது, ரௌரவன் என்றழைக்கப்படும் நரகில் மூழ்குகிறார்கள்.(13) வேதஞானம் கொண்ட மனிதன், சோமத்தை முறையாக விற்றால் தன் அடுத்தப் பிறவியில் வட்டிக்கு விடுபவனாகப் பிறந்து விரைவில் அழிவைச் சந்திக்கிறான்.(14) முன்னூறு முறை நரகில் மூழ்கும் அவன், மனிதக் கழிவை உண்டு வாழும் ஒரு விலங்காகிறான். தாழ்ந்த, இழிந்த மனிதருக்குத் தொண்டாற்றுபவன், செருக்குடையவன், நண்பனின் மனைவியைக் கற்பழிப்பவன் ஆகியோர்(15) ஒரே தராசில் எதிரெதிராக எடை பார்க்கப்பட்டால், அது கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்த செருக்கே கனமானதாக இருப்பதைக் காட்டும். பாவம் நிறைந்ததும், ஏற்பில்லாத நிறமும் கொண்டதும், மெலிந்திருப்பதுமான இந்த நாயைப் பார்ப்பாயாக.(16) (இது முந்தைய வாழ்வில் மனிதனாக இருந்தது). செருக்கின் மூலமே உயிரினங்கள் இத்தகைய பரிதாபகரமான கதியை அடைகின்றன. என்னைப் பொறுத்தவரையில், எனது முற்பிறவி ஒன்றில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து,(17) அறிவின் அனைத்துக் கிளைகளிலும், அறிவியல்கள் அனைத்திலும் தேர்ச்சியடைந்தவனாக இருந்தேன். இக்குற்றங்களின் ஆழத்தை அறிந்தவனாக இருந்தாலும், செருக்கின் வசப்பட்ட நான்,(18) குருட்டுத் தன்மையை அடைந்து, விலங்குகளின் முதுகெலும்பைப் பற்றியிருக்கும் இறைச்சியை உண்டேன். அத்தகைய நடத்தை மற்றும் அத்தகைய உணவின் விளைவால்,(19) நான் இந்நிலையை அடைந்தேன். காலம் கொண்டு வரும் நேர்மாறு நிலைகளைக் காண்பாயாக. ஆடையின் ஒரு முனையில் நெருப்புப் பற்றப்பட்ட மனிதனைப் போலவோ, வண்டுகளால் தொடரப்படுபவனைப் போலவோ,(20) புழுதி பூசப்பட்டு அச்சத்தால் நான் ஓடுவதைப் பார்.

இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள், வேத கல்வியின் மூலமும், ஞானிகளால் அறிவிக்கப்பட்ட பிற வகைக் கொடைகளின் மூலமும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுகிறார்கள். ஓ! அரச வகையைச் சார்ந்தவனே {க்ஷத்ரபந்துவே}, பாவம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு பிராமணன், அனைத்து வகைப் பற்றுகளையும் துறந்து, காட்டு வாழ்வுமுறையை {வானப்பிரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றினால் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுவான். ஓ க்ஷத்திரியர்களின் தலைவா, நான் இப்பிறவியில் பாவம் நிறைந்த வகையில் பிறந்திருக்கிறேன்.(21-23) அனைத்துப் பாவங்களில் இருந்தும் என்னைத் தூய்மையாக்கிக் கொள்வதில் எவ்வாறு வெல்லப்போகிறேன் என்பதை நான் தெளிவாகக் காணத் தவறுகிறேன். முற்பிறவியில் செய்த ஏதோவொரு தகுதிமிக்கச் செயலின் விளைவால், முற்பிறவிகளின் நினைவை நான் இழக்காமல் இருக்கிறேன்.(24) ஓ! மன்னா, உன் கருணைக்கே நான் என்னை விடுகிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். என் ஐயத்தை நீ தீர்ப்பாயாக. எந்த மங்கல ஒழுக்க வழிமுறையின் மூலம் நான் என் விடுதலையை {முக்தியை} அடைய விரும்ப வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, எந்த வழிமுறைகளின் மூலம் நான் சண்டாளன் என்ற என் நிலையைக் கைவிடுவதில் வெல்வேன்?” என்று கேட்டான்.(25)

அதற்கு அந்த அரச வகையினன், “ஓ! சண்டாளா, நீ விடுதலையை {முக்தியை} அடையக்கூடிய வழிமுறையை அறிவாயாக. ஒரு பிராமணனுக்காக உன் உயிர்மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விரும்பத்தக்க கதியை அடையலாம்.(26) ஒரு பிராமணனின் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் ஆகுதியாக, விலங்குகள் மற்றும் பறவைகளின் இரையாக உன் உடலை வீசுவதன் மூலம், உண்மையில் இவ்வாறு உயிர் மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விடுதலையை {முக்தியை} அடையலாம். வேறு எந்த வழிமுறையின் மூலமும் உன்னால் அதை அடைவதில் வெல்லமுடியாது” என்றான்”.(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகைவர்களைச் சுடுபவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சண்டாளன், ஒரு பிராமணனின் செல்வத்தைக் காக்கும் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் தன் உயிர் மூச்சை ஆகுதியாக ஊற்றியதன் விளைவாக மிக விரும்பத்தக்க கதியை அடைந்தான்.(28) எனவே, ஓ! மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ நித்திய இன்பத்தையே கதியா அடைய விரும்பினால் பிராமணர்களின் உடைமைகளை நீ எப்போதும் பாதுகாக்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(29)

புண்யலோகங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 102-புண்ணிய உலகங்கள் அனைத்தையும் குறித்து கௌதமருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அறவோர் அனைவரும் மரணத்திற்குப் பிறகு ஒரே உலகத்தையே அடைவதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதரே, அவர்களுக்கிடையிலான நிலையில் உண்மையில் வேறு இருக்கிறதா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “ஓ! பிருதையின் மகனே, பல்வேறு செயல்களின் மூலம் மனிதர்கள் பல்வேறு உலகங்களை அடைகின்றனர். அறவொழுக்கம் கொண்டவர்கள் இன்பலோகங்களை அடைகின்றனர், அதே வேளையில் பாவம் நிறைந்தவர்கள், துன்பம் நிறைந்த உலகங்களை அடைகின்றனர்.(2) ஓ! மகனே, இதுதொடர்பாகத் தவசியான கௌதமருக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) கௌதமர் என்ற பெயரையுடையவரும், மென்மையானவனும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவரும், புலன்கள் அனைத்தையும் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவருமான குறிப்பிட்ட பிராமணர், தாயை இழந்து உற்சாகமற்ற நிலையில் இருந்த ஒரு யானைக்குட்டியைக் கண்டார்.(4) கருணை நிறைந்தவரும், நோன்புகள் நோற்பதில் உறுதியானவருமான அந்தத் தவசி அந்த யானைக் குட்டியை வளர்த்தார். நீண்ட காலம் கழித்து அந்தச் சிறு விலங்கு பெரிய, வலிமைமிக்க யானையாக வளர்ந்தது.(5)

ஒருநாள், இந்திரன், மன்னன் திருதராஷ்டிரனின் வடிவை ஏற்றுக் கொண்டு, மலையைப் போன்று பெரிதாக இருந்ததும், மதநீர் பெருகி வழிந்ததுமான அந்த வலிமைமிக்க யானையை அபகரித்தான்.(6) இழுத்துச் செல்லப்படும் யானைக் கண்டவரும், கடும் நோன்புகள் நோற்பவருமான பெரும்பதவசி கௌதமர், மன்னன் திருதராஷ்டிரனிடம்,(7) “ஓ! நன்றிகெட்ட திருதராஷ்டிரா, என் யானைக் களவாடாதே. பெரும் துன்பத்துடன் நான் அஃதை என் மகனைப் போலவே வளர்த்து வந்தேன். அறவோருக்கிடையில் ஏழு சொற்கள் பரிமாறப்படுவதிலேயே நட்பு உதிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, ஒரு நண்பனுக்குத் தீங்கிழைக்கும் பாவம் உன்னை அண்டாது பார்த்துக் கொள்வாயாக.(8) ஓ! மன்னா, எனக்காக விறகும், நீரும் கொண்டு வருவதும், நான் வெளியே சென்றிருக்கும்போது ஆசிரமத்தைப் பாதுகாப்பதும், கற்றுக் கொடுப்பவருக்குக் கீழ்ப்படிவதும், அடக்கமானதும், ஆசானின் ஆணைகளைச் செய்வதில் கவனமுள்ளதும், மென்மையானதும், நன்கு பயிற்சி பெற்றதும், நன்றிநிறைந்ததும், எனக்கு மிகவும் அன்பானதுமான இந்த யானையைக் கொண்டு போகாதே. என்னுடைய எதிர்ப்பையும், கதறல்களையும் அலட்சியம் செய்து அதைக் கொண்டுபோகாதே” என்றார்.(9,10)

திருதராஷ்டிரன் {கௌதமரிடம்}, “நான் உமக்கு ஓராயிரம் பசுக்களையும், நூறு பணிப்பெண்களையும், ஐநூறு தங்க நாணயங்களையும் தருகிறேன். மேலும், ஓ! பெரும் முனிவரே, பல்வேறு வகைச் செல்வங்களையும் உமக்குத் தருகிறேன். யானைகளைக் கொண்டு பிராமணர்களுக்கு என்ன பயன் ஏற்படப்போகிறது?” என்று கேட்டான்.(11)

கௌதமர் {திருதராஷ்டிரனான இந்திரனிடம்}, “ஓ! மன்னா, உன் பசுக்கள், பணிப்பெண்கள், தங்கநாணயங்கள், பல்வேறு ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகைச் செல்வங்களையும் நீயே வைத்துக் கொள்வாயாக. ஓ! ஏகாதிபதி, செல்வத்தைக் கொண்டு பிராமணர்களுக்கு ஆவதென்ன?” என்று கேட்டார்.(12)

திருதராஷ்டிரன், “யானைகளைக் கொண்டு பிராமணர்களுக்குப் பயனேதுமில்லை. ஓ! கல்விமானான பிராமணரே உண்மையில் யானைகள் அரச வகையினருக்கானவையே. யானைகளில் முதன்மையான இந்த விலங்கை என் வாகனப் பயன்பாட்டுக்காகக் கொண்டு செல்வதால் நான் எந்தப் பாவத்தையும் இழைத்ததாகக் கருதமுடியாது. ஓ! கௌதமரே, நீர் இவ்வாறு என்னைத் தடுக்காதீர்” என்றான்.(13)

கௌதமர், “ஓ! சிறப்புமிக்க மன்னா, அறவோர் இன்பமாகவும், பாவிகள் துன்பத்துடனும் வாழும் யமலோகத்திற்குச் சென்றாவது நான் என் யானையை உன்னிடம் இருந்து பெறுவேன்” என்றார்.(14)

திருதராஷ்டிரன், “(அறச்) செயலேதும் செய்யாதவர்கள், நம்பிக்கையற்றவர்கள், நாத்திகர்கள், பாவம் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்கள், எப்போதும் புலன்களை நிறைவடையச் செய்பவர்கள் ஆகியோர் மட்டுமே யமலோகம் சென்று துன்பத்தை அனுபவிப்பார்கள். திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான், உயர்ந்த உலகத்திற்கே செல்வான்” என்றான்.(15)

கௌதமர், “யமலோகத்தில் மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அங்கே பொய்யேதும் சொல்ல முடியாது. அவ்விடத்தில் உண்மை மட்டுமே நிலைத்திருக்கும். அங்கே வலியோரை பலவீனர் தண்டிக்கிறார்கள். அங்கே {ஸம்யமினி எனும் அந்த யமபட்டணத்திற்குச்} சென்று நான் உன்னிடம் இருந்து இந்த யானையைப் பலவந்தமாகப் பெறுவேன்” என்றார்.(16)

திருதராஷ்டிரன், “ஓ! பெருந்தவசியே செருக்கால் போதையுண்டிருக்கும் மனிதர்களும், தமக்கை, தந்தை, தாய் ஆகியோரிடம், பகைவரிடம் நடந்து கொள்வது போல நடப்பவர்களும்தான் அத்தகைய உலகத்திற்குச் செல்வார்கள். உண்மையில், நான் அங்கே செல்லப் போவதில்லை உயர்ந்த உலகத்திற்கே செல்வேன்” என்றான்.(17)

கௌதமர், “அனைத்து வகை இன்பங்களுக்கும், வசதிகளுக்கும் தகுந்த உயர்ந்த அருளைக் கொண்ட மனிதர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் மன்னன் வைஸ்வரணனுடைய {குபேரனுடைய} உலகத்தை அடைகிறார்கள். (அங்கே வசிப்பவர்களுக்குத் தங்கள் ஆடல் பாடல்களால் மகிழ்வூட்டிக் கொண்டு) கந்தர்வர்களும், யக்ஷர்களும், அப்சரஸ்களும் அங்கே வாழ்கிறார்கள். ஓ! மன்னா, அங்கேயும் சென்று என் யானையைத் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(18)

திருதராஷ்டிரன், “விருந்தினருக்கான விருந்தோம்பலை நோன்பாகக் கருதுவோரும், (வேறு நோக்கங்களைக் கொண்ட) நல்ல நோன்புகளை நோற்போரும், பிராமணர்களுக்கு உறைவிடமளிப்பவர்களும், தங்களைச் சார்ந்திருப்போர் அனைவருக்கும் பகிர்ந்தளித்தபிறகு எஞ்சியிருப்பதை உண்பவர்களும், குபேரனின் மந்தாகினி என்றழைக்கப்படும் உலகத்தை அலங்கரிப்பார்கள். (எனக்கு) ஓர் உயர்ந்த உலகம் ஒதுக்கப்பட்டிருப்பதால் நான் அங்கே செல்ல மாட்டேன்” என்றான்.(19)

கௌதமர், “கின்னரர்களின் இனிய குரலை எதிரொலிப்பதும், பரந்து விரிந்த கிளைகளைக் கொண்ட {ஸுதர்சனை என்றழைக்கப்படும்} அழகிய ஜம்பு {நாவல்} மரங்களால் அருளப்பட்டதும், மலர்கள் நிறைந்ததுமான மேருவின் {மேரு மலையில்} சிகரத்திலுள்ள இனிமைநிறைந்த காடுகளுக்கு நீ சென்றால், நான் அங்கேயும் வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன் ” என்றார்.(20)

திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, மென்மையான இயல்புகளைக் கொண்டவர்களும், வாய்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், சாத்திரப் பெருங்கல்வி கற்றவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களும், வரலாறுகள் அனைத்துடன் கூடிய புராணங்களைப் படிப்பவர்களும், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், பிராமணர்களுக்குத் தேனைக் கொடையளிப்பவர்களுமான பிராமணர்களே அத்தகை உலகங்களுக்குச் செல்வார்கள். நான் உயர்ந்த உலகத்திற்கே செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்ல மாட்டான். வேறு இன்பலோகம் எதையும் நீர் நன்கறிந்திருந்தால் அது குறித்து எனக்குச் சொல்வீராக, {இவ்வளவு வேகமாகச் செல்லும்} நான் அங்கேயும் செல்லலாம்” என்றான்.(21,22)

கௌதமர், “நாரதருக்குரியதும், அவரால் மிகவும் விரும்பப்படுவதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும், கின்னர இளவரசனின் மெல்லிசைப் பாடல்களின் எதிரொலியுடன் கூடியதும், கந்தர்வர்களுக்கும் அப்சரஸ்களுக்கும் நித்திய வசிப்பிடமாக இருப்பதுமான காட்டுக்கு நீ சென்றால், நான் அங்கேயும் உன்னைப் பின்தொடர்ந்து வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்குக் கட்டாயப்படுத்துவேன் ” என்றார்.(23)

திருதராஷ்டிரன், “ஒருபோதும் பிச்சை கேட்காதவர்களும், இசையையும், நடனத்தையும் விளைவிப்பவர்களும், இன்பமாகத் திரிபவர்களுமாக இருப்பவர்கள் அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். ஓ! பெரும் முனிவரே, நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில், திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(24)

கௌதமர், “ஓ! மன்னா, எங்கே உத்தரக் குருக்கள் அழகுடன் சுடர்விட்ட படியே தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்துகிறார்களோ, எங்கே நெருப்பில் பிறந்தவர்களும், நீரில் பிறந்தவர்களும், மலைகளில் பிறந்தவர்களும் மகிழ்ச்சியாக வசிக்கிறார்களோ,(25) எங்கே அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையைச் சக்ரன் பொழிகிறானோ, எங்கே பெண்கள் போக்குவரத்து மற்றும் ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தும் எவ்வகை விதிகளாலும் கட்டுப்படுத்தப்படாமல் முற்றான சுதந்தரத்துடன் வாழ்கிறார்களோ, எங்கே இரு பாலினத்தவர்களிடமும் பொறாமையுணர்வு இல்லையோ அங்கே நீ சென்றால், நான் அங்கேயும் வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(26)

திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, இன்பநுகர் பொருட்கள் அனைத்திலும் உள்ள ஆசைகளில் இருந்து விடுபட்டவர்களும், இறைச்சியைத் தவிர்த்தவர்களும், தண்டக்கோலை ஒருபோதும் எடுக்காதவர்களும் {தண்டிப்பதைக் கைவிட்டவர்களும்}, அசைவன மற்றும் அசையாதனவற்றுக்கும் ஒருபோதும் துன்பம் செய்யாதவர்களும், உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாவாகத் தம்மை நினைப்பவர்களும்,(27) ஓ! பெரும் முனிவரே, எவருக்கும் ஆசி கூறுவதன் மூலம் பிறரை ஒருபோதும் அழைக்காதவர்களும், ஆணவம் என்ற கருத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர்களும், அனைத்து வகைப் பற்றுகளையும் கைவிட்டவர்களும், ஈட்டல் இழப்புகளையும், இகழ்ச்சி புகழ்ச்சிகளையும் இணையாக நினைப்பவர்களுமான மனிதர்களால் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்ல முடியும். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(28)

கௌதமர், “இவற்றுக்கு அடுத்ததாக, சிறந்த நறுமணங்களால் மணங்கமழ்பவையும், அனைத்து வகை ஆசைகள் மற்றும் கவலையிகளில் இருந்து விடுபட்டவையும், அழகியவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. அவை உயர்ஆன்ம மன்னன் சோமனின் வசிப்பிடங்களாக இருக்கின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் நான் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(29)

திருதராஷ்டிரன், “எக்கொடையும் பெறாமல் எப்போதும் கொடையளிப்பவர்களும், பிறரிடம் இருந்து எத்தொண்டையும் ஒருபோதும் ஏற்காதவர்களும், தகுந்த மனிதருக்குக் கொடுக்க முடியாத எந்தப் பொருளையும் கொள்ளாதவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவர்களும், அனைவருக்கும் கருணை காட்டுபவர்களும்,(30) மன்னிக்கும் இயல்புகளைக் கொண்டவர்களும், பிறரைக் குறித்துத் தீங்கு பேசாதவர்களும், கருணை காப்புறை வீசி அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பவர்களும், எப்போதும் நடத்தையில் அறம்சார்ந்தவர்களுமான மனிதர்களால் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்ல முடியும். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(31)

கௌதமர், “இவற்றுக்கு அடுத்ததாக, ஆசை, இருள் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவையும், உயர் ஆன்ம சூரிய தேவனின் காலடியில் கிடப்பவையும், அழகில் சுடர்விடுபவையும், நித்திமானவையுமான வேறு உலகங்கள் இருக்கின்றன. நீங்க அங்கே சென்றால், அங்கேயும் நான் வந்து, இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(32)

திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, வேத கல்வியில் கவனமாக இருப்பவர்கள், ஆசான்களின் தொண்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தவங்கள் மற்றும் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள், வாய்மையில் உறுதியானவர்கள், கீழ்ப்படியாமை, அல்லது ஆசான்களிடம் பகை என்ற மணம் கொண்ட எதையும் ஒருபோதும் சொல்லாதவர்கள், எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள், பெரியோர்கள் மற்றும் ஆசான்களுக்குத் தொண்டு செய்ய எப்போதும் ஆயத்தமாக இருப்பவர்கள், (மனத்திலும், உடலிலும்) தூய்மையாக இருப்பவர்கள், ஆன்மத் தூய்மை கொண்டவர்கள், வாக்கை அடக்கியவர்கள், வாய்மையில் உறுதியாக இருப்பவர்கள், வேதங்களை நன்கறிந்தவர்கள் ஆகியோர் அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(33,34)

கௌதமர், “அதற்குமடுத்து, அழகில் சுடர்விடுபவையும், சிறந்த நறுமணங்களால் மணங்கமழ்பவையும், ஆசையில் இருந்து விடுபட்டவையும், கவலைகள் ஏதும் அற்றவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. அவை உயர் ஆன்ம மன்னன் வருணனின் வசிப்பிடமாக இருக்கின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து, இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(35)

திருதராஷ்டிரன், “சாதுர்மாஸ்யம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்றுத் தேவர்களை வழிபடுபவர்களும், நூற்றுப்பத்து வேள்விகளைச் செய்பவர்களும், வேதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடைய வகையில் மூன்று வருடங்கள் நாள்தோறும் அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும்,(36) அனைத்துக் கடமைகளின் சுமையைவிட்டு விலகாமல் சுமப்பவர்களும், அறவோரால் நடக்கப்பட்ட பாதையில் உறுதியாக நடப்பவர்களும், அற ஆன்மா கொண்டோரால் பின்பற்றபட்ட ஒழுக்க நடைமுறைகளை உறுதியாகப் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(37)

கௌதமர், “அவற்றுக்கும் மேல், ஆசை மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவையும், அடைதற்கரியவையும், அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படுபவையுமான இந்திரனின் உலகங்கள் இருக்கின்றன. ஓ! மன்னா, வலிமையும், சக்தியும் கொண்ட இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாவது எனக்கு இந்த யானையைத் தருமாறு உன்னைக் கட்டையாப்படுத்துவேன்” என்றார்.(38)

திருதராஷ்டிரன், “நூறு வருடங்கள் வாழ்பவர்களும், வீரம் நிறைந்தவர்களும், வேதங்கற்றவர்களும், பக்தியுடன் வேள்விகளைச் செய்பவர்களுமான மனிதர்களே சக்ரனின் உலகத்திற்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில், திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(39)

கௌதமர், “சொர்க்கங்களுக்கு மேலே, மேன்மையான இன்பத்தைக் கொண்டவையும், அனைத்து வகை மகிழ்ச்சியாலும் நிறைந்தவையும், கவலை இல்லாதவையுமான பிரஜாபதிகளின் உலகங்கள் இருக்கின்றன. எவரிடம் இருந்து படைப்பு உண்டானதோ அந்தப் பலமிக்கவர்களுக்குச் சொந்தமான அவை அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படுகின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(40)

திருதராஷ்டிரன், “ராஜசூய வேள்வியின் நிறைவில் நீராடியவர்களும், அற ஆன்மா கொண்டவர்களும், தங்கள் குடிமக்களை உரிய முறையில் பாதுகாத்தவர்களும், குதிரை வேள்வியின் நிறைவில் புனித நீரால் தங்கள் அங்கங்களைக் கழுவியவர்களுமான மன்னர்களே அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(41)

கௌதமர், “அவற்றுக்கு அடுத்து, இனிய நறுமணங்களால் மணங்கமழ்பவையும், ஆசையிலிருந்து விடுபட்டவையும், கவலைகள் அனைத்தையும் கடந்தவையும், அழகில் சுடர்விடுபவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. ஒடுக்குமுறைகளே ஒருபோதும் இல்லாதவையும், அடைவதற்கரியவையுமான அவை கோலோகங்களாகும் {கோ=பசு_க்களின் உலகம்}. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னை நான் வற்புறுத்துவேன்” என்றார்.(42)

திருதராஷ்டிரன், “ஆயிரம் பசுக்களைக் கொண்டவனும், ஒவ்வொரு வருடமும் நூறு பசுக்களைக் கொடையளிப்பவனும், அல்லது நூறு பசுக்களைச் சொந்தமாகக் கொண்டு தன் சக்திக்குத் தக்கபடி வருடத்திற்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பவனும், அல்லது பத்தோ, ஐந்தோ பசுக்களை மட்டுமே சொந்தமாகக்கொண்டு, அவற்றில் இருந்து ஒன்றைக் கொடையளிப்பவனும்,(43) நாள்தோறும் பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று முதிய வயதை அடைந்தவர்களும், வேத அறிவிப்புகளுக்குக் கீழ்ப்படிபவர்களும், மனோசக்தி கொண்டவர்களும், புனித நீர்நிலைகள் மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்பவர்களும் இன்பத்துடன் கோலோகத்தில் வசிக்கிறார்கள்.(44) பிரபாஸம், மானஸம் {மானஸஸரோவரம்}, புஷ்கரத் தடாகங்கள், மகாஸரஸ் என்றழைக்கப்படும் பெருந்தடாகம், நைமிசமெனும் புனிதக்காடுகள், பாஹுதை, கரதோயை,(45) கங்கை, கயசிரஸ், விபாசை, ஸ்தூலபாலுகை, கிருஷ்ணா, (பஞ்சாபின்) ஐந்து ஆறுகள், {தூஷ்ணீங்கங்கை, சனைர்க்கங்கை}, மஹாஹ்ரதம் என்றழைக்கப்படும் பெரிய தடாகம்,(46) கோமதி, கௌசிகி, சம்பை, ஸரஸ்வதி, திரஷத்வதி, யமுனை ஆகியவற்றுக்குச் செல்லும் சிறப்புமிக்கவர்களும், நோன்புகளை உறுதியாக நோற்பவர்களும், இந்தப் புனித நீர்நிலைகளுக்குப் பயணிப்பவர்களுமான பிராமணர்கள் நீர் சொன்ன உலகங்களுக்குச் செல்வார்கள். தெய்வீக உடல்களுடன் கூடியவர்களும், தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் எப்போதும் இனிய நறுமணங்களை வெளிப்படுத்தியபடியே இன்பத்திலும், மகிழ்ச்சியிலும் அவ்வுலகங்களுக்குச் செல்வார்கள். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(47,48)

கௌதமர், “அவற்றுக்கு அடுத்ததாக, குளிருக்கோ சிறிதும் அச்சமில்லாதவையும், வெப்பமோ, பசியோ, தாகமோ, துன்பமோ, கவலையோ, இன்பமோ இல்லாதவையும்,(49) ஏற்புடைய, ஏற்பில்லாத எவரும் இல்லாதவையும், நண்பனோ, பகைவனோ அற்றவையும், முதுமையோ, மரணமோ இல்லாதவையும், அறமோ, பாவமோ இல்லாதவையுமான உலகங்கள் இருக்கின்றன. ஆசையில் இருந்து விடுபட்டதும், ஒரே மாதிரியான மகிழ்ச்சி நிறைந்ததும், ஞானம் உள்ளதும், சத்வ குணம் கொண்டதுமான சுயம்புபிரம்மனின் புனித வசிப்பிடத்திற்கே சென்றாலும், இந்த யானையை எனக்குத் தருமாறு நான் உன்னை வலியுறுத்துவேன்” என்றார்.(50,51)

திருதாரஷ்டிரன், “பற்றுகளில் இருந்து விடுபட்டோரும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், முதன்மையான நோன்புகளை நோற்பதில் உறுதியானவர்களும், மன அமைதி சார்ந்த யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், (இப்பிறவியிலேயே) சொர்க்கத்தின் மகிழ்ச்சியை அடைந்தவர்களும், சத்வ குணம் கொண்டவர்களுமான மனிதர்கள் புனிதமான பிரம்மலோகத்தை அடைகிறார்கள். ஓ! பெருந்தவசியே, உம்மால் திருதராஷ்டிரனை அங்கே காண இயலாது” என்றான்.(52,53)

கௌதமர், “எங்கே முதன்மையான ரதந்தரங்கள் பாடப்படுகின்றவோ, எங்கே பௌண்டரீக வேள்விகளைச் செய்வதற்காகப் புனிதக் குசப் புற்கள் விரவிய பீடங்கள் இருக்கின்றனவோ, சோமம் பருகும் பிராமணர்கள் எங்கே சிறந்த வாகனங்களில் பயணிக்கிறார்களோ, அங்கே சென்றாலும், இந்த யானையைத் தருமாறு நான் உன்னை வற்புறுத்துவேன்.(54) அண்டத்திலுள்ள உலகங்கள் அனைத்தின் ஊடாக உலவும் நீ, நூறு வேள்விகளைச் செய்தவனும், விருத்திரனைக் கொன்றவனுமான தேவன் {இந்திரன்} என்று நினைக்கிறேன். நான் மனோபலவீனத்துடன் உன்னிடம் பேசிய சொற்களினால் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்” என்றார்.(55)

நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, “ஆம், நான் மகவத்தே {மகவானே}. நான் இந்த யானையைப் பிடிப்பதற்காக மனிதர்களின் உலகத்திற்கு வந்தேன். நான் உம்மை வணங்குகிறேன். எனக்கு ஆணையிடுவீராக. நீர், சொல்ல விரும்புபவை அனைத்தையும் நான் நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(56)

கௌதமர், “ஓ! தேவர்களின் தலைவா, வெண்ணிறம் கொண்டதும், பத்து வயதே கொண்ட குட்டியுமான இந்த யானையை எனக்குக் கொடுப்பாயாக. நான் இஃதை என் பிள்ளையாகவே வளர்த்தேன். இந்தக் காடுகளில் வசித்து என் கண் முன்னே வளர்ந்த இஃது என் அன்புக்குரிய தோழனாயிருக்கிறது. நீ பிடித்து இழுத்துச் செல்ல விரும்பும் என் பிள்ளையை விடுவிப்பாயாக” என்றார்.(57)

நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது மகனாக இருக்கும் இந்த யானை, விருப்பத்துடன் உம்மைக் கண்டு உம்மிடம் வருகிறது. தன் துதிக்கையினால் உமது பாதத்தை நுகர்கிறது பார்ப்பீராக. உமக்கு என் வணக்கம். என் நன்மைக்கு வேண்டுவீராக” என்றான்.(58)

கௌதமர், “ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன் நன்மையையே நினைக்கிறேன். நான் எப்போதும் உன்னை வழிபடுகிறேன். ஓ! சக்ரா, நீயும் எனக்கு உன் அருளை வழங்குவாயாக. உன்னால் கொடுக்கப்படும் இந்த யானையை நான் ஏற்கிறேன்” என்றார்.(59)

நூறு வேள்விகளைச் செய்த தேவன், “உயர் ஆன்மாவைக் கொண்டவர்களும், வாய்மையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பவர்களும், தங்கள் இதயங்களில் வேதங்கள் நடப்பட்டவர்களுமான முதன்மையான முனிவர்கள் அனைவருக்கும் மத்தியில் உம்மால் மட்டுமே என்னை அடையாளம் காண முடிந்தது. இந்தக் காரணத்திற்காக நான் உம்மிடம் பெரும் நிறைவுடன் இருக்கிறேன்.(60) எனவே, ஓ! பிராமணரே, உமது மகனின் துணையுடன் நீர் விரைவில் என்னிடம் வருவீராக. பேரின்பம் கொண்ட பல்வேறு உலகங்களை எந்தத் தாமதமும் இல்லாமல் ஒரே நாளில் அடைவதற்கு நீர் தகுந்தவராவீர்” என்றான்”.(61)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்தச் சொற்களைச் சொன்ன வஜ்ரதாரி {இந்திரன்}, கௌதமரையும், அவருடன் அவரது மகனான யானையையும் முன்னிட்டு அழைத்துக் கொண்டு தன்னுடன் அறவோராலும் அடைதற்கரிதான சொர்க்கத்திற்குச் சென்றான்.(62) இந்த வரலாற்றை ஒவ்வொரு நாளும் புலனடக்கத்துடன் கேட்பவன், அல்லது உரைப்பவன், (தன் மரணத்திற்குப் பிறகு) கௌதமரைப் போலவே பிரம்மலோகத்தை அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(63)

உபவாஸ மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 103-உபவாஸத்தின் சிறப்பு மற்றும் பிராமண வாக்கின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்துப் பிரம்மனுக்கும் பகீரதனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பல்வேறு வகைக் கொடைகள், ஆன்ம அமைதி, வாய்மை, கருணை, ஒருவன் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவடைவது, கொடையின் பலன்கள் ஆகியவற்றைக் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, தவங்களைவிட யாருடைய பலமும் மேன்மையானதல்ல என்பதை நீர் அறிவீர். உயர்ந்த தவமாக அமைவது எது என்பதைக் குறித்து எங்களுக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் நோற்கும் தவ வகையானது அவன் அடையும் இன்பலோகத்திற்குத் தொடர்புடையதாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே, உணவைத் தவிர்ப்பதைவிட மேன்மையான தவம் வேறேதும் இல்லை என்றே நான் கொள்கிறேன்.(3) இது தொடர்பாகப் பகீரதனுக்கும், சிறப்புமிக்க (படைப்பின் பெரும்பாட்டனான) பிரம்மனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை சொல்லப்படுகிறது.(4) ஓ! பாரதா, பகீரதன், தேவலோகம், கோலோகம், முனிவர்களின் உலகம் {ரிஷிலோகம்} ஆகியவற்றையும் கடந்த உலகத்தை அடைந்ததாக நாம் கேள்விப்படுகிறோம்.(5)

ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட பெரும்பாட்டன் பிரம்மன், பகீரதனிடம், “ஓ! பகீரதா, அடைவதற்கரிதான இந்த லோகத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?(6) ஓ !பகீரதா, கடுந்தவங்களைப் பயிலாமல் தேவர்களோ, கந்தர்வர்களோ, மனிதர்களோ இங்கே வருவதில் வெல்வதில்லை. உண்மையில் இவ்வுலகத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?” என்று கேட்டான்.(7)

பகீரதன் {பிரம்மனிடம்}, “எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் பிராமணர்களுக்கு நான் நூறாயிரம் பொற்காசுகளைக் கொடையாக அளித்தேன். ஓ! கல்விமானே, அந்தக் கொடைகளின் பலனாக நான் இவ்வுலகை அடையவில்லை.(8) நான் ஏகராத்ரி வேள்வியைப் பத்துமுறையும், பஞ்சராத்ரி வேள்வியைப் பல முறையும் செய்திருக்கிறேன். ஏகாதசராத்ரி வேள்வியைப் பதினோரு முறை செய்திருக்கிறேன். ஜோதிஷ்டோமம் என்னால் நூறு முறை செய்யப்பட்டிருக்கிறது. எனினும், அவ்வேள்விகளின் பலன்களால் நான் இந்த இன்பலோகத்தை அடையவில்லை[1].(9) கடுந்தவங்களைப் பயின்றவாறு புனிதமான ஜானவியின் {கங்கையின்} அருகில் நூறு ஆண்டுக் காலம் தொடர்ந்து வாழ்ந்து வந்தேன். அங்கே ஆயிரம் ஆண்களையும் மற்றும் எண்ணற்ற பெண் அடிமைகளையும் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன்[2].(10) புஷ்கரத் தடாகத்தின் அருகில் நூறாயிரம் முறை நூறாயிரம் குதிரைகளையும், இருநூறாயிரம் பசுக்களையும் பிராமணர்களுக்குக் கொடையளித்திருக்கிறேன்.(11) பேரழகுடையவர்களும், தங்க நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் காரிகையரையும், பசும்பொன்னாலாய ஆபரணங்களுடன் கூடிய இன்னும் அறுபதாயிரம் பேரையும் நான் கொடையளித்திருக்கிறேன். எனினும், இந்தச் செயல்களின் பலன்களால் நான் இவ்வுலகத்தை அடைவதில் வெல்லவில்லை[3].(12)ஓ! அண்டத்தில் தலைவா, கோஸவம் என்ற பெயரில் அறியப்படும் வேள்விகளைச் செய்து, தங்கள் கன்றுடன் கூடியவையும், காலத்தில் பால் தரவல்லவையும், தங்கப்பாத்திரத்துடன் கூடியவையும், பால் கறப்பதற்கான வெண்கலப்பாத்திரம் ஒன்றுடன் கூடியவையுமான பத்துப் பசுக்களை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுப்பது என்ற வீதத்தில் பத்து அற்புதங்கள் அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்தேன்.(13) சோமவேள்விகள் பலவற்றைச் செய்து, பால் தரவல்லவையும், முதல்கன்றை ஈன்றவையுமான பத்துப் பசுக்களை ஒவ்வொரு பிராமணர்களுக்கும் கொடுத்து, ரோஹிணி என்ற பெயரில் அறியப்படும் வகையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பசுக்களையும் அவர்களுக்குக் கொடையளித்தேன்.(14) மேலும் பால் தரும் பசுக்களை இருபது பிரயுதங்கள் அளவுக்குப் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். ஓ! பிரம்மா, அந்தக் கொடைகளின் பலனால் நான் இந்த இன்பலோகத்தை அடைவதில் வெல்லவில்லை.(15) வெண்ணிறம் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பால்ஹீக இனத்தைச் சேர்ந்தவையுமான நூறாயிரம் குதிரைகளையும் நான் கொடையளித்தேன். எனினும், அச்செயல்களுக்கான பலன்களின் மூலம் நான் இந்த உலகத்தை அடையவல்லை.(16) ஓ! பிரம்மா, எட்டு கோடி தங்கநாணயங்களை மேலும் மற்றொரு பத்து கோடியையும் நான் செய்த ஒவ்வொரு வேள்வியிலும் கொடுத்திருக்கிறேன். எனினும், அந்தக் கொடைகளின் பலனால் நான் இந்த இன்பலோகத்தை அடையவில்லை.(17)

ஓ! பெரும்பாட்டனே, மேலும் நான் பச்சை நிறம் கொண்டவையும், கருப்பு காதுகளைக் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான பதினேழு கோடி {17,00,00,000} குதிரைகளைக் கொடையளித்திருக்கிறேன்.(18) மேலும், பேரளவு கொண்டவையும், உழுமுனையை {கொழுவைப்} போன்ற பெரும்பற்களைக் கொண்டவையும், பத்மங்கள் என்றழைக்கப்படும் சுழிகளைத் தன் உடலில் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான பதினேழாயிரம் {17,000} யானைகளையும் கொடையளித்திருக்கிறேன்.(19) ஓ! பெரும்பாட்டா, தங்கத்தாலான அங்கங்களைக் கொண்டவையும், பல்வேறு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பத்தாயிரம் {10,000} தேர்களையும் நான் கொடையளித்திருக்கிறேன்.(20) குதிரைகள் பூட்டப்பட்ட வேறு தேர்கள் ஏழாயிரமும் {7,000} நான் கொடையளித்திருக்கிறேன். அவற்றில் பூட்டப்பட்ட குதிரைகள் யாவும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் வேள்வி தக்ஷிணைகளாகவும், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதே வகையைச் சார்ந்தவையாகவும் இருந்தன.(21) ஆற்றல் மற்றும் செய்த வேள்விகளால் தீர்மானிக்கப்படுபவர்களும், இந்திரனின் பலத்தைக் கொண்டவர்களுமான ஓராயிரம் வீரர்களை நான் செய்த பத்து பெரும் வாஜபேய வேள்விகளில் கொடையளித்திருக்கிறேன்.(22) ஓ! பெரும்பாட்டனே, பெருமளவில் பணத்தைச் செலவு செய்து எட்டு ராஜசூய வேள்விகளைச் செய்து, (அவற்றைச் செய்து கொடுத்த பிராமணர்களுக்கு) போரில் வெல்லப்பட்டவர்களும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தைக் கொண்டவர்களுமான ஆயிரம் மன்னர்களைக் கொடையளித்தேன்[4]. எனினும், அச்செயல்களால் கிட்டிய பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(23,24)ஓ! அண்டத்தின் தலைவா, அந்த வேள்விகளில் நான் கொடுத்த கொடைகள் கங்கையின் ஓடையைப் போல அபரிமிதமாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டாயிரம் யானைகளையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அதே அளவு குதிரைகளையும், சிறந்த வகையிலான நூறு கிராமங்களையும் நான் ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுத்தேன்.(25) உண்மையில், நான் இவற்றை அடுத்தடுத்து மூன்று முறை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுத்தேன். இமயச் சாரலில் தடுக்கப்பட முடியாத ஓடையாக (சொர்க்கத்தில் இருந்து பாய்ந்து) மஹாதேவனின் தலையில் தாங்கப்பட்ட கங்கையின் அருகில் தவம் செய்து கொண்டும், அமைதியான ஆன்மாவைப் பின்பற்றியும், பேச்சைக் கட்டுப்படுத்தியவாறும், முறைப்படுத்தப்பட்ட உணவுமுறையில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தேன். ஓ! பெரும்பாட்டனே, இந்தச் செயல்களின் பலன் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(27) சமியை {சமியென்று சொல்லப்படும் வன்னிமரக் கட்டைகளை வீசி), பௌண்டரீகம் தவிர, ஒரே நாளில் நிறைவடையக்கூடிய, பனிரெண்டு நாட்களில் மற்றும் பதிமூன்று நாட்களில் முடிவடைக்கூடிய {திரயோதசாஹம், துவாதசாஹாம்} வேள்விக்கூட்டங்களைச் செய்து நான் தேவர்களைத் துதித்தேன். அந்த வேள்விகளில் எவற்றின் பலனினாலும் நான் இவ்வுகலை அடையவில்லை[5].(28)வெண்ணிறம் கொண்டவையும், அழகிய திமில்களைக் கொண்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையுமான எட்டாயிரம் {8,000} காளைகளை நான் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். அவற்றும் கழுத்து நிறையத் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மனைவிகளையும் {பசுக்களைக்} கொடுத்தேன்[6].(29) மேலும் நான் பொற்குவியல்களையும், பிறவகைச் செல்வங்களையும் கொடையளித்தேன். உண்மையில், நான் ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்புமிக்கக் கற்களின் மலைகளைக் கொடையளித்தேன். செல்வங்களும், தானியங்களும் நிறைந்தவையான ஆயிரக்கணக்கான கிராமங்கள் என்னால் கொடையளிக்கப்பட்டன.(30) நான் செய்த பெரும் வேள்விகள் பலவற்றில், முதல் கன்றை ஈன்றவையான நூறாயிரம் பசுக்களை என் தன்நினைவுடன் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். எனினும், அச்செயல்களினால் கிட்டிய பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(31) பதினோரு நாட்களில் நிறைவடையும் வேள்வி {ஏகாதசாஹம்} ஒன்றில் நான் தேவர்களைத் துதித்தேன். பனிரெண்டு நாட்களில் முடிவடையும் வேள்விகளில் {த்விர்த்வாதசாஹம்} இருமுறை நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். பல முறை நடைபெற்ற குதிரைவேள்விகளிலும் நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். ஆர்காயண வேள்வியை நான் பதினாறு முறை செய்திருக்கிறேன். அச்செயல்களின் பலன்கள் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(32)ஒரு யோஜனை நீள அகலம் கொண்டதும், ரத்தினங்களாலும் பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட காஞ்சன மரங்களைக் கொண்டதுமான காட்டை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடையளித்தேன். அந்தச் செயலின் பலனால் நான் இவ்வுலகை அடையவில்லை.(33) மேன்மையான தகுதியைக் கொண்ட துராயண நோன்பை முப்பது வருடங்கள் நோற்றுக் கோபத்தில் இருந்து முற்றிலும் விடுபட்ட நான், ஒவ்வொரு நாளும் தொள்ளாயிரம் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன்.(34) உண்மையில், ஓ! அண்டத்தின் தலைவா, நான் கொடுத்த அந்தப் பசுக்கள் ஒவ்வொன்றும் ரோகிணி இனத்தைச் சார்ந்தவையும், அந்த நேரத்தில் பால் தருபவையாகவும் இருந்தன. ஓ! தேவர்களின் தலைவா, அந்தச் செயல்களின் பலன்கள் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(35) ஓ! பிரம்மாவே, நான் ஒவ்வொரு நாளும் முப்பது நெருப்புகளை வழிபட்டேன். விலங்குகள் அனைத்தின் கொழுப்பும் நெருப்பில் ஊற்றப்பட்ட எட்டு வேள்விகளில் {ஸர்வமேதயாகங்களில்} நான் தேவர்களைத் துதித்திருக்கிறேன். மனிதக்கொழுப்பை நெருப்பில் ஊற்றிச் செய்யப்பட்ட ஏழு வேள்விகளில் {நரமேதயாகங்களில்} நான் அவர்களைத் துதித்திருக்கிறேன்.(36) ஆயிரத்து இருபத்தெட்டு விஸ்வஜித் வேள்விகளிலும் நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவரே, அந்த வேள்விகளின் பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(37) சரயூ, பாஹுதை, கங்கை ஆகியவற்றின் கரைகளிலும், நைமிசக் காடுகளிலும் நான் கோடிக்கணக்கான பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்திருக்கிறேன்.(38)

உண்ணா நோன்பெனும் விரதம் இந்திரனால் அறியப்பட்டிருந்தது. எனினும் அவன் அதை ரகசியமாக வைத்திருந்தான். பிருகுவின் வழித்தோன்றலான சுகரன், தவங்களினால் அடைந்த ஆன்மப் பார்வையின் மூலம் அந்த அறிவை அடைந்தார். சுடர்மிக்க சக்தியைக் கொண்ட உசானஸே இது குறித்து அண்டத்திற்கு அறிவித்தார். ஓ! வரமளிக்கும் தேவா, நான் அந்நோன்பை நோற்றிருக்கிறேன்.(39) நான் மிக மேன்மையான அந்நோன்பை நிறைவேற்றிய போது பிராமணர்கள் அனைவரும் என்னிடம் நிறைவடைந்தார்கள். ஓராயிரம் முனிவர்கள் அங்கே வந்தனர்.(40) ஓ! பலமிக்கத் தலைவா, அந்தப் பிராமணர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் என்னிடம் நிறைவடைந்தவர்களாக, “நீ பிரம்ம லோகத்திற்குச் செல்வாயாக” என்றனர். அந்நோன்பு பலனின் விளைவாலேயே நான் மிக மேன்மையான இன்பத்தைக் கொண்ட இந்த உலகை அடைவதில் வென்றேன். இதில் எந்த ஐயமும் இல்லை.(41) அனைத்துப் பொருட்களின் பரம ஆணையாளனால் காட்கப்பட்டு உண்ணாவிரதத்தின் பலன்களை முறையாக நான் விளக்கிச் சொன்னேன். என் கருத்தின்படி, உண்ணா நோன்பை {உபவாஸத்தை} விட உயர்ந்த தவம் ஏதும் கிடையாது. ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, நான் உம்மை வணங்குகிறேன். என்னிடம் நிறைவடைவீராக” என்றான் {பகீரதன்}”.(42)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், இவ்வாறு சொன்னவனும், மதிப்பனைத்திற்கும் தகுந்தவனுமான மன்னன் பகீரதன் தன் பேச்சை முடித்த போது அக்காரியத்திற்காக விதிக்கப்பட்ட சடங்குகளின் படி பிரம்மனால் அவன் கௌரவிக்கப்பட்டான்.(43) எனவே, ஓ! யுதிஷ்டிரா, உண்ணாநோன்பை நோற்று ஒவ்வொரு நாளும் பிராமணர்களை வழிபடுவாயாக. பிராமணர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் இம்மையிலும், மறுமையிலும் அனைத்தையும் நிறைவேற்றும்.(44) உண்மையில், ஆடைகள், உணவு, வெண்ணிற பசுக்கள், வசிப்பதற்கு நல்ல வீடுகள் மற்றும் மாளிகைகளைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் நிறைவடையச் செய்யப்பட வேண்டும். பேராசையில் இருந்து விடுபட்டு, அனைவராலும் அறியப்பட்ட மிக மேன்மையான இந்த நோன்பை நீ பயில்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(45)

ஆசாரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 104-ஆயுள் குறைபாடு அல்லது நீண்ட ஆயுளுக்கான காரணங்கள்; செய்யப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்; நன்மைகளுக்குக் காரணமான ஆசாரங்கள், அதாவது ஒழுக்கவிதிகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனிதன் நூறு வருடங்கள் நீளும் வாழ்வுக்காலத்தையும், சக்தியையும், கருத்தில் கொள்ளத்தக்க அளவு வலிமையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பாட்டா, அப்படியிருக்கையில் ஏன் மனிதர்கள் மிக இளமைக் காலத்திலேயே {சிறு வயதிலேயே} இறக்கிறார்கள்?(1) எதன் மூலம் ஒரு மனிதன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்? எதன் மூலம் குறைந்த வாழ்நாளைப் பெறுகிறான்? எதன் மூலம் ஒரு மனிதன் பெருஞ்சாதனைகளைச் சார்ந்திருக்கும் புகழை அடைகிறான். எதன் மூலம் அவன் செல்வத்தையும், செழிப்பையும் அடைகிறான்?(2) தவங்கள், பிரம்மச்சரியம், அமைதியாகப் புனித மந்திரங்களை உரைத்தல், மருந்து ஆகியவற்றில் எதன் மூலம் இது நேர்கிறது? செயல்கள், மனம், அல்லது வாக்கில் எது அதற்குக் காரமாகிறது ஓ! பாட்டா இதை எனக்கு விளக்குவீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கேட்பதை நான் சொல்லப் போகிறேன். உண்மையில், ஒருவன் குறுகிய காலம் வாழ்வதற்கும், நெடுங்காலம் வாழ்வதற்கும் உரிய காரணத்தைச் சொல்லப் போகிறேன்.(4) பெருஞ்சாதனைகளினால் உண்டாகும் புகழை அடைவதில் ஒருவன் வெல்லும் காரணத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் அடையும் காரணத்தையும் சொல்லப் போகிறேன். உண்மையில், ஒருவன் நன்மையை அடைய வேண்டி வாழ வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(5) ஒழுக்கத்தின் மூலமே ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான், மேலும் ஒழுக்கத்தின் மூலமே அவன் செல்வத்தையும், செழிப்பையும் அடைகிறான். உண்மையில், ஒழுக்கத்தின் மூலமே அவன் பெருஞ்சாதனைகளைச் சார்ந்திருக்கும் புகழை இம்மையிலும், மறுமையிலும் அடைகிறான்.(6) முறையற்ற, அல்லது தீய ஒழுக்கத்தைக்கொண்ட மனிதன் ஒருபோதும் நீண்ட வாழ்நாளை அடைவதில்லை. அத்தகைய மனிதனை அனைத்து உயிரினங்களும் அஞ்சுகின்றன, அவனால் ஒடுக்கப்படுகின்றன.(7) எனவே, ஒருவன் முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பினால், அவன் முறையான நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மங்கலமற்ற நிலையையும், பாவம் நிறைந்த ஒருவனின் துன்பத்தையும் அகற்ற வல்லது நல்லொழுக்கம்[1].(8)அறமானது தன் குறியீடாக ஒழுக்கத்தையே கொண்டிருக்கிறது {ஒழுக்கத்தினால் அறியப்படுவது அறம்}. நல்லவர்களாகவும், அறம்சார்ந்தவர்களாகவும் இருப்பவர்கள், தாங்கள் பின்பற்றும் ஒழுக்கதின் விளைவாலேயே அவ்வாறிருக்கிறார்கள். மேலும், நல்லொழுக்கத்தின் குறியீடுகள் நல்லோர் அல்லது அறவோரின் செயல்களின் மூலமே விளைகின்றன.(9) நியாயமாகச் செயல்படுபவனும், நற்செயல்களைச் செய்பவனுமான மனிதனை மக்கள் காணவில்லையென்றாலும், {அவனைக் குறித்துக்} கேள்விப்படுவதால் மட்டுமே கூட அவனை மதிப்பார்கள்.(10)

நாத்திகர்களாக இருப்பவர்கள், செயல்கள் ஏதும் அற்றவர்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள், சாத்திர ஆணைகளை மீறுபவர்கள், கடமைகளைக் குறித்து அறியாதவர்கள், அவற்றை நோற்காதவர்கள், தீய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் குறுகிய வாழ்நாளை வாழ்வார்கள்.(11) முறையற்ற நடத்தை கொண்டவர்கள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவர்கள், பாலினக் கலவியில் பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள் ஆகியோர் குறுகிய வாழ்நாளே வாழ்ந்து மறுமையில் நரகிற்குச் செல்வார்கள்.(12) எந்தச் சாதனையுமற்றவர்களாக இருந்தாலும் நம்பிக்கையுள்ளவர்களாகவும், வன்மத்திலிருந்து விடுபட்டவர்களுமாகி ஒழுங்குமுறையையும், அறவொழுக்கத்தையும் பின்பற்றும் மனிதர்கள் நூறு வருடங்கள் வாழ்வார்கள்.(13) கோபத்தில் இருந்து விடுபட்டவனும், வாக்கில் வாய்மை நிறைந்தவனும், அண்டத்திலுள்ள எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தீங்கிழைக்காதவனும், வன்மமற்றவனும், நெறியுள்ளவனும், நேர்மையாளனுமான ஒருவன் நூறு வருடங்கள் வாழ்வதில் வெல்கிறான்.(14) எப்போதும் மண் ஓடுகளை உடைப்பவன், காலுக்கடியில் வளரும் துரும்பைக் கிள்ளுபவன், நகங்களைக் கடிப்பவன், எப்போதும் தூய்மையற்றிருப்பவன், மனத்தடுமாற்றம் கொண்டவன் ஆகியோர் ஒருபோதும் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்லமாட்டார்கள்.(15)

ஒருவன், பிரம்மமுகூர்த்தம் என்றறியப்படும் நேரத்தில் உறக்கத்தில் இருந்து விழித்து, அறம் மற்றும் பொருள் குறித்துச் சிந்திக்க வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் அவன் தன் முகத்தையும், வாயையும் கழுவிய பிறகு, மதிப்புமிக்க மனநிலையுடன் தனது கரங்களைக்கூப்பிக் காலை வேண்டுதல்களை {துதிகளைச்} சொல்ல வேண்டும்[2].(16) இதே வழியில் மாலைவேளை வரும்போதும் அவன் (வேறு மக்களிடம்) பேச்சைத் தவிர்த்து மாலை வேண்டுதல்களைச் சொல்ல வேண்டும். ஒருவன் உதிக்கும் சூரியனையோ, மறையும் சூரியனையோ பார்க்கக்கூடாது[3].(17) கிரகணக் காலத்திலோ, நீரின் பிம்பத்திலோ, நடுப்பகலில் நடுவானிலோ உள்ள சூரியனையும் அவன் ஒருபோதும் பார்க்கக்கூடாது. முனிவர்கள், பெரும் முறைமையுடன் இரு சந்திப்பொழுதுகளிலும் துதிப்பதன் விளைவால் அவர்கள் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறார்கள்.(18) எனவே, ஒருவன் பேச்சைத் தவிர்த்து, இரு சந்திப்பொழுதுகளிலும் முறையாகத் தன் வேண்டுதல்களைச் சொல்ல வேண்டும் {துதிக்க வேண்டும்}. இரு சந்திப்பொழுதுகளிலும் தங்கள் வேண்டுதல்களைச் சொல்லாத பிராமணர்களைப் பொறுத்தவரையில், ஓர் அறம்சார்ந்த மன்னன் சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வதில் அவர்களை நிறுவ வேண்டும். அனைத்து வகையை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களும் அடுத்தவர் மனைவிகளுடன் ஒருபோதும் பாலினக் கலவி கொள்ளக்கூடாது.(19,20)அடுத்தவர் மனைவிகளுடன் பாலினக்கலவி புரிவதைவிட வாழ்நாளை மிகத் தீவிரமாகக் குறைப்பது வேறேதும் இல்லை.(21) பிறன்மனைநயப்பவன், தான் குற்றமிழைத்த பெண்களின் உடல்களில் உள்ள வியர்வைத்துளைகளின் எண்ணிக்கை அளவுக்குப் பல்லாயிரம் வருடங்கள் நரகில் வாழ்வான்.(22) ஒருவன் பிற்பகலில், தன் மயிரைச் சீர்படுத்தி, தன் கண்களுக்கு அஞ்சனந்தீட்டி, பற்களைக் கழுவியபிறகு தேவர்களை வழிபடவும் வேண்டும்.(23) ஒருவன் சிறுநீரையோ, மலத்தையோ பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது, அல்லது அதில் நடக்கக்கூடாது, அல்லது தன் பாதத்தால் தீண்டக்கூடாது. ஒருவன் விடியற்காலையிலோ, நடுப்பகலிலோ, மாலை சந்தி காலத்திலோ,(24) அறியாத தோழனுடனோ, ஒரு சூத்திரனுடனோ, தனியாகவோ பயணம் புறப்படக்கூடாது. ஒருவன் சாலையில் நடந்து செல்லும்போது, {எதிர்ப்படும்} பிராமணன், பசுக்கள், மன்னர்கள்,(25) முதியவர், சுமை தூக்கி வருபவர், கருவுற்றிருக்கும், பெண் மற்றும் பலவீனர் ஆகியோருக்கு எப்போதும் வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்.

ஒருவன் அறியப்பட்ட ஒரு பெரிய மரத்தைக் காணும்போது அதை வலம் வர வேண்டும். ஒருவன் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு வரும்போது, தனது பயணத்தைத் தொடரும் முன்பு அதை வலம் வர வேண்டும். நடுப்பகலிலோ, நள்ளிரவிலோ, பொதுவாக இரவிலோ,(26) இரு சந்திப் பொழுதுகளிலோ நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களுக்கு ஒருவன் செல்லக்கூடாது. ஒருவன் மற்றொருவரால் அணியப்பட்ட காலணிகளையோ, ஆடைகளையோ ஒருபோதும் அணியக்கூடாது.(27) ஒருவன் எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்க வேண்டும், தன் கால்களை ஒருபோதும் பின்னிக் கொள்ளக்கூடாது. ஒருவன் புது நிலவு {அமாவாசை} நாளிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாளிலும், இரு பிறை அரைமாதங்களிலும் {வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில்} வரும் எட்டாவது சந்திர நாளிலும் {அஷ்டமியிலும்} பிரம்மச்சரிய நோன்பை நோற்கவேண்டும். ஒருவன் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது. ஒருவன் ஒரு விலங்கின் முதுகில் உள்ள இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது. ஒருவன் பிறரை நிந்திப்பதையும், பிறரைக் குறித்து அவதூறு பேசுவதையும், அனைத்து வகை வஞ்சக நடத்தைகளையும் தவிர்க்க வேண்டும்[4].(28-30)ஒருவன் மற்றொருவரை சொற்கணைகளால் துளைக்கக்கூடாது. உண்மையில், ஒருவன் எந்தவிதமான கொடூரப் பேச்சையும் பேசக்கூடாது. தாழ்ந்த மற்றும் இழிந்த மனிதனிடம் இருந்து ஒருபோதும் கொடைபெறக்கூடாது. வேறு மக்களுக்குத் தொல்லையைக் கொடுக்கத் தகுந்தவையோ, மங்கலமற்றவையோ, பாவம்நிறைந்தவையோவான சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது.(31) சொற்கணைகள் வாயில் இருந்து பாய்கின்றன. அவற்றால் துளைக்கப்பட்டவன் பகலும், இரவும் வருந்துகிறான். ஞானமுள்ள மனிதன், வேறு மக்களின் முக்கிய அங்கங்களைத் துளைப்பதற்காக ஒருபோதும் அவற்றை ஏவக்கூடாது.(32) கணைகளால் துளைக்கப்பட்ட, அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும்வளரும். எனினும், விவேகமில்லாமல் பேசப்படும் சொற்களால் துளைக்கப்பட்ட மனிதன், மரணத்திற்கு வழிவகுக்கும் சீழ் பிடித்த புண்ணுக்குப் பலியாகிறான்.(33) கர்ணிகள், நாளீகங்கள், நாராசங்கள் ஆகியவற்றை உடலில் இருந்து பிடுங்கிவிட வல்லவையாகும். எனினும், சொற்கணைகள் இதயத்திலேயே பதிந்து கிடப்பதால் அவற்றை ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது.(34) அங்க குறையுள்ளவனையோ, அங்கம் அதிகமுள்ளவனையோ, கல்வியற்றவனையோ, துன்பத்திலிருப்பவனையோ, கோரமானவனையோ {அழகற்றவனையோ}, பலமற்றவனையோ ஒருவன் குற்றங்கூற {பரிகசிக்கக்} கூடாது.(35)

நாத்திகம், வேதங்களை அவதூறு செய்வது, தேவர்களை நிந்திப்பது, வன்மம், செருக்கு, ஆணவம், கடுமை ஆகியவற்றை ஒருவன் தவிர்க்க வேண்டும்.(36) ஒருவன் கோபத்தினால் பிறரைத் தாக்க தண்டக்கோலை {தடியை} எடுக்கக்கூடாது. கற்பித்தல் நோக்கத்தில் மகன், அல்லது சீடனை மட்டுமே மென்மையாகத் தண்டிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.(37) ஒருவன் பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசக்கூடாது; அதேபோல நட்சத்திரங்களை விரல் நீட்டிச் சுட்டிக் காட்டக்கூடாது. கேட்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாளின் சந்திர நாளை {பக்ஷத்தின் திதியை} ஒருவன் சொல்லக் கூடாது. அதைச் சொல்வதன் மூலம் ஒருவனுடைய வாழ்நாள் குறுகுகிறது.(38) இயற்கை அழைப்புகளுக்குப் பதிலளித்த பிறகோ, சாலையில் நடந்து வந்த பிறகோ ஒருவன் தன் பாதங்களைக் கழுவ {அலம்ப} வேண்டும். வேதங்கள் உரைக்க அமர்வதற்கோ, உணவை உண்பதற்கோ முன்பு ஒருவன் தன் பாதங்களைக் கழுவ வேண்டும்.(39) அறியப்படாததும் {பிறரால் பார்க்கப்படாததும்}, நீரினால் கழுவப்பட்டதும், நன்றாகப் பேசப்பட்டதுமான {வாக்கினால் புகழப்பட்டதுமான} இம்மூன்று மாசுகளும் தூய்மையானவை, புனிதமானவை, பிராமணர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவை எனத் தேவர்கள் கருதுகின்றனர்.(40)

ஸம்யாவம் {அரிசிச் சோறு}, கிருஸரம், இறைச்சி, சஸ்குலீ {முறுக்கு}, பாயஸம் ஆகியவற்றை ஒருவன் ஒருபோதும் தனக்காகச் சமைத்துக் கொள்ளக்கூடாது. இவை எப்போது சமைக்கப்பட்டாலும், தேவர்களுக்கே காணிக்கை அளிக்கப்பட வேண்டும்[5].(41) ஒருவன் ஒவ்வொரு நாளும் தன் நெருப்பைக் கவனிக்க {அக்னிஹோத்ரம் செய்ய} வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் பிச்சையிட வேண்டும். அவன், பேச்சைக் கட்டுப்படுத்திப் பற்குச்சியினால் பற்களைத் தூய்மை செய்ய வேண்டும்.(42) ஒருவன் சூரியன் எழுந்த பிறகும் ஒருபோதும் படுக்கையில் கிடக்கக்கூடாது. எந்த நாளிலாவது அவன் சூரியனுக்கு முன் எழத் தவறினால், அவன் பாவக்கழிப்பைச் செய்ய வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் அவன் முதலில் தன் பெற்றோரையும், ஆசான்களையும், மதிக்கத்தகுந்த பெரியோரையும் வணங்க வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான். பற்குச்சியின் வேலை முடிந்ததும் அதைக் கைவிட்டு ஒவ்வொரு நாளும் புதியதையே பயன்படுத்த வேண்டும்.(43,44) ஒருவன் புதுநிலவு {அமாவாசை} மற்றும் முழு நிலவு {பௌர்ணமி} நாட்களில் அனைத்து வகை உணவையும் கைவிட்டு, {மற்ற நாட்களில்} சாத்திரங்களால் விலக்கப்படாத உணவையே உண்ண வேண்டும். அவன் தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இயற்கையின் அழைப்புகளுக்கு வடக்கு நோக்கிப் பதிலளிக்க {சிறுநீர், மலம் கழிக்க} வேண்டும்[6].(45)ஒருவன் முதலில் தன் பற்களைக் கழுவாமல் தேவர்களை வழிபடக்கூடாது. மேலும் முதலில் தேவர்களை வழிபடாமல், தன் ஆசானையோ, வயதில் முதிர்ந்த ஒருவரையோ, ஓர் அறவோரையோ, ஞானம் கொண்டவரையோ தவிர்த்து வேறு யாரிடமும் செல்லக்கூடாது. ஞானமுள்ளவர்கள், பளபளப்பாக்கப்படாத, மாசுள்ள கண்ணாடியில் ஒருபோதும் தங்களைக் காணமாட்டார்கள்.(46,47) ஒருவன் தான் அறியாத பெண்ணுடனோ, கருவுற்றிருக்கும் பெண்ணுடனோ பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.(48) ஒருவன் வடக்கிலோ, மேற்கிலோ தலைவைத்து ஒருபோதும் உறங்கக்கூடாது. அவன் உடைந்ததும், தளர்ந்ததுமான படுக்கையில் படுக்கக்கூடாது.(49) ஒருவன் விளக்கின் உதவியுடன் முதலில் படுக்கையைச் சோதிக்காமல் அதில் படுக்கக்கூடாது. மேலும் தன் அருகில் (மனைவி போன்ற) மற்றொருவருடன் சேர்ந்து படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் குறுக்குத் திசையில் படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் நாத்திகர்களுக்கு அடங்கியிருக்கக்கூடாது, அல்லது அவர்களுக்கு இணக்கமான எதையும் செய்யக்கூடாது[7].(50)ஒருவன் ஓர் இருக்கையைத் தன் காலால் இழுத்து அதில் அமரக்கூடாது. ஒருவன் நிர்வாண நிலையிலோ, இரவிலோ ஒருபோதும் நீராடக்கூடாது.(51) புத்தியுள்ள ஒருவன் நீராடிய பிறகு தன் உறுப்புகளைத் தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது. முதலில் நீராடாமல் ஒருபோதும் {சந்தனம் போன்ற} களிம்புகளைத் தன் உடலில் பூசக்கூடாது. நீராடிய பிறகு அவன் ஒருபோதும் தன் ஆடையை (காய வைக்கும் நோக்கில்) காற்றில் அசைக்கக்கூடாது.(52) ஒருவன் ஒவ்வொரு நாளும் ஈரமான ஆடைகளை உடுத்தக்கூடாது. அவன் தான் அணியும் மலர்மாலைகளை எடுக்கக்கூடாது. அதேபோல வெளிப்புற ஆடைகளுக்கு மேல் அத்தகைய மாலைகளை ஒருபோதும் அணியக்கூடாது.(53) ஒருவன் பெண்ணுக்கான இயக்க மாறுபாட்டு {வீட்டுக்கு விலக்கான} காலத்தில் அவளுடன் பேசவும் கூடாது. அவன் இயற்கையின் அழைப்புகளுக்கு (பயிர் விளையும்) களத்திலோ {வயலிலோ}, மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அருகிலோ பதிலளிக்கக்கூடாது {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடாது}[8].(54) ஒருவன் நீர்வெளியில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. ஒருவன் எந்த உணவையும் உண்ணும் முன்பு மூன்று முறைகள் தன் வாயைக் கழுவ வேண்டும்.(55)உணவு உண்டு முடித்த பிறகு அவன் மூன்று முறையும், மீண்டும் இரண்டு முறையும் {ஆக மொத்தம் ஐந்து முறைகள்} தன் வாயையைக் கழுவ வேண்டும். ஒருவன் பேச்சைக்கட்டுப்படுத்திக் கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ணும் உணவை நிந்திக்காமல் உண்ண வேண்டும்.(56) ஒருவன் தான் உண்பதற்காகத் தனக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் உணவில் எப்போதும் மிச்சம் வைக்க வேண்டும். தன் உணவை உண்டு முடித்ததும் ஒருவன் நெருப்பை மனத்தால் தீண்ட வேண்டும்[9]. ஒருவன் கிழக்குத் திசை நோக்கி உண்டால் அவன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாவான். தெற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெரும் புகழை அடைவான்.(57) மேற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செல்வத்தை அடைகிறான். வடக்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பேச்சில் வாய்மை நிறைந்தவனாகிறான். ஒருவன் தன் உணவை உண்ட பிறகு மேலுடலின் துளைகள் அனைத்தையும் நீரால் துடைக்க வேண்டும்.(58) அதே போல அனைத்து அங்கங்களையும், உந்தியையும், உள்ளங்கைகளையும் நீரால் கழுவ வேண்டும். ஒருவன் உமியின் மீதோ, மயிரின் மீதோ, சாம்பலின் மீதோ, எலும்புகளின் மீதோ ஒருபோதும் அமரக்கூடாது.(59) ஒருவன், மற்றொருவன் நீராடிய, பயன்படுத்தி நீரை எக்காரணத்தினாலும் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் தேவர்களைத் தணிவைடையச் செய்வதற்கு ஹோமத்தை எப்போதும் செய்து, சாவித்திரி மந்திரங்களையும் உரைக்க வேண்டும்.(60)ஒருவன் எப்போதும் அமர்ந்தே உண்ண வேண்டும். ஒருபோதும் நடந்து கொண்டே உண்ணக்கூடாது. ஒருவன் நின்ற நிலையில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. சாம்பலிலோ, மாட்டுக் கொட்டிலிலோ அவன் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது.(61) ஒருவன் உண்ண அமர்வதன் முன்னர்த் தன் பாதங்களைக் கழுவ வேண்டும். ஒருவன் ஈரக்கால்களுடன் ஒருபோதும் அமரவோ, உறங்குவதற்காகப் படுக்கவோ கூடாது. கால் கழுவிய பிறகு அமர்ந்து உண்ணும் ஒருவன் நூறு வருடங்கள் வாழ்கிறான்.(62) ஒருவன் தூய்மையற்ற நிலையில் இருக்கும்போது, பெருஞ்சக்தி கொண்ட நெருப்பு, பசு மற்றும் பிராமணன் என்ற மூவரையும் ஒருபோதும் தீண்டக்கூடாது. இந்த விதியைக் கடைப்பிடிப்பதால் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்.(63) மாசுள்ள நிலையில் இருக்கும்போது பெருஞ்சக்தி கொண்ட சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் மூன்றிலும் கண்களைச் செலுத்தக்கூடாது.(64) ஓர் இளைஞனின் வீட்டிற்கு, மதிக்கத்தகுந்த ஒரு முதியவர் வந்தால், அவனுடைய {அந்த இளைஞனின்} உயர் மூச்சுகள் மேல்நோக்கிச் செல்கின்றன. அவன் எழுந்து நின்று, தன் விருந்தினரை முறையாக வணங்கும்போதே அதைத் திரும்பப் பெறுகிறான்.(65)

முதியவர்கள் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் அவர்களைக் கண்டதும் தன் கரத்தால் இருக்கை அளிக்க வேண்டும். அந்த முதியவர் அமர்ந்த பிறகு, தானும் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் இருக்க வேண்டும். ஒரு பெரியவர் சாலையில் செல்லும்போது அவன் அவரைப் பின்தொடர வேண்டுமேயன்றி அவருக்கு முன் நடக்கக்கூடாது.(66) ஒருவன் கிழிந்த, அல்லது உடைந்த இருக்கையில் அமரக்கூடாது. அவன் உடைந்த வெண்கலப் பாத்திரத்தை மீண்டும் பயன்படுத்தாமல் அதைக் கைவிட வேண்டும். ஒருவன் மேலாடை அணிந்து தன் உடலை மூடாமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவன் நிர்வாண நிலையில் ஒருபோதும் நீராடக் கூடாது. நிர்வாண நிலையில் ஒருபோதும் உறங்கக்கூடாது[10].(67) அடுத்தவர் உணவில் எஞ்சியவற்றையும், தட்டுகளையும் ஒருவன் ஒருபோதும் தீண்டக்கூடாது. உயிர் மூச்சுகள் அனைத்தும் தலையிலியே குவிந்திருப்பதாகச் சாத்திரங்களில் சொல்லப்படுவதால், ஒருவன் தான் தூய்மையற்ற {மாசுள்ள} நிலையில் இருக்கும்போது ஒருபோதும் மற்றொருவனின் தலையைத் தீண்டக்கூடாது.(68) ஒருவன் ஒருபோதும் மற்றொருவரின் தலையைத் தாக்கவோ, மற்றொருவனின் மயிரைப் பற்றவோ கூடாது. இரண்டு கைகளையும் சேர்த்து ஒருவன் தன் தலையைச் சொறியக்கூடாது.(69) ஒருவன் நீராடும்போது, மீண்டும் மீண்டும் தன் தலையை நீரில் மூழ்கச் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது ஒருவனுடைய வாழ்நாளைக் குறைக்கும். நீரில் தலை மூழ்கி நீராடியவன் அதன் பிறகு தன்னுடலின் எந்தப் பகுதியிலும் எண்ணெய் பூசக் கூடாது.(70)ஒருவன் சிறிதளவு எள்ளை உண்ணாமல் ஒருபோதும் உணவு உண்ணக்கூடாது[11]. ஒருவன் தூய்மையற்றிருக்கும் காலத்தில் ஒருபோதும் (வேதங்களையோ, வேறு சாத்திரங்களையோ) கற்பிக்கக்கூடாது. அதேபோலத் தூய்மையற்றிருக்கும்போது ஒருவன் கற்கவும் கூடாது.(71) புயல் எழும்போது, சுற்றுச்சூழலில் கெட்ட வாடை ஊட்புகும்போதோ ஒருவன் வேதங்களைக் குறித்து நினைக்கக்கூடாது. பழைய வரலாற்றை அறிந்தவர்கள் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட காதையை உரைக்கிறார்கள். தூய்மையற்றவனாயிருக்கையில் ஓடுபவனோ, அத்தகைய சூழ்நிலையில் வேதங்கற்பவனோ, உண்மையில் மறுபிறப்பாள பிராமணனே ஆனாலும் தகாத காலங்களில் வேதம்படிப்பவன் தன் வேதத்தை இழந்து தன் வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான்.(72-74) எனவே, தடைசெய்யப்பட்ட காலங்களில் குவிந்த கவனத்துடன் ஒருவன் ஒருபோதும் வேதங்கற்கக்கூடாது.சூரியனை நோக்கியோ, சுடர்மிக்க நெருப்பை நோக்கியோ, பசுவை நோக்கியோ, ஒரு மறுபிறப்பாள மனிதனை நோக்கியோ, சாலையிலோ இயற்கையில் அழைப்புக்குப் பதில் சொல்பவன் குறைந்த காலமே வாழ்கிறான். பகல் வேளையில் இயற்கையின் அழைப்புகள் இரண்டுக்கும் வடக்கு நோக்கி பதிலளிக்க வேண்டும் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டும்}.(75,76) இரவில் அவ்வழைப்புகளுக்குத் தெற்கு நோக்கி பதிலளிக்கலாம். இவ்வாறு செய்வதால் ஒருவன் தன் வாழ்நாளைக் குறைத்துக் கொள்வதில்லை. நீண்ட நாள் வாழ விரும்பும் ஒருவன், பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் பாம்பு ஆகிய மூன்றும் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் ஒருபோதும் அலட்சியம் செய்யவோ, அவமதிக்கவோ கூடாது. இம்மூன்றும் கடும் நஞ்சுமிக்கவையாகும். பாம்பு கோபமடைந்தால் தனக்குக் குற்றமிழைத்தவனைத் தன்னுடைய ஒரே ஒரு பார்வையால் மட்டுமே கூட எரித்துவிடும்.(77,78) க்ஷத்திரியன் கோபப்பட்டாலும் தன் கோபத்துக்குத் தகுந்த பொருளாக இருப்பவனைக் கண்டவுடன் தன் சக்தியால் எரித்துவிடுவான். இவ்விருவரை விடப் பலவானான பிராமணன், தன் கோபத்திற்குரிய பொருளாக இருப்பவனை மட்டுமல்லாமல் அவனுடைய மொத்த குலத்தையும், பார்வையால் மட்டுமல்லாமல் எண்ணத்தாலேயே அழித்து விடுவான்.(79) எனவே, ஞானம் கொண்ட ஒருவன், இம்மூவரிடமும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஒருவன் தன் ஆசானிடம் ஒருபோதும் எந்தச் சச்சரவிலும் ஈடுபடக்கூடாது. ஓ! யுதிஷ்டிரா, ஆசான் கோபமடைந்தால் உரிய கௌரவங்களுடன் அவர் தணிவடையச் செய்யப்பட வேண்டும். ஆசான் சொல்வது மொத்தமும் தவறாக இருந்தாலும், ஒருவன் அவரைப் பின்பற்றிக் கௌரவிக்கவே வேண்டும்.(81) ஆசானுக்கு எதிராக அவதூறு பரப்புவது அவ்வாறு செய்பவர்களின் வாழ்வை ஐயமில்லாமல் எரிக்கும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவாகச் சென்று இயற்கையின் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே தன் கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்.(82) ஒருவன் தன் உணவில் எஞ்சியவற்றையும், பாத்திரங்களையும் {இலைகளையும்} தன் வசிப்பிடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் வீச வேண்டும். உண்மையில் தன் நன்மையில் விருப்பம் உள்ளவன் இவை யாவற்றையும் செய்ய வேண்டும். ஒருவன் சிவப்பு மலர்களாலான மாலைகளை அணியக்கூடாது. உண்மையில் ஞானம் கொண்ட வருவன் வெள்ளை நிற மலர்களாலான மாலைகளையே அணிய வேண்டும்.(83) ஓ! பெரும் வலிமையுள்ளவனே, தாமரையையும், அல்லியையும் புறக்கணித்தாலும், நீரியில் விளைவதாக இருந்தால் ஒருவன் தன் தலையில் சிவப்பு மலரையும் சூடலாம்[12].(84) தங்கத்தாலான மாலை எந்தச் சூழ்நிலையிலும் தூய்மையற்றதாகாது. ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு நீரில் கலந்த நறுமணப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.(85)ஒருவன் அடி உறுப்புகளை மறைப்பதற்கு மேலாடையையும், மேல் உறுப்புகளை மறைப்பதற்குக் கீழாடைகளையும் ஒருபோதும் அணியக்கூடாது. அதே போலப் பிறர் உடுத்திய ஆடைகளையும் ஒருபோதும் அவன் அணியக்கூடாது. மேலும், பக்கவாட்டில் இரு விளிம்புகள் இல்லாத ஆடைகளை ஒருவன் உடுத்தக்கூடாது.(86) ஓ! மன்னா, ஒருவன் படுக்கைக்குச் செல்லும்போது வேறு உடையை உடுத்த வேண்டும். சாலையில் பயணிக்கும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும். அதே போலத் தேவர்களை வழிபடும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும்.(87) புத்தியுள்ள மனிதன் தன் அங்கங்களில் பிரியங்கு {தினை}, சந்தனம், வில்வம் {வில்வக்காய்}, தகரம் {ஒரு நறுமணப்பொருள் / நந்தியார்வட்டை}, கேஸரம் {கரிசலாங்கண்ணி} ஆகியவற்றாலான களிம்புகளைப் பூச வேண்டும்.(88) உண்ணாவிரதம் நோற்கும் ஒருவன், நீராடுவதன் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஆபரணங்கள் மற்றும் களிம்புகளால் தன் மேனியை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் எப்போதும் பாலினக்கலவியைத் தவிர்க்க வேண்டும்.(89) ஓ! ஏகாதிபதி, ஒருவன் தன் சொந்தக்காரனாகவே இருந்தாலும், ஒரே பதவி கொண்டவனாகவே இருந்தாலும் ஒரே தட்டில் ஒருபோதும் உண்ணக்கூடாது. விலக்கப்பட்ட காலத்தில் உள்ள பெண்ணால் தயாரிக்கப்பட்ட உணவையும் ஒருபோதும் உண்ணக்கூடாது.(90)

ஒருவன் சாறு எடுக்கப்பட்ட எந்த உணவையும் உண்ணவோ, அப்படிப்பட்ட பானத்தைப் பருகவோ கூடாது. அதே போல, ஒருவன் உண்ணும் உணவை விருப்பத்துடன் பார்க்கும் மனிதர்களுக்கு ஒரு பகுதியைக் கொடுக்காமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தூய்மையற்ற ஒருவனுடைய அருகில் அமரக்கூடாது. அதே போல அறத்தில் முதன்மையானவர்கள் அருகிலும் அவன் அமரக்கூடாது.(91) அறச்செயல்களில் தடை செய்யப்பட்டிருக்கும் உணவுகள் அனைத்தையும் வேறு சந்தர்ப்பங்களிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், அரசமரக் கனி மற்றும் ஆலங்கனிகளையும், சணல் இலைகளையும் மற்றும் அத்திக்கனிகளையும் ஒருபோதும் உண்ணக்கூடாது. வெள்ளாடுகள், பசுக்கள் மற்றும் மயிலின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது.(92,93) உலர்ந்த இறைச்சியையும், பழைய இறைச்சியையும் ஒருவன் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் எவனும் உப்பைத் தன் கையில் எடுத்து ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போல, இரவில் தயிர் மற்றும் கரைத்தமாவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருவன் தவிர்க்க வேண்டும். ஒருவன் காலையில் ஒரு முறையும், மாலையில் ஒருமுறையும் தவிர உள்ள இடைவெளியில் உணவனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(94,95)

மயிர் காணப்படும் எந்த உணவையும் ஒருவன் ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போலப் பகைவனின் சிராத்தத்திலும் ஒருவன் உண்ணக்கூடாது. ஒருவன் அமைதியாக உண்ண வேண்டும்; மேலாடையால் தன் மேனியை மறைத்துக் கொள்ளாமல், அமராமல் ஒருபோதும் உண்ணக்கூடாது.(96) எந்த உணவையும் வெறுந்தரையில் இட்டு உண்ணக்கூடாது. அமர்ந்த நிலை தவிர வேறு எந்த நிலையிலும் ஒருபோது உண்ணக்கூடாது. ஒருவன் உண்ணும்போது எந்த ஒலியையும் உண்டாக்கக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தன் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு முதலில் நீரையும், உணவையும் காணிக்கை அளித்து, இவ்வாறு விருந்தினருக்குத் தொண்டாற்றிய பிறகே தான் உண்ண அமர வேண்டும். நண்பர்களுடன் வரிசையில் அமர்ந்து, நண்பர்களுக்குக் கொடுக்காமல் எந்த உணவையும் உண்பவன் கடும் நஞ்சை உண்பதாகச் சொல்லப்படுகிறது. நீர், பாயஸம், மாவு, தயிர், நெய், தேன் ஆகியவற்றைப் பொறுத்தவரையில்,(97-99) ஒருவன் பருகிய பிறகு, அல்லது உண்டபிறகு எஞ்சியவற்றை ஒருபோதும் பிறருக்குக் கொடுக்கக்கூடாது. ஓ! மனிதர்களின் தலைவா, ஒருவன் எந்த உணவையும் ஐயத்துடனே உண்ணக்கூடாது[13].(100)நன்மையை விரும்பும் ஒருவன், உணவை நிறைவு செய்த பிறகு ஒருபோதும் தயிரைக் குடிக்கக்கூடாது. உணவு உண்ட பிறகு ஒருவன் தன் வாயையும் முகத்தையும் தன் (வலக்) கரத்தால் மட்டுமே கழுவிக் கொண்டு, சிறிதளவு நீரை எடுத்து வலக்காலின் பெருவிரலை அதில் மூழ்கச் செய்ய வேண்டும்.(101) கழுவிய பிறகு, உச்சந்தலையைத் தன் (வலக்) கரத்தால் தீண்ட வேண்டும். அடுத்ததாகக் குவிந்த கவனத்துடன் நெருப்பைத் தீண்ட வேண்டும்.(102) இந்த விதிமுறைகள் அனைத்தையும் நோற்பது எவ்வாறு என்பதை அறிந்த மனிதன், தன் உற்றார் உறவினரில் முதன்மையான இடத்தை அடைவதில் வெல்கிறான். உணவை உண்டு முடித்த ஒருவன், தன் மூக்கு, கண்கள், காதுகள், உந்தி மற்றும் தன் இரு கரங்களையும் நீரால் கழுவ வேண்டும்.(103) எனினும், அவன் தன் கரங்களை ஈரமாக வைத்துக் கொள்ளக்கூடாது. கட்டைவிரலின் நுனியில் இருக்கு அடிவரை உள்ள இடத்தில் பிரம்மம் என்றறியப்படும் புனிதமான தீர்த்தம் இருக்கிறது.(104) சுண்டு விரலின் {கட்டைவிரலில் இருந்து ஐந்தாம் விரலின்} பின்பகுதியில் தேவ தீர்த்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதா, கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் {ஆட்காட்டி விரல்}ஆகியவற்றுக்கிடையில் உள்ள இடைவெளியானது, விதிப்படி நீரைத் தீண்டிய பிறகு பித்ரு சடங்குகளைச் செய்வதில் பயன்படுத்தப்பட வேண்டும்[14]. ஒருவன் பிறரை அவதூறு செய்வதில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. அதேபோல ஏற்பில்லா {இனிமையற்ற} எதையும் சொல்லக் கூடாது.(105, 106)தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், பிறரின் கோபத்தைத் தூண்ட ஒருபோதும் முனையக்கூடாது. ஒருவன், தன் வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட ஒருவனிடம் உரையாட முனையக்கூடாது. அத்தகைய மனிதனைப் பார்ப்பதே தவிர்க்கப்பட வேண்டும்.(107) ஒருவன் வீழ்ந்துவிட்ட மனிதனிடம் ஒருபோதும் தொடர்பு கொள்ளக்கூடாது. அத்தகைய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் அவன் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறான். ஒருவன் பகல் வேளையில் பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. கன்னிகை, வேசி அல்லது மலடியுடன் ஒருபோதும் கலவி கொள்ளக்கூடாது.(108) விலக்குக் காலம் முடிந்து நீராடாத ஒரு பெண்ணுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடக்கூடாது. அறச்செயல்களின் நோக்கில் பல்வேறு அங்கங்களைக் கழுவிய பின்னர் ஒருவன் தன் உதடுகளை மும்முறையும், மீண்டும் இருமுறையும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அவன் தூய்மையடைந்து அறச்சடங்குகளுக்குத் தகுந்தவனாகிறான். பல்வேறு புலனுறுப்புகளையும் ஒருமுறை கழுவி விட்டு, மொத்த உடலிலும் நீர் தெளிக்கப்பட வேண்டும்.(110) இதைச் செய்த பிறகு ஒருவன் வேத விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும்.

ஓ! குரு குலத்தவனே, ஒரு பிராமணனுக்குரிய நன்மைக்கும், தூய்மைக்குமான துப்புரவு செயல்கள் எவை என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்பதற்கு முன்பும், பின்பும், தூய்மை தேவைப்படும் அனைத்துச் செயல்களிலும் ஒரு பிராமணன், பிரம்ம தீர்த்தம் என்றைழைக்கப்படும் பகுதியில் நீரை வைத்து ஆசமனம் செய வேண்டும்[15].(112) தொண்டையில் இருந்து ஒரு துகளை வெளியேற்றினாலோ, உமிழ்ந்தாலோ ஒருவன் வாயைக் கழுவினால்தான் தூய்மையடைவான். ஒருவன் முதிர்ந்தவராக உள்ள உறவினரையோ, ஏழையாக உள்ள நண்பனையோ தன் வீட்டில் நிறுவி, அவரும் தன் குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு அவரை ஆதரிக்க வேண்டும்[16]. இதைச் செய்வதன் மூலம் ஒருவன் புகழையும், நீண்ட வாழ்நாளையும் பெறுவதில் வெல்கிறான். ஒருவனுடைய வீட்டில் புறாக்கள் {பாராவதங்கள் / மாடப்புறாக்கள்} மற்றும் ஆண், பெண் கிளிகள்  நிறுவப்படும்போது அஃது {அவ்வீடு} அருள் நிலையால் நிறையும்.(114) ஒருவனுடைய வீட்டில் இருந்தால், துயரை விலக்குவதில் இவை வெல்லும். கரப்பான்பூச்சிகளும் அதையே செய்யும். மின்மினிப்பூச்சிகள், பினந்தின்னிக் கழுகுகள், காட்டுப்புறாக்கள் {கபோதங்கள்}, வண்டுகள் ஆகியன(115) ஒருவனுடைய வீட்டுக்குள் நுழையவோ அங்கு வசிக்கவோ முனைந்தால், தேவர்களைத் தணிவடையச் செய்யும் செயல்கள் செய்யப்பட வேண்டும். அவையும், மீன்கொத்திகளும் தீய சகுனங்களைக் காட்டும் உயிரினங்களாகும்.(116)ஒருவன் உயர் ஆன்ம மனிதர்களின் ரகசியங்களை வெளியிடக்கூடாது; அவன் தடைசெய்யப்பட்ட பெண்களுடன் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது. மேலும் மன்னனின் மனைவியிடமோ, ராணியின் நண்பர்களுடனோ அத்தகைய கலவியில் ஈடுபடக்கூடாது.(117) ஓ! யுதிஷ்டிரா, மருத்துவர்கள், பிள்ளைகள், முதிர்ந்தவர்கள், பணியாட்கள் ஆகியோரிடம் ஒருபோதும் நெருக்கம் பாராட்டக்கூடாது. நண்பர்கள், பிராமணர்கள் மற்றும் தன்னிடம் பாதுகாப்பு நாடுபவர்கள் ஆகியோரை எப்போதும்அவன் ஆதரிக்க வேண்டும். ஓ! மன்னா, இதைச் செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஞானம் கொண்ட ஒருவன் தன் நன்மையில் விருப்பம் கொண்டவனாக இருந்தால், ஒரு பிராமணர்கள் மற்றும் தொழிலில் திறன்மிக்க ஒரு பொறியாளர் {சிற்பி} ஆகியோரின் துணையுடன் கட்டப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும்[17]. ஓ! மன்னா, மாலை சந்திப் பொழுதில் ஒருவன் உறங்கக்கூடாது. அத்தகைய காலத்தில் ஒருவன் எத்துறையின் ஞானத்தையும் அடையப் படிப்பதிலும் ஈடுபடக்கூடாது.(118-120) புத்திமானான ஒருவன் அத்தகைய நேரத்தில் ஒருபோதும் உண்ணக்கூடாது. இவ்வழியில் செயல்படுவதால் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஒருவன் பித்ருக்களைக் கௌரவிக்கும் எந்தச் சடங்கையும் ஒருபோதும் இரவில் செய்யக்கூடாது. ஒருவன் உணவு உண்ட பிறகு தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.(121) தன் முன்னேற்றத்தில் விருப்பமுள்ள ஒருவன் இரவில் நீராடக்கூடாது. ஓ! பாரதா, இரவில் மாவை உண்பதையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(122)உணவு மற்றும் பானங்களில் எஞ்சியவையும், தேவர்களுக்கு வழிபாடு செய்யப் பயன்படுத்திய மலர்களையும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இரவில் விருந்தினரை அழைத்து, நிறைவடையும் அளவுக்கு உண்ணச் சொல்லி அதீத மதிப்புடன் அவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது. அதே போல, தானும் நிறைவடையும் அளவுக்கு இரவில் உண்ணக்கூடாது.(123) ஒருவன் ஒரு பறவைக்கு உணவூட்டிய பிறகு (அதை உண்பதற்காகக்) கொல்லக்கூடாது. ஞானம் கொண்ட ஒருவன், ஓ! பாரதா, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவளும், மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், சரியான வயதைக் கொண்டவளுமான ஒரு கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும். அவளிடம் பிள்ளைகளைப் பெற்று, அந்த வழிமுறையின் மூலம் தன் குலத்தைத் தழைக்கச் செய்து,(124,125) ஓ! ஏகாதிபதி, தன் மகன்கள் பொது அறிவையும், குடும்பப் பழக்க வழக்கங்களின் அறிவையும் அடைவதற்காக அவர்களை ஒரு நல்ல ஆசானிடம் அனுப்பி வைக்க வேண்டும். ஒருவன் பெறும் மகள்களை, மதிப்பிற்குரிய குடும்பங்களைச் சார்ந்தவர்களும், புத்தி கொண்டவர்களுமான இளைஞர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.(126) ஓ! பாரதா, குடும்ப மரபுரிமைகளில் ஒரு பகுதியை மகன்களுக்கான வாழ்வாதாரமாகக் கொடுத்து அவர்களை அவற்றில் நிறுவ வேண்டும். பித்ருக்கள் அல்லது தேவர்களைக் கௌரவிக்கும் எந்தச் செயலில் ஈடுபடும் முன்பும் ஒருவன் தன் தலையை நீரில் மூழ்கச் செய்து நீராட வேண்டும்.(127)

ஒருவன் தன் சொந்த திதியில் {தான் பிறந்த அதே திதியில்} ஒருபோதும் சிராத்தம் செய்யக்கூடாது. ஓ! பாரதா, (முந்தைய அல்லது பிந்தைய) பாத்ரபதங்கள் {பூரட்டாதி, உத்தரட்டாதி ஆகிய} இரண்டிலும், கிருத்திகை நட்சத்திரத்திலும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது.(128) கடுமையானவையாகக் கருதத்தக்க (அஷ்லேஷம் {ஆயில்யம்} முதலிய) நட்சத்திரங்களிலும், கணக்கீட்டில் பகையாகத் தெரிபவை எதனிலும் ஒருபோதும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது. உண்மையில் இவ்வகையில் கணிய {ஜோதிட} சாத்திரங்களில் தடை செய்யப்பட்ட இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் {சிராத்தம் செய்வதற்குத்} தவிர்க்கப்பட வேண்டும்.(129) ஒருவன் நாவிதர் முடி மழிக்கும்போது கிழக்கையோ, வடக்கையோ நோக்கி இருக்க வேண்டும். ஓ! பெரும் மன்னா, அவ்வாறு செய்வதால் நீண்ட வாழ்நாளை அடைவதில் அவன் வெல்கிறான்.(130) ஓ! பாரதர்களின் தலைவா, ஒருவன், பிறரைக் குறித்த அவதூறு பேசுவது, தன்வெறுப்பில் தன்னைத் தானே கடிந்து கொள்வது ஆகியவற்றில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறரை அவதூறு செய்வதும், தன்னையே தூற்றிக் கொள்வதும் பாவம் நிறைந்த செயல்களாகும்.(131) அங்கக் குறைபாடு உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஒரு கன்னிகையே இருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரே பிரவரங்களைக் கொண்ட {ஒரே கோத்திரத்தில் பிறந்த} பெண் தவிர்க்கப்பட வேண்டும்; ஒழுங்கற்ற உறுப்புகளைக் கொண்ட பெண்ணும், தன் தாய் சார்ந்த குலத்தில் பிறந்த பெண்ணும் தவிர்க்கப்பட வேண்டும்.(132)

ஞானம் கொண்ட ஒருவன், முதிய பெண், காட்டு வாழ்க்கை வாழ இல்லற வாழ்வுமுறையைக் கைவிட்டவள், கணவனுக்கு உண்மையுள்ள பெண், நலமற்ற பிறப்புறுப்புகளைக் கொண்டவள் ஆகியோரிடம் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது.(133) மஞ்சள் நிறம் கொண்டவள், தொழுநோயால் பீடிக்கப்பட்டவள், வலிப்புநோய் உள்ள குடும்பத்தில் பிறந்தவள், பிறப்பு மற்றும் பழக்க வழக்கங்களில் தாழ்ந்தவள்,(134) சிவித்ரி (தொழுநோய்} என்றழைக்கப்படும் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள், விரைவில் மரணம் நேரும் குலத்தில் பிறந்தவள் ஆகியோரையும் திருமணம் செய்து கொள்வது தகாது. மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், பல்வேறு வகைத் தகுதிகளை நிறைவு செய்பவளும்,(135) ஏற்புடையவளும் {இனிமையானவளும்}, அழகானவளுமான ஒரு கன்னிகையே திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தன்னை விட உயர்ந்த குடும்பம் அல்லது குறைந்தது சமமான குடும்பத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.(136) தன் செழிப்பை விரும்பும் ஒருவன், தாழ்ந்த வகை {வர்ணப்} பெண்ணையோ, தான் பிறந்த வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட பெண்ணையோ ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. கவனமாக நெருப்பை மூட்டும் ஒருவன், வேதங்கள் அறிவித்திருக்கும், அல்லது பிராமணங்கள் {வேதசடங்குகள்} விதித்திருக்கும் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்ற வேண்டும். ஒருவன் ஒருபோதும் பெண்களுக்குத் தீங்கிழைக்க முனையக்கூடாது. மனைவிகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.(137,138)

வன்மம் எப்போதும் வாழ்வைக் குறுக்கும். எனவே, ஒருவன் வன்மம் வளர்ப்பதை எப்போதும் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதில் உறக்கம் வாழ்வைக் குறுக்குகிறது. சூரியன் எழுந்த பிறகும் உறங்குவது வாழ்வை குறுக்குகிறது.(139) சந்திப் பொழுதுகள், இரவின் தொடக்கத்திலும் உறங்குபவன், தூய்மையற்ற நிலையில் உறங்கச் செல்பவன் ஆகியோர் தங்கள் வாழ்வைக் குறைத்துக் கொள்கின்றனர். பிறன்மனைநயத்தல் எப்போதும் வாழ்வைக் குறுக்குகிறது. ஒருவன் சவரம் செய்த பிறகு தூய்மையற்ற நிலையில் இருக்கக்கூடாது[18].(140) ஓ! பாரதா, மாலைப்பொழுதில் ஒருவன் படிப்பதையோ, வேதம் உரைப்பதையோ, உண்பதையோ, நீராடுவதையோ கவனமாகத் தவிர்க்க வேண்டும்.(141) மாலை சந்தி வரும்போது ஒருவன் எச்செயலையும் செய்யாமல் தியானத்திற்காகத் தனது புலன்கள் அனைத்தையும் திரட்ட வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு பிராமணர்களை வணங்க வேண்டும்.(142)உண்மையில் ஒருவன் தேவர்களை வழிபடுவதற்கு முன்னரும், ஆசானை மரியாதையாக வணங்குவதற்கு முன்னரும் நீராட வேண்டும். ஒருவன் அழைக்கப்படாமல் ஒருபோதும் வேள்விக்குச் செல்லக்கூடாது. உண்மையில், ஒருவன் வேள்வி எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் காண்பதற்கு மட்டுமே விரும்பினால் அவன் அழைப்பில்லாமலேயே அங்கே செல்லலாம். ஒருவன் (ஏதோ ஓர் காரணத்திற்காக) அழைப்பில்லாமல் ஒரு வேள்விக்குச் சென்றாலும், அவ்வகையில் வேள்வி செய்பவனிடம் இருந்து அவன் உரிய வழிபாட்டைப் பெறவில்லையெனில் அவனுடைய வாழ்வுக் காலம் குறைகிறது. அந்நியர் பகுதிகளுக்கு ஒருவன் தனித்துப் பயணம் செல்லக்கூடாது. அதே போல இரவில் எந்த இடத்திற்கும் தனித்துச் செல்லக்கூடாது.(143,144) மாலை வருவதற்கு முன்பே ஒருவன் தன் வீட்டிற்குத் திரும்பி அதற்குள்ளேயே இருக்க வேண்டும். ஒருவன் தனது தாய், தந்தை மற்றும் ஆசானின் ஆணைகள் நன்மை விளைவிக்குமா, இல்லையா என்று தீர்மானிக்காமலேயே அவற்றுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் பெருங்கவனத்துடன் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் கவனிக்க வேண்டும்.(145,146) ஓ! மன்னா, யானை, குதிரை மற்றும் தேர் ஏற்றப் பயிற்சிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். இவற்றைக் கவனமாகக் கவனிக்கும் மனிதன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(147)

அத்தகைய மன்னன் பகைவர்களால் வெல்லப்படமுடியாதவனாகி தன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரில் தன்னைவிடச் சிறந்தவன் யாருமின்றி அவர்களை ஆள்வதில் வெல்கிறான். அத்தகைய நிலைய அடைபவனும், குடிமக்களைக் காக்கும் கடமையைக் கவனமாகச் செய்பவனுமான மன்னன் ஒருபோதும் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டான்.(148) ஓ! மன்னா, காரண அறிவியல், சொல்லறிவியல், கந்தர்வர்களின் அறிவியல், கலை என்ற பெயரில் அறியப்படும் அறிவின் அறுபத்துநான்கு கிளைகளையும் {கலைகளையும்} நீ அடைய வேண்டும்.(149) ஒருவன் நாள்தோறும் புராணங்கள், இதிகாசங்கள், மற்றும் உயர் ஆன்மா மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள் ஆகியவற்றை மனத்தில் கொள்ள வேண்டும்.(150) ஒருவனுடைய மனைவி விலக்கப்பட்ட காலத்தைக் கடக்கும்போது ஒருவன் அவளுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடாமல், உரையாடுவதற்கு அவளை அழைக்காமலும் இருக்க வேண்டும். ஞானம் கொண்ட மனிதன், நான்காம் நாளில் தூய்மைக்காக நீராடிய பிறகே அவளுடைய தோழமையை ஏற்க வேண்டும்.(151) விலக்குக் காலம் முதலில் தோன்றியதில் இருந்து ஐந்தாம் நாளில் ஒருவன் கலவியில் ஈடுபட்டால் அவன் மகளைப் பெறுகிறான். ஆறாம் நாளில் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் மகனை அடைகிறான். ஞானம் கொண்ட மனிதன், கலவி காரியத்தில் (ஒற்றைப்படை, இரட்டைப்படை என்ற) இவ்விதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.(152)

திருமணத்தின் மூலமாக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். ஒருவன் தன் சிறந்த சக்தியின்படி வேள்விகளில் தேவர்களைத் துதித்து, பல்வேறு வகைப் பொருட்களை வேள்வி தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(153) ஓ! மன்னா, இல்லற வாழ்வுமுறைக்காக {கிருஹஸ்தாஸ்ரமத்திற்காக} விதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ஒருவன் காட்டுத்துறவியின் {வானப்ரஸ்தாஸ்ரம} வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். நீண்ட காலம் வாழ்வதில் வெல்லும் மனிதர்களின் குறியீடுக்ள அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்.(154) ஓ! யுதிஷ்டிரா, என்னிடம் இருந்து கேட்கப்படாமல் எஞ்சியிருப்பதை நீ மூன்றுவேதங்களையும் நன்கறிந்த மனிதர்களின் வாய்களில் இருந்து கேட்க வேண்டும். ஒழுக்கமே செழிப்பின் வேர் என்பதை நீ அறிய வேண்டும். ஒழுக்கமே புகழை அதிகரிக்கிறது.(155) ஒழுக்கமே வாழ்நாளையும் நீட்டிக்கிறது. ஒழுக்கமே தீமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் அழிக்கிறது. ஒழுக்கமே அனைத்து வகை ஞானங்களுக்கும் மேன்மையானது எனச் சொல்லப்படுகிறது.(156) ஒழுக்கமே அறத்தை உண்டாக்குகிறது, அறமே வாழ்வை நீட்டிக்கிறது. ஒழுக்கமே புகழையும், நீண்ட வாழ்நாளையும், சொர்க்கத்தையும் விளைவிக்கிறது. ஒழுக்கமே (அனைத்து வகை நன்மைகளையும் கொண்டு வருவதற்குத்) தேவர்களைத் தணிவடையச் செய்யும் பெருந் திறன்மிக்கச் சடங்காகும். சுயம்புவான பிரம்மனே ஒருவன் அனைத்து வகை மனிதரிடமும் கருணை காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(157)

ஜியேஷ்டகனிஷ்டர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 105-அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் நடந்து கொள்ளும் முறை; தந்தைக்குரிய மதிப்பு; தாயின் மகிமை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அண்ணன் தன் தம்பியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தம்பிகள் தங்கள் அண்ணனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, நீ எப்போதும் உன் தம்பிகளிடம் அண்ணனுக்குரிய முறையில் நடந்து கொள்வாயாக. இந்தச் சகோதரர்களுக்கிடையில் நீயே எப்போதும் மூத்தவனாக இருக்கிறாய். ஓர் ஆசான் தன் சீடர்களிடம் எப்போதும் பின்பற்ற வேண்டிய உயர்ந்த ஒழுக்கத்தையே நீ உன் தம்பிகளிடம் பின்பற்றுவாயாக.(2) ஓர் ஆசான் ஞானமில்லாதவராக இருந்தால், சீடன் மதிப்புமிக்க வகையிலோ, முறையான வழியிலோ அவரிடம் நடந்து கொள்ள மாட்டான். ஓ! பாரதா, அந்த ஆசான் தூய்மையையும், உயர்ந்த ஒழுக்கத்தையும் கொண்டவராக இருந்தால், அந்தச் சீடனும் அதே வகை ஒழுக்கத்தை அடைவதில் வெல்வான்.(3) மூத்த சகோதரன் சில வேளைகளில் தன் தம்பிகள் செய்யும் செயல்களைக் கண்டு குருடனாகவும், தான் ஞானம் கொண்டவனாக இருப்பினும் சில வேளைகளில் அவர்கள் செய்யும் செயல்களைப் புரிந்து கொள்ளாதவன் போலவும் இருக்க வேண்டும். தம்பிகள் வரம்புமீறி குற்றம் புரிந்தால் அண்ணன் மறைமுக வழிமுறைகளில் அவர்களைத் திருத்த வேண்டும்.(4) சகோதரர்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து, அண்ணன் நேரடியாகவோ, வெளிப்படையான வழிமுறைகளிலோ தன் தம்பியைத் திருத்தினால், ஓ! குந்தியின் மகனே, அத்தகைய நல்ல புரிந்துணர்வைக் காண்பதால் கவலையில் பீடிக்கப்படும் பகைவர்கள், அவர்களுக்குள் வேற்றுமையை விளைவித்து, சகோதரர்களைப் பிரிப்பதில் தங்களை நிறுவிக் கொண்டு, அவர்களுக்கு ஒற்றுமையின்மை உண்டாக்க எப்போதும் முனைவார்கள்.(5)

ஓர் அண்ணனே, குடும்பத்தின் செழிப்பை அதிகரிக்கவோ, முற்றிலும் அழிக்கவோ செய்வான். அண்ணன் அறிவில்லாதவனாகவும், தீய நடத்தை கொண்டவனாகவும் இருந்தால், அவன் மொத்த குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டு வருவான்.(6) தம்பிகளுக்குத் தீங்கு செய்யும் அண்ணன் மூத்தவனாகக் கருதப்படாமல், தன் குடும்ப உடைமையில் உள்ள தன் பங்கை இழந்து, மன்னனால் அடக்கப்படத் தகுந்தவனாகிறான்.(7) வஞ்சகமாகச் செயல்படும் மனிதன், துன்பமும், அனைத்து வகைத் தீமைகளும் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதனின் பிறப்பு, பிரம்பு மலர்களைப் போலவே எந்தப் பயனுமில்லாததாகும்[1].(8) பாவம் நிறைந்த மனிதன் பிறக்கும் குடும்பமானது அனைத்து வகைத் தீமைகளுக்கும் ஆட்படுகிறது. அத்தகைய மனிதன் புகழ்க்கேட்டைக் கொண்டு வருகிறான், மேலும் அந்தக் குடும்பத்தின் நற்செயல்கள் அனைத்தும் மறைந்து போகும்.(9) தீச்செயல்களில் ஈடுபடும் சகோதரர்கள் குடும்ப உடைமையில் உள்ள தங்கள் பங்குகளை இழக்கிறார்கள். அத்தகைய வழக்கில், அண்ணனானவன் யௌதுக {தன் மனைவி குடும்பத்தின் மூலம் வந்த சீதன} உடைமையில் எந்தப் பங்கையும் தன் தம்பிகளுக்குக் கொடுக்காமல் மொத்தத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(10)தந்தைவழி உடைமைகளைப் பயன்படுத்தாமல் ஓர் அண்ணன் தொலைவான இடத்திற்குச் செல்வதன் மூலம் எந்த உடைமையையும் ஈட்டினால் அவன் அத்தகைய உடைமைகளில் தன் தம்பிகளுக்கு எந்தப் பங்கையும் கொடுக்காமல் அவற்றைத் தன் சொந்த பயன்பாட்டுக்கே கொள்ளலாம்.(11) பிரியாத சகோதரர்கள், (தங்கள் தந்தையின் வாழ்நாள் காலத்திலேயே) குடும்ப உடைமைகளைப் பிரித்துக் கொள்ள விரும்பினால், தந்தையானவன் தன் மகன்கள் அனைவருக்கும் அவற்றைச் சமப் பங்குகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.(12) அண்ணன், பாவச்செயல்களைச் செய்பவனாகவும், எந்தச் சாதனைக்காகவும் பிரித்தறியப்பட முடியாதவனாகவும் இருந்தால் அவன் தன் தம்பிகளால் அவமதிக்கப்படுவான். மனைவியோ, தம்பியோ பாவம் நிறைந்தவர்களாக இருந்தாலும் அப்போதும் அவள் அல்லது அவனின் நலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.(13) அறத்தின் உச்சவினையை {பலாபலன்களை} அறிந்த மனிதர்கள் அறமே உயர்ந்த நன்மை என்று சொல்கிறார்கள். ஓர் உபாத்யாயர் {தலைமை ஆசிரியர்} பத்து ஆச்சார்யர்களைவிட {ஆசிரியர்களைவிட} உயர்ந்தவர். தந்தையானவர் பத்து உபாத்யாயர்களுக்கு இணையானவர்.(14) ஒரு தாயானவள், பத்து தந்தைக்கோ, மொத்த பூமிக்கோ இணையானவள். தாயினும் பெரியோர் யாருமில்லை. உண்மையில் அவள் தனக்கு உரிய மதிப்புகள் அனைத்தையும் கடந்திருப்பவள்[2].(15)இதன் காரணமாகவே மக்கள் ஒரு தாயை அதிக மதிப்புக்குத் தகுந்தவளாகக் கருதுகிறார்கள். ஓ! பாரதா, தந்தை மூச்சை நிறுத்தியதும் அண்ணனே தந்தையாகக் கருதப்பட வேண்டும்.(16) அண்ணனே அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து, அவர்களைப் பாதுகாக்கவும், பேணி வளர்க்கவும் வேண்டும். தம்பிகள் அனைவரும் அவனை வணங்கி அவனது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.(17) உண்மையில் அவர்கள், தங்கள் தந்தை உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தார்களோ அப்படியே அவனை {அண்ணனைச்} சார்ந்து வாழ வேண்டும். ஓ! பாரதா, தந்தையும், தாயுமே உடலைப் படைக்கின்றனர்.(18) எனினும், ஆச்சாரியார் விதிக்கும் பிறவியே உண்மையில் மங்காததாகவும், அழிவில்லாததாகவும், உண்மையான பிறவியாகவும் கருதப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அக்காள் {தமக்கை} ஒரு தாயைப் போன்றவளாவாள். குழந்தைப் பருவத்தில் பாலூட்ட {உணவூட்டக்} கூடியவளானதால் அண்ணனின் மனைவியும் {அண்ணியும்} ஒரு தம்பிக்குத் தாயைப் போன்றவளே ஆவாள்[3]” என்றார் {பீஷ்மர்}.(19)

உபவாஸ பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 106-உபவாஸங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து அங்கிரஸ் சொன்னது; வேள்விகளுக்கு இணையான பலன்களை அளிக்கக்கூடிய குறிப்பிட்ட உபவாஸங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அனைத்து வகை {வர்ண} மனிதர்களும், மிலேச்சர்களும் நோன்புகள் நோற்கும் இயல்பினராகத் தெரிகிறார்கள். எனினும், இதன் காரணத்தை நாம் அறிந்ததில்லை.(1) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் மட்டுமே நோன்புகள் {விரதங்கள்} நோற்க வேண்டும் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஓ! பாட்டா, உண்ணாநோன்புகளை {உபவாஸங்களை{ நோன்பதன் மூலம் பிற வகை {வர்ண} மக்கள் எவ்வாறு பலனை ஈட்டுவார்கள்?(2) ஓ! மன்னா, நோன்புகளும் {விரதங்களும்}, உண்ணாநோன்புகளும் {உபவாஸங்களும்} அனைத்து வகை {வர்ண} மக்களும் எவ்வாறு நோற்கிறார்கள்? உண்ணாநோன்பு நோற்பதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் அடையும் கதி என்ன?(3) உண்ணாவிரதங்கள் பெரும்புகலிடங்களாக இருப்பவை, உயர்ந்த பலன்களைத் தரவல்லவை என்று சொல்லப்படுகிறது. ஓ! மனிதர்களின் இளவரசே, நோன்புகள் நோற்கும் மனிதனால் இவ்வுலகில் ஈட்டப்படும் கனியென்ன? ஒருவன் அறமீட்டும் வழிமுறைகள் என்னென்ன? ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஒருவன் சொர்க்கத்தையும், பலன்களையும் அடைவதில் வெல்லும் வழிமுறைகள் என்னென்ன?(5) ஓ! மன்னா, உண்ணாநோன்பு நோற்ற பிறகு ஒருவன் ஏன் கொடையளிக்க வேண்டும்? இன்பத்துக்கு வழிவகுக்கும் நோக்கங்களை அடைவதில் வெல்ல ஒருவன் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன?” என்று கேட்டான்”.(6)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “தர்மதேவனால் உண்டானவனும் {யுதிஷ்டிரன்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், தம்மிடம் இவ்வாறு சொன்னவனுமான குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், சாந்தனுவின் மகனுமான பீஷ்மர் பின்வரும் சொற்களில் பதிலளித்தார்.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, விதிப்படி நோன்புகள் {விரதங்கள்} நோற்பதால் உண்டாகும் உயர்ந்த பலன்களை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(8) ஓ! பாரதா, நீ இன்று கேட்ட இதே கேள்விகளை நான் உயர்ந்த தவத் தகுதியைக் கொண்ட முனிவர் அங்கிரசிடம் கேட்டிருக்கிறேன்.(9) இவ்வாறு என்னால் கேட்கப்பட்டவரும், வேள்வித்தீயில் உண்டானவருமான அந்தச் சிறப்புமிக்க முனிவர், விதிப்படி செய்யும் உண்ணாநோன்புகளை நோற்பது குறித்து இவ்வாறு என்னிடம் சொன்னார்.(10)

அங்கிரஸ் {பீஷ்மரிடம்}, “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் பொறுத்தவரையில் ஒரே சீராக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பது {உபவாஸம் இருப்பது} அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், ஓ! மனிதர்களின் தலைவா, ஓரிரவு உண்ணா நோன்பு {உபவாஸம்}, ஈரிரவு, மூவிரவு உண்ணா நோன்புகளே அவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. (மூன்று இரவுகளைக் கடந்து அவர்கள் {பிராமணர்களும், க்ஷத்திரியகளும்} உண்ணாவிரதமிருக்கக்கூடாது).(11) வைசியர்களையும், சூத்திரர்களையும் பொறுத்தவரையில் உண்ணாநோன்புக்கான அவர்களது கால அளவு ஓரிரவே ஆகும். மடமையினால் {அறியாமையினால்} அவர்கள் ஈரிரவு அல்லது மூவிரவு உண்ணாநோன்புகளை நோற்றால், அத்தகைய உண்ணா நோன்புகள் அவர்களது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.(12) உண்மையில், (குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்) அவர்களுக்கு ஈரிரவு உண்ணாநோன்புகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், கடமைகளை அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அவர்களுக்கு மூவிரவு உண்ணாநோன்புகள் விதிக்கப்படவில்லை[1].(13) ஓ! பாரதா, ஞானம் கொண்ட மனிதன், தன் புலன்களையும், ஆன்மாவையும் அடக்கி, ஐந்தாம் சந்திர நாள் {பஞ்சமி}, ஆறாம் சந்திரநாள் {சஷ்டி} மற்றும் முழு நிலவு {பௌர்ணமி} நாள் ஆகியவற்றில் இரண்டு வேளை உணவில் ஒன்றைத் தவிர்த்து உண்ணா நோன்பிருந்தால் அவன் மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும் {பொறுமையுள்ளவனாகவும்}, மேனியழகு கொண்டவனாகவும், சாத்திரங்களை அறிந்தவனாகவும் ஆகிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் பிள்ளையற்றவனாகவோ, ஏழையாகவோ ஆவதில்லை.(14,15)

ஐந்து மற்றும் ஆறாம் சந்திர நாட்களில் {பஞ்சமி, சஷ்டிகளில்} தேவர்களைத் துதித்து வேள்விகளைச் செய்பவன், தன் குடும்பத்தினர் அனைவரையும் கடந்து, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு உணவூட்டுவதில் வெல்கிறான். தேய்பிறையின் எட்டாம் மற்றும் பதினான்காம் சந்திரநாட்களில் {அஷ்டமி மற்றும் சதுர்த்தசியில்} உண்ணாநோன்புகளை {உபவாசம்}[2] நோற்பவன் அனைத்து வகைப் பிணிகளில் இருந்தும் விடுபட்டுப் பெரும் சக்தியை அடைகிறான். மார்கசீரிஷம் என்றழைக்கப்படும் மாதம் {மார்கழி மாதம்} முழுவதையும் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவைத்தவிர்த்துக் கழிப்பவன்,(16,17) மதிப்புடனும், அர்ப்பணிப்புடனும் பிராமணர்களுக்கு உணவூட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். அத்தகைய மனிதன் செழிப்புடன் கூடியவனாகிறான், அனைத்து வகைத் தானியங்களும் அவனுடையதாகின்றன.(18) அவன் சக்தியுடன் கூடியவனாகிறான். உண்மையில், அத்தகைய மனிதன், தன் களங்களில் {வயல்களில்} இருந்து அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்து, பெருஞ்செல்வத்தையும், அதிகத் தானியங்களையும் அடைகிறான்.(19) ஓ! குந்தியின் மகனே, ஒவ்வொரு நாளும் இரு வேளை உணவுகளில் ஒன்றைத் தவிர்த்து பௌஷ மாதம் {தை மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், பெரும் நற்பேற்றுடன் கூடியவனாகி, ஏற்புடைய பண்புகளையும், பெரும்புகழையும் அடைகிறான்.(20)ஒவ்வொரு நாளும் இரு வேளை உணவில் ஒன்றைத் தவிர்த்து மாக மாதம் {மாசி மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பை அடைந்து, தன் சுற்றத்தாருக்கு மத்தியில் திறன்மிக்க நிலையை அடைகிறான்.(21) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு பகதைவத மாதம் {பங்குனி மாதம்} முழுவதையும் கழிப்பவன், பெண்களுக்குப் பிடித்தமானவனாகி, அவர்களை உடனடியாகத் தன் வசப்படுத்துவான்.(22) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு சைத்ர மாதம் {சித்திரை மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பை அடைந்து, பொன், ரத்தினங்கள் மற்றும் முத்துக்களின் வளம்பெறுபவனாகிறான்.(23) புலனடக்கத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு வைசாக மாதம் {வைகாசி மாதம்} முழுவதையும் கழிப்பது, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தன் சுற்றத்தாருக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(24) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு ஜய்ஷ்ட மாதம் {ஆனி மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த நிலையையும், பெருஞ்செல்வத்தையும் அடைவதில் வெல்கிறான். அது {இவ்வாறு நோற்பது ஒரு} பெண்ணாக இருந்தால், அவளும் அதே வெகுமதியையே அறுவடை செய்கிறாள்.(25)

ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு ஆஷாத மாதம் {ஆடி மாதம்} முழுவதையும் கழிப்பவன், அதிகத் தானியங்களையும், பெருஞ்செல்வத்தையும், பெரும் சந்ததியையும் அடைகிறான்.(26) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு சிரவண மாதம் {ஆவணி மாதம்} முழுவதையும் கழிப்பவன், எங்கே வசிக்க நேர்ந்தாலும் அபிஷேக கௌரவங்களைப் பெற்று, தான் ஆதரிக்கும் உற்றார் உறவினருக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைவான்.(27) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு பிரோஷ்தபத மாதம் {புரட்டாசி மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், பெரும் செல்வத்துடன் கூடியவனாகி, நிலைத்துப் பெருகும் செல்வாக்கையும் அடைவான்.(28) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு அஷ்வின் மாதம் {ஐப்பசி மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், ஆன்ம மற்றும் உடல் தூய்மையை அடைந்து, விலங்குகளையும், அபரிமிதமான வாகனவகைகளையும், பெரிய சந்ததியையும் பெறுவான்.(29) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு கார்த்திகா மாதம் {கார்த்திகை மாதம்} முழுவதையும் கழிப்பவன், பெரும் வீரத்தையும், பல மனைவிகளையும், பெரும்புகழையும் அடைவான்.(30)

ஓ! மனிதர்களின் தலைவா, நான் இப்போது பனிரெண்டு மாதங்களில் நோன்புகள் நோன்பதன் மூலம் மனிதர்கள் என்னென்ன பலன்களை அடைவார்கள் என்பதை விவரமாகச் சொன்னேன். ஓ! மன்னா, இனி, ஒவ்வொரு சந்திர நாளுக்கும் உரிய விதிகள் என்ன என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(31) ஒவ்வொரு நாளும் அரிசியைத் தவிர்த்து, ஒவ்வொரு அரைத்திங்களின் {பக்ஷத்தின்} முடிவிலும் அதை {அரிசியை} உட்கொண்டால் அவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களையும், பெரும் சந்ததியையும், நீண்ட வாழ்நாளையும் அடைவான்.(32) ஒவ்வொரு மாதமும் மூன்று இரவுகள் எனப் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து உண்ணாநோன்பை நோற்பவன், போட்டிக்கு எதிரி இல்லாமல், ஒரே உயரத்திற்கு வளர முயற்சிக்கும் வேறு எவராலும் எந்தக் கவலையும் உண்டாகாமல் தன் உற்றார் உறவினர் மற்றும் துணைவர்களுக்கு மத்தியில் மேன்மையான நிலையை அடைவான்.(33) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் சொல்லும் இந்த விதிகள் பனிரெண்டு வருடங்களுக்குப் பின்பற்றப்பட வேண்டியவையாகும். உன் சார்பு அதை நோக்கி வெளிப்படட்டும்.(34)

முற்பகலில் ஒரு முறையும், மாலைக்குப் பிறகு ஒருமுறையும் உண்டு, இடைவெளியில் பருகுவதை (அல்லது எதையும் உண்பதைத்) தவிர்த்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணையை நோற்று, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் தெளிந்த நெய்யை ஆகுதியாக ஊற்றும் மனிதன்(35) ஆறுவருடங்களில் நிச்சயமான வெற்றியை அடைகிறான். இதில் ஐயமேதும் கிடையாது. அத்தகைய மனிதன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை ஈட்டுகிறான்.(36) பலன்களுடன் கூடியவனாக அனைத்துக் களங்கங்களிலிருந்தும் விடுபடும் அவன், ஆடல் மற்றும் பாடல் ஒலிகளை எதிரொலிக்கும் அப்ஸரஸ்களின் உலகத்தை அடைந்து, பேரழகுடன் கூடிய ஆயிரம் காரிகையரின் துணையுடன் தன் நாட்களைக் கடத்துவான்.(37) உருக்கப்பட்ட பொன்னின் நிறத்தாலான தேரைச் செலுத்திச் செல்லும் அவன் பிரம்மலோகத்தில் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான். அந்தப் பலன் தீர்ந்ததும் பூமிக்குத் திரும்பும் அத்தகைய மனிதன் மேன்மையான நிலையை அடைகிறான்.

ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு வேளை உணவுக்கு மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு {அவ்வாறே} தொடர்ந்து ஒரு வருடத்தைக் கழிக்கும் மனிதன்(39) அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான். இறந்த பிறகு சொர்க்கத்திற்கு உயரும் அவன் அங்கே பெரும் கௌரவங்களைப் பெறுகிறான்.(40) அந்தப் பலன் {புண்ணியம்} தீர்ந்ததும் பூமிக்கும் திரும்பு அவன் மேன்மையான நிலையை அடைகிறான்.

தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஒவ்வொரு நான்காம் நாளிலும் உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தி,(41) அனைத்து வகையிலும் தீங்கிழைக்காதவனாக இருந்து, பேச்சில் வாய்மையில் பற்றுக் கொண்டு, தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.(42) இறப்புக்குப் பிறகு சொர்க்கத்திற்கு உயரும் அத்தகைய மனிதன் அங்கே உயர்ந்த வெகுமதிகளை அடைகிறான்.

ஓ! குந்தியின் மகனே, தொடர்ந்து ஐந்து நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஆறாம் நாளில் மட்டுமே உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தும் மனிதன்,(43) குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது சக்கரவாகங்கால் இழுக்கப்படும்.(44) அத்தகைய மனிதன் முழுமையாக நாற்பதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.

தொடர்ந்து ஏழு நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஒவ்வொரு எட்டாம் நாளிலும் உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தும் ஒருவன்,(45) கவாமய வேள்வி செய்த பலனை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது, அன்னங்களாலும், நாரைகளாலும் இழுக்கப்படும்.(46) அத்தகைய மனிதன் ஐம்பதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.

ஓ! மன்னா, ஒவ்வொரு அரைத்திங்கள் {பக்ஷகாலம்} இடைவெளிகளில் மட்டுமே உண்டு ஒரு வருடத்தைக் கடத்தும் ஒருவன்,(47) ஆறு மாதங்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருந்ததன் பலனை அடைகிறான். இது சிறப்பு மிக்க அங்கிரஸால் சொல்லப்பட்டதாகும். அத்தகைய மனிதன் அறுபதாயிரம் வருட காலம் சொர்க்கத்தில் வசிப்பான்.(48) ஓ! மன்னா அவன் ஒவ்வொரு காலையிலும் வீணைகள், வல்லகிகள் மற்றும் புல்லாங்குழல்களின் {வேணுவின்} இனிய இசையால் படுக்கையில் இருந்து எழுப்பப்படுவான்.(49)

ஓ! ஏகாதிபதி, ஒவ்வொரு மாதம் முடியும்போதும் சிறிதளவு நீரை மட்டுமே பருகி ஒரு வருடத்தைக் கடத்தும் ஒருவன் விஷ்வஜித் வேள்வி செய்ததன் பலனை அடைவான்.(50) அத்தகைய மனிதன் சிங்கங்கள் மற்றும் புலிகளால் இழுக்கப்படும் தேரைச் செலுத்துவான். அவன் எழுபதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.(51) ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு மாதத்திற்கும் அதிகமாக எந்த உண்ணாநோன்பும் விதிக்கப்படவில்லை. ஓ! பிருதையின் மகனே, கடமைகளை அறிந்தவர்களான தவசிகளால் அறிவிக்கப்பட்ட உண்ணாநோன்பின் விதி இதுவே ஆகும்.(52) ஒவ்வொரு பிணியில் இருந்தும் விடுபட்டு நோயால் பீடிக்கப்படாமல் ஓர் உண்ணாநோன்பை நோற்கும் மனிதன், உண்மையில் ஒவ்வொரு நோன்பினாலும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(53) அத்தகைய மனிதன் அன்னங்களால் இழுக்கப்படும் தேரில் சொர்க்கத்திற்கு உயர்கிறான். பலத்துடன் கூடிய அவன், நூறாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புறுகிறான்.(54) அழகிய குணங்களைக் கொண்ட நூறு அப்சரஸ்கள் அவனுக்குப் பணிவிடை செய்து அவனோடு விளையாடுவார்கள்.(55) அந்தக் காரிகையரின் காஞ்சிகள் {மேகலைகள்} மற்றும் நுபுரங்களின் {சிலம்புகளின்} ஒலியால் அவன் ஒவ்வொரு காலையிலும் படுக்கையில் இருந்து எழுப்பப்படுவான்.(56) அத்தகைய மனிதன் ஆயிரம் அன்னங்களால் இழுக்கப்படும் தேரைச் செலுத்திச் செல்வான். நூற்றுக்கணக்கான அழகிய காரிகைகள் நிறைந்த உலகத்தில் வசித்துப் பெரும் மகிழ்ச்சியில் அவன் நேரத்தைக் கடத்துவான்.(57)

சொர்க்கத்தை விரும்பும் மனிதன், பலவீனத்தை அடையும்போது பலமடையவோ, காயம்படும்போதும், காயம் ஆறவோ, நோய்வாய்ப்படும்போது குணப்படுத்தும் மருந்துகளையோ, கோபத்திலிருக்கும் போது பிறரின் ஆறுதல்களையோ, செல்வம் செலவழிந்ததன் மூலம் வறுமையால் உண்டாகும் கவலைகளைத் தணிக்கவோ விரும்புவதில்லை.(58,59) அனைத்து வகைப் பண்புகளை இழந்து இவ்வுலகை விட்டுச் செல்லும் அவன், சொர்க்கத்திற்குச் சென்று, அனைத்து வகை ஆபரணங்களாலும் தன் மேனி பளபளக்க, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்களைச் செலுத்துகிறான். அங்கே, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்து, நூற்றுக்கணக்கான அழகிய காரிகையருக்கு மத்தியில் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கிறான்(60)

உண்மையில், உணவையும் இவ்வுலக இன்பங்களையும் தவிர்க்கும் அவன் இவ்வுடலைவிட்டு அங்கன்று, தவங்களின் கனியாகச் சொர்க்கத்திற்கு உயர்கிறான். அங்கே தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நலமும், மகிழ்ச்சியும் அடைந்து, தன் மனத்தில் எழும் விருப்பம் எதுவும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படுகிறான்.(61) அத்தகைய மனிதன் தங்கநிறம் கொண்டதும், காலை சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும் முத்துக்கள் மற்றும் வைடூரியங்கள் பதிக்கப்பட்டதும், வீணைகள் மற்றும் முரஜங்களின {முரசுகளின்} இசையை எதிரொலிப்பதும், கொடிகள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக மணிகளின் கிங்கிணிகளை எதிரொலிப்பதுமான ஒரு தெய்வீகத் தேரைச் செலுத்திச் செல்வான்.(62,63) அத்தகைய மனிதன், தன் உடலில் உள்ள வியர்வைத் துளைகளின் எண்ணிக்கை அளவு வருட காலம் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் பெற்று இன்புற்றிருப்பான்.(64)

வேதத்தைவிட மேன்மையான சாத்திரமேதும் இல்லை. தாயைவிட மதிக்கத் தகுந்த மனிதர் வேறு யாரும் இல்லை. அறத்தைவிட மேன்மையான உடைமை {லாபம்} வேறேதும் இல்லை. உண்ணாநோன்பை விட மேன்மையான தவம் ஏதும் இல்லை.(65) பிராமணர்களை விடப் புனிதமானதெனச் சொர்க்கத்திலோ, பூமியிலோ வேறேதும் இல்லை. அதே வகையில் உண்ணாநோன்புகள் நோற்பதைவிட மேன்மையான வேறு தவம் ஏதுமில்லை.(66) உண்ணாநோன்புகளின் மூலமே தேவர்கள் சொர்க்கவாசிகளாவதில் வென்றனர். உண்ணா நோன்புகளின் மூலமே முனிவர்கள் உயர்ந்த வெற்றியை அடைந்தனர்.(67)

விஷ்வாமித்திரர், ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு முறை உணவில் மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு ஆயிரம் தேவ வருடங்களைக் கழித்ததன் விளைவாகவே அவர் பிராமண நிலையை அடைந்தார்.(68) மன்னிக்கும் பண்பைக் கொண்ட சியவனர், ஜமதக்னி, வசிஷ்டர், கௌதமர், பிருகு ஆகிய பெரும் முனிவர்கள் அனைவரும் உண்ணாநோன்புகள் நோற்றன் மூலமே சொர்க்கத்தை அடைந்தனர்.(69) பழங்காலத்தில் அங்கிரஸ் இவ்வாறே பெரும் முனிவர்களுகுக அறிவித்தார். உண்ணாநோன்புகளின் பலனை மற்றொருவனுக்குக் கற்பிக்கும் மனிதன் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க மாட்டான்.(70) ஓ! குந்தியின் மகனே, உண்ணா நோன்புகள் குறித்த விதிகள் பெரும் முனிவரான அங்கிரசிடம் இருந்தே முறையான வரிசையில் உண்டாகின. இவ்விதிகளை நாள் தோறும் படிப்பவன் அல்லது அவற்றைப் படிக்கக் கேட்பவன் அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.(71) அத்தகைய மனிதன் ஒவ்வொரு துன்பத்தில் இருந்து மட்டும் விடுபடுவதோடல்லாமல் அவனுடைய மனமானது எவ்வகைக் களங்கத்தாலும் தீண்டப்பட முடியாததாகிறது. அத்தகைய மனிதன், மனிதர்களையும் தவிர அனைத்து உயிரினங்களின் ஒலிகளையும் புரிந்து கொள்வதில்வென்று, நித்திய புகழை அடைந்து, தன் வகையில் முதன்மையானவனாகிறான்” என்றார் {பீஷ்மர்}.(72)

உபவாஸ யாக பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 107-யாகம் செய்ய இயலாதவர்கள் உபவாஸங்களின் மூலமே யாக பலனை அடைவது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! உயர் ஆன்ம பாட்டா, வேள்விகள் குறித்தும், இம்மையிலும், மறுமையிலும் அவை அளிக்கும் பலன்கள் குறித்தும் விவரமாக எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, வேள்விகளில் பல்வேறு வகையான பொருட்களைப் பெரிய அளவில் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவற்றை ஏழை மக்களால் செய்ய முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.(2) ஓ! பாட்டா, வேள்விகளால் உண்டாகும் பலன்களை மன்னர்கள் மற்றும் இளவரசர்களால் மட்டுமே அடைய முடியும். செல்வமும், திறனுமற்றுத் தனியாக, ஆதரவற்றவர்களாக வாழும் மக்களால் அந்தப் பலன்களை அடைய இயலாது.(3) ஓ! பாட்டா, வேள்விகள் செய்வதால் உண்டாகும் பலன்களைக் கொண்டவையும், வழிமுறையற்றவர்களாலும் செய்யக்கூடியவையுமான செயல்களைப் பொறுத்தவரையில் விதிகள் என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, கேட்பாயாக. முனிவர் அங்கிரஸால் முதலில் வெளியிடப்பட்டதும், ஆன்மாவுக்குப் பலன்மிக்க உண்ணாநோன்புகள் தொடர்புடையதுமான நான் சொன்ன விதிமுறைகள் (இம்மையிலும், மறுமையிலும் அவை கொண்டு வரும் கனிகளைப் பொறுத்தவரையில்) வேள்விக்குச் சமமானதாகவே கருதப்படுகின்றன.(5) முற்பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் உணவுண்டு, அதன் இடைவெளியில் எந்த உணவையோ, பானத்தையோ உட்கொள்ளாமல், தொடர்ந்து ஆறு வருடங்கள் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றும் மனிதன் ஐயமில்லாமல் வெற்றியை அடைகிறான். அத்தகைய மனிதன், மறுமையில் உருக்கிய தங்கத்தின் நிறத்திலான தேரையும், ஒரு வசிப்பிடத்தையும் அடைந்து, பிரஜாபதியின் உலகத்தில் பத்து லட்சம் வருடங்கள் தெய்வீக காரிகையரின் துணையுடனும், ஆடல் மற்றும் பாடலொலிகள் எதிரொலிக்க, நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசிப்பான்.(6-8)

ஒவ்வொரு நாளும் ஒரேயொரு வேளை உணவில் தன்னை அடக்கிக் கொண்டு, தான் மணந்த மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் கலவியை எப்போதும் தவிர்த்து மூன்று வருடங்களைக் கடத்துபவன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9) அத்தகைய மனிதன், வாசவனுக்கு {இந்திரனுக்குப்} பிடித்தமானதும், அபரிமிதமான பொற்கொடை அளிக்கப்பட்டதுமான ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். வாக்கில் வாய்மை பயின்று, கொடைகள் அளித்து, பிராமணர்களை மதித்து, வன்மத்தைத் தவிர்த்து,(10) மன்னிக்கும் குணத்தை அடைந்து, தற்கட்டுப்பாட்டுடன் கோபத்தை வெல்லும் மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான். மேகம் போன்ற வெண்ணிறம் கொண்டதும், அன்னங்களால் இழுக்கப்படுவதுமான தேரைச் செலுத்திக் கொண்டு, அப்சரஸ்களின் துணையுடன் லட்சோபலட்சம் ஆண்டுகள் வாழ்கிறான்.ஒரு முழு நாள் உண்ணாநோன்பிருந்து, இரண்டாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு,(11,12) மொத்த வருட காலமும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், உண்மையில், அத்தகைய நோன்பை நோற்று, ஒவ்வொரு நாளும் சூரியன் எழுவதற்கு முன்பு படுக்கையில் இருந்து எழுந்து, ஒவ்வொரு நாளும் தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்(13) அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தகைய மனிதன் அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்பட்ட தேரை அடைகிறான்.(14) அவன், மிக அழகிய காரிகைகள் சூழ இந்திரலோகத்தில் வசிக்கிறான்.

{இரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து,} மூன்று நாளைக்கொரு முறை மட்டுமே உணவை உண்டு,(15) மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன், உண்மையில் இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலையிலும் சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்து தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்,(16) அதிராத்ர வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் மயில்கள், அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் தேரை அடைகிறான்.(17) (தெய்வீக) முனிவர்கள் எழுவரின் உலகங்களுக்குச் செல்லும் அவன், பேரழகுடைய அப்சரஸ்கள் சூழ அங்கேயே தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்கிறான். அத்தகைய வாசம் முழுமையாக மூன்று பத்ம வருடங்கள் நீடித்திருப்பதாக நன்கு அறியப்பட்டுள்ளது[1].(18)தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாநோன்பிருந்து, நான்காம் நாளில் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, தன் புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றுபவன்,(19) வாஜபேய வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் அடையும் தேரானது, இந்திரனைத் தங்கள் தந்தையாகக் கொண்டவர்களும், பேரழகுடன் கூடியவர்களுமான தெய்வீக காரிகையரால் நிறைந்திருக்கும்.(20) அவன் லட்சோபலட்சம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் வசித்திருந்து, தேவர்களின் தலைவனுடைய விளையாட்டுகளைக் கண்டு பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பான்.(21)

தொடர்ந்து நான்கு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஐந்தாம் நாளில் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(22) பேராசையின்றி, வாய்மை பேசி, பிராமணர்களை மதித்து, அனைத்து வகைத் தீங்குகளை விட்டும் விலகி, பாவம் மற்றும் வன்மத்தைத் தவிர்த்து வாழ்பவன், வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.(23) அவன், தங்கத்தால் அமைக்கப்பட்டதும், அன்னங்களால் இழுக்கப்படுவதும், பல சூரியன்கள் ஒன்றாக எழுந்தால் உண்டாகும் பிரகாசத்துடன் கூடியதுமான தேரைச் செலுத்துகிறான். அதுதவிர, தூய வெண்ணிறத்தாலான மாடமாளிகை ஒன்றையும் அடைகிறான். அங்கே அவன் முழுமையாக ஐம்பத்தோரு பத்ம வருடங்கள் பெரும் மகிழ்ச்சியோடு வாழ்கிறான்[2].(25)ஐந்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஆறாம் நாளில் மட்டுமே உணவு உண்டு, மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(26) தன்னைத் தூய்மை செய்து கொள்ள ஒரு நாளைக்கு மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து, தன் வேண்டுதல்களைச் சொல்லி வழிபட்டு, தன்னொழுக்கத்தில் வன்மம் இல்லாமல் பிரம்மச்சரிய வாழ்வை வாழும் ஒருவன் கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(27) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்க நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதும், அன்னங்கள் மற்றும் மயில்களால் இழுக்கப்பட்டதுமான ஒரு சிறந்த தேரை அவன் அடைகிறான்.(28) அப்சரஸ்களின் மடியில் உறங்கும் அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் காஞ்சிகள் {மேகலைகள்} மற்றும் நுபுரங்களின் {சிலம்புகளின்} இனிய கிங்கிணியால் விழிப்படையச் செய்யப்படுகிறான்.(29) அவன் பதினெட்டுப் பத்மங்கள் மற்றும் இரண்டு பதாகங்கள் தவிர ஆயிரத்து முன்னேறு கோடி வருடங்கள் அத்தகைய மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வான்.(30) அத்தகைய மனிதன் ஐயாயிரம் கரடிகளின் உடல்களில் உள்ள மயிர்களின் எண்ணிகை அளவுக்கான வருடங்கள் பிரம்மலோகத்தில் அனைவராலும் கௌரவிக்கப்பட்டு வசித்து வருவான்[3].(31)ஆறு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஒவ்வொரு ஏழாம் நாளிலும் ஒரு வேளை மட்டுமே உண்டு, முழுமையாக ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு நாளும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(32) பேச்சை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பை நோற்று, மலர்கள், களிம்புகள், தேன் மற்றும் இறைச்சிப் பயன்பாட்டைத் தவிர்த்து இருப்பவன்,(33) மருத்துகள் மற்றும் இந்திரனின் உலகங்களை அடைகிறான். அவன் தன் மனத்தில் எழும் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு, தெய்வீகக் காரிகையரால் பணிசெய்யப்பட்டு, துதிக்கப்படுகிறான்.(34) அபரிமிதமான தங்கத்தைக் கொடையளிக்கும் ஒரு வேள்வி செய்த பலனை அவன் அடைகிறான். மேற்சொன்ன உலகங்களுக்குச் செல்லும் அவன் அங்கே எண்ணற்ற வருடங்கள் பெரும் மகிழ்ச்சியில் வாழ்கிறான்.(35)

அனைவரிடமும் பொறுமை காத்து, ஏழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, மொத்த வருடதில் ஒவ்வொரு எட்டு நாளும் உண்டு, புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றி, தேவர்களை முறையாக வழிபடுபவன்,(36) பௌண்டரீக வேள்வி செய்த உயர்ந்த பலன்களை அடைகிறான். அவன் தாமரையின் நிறம் கொண்ட தேரைச் செலுத்துவான்.(37) அத்தகைய மனிதன், இளமையும் அழகும் கொண்டவர்களும், மிக ஏற்கத்தக்க வகையிலான குணங்களையும், பார்வைகளையும் கொண்டவர்களும் கரிய நிறம் கொண்ட சிலரும், தங்க போன்ற நிறம் கொண்ட சிறரும், சியாமைகள் சிலரும் எனப் பெரும் எண்ணிக்கையிலான காரிகையரை அடைகிறான்[4].(38)எட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு ஒன்பதாம் நாளிலும் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு, நாள்தோறும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன்,(39) ஆயிரம் குதிரைவேள்விகள் செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் சொர்க்கத்தில் செலுத்தும் தேரானது ஒரு தாமரையைப் போன்ற அழகுடையதாக இருக்கும்.(40) எப்போதும் அவன், தெய்வீக மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், நடுப்பகல் சூரியன் அல்லது சுடர்மிக்க நெருப்பின் தழல்களுடைய பிரகாசத்துடன் கூடியவர்களுமான ருத்ரனுடைய பெண்களின் துணையுடன் தேர்களில் பயணம் செய்வான்.(41) ருத்ரனின் உலகங்களை அடைந்து அங்கே அவன் எண்ணற்ற வருடங்கள் பெரும் மகழ்ச்சியில் வாழ்வான்.(42)

ஒன்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு பத்தாவது நாளும் ஒரேயொரு வேளை உணவை உண்டு, நாள்தோறும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன்,(43) ஆயிரம் குதிரை வேள்விகள் செய்த உயர்ந்த பலனைப் பெற்று, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கவரவல்ல அழகுடன் கூடிய பிரம்மனின் மகன்களுடைய துணையையும் அடைகிறான்.(44) இத்தகைய அழகுடன் கூடிய இந்தக் காரிகையரில் தாமரையைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிலரும், அதே மலரின் நீல வகையிலான நிறத்தைக் கொண்ட சிலரும் எப்போதும் அவனை இன்பத்துடன் வைத்திருக்கிறார்கள்.(45) அழகாக வலம் வருவதும், ஆவர்த்தம் என்றழைக்கப்படும் அடர்த்தியான மேகம் போலத் தெரிவதும், பெருங்கடலின் அலைக்கு ஒப்பாகச் சொல்லப்படுவதுமான ஓர் அழகிய தேரை அவன் அடைவான்.(46) முத்து மற்றும் ரத்தினச்சரங்களின் கிங்கிணியையும், சங்கின் இனிய முழக்கங்களையும் எப்போதும் எதிரொலிக்கும் அந்த வாகனம், படிகம் மற்றும், வைரங்களால் அமைக்கப்பட்ட தூண்களாலும், அதே பொருட்களால் கட்டப்பட்ட பீடத்துடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.(47) அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் அத்தகைய தேரில் பயணம் செய்யும் அவன் சொர்க்கத்தில் கோடானகோடி வருடங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.(48)

பத்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு பதினோராம் நாளிலும் நெய்யை மட்டுமே உண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(49) சொல்லாலோ, எண்ணத்தாலோ அடுத்தவரின் மனைவிகளின் மேல் ஒருபோதும் ஆசை கொள்ளாதவனும், தன் தாய்க்காகவும், தந்தைக்காகவும் கூட ஒருபோதும் பொய் பேசாதவனுமான ஒருவன்,(50) பெரும்பலம் கொண்ட மஹாதேவன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் காண்பதில் வெல்வான். அத்தகைய மனிதன் ஓராயிரம் குதிரை வேள்விகள் செய்த உயர்ந்த பலனை அடைகிறான்.(51) அவன் சுயம்புவான பிரம்மனின் தேர் தன்னை அழைத்துச் செல்ல வருவதைக் காண்பான். பசும்பொன் மோன்ற பிரகாசத்துடனும், பேரழகுடனும் கூடிய தெய்வீகக் காரிகையரின் துணையுடன் அவன் அதை {அந்தத் தேரைச்} செலுத்துவான்.(52) யுகநெருப்பின் காந்தியுடன் சுடர்விடும் அவன் சொர்க்கத்தின் தெய்வீக மாளிகையில் முழுமையான மகிழ்ச்சியுடன் எண்ணற்ற வருடங்கள் வாழ்வான்.(53) அந்த எண்ணற்ற வருடங்களும் அவன், தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படும் ருத்திரனுக்குத் தலைவணங்கி இன்பமாக வாழ்வான்.(54) அத்தகைய மனிதன் ஒவ்வொரு நாளும் அந்தத் தேவனைக் காண்பான்.

பதினோரு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பனிரெண்டாம் நாளில் மட்டும் சிறிதளவு நெய்யை மட்டுமே உண்டு,(55) மொத்த வருடமும் இவ்வொழுக்கத்தை நோற்கும் மனிதன், அனைத்து வேள்விகளையும் செய்த பலன்களை அடைவதில் வெல்வான். அவன் செலுத்தும் தேர் பனிரெண்டு சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக இருக்கும்.(56) பெரும் மதிப்புமிக்க ரத்தினங்கள், முத்துகள் மற்றும் பவளங்களால் அலங்கரிக்கப்பட்டதும், இன்னிசை முழங்கும் அன்னங்கள், பாம்புகள், மயில்கள் மற்றும் சக்கரவாகங்களால் செறிவூட்டப்பட்டதும், பெரிய குவிமுக மாடங்களால் அழகூட்டப்பட்டதுமான பிரம்மலோகத்தை அடைந்து அங்கே வசிக்கிறான்.(57,58) ஓ! மன்னா, அந்த வசிப்பிடம் (பணிவிடை செய்யக் காத்திருக்கும்) ஆண்கள் மற்றும் பெண்களால் எப்போதும் நிறைந்திருப்பதாகும். அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான முனிவர் அங்கிரஸ் (இத்தகைய நோன்பிற்கான கனிகளாக) இதையே சொல்லியிருக்கிறார்.(59)

பனிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதிமூன்றாம் நாளில் சிறிதளவு நெய்யுண்டு, மொத்த வருடமும் இவ்வழியிலேயே தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், தெய்வீக வேள்வி {தேவஸத்ர வேள்வி} செய்த பலனை அடைவதில் வெல்கிறான்.(60) அத்தகைய மனிதன், புதிதாய் மலர்ந்த தாமரையின் நிறத்தைக் கொண்டதும், பசும்பொன்னாலும், ரத்தினக்குவியல்களாலும் அலங்கரிக்கப்பட்ட {ரக்தபத்மோதயம் என்றழைக்கப்படும்} ஒரு தேரை அடைகிறான்.(61) அவன், தெய்வீகக் காரியர்களால் நிறைந்ததும், அனைத்து வகைத் தேவ ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக நறுமணங்கள் கமழ்வதும், அனைத்து வகை இன்பங்களையும் கொண்டதான மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(62) அவன் அந்த மகிழ்ச்சிகரமான உலகத்தில் வசிக்கும் வருடங்களின் எண்ணிக்கை எண்ணற்றதாகும்[5].(63) கந்தர்வர்களின் இனிய குரல், இசையொலி, பணவங்கள் ஆகியவற்றால் ஆறுதலடையும் அவன் பேரழகுடன் கூடிய காரிகைகளால் தொடர்ந்து மகிழ்ச்சியூட்டப்படுவான்.(64)பதிமூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து பதினான்காம் நாளில் சிறிதளவு நெய்யும் உண்டு, முழு வருடமும் இவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன் மஹாமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்[6].(65) விவரிக்கமுடியாத அழகைக் கொண்டவர்களும், தோற்றத்தில் இளமையாகவே இருப்பதால் வயதை ஊகித்தறிய முடியாதவர்களும், அனைத்து ஆபரணங்கள் மற்றும் சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தெய்வீகக் காரிகையர், அவனது பயணங்களில் அவனைப் பின் தொடரத் தேர்கள் பலவற்றில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.(66) ஒவ்வொரு காலையிலும், அன்னங்களின் மெல்லிய குரல், நுபுரங்களின் {சிலம்புகளின்} கிங்கிணி, காஞ்சிகளின் {மேகலைகளின்} இனிய ஒலி ஆகியவற்றால் படுக்கையில் இருந்து அவன் எழுப்பப்படுவான். உண்மையில், கங்கையின் கரைகளில் உள்ள மணலின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் அத்தக தெய்வீகக் காரிகையர் பணிவிடை செய்யும் மேன்மையான வசிப்பிடத்தில் அவன் வசித்திருப்பான்.(67)புலன்களை அடக்கி, ஓர் அரைத்திங்கள் {ஒரு பக்ஷ காலம்} உண்ணா நோன்பிருந்து, பதினாறாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உட்கொண்டு, இவ்வழியில் மொத்த வருடமும் தன்னைத் தாங்கிக் கொண்டு, நாள்தோறும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(68,69) ஓராயிரம் ராஜசூய வேள்விகள் செய்த உயர்ந்த பலன்களை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது பேரழகுடன் கூடியதாகவும், அன்னங்கள் மற்றும் மயில்களால் இழுக்கபடுவதாகவும் இருக்கும். முத்துமாலை மற்றும் பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், அனைத்து வகை ஆபரணங்களும் பூண்ட தெய்வீகக் காரிகையரின் கூட்டத்தால் நிறைந்ததும்,(71) ஒற்றைத் தூணையும், நான்கு வளைவுகளையும், மிக மங்கலமான ஏழு பீடங்களையும் கொண்டதும், ஆயிரம் கொடிகளுடன் கூடியதும், இசையொலியை எதிரொலிப்பதும்,(72) தெய்வீக குணங்களையும், தேவர்களின் குணங்களையும் கொண்டதும், ரத்தினங்கள், முத்துகள், பவளங்கள் ஆகியவை நிறைந்ததும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு தேரைச் செலுத்தும் அத்தகைய மனிதன், அவ்வாகனத்தை இழுக்க யானைகளையும், காண்டாமிருகங்களையும் கொண்டு ஆயிரம் யுகங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்திருப்பான்.(73)

பதினைந்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதினாறாம் நாளில் ஒரு வேளை உணவை உண்டு, இவழியில் மொத்த ஆண்டும் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், சோம வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(74) சொர்க்கத்திற்குச் செல்லும் அவன் சோமனுடைய மகள்களின் துணையுடன் வாழ்கிறான். சோமனைப் போலவே இனிய நறுமணக் களிம்புகளால் அவனது உடலில் நறுமணம் கமழும் அவன் தான் விரும்பும் இடத்திற்கு உடனே செல்லும் சக்தியையும் அடைகிறான்.(75) மிக அழகிய குணங்களையும், ஏற்புடைய நடத்தையுயும் கொண்ட காரிகையர் பணிசெய்ய, அனைத்து வகை இன்பங்களுடன் கூடியவனாகத் தேரில் அமர்ந்திருப்பான்.(76) அவன் இத்தகைய இன்பங்களைக் கணக்கில்லாத ஆண்டுகள் அனுபவிப்பான்[7].(77)பதினாறு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, பதினேழாம் நாளில் சிறிதளவு நெய்யை உண்டு, ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு. ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(78) வருண, இந்திர, ருத்திர, மருத்து, உசானஸ, பிரம்ம லோகங்களுக்குச் செல்கிறான்.(79) அங்கே அவன் தெய்வீகக் காரிகையரால் பணிவிடை செய்யப்பட்டு, புர்புவன் என்றழைக்கப்படும் தெய்வீக முனிவரின் காட்சியைப் பெற்று மொத்த அண்டத்தையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவில்) அடக்குகிறான்.(80) தேவர்களின் தேவனுடைய {பிரம்மனின்} மகள்கள் அங்கே அவனுக்கு மகிழ்ச்சியூட்டுகிறார்கள். ஏற்புடைய {இனிய} நடத்தை கொண்டவர்களும், அனைத்து ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்தக் காரிகையர் முப்பத்திரண்டு வடிவங்களை ஏற்கவல்லவர்களாவர்.(81) ஆகாயத்தில் சூரியனும், சந்திரனும் நகரும் வரை, ஞானம் கொண்ட அந்த மனிதனும் அமுதத்தைப் பருகியபடியே அந்த இன்ப உலகத்தில் வசித்திருப்பான்[8].(82)பதினேழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதினெட்டாம் நாளில் ஒரேயொரு வேளை மட்டும் உணவை உண்டு, அவ்வழியிலேயே மொத்த ஆண்டும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் அண்டத்திலுள்ள ஏழு உலகங்களையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவிற்குள்} அடக்கிவிடுவான்.(83) அவன் தன் தேரில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஏற்புடைய சடசடப்பொலியைக் கொண்டவையும், ஆபரணங்களாலும், அழகாலும் சுடர்விடும் தெய்வீகக் காரிகைகளால் செலுத்தப்படுபவையுமான தேர்க்கூட்டங்களால் எப்போதும் பின்தொடரப்படுவான்.(84) தெய்வீகமானதும், பேரழகுடன் கூடியதுமான தன் வாகனத்தைப் பெரும் மகிழ்ச்சியில் இன்புற்றவாறே அவன் செலுத்திக் கொண்டிருப்பான். அது சிங்கங்களாலும், புலிகளாலும் இழுக்கப்பட்டு மேகவொலியைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்கும்.(85) அவன் அத்தகைய இன்ப உலகத்தில், அமுதம் போன்ற இனிய சுவையுள்ளவற்றை உண்டு ஆயிரம் கல்பங்கள் வாழ்வான்.(86)

பதினெட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பத்தொன்பதாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு ஒரு முழுமையான வருடம் இதே வழியில் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், இந்த அண்டத்திலுள்ள ஏழு உலகங்களையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவிற்குள்} அடக்கிவிடுவான்.(87) அவன் அடையும் உலகத்தில் அப்சரஸ்களின் எண்ணற்ற இனக்குழுக்கள் வசிக்கின்றன, அது கந்தர்வர்களின் இனிய குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவன் செலுத்தும் தேர், சூரியப் பிரகாசத்தைக் கொண்டதாகும்.(88) அனைத்துக் கவலையில் இருந்தும் விடுபட்ட இதயத்துடன் கூடிய அவனிடம் தெய்வீகக் காரிகையரில் முதன்மையானோர் பணி செய்வார்கள். தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், அழகிய வடிவைக் கொண்டவனாகவும் அவன் கோடானுகோடி ஆண்டுகள் அத்தகைய இன்பத்தில் வாழ்ந்திருப்பான்.(89)

பத்தொன்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு இருபதாம் நாளில் மட்டும் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடமும் இவ்வழியிலேயே தன்னைத் தாங்கிக் கொண்டு, எப்போதும் பேச்சில் வாய்மையைப் பின்பற்றி, வேறு (சிறந்த) சடங்குகளையும் பின்பற்றி,(90) இறைச்சியைத் தவிர்த்து, பிரம்மச்சரிய வாழ்வை நோற்று, அனைத்து உயிரினங்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்து வாழும் மனிதன், பரந்து விரிந்தவையும், பெரும் மகிழ்ச்சியைக் கொண்டவையுமான ஆதித்தியர்களின் உலகங்களை அடைகிறார்கள்.(91) அவன் தன் தேரில் பயணம் மேற்கொள்ளும்போது, தெய்வீக மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்ட கந்தர்வகள் மற்றும் அப்சரஸ்களால் செலுத்தப்படும் தேர்க்கூட்டங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.(92)

இருபது நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தோராம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு, தன் புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றுபவன்,(93) உசானஸ், சக்ரன், அஸ்வினிகள் மற்றும் மருத்துகளின் உலகங்களை அடைந்து, பெருமளவிலான தடங்கலில்லா மகிழ்ச்சியுடன் அங்கே வாழ்கிறான்.(94) எந்த வகைக் கவலையையும் அறியாத அவன், தன் பயணங்களில் முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தெய்வீகக் காரிகையரில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்டு, பலத்துடன் கூடியவனாக ஒரு தேவனைப் போலவே அங்கே விளையாடிக் கொண்டிருப்பான்.(95)

இருபத்தோரு நாட்கள் உண்ணாநோன்பிருந்து இருபத்திரண்டாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை உற்றி,(96) எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்வதைத் தவிர்த்து, பேச்சில் வாய்மையில் பற்றுக் கொண்டு, வன்மத்தில் இருந்து விடுபட்டு வாழும் மனிதன் வசுக்களின் உலகை அடைந்து, சூரியப் பிரகாசம் கொண்டவனாகிறான்.(97) விரும்பிய இடம் எங்கும் செல்லும் சக்தியைக் கொண்டவனாக அமுதத்தைப் பருகி, முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்களை அணிந்து கொண்டு, தெய்வீகக் காரிகையரின் துணையுடன் இன்பத்தில் அவன் விளையாடிக் கொண்டிருப்பான்.(98)

இருபத்திரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்துமூன்றாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடம் இவ்வழியில் தன்னைத் தாங்கிக் கொண்டு, இவ்வாறே தன் உணவுமுறையை வகைமை செய்து கொண்டு, தன் புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் மனிதன்,(99) காற்றுதேவன் {வாயு}, உசானஸ் மற்றும் ருத்திரனின் உலகங்களை அடைகிறான். விரும்பிய எந்த இடத்திற்கும் செல்லவல்லவனாகத் திரியும் அவன் அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் வழிபடப்படுகிறான்.(100) முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தன் மேனியை தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்ளும் அவன், அந்தப் பேரின்ப நிலையில் தெய்வீகக் காரிகையரின் துணையுடன் எண்ணற்ற வருடங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(101)

இருபத்துமூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இருபத்துநான்காம் நாளில் சிறிதளவு நெய்யையுண்டு, இவ்வழியில் ஒரு முழு வருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொண்டு, தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(102) மேனியில் தெய்வீக ஆடைகளையும், மாலைகளையும் பூண்டு, தெய்வீக நறுமணங்களையும், களிம்புகளையும் பூசிக் கொண்டு, பெரும் மகிழ்ச்சியுடன் ஆதித்தியர்களின் உலகங்களில் எண்ணற வருடங்கள் வசிக்கிறான்.(103) தங்கத்தால் அமைந்ததும், பேரழகுடன் கூடியதும், அன்னங்களால் இழுக்கப்படுவதுமான சிறந்த தேரைச் செலுத்தும் அவன், ஆயிரமாயிரம் தெய்வீகக் காரியரின் துணையுடன் இன்பத்தில் திளைத்திருக்கிறான்.(104)

இருபத்து நான்கு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இருபத்தைந்தாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வாறு ஒரு முழுவருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், முதன்மையான வகையைச் சார்ந்ததும், அனைத்து வகை இன்பங்கள் நிறைந்ததுமான ஒரு தேரை அடைவதில் வெல்கிறான்.(105) அவனுடைய பயணங்களில், சிங்கங்கள் மற்றும் புலிகளால் இழுக்கப்படுபவையும், மேகமுழக்கம் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்குபவையும், தெய்வீகக் காரிகையரால் செலுத்தப்படுபவையும், பசும்பொன்னால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையுமான தேர்க்கூட்டங்களால் அவன் பின் தொடரப்படுவான். பேரழகுடன் கூடிய ஒரு சிறந்த தெய்வீகத் தேரைச் செலுத்தும் அவன்,(106,107) நூற்றக்கணக்கான தெய்வீகக் கன்னிகையரின் துணையுடன், அமுதம் போன்ற இனிமையான சுவைமிக்கவற்றை உண்டு ஓராயிரம் கல்பங்கள் அவ்வுலகங்களில் வசித்திருப்பான்.(108)

இருபத்தைந்து நாட்கள் உண்ணா நோன்பிருந்து இருபத்தாறாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு, இத்தகைய உணவு நடைமுறையை நோற்று ஒரு முழு வருடமும் இவ்வாறு தன்னைத் தாங்கிக் கொண்டு,(109) (உலகப் பொருட்களின்) பற்றுகளில் இருந்து விடுபட்டு, தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்து, நாள்தோறும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் அருள்நிறைந்த மனிதன், அப்சரஸ்களால் வழிபடப்பட்டு, ஏழு மருத்துகள் மற்றும் வசுக்களின் உலகங்களை அடைவான்.(110) அவன் பயணம் மேற்கொள்ளும்போது, சிறந்த படிகங்களால் ஆனவையும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அவனுக்கு அனைத்து வகை மதிப்புகளை அளிக்கும் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களால் செலுத்தப்படும் தேர்க்கூட்டங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும். இத்தகைய இன்பநிலையில், தெய்வீக சக்தியுடன் கூடியவனாக இரண்டாயிரம் யுகங்கள் அந்த உலகங்களில் வசிக்கிறான்.(111,112)

இருபத்தாறு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தேழாம் நாள் ஒரேயொரு வேளை உணவுண்டு, இவ்வழியில் ஒரு முழு வருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(113) பெரும் பலனை ஈட்டி, தேவர்களிடம் இருந்து பெரும் கௌரவங்களைப் பெற்றுச் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அங்கே வசிக்கும் அவன் அமுதம் உண்டு, அனைத்து வகைத் தாகங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்து வகை இன்பங்களை அனுபவிப்பான்.(114) ஓ! மன்னா, அனைத்துக் களங்கங்களில் இருந்து தூய்மையடைந்த ஆன்மாவுடன், பேரழகுடன் கூடிய தெய்வீகத் தேரில் பயணம் மேற்கொள்ளும் அவன், தெய்வீக முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் வகையில் அங்கே தன்னைத் தாங்கிக் கொள்வான்.(115) பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், உயர்ந்த ஏற்புடைய நடத்தையுடன் கூடிய தெய்வீகக் காரிகையரின் துணையுடன் மூவாயிரம் யுகங்கள் மற்றும் கல்பங்களுக்கு அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருக்கிறான்.(116)

இருபத்தேழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தெட்டாம் நாள் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, இவ்வழியில் ஒரு வருடம் முழுவதும் புலன்கள் மற்றும் ஆன்மாவை நன்கு கட்டுப்படுத்தித் தன்னைத் தாங்கிக் கொள்பவன்,(117) தெய்வீக முனிவர்கள் அடைவதற்கு இணையான மிகப்பெரும் பலனை அடைவான். இன்பத்திற்குரிய அனைத்து வகைப் பொருட்களுடன் பெரும் சக்தியையும் கொண்டு அவன் நடுப்பகல் சூரியனைப் போலப் பிரகாசிக்கிறான்.(118) மிக மென்மையான குணங்களைக் கொண்டவர்களும், பிரகாசமான நிறத்தையும், பருத்த கொங்கைகளையும், சிறுத்த இடையையும், {வாழைபோன்ற} வழவழப்பான தொடைகளையும் கொண்டவர்களும், தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான விளையாட்டுக் காரிகைகள்,(119) அனைத்து வகை இன்பப் பொருட்களுடன் கூடியதும், சூரியப் பிரகாசம் கொண்டதும், இனிமை நிறைந்ததுமான சிறந்த தேரை அவன் செலுத்திக் கொண்டிருக்கும்போது, ஆயிரமாயிரம் கல்பங்கள் அவனுக்கு மகிழ்வூட்டுகின்றனர்.(120)

இருபத்தெட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தொன்பதாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடமும் இவ்வழியில் தன்னைத் தாங்கிக் கொண்டு, பேச்சில் வாய்மையுடன் இருக்கும் மனிதன்,(121) தெய்வீக முனிவர்களாலும், அரசமுனிகளாலும் வழிபடப்படுபவையும், பெரும் மகிழ்ச்சி நிறைந்தவையுமான மங்கல உலகங்களை அடைகிறான். சூரியன் மற்றும் சந்திரனின் பிரகாசத்துடன் கூடியதும், பசும்பொன்னாலானதும், அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், மெல்லிசை பாடும் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்களால் செலுத்தப்படுவதுமான தேரை அடைகிறான்.(122,123) அங்கே அவன் அனைத்து வகைத் தெய்வீக ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மங்கலக் காரிகைகளால் பணிவிடை செய்யப்படுகிறான். இனிய இயல்புகளையும், ஏற்புடைய குணங்களையும் கொண்டவர்களும், பெரும் சக்தியுடன் கூடியவர்களுமான இவர்கள் தங்கள் துணையால் அவனுக்கு மகிழ்வூட்டுகிறார்கள்.(124) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும், பெரும்சக்தியையும், சுடர்மிக்க நெருப்பின் காந்தியையும் கொண்ட அவன், தேவனைப் போல ஒளிர்ந்து, சிறப்புகள் அனைத்தையும் கொண்ட தேவ வடிவை அடைகிறான்.(125) அவன் வசுக்கள், மருத்துகள், சாத்யஸ்கள், அஸ்வினிகள், ருத்திரர்கள் மற்றும் பிரம்மலோகங்களை அடைகிறான்.(126)

ஒரு முழு மாதம் உண்ணாநோன்பிருந்து, பின்தொடரும் மாதத்தின் முதல்நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு வருடம் முழுவதும் தன்னைத் தாங்கிக் கொண்டு, அனைத்தையும் சம பார்வையுடன் பார்த்து வரும் மனிதன், பிரம்மலோகத்தையே அடைகிறான்.(127) அங்கே அவன் அமுதம் பருகி வாழ்கிறான். பேரழகுடன் கூடியவனாகவும், அனைவருக்கும் ஏற்புடையவனாகவும் இருக்கும் அவன், ஆயிரங்கதிர் கொண்ட சூரியனைப் போலவே சக்தியிலும், செழிப்பிலும் ஒளிர்கிறான்.(128) யோகத்தில் அர்ப்பணிப்புடன், தெய்வீக ஆடைகள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக நறுமணப் பொருட்கைளயும், களிம்புகளையும் பூசிக் கொண்டு, சிறு துன்பத்தையும் அறியாமல் தன் நேரத்தைப் பெரும் மகிழ்ச்சியுடன் கடத்துகிறான். பிரகாசத்தில் சுடர்விடும் காரிகையரின் பணியை ஏற்றுத் தன்னுடைய தேரில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(129) தெய்வீக முனிவர்கள் மற்றும் ருத்திரர்களின் மகள்களான அந்தக் காரிகையர், மதிப்புடன் அவனைத் துதிப்பார்கள்.(130) மிக இனிமையான, மிக ஏற்புடைய பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், பல்வேறு வகை இனிய பேச்சுகளைக் கொண்டவர்களுமான அவர்கள், பல்வேறு வகைகளிலும், வழிகளிலும் பணிவிடை செய்து மகிழ்வூட்டுவார்கள்.(131) அவன் பயணங்கள் மேற்கொள்ளும்போது, (நுட்பமாக அமைந்திருக்கும் பொருட்களால்) ஆகாயத்தின் நிறத்தில் தெரியும் தேரைச் செலுத்திச் செல்கிறான். அவனுக்குப் பின்னால், சந்திரனைப் போலத் தெரியும்தேர்களும், அவனுக்கு முன்னால் மேகங்களுக்கு ஒப்பான தேர்களும்ம், வலப்புறத்தில் சிவப்பு வண்ணத் தேர்களும், அவனுக்குக் கீழே நீல நிறத் தேர்களும், அவனுக்கு மேலே பல்வேறு வண்ணங்களிலான தேர்களும் பின்தொடர்கின்றன[9]. அவன் எப்போதும் தனக்குப் பணிவிடை செய்பவர்களால் துதிக்கப்படுகிறான்.(132,133). பெரும் ஞானம் கொண்ட அவன், பூமியில் ஜம்புத்வீபம் என்றழைக்கப்படும் பகுதியில் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் பொழியும் மழைத்துளிகளின் அளவுக்கான வருடங்கள் பிரம்மலோகத்தில் வாழ்வான்.(134) உண்மையில், ஒரு தேவனின் பிரகாசத்தைக் கொண்ட அவன், மழைக்காலங்களில் பூமியில் விழும் மழைத்துளிகளின் அளவுக்கான வருடங்கள் கலப்பற்ற இன்ப நிலையைக் கொண்ட அந்த உலகத்தில் வாழ்வான்.(135)ஒரு மாதம் முழுவதும் உண்ணாநோன்பிருந்து, பின்வரும் மாதத்தின் முதல்நாளில் உண்டு, இவ்வழியில் பத்து வருடங்கள் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன் பெரும் முனிவன் என்ற தகுதியை அடைகிறான். அவன் இப்பிறவியில் செய்த செயல்களின் வெகுமதியாகச் சொர்க்கத்திற்குச் செல்லும்போது வடிவத்தில் எந்த மாற்றத்திற்கும் உட்பட வேண்டியதில்லை.(136) உண்மையில், பேச்சைத் தவிர்த்து, தன்மறுப்பைப் பயின்று, கோபத்தையும், பாலியல் பசியையும், உண்ணும் ஆசையையும் அடக்கி, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்று, இரு சந்திப் பொழுதுகளிலும் முறையாகத் துதிப்பதன் மூலம் ஒருவன் இந்நிலையை அடைகிறான்.(137) இவற்றையும், இதுபோன்ற நோன்புகளையும் நோற்று இவ்வழியில் உண்பதன் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் மனிதன், ஆகாயம் போன்ற களங்கமற்றவனாகி, சூரியனைப் போலப் பிரகாசிக்கிறான்.(138) ஓ! மன்னா, அத்தகைய மனிதன், தன் சொந்த உடல் வடிவத்துடனேயே சொர்க்கத்திற்குச் சென்று, தேவனைப் போல விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.(139)

ஓ! பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறே நான் உண்ணாநோன்புகளின் கனிகளை {பயன்களைச்} சார்ந்த வேள்விகளின் சிறந்த விதிகளை ஒன்றன்பின் ஒன்றாக உனக்குச் சொன்னேன்[10].(140) ஓ! பிருதையின் மகனே, (வேள்விகளைச் செய்ய இயலாத) ஏழை மக்கள், இவற்றின் மூலம் (உண்ணா நோன்புகளை நோற்பதன் மூலம்) {வேள்வி செய்த} கனிகளை அடைவார்கள். உண்மையில், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓர் ஏழை மனிதனும் தேவர்களையும், பிராமணர்களையும் வழிபட்டுவரும் அதே வேளையில், இந்த உண்ணா நோன்புகளை நோற்பதன் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றனர். இவ்வாறே உண்ணாநோன்புகள் குறித்த விதிகளை விரிவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(141,142) நோன்புகளை நோற்பவர்கள், விழிப்புணர்வு நிறைந்தவர்கள், தூயவர்கள், உயர் ஆன்மாக்கள், செருக்கில் இருந்தும், அனைத்து வகைக் கருத்து முடிவுகளில் இருந்தும் விடுபட்டவர்கள், அர்ப்பணிப்புள்ள புத்திமான்கள், பாதையில் இருந்து வழுவாமல் நோக்கத்தில் நிலைத்திருந்து தங்கள் முடிவை உறுதியுடன் பின்பற்றுபவர்கள் ஆகியோரிடம் ஒருபோதும் ஐயங்கொள்ளலாகாது” என்றார் {பீஷ்மர்}.(143)

சரீரத்தீர்த்தங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 108-தீர்த்தங்களும், தூய்மைகளும் எவை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தீர்த்தங்கள் அனைத்திலும் எது முதன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், எந்தத் தீர்த்தத்தால் பெருந்தூய்மை உண்டாகிறது என்பதையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்துத் தீர்த்தங்களும் பலன்கொண்டவையே என்பதில் ஐயமில்லை. எனினும், ஞானம் கொண்ட மனிதர்களுக்குத் தீர்த்தமும், தூய்மையும் எது என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) நித்திய வாய்மையைப் பின்பற்றும் ஒருவன், ஆழங்காண முடியாததும், களங்கமற்றதும், தூய்மையானதும், வாய்மையையே நீராகக் கொண்டதும், புத்தியையே தடாகமாகக் கொண்டதுமான மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராட வேண்டும்[2].(3) ஒருவன் இத்தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் தூய்மையின் வடிவில் அடையப்படும் கனிகளே {பயன்களே}, பேராசையிலிருந்து விடுதலை, நேர்மை, வாய்மை, (நடத்தையில்) மென்மை, கருணை, எந்த உயிரினத்துக்கும் தீங்கிழையாமை, தற்கட்டுப்பாடு மற்றும் அமைதி {மன அடக்கம்} ஆகியவையாகும்.(4) பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள், செருக்கற்றவர்கள், (இன்பதுன்பம், புகழ்பழி, வெப்பம்குளிர் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவர்கள், மனைவி, பிள்ளைகள், வீடுகள், தோட்டங்கள் முதலியவை இல்லாதவர்கள், தூய்மையுடன் கூடியவர்கள், பிறரால் கொடுக்கப்படும் பிச்சையில் மட்டுமே வாழ்பவர்கள் ஆகியோர் தீர்த்தங்களாகக் கருதப்படுகிறார்கள்.(5)அனைத்துப் பொருட்களின் உண்மையை அறிந்தவனும், நான், எனது என்ற {அகங்காரக்} கருத்தில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் உயர்ந்த தீர்த்தமாகச் சொல்லப்படுகிறான்[3]. தூய்மைக்கான குறியீடுகளைத் தேடும்போது உன் பார்வை இந்தக் குணங்களில் (அஃதாவது இந்தக் குணங்கள் இருக்கும் இடத்தில் தூய்மை இருக்கும், இல்லாத இடத்தில் தூய்மை இல்லை என்று கொள்வதற்காக) எப்போதும் செலுத்தப்பட வேண்டும்.(6) சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்கள் கழுவப்பட்ட ஆன்மாவைக் கொண்டோர், (புறத்) தூய்மை மற்றும் தூய்மையின்மைகளைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுக்கு முன்மொழிந்து கொண்ட முடிவுகளைப் பின்தொடர்பவர்கள்,(7) அனைத்தையும் துறந்தவர்கள், அனைத்தையும் அறிந்தவர்கள், அண்டப் பார்வை கொண்டவர்கள், தூய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் தூய்மை செய்யும் சக்தி படைத்த தீர்த்தங்களாகக் கருதப்படுகின்றனர்.(8) அங்கங்கள் நீரில் நனைந்ததால் மட்டுமே ஒரு மனிதன் கழுவப்பட்டவனாகக் கருதப்படமாட்டான். மறுபறம் அவன் தன்மறுப்பால் தன்னைக் கழுவிக் கொண்டால் அவன் கழுவப்பட்டவனாகக் கருதப்படுவான். அத்தகைய மனிதனே அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(9) கடந்த காலத்தைக் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளாதவர்கள், உண்மையில், ஆசையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் உயர்ந்த தூய்மையைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(10)அறிவே தனிச்சிறப்புள்ள உடல்தூய்மையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. அதே போல ஆசையில் இருந்து விடுதலையும் மன உற்சாகமும் அவ்வாறே சொல்லப்படுகிறது.(11) ஒழுக்கத்தூய்மையானது, மனத்தூய்மையில் அடங்கியிருக்கிறது. புனித நீர்நிலைகளில் செய்யப்படும் தூய்மைச் சடங்குகளால் ஒருவன் அடையும் தூய்மை தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.(12) சுடர்மிக்க மனத்துடன், பிரம்ம அறிவு என்ற நீரில், மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் ஒருவனால் செய்யப்படும் தூய்மைச்சடங்குகளே வாய்மையறிந்தோருக்கு உண்மையான தூய்மைச்சடங்குகளாகும்.(13) உண்மையான ஒழுக்கத்தூய்மை கொண்டவனும், அனைவரிடமும் முறையான அணுகுமைறையைப் பாதுகாப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவுனும், உண்மையில் (தூய) குணங்களும் தகுதியும் கொண்டவனுமான மனிதனே உண்மையில் தூய்மையானவனாகக் கருதப்படுகிறான்.(14) நான் சொன்ன இவையே உடலில் உள்ள தீர்த்தங்களாகச் சொல்லப்படுகின்றன. பூமியில் அமைந்திருக்கும் புனிதத் தீர்த்தங்களையும் சொல்கிறேன் கேட்பாயாக.(15)

உடலின் தனிச்சிறப்புள்ள குணங்கள் புனிதமானவையாகச் சொல்லப்படுவதைப் போலவே, பூமியில் உள்ள குறிப்பிட்ட இடங்களும், குறிப்பிட்ட நீர்நிலைகளும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(16) தீர்த்தங்களின் பெயர்களைச் சொல்வதன் மூலமும், அங்கே தூய்மைச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், அவ்விடங்களில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிப்பதன் மூலமும் ஒருவனுடைய பாவங்கள் கழுவப்படுகின்றன.. உண்மையில், இவ்வாறு பாவங்கள் கழுவப்பட்ட மனிதன், இவ்வுலகை விட்டுச் செல்லும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17) அறவோரின் தொடர்புடையதன் விளைவாகவும், அந்த இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நீர்நிலைகளில் உள்ள பூமியின் சிறப்புத்திறன்களின் மூலமும், பூமியில் குறிப்பிட்ட பகுதிகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(18) மனோதீர்த்தங்கள் பூமியில் உள்ளவற்றைக் காட்டிலும் தனியானவையும், வேறுபட்டவையுமாகும். இரண்டிலும் நீராடும் மனிதன் தாமதமில்லாமல் வெற்றியை அடைகிறான்.(19) முயற்சியில்லாத பலம், அல்லது பலமில்லாத முயற்சி ஆகியவற்றால் தனியாக எதையும் நிறைவேற்ற முடியாமல், இவை சேர்ந்திருக்கும்போதே அனைத்தையும் நிறைவேற்ற முடிவதைப் போலவே,(20) உடலில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதும், பூமியில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதுமான தூய்மையுடன் கூடிய ஒருவன் உண்மையில் தூய்மையடைந்து வெற்றியை அடைகிறான். இரண்டு மூலங்களில் இருந்தும் பெறப்படும் தூய்மையே சிறந்ததாகும்” என்றார் {பீஷ்மர்}.(21)

விஷ்ணுவும், உபவாஸமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 109-பனிரெண்டு மாதங்களில், பனிரெண்டு பெயர்களால் விஷ்ணுவைத் துதிப்பதன் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, இவ்வுலகில் அனைத்து வகை உண்ணா நோன்புகளிலும் உயர்ந்ததும், நன்மையானதும், குறிப்பிடத்தக்கதுமான பலன் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒருவன் எதைச் செய்வதன் மூலம் ஐயமில்லாமல் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான் என்பதைச் சுயம்புவே பாடியிருக்கிறான் கேட்பாயாக.(2)

மார்கசீரிஷம் {மார்கழி} என்றழைக்கப்படும் மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனைக், கேசவனாக {கேசவன் என்று சொல்லி} வழிபடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து கழுவப்பட்டு, ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(3)

அதே வகையில், பௌஷ {தை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை நாராயணனாக வழிபடும் மனிதன், உயர்ந்த வெற்றியை அடைந்து, வாஜபேய வேள்வியைச் செயத பலனை அடைகிறான்.(4)

மாக {மாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மாதவனாக வழிபடும் மனிதன், தன் குலத்தை (துன்பத்தில் இருந்து) மீட்டு, ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான்[1].(5)பால்குன {பங்குனி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை கோவிந்தனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகத்திற்குச் சென்று அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான்.(6)

சைத்ர {சித்திரை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை விஷ்ணுவாக வழிபடும் மனிதன், தேவர்களின் உலகிற்குச் சென்று, பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைகிறான்.(7)

வைசாக {வைகாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} அதேபோன்ற உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மதுசூதனனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகிற்குச் சென்று அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(8)

ஜய்ஷ்ட (ஆனி) மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (பலியின் வேள்வியில்) அண்டத்தையே தன் மூன்று அடிகளால் மறைத்தவனாக {திரிவிக்கிரமனாக} வழிபடும் மனிதன், பெரும் மகிழ்ச்சியுடன் அப்சரஸ்களுடன் விளையாடிக் கொண்டு கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9)

ஆஷாத {ஆடி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (அசுர மன்னன் பலியியை வஞ்சித்த) வாமனனாக வழிபடும் ஒருவன், அப்சரஸ்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டே, நரமேத வேள்வியின் பலன்களை அடைகிறான்[2].(10)சிரவண {ஆவணி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ஸ்ரீதரனாக வழிபடும் ஒருவன், தான் இன்பத்தில் விளையாடும் சொர்க்கத்தில் ஓர் அழகிய தேரை அடைந்து, பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(11)

பாத்ரபத {புரட்டாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ரிஷிகேசனாக {ஹ்ருஷீகேசனாக} வழிபடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்து, சௌத்ராமணி வேள்வி செய்த பலன்களை அடைவான்.(12)

அஸ்வினி {ஐப்பசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனைப் பத்மநாபனாக வழிபடும் ஒருவன், ஆயிரம் பசுக்கள் கொடையளிக்கப்பட்டும் செய்யப்பட்ட வேள்வியின் பலன்களை ஐயமில்லாமல் கொடுக்கும்.(13)

கார்த்திகா {கார்த்திகை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனை தாமோதரனாக வழிபடும் ஒருவன், அனைத்து வேள்விகளையும் செய்த மொத்த பலன்களையும் ஐயமில்லாமல் அடைகிறான்.(14)

இவ்வழியில் மொத்த வருடமும் கிருஷ்ணனை புண்டரீகாக்ஷனாகத் துதிப்பவன் பெரும் அளவினால தங்கத்தை அடைந்து, தன் முற்பிறவிகளின் சம்பவங்களை நினைவுகூரும் சக்தியை அடைகிறான்.(15)

அதேபோல, ஒவ்வொரு நாளும் கிருஷ்ணனை உபேந்திரனாக வழிபடும் ஒருவன் அவனோடு அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான். இவ்வழியில் கிருஷ்ணனை வழிபட்ட பிறகு, ஒருவன் தன் நோன்பை முடிவுக்குக் கொண்டு வந்து, எண்ணற்ற பிராமணர்களுக்கு உணவூட்டி, நெய்யாலான கொடைகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(16)

புராதனமானவனும், சிறப்புமிக்கவனுமான விஷ்ணுவே, இவ்வகை உண்ணாநோன்புடன் தொடர்புடைய மேன்மையான பலன்களைக் கொண்ட  வேறு உண்ணாநோன்பு ஏதுமில்லை என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}”.(17

சந்திரவிரதம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 110-ழகு செல்வம் முதலியவற்றை அடைவதற்குச் செய்ய வேண்டிய சந்திர நோன்பு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருகுலப் பாட்டனும், வயதில் முதிர்ந்தவரும், அப்போது கணைப்படுக்கையில் கிடந்தவருமான பீஷ்மரிடம் சென்ற பெரும் ஞானம் கொண்ட யுதிஷ்டிரன் பின்வரும் கேள்வியைக் கேட்டான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வடிவ அழகு, செழிப்பு, ஏற்புடைய இயல்பு ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு அடைகிறான்? உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு ஈட்டுகிறான்? ஒருவன் எவ்வாறு மகிழ்ச்சியுடன் கூடியவனாகிறான்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மார்கசீரிஷ {மார்கழி} மாதத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் கூடியிருக்கும் நாளில் அதே நட்சத்திரத்தை {மூல நட்சத்திரத்தையே} பாதங்களாகவும், ரோகிணியைக் கணுக்கால்களாகவும்,(3) அசுவினியை முழங்கால்களாகவும், இரண்டு ஆஷாதங்களை {பூராட உத்தராடங்களைத்} தொடைகளாகவும், பால்குனிகள் {பூரம் உத்தரங்களைக்} குதமாகவும், கிருத்திகையை இடுப்பாகவும்,(4) பாத்ரபதங்களை {பூரட்டாதி உத்தரட்டாதிகளை} உந்தியாகவும், ரேவதியை வயிற்றுப் பகுதியாகவும், தனிஷ்டையை {அவிட்டத்தை} முதுகாகவும், அனுராதாவை {அனுஷத்தை} வயிறாகவும்,(5) விசாகத்தை இரு தோள்களாகவும், ஹஸ்தத்தை இரு கைகளாகவும், புனர்வசுவை {புனர்பூசத்தை} விரல்களாகவும், அஸ்லேஷத்தை {ஆயில்யத்தை} நகங்களாகவும்,(6) ஜியேஷ்டையை {கேட்டையைக்} கழுத்தாகவும், சிரவணத்தை {திருவோணத்தைக்} காதுகளாகவும், புஷ்யத்தை {பூசத்தை} வாயாகவும், ஸ்வாதியைப் பற்கள் மற்றும் உதடுகளாகவும்,(7) சதாபிஷத்தை {சதயத்தைச்} புன்னகையாகவும், மகத்தை மூக்காகவும், மிருகசீர்ஷத்தைக் கண்களாகவும், சித்திரையை நெற்றியாகவும்,(8) பரணியைத் தலையாகவும், ஆர்த்திராவை {திருவாதிரையை} மயிராகவும் {கேசமாகவும்} கொண்டிருக்கும் {நிலவுக்கான} சந்திர விரதம் தொடங்கப்பட வேண்டும் {தியானம் செய்ய வேண்டும்}. அந்த நோன்பின் முடிவில், வேதமறிந்த பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்கப்பட வேண்டும்.(9)

அந்நோன்பின் கனியாக ஒருவன், செழிப்பு, மேனி அழகு, அறிவைத் தரும் நற்பேறு ஆகியவற்றைக் கொண்டவனாகிறான். உண்மையில், அத்தகைய நோன்பின் விளைவாக முழு நிலவைப் போலவே அவன் (அனைத்து வகை நற்குணங்களும்) நிறைந்தவனாகிறான்” என்றார் {பீஷ்மர்}.(10)

பாவப்பிறவிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 111-அறம் எவ்வாறு ஒருவனைப் பின்தொடர்கிறது; உயிர்வித்து எவ்வாறு உண்டாகிறது; ஜீவன் எவ்வாறு பிறந்து வளர்கிறது; உடலைக் கைவிடும்போது, ஜீவன் எவ்வாறு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது; பல்வேறு செயல்களின் விளைவால் ஜீவன் அடையும் பல்வேறு வடிவங்களிலான பிறவிகள் குறித்து யுதிஷ்டிரனுக்கும் பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்து பெரும் ஞானம் கொண்டவரே, எவற்றின் விளைவாக மனித உயிரினங்கள் மறுபிறவி எனும் பயணத்தில் சுழல்கின்றனவோ அந்தச் சிறந்த விதிகளை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! மன்னா, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் மனிதர்கள் உயர்ந்த சொர்க்கத்தை அடைகின்றனர்? எவ்வொழுக்கத்தைப் பின்பற்றினால் ஒருவன் நரகில் மூழ்குகிறான்?(2) மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற செயலற்ற இறந்த உடலைக் கைவிட்டு, மக்கள் மறுஉலகத்திற்குச் செல்லும்போது, அவர்களைப் பின்தொடர்பவை எவை?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும் சிறப்புமிக்கவருமான பிருஹஸ்பதி அதோ வருகிறார். நீ அவரிடமே இதைக் கேட்பாயாக. இக்காரியம் ஒரு நித்திய புதிராகும்.(4) இக்காரியத்தை வேறு யாராலும் விளக்க முடியாது. பிருஹஸ்பதியைப் போன்ற பேச்சாளர் வேறு எவரும் இல்லை” என்றார்”.(5)வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், “பிருதையின் மகனும் {யுதிஷ்டிரனும்}, கங்கையின் மகனும் {பீஷ்மரும்} இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தபோது, தூய்மையான ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவருமான பிருஹஸ்பதி ஆகாய வழியில் அவ்விடத்திற்கு வந்தார்.(6) திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனும், வேறு அனைவரும் எழுந்து நின்று, உரிய கௌரவங்களுடன் பிருஹஸ்பதியை வரவேற்றனர். உண்மையில், அவர்கள் தேவர்களின் ஆசானுக்கு {பிருஹஸ்பதிக்கு} அளித்த வழிபாடு சிறப்புமிக்கதாக இருந்தது.(7) பிறகு தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரன், சிறப்புமிக்கவரான பிருஹஸ்பதியை அணுகி, உண்மையை அறிய விரும்பி உரிய வடிவில் கேள்வியைக் கேட்டான்.(8)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, நீர் கடமைகளை மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவராவீர். உண்மையில மனித உயிரினங்களின் நண்பன் யார் என்பதை எனக்குச் சொல்வீராக.(9) தந்தை, தாய், மகன், ஆசான், உற்றார் உறவினர், நண்பர்கள் என்றழைக்கப்படுபவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உண்மையில் ஒரு மனித உயிரினத்தின் நண்பனாக {துணையாக} இருப்பது யார்? ஒருவன் மரக்கட்டையையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற தன் இறந்த உடலைக் கைவிட்டு அடுத்த உலகிற்குச் செல்கிறான். அங்கே அவனைப் பின்தொடர்ந்து செல்வது யார்?” என்று கேட்டான்.(10)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒருவன் தனியாகவே பிறக்கிறான்; தனியாகவே இறக்கிறான்; தான் சந்திக்கும் சிரமங்கள் அனைத்தையும் அவன் தனியாகவே கடக்கிறான்; தனக்கு ஏற்படும் எந்தத் துன்பத்தையும் அவன் தனியாகவே அனுபவிக்கிறான்.(11) இச்செயல்களில் உண்மையில் ஒருவனுக்கு எவனும் துணைவனல்ல. தந்தை, தாய், சகோதரன், மகன், ஆசான், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்,(12) ஒரு கணம் மட்டுமே துக்கமடைந்து, இறந்த உடலை மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்று கைவிட்டு, தங்கள் சொந்த காரியங்களைப் பார்க்க வேறு முகமாகச் செல்வார்கள்.(13) அவர்கள் அனைவராலும் இவ்வாறு கைவிடப்பட்ட உடலை அறம் மட்டுமே பின்தொடர்கிறது. எனவே, அறம் மட்டுமே ஒருவனுடைய நண்பன், அறம் மட்டுமே அனைவராலும் நாடப்பட வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(14) அறத்துடன் கூடியவன் சொர்க்கத்தால் அமைந்த உயர்ந்த கதியை அடைகிறான். அவன் அறமற்றவனாக இருந்தால் நரகை அடைகிறான்.(15) எனவே, புத்தியுள்ள மனிதன் நீதிமிக்க வழிமுறைகளில் வெல்லப்பட்ட செல்வத்தைக் கொண்டு அறமீட்டுவதற்கு எப்போதும் முயல வேண்டும். மறுமையில் உயிரினங்களுக்கு ஒரே உற்ற நண்பன் அறம் மட்டுமே ஆகும்.(16) அதிக அறிவில்லாதவனும், ஆசையால் மதிமயங்கியவனுமான ஒரு மனிதன், பேராசை, மயக்கம் {அறியாமை}, கருணை, அச்சம் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு வேறொருவருக்காகவாவது முறையற்ற செயல்களில் ஈடுபடுவது காணப்படுகிறது.(17) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றுமே வாழ்வின் கனியாகின்றன. ஒருவன் ஒழுங்கற்றவற்றிலும், பாவத்திலிம் இருந்து விடுபடுவதன் மூலம் இம்மூன்றையும் அடைய வேண்டும்” என்றார்.(18)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “சிறப்புமிக்க உம்மால் பேசப்பட்டதும், உயர்ந்த நன்மையைத் தருவதும், அறம் நிறைந்ததுமான சொற்களைக் கவனமாகக் கேட்டேன். நான் இப்போது (மரணத்திற்குப் பிறகான) உடலின் இருப்பு குறித்து அறிய விரும்புகிறேன்.(19) ஒரு மனிதனின் சடலம் நுட்பமானதாகவும், வெளிப்படா {புலப்படாத்} தன்மை கொண்டதாகவும் ஆகிறது. அறத்தால் எவ்வாறு அதைப் பின்தொடர முடியும்?” என்று கேட்டான்.(20)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “பூமி {நிலம்}, காற்று, ஆகாயம், நீர், ஒளி, மனம், யமன் (இறந்தோரின் மன்னன்), புத்தி, ஆன்மா, பகல், இரவு ஆகிய அனைத்தும் சேர்ந்து வாழும் உயிரினங்கள் செய்யும் நன்மைகள் (மற்றும் தீமைகளை) சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. (இறக்கும்போது) இவற்றைக் கொண்ட அறமானது அந்த உயிரினத்தைப் பின்தொடர்கிறது.(21,22) ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, உயிர், தோல், எலும்புகள், இறைச்சி, உயிர்வித்து, குருதி ஆகியவற்றை உடல் இழக்கும் அதே நேரத்தில் அவையும் அதை விட்டு அகல்கின்றன.(23) தகுதியுடன் (மற்றும் குறையுடனும்) கூடிய ஜீவன், (இந்த உடல் அழிந்த பிறகு) மற்றொன்றை அடைகிறது. ஜீவன் அந்த உடலை அடைந்ததும், ஐம்பூதங்களின் தலைமைத் தேவர்கள் அவனது நற்செயல்களையும், தீச்செயல்களையும் சாட்சியாகக் காண்கின்றனர்.(24) நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்? அறத்துடன் கூடியதாக இருந்தால் ஜீவன் மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்மை மற்றும் மறுமை குறித்து வேறென்ன நான் உரையாட வேண்டும்?” என்று கேட்டார்.(25)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “சிறப்புமிக்க நீர் அறம் எவ்வாறு ஜீவனைத் தொடர்கிறது என்று சொன்னீர். உயிர்வித்து எவ்வாறு தோன்றுகிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(26)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உடலில் வசிக்கும், பூமி, காற்று, ஆகாயம், நீர், ஒளி, மனம் ஆகிய தேவர்கள் உண்ணும் உணவு அவர்களை நிறைவடையச் செய்கிறது. ஓ! ஏகாதிபதி, ஓ! தூய ஆன்மாவே, ஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐம்பூதங்களும் நிறைவடையும்போது, அவர்களுடைய உயிர்வித்து உண்டாகிறது.(28) ஆண் மற்றும் பெண்ணுக்கிடையில் ஒரு கலவிச் செயல் நடைபெறும்போது, வெளியே பாயும் உயிர்வித்துக் கருவை உண்டாக்குகிறது. இவ்வாறு நீ கேட்டதற்கு நான் விளக்கமளித்தேன். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார்.(29)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, கருத்தரித்தல் எவ்வாறு நடைபெறுகிறது. பிறவி எடுக்கும் ஜீவன் (உடலைப் பெறுவதன் மூலம்) எவ்வாறு வளர்கிறது என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(30)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஜீவன் உயிர்வித்துக்குள் நுழைந்த உடனேயே, அவன் ஏற்கனவே சொல்லப்பட்ட பூதங்களால் நிறைகிறான். ஜீவன் அவற்றில் இருந்து பிரியும் போது மறுகதி (மரணம்) அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(31) அந்தப் பூதங்கள் அனைத்துடன் சேரும் ஜீவன் அதன் விளைவாக உடலைப் பெறுகிறான். அந்தப் பூதங்களின் தலைமைத் தேவர்கள், அவனுடைய நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் சாட்சியாகக் காண்கிறார்கள். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார்.(32)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, தோல், எலும்பு, மற்றும் இறைச்சியைக் கைவிட்டு அந்தப் பூதங்கள் அனைத்துமற்ற ஜீவன், இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் எதில் வசிக்கிறது?” என்று கேட்டான்.(33)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, தன் செயல்கள் {கர்மங்கள்} அனைத்துடன் கூடிய ஜீவன் விரைவாக உயிர்வித்துக்குள் நுழைந்து, பெண்களின் பருவநீரைப் பெற்றுக் காலத்தில் பிறப்பை அடைகிறான்.(34) பிறந்த பிறகு, ஜீவனானவன் யமனின் தூதுவர்களிடம் இருந்து துன்பத்தையும் மரணத்தையும் பெறுகிறான். உண்மையில், துன்பதுயரம் நிறைந்த மறுபிறவிச் சுழல் அவனுடைய மரபுரிமையாகும்.(35) ஓ! மன்னா, உயிருடன் கூடிய ஜீவன் இவ்வுலகில் தான் பிறந்த கணம் முதல் (முற்பிறவி சார்ந்த) தன் சொந்த செயல்களின் அறம் (மற்றும் அதற்கு முரணானவற்றைச்) சார்ந்து இன்புறவும், துன்புறவும் செய்கிறான்.(36) ஒரு ஜீவன், தான் பிறந்த நாள் முதல் தன் சக்திக்குத் தகுந்தபடி அறத்தையே பின்பற்றினால், அவன் மறுபிறவி எடுக்கும்போது தடங்கலில்லாத மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(37) மறுபுறம், தடங்கலில்லாமல் அறத்தைப் பின்பற்றாமல் அவன் பாவம்நிறைந்து செயல்பட்டால், மறுபிறவியில் அவன் முதலில் தன் அறத்தின் வெகுமதியாக மகிழ்ச்சியை அறுவடை செய்து, அதன் பிறகு துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறான்.(38) மறத்துடன் கூடிய ஜீவன், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குச் சென்று அங்கே பெருந்துன்பத்தை அனுபவித்து, பிறகு இடைநிலை உயிரின வகையில் தன் பிறப்பை எடுக்கிறான்.(39) ஜீவன் மடமையில் மயக்கமடைந்து செய்யும் பல்வேறு செயல்களால் எவ்வாறு பல்வேறு வகை உயிரினங்களாகப் பிறப்பை அடைகின்றனர் என்று வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் (புனித) வரலாறுகளில் அறிவிக்கப்பட்டுள்ளதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(40)

மானிடர்கள் பயங்கரமான யமலோகத்தை அடைகின்றனர். ஓ! மன்னா, அவ்வுலகத்தில் அனைத்துத் தகுதிகள் நிறைந்வையும், தேவர்களின் வசிப்பிடமாக இருப்பதற்குத் தகுந்தவையுமான இடங்கள் இருக்கின்றன.(41) மேலும் அவ்வுலகத்தில், விலங்குகள் மற்றும் பறவைகள் வசிக்கும் பகுதிகளைவிட இழிந்த இடங்களும் இருக்கின்றன. உண்மையில், (மகிழ்ச்சியைப் பொறுத்தவரையில்) பிரம்மலோகத்திற்கு இணையான தகுதிகளைக் கொண்ட இடங்களும் யமலோகத்தில் இருக்கின்றன.(42) உயிரினங்கள், தங்கள் செயல்களால் கட்டப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றன. இதன் பிறகு, பெரும் துன்பமும், பயங்கரமும் நிறைந்த கதியை ஒரு மனிதன் எவற்றின் விளைவால் அடைவானோ அந்தச் செயல்களையும், இயல்புகளைம் நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)

நான்கு வேதங்களையும் கற்ற ஒரு மறுபிறப்பாளன், அறியாமையில் மயக்கமடைந்து, வீழ்ந்துவிட்ட மனிதனிடம் இருந்து கொடையை ஏற்றால் அவன் கழுதையாகப் பிறப்பை அடைகிறான்.(45) அவன் ஒரு கழுதையாகப் பதினைந்து வருடங்கள் வாழ்வான். பிறகு அந்தக் கழுதை வடிவத்தைக் கைவிட்டு, அவன் ஓர் எருதாகப் பிறந்து ஏழு வருடங்கள் வாழ்வான்.(46) பிறகு மாட்டு வடிவத்தையும் கைவிட்டு அவன் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசனாக {பிரம்மராட்சசனாகப்} பிறப்பை எடுக்கிறான். மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசனாக {பிரம்ம ராட்சசனாக} மூன்று மாதங்கள் வாழும் அவன் (தன் அடுத்தப் பிறவியில்) தன் பிராமண நிலையை மீட்கிறான்.(47)

வீழ்ந்துவிட்ட மனிதனின் வேள்வியைச் செய்து கொடுக்கும் ஒரு பிராமணன், இழிந்த புழுவாகப் பிறப்பான். ஓ! பாரதா, அவன் இவ்வடிவில் பதினைந்து வருடங்கள் வாழ்வான்.(48) புழுவின் நிலையில் இருந்து விடுபடும் அவன் அடுத்ததாக ஒரு கழுதையாகப் பிறக்கிறான். கழுதையாகப் பதினைந்து வருடங்கள் வாழும் அவன், அடுத்ததாக அதே அளவு காலம் ஒரு காட்டுப்பன்றியாக வாழ்கிறான்.(49) அதன் பிறகு ஒரு சேவலாகப் பிறந்து, அவ்வடிவிலேயே ஐந்து வருடங்கள் வாழ்ந்த பிறகு அதே அளவு வாழ்நாள் காலம் கொண்ட ஓநாயின் பிறப்பை அடைக்கிறான். அடுத்ததாக ஒரு நாயாகப் பிறந்து, ஒரு வருட காலம் அவ்வாறு வாழ்ந்த பிறகு அவன் மனித நிலையை மீட்டெடுக்கிறான்.(50)

ஆசானுக்குத் தீங்கிழைக்கும் குற்றம்புரிந்த மூடச் சீடன், இவ்வுலகில் மூன்று மாற்றங்களுக்கு நிச்சயம் உட்பட வேண்டும்.(51) ஓ! ஏகாதிபதி, அத்தகையவன் முதலில் ஒரு நாயாகிறான். அதன் பிறகு இரைதேடும் விலங்காகி அதன் பிறகு அவன் ஒரு கழுதையாகிறான். கழுதை வடிவில் வாழும்போது அவன் ஒரு பிசாசைப் போலப் பெருந்துன்பத்துடன் சில காலம் திரிய வேண்டும். அந்தக் காலம் முடிந்ததும் அவன் ஒரு பிராமணனாகப் பிறப்பை அடைவான்.(52)

ஆசானின் மனைவியுடன் கூடா உறவுகொள்ள நினைக்கும் பாவம் நிறைந்த சீடன், அத்தகைய பாவம் நிறைந்த இதயத்தின் விளைவாக இவ்வுலகில் பல கடும் வடிவங்களை எடுக்க வேண்டும்.(53) முதலில் நாயாகப் பிறந்து மூன்று வருடம் வாழ வேண்டும். பிறகு மரணம் வரும்போது நாயின் வடிவத்தைத் கைவிட்டு ஓர் இழிந்த புழுவாகப் பிறக்க வேண்டும்.(54) இவ்வடிவில் ஒருவன் ஒரு வருடம் வாழ வேண்டும். அந்த வடிவத்தை விட்டதும் அவன் மறுபிறப்பாள மனிதனாகத் தன் நிலையை மீட்பதில் வெல்வான்.(55)

ஓர் ஆசான், தன் மகனைக் போன்றவனான சீடனைக் காரணமே இல்லாமல் கொன்றுவிட்டால், தன் பங்குக்கான வேண்டுமென்றே செய்யப்பட்ட அத்தகைய பாவச் செயலால் அவர் இரை தேடும் விலங்காகப் பிறக்க வேண்டும்.(56)

ஓ! மன்னா, தந்தை மற்றும் தாயை அவமதிக்கும் மகன், தன் மனித வடிவை விட்டகலும்போது, கழுதை வகையிலான ஒரு விலங்கின் வடிவில் பிறக்கிறான்.(57) அந்தக் கழுதை வடிவில் அவன் பத்து வருட காலம் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் முதலையாகப் பிறந்து ஒரு வருடம் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் மனித வடிவை அடைவான்.(58)

எந்த மகனிடம் பெற்றோர் கோபமடைவார்களோ, அவன் அவர்களிடம் தான் கொண்டுள்ள தீய எண்ணங்களின் விளைவால் ஒரு கழுதையாகப் பிறப்பான்.(59) அவன் கழுதையாகப் பத்து மாதங்கள் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் நாயாகப் பிறந்து பதினான்கு மாதங்கள் அவ்வாறு வாழ வேண்டும். அதன் பிறகு ஒரு பூனையாகப் பிறந்த அவ்வடிவில் ஏழுமாதங்கள் வாழ்ந்து அதன் பிறகு தன் மனித நிலையை அவன் மீட்பான்.(60)

பெற்றோரைப் பழித்துப் பேசுபவன் ஒரு சாரிகமாக {ஆமையாகப்} பிறக்க வேண்டும். ஓ! மன்னா அவர்களை அடிக்கும் ஒருவன் ஓர் ஆமையாகப் பிறப்பான்.(61) ஆமையாகப் பத்து வருடம் வாழும் அவன் அதன் பிறகு ஒரு முள்ளம்பன்றியாகப் பிறப்பான். அதன்பிறகு ஒரு பாம்பாகப் பிறந்து அவ்வடிவிலேயே ஆறு மாதங்கள் வாழ்ந்து பிறகு தன் மனித நிலையை அவன் மீட்பான்.(62)

அரசத் தலைவன் தரும் உணவை உண்டு, தன் தலைவனின் விருப்பங்களுக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்யும் மனிதன் இவ்வாறான மடமையில் {அறியாமையில்} மயங்கி தன் மரணத்திற்குப் பிறகு ஒரு குரங்காகப் பிறக்கிறான்.(63) பத்து வருடங்கள் குரங்காக வாழ்ந்து அதன் பிறகு ஐந்து வருடங்கள் எலியாக வாழ்கிறான். அதன் பிறகு ஒரு நாயாகி அவ்வடிவத்தில் ஆறுமாத காலம் வாழ்ந்த பிறகே அவன் தன் மனித நிலையை மீட்பதில் வெல்கிறான்.(64)

தன்னிடம் நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டவற்றைக் கையாடல் செய்யும் மனிதன், நூறு வடிவமாற்றங்களுக்கு {நூறு பிறவிகளுக்கு} உட்பட வேண்டும். இறுதியாக அவன் ஓர் இழிந்த புழுவாகப் பிறப்பான்.(65) ஓ! பாரதா, அவ்வகையில் {புழுவாகவே} அவன் பதினைந்து வருடங்கள் வாழ வேண்டும். இவ்வழியில் தன் பெரும்பாவம் தீர்ந்ததும் அவன் தன் மனித நிலையை மீட்பதில் வெல்வான்.(66)

பிறருக்கு எதிராக வன்மத்துடன் இருக்கும் மனிதன் தன் மரணத்திற்குப் பிறகு சார்ங்ககனாகப் பிறக்கிறான்[1]. நம்பிக்கை துரோகம் செய்த தீய புத்தி கொண்ட மனிதன் ஒரு மீனாகப் பிறக்கிறான்.(67) ஓ! பாரதா, எட்டு வருடங்கள் மீனாக வாழ்ந்த பிறகு மானாகப் பிறவி எடுக்கிறான். மானாக நான்கு மாதங்கள் வாழ்ந்த பிறகு அவன் வெள்ளாடாகப் பிறவி எடுக்கிறான்.(68) ஒரு முழு வருடம் கழிந்ததும் அவன் தன் ஆட்டுடலைக் கைவிட்டு ஒரு புழுவாகப் பிறக்கிறான். அதன் பிறகு அவன் மனித நிலையை அடைவதில் வெல்கிறான்.(69)நெல், யவம், எள், உழுந்து, கொள்ளு, கடுகு, கடலை, கலாயம், பச்சைப்பயறு, கோதுமை, அதசி (காயா) மற்றும் வேறு வகைத் தானியங்களையும் ஆசையினால் களவாடும் அறிவுகெட்ட, வெட்கங்கெட்ட மனிதன் பெருச்சாளியாகப் பிறக்கிறான்.(70,71) சில காலம் அப்பிறவியில் வாழ்ந்து பிறகு ஒரு காட்டுப் பன்றியாகப் பிறவியடைகிறான். காட்டுப்பன்றியாகப் பிறவியெடுக்கும் அவன் உடனடியாக நோயால் இறக்கிறான்.(72) ஓ! மன்னா, தன் பாவத்தின் விளைவால் அந்த மூட மனிதன் அடுத்ததாக ஒரு நாயாகப் பிறக்கிறான். ஐந்து வருடங்கள் நாயாக வாழும் அவன் மனித நிலையை மீண்டும் அடைகிறான்.(73)

மற்றொரு மனிதனின் மனைவியுடன் கூடாவுறவு கொண்ட ஒருவன் ஓநாயாகப் பிறவிஎடுக்கிறான். அடுத்தடுத்து அவன் நாய், நரி மற்றும் கழுகின் வடிவங்களை ஏற்கிறான். அடுத்ததாகப் பாம்பு, கங்கம் மற்றும் நாரையின் வடிவை ஏற்கிறான்.(74) ஓ! மன்னா, அறியாமையால் மயக்கப்பட்டு, சகோதரனுடைய மனைவியுடன் பாலினக் கலவி புரிந்த பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட மனிதன், ஆண் குயிலாகப் பிறந்து அவ்வடிவத்திலேயே ஓர் ஆண்டு முழுவதும் வாழ வேண்டும்.(75) காமத்தினால் நண்பனின் மனைவி, அல்லது ஆசானின் மனைவி, அல்லது மன்னனின் மனைவியுடன் பாலினக் கலவி புரிபவன், தனது மரணத்திற்குப் பிறகு காட்டுப்பன்றியாகப் பிறக்கிறான்.(76) அதன்பிறகு அவன் ஐந்து வருடங்கள் முள்ளம்பன்றியாகவும், பத்து வருடங்கள் ஓநாயாகவும் வடிவங்களை ஏற்கிறான். அடைத்த ஐந்து வருடங்கள் பூனையாகவும், அடுத்தப் பத்து வருடங்கள் சேவலாகவும் பிறக்கிறான். மூன்று மாதங்கள் எறும்பாகவும், ஒரு மாதம் புழுவாகவும் பிறந்து வாழ்கிறான். இந்த வடிவமாற்றங்களை அடைந்து அடுத்ததாக அவன் பதினான்கு வருடங்கள் இழிந்த புழுவாக வாழ்கிறான்.(78) அத்தகைய தண்டனையின் மூலம் அவனது பாவம் தீர்ந்ததும் மீண்டும் அவன் மனித நிலையை அடைகிறான்.(79)

ஓ! பெரும்பலம் கொண்டவனே, ஒரு திருமணமோ, ஒரு வேள்வியோ, கொடைச்செயல்களோ நடைபெறும்போது அதற்குத் தடையேதும் ஏற்படுத்தும் மனிதன் தன் அடுத்தப் பிறவியில் இழிந்த புழுவாகப் பிறக்கிறான்.(80) ஓ! பாரதா, அவ்வடிவத்திலேயே அவன் பதினைந்து வருடங்கள் வாழ்கிறான். அத்தகைய துன்பத்தின் மூலம் அவனது பாவம் கழிந்ததும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(81)

ஓ! மன்னா, முதலில் ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு, பிறகு இரண்டாம் கணவனுக்கும் கொடுப்பவன் இழிந்த புழுக்களுக்கு மத்தியில் பிறப்பான்.(82) ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய வடிவத்தை ஏற்று அவன் பதிமூன்று வருட காலம் வாழ்கிறான். அத்தகைய துன்பத்தின் மூலம் தன் பாவம் தீரும் அவன், மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(83)

தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ சடங்குகளைச் செய்யாமல் அல்லது முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் நீர்க்காணிக்கையளிக்காமல் உண்ணும் மனிதன் ஒரு காகமாகப் பிறக்கிறான்.(84) நூறு வருடங்கள் காகமாக வாழும் அவன் அடுத்ததாகச் சேவலின் வடிவை ஏற்கிறான். அதற்குப் பிறகு ஒரு மாதம் அவன் பாம்பாக வடிவ மாற்றம் கொள்கிறான். அதன் பிறகே அவன் மனித நிலையை மீண்டும் அடைகிறான்.(85)

தந்தையைப் போன்றவனான அண்ணனை அவமதிப்பவன், தன் மரணத்திற்குப் பிறகு நாரை வகைகளில் பிறக்கிறான்.(86) அவ்வடிவத்தில் அவன் இரண்டு வருடங்கள் வாழ்கிறான். காலத்தின் முடிவில் அந்த வடிவத்தைக் கைவிடும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(87)

ஒரு பிராமணிப் பெண்ணுடன் பாலினக் கலவி வைத்துக் கொள்ளும் சூத்திரன், தன் மரணத்திற்குப் பிறகு ஒரு காட்டுப் பன்றியாகப் பிறப்பை அடைகிறான்.(88) ஓ! மன்னா, அப்பிறவியை அடைந்தவுடனேயே அவன் நோயால் இறக்கிறான். அந்த இழிந்தவன் அடுத்ததாகத் தன் கொடும்பாவத்தின் விளைவால் ஒரு நாயாகப் பிறக்கிறான்.(89) தன் பாவம் தீர்ந்தமும் நாயின் வடிவைக் கைவிடும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான். பிராமணிப் பெண்ணிடம் சந்ததியை உண்டாக்கும் சூத்திரன் தன் மனித வடிவை விட்டதும் பெருச்சாளியாக மறுபிறவியை அடைகிறான்.(90)

ஓ! மன்னா, செய் நன்றி மறந்த குற்றவாளியான மனிதன், யமலோகத்திற்குச் சென்று, இறந்தோரின் கடும் மன்னனின் {யமனின்} சீற்றத்தால் தூண்டப்படும் {யம}தூதுவர்களின் கைகளில் வலிநிறைந்த கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறான்.(91) கனமான சுத்தியல்களுடன் கூடிய தடிகள், உலக்கைகள், கூர்முனை சூலங்கள், கொடிய தீக்குடம், கத்திகளை இலைகளாகக் கொண்ட பயங்கரக் காடு, கொதிக்கும் மணல், இரும்பு முட்கள்(92) ஆகியவையும், ஓ! பாரதா, இன்னும் அதிகமான கருவிகளையும் அத்தகைய மனிதன் யமலோகத்தில் தாங்க வேண்டியிருக்கும்.(93) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இறந்தோரின் கொடும் மன்னனின் உலகத்தில் இத்தகைய பயங்கரத் தண்டனைகளை அடையும் நன்றிகெட்ட மனிதன் இழிந்த ஒட்டுண்ணியாக மீண்டும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஓ! பாரதா, அதன்பிறகு அவன் அருவருக்கத்தக்க ஒட்டுண்ணியாக ஐந்து வருடங்கள் வாழ்கிறான். அதன் பிறகு கருவறைக்குள் நுழைந்து பிறப்பிற்கு முன்பே முன்முதிர்ந்து இறக்கிறான்.(95) அதன் பிறகு அவன் நூறு முறை அடுத்தடுத்து கருவறைக்குள் நுழைகிறான். உண்மையில் நூறு மறுபிறவிகளுக்குப் பிறகு அவன் மனிதனுக்கும், உயிரற்ற இயற்கைக்கும் இடைப்பட்ட இடைநிலை வகை உயிரினமாகப் பிறக்கிறான்.(96) பல வருடங்கள் பெருந்து துன்பத்தை அனுபவிக்கும் அவன் பிறகு முடியற்ற ஆமையாகப் பிறக்கிறான்.(97)

தயிரைத் திருடும் மனிதன் நாரையாகப் பிறக்கிறான். மீனைக் களவு செய்பவன் குரங்காகப் பிறக்கிறான். தேனைக் களவு செய்யும் புத்தியுள்ள மனிதன் ஒரு பூச்சியாகப் பிறக்கிறான்.(98) கனிகள், கிழங்குகள் மற்றும் பண்டங்களைக் களவு செய்பவன் எறும்பாகிறான். மொச்சைக் கொட்டையைக் களவு செய்பவன் ஹலகோலகமாக {நீண்ட வாலுள்ள புழுவாக} மாறுகிறான்.(99) பாயஸம் களவும் செய்தவன் அடுத்தப் பிறவியில் தித்திரி பறவையாக {ஊர்க்குருவியாகப்} பிறக்கிறான். மாவுப் பண்டத்தைக் களவு செய்பவன் {கும்போலூகம் என்றழைக்கப்படும்} மலைக்கோட்டானாகப் பிறக்கிறான்.(100) இரும்பைக் களவு செய்யும் சிறுமதி கொண்ட மனிதன் ஒரு பசுவாகப் பிறக்கிறான். வெண்கலத்தைக் களவு செய்யும் சிறு மதிகொண்ட மனிதன் ஹாரீத இனப் பறவையாக {பச்சைக் குருவியாகப்} பிறக்கிறான்.(101) வெள்ளிப்பாத்திரம் களவு செய்தவன் புறாவாகப் பிறக்கிறான். பொற்பாத்திரம் களவு செய்வதன் மூலம் அவன் இழிந்த புழுவாகப் பிறக்கிறான்.(102) பட்டுத்துணியைக் களவு செய்தவன் கிருகரமாக {கிருகலமெனும் உயிரினமாகப்} பிறக்கிறான். சிவப்புப்பட்டாலான துணியைக் களவு செய்தவன் வர்த்தகையாக {வர்த்திகை எனும் பறவையாக} மாறுகிறான்.(103)

நூலாடைகளைக் களவு செய்பவன் கிளியாகப் பிறக்கிறான். நுண்ணிழைத்துணியைக் களவு செய்பவன் தன் உடலைக் கைவிட்டதும் ஒரு வாத்தாகப் பிறக்கிறான்.(104) பஞ்சுத் துணியைக் களவு செய்பவன் நாரையாகப் பிறக்கிறான். சணலாலான ஆடைகளைக் களவு செய்பவன் தன் அடுத்தப் பிறவியில் செம்மறியாடாகப் பிறக்கிறான்.(105) நார்மடித்துணியைக் களவு செய்பவன் முயலாகப் பிறக்கிறான். பல்வேறு வகை வண்ணப் பொருட்களைக் களவு செய்பவன் மயிலாகப் பிறக்கிறான்.(106) சிவப்பு ஆடைகளைக் களவு செய்பவன் ஜீவஜிவக {சகோரப்} பறவையாகப் பிறக்கிறான். இவ்வுலகில் உள்ள (சந்தனம் முதலிய) களிம்புகளையும், நறுமணப் பொருட்களையும் பேராசையால் களவு செய்யும் மனிதன் மூஞ்சூறாகப் பிறக்கிறான். மூஞ்சூறின் வடிவை ஏற்றுப் பதினைந்து வருடங்கள் வாழ்கிறான்.(107,108) அதன் பிறகு தன் பாவத்தைக் கழித்த பிறகு அவன் மனிதனாகப் பிறக்கிறான். பாலைக் களவு செய்பவன் நாரையாகப் பிறக்கிறான்.(109) ஓ! மன்னா, மதிகெட்டுப்போய் எண்ணெயைக் களவும் செய்யும் மனிதன் எண்ணெயை உண்டு வாழும் விலங்கின் வடிவில் {தைலபாயி எனும் உயிரினமாக [வௌவாலாக / கறப்பான்பூச்சியாகப்]} பிறக்கிறான்.(110)

தான் நன்கு ஆயுதம் தரித்தவனாக, ஆயுதந்தரிக்காதவனான மற்றொருவனை, அவனுடைய செல்வத்தை அடைவதற்காகவோ, அவனிடம் கொண்ட பகையுணர்ச்சியாலோ கொல்லும் இழிந்தவன், தன் மனித உடலைக் கைவிட்ட பிறகு ஒரு கழுதையாகப் பிறக்கிறான்.(111) கழுதை வடிவை ஏற்று இரண்டு வருட காலம் வாழ்ந்து ஆயுத முனையால் அவன் இறப்பைச் சந்திக்கிறான். இவ்வழியில் தன் கழுதை உடலைக் கைவிடும் அவன் அடுத்தப் பிறவியில் (பகைவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்ட) கவலை நிறைந்த மானாகப் பிறக்கிறான்.(112) மானாகப் பிறந்து ஒரு வருடம் கழிந்ததும் அவன் ஆயுத முனையில் தன் உயிரை விடுவான். இவ்வாறு மானின் வடிவைக் கைவிடும் அவன் அடுத்ததாக மீனாகப் பிறந்து, நான்கு மாதம் கழிந்ததும் வலையால் இழுக்கப்படுவதன் விளைவால் இறப்பான். அடுத்தப் பிறவியில் இரைதேடும் விலங்காக அவன் பிறப்பான். பத்து வருடங்கள் அவ்வடிவில் வாழும் அவன், பிறகு சிறுத்தையாகப் பிறந்து ஐந்து வருடகாலம் வாழ்கிறான்.(114) காலம் கொண்டுவரும் மாற்றத்தால் தூண்டப்படும் அவன் அந்த வடிவத்தையும் கைவிட்டு, பாவம் தீர்ந்ததும், மீண்டும் மனித வடிவைப் பெறுகிறான்.(115)

பெண்ணைக் கொல்லும் சிறுமதி கொண்ட மனிதன் யமலோகத்திற்குச் சென்று பல்வேறு வகைத் துன்ப துயரங்களை அனுபவிப்பான். பிறகு முழுமையாக அவன் இருபத்தோரு வடிவ மாற்றங்களைப் பெறுவான்.(116) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அவன் அருவருக்கத்தக்க ஓர் ஓட்டுண்ணியாகப் பிறப்பான். ஒட்டுண்ணியாக இருபது வருடங்கள் வாழ்ந்த பிறகு அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(117)

உணவைக் களவு செய்வதன் மூலம் ஒருவன் வண்டாகப் பிறப்படைகிறான். வேறு வண்டுகளின் துணையுடன் பல மாதங்கள் வாழும் அவன் தன் பாவம் தீர்ந்ததும் மீண்டும் மனித நிலையை அடைகிறான். நெல்லைத் திருடுவதன் மூலம் ஒருவன் பூனையாகிறான்.(118,119) எள் கலந்த உணவைத் திருடும் மனிதன் தான் திருடிய உணவின் அளவுக்குத் தகுந்தபடி பெரிய அல்லது சிறிய எலியாகிறான்.(120) அவன் தினமும் மனிதர்களைக் கடிக்கிறான், அதன் விளைவாக அவன் பாவம் நிறைந்தவனாகப் பல்வேறு மறுபிறவிகளின் சுழலில் பயணிக்கிறான். நெய்யைத் திருடும் மதிகெட்ட மூடன் ஈயாகப் பிறக்கிறான்.(121) மீனைக் களவு செய்யும் இழிந்தவன், காக்கையாகப் பிறக்கிறான். உப்பைக் களவு செய்யும் ஒருவன், பேசும் கிளியாகப் பிறக்கிறான்.(122) நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டவற்றை அபகரிக்கும் மினதன், வாழ்வுக்காலம் குறைந்தவனாக இறந்து மீன்களுக்கு மத்தியில் பிறக்கிறான்.(123) சில காலம் மீனாக வாழும் அவன் இறந்ததும் மீண்டும் மனித வடிவை அடைகிறான். மனித நிலையை அடைந்தாலும் அவன் குறுகிய வாழ்நாளையே பெறுகிறான்.(124) ஓ! பாரதா, உண்மையில் பாவங்களை இழைக்கும் ஒருவன், மனிதர்களுக்கும், காய்கறிகளுக்கும் இடைப்பட்ட நிலையான இடைநிலை வகையில் தன் பிறப்பை அடைகிறான். தங்கள் இதயத்தையே அதிகாரமாகக் கொண்ட மக்கள் முற்றாக அறமறியாதவர்களாக இருக்கிறார்கள்(125)

பல்வேறு பாவச்செயல்களைச் செய்து தொடர்ந்த நோன்புகள் மற்றும் பக்திச் செயல்பாடுகள் மூலம் அவற்றைத் தணிக்க முயலும் மனிதர்கள், இன்பதுன்பங்களை அடைந்து இதயத்தில் பெரும் கவலையுடன் வாழ்கிறார்கள்.(126) பாவம் நிறைந்த ஒழுக்கம் கொண்டவர்களும், பேராசை மற்றும் அறியாமைக்கு வசப்படுகிறவர்களும், தொடர்பு கொள்ளத்தகாத மிலேச்சர்களாகப் பிறக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(127) மறுபுறம், தங்கள் பிறவிகள் தோறும் பாவங்களைத் தவிர்க்கும் மனிதர்கள், அனைத்து வகைப் பிணியில் இருந்து விடுபட்டு, வடிவ அழகுடன் கூடியவர்களாகச் செல்வத்தை அடைகிறார்கள்.(128)

மேற்குறிப்பிட்ட வழியில் செயல்படும் பெண்களும் அதே வகையிலேயே பிறப்பை அடைவார்கள். உண்மையில் அவர்கள் நான் குறிப்பிட்ட விலங்குகளின் துணைகளாகப் பிறப்பை அடைகின்றனர்.(129)

ஓ! பாவமற்றவனே, பிறரின உடைமைகளை அபகரிப்பதில் தொடர்புடைய குற்றங்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இக்காரியம் குறித்து நான் உனக்கு மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.(130) ஓ! பாரதா, வேறு காரியம் குறித்த குற்றங்களைக் குறித்து மற்றொருமுறை கேட்பாயாக. ஓ! மன்னா, நான் இவற்றைப் பிரம்மனிடம் இருந்து கேட்டிருக்கிறேன்.(131) அவர் தேவர்களுக்கு மத்தியில் இது குறித்து உரையாடியபோது இவையனைத்தையும் மகிழ்வூட்டும் வகையில் கேட்டேன். உண்மையில் நீ கேட்டது அனைத்தையும் விரிவாகச் சொல்லிவிட்டேன்.(132) ஓ! ஏகாதிபதி, இவை யாவற்றையும் கேட்டு நீ உன் இதயத்தை எப்போதும் அறத்தில் நிலைநிறுத்துவாயாக” என்றார் {பிருஹஸ்பதி}.(133)

அன்னதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 112-பாவத்தைப் போக்கும் வழிமுறைகள்; அறத்தின் துணையுடன் அடையப்படும் கதிகள்; அன்னதானத்தின் சிறப்பு; அறத்தின் ஆறு வாயில்கள் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்..

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, மறம் அல்லது பாவத்தின் கதியென்ன? என எனக்குச் சொன்னீர். ஓ! பேசுபவர்களின் முதன்மையானவரே, அறத்தின் கதியென்ன? என இப்போது கேட்க விரும்புகிறேன்.(1) பல்வேறு பாவச் செயல்களைச் செய்தபின் எந்தச் செயல்களின் மூலம் மக்கள் இவ்வுலகில் {இம்மையில்} மங்கல கதியை அடைகிறார்கள்? எந்தச் செயல்களின் மூலம் மக்கள் சொர்க்கத்திலும் {மறுமையிலும்} மங்கல கதியை அடைகிறார்கள்?” என்று கேட்டான்.(2)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “பிறழ்மனத்துடன் பாவம்நிறைந்த செயல்களைச் செய்த ஒருவன் மறத்தின் ஆளுகைக்கு வசப்பட்டு அதன் விளைவாக நரகத்திற்குச் செல்கிறான்.(3) மனத்தின் அறியாமையால் பாவச்செயல்களைச் செய்த மனிதன், மனந்திருந்தி வேதனையடைந்து தன் இதயத்தை (தேவர்களை) தியானிப்பதில் நிறுவினால், அவன் தன் பாவங்களின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதில்லை.(4) ஒருவன் எந்த அளவுக்கு {தான் செய்த பாவத்தைக் குறித்து நினைத்து} வருந்துகிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(5) ஓ! மன்னா, பாவத்தை இழைத்த மனிதன், கடமைகளை அறிந்த பிராமணர்களின் முன்னால் அவற்றை அறிவித்தால் அந்தப் பாவங்களில் இருந்து எழும் அவதூறுகளிலிருந்து உடனே அவன் தூய்மையடைகிறான்.(6) இதன்படி ஒருவன் முழுமையாகவோ, வேறு வகையிலோ தன் பாவங்களைக் குவிந்த மனத்துடன் அறிக்கையிட்டால் அவன் பழைய சட்டையில் இருந்து விடுபெறும் பாம்பைப் போல அந்தப் பாவத்தில் இருந்து முழுமையாகவோ, வேறுவகையிலோ விடுபடுகிறான்.(7) குவிந்த மனத்துடன் ஒரு பிராமணனுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை அளித்து, (தேவனிடம்) மனதைக் குவிப்பதன் மூலம் ஒருவன் மங்கல கதியை அடைகிறான்.(8)

ஓ! யுதிஷ்டிரா, பாவச்செயல்களை இழைத்த குற்றவாளியாகவே இருந்தாலும் எக்கொடைகளை அளித்தால் அவன் பலன் கொண்டவனாகிறான் என்பதைச் சொல்லப் போகிறேன்.(9) கொடைகள் அனைத்திலும் உணவுக்கொடையே {அன்னதானமே} சிறந்ததெனக் கருதப்படுகிறது. பலனை அடைய விரும்பும் ஒருவன் நேர்மையான இதயத்துடன் உணவுக்கொடையளிக்க வேண்டும்.(10) உணவே மனிதர்களுக்கு உயிர் மூச்சுகளை அளிக்கிறது. அதிலிருந்துதான் உயிரினங்கள் பிறக்கின்றன. உயிரினங்களைக் கொண்ட உலகங்கள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன. எனவே உணவு மெச்சப்படுகிறது.(11) தேவர்கள், முனிவர்கள், பித்ருகள் மற்றும் மனிதர்கள் அனைவரும் உணவைப் புகழ்கின்றனர். பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததற்காகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(12)

நியாயமாக அடையப்பட்ட நல்ல உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கொடுக்க வேண்டும்.(13) ஓராயிரம் பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் உணவைக் கொடையளித்த மனிதன் இடைநிலை வகையில் {விலங்கு, பறவை, பூச்சிகளாக} ஒருபோதும் பிறக்க மாட்டான்.(14) ஓ! மனிதர்களின் தலைவா, பத்தாயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டிய ஒருவன், மறத்தில் {அதர்மத்தில்} இருந்து தூய்மையடைந்து யோக நடைமுறைகளில் அர்ப்பணிப்புள்ளவன் ஆகிறான்.(15)

வேதங்களை அறிந்த ஒரு பிராமணன், பிச்சையில் தனக்குக் கிடைத்த உணவை வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒரு பிராமணனுக்குக் கொடையளித்தால் இம்மையில் {இவ்வுலகில்} மகிழ்ச்சியடைவதில் வெல்கிறான்.(16)

ஒரு க்ஷத்திரியன், எந்தப் பிராமணனின் உடைமைகளையும் அபகரிக்காமல், தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பலத்தைப் பயன்படுத்தி அடைந்த உணவை வேத அறிவு கொண்ட முதன்மையான பிராமணர்களுக்குக் கொடையளித்தால், ஓ! பாண்டுவின் மகனே, ஓ! அற ஆன்மாவே, அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் அவன் தான் செய்த பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17,18)

ஒரு வைசியன், தன் களத்தின் {வயலின்} விளைச்சலை ஆறு சமமான பங்குகளாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை பிராமணர்களுக்குக் கொடுத்தால், அவன் அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(19)

ஒரு சூத்திரன், கடும் உழைப்பாலும், உயிரைப் பணயம் வைத்தும் ஈட்டப்பட்ட உணவைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(20)

உடல் பலத்தைப் பயன்படுத்தி, எந்த உயிரினத்திற்கும் எத்தீங்கையும் செய்யாமல் ஈட்டிய உணவை பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் தனக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதில் வெல்கிறான்.(21) நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகமாகக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) அறத்தின் பாதையில் நடப்பதன் மூலம் ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். பெருஞ்சக்தியைக் கொடுக்க வல்ல உணவைக் கொடையளிப்பவன் பெருஞ்சக்தி கொண்டவனாகிறான்.(23) ஈகையாளர்களால் அமைக்கப்பட்ட பாதையிலேயே ஞானம் கொண்டவர்கள் எப்போதும் நடக்கிறார்கள். உணவு கொடையளிப்பவர்கள் உயிரைக் கொடையளிப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அத்தகைய கொடையின் மூலம் அவர்கள் அடையும் பலன் நித்தியமானதாகும்.(24) எனவே ஒருவன் அனைத்துச் சூழ்நிலைகளிலும், நியாயமான முறைகளில் உணவை ஈட்ட முனைந்து, அவ்வாறு ஈட்டப்பட்டவற்றைத் தகுந்த மனிதர்களுக்கு எப்போதும் கொடையளிக்க வேண்டும். உயிரினங்களின் உலகிற்கு உணவே பெரும்புகலிடமாகும்.(25)

உணவுக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் ஒருபோதும் நரகத்திற்குப் போக மாட்டான். எனவே, ஒருவன் நியாயமான வழிமுறைகளில் ஈட்டப்பட்ட உணவை எப்போதும் கொடையளிக்க வேண்டும்.(26) ஓர் இல்லறத்தான் ஒரு பிராமணனுக்கு உணவுக் கொடையளித்தபிறகே எப்போதும் உண்ண வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உணவுக் கொடையளிப்பதன் மூலம் அந்த நாளை கனிநிறைந்ததாக்க வேண்டும்.(27) ஓ! மன்னா, கடமைகள் {தர்மங்கள்}, சாத்திரங்கள் மற்றும் புனித வரலாறுகளை அறிந்தவர்களான ஆயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டும் மனிதன்,(28) நரகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை, இவ்வுலகில் மீண்டும் திரும்பும் வகையில் மறுபிறவியை அடைவதுமில்லை. அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அடையும் அவன் மறுமையில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(29) அக்கதைய பலனை அடையும் அவன், கவலையில் இருந்து விடுபட்டு, வடிவ அழகு, பெரும்புகழ் மற்றும் செல்வத்தை அடைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(30) இவ்வாறு உணவுக் கொடையின் உயர்ந்த பலன்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். {வேற எந்த} அறம், பலன்கள் மற்றும் கொடைகள் அனைத்தின் வேராகவும் இதுவே இருக்கிறது” என்றார் {பிருஹஸ்பதி}.(31)

அஹிம்ஸை! – அநுசாஸனபர்வம் பகுதி – 113-அறத்தின் ஆறு வாயில்கள் மற்றும் அஹிம்ஸை குறித்து பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}“தீங்கிழையாமை {கொல்லாமை}, வேத சடங்குகளைச் செய்தல், தியானம், புலனடக்கம், தவங்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து தொண்டாற்றல் ஆகியவற்றில் ஒருவனுக்குப் பெரும் பலனைத் தரக்கூடியது எது?” எனக் கேட்டான்.

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}“இந்த ஆறும் பலன்நிறைந்தவையே ஆகும். இவை அறத்தின் வெவ்வேறு வாயில்களாகும். நான் அது குறித்து இப்போது சொல்லப் போகிறேன். ஓ! பாரதர்களின் தலைவா, அவற்றைக் கேட்பாயாக.(2) மனிதர்களுக்கான உயர்ந்த நன்மை எது என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன். அண்டம் சார்ந்த கருணை அறத்தை {கொல்லாமையைப்} பயிலும் மனிதன் உயர்ந்த நன்மையை அடைகிறான்.(3) காமம், கோபம், பேராசை ஆகிய மூன்று குற்றங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் மனிதன் (கருணை அறத்தைப் பயின்று) வெற்றியை அடைகிறான்[1].(4)தன் மகிழ்ச்சிக்கான நோக்கில் தீங்கற்ற பிற உயிரினங்களைத் தண்டக் கோல் கொண்டு கொல்பவன், ஒருபோதும் மறுமையில் மகிழ்ச்சியை அடைய மாட்டான்.(5) அனைத்து உயிரினங்களையும் தானாகவே கருதி, தன்னைப் போலவே அவற்றிடம் நடந்து கொள்ளும் மனிதன், தண்டக்கோலை வைத்து, முற்றிலும் தன் கோபத்தை அடக்கி மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொண்டு, அவை அனைத்தையும் தானாகவே பார்ப்பவன், தன் பின்னே சுவடுகளை விடாததால் நிலையான வசிப்பிடத்தை விரும்பும் தேவர்களும் அவனது பாதையை உறுதி செய்வதில் மயக்கமடைகிறார்கள்[2].(7) ஒருவன் தனக்குத் தீங்கு எனக் கருதுவதை மற்றவனுக்கு ஒருபோதும் செய்யக்கூடாது. இதுவே அறத்தின் சுருக்கமான விதியாகும். வேறு வழியில் செயல்படும் ஒருவன் ஆசைக்கு வசப்படுவதன் மூலம் அறமற்ற {அதர்மம் செய்யும்} குற்றவாளியாகிறான்.(8)கொடை மறுத்தல் மற்றும் பெறல், இன்பம் மற்றும் துன்பம், ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை ஆகியவற்றில் ஒருவன் தன்னையே உவமையாகக் கொண்டு அவற்றின் விளைவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.(9) ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைக்கும்போது, தீங்குக்குள்ளானவன் திரும்பி தீங்கிழைத்துவனுக்குத் தீங்கிழைக்கிறான். அதே போலவே, ஒருவன் மற்றொருவனைப் பேணி வளர்க்கும்போது, அவ்வாறு வளர்ப்பவனைப் பிறர் பேணி வளர்ப்பார்கள். ஒருவன் தனக்கான ஒழுக்க விதியை இதன்படியே கட்டமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நுட்பமான வழியில் நான் அறம் என்றால் என்ன என்பதை உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}”.(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இதைச் சொல்லிவிட்டு, எங்கள் கண் முன்பே சொர்க்கத்திற்குச் செல்ல மேல்நோக்கி உயர்ந்தார்”.(11)

புலால்மறுத்தல்! – அநுசாஸனபர்வம் பகுதி – 114-நான்கு வகை அஹிம்ஸை; புலால் மறுத்தல் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு, பெரும் சக்தி கொண்டவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், கணைப்படுக்கையில் கிடக்கும் பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, வேதங்களின் அதிகாரத்தினால் வழிநடத்தப்படும் முனிவர்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் அனைவரும் கருணையையே தன் குறியீடாகக் கொண்ட அறத்தை மெச்சுகிறார்கள்.(2) ஆனால், ஓ! மன்னா, நாம் உம்மிடம் கேட்பது என்னவென்றால்: சொல், எண்ணம், செயல் ஆகியவற்றில் பிறருக்குத் தீங்கிழைத்த மனிதன், துன்பத்தில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் எவ்வாறு வெல்கிறான்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிரம்மத்தை ஓதுபவர்கள், கருணை, அல்லது தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை} நான்கு வகையானது என்று சொல்லியிருக்கின்றனர். இந்த நான்கு வகைகளில் ஒன்று நோற்கப்படாவிட்டாலும் கருணையறம் {அஹிம்ஸை} நோற்கப்பட்டதாகாது என்று சொல்லப்படுகிறது.(4) நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் யாவும் மூன்று கால்களில் நிற்க இயலாததைப் போலவே கருணையறத்தாலும் நான்கு வகைகளில் ஒன்றில்லாவிட்டாலும் நிற்க இயலாது.(5) பிற உயிரினங்களின் காலடித்தடங்கள் அனைத்தையும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதைப் போலவே வேறு அறங்கள் அனைத்தும் கருணையறத்தில் {அஹிம்ஸையில்} உள்ளடங்கிவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. செயல்கள், சொற்கள் மற்றும் எண்ணங்களின் மூலமாக ஒருவன் தீங்கிழைக்கும் குற்றவாளியாகிறான்[1].(6,7)தொடக்கத்திலேயே அதை மனத்தில் இருந்து அகற்றும் ஒருவன் அடுத்ததாக அதைச் சொல் மற்றும் எண்ணத்தில் இருந்தும் விலக்க வேண்டும். இவ்விதியின்படி இறைச்சியுண்பதைத் தவிர்க்கும் ஒருவன் மூன்று வழிகளில் {எண்ணம், சொல் மற்றும் செயல் வழிகளில்} தூய்மையடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(8) பிரம்மம் ஓதுபவர்கள் (இறைச்சியுண்ணும் பாவத்திற்கான) மூன்று காரணங்களைக் குறிப்பிடுவதாகக் கேள்விப்படுகிறோம். அந்தப் பாவம் மனம், சொற்கள் மற்றும் செயல்களில் பற்றியிருக்கலாம்.(9) இந்தக் காரணத்தினாலேயே தவங்களுடன் கூடிய ஞானம் கொண்ட மனிதர்கள் இறைச்சி உண்பதைத் தவிர்க்கிறார்கள். ஓ! மன்னா, இறைச்சியுண்பதால் ஏற்படும் குற்றங்களை {தோஷங்களை} உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(10)

பிற விலங்குகளின் இறைச்சியானது ஒருவனுடைய மகனின் சதையைப் போன்றதாகும். அறியாமையில் மயங்கி இறைச்சியுண்ணும் மூடன், மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான்.(11) தந்தையும், தாயும் இணைவதால் சந்ததி உண்டாகிறது. அதே வகையிலேயே ஓர் ஆதரவற்ற, பாவம் நிறைந்த இழிந்தவன் இழைக்கும் கொடுமையே, பெரும் துன்பம் நிறைந்த மறுபிறவிகளைக் கொண்ட சந்ததியை மீண்டும் மீண்டும் உண்டாக்குகிறது.(12) சுவையுணர்வு அல்லது சுவையின் அறிவுக்குக் காரணமாக நாக்கு இருப்பதைப் போலவே, பற்றானது சுவையிலிருந்தே உண்டாகிறது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன[2].(13) நன்கு தோல்நீக்கப்பட்டு, உப்புடனோ, உப்பில்லாமலோ சமைக்கப்படும் இறைச்சியை ஒருவன் எவ்வடிவில் உண்டாலும், அது படிப்படியாக மனத்தை ஈர்த்து, அதற்கு அவனை அடிமையாக்குகிறது.(14)இறைச்சியுண்டு வாழும் மூட மனிதர்களால் (தெய்வீகப்) பேரிகைகள், மிருதங்கங்கள், யாழ் மற்றும் தந்திக்கருவிகளின் இனிய இசையைக் கேட்பதில் எவ்வாறு வெல்ல முடியும்?(15) உணரப்பட முடியாதது, விவரிக்க முடியாதது, கற்பனை செய்ய முடியாதது என இறைச்சி குறித்து {இல்லாததைச்} சொல்லும் ஊனுண்பவர்கள் அதன் சுவையில் மயக்கமடைந்து அதை உயர்வாக மெச்சுகிறார்கள்.(16) இவ்வாறு இறைச்சியைப் புகழ்வதும் பாவம் நிறைந்ததாகும். பழங்காலத்தில், அறவோர் பலர், தங்கள் உடலின் சதையைக் கொடுத்து, பிற உயிரினங்களின் சதையைக் காத்தார்கள். பலன்தரும் அத்தகைய செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்கள்.(17) ஓ! ஏகாதிபதி, இவ்வழியில் கருணையறமானது, நான்கு கருத்துகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்ட கருணையறத்தைச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}[3].(18)

கொல்லாமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 116-இறைச்சி உண்பதால் கிட்டும் பலன்கள்; உயிரின் மதிப்பு; இறைச்சியுண்பதால் நேரும் பாவம்; கொல்லாமையின் சிறப்புகள் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஐயோ, பல்வேறு வகை உணவுகளைக் கைவிட்டு இறைச்சியை மட்டுமே உண்ணும் கொடூர மனிதர்கள், உண்மையில் பெரும் ராட்சசர்களைப் போன்றோரே.(1) ஐயோ, அவர்கள் இறைச்சியை {துய்த்து மகிழ்வதைப்} போலப் பல்வேறு வகைப் பண்டங்களையும், பல்வேறு வகைக் கீரைகளையும், சுவைமிக்கச் சாறுகளுடன் கூடிய பல்வேறு வகைக் கண்டங்களையும் துய்த்து மகிழ்வதில்லை.(2) இந்தக் காரணத்தினால் இக்காரியத்தில் என் புத்தி மயங்குகிறது. சுவையைப் பொறுத்தவரையில் இறைச்சியோடு ஒப்பிடத்தக்கது வேறேதும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.(3) எனவே, ஓ! பலமிக்கவரே, ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இறைச்சியைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன, இறைச்சியை உண்பதால் உண்டாகும் குற்றங்கள் என்ன என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(4) நீர் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர். கடமைகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இது குறித்து நீர் எனக்கு முழுமையாகச் சொல்வீராக. உண்மையில், எது உண்ணத்தக்கது, எது உண்ணத்தக்கதல்ல என்பதை எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, இறைச்சி என்பது என்ன, அஃது என்ன சாரத்தாலானது, அதைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்கள் மற்றும் இறைச்சியை உண்பதால் ஏற்படும் குற்றங்கள் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. சுவையின் நோக்கில் இறைச்சிக்கு மேன்மையானது இந்தப் பூமியில் ஏதும் கிடையாது. மெலிந்தவருக்கோ, பலவீனருக்கோ, நோயால் பீடிக்கப்பட்டவருக்கோ, பாலினக்கலவிக்கு அடிமையாயிருப்பவருக்கோ, பயணத்தால் களைப்படைந்தவருக்கோ இறைச்சியைவிட மிக நன்மையானது வேறேதும் இல்லை.(8) இறைச்சி மிக விரைவாகப் பலத்தை அதிகரிக்கச் செய்கிறது. அது பெரும் வளர்ச்சியை விதிக்கிறது. ஓ! பகைவர்களை எரிப்பவனே, இறைச்சியைவிட மேன்மையான உணவேதும் கிடையாது.(9) ஆனால், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அதைத் தவிர்க்கும் மனிதர்களுக்குக் கிட்டும் பலன்கள் பெரியனவாகும். நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(10)

மற்றொரு உயிரினத்தின் இறைச்சியைக் கொண்டு தன் சதையைப் பெருக்க விரும்பும் மனிதனைவிட அற்பனும், கொடூரனும் வேறெவனும் இல்லை.(11) இவ்வுலகில் தன் உயிரைவிட அன்புக்குரியது ஓர் உயிரினத்திற்கு வேறேதும் இல்லை. எனவே, (மதிப்புமிக்க அந்த உடைமையை எடுக்காமல்) ஒருவன் தன் உயிரைப் போலவே பிறரின் உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும்.(12) ஓ! மகனே, சதையே உயிர்வித்தின் தோற்றுவாய் என்பதில் ஐயமேதும் இல்லை. அதை உண்பதில் பெரும் குற்றமும், அதைத் தவிர்ப்பதில் நன்மையும் இருக்கின்றன.(13) எனினும், வேத விதிகளின் படி புனிதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதன் மூலம் எக்குற்றமும் இழைக்கப்படுவதில்லை. வேள்விகளுக்காகவே விலங்குகள் உண்டாக்கப்பட்டன என்று கேள்விப்படுகிறோம். வேறு எந்த வழியிலும் இறைச்சியை உண்பவர்கள் ராட்சச நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(14) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஆற்றலைப் பயன்படுத்தி அடையப்பட்ட இறைச்சியை உண்பதில் அவர்கள் எக்குற்றத்தையும் இழைப்பதில்லை.(15)

ஓ! மன்னா, பழங்காலத்தில் காட்டின் மான்கள் அனைத்தும் அகஸ்தியரால் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டன. எனவே, மானை வேட்டையாடுவது நிந்திக்கப்படுவதில்லை.(16) ஒருவன் தன் உயிரைப் பணயம் வைக்காமல் எந்த வேட்டையையும் செய்ய முடியாது. அங்கே விலங்கு கொல்லப்படுகிறது, அல்லது வேட்டைக்காரன் கொல்லப்படுகிறான்.(17) எனவே, ஓ! பாரதா, அரசமுனிகளே கூட வேட்டையாடினர். அத்தகைய ஒழுக்கத்தால் அவர்கள் பாவமேதும் இழைப்பதில்லை. உண்மையில் அந்த நடைமுறை பாவம் நிறைந்ததாகக் கருதப்படுவதில்லை.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டும் நடைமுறையில் உண்டாகும் பலனுக்கு இணையாக இம்மையிலோ, மறுமையிலோ வேறேதும் இல்லை.(19) கருணைகொண்ட மனிதனுக்கு எந்த அச்சமும் கிடையாது. கருணையுடன் கூடிய தீங்கற்ற மனிதர்களே இம்மையையும், மறுமையையும் அடைகிறார்கள்.(20)

கடமைகளை அறிந்த மனிதர்கள், கொடூரம் தவிர்ப்பதைக் குறியீடாகக் கொண்ட அறமே அறமென அழைக்கத்தகுந்தது எனச் சொல்கிறார்கள். தூய ஆன்மா கொண்ட மனிதன், தன் ஆன்மா கருணை கொள்ளும் செயல்களை மட்டுமே செய்வான்.(21) தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் இறைச்சி ஹவி {ஹவிஸ்} (உண்ணத்தக்கது) என்று அழைக்கப்படுகிறது. கருணையில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறரிடம் கருணையாக நடந்து கொள்பவனுமான மனிதனுக்கு எவ்வுயிரினத்திடமிருந்தும் அச்சமேதும் கிடையாது {உண்டாகாது}.(22) உயிரினங்கள் அனைத்தும் {பின்வரும்} இத்தகைய ஓர் உயிரினத்திற்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று நான் கேள்விப்படுகிறோம். ஒருவன் காயமடைந்தாலோ, வீழ்ந்துவிட்டாலோ, நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தாலோ, பலவீனமடைந்திருந்தாலோ, அடிபட்டிருந்தாலோ அவன் எந்நிலையில் இருந்தாலும், அனைத்து உயிரினங்களும் அவனைப் பாதுகாக்கவே செய்யும். உண்மையில், அவன் சமமான தரையில் இருந்தாலும், சமமற்றதரையில் திருந்தாலும் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவை இவ்வாறே செயல்படுகின்றன. பாம்புகளோ, காட்டு விலங்குகளோ, பிசாசங்களோ, ராட்சசர்களோ அவனை ஒருபோதும் கொல்வதில்லை[1].(23,24) பிறரை அச்சத்தில் இருந்து விடுவித்தவன் அஞ்சுவதற்கான சூழ்நிலைகள் எழும்போது அவன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான். உயிர்க்கொடையைவிட மேன்மையான எக்கொடையும் இதற்கும் முன்பும் இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதுமில்லை.(25)ஒருவனுக்குத் தன் உயிரைவிட அன்புக்குரியது வேறேதும் இல்லை என்பது நிச்சயமான ஒன்றாகும். ஓ! பாரதா, மரணமானது அனைத்து உயிரினங்களுக்கும் துன்பமாகவோ, தீமையாகவோ ஆகிறது.(26) மரணத்திற்கான காலம் வரும்போது, அனைத்து உயிரினங்களின் மொத்த சட்டகமும் நடுங்குவதே காணப்படுகிறது. இந்த உலகப்பெருங்கடலில், கருப்பையில் பிறக்கும் போதும், மூப்பின்போதும் பல்வேறு வகைப் பிணிகளைத் தாங்கிக் கொண்டு,(27) உயிரினங்கள் தொடர்ந்து போவதும் வருவதும் காணப்படுகிறது. ஒவ்வொரு உயிரினமும் மரணத்தால் பீடிக்கப்படுகிறது. கருப்பையில் வசித்திருக்கும்போது அனைத்து உயிரினங்களும் சிறுநீர், சளி {வியர்வை}, மலம் ஆகியவற்றின் காரமான, புளிப்பான, கசப்பான, வலிநிறைந்த உணர்வுகளை உண்டாக்கக்கூடிய, தாங்கிக் கொள்வதற்குக் கடினமான நீர்மச்சாறுகளில் {ரசங்களில்} சமைக்கப்படுகின்றன {வேகின்றன}. அங்கே அவை கருப்பையில் ஆதரவற்ற நிலையில் வசித்து, மீண்டும் மீண்டும் கிழிக்கப்படவும், துளைக்கப்படவும் செய்கின்றன(28,29). இறைச்சியில் பேராசை கொண்டவர்கள், அத்தகைய ஆதரவற்ற நிலையில் மீண்டும் மீண்டும் கருப்பையில் சமைக்கப்படுவது காணப்படுகிறது. பல்வேறு வகைப் பிறவிகளை அடையும் அவை, கும்பீபாகம் என்றழைக்கப்படும் நரகத்தில் சமைக்கப்படுகின்றன.(30)

அவை அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு இவ்வழியில் மீண்டும் மீண்டும் பயணம் செய்கின்றன. ஒருவன் இவ்வுலகத்திற்கு வரும்போது அவனுடைய உயிரைவிட மிக அன்புக்குரியது வேறேதும் இல்லை.(31) எனவே தூய ஆன்மா கொண்ட ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். ஓ! மன்னா, தான் பிறந்ததிலிருந்து அனைத்து வகை இறைச்சியையும் தவிர்க்கும் மனிதன்,(32) சொர்க்கதில் பெரும் அளவிலான இடத்தை அடைவான் என்பதில் ஐயமில்லை. உயிரில் விருப்பமுள்ளவர்களாக இருந்தாலும், விலங்குகளின் இறைச்சியை உண்பவர்கள்,(33) தாங்கள் உண்ணும் விலங்குகளாலேயே உண்ணப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. இதுவே என் கருத்தாகும். ஓ! பாரதா, “என்னை உண்டவனை நான் பதிலுக்கு உண்ணப்போகிறேன்” என்பதே மாம்ஸம் என்ற குணமாகிறது[2]கொலைகாரன் எப்போதும் கொல்லப்படுவான். அவனுக்குப் பிறகு {கொல்லப்பட்டதை} உண்பவனும் அதே விதியைச் சந்திக்கிறான்.(35)(இப்பிறவியில்) மற்றொருவனிடம் பகையுடன் செயல்படுபவன், மற்றொருவனால் செய்யப்படும் அதே போன்ற செயல்களுக்குப் பலியாகிறான். எந்த உடலிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயல்களினாலும்(36) அவன் அவ்வுடல்களில் எழும் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்[3]. கொடூரந்தவிர்த்தலே {கொல்லாமையே} உயர்ந்த அறமாகும்.(37) கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த கொடையாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த தவமாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த வேள்வியாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த பலமாகும்.(38) கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த நண்பனாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த மகிழ்ச்சியாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த உண்மையாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த ஸ்ருதியாகும்.(39)அனைத்து வேள்விகளிலும் அளிக்கப்படும் கொடைகள், புனித நீர்நிலைகள் அனைத்திலும் செய்யப்படும் தூய்மைச் சடங்குகள், சாத்திரங்களில் குறிப்பிடப்பட்ட அனைத்து வகைக் கொடைகள் ஆகிய இவை அனைத்தையும் செய்வதனால் ஒருவன் அடையும் பலனையும் கொடூரந்தவிர்த்தல் {கொல்லாமை} (மேற்சொன்ன அனைத்தின் பலன்களையும்) அளிக்கிறது.(40) கொடூரந்தவிர்க்கும் மனிதன் செய்யும் தவங்கள் வற்றாதனவாகின்றன. கொடூரந்தவிர்க்கும் மனிதன் எப்போதும் வேள்விகளைச் செய்பவனாகக் கருதப்படுகிறான். கொடூரந்தவிர்க்கும் மனிதன் அனைத்து உயிருக்கும் தந்தையும், தாயும் போன்றவனாவான்.(41) ஓ! குரு குலத்தின் தலைவா, இவையே கொடூரந்தவிர்ப்பதால் {அஹிம்ஸையால்} உண்டாகும் சில பலன்களாகும். ஒருவன் நூறுவருடங்கள் சேர்ந்தாற்போலப் பேசினாலும் அதைச் செய்வதால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது” என்றார் {பீஷ்மர்}.(42)

சூத்திரச் செல்வந்தன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 117-ஒரு புழுவைக் கண்ட வியாசர்; புழுவின் முற்பிறவிக் கதை; முற்பிறவியில் பெருந்தனம் படைத்த சூத்திரனாய் இருந்தது; அந்தப் புழுவுக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இறக்க விரும்பியோ, வாழ விரும்பியோ பல மனிதர்கள் தங்கள் உயிர்களை (போர் எனும்) பெரும் வேள்வியில் விடுகின்றனர். ஓ! பாட்டா, அவர்கள் அடையும் கதியென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) போரில் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கவலை நிறைந்த ஒன்றாகும். ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, செழிப்பாக இருந்தாலும், வறுமையில் இருந்தாலும், இன்பமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கடினமானது என்பதை நீர் அறிவீர். நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பது என் கருத்தாகும். இதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்றான்.(2,3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, செழிப்பிலோ, வறுமையிலோ, மகிழ்ச்சியிலோ, துக்கத்திலோ இவ்வுலகிற்கு வரும் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கேற்றபடியே வாழ்கின்றன[1].(4) அதன் காரணத்தைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி சிறப்பானதாகும்.(5) ஓ! மன்னா, இது தொடர்பாகத் தீவில் பிறந்த முனிவருக்கும் {வியாசருக்கும்}, தவழும் புழுவுக்கும் இடையில் முற்காலத்தில் நடந்த ஒரு பழைய உரையாடலை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(6) பழங்காலத்தில் கல்விமானான பிராமணரும், தீவில் பிறந்தவரும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவருமான கிருஷ்ணர் {வியாசர்} உலகில் திரிந்து கொண்டிருந்த போது, தேர்கள் கடந்து செல்லும் சாலையில் ஒரு புழு வேகமாகச் செல்வதைக் கண்டார்.(7) அந்த முனிவர் ஒவ்வொரு உயிரினத்தின் நடைமுறையையும், ஒவ்வொரு விலங்கின் மொழியையும் அறிந்தவராவார். அனைத்தையும் அறிந்த அவர் அந்தப் புழுவின் இச்சொற்களைச் சொன்னார்.(8)வியாசர், “ஓ! புழுவே, பேரச்சத்துடன் நீ மிக விரைவாகச் செல்வதாகத் தெரிகிறது. நீ எங்கே ஓடுகிறாய், எதைக் கண்டு அஞ்சுகிறாய் என்பதை எனக்குச் சொல்” என்றார்.(9)

அந்தப் புழு {வியாசரிடம்}, “பெருந்தேர் ஒன்றின் சடசடப்பொலியைக் கேட்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அதன் முழக்கம் கடுமையாக இருக்கிறது. அது கிட்டத்தட்ட {அருகில்} வந்துவிட்டது. ஒலி கேட்கிறது. அஃது என்னைக் கொல்லாதா? இதற்காகவே நான் தப்பி ஓடுகிறேன். காளைகளின் ஒலியை மிக அருகில் கேட்கிறேன். அவை சாரதியின் சாட்டையின் கீழ் கடும் மூச்சு விட்டுக் கொண்டே கடும் சுமையைச் சுமந்து வருகின்றன. அந்தக் காளைகளைச் செலுத்தும் மனிதர்கள் வெளியிடும் பல்வேறு ஒலிகளையும் நான் கேட்கிறேன்.(12) புழு வகையில் பிறந்திருக்கும் எங்களைப் போன்ற உயிரினங்களால் அவ்வொலிகள் கேட்கத்தகாதனவாகும். இதன் காரணமாகவே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்தச் சூழ்நிலையில் இருந்து நான் தப்பிச் செல்கிறேன்.(13) அனைத்து உயிரினங்களும் வலிநிறைந்த மரணத்தை உணர்கின்றன. வாழ்வு என்பது அடைதற்கரிய உடைமையாகும். எனவே, மகிழ்ச்சியான நிலையில் இருந்து துன்ப நிலைக்குச் செல்ல நான் விரும்பவில்லை. எனவே நான் அச்சத்தால் தப்பி ஓடுகிறேன்” என்றது”.(14)

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டதும், தீவில் பிறந்தவரான வியாசர், “ஓ! புழுவே, நீ எங்கே மகிழ்ச்சியாக இருப்பாய்? நீ இடைநிலை வகையைச் சார்ந்த உயிரினமாக இருக்கிறாய். மரணம் உனக்கு மகிழ்ச்சி நிறைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(15) ஓ! புழுவே, ஒலி, தீண்டல், சுவை, மணம், மற்றும் பல்வேறு வகையான சிறந்த இன்பங்களை நீ அறியமாட்டாய். மரணம் உனக்கு நன்மையானது என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.(16)

புழு {வியாசரிடம்}, “ஓர் உயிரினம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அதில் பற்றுக் கொள்கிறது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, இந்த வகைப் பிறப்பிலும் நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதற்காகவே நான் வாழ விரும்புகிறேன்.(17) இந்தச் சூழ்நிலையிலும் என் உடல் தேவைகளுக்கு ஏற்ற இன்பங்கள் இருக்கின்றன. மனிதர்களும், அசைவற்ற {உயிரற்ற} பொருட்களில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் வெவ்வேறு இன்பங்களைக் கொண்டிருக்கின்றனர்.(18) என் முந்தைய பிறவியில் நான் மனிதனாக இருந்தேன். ஓ! பலமிக்கவரே, நான் செல்வம் நிறைந்த ஒரு சூத்திரனாக இருந்தேன். நான் பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இல்லை. நான் கொடூரனாகவும், ஒழுக்கத்தில் இழிந்தவனாகவும், அநியாய வட்டிக்குப் பணம் தருபவனாகவும் இருந்தேன்.(19) நான் பேச்சில் கடுமை மிகுந்தவனாகவும் இருந்தேன். வஞ்சிப்பதையே ஞானமாகக் கருதினேன். அனைத்து உயிரினங்களையும் நான் வெறுத்தேன். எனக்கும் பிறருக்கும் இடையில் உண்டான உடன்படிக்கைகளில் உள்ள சாக்குபோக்குகளைப் பயன்படுத்திப் பிறருக்குச் சொந்தமானவற்றை எப்போதும் அபகரித்து வந்தேன்.(20)

கொடியவனான நான், பசித்ததும் என் வயிற்றை நிறைத்துக் கொண்டு, பணியாட்களுக்கும், என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.(21) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நம்பிக்கையுடனும், மதிப்புடனும் அவர்களுக்கு எந்த உணவையும் ஒருபோதும் அர்ப்பணிக்காத பேராசைக்காரனாக நான் இருந்தேன்.(22) பாதுகாப்பை நாடி அச்சத்துடன் என்னிடம் வந்த மனிதர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்காமல் திசைமாற்றிச் செல்ல வைத்தேன். தங்கள் அச்சத்தை விலக்க வேண்டி என்னிடம் வந்தவர்களுக்கு நான் எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை.(23) வேறு மக்களுக்குச் சொந்தமான செல்வம், தானியங்கள், மனைவிகள், அவர்களது அன்புக்குரியவை, பருகும் பானங்கள், நல்ல மாளிகைகள் ஆகியவற்றைக் கண்டு காரணமேயில்லாமல் அவர்களிடம் பொறாமை கொள்வேன்.(24) அவர்களுக்கு வறுமையையே நான் விரும்பினேன். என் ஆசைகளைக் கனியும் நிலையால் மகுடம் சூட்ட உறுதி அளித்த அந்த ஒழுக்கத்தையே பின்பற்றி, மற்றவர்களின் அறம், பொருள் மற்றும் இன்பங்களை அழிக்க முனைந்தேன்.(25)

என்னுடைய அந்த முற்பிறவியில் பெரிய கொடுமைகளையும், அதே போன்ற ஆசைகளை நிறைவேற்றும் செயல்களையும் செய்தேன். அந்தச் செயல்களை நினைவுகூரும் நான் அன்புக்குரிய மகனை இழந்து துயரப்படும் ஒருவனைப் போல வருத்தத்திற்கும் துன்பத்திலும் நிறைகிறேன்.(26) என்னுடைய இந்தச் செயல்பாடுகளின் விளைவால் நற்செயல்கள் என்ன கனிகளைத் தரும் என்பதை அறிந்தவனாக நான் இல்லை. எனினும், நான் வயது முதிர்ந்த என் தாயை வழிபட்டு வந்தேன், ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிராமணரையும் வழிபட்டேன்.(27) {நல்ல} பிறவியையும், சாதனைகளையும் கொண்ட அந்தப் பிராமணர், ஒருமுறை தமது பயணங்களின் போது என் வீட்டிற்கு விருந்தினராக வந்தார். நான் அவரை மதிப்புடனும், விருந்தோம்பலுடனும் வரவேற்றேன். அந்தச் செயலுக்கான பலனின் விளைவால் என் நினைவு என்னைக் கைவிடாதிருக்கிறது.(28) என்னுடைய அந்தச் செயலின் விளைவால் மீண்டும் நான் மகிழ்ச்சியை மீட்டெடுப்பேன் என நினைக்கிறேன். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். என் நன்மைக்கானது என்ன என்பதை அன்புடன் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டது.(29)

ஜென்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 118-புழுவானது அடுத்தடுத்து வெவ்வேறு பிறவிகள் அடைந்ததைக் கண்ட வியாசர்…

வியாசர், “ஓ! புழுவே, ஒரு புண்ணியச் செயலின் விளைவாலேயே இடைநிலை உயிரின வகையில் பிறந்திருந்தாலும் நீ மதிமயங்காமலிருக்கிறாய். ஓ! புழுவே, நான் செய்த அந்தச் செயலின் விளைவாலேயே நீ மதிமயங்காமலிருக்கிறாய்[1].(1) என் தவ வலிமையின் விளைவாலேயே நானும் குற்றமுள்ள ஓர் உயிரினத்திற்கு என்னைக் காணச் செய்து அதைக் காக்க இயன்றவனாயிருக்கிறேன். தவ வலிமையைவிடப் பலமிக்க வலிமை வேறேதும் இல்லை.(2) ஓ! புழுவே, நீ உன் முற்பிறவியில் செய்த தீச்செயல்களின் மூலமே புழுக்களின் வகையில் பிறப்பெடுத்திருக்கிறாய் என்பதை அறிவேன். எனினும், நீ அறத்தையும், தகுதியையும் ஈட்ட நினைத்தால் உன்னால் அவற்றை அடைய முடியும்.(3) தேவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், இந்தச் செயற்களத்தில் தங்களால் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே இன்பத்தையும், துன்பத்தையும் அடைகிறார்கள். மனிதர்களுக்கு மத்தியிலும் அறச்செயல்கள் செய்யப்படும்போது கனியின் மேல் உள்ள விருப்பத்தாலேயே அவை செய்யப்படுகின்றன (கனியை விரும்பாமலல்ல). ஒருவன் அடைய நினைக்கும் சாதனையானது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்ற விருப்பத்தாலேயே வேண்டப்படுகிறது.(4)(முற்பிறவியில்) கல்விமானாகவோ, அறியாமையுடன் கூடிய உயிரினமாகவோ, பேச்சும், புத்தியும், கைகளும், கால்களும் அற்றிருப்பது உண்மையில் அனைத்துமற்றிருப்பதே ஆகும்.(5) ஒரு மேன்மையான பிராமணன் ஆகிறவன், வாழும்போது புனித மந்திரங்களைச் சொல்லி சூரியன் மற்றும் சந்திர தேவர்களைத் துதிக்கிறான். ஓ! புழுவே, நீ அந்த நிலையை அடைவாய்.(6) அந்த நிலையை அடைந்ததும் நீ இன்ப நுகர்பொருட்களாக மாற்றப்பட்ட பூதங்கள் அனைத்தையும் அனுபவிப்பாய். நீ அந்த நிலையை அடையும்போது நான் உனக்குப் பிரம்மத்தைப் போதிப்பேன். அல்லது, நீ விரும்பினால் உனக்கு வேறெந்த நிலையையும்  நான் அளிப்பேன்” என்றார் {வியாசர்}.(7)

வியாசரின் சொற்களை ஏற்றுக் கொண்ட அந்தப் புழு சாலையை விட்டு அகலாமல் அங்கேயே இருந்தது. அதே வேளையில், அந்தத் திசையில் வந்து கொண்டிருந்த பெரிய வாகனம் அந்த இடத்திற்கு வந்தது.(8) அந்தப் புழு, சக்கரங்களின் தாக்குதலில் துண்டுகளாகக் கிழிந்து தன் உயிர்மூச்சை விட்டது. இறுதியாக அளவிலா பலம் கொண்ட வியாசரின் அருள் மூலம் க்ஷத்திரிய வகையில் பிறந்த அது {அந்தப் புழு}(9) அந்தப் பெரும் முனிவரைக் காணச் சென்றது. அது க்ஷத்திரியனாவதற்கு முன், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான், பறவை,(10) சண்டாளன், சூத்திரன் மற்றும் வைசியன் என்ற பல்வேறு வகைகளில் பிறந்திருந்தது. உண்மையைச் சொல்லும் முனிவரிடம் தன் பல்வேறு வடிவமாற்றங்களைக் குறித்துச் சொல்லி, முனிவர் தன்னிடம் காட்டிய கருணையை நினைவுகூர்ந்த அந்தப் புழு (இப்போது க்ஷத்திரியனாக மாறியிருப்பது) தன் கரங்களைக் கூப்பி அந்த முனிவரின் கால்களில் விழுந்து தன் தலையால் அவற்றைத் தீண்டியது {அந்த க்ஷத்திரியன் தன் தலையால் அம்முனிவரின் பாதங்களைத் தீண்டினான்}.(11)

அந்தப் புழு, “அனைவராலும் விரும்பப்படுவதும், நன்கறியப்பட்ட பத்துக் குணங்களைக் கொண்டிருந்தால் அடையக்கூடியதுமான உயர்ந்த நிலையில் இப்போது நான் இருக்கிறேன்[2]உண்மையில், முன்பு ஒரு புழுவாக இருந்த நான் இவ்வாறே ஒரு இளவரசனின் நிலையை அடைந்திருக்கிறேன்.(12) பெரும்பலம் கொண்டவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் என்னைத் தங்கள் முதுகுகளில் சுமந்து செல்கின்றன. என் தேர்களில் உயர்ந்த வகையைச் சார்ந்த காம்போஜ குதிரைகள் பூட்டப்படுகின்றன.(13) ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட எண்ணற்ற வாகனங்களும் என்னைச் சுமக்கின்றன. நான் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் இறைச்சியுடன் கூடிய உணவை உண்கிறேன்.(14) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, அனைவராலும் வழிபடப்படும் நான் இனிமையற்ற காற்று வீச முடியாத இனிமை நிறைந்த அறைகளில் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் நான் உறங்குகிறேன்.(15) ஒவ்வொரு இரவிலும் கொஞ்ச நேரம், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தேவர்கள் தங்கள் தலைவனான இந்திரனை இனிமையாகப் புகழ்வதைப் போலவே என்னைப் புகழ்கிறார்கள்.(16) முன்பு புழுவாக இருந்த நான், வாய்மையில் உறுதியுள்ளவரும், அளவிலா சக்தி கொண்டவருமான உமது அருளின் மூலம் இப்போது அரச வகையில் பிறந்திருக்கிறேன்.(17) ஓ! பெரும் ஞானியே, நான் உமக்குத் தலைவணங்குகிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு ஆணையிடுவீராக. உமது தவப் பலத்தின் மூலம் விதிக்கப்பட்டே இந்த மகிழ்ச்சியான நிலை இப்போது எனதாகியிருக்கிறது” என்றது {க்ஷத்திரியனாக மாறியிருந்த அந்தப் புழு}.(18)வியாசர், “ஓ! மன்னா, மதிப்பை வெளிப்படுத்தும் பல்வேறு சொற்களால் நீ இன்று என்னை வழிபட்டாய். புழுவாக மாறியிருந்த உன் நினைவு மறைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவே இப்போது தோன்றியிருக்கிறது[2].(19) நீ முற்பிறவியில் ஈட்டிய பாவம் இன்னும் அழிக்கப்படவில்லை. முற்பிறவியில் சூத்திரனாக இருந்தபோது செல்வத்தில் பேராசை கொண்டவனும், நடத்தையில் கொடூரனும், பிராமணர்களுக்குப் பகைவனுமாக இருந்து அந்தப் பாவங்களை ஈட்டினாய்.(20) உன்னால் என்னைப் பார்க்க முடிந்தது. அது நீ புழுவாக இருந்தபோது செய்த செயலுக்கான பலனே ஆகும். என்னை வணங்கி வழிபட்டதன் விளைவாக, பசுக்களுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போர்க்களத்தில் உன் உயிர்மூச்சைவிட்டு, நீ மேலும் உயர்ந்தெழுந்து க்ஷத்ததிரிய வகையில் இருந்து பிராமண நிலையை அடைவாய்.(21,22) ஓ! இளவரசே, அதிக இன்பத்தை அனுபவித்தும், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தும் சொர்க்கத்தை அடைந்து, நித்திய பிரம்மம் ஆவாய். அந்த முற்றான இன்ப நிலையே உனதாகும்.(23) இடைநிலை வகைகளில் (விலங்குகளாகப்) பிறப்பவர்கள் (எழும்போது) சூத்திரர்களாகிறார்கள். சூத்திரன் வைசியன் என்ற நிலைக்கு உயர்ந்தெழுகிறான்; வைசிய் க்ஷத்திரியனாகிறான். தன் வகைக்கான கடமைகளை வெளிப்படுத்துவதில் செருக்கு கொள்ளும் க்ஷத்திரியன், பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான். அறவொழுக்கத்தைப் பின்பற்றும் பிராமணன், பேரின்பம் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்” என்றார் {வியாசர்}”.(24)

நற்கதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 119-வியாசரால் நற்கதியடைந்த புழுவைப் போலவே, குருக்ஷேத்திரத்தில் மடிந்த க்ஷத்திரியர்க்ள அனைவரும் நற்கதியையே அடைந்ததாக யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, புழு நிலையைக் கைவிட்டு பெருஞ்சக்தியைக் கொண்ட க்ஷத்திரியனாகப் பிறந்த மனிதன், தன் முந்தைய வடிவ மாற்றங்களை நினைவு கூர்ந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(1) அறம் மற்றும் செல்வத்தை நன்கறிந்த க்ஷத்திரியன் செய்த கடுந்தவங்களைக் கண்டவரும், தீவில் பிறந்தவரும், பிராமணர்களில் முதன்மையானவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் சென்றார்.(2)

வியாசர், “ஓ! புழுவே, க்ஷத்திரிய வகைக்கான தவம் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதாகும். க்ஷத்திரிய வகையின் இந்தக் கடமைகளையே உனக்கு விதிக்கப்பட்ட தவமாக நீ கருதுவாயாக. அதன்பிறகு நீ பிராமண நிலையை அடைவாய்.(3) எது சரி, எது தவறு என்பதை உறுதி செய்து, உன் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டு, அனைத்து உயிரினங்களையும் முறையாகப் பேணி வளர்த்துப் பாதுகாத்து, நல்ல ஆசைகள் அனைத்தையும் நியாயமாக நிறைவேற்றி, புனிதமற்ற அனைத்தையும் திருத்துவாயாக.(4) தூய்மையடைந்த ஆன்மாவாகவும், மனநிறைவுள்ளவனாகவும் இருந்து கொண்டு அறப் பயிற்சியில் அர்ப்பணிப்புடன் இருப்பாயாக. இவ்வழியில் உன் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் நீ உன் உயிர் மூச்சை விடும்போது ஒரு பிராமணனாவாய்” என்றார்”.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அவன் காடுகளுக்குச் சென்று ஓய்ந்திருந்தாலும், பெரும் முனிவரின் சொற்களைக் கேட்ட பிறகு தன் குடிமக்களை அறம்சார்ந்து பேணி வளர்க்கவும், பாதுகாக்கவும் தொடங்கினான்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிறகு அந்தப் புழுவானவன், தன் குடிமக்களைப் பாதுகாத்தக் கடமையின் விளைவாக க்ஷத்திரிய உடலைக் கைவிட்டு ஒரு பிராமணனானான்.(7) அவன் பிராமணனானதைக் கண்டவரும், கொண்டாடப்பட்ட முனிவரும், பெரும் ஞானம் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் வந்தார்.(8)

வியாசர் {புழுவானவனிடம்}, “ஓ! பிராமணர்களின் தலைவா, ஓ! அருளப்பட்டவனே, (மரணத்தில் உள்ள அச்சத்தால்) வருந்தாதே. அறம்சார்ந்து செயல்படுபவன் மதிப்புமிக்கப் பிறவியை அடைகிறான். மறுபுறம் நியாயமில்லாமல் செயல்படுபவன் தாழ்ந்த மற்றும் இழிந்த பிறவியை அடைகிறான். ஓ! அறமறிந்தவனே, ஒருவன் செய்யும் பாவத்தின் அளவுக்குத் தகுந்த துன்பத்தையே ஒருவன் அடைகிறான்.(9) எனவே, ஓ! புழுவானவனே, மரணத்தில் உள்ள அச்சத்தினால் வருந்தாதே. அறம் இழப்பு குறித்தது மட்டுமே நீ அஞ்ச வேண்டிய ஒன்றாகும். எனவே நீ அறம் பயில்வதைத் தொடர்வாயாக” என்றார்.(10)

புழுவானவன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, உமது அருளால் நான் மகிழ்ச்சிக்கு மேலான இன்பநிலைகளை அடைந்தேன். அறத்தில் தன் வேர்களைக் கொண்ட செழிப்பை நான் அடைந்திருப்பதால் என் பாவங்கள் ஒழிந்து விட்டதாக நினைக்கிறேன்” என்றான்”.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தப் புனித முனிவரின் ஆணையின் பேரில் அடைதற்கரிய பிராமண நிலையை அடைந்த அந்தப் புழுவானவன், ஆயிரம் வேள்வித்தூண்களால் {யாகஸ்தம்பங்களால்} பூமியில் சுவடுகளை உண்டாக்கினான்(12) பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன், பிரம்மலோகத்திலேயே தன் வசிப்பிடத்தை அடைந்தான். உண்மையில், ஓ! பிருதையின் மகனே, அந்தப் புழுவானவன், வியாசரின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் செயல்களின் விளைவால் உயர்ந்த நிலையான நித்திய பிரம்மத்தையே அடைந்தான்.(13) சக்தியுடன் முயன்று, (குருக்ஷேத்திரக் களத்தில்) தங்கள் உயிர்மூச்சுகளை விட்ட க்ஷத்திரியக் காளைகள் அனைவரும் பலன்மிக்க {புண்ணியமான} கதிகளையே அடைந்தனர். எனவே, ஓ! மன்னா, நீ அவர்களுக்காக வருந்தாதே” என்றார் {பீஷ்மர்}.(14)

தானத்தின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 120-ஞானம், தவம், தானம் ஆகியவற்றின் சிறப்பைக் குறித்து மைத்ரேயருக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“ஞானம், தவங்கள் மற்றும் கொடைகள் என்ற மூன்றில் எது மேன்மையானது? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக மைத்ரேயருக்கும், தீவில் பிறந்தவரான கிருஷ்ணருக்கும் {வியாசருக்கும்} இடையில் நடந்த உரையால் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! மன்னா, ஒரு காலத்தில் தீவில் பிறந்தவரான கிருஷ்ணன் {வியாசர்}, யாருக்கும் தெரியாமல் உலகில் திரிந்து கொண்டிருந்த போது, வாராணசிக்கு {காசிக்குச்} சென்று முனிவர்களின் குலத்தில் பிறந்தவரான மைத்ரேயரிடம் பணி செய்தார்.(3) முனிவர்களில் முதன்மையான மைத்ரேயர், வியாசர் வருவதைக் கண்டு, அவரை முறையான சடங்குகளுடன் வழிபட்டபிறகு, அவருக்கு ஓர் இருக்கையை அளித்து, சிறந்த உணவையும் அவருக்கு உண்ணக் கொடுத்தார்.(4) உயர் ஆன்மக் கிருஷ்ணர் {வியாசர்}, உடலுக்கு நலந்தருவதும், அனைத்து வகை நிறைவையும் உண்டாக்குவதுமான அந்த நல்ல உணவை உண்ட பிறகு அங்கே அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக உரக்கச் சிரித்தார்.(5)

கிருஷ்ணர் {வியாசர்} சிரிப்பதைக் கண்ட மைத்ரேயர், “ஓ! அற ஆன்மாவே, உமது சிரிப்புக்கான காரணம் என்ன? நீர் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய தவசியாவீர். நீர் பெருமகிழ்ச்சியில் இருப்பவராகத் தெரிகிறீர்.(6) உம்மைத் தலைவணங்கி வழிபட்டுக் கேட்கிறேன் என் தவ வலிமை என்ன? உமது உயர்ந்த அருள் என்ன?(7) நான் செய்யும் செயல்கள் நீர் செய்வதில் இருந்து வேறுபட்டனவாகும். நீர் உயிர் மூச்சைக் கொண்டிருந்தாலும் ஏற்கனவே முக்தியடைந்தவராவீர். எனினும், நான் இன்னும் விடுதலை அடையவில்லை. இவ்வளவு இருந்தாலும் எனக்கும் உமக்கும் பெரும் வேறுபாடு இல்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் பிறப்பாலும் வேறுபடுகிறேன்” என்றார்[1].(8)வியாசர் {மைத்ரேயரிடம்}, “என்னை நிறைத்திருக்கும் இந்த ஆச்சரியம், மிகைப்படச் சொல்வது போலத் தெரியும் ஒரு விதியில் இருந்தும், மக்கள் புரிந்து கொள்ளும் முரண்பட்ட கூற்றிலிருந்தும் எழுகிறது. வேதங்களின் அறிக்கை உண்மையில்லை என்பது போலத் தெரிகிறது. ஆனால் வேதங்கள் ஏன் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்?[2](9) மனிதனுக்கான சிறந்த நோன்புகளாக அமையும் மூன்று தடங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஒருவன் ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது; அவன் எப்போதும் வாய்மையே பேச வேண்டும்; அவன் கொடையளிக்க வேண்டும்.(10) வேத அறிவிப்புகளைப் பின்பற்றிப் பழங்காலத்து முனிவர்கள் இதை அறிவித்தனர். பழங்காலத்தில் இருந்தது போலவே இந்தத் தடையாணைகளைக் கேட்டு நம் காலத்திலும் அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும்.(11) விதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் செய்யப்படும் சிறு கொடையும் பெரும் கனிகளை விளைவிக்கும். தாகம் நிறைந்த மனிதனுக்கு நேர்மையான இதயத்துடன் நீ சிறிதளவு நீரைக் கொடுத்திருக்கிறாய்.(12) ஓ! பலமிக்கவனே, தாகத்திலும், பசியிலும் இருந்த நீ இத்தகைய உணவை எனக்குக் கொடுத்ததன் மூலம் பல வேள்விகளைச் செய்த ஒருவனைப் போல உயர்ந்த இன்ப லோகங்களை வென்றிருக்கிறாய்.(13) உனது புனிதக் கொடையாலும், உனது தவங்களாலும் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அறமே உனது பலம். அறமே உனது தோற்றம்.(14) அறமே நீ வெளியிடும் நறுமணமாக இருக்கிறது. உனது செயல்கள் அனைத்தும் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன். ஓ! மகனே, கொடையானது, புனித நீர்நிலைகளில் தூய்மைச் சடங்குகளைச் செய்வதையும், அனைத்து வேத நோன்புகளை நிறைவேற்றுவதையும் விட மேன்மையானதாகும்.(15)உண்மையில், ஓ! பிராமணா {மைத்ரேயா}, கொடையானது, புனிதச் செயல்கள் அனைத்திலும் மங்கலமிக்கதாகும். அனைத்துப் புனிதச் செயல்களையும் விட அது பலன்மிக்கதாக இல்லாதிருந்தால், அதன் மேன்மை குறித்த கேள்வியே இருந்திருக்க முடியாது.(16) நீ மெச்சும் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தும் கொடைக்கருகில் நிற்காது. கொடையானது ஐயமில்லாமல் உயர்ந்த பலன் நிறைந்தது என நான் கருதுகிறேன்.(17) கொடையளிக்கும் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பாதையே ஞானிகள் நடக்கும் பாதையாக இருக்கிறது. கொடையளிப்பவர்கள் உயிர்மூச்சையே கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அறமாக அமையும் கடமைகள் அவற்றிலேயே {கொடைகளிலேயே} நிறுவப்பட்டுள்ளன.(18) வேதங்களை நன்கு கற்பதும், புலன்களை அடக்குவதும், அண்டந்தழுவிய துறவறம் கொள்வதும் போலவே கொடையும் மிக மேன்மையான பலனைக் கொண்டதாகும்.(19) ஓ! மகனே, கொடையளிக்கும் கடமையை நீ செய்ததன் விளைவால் மகிழ்ச்சியில் இருந்து பெரும் மகிழ்ச்சியை அடைவாய். (இந்தக் கடமையைப் பயிலும்) புத்தியுள்ள மனிதன் நிச்சயம் மகிழ்ச்சியில் இருந்து உயர்ந்து பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(20)

நாம் இது போன்ற நேரடி நிகழ்வுகள் பலவற்றைச் சந்தித்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. செழிப்புடன் கூடிய மனிதர்கள் செல்வத்தை அடைவதிலும், கொடைகளை அளிப்பதிலும், வேள்விகளைச் செய்வதிலும் அதன் மூலம் விளையும் மகிழ்ச்சியை ஈட்டுவதிலும் வெல்கின்றனர்.(21) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இன்பத்தைத் தொடர்ந்து துன்பமும், துன்பத்தைத் தொடர்ந்து இன்பமும் இயற்கையாக நடைபெறுவதே எப்போதும் காணப்படுகிறது[3].(22) ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் மனிதர்களுக்கு மூன்றுவகை ஒழுக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கின்றனர். சிலர் அறவோராகவும்; சிலர் பாவம் நிறைந்தவர்களாகவும்; சிலர் அறவோராகவும் அல்லாமல், பாவிகளாகவும் அல்லாமல் இருக்கின்றனர்.(23) பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள மனிதனின் ஒழுக்கம் இரண்டாகவும் கருதப்படுவதில்லை. அவனது பாவங்கள் பாவங்களாகவே கருதப்படுவதில்லை. தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதனும் (அந்தக் கடமைகளை நோற்பதால்) அறவோனாகவோ, பாவியாகவோ கருதப்படுவதில்லை.(24)வேள்விகள், கொடைகள், தவங்கள் ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களே அறவோராகக் கருதப்படுகின்றனர். எனினும், இவர்களில் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பவர்களும், அவற்றுடன் நட்பற்றவர்களும் பாவிகளாகவே கருதப்படுகின்றனர்.(25) சில மனிதர்கள் பிறர் உடைமைகளை அபகரிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் நரகில் விழுந்து, துன்பத்தைச் சந்திப்பார்கள். ஈடுபாடில்லாமல் {அக்கறையில்லாமல்} மனிதர்கள் செய்யும் பிற செயல்கள் அனைத்தும் அறமாகவோ, பாவமாகவோ கருதப்படுவதில்லை.(26) நீ விளையாடுவாயாக, வளர்வாயாக, உற்சாகமாயிருப்பாயாக, கொடையளிப்பாயாக, வேள்விகளைச் செய்வாயாக. ஞானிகளோ, தவசிகளோ உன்னைவிடச் சிறந்தவராகமாட்டார்” என்றார் {வியாசர்}.(27)

பெறுபவர் அடையும் பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 121-பிராமணர்களின் பெருமை; தகாதோருக்குக் கொடுக்கப்படும் உணவுக் கொடை கொடுத்தவனையும், பெறுபவனையும், உணவையும் கெடுப்பது ஆகியவற்றை வியாசருக்குச் சொன்ன மைத்ரேயர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், செயல்களை வழிபடுபவரும், பெருஞ்செழிப்புடைய குலத்தில் பிறந்தவரும், பெருங்கல்வி கொண்டவரும், ஞானியுமான மைத்ரேயர் இந்தச் சொற்களை அவரிடம் சொன்னார்.(1)

மைத்ரேயர் {வியாசரிடம்}, “ஓ! பெரும் ஞானியே, நீர் சொன்னதில் எந்த ஐயமுமில்லை. ஓ! பலமிக்கவரே, உமது அனுமதியுடன் நான் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.(2)

வியாசர் {மைத்ரேயரிடம்}, “ஓ! மைத்ரேயா, ஓ! பெரும் ஞானியே, நீ என்ன சொல்ல வேண்டுமோ, என்ன வழியில் சொல்ல வேண்டுமோ அதைச் சொல், நான் அதைக் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(3)

மைத்ரேயர் {வியாசரிடம்}, “கொடை குறித்து நீர் சொன்ன சொற்கள் குற்றமில்லாதவையும், தூய்மையுடையவையுமாகும். உமது ஆன்மா ஞானத்தாலும், தவத்தாலும் தூய்மையடைந்தது என்பதில் ஐயமில்லை.(4) உமது ஆன்மா தூய்மை அடைந்ததன் விளைவால் நான் அறுவடை செய்யும் பெரும் நன்மை இதுவே. என் புத்தியின் துணையால் உயர்ந்த தவங்களுடன் கூடியவராகவே நான் உம்மைக் காண்கிறேன்.(5) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் உம்மைப் போன்ற மனிதர்களைக் காண்பதன் மூலம் மட்டுமே செழிப்பை அடைகிறோம். உமது அருளாலும், நான் செய்த செயல்களின் இயல்பாலும் அது {செழிப்பு} உண்டாகிறது என்று நான் நினைக்கிறேன்.(6) தவங்கள், வேதஞானம், தூய குலத்தில் பிறப்பு ஆகிய காரணங்களாலேயே ஒருவன் பிராமணனாகிறான். ஒருவன் இந்த மூன்று குணங்களையும் வெளிப்படுத்தும்போதே அவன் மறுபிறப்பாளனாக அழைக்கப்படுகிறான்.(7)

பிராமணர்கள் நிறைவடைந்தால், பித்ருக்களும், தேவர்களும் நிறைவடைகின்றனர். வேதமறிந்த பிராமணனை விட உயர்ந்தது வேறேதும் இல்லை.(8) பிராமணன் இல்லாவிட்டால் மொத்தமும் இருளாகவே இருக்கும். எதையும் அறிய முடியாது. நான்கு வகையும் {வர்ணங்களும்} நீடித்திருக்காது. அறம் மறம், வாய்மை பொய்மை, ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு மறைந்து போகும்.(9) நன்கு உழப்பட்ட நிலத்தை {பண்பட்ட நிலத்தை} மனிதர்கள் காணும்போது அவர்கள் அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். அதேபோல, பெருங்கல்வி படைத்த பிராமணனுக்குக் கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்பலனை அறுவடை செய்கிறான்.(10) கொடைகளை ஏற்க வேத அறிவும், நல்லொழுக்கமும் கொண்ட பிராமணன் இல்லாவிட்டால் செல்வந்தர்கள் கொண்ட செல்வத்திற்குப் பயனேதும் இல்லை.(11)

அறியாமை கொண்ட பிராமணன், தனக்கு அளிக்கப்பட்ட உணவை உண்பதன் மூலம், (கொடுத்தவனுக்கு எந்தப் பலனையும் உண்டாக்காததால்) தான் உண்டதை அழிக்கிறான். உண்ணப்பட்ட உணவானது (உண்பவன் தனக்கு அளிக்கப்பட்டதை உண்டதன் மூலம் பாவத்தை ஈட்டுவதால்) உண்டவனை அழிக்கிறது. தகுந்த மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதே உண்ணத்தகுந்தது என்று முறையாக அழைக்கப்படும், மற்ற வழக்குகள் அனைத்திலும், அதைப் பெறுபவன் கொடையாளியின் கொடையைக் கெடுத்து, முறையில்லாமல் உண்பதன் மூலம் தானே அழிவையும் அடைகிறான்[1].(12)கல்விமானான பிராமணன் தான் உண்ணும் உணவை வசப்படுத்துபவன் ஆகிறான் {செரிக்கிறான்}. அதை உண்ட பிறகு அவனே வேறு உணவைத் தோற்றுவிக்கிறான் {உணவைப் பெருகச் செய்கிறான்}. எவனுடைய உணவு, பிள்ளைகளின் பெற்றோர்களை அவர்களை ஈன்றெடுக்க இயன்றவர்களாக்கியதோ அவனே அவர்களுக்குரியவன் {அந்தப் பிள்ளைகளுக்குரியவன்} என்பதால் அறியாமை கொண்டவன் தனக்கு அளிக்கப்படும் உணவை உண்பதன் மூலம் தான் ஈன்றெடுக்கும் பிள்ளைகளிடம் உள்ள தன் உரிமையை இழக்கிறான். அடுத்தவரின் உணவை உண்பவர்கள், அந்த உணவை வெல்லும் பலமற்றவர்களாகும்போது இந்த நுட்பமான களங்கம் ஏற்படுகிறது[2].(13) கொடையளிப்பதன் மூலம் ஒரு கொடையாளி அடையும் பலனானது, உணவை ஏற்பதன் மூலம் அதைப் பெற்றுக் கொள்பவன் அடையும் பலனுக்கு ஈடானதாகும். கொடையாளியும், ஏற்பவனும் இணையான அளவில் ஒருவரையொருவர் சாந்தவர்களாக இருக்கிறார்கள். இதையே முனிவர்களும் சொல்லியிருக்கின்றனர்.(14)வேத அறிவும், ஒழுக்கமும் கொண்ட பிராமணர்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே இருக்கும் மக்கள் கொடைகளின் புனிதக் கனிகளை ஈட்ட இயன்றவர்களாகவும், இம்மையிலும், மறுமையிலும் அவற்றை அனுபவிக்கத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(15) தூய குலத்தில் பிறந்தவர்களும், தவங்களில் பேரர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், கொடையளிப்பவர்களும், வேதங்கற்பவர்களுமான மனிதர்கள் பெரும் மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.(16) அந்த நல்லோரே ஒருவன் மயங்காமல் நடக்கக்கூடிய பாதையை அமைத்தவர்கள் ஆவர். அந்த மனிதர்களே பிறரைச் சொர்க்கத்திற்கு வழிநடத்தக்கூடியவர்களாவர். வேள்விச் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு நித்தியமாக வாழ்ந்து வருபவர்கள் அம்மனிதர்களே” என்றார் {மைத்ரேயர்}”.(17)

தவத்தின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 122-வத்தின் சிறப்பு மற்றும் இல்லறக் கடமைகளை நோற்பதன் அவசியம் ஆகியவற்றை மைத்ரேயருக்குச் சொன்ன வியாசர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்தப் புனிதமானவர் {வியாசர்}, மைத்ரேயருக்குப் பதிலளிக்கும் வகையில், “நீ ஞானத்துடன் இருப்பது நற்பேறே. உன் புத்தி இவ்வகையில் இருப்பதும் நற்பேறே.(1) நல்லோர் எப்போதும் அறம் சார்ந்த குணங்கள் அனைத்தையும் உயர்வாகவே மெச்சுகின்றனர். தனிப்பட்ட அழகு, இளமை மற்றும் செழிப்பு ஆகியவை உன் நற்பேறின் காரணமாகவே உன்னை மூழ்கடிக்காமல் இருக்கின்றன.(2) தேவர்கள் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக இதை உனக்குச் செய்திருக்கின்றனர். கொடையை விட (திறனில்) மேன்மையானதைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இருக்கும் சாத்திரங்கள் மற்றும் அறம் சார்ந்த உடன்படிக்கைகள் எதுவும், உலகில் காணப்படும் (அற) நாட்டங்கள் எதுவும் வேதங்களின் வழிகாட்டலுக்கு இணங்க முறையான வரிசைப்படி உண்டாகின்றன.(4)

அவற்றைப் பின்பற்றியே நான் கொடையை {தானத்தை} மெச்சுகிறேன். நீயோ தவங்களையும், வேத ஞானத்தையும் புகழ்கிறாய். தவங்கள் புனிதமானவையே. ஒருவன் வேதங்களையும், சொர்க்கத்தையும் அடையும் வழிமுறைகளாகத் தவங்கள் இருக்கின்றன.(5) தவம் மற்றும் அறிவின் துணையுடன் ஒருவன் நாம் கேள்விப்பட்டிருக்கும் உயர்ந்த கனிகளை அடைகிறான். தவங்களின் மூலமே ஒருவன் தன் பாவங்களையும், தீமைகள் அனைத்தையும் அழிக்கிறான்.(6) எந்த நோக்கத்துடன் ஒருவன் தவம் செய்தாலும் அவன் தவங்களின் விளைவால் அதற்கான கனியை அடைகிறான் என நாம் கேள்விப்படுகிறோம்.(7) நிறைவேற்றக் கடினமான எதையும், வெல்லக் கடினமான எதையும், அடைவதற்கு அரிதான எதையும், கடப்பதற்கு அரிதான எதையும் தவங்களின் உதவியுடன் அடையலாம். அனைத்திலும் தவங்களே மிக மேன்மையான வலிமையைக் கொண்டிருக்கின்றன.(8)

மது அருந்துபவனோ, பிறரின் உடைமைகளை வலுக்கட்டாயமாக அபகரிப்பவனோ, கருவைக் கொன்ற குற்றவாளியோ, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவனோ எவனும் தவத்தின் உதவியால் அவற்றைக் கடப்பதில் வெல்கிறான். உண்மையில் ஒருவன் தவங்களின் மூலம் இந்தப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(9) ஞானங்கள் அனைத்துடன் கூடிய உண்மையான பார்வையைக் கொண்டவன் ஒருவனும், எவ்வகையைச் சார்ந்த தவசி ஒருவரும் நிகரானவரே. ஒருவன் இவர்கள் இருவரையும் எப்போதும் வணங்க வேண்டும்.(10) வேதங்களையே தங்கள் செல்வமாகக் கொண்ட மனிதர்கள் அனைவரும் வழிபடப்பட வேண்டும். அதே போலத் தவங்களுடன் கூடிய மனிதர்கள் அனைவரும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. கொடையாளிப்பவர்கள் மறுமையில் மகிழ்ச்சியையும், இம்மையில் பெருஞ்செழிப்பையும் அடைகின்றனர்.(11) இவ்வுலகின் அறவோர், உணவுக் கொடை அளிப்பதன் மூலம் இவ்வுலகையும், மேன்மையான இன்ப நிலைகளைக் கொண்ட பிரம்மலோகம் முதலிய பிற உலகங்களையும் அடைகிறான்.(12)

அனைவராலும் துதிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைத் துதிக்கின்றனர். எங்கும் கௌரவிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைக் கௌரவிக்கின்றனர். கொடையாளி எங்குச் சென்றாலும் புகழப்படுகிறான்.(13) செயல்களைச் செய்பவனும், அவற்றைத் தவிர்ப்பவனும், செய்யும் செயல்களுக்கும், செய்யாதவற்றுக்கும் தகுந்த அளவில் பலனை அடைகிறார்கள். ஒருவன் மேலுலகத்தில் வசித்தாலும், பாதாள லோகத்தில் வசித்தாலும் அவன் எப்போதும் தன் செயல்களுக்குத் தகுந்த இடங்களையே அடைகிறான்.(14) உன்னைப் பொறுத்தவரையில், நீ புத்தி, நற்பிறப்பு, வேத ஞானம் மற்றும் கருணை கொண்டவனாக இருப்பதால் நீ விரும்பும் உணவு மற்றும் பானம் எதையும் நிச்சயம் அடைவாய்.(15) ஓ! மைத்ரேயா, நீ இளைஞனாக இருக்கிறாய். நோன்புகளை நோற்கிறாய். அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய். நீ முதலில் இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை என்னிடம் இருந்து அறிந்து கொள்வாயாக.(16)

தான் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவாக இருக்கும் கணவனைக் கொண்டதும், தன் கணவனிடம் நிறைவாக உள்ள மனைவியைக் கொண்டதுமான வீட்டில் எல்லா மங்கல விளைவுகளும் உண்டாகும்.(17) உடலில் உள்ள புழுதி நீரால் கழுவப்படுவதைப் போலவே நெருப்பின் காந்தியால் இருள் விலகுவதைப் போலவே, கொடைகள் மற்றும் தவங்களால் பாவம் கழுவப்படுகிறது.(18) ஓ! மைத்ரேயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. இங்கிருந்து அமைதியுடன் செல்வாயாக. நான் சொன்னதை உன் மனத்தில் கொள்வாயாக. அப்போது நீ பலன்கள் பலவற்றை அறுவடை செய்வாய்” என்றார் {வியாசர்}.(19)

அப்போது மைத்ரேயர் சிறப்புமிக்கவரான தமது விருந்தினரை {வியாசரை} வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி, தன் கரங்களை மதிப்புடன் கூப்பி, “ஓ! புனிதமானவரே, நீரும் அருளப்பட்டிருப்பீராக” என்றார்”.(20)

ஸ்திரீ தர்மம் – சுமனையும் சாண்டிலியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 123-கற்புடைய நல்ல பெண்களின் நடத்தை மற்றும் பெண்கள் பின்பற்ற வேண்டிய அறம் குறித்து ஸுமனை மற்றும் சாண்டிலிக்கிடையில் நடைபெற்ற உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவரே, கற்புடைய நல்ல பெண்களுக்குரிய சிறந்த நடத்தை எது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு காலத்தில், தேவலோகத்தில் கேகய குலத்தைச் சாரந்தவளும், சுமனை {ஸுமனை} என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு பெண், பெரும் சக்தி கொண்டளும், அனைத்தையும், அனைத்தின் உண்மைகளையும் அறிந்தவளுமான சாண்டிலியிடம்,(2) “ஓ!மங்கலமான பெண்ணே, எந்த ஒழுக்கத்தின் மூலம், என்ன வகையான செயல்முறையின் மூலம் அனைத்துப் பாவங்களையும் அழித்துச் சொர்க்கம் அடைவதில் நீ வென்றாய்?(3) நீ நெருப்பின் தழலைப் போலத் தன்சக்தியில் சுடர்விடுகிறாய். தன்பிரகாசத்துடன் சொர்க்கத்திற்கு வந்திருக்கும் நட்சத்திரங்களின் தலைவனுடைய {சந்திரனுடைய} மகளைப் போலத் தெரிகிறாய்.(4) தூய வெள்ளுடை உடுத்தியிருக்கும் நீ உற்சாகம் நிறைந்தவளாகவும், சுகமாகவும் இருக்கிறாய். ஓ! மங்கலச் சீமாட்டியே, தெய்வீகத் தேரில் அமர்ந்திருக்கும் நீ பல்லாயிரம் மடங்கு சக்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்.(5) சிறிய அளவிலான தவங்கள், கொடைகள் மற்றும் நோன்புகளின் மூலம் நீ இந்த இன்பலோகத்தை அடைந்திருப்பதாக நான் கருதவில்லை. நீ உண்மையைச் சொல்வாயாக” என்று கேட்டாள்.(6)

இவ்வாறு சுமனையால் இனிமையாகக் கேட்கப்பட்டவளும், இனிய புன்னகையைக் கொண்டவளுமான சாண்டிலி, தன்னிடம் கேள்வி கேட்ட அழகியிடம், பிறரும் கேட்கும் வகையில்,(7) “நான் மஞ்சள் ஆடை {காஷாயம்} உடுத்தவில்லை; மரவுரியும் தரிக்கவில்லை. என் தலையை மழிக்கவில்லை; தலையில் சடாமுடியுந்தரிக்கவில்லை. இந்தச் செயல்களின் விளைவால் நான் தெய்வீக நிலையை அடையவில்லை.(8) நான் ஒருபோதும் விழிப்புணர்வின்றி ஏற்பில்லாத, தீய பேச்சு எதையும் என் கணவரிடம் பேசியதில்லை.(9) நான் எப்போதும் தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருந்தேன். எப்போதும் விழிப்புடன் நான் என் மாமியார் மற்றும் மாமனாருக்குத் தொண்டாற்றினேன்.(10) வஞ்சகமாக ஒருபோதும் நடக்கக்கூடாது என்பது என் தீர்மானமாக இருந்தது. நான் ஒருபோதும் வீட்டைவிட்டு வெளியே தங்கியதோ, வேறு எவருடனும் நீண்ட நேரம் பேசியதோ கிடையாது {நிற்கத்தகாத இடங்களில் நிற்பதுமில்லை. வெகுநேரம் பேசுவதுமில்லை}.(11) நான் ஒருபோதும் தீச்செயலேதும் செய்ததில்லை; நான் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை; நான் ஒருபோதும் தீங்கேதும் செய்ததில்லை. நான் ரகசியம் எதையும் ஒருபோதும் வெளியிட்டதில்லை. இவ்வாறே நான் என்னைத் தாங்கிக் கொண்டேன்.(12)

எந்தக் காரியத்திற்காகவும் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பும்போது, நான் எப்போதும் அவருக்கு இருக்கையளித்துத் தொண்டாற்றி மதிப்புடன் வழிபட்டேன்.(13) என் கணவர் அறியாத, என் கணவருக்குப் பிடிக்காத எவ்வகை உணவையும் நான் ஒருபோதும் உண்டதில்லை.(14) விடியும் முன்பு எழுந்து, உற்றார் உறவினர்களுக்காகச் செய்ய வேண்டியதை, செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை நிறைவேற்றினேன்.(15) என் கணவர் ஏதோ ஒரு காரியத்திற்காக வீட்டைவிட்டுத் தொலைவான இடத்திற்குச் சென்றால், நான் வீட்டில் இருந்து அவரது காரியம் நிறைவேற பல்வேறு மங்கலச் செயல்களைச் செய்வதில் ஈடுபடுவேன்.(16) உண்மையில் என் கணவர் இல்லாத போது நான் மையையோ, ஆபரணங்களையோ பயன்படுத்துவதில்லை; நான் என்னை முறையாகக் கழுவிக் கொள்வதில்லை; மாலைகளையும், நறுமணப்பொருட்களையும் பயன்படுத்துவதில்லை; என்பாதத்தை அரக்கு சாயத்தாலோ, என் மேனியை ஆபரணங்களாலோ அலங்கரித்துக் கொள்வதில்லை.(17)

என் கணவர் அமைதியாக உறங்கும்போது, முக்கியமான காரியத்தில் அவரது கவனம் தேவைப்பட்டாலும் நான் ஒருபோதும் அவரை எழுப்பியதில்லை. உறங்கிக் கிடக்கும் அவருக்கு அருகில் அமர்ந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.(18) என் கணவர் தன் குடும்பத்தையும் உறவினர்களையும் தாங்கிக் கொள்வதற்காக இன்னும் அதிகச் சக்தியோடு செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஒருபோதும் நான் அவரைத் தூண்டியதில்லை. நான் எப்போதும் ரகசியங்களைப் பிறருக்கு வெளியிடாமல் இருந்தேன். நான் எங்கள் வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருந்தேன்.(19) கடமையின் இந்தப் பாதையைக் குவிந்த கவனத்துடன் பின்பற்றும் ஒரு பெண்மணி, சொர்க்கத்தில் போதுமான கௌரவங்களைப் பெற்று இரண்டாவது அருந்ததியாகிறாள்” என்றாள் {சாண்டிலி}”.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்கவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும் அறவொழுக்கம் ஒழுகுபவளுமான சாண்டிலி, தன் கணவனுக்குப் பெண்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துச் சுமனையிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, அங்கேயே அப்போதே மறைந்து போனாள்.(21) ஓ! பாண்டுவின் மகனே, ஒவ்வொரு முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவுகள் {அமாவாசைகள்} அன்றும் இதைப் படிக்கும் மனிதன், சொர்க்கத்தை அடைவதில் வென்று நந்தனக் காடுகளில் பேரின்பத்தை அனுபவிப்பான்” {என்றார் பீஷ்மர்}.(22)

சாமச்சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 124-இன்சொல்லின் சிறப்புக் குறித்து ஒரு ராட்சசனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“இன்சொல் {சாமம்}, அல்லது கொடை {தானம்} ஆகியவற்றில் எது மேன்மையான திறனைக் கொண்டது? ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இவை இரண்டில் மேன்மையான திறன் கொண்டது எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சிலர் இன்சொல்லில் {சாமத்தில்} நிறைவடைகின்றனர், வேறு சிலர் கொடைகளால் நிறைவடைகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பின்படி இவை ஒன்றாலோ, அடுத்ததாலோ நிறைவடைகிறான்.(2) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மிகக் கொடூரமான உயிரினங்களும் தணிவை அடையும் இன்சொல்லின் {சாமத்தின்} பலன்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இது தொடர்பாகக் காட்டில் ஒரு ராட்சசனால் கைப்பற்றப்பட்ட ஒரு பிராமணன், (இன்சொல்லின் உதவியால்) விடுதலையடைந்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4)

நாநயமும், புத்தியும் கொண்ட ஒரு குறிப்பிட்ட பிராமணன், தனியாகக் காட்டில் சென்ற போது, அவனை உண்ண நினைத்த ஒரு ராட்சசனால் பிடிக்கப்பட்டுத் துன்பத்தில் விழுந்தான்.(5) புத்தியும், கல்வியும் கொண்ட அந்தப் பிராமணன் கலக்கமடையாமல் இருந்தான். பயங்கரமான அந்த மனிதவூனுண்ணியைக் கண்டதும் கலங்காமல், இன்சொல்லைப் பயன்படுத்தி அதன் விளைவுகளை அந்த ராட்சசனிடம் காணத் தீர்மானித்தான்.(6)

அது வரை சொல்லப்பட்ட {இனிய}சொற்களுக்காக அந்தப் பிராமணனை மதிப்புடன் வணங்கிய அந்த ராட்சசன் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டான்: “நீர் தப்பிக்கலாம், ஆனால் நான் ஏன் வெளுத்தும், இளைத்தும் இருக்கிறேன் என்பதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(7) சிறிது நேரம் இது குறித்துச் சிந்தித்த அந்தப் பிராமணன், அந்த ராட்சசனின் கேள்வியை ஏற்று, நன்கு பேசப்பட்ட பின்வரும் சொற்களால் பதில் கூறினான்.(8)

அந்தப் பிராமணன் {ராட்சசனிடம்}, “உன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்தில் வசித்து, உனக்குச் சொந்தமில்லாத பகுதியில் திரிந்து, உன் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் தோழமை இல்லாமல் நீ பெரும் செல்வத்தை அனுபவித்து வருகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(9) ஓ! ராட்சசா, உண்மையில் உன் நண்பர்கள் உன்னால் நன்றாக நடத்தப்பட்டாலும், உன் தீய இயல்பின் விளைவால் உன்னிடம் நல்ல மனம் கொண்டவர்களாக இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(10) நீ பலனும் {புண்ணியமும்}, ஞானமும் நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டவனாக இருக்கிறாய். இருப்பினும், பலனும், ஞானமும் இல்லாதவர்கள் உன்னைவிட அதிக முன்னுரிமை பெற்று கௌரவிக்கப்படுவதை நீ பார்க்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(11) உன்னைவிட மிக அதிகமான செல்வமும் செல்வாக்கும் கொண்டிருந்தாலும், சாதனைகளில் உன்னைவிடத் தாழ்ந்தவர்களாக இருக்கும் மனிதர்களால் நீ அவமதிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(12)

வாழ்வாதாரங்கள் இல்லாமல் துன்புற்றிருந்தாலும், உயர்ந்த நிலையில் இருக்கும் உன் ஆன்மாவால் வழிநடத்தப்பட்டு, உன் வாழ்வாதாரங்களை ஈர்ப்பதில் வெளிப்படையாகத் தெரியும் வழிமுறைகளை அலட்சியம் செய்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(13) அறத்தின் விளைவால் பிறருக்கு நன்மை செய்து உன்னை நீயே களங்கம் செய்திருக்கிறாய். ஓ! அறம் சார்ந்த ராட்சசா, இருப்பினும் மற்றவன் நீ அவனை வஞ்சித்துவிட்டதாகவும், அடக்கிவிட்டதாகவும் நினைக்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(14) காமம் மற்றும் கோபத்தில் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டோர் இவ்வுலகில் படும் துன்பத்திற்காக நீ வருந்துகிறாய் என நினைக்கிறேன். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(15) ஞானம் கொண்டவனாக இருந்தாலும், அது முற்றிலும் இல்லாதவனைப் போல நீ பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் தீய ஒழுக்கம் கொண்ட மனிதர்கள் உன்னை நிந்திக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(16)

நட்பின் நாவைக் கொண்ட உன் பகைவன் எவனோ ஒருவன், முதலில் அறம்சார்ந்த ஒருவனைப் போல உன்னிடம் நடந்து கொண்டு, பிறகு கபடன் போல உன்னை வசிந்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(17) உலக நடைமுறைகளை நீ நன்கறிந்திருக்கிறாய். புதிர்கள் அனைத்திலும் நீ நல்ல திறம்பெற்றவனாக இருக்கிறாய். நீ தகுதியுடன் கூடியவனாக இருக்கிறாய். இத்தகையவனாக உன்னை அறிந்தவர்கள் உன்னை மதிப்பதும், புகழ்வதும் இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(18) ஏதோ காரியத்தில் ஈடுபட்டிருக்கும் தீய மனிதர்களுக்கு மத்தியில் உள்ள நீ அவர்களுடன் பேசி அவர்களுடைய ஐயங்களைக் களைந்திருப்பாய். இவை யாவும் செய்தாலும் அவர்கள் உன் மேன்மையான தகுதிகளை ஏற்றுக் கொள்ளதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(19) உண்மையில், செல்வமும், புத்தியும், வேத ஞானமும் இல்லாதிருந்தாலும் நீ உன் சக்தியால் மட்டுமே ஏதோ பெரிதான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(20)

காட்டுச் சென்று கடுந்தவம் செய்யத் தீர்மானத்திருந்தாலும், உன் திட்டத்தை உற்றார் உறவினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(21) பெருஞ்செல்வமும், இளமையும், அழகிய குணங்களும் கொண்ட உன் அண்டைவீட்டுக்காரன் உன் அன்புக்குரிய மனைவியின் மேலம் ஆசை கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(22) செல்வந்தர்களுக்கு முன் உன்னால் சொல்லப்பட்ட சொற்கள் சிறப்புடையவையாக இருப்பினும், ஞானமுள்ளவையாகவோ, சரியான நேரத்தில் சொல்லப்பட்டவையாகவோ கருதப்படவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(23) உன் அன்புக்குரிய உறவினனும், புத்தியற்றவனுமான ஒருவன், சாத்திரக் கல்வியை மீண்டும் மீண்டும் புகட்டினாலும், கோபக்காரனாகவே இருக்கிறான். நீ அவனைத் தணிப்பதில் வெல்லவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(24)

உண்மையில், ஏதோ ஒரு விரும்பத்தக்க காரியத்தில் உன்னை நிறுவிய ஒருவர் இப்போது அதன் கனியை உன்னிடம் இருந்து இப்போது பறிக்க முயலக்கூடும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(25) சிறந்த சாதனைகளைக் கொண்டவனாகவும், அதன் காரணமாக அனைவராலும் வழிபடப்படுபவனாகவும் இருந்தாலும், உன் உறவினர்கள் உனக்காக அல்லாமல் தங்களுக்காகவே நீ வழிபடப்படுவதாகக் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(26) உண்மையில், தவிர்க்க முடியாத தாமதத்தால் உன் இதயத்தில் உள்ள ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்ற முடியாததால் வெட்கத்தினால் நீ அதைக் கைவிட முடியாதவனாக இருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(27) உண்மையில், பல்வேறு வகைப் புத்தி மற்றும் விருப்பங்களுடன் உள்ள மனிதர்களை உன் புத்தியின் துணையுடன் உன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நீ விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[1].(28)கல்வியற்றவனும், துணிவில்லாதவனும், அதிகச் செல்வமில்லாதவனுமான நீ, அறிவு, ஆற்றல் மற்றும் கொடைகளால் வெல்லப்பட்ட புகழைப் பெற முனைகிறாய். உண்மையில், இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(29) உன் இதயத்தில் நீண்ட காலம் உள்ள ஏதோ ஒன்றை அடைய முடியாமல் இருக்கிறாய். அல்லது, நீ அடைய முனையும் ஒன்று வேறு எவராலோ தடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(30) உண்மையில், உன் தரப்பில் எந்தக் களங்கமும் இன்றி நீ வேறு எவராலோ சபிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[2].(31) செல்வமும், சாதனைகளும் இல்லாத நீ, உன் நண்பர்களின் துயரத்தையும், கவலையில் இருக்கும் மனிதர்களின் கவலையையும் விலக்க வீணாக முயல்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(32) அறவோர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதையும், அறமற்றோர் காட்டு வாழ்வுமுறைப்படி {வானப்ரஸ்தாஸ்ரமப்படி} வாழ்வதையும், துறவிகள் இல்லத்தாராகவும், நிலைத்த வசிப்பிடங்களில் வாழ்வதையும் கண்டதால் நீ வெளுத்தும், இளைத்துமிருக்கிறாய்.(33)அறம், பொருள் மற்றும் இன்பத்தோடு தொடர்புடைய உன் செயல்களும், சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சொற்களும் உனக்குக் கனி {பலன்} கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(34)

ஞானம் கொண்டவனாக இருந்தாலும், வாழும் விருப்பத்தினால் உந்தப்பட்டு, தீய நடத்தை கொண்ட ஒருவனால் கொடுக்கப்பட்ட கொடையைப் பெற்றுக் கொண்டு செல்வத்துடன் வாழ்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(35)

அனைத்துப்புறங்களிலும் மறம் {அறமற்ற நிலை} பெருகுவதையும், அறம் நலிவுறுவதையும் கண்டு நீ துன்பத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(36)

ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு அனைத்துப் புறங்களிலும் சச்சரவு செய்து கொண்டிருந்தாலும், நண்பர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ய அவர்களால் தூண்டப்படுகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(37) வேத ஞானம் கொண்டோர் முறையற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், கல்விமான்கள் தங்கள் புலன்களை அடக்காததையும் கண்டு நீ துயரத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்” என்றான்.(38)

இவ்வாறு புகழப்பட்ட அந்த ராட்சசன், கல்விமனான அந்தப் பிராமணனைப் பதிலுக்கு வழிபட்டு, அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டு, போதுமான செல்வத்தையும் அவனுக்குக் கொடையாகக் கொடுத்து (அவனை விழுங்காமல்) விடுவித்தான்” என்றார் {பீஷ்மர்}.(39)

சாத்திர விதிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 125-உயர்ந்த கதியை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்; சிராத்தங்கள்; உயிர்க்கொலையில் உள்ள பாவம் ஆகியவற்றைக் குறித்து தேவதேதூதன், இந்திரன், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒரு வறிய மனிதன், அடைதற்கரிதான செயல்களின் உலகத்திற்குள் மனித நிலையை அடைந்து {கர்மங்கள் பலிக்கும் பூமியில், கிடைத்தற்கரிதான மானிட ஜன்மத்தை அடைந்து} எவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(1) கொடைகள் அனைத்திலும் சிறந்தது எது? எந்தெந்தச் சூழ்நிலைகளில் எவையெவை கொடுக்கப்பட வேண்டும் என்பன குறித்தும் எனக்குச் சொல்வீராக. ஓ! கங்கையின் மகனே, கௌரவிப்பதற்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவர்கள் யார் என்பதை எனக்குச் சொல்வீராக. இந்தப் புதிர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்”.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “புகழ்பெற்ற ஏகாதிபதியான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு கேள்வி கேட்டதும், கடமை தொடர்புடைய இந்த உயர்ந்த புதிர்களைப் பீஷ்மர் (இந்தச் சொற்களில்) விளக்கிச் சொன்னார்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதா, பழங்காலத்தில் புனிதமான வியாசர் சொன்னது போலவே கடமைகள் தொடர்பான இந்தப் புதிர்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(4) ஓ! ஏகாதிபதி, இது தேவர்களுக்கும் புதிரானதாகும். களங்கமற்ற செயல்களைக் கொண்ட யமன், நன்கு நோற்கப்பட்ட நோன்புகள் மற்றும் தியான யோகத்தின் உதவியுடனும், தன் தவங்களின் உயர்ந்த கனிகளாகவும் இந்தப் புதிர்களின் ஞானத்தை அடைந்தான்.(5) எந்தெந்த தேவர்களுக்கு எவையெவை நிறைவைத் தரும், பித்ருக்கள், முனிவர்கள், (மஹாதேவனின் துணைவர்களான) பிரமாதர்கள், ஸ்ரீதேவி, (யமனின் உதவியாளரான) சித்திரகுப்தன், திசைகளின் முக்கியப்புள்ளிகளை ஆளும் வலிமைமிக்க யானைகள் ஆகியோருக்கு எது நிறைவைத் தரும்.(6) பல புதிர்களைக் கொண்டதும், பெருங்கொடைகள் என்றழைக்கப்படும் பலன்களான உயர்ந்த கனிகளை உண்டாக்கவல்லதும், வேள்விகள் அனைத்துக்குமான பலனைக் கொண்டதுமான முனிவர்களின் அறமாக எது அமைகிறது?(7) ஓ! பாவமற்றவனே, இவற்றை அறிந்தவனும், தன் அறிவின் படி செயல்களை அறிந்து கொண்டவனுமான ஒருவன், களங்கம் கொண்டவனாக இருந்தால் அக்களங்களில் இருந்து விடுபட்டுக் குறிப்பிடப்பட்ட பலன்களை அடைவான்.(8)

எண்ணை உற்பத்தியாளன் ஒருவன் பத்து கசாப்புக்காரர்களுக்கு இணையானவன். மது அருந்தும் ஒருவன் பத்து எண்ணைக்காரர்களுக்கு இணையானவன். ஒரு விலைமகள் பத்து குடிகாரர்களுக்கு இணையானவள். (ஆட்சி எல்லைக்குட்பட்ட) ஒரு தலைவன் பத்து விலைமகள்களுக்கு இணையானவன்[1].(9) ஒரு பெரும் மன்னன் இவர்களில் பாதி என்று சொல்லப்படுகிறான். மறுபுறம் ஒருவன், புனிதமானதும், அறத்தையே தன் குறியீடாகக் கொண்டதுமான (அறம், பொருள் மற்றும் இன்பம் அடங்கிய) முத்தொகை அறிவியலைக் கவனத்தில் கொள்ள {கவனிக்க} வேண்டும். இவற்றில் செல்வமும், இன்பமும் இயல்பான ஈர்ப்பைக் கொண்டவையாகும். அறப்புதிர்களைக் குறித்துக் கேட்பது பெருங்கனிகளை {பெரும்பலன்களைக்} கொண்டது என்பதால், ஒருவன் (குறிப்பாக) அறம் தொடர்பான புனிதமான விரிவுரைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்க வேண்டும். அவன் தேவர்களால் விதிக்கப்பட்ட அறம் தொடர்பான அனைத்தையும் கேட்க வேண்டும்.(10,11) அவற்றிலேயே பித்ருக்கள் தொடர்பான புதிர்கள் அடங்கிய சிராத்தச் சடங்கு அறவிக்கப்பட்டிருக்கிறது. தேவர்கள் அனைவர் தொடர்பான புதிர்களும் அவற்றில் விளக்கப்பட்டுள்ளன.(12) முனிவர்கள் தொடர்பான புதிர்களுடன் சேர்த்து, பெரும் பலன்களை உண்டாக்கவல்ல கடமைகள், நடைமுறைகள் ஆகியனவும் அவற்றிலேயே அறியப்படுகின்றன. பெரும் வேள்விகள் மற்றும் அனைத்து வகையான கொடைகள் தொடர்பான பலன்களையும் அவையே கொண்டிருக்கின்றன.(13)

இவை குறித்த சாத்திரங்களை எப்போதும் படிப்பவர்களும், தங்கள் மனங்களில் அவற்றை முறையாகத் தாங்கிக் கொள்வோரும், அவற்றைக் கேட்ட பிறகு நடைமுறையில் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் அனைவரும் பலமிக்க நாராயணனையே போன்ற புனிதமானவர்களாகவும், பாவமற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(14) பசுக்கொடை அளிப்பது, நீர்நிலைகளில் நீராடுவது, வேள்விகளைச் செய்வது ஆகியவற்றால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும், வீட்டுக்கு வரும் விருந்தினரை மதிப்புடன் நடத்தும் மனிதன் அடைகிறான்.(15) இந்தச் சாத்திரங்களைக் கேட்பவர்களும், நம்பிக்கையுடன் இருப்பவர்களும், தூய இதயம் படைத்தவர்களும் மகிழ்ச்சியான உலகங்களை வெல்வதாக நன்கு அறியப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் கூடிய அறவோர்,(16) அனைத்துக் களங்கங்களிலிருந்து விடுபட்டு, பாவம் அண்டமுடியாதவர்களாக ஆகிறார்கள். அத்தகைய மனிதர்கள் எப்போதும் அறத்தைப் பெருக்கி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17)

ஒரு காலத்தில் இந்திரனின் அவைக்கு வந்தும் புலப்படாமல் தொடர்ந்த தேவதூதன் ஒருவன் தேவர்களின் தலைவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(18) “மருத்துவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களும், இனிய குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களுமான தேவர்கள் இருவரின் {அஸ்வினி இரட்டையரின்} ஆணையின் பேரில் இந்த இடத்திற்கு வந்த நான், இங்கே மனிதர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்கள் கூடியிருப்பதைக் காண்கிறேன்.(19) உண்மையில், சிராத்தம் செய்தவன் மற்றும் (குறிப்பிட்ட நாளில்) சிராத்தத்தில் உண்டவன் ஆகியோருக்கு பாலினக் கலவி ஏன் தடைசெய்யப்பட்டிருக்கிறது? சிராத்தங்களில் ஏன் மூன்று அரிசிப்பிண்டங்கள் காணிக்கையளிக்கப்படுகின்றன?(20) அவற்றில் முதற்பிண்டத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும்? இரண்டாவதை யாருக்குக் கொடுக்க வேண்டும்? எஞ்சியிருக்கும் மூன்றாவதை யாருக்குக் கொடுக்க வேண்டும்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்” {என்றான் தேவ தூதன்}.(21)

அறம் மற்றும் கடமை தொடர்புடைய இந்தச் சொற்களைத் தேவ தூதன் சொன்னதும், கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த தேவர்களும், பித்ருக்கும் அந்த வானுலாவியைப் பின்வருமாறு மெச்சத் தொடங்கினர்.(22)

பித்ருக்கள், “உனக்கு நல்வரவு, அருளப்பட்டிருப்பாயாக. ஓ! வானுலாவிகளில் சிறந்தவனே, கேட்பாயாக. நீ கேட்டது ஆழம் நிறந்த பொருளைக் கொண்ட உயர்ந்த கேள்வியாகும்.(23) தான் செய்யும் சிராத்த நாளன்று, அல்லது தான் உண்ட சிராத்த நாளன்று பாலியல்கலவியில் ஈடுபடும் மனிதனுடைய பித்ருக்கள், ஒரு மாதகாலம் முழுவதும் அவனது உயிர் வித்திலேயே கிடப்பார்கள்.(24) சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் அரிசிப்பிண்டங்களைக் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை ஒன்றன்பின் ஒன்றாக நாங்கள் விளக்கிச் சொல்லப் போகிறோம். முதல் அரசிப்பிண்டம் நீரில் வீசப்பட வேண்டும்.(25) இரண்டாவது பிண்டம் ஒருவனுடைய மனைவியருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். மூன்றாவது பிண்டம் சுடர்மிக்க நெருப்பில் வீசப்பட வேண்டும்.(26) சிராத்தத்தைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் விதி இதுவே. அறச்சடங்குகளின் படி நடைமுறையில் பின்பற்றப்படும் விதியும் இதுவேதான். இந்த விதிப்படி செயல்படும் மனிதனின் பித்ருக்கள் நிறைவடைந்து, எப்போதும் உற்சாகமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.(27) அத்தகைய மனிதனின் சந்ததி பெரும், வற்றாத செல்வம் எப்போதும் அவனது ஆணையின் கீழ் எஞ்சியிருக்கும்” என்றர்.(28)

தேவ தூதன், “அரிசிப் பிண்டங்கள் பகுக்கப்படுவதையும், ஒன்றன் பின் ஒன்றாக அவை மூன்று நிலைகளுக்கு (நீர், மனைவி மற்றும் சுடர்மிக்க நெருப்பு ஆகிய நிலைகளுக்கு) அனுப்பப்படுவதையும் அதன் காரணங்களுடன் விளக்கினீர்கள்[2].(29) நீரில் அனுப்பப்படும் அரிசிப்பிண்டம் யாரை அடைகிறது? தேவர்களை நிறைவடையச் செய்ய எப்படி இவ்வாறு அனுப்பப்படுகிறது? அஃது எவ்வாறு பித்ருக்களைக் காக்கிறது?(30) இரண்டாம் பிண்டம் மனைவியால் உண்ணப்படுகிறது. அது விதியில் விதிக்கப்பட்டிருக்கிறது. (எவனுடைய மனைவி அந்தப் பிண்டத்தை உண்பாளோ) அந்த மனிதனின் பித்ருக்கள் எவ்வாறு அதை உண்டவர்களாகிறார்கள்?(31) இறுதிப் பிண்டம் சுடர்மிக்க நெருப்புக்குள் செல்கிறது. இந்தப் பிண்டம் உங்களிடம் வருவதற்கான வழியைக் கண்டடைவதில் எவ்வாறு வெல்கிறது? அல்லது யாரிடம் அது செல்கிறது?(32) சிராத்தங்களில் நீரில் விடப்பட்டும், மனைவிக்குக் கொடுக்கப்பட்டும், சுடர்மிக்க நெருப்பில் வீசப்பட்டும் காணிக்கையளிக்கப்படும் அரிசிப் பண்டங்கள் அடையும் கதியைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(33)

பித்ருக்கள் {தேவதூதனிடம்}, “நீ கேட்டிருக்கும் இந்தக் கேள்வி மிகப் பெரியதாகும். இது புதிரும், ஆச்சரியமும் நிறைந்ததாகும். ஓ! வானுலாவியே, நாங்கள் உன்னிடம் பெரும் நிறைவை அடைகிறோம்.(34) தேவர்களும், முனிவர்களும் பித்ருக்களுக்காகச் செய்யப்படும் செயல்களை மெச்சுகிறார்கள். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் செயல்களுக்குண்டான விதிகளின் நிச்சயத் தீர்மானத்தை அவர்களே அறிய மாட்டார்கள்.(35) உயர் ஆன்மா கொண்டவரும், இறப்பற்றவரும், சிறந்தவரும், பெரும் புகழைக் கொண்ட கல்விமானும், பித்ருக்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புமிக்கவருமான மார்க்கண்டேயரைத் தவிரப் பித்ருக்களின் விதிகளில் அமைந்துள்ள புதிர்களை அறிந்தவர்கள் வேறு யாருமில்லை” என்றனர்.(36)

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் மூன்று அரிசிப்பிண்டங்களின் கதியைக் குறித்துப் புனிதரான வியாசரிடம் கேட்டதையும், தேவ தூதன் கேள்விக்கு மறுமொழியாகப் பித்ருக்கள் சொன்னதையும், நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். ஓ! ஏகாதிபதி, சிராத்தவிதிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட தீர்மானங்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(37) ஓ! பாரதா, மூன்று அரிசிப்பிண்டங்களின் கதி என்ன என்பதை விளக்கிச் சொல்கிறேன், கவனமாகக் கேட்பாயாக. {பித்ருக்கள் தேவதூதனிடம் சொன்னார்கள்}, “நீருக்குள் செல்லும் அரிசிப்பிண்டம் சந்திர தேவனை நிறைவடையச் செய்வதாகக் கருதப்பட வேண்டும்.(38) ஓ! பெரும் நுண்ணறிவு கொண்டவனே, அந்தத் தேவன் நிறைவடைந்ததும், அவன் பிற தேவர்களையும், அவர்களோடு சேர்த்து பித்ருக்களையும் நிறைவடையச் செய்கிறான். இரண்டாவது அரிசிப்பிண்டம் (சிராத்தம் செய்யும் மனிதனின்) மனைவியால் உணப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(39) சந்ததியை எப்போதும் விரும்பும் பித்ருக்கள் அந்த வீட்டின் பெண்ணுக்கு பிள்ளைகளைக் கொடுப்பார்கள். சுடர்மிக்க நெருப்புக்குள் வீசப்படும் அரிசிப்பிண்டம் என்ன ஆகிறது என்பதைக் குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(40)

அந்தப் பிண்டத்தால் நிறைவடையும் பித்ருக்கள், அதன் விளைவாக அதைக் காணிக்கையளித்த மனிதனின் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அவனுக்கு அருள்வார்கள். இவ்வாறு சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் மூன்று அரிசிப்பிண்டங்களின் கதியையும், அவை செல்லும் (நீர், மனைவி மற்றும் நெருப்பு என்ற) மூன்றையும் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(41) சிராத்தத்தில் ரித்விக்காகும் பிராமணனே அந்தச் செயலின் மூலம் அந்தச் சிராத்தத்தைச் செய்பவனின் பித்ருவாக அமைகிறான். எனவே, அவன் தன் சொந்த மனைவியுடன் கூட அந்த நாளில் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும்[3].(42) ஓ! வானுலாவிகள் அனைவரிலும் சிறந்தவனே, சிராத்தத்தில் உண்ணும் மனிதன் அந்த நாள் முழுவதும் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வேறு வகையில் செயல்படுவதால் அவன் நிச்சயம் மேற்குறிப்பிட்ட களங்கங்களை இழைத்தவனாகிறான். இது வேறு வகையிலாகாது.(43) எனவே, காணிக்கைகளை உண்ண சிராத்தத்திற்கு அழைக்கப்பட்ட பிராமணன், நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்த பிறகு அதை உண்டு, அந்த நாள் முழுவதும் அனைத்து வாகை தீங்கு அல்லது தீமைகளையும் தவிர்த்து அறம் சார்ந்தவனாக இருக்க வேண்டும். அத்தகைய மனிதனின் சந்ததி பெருகுகிறது, அவனுக்கு உணவைக் கொடுப்பவனும் அதே வெகுமதியை அறுவடை செய்கிறான்” என்றனர் {பித்ருக்கள்}”.(44)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பித்ருக்கள் இவ்வாறு சொன்ன பிறகு, கடுந்தவங்களைக் கொண்டவரும், சூரியனைப் போன்ற காந்தியுடன் ஒளிர்ந்தவருமான வித்யுத்பிரபர் என்ற முனிவர் பேசினார்.(45) பித்ருக்களால் விளக்கப்பட்ட அறப்புதிர்களைக் கேட்ட அவர் சக்ரனிடம், “மடமையில் {அறியாமையில்} மயங்கி மனிதர்கள் இடைநிலை வகையில் பிறந்த எண்ணற்ற உயிரினங்களைக் கொல்கின்றனர்.(46) அவை புழுக்கள், எறும்புகள், பாம்புகள், செம்மறியாடு, மான்கள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களாகும். இச்செயல்களால் அவர்கள் அளவிலும், கனத்திலும் மிகப் பெரிய பாவத்தை இழைக்கின்றனர். எனினும் இதற்குத் தீர்வு என்ன?” என்று கேட்டார்.(47) இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது, தேவர்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள் மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தவசியை மெச்சினார்கள்.(48)

சக்ரன் {இந்திரன்}, “குருக்ஷேத்திரம், கயை, கங்கை, பிராபாஸம், புஷ்கரத்தடாகங்கள் ஆகியவற்றை மனத்தில் நினைத்துக் கொண்டு வருவன் நீரில் தன் தலையை மூழ்கச் செய்ய வேண்டும்.(49) இவ்வாறு செய்வதால் ஒருவன் ராகுவிடம் இருந்து விடுபடும் சந்திரமாஸை {சந்திரனைப்} போலத் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். இவ்வாறு அடுத்தடுத்து மூன்று நாட்கள் நீராடும் ஒருவன், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(50) அதையும் தவிர அவன் (நீராடிய பிறகு) பசுவின் குதத்தைத் தீண்டி, அவளது வாலுக்குத் தலைவணங்க வேண்டும்” என்றான்.

வித்யுத்பிரபர் மீண்டும் வாசவனிடம் {இந்திரனிடம்}, “நான் மிக நுட்பமான ஒரு சடங்கை அறிவிக்கப் போகிறேன். ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(51) ஆலமரத்தில் தொங்கும் விழுதுகளின் துவர்ப்பான பொடியால் {கஷாயத்தால்} உடம்பைத் தேய்த்து கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து நீராடிய பிறகு, சாஷ்டிக {அறுபதாம் குறுவை} நெல்லுடன் பாலைக் கலந்து உண்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவான்[4].(52) பலர் அறியாததும், முனிவர்களால் தியானத்தின் உதவியுடன் கண்டடையப்பட்டதுமான மற்றொரு புதிரை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக. மஹாதேவனின் முன்னிலையில் பிருஹஸ்பதி சொல்லிக் கொண்டிருந்தபோது இதை நான் கேட்டேன்.(53) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, நீயும் ருத்ரனின் துணையுடன் இதைக் கேட்பாயாக. ஒரு மனிதன் மலையில் ஏறி கரங்களை உயர்த்திக் கூப்பியபடி அங்கே ஒற்றைக் காலில் நின்று, உணவனைத்தையும் தவிர்த்து சுடர்மிக்க நெருப்பைக் கண்டால் அவன் கடுந்தவங்கள் செய்த பலன்களை அடைந்து, உண்ணா நோன்பு தொடர்பான வெகுமதிகளையும் அடைகிறான்.(54,55) சூரியனின் கதிர்களால் சுடப்படும் அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். கோடைக் காலத்திலும், குளிர் காலத்திலும் இவ்வழியில் செயல்படும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.(56) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடையும் ஒருவன், எப்போதும் காந்தி மிக்கத் தோல் நிறத்தை அடைவான். அத்தகைய மனிதன் சூரியனைப் போன்ற சக்தியுடன் சுடர்விடவோ, சந்திரனின் அழகுடன் ஒளிரவோ செய்கிறான்” என்றார் {வித்யுத்பிரபர்}.(57)

தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவனும், நூறு வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன், இதன் பிறகு பிருஹஸ்பதியிடம் இந்தச் சிறந்த சொற்களைச் சொல்லிப் பேசினான்:(58) “ஓ! புனிதமானவரே, மனிதர்களுக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய அறப்புதிர்கள் குறித்தும், அவர்கள் செய்யும் குற்றங்களுடன் தொடர்புடைய புதிர்கள் குறித்தும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(59)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சூரியனைப் பார்த்து சிறுநீர் கழிப்பவர்கள், காற்றை {வாயுவை} மதிக்காதவர்கள், சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றாதவர்கள்,(60) மிக இளவயது கன்றைக் கொண்ட பசுவிடம் இருந்து அதிக அளவு பாலை அடைவதற்காகக் கறப்பவர்கள் ஆகியோர் பல களங்கங்களை {பாவங்களை} இழைக்கின்றனர். ஓ! சச்சியின் தலைவா, அந்தக் குற்றங்கள் என்ன என்பதை நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(61) ஓ! வாசவா, ஓ! சக்ரா, சூரியன், காற்று, வேள்வி ஆகுதிகளைச் சுமப்பவன் {நெருப்பு / அக்னி}, அனைத்து உயிரினங்களின் தாய்மாரான பசுக்கள் ஆகியோர் உலகங்களைப் பாதுகாப்பதற்காகச் சுயம்புவால் படைக்கப்பட்டனர். இவர்களே மனிதர்களின் தேவர்களாவர். அறத் தீர்மானங்களை நீங்கள் அனைவரும் கேட்பிராக.(62,63) சூரியனைப் பார்த்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் தீய ஆண்களும், தீய பெண்களும் எண்பத்தாறு ஆண்டுகள் பெரும் புகழ்க்கேட்டில் வாழ்வார்கள்.(64) ஓ! சக்ரா, காற்றிடம் எந்த மதிப்பையம் வளர்க்காதவன், தன் மனைவியின் கருப்பையிலிருந்து காலம் கனிவதற்கு முன்பே விழும் பிள்ளைகளைப் பெறுகிறான். சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றாத மனிதர்கள், அத்தகைய சடங்குகளைச் செய்ய நெருப்பை மூட்டும்போது அது தங்கள் ஆகுதிகளை உண்ண மறுப்பதைக் காண்பார்கள்.(65) மிக இளவயது கன்றைக் கொண்ட பசுவின் பாலைக் குடிப்பவர்கள், தங்கள் குலத்தைத் தழைக்கச் செய்ய ஒருபோதும் பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்.(66) அத்தகைய மனிதர்கள் தங்கள் பிள்ளைகள் இறப்பதையும், தங்கள் குலம் சுருங்குவதையும் காண்பார்கள். மதிப்பிற்குரிய குலங்களில் உள்ள வயதில் முதிர்ந்த மறுபிறப்பாளர்களால் காணப்படும் குறிப்பிடப்பட்ட செயல்களின் விளைவுகள் இவையே.(67) எனவே, ஒருவன் செழிப்படைய விரும்பினால் அவன் தடைசெய்யப்பட்டதை எப்போதும் தவிர்த்து, அறிவுறுத்தப்பட்டதை மட்டுமே எப்போதும் செய்ய வேண்டும். நான் உனக்குச் சொன்ன இது பெரும் உண்மையாகும்” என்றார் {பிருஹஸ்பதி}.(68)

தேவ ஆசான் இவ்வாறு சொன்ன பிறகு உயர்ந்த அருளைக் கொண்ட தேவர்கள், மருத்துகள் மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் ஆகியோர் பித்ருக்களிடம் கேள்வி கேட்கும் வகையில்,(69) “பித்ருக்களே, பொதுவாகவே சிறுமதி கொண்ட மனிதர்கள் செய்யும் எந்தச் செயல்களால் நீங்கள் நிறைவடைகிறீர்கள்? அத்தகைய சடங்குகளில் அளிக்கப்படும் எந்தக் கொடைகளால், இவ்வுலகில் இறந்து போன மனிதர்களின் நிலையை உயர்த்தி, அவர்களை வற்றாத திறன் கொண்டவர்களாக்கும்?(70) எந்தச் செயல்களைச் செய்வதால் மனிதர்கள் பித்ருக்களுக்குத் தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுவார்கள்? இதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நாங்கள் உணரும் ஆவல் பெரிதாக இருக்கிறது” என்றனர்.(71)

பித்ருக்கள், “உயர்ந்த அருளைக் கொண்டவர்களே, உங்கள் மனங்களில் உள்ள ஐயங்கள் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. அறவோர் செய்யும் எந்தச் செயல்களால் நாங்கள் நிறைவடைகிறோம் என்பதை அறிவிக்கப் போகிறோம் கேட்பீராக.(72) நீல நிறத்துடன் {கரிய நிறத்துடன்} கூடிய காளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும். புது நிலவு {அமாவாசை} நாளில் எங்களுக்கு எள்ளையும், நீரையும் கொடையளிக்க வேண்டும். மழைக்காலங்களில் விளக்குகள் கொடையளிக்கப்பட வேண்டும். மனிதர்கள் செய்யும் இந்தச் செயல்களால் அவர்கள் பித்ருக்களுக்குத் தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறார்கள்.(73) அத்தகைய கொடைகள் ஒருபோதும் வீண்போவதில்லை. மறுபுறம், அவை வற்றாதவையாகி உயர்ந்த கனிகளை விளைவிக்கின்றன. அவற்றில் இருந்து நாங்கள் அடையும் நிறைவு வற்றாததாகக் கருதப்பட வேண்டும்.(74) நம்பிக்கையுடன் கூடிய மனிதர்கள் சந்ததியைப் பெற்று இறந்து போன தங்கள் மூதாதையரைத் துன்பகரமான நரகில் இருந்து மீட்கிறார்கள்” என்றனர் {பித்ருக்கள்}.(75)

பித்ருக்களின் இச்சொற்களைக் கேட்டவரும், தவச் செல்வத்தையும், உயர்ந்த சக்தியையும் கொண்ட விருத்தகார்க்கியர், உடலில் மயிர்ச்சிலிர்ப்புடன் ஆச்சரியத்தால் நிறைந்தார். அவர்களிடம் பேசிய அவர்,(76) “தவச் செல்வத்தைக் கொண்டவர்களே, நீல நிறக் காளைகளை விடுதலை செய்வதால் உண்டாகும் பலன்களை எங்களுக்குச் சொல்லுங்கள். மேலும், மழைக்காலங்களில் விளக்கு கொடையும், எள்ளுடன் சேர்ந்து நீரையும் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன?” என்று கேட்டார்.(77)

பித்ருக்கள், “நீல {கருப்பு} நிறம் கொண்ட ஒரு காளையை விடுதலை செய்யும்போது அதன் வாலைக் கொண்டு (சிறிதளவு) நீரை எடுத்து இறைத்தால், (காளையை விடுவித்த மனிதனின்) பித்ருக்கள் முழுமையாக அறுபதாயிரம் வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(78) அத்தகைய காளை, (ஆறு, அல்லது தடாகக்) கரையில் இருந்து தன் கொம்புகளால் எழுப்பும் மணலானது, பித்ருக்களைச் சோமலோகத்திற்கு அனுப்புவதில் வெல்கிறது.(79) மழைக்காலங்களில் விளக்குகளைக் கொடையளிப்பதால் ஒருவன் சோமனைப் போலவே பிரகாசமாக ஒளிர்கிறான். விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் இருள் குணத்திற்கு {தமோ குணத்திற்கு) ஆட்படுவதில்லை.(80) புது நிலவு {அமாவாசை} நாளில், தாமிரப் பாத்திரத்தைப் பயன்படுத்தித் தேனில் கலந்த எள்ளும் நீரும் கொடையளிக்கும் மனிதர்கள்,(81) ஓ! தவச் செல்வத்தைக் கொண்டவனே, புதிர்கள் அனைத்துடன் கூடிய சிராத்தத்தை முறையாகச் செய்ததாகக் கருதப்படுகிறார்கள். இந்த மனிதர்கள் நல்ல உடல்நலத்தையும், உற்சாகமிக்க மனங்களையும் பெறுகின்றனர்” {என்றனர் பித்ருக்கள்}.(82)

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, (பித்ருக்களுக்கு) பிண்டம் கொடுப்பவன் அடையும் பலன், அவனது குலத்தின் வளர்ச்சி என்ற வடிவத்தை எடுக்கும். உண்மையில், இச்செயல்களை நம்பிக்கையுடன் செய்பவன், பித்ருக்களுக்குத் தான் பட்ட கடனிலிருந்தும் விடுபடுகிறான்.(83) இவ்வாறு சிராத்தம் செய்வதற்குரிய முறையான காலம், நோற்கப்பட வேண்டிய சடங்குகளின் விதிகள், சிராத்தத்தில் உணவூட்டபட வேண்டிய முறையான மனிதன், அவற்றோடு தொடர்புடைய பலன்கள் ஆகியன விதிக்கப்பட்டிருக்கின்றன. நான் அனைத்தையும் உரிய வரிசையில் உனக்குச் சொல்லியிருக்கிறேன்” {என்றார் பீஷ்மர்}”.(84)

பரமரகசியங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 126-ஸ்ரீ ஹரியை நிறைவடையச் செய்யும் செயல்கள்; ஏழைகளும் வேள்வி செய்த பலன்களை அடைய செய்ய வேண்டிய செயல்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பித்ருக்கள் பேசுவதை நிறுத்தியதும், தேவர்களின் தலைவனான இந்திரன், பலமிக்க ஹரியிடம், “ஓ! தலைவா, எந்தச் செயல்களின் மூலம் நீ நிறைவடைகிறாய். உண்மையில், மனிதர்கள் உன்னை நிறைவடையச் செய்வதில் எவ்வாறு வெல்கிறார்கள்” என்று கேட்டான்.(1)

விஷ்ணு {இந்திரனிடம்}, “பிராமணர்களை இழிவு செய்வது, நான் பெரிதும் வெறுக்கும் ஒன்றாகும். பிராமணர்களை வழிபட்டால் என்னை வழிபட்டதாகவே நான் கருதுகிறேன். இதில் ஐயமில்லை.(2) மேன்மையான பிராமணர்கள் அனைவருக்கும் விருந்தோம்பலுடன் உணவு அளித்த பிறகு, அவர்கள் மதிப்புடன் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் (மாலை வேளையில்) தன் {என்} பாதத்தை வணங்க வேண்டும். இவ்வழியில் செயல்படுபவர்கள், (பசுவில் இருந்து முதலில் விழும்) பசுஞ்சாணத்தில் தெரியும் சுழியை {என்னுடைய சக்கராயுதத்தை} வணங்கி அவற்றுக்குக் காணிக்கை அளிப்பவர்கள் ஆகிய மனிதர்களிடம் நான் நிறைவடைகிறேன்[1].(3) குள்ள வடிவில் இருக்கும் ஒரு பிராமணனைக் காண்பவர்கள், அல்லது கரையில் இருந்து சிறிதளவு மண்ணைத் தலையில் சுமந்து நீரில் இருந்து எழும் பன்றியைக் காண்பவர்கள் ஒருபோதும் எந்தத் தீமையையும் சந்திக்கமாட்டார்கள். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். ஒவ்வொரு நாளும், அஸ்வதம் {அரசமரம்}, கோரோசனை என்றழைக்கப்படும் பண்டம், பசு ஆகியவற்றை வழிபடும் மனிதன்,(5) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். இவற்றுக்குள் இருந்து, இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாட்டை என் சொந்த வடிவில் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(6) இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாடு எனக்கே அழிக்கப்பட்ட வழிபாடாகும். இஃது உலகம் தொடங்கிய காலம் முதல் இருக்கிறது. வேறு வகை வழிபாட்டை நான் ஏற்பதில்லை என்பதால் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் வீணாகவே அவ்வழியில் என்னை வழிபடுகிறார்கள். உண்மையில், வேறு வகையில் என்னை வழிபடுவது என்னை நிறைவடையச் செய்வதில்லை” என்றான் {விஷ்ணு}.(7)

இந்திரன் {விஷ்ணுவிடம்}, “பசுஞ்சாணத்தில் உள்ள சுழிகளையும், பாதத்தையும், பன்றியையும், குள்ள பிராமணனையும், நிலத்தில் இருந்து உயர்த்தப்பட்ட மண்ணையும் நீ ஏன் மெச்சுகிறாய்?(8) நீயே அனைத்து உயிரினங்களையும் படைத்தாய், நீயே அவற்றை அழிக்கவும் செய்கிறாய். அழியக்கூடிய அல்லது நிலையற்ற பொருட்கள் அனைத்தின் நித்திய இயற்கையாக நீயே இருக்கிறாய்” என்றான்”.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் இச்சொற்களைக் கேட்ட விஷ்ணு, சற்றே புன்னகைத்து, “என்னுடைய சக்கரத்தின் மூலம் தான் தைத்தியர்கள் கொல்லப்பட்டனர். என் பாதங்கள் இரண்டினால் இவ்வுலகம் மறைக்கப்பட்டது.(10) பன்றியின் வடிவத்தை ஏற்றே நான் ஹிரண்யாக்ஷனைக் கொன்றேன். குள்ளனின் வடிவை ஏற்றே நான் (அசுர) மன்னன் பலியை வென்றேன்.(11) இவற்றை வழிபடும் உயர் ஆன்ம மனிதர்கள் என்னை நிறைவடையச் செய்கின்றனர். உண்மையில், என்னை இவ்வடிவங்களில் வழிபடுபவர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடைவதில்லை.(12) ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும் ஒரு பிராமணர் தன் வீட்டுக்கு வருவதைக் கண்டு, பிராமணனுக்கு உரிமையுள்ள தன் உணவின் முதல் பகுதியை அவனுக்குக் கொடுத்து, அதன் பிறகு எஞ்சியிருப்பதை உண்பவர் அமுதத்தை உண்டதாகக் கருதப்படுகிறான்.(13) காலை சந்தி வேளையைத் துதித்து, சூரியனை நோக்கிய முகத்துடன் நின்று கொண்டிருப்பவன், தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பலனை அறுவடை செய்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(14) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, ஒரு பெரும்புதிரை நான் உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். நான் உங்களுக்கு வேறென்ன சொல்ல வேண்டும்? உங்கள் ஐயங்களை எனக்குச் சொல்வீராக” என்றான் {விஷ்ணு}.(15)

பலதேவன், “மனிதர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் மற்றொரு பெரும்புதிரைக் கேட்பாயாக. இதை அறியாத அறிவற்ற மக்களே பிற உயிரினங்களின் கரங்களில் பெருந்துன்பத்தைச் சந்திக்கிறார்கள்.(16) விடிவதற்கு முன்பு எழுந்து, பசு, நெய், தயிர், கடுகு, தினை ஆகியவற்றைத் தீண்டும் மனிதன், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள், சிராத்தம் செய்யும்போது, முன்பும் பின்பும் அனைத்து உயிரினங்களையும், தூய்மையற்ற அனைத்தையும் எப்போதும் தவிர்க்கிறார்கள்” என்றான்[2].(18)தேவர்கள், “ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்து, அதை நீரால் நிறைத்து, கிழக்கு நோக்கி உண்ணா நோன்பையோ, ஒரு குறிப்பிட்ட நோன்பையோ நோற்கும் மனிதனிடம்,(19) தேவர்கள் அனைவரும் நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் வெற்றியால் மகுடம் சூட்ட வைக்கின்றனர். வேறு வழியில் உண்ணா நோன்பையோ, வேறு எந்த நோன்பையோ நோற்கும் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் எதையும் ஈட்டுவதில்லை[3].(20) உண்ணா நோன்புகள் நோற்பது குறித்தும், தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதும் குறித்தும் தீர்மானங்களைச் சொல்லும்போது தாமிரப்பாத்திரமே பயன்படுத்த உகந்ததாகும். தேவர்களுக்குக் காணிக்கை அளிக்கும் காரியத்தில், பிச்சை (இடும் அல்லது ஏற்கும்) காரியத்தில், அர்க்கியத்திற்குத் தேவையான உட்பொருட்களை அளிப்பதில், பித்ருக்களுக்கு எள்ளுடன் கலந்த நீரைக் காணிக்கையளிக்கும் காரியத்தில்,(21) தாமிரப்பாத்திரங்களே பயன்படுத்தப்பட வேண்டும்[4]. வேறு வகையில் இச்செயல்களைச் செய்வதன் மூலம் சிறிதளவே பலன் கிட்டும். தேவர்கள் எவ்வாறு நிறைவடைகிறார்கள் என்பது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிர்கள் இவையே” என்றனர் {தேவர்கள்}.(22)ர்மன், “மன்னனிடம் பணி செய்பவனாகவோ, {காலத்தைத் தெரிவிக்கும்} மணி அடிப்பவனாகவோ, வழிபாடுகள், அல்லது சிராத்தங்களில் உடனுதவி கடமைகளைக் கவனிப்பவனாகவோ {பரிசாரகனாகவோ}, பசு வளர்ப்பவனாகவோ {ஆ மேய்ப்பவனாகவோ}, வணிகம் செய்பவனாகவோ {வர்த்தகனாகவோ}, ஏதோ ஒரு கலையைத் தொழிலாகச் செய்பவனாகவோ, நடிகனாகவோ, நண்பர்களுடன் சச்சரவு செய்பவனாகவோ, வேத கல்வி இல்லாதவனாகவோ, ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்டவனாகவோ இருக்கும் பிராமணனுக்குத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ செய்யப்படும் சடங்குகள் அனைத்திலும் அளிக்கப்படும் காணிக்கைகளை ஒரு போதும் கொடுக்கக்கூடாது.(23,24) சிராத்தம் செய்பவன் அத்தகைய காணிக்கைகளை இத்தகைய பிராமணனுக்கு அளித்தால் அவன் தன் குலத்தைப் பெருகச் செய்யாமல் செழிப்பில் இருந்து வீழ்ச்சியடைகிறான். மேலும் அவன் செய்யும் அத்தகைய செயலால் பித்ருக்களை நிறைவடையச் செய்வதிலும் தவறுகிறான்.(25) எந்த வீட்டில் இருந்து ஒரு விருந்தினன் நிறைவடையாமல் திரும்புகிறானோ, அந்த வீட்டில் இருந்து பித்ருக்கள், தேவர்கள், புனித நெருப்புகள் ஆகியோர் அனைவரும் ஒரு விருந்தினர் இவ்வாறு நடத்தப்பட்டதன் விளைவால் ஏமாற்றம் அடைந்து வெளியேறுகின்றனர்.(26) தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினரிடம் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தாத மனிதன், பெண்களையும், பசுக்களையும் கொன்றவர்கள், நன்மை செய்தவர்களிடம் நன்றி மறந்தவர்கள், பிராமணக் கொலை செய்தவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கைகளைக் களங்கப்படுத்தியவர்கள் ஆகியோருக்கு இணையான பாவம் நிறைந்தவனாகக் கருதப்படுகிறான்” என்றான்.(27)

அக்னி, “குவிந்த கவனத்துடன் கேளுங்கள். பசுவையோ, உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ மிதிப்பதற்காகக் காலை உயர்த்தும் தீய புத்தி கொண்ட மனிதன் அடையும் கெடுபலன்களைச் சொல்லப் போகிறேன். அத்தகைய மனிதனின் புகழ்க்கேடு உலகம் முழுவதும் பரவி, சொர்க்கத்தின் எல்லைகளையே தொடுகிறது. அவனுடைய பித்ருக்கள் அச்சத்தால் நிறைகிறார்கள். அவன் காரியத்தில் தேவர்களும் பெரிதும் நிறைவற்றவர்களாகிறார்கள். பெரும் சக்தியுடன் கூடிய நெருப்பு, அவனால் ஊற்றப்படும் ஆகுதிகளை ஏற்க மறுக்கும்.(28-30) நூறு பிறவிகள் அவன் நரகில் கிடந்து அழுகுவான். அவன் ஒருபோதும் எக்காலத்திலும் மீட்கப்படுவதில்லை.(31) எனவே, தன் நன்மையை விரும்பி நம்பிக்கையோடு இருக்கும் ஒருவன், ஒரு பசுவையோ, உயர்ந்த சக்தியுடன் கூடிய பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ தன் காலால் ஒருபோதும் தீண்டக்கூடாது. இவையே இவை மூன்றுக்கு எதிராகக் கால்களை உயர்த்துபவன் அடையும் கெடுபலன்களென நான் அறிவிக்கிறேன்” என்றான்.(32,33)

விஷ்வாமித்திரர், “அறம் தொடர்பாகப் பொதுவாக மனிதர்களுக்கு மத்தியில் அறியப்படாத உயர்ந்த புதிரைக் கேட்பீராக. இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியை {பாயஸான்னத்தைப்} பித்ருக்களுக்குக் கொடுப்பதற்கு,(34) பாத்ரபத {புரட்டாசி} மாத {கிருஷ்ண பக்ஷ / தேய்பிறை} மக நட்சத்திரத்தின், நடுப்பகலில் தெற்குத் திசை நோக்கி ஒரு யானையினால் உடலால் உண்டான நிழலில் {கஜசாயையில்} அமர்ந்து காணிக்கையளிப்பவன்,(35) பெரும் பலன்கள் அடைகிறான். அந்தப் பலன்கள் என்னென்ன என்பதைக் கேட்பீராக[5]. இத்தகைய சூழ்நிலைகளில் பித்ருக்களுக்கு இத்தகைய காணிக்கையளிக்கும் மனிதன், அடுத்தடுத்து பதிமூன்று வருடங்களில் ஒவ்வொரு வருடமும் பெரும் சிராத்தத்தைச் செய்தவனாகக் கருதப்படுவான்” என்றார்.(36)பசுக்கள், “எந்த மனிதன், “ஓ! வாகுலையே {அனைத்தும் நிறைந்தவளே}, ஓ! சமங்கையே {பருத்த அங்கங்களைக் கொண்டவளே}, ஓ! எங்கும் அச்சமற்றவளே, ஓ! எப்போதும் பொறுமையாகவும், மங்கலம் நிரம்பியும் இருப்பவளே {நலமாயிருப்பவளே}, ஓ! நட்பே, ஓ! எண் போல் பெருகுபவளே, பழங்காலத்தில் பிரம்ம லோகத்தில் வஜ்ரதாரியான இந்திரனின் வேள்வியில் கன்றுடன் இருந்தவள் நீயே. ஆகாயத்திலும், அக்னியின் பாதையிலும் உன் நிலையைக் கொண்டவள் நீயே. தேவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள நாரதருடன் சேர்ந்து சர்வம்ஸஹை {ஸர்வஸஹை / அனைத்தையும் பொறுப்பவள்} என்று உன்னை அழைத்துத் துதிக்கின்றனர்” என்ற இந்த மந்திரங்களைச் சொல்லி ஒரு பசுவைத் துதிப்பானோ, அவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய மனிதன், புரந்தரனின் உலகை அடைகிறான். அதையும் தவிர அவன், பசுக்கள் மற்றும் சந்திரமாஸுடன் {சந்திரனுடன்} தொடர்புடைய பலன்களையும் அடைகிறான்.(37-39) அத்தகைய மனிதன், தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும், தான் கொண்ட ஒவ்வொரு அச்சத்தில் இருந்தும், ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் விடுபடுகிறான். இறுதியாக அவன் ஆயிரங்கண் இந்திரனின் மகிழ்ச்சி மிக்க உலகத்தில் வசிப்பிடத்தை அடைகிறான்” என்றன”.(40)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதன்பிறகு உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், கொண்டாடப்பட்டவர்களுமான ஏழு முனிவர்கள், வசிஷ்டரைத் தங்கள் தலைமையில் கொண்டு எழுந்து தாமரையில் பிறந்த பிரம்மனை வலம்வந்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி அவனைச் சூழ்ந்து நின்றனர்.(41) பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் அவர்களுடைய பேச்சாளராகி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் நன்மையைத் தருவதும், குறிப்பாகப் பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் நன்மையைத் தருவதுமான இந்தக் கேள்வியைக் கேட்டனர்.(42)

{வசிஷ்டரின் தலைமையிலான சப்தரிஷிகள்}, “அறவொழுக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், இவ்வுலக நன்மைகள் இல்லாதவர்களான மனிதர்கள் எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் வேள்விகள் தொடர்பான பலன்களை அடைவதில் வெல்கிறார்கள்?” என்று கேட்டனர்.(43) அவர்களது இந்தக் கேள்வியைக் கேட்ட பெரும்பாட்டன் பிரம்மன் பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.(44)

பிரம்மன், “உயர்வாக அருளப்பட்டவர்களே, இது சிறப்பான கேள்வியாகும். இது மங்கலமானதும், உயர்ந்ததும், புதிர் நிறைந்ததுமாகும். நீங்கள் முன்வைக்கும் கேள்வியானது நுட்பமானதும், மனித குலத்திற்குப் பெரும் நன்மை நிறைந்ததும் ஆகும்.(45) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நான் அனைத்தையும் விரிவாக உங்களுக்குச் சொல்கிறேன். (வறுமையின் மூலம் வேள்விகளைச் செய்ய இயலாதவர்களாக இருப்பினும்) வேள்விகளுக்கான பலன்களை மனிதர்கள் எவ்வாறு அடைகிறார்கள் என்பதைச் சொல்கிறேன் கவனமாகக் கேட்பீராக.(46) பௌச {தை} மாதத்தின் வளர்பிறை ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வானத்தையே கூரையாகக் கொண்டு {மேலே மூடாத இடத்தில்}, ஒற்றையாடை உடுத்தி,(47) நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும், நிலவின் கதிர்களைப் பருகும் {நிலவின் ஒளியில் படுத்து உறங்கும்} ஒருவன், பெரும் வேள்விகள் செய்த பலன்களை அடைகிறான்.(48) மறுபிறப்பாளர்களில் முதன்மையாவர்களே, அனைத்துக் காரியங்களின் நுட்பமான உண்மைகளில் உட்பார்வை கொண்டவர்களே, உங்கள் கேள்விக்கான பதிலாக நான் பெரும்புதிரை {பெரும் ரகசியத்தை} அறிவித்திருக்கிறேன்” என்றான் {பிரம்மன்}.(49)

ஹிருதயத்தூய்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 127-சூரியன், ஸ்ரீதேவி, கார்க்யர், தௌம்யர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் வெளியிட்ட பரமரகசியங்கள்…

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்},
“விபாவசு (சூரியன் என்றும் அழைக்கப்படுபவன்), “இரு காணிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கைநிறைய நீரையும், மற்றொன்று நெய் கலந்த அரிசி தானியங்கள் அடங்கிய அக்ஷதையையும் கொண்டவையாகும். ஒருவன் ஒரு முழு நிலவு {பௌர்ணமி} நாளில், அந்தப் பிரகாசமான கோளத்தை {சந்திரனை} நோக்கி நின்று கொண்டு கை நிறைய நீர் மற்றும் அக்ஷதை என்றழைக்கக்கூடிய நெய்கலந்த அரசிதானியங்கள் என்ற குறிப்பிட்ட இரு காணிக்கைகளையும் அளிக்க வேண்டும். இந்தக் காணிக்கைகளை அளிக்கும் மனிதன் தன்னுடைய புனித நெருப்பைத் துதிப்பவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், அவன் (அடிப்படையான) மூன்று நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றியவனாகக் கருதப்படுகிறான்.(1,2) ஒரு புது நிலவு {அமாவாசை} நாளில் பெரும் மரத்தை வெட்டும் அற்ப புத்தி கொண்டவன், பிராமணக் கொலை செய்த பாவத்தால் {பிரம்மஹத்தி தோஷத்தால்} களங்கப்படுகிறான்.(3) புது நிலவு {அமாவாசை} நாளில் பற்குச்சியை மெல்லும் மூட மனிதன் அத்தகைய செயலின் மூலம் சந்திர தேவனுக்குத் தீங்கிழைத்தவனாகக் கருதப்படுகிறான்.(4) முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அத்தகைய மனிதனால் ஊற்றப்படும் ஆகுதிகளைத் தேவர்கள் ஏற்பதில்லை. அவனது பித்ருக்கள் அவனிடம் சினம் கொள்கின்றனர், அவனது குலமும், குடும்பமும் ஒழிந்து போகின்றன” என்றான் {சூரியன்}.(5)

ஸ்ரீ {லட்சுமி}, “எந்த வீட்டில் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய பாத்திரங்கள், இருக்கைகள், படுக்கைகள் ஆகியன சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கே பெண் அடிக்கப்படுகிறாளோ,(6) அந்த வீட்டில் இருந்து தேவர்களும், பித்ருக்களும் அருவருப்புடன் வெளியேறுகின்றனர். உண்மையில், அத்தகை வீடுகளின் உரிமையாளர்களால் அளிக்கப்படும் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் தேவர்களும், பித்ருக்களும் அத்தகைய பாவம் நிறைந்த வசிப்பிடத்தில் இருந்து விலகி ஓடுகின்றனர்” என்றாள்.(7)

அங்கிரஸ், “ஓர் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு இரவிலும் ஏற்றுவதற்கு ஒரு விளக்குடன் கரஞ்சக {புங்கை} மரத்தின் அடியில் நின்று கொண்டும், தன் கைகளில் ஸுவர்ச்சலைக் கொடியின் வேரை வைத்துக் கொண்டும் இருப்பவனுடைய சந்ததி பெருகும்” என்றார்[1].(8)

கார்க்யர், “ஒருவன் தன் விருந்தினர்களுக்கான விருந்தோம்பல் கடமைகளை எப்போதும் செய்ய வேண்டும். வேள்வி நடைபெறும் கூடம், அல்லது கொட்டகையில் அவன் விளக்குகளை அளிக்க வேண்டும். பகலில் உறங்குவதை அவன் தவிர்க்க வேண்டும். அனைத்து வகை இறைச்சியை, அல்லது இறைச்சியுணவைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் ஒருபோதும் தீங்கைச் செய்யக்கூடாது. அவன் எப்போதும் புஷ்கரை தடாகங்கள் மற்றும் பிற புனித நீர்நிலைகளின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தகைய கடமை நடைமுறையே முதன்மையானதாகும். இதுவே புதிர்களுடன் கூடிய உயர்ந்த அறமாகும். நடைமுறையில் பின்பற்றப்பட்டால் அது நிச்சயம் பெரும் விளைவுகளை உண்டாக்கும்.(10) ஒருவன் நூறு வேள்விகளைச் செய்தாலும், அவற்றில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் உண்டான பலன் தீர்ந்து போவதை காணும் நிலையை அடைகிறான். எனினும் நான் சொன்ன கடமைகளை நம்பிக்கையுடன் செய்வதால் அவற்றின் பலன் வற்றாதனவாகின்றன.(11)

பலரின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் மற்றொருமொரு உயர்ந்த புதிரை {பெரும் ரகசியத்தைக்} கேட்பீராக. சிராத்தங்கள், தேவர்களைக் கௌரவிக்கும் சடங்குகள், சாதாரண நாடகளில் செய்யப்படும் சடங்குகள், குறிப்பாகப் புனிதமான முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} நாட்களில் செய்யப்படும் சடங்குகள் ஆகியவற்றின் போது, மாதவிலக்கான பெண்ணையோ, தொழுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளையோ தேவர்கள் பார்த்துவிட்டால் அச்சந்தர்ப்பங்களில் (நெருப்பில் ஊற்றப்படும்) ஆகுதிகளை அவர்கள் உண்பதில்லை.(12,13) தன்னால் செய்யப்பட்ட சிராத்தம் நடைபெறும் இடத்தின் அருகில் இத்தகைய பெண்ணை அனுமதித்த மனிதனுடைய பித்ருக்கள், பதிமூன்று வருடங்கள் அவனிடம் நிறைவடையாமல் இருப்பார்கள்.(14) ஒருவன், வெள்ளுடை உடுத்தி, மனமும், உடலும் தூய்மையடைந்து, பிராமணர்களை அழைத்து, (தான் செய்யும் சிராத்தத்தின் போது) அவர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அத்தகைய தருணங்களில் ஒருவன் பாரதத்தைப் படிக்க வேண்டும். சிராத்தங்களில் இவை அனைத்தையும் பின்பற்றினால் அங்கே அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றாதனவாகின்றன” என்றார் {கார்க்யர்}.(15)

தௌம்யர், “உடைந்த பாத்திரங்கள், உடைந்த கட்டில்கள், சேவல்கள், நாய்கள், வசிக்கும் வீட்டிற்குள் வளரும் மரங்கள் ஆகியவை அனைத்தும் மங்கலமற்ற பொருட்களாகும். உடைந்த பாத்திரத்தில் கலியே இருக்கிறான் {எனவே, கலகம் உண்டாகும்}, அதே வேளையில், உடைந்த கட்டிலால் செல்வத்தின் இழப்பு ஏற்படும். சேவலோ, நாயோ காணப்படும்போது, தேவர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்ணமாட்டர்கள். மரத்தின் வேருக்கடியில் தேள்களும், பாம்புகளும் நிச்சயம் உறைவிடத்தைக் காண்கின்றன. எனவே, ஒருவன் தன் வசிப்பிடத்திற்குள் மரத்தை ஒருபோதும் நடக்கூடாது” என்றார்.(17)

ஜனதக்னி, “தூய்மையற்ற இதயத்தைக் கொண்ட மனிதன், குதிரை வேள்வியிலோ, நூறு வாஜபேய வேள்விகளிலோ, தலைவணங்கிக் கடுந்தவம் இருந்தோ தேவர்களைத் துதித்திருந்தாலும் நிச்சயம் நரகத்திற்குச் செல்வான். இதயத் தூய்மை வேள்விகளுக்கும், வாய்மைக்கும் இணையானதாகக் கருதப்படுகிறது.(18,19) ஓர் ஏழை பிராமணன், மற்றொரு பிராமணனுக்கு மாவாலான பிரசாதத்தை {ஒரு படி மாவை} மட்டுமே கொடுப்பதன் மூலம் பிரம்ம லோகத்தை அடைகிறான். (இதயத் தூய்மையின் முக்கியத்துவத்திற்கு) இது போதுமான சான்றாகும்” என்றார்.(20)

வாயு சொன்ன பரமரகசியம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 128-வாயுதேவன் வெளியிட்ட பரமரகசியம்; விதிமீறல்களைச் சமன் செய்யும் பரிகாரங்கள்…

வாயு, “நோற்றால் மனித குலத்தை மகிழ்ச்சியில் நிறைக்கும் சில கடமைகளை நான் சொல்லப் போகிறேன். சில ரகசிய காரணங்களைச் சார்ந்திருக்கும் குறிப்பிட்ட விதிமீறல்களைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(1)

மழைக்காலத்தின் நான்கு மாதங்களில் (பித்ருக்களுக்கு) எள்ளையும் நீரையும், கடமைகளை அறிந்த பிராமணர்களுக்குத் தன் சக்திக்குத்தகுந்தபடி உணவையும் காணிக்கையளித்து,(2) புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியைக் காணிக்கையளித்து, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் எள் மற்றும் நீருடன் சேர்த்து விளக்குகளையும் கொடையளிப்பவனும்,(3) உண்மையில் இவை அனைத்தையும் நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும் செய்பவனுமான மனிதன், தேவர்களுக்கு விலங்குகளைக் காணிக்கையளிக்கும் நூறு வேள்விகள் செய்வதால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும் அடைகிறான்.(4)

அனைவரும் அறியாத மற்றொரு உயர்ந்த புதிரைக் கேட்பீராக. தான் ஆகுதிகளை ஊற்றும் நெருப்பை ஒரு சூத்திரன் மூட்டும்போது அனைத்தும் சரி என்று நினைப்பவனும், சிராத்தங்களிலும், வேறு சடங்குகளிலும் துணை செய்யத் தகாத பெண்கள் அவற்றில் உதவி செய்ய அனுமதிக்கப்படும்போது எந்தக் குற்றத்தையும் காணாதவனுமான மனிதன் நிச்சயம் பாவத்தால் களங்கமடைகிறான்.(5) வேள்வி நெருப்புகள் மூன்றும் அத்தகைய மனிதனிடம் சினம் கொள்கின்றன. அவன் அடுத்தப் பிறவியில் ஒரு சூத்திரனாகப் பிறப்பான். அவனுடைய பித்ருக்களும் தேவர்களும் அவனிடம் ஒருபோதும் நிறைவடைய மாட்டார்கள்.(6)

அத்தகைய பாவங்களில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள ஒருவன் செய்ய வேண்டிய பாவக்கழிப்புகளை {பரிகாரங்களை} இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீராக. அந்தப் பரிகாரச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் பிணியில இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியை அடைகிறான்.(7) அவன் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து குவிந்த கவனத்துடன் பசுவின் சிறுநீர், சாணம், பால், நெய் ஆகியவற்றைப் புனித நெருப்பில் ஆகுதிகளாக ஊற்ற வேண்டும்.(8)

ஒரு வருடம் முழுமையாகத் தீர்ந்ததும் அத்தகைய மனிதனின் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அவனுடைய பித்ருக்களும் சிராத்தம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, அவனிடம் நிறைவை அடைகின்றனர்.(9)

சொர்க்கத்தை அடைய விரும்பும் மனிதர்களைப் பொறுத்தவரையில் எது அறம், எது மறம் {அறமற்றது} என்பனவற்றை அறியப்படாத விபரங்களுடன் நான் உரைத்திருகிறேன். உண்மையில் இந்த விதிமீறல்களைத் தவிர்ப்பவர்களும், அவற்றை இழைத்தாலும் குறிப்பிட்ட பரிகாரச் சடங்குகளைச் செய்பவர்களுமான மனிதர்கள், இவ்வுலகத்தைவிட்டு அகலும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்” என்றான் {வாயு}.(10)

லோமசர் சொன்ன ரகசியங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 129-லோமசர் வெளியிட்ட சொன்ன பரமரகசியங்கள்…

லோமசர், “தனக்காக மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளாமல், அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்தும் மனிதர்களின் பித்ருக்கள் சிராத்தத்திற்கான நேரம் வரும் போது ஏமாற்றம் அடைகின்றனர்.(1) அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்துபவன், மலட்டுப் பெண்ணிடம் பாலியல் கலவியில் ஈடுபடுபவன், ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பவன் ஆகியோர் இணையான பாவம் நிறைந்தவர்களே.(2)

அத்தகையோரின் பித்ருக்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பாமல் அவர்களிடம் இருந்து தங்களை அறுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அளிக்கும் காணிக்கைகள் தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்வதில் தவறுகின்றன.(3) எனவே, பிறர் மணந்து கொண்ட பெண்களுடனும், மலட்டுப் பெண்களுடனும் ஒருவன் எப்போதும் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும். தன் நன்மையை விரும்பும் மனிதன் ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க மாட்டான்.(4)

அறத்தைப் பொறுத்தவரையில் அனைவராலும் அறியப்படாத மற்றொரு புதிரை இப்போது சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் எப்போதும் தனது ஆசான் மற்றும் வேறு பெரியோர்களின் ஆணைகளைச் செய்ய வேண்டும்.(5) ஒவ்வொரு மாதமும், பனிரெண்டாம் சந்திர நாளிலும் {துவாதசியிலும்}, முழு நிலவு {அமாவாசை} நாளிலும் ஒருவன் நெய்யையும், அக்ஷதையால் அமைந்த காணிக்கைகளையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளிக்க வேண்டும். அத்தகைய மனிதன் அடையும் பலனின் அளவை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)

அத்தகைய செயலால் ஒருவன் சோமத்தையும், பெருங்கடலையும் பெருகச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களின் தலைவனான வாசவன் {இந்திரன்}, அவனுக்குக் குதிரை வேள்வி செய்த பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அளிக்கிறான்.(7) அத்தகைய கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒரு மனிதன் பெரும் சக்தியையும், ஆற்றலையும் அடைகிறான். தெய்வீகமான சோமன் அவனிடம் நன்கு நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் கனியும் நிலையை அருள்கிறான்.(8)

பெரும் பலனை உண்டாக்கவல்லதும், கடமை நிலைத்திருக்கும் அடித்தளமுமான மற்றுமொரு கடமை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. கலியுகத்தில் அந்தக் கடமை செய்யப்பட்டால் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.(9) விடிவதற்கு முன்பு எழுந்து, நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வெள்ளுடைகளை உடுத்திக் கொண்டு, குவிந்த கவனத்துடன் பாத்திரங்கள் நிறைந்த எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பவனும்,(10) பித்ருக்களுக்கு எள்ளும் தேனும், நீரும் கொடுப்பவனும், கிருச்ரம் என்றழைக்கப்படும் உணவையும், விளக்குகளையும் கொடுப்பவனுமான மனிதன், அடுத்தடுத்து நல்ல பலன்களையே அடைகிறான். அந்தப் பலன்கள் யாவை எனச் சொல்கிறேன் கேட்பீராக(11)

தெய்வீக தண்டனை அளிப்பவனான பாகன் {இந்திரன், தாமிரப் பாத்திரங்களையும், எள் நிறைந்த வெண்கலப் பாத்திரங்களையும் கொடையளிப்பதன் பலன்களைக் குறிப்பிட்டிருக்கிறான். பசுக்கொடை, நித்திய பலனை விளைவிக்கவல்ல நிலக்கொடை ஆகியவற்றை அளிப்பவன்,(12) தக்ஷிணையின் வடிவில் பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவன் ஆகியோர் அனைவரும் எள் நிறைந்த பாத்திரங்களைக் கொடையளிப்பதன் மூலம் அடைவதற்கு இணையான பலன்களை அடைந்தவனாகத் தேவர்கள் அனைவராலும் கருதப்படுகிறான்.(13)

நீருடன் சேர்த்து எள் காணிக்கையளிக்கப்படும் கொடைகள் நித்தியமான நிறைவை அளிப்பவையாகப் பித்ருக்களால் கருதப்படுகின்றன. விளக்குக் கொடை மற்றும் கிருசரக் கொடைகளில் பாட்டன்கள் {மூதாதையர்} அனைவரும் உயர்ந்த நிறைவை அடைகிறார்கள்.(14) இவ்வாறு பித்ருக்கள் மற்றும் தேவர்களால் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் உயர்வாக மெச்சப்பட்டதும், முனிவர்களால் விதிக்கப்பட்டதுமான பழைமையான விதியைச் சொன்னேன்” என்றார் {லோமசர்}”.(15)

புறக்கணிக்கத்தக்க ஐவர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 130- அருந்ததி, சூரியன் மற்றும் யமன் ஆகியோர் சொன்ன பரமரகசியங்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது, அங்கே கூடியிருந்த பல்வேறு முனிவர்களும், பித்ருக்களும், தேவர்களும், பெரும் தவத்தகுதியைக் கொண்டிருந்த (வசிஷ்டரின் மனைவியான) அருந்ததியிடம் குவிந்த கவனத்தோடு கேள்வி கேட்டனர்.(1) தவச் செல்வத்தை அபரிமிதமாகக் கொண்டவளும், நோன்புகள் மற்றும் ஒழுக்கத்தில் தன் கணவரும், உயர் ஆன்ம கொண்டவருமான வசிஷ்டருக்கு இணையானவளாதலால் சக்தியிலும் அவள் அவருக்கு இணையானவளாக இருந்தாள்.(2) அவர்கள் அவளிடம், “அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களை நாங்கள் உன்னிடம் கேட்க விரும்புகிறோம். ஓ! இனிமை நிறைந்த பெண்மணியே, உயர்ந்த புதிராக {ரகசியமாக} நீ எதைக் கருதுகிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர்.(3)

அருந்ததி, “ஏழையான என்னை இவ்வாறு நீங்கள் கருத்துடன் நினைவுகூர்வதாலேயே என்னால் தவங்களில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடிந்தது. அருள் நிறைந்த உங்கள் அனுமதியுடன் நான் இப்போது நித்தியமான கடமைகள் மற்றும் உயர்ந்த புதிர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அவை சார்ந்திருக்கும் காரணங்களுடன் சேர்த்து நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையும், தூய இதயத்தையும் கொண்டவருக்கு மட்டுமே இந்த ஞானம் சொல்லப்பட வேண்டும்.(4,5) நம்பிக்கையற்றவன், செருக்கு நிறைந்தவன், பிராமணக்கொலை செய்த {பிரம்மஹத்தி தோஷம் கொண்ட} குற்றவாளி, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவன் ஆகியோருடன் ஒருபோதும் இது குறித்துப் பேசக் கூடாது. அவர்களுக்கு ஒருபோதும் அறமும், கடமையும் சொல்லப்படக்கூடாது.(6) பனிரெண்டு வருட காலம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிக்கும் மனிதன், அல்லது, ஒவ்வொரு மாதமும் ஒரு வேள்வியில் தேவர்களைத் துதிப்பவன், அல்லது பெரும் புஷ்கரையில், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளிப்பவன் ஆகியோர் அடையும் பலன்கள் விருந்தினரை நிறைவடையச் செய்வதன் மூலம் கிட்டும் பலன்களுக்கு ஒருபோதும் ஈடாகாது.(7,8)

மனித குலத்தை மகிழ்ச்சியால் நிறைக்கும் மற்றொரு கடமையைச் சொல்லப் போகிறேன் கேட்பீராக. அது நம்பிக்கையுடன் கூடிய மனிதனால் ரகசிய சடங்காகச் செய்யப்பட வேண்டும். அதன் பலன்கள் நிச்சயம் உயர்ந்தவையாகும். அவை என்னென்ன என்பதைக் கேட்பீராக. விடிவதற்கு முன் எழுந்து, குறிப்பிட்ட அளவு நீரையும், சில குசப் புற்களையும் {தர்ப்பைகளையும்} எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டகைக்குச் சென்று, கொண்டு சென்ற நீரைக் குசப்புற்களைக் கொண்டு தெளிப்பதன் மூலம் மாடுகளின் கொம்புகளைக் கழுவியபிறகு தன் தலையில் நீரை வடியச் செய்பவன், அத்தகைய நீராடலின் விளைவால் சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி செல்பவையும், மதிப்புமிக்கவையும், மூவுலகங்களிலும் உள்ளவையுமான அனைத்து நீர்நிலைகளிலும் நீராடியவனாகக் கருதப்படுகிறான்” என்று சொன்னாள்.(10-12) அருந்ததி இந்தச் சொற்களைச் சொன்னதும் தேவர்கள் மற்றும் பித்ருக்கள் அனைவரும் “நன்று, நன்று” என்று சொல்லி அவர்களை மெச்சினார்கள். உண்மையில், அங்கே இருந்த உயிரினங்கள் அனைத்தும் உயர்வான நிறைவை அடைந்து அருந்ததியை வழிபட்டன.(13)

பிரம்மன், “ஓ! உயர்வாக அருளப்பட்டவளே, ரகசிய சடங்குடன் சேர்த்து நீ சொன்ன கடமை சிறப்பானதாகும். புகழ் உனதாகட்டும். உன் தவங்கள் தொடர்ந்து பெருகும் வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றான்.(14)

யமன், “நான் உங்களிடம் இருந்து இனிமையான, சிறப்பான உரையைக் கேட்டேன். எனக்கு ஏற்புடைய வகையில் சித்திரகுப்தன் சொன்னதை இப்போது கேட்பீராக.(15) அச்சொற்கள் ரகசிய சடங்குடன் கூடிய கடமை தொடர்பானதாகவும், பெரும் முனிவர்களாலும், நம்பிக்கையுடன் கூடியவர்களாலும், தன் நன்மையை விரும்புபவர்களாலும் கேட்கத்தகுந்ததாகவும் இருக்கின்றன.(16) உயிரினங்களால் இழைக்கப்படும் அறமோ, பாவமோ ஏதும் அழிவதில்லை. முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அச்செயல்கள் அவை சார்ந்திருக்கும் சூரியனிடம் அறிவிக்கப்படுகின்றன.(17) ஒரு மனிதன் இறந்தோரின் உலகத்திற்குள் செல்லும்போது, சூரிய தேவன் அவனுடைய செயல்கள் அனைத்துக்குமான சாட்சியாக இருக்கிறான். அறவோனாகிருப்பவன் அங்கே தன் அறத்திற்கான கனிகளை அடைகிறான்.(18) சித்திரகுப்தனால் அங்கீகரிக்கப்பட்ட சில மங்கலக் கடமைகளை இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். குடிப்பதற்கான நீர், இருளை அகற்றும் விளக்குகள் ஆகியவை எப்போதும் கொடையளிக்கப்பட வேண்டும்.(19) காலணிகள், கொடைகள், கபிலைப்பசுக்கள் ஆகியவையும் உரிய சடங்குகளுடன் கொடையளிக்கப்பட வேண்டும். புஷ்கரையில் குறிப்பாக ஒருவன் வேதமறிந்த ஒரு பிராமணனுக்கு ஒரு கபிலைப் பசுவைக் கொடையாக அளிக்க வேண்டும்.(20)

அவன் எப்போதும் தன் அக்னிஹோத்ரத்தைப் பெருங்கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இங்கே சித்திரகுப்தனால் மற்றொரு கடமையும் அறிவிக்கப்படுகிறது.(21) உயிரினங்களில் சிறந்தவை, அந்தக் கடமையின் பலன்களைத் தனித்தனியாகக் கேட்பது தகுந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு உயிரினமும் அழிவடையவே விதிக்கப்பட்டிருக்கிறது.(22) அற்ப புத்தி கொண்டோர், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு இறந்தோரின் உலகில் பெரும் துன்பத்தைச் சந்திக்கின்றனர். அத்தகைய துன்பத்தில் இருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.(23) அவர்கள் காரிருளுக்குள் நுழைய வேண்டும். அத்தகைய துன்பத்தைக் கடப்பதில் வெல்ல ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன்.(24) அந்தக் கடமைகளைச் செய்வதற்கு ஆகும் செலவு குறைவே ஆனால் அவை பெரும் பலன் நிறைந்தவையா இருக்கின்றன. உண்மையில் அத்தகைய செயல்பாடு மறுமையில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். குடிப்பதற்கான நீரைக் கொடையாக அளிப்பதில் உண்டாகும் பலன்கள் சிறந்தவையாகும். குறிப்பாக மறுமையில் உயர்ந்த பலன்களை அளிக்கும்.(25)

குடிப்பதற்கான நீரைக் கொடையளிப்பவர்களுக்காக மறுமையில் சிறந்த நீர் நிறைந்த ஒரு பேராறு விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த ஆற்றில் உள்ள நீர் வற்றாததாகவும், குளுமையானதாகவும், அமுதம் போன்ற இனிமை கொண்டதாகவும் இருக்கிறது.(26) இவ்வுலகில் நீர்க்கொடை அளிப்பவன் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, மறுமையில் அந்த ஆற்றில் இருந்தே நீரைக் குடிக்கிறான். விளக்குகளை {தீபங்களைக்} கொடையளிப்பதால் கிட்டும் அபரிமிதமான பலன்களை இப்போது கேட்பீராக.(27) இவ்வுலகில் விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் (நரகத்தின்) காரிருளைக் காண வேண்டியதில்லை. அவன் வேறு உலகத்திற்குச் செல்லும்போது, சோமன், சூரியன், நெருப்பு தேவன் ஆகியோர் தங்கள் ஒளியை அவனுக்கு அளிக்கின்றனர்.(28) அத்தகைய மனிதனின் அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க ஒளி இருக்கத் தேவர்கள் விதிக்கின்றனர். உண்மையில், விளக்குகளை {தீபங்களைக்} கொடையளிப்பவன் இறந்தோரின் உலகத்திற்குச் செல்லும்போது அவன் இரண்டாவது சூரியனைப் போலத் தூயப் பிரகாசத்துடன் சுடர்விடுகிறான்.(29) எனவே ஒருவன் இம்மையில் குறிப்பாக விளக்குகளையும், குறிப்பாக நீர்க்கொடையையும் அளிக்க வேண்டும். வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குக் கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம், குறிப்பாகப் புஷ்கரையில் அக்கொடை அளிக்கப்படும்போது ஒருவன் அடையும் பலன்களைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(30)

அத்தகைய மனிதன் நித்திய பலனை உண்டாக்கவல்ல கொடையான காளையுடன் சேர்த்து நூறு பசுக்களைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(31) ஒரேயொரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பது நூறு பசுக்களைக் கொடையளித்த பலனைக் கொடுக்கவல்லதாகக் கருதப்படுவதால் கொடையாளி எந்தப் பாவத்தைச் செய்த குற்றவாளியாக இருந்தாலும், அதிலும் பாவங்களில் பெரிய பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக இருந்தாலும் {பிரம்மஹத்தி தோஷம் கொண்டவனாக இருந்தாலும்} அவன் கொடையளிக்கும் ஒரேயொரு கபிலைப்பசு அவற்றைத் தூய்மைப்படுத்தவல்லதாகும்.(32) எனவே, ஒருவன் கார்த்திகை மாத முழு நிலவு {பௌர்ணமி} நாளில் (புஷ்கரை என்ற பெயரில் அறியப்பட்ட இரு தீர்த்தங்களில்) பெரியதாகக் கருதப்படும் புஷ்கரையில் ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிக்க வேண்டும். அத்தகைய கொடையை அளிப்பதில் வெல்லும் மனிதர்கள் எவ்வகைத் துன்பத்தையும், கவலையையும், வலிதரும் முட்களையும் சந்திக்க வேண்டியதில்லை.(33) கொடைக்குத் தகுந்த ஒரு மேன்மையான பிராமணனுக்கு ஒரு ஜோடிக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன் அதே போன்ற பலன்களை அடைகிறான். ஒரு குடையைக் கொடையளிப்பதன் மூலம் அம்மனிதன் மறுமையில் வசதியான நிழலை அடைகிறான் (அவன் சூரியனுக்கு வெளிப்பட்டிருக்க மாட்டான்).(34) தகுந்தவர்களுக்கு அளிக்கப்படும் கொடை ஒருபோதும் வீணாவதில்லை. அது நிச்சயம் கொடையாளிக்கு ஏற்புடைய விளைவுகளை உண்டாக்கும்” என்று {சித்திரகுப்தன் சொன்னதாக யமன்} சொன்னான். சித்திரகுப்தனின் இந்தக் கருத்துகளைக் கேட்ட சூரியனுக்கு மயிர்ச்சிலிர்ப்பு உண்டானது.(35)

பெருங்காந்தியுடன் கூடிய அவன் {சூரியன்}, “உயர் ஆன்ம சித்திரகுப்தனால் எடுத்துரைக்கப்பட்ட கடமை தொடர்பான புதிர்களைக் கேட்டீர்கள்.(36) நம்பிக்கையுடன் கூடிய மனிதர்கள் உயர் ஆன்ம பிராமணர்களுக்கு இக்கொடைகளை அளிப்பதன் மூலம் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.(37) தீச்செயல்களால் களங்கமடைந்த இந்த ஐவகை மனிதர்களால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. உண்மையில் பாவம் நிறைந்த நடத்தை கொண்டவர்களும், மனிதர்களில் இழிந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான அவர்களிடம் ஒருபோதும் பேசக்கூடாது. உண்மையில் அவர்கள் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும்.(38) பிராமணனைக் கொன்றவன் {பிரம்மஹத்தி செய்தவன்}, பசுவைக் கொன்றவன் {கோஹத்தி செய்தவன்}, பிறர் மனைவிகளுடன் சேரும் பாலியல் கலவிக்கு அடிமையானவன், (வேதங்களில்) நம்பிக்கையில்லாதவன், மனைவியைக் கொண்டு பிழைப்பவன் ஆகியோரே அந்த ஐவராவர்.(39) பாவம் நிறைந்த நடத்தை கொண்ட இந்த மனிதர்கள், இறந்தோரின் உலகத்திற்குச் செல்லும்போது, சீழ் மற்றும் குருதியில் வாழும் புழுக்களைப் போல நரகத்தில் அழுகுகின்றனர்.(40) பித்ருக்கள், தேவர்கள், ஸ்நாதகப் பிராமணர்கள் மற்றும் தவப்பயிற்சிகளுக்குத் தங்களை அர்ப்பணித்த வேறு மறுபிறப்பாளர்கள் ஆகியோரால் இந்த ஐவரும் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்றான் {சூரியன்}”.(41)

பிரமதர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 131-பிரமதர்கள் யாரைப் பீடிப்பார்கள் என்று தேவர்களிடம் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது உயர்வாக அருளப்பட்டவர்களான தேவர்கள், பித்ருக்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் பிரமதர்களிடம்[1],(1) “நீங்கள் அனைவரும் உயர்வாக அருளப்பட்டவர்கள். நீங்கள் இரவில் புலப்படா வகையில் திரிபவர்கள். இழிந்தவர்களும், தூய்மையற்றவர்களும், களங்கமுள்ளவர்களுமான மனிதர்களை நீங்கள் ஏன் பீடிக்கிறீர்கள்?(2) உங்கள் அதிகாரத்திற்குத் தடையாக எச்செயல்கள் கருதப்படுகின்றன? உண்மையில் எந்தச் செயல்களைச் செய்வதன் விளைவால் நீங்கள் மனிதர்களைப் பீடிக்க முடியாதவர்கள் ஆகிறீர்கள்? ராட்சசர்களை அழித்து, மனிதர்களின் வசிப்பிடங்களில் உங்கள் அதிகாரத்தை உறுதிபடுத்துவைத் தடுக்கும் செயல்கள் எவை? இரவுலாவிகளே, இவை அனைத்தையும் நாங்கள் உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறோம்” என்றனர்.(4)பிரமதர்கள், “பாலியல் கலவிச் செயல்களால் மனிதர்கள் தூய்மையற்றவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய செயல்களுக்குப் பின்பு தங்களைத் தூய்மை படுத்திக் கொள்ளாதவர்கள், பெரியோர்களை அவமதிப்பவர்கள், அறியாமையால் பல்வேறு வகை இறைச்சிகளை உண்பவர்கள், மரத்தினடியில் உறங்கும் மனிதன்,(5) உறங்கப் சென்று தன் படுக்கையின் தலையணைக்கடியில் இறைச்சியை வைத்திருப்பவன், கால் வைக்க வேண்டிய இடத்தில் தலையையோ, தலை வைக்க வேண்டிய இடத்தில் காலையோ வைத்து படுப்பவன் ஆகியோர் தூய்மையற்ற மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில் இம்மனிதர்கள் {நாங்கள் நுழையத்தக்க} பல துளைகளைகளைக் கொண்டிருக்கின்றனர்.(6)

நீருக்குள் சளி மற்றும் தூய்மையற்ற {சிறுநீர், மலம் போன்ற} கழிவுகளை வீசுபவர்களும் அதே வகையில் எண்ணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் எங்களால் கொல்லப்படவும், உண்ணப்படவும் தகுந்தவர்களாவர் என்பதில் ஐயமில்லை.(7) உண்மையில், இத்தகைய ஒழுக்கம் கொண்ட மனிதர்களையே நாங்கள் பீடிக்கிறோம். மாற்று மருந்தாகக் கருதப்படுபவையும், மனிதர்களுக்கு எத்தீங்கையும் விளைவிப்பதில் எங்களைத் தவறச் செய்பவையுமான செயல்களை இப்போது கேட்பீராக.(8)

கோரோசனையை மேனியில் பூசிக்கொண்டவர்களையோ, கரங்களில் வசம்பை வைத்திருப்பவர்களையோ, அக்ஷதை என்ற பெயரில் உள்ள உட்பொருட்களுடன் நெய்யைக் கொடையளிப்பவர்களையோ, நெய்யையும், அக்ஷதையையும் தங்கள் தலைகளில் வைத்துக் கொள்பவர்களையோ,(9) இறைச்சியைத் தவிர்ப்பவர்களையோ எங்களால் பீடிக்க இயலாது. எந்த மனிதனின் வீட்டில் அணையாமல் பகலும் இரவும் புனித நெருப்பு எரிகின்றதோ,(10) எவன் தன் வசிப்பிடத்தில் ஓநாயின் தோலையோ, பற்களையோ, மலை ஆமையையோ வைத்துக் கொள்வானோ, எவனுடைய வீட்டில் இருந்து வேள்விப்புகை மேல்நோக்கிச் சுழன்று செல்கிறது, பழுப்பு, அல்லது எவன் கருப்பு வண்ணத்திலான பூனை அல்லது ஆட்டை வளர்ப்பானோ அவன் எங்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டவன் ஆவான்[2].(11)உண்மையில், இவற்றைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளும் இல்லறத்தார் அழுகிய பிணங்களை உண்டு வாழும் கடும் பூதங்களாலும் ஊடுருவ இயலாதவையாக அவை {தங்கள் வீடுகள்} இருப்பதைக் காண்பார்கள்.(12) இன்பங்களைத் தேடி பல்வேறு உலகங்களில் திரியும் எங்களைப் போன்றவையாலும் {பூதங்களாலும்} இத்தகைய வீடுகளுக்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. எனவே, தேவர்களே, ராட்சசர்களுக்கு (ராட்சசர்களுக்கும் வேறு வகையைச் சார்ந்த பிசாசுகளுக்கும்) அழிவைத் தரும் இத்தகைய பொருட்கள் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவர்களான நீங்கள் கொண்டிருந்த பெரும் ஐயங்கள் குறித்த அனைத்தையும் நாங்கள் சொல்லிவிட்டோம்” என்றனர் {பிரமதர்கள்}.(13)

நாக பலி காணிக்கை! – அநுசாஸனபர்வம் பகுதி – 132-நாகபலி காணிக்கையளிக்கும் முறைகளை ரேணுகன் என்ற யானைக்குச் சொன்ன திக்கஜங்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆதி தாமரையில் உதித்தவனும், (இனிமையிலும், நறுமணத்திலும்) தாமரைக்கே ஒப்பானவனுமான பெரும்பாட்டன் பிரம்மன், சச்சியின் தலைவனான வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களிடம்,(1) “அதோ பாதாள லோகத்தில் வசிப்பவனான வலிமைமிக்க {யானையான} நாகன் அமர்ந்திருக்கிறான். பெரும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் கொண்ட அவனது பெயர் ரேணுகன் ஆகும். நிச்சயம் அவன் பெரியவன் ஆவான்.(2) பெரும் சக்தியும், பலமும் கொண்டவையும், மலைகள், நீர்நிலைகள் மற்றும் தடாகங்களுடன் கூடிய மொத்த பூமியையும் தாங்கிக் கொண்டிருப்பவையும் வலிமைமிக்க யானைகளை {திக்கஜங்களை} உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த ரேணுகன் பேட்டி காணட்டும். ரேணுகன் அவற்றிடம் சென்று அறம் அல்லது கடமையின் புதிர்களைக் குறித்து அவற்றிடம் கேட்கட்டும்” என்றான்.(3,4) பெரும்பாட்டனின் இச்சொற்களைக் கேட்ட தேவர்கள், தங்கள் மனங்களில் நிறைவடைந்தவர்களாக (யானையான) ரேணுகனை, அந்த உலகைத் தாங்கிப் பிடிப்பவையிடம் {திக் கஜங்களிடம்} அனுப்பினர்.(5)

அந்த யானைகள் இருந்த இடத்திற்குச் சென்ற ரேணுகன் அவற்றிடம் {யானைகளிடம்}, “வலிமைமிக்க உயிரினங்களே, அறம் மற்றும் கடமையின் புதிர்களைக் குறித்து உங்களிடம் கேட்குமாறு தேவர்கள் மற்றும் பித்ருகள் எனக்கு ஆணையிட்டுள்ளனர். நீங்கள் அவை குறித்து விரிவாகப் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, உங்கள் ஞானத்தின் ஆணைப்படி இக்காரியத்தைக் குறித்து நீங்கள் பேசுவீராக” என்றான் {நாகனான ரேணுகன் என்ற யானை}.(6)

எட்டுத் திக்குகளில் நிற்கும் (எட்டு) யானைகள், “கார்த்திகை மாதத் தேய்பிறையின் மங்கலமான எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அஸ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் ஒருவன் பாகு மற்றும் அரிசி கொடைகளை அளிக்க வேண்டும்.(7) கோபத்தை அடக்கி, முறையான உணவுத்திட்டத்திற்கு ஒழுங்கமைந்து வாழும் ஒருவன் ஒரு சிராத்தத்தில் பின்வரும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே இந்தக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். “பெரும் பலத்தைக் கொண்ட பலதேவனும் பிற நாகர்களும்,(8) அழிவற்ற, நித்தியமான பேருடல்படைத்த வலிமைமிக்கப் பாம்புகள் பிறவும், குலங்களில் பிறந்திருக்கும் வேறு பெரும் பாம்புகள் அனைத்தும்,(9) என் பலமும், சக்தியும் பெருகுவதற்காக எனக்குப் பலி காணிக்கைகளை அளிக்கட்டும். உண்மையில், என் பலமானது, மூழ்கிய பூமியை உயர்த்திய அருளப்பட்ட நாராயணனைப் போலப் பெரும்பலமாக அமையட்டும்” {என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே பாகு மற்றும் அரசிக் கொடைகளை அளிக்க வேண்டும்}.(10)

இந்த மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே அவன் ஓர் எறும்புப்புற்றில் பலி காணிக்கைகளை இட வேண்டும். நாள் சமைப்பவன் {சூரியன்}, மேற்கில் உள்ள தன் அறைகளுக்குள் ஓயச் செல்லும்போது அரிசி மற்றும் கச்சா சர்க்கரை {வெல்லமாக இருக்க வேண்டும்} ஆகியவற்றாலான காணிக்கைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட எறும்புப் புற்றுகளில் வைக்க வேண்டும்.(11) அதற்கு முன்பே அந்த எறும்புப்புற்றில் கஜேந்திர மலர்களைத் தூவ வேண்டும். நீலத் துணிகள் மற்றும் நறுமணக் களிம்புகளும் காணிக்கையளிக்கப்பட வேண்டும்.(12) இவ்வகையில் காணிக்கைகள் அளிக்கப்பட்டால் பாதாள லோகத்தில் வாழ்வோரும் {நாகர்களும்}[1], மேலுலகங்களின் கனத்தைத் தங்கள் தலைகளிலும், தோள்களிலும் தாங்கி நன்கு நிறைவடைகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இத்தகைய காணிக்கைகள் எங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் பூமியைத் தாங்குவதில் எந்தக் களைப்பையும் அடையவில்லை.(13)சுமக்கும் சுமையால் பீடிக்கப்படும் நாங்கள், தன்னல நோக்கங்கள் கிஞ்சிற்றும் இன்றி (மனிதர்களின் நன்மைக்காக) இதையே சிந்திக்கிறோம். இந்த விதியை நோற்று ஒரு முழு வருடம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்ணா நோன்பிருக்கும் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள், அத்தகைய கொடைகளின் மூலம் பெரும்பலன்களை அடைகிறார்கள்.(14) எறும்புப் புற்றில் இத்தகைய பலி காணிக்கைகளை அளிப்பது உண்மையில் மேன்மையான பலன்கள் நிறைந்தது என்று நாங்கள் நினைக்கிறோம்.(15) இத்தகைய காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன், மூவுலகங்களில் உள்ள வலிமைமிக்க யானைகள் அனைத்திற்கும் நூறு வருடகாலம் விருந்தோம்பல் கடமைகளைச் செய்தவனாகக் கருதப்படுவான்” என்றன {திக்கஜங்கள்}.(16)

அந்த வலிமைமிக்க யானைகள் {திக்கஜங்கள்} சொன்ன இந்தச் சொற்களைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும், உயர்வாக அருளப்பட்டவர்களான முனிவர்கள் அனைவரும் ரேணுகனை மெச்சினார்கள்” {என்றார் பீஷமர்}.(17)

பசுக்களின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 133-பசுக்களுக்கு உணவளிப்பதன் சிறப்பைச் சொன்ன மஹேஸ்வரன்…

மஹேஸ்வரன், “உங்கள் நினைவுகளைத் தேடி நீங்கள் அனைவரும் சொன்ன கடமைகள் யாவும் சிறப்பானவையாகும். அறம் மற்றும் கடமை தொடர்பான சில புதிர்களை நான் அறிவிக்கப் போகிறேன். நான் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்பீராக.(1) அறத்தில் நிறுவப்பட்ட புத்தியைக் கொண்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான மனிதர்களுக்கு மட்டுமே உயர்ந்த பலன்கள் நிறைந்த அறம் மற்றும் கடமைப் புதிர்கள் போதிக்கப்பட வேண்டும்.(2)

கவலையில் இருந்து விடுதலை அடைந்த இதயத்துடன் ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் பசுக்களுக்கு உணவைக் கொடுத்து, அத்தகைய காலம் முழுவதும் ஒரே ஒரு வேளை உணவை மட்டுமே உண்பவன் அடையும் பலன்களைக் கேட்பீராக.(3) பசுக்கள் உயர்வாக அருளப்பட்டவையாகும். புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவையாக அவை கருதப்படுகின்றன. உண்மையில், அவையே தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூவுலங்கங்களையும் தாங்கிப் பிடிப்பவையாகும்.(4)

அவற்றுக்கு அளிக்கப்படும் மதிப்புமிக்கத் தொண்டுகள் உயர்ந்த பலன்கள் மற்றும் முக்கிய விளைவுகள் நிறைந்தவையாகும். ஒவ்வொரு நாளும் பசுக்களுக்கு உணவை அளிக்கும் மனிதன் ஒவ்வொரு நாளும் அறத்தகுதியில் முன்னேறுகிறான்.(5) முற்காலத்தில், கிருத யுகத்தில் இந்த விலங்குகளிடம் என் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினேன். அதன் பிறகே, ஆதி தாமரையில் பிறந்த பிரம்மன் (பசுக்களிடம் கருணை காட்டுமாறு) என்னிடம் வேண்டினான்[1].(6)இந்தக் காரணத்தினாலேயே ஒரு காளையானது இந்த நாள் வரை என் தலைக்கு மேலே என் கொடிக்கம்பத்தில் சின்னமாக அமைந்து நிற்கிறது. நான் எப்போதும் பசுக்களுடன் விளையாடுகிறேன். எனவே அனைவராலும் பசுக்கள் வழிபடப்பட வேண்டும்.(7) பசுக்கள் பெரும் சக்தியைக் கொண்டவையாகும். அவை வரங்களையும் அளிக்கவல்லவையாகும். வழிபடப்பட்டால் அவை வரங்களை அளிக்கும். பசுக்களுக்கு ஒரேயொரு நாள் உணவைக் கொடுத்தாலும், அம்மனிதன், வாழ்வில் தன் நற்செயல்கள் அனைத்திற்கும் கிட்டும் பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அந்த நல்ல உயிரினங்களிடம் இருந்து பெறுகிறான்” என்றான் {மஹேஸ்வரன்}.(8)

ரகசிய தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 134-ஸ்கந்தன்; அறங்கள் அனைத்தையும் புகழ்ந்த விஷ்ணு…

ஸ்கந்தன், “என்னால்அங்கீகரிக்கப்பட்ட கடமையை இப்போது அறிவிக்கப் போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பீராக. நீல {கறுப்பு} நிறக் காளையின் கொம்புகளில் இருந்து சிறிதளவு மண்ணை எடுத்து தன் மேனியில் மூன்று நாட்கள் பூசிக்கொண்டு அதன் பிறகு நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைகிறான். அந்தப் பலன்கள் எவை என்பதைக் கேட்பீராக. அத்தகைய செயலின் மூலம் ஒருவன் ஒவ்வொரு களங்கத்தையும், தீமையையும் கழுவிக் கொண்டு, மறுமையில் அரசுரிமையை அடைந்து ஆள்கிறான்.(2) எத்தனை முறை அவன் இவ்வுலகில் பிறக்கிறானோ, அவ்வளவு முறை அவன் தனது வீரத்திற்காகக் கொண்டாடப்படுகிறான். யாரும் அறியாத மற்றொரு புதிரை இப்போது கேட்பீராக.(3)

ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, சமைக்கப்பட்ட உணவை தேன் கலந்து அதிலிட்டு, நிலவு முழுமையாக இருக்கும் {அமாவாசை} நாளின் மாலை வேளையில், உதிக்கும் சந்திரனுக்கு அதைப் பலியாகக் கொடுக்க வேண்டும்.(4) இவ்வழியில் செயல்படும் மனிதன் அடையும் பலன்களை நம்பிக்கையுடன் அறிவீராக. சாத்தியர்கள், ருத்திரர்கள், ஆதித்யர்கள், விஷ்வேதேவர்கள், அசுவின இரட்டையர்கள்,(5) மருத்துகள், வசுக்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் காணிக்கையை ஏற்கின்றனர். அத்தகைய காணிக்கையின் மூலம் சோமமும், நீர்க்கொள்ளிடமான பெருங்கடலும் வளர்கின்றன. என்னால் அறிவிக்கப்பட்டதும், பெரும்பாலும் யாராலும் அறியப்படாததுமான இக்கடமையானது செய்யப்பட்டால் நிச்சயம் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றான் {ஸ்கந்தன்{.(6)

விஷ்ணு, “உயர் ஆன்ம தேவர்களாலும், முனிவர்களாலும் பாதுகாக்கப்படும் அறம் மற்றும் கடமை சார்ந்த புதிர்களைக் குவிந்த கவனத்துடனும், வன்மத்தில் இருந்து விடுபட்டு நம்பிக்கையுடனும் ஒவ்வொரு நாளும் கேட்கும் மனிதன், ஒரு போதும் தீமைக்கு அடிபணியவேண்டியதில்லை. அத்தகைய மனிதன் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(7,8) புலன்களை முழுமையாக அடக்கி, (முன்பு பேசிய அனைவராலும்) அறிவிக்கப்பட்ட மங்கலமான பலன்மிக்கக் கடமைகள் அடங்கிய இந்தப் பகுதிகளை அவற்றின் புதிர்களுடன் சேர்த்துப் படிப்பவன், அவர்களுடைய செல்பாட்டுக்குரிய அனைத்துப் பலன்களையும் அடைகிறான்.(9) பாவத்தால் ஒருபோதும் அவனை வெல்லமுடியாது. உண்மையில் அத்தகைய மனிதன் எவ்வகைக் களங்கங்களாலும் கறைபடமாட்டான். உண்மையில், அவன் இந்தப் புதிர்களைப் படிப்பதன் மூலமோ, பிறருக்கு அறிவிப்பதன் மூலமோ, அவற்றைக் கேட்பதன் மூலமோ (அறிவிக்கப்பட்டிருக்கும்) பலன்களை அபரிமிதமாக வெல்கிறான்.(10)

அத்தகைய உயிரினத்தால் அளிக்கப்படும் ஹவ்யகவ்யங்களைத் தேவர்களும், பித்ருக்களும் எப்போதும் உண்கின்றனர். காணிக்கை அளிப்பவனின் ஒழுக்கத்தின் விளைவால் இவை இரண்டும் வற்றாதனவாகின்றன. முழு நிலவு நாளிலோ, புது நிலவு நாளிலோ முதன்மையான பிராமணர்களுக்கு இந்தப் புதிர்களைக் குவிந்த கவனத்துடன் உரைப்பவனும் இத்தகைய பலன்களையே அடைகிறான்.(11) இத்தகைய மனிதன், அத்தகைய செயலின் விளைவால், அனைத்துக் கடமைகளையும் உறுதியாக நோற்பவனாகிறான். அதையுந்தவிர, அவன் முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு எப்போதும் பிடித்தமானவன் ஆகிறான்.(12) கொடூரமானவையாக வகைப்படுத்தப்படும் பயங்கரப் பாவங்களைச் செய்த மனிதனும், அறம் மற்றும் கடமை குறித்த இந்தப் புதிர்கள் சொல்லப்படும்போது கேட்பதால் மட்டுமே அவை அனைத்திலும் இருந்து தூய்மையடைந்துவிடுகிறான்” என்றான்”.(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களின் மன்னா, தேவர்களின் நெஞ்சகங்களில் அறம் மற்றும் கடமை குறித்த இந்தப் புதிர்களே வசிக்கின்றன. தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டவையும், வியாசரால் அறிவிக்கப்பட்டவையுமான அவற்றை உன்நன்மைக்காக நான் இப்போது அறிவித்திருக்கிறேன். அறம் மற்றும் கடமையை அறிந்த ஒருவன், மொத்த பூமியில் நிறைந்திருக்கும் வளங்கள் மற்றும் செல்வங்களை விட இந்தச் சிறந்த ஞானம் (மதிப்பின் அளவில்) மேன்மையானது என்று நினைக்கிறான்.(14,15) நம்பிக்கையற்ற ஒருவனுக்கோ, நாத்திகனுக்கோ, தன் வகைக்கான கடமைகளில் இருந்து வீழ்த்துவிட்டவனுக்கோ, கருணையற்றவனுக்கோ, வெற்று சச்சரவுகளைக் கொண்ட அறிவியலில் அர்ப்பணிப்புள்ளவனுக்கோ, தன் ஆசானிடம் பகைமை கொண்டிருப்பவனுக்கோ, அனைத்து உயிரினங்களும் தன்னில் இருந்து வேறுபட்டவை என்று கருதுபவனுக்கோ இந்த ஞானத்தை ஒருபோதும் போதிக்கக்கூடாது” {என்றார் பீஷ்மர்}.(16)

உணவு ஏற்றலும் தவிர்த்தலும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 135-உணவை எவரிடம் இருந்து ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பன உள்ளிட்டவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதா, இவ்வுலகில் ஒரு பிராமணன் தான் உண்ணும் உணவை யாரிடம் இருந்து ஏற்கலாம்? க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகியோரும் முறையே யாரிடம் இருந்து தங்கள் உணவை ஏற்கலாம்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“ஒரு பிராமணன், மற்றொரு பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியன் அல்லது வைசியனிடமிருந்தோ தன் உணவை ஏற்கலாமேயன்றி ஒருபோதும் ஒரு சூத்திரனிடமிருந்து உணவை ஏற்கக்கூடாது.(2)

ஒரு க்ஷத்திரியன் தன் உணவை, பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் வைசியரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எனினும், அவன் தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவர்களும், எந்த ஐயமுமின்றி அனைத்துவகை உணவுகளை உண்பவர்களுமான சூத்திரர்களால் கொடுக்கப்படும் உணவைத் தவிர்க்க வேண்டும்.(3)

ஒவ்வொரு நாளும் தங்கள் புனித நெருப்பை மூட்டுபவர்களும், குணத்தில் களங்கமில்லாதவர்களும், சாதுர்மாஸ்ய நோன்பைச் செய்பவர்களுமான வைசியர்களால் கொடுக்கப்படும் உணவைப் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் உண்ணலாம்.(4) ஆனால், ஒரு சூத்திரனிடம் இருந்து உணவை உண்ணும் மனிதன், பூமியின் மலத்தை உண்கிறான், மனித உடலின் கழிவுகளைப் பருகுகிறான், உலகம் அனைத்தின் மாசுகளை உண்கிறான்.(5)

ஒரு சூத்திரனிடம் இருந்து பெற்ற உணவை உண்பவன் பூமியின் மாசுகளையே உண்கிறான். உண்மையில், சூத்திரனிடம் இருந்து தங்கள் உணவைப் பெறும் பிராமணர்கள் பூமியின்அழுக்கையே உண்கிறார்கள்.(6)

ஒருவன் சூத்திரனுக்குத் தொண்டு செய்பவனாக இருப்பானேயானால், தன் வகைக்கான அனைத்துச் சடங்குகளையும் முறையாகச் செய்பவனாக இருந்தாலும், அவன் நரகத்தில் விழுவான். பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ இவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் அறச் சடங்களுகளை முறையாகச் செய்பவர்களாக இருந்தாலும் இழிவடைவார்கள்.(7)

வேதங்களைக் கற்பது, மனித குலத்தின் நன்மையை நாடுவது ஆகியன பிராமணனின் கடமை; மனிதர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனின் கடமை; தங்கள் பொருள் செழிப்பை ஊக்கப்படுத்துவதாகும் எனச் சொல்லப்படுகிறது.(8) ஒரு வைசியன், தன் செயல்கள் மற்றும் உழவின் கனிகளைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் வாழ்கிறான். பசுக்களை வளர்த்தல் மற்றும் வணிகமும் நிந்தனையில்லாமல் ஒரு வைசியன் செய்யக்கூடிய நியாயமான பணிகளாகும்.(9)

தனக்குரிய தொழிலைக் கைவிட்டு, சூத்திரனின் தொழிலை எடுத்துக் கொள்ளும் மனிதன், சூத்திரனாகவே கருதப்பட்டு, அவனிடம் இருந்து ஒருபோதும் உணவை ஏற்கக்கூடாது.(10) மருத்துவன், கூலிப்படையினர், வீட்டைப் பாதுகாப்பவனாகச் செயல்படும் புரோகிதன், முழுமையாக ஒரு வருடம் வேதம் ஓதியும் பயன்படாதவன் ஆகியோர் அனைவரும் சூத்திரர்களாகக் கருதப்பட வேண்டும்.(11) சூத்திரனின் வீட்டில் நடைபெறும் விழாக்களில் அளிக்கப்படும் உணவை ஆணவமாக உண்பவன் பயங்கரத் துன்பத்தால் பீடிக்கப்படுவான். தடைசெய்யப்பட்ட உணவை உண்பதன் விளைவால் அவன் தன் குடும்பத்தையும், பலத்தையும், சக்தியையும் இழந்து, இழிந்த விலங்குகளின் நிலையை அடைந்து, அறந்தவறி, அற நோன்புகள் அனைத்தும் அற்றவனாக நாயின் நிலைக்கு இழிந்தவனாகிறான்.(12,13)

ஒரு மருத்துவனிடம் உண்ணும் உணவு மலத்தைப் போன்றதாகும்; விலைமகளிடம் உண்ணும் உணவு சிறுநீரைப் போன்றதாகும்; திறம்பெற்ற இயந்திரக் கைவினைஞரின் {சிற்பிகளின்} உணவு குருதியைப் போன்றதாகும்.(14)

நல்லோரால் அங்கீகரிக்கப்பட்ட பிராமணன் ஒருவன், கல்வியின் மூலம் வாழும் ஒருவனிடம் உணவு உண்டால் அவன் சூத்திரனிடம் இருந்து உணவைப் பெற்றவனாகக் கருதப்படுகிறான். நல்லோர் அனைவரும் அத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.(15) அனைவராலும் நிந்திக்கப்படும் மனிதனின் உணவானது, குருதிக்குளத்தில் இருந்து பெறப்பட்ட உணவாகச் சொல்லப்படுகிறது. தீய மனிதனிடம் இருந்து உணவை ஏற்பவன், பிராமணனைக் கொன்றவனைப் போல நிந்திக்கத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(16)

ஒருவன் கொடையாளியால் முறையாக வரவேற்கப்படாமல் ஆதரிக்கப்படாமல் இருந்தால் அவனுடைய உணவை ஏற்கக்கூடாது. இவ்வாறு செய்யும் பிராமணன் நோயால் பீடிக்கப்படுகிறான், அவனது குலம் அழிகிறது.(17) நகரக் காவலாளியிடம் இருந்து உணவை ஏற்பதன் மூலம் ஒருவன் தள்ளிவைக்கப்பட்ட இழிந்தி நிலைக்குத் தாழ்கிறான்.(18)

பசு அல்லது பிராமணனைக் கொன்ற குற்றம் புரிந்தவன், ஆசானின் மனைவியுடன் கூடாவுறவு கொண்டவன், குடிகாரன் ஆகியோரிடம் இருந்து உணவை ஏற்கும் பிராமணன், ராட்சசர்களின் குலத்தை ஊக்குவிக்கிறான்.(19) ஓர் அலியிடம் இருந்தும், நன்றிமறந்த மனிதனிடமிருந்தும், தன்னிடம்கொடுக்கப்பட்ட செல்வத்தை அபகரித்தவனிடம் இருந்தும் உணவை ஏற்பவன், நடு நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் அமைந்திருக்கும் சவரர்களின் நாட்டில் பிறப்பான்.(20) எவரிடம் இருந்து உணவை ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பதை நான் முறையாகச் சொல்லிவிட்டேன். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இன்று இன்னமும் நீ கேட்க விரும்புவதென்ன?” என்று கேட்டார் {பீஷ்மர்}.(21)

பரிகாரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 136-கொடை பெறுவதாலும், உணவை உண்பதாலும் அடையும் பாவத்தைக் கழிப்பதற்குரிய பரிகாரணங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “யாரிடம் உணவை ஏற்கலாம், யாரிடம் கூடாது என்பதை எனக்கு நீர் முழுமையாகச் சொன்னீர்.(1) ஆனால் எனக்கு ஒன்றில் பெரும் ஐயம் நிலவுகிறது. ஓ! ஐயா, ஒரு பிராமணன் பல்வேறு வகை உணவுகளை, அதிலும் குறிப்பாகத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் படைக்கப்படும்போதும், இறந்து போன மூதாதையருக்குப் பலியுணவு படைக்கப்படும்போதும் ஏற்றுக் கொள்ளும்போது, (அவன் ஈட்டும் பாவத்திற்கு) என்ன பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லி தெளிவுபடுத்துவீராக” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இளவரசே, உயர் ஆன்ம பிராமணர்கள், பிறரிடம் இருந்து உணவை ஏற்பதால் இழைக்கப்படும் பாவத்தை எவ்வாறு கழிப்பது என்பதை உனக்குச் சொல்வேன்.(3) தெளிந்த நெய்யை ஏற்கும்போது, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது பரிகாரமாகிறது. ஓ! யுதிஷ்டிரா, எள்ளை ஏற்கும்போதும் அதே பரிகாரம் செய்யப்பட வேண்டும்.(4) இறைச்சியையோ, தேனையோ, உப்பையோ ஏற்றுக் கொள்ளும் பிராமணன், சூரியன் எழும்வரை நின்று கொண்டிருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(5) ஒரு பிராமணன் எவரிடம் இருந்தாவது தங்கத்தை ஏற்றுக் கொண்டால், பொதுமக்கள் முன்னிலையில் தன் கரத்தில் இரும்புத் துண்டை {இரும்புப் பாத்திரத்தைப்} பிடித்துக் கொண்டு வேத (காயத்ரி) துதியை அமைதியாகச் சொல்வதன் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். பணம், துணிமணிகள், பெண்கள் அல்லது தங்கத்தை ஏற்கும்போது முன்சொன்னது போலவே செய்து தூய்மையடைய வேண்டும்.(6,7)

உணவு, அல்லது பால் மற்றும் சர்க்கரையுடன் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயஸம்}, {வெல்லம், சர்க்கரை}, கரும்பு, எண்ணெய், வேறு புனித பொருட்களை ஏற்கும் ஒருவன், காலை, நடுப்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளில் நீராடுவதன் மூலம் தூய்மையடைகிறான்.(8) நெல், மலர்கள், கனிகள், நீர், மாப்பண்டம், பால், தயிர், அல்லது வேறு உணவையோ, மாவுகளையோ ஏற்றக் கொண்டால், நூறு முறை காயத்ரி துதியைச் சொல்வதே பரிகாரமாகும்.(9) ஈமச்சடங்குகளில் கொடுக்கப்படும் காலணிகள் மற்றும் உடைகளை ஏற்றால், அதே {காயத்திரி} மந்திரத்தை பக்தியுடன் நூறு முறை சொல்வது பாவத்தை அழிக்கும்.(10) கிரகணக் காலத்திலோ, தூய்மையற்ற காலத்திலோ நிலக்கொடை பெற்றால், அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருத்தல் பரிகாரமாகும்.(11) இறந்து போன மூதாதையருக்குக் காணிக்கையளிக்கப்படும் பலியுணவுகளை உண்ணும் பிராமணன், தேய்பிறை காலம் முழுவதும் பகலும், இரவும் முழுமையாக உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(12)

ஒரு பிராமணன், தூய்மைச் சடங்குகளைச் செய்யாமல் மாலை வேளை துதிகளைச் சொல்லவோ, அறம் சார்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ, இரண்டாம் முறை உணவை உண்ணவோ கூடாது. அவ்வாறு செயல்படுவதால் அவன் தூய்மையடைகிறான்.(13) இந்தக் காரணத்திற்காகவே, சிராத்தமானது பிற்பகல்வேளையில் விதிக்கப்படுகிறது, இதன் காரணமாகவே சிராத்தத்திற்கு அழைக்கப்படும் பிராமணனும் முன் கூட்டியே உணவருந்தச் செய்யப்படுகிறான்.(14) மரணம் நேர்ந்ததற்கு மூன்றாம் நாளில் இறந்த மனிதனின் வீட்டில் உணவை உண்ணும் பிராமணன், பனிரெண்டு நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை நீராடுவதால் தூய்மையடைகிறான்.(15) பனிரெண்டு நாட்கள் முடிவடைந்ததும், முறையான தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யைக் கொடுப்பதன் மூலம் அந்தப் பாவம் அழிவை அடைகிறது.(16)

ஒரு மனிதன் இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு அவனது வீட்டில் எந்த உணவையும் உண்டால், அவன் முன்பு சொல்லப்பட்டுள்ள அனைத்துப் பரிகாரங்களையும் செய்து, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லி பாவத்தை அழிக்கும் இஷ்டி மற்றும் கஷ்மாண்ட தவங்களைச் செய்ய வேண்டும்[1].(17) இறந்தவனின் வீட்டில் மூன்று இரவுகள் உணவை உண்ணும் பிராமணன், ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளும் மும்மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து தூய்மையடைந்து, அதன் மூலம் தன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, ஒரு போதும் ஆபத்துகளில் சிக்காதவனாக இருப்பான்.(18,19) சூத்திரர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், முறையாகத் தூய்மைச் சடங்குகளை நோற்பதன் மூலம் மாசுகள் அனைத்தையும் அழிக்கிறான்.(20) வைசியர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், அடுத்தடுத்து மூன்று இரவுகள் பிச்சையெடுத்து வாழ்வதன் மூலம் தன் பாவத்தைக் கழிக்கிறான்.(21) க்ஷத்திரியர்களுடன் சேர்ந்து தன் உணவை உண்ணும் பிராமணன், தான் உடுத்திய உடையுடனே நீராடுவதன் மூலம் பரிகாரத்தைச் செய்தவனாவான்.(22){தகாதவனான} ஒரு சூத்திரனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு சூத்திரன் தன் குடும்ப மதிப்பை இழக்கிறான்; {தகாதவனான} ஒரு வைசியனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு வைசியன் தன் கால்நடைகளையும் {பசுக்களையும்}, நண்பர்களையும் இழக்கிறான். ஒரு க்ஷத்திரியன் தன் செழிப்பையும், ஒரு பிராமணன் தன் காந்தி மற்றும் சக்தியையும் {பிரம்மதேஜஸை} இழக்கின்றனர்.(23) இத்தகைய வழக்குகளில், பரிகாரங்களும் தணிவடையச் செய்யும் சடங்குகளும் செய்யப்பட்டு, தேவர்களுக்குப் பலியுணவுகள் காணிக்கையளிக்கப்பட வேண்டும். பாவத்தை அழிக்கும் நோக்கில் சாவித்திரி மந்திரம் உரைக்கப்பட வேண்டும், ரேவதி சடங்குகளும், கஷ்மாண்ட தவங்களும் செய்யப்பட வேண்டும்.(24) மேற்கண்ட நான்கு வகையினரில் எவரும், வேறு வகை மனிதனால் உண்ணப்பட்ட உணவை உண்டால், நிச்சயம் கோரோசனை, அறுகம்புல், மஞ்சள், சந்தனம் முதலிய மங்கலப் பொருட்களை உடல் முழுவதும் பூசிக் கொள்வதே பரிகாரம்” என்றார் {பீஷ்மர்}.(25)

மேலகம் அடைந்தவர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 137-தவங்கள், கொடைகள், வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தையும், பிற மேன்மையான உலகங்களையும் அடைந்தவர்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, இவ்வுலகில் ஈகை {தானம்} மற்றும் அர்ப்பணிப்பு {தவம்} ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பதை எனக்குச் சொல்ல வேண்டும். இதன் மூலம் என் மனத்தில் உள்ள பெரும் ஐயத்தை நீர் நீக்க வேண்டும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்திற்கு அர்ப்பணிப்புடன், தவங்களால் தங்கள் இதயங்களைத் தூய்மை செய்து கொண்டு, கொடைகளையும் பிற அறச் செயல்களையும் செய்து, வெவ்வேறு தெய்வீக உலகங்களை அடைந்த இளவரசர்களின் பெயர்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) ஓ! ஏகாதிபதி, அனைவராலும் கொண்டாடப்படும் முனிவர் ஆத்ரேயர், தமது சீடர்களுக்குத் தடையற்ற பரம்பொருளின் {நிர்க்குண பிரம்மத்தின்} அறிவைப் போதித்துச் சிறந்த தெய்வீக உலகங்களை அடைந்தார்.(3) உசீனரனின் மகனான மன்னன் சிபி, ஒரு பிராமணனின் நன்மைக்காகத் தன் அன்புக்குரிய மகனின் உயிரைக் காணிக்கையளித்து இவ்வுலகில் இருந்து மறுவுலகதிதற்குச் சென்றான்.(4) காசியின் மன்னனான பிரதர்த்தனன் ஒரு பிராமணருக்குத் தன் மகனைக் கொடுத்ததன் மூலம் இவ்வுலகிலும், மறுவுலகிலும் தனக்கெனத் தனிப்பட்ட இறவாப்புகழை அடைந்தான்.(5) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு முறையாகக் கொடைகளை அளித்து உயர்ந்த சொர்க்கத்தை அடைந்தான்.(6) தேவவிரதன், ஒரு வேள்வியில் நூறு விலாக்கள் கொண்ட சிறந்த தங்கக் குடை ஒன்றை ஒரு பிராமணனுக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(7) வழிபடத்தகுந்த அம்பரீஷனும், பெருஞ்சக்தியைக் கொண்ட ஒரு பிராமணனுக்குத் தன் நாடு முழுவதையும் கொடையாக அளித்துத் தேவர்களின் உலகை அடைந்தான்.(8)

சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னன் ஜனமேஜயன் பிராமணர்களுக்குக் காது குண்டலங்களையும், சிறந்த வாகனங்களையும், பசுக்களையும் கொடையளித்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(9) அரச முனியான விருஷாதர்ப்பி, பிராமணர்களுக்குப் பல்வேறு நகை ஆபரணங்களையும், அழகிய வீடுகளையும் கொடையளித்துச் சொர்க்கதிதற்குச் சென்றான்.(10) விதர்ப்பத்தைச் சேர்ந்த மன்னன் நிமி, உயர் ஆன்ம அகஸ்தியருக்குத் தன் மகளையும், நாட்டையும் கொடையாள அளித்துத் தன் மகன்கள், நண்பர்கள் மற்றும் பசுக்களுடன் சொர்க்கத்தை அடைந்தான்.(11) பெரும்புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனுமான ராமர், பிராமணர்களுக்கு நிலக்கொடைகளை அளித்து, எதிர்பார்ப்பைக் கடந்த நித்திய உலகங்களை அடைந்தார்.(12)

பிராமணர்களின் இளவரசரான வசிஷ்டர், பர்ஜன்ய தேவன் பூமியில் தன் அருள் மழையைப் பொழியாமல் இருந்த போது நேர்ந்த பெரும்பஞ்சத்தில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, அந்தச் செயலின் மூலம் நித்திய அருளை தாமே அடைந்தார்.(13) இவ்வுலகில் மிக உயர்ந்த புகழைக் கொண்டவனும், தசரதனின் மகனுமான ராமன், வேள்விகளில் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்து நித்திய உலகங்களை அடைந்தான்.(14) பெரும் புகழைக் கொண்டவனும், அரசமுனியுமான கக்ஷஸேனன், முறையாக உயர் ஆன்ம வசிஷ்டருக்குச் செல்வத்தைக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15) அவிக்ஷித்தின் மகனும், கரந்தமனின் பேரனுமான மருத்தன்அங்கிரசுக்குத் தன் மகளைக் கொடுத்ததன் மூலம் உடனே சொர்க்கத்திற்குச் சென்றான்.(16)

உயர்ந்த பக்தியைக் கொண்ட பாஞ்சால மன்னன் பிரம்மதத்தன், விலைமதிப்புமிக்கச் சங்கு ஒன்றைக் கொடையளித்ததன் மூலம் அருள்வழியை அடைந்தான்.(17) மன்னன் மித்ரஸஹன்தனக்குப் பிடித்த மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(18)

மனுவின் மகனான ஸுத்யும்னன், உயர் ஆன்ம லிகிதருக்கு உரிய தண்டையைக் கொடுத்ததன் மூலம் பேரருள் நிறைந்த உலகங்களை அடைந்தான்.(19) கொண்டாடப்பட்ட அரசமுனியான சஹஸ்ரசித்தன், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே தியாகம் செய்ததன் மூலம் அருள் உலகங்களுக்குச் சென்றான்.(20)

மன்னன் சதத்யும்னன், பெரும் அளவிலான இன்பப் பொருட்கள் அனைத்துடன் கூடிய ஒரு பொன்மாளிகையை மௌத்கலருக்கு {மொத்கல்யருக்குக்} கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) பழங்காலத்தில் மன்னன் சுமன்யு, மலை போல் தெரிந்த உணவுக் குவியல்களைச் சாண்டில்யருக்குக் கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(22) பெருங்காந்தியைக் கொண்ட சால்வ இளவரசன் தியுமத் {தியுமான்} தன் நாட்டை ரிசீகருக்குக் கொடுத்து உயர்ந்த உலகங்களை அடைந்தான்.(23)

அரச முனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்ததன் மூலம் தேவர்களின் உலகத்திற்குச் சென்றார்.(24)

தலைமைத்துவம் கொண்ட லோமபாதன், தன் மகளான சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து, தன் ஆசைக்குகந்த அனைத்துப் பொருட்களையும் பெருமளவில் பெற்றான்.(25)

அரச முனியான பகீரதன், ஹம்ஸி என்ற தன் புகழ்பெற்ற மகளைக் கௌஸ்தருக்குக் கொடுத்து நித்திய உலகங்களுக்குச் சென்றான்.(26) மன்னன் பகீரதன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பசுக்களைக் கன்றுகளுடன் சேர்த்துக் கோகலருக்குக் கொடுத்து அருள்மிகுந்த உலகங்களை அடைந்தான்.(27)

ஓ! யுதிஷ்டிரா, இவர்களும், இன்னும் பல மனிதர்களும் தாங்கள் செய்த ஈகை, தவங்கள் ஆகியவற்றால் சொர்க்கத்தை அடைந்து, அங்கிருந்து மீண்டும் மீண்டும் திரும்புகின்றனர்.(28) அவர்களுடைய புகழ் இந்த உலகங்கள் உள்ளளவும் நீடித்திருக்கும். ஓ! யுதிஷ்டிரா, ஈகை மற்று தவங்களின் மூலம் நித்திய உலகங்களை அடைந்த நல்ல இல்லறத்தோரின் கதையை நான் உனக்குச் சொன்னேன்.(29) தங்கள் ஈகையின் மூலமும், தாங்கள் செய்த வேள்விகளின் மூலமும், சந்ததியை உண்டாக்கியதன் மூலமும் இந்த மக்கள் சொர்க்கலோகங்களை அடைந்தனர்.(30) ஓ! குரு குலக்கொழுந்துகளில் முதன்மையானவனே, ஈகைச்செயல்களை எப்போதும் செய்வதன் மூலம் இம்மனிதர்கள் தங்கள் அறம் சார்ந்த புத்தியை வேள்விகள் செய்வதிலும், கொடையளிப்பதிலும் செலுத்தினர்.(31) ஓ வலிமைமிக்க இளவரசே, இரவு வருகிறது, உன் மனத்தில் எழும் எந்த ஐயத்திற்கும் காலையில் நான் விளக்கமளிப்பேன்” என்றார் {பீஷ்மர்}.(32)

ஐவகை தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 138-ஐந்து வகை தானங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஓ! கொடையறத்தைப் பின்பற்றி வாய்மை நோன்பை நோற்பதில் பெரும் சக்தி கொண்டவரே, சொர்க்கத்திற்கு உயர்ந்த மன்னர்களின் பெயர்களை நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(1) கொடைக்களிக்கப்பட வேண்டிய கொடைகளில் எத்தனை வகை உள்ளன? பல்வேறு வகையான அந்தக் கொடைகளின் கனிகள் முறையே என்னென்ன?(2) என்ன காரணங்களுக்காக, எந்த மனிதர்களுக்குக் கொடுக்கப்படும், என்ன வகைக் கொடைகள் பலன்களை உண்டாக்குகின்றன? என்ன காரணங்களுக்காக எத்தனை வகைக் கொடைகள் அளிக்கப்படுகின்றன? இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, ஓ! பாவமற்றவனே, கொடைகள் குறித்துச் சொல்கிறேன் விரிவாகக் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாரதா, அனைத்து வகை மனிதர்களுக்கும் கொடைகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) ஓ! பாரதா, பலன் {அறம்} விரும்பியும், லாபம் {பொருள்} விரும்பியும், அச்சத்தின் மூலமும், சுதந்திரத் தேர்வு {ஆசை} மூலமும், கருணை மூலமும் கொடைகள் அளிக்கப்படுகின்றன. எனவே, கொடைகள் ஐவகையானவை என்று அறியப்பட வேண்டும். கொடைகள் இவ்வாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுவதற்கான காரணங்களை இப்போது கேட்பாயாக.(5)

ஒருவன் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையிலும் பேரின்பத்தையும் அடைவான் என்பதால் வன்மத்தில் இருந்து விடுபட்ட மனத்துடன் அவன் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். (அத்தகைய கொடைகள் பலன் விரும்பி அளிக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(6)

அவன் கொடையளிப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறான்; அல்லது அவன் கொடையளிப்பான்; அல்லது அவன் ஏற்கனவே எனக்குக் கொடையளித்திருக்கிறான். வேண்டுபவர்களின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு, வேண்டுவோரில் குறிப்பிட்டவனுக்கு ஒருவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொடுக்கிறான். (இத்தகைய கொடைகள் லாபம் விரும்பி அளிக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன).(7)

நான் அவனுடையவனல்ல; அதேபோல அவனும் என்னுடையவனல்ல. அலட்சியப்படுத்தப்பட்டால் அவன் எனக்குத் தீங்கிழைக்கக்கூடும். இத்தகைய அச்ச நோக்கங்களில் கல்வியும், ஞானமும் கொண்ட ஒரு மனிதன் கூட, ஓர் இழிந்த மூடனுக்குக் கொடைகளை அளிக்கக்கூடும். (இத்தகைய கொடைகள் அச்சத்தால் கொடுக்கப்படுபவை எனக் கருதப்படுகின்றன).(8)

இவன் எனது அன்புக்குரியவன். நானும் அவனது அன்புக்குரியவன். இத்தகைய கருத்துகளின் ஆதிக்கத்தில் புத்தியுள்ள ஒருவன், சுதந்திரமாகவும், சுறுசுறுப்புடனும் ஒரு நண்பனுக்குக் கொடையளிக்கிறான். (இத்தகைய கொடைகள் சுதந்திரத் தேர்வின் மூலம் கொடுக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(9)

என்னை வேண்டிக் கேட்பவன் ஓர் ஏழை. மேலும் அவன் சிறிதளவிலேயே நிறைவடைகிறான். இத்தகைய கருத்துகளின் மூலம் ஒருவன் எப்போதும் கருணையால் உந்தப்பட்டு ஓர் ஏழைக்குக் கொடைகளை அளிக்க வேண்டும். (இத்தகைய கருத்துகளின் மூலம் கொடுக்கப்படும் கொடைகள் கருணையால் கொடுக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(10)

இவையே ஐவகைக் கொடைகளாகும். இவை கொடையாளின் பலனையும், புகழையும் பெருக்குகின்றன. அனைத்து உயிரினங்களின் தலைவனை (பிரம்மனே), ஒருவன் தன் சக்திக்கேற்றபடி எப்போதும் கொடைகளையளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(11)

வாசுதேவதவம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 139-முகத்திலுண்டான நெருப்பால் மலையை எரித்த கிருஷ்ணன்; அம்மலையைச் செழிக்கச் செய்தது; அதன் காரணத்தை முனிவர்களுக்குச் சொன்னது; தவசிகளை நல்லுரை வழங்கும்படி கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்; தவசிகள் அப்பணிக்கு நாரதரைத் தேர்ந்தெடுத்தது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீர் பெரும் ஞானத்தைக் கொண்டிருக்கிறீர். உண்மையில், கல்வியின் அனைத்து வகைகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். நமது பெருங்குலத்தில் நீர் மட்டுமே அனைத்து அறிவியல்களுடனும் பெருகியிருக்கிறீர்.(1) அறம் மற்றும் பொருள் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்ததும், மறுமையில் இன்பத்திற்கு வழிவகுப்பதும், அனைத்து உயிரினங்களுக்கும் ஆச்சரியம் நிறைந்ததுமான உரையை உம்மிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன்.(2) வந்திருக்கும் காலமானது துன்பம் நிறைந்ததாகும். நமக்குச் சுற்றத்தாரும், நண்பரும் இருப்பதை அது விரும்பவில்லை. உண்மையில், ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நம்மிடம் உம்மைத் தவிரப் போதகராக இருக்கத்தகுந்த வேறு எவரும் இல்லை.(3) ஓ! பாவமற்றவரே, நானும், என் தம்பிகளும் உமது உதவியைப் பெறத் தகுந்தவர்களாக இருந்தால், நான் உம்மைக் கேட்க விரும்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதே உமக்குத் தகும்.(4) இவன் அனைத்து வகைச் செழிப்பைக் கொண்டவனும், மன்னர்கள் அனைவராலும் கௌரவிக்கப்படுபவனுமான நாராயணன் ஆவான். இவனும் உம்மைப் பெரிதும் மதித்து, உமக்காகக் காத்திருக்கிறான்.(5) வாசுதேவன் மற்றும் இந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் எனக்கும் என் தம்பிகளுக்குமான நன்மைக்காக நீர் அன்புடன் என்னோடு உரையாடுவதே உமக்குத் தகும்” என்றான்”.(6)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் யுதிஷ்டிரனின் இச்சொற்களைக் கேட்டவரும், பகீரதனின் பெயரால் அழைக்கப்பட்ட ஆற்றின் மகனுமான பீஷ்மர், அந்த ஏகாதிபதியிடமும், அவனது தம்பிகளிடமும் கொண்ட அன்பின் விளைவால் மகிழ்ச்சியால் நிறைந்து பின் வருவனவற்றைச் சொன்னார்[1].(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இனிமை நிறைந்ததும், பழங்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டதுமான இந்த விஷ்ணுவின் மகிமை குறித்து (நான் என் ஆசான்களிடம் இருந்து) கேட்டவாறு நிச்சயம் உனக்குச் சொல்வேன். மேலும், காளைமாட்டைத் தன் அடையாளமாகக் கொண்ட பெருந்தேவனின் பலத்தையும் {மகிமையையும்} நான் விளக்கிச் சொல்வேன் கேட்பாயாக. ருத்திரன் மற்றும் ருத்திரனுடைய மனைவியின் மனங்களில் நிறைந்திருந்த ஐயத்தையும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9)

அற ஆன்மா கொண்டவனான கிருஷ்ணன், ஒரு காலத்தில் பனிரெண்டு வருடங்கள் நீண்ட ஒரு நோன்பை நோற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பெரும் நோன்பை நோற்பதற்கான தொடக்கச் சடங்குகளைச் செய்திருந்த அவனைக் காண[2] நாரதர், பர்வதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அமைதியாகப் பேசுபவர்களில் முதன்மையான தௌம்யர், தேவலர், காஸ்யபர், ஹஸ்திகாஸ்யபர் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்தனர்.(10,11) தீக்ஷையுடன் கூடியவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களுமான பிற முனிவர்கள், தங்கள் சீடர்களால் பின்தொடரப்பட்டும், பல சித்தர்கள் மற்றும் பெருந்தகுதியைக் கொண்ட தவசிகள் பலரின் துணையுடனும் அங்கே வந்தனர்.(12) தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, உயர்ந்த புகழுக்குத் தகுந்ததும், தேவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதுமான விருந்தோம்பல் கௌரவங்களை அவர்களுக்கு அளித்தான்.(13) பச்சை நிறத்தில் இருந்தவையும், தங்க நிறத்தில் இருந்தவையும், மயிலின் தோக வண்ணத்தில் இருந்தவையும், முற்றிலும் புதியவையாக இருந்தவையுமான இருக்கைகளில் அந்தப் பெரும் முனிவர்கள் அமர்ந்தனர்.(14) இவ்வாறு அமர்ந்த அவர்கள் அறம் மற்றும் கடமை தொடர்பான காரியங்களைக் குறித்து அரச முனிகள் பலருடனும், தேவர்களுடனும் சேர்ந்து இனிமையாக உரையாடத் தொடங்கினர்.(15)அந்நேரத்தில், கடும் நோன்புகளெனும் விறகில் எழுந்த நெருப்பின் வடிவிலான நாராயணனின் சக்தியானது, அற்புதச் சாதனைகள் கொண்ட கிருஷ்ணனின் வாயிலிருந்து வெளிப்பட்டது.(16) மரங்கள், செடிகொடிகள், பறவைகள், மான்கள், இரைதேடும் விலங்குகள், ஊர்வன ஆகியவற்றுடன் கூடிய மலைகளை அந்நெருப்பு எரிக்கத் தொடங்கியது.(17) விரைவிலேயே அந்த மலையின் சிகரம் துன்பம் நிறைந்த பரிதாபகரமான தோற்றத்தை அளித்தது. அந்தச் சிகரத்தில் வசித்து வந்த பல்வேறு வகை விலங்குகள் துன்பத்தால் அலறி ஓலமிட்டன. விரைவில் அச்சிகரம் அனைத்து உயிரினங்களும் இல்லாததானது.(18) வலிமைமிக்கத் தழல்களைக் கொண்ட அந்நெருப்பு எஞ்ச ஏதுமில்லாமல் அனைத்தையும் எரித்துவிட்டு இறுதியாகப் பணிவான சீடனைப் போல விஷ்ணுவிடம் திரும்பி வந்து, அவனது பாதங்களைத தீண்டியது.(19) பகைவர்களை நொறுக்குபவனான கிருஷ்ணன், அம்மலை எரிந்ததைக் கண்டு நலம்பயக்கும் அருள்பார்வையை அதில் செலுத்தி, மீண்டும் அதைப் பழைய நிலைக்கே கொண்டு வந்தான்.(20) அதன் பேரில், அந்த மலையானது, மலர்ந்திருக்கும் மரஞ்செடிகொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் பறவைகள், மான்கள், இரைதேடும் விலங்குகள் மற்றும் ஊர்வனவற்றின் இனிய ஒலிகள் மற்றும் முழக்கங்களை எதிரொலித்தது.(21) நினைத்தற்கரிய, அற்புதம் நிறைந்த அந்தக் காட்சியைக் கண்ட தவசிகள் அனைவரும் வியப்படைந்தனர். பார்வை கண்ணீரால் தடைபட்டு, மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர்.(22)

பேசுபவர்களில் முதன்மையான நாராயணன், இவ்வாறு ஆச்சரியத்தில் நிறைந்த முனிவர்களைக் கண்டு புத்துணர்ச்சியை அளிக்கும் இந்த இனிய சொற்களைச் சொன்னான்:(23) “உண்மையில், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவர்களும், மமதையற்றவர்களும், புனித அறிவியல் அனைத்தையும் முழுமையாக அறிந்தவர்களுமான இந்தத் தவசிகளும், முனிவர்க்கூட்டங்களும் ஏன் இதயம் நிறைந்த ஆச்சரியத்துடன் இருக்கிறார்கள்?(24) தவங்களைச் செல்வமாகக் கொண்டவர்களும், அனைத்து வகைக் களங்கங்களிருந்தும் விடுபட்டவர்களுமான இந்த முனிவர்கள், என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்திற்கு உண்மையில் விளக்கம் அளிப்பதே தகும்” என்றான்.(25)

முனிவர்கள், “உலகங்கள் அனைத்தையும் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. குளிர் காலமாகவும், கோடைக்காலமாகவும், மழைக்காலமாகவும் இருப்பவன் நீயே.(26) உலகில் தோன்றும் அசைவன, அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்திற்கும், தந்தையும், தாயும், ஆசானும், தோற்றமும் நீயே.(27) ஓ! மதுசூதனா, எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதும், ஐயங்கொள்ள வைப்பதும் இதுவே. ஓ! மங்கலங்கள் அனைத்தின் பிறப்பிடமே, உன் வாயில் வெளிப்பட்ட நெருப்பு குறித்த எங்கள் ஐயத்தை விலகச் செய்வதே உனக்குத் தகும்.(28) ஓ! ஹரியே, எங்கள் அச்சம் விலகியதும் நாங்கள் கேட்டதையும் கண்டதையும் உனக்கு உரைக்கின்றோம்” என்றனர்.(29)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “காந்தியில் அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்புக்கு ஒப்பானதும், இந்த மலையை நொறுக்கி, எரித்ததும், என் வாயில் இருந்து வெளிப்பட்டதுமான அந்த நெருப்பு விஷ்ணுவின் சக்தியேயன்றி வேறேதுமில்லை.(30) முனிவர்களே, நீங்கள் கோபத்தை அடக்கியவர்களும், புலன்களை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவந்தவர்களும், தவமென்ற செல்வத்துடன் கூடியவர்களும், தேவ பலம் கொண்டவர்களாக இருப்பவர்களாவீர். இருப்பினும் நீங்கள் கலக்கத்தையும், துன்பத்தையும் அனுபவத்திருக்கிறீர்கள்.(31) நான் இப்போது ஒரு கடும் நோன்பு தொடர்பான நியமங்களில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். உண்மையில் ஒரு தவசியின் நோன்புகளை நான் நோற்பதன் விளைவாலேயே நெருப்பானது என் வாயில் இருந்து வெளிப்பட்டது. இதற்காக நீங்கள் கலங்குவது உங்களுக்குத் தகாது.(32) கடும் நோன்பை நோற்கவே இனிமைநிறைந்த இந்த மங்கலமான மலைக்கு நான் வந்தேன். தவத்தின் உதவியால் சக்தியில் எனக்கு இணையான ஒரு மகனைப் பெறும் நோக்கமே என்னை இங்கே கொண்டு வந்தது.(33) என் தவங்களின் விளைவால், என் உடலில் உள்ள ஆன்மாவானது நெருப்பாக மாறி என் வாயில் வெளிப்பட்டது. அந்த நெருப்பானது, வரமளிப்பவரான அண்டமனைத்திற்கும் பெரும்பாட்டனை {பிரம்மனைக்} காணச் சென்றது.(34)

தவசிகளில் முதன்மையானவர்களே, பெரும்பாட்டன் என் ஆன்மாவிடம், காளையைக் கொடியில் கொண்ட பெருந்தேவனின் சக்தியில் பாதியைக் கொண்ட மகன் எனக்குப் பிறப்பான என்று சொன்னார்[3].(35) தன் காரியத்தை முடித்துத் திரும்பிய அந்த நெருப்பானது, என்னிடம் வந்து, கடமையுணர்வுமிக்க ஒரு சீடனைப் போல என் பாதங்களை அணுகியிருக்கிறது. உண்மையில் தன் சீற்றத்தைக் கைவிட்டு தனக்குரிய இயல்புடனேயே அது திரும்பியிருக்கிறது.(36) தாமரையையே தன் பிறப்பிடமாகவும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவர் தொடர்பான ஒரு புதிரை உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நீங்கள் அச்சத்தின் வசப்படக்கூடாது.(37) தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் நீங்கள். எத்தடையுமின்றி எந்த இடத்திற்கும் செல்பவர்கள் நீங்கள். தவசிகளால் நோற்கப்படும் நோன்புகளால் சுடர்விடும் நீங்கள் ஞானத்தாலும், அறிவியலாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.(38) பூமியிலோ, சொர்க்கத்திலோ நீங்கள் கேட்ட அல்லது கண்ட அற்புதம் நிறைந்த காரியங்களை எனக்குச் சொல்ல வேண்டுமென உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.(39) உங்கள் உதடுகள் சிந்தும் உரையெனும் தேன்துளியைச் சுவைக்க ஆவலுடன் இருக்கிறேன். அமுதத் தாரை போல அந்தத் தேன் நிச்சயம் இனிமையாகவே இருக்கும்.(40)தேவர்களைப் போலத் தெரியும் முனிவர்களே, நீங்கள் அறியாததும், இனிமை நிறைந்ததும், அற்புதம் நிறைந்ததுமான தன்மை எதையும் பூமியிலோ, சொர்க்கத்திலோ நான் கண்டிருந்தால், எதனாலும் தடுக்கப்பட இயலாத என் உயர்ந்த இயல்பின் விளைவாக அஃது இருக்கும் என நான் சொல்லிக் கொள்கிறேன். அற்புதம் நிறைந்த ஞானம் ஏதும் என்னிடம் இருந்தாலோ, என் மனவெழுச்சியினால் அடையப்பட்டிருந்தாலோ அஃது எனக்கு அற்புதம் நிறைந்ததாகவே தெரிவதில்லை.(41,42) எனினும், பக்திமான்களால் உரைக்கப்படுவதும், நல்லோரிடம் கேட்கப்படுவதுமான எதுவும் மதிப்புடனும், நம்பிக்கையுடனும் ஏற்றக்கொள்ளத் தகுந்ததாகும். பூமியில் அத்தகைய உரைகள் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துகளாக நீண்ட காலம் நீடித்து நிலைத்து இருக்கின்றன.(43) எனவே, நம்முடைய இந்தச் சந்திப்பில், நல்லோரும், நல்லோரை உண்டாக்கத் தவறாதவர்களுமான மனிதர்களின் உதடுகள் சிந்தும் எதையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான் வாசுதேவன் {கிருஷ்ணன்}.(44)

கிருஷ்ணனின் இந்தச் சொற்களைக் கேட்ட தவசிகள் அனைவரும் வியப்பால் நிறைந்தனர். அவர்கள், தாமரை இதழ்களைப் போன்ற நீண்டவையும், அழகியவையுமான தங்கள் கண்களைக் கொண்டு ஜனார்த்தனனைப் பார்க்கத் தொடங்கினர்[4].(45) சிலர் அவனைப் புகழத் தொடங்கினர், சிலர் அவனை மதிப்புடன் வழிபடத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அனைவரும் நித்தியமான ரிக்குகளில் அலங்கரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்ட சொற்களால் மதுசூதனனைப் புகழ்ந்து பாடினர்.(46) பிறகு அந்தத் தவசிகள் அனைவரும் பேச்சை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நாரதரை, வாசுதேவனின் வேண்டுகோளை நிறைவடையச் செய்ய நியமித்தனர்.(47)தவசிகள், “ஓ! நாரதரே, ஓ! பலமிக்கவரே, ஓ! தவசியே, நாம் புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் {தீர்த்தயாத்திரை} செல்லும்போது இமய மலைகளில் நாம் கண்ட ஆச்சரியம் நிறைந்த, நினைத்தற்கரிய நிகழ்வை, ரிஷிகேசனுக்குத் தொடக்கம் முதல் விரிவாக முழுமையாகச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில், இங்கே கூடியிருக்கும் முனிவர்கள் அனைவரின் நன்மைக்காகவும் அந்த நிகழ்வை உரைப்பதே உமக்குத் தகும்” என்றனர்.(48,49) இவ்வாறு அத்தவசிகளால் சொல்லப்பட்டதும், தேவ முனிவரான தெய்வீக நாரதர், சில காலத்திற்கு முன் நிகழ்ந்த பின் வரும் கதையை உரைத்தார்” என்றார் {பீஷ்மர்}.(50)

ஐயனின் கண்மறைத்த அம்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 140-மஹேஸ்வரனின் கண்களை உமாதேவி மூடியதால் உண்டான மூன்றாவது கண்; இமய மலை எரிக்கப்பட்டு மீட்கப்பட்டது; காரணங்களைச் சொன்ன மஹேஸ்வரன்; நான்கு தலைகளின் தன்மைகளைக் குறித்துக் கேட்ட உமாதேவி…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது, புனிதமான முனிவரும், நாராயணனின் நண்பருமான நாரதர், சங்கரனுக்கும், அவனது மனைவியான உமைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பின்வரும் கதையைச் சொன்னார்.(1)

நாரதர், “ஒரு காலத்தில், தேவர்கள் அனைவரிலும் அற ஆன்மா கொண்டவனும், காளையைத் தன் கொடியில் கொண்டவனுமான மஹாதேவன், சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி சென்று வரும் புனிதமான இமய மலைகளில் கடுந்தவம் செய்து வந்தான்.(2) இனிமை நிறைந்த அம்மலைகள், பல்வேறு வகை மூலிகைகள் அதிகமாக வளர்ந்திருப்பவையும், பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையுமாக இருந்தன. இந்த நேரத்தில் அவை பல்வேறு இனக்கூட்டங்களைச் சேர்ந்த அப்சரஸ்களாலும், பூத கணங்களாலும் நிறைந்திருந்தன.(3) மகிழ்ச்சியால் நிறைந்தவனாக, பார்ப்பவர்களின் கண்களுக்குப் பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பூதகணங்களால் சூழப்பட்டவனாக அங்கே அந்தப் பெருந்தேவன் அமர்ந்திருந்தான். அவர்களில் சிலர் கோரமாகவும், அருவருக்கத்தகுந்தவர்களாகவும் இருந்தனர், சிலர் மிக அழகிய குணங்களைப் பெற்றிருந்தனர், வேறு சிலர் மிக அற்புதமான தோற்றங்களில் இருந்தன.(4) அவர்களில் சிலருடைய முகங்கள் சிங்கம் போன்றவையாகவும், சிலருக்கு புலியைப் போன்றவையாகவும், சிலருக்கு யானையைப் போன்றவையாகவும் இருந்தன. உண்மையில், அந்தப் பூத கணங்களின் முகங்கள் பல்வேறு வகை விலங்குகளின் முகங்களைப் போல இருந்தன. சிலருக்கு நரிக்கு ஒப்பான முகமும், சிலருக்கு சிறுத்தையின் முகமும், சிலருக்கு குரங்கின் முகமும், சிலருக்கு காளையின் முகமும் இருந்தன.(5) சிலருடைய முகங்கள் ஆந்தைகளைப் போலவும், சிலருக்கு பருந்துகளைப் போலவும், சிலருக்கு பல்வேறு வகை மான்களின் முகங்களைப் போலவும் இருந்தன.(6)

அந்தப் பெருந்தேவன், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் மற்றும் பல்வேறு வகைப் பூதங்கள் சூழ இருந்தான். மஹாதேவன் இருந்த வனம், தெய்வீக மலர்கள் நிறைந்ததாகவும், தெய்வீக ஒளிக்கதிர்களால் சுடர்விடுவதாகவும் இருந்தது.(7) அது தெய்வீக சந்தனத்தின் நறுமணத்துடன் இருந்தது, அனைத்துப் புறங்களிலும் தெய்வீக சாம்பிராணி எரிக்கப்பட்டது. மேலும் அது தெய்வீக இசைக்கருவிகளின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) உண்மையில், மிருதங்கங்கள், பணவங்கள் {முரசுகள்}, சங்கங்கள், மற்றும் பேரிகைகளின் ஒலிகள் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன. அங்கே பல்வேறு வகைப் பூதகணங்கள், தோகை விரிந்த மயில்களுடன் மகிழ்ச்சிக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர்.(9) இவ்வாறு அமைந்திருந்த தெய்வீக முனிவர்களுடைய அந்த வனத்தில், அப்சரஸ்கள் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தனர். அந்த இடமானது பார்வைக்கு இனிமை நிறைந்ததாக இருந்தது. சொர்க்கத்திற்கு ஒப்பான அது பேரழகுடன் திகழ்ந்தது. உண்மையில் அங்கே மொத்த சூழலும் அற்புதம் நிறைந்ததாகவும், விவரிக்க இயலாத அழகும், இனிமையும் கொண்டதாவும் இருந்தது.(10)

மலைச்சாரல்களில் உறங்கும் அந்தப் பெருந்தேவனின் தவங்களால் அந்த மலைகளின் இளவரசன் {இமவான் / இமய மலை} பேரெழிலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். வேதமோதுவதில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களால் ஓதப்படும் வேதங்கள் அங்கே முழங்கிக் கொண்டிருந்தன. ஓ! மாதவா, வண்டுகளின் ரீங்காரத்தை எதிரொலித்துக் கொண்டிருந்த அம்மலை ஒப்பற்ற அழகுடையதாகத் திகழ்ந்தது.(11) ஓ! ஜனார்த்தனா, பெருவிழாவைப் போலத் தெரிந்தவனும் கடும் வடிவம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனைக் கண்ட தவசிகள் பேரின்பத்தால் நிறைந்தனர்.(12) உயர்வாக அருளப்பட்ட தவசிகள், உயிர்வித்தை உள்ளிழுத்தவர்களான சித்தர்கள், மருத்துகள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், வாசவன் {இந்திரன்},(13) யக்ஷர்கள், நாகர்கள், பிசாசங்கள், லோகபாலர்கள், பல்வேறு புனித நெருப்புகள், காற்றுகள் மற்றும் பெரும்பூதங்கள் அனைவரும் யோகத்தில் குவிந்த மனங்களுடன் அந்த மலையில் வசித்து வந்தனர்.(14) பருவ காலங்கள் அனைத்தும் அங்கே இருந்தன, அவை அங்கே பல்வேறு வகைச் சிறந்த மலர்களைச் சிதறிக் கிடக்கச் செய்தன. பல்வேறு வகைச் சுடர்மிக்க மூலிகைகள் {ஜோதிலதைகள்} அந்த மலையில் இருந்த வனங்களுக்கும், காடுகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.(15)

மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பல்வேறு வகைப் பறவைகள், இனிமைநிறைந்த அந்த மலைச்சாரலில் தத்தி நடந்த படியே இன்பமாகப் பாடிக் கொண்டிருந்தன. அவை வெளியிட்டுக் கொண்டிருந்த இசையொலியின் விளைவால் அந்தப் பறவைகள் மிகவும் விரும்பத்தக்கனவாக இருந்தன.(16)  சிறந்த படுக்கையாகச் செயல்படுவதைப் போன்றிருந்ததும், சிறந்த தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சிகரங்களில் ஒன்றில் உயர் ஆன்ம மஹாதேவன் அமர்ந்திருந்தான்.(17) இடையைச் சுற்றிலும் புலித்தோலையும், மேலாடையாகச் சிங்கத் தோலையும் அவன் உடுத்தியிருந்தான். ஒரு பாம்பு அவனது புனித நூலாக {பூணூலாக} இருந்தது. அவனுடைய தோள்கள் சிவப்பு அங்கதங்கள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) அவனுடைய தாடி பச்சை நிறத்தில் இருந்தது. அவன் தலையில் சடாமுடி தரித்திருந்தான்[1]. பயங்கரமானவனாக இருந்த அவன், தேவர்களின் பகைவர்கள் அனைவரின் இதயங்களையும் அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அவனே அனைத்து உயிரினங்களின் அச்சங்களைப் போக்குபவனாகவும் இருக்கிறான். காளைமாட்டைக் கொடியில் கொண்ட தேவனாக அவனை வழிபடுபவர்கள் துதிக்கிறார்கள்.(19) மஹாதேவனைக் கண்ட பெரும் முனிவர்கள், தங்கள் தலைகளால் தரையைத் தொட்டு அவனை வணங்கினார்கள். மன்னிக்கும் ஆன்மாக்களைக் கொண்ட அவர்கள் அனைவரும் (அந்தப் பெருந்தேவனைக் கண்டதன் விளைவால்) பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முற்றிலும் தூய்மையடைந்தார்கள்.(20)அனைத்து உயிரினங்களின் தலைவனுடைய {சிவனின்} வனம், பயங்கர வடிவங்கள் பலவற்றால் நிறைந்து வினோதமான அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பெரும்பாம்புகள் பலவற்றால் நிறைந்திருந்த அஃது அணுகத்தகாததாகவும், (சாதாரண உயிரினங்களால்) தாங்கிக் கொள்ள முடியாததாகவும் இருந்தது.(21) ஓ! மதுசூதனா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்த அனைத்தும் அற்புதம் நிறைந்தவையாகின. உண்மையில், காளைமாட்டைத் தன் கொடியாகக் கொண்ட பெருந்தேவன் பயங்கர அழகுடன் சுடர்விடத் தொடங்கினான்.(22) அங்கே அமர்ந்திருந்த மஹாதேவனிடம், அவனது மனைவியான இமவானின் மகள் {உமை}, அந்தப் பெருந்தேவனின் துணைவர்களான பூதகணங்களுடைய மனைவிமார் சூழ வந்தாள். அவளது ஆடைகள் அவளுடைய தலைவனுடையவை போலவே இருந்தன, அவள் நோற்ற நோன்புகளும் அவனுடையவை போலவே இருந்தன.(23) அவள், அனைத்து தீர்த்தங்களின் நீரால் நிறைந்திருந்த ஒரு குடத்தை தன் இடையில் வைத்திருந்தாள், அவளுடன் மலையோடைகளுக்குத் தலைமை தாங்கும் தேவியரும் வந்தனர். அந்த மங்கலப் பெண்கள் அவளுக்குப் பின்னால் அணிவகுத்தனர்.(24) அந்தத் தேவி, அனைத்துப் புறங்களிலும் மலர் மாரி பொழிய, பல்வேறு வகை இனிய நறுமணங்களுடன் கூடியவளாக  நடந்து வந்தாள். இமயச் சாரலில் வசிக்கப் பிடித்த அவள், இந்தக் கோலத்தில் அந்தப் பெருந்தேவனிடம் சென்றாள்.(25)அழகிய உமை, இதழ்களில் புன்னகையுடனும், கேலி செய்து விளையாடும் விருப்பத்துடனும், தன் அழகிய கரங்கள் இரண்டாலும் மஹாதேவனின் கண்களைப் பின்னால் இருந்து மறைத்தாள்.(26) மஹாதேவனின் கண்கள் இவ்வாறு மறைக்கப்பட்ட உடனேயே, அனைத்து உலகங்களிலும் இருள் சூழ்ந்தது, அண்டத்தில் எங்கும் உயிரற்றுப் போனதாகத் தெரிந்தது. ஹோமச் சடங்குகள் நின்றுபோயின. புனித வஷத்துகள் திடீரென இல்லாமல் ஆகின.(27) உயிரினங்கள் அனைத்தும் உற்சாகம் இழந்து, அச்சத்தால் நிறைந்தன. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய கண்கள் இவ்வாறு மூடப்பட்ட போது, மொத்த அண்டமும் சூரியனற்றுப் போனதாகத் தெரிந்தது.(28) எனினும், அதிகம் பரவியிருந்த இருள் விரைவில் மறைந்து போனது. வலிமைமிக்கச் சுடர்மிக்க நெருப்புத் தழல் மஹாதேவனின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டது.(29) மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்த மூன்றாம் கண் (அதில் {நெற்றியில்}) தோன்றியது. அந்தக் கண் யுக நெருப்பைப் போலச் சுடர்விட்டு எரிந்து அந்த மலையை எரிக்கத் தொடங்கியது.(30)

நீண்ட கண்களைக் கொண்ட இமவானின் மகள் {உமை} நேர்ந்ததைக் கண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்கு ஒப்பான மூன்றாவது கண்ணுடன் கூடிய மஹாதேவனுக்குத் தலைவணங்கினாள். அவள் தன் தலைவனின் மீது நிலைத்த பார்வையுடன் அங்கே நின்றாள்.(31) சாலமரங்கள் மற்றும் நீண்ட தண்டுகளுடன் கூறிய பிற மரங்கள், இனிமைமிக்கச் சந்தன மரங்கள், பல்வேறு வகையிலான சிறந்த மூலிகைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் மலைக்காடுகள் எரிந்த போது,(32) அச்சத்தால் நிறைந்த மான் கூட்டங்களும், பிற விலங்குகளும் ஹரன் அமர்ந்திருந்த இடத்திற்குப் பெருவேகத்துடன் வந்து, அவனது பாதுகாப்பை நாடின. அவ்விலங்களால் கிட்டத்தட்ட நிறைந்திருந்த அந்தப் பெருந்தேவனின் வனம், ஒருவகை வினோதமான அழகுடன் சுடர்விட்டது.(33) அதே வேளையில், மூர்க்கமாகப் பெருகி சொர்க்கத்தையே எட்டியதும், நிலையற்ற மின்னலைப் போன்ற காந்தியுடன் கூடியதும், வலிமையும், பிரகாசமும் மிக்கப் பனிரெண்டு சூரியர்களைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தீ, அனைத்தையும் அழிக்கும் யுகநெருப்பைப் போல அனைத்துப் புறங்களையும் மறைத்தது.(34) ஒரு கணத்தில், தாதுகள், சிகரங்கள் மற்றும் சுடர்மிக்க மூலிகைகளுடன் கூடிய அந்த இமய மலைகள் எரிந்தன.(35)

இமவான் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டதைக் கண்ட மலை இளவரசனின் {இமவானின்} மகள், அந்தப் பெருந்தேவனின் முன்பு மதிப்புடன் கரங்களைக் கூப்பி நின்று அவனது பாதுகாப்பை நாடினாள்.(36) அப்போது சர்வன் {சிவன்}, பெண்மையின் மென்மையால் வெல்லப்பட்ட உமை, தன் தந்தையான இமவான் அத்தகைய பரிதாபகரமான நிலைக்குக் குறைக்கப்பட்டதைக் காண விரும்பாமல் இருப்பதைக் கண்டு, அந்த மலையின் மீது தன் அருள் பார்வையைச் செலுத்தினான்.(37) ஒரு கணத்தில் மொத்த இமயமும் முந்தைய நிலைக்கு மீட்கப்பட்டு, எப்போதும் போன்ற அழகை அடைந்தது. உண்மையில் அந்த மலை உற்சாகம் நிறைந்த தன்மையை வெளிப்படுத்தியது. அதன் மரங்கள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(38) இமவான் மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்ததைக் கண்டவளும், களங்கமேதும் இல்லாதவளுமான உமா தேவி, உயிரினங்கள் அனைத்தின் ஆசானான தன் தலைவனிடம், இச்சொற்களைச் சொன்னாள்.(39)

உமை {மஹாதேவனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, ஓ! திரிசூலந்தரிக்கும் தேவா, ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, என் மனத்தைப் பெரும் ஐயம் ஒன்று நிறைக்கிறது. என் ஐயத்தைத் தீர்ப்பதே உமக்குத் தகும்.(40) உமது நெற்றியில் இந்த மூன்றாம் கண் தோன்றியதற்கான காரணங்கள் என்ன? காடுகளும், உரிய அனைத்தும் சேர்ந்து அந்த மலை எரிக்கப்பட்டது ஏன்?(41) ஓ! சிறப்புமிக்கத் தேவா, இந்த மலை மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தது ஏன்? உண்மையில், ஒரு முறை அஃதை எரித்தபிறகு, மீண்டும் ஏன் மரங்களால் அதை மறைத்தீர்?” என்று கேட்டாள்.(42)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “ஓ! களங்கமற்ற தேவி, ஆராயாமல் நீ செய்த செயலின் மூலம் நீ என் கண்களை மறைத்தன் விளைவால் ஒரு கணத்தில் அண்டம் ஒளியற்றுப் போனது.(43) ஓ! மலைகளின் இளவரசனுடைய மகளே, அண்டமே சூரியனற்று அனைத்தும் இருளாகிப் போனதால், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க விரும்பி நான் என் மூன்றாவது கண்ணை உண்டாக்கினேன்.(44) இந்தக் கண்ணின் உயர்ந்த சக்தியானது அந்த மலையை நொறுக்கி எரித்தது. எனினும், ஓ! தேவி, உன்னை நிறைவடையச் செய்யவே இமவானின் பழுதை நீக்கி மீண்டும் முன்பு போல அமைத்தேன்” என்றான்.(45)

உமை {மஹாதேவனிடம்}, “ஓ! புனிதமானவரே, கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகியவற்றில் உள்ள உமது முகங்கள் சந்திரனைப் போன்ற இனிமையுடனும், அழகாகவும் இருப்பது ஏன்?(46) தெற்கில் இருக்கும் உமது முகம் பயங்கரமாக இருப்பது ஏன்? உமது சடா முடி பழுப்பாக, செங்குத்தாக நிமிர்ந்தும் நிற்பது ஏன்?[2] உமது தொண்டை மயில்தோகை போல நீலமாக இருப்பது ஏன்?(47) ஓ! சிறப்புமிக்கத் தேவா, உமது கரங்களில் எப்போதும் பினாகை இருப்பது ஏன்? எப்போதும் சடைமுடி தரித்த பிரம்மச்சாரியாக நீர் இருப்பது ஏன்?(48) ஓ!தலைவா, இவை அனைத்தையும் எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். உம்முடன் சேர்ந்து ஒரே கடமைகளைப் பின்பற்ற முயலும் உமது மனைவி நான். மேலும், ஓ! காளையை உமது அடையாளமாகக் கொண்ட தேவா, நான் பக்தியுடன் உம்மை வழிபடுபவளும் ஆவேன்” என்றாள்”.(49)நாரதர் தொடர்ந்தார் “மலைகளின் இளவரசனுடைய மகள் இவ்வாறு சொன்னதும், சிறப்புமிக்கப் பினாகைதாரியான அந்தப் பலமிக்க மஹாதேவன், அவளிடம் உயர்வான நிறைவையடைந்தான்.(50)

அந்தப் பெருந்தேவன் அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, என் வடிவங்கள் அப்படி இருப்பதற்கான காரணங்களை நான் விளக்கிச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக” என்றான்.(51)

வர்ணாசிரம தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 141-நான்கு முகங்களைக் கொண்ட காரணம்; காளைமாட்டு வாகனம் அடைந்த வகை; சுடலையில் வசிக்கும் காரணம்; அறம் அல்லது கடமையின் குறியீடுகள்; வர்ணதர்மங்கள்; ஆசிரம தர்மங்கள்; முனி தர்மங்கள் ஆகியவற்றைக் குறித்து உமையிடம் உரையாடிய மஹேஸ்வரன்…

அருள் நிறைந்த புனிதமானவன் {மஹேஸ்வரன் உமையிடம்}, “பழங்காலத்தில், அண்டத்திலுள்ள ஒவ்வொரு அழகிய பொருளிலிருந்தும் அழகு தானியங்களை வெட்டியெடுத்து அருள் நிறைந்தவளான திலோத்தமை என்றழைக்கப்படும் பெண்களில் முதன்மையானவளை பிரம்மன் படைத்தான்.(1) ஒரு நாள், அழகிய முகம் கொண்டவளும், வடிவ அழகில் அண்டத்தில் ஒப்பற்றவளுமான அந்தப் பெண், என்னை மயக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு என்னை வலம் வந்தாள்.(2) அழகிய பற்களைக் கொண்ட அந்தப் பெண் சென்ற திசையங்கும் (நான் அவளைக் காணும் ஆவல் கொண்டிருந்ததால்) உடனுக்குடனே எனக்கொரு புதிய முகம் தோன்றியது. அந்த முகங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு இனிமையாக இருந்தன.(3) இவ்வாறு அவளைக் காணும் விருப்பத்தின் விளைவாலும், யோகபலத்தின் மூலமும் நான் நான்கு முகம் படைத்தவனானேன். இவ்வாறு நான்கு முகம் கொண்டதில் நான் என் உயர்ந்த யோக சக்தியை வெளிப்படுத்தினேன்.(4)

கிழக்கு நோக்கித் திரும்பிய முகத்தைக் கொண்டு நான் அண்டத்தை ஆள்கிறேன். ஓ! களங்கமற்ற குணங்களைக் கொண்டவளே {உமையே}, வடக்கு நோக்கித் திரும்பிய முகத்தைக் கொண்டு நான் உன்னோடு விளையாடுகிறேன்.(5) மேற்கு நோக்கித் திரும்பிய என் முகம் ஏற்புடையதாகவும், மங்கலமானதாகவும் இருக்கிறது. நான் அதைக் கொண்டு அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை விதிக்கிறேன். தெற்கு நோக்கித் திரும்பியிருக்கும் என் முகம் பயங்கரமானதாகும். நான் அதைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறேன்.(6) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டு நான் தலையில் சடாமுடி தரித்த பிரம்மச்சாரியாக வாழ்கிறேன். தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பினாகை வில் எப்போதும் என் கரங்களில் இருக்கிறது.(7) பழங்காலத்தில் என் செழிப்பை அடைய விரும்பிய இந்திரன், தன் வஜ்ராயுதத்தை என் மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் என் தொண்டை எரிக்கப்பட்டது. அந்தக் காரணத்தினாலேயே என் தொண்டை நீலமானது[1]” என்றான்.(8)உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவரே, பேரழகுடன் கூடிய சிறந்த வாகனங்கள் பலவிருக்க, ஒரு காளைமாட்டை உமது வாகனமாக நீர் தேர்ந்தெடுத்தது ஏன்?” என்று கேட்டாள்.(9)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “பழங்காலத்தில் பெரும்பாட்டனான பிரம்மன், அபரிமிதமான பாலைத் தரும் தெய்வீகப் பசுவான சுரபியைப் படைத்தான். அவள் படைக்கப்பட்ட பிறகு, அமுதம் போன்று இனிமையான பாலை அபரிமிதமான அளவுகளில் தரும் பெரும் எண்ணிக்கையிலான பசுக்கள் உண்டாகின.(10) ஒரு காலத்தில் அவளது கன்றுகளின் வாயிலிருந்து ஓரளவு நுரையானது என் உடலில் விழுந்தது. இதனால் நான் கோபமடைந்தேன், என் கோபத்தால் எரிக்கப்பட்ட பசுக்கள் அனைத்தும் பல்வேறு நிறங்களைக் கொண்டவையாகின.(11) பிறகு, அனைத்தையும் அறிந்தவனும், உலங்கள் அனைத்தின் ஆசானுமான பிரம்மன் என்னைத் தணிவடையச் செய்தான். அவனே என்னைச் சுமக்கும் வாகனமாகவும், என் கொடியிலுள்ள சின்னமாகவும் இந்தக் காளையை எனக்குக் கொடுத்தான்[2]” என்றான்.(12)உமை {மஹேஸ்வரனிடம்}, “பல்வேறு வடிவங்களையும், அனைத்து வசதிகளையும், ஆடம்பரங்களையும் கொண்ட பல வசிப்பிடங்கள் உமக்குச் சொர்க்கத்தில் இருக்கின்றன. ஓ! புனிதமானவரே, அந்த இனிமை நிறைந்த மாளிகைகள் அனைத்தையும் கைவிட்டு நீர் சுடலையில் வசிப்பது ஏன்? சுடலையானது, (இறந்தோரின்) மயிரும், எலும்புகளும் நிறைந்ததாகவும், கழுகுகளும், நரிகளும் நிறைந்ததாகவும், நூற்றுக்கணக்கான ஈமச்சிதைகள் விரவிக்கிடப்பதாகவும் இருக்கிறது.(14) அழுகும் பிணங்கள் நிறைந்ததும், கொழுப்பு மற்றும் குருதியால் சேறாக இருப்பதும், அதன் மேல் குடல்களும் எலும்புகளும் விரவிக் கிடப்பதும், நரிகளின் ஊளைகளை எப்போதும் எதிரொலிப்பதுமான அது நிச்சயம் ஒரு தூய்மையற்ற இடமாகும்” என்றாள்.(15)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “நான் எப்போதும் புனித இடத்தைத் தேடி பூமி முழுவதும் சுற்றித் திரிகிறேன். எனினும், சுடலையைவிடப் புனிதமிக்க வேறு இடமெதையும் என்னால் காண முடியவில்லை.(16) எனவே, அனைத்து வசிப்பிடங்களைக் காட்டிலும், ஆலமரக்கிளைகளின் நிழலைக் கொண்டதும், கிழிந்த மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான சுடலையே என் இதயத்திற்கு அதிக விருப்பமுள்ளதாக இருக்கிறது.(17) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, என் துணைவர்களான பூதகணங்கள் இத்தகைய இடங்களில் வசிக்கவே விரும்புகின்றனர். ஓ! தேவி, அந்தப் பூதகணங்கள் என்னுடன் இல்லாமல் நான் எங்கும் வசிக்க விரும்புவதில்லை.(18) எனவே, சுடலையே என் புனித வசிப்பிடமாகும். உண்மையில், ஓ! மங்கலப் பெண்ணே, அதுவே எனக்குச் சொர்க்கமாகத் தெரிகிறது. உயர்ந்த புனிதம் நிறந்ததும், பெரும் பலனைத் தரவல்லதுமான சுடலையே, புனித வசிப்பிடங்களை விரும்பும் மனிதர்களால் அதிகம் மெச்சப்படுகிறது” என்றான்.(19)

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, ஓ! கடமைகள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்தையும் நோற்பவர்களில் முதன்மையானவரே, ஓ! பினாகைபாணியே, ஓ! வரங்களை அளிப்பவரே, எனக்கு ஒரு பெரும் ஐயம் உள்ளது. இவ்வுலகில் பல்வேறு வடிவங்களிலும், பல்வேறுவகை உடைகளை உடுத்திக் கொண்டும் எங்கும் திரியும் தவசிகள் காணப்படுகிறார்கள்.(21) ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவரே, இந்தப் பெரும் முனிவர் கூட்டத்திற்கு நன்மை செய்வதற்காக என்னுடைய இந்த ஐயத்தை அன்புகூர்ந்து தீர்ப்பீராக.(22) அறம் அல்லது கடமையானது என்னென்ன குறியீடுகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது? உண்மையில், அறம் அல்லது கடமையின் விவரங்களை அறியாத மனிதர்கள் அவற்றை நோற்பதில் எவ்வாறு வெல்கிறார்கள்? ஓ! பலமிக்கத் தலைவா, ஓ! அறமறிந்தவரே, இதை எனக்குச் சொல்வீராக” என்றாள்”.(23)

நாரதர் தொடர்ந்தார், “இமவானின் மகள் இந்தக் கேள்வியைக் கேட்ட போது, அங்கே இருந்த முனிவர்களின் கூட்டம் அந்தத் தேவியை வழிபட்டு ரிக்குகளாலும், ஆழ்ந்த பொருள் கொண்ட மந்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு அவளைத் துதித்தனர்.(24)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “தீங்கிழையாமை, வாக்கில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, ஆன்ம அமைதி, சக்திக்குத்தக்க கொடை ஆகியவை இல்லறத்தானின் முதன்மையான கடமைகளாகும்.(25) பிறர் மனைவியுடன் பாலியல் கலவி தவிர்த்தல், தன் பொறுப்பில் உள்ள செல்வத்தையும், பெண்களையும் பாதுகாத்தல், தனக்குக் கொடுக்கப்படாததை அபகரிக்க விரும்பாமை, தேன் மற்றும் இறைச்சி தவிர்த்தல் ஆகிய இவையே ஐந்து தலைமையான கடமைகளாகும்.(26) உண்மையில், அறம், அல்லது கடமையானது மகிழ்ச்சி நிறைந்த பல கிளைகளைக் கொண்டதாகும். கடமையையே மேன்மையானதாகக் கருதும் உடல் படைத்த உயிரினங்கள் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைகள் இவையே. தகுதியின் ஆதாரங்கள் இவையே” என்றான்.(27)

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, பெரும் ஐயங்கள் கொண்ட மற்றொரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். அதற்குப் பதிலளித்து என் ஐயங்களை விலக்குவதே உமக்குத் தகும். நான்கு வகையினர் செய்யக்கூடிய பலன்மிக்கக் கடமைகள் என்னென்ன? பிராமணன் தொடர்புடைய கடமைகள் என்னென்ன? க்ஷத்திரியனுக்கு என்னென்ன? வைசியன் தொடர்பான கடமைகளின் குறியீடுகள் என்னென்ன? சூத்திரன் தொடர்புடைய கடமைவகைகள் என்னென்ன?” என்று கேட்டாள்.(29)

அந்தப் புனிதமானவன், “ஓ! உயர்வாக அருளப்பட்ட பெண்ணே, நீ கேட்ட கேள்வி மிகச்சரியானதாகும். உண்மையில், மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவர்கள் உயர்வாக அருளப்பட்டவர்களாகவும், பூமியில் தேவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(30) உண்ணா நோன்புகள் நோற்பதே (புலனடக்கமே) எப்போதும் பிராமணனின் கடமையாகும். ஒரு பிராமணன் தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்வதில் வெல்லும்போது அவன் பிராமணன் என்ற அடையாளத்தைப் பெறுகிறான்[3].(31) ஓ! தேவி, பிரம்மச்சரிய கடமைகளை முறையாக நோற்பது அவன் செய்ய வேண்டிய சடங்காகும். நோன்புகள் நோற்பதும், புனித நூல் {பூணூல்} தரித்தல் ஆகியவை அவனது பிற கடமைகளாகும். இவற்றின் மூலமே அவன் மறுபிறப்பாளனாகிறான்.(3) அவன் தன் ஆசான்களையும், பெரியோர்களையும், தேவர்களையும் வழிபடுவதால் ஒரு பிராமணனாகிறான். வேத கல்வியை ஆன்மாவாகக் கொண்ட அறமே நீதியின் ஆதாரமாகும். நீதி மற்றும் கடமைக்கு அர்ப்பணிப்புடன் உள்ள உடல் படைத்த உயிரினங்களுக்கு அதுவே பின்பற்றவேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய அறமாகும்” என்றான்.(33)உமை, “ஓ புனிதமானவரே, என் ஐயங்கள் விலகவில்லை. மனிதர்களில் நான்கு வகையினரின் கடமைகளை விரிவாக விளக்குவதே உமக்குத் தகும்” என்றாள்.(34)

மஹேஸ்வரன், “அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களைக் கேட்டு, வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்று, புனித நெருப்பில் கவனத்துடன், ஆசானின் காரியத்தை நிறைவேற்றி,(35) ஒரு துறவியின் வாழ்வை வாழ்ந்து, எப்போதும் புனித நூலை {பூணூலைத்} தரித்து, தொடர்ந்து வேதமோதி, பிரம்மச்சரியக்கடமைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதே பிராமணனின் கடமைகளாகும்.(36) கல்விக்கான காலம் நிறைவடைந்ததும், ஒரு பிராமணன் தன் ஆசானிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன் ஆசானின் வசிப்பிடத்தை விட்டகன்று தன் தந்தையின் இல்லத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பியதும் அவன் தனக்குத் தகுந்த மனைவியை முறைப்படி மணந்து கொள்ள வேண்டும்.(37) சூத்திரனால் செய்யப்பட்ட உணவைத் தவிர்ப்பதும் பிராமணனின் கடமையாகும். அறத்தின் பாதையில் நடந்தவாறே, உண்ணா நோன்புகளை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைப் பயில்வது அவனது பிற கடமைகளாகும்[4].(38) ஓர் இல்லறத்தான் நாளுக்கு நாள் செய்யும் வழிபாட்டிற்காகத் தன் இல்லத்தில் இல்லற நெருப்பைப் பராமரிக்க வேண்டும். அவன் தன் புலன்களை உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும். அவன், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் தன்னைச் சார்ந்திருக்கும் அனைவரையும் கவனித்தபிறகு எஞ்சியிருப்பதையே உண்ண வேண்டும். அவள் எளிய உணவை உண்பவனாக, வாக்கில் வாய்மையுள்ளவனாக, அகத்திலும் புறத்திலும் தூய்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(39) விருந்தினர்களைக் கவனிப்பதும், மூன்று வேள்வி நெருப்புகளைப்[5] பராமரிப்பதும் அவனுடைய வேறு கடமைகளாகும். இஷ்டி என்ற பெயரில் சொல்லப்படும் சாதாரண வேள்விகளையும் அவன் கவனிக்க வேண்டும். மேலும் விதிப்படி தேவர்களுக்கு விலங்குகளை அர்ப்பணிக்கவும் {பசுபந்தனங்கள் செய்யவும்} வேண்டும்.(40)உண்மையில், வேள்விகளைச் செய்வதும், அனைத்து உயிரினங்களுக்கும் முழுமையாகத் தீங்கிழைக்காமல் இருப்பதும் அவனுக்கான உயர்ந்த கடமைகளாகும். தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் உண்ணும் முன்பு ஒருபோதும் தான் உண்ணாமல் இருப்பதும் ஓர் இல்லறத்தானின் கடமையாகும். தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோரைக் கவனித்த பிறகு எஞ்சியிருக்கும் உணவு விகஸம் என்றழைக்கப்படுகிறது. ஓர் இல்லறத்தான் விகஸம் உண்ண வேண்டும்.(41) உண்மையில், ஒரு மறுபிறப்பாள வகையைச் சார்ந்த இல்லறத்தான் ஒருவன், வேதங்களை அறிந்து கொள்வதைத் தவிர்த்து, பணியாட்கள் மற்றும் சார்ந்திருப்போர் பிறர் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் பிறகு உண்பது அவனுக்கான சிறப்புக் கடமையாகக் கருதப்படுகிறது.(42) இல்லறவாசிகளின் வழக்கில் கணவன் மற்றும் மனைவியின் ஒழுக்கம் நிகராக இருக்க வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் வீட்டின் தலைமை தேவர்களுக்கு மலர்களையும், பிற பொருட்களையும் காணிக்கை அளிக்க வேண்டும்.(43) ஓர் இல்லறத்தான் ஒவ்வொரு நாளும் தன் வீடு (பசுஞ்சாணம் மற்றும் நீர் கொண்டு) முறையாகக் கழுவப்படுவதைக் கவனத்துடன் செய்ய வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் உண்ணோநோன்புகளை நோற்க வேண்டும். நன்கு கழுவப்பட்டு, தூய்மைப்படுத்தப்படும் அவனது வீட்டில் ஒவ்வொரு நாளும் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவித்து வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யால் உண்டாகும் புகையால் தூமமூட்ட வேண்டும்.(44) ஒரு மறுப்பிறப்பாளன் வாழும் இல்லற வாழ்வு தொடர்புடைய கடமைகள் இவையே ஆகும். இந்தக் கடமைகளே உண்மையில் உலகத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. உண்மையில், இந்தக் கடமைகள் இல்லற வாழ்வை வாழும் பிராமணர்களுக்கு மத்தியில் உள்ள அறம் சார்ந்த மனிதர்களிடம் இருந்து எப்போதும், நித்தியமாக உண்டாகிறது.(45)

ஓ! தேவி, நீ என்னிடம் கேட்ட க்ஷத்திரியக் கடமைகளைச் சொல்லப் போகிறேன் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(46) ஒரு க்ஷத்திரியனின் கடமை அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதே என்பது தொடக்கம் முதல் சொல்லப்படுகிறது. ஒரு மன்னன் தன் குடிமக்கள் ஈட்டும் பலன்களில் ஒரு நிலையான பங்கைப் பெறுபவனாவான். அந்த வழிமுறையின் மூலம் அம்மன்னன் அறவோனாகிறான்.(47) தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுப் பாதுகாக்கும் மனிதர்களின் ஆட்சியாளன், பிறருக்குப் பாதுகாப்பளிக்கும் நல்லியல்பின் மூலம் மறுமையில் பல இன்ப உலகங்களை அடைகிறான்.(48) தற்கட்டுப்பாடு, வேத கல்வி, புனி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது, கொடையளிப்பது, கல்வி,(49) புனித நூல் {பூணூல்} தரிப்பது, அறச்சடங்குகளைச் செய்வது, பணியாட்களையும், சார்ந்திருப்போரையும் ஆதரிப்பது, தொடங்கப்பட்ட செயல்களில் விடாமுயற்சியுடன் செயல்படுவது ஆகியவை அரச வகையினரின் வேறு கடமைகளாகும்.(50)

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஏற்புடைய தண்டனைகளை அளிப்பதும் அவனுடைய மற்றொரு கடமையாகும். வேள்விகளைச் செய்வது, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படியான அறச்சடங்குகளைச் செய்வது ஆகியவையும் அவனது கடமைகளே. தன் முன்பு வழக்காடுபவர்களின் சச்சரவுகளைச் சரியாகத் தீர்க்கும் நடைமுறையைப் பின்பற்றுவது, வாக்கில் வாய்மை நிறைந்திருப்பதில் அர்ப்பணிப்பு,(51) துன்பத்தில் இருப்போருக்கு உதவி செய்வது ஆகியவற்றையும் மற்றும் வேறு கடமைகளையும் வெளிப்படுத்தும் மன்னன் இம்மையிலும் மறுமையிலும் பெரும் மகிமையை அடைகிறான். பசுக்கள் மற்றும் பிராமணர்களின் சார்பில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தி, போர்க்களத்தில் அவன் {மன்னன்} உயிரை விட வேண்டும்.(52) அத்தகைய மன்னன், குதிரை வேள்விகளைச் செய்வதால் வெல்லப்படும் இன்ப உலகங்களைச் சொர்க்கதில் அடைவான்.(53)

கால்நடைகளைப் பராமரித்தல், உழவு, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுதல், கொடையளித்தல், கல்வி ஆகியன வைசியனின் கடமைகளாகும்.(54) வணிகம், அறப்பாதையில் நடத்தல், விருந்தோம்பல், அமைதி, தற்கட்டுப்பாடு, பிராமணர்களை வரவேற்றல், (பிராமணர்களுக்காக) பொருட்களைத் துறத்தல் ஆகியனவும் வைசியனின் நித்திய கடமைகளாகும்.(55) வணிகத்தில் ஈடுபட்டு, அறப்பாதையில் நடக்கும் வைசியன், எள், நறுமணப் பொருட்கள், சாறுகள் அல்லது நீர்மை சார்ந்த பொருட்களை ஒருபோதும் விற்பனை செய்யக் கூடாது. அவன் அனவருக்கும் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்த வேண்டும்.(56) அவன் தன் வழிமுறைகளின் படியும், நீதியின் படியும் சுதந்திரமாக அறம், பொருள் மற்றும் இன்பத்தை அடைய வேண்டும்.

மூன்று மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவதே ஒரு சூத்திரனின் உயர்ந்த கடமையாகிறது[6].(57) வாக்கில் வாய்மை நிறைந்தவனும், புலனடக்கம் கொண்டவனுமான சூத்திரன் தவங்களின் பலன்களை அடைந்தவனாகக் கருதப்படுகிறான். உண்மையில், வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தும் சூத்திரன், உயர்ந்த தவங்களின் பலனை அடைந்ததாகக் கருதப்படுகிறான்.(58) அறம் சார்ந்த ஒழுக்கம் கொண்டவனும், தேவர்களையும், பிராமணர்களையும் வழிபடுபவனும், புத்திமானுமான சூத்திரன், விரும்பத்தகுந்த அற வெகுமதிகளை அடைந்தவனாகிறான்.(59) ஓ! அழகிய மங்கையே, நான் நான்கு வகையினருக்கான கடமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், ஓ! அருள்நிறந்த மங்கையே, அவர்களுக்குரிய கடமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டான் {சிவன்}.(60)உமை, “நான்கு வகையினருக்குரியவையும், அவர்களுக்கு நன்மை தரக்கூடியவையும், மங்கலமானவையுமான கடமைகளைச் சொன்னீர். ஓ! புனிதமானவரே, அனைத்து வகையினருக்குமான பொதுக்கடமைகளை இப்போது சொல்வீராக” என்று கேட்டாள்.(61)

மஹேஸ்வரன், “அண்டத்தில் உள்ள அனைத்திலும் முதன்மையானவனும், எப்போதும் அற சாதனைகளை விரும்புபவனும், படைப்பாளனுமான பிரம்மன், உலகங்கள் அனைத்தையும் காக்கும்பொருட்டுப் பிராமணர்களைப் படைத்தான். படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்திலும் அவர்களே பூமிதேவர்களாவர் {பூமியில் உள்ள தேவர்கள் என்று சொல்லப்படுகின்றனர்}.(62) அவர்கள் செய்ய வேண்டிய அறச்சடங்குகள் என்ன என்றும், அவற்றின் மூலம் அவர்கள் அடையும் வெகுமதிகளையும் தொடக்கத்தில் சொல்கிறேன். பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அறமே அறங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(63) உலகத்தில் நீதி நிலவ, சுயம்புவால் மூன்று அறங்கள் உண்டாக்கப்பட்டன. உலகம் படைக்கப்படும்போதெல்லாம் அவ்வறங்கள் பெரும்பாட்டனால் படைக்கப்படுகின்றன. அதைக் கேட்பாயாக. அவையே மூன்று நித்தியமான அறங்களாகும். அதைக் கேட்பாயாக.(64) அந்த மூன்று அறங்கள் இவையே. வேதங்களில் விளக்கப்படும் அறமே உயர்ந்தது; முக்கியத்துவம் வாய்ந்ததில் அடுத்ததாக ஸ்மிருதிகளில் விளக்கப்படுவது {விளகப்படும் அறம்} இருக்கிறது; மூன்றாவதாக முக்கியத்துவம் வாய்ந்தது அறவோராகக் கருதப்படுவோரால் நடைமுறையில் செய்யப்படும் செயல்கள் சொல்லப்படுகின்றன.(65)

கல்விமானான பிராமணன், மூன்று வேதங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவன் வேத கல்வியை (அல்லது சாத்தங்களை உரைப்பதை) தான் வாழ்வதற்கான வழிமுறையாக ஒருபோதும் கொள்ளக்கூடாது[7]. அவன் நன்கறியப்பட்ட மூன்று செயல்களுக்கு (கொடையளிப்பது, வேதங்கற்பது மற்றும் வேள்விகள் செய்வது ஆகியவற்றுக்குத்) தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவன் (காமம், கோபம் மற்றும் பேராசையை என்ற) மூன்றைக் கடக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும். இந்தக்குணங்களைக் கொண்டவனே பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(66) அண்டத்தின் தலைவன் பிராமணர்கள் நோற்பதற்கென இந்த ஆறு செயல்களை அறிவித்திருக்கிறான். அந்த நித்திய கடமைகளைக் கேட்பாயாக.(67) வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்தித் தருவது, கொடைகள் அளிப்பது, கொடைகள் ஏற்பது, கற்பிப்பது, கற்பது ஆகிய ஆறு செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் அறத்தகுதியை வெல்கிறான்[8].(68) உண்மையில் ஒவ்வொரு நாளும் வேதங்களைக் கற்பது ஒரு கடமையாகும். வேள்வியானது (மற்றொரு) நித்திய கடமையாகும். தன் சக்திக்குத் தக்கபடியும், விதிக்கு ஏற்புள்ளபடியும் கொடைகளை அளிப்பது அவனுடைய வழக்கில் அதிகம் மெச்சப்படுகிறது.(69) மனோ அமைதியானது அறவோருக்கு மத்தியில் எப்போதும் உயர்ந்த கடமையாகவே நிலவுகிறது. தூய மனம் கொண்ட இல்லறத்தார் மிகப்பெரும் பலன்களை ஈட்டவல்லவர்களாவர்.(70)உண்மையில், ஐந்து வேள்விகளைச் செய்வதன் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துபவன், வாக்கில் வாய்மை நிறைந்தவன், வன்மத்தில் இருந்து விடுபட்டவன், கொடைகளை அளிப்பவன், மறுபிறப்பாள விருந்தினர்கள் அனைவரையும் மதித்து விருந்தோம்பலுடன் நடத்துபவன், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட வசிப்பிடங்களில் வாழ்பவன்,(71) செருக்கற்றவன், தன் காரியங்களில் எப்போதும் நேர்மையாக இருப்பவன், பிறரிடம் இனிமையான நம்பிக்கை தரும் சொற்களைப் பயன்படுத்துபவன், விருந்தினர்களுக்கும், தன் வசிப்பிடத்திற்கு வருவோருக்கும் தொண்டாற்றுவதில் இன்பமடைபவன், குடும்ப உறுப்பினர்கள், தன்னைச் சார்ந்திருப்பவர்கள் ஆகியோரின் தேவைகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சியிருக்கும் உணவை உண்பவன் ஆகியோர் பெரும் பலன்களை வெல்கிறார்கள்.(72) தன் விருந்தினர்கள் கைகால்களைக் கழுவிக் கொள்ள நீர் தருபவனும், பெறுபவரைக் கௌரவிக்கும் வகையில் அர்க்கியம் கொடுப்பவனும், தன் வசிப்பிடத்திற்கு வருவோருக்கு இருக்கைகள், படுக்கைகள், இருளை விலக்கும் விளக்குகள், உறைவிடம் ஆகியவற்றை முறையாகக் கொடுப்பவனுமான மனிதன் உயர்ந்த அறவோனாகக் கருதப்படுகிறான்.(73) விடியலில் எழுந்து, தன் வாயையும், முகத்தையும் கழுவிக் கொண்டு, தன் விருந்தினர்களுக்கு உணவளித்து, அவர்களைக் கௌரவித்து முறையாகத் தன் வசிப்பிடத்தில் இருந்து அனுப்பி, (மதிப்பின் வெளிப்பாடாக) சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் இல்லறத்தான் நித்திய தகுதியை அடைகிறான்.(74) அனைவருக்கும் விருந்தோம்பலும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகை தேடலும் இல்லறத்தானின் கடமைகளாகும்.(75)

ஓர் இல்லறத்தானுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அறம் தன் முக்கியக் குறியீடாகப் பிரவிருத்தியைக் கொண்டதாகும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து உயிரினங்களுக்கும் மங்கலமானதையும், நன்மை மிகுந்ததையும் உனக்கு நான் விளக்கிச் சொல்கிறேன்.(76) ஓர் இல்லறத்தான் தன் சக்திக்குத் தகுந்த வகையில் கொடைகளை அளிக்க வேண்டும். அவன் அதே வகையிலேயே அடிக்கடி வேள்விகளையும் செய்ய வேண்டும். உண்மையில், தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒருவன் எப்போதும் பலன்மிக்கச் செயல்களைச் செய்ய வேண்டும்.(77) ஓர் இல்லறத்தான் நியாயமான வழிமுறைகளின் மூலம் செல்வத்தை ஈட்ட வேண்டும். இவ்வாறு அடையப்பபட்ட செல்வத்தை அற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, மூன்று பங்குகளாகக் கவனமாகப் பிரிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் ஒன்றைக் கொண்டு அவன் அறச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மற்றொன்றைக் கொண்டு இன்பத்திற்கான தன் ஏக்கங்களை நிறைவடையச் செய்ய முயல வேண்டும். மூன்றாவது பங்கைக் கொண்டு அதை {செல்வத்தை} மேலும் பெருக்க வேண்டும்.(79) நிவிருத்தி அறம் வேறுவகையானதாகும். அது (மறுபிறவியில் இருந்து பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படும்) விடுதலை நிலைக்காக {முக்திக்காக} இருக்கிறது. அஃதை அமைக்கும் ஒழுக்கம் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! தேவி, விரிவாக என்னிடம் இருந்து கேட்டுக் கொள்வாயாக.(80)

அவ்வறத்தால் மனத்தில் ஆழப்பதிய வைக்கப்படும் கடமைகளில் ஒன்று, அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையாகும். அதைப் பின்பற்றும் மனிதன், ஒரு நாளைக்கும் அதிகமாக ஓர் இடத்தில் வசிக்கக்கூடாது. இவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், விடுதலையை {முக்தியை} அடைய விரும்பி நம்பிக்கையுடன் (அல்லது ஆசையுடன்) கூடிய பற்றுகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.(81) தங்கள் வசிப்பிடம், நீருக்காகத் தாங்கள் சுமக்கும் கமண்டலம், தங்கள் மடியை மறைக்கும் ஆடைகள், அவர்கள் அமரும் இருக்கை, தங்கள் கரங்களில் சுமக்கும் திரிதண்டம், தாங்கள் படுக்கும் படுக்கை, தங்களுக்கு வேண்டிய நெருப்பு, தாங்கள் தங்கும் அறை ஆகியவற்றில் அவர்கள் பற்றேதும் கொள்ளக்கூடாது.(82) இவ்வறத்தைப் பின்பற்றுபவன் தன் இதயத்தைத் தன் ஆன்மாவின் இயக்கத்தில் நிறுவுகிறான். அவனது மனம் பரப்பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. அவன் பிரம்மத்தை அடையும் கருத்தால் நிறைந்திருக்கிறான். அவன் யோகம் மற்றும் சாங்கிய தத்துவத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(83) அவன் மரத்தடியைத் தவிர வேறு உறைவிடமெதையும் விரும்புவதில்லை. மனிதர்களின் வெற்று வசிப்பிடங்களிலேயே அவன் தங்குகிறான். அவன் ஆற்றங்கரைகளில் உறங்குகிறான். அவன் அத்தகைய கரைகளில் தங்குவதை இன்பமாகக் கருதுகிறான்.(84) அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும், பிணைப்புகள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான். அவன் தன் சொந்த ஆன்மாவின் இருப்பைப் பரமாத்மாவுடன் கலக்கிறான்.(85)

மரக்கட்டையைப் போல நின்று, உணவனைத்தையும் தவிர்க்கும் அவன் விடுதலைக்கான {முக்திக்கான} செயல்களில் மட்டுமே ஈடுபடுகிறான். அல்லது அவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் திரிந்து கொண்டிருப்பான். நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுபவரின் நித்திய கடமைகள் இவையே.(86) அவன் தன் இனத்தில் இருந்து பிரிந்து தனியே வாழ்கிறான். அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். அவன் ஒரே இடத்தில் ஒரு நாளைக்கு மேல் வசிப்பதில்லை. அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபட்டு அவன் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருக்கிறான். பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்த அவன் ஒரே ஆற்றங்கரையில் கூட ஒரு நாளைக்கு மேல் ஒருபோதும் உறங்க மாட்டான்.(87) வேதங்களில் அறிவித்துள்ள படி விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதர்களின் அறம் இதுவே ஆகும். இதுவே அறவோரால் நடத்தப்படும் அறப்பாதையாகும். இந்தப் பாதையைப் பின்பற்றுபவன், எந்த அடிச்சுவட்டையும் விட்டுச் செல்வதில்லை.(88)

பிக்ஷுக்கள் (விடுதலை அறத்தைப் பின்பற்றுபவர்கள்) நான்கு வகையினராவர். அவர்கள், குடீசகர்கள், பஹூதகர்கள் ஹம்ஸர்கள், பரமஹம்ஸர்கள் ஆவர். இரண்டாமவர் முதலாமவரைவிடவும் மேன்மையானவர் ஆவார், மூன்றாமவர் இரண்டாமவரை விடவும், நான்காமவர் மூன்றாவரைவிடவும் மேன்மையானவர்கள் ஆவர்.(89) பரமஹம்ஸ நிலையைவிடப் மேன்மையானது ஏதுமில்லை; அதைவிடத் தாழ்ந்தது ஏதுமில்லை, அதைவிட முன்போ பின்போ ஏதுமில்லை. அது மகிழ்ச்சியும் துக்கமுமற்ற ஒரு நிலையாகும்; அது மங்கலமானதும், முதுமை மற்றும் மரணத்தில்இருந்து விடுபட்டதும், மாற்றமேதும் அடையாததுமான நிலையாகும்” என்றான் {மஹேஸ்வரன்}.(90)

உமை {மஹேஸ்வரனிடம்}, “இல்லறத்தார் மற்றும் முக்தி அறத்தைக்குறித்தும், அறவோரால் பின்பற்றப்படும் அறங்கள் குறித்தும் சொன்னீர். இவை உலகில் வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த நன்மையைப் பயக்கும் உயர்ந்த பாதைகளாகும்.(91) ஓ! அறங்கள் அனைத்தையும் அறிந்தவரே, நான் முனிவர்களின் உயர்ந்த அறத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஆசிரமங்களில் வசிக்கும் தவசிகளை நான் எப்போதும் விரும்புகிறேன்.(92) புனித நெருப்பில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளின் புகை வெளியிடும் நறுமணம் மொத்த ஆசிரமங்களிலும் நீக்கமற நிறைந்து அவற்றை இனிமைநிறைந்தவைகளாக ஆக்குகிறது. ஓ! பெரும் தேவா, இதைக் கண்டு என் இதயம் எப்போதும் மகிழ்ச்சியில் நிறைகிறது.(93) ஓ! பலமிக்கத் தேவா, தவசிகள் அறம் குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. அனைத்து அறங்களையும் அறிந்தவர் நீரே. ஓ தேவர்களின் தேவா, ஓ! பெரும் தேவா, நான் உம்மிடம் கேட்ட இக்காரியங்கள் குறித்து உண்மையில் விரிவாகச் சொல்லி என்னைத் தெளிவடையச் செய்வீராக” என்று கேட்டாள்.(94,95)

அருள் நிறைந்த அந்தப் புனிதமானவன் {மஹேஸ்வரன் உமையிடம்}, “சரி. உயர்ந்ததும், சிறந்ததுமான தவசிகளின் அறம் குறித்து உனக்கு நான் சொல்லப் போகிறேன். ஓ! மங்கலப் பெண்ணே, இந்த அறத்தின் ஆணைகளைப் பின்பற்றும் தவசிகள், தாங்கள் பயிலும் கடுந்தவங்களின் மூலம் வெற்றியை அடைகின்றனர்.(96) ஓ! உயர்வாக அருளப்பட்டவளே, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களும், பேநபர்கள் {நுரையை உண்பவர்கள்} என்ற பெயரில் அறியப்பட்டவர்களுமான அறம்சார்ந்த முனிவர்களின் கடமைகள் என்னென்ன என்பதைத் தொடக்கம் முதல் நீ கேட்பாயாக.(97) பெரும்பாட்டனான பிரம்மன் (தவங்களைப் பயிலும் நாட்களின் போது நீரின் வடிவிலான) அமுதத்தைப் பருகினான். அந்த நீரானது ஒரு பெரும் வேள்வியில் இருந்து சொர்க்கத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.(98) அந்த நீரின் நுரை (பிரம்மன் குடித்ததன் விளைவால்) தன் இயல்பின்படியே உயர்ந்த மங்கலத்தைக் கொண்டதாக இருந்தது. (குறிப்பிடப்பட்ட அந்த நீரில் இருந்து) இவ்வாறு வெளி வந்த நுரையை உண்டு வாழ்ந்த அந்த முனிவர்கள் பேநபர்கள் (நுரையை உண்பவர்கள்) என்றழைக்கப்பட்டார்கள். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்ட மங்கையே, தூய ஆன்மா கொண்ட முனிவர்களின் ஒழுக்கம் இதுவே. வாலகில்யர்களைக் குறித்து நான் விளக்கப் போகிறேன் கேட்பாயாக.(99) வாலகில்யர்கள் தங்கள் தவங்களால் வெற்றியை அடைந்த தவசிகளாவர். அவர்கள் சூரிய வட்டிலில் வசிக்கிறார்கள். பறவைகளால் பின்பற்றப்படும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்திருப்பவர்களும், அறக் கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான அந்த முனிவர்கள், உஞ்ச முறையின்படி வாழ்கிறார்கள்.(100)

அவர்கள் மான் தோல்களையோ, மரப்பட்டைகளையோ {மரவுரிகளையோ} உடுத்துகிறார்கள். முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்து விடுபட்டவர்களும், தவங்களையே செல்வமாகக் கொண்டவர்களுமான இந்த வாலகில்யர்கள் இந்த அறப்பாதையிலேயே நடக்கிறார்கள்.(101) அவர்கள் {வாலகில்யர்கள்} கட்டைவிரல் அளவுள்ளவர்களே. வகைகளாப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வகையும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தவங்களை மட்டுமே பயில்கிறார்கள். அவர்க்ள தங்கள் அறவொழுக்கத்தால் வெல்லும் பலன்கள் மிக உயர்ந்தவையாகும்.(102) அவர்கள் தேவர்களுக்குச் சரிநிகர் நிலையை அடைந்தவர்கள் என்றும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவே இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களால் தங்கள் பாவங்கள் அனைத்தையும் அழித்த அவர்கள், பிராகசத்தில் சுடர்விட்ட படியே திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுகிறார்கள்.(103)

தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், கருணையைப் பயில்வதில் தங்களை அர்ப்பணித்தவர்களுமான வேறு சிலர் சக்ரசரர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அறவொழுக்கம் ஒழுகுபவர்களும், பெரும் புனித நிலையைக் கொண்டவர்களுமான அவர்கள் சோமனின் உலகத்தில் வாழ்கிறார்கள்.(104) இவ்வாறு பித்ருக்களின் உலகதிற்கு மிக அருகில் வசிக்கும் அவர்கள் சோமனின் கதிர்களைப் பருகி வாழ்கிறார்கள்ஸம்ப்ரக்ஷாலர்கள், ஆஷ்மகுட்டர்கள் மற்றும் தந்தோலூகலர்கள் என்றழைக்கப்படும் வேறு சிலரும் இருக்கிறார்கள்[9].(105)இவர்கள் சோமம் பருகும் தேவர்கள் மற்றும் நெருப்பின் தழல்களைப் பருகும் வேறு சிலருக்கு அருகில் வாழ்கிறார்கள். தாங்கள் மணந்து கொண்ட மனைவிகளுடன், தங்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, சோமனின் கதிர்களைப் பருகி அவர்கள் வாழ்கிறார்கள்.(106) அவர்கள் புனித நெருப்பில் தெளிந்த நெய் ஆகுதிகளை ஊற்றி பித்ருக்களை உரிய வடிவங்களில் துதிக்கிறார்கள். மேலும் அவர்கள் நன்கறியப்பட்ட வேள்விகளையும் செய்கிறார்கள். இதுவே அவர்களது அறமெனச் சொல்லப்படுகிறது.(107) ஓ! தேவி, இந்த முனிவர்களின் அறமானது, வீடற்றோர் மற்றும் தேவலோகம் உட்பட எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக உலவுபவர்கள் ஆகியோரால் எப்போதும் நோற்கப்படுகிறது. மேலும் உள்ள வேறு வகையினர் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(108) முனிவர்களின் வெவ்வேறு அறங்களைப் பின்பற்றுவோர் தங்கள் ஆசைகளை அடக்கித் தங்கள் ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உண்மையில், காமம், கோபம் ஆகியவற்றில் முற்றிலும் வெல்ல வேண்டும் என்பது என் கருத்தாகும்.(109) உஞ்ச வாழ்வு முறை மூலம் அடையப்பட்ட (செல்வம்) தானியத்தைக் கொண்டு அவர்கள், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுதல், தர்மராத்ரி என்றழைக்கப்படும் வேள்வியின் நிலையான இருக்கையில் எப்போதும் அமர்வது, சோம வேள்வியைச் செய்வது, சிறப்பறிவை அடைவது, பட்டியலில் ஐந்தாவதாக வேள்விக் கொடைகளை அளிப்பது, நாள்தோறும் செய்யும் வேள்விகள், பித்ரு மற்றும் தேவ வழிபாட்டில் அர்ப்பணிப்பு மற்றும் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடத்தல் உள்ளிட்ட கடமைகளை வெளிப்படுத்த வேண்டும்.(110,111)

பசுவின் பாலில் தயாரிக்கப்படும் ஆடம்பர உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்தல், இதய அமைதியில் இன்பங்கொள்ளல், வெறும்பாறைகள் அல்லது வெறும் நிலத்தில் கிடத்தல், யோகத்தில் அர்ப்பணிப்பு, கீரைகள் மற்றும் மரங்களின் இலைகளை உண்பது,(112) கனிகள், கிழங்குகள், காற்று, நீர், பாசி ஆகியவற்றை உண்டு வாழ்தல் உள்ளிட்டவை, (உலகத்தால்) வெல்லப்பட முடியாத மனிதர்களுக்குடைய கதியை அடைவதற்கு முனிவர்களால் பயிலப்படும் சில நடைமுறைகளாகும்.(113) ஒரு வீட்டில் இருந்து மேல்நோக்கி செல்லும் புகை {சமையலறை புகை} இல்லாமல் போகும்போது, உமி நீக்கும்கருவி இயங்காமல் நிற்கும்போது, இதய நெருப்பு அணைந்த போது, வீட்டில் இருப்பவர்க்ள அனைவரும் தங்கள் உணவை உண்ட பிறகு, உணவு வகைகள் அறைக்கு அறை எடுத்துச் செல்லப்படாதபோது, பிச்சைக்காரர்கள் சாலைகில் நடக்காத போது,(114) வாய்மை அறம் மற்றும் மனோ அமைதியில் அர்ப்பணிப்புடைய மனிதன், ஒரு விருந்தினரை அடைய விரும்பி (தன் ஆசை நிறைவடையாமல்) இருந்தால், அப்போது அவன் தன் வீட்டில் எஞ்சியிருக்கும் உணவை உண்ணலாம். இவ்வழியில் செயல்படுவதால் அவன் முனிவர்களின் அறத்தைப் பயில்பவனாகிறான்.(115) ஒருவன் ஆணவம் கொள்ளக்கூடாது; செருக்கடையக்கூடாது; உற்சாகமில்லாதவனாக, நிறைவில்லாதவனாக, எதற்கும் வியப்படைபவனாக இருக்கக்கூடாது. ஒருவன் நண்பர்களுக்கும், பகைவர்களுக்கும் இடையில் சரிநிகராகவே நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன் அனைத்து உயிரினங்களுடனும் நட்புடன் பழக வேண்டும்” என்றான் {சிவன்}.(116)

வானப்பிரஸ்தம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 142-வானப்பிரஸ்தர்களின் கடமைகள்; வானப்பிரஸ்தர்களில் இருவகையினரின் கடமைகள்; துறவிகளின் கடமைகள் ஆகியவற்றை உமைக்குச் சொன்ன சிவன்…

உமை {மஹேஸ்வரனிடம்}“காட்டுத்துறவிகள் {வானப்பிரஸ்தர்கள்}, இனிமை நிறைந்த பகுதிகளிலும், ஆறுகளின் ஓடைகள் மற்றும் நீரூற்றுகளின் மத்தியிலும், ஓடைகள் மற்றும் மற்றும் சிற்றோடைகள், குன்றுகள், மலைகள், வனங்கள் மற்றும் காடுகளில் அருகில் உள்ள கொடிப்பந்தல்களிலும், கனிகள் மற்றும் கிழங்குகள் நிறைந்த புனிதத்தலங்களிலும் வசிக்கிறார்கள்.(1) குவிந்த கவனத்துடனும், நோன்புகள் மற்றும் விதிகளைப் பின்பற்றியபடியும் அவர்கள் அத்தகைய இடங்களில் வசிக்கிறார்கள்.(2) ஓ! சங்கரரே, அவர்கள் பின்பற்றக்கூடிய புனித விதிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ! தேவர்கள் அனைவரின் தேவா, இந்தத் துறவிகள் தங்கள் உடல்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களைத் தாங்களே சார்ந்திருக்கிறார்கள்” என்றாள்.(3)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “காட்டுத்துறவிகளின் {வானப்பிரஸ்தர்களின்} கடமைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. ஓ! தேவி, ஒரு மனத்துடன் அதைக் கேட்டு, அறத்தை உன் இதயத்தில் நிலைநிறுத்துவாயாக.(4) கடும் நோன்புகளையும், விதிகளையும் பின்பற்றி, வனங்களிலும், காடுகளிலும் வசிக்கும் அறம் சார்ந்த துறவிகளால் செய்யப்பட்டும் எந்தச் செயல்களால் அவர்கள் வெற்றியை அடைகிறார்கள் என்பதைக் கேட்பாயாக.(5) ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடி, பித்ருகள் மற்றும் தேவர்களை வழிபட்டு, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, இஷ்டி ஹோமம் என்ற பெயரிலான சடங்குகளைச் செய்து,(6) நீவார நெல்லை எடுத்து வந்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, இங்குதை மற்றும் ஆமணக்கு வித்துகளை நசுக்குச் செய்யப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவது அவர்களது கடமைகளாகும்.(7) யோக நடைமுறைகளைச் செய்வதன் மூலம் (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, காமம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபடும் அவர்கள் வீராசனம்[1] என்றழைக்கப்படும் மனோநிலையில் தங்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். உண்மையில், கோழைகளால் அடைய முடியாத இடங்களில் அவர்கள் வசிக்க வேண்டும்.(8)யோகம் தொடர்பான சிறந்த விதிகளைப் பின்பற்றி, கோடைக்காலத்தில் நான்கு புறமும் நான்கு நெருப்புகளுக்கு மத்தியிலும், தலைக்கு மேலே சூரியனுடனும் மண்டூகம் என்றழைக்கப்படும் யோகத்தை முறையாகப் பயின்று,(9) வீராசனம் என்றழைக்கப்படும் மனோநிலையில் எப்போதும் அமர்ந்து, வெறும் பாறைகள் அல்லது வெறுந்தரையில் கிடந்து, அறத்தில் இதயத்தை நிலைநிறுத்தி, குளிர், நீர், நெருப்பு ஆகியனவற்றுக்கு அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.(10) அவர்கள் நீர், அல்லது காற்று, அல்லது பாசி ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும். அவர்கள் தங்கள் தானியங்களின் உமி நீக்க இரு கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களில் சிலர் அக்காரியத்திற்குத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். (வருங்காலத்திற்கு எதையும் சேமிக்காமல் இருப்பதற்காக) அவர்கள் எவ்வகைப் பாத்திரங்களையும் வைத்துக் கொள்வதில்லை.(11) சிலர் கந்தலாடைகளையோ, மரவுரிகளையோ, மான் தோல்களையோ உடுத்துகின்றனர். இவ்வாறே அவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கால அளவில் (சாத்திரங்களால் நிறுவப்பட்ட) விதிகளின் படி தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.(12) காடுகளில் இருக்கும் அவர்கள், காடுகளுக்குள்ளேயே திரிந்து, அவற்றுக்குள்ளேயே வாழ்ந்து, அவற்றுக்குள்ளேயே காணப்பட வேண்டும். உண்மையில் இந்தக் காட்டுத் துறவிகள் ஓர் ஆசானை அடைந்து அவர்களுடனே சீடனாக வாழ்கிறார்கள்.(13)

ஹோமச் சடங்குகளைச் செய்வதும், ஐந்து வேள்விகளைச் செய்வதும் அவர்களது கடமையாகும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி ஐந்து வேள்விகளை (குறித்த நேரத்தில்) பிரித்து முறையாகச் செய்து,(14) வேறு வேள்விகளிலும் அர்ப்பணிப்புடன், எட்டாவதாகச் சாதுர்மாஸ்யத்தைப் பின்பற்றி, பௌர்ணமாஸ்யம் மற்றும் பிற வேள்விகளையும் செய்து, நாள்தோறும் செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து வாழ்வதே(15) மனைவிகளிடம் இருந்து பிரிந்து, அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்த மனிதர்களின் கடமையாகும். உண்மையில் அவர்கள் இவ்வாறு காட்டில் வாழ வேண்டும்.(16) வேள்விக்கரண்டியும், நீர்க்கலனும் அவர்களுடைய முக்கியச் செல்வங்களாகும். அவர்கள் எப்போதும் மூன்று நெருப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அறவொழுக்கம் ஒழுகி, அறப்பாத்தையைப் பின்பற்றும் அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(17) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், வாய்மை அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான இம்முனிவர்கள், புனிதம் நிறைந்த பிரம்மலோகத்தையோ, நித்தியமான சோமலோகத்தையோ அடைகின்றனர்.(18) ஓ! மங்கலமான தேவி, காட்டுத் துறவிகளால் {வானப்பிரஸ்தர்களால்} பின்பற்றபடும் அறத்தின் வரையறைகளைச் சுருக்கமாகவும், அவற்றின் பல்வேறு நடைமுறைகளை விரிவாகவும் சொன்னேன்” என்றான்.(19)

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, ஓ! அனைவராலும் வழிபடப்படுபவரே, தவ வெற்றியை அடைய சாத்திரங்களைப் பின்பற்றும் முனிவர்க்கூட்டங்களின் அறம் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அதை எனக்குச் சொல்வீராக.(20) காடுகளில் வசித்து, வெற்றியைத் தரும் சாத்திரங்களை நல்ல திறனுள்ளவர்களாக இருக்கும் அவர்களில் சிலர் தாங்கள் விரும்பியபடி வாழ்ந்து, குறிப்பிட்ட நடைமுறைகளில் சுருங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர்; வேறு சிலர் மனைவிகளையும் கொள்கின்றனர். உண்மையில் அவர்களுக்கான நடைமுறைகள் எவ்வாறு விதிக்கப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டாள்.(21)

மஹாதேவன் {உமையிடம்}, “ஓ! தேவி, தலையை மழித்து, பழுப்பு {காவி} உடை தரித்தல் சுதந்திரமாகத் திரியும் துறவிகளின் குறியீடுகளாகும்; மணந்து கொண்ட மனைவிகளுடன் விளையாடுவோரின் குறியீடுகள் தங்கள் இரவுகளை இல்லங்களில் கழிப்பதில் அடங்குகின்றன.(22) ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடுவது இருவகையினருக்கும் கடமையாகும். பொதுவாக முனிவர்களால் செய்யப்படுவதைப் போலவே நீர் மற்றும் காட்டில் கிடைக்கும் கனிகள் ஆகியவற்றுடன் ஹோமம் செய்வது, திருமணம் செய்து கொண்ட துறவிகளுக்குப் பொருந்தும். தியான யோகத்திற்குள் ஈர்க்கப்படுவது, அறக்கடமைகளையும் (சாத்திரங்கள் மற்றும் வேதங்களில்) விதிக்கப்பட்டுள்ளவற்றையும் கடைப்பிடிப்பது, அவர்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட வேறு சில கடமைகளாகும்.(23) காட்டில் வசிக்கும் துறவிகள் தொடர்பாக முன்பு நான் சொன்ன கடமைகள் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். உண்மையில், அந்தக் கடமைகளைச் செய்தால், அவற்றைச் செய்பவர்கள் கடுந்தவங்களுக்குரிய வெகுமதிகளை அடைவார்கள்.(24) திருமண வாழ்வை வாழும் காட்டுத் துறவிகள் தங்கள் புலன்களின் நிறைவைத் தாங்கள் மணந்து கொண்ட மனைவியருடன் அடக்கிக் கொள்ள வேண்டும். மனைவிகளுக்குரிய பருவ காலங்களில் மட்டுமே அவர்களுடன் கலவியில் ஈடுபட்டு அவர்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும்.(25)

இந்த அறவோர் பின்பற்றும் அறமானது, முனிவர்களால் விதிக்கப்பட்டு அவர்களாலேயே பின்பற்றப்படுகிறது. அறம் ஈட்டுவதில் தங்கள் கண்களை நிலைக்கச் செய்யும் அவர்கள், கட்டுப்பாடற்ற பேராசையில் இன்ப நுகர் பொருட்கள் எதனையும் பின்தொடரக்கூடாது.(26) முற்றிலும் தீங்கற்ற தன்மையை உறுதிகூறும் கொடையை அனைத்து உயிரினங்களுக்குக் கொடுக்கும் மனிதனின் ஆன்மாவானது வன்மத்தில் இருந்தும் தீங்கிலிருந்தும் விடுபடுவதால் அவன் அறவோனாகிறான்.(27) உண்மையில், அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுபவனும், அனைத்து உயிரினங்களிடமும் முற்றிலும் நேர்மையாக நடந்து கொள்ளும் நோன்பைப் பின்பற்றுபவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்பவனுமான மனிதன் அறவோனாகிறான்.(28) வேதங்கள் அனைத்திலும் நீராடுபவன், அனைத்து உயிரினங்களுடனும் நேர்மையாக நடந்து கொள்பவன் ஆகிய இருவரும் பலனின் அளவில் சரிநிகராகவே பார்க்கப்படுகிறார்கள். ஒருவேளை பின்னவன் பலனின் அளவில் சிறிதளவு மேம்பட்டிருக்கக்கூடும்.(29)

நேர்மை அறமெனச் சொல்லப்படுகிறது; நேன்மையின்மை அல்லது கோணல்புத்தி மாறாக {மறமாகச்} சொல்லப்படுகிறது. நேர்மையாக நடந்து கொள்ளும் மனிதன் அறத்துடன் கூடியவனாகிறான் {அறவோனாகிறான்}.(30) நேர்மையான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதன், தேவர்களுக்கு மத்தியில் வசிப்பிடத்தை அடைவதில் வெற்றியடைகிறான். எனவே, அறப்பலனை அடைய விரும்பும் மனிதன் நேர்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.(31) மன்னிக்கும் இயல்பு, தற்கட்டுப்பாடு, முற்றாக அடக்கப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் கூடிய ஒருவன் வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகத் தன்னை அறத்தின் உடல்வடிவமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அத்தகைய மனிதன், அறக்கடமைகளை வெளிப்படுத்துவதைத் தவிர அறப்பலனையும் கொண்டவனாகிறான்.(32) தூக்கக்கலக்கம், தாமதம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், தன் சக்திக்குத் தக்க அறப்பாதையைப் பின்பற்றுபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதன், ஒழுக்கத்தூய்மை அடைந்து, வயதில் முதிர்ந்ததும் பிரம்மத்திற்கு இணையானவனாகக் கருதப்படுகிறான்” என்றான்.(33)

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! தேவா, தங்கள் ஆசிரமங்களில் பற்றுடையவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களுமான தவசிகள் கடமைகளின் எந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் பெருங்காந்தியை அடைவதில் வெல்கிறார்கள்?(34) மேலும் பெருஞ்செல்வத்தைக் கொண்ட மன்னர்களும், இளவரசர்களும், செல்வமில்லாத பிறரும் என்ன செயல்களைச் செய்வதன் மூலம் உயர்ந்த வெகுமதிகளை அடைவதில் வெல்கிறார்கள்?(35) ஓ! தேவா, காட்டில் வசிப்பவர்கள் என்ன செயல்களைச் செய்வதன் மூலம் நித்தியமான இடத்தை அடைவதிலும், தங்கள் மேனியில் தெய்வீக சந்தனத்தைப் பூசி அலங்கரித்துக் கொள்வதிலும் வெல்கிறார்கள்?(36) ஓ! முக்கண்களைக் கொண்ட சிறப்புமிக்கத் தேவா, ஓ! முந்நகரங்களை அழித்தவரே, தவங்களைச் செய்வது குறித்த மங்கல காரியம் குறித்த அனைத்தையும் விரிவாகச் சொல்வதன் மூலம் என் ஐயத்தை விலக்குவீராக” என்று கேட்டாள்.(37)

அந்தச் சிறப்புமிக்கத் தேவன், “புலனடக்கத்துடன் உண்ணாநோன்புகள் தொடர்பான நோன்புகளை நோற்பவர்கள், எந்த உயிரினத்திற்கு எவ்வகைத் தீங்கையும் இழைக்காதவர்கள், வாக்கில் வாய்மை பயில்பவர்கள் ஆகியோர் வெற்றியை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்ந்து, அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டு, கந்தர்வர்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பார்கள்.(38) மண்டூக யோகம் தொடர்புடைய மனோநிலையுடன் கிடப்பவனும், முறையான விதிகளின்படி பலன்மிக்கச் செயல்களைச் செய்து தீக்ஷை எடுத்தவனுமான அறவோன், மறுமையில் நாகர்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பார்கள்.(39) மான்களின் துணையுடன், அவற்றின் வாய்களில் இருந்து விழும் புற்களையும், காய்கறிகளையும் உண்டு தீக்ஷை எடுத்துக் கொண்டு அவை தொடர்பான கடமைகளைக் கவனிப்பவர்கள் அமராவதியை (இந்திரனின் மாளிகைகளை) அடைவதில் வெல்கிறார்கள்.(40)

பாசிகளைத் திரட்டி, மரங்களின் உதிர்ந்த இலைகளை எடுத்து அவற்றை உண்டு வாழ்ந்து, குளிரின் கடுமைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன் மிக உயர்ந்த இடத்தை அடைவான்.(41) காற்றையோ, நீரையோ, கனிகளையோ, கிழங்குகளையோ உண்டு வாழும் மனிதன், மறுமையில் யக்ஷர்களின் செழிப்பை அடைந்து, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த அப்சரஸ்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பான்.(42) விதிகளில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி பனிரெண்டு ஆண்டுகள் கோடைக்காலத்தில் ஐந்து நெருப்புகளைத் தாங்கும் நோன்பைப் பயிலும் ஒருவன் தன் மறுபிறவியில் ஒரு மன்னனாகப் பிறக்கிறான்.(43) உணவு குறித்த நோன்புகளை நோற்று, பனிரெண்டு வருடங்கள் தவம்பயின்று, தடையெச்சப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களையும் முறையாகக் கடைபிடித்து வாழ்பவன் தன் மறுபிறவியில் பூமியின் ஆட்சியாளனாவான்.(44) ஆகாயத்தையே மேற்கூரையாகக் கொண்ட உறைவிடத்தில் வெறுந்தரையில் அமர்ந்து, கிடப்பவன், அனைத்து உணவையும் தவிர்த்து தன் உடலைக் கைவிடும்போது சொர்க்கத்தின் பேரின்பத்தை அடைகிறான்.(45)

ஓ! மங்கையே, (வானத்தை {மேற்கூரையாகக் கொண்ட இடத்தை} மட்டுமே தன் உறைவிடமாகக் கொண்டு) வெறுந்தரையில் அமர்ந்து, கிடப்பவன், சிறந்த வாகனங்கள், படுக்கைகள், சந்திரப்பிரகாசத்துடன் கூடிய விலைமதிப்புமிக்க மாளிகைகள் ஆகியவற்றை வெகுமதிகளாக அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எளிய உணவை உண்டு, பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்று தன்னைச் சார்ந்தே வாழும் மனிதன், உணவனைத்தையும் கைவிட்டு தன் உடலைக் கைவிடும்போது, சொர்க்கத்திற்கு உயர்வதில் வென்று, அதன் இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான். தன்னை மட்டுமே முழுமையாகச் சார்ந்து வாழ்ந்த மனிதன், தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைப் பனிரெண்டு வருடங்கள் பயின்று, இறுதியாகப் பெருங்கடலில் தன்னுடலைக் கைவிட்டால், அவன் தன் மரணத்திற்குப் பிறகு வருணலோகத்தை அடைகிறான். முற்றிலும் தன்னை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, பனிரெண்டு வருட தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைச் செய்து,(46-49) கூரிய கல்லால் தன் பாதத்தையே துளைத்துக் கொள்ளும் மனிதன் குஹ்யலோகத்தின் இன்பத்தை அடைவதில் வெல்கிறான். சுயத்தின் துணையுடன் சுயத்தை விளைவிப்பவனும், (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும்,(50) தீக்ஷைக்குப் பிறகு பனிரெண்டு ஆண்டு ஒழுக்கமாக மனத்தில் இவற்றை நோற்பவன், சொர்க்கத்தை அடைந்து, தேவர்களைத் துணையாக அடைந்து இன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பான்.(51)

முற்றிலும் தன்னையே சார்ந்திருந்து, தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைப் பனிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி, இறுதியாகத் தேவர்களுக்குக் காணிக்கையாகத் தன்னுடலை நெருப்பில் கைவிடுபவன், பிரம்மலோகத்தை அடைந்து அங்கே உயர்வாக மதிக்கப்படுகிறான்.(52) ஓ! தேவி, பனிரெண்டு வருடங்கள் தீக்ஷை கடமைகளைப் பின்பற்றி, தன் புனித நெருப்பை ஒரு மரத்தில் வைத்துவிட்டு, உரிய தீக்ஷை பெற்றவனும், புலனடக்கத்துடன் கூடியவனுமான ஒரு மறுபிறப்பாளன், சுயத்தைச் சுயத்தில் வைத்து மமதையில் இருந்து விடுபட்டு, அறம் ஈட்ட விரும்பி, தன் உடலை மறைக்காமல் புறப்பட்டு, வீரர்கள் செல்லும் பாதையில் நடந்து (கிடப்பதற்குரிய காலம் வரும்போது) வீரர்களின் இயல்புக்கேற்றபடி கிடந்து, வீரர்களின் ஒழுக்கப்படியே வாழ்ந்தால், அவன் நிச்சயம் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட கதியை அடைவான்[2].(53-55) அத்தகைய மனிதன் சக்ரனின் {இந்திரனின்} நித்திய உலகத்திற்குச் சென்று தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையைப் பெற்று, தெய்வீக மலர்மாலைகளையும், தெய்வீக நறுமணப்பொருட்களையும் தரித்துக் கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(56)உண்மையில், அறம் சார்ந்த ஆன்மா கொண்ட மனிதன், தேவர்களைத் தன் துணைவர்களாக அடைந்து, சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறான். வீரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றும் வீரனும், வீரர்களுக்குரிய யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவனும்,(57) அனைத்தையும் துறந்து, நல்லியல்பின் நடைமுறைகளைப் பயின்று வாழ்பவனும், புலனடக்கத்துடன் கூடியவனாகத் தீக்ஷை பெற்று உடலிலும், மனத்திலும் தூய்மையை அடைந்தவனுமான ஒருவன், வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையை நிச்சயம் அடைவான். நித்தியமான இன்பலோகங்கள் அவனுடையவையாகும்.(58) சாரதியின் விருப்பப்படி செல்லும் தேரைச் செலுத்திக் கொண்டு இன்பலோகங்கள் அனைத்திலும் அவன் தன் விருப்பப்படி திரிந்து வருவான். உண்மையில் அருளப்பட்ட மனிதன், சக்ரனின் உலகங்களில் வசித்து, துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு எப்போதும் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருப்பான்” என்றான் {சிவன்}.(59)

பிராமணத்தன்மை கொண்ட சூத்திரன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 143-ஒருவன் தன் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு மேன்மையுறவோ, தாழ்ந்த நிலைக்கு வீழ்வதோ நேரும் சூழ்நிலைகளை உமைக்குச் சொன்ன சிவன்…

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பகனின் கண்களையும், பூஷனின் பற்களையும் கிழித்தெறிந்தவரே, ஓ! தக்ஷனின் வேள்வியை அழித்தவரே, ஓ! முக்கண் தேவா, எனக்கோர் ஐயம் இருக்கிறது.(1) பழங்காலத்தில் சிறப்புமிக்கச் சுயம்புவே நான்கு வகைகளை {வர்ணங்களைப்} படைத்தார். ஒரு வைசியன் செய்யும் எந்தச் செயல்களின் தீய விளைவால் அவன் ஒரு சூத்திரனாகிறான்?(2) எந்தச் செயல்களினால் ஒரு க்ஷத்திரியன் வைசியானாகவும், ஒரு மறுபிறப்பாளன் (பிராமணன்) க்ஷத்திரியனாகவும் ஆகின்றனர்? வகைகளின் தரம் குறைவதை எவ்வழிமுறைகளினால் தடுக்க வேண்டும்?(3) எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் மறுபிறவியில் சூத்திர வகையில் பிறக்கிறான்? ஓ! பலமிக்கத் தேவா, எந்தச் செயல்களைச் செய்தன் மூலம் ஒரு க்ஷத்திரியன் சூத்திர நிலையை அடைகிறான்?(4) ஓ! பாவமற்றவரே, ஓ! அனைத்து உயிரினங்களில் தலைவரே, ஓ! சிறப்புமிக்கவரே, எனக்கிருக்கும் இந்த ஐயத்தை விலக்குவீராக. மேலும் மற்ற மூன்று வகையினரும் இயல்பாகவே பிராமணத்தன்மையை அடைவது எவ்வாறு என்பதையும் சொல்வீராக?” என்று கேட்டாள்.(5)அந்தச் சிறப்புமிக்கவன், “ஓ! தேவி, பிராமணத்தன்மை அடைவதற்கு மிக அரிதானதாகும். ஓ! மங்கலமங்கையே, ஒருவன் அசல் படைப்பின் மூலமோ, பிறப்பின் மூலமோ பிராமணனாகிறான். அதே போலவே, க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகியோர் அனைவரும் மூலப்படைப்பின் மூலமே அவ்வாறாகிறார்கள். இதுவே என் கருத்தாகும்[1].(6) எனினும், பிராமணனாகப் பிறந்த ஒருவன் தன் தீச்செயல்களின் மூலம் தன் நிலையில் இருந்து வீழ்கிறான். எனவே, முதல் வகை நிலையை அடைந்த பிராமணன், (தன் செயல்களின் மூலம்) அதை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.(7) ஒரு க்ஷத்திரியனோ, வைசியனோ ஒரு பிராமணனைப் போலவே பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளைப் பயின்று வாழ்ந்தால், அவன் (தன் அடுத்தப் பிறவியில்) ஒரு பிராமணனாகிறான்.(8) ஒரு பிராமணன் தன் வகைக்கான கடமைகளைக் கைவிட்டு, க்ஷத்திரியனுக்குரிய கடமைகளைப் பின்பற்றினால் அவன் தன் பிராமணன நிலையில் இருந்து விழுந்து க்ஷத்திரியனாகிவிட்டதாகக் கருதப்பட வேண்டும்.(9)
அற்ப புத்தி கொண்ட எந்தப் பிராமணன், அடைதற்கு மிக அரிய தன் பிராமண நிலையை மறந்து, பேராசை மற்றும் மடமையால் தூண்டப்பட்டு, வைசியர்களுக்குரிய நடைமுறைகளைப் பின்பற்றுவானோ,(10) அவன் வைசியனாகவே கருதப்படுகிறான். அதே போல வைசியனாகப் பிறந்த ஒருவன், சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு சூத்திரனாகிறான். உண்மையில், தன் வகைக்கான கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட பிராமணன், சூத்திரனின் நிலைக்கும் தாழக்கூடும்.(11) தன் பிறப்பின் வகையில் இருந்து வீழ்ந்த அத்தகைய பிராமணன், (அவன் முறையாகத் தன் கடமைகளை நோற்றால் எது அவனுடைய இலக்காக இருக்குமோ அந்த) பிரம்ம லோகத்தை அடையாமல், நரகத்தில் மூழ்கி, தன் மறுபிறவியில் ஒரு சூத்திரனாகப் பிறக்கிறான்.(12) உயர்வாக அருளப்பட்ட க்ஷத்திரியனோ, வைசியனோ தன் வகைக்காக விதிக்கப்பட்ட கடமைகளுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கைவிட்டு ஒரு சூத்திரனுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால்,(13) அவன் தன் வகையில் இருந்து வீழ்ந்து கலப்பு வர்ண மனிதனாகிறான். இவ்வகையிலேயே பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ சூத்திர நிலைக்குள் மூழ்குகிறார்கள்.(14) தன் வகைக்கான கடமைகளைப் பயின்று தெளிவான பார்வையை அடைந்தவனும், அறிவு மற்றும் அறிவியலுடன் கூடியவனும், (உடலிலும், மனத்திலும்) தூய்மை கொண்டவனும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், தன் கடமைகள் அனைத்தையும் பயில்வதில் அர்ப்பணிப்புமிக்கவனுமான மனிதன், நிச்சயம் அறவெகுமதிகளை அனுபவிப்பான்.(15)
 
ஓ! தேவி, இது குறித்து (சுயம்புவான) பிரம்மனால் சொல்லப்பட்டவற்றை உனக்குச் சொல்லப் போகிறேன். பலனடைய விரும்பும் அறவோர் எப்போதும் உறுதியுடன் ஆன்மப் பண்பாட்டைத் தொடர்வார்கள்.(16) கடுமைநிறைந்த கொடூர மனிதர்களில் இருந்து வரும் உணவு நிந்திக்கத்தகுந்ததாகும். பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களுக்குக் கொடுக்கச் சமைக்கப்பட்ட உணவும் அத்தகையதே. இறந்து போன மனிதனின் முதல் சிராத்தத்திற்காகச் சமைக்கப்பட்ட உணவும் அத்தகையதே. ஒரு சூத்திரனால் கொடுக்கப்பட்டதும், வழக்கமான களங்கங்களின் விளைவால் களங்கப்பட்டதுமான உணவும் அவ்வாறானதே. இவற்றை ஒரு பிராமணன் ஒருபோதும் உண்ணக்கூடாது.(17) ஓ! தேவி, ஒரு சூத்திரனின் உணவு உயர் ஆன்ம தேவர்களால் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. இதைப் பெரும்பாட்டன் தன் வாயால் அதிகாரத்துடன் சொன்னதாகவே நான் நினைக்கிறேன்.(18) புனித நெருப்பை நிறுவுபவனும், வேள்விகளைச் செய்பவனுமான ஒரு பிராமணன், ஒரு சூத்திரன் கொடுத்த உணவின் எந்தப் பகுதியும் செரிக்காமல் இறந்தால் அவன் நிச்சயம் அடுத்தப் பிறவியில் ஒரு சூத்திரனாகவே பிறப்பான்.(19) சூத்திரனின் உணவு தன் குடலில் எஞ்சியிருப்பதன் விளைவால் அவன் பிராமண நிலையில் இருந்து வீழ்கிறான். அத்தகைய பிராமணன் சூத்திர நிலையை அடைகிறான். இதில் ஐயமேதும் கிடையாது.(20)
 
ஒரு பிராமணன், எந்த மனிதனின் உணவை வாழ்நாள் முழுவதும் உண்டு வாழ்ந்தானோ, அல்லது தன் இறுதி மூச்சில் தன் வயிற்றில் எந்த மனிதன் கொடுத்த உணவு செரிக்காமல் இருக்கிறதோ அந்த மனிதனின் நிலையிலேயே அடுத்தப் பிறவியில் அவன் பிறக்கிறான்.(21) அடைவதற்கு மிக அரிதான பிராமணன் என்ற மங்கல நிலையை அடைந்தவன், அதை அலட்சியம் செய்து, தடை செய்யப்பட்ட உணவை உண்டால் அவன் தனது உயர்ந்த நிலையில் இருந்து வீழ்கிறான்.(22) மதுவைப் பருகுபவனும், பிராமணக் கொலை செய்த குற்றவாளியும், நடத்தையில் வஞ்சகம் நிறைந்தவனும், கள்வனும், நோன்புகளை உடைத்தவனும், தூய்மையற்றவனும், வேத கல்வியில் கவனமில்லாதவனும், பாவியும், பேராசை கொண்டவனும், வஞ்சகனும்,(23) நோன்புகளை நோற்காதவனும், சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவனும், பிறரின் காமத்திற்குத் தரகு வேலை பார்த்து வாழ்வாதாரத்தை அடைபவனும், சோமலதையை விற்பனை செய்பவனும், தன்னிலும் தாழ்ந்த வகை மனிதனுக்குத் தொண்டாற்றுபவனுமான மனிதன் பிராமணத்தன்மை என்ற தன் நிலையில் இருந்து வீழ்கிறான்.(24) ஆசானின் படுக்கைக்குக் களங்கம் செய்பவனும், அவரிடம் வன்மத்தை வளர்த்துக் கொள்பவனும், அவரைக் குறித்துத் தவறாகப் பேசுவதில் இன்பங்காணுபவனுமான பிராமணன், பிரம்மத்தை அறிந்தவனாகவே இருப்பினும் தன் பிராமணத்தன்மையை இழக்கிறான்.(25)
 
ஓ! தேவி, இந்த நற்செயல்களைச் செய்வதால் ஒரு சூத்திரன், பிராமணனாகவும், வைசியன் க்ஷத்திரியனாகவும் மாறலாம். ஒரு சூத்திரன் தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளை யாவற்றையும் முறையாக விதிப்படி செய்ய வேண்டும். அவன் மூவகை மக்களிடமும் பணிவுடன் கீழ்ப்படிந்து பணி செய்து, கவனத்துடன் அவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். எப்போதும் அறப்பாதையைப் பின்பற்றும் சூத்திரன் இவை யாவற்றையும் உற்சாகமாகச் செய்ய வேண்டும். அவன் தேவர்களையும், மறுபிறப்பாள வகையினரையும் மதிக்க வேண்டும். அவன் அனைத்து மனிதர்களிடமும் விருந்தோம்பல் நோன்பைப் பின்பற்ற வேண்டும்.(28) புலனடக்கத்துடன் எளிய உணவை உண்ணும் அவன் தன் மனைவியை அவளுக்குரிய காலத்தைத் தவிர ஒருபோதும் அணுகக்கூடாது. அவன் எப்போதும் புனிதமான, தூய்மையான மனிதர்களைத் தேட வேண்டும். உணவைப் பொறுத்தவரையில் அவன் அனைத்து மனிதர்களின் தேவைகளும் நிறைவடைந்த பின்னர் எஞ்சியதை உண்ண வேண்டும்.(29) உண்மையில், ஒரு சூத்திரன் (தனது மறுபிறவியில்) ஒரு வைசியனாக விரும்பினால், அவன் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஒரு வைசியன் (தன் அடுத்தப் பிறவியில்) ஒரு பிராமணனாக விரும்பினால் அவன் இக்கடமைகளைப் பின்பற்ற வேண்டும். அவன் வாக்கில் வாய்மை பயில வேண்டும், செருக்கு மற்றும் ஆணவத்தில் இருந்து விடுபட வேண்டும். அவன் முரண்பட்ட இரட்டைகள் அனைத்திற்கும் மேலாக எழ வேண்டும். அவன் அமைதியாகத் தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.(30)
 
அவன் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, வேத கல்வியையும், வேதம் ஓதுவதையும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அவன் புலனடக்கத்துடன் பிராமணர்களை மதித்து அனைத்து வகையினரின் நலத்தை நாட வேண்டும். அவன் இல்லறவாழ்வுமுறையைப் பின்பற்றி, பரிந்துரைக்கப்பட்ட வேளைகளில் ஒரு நாளைக்கு இரு முறை மட்டுமே உண்டு, தன் குடும்ப உறுப்பினர்கள், தன்னைச் சார்ந்திருப்பவர்கள், விருந்தினர்கள் ஆகியோர் அனைவரும் நிறைவடைந்த பின்னர் எஞ்சியிருக்கும் உணவைக் கொண்டு மட்டுமே தன் பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும். எளிய உணவை உண்பவனாக இருக்கும் அவன், வெகுமதி பெறும் ஆசையின் உந்துதலில்லாமல் செயல்பட வேண்டும். அவன தற்பெறுமை பேசுவதில் இருந்து விடுபட வேண்டும். அவன் அக்னிஹோத்திரத்தில் தேவர்களை வழிபட்டு விதிப்படி ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அனைத்து மனிதர்களுக்கு விருந்தோம்பல் கடமைகளைப் பின்பற்றும் அவன், சமைக்கப்பட்ட உணவை முன் சொன்ன அனைவருக்கும் கொடுத்த பிறகு எஞ்சியிருப்பதையே உண்ண வேண்டும். அவன் விதிப்படி மூன்று நெருப்புகளை வழிபட வேண்டும். அத்தகைய தூய ஒழுக்கம் கொண்ட வைசியன், அடுத்தப் பிறவியில் உயர்ந்த க்ஷத்திரியக் குடும்பத்தில் பிறப்பான்[2].(31-34) ஒரு வைசியன் க்ஷத்திரியனாகப் பிறந்த பிறகு, வழக்கமான தூய்மைச் சடங்குகளின் மூலம் புனித நூல் {பூணூல்} தரித்தவனாகி, நோன்புகளை நோற்று வந்தால் அவன் தனது அடுத்தப் பிறவியில் மதிப்புமிக்கப் பிராமணனாகிறான்.(35)
உண்மையில், ஒரு க்ஷத்திரியனாகப் பிறந்த பிறகு அவன் கொடைகளை அளித்து, அபரிமிதமான தக்ஷிணைகளுடன் பெரும் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, வேதங்கற்று, சொர்க்கத்தை அடையும் விருப்பத்துடன் மூன்று நெருப்புகளை வழிபட வேண்டும்.(36) அவன் துன்பத்தில் இருப்போரின் கவலைகளை அகற்றி அறவோரை வளர்த்து, தன் ஆட்சியின் கீழுள்ள குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். அவன் வாய்மை நிறைந்தவனாக, உண்மையிலுள்ள செயல்கள் அனைத்தையும் செய்து, இவ்வொழுக்கத்திலேயே இன்பத்தை அடைய வேண்டும்.(37) நல்லோரிடம் தண்டக்கோலைப் புறந்தள்ளி நியாயமான தண்டனைகளை அளிக்க வேண்டும். அவன் மனிதர்களை அறச்செயல்கள் செய்யுமாறு தூண்ட வேண்டும். (தன் மக்களை ஆளும் காரியத்தில்) கொள்கை கருத்துகளால் வழிநடத்தப்பட்டு, வயல்களில் விளைவதில் ஆறில் ஒரு பங்கை {வரியாக} எடுத்துக் கொள்ள வேண்டும்.(38) அவன் எப்போதும் பாலியல் இன்பத்தில் ஈடுபடாமல், பொருளியல் அறிந்தவனாக உற்சாகமாக, சுதந்திரமானவனாக வாழ வேண்டும். அற ஆன்மா கொண்ட அவன் தான் மணந்து கொண்ட மனைவியை அவளுடைய பருவகாலத்திலேயே அணுக வேண்டும்.(39) அவன் உண்ணா நோன்புகளை நோற்க வேண்டும், ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்து, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, மனத்திலும், உடலிலும் தூய்மையுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் நெருப்பறையில் விரிக்கப்பட்ட குசப் புற்களில் {தர்ப்பைகளில்} உறங்க வேண்டும்.(40)
 
அவன் (அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற) முத்தொகையைத் தேடி எப்போதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். உணவை விரும்பும் சூத்திரர்களிடம் அவன் எப்போதும் தயாராக இருக்கிறது என்ற பதிலையே சொல்ல வேண்டும்.(41) அவன் லாப அல்லது இன்ப நோக்கத்தில் எதையும் ஒருபோதும் விரும்பக்கூடாது. அவன் பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை வழிபட வேண்டும்.(42) அவன் தன் இல்லத்திலேயே துறவியின் வாழ்வை வாழ வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் விதிப்படி ஆகுதிகளை ஊற்றி காலையும், நடுப்பகலிலும், மாலையிலும் தன் அக்னிஹோத்திரத்தில் தேவர்களை முறையாகத் துதிக்க வேண்டும்.(43) அவன் {க்ஷத்திரியன்} பகைவனுக்கு எதிராகத் தன் முகத்தைத் திருப்பி, பசுக்கள் மற்றும் பிராமணர்களின் நன்மைக்காகப் போர்க்களத்தில் தன் உயிர்மூச்சை விட வேண்டும். அல்லது அவன் மந்திரங்களால் புனிதப்படுப்பட்ட மூன்று நெருப்புகளுக்குள் நுழைந்து தன் உடலைக் கைவிட வேண்டும். இந்த ஒழுக்க முறையை அவன் பின்பற்றினால் அடுத்தப் பிறவியில் அவன் ஒரு பிராமணனாவான்.(44) ஞானம் கொண்டவனும், அறிவியல் அறிந்தவனும், கழிவுகள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், வேதங்களை முழுமையாக அறிந்தவனும், அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான ஒரு க்ஷத்திரியன் தன் செயல்களின் மூலமே பிராமணனாக ஆவான்.(45)
 
ஓ! தேவி, தாழ்ந்த வகையில் சூத்திரனாகப் பிறந்த ஒரு மனிதன் இந்தச் செயல்களின் துணையால் களங்கங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, வேத அறிவையும் அடைந்து ஒரு பிராமணனாகலாம்.(46) தீய ஒழுக்கம் கொண்டவனாகும்போதும், உணவில் எந்த வேறுபாட்டையும் காணாதபோதும் ஒரு பிராமணன் தன் பிராமணத்தன்மை என்ற நிலையில் இருந்து வீழ்ந்து சூத்திரனாகிறான்.(47) ஓ! தேவி, தூய செயல்களால் தன் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டவனும், தன் புலன்கள் அனைத்தையும் அடக்கியவனும்மான சூத்திரனும், ஒரு பிராமணனைப் போன்ற மதிப்புடன் பணிவிடை செய்யப்படவும், தொண்டாற்றப்படவும் தகுந்தவனே ஆவான்.(48) இறையுணர்வுமிக்க இயல்பும், செயல்களும் ஒரு சூத்திரனிடம் தென்படும்போது, அவன் மூன்று மறுபிறப்பாள வகையினரை விடவும் மேன்மையாகக் கருதப்பட வேண்டும் என்பது என் கருத்தாகும்.(49) பிறப்போ, தூய்மைச் சடங்குகளோ, கல்வியோ, சந்ததியோ மறுபிறப்பாளர் என்ற நிலையை அளிக்கக்கூடிய தளங்களாக ஒருபோதும் கருத முடியாதவை ஆகும். உண்மையில் ஒழுக்கம் மட்டுமே அதற்கான ஒரே தளமாகும்.(50)
 
இவ்வுலகில் உள்ள பிராமணர்கள் அனைவரும், ஒழுக்கத்தின் விளைவாலேயே பிராமணர்களாக இருக்கிறார்கள். ஒரு சூத்திரன் நல்லொழுக்கத்தைத் தன்னில் நிறுவிக்கொண்டால் அவன் பிராமணத்தன்மையைக் கொண்டவனாகக் கருதப்படுவான்.(51) ஓ! மங்கல மங்கையே, பிரம்ம நிலை என்பது எங்கும் சமமாகவே இருக்கிறது. இதுவே என் கருத்தாகும். உண்மையில், குணங்களற்றதும், ஒரு களங்கமும் இல்லாததுமான பிரம்ம நிலையைக் கொண்டவன் எவனும் பிராமணனே ஆவான்.(52) வரமளிக்கும் பிரம்மன், உயிரினங்கள் அனைத்தையும் படைத்தபோது, மனிதர்களை நான்கு வகையாகப் பிறவி சார்ந்து பிரித்தது அவர்கள் வகைப்படுத்தும் காரியத்திற்காக மட்டுமே ஆகும்.(53) ஒரு பிராமணன் இவ்வுலகில் பெருங்களமாவான். அவன் இடத்திற்கு இடம் நகர்ந்து செல்வதால் அவன் பாதங்களைக் கொண்ட ஒரு களமாக இருக்கிறான். ஓ! அழகிய மங்கையே, அந்தக் களத்தில் விதைகளை நடும் ஒருவன், மறுமையில் பயிரை அறுவடை செய்வான்.(54) தனக்கான நன்மையை அடைய விரும்பும் பிராமணன், தன் வீட்டில் உள்ள அனைவரின் தேவைகளும் நிறைவடைந்த பின்னர் எஞ்சும் உணவையே எப்போதும் உண்டு வாழ வேண்டும். அவன் எப்போதும் அறப்பாதையைப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். உண்மையில் அவன் பிரம்மத்தின் பாதையிலேயே பயணிக்க வேண்டும்.(55)
 
ஸம்ஹிதைகளைக் கற்பதில் ஈடுபட்டு, இல்லறவாசியின் கடமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தியபடி அவன் வீட்டில் இருக்க வேண்டும். அவன் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், ஒருபோதும் அத்தகைய கல்வியைக் கொண்ட வாழ்வாதாரங்களைப் பெறக் கூடாது.(56) அறப்பாதையைப் பின்பற்றி, தன் புனித நெருப்பை வழிபட்டு, வேத கல்வியில் ஈடுபட்டு, எப்போதும் இவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் பிராமணன், பிரம்மமாகவே கருதப்படுகிறான்.(57) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, பிராமண நிலையை அடைந்த பிறகு, தாழ்ந்த வகை மனிதர்களின் தொடர்பால் ஏற்படும் களங்கங்களைத் தவிர்ப்பதன் மூலமும், கொடைகளைப் பெறுவதைத் தவிர்ப்பதன் மூலமும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேறு செயல்களைச் செய்வதன் மூலமும் எப்போதும் அதை {தான் அடைந்த பிராமண நிலையைக்} கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(58) ஒரு சூத்திரன் பிராமணனாகும் முறையையும், ஒரு பிராமணன் தன் தூய நிலையில் இருந்து வீழ்ந்து சூத்திரனாகும் முறையையும்கொண்ட புதிரை உனக்குச் சொன்னேன்” என்றான் {சிவன்}.(59)

கர்மபலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 144-கர்மபலன்கள் வெளிப்படும் போக்கு மற்றும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவதற்கான வழிகள் ஆகியவற்றைக் குறித்து உமைக்குச் சொன்ன சிவன்…

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, ஓ! தேவர்கள் மற்றும் அசுரர்களாக இணையாக வழிபடப்படுபவரே, மனிதர்களின் கடமைகள் மற்றும் கடமை தவறுதல்களையும் எனக்குச் சொல்வீராக. உண்மையில், ஓ! பலமிக்கவரே என் ஐயங்களைத் தீர்ப்பீராக.(1) எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றாலேயே மனிதர்கள் பந்தங்களால் கட்டப்படுகின்றனர். இவை மூன்றினாலேயே அவர்கள் அக்கட்டுகளில் இருந்து விடுபெறவும் செய்கிறார்கள்.(2) ஓ! தேவா, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், உண்மையில், எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம், எந்த நடத்தை, குணம் மற்றும் சொற்களின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்” என்று கேட்டாள்?(3)
 



தேவர்களுக்குத் தேவன், “ஓ! தேவி, கடமைகளின் உண்மைகளை நீ நன்கறிந்தவளாவாய். நீ அறம் மற்றும் தற்கட்டுப்பாட்டில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவளாவாய். நீ என்னைக் கேட்டிருப்பது உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை நிறைந்ததாகும். அது மனிதர்கள் அனைவரின் புத்தியையும் மேம்படுத்துகிறது. எனவே, அதற்குண்டான பதிலைக் கேட்பாயாக.(4) வாய்மை அறத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அறவோராகவும், பல்வேறு வாழ்வுமுறைகளின் குறியீடுகள் ஏதுமற்றவர்களாகவும் உள்ளவர்களும், அறவழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வத்தை அனுபவிப்பவர்களும் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(5) அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டவர்களும், அனைத்தையும் அறிந்தவர்களும், அனைத்துப் பொருட்களையும் காணும் கண்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் ஒருபோதும், புண்ணியம் அல்லது பாவம் ஆகியவற்றில் கட்டப்படுவதில்லை. பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்ட மனிதர்கள் ஒருபோதும் செயல் சங்கிலிகளால் கட்டப்படுவதில்லை.(6) எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஒருபோதும் எவருக்கும் தீங்கிழைக்காதவர்கள், எதனிடமும் ஒருபோதும் பற்று கொள்ளாதவர்கள் ஆகியோர் செயல்களால் ஒருபோதும் கட்டப்படுவதில்லை.(7)
 
எந்த உயிரினத்தின் உயிரையும் எடுப்பதைத் தவிர்ப்பவர்கள், அறவொழுக்கம் கொண்டவர்கள், கருணை கொண்டவர்கள், நண்பர்களையும், பகைவர்களையும் சரிநிகரான ஒளியில் காண்பவர்கள், தற்கட்டுப்பாடுடையவர்கள் ஆகியோர் ஒருபோதும் செயல்களால் கட்டப்பட மாட்டார்கள்.(8) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்கள், அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறக்கூடியவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெற்றியடைகிறார்கள்.(9) பிறருக்குச் சொந்தமானத்தை அபகரிக்க விருப்பமில்லாதவர்கள், பிறரின் மனைவிகளைவிட்டு ஒதுங்கியிருப்பவர்கள், அறவழிமுறைகளில் ஈடப்பட்ட செல்வத்தை மட்டுமே அனுபவிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(10) பிறரின் மனைவிகளிடம் தங்கள் தாய்மார், சகோதரிமார், மகள்களிடம் பழகுவது போல நடந்து கொள்ளும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(11) பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பதைத் தவிர்ப்பவர்கள், தாங்கள் கொண்டுள்ளவற்றில் முற்றிலும் நிறைவுடன் இருப்பவர்கள், தங்கள் விதியைச் சார்ந்து மட்டுமே வாழ்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(12)
 
அடுத்தவர் மனைவிகளை எப்போதும் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்பவர்கள், தங்கள் புலன்களை ஆள்பவர்கள், அற ஒழுக்கத்திற்கு அர்ப்பணிப்புடன் உள்ளவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(13) அறவோர் பின்பற்றுவதற்காகத் தேவர்களால் உண்டாக்கப்பட்ட பாதை இதுவே ஆகும். விருப்பு வெறுப்பில் இருந்து விடுபட்ட இந்தப் பாதை அறவோர் பின்பற்றுவதற்குரியதாகும்.(14) தங்கள் மனைவிகளிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவர்களுக்குரிய காலங்களில் மட்டுமே அவர்களை நாடுபவர்களும், பாலின இன்பத்தில் ஈடுபடுவதில் இருந்து விலகுபவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(15) பலன் பெறவோ, வாழ்வாதாரங்களை ஈட்டுவோ விரும்பும் ஞானிகள், ஈகை, தவங்கள், அறச்செயல்கள், உடல் மற்றும் இதயத் தூய்மை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒழுக்கத்தைப் பின்பற்றப்பட வேண்டும்.(16) சொர்க்கத்திற்கு உயர விருப்பம் கொண்டோர் இப்பாதையைப் பின்பற்ற வேண்டுமேயன்றி வேறெதையும் அல்ல” என்றான் {சிவன்}.(17)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! சிறப்புமிக்கத் தேவா, ஓ! அனைத்துயிரினங்களின் பாவமற்ற தலைவா, எந்தச் சொற்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் கட்டப்படுகிறான். மேலும் எந்தச் சொற்களைப் பேசுவதன் மூலம் ஒருவன் தன் கட்டுகளில் இருந்து விடுபடுகிறான்” என்று கேட்டாள்.(18)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “தங்களுக்காகவோ, பிறருக்காகவோ, கேலிக்காகவோ, சிரிக்கத் தூண்டவோ ஒருபோதும் பொய் சொல்லாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(19) தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டவோ, தகுதியை ஈட்டவோ, வெறும் கற்பனைக்காகவோ ஒருபோதும் பொய் சொல்லாதவர்க்ள சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(20) மென்மையான, இனிமையான, களங்கமற்ற சொற்களைச் சொல்பவர்கள், சந்திக்க நேர்பவர்கள் அனைவரையும் நேர்மையுடன் வரவேற்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(21) கடுமையான, கசப்பான, கொடுமையான சொற்களை ஒருபோதும் சொல்லாதவர்கள், வஞ்சகம் மற்றும் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(22) வஞ்சம் நிறைந்த அல்லது நண்பர்களுக்கிடையில் உள்ள புரிந்துணர்வை மீறச் செய்யும் சொற்களை ஒருபோதும் சொல்லாதவர்களும், உண்மையானதையே பேசி, நல்ல உணர்வுகளை வளர்ப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(23) கடுமை நிறைந்த பேச்சுகளைத் தவிர்ப்பவர்களும், பிறரிடம் சச்சரவுகளைத் தவிர்ப்பவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் சரிநிகராக நடந்து கொள்பவர்களும், தங்கள் ஆன்மாவை அடக்கியவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(24) தீமையான பேச்சையோ, பாவம் நிறைந்த உரையாடலையோ தவிர்ப்பவர்கள், ஏற்பில்லாத இனிமையற்ற பேச்சுகளைத் தவிர்ப்பவர்கள், ஏற்புடைய மங்கல சொற்களை மட்டுமே பேசுபவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(25) கோபவசப்பட்டுப் பிறரின் இதயங்களைக் கிழிக்கும் சொற்களைப் பேசாதவர்கள், கடும்கோபத்தில் இருக்கும்போதும் அமைதி நிறைந்த ஏற்புடைய சொற்களைப் பேசுபவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(26) ஓ! தேவி, வாக்கு தொடர்புடைய இவ்வறமும் மனிதர்களால் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும். அது மங்கலம் நிறைந்தமும், வாய்மையின் பண்பைக் கொண்டதுமாகும். ஞானம் கொண்ட மனிதர்கள் எப்போதும் பொய்யைத் தவிர்க்க வேண்டும்” என்றான்.(27)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! தேவர்களுக்குத் தேவா, ஓ! பினாகைபாணியே, ஓ! உயர்வாக அருளப்பட்டவரே, ஒரு மனிதன் கட்டப்படும் நிலையை அடையும் மனச்செயல்கள் அல்லது எண்ணங்கள் என்னென்ன?” என்று கேட்டாள்.(28)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “ஓ! தேவி, மனச் செயல்களில் இருந்து எழும் புண்ணியத்துடன் கூடிய ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ! மங்கலமானவளே, அச்செயல்களைச் சொல்லப் போகிறேன்.(29) ஓ! இனிய முகம் கொண்டவளே, தீய பண்புகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மனம் எவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்ட, அல்லது தீய எண்ணங்களால் கட்டப்படுகிறது என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(30)
 
தனிமையான காட்டில் கிடக்கும் பிறருக்குச் சொந்தமான உடைமைகளைக்கூட அபகரிக்க வேண்டுமென மனத்தாலும் நினைக்காத மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(31) வீட்டிலோ, கிராமத்திலோ கைவிடப்பட்டுத் தனியாகக் கிடக்கும் பிறருடைய உடைமைகளை அபகரிக்க நினைக்காத மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(32) பிறருடைய மனைவிகளை வெறிச்சோடிய இடங்களில் கண்டாலும் ஆசையின் ஆதிக்கத்தில் அவர்களுடன் தொடர்புகொள்ள மனத்தாலும் நினையாத மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(33) நண்பர்களையோ, பகைவர்களையோ சந்தித்தாலும் அனைவரிடமும் ஒரே நட்பு வழியிலேயே பழகும் மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(34) கல்வியும், கருணையும் கொண்டவர்களும், உடலிலும், மனத்திலும் தூய்மை கொண்டவர்களும், வாய்மையைப் பின்பற்றுவதில் உறுதி கொண்டவர்களும், தாங்கள் கொண்டுள்ளவற்றில் நிறைவுடன் இருப்பவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(35)
 
எந்த உயிரினத்திற்கும் கெடுதி நினைக்காதவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் இதயப்பூர்வமான நட்பைக் கொண்டவர்களும், அனைத்திடமும் கருணை கொண்டவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(36) நம்பிக்கை கொண்டவர்களும், புனிதமானவர்களும், புனிமான மனிதர்களின் துணையை நாடுபவர்களும், சரி தவறு ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிதவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(37) ஓ! தேவி, நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவுகளை அறிந்த மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(38) செய்யும் காரியங்கள் அனைத்திலும் நீதியுடன் செயல்படுபவர்களும், விரும்பத்தக்க சாதனைகள் அனைத்தையும் கொண்டவர்களும், தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அனைத்து நற்செயல்களிலும் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(39) ஓ! தேவி, இந்த மனிதர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் செயல்களின் பலன்மிக்க விளைவுகளால் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள். நீ வேறு என்ன கேட்க விரும்புகிறாய்?” என்றான்.(40)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! மஹேஸ்வரரே, மனிதர்கள் தொடர்புடைய ஒரு காரியத்தில் எனக்குப் பெரும் ஐயம் இருக்கிறது. அதைக் கவனமாக எனக்கு விளக்குவதே உமக்குத் தகும்.(41) ஓ! பலமிக்கத் தேவா, எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மனிதன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்? எந்தத் தவங்களைச் செய்வதன் மூலம் அவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்?(42) எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் அவன் பூமியில் குறைந்த காலமே வாழ்கிறான்? ஓ! முற்றிலும் களங்கமற்றவரே, (செயல்படுபவனுக்கு நீண்ட மற்றும் குறுகிய வாழ்நாளை அளிப்பதில்) செயல்கள் உண்டாக்கும் விளைவுகளைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(43) சிலர் நற்பேற்றைப் பெறுவதும், சிலர் கெடுபேற்றைப் பெறுவதும் காணப்படுகிறது. சிலர் உன்னதப் பிறப்பைக் கொண்டவர்களாகவும், சிலர் உன்னதமற்ற பிறப்பைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.(44) சிலர் மரக்கட்டைகளால் ஆனவர்களைப் போல வெறுப்பூட்டும் குணம் கொண்டவர்களாகவும், அதே வேளையில் வேறு சிலர் முதல் பார்வையிலேயே இனிமையான குணங்களைக் கொண்டவர்களாகவும் தெரிகிறார்கள்.(45) சிலர் ஞானமற்றவர்களாகவும், சிலர் ஞானமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் சிலர் உயர்ந்த புத்தியையும் ஞானத்தையும் கொண்டனவர்களாக, அறிவு மற்றும் அறிவியலால் தெளிவடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(46) சிலர் சிறு துன்பத்தை அனுபவிக்கிறார்கள், வேறு சிலர் மிகக் கனமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இத்தகைய பல்வேறு காட்சிகள் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றன. ஓ! சிறப்புமிக்கவரே, இவை யாவற்றுக்கும் காரணம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள்.(47)
 
தேவர்களின் தேவன் {மஹேஸ்வரன்}, “ஓ! தேவி, செயல்களின் கனிகள் வெளிப்பாட்டைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். அந்த வெளிப்பாட்டு விதிகளின்படியே மனிதர்கள் இவ்வுலகில் தங்கள் செயல்களின் விளைவால் இன்புறவும் துன்புறவும் செய்கிறார்கள்.(48) ஓ! தேவி, பிற உயிரினங்களின் உயிர்களை எடுக்கும் நோக்கில் கடும் தன்மையை ஏற்பவனும், பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கத் தடிகளைக் கைகளில் ஏந்துபவனும், ஆயுதங்களை உயர்த்துபவனும், உயிரினங்களைக் கொல்பவனும்,(49) கருணையற்றவனும், உயிரினங்களுக்கு எப்போதும் கலக்கத்தை ஏற்படுத்துபவனும், எறும்பு மற்றும் புழுக்களுக்கும் பாதுகாப்பை வழங்க மறுப்பவனும், கொடூரம் நிறைந்தவனுமான ஒருவன்,(50) நரகில் மூழ்குகிறான். ஓ! தேவி, இதற்கு எதிர் மனநிலையில் இருந்து அறச்செயல்கள் செய்யும் ஒருவன் ஓர் அழகான மனிதனாகப் பிறக்கிறான்.(51) கொடூரமிக்க மனிதன் நரகத்திற்குச் செல்லும் அதே வேளையில் கருணை கொண்ட மனிதன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். நரகத்திற்குச் செல்லும் மனிதன் கடும் துன்பங்களை அனுபவிக்கிறான்.(52) நரகத்தில் மூழ்கும் ஒருவன், அதில் இருந்து எழுந்து குறைந்த வாழ்நாளைக் கொண்ட மனிதனாகப் பிறப்பெடுக்கிறான்.(53) ஓ! தேவி, தீங்கிழைக்கும், கொலை செய்யும் காரியங்களில் அடிமையாக இருக்கும் மனிதன் தன் பாவம் நிறைந்த செயல்களால் அழியத்தகுந்தவனாகிறான். அத்தகைய மனிதன் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்பிலாதவனாகி, குறைந்த வாழ்நாளைப் பெறுகிறான்.(54)
 
வெள்ளை என்றழைக்கப்படும் வகைக்குரியவனும், உயிரினங்களைக் கொல்வதைத் தவிர்ப்பவனும், ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டவனும், ஒருவரையும் ஒருபோதும் தண்டிக்காதவனும், எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காதவனும்,(55) தனக்காக எவரையும் உயிரினங்களைக் கொல்லச் செய்யாதவனும், தானே தாக்கப்படும்போதும், தன்னைக் கொல்ல முயற்சி நடக்கும்போதும்கூட ஒருபோதும் தாக்காமல் அல்லது கொல்லாமல் இருப்பவனும், கொலைச்செயலை ஒருபோதும் அங்கீகரிக்காதவனும், அல்லது அனுமதிக்காதவனும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவனும், தன்னைப் போலவே பிறரிடமும் நடந்து கொள்பவனுமான(56) மேன்மையான மனிதன், ஓ! தேவி, தேவர்களின் நிலையை அடைவதில் வெல்கிறான். அத்தகைய மனிதன் மகிழ்ச்சி நிறைந்தவனாகப் பல்வேறு வகை ஆடம்பரப் பொருட்களை அனுபவிப்பவனாகிறான்.(57) அத்தகையவன், மனிதர்களின் உலகில் பிறக்க நேர்ந்தால் அவன் நெரும் வாழ்நாளை அடைந்து, பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(58) உயிரினங்களைக் கொல்வதைத் தவிர்க்கும் பண்பைக் குறியீடாகக் கொண்ட இந்த வழியை அறவொழுக்கம் ஒழுகுபவர்களுக்கும், நெடும் வாழ்நாளால் அருளப்பட்டவர்களுக்கும் உரிய வழியாகச் சுயம்புவான பிரம்மனே குறிப்பிட்டிருக்கிறான்” என்றான் {சிவன்}.(59)

தர்மப் பாதை! – அநுசாஸனபர்வம் பகுதி – 145-சொர்க்கத்தை வெல்லும் மனோநிலை, ஒழுக்கம், செயல்கள் மற்றும் கொடைகள்; ஞானத்தை அடையச் செய்யும் செயல்கள்; நன்மைக்கு வழிவகுக்கும் செயல்கள்; பல்வேறு இயல்புகளை உண்டாக்கும் செயல்கள் ஆகியவை குறித்த உமையின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிவன்…

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஒரு மனிதன், எந்த இயல்பு {மனோநிலை}, ஒழுக்கம், செயல்கள், கொடைகள் ஆகியவற்றால் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டாள்.(1)
 



மஹேஸ்வரன் {உமையிடம்}, “தாராள மனநிலை கொண்டவனும், பிராமணர்களை மதிப்பவனும், அவர்களை விருந்தோம்பலுடன் நடத்துபவனும், இல்லாதவர்கள், குருடர்கள் மற்றும் துன்புறுவோருக்கு உணவு, பானம், ஆடைகள் மற்றும் வேறு இன்பநுகர் பொருட்களைக் கொடையளிப்பவனும்,(2) வீடுகளைக் கொடையளிப்பவனும், (பொதுப் பயன்பாட்டுக்காக) மண்டபங்கள் கட்டுபவனும், கிணறுகளைத் தோண்டுபவனும், (வெப்பமான மாதங்களின் பயணிகளின் தாகம் தணிக்க) உறைவிடங்களைக் கட்டி, குளிர்ந்த தூய நீரை விநியோகிப்பவனும், குளங்களை வெட்டுபவனும், ஒவ்வொருநாளும் இலவசக் கொடைகள் அளிக்க ஏற்பாடு செய்பவனும், வந்து வேண்டுவோர் அனைவருக்கும் கொடையளிப்பவனும்,(3) இருக்கைகள், படுக்கைகள், வாகனங்கள், செல்வம், ரத்தினங்கள், வீடுகள், அனைத்து வகைத் தானியங்கள், பசுக்கள், வயல்கள் மற்றும் பெண்களை உற்சாகமிக்க இதயத்துடன் கொடையளிப்பவனுமான ஒருவன், ஓ! தேவி, சொர்க்கவாசியாகிறான்.(4,5)
 
அவன் அங்கே {சொர்க்கத்தில்} நீண்ட காலம் வசித்திருந்து பல்வேறு வகை மேன்மையான பொருட்களை அனுபவிப்பான். தன் காலத்தை அப்சரஸ்கள் துணையுடன் இன்பமாகக் கழிக்கும் அவன், நந்தவனத்திலும், இன்னும் பிற இனிமையான பகுதிகளிலும் விளையாடித் திளைத்திருப்பான்.(6) ஓ! தேவி, அவன் தன் பலன்கள் தீர்ந்ததும் சொர்க்கத்தில் இருந்து விழுந்து, இன்பத்திற்குரிய பொருட்கள் நிறைந்த, பெரும் அதிகராம் மிக்க, அபரிமிதமான செல்வம் கொண்ட மனிதனாகப் பிறக்கிறான்.(7) அப்பிறவியில் அவன் பசியிலும், உணவிலும் நிறைவடையும் பொருட்கள் அனைத்துடன் கூடியவனாகிறான். உண்மையில் அத்தகைய பொருட்களுடன் அருளப்படும் அவன் செல்வாக்கு நிறைந்தவனாகவும், கருவூலம் நிறைந்தவனாகவும் இருப்பான்.(8) ஓ! தேவி, சுயம்புவான பிரம்மன், இத்தகைய மனிதர்கள், தாராள மனத்தையும் இனிமையான குணங்களையும், உயர்வான அருளையும் பெறுவர் எனப் பழங்காலத்தில் சொல்லியிருக்கிறான்.(9) ஓ! தேவி, கொடைகள் அளிக்க இயலாத வேறு சிலரும் இருக்கிறார்கள். அற்ப புத்தி கொண்டவர்களான சிலர், அபரிமிதமான சொல்வத்தைக் கொண்டிருந்தாலும், பிராமணர்களால் கேட்கப்படும்போதுகூடக் கொடையளிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.(10)
 
இல்லாதவர்கள், குருடர்கள், துன்பத்திலிருப்போர், துறவிகள், தங்கள் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்கள் ஆகியோரைக் கண்டும், அவர்களால் வலிய கேட்கப்பட்டும்கூடச் சுவைப்புலனை {நாவை} நிறைவடையச் செய்யும் விருப்பத்தால் எப்போதும் நிறைந்த அம்மனிதர்கள் திரும்பிக் கொள்வார்கள்.(11) அவர்கள் செல்வக்கொடையோ, ஆடைகள், உணவுகள், பொன், பசுக்கள் மற்றும் எவ்வகை உணவுக் கொடையோ ஒருபோதும் கொடுப்பதில்லை.(12) ஓ! தேவி, துன்பத்தில் உள்ளோரை விடுவிக்க மனமில்லாதவர்களும், பேராசை நிறைந்தவர்களும், சாத்திரங்களில் நம்பிக்கையற்றவர்களும், கொடையளிக்காதவர்களுமான இந்த அற்ப மனிதர்கள் நரகத்தில் மூழ்குவார்கள்.(13) நரகத்தில் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய காலம் முடிந்ததும் அவர்கள் முற்றிலும் செல்வமற்ற குடும்பங்களில் மனிதனாகப் பிறப்பார்கள்.(14) எப்போதும் பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்டு, பண்பட்ட சமூகத்திலிருந்து விலக்கபட்டு, நல்ல பொருட்கள் எதையும் அனுபவிக்கும் நம்பிக்கையற்று, மிக இழிந்த வகை வாழ்வையே அவர்கள் வாழ்வார்கள்.(15)
 
அனுபவிக்கத்தகுந்த பொருட்கள் ஏதும் இல்லாத குடும்பங்களில் பிறக்கும் இந்த மனிதர்கள், பூமியில் உள்ள நல்ல பொருட்கள் எதையும் அனுபவிப்பதில் வெல்ல மாட்டார்கள். உண்மையில், ஓ! தேவி, அந்த மனிதர்கள் தங்கள் செயல்களின் மூலமே இழிந்த, வறிய நிலையை அடைவார்கள்.(16) செல்வ வளங்களால் உண்டான ஆணவமும், செருக்கும் நிறைந்த வேறு சிலரும் இருக்கிறார்கள். உணர்வற்ற அந்த இழிந்தவர்கள், தகுந்தோருக்கும் ஒருபோதும் இருக்கை அளிக்க மாட்டார்கள்.(17) அற்ப புத்தியைக் கொண்ட அவர்கள் அவ்வாறு மதிக்கத் தகுந்தோருக்கும் வழிகொடுக்க மாட்டார்கள். கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கும் கால்களைக் கழுவிக்கொள்ள நீரும் கொடுக்க மாட்டார்கள்.(18) உண்மையில், விதிக்கேற்புடைய வகையில், அர்க்கிய கொடைகளுடன் கௌரவிக்கத்தகுந்த மனிதர்களை அவர்கள் கௌரவிப்பதில்லை, அவர்கள் மதிக்கத்தகுந்தவர்களுக்கும் வாய் கழுவ நீர் கொடுப்பதில்லை.(19)
 
தங்கள் ஆசான்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்போது, அவர்கள் ஆசான்களை நடத்தும் வகையில் அவர்களை நடத்துவதில்லை. பேராசை மற்றும் ஆணவத்துடன் வாழும் அவர்கள் பெரியோரையும், வயது முதிர்ந்தோரையும், அன்புடனும், பாசத்துடனும் நடத்த மறுக்கின்றனர். மதிக்கத் தகுந்தோரையும் அவமதித்து, மதிப்பையோ, பணிவையோ வெளிப்படுத்தாமல் தங்கள் மேன்மையை உறுதி செய்கின்றனர். ஓ! தேவி, அத்தகைய மனிதர்கள் நரகில் மூழ்குவார்கள்.(20,21) நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் துன்பகாலம் முடிவடைந்து நரகத்தில் இருந்து எழுந்து, மனித வகையில் இழிந்த குடும்பங்களில் பிறக்கின்றனர்.(22) உண்மையில், தங்கள் ஆசான்களையும், பெரியோர்களையும் அவமதிப்பவர்கள், மிக இழிந்தவர்களும், புத்தியற்றவர்களுமான ஸ்வபாகர்கள் மற்றும் புல்கஸர்களின் சாதிகளில் பிறவி எடுக்கின்றனர்.(23)
 
ஆணவமற்றவன், அல்லது செருக்கற்றவன், தேவர்கள் மற்றும் பிராமணர்களை வழிபடுபவன், உலகத்தால் மதிக்கப்படுபவன், தனது மதிப்புக்குரிய அனைவரையும் வணங்குபவன், மென்மையான, இனிமையான சொற்களைப் பேசுபவன்,(24) அனைத்து வகை {வர்ண} மனிதர்களுக்கு நன்மையைச் செய்பவன், அனைத்து உயிரினங்களின் நன்மையிலும் அர்ப்பணிப்பு கொண்டவன், எவரிடமும் வெறுப்புணர்வு கொள்ளாதவன், இனிய நாவைப் படைத்தவன், இனிய குளுமையான சொற்களைச் சொல்பவன்,(25) வழிவிடத்தகுந்தோருக்கு வழிவிடுபவன், ஆசான்கள் துதிக்கப்படத்தகுந்த வகையிலேயே தன் ஆசான்களைத் துதிப்பவன், எந்த உயிரினத்திடமும் குறை காணாதவன், பெரியோரையும், விருந்தினரையும் தகுந்த முறையில் வழிபடுபவன்,(26) இயன்ற அளவுக்கு விருந்தினர்களைப் பெற விரும்புபவன், தன் வீட்டுக்கு வந்து மதிப்பவர்கள் அனைவரையும் வழிபடுபவனுமான ஒருவன்,(27) ஓ! தேவி, சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறான். அவன் தன் புண்ணியம் தீர்ந்ததும் மனித வகையில் உயர்ந்த மதிக்கத்தகுந்த குடும்பத்தில் பிறக்கிறான்.(28) அந்த வாழ்விலும் அவன் மகிழ்ச்சிக்குரிய அனைத்து வகைப் பொருட்களையும், ரத்தினங்கள் மற்றும் அனைத்து வகைச் செல்வத்தையும் அபரிமிதமாகப் பெற்றவனாக இருப்பான். அவன் தகுந்த மனிதர்களுக்கு அவர்களுக்குத் தகுந்தவற்றைக் கொடுக்கிறான். அவன் அனைத்து வகைக் கடமைகளையும், அறச்செயல்கள் அனைத்தையும் நோற்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(29) அனைத்து உயிரினங்களாலும் கௌரவிக்கப்பட்டு, அவற்றின் மதிப்பைப் பெற்று தன் செயல்களுக்கான கனிகளை அவன் அடைகிறான். அத்தகைய மனிதன் இவ்வுலகில் உயர்ந்த குலத்தில் பிறக்கிறான். நான் உனக்குச் சொன்ன இவற்றைப் பழங்காலத்தில் விதி சமைத்தவனே (பிரம்மனே) சொல்லியிருக்கிறான்.(31)
 
நடத்தையில் கடுமையாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் பீடிப்பவனும், கைகள், கால்கள், கயிறுகள், தடிகள், கல்துண்டுகள், மண்ணாங்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு பிற உயிரினங்களுக்குக் காயமேற்படுத்தித் துன்புறுத்துபவன், உயிரினங்களைக் கொல்வதற்காகப் பல்வேறு வகை வஞ்சங்களைப் பயில்பவன், விலங்குகளை விரட்டி அவற்றை அச்சுறுத்துபவன் என இவ்வழியில் தன்னை நடத்திக் கொள்ளும் ஒரு மனிதன் நிச்சயம் நரகத்தில் மூழ்குவான்.(32-34) காலப்போக்கில் அவன் மனித குலத்தில் பிறந்தால், அனைத்து வகைத் தடைகளாலும் அனைத்துப் புறங்களிலும் பீடிக்கப்படும் இழிந்த குலம், அல்லது குடும்பத்தில் பிறப்பை அடைவான்.(35) அவன் உலகமெங்கும் வெறுப்புக்குகந்த ஒரு பொருளாகிறான். மனிதர்களில் இழிந்தவனான அவன் தான் செய்யும் செயல்களின் விளைவாலேயே அவ்வாறு ஆகிறான்.(36)
 
கருணை கொண்ட மற்றொருவன், தன் கண்களை அனைத்து உயிரினங்களிலும் செலுத்துகிறான். நட்புப் பார்வையுடன் கொண்ட அவன், அனைத்து உயிரினங்களிடமும் அவற்றின் தந்தையைப் போல நடந்து கொண்டு, எந்த வகைப் பகை உணர்வும் இல்லாமல், தன் விருப்பங்களை முழுக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அவன்,(37) எந்த உயிரினத்திற்கும் வெறுப்பூட்டாமல், எப்போதும் கட்டுக்குள் உள்ள தன் கரங்கள் மற்றும் கால்கள் மூலமாக அவற்றை ஒருபோதும் அச்சுறுத்தாமல் இருக்கிறான். அவன் அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையை ஈர்க்கிறான்.(38) அவன் கயிறுகள், தடிகள், கற்கள், மண்ணாங்கட்டிகள் அல்லது எவ்வகை ஆயுதத்தாலும் ஒருபோதும் எந்த உயிரினத்தையும் பீடிப்பதில்லை. அவனுடைய செயல்கள் ஒருபோதும் கடுமையாகவோ, கொடூரமாகவோ இருப்பத்தில்லை, அவன் அன்பு நிறைந்தவனாவான்.(39) இத்தகைய நடைமுறைகளையும், ஒழுக்கத்தையும் கொண்ட ஒருவன் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்கிறான். அங்கே அவன் அனைத்து வசதிகளும் நிறைந்த தெய்வீக மாளிகையில் ஒரு தேவனைப் போல வாழ்கிறான்.(40) அவன் செய்த புண்ணியங்கள் தீர்ந்து போனால், அவன் எவ்வகைச் சிரமங்களுடனும் போராடாத, எவ்வக அச்சத்தையும் சந்திக்காத ஒரு மனிதனாகப் பிறப்பை அடைகிறான். உண்மையில், அவன் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(41) இன்பத்துடன் கூடிய அவன், தன் வாழ்வாதாரத்திற்காகத் துன்பமிக்க உழைப்பைச் செலுத்தவேண்டிய கடப்பாடு இல்லாமல், அனைத்து வகைக் கவலைகளில் இருந்தும் விடுபட்டவனாக வாழ்கறான். ஓ! தேவி, இதுவே அறவோரின் பாதையாகும். இதில் எந்தத் தடைகளோ, துன்பங்களோ கிடையாது” என்றான் {சிவன்}.(42)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “இவ்வுலகில் சில மனிதர்கள், அவற்றுக்கு {அறப்பாதைக்கு} வழிவகுக்கும் உய்த்துணர்வு மற்றும் முதற்கோள்களை நன்கறிந்தவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் அறிவியலையும், அறிவையும் கொண்ட அவர்கள் கல்வி மற்றும் ஞானம் கொண்ட பெரும் சந்ததியைப் பெற்றிருக்கிறார்கள்.(43) ஓ! தேவா, ஞானம், அறிவியல், அறிவு ஆகியவை அற்ற வேறு சிலர் மடமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்தக்குறிப்பிட்ட செயலைச் செய்வதன் மூலம் ஒரு மனிதன் ஞானத்தை அடையலாம்? எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் சிறு ஞானத்தையும், தெளிவற்ற பார்வையையும் ஒருவன் அடைகிறான்? ஓ! கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே என்னுடைய இந்த ஐயத்தை நீர் விலக்குவீராக.(45) ஓ! தேவா, பிறந்ததிலிருந்தே குருடாக இருக்கும் வேறு சிலரும் இருக்கிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்டவர்கள், பீடிக்கப்பட்டவர்கள், ஆண்மையற்றவர்கள் எனவேறு சிலரும் இருக்கிறார்கள். ஓ! தேவா, இதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள்.(46)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “தங்கள் நன்மைக்கானது எது, தங்கள் கேட்டுக்கானது எது என வேதங்கற்ற பிராமணர்களிடம் எப்போதும் விசாரிக்கும் மனிதர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, அனைத்துக் கடமைகளையும் அறிந்து,(47) அனைத்து வகைத் தீச்செயல்களையும் தவிர்த்து, நற்செயல்களை மட்டுமே செய்து, இங்குள்ள வரை பெரும் மகிழ்ச்சியில் திளைத்து, இவ்வுலகில் இருந்து செல்லும்போது, சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(48) உண்மையில், அவர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்துவிடும்போது, மானிட லோகத்தில் பெரும் நுண்ணறிவுமிக்க மனிதனாகப் பிறக்கிறார்கள். அவர்களுடன் பிறந்த புத்தியின் விளைவால் அனைத்து வகை இன்பங்களும், மங்கலங்களும், அவர்களுடையதாகிறது.(49) பிற மனிதர்கள் மணந்து கொண்ட மனைவிகள் மீது தனது தீய கண்களைச் செலுத்துபவன், அந்தப் பாவச் செயலின் விளைவால் பிறவிக் குருடாகச் சபிக்கப்படுகிறான்.(50) தங்கள் இதயத்தில் உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு, நிர்வாணப் பெண்கள் மீது தங்கள் கண்களைச் செலுத்துபவர்களும், தீச்செயல் செய்பவர்களுமான மனிதர்கள் இவ்வுலகில் பிறந்து, தொடர்நோயில் அவதிப்பட்டு, தங்கள் மொத்த வாழ்வையும் கடத்துகிறார்கள்.(51) மூடர்களும், தீச்செயல்களைச் செய்பவர்களும், தங்கள் வகையில் இருந்து வேறுபட்ட வகையைச் சார்ந்த பெண்களுடன் பாலியல் கலவியில் ஈடுபடுபவர்களுமான அற்ப ஞானம் கொண்ட மனிதர்கள், தங்கள் அடுத்தப் பிறவியில் ஆண்மையற்றவர்களாகப் பிறக்கிறார்கள்.(52) விலங்குகளைக் கொல்லச் செய்தவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கம் செய்தவர்கள், கண்டபடி பாலியல் கலவிகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் தாங்கள் பிறக்கபோகும் அடுத்தப் பிறவியில் ஆண்மையற்ற மனிதர்களாகப் பிறப்பார்கள்” என்றான் {சிவன்}.(53)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! தேவர்களில் முதன்மையானவரே, எந்தச் செயல்கள் களங்கமுள்ளவை, எந்தச் செயல்கள் களங்கமற்றவை? உண்மையில், எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் மனிதன் தனக்கான உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டாள்.(54)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “எது அறமென உறுதிசெய்ய விரும்புபவன், முக்கிய அறங்கள் மற்றும் சாதனைகளை அடைய விரும்புபவன், தனக்கான உயர்ந்த நன்மைக்கு வழிவகுக்கும் பாதையைக் கண்டடையும் நோக்கில் பிராமணர்களிடம் எப்போதும் கேள்வி கேட்பவனுமான மனிதன், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறான்.(55) (தன் பலன் தீர்ந்ததும்) அவன் மானிடப் பிறவியாய் பிறந்தால் அவன் புத்தியும், நினைவும், பெரும் ஞானமும் கொண்டவனாக இருப்பான்.(56) ஓ! தேவி, இதுவே அறவோர் பின்பற்ற வேண்டிய பெரும் நன்மை நிறைந்த ஒழுக்கக்கோடாகும். நான் மனிதர்களின் நன்மைக்கானதை உனக்குச் சொன்னேன்” என்றான்.(57)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “அறத்தை வெறுப்பவர்களும், அற்ப புத்தி கொண்டவர்களுமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேதங்களை அறிந்த பிராமணர்கள் ஒருபோதும் அணுக விரும்புவதில்லை.(58) சிராத்தம் செய்யும் கடமையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், நோன்புகளை நோற்பவர்களுமான வேறு சிலர் இருக்கின்றனர். மேலும், நோன்புகள் ஏதும் அற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நோன்புகளைக் குறித்து மனத்தில் கொள்ளாதவர்களாகவும், ஒழுக்கத்தில் ராட்சசர்களைப் போலவும் இருக்கிறார்கள்.(59) வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், ஹோமம் செய்வதில் மனம் கொள்ளாதவர்களாகவும் சிலர் இருக்கிறார்கள். எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் மனிதர்கள் இவ்வாறு பல்வேறு வகை இயல்புகளைக் கொண்டவர்களாகிறார்கள்?” என்று கேட்டாள்.(60)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “வேதங்களின் மூலம் மனிதர்களுக்கான அனைத்து செயல்களுக்கும் எல்லைகள் வரையறைசெய்யப்பட்டுள்ளன. வேத அதிகாரத்தின்படி தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளும் மனிதர்கள் (தங்கள் மறுபிறவிகளில்) நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.(61) எனினும், மடமையின் ஆதிக்கத்திற்கு ஆட்படும் மனிதர்கள் அதற்கு முரணான மறத்தை {அறமற்ற தன்மையை} ஏற்றுக் கொண்டு, நோன்புகளற்றவர்களாகவும், கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவர்களாகவும், இறுதியில் பிரம்மராட்சசர்களாகவும் கருதப்பட நேர்கிறார்கள். உண்மையில், இந்த மனிதர்களே ஹோமத்தை மனத்தில் கொள்ளாமல் ஒருபோதும் வஷத்தையும், வேறு புனித மந்திரங்களையும் சொல்லாமல், மனிதர்களில் இழிந்தவராகக் கருதப்படுகிறார்கள்.(62,63) ஓ! தேவி, உன் ஐயங்களை விலக்குவதற்காக, மனிதர்கள் தொடர்புடைய கடமைப் பெருங்கடலில் உள்ள பாவங்கள் எதையும தவிர்க்காமல் மொத்தமாக உனக்கு விளக்கியிருக்கிறேன்” என்றான் {சிவன்}”[1].(64)

ஸ்திரீ தர்மம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 146-உமையிடம் பெண்களின் அறம் குறித்துக் கேட்ட சிவன்; ஆறுகளிடம் ஆலோசனை கேட்ட உமை; உமையை உரைக்கும்படி கங்கை கோரியது; பெண்களின் அறம் குறித்து சிவனுக்குச் சொன்ன உமை…

நாரதர், “இந்தச் சொற்களைச் சொன்ன பலமிக்க மஹாதேவன், (தானே பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாகக்) கேட்க விரும்பி, தன் அருகில் அமர்ந்திருந்தவளும், தன் விருப்பத்தையே செய்ய விருப்பம் கொண்டவளுமான அன்புக்குரிய தன் மனைவியிடம் {உமையிடம்} கேள்வி கேட்டான்.(1)
 



மஹாதேவன் {உமையிடம்}, “ஓ! தேவி, எது பரம், எது அல்ல {பரமல்ல} என்பதை அறிந்தவள் நீ. ஓ! தவசிகளின் ஆசிரமங்களில் வசிக்க விரும்புபவளே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவள் நீ. ஓ! மலைகளின் மன்னனான இமவான் மகளே, நற்குணமனைத்தையும், அழகிய புருவங்களையும், அழகான சுருள் நுனி மயிரைக் கொண்டவள் நீ.(2) அனைத்துக் காரியத்திலும் திறம்பெற்றவள் நீ. தற்கட்டுப்பாட்டையும், அனைத்து உயிரினங்களிடமும் சரிநிகரான பார்வையும் கொண்டவள் நீ. மமதை அற்று அனைத்துக் கடமைகளையும் செய்பவள் நீ.(3)
பிரம்மனின் பத்தினி {கற்புடை மனைவி} சாவித்திரி ஆவாள்.
இந்திரனின் பத்தினி சச்சி ஆவாள்.
மார்க்கண்டேயரின் மனைவி தூமோர்ணை ஆவாள்.
(மன்னன்) வைஸ்ரவணனின் {குபேரனின்} மனைவி ருத்தி ஆவாள்.(4)
வருணனின் மனைவி கௌரி ஆவாள்.
சூரியனின் மனைவி ஸுவர்ச்சலை ஆவாள்.
சசியின் {சந்திரனின்} மனைவி ரோஹிணி ஆவாள்.
விபாவசுவின் {அக்னியின்} மனைவி ஸ்வாஹாதேவி ஆவாள்.(5)
கசியபரின் மனைவி அதிதி ஆவாள்.

இவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கணவர்களையே தங்கள் தேவர்களாகக் கருதுகிறார்கள். ஓ! தேவி, நீ நாள்தோறும் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறாய்.(6)
 
ஓ! அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளே, ஓ! எப்போதும் அறத்திற்கிணக்கமான சொற்களைச் சொல்பவளே, இந்தக் காரணத்திற்காகவே நான் பெண்களின் கடமைகள் குறித்து உன்னிடம் கேட்க விரும்புகிறேன். இக்காரியம் குறித்து நீ தொடக்கத்தில் இருந்தே உரையாடுவதைக் கேட்க விரும்புகிறேன்.(7) நீ என்னோடு சேர்ந்து அனைத்துக் கடமைகளையும் செய்கிறாய். உன் ஒழுக்கம் சரியாக என்னுடையதைப் போன்றது, நான் நோற்கும் நோன்புகளையே நீயும் நோற்கிறாய். உன் பலமும், சக்தியும் எனக்கிணையானவை, நீ கடுந்தவங்களைச் செய்திருக்கிறாய். உன்னால் பேசப்படும் காரியம் பெரும் பலன் மிக்கதாகும். உண்மையில், அந்த உரை உலகில் அதிகாரமிக்கதாகும்.(9) பெண்களே, பெண்களின் உயர்ந்த புகலிடமாவர் {பெண்களுக்குப் பெண்களே கதி}. ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, மனிதர்களுக்கு மத்தியில் நீ விதிக்கும் ஒழுக்க நடைமுறைகள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும்.(10) என்னுடைய பாதி உடல் உன்னுடைய பாதி உடலாலானதாகும். நீ எப்போதும் தேவர்களின் காரியங்களைச் செய்வதில் ஈடுபடுகிறாய். பூமியில் மக்கள் பெருகுவதற்குக் காரணமாகவும் இருக்கிறாய்.(11) ஓ! மங்கல மங்கையே, பெண்களின் நித்திய கடமைகள் அனைத்தையும் நீ நன்கு அறிவாய். எனவே, உன் பாலினத்திற்கான {பெண்ணினத்திற்கான} கடமைகளை எனக்கு விரிவாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(12)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தலைவா, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்திற்கும் மூலமானவரே, உமது அருளின் மூலம் என் மனத்தில் எழும் சொற்களைப் பேசப் போகிறேன்.(13) ஓ! தேவர்களின் தேவா, (என் பாலினத்தைச் சேர்ந்தவையும்) தீர்த்தங்கள் அனைத்தின் நீரையும் கொண்ட இந்த ஆறுகள் அனைத்தும், அவற்றில் உமது தூய்மைச்சடங்குகளை நீ செய்து கொள்வதற்கேதுவாக உம்மை அணுகுகின்றன[1].(14) அவற்றிடம் ஆலோசித்துவிட்டு நீர் சொன்ன காரியத்தை முறையாகச் சொல்கிறேன். தகுதிவாய்ந்தவனாக இருப்பினும், தற்பெருமை பேசுவதில் இருந்து விடுபட்டிருக்கும் மனிதனே ஒரு புருஷன் என்று அழைக்கப்படுகிறான்[2].(15) ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, பெண்களைப் பொறுத்தவரையில் அவள் தன் பாலினம் கொண்டவர்களையே பின்பற்றுகிறாள். இந்த முதன்மையான ஆறுகளிடம் ஆலோசிப்பதன் மூலம் அவை என்னால் கௌரவிக்கப்பட்டவையாக இருக்கும்.(16) புனிதமான சரஸ்வதி ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவள் ஆவாள். பெருங்கடலை நோக்கிச் செல்லும் அவள் உண்மையில் ஓடைகள் அனைத்திலும் முதல்வியாவாள்.(17) விபாசை, விதஸ்த்யை, சந்திரபாகை, ஐராவதி, சதத்ரு, தேவிகையாறு, {சிந்து, கௌதமி}, கௌசிகி, கோமதி[3],(18) {யமுனை, நர்மதை, காவேரி மற்றும்} தன்னுள் அனைத்து தீர்த்தங்களையும் கொண்டவளும், ஓடைகள் அனைத்திலும் முதன்மையாகக் கருதப்படுபவளும், சொர்க்கத்தில் எழுந்து, பூயியில் இறங்கி வந்த தெய்வீக ஆறுமான கங்கா தேவி ஆகியோர் இங்கே இருக்கின்றனர்” என்றாள்.(19)
அறவோர் அனைவரிலும் முதன்மையான தேவர்களுக்குத் தேவனின் மனைவி இதைச் சொல்லிவிட்டுத் தன் பாலினத்தைச் சேர்ந்தவர்களான அந்த ஆறுகள் அனைத்திடமும் புன்னகைத்தவாறே பேசினாள்.(20) உண்மையில், அனைத்துக் கடமைகளையும் செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்தப் பெருந்தேவனின் மனைவி, தன் பாலினத்தைச் சேர்ந்த அவர்கள் ஒவ்வொருவரிடமும் பெண்களின் கடமைகளைக் குறித்துக் கேட்டாள். உண்மையில், கங்கையை முதல்வியாகக் கொண்ட அந்த முதன்மையான ஆறுகள் பெண்களின் கடமைகள் அனைத்தையும் அறிந்தவையாகும்.(21)
 
உமை, “சிறப்புமிக்கத் தேவன் {மஹேஸ்வரன்} பெண்களின் கடமைகள் தொடர்பான கேள்வியைக் கேட்டுள்ளார். நான் உங்களுடன் ஆலோசித்த பிறகு சங்கரருக்குப் பதிலளிக்க விரும்புகிறேன்.(22) துணையற்ற எந்தத் தனி மனிதராலும் சொர்க்கத்திலோ பூமியிலோ உள்ள எந்த ஞானக்கிளையையும் அறிந்து கொள்ள இயன்றதாக நான் காணவில்லை. பெருங்கடலை நோக்கிப் பாயும் ஆறுகளே, இதற்காகவே நான் உங்கள் கருத்துகளை நாடுகிறேன்” என்றாள்.(23)
 
மங்கலமானவையும், உயர்ந்த புனிதம் கொண்டவையுமான அந்த முதன்மையான ஆறுகள் அனைத்தும் சிவனின் மனைவியால் இவ்வழியிலேயே கேள்வி கேட்கப்பட்டன. அப்போது பதிலுக்கு மலைகளின் இளவரசனுடைய மகளை {உமையை} வழிபட்ட தெய்வீக ஆறான கங்கை அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.(24) உண்மையில், இனிய புன்னகை கொண்ட அவள் {கங்கை}, பல்வேறு வகைப் புத்திகளில் பெருகுபவளாகவும், பெண்களின் கடமைகள் அனைத்தும் நன்கறிந்தவளாகவும் கொள்ளப்படுகிறாள். பாவத்தால் உண்டாகும் அனைத்து அச்சங்களையும் விலக்கவல்லவளும், புத்தியின் காரணமாகப் பணிவைக் கொண்டவளும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவளும், மிக விரிவான நுண்ணறிவு எனும் வளம் கொண்டவளுமான அந்தப் புனிதமான தேவி {கங்கை}, இனிமையாகப் புன்னகைத்தபடியே இந்தச் சொற்களைச் சொன்னாள்,(25,26) “ஓ! தேவி, அனைத்துக் கடமைகளையும் முறையாகச் செய்வதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவள் நீ. என்னைக் கேள்வி கேட்டதன் மூலம் நீ எனக்கு உயர்ந்த உதவியைச் செய்திருக்கிறாய். ஓ! பாவமற்றவளே, மொத்த அண்டத்தாலும் மதிக்கப்படுபவளாக நீ இருந்தாலும், ஓர் ஆறான என்னிடம் நீ கேட்டிருக்கிறாய்.(27) ஒருவன் தானே (ஒரு காரியத்தைக் குறித்து உரையாடத்) திறன்மிக்கவனாக இருந்தாலும், மற்றொருவனைக் கேட்பவன், அல்லது அருள்நிறைந்த கொடையை அளிப்பவன் நிச்சயம் அற ஆன்மாவாகக் கருதத்தக்கவன் என்று நான் நினைக்கிறேன். உண்மையில், அத்தகைய மனிதன் கல்விமான் என்றும் ஞானி என்றும் அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(28) அறிவைக் கொண்டவர்களும், அறிவியில் அறிந்தவர்களும், முன்தீர்மானங்கள் மற்றும் அனுமானங்களை அறிந்தவர்களுமான பேச்சாளர்களைக் கேட்கும் மனிதர்கள் ஒருபோதும் அவமானமடைய மாட்டார்கள்.(29) செருக்குமிக்க மனிதன், நுண்ணறிவுமிக்க மனிதனாக இருந்தாலும், வேறுவகையில் (பிறரின் ஆலோசனைகளை ஏற்காமல் தன்னை மட்டுமே சார்ந்து) ஒரு கூட்டத்தின் மத்தியில் பேசுவதன் மூலம் பலமற்ற, முக்கியத்துவமற்ற சொற்களைப் பேசுபவனாகவே தன்னைக் காண்பான்.(30) ஆன்ம அகப்பார்வைக் கொண்டவள் நீ. சொர்க்கவாசிகள் அனைவரிலும் முதன்மையானவள் நீ. பல்வேறு வகைச் சிறந்த தகுதிகளின் துணையுடன் எழுந்தவள் நீ. ஓ! தேவி, பெண்களின் கடமைகள் குறித்து உரையாட முற்றிலும் தகுந்தவள் நீ” என்றாள் {கங்கா தேவி}.(31) இவ்வழியில் கங்கையால் வழிபடப்பட்ட உமாதேவி, உயர்ந்த தகுதிகள் பலவற்றைச் சார்ந்தவளாக மதிக்கப்பட்டாள். இவ்வாறு புகழப்பட்ட அந்த அழகிய தேவி, பெண்களின் கடமைகளைக் குறித்து முழுமையாக உரையாடத் தொடங்கினாள்.(32)
 
உமை, “நான் அறிந்தவரையில் பெண்களின் கடமைகளைக் குறித்து விதிப்படி உரையாடுவேன். குவிந்த கவனத்துடன் நீங்கள் அனைவரும் கேட்பீராக.(33) உறவினர்களால் திருமணச் சடங்குகள் தொடங்கப்படும் போதே பெண்களின் கடமைகள் உண்டாகி எழுகின்றன. உண்மையில், திருமண நெருப்பின் முன்னிலையில் ஒரு பெண்ணானவள் தன் தலைவன் செய்யும் அறச் சடங்குகள் அனைத்தையும் செய்வதில் துணைவியாகிறாள்.(34) நல்லியல்பும், இனிய பேச்சும், இனிய ஒழுக்கமும், இனிமையான குணங்களும் கொண்டு, எப்போதும் தன் கணவனின் முகத்தைத் தன் பிள்ளையின் முகம் போலப் பார்த்து இன்பம் அடைபவளும்,(35) பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இருப்பவளுமான ஒரு பத்தினி உண்மையில் அறம் சார்ந்த தன் ஒழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். (சாத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள படி) திருமண வாழ்வின் கடமைகளை (மதிப்புடன்) கேட்டு, அந்த மங்கலக் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவளும்,(36) தேடும் பொருட்கள் அனைத்திலும் முதன்மையாக அறத்தைக் கருதுபவளும், தன் தலைவன் நோற்கும் நோன்புகளைத் தானும் நோற்பவளும், கற்பால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் கணவனைத் தேவனாகக் காண்பவளும்,(37) ஒரு தேவனைப் போலவே அவனுக்குப் பணிவிடை செய்து தொண்டாற்றுபவளும், உற்சாகம் நிறைந்தவளும், சிறந்த நோன்புகளை நோற்பவளும், நல்ல குணங்களைக் கொண்டவளும்,(38) வேறு எந்த மனிதனையும் மனத்தாலும் நினையாமல் முற்றிலும் தன் கணவனுக்கு அர்ப்பணித்த இதயத்தைக் கொண்டவளுமான பெண், உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் கணவனின் கோபக் கண்களால் பார்க்கப்பட்டு, அவனது கடுமொழியை எதிர்கொண்டாலும்(39) அவனிடம் உற்சாகமாக நடந்து கொள்பவள், தன் கணவனுக்கு உண்மையில் அர்ப்பணிப்புள்ளவளாகச் சொல்லப்படுகிறாள். சூரியன், சந்திரன், ஆண்பெயர் கொண்ட மரம் ஆகியவற்றில் தன் கண்களைச் செலுத்தாதவளும்,(40) தன் கணவனால் துதிக்கப்படுபவளும், அழகிய குணங்களைக் கொண்டவளுமான பெண் உண்மையில் அறம் சார்ந்தவளாகக் கருதப்படுகிறாள். தன் கணவன் ஏழையாகவோ, நோய்வாய்ப்பட்டவனாகவோ, பலவீனனாகவோ, பயணக் களைப்புக் கொண்டவனாகவோ இருந்தாலும், தன் பிள்ளையிடம் அன்பு காட்டுவதைப் போலவே அவனை அன்புடன் நடத்தும் பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள்.(41)
 
தற்கட்டுப்பாடுடையவளும், பிள்ளைகளை ஈன்றவளும், தன் கணவனுக்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுபவளும், அர்ப்பணிப்புள்ள மொத்த இதயத்தையும் அவனிடம் கொண்டவளுமான பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் தலைவனுக்குக் காத்திருந்து பணிவிடை செய்து, உற்சாகமிக்க இதயத்துடன் தொண்டாற்றுபவளும்,(42,43) எப்போதும் உற்சாகமிக்க இதயத்துடன் இருப்பவளும், பணிவுடையவளுமான பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் உற்றார் உறவினருக்கு உணவளித்து எப்போதும் ஆதரிப்பவளும்,(44) விருப்பங்களையோ, இன்ப நுகர் பொருட்களையோ, தான் கொண்ட செல்வத்தையோ, தான் சூழ்ந்திருக்கும் மகிழ்ச்சியையோ நிறைவடையச் செய்வதைவிடத் தன் கணவனுடன் அடையும் மகிழ்ச்சியைப் பெரிதாகக் கருதம் பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள்.(45) விடிவதற்கு முன்பு எழுவதில் எப்போதும் இன்பங்கொள்பவளும், இல்லம் சார்ந்த கடமைகளை வெளிப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், எப்போதும் தன் வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்பவளும், ஒவ்வொரு நாளும் பசுஞ்சாணத்தால் தன் வீட்டை மெழுகுபவளும்,(46) (ஆகுதிகளை ஊற்றுவதற்கான) இல்லற நெருப்பை எப்போதும் கவனிப்பவளும், தேவர்களுக்கு மலர்களையும், பிற பொருட்களையும் காணிக்கையளிப்பதை எப்போதும் புறக்கணிக்காதவளும், கணவனுடன் சேர்ந்து, விதிப்படி கொடுக்க வேண்டிய உணவுப் பங்குடன் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள் மற்றும் குடும்பத்தில் தங்களைச் சார்ந்திருப்போரை எப்போதும் நிறைவடையச் செய்பவளும்,(47) தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் பணியாட்களின் தேவைக்குக் கொடுத்தது போக வீட்டில் எஞ்சி இருக்கும் உணவை உண்பவளும், தங்கள் குடும்பத்தோடு தொடர்புடைய அனைத்து மக்களையும் நிறைவடையச் செய்து அவர்களுக்கு நிறைவான உணவை அளிப்பவளுமான பெண் பெரும் பலனை அடைவதில் வெல்கிறாள்.(48)
 
சாதனைகள் அனைத்துடன் கூடியவளும், தன் மாமனார், மாமியாரின் பாதங்களுக்கு நிறைவைத் தருபவளும், தன் தந்தை மற்றும் தாய்க்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவளுமான பெண் தவச் செல்வத்தை உடையவளாகக் கருதப்படுகிறாள்.(49) பலவீனர்களும், ஆதரவற்றவர்களுமான பிராமணர்களுக்கும், துன்புற்றவர்களுக்கும், குருடர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து ஆதரிக்கும் பெண் தன் கணவன் அடையும் பலன்களின் பங்குக்குரியவள் என்று கருதப்படுவாள்.(50) கடும் நோன்புகளை இலகுவான இதயத்துடன் எப்போதும் நோற்பவளும், தன் தலைவனிடம் அர்ப்பணிப்புள்ள இதயத்தைக் கொண்டவளும், தன் தலைவனின் நன்மையையே எப்போதும் நாடுப்பவளுமான பெண், தன் கணவன் அடையும் பலன்களின் பங்குக்குரியவள் என்று கருதப்படுவாள்.(51) தலைவனிடம் கொள்ளும் அர்ப்பணிப்பு {பக்தி} பெண்ணுக்குப் பலனைத் தருவதாகும்; அதுவே அவளது தவமாகும், அதுவே அவளது நித்திய சொர்க்கமாகும். தன் கணவனையே எல்லாமாகப் பார்ப்பவளும், கற்புடன் கூடியவளும், அனைத்திலும் தன் தலைவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதையே நாடுபவளுமான பெண்ணுக்கு, பலன் {புண்ணியம்}, தவங்கள், சொர்க்கம் ஆகியன அவளுடையதாகின்றன.(52)
 
கணவனே பெண்களுக்கு தேவனாவான். கணவனே அவர்களுடைய நண்பனாவான். கணவனே அவர்களுடைய உயர்ந்த புகலிடமுமாவான். கணவனோடு ஒப்பிடத்தக்க புகலிடம் எதுவும், அவனோடு ஒப்பிடத்தக்க தேவன் எவனும் கிடையாது.(53) பெண்களின் கணிப்பில் கணவனின் அருளும், சொர்க்கமும் சரிநிகரானவை; அல்லது சரிநிகராக இல்லையென்றாலும், அந்த ஏற்றத்தாழ்வு மிக அற்பமான அளவிலேயே இருக்கும். ஓ! மஹேஸ்வரரே, நீர் என்னிடம் நிறைவகொள்ளவில்லையெனில் நான் சொர்க்கத்தையும் விரும்ப மாட்டேன்(54) ஏழையாகவோ, நோய்வாய்ப்பட்டவனாகவோ, துன்பமடைந்தவனாகவோ, பகைவர்களிடம் வீழ்ந்துவிட்டவனாகவோ, பிராமணச் சாபத்தால் பீடிக்கப்பட்டவனாகவோ இருக்கும் கணவன், முறையற்ற அல்லது அறமற்ற அல்லது உயிரின் அழிவுக்கே வழிவகுக்ககூடிய எதையும் நிறைவேற்றச் சொல்லி மனைவிக்கு ஆணையிட்டால், அந்த மனைவியானவள், துன்பச்சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட தனியுரிமை குறியீட்டினால் வழிநடத்தப்பட்டு எந்தத் தயக்கமுமின்றி அதை நிறைவேற்ற வேண்டும்.(55,56) ஓ! தேவா, உமது ஆணையின் பேரில் பெண்களின் கடமைகள் என்னென்ன என்பதைச் சொன்னேன். உண்மையில், இவ்வழியில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் பெண் தன் கணவனால் வெல்லப்பட்ட பலன்களின் பங்கைப் பெறும் உரிமைபெறுகிறாள்” என்றாள் {உமை}”.(57)
 
நாரதர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பெருந்தேவன், மலைகளின் இளவரசனுடைய மகளை {உமையை} மெச்சி, அங்கே கூடியிருந்தோர் அனைவருக்கும், உடன் இருந்த தன் பணியாளர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பினான்.(58) பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த பூதகணங்களும், உடல்படைத்த ஆறுகள் அனைத்தும், கந்தர்வர்களும், அப்சரஸ்கள் அனைவரும் மஹாதேவனுக்குத் தலைவணங்கியவர்களாகத் தாங்கள் வந்த இடம் நோக்கி அங்கிருந்து சென்றார்கள்”.(59)

வாசுதேவ மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 147-வாசுதேவனின் மகிமையையும், பலராமனின் பெருமையையும் முனிவர்களுக்குச் சொன்ன சிவன்…

முனிவர்கள் {மஹேஸ்வரனிடம்}, “ஓ! பிநாகம் தரிப்பவனே, ஓ! பகனின் கண்களைக் கிழித்தவனே, ஓ! அண்டமனைத்தாலும் வழிபடப்படுபவனே, நாங்கள் வாசுதேவனின் மகிமையைக் கேட்க விரும்புகிறோம்” என்றனர்.(1)
 



மஹேஸ்வரன், “ஹரியானவன் பெரும்பாட்டனுக்கே {பிரம்மனுக்கே} மேற்பட்டவனாவான். அவனே நித்திய புருஷனாவான். கிருஷ்ணன் என்றும் அழைக்கப்படும் அவன் தங்கத்தின் காந்தியைக் கொண்டவனாகவும், இரண்டாவது சூரியனைப் போலப் பிரகாசத்தில் ஒளிர்பவனாகவும் இருக்கிறான்.(2) பத்துக் கரங்களைக் கொண்டவனான அவன் பெருஞ்சக்தி கொண்டவனாகவும், தேவர்களின் பகைவர்களைக் கொல்பவனாகவும் இருக்கிறான். அவன் தன் மார்பில் ஒரு சுழியை {ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தைக்} கொண்டிருக்கிறான், தன் தலையில் சுருள் முடியைக் கொண்டிருக்கிறான். அவன் தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுகிறான்.(3) பிரம்மன் அவனுடைய வயிற்றுப் பகுதியில் இருந்து எழுந்தான். நான் அவனுடைய தலையில் இருந்து உண்டானேன். ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்கள் அனைத்தும் அவனுடைய தலைமயிரிலிருந்து உண்டானவை. அவனது உடல் மயிரிலிருந்து தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் உண்டாகினர்.(4) அவனுடைய உடலிலிருந்தே முனிவர்களும், நித்திய உலகங்கள் அனைத்தும் உண்டாகின. அவனே பெரும்பாட்டனின் முழுவசிப்பிடமாகவும், தேவர்களின் வசிப்பிடமாகவும் இருக்கிறான்.(5)
 
மொத்த பூமியின் படைப்பாளன் அவனே, மேலும் மூன்று உலகங்களின் தலைவனும் அவனே. அசையும், அசையாத உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவன் அவனே.(6) உண்மையில் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் அவனே. அவர்களின் ஆசானும் அவனே. பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவன் அவனே. அனைத்தையும் அறிந்தவன் அவனே. அனைத்திலும் இருப்பவன் அவனே. எங்கும் செல்ல வல்லவன் அவனே. அண்டத்தின் எல்லையாக (அனைத்திலும் நீக்கமற) நிறைந்திருப்பவன் அவனே.(7) பரமாத்மா அவனே. புலன்கள் அனைத்தையும் தூண்டுபவன் அவனே. அண்டத்தை மறைப்பவன் அவனே. பரமத்தலைவன் அவனே. மூவுலகிலும் தனக்கு மேன்மையானவன் எவனும் இல்லாதவன் அவனே.(8) நித்தியமானவன் அவனே. கோவிந்தன் என்றும் அழைக்கப்படும் மதுசூதனன் அவனே. கௌரவங்களை அளிப்பவனான அவனே, மனித வடிவில் பிறந்து தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரையும் போரில் கொல்லச் செய்கிறான். அவனால் கைவிடப்பட்ட தேவர்கள், பூமியில் உள்ள தங்கள் காரியங்களை நிறைவேற்ற இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவனைத் தலைவனாக அடையாமல் அவர்களால் எதையும் செய்ய முடியாது. உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படுபவனும் அவனே.(10,11)
 
தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், பிரம்மத்தோடு அடையளங்காணப் படுபவனும், மறுபிறப்பாளர்களான முனிவர்களின் புகலிடமாக எப்போதும் இருப்பவனுமான தேவர்களுடைய இந்த ஆசானின் வயிற்றுக்குள்ளே (பெரும்பாட்டன்) பிரம்மன் வசிக்கிறான். உண்மையில் பிரம்மன், ஹரியின் உடலான தன் வசிப்பிடத்திற்குள் மகிழ்ச்சியாக வசிக்கிறான். சர்வன் {சர்வேஸ்வரன்} என்றழைக்கப்படும் நானும் என்னுடைய வசிப்பிடமாக இருக்கும் அதனுள் மகிழ்ச்சியாக வசிக்கிறேன்.(12,13) அவனுடைய உடலில் தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வசிக்கின்றனர். பெரும் பிரகாசம் கொண்ட அவனது கண்கள் தாமரை இதழ்களுக்கு ஒப்பானவையாகும். ஸ்ரீதேவி அவனுக்குள்ளேயே வசிக்கிறாள். அவனும் அவளுடனேயே எப்போதும வசிக்கிறான்.(14) வாளுடன் சேர்த்துச் சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லும் (சுதர்சனம் என்றழைக்கப்படும்) சக்கரமும் அவனது ஆயுதங்களாகும். அவன் பாம்புகள் அனைத்தின் தலைவனை (கருடனைத்) தன் கொடிமரத்தில் அமரச் செய்திருக்கிறான். அவன் சிறந்த ஒழுக்கத்தால், (உடல் மற்றும் மனத்) தூய்மையால், தற்கட்டுப்பாட்டால், ஆற்றலால், சக்தியால், அழகிய வடிவத்தால், நெடும் உயரத்தால், நல்ல அளவுகளில் உள்ள அங்கங்களால், வடிவச்சிறப்பால், வலிமையால் தனித்துவமாக {புகழ்பெற்றவனாக} இருக்கிறான். அற்புத வடிவம் மற்றும் தயாரிப்பாலான தெய்வீக ஆயுதங்களுடன் கூடியவனாக அவன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(15-17)
 
யோகத்தைத் தன் மாயையாகக் கொண்டவன் அவனே. ஆயிரம் கண்களைக் கொண்டவன் அவனே. அனைத்துக் களங்கங்கள் அல்லது குற்றங்களில் இருந்து விடுபட்டவன் அவனே. உயர்ந்த மனம் படைத்தவன் அவனே. வீரமிக்கவன் அவனே. தன் நண்பர்கள் அனைவரின் மத்தியில் செருக்கிற்குத் தகுந்த பொருளாக இருப்பவன் அவனே. உற்றார் உறவினர் மற்றும் தன்னிடம் அன்புடை அனைவரிடமும் அன்பாயிருப்பவன் அவனே.(18) மன்னிக்கும் தன்மையுடன் கூடியவன் அவனே. செருக்கு மற்றும் தற்பெருமையில் இருந்து விடுபட்டவன் அவனே. பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவர்களுக்குத் தலைவனும் அவனே. அச்சத்தால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் அனைவரின் அச்சங்களை விலக்குபவன் அவனே. தன் நண்பர்கள் அனைவரின் இன்பத்தைப் பெருக்குபவன் அவனே.(19) அனைத்து உயிரினங்களின் புகலிடம் அவனே. துன்பமடைந்தோரைப் பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும் எப்போதும் ஈடுபடுபவன் அவனே. சாத்திரங்கள் அனைத்தையும், அனைத்து வகைச் செல்வத்தையும் கொண்டிருப்பதன் மூலம் அனைவராலும் வழிபடப்படுபவன் அவனே.(20)
 
அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான அவன், தன் பாதுகாப்பை நாடும்போது எதிரிகளுக்கும் பெரும் நண்மைகளைச் செய்பவனாவான். கொள்கையை அறிந்து, கொள்கையுடன் கூடிய அவன் பிரம்மத்தைச் சொல்பவனாகவும், தன் புலன்களை முற்றிலும் கட்டுப்படுத்தியவனாகவும் இருக்கிறான்.(21) தேவர்களுக்கு நன்மை செய்வதற்காகக் கோவிந்தன் உயர் ஆன்ம மனு குலத்தில் பிறப்பெட்டுப்பான். உண்மையில் உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அவன் மங்கலமிக்க, அறம் சார்ந்த பிரஜாபதியின் குலத்தில் தன் பிறப்பை எடுப்பான். மனு, அங்கன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொள்வான். அதன் பிறகு அங்கனுக்கு அந்தர்த்தாமன் வருவான்.(22,23) அந்தர்த்தாமனிலிருந்து அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனும், அனைத்துக் களங்கங்களில் இருந்து விடுபட்டவனுமான ஹவிர்த்தாமன் உண்டாவான். ஹவிர்த்தாமன் பழைய-பர்ஹி {பிராசீனபர்ஹி} என்ற பெயரில் ஒரு சிறப்புமிக்க மகனைப் பெறுவான்.(24) அவனுக்குப் பிரசேதஸ் முதலான பத்து மகன்கள் உண்டாவார்கள். பிரசேதஸ், தக்ஷன் என்ற பெயரில் பிரஜாபதியாகக் கருதத்தகுந்த ஒரு மகனைப் பெறுவன். தக்ஷன் தாக்ஷாயிணி என்ற பெயரில் ஒரு மகளைப் பெறுவான்.(25) தாக்ஷாயினியிடம் ஆதித்தன் உண்டாவான், அதித்தனுக்கு {வைவஸ்வத} மனு உண்டாவான். மனுவுக்கு ஸுத்யும்னன் என்ற பெயரில் மகனாகப் போகும் இளை என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள்.(26) இளை புதனைத் தன் கணவனாகக் கொள்வாள், புதனிடம் இருந்து புரூரவன் உண்டாவான். புரூரவஸிலிருந்து ஆயு எழுவான். ஆயுவிடம் இருந்து நஹுஷனும் உண்டாவான், அந்தம நஹுஷன் யயாதி என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான்.(27)
 
யயாதி யது என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகனைப் பெறுவான். யது க்ரோஷ்டிரியை {கிரோஷ்டாவைப்} பெறுவான். கிரோஷ்டிரி விருஜினீவான் என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகனைப் பெறுவான்.(28) விருஜினீவானிடமிருந்து வெல்லப்பட முடியாதவனான உஷத்கு {உஷங்கு} பிறப்பான். உஷத்கு சித்திரரதன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான்.(29) சித்திரரதன், சூரன் என்ற பெயரில் ஓர் இளைய மகளைப் பெறுவான். உண்மையில், உலகம் அனைத்திலும் கொண்டாடப்படும் சக்தியைக் கொண்டவர்களும், சிறந்த ஒழுக்கம் மற்றும் பல்வேறு சாதனைகளைக் கொண்டவர்களும்,(30) வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தூய நடத்தை கொண்டவர்களுமான இந்த வலிமைமிக்க மனிதர்கள் பிறந்த குலத்தில் பிராமணர்களால் கௌரவிக்கப்படும் அந்தத் தூய குலத்தில், சூரன் தன் பிறப்பை எடுப்பான். அவன் {சூரன்} க்ஷத்திரியரில் முதன்மையானவனாகவும், பெருஞ்சக்தி கொண்டவனாகவும், பெரும்புகழைக்கொண்டவனாகவும் இருப்பான்.(31) கௌரங்களை அளிப்பவனான சூரன், தன் குலத்தைப் பெருகச் செய்பவனும், ஆனகதுந்துபி என்றும் அழைக்கப்படுபவனான வசுதேவன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெறுவான்.(32) வசுதேவன், வாசுதேவன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான். அவன் நான்கு கரங்களைக் கொண்டிருப்பான். அவன் அதீத தயாளனாகவும், பிராமணர்களைப் பெரிதும் மதிப்பவனாகவும் இருப்பான். பிரம்மத்துடன் அடையாளங்காணப்படும் அவன் பிராமணர்களிடம் அன்பு கொண்டவனாக அவர்களை விரும்புகிறான், பிராமணர்களும் அவனை விரும்பி அன்பு செலுத்துகின்றனர்.(33)
 
அந்த யதுகுலக் கொழுந்து {கிருஷ்ணன்}, மலைகளுக்கு மத்தியில் புதைந்திருக்கும் தலைநகரைக் கொண்டவனும், ஜராசந்தன் என்ற பெயருடையவனுமான ஆட்சியாளனை வென்ற பிறகு, அந்த மகதர்களின் ஆட்சியாளனுடைய சிறையில் அடைபட்டிருக்கும் மன்னர்கள் பலரை விடுவிப்பான்.(34) பெருஞ்சக்தி கொண்ட அவன் தங்கம், ரத்தினங்கள் கொண்ட பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரிலும் வளமிக்கவனாக இருப்பான்.(35) பேராற்றலைக் கொண்ட அவன் பூமியில் மன்னர்களுக்கு மன்னனாக இருப்பான். சூரசேனர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருக்கும் அந்தப் பலமிக்கவன், துவாரகையில் வசித்துக் கொண்டு,(36) அரசியல் அறிந்தவனாக மொத்த பூமியின் ஆட்சியாளர்களையும் வென்று அவளைப் {பூமியைப்} பாதுகாத்து ஆள்வான். நீங்கள் அனைவரும் ஒன்று கூடி, நித்திய பிரம்மனைத் துதிப்பது போல, வாக்கு, மலர்மாலைகள், நறுமணப் பொருட்கள் மற்றும் சிறந்த தூபங்களுடன் அவனைத் துதிப்பீராக.
 
என்னையோ, பெரும்பாட்டன் பிரம்மனையோ காண விரும்பும் ஒருவன்,(37,38) பெரும்பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான வாசுதேவனை முதலில் காண வேண்டும். அவன் காணப்பட்டால், நானும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையான பிரம்மனும் காணப்பட்டோம்.(39) இதில் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் கருதவில்லை. தவச் செல்வத்தைக் கொண்ட முனிவர்களே இதை அறிவீராக. தாமரைக் கண்ணனான வாசுதேவன் எவனிடம் நிறைவடைவானோ,(40) அவனிடம் பிரம்மனும், தேவர்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள். கேசவனின் பாதுகாப்பை நாடும் மனிதன்,(41) பெருஞ்சாதனைகளையும், வெற்றியையும், சொர்க்கத்தையும் ஈட்டுவதில் வெல்வான். அறம் மற்றும் கடமைகளைப் பயிற்றுவிப்பவனாக இருக்கும் அவன் பெரும் அறப்பலன்களை ஈட்டுவான்.(42) அறம் மற்றும் கடமைகளை அறிந்த மனிதர்கள அனைவரும், பெரும் சுறுசுறுப்புடன் தேவர்கள் அனைவரின் தலைவனான அவனுக்குத் தலைவணங்க வேண்டும்.(43)
 
பெருஞ்சக்தியைக் கொண்ட அந்தத் தேவன், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய விரும்பி அறநோக்கத்தில் கோடிக்கணக்கான முனிவர்களைப் படைத்தான்.(44) அந்தப் பேராணையாளனால் இவ்வாறு உண்டாக்கப்பட்ட கோடிக்கணக்கான முனிவர்கள், சனத்குமாரர் தலைமையில் கந்தமாதன மலைகளில் வசித்துக் கொண்டு இப்போது தவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.(45) எனவே, மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நாநயமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், அறவோனுமான வாசுதேவன் அனைவராலும் துதிக்கப்பட வேண்டும். அந்தச் சிறப்புமிக்க ஹரி, பலமிக்க நாராயணன், உண்மையில் சொர்க்கத்தில் உள்ள அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(46) அவன், தன்னைத் துதிப்பவனைத் துதிப்பான், கௌரவித்தவனைக் கௌரவிப்பான், காணிக்கையளிப்பவர்களுக்குப் பதில்காணிக்கைகள் அளிப்பான். அவன் தன்னை வழிபடுபவனைப் பதிலுக்கு வழிபடுவான்.(47) எப்போதும் தன்னைக் காண்போரை, எப்போதும் தானும் காண்பான். அவனது புகலிடத்தையும், பாதுகாப்பையும் நாடும் ஒருவனைத் தானே புகலிடமாகக் கொள்வான். அறவோர் அனைவரிலும் முதன்மையானவர்களே, துதிக்கப்பட்டு, வழிபடப்பட்டால், அவன் பதிலுக்குத் துதித்து வழிபடுவான்.(48)
 
இதுவே குற்றமற்ற விஷ்ணுவின் உயர்ந்த நடைமுறை. இதுவே தேவர்கள் அனைவரிலும் முதல்வனும், உயிரினங்கள் அனைத்தின் பலமிக்கத் தலைவனுமான அவனுக்காக அறவோர் அனைவராலும் பின்பற்றப்படும் நோன்பாகும்.(49) அவன் எப்போதும் உலகத்தால் வழிபடப்படுகிறான். உண்மையில் அந்த நித்தியமானவன் தேவர்களாலும் வழிபடப்படுகிறான். அவனிடம் நிலையான பக்தி கொண்ட மனிதர்கள் தங்கள் பக்திக்குத் தக்க வகையில் துன்பங்களில் இருந்தும், அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள்.(50) மறுபிறப்பாளர்கள் எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் எப்போதும் அவனை வழிபட வேண்டும். தேவகியின் மகன் அவர்களால் மதிப்புடன் காணப்பட வேண்டும். அவனை மதிப்புடன் காண அவர்கள் தவங்களைச் செய்ய வேண்டும்.(51) தவசிகளில் முதன்மையானோரே, இதுவே நான் உங்களுக்குக் காட்டும் பாதையாகும். அவனைக் காண்பதன் மூலம், நீங்கள் தேவர்களில் முதன்மையானோர் அனைவரையும் காண்பீர்கள்.(52) அண்டத்தின் தலைவனும், வலிமைமிக்கப் பெரும்பன்றியும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான அவனுக்கு நானும் தலைவணங்குகிறேன்.(53)
 
அவனைக் காண்பதன் மூலம் ஒருவன் மும்மூர்த்திகளையும் காண்கிறான். தேவர்களான நாங்கள் அனைவரும் அவனுக்குள் வசிக்கிறோம்.(54) உலகம் முழுவதிலும் பலன் {பலராமன்} என்ற பெயரில் அறியப்பட்ட ஓர் அண்ணனை அவன் பெற்றிருப்பான். கலப்பையையே ஆயுதமாகக் கொள்ளும் அவன் வடிவத்தில் ஒரு வெண்மலையைப் போல இருப்பான். உண்மையில் அவன் மொத்த பூமியையும் உயர்த்தவல்ல வலிமையைப் பெற்றிருப்பான்.(55) அந்தத் தெய்வீகமானவனின் தேரில், மூன்று தலை கொண்டதும், தங்கத்தாலானதுமான நெடும் பனைமரம் செருக்குடன் அவனது {பலராமனது} கொடிமரமாக அமைந்திருக்கும்.(56) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், உலகங்கள் அனைத்தின் தலைவனுமான அவனுடைய தலையானது உயர் ஆன்மப் பாம்புகள் பலவற்றின் பேருடல்களின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும். தாக்குவதற்கும், தற்காப்பதற்கும் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் அவனிடம் வந்து சேரும்.(78) அவன் அனந்தன் (முடிவற்றவன்) என்றழைக்கப்படுகிறான். உண்மையில், அந்தச் சிறப்புமிக்கவன், மாற்றமற்றவனான ஹரியோடு அடையாளங்காணப் படக்கூடியவனாவான்.
 
ஒரு காலத்தில் கசியபரின் மகனான வலிமைமிக்கக் கருடனிடம் தேவர்கள் இந்தச் சொற்களைச் சொன்னார்கள், “ஓ! பலமிக்கவனே, இவனுக்கு எல்லையேதும் இருக்கிறதா என்பதைப் பார்ப்பாயாக” என்றனர். கருடன் பெரும் சக்தி கொண்டவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருப்பினும், பரமாத்மாவுடன் அடையாளங்காணப்படும் இந்தச் சிறப்புமிக்கவனின் எல்லையைக் காணத் தவறினான்.(58,59) மொத்த உலகத்தையும் தன் தலையில் தாங்கும் இவன், பாதாள லோகங்களில் வசிக்கிறான். அவன் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்த சேஷனாக அண்டம் முழுவதும் உலவித் திரிகிறான்.(60) விஷ்ணு அவனே, சிறப்புமிக்க அனந்தன் அவனே, பூதியை ஆதரிப்பவனும் அவனே. ரிஷிகேசனே {கிருஷ்ணனே} ராமன் {பலராமன்}. அச்யுதனே {கிருஷ்ணனே} உலகத்தைத் தாங்கும் அனந்தன் {பலராமன்}.(61) உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான அவ்விருவரும் தெய்வீகமானவர்களும், தெய்வீக ஆற்றலுடன் கூடியவர்களும் ஆவர். அவர்களில் ஒருவன் சக்கரத்தையும், மற்றொருவன் கலப்பையையும் தரித்திருக்கிறான். அனைத்து கௌரவங்களுக்கும் தகுந்தவர்களாகவே அவர்கள் காணப்பட வேண்டும்.(61) நான் உங்களிடம் கொண்ட அன்பினால், வாசுதேவனின் இயல்பை உங்களுக்கு இவ்வாறு அறிவித்தேன். தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, அறம் இதுவே.(62) நீங்கள் யது குலத்தில் முதன்மையான கிருஷ்ணனை மதித்துக் கவனத்துடன் வழிபட வேண்டும் என்பதற்காகவே நான் இவையனைத்தையும் உங்களுக்குச் சொன்னேன்” என்றான் {சிவன்}.(63)

நரநாராயணர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 148-கிருஷ்ணனின் மகிமையையும், அர்ஜுனனின் திறமையையும் சொல்லி துரியோதனனுக்காக வருந்திய பீஷ்மர்…

நாரதர், “மஹாதேவனின் பேச்சு நிறைவடைந்ததும் ஆகாயத்தில் பெருமுழக்கங்கள் கேட்டன. மின்னல் கீற்றுகளுடன் கூடிய இடிகள் பெரு முழக்கம் செய்தன. ஆகாயம் அடர்த்தியான கருமேகங்களால் மூடப்பட்டது.(1) மேகங்களின் தேவன் மழைக்காலங்களில் செய்வதைப் போலவே தூய நீரைப் பொழிந்தான். அடர்த்தியான இருள் கவ்வியது. திசைப்புள்ளிகளை அதற்கு மேலும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(2) பிறகு அந்த இனிமை நிறைந்த, புனிதமான தெய்வீக மலையின் நித்திச் சாரலில் கூடியிருந்த முனிவர்களால் மஹாதேவனுடன் இருந்த அவனது துணைவர்களான பூத கணக் கூட்டங்களைப் பார்க்க முடியவில்லை.(2) எனினும், விரைவில் ஆகாயம் தெளிவடைந்தது. முனிவர்களில் சிலர், புனித நீர்நிலைகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். வேறு சிலர் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(4)
 



உண்மையில், காண்பதற்கரிய அந்த அற்புதக் காட்சியைக் கண்ட அவர்கள் வியப்பில் நிறைந்தனர். சங்கரனுக்கும், உமைக்கும் இடையில் நடந்த உரையாடலும் அதே உணர்வுடனே கேட்கப்பட்டது.(5) அனைத்திலும் முதன்மையானவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான சங்கரன் அந்த மலையில் வைத்து எங்களிடம் சொன்னது உன்னைத் தான். உண்மையில், நீ நித்திய பிரம்மமாவாய் {பரப்பிரம்மமாவாய்}.(6) சில காலத்திற்கு முன்பு மஹாதேவன் தன் சக்தியால் இமயத்தை எரித்தான். நீயும் அதே போன்ற அற்புதக் காட்சியை எங்களுக்குக் காட்டினாய். உண்மையில், நாங்கள் இன்று கண்டதை வைத்து அந்தப் பழங்கால நிகழ்வு நினைவுகூர்ந்தோம்.(7) ஓ! வலிய கரங்களைக் கொண்ட ஜனார்த்தனா, ஓ! பலமிக்கவனே, இவ்வாறே கபர்தின், அல்லது கிரீசன் என்றழைக்கப்படும் அந்தத் தேவர்களுக்குத் தேவனின் மகிமையை நான் உனக்கு உரைத்தேன்[1]” என்றார் {நாரதர்}.(8)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தத் தபோவனத்தில் வசித்தவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தேவகியை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவனுமான கிருஷ்ணன், அந்த முனிவர்கள் அனைவருக்கும் உரிய கௌரவத்தைச் செலுத்தினான்.(9) மகிழ்ச்சியில் நிறைந்த அந்த முனிவர்கள் மீண்டும் கிருஷ்ணனிடம், “ஓ! மதுசூதனா, அடிக்கடி எங்களுக்குக் காட்சியளிப்பாயாக.(10) ஓ! பலமிக்கவனே, உன்னைக் காண்பதைவிட மகிழ்ச்சியான சொர்க்கம் எங்களுக்கு வேறேதும் இல்லை. சிறப்புமிக்கப் பவனால் (உன்னைக் குறித்துச்) சொல்லப்பட்டது அனைத்தும் உண்மையே.(11) ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, அந்தப் புதிர் குறித்த அனைத்தையும் நாங்கள் உனக்குச் சொன்னோம். நீயே அனைத்து உண்மைகளையும் அறிந்தவனாவாய். எனினும், எங்களால் கேட்கப்பட்டு, பதிலுக்கு உன்னால் நாங்கள் கேட்கப்பட்ட காரணத்தால் (பவனுக்கும் உமைக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்த) அனைத்தையும் உங்களுக்குச் சொன்னோம். மூவுலகங்களிலும் நீ அறியாதது ஏதுமில்லை.(12,13)
 
அனைத்துப்பொருட்களின் பிறப்பு மற்றும் தோற்றம் குறித்த அனைத்தையும், உண்மையில் (வேறு பொருட்களை உண்டாக்குவதற்குக்) காரணமாக இயங்கும் அனைத்தையும் முழுமையாக நீ அறிவாய். எங்கள் மென்மையான குணத்தின் விளைவால், எந்தப் புதிரையும் தாங்கிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம் (எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தமால் எங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம்)[2].(14) உண்மையில், ஓ! பலமிக்கவனே, எங்கள் இதய மென்மையிலிருந்து தொடர்பில்லாதவற்றில் ஈடுபடுகிறோம். நீ அறியாத அற்புதப் பொருள் ஏதும் கிடையாது.(15) பூமியில் உள்ள யாவையும், சொர்க்கத்தில் உள்ள யாவும் நீ அறிந்தவையே. ஓ! கிருஷ்ணா, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புகிறோம் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. புத்தியிலும், செழிப்பிலும் நீ பெருகுவாயாக. ஓ! ஐயா, உன்னைப் போன்றவனும், உன்னைவிடப் புகழ்மிக்கவனுமான மகன் ஒருவனை நீ விரைவில் பெறுவாய்.(16) அவன் சக்தியும், காந்தியும் கொண்டவனாக இருப்பான். பெரும் சாதனைகளைச் செய்யும் அவன், உன்னைப் போன்றே பெரும்பலம் கொண்டவனாக இருப்பான்” என்றனர் {முனிவர்கள்}”.(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அதன்பிறகு, தேவர்களுக்குத் தேவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த யது குலக் கொழுந்துக்கு அந்தப் பெரும் முனிவர்கள் தலைவணங்கினர். பிறகு அவனை வலம் வந்த அவர்கள், அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.(18) செழிப்பையும், சுடர்மிக்கப் பிரகாசத்தையும் கொண்ட நாராயணன், தன் நோன்பை முறையாக நோற்று துவாரகைக்குத் திரும்பினான்.(19) கருவுற்ற அவனுடைய மனைவி ருக்மிணிக்கு, பத்தாம் மாதம் முடிந்ததும், பெரும் வீரத்தையும், அற்பத சாதனைகளுக்காக அனைவரும் தரும் மதிப்பையும் கொண்ட ஒரு மகன் பிறந்தான்.(20) அவன், ஒவ்வொரு உயிரினத்திலும் இருப்பதும், இருப்பிலுள்ள ஒவ்வொரு நிலையையும் ஊடுருவவல்லதுமான காமத்துடன் (ஆசையுடன் / காமனுடன் / மன்மதனுடன்) அடையாளம் காணப்படுபவனாக இருந்தான். உண்மையில் அவன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களில் உலவிக் கொண்டிருக்கிறான்.(21)

இந்தக் கிருஷ்ணனே அனைவரிலும் முதன்மையானவன். மேகவண்ணம் கொண்ட இவனே நான்கு கரங்களைக் கொண்ட வாசுதேவனாவான். அன்பின் மூலம் அவன் பாண்டவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான். பாண்டவர்களான நீங்களும் அவ்வாறே அவனுடன் இணைந்தீர்கள்.(22) சாதனைகள், செழிப்பு, புத்தி, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதை ஆகிய அனைத்தும், மூன்று அடிகளை வைத்த சிறப்புமிக்க விஷ்ணுவான இவன் இருக்கும் இடங்களில் இருக்கும்.(23) இந்திரனைத் தலைமையில் கொண்ட முப்பத்துமூன்று தேவர்கள் இவனே. இதில் ஐயமேதும் இல்லை. இவன் ஒரு புராதன தேவனாவான். இவன் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். இவன் அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாவான்.(24) இவன் தொடக்கமும், அழிவும் இல்லாதவனாவான். இவன் வெளிப்படாதவனாவான் {அறிவுக்கு எட்டாதவன் ஆவான்}. இவனே உயர் ஆன்ம மதுசூதனனாவான். வலிமையும், சக்தியும் கொண்ட இவன், தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுவதற்காக (மனிதர்களின் மத்தியில்) பிறந்திருக்கிறான்.(25)

உண்மையில் இந்த மாதவன், செல்வம் தொடர்புடைய மிகக் கடினமான உண்மைகளை விளக்குபவனும், அஃதை அடைபவனுமாவான். ஓ!பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரனே}, நீ உன் பகைவர்களிடம் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பற்றவையாக இருக்கும் உன் சாதனைகள்,(26) மொத்த பூமியிலும் நீ அடைந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் ஆகிய அனைத்தும் நாராயணன் உன் தரப்பை அடைந்ததாலேயே கிடைத்தன.(27) எண்ணிப்பார்க்கமுடியாத நாராயணனையே உன் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் அடைந்தாயே, போரெனும் சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளாகப் பெரும் மன்னர்கள் கூட்டத்தை ஊற்றும் அதர்யுவாக உன்னால் இயன்றது. இந்தக் கிருஷ்ணனே, யுகத்தின் முடிவில் தோற்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்புக்கு ஒப்பான பெரும் வேள்விக் கரண்டியானான்.(28) கோபத்தால் தூண்டப்பட்டு ஹரியுடனும், காண்டீவதாரியுடனும் போர் செய்த துரியோதனன், அவனுடைய மகன்கள், அவனது சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர் ஆகியோர் பரிதாபத்திற்குரியவர்களே.(29) பேருடல் படைத்தவர்களும், பெரும்பலம் கொண்டவர்களுமான திதியின் மகன்கள் பலரும், தானவர்களில் முதன்மையானோர் பலரும், காட்டு நெருப்பில் பூச்சிகளைப் போலக் கிருஷ்ணனின் சக்கர {சக்ராயுத} நெருப்பில் அழிந்து போனார்கள்.(30) ஓ! மனிதர்களில் புலியே, பலமும், வலிமையுமற்ற மனிதர்கள் கிருஷ்ணனை எதிர்த்துப் போரிட எவ்வளவு இயதாவர்களாக இருந்திருக்க வேண்டும்.(31)

ஜெயனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரையில் அவன் சக்தியில் அனைத்தையும் அழிக்கும் யுக நெருப்புக்கு ஒப்பான விலிமைமிக்க யோகியாவான். இரு கரத்தாலும் வில்லை இழுக்க வல்ல அவன் படையின் முன்னணியிலேயே எப்போதும் இருந்தான். ஓ! மன்னா, அவனது சக்தியாலேயே, சுயோதனனின் துருப்பினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.(32) கொடி மரச் சின்னத்தில் காளைமாட்டைக் கொண்ட மஹாதேவன் {விருஷபத்வஜன்} இமயச் சாரலில் உள்ள தவசிகளுக்குச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அவன் சொன்னதே ஒரு புராணமாகும்.(33) அர்ஜுனனில் உள்ள முன்னேற்றம், பெருமை, சக்தி, பலம், ஆற்றல், வலிமை, பணிவு, குலம் ஆகியன கிருஷ்ணனிடம் வசிக்கும் அக்குணங்களில் மூன்றில் ஒரு பகுதியின் அளவை எட்டும்.(34) கிருஷ்ணனின் இக்குணங்களைக் கடக்க யாரால் முடியும்? அது சாத்தியமா இல்லையா என்பதைக் கேட்பாயாக (கேட்ட பிறகு தீர்மானிப்பாயாக). எங்கே கிருஷ்ணன் இருப்பானோ அங்கே ஒப்பற்ற சிறப்புகள் {பெருமைகள்} இருக்கும்.(35)

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அற்ப புத்தி கொண்ட மனிதர்களாக இருந்தோம். பிறரின் விருப்பங்களைச் சார்ந்திருந்த நாங்கள் பெருங்கெடுபேற்றைப் பெற்றிருந்தோம். அறிந்தே நாங்கள் நித்தியமான மரணப் பாதையில் நடந்தோம்.(36) எனினும் நீ நேர்மையான ஒழுக்கத்தில் அர்ப்பணிப்புடன் இருந்தாய். உன் நாட்டை ஏற்பதற்கு எதிராக உறுமொழியேற்ற நீ உன் உறுதிமொழியைக் காக்க விரும்பி அதை எடுக்காமலேயே இருந்தாய்[3].(37) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ போர்க்களத்தில் உன் உற்றார் உறவினரையும், நண்பர்களையும் அதிகமாகக் கொன்றுவிட்டாய் என நினைக்கிறாய் (அவ்வாறு நீ நம்புகிறாய்). எனினும், ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, உறுதிமொழியை மீறுவது தகாதது என்பதை நீ நினைவுகூர வேண்டும்[4].(38) போர்க்களத்தில் வீழ்ந்தவர் அனைவரும் காலத்தாலேயே உண்மையில் கொல்லப்பட்டனர். காலமே உண்மையில் அனைத்திலும் பலமிக்கதாகும்.(39) காலத்தின் வலிமையை நீ முழுமையாக அறிவாய். காலத்தினால் பீடிக்கப்பட்டிருப்பதால் வருந்துவது உனக்குத் தகாது. ஹரி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படும் இந்தக் கிருஷ்ணனே, குருதிச் சிவப்பான கண்களுடனும், கையில் தண்டத்துடனும் கூடிய காலமாக இருக்கிறான் என்பதை அறிவாயாக.(40)

ஓ! குந்தியின் மகனே, இந்தக் காரணங்களினால் நீ உன் (உன்னால் கொல்லப்பட்ட) உறவினர்களுக்காக வருந்துதல் தகாது. ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீ எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டிருப்பாயாக.(41) நீ மாதவனின் மகிமையையும், பெருமையையும் என்னால் உரைக்கப்பட்டபடியே கேட்டாய். ஒரு நல்ல மனிதன் அவனைப் புரிந்து கொள்ள இயல இது போதுமானதாகும்.(42) வியாசர் மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாரதரின் சொற்களையும் கேட்டு கிருஷ்ணனின் துதிக்கத்தக்க தன்மையை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். நானும் என் ஞானத்திலிருந்து சிலவற்றை அந்த உரையில் சேர்த்திருக்கிறேன்.(43) உண்மையில் நான் (இமயச் சாரலில்) முனிவர்களின் கூட்டத்திடம் மஹாதேவன் உரைத்த கிருஷ்ணனின் அளவு கடந்த மகிமையையும் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ! பாரதா, மஹேஸ்வரனுக்கும், இமயவான் மகளுக்கும் இடையில் நடந்த உரையாடலும் என்னால் உனக்குச் சொல்லப்பட்டது.(44)

ஒரு முதன்மையான மனிதனிடம் இருந்து வெளிவரும் அந்த உரையாடலை மனத்தில் தாங்கிக் கொள்பவனும், அதைக் கேட்பவனும், (வேறு மக்கள் கேட்பதற்கு) அதை மீண்டும் உரைப்பவனும், உயர்ந்த நன்மைகளை வெல்வது உறுதி.(45) அம்மனிதன் தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைவதைக் காண்பான். இந்த உலகத்தில் இருந்து செல்லும் அவன் சொர்க்கத்திற்கு உயர்வான். இதில் ஐயமேதும் இல்லை.(46) தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன் தன்னை ஜனார்த்தனனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.(47) ஓ! குருக்களின் மன்னா, கடமை மற்றும் அறம் குறித்து மஹேஸ்வரனால் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகளை நீ எப்போதும் மனத்தில் கொள்வாயாக.(48) இந்தப் பணிப்பாணைகளின் படி நீ உன்னை ஒழுங்கமைத்துக் கொண்டால், நீ முறையாகத் தண்டக் கோலைத் தாங்கினால், முறையாக உன் குடிமக்களைப் பாதுகாத்தால் நிச்சயம் நீ சொர்க்கத்தை அடைவாய்.(49) ஓ! மன்னா, அறத்தின் அணைகளின் படி எப்போதும் குடிமக்களைப் பாதுகாப்பதே உனக்குத் தகும். மன்னன் தாங்கும் தண்டனைக்குரிய பருத்த கோல் {தண்டக்கோல்} அறம் அல்லது பலனின் உடல்வடிவமாகச் சொல்லப்படுகிறது[5].(50)சங்கரன் மற்றும் உமைக்கிடையிலான அறம் நிறைந்ததும், அறம்சார்ந்த கூட்டத்திற்கு முன்பு நான் உரைத்ததுமான இந்த உரையாடலைக் கேட்கும் ஒருவன், கொடியில் காளைமாட்டைத் தன் சின்னமாகக் கொண்ட தேவனை மதிப்புடன் வணங்க வேண்டும்.(51) அந்த உரையாடலைக் கேட்க விரும்பும் ஒருவனும் மதிப்புடன் மஹாதேவனை வணங்க வேண்டும். உண்மையில், தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், தூய இதயத்துடன் மஹாதேவனைத் துதிக்க வேண்டும்.(52) இதுவே களங்கமற்றவரும், உயர் ஆன்மா கொண்டவருமான நாரதரின் ஆணையாகும். அவரும் பெருந்தேவனை வழிபடுவது குறித்து ஆணையிட்டிருக்கிறார். ஓ! பாண்டுவின் மகனே, நாரதரின் ஆணைக்குக் கீழ்ப்படிவாயாக.(53) ஓ!பலமிக்க மன்னா, ஓ! குந்தியின் மகனே, புனிதமான இமயச் சாரலில் வாசுதேவனுக்கும், ஸ்தாணுவுக்கும் இடையில் நடந்த அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் இவையே ஆகும். அந்த நிகழ்வுகள் அந்த உயர் ஆன்ம தேவர்களின் இயல்பிலிருந்தே உண்டாகின.(54) காண்டீவதாரியுடன் கூடிய வாசுதேவன் பதரி ஆசிரமத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் நித்திய தவங்களைப் பயின்று வந்தான்[6].(55)உண்மையில், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட வாசுதேவன் மற்றும் தனஞ்செயன் ஆகிய இருவரும் மொத்தமாக மூன்று யுகங்கள் கடுந்தவமிருந்தனர். ஓ! மன்னா, நான் இதை நாரதர் மற்றும் வியாசரிடம் இருந்து அறிந்து கொண்டேன்.(56) தாமரைக் கண்ணனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான வாசுதேவன், (மனித வடிவில்) பிள்ளையாக இருக்கும்போதே தன் உறவினர்களின் விடுதலைக்காகக் கம்சனைக் கொன்ற பெருஞ்சாதனையைச் செய்திருக்கிறான்.(57) ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, புராதனமானவனும், நித்தியமானவனுமான இவனது சாதனைகளைப் பட்டியலிட நான் துணியேன்.(58) ஓ! மகனே, அனைவரிலும் முதன்மையான வாசுதேவனை உற்ற நண்பனாகக் கொண்டிருக்கும் நீ, நிச்சயம் உயர்ந்த பெரிய நன்மைகளை அறுவடை செய்வாய்.(59) தீயவனான துரியோதனன் சென்றிருக்கும் அடுத்த உலகத்தைப் பொறுத்தவரையிலும் கூட (அவன் அடைந்த மறுமையிலும்) அவனுக்காக நான் வருத்தமே அடைகிறேன். அவனுக்காகவே இந்த மொத்த பூமியும், குதிரைகளும், யானைகளுமற்றதானது.(60) உண்மையில், துரியோதனன், கர்ணன், சகுனி, நான்காவதாகத் துச்சாசனன் ஆகியோரின் குற்றத்தாலேயே குருக்கள் அழிந்தனர்” {என்றார் பீஷ்மர்}”.(61)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மனிதர்களில் முதன்மையானவரான கங்கையின் மைந்தர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, (பீஷ்மரின் உரையாடல்களைக் கேட்பதற்காகக் கூடியிருந்த) உயர் ஆன்ம மனிதர்களின் மத்தியில் குரு மன்னன் (யுதிஷ்டிரன்) முற்றான அமைதியுடன் இருந்தான்.(62) திருதராஷ்டிரனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருந்த மன்னர்கள் அனைவரும், குரு பாட்டனின் {பீஷ்மரின்} சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் தங்கள் மனங்களில் கிருஷ்ணனை வழிபட்டு, மதிப்புடன் கரங்களைக் கூப்பியபடி அவனை நோக்கித் திரும்பினர்.(63) நாரதரைத் தங்கள் தலைமையில் கொண்டிருந்த முனிவர்களும் பீஷ்மரின் சொற்களை ஏற்று, மெச்சி, மகிழ்ச்சியுடன் அவற்றை அங்கீகரித்தனர்.(64) பாண்டுவின் மகனும் (யுதிஷ்டிரனும்), அவனுடைய தம்பிகள் அனைவரும் இன்பமாகக் கேட்ட பீஷ்மரின் அற்புத உரையாடல்கள் இவையே.(65) சிறிது நேரம் கழித்து, தாம் செய்த வேள்விகளில் பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வக் கொடைகளை அளித்த கங்கையின் மைந்தன் ஓய்வெடுத்து, புத்துணர்ச்சி அடைந்திருப்பதை மன்னன் யுதிஷ்டிரன் கண்டபோது, அந்தப் புத்திசாலி மன்னன் மீண்டும் அவரிடம் பின்வருவனவற்றைக் கேட்டான்”.(66)

ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ரநாமம் – விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 149-விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்{ அந்தப் பெயர்களைச் சொல்வதாலோ, கேட்பதாலோ கிட்டும் பலன்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடமைகள் அனைத்தையும், புனிதச் செயல்கள் அனைத்தையும், மனிதர்களின் பாவங்களைத் தூய்மையாக்கும் பொருட்களையும் முழுமையாகக் கேட்ட யுதிஷ்டிரன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} மீண்டும் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம்? நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம்? எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்?(2) உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது? எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தளர்வனைத்தையும் வீசியெறிந்துவிட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லையற்றவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3) மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும், அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும், தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6) உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும், அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும், அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7) என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும் அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)

உயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9) புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே. தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10) தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின. யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11) ஓ! மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக, அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12) முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்[2][3].(13)

அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்}, அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு}, வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்}, கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்},  அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்},  அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா},  அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்}<1-9>;(14)

தூய ஆன்மா கொண்டவன் {பூதாத்மா}, உச்சமான உயர்ந்த ஆன்மா {பரமாத்மா}, விடுதலையடைந்த {முக்தியடைந்த} மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக இருப்பவன் {முக்தாநாம்பரமாகதி}, மாற்றமற்றவன் {அவ்யயன்}, உறைக்குள் மறைந்து கிடப்பவன் {புருஷன்}, சான்றாளன் {ஸாக்ஷீ}, தான் வசிக்கும் உடல் உறையை அறிந்தவன் {க்ஷேத்ரஜ்ஞன்}, அழிவற்றவன் {அக்ஷரன்}<10-17>;(15)

யோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்}, யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா}, பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்}, சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு}, அழகிய சிறப்புக்கூறுகளையும், செய்கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அழகுமயிர் படைத்தவன்{கேசவன்}, புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்}<18-24>;(16)

அனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்}, அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்}, சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்}, அசைவற்றவன் {ஸ்தாணு}, அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி}, அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்}, மாற்றமில்லாதவன் {ஸம்பவன்}, விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்) கனியச் செய்பவன் {பர்த்தா}, அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு}, அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்}<25-37>;(17)

தானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ}, தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு}, சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்}, தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்}, உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்}, தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்}, (அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா}, பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்}<38-46>;(18)

அளவற்றவன் {அப்ரமேயன்}, புலன்களின் தலைவன் (அல்லது சுருள் மயிர்க் கொண்டவன்) {ஹ்ருஷீகேசன்}, தொடக்கக் காலத் தாமரை உதித்த உந்தி கொண்டவன் {பத்மநாபன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {அமரப்ரபு}, அண்டத் தச்சன் {விஸ்வகர்மா}, மந்திரமாக இருப்பவன் {மநு}, அனைத்துப் பொருட்களையும் பலவீனப்படுத்துபவன், அல்லது மெலியச் செய்பவன் {த்வஷ்டா}, மிகப் பெரியவன் {ஸ்தவிஷ்டன்}, புராதனமானவன் {ஸ்தவிரன்}, தாங்கி நிலைத்திருப்பவன் {த்ருவன்/துருவன்} <47-56>;(19)

(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்}, நித்தியமானவன் {சாஸ்வதன்}, கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்}, அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்}, அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்}, ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா}, தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்}, மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்}<57-64>;(20)

அனைத்து உயிரினங்களையும் அனைத்துச் செயல்களையும் செய்யத் தூண்டுபவன் {ஈசாநன்}, செயல்படுவதற்கான உயிர்மூச்சை உண்டாக்குபவன் {{ப்ராணதப்ராணன்}, அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்பவன் {ஜ்யேஷ்டன்}, மூத்தவன் {ஸ்ரேஷ்டன்}, உயிரினங்களின் தலைவர்களாகக் கருதப்படுவோர் அனைவரிலும் முதன்மையானவன் {ப்ரஜாபதி}, பொன்னையே தன் வயிறாகக் கொண்டவன் {ஹிரண்யகர்ப்பன்}, பூமியை வயிறாக் கொண்டவன் {பூகர்ப்பன்}, ஸ்ரீ அல்லது லட்சுமியின் தலைவன் {மாதவன்}, மதுவைக் கொன்றவன் {மதுஸூதநன்}<65-73>;(21)

எல்லாம் வல்லவன்{ஈஸ்வரன்}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, வில் தரித்தவன் {தந்வீ}, ஆய்வுகள் அனைத்தின் உள்ளடக்கத்தையும் மனத்தில் கொள்ளவல்லவன் {மேதாவீ}, கருடனைச் செலுத்திக் கொண்டு அண்டத்தில் திரிபவன் {விக்ரமன்}, தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளுக்குத் தகுந்தவனாகவும் அவற்றை முறையாக அனுபவிக்கும் சக்தி கொண்டவனாகவும் இருப்பவன் {க்ரமன்}, ஒப்பற்றவன் {அநுத்தமன்}, குழப்பமடையாதவன் {துராதர்ஷன்}, செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, அனைத்துச் செயல்களுடன் அடையாளங்காணப் படுபவன் {க்ருதி}, தன் உண்மையான சுயத்தையே சார்ந்திருப்பவன் {ஆத்மவாந்}<74-84>;(22)

தேவர்கள் அனைவரின் தலைவன் {ஸுரேசன்}, அனைத்தின் புகலிடமாக இருப்பவன் {சரணன்}, உயர்ந்த இன்பத்தின் உடல் வடிவம் {சர்ம}, அண்டத்தின் வித்தாக இருப்பவன் {விஸ்வரேதஸ்}, அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமாக இருப்பவன் {ப்ரஜாபவன்}, (அறியாமை உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவனை விழிப்படையச் செய்பவனாக இருக்கும் விளைவால்) பகலாக இருப்பவன் {அஹஸ்}, ஆண்டாக இருப்பவன் {ஸவம்த்ஸரன்}, (பிடிக்கப்பட முடியாதவனாக இருப்பதால்) பாம்பாக இருப்பவன் {வியாளன்}, திட நம்பிக்கையின் உடல்வடிவமாக இருப்பவன் {ப்ரத்யயன்}, அனைத்தையும் காண்பவன் {ஸர்வதர்சநன்}<85-94>;(23)

பிறப்பற்றவன் {அஜன்}, அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஸ்வரன்}, வெற்றி அடைந்தவன் {ஸித்தன்}, வெற்றி {ஸித்தி}, (அனைத்துப் பொருட்களுக்கும் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களின் தொடக்கமாக இருப்பவன் {ஸர்வாதி}, சிதைவைக் கடந்தவன் {அச்யுதன்}, மூழ்கிய பூமியை உயர்த்திய பெரும்பன்றி மற்றும் காளைமாட்டின் வடிவில் அறமாக இருப்பவன் {வ்ருஷாகபி}, அளவற்ற ஆன்மா கொண்டவன் {அமேயாத்மா}, அனைத்து வகைக் கலவிகளில் இருந்தும் தனித்து நிற்பவன்{ஸர்வயோகவிநிஸ்ருதன்}<95-103>;(24)

வசுக்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு மத்தியில் பாவகனாக இருப்பவன் (அல்லது தன்னை வழிபடுபவர்களிடம் வசிப்பவன்) {வஸு}, கோபம், வெறுப்பு, செருக்கு மற்றும் பிற தீய உணர்வுகளில் இருந்து விடுபட்டிருக்கும் தயாள ஆன்மா கொண்டவன் {வஸுமநஸ்}, வாய்மையாக இருப்பவன் {ஸத்யன்}, தன்னை வழிபடுபவர்களால் அளக்கப்படுபவன் {ஸமாத்மா}, தன் நடுநிலையின் விளைவால் ஒரே தன்மையிலான ஆன்மாவைக் கொண்டவன் {ஸம்மிதன்}, மாற்றம் அல்லது சீர்திருத்தங்கள் அனைத்தையும் கடந்து எப்போதும் சமமாக இருப்பவன் {ஸமன்}, தன்னை வழிபடுபவர்களின் விருப்பங்களை அருள ஒருபோதும் மறுக்காதவன் {அமோகன்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {புண்டரீகாக்ஷன்}, அறத்தின் மூலம் எப்போதும் தனிச்சிறப்புடன் கூடிய செயல்களைச் செய்பவன் {விருஷகர்மா}, அறத்தின் வடிவமாக இருப்பவன் {வ்ருஷாக்ருதி}<104-113>;(25)

அனைத்து உயிரினங்களையும் (அல்லது அவற்றின் துன்பங்களை) அழிப்பவன் {ருத்ரன்}, பல தலைகளைக் கொண்டவன் {பஹுசிரஸ்}, அண்டத்தைத் தாங்குபவன் {பப்ரு}, அண்டத்தின் பிறப்பிடமாக இருப்பவன் {விஸ்வயோநி}, தூய அல்லது களங்கமற்ற புகழைக் கொண்டவன் {சுசிஸ்ரவஸ்}, அழிவற்றவன் {அம்ருதன்}, நித்யமாக நிலைத்திருப்பவன் {சாஸ்வதஸ்தாணு}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் (அல்லது சிறந்த செயல்களைச் செய்பவர்களுக்கு எழுச்சி தருபவன்) {வராரோஹன்}, அண்டத்தில் உண்டாகி வெளிவரும் பிருக்ருதியைக் கலங்கடிக்க இயன்ற குறியீடுகளைக் கொண்ட தவங்களின் அறிவைக் கொண்டவன் {மஹாதபஸ்}<114-122>;(26)

எங்கும் செல்பவன் (அனைத்துப் பொருட்களின் காரணியாக அவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவன்) {ஸர்வகன்}, அனைத்தும் அறிந்தவன் {ஸர்வவித்}, மாற்றமற்ற ஒளியாகச் சுடர்விடுபவன் {பாநு}, (பக்தர்களின் வடிவில்) எங்கும் தன் துருப்பினரைக் கொண்டவன் (அல்லது எவனைக் கண்டால் தானவத் துருப்புகள் அனைத்துத் திசைகளிலும் சிதறுமோ அவன்) {விஷ்வக்ஸேநன்}, அனைவராலும் விரும்பப்படுபவன் (அல்லது வேண்டப்படுபவன்) (அல்லது தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன்) {ஜநார்த்தநன்}, வேதமாக இருப்பவன் {வேதன்}, வேதங்களை அறிந்தவன் {வேதவித்}, வேதங்களின் அங்கங்கள் (அல்லது கிளைகள்) அனைத்தையும் அறிந்தவன் {அவ்யங்கன்}, வேதங்களின் அங்கங்களை (துணை அறிவியல்கள் அனைத்தையும்) பிரதிபலிப்பவன் {வேதாங்கன்}, வேத விளக்கங்களைத் தீர்மானிப்பவன் {வேதவித்}, ஞானத்தில் தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவன் {கவி}<123-133>;(27)

உலகங்கள் அனைத்திலும் ஆளுமை கொண்டவன் {லோகாத்யக்ஷன்}, தேவர்களிடம் ஆளுமை கொண்டவன் {ஸுராத்யக்ஷன்}, (ஒன்றையோ, மற்றொன்றையோ நாடுபவர்களுக்கான கனிகளைக் கொடுப்பதற்கு) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கண்காணிப்பவன் {தர்மாத்யக்ஷன்}, விளைவாகவும் {காரியமாகவும்}, காரணமாகவும் இருப்பவன் (அல்லது பிரகிருதியைக் கடந்திருக்கும் விளைவால் முன்நிகழ்வுகளில் செய்யப்பட்ட எந்தச் செயல்களாலும் தன் வாழ்வு தீர்மானிக்கப்படாதவன்) {க்ருதாக்ருதன்}, (அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன், வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டதன் விளைவால்) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, (மேற்கண்ட) நான்கு வடிவங்களில் அறியப்படுபவன் {சதுர்வ்யூஹன்}, (அசுரத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையுடன் கூடிய மனித வடிவத்தை அவன் ஏற்ற போது தோன்றிய) நான்கு கொம்புகளைக் கொண்டவன் {சதுர்த்தம்ஷ்ட்ரன்}, (சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்வதற்கான) நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்புஜன்}<134-141>;(28)

பிரகாசத்தால் சுடர்விடுபவன் {ப்ராஜிஷ்ணு}, உணவுக்கொடையாளி {போஜநன்}, நல்லோரைப் பேணிவளர்ப்பவன் {போக்தா}, தீயோரைப் பொறுத்துக் கொள்ளாதவன் (அல்லது தன் பக்தர்கள் அவ்வப்போது செய்யும் மீறல்களைப் பொறுத்துக் கொள்பவன்) {ஸஹிஷ்ணு}, அண்டம் உயிர் பெறும் முன்பே இருப்பவன் {ஜகதாதிஜன்},  எப்போதும் வெற்றி பெறுபவன்{அனகோவிஜயன்}, தேவர்களையே வெற்றி கொள்பவன் {ஜேதா}, அண்டத்தின் பொருட்காரணமாக இருப்பவன் {விஸ்வயோநி}, பொருட் காரணங்களில் மீண்டும் மீண்டும் {உடல்களை எடுத்து அவற்றில்} வசிப்பவன் {புநர்வஸு}<142-150>;(29)

இந்திரனின் தம்பி (அல்லது சாதனைகளிலும், குணங்களிலும் இந்திரனைக் கடந்தவன்) {உபேந்த்ரன்}, (மூவுலகங்களின் ஆட்சி உரிமையில் இருந்து அசுர மன்னன் பலியை வஞ்சித்து, அதையே இந்திரனுக்குக் கொடுப்பதற்காகக் கசியபரின் மனைவியான அதிதியிடம்) குள்ளனாகப் பிறந்தவன் {வாமநன்}, நெடியவன் (பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் சொர்க்கம் பூமி மற்றும் பாதாள லோகங்களை மறைப்பதற்குப் பெரும் அண்ட வடிவம்) {ப்ராம்சு}, வீணாகும் {பயனற்ற} செயலேதும் செய்யாதவன் {அமோகன்}, (தன்னை வழிபடுபவர்கள், தன்னைக் கேட்பவர்கள், தன்னை நினைப்பவர்கள் ஆகியோரைத்) தூய்மை செய்பவன் {சுசி}, புகழ்வாய்ந்த சக்தியும் பலமும் கொண்டவன் {ஊர்ஜிதன்}, குணங்கள் அனைத்திலும் இந்திரனைக் கடந்தவன் {அதீந்த்ரன்}, தன்னை வழிபடுபவர்க்ள அனைவரையும் ஏற்பவன் {ஸங்க்ரஹன்}, படைப்பின் காரணனாக இருப்பதன் விளைவால் அந்தப் படைப்பாகவே இருப்பவன் {ஸர்க்கன்}, பிறவி, வளர்ச்சி, மரணம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் ஒரே வடிவில் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் {த்ருதாத்மா}, அண்டத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அதனதன் செயல்பாடுகளில் நிறுவுபவன் {நியமன்}, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கட்டுப்படுத்துபவன் {யமன்}<151-162>;(30)

தங்கள் உயர்ந்த நன்மையை அடைய விரும்பவர்களால் அறியத்தகுந்தவன் {வேத்யன்}, தன்வந்திரியின் வடிவில் தெய்வீக மருத்துவனாக இருப்பவன் (அல்லது, உலகில் ஒருவனைக் கட்டிப்போடும் பந்தங்களெனும் முன்மையான நோயைக் குணப்படுத்துபவன்) {வைத்யன்}, எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவன் {ஸதாயோகீ}, அறத்தை நிறுவ பேரசுரர்களைக் கொல்பவன் {வீரஹா}, தேவாசுரர்களால் கடையப்பட்டபோது பெருங்கடலில் இருந்து உதித்த லக்ஷ்மியின் தலைவன் (அல்லது, செழிப்பு மற்றும் கல்விக்குரிய தேவிகள் இருவரையும் பேணி வளர்ப்பவன்) {மாதவன்}, (தன்னைச் சுவைப்பதில் வெல்பவர்களுக்கு அவன் கொடுக்கும் இன்பத்தின் விளைவால்) தேனாக இருப்பவன் {மது}, புலன்களைக் கடந்தவன் (அல்லது, தன்னை நோக்கித் திரும்பாதவர்களுக்குத் தெரியாதவன்) {அதீந்த்ரியன்}, (மஹாதேவனையும், தேவர்களையும் பல நிகழ்வுகளில் வஞ்சித்ததன் விளைவால்) பெரும் மாய சக்திகளைக் கொண்டவன் {மஹாமாயன்}, (வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்வதில்) பெரும் சக்தியை வெளிப்படுத்துபவன் {மஹோத்ஸாஹன்}, பலத்தில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபலன்}<163-172>;(31)

புத்தியில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபுத்தி}, வலிமையில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாவீர்யன்}, திறனில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாசக்தி}, தன் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்தின் மூலம் அண்டத்தைக் காண்பவன் {மஹாத்யுதி}, கண்களால் (அல்லது வேறு எந்தப் புலனாலோ, அறிவுப்புலனாலோ) உறுதிப்படுத்த இயலாத உடலைக் கொண்டவன்{அநிர்த்தேஸ்யவபு}, அழகுகள் அனைத்தையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, தேவர்களாலோ, மனிதர்களாலோ புரிந்து கொள்ள முடியாத ஆத்மாவைக் கொண்டவன் {அமேயாத்மா}, பெருங்கடலில் மறைந்திருக்கும் மதிப்புமிக்கப் பொருட்களை அடைவதற்காகத் தேவர்களும், அசுரர்களும் பெருங்கடலைக் கடைவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது, பெரும் ஆமையின் வடிவில் பெரும் மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கியவன் (அல்லது, அனைத்தையும் மூழ்கடித்துவிடும் நோக்கத்துடன் பல நாட்கள் இடையறாமல் மழையைப் பொழிந்த இந்திரனின் கோபத்தில் இருந்து பிருந்தாவனம் என்ற இனிய இடத்தில் வசித்தோரைப் பாதுகாக்க கோவர்த்தன மலையை உயரத் தூக்கியவன்) {மஹாத்ரித்ருத்}<173-180>;(32)

அனைத்து வகைத் தடைகளையும் துளைக்கும் வகையில் பெரும் தொலைவுக்குத் தன் கணைகளை ஏவவல்லவன் {மஹேஷ்வாஸன்}, மூழ்கியிருந்த பூமியை வலிமைமிக்கப் பன்றியின் வடிவத்தை ஏற்று உயர்த்தியவன் {மஹீபர்த்தா}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் வசிக்கச் செய்தவன் (ரதியின் கணவனான காமனோடு அடையாளங்காணத் தக்கவன்) {ஸ்ரீநிவாஸன்}, அறவோரின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, முழு அர்ப்பணிப்பில்லாமல் வெல்லப்பட முடியாதவன் (அல்லது, சக்திகளைப் பயன்படுத்தும் எவனையும் தடுக்க வல்லவன்) {அநிருத்தன்}, தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்பவன் (அல்லது, நிறைவான இன்பத்தின் உடல்வடிவமாக இருப்பவன்) {ஸுராநந்தன்}, மூழ்கிய பூமியை மீட்டவன் (அல்லது, தன்னை நோக்கி பக்தர்களால் பாடப்படும் மந்திரங்களைப் புரிந்து கொள்பவன்) {கோவிந்தன்}, நாநயமிக்க மனிதர்கள் அனைவரையும்விடத் திறம்பெற்றவன் (தன்னை அறிந்தவர்கள் அனைவரின் துன்பங்களையும் போக்குபவன்) {கோவிதாம்பதி}<181-188>;(33)

சுடர்மிக்கப் பிரகாசம் நிறைந்தவன் {மரீசி}, தன்னைத் துதிப்போரின் துன்பங்களை அடக்குபவன் (அல்லது, தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட மனிதர்கள் அனைவரையும் தண்டிப்பதற்காக அண்டத்தை அழிக்கும் யமனின் வடிவத்தை ஏற்பவன்) {தமநன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச்சொல்வதற்காக அன்னப்பறவையின் வடிவை ஏற்றவன் (அல்லது, அனைவரின் உடல்களுக்குள்ளும் நுழைபவன்) {ஹம்ஸன்}, இறகு படைத்த ஆகாயவாசிகளின் இளரவசனான கருடனையே தன் வாகனமாகக் கொண்டவன் {ஸுபர்ணன்}, பரந்த பூமியைத் தலையில் தாங்கும் சேஷன் அல்லது அனந்தனுடன் அடையாளங்காணப் படுவதன் விளைவால் பாம்புகளில் முதன்மையானவனாக இருப்பவன் (அல்லது, அண்ட அழிவுக்குப் பிறகு பரந்த நீர்ப்பரப்பில் உறங்குவதற்காகப் பாம்புகளின் இளவரசனுடைய தலையைப் படுக்கையாகக் கொள்பவன்) {புஜகோத்தமன்}, தங்கம் போன்ற அழகிய உந்தியைக் கொண்டவன் {ஹிரண்யநாபன்}, இமயமலைச் சாரலில் உள்ள பதரியில் நாராயணனின் வடிவில் கடுந்தவங்களைப் பயின்றவன் {ஸுதபஸ்}, தாமரைக்கு ஒப்பான உந்தியைக் கொண்டவன் (அல்லது பெரும்பாட்டனான பிரம்மன் பிறந்த ஆதி தாமரையைத் தன் உந்தியில் கொண்டவன்) {பத்மநாபன்}, அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருப்பவன் {ப்ரஜாபதி}<189-197>;(34)

மரணத்தைக் கடந்தவன் (அல்லது, தன்னிடம் பக்தி கொண்டோரின் மரணத்தை விலக்குபவன்) {அம்ருத்யு}, தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் கருணைக் கண்களைச் செலுத்துபவன் (அல்லது, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவன்) {ஸர்வத்ருக்}, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவன் (அல்லது, பக்தியுடன் ஒருமனத்தோடு தன்னை வழிபடுவோர் அனைவரையும் அமுதத்தால் நனைப்பவன்) {ஸிம்மன்}, விதிப்பவர்கள் அனைவருக்கும் விதியாக இருப்பவன் (அல்லது, மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பவன்) {ஸந்தாதா}, செயல்கள் அனைத்தின் கனிகளைத் தானே இன்புறவும், பொறுக்கவும் செய்பவன் (அல்லது, தன் தந்தையின் ஆணையின் பேரில் நாடு கடந்து சென்று, இலங்கையில் உள்ள தன் தீவுக்கு ராட்சசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்தவனும், குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனது அண்ணனின் பிடியில் இருந்து அவனது நாட்டை மீட்டுத் தருமாறு ஒப்பந்தமிட்டவனும், தசரதனின் மகனுமான ராமன்) {ஸந்திமாந்}, எப்போதும் ஒரே வடிவில் இருப்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களிடம் பேரன்புடன் இருப்பவன்) {ஸ்திரன்}, எப்போதும் இயங்குபவன் (அல்லது, அனைத்து உயிரினங்களின் இதயத்துக்குள்ளும் உதிக்கும் காமனின் வடிவை ஏற்பவன்) {அஜன்}, தானவர்களாலோ, அசுரர்களாலோ தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் (ராவணனைக் கொன்று, தன் மனைவியான சீதையை மீட்டவன், அல்லது சிருங்கவேரபுரம் என்ற பெயரில் அறியப்படும் நாட்டில் வசிக்கும் சண்டாளர்களின் தலைவன் குஹகனிடம் நட்பைக் கொண்ட ராமனின் வடிவத்தைக் குறிப்பிடும் வகையில் தாழ்ந்த வகுப்பனிடமும், சண்டாளர்களிடமும் கருணை காட்டுபவன்) {துர்மர்ஷணன்}, தீயோரைத் தண்டிபவன் (அல்லது, (அல்லது, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளின் படி அனைத்து மனிதர்களின் ஒழுங்கையும் முறைப்படுத்துபவன்) {சாஸ்தா}, உண்மை ஞானத்தையே தன் அடையாளமாகக் கொண்ட ஆன்மா (அல்லது கருணையும், பிற இனிய குணங்களையும் கொண்ட ராமனின் வடிவை ஏற்றுத் தேவர்களின் பகைவனான ராவணனை அழித்தவன்) {விஸ்ருதாத்மா}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் (அல்லது, தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவர்களைத் தவிர்ப்பவனோ, கொடை கொடுப்பதைத் தடுப்பவனைக் கொல்பவனோ) {ஸுராரிஹா}<198-208);(35)

அறிவியல்கள் அனைத்தையும் போதிப்பவனும், அனைத்துக்கும் தந்தையுமானவன் {குரு}, பெரும்பாட்டனான பிரம்மனுக்குப் போதிப்பவன் {குருதமன்}, அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாகவோ, ஓய்விடமாகவோ இருப்பவன் {தாம}, பொய்மை எனும் களங்கத்திலிருந்து விடுபட்ட நல்லவர்களுக்கு நன்மை செய்பவன் {ஸத்யன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றலைக் கொண்டவன் {ஸத்யபராக்ரமன்}, சாத்திரங்களினால் அங்கீகரிக்கப்படாத, அல்லது அனுமதிக்கப்படாத செயல்களில் தன் கண்களை ஒருபோதும் செலுத்தாதவன் {நிமிஷன்}, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட செயல்களில் தன் கண்களைச் செலுத்துபவன்{அநிமிஷன்},  வைஜயந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் மங்காத வெற்றி மாலையைச் சூடுபவன் {ஸ்ரக்வீ}, வாக்கின் தலைவன் {வாசஸ்பதி}, தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவருக்கும், இழிந்தவர்களிலும் இழிந்தவர்களுக்கும் தன் அருளை வழங்கி மீட்ட பெரும் தயாளனுமான ஒருவன் {உதாரதீ}<209-218>;(36)

முக்தியடைய விரும்பும் மனிதர்களை முதன்மையான நிலையான முக்தி நிலைக்கு வழிநடத்துபவன் (அல்லது, வலிமைமிக்கப் பெரிய மீனின் வடிவை ஏற்று, அண்ட அழிவின் போது, பூமியை மறைத்த நீர் வெளியில் நீந்தி, தன் கொம்புகளில் கட்டப்பட்ட படகில் மநுவையும், பிறரையும் பாதுகாப்பாக வழிநடத்தியவன்) {அக்ரணீ}, அனைத்து உயிரினங்களின் தலைவன் (அல்லது, அண்ட அழிவின் போது அனைத்தையும் மூழ்கடிக்கும் நீர்வெளியில் விளையாடுபவன்) {க்ராமணீ}, வேதங்களையே வார்த்தைகளாகக் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அண்ட அழிவின் போது நீருக்குள் மூழ்கிய வேதங்களை மீட்டவன் {ந்யாயன்}, அண்டத்தின் இயக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {நேதா}, உயிரினங்கள் அனைத்தையும் செயல்படச் செய்ய, அல்லது முயற்சிக்கச் செய்யக் காற்றின் {வாயுவின்} வடிவை ஏற்றவன் (அல்லது, எப்போதும் அழகிய அசைவுகளைக் கொண்டவன், அல்லது தான் உண்டாக்கிய உயிரினங்கள் தன்னைத் துதிக்க வேண்டும் என விரும்புபவன்) {ஸமீரணன்}, ஆயிரம் தலைகளைக் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தா}, அண்டத்தின் ஆத்மாவாக இருந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விஸ்வாத்மா}, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்}<219-226>;(37)

ஆயிரம் கால்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாத்}, அண்டச் சக்கரத்தைத் தன் விருப்பப்படி சுழலச் செய்பவன் {ஆவர்த்தநன்}, ஆசையில் இருந்து விடுபட்டவனும், ஜீவனையும், ஜீவன் சார்ந்தவற்றையும் நிறுவும் சூழ்நிலைகளைக் கடந்தவனுமான ஒருவன் {நிவ்ருத்தாத்மா}, உலகப் பந்தம் கொண்ட மனிதர்கள் அனைவரின் பார்வையில் இருந்து மறைந்திருப்பவன் (அல்லது அறியாமை எனும் கட்டைக் கொண்டு மனிதர்கள் அனைவரின் கண்களையும் மறைத்தவன்) {ஸம்வ்ருதன்}, தன்னிடம் இருந்து விலகியவர்களக் கலங்கடிப்பவன் {ஸம்ப்ரமர்த்தநன்}, சூரியனோடு அடையாளங்காணப்படுபவனாக இருப்பதன் விளைவால் நாளைத் தொடங்கி வைப்பவனும், அனைத்தையும் அழிக்கும் காலனையே அழிப்பவனுமாக இருப்பவன் {அஹஸ்ஸம்வர்த்தகன்},, தொடக்கமில்லாதவன் (அல்லது நிலையான வசிப்பிடம் இல்லாதவன்) {வஹ்நி}, புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளைக் குறிப்பிட்டோருக்கு அளிப்பவன் (அல்லது, தன்னுடைய உடலின் சிறு பகுதியில் மட்டுமே வைத்து அண்டத்தைத் தாங்குபவன்) {அநிலன்}, (சேஷனின் வடிவிலோ, பூமியைக் காத்த பெரும் பன்றியின் வடிவத்திலோ, பூமியை ஆதரித்து நுட்பமாக ஊடுருபவனாகவோ)ஆகாயத்தில் பூமியைத் தாங்கிப் பிடிப்பவன் {தரணீதரன்}<227-235>;(38)

சிசுபாலனைப் போலப் பகைவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துப் பேரருள் புரிபவன் {ஸுப்ரஸாதன்}, ரஜஸ் (ஆசை) மற்றும் தமோ (இருள்) குணங்களிலிருந்து விடுபட்டு களங்கமற்ற சத்வ குணத்துடன் தூய நிலையில் இருப்பவன் (அல்லது, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்தவன்) {ப்ரஸந்நாத்மா}, அண்டத்தை ஆதரிப்பவன் {விஸ்வஸ்ருக்}, அண்டத்திற்கு உணவளிப்பவன் (அல்லது அஃதை அனுபவிப்பவன்) {விஸ்வபுக்விபு}, எல்லையில்லா பலத்தை வெளிப்படுத்துபவன் {ஸத்கர்த்தா}, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தன்ன வழிபடுபவர்களைக் கௌரவிப்பவன் {ஸத்க்ருதன்}, பிறரால் கௌரவிக்கப்பட்ட, அல்லது துதிக்கப்பட்டவர்களால் கௌரவிக்கப்படவோ, துதிக்கப்படவோ நேர்பவன் (நீடித்த சகிப்புடன் கூடிய அழகிய செயல்களைக் கொண்டவன்) {ஸாது}, பிறரின் காரியங்களை நிறைவேற்றுபவன் (அல்லது பிறருக்கு நன்மை செய்பவன்) {ஜஹ்நு}, அண்ட அழிவின் போது தனக்குள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவன் (அல்லது, தேவர்களுக்கோ, தன்னை வழிபடுபவர்களுக்கோ எதிராக இருப்பவர்களை அழிப்பவன்) {நாராயணன்}, நீரையே தன் இல்லமாகக் கொண்டவன் (அல்லது, அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவன், அல்லது அனைத்து உயிரினங்களின் அறியாமையை அழிப்பவன்) {நரன்}<236-246>;(39)

வேறுபாடுகளைக் களைந்தவன் {அஸங்க்யேயன்}, அளவற்ற பொருட்களின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் {அப்ரமேயாத்மா},  அனைவருக்கும் மேலான புகழைப் பெற்றவன், அறவோரைப் பேணி வளர்ப்பவன் {சிஷ்டக்ருத்}, உலகங்கள் அனைத்தையும் தூய்மையாக்குபவன் {சுசி}, அனைத்து உயிரினங்களின் விருப்பங்களையும் கனியும் நிலையால் மகுடம் சூட்டச் செய்பவன் {ஸித்தார்த்தன்}, தன் விருப்பங்கள் எப்போதும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தஸங்கல்பன்}, அனைவருக்கும் வெற்றியை அளிப்பவன் {ஸித்திதன்}, வேண்டுவோருக்கு வெற்றியை அளிப்பவன் {ஸித்திஸாதநன்}<247-256>;(40)

புனிதநாட்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் (அல்லது, தன் சிறந்த குணங்களால் இந்திரனையே மறைப்பவன்) {வ்ருஷாஹீ}, விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்குப் பொழிபவன் {வ்ருஷபன்}, அண்டம் முழுவதும் நடப்பவன் {விஷ்ணு}, (உயர்ந்த இடத்திற்கு ஏற விரும்புகிறவர்களுக்கு) அறத்தால் அமைந்த சிறந்த படிக்கட்டுகளை அளிப்பவன் {வ்ருஷபர்வா}, வயிற்றில் அறத்தைக் கொண்டவன் (அல்லது, கருவரையில் பிள்ளையைப் பாதுகாக்கம் தாயைப் போல இந்திரனைப் பாதுகாப்பவன்) {வ்ருஷோதரன்}, (தன்னை வழிபடுபவர்களைப்) பெருக்குபவன் {வர்த்தநன்}, பெரும் அண்டமாகப் பரவத் தன்னைப் பரப்பிக் கொள்பவன் {வர்த்தமாநன்}, அனைத்திலிருந்தும் (அவற்றில் ஊடுருவாமல்) தனித்து இருப்பவன் {விவிக்தன்}, ஸ்ருதிகளெனும் பெருங்கடலின் கொள்ளிடமாக இருப்பவன் {ஸ்ருதிஸாகரன்}<257-264>;(41)

(அண்டத்தையே தாங்க வல்ல) சிறந்த கரங்களைக் கொண்டவன் {ஸுபுஜன்}, எந்த உயிரினத்தாலும் சுமக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, பிரம்மன் என்றழைக்கப்படும் ஒலிகள் பாய்ந்த இடமாக இருப்பவன் (அல்லது வேதமாக இருப்பவன்) {வாக்மீ}, அண்டத்தலைவர்கள் அனைவரின் தலைவன் {மஹேந்த்ரன்}, செல்வத்தைக் கொடுப்பவன் {வஸுதன்}, தன் பலத்தில் தானே வசிப்பவன் {வஸு}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {நைகரூபன்}, பெரும் வடிவம் படைத்தவன் {ப்ருஹத்ரூபன்}, விலங்குகள் அனைத்திலும் வேள்வியின் வடிவில் வசிப்பவன் {சிபிவிஷ்டன்}, அனைத்துப் பொருளும் வெளிப்படும் காரணன் {ப்ரகாசநன்}<265-274>;(42)

பெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன் {ஓஜஸ்தேஜோத்யுதிதரன்}, தன்னை வழிபடுபவர்களுக்குக் காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் {ப்ரகாசாத்மா}, எரியும் சக்தியால் அறமற்றவர்களை எரிப்பவன் {ப்ரதாபநன்}, (வளம் முதலிய) ஆறு வகைக் குணங்களின் வளம் கொண்டவன் {ருத்தன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன் {ஸ்பஷ்டாக்ஷரன்}, சாம, ரிக் மற்றும் யஜூஸ் (வேதங்களின்) வடிவில் இருப்பவன் {மந்த்ரன்}, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் குளுமைப்படுத்தும் சந்திரனின் கதிர்களைப் போல உலகத் துன்பங்களில் எரிந்து கொண்டிருக்கும் தன் வழிபாட்டாளர்களுக்கு ஆறுதலளிப்பவன் {சந்த்ராம்சு}, சூரியனைப்போன்ற சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடியவன் {பாஸ்கரத்யுதி}<275-282>;(43)

எவன் மனத்திலிருந்து சந்திரன் உதித்தானோ அவன் {அம்ருதாம்சூத்பவன்}, தன்னொளியில் தானே சுடர்விடுபவன் {பாநு}, முயலால் குறிப்பிடப்படும் ஒளிக்கோளைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஊட்டுபவன் {சசபிந்து}, தேவர்களில் திறம் பெற்றவன் {ஸுரேஸ்வரன்}, உலகப்பற்றெனும் நோய்க்குப் பெரும் மருந்தாக இருப்பவன் {ஒளஷதம்}, அண்டத்தின் பெரும் பாலமாக இருப்பவன் {ஜகதஸ்ஸேது}, வீண்போகாத அறிவும் மற்றும் பிற குணங்களுடனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலுடனும் இருப்பவன் {ஸத்யதர்மபராக்ரமன்}<283-289>;(44)

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென அனைத்துக் காலங்களிலும் உயிரினங்கள் அனைத்தாலும் வேண்டப்படுபவன் {பூதபவ்யபவந்நாதன்}, தன்னை வழிபடுபவர்களிடம் கருணைப் பார்வையைச் செலுத்தி அவர்களை மீட்பவன் {பவன்}, புனிதமானவர்களை மேலும் புனிதப்படுத்துபவன் {பாவநன்}, ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன் (அல்லது, விடுதலையடைந்தவர்களையும் {முக்தி பெற்றவர்களையும்}, விடுதலையடையாதவர்களையும் பல்வேறு வடிவங்களை ஏற்றுக் காப்பவன்) {அநலன்}, விடுதலையடைந்தோரின் {முக்தி அடைந்தோரின்} ஆசைகளைக் கொல்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் மனங்களில் தீய ஆசைகள் எழாமல் தடுப்பவன்) {காமஹா}, காமனின் தந்தை (ஆசை அல்லது காமத்தின் கோட்பாடு) {காமக்ருத்}, மிக இனிமையானவன் {காந்தன்}, அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுபவன் {காமன்}, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன் {காமப்ரதன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன் {ப்ரபு}<290-299>;(45)

நான்கு யுகங்களையும் நடைமுறையில் தொடங்கச் செய்பவன் {யுகாதிக்ருத்}, யுகங்களைத் தொடர்ச்சியாகச் சக்கரமாகச் சுழலச் செய்பவன் {யுகாவர்த்தன்}, பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன் (அதன் மூலம், பல்வேறு யுகங்களைப் பல்வேறு வகைச் செயல்களின் மூலம் வேறுபடுத்திக் காட்டும் காரணமாக இருப்பவன்) {நைகமாயன்}, (ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அனைத்தையும் விழுங்குவதன் விளைவால்) உண்பவர்களில் பெரியவன் {மஹாசநன்}, (பக்தர்கள் அல்லாதோருக்குப்) பிடிபட இயலாதவன் {அத்ருஸ்யன்}, (மிகப்பெரிய) வெளிப்படு வடிவத்துடன் கூடியவன் {வ்யக்தரூபன்}, (தேவர்களின்) ஆயிரம் பகைவர்களை அடக்கியவன் {ஸஹஸ்ரஜித்}, எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன் {அநந்தஜித்}<300-308>;(46)

(பெரும்பாட்டன் மற்றும் ருத்திரனாலும்) விரும்பப்படுபவன் (அல்லது வேள்விகளில் துதிக்கப்படுபவன்) {இஷ்டோவிசிஷ்டன்}, அனைத்திற்கும் மேலான புகழ்பெற்றவன், ஞானிகள் மற்றும் அறவோரால் விரும்பப்படுபவன் {சிஷ்டேஷ்டன்}, தலைப்பாகையில் (மயில்) இறகுகளுடன் கூடிய ஆபரணத்தைக் கொண்டவன் {சிகண்டீ}, அனைத்து உயிரினங்களையும் தன் மாயையால் கலங்கடிப்பவன் {நஹுஷன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் தன் அருளைப் பொழிபவன் {வ்ருஷன்}, அறவோரின் கோபத்தைக் கொல்பவன் {க்ரோதஹா}, அறமற்றவர்களைக் கோபத்தால் நிறைப்பவன் {க்ரோதக்ருத்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுபவன் {கர்த்தா}, அண்டத்தையே தன் கரங்களில் தாங்குபவன் {விஸ்வபாஹு}, பூமியை நிலைநிறுத்துபவன் {மஹீதரன்}<309-318>;(47)

(தொடக்கம், பிறவி அல்லது தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி, அழிவு என்ற) நன்கு அறியப்பட்ட ஆறு மாறுபாடுகளைக் கடந்தவன் {அச்யுதன்}, (தன் சாதனைகளின் விளைவால்) பெரும் புகழைக் கொண்டவன் {ப்ரதிதன்}, (நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) உயிரினங்கள் அனைத்தையும் {உயிரோடு} வாழச் செய்பவன் {ப்ராணன்}, உயிரைக் கொடுப்பவன் {ப்ராணதன்}, (உபேந்திரனின் வடிவத்தில் அல்லது குள்ள வடிவத்தில் உள்ள) வாசவனின் தம்பி {வாஸவாநுஜன்}, அண்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அபாம்நிதி}, (அனைத்திலும் பொருள் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்து உயிரினங்களையும் மறைப்பவன் {அதிஷ்டாநன்}, (எப்போதும் பிழை கடந்தவனாகவும்) எப்போதும் விழிப்புடன் இருப்பவன் {அப்ரமத்தன்}, தன் மகிமையில் நிறுவப்பட்டவன் {ப்ரதிஷ்டிதன்}<319-327>;(48)

அமுத வடிவில் பாய்பவன் (அல்லது, அனைத்தையும் வற்றச் செய்பவன்) {ஸ்கந்தன்}, அறப்பாதையை நிலைநிறுத்துபவன் {ஸ்கந்ததரன்}, அண்டத்தின் சுமையைச் சுமப்பவன் {துர்யன்}, வேண்டுவோர் விரும்பும் வரங்களைக் கொடுப்பவன் {வரதன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}, வசுதேவரின் மகன் (அல்லது, அண்டத்தைத் தன் மாயைகளில் மறைத்து, அதன் மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பவன்) {வாஸுதேவன்}, இயல்புக்குமீறிய வகையில் ஒளிர்பவன் {ப்ருஹத்பாநு}, தேவர்கள் தோன்றக் காரணமானாவன் {ஆதிதேவன்}, பகைவரின் நகரங்கள் அனைத்தையும் துளைப்பவன் {புரந்தரன்}<328-336>;(49)

துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் கடந்தவன் {அசோகன்}, உலக வாழ்வெனும் பெருங்கடலைப் பாதுகாப்பாகக் கடக்க நம்மை வழிநடத்துபவன் {தாரணன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்தும் மறுபிறவி குறித்த அச்சத்தை விலக்குபவன் {தாரன்}, எல்லையற்ற துணிவும் ஆற்றலும் கொண்டவன் {சூரன்}, சூர குலத்தில் பிறந்தவன் {செளரி}, அனைத்து உயிரினங்களையும் ஆள்பவன் {ஜநேஸ்வரன்}, அனைவருக்கும் அருள்தரவிரும்புபவன் {அநுகூலன்}, (நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிறுவுவதற்காகப்) பூமிக்கு நூறு முறை வருபவன் {சதாவர்த்தன்}, தன் கரங்களில் ஒன்றில் தாமரையைக் கொண்டவன் {பத்மீ}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {பத்மநிபேஷணன்}<337-346>;(50)

உந்தியில் தொடக்ககாலத் தாமரையைக் கொண்டவன் (அல்லது, தாமரையில் அமர்ந்திருப்பவன்) {பத்மநாபன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {அரவிந்தாக்ஷன்}, தன்னை வழிபடுபவர்களால் இதயத்தாமரையில் அமர்ந்திருப்பவனாகத் துதிக்கப்படுபவன் {பத்மகர்ப்பன்}, (தன் மாயையின் மூலம்) ஜீவனின் உடல்வடிவத்தை ஏற்பவன் {சரீரப்ருத்}, அனைத்து வகைப் பலங்களையும் கொண்டவன் {மஹர்த்தி}, ஐந்து அடிப்படை பூதங்களின் வடிவில் வளர்பவன் {ருத்தன்}, புராதன ஆன்மா {வ்ருத்தாத்மா}, பெரிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்}, தேரின் கொடிக்கம்பத்தில் கருடன் அமர்ந்திருக்கப் பெற்றவன் {கருடத்வஜன்}<347-355>;(51)

ஒப்பற்றவன் {அதுலன்}, (சிங்கத்தைக் கொல்லும் விலங்கான} சரபன், தீயோரைப் பயங்கரமாகத் தாக்குபவன் {பீமன்}, காலத்தில் நேர்ந்தவை அனைத்தையும் அறிந்தவன் {ஸமயஜ்ஞன்}, வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக இருப்பவன் {ஹவிஸ்}, அவ்வாறு ஊற்றப்படும் நெய்யை தேவர்களின் வடிவில் ஏற்பவன் {ஹரி}, அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன் {ஸர்வலக்ஷணலக்ஷண்யன்}, எப்போதும் செழிப்பு அமர்ந்திருக்கும் மார்பைக் கொண்டவன் {லக்ஷமீவாந்}, போர்கள் அனைத்திலும் வெல்பவன் {ஸமிதிஞ்சயன்}<356-364>;(52)

அழிவைக் கடந்தவன் {விக்ஷரன்}, செவ்வண்ணம் ஏற்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் எதிரிகளிடம் கோபம் நிறைந்தவன்) {ரோஹிதன்}, அறவோர் தேடும் பொருளாக இருப்பவன் {மார்க்கன்}, அனைத்துக்கும் வேராக இருப்பவன் {ஹேது}, (குழந்தையாக இருக்கும்போது யசோதனையால் கட்டப்பட்டதால்) வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன் {தாமோதரன்}, தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன் அல்லது தாங்கிக் கொள்பவன் {ஸஹன்}, மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன் {மஹீதரன்}, வழிபடத்தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன் {மஹாபாகன்}, பெரும் வேகம் கொண்டவன் {வேகவாந்}, பெரும் அளவிலான உணவை விழுங்குபவன் {அமிதாசநன்}<365-374>;(53)

படைப்பை உண்டாக்கி இயங்கச் செய்தவன் {உத்பவன்}, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் எப்போதும் கலங்கடிப்பவன் {க்ஷோபணன்}, பிரகாசமாக ஒளிர்பவன் (அல்லது, இன்பத்தில் திளைப்பவன்) {தேவன்}, வயிற்றில் பலம் கொண்டவன் {ஸ்ரீகர்ப்பன்}, அனைத்தையும் ஆளும் பரமன் {பரமேஸ்வரன்}, அண்டம் உண்டான பொருளாக இருப்பவன் {கரணம்}, அண்டத்தை உண்டாக்கிய காரணப்பொருளானவன் {காரணன்}, அனைத்துப் பொருள்களையும் சாராதிருப்பவன் {கர்த்தா}, அண்டத்தில் பன்முகத்தன்மையை விதிப்பவன் {விகர்த்தா}, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {கஹநன்}, மாயத்திரை மூலம் தன்னை மறைத்துக் கொள்பவன்{குஹன்}<375-385>;(54)

குணங்கள் ஏதும் அற்ற சித் ஆக இருப்பவன் {வ்யவஸாயன்}, அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {வ்யவஸ்தாநன்}, அண்டப் பேரழிவின் போது அனைத்துப் பொருட்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்ஸ்தாநன்}, தன்னை வழிபடுபவனுக்கு முதன்மையான இடத்தை ஒதுக்குபவன் {ஸ்தாநதன்}, நீடித்து நிலைத்திருப்பவன் {த்ருவன்}, உயர்ந்த பலத்தைக் கொண்டவன் {பரர்த்தி}, வேதங்களில் மகிமைப்படுத்தப்படுபவன் {பரமஸ்பஷ்டன்}, நிறைவுடன் இருப்பவன் {துஷ்டன்}, எப்போதும் முழுமையாக இருப்பவன்{புஷ்டன்}, மங்கலப் பார்வை கொண்டவன் {சுபேக்ஷணன்}<386-395>;(55)

யோகிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {ராமன்}, (அண்ட அழிவின் போது அனைத்தும் அவனிடமே கலப்பதால்) அனைத்து உயிரினங்களின் கதியாக இருப்பவன் {விராமன்}, {விரதன்}, குறையற்ற பாதையாக இருப்பவன் {மார்க்கன்}, ஜீவனின் வடிவில் இருந்து கொண்டு முக்திக்கு வழிநடத்துபவன் {நேயன்}, (ஜீவனிலிருந்து முக்திக்கு) வழிநடத்துபவன் {நயன்}, வழிநடத்த எவனும் இல்லாதவன் {அநயன்}, பெரும் வலிமை கொண்டவன் {வீரன்}, வலிமை நிறைந்த அனைத்திலும் முதன்மையானவன் {சக்திமதாம்ஸ்ரேஷ்டன்}, நிலைநிறுத்துபவன் {தர்மம்}, கடமை மற்றும் அறம் அறிந்த அனைவரிலும் முதன்மையானவன் {தர்மவிதுத்தமன்}<396-404>;(56)

படைப்புக் காலத்தில் பொருட்கள் அனைத்தையும் அமைப்பதற்காகப் பிரிந்து கிடக்கும் பூதங்களை ஒன்றாகச் சேர்ப்பவன் {வைகுண்டன்}, அனைத்து உடல்களிலும் வசிப்பவன் {புருஷன்}, க்ஷேத்ரஜ்ஞனின் வடிவில் இருந்து கொண்டு அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்பவன் {ப்ராணன்}, அண்டப் பேரழிவின் போது அழித்த உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் {ப்ராணதன்}, அனைவராலும் மதிப்புடன் வணங்கப்படுபவன் {ப்ரணமன்}, மொத்த அண்டத்திலும் விரிந்திருப்பவன் {ப்ருது}, ஆதி பொன்முட்டையைத் தன் வயிறாகக் கொண்டு அனைத்தையும் உண்டாக்குபவன் {ஹிரண்யகர்ப்பன்}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் {சத்ருக்நன்}, (பொருள் காரணமாக இருக்கும் தன்னில் இருந்து உதித்த) அனைத்திலும் படர்ந்திருப்பவன் {வ்யாப்தன்}, இனிய நறுமணங்களைப் பரவச் செய்பவன் {வாயு}, புலன் இன்பங்களை அலட்சியம் செய்பவன் {அதோக்ஷஜன்}<405-415>;(57)

பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் {ருது}, தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன் {ஸுதர்சநன்}, அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன் {காலன்}, தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் {பரமேஷ்டீ}, (எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன் {பரிக்ரஹன்}, அனைவரையும் அச்சங்கொள்ளச் செய்பவன் {உக்ரன்}, அனைத்து உயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்வத்ஸரன்}, {தக்ஷன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறமை கொண்டவன் {விஸ்ராமன்}, பிறரைவிட அதிகத் திறன் கொண்டவன் {விஸ்வதக்ஷிணன்}<416-425>;(58)

மொத்த அண்டமும் படர்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {விஸ்தாரன்}, அனைத்துப் பொருட்களும் எப்போதும் சார்ந்திருப்பவனாகவும், அசைவில்லாதவனாகவும் இருப்பவன் {ஸ்தாவரஸ்தாணு}, சான்றுப் பொருளாக இருப்பவன் {ப்ரமாணன்}, அழிவில்லாத, மாற்றமில்லாத வித்தாக இருப்பவன் {பீஜமவ்யயம்}, (மகிழ்ச்சியாக இருப்பதன் விளைவால்) அனைவராலும் வேண்டப்படுபவன் {அர்த்தன்}, (விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைந்ததன் விளைவால்) ஆசையற்றவன் {அநர்த்தன்}, (அண்டத்தை மறைக்கும்) பெரும் உறையாக இருப்பவன் {மஹாகோசன்}, அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைப் பொருட்களையும் கொண்டவன் {மஹாபோகன்}, (விருப்பத்திற்குரிய பொருட்களனைத்தையும் அடையவதற்குரிய) பெருஞ்செல்வம் கொண்டவன் {மஹாதனன்}<426-434>;(59)

மனத்தளர்ச்சிக்கு அப்பாற்பட்டவன் {அநிர்விண்ணன்}, துறவின் வடிவில் இருப்பவன் {ஸ்தவிஷ்டன்}, பிறப்பற்றவன் {பூ}, அறம் கட்டப்படும் தூணாக இருப்பவன் {தர்மயூபன்}, வேள்வியின் பெரும் உடல்வடிவம் {மஹாமகன்}, ஆகாயத்தில் சுழலும் நட்சத்திர சக்கரத்தின் நடுப்பகுதியாக {மையமாக} இருப்பவன் {நக்ஷத்ரநேமி}, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் நிலவாக இருப்பவன் {நக்ஷத்ரீ}, அனைத்துச் சாதனைகளையும் செய்யவல்லவன் {க்ஷமன்}, அனைத்துப் பொருட்களும் மறையும்போது தன் ஆன்மாவில் இருப்பவன் {க்ஷாமன்}, படைக்கும் விருப்பத்தைப் பேணி வளர்ப்பவன் {ஸமீஹநன்}<435-444>;(60)

அனைத்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன் {யஜ்ஞன்}, வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளில் துதிக்கப்படுபவன் {இஜ்யன்}, மனிதர்கள் செய்யும் வேள்விகளில் இருக்கும் தேவர்கள் அனைவரிலும் மிகவும் துதிக்கப்படத்தகுந்தவன் {மஹேஜ்யன்}, விதிப்படி விலங்குகள் காணிக்கையளிக்கப்படும் வேள்விகள் அனைத்தின் உடல்வடிவமாக இருப்பவன் {க்ரது}, எந்த உணவையும் உட்கொள்ளும் முன்னர் மனிதர்களால் துதிக்கப்படுபவன் {ஸத்ரம்}, முக்தி நாடுபவர்களின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, அனைத்து உயிரினங்களும் செய்யும் மற்றும் செய்யத்தவறும் செயல்களைக் காண்பவன் {ஸர்வதர்சீ}, குணங்கள் அனைத்தையும் கடந்த ஆன்மாவைக் கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, அடையப்பட முடியாததும், எல்லையற்றதும், அனைத்தையும் நிறைவேற்றவல்லதுமான ஞானத்திற்கு ஒப்பானவன் {ஜ்ஞானமுத்தமம்}<445-454>;(61)

(வேண்டுபவனுக்குத் தூய இதயத்துடன் அருள்வழங்க வல்ல) சிறந்த நோன்புகளை நோற்பவன் {ஸுவ்ரதன்}, எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்}, நுட்பமிக்கவன் {ஸூக்ஷ்மன்}, (வேதத்தின் வடிவிலோ, குழல் இசைக்கும் கிருஷ்ணனாகவோ) இனிமைமிக்க ஒலிகளை வெளியிடுபவன் {ஸுகோஷன்}, (தன்னை வழிபடுபவர்கள் அனைவருக்கும்) மகிழ்ச்சியைக் கொடுப்பவன் {ஸுகதன்}, மறுவுதவியேதும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருத்}, அனைத்து உயிரினங்களையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {மனோஹரன்}, கோபத்தை வென்றவன் {ஜிதக்ரோதன்}, (பெரும் வலிமைமிக்க அசுரர்களைக் கொல்லும் வகையிலான) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {வீரபாஹு}, அறமற்றோரைக் கிழித்தெறிபவன் {விதாரணன்}<455-464>;(62)

ஆன்ம அறிவற்றவர்களைத் தன் மாயையால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கச் செய்பவன் {ஸ்வாபநன்}, (அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகத்) தன்னைத்தானே சார்ந்திருப்பவன் {ஸ்வவசன்}, மொத்த அண்டத்திலும் முற்றாகப் பரவியிருப்பவன் {வ்யாபீ}, முடிவிலா வடிவங்களில் இருப்பவன் {நைகாத்மா}, முடிவிலா எண்ணிக்கையிலான தொழில்களில் ஈடுபடுபவன் {நைககர்மக்ருத்}, அனைத்திலும் வாழ்பவன் {வத்ஸரன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் முழு அன்பைக் கொண்டவன் {வத்ஸலன்}, (அனைத்து உயிரினங்களும் அவனிடம் இருந்து உண்டான கன்றுகளாக இருப்பதன் விளைவால்) அண்டத்தின் தந்தையாக இருப்பவன் {வத்ஸீ}, பரந்திருக்கும் பெருங்கடலின் வடிவில் தன் வயிற்றில் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவன் {ரத்நகர்ப்பன்}, கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {தநேஸ்வரன்}<465-474>;(63)

அறத்தைப் பாதுகாப்பவன் {தர்மகுப்}, அறக்கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தர்மக்ருத்}, அறத்தின் ஆதாரமாக இருப்பவன் {தர்மீ}, எப்போதும் இருப்பவன் {ஸத்}, (வெளிப்படும் அண்டம் மாயையின் விளைவாக இருப்பதால் அண்டத்தின் வடிவில்) இல்லாதவன் {அஸத்}, (வெளிப்படும் அண்டத்தின் வடிவில்) அழியத்தக்கவன் {க்ஷரம்}, அழிவற்ற சித் ஆக இருப்பவன் {அக்ஷரன்}, உண்மை அறிவற்ற ஜீவனின் வடிவில் இருப்பவன் {அவிஜ்ஞாதா}, சூரியனின் வடிவில் ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராம்சு}, (சேஷன், கருடன் முதலிய வலிமைமிக்கப் பெரும் உயிரினங்களை) விதிப்பவன் {விதாதா}, சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தவன் {க்ருதலக்ஷணன்}<475-485>;(64)

எண்ணற்ற ஒளிக்கதிர்களின் நடுவில் சூரியனின் வடிவில் இருப்பவன் {கபஸ்திநேமி}, அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவன் {ஸத்வஸ்தன்}, பேராற்றல் கொண்டவன் {ஸிம்மன்}, யமன் மற்றும் அதே பலத்தைக் கொண்ட பிறரை ஆள்பவன் {பூதமஹேஸ்வரன்}, (தொடக்கத்தில் இருந்தே இருப்பனாதலால்) தேவர்களில் பழைமையானவன் {ஆதிதேவன்}, அனைத்து நிலைகளையும் கைவிட்டு தன் மகிமையில் தானே இருப்பவன் {மஹாதேவன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {தேவேசன்}, தேவர்களை நிலைநிறுத்தபவனையும் (இந்திரனையும்) ஆள்பவன் {தேவப்ருத்குரு}<486-493>;(65)

பிறப்பையும், அழிவையும் கடந்தவன் {உத்தரன்}, (கிருஷ்ணனின் வடிவில்) பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன் {கோபதி}, அனைத்து உயிரினங்களையும் ஊட்டி வளர்ப்பவன் {கோப்தா}, அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன் {ஜ்ஞானகம்யன்}, பழைமையானவன் {புராதநன்}, உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன் {சரீரபூதப்ருத்}, (ஜீவனின் வடிவில் இன்ப துன்பங்களை) அனுபவிப்பவன் {போக்தா}, பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன் (அல்லது, ராமனின் வடிவில் இருந்த போது பெரும் குரங்குக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன்) {கபீந்த்ரன்}, தன்னால் செய்யப்பட்ட மகத்தான வேள்வியில் அபரிமிதமான கொடைகளை அனைவருக்கும் வழங்கியவன் {பூரிதக்ஷிணன்}<494-502>;(66)

ஒவ்வொரு வேள்வியிலும் சோமத்தைப் பருகுபவன் {ஸோமபன்}, அமுதம் பருகுபவன் {அம்ருதபன்}, சோமனின் (சந்திரமாஸின்) வடிவில் மூலிகை, செடி, கொடிகளை ஊட்டி வளர்ப்பவன் {ஸோமன்}, முடிவிலா எண்ணிக்கையில் பகைவர்கள் இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் அவர்களை வெல்பவன் {புருஜித்}, இருப்பிலுள்ளவை அனைத்திலும் முதன்மையான அண்ட வடிவைக் கொண்டவன் {புருஸத்தமன்}, தண்டிப்பவன் {விநயன்}, அனைவரையும் வெல்பவன் {ஜயன்}, கலங்கடிக்க இயலாத நோக்கங்களைக் கொண்டவன் {ஸத்யஸந்தன்}, கொடைகளுக்குத் தகுந்தவன் {தாசார்ஹன்}, உயிரினங்களிடம் இல்லாதவற்றைக் கொடுப்பவனும், அவற்றைப் பாதுகாப்பவனுமாக இருப்பவன் {ஸாத்வதாம்பதி}<503-512>;(67)

உயிர்மூச்சைத் தாங்குபவன் {ஜீவன்}, தன் உயிரினங்கள் அனைத்தையும் நேரடி பார்வையில் உள்ள பொருட்களாகக் காண்பவன் {விநயிதா}, சுயத்தைத்தவிர வேறெதையும் ஒருபோதும் காணாதவன் {ஸாக்ஷீ}, முக்தியை அளிப்பவன் {முகுந்தன்}, சொர்க்கம், பூமி, பாதாளம்  ஆகியவற்றை தன் காலடிகளால் (எண்ணிக்கையில் மூன்று) மறைத்தவன் {அமிதவிக்ரமன்}, நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அம்போநிதி}, வெளி, காலம் மற்றும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் {அநந்தாத்மா}, அண்டப் பேரழிவின் போது, பெரும் நீர்ப்பரப்பில் கிடப்பவன் {மஹோததிசயன்}, அனைத்தையும் அழிப்பவன் {அந்தகன்}<513-521>;(68)

பிறப்பற்றவன் {அஜன்}, அதிகம் துதிக்கப்படுபவன் {மஹார்ஹன்}, தன் இயல்பில் தோன்றுபவன் {ஸ்வாபாவ்யன்}, (கோபம் மற்றும் தீய ஆசைகளின் வடிவில் உள்ள) பகைவர்கள் அனைவரையும் வெல்பவன் {ஜிதாமித்ரன்}, தன்னைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {ப்ரமோதன்}, இன்ப வடிவம் {ஆநந்தன்}, பிறரை மகிழ்ச்சியில் நிறைப்பவன் {நந்தநன்}, மகிழ்க்கான காரணங்கள் அனைத்துடன் பெருகுபவன் {நந்தன்}, வாய்மையையும், பிற அறங்களையும் தன் குறியீடுகளாகக் கொண்டவன் {ஸத்யதர்மா}, மூவுலகங்களையும் தன் காலடிகளில் கொண்டவன் {த்ரிவிக்ரமன்}<522-530>;(69)

(வேதங்களை மொத்தமாக அறிந்து வைத்திருக்கும்) முனிவர்களில் முதல்வன் {மஹர்ஷி}, ஆசான் கபிலராக இருப்பவன் {கபிலாசார்யன்}, அண்டத்தை அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, பூமியை ஆள்பவன் {மேதிநீபதி}, மூன்று பாதங்களைக் கொண்டவன் {த்ரிபதன்}, தேவர்களைப் பாதுகாப்பவன் {த்ரிதசாத்யக்ஷன்}, (அண்டப் பேரழிவின் போது, மனுவின் படகைத் தன் கொம்புகளில் கட்டி இழுத்துச்சென்ற மீன் வடிவில் இருந்த போது) பெரும் கொம்புகளைக் கொண்டவன் {மஹாஸ்ருங்கன்}, செயல்பட்டவர்களை இன்பத்தை அனுபவிக்கவோ, துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவோ செய்து செயல்களைத் தீர்ப்பவன் {க்ருதாந்தக்ருத்}<531-538>;(70)

பெரும்பன்றியானவன் {மஹாவராஹன்}, வேதாந்தத்தின் துணையுடன் புரிந்துகொள்ளப்படுபவன் {கோவிந்தன்}, (தன்னை வழிபடுபவர்களின் வடிவில்) அழகிய துருப்புகளைக் கொண்டவன் {ஸுஷேணன்}, பொன்கங்கணங்கள் கொண்டவன் {கநகாங்கதீ}, (உபநிஷத்துகளின் துணையுடன் மட்டுமே அறியப்படும் வகையில்) மறைந்திருப்பவன் {குஹ்யன்}, (அறிவு மற்றும் பலத்தில்) ஆழம் நிறைந்தவன் {கபீரன்}, அடைதற்கரியவன் {கஹநன்}, சொல்லையும், எண்ணத்தையும் கடந்தவன் {குப்தன்}, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவன் {சக்ரகதாதரன்}<539-547>;(71)

விதி விதிப்பவன் {வேதஸ்}, (உதவியாளன் வடிவில் இருக்கும்) அண்டத்தின் காரணன் {ஸ்வாங்கன்}, ஒருபோதும் வெல்லப்பட முடியாதவன் {அஜிதன்}, தீவில் பிறந்த கிருஷ்ணராக {வியாசராக} இருப்பவன் {க்ருஷ்ணன்}, (சிதைவைக் கடந்திருப்பதன் விளைவால்) நீடித்திருப்பவன் {த்ருடன்}, அனைத்தையும் செதுக்குபவன்  {ஸங்கர்ஷணன்}, சிதைவுக்கு அப்பாற்பட்டவன் {அச்யுதன்}, வருணன், (வசிஷ்டர் அல்லது அகஸ்தியரின் வடிவில்) வருணனின் மகனாக இருப்பவன் {வாருணன்}, அசையாத மரமாக இருப்பவன் {வ்ருக்ஷன்}, இதயத்தாமரையில் தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துபவன் {புஷ்கராக்ஷன்}, மனச்சாதனையின் மூலமே படைத்து, காத்து, அழிப்பவன் {மஹாமநஸ்}<548-558>;(72)

(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்}, (அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா}, (அனைத்து வகைச் செழிப்பிலும் பெருகுபவனாக இருக்கும் விளைவால்) இன்பநிலையாக இருப்பவன் {நந்தீ}, {வைஜயந்தம் என்றழைக்கப்படும்) வெற்றிமாலையால் அலங்கரிக்கப்படுபவன் {வநமாலி}, (பலதேவன் அவதாரத்தில்) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன் {ஹலாயுதன்}, (பலியை வஞ்சித்த குள்ளனின் வடிவில்) அதிதியின் கருவறையில் பிறந்தவன் {ஆதித்யன்}, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {ஜ்யோதிராதித்யன்}, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகளைத் தாங்கிக் கொள்பவன் {ஸஹிஷ்ணு}, அனைத்துப் பொருட்களின் முதன்மையான புகலிடமாக இருப்பவன் {கதிஸத்தமன்}<559-567>;(73)

(சாரங்கம் என்றழைக்கப்படும்) முதன்மையான வில்லை ஆயுதமாகக் கொண்டவன் {ஸுதந்வா}, (பிருகு குல ராமராய் {பரசுராமராய்} இருந்து) தன் கோடரியை இழந்தவன் {கண்டபரசு}, கடுமைமிக்கவன் {தாருணன்}, விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடுப்பவன் {த்ரவிணப்ரதன்}, சொர்க்கத்தையே (பலியின் வேள்வியில் தான் ஏற்று வந்த வடிவத்துடன்) தன் தலையால் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு நெடிதுயர்ந்தவன் {திவிஸ்ப்ருக்}, அண்டம் முழுவதும் பார்வை கொண்டவன் {ஸர்வத்ருக்}, (வேதங்களைப் பகுத்தவன்) வியாசன் {வ்யாஸன்}, வாக்கு அல்லது கல்வியை ஆள்பவன் {வாசஸ்பதி}, பிறப்புறுப்புகளின் தலையீடின்றி இருப்புக்குள் எழுந்தவன் {அயோநிஜன்}<568-576>;(74)

மூன்று (முதன்மையான) சாமங்களில் பாடப்படுபவன் {த்ரிஸாமா}, சாமங்களைப் பாடுபவன் {ஸாமகன்}, சாமங்களாக இருப்பவன் {ஸாம}, (துறவின் உடல்வடிவமாக இருப்பதன் விளைவால்) உலகபந்தங்களுக்கு அழிவைத் தருபவன் {நிர்வாணம்}, (நோயைச் சீராக்கப் பயன்படும்) மருந்தாக இருப்பவன் {பேஷஜம்}, (மருந்தைப் பயன்படுத்தும்) மருத்துவன் {பிஷக்}, (உயிரினங்கள் முக்தி அடைவதற்குத் தகுந்தவையாக) துறவறம் என்றழைக்கப்படும் நான்காவது வாழ்வு முறையை விதித்தவன் {ஸந்யாஸக்ருத்}, தன்னை வழிபடுபவர்களைப் பொறுத்தவரையில் (ஆன்ம அமைதியைக் கொடுக்கும் நோக்கில்) அவர்களின் ஆசைகளைத் தணிவடையச் செய்பவன் {சமன்}, (உலகப் பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் தொடர்பறுத்ததன் விளைவால்) நிறைவாய் இருப்பவன் {சாந்தன்}, பக்தி மற்றும் ஆன்ம அமைதிக்கான புகலிடமாக இருப்பவன் {நிஷ்டாசாந்திபராயணன்}<577-585>;(75)

அழகிய அங்கங்களைப் பெற்றவன் {சுபாங்கன்}, ஆன்ம அமைதியைத் தருபவன் {சாந்திதன்}, படைத்தவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் மார்பில் இன்பத்தில் திளைப்பவன் {குமுதன்}, அண்டப் பேரழிவுக்குப் பின்னர்ப் பாம்புகளின் இளவரசனான சேஷனின் உடலில் (யோக) உறக்கத்தில் கிடப்பவன் {குவலேசயன்}, பசுக்களுக்கு நன்மை செய்பவன் (அல்லது, மக்கள் தொகையில் அவதியுறும் பூமியின் கனத்தைக் குறைக்க மனிதனின் வடிவில் பிறந்தவன்) {கோஹிதன்}, அண்டத்தை ஆள்பவன் {கோபதி}, அண்டத்தைப் பாதுகாப்பவன் {கோப்தா}, காளையைப் போன்ற கண்களைக் கொண்டவன் {வ்ருஷபாக்ஷன்}, அன்புடன் அறத்தைப் பேணி வளர்ப்பவன் {வ்ருஷப்ரியன்}<586-595>;(76)

புறமுதுகிடாத வீரன் {அநிவர்த்தீ}, பற்றுகள் அனைத்தில் இருந்தும் விலகிய ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அண்டப் பேரழிவின் காலத்தில் அண்டத்தை நுட்பமான வடிவில் குறைப்பவன் {ஸம்க்ஷேப்தா}, துன்புறும் தன் வழிபாட்டாளர்களுக்கு நன்மை செய்பவன் {க்ஷேமக்ருத்}, கேட்டதும் கேட்டவனின் பாவம் அனைத்தும் தூய்மையடையும் பெயரைக் கொண்டவன் {சிவன்}, தன் மார்பில் மங்கலச் சுழியைக் கொண்டவன் {ஸ்ரீவத்ஸவக்ஷஸ்}, செழிப்பின் தேவி எப்போதும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸ்ரீவாஸன்}, (செழிப்பின் தேவியான) லட்சுமியால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் {ஸ்ரீபதி}, செழிப்புடன் கூடியவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸ்ரீமதாம்வரன்}<596-604>;(77)

தன்னை வழிபடுபவர்களுக்குச் செழிப்பைத் தருபவன் {ஸ்ரீதர்}, செழிப்பை ஆள்பவன் {ஸ்ரீசன்}, செழிப்புடையவர்களுடன் எப்போதும் வாழ்பவன் {ஸ்ரீநிவாஸன்}, அனைத்து வகைச் செல்வங்களின் கொள்ளிடம் {ஸ்ரீநிதி}, அறத்தை அளவாகக் கொள்ளும் அடிப்படையில் அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவருக்கும் செழிப்பைக் கொடுப்பவன் {ஸ்ரீவிபாவநன்}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் கொண்டவன் {ஸ்ரீதரன்}, தன்னைக் குறித்துக் கேட்பவர்கள், தன்னைப் புகழ்பவர்கள், தன்னைத் தியானிப்பவர்கள் ஆகியோருக்குச் செழிப்பை அளிப்பவன் {ஸ்ரீகரன்}, அடைதற்கரிய மகிழ்ச்சியை அடையும் நிலையின் உடல்வடிவமாக இருப்பவன் {ஸ்ரேயஸ்}, அனைத்து வகை அழகையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, மூவுலகங்களின் புகலிடமாக இருப்பவன் {லோகத்ரயாஸ்ரயன்}<605-614>;(78)

அழகிய கண்களைக் கொண்டவன் {ஸ்வக்ஷன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {ஸ்வங்கன்}, மகிழ்ச்சிக்கான நூறு தோற்றுவாய்களைக் கொண்டவன் {சதாநந்தன்}, உயர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பவன் {நந்தி}, (ஆகாயத்து ஒளிக்கோள்களின் இடங்களையும், பாதைகளையும் பராமரிப்பவனாக இருப்பதால்) ஆகாயத்து ஒளிக்கோள்கள் அனைத்தையும் ஆள்பவன் {ஜ்யோதிர்க்கணேஸ்வரன்}, ஆன்மாவை வென்றவன் {விஜிதாத்மா}, மேன்மையான வேறு எவனாலும் ஆளப்படாத ஆன்மா கொண்டவன் {விதேயாத்மா}, எப்போதும் அழகிய செயல்களைச் செய்பவன் {ஸத்கீர்த்தி}, (உள்ளங்கை நெல்லிக்கனி போல மொத்த அண்டத்தையும் காண்பவனாக அவன் சொல்லப்படுகிறான், எனவே) ஐயங்கள் அனைத்தும் விலகப் பெற்றவன் {சிந்நஸம்சயன்}<615-623>;(79)

அனைத்து உயிரினங்களையும் கடந்தவன் {உதீர்ணன்}, திசைகள் அனைத்திலும் பரந்த பார்வை கொண்டவன் {ஸர்வதர்க்ஷு}, தலைவனற்றவன் {அநீசன்}, எக்காலத்திலும் நேரும் மாற்றங்கள் அனைத்தையும் கடந்திருப்பவன் {சாஸ்வதஸ்திரன்}, (ராமனின் வடிவில்) வெறுந்தரையில் கிடந்தவன் {பூசயன்}, (தன் அவதாரங்களின் மூலம்) பூமியை அலங்கரிப்பவன் {பூஷணன்}, பலத்தின் சுயமாக இருப்பவன் {பூதி}, துன்பங்கள் அனைத்தையும் கடந்தவன் {விசோகன்)}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரும் தன்னை நினைத்ததும் அவர்களின் துன்பங்களைக் களைபவன் {சோகநாசநன்}<624-632>;(80)

பிரகாசம் கொண்டவன் {அர்ச்சிஷ்மாந்}, அனைவராலும் வழிபடப்படுபவன் {அர்ச்சிதன்}, (அனைத்தும் தன்னுள் வசிப்பதைப் போன்ற) நீர்க்குடமாக இருப்பவன் {கும்பன்}, தூய ஆன்மா கொண்டவன் {விசுத்தாத்மா}, தன்னைக் குறித்துக் கேட்பவர் அனைவரையும் தூய்மையடையச் செய்பவன் {விசோதநன்}, கட்டற்ற சுதந்திரம் கொண்டவன் {அநிருத்தன்}, போர்க்களங்களில் இருந்து ஒருபோதும் திரும்பாத தேரைக் கொண்டவன் {அப்ரதிரதன்}, பெருஞ்செல்வம் கொண்டவன் {ப்ரத்யும்நன்}, அளவற்ற ஆற்றல் கொண்டவன் {அமிதவிக்ரமன்}<633-641>;(81)

காலநேமி என்ற பெயரைக் கொண்ட அசுரனைக் கொன்றவன் {காலநேமிநிஹா}, சூரன் குலத்தில் பிறந்தவன் {செளரி}, வீரன் {சூரன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {சூரஜநேஸ்வரன்}, மூவுலகங்களின் ஆன்மாவாக இருப்பவன் {த்ரிலோகாத்மா}, மூவுலகங்களையும் ஆள்பவன் {த்ரிலோகேசன்}, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களையே தன் மயிராகக் கொண்டவன் {கேசவன்}, கேசியைக் கொன்றவன் {கேசிஹா}, (அண்டப் பேரழிவின் போது) அனைத்தையும் அழிப்பவன் {ஹரி}<642-650>;(82)

வேண்டப்படும் விருப்பங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தேவன் {காமதேவன்}, அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமபாலன்}, விரும்புபவன் {காமீ}, அழகிய வடிவம் கொண்டவன் {காந்தன்}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் முற்றான ஞானம் கொண்டவன் {க்ருதாகமன்}, குணங்களின் மூலம் விவரிக்க இயலாத வடிவம் கொண்டவன் {அநிர்த்தேஸ்யவபு}, பிரகாசக் கதிர்களால் சொர்க்கத்தை நிறையச் செய்பவன் {விஷ்ணு}, {வீரன்}, எல்லையற்றவன் {அநந்தன்}, (அர்ஜுனன் அல்லது நரனின் வடிவில்) படையெடுப்பின் மூலம் திரண்ட செல்வத்தை அடைந்தவன் {தநஞ்சயன்}<651-660>;(83)

மந்திரங்கள், வேள்விகள், வேதங்கள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்திலும் முதன்மையானவன் {ப்ரம்மண்யன்}, தவங்களைப் படைத்தவனும், தவமுமாக இருப்பவன் {ப்ரம்மக்ருத்ப்ரம்மா}, (பெரும்பாட்டன்) பிரம்மனின் வடிவத்தில் இருப்பவன் {ப்ரம்ம}, தவங்களைப் பெருகச் செய்பவன் {ப்ரம்மவிவர்த்தநன்}, பிரம்மத்தை அறிந்தவன் {ப்ரம்மவித்}, பிராமண வடிவத்தில் இருப்பவன் {ப்ராம்மணன்}, பிரம்மம் என்றழைக்கப்படுபவன் {ப்ரம்மீ}, வேதங்கள் அனைத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவன் {ப்ரம்மஜ்ஞன்}, பிராமணர்களைப் பிடித்தவனாகவும் பிராமணர்களுக்குப் பிடித்தமானவனாகவும் எப்போதும் இருப்பவன் {ப்ராம்மணப்ரியன்}<661-670>;(84)

பெரும்பகுதிகளை மறைக்கவல்ல காலடித்தடங்களைக் கொண்டவன் {மஹாக்ரமன்}, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மா}, பெருஞ்சக்தி கொண்டவன் {மஹாதேஜஸ்}, பாம்புகளின் மன்னான வாசுகியுடன் அடையாளங்காணப்படுபவன் {மஹோரகன்}, வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாக்ரது}, வேள்வி செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {மஹாயஜ்வா}, வேள்விகளில் முதன்மையான ஜபமாக இருப்பவன்{மஹாயஜ்ஞன்}, வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாஹவிஸ்}<671-678>;(85)

அனைவராலும் பாடப்படுபவன் {ஸ்தவ்யன்}, (தன்னை வழிபடுபவர்களால்) பாடப்பட விரும்புபவன் {ஸ்தவப்ரியன்}, தன்னை வழிபடுபவர்களால் சொல்லப்படும் துதிகளாக இருப்பவன் {ஸ்தோத்ரம்}, துதிக்கும் செயலே ஆனவன்{ஸ்துதன்}, துதிகளைப் பாடுபவன் {ஸ்தோதா}, (தீமையான அனைத்துடனும்) போரிட விரும்புபவன் {ரணப்ரியன்}, அனைத்து வகையிலும் முழுமையானவன் {பூர்ணன்}, அனைத்து வகைச் செழிப்பாலும் பிறரை நிறைப்பவன் {பூரயிதா}, நினைவுகூரப்பட்ட உடனேயே பாவங்கள் அனைத்தையும் அழிப்பவன் {புண்யன்}, செய்யும் அனைத்தையும் அறச்செயல்களாகச் செய்பவன் {புண்யகீர்த்தி}, அனைத்து வகை நோய்களையும் கடந்தவன் {அநாமயன்}<679-689>;(86)

மனோ வேகம் கொண்டவன் {மநோஜவன்}, அனைத்து வகைக் கல்விகளையும் படைத்து அவற்றை அறிவிப்பவன் {தீர்த்தகரன்}, பொன்னையே உயிர்வித்தாகக் கொண்டவன் {வஸுரேதஸ்}, (கருவூலத் தலைவனான குபேரனாக) செல்வத்தை வழங்குபவன் {வஸுப்ரதன்}, அசுரர்களின் செல்வத்தை அழிப்பவன் {வஸுப்ரதன்}, வசுதேவரின் மகன் {வாஸுதேவன்}, அனைத்துயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {வஸு}, அனைத்துப் பொருட்களிலும் வசிக்கும் மனத்தைக் கொண்டவன் {வஸுமநஸ்}, தன்னிடம் புகலிடம் நாடுவோர் அனைவரின் பாவங்களையும் எடுப்பவன் {ஹவிஸ்}<690-698>;(87)

அறவோரால் அடையப்படுபவன் {ஸத்கதி}, எப்போதும் நற்செயல்களைச் செய்பவன் {ஸத்க்ருதி}, அண்டத்தின் ஒரே உட்பொருளாக இருப்பவன் {ஸத்தா}, பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துபவன் {ஸத்பூதி}, உண்மை அறிந்தோர் அனைவரின் புகலிடமாக இருப்பவன் {ஸத்பராயணன்}, பெரும் வீரர்களைத் தன் துருப்பினராகக் கொண்டவன் {சூரஸேநன்}, யாதவர்களில் முதன்மையானவன் {யதுரேஷ்டன்}, அறவோரின் வசிப்பிடமாக இருப்பவன் {ஸந்நிவாஸன்}, யமுனையின் கரைகளில் (பிருந்தாவனத்தில்) இன்பமாக விளையாடுபவன் {ஸுயாமுநன்}<699-707>;(88)

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பூதாவாஸன்}, அண்டத்தைத் தன் மாயையால் நிறைக்கும் தேவன் {வாஸுதேவன்}, முதன்மையானவை அனைத்தும் (முக்தியடையும்போது அவற்றோடு) கலந்திருப்பவன் {ஸர்வாஸுநிலயன்}, ஒருபோதும் நிறைவடையாத பசி கொண்டவன் {அநலன்}, அனைவரின் செருக்கையும் அடக்குபவன் {தர்ப்பஹா}, நியாயமான செருக்குடன் அறவோரை நிறைப்பவன் {தர்ப்பதன்}, மகிழ்ச்சியில் பெருகுபவன் {அத்ருப்தன்}, பிடிக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, ஒருபோதும் வெல்லப்படமுடியாதவன் {அபராஜிதன்}<708-716>;(89)

அண்டவடிவம் கொண்டவன் {விஸ்வமூர்த்தி}, பெருவடிவம் கொண்டவன் {மஹாமூர்த்தி}, சக்தியிலும், பிராகசத்திலும் சுடர்விடும் வடிவம் கொண்டவன் {தீப்தமூர்த்தி}, (செயல்களால் தீர்மானிக்கப்படுவது போன்ற) வடிவமற்றவன் {அமூர்த்திமாந்}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {அநேகமூர்த்தி}, வெளிப்படாதவன் {அவ்யக்தன்}, நூறு வடிவங்கள் கொண்டவன் {சதமூர்த்தி}, நூறு முகங்களைக் கொண்டவன் {சதாநநன்}<717-724>;(90)

தனியொருவன் {ஏகன்}, (மாயையால்) பலராகத் தெரிபவன் {நைகன்}, {அனைத்தையும் தன்னுள் கொண்டவன்} {ஸவ}, இன்பம் நிறைந்தவன் {க}, விசாரிக்கத்தகுந்த மகத்தான காரிய வடிவம் கொண்டவன் {கிம்}, இவை அனைத்துமானவன் {யத்}, அஃது என்றழைக்கப்படுபவன் {தத்}, உயர்ந்த புகலிடம் {பதமநுத்தமம்}, பொருட்காரணங்களுக்குள் ஜீவனை அடைப்பவன் {லோகபந்து}, அனைவராலும் விரும்பப்படுபவன் {லோகநாதன்}, மது குலத்தில் பிறந்தவன் {மாதவன்}, தன்னை வழிபடுபவர்களிடம் அதிக அன்பு கொண்டவன் {பக்தவத்ஸலன்}<725-735>;(91)

பொன்வண்ணன் {ஸுவர்ணவர்ணன்}, பொன் போன்ற (வண்ணத்தில்) அங்கங்கள் கொண்டவன் {ஹேமாங்கன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {வராங்கன்}, சந்தனத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {சந்தநாங்கதீ}, வீரர்களைக் கொல்பவன் {வீரஹா}, இணையற்றவன் {விஷமன்}, (குணமற்ற விளைவால்) சுழியத்தைப் போன்றவன் {சூந்யன்}, (தான் கொண்ட முழுமையின் விளைவால்) எந்த அருளும் தேவைப்படாதவன் {க்ருதாசிஸ்}, சொந்த இயல்பு, பலம் மற்றும் ஞானத்தில் ஒருபோதும் பிறழாதவன் {அசலன்}, காற்றின் வடிவில் அசைபவன் {சலன்}<736-745>;(92)

ஆன்மா இல்லாத எதனுடனும் தன்னை ஒருபோதும் அடையாளம் காணாதவன் {அமாநீ}, தன்னை வழிபடுபவர்களுக்குக் கௌரவங்களை அளிப்பவன் {மாந்தன்}, அனைவராலும் மதிக்கப்படுபவன் {மாந்யன்}, மூவுலகங்களின் தலைவன் {லோகஸ்வாமீ}, மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துபவன் {த்ரிலோகக்ருக்}, உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தன் மனத்தில் தாங்க வல்ல நினைவுடன் கூடிய புத்தி கொண்டவன் {ஸுமேதஸ்}, வேள்வியில் பிறந்தவன் {மேதஜன்}, பெரும்புகழுக்குத் தகுந்தவன் {தந்யன்}, புத்தியும் நினைவும் ஒருபோதும் தவறாதவன் {ஸத்யமேதஸ்}, பூமியை நிறைநிறுத்துபவன் {தராதரன்}<746-755>;(93)

சூரியனின் வடிவில் வெப்பத்தை வெளியிடுபவன் {தேஜோவ்ருஷன்}, அழகிய அங்கங்களைச் சுமப்பவன் {த்யுதிதரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸர்வசஸ்த்ரப்ருதாம்வரன்}, தன்னை வழிபடுபவர்களால் அளிக்கப்படும் மலர் மற்றும் இலை காணிக்கைகளை ஏற்பவன் {ப்ரக்ரஹன்}, ஆசைகள் அனைத்தையும் அடக்கி தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன் {நிக்ரஹன்}, தனக்கு முன்பு நடக்க யாருமில்லாதவன் {வ்யக்ரன்}, நான்கு கொம்புகளைக் கொண்டவன் {நைகஸ்ருங்கன்}, கதனின் அண்ணன் {கதாக்ரஜன்}<756-764>;(94)

நான்கு வடிவங்களைக் கொண்டவன் {சதுர்மூர்த்தி}, நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்பாஹு}, தன்னில் இருந்து நான்கு புருஷர்களை உதிக்கச் செய்தவன் {சதுர்வ்யூஹன்}, நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, நான்கு வகைகளையும் {வர்ணங்களையும்} சார்ந்த மனிதர்களுக்குப் புகலிடமாக இருப்பவன் {சதுர்க்கதி}, (மனம், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, நினைவு ஆகிய) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு நோக்ககளின் பிறப்பிடமாக இருப்பவன் {சதுர்ப்பாவன்}, நான்கு வேதங்களை அறிந்தவன் {சதுர்வேதவித்}, தன் பலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியவன் {ஏகபாத்}<765-772>;(95)

உலகச் சக்கரத்தை வட்டமாகச் சுழலச் செய்பவன் {ஸமாவர்த்தன்}, உலகப் பற்றுகள் அனைத்திலும் இருந்து தொடர்பறுந்த ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, வெல்லப்பட இயலாதவன் {துர்ஜயன்}, கடக்கப்பட இயலாதவன் {துரதிக்ரமன்}, அடைதற்கு மிக அரியவன் {துர்லபன்}, அணுகுதற்கரியவன் {துர்க்கமன்}, நுழைவதற்கு அரிதானவன் {துர்க்கன்}, (யோகியராலும்) இதயத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கு அரியவன் {துராவாஸன்}, (தானவர்களுக்கு மத்தியில் உள்ள) பெரும்பலமிக்கப் பகைவர்களைக் கொல்பவன் {துராரிஹா}<773-781>;(96)

அழகிய அங்கங்களைக் கொண்டவன் {சுபாங்கன்}, அண்டத்தில் உள்ள அனைத்தின் சாரமாக இருப்பவன் {லோகஸாரங்கன்}, (அண்டமெனும் துணியை நெய்வதற்குரிய) மிக அழகிய கயிறுகள் மற்றும் இழைகளைக் கொண்டவன் {ஸுதந்து}, எப்போதும் நீண்டு கொண்டிருக்கும் கயிறுகளையும், இழைகளையும் கொண்டவன் {தந்துவர்த்தகன்}, இந்திரனால் செய்யப்படும் செயல்களைச் செய்பவன் {இந்த்ரகர்மா}, பெருஞ்செயல் புரிபவன் {மஹாகர்மா}, செய்யத்தவறிய செயல்களற்றவன் {க்ருதகர்மா}, வேதங்கள் மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் தொகுத்தவன் {க்ருதாகமன்}<782-789>;(97)

உயர்ந்த பிறப்பைக் கொண்டவன் {உத்பவன்}, பேரழகன் {ஸுந்தரன்}, இதயம் முழுவதும் பரிவிரக்கத்தால் நிறைந்தவன் {ஸுந்தர்}, உந்தியில் விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்டவன் {ரத்நநாபன்}, சிறந்த ஞானத்தையே கண்ணாகக் கொண்டவன் {ஸுலோசநன்}, பிரம்மனாலும், அண்டத்தில் உள்ள முதன்மையானோர் பிறராலும் வழிபடத்தகுந்தவன் {அர்க்கன்}, உணவுக் கொடையாளி {வாஜஸநி}, அண்டப் பேரழிவின் போது கொம்புகளை ஏற்றவன் {ஸ்ருங்கீ}, தன் பகைவர்களை எப்போதும் மிக அற்புதமாக வெல்பவன் {ஜயந்தன்}, அனைத்தையும் அறிந்தவன், தடுக்கப்பட முடியாத ஆற்றலுடன் கூடியோரை எப்போதும் வெல்பவன் {ஸர்வவிஜ்ஜயீ}<790-799>;(98)

பொன் போன்ற அங்கங்களைக் கொண்டவன் {ஸுவர்ணபிந்து}, (கோபம், வெறுப்பு, அல்லது வேறு ஆசைகளால்) கலங்கடிக்கப்பட முடியாதவன் {அக்ஷோப்யன்}, வாக்குகள் அனைத்தையும் ஆள்வர்கள் அனைவரையும் ஆள்பவன் {ஸர்வவாகீஸ்வரேஸ்வரன்}, ஆழமான தடாகமாக இருப்பவன் {மஹாஹ்ரதன்}, ஆழ்ந்த படுகுழியாக இருப்பவன் {மஹாகர்த்தன்}, காலத்தின் ஆதிக்கத்தைக் கடந்தவன் {மஹாபூதன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தையும் தனக்குள் நிறுவிக் கொண்டவன் {மஹாநிதி}<800-806>;(99)

பூமியை மகிழச் செய்பவன் {குமுதன்}, குந்த மலர்களைப் போன்ற ஏற்புடைய கனிகளை அருள்பவன் {குந்தரன்}, (ராம அவதாரத்தில்) கசியபருக்கு பூமியைக் கொடையாக அளித்தவன் {குந்தன்}, பூமியின் வெப்பத்தைத் தன் மழைப்பொழிவால் தணிக்கும் மழை நிறைந்த மேகத்தைப் போல (சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) மூன்றுவகைத் துன்பங்களை அழிப்பவன் {பர்ஜந்யன்}, அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்பவன் {பவநன்}, தன்னைத் தூண்ட எவரும் இல்லாதவன் {அநிலன்}, அமுதம் பருகியவன் {அமிதாசன்}, சாகாவுடல் படைத்தவன் {அம்ருதவபு}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, ஒவ்வொரு திசையிலும் முகமும் கண்களும் திரும்பப்பெற்றவன் {ஸர்வதோமுகன்}<807-816>;(100)

(மலர்கள் மற்றும் இலைகள் போன்ற காணிக்கைகளுடன்) எளிதில் வெல்லபடக்கூடியவன் {ஸுலபன்}, சிறந்த நோன்புகளைச் செய்தவன் {ஸுவ்ரதன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தன்}, பகைவர் அனைவரையும் வெல்பவன் {சத்ருஜித்}, பகைவர் அனைவரையும் எரிப்பவன் {சத்ருதாபநன்}, பிற மரங்களுக்கு மேலாக எப்போதும் வளரும் நெடிய ஆல மரமாக இருப்பவன் {ந்யக்ரோதன்}, புனிதமான அத்திமரமாக இருப்பவன் {உதும்பரன்}, அரச மரமாக இருப்பவன் (அல்லது, அழியாத வடிவங்களில் இருப்பது போலவே அண்டத்தில் அழியும் வடிவங்களிலும் இருப்பதன் விளைவால் நீடித்து நிற்காதவன்) {அஸ்வத்தன்}ஆந்திர நாட்டின் சாணூரனைக் கொன்றவன் {சாணூராந்த்ரநிஷூதநன்}<817-825>;(101)

ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரார்ச்சிஸ்}, (காளி, கராளி முதலிய வடிவங்களில்) ஏழு நாவுகளைக் கொண்டவன் {ஸப்தஜிஹ்வன்}, (நெருப்பின் தேவனுடன் அடையாளம் காணப்படும் விளைவால்) ஏழு தழல்களைக் கொண்டவன் {ஸப்தைதஸ்}, தன் வாகனத்தை இழுக்க ஏழு குதிரைகளைக் கொண்டவன் (அல்லது, சப்தம் என்றழைக்கப்படும் குதிரையைக் கொண்டவன்) {ஸப்தவாஹநன்}, வடிவமற்றவன் {அமூர்த்தி}, பாவமற்றவன் {அநகன்}, நினைத்தற்கரியவன் {அசிந்த்யன்}, அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவன் {பயக்ருத்}, அச்சங்கள் அனைத்தையும் அழிப்பவன் {பயநாசநன்}<826-834>;(102)

மிகச் சிறியவன் {அணு}, மிகப் பெரியவன் {ப்ருஹத்}, மெலிந்தவன் {க்ருசன்}, பருத்தவன் {ஸ்தூலன்}, குணங்களுடன் கூடியவன் {குணப்ருத்}, குணங்களைக் கடந்தவன் {நிர்க்குணன்}, மிகச்சிறந்தவன் {மஹாந்}, கைப்பற்றப்பட முடியாதவன் {அத்ருதன்}, (தன்னை வழிபடுபவர்களால்) எளிதில் கைப்பற்றப்படுபவன் {ஸ்வத்ருதன்}, சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸ்வாஸ்யன்}, தற்செயலான உலகங்களைச் சார்ந்த மக்களைத் தன் வழித்தோன்றல்களாகக் கொண்டவன் {ப்ராக்வம்சன்}, ஐந்து அடிப்படை பூதங்கள் உள்ளடங்கிய படைப்பைச் செய்பவன் {வம்சவர்த்தநன்}<835-846>;(103)

(ஆனந்தனின் வடிவில்) கனமான சுமைகளைச் சுமப்பவன் {பாரப்ருத்}, வேதங்களில் அறிவிக்கப்பட்டவன் {கதிதன்}, யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவன் {யோகீ}, யோகியர் அனைவரின் தலைவன் {யோகீசன்}, அனைத்து ஆசைகளையும் கொடுப்பவன் {ஸர்வகாமதன்}, நாடுவோருக்கு ஆசிரமம் அளிப்பவன் {ஆஸ்ரமன்}, சொர்க்கத்தின் இன்ப வாழ்வு நிறைவடைந்து மீண்டும் இவ்வாழ்வுக்குத் திரும்பும் யோகியரை புதிதாக யோகத்தைச் செய்யச் செய்பவன் {ஸ்ரமணன்}, யோகியரின் பலன்கள் தீர்ந்தும் கூட அவர்களில் பலத்தை நிறுவுபவன் {க்ஷாமன்}, (உலக மரமாக இருந்து வேதங்களில் சந்தங்களின் வடிவில்) நல்ல இலைகளாக இருப்பவன் {ஸுபர்ணன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}<847-856>;(104)

(ராமனின் வடிவில்) வில் தரித்தவன் {தநுர்த்தரன்}, ஆயுத அறிவியல் அறிந்தவன் {தநுர்வேதன்}, தண்டக் கோலாக இருப்பவன் {தண்டன்}, தண்டிப்பவன் {தமயிதா}, தண்டனைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {அதமன்}, வெல்லப்பட முடியாதவன் {அபராஜிதன்}, அனைத்துச் செயல்களையும் செய்யத்தகுந்தவன் {ஸர்வஸஹன்}, மனிதர்கள் அனைவரையும் அவரவர் கடமைகளில் நிறுவுபவன் {நியந்தா}, தன்னைப் பணியில் நிறுவ எவரும் இல்லாதவன் {நியமன்}, தன்னைக் கொல்ல யமன் எவனும் இல்லாதவன் {யமன்}<857-866>;(105)

வீரமும் ஆற்றலும் கொண்டவன் {ஸத்வவாந்}, சத்வ (நல்லியல்பின்) குணம் கொண்டவன் {ஸாத்விகன்}, வாய்மையுடன் அடையாளங்காணப் படுபவன் {ஸத்யன்}, வாய்மையிலும், அறத்திலும் அர்ப்பணிப்புள்ளவன் {ஸத்யதர்மபராயணன்}, முக்தி அடையத் தீர்மானித்தவர்களால் விரும்பப்படுபவன் (அல்லது, பேரழிவு நேரும்போது இந்த அண்டம் எவனிடம் செல்லுமோ அவன்) {அபிப்ராயன்}, தன்னை வழிபடுபவர்கள் அளிக்கும் அனைத்து வகைப் பொருட்களுக்கும் தகுந்தவன் {ப்ரியார்ஹன்}, (மந்திரங்கள், மலர்கள் மற்றும் வேறு மதிப்புமிக்கக் காணிக்கைகளால்) துதிக்கத்தகுந்தவன் {அர்ஹன்}, அனைவருக்கும் நல்லது செய்பவன் {ப்ரியக்ருத்}, அனைவரின் மகிழ்ச்சியையும் பெருக்குபவன் {ப்ரீதிவர்த்தநன்}<867-875>;(106)

ஆகாயப்பாதை கொண்டவன் {விஹாயஸகதி}, சுயப்பிரகாசத்தில் ஒளிர்பவன் {ஜ்யோதி}, பேரழகுடன் கூடியவன் {ஸுருசி}, வேள்வி நெருப்பில் இடப்படும் காணிக்கைகளை உண்பவன் {ஹுதபுக்விபு}, எங்கும் வசிப்பவன் {ரவி}, பெரும்பலம் கொண்டவன் {விரோசநன்}, சூரியனின் வடிவில் பூமியின் ஈரத்தை உறிஞ்சுபவன் {ஸூர்யன்}, பல்வேறு ஆசைகளைக் கொண்டவன், அனைத்தையும் பெறுவபன், அண்டத்தைப் பெற்றவன் {ஸவிதா}, சூரியனை கண்ணாகக் கொண்டவன் {ரவிலோசநன்}<876-885>;(107)

எல்லையற்றவன் {அநந்த}, வேள்விக் காணிக்கைகள் அனைத்தையும் ஏற்பவன் {ஹுதபுக்}, மனத்தின் வடிவில் பிரகிருதியை அனுபவிப்பவன் {போக்தா}, இன்பத்தை அளிப்பவன் {ஸுகதன்}, (அறத்திற்காகவும், அறத்தைப் பாதுகாக்கவும்) மீண்டும் மீண்டும் பிறப்பவன் {நைகதன்}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் முதலில் பிறந்தவன் {அக்ரஜன்}, (விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதன் விளைவால்) மனத்தளர்வைக் கடந்தவன் {அநிர்விண்ணன்}, அறவோர் வழுவும்போது மன்னிப்பவன் {ஸதாமர்ஷீ}, அண்டம் நிலைக்கும் அடித்தளமாக இருப்பவன் {லோகாதிஷ்டாநன்}, மிக அற்புதமானவன் {அத்புதன்}<886-895>;(108)

தொடக்கக் காலம் முதல் இருப்பவன் {ஸநாத்}, பெரும்பாட்டன் முதலியோர் பிறப்பதற்கு முன்பே இருப்பவன் {ஸநாதந்தமன்}, பழுப்பு நிறம் கொண்டவன் (அல்லது கண்டடைபவன், அல்லது இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் தன் கதிர்களால் ஒளியூட்டுபவன்) {கபிலன்}, பெரும் பன்றியின் வடிவமேற்றவன், அனைத்தும் அழிந்த பிறகும் இருப்பவன் {கபிரவ்யயன்}, அனைத்து அருள்களையும் வழங்குபவன் {ஸ்வஸ்திதன்}, அருள்களைப் படைப்பவன் {ஸ்வஸ்திக்ருத்}, அருள்கள் அனைத்துடன் அடையாளம் காணப்படுபவன் {ஸ்வஸ்தி}, அருள்களை அனுபவிப்பவன் {ஸ்வஸ்திபுக்}, அருள்களைப் பொழிபவன் {ஸ்வஸ்திதக்ஷிணன்}<896-905>;(109)

கோபமற்றவன் {அரெளத்ரன்}, பாம்பான சேஷனின் வடிவில் மடங்கிச் சுருண்டு கிடப்பவன் {குண்டலீ}, சக்கரந்தரித்தவன் {சக்ரீ}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் உயர்ந்த ஆணைகளால் முறைப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டவன் {ஊர்ஜிதசாஸநன்}, வாக்கின் துணையால் விவரிக்கப்பட இயலாதவன் {சப்தாதிகன்}, வாக்கின் உதவியால் வேதாங்கங்களில் சொல்லப்பட்டவன் {சப்தஸ்ஹன்}, மூவகைத் துன்பங்களால் பீடிக்கப்பட்டவர்களைக் குளிர்விக்கும் பனித்துளியாய் இருப்பவன் {சிசிரன்}, இருளை விலக்கும் வல்லமுடையுடன் அனைத்து உடல்களிலும் வாழ்பவன் {சர்வரீகரன்}<906-914>;(110)

கோபமற்றவன் {அக்ரூரன்}, எண்ணம், சொல் மற்றும் செயலின் மூலம் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவதில் திறன் படைத்தவன் {பேசலன்}, குறுகிய காலத்திற்குள் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவன் {தக்ஷன்}, தீயோரை அழிப்பவன் {தக்ஷிணன்}, மன்னிக்கும் தன்மை கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் {க்ஷமிணாம்வரன்}, ஞானியர் அனைவரிலும் முதன்மையானவன் {வித்வத்தமன்}, அச்சமனைத்தையும் கடந்தவன் {வீதபயன்}, எவனுடைய பெயர்களும், சாதனைகளும் கேட்கப்படுமோ, உரைக்கப்படுமோ, அறத்திற்கு வழிவகுக்குமோ அவன் {புண்யஸ்ரவணகீர்த்தநர்}<915-922>;(111)

மயக்கம் நிறைந்த உலகப் பெருங்கடலில் இருந்து அறத்தைப் பாதகாப்பவன் {உத்தாரணன்}, தீயோரை அழிப்பவன் {துஷ்க்ருதிஹா}, அறமே ஆனவன் {புண்யன்}, தீய கனவுகள் அனைத்தையும் விலக்குபவன் {துஸ்வப்நநாசநன்}, தன்னை வழிபடுபவர்களை விடுதலைக்கான {முக்திக்கான} நல்ல பாதையில் செலுத்துவதற்காகத் தீய பாதைகள் அனைத்தையும் அழிப்பவன் {வீரஹா}, சத்வ குணத்தில் இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் {ரக்ஷணன்}, நற்பாதையில் நடப்பவன் {ஸந்தன்}, வாழ்வே ஆனவன் {ஜீவநன்}, அண்டம் முழுவதும் பரவியிருப்பவன் {பர்யவஸ்திதன்}<923-931>;(112)

எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவன் {அநந்தரூபன்}, எல்லையற்ற செல்வத்தைக் கொண்டவன் {அநந்தஸ்ரீ}, கோபத்தை அடக்கியவன் {ஜிதமந்யு}, அறவோரின் அச்சங்களை அழிப்பவன் {பயாபஹன்}, எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தன்னுணர்வு உள்ளவர்களுக்கு அனைத்துப் புறங்களிலும் நீதிக்கனிகளைக் கொடுப்பவன் {சதுரஸ்ரன்}, அளவிலா ஆன்மா கொண்டவன் {கபீராத்மா}, பல்வேறு வகையில் தகுந்த செயல்களைச் செய்தோருக்கு பல்வேறு வகையான கனிகளை அளிப்பவன் {விதிசன்}, (தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு) பல்வேறு வகையில் ஆணைகளை நிறுவுபவன் {வ்யாதிசன்}, சரியான கனியுடன் கூடிய ஒவ்வொரு செயலிலும் பற்று கொண்டவன் {திசன்}<932-940>;(113)

தொடக்கமற்றவன் {அநாதி}, பூமி மற்றும் காரணங்கள் அனைத்தின் கொள்ளிடம் {பூர்ப்புவன்}, செழிப்பின் தேவியை எப்போதும் தன் புறத்தில் கொண்டவன் {லக்ஷ்மீ}, வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸுவீரன்}, அழகிய கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {ருசிராங்கதன்}, உயிரினங்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஜநநன்}, உயிரினங்கள் அனைத்தும் பிறப்பதற்கான மூலக் காரணன் {ஜநஜந்மாதி}, தீய அசுரர்கள் அனைவரையும் அச்சுறுத்துபவன் {பீமன்}, பயங்கர ஆற்றலைக் கொண்டவன் {பீமபராக்ரமன்}<941-949>;(114)

அடிப்படையான ஐந்து பூதங்களின் வசிப்பிடமாகவும் கொள்ளிடமாகவும் இருப்பவன் {ஆதாரநிலயன்}, அண்டப் பேரழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் தன் தொண்டையில் விழுங்குபவன் {தாதா}, மலரைக் காண்பதைப் போல ஏற்புடைய இனிய புன்னகை கொண்டவன் (அல்லது, மலர்களின் வடிவில் புன்னகைப்பவன்) {புஷ்பஹாஸன்}, எப்போதும் விழிப்புநிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஜாகரன்}, உயிரினங்கள் அனைத்துக்கும் தலைமையாக நிற்பவன் {ஊர்த்வகன்}, அறவோர் செய்யும் செயல்களுடன் கூடிய ஒழுக்கம் கொண்டவன் {ஸத்பதாசாரன்}, [பரீக்ஷித் மற்றும் பிறரின் வழக்கில் நேர்ந்தது போல்] இறந்தோரை மீட்பவன்{ப்ராணதன்}, தொடக்க அசையான ஓம் ஆக இருப்பவன் {ப்ரணவன்}, அறச்செயல்கள் அனைத்தையும் விதித்தவன் {பணன்}<950-958>;(115)

பரமாத்மாவைக் குறித்த உண்மையை வெளிப்படுத்துபவன் {ப்ரமாணன்}, ஐந்து மூச்சுக்காற்றுகள் மற்றும் ஐம்புலன்களின் வசிப்பிடமாக இருப்பவன் {ப்ராணநிலயன்}, உயிரினங்களின் வாழ்வை ஆதரிக்கும் உணவாக இருப்பவன் {ப்ராணத்ருத்}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர் மூச்சின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தையும் வாழச் செய்பவன் {ப்ராணஜீவநன்},  தத்துவ அமைப்புகள் அனைத்திலும் சிறந்த தத்துவமாக இருப்பவன் {தத்வம்தத்வவித்}, அண்டத்தின் ஒரே ஆன்மாவாக இருப்பவன் {ஏகாத்மா}, பிறப்பு, முதுமை மற்றும் மரணத்தைக் கடந்தவன் {ஜந்மம்ருத்யுஜராதிகன்}<959-965>;(116)

பூ, புவ, ஸ்வ மற்றும் செய்யப்படும் பிற ஹோம காணிக்கைகளின் புனித அசைகளின் விளைவால் அண்டத்தைக் காப்பவன் {பூர்ப்புவஸ்வஸ்தரு}, பெரும்பாதுகாவலன் {தாரன்}, அனைவரின் தந்தையாக இருப்பவன் {ஸவிதா}, பெரும்பாட்டனுக்கே (பிரம்மனுக்கே) தந்தையாக இருப்பவன் {ப்ரபிதாமஹன்}, வேள்வியின் வடிவில் இருப்பவன் {யஜ்ஞன்}, (வேள்விகளில் துதிக்கப்படும் பெருந்தேவனாக அவனே இருப்பதால்) வேள்விகள் அனைத்தின் தலைவன் {யஜ்ஞபதி}, வேள்வி செய்பவன் {யஜ்வா}, வேள்விகளையே தன் அங்கங்களாகக் கொண்டவன் {யஜ்ஞாங்கன்}, வேள்விகள் அனைத்தையும் நிலைநிறுத்துபவன் {யஜ்ஞவாஹநன்}<966-975>;(117)

வேள்விகளைப் பாதுகாப்பவன் {யஜ்ஞப்ருத்}, வேள்விகளைப் படைத்தவன் {யஜ்ஞக்ருத்}, வேள்விகள் செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {யஜ்ஞீ}, வேள்விகள் அனைத்தின் வெகுமதிகளையும் அனுமதிப்பவன் {யஜ்ஞபுக்}, வேள்விகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவன் {யஜ்ஞஸாதநன்}, வேள்விகளின் இறுதியில் ஆகுதிகள் முழுமையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை அனைத்தையும் நிறைவடையச் செய்பவன் {யஜ்ஞாந்தக்ருத்}, பலனில் விருப்பமின்றிச் செய்யப்படும் வேள்விகளோடு அடையாளங்காணப் படுபவன் {யஜ்ஞகுஹ்யன்}, அனைத்து உயிரினங்களையும் நீடிக்கச் செய்யும் உணவாக இருப்பவன் {அந்நம்}, அந்த உணவை உண்பவன் {அந்நாதன்}<976-984>;(118)

இருப்பின் காரணன் {ஆத்மயோநி}, தானாகத் தோன்றியவன் {ஸ்வயஞ்சாதன்}, திடமான பூமியைத் துளைத்துச் சென்றவன் (சென்று பாதாள லோகத்தில் ஹிரண்யாக்ஷன் மற்றும் பிறரைக் கொன்றவன்) {வைகாநன்}, சாமங்கள் பாடுபவன் {ஸாமகாயநன்}, தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவன் {தேவகீநந்தநன்}, அனைத்தையும் படைப்பவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் தலைவன் {க்ஷிதீசன்}, தன்னை வழிபடுபவர்களின் பாவங்களை அழிப்பவன் {பாபநாசநன்}<985-992>;(119)

(பாஞ்சஜன்யம் என்ற) சங்கைத் தன் கையில் சுமப்பவன் {சங்கப்ருத்}, ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவன் {நந்தகீ}, இடையறாமல் யுகச்சக்கரத்தைச் சுழலச் செய்பவன் {சக்ரீ}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புலன்களில் தன்னைச் செலுத்திக் கொள்பவன் {சார்ங்கதந்வா}, மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவன் {கதாதரன்}, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் {ரஇவ்வாறே எப்போதும் பாடப்பட வேண்டிய, மகிமை பொருந்திய உயர் ஆன்ம கேசவனின் சிறப்பான ஆயிரம் பெயர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி உனக்கு உரைத்தேன்.(121) ஒவ்வொரு நாளும் இந்தப் பெயர்களைக் கேட்பவனோ, உரைப்பவனோ இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் எந்தத் தீங்கையும் சந்திக்க மாட்டான்.(122) இஃதை ஒரு பிராமணன் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் செய்தால் அவன் எப்போதும் போர்க்களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் செய்தால் அவன் செழிப்படைவான். அதே வேளையில் ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(123) ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் (இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ) அஃதை ஈட்டுவதில் வெல்கிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் (இவ்வழியில் செயல்பட்டு) செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் கூட, ஆனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் (இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்) சந்ததியை அடைகிறான்.(124)

எந்த மனிதன், அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாசுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ(125) அவன் பெரும்புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன்மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.(126) அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும் பெரும் சக்தியையும் கொண்டிருப்பான். நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது; நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள் ஆகியன அவனுடையவையாகின்றன.(127) நோயாளி சுகம்பெறுவான்; துன்பங்களில் பீடிக்கப்படுபவன் அவற்றில் இருந்து விடுபடுவான், பேரிடரில் மூழ்கியவன் அதனிலிருந்து விடுபடுவான்.(128) அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன், சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.(129) வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.(130)

வாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.(131) பக்தியுடனும், நம்பிக்கையுடனும் (வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய) இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் ஒரு மனிதன் ஆன்ம இன்பம், மன்னிக்கும் இயல்பு, செழிப்பு, புத்தி, நினைவு மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(132) அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒருபோதும் தோன்றாது.(133)

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் வானம், திசைப்புள்ளிகள், பூமி, பெருங்கடல் ஆகியவற்றுடன் கூடிய வெளியானது உயர் ஆன்ம வாசுதேவனின் ஆற்றலாலேயே ஆதரவடைந்து நிலைநிறுத்தப்படுகிறது.(134) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.(135) புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(136) சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) ஒழுக்கமே முதன்மையானது எனச் சொல்லப்படுகிறது. அறம் ஒழுக்கத்தையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் அறத்தின் தலைவனாகச் சொல்லப்படுகிறான்.(137)

முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.(138) யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள் என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.(139) விஷ்ணு, பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கும் ஒரே பெரும்பொருளாக இருக்கிறான். மூவுலகங்களையும் மறைப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவுமான அவன் அவை அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனது மகிமை குறைவறியாதது, அவன் (அண்டத்தின் உயர்ந்த தலைவனாக) அதை அனுபவிக்கிறான்.(140) சிறப்புமிக்க விஷ்ணுவைப் புகழ்வதும், வியாசரால் தொகுக்கப்பட்டதுமான இந்தப் பாடல், உயர்ந்த மகிழ்ச்சியையும், உயர்ந்த நன்மையையும் (முக்தியையும்) அடைய விரும்பும் மனிதனால் பாடப்பட வேண்டும்.(141) பிறப்பற்ற தேவனும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவனும், அண்டத்திற்கு மூலமாகவோ, காரணமாகவோ இருப்பவனும், சிதைவறியாதவனும், பெரியவையும், தாமரை இதழ்களைப் போன்றவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த அண்டத் தலைவனை வழிபட்டுத் துதிப்பவர்கள் எந்த ஏமாற்றத்தையும் ஒருபோதும் சந்திப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(142)தாங்கபாணி}, கலங்கடிக்கப்பட முடியாதவன் {அஷோப்யன்}, அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவன் {ஸர்வப்ரஹரணாயுதன்}<993-1000>[1].(120) ஓம், அவனை வணங்குகிறேன்[2].

சாவித்ரி மந்திரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 150-தேவர்கள், முனிவர்கள், மன்னர்கள் மற்றும் பலரின் பெயர்கள் அடங்கிய சாவித்திரி மந்திரத்தை {காயத்ரியை} யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும்ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் ஒருவன் பெருமளவு அறத்தகுதிக்குரிய பலன்களை ஈட்டச் செய்யும் மந்திரம் எது?(1) பயணம் புறப்படும்போதோ, புதிய கட்டடத்திற்குள் நுழையும்போதோ, எந்தச் செயலையும் செய்யும்போதோ, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளின் போதோ சொன்னால் வெற்றியை உண்டாகும் மந்திரம் எது?(2) உண்மையில் வேதங்களுக்கு இணக்கமாக, தீய ஆதிக்கங்கள் அனைத்தையும் தணிக்கவோ, செழிப்பு, அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவோ, தீமையிலிருந்து பாதுகாக்கவோ, பகைவர்களை அழிக்கவோ, அச்சங்களை விலக்கவோ உரிய மந்திரம் எது?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, வியாசரால் அறிவிக்கப்பட்ட அந்த மந்திரத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சாவித்ரியால் {சூரியனால்} விதிக்கப்பட்டிருக்கும் அது பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகும். அஃது ஒரு மனிதனிடம் இருக்கும் பாவங்கள் அனைத்தையும் உடனே தூய்மையாக்கவல்லதாகும்.(4) ஓ! பாவமற்றவனே, அந்த மந்திரத்தின் விதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாண்டு மகன்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த விதிகளைக் கேட்பதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைகிறான்.(5) அம்மந்திரத்தைப் பகலும், இரவும் உரைப்பவன் பாவத்தால் ஒருபோதும் களங்கமடையமாட்டான். அந்த மந்திரத்தை உனக்கு இப்போது உரைக்கப்போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6) உண்மையில், ஓ! இளவரசே, இதைக் கேட்கும் மனிதன் நீண்ட வாழ்நாளை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தில் திளைப்பான்.(7) ஓ! மன்னா, க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மை நோன்பை {சத்திய விரதத்தை} நிலையாக நோற்றவர்களுமான அரசமுனிகளில் முதன்மையானவர்களால் ஒவ்வொரு நாளும் இம்மந்திரம் உரைக்கப்பட்டது.(8) உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, புலனடக்கத்துடனும், ஆன்ம அமைதியுடனும் ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தைச் சொல்லும் ஏகாதிபதிகள் ஒப்பற்ற செழிப்பை அடைவதில் வெல்வார்கள்.(9)

உயர்ந்த நோன்புகளைக் கொண்ட வசிஷ்டரையும், வேதப்பெருங்கடலான பராசரரையும் மதிப்புடன் வணங்குகிறேன். பெரும் நாகனான அனந்தனை வணங்குகிறேன். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் மற்றும் மங்கா மகிமை கொண்ட அனைவரையும் வணங்குகிறேன்.(10) முனிவர்களையும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், முதன்மையானோர் அனைவருக்கும் வரங்களை அளிப்பவனுமான தேவதேவனை வணங்குகிறேன். ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், மங்கலமிக்கவனும், ஆயிரம் பெயர்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை வணங்குகிறேன்.(11)

அஜன் ஏகபாத் {அஜைகபாத்}, அஹிர்ப்புத்நியன், வெல்லப்பட இயலாத பிநாகி, ருதன், பித்ருரூபன், திரியம்பகன், மஹேஸ்வரன்,(12) விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஸ்வரன் என எண்ணிக்கையில் பதினொருவராக {11} உள்ள இவர்கள் உலகங்கள் அனைத்தின் தலைவர்களாகக் கொண்டாடப்படும் ருத்திரர்களாவர்.(13) இந்தப் பதினோரு உயர் ஆன்மாக்களே (வேதங்களின்) சதருத்ரத்தில் நூற்றுவராகக் குறிப்பிடப்படுகின்றனர்.

அம்சன், பகன், மித்ரன், வருணன், தாதா, அர்யமா, ஜயந்தன், பாஸ்கரன்,(14) த்வஷ்டா, பூஷா, இந்திரன், விஷ்ணு ஆகியோர் பன்னிருவராவர். ஸ்ருதி அறிவிப்பது போலக் கசியபரின் மகன்களான இந்தப் பன்னிருவரும் {12} ஆதித்யர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.(15)

தரன், துருவன், ஸோமன், ஸாவித்ரன், அநிலன், அநலன், பிரத்யூஷன், பிரபாஸன் ஆகியோர் சாத்திரங்களில் சொல்லப்படும் எட்டு {8} வசுக்களாவர் {அஷ்டவசுக்களாவர்}.(16)

நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினி இரட்டையராகச் {2} சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மார்த்தாண்டனின் {சூரியனின்} மகன்களாவர், அவனது மனைவியான ஸம்ஜ்ஞாதேவியின் மூக்கில் இருந்து இவர்கள் வெளிவந்தனர்.(17)

இனி இவ்வுலகில் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சிகளாக இருப்போரின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன்.(18) தேவர்களில் தலைவர்களான அவர்கள் புலப்படாத நிலையில் இருந்தாலும் அனைத்தையும் காண்கின்றனர். உண்மையில், அவர்கள் அனைத்து உயிரினங்களும் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் காண்கின்றனர். அவர்கள் மிருத்யு, காலன்,(19) விஷ்வேதேவர்கள், வடிவங்களுடன் கூடிய பித்ருக்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட பெரும் முனிவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்கள், மற்றும் தவங்கள், முக்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோராவர்.(20) இவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லும் மனிதர்களுக்குப் பல்வேறு வகை நன்மைகளைச் செய்கின்றனர். உண்மையில் தெய்வீக சக்தி கொண்ட அவர்கள், பெரும்பாட்டனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு இன்ப உலகங்களை அத்தகைய மனிதர்களுக்கு அளிக்கிறார்கள்.(21) அனைத்து உலகங்களிலும் வசித்திருக்கும் அவர்கள், அங்கு நடைபெறும் செயல்களைக் கவனமாகக் குறித்துக் கொள்கின்றனர். உயிரினங்கள் அனைத்தின் தலைவர்களான அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அபரிமிதமான அளவில் ஈட்டுபவனாகிறான்.(22) அவன் மறுமையில் அண்டத்தின் தலைவனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு மங்கல, இன்ப உலகங்களை அடைகிறான்.(23)

அனைத்து உயிரினங்களின் தலைவர்களான இந்த முப்பத்துமூவர்[1], பேருடல் படைத்த நந்தீஸ்வரன், காளையைத் தன் கொடிச் சின்னமாகக் கொண்ட உயர்ந்தவன், கணேஸ்வரன் என்றழைக்கப்படுபவனின் தொண்டர்கள் மற்றும் துணைவர்களாக இருக்கும் உலக ஆட்சியாளர்கள் அனைவர், சௌமியர்கள், ரௌத்திரர்கள், யோகிகள் என்றழைக்கப்படுபவர்கள், பூதங்கள் என்றறியப்படுபவர்கள்,(24,25) ஆகாயத்து ஒளிக்கோள்கள், ஆறுகள், வானம், பறவைகளின் இளவரசன் (கருடன்), தவங்களின் விளைவால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அசையும் மற்றும் அசையாத வடிவம் கொண்டிருப்பவர்கள்,(26) இமவான் {இமய மலை}, அனைத்து மலைகள், நான்கு பெருங்கடல்கள், பவனின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட அவனது தொண்டர்கள்,(27) எப்போதும் வெற்றியாளனாக இருக்கும் சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கந்தன், அம்பிகை ஆகிய இந்தப் பெரும் ஆன்மாக்களின் பெயர்களைப் புலனடக்கத்துடன் சொல்லும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(28)இனி மானவர்கள் என்றறியப்படும் முதன்மையான முனிவர்களின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு;(29) ஔஷிஜர், கக்ஷீவான், அங்கிரஸின் மகனான பலர் {பலன்} ஆகியோராவர். பிறகு, மேதாதியின் மகனான கண்வரும், பரிஷதரும் வருகின்றனர்.(30) பிரம்ம சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் அண்டத்தைப் படைத்தவர்களாக (சாத்திரங்களில்) சொல்லப்படுகின்றனர். ருத்திரன், அநலன் மற்றும் வசுக்களில் இருந்து இவர்கள் உண்டானார்கள். இவர்களின் பெயர்களைச் சொல்வதால் மக்கள் பெரும் நன்மைகளை அடைகிறார்கள்.(31) உண்மையில், பூமியில் நற்செயல்களைச் செய்யும் மக்கள், தேவர்களுடன் சொர்க்கத்தில் இன்புற்றுத் திளைக்கிறார்கள். இம்முனிவர்களே இந்திரனின் புரோகிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் வாழ்கிறார்கள்.(32) குவிந்த கவனத்துடன் இம்முனிவர்களின் பெயர்களைச் சொல்லும் மனிதன், இந்திரலோகத்திற்கு உயர்வதிலும், அங்கே பெரும் கௌரவங்களை அடைவதிலும் வெல்கிறான்.(33)

உன்முசு, பிரமுசு, பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்தியாத்ரேயர், திருடவ்யர், ஊர்த்தவபாஹு, திரணஸோமாங்கிரஸ்,(34) மித்ராவருணனின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான அகஸ்தியர் ஆகிய எழுவரும் இறந்தோரின் மன்னனான யமனின் ரித்விஜர்களாகத் தென் பகுதியில் வசிக்கின்றனர்.(35)

திருடேயு, ருதேயு, பெரும்புகழ் கொண்ட பரிவ்யாதர், சூரியனின் காந்தியுடன் கூடியவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர்,(36) அறம் சார்ந்த அத்ரியின் மகனான ஸாரஸ்வதர் ஆகிய எழுவரும் வருணனின் பெரும் வேள்வியில் ரித்விஜர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குப் பகுதியில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர்.(37)

அத்ரி, சிறப்புமிக்க வசிஷ்டர், பெரும் முனிவர் கசியபர், கோதமர், பரத்வாஜர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர்,(38) பெரும் சக்தி கொண்டவரும், கடுமை நிறைந்தவரும், ரிசீகரின் மகனுமான ஜமதக்னி ஆகிய இவர்கள் எழுவரும், கருவூலத்தலைவனின் {குபேரனின்} ரித்விஜர்களாக வடக்குப்பகுதியில் வசிக்கின்றனர்.(39)

எத்திசையிலும் அடைபடாமல் அனைத்துத் திசைகளிலும் வாழும் வேறு முனிவர்கள் எழுவர் இருக்கின்றனர். மனிதர்களுக்குப் புகழையும் அவர்களுக்கான நன்மைகள் யாவையும் கொடுக்கும் அவர்கள், உலகங்களைப் படைத்தவர்களாகப் பாடப்படுகின்றனர்.(40)

தர்மன், காமன், காலன், வஸு, வாஸுகி, அனந்தன், கபிலன் ஆகிய இவ்வேழு பேரும் {நாகர்களும்} உலகத்தைத் தாங்குபவர்களாக இருக்கின்றனர்.(41) ராமர் {பரசுராமர்}, வியாசர், துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரே (முதன்மையானவர்களாகக் கருதப்படும்) வேறு முனிவர்களாவர். இந்தப் பெரும் முனிவர்களே ஒவ்வொன்றிலும் ஏழேழு பேரைக் கொண்ட ஏழு கூட்டங்களாகப் பிரிந்திருக்கின்றனர்[2].(42) மனிதர்கள் அனுபவிக்கும் அமைதியையும் நன்மையையும் உண்டாக்குபவர்கள் பல்வேறு திசைப்புள்ளிகளின் ஆட்சியாளர்களாக {திக்பாலர்களாகச்} சொல்லப்படுகின்றனர். இம்முனிவர்கள் எந்தெந்தெந்த திசையில் இருக்கின்றனரோ அந்த அந்தத் திசையை நோக்கி ஒருவன் வழிபட வேண்டும்.(43)உயிரினங்களைப் படைத்தவர்களான அம்முனிவர்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவர்களாகக் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களைச் செய்தவர்களும், பெரும் தற்கட்டுப்பாடுடையவர்களுமான ஸம்வர்த்தர், மேருஸாவர்ணர், அறம்சார்ந்தவரான மார்க்கண்டேயர், ஸாங்கியர், யோகர், நாரதர், துர்வாஸர் ஆகியோர் மூவுலகங்களிலும் கொண்டாடப்படுபவர்களாக இருக்கிறார்கள்.(45) ருத்திரனுக்கு இணையான வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்கள் பிரம்ம லோகத்தில் வாழ்கின்றனர். அவர்களின் பெயர்களை மதிப்புடன் சொல்லும் மகனற்ற மனிதன் மகனை அடைகிறான், ஓர் ஏழை செல்வத்தை அடைகிறான்.(46) உண்மையில் அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(47)

பூமி முழுவதும் ஆட்சி செய்த பேரரசனும், ஏகாதிபதிகளில் முதன்மையான பிராஜபதிக்கு இணையானவனும், வேனனின் மகனும், கொண்டாடப்பட்ட மன்னனுமான பிருவின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். (அன்பினாலும், பாசத்தினாலும்) பூமி {பூமாதேவி} அவனது மகளானாள் {எனவே, அவள் பிருத்வி என்றழைக்கப்பட்டாள்}. சூரிய குலத்தைச் சேர்ந்தவனும், ஆற்றலில் மஹேந்திரனுக்கு இணையானவனுமான புரூரவனின் பெயரும் ஒருவனால் சொல்லப்பட வேண்டும்.(48) இளையின் மகனான அவன் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவனாக இருந்தான். உண்மையில், புதனின் அன்புக்குரிய மகனான அவனின் {புரூரவனின்} பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(49) மூவுலகங்களில் கொண்டாடப்படும் வீரனான பரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். கிருத யுகத்தில் மகத்தான கோமேத வேள்வியில் {கவாமயனயாகம்} தேவர்களைத் துதித்து, மஹாதேவனுக்கு இணையானவனாக இருந்த பெரும் காந்தி கொண்ட ரந்திதேவனின் பெயரும் சொல்லப்பட வேண்டும். தவங்களுடன் கூடியவனும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவனும், உலகின் அனைத்து வகை நன்மைகளுக்கும் தோற்றுவாயாக இருந்தவனுமான அவன் அண்டத்தை வென்றவனாக இருந்தான்.(51)

பெரும்புகழைக் கொண்ட அரச முனி ஸ்வேதனின்[3] பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். மஹாதேவனை நிறைவடையச் செய்த அவனுக்காகவே அந்தகன் கொல்லப்பட்டான்.(52) சொர்க்கத்தில் பாய்ந்த புனித ஆற்றை {கங்கை ஆற்றை} மஹாதேவனுடைய அருளின் மூலம் (மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க பூமியில் பாயச்செய்ய {அவ்வாற்றைப்}) கீழே கொண்டு வந்தவனும், பெரும்புகழுடைய அரசமுனியுமான பகீரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(53) பகீரதனே, சகரனின் அறுபதாயிரம் மகன்களின் சாம்பலைக் கங்கையின் புனித நீரில் நனையச் செய்து, அவர்களைப் பாவத்தில் இருந்து மீட்டவனாவான். உண்மையில், நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், பேரெழில்வாய்ந்தவர்களும், உயர்ந்த சக்தியைக் கொண்டவர்களுமான இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(54) அவர்களில் சிலர் அச்சந்தரும் வடிவங்களைக் கொண்டவர்களாகவும், பெரும்வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். உண்மையில், ஒருவன் புகழைப் பெருக்கவல்லவர்களான தேவர்கள், முனிவர்கள், மற்றும் அண்டத்தின் தலைவர்களான மன்னர்கள் ஆகியோரின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(55) சாங்கியம், உயர்ந்ததில் உயர்வான யோகம், ஹவ்யம், கவ்யம், ஸ்ருதிகள் அனைத்தின் புகலிடமான பரப்பிரம்மம் ஆகியவை,(56) அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் நன்மைகளைச் செய்யவல்ல ஊற்றுக்கண்களாகச் சொல்லப்பட்டுள்ளன. புனிதமானவையும், பாவத்தைத் தூய்மை செய்பவையுமான இவை மிக உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளன. நோய்கள் அனைத்தையும் சீராக்கும் மருந்துகளாகவும், அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தருபவையாகவும் இவையே இருக்கின்றன[4].(57)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் புலனடக்கத்துடன் காலையும், மாலையும் இப்பெயர்களைச் சொல்ல வேண்டும். இவர்களே பாதுகாப்பவர்கள். இவர்களே மழையைப் பொழியச் செய்கிறார்கள். இவர்களே ஒளிர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருகிறார்கள். இவர்களே {காற்றை} வீசச் செய்கிறார்கள் . இவர்களே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறார்கள்.(58) இவர்களே அண்டத்தின் தலைவர்களாகவும், அனைத்தையும் சாதிப்பதில் உயர்ந்த புத்தியைக் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவர்களாகவும், புலன்களை முற்றாக ஆள்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உண்மையில் இவர்களே மனிதர்களுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் அகற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது.(59) நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த உயர் ஆன்மாக்களே. ஒருவன் தனக்கான நன்மைகள் அனைத்தையும் நிச்சயம் அடைய முடியும் என்பதால் அவன் காலையில் எழுந்ததும் இவர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(60)

இவர்களின் பெயர்களைச் சொல்பவன் நெருப்பு மற்றும் கள்வர்களிடம் உள்ள அச்சங்களில் இருந்து விடுபடுவான். அத்தகைய மனிதன் எத்தடையாலும் தடுக்கப்படமாட்டான். இந்த உயர் ஆன்மாக்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அனைத்து வகைத் தீய கனவுகளில் இருந்தும் விடுபடுவான்.(61) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதர்கள் மங்கலமான குடும்பங்களில் பிறக்கிறார்கள். புலனடக்கத்துடன் கூடிய மறுபிறப்பாளன், வேள்விகளின் தொடக்கச் சடங்குகள் செய்யப்படும்போது இந்தப் பெயர்களைச் சொல்வதன் விளைவால்,(62) அறவோனாகவும், ஆன்ம கல்வியில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், மன்னிக்கும் தன்மை {பொறுமை}}, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகவும் ஆகிறான். நோயால் பீடிக்கப்பட்ட மனிதன் இவற்றைச் சொன்னால், நோயின் வடிவத்தில் இருக்கும் தன் பாவத்தில் இருந்து அவன் விடுபடுகிறான்.(63) ஒரு வீட்டிற்குள் இவற்றைச் சொல்வதன் மூலம், அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபடுவார்கள். வயலில் இவற்றைச் சொல்வதன் மூலம், அனைத்து வகைப் பயிர்களும் செழித்து வளரும்.(64)

பயணத்திற்குப் புறப்படும் சமயத்திலோ, ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியே இருக்கும் போதோ அவற்றை உரைத்தால் அவன் நற்பேற்றை அடைவான். இந்தப் பெயர்கள் ஒருவனுடைய சுயத்திற்கும், தன் பிள்ளைகள் மனைவிகள், செல்வம்,(65) அவனுடைய வித்துகள் மற்றும் செடிகளுக்கும் பாதுகாப்பைத் தரும். போரிடும் சமயத்தில் இப்பெயர்களை உரைக்கும் க்ஷத்திரியன் தன் பகைவர்கள் அழிவடைவதையும், தானும், தன் தரப்பும் நற்பேற்றால் மகுடம் சூடப்படுவதையும் காண்பான். தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் சடங்குகளைச் செய்யும்போது இந்தப் பெயர்களை உரைக்கும் மனிதன், வேள்வியின் ஹவ்யம் மற்றும் கவ்யத்தைப் பித்ருக்களும், தேவர்களும் உண்பதற்கு உதவி செய்தவனாவான். இவற்றை உரைக்கும் மனிதன், நோய்கள், இரைதேடும் விலங்குகள், யானைகள் மற்றும் கள்வர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(66-68) அவனுடைய துன்பச் சுமை குறைந்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலையடைகிறான்.

சிறப்புவாய்ந்த இந்த சாவித்ரி மந்திரத்தை {காயத்ரி மந்திரத்தை} ஓடத்திலோ, வாகனத்திலோ, மன்னர்களின் சபைகளிலோ சொல்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த வெற்றியை அடைகிறான். எங்கே இந்த மந்திரஙகள் உரைக்கபடுகின்றனவோ, அங்கே நெருப்பும் மரத்தை எரிக்காது.(69,70) அங்கே பிள்ளைகள் இறக்கமாட்டார்கள், பாம்புகள் வசிக்காது. உண்மையில், அத்தகைய இடங்களில் மன்னன், பிசாசங்கள், அல்லது ராட்சசர்களிடம் இருந்து எந்த அச்சமும் நேராது[5].(71) உண்மையில் இந்த மந்திரங்களைச் சொல்லும் மனிதனுக்கு, நெருப்பிடமோ, நீரிடமோ, காற்றிடமோ, இரைதேடும் விலங்குகளிடமோ எந்த அச்சமும் நேராது.(72) முறையாக உரைக்கப்படும் இந்த சாவித்திரி மந்திரங்கள் அமைதியை அளித்து, நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையைச் செய்யும். மதிப்புடன் அவற்றை உரைக்கும் மனிதர்கள் அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(73) பிரம்மத்தின் வடிவிலான இந்த சாவித்திரி மந்திரங்களை உரைப்பதன் மூலம் அடையப்படும் விளைவுகள் இவையே. பசுக்களின் மத்தியில் வைத்து இந்த மந்திரங்களை உரைக்கும் மனிதன், அந்தப் பசுக்கள் கனிநிறைந்தவையாக இருப்பதைக் காண்பான்.(74) பயணம் புறப்பட்டாலோ, பயணத்தில் இருந்து வீடு திரும்பினாலோ ஒருவன் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(75)முனிவர்கள் கொண்டுள்ள பெரும் புதிரை {ரகசியத்தை} உள்ளடக்கிய இந்த மந்திரங்கள், அமைதியாக உரைக்கப்படும்போது மிக உயர்ந்தவையாகின்றன. வேள்வித்தீயில் ஆகுதி ஊற்றி முறையாக உரைப்போருக்கு இந்த மந்திரங்கள் இவ்வாறே அமைகின்றன[6].(76) நான் உனக்குச் சொன்னவை பராசரருடைய சிறந்த கருத்துகளாகும். இவை முற்காலத்தில் சக்ரனிடம் சொல்லப்பட்டன. வாய்மை, அல்லது நித்திய பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் அதனை நான் உனக்கு முழுமையாக உரைத்திருக்கிறேன்.(77) அனைத்து உயிரினங்களின் இதயமாக அமைந்திருக்கும் இஃது உயர்ந்த ஸ்ருதியாக இருக்கிறது. சோம குல, சூரிய குல இளவரசர்களான ராகவர்கள் மற்றும் குரவர்கள் {குரு வம்சத்துக் கௌரவர்கள்} அனைவரும்,(78) தங்களைத் தூய்மை செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த மந்திரங்களைச் சொல்கிறார்கள்.இவையே மனித இனத்தின் உயர்ந்த கதியாக அமைகிறது. தேவர்கள், ஏழு முனிவர்கள் மற்றும் துருவனின் பெயர்களை ஒவ்வொரு நாளும் உரைப்பதால் அனைத்து தொல்லைகளிலிருந்தும், துன்பங்களில் இருந்தும் தப்பிக்கும் வழி ஏற்படுகிறது. உண்மையில், இவ்வாறு உரைப்பது ஒருவனைத் துன்பத்தில் இருந்து விரைவாக மீட்கிறது.(79)பழங்காலத்து தவசிகளான கசியபர், கோதமர், பிருகு, அங்கிரஸ், அத்ரி, சுக்ரர், அகஸ்தியர், பிருஹஸ்பதி ஆகியோரும், மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் இந்த மந்திரங்களைத் துதித்தனர். பரத்வாஜரின் மகனால் அங்கீகரிக்கப்பட்ட இம்மந்திரங்கள் ரிசீகரின் மகன்களால் அடையப்பட்டன. உண்மையில் அவற்றை வசிஷ்டரிடம் இருந்து மீண்டும் அடைந்த சக்ரனும், வசுக்களும் தானவர்களிடம் போரிடச் சென்று அவர்களை அடக்கினர்.(80) பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கல்விமானும், வேதங்களை நன்கறிந்தவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதனும், ஒவ்வொரு நாளும் பாரதக் கதையைத் தன் வீட்டில் உரைக்கச் செய்யும் மனிதனும் ஒரே பலன்களை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(81) பிருகுவின் பெயரைச் சொல்வதன் மூலம் ஒருவனிடம் அறம் பெருகுகிறது. வசிஷ்டரை வணங்குவதன் மூலம் அவனது சக்தி பெருகுகிறது. ரகுவை வணங்குவதன் மூலம் அவன் போர்க்களங்களில் வெற்றிவாகை சூடுகிறான். அசுவினிகளின் புகழைச் சொல்வதன் மூலம் ஒருவன் நோய்களில் இருந்து விடுபடுகிறான்.(82) ஓ! மன்னா, இவ்வாறு நித்திய பிரம்மத்திற்கு ஒப்பான சாவித்திரி மந்திரங்களை நான் உனக்குச் சொன்னேன். வேறேதும் என்னிடம் கேட்ட விரும்பினால், நீ அவ்வாறே செய்வாயாக. ஓ! பாரதா நான் உனக்குப் பதிலளிப்பேன்” என்றார் {பீஷ்மர்}.(83)

பிராமண மேன்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 151-பிராமணர்களின் மேன்மையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“வழிபடத்தகுந்தவர் எவர்? நாம் வணங்க வேண்டியவர் எவர்? உண்மையில், எவரிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, எந்தெந்த வகையினரிடம் எந்தெந்த ஒழுங்கு நடைமுறை களங்கமற்றதாகக் கருதப்படுகிறது?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பிராமணர்களை அவமதிப்பது, தேவர்களையே அவமதிப்பதாகும். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்களை வணங்குவதன் மூலம் ஒருவன் எந்தக் களங்கத்தையும் இழைப்பதில்லை.(2) உண்மையில் அவர்கள் வழிபடத்தகுந்தவர்களாவர். அவர்கள் நாம் வணங்கத்தகுந்தவர்கள் ஆவர். உன் மகன்களிடம் நடந்து கொள்வதைப் போல நீ அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், பெரும் ஞானம் கொண்ட அம்மனிதர்களே உலகங்கள் அனைத்தையும் தாங்குகிறார்கள்.(3) அனைத்து உலகங்களிலும் அறத்தின் பெரும்பாலங்களாக இருப்போர் பிராமணர்களே. அனைத்து வகைச் செல்வங்களையும் துறப்பதிலேயே அவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. வாக்கைக் கட்டுப்படுத்தும் நோன்புக்கு அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆவர்.(4) உயிரினங்கள் அனைத்திற்கும் இனிமையான அவர்கள் பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்பவர்களாவர். அவர்கள் இந்த அண்டத்தின் உயிரினங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவர்கள். உலகங்களை ஆளும் விதிமுறைகள் அனைத்தின் ஆசிரியர்கள் அவர்கள். பெரும் புகழைக் கொண்டவர்கள் அவர்கள்.(5)

தவங்களே எப்போதும் அவர்களின் பெருஞ்செல்வமாக இருக்கின்றன. வாக்கே அவர்களது பலமாக இருக்கிறது. அவர்கள் நோற்கும் கடமைகளிலிருந்தே அவர்களது சக்தி பாய்கிறது. அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களான அவர்கள், நுட்பமான கருத்துகளையும் அறியும் நுண்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(6) அவர்கள் நியாயமான ஆசைகளைக் கொண்டவர்கள். கடமைகளை நன்கு செய்து வாழ்பவர்கள் அவர்கள். அறத்தின் பெரும்பாலங்கள் அவர்கள். இருப்பில் இருக்கும் நால்வகை உயிரினங்களும் அவர்களையே தங்கள் புகலிடங்களாகச் சார்ந்திருக்கின்றன.(7) அவர்களே அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகவோ, சாலையாகவோ இருக்கின்றனர். அவர்களே அனைவரின் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். அவர்களே வேள்விகள் அனைத்தையும் எப்போதும் தாங்குபவர்கள். அவர்கள் தங்கள் தந்தைமார் மற்றும் பாட்டன்களின் கனமான சுமைகளை எப்போதும் சுமப்பவர்கள்.(8) வலிமைமிக்க மாடுகளைப் போலக் கடினமான சாலைகளைக் கடக்கும்போதும் தங்கள் கனமான சுமைகளால் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை. பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களின் தேவைகளில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஹவ்யம் மற்றும் கவ்யத்தின் முதல் பங்கை உண்ணும் உரிமை அவர்களுக்கு உண்டு.(9) அவர்கள் உண்ணும் உணவின்மூலமே மூன்று உலகங்களையும் பேரச்சத்தில் இருந்து விடுவிக்கிறார்கள். அனைத்து உலகங்களுக்குமான தீவாக (புகலிடமாக) அவர்கள் இருக்கிறார்கள். பார்வை கொண்ட மனிதர்கள் அனைவரின் கண்களாக அவர்களே இருக்கின்றனர்.(10)

சிக்ஷை என்ற பெயரில் அறியப்படும் ஞானத்தின் அனைத்துக் கிளைகளும், ஸ்ருதிகள் அனைத்தும் அவர்களின் செல்வமாகின்றன. பெருந்திறனுடன் கூடிய அவர்கள் பொருட்களின் மிகநுட்பமான உறவுகளை அறிந்தவர்களாக இருக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் கதியை நன்கறிந்தவர்களாக இருக்கும் அவர்களது எண்ணங்கள் எப்போதும் ஆன்ம அறிவியலிலேயே ஈடுபட்டிருக்கின்றன.(11) அனைத்துப் பொருட்களின் தொடக்கம், நடு மற்றும் முடிவு ஆகியவற்றின் அறிவுடன் கூடியவர்களாகவும், தாங்கள் கொண்ட ஞானத்தில் உள்ள உறுதியுணர்வின் விளைவால் எந்த ஐயமும் இல்லாதவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பதற்கிடையிலான வேறுபாடுகளில் முழு விழிப்புணர்வுடன் இருக்கும் அவர்களே உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(12) அவர்கள் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, உலகப் பொருட்கள் யாவற்றிலும் தொடர்பறுந்தவர்களாக இருக்கிறார்கள். மதிக்கத்தகுந்த அவர்கள், ஞானமும், உயர்ந்த ஆன்மாக்களையும் கொண்ட மனிதர்களால் எப்போதும் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.(13) சந்தனம், அழுக்கான சேறு ஆகியவற்றிலும், எது உணவு, எது உணவில்லை என்பதிலும் அவர்கள் சமமான பார்வையைச் செலுத்துவார்கள். மெல்லிய காவி ஆடைகள், நார்மடி பட்டாடைகள், விலங்கின் தோல் ஆகியவற்றில் தங்கள் கண்களைச் சமமாகச் செலுத்துகிறார்கள்.(14) அவர்கள், எந்த உணவையும் பல நாட்கள் உண்ணாமல், வாழ்வதாரங்களை விலக்குவதன் மூலம் தங்கள் அங்கங்களை வற்ற செய்து வாழ்பவர்கள். வேத கல்வி மற்றும் புலனடக்கத்தில் அவர்கள் உள்ளார்வத்துடன் தங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(15)

அவர்கள் தேவர்களல்லாதவர்களை தேவர்களாகவும், தேவர்களை தேவர்களல்லாதவர்களாகவும் ஆக்குபவர்கள். சினமடைந்தால் அவர்களால் வேறு உலகங்களையும், இருப்பவர்களைத் தவிர்த்து வேறு லோகபாலர்களையும் உண்டாக்க முடியும்.(16) அந்த உயர் ஆன்மாக்களுடைய சாபத்தின் மூலமே பெருங்கடலானது குடிக்க முடியாத வகையில் உப்பானது. அவர்களுடைய கோபமெனும் நெருப்பு காலத்தால் தணிவடையாமல் இன்னும் தண்டகக் காட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.(17) அவர்கள் தேவர்களின் தேவர்களாகவும், காரணங்கள் அனைத்தின் காரணங்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அதிகாரங்கள் அனைத்தின் அதிகாரமாக இருக்கின்றனர். புத்தியும் ஞானமும் கொண்ட எந்த மனிதன் அவர்களை அவமதிக்க முயல்வான்?(18) அவர்களில் இளையோரும், முதியோரும் கௌரவங்களுக்குத் தகுந்தவர்களே. அவர்கள் தங்கள் (வயதின் விளைவால் அல்லாமல்) தவங்கள் மற்றும் ஞானத்தில் உள்ள தனிச்சிறப்புகளின் விளைவால் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள்.(19)

ஞானமற்ற பிராமணனும் தேவனாவான், பிறரைத் தூய்மைப்படுத்தும் உயர்ந்த கருவியாவான். அவர்களுக்கு மத்தியில் அறிவைப் படைத்தவன் உயர்ந்த தேவனும், முற்றாக நிறைந்த பெருங்கடலைப் போன்றவனும் ஆவான்.(20) கல்விமானாகவோ, கல்லாதவனாகவோ இருந்தாலும் பிராமணன் எப்போதும் உயர்ந்த தேவனே. (மந்திரங்களின் துணையால்) புனிதமாகவோ, புனிதமற்றோ இருந்தாலும் நெருப்பு {அக்னி} எப்போதும் பெருந்தேவனே.(21) சுடர்மிக்க நெருப்பானது சுடலையில் எரிந்தபோதும், அஃது எரியும் இடத்தினுடைய தன்மையின் விளைவால் களங்கமடைந்ததாக ஒருபோதும் கருதப்படுவதில்லை. வேள்விப்பீடத்தில் இருந்தாலும், அறையில் இருந்தாலும் தெளிந்த நெய் எப்போதும் அழகாகவே தெரியும்.(22) எனவே, ஒரு பிராமணன் எப்போதும் தீச்செயல்களில் ஈடுபடுபவனாக இருப்பினும் அவன் மதிக்கத்தகுந்தவனாகவே கருதப்பட வேண்டும். உண்மையில், பிராமணனே எப்போதும் உயர்ந்த தேவன் என்பதை அறிவாயாக” என்றார் {பீஷ்மர்}.(23)

எவ்வகை உயிரினம்? – அநுசாஸனபர்வம் பகுதி – 152-தத்தாத்ரேயரிடம் இருந்து நான்கு வரங்களை அடைந்த கார்த்தவீரியார்ஜுனன்; பிராமண மகிமை குறித்து வாயு தேவனுக்கும் கார்த்தவீரியார்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, ஓ! மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெகுமதியைக் கண்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்? உண்மையில், பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெற்றியால் வழிநடத்தப்பட்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பவனனுக்கும், அர்ஜுனனுக்கும் {கார்த்தவீரியார்ஜுனகுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஆயிரங்கரங்களைக் கொண்டவனும், பேரெழில்வாய்ந்தவனுமான வலிமைமிக்கக் கார்த்தவீரியன் பழங்கலாத்தில் உலகம் அனைத்திற்குமான தலைவனானான். மாஹிஷ்மதி நகரம் அவனுடைய தலைநகரமாக இருந்தது.(3) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த க்ஷத்திரிய குல ஹைஹய {ஹேஹயத்} தலைவன், கடல்களைத் தன் கச்சையாகக் கொண்டவளும், தீவுகள், தங்கச்சுரங்கங்கள் மற்றும் மதிப்புமிக்க ரத்தினச் சுரங்கங்கள் அனைத்துடன் கூடியவளுமான மொத்த பூமியையும் ஆண்டு வந்தான்.(4) க்ஷத்திரிய வகைக்கான கடமைகளைத் தன் முன் கொண்டவனும், பணிவுடனும், வேத அறிவுடனும் கூடிய அம்மன்னன், தத்தாத்ரேய முனிவருக்குப் பெரும் செல்வக்கொடையை அளித்தான்.(5) உண்மையில், கிருதவீரியனின் மகனால் இவ்வாறு துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தவசி, அவனிடம் நிறைவடைந்தவராக, தம்மிடம் மூன்று வரங்களைக் கேட்குமாறு அவனைக் கேட்டுக் கொண்டார்.(6)

வரங்கள் குறித்து அம்முனிவரால் இவ்வாறு வேண்டப்பட்ட அம்மன்னன், அவரிடம், “நான் என் துருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் போது ஆயிரம் கரங்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும். எனினும், வீட்டில் இருக்கும் போது, வழக்கம் போலவே இரு கரங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.(7) உண்மையில் போரில் ஈடுபடும்போது, ஆயிரம் கரங்களைப் படைத்தவனாகப் போராளிகள் என்னைக் காண வேண்டும். உயர்ந்த நோன்புகளை நோற்றவனான நான், என் ஆற்றலின் துணையுடன் மொத்த பூமியையும் அடக்குவதில் வெல்ல வேண்டும்.(8) அறம் சார்ந்து பூமியை அடைந்த பிறகு அவளை நான் விழிப்புடன் ஆள வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான்காவது வரத்தையும் நீர் அருள நான் வேண்டுகிறேன்.(9) ஓ! களங்கமற்றவரே, எனக்கு உதவும் மனோநிலையில் நீர் இருப்பதன் விளைவால், எனக்கு அஃதை அருள்வதே உமக்குத் தகும். நான் உம்மையே சார்ந்திருக்கிறேன். தான் தவற நேரும்போதெல்லாம் அறவோர் என்னைத் திருத்தி நிலைபெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டான்.(10)இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், அந்த மன்னனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட அந்த மன்னனால் அந்த வரங்கள் இவ்வாறே அடையப்பட்டன.(11) நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் கூடிய தன் தேரைச் செலுத்திக் கொண்டிருந்த அந்த ஏகாதிபதி, தன்னுடைய பேராற்றலால் குருடாகி, “பொறுமை, சக்தி, புகழ், வீரம், ஆற்றல் மற்றும் பலம் ஆகியவற்றில் எனக்கு நிகராகக் கருதத்தகுந்தவன் எவன்?” என்றான். அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஆகாயத்தில் இருந்து ஒரு புலப்படாத குரல்,(13) “ஓ! இழிந்த மூடா, க்ஷத்திரியனைவிடப் பிராமணன் உயர்ந்தவன் என்பதை நீ அறியமாட்டாயா? பிராமணனால் உதவப்படும் க்ஷத்திரியனே அனைத்து உயிரினங்களையும் ஆள்கிறான்” என்றது.(14)

{கார்த்தவீரிய} அர்ஜுனன், “நான் நிறைவடையும்போது, உயிரினங்களைப் படைக்கவல்லவனாக இருக்கிறேன். நான் கோபமாக இருக்கும்போது, அனைத்தையும் அழிக்கவல்லவனாக இருக்கிறேன். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நானே முதன்மையானவனாக இருக்கிறேன். நிச்சயம் பிராமணன் என்னைவிட உயர்ந்தவனல்ல.(15) பிராமணன் க்ஷத்திரியனைவிட மேன்மையானவன் என்பது முதல் கருத்து. க்ஷத்திரியனே மேன்மையானவன் என்பது எதிர் கருத்து. (ஓ! புலப்படாதவளே, அடிப்படையில் க்ஷத்திரிய மேன்மை வேண்டப்படும் செயலில்) இருவரும் ஒன்று சேர்வதாக நீ சொல்கிறாய். எனினும், இதில் ஒரு வேறுபாடு காணக்கிடைக்கிறது.(16) பிராமணர்கள், க்ஷத்திரியர்களைப் புகலிடமாகக் கொள்வது காணப்படுகிறது. உண்மையில், பூமி முழுவதிலும், வேதங்களைக் கற்பிக்கும் தோரணையில் அத்தகைய புகலிடத்தை ஏற்கும் அவர்கள் {பிராமணர்கள்}, க்ஷத்திரியர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈர்க்கிறார்கள்.(17) உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் கடமை க்ஷத்திரியர்களுக்குரியது. க்ஷத்திரியர்களிடம் இருந்தே பிராமணர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடைகின்றனர்[1]. அவ்வாறிருக்கையில் பிராமணன் எவ்வாறு க்ஷத்திரியர்களைவிட மேன்மையானவனாக இருக்க முடியும்?(18) நன்று, உயிரினங்கள் அனைத்தையும் விட மேன்மையாக இருந்தாலும் பிச்சையெடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களும், தற்பெருமை கொண்டவர்களுமான உங்கள் பிராமணர்களை இன்று முதல் என் ஆளுகைக்குள் கொண்டு வருகிறேன்.(19) ஆகாயத்தில் இருந்து கன்னி காயத்ரி சொல்வது உண்மையல்ல. தோலாடை உடுத்திய பிராமணர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர். சுதந்திரமாக இருக்கும் அவர்களை என் ஆளுகைக்குள் கொண்டவரப் போகிறேன்.(20) தேவனோ, மனிதனோ, நான் அனுபவிக்கும் இந்த அரசுரிமையில் இருந்து என்னைத் தூக்கி வீச மூவுலகங்களிலும் யாருமில்லை. எனவே, நான் நிச்சயம் பிராமணர்களைவிட மேன்மையானவனே.(21) பிராமணர்களையே முதன்மைவாசிகளாகக் கருதப்படும் இவ்வுலகில், க்ஷத்திரியர்களே முதன்மையானவர்கள் என்பது நிறுவப்படும். போரில் என் வலிமையைப் பொறுத்துக்கொள்ளவல்லவன் எவனுமில்லை” என்றான்[2].(22)அப்போது, வானத்தில் இருந்து அம்மன்னனிடம் பேசிய காற்றின் தேவன் {வாயு}, “பாவம் நிறைந்த இந்த மனோநிலையைக் கைவிடுவாயாக. பிராமணர்களை வணங்குவாயாக. அவர்களுக்குத் தீங்கிழைப்பதன் மூலம் நீ உன் நாட்டுக்குத் தொல்லைகளைக் கொண்டு வரப் போகிறாய்.(24) மன்னனாக இருக்கும் உன்னைப் பிராமணர்கள் கொன்றுவிடுவார்கள், அல்லது பெரும் வலிமை கொண்ட அவர்கள் உன் சக்தியைக் கெடுத்து உன்னை உன் நாட்டில் இருந்து விரட்டிவிடுவார்கள்” என்றான்.(25)

இந்தப் பேச்சைக் கேட்ட மன்னன், அவ்வாறு பேசியவனிடம், “உண்மையில், நீ யார்?” என்று கேட்டான். காற்றின் தேவன், “நான் காற்றின் தேவன் மற்றும் தேவர்களின் தூதுவன். உனக்கான நன்மையே நான் உனக்குச் சொன்னேன்” என்றான்.(26)

{கார்த்தவீரிய} அர்ஜுனன், “ஓ! நீ இன்று பிராமணர்களிடம் கொண்ட உன் பக்தியையும், பற்றையும் காட்டிவிட்டாய். பிராமணன் பூமி சார்ந்த என்ன வகை உயிரினம் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக.(27) ஒரு மேன்மையான பிராமணன் எந்த வகையிலாவது காற்றுக்கு ஒப்பானவனா என்பதை எனக்குச் சொல்வாயாக. அல்லது, அவன் நீரையோ, நெருப்பையோ, சூரியனையோ, ஆகாயத்தையோ போன்றவனா?” என்று கேட்டான்.(28)

வெட்டவெளிமெய்! – அநுசாஸனபர்வம் பகுதி – 153-பிராமணர்களின் மேன்மையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…

காற்றின் தேவன் {வாயு தேவன் கார்த்தவீரியனிடம்}, “ஓ! மூடா, உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களான பிராமணர்கள் அனைவரின் குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, நீ சொன்ன அனைத்தையும்விடப் பிராமணன் மேன்மையானவன்.(1) பழங்காலத்தில் பூமாதேவியானவள், அங்கர்களின் மன்னனிடம் பகை பாராட்டி பூமியென்ற தன் தன்மையைக் கைவிட்டாள். மறுபிறப்பாளரான கஸ்யபர், அவளை {பூமா தேவியை} முடக்கி, அழிவடையச் செய்தார்[1].(2) ஓ! மன்னா, பிராமணர்களைப் பூமியில் உள்ளதைப் போலவே எப்போதும் சொர்க்கத்திலும் வெல்லப்படமுடியாதவர்கள். பழங்காலத்தில், பெரும் முனிவரான அங்கிரஸ், தன் சக்தியின் மூலம் நீரனைத்தையும் பருகினார்.(3) அந்த உயர் ஆன்ம முனிவர், பாலைக் குடிப்பது போல நீரனைத்தையும் குடித்தும், தன் தாகம் தணிந்தவராக உணரவில்லை. எனவே, அவர் பேரலைகள் எழும்பும் நீர் நிறைந்ததாகப் பூமியை மீண்டும் செய்தார்.(4) மற்றொரு சந்தர்ப்பத்தில், அங்கிரஸ் என்னிடம் கோபமடைந்த போது, நான் உலகத்தைவிட்டுத் தப்பிச் சென்று, அந்த முனிவரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, ஒரு பிராமணரின் {உதத்தியரின் / உசத்தியரின்} அக்னிஹோத்ரத்தில் நெடுங்காலம் ஒளிந்திருந்தேன்.(5)சிறப்புமிக்கப் புரந்தரன், அஹல்யையின் உடலில் ஆசை கொண்டதன் விளைவால், கௌதமரால் சபிக்கப்பட்டாலும், அறம் மற்றும் செல்வத்தின் நிமித்தமாக அந்தத் தேவர்களின் தலைவனை அம்முனிவர் முற்றாக அழிக்கவில்லை.(6) ஓ! மன்னா, முற்காலத்தில் தெளிந்த நீரால் நிறைந்திருந்த பெருங்கடல், பிராமணர்களால் சபிக்கப்பட்டு உப்பு நீரின் சுவையை அடைந்தது.(7) பொன்னிறம் கொண்டவனும், புகையற்றிருக்கும்போது, பிரகாசமாகச் சுடர்விடுபவனும், ஒன்றுசேர்ந்து மேலெழும் தழல்களைக் கொண்டவனுமான அக்னியும் கூட, கோபமடைந்த அங்கிரஸால் சபிக்கப்பட்ட போது, இந்தக் குணங்கள் அனைத்தையும் இழந்தான்[2].(8) பெருங்கடலைத் துதிக்க வந்தவர்களும், சகரனின் மகன்களுமான அறுபதினாயிரம் பேரும் பொன்னிறம் கொண்ட பிராமணரான கபிலரின் மூலம் பொடியாக்கப்பட்டதைப் பார்.(9) நீ பிராமணர்களுக்கு நிகரானவனில்லை. ஓ! மன்னா, உன் நன்மையை நாடுவாயாக. பெரும் பலம் கொண்ட க்ஷத்திரியனும், தாயின் கருவறையில் உள்ள பிராமணப் பிள்ளைகளைக்கூட வணங்குகிறான்.(10)தண்டகர்களின் பெரும் நாடு ஒரு பிராமணனால் அழிக்கப்பட்டது. வலிமைமிக்க க்ஷத்திரியனான தாலஜங்கன்ஔர்வர் என்ற ஒற்றைப் பிராமணரால் அழிக்கப்பட்டான்.(11) நீயும் கூட, தத்தாத்ரேயரின் அருளின் மூலம், பெரும் நாட்டையும், அடைதற்கரிதானவையான பெரும் வலிமை, அறத்தகுதி, கல்வி ஆகியவற்றை அடைந்திருக்கிறாய்.(12) ஓ! அர்ஜுனா, பிராமணனான அக்னியை நீ ஏன் ஒவ்வொரு நாளும் வணங்குகிறாய்? அண்டத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வேள்விக் காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் அவனே. இதை நீ அறிந்தாயில்லையா?(13) உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் ஒரு மேன்மையான பிராமணனே உண்மையில், வாழும் உலகைப் படைத்தவன் என்பதை நீ அறியாமலில்லை எனும்போது, ஏன் இந்த மூடத்தனத்தில் அவதியுறுகிறாய்?(14) புலப்படாதவனும், பலங்கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடன் கூடிய எல்லையற்ற அண்டத்தையும் படைத்தவன் அனைத்து உயிரினங்களின் தலைவனான பிரம்மனாவான் (அவனும் ஒரு பிராமணனாவான்).(15)

ஞானமற்ற சிலர், பிரம்மன் ஒரு முட்டையில் இருந்து பிறந்தான் என்று சொல்கின்றனர். மூலமுட்டை வெடித்தபோது, மலைகளும், திசைப்புள்ளிகளும், நீரும், பூமியும், சொர்க்கங்கள் அனைத்தும் இருப்புக்குள் எழுந்தன.(16) அந்தப் படைப்பின் பிறப்பை யாரும் காணவில்லை. அவ்வாறிருக்கையில் பிறப்பில்லாதவனாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரம்மன், மூல முட்டையில் இருந்து பிறந்தான் என்று எவ்வாறு சொல்லப்படுகிறது? படைக்கப்படாத வெளியே மூல முட்டையெனச் சொல்லப்படுகிறது. படைக்கப்படாத வெளியில் (அல்லது பரமாத்மாவில்) இருந்தே பெரும்பாட்டான் {பிரம்மன்} பிறந்தான்[3].(17) “படைக்கப்படாத வெளியில் இருந்து பெரும்பாட்டன் பிறந்த பிறகு, வேறொன்றும் இருந்திருக்காதே அவன் எங்கே நின்றான்?” என்று நீ கேட்டால், பின்வரும் சொற்களில் பதில் அமையக் கூடும். நினைவு {அகங்காரம்} என்ற பெயரில் ஓர் இருப்பு உள்ளது. வலிமைமிக்க அந்த இருப்பு பெருஞ்சக்தி கொண்டதாகும்.(18) {அப்போது} முட்டை என்று ஏதுமில்லை. எனினும், பிரம்மன் இருந்தான். அவன் அண்டத்தைப் படைத்தவன், அவனே அதன் மன்னன்[4]” என்றான் {வாயு தேவன்}.காற்றின் தேவனால் {வாயுவால்} இவ்வாறு சொல்லப்பட்டதும் மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான்”.(19)

உதத்தியரும் வருணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 154-பிராமணர்களின் மேன்மையை விவரிக்க கசியபர் மற்றும் உதத்தியரின் கதையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…

காற்றின் தேவன் {வாயு கார்த்தவீரியார்ஜுனனிடம்}, “ஓ! மன்னா, ஒரு காலத்தில், அங்கன் என்ற பெயரைக் கொண்ட ஓர் ஆட்சியாளன், மொத்த பூமியையும் பிராமணர்களுக்கு வேள்விக் கொடையாக அளிக்க விரும்பினான். இதனால் பூமி கவலையில் நிறைந்தாள்.(1)

அவள் {பூமி}, “நான் பிரம்மனின் மகளாவேன். அனைத்து உயிரினங்களையும் நான் தாங்குகிறேன். ஐயோ, என்னை அடைந்த பிறகும் மன்னர்களில் முதன்மையான இவன் ஏன் பிராமணர்களுக்கு என்னைக் கொடுக்க விரும்புகிறான்?(2) இந்த நிலத் தன்மையைக் கைவிட்டு நான் என் தந்தையிடம் செல்லப் போகிறேன். இந்த மன்னன் தன் நாடு மற்றும் அனைத்துடன் அழிவையடையட்டும்” என்று நினைத்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்ததும் அவள் பிரம்மலோகத்திற்குச் சென்றாள்.(3) இவ்வாறு {தன் உடல்வடிவமான பூமியைவிட்டுச்} செல்லும் பூமாதேவியைக் கண்ட முனிவர் கசியபர், யோகத்தின் உதவியால் தன் உடலைக் கைவிட்டு அந்தத் தேவியின் புலப்படத்தக்க உடல்வடிவத்திற்குள் {பூமிக்குள்} உடனே நுழைந்தார்.(4) கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட பூமியானது, செழிப்பில் வளர்ந்து அனைத்து வகைப் பயிர்களின் விளைச்சலும் நிறைந்ததாக இருந்தது. உண்மையில், ஓ! மன்னா, பூமிக்குள் கசியபர் நுழைந்த நேரத்தில் இருந்து, எங்கும் அறமே முதன்மையானது, அனைத்து அச்சங்களும் இல்லாமற்போயின.(5)

இவ்வழியில், ஓ! மன்னா, பூமியானது, முப்பதாயிரம் தேவ வருடங்கள் கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட நிலையிலேயே இருந்தது. பிரம்மனின் மகளுடைய ஆன்மா ஊடுருவியிருந்தபோது இருந்த செயல்பாடுகள் அனைத்துடனும் சேர்ந்து முழுமையான உயிர்ப்புடன் இருந்தது.(6) இந்தக் காலம் முடிந்ததும் அந்தத் தேவி {பூமா தேவி} பிரம்மலோகத்தில் இருந்து திரும்பி வந்து, கசியபரை வணங்கி நின்று, அதுமுதல் அந்த முனிவரின் மகளானாள் {காசியபி ஆனாள்}.(7) கசியபர் ஒரு பிராமணராவார். ஓ! மன்னா, இஃது அவர் செய்த சாதனையாகும். அந்தக் கசியபரை விட மேன்மையானவன் என்று சொல்லத்தக்க ஒரு க்ஷத்திரியனின் பெயரை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(8)

இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். அவனிடம் மீண்டும் காற்றின் தேவன் {வாயு}, “ஓ! மன்னா, அங்கிரஸ் குலத்தில் பிறந்த உதத்தியரின் {உசத்தியரின்} கதையை இப்போது கேட்பாயாக.(9) பத்ரை என்ற பெயரைக் கொண்ட சோமனின் மகள் ஒப்பற்ற அழகுடன் கூடியவளாகக் கருதப்பட்டாள். அவளது தந்தையான சோமன் உதத்தியரை அவளுக்குத் தகுந்த கணவனாகக் கருதினான்.(10) புகழ்பெற்றவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், குற்றமில்லா அங்கங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, பல்வேறு நோன்புகளை நோற்றபடியே, உதத்தியரைத் தன் தலைவனாக அடைய விரும்பிக் கடுந்தவங்களைச் செய்தாள்.(11) சிறிது காலம் கழித்து, சோமனின் தந்தையான அத்ரி, உதத்தியரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் புகழ்பெற்ற அந்தக் கன்னிகையை அவருக்கு அளித்தார். அபரிமிதமான அளவில் வேள்விக் கொடைகளைக் கொடுப்பவரான உதத்தியர், அந்தப் பெண்ணைத் தம் மனைவியாக முறைப்படி ஏற்றுக் கொண்டார்.(12)

எனினும், அழகிய வருணன் நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணின் மீது ஆசை கொண்டிருந்தான். உதத்தியர் வசித்து வந்த வனத்திற்கு வந்த அவன், நீராடுவதற்காக யமுனையில் மூழ்கிய அந்தப் பெண்ணை அபகரித்துச் சென்றான்.(13) அந்த நீர்நிலைகளின் தலைவன், இவ்வாறு அவளை அபகரித்துத் தன் வசிப்பிடத்திற்குக் கொண்டு சென்றான். அந்த மாளிகை அற்புதம் நிறைந்த தன்மையுடன் இருந்தது. அஃது அறுநூறாயிரம் தடாகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(14) வருணனின் அரண்மனையைவிட மிக அழகானதாக வேறு எந்த மாளிகையும் கருதப்பட்டதில்லை. பல்வேறு அரண்மனைகளாலும், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் இன்பத்திற்கான பல்வேறு பொருட்களின் இருப்பாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(15) அங்கே, ஓ! மன்னா, நீர்நிலைகளின் தலைவன் அந்த அரண்மனைக்குள் அந்தக் காரிகையுடன் விளையாடினான். சிறிது காலம் கழித்து உதத்தியரிடம் அவரது மனைவி கெடுக்கப்பட்டது சொல்லப்பட்டது.

உண்மையில், செய்திகள் அனைத்தையும் நாரதரிடம் இருந்து கேட்ட உதத்தியர், அந்தத் தெய்வீக முனிவரிடம்,(16) “ஓ! நாரதரே, வருணனிடம் சென்று கடுமையாக நீர் பேச வேண்டும். அவன் ஏன் என் மனைவியை அபகரித்தான் என்றும், என் பெயரை அவனிடம் சொல்லி அவளைத் தர வேண்டும் என்றும் கேட்பீராக.(17) மேலும் அவனிடம், “ஓ! வருணா, நீ உலகங்களைக் காப்பவனன்றி அழிப்பவனல்ல. அவ்வாறிருக்கையில், சோமனால் எனக்கு அளிக்கப்பட்ட என் மனைவியை நீ ஏன் அபகரித்தாய்?” என்றும் கேட்பீராக” என்று சொன்னார் {உதத்தியர்}.(18)

தெய்வீக முனிவரான நாரதர், உதத்தியரால் இவ்வாறு வேண்டப்பட்டதும், வருணன் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவனிடம், “உதத்தியரின் மனைவியை விடுவிப்பாயாக. உண்மையில் நீ ஏன் அவளை அபகரித்தாய்?” என்று கேட்டார்.(19)

நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன், அவரிடம், “மருட்சியுடைய இந்தப் பெண் எனது பேரன்புக்குரியவள். நான் அவளை அனுப்பத் துணியேன்” என்றான்.(20)

இந்த மறுமொழியைக் கேட்ட நாரதர், உதத்தியரிடம் சென்று, உற்சாகமில்லாமல் அவரிடம்,(21) “ஓ! பெருந்தவசியே, வருணன் என் தொண்டையைப் பிடித்து {கழுத்தைப் பிடித்து} அவனது வீட்டில் இருந்து என்னை விரட்டிவிட்டான். அவன் உமது மனைவியைத் திருப்பி அனுப்ப விரும்பவில்லை. நீர் விரும்பியவண்ணம் செயல்படுவீராக” என்றார்[1].(22)நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அங்கிரஸ் {உதத்தியர்}, கோபத்தில் எரிந்தார். தவச் செல்வம் கொண்ட அவர், நீர் நிலைகளைத் திடமாக்கி, தன் சக்தியால் அவற்றைக் குடித்தார்.(23) இவ்வாறு நீரனைத்துப் பருகப்பட்டதும் நீரின் தேவன், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து உற்சாகமிழந்தான். இவ்வளவு நடந்தும் அவன் உதத்தியரின் மனைவியைக் கொடுத்தானில்லை.(24)

பிறகு மறுபிறப்பாளர்களில் முதன்மையான உதத்தியர், கோபத்தில் நிறைந்தவராகப் பூமியிடம், “ஓ! இனியவளே, அறுநூறாயிரம் தடாகங்கள் உள்ள நிலத்தை எனக்குக் காட்டுவாயாக” என்றார்.(25)

முனிவரின் இந்த வார்த்தைகளில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பெருங்கடல் பின்வாங்கியதும், விளைச்சலே இல்லாத நிலம் தோன்றியது. அந்தப் பகுதியின் வழியாகப் பாய்ந்த ஆற்றிடம், உதத்தியர்,(26) “ஓ! சரஸ்வதி, இங்கே புலப்படாதவளாவாயாக. உண்மையில், ஓ! மருண்ட மங்கையே, இந்தப்பகுதியை விட்டுப் பாலைவனத்திற்குச் செல்வாயாக. ஓ! மங்கல தேவி, நீ இல்லாமல் இந்தப் பகுதி புனிதமற்றதாகட்டும்” என்றார்.(27)

(நீரின் தலைவன் வசித்த) அந்தப் பகுதி வறண்டதும், அவன் உதத்தியரின் மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிரஸிடம் சென்று அவளை அவரிடம் கொடுத்தான்.(28) தம் மனைவியைத் திரும்பப் பெற்ற உதத்தியர் உற்சாகம் நிறைந்தவரானார். ஓ! ஹைஹய குலத் தலைவா, அப்போது அந்தப் பெரும்பிராமணர், இந்த அண்டத்தையும், நீரின் தேவனையும் {வாயுவையும்} தாம் கொடுத்துவந்த துன்பத்தில் இருந்து மீட்டார்.(29) ஓ! மன்னா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் உதத்யர், தம் மனைவியைத் திரும்பப் பெற்றதும், வருணனிடம்,(30) “நீரின் தலைவா {ஜலாதிபதியே}, என் தவங்களின் துணையுடன் உனக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்து வேதனையில் உரக்க அழ வைத்த பிறகே நான் என் மனைவியை மீட்டுக் கொண்டேன்” என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, தம் மனைவியுடன் அவர் தமதில்லத்திற்குச் சென்றார்.(31) ஓ! மன்னா, பிராமணர்களில் முதன்மையான உதத்தியர் இவ்வாறே இருந்தார். நான் இன்னும் சொல்லட்டுமா? அல்லது, நீ உன் கருத்தில் இன்னும் பிடிவாதமாக இருக்கப் போகிறாயா? உதத்தியருக்கும் மேன்மையான எந்த க்ஷத்திரியன் இருக்கிறான்?” என்று கேட்டான் {வாயு}”.(32)

அகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 155- பிராமணர்களான அகஸ்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம் பேசினான், “ஓ! மன்னா, பிராமணரான அகஸ்தியரின் பெருமையைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் தேவர்கள் அசுரர்களால் அடக்கப்பட்டதால் அவர்கள் உற்சாகமிழந்தவர்களாக இருந்தனர். தேவர்களுக்கான வேள்விகள் அனைத்தும் கொள்ளையடிக்கபட்டன, பித்ருக்களின் ஸ்வதாவும் அபகரிக்கப்பட்டது.(2) உண்மையில், ஓ! ஹைஹயர்களின் தலைவா, மனிதர்கள் செய்யும் அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் தானவர்களால் தடுக்கப்பட்டன. தேவர்கள் செழிப்பிழந்து பூமியில் திரிந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு நாள் அவ்வாறு அவர்கள் திரிந்து வருகையில் உயர்ந்த நோன்புகளையும் பெருஞ்சக்தியையும், சூரியனைப் போன்ற சுடர்மிக்கக் காந்தியையும் கொண்ட பிராமணரான அகஸ்தியரைக் கண்டனர்.(4)

அவரை முறையாக வணங்கிய தேவர்கள், மதிப்புக்குரிய வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மாவிடம் {அகஸ்தியரிடம்},(5) “நாங்கள் போரில் தானவர்களால் வீழ்த்ததால் செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, பேரச்சந்தரும் இந்நிலையில் இருந்து நீர் எங்களை மீட்பீராக” என்று வேண்டினர்.(6)

தேவர்களின் அவலநிலையை இவ்வாறு அறிந்த அகஸ்தியர் (தானவர்களிடம்) பெருங்கோபம் கொண்டார். பெருஞ்சக்தி கொண்ட அவர், அண்டப் பேரழிவின் போது தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல உடனே சுடர்விடத் தொடங்கினார்.(7) அம்முனிவரிடம் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கக் கதிர்களில் தானவர்கள் எரியத் தொடங்கினர். உண்மையில், ஓ! மன்னா, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஆகாயத்திலிருந்து விழத் தொடங்கினர்.(8) அகஸ்தியரின் சக்தியில் எரிந்த தானவர்கள், சொர்க்கத்தையும், பூமியையும் கைவிட்டு, தெற்குத் திசை நோக்கித் தப்பி ஓடினர்.(9)

அந்நேரத்தில் தானவ மன்னன் பலி, பாதாளலோகத்தில் ஒரு குதிரை வேள்வியைச் செய்து கொண்டிருந்தான். பூமியின் குடல்களுக்குள் இருந்த அந்தப் பகுதியில் அவனோடு வசித்து வந்த பேரசுரர்கள் எரியாமல் இருந்தனர்.(10) தேவர்கள், தங்கள் பகைவர்கள் அழிந்ததும், முற்றிலும் அச்சம் விலகியவர்களாகத் தங்கள் உலகங்களை மீட்டனர். அவர்களுக்காக அவர் சாதித்த காரியத்தின் மூலம் ஊக்கமடைந்த அவர்கள், பூமியின் குடல்களுக்குள் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்த அசுரர்களை அழிக்குமாறு அம்முனிவரை வேண்டினர்.(11)

தேவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அகஸ்தியர், அவர்களிடம், “ஆம், பூமிக்கடியில் வசிக்கும் அசுரர்களையும் எரிக்க நான் முழுத் தகுதி கொண்டவனாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்தால் என் தவங்கள் பழுதடையும். எனவே, நான் என் சக்தியைப் பயன்படுத்தமாட்டேன்” என்றார்.(12)

ஓ! மன்னா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்க முனிவரின் சக்தியால் தானவர்கள் எரிக்கப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, இவ்வாறே தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அகஸ்தியர், தம் தவங்களின் துணையுடன் அக்காரியத்தைச் சாதித்தார்.(13) ஓ! பாவமற்றவனே, என்னால் விவரிக்கப்பட்டவாறே அகஸ்தியர் இருந்தார். நான் தொடரலாமா? அல்லது, நீ மறுமொழியேதும் கூறப் போகிறாயா? அகஸ்தியரைவிடப் பெரியவனாக எந்த க்ஷத்திரியனும் இருக்கிறானா?” என்று கேட்டான் {வாயு}”.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் {வாயு} மீண்டும், “ஓ! மன்னா, சிறப்புமிக்க வசிஷ்டரின் பெருஞ்சாதனைகளைக் கேட்பாயாக.(15) ஒரு காலத்தில் தேவர்கள், {கங்கையில்} வைகானஸத் தடாகக் கரைகளில் ஒரு வேள்வி செய்வதில் ஈடுப்பட்டிருந்தனர். வேள்வி செய்து வந்த தேவர்கள், வசிஷ்டரின் பலத்தை அறிந்து அவரையே தங்கள் புரோகிதராகத் தங்கள் மனத்தில் நிறுவினர்.(16) அதேவேளையில், மலைகளுக்கொப்பான வடிவங்களைக் கொண்டவர்களும் கலினர்கள் {பலிகள்} என்ற பெயர்படைத்தவர்களுமான தானவ குலத்தினர், தேவர்கள் தங்களின் தீக்ஷையின் விளைவால், மெலிந்து குறைந்திருப்பதைக் கண்டு அவர்களைக் கொல்ல விரும்பினர்.(17)

அந்தப் போரில் தானவர்களில் அங்கம் பழுதுபட்டவர்களும், கொல்லப்பட்டவர்களும் மானஸத் தடாக நீரில் மூழ்கச் செய்யப்பட்டு, பெரும்பாட்டனின் வரத்தின் விளைவால் உடனே உயிரையும், வன்மையையும் பெற்றனர்.(18) பெரியவையும், பயங்கரமானவையுமான மலைச்சிகரங்களையும், பரிகங்களையும், மரங்களையும் எடுத்துக் கொண்டு தடாகத்தின் நீரைக் கலக்கி, நூறு யோஜனை உயரத்திற்கு அவற்றைப் பெருகச் செய்தனர்.(19) பிறகு அவர்கள் எண்ணிக்கையில் பத்தாயிரமான இருந்த தேவர்களை எதிர்த்து ஓடினர். தானவர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள், தங்கள் தலைவனான வாசவனின் பாதுகாப்பை நாடினார்கள்.(20) எனினும், சக்ரனும் அவர்களால் விரைவில் பீடிக்கப்பட்டான். அவன் மனத்தளர்வுடன் வசிஷ்டரின் பாதுகாப்பை நாடினான். இதன்பேரில் புனித முனிவரான வசிஷ்டர் தேவர்களின் அச்சங்களை விலக்குவதாக உறுதியளித்தார்.(21)

தேவர்கள் பெரிதும் உற்சாகமிழந்திருப்பதைப் புரிந்து கொண்ட அந்தத் தவசி {வசிஷ்டர்}, தமது கருணையின் மூலம் இதைச் செய்தார். அவர் தமது சக்தியை வெளிப்படுத்தி, கலினர்கள் {பலிகள்} என்றழைக்கப்பட்ட அந்தத் தானவர்களை எந்த முயற்சியுமின்றி எரித்தார்.(22) தவங்களையே செல்வமாகக் கொண்ட அம்முனிவர், கைலாசத்திற்குச் சென்றிருந்த கங்கையை அந்த இடத்திற்கு வரச் செய்தார். உண்மையில் கங்கையானவள், அந்தத் தடாகத்தின் நீரைத் துளைத்தபடி தோன்றினாள்.(23) தடாகமானது அந்த ஆற்றால் துளைக்கப்பட்டது {உடைக்கப்பட்டது}. அந்தத் தெய்வீக ஓடையானவள், அத்தடாகத்தின் நீரைத் துளைத்துத் தோன்றி, சரயு என்ற பெயரில் பாய்ந்தாள். அந்தத் தானவர்கள் வீழ்ந்த இடம் அவர்களின் பெயராலேயே  {கலினம் / பலினம் என்று} அழைக்கப்படலாயிற்று.(24)

இவ்வாறே, இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள், வசிஷ்டரின் மூலம் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்பட்டனர். இவ்வாறே, பிரம்மனிடம் வரம்பெற்றவர்களான அந்தத் தானவர்கள், அந்த உயர் ஆன்ம முனிவரால் கொல்லப்பட்டனர்.(25) ஓ! பாவமற்றவனே, வசிஷ்டர் செய்த சாதனையை நான் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? பிராமணரான வசிஷ்டரை விஞ்சியவன் என்று எந்த க்ஷத்திரியனையாவது சொல்ல முடியுமா?” என்று கேட்டான் {வாயு}”.(26)

அத்ரி மற்றும் சியவனர் பெருமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 156-பிராமணர்களான அத்ரி மற்றும் சியவனரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “ஓ! ஹைஹயர்களில் முதன்மையானவனே, உயர் ஆன்ம அத்ரியின் சாதனையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில், இருளில் தேவர்களும், தானவர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டபோது, சூரியன் மற்றும் சோமன் {சந்திரன்} ஆகிய இருவரையும் ராகு {ஸ்வர்ப்பானு} தன் கணைகளால் துளைத்தான்.(2) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இருளில் மூழ்கிய தேவர்கள் வலிமைமிக்கத் தானவர்களின் முன்பு வீழத் தொடங்கினர்.(3) அசுரர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சொர்க்கவாசிகள், தங்கள் பலத்தை இழக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும் கல்விமானுமான பிராமணர் அத்ரி கடுந்தவத்தில் இருப்பதைக் கண்டனர்.(4)

புலன்கள் அனைத்தையும் வென்றவரும், கோபமில்லாதவருமான அந்த முனிவரிடம் {அத்ரியிடம்} அவர்கள், “ஓ! முனிவரே, அசுரர்களின் கணைகாளல் துளைக்கப்பட்டிருக்கும் இந்தச் சோமன் மற்றும் சூரியன் ஆகிய இருவரையும் காண்பீராக.(5) இதன் விளைவால் நாங்கள் இருளில் மூழ்கியிருக்கிறோம், பகைவர்களால் நாங்கள் வீழ்த்தப்படுகிறோம். எங்கள் தொல்லைகளுக்கான ஒரு முடிவை நாங்கள் காணவில்லை. ஓ! பெரும்பலத்தில் தலைவரே, இந்தப் பேரச்சத்தில் இருந்து எங்களை மீட்பீராக” என்றனர்.(6)

அதற்கு முனிவர், “உண்மையில், எவ்வாறு நான் உங்களைப் பாதுகாக்க வேண்டும்?” என்றார். அவர்கள், “நீரே சந்திரமாஸாவீராக. நீரே சூரியனாகி, இந்தக் கள்வர்களைக் கொல்வீராக” என்றனர்.(7)

அவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அத்ரி, இருளை அழிக்கும் சோமனின் வடிவை ஏற்றார். உண்மையில் தமது ஏற்புடைய இயல்பின் விளைவால் அவர் சோமனைப் போன்றே அழகானவராகவும் ஒளி நிறைந்தவராகவும் காணப்படத் தொடங்கினார்.(8) இதைக் கண்டவர்களான உண்மையான சோமனும், உண்மையான சூரியனும் பகைவரின் கணைகளால் இருளடைந்தனர். இந்த ஒளிக்கோள்களின் வடிவங்களை ஏற்ற அத்ரி, தமது தவப் பலத்தின் துணையுடன் போர்க்களத்தின் மீது காந்தியுடன் ஒளிரத் தொடங்கினார்.(9) உண்மையில் அத்ரி, இருள் அனைத்தையும் விலக்கி அண்டத்தை ஒளியில் சுடர்விடச் செய்தார். மேலும் தம் பலத்தை வெளிப்படுத்திய அவர், தேவர்களுடைய பகைவர்களின் கூட்டத்தையும் அடக்கினார்.(10)

அத்ரியினால் எரிக்கப்படும் அந்தப் பேரசுரர்களைக் கண்ட தேவர்களும், அத்ரியின் சக்தியால் பாதுகாக்கப்பட்டவர்களாக, அவர்களை {தானவர்களை} விரைவில் அகற்றத் தொடங்கினர்.(11) தமது சக்தி அனைத்தையும் திரட்டி, தம் ஆற்றலை வெளிப்படுத்திய அத்ரி இவ்வழியிலேயே நாளின் தேவனுக்கு ஒளியூட்டி, தேவர்களை மீட்டு, அசுரர்களைக் கொன்றார்.(12) புனித நெருப்பைத் துணையாகக் கொண்டவரும், அமைதியாக மந்திரங்களை ஓதுபவரும், மான் தோல் உடுத்தியவருமான அந்த மறுபிறப்பாளரால் செய்யப்பட்ட சாதனை இதுவே. ஓ! அரசமுனியே, கனிகளைமட்டுமே உண்டு வாழ்ந்த அந்த முனிவர் செய்த சாதனையைக் காண்பாயாக.(13) உயர் ஆன்ம அத்ரியின் சாதனையை நான் விரிவாக உனக்கு உரைத்தேன். நான் தொடரலாமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? இந்த மறுபிறப்பாள முனிவரைவிட மேன்மையான க்ஷத்திரியன் யாரேனும் உண்டா?” என்று கேட்டான் {வாயு}.(14)

இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “ஓ! மன்னா, (பழங்காலத்தில்) உயர் ஆன்ம சியவனரால் செய்யப்பட்ட சாதனையைக் கேட்பாயாக.(15) அஸ்வினி இரட்டையர்களுக்கு உறுதி மொழி அளித்த சியவனர், பாகனைத் தண்டித்தவனிடம் {இந்திரனிடம்}, “வேறு தேவர்கள் அனைவருடன் சேர்ந்து அஸ்வினிகளையும் சோமம் பருகுபவர்களாகச் செய்வாயாக” என்றார்.(16)

இந்திரன் {சியவனரிடம்}, “அஸ்வினிகள் எங்களால் கைவிடப்பட்டவர்கள். அவர்களைப் பிறரோடு சேர்ந்து சோமம் பருக வேள்வி வட்டத்திற்குள் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அவர்கள் தேவர்களோடு கணக்கிடப்படுவதில்லை. எனவே, எங்களிடம் அவ்வாறு சொல்லாதீர்.(17) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவரே, அஸ்வினிகளுடன் சேர்ந்து நாங்கள் சோமம் பருக விரும்பவில்லை. ஓ! கல்விமானான பிராமணரே, நீர் சொல்லும் வேறு எதையும் நாங்கள் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்” என்றான்.(18)

சியவனர், “அஸ்வினி இரட்டையர்களும் உங்கள் அனைவருடன் சேர்ந்து சோமம் பருக வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா, அவ்விருவரும் சூரியனுடைய மகன்களாக இருப்பதால் அவர்களும் தேவர்களே.(19) நான் சொன்னதைத் தேவர்கள் செய்ய வேண்டும். அந்த வார்த்தைகளின்படி செயல்படும்போது, தேவர்கள் பெரும் நன்மையை அறுவடை செய்வார்கள். வேறு வகையில் செய்பட்டால் தீமையே அவர்களை மூழ்கடிக்கும்” என்றார்.(20)

இந்திரன், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் அஸ்வினிகளுடன் சேர்ந்து சோமம் பருக மாட்டேன். மற்றவர்கள் விரும்பினால் அவர்களோடு பருகட்டும். என்னைப் பொறுத்தவரையில், நான் அதைச் செய்யத் துணியேன்” என்றான்.(21)

சியவனர், “ஓ! பலனைக் கொன்றவனே, என் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாவிட்டால், இந்த நாளிலேயே என்னால் வற்புறுத்தப்பட்டு வேள்வியில் அவர்களோடு சோமம் பருகுவாய்” என்றார்”.(22)

காற்றின் தேவன் {தொடர்ந்தான்}, “பிறகு, தம்மோடு அஸ்வினிகளை அழைத்துச் சென்ற சியவனர், அவர்களின் நன்மைக்காக ஒரு பேரறச் சடங்கைத் தொடங்கினார். மந்திரங்களின் துணையுடன் சியவனரால் தேவர்கள் அனைவரும் கலங்கடிக்கப்பட்டனர்.(23) சியவனரால் தொடங்கப்பட்ட காரியத்தைக் கண்ட இந்திரன், கோபத்தால் தூண்டப்பட்டான். ஒரு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டு அவன் {இந்திரன்} அந்த முனிவரை எதிர்த்து ஓடினான்.(24) தேவர்களின் தலைவன் வஜ்ரமும் தரித்திருந்தான். அப்போது, தவங்களுடன் கூடிய சியவனர், அவ்வாறு முன்னேறி வரும் இந்திரனின் மீதும் தம் கோபப் பார்வையைச் செலுத்தினார்.(25) சிறிதளவு நீரைத் தெளித்த அவர் தேவர்களின் தலைவனை அவனது வஜ்ரத்தோடும் மலையோடும் சேர்த்து முடக்கினார். அவரால் தொடங்கப்பட்ட அந்த அறச்சடங்கின் விளைவால் அவர் இந்திரனுக்குப் பகையான ஒரு பயங்கர அசுரனை உண்டாக்கினார்.(26) வேள்வித் தீயில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் அமைந்தவனும், அகன்று விரிந்த வாயைக் கொண்டவனுமான அந்த அசுரன் மதன் என்றழைக்கப்பட்டான். மந்திரங்களின் துணையுடன் அந்தப் பெருந்தவசியால் உண்டாக்கப்பட்ட அந்த அசுரன் இவ்வாறே இருந்தான். அவனது வாயில் நூறு யோஜனைகள் தொலைவுக்கு நீளும் ஆயிரம் பற்கள் இருந்தன.(27) பயங்கர முகத் தோற்றத்தைக் கொண்டிருந்த அவனுடைய கோரப் பற்கள் இருநூறு யோஜனைகள் நீளம் இருந்தன. அவனுடைய கன்னங்களில் ஒன்று பூமியில் இருந்தது, மற்றொன்று சொர்க்கங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.(28) உண்மையில், வாசவனுடன் கூடிய தேவர்கள் அனைவரும், லேவியாதனத்தின் {பெரிய மீன் ஒன்றின்} அகன்று திறந்திருக்கும் வாய்க்குள் நுழையப் போகும் மீன்களைப் போல அந்தப் பேரசுரனின் நாவின் அடிப்பாகத்தில் {தொண்டையில்} நின்று கொண்டிருந்தனர்.(29)

தேவர்கள், மதனின் வாய்க்குள் நின்று கொண்டிருந்தபோது, அவர்களுள் அவசர ஆசலோசனை செய்து இந்திரனிடம், “இந்த மறுபிறப்பாளரிடம் மதிப்புடன் தலைவணங்குவாயாக.(30) அனைத்து ஐயங்களில் இருந்து விடுபட்டு, அஸ்வினிகளின் துணையுடன் நாங்கள் சோமத்தைப் பருகுவோம்” என்றனர். அதன் பிறகு, சக்ரன் சியவனரிடம் தலைவணங்கி அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்தான்.(31) இவ்வாறே சியவனர், அஸ்வினிகளைப் பிற தேவர்களுடன் சேர்ந்து சோமம் பருகுபவர்களாக்கினார். மதனைத் திருப்பி அழைத்துக் கொண்ட அந்த முனிவர், அவன் செய்ய வேண்டிய செயல்களை அவனுக்கு ஒதுக்கினார்.(32) அந்த மதன், பகடையிலும், வேட்டையிலும், குடியிலும், பெண்களிடத்திலும் வசிக்குமாறு பணிக்கப்பட்டான். எனவே, ஓ! மன்னா, இவற்றில் ஈடுபடும் மனிதர்கள் ஐயமில்லாமல் அழிவையே அடைவார்கள்.(33) எனவே, ஒருவன் இந்தக் களங்கங்களை எப்போதும் நெடுந்தொலைவுக்குக் களைய வேண்டும். இவ்வாறே, ஓ! மன்னா, சியவனர் செய்த சாதனையை நான் உனக்குச் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ மறுமொழியேதும் சொல்லப் போகிறாயா? பிராமணரான சியவனரைவிட உயர்ந்த க்ஷத்திரியன் எவனும் இருக்கிறானா?” என்று கேட்டான் {வாயு}[1]“.(34,35)

கபர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 157-பூமியும், சொர்க்கமும் கபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது; தேவர்கள் பிராமணர்களால் அவற்றைத் திரும்பப் பெற்றது; கார்த்தவீரியார்ஜுனனுக்குப் பிராமணர்களால் ஏற்படப்போகும் அச்சம் ஆகியவற்றைக் குறித்து கார்த்தவீரியார்ஜுனனுக்குச் சொன்ன வாயு தேவன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “காற்றின் தேவனுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட {கார்த்தவீரிய} ஆர்ஜுனன் அமைதியாக இருந்தான். இதன்பேரில் காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள் அசுரன் மதனின் வாய்க்குள் தங்களைக் கண்டபோது, சியவனர் அவர்களிடம் இருந்து பூமியை அடைந்தார்.(1,2) ஏற்கனவே சொர்க்கத்தை இழந்தவர்களும், இப்போது பூமியை இழந்தவர்களுமான தேவர்க்ள உற்சாகமிழந்தனர். உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டு, பெரும்பாட்டனின் பாதுகாப்பின் கீழ் தங்களை நிறுத்திக் கொண்டனர் {பிரம்மனைத் தஞ்சமடைந்தனர்}.(3)

தேவர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவரே, பூமியானது எங்களிடமிருந்து சியவனரால் எடுத்துக் கொள்ளப்பட்டது, ஓ! பலமிக்கவனே, அதே வேளையில் சொர்க்கமும் கபர்களால் அபகரிக்கப்பட்டது.(4)

பிரம்மன், “சொர்க்கவாசிகளே, இந்திரனின் தலைமையில் விரைவாகச் சென்று பிராமணர்களின் பாதுகாப்பை நாடுவீராக. அவர்களை நிறைவடையச் செய்வதன் மூலம் நீங்கள் முன்பு போலவே இரண்டு உலகங்களையும் பெறுவீர்கள்” என்றான்.(5)

பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவர்கள், பிராமணர்களிடம் சென்று, அவர்களது பாதுகாப்பை அடைய வேண்டினார்கள். பிராமணர்கள் மறுமொழியாக, “நாங்கள் யாரை வசப்படுத்த வேண்டும்?” என்று கேட்டனர். இவ்வாறு கேட்கப்பட்ட தேவர்கள், அவர்களிடம், “கபர்களை அடக்குவீராக” என்றனர்.(6)

பிராமணர்கள், “முதலில் அவர்களைப் பூமிக்குக் கொண்டு வந்து, அதன் பிறகு அவர்களை விரைவில் அடக்குகிறோம்” என்றனர். அதன் பிறகு, கபர்களின் அழிவை நோக்கமாகக் கொண்ட ஒரு சடங்கை அந்தப் பிராமணர்கள் தொடங்கினர். இதைக் கேட்ட உடனேயே கபர்கள், தனி என்ற பெயர் கொண்டவனைத் தங்கள் தூதுவனாக அந்தப் பிராமணர்களிடம் அனுப்பி வைத்தனர்.(7)

தனி, அவர்களிடம் வந்து பூமியில் அமர்ந்து, கபர்களால் சொல்லப்பட்ட செய்தியை இவ்வாறு சொன்னான், “கபர்களும் உங்கள் அனைவரையும் போன்றோரே. (அவர்கள் உங்களில் எவரையும் காட்டிலும் தாழ்ந்தவர்களல்ல). எனவே, நீங்கள் நிறைவேற்றப் பார்க்கும் சடங்குகள் என்ன விளைவை ஏற்படுத்தப் போகின்றன?(8) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வேள்விகளில் கவனம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாய்மையைத் தங்கள் நோன்பாகவும் கொண்டிருப்பதால் பெரும் முனிவர்களுக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(9) செழிப்பின் தேவி அவர்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவர்களும் பதிலுக்கு அவளை மதிப்புடன் ஆதரிக்கின்றனர். அவர்கள் கனியற்ற கலவிகளுக்காகத் தங்கள் மனைவியரை நாடுவதில்லை, மேலும், அவர்கள் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்பதில்லை.(10) அவர்கள் (ஒவ்வொருநாளும்) சுடர்மிக்க வேள்வித்தீயில் ஆகுதிகள் ஊற்றி, தங்கள் ஆசான்கள் மற்றும் பெரியோரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் ஆன்மாக்களை முற்றிலும் கட்டுப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முறையாகப் பகர்ந்து கொடுக்காமல் ஒருபோதும் எந்த உணவையும் உட்கொள்வதில்லை.(11) அவர்கள் எப்போதும் தேர்களிலும், பிற வாகனங்களிலும் ஒன்றாகச் சேர்ந்தே செல்கிறார்கள் (அவர்களில் எவரும், பிறர் கால்நடையாகச் செல்லும்போது வாகனம் செலுத்திச் செல்வதில்லை). அவர்கள் தங்கள் மனைவியர் மாத விலக்குக் காலத்தில் இருக்கும்போது அவர்களிடம் ஒருபோதும் கலவியில் ஈடுபடுவதில்லை. மறுமையில் இன்பலோகங்களை அடையும் வழியிலேயே அவர்கள் அனைவரும் செயல்படுகின்றனர்.(12) பெண்கள் கருவுற்றிருக்கும்போதோ, முதியோர் உண்ணாதிருக்கும்போதோ, அவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. அவர்கள் முற்பகலில் எவ்வகை விளையாட்டுகளிலும் ஈடுபடுவதில்லை. ஒருபோதும் அவர்கள் பகலில் உறங்குவதில்லை.(13) கபர்களிடம் இவையும், இன்னும் பிற நல்லொழுக்கங்ளும், சாதனைகளும் இருக்கும்போது, ஏன் நீங்கள் அவர்களை அடக்க முயல்கிறீர்கள்? இம்முயற்சியை நீங்கள் தவிர்க்க வேண்டும். உண்மையில், அவ்வாறு தவிர்ப்பதன் மூலம் நீங்கள் நன்மையை அடைவீர்கள்” என்றான்.(14)

பிராமணர்கள், “ஓ, நாங்கள் கபர்களை அடக்கவே போகிறோம். இக்காரியத்தில் நாங்களும் தேவரும் ஒருவரே. எனவே, கபர்கள் எங்கள் கரங்களால் கொல்லப்படுவார்கள். தனியைப் பொறுத்தவரையில் {தனி என்ற உன்னைப் பொறுத்தவரையில்} அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்ப வேண்டும்” என்றனர்.(15)

இதன் பிறகு, கபர்களிடம் திரும்பிய தனி, அவர்களிடம், “பிராமணர்கள் உங்களுக்கு எந்த நன்மையும் செய்பவர்களாக இல்லை” என்றான். இதைக் கேட்ட கபர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பிராமணர்களை நோக்கிச் சென்றனர்.(16) தேரின் கொடிமரங்கள் உயர்த்தப்பட்டு, தங்களை எதிர்த்து வரும் கபர்களைக் கண்ட பிராமணர்கள், கபர்களின் உயிர் மூச்சுகளுக்கு அழிவை உண்டாக்குவதற்காகக் குறிப்பிட்ட சுடர்மிக்க நெருப்புகளை உண்டாக்கினர்.(17) வேத மந்திரங்களின் துணையுடன் உண்டாக்கப்பட்ட அந்த நித்திய நெருப்புகள், கபர்களை அழித்து, (பொன்) மேகங்கள் பலவற்றைப் போல ஆகாயத்தில் ஒளிரத் தொடங்கின.(18) போரில் ஒன்றுகூடிய தேவர்கள், பல தானவர்களைக் கொன்றனர். பிராமணர்களே அவர்களுக்கு அழிவை உண்டாக்குகிறார்கள் என்பதை அந்நேரத்தில் அவர்கள் அறியவில்லை.(19)

ஓ! மன்னா, பெரும் சக்தி கொண்ட நாரதர் அங்கே வந்து, (தேவர்களால் அல்லாமல்) பிராமணர்களின் வலிய சக்தியின் மூலம் தங்கள் பகைவர்களான கபர்கள் எவ்வாறு உண்மையில் கொல்லப்பட்டனர் என்பதைத் தேவர்களுக்குச் சொன்னார்.(20) தேவர்களின் சொற்களைக் கேட்ட சொர்க்கவாசிகள் பெரும் நிறைவை அடைந்தனர். அவர்கள் பெரும்புகழைக் கொண்ட தங்கள் மறுபிறப்பாளக் கூட்டாளிகளை மெச்சினார்கள்.(21) பிறகு, தேவர்களின் சக்தியும் ஆற்றலும் பெருகத் தொடங்கின, அவர்கள் உலகங்கள் அனைத்திலும் வழிபடப்பட்டார்கள், அழிவின்மை என்ற வரத்தையும் அவர்கள் அடைந்தார்கள்” என்றான் {வாயு}.(22)

காற்றின் தேவன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவனை முறையாக வழிபட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அவனிடம் இந்த வார்த்தைகளில் பதிலளித்தான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி, {கார்த்தவீரிய} அர்ஜுனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பாயாக.(23)

{கார்த்தவீரிய} அர்ஜுனன் {வாயு தேவனிடம்}, “ஓ! பலமிக்கத் தேவா {வாயுவே}, எப்போதும், அனைத்து வழிமுறைகளிலும் நான் பிராமணர்களுக்காகவே வாழ்கிறேன். அவர்களிடம் அர்ப்பணிப்புள்ள நான் எப்போதும் அவர்களை வழிபட்டு வருகிறேன்.(24) தத்தாத்ரேயரின் அருளின் மூலம் நான் என்னுடைய இந்த வலிமையை அடைந்திருக்கிறேன். அவருடைய அருளின் மூலமே உலகில் பெருஞ்சாதனைகளைச் செய்தேன், உயர்ந்த பலன்களையும் அடைந்தேன்.(25) ஓ! காற்றின் தேவா, உன்னால் விரிவாகவும், கவனத்தைக் கவரும் வகையிலும் சொல்லப்பட்ட பிராமணர்களின் சாதனைகளை நான் கவனத்துடன் கேட்டேன்” என்றான்.(26)

காற்றின் தேவன், “பிறப்பால் உனதான க்ஷத்திரியக் கடமைகளை நீ செய்யும்போது, பிராமணர்களைப் பாதுகாத்து, அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. உன் புலன்களைக் காப்பது போலவே நீ அவர்களைக் காப்பாயாக. பிருகுவின் குலத்தில் இருந்து உனக்கு ஆபத்து இருக்கிறது. எனினும், நெடுங்காலம் கழித்தே அவை அனைத்தும் நடந்தேறும்” என்றான் {வாயு}”.(27)

கிருஷ்ணன் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 158-கிருஷ்ணனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட பிராமணர்களை எப்போதும் நீர் வழிபடுகிறீர். எனினும், ஓ! மன்னா, அவர்களை வழிபடுவதால் நீர் காணும் கனியென்ன?(1) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிடைக்கும் எந்தச் செழிப்பால் நீர் அவர்களை வழிபடுகிறீர்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணன் இங்கே இருக்கிறான். அவன் உனக்கு அனைத்தையும் சொல்வான். உயர்ந்த நோன்புகளையும், செழிப்பையும் கொண்ட அவன், பிராமண வழிபாட்டுடன் தொடர்புடைய செழிப்பைக் குறித்து உனக்குச் சொல்வான்.(3) என் பலம், காதுகள், வாக்கு, மனம், கண்கள், புத்தி ஆகியன (இன்று குழம்புவதால்) தெளிவாக இல்லை. என் உடலைக் கைவிடுவதற்கான நேரம் தொலைவிலில்லை என நினைக்கிறேன். சூரியன் வெகு மெதுவாகச் செல்வதாக எனக்குத் தெரிகிறது[1].(4) ஓ! மன்னா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களால் பின்பற்றப்படுபவையும், புராணங்களில் குறிப்பிடப்படுபவையுமான உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, அவ்வகையில் கொஞ்சம் எஞ்சி இருப்பதைக் கிருஷ்ணனிடம் இருந்து அறிவாயாக.(5)நான் கிருஷ்ணனை உண்மையில் அறிவேன். அவன் யார் என்பதையும், அவனது புராதன வலிமை என்ன என்பதையும் நான் அறிவேன். ஓ! கௌரவர்களின் தலைவா, கேசவன் அளக்க இயலாத ஆன்மா கொண்டவன். ஐயங்கள் எழும்போது அறத்தை நிலைநிறுத்துபவன் அவனே.(6) பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றைப் படைத்தவன் கிருஷ்ணனே. உண்மையில், பூமியானது கிருஷ்ணனின் உடலில் இருந்தே எழுந்தது. பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், தொடக்கக் காலத்தில் இருந்தே இருப்பவனுமான கிருஷ்ணனே வலிமைமிக்கப் பன்றியாகி மூழ்கிப் போன பூமியை உயர்த்தியவன். திசைப்புள்ளிகளையும், மலைகளையும் படைத்தவன் அவனே.(7) ஆகாயம், சொர்க்கம், திசைப்புள்ளிகள் நான்கு, திசைகளின் துணைப்புள்ளிகள் நான்கு ஆகியன அவனுக்குக் கீழேயே இருக்கின்றன. அவனிடம் இருந்தே மொத்த படைப்பும் உண்டானது. பழைமையான அண்டத்தைப் படைத்தவன் அவனே.(8) அவனது உந்தியில் ஒரு தாமரை தோன்றியது. அந்தத் தாமரைக்குள் அளவிலா சக்தி கொண்ட பிரம்மன் எழுந்தான். ஓ! பிருதையின் மகனே, (ஆழத்திலும், அகலத்திலும்) கடலையே கடந்திருக்கும் {விஞ்சியிருக்கும்} இருளைப் போக்கியவன் பிரம்மனே.(9)

ஓ! பார்த்தா, கிருத யுகத்தில் கிருஷ்ணன் அறத்தின் {தர்மத்தின்} வடிவில் (பூமியில்) இருந்தான். திரேதா யுகத்தில் அறிவின் வடிவில் இருந்தான். துவாபர யுகத்தில் வலிமையின் வடிவில் இருந்தான். கலி யுகத்தில் அவன் மறத்தின் {அதர்மத்தின்} வடிவில் பூமிக்கு வந்தான்[1].(10) பழங்காலத்தில் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. புராதன தேவன் அவனே. அசுரப் பேரரசனின் (பலியின்) வடிவில் அசுரர்களை ஆண்டவன் அவனே. அனைத்தையும் படைத்தவன் அவனே. அனைத்து உயிரினங்களின் எதிர்காலமாக இருப்பவனும் அவனே. அழிவின் வித்துகள் நிறைந்த இந்த அண்டத்தைப் பாதுகாப்பவனும் அவனே.(11) அறம் குன்றும்போது, தேவகுலத்திலோ, மனித குலத்திலோ பிறப்பவன் இந்தக் கிருஷ்ணனே. (அத்தகைய சந்தர்ப்பங்களில்) மேல் மற்றும் கீழ் உலகங்கள் இரண்டையும் பாதுகாப்பவன் அறத்தில் நிலைத்திருக்கும் தூய ஆன்மா கொண்ட இந்தக் கிருஷ்ணனே.(12) ஓ! பார்த்தா, அசுரர்களில் விடத் தகுந்தவர்களை விட்டு, அவர்களைக் கொல்வதில் தன்னை நிறுவி கொள்கிறான். முறையான மற்றும் முறையற்ற செயல்கள் அனைத்தாகவும், அவற்றின் காரணமாகவும் இருப்பவன் அவனே. செய்யப்பட்ட செயலும், செய்யப்பட வேண்டிய செயலும், செய்துவரும் செயலும் கிருஷ்ணனே ஆவான். ராகு, சோமன் மற்றும் சக்ரன் ஆகியோரும் இந்தச் சிறப்புமிக்கவனே என்பதை அறிவாயாக.(13) விஷ்வகர்மன் அவனே. அண்டவடிவில் இருப்பவன் அவனே. அண்டத்தை அழிப்பவனும், படைப்பவனும் அவனே. சூலபாணி அவனே, மனித வடிவம் அவனே, பயங்கர வடிவம் அவனே. செயல்களால் அறியப்படுபவனாக இருப்பதால் உயிரினங்கள் அனைத்தும் அவனது புகழையே பாடுகின்றன.(14)நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரஸ்களும், தேவர்களும் எப்போதும் அவனுடன் இருக்கின்றனர். ராட்சசர்களும் கூட அவனது புகழைப் பாடுகின்றனர். செல்வத்தைப் பெருக்குபவன் அவனே; அண்டத்தின் ஒரே வெற்றியாளன் அவனே.(15) நாநயமிக்க மனிதர்கள் வேள்விகளில் அவனது புகழையே பாடுகிறார்கள். சாமங்களைப் பாடுபவர்கள் ரதந்தரங்களைச் சொல்லி அவனைப் புகழ்கின்றனர். பிராமணர்க்ள வேத மந்திரங்களில் அவனையே புகழ்கின்றனர். வேள்விப் புரோகிதர்கள் அவனிடமே தங்கள் ஆகுதிகளை ஊற்றுகின்றனர்.(16) சினத்தில் இந்திரன் பொழிந்த மழையில் இருந்து பிருந்தாவனத்தின் மாட்டிடையர்களைப் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தன மலைகளை அவன் {கிருஷ்ணன்} உயர்த்திய போது இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அவனது புகழைப் பாடினர். ஓ!பாரதா, அனைத்து உயிரினங்களுக்குமான ஒரே பேறு அவனே. ஓ! பாரதா, அவன் பழைய பிரம்மக் குகைக்குள் நுழைந்து, அவ்விடத்தில் இருந்து, உலகத்தை மறைத்த ஆதி தொடக்கத்தைக் கண்டவன்[2].(17)முதன்மையான சாதனைகளைக் கொண்ட இந்தக் கிருஷ்ணனே தானவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரையும் கலங்கடித்து, பூமியை மீட்டான். மக்கள் அவனுக்கே பல்வேறு வகை உணவுகளை அர்ப்பணிக்கிறார்கள். போர் நேரும் சமயத்தில் போர்வீரர்கள் அனைவரும் அவனுக்கே தங்கள் வாகனங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(18) அவன் நித்தியமானவன், சிறப்புமிக்க அவனுக்குக் கீழ்தான் பூமி, சொர்க்கம் மற்றும் இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. மித்ரன் மற்றும் வருணன் ஆகிய தேவர்களின் உயிர் வித்துகளைக் குடுவைக்குள் விழச் செய்து, வசிஷ்டர் என்ற பெயரில் அறியப்பட்ட முனிவரை உண்டாக்கியவன் அவனே.(19) கிருஷ்ணனே காற்றின் தேவனாக {வாயுவாக} இருக்கிறான்; அவனே பலமிக்க அஸ்வினிகளாக இருக்கிறான்; அவனே தேவர்களில் முதல்வனும், ஆயிரங்கதிர்களைக் கொண்டவனுமான சூரியனாக இருக்கிறான். அவனாலேயே அசுரர்கள் அடக்கப்பட்டார்கள். அவனே தன் மூன்று அடிகளால் மூவுலகங்களையும் மறைத்தான்.(20) தேவர்கள், மனிதர்கள் மற்றும் பித்ருகளின் ஆன்மாவாக இருப்பவன் அவனே. வேள்விச் சடங்குகளை அறிந்தோரால் செய்யப்படும் வேள்வி அவனே. ஒவ்வொரு நாளும் (சூரியனின் வடிவில்) ஆகாயத்தில் எழுந்து பகல் மற்றும் இரவாகக் காலத்தைப் பகுத்து, அரைவருடம் வடக்கு நோக்கியும், அரைவருடம் தெற்கு நோக்கியும் செல்பவன் அவனே.(21)

மேல்நோக்கியும், கீழ்நோக்கியும், பக்கவாட்டிலும் அவனிடமிருந்து எழும் எண்ணற்ற ஒளிக்கதிர்கள் உலகத்திற்கு ஒளியூட்டுகின்றன. வேதமறிந்த பிராமணர்கள் அவனைத் துதிக்கின்றனர். அவனுடைய கதிர்களில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டே சூரியன் ஆகாயத்தில் ஒளிர்கிறான்.(22) மாதாமாதம் வேள்வி செய்பவன் அவனை வேள்வியாகவே விதிக்கிறான். வேதங்களை அறிந்த மறுபிறப்பாளர்கள் அனைத்து வகை வேள்விகளிலும் அவனது புகழையே பாடுகின்றனர். மூன்று அச்சுகளைக் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான ஆண்டுச் சக்கரமாக இருப்பவன் அவனே. இவ்வழியில் (பருவகாலங்கள் என்ற) மூன்று மாளிகைகளை ஆதரிப்பவன் அவனே.(23) பெருஞ்சக்தி கொண்டவனும், அனைத்திலும் நிறைந்திருப்பவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான கிருஷ்ணனே உலகங்கள் அனைத்தையும் நிலைநிறுத்துகிறான். இருள் அனைத்தையும் விலக்கும் சூரியன் அவனே. அனைத்தையும் படைத்தவன் அவனே. ஓ! வீரா, நீ கிருஷ்ணனை அணுகுவாயாக.(24)

உயர் ஆன்மாவும் பலமும் கொண்டவனான கிருஷ்ணன் ஒரு காலத்தில் காண்டவ வனத்தின் புல்லில் அக்னியின் வடிவில் வசித்திருந்தான். (அந்தக் காட்டில் இருந்த மூலிகைகள் அனைத்தையும் எரித்ததால்) விரைவில் அவன் நிறைவடைந்தான். விரும்பிய எங்கும் செல்லவல்லவனான கிருஷ்ணன், ராட்சசர்கள் மற்றும் உரகர்களை அடக்கிவிட்டு, சுடர்மிக்க நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றினான்.(25) அர்ஜுனனுக்கு எண்ணற்ற வெண்குதிரைகளைக் கொடுத்தவன் கிருஷ்ணன். குதிரைகள் அனைத்தையும் படைத்தவன் அவனே. இந்த உலகம் (அல்லது மானுட வாழ்வு) அவனது தேராக இருக்கிறது. அந்தத் தேருக்கு (சத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாலான) மூன்று சக்கரங்கள் இருக்கின்றன.(26) அது (செயல்களால் கொண்டுவரப்படும் மேன்மையான, தாழ்ந்த, இடைநிலை பிறவிகளைக் குறிக்கும் மேல்நோக்கு, கீழ்நோக்கு, குறுக்கு என) மூவகை நகர்வியக்கங்களைக் கொண்டிருக்கிறது. அதில் (காலம், முன்வினை, தேவர்கள் விருப்பம் மற்றும் சுய விருப்பம் என்ற) நான்கு குதிரைகளைப் பூட்டப்பட்டுள்ளன. அது (நற்செயல்கள், தீச்செயல்கள் மற்றும் கலப்புத்தன்மையுள்ள செயல்களைக் குறிக்கும் வகையில் வெள்ளை, கருப்பு மற்றம் கலந்த வண்ணங்களில்) மூன்று அச்சுகளைக் கொண்டிருக்கிறது.(27) வானத்துடன் சேர்ந்த ஐம்பூதங்களுக்கும் புகலிடமாக இருப்பவன் இந்தக் கிருஷ்ணனே. பூமியையும், சொர்க்கத்தையும் இடையில் உள்ள வெளியையும் படைத்தவன் அவனே. உண்மையில், காடுகளையும், மலைகளையும் படைத்தவன் அளவிலா சுடர்மிக்க சக்தி கொண்ட இந்தக் கிருஷ்ணனே. தன் மீது வஜ்ரத்தை ஏவ இருந்த சக்ரனைத் தண்டிக்க விரும்பி, ஆறுகளைக் கடந்து அவனை உடனே முடக்கியவன் இந்தக் கிருஷ்ணனே. பழைமையான ஆயிரம் ரிக்குகளின் துணையால் பெரும் வேள்விகளில் பிராமணர்களால் துதிக்கப்படுபவன் இந்தக் கிருஷ்ணனே.(28) ஓ! மன்னா, வீட்டிற்கு விருந்தினராக வந்தவரும், புராதன முனிவர்களில் ஒருவராகச் சொல்லப்படுபவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் துர்வாசரைப் பராமரிக்க இந்தக் கிருஷ்ணனால் மட்டுமே முடிந்தது. அண்டத்தைப் படைத்தவன் அவனே. உண்மையில் அவன் தன் சொந்த இயல்பில் இருந்தே அனைத்தையும் படைக்கிறான்.(29) தேவர்கள் அனைவரையும் விட மேன்மையான அவனே தேவர்கள் அனைவருக்கும் கற்பிக்கிறான். பழைமையான விதிகள் அனைத்தையும் பிழையில்லாமல் பின்பற்றுபவன் அவனே. ஓ! மன்னா, இன்பம் தொடர்புடைய அனைத்துச் செயல்கள், வேதங்களில் காணப்படும் அனைத்துச் செயல்கள், உலகம் தொடர்புடைய அனைத்துச் செயல்களின் கனியாக இருப்பவன் விஷ்வக்ஸேனன் என்றழைக்கப்பபடும் இந்தக் கிருஷ்ணனே. (30)

உலகங்கள் அனைத்திலும் காணப்படும் ஒளியின் வெண்கதிர்கள் அவனே. மூவுலகங்கள் அவனே. உலகங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் மூவர் {மும்மூர்த்திகள்} அவனே. வேள்வி நெருப்புகள் மூன்றிலும் இருப்பவன் அவனே. {பூ: புவ: ஸ்வ: எனும்} வியாஹ்ருதிகள் மூன்றும் அவனே. உண்மையில் அனைத்து தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தவன் இந்தத் தேவகியின் மைந்தனே.(31) ஆண்டு அவனே; பருவகாலங்கள் அவனே; பக்ஷங்கள் அவனே, பகலும், இரவும் அவனே; கலைகள், காஷ்டைகள், மாத்திரைகள், முகூர்த்தங்கள், லவங்கள், க்ஷணங்கள் என்றழைக்கப்படும் காலப்பிரிவுகள் அவனே. இவை யாவும் இந்த விஷ்வக்ஸேனனே என்பதை அறிவாயாக.(32) சந்திரன், சூரியன், கோள்கள், நட்சத்திரக்கூட்டங்கள், விண்மீன்கள், முழு நிலவு {பௌர்ணமி} நாள் உள்ளிட்ட பர்வ நாட்கள் அனைத்தும், நட்சத்திரக் கூடுகைகள் மற்றும் பருவகாலங்கள் ஆகியன விஷ்வக்ஸேனனான இந்தக் கிருஷ்ணனிடம் இருந்தே பாய்கின்றன.(33) ருத்திரர்கள், ஆதித்தயர்கள், வசுக்கள், அஸ்வினிகள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், பல்வேறு மருத்துக்கள், பிரஜாபதி, தேவர்களின் தாயான அதிதி, முனிவரெழுவர் {சப்தரிஷிகள்} ஆகியோரனைவரும் கிருஷ்ணனில் இருந்தே எழுந்தனர்.(34)

காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு அவன் அண்டத்தைச் சிதறடிக்கிறான். அண்ட வடிவிலான அவன் அனைத்தையும் எரிக்கும் நெருப்பாகிறான். நீராக மாறி அனைத்தையும் நனைத்து மூழ்கடிக்கிறான், பிரம்மனின் வடிவை ஏற்று உயிருள்ள மற்றும் உயிரற்ற பல்வேறு இனங்களைப் படைக்கிறான்.(35) தானே வேதமாக இருந்தாலும், வேதங்கள் அனைத்தையும் கற்கிறான். விதிகள் அனைத்துமாக இருந்தாலும், அறம் தொடர்பாகக் காரியங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும், வேதங்களையும், அண்டத்தை ஆளும் சக்தியையும் பின்பற்றுகிறான். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, அசையும் மற்றும் அசையாத அண்டமனைத்தும் இந்தக் கேசவனே என்பதை அறிவாயாக. மிகப் பிரகாசமான ஒளியின் வடிவில் இருப்பவன் அவனே. அண்டவடிவம் கொண்ட இந்தக் கிருஷ்ணன், அந்தச் சுடர்மிக்கப் பிரகாசத்தில் வெளிப்படுகிறான். இருப்பிலுள்ள அனைத்து உயிரின ஆன்மாக்களின் உண்மை காரணமாக இருக்கும் அவன் முதலில் நீரையே படைத்தான். அதன் பிறகு இந்த அண்டத்தை அவன் படைத்தான்.(37) இந்தக் கிருஷ்ணனே விஷ்ணு என்பதை அறிவாயாக. அண்டமனைத்தின் ஆன்மா அவனே என்பதை அறிவாயாக. பருவகாலங்கள் அனைத்தும் அவனே என்பதை அறிவாயாக. இயற்கையில் நாம் காணும் பல்வேறு அற்புதங்கள் அவனே. மழைபொழியும் மேகங்களும், வானத்தில் மின்னும் மின்னல்களும் அவனே. யானை ஐராவதன் அவனே. உண்மையில், அசையும், அசையாத அண்டமனைத்தும் அவனே.(38)

அண்டத்தின் வசிப்பிடமாகவும், குணங்கள் அனைத்தையும் கடந்தவனாகவும் இருக்கும் இந்தக் கிருஷ்ணனே வாசுதேவன். அவன் ஜீவன் ஆகும்போது சங்கர்ஷணன் என்றழைக்கப்படுகிறான். அடுத்ததாக அவன் பிரத்யும்னனாகவும், அநிருத்தனாகவும் ஆகிறான். இவ்வழியில் தெய்வப் பிறவியான உயர் ஆன்ம கிருஷ்ணன், நான்கு வகை வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.(39) ஐம்பூதங்களாலான இந்த அண்டத்தை உண்டாக்க விரும்பிய அவன், தன்னை அப்பணியில் நிறுவி கொண்டு, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்ற உயிருள்ள ஐந்து இருப்புகளில் அண்டத்தை இயங்கச் செய்கிறான். ஓ! பிருதையின் மகனே, பூமி {நிலம்}, காற்று, வானம், ஒளி, நீர் ஆகியற்றைப் படைத்தவன் அவனே. அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டத்தைப் படைத்து, அவற்றை (ஈன்றுபெறும் இனம், முட்டையிட்டுப் பெறும் இனம், தாவரங்கள் மற்றும் கழிவில் பிறப்பவை என்ற) நால்வகையாகப் பிரித்த பிறகு, பூமியை {ஆகாயம், நிலம், நெருப்பு, நீர், காற்று என்ற) ஐந்துவகை வித்துகளுடன்[3] கூடியவளாகப் படைத்தான். பிறகு, பூமியில் நீரை அபரிமிதமாகப் பொழிவதற்காக ஆகாயத்தை உண்டாக்கினான்.(41)ஓ! மன்னா, இந்த அண்டத்தை உண்டாக்கியவன் இந்தக் கிருஷ்ணனே என்பதில் ஐயமில்லை. அவன் தானே தோன்றியவன் ஆவான். அவன் தன் பலத்தால் அனைத்துப் பொருட்களையும் இருப்பில் இருக்கச் செய்கிறான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், உலகங்கள், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அவனே. அனைத்து உயிரினங்களின் தலைவன், படைக்க விரும்பியவனாக உயிருள்ள மொத்த அண்டத்தையும் முறையாகப் படைத்தான். நன்மை மற்றும் தீமை, அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தும் விஷ்வக்ஸேனனான இவனிடம் இருந்தே பாய்கின்றன. இருப்பில் உள்ள எதுவும், இருப்பில் உதிக்கும் எதுவும், அனைத்தும் கேசவனே. உயிரினங்களுக்கு முடிவு ஏற்படுகையில் மரணமாக வருபவனும் இந்தக் கிருஷ்ணனே. அவன் நித்தியமானவன், அறக் காரணங்களை நிலைநிறுத்துபவன். கடந்த காலத்தில் இருந்த எதுவும், நாம் அறிந்த எதுவும், உண்மையில் அனைத்தும் இந்த விஷ்வக்ஸேனனே.(42-44) அண்டத்தில் உன்னதமானவையும், பலன்மிக்கவையுமான எவையும், நன்மை, தீமை என்று இருக்கும் எவையும், அனைத்தும் நினைத்தக்கரியவனான இந்தக் கேசவனே. எனவே கேசவனைவிட மேன்மையானது என எதையும் நினைப்பதே பொருளற்றதாகும்.(45) கேசவன் அத்தகையவனே. இதையும்விடப் பெரியவனே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், மாற்றமில்லாதவனும், மங்காதவனுமான நாராயணன் அவனே. அசைவன மற்றும் அசையாதனவற்றுடன் கூடியதும், தொடக்கம், நடு மற்றும் முடிவுடன் கூடியதுமான மொத்த அண்டத்திற்கும், ஆசைகளைப் பின்தொடர்ந்து பிறக்கும் உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமற்ற நித்திய காரணன் அவனே” என்றார் {பீஷ்மர்}.(46)

துர்வாஸர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 159-பிராமண வழிபாட்டின் சிறப்பையும், துர்வாஸ முனிவரை வழிபட்டதனால் தனக்குக் கிடைத்த மேன்மையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்..

யுதிஷ்டிரன் {கிருஷ்ணரிடம்}, “ஓ! மதுசூதனாபிராமண வழிபாட்டினால் உண்டாகும் செழிப்பென்ன என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. இக்காரியம் குறித்து நன்கறிந்தவன் நீயே. உண்மையில் நம் பாட்டன் {பீஷ்மர்} உன்னை அறிந்திருக்கிறார்” என்றான்.(1)

வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, வாய்மைக்கு இணக்கமனான வகையில் பிராமணர்களை வழிபடுவதால் கிட்டும் பலன்களை உமக்குச் சொல்கிறேன், குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(2) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, ஒரு காலத்தில் நான் துவாராவதியில் அமர்ந்திருந்த போது, குறிப்பிட்ட பிராமணர்களிடம் சினம் அடைந்திருந்த என் மகன் பிரத்யும்னன் என்னிடம் வந்து,(3) “ஓ! மதுசூதனரே, பிராமண வழிப்பாட்டில் கிட்டும் பலனென்ன? இம்மையிலும், மறுமையிலும் அவர்களின் தலைமைத்துவம் எவ்வாறு உண்டானது?(4) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, பிராமணர்களைத் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் வெல்லப்படும் வெகுமதிகள் என்ன? இக்காரியத்தில் என் மனம் ஐயங்களால் குழப்பமடைவதால் இஃதை அன்புடன் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

பிரத்யும்னனால் என்னிடம் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டதும், நான் அவனுக்குப் பின்வருமாறு பதிலளித்தேன். ஓ! மன்னா, அந்த வார்த்தைகளைச் சொல்கிறேன் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(6) {நான் அவனிடம்}, “ஓ! ருக்மிணியின் பிள்ளாய், பிராமண வழிபாட்டின் மூலம் வெல்லப்படும் செழிப்பென்ன என்பதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஒருவன், (அறம், பொருள், இன்பம் என்று) நன்கறியப்படும் முத்தொகையை அடைவதிலோ, முக்தியை அடைவதிலோ, புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றை அடைவதிலோ, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் வழிப்பாட்டிலோ தன்னை நிறுவிக் கொள்ளும்போது, அவன் மறுபிறப்பாளர்களை நிறைவடையச் செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் (ஆகாயத்தில் இனிய ஒளியைப் பொழியும்) சோம மன்னன் {சந்திரன்} ஆவர். அவர்கள் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் ஆள்பவர்கள்.(7,8) ஒரு ருக்மிணியின் பிள்ளாய், ஓ! மகனே, இம்மையிலோ, மறுமையிலோ ஏற்புடைய அனைத்தும் பிராமணர்களைத் தோற்றுவாயாகக் கொண்டவையே. இதில் எனக்கு ஐயமேதும் இல்லை.(9) பிராமண வழிபாட்டில் இருந்தே பெருஞ்சாதனைகளும், புகழும், பலமும் பாய்கின்றன. உலகங்கள் அனைத்திலும் வசிப்பவர்களும், லோகபாலர்கள் அனைவரும் பிராமணர்களை வழிபடுபவர்களே.(10) இவ்வாறிருக்கையில், ஓ! மகனே, நாமே பூமியின் தலைவர்கள் என்ற கருத்தால் நிறைந்து எவ்வாறு அவர்களை நாம் அவமதிக்கலாம்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன் கோபம், தனக்கான பொருளாகப் பிராமணர்களைத் தழுவ வேண்டாம்.(11) இம்மையிலும், மறுமையிலும் பிராமணர்கள் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்தையும் குறித்த நேரடி அறிவு பெற்றவர்கள் அவர்கள். உண்மையில் அவர்கள் கோபமடைந்தால் அனைத்தையும் சாம்பலாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.(12)

அவர்கள் (இருப்பில் உள்ளவற்றைத் தவிர) வேறு உலகங்களையும், வேறு லோகபாலர்களையும் படைக்கவல்லவர்கள். அவ்வாறிருக்கையில், சக்தியும், சரியான அறிவும் படைத்த மனிதர்கள் ஏன் அவர்களிடம் மதிப்புடன் நடந்துகொண்டு, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கக் கூடாது?(13) ஓ! மகனே, பச்சை மற்றும் பழுப்பு {பசும்பொன்} நிறம் கொண்ட பிராமணரான துர்வாசர் முன்பொரு சமயம் என் வீட்டில் வசித்திருந்தார். மரவுரியுடுத்திய அவர், வில்வ மரத்தாலான தண்டத்தைக் கொண்டிருந்தார். நீண்ட தாடியுடன் கூடிய அவர் மிகவும் மெலிந்தவராகவும் இருந்தார்.(14) பூமியில் உள்ள நெடிய மனிதனைவிட உயரத்தில் நெடியவராக இருந்தார். மனிதர்களுக்குரிய உலகங்கள், தேவலோகங்கள் மற்றும் வேறு மேன்மையானோருக்குரிய உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்த அவர், சபைகளிலும், பொதுவெளிகளிலும் எப்போதும் இந்த ஸ்லோகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். {துர்வாஸர்} “பிராமணனான இந்தத் துர்வாசனை, விருந்தோம்பல் கடமைகளுடன் தன் வீட்டில் வசிக்கச் செய்பவன் எவன்?(16) அனைவரிடமும் சிறு மீறலையும் கண்டு கோபங்கொள்பவன் இவன். என் இயல்பைக் கேட்டும் இங்கே எனக்குப் புகலிடமளிப்பவன் எவன்?(17) உண்மையில், ஒரு விருந்தினனாக எனக்கு உறைவிடமளிக்கும் ஒருவன், என்னைக் கோபமடையச் செய்யும் எதையும் செய்யக்கூடாது” {என்ற வரிகளைப் பாடுவார்}.

எவரும் தம் வீட்டில் அவருக்கு உறைவிடமளிக்கத் துணியவில்லை என்பதை நான் கண்டபோது, அவரை அழைத்து என் வசிப்பிடத்தில் வசிக்கச் செய்தேன்.(18) ஆயிரக்கணக்கானோர் உண்ணப் போதுமான உணவை குறிப்பிட்ட நாட்களில் அவர் ஒருவரே உண்பார். வேறு குறிப்பிட்ட நாட்களில் மிகக் குறைவாகவே உண்பார். சில நாட்களில் என் வீட்டை விட்டு வெளியே செல்லும் அவர் திரும்பி வரமாட்டார்.(19) சில வேளைகளில் வெளிப்படையான காரணமேதுமின்றிச் சிரிப்பார். சில வேளைகளில் காரணமில்லாமல் அழுவார். அந்த நேரத்தில் பூமியில் அவருக்கு நிகரான வயதைக் கொண்டவர்கள் எவரும் இல்லை.(20) ஒரு நாள், தமக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து அங்கே இருந்த படுக்கைகள், விரிப்புகளையும், அவருக்குத் தொண்டாற்றியவர்களும், நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களுமான காரிகையரையும் எரித்துவிட்டுச் சென்றுவிட்டார்[1].(21)உயர்வாகப் புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட அவர், இது நடந்த பிறகு என்னிடம், “ஓ! கிருஷ்ணா, தாமதமேதும் இல்லாமல் பாயஸம் உண்ண விரும்புகிறேன்” என்றார்.(22) அவரது மனத்தை முன்பே புரிந்து வைத்திருந்த நான் அனைத்து வகை உணவு மற்றும் பானங்களைத் தயாரிக்கும் வகையில் பணியாட்களை நிறுவியிருந்தேன்.(23) உண்மையில், சிறந்த உணவுப்பொருட்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. என்னிடம் பாயஸம் கேட்கப்பட்ட உடனே, நான் அதைக் கொண்டு வந்து அந்தத் தவசிக்கு அளித்தேன்.(24) சிறிதளவு உண்ட அவர், என்னிடம், “ஓ! கிருஷ்ணா, இந்தப் பாயஸத்தை எடுத்து உன் அங்கமெங்கும் பூசிக் கொள்வயாக” என்றான்.(25) எந்தத் தயக்கமுமின்றி அவர் சொன்னவாறே நான் செய்தேன். உண்மையில் எஞ்சியிருந்த பாயஸத்தை என் உடலிலும், தலையிலும் பூசிக் கொண்டேன்.(26)

அந்த நேரத்தில் அத்தவசி, இனிய முகம் படைத்த உன் அன்னை {ருக்மிணி} அருகில் நிற்பதைக் கண்டார். சிரித்துக் கொண்டே அந்தப் பாயஸத்தை அவள் மீதும் அவர் பூசினார்.(27) பாயஸம் பூசப்பட்ட உடலுடன் கூடிய உன் அன்னையைத் தாமதமேதும் இல்லாமல் ஒரு தேரில் பூட்டினார். அந்தத் தேரில் ஏறி அவர் என் வீட்டில் இருந்து புறப்பட்டார்.(28) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், நெருப்பைப் போன்று சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அந்தத் தவசி, மனிதர்களின் தேரை இழுக்கும் விலங்கைப் போல இளமையுடன் கூடிய என் ருக்மிணியை என் முன்னிலையிலேயே அடித்தார்.(29) இதைக் கண்டும், வன்மத்தில் பிறந்த சிறு துன்பத்தையும் நான் உணரவில்லை, அந்த முனிவரைக் காயப்படுத்தவும் விரும்பவில்லை. உண்மையில், தேரில் ருக்மிணியைப் பூட்டிய அந்த முனிவர், நகரத்தின் சாலைவழியே செல்ல விரும்பிப் புறப்பட்டார்.(30)

இயல்புக்குமீறிய இக்காட்சியைக் கண்ட தாசார்ஹர்களில் சிலர், கோபத்தால் நிறைந்து, ஒருவருக்கொருவர் இவ்வகையில் பேசத் தொடங்கினர், {அவர்கள் தங்களுக்குள்}{31) “ருக்மிணியைத் தேரில் பூட்டிய பிறகும் மூச்சை இழுக்க {சுவாசிக்கக்} கூடியவன் இந்தப் பூமியில் வேறு எவன் இருக்கிறான்? உண்மையில் இந்த உலகம் பிராமணர்களால் நிறையட்டும். வேறு வகையினர் எவரும் இங்கே பிறக்க வேண்டாம்.(32) நஞ்சுமிக்கப் பாம்பின் நஞ்சானது மிகக் கொடியதாகும். ஒரு பிராமணன் அதைவிடக் கொடிய நஞ்சாவான். நஞ்சுமிக்கப் பாம்பான ஒரு பிராமணனால் கடிபட்ட, அல்லது எரிக்கப்பட்ட ஒரு மனிதருக்கு மருத்துவன் எவனும் இல்லை” என்றனர்.(33)

தடுக்கப்பட முடியாதவரான துர்வாசர் அவ்வாறு தேரில் சென்ற போது, ருக்மிணி சாலையில் நிலைதடுமாறி நடந்து அடிக்கடி விழுந்தாள். இதனால் கோபமடைந்த அந்த மறுபிறப்பாள முனிவர், சாட்டையால் ருக்மிணியை அடித்து ருக்மிணியைத் தூண்டினார்.(34) இறுதியாக, பேரார்வத்தில் நிறைந்திருந்த அவர் தேரில் இருந்து குதித்து, வழியற்ற நிலத்தில் கால்நடையாகவே தென்திசையை நோக்கி ஓடினார்.(35) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் பாதையற்ற நிலத்தில் ஓடுவதைக் கண்ட நாங்கள், உடலில் பாயஸம் பூசப்பட்டவர்களாக இருந்தாலும், அவரைப் பின்தொடர்ந்து சென்று, “ஓ! புனிதமானவரே, எங்களிடம் நிறைவடைவீராக” என்றோம்.(36)

பெரும் சக்தி கொண்ட அந்தப் பிராமணர் {துர்வாஸர்}, என்னைக் கண்டு, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, உன் இயல்பின் பலத்தால் உன் கோபத்தை அடக்கிக் கொண்டாய். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உன்னிடம் சிறு குற்றத்தையும் காணவில்லை. ஓ! கோவிந்தா, நான் உன்னிடம் உயர்ந்த நிறைவையடைகிறேன். நீ விரும்பும் ஆசைகள் கனியும் நிலையை வேண்டுவாயாக.(38) ஓ! மகனே, நான் எவரிடமாவது நிறைவடையும்போது, என்னுடைய பலம் என்ன என்பதைக் காண்பாயாக. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் உணவை விரும்புவதைத் தொடரும் வரையில் அவர்களில் ஒவ்வொருவரும் உணவில் கொள்வது போலவே உன்னையும் விரும்புவார்கள். பல்வேறு உலகங்களில் அறம் இருக்கும் வரை நீ செய்த சாதனைகளின் புகழ் நீடித்திருக்கும்(39,40) உண்மையில் உன் புகழ் மூவுலகங்கள் உள்ள வரை நீடித்திருக்கும். ஓ! ஜனார்த்தனா, நீ அனைவருக்கும் ஏற்புடையவனாக இருப்பாய்.(41) உன் பொருட்களில் உடைக்கப்பட்டவையோ, எரிக்கப்பட்டவையோ வேறுவகையில் (என்னால்) அழிக்கப்பட்டவையோ, அவை அனைத்தும் முன்போலவே, அல்லது முன்னிலும் சிறந்த வடிவில் மீளும்.(42) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, நீ வாழ விரும்பும் வரை, நான் கொடுத்த பாயஸந்தடவிய உடல் பகுதிகளில் தாக்கப்பட்டு மரணம் நேரும் அச்சமேதும் உனக்கு இருக்காது.(43) ஓ! மகனே, உள்ளங்கால்களிலும் அந்தப் பாயஸத்தை நீ ஏன் பூசவில்லை? அதைச் செய்யாததால், என்னால் அங்கீகரிக்கப்படாத வழியில் நீ செயல்பட்டிருக்கிறாய்” என்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் என்னிடம் நிறைவடைந்து அவர் சொன்ன வார்த்தைகள் இவையே. அவர் பேசுவதை நிறுத்திய பிறகு, என் உடல் பேரெழிலுடனும், காந்தியுடனும் கூடியதை நான் கண்டேன்.(44)

ருக்மிணியிடமும் நிறைவடைந்த அம்முனிவர் அவளிடம், “ஓ! அழகிய பெண்ணே, புகழடைவதில் பெண்களில் முதன்மையானவளாக இருப்பாய், பெரும் மகிமையும், சாதனைகளும் உனதாகும். முதுமை, நோய் அல்லது மேனிவண்ணம் குறைதல் ஆகியவை உனக்கு எப்போதும் ஏற்படாது.(45) எப்போதும் உன்னுடன் இருக்கும் நறுமணத்துடன் கிருஷ்ணனுக்கு நீ எப்போதும் பணிவிடை செய்வதை அனைவரும் காண்பார்கள்.(46) கேசவனின் பதினாறாயிரம் {16,000} மனைவியரில் நீ முதன்மையானவளாக இருப்பாய். இறுதியாக, இவ்வுலகில் இருந்து செல்லும் காலம் வரும்போது, மறுமையில் கிருஷ்ணனின் பிரியா துணையை அடைவாய்” என்றார்.(47)

உன் அன்னையிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அம்முனிவர் மீண்டும் என்னிடம் பின்வரும் சொற்களைச் சொல்லிவிட்டு இடத்தை விட்டு அகன்றார். உண்மையில், சுடர்மிக்க நெருப்பைப் போன்ற முனிவர் துர்வாசர்,(48) “ஓ! கேசவா, பிராமணர்களிடம் எப்போதும் உன் புத்தி இவ்வாறே இருக்கட்டும்” என்றார். உண்மையில் இச்சொற்களைச் சொன்ன அந்தப் பிராமணர், என் கண் முன்பாகவே அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(49) அவர் மறைந்த பிறகு, யாரும் கேட்காத வகையில் அமைதியாகச் சில மந்திரங்களைச் சொல்லும் நோன்பை நோற்றேன். உண்மையில், அந்த நாளில் இருந்து பிராமணர்களிடம் நான் பெறும் ஆணைகளை நிறைவேற்றத் தீர்மானித்தேன்.(50) ஓ மகனே, நானும் உன் அன்னையும் இந்நோன்பைப் பின்பற்றி இன்பத்தில் நிறைந்த இதயங்களுடன் எங்கள் அரண்மனைக்குள் மீண்டும் நுழைந்தோம்.(51) வீட்டிற்குள் நுழைந்ததும், அம்முனிவரால் உடைக்கப்பட்ட, அல்லது எரிக்கப்பட்ட அனைத்தும் புதிதாக இருப்பதைக் கண்டேன்.(52) மேலும் நீடித்திருக்கும் தன்மையுடன் கூடிய அந்தப் புதிய பொருட்களைக் கண்டு நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். உண்மையில், ஓ! ருக்மிணியின் மகனே, அந்நாளில் இருந்தே நான் பிராமணர்களை எப்போதும் மனத்தால் வழிபடுகிறேன்” என்றேன்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, “தங்கள் வகையில் {வர்ணத்தில்} முதன்மையானவர்களான பிராமணர்களின் பெருமை குறித்து அந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொன்னது இதுவே.(54) ஓ! குந்தியின் மகனே, ஓ பலமிக்கவரே, நீரும் செல்வம் மற்றும் பசுக்களைக் கொடைகளாக அளித்து உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்களை வழிபடுவீராக.(55) இவ்வழியிலேயே பிராமணர்களின் அருள் மூலம் பிறந்த செழிப்பை நான் அனுபவிக்கிறேன். மேலும், ஓ! பாரதர்களின் தலைவா, பீஷ்மர் என்னைக் குறித்துச் சொன்னது அனைத்தும் உண்மையே” என்றான் {கிருஷ்ணன்}.(56)

சங்கரன் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 160-சிவனின் பெருமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா, துர்வாஸரின் அருள்மூலம் நீ அடைந்த அறிவை எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்.(1) ஓ! நுண்ணறிவுமிக்கவர் அனைவரிலும் முன்மையானவனே, அந்த உயர்ந்த அருள், அந்த உயர் ஆன்மாவின் பெயர்கள் அனைத்தையும் விளக்கமாக நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்[1].(2)வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த உயர் ஆன்மாவின் அருள் மூலம் நான் வென்ற புகழ் மற்றும் அடைந்த நன்மைகளை உமக்குச் சொல்கிறேன். உண்மையில், கபர்தினை வணங்கிய பிறகு இது குறித்து நான் உமக்குச் சொல்கிறேன்.(3) ஓ! மன்னா, ஒவ்வொரு நாள் படுக்கையில் இருந்து எழுந்ததும் நான் சொல்லும் சதருத்ரீயத்தை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(4) அனைத்து உயிரினங்களின் பெருந்தலைவனும், தவங்களையே செல்வமாகக் கொண்டவனுமான பிரம்மனே, சில காலம் சிறப்புத் தவங்களைச் செய்து இந்த மந்திரங்களைத் தொகுத்தான். ஓ! ஐயா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய இந்த அண்டத்தைச் சங்கரனே படைத்தான்.(5) ஓ! ஏகாதிபதி, மஹாதேவனை விட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உண்மையில், மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் உயர்ந்தவன் அவனே.(6) அந்த உயர் ஆன்மாவின் எதிரே நிற்கவல்லவர்கள் வேறு எவரும் இல்லை. உண்மையில், அவனுக்கு நிகராக மூவுலகங்களிலும் ஒருவனும் இல்லை.(7)

போர்க்களத்தில் சினத்தால் நிறைந்தவனாக அவன் நிற்கும்போது, அவனது மேனி மணமே பகைவர்கள் அனைவரின் நினைவையும் இழக்கச் செய்யும். கொல்லப்படாதவர்கள் நடுங்கிக் கீழே விழுவார்கள்.(8) அவனது முழக்கங்கள் மேகங்களுக்கு ஒப்பான பயங்கரமானவை. போர்க்களத்தில் அவனது முழக்கங்களைக் கேட்கும் தேவர்களின் இதயங்களே கூட இரண்டாகப் பிளக்கும்.(9) பினாகைதாரி கோபமடைந்து பயங்கர வடிவை ஏற்று, தேவர்கள், அசுரர், கந்தர்வர், அல்லது பாம்பின் மீது வெறுமனே தன் பார்வையைச் செலுத்தினாலும், அவனுக்கு மலைக்குகையில் உறைவிடம் அமைந்தாலும் மனோ அமைதியை அடையத் தவறுவான். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷன் வேள்வி செய்ய விரும்பி, தன் வேள்வியைப் பரப்பியபோது,(10,11) அச்சமற்ற பவன், (தக்ஷனைக் கண்டு) கோபமடைந்து, (உடல்படைத்த) வேள்வியைத் துளைத்தான். தன்னுடைய பயங்கர வில்லில் இருந்து கணையை ஏவி உரக்க முழங்கினான்.(12) உண்மையில் மஹாதேவன் கோபமடைந்து உடல்வடிவம் கொண்ட வேள்வியைத் தன் கணையால் திடீரெனத் துளைத்தபோது, தேவர்கள் மகிழ்ச்சியையும், இதய அமைதியையும் இழந்து துன்பத்தில் நிறைந்தனர்.(13)

அவனது வில்லின் நாண்கயிற்றில் உண்டான நாணொலியின் விளைவால் மொத்த அண்டமும் கலக்கமடைந்தது. ஓ! பிருதையின் மகனே, தேவர்களும், அசுரர்களும், உற்சாகத்தை இழந்து கலக்கமடைந்தனர்.(14) பெருங்கடல் கலங்கியது, பூமியானவள் மையம் வரை நடுங்கினாள். மலைகளும், குன்றுகளும் தங்கள் அடித்தளத்தைவிட்டு நகரத் தொடங்கி, அனைத்துப் புறங்களிலும் ஓடின. ஆகாய வெளி உடைந்தது.(15) உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. எதையும் காண முடியவில்லை. ஓ! பாரதா, சூரியனுடன் சேர்த்து, ஒளிக்கோள்கள் அனைத்தின் ஒளியும் இருளடைந்தது.(16) அச்சமடைந்த பெரும் முனிவர்கள், தங்களுக்கும், அண்டத்திற்கும் நன்மை செய்ய விரும்பி, அமைதிக்கான வழக்கமான பரிகாரச் சடங்குகளைச் செய்தனர்.(17) அதே வேளையில், பயங்கர ஆற்றலைக்கொண்ட ருத்திரன் தேவர்களை எதிர்த்து விரைந்தான். சினத்தால் நிறைந்த அவன், பகனின் {பக தேவனின்} கண்களைக் கிழித்தெறிந்தான்.(18) சினத்தால் தூண்டப்பட்ட அவன், தன் காலால் பூஷனை {சூரியனைத்} தாக்கினான். (புரோடாசம் என்றழைக்கப்படும்) பெரிய வேள்விப்பிண்டத்தை அமர்ந்து உண்ட போது, அந்தத் தேவனின் {சூரியனின்} பற்கள் அவனால் {ருத்திரனால்} கிழித்தெறியப்பட்டன.(19)

அச்சத்தால் நடுங்கிய தேவர்கள் சங்கரனுக்குத் தலைவணங்கினர். தணிவடையாத ருத்திரன் மீண்டும் தன் வில்லின் நாணில் சுடர்மிக்கக் கூரிய கணையொன்றைப் பொருத்தினான்.(20) அவனது ஆற்றலைக் கண்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். முதன்மையான தேவர்களான அவர்கள் அவனைத் தணிவடையச் செய்யத் தொடங்கினர்.(21) மதிப்புடன் தங்கள் கரங்களைக் கூப்பிக் கொண்ட அவர்கள், சதருத்ரீய மந்திரங்களைச் சொல்லத் தொடங்கினர். இறுதியாக, இவ்வாறு தேவர்களால் புகழப்பட்ட மஹேஸ்வரன் நிறைவடைந்தான்.(22) பிறகு தேவர்கள் (வேள்விக்காணிக்கைகளில்) ஒரு பெரும் பங்கை அவனுக்கு ஒதுக்கினார்கள். ஓ! மன்னா, அச்சத்தில் நடுங்கிய அவர்கள் அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(23) இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்த வேள்வியின் உடல் வடிவமானது ருத்திரன் நிறைவடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்தது. மஹாதேவனின் கணைகளால் எந்த அங்கங்கள் அழிக்கப்பட்டனவோ அவை மீண்டும் முழுமையாக நலமாகத் திரும்பியது.(24)

பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்ட அசுரர்கள் ஆகாயத்தில் முந்நகரங்களை {திரிபுரத்தைக்} கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்று இரும்பாலானது; ஒன்று வெள்ளியாலானது; மற்றொன்று பொன்னாலானது.(25) மகவத்தால், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தாலும் அந்த நகரங்களைத் துளைக்க இயலவில்லை. அசுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் அப்போது பெரும் ருத்திரனின் பாதுகாப்பை நாடினார்கள். உயர் ஆன்ம தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவனிடம் {ருத்திரனிடம்}, “ஓ! ருத்ரா, அசுரர்கள் தங்கள் செயல்கள் அனைத்திலும் அழிவாதிக்கத்தைச் செய்ய அச்சுறுத்துகின்றனர்.(27) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மூவுலகங்களையும் பாதுகாப்பதற்க்காக அந்தத் தைத்தியர்களைக் கொன்று அவர்களது நகரத்தையும் அழிப்பாயாக” என்று கேட்டனர். அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, விஷ்ணுவைத் தன் கணையின் சிறந்த தலையாக அமைத்தான்.(28) நெருப்பின் தேவனைக் கணை முனையாகவும், சூரியனின் மகனான யமனை அந்தக் கணையின் சிறகுகளாகவும் அமைத்தான். வேதங்களைத் தன் வில்லாகவும், சாவித்ரி தேவியைத் தன் வில்லின் சிறந்த நாணாகவும் கொண்டான்.(29) பெரும்பாட்டன் பிரம்மனையே தன் தேரோட்டி ஆக்கிக் கொண்டான். இவை அனைத்தையும் பயன்படுத்தி, மூன்று பர்வங்கள் மற்றும் மூன்று சல்லியங்களைக் கொண்ட தன் கணையால் அசுரர்களின் முந்நகரத்தைத் துளைத்தான்[2].(30) உண்மையில், ஓ! பாரதா, யுக முடிவில் அனைத்துப் பொருட்களையும் எரிக்கத் தோன்றும் நெருப்பின் சக்தியுடன் கூடியவனும் சூரியனைப் போன்ற வெண்ணிறத்தவனுமான ருத்திரனின் கணையால் அசுரர்களும், அவர்களது நகரங்களும் எரிக்கப்பட்டன.(31)ஐந்து சடைகளைக் கொண்ட ஒரு குழந்தையாக மாறி பார்வதியின் மடியில் கிடக்கும் மஹாதேவனைக் கண்டு, தேவர்களிடம் அவள் {பார்வதி}, {குழந்தையின் வடிவில் இருக்கும்} அவன் யார் என்று கேட்டாள்.(32) அந்தக் குழந்தையைக் கண்ட சக்ரன், திடீரெனப் கோபம் மற்றும் பொறாமையால் நிறைந்து தன் வஜ்ரத்தைக் கொண்டு அவனைக் கொல்லத் தீர்மானித்தான். எனினும், அக்குழந்தை இரும்புத் தடியைப் போன்ற இந்திரனின் கரத்தையும், அதனுடன் கூடிய வஜ்ரத்தையும் சேர்த்து முடக்கினான்.(33) தேவர்கள் அனைவரும் கலக்கமடைந்தனர், அந்தப் பிள்ளைதான் அண்டத்தின் தலைவன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில், அவர்கள் அனைவரும், லோகபாலர்களும் அந்தக் குழந்தையின் காரியத்தில் மதி கலங்கியவர்களாகினர்.(34)

அப்போது சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் பிரம்மன், தன் தவங்களின் உதவியால் நினைவுகூர்ந்து, அனைத்திலும் முதன்மையானவனும், உமையின் தலைவனும், அளவிலா ஆற்றல் கொண்டவனுமான மஹாதேவன் அந்தக் குழந்தையே என்பதைக் கண்டறிந்தான். பிறகு அந்தத் தலைவனை அவன் புகழ்ந்தான்.(35) தேவர்களும், உமை மற்றும் ருத்திரன் ஆகிய இருவரின் புகழையும் துதிக்கத் தொடங்கினர். பலனைக் கொன்றவனுடைய {சக்ரனுடைய} (முடக்கப்பட்ட) கரம் மீண்டும் பழைய நிலைமையை அடைந்தது.(36) பெரும் சக்தி கொண்ட பிராமணரான துர்வாசராகப் பிறந்த மஹாதேவன், என் வீட்டில் நெடுங்காலம் வசித்திருந்தான்.(37) என் வசிப்பிடத்தில் வசித்திருந்தபோது அவன் பல்வேறு குறும்புகளைச் செய்தான். பொறுத்துக் கொள்ளக் கடினமாக இருந்தாலும், {அவன் அளித்த} இதயப் பெருந்தன்மையால் அவற்றை நான் பொறுத்துக் கொண்டேன்.(38)

ருத்திரன் அவனே; சிவன் அவனே; அக்னி அவனே; சர்வன் அவனே; அனைவரையும் வெல்பவன் அவனே; இந்திரன் அவனே, வாயுவும், அஸ்வினிகளும், மின்னலின் தேவனும் அவனே.(39) சந்திரமாஸ் அவனே; ஈசானன் அவனே; சூரியன் அவனே; வருணன் அவனே; காலம் அவனே; அழிப்பவன் {மிருத்யு} அவனே; மரணம் {யமன்} அவனே; பகலும், இரவும் அவனே;(40) பக்ஷம் அவனே; பருவகாலங்கள் {ருது} அவனே; {காலை, மாலை என்ற} இரு சந்திப் பொழுதுகள் அவனே; வருடம் அவனே. தாத்ரி அவனே; விதாத்ரி அவனே; விஷ்வகர்மன் அவனே; அனைத்தையும் அறிந்தவன் அவனே.(41) திசைகளின் முக்கிய மற்றும் துணைப்புள்ளிகள் அவனே. அண்ட வடிவில் இருக்கும் அவன் அளவிலா ஆன்மா கொண்டவனாவான். புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான துர்வாசர் தெய்வீக நிறம் கொண்டவராவார்.(42) சில வேளைகளில் தனியாகவும்; சில வேளைகளில் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டும்; சில வேளைகளில் பலவாகவும், நூறாகவும், ஆயிரமாகவும், நூறாயிரமாகவும் வெளிப்படுகின்றான்.(43) மஹாதேவன் இவ்வாறானவனே. மேலும், அவன் பிறப்பற்றவன் ஆவான். நூறு வருடங்கள் ஆனாலும் ஒருவனால் அவனது {மஹாதேவனது} குணங்களைச் சொல்லித் தீர்க்க முடியாது” என்றான் {கிருஷ்ணன்}.(44)

ஸதருத்ரீயம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 161-சதருத்ரீயம் மற்றும் சிவலிங்கப் பெருமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே, ருத்திரனின் பல்வேறு பெயர்களையும், அந்த உயர் ஆன்மாவின் உயர்ந்த அருள்நிலையையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) முனிவர்கள் மஹாதேவனை அக்னி என்றும், ஸ்தாணு என்றும், மஹேஸ்வரன் என்றும், ஒற்றைக் கண்ணன் என்றும், அண்ட வடிவம் கொண்ட முக்கண்ணன் என்றும், சிவன் அல்லது மங்கலமானவன் என்றும் சொல்கிறார்கள்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அந்தத் தேவன் என்று சொல்கின்றனர். ஒன்று பயங்கரமானதும், மற்றொன்று மங்கலமான மென்மை நிறைந்ததுமாகும். அவ்விரு வடிவங்களும் இன்னும் பல வடிவங்களாகப் பகுக்கப்படுகின்றன.(3) கடுமையான பயங்கர வடிவம், அக்னி, மின்னல் மற்றும் சூரியனோடு ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் அறம், நீர் மற்றும் சந்திரனோடு ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.(4)

மேலும் அவனது பாதி உடல் நெருப்பெனவும், பாதி உடல் சோமன் (அல்லது சந்திரன்) எனவும் சொல்லப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் பிரம்மச்சரிய நோன்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.(5) மிகப் பயங்கரமான மற்றொரு வடிவம் அண்டத்தை அழிக்கும் அனைத்து இயக்கங்களிலும் ஈடுபடுகிறது. அவனே பெரியவன் (மகத்), அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த தலைவன் (ஈஸ்வரன்) என்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(6) அவன் எரிக்கிறான், ஒடுக்குகிறான், கடுமையாக இருக்கிறான், பெருஞ்சக்தியுடன் கூடியவனாக இருக்கிறான், சதை, குருதி, மஜ்ஜை ஆகியவற்றை உண்பவனாகவும் இருக்கிறான் என்பதாலேயே அவன் ருத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருப்பதாலும், அவனுடைய ஆட்சிப் பகுதியும், செல்வங்களும் மிகப் பெரியவையாக இருப்பதாலும், அவன் பாதுகாக்கும் அண்டம் மிகப் பெரியதாக இருப்பதாலும் அவன் மஹாதேவன் என்றழைக்கப்படுகிறான்.(8)

புகையின் வடிவம் அல்லது நிறத்தில் அவன் இருப்பதன் காரணத்தால் அவன் தூர்ஜடி {தூர்ஜடை} என்றழைக்கப்படுகிறான். தன் செயல்கள் அனைத்தாலும் அனைவருக்குமான வேள்விகளைச் செய்வதாலும்,(9) அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுவதாலும் அவன் சிவன் அல்லது மங்கலமானவன் என்றழைக்கப்படுகிறான். (ஆகாயத்தில்) நின்று கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிப்பதையும் தவிர அவன் வழுவாத குறிப்பிட்ட ஒரு பாதையில் நிலைத்திருக்கிறான்.(10) அவனுடைய சின்னம் {லிங்கம்} நிலையானது, எக்காலத்திலும் அழிவற்றது. இந்தக் காரணங்களினால் அவன் ஸ்தாணு என்றழைக்கப்படுகிறான். அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே.(11) அசைவனவும், அசையாதனவும் அவனே. இதன் காரணமாக அவன் பஹுரூபன் என்றழைக்கப்படுகிறான். விஷ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்க்ள அவனது உடலில் வசிக்கிறார்கள். இதன் காரணமாக அவன் (அண்ட வடிவம் கொண்ட) விஷ்வரூபன் என்றழைக்கப்படுகிறான்.(12)

ஆயிரம் கண் கொண்டவன்; அல்லது எல்லையற்ற கண்களைக் கொண்டவன்; அல்லது எங்கும், தன் உடலெங்கும் கண் கொண்டவன். அவனது சக்தி அவனது கண்களின் மூலம் வெளிப்படுகிறது. அவனது கண்களுக்கு ஓர் எல்லையில்லை {அவன் ஸர்வதஸ்சக்ஷு என்றழைக்கப்படுகிறான்}.(13) உயிரினங்கள் {பசுக்கள்} அனைத்திற்கும் உணவூட்டி வளர்ப்பவனாகவும், அவற்றுடன் விளையாடுபவனாகவும் இருப்பதாலும், அவற்றின் தலைவனாகவோ, அவற்றை ஆள்பவனாகவோ இருப்பதனால் அவன் பசுபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றழைக்கப்படுகிறான்.(14) அவனுடைய சின்னம் {லிங்கம்} எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்பதால் உலகங்கள் அனைத்தும் அதை முறைப்படி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டுச் செயல் அவனுக்குப் பெரும் நிறைவைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.(15) சிலையை உண்டாக்கி அவனை ஒருவன் வழிபட்டாலும், மற்றொருவன் அவனது சின்னத்தை {லிங்கத்தை} வழிபட்டாலும், பின்னவனே {லிங்கத்தை வழிபட்டவனே} எப்போதும் பெருஞ்செழிப்பை அடைவான்[1].(16)முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் எப்போதும் நிமிர்ந்து உயர்ந்திருக்கும் அவனது சின்னத்தையே {லிங்கத்தையே} வழிபடுகின்றனர்.(17) தன் சின்னம் {லிங்கம்} வழிபடப்பட்டால், அந்த வழிபாட்டைச் செய்பவனிடம் மஹேஸ்வரன் உயர்ந்த நிறைவை அடைகிறான். தன் பக்தர்களிடம் அன்பு கொண்ட அவன், உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான்.(18) அந்தப் பெருந்தேவன் சுடலையில் வசிக்க விரும்புகிறான், அங்கே அவன் சடலங்கள் அனைத்தையும் எரிக்கிறான். அத்தகைய இடங்களில் {சுடலைகளில்} வேள்விகளைச் செய்யும் மனிதர்கள், வீரர்களுக்கெனத் தனியே ஒதுக்கப்பட்ட உலகங்களை இறுதியில் அடைவார்கள்[2].(19) நியாயமாகச் செயல்படுவதில் ஈடுபடும் அவனே உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் மரணமாக {மிருத்யுவாகக்} கருதப்படுகிறான். மேலும் அவன், பிராணன், அபானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளாக உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் இருக்கிறான்.(20)அவன் சுடர்மிக்கப் பல்வேறு பயங்கர வடிவங்களைக் கொண்டவனாவான். இவ்வுலகத்தில் வழிபடப்படும் அந்த வடிவங்கள் அனைத்தையும், ஞானம் கொண்ட பிராமணர்கள் அறிந்திருக்கிறார்கள்.(21) தேவர்களுக்கு மத்தியில் பெரும் முக்கியத்தவம் வாய்ந்த பல பெயர்களை அவன் கொண்டிருக்கிறான். அந்தப் பெயர்களின் பொருள்கள் அவனது பெருமையில் இருந்தோ, சாதனைகளில் இருந்தோ, ஒழுக்கத்தில் இருந்தோ எடுக்கப்படுகின்றன.(22) வியாசரால் தொகுக்கப்பட்ட வேதங்களில் தோன்றும் சிறந்த சதருத்ரீயத்தை அவனைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்கள் எப்போதும் உரைக்கிறார்கள்.(23) உண்மையில், பிராமணர்களும், முனிவர்களும் அனைத்து உயிரினங்களுக்கும் மூத்தவன் என்று அவனை அழைக்கின்றனர்.(24)

தேவர்கள் அனைவரிலும் முதல்வன் அவன், அவனது வாயில் இருந்தே அக்னி உண்டானான். அற ஆன்மா கொண்டவனும், எப்போதும் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்க விரும்புபவனுமான அந்தத் தேவன், தன்னிடம் பணிவோரை ஒருபோதும் கைவிடாதவன்.(25) அதைவிட அவன் தன் உயிர் மூச்சையே கைவிட்டு, சாத்தியப்படும் துன்பங்கள் அனைத்தையும் தானே ஈட்டிக் கொள்வான். நீண்ட வாழ்வுக்காலம், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, செல்வாக்கு, செல்வம் பல்வேறு வகை இன்பங்கள் ஆகியனவற்றை(26) அளிப்பவனும், பறிப்பவனும் அவனே[3]. சக்ரன் மற்றும் பிற தேவர்களிடம் ஒருவன் காணும் தலைமைத்துவம் மற்றும் செல்வாக்கு ஆகியவை உண்மையில் அவனுடையவையே.(27)மூவுலகங்களிலும் நேரும் நன்மை, தீமைகள் அனைத்திலும் ஈடுபடுபவன் அவனே. அனுபவிக்கத் தகுந்த பொருட்கள் அனைத்தையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் விளைவால் அவன் ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன், அல்லது உயர்ந்த பொருள்) என்று அழைக்கப்படுகிறான்.(28) மேலும், பரந்த அண்டத்தை ஆள்பவனாக இருப்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான். மொத்த அண்டமும் பல்வேறு வடிவங்களின் மூலம் அவனால் நிறைந்திருக்கிறது. பெரும் பெண்குதிரைத்தலையின் வடிவில் கடலின் நீரை {வடவாமுகாக்னியாக} எரிப்பவனும், முழக்கங்களை இடுபவனும் அந்தத் தேவனே ” என்றான் {கிருஷ்ணன்}”.(29)

அறம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 162-அறத்தைத் தீர்மானிப்பதில் ஐயம் நேரும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும், அறப்பலன்களையும், பல அறங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தேவகியின் மகனான கிருஷ்ணன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, யுதிஷ்டிரன் மீண்டும் சந்தனுவின் மகனான பீஷ்மரிடம்,(1) “ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, ஓ! கடமைகளை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு, நேரடியாகக்கண்டுணர்தல் மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டில் அதிகாரமிக்கதாகக் கருதப்பட வேண்டியது எது?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதில் எந்த ஐயமும் கிடையாது என நினைக்கிறேன். ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. நீ என்னிடம் கேட்டிருக்கும் கேள்வி நிச்சயம் சரியானதே. ஐயம் வளர்ப்பது எளிதே. ஆனால், அந்த ஐயத்திற்கான தீர்வை அடைவது கடினம்.(3) நேரடியாகக் கண்டுணர்தல், திறன் தேர்வு (அல்லது சாத்திரங்கள்) ஆகிய இரண்டிலும் ஐயங்கள் எழும் சந்தர்ப்பங்கள் எண்ணற்றவையாகும். தர்க்கவியலாளர் {பண்டிதர்கள்} என்ற பெயரில் திளைக்கும் சில மனிதர்கள், மேன்மையான அறிவைக் கொண்டவர்கள் தாங்கள் என்று கற்பனை செய்து கொண்டு, நேரடி கண்டுணர்தல் மட்டுமே அதிகாரமிக்கது என்று உறுதிகூறுகிறார்கள்.(4) இஃது உண்மையாக இருந்தாலும், நேரடியாகக் கண்டுணர முடியாத ஏதும் இருப்பில் இல்லை என்று அவர்கள் உறுதியடைகிறார்கள்; அல்லது அந்தப் பொருட்களின் இருப்பில் அவர்கள் ஐயுறுகிறார்கள். உண்மையில் அத்தகைய கூற்றுகள் பற்றாக்குறையுடன் கூடியவையாகும்; கல்வியில் எவ்வளவு செருக்குள்ளவர்களாக இருப்பினும் அவற்றைச் சொல்பவர்கள் மூட புத்தி கொண்டவர்களே.(5)

மறுபுறம், ஒன்று (பகுபடா பிரம்மம்) எவ்வாறு காரணமாக இருக்க முடியும் என நீ ஐயுறுகிறாயெனில், நீண்ட வருட காலம், சோம்பலில்லாமல், யோகத்தின் துணையின் மூலமே ஒருவனால் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பது என் மறுமொழியாக இருக்கும்.(6) உண்மையில், ஓ! பாரதா, (அந்த அல்லது இந்த நிலையான வாழ்வுமுறைகளில் பற்றுக் கொள்ளாமல்) தனக்கு நேரும் வழிமுறைகளின்படி வாழ்பவன் மற்றும் (கேள்விக்கான விடை தேடுவதில்) அர்ப்பணிப்புள்ள ஒருவனால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள இயலும். உண்மையில் வேறு எவராலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது.(7) காரணங்களின் எல்லையை (பகுத்தறிவு செயல்முறையை} ஒருவன் அடையும்போது, அவன் சிறந்ததும், அனைத்தையும் புரிந்து கொள்ளக் கூடியதும், (பிரம்மம் என்றழைக்கப்படும்) அண்டத்திற்கு ஒளியூட்டும் பிரகாசப் பெருந்திரளாக இருப்பதுமான அறிவை அடைகிறான்.(8) ஓ! மன்னா, காரணத்தில் (அல்லது அனுமானத்தில்) இருந்து பெறப்படும் அறிவை அறிவென்று சொல்வது அரிதே. அத்தகை அறிவு மறுக்கப்பட வேண்டும். இது சொல்லால் வரையறுக்கப்படவில்லை, அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அது மறுக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}[1].(9)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நேரடியாகக் கண்டுணர்தல், கவனித்து அனுமானம் செய்தல், ஆகம அறிவியல், அல்லது சாத்திரங்கள் மற்றும், நல்லவற்றை வேறுபடுத்திக் காட்டும் பல்வேறுவகை நடைமுறைகள் ஆகிய இவற்றில் (நான்கில்) அதிகாரமிக்கது எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் வலிமை கொண்ட தீய மனிதர்களால் அறம் அழிக்கப்படும்போது, நல்லோர் கவனத்துடனும், ஊக்கத்துடனும் செயல்படுவதன் மூலம் அப்போதைக்கு அதை {அறத்தைப்} பாதுகாக்க முடியும். எனினும், முடிவில் அறம் அழிவடையும் என்பதால் அத்தகைய பாதுகாப்பு நீண்ட காலம் நீடிக்காது.(11) மேலும், ஆழமான குழியைப் பார்வையில் இருந்து மறைத்து, அதன் {அந்தக் குழியின்} வாயை மூடியிருக்கும் புல்லைப் போல, அறமானது சில வேளைகளில் மறத்திற்கான {அதர்மத்திற்கான} முகமூடியாக இருக்கிறது. ஓ! யுதிஷ்டிரா, மேலும் கேட்பாயாக. இதன் விளைவால், நல்லோரின் நடைமுறைகளைத் தீயோர் குறுக்கிட்டு அழிக்கின்றனர்.(12) தீய நடத்தை கொண்டோரும், ஸ்ருதிகளைப் புறக்கணிப்பவர்களும், அறத்தை வெறுப்பவர்களும் தீயோருமான இழிந்தவர்கள், (நிலையாக நிறுவப்பட வேண்டிய) நல்லொழுக்கத்துடன் கூடிய நடைமுறைகளை அழிக்கின்றனர். எனவே, நேரடியாகக் கண்டுணர்வது, அனுமானம் மற்றும் நன்னடத்தை ஆகியவற்றில் ஐயங்கள் தோன்றுகின்றன[2].(13)எனவே, நல்லோருக்கு மத்தியில், சாத்திரங்களில் பிறந்த (அல்லது தூய்மையடைந்த) புத்தியைக் கொண்டவர்களும், எப்போதும் நிறைவான மனம் கொண்டவர்களும் முதன்மையானவர்களாகக் கருதப்பட வேண்டும். கவலைநிறைந்தவர்களாக, ஆன்ம அமைதி இல்லாதவர்களாக இருப்பவர்கள், இவர்களையே அணுகட்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, உன் ஐயங்களுக்கான தீர்மானங்களை அடைய நீ அவர்களையே நாடுவாயாக.[3](14) இன்பத்தையும், பேராசையைத் தொடர்ந்துவரும் செல்வத்தையும் அலட்சியம் செய்து, அறம் மட்டுமே நாடப்பட வேண்டிய ஒன்று என்ற நம்பிக்கையில் விழிப்படைந்த மனிதர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்களிடம் (உனக்கு ஞானமளிக்குமாறு) கேட்பாயாக.(15) அத்தகைய மனிதர்களின் ஒழுக்கம் ஒருபோதும் தவறவோ, அழியவோ செய்யாது. அதே போல அவர்களது வேள்விகளும், வேத கல்வியும், சடங்குகளும் அழிவடையாது. உண்மையில் வெளிப்படையான செயல்களை உள்ளடக்கிய ஒழுக்கம், (மனத்) தூய்மையுடன் கூடிய நடத்தை, வேதங்கள் ஆகியவை சேர்ந்ததே அறம் ஆகும்” என்றார் {பீஷ்மர்}.(16)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, என் புத்தி மீண்டும் ஐயத்தால் கலங்குகிறது. நான் பெருங்கடலின் இந்தப் பக்கத்தில், அதைக் கடப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனினும் அக்கடலின் மறுகரையை என்னால் காண முடியவில்லை.(17) வேதங்கள், நேரடியாகக்கண்டுணர்தல், நடத்தை (அல்லது மனத்தூய்மை) ஆகிய இம்மூன்றும் சேர்ந்ததே அதிகாரமிக்கது எனக் கருதப்படுமானால், அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன என்று பிழைகூறலாம். அவ்வாறெனில் அறமானது பகுபடாத ஒன்றாக இருப்பினும், உண்மையில் மூன்று வகையாகிறதே” என்றான்.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சில வேளைகளில், பெருஞ்சக்தி கொண்ட தீயோரால் அறம் அழிக்கப்படுவது காணப்படுகிறது. அறம் உண்மையில் மூன்றுவகையானது என நீ கருதினால், உன் தீர்மானம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்று நான் சொல்வேன்.(19) உண்மையென்னவென்றால், அறமானது மூன்று வெவ்வேறு புள்ளிகளில் இருந்து பார்க்கக்கூடியதாக இருப்பினும், அஃது ஒன்றாகவும், பகுக்கப்பட முடியாததாகவும் இருக்கிறது.(20) அறத்தின் அடித்தளமாக இருக்கும் இம்மூன்று பாதைகள் (குறியீடுகள்) ஒவ்வொன்றுக்கும் விதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. விதிக்கப்பட்ட அறிவுரைகளின்படி நீ செயல்படுவாயாக. நீ அறம் குறித்து ஒருபோதும் சச்சரவு செய்யாமல், அந்த ஐயங்களைத் தீர்க்க முனைந்தால் நீ அவற்றை அடைவாய்.(21) ஓ! பாரதர்களின் தலைவா, இதுபோன்ற ஐயங்கள் ஒருபோதும் உன் மனத்தைப் பீடிக்காதவாறு செய்வாயாக. எவ்வகைத் தயக்கமுமின்றி நான் சொல்வதற்குக் கீழ்ப்படிவாயாக. ஒரு குருடனைப் போலவோ, வேறொருவனைச் சார்ந்திருக்கும் புலனற்றவனைப் போலவோ என்னைப் பின்பற்றுவாயாக.(22)

ஓ! பகைவர் எவனும் இல்லாத மன்னா, தீங்கிழையாமை, வாய்மை, கோபமின்மை (அல்லது மன்னிக்கும்தன்மை), ஈகை அல்லது கொடைகள் ஆகிய நான்கும் நித்திய அறமாக அமைவதால் இவை நான்கையும் நீ பயில்வாயாக.(23) ஓ! வலிய கரங்கொண்ட இளவரசே, உன் தந்தைமார் மற்றும் பாட்டன்களிடம் நீ நடந்து கொள்வது போலவே, பிராமணர்களிடம் உன் நடத்தை இருக்கட்டும். இவையே அறத்தின் முக்கியக் குறியீடுகளாகும்.(24) எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும் தரத்தை மறுப்பதன் மூலம் அதிகாரத்தின் கனத்தை அழிக்கும் சிறு மதி கொண்ட மனிதன், மனிதர்களுக்கு மத்தியில் அதிகாரமிக்கவனாவதில் தவறுவான். அத்தகைய மனிதன் உலகத்தில் துன்பம் அதிகரிப்பதற்கான காரணமாவான்.(25) நீ பிராமணர்களை மதித்து, அவர்களை விருந்தோம்பலுடன் கவனிப்பாயாக. நீ எப்போதும் அவர்களுக்கு இவ்வாறே தொண்டாற்றுவாயாக. இந்த அண்டமே அவர்களைச் சார்ந்திருக்கிறது. நீயும் அவ்வாறே அவர்களைப் புரிந்து கொள்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(26)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அறத்தை வெறுப்போர் மற்றும் அதைத் துதித்து நோற்போர் ஆகியோர் அடையும் கதிகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்தை வெறுக்கும் மனிதர்கள், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களில் மூழ்கிய இதயம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அத்தகைய மனிதர்கள் எப்போதும் நரகத்திற்கே செல்வார்கள்.(28) மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அறத்தைத் துதித்து நோற்போரும், வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளோருமான மனிதர்களே, நல்லோர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எப்போதும் சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கிறார்கள்.(29) ஆசான்களிடம் மதிப்புடன் காத்திருப்பதன் விளைவால் அவர்களின் இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கித் திரும்புகின்றன. உண்மையில் அறத்தைத் துதிப்போர் தேவலோகங்களை அடைகின்றனர்.(30) மனிதர்களாக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும், பேராசை மற்றும் வன்மத்தைத் தவிர்த்து, தவங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் உடல்களை மெலியச் செய்யும் மனிதர்கள், தங்களுடையதாகும் அறத்தின் விளைவால் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(31) பிரம்மனின் மூத்த மகன்களான பிராமணர்கள் அறத்தைப் பிரதிபலிப்பவர்களாவர் என்று ஞானத்தைக் கொடையாகப் பெற்றவர்கள் சொல்கின்றனர். அறவோர் எப்போதும் அவர்களை வழிபடுகின்றனர், அவர்களது இதயங்கள், பசித்த மனிதனின் வயிறு கனிந்த இனிய கனிகளை விரும்புவதைப் போலவே அவர்களிடம் அன்பும் பாசமும் கொள்ளும்” என்றார் {பீஷ்மர்}.(32)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தீயோர் வெளிப்படுத்தும் தோற்றமென்ன? நல்லோர் என்றழைக்கப்படுவோர் செய்யும் செயல்களென்ன? ஓ! புனிதமானவரே, எனக்கு இதை விளக்குவீராக. உண்மையில், நல்லோர் மற்றும் தீயோருக்குண்டான குறியீடுகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(33)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீச்செயல் செய்பவர்கள், அடக்க முடியாதவர்கள், அல்லது விதிகளெனும் கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட முடியாதவர்கள், கெட்ட வாக்கு கொண்டோர் ஆகியோர் தீயோராவர். மறுபுறம், எப்போதும் நற்செயல்களைச் செய்பவர்கள் நல்லோராவர். உண்மையில், இந்த மனிதர்களே நல்லொழுக்க நடைமுறையின் குறியீடுகளாகக் கருதப்படுகிறார்கள்.(34) ஓ! ஏகாதிபதி, நல்லோர் அல்லது அறவோர், இயற்கையின் அழைப்புகளுக்குப் பொதுச் சாலையிலோ, மாட்டுக் கொட்டகையின் மத்தியிலோ, நெற்களத்திலோ {வயலிலோ} பதிலளிக்க மாட்டர்கள் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கமாட்டார்கள்}.(35) ஐவருக்கு உணவூட்டிய பிறகே தாங்கள் உணவை உண்பார்கள்[4]. உண்ணும் போது அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள், ஈரக் கரங்களுடன் ஒருபோதும் உறங்கச் செல்லமாட்டார்கள்.(36) சுடர்மிக்க நெருப்பு, காளை, ஒரு தேவனின் வடிவம் {சிலை}, மாட்டுக் கொட்டகை, நாற்சந்திகள், முதிர்ந்தவரும், அறம் சார்ந்தவருமான ஒரு பிராமணர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, ஒருவரையோ கண்டாலும், தங்கள் மதிப்பை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் அவற்றை வலம் வருவார்கள்.(37) முதியவர்கள், சுமை சுமப்போர், பெண்கள், கிராம மற்றும் நகர நிர்வாகிகள், பிராமணர்கள், பசுக்கள், மன்னர்கள் ஆகியோர் எதிரில் வந்தால் அவர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள்.(38)விருந்தினர்கள், பணியாட்கள், தன்னைச் சார்ந்திருப்போர், உறவினர்கள் மற்றும் தன் பாதுகாப்பை நாடுவோர் அனைவரையும் நல்லோர், அல்லது அறவோர் பாதுகாப்பார்கள். அத்தகைய மனிதன் எப்போதும் அவர்களை மதிப்புடன் விசாரிப்பான்.(39) காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகள் மனிதர்கள் தங்கள் உணவை உண்பதற்கான நேரமாகத் தேவர்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இடைவேளைகளில் அவன் எதையும் உண்ணக்கூடாது. இந்த விதியைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் உண்ணா நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான்.(40) ஆகுதிகள் பெறுவதற்காக ஹோம நேரம் வரும் வரைக் காத்திருக்கும் புனித நெருப்பைப் போலவே, ஒரு பெண்ணானவள், தன் மாதவிலக்குக் காலம் முடிந்ததும், கணவனுடன் கலவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.(41) மாதவிலக்கு முடிந்த காலத்திற்குப் பிறகு உள்ள காலத்தைத் தவிர வேறு காலத்தில் {மாதவிலக்கு காலத்தில்} தன் மனைவியை ஒருபோதும் அணுகாதவன் பிரம்மச்சரிய நோன்பைப் பின்பற்றுபவனாகச் சொல்லப்படுகிறான். அமிர்தம் (அமுதம்), பிராமணர்கள், பசுக்கள் ஆகிய மூன்றும் நிகரானவையாகக் கருதப்படுகின்றன.(42) எனவே, ஒருவன் பிராமணர்களையும், பசுக்களையும் உரிய சடங்குகளுடன் எப்போதும் வழிபட வேண்டும். யஜுர் வேத மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலம் ஒருவன் எந்தக் குற்றத்தையும், அல்லது களங்கத்தையும் {பாவத்தையும்} ஈட்டுவதில்லை.(43) ஒருவன் தன் மகனின் இறைச்சியைத் தவிர்ப்பதைப் போலவே முதுகெலும்பைச் சேர்ந்தவையும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளைச் சேர்ந்தவையுமான இறைச்சியும் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவன் தன் நாட்டில் வசித்தாலும், அயல்நாட்டில் வசித்தாலும் தன் விருந்தினருக்கு உணவளிக்காமல் அனுப்பக்கூடாது.(44)

கல்வி நிறைவடைந்ததும் ஒருவன் தன் ஆசானுக்குத் தக்ஷிணை அளிக்க வேண்டும். அவன் தன் ஆசானைக் காணும்போது, அவரை மதிப்புடன் வணங்கி, ஓர் இருக்கையை அளித்து அவரை வழிபட வேண்டும்.(45) தன் ஆசானை வழிபடுவதன் மூலம் ஒருவன் தான் வாழும் காலத்தையும், புகழையும், செழிப்பையும் பெருக்கிக் கொள்கிறான். முதியோரை ஒருபோதும் நிந்திக்கக்கூடாது, மேலும் அவர்களை எக்காரியத்திலும் ஈடுபடுத்தக் கூடாது[5].(46) முதியவர் ஒருவர் நிற்கும்போது ஒருவன் ஒருபோதும் அமரக்கூடாது. இவ்வாறு செயல்படுவதன் மூலம் ஒருவன் தன் வாழ்நாள் காலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறான். ஒருவன் நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண், அல்லது ஆணின் மீது தன் கண்களை ஒருபோதும் செலுத்தக்கூடாது.(47) தனிமையிலன்றி வேறு இடங்களில் ஒருவன் பாலியல்கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறர் பார்க்க ஒருவன் உண்ணக்கூடாது. ஆசான்களே முதன்மையான தீர்த்தங்களாவர்; புனிதமான பொருட்கள் அனைத்திலும் இதயமே முதன்மையானதாகும்;(48) தேடத்தகுந்தவற்றுள் ஞானமே முதன்மையானதாகும்; இன்பங்கள் அனைத்திலும் மனநிறைவே முதன்மையானதாகும். காலையும், மாலையும் ஒருவன் முதியோரின் முக்கிய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். வயதால் மதிக்கத் தகுந்தவர்களிடம் தொடர்ந்து காத்திருப்பதன் மூலம் ஒருவன் ஞானத்தை அடைகிறான். வேதங்களைப் படிக்கும்போதும், உண்ணும் போதும் ஒருவன் தன் வலக்கரத்தையே பயன்படுத்த வேண்டும்.(50)ஒருவன் தன் வாக்கு, மனம் மற்றும் புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு சமைக்கப்பட்ட பாயஸம், யாவகம், கிருசரம், ஹவி (தெளிந்த நெய்)) ஆகியவற்றுடன்(51) ஒருவன் அஷ்டகை என்றழைக்கப்படும் சிராத்தத்தில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும். கோள்களை வழிபடுவதிலும் அவற்றையே பயன்படுத்த வேண்டும். ஒருவருடைய ஆசி பெறாமல் சிரைத்துக் கொள்வது {சவரம் செய்தல்} கூடாது. ஒருவன் தும்மினால், அங்கே இருப்பவர்கள் அவனுக்கு ஆசி கூற வேண்டும்[6]. உடல் நலமில்லாதவர்கள், அல்லது நோயால் பீடிக்கப்பட்டவர்களனைவருக்கும் ஆசி கூற வேண்டும். அவர்களுடைய வாழ்நாள் நீட்டிப்பு வேண்டப்பட வேண்டும்.(52) உயர்ந்த மனிதர்களை ஒருபோதும் (நீ என்ற சொல்லைப் பயன்படுத்தி) வழக்கான சொற்களால் அழைக்கக்கூடாது. பெரும் இக்கட்டுகளிலும் ஒருவன் ஒருபோதும் அதைச் செய்யக்கூடாது. அத்தகைய மனிதனை, நீ என்று அழைப்பது அவனைக் கொல்வதற்கு இணையானதாகும். கல்விமான்கள் இவ்வாறு அழைக்கப்படுவதால் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.(53) தாழ்ந்தவர்கள், இணையானவர்கள், அல்லது சீடர்களிடம் இத்தகைய சொல் பயன்படுத்தப்படலாம். பாவம் நிறைந்த மனிதனின் இதயம் எப்போதும் தான் செய்த பாவங்களை அறிவித்துக் கொண்டே இருக்கும்.(54)வேண்டுமென்றே பாவங்களைச் செய்துவிட்டு, நல்லோரிடம் அவற்றை மறைக்க முயலும் மனிதர்கள் அழிவை அடைவார்கள். உண்மையில், நிச்சயமான பாவிகள் தங்கள் பாவச் செயல்களைப் பிறரிடம் இருந்து மறைக்கவே முனைவார்கள்[7].(55) அத்தகைய மனிதர்கள் தங்கள் பாவங்களை வேறு மனிதர்களோ, தேவர்களோ பார்ப்பதில்லை என்று நினைக்கிறார்கள். பாவங்களில் மூழ்கி பாவியாக இருக்கும் மனிதன், {தன் அடுத்தப் பிறவியில்} அவலம் நிறைந்த உயிரினமாகப் பிறப்பான்.(56) அத்தகைய மனிதனின் பாவங்கள், (கடன் வழங்கும்) ஈட்டிக்காரனின் வட்டியைப் போலவே நாளுக்கு நாள் பெருகுகிறது. ஒரு பாவத்தைச் செய்த மனிதன் அதை அறத்தின் மூலம் மறைக்க முனைந்தால், அந்தப் பாவம் அழிவை அடைந்து, வேறு பாவங்களுக்கு வழிவகுப்பதற்குப் பதில் அறத்திற்கு வழிவகுக்கிறது[8].(57) உப்பின் மீது நீரை ஊற்றினால் அஃது உடனே கரைந்து போகும். அதைப் போலவே, பரிகாரம் செய்யப்படும்போது பாவமும் கரைந்து போகிறது.(58) இந்தக் காரணங்களினால் ஒருவன் ஒருபோதும் பாவத்தை மறைக்கக்கூடாது. மறைக்கப்பட்டால், அது நிச்சயம் வளரும். பாவமிழைக்கப்பட்டால் ஒருவன் அதை நல்லோரின் முன்பு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது அவை {பாவங்கள்} உடனே அழிந்து போகும்.(59)நம்பிக்கையுடன் சேகரிக்கப்பட்டவற்றை ஒருவன் சரியான நேரத்தில் அனுபவிக்காவிட்டால், சேகரிக்கப்பட்ட அந்தச் செல்வம் அவனது மரணத்திற்குப் பின் வேறோர் உரிமையாளரைக் கண்டடையும்.(60) ஒவ்வொரு உயிரினத்தின் மனமும், உண்மையான அறச்சோதனையைச் செய்யும் என்று ஞானிகள் சொல்கின்றனர். எனவேதான், உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அறத்தை அடைவதை உள்ளார்ந்த போக்காகக் கொண்டிருக்கின்றன.(61) ஒருவன் அறத்தைத் தனியாகவே அடைய வேண்டும். உண்மையில் அவன் தன்னை அறவோனாக அறிவித்துக் கொள்ளக்கூடாது, மேலும், {தன்னை அறவோனாக} வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அறக்கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடக்கவும் கூடாது. அறம் கொண்டுவரும் கனிகளை அனுபவிக்க அதைப் பின்பற்றுபவர்கள் அறவணிகர்களாவர்.(62) செருக்கெண்ணங்களைக் கைவிட்டு ஒருவன் தேவர்களைத் துதிக்க வேண்டும். அதே போல, அவன் தன் ஆசானுக்கு வஞ்சனையில்லாமல் தொண்டாற்ற வேண்டும். இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக் கொடையளிப்பதால், மறுமையில் கிட்டும் விலைமதிப்புமிக்கச் செல்வத்தை ஈட்டும் ஏற்பாட்டை ஒருவன் செய்து கொள்ள வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(63)

மெய்வருத்தக்கூலி! – அநுசாஸனபர்வம் பகுதி – 163-விதி மற்றும் முயற்சிக்கிடையிலான வேறுபாட்டை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மனிதன் கெடுபேறு கொண்டவனாக இருந்தால் அவன் எவ்வளவு பலம் கொண்டவனாக இருந்தாலும் செல்வமீட்டத் தவறுவது காணப்படுகிறது. மறுபுறம் நற்பேறு பெற்ற ஒருவன் பலவீனனாகவோ, மூடனாகவோ இருந்தாலும் செல்வத்தை அடைகிறான்.(1) மேலும், அடைவதற்கான காலமாக இல்லாதபோது, ஒருவன் சிறப்பாக முயற்சி செய்தாலும் ஒன்றையும் அவனால் அடைய முடிவதில்லை. எனினும், அடைவதற்கான காலம் வரும்போது, எந்த முயற்சியும் இல்லாமலே ஒருவன் பெருஞ்செல்வத்தை வெல்கிறான்.(2) சிறப்பாக முயற்சி செய்தும் விளைவேதும் அடையாத நூற்றுக்கணக்கான மனிதர்கள் காணப்படுகின்றர். மேலும், எம்முயற்சியுமின்றிச் செல்வீட்டும் பலரும் காணப்படுகின்றனர்.(3)

முயற்சியின் விளைவே செல்வம் என்றால், ஒருவன் முயற்சி செய்த உடனேயே அஃதை அடைய வேண்டும். உண்மையில் அவ்வாறிருந்தால், கல்வி கற்ற எந்த மனிதனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனிடம் பாதுகாப்பை அடைவது காணப்படாது.(4) ஓ! பாரதர்களின் தலைவரே, மனிதர்களுக்கு மத்தியில் அடையக்கூடாது என்பது (என விதிக்கப்பட்ட எதுவும்) ஒருபோதும் அடையப்படுவதில்லை. சிறந்த முயற்சிகளின் துணையுடன் கூட மனிதர்கள் விளைவுகளை அடைவதில் தவறுவது காணப்படுகிறது.(5)

ஒருவன் நூறு வழிமுறைகளின் மூலம் செல்வத்தைத் தேடுவது (தேடினாலும் அஃதை அடையத்தவறுவது) காணப்படுகிறது; அதே வேளையில் மற்றொருவன் தேடவே செய்யாமல் அஃதை {செல்வத்தை} அடைந்து மகிழ்ச்சி அடைகிறான். மனிதர்கள் (செல்வத்துக்காகத்) தொடர்ந்து தீச்செயல்களைச் செய்து, அதை அடையத் தவறுவது காணப்படுகிறது.(6) எந்த வகைத் தீச்செயலும் செய்யாமல் செல்வத்தை அனுபவிக்கும் பிறரும் இருக்கின்றனர். மேலும், சாத்திரங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்தும் செல்வமில்லாத பிறரும் இருக்கின்றனர். ஒருவன் நெறிகள் மற்றும் கொள்கை அறிவியலைச் சார்ந்த ஆய்வுகள் அனைத்தையும் கற்றும் அவற்றைக் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பது காணப்படுகிறது.(7) மேலும், நெறிகள் மற்றும் கொள்கை அறிவியல் எதையும் கற்காமலேயே ஒருவன் மன்னனின் முதன்மை அமைச்சராக நியமிக்கப்படுவதும் காணப்படுகிறது. கல்விமான் ஒருவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. கல்லாதவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. இரு வகை மனிதர்களும் முற்றிலும் செல்வம் இல்லாதவர்களாக இருப்பதும் காணப்படுகிறது.(8)

ஒருவன் கல்வியை அடைவதன் மூலம் செல்வத்தின் மகிழ்ச்சியை அடையலாம் என்றால், கல்விமான் எவனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனின் பாதுகாப்பில் இருப்பது ஒருபோதும் காணப்படாது.(9) உண்மையில், கல்வியை அடைவதனால் ஒருவன் நீரை அடைந்து தாகம் தணிப்பவனைப் போல விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கலாம் என்றால், கல்வியை அடைவதில் இவ்வுலகில் எவரும் சோம்பியிருக்க மாட்டார்கள்.(10) ஒருவனுக்கான காலம் வராவிட்டால், அவன் நூறு கணைகளால் துளைக்கப்பட்டாலும் மாளமாட்டான். மறுபுறம், வேளை வந்தவுடனேயே, புல்லால் தாக்கப்பட்டவனும் தன் உயிரைவிடுவான்” என்றான்.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வதில் ஒருவன் தன்னை நிறுவிக் கொண்டும் செல்வமீட்டத் தவறினால் அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். விதைகள் விதைக்கப்படாமல் பயிர்கள் தோன்றுவதில்லை.(12) வயதால் மதிப்பிற்குரியோரிடம் பணி செய்வதன் மூலம் ஒருவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் அடைவதைப் போலவே, (இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக்) கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் (மறுமையில்) இன்பத்திற்குரிய எண்ணற்ற பொருட்களை அடைகிறான். உயிரினங்கள் அனைத்துக்கும் கொடுமை செய்யாமல் இருக்கும் கடமையைச் செய்வதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(13) எனவே, ஒருவன் கொடைகளை அளிக்க வேண்டுமேயன்றி வேண்டக் கூடாது (அல்லது பிறரால் கொடுக்கப்படும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும்). ஒருவன் அறவோரை வழிபட வேண்டும். உண்மையில், அவன் இனிய பேச்சுக் கொண்ட அனைவருக்கும், பிறருக்கும் ஏற்புடையதையே எப்போதும் செய்ய வேண்டும். ஒருவன் (மனம் மற்றும் புறத்) தூய்மையை அடைய முனைய வேண்டும். உண்மையில், அவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.(14) ஓ! யுதிஷ்டிரா, பூச்சிகளும், எறும்புகளும் கூட, (இப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் செய்த) தங்கள் செயல்கள் மற்றும் இயல்பின் விளைவாக இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றன. நீ அமைதியடைவாயாக” என்றார் {பீஷ்மர்}[1].(15)

நடைமுறை அறம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 164-அறத்தைப் பின்பற்றும் முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தானே நல்லது செய்யும்போதும், அல்லது பிறரைச் செய்ய வைக்கும்போதும், அவன் அறத்தகுதிகளை அடைவதை எதிர்பார்க்கலாம். அதேபோல, ஒருவன் தானே தீமை செய்தாலும், பிறரைச் செய்ய வைத்தாலும், அறத்தகுதிகளை அடைவதை அவன் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.(1) எல்லா நேரங்களிலும், காலமே உயிரினங்கள் அனைத்தின் புத்தியிலும் நுழைந்து, அவற்றை அறச்செயல்களையோ, மறச் செயல்களையோ செய்வதில் நிறுவி, அதன் பின் அவற்றுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ அளிக்கிறது.(2)

ஒரு மனிதன் அறத்தின் கனிகளைக் கண்டு, அறமே மேன்மையானது என்பதைக் காணும்போதுதான், அவன் அறத்தில் நம்பிக்கை கொண்டு அதைப் பின்பற்றுகிறான். எனினும், உறுதியற்ற புரிதல் கொண்டவன் அதில் நம்பிக்கை வைக்கத் தவறுகிறான்.(3) அறத்தில் நம்பிக்கை என்பது இதுதான் (வேறேதுமல்ல). அறத்தில் நம்பிக்கை கொள்தல் என்பது மனிதர்கள் அனைவருக்கும் ஞானத்தின் குறியீடாகும். (எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற) இரண்டையும் அறிந்த ஒருவன், வாய்ப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்தோடும், கவனம் மற்றும் அர்ப்பணிப்புடனும் சரியானதைச் செய்ய வேண்டும்.(4) இப்பிறவியில் செல்வாக்குடன் அருளப்பட்ட அறவோர், மறுபிறவியில் ஆசை குணம் {ரஜோகுணம்) தலைதூக்கும் பிறவியை அடையாமல் தவிர்க்க தங்கள் இயல்பின்படியே செயல்பட்டு, தங்கள் ஆன்மாக்களில் குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும்.(5)

(அனைத்தையும் அகற்றவல்ல) காலத்தால் அறத்தைத் துன்பத்திற்கான காரணமாக ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே, அறம் சார்ந்த ஆன்மா நிச்சயம் தூய்மையானது (தீமை மற்றும் துயரத்தில் இருந்து விடுபட்டு இருப்பது) என்பதை ஒருவன் அறிய வேண்டும்.(6) மறத்தை {அதர்மத்தைப்} பொறுத்தவரையில், அது பெருமளவில் இருந்தபோதிலும் கூட, காலத்தால் எப்போதும் பாதுகாக்கப்படுவதும், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்வதுமான அறத்தைத் தீண்ட முடியாது.(7)

களங்கமில்லா ஆன்மா, மறத்தால் {அதர்மத்தால்} தீண்டப்படாத ஏற்பில்லாமை ஆகிய இரண்டு விளைவுகளும் அறத்தால் அடையப்படுகின்றன. உண்மையில், அறமே வெற்றியைத் தரும். மூவுலகங்களுக்கும் ஒளியூட்டும் அளவிற்கு அது பெரும் பிரகாசம் கொண்டது.(8) ஒரு பாவியைப் பிடித்து அறவோனாக்குதல் ஞானியாலும் முடியாது. அறச்செயல் செய்ய வலுக்கட்டாயமாகத் தூண்டப்படும்போது பாவிகள் அச்சத்தால் தூண்டப்பட்டவர்களாக {உள்ளொன்றும் புறமொன்றாகவும்} கபடமாகவே செயல்படுவார்கள்.(9) சூத்திரர்களில் அறவோர், பரிந்துரைக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} எதையும் பின்பற்றி வாழ சூத்திர வகையினர் அனுமதிக்கப்படவில்லை என்ற முறையீட்டின் மூலம் ஒருபோதும் போலியாக நடந்து கொள்ள மாட்டார்கள்.(10)

நான்கு வகையினருக்கான {வர்ணத்தினருக்கான} உண்மையான கடமைகள் என்னென்ன என்பதை நான் உனக்குக் குறிப்பாகச் சொல்கிறேன். நான்கு வகையை {வர்ணங்களைச்} சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்ளும் உடல்களைப் பொறுத்தவரையில் ஐம்பூதங்களே அவற்றின் {அவ்வுடல்களின்} உட்பொருட்களாக அமைகின்றன. உண்மையில், அவை அனைத்தும் ஒரே பொருளைச் சார்ந்தவையே.(11) இவ்வாறிருப்பினும் அவற்றுக்கிடையில், வாழ்வு அல்லது உலக நடைமுறைகள் மற்றும் அறக்கடமைகள் ஆகிய இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவருக்குள்ளும் ஒரு சமநிலையை எட்டக்கூடிய வகையில் செயல்பாடுகளில் போதுமான சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.(12)

அறத்தின் விளைவுகள் அல்லது வெகுமதிகளாக இருக்கும் இன்ப உலகங்களுக்கும் ஒரு முடிவுண்டு என்பதால் அவை நித்தியமானவையல்ல. எனினும், அறம் நித்தியமானது. காரணம் நித்தியமானதாக இருக்கையில், விளைவு {காரியம்} ஏன் அவ்வாறில்லை?[1] அதற்கான பதில் பின்வருமாறு அமையும். கனி அல்லது வெகுமதியில் உள்ள ஆசையால் தூண்டப்படாமல் செய்யப்படும் அறமே நித்தியமானதாகும். (எனினும், வெகுமதி மீது கொண்ட ஆசையால் செய்யப்படும் அறமானது நித்தியமானதல்ல. எனவே, வெகுமதி விரும்பப்படவில்லை என்றாலும், முதல் வகை அறத்தோடு தொடர்புடைய {வெகுமதியான} பிரம்மத்தை அடைதல் என்பது நித்தியமானதாகும். எனினும், கனியில் உள்ள ஆசையால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் அறத்துடன் தொடர்புடைய வெகுமதியான சொர்க்கம் நித்தியமானதல்ல)[2].(13)உடலுயிரைப் பொறுத்தவரையில் அனைத்து மனிதர்களும் நிகரானவர்களே. மேலும், அவர்கள் அனைவரும் தங்கள் இயல்பின்படியே நிகரான ஆன்மாக்களைக் கொண்டவர்களே. அண்டம் அழியும்போது அனைத்தும் கரைந்துவிடுகின்றன. அறத்தை அடைவதற்கான செயலற்ற விருப்பம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. உண்மையில் அதுவே (மறுபிறவியில்) மீண்டும் தன்னைத் தோற்றுவித்துக் கொள்ளும்.(14) விளைவு இத்தகையதாயிருக்கையில் (வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகளாக இருப்பதால்), மனிதர்களுக்கிடையில் காணப்படக்கூடிய சமமின்மைகளை எந்த வகையிலும் முரண்பட்டவையாகக் கருதமுடியாது. அதே போலவே, இருப்பில் உள்ள இடைநிலை உயிரினங்களின் செயல்கள் இந்த உதாரணத்தின்படி சமமாக இருப்பதும் காணப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}”.(15)

நாமாவளி! – அநுசாஸனபர்வம் பகுதி – 165-பாவங்களை அகற்றவல்ல தேவர்கள், முனிவர்கள் மற்றும் அரசமுனிகளின் துதிக்கத்தக்க பெயர்ப்பட்டியலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரன், பாவங்களை அழிக்கும் நன்மையை அடைய விரும்பி, கணைப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மரிடம் (பின்வரும் வார்த்தைகளால்) கேள்வி கேட்டான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு நன்மையானதென்ன? எதைச் செய்வதன் மூலம் ஒருவன் மகிழ்ச்சியை ஈட்டுகிறான்? எதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்? உண்மையில் பாவங்களை அழிக்கத்தக்கது எது?” என்று கேட்டான்”.(2)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இது தொடர்பாகக் கேட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம் சந்தனுவின் அரச மகன் {பீஷ்மர்} தேவர்களின் பெயர்களை முறையாக உரைத்தார்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தேவர்கள் மற்றும் முனிவர்களின் பின்வரும் பெயர்களைக் காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும் முறையாக உரைத்தால், அவை அனைத்துப் பாவங்களையும் திறம்படத் தூய்மையாக்குகின்றன.(4) ஒருவன் (அறிவு மற்றும் செயல்) புலன்களின் {ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின்} துணையுடன் செயல்படுவதால் பகலிலோ, இரவிலோ, இரு சந்திப் பொழுதுகளிலோ, தெரிந்தோ தெரியாமலோ செய்த எந்தப் பாவமும் இந்தப் பெயர்களை உரைப்பதன் மூலம் தூய்மையடைந்து, அவன் முற்றிலும் தூயவனாகிறான். இந்தப் பெயர்களைச் சொல்லும் ஒருவன் ஒருபோதும் குருடனாகவோ, செவிடனாகவோ ஆவதில்லை; உண்மையில் இப்பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் நன்மையானதை அடைவதில் வெல்கிறான்.(5,6) அத்தகைய மனிதன் ஒருபோதும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்காமல், ஒருபோதும் நரகத்திற்குச் செல்லாமல், மனிதர்களில் ஒருபோதும் கலப்புச் சாதியில் பிறக்காமல் இருக்கிறான். எந்தத் துயரையும் அடைவது குறித்த அச்சமேதும் அவனுக்கு ஏற்படாது. மரணம் நேரும் போது அவன் ஒருபோதும் கலங்குவதில்லை.(7)

தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரையும் ஆள்பவனும், பிரகாசத்துடன் ஒளிர்பவனும், அனைத்து உயிரினங்களாலும் வழிபடப்படுபவனும், நினைத்தற்கரியவனும், விவரிக்கப்படமுடியாதவனும், அனைத்து உயிரினங்களுக்கும் உயிரைத் தருபவனும், பிறப்பில்லாதவனும்,(8) அண்டத்தின் தலைவனும், பெரும்பாட்டனுமாக இருப்பவன் பிரம்மன். அவனுடைய பத்தினி சாவித்ரி. அதன் பிறகு வருபவன், வேதங்களின் பிறப்பிடமும், படைப்பாளனும், அளவிலா பலம் கொண்ட நாராயணன் என்று அழைக்கப்படுபவனுமான விஷ்ணு.(9) அதன் பிறகு வருபவன் முக்கண்ணனான உமையின் தலைவன். அதன் பிறகு தேவர்ப்படைத்தலைவன் ஸ்கந்தன்; அதன் பிறகு விசாகன்; பிறகு வேள்வி ஆகுதிகளை உண்பவனான அக்னி: பிறகு காற்றின் தேவனான வாயு; பிறகு சந்திரமாஸ்; பிறகு, பிரகாசத்துடன் கூடிய சூரிய தேவன் ஆதித்யன்.(10)

பிறகு, சச்சியின் தலைவனான சிறப்புமிக்கச் சக்ரன், தூமோர்ணையென்ற மனைவியுடன் கூடிய யமன்; கௌரியுடன் கூடிய வருணன்; ருத்தியெனும் மனைவியுடன் கூடிய கருவூலத் தலைவன் {குபேரன்};(11) இனிமையானவளும், சிறப்பானவளுமான சுரபி எனும் பசு {காமதேனு}, பெரும் முனிவர் விஸ்ரவஸ்; ஸங்கல்பன் {காமன்}; பெருங்கடல் {சமுத்திரன்}; கங்கை; வேறு புனித ஆறுகள்; பல்வேறு {ஏழு} மருத்துகள்;(12) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான வாலகில்யர்கள்; தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}; நாரதர்; பர்வதர்; விஸ்வாவஸு; ஹாஹாக்கள்; ஹூஹூக்கள்;(13) தும்புரு; சித்ரஸேனன்; பரந்த புகழ் கொண்ட தேவ தூதன் {விஸ்ருதன்}; உயர்ந்த அருளைப் பெற்ற தேவக்கன்னிகையர் மற்றும் தெய்வீக அப்சரஸ்கள்;(14) ஊர்வசி; மேனகை; ரம்பை; மிஸ்ரகேசி; அலம்புஷை; விஸ்வாசி; கிருதாசி; பஞ்சசூடை; திலோத்தமை;(15)

ஆதித்யர்கள்; வஸுக்கள்; {ருத்ரர்கள்;} அஸ்வினிகள்; பித்ருக்கள்; தர்மம் (அறம்); வேதகல்வி; தவங்கள்; தீக்ஷை; (அறச்செயல்களில்) விடாமுயற்சி; பெரும்பாட்டன்;(16) இரவு; பகல்; மரீசியின் மகனான கசியபர்; சுக்ரர்; பிருஹஸ்பதி; பூமியின் மகனா மங்கலன் {செவ்வாய் / குஜன்}; புதன்; ராஹு; சனீஸ்வரன்;(17) நட்சத்திரக் கூட்டங்கள்; பருவகாலங்கள் {ருதுக்கள்}; மாதங்கள்; பக்ஷங்கள்; வருடம்; வினதையின் மகன் கருடன்; பல்வேறு கடல்கள்; கத்ருவின் மகன்களான பாம்புகள்;(18) சதத்ரு; விபாசை; சந்திரபாகை; ஸரஸ்வதி; ஸிந்து; தேவிகை; பிரபாஸம்; புஷ்கரைத் தடாகங்கள்;(19) கங்கை; மகாநதி; வேணை; காவேரி; நர்மதை; குலம்புனை; விசல்யை; கரதோயை; அம்புவாஹினி;(20)

ஸரயு; கண்டகி; பேராறான லோஹிதம்; தாம்ரம்; ஆருணை; {தாமிரபரணி;} வேத்ரவதி; பர்ணாசை; கௌதமி;(21) கோதாவரி; வேணை; கிருஷ்ணவேணை; திவிஜை {அத்ரிஜை}; திருஷத்வதி; காவேரி; பங்கு {சக்ஷு}; மந்தாகினி;(22) பிரயாகை; பிரபாஸம்; புனித நைமிசம் {நைமிசாரண்யம்}; விஷ்வேஸ்வரன் அல்லது மஹாதேவனுக்குப் புனித இடமாகவும், தெளிந்த நீரைக் கொண்ட தடாகமாகவும் திகழும் காசி;(23) புனித நீர்நிலைகள் பலவற்றால் நிறைந்த குருக்ஷேத்திரம்; பெருங்கடல்களில் முதன்மையான கடல் (பாற்கடல்) {ஸிந்தூத்தமம்}; தவங்கள், கொடைகள் {தபோதானம்;} ஜம்புமார்க்கம்;(24) ஹிரண்யவதி; விதஸ்தை; பிலக்ஷவதி ஆறு; வேதஸ்மிருதி; வேதவதி; மாலவை; அஸ்வவதி;(25)

பூமியில் உள்ள புண்ணியத்தலங்கள்; கங்காத்வாரம்; {ஸிந்து ஆற்றைச் சேரும்} புனிதமான ரிஷிகுல்யைகள்; சித்திரபாகை;(26) சர்மண்வதி; புனித ஆறான கௌசிகி; யமுனை; பீமரதி ஆறு; பேராறான பாஹுதை;(27) மாஹேந்திரவாணி; திரிதிவை; நீலிகை; ஸரஸ்வதி; நந்தை; அபரநந்தை; புனிதமான பெருந்தடாகம் {தீர்த்தமகஹ்ரதம்};(28) கயை; பல்குனீ தீர்த்தம்; தேவர்கள் நிறைந்த (புனிதக் காடான) தர்மாரண்யம்; தேவநதி;(29) பெரும்பாட்டன் பிரம்மனால் படைக்கப்பட்டதும், புனிதமானதும், மூவுலகங்களிலும் கொண்டாடப்படுவதும், மங்கலமானதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க வல்லதுமான தடாகம் {மானஸஸரஸ்};(29) சிறந்த மூலிகைகளுடன் கூடிய இமய மலை;(30)

பல்வேறு வகை உலகங்களும், தீர்த்தங்கள் மற்றும் மருத்துவமூலிகைகள் நிறைந்த விந்திய மலை; மேரு; மஹேந்திரம்; மலயம்; வெள்ளியுடன் கூடிய ஸ்வேதம்;(31) ஸ்ருங்கவான்; மந்தரம்; நீலம்; நிஷதம்; தர்த்துரம்; சித்ரகூடம்; அஞ்சனாபம்; கந்தமாதன மலைகள்;(32) புனிதமான ஸோமகிரி; வேறு பல்வேறு மலைகள்; திசைகள்; மூலைகள்; பூமி; மரங்கள்;(33) விஸ்வேதேவர்கள்; ஆகாயம்; நக்ஷத்திரக் கூட்டங்கள்; கோள்கள் {கிரகங்கள்} மற்றும் தேவர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்ட, குறிப்பிடப்படாத இவை அனைத்தும் நம்மை மீட்டுத் தூய்மையடையச் செய்யட்டும்.(34) இந்தப் பெயர்களைச் சொல்லும் மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். இவர்களைப் புகழ்ந்து நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறான்.(35) உண்மையில், தேவர்களின் புகழைப் பாடுவதில் திளைக்கும் மனிதன், தூய்மையற்ற வகைகளில் பிறப்பதற்கு வழிவகுக்கும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(36)

தேவர்களின் பெயர்களைச் சொன்ன பிறகு, தவத்தகுதி மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், ஒருவன் செய்த அனைத்துப் பாவங்களையும் தூய்மையாக்கவல்லவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், {உசிக்கின் மகனான} கக்ஷீவான், ஔஷிஜன்,(37) பிருகு, அங்கிரஸ், கண்வர், பலமிக்க மேதாதி, அனைத்து சாதனைகளையும் கொண்ட பர்ஹி ஆகியோராவர். அவர்கள் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.(38) உயர்ந்த அருளைக் கொண்டவர்களான உன்முசு {உல்முசு}, பிரமுசு, முமுசு ஆகியோர், பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்த்யாத்ரேயர்;(39) மித்ரனுக்கும், வருணனுக்கும் மகனும், பேராற்றல் கொண்டவருமான அகஸ்தியர்; முனிவர்களில் கொண்டாடப்படும் முதன்மையான இருவரான திருடாயு, ஊர்த்வபாஹு ஆகியோர் அனைவரும் தெற்குப் பகுதியில் வாழ்கின்றனர்.(40) மேற்குப் பகுதியில் வசிக்கும் முனிவர்களின் பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன். அவர்கள் உடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய உஷங்கு, பெருஞ்சக்தி கொண்ட பரிவ்யாதர்,(41) தீர்க்கதமஸ், கௌதமர், காசியபர், ஏகதர், திவிதர், திரிதர்,(42) அத்ரியின் அற ஆன்மா கொண்ட மகன் (துர்வாஸர்), பலமிக்க ஸாரஸ்வதர் ஆகியோராவர். வடக்குப் பகுதியில் வசித்து, வேள்விகளில் தேவர்களை வழிபடும் முனிவர்களின் பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன்.(43) அவர்கள் அத்ரி, வசிஷ்டர், சக்திரி, பராசரரின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், விஷ்வாமித்ரர், பரத்வாஜர், ஜமதக்நி,(44) ரிசீகரின் மகன் {பரசுராமர்}, {உத்தாலகர் மகன்} ஔத்தாலகர், ஸ்வேதகேது, கோஹலர், விபுலர், தேவலர்,(45) தேவசர்மன், தௌமியர், ஹஸ்திகாசியபர், லோமசர், நாசிகேதர், லோமஹர்ஷணர்,(46) உக்ரஸ்ரவஸ், பிருகுவின் மகனான சியவனர் ஆகியோராவர். இது வேதகல்வி கொண்ட முனிவர்களின் பட்டியலாகும்.(47) ஓ! மன்னா, பெயர்கள் சொல்லப்பட்டால் ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல ஆதி முனிவர்கள் இவர்கள்.

இதன் பிறகு நான் முக்கியமான மன்னர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(48) அவர்கள் நிருகன், யயாதி, நகுஷன், யது, பெருஞ்சக்தி கொண்ட பூரு, ஸகரன், துந்துமாரன், பேராற்றல் கொண்ட திலீபன், கிருசாஸ்வன், யௌவனாஸ்வன், சித்ராஸ்வன், ஸத்யவான்,(49) துஷ்மந்தன் {துஷ்யந்தன்}, பல மன்னர்களுக்கும் மேலான சிறப்புமிக்கப் பேரரசனாக இருந்த பரதன், யவனன், ஜநகன், திருஷ்டரதன்,(50) ரகு, மன்னர்களில் முதன்மையான தசரதன், ராட்சசர்களைக் கொன்ற வீரனான ராமன், சசபிந்து, பகீரதன்,(51) ஹரிச்சந்திரன், மருத்தன், திருடரதன், பெரும் நற்பேறு பெற்றவனான அலர்க்கன், ஐலன் {புரூரவன்},(52) கரந்தமன், மனிதர்களில் முதன்மையான காஷ்மீரன், தக்ஷன், அம்பரீஷன், குகுரன், பெரும் புகழைக் கொண்ட ரைவதன், குரு, ஸம்வரணன், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட மாந்தாத்ரி {மாந்தாதா},(53) அரசமுனியான முசுகுந்தன், ஜாந்நவியால் (கங்கையால்) மிகவும் விரும்பப்பட்ட ஜஹ்நு, ஒரு காலத்தில் மன்னர்கள் அனைவரிலும் முதல்வனும், வேனனின் மகனுமான பிருது, மித்ரபானு, பிரியங்கரன்,(54) திரஸத்தஸ்யு, அரசமுனிகளில் முதன்மையான ஸ்வேதன், கொண்டாடப்பட்ட மகாபீஷன், நிமி, அஷ்டகன்,(55) ஆயு, அரச முனியான க்ஷுபன், கக்ஷேயு, பிரதர்த்தனன், திவோதாஸன், ஸுதாஸன், கோசலேஸ்வரன்,(56) ஐலன், அரச முனியான நளன், அனைத்து உயிரினங்களின் தலைவனான மனு, ஹவித்ரன், பிருஷத்ரன், பிரதீபன், சந்தனு,(57) அஜன், மூத்தவனான பர்ஹி {பினராசீபர்ஹி}, பெரும்புகழைக் கொண்ட இக்ஷ்வாகு, அநரண்யன், ஜானுஜங்கன், அரச முனியான கக்ஷஸேனன், மற்றும் (வரலாற்றில் உள்ள) பெயர் சொல்லப்படாத பலர் ஆகியோராவர்.(58)

விடியும் முன்பு எழுந்து, சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் எழும் இரு சந்தி வேளைகளிலும் இந்த மன்னர்களின் பெயர்களைத் தூய்மையான உடல் மற்றும் மனத்துடனும், கவனம் சிதறாமலும் சொல்லும் மனிதன் பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஒருவன், தேவர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் புகழைப் பாடி, “படைப்பின் தலைவர்களான இவர்கள் எனக்கு வளர்ச்சியையும், நீண்ட வாழ்நாளையும், புகழையும் விதிக்கட்டும். எத்துயரும் எனதாக வேண்டாம், எந்தப் பாவமும் எனதாக வேண்டாம், எதிர்ப்பவர்கள், அல்லது பகைவர்கள் யாரும் எனக்கு வேண்டாம். வெற்றி எப்போதும் எனதாகும், மறுமையில் மங்கல கதியும் எனதாகும். இதில் ஐயமில்லை” என்று சொல்ல வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(60,61)

விடைகொடுத்த பீஷமர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 166-பீஷ்மரிடம் அனுமதி கேட்ட வியாசர்; யுதிஷ்டிரனின் ஐயங்களைத் தீர்த்த மனநிறைவுடன் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிய பீஷ்மர்…

ஜனமேஜயன் {வைசம்பாயணரிடம்}, “கௌரவர்களில் முதன்மையான மனிதரான பீஷ்மர், வீரர்களால் எப்போதும் விரும்பப்படும் கணைப்படுக்கையில் கிடந்த போது, அவரைச் சுற்றிலும் பாண்டவர்கள் அமர்ந்திருந்தபோது,(1) என் பாட்டனும், பெரும் ஞானியுமான யுதிஷ்டிரன், கடமை குறித்த புதிர்களுக்கு விளக்கங்களைக் கேட்டு தன் ஐயங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டான்.(2) கொடைகளின் காரியத்தில் பயன்படும் விதிகளையும் கேட்ட அவன், அறம் மற்றும் செல்வம் குறித்த காரியங்களில் தன் ஐயங்கள் அனைத்தும் அகலப்பெற்றான். ஓ! கல்விமானான பிராமணரே {வைசம்பாயணரே}, அந்தப் பெரும் பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்} அதன் பிறகு என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்[1].(3)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பீஷ்மர் அமைதியடைந்தபோது, (சுற்றிலும் அமர்ந்திருந்த) மன்னர் குழாம் முற்றிலும் அமைதியடைந்தது. உண்மையில், அவர்கள் அனைவரும் படத்தில் எழுதிய ஓவியத் தோற்றங்களைப் போல அசைவற்றவர்களாக அமர்ந்திருந்தனர்.(4)

அப்போது, சத்தியவதியின் மகனான வியாசர், ஒருகணம் சிந்தித்து, கங்கையின் அரசமகனிடம்,(5) “ஓ! மன்னா, தன் தம்பிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் கூடிய குருக்களின் தலைவனான யுதிஷ்டிரன் தன் சொந்த இயல்பை அடைந்துவிட்டான்.(6) தன்னருகே பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணனுடன் இருக்கும் அவன், உமக்கு மதிப்புடன் தலைவணங்குகிறான். அவன் நகரம் திரும்ப நீர் அவனுக்கு விடைகொடுப்பதே உமக்குத் தகும்” என்றார்.(7)

புனிதரான வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் அரச மகனுமானவர் {பீஷ்மர்}, யுதிஷ்டிரனுக்கும், அவனது அமைச்சர்களுக்கும் விடைகொடுத்தனுப்பினார்.(8)சந்தனுவின் அரசமகன் {பீஷ்மர்}, இனிய குரலில் தமது பேரனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நீ நகரம் திரும்புவாயாக. உன் இதயத்தில் உள்ள நோய் அகலட்டும்.(9) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பக்தியும், தற்கட்டுப்பாடும் கொண்ட யயாதியைப் போலவே, பெரும் அளவிலான உணவு மற்றும் செல்வக் கொடைகளுக்காகப் புகழ்பெறும் பல்வேறு வேள்விகளில் நீ தேவர்களைத் துதிப்பாயாக.(10) ஓ! பிருதையின் மகனே, க்ஷத்திரிய நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் நீ பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்வாயாக. அப்போது நீ பெரும் பயன்களை ஈட்டுவாய். உண்மையில், உன் இதய நோய் அகலட்டும்.(11) நீ உன் குடிமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வாயாக. அவர்களுக்கு உறுதியளிக்கும் நீ அனைவருக்கும் மத்தியில் அமைதியை நிறுவுவாயாக. உனது நலத்தை விரும்புபவர்கள் அனைவருக்கும் தகுந்த வெகுமதிகளை அளித்து அவர்களைக் கௌரவிப்பாயாக.(12) புனிதமான ஓர் இடத்தில் நிற்பதும், முற்றும் வளர்ந்து கனிகள் நிறைந்திருப்பதுமான ஒரு மரத்தைத் தங்கள் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கும் பறவைகளைப் போலவே உன் நண்பர்கள் மற்றும் உனது நலம் விரும்பிகள் அனைவரும், தங்கள் வாழ்வாதாரங்களுக்காக உன்னைச் சார்ந்து வாழட்டும்.(13) ஓ! மன்னா, இவ்வுலகில் இருந்து நான் செல்ல வேண்டிய காலம் வரும்போது நீ இங்கே வருவாயாக. சூரியன் தெற்கு நோக்கிய தன் போக்கை நிறுத்தி, வடக்கு நோக்கித் திரும்பத் தொடங்கும் காலமே நான் என் உடலைவிட்டு விடைபெறும் காலமாகும்” என்றார் {பீஷமர்}.(14)தன் பாட்டனை மதிப்புடன் வணங்கி, அங்கிருந்து தன் உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான்.(15) திருதராஷ்டிரனையும், தன் தலைவனிடம் பெரும்பக்தி கொண்ட காந்தாரியையும் தலைமையில் நிறுத்திக் கொண்டும், முனிவர்கள் மற்றும் கேசவனின் துணையுடனும்,(16) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குரு குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் குடிமக்கள், தன் நாட்டில் வசிப்போர் மற்றும் தன் அமைச்சர்களுடனும் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

அநுசாஸனிக உப பர்வம் {தான தர்ம உப பர்வம்} முற்றும்*

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ தான தர்ம உப பர்வம்-பகுதி -1-

October 18, 2025

காலனும் கர்மமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 01-அழிவுக்குத் தானே காரணமாக அமைந்ததை எண்ணி வருந்திய யுதிஷ்டிரன்; கௌதமி என்ற கிழவி, அர்ஜுனகன் என்ற வேடன், மிருத்யு மற்றும் யமன் ஆகியோருக்கிடையில் மரணம் குறித்து நிகழ்ந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பிதாமஹரே}, மன அமைதி என்பது நுட்பமானதென்றும், பல்வேறு வடிவங்களைக் கொண்டதென்றும் சொல்லப்படுகிறது. நான் உமது உரையாடல்கள் அனைத்தையும் கேட்டேன், ஆனாலும் மன அமைதி எனதாகவில்லை. ஓ! ஐயா, இக்காரியத்தில் மனத்தை அமைதியடைய {ஆறுதலடையச்} செய்ய உம்மால் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன, இருந்தாலும், இவ்வளவு காரியங்கள் நடப்பதற்கும் காரணமாக அமைந்த என்னால், பல்வேறு வகைகளிலான அமைதிநிலைகளை அறிந்து கொள்வதால் மட்டுமே மனோ அமைதியை எவ்வாறு அடைய முடியும்?(2) ஓ! வீரரே உமது உடல் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதையும், கடுங்காயங்களால் அவதியுறுவதையும் கண்டு, நான் ஏற்படுத்தியிருக்கும் தீமைகளைக் குறித்த எண்ணத்தால் நான் மன அமைதியை அடையத் தவறுகிறேன் {எனக்கு ஆறுதல் உண்டாகவில்லை}.(3) ஓ! மனிதர்களில் பெரும் வீரரே, அருவிகளில் நீர் பெருகியிருக்கும் ஒரு மலையைப் போலக் குருதியால் குளித்திருக்கும் உமது உடலைக் கண்டு, மழைகாலத்துத் தாமரையைப் போல நான் துயருறுகிறேன்.(4)

ஓ! பாட்டா {பீஷ்மரே}, போர்க்களத்தில் என் மக்கள் என் நிமித்தமாகத் தங்கள் எதிரிகளுடன் போரிட்டதால் நீர் இந்த அவல நிலையை அடைந்ததைவிட அதிகத் துன்பத்தை வேறு எது அளிக்க முடியும்?(5) என் நிமித்தமாக வேறு இளவரசர்களும், தங்கள் மகன்கள் மற்றும் உற்றார் உறவினருடன் சேர்ந்து அழிவை அடைந்திருக்கின்றனர். ஐயோ, இதைவிடத் துன்பம் தரத்தக்கது வேறு எது?(6) ஓ! இளவரசரே {பீஷ்மரே}, விதி மற்றும் கோபத்தின் வசத்தை அடைந்து இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்த எங்களுக்கும், திருதராஷ்டிரர் மகன்களுக்கும் என்ன விதி காத்திருக்கிறது {நாங்கள் என்ன கதியை அடையப் போகிறோம்} என்பது எங்களுக்குச் சொல்வீராக.(7) ஓ! மனிதர்களின் தலைவரே, உம்மை இந்நிலையில் காணாததால், திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} நற்பேறு பெற்றவன் என நான் நினைக்கிறேன்.(8) ஆனால், நமது நண்பர்கள் மற்றும் உமது மரணத்திற்குக் காரணமாக அமைந்த எனக்கு, வெறுந்தரையில் இந்த அவல நிலையில் உம்மைக் காண்பதால் மன அமைதி மறுக்கப்பட்டிருக்கிறது.(9)

தன் குலத்தில் இழிந்தவனான தீய துரியோதனன், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றி தன் துருப்புகள் மற்றும் தன் தம்பியர் அனைவருடன் போர்க்களத்தில் இறந்தான்.(10) தீய ஆன்மா கொண்ட இழிந்தவன் இப்போது வெறுந்தரையில் கிடக்கும் உம்மைக் காணவில்லை. உண்மையில், இந்தக் காரணத்திற்காக, வாழ்வை விட மரணமே {எனக்கு} விரும்பத்தக்கது என நான் கருதுகிறேன்.(11) ஓ! நோன்பு வழுவா வீரரே, நானும் என் தம்பிகளும் போர்க்களத்தில் எங்கள் எதிரியின் கரங்களில் மாண்டிருந்தால்,(12) நீர் கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கும் இந்த அவல நிலையை நான் கண்டிருக்க மாட்டேன். ஓ! இளவரசரே {பீஷ்மரே}, படைப்பாளன் {பிரம்மன்} தீச்செயல் செய்பவர்களாக எங்களைப் படைத்திருக்கிறான் என்பது திண்ணம்.(13) ஓ! மன்னா, நீர் எனக்கு நன்மை செய்ய விரும்பினால், மறுமையிலும் {மறுமையிலாவது} இந்தப் பாவத்தில் இருந்து நான் தூய்மை அடையும் வழியை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! நற்பேறு பெற்றவனே, (தெய்வம், விதி மற்றும் காலத்தைச்) சார்ந்திருக்கும் உன் ஆன்மாவே உன் செயல்களுக்கான காரணமென ஏன் நீ நினைக்கிறாய்? அதன் {ஆன்மாவுடைய} செயல்பாடின்மையின் வெளிப்பாடானது, நுட்பமானதும், புலன்களால் உணரப்பட முடியாததுமாகும்.(15) இக்காரியத்தில், மிருத்யு {யமன்}, கௌதமி, காலன், வேடன் மற்றும் ஒரு பாம்பு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! குந்தியின் மகனே, கௌதமி என்ற பெயரையும், பெரும் பொறுமையையும், மனோ அமைதியையும் கொண்ட ஒரு கிழவி {முதிர்ந்த பெண்மணி} இருந்தாள். ஒரு நாள் அவள், பாம்பால் கடிக்கப்பட்டதன் விளைவால் தன் மகன் மரணமடைந்ததைக் கண்டாள். அர்ஜுனகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கோபக்கார வேடன், ஓர் இழையில் அந்தப் பாம்பைக் கட்டி அதைக் கௌதமியின் முன் கொண்டு வந்தான்.(16-19)

அவன் அவளிடம், “ஓ! அருளப்பட்ட பெண்மணியே, இந்த இழிந்த பாம்பே உன் மகனின் மரணத்திற்குக் காரணமாகும். இழிவான இஃதை எவ்வகையில் கொல்லலாம் என்பதை எனக்கு விரைந்து சொல்வாயாக. நான் இதை நெருப்பில் வீசவா? அல்லது துண்டுகளாக வெட்டிப் போடவா? குழந்தையைக் கொன்ற இந்த ஈனப்பிறவி இனியும் வாழ்ந்திருப்பது தகாது” என்றான்.(20)

கௌதமி { வேடன் அர்ஜுனகனிடம்}, “ஓ! சிறு புத்தி கொண்ட அர்ஜுனகா, இந்தப் பாம்பை விடு. இஃது உன் கரங்களில் இறப்பது தகாது. தனக்காகக் காத்திருக்கும் தவிர்க்கப்பட முடியாதவற்றை அலட்சியம் செய்து பாவத்தில் மூழ்கும் வகையில் தன்னைக் கனமாக்கிக் கொள்ளும் மூடன் எவன்?(21) நற்செயல்களைச் செய்வதன் மூலம் தங்களைக் கனமற்றவர்களாக்கிக் கொள்வோர் பெருங்கடலைக் கடக்கும் ஓடத்தைப் போல உலகக் கடலைக் கடக்கிறார்கள். ஆனால் பாவத்தால் தங்களைக் கனமாக்கிக் கொள்பவர்கள் நீருக்குள் வீசப்பட்ட கணையைப் போல அடி ஆழத்தில் மூழ்குகிறார்கள்.(22) இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் என் பிள்ளை மீண்டும் உயிர்பெற மாட்டான், மேலும் இதை வாழ விடுவதால் உனக்கும் எந்தத் தீங்கும் நேராது. இந்த உயிரினத்தைக் கொல்வதன் மூலம் முடிவில்லாத யம லோகத்திற்கு எவன் செல்வான்?” என்று கேட்டாள்.(23)

வேடன், “ஓ! சரிதவறுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்த பெண்ணே, உயிரினங்கள் அனைத்தின் துன்பத்திலும் பெரியோர் பீடிக்கப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நீ சொன்ன இந்த வார்த்தைகள் (துயரத்தில் மூழ்காமல்) தன்னிறைவடைந்த ஒரு மனிதனால் சொல்லப்படும் அறிவுரை நிறைந்தவையாக இருக்கின்றன. எனவே, நான் இந்தப் பாம்பைக் கொல்லத்தான் வேண்டும்.(24) மனோ அமைதியை விரும்புபவர்கள் அனைத்திற்கும் காலத்தின் போக்கையே காரணமாகக் கொள்கின்றனர், ஆனால் நடைமுறை அறிந்த மனிதர்கள் (பழி தீர்த்துக் கொள்வதன் மூலம்) தங்கள் துயரத்தை உடனே தணித்துக் கொள்கின்றனர். நிலையான மாயையில் இருக்கும் மனிதர்கள், (இவ்வாறான செயல்களினால் மறுமையில் கிட்டும்) பேரின்பத்தை இழந்து விடுவோமென அஞ்சுகின்றனர்[1]. எனவே, ஓ! பெண்ணே, (என்னைக் கொண்டு) இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் உன் துயரத்தைத் தணித்துக் கொள்வாயாக” என்றான்.(25)கௌதமி, “நம்மைப் போன்ற மக்கள் (கெடுபேறால்) ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. நல்ல மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களில் அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிள்ளையின் மரணம் ஏற்கனவே விதிக்கப்பட்டதாகும். எனவே, இந்தப் பாம்பைக் கொல்வதை அங்கீகரிக்க இயலாதவளாக இருக்கிறேன்.(26) சினம் துன்பத்திற்கே வழிவகுக்கும் என்பதால் பிராமணர்கள் சினங்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! நல்ல மனிதா, இந்தப் பாம்பை மன்னித்து, கருணையோடு அதை விடுவாயாக” என்றாள்.(27)

வேடன், “பீடத்தில் வேள்வி செய்வதன் மூலம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் மனிதன், அதைத் தன் பலிக்கும் {பலியான விலங்குக்கும்} கொடுப்பதைப் போல நாமும் (இந்த உயிரனத்தைக்) கொல்வதன் மூலம் மறுமையில் வற்றாத பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவோம். ஓர் எதிரியைக் கொல்வதன் மூலம் தகுதி அடையப்படுகிறது. வெறுக்கத்தக்க இந்த உயிரினத்தைக் கொல்வதன் மூலம் மறுமையில் நீ உண்மையான பெரும் தகுதியை ஈட்டுவாய்” என்றான்(28).

கௌதமி, “ஓர் எதிரியை வதைப்பதிலும், கொல்வதிலும் என்ன நன்மை இருக்கிறது? நம் அதிகாரத்தில் உள்ள ஓர் எதிரியை விடுவிக்காததன் மூலம் என்ன நன்மை வெல்லப்படுகிறது? எனவே, ஓ! நலமான முகத்தோற்றத்தைக் கொண்டவனே, நாம் ஏன் இந்தப் பாம்பை மன்னித்து விடுவதனால் கிட்டும் தகுதியை {புண்ணியத்தை} அடைய முயற்சிக்கக்கூடாது?” என்று கேட்டாள்.(29)

வேடன், “(பல உயிரினங்களைக் காக்காமல்) இந்த ஒற்றை உயிரினத்தைக் காப்பதற்குப் பதிலாக, இதனிடமிருந்து ({இந்த ஒற்றை உயிரினத்தின்} தீமையில் இருந்து) பெரும் எண்ணிக்கையாலனவை காக்கப்பட வேண்டும். நல்லோர் (அழிந்து போகட்டுமெனவே) தீயோரைக் கைவிடுகிறார்கள். எனவே, இந்தத் தீய உயிரினத்தைக் கொல்வாயாக” என்றான்.(30)

கௌதமி, “ஓ! வேடா, இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் என் மகன் மீண்டும் உயிர் பெற மாட்டான், மேலும், இதன் {இந்தப் பாம்பின்}} மரணத்தால் அடையப்படும் வேறு எந்தக் கதியையும் நான் காணவில்லை. எனவே, ஓ! வேடா, வாழும் உயிரினமான இந்தப் பாம்பை விட்டுவிடுவாயாக” என்றாள்.(31)

வேடன், “விருத்திரனைக் கொன்றதன் மூலம், (வேள்விக் காணிக்கைகளில்) சிறந்த பகுதியை இந்திரன் அடைந்தான். ஒரு வேள்வியை அழித்ததன் மூலம் வேள்விக் காணிக்கைகளில் தன் பங்கை மஹாதேவன் அடைந்தான். எனவே, மனத்தில் எந்த அச்சத்திற்கும் இடம் தராமல், இந்தப் பாம்பை உடனே கொல்வாயாக” என்றான்”.(32)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த உயர் ஆன்ம கௌதமி, அந்தப் பாம்பைக் கொன்றுவிடுமாறு அந்த வேடனால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டாலும், அவள் அந்தப் பாவச்செயலை மனத்தாலும் நினைக்கவில்லை.(33) அப்போது கயிற்றில் கட்டப்பட்டிருந்த அந்தப் பாம்பு, பெருமூச்சு விட்டுப் பெரும் சிரமத்துடன் மனோ அமைதியைத் தக்க வைத்துக் கொண்டு, மெதுவாக மனிதக் குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னது.(34)

பாம்பு {வேடனிடம்}, “ஓ! மூட அர்ஜுனகா, என்னுடைய குற்றமென்ன? எனக்குச் சொந்த விருப்பமும் கிடையாது, நான் சுதந்திரமானவனும் {எச்சார்பும் இல்லாதவனும்} கிடையாது. இந்தச் சிறு வேலைக்கு மிருத்யுவே என்னை அனுப்பினான்.(35) அவனது ஆணையின் பேரிலேயே நான் இந்தப் பிள்ளையைக் கடித்தேனேயன்றி என் பங்கில் எந்தக் கோபத்தினாலும் அல்ல. எனவே, ஓ! வேடா, இதில் பாவமேதும் இருந்தால் அந்தப் பாவம் அவனுடையதே {மிருத்யுவினுடையதே}” என்றது.(35)

வேடன், “மற்றொருவரால் வழிநடத்தப்பட்டு நீ இந்தத் தீமையைச் செய்திருந்தால், இச்செயலில் கருவியாக இருந்த பாவமும் உன்னையே சேரும்.(37) ஓ! பாம்பே, மண் பாத்திரம் செய்வதில் குயவனின் சக்கரம், தடி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பதைப் போலத்தான் நீயும் (இவ்விளைவை உண்டாக்கிய காரணங்களின் ஒன்றாக இருக்கிறாய்). குற்றவாளி என் கரங்களால் மரணமடையத் தகுந்தவன். ஓ! பாம்பே, நீ குற்றவாளி. உண்மையில், இக்காரியத்தை நீயே ஏற்றுக் கொண்டாய்” என்றான்.(39)

பாம்பு, “குயவனின் சக்கரம், தடி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் சார்பற்ற {சுதந்திரமான} காரணங்களாக இல்லாததைப் போலவே நானும் ஒரு சார்பற்ற {தானே காரியம் செய்ய இயலாத} காரணமாக இருக்கிறேன். எனவே, இக்குற்றம் எனதில்லை என்றே நீ கருத வேண்டும்.(40) வேறு வகையில் நீ சிந்தித்தால், இவற்றை ஒன்றோடொன்றாக இயங்கும் காரணங்களாகக் கருத வேண்டும். இவ்வாறு ஒன்றாக இயங்குவதால், காரணம் மற்றும் விளைவில் அவற்றின் தொடர்பு குறித்து ஐயம் எழுகிறது.(41) இஃது இவ்வாறிருக்கையில், குற்றம் எனதில்லை, இக்காரியத்தில் நான் மரணமடையத் தகாதவன், மேலும் நான் எந்தப் பாவத்தையும் செய்த குற்றவாளியுமல்லேன். அல்லது இதில் பாவம் இருக்கிறது என நீ கருதினால், அந்தப் பாவமும் காரணங்களின் தொகுப்பில் இருக்கிறது” என்றது.(42)

வேடன், “நீ இக்காரியத்தில் முக்கியக் காரணமாவோ இயக்கமாகவோ இல்லை என்றாலும் (இந்தப் பிள்ளையின்) மரணத்திற்கு நீயே காரணமாக இருக்கிறாய். எனவே, நீ மரணத்திற்குத் தகுந்தவன் என்பது எனது கருத்து.(43) ஓ! பாம்பே, ஒரு தீயச் செயலைச் செய்தும், அதைச் செய்தவனுக்கு அதில் தொடர்பில்லை என நீ நினைத்தால், இக்காரியத்தில் வேறெந்தக் காரணமும் இல்லை. ஆனால் உண்மையில் இதைச் செய்ததற்கு நீயே உண்மையில் மரணத்திற்குத் தகுந்தவன். இன்னும் நீ வேறென்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.(44)

பாம்பு, “எந்தக் காரணமும் இருக்கிறதோ, இல்லையோ,[2] (இடையில்) {முதுகெலும்பாக இருக்கும்} ஒரு செயலில்லாமல் எந்த விளைவும் உண்டாவதில்லை. எனவே, இவ்விரண்டிலும் {காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்} தூண்டும் காரணத்தின் திறன் எதனையும் கொள்ளாமல், (இக்காரியத்தில்) என் இயக்கம் மட்டுமே காரணம் எனக் கொள்வதில் முறையான நோக்கமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(45) ஓ! வேடா, உண்மையில் நானே காரணம் என நீ நினைத்தால், ஓர் உயிரினத்தைக் கொன்ற இந்தக் குற்றச்செயல், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கியவனின் தோள்களில் இருக்கிறது[3]” என்றது.(46)வேடன், “ஓ! மூடா, ஓ! இழிந்த பாம்பே, வாழத்தகாத நீ, ஏன் இவ்வளவு வார்த்தைகளைப் பந்தாக எறிந்து கொண்டிருக்கிறாய். நீ என் கரங்களால் மரணமடையத் தகுந்தவனே. நீ இந்தக் குழந்தையைக் கொன்றதன் மூலம் மிகக் கொடிய செயலொன்றைச் செய்திருக்கிறாய்” என்றான்.(47)

பாம்பு, “ஓ! வேடா, வேள்வியைச் செய்து தரும் புரோஹிதர்கள், நெருப்பில் தெளிந்த நெய்யை ஆகுதியாக ஊற்றும் செயலில் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஈட்டாததைப் போலவே, நானும் இவ்வகையான விளைவில் தொடர்புடையவனாகவே கருதப்பட வேண்டும்” என்றது”.(48)

பீஷ்மர் தொடர்ந்தார், “மிருத்யுவால் இயக்கப்பட்ட பாம்பு இவ்வாறு சொன்னதும், மிருத்யுவே {யமனே} அங்கே தோன்றி, அந்தப் பாம்பிடம் இவ்வாறு பேசினான்.(49)

மிருத்யு, “ஓ! பாம்பே, காலனால் வழிநடத்தப்பட்டே நானும் நீயும் இந்தக் குற்றேவலைச் செய்தோம். நானோ, நீயோ இந்தப் பிள்ளையின் மரணத்திற்குக் காரணமானவர்களல்ல.(50) ஓ! பாம்பே, காற்றால் அங்கேயும், இங்கேயும் அலைக்கப்படும் மேகங்களைப் போலவே நான் காலனால் இயக்கப்படுகிறேன்.(51) சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தொடர்புடைய ஆதிக்கங்கள் அனைத்தும் காலனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டு அனைத்து உயிரினங்களிலும் இயங்குகின்றன.(52) சொர்க்கத்திலோ, பூமியிலோ உள்ள அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் காலனின் இதே ஈர்ப்பிலேயே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஓ! பாம்பே, மொத்த அண்டமும் காலனின் இதே ஆதிக்கத்திலேயே ஊக்கம்பெறுகிறது.(53) இவ்வுலகில் உள்ள செயல்கள், செயலின்மைகள், அவற்றின் மாற்றங்கள் {விகாரங்கள்} ஆகிய அனைத்தும் காலனின் ஆதிக்கத்திலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(54) சூரியன், சோமன், விஷ்ணு, நீர், காற்று, நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, நெருப்பு {அக்னி}, வானம், பூமி, மித்ரன், பர்ஜன்யன், அதிதி, வசுக்கள், ஆறுகள், பெருங்கடல்கள் என இருப்பில் உள்ள மற்றும் இருப்பில் இல்லாத பொருட்கள் அனைத்தும் காலனாலேயே படைக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன.(55) ஓ! பாம்பே, இஃதை அறிந்து நீ ஏன் என் மீது பழி சுமத்த நினைக்கிறாய்? இதில் எக்குற்றமும் எனதாகா இருந்தால், நீயும் பழி சுமத்தப்பட வேண்டியவனே” என்றான் {மிருத்யு}.(56,57)

பாம்பு, “ஓ! மிருத்யு, நான் உன்னைப் பழிக்கவில்லை, மேலும் அனைத்துப் பழியில் இருந்தும் உன்னை விடுவிக்கவில்லை. உனது ஆதிக்கத்தில் உன் இயக்கத்தின் பேரிலேயே நான் (என் செயல்களைச்) செய்தேன் என்று மட்டுமே நான் சொல்கிறேன்.(58) காலன் மீது எப்பழியும் இருந்தாலோ, எப்பழியும் இல்லா விட்டாலோ அக்குற்றத்தை ஆராய்வது என் வேலையல்ல. அதற்கான உரிமையும் நமக்கில்லை.(59) இந்தப் பழியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வது என் பொறுப்பாக இருப்பதைப் போலவே மிருத்யுவிடம் எந்தப் பழியும் இல்லை எனக் காண்பதும் என் கடமையாகும்” என்றது”.(60)

பீஷ்மர் தொடர்ந்தார், “பிறகு அந்தப் பாம்பானது அர்ஜுனகனிடம் {அந்த வேடனிடம்}, “மிருத்யு சொன்னதை நீ கேட்டாய். எனவே, குற்றமற்றவனான என்னை இந்தக் கயிற்றில் கட்டி என்னை வதைப்பது உனக்கு முறையாகாது” என்றது.(61)

ஓ! பாம்பே, “நான் உன் வார்த்தைகளையும், மிருத்யுவின் வார்த்தைகளையும் கேட்டேன். ஆனால், இவை உன் மீதான பழியைத் துடைக்கவில்லை.(62) மிருத்யுவும், நீயும் இந்தப் பிள்ளையின் மரணத்திற்கான காரணங்களாக இருக்கிறீர்கள். நான் உங்கள் இருவரையுமே காரணங்களாகக் கருதுகிறேன், ஆனால் நீங்களே உண்மையான முக்கியக் காரணம் என்று நான் சொல்லவில்லை.(63) நல்லோருக்குத் துன்பத்தை உண்டாக்கும் தீயவனும், பழி நிறைந்தவனுமான மிருத்யு தெறுமொழி பெற்றவனாவான் {சபிக்கப்பட்டவனாவான்}. பாவம் நிறைந்தவனான நீ பாவச் செயல்களில் ஈடுபடுவதால் உன்னை நான் கொல்லப் போகிறேன்” என்றான்.(64)

மிருத்யு, “நாங்கள் இருவரும் சுதந்திரமானவர்களல்ல, ஆனால் காலனைச் சார்ந்தவர்கள்; {அவனால்} நியமிக்கப்பட்ட பணியைச் செய்ய விதிக்கப்பட்டவர்ள். இக்காரியத்தை நீ முழுமையாகக் கருத்தில் கொண்டால் எங்களிடம் எக்குற்றத்தையும் காணமாட்டாய்” என்றான்.(65)

வேடன், “ஓ! பாம்பே, ஓ! மிருத்யுவே, நீங்கள் இருவரும் காலனைச் சார்ந்திருப்பவர்கள் என்றால், (நன்மையில் இருந்து எழும்) இன்பமும், (தீமையில் இருந்து எழும்) கோபமும் எவ்வாறு உண்டாகின்றன என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்றான்.(66)

மிருத்யு, “எது செய்யப்பட்டதோ அது காலனின் ஆதிக்கத்திலேயே செய்யப்பட்டது. ஓ! வேடா, காலனே அனைத்திற்கும் காரணம் என்றும், நாங்கள் இருவரும் காலனால் ஈர்க்கப்பட்ட காரணத்தால் எங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்தோம் என்றும் ஏற்கனவே சொன்னேன், எனவே, ஓ! வேடா, எங்கள் இருவரையும் நீ எவ்வகையிலும் நிந்திக்கலாகாது” என்றான்”.(67,68)

பீஷ்மர் தொடர்ந்தார், “அப்போது அறநெறி அறிவியல் சார்ந்த அந்தச் சச்சரவுக் காட்சியில் காலன் {காலபுருஷன்} தோன்றி, அங்கே கூடியிருந்த பாம்பு, மிருத்யு மற்றும் வேடனிடம் இவ்வாறு பேசினான்.(69)

காலன், “ஓ! வேடா, மிருத்யுவோ, இந்தப் பாம்போ, நானோ எந்த உயிரினத்தின் மரணத்திலும் குற்றவாளிகளல்ல. நிகழ்வைத் தூண்டும் உடனடி காரணங்களாக மட்டுமே நாங்கள் இருக்கிறோம். ஓ! அர்ஜுனகா, இக்காரியத்தில் இந்தப் பிள்ளையின் கர்மமே எங்கள் செயல்பாட்டைத் தூண்டும் காரணமாக இருந்தது.(70) வேறு எக்காரணத்தாலும் இப்பிள்ளை இறக்கவில்லை. இவன் தன் கர்மத்தின் விளைவாலேயே இறந்திருக்கிறான்.(71) இவன் தன் முற்பிறவியில் செய்த கர்மத்தின் விளைவாலேயே மரணத்தைச் சந்தித்திருக்கிறான். நாங்கள் அனைவரும் எங்கள் ஒவ்வொருவருக்குமுரிய கர்மத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறோம்.(72) மகன்களைப் போலவே கர்மமே விடுதலைக்கான துணையாகும், மேலும் கர்மமே மனிதனின் அறத்தையும், மறத்தையும் குறிப்பிடுகிறது. செயல்கள் ஒன்றையொன்று தூண்டுவதைப் போலவே, நாங்கள் ஒருவரையொருவர் தூண்டுகிறோம்.(73) களிமண் குவியலை மனிதர்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் அமைத்துக் கொள்வதைப் போல மனிதர்கள் அடையும் பல்வேறு விளைவுகள் கர்மத்தாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.(74) ஒளியும், நிழலும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல மனிதர்கள் தங்கள் சொந்த செயல்களின் மூலம் அமையும் கர்மத்தையே சார்ந்திருக்கிறார்கள்.(75) எனவே, நீயோ, நானோ, மிருத்யுவோ, பாம்போ, இந்தப் பிராமணப் பெண்ணோ இந்தப் பிள்ளையின் மரணத்திற்கான காரணங்கள் இல்லை.(76) இங்கே இவனே {இந்தப் பிள்ளையே அவனது மரணத்திற்கான} காரணமாக இருக்கிறான்” என்றான் காலன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, காலன் இவ்வழியில் இக்காரியத்தை விளக்கியதும், மனிதர்கள் தங்கள் செயல்களாலேயே துன்பத்தை அடைகிறார்கள் என்று தன் மனத்துக்குள் சமாதானமடைந்த கௌதமி, {வேடனான} அர்ஜுனகனிடம் இவ்வாறு பேசினாள்.(77)

கௌதமி {வேடன் அர்ஜுனகனிடம்}, “காலனோ, மிருத்யுவோ {யமனோ}, பாம்போ இக்காரியத்தில் காரணமாக அமையவில்லை. இந்தப் பிள்ளை தன் சொந்த கர்மத்தின் விளைவாலேயே மரணத்தை அடைந்திருக்கிறான்.(78) என் மகனின் இறப்பில் (அதன் காரணமாக அமையும் முற்பிறவி செயலில்) நானும் பங்குபெற்றிருக்கிறேன். காலனும், மிருத்யுவும் இவ்விடத்தில் இருந்து செல்லட்டும். ஓ! அர்ஜுனகா, நீ இந்தப் பாம்பை விடுதலை செய்வாயாக” என்றாள்”.(79)

பீஷ்மர் தொடர்ந்தார், “காலன், மிருத்யு மற்றும் அந்தப் பாம்பு ஆகியோர் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றதும், கௌதமியும், அந்த வேடனும் தங்கள் மனத்தில் ஆறுதலடைந்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை யாவற்றையும் கேட்டு உன் துன்பவிலகி மனத்தில் அமைதியை அடைவாயாக. மனிதர்கள் தங்கள் சொந்த கர்மத்தின் விளைவாகவே சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகின்றனர்.(81) இந்தத் தீமையை நீயோ, துரியோதனனோ உண்டாக்கவில்லை. (இந்தப் போரில்) பூமியின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டது காலனின் செயல் என்று அறிவாயாக” {என்றார் பீஷ்மர்}”.(82)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பலமிக்கவனும், அறம் சார்ந்தவனுமான யுதிஷ்டிரன் இவை அனைத்தையும் கேட்டு மனத்தில் ஆறுதல் அடைந்து, மீண்டும் பின்வருமாறு விசாரித்தான்”.(83)

சுதர்சனனும், ஓகவதியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 02-இல்லறத்தின் சிறப்பை விளக்க சுதர்சனன் மற்றும் ஓகவதியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! மனிதர்களில் விவேகியே, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவரே, ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, நான் இந்தப் பெருங்கதையைக் கேட்டிருக்கிறேன்.(1) அறபோதனைகள் நிறைந்த வரலாறுகளே மேலும் கேட்க நான் விரும்புகிறேன், என்னை நிறைவுசெய்வதே உமக்குத் தகும்.(2) ஓ! பூமியின் தலைவா, இல்லறத்தான் எவனும் {கிருஹஸ்தன் எவனும்} அறப்பயிற்சியின் மூலம் மிருத்யுவை வென்றிருக்கிறானா என்பதை எனக்குச் சொல்வீராக. விவரங்கள் அனைத்துடன் எனக்கு இதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இல்லறத்தான் ஒருவன் அறப்பயிற்சியின் மூலம் மிருத்யுவை வென்ற இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது.(4) ஓ! மன்னா, பிரஜாபதியான மனு, இக்ஷ்வாகு என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சூரியனைப் போன்று ஒளிமிக்கவனான அந்த மன்னனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} நூறு மகன்கள் பிறந்தனர்.(5) ஓ! பாரதா, அவனுடைய பத்தாவது மகனுக்குத் தசாஸ்வன் என்ற பெயர் சூட்டப்பட்டது. பிழையற்ற ஆற்றல் கொண்ட இந்த அறம்சார்ந்த இளரவசனே மாஹிஷ்மதியின் மன்னனானான்.(6) ஓ! மன்னா, இந்தத் தசாஸ்வனின் மகன், வாய்மை, ஈகை மற்றும் அர்ப்பணிப்பை நிலையாகப் பயிலும் அறம் சார்ந்த ஓர் இளவரசனாக இருந்தான். மதிராஸ்வன் என்ற பெயரில் அறியப்பட்ட அவன், பூமியின் தலைவனாக அவளை {பூமியை} ஆண்டான். அவன் வேத கல்வி மற்றும் ஆயுத அறிவியல் கல்வி ஆகியவற்றில் தன்னை நிலையாக அர்ப்பணித்திருந்தான்.(8) அந்த மதிராஸ்வனின் மகன், பெரும் நற்பேற்றையும், பலம், சக்தி, அதிகாரம் ஆகியவற்றுடன் கூடியவனாகத் தியுதிமான் என்ற பெயரைக் கொண்டிருந்தான்.(9) தியுதிமானின் மகன், மிகுந்த அர்ப்பணிப்பும், பக்தியும் மிக்க மன்னனாகச் சுவீரன் என்ற பெயரில் உலகங்கள் அனைத்திலும் புகழ்பெற்றிருந்தான். அறநோக்கு ஆன்மாவுடன் கூடிய அவன், தேவர்களின் தலைவனான மற்றொரு இந்திரனைப் போலப் பெருஞ்செல்வம்படைத்தவனாக இருந்தான்.(10)

சுவீரனுக்குப் போரில் வெல்லப்பட முடியாதவனாகவும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும், சுதுர்ஜயன் என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு மகன் இருந்தான்.(11) இந்திரனைப் போன்ற உடலைக் கொண்ட துர்ஜயனுக்கும், நெருப்பின் காந்தியைக் கொண்ட ஒரு மகன் இருந்தான். துரியோதனன் என்ற பெயரைக் கொண்ட அவன் அரச முனிகளில் முதன்மையான பெரும் ஏகாதிபதியாக இருந்தான்.(12) போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவனும், இந்திரனைப் போன்ற வீரத்தைக் கொண்டவனுமான இந்த ஏகாதிபதியின் நாட்டில் இந்திரன் அபரிமிதமான மழையைப் பொழிந்தான்.(13) இந்த மன்னனின் நாடு மற்றும் நகரங்கள் ரத்தினங்கள், கால்நடைகள், பல்வேறு வகைத் தானியங்கள் மற்றும் செல்வங்களுடன் நிறைந்திருந்தன.(14) அவனுடைய நாட்டில் கஞ்சர்கள் யாரும் இல்லை, துன்பத்தால் அல்லது வறுமையால் பீடிக்கப்பட்ட எந்த மனிதனும் இல்லை. பலவீனமான அல்லது நோயால் பீடிக்கப்பட்ட உடல் கொண்ட எந்த மனிதனும் அவனுடைய நாட்டில் இல்லை.(15)

அந்த மன்னன் {துரியோதனன்}, மிகுந்த புத்திமானாகவும், பேச்சில் மென்மையானவனாகவும், பொறாமையற்றவனாகவும், தன் ஆசைகளை அடக்கி ஆள்பவனாகவும், அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனாகவும், கருணை நிறைந்தவனாகவும், ஆற்றல் கொண்டவனாகவும், தற்பெருமையில் ஈடுபடாதவனாகவும் இருந்தான்.(16) அவன் வேள்விகளைச் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும், நுண்ணறிவுமிக்கவனாகவும், பிராமணர்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருந்தான். அவன் ஒருபோதும் பிறரை அவமதிக்காதவனாகவும், ஈகையாளனாகவும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்றவனாகவும் இருந்தான்.(17) ஓ! பாரதா, மங்கலமானவளும், புனிதமானவளும், குளிர்ந்த நீரைக் கொண்டவளுமான நர்மதையெனும் தெய்வீக ஆறானவள், தன் சொந்த இயல்பினோடு {அந்த தெய்வீக வடிவத்தோடு} அவனிடம் வந்தாள்.(18) அவன் அந்த ஆற்றிடம், தாமரைக் கண்களையும், பேரழகையும் கொண்டவளும், சுதர்சனை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மகளைப் பெற்றான்.(19) ஓ! யுதிஷ்டிரா, துரியோதனனின் மகளான அந்தச் சிறந்த கன்னிகையைப் போன்று அதற்கு முன் பெண்குலத்தில் எந்த ஓர் உயிரினமும் அழகாக இருந்ததில்லை.(20)

ஓ! ஏகாதிபதி, அக்னி தேவன், ஒரு பிராமண வடிவில் மன்னனிடம் வந்து, அழகுநிறைந்த இளவரசி சுதர்சனையின் கரத்தை வேண்டினான்.(21) அம்மன்னன் {துரியோதனன்}, ஏழையும், தனக்கு ஒப்பான பதவி இல்லாதவனுமான அந்தப் பிராமணனுக்குத் தன் மகளைக் கொடுக்க விரும்பவில்லை.(22) எனவே அக்னி அவனுடைய பெரும் வேள்வியில் இருந்து மறைந்து போனான்[1].இதயத்தில் துயர் கொண்ட அம்மன்னன் பிராமணர்களை அழைத்து அவர்களிடம்,(22) “சிறப்புவாய்ந்த பிராமணர்களே, தீயோருக்குச் செயப்படும் நன்மை அவர்களது கருத்தில் இருந்து மறைந்து போவது போல அக்னி இவ்வேள்வியில் இருந்து மறைந்து போகும் அளவுக்கு நான் என்ன பாவம் செய்தேன், அல்லது நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள்?(24) உண்மையில், அக்னி மறைந்து போகுமளவுக்கு நாம் செய்த பாவம் நிச்சயம் பெரியதாக இருக்கும். இந்தப் பாவம் உங்களுடையதாகவோ, என்னுடையதாகவோ இருக்க வேண்டும். இக்காரியத்தை முழுமையாக விசாரிப்பீராக” என்று சொன்னான்.(25)

ஓ! பாரதகுல இளவரசர்களில் முதன்மையானவனே, மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள், வாக்கைக் கட்டுப்படுத்தி, அக்னி தேவனின் பாதுகாப்பைக் குவிந்த கவனத்தோடு நாடினார்கள்.(26) கூதிர்காலச் சூரியனைப் போல ஒளிமிக்கவனும், ஆகுதிகளைச் சுமக்கும் தெய்வீக வாகனமுமான அவன், மகிமைபொருந்திய ஒளி சூழ அவர்கள் முன்பு தோன்றினான்.(27)

அப்போது உயர் ஆன்ம அக்னி அந்தச் சிறந்த பிராமணர்களிடம், “நான் எனக்காகவே துரியோதனனின் மகளைக் கேட்டேன்” என்றான்.(28) இதனால் ஆச்சரியமடைந்த பிராமணர்கள் அனைவரும் காலையில் எழுந்து அக்னி தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளை மன்னனிடம் சொன்னார்கள்.(29)

ஞானியான அம்மன்னன், பிரம்மத்தைச் சொல்பவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இதயத்தில் மகிழ்ச்சியடைந்து, “அப்படியே ஆகட்டும்” என்றான். மேலும் அம்மன்னன் சிறப்புமிக்கவனான அக்னிதேவனிடம், “ஓ! அக்னியே, நீ எப்போதும் இங்கே எங்களுடன் இருக்க எண்ணுவாயாக” என்று ஒரு வரத்தை வரதட்சணையாக {கன்யாசுக்லமாக} வேண்டிக் கேட்டான்.(30) தெய்வீக அக்னியும், “அப்படியே ஆகட்டும்” என்று அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்} சொன்னான். இந்தக் காரணத்தினாலேயே இந்த நாள்வரை மாஹிஷ்மதி நாட்டில் அக்னி இருக்கிறான்;(31) தென்திசை வெற்றிப் பயணத்தில் {திக்விஜயத்தில்} சகாதேவனாலும் காணப்பட்டான்.(32) பிறகு மன்னன் தன் மகளைப் புதிய ஆடைகளில் நகைகளுடன் அலங்கரித்து, அந்த உயர் ஆன்ம தேவனுக்குக் கொடுத்தான், அக்னியும், வேள்விகள் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஏற்பதைப் போலவே, இளவரசியான சுதர்சனையைத் தன் மனைவியாக வேத சடங்குகளுடன் ஏற்றுக் கொண்டான்.(33,34) அவளது தோற்றம், அழகு, அருள், பண்பு, உன்னதப் பிறப்பு ஆகியவற்றில் நிறைவடைந்த அக்னி, அவளிடம் வாரிசைப் பெற மனம் கொண்டான். சுதர்சனன் என்ற பெயரைக் கொண்ட மகனை விரைவில் அவளிடம் பெற்றான்.(35,36) சுதர்சனனும், தோற்றத்தில் முழுநிலவைப் போன்ற அழகுடன் இருந்தான். பிள்ளைப்பருவத்திலேயே அவன் உயர்ந்ததும், எப்போதும் நீடிப்பதுமான பிரம்ம ஞானத்தை அடைந்தான்[2].(37)நிருகனின் பாட்டனும், ஓகவான் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னன் இருந்தான். ஓகவதி என்ற பெயரில் ஒரு மகளும், ஓகரதன் என்ற பெயரில் ஒரு மகனும் அவனுக்குப் பிறந்தனர்.(38) மன்னன் ஓகவான், தேவியைப் போன்ற அழகுநிறைந்தவளான ஓகவதி என்ற தன் மகளைக் கல்விமானான சுதர்சனனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.(39) ஓ! மன்னா, சுதர்னன், ஓகவதியுடன் ஓர் இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} வாழ்வுமுறையை நோற்று, குருக்ஷேத்திரத்தில் அவளுடன் சேர்ந்து வாழ்ந்தான்.(40) புத்திமானும், சுடர்மிக்க சக்தி கொண்டவனுமான அந்த இளவரசன் {சுதர்சனன்}, ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையைப் பின்பற்றியபடியே மரணத்தை {யமனை} வெல்லும் நோன்பை நோற்றான்.(41)

ஓ! மன்னா அந்த அக்னிமகன் {சுதர்சனன்}, {தன் மனைவியான} ஓகவதியிடம், “நமது விருந்தோம்பலை நாடுவோருக்கு (அவர்களது விருப்பங்களுக்கு} எதிரான எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யாதே.(42) நீ உன்னையே கொடுக்க வேண்டியிருந்தாலும், விருந்தினர்களை வரவேற்கும் வழிமுறைகளில் எந்த ஐயுணர்வும் கொள்ளாதே[3].(43) ஓ! அழகியே, விருந்தினர்களுக்கு இணங்கும் விருந்தோம்பலைவிட இல்லறத்தாருக்கு உயர்ந்த அறம் வேறேதும் கிடையாது என்பதால் இந்நோன்பே எப்போதும் என் மனத்தில் இருக்கிறது.(44) என் வார்த்தைகளுக்கு உன்னிடம் எந்த அதிகாரமாவது இருந்தால், ஐயமில்லாமல் இஃதை உன் மனத்தில் எப்போதும் கொள்வாயாக.(45) ஓ! பாவமற்றவளே, அருளப்பட்டவளே, நீ என்னை நம்பினால், நான் உன் அருகில் இருந்தாலும், உன்னிடம் இருந்து தொலைவாக இருந்தாலும் ஒருபோதும் விருந்தினரை அவமதிக்காதே” என்றான்.(46)அப்போது ஓகவதி, தன் தலைக்கு மேலே கரங்களைக் குவித்து, “நீர் ஆணையிடும் எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன்” என்று மறுமொழி கூறினாள்.(47)

அப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சுதர்சனனை வெல்ல விரும்பிய மிருத்யு {யமன்}, அவனிடம் தாமதங்களை {அவன் செய்யும் தவறுகளைக்} காண அவனைக் கண்காணிக்கத் தொடங்கினான்.(48)

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், காட்டில் இருந்து விறகைக் கொண்டுவர அக்னிமகன் {சுதர்சனன்} வெளியே சென்றபோது, அருள்நிறைந்த பிராமணர் ஒருவர் ஓகவதியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விருந்தோம்பலை வேண்டினார்,(49) “ஓ! அழகிய பெண்ணே, இல்லறத்தாருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விருந்தோம்பலெனும் அறத்தில் உனக்கு நம்பிக்கையேதும் இருந்தால், இன்று நீ என்னை விருந்தோம்பல் சடங்குகளுடன் வரவேற்க வேண்டும் என உன்னை வேண்டுகிறேன்” என்றார்.(50)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் புகழைக் கொண்ட அந்த இளவரசி {ஓகவதி}, அந்தப் பிராமணரால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி அவரை வரவேற்றாள்.(51) அவர் அமர்வதற்கு இருக்கையும், கால் கழுவிக்கொள்ள நீரும் கொடுத்த அவள், “உமது காரியம் என்ன? நான் உமக்கு என்ன தர வேண்டும்?” என்று கேட்டாள்.(52)

அதற்கு அந்தப் பிராமணர், “ஓ! அருளப்பட்டவளே, உன் மேனியில் என் காரியம் இருக்கிறது. மனத்தில் எத்தயக்கமுமின்றி அதன்படியே நீ செயல்படுவாயாக.(53) இல்லறத்தாருக்குப் பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் உனக்கு ஏற்புடையனவாக இருந்தால், ஓ! இளவரசியே, உன் மேனியை எனக்குக் கொடுப்பதன் மூலம் என்னை நிறைவு செய்வாயாக” என்றார்.(54)

பல்வேறு பொருட்களைக் கொடுப்பதாக அந்த இளவரசியால் ஆசைகாட்டப்பட்டாலும் அந்தப் பிராமணர் வேறு கொடை எதையும் கேட்காமல் அவளது மேனியையே கேட்டுக் கொண்டிருந்தார்.(55) தீர்மானமாக இருக்கும் அவரைக் கண்ட அந்தப் பெண்மணி, முன்பே தன் கணவனால் கொடுக்கப்பட்ட ஆணைகளை நினைவுகூர்ந்து, வெட்கமடைந்து {அவமானமடைந்தவளாக} அந்தச் சிறந்த பிராமணரிடம் “அப்படியே ஆகட்டும்” என்றாள்.(56) இல்லறத்தாரின் அறத்தை ஈட்ட விரும்பிய தன் கணவனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவள் உற்சாகத்துடன் அந்த மறுபிறப்பாள முனிவரை அணுகினாள்.(57)

அதே வேளையில் விறகு சேகரித்துக் கொண்டு அக்னிமகன் {சுதர்சனன்} தன் இல்லம் திரும்பினான். கடுமையான, இரக்கமில்லாத இயல்புடன் கூடிய மிருத்யுவானவன், அர்ப்பணிப்புமிக்க ஒரு நண்பனுடன் இருப்பது போலவே அவனது அருகிலேயே எப்போதும் இருந்தான்.(58) அந்தப் பாவகனின் {அக்னியின்} மகன் {சுதர்சனன்} தன் ஆசிரமத்திற்குத் திரும்பியதும், ஓகவதியின் பெயர் சொல்லி அழைத்தும் (எந்தப் பதிலையும் அடையாமல்) மீண்டும் மீண்டும், “நீ எங்கே சென்றுவிட்டாய்?” என்று கேட்டான்.(59)

தன் கணவனிடம் அர்ப்பணிப்புமிக்க அந்தக் கற்புடைய பெண்மணி, அந்தப் பிராமணரின் கரங்களில் அகப்பட்டிருந்ததால் தன் கணவனுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.(60) உண்மையில் அந்தக் கற்புமிக்கப் பெண், கறைபட்டவளாகத் தன்னைக் கருதி, வெட்கத்தால் {அவமானத்தால்} பேச்சற்றவளானாள்.(61)

சுதர்சனன் மீண்டும் அவளிடம், “கற்புடைய என் மனைவி எங்கே இருக்கக்கூடும்? அவள் எங்கே சென்றுவிட்டாள்? (அவள் மறைந்ததைவிட) எனக்குப் பெரியது வேறு ஏதும் இல்லை.(62) எளிமையும், வாய்மையும் நிறைந்தவளும், கணவனிடம் அர்ப்பணிப்புமிக்கவளுமான அந்தப் பெண்மணி, ஐயோ, இனிய புன்னகையுடன் ஏன் இன்று என் அழைப்புக்குப் பதில் சொல்லாமல் இருக்கிறாள்?” என்றான்.(63)

அப்போது அந்தக் குடிசையில் இருந்த பிராமணர், சுதர்சனனிடம், “ஓ!பாவகனின் மகனே {சுதர்சனா}, ஒரு பிராமணன் வந்திருக்கிறான்,(64) வரவேற்புக்குரிய பல்வேறு பொருட்களைக் கொண்டு உனது மனைவியான இவளால் ஆசை காட்டப்பட்டாலும், அவன் அவளது மேனியை மட்டுமே விரும்பினான்,(65) இப்போது இந்த அழகிய முகம்படைத்த பெண் உரிய சடங்குகளுடன் என்னை வரவேற்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிவாயாக. இத்தருணத்திற்குத் தகுந்தது எனக் கருதும் எதையும் நீ செய்யலாம்” என்றார்.(66)

இரும்பு தண்டத்துடன் கூடிய மிருத்யுவானவன், அந்த முனிவன் {சுதர்சனன்} தன் உறுதிமொழியில் இருந்து பிறழ்வான் என நினைத்து அவனை அழிப்பதற்காக அக்கணத்தில் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.(67)

சுதர்சனன் அதிர்ச்சியடைந்தாலும், பார்வை, சொல், செயல் அல்லது எண்ணத்தில் உள்ள பொறாமை மற்றும் கோபம் அனைத்தையும் கைவிட்டு,(68) “ஓ! பிராமணரே, நீர் இன்புற்றிருப்பீராக. எனக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓர் இல்லறத்தான் தன் விருந்தினரைக் கௌரவிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(69) இல்லறத்தானைப் பொறுத்தவரையில், தன் விருந்தினருக்குத் தன் இல்லத்தில் இருப்பதை முறையாகக் கொடுத்துக் கௌரவிப்பதில் விளைவதை விடப் பெருந்தகுதி {பெரும்புண்ணியம்} வேறேதும் கிடையாது என்று கல்விமான்கள் சொல்கின்றனர்.(70) என் உயிர், என் மனைவி, மேலும் நான் கொண்டுள்ள உலக உடைமைகள் ஆகிய அனைத்தும் என் விருந்தினர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையே. இதை நான் என் நோன்பாக நோற்கிறேன்.(71) ஓ! பிராமணரே, இம்மொழியை நான் உண்மையில் சொல்வதால், தன்னறிவை {சுயஞானத்தை} நான் அடைவேன்.(72) ஓ! அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே, நெருப்பு, காற்று, பூமி, நீர் மற்றும் வானம் என்ற ஐம்பூதங்களும், மனம், புத்தி, ஆன்மா, காலம், வெளி மற்றும் பத்து புலன்கள்(73) ஆகிய அனைத்தும் மனிதர்களின் உடல்களில் இருந்து, அவர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களை எப்போதும் சாட்சியாகக் காண்கின்றன.(74) இந்த உண்மை இன்று என்னால் சொல்லப்படுகிறது, இதற்காகத் தேவர்கள் எனக்கு அருள் தரட்டும், அல்லது நான் பொய் பேசினால் என்னை அழிக்கட்டும்” என்றான்.(75)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அப்போது அனைத்துத் திசைகளிலும் எதிரொலிக்கும்படி ஒரு குரல், “இஃது உண்மை, இது பொய்யல்ல” என்று அலறியது.(76)அப்போது அந்தப் பிராமணர், பூமியையும், வானத்தையும் சூழ்ந்து எழும் காற்றைப் போலக் குடிசையில் இருந்து வெளியே வந்து,(77) வேதவொலிகளால் மூவலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அறம்சார்ந்த அம்மனிதனின் பெயர் சொல்லி அழைத்து, அவனை வாழ்த்தி,(78) “ஓ! பாவமற்றவனே, நான் தர்மன். மகிமை அனைத்தும் உனக்கே ஆகும். ஓ! வாய்மை விரும்பியே, உன்னைச் சோதிக்கவே நான் இங்கே வந்தேன். நீ அறம் சார்ந்தவன் என்பதை அறிந்து நான் நிறைவடைகிறேன்.(79) உன் தவறுகளைத் தேடி உன்னை எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருந்த மிருத்யுவை நீ வென்றுவிட்டாய்.(80) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, தன் கணவனிடம் அர்ப்பணிப்புள்ள இந்தக் கற்புடைய பெண்ணை, பார்வையால் அவமதிக்கும் திறனும் மூவுலகத்தில் ஒருவனுக்கும் இல்லை எனும்போது அவளது மேனியை {எவனாலும்} தொடவும் முடியாது.(81) உன் நற்குணத்தினாலும், தன் சொந்த கற்பினாலும் இவள் பாதுகாக்கப்பட்டிருக்கிறாள். பெருமைமிக்க இந்தப் பெண்மணி சொல்வதற்கு முரணாக ஏதும் இருக்க முடியாது.(82) பிரம்மம் ஓதுபவளும், கடுந்தவங்களுடன் கூடியவளுமான இவள், உலகத்தின் விடுதலைக்காக {விமோசனத்துக்காக} ஒரு பெரிய ஆறாக வடிவ மாற்றம் பெறுவாள்.(83) நீ உனது சொந்த உடலுடன் அனைத்து உலகங்களையும் அடைவாய், மேலும் யோக அறிவியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இவளது உடலின் ஒரு பாதி உன்னைப் பின்தொடரும், மறுபாதியானது ஓகவதி என்று கொண்டாடப்படும் ஆறாக மாறும்[4].(84) தவங்களின் மூலம் அடையப்படும் அனைத்து உலகங்களையும் நீ இவளுடன் சேர்ந்து அடைவாய்.(85) திரும்பி வராத நித்தியமாக நீடித்திருக்கும் உலகங்களை நீ இந்தத் திரள் உடலுடனே அடைவாய்.(86) நீ மரணத்தை வென்றாய், உயர்ந்த இன்ப நிலைகள் அனைத்தையும் அடைந்தாய், உன் (மனத்தின்) சக்தியால் எண்ணத்தின் வேகத்தை அடைந்து, ஐம்பூதங்களின் சக்திக்கு மேலாக எழுந்திருக்கிறாய்.(87) ஓ! அறம்சார்ந்த மனிதர்களின் இளரவசே, இவ்வாறு ஓர் இல்லறத்தானின் கடமைகளைப் பின்பற்றியதன் மூலம் நீ உன் ஆசைகள், விருப்பங்கள், கோபம் ஆகியவற்றை வென்றிருக்கிறாய், இந்த இளவரசியோ உனக்குத் தொண்டாற்றி, துன்பம், ஆசை, மாயை, பகைமை, மனத்தளர்ச்சி ஆகியவற்றை வென்றிருக்கிறாள்” என்றான் {தர்மன்}”.(88)(ஓகவதி என்பது, சரஸ்வதி ஆற்றின் கிளை ஆறாகும்குருக்ஷேத்திரத்தின் அருகில் தென்படுவதுதான் ஓகவதியாறு தோன்றுமிடம். சரஸ்வதியின் மறைவோடு, இந்தக் கிளையாறும் மறைந்திருக்க வேண்டும்.)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது (தேவர்களின் தலைவனான) மகிமைபொருந்திய வாசவன், ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட ஓர் அழகிய தேரைச் செலுத்திக் கொண்டு அந்தப் பிராமணனை {சுதர்சனனை} அணுகினான்.(89) மரணம், ஆன்மா, அனைத்து உலகங்கள், அனைத்துப் பூதங்கள், புத்தி, மனம், காலம், வெளி, ஆசை, கோபம் ஆகிய அனைத்தும் வெல்லப்பட்டன.(90) எனவே, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓர் இல்லறத்தானுக்கு விருந்தினரை விட உயர்ந்த தெய்வீகம் வேறெதுவும் இல்லை என்பதை மனத்தில் தாங்குவாயாக.(91) கௌரவிக்கப்பட்ட ஒரு விருந்தினருடைய அருளானது, ஆயிரம் வேள்விகளின் தகுதியைவிட நன்மைமிக்கது என்று கல்விமான்களால் சொல்லப்படுகிறது.(92) தகுதிவாய்ந்த விருந்தினர் ஒருவன் ஓர் இல்லறத்தானின் விருந்தோம்பலை நாடும்போது, அவனால் கௌரவிக்கப்படவில்லையெனில் அவனது புண்ணியங்கள் அனைத்தையும் (தன்னோடு) எடுத்துக் கொண்டு (பதிலுக்கு) தன் பாவங்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுக்கிறான்.(93) என் மகனே {யுதிஷ்டிரனே}, ஓர் இல்லறத்தானால் எவ்வாறு மரணம் வெல்லப்பட்டது என்ற இந்தச் சிறந்த கதையை இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(94) (கேட்போருக்கு) இச்சிறந்த கதையைச் சொல்வது, மகிமை, புகழ் மற்றும் நீண்டவாழ்நாள் {நீண்ட ஆயுள்} ஆகியவற்றைக் கொடுக்கும். உலகம் சார்ந்த செழிப்பை நாடும் மனிதன், அனைத்துத் தீமைகளையும் விலக்குவதில் இது திறன்மிக்கது எனக் கருத வேண்டும்.(95) ஓ! பாரதா, இந்தச் சுதர்சனனின் வாழ்க்கைக் கதையைத் தினமும் உரைக்கும் மனிதன் அருள் உலகங்களை அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(96)

விஷ்வாமித்ரர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 03-அடைதற்கரிதான பிராமணத் தன்மையானது க்ஷத்திரியரான விஷ்வாமித்ரரால் எவ்வாறு அடையப்பட்டது என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்…

[1]யுதிஷ்டிரன், “ஓ! இளவரசரே {பீஷ்மரே} பிராமணத்தன்மையானது வேறு மூன்று வர்ணங்களால் (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோரால்) அடைவதற்கு மிக அரிதானது என்றால், ஓ! மன்னா, உயர் ஆன்ம விஷ்வாமித்ரர், (பிறவியால்) ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமணத் தன்மையை அடைந்தது எவ்வாறு? ஓ! ஐயா, இதை நான் அறிய விரும்புகிறேன். எனவே இக்காரியம் குறித்த உண்மையை எனக்குச் சொல்வீராக.(1,2) ஓ! ஐயா, அந்தப் பலமிக்க மனிதர் தன் தவத்தகுதிகளின் மூலம் உயர் ஆன்ம வசிஷ்டரின் நூறு மகன்களை ஒரு கணத்தில் அழித்துவிட்டார்.(3) அவர் கோப வசத்தில் இருந்தபோது, எண்ணற்ற தீய ஆவிகளையும், வலிமையும், வீரமும் கொண்டவர்களையும், காலனுக்கு ஒப்பானவர்களுமான ராட்சர்களையும் படைத்தார்.(4) நூற்றுக்கணக்கான மறுபிறப்பாள தவசிகளைக் கொண்டதும், பெருமையும், கல்வித்தகுதியும் கொண்டதும், பிராமணர்களால் போற்றிப் புகழப்படுவதுமான குசிக குலமானது இந்த மனிதர்களின் உலகில் அவராலேயே உண்டானது.(5)ரிசீகரின் மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுனச்சேபர், அம்பரீஷனின் பெரும் வேள்வியில் ஒரு விலங்காகக் கொல்லப்பட்ட வேண்டியவராக இருந்தாலும் விஷ்வாமித்ரரின் மூலம் விடுவிக்கப்பட்டார்.(6) ஹரிஷ்சந்திரன் {ஹரிச்சந்திரன்} வேள்வியில் தேவர்களை நிறைவு செய்ததால், அவர் {சுனச்சேபர்} ஞானியான விஷ்வாமித்ரரின் மகனானார்.(7) அண்ணனான தேவவிரதனை மதிக்காததால், அவனது ஐம்பது தம்பிகளும் சண்டார்களாகப் போகும்படி சபிக்கப்பட்டனர்.(8) இக்ஷ்வாகுவின் மகனான திரிசங்கு, தன் நண்பர்களால் கைவிடப்பட்டு, கீழ் உலகங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தபோது, விஷ்வாமித்ரரின் விருப்பப்படி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.(9) விஷ்வாமித்ரர், கௌசிகி என்ற பெயரைக் கொண்டதும், தெய்வீக முனிவர்களால் அடிக்கடி நாடப்படுவதுமான ஒரு பெரும் ஆற்றை {தன் தங்கையாகக்} கொண்டிருந்தார். அந்தப் புனிதமான, மங்கலமான ஆறானது, தேவர்களாலும், மறுபிறப்பாள முனிவர்களாலும் அடிக்கடி நாடப்பட்டது.(10)

புகழ்பெற்ற தேவகன்னிகையும், அழகிய கைவளைகளைக் கொண்டவளுமான ரம்பை, அவரது தவங்களுக்கு இடையூறு செய்ததால் சபிக்கப்பட்ட ஒரு பாறையாகச் சமைக்கப்பட்டாள்.(11) மகிமைபொருந்திய வசிஷ்டர், விஷ்வாமித்ரரின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் பழங்காலத்தில் தன்னைக் கொடிகளால் சுற்றிக் கொண்டு ஆற்றில் விழுந்து, பிறகு கட்டுகளில் இருந்து விடுபட்டு வெளியே வந்தார்.(12) பெரியதும், புனிதமானதுமான அந்த ஆறு இதன் விளைவால் அதுமுதல் விபாசை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[2].(13) அவர் {விஷ்வாமித்ரர்} மகிமை பொருந்தியவனும், பலமிக்கவனுமான இந்திரனை வேண்டியதால், அவரிடம் நிறைவடைந்த அவன் அவரைச் சாபத்தில் இருந்து விடுவித்தான்[3]. அவர் ஆகாயத்தின் வட பக்கத்தில் இருந்து கொண்டு, ஏழு மறுபிறப்பாள முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்} சார்ந்து உத்தானபாதன் மகனான துருவனுக்கும் நடுவில் எப்போதும் ஒளியைப் பொழிந்து கொண்டிருக்கிறார்.(14,15)இவையும், இன்னும் பலவும் அவரது சாதனைகளாக இருக்கின்றன. ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே, இவை ஒரு க்ஷத்திரியரால் செய்யப்பட்டிருப்பதால் எனக்கு ஆவல் மேலிடுகிறது.(16) எனவே, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இக்காரியத்தை எனக்கு உண்மையாக விளக்குவீராக. தன் உடற்கட்டைக் கைவிட்டு, சதையாலான மற்றொரு வசிப்பிடத்தைக் கொள்ளாமல் அவரால் எவ்வாறு பிராமணராக முடிந்தது?(17) ஓ! ஐயா, மதங்கனின் கதையை எனக்குச் சொன்னதைப் போலவே இக்காரியத்தை உண்மையில் விளக்குவீராக[4].(18) மதங்கன் (தவங்கள் அனைத்தையும் செய்திருந்தாலும்) சண்டாளனாகப் பிறந்தவனாதலால் பிராமணத்தன்மையை அடைய முடியாதபோது, இந்த மனிதனால் {விஷ்வாமித்ரரால்} எவ்வாறு பிராமண நிலையை அடைய முடிந்தது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(19)

விஷ்வாமித்ர குலம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 04-விஷ்வாமித்ரரின் பிறப்பு; அடைதற்கரிதான பிராமணத் தன்மையை அவர் அடைந்த காரணம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, பழங்காலத்தில் விஷ்வாமித்ரர் எவ்வாறு பிராமணர் மற்றும் பிராமண முனிவர் என்ற நிலைகளை அடைந்தார் என்பதை விளக்கமாகக் கேட்பாயாக.(1) ஓ! பாரத வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, பாரதக் குலத்தில் பல வேள்விகளைச் செய்தவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனுமான ஆஜமீடன்[1] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான்.(2) அவனது மகன் ஜன்னு என்ற பெயர் கொண்ட பெரும் மன்னன் ஆவான். உயர்ந்த மனம் கொண்ட இந்த இளவரசனின் மகளாகக் கங்கை இருந்தாள்.(3) பெரும் புகழ்பெற்றவனும், தந்தைக்கு இணையான அறவோனுமான சிந்துத்வீபன் இந்த இளவரசனின் {ஜன்னுவின்} மகனாக இருந்தான். சிந்துத்வீபனிடமிருந்து பெரும் அரசமுனியான பலாகாஸ்வன் உண்டானான்.(4) வல்லபன் என்ற பெயரைக் கொண்ட அவனுடைய மகன் உடல் படைத்த இரண்டாவது தர்மனைப் போல இருந்தான். அவனது மகனான குசிகன், ஆயிரங்கண் இந்திரனைப் போல மகிமையுடன் பிரகாசித்தான்.(5)(சந்திரன் – புதன் – ப்ரூரவஸ் – அமாவசு – பீமன் – காஞ்சனன் – கதோத்திரன்(ஆஜமீடன்) – ஜன்னு – சுமந்து(சிந்துத்வீபன்) – அசகன் – பலகாஸ்வன் – குசன் (வல்லபன்) – குசநாபன் (குசிகன்) – காதி – கௌசிகன்(விசுவாமித்திரர்))குசிகனின் மகனும், சிறப்புமிக்கவனுமான மன்னன் காதி, பிள்ளையற்றவனாக இருந்ததால், தனக்கு ஒரு மகன் பிறக்க விரும்பி காட்டுக்குச் சென்றான்.(6) அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு ஒரு மகள் பிறந்தாள். சத்தியவதி என்ற பெயரால் அழைக்கப்பட்ட அவள் பூமியில் ஒப்பற்ற அழகுடையவளாக இருந்தாள்.(7) பிருகு குலத்தவரும், சியவனரின் சிறப்புமிக்க மகனும், கடுந்தவங்களுடன் கூடியவரும், ரிசீகர் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவர் இந்தப் பெண்ணின் கரத்தை வேண்டினார்.(8) எதிரிகளை அழிப்பவனான காதி, உயர் ஆன்ம ரிசீகரை ஏழையாக நினைத்து தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்காமல் இருந்தான்.(9) பின்னவர் {ரிசீகர்} இவ்வாறு விடைகொடுத்தனுப்பப்பட்டுத் திரும்பிச் செல்கையில் அந்தச் சிறப்புமிக்க மன்னன் {காதி} அவரிடம் {ரிசீகரிடம்}, “நீர் எனக்கு மணக்கொடையளித்தால் {வரதட்சணை அளித்தால்} என் மகளை உமது மனைவியாக அடையலாம்” என்றான்.(10)

ரிசீகர் {காதியிடம்}, “ஓ! மன்னா, உன் மகளின் கரத்திற்காக நான் என்ன மணக்கொடையை அளிக்க வேண்டும்? தயக்கமேதும் இல்லாமல் இக்காரியத்தை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(11)

காதி, “ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, காற்றின் வேகம் கொண்டவையும், சந்திரக்கதிரின் வண்ணத்தைக் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஓராயிரம் குதிரைகளை எனக்குக் கொடுப்பீராக” என்றான்”.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிருகு குலத்தில் முதன்மையானவரான அந்த வலிமைமிக்கச் சியவனரின் மகன் {ரிசீகர்}, அதிதியின் மகனும், நீர்நிலைகள் அனைத்தின் தலைவனுமான வருண தேவனிடம்,(13) “ஓ! தேவர்களில் சிறந்தவனே, காற்றின் வேகம் கொண்டவையும், சந்திரனின் பிரகாசத்தையே நிறமாகக் கொண்டவையும, ஒரு காது கருப்பாக இருப்பவையுமான ஓராயிரம் குதிரைகளைக் கொடுக்க வேண்டுமென உன்னை நான் வேண்டுகிறேன்” என்று வேண்டினார்.(14)அதிதியின் மகனான வருண தேவன், சிறப்பானவரான அந்தப் பிருகு குலக்கொழுந்திடம், “அப்படியே ஆகட்டும். நீர் எங்கே தேடினாலும் (உமது முன்னிலையில்) குதிரைகள் எழும்” என்றான்.(15)

ரிசீகர் அவற்றைக் குறித்து நினைத்த உடனேயே உயர்வகையைச் சேர்ந்தவையும், சந்திரனின் காந்தி மக்கிய நிறத்தையும் கொண்ட ஆயிரம் குதிரைகள் கங்கையின் நீரில் இருந்து எழுந்தன.(16) கான்யகுப்ஜத்திற்கு அருகில் புனிதமான கங்கைக்கரையில் அந்தக் குதிரைகள் தோன்றியதன் விளைவால் இன்றும் மனிதர்களுக்கு மத்தியில் அவ்விடம் அஸ்வதீர்த்தம் என்ற பெயரில் புகழ்பெற்றிருக்கிறது.(17) அப்போது தவசிகளில் சிறந்தவரான ரிசீகர் மனத்தில் நிறைவடைந்து, காதியிடம் மணக்கொடையாக அந்தச் சிறந்த ஆயிரம் குதிரைகளையும் கொடுத்தார்.(18) மன்னன் காதி, ஆச்சரியத்தால் நிறைந்து, சபிக்கப்படுவோமென அஞ்சி தன் மகளை நகைகளால் அலங்கரித்து அந்தப் பிருகு மகனுக்கு {ரிசீகருக்குக்} கொடுத்தான்.(19) அந்த முதன்மையான மறுபிறப்பாள முனிவர், திருமணத்தில் பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளின் படி அவளது கரத்தை ஏற்றார். அந்த இளவரசியும் தன்னை அந்தப் பிராமணரின் மனைவியாகக் கண்டு பெரும் நிறைவையடைந்தாள்.(20)

ஓ! பாரதா, அவளது ஒழுக்கத்தில் பெரும் நிறைவை அடைந்த அந்த மறுபிறப்பாள முனிவர், அவளுக்கு ஒரு வரத்தை அருளும் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.(21) ஓ! சிறப்புமிக்க மன்னா, அந்த இளவரசி {சத்தியவதி} இக்காரியத்தைத் தன் தாய்க்குச் சொன்னாள். அந்தத் தாய், தன் முன்பு கீழ் நோக்கிய கண்களுடன் {தலை குணிந்து} நின்றிருந்த தன் மகளிடம்,(22) “ஓ! என் மகளே, உன் கணவனிடம் எனக்கும் ஓர் உதிவியைப் பெறுவதே உனக்குத் தகும். கடுந்தவங்களுடன் கூடிய அந்தத் தவசி எனக்கு ஒரு மகன் பிறப்பதற்குரிய வரத்தை அருள வல்லவர்” என்றாள்.(23)

ஓ! மன்னா, அப்போது அந்த இளவரசி {சத்தியவதி} தன் கணவரான ரிசீகரிடம் உடனே திரும்பி தன் தாயின் விருப்பத்தைச் சொன்னாள்.(24) ரிசீகர், “ஓ! அருளப்பட்டவளே, என் உதவியால் அனைத்து நற்குணமும் கொண்ட ஒரு மகனை அவள் விரைவில் பெறுவாள். உன் வேண்டுகோள் நிறைவேறும்.(25) வலிமைமிக்கவனும், மகிமைமிக்கவனும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவனும், என் குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான ஒரு மகன் உனக்குப் பிறப்பான். இதை நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்.(26) நீங்கள் இருவரும் உங்கள் பருவ காலத்தில் நீராடிய {ருது ஸ்நானம் முடிந்த} பிறகு, ஓ! சிறந்த பெண்ணே, அவள் அரச மரத்தையும், நீ அத்தி மரத்தையும் தழுவினால் உங்கள் விரும்பத்திற்குரிய பொருளை நீங்கள் அடைவீர்கள்.(27) ஓ! இனிய புன்னகை கொண்ட பெண்ணே, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட இந்த வேள்விக் காணிக்கைகள் (சாரு) இரண்டை நீங்கள் இருவரும் உண்டால் (நீங்கள் விரும்பியபடியே) மகன்களை அடைவீர்கள்” என்றார்.(28)

இதனால் இதயத்தில் மகிழ்ச்சியடைந்த சத்தியவதி, ரிசீகரால் சொல்லப்பட்ட அனைத்தையும், சாரு {ஹவிஸ்}[2] உருண்டைகள் இரண்டைக் குறித்தும் தன் தாய்க்குச் சொன்னாள். அந்தத் தாய் தன் மகளான சத்தியவதியிடம், “ஓ! மகளே, உன் கணவனை விட நான் உன்னால் பெரிதும் மதிக்கப்படத் தகுந்தவள் என்பதைக் கருதி என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக.(30) மந்திரங்களால் புனிதமாக்கப்பட்டு உன் கணவனால் உனக்குக் கொடுக்கப்பட்ட சாருவை {ஹவிஸை} எனக்குக் கொடுப்பாயாக, மேலும் எனக்குப் பரிந்துரைக்கப்பட்டதை நீ எடுத்துக் கொள்வாயாக.(31) ஓ! பழியற்ற குணத்துடன் கூடிய இனிய புன்னகை கொண்டவளே, என் வார்த்தைக்கு உன்னிடம் மதிப்பிருந்தால், நமக்காக நிர்ணயிக்கப்பட்ட மரங்களையும் நாம் மாற்றிக் கொள்வோம்.(32) தனக்குச் சிறந்தவனும், களங்கமற்றவனுமான மகன் வேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புவார்கள். மகிமை பொருந்திய ரிசீகரும் இக்காரியத்தில் இவ்வாறே செய்திருக்க வேண்டும். அது முடிவில் தெரியப் போகிறது.(33) ஓ! அழகிய பெண்ணே, இக்காரணத்தால் என் இதயம் உன் சாருவையும், உன் மரத்தையும் கொள்ள விரும்புகிறது. நீயும் உனக்குச் சிறந்த தம்பியை அடைவாய் என்பதைக் கருத்தில் கொள்வாயாக” என்றாள்.(34)இவ்வாறு, ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தாய், மகளான சத்யவதி ஆகிய இருவரும் கருவுற்றனர்.(35) பிருகுவின் சிறந்த வழித்தோன்றலான அந்தப் பெரும் முனிவர் {ரிசீகர்}, தமது மனைவி கருவுற்றதை அறிந்து, இதயத்தில் நிறைவடைந்து, அவளிடம் {சத்யவதியிடம்},(36) “ஓ! சிறந்த பெண்ணே, சாருவை மாற்றிக் கொண்டதில் நீ நல்லது செய்யவில்லை என்பது விரைவில் வெளிப்படையாகும். நீ மரங்களை மாற்றிக் கொண்டாய் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.(37) உன்னுடைய சாருவில் மொத்தமாகச் சேகரிக்கப்பட்ட பிரம்ம சக்தியையும், உன் தாய்க்குரிய சாருவில் க்ஷத்திரிய சக்தியையும் வைத்திருந்தேன்.(38) நீ மூவுலகங்களிலும் புகழத்தக்க நற்குணங்களைக் கொண்ட ஒரு பிராமணனை ஈன்றெடுக்கும்படியும், அவள் (உன் தாய்) ஒரு சிறந்த க்ஷத்திரியனை ஈன்றெடுக்கும்படியும் விதித்திருந்தேன்.(39) ஆனால், ஓ! சிறந்த பெண்ணே, நீ (சாருவை) மாற்றிவிட்டதால் உன் தாய் சிறந்த பிராமணனையும், செய்கையில் கொடூரம் நிறைந்த க்ஷத்திரியனை நீயும் ஈன்றெடுப்பீர்கள். ஓ! பெண்ணே, உன் தாய் மீது கொண்ட பாசத்தால் நீ செய்தது நல்லதல்ல” எனறார்.(41)

ஓ! மன்னா, சிறந்த பெண்மணியான அந்தச் சத்தியவதி இதைக் கேட்டுக் கவலையடைந்து, இரண்டாக ஒடிந்துவிழும் அழகிய கொடியைப் போலத் தரையில் விழுந்தாள்.(42) புலனுணர்வு மீண்டு தன் தலைவனுக்குத் தலைவணங்கிய அந்தக் காதியின் மகள், பிருகு குலத்தில் முதன்மையானவரான தன் கணவரிடம்,(43) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவரே, உம்மிடம் மன்றாடும் உமது மனைவிடம் கருணை கொண்டு, எனக்கு க்ஷத்திரிய மகன் பிறக்காமல் இருக்க வகைச் செய்வீராக.(44) ஓ! பிராமணரே, உமக்கு விருப்பமிருந்தால் என் மகன் அவ்வாறில்லாமல், என் பேரன் தன் கொடூரச் செயல்களுக்குப் புகழ்பெற்றவனாக இருக்கட்டும். நீர் எனக்கு இந்த உதவியைச் செய்வீராக” என்றாள்.(45)

ஓ! மன்னா, கடுந்தவங்களைக் கொண்ட அந்த மனிதர், தம் மனைவியிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னார். அதன் பிறகு அவள் ஜமதக்னி என்ற பெயரில் அருள்நிறைந்த ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(46) காதியின் கொண்டாடப்பட்ட மனைவியும், அந்த முனிவரின் {ரிசீகரின்} அருளால் பிரம்ம ஞானத்தை அறிந்த மறுபிறப்பாள முனி விஷ்வாமித்ரரை ஈனறெடுத்தாள்.(47) பெரும் அர்ப்பணிப்பணிப்பைக் கொண்டிருந்த விஷ்வாமித்ரர் ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமண நிலையை அடைந்து, ஒரு பிராமணக் குலத்தையே உண்டாக்கியவரானார்.(48) அவரது மகன்கள், கடுந்தவங்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், வேதங்களில் கல்விமான்களும், பல கோத்ரங்களை உண்டாக்கியவர்களுமான பல பிராமணக் குலங்களின் உயர் ஆன்ம மூதாதையர்களாக இருந்தனர்.(49)

புகழத்தக்க மதுச்சந்தர், வலிமைமிக்கத் தேவராதர், அக்ஷீணர், சகுந்தர், பப்ரு, காலபதன்,(50) கொண்டாடப்பட்ட யாஜ்ஞவல்க்யர், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட ஸ்தூணர், உலூகர், முத்கலர் {யமதூதர்}, தவசி ஸைந்தவயானர்,(51) சிறப்புமிக்கப் பல்குஜங்கர் {பர்ணஜங்கர்}, பெரும் முனிவர் காலவர், ருசி, கொண்டாடப்பட்ட வஜ்ரர், ஸாலங்காயனர்,(52) லீலாத்யர், நாரதர், கூர்ச்சாமுகர் என்ற பெயரில் அறியப்பட்டவர், வாஹுலி {வாதுலி}, முஸலர், வக்ஷோக்ரீவர்,(53) ஆங்க்ரிகர், நைகத்ருக், சிலாயூபர், சிதர் {ஸிதர்}, சுசி, சக்ரகர், மாருதந்தவ்யர், வாதக்னர், அஸ்வலாயனர்,(54) ஸ்யாமாயனர், கார்க்யர், ஜாபாலி, ஸுஸ்ருதர், காரீஷி, ஸம்ச்ருத்யர், பர பௌரவர், தந்து,(55) பெருந்தவசி கபிலர், தாடகாயனர், உபகஹனர், ஆஸுராயணர், மார்கமர் {மார்த்தர்}, ஹிரண்யாக்ஷர், ஜங்காரி, பாப்ரவாயணி, ஸூதி {பூதி}, விபூதி, ஸூதர், ஸூரக்ருத்,(56) ஆராணி {அராலி}, நாசிகர், சாம்பேயர், உஜ்ஜயனர், நவதந்து, பகநகர், ஸேயனர், யதி,(57) அம்போருஹர் {அம்போருதர்}, அமத்யஸின் {சாருமத்ஸ்யர்}, சீரிஷின், கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேக்ஷின், பெரும் முனிவர் நாரதி(58) ஆகிய முனிவர்கள் அனைவரும் விஷ்வாமித்ரரின் மகன்களாகவும், பிரம்மஞானத்தை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.

ஓ! மன்னன் யுதிஷ்டிரா, ஓ! பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனே, உயர்ந்த தவமும், அர்ப்பணிப்பும் மிக்க விஷ்வாமித்ரர் (பரம்பரை வழியில்) ஒரு க்ஷத்திரியராக இருந்தாலும்,(59) ரிசீகரால் (சாருவில்) உயர்ந்த பிரம்ம சக்தி இடப்பட்டதால் ஒரு பிராமணரானார். சூரியன், சந்திரன், அக்னி தேவன் ஆகியோரின் சக்திகளைக் கொண்ட விஷ்வாமித்ரர் பிறந்த கதையை உனக்கு விளக்கமாகச் சொல்லிவிட்டேன்.(61) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உனக்கு வேறு எந்தக் காரியத்தில் ஐயம் இருந்தாலும், எனக்கு அறியச் செய்வாயாக, நான் அவற்றைப் போக்குவேன்” என்றார் {பீஷ்மர்}.(62)

இந்திரனும் கிளியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 05-கருணை மற்றும் பக்தியின் சிறப்புகளை விளக்குவதற்காக இந்திரனுக்கும், ஒரு கிளிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அற உண்மைகளை அறிந்தவரே, கருணையின் தகுதிகளையும் {சிறப்புகளையும்}, பக்திமான்களின் பண்புகளையும் {மேன்மைகளையும்} நான் கேட்க விரும்புகிறேன். ஓ! ஐயா, எனக்கு அவற்றை விளக்குவீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, வாசவன் {இந்திரன்} மற்றும் உயர்ந்த மனம் படைத்த சுகனின் {கிளியின்} கதை அடங்கிய இந்தப் பண்டைய புராணம் மேற்கோளாகக் குறிப்பிடப்படுகிறது.(2) காசி மன்னனின் ஆட்சிப்பகுதிகளில், ஒரு வேடன் நஞ்சு தோய்த்த கணைகளை எடுத்துக் கொண்டு, தன் கிராமத்திலிருந்து மான்களைத் தேடி வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(3) ஒரு பெருங்காட்டில் தேடுதல் வேட்டையில் இருந்தபோது, அருகில் இருக்கும் மான்களைக் கண்ட அவன், இறைச்சியை அடையும் விருப்பத்தில் அவற்றில் ஒன்றின் மீது தன் கணையை ஏவினான்.(4) மானின் அழிவுக்காக ஏவப்பட்ட, தடுக்கப்பட முடியாத கரங்களைக் கொண்ட அந்த வேடனின் கணையானது இலக்கு தவறி அந்தக் காட்டில் ஒரு பெரும் மரத்தைத் துளைத்தது.(5)

கடும் நஞ்சில் தோய்க்கப்பட்ட அந்தக் கணையால் பலமாகத் துளைக்கப்பட்ட அந்த மரம், இலைகளையும், கனிகளையும் உதிர்த்து உலர்ந்து போனது.(6) அந்த மரம் உலர்ந்து போனாலும், அதன் பொந்தில் தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து வந்த ஒரு கிளி, அந்தக் கானகத் தலைவன் {மரத்தின்} மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் கூட்டை விட்டு அகலாமல் இருந்தது.(7) நன்றியறிந்ததும், அறம்சார்ந்ததுமான அந்தக் கிளி, தானும் அம்மரத்துடன் சேர்ந்து அசைவில்லாமலும் {வெளியே செல்லாமலும்}, உணவில்லாமலும், அமைதியாகவும், துன்பத்துடனும் உலர்ந்து போனது.(8)

பாகனைக் வென்றவன் {இந்திரன்}, உயர் ஆன்மா கொண்டதும், பெரும் இதயம் படைத்ததுமான அந்தப் பறவை இவ்வாறு இன்பதுன்பங்களின் ஆதிக்கத்தில் இயல்புக்கு மீறிய உறுதியுடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(9) சக்ரனின் {இந்திரனின்} மனத்தில் இந்த எண்ணம் எழுந்தது, “இழிந்த விலங்கு பிறவிக்குச் சாத்தியமில்லாத மானுடத்தன்மை வாய்ந்த இந்தத் தாராள உணர்வு இப்பறவைக்கு எவ்வாறு வாய்த்தது?.(10) உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று அன்பையும், தாராள உணர்வையும் வெளிப்படுத்துவதைக் காண முடிவதால் தற்செயலான இக்காரியத்தில் ஆச்சரியமில்லைதான்” {என்று இந்திரன் நினைத்தான்}.(11)

சக்ரன் {இந்திரன்}, ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்றுப் பூமிக்கு வந்து அந்தப் பறவையிடம்,(12) “ஓ! சுகா, ஓ! பறவைகளில் சிறந்தவனே, தக்ஷனின் பேத்தி (சுகி), (உன்னைத் தன் வாரிசாகப் பெற்றதால்) அருளடைந்தவளானாள். இந்த உலர்ந்த மரத்தை விட்டு நீ என்ன காரணத்தினால் விலகவில்லை?” என்று கேட்டான்.(13)

இவ்வாறு கேட்கப்பட்ட சுகன், அவனுக்குத் தலைவணங்கி, “ஓ! தேவர்களின் தலைவா, என் கடுந்தவங்களின் தகுதியால் நான் உன்னை அடையாளம் கண்டேன். உனக்கு நல்வரவு” என்று மறுமொழி கூறினான்.(14)

ஆயிரங்கண் தேவன் {இந்திரன்}, “நன்று, நன்று” என்று சொல்லி ஆச்சரியமடைந்து தன் மனத்தினுள், “இவன் பெற்றிருக்கும் அறிவு எவ்வளவு ஆச்சரியகரமானது” என்று புகழ்ந்தான்.(15) அந்தக் கிளியானவன் உயர்ந்த நன்னடத்தையும், செயற்தகுதியும் கொண்டவன் என்பதை அறிந்தும், ’அம்மரத்தை விட்டு அவன் அகலாமல் இருக்கும் பற்றுக்கான காரணமென்ன?’ என்று விசாரித்து,(16) “இந்த மரம் உலர்ந்து விட்டது, இலைகளும், கனிகளுமற்றதாக இருக்கிறது, மேலும் பறவைகளின் புகலிடமாகும் தகுதி இதற்கில்லை. இன்னும் நீ ஏன் இதில் தொற்றிக் கொண்டிருக்கிறாய்? இந்தக் கானகம் பெரியதாகும்,(17) மேலும் இதய நிறைவுடன் நீ விரும்பித் தேர்ந்தெடுக்கும் வகையில் இலைகள் அடர்ந்த பொந்துகளைக் கொண்ட எண்ணற்ற அழகிய மரங்கள் இக்காட்டில் இருக்கின்றன.(18) ஓ! பொறுமைசாலியே, உன் ஞானத்தின் மூலம் பகுத்தறிந்து, இறந்ததும், பயனற்றதும், இலைகள் அனைத்தும் உதிர்ந்ததும், இனியும் எந்நன்மையும் கொடுக்க இயலாததுமான இந்தப் பழைய மரத்தைக் கைவிடுவாயாக” என்றான் {இந்திரன்}”.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறம் சார்ந்த சுகன் {கிளி}, சக்ரனின் {இந்திரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, ஆழமான பெருமூச்சுவிட்டபடியே, கவலையுடன்,(20) “ஓ! சச்சியின் கணவா {இந்திரா}, தேவர்களின் தலைவா, தேவர்களின் விதிகளுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். நீ கேட்ட கேள்வி தொடர்புடைய பொருளுக்கான காரணத்தைக் கேட்பாயாக.(21) இந்த மரத்திற்குள்தான் நான் பிறந்தேன், என் குணத்தின் நல்லியல்புகள் அனைத்தையும் நான் இங்கேயே அடைந்தேன். குஞ்சாக இருந்த போது, என் பகைவர்களின் தாக்குதலில் இருந்து இந்த மரத்தில்தான் நான் பாதுகாக்கப்பட்டேன்.(22) ஓ! பாவமற்றவனே, அன்புடையவனான நீ, என் வாழ்வொழுக்கக் கோட்பாட்டில் இருந்து என்னை ஏன் வழுவச் செய்கிறாய்? நான் கருணை நிறைந்தவனாகவும், அறநோக்கத்தில் அர்ப்பணிப்புள்ளவனாகவும் {பக்தியுடனும்}, ஒழுக்கத்தில் உறுதியானவனாகவும் இருக்கிறேன்.(23) நல்லோருக்கு மத்தியில் அன்பு மனப்பான்மையே பெரும் அறச்சோதனை, இதே கருணையும், {மனிதாபிமானம் சார்ந்த} இரக்கவுணர்வும்தான் அறவோருக்கான வற்றாத இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகும்.(24) அறத்தில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தேவர்கள் அனைவரும் உன்னிடமே கேட்கின்றனர், ஓ! தலைவா, இந்தக் காரணத்தினாலேயே அவர்கள் அனைவருக்கும் மேலாக அரசுபுரியும் நிலையில் நீ நிறுத்தப்பட்டிருக்கிறாய்.(25) ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, இம்மரத்தைக் கைவிடுமாறு எனக்கு நீ அறிவுரை கூறுவது உனக்குத் தகாது. நல்லது செய்ய இயன்ற போது, இஃது {இம்மரம்} என் வாழ்வை ஆதரித்தது. இப்போது என்னால் எவ்வாறு இதைக் கைவிட முடியும்?” என்று அவனிடம் {இந்திரனிடம்} மறுமொழி கூறினான்.(26)

பாகனைக் கொன்றவனான அந்த அறம்சார்ந்தவன் {இந்திரன்}, நற்பொருள் கொண்ட அந்தக் கிளியின் வார்த்தைகளில் நிறைவடைந்து, அவனிடம் {அந்தக் கிளியிடம்}, “இரக்கமும், கருணையும் கொண்ட உன் மனோநிலையில் நான் நிறைவடைந்திருக்கிறேன்.(27) என்னிடம் இருந்து ஒரு வரத்தைக் கேட்பாயாக” என்றான்.

கருணைநிறைந்த அந்தக் கிளியானவன், “இந்த மரம் மீண்டும் உயிர் பெறட்டும்” என்ற இந்த வரத்தையே அவனிடம் வேண்டினான்.(28) கிளியானவன், அம்மரத்திடம் கொண்ட பெரும்பற்றையும், அவனது உயர்ந்த பண்பையும் அறிந்து பெரும் நிறைவடைந்த இந்திரன், அம்மரத்தின் மீது விரைவில் அமுதத்தைத் தெளிக்கச் செய்தான்.(29) அப்போது அம்மரம் அந்தக் கிளியின் தவங்களின் மூலம் மீண்டும் நிறைந்து, மிக நேர்த்தியான மகத்தான நிலையை அடைந்தது,(30) ஓ! பெரும் மன்னா, அந்தக் கிளியானவனும் தன் வாழ்வின் நெருக்கத்தில் {முடிவில்}, அந்தக் கருணைச்செயலில் விளைந்த அறத்தின் மூலம் சக்ரனின் தோழமையை அடைந்தான்.(31) ஓ! மனிதர்களின் தலைவா, இவ்வாறு கிளியிடம் தோழமை கொண்ட மரத்தைப் போலவே மக்களும் பக்திமான்களின் சேர்க்கை மற்றும் தோழமையின் மூலம் தங்கள் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைவார்கள்” என்றார் {பீஷ்மர்}.(32)

முயற்சியின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 06-முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டுக்குமிடையில் எது சக்திமிக்கது என்பதை விளக்க பிரம்மனுக்கும் வசிஷ்டருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் கற்ற ஐயா, முயற்சி மற்றும் விதி ஆகியவற்றில் எது சக்திமிக்கது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, வசிஷ்டருக்கும், பிரம்மனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை கருத்தில் கொள்ளத்தக்க விளக்கமாக இருக்கிறது.(3) புகழத்தக்கவரான வசிஷ்டர் பழங்காலத்தில் பிரம்மனிடம், இப்பிறவியில் ஓர் உயிரினத்தால் அடையப்பட்ட கர்மம், அல்லது முற்பிறவிகளில் அடையப்பட்டவை (விதி என்றழைக்கப்படுவது) ஆகிய இரண்டில் அதன் வாழ்வை வடிவமைப்பதில் எது அதிகச் சக்தி கொண்டது என்று கேட்டார்.(3) அப்போது, ஓ! மன்னா, ஆதி தாமரையில் இருந்து உதித்த பெருந்தேவனான பிரம்மன், அறிவுக்குப் பொருத்தமான பொருள் நிறைந்த சீரிய சொற்களால் அவருக்குப் பதிலளித்தான்.(4)

பிரம்மன் {வசிஷ்டரிடம்}, “வித்தில்லாமல் எதுவும் இருப்புக்கு வருவதில்லை. வித்தில்லாமல் கனிகள் வளர்வதில்லை. வித்தில் இருந்து வேறு வித்துகள் முளைக்கின்றன. எனவே, கனிகள் வித்திலிருந்து உண்டாகின்றன என அறியப்படுகிறது[1].(5) உழவன் வயலில் விதைக்கும் நல்ல அல்லது தீய வித்துகளைப் போலவே அவன் நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களை} அறுவடை செய்கிறான்.(6) உழுதாலும் வித்துகள் விதைக்கப்படாத மண் கனியற்றுப் போவதைப் போலவே, தனிப்பட்ட முயற்சி இல்லாமல் விதியால் எந்தப் பயனையும் அளிக்க முடியாது.(7) ஒருவன் செய்யும் முயற்சி மண் போன்றது, விதியோ (அல்லது முற்பிறவி செயல்களின் தொகையோ) வித்தாக ஒப்பிடப்படுகிறது. மண்ணும் வித்தும் கலப்பதில் இருந்தே அறுவடை விளைகிறது.(8) செயலைச் செய்பவன் தான் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் கனிகளை அறுவடை செய்வதும்; நற்செயல்களில் இருந்து மகிழ்ச்சி விளைவதும் மற்றும் தீச்செயல்களில் இருந்து துன்பம் விளைவதும்; செய்யப்படும் செயல்கள் எப்போதும் கனிவதும் {பலன் தருவதும்}; செய்யப்படாத செயல்களில் கனிகள் உண்டாகாததும் {பயனில்லாமல் போவதும்} இவ்வுலகில் தினந்தோறும் காணப்படுகிறது.(9,10)நற்செயல்களைச் செய்யும் மனிதன் நற்பேற்றுடன் கூடிய தகுதிகளை {புண்ணியங்களை} ஈட்டுகிறான், அதே வேளையில், ஒரு சோம்பேறி தன் நிலையில் இருந்து வீழ்ந்து, புண்ணில் உப்புநீர் செலுத்தப்படுவது போன்ற தீமையை அறுவடை செய்கிறான்.(11) அர்ப்பணிப்புமிக்கச் செயல்பாட்டின் மூலம் ஒருவன் அழகு, நற்பேறு மற்றும் பல்வேறு வகை வளங்களை அடைகிறான். முயற்சியின் மூலம் அனைத்தையும் அடையலாம்; ஆனால் முயற்சியற்ற ஒரு மனிதனால் விதியால் மட்டுமே ஒன்றையும் அடைய முடியாது.(12) இவ்வாறே ஒருவன் சொர்க்கத்தையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, தனிப்பட்ட வகையில் செய்யும் நல்ல முயற்சியின் மூலம் தன் இதய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறான்.(13) ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்கள் அனைத்தும் , தேவர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும், சூரியன், சந்திரன், காற்று ஆகிய அனைத்தும், தங்கள் சொந்த செயல்பாடு என்ற உழைப்பின் மூலமே மனித நிலையில் இருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சியில் அந்த உயர்ந்த நிலைகளை அடைந்தனர்.(14) வளங்கள், நண்பர்கள், பரம்பரையாக வழிவழியாகத் தொடரும் செழிப்பு, வாழ்வின் சிறப்புகள் ஆகியற்றை முயற்சியற்றவர்கள் அடைவது மிகக் கடினமாகும்.(15)

பிராமணன் புனித வாழ்வின் மூலமும், க்ஷத்திரியன் ஆற்றலின் மூலமும், வைசியன் உடல் உழைப்பின் மூலமும், சூத்திரன் தொண்டின் மூலமும் செழிப்பை அடைகின்றனர்.(16) வளங்களும், இன்பத்திற்குரிய பிற பொருட்களும், கஞ்சனையோ, திறனற்றவனையோ, சோம்பேறியையோ ஒருபோதும் அடையாது. மேலும், சுறுசுறுப்போ, ஆண்மையோ, அறம்சார்ந்த தவமோ இல்லாத மனிதனால் இவற்றை ஒருபோதும் அடைய முடியாது.(17) தைத்தியர்கள் மற்றும் தேவர்கள் அனைவருடன் கூடிய மூவுலகங்களையும் படைத்தவனும், துதிக்கப்பட வேண்டியவனுமான விஷ்ணுவே கூட, ஆழக்கடலில் தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.(18) ஒருவனுடைய கர்மம் எக்கனியையும் தரவில்லையெனில், செயல்பாடுகள் அனைத்தும் கனியற்றுப் போகும்; மனிதர்களும் விதியை நம்பி சோம்பேறிகளாக இருப்பார்கள்.(19) மனித செயல்முறைகளைப் பின்பற்றாமல் விதியை மட்டுமே நம்பும் ஒருவன், திறனற்ற கணவனைக் கொண்ட ஒரு பெண்ணைப் போல வீணாவான்.(20)

இம்மையில் முயற்சியில்லாமல் மறுமையின் இன்ப துன்பங்களை ஒருவன் உணர்வதைப் போலச் சாதகமில்லாத விதியுடன் இவ்வுலகில் நன்மை தீமையை உணர்வது பெரிதல்ல[2].(21) சரியாக முயற்சிக்கப்படும் மனித சக்தியை விதி பின்தொடருமே அன்றி முயற்சியில்லாத இடத்தில் விதியால் மட்டுமே எந்த நன்மையையும் செய்துவிட முடியாது.(22) தேவலோகங்களில் தேவர்களின் நிலைகளே நிலையில்லாதவையாகக் காணப்படும்போது, சரியான கர்மமில்லாமல் தேவர்களால் தங்கள் நிலைகளையோ, பிறரின் நிலைகளையோ எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடியும்?[3](23) இவ்வுலகில் பிறரின் நற்செயல்களைத் தேவர்கள் எப்போதும் அங்கீகரிப்பதில்லை. (அந்த நற்செயல்களால்) தாங்கள் வீழ்வோம் என்று உணர்வதால், அவர்கள் பிறரின் செயல்களைத் தடை செய்கின்றனர்.(24) தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நிலையான பகை இருக்கிறது, அவர்கள் அனைவரும் தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டுமென்றாலும், அனைத்துக் கர்மங்களையும் விதியே தொடங்கி வைப்பதால், விதி என்ற ஏதும் இல்லை என்று ஒருபோதும் கூற முடியாது[4].(25)தொடக்கத்தில் இருந்தே மனித செயல்பாட்டின் மூலம் விதி உண்டாகிறதென்றால், கர்மம் எவ்வாறு உண்டாகிறது? இந்த வழிமுறைகளின் மூலம் தேவலோகங்களிலேயே பல அறங்கள் {நற்செயல்கள்} வளர்கின்றன என்பதே (இதற்கான பதிலாகும்).(26) ஒருவன் தானே தன் நண்பனாகவும், பகைவனாகவும், தன் நல்ல மற்றும் தீச்செயல்களின் சாட்சியாகவும் இருக்கிறான்.(27) நன்மையும் தீமையும் கர்மத்தின் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. நல்ல மற்றும் தீய செயல்கள் போதுமான விளைவுகளைத் தருவதில்லை.(28) அறமே தேவர்களின் புகலிடமாக இருக்கிறது, அறத்தின் மூலமே அனைத்தும் அடையப்படுகின்றன. நல்லொழுக்கம் மற்றும் அறத்தை அடைந்த மனிதனை விதி தடுப்பதில்லை[5].(29)பழங்காலத்தில் யயாதி, சொர்க்கத்தின் உயர்ந்த நிலையில் இருந்து பூமியில் விழுந்தாலும், அறம்சார்ந்த தன் பேரப்பிள்ளைகளின் {தௌஹித்ரர்களால் / மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளின்} நற்செயல்களால் மீண்டும் தேவலோகத்தை அடைந்தான்.(30) ஐலனின் வழித்தோன்றலாகக் கொண்டாடப்படும் அரச முனியான புரூரவஸ், பிராமணர்களின் பரிந்துரையால் சொர்க்கத்தை அடைந்தான்.(31) அஸ்வத்தாமன் மற்றும் ராமர் {பரசுராமர்} ஆகியோர் இருவரும் போர்வீரர்களாகவும், முனிவர்களின் மகன்களாவும் இருந்தாலும், இவ்வுலகில் அவர்கள் செய்த செயல்களின் காரணமாகச் சொர்க்கத்தை அடையத் தவறினர்.(32) கோசல மன்னன் சௌதாசன், அஸ்வமேதம் மற்றும் பிற வேள்விகளைச் செய்த மதிப்பை அடைந்தவனாக இருந்தாலும், ஒரு பெரும் முனிவரின் சாபத்தின் மூலம் மனிதர்களை உண்ணும் ராட்சச நிலையை அடைந்தான்.(33) வசுவானவன், இரண்டாவது வாசவனை {இந்திரனைப்} போல நூறு வேள்விகளைச் செய்திருந்தாலும், ஒரே ஒரு பொய் சொன்னதால் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டான்.(34) விரோசனன் மகனான பலி, அவனுடைய உறுதிமொழியின் மூலம் விஷ்ணுவின் ஆற்றலால் அறமெனும் கட்டுகளால் கட்டப்பட்டு, பூமிக்கு அடியில் அனுப்பப்பட்டான்.(35)

சக்ரனின் {இந்திரனின்} பாதச்சுவடுகளைப் பின்பற்றியவனான ஜனமேஜயன், ஒரு பிராமணப் பெண்ணைக் கொன்றதற்காகத் தேவர்களால் தடுக்கப்பட்டுக் கைவிடப்படவில்லையா?[6](36) அறியாமையினால் ஒரு பிராமணரைக் கொன்று, ஒரு குழந்தையையும் கொன்றதால் களங்கமடைந்திருந்த மறுபிறப்பாள முனிவர் வைசம்பாயனர் தேவர்களால் கைவிடப்படவில்லையா?[7](37) பழங்காலத்தில் அரச முனியான நிருகன் ஓணானாக மாற்றப்பட்டான். அவன் தனது பெரும் வேள்வியில் பசுக்களைக் கொடையளித்திருந்தாலும் அஃது அவனுக்குப் பயனளிக்கவில்லை[8].(38) அரசமுனியான துந்துமாரன், வேள்விகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே முதுமை அடைந்து, தன் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் துறந்து கிரிவ்ரஜத்தில் உறங்கிக் கிடந்தான்.(39) பாண்டவர்களும், திருதராஷ்டிரனுடைய பலமிக்க மகன்களால் இழந்த தங்கள் நாட்டை விதியின் பரிந்துரைமூலமல்லாமல் தங்கள் சொந்த வீரத்தின் மூலமே மீண்டும் அடைந்தனர்.(40)கடும் நோன்புகளைக் கொண்டவர்களும், கடுந்தவப்பயிற்சிகளுக்கு அடிமையானவர்களுமான முனிவர்கள், சாபம் கொடுப்பது இயல்புக்கு மீறிய எந்தச் சக்தியின் உதவியினாலா? தனிப்பட்ட தங்கள் செயல்களால் அடைந்த பலத்தைப் பயன்படுத்துவதாலா?(41) இவ்வுலகில் பெருங்கடினத்துடன் அடையப்படும் நன்மைகள் அனைத்தையும், தீயோர் அடைந்தாலும் விரைவில் அவற்றைத் தொலைத்துவிடுவார்கள். ஆன்ம அறியாமை மற்றும் பேராசையில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு விதி ஒருபோதும் உதவி செய்வதில்லை.(42) சிறு அளவிலான நெருப்பும், காற்று வீசப்பட்டால் வலிமையடைவதைப் போலவே விதியும் தனிப்பட்ட முயற்சியுடன் கூடும்போது, (திறனளவில்) பெரிதாக அதிகரிக்கிறது.(43) எண்ணெய் குறைவதால் விளக்கின் ஒளி மங்குவதைப் போலவே விதியின் ஆதிக்கமும் ஒருவனுடைய செயல்களால் தணிவடைகிறது.(44) பெருஞ்செல்வத்தையும், மகளிரையும், இவ்வுலகின் இன்பங்கள் அனைத்தையும் அடைந்தாலும், செயலில் விடாமுயற்சியில்லாதிருக்கும் மனிதனால் அவற்றை நீண்டு அனுபவிக்க முடியாது, ஆனால், விடாமுயற்சியுள்ள மனிதன், விதியால் காக்கப்பட்டு, பூமியில் புதைந்திருக்கும் வளங்களையும் கண்டடைபவனாக இருக்கிறான்.(45)

மானிட லோகத்தைவிடத் தேவலோகம் சிறந்ததாக இருப்பினும், (அறக்கொடைகள் மற்றும் வேள்விகளில்) பெரும் செலவு செய்யும் நல்ல மனிதன், அவனது நல்லொழுக்கத்திற்காகத் தேவர்களால் வேண்டப்படுகிறான், ஆனால் கஞ்சனின் வீடு செல்வத்தால் நிறைந்திருந்தாலும், இறந்தவனின் வீடாகவே தேவர்களால் காணப்படுகிறது[9].(46) முயற்சி செய்யாத மனிதன் இவ்வுலகில் ஒருபோதும் நிறைவடைவதுமில்லை, விதியும் தவறாகச் சென்ற மனிதனின் பாதையை மாற்றுவதுமில்லை. விதிக்கு உள்ளார்ந்த சக்தி ஏதும் கிடையாது. ஆசானைப் பின்தொடரும் சீடனைப் போலவே, விதியால் வழிநடத்தப்படும் ஒருவனுடைய செயல்பாடும், அவனது முயற்சியைப் பின்தொடர்ந்து வருகிறது. எங்கே ஒருவன் முயற்சி செய்கிறானோ அங்கே மட்டுமே விதி தன் கரத்தை {செயலைக்} காட்டுகிறது.(47) ஓ! முனிவர்களில் சிறந்தவனே {வசிஷ்டரே}, தனிப்பட்ட முயற்சியை, உண்மையான முக்கியத்துவத்துடன் எப்போதும் அறிந்திருக்கும் நான் அதன் தகுதிகள் அனைத்தையும் விளக்கிச் சொன்னேன்.(48) விதியின் ஆதிக்கத்தின் மூலமும், தனிப்பட்ட முறையில் முயற்சி செய்வதன் மூலமும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர். விதி மற்றும் முயற்சியின் ஒன்று சேர்ந்த துணை நன்மையைச் செய்கிறது” என்றான் {பிரம்மன்}[10].(49)

செயல்களும், கனிகளும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 07-நல்வினை மற்றும் தீவினைகளின் பயன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே, பெரியோர்களில் முதன்மையானவரே, நற்செயல்களின் கனிகள் என்னென்ன என்பது குறித்து நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என்னை விழிப்படைச் செய்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கேட்டதற்கு நான் பதில் சொல்கிறேன். ஓ! யுதிஷ்டிரா, முனிவர்களின் இரகசிய ஞானமான இதைக் கேட்பாயாக.(2) வெகு காலம் விரும்பியவையும், இறந்த பிறகு மனிதர்களால் அடையப்படுபவையுமான கதிகளை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக. எந்தெந்த உடல்களில் அல்லது இருப்பின் வடிவங்களில் உயிரினங்களால் செயல்கள் செய்யப்படுகின்றனவோ,(3) அவற்றின் கனிகள் {பலன்கள்} அதைச் செய்பவர்கள் அதே உடல்களைக் கொண்டிருக்கும்போதே அறுவடை செய்யப்படுகின்றன {அடையப்படுகின்றன}. உயிரினங்கள் எந்த நிலைகளில் நல்ல அல்லது தீய செயல்களைச் செய்கின்றனவோ, அடுத்தடுத்த பிறவிகளில் அதே நிலையில் இருக்கும்போது அவை அவற்றின் கனிகளை அறுவடை செய்கின்றன. ஐம்புலன்களின் உதவியால் செய்யப்படும் எந்தச் செயலும் தொலைந்து போவதில்லை {எந்த செயலுக்கும் பலனில்லாமல் போவதில்லை}.(4)

ஐம்புலன்களும், ஆறாவதாக அழிவில்லாத ஆன்மாவும் சாட்சிகளாக நீடிக்கின்றன. ஒருவன் தன் கண்களை (பிறரின் தொண்டில்) அர்ப்பணிக்க வேண்டும்;(5) அவன் தன் இதயத்தையும் (அதே காரியத்திற்கே) அர்ப்பணிக்க வேண்டும்; அவன் ஏற்புடைய {இனிமையான} சொற்களையே பேச வேண்டும்;(6) மேலும் அவன் (தன் விருந்தினரை) வழிபட்டுப் பின்பற்றவும் வேண்டும். இதுவே ஐங்கொடைகளுடன் கூடிய வேள்வி என்றழைக்கப்படுகிறது. முன்பின் தெரியாதவனும், நீண்ட பயணத்தால் களைப்படைந்தவனும், சோர்வடைந்தவனுமான ஒரு பயணிக்கு நல்ல உணவை அளிப்பவன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான்.(7) வேள்வித் தரைகளை மட்டுமே தங்கள் படுக்கையாகப் பயன்படுத்துபவர்கள், (அடுத்தடுத்த பிறவிகளில்) மாடமாளிகைகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளையும், கந்தலாடைகளையும் மட்டுமே உடுத்துபவர்களுக்கு நல்ல ஆடை மற்றும் ஆபரணங்கள் கிடைக்கின்றன.(8)

தவம் செய்து தன் ஆன்மாவை யோகத்தில் நிலைக்கச் செய்தவர்கள், (இம்மையில் தங்கள் துறவின் கனியாக) வாகனங்களையும், விலங்குகளையும் அடைகிறார்கள். வேள்வி நெருப்பின் அருகே படுக்கும் ஏகாதிபதி வீரத்தை அடைகிறான்.(9) சுவை மிக்கவை அனைத்தையும் அனுபவிக்காமல் துறப்பவன் செழிப்பை அடைகிறான், விலங்குணவைத் தவிர்ப்பவன், பிள்ளைகளையும், கால்நடைகளையும் {விலங்குகளையும்} அடைகிறான்.(10) தலைகீழாகத் தொங்கிக் கொண்டு, அல்லது நீரில் வாழ்ந்து, அல்லது தனிமையாக வாழ்ந்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் விரும்பப்படும் கதிகள் அனைத்தையும் அடைகிறான்.(11) ஒரு விருந்தினருக்கு உறைவிடமளித்து, கால் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து, உணவு, ஒளி மற்றும் படுக்கையும் அளிப்பவன், ஐங்கொடைகளுடன் கூடிய வேள்வி செய்ததன் தகுதிகளை {புண்ணியங்களை} அடைகிறான்.(12)

போர்க்களத்தில், போர்வீரனின் நிலையை {வீராஸனத்தை} அடைந்து, போர்வீரனின் படுக்கையில் {வீரசயனத்தில்}[1] தன்னைக் கிடத்திக் கொள்ளும் ஒருவன், விருப்பத்திற்குரிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் நித்திய உலகங்களை அடைகிறான்.(13) ஓ! மன்னா, ஈகையுடன் கொடையளிக்கும் மனிதன் வளங்களை அடைகிறான். பேசாநோன்பினால் {மௌனமிருப்பதனால்} அதிகாரம் செலுத்தும் தகைமையையும், தவப் பயிற்சியினால் வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும், பிரம்மச்சரியத்தினால் பெருகும் நீண்ட வாழ்நாளையும், பிறருக்குத் தீங்கிழையாமல் இருப்பதன் மூலம் அழகு, செழிப்பு மற்றும் நோயிலிருந்து விடுதலை {உடல்நலம்} ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(14) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்பவர்களுக்கு அரசுரிமை கிடைக்கிறது. மரங்களின் இலைகளை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், சொர்க்கவாசத்தை அடைகின்றனர்.(15) ஓ! மன்னா, உணவைத் தவிர்ப்பதன் மூலம் {உண்ணா நோன்பினால்} ஒரு மனிதன் இன்பத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது. மூலிகைகளை மட்டுமே தன் உணவாகச் சுருக்கிக் கொள்பவன், பசுக்களை அடைகிறான். புற்களை மட்டுமே உண்டு வாழ்பவன் தேவலோகங்களை அடைகிறான்.(16)ஒருவன் தன் மனைவியுடன் கலவியைத் தவிர்ப்பதன் மூலமும், பகலின் மூன்று வேளைகளில் தூய்மைச் சடங்குகளை {நீராடுதலைச்} செய்வதன் மூலமும், வாழ்வுக்காகக் காற்றைமட்டுமே உண்டு வாழ்வதன் மூலமும் ஒருவன் ஒரு வேள்வியின் தகுதியை அடைகிறான். வாய்மை பயில்வதன் மூலம் சொர்க்கமும், வேள்விகளின் மூலம் உன்னதப் பிறவிகளும் அடையப்படுகின்றன.(17) தூய ஒழுக்கத்தைக் கொண்டவனும், நீரை மட்டுமே உண்டு வாழ்பவனும், இடையறாமல் அக்னிஹோத்ரம் செய்பவனும், காயத்ரியை உரைப்பவனுமான பிராமணன் ஒரு நாட்டை அடைகிறான். உணவைத் தவிர்ப்பதன் மூலம் அல்லது அதை ஒழுங்குமுறை செய்வதன் மூலம் ஒருவன் சொர்க்க வாசத்தை அடைகிறான்.(18) ஓ! மன்னா, வேள்விகளில் ஈடுபடும்போது பரிந்துரைக்கப்படும் உணவுகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலமும், பனிரெண்டு வருடங்கள் புனிதப்பயணம் {யாத்திரை} செய்வதன் மூலமும் வீரர்களுக்காக ஒதுக்கப்படும் வசிப்பிடங்களைவிடச் சிறந்த இடத்தை ஒருவன் அடைகிறான்.(19) வேதங்கள் அனைத்தையும் படிப்பதன் மூலம் ஒருவன் உடனடியாகத் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான், எண்ணத்தால் அறம்பயில்வதன் மூலம் அவன் சொரக்கலோகத்தை அடைகிறான்[2].(20)ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயைக் கண்டடையும் கன்றைப் போலவே, மனிதனின் முற்பிறவி செயல்களும் (அவன் {வெவ்வேறு பிறவிகளில்} வெவ்வேறு வகையில் மாற்றமடையும்போதும்) அவனைப் பின்தொடர்கின்றன.(22) மரத்தின் மலர்களும், கனிகளும், புலப்படும் ஆதிக்கங்கள் எதன் மூலமும் தூண்டப்படாமல், பருவ காலத்தைத் தவறவிடாததைப் போலவே முற்பிறவியில் செய்த கர்மம், சரியான காலத்தின் தன் கனிகளைக் கொண்டு வருகிறது.(23) வயதானதும் மனிதனின் மயிரில் நரைகூடுகிறது; அவனது பற்கள் தளர்கின்றன; அவனது கண்களும், காதுகளும் செயல்பாட்டில் மங்குகின்றன; ஆனால் இன்பங்களில் அவனுக்குரிய ஆசை மட்டுமே தணிவடையாத ஒரே பொருளாக இருக்கிறது.(24) தந்தையை நிறைவு செய்யும் செயல்களால் பிரஜாபதி நிறைவடைகிறான், தாயை நிறைவு செய்யும் செயல்களால் பூமாதேவி நிறைவடைகிறாள், ஆசானை நிறைவு செய்யும் செயல்களால் பிரம்மனே துதிக்கப்படுகிறான். இம்மூவரை மதிப்பவர்களால் அறமே மதிக்கப்படுகிறது. இம்மூன்றையும் வெறுப்போரின் செயல்கள் அவர்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது” என்றார் {பீஷ்மர்}”.(25,26)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பீஷ்மரின் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குருகுல இளவரசர்கள் ஆச்சரியத்தால் நிறைந்து, மனமத்தில் நிறைவடைந்தவர்களான இன்புற்றார்கள்”.(27) {மேலும் பீஷ்மர் தொடர்ந்தார்},[3] “வெற்றி அடையும் விருப்பத்தில் பயன்படுத்தப்பட்ட மந்திரங்கள், அல்லது உரிய கொடைகள் அளிக்கப்படாமல் செய்யப்படும் சோம வேள்வி, அல்லது உரிய ஸ்லோகங்களைச் சொல்லாமல் நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் பயனளிக்காமல், தீய விளைவுகளுக்கு வழி வகுப்பதைப் போலவே, பாவமும், தீய விளைவுகளும் பொய்மையில் இருந்து உண்டாகின்றன.(28) ஓ! இளவரசே {ஜனமேஜயா}, நல்ல மற்றும் தீய செயல்களின் கனிகள் குறித்த இந்தக் கோட்பாட்டைப் பழங்கால முனிவர்கள் சொன்னபடியே நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறென்ன நீ கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(29)

பிராமணர்களின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 08-பிராமணர்களின் சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வழிபடத்தகுந்தவர் எவர்? வணங்கத்தகுந்தவர் எவர்? ஓ! பாரதரே, தலைவணங்கத்தகுந்தவர் எவர்? நீர் விரும்புபவர் எவர்? ஓ! இளவரசே {பீஷ்மரே}, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(1) நீர் துன்பத்தின் பீடிப்பில் மூழ்கும்போது உமது மனம் எதில் வசித்திருக்கும்? மனிதர்களின் உலகான இம்மையிலும், இதன்பின் வரும் மறுமையிலும் கிடைக்கும் நன்மை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிரம்மத்தையே உயர்ந்த செல்வமாகக் கொண்டவர்களும், தளராத ஊக்கத்துடன் கூடிய தங்கள் வேத கல்வியின் மூலம் உண்டாகும் தவங்களைச் செய்பவர்களுமான மறுபிறப்பாளர்களையே {பிராமணர்களையே} நான் விரும்புகிறேன்.(3) எவரின் குலத்தில் சிறுவர்களும், கிழவர்களும், தளராது ஊக்கத்துடன் தங்கள் மூதாதையரின் பணிச்சுமையைச் சோர்வின்றிச் சுமக்கிறார்களோ அவர்களுக்காக என் இதயம் ஏங்குகிறது {அவர்களை என் இதயம் விரும்புகிறது}.(4) அறிவின் பல்வேறு கிளைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்களும், தற்கட்டுப்பாடு, மென்மையான பேச்சு ஆகியவற்றைக் கொண்டவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களும், பிரம்ம அறிவு, அறவொழுக்கம் கொண்டவர்களுமான பிராமணர்கள்,(5) அன்னக்கூட்டங்களைப் போல மதிப்புமிக்கச் சபைகளில் உரையாற்றுகின்றனர்[1]. ஓ! யுதிஷ்டிரா, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் மங்கலமானைவையும், ஏற்புடையவையும் {இனிமையானவையும்}, சிறப்பானவையும், நன்றாக உச்சரிக்கப்படுபவையுமாக இருக்கின்றன. அவர்கள் ஏகாதிபதிகளின் சபைகளில் சொல்லும் உலகியல் சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த இரு மகிழ்ச்சிகளும் நிறைந்த வார்த்தைகள், அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களால் கவனமாகவும், மதிப்புடனும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன[2].(6,7)உண்மையில், ஞானத்தையும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களும், பிறரால் மதிக்கப்படுபவர்களுமான அவர்கள் மன்னர்களின் சபைகளில் சொல்லும் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் அவர்களுக்காக ஏங்குகிறது {அவர்களிடம் விருப்பம் கொள்கிறது}.(8) ஓ! ஏகாதிபதி, பிராமணர்களின் மனம் நிறைவதற்காக நன்கு சமைக்கப்பட்ட தூய உணவை நிறைவாக அர்ப்பணிப்புடன் கொடுப்பவர்களுக்கு என் இதயம் ஏங்குகிறது.(9) போர்க்களத்தில் போரிடுவது எளிது, ஆனால் செருக்கும், தற்பெருமையுமின்றிக் கொடையளிப்பது அவ்வாறானதல்ல.(10) ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகில் துணிச்சல்மிக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கணக்கிடுகையில் கொடைகளில் வீரனாக இருப்பவனே மேன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(11) ஓ! இனியவனே, நல்ல குலத்தில் பிறந்து, நன்னடத்தைக் கொண்டவனாகத் தவங்களிலும், கல்வியிலும் அர்ப்பணிப்புள்ளவனாக இருப்பதைவிட நான் ஓர் ஈனப் பிராமணனாக இருந்தாலும் என்னைப் பெரியவனாகக் கருதிக் கொள்வேன்.(12) ஓ! பாண்டுவின் மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வுலகில் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவன் வேறெவனும் இல்லையென்றாலும், பிராமணர்கள் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவர்களாவர்[3].(13)எனக்குப் பிராமணர்கள் உன்னைவிட அன்புக்குரியவர்கள் என்ற உண்மையால், என் தந்தையான சந்தனுவால் அடையப்பட்ட இன்பலோகங்கள் அனைத்திற்கும் செல்வேன் என நான் நம்புகிறேன்.(14) என் தந்தையோ, என் தந்தையின் தந்தையோ, குருதியால் என்னுடன் தொடர்புடைய வேறு எவருமோ பிராமணர்களைவிட எனக்கு அன்புக்குரியவர்கள் இல்லை.(15) (நான் வழிபாட்டுக்குத் தகுந்த பிராமணர்களைத் தேவர்களாக வழிபடுவதால்) என் பிராமண வழிபாட்டின் மூலம் நான் சிறிய அல்லது பெரிய பலன் எதையும் எதிர்பார்க்கவில்லை.(16) எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் பிராமணர்களுக்கு நான் செயல்பட்டிருக்கும் விளைவால் நான் இப்போது (இந்தக் கணைப்படுக்கையில் கிடந்தாலும்) எந்தத் துன்பத்தையும் உணரவில்லை.(17) பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாக மக்கள் என்னை அழைக்கிறார்கள். இவ்வகை அழைப்பு எப்போதும் என்னை உயர்வான நிறைவை அடையச் செய்கிறது. பிராமணர்களுக்கு நன்மை செய்வது என்பது புனிதச் செயல்கள் அனைத்திலும் புனிதமானதாகும்.(18) பிராமணர்களுக்குப் பின்னால் மதிப்புடன் நடந்து சென்ற எனக்கு அருள்நிறைந்த உலகங்கள் காத்திருப்பது எனக்குத் தெரிகிறது. ஓ! மகனே, காலத்திற்கும் எப்போதும் நீடித்திருக்கும் உலகங்களுக்கு நான் மிக விரைவில் செல்லப் போகிறேன்.(19)

ஓ! யுதிஷ்டிரா, பெண்களின் கடமைகள் அவர்களது கணவர்களின் {கடமைகளுக்குத்} தொடர்புடையதாகவும் அவற்றையே சார்ந்துமிருக்கின்றன. உண்மையில் ஒரு பெண்ணுக்குக் கணவனே தெய்வமாவான், அவள் அடைய விரும்பும் உயர்ந்த கதியும் அவனே ஆவான். மனைவிக்குக் கணவனைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் பிராமணர்கள் இருக்கிறார்கள்[4].(20) முழுமையாக நூறு வயதுடைய ஒரு க்ஷத்திரியனும், பத்து வயதேயுடைய ஒரு நல்ல பிராமணச் சிறுவனும் இருந்தால், பிராமணனே முதன்மையானவன் என்பதால் பின்னவன் {பிராமணச் சிறுவன்} தந்தையாகவும், முன்னவன் {க்ஷத்திரிய முதியவர்} மகனாகவும் கருதப்பட வேண்டும்.(21) {பழங்காலத்தில்} ஒரு பெண், தன் கணவன் இல்லாதபோது, அவனுடைய தம்பியையே தன் கணவனாகக் கொண்டதைப் போலவே பூமியும் பிராமணனை அடையாமல், க்ஷத்திரியனைத் தன் தலைவன் ஆக்கிக் கொண்டாள்.(22) பிராமணர்களை மகன்களைப் போலப் பாதுகாக்கவும், தந்தைமார் அல்லது ஆசான்களைப் போல வழிபடவும் வேண்டும். ஓ! குருக்களில் சிறந்தவனே, உண்மையில், வேள்வி அல்லது ஹோம நெருப்பின் முன்னால் மக்கள் மதிப்புடன் காத்திருப்பதைப் போலவே அவர்கள் {பிராமணர்கள்} முன்பும் காத்திருக்க வேண்டும்.(23) பிராமணர்கள் எளிமையானவர்களாகவும், அறம்சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் வாய்மைக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள். அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே அவர்கள் எப்போதும் ஈடுபடுவார்கள். இருப்பினும், அவர்கள் கோபமடையும்போது, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாகிறார்கள். இக்காரணங்களால் அவர்கள் மதிப்புடனும், பணிவுடனும் தொண்டாற்றப்பட்டு, எப்போதும் காத்திருக்கப்பட வேண்டும் {அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டும்}.(24)ஓ! யுதிஷ்டிரா, சக்தி {அதிகாரம்} மற்றும் தவங்கள் {சாந்தம்} ஆகிய இரண்டிற்கும் ஒருவன் எப்போதும் அஞ்ச வேண்டும். இவை இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும், அல்லது தொலைவில் வைக்கப்பட வேண்டும்.(25) இவை இரண்டின் விளைவுகளும் மிக விரைவானவை. எனினும், தவங்களுடன் கூடிய பிராமணர்கள் கோபப்பட்டால், தங்கள் கோபத்திற்குரிய பொருளை (அந்தப் பொருள் எவ்வளவு தான் சக்தியைக் கொண்டிருந்தாலும்) கொன்றுவிடலாம் என்பதால் {சக்தியைக் காட்டிலும்} தவங்களுக்கு மேன்மையுண்டு.(26) கோபத்தை வென்ற ஒரு பிராமணன் மீது பெரும் அளவிலான சக்தியும், தவங்களும் பயன்படுத்தப்பட்டாலும் அவை தணிவையே அடையும். சக்தி மற்றும் தவங்கள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் அழிவு இரண்டுக்கும் ஏற்படும், அதே வேளையில், தவங்களுக்கு எதிராக சக்தி பயன்படுத்தப்பட்டால், அதற்கு {சக்திக்கு} ஒன்றும் எஞ்சாத அழிவு ஏற்படும்; சக்திக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தவங்களை முழுமையாக அழிக்க முடியாது[5].(27) கையில் தடியுடன் மந்தையைப் பாதுகாக்கும் ஓர் இடையனைப் போலவே க்ஷத்திரியர்களும் வேதங்களையும், பிராமணர்களையும் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.(28) உண்மையில், ஒரு தந்தை தன் மகன்களைப் பாதுகாப்பதைப் போலவே ஒரு க்ஷத்திரியன் பிராமணர்களில் அறவோர் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். பிராமணர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கண்காணிக்கும் விதமாக அவனது கண்கள் எப்போதும் அவர்களது இல்லத்தின் மீது இருக்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(29)

நரியும், குரங்கும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 09-கொடையளிப்பதாக உறுதியளித்தும் அவற்றைக் கொடாமல் இருப்பவன் கதியை விளக்க நரி மற்றும் குரங்கின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் காந்தி கொண்டவரே, பிராமணர்களுக்குக் கொடுக்கிறேன் என்று உறுதியளித்த கொடைகளைப் புத்தி மயக்கத்தால் {லோபத்தினால்} கொடுக்காமலிருக்கும் மனிதர்கள் என்ன ஆகிறார்கள்?(1) ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, இவ்வகையில் உள்ள கடமைகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், உறுதியளித்த கொடையைக் கொடுக்காதிருக்கும் தீய ஈனர்களின் கதி என்னவாகிறது?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உறுதிமொழியளித்த கொடை சிறிதாகவோ, பெரிதாவோ இருந்தாலும், அதைக் கொடுக்காத மனிதன், சந்ததியை எதிர்பார்க்கும் அலியைப் போல (அனைத்துத் திசைகளிலும்) தனது நம்பிக்கைகள் கனியற்றுப் போவதைப் பார்க்கும் பேரிழிவை அடைகிறான்.(3) ஓ! பாரதா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அத்தகைய மனிதன் தான் பிறந்த நாள் முதல், தன் மரணம் வரை செய்த நற்செயல்கள் எதுவும்,(4) வேள்வி நெருப்பில் அவன் ஊற்றும் ஆகுதிகள் எதுவும், அவன் அளிக்கும் கொடைகள் எதுவும், அவன் செய்யும் தவங்கள் எதுவும் என அனைத்தும் கனியற்று {பலனற்றுப்} போகின்றன.(5) ஓ! பாரதர்களின் தலைவா, சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், நன்கு அமைக்கப்பட்ட தங்கள் புத்தியின் துணை கொண்டு இதையே தங்கள் கருத்தாக அறிவிக்கின்றனர்.(6) அத்தகைய மனிதன், கருப்பு நிறக் காதுடைய ஆயிரம் குதிரைகளைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் கருதுகின்றனர்.(7)

இது தொடர்பாக ஒரு நரிக்கும், ஒரு குரங்குக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! பகைவர்களைச் சுடுபவனே, அவை இரண்டும் மனிதர்களாக இருந்தபோது அணுக்கமான நண்பர்களாக இருந்தன. மரணத்திற்குப் பிறகு அவர்களில் ஒருவர் நரியாகவும், மற்றவர் குரங்காகவும் ஆகினர்.(9) சுடலைக்கு மத்தியில் ஒரு விலங்கின் சடலத்தை உண்ணும் நரியைக் கண்ட குரங்கு, முற்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது அது {நரி} தன் நண்பனாக இருந்ததை நினைவு கூர்ந்து அதனிடம்,(10) “உண்மையில், ஒரு விலங்கின் அழுகிய சடலத்தைப் போன்ற வெறுக்கத்தக்க இந்த உணவை இப்பிறவியில் உண்ணும் கடப்பாட்டை அடையும் அளவுக்கு முற்பிறவியில் நீ இழைத்த பயங்கரப் பாவம் என்ன?” என்று கேட்டது.(11)

இவ்வாறு கேட்கப்பட்ட நரியானது, குரங்கிடம், “ஒரு பிராமணருக்குக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு அக்கொடையை நான் அவருக்குக் கொடுக்காதிருந்தேன்.(12) ஓ! குரங்கே, இந்த இழிந்த இருப்பு நிலையில் நான் வீழ்ந்ததற்கு அந்தப் பாவமே காரணம். அந்தக் காரணத்திற்காகவே எனக்குப் பசியேற்படும்போது, இத்தகைய உணவை உண்ணும் கடப்பாட்டை நான் அடைந்தேன்” என்று மறுமொழி சொன்னது”.(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பிறகு அந்த நரியானது குரங்கிடம், “ஒரு குரங்காவதற்கு நீ இழைத்த பாவமென்ன?” என்று கேட்டது.(14)

அந்தக் குரங்கு {நரியிடம்}, “என்னுடைய முற்பிறவியில் பிராமணர்களுக்குச் சொந்தமான கனிகளை நான் அபகரித்து வந்தேன். அதனால் நான் குரங்கானேன். புத்தியும், கல்வியும் கொண்ட ஒருவரும் பிராமணர்களுக்குச் சொந்தமானதை ஒருபோதும் அபகரிக்கக்கூடாது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், ஒருவன் இதைத் தவிர்க்கும் அதே வேளையில் பிராமணர்களுடன் எந்தச் சச்சரவையும் தவிர்க்க வேண்டும். ஒருவன் அவர்களுக்கு உறுதியளித்த பிறகு அந்தக் கொடையை அவர்களுக்கு நிச்சயம் அவன் கொடுக்க வேண்டும்” என்றது”.(15)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, நான் என் ஆசானுடன் பிராமணர்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்தே இதை நான் கேட்டேன். இக்காரியத்தில் புராதனமான, புனிதமான அறிவுக்குள் அந்த அறம் சார்ந்த மனிதர் உரைத்துக் கொண்டிருக்கும்போது, இதை நான் கேட்டேன்.(16) ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, பிராமணர்களைக் குறித்துக் கிருஷ்ணர் {வியாசர்} உரையாடிக் கொண்டிருக்கும்போதும் இதை நான் கேட்டிருக்கிறேன்[1].(17) ஒரு பிராமணனின் உடைமை ஒருபோதும் அபகரிக்கப்படக்கூடாது. அவர்களை ஒருபோதும் தனிமையில் விடக்கூடாது. ஏழையாகவோ, கஞ்சனாகவோ, வயதில் இளையவராகவோ இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது.(18) பிராமணர்கள் இஃதை எனக்குக் கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுப்பதாக உறுதியளித்த கொடையை நிச்சயம் கொடுக்க வேண்டும். மேன்மையான ஒரு பிராமணர் தன் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடையக்கூடாது.(19) ஓ! மன்னா, ஒரு பிராமணனுக்குள் எழும் எதிர்பார்ப்பானது சுடர்மிக்க நெருப்பைப் போன்றது எனச் சொல்லப்படுகிறது[2].(20)எதிர்பார்ப்புகள் எழுந்த ஒரு பிராமணர், எந்த மனிதன் மீது தன் கண்களைச் செலுத்துவாரோ அவன், ஓ! ஏகாதிபதி, சுடர்மிக்க நெருப்பால் எரிய வல்ல வைக்கோல் குவியலைப் போலவே எரியத்தகுந்தவனாவான்[3].(21) ஓ! பாரதா, மன்னன் கொடுக்கும் (கௌரவங்கள் மற்றும் கொடைகளில்) ஒரு பிராமணன் நிறைவடைந்து அந்த மன்னனிடம் இனிமையும், அன்பும் நிறைந்த வார்த்தைகளை {ஆசிகளைச்} சொல்லி அவன் அந்த நாட்டிலேயே தொடர்ந்து வாழும்போது, உடலில் உள்ள பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு மருத்துவனைப் போல அவன் அந்த மன்னனின் பெரும் நன்மைக்கான ஊற்றுக்கண்ணாகிறான்.(22) அத்தகைய ஒரு பிரமாணன், அந்த மன்னனின் மகன்கள், பேரர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், பிற அதிகாரிகள் ஆகியோரும் விலங்குகள், நகரம் மற்றும் மாகாணங்கள் ஆகியவையும் நன்மையும், அமைதியும் அடையும்படி செய்கிறான்.(23) பூமியில் ஆயிரங்கதிர் சூரியனைப் போல ஒரு பிராமணனின் சக்தி அவ்வளவு பெரியதாகும்.(24)எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தனது அடுத்தப் பிறவியில் மதிப்புமிக்க அல்லது மகிழ்ச்சிமிக்க நிலையை அடைய விரும்பினால், அவன் ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதாக உறுதியளித்ததை நிச்சயம் கொடுக்க வேண்டும்.(25) ஒரு பிராமணனுக்குக் கொடைகளை அளிப்பதால் அவன் நிச்சயம் உயர்ந்த சொர்க்கத்தை அடைவான். உண்மையில், கொடையளிக்கும் ஈகையே ஒருவன் அடையும் உயர்ந்த காரியம் {கர்மம்} ஆகும்.(26) ஒரு பிராமணனுக்கு ஒருவன் அளிக்கும் கொடைகளால், தேவர்களும், பித்ருக்களும் ஆதரிக்கப்படுகிறார்கள். எனவே, ஞானம் கொண்ட ஒருவன், பிராமணர்களுக்கு எப்போதும் கொடைகளை அளிக்க வேண்டும்.(27) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அளிக்கத் தகுந்த பிராமணனே ஒருவனுடைய உயர்ந்த நோக்கம் எனச் சொல்லப்படுகிறான்[4]. எக்காலத்திலும் ஒரு பிராமணனை முறையாக வழிபடாமல் அவன் வரவேற்கப்படக்கூடாது. {எப்போதும் ஒரு பிராமணன் முறையாக வழிபடப்பட்டு வரவேற்கப்பட வேண்டும்}.” {என்றார் பீஷ்மர்}.(28)

சூத்திரனும், பிராமணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 10-சூத்திரனுக்கு அறிவுரை சொன்ன பிராமணரின் நிலையை எடுத்துக் காட்டி தாழ்ந்தோருக்கு அறிவுரை சொல்லக்கூடாது என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அரசமுனியே, பிறப்பால் தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதனுக்கு நட்பின் விருப்பத்தாலோ, இல்லாமலோ {அன்பினாலோ} அறிவுரை சொல்வதால் ஒருவன் களங்கம் {பாவம்} இழைத்தவன் ஆவானா இல்லையா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! பாட்டா, எனக்கு இது விரிவாகச் சொல்லப்படுவதைக் கேட்க விரும்புகிறேன். கடமையின் பாதை {அறம்} மிக நுட்பமானதாகும். அவ்வழியில் மனிதர்கள் தடுமாறுவதே அடிக்கடி காணப்படுகிறது” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இது தொடர்பாகப் பழங்காலத்தில் குறிப்பிட்ட முனிவர்களிடம் இருந்து நான் கேட்டவற்றை முறையாக நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) தாழ்ந்த அல்லது இழிந்த சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு அறிவுரை வழங்கக்கூடாது[1]. அத்தகையை மனிதனுக்கு அறிவுரையை வழங்கும் ஓராசான் பெரும்பாவத்தை இழைப்பதாகச் சொல்லப்படுகிறது.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! யுதிஷ்டிரா, ஓ! ஏகாதிபதி, துன்பத்தில் வீழ்ந்தவனும், தாழ்ந்த பிறவியைக் கொண்டவனுமான ஒரு மனிதனுக்கு அறிவுரை வழங்குவதன் தீய விளைவுகளைப் பழங்காலத்தில் நடந்த இந்நிகழ்வின் மூலம் நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(5)நான் சொல்லப்போகும் இந்நிகழ்வு, மங்கலமான இமயச் சாரத்தில் உள்ள குறிப்பிட்ட மறுபிறப்பாள தவசிகளின் ஆசிரமத்தில் நேர்ந்ததாகும். அங்கே, அந்த மலைகளின் இளவரசனுடைய சாரலில், பல்வேறு வகையான மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு புனிதமான ஆசிரமம் இருந்தது.(6) பல்வேறு வகைச் செடிகொடிகள் நிறைந்த அந்த இடம், விலங்குகள் மற்றும் பறவைகள் பலவற்றின் ஓய்விடமாகவும் இருந்தது. சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த அந்த இடமானது, ஒவ்வொரு பருவகாலத்தில் மலர்ந்திருக்கும் சோலைகளின் விளைவால் மிக இனிமை நிறைந்ததாக இருந்தது.(7) அங்கே பிரம்மச்சாரிகள் பலரும், காட்டு வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்} வாழ்வோர் பலரும் அங்கே இருந்தனர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், சக்தி மற்றும் பிரகாசத்தில் சூரியனையோ, நெருப்பையோ போன்றவர்களுமான பிராமணர்கள் பலரும் அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(8) பல்வேறு நோன்புகளையும், நியமங்களையும் கொண்டவர்களும், தீக்ஷை பெற்றவர்களும், எளிய உணவை உண்பவர்களும், தூய்மையான ஆன்மாவைக் கொண்டவர்களுமான பல்வேறு வகைத் தவசிகள் அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(9) பெரும் எண்ணிக்கையிலான வாலகில்யர்களும், சந்நியாச நோன்பை நோற்கும் பலரும் அங்கே எப்போதும் வசித்து வந்தனர். இவை அனைத்தின் விளைவால் அந்த ஆசிரமம், அங்கே வசிப்பவர்கள் சொல்லும் வேதங்கள் மற்றும் புனித மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(10)

ஒரு காலத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட ஒரு சூத்திரன் அந்த ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்திற்கு அவன் வந்ததும், தவசிகள் அனைவராலும் அவன் முறையாகக் கௌரவிக்கப்பட்டான்[2].(11) ஓ! பாரதா, பல்வேறு வர்க்கங்களை {வர்ணங்களைச்} சேர்ந்தவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், (தூய்மையிலும், சக்தியிலும்) தேவர்களுக்கு ஒப்பானவர்களும், பல்வேறு வகைத் தீக்ஷைகளைப் பெற்றவர்களுமான அந்தத் தவசிகளைக் கண்டு அந்தச் சூத்திரன் இதயத்தில் பெரும் நிறைவை அடைந்தான்.(12) அனைத்தையும் கண்ட அந்தச் சூத்திரன், தவப்பயிற்சிக்குத் தன்னை அர்ப்பணிக்கும் விருப்பத்தை {தன்னுள்} உணர்ந்தான். ஓ! பாரதா, அவன் குலபதியின் பாதங்களைத் தீண்டி[3],(13) “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமது அருளால் நான் அறக்கடமைகளைக் கற்க (பயிற்சி செய்ய) விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கவரே, அக்கடமைகளைக் குறித்துச் சொல்லி, (தொடக்கச் சடங்குகளைச் செய்வதன் மூலம்) துறவு வாழ்வுக்கு என்னை அறிமுகம் செய்வதே உமக்குத் தகும்.(14) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, சாதியால் சூத்திரனான நான், நிச்சயம் வர்ணத்தால் தாழ்ந்தவனே. நான் இங்கே உமக்குப் பணிவிடை செய்யவும், தொண்டாற்றவும் விரும்புகிறேன். உமது உறைவிடத்தை எளிமையாக நாடும் என்னிடம் நிறைவு கொள்வீராக” என்றான்.(15)குலபதி, “ஒரு சூத்திரன், துறவு வாழ்வுக்கான குறியீடுகளைப் பின்பற்றி இங்கே வாழ்வது சாத்தியமில்லை. நீ விரும்பினால், எங்களுக்குப் பணிவிடை செய்து கொண்டும், தொண்டாற்றிக் கொண்டும் இங்கேயே இருக்கலாம்.(16) அத்தகைய தொண்டின் மூலம் நீ உயர்ந்த இன்பலோகங்கள் பலவற்றை அடைவாய் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, அந்தத் தவசியால் இவ்வாறு சொல்லப்பட்டும், அந்தச் சூத்திரன் தன் மனத்தில் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கினான், “நான் இப்போது என்ன செய்வது? தகுதிக்கு {புண்ணியத்திற்கு} வழிவகுக்கும் அந்த அறக்கடமைகளில் நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன்.(18) எனினும், எனக்கான நன்மையை நானே செய்து கொள்ளத் தீர்மானிக்கிறேன்” {என்று நினைத்தான்}. அந்த ஆசிரமத்தில் இருந்து தொலைவான ஓர் இடத்தை அடைந்த அவன், மரத்தின் குச்சிகள் மற்றும் இலைகளால் ஒரு குடிசையை அமைத்தான்.(19) ஓ! பாரதர்களின் தலைவா, ஒரு வேள்வி மேடையையும் அமைத்து, தனது உறக்கத்திற்கான சிறு இடத்தையும் ஒதுக்கிக் கொண்ட அவன், தேவர்களுக்காகச் சில மேடைகளை அமைத்து, பேச்சைத் தவிர்த்து, கடும் நோன்புகள், நியமங்கள் மற்றும் தவங்களுக்கான ஒரு வாழ்வைப் பின்பற்றத் தொடங்கினான்.(20) அவன், ஒரு நாளைக்கு மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்யவும், (உணவு மற்றும் உறக்கத்தைப் பொறுத்தவரையில்) பிற நோன்புகளை நோற்கவும், தேவர்களுக்கான வேள்விகளைச் செய்யவும், வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றவும், இவ்வழியில் தேவர்களைத் துதித்து வழிபடவும் தொடங்கினான்.(21) உடல் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் தவித்து, கனிகள் மற்றும் கிழங்குகளைக் குறைவாகவே உண்டு, புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, தன் ஆசிரமத்திற்கு வந்த விருந்தாளிகள் அனைவரையும் வரவேற்று உபசரித்து, சுற்றிலும் அபரிமிதமாக வளர்ந்திருந்த கனிகளையும், கீரைகளையும் அவர்களுக்குக் கொடுத்தான். இவ்வழியில் அவன் தன் ஆசிரமத்திலேயே நெடுங்காலத்தைக் கழித்தான்.(22,23)

ஒரு நாள் ஒரு தவசி தம்மை அறிமுகம் செய்து கொள்ளும் நோக்கில் அந்தச் சூத்திரனின் ஆசிரமத்திற்கு வந்தார். சூத்திரன், முறையாக சடங்குகளுடன் அந்த முனிவரை வரவேற்று வழிபட்டு, அவரை உயர்வான நிறைவைக் கொள்ளச் செய்தான்.(24) பெரும் சக்தியும், அற ஆன்மாவும் கொண்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த முனிவர், தனக்கு விருந்தளிப்பவனிடம் ஏற்புடைய பல்வேறு காரியங்களைக் குறித்துப் பேசி, தாம் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்தையும் அவனுக்குச் சொன்னார்.(25) ஓ! பாரதர்களின் தலைவா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இவ்வழியில் அந்த முனிவர், அந்தச் சூத்திரனைக் காண எண்ணற்ற முறை அந்த ஆசிரமத்திற்கு வந்தார்.(26) ஓ! மன்னா, இந்தச் சந்தர்ப்பங்கள் ஒன்றில் சூத்திரன் அம்முனிவரிடம், “நான், பித்ருக்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன். இக்காரியத்தில் நீர் எனக்கு அன்பைக் காட்டுவீராக {கருணை கொள்வீராக}” என்று கேட்டான்.(27) ஓ! ஏகாதிபதி, “மிக்க நன்று” என அந்தப் பிராமணர் மறுமொழி கூறினார்.(28)

அப்போது அந்தச் சூத்திரன் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அந்த முனிவர் தமது காலைக் கழுவிக் கொள்ள நீரையும், குச {தர்ப்பைப்} புற்களையும், காட்டின் காய் கனிகளையும், ஒரு புனிதமான இருக்கையையும், விருஷி என்றழைக்கப்பட்ட இருக்கையையும் கொண்டு வந்தான்.(29) மேலும் அவன் தெற்கு நோக்கி நின்று கொண்டு அந்த விருஷியை மேற்கு நோக்கிப் போட்டான். இதைக் கண்டு, இது விதிக்கு எதிரானது என்பதை அறிந்த அந்த முனிவர் அந்தச் சூத்திரனிடம்,(30) “விருஷியின் தலையைக் கிழக்கு நோக்கித் திருப்புவாயாக, நீயும் உன்னைத் தூய்மை செய்து கொண்டு, வடக்கு நோக்கிய முகத்துடன் அமர்வாயாக” என்றார். அம்முனிவர் சொன்னது போலவே அந்தச் சூத்திரன் அனைத்தையும் செய்தான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அறம் நோற்பவனுமான அந்தச் சூத்திரன், தவங்களைக் கொண்ட அந்த முனிவரிடம் இருந்து, குசப் புற்களை {தர்ப்பைகளைப்} பரப்புவது முறை, அர்க்கியம் வைப்பது போன்ற முறைகள், ஆகுதிகளை ஊற்றும் காரியத்தில் செய்யப்பட வேண்டிய சடங்குகள், காணிக்கை அளிக்கப்பட வேண்டிய உணவு ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்து, விதிப்படி விதிக்கப்பட்டுள்ள சிராத்தம் குறித்த அனைத்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டான். பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்குகள் நிறைவடைந்ததும் சூத்திரன் அந்த முனிவரை அவரது வசிப்பிடத்திற்கே அனுப்பி வைத்தான்[4].(32,33)இத்தகைய தவங்கள் மற்றும் நோன்புகளைச் செய்து கொண்டே நீண்ட காலத்தைக் கழித்த அந்தச் சூத்திரத் தவசி அந்தச் சோலையிலேயே மரணத்தைச் சந்தித்தான். அந்தப் பயிற்சிகளால் அந்தச் சூத்திரன் ஈட்டிய தகுதியின் {புண்ணியத்தின்} விளைவாக மறுபிறவியில் பெரும் மன்னனின் குடும்பத்தில் பிறந்து,(34) காலத்தில் அவன் பெருங்காந்தியைக் கொண்டவனானான். அந்த மறுபிறப்பாள முனிவரும் காலம் வந்தபோது இயற்கைக்குத் தன் கடனைச் செலுத்தினார் {இறந்து போனார்}.(35) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவர் மறுபிறவியில் ஒரு புரோஹிதரின் குடும்பத்தில் பிறந்தார். தவத்தில் வாழ்வைக் கழித்த அந்தச் சூத்திரன், அன்பினால் அவனுக்குப் பித்ரு பூஜையில் செய்யப்படும் சடங்குகளைக் கற்பித்த அந்த மறுபிறப்பாள முனிவர் ஆகிய இருவரில் ஒருவர் அரச குடும்பக் கொழுந்தாகவும், மற்றொருவர் புரோகிதக் குடும்பத்தின் உறுப்பினராகவும் மறுபிறவி அடைந்தனர்.(36) இருவரும் வளரத் தொடங்கினர், இருவரும் வழக்கமான கல்விக் கிளைகளில் பெரும் ஞானத்தை அடைந்தனர்.

அந்தப் பிராமணர் வேதங்களையும், அதர்வணங்களையும் நன்கறிந்தவரானார்[5].(37) மேலும், மறுபிறவி அடைந்த அந்த முனிவர், அறச்சடங்குகள், நோன்புகள், கணியம் {சோதிடம்}, வானவியல் தொடர்பான வேதாங்க சூத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகள் அனைத்திலும் பெருந்திறனைப் பெற்றார். சாங்கியத் தத்துவத்திலும் அவர் பெரும் திளைப்பை அடையத் தொடங்கினார்.(38) அதே வேளையில், இளவரசனாக மறுபிறவியடைந்த அந்தச் சூத்திரன், தன் தந்தையான மன்னன் இறந்தபோது, அவனது இறுதிச் சடங்குகளைச் செய்து, ஈமக் காரியங்கள் அனைத்தையும் செய்வதன் மூலம் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்ட பிறகு, குடிமக்கள் அவனது தந்தை வழியில் வந்த அரியணையில் அவனைத் தங்கள் மன்னனாக நிறுவிக் கொண்டனர்.(39) அவன் மன்னனாக நிறுவப்பட்ட உடனேயே அவன், மறுபிறவி எடுத்திருந்த அந்த முனிவரைத் தன் புரோஹிதராக நியமித்தான். உண்மையில், அந்தப் பிராமணரைத் தன் புரோகிதராக்கிக் கொண்ட அந்த மன்னன் பெரும் மகிழ்ச்சியில் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்.(40)அவன் தன் நாட்டை நீதியுடன் ஆட்சி செய்து, தன் குடிமக்கள் அனைவரையும் பேணி வளர்த்துப் பாதுகாத்தான். எனினும், ஒவ்வொரு நாளும் தன் புரோகிதரிடம் ஆசி பெறும்போதும், அறச்சடங்குகள் அல்லது புனிதமான பிற சடங்குகளைச் செய்யும்போதும் அவரைக் காணும் மன்னன் புன்னகைக்கவோ, உரக்கச் சிரிக்கவோ செய்தான். ஓ! ஏகாதிபதி, இவ்வகையில் மறுபிறவியில் மன்னனான அந்தச் சூத்திரன், எண்ணற்ற சந்தர்ப்பங்களில் தன் புரோகிதரைக் கண்டு சிரித்தான்.(41,42) மன்னன் எப்போதும் சிரிப்பதைக் கவனித்த புரோகிதர், எப்போதெல்லாம் தமது கண்களை அவன் மேல் செலுத்தினாரோ அப்போதெல்லாம் கோபமடைந்தார்.(43) ஒரு தருணத்தில் அவர் யாருமற்ற ஓரிடத்தில் அம்மன்னனைச் சந்தித்தார். அவர் ஏற்புடைய உரையின் மூலம் மன்னனை நிறைவு கொள்ளச் செய்தார்.(44) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அக்கனத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் புரோகிதர் மன்னனிடம், “ஓ! பெரும் காந்தி கொண்டவனே, நீ எனக்கு ஒரு வரமளிக்க வேண்டுகிறேன்” என்றார்.(45)

மன்னன், “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நான் உமக்கு நூறு வரங்களை அளிக்கவும் தயாராக இருக்கிறேன் எனும்போது ஏன் ஒன்று மட்டுமே கேட்கிறீர்? நான் உம்மிடம் கொண்ட அன்புக்கும், மதிப்புக்கும் என்னால் உமக்குக் கொடுக்க முடியாதது எதுவுமில்லை” என்றான்.(46)

புரோஹிதர், “ஓ! மன்னா, நீ என்னிடம் நிறைவுகொண்டிருந்தால் ஒரே ஒரு வரத்தை மட்டுமே விரும்புகிறேன். பொய் சொல்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வதாக உறுதியளிப்பாயாக” என்றார்”.(47)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, புரோகிதரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மன்னன் அவரிடம், “அவ்வாறே ஆகட்டும். நீர் என்னிடம் கேட்பது நான் அறிந்ததாக இருந்தால் நிச்சயம் நான் உமக்கு உண்மையைச் சொல்வேன். மறுபுறம் அக்காரியத்தை நான் அறியவில்லையென்றால் நான் ஒன்றையும் சொல்லமாட்டேன்” என்றான்.(48)

புரோஹிதர், “ஒவ்வொரு நாளும் என் ஆசிகளைப் பெறும் தருணங்களிலும், உன் சார்பாக நான் அறச்சடங்குகளைச் செய்வதில் ஈடுபடும்போதும், ஹோமம் மற்றும் பிற தணிவுச் சடங்குகளைச் செய்யும் தருணங்களிலும் நீ ஏன் என்னைக் கண்டு சிரிக்கிறாய்?(49) அத்தருணங்கள் அனைத்திலும் நீ சிரிப்பதைக் கண்டு என் மனம் வெட்கத்தால் ஒடுங்குகிறது. ஓ! மன்னா, உண்மையான பதிலைச் சொல்ல வேண்டுமென நான் உன்னை உறுதியளிக்கச் செய்திருக்கிறேன். பொய் சொல்வது உனக்குத் தகாது.(50) உன் நடத்தைக்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்க வேண்டும். உன் சிரிப்புக் காரணமற்றதாக இருக்க முடியாது. அக்காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது. நீ எனக்கு உண்மையைச் சொல்வாயாக” என்றார்.(51)

மன்னன், “ஓ! மறுபிறப்பாளரே, நீர் இவ்வாறு கேட்ட பிறகு, நீர் கேட்கத்தகாததாக இருப்பினும் உமக்கு இக்காரியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நான் கட்டுப்பட்டிருக்கிறேன். நான் உமக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். ஓ! மறுபிறப்பாளரே, மிகக் கவனமாகக் கேட்பீராக.(52) ஓ!இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நமது முற்பிறவிகளில் (நமக்கு) என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக. அப்பிறவியை நான் நினைவில் கொண்டுள்ளேன். குவிந்த மனத்தோடு நான் சொல்வதைக் கேட்பீராக.(53) முற்பிறவியில் நான் கடுந்தவங்களில் ஈடுபடும் ஒரு சூத்திரனாக இருந்தேன். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நீரோ கடுந்தவங்களைக் கொண்ட ஒரு முனிவராக இருந்தீர்.(54) ஓ!  பாவமற்றவரே, ஓ! பிராமணரே, (ஒரு சந்தர்ப்பத்தில்) என் பித்ருக்களைக் கௌரவிக்க நான் செய்த சடங்குகளில், எனக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்ட நீர் குறிப்பிட்ட சில அறிவுரைகளைச் சொல்லி என்னை நிறைவு கொள்ளச் செய்தீர்.(55) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, விருஷி மற்றும் குச {தர்ப்பைப்} புற்களைப் பரப்பும் முறை, ஆகுதிகள், இறைச்சி மற்றும் பிற உணவுகளைக் காணிக்கை அளிப்பது குறித்த அறிவுரைகளை நீர் எனக்குச் சொன்னீர். இந்தக் குற்றத்தின் விளைவால் நீர் ஒரு புரோஹிதராகப் பிறந்தீர். ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நானோ மன்னாகப் பிறந்திருக்கிறேன். காலம் கொண்டு வரும் மாற்றங்களைக் காண்பீராக. (முற்பிறவியில்) நீ எனக்கு அறிவுரை கூறியதன் விளைவால் இக்கனியை அறுவடை செய்திருக்கிறீர் {இந்தப் பலனை அடைந்திருக்கிறீர்}.(57) ஓ! பிராமணரே, இக்காரணத்திற்காகவே நான் உம்மைப் பார்க்கும்போதெல்லாம் சிரிக்கிறேன். உம்மை அவமதிக்கும் விருப்பத்தில் நிச்சயம் நான் சிரிக்கவில்லை. நீர் என் ஆசானாவீர்.(58) இந்நிலை மாறுபாட்டில் நான் உண்மையில் வருத்தமடைகிறேன். இந்த நினைப்பில் என் இதயம் எரிகிறது. நமது முற்பிறவியை நினைவுகூர்ந்தே உம்மைக் காணும்போது நான் சிரிக்கிறேன்.(59) நீர் எனக்குக் கொடுத்த அறிவுரைகளின் மூலம் உமது கடுந்தவங்கள் அனைத்தும் அழிவடைந்தன. புரோஹிதரான உமது தற்போதைய அலுவலைத் துறந்து மீண்டும் மேன்மையான பிறவியை அடைய முயற்சிப்பீராக.(60) இப்பிறவியில் உள்ளதைவிட மறுபிறவியில் இழிந்த நிலையை அடையாமல் இருக்க முயற்சி செய்வீராக. ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, விரும்பிய அளவுக்குச் செல்வங்களை எடுத்துக் கொண்டு உமது ஆன்மாவைத் தூய்மையடையச் செய்வீராக” என்றான்”.(61)

பீஷ்மர் தொடர்ந்தார், “(புரோஹித அலுவலில் இருந்து) மன்னனால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட அந்தப் பிராமணர், தன் வகையைச் சேர்ந்தோருக்குச் செல்வம், நிலம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட பல கொடைகளை அளித்தார்.(62) அவர் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட கடும் தவங்களைச் செய்தார். அவர் புனித நீர்நிலைகள் பலவற்றுக்குச் சென்று அந்த இடங்களில் வைத்துப் பல கொடைகளை அளித்தார்.(63) மறுபிறப்பாள வகையினருக்குப் பசுக்களைக் கொடையளித்து ஆன்மத் தூய்மையை அடைந்து ஞானத்தை ஈட்டுவதில் வென்றார். அவர், முற்பிறவியில் தாம் வாழ்ந்த அதே ஆசிரமத்திற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தார்.(64) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இவை அனைத்தின் விளைவால் அந்தப் பிராமணர் உயர்ந்த வெற்றியை அடைவதில் வென்றார். அவர் அந்த ஆசிரமத்தில் வசித்த தவசிகள் அனைவரின் மதிப்பிற்குரிய பொருளாக இருந்தார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, இவ்வகையிலேயே அந்த மறுபிறப்பாள முனிவர் பெரும் துயரத்தை அடைந்தார். எனவே ஒரு பிராமணன் சூத்திரர்களுக்கு ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது.(66)

ஓ! மன்னா, ஒரு பிராமணன் தாழ்ந்த பிறவியைக் கொண்ட ஒரு மனிதனுக்கு அறிவுரை சொல்லி துயரத்தை அடைந்ததால் பிராமணன் (அத்தகைய தாழ்ந்த பிறவியைக் கொண்டோருக்கு) அறிவுரை சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.(67) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, ஒரு பிராமணன் தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒரு மனிதனிடமிருந்து அறிவுரை பெறவோ, அறிவுரை சொல்லவோ கூடாது.(68) பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினர் {வர்ணத்தார்} இருபிறப்பாளர்களாக {த்விஜர்களாகக்} கருதப்படுகிறார்கள். ஒரு பிராமணன் இவர்களுக்கு அறிவுரை சொல்வதால் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான்.(69) எனவே, தாழ்ந்த வகையைச் சார்ந்த மனிதர்களின் முன்பு நல்லோர் ஒருபோதும் எந்த அறிவுரையும் சொல்லக்கூடாது. அறத்தின் பாதை மிக நுட்பமானதும், தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாததும் ஆகும்.(70) இந்தக் காரணத்திற்காகவே தவசிகள் அமைதி நோன்பை நோற்று (மௌன விரதம் இருந்து), பேச்சில் ஈடுபடாமல் தீக்ஷையைக் கடந்து அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். சரியற்றது அல்லது வருத்தமளிக்கக்கூடியதைச் சொல்வதற்கு {சொற்குற்றத்துக்கு} அஞ்சியே தவசிகள் பேச்சை துறக்கிறார்கள்[6].(71)அறவோரும், அனைத்துச் சாதனைகளையும் செய்தோரும், உண்மை மற்றும் எளிய நடத்தை கொண்டோரும் கூடச் சரியாகப் பேசாத வார்த்தைகளின் விளைவால் பெருங்களங்கத்தை {பெரும்பாவத்தை} இழைத்ததாக அறியப்படுகிறார்கள்.(72) {அறியாமல்} யாருக்கும் எது குறித்தும் ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது. சொல்லப்பட்ட அறிவுரையின் காரணமாக, அறிவுரை பெற்றவன் பாவமேதும் செய்தால் அந்தப் பாவம் அறிவுரை சொன்ன பிராமணனையே சாரும்.(73) எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் மனிதன் எப்போதும் ஞானத்துடன் செயல்பட வேண்டும். பணப் பறிமாற்றத்திற்காகச் சொல்லப்படும் அறிவுரை உபதேசிப்பவனைக் களங்கமடையச் செய்யும் {பாவமீட்ட வைக்கும்}.(74) பிறரால் வேண்டப்படும் ஒருவன் தன் நினைவின் துணையுடன் தீர்மானத்தை அடைந்த பிறகு சரியானதை மட்டுமே சொல்ல வேண்டும்.(75) நான் இப்போது அறிவுரை குறித்த காரியங்கள் அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். அறிவுரை சொல்வதன் விளைவால் மனிதர்கள் எப்போதும் பெரும் துன்பத்தில் மூழ்குகிறார்கள். எனவே, ஒருவன் பிறருக்கு அறிவுரைகள் சொல்வதைத் தவிர்ப்பது அவசியமாகிறது” {என்றார் பீஷ்மர்}[7].(76)

திருமகள் வசிப்பிடம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 11-லட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் ருக்மிணிக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதர்களின் தலைவரே, எந்த வகை ஆண், அல்லது எந்த வகைப் பெண்ணில் செழிப்பின் தேவி {லட்சுமி} எப்போதும் வசிக்கிறாள்?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக உள்ளபடியே நடந்ததையும், நான் கேட்டதையும் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு காலத்தில் இளவரசி ருக்மிணி, தேவகி மகனின் {கிருஷ்ணனின்} முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(2) தன் கொடியில் மகரத்தைக் கொண்டவனான பிரத்யும்னனின் தாயானவள் {ருக்மிணி}, அழகில் சுடர்விடுபவளும், தாமரையின் நிறத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவியை {லட்சுமியைக்} கண்டு, ஆவலால் நிறைந்தவளாக இந்த வார்த்தைகளைச் சொன்னாள்:(3) “நீ யாரின் அருகில் இருக்கிறாய், யாருக்குத் தொண்டாற்றுகிறாய்? மேலும் நீ யாருக்குத் தொண்டாற்றுவதில்லை? ஓ! அனைத்துயிரினங்ளுடைய தலைவனின் அன்புக்குரியவளே, ஓ! தவத்திலும், பலத்திலும் ஒரு பெருமுனிவருக்கு இணையானவளே, இஃதை எனக்கு உண்மையில் சொல்வாயாக” என்று கேட்டாள்.(4) அந்த இளவரசியால் {ருக்மிணியால்} இவ்வாறு கேட்கப்பட்டவளும், சந்திரனைப் போன்ற அழகிய முகத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவி, அருளால் தூண்டப்பட்டு, இனிமையானவையும், அழகானவையுமான இந்த வார்த்தைகளைக் கருடனைத் தன் கொடியில் கொண்டவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து மறுமொழியாகக் கூறினாள்.(5)

ஸ்ரீ {லட்சுமி}, “ஓ! அருளப்பட்ட பெண்ணே {ருக்மிணி}, நாநலம், சுறுசுறுப்பு, காரியத்தில் கவனம் ஆகியவற்றைக் கொண்டவனும், கோபத்தில் இருந்து விடுபட்டவனும், தேவர்களை வழிபடுபவனும், நன்றியுணர்வுமிக்கவனும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த மனத்தைக் கொண்டவனுமாக இருப்பவனிடம் எப்போதும் வசிக்கிறேன்.(6) காரியத்தில் கவனமில்லாதவன், நம்பிக்கையில்லாதவன் {நாத்திகன்}, காமத்தின் விளைவால் இனக்கலப்பு செய்பவன், நன்றிமறந்தவன், தூய்மையற்ற நடைமுறைகளைக் கொண்டவன், கடுமையான மற்றும் கொடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவன், கள்வன், தன் ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் வன்மத்தை வளர்ப்பவன் ஆகியோரிடத்தில் ஒருபோதும் வசிப்பதில்லை.(7) சக்தி, பலம், வாழ்வு, கௌரவம் ஆகியவை குறைந்திருப்போர், அற்ப காரியம் ஒவ்வொன்றிற்கும் துயரமடைபவர்கள், எப்போதும் கோபமடைபவர்கள் ஆகியோரிடத்தில் நான் ஒருபோதும் வசிப்பதில்லை. மேலும், எண்ணத்தில் ஒன்றாகவும், செயலில் மற்றொன்றாகவும் இருப்போரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை.(8) தனக்காக எந்த உடைமையையும் ஒருபோதும் விரும்பாதவன், அல்லது முயற்சியின்றிக் கிட்டும் பொருளில் நிறைவடைந்து எஞ்சியவற்றில் குருடாயிருப்பவன், அல்லது சொற்ப உடைமைகளிலேயே நிறைவடைபவர்கள் ஆகியோரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை[1].(9) தங்கள் வகைக்கான {வர்ணத்திற்கான} கடமைகளைச் செய்வோர், அல்லது அறக்கடமைகளை அறிந்தோர், அல்லது, முதியோரின் தொண்டிற்குத் தங்களை அர்ப்பணித்தோர், தங்கள் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டோர், அல்லது தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோர், அல்லது மன்னிக்கும் தன்மை என்ற அறத்தை நோற்பவர்கள், அல்லது செயல்படுவதில் திறனும் ஊக்கமும் வாய்ந்தவர்கள், அல்லது மன்னிக்கும் தன்மை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட பெண்களிடம் நான் எப்போதும் வசிப்பேன்.(10)

வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தேவர்களை வழிபடுபவர்களுமான பெண்களிடமும் நான் வசிக்கிறேன். வீட்டு அறைகலன்கள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கவனிக்காதவர்கள், தங்கள் கணவர்களின் விருப்பங்களுக்கு முரணான வார்த்தைகளையே எப்போதும் சொல்பவர்கள் ஆகிய பெண்களிடம் நான் வசிப்பதில்லை.(11) வேறு மனிதர்களின் வீடுகளில் விருப்பமுள்ளவர்கள் மற்றும் பணிவில்லாதவர்களாக இருக்கும் பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். மறுபுறம், தங்கள் கணவர்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்போர், நன்னடத்தையால் அருளப்பட்டவர்கள், எப்போதும் ஆபரணங்களை அணிந்து கொள்பவர்கள், நல்ல ஆடைகளை உடுத்துபவர்கள் ஆகிய பெண்களிடம் எப்போதும் நான் வசிக்கிறேன்.(12) பேச்சில் வாய்மை நிறைந்தோர், அழகிய ஏற்புடைய குணங்களைக் கொண்டோர், அருளப்பட்டோர், அனைத்து சிறப்புகளையும் கொண்டோர் ஆகிய பெண்களில் எப்போதும் நான் வசிக்கிறேன். பாவம் நிறைந்தோர், தூய்மையற்றோர், கடைவாயை நாவால் நனைப்போர், பொறுமையோ, மனோவுறுதியோ இல்லாதோர், சண்டை சச்சரவுகளில் விருப்பமுள்ளோர்;(13) அதிகம் உறங்குவோர் மற்றும் எப்போதும் படுத்தே கிடப்பவர்கள் ஆகிய பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். வாகனங்கள், அவற்றை இழுக்கும் விலங்குகள், கன்னிப் பெண்கள், ஆபரணங்கள், நல்ல ஆபரணங்கள், வேள்விகள், மழை நிறைந்த மேகங்கள்,(14) முற்றாக மலர்ந்த தாமரைகள், கூதிர் கால ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் எப்போதும் நான் வசிக்கிறேன். யானைகள், மாட்டுக் கொட்டில், நல்ல இருக்கைகள், முற்றாக மலர்ந்த தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட தடாகங்கள் ஆகியவற்றில் நான் வசிக்கிறேன்.(15)

நாரைகளின் இனிய இசையைக் கொண்டவையும், பல்வேறு மர வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட கரைகளைக் கொண்டவையும், பிராமணர்கள், தவசிகள் மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறரால் அடையப்பட்டவையும், தங்கள் போக்கில் இனிமையான மென் சலசலப்பைக் கொண்டவையுமான ஆறுகளிலும் நான் வாழ்கிறேன்.(16) நீராடவும், தாகம் தணித்துக் கொள்வதற்காகவும் மூழ்கும் சிங்கங்கள் மற்றும் யானைகளால் சேறாகக் கலங்கி பெரும் அளவில் கரைபுரண்டோடும் நீருடன் கூடிய ஆழமான ஆறுகளிலும் நான் எப்போதும் வசிக்கிறேன். மதங்கொண்ட யானைகள், காளை மாடுகள், அரியணை ஆகியவற்றிலும், மன்னர்கள் மற்றும் நல்ல மனிதர்களிடத்திலும் நான் வசிக்கிறேன்.(17) எந்த வீட்டு மக்கள் வேள்வித் தீயில் ஆகுதிகளை ஊற்றி, பசுக்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்களை வணங்குகிறார்களோ அந்த வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன். தேவர்களின் வழிபாட்டில் சரியான நேரங்களில் மலர்களைக் காணிக்கையளிப்போர் உள்ள வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன்[2].(18)வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்கள், அறம் நோற்பதில் அர்ப்பணிப்புள்ள க்ஷத்திரியர்கள், உழவில் அர்ப்பணிப்புள்ள வைசியர்கள், மூன்று மேல் வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} (மேனியால் செய்யப்படும்) தொண்டில் அர்ப்பணிப்புள்ள சூத்திரர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(19) நான் நாராயணனில் உறுதிமிக்க மாற்றமில்லாத இதயத்துடன் கூடியவளாக உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிக்கிறேன். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு, ஏற்புடைய குணம், முற்று முழுதான அறம் ஆகியவை அவனிலேயே இருக்கின்றன.(20) ஓ! பெண்ணே {ருக்மிணி}, (நாராயணனைத் தவிர, நான் குறிப்பிட்ட எந்த இடத்திலும்) உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிப்பதில்லை என நான் சொல்ல முடியாதா? எந்த மனிதனிடம் நான் சக்தியாக வசிக்கிறேனோ, அவனிடம் அறமும், புகழும், ஆசைக்குரிய பொருட்களும், செல்வமும் தழைத்துப் பெருகும்” என்றாள் {ஸ்ரீ}” {என்றார் பீஷ்மர்}.(21)

பெண்ணாகவே நீடிக்க விரும்பிய பங்காஸ்வனன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 12-ஆண் பெண் கலவியில் யாருக்கு இன்பம் அதிகமென்பதைச் சொல்ல பங்காஸ்வனன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் புரியும் கலவிச் செயல்பாட்டில் அவ்விருவரில் அதிக இன்பத்தைப் பெறுபவர் எவர் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். அருள்கூர்ந்து இக்காரியத்தில் எனது ஐயத்தைப் போக்குவீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பங்காஸ்வனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை இக்கேள்வியை முன்வைக்கும் முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் பங்காஸ்வனன் என்ற பெயரில் ஒரு மன்னன் வாழ்ந்தான். அவன் பெரும் அறவோனாகவும், அரசமுனியாகவும் அறியப்பட்டிருந்தான். எனினும், ஓ! மனிதர்களின் தலைவா, அவன் பிள்ளையற்றவனாக இருந்ததால், ஒரு பிள்ளையைப் பெறும் விருப்பத்தில் ஒரு வேள்வியைச் செய்தான்.(3) அந்த வலிமைமிக்க ஏகாதிபதி செய்த அக்னிஸ்டுதம் என்ற அவ்வேள்வியில், நெருப்பின் தேவன் மட்டுமே துதிக்கப்படுவதன் விளைவால் இந்திரன் அஃதை {அவ்வேள்வியை} எப்போதும் விரும்பியதில்லை. எனினும் அது {அவ்வேள்வி}, பிள்ளை பெறும் நோக்கில் தங்கள் பாவங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக் கொள்ள முனையும் மனிதர்களால் விரும்பப்படும் வேள்வியாக இருந்தது[1].(4)உயர்வாக அருளப்பட்டவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன், அந்த ஏகாதிபதி {பங்காஸ்வனன்} அக்னிஷ்டுத வேள்வியைச் செய்ய விரும்புவதை அறிந்து, (அவனிடம் சில தவறுகளைக் கண்டால் தன்னை அவமதித்தவனை அவனால் தண்டிக்க முடியும் என்பதால்) நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட அந்த அரசமுனியிடம் {பங்காஸ்வனிடம்} அந்தக் கணம் முதல் தவறுகளைத் தேடத் தொடங்கினான்.(5) எனினும், ஓ! மன்னா, எப்போதும் இந்திரனின் கண்காணிப்பு இருந்தபோதிலும், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடம் அவனால் தவறுகளை எதையும் காண முடியவில்லை. சில காலம் கழித்து ஒரு நாள், அந்த மன்னன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(6) இந்திரன் தனக்குள்ளேயே, “உண்மையில் இஃது ஒரு வாய்ப்புதான்” எனச் சொல்லிக் கொண்டு அந்த ஏகாதிபதியை புத்திமயங்கச் செய்தான். தேவர்களின் தலைவனால் புலன்கள் திகைத்துக் குழப்பத்தில் இருந்த அம்மன்னன் தன் குதிரையில் தனியாகச் சென்று கொண்டிருந்தான்.(7) பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்ட அம்மன்னனால் திசைப்புள்ளிகளை உறுதி செய்து கொள்ள முடியாத வண்ணம் அவனது மயக்கம் பெரிதாக இருந்தது.(8) அப்போது அவன் தெளிந்த நீர் நிரம்பிய மிக அழகிய தடாகம் ஒன்றைக் கண்டான். தன் குதிரையில் இருந்து இறங்கிய அவன், தடாகத்திற்குள் மூழ்கித், தன் விலங்கையும் {குதிரையையும் நீர்} குடிக்கச் செய்தான்.(9) பிறகு, தாகம் தணிக்கப்பட்ட தன் குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, தன் தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காக அம்மன்னன் மீண்டும் தடாகத்திற்கு மூழ்கினான். அந்த நீரின் தன்மையால் அவன் பெண்ணாக மாறிவிட்டதைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான்.(10)இவ்வாறு தான் பாலின மாற்றம் அடைந்ததைக் கண்ட அம்மன்னன் வெட்கமடைந்தான் {அவமானமடைந்தான்}. புலன்களும், மனமும் முற்றிலும் கலங்கிய அவன் முழு இதயத்துடன் இவ்வகையில் நினைக்கத் தொடங்கினான்:(11) “ஐயோ, என் குதிரையை நான் எவ்வாறு செலுத்தப் போகிறேன்? என் தலைநகருக்கு எவ்வாறு திரும்பப் போகிறேன்? அக்னிஷ்டுத வேள்வி செய்ததன் விளைவால், பெரும் வலிமைமிக்கவர்களும், என் மடியில் பிறந்தவர்களுமான நூறு மகன்களைப் பெற்றிருக்கிறேன். ஐயோ, இவ்வாறு மாற்றமடைந்திருக்கும் நான் அவர்களிடம் என்ன சொல்லப் போகிறேன்? என் மனைவியர், உறவினர், நலன்விரும்பிகள், நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள என் குடிமக்கள் ஆகியோரிடம் நான் என்ன சொல்லப் போகிறேன்?(12,13) கடமை, அறம் மற்றும் பிற காரியங்களின் உண்மைகளை அறிந்த முனிவர்கள், அமைதியான குணம், மென்மை, பெருங்கலக்கமடையும் தன்மை {பிறருக்கு உட்படுதல், நகை, விளையாட்டு, தேக ஒளி} ஆகியவற்றைப் பெண்களின் குணங்கள் என்றும்,(14) செயல்பாடு {உடல் உழைப்பு}, கடுமை, சக்தி ஆகியவற்றை ஆண்களின் குணங்கள் என்றும் சொல்கிறார்கள். ஐயோ என் ஆண்தன்மை மறைந்துவிட்டதே. என்ன காரணத்திற்காக எனக்குப் பெண்தன்மை உண்டானது? இந்தப் பாலின மாறுபாட்டின் விளைவால், என் குதிரையில் நான் மீண்டும் எவ்வாறு ஏறப் போகிறேன்?” {என்று நினைத்தான்}.(15)

இந்தச் சோகமான எண்ணங்களுடன் கூடிய அந்த ஏகாதிபதி, பெண்ணாக மாறியிருந்தாலும், பெரும் முயற்சிக்குப் பிறகு தன் குதிரையில் ஏறி தலைநகரத்திற்குத் திரும்பினான்.(16) அவனது {மன்னன் பங்காஸ்வனது மகன்கள், மனைவியர், பணியாட்கள், நகரம் மற்றும் மாகாணங்களின் குடிமக்கள் ஆகியோர் இந்த இயல்புக்கு மீறிய மாறுபாட்டைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.(17) அப்போது நாநலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அந்த அரச முனி {பங்காஸ்வனன்}, அவர்கள் அனைவரிடமும், “ஒரு பெரும் படையின் துணையுடன் நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன். திசைப்புள்ளிகளின் அறிவனைத்தையும் இழந்த நான், விதியின் உந்துதலால் அடர்த்தியானதும், பயங்கரமானதுமான ஒரு காட்டுக்குள் நுழைந்தேன்.(18) அந்தப் பயங்கரக் காட்டில், தாகத்தால் பீடிக்கப்பட்ட நான் என் புலனுணர்வை இழந்தேன். அப்போது, நீர்க்கோழிகள் நிறைந்ததும், அனைத்து வர்ணனைகளுக்கும் தகுந்ததுமான ஓர் அழகி தடாகத்தைக் கண்டேன்.(19) தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காக அந்த ஓடைக்குள் மூழ்கிய நான் ஒரு பெண்ணாக மாறிவிட்டேன்” என்றான்.

பெண்ணாக மாறியிருந்த அந்த ஏகாதிபதி {பங்காஸ்வனன்}, பிறகு, தன் மனைவியர் மற்றும் அமைச்சர்களை அழைத்து,(20) தன் மகன்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னான்: “நீங்கள் இந்நாட்டை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். மகன்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன்” என்றான்.(21) அந்த ஏகாதிபதி தன் பிள்ளைகளிடம் இவ்வாறு சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றான்.

அங்கே வந்த அவள் {பெண்ணாக மாறியிருக்கும் அந்த ஏகாதிபதி} ஒரு தவசி வசித்து வந்த ஓர் ஆசிமத்தை அடைந்தாள்.(22) {பெண்ணாக} மாற்றமடைந்திருந்த அந்த ஏகாதிபதி {பங்காஸ்வன்}, அந்தத் தவசியின் மூலம் நூறு மகன்களைப் பெற்றாள். அந்தப் பிள்ளைகள் அனைவரையும் கூட்டிக் கொண்டு தன் முந்தைய பிள்ளைகளிடம் சென்ற அவள் அவர்களிடம் {பழைய பிள்ளைகளிடம்},(23) “நான் ஆணாக இருந்த போது என் மடியில் பிறந்த பிள்ளைகள் நீங்கள். மாற்றமடைந்திருக்கும் இந்நிலையில் என்னால் ஈன்றெடுக்கப்பட்ட பிள்ளைகள் இவர்கள். மகன்களே, ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்த சகோதரர்களைப் போலவே நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக என் நாட்டை அனுபவிப்பீராக” என்றாள்.(24)

தங்களைப் பெற்றவரின் இந்த ஆணையின் படி அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அந்த நாட்டை அனுபவிக்கத் தொடங்கினர். அந்த மன்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த சகோதரர்களைப் போல ஒற்றுமையாக நாட்டை அனுபவிப்பதைக் கண்டு,(25) கோபத்தில் நிறைந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, “இந்த அரசமுனியைப் பெண்ணாக மாற்றியதன் மூலம் நான் அவனுக்குத் தீங்கிழைப்பதற்குப் பதில் நன்மையையே செய்திருப்பதாகத் தெரிகிறது” என்று சிந்திக்கத் தொடங்கினான்.(26) நூறு வேள்விகளைச் செய்தவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன் இவ்வாறு சொல்லி ஒரு பிராமணனின் வடிவை ஏற்று, மன்னனின் தலைநகருக்குச் சென்று அந்தப் பிள்ளைகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவதில் வென்றான்.(27) அவன் அவர்களிடம், ” ஒரே தந்தைக்குப் பிறந்த பிள்ளைகளே கூடச் சகோதரர்களாக அமைதியாக ஒரு போதும் நீடித்ததில்லை. தவசி கசியபரின் மகன்களான தேவர்களும், அசுரர்களும் மூவுலகங்களின் அரசுரிமையினிமித்தம் ஒருவரோடொருவர் பிணக்கு கொண்டனர்.(28) இளவரசர்களான உங்களைப் பொறுத்தவரையில், நீங்களே அரச முனியான பங்காஸ்வனனின் பிள்ளைகள் ஆவீர். மற்றும் இவர்களோ ஒரு தவசியின் பிள்ளைகளாவர். தேவர்களும், அசுரர்களும் கூட ஒரே தந்தையின் பிள்ளைகள்தானே (இருப்பினும் அவர்களும் ஒருவருடனொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். எனவே, நீங்கள் சண்டயிடுவதற்கு வேறு என்ன காரணம் வேண்டும்}?(29) உங்கள் தந்தைவழியில் நீங்கள் அடைந்த இந்த நாடு ஒரு தவசியின் பிள்ளைகளால் அனுபவிக்கப்படுகிறது” என்றான்.

இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்குள் ஒரு பிளவை உண்டாக்குவதில் இந்திரன் வென்றதால், மிக விரைவில் அவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் கொன்றனர்.(30) ஒரு பெண் தவசியாக வாழ்ந்து வந்த மன்னன் பங்காஸ்வனன், இதைக் கேட்டுத் துயரத்தில் எரிந்து, அழுது புலம்பினான். தேவர்களின் தலைவனான இந்திரன், ஒரு பிராமணனின் வடிவை ஏற்று, அந்தப் பெண் தவசி வாழ்ந்து வந்த இடத்திற்குச் சென்று அவளைச் சந்தித்து,(31) “ஓ! அழகிய முகம் படைத்தவளே, எந்தத் துயரத்தின் எரிச்சலில் நீ இவ்வாறு அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

பிராமணனைக் கண்ட அந்தப் பெண், பரிதாபகரமான குரலில்,(32) “ஓ! மறுபிறப்பாளரே, என்னுடைய இருநூறு மகன்கள் காலத்தால் {காலனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர். ஓ! கல்விமானான பிராமணரே, முன்பு நான் ஒரு மன்னனாக இருந்தேன், அந்நிலையில் எனக்கு நூறு மகன்கள் இருந்தனர்.(33) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, என் சொந்த வடிவத்தில் அவர்கள் என்னால் பெறப்பட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நான் வேட்டைக்குச் சென்றேன். மயக்கத்துடன் கூடிய நான் ஓர் அடர்த்தியான காட்டில் திரிந்து கொண்டிருந்தேன்.(34) இறுதியாக ஒரு தடாகத்தைக் கண்டு அதற்குள் மூழ்கினேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, எழுந்த போது நான் பெண்ணாக மாறியிருப்பதைக் கண்டேன். என் தலைநகருக்குத் திரும்பி என் ஆட்சிப்பகுதிகளுக்கான அரசுரிமையின் என் மகன்களை நிறுவிவிட்டு நான் காட்டுக்குத் திரும்பினேன்.(35) பெண்ணாக மாறிய நான், என் கணவரான ஓர் உயர் ஆன்ம தவசியின் மூலம் நூறு மகன்களைப் பெற்றேன். அவர்கள் அனைவரும் அந்தத் தவசியின் ஆசிரமத்திலேயே பிறந்தனர். அவர்களைத் தலைநகரத்திற்கு அழைத்துச் சென்றேன்.(36) ஓ! இருபிறப்பாளரே, காலத்தின் ஆதிக்கத்தில் என் பிள்ளைகள் ஒருவரோடொருவர் சச்சரவில் ஈடுபட்டனர். இவ்வாறு காலத்தால் பீடிக்கப்பட்ட நான் துயரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.(37)

அப்போது இந்திரன் அவளிடம் {பங்காஸ்வனிடம்} கடும் வார்த்தைகளில், “ஓ! பெண்ணே, பழங்காலத்தில் இந்திரனுக்குப் பிடிக்காத ஒரு வேள்வியைச் செய்ததால் நீ எனக்குப் பெருந்துன்பத்தைத் தந்தாய்.(38) உண்மையில், நான் அப்போது இருந்தாலும், என்னை நீ மதித்து அழைக்கவில்லை. ஓ! தீய புத்தி கொண்டவளே, நானே அந்த இந்திரன். நீ யாரிடம் வேண்டுமென்றே பகையை நாடினாயோ அவன் நானே” என்றான்.(39)

இந்திரனைக் கண்ட அந்த அரசமுனி, அவனது பாதங்களில் வீழ்ந்து தன் தலையால் அவற்றைத் தீண்டி, “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, என்னிடம் நிறைவுகொள்வாயாக. நீ சொல்லும் வேள்வியானது வாரிசை விரும்பி செய்யப்பட்டது (செய்யப்பட்டதே அன்றி உனக்குத் தீங்கிழைக்கும் எந்த நோக்கத்திலும் செய்யப்படவில்லை).(40) எனவே, எனக்கு உன் மன்னிப்பை அருள்வதே உனக்குத் தகும்” என்றான்.

{பாலின} மாற்றமடைந்த அந்த ஏகாதிபதி தன்னிடம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடப்பதைக் கண்ட இந்திரன் அவனிடம் நிறைவை அடைந்து, அவனுக்கு ஒரு வரத்தைக் கொடுக்க விரும்பி,(41) “ஓ! மன்னா, பெண்ணாக மாறிய நிலையில் உன்னால் பெறப்பட்டவர்கள், ஆண் பாலினம் கொண்ட மனிதனின் நிலையில் இருந்து உன்னால் பெறப்பட்டவர்கள் ஆகிய உன் மகன்களில் நீ எவரை மீட்க விரும்புகிறாய்? {அவர்களில் எவர் பிழைக்க வேண்டும்?}” என்று கேட்டான்.(42)

அந்தப் பெண் தவசி தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு இந்திரனிடம், “ஓ! வாசவா, பெண்ணாக இருந்து என்னால் பெறப்பட்ட என் மகன்கள் மீண்டும் உயிர் பெறட்டும்” என்றாள்.(43)

இந்த மறுமொழியால் ஆச்சரியத்தால் நிறைந்த இந்திரன் மீண்டும் அந்தப் பெண்ணிடம், “மனிதரில் ஆண் பாலின வடிவில் இருந்த போது உன்னால் பெறப்பட்ட பிள்ளைகளிடம் ஏன் குறைவான அன்பைக் கொண்டிருக்கிறாய்?(44) {பெண்ணாக} மாற்றமடைந்த இந்த நிலையில் உன்னால் பெறப்பட்ட பிள்ளைகளிடம் ஏன் அதிக அன்பைக் கொண்டிருக்கிறாய்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றான்.(45)

அந்தப் பெண், “ஆண் கொள்ளும் பாசத்தைவிடப் பெண்கொள்ளும் பாசமே பெரிது. ஓ! சக்ரா, ஒரு பெண்ணாக என்னால் பெறப்பட்ட பிள்ளைகள் மீண்டும் உயிர் பெறுவதையே நான் விரும்புகிறேன்” என்றாள்”.(46)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டதும் பெரும் நிறைவடைந்த இந்திரன் அவளிடம், “ஓ! வாய்மை நிறைந்த பெண்ணே, உன் பிள்ளைகள் அனைவரும் உயிர் பெறட்டும்.(47) ஓ! மன்னர்களில் முதன்மையானவனாக இருந்தவளே, நீ மற்றுமொரு வரத்தையும் கொள்வாயாக. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே உண்மையில் நீ எந்த வரத்தை விரும்பினாலும் கேட்பாயாக. பெண், அல்லது ஆண் என நீ தேர்ந்தெடுக்கும் எந்நிலையையும் நீ என்னிடம் இருந்து பெறலாம்” என்றான்.(48)

அதற்கு அந்தப் பெண், “ஓ! சக்ரா, நான் பெண்ணாக நீடிக்கவே விரும்புகிறேன். உண்மையில், ஓ! வாசவா, நான் ஆண் தன்மையை மீண்டும் பெற விரும்பவில்லை” என்றாள்.

இந்தப் பதிலைக் கேட்ட இந்திரன், மீண்டும் அவளிடம்,(49) “ஓ! பலமிக்கவளே, ஆண்மை நிலையைக் கைவிட்டு ஏன் நீ பெண்மையை விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

ஏகாதிபதிகளில் முதன்மையானவனாக இருந்து பெண்ணாக மாறியிருப்பவள் இவ்வாறு கேட்கப்பட்டதும்,(50) “கலவிச் செயல்பாடுகளில் ஆண்களால் அனுபவிக்கப்படுவதை விடப் பெண்களால் அனுபவிக்கப்படும் இன்பமே பெரியது. ஓ! சக்ரா, இந்தக் காரணத்திற்காக நான் பெண்ணாகவே தொடர விரும்புகிறேன்.(51) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, பெண்ணாக இருக்கும் என்னுடைய தற்போதைய நிலையிலேயே நான் பெரும் இன்பத்தைப் பெற்றேன் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். இப்போது பெண்ணாக இருக்கும் இந்நிலையிலேயே நான் நிறைவாக இருக்கிறேன். ஓ! சொர்க்கத்தின் தலைவா, இப்போது நீ என்னைவிட்டுச் செல்லலாம்” என்றாள்[2].(52)அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்களின் தலைவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! ஏகாதிபதி, நீ கேட்டதன் அடிப்படையில் பார்த்தால், ஆண்களைவிடப் பெண்களே அதிக இன்பத்தைப் பெறுபவர்களாக அறியப்படுகிறார்கள்” {என்றார் பீஷ்மர்}.(53)

தீய பாதைகள் பத்து! – அநுசாஸனபர்வம் பகுதி – 13-வினைகளைப் புரிவோர், அவற்றின் நல்ல, தீய விளைவுகளை அனுபவிக்கவே வேண்டும் என்பது குறித்தும், தவிர்க்கப்பட வேண்டிய பத்து தீய பாதைகளைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இம்மை, மறுமை ஆகியவற்றை இன்பமாகக் கடந்து செல்ல ஒரு மனிதன் செய்ய வேண்டியது என்ன? உண்மையில் ஒருவன் தன் ஒழுக்கத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? இந்நோக்கில் ஒருவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உடலைக் கொண்டு செய்யப்படும் மூன்று செயல்களையும், பேச்சால் செய்யப்படும் நான்கையும் {நான்கு செயல்களையும்}, மனத்தால் செய்யப்படும் மூன்றையும், செயல்பாட்டின் இந்தப் பத்து பாதைகளையும் ஒருவன் தவிர்க்க வேண்டும்.(2) பிற உயிரினங்களின் உயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தல், களவு, அல்லது பிறருக்கு உரியவற்றை அபகரித்தல், அடுத்தவர் மனைவிகளை அனுபவித்தல் ஆகிய உடலால் செய்யப்படும் மூன்று {தீய} செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(3) தீய உரை, கடுஞ்சொற்கள், அடுத்தவரின் குறைகளை அறிக்கையிடல், பொய்மை ஆகிய வாக்கால் செய்யப்படும் நான்கு {தீய} செயல்களை ஒருபோதும் செய்யவோ, நினைக்கவோ கூடக் கூடாது.(4) பிறரின் உடைமைகளில் பேராசை கொள்வது, பிறருக்குத் தீங்கிழைப்பது, வேத விதிகளில் அவநம்பிக்கை ஆகிய மனத்தால் செய்யப்படும் மூன்று {தீய} செயல்களையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(5) எனவே ஒருவன் சொல், உடல் அல்லது மனத்தால் எந்தத் தீய செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது. நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்வதால் ஒருவன் அவற்றின் நியாயமான விளைவுகளை நிச்சயம் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ நேரும். இதைவிட அதிகம் வேறெதுவும் இல்லை” என்றார் {பீஷ்மர்}.(6)

ஜாம்பவதியும் கிருஷ்ணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14அ-பீஷ்மர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் வரம் கேட்ட ஜாம்பவதி; இமயம் சென்ற கிருஷ்ணன்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! கங்கையாற்றின் மைந்தரே, அண்டத்தின் தலைவனுடைய பெயர்கள் அனைத்தையும் நீர் கேட்டிருக்கிறீர். ஓ! பாட்டா, ஓ! பலமிக்கவரே, ஈசன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனின் பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக.(1) அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவருக்கும் சிறப்புமிக்க ஆசானும், சங்கரன் என்றழைக்கப்படுபவனும், புலப்படாத தோற்றத்தைக் கொண்டவனும், பப்ரு அல்லது பரந்தவன் {பெரியவன்} என்றும் அழைக்கப்படுபவனுடைய பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக. அந்த மஹாதேவனின் பலத்தையும் எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனின் குணங்களை உரைக்க நான் சக்தியுள்ளவன் அல்லன். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்தவனாய் இருந்தாலும் எங்கும் காணப்படாதவனாக அவன் இருக்கிறான்.(3) பிரம்மன், விஷ்ணு மற்றும் இந்திரனைப் படைத்தவனும் அவனே {ஈசனே}, அவர்களுடைய ஆசானும் அவனே. பிரம்மன் முதலான தேவர்கள் முதல் பிசாசங்கள் வரை அனைவராலும் துதிக்கப்பட்டு வழிபடப்படுபவன் அவனே.(4) பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் கடந்தவன் அவனே. யோகத்தை அறிந்தவர்களும், கேள்வி சம்பந்தப்பட்ட காரியங்களில் ஞானத்தைக் கொண்டவர்களுமான முனிவர்கள் சிந்திப்பதும், நினைப்பதும் அவனையே.(5) அழிவற்றவனான பரப்பிரம்மம் அவனே. இருப்பு மற்றும் இல்லாமை என்ற இரண்டாகவும் இருப்பவன் அவனே. பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் தன் சக்தியின் மூலம் கலங்கடித்து, அவற்றிலிருந்து உயிரினங்களின் அண்டத்தலைவனான பிரம்மனைப் படைத்தவன் அவனே.(6)

உயர்ந்த நுண்ணறிவுடன் கூடிய அந்தத் தேவ தேவனுடைய குணங்களைச் சொல்லத் தகுந்தவன் எவன்? மனிதன், (தாயின் கருவறையில்) கருவை அடைதல், பிறவி, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றுக்கு உட்பட்டவனாவான்.(7) அவ்வாறிருக்கையில் பவனைப் புரிந்து கொள்ள என்னைப் போன்ற மனிதனால் முடியுமா? ஓ! மகனே, சங்கு, சக்கரம் கதாயுதம் ஆகியவற்றைத் தாக்கும் நாராயணனால் மட்டுமே மஹாதேவனைப் புரிந்து கொள்ள முடியும்.(8) அவனே ஞானவான். அனைத்துப் பொருட்களின் குணங்களில் முதன்மையானவன் அவனே. அண்டத்தில் நீக்கமற நிறைந்திருப்பதால் விஷ்ணு அவனே. தடுக்கப்பட முடியாதவன் அவனே. ஆன்மப் பார்வையுடன் கூடிய உயர்ந்த சக்தியைக் கொண்டவன் அவனே. அனைத்துப் பொருட்களையும் யோகக் கண்களால் காண்பவன் அவனே.(9) ஓ! பாரதா, பதரி ஆசிரமத்தில் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சிறப்புமிக்க ருத்திரனை நிறைவு செய்ததன் விளைவால் இந்த உயரான்மக் கிருஷ்ணன் மொத்த அண்டத்தையும் {தன்னால்} நிறைப்பதில் வென்றான்.(10)

ஓ! மன்னர்களின் மன்னா, செல்வம் என்ற பெயரில் உள்ள பொருட்கள் அனைத்தையும் விட உலகளாவிய அளவில் ஏற்கப்படும் தன்மையை தெய்வீகப் பார்வை கொண்ட மஹேஸ்வரனின் மூலமே இந்த வாசுதேவன் அடைந்தான்[1].(11) இந்த மாதவன், முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கடுந்தவங்களைச் செய்து, சிறப்புமிக்கவனும், வரமளிப்பவனும், அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆசானுமான அந்தச் சிவனை நிறைவு செய்வதில் இறுதியாக வென்றான்.(12) ஒவ்வொரு யுகத்திலும் உயர் ஆன்மக் கிருஷ்ணனின் பெரும் அர்ப்பணிப்பால் மஹாதேவன் நிறைவடைகிறான்.(13) சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனான ஹரி, ஒரு மகனை அடைவதற்காகப் பதரி ஆசிரமத்தில் தவங்களைச் செய்த போது, அண்டத்தின் மூலக் காரணனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மஹாதேவனின் பலம் என்ன என்பதைத் தன் கண்களாலேயே கண்டான்[2].(14) ஓ! பாரதா, மஹாதேவனைவிட மேன்மையானவன் எவனையும் நான் காணவில்லை. மேலும் கேட்கும் விருப்பத்தை உண்டாக்காமல் அந்தத் தேவ தேவனின் பெயர்களை முழுமையாக விளக்கிச் சொல்ல கிருஷ்ணன் மட்டுமே தகுந்தவனாவான்.(15) யது குலத்தைச் சேர்ந்த இந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} மட்டுமே சிறப்புமிக்கச் சிவனின் குணங்களைச் சொல்லத் தகுந்தவனாவான். ஓ! மன்னா, உண்மையில், அந்தப் பரமதேவனின் பலத்தை முழுமையாகச் சொல்ல அவனால் மட்டுமே சொல்ல முடியும்” என்றார் {பீஷ்மர்}”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களின் பாட்டனான சிறப்புமிக்கப் பீஷ்மர் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, ஓ! ஏகாதிபதி, பவனின் பெருமையைச் சொல்லும் பின் வரும் வார்த்தைகளை வாசுதேவனிடம் சொன்னார்.(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசான் நீயே. சிறப்புமிக்கவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால் விஷ்ணு நீயே. யுதிஷ்டிரனால் என்னிடம் கேட்கப்பட்டவனும், அண்ட வடிவிலானவனுமான சிவன் தொடர்புடைய காரியங்களைக் குறித்துச் சொல்வதே உனக்குத் தகும்.(18) பழங்காலத்தில் பிரம்மனிடம் இருந்து உதித்த முனிவர் தண்டின் {தண்டி}, பிரம்ம லோகத்தில், பிரம்மனின் முன்னிலையில் வைத்து மஹாதேவனின் ஆயிரம் பெயர்களைச் சொன்னார்.(19) தவத்தைச் செல்வமாகக் கொண்டவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான இந்த முனிவர்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் தீவில் பிறந்த கிருஷ்ணரும்{வியாசரும்} கேட்கும் வகையில் இந்தச் சபையின் முன்னிலையில் அந்த ஆயிரம் பெயர்களையும் நீ சொல்வாயாக.(20) மாற்றமில்லாதவனும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக, மகிழ்ச்சியாக இருப்பவனும், ஹோத்ரியும், அண்டத்தின் பாதுகாவலனும், அண்டத்தின் படைப்பாளனும், முண்டின் {முடிகளற்றவன்} மற்றும் கபர்த்தின் {சடாமுடிதரித்தவன்} என்று அழைக்கப்படுபவனின் உயர்ந்த அருள்நிலையைக் குறித்துச் சொல்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(21)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பெரும்பாட்டனான பிரம்மனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருக்கும் பெரும் முனிவர்களும் கூட, மஹாதேவனின் செயற்போக்குகளையும், அவற்றின் விபரங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளத் தக்கவர்களல்லர்.(22) மக்களில் அறவோர் அனைவரும் அடையப்போகும் கதி அவனேயாவான். நுண்பார்வை கொண்ட ஆதித்யர்களே கூட அவனது வசிப்பிடத்தைக் காணத் தகுந்தவர்களல்லர். அவ்வாறிருக்கையில், சாதாரண ஒரு மனிதனால் எவ்வாறு அவனைப் புரிந்து கொள்ள முடியும்?(23) எனவே, வேள்விகள் மற்றும் நோன்புகள் அனைத்தின் தலைவனாகக் கருதப்படுபவனும், அசுரர்களைக் கொல்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனின் குணங்களில் சிலவற்றை மட்டுமே உண்மையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்” என்றான்”.(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க வாசுதேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, நீரைத் தீண்டி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் நுண்ணறிவையுடைய உயர் ஆன்ம மஹாதேவனின் குணங்களைக் குறித்துச் சொல்லத் தொடங்கினான்.(25)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பிராமணர்களில் முதன்மையானவர்களே, ஓ!ஐயா யுதிஷ்டிரரே, ஓ! ஆற்றின் மைந்தரே {பீஷ்மரே}, கபர்த்தினுக்கு {கபர்த்திக்கு [மஹாதேவனுக்கு]} உரிய பெயர்களைக் கேட்பீராக.(26) காணக்கிடைக்காத (அந்தப் பெருந்தேவனை) {எனது மகன்} சாம்பனுக்காகப் பழங்காலத்தில் கண்டேன். உண்மையில் அந்த நாட்களில் தியான யோகத்தின் விளைவால் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, என்னால் காணப்பட்டான்[3].(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், ருக்மிணியின் மகனுமான பிரத்யும்னன், பழங்காலத்தில் அசுரன் சம்பரனைக் கொன்ற காலத்திலிருந்து பனிரெண்டு வருடங்கள் கடந்ததும், என் மனைவியான ஜாம்பவதி என்னிடம் பேசினாள்.(28)உண்மையில் ஓ! யுதிஷ்டிரரே, ருக்மிணிக்கு பிறந்தவர்களான பிரத்யும்னன், சாருதேஷ்ணன் மற்றும் பிற மகன்களைக் கண்ட ஜாம்பவதி, தானும் ஒரு மகனைப் பெற விரும்பி என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்,(29) “ஓ! மங்கா மகிமை கொண்டவரே, வீரம், மிக ஏற்புடைய குணங்கள், பாவமற்ற ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனாகவும் உள்ள உம்மைப் போன்ற ஒரு மகனை எனக்கு அருள்வீராக. ஓ!, இந்த என் வேண்டுதலை எத்தாமதமுமின்றி அருள்வீராக.(30) மூவுலகங்களிலும் உம்மால் அடையப்பட முடியாது எதுவும் இல்லை. ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நீர் விரும்பினால் வேறு உலகங்களையே கூட உண்டாக்க முடியும். பனிரெண்டு வருட நோன்பை நோற்று, உம்மைத் தூய்மை செய்து கொண்டு, உயிரினங்கள் அனைத்தின் தலைவனை (மஹாதேவனைத்) துதித்து, ருக்மிணியின் மகன்களைப் பெற்றீர்.(31,32) சாருதேஷ்ணன், ஸுசாரூ, சாருவேசன், யசோதரன், சாருஸ்ரவன், சாருயசஸ், பிரத்யும்னன், சம்பு என்ற மகன்களை அவள் {ருக்மிணி} உம்மிடம் இருந்து பெற்றாள்.(33) ஓ! மதுசூதனா {மதுவெனும் அரக்கனைக் கொன்றவரே}, ருக்மிணி பெற்றிருக்கும் பேராற்றல் வாய்ந்த மகன்களைப் போல எனக்கும் ஒரு மகனை அருள்வீராக” என்று கேட்டாள்.(34)

அந்த இளவரசியால் இவ்வாறு கேட்கப்பட்டதும், நான் அந்தக் கொடியிடையாளிடம் {ஜாம்பவதியிடம்}, “ஓ! ராணி, (உன்னை விட்டுச் சிலகாலம் பிரிந்து செல்ல) உன் அனுமதி எனக்கு வேண்டும். நிச்சயம் நான் உனதாணைக்குக் கீழ்ப்படிவேன்” என்றேன்.(35)

அவள் என்னிடம், “செல்வீராக, வெற்றியும், செழிப்பும் எப்போதும் உமக்குத் துணை புரியட்டும். பிரம்மன், சிவன், கசியபர், ஆறுகள், மனத்தை ஆளும் தேவர்கள்,(36) மண், இலையுதிர் மூலிகைகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளைச் சுமப்பதாகக் கருதப்படும் சந்தங்கள் {த்ரேதாக்னிகள் மற்றும் வேதங்கள்}, முனிவர்கள், பூமி, பெருங்கடல்கள், வேள்விக் கொடைகள், சாமங்களின் {இசையில் உள்ள} ஏற்றத்தாழ்வுகளை நிறைவு செய்யச் சொல்லப்படும் அசைகள், ரிக்ஷங்கள் {நட்சத்திரங்கள்}, பித்ருக்கள்,(37) ஓ! யாதவரே, கோள்கள், தேவர்களின் மனைவிகள் {தேவிகள்}, தேவகன்னிகள், தேவர்களின் தாய்மார், பெரும் யுகங்கள் {மன்வந்தரங்கள்}[4], பசுக்கள், சந்திரமாஸ் {சந்திரன்}, சாவித்ரி {சூரியன்}, அக்னி {விஷ்ணு},(38) காயத்ரி, வேத அறிவு {பிரம்ம வித்தை}, பருவ காலங்கள் {ருதுக்கள்}, ஆண்டுகள், க்ஷணங்கள் {கணங்கள்}, லவங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள்,(39) என்ற அனைத்தாலும் பாதுகாக்கப்படுவீராக. நீரெங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பீராக. ஓ! பாவமற்றவரே உமது வழியில் உம்மை ஆபத்து அணுகாதிருக்கட்டும், விழிப்புணர்வின்மை உமதாக வேண்டாம் {ஜாக்ரதையாக இருப்பீராக}” என்று மறுமொழி கூறினாள்.(40)இவ்வாறு குரங்குகளின் இளவரசனுடைய மகளால் {ஜாம்பவதியால்} ஆசி கூறப்பட்ட {மங்களசாஸனம் செய்யப்பெற்ற} நான் நல்வாழ்த்து கூறி அவளிமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். மனிதர்களில் முதன்மையானவரான என் தந்தை {வசுதேவர்}, தாய் {தேவகி}, மன்னன் மற்றும் ஆஹுகர் ஆகியோரிடம்(41) சென்று வித்யாதரர்களின் இளவரசனுடைய மகள் {ஜாம்பவதி}[5] பெருந்துன்பத்துடன் என்னிடம் சொன்ன வார்த்தைகளைத் தெரிவித்தேன். கவலை நிறைந்த இதயத்துடன் அவர்களிமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு கதன் மற்றும் பெரும் வலிமை கொண்ட ராமர் {பலராமர்} ஆகியோரிடம் சென்றேன்.(42) அவர்கள் இருவரும் உற்சாகம் நிறைந்தவர்களாக, “எத்தடையுமின்றி உன் தவங்கள் பெருகட்டும்” என்று என்னிடம் சொன்னார்கள்.(43) அவர்கள் அனைவரிடமும் அனுமதிபெற்றுக் கொண்ட நான் கருடனை நினைத்தேன். உடனே என்னிடம் வந்த அவன் (என் ஆணையின் பேரில்) என்னை இமயத்துக்குச் சுமந்து சென்றான். இமயத்தை அடைந்ததும் நான் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினேன்.(44) அந்த முதன்மையான மலையில் நான் அற்புதக் காட்சிகள் பலவற்றைக் கண்டேன். தவம் பயில்வதற்கு ஏற்புடையதும், அற்புதமானதும், சிறந்ததுமான ஓர் ஆசிரமத்தைக் கண்டேன்.(45)

உபமன்யு! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஆ-இமயம் சென்ற கிருஷ்ணன்; உபமன்சுவின் ஆசிரமத்தை அடைந்தது; அந்த ஆசிரமம் இருந்த பகுதி குறித்த வர்ணனை; கிருஷ்ணனுக்கும் உபமன்யுவுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சிவனின் பெருமையைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு…

இனிமை நிறைந்த அந்த ஆசிரமம், வியாக்ரபாதரின் வழித்தோன்றலான உயர் ஆன்ம உபமன்யுவினுடையதாகும். தேவர்கள், கந்தர்வர்களால் மதித்து மெச்சபடும் அந்த ஆசிரமமானது வேத அழகில் மறைந்திருப்பதாகத் தெரிந்தது.(46) மலர்கள் மற்றும் கனிகளுடன் கூடியவையான தவங்கள், ககுபங்கள் {மருது}, கடம்பங்கள் {கடம்பு}, தென்னை, குருவாகங்கள் {மருதாணி}, கேதகங்கள் {தாழை}, நாவல், பாடலங்கள் {பாதிரி}, ஆல், வருணகங்கள் {வருணம்}, வத்ஸநாபங்கள், வில்வங்கள், ஸரளங்கள், கபிட்டங்கள் {விளா}, பியாளங்கள் {பரியாளம்}, சாலங்கள் {ஆச்சா}, பனைகள்,(47) பதரிகள் {இலந்தை}, இங்குடிகள் {குருக்கத்தி}, புன்னகங்கள் {புன்னை}, அசோகங்கள், ஆம்ரங்கள் {மா}, {பச்சிலை, இலுப்பை}, கோவிதாரங்கள், சண்பகங்கள், பலா மரங்கள்,(48) ஆகியவற்றாலும் இன்னும் பிற மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆசிரமம் வாழை மரங்களின் நேர்த் தண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(49) உண்மையில் அவ்வாசிரமம், பல்வேறு வகைப் பறவைகளுக்கு உணவாக அமையும் பல்வேறு வகைக் கனிகளையுடைய பல்வேறு வகை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் (வேள்வி நெருப்புகளின்) சாம்பற்குவியல்கள் {திருநீற்றுக் குவியல்கள்} உரிய இடங்களில் வீசப்பட்டிருந்தது அக்காட்சிக்கு மேலும் அழகூட்டியது.(50)

மேலும் அது புள்ளிமான்கள், குரங்குகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் பல்வேறு மான்வகைகள், மயில்கள், பூனைகள் மற்றும் பாம்புகளால் நிறைந்திருந்தது.(51) உண்மையில், பெரும் எண்ணிக்கையிலான வேறு விலங்குகளும், எருமைகளும், கரடிகளும் அங்கிருந்தன. தெய்வீக மங்கையரின் இனிய இசையைச் சுமந்தபடியே தொடர்ந்து இனிய தென்றல் அங்கே வீசிக்கொண்டிருந்தது.(52) ஓ! வீரரே, மலையருவிகள் மற்றும் ஊற்றுகளின் பிதற்றல்கள், சிறகு படைத்த இசைக்குழுவின் {பறவைகளின்} இனிய கூவல்கள், யானைகளில் பிளிறல்கள், கின்னரர்களின் இனிய இசை, சாமங்களைப் பாடும் தவசிகளின் மங்கலக் குரல், மற்றும் இனிமை நிறைந்த பல்வேறு இசைகளுடன் கூடிய அந்த ஆசிரமம் மிக அழகானதாக இருந்தது. நான் கண்ட அந்த இனிமை நிறைந்த ஆசிரமத்தைப் போன்று மற்றொன்றைக் கற்பனையிலும் காண முடியாது. அந்த ஆசிரமத்தில் புனித நெருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் எங்கும் மலர்ந்த கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த பெரிய வீடுகளும் {அக்னி ஹோத்ர சாலைகளும்} இருந்தன.(53,54) புனிதமான தெளிந்த நீரைக் கொண்ட கங்கை ஆற்றினால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அந்த ஜானுவின் மகள் {கங்கை} எப்போதும் அங்கே இருந்தாள்.[6] அறவோர் அனைவரில் முதன்மையானவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், சக்தியில் நெருப்புக்கு ஒப்பானவர்களுமான பல தவசிகளாலும் அது நிறைந்திருந்தது.(55)அந்தத் தவசிகளில் சிலர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் ஜபம் அல்லது புனித மந்திரங்களை அமைதியாகப் பாராயணம் செய்வதில் ஈடுபட்டனர். சிலர் கருணை மற்றும் வேறு சில அறங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தியான யோகத்தின் தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யோகியராக இருந்தனர். அவர்களில் சிலர் புகையை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், வேறு சிலர் நெருப்பையும், வேறு சிலர் பாலையும் உண்டு வாழ்ந்தனர். இவ்வாறே அந்த ஆசிரமம் மறுபிறப்பாளர்களில் முதன்மையான பலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(56) அங்கே இருந்த சிலர், கைகளைப் பயன்படுத்துவதைத் துறந்து பசுவைப் போல உண்ணவும், குடிக்கவும் செய்யும் நோன்பை நோற்றுவந்தனர். சிலர் தானியங்களை நசுக்க இரு கற்துண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர், மேலும் சிலர் அக்காரியத்திற்காகத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்தினர். சிலர் சந்திரனின் கதிர்களைப் பருகுவதன் மூலமும், நுரையை மட்டுமே பருகியும் வாழ்ந்து வந்தனர். வேறு சிலர் மானைப் போல வாழும் நோன்பைக் கைக்கொண்டிருந்தனர்[7].(57) சிலர் அரசம்பழங்களை உண்டு வாழ்கின்றனர், சிலர் நீரிலேயே கிடக்கின்றனர். சிலர் கந்தைகளை உடுத்திக் கொள்கின்றனர், சில மான்தோல்களையும், சிலர் மரவுரிகளையும் உடுத்துகின்றனர்.(58) உண்மையில், முதன்மையான வகையைச் சார்ந்த பல்வேறு தவசிகள் இவற்றையும், இன்னும் வலிநிறைந்த பிற நோன்புகளை நோற்பதையும் கண்டேன். பிறகு நான் அந்த ஆசிரமத்திற்குள் நுழைய விரும்பினேன்.(59) உண்மையில் அந்த ஆசிரமம், தேவர்கள், உயர் ஆன்மாக்கள், சிவன், அறச் செயல்களைச் செய்யும் அனைத்து உயிரினங்களாலும் மதித்துத் துதிக்கப்பட்டது. இவ்வாறு சொல்லப்படும் அஃது ஆகாயத்திலுள்ள சந்திர வட்டிலைப் போலவே இமயச் சாரலில் மிக அழகானதாக இருந்தது.(60)சுடர்மிகு தவங்களைச் செய்த உயர் ஆன்ம தவசிகளுடைய அருகாமையின் விளைவாக அங்கே கீரிப்பிள்ளை பாம்புடனும், புலியானது மானுடனும் தங்கள் இயல்பான பகைமையை மறந்து விளையாடிக் கொண்டிருந்தன.(61) அனைத்து உயிரினங்களும் திளைத்திருக்கும் அந்த முதன்மையான ஆசிரமத்தில் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் முழுமையாக நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலரும்,(62) கடினமான நோன்புகளை நோற்பதற்காகக் கொண்டாடப்படும் உயர் ஆன்ம முனிவர்கள் பலரும் வசித்திருப்பதை நான் கண்டேன். அந்த ஆசிரமத்தில் நான் நுழைந்தபோது, தலையில் சடாமுடி தரித்தவரும், மரவுரி உடுத்தியவரும்,(63) தவங்கள் மற்றும் சக்தியால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், சீடர்களால் பணிவிடை செய்யப்படுபவரும், வயதில் இளமையானவருமான ஒரு முதன்மையான பிராமணரைக் கண்டேன்.(64)

அவரது பெயர் உபமன்யு ஆகும். தலைவணங்கி நின்ற என்னிடம் அவர் {உபமன்யு}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷா}, உனக்குநல்வரவு. இன்று நீ இங்கு வந்திருப்பதால் எங்கள் தவங்களைக் கனிவதை நாங்கள் காண்கிறோம். துதிக்கத்தக்கவனாக இருப்பினும் எங்களை நீ துதிக்கிறாய். காணத்தகுந்தவனாக இருப்பினும் நீ எங்களைக் காண விரும்புகிறாய்” என்றார்.(65) நான் என் கரங்களைக் கூப்பி அவரது ஆசிரமத்தில் வசிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் நலத்தையும், அவருடைய சீடர்களின் ஆன்ம முன்னேற்றத்தையும் குறித்து விசாரித்தேன்.(66)

சிறப்புமிக்கவரான அந்த உபமன்யு, அப்போது மிக இனிமையான வார்த்தைகளை எனக்குச் சொன்னார் “ஓ! கிருஷ்ணா, உன்னைப் போன்றே ஒரு மகனை நீ நிச்சயம் அடைவாய்.(67) கடுந்தவங்களைப் பயின்று உயிரினங்கள் அனைத்தின் தலைவனான ஈசானனை நீ நிறைவடையச் செய்வாயாக. அதோக்ஷஜன் {எப்போதும் கீழே வீழாதவன்} என்றும் அழைக்கப்படும் அந்தத் தெய்வீக ஆசான், தன் அருகே இருக்கும் தன் மனைவியுடன் சேர்ந்து இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான்.(68) ஓ! ஜனார்த்தனா, பழங்காலத்தில் இங்கேதான் முனிவர்கள் அனைவருடன் கூடிய தேவர்கள், தங்கள் தவங்கள், பிரம்மச்சரியம், வாய்மை மற்றும் தற்கட்டுப்பாட்டின் மூலம் தேவர்களில் முதன்மையானவனை நிறைவடையச் செய்து உயர்ந்த விருப்பங்கள் பலவும் கனியும் தன்மையை அடைவதில் வென்றனர். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சக்திகள் மற்றும் தவங்கள் அனைத்தின் பரந்த கொள்ளிடமாக இருக்கிறான்.(69,70) ஓ! எதிரிகளை அழிப்பவனே, நீ யாரைத் தேடுகிறாயோ அந்தச் சிந்தனைக்கெட்டாத தேவன், நன்மை மற்றும் தீமை நிறைந்த அனைத்துப் பொருட்களையும் மீண்டும் தன்னுள் ஈர்த்து இருப்புக்கு வந்து தன் மனைவியுடன் இங்கே வாழ்கிறான்.(71) ஹிரண்யகசிபு என்ற பெயரில் பிறந்தவனும், மேரு மலைகளையே அசைக்கும் பெரும்பலம் கொண்டவனுமான தானவன், மஹாதேவனிடம் இருந்து தேவர்கள் அனைவரின் பலத்தையும் பெற்றுக் கொண்டு ஒரு கோடி வருடங்கள் அதை அனுபவித்தான்.(72)

அவனது மகன்கள் அனைவரிலும் முதன்மையானவனும் {மூத்த மகனும்}, மந்தாரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒருவன், மஹாதேவனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் சக்ரனோடு பத்து லட்சம் வருடங்கள் போரிடுவதில் வென்றான்.(73) ஓ! கேசவா, அண்டத்தின் துன்பத்திற்குப் பெருங்காரணனாக இருந்த அவனுடைய {அந்த மந்தாரனுடைய} உடலில், விஷ்ணுவின் பயங்கரச் சக்கரத்தாலும், இந்திரனின் வஜ்ரத்தாலும் சிறு தடயத்தையும் ஏற்படுத்த முடியவில்லை[8].(74) ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ கொண்டிருக்கும் சக்கரமானது, நீருக்குள் வாழ்ந்து வந்தவனும், தன் பலத்தில் செருக்குடையவனுமான ஒரு தைத்தியனைக் கொன்ற பிறகு, மஹாதேவனால் உனக்குக் கொடுக்கப்பட்டது.(75) சுடர்மிக்க சக்தியைக் கொண்டதும், நெருப்பைப் போன்றதுமான அந்தச் சக்கரம், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட பெருந்தேவனால் படைக்கப்பட்டதாகும். அற்புதம் நிறைந்ததும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டதுமான அஃது அந்தச் சிறப்புமிக்கத் தேவனாலேயே உனக்குக் கொடுக்கப்பட்டது.(76) அஃது அதன் சுடர்மிக்க சக்தியின் விளைவால் பிநாகைபாணியைத் தவிர வேறு எவனாலும் பார்க்க முடியாததாகும். அதன் காரணமாகவே பவன் அதற்குச் சுதர்சனம் என்ற பெயரைச் சூட்டினான்.(77) அந்தக் காலத்தில் இருந்தே உலகம் எங்கும் சுதர்சனம் என்ற பெயர் இருப்புக்கு வந்தது. ஓ! கேசவா, அந்த ஆயுதம் கூட மூவுலகங்களிலும் ஒரு தீய கோளைப் போலத் தோன்றியவனும், ஹிரண்யகசிபுவின் மகனுமான மந்தாரனின் உடலில் சிறு தடத்தையும் ஏற்படுத்த தவறியது.(78) மஹாதேவனிடம் வரத்தைப் பெற்றவனும், பெரும் பலத்துடன் கூடியவனுமான அந்தத் தீய கோளின் உடலில் உன்னுடைய சக்கரத்தைப் போன்ற நாற்றுக்கணக்கான சக்கரங்களாலும், சக்ரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான வஜ்ராயுதங்களாலும் சிறு காயத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.(79) வலிமைமிக்கவனான மந்தாரனால் பீடிக்கப்பட்ட தேவர்கள், அவனையும், மஹாதேவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற அவனுடைய துணைவர்களையும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர்.(80)வித்யுத்பிரபன் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு தானவனிடம் நிறைவடைந்த மஹாதேவன் அவனுக்கு மூவுலகங்களின் ஆட்சியுரிமையை அருளினான். அந்தத் தானவன் மூவுலகங்களின் ஆட்சியுரிமையில் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்தான்.(81) மஹாதேவன் அவனிடம் {வித்யுத்பிரபனிடம்}, “நீ என்னுடைய பணியாட்களில் ஒருவனாக இருப்பாய்” என்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தலைவன் {சிவன்} அவனுக்குக் கோடிக்கணக்கான பிள்ளைகளை வரமாக அளித்தான். பிறப்பில்லாதவனான அந்த அனைத்து உயிரினங்களின் ஆசான் குசத்வீபம் என்ற பெயருடைய ஒரு நாட்டை மேலும் ஒரு வரமாக அவனுக்கு அளித்தான்.(82)

சதமுகன் என்ற பெயரையுடைய மற்றொரு பேரசுரன் பிரம்மனால் படைக்கப்பட்டான். அவன் தன்னுடலின் சதையையே (மஹாதேவனுக்கான காணிக்கையாக) வேள்வி நெருப்பில் நூறு வருடங்கள் ஊற்றிக் கொண்டிருந்தான்.(83) இத்தகைய தவங்களால் நிறைவையடைந்த சங்கரன் அவனிடம் {சதமுகனிடம்}, “நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டான். அதற்குச் சதமுகன், “ஓ! அற்புதமிக்கவனே, புதிய உயிரினங்களையும், விலங்குகளையும் படைக்கும் சக்தி எனக்கு வேண்டும்.(84) ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நித்திய சக்தியையும் எனக்குக் கொடுப்பாயாக” என்று மறுமொழி கூறினான்[9]. அவன் இவ்வாறு சொன்னதும் அந்தப் பலமிக்கத் தலைவன் அவனிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.(85)பழங்காலத்தில் சுயம்புவான பிரம்மன், பிள்ளைகளை அடையும் நோக்கில் யோகத்தில் தன் மனத்தைக் குவித்து முன்னூறு ஆண்டுகளாக ஒரு வேள்வியைச் செய்தான்.(86) மஹாதேவன் அந்த வேள்வியின் தகுதிகளுக்கு ஏற்ற திறனைக் கொண்ட ஓராயிரம் மகன்களை அவனுக்கு அளித்தான். ஓ! கிருஷ்ணா, தேவர்களால் பாடப்படும் அந்த யோகத் தலைவனை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(87) யாஜ்ஞவல்கியர் என்ற பெயரில் அறியப்படும் முனிவர் பெரும் அறவோனாவார். அவர் மஹாதேவனைத் துதித்ததன் மூலம் பெரும் புகழை அடைந்தார்.(88) பராசரரின் மகனும், யோகத்தில் ஆன்மாவை நிலைக்கச் செய்யும் பெருந்தவசியுமான வியாசர் சங்கரனைத் துதித்ததன் மூலம் பெரும்புகழை அடைந்தார்.(89)

முன்பொரு சந்தர்ப்பத்தில் வாலகில்யர்கள் மகவத்தால் {இந்திரனால்} அவமதிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த அவர் சிறப்புமிக்க ருத்திரனை நிறைவடையச் செய்தனர்.(90) தேவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அண்டத்தில் தலைவன், வாலகில்யர்களால் இவ்வாறு நிறைவை அடைந்து, அவர்களிடம், “இந்திரனிடம் இருந்து அமுதத்தை அபகரிக்கும் ஒரு பறைவையைப் படைப்பதில் உங்கள் தவத்தின் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்” என்றான்.(91) முன்பொரு சந்தர்ப்பத்தில் மஹாதேவனின் கோபத்தின் மூலம் நீர்கள் {நீர்நிலைகள் அனைத்திலும் உள்ள நீர்) அனைத்தும் மறைந்தன. தேவர்கள் சப்தகபாலம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்து அவனை நிறைவடையச் செய்து, அவனது அருளின் மூலம் உலகங்களில் வேறு நீர் பாயும்படி செய்தார்கள். உண்மையில், அந்த முக்கண் தேவன் நிறைவடைந்தபோது, மீண்டும் உடனடியாக உலகில் நீர் தோன்றியது.(92)

வேதங்களை அறிந்தவளான அத்ரியின் மனைவி {அனசூயை} ஒரு கோபத்தில் தன் கணவனைக் கைவிட்டு, “அந்தத் தவசியின் ஆதிக்கத்தின் கீழ் இனி ஒருபோதும் வாழ மாட்டேன்” என்றாள்.(93) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவள் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினாள். தன் கணவரான அத்ரியிடம் கொண்ட அச்சத்தால் அவள் {மஹாதேவனின் பாதுகாப்பை நாடி} உணவனைத்தையும் துறந்து முன்னூறு வருடங்களைக் கழித்தாள்.(94) அக்காலம் முழுவதும் அவள் பவனை நிறைவடையச் செய்யும் நோக்கத்தால் உலக்கைகளில் மீது உறங்கினாள். பிறகு அந்தப் பெருந்தேவன் அவள் முன்பு தோன்றி புன்னகைத்தவாறே, “நீ ஒரு மகனை அடைவாய்.(95) கணவனின் தேவை இல்லாமல், ருத்திரனின் அருளால் மட்டுமே நீ ஒரு மகனைப் பெறுவாய். தந்தையின் குலத்தில் பிறக்கும் அந்த மகன் தன் தகுதிக்குத்தக்க உன் பெயராலேயே {தத்தாத்ரேயர் என்ற பெயரில்} கொண்டாடப்படுவான்” என்றான்[10].(96ஓ! மதுசூதனா, சிறப்புமிக்க விகர்ணரும் {விகர்ண முனிவரும்} கூட மஹாதேவனிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்டு, கடுந்தவங்களால் அவனை நிறைவடையச் செய்து, மகிழ்ச்சியையும் உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(97) ஓ! கேசவா, கட்டுப்பாடுடைய ஆன்மாவைக் கொண்ட சாகல்யரும்[11] கூடத் தொள்ளாயிரம் ஆண்டுகள் மனோ வேள்வி செய்து பவனைத் துதித்தார்.(98) அவரிடம் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவரிடம், “நீ பேராசானாவாய் {கிரந்தகர்த்தாவாவாய்}. ஓ! மகனே, உனது புகழ் மூவுலகங்களிலும் வற்றாமல் இருக்கும்.(99) பெரும் முனிவர்கள் பிறப்பால் உன் குலம் முடிவற்றதாக அவர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உன் மகன் பிராமணர்களில் முதன்மையானவனாகி, உன் படைப்பில் சூத்திரங்களை உண்டாக்குவான்” என்றான்.(100) கிருத யுகத்தில் சாவர்ணி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் இந்த ஆசிரமத்தில் ஆறாயிரம் வருடங்கள் கடுந்தவமிருந்தார்.(101) சிறப்புமிக்க ருத்திரன், “ஓ! பாவமற்றவனே, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். முதுமை அல்லது மரணத்திற்கு ஆட்படாதவனும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவனுமான ஓர் ஆசானாக நீ இருப்பாய்” என்றான்.(102)

ஓ! ஜனார்த்தனா, அர்ப்பணிப்பில் நிறைந்த சக்ரனும் {இந்திரனும்} கூடப் பழங்காலத்தில் வாராணசியில் {காசியில்}, வெட்ட வெளியையே தன் ஆடைகளாகக் கொண்டவனும், ஏற்புடைய தைலமாகச் சாம்பலைப் பூசிக் கொள்பவனுமான மஹாதேவனைத் துதித்தான்.(103) இவ்வாறு மஹாதேவனைத் துதித்த அவன் தேவர்களின் அரசுரிமையை அடைந்தான். நாரதரும் கூடப் பழங்காலத்தில் அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் பெரும் பவனைத் துதித்தார். தேவகுருவுக்குக் குருவான அந்த மஹாதேவன் அவரிடம் நிறைவடைந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(104) “சக்தியிலும், தவங்களிலும் உனக்கு இணையானவர்களாக யாரும் இருக்க மாட்டார்கள். பாட்டினாலும், இசைக்கருவியினாலும் எப்போதும் நீ எனக்குப் பணிவிடை செய்வாயாக” என்றான்.(105) ஓ! மாதவா, ஓ! தலைவா, பழங்காலத்தில், உயிரினங்கள் அனைத்தின் ஆசானான அந்தத் தேவ தேவனைக் காண்பதில் நான் எவ்வாறு வென்றேன் என்பதைக் கேட்பாயாக.(106) மேலும், ஓ! பெரும்பலம் கொண்டவனே, உயர்ந்த சக்தியுடன் கூடிய அந்தச் சிறப்புமிக்கத் தேவனைக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள் மற்றும் மனத்துடன் எந்த நோக்கத்திற்காக இருப்புக்கு அழைத்தேன் என்பதையும் விபரமாகக் கேட்பாயாக.(107) ஓ! பாவமற்றவனே, தேவதேவனான அந்த மஹேஸ்வரனிடம் பெற்றத்தில் இருந்து நான் அடைந்த வெற்றிகள் அனைத்தையும் முழு விபரங்களுடன் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(108)

சிவ வடிவங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14இ-உபமன்யு தாம் சிவனைக் கண்ட வகையைக் கிருஷ்ணனுக்குச் சொல்லத் தொடங்கியது; தமது அன்னையிடம் பால் உணவு கேட்ட உபமன்யு; பால் உணவு கொடுக்க முடியாத அவரது அன்னை சிவனை வேண்டச் சொன்னது; சிவனின் இருப்புநிலைகளை உபமன்யுவுக்குச் சொன்ன அவரது அன்னை…

{உபமன்யு தொடர்ந்தார்}, பழங்காலத்தில் கிருத யுகத்தில், ஓ! மகனே, வியாக்ரபாதர் என்ற பெயரில் பெரும் புகழைக் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் தனது ஞானத்திற்காகவும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களில் கொண்ட திறனுக்காகவும் கொண்டாடப்பட்டார்.(109) அந்த முனிவரின் மகன்களாக நானும், என் தம்பியாகத் தௌமியனும் பிறந்தோம். ஓ! மாதவா, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட சில முனிவர்களின் ஆசிரமத்தை தௌமியனின் துணையுடன் நான் அடைந்தேன். அங்கே ஒரு பசுவிடம் பால் கறக்கப்படுவதைக் கண்டேன். நான் பாலைக் கண்டேன், அஃது அமுதத்துக்கு ஒப்பான சுவையுடையதாக எனக்குத் தோன்றியது.(111) பிறகு வீடு திரும்பிய நான், குழந்தைத்தனத்தால் உந்தப்பட்டு என் அன்னையிடம், “பாலில் தயாரிக்கப்பட்ட ஏதாவது உணவைத் தருவாயாக” என்று கேட்டேன்.(112) 

அப்போது வீட்டில் பாலில்லை என்பதால், நான் அதைக் கேட்டதும் என் அன்னை மிகவும் வருத்தமடைந்தாள். ஓ! மாதவா, என் அன்னை (அரிசி) மாவைத் தண்ணீரில் கொதிக்கவைத்தாள்.(113) நீரானது வெண்ணிறமானது, என் தாய் அஃதை எங்கள் முன்பு வைத்து, பாலென்று சொல்லி எங்களைக் குடிக்கச் சொன்னாள். அதற்கு முன்பே ஒரு சந்தர்ப்பத்தில் செழிப்புமிக்கவரான எங்கள் உறவினரின் வசிப்பிடத்திற்கு ஒரு வேள்விக்காக என் தந்தை அழைத்துச் சென்ற போது நான் பாலைக் குடித்திருக்கிறேன்.(114) அந்தச் சந்தர்ப்பத்தில் தேவர்களைத் திளைக்கச் செய்யும் ஒரு தெய்வீகப் பசுக் கறக்கப்பட்டது. சுவையில் அமுதத்திற்கு ஒப்பான அவளது பாலைக் குடித்திருந்ததால்,(115) பாலின் தன்மையை நான் அறிந்திருந்தேன். எனவே, பாலென்று சொல்லி என் அன்னை கொடுத்த பொருளின் தோற்றத்தை உடனடியாகப் புரிந்து கொண்டேன். ஓ! மகனே, உண்மையில் அந்த மாவு எனக்கு எந்த இன்பத்தையும் அளிக்கவில்லை.(116)

குழந்தைத்தனத்தால் உந்தப்பட்ட நான் என் தாயாரிடம், “ஓ! தாயே, நீ எனக்குக் கொடுத்தது பாலில் தயாரிக்கப்பட்ட உணவல்ல” என்றேன்.(117)

ஓ! மாதவா, இதனால் துயரத்தில் நிறைந்த என் அன்னை பெற்ற பாசத்தால் என்னைத் தழுவி உச்சி முகர்ந்து, என்னிடம், “ஓ! குழந்தாய், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட தவசிகளால் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை எங்கே பெற முடியும்? அத்தகைய மனிதர்கள், எப்போதும் காட்டில் வசித்து, கிழங்குகள், வேர்கள் மற்றும் கனிகளை உண்டு வாழ்கின்றனர்.(119) ஓ! குழந்தாய், மலைகளையும் காடுகளையும் இல்லங்களாகக் கொண்டவர்களும், வாலகில்யர்களின் ஓய்விடங்களான ஆற்றங்கரைகளில் வாழ்பவர்களுமான நம்மால் பாலை எங்குப் பெற முடியும்?(120) ஓ! அன்புக் குழந்தாய், நாம் (சில வேளைகளில்) காற்றையும், சில வேளைகளில் நீரையும் உண்டு வாழ்கிறோம். காடுகள் மற்றும் சோலைகளுக்கு மத்தியில் உள்ள ஆசிரமங்களில் நாம் வாழ்கிறோம். கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மனிதர்கள் உண்ணும் அனைத்து வகை உணவுகளையும் தவிர்ப்பதே நமது வழக்கம். காட்டில் விளையும் உணவை உண்பதே நமது வழக்கம்.(121) ஓ! குழந்தாய், சுரபியின் சந்ததி {பசுக்கள்} ஏதும் இல்லாத காட்டில் பால் கிடைக்காது[12]. ஆற்றங்கரைகள், அல்லது குகைகள், அல்லது மலைச்சாரல்கள், அல்லது தீர்த்தங்கள், அல்லது அதுபோன்ற வேறுவகை இடங்களில் வசித்து,(122) சிவனையே நமது உயர்ந்த புகலிடமாகக் கொண்டு தவங்களிலும், புனித மந்திரங்களை உரைப்பதிலும் நம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். ஓ! குழந்தாய், வரமளிப்பவனும், முக்கண்களைக் கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த ஸ்தாணுவை நிறைவடையச் செய்யாமல்,(123) பாலில் தயாரிக்கப்பட்ட உணவையும், நல்ல ஆடைகளையும், உலகில் இன்பத்திற்குரிய பிற பொருட்களை ஒருவன் எங்கிருந்து அடைவான்? ஓ! அன்பு மகனே, முழு ஆன்மாவுடன் சங்கரனிடம் உன்னை அர்ப்பணிப்பாயாக {சங்கரனிடம் நீ பக்தி கொள்வாயாக}.(124) ஓ! குழந்தாய், அவனது அருளின் மூலம் உனது விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் நீ நிச்சயம் அடைவாய்” என்றாள்.

ஓ! பகைவர்களைக் கொல்பவனே, அந்நாளில் என் தாயாரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான்,(125) மதிப்புடன் என் கரங்களைக் கூப்பி அவளை வணங்கி, “ஓ! தாயே, இந்த மஹாதேவன் எவன்? என்ன வகையில் அவனை ஒருவனால் நிறைவடையச் செய்ய இயலும்?(126) அந்தத் தேவன் எங்கே வசிக்கிறான்? அவனை எவ்வாறு காணலாம்? எதனால் அவன் நிறைவை அடைவான்? அந்தச் சர்வனின் வடிவம் எது? அவனைக் குறித்த அறிவை அடைவதில் ஒருவன் எவ்வாறு வெல்லலாம்? ஓ! தாயே, என்னிடம் நிறைவை அடைந்தால், அவனை எனக்குக் காட்டுவாயாக” என்றேன்.(127)

ஓ! கிருஷ்ணா, ஓ! கோவிந்தா, நான் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு என் தாயார் பெற்ற பாசத்தால் நிறைந்து என் தலையை முகர்ந்த போது அவளது கண்களைக் கண்ணீர் மறைத்தது.(128) ஓ! மதுசூதனா, ஓ! தேவர்களில் சிறந்தவனே, அப்போது என் உடலை மென்மையாகத் தட்டிக் கொடுத்த என் தாயார், பெரும் பணிவுடன் கூடிய தொனியில் பின்வரும் வார்த்தைகளை என்னிடம் சொன்னாள்.(129) என் தாயார், “தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் மஹாதேவனை அறிவது மிகக் கடினமாகும். இந்த மனிதர்கள் அவனைத் தங்கள் இதயங்களில் சுமக்க, அல்லது அவனைப் புரிந்துகொள்ள வல்லவர்களல்ல. அவர்களால் அவனைத் தங்கள் மனங்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அவர்களால் அவனைப் பற்றவும் முடியாது, மேலும் அவர்களால் அவனைக் காணவும் முடியாது,(130) அவனது வடிவங்கள் பலவாகும் என ஞானிகள் உறுதியாகச் சொல்கின்றனர். மேலும் அவன் வசிக்கும் இடங்களும் பலவாகும். அவனது அருளின் வடிவங்கள் பலவாகும்.(131) ஈசனின் சிறந்த செயல்கள் அனைத்தையும், பழங்காலத்தில் அவன் ஏற்ற வடிவங்கள் அனைத்தையும் என அவற்றின் விபரங்களுடன் புரிந்து கொள்ள எவன் இருக்கிறான்?(132) சர்வன் எவ்வாறு விளையாடுவான்?, எவ்வாறு நிறைவை அடைவான் என்ற யாரால் சொல்ல முடியும்? அண்டத்தின் வடிவிலான மஹேஸ்வரன் அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கிறான்.(133) ஈசானனின் மங்கலமான அற்புதச் செயல்கள் குறித்து முனிவர்கள் உரையாடும்போது, தன்னை வழிபடுபவர்களிடம் கருணையால் தூண்டப்பட்டு அவன் எவ்வாறு நேரடியாகக் காட்சி கொடுப்பான் என்பதைக் கேட்டிருக்கிறேன்.(134) பழங்காலத்தில் மஹாதேவன் ஏற்ற பல்வேறு வடிவங்கள் குறித்த செய்திகளைப் பிராமணர்களுக்குக் கருணை காட்டும் நோக்கில் சொர்க்கவாசிகள் சொல்லியிருக்கின்றனர். அவற்றைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மகனே, நான் அவற்றை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றாள்.(135)

என் அன்னை தொடர்ந்தாள், “பிரம்மன், விஷ்ணு, தேவர்களின் தலைவன், ருத்திர்கள், ஆதித்தியர்கள், அஸ்வினிகள், விஸ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்கள் ஆகிய வடிவங்களைப் பவன் {சிவன்} ஏற்கிறான்.(136) மனிதர்கள், பெண்கள், பிரேதங்கள், பிசாசங்கள், கிராதர்கள், சபரர்கள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். காடுகள் மற்றும் சோலைகளில் வசிக்கும் சபரர்களின் வடிவங்களையும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் ஏற்கிறான்.(137) ஆமைகள், மீன்கள், சங்குகள் ஆகிய வடிவங்களையும் அவன் ஏற்கிறான். மனிதர்கள் ஆபரணங்களாகப் பயன்படுத்தும் பவளக் கொடிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(138) யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், தைத்தியர்கள், தானவர்கள் ஆகியோரின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், பொந்துகளில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களையும் ஏற்கிறான்.(139) புலிகள், சிங்கங்கள், மான்கள், ஓநாய்கள், கரடிகள், பறவைகள், ஆந்தைகள் மற்றும் நரிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(140)

அன்னங்கள், காக்கைகள், மயில்கள், ஓணான்கள், பல்லிகள் மற்றும் நாரைகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். கொக்குகள், கழுகுகள், சக்கரவாகங்கள் ஆகிய வடிவங்களையும் அவனே ஏற்கிறான்.(141) உண்மையில் அவன், சாசங்கள் மற்றும் மலைகளின் வடிவங்களையும் ஏற்கிறான். ஓ! மகனே, பசுகள், யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகிய வடிவங்களையும் மஹாதேவனே ஏற்கிறான்.(142) ஆடுகள், சிறுத்தைப்புலிகள் மற்றும் பல்வேறு வகை விலங்குகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். அழகிய தோகைகளைக் கொண்ட பல்வேறு வகைப் பறவைகளின் வடிவங்களையும் பவனே ஏற்கிறான்.(143) பிராமணர்களுக்கு மத்தியில் தண்டங்கள், குடைகள் மற்றும் கமண்டலங்களுடன் இருக்கும் மனிதர்களின் வடிவங்களைத் தரிப்பவன் மஹாதேவனே. சில வேளைகளில் அவன் ஆறு முகம் படைத்தவனாகிறான், சில வேளைகளில் பல முகங்களைத் தரித்தவனாகிறான். சில வேளைகளில் அவன் மூன்று கண்களை உடைய வடிவங்களையும், பல தலைகளையுடைய வடிவங்களையும் ஏற்கிறான்.(144) சில வேளைகளில் பல கோடி கால்களைக் கொண்ட வடிவங்களையும், எண்ணற்ற வயிறுகள் மற்றும் முகங்களைக் கொண்ட வடிவங்களையும், எண்ணற்ற கரங்கள் மற்றும் எண்ணற்ற இடைகளையுடைய வடிவங்களையும் அவன் ஏற்கிறான். சில வேளைகளில் அவன் எண்ணற்ற கணங்கள் மற்றும் பூதங்கள் சூழ இருக்கிறான்.(145) முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்களின் வடிவங்களை அவனே ஏற்கிறான். சில வேளைகளில் அவன் சாம்பற் {திருநீறு} பூசப்பட்ட வெண்ணிறத்துடன், நெற்றியில் அரை மதியால் அலங்கரிக்கப்பட்ட வடிவத்தை ஏற்கிறான்.(146)

பல்வேறு வகைக் குரல்களில் பாடப்படும் பல்வேறு துதிகளால் துதிக்கப்படுபவனும், புகழ்மாலைநிறைந்த பல்வேறு மந்திரங்களால் வழிபடப்படுபவனும், சில வேளைகளில் சர்வன் என்றழைக்கப்படுபவனுமான அவன், அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவனாக இருக்கிறான், மேலும் அனைத்து உயிரினங்களும் சார்ந்திருக்கும் பொதுவான அடித்தளமாக அவனே இருக்கிறான்.(147) மஹாதேவனே அனைத்து உயிரினங்களின் ஆன்மா ஆவான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். (கடமைகள் {தர்மங்கள்} மற்றும் சடங்குகள் குறித்த) உரைகள் அனைத்தையும் பேசுபவன் அவனே ஆவான். எங்கும் வசிக்கும் அவன், அண்ட உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிப்பவனாக அறியப்பட வேண்டும்.(148) தன்னை வழிபடும் ஒவ்வொருவனாலும் வளர்க்கப்படும் ஆசைகளை அறிந்தவன் அவன். தன்னைத் துதிப்பவனின் நோக்கத்தை அறிபவன் அவன். உனக்கு விருப்பமிருந்தால், அந்தத் தேவர்களுடைய தலைவனின் பாதுகாப்பை நாடுவாயாக.(149) அவன் சில வேளைகளில் மகிழ்வான், சில வேளைகளில் கோபவசப்படுவான், சில வேளைகளில் ஹும் என்ற அசையை மிக உரக்கச் சொல்வான். அவன் சில வேளைகளில் சக்கரத்தைத் தரிக்கிறான், சில வேளைகளில் திரிசூலத்தையும், சில வேளைகளில் கதாயுதத்தையும், சில வேளைகளில் உலக்கைகளையும், சில வேளைகளில் வாள்களையும், சில வேளைகளில் போர்க்கோடரிகளையும் தரிப்பான்.(150)

உலகைத் தலையில் தாங்கும் சேஷனின் வடிவை ஏற்பவன் அவனே. அவன் பாம்புகளைத் தன் கச்சையாகக் கொண்டிருக்கிறான், அவனது காதுகள் பாம்புகளால் செய்யப்பட்ட காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. அவன் சூடும் புனித நூலாகவும் பாம்புகளே அமைகின்றன. யானைத் தோல் அவனது மேலாடையாக அமைகிறது.(151) சில வேளைகளில் அவன் சிரிக்கிறான், சில வேளைகளில் பாடுகிறான், சில வேளைகளில் மிக அழகாக ஆடுகிறான். எண்ணற்ற பூதங்களாலும், கணங்களாலும் சூழப்பட்ட அவன் சில வேளைகளில் இசைக்கருவிகளை இசைக்கிறான். அவன் இசைக்கும் பல்வேறு வகைக் கருவிகள் இனிமையான ஒலிகளை வழங்குகின்றன.(152) அவன் சில வேளைகளில் (சுடலைகளில்) திரிகிறான், சில வேளைகளில் கொட்டாவி விடுகிறான், சில வேளைகளில் அழுகிறான், சில வேளைகளில் பிறரை அழச் செய்கிறான். சில வேளைகளில் அவன் பித்தனின் தோற்றத்தை ஏற்கிறான், சில வேளைகளில் மது மயக்கத்துடன் கூடியவனாகவும், சில வேளைகளில் மிக இனிய சொற்களைச் சொல்பவனாகவும் இருக்கிறான்.(153) அச்சுறுத்தும் கடுமையுடன் கூடிய அவன் சில வேளைகளில், தன் கண்களால் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் உரக்கச் சிரிக்கிறான். சில வேளைகளில் அவன் உறங்குகிறான், சில வேளைகளில் விழித்திருக்கிறான், சில வேளைகளில் விரும்பியவாறு கொட்டவீ விடுகிறான்.(154) சில வேளைகளில் அவன் புனித மந்திரங்களை ஓதுகிறான், சில வேளைகளில் ஓதப்படும் அந்த மந்திரங்களின் தேவனாகிறான். சில வேளைகளில் அவன் தவங்களைச் செய்கிறான், சில வேளைகளில் செய்யப்படும் அத்தவங்களில் துதிக்கப்படும் தேவனாகிறான். சில வேளைகளில் அவன் கொடைகளை அளிக்கிறான், சில வேளைகளில் கொடைகளை ஏற்கிறான்; சில வேளைகளில் யோகத்தில் ஆழ்கிறான், சில வேளைகளில் பிறருடைய தியான யோகத்தின் பொருளாகிறான்.(155)

வேள்விப் பீடத்திலோ {யாகவேதியின் நடுவிலோ}, வேள்வித் தண்டிலோ {யூபஸ்தம்பத்திலோ} அவன் காணப்படுகிறான்; மாட்டுக் கொட்டில் அல்லது நெருப்பின் மத்தியிலும் அவன் காணப்படுகிறான். மீண்டும் அவனை அங்கே காணமுடியாதும் போகலாம். அவன் சிறுவனாகவோ, முதிர்ந்தவனாகவோ காணப்படுகிறான்.(156) அவன் முனிவர்களின் மகள்கள் மற்றும் மனைவிகளுடன் விளையாடுகிறான். அவனுடைய முடி நீண்டதாகவும் நிமிர்ந்து நிற்பதாகவும் இருக்கிறது. திசைகளையே ஆபரணங்களாகக் கொண்ட அவன் முழு அம்மணமாக இருக்கிறான். அவன் பயங்கரக் கண்களைக் கொண்டவனாக இருக்கிறான்.(157) அவன் வெண்மையாகவும், கருமையாகவும், கருப்பனாகவும், வெளுப்பனாகவும் இருக்கிறான், புகையின் நிறத்தைக் கொண்டவனாகவும், சிவப்பாகவும் அவன் இருக்கிறான். நீண்ட பயங்கரமான கண்களைக் கொண்டவனாக அவன் இருக்கிறான். வெட்ட வெளியையே ஆடையாகக் கொண்டவன் அவன், அனைத்துப் பொருட்களையும் மறைப்பவனும் அவன்.(158) 

வடிவமற்றவனும், மாயையால் அமைந்தவனும், அண்டத்தின் செயல்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்தின் வடிவைக் கொண்டவனும், ஹிரண்யகர்ப்பனின் வடிவத்தை ஏற்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாதவனுமான அவன் பிறப்பற்றவனாக இருக்கிறான்.(159) அவன் (ஒவ்வொரு உயிரினத்தின்) இதயத்தில் வாழ்கிறான். அவனே உயிர் மூச்சு, அவனே மனம், அவனே (உடற்பொதியில் மறைந்திருக்கும்) ஜீவனும் ஆவான் . அவன் யோகத்தின் ஆன்மாவாக இருக்கிறான், அவனே யோகம் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியர் நுழையும் தியான யோகமாக அவனே இருக்கிறான். அவனே பரமாத்மா ஆவான். உண்மையில், புலன்களாலல்லாமல், அவனது இருப்பைப் பற்றும் ஆன்மாவால் மட்டுமே அவன் புரிந்து கொள்ளப்படுகிறான்.(160) அவன் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கிறான். அவன் பாடகனாகவும் இருக்கிறான். அவன் ஒரு லட்சம் கண்களைக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு வாயைக் கொண்டிருக்கிறான், இரண்டு வாய்கள், மூன்று வாய்கள் மற்றும் பல வாய்களையும் கொண்டிருக்கிறான். (161) ஓ! மகனே {உபமன்யு}, உன்னை அவனுக்கு அர்ப்பணித்து, அவனில் உன் இதயத்தை நிலை நிறுத்தி, அவனையே சார்ந்திருந்து, அவனையே ஒரே புகலிடமாக ஏற்று மஹாதேவனைத் துதிப்பாயாக. அவ்வாறு செய்தால் உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாய்” என்றாள் {என் தாயார்}.(162)

லிங்கமும், பகமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஈ-அன்னையின் சொல் கேட்டு, சிவனை நினைத்துத் தவமிருந்த உபமன்யு; உபமன்யுவிடம் நிறைவடைந்த சிவன், அவரைச் சோதிக்க இந்திரனின் வடிவில் வந்தது; வேறு எந்தத் தேவனிடமும் வரம்பெற மாட்டேன் என உபமன்யு சொன்னது; சிவனின் மகிமையைச் சொன்னது; சிவலிங்கச் சின்னத்தின் பொருள் சொன்ன உபமன்யு…

{உபமன்யு தொடர்ந்தார்}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே என் அன்னையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்த நாள் முதல் வேறு எந்த நோக்கமும் இல்லாத என் அர்ப்பணிப்பை மஹாதேவனிடம் செலுத்தினேன்.(163) பிறகு நான், சங்கரனை நிறைவடையச் செய்வதற்காகக் கடுந்தவங்கில் ஈடுபட்டேன். ஓராயிரம் வருடங்கள் நான் என் இடக்கால் கட்டைவிரலில் நின்றேன்.(164) அதன் பிறகு ஓராயிரம் வருடங்கள் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். அதன்பிறகு ஓராயிரம் வருடங்கள் மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். அடுத்த ஆயிரம் வருடங்கள் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தேன்.(165) அதன் பிறகு எழுநூறு ஆண்டுகள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். இவ்வகையில் நான் முழுமையாக ஓராயிரம் தேவ வருடங்கள் மஹாதேவனைத் துதித்தேன்.(166) இதன்பிறகு அண்டத்தின் ஆசானான பலமிக்க மஹாதேவன் என்னிடம் நிறைவடைந்தான். நான் அவனிடம் மட்டுமே முற்றான அர்ப்பணிப்புடன் இருக்கிறேனா என்பதை உறுதி செய்து கொள்ள விரும்பிய அவன்,(167) தேவர்கள் அனைவராலும் சூழப்பட்ட சக்ரனின் {இந்திரனின்} வடிவில் என் முன்னிலையில் தோன்றினான்.

மேனியில் ஆயிரம் கண் கொண்டவனும், வஜ்ராயுதம் தரித்தவனும், கொண்டாடப்படுபவனுமான சக்ரனாக அவன் தோன்றினான்.(168) அவன், தூய வெண்ணிறம் கொண்டதும், கண்கள் சிவந்ததும், காதுகள் மடங்கியதும், மதநீர் பெருகுவதும், துதிக்கை மடங்கியதும், காணப் பயங்கரமானதும், நான்கு தந்தங்களுடன் கூடியதுமான ஒரு யானையைச் செலுத்திக் கொண்டு வந்தான். உண்மையில், அத்தகைய யானையைச் செலுத்தி வரும் தேவர்களின் தலைவன் சக்தியால் சுடர்விடுபவனாகத் தெரிந்தான். தலையில் அழகிய மகுடத்துடனும், கழுத்தைச் சுற்றும் மாலைகளுடனும், கரங்களைச் சுற்றும் கங்கணங்களுடனும் அவன் நான் இருந்த இடத்திற்கு வந்தான்.(169,170) அவனது தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டிருந்தது. பல அப்சரஸ்கள் அவனுக்குப் பணிவிடையும், பல கந்தர்வர்கள் அவனது புகழைப் பாடவும் செய்தனர்.(171) அவன் என்னிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் உம்மிடம் நிறைவடைந்தேன். நீர் விரும்பும் வரத்தை என்னிடம் இரந்து பெறலாம்” என்றான்.(172)

சக்ரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் மகிழவில்லை. உண்மையில், ஓ! கிருஷ்ணா, நான் தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினேன்,(173) “நான் உன்னிடமோ, வேறு பிற தேவர்களிடமோ எந்த வரத்தையும் விரும்பவில்லை. ஓ! இனிய தேவா, மஹாதேவனிடம் மட்டுமே வரங்களைக் கேட்பேன் என நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(174) உண்மை, இஃது உண்மை, நான் உன்னிடம் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே. மஹேஸ்வரன் தொடர்பானவற்றைத் தவிர வேறு எந்தச் சொற்களும் எனக்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல.(175) அந்த அனைத்து உயிரினங்களின் தலைவனுடைய ஆணையின் பேரில் நான் புழுவாகவோ, பல கிளைகளையுடைய மரமாகவோ ஆயத்தமாக இருக்கிறேன். மஹாதேவனின் வரங்களின் மூலம் அடையப்படாத அருளானது மூவுலகங்களின் அரசுரிமையே ஆனாலும் அஃது எனக்கு ஏற்புடையதல்ல.(176) நான் ஸ்வபாகர்களுக்கு {சண்டாளர்களுக்கு} மத்தியில் பிறப்பை அடைந்தாலும், ஹரனின் பாதத்திலேயே அர்ப்பணிப்புடன் இருப்பேன். மேலும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பசுபதியிடம்} அர்ப்பணிப்பில்லாமல் இந்திரனின் அரண்மனையில் பிறக்கவும் நான் விரும்பவில்லை.(177)

தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானான அண்டத்தின் தலைவனிடம் அர்ப்பணிப்பில்லாதவன் உணவில்லாமல் வெறும் காற்று மற்றும் நீரை உண்டு வாழ்ந்தாலும் அவனது துன்பம் தீராது.(178) மஹாதேவனின் பாதத்தை நினையாமல் ஒரு கணமும் வாழ விரும்பாத மனிதர்களுக்கு அறம் மற்றும் பிறவகை நெறிகள் நிறைந்த உரைகள் ஏதும் தேவையில்லை.(179) அறமற்ற, அல்லது பாவம் நிறைந்த யுகம் தோன்றும்போது, ஒருவன் மஹாதேவனிடம் தன் இதயத்தை அர்ப்பணிக்காமல் ஒரு கணத்தையும் கடத்தக்கூடாது. ஹரனிடம் அர்ப்பணிப்பு என்ற அமுதத்தைப் பருகிய ஒருவன் உலக அச்சங்களில் இருந்து விடுபடுகிறான்.(180) மஹாதேவனின் அருளைப் பெறாத ஒருவனால் ஒரு நாள், அரை நாள், ஒரு முகூர்த்தம், ஒரு க்ஷணம் {ஒரு நிமிடம்}, ஒரு லவம் {ஒரு நொடி} கூட மஹாதேவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதில் ஒருபோதும் வெல்ல முடியாது.(181) ஓ! சக்ரா, மஹாதேவனின் ஆணையின் பேரில் நான் உற்சாகமாக ஒரு புழுவாகவோ, பூச்சியாகவோ ஆவேனேயன்றி, மூவுலகங்களின் அரசுரிமையை நீ கொடுக்க முன்வந்தாலும் அஃது எனக்கு உவப்பாகாது.(182)

ஹரனின் சொல்லால் நான் நாயாகவும் ஆவேன். உண்மையில், அஃது என் உயர்ந்த விருப்பத்திற்கு இணக்கமாகவே அமையும். மஹேஸ்வரனால் கொடுக்கப்படவில்லையென்றால் நான் தேவர்களின் அரசுரிமையையும் கொள்ள மாட்டேன்.(183) சொர்க்கத்தின் ஆட்சிப்பகுதிகளை நான் அடைய விரும்பவில்லை. பிரம்ம லோகத்தை நான் விரும்பவில்லை. உண்மையில், விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுவதும், முற்றாகப் பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுவதுமான தனிப்பட்ட இருப்பின் அழிவை நான் விரும்பவில்லை. ஆனால் நான் ஹரனின் அடிமையாக வேண்டுகிறேன்[13].(184) தலையில் மகுடம் தரித்தவனும், சந்திர வட்டிலைப்போன்ற தூய வெண்ணிற உடலைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான அந்தச் சிறப்புமிக்க மஹேசன் என்னிடம் நிறைவடையாத வரையில் உடல் படைத்த உயிரினங்கள் அனைத்திற்கும் நூறு முறை நேரும் முதுமை, மரணம், பிறவி மூலம் கிட்டும் துன்பம் அனைத்தையும் நான் உற்சாகமாகப் பொறுத்துக் கொள்வேன்.(185) முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டவனும், சூரியன், சந்திரன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டவனும், மூவுலகங்களில் காணப்படும் உண்மையான மற்றும் உண்மையற்ற அனைத்தின் வேராக இருப்பவனும், அல்லது அவற்றுக்கு மூலக் காரணனனும், பகுபடாத ஒரே இருப்பாக உள்ளவனுமான ருத்திரனை நிறைவடையச் செய்யாமல் இந்த அண்டத்தில் அமைதிநிலையை அடைய இயன்றவன் எவன் இருக்கிறான்?(186) என் குற்றங்களின் விளைவால் எனக்கு மறுபிறவிகள் நேருமாயின், அந்தப் பிறவிகள் அனைத்திலும் நான் பவனிடம் மட்டுமே என்னை அர்ப்பணிப்பேன் {பக்தி கொள்வேன்}” என்றேன்.(187)இந்திரன் {இந்திரனாக வந்த சிவன்}, “பரம்பொருளின் இருப்புக்கு, அல்லது காரணங்கள் அனைத்திற்கும் காரணமாக அவன் இருப்பதற்கு என்ன காரணங்களை உம்மால் சொல்ல முடியும்?” என்று கேட்டான்.(188)

உபமன்யு {நான்}, “இருப்பு மற்றும் இல்லாமையாக, வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாதவனாக, நித்தியமானவனாக அல்லது மாற்றமில்லாதவனாக, ஒருவனாக மற்றும் பலராகப் பிரம்மத்தை ஓதுபவர்கள் எவனை விளக்குகிறார்களோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(189) தொடக்கம், நடுவுநிலை, முடிவு ஆகியவை இல்லாதவனும், ஞானம் மற்றும் பலமாக இருப்பவனும், புலப்படாதவனும், பரமாத்மாவும் எவனோ அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(190) பலம் அனைத்தும் வரும் இடமாக இருப்பவனும், எவராலும் படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், எந்த வித்திலிருந்தும் எழாதவனாக இருந்தாலும், அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களின் வித்தாக இருப்பவன் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(191) இருள் குணத்தை {தமஸ் குணத்தைக்} கடந்தவனும், சுடர்மிக்கப் பிரகாசமாக இருப்பவனும், தவங்கள் அனைத்தின் சாரமாக இருப்பவனும், அவனைப் புரிந்து கொள்ளும் நோக்கில் நாம் கொள்ளும் திறன்கள் அனைத்தையும் கடந்தவனும், துன்பம் அல்லது கவலையில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் அறிய வேண்டியவனும் எவனோ அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(192) ஓ! புரந்தரா, பூதங்கள் அனைத்தின் படைப்பையும், உயிரினங்கள் அனைத்தின் எண்ணங்களையும் அறிந்தவனும், இருப்புக்கு, அல்லது அனைத்து உயிரினங்களின் படைப்புக்கு மூலக் காரணனும், எங்கும் நிறைந்திருப்பவனும், அனைத்தையும் கொடுக்கும் பலம் கொண்டவனும் எவனோ அவனையே நான் வழிபடுகிறேன்.(193)

வாதத்தால் {விவாதத்தால்} புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், சாங்கிய மற்றும் யோக அமைப்பு தத்துவங்களின் பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களையும் கடந்திருப்பவனும், வேண்டப்படும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அனைவராலும் வழிபடப்பட்டுத் துதிக்கப்படுபவனும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(194) ஓ! மகவத், மகவத்தின் ஆன்மாவாக இருப்பவனும், தேவர்களின் தேவனும், உயிரினங்கள் அனைத்தின் ஆசானும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(195) உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரம்மனை முதலில் படைத்தவனும், வெளியை (தன் சக்தியால்) நிறைத்து ஆதி முட்டையை இருப்புக்கு அழைத்தவனும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்[14].(196) நெருப்பு, நீர், காற்று, நிலம், வெளி, மனம், மஹத் என்றழைக்கப்படுவது ஆகியற்றைப் படைத்தவன் பரமனைத் தவிர வேறு எவன்?(197) ஓ! சக்ரா, எனக்குச் சொல்வாயாக; மனம், புத்தி, அகங்காரம், தன்மாத்திரைகள் மற்றும் புலன்களைச் சிவனைத் தவிர வேறு எவனால் படைக்க முடியும்? சிவனைவிட உயர்ந்தவன் வேறு எவன்?[15](198) இந்த அண்டத்தைப் படைத்தவன் பெரும்பாட்டனான பிரம்மனே என ஞானிகள் சொல்கின்றனர். எனினும், அந்தப் பிரம்மன், தேவர்களின் தேவனான மஹாதேவனைத் துதித்து, நிறைவடையச் செய்ததன் மூலமே தன் பலத்தையும், செழிப்பையும் அடைந்தான்.(199) பிரம்மன், விஷ்ணு மற்றும் ருத்திரனைப் படைத்த அந்தச் சிறப்புமிக்கவனில் இருக்கும் (படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற) அந்த உயர்ந்த பலமானது மஹாதேவனிடமிருந்து அடையப்பட்டதே. எனக்குச் சொல்வாயாக; அந்தப் பரமனுக்கு மேலானவன் வேறு எவன்?[16](200)தைத்தியர்கள் மற்றும் தானவர்களில் முதன்மையானவர்களின் ஒடுக்கும் சக்தி மற்றும் அரசுரிமையின் மூலம் தீர்மானிக்கும் பலத்தைக் கொடுக்கவும், திதியின் மகன்களைத் தலைமைத்துவத்துடன் இணைக்கவும் வல்லவன் அந்தத் தேவர்களின் தேவனைத் தவிர வேறு எவன்?[17](201) திசைகளின் பல்வேறு புள்ளிகள், காலம், சூரியன், ஒளிரும் பொருட்கள், கோள்கள், காற்று, நீர், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள் ஆகியவையும் நீ மஹாதேவனிடம் இருந்து வந்தவன் என்பதை அறியும். எமக்குச் சொல்; அந்தப் பரமனை விட உயர்ந்தவன் வேறு எவன்?(202) வேள்வியைப் படைத்து, திரிபுரத்தை அழித்த காரியங்களில் மஹாதேவனைத் தவிர வேறு எவன் இருக்கிறான்? தைத்தியர்கள் மற்றும் தானவர்களை அடைந்து பகைவர்களை நொறுக்குபவனாகச் செயல்படுபவன் மஹாதேவனைத் தவிர வேறு எவன்? (203) ஓ! புரந்தரா, ஓ! தேவர்களில் சிறந்தவனே, சித்தர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் மற்றும் முனிவர்களால் வழிபடப்படும் ஆயிரங்கண் கொண்ட உன்னை நான் காணும்போது, போலி தத்துவங்கள் நிறைந்த பல போலி வாக்கியங்களின் தேவை என்ன இருக்கிறது? ஓ! குசிகர்களில் சிறந்தவனே, இவை அனைத்தும், தேவர்களின் தேவனான மஹாதேவனின் கருணையால் விளைந்தவையே[18].(204,205)ஓ! கேசவா, சொர்க்கத்திலும், பிற காணப்படாதவற்றிலும் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும், நீக்கமற நிறைந்திருக்கும் தலைவனையே ஆன்மாவாகக் கொண்டிருக்கும் இந்த உலகங்களும் மஹேஸ்வரனிடம் இருந்தே வந்தன, ஜீவன் அனுபவிப்பதற்காக (அவனால்) படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக[19].(206) கேட்கப்படும் அனைத்தையும் அறிந்தவர்கள், பூ, புவ, சுவ, மஹா என்ற பெயர்களில் அறியப்படும் உலகங்களிலும், லோகாலோக மலைகளுக்கு மத்தியிலும், தீவுகளிலும், மேரு மலைகளிலும், மகிழ்ச்சியை விளைவிக்கும்அனைத்துப் பொருட்களிலும், உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் மஹேஸ்வரன் வசிப்பதாகச் சொல்கிறார்கள்.(207) ஓ! சக்ரா, பவனைத் தவிர வேறு எந்தப் பலமிக்க வடிவையும் தேவர்களும் அசுரர்களும் காணமுடியவில்லையெனில், அதிலும் குறிப்பாக முன்னவர்கள் {தேவர்கள்} எதிர்க்கப்படும்போதும், பின்னவர்களால் {அசுரர்களால்} பீடிக்கப்படும்போதும் அவ்வடிவத்தின் பாதுகாப்பை நாடவில்லையா?(208) தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்களுக்கிடையில் பரஸ்பர அழிவை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் பகைமிக்கப் போர்கள் அனைத்திலும், அழிவடைவோரின் செயல்கள் சார்ந்த நிலைக்கு இணங்கிய பலத்தைப் பவனே அவர்களுக்குக் கொடுக்கிறான்.(209) எனக்குச் சொல்வாயாக; அந்தகன், சுக்ரன், துந்துபி, மஹிஷன், முதன்மையான யக்ஷர்கள் பலர், பலன், ராட்சசர்கள் மற்றும் நிவாதகவசர்கள் ஆகியோருக்கு வரங்களை அருளி மீண்டும் அவற்றை அவர்களிடம் இருந்து பறிக்க மஹேஸ்வரனைத் தவிர வேறு எவனால் இயலும்?(210) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசானான {தந்தையான} மஹாதேவனின் உயிர் வித்து நெருப்பில் ஆகுதியாக ஊற்றப்படவில்லையா? அந்த வித்தில் இருந்தே தங்க மலை {பொன்மலை} உதித்தது. இத்தகைய குணத்துடன் கூடிய வித்தைக் கொண்டவன் வேறு எவன்?[20](211)திசைகளையே தன் ஆடையாகக் கொண்டவன் என இவ்வுலகில் பாடப்படுபவன் வேறு எவன் இருக்கிறான்? மேல்நோக்கிய உயிர்வித்துடன் கூடிய ஒரு பிரம்மச்சாரி என்று சொல்லப்படுபவன் வேறு எவன்? தன் உடலில் பாதியை அன்பு மனைவிக்குக் கொடுப்பவன் வேறு எவன்? காமதேவனை அடக்கவல்லவன் வேறு எவன்?(212) ஓ! இந்திரா, தேவர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பரமானந்தம் நிறைந்த உயர்ந்த பகுதியைக் கொண்டவன் வேறு எவன்? சுடலையையே தனது விளையாட்டு மைதானமாகக் கொண்டவன் வேறு எவன்? ஆடலுக்காகப் புகழப்படுபவன் வேறு எவன்?(213) எவனுடைய வழிபாடும், பலமும் மாற்றமில்லாததாகவே நீடிக்கிறது? பூத கணங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பவன் வேறு எவன்? ஓ! தேவா, தன்னைப் போலவே பலம் நிறைந்தவர்களையும், அந்தப் பலத்தில் செருக்கு கொண்டவர்களையும் தன் துணைவர்களாகக் கொண்டிருப்பவன் வேறு எவன்?[21](214) மாற்றமில்லாதது என மூவுலகங்களாலும் மதிக்கப்பட்டு வழிபடப்படும் இடத்தை {கைலை மலையைக்} கொண்டவன் வேறு எவன்? மழையைப் பொழிந்து, வெப்பத்தைக் கொடுத்து, சக்தியால் சுடர்விடுபவன் வேறு எவன்?(215) நம் மூலிகைச் செல்வத்தை யாரிம் இருந்து நாம் பெறுகிறோம்? அனைத்து வகைச் செல்வங்களையும் தாங்குபவன் எவன்? அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட மூவுலகங்களிலும் விரும்பியவாறு விளையாடுபவன் வேறு எவன்?(216)ஓ! இந்திரா, மஹேஸ்வரனே (அனைத்திற்கும்) மூலக் காரணன் என்பதை அறிவாயாக. ஞானம், (தவ) வெற்றி, சாத்திர விதிகளில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் ஆகியவற்றின் மூலம் யோகிகள், முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்களால் அவன் துதிக்கப்படுகிறான்.(217) வேள்விகள் செய்வது மற்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்வது ஆகியவற்றின் துணை மூலம் தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும் அவன் துதிக்கப்படுகிறான். செயற்கனிகள் அனைத்தையும் கடந்தவனாக இருப்பதால் அவற்றால் அவனை ஒருபோதும் தீண்டமுடியாது. இவ்வாறு இருக்கும் அவனையே அனைத்தின் மூலக் காரணன் என்று நான் அழைக்கிறேன்.(218) அவன் திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {ஸூக்ஷ்மமாகவும்} இருக்கிறான். அவன் ஒப்பில்லாதவனாக இருக்கிறான். புலன்களால் அவனை உணர முடியாது. குணங்களுடன் கூடியவனாகவும், அவை அற்றவனாகவும் அவன் இருக்கிறான். குணங்கள் அவனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவனே குணங்களின் தலைவனாவான். மஹேஸ்வரனின் இடம் இத்தகையதே.(219) (அண்டத்தின்) வாழ்வுக்கும், அழிவுக்கும் காரணன் அவனே. அண்டத்தின் காரணனும், அதன் அழிவுக்குக் காரணனும் அவனே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே. அனைத்துப் பொருட்களுக்கும் தந்தை அவனே. உண்மையில், அனைத்துக்கும் காரணன் அவனே.(220)

அவன் மாற்றமில்லாதவன், அவன் வெளிப்படாதவன், ஞானம் அவனே; அறியாமை அவனே; ஒவ்வொரு செயலும் அவனே; ஒவ்வொரு விடுபடலும் அவனே; அறம் அவனே; மறம் அவனே. ஓ! சக்ரா, அனைத்துக்கும் காரணன் என என்னால் அழைக்கப்படுபவனும் அவனே.(221) ஓ! இந்திரா இரு பாலினங்களின் குறியீட்டையும் கொண்டிருக்கும் மஹாதேவனின் சின்னத்தை {லிங்கத்தைக்} காண்பாயாக. படைப்பு மற்றும் அழிவு ஆகிய இரண்டுக்கும் காரணனும், தேவதேவனுமான அந்த ருத்திரன், தன் வடிவத்தில் அண்டத்தின் படைப்புக்கான ஒரே காரணமான இரண்டு பாலினங்களின் குறியீடுகளையும் வெளிப்படுத்துகிறான்[22].(222) முன்பு எனக்கு அவனே அண்டத்தின் காரணன் என்றும், அனைத்திற்கும் காரணமான ஒருவன் என்றும் என் அன்னை சொல்லியிருக்கிறாள். ஓ! சக்ரா, ஈசனைவிட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உனக்கு விருப்பமிருந்தால் அவனது அன்பையும், பாதுகாப்பையும் பெற அவனிடம் பணிவாயாக.(223) ஓ! தேவர்களின் தலைவா, (மஹாதேவனால் வெளிப்படுத்தப்படும்) பாலினக் கலப்பின் மூலமே அண்டம் உதித்தது என்பது காணத்தக்க சான்றே. குணங்கள் கொண்டவை, குணங்கள் அற்றவை, பிரம்மன் மற்றும் பிற வித்துகளை உடனடிக் காரணங்களாகக் கொண்டவை ஆகியவற்றின் தொகையே அண்டம் என்பதை நீ அறிவாய். ஆயிரம் ஆசைகள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்ட பிரம்மன், இந்திரன், ஹுதாசன் {அக்னி}, விஷ்ணு மற்றும் பிற தேவர்கள், தைத்தியர்கள் அசுரர்கள் அனைவரும் மஹாதேவனை விட உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை என்று எப்போதும் சொல்கிறார்கள்.(224) அசையும் மற்றும் அசையாதன அடங்கிய அண்டத்தில் அனைவராலும் அறியப்பட்டவனும், சிறந்தவன், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவன், மங்கலமே வடிவானவன் என்று சொல்லப்படுபவனுமான அந்தத் தேவனிடம் ஆசையால் உந்தப்பட்டு, கட்டுப்பாட்டுடன் கூடிய மனத்துடன் உடைமைகள் அனைத்திலும் உயர்ந்த விடுதலையை {முக்தியைத்} தாமதமில்லாமல் கேட்கிறேன்[23].(225)(நான் நம்புவது என்ன என்பதை நிறுவ) வேறு காரணங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? உயர்ந்த மஹாதேவனே அனைத்துக் காரணங்களுக்கும் காரணமாக இருக்கிறான். மஹாதேவனைத் தவிர வேறு எந்தத் தேவனின் அடையாளத்தையும் {லிங்கத்தையும்} தேவர்கள் துதித்ததாக நாம் ஒருபோதும் கேட்டதில்லை.(226) மஹேஸ்வரன் ஏற்கப்படவில்லையென்றால், வேறு யாருடைய சின்னமாவது வழிபடப்படுகிறது, அல்லது தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுகிறது என்று நீ எப்போதாவது கேட்டதுண்டா?(227) ஓ! இந்திரா, நீ உட்படப் பிரம்மன், விஷ்ணு மற்றும் பிற தேவர்கள் அனைவராலும் வழிபடப்படும் சின்னத்தை {லிங்கத்தைக்} கொண்டவனே உண்மையில் துதிக்கத்தக்க தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(228) பிரம்மன் தாமரையைத் தன் சின்னமாகக் கொண்டிருக்கிறான். விஷ்ணு சக்கரத்தைக் கொண்டிருக்கிறான். இந்திரன் வஜ்ரத்தைக் கொண்டிருக்கிறான். ஆனால் உலகின் உயிரினங்கள் இந்தத் தேவர்களின் சின்னங்களைத் தரிப்பதில்லை. மறுபுறம், மஹாதேவன் மற்றும் அவனது மனைவியின் சின்னங்களையே உயிரினங்கள் அனைத்தும் தரித்திருக்கின்றன. எனவே, உயிரினங்கள் அனைத்தும் மஹேஸ்வரனுக்குச் சொந்தமானவை என்றே கருதப்பட வேண்டும்.(229) உயிரினங்களில் பெண் பாலினத்தவர் அனைவரும் உமையின் இயல்பையே தங்கள் காரணமாகக் கொண்டு உதித்தவர்கள் எனவே உமைக்குச் சொந்தமான பெண்மையின் குறியீட்டை அவர்கள் தரிக்கிறார்கள்; அதே வேளையில் உயிரினங்களில் ஆண் பாலினத்தவர் அனைவரும் சிவனில் இருந்து உதித்து, சிவனுக்குச் சொந்தமான ஆண் குறியைத் தரிக்கின்றனர். அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும், மஹாதேவனின் குறியீட்டையோ, அவனது மனைவியின் குறியீட்டையோ தரிக்காமலும், அந்த உயர்ந்த தலைவனைத் தவிர வேறு காரணம் இருக்கிறது என்று சொல்பவன் மிக இழிந்தவனாகக் கருதப்பட்டு, அவனை அண்டத்தின் உயிரினங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது[24].(230) ஆண் பாலினக் குறியீட்டுடன் கூடிய ஒவ்வொருவரும் ஈசானன் என்றும், பெண் பாலினக் குறியீட்டுடன் கூடிய ஒவ்வொருவரும் உமை என்றும் அறியப்பட வேண்டும். அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் இரு வகை வடிவங்களால் நீக்கமற நிறைந்திருக்கின்றன.(231) மஹாதேவனிடம் இருந்தே நான் வரங்களைப் பெற விரும்புகிறேன். ஓ! கௌசிகா, இதில் தவறினால் நான் அழிவையே விரும்புகிறேன். ஓ! சக்ரா, ஓ! பலனைக் கொன்றவனே, விரும்பியவாறு செல்வாயாக, அல்லது இருப்பாயாக.(232) வரங்களையோ, சாபங்களையோ நான் மஹாதேவனிடம் இருந்தே பெற விரும்புகிறேன். வேறு எந்தத் தேவனையும் நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என் விருப்பங்கள் அனைத்தும் கனியும் வரத்தை வேறு எந்தத் தேவனிடம் இருந்தும் பெறவும் மாட்டேன்” என்றேன் {என்றார் உபமன்யு}.(233)

உபமன்யுவின் சிவத் துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 14உ-உபமன்யுவிடம் இந்திரனாக வந்தவன் சிவனாக மாறியது; அந்தக் காட்சி மாறுதலை நுணுக்கமாக விவரித்த உபமன்யு; உபமன்யு சொன்ன சிவத் துதி…

{உபமன்யு தொடர்ந்தார்}, தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, என் கடுந்தவங்களாலும் மஹாதேவனை நிறைவடையச் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் தந்த துயரத்தில் மூழ்கினேன்.(234) எனினும், கண்ணிமைப்பதற்குள் என் முன்னிருந்த தெய்வீக யானையானது, அன்னம், அல்லது குருக்கத்திப்பூ, அல்லது தாமரைத் தண்டு, அல்லது வெள்ளி, அல்லது பாற்கடலைப் போன்ற வெண்ணிறம் கொண்ட ஒரு காளையாக மாறியது. பேருடலைப் படைத்திருந்த அதன் வால் கருப்பாகவும், அதன் கண்கள் தேனைப் போன்ற பழுப்பு நிறத்திலும் இருந்தன.(235,236) வஜ்ரம் போன்று கடினமானதாக இருந்த அதன் கொம்புகள் தங்க நிறத்தில் இருந்தன. இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அதன் கூர்முனைகளைக் கொண்டு அந்தக் காளை பூமியைப் பிளக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(237) அவ்விலங்கு, பசும்பொன்னாலான ஆபரணங்களால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் முகம், குளம்புகள், மூக்கு, காதுகள் ஆகியன மிக அழகாக இருந்தன, அதன் இடையும் கட்டுக்கோப்பாக இருந்தது.(238) அதன் விலாப்புறங்கள் பேரழகுடன் இருந்தன, அதன் கழுத்து மிகப்பருத்திருந்தது. அதன் திமில் பேரழகுடன் ஒளிர்ந்து, தோள் பகுதி முழுவதையும் நிறைத்திருப்பதாகத் தெரிந்தது. (239) அது பனிமலைச் சிகரம் போலவோ, வானத்தில் உள்ள மேகங்களைப் போலவோ தெரிந்தது. அவ்விலங்கின் முதுகில் சிறப்புமிக்க மஹாதேவனும், அவனது மனைவியான உமையும் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(240)

உண்மையில் மஹாதேவன் முழுமையாக இருக்கும் நட்சத்திரத் தலைவனை {சந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவனது சக்தியில் பிறந்த நெருப்பானது, மேகங்களுக்கு மத்தியில் தோன்றும் மின்னல் கீற்றுகளின் பிரகாசத்துக்கு ஒப்பாக இருந்தது. உண்மையில் பளிச்சிடும் காந்தியால் அனைத்துப் புறங்களையும் நிறைத்தபடி ஆயிரம் சூரியர்கள் எழுந்ததைப் போலத் தெரிந்தது. அந்தப் பரமனின் சக்தியானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தது.(241,242) திசைகள் அனைத்தும் அந்தச் சக்தியால் நிறைந்திருந்ததால் என்னால் எந்தப் பக்கத்திலும் எதையும் காண முடியவில்லை. கவலையில் நிறைந்த நான் இஃது என்னவாக இருக்கும் என்று மீண்டும் சிந்தித்தேன்.(243) எனினும், அந்தச் சக்தி நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை, அந்தத் தேவதேவன் மாயையின் மூலம் திசைகள் தெளிவடைந்தன.(244) அதன்பிறகே நான் காளையின் முதுகில் அருளப்பட்டவனாக, ஏற்புடைய தோற்றத்தில், புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்த சிறப்புமிக்க ஸ்தாணு அல்லது மஹேஸ்வரனைக் கண்டேன்.(245) அந்தப் பெருந்தtவன் களங்கமற்ற குணங்களைக் கொண்ட பார்வதியுடன் இருந்தான்.

உண்மையில், எதிலும் பற்று கொள்ளாதவனும், அனைத்து வகைச் சக்திகளின் கொள்ளிடமாக இருப்பவனும், நீலமிடறு கொண்டவனுமான உயர் ஆன்ம ஸ்தாணுவை, பதினெட்டுக் கரங்களுடன், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனாகக் கண்டேன்.(246) அவன் வெள்ளுடைகள் உடுத்தி, வெண் மாலைகள் சூடி, மேனியில் வெண்பூச்சுப் பூசியிருந்தான். அண்டத்தில் தடுக்கப்படமுடியாததான அவனது கொடியின் நிறம் வெள்ளையாக இருந்தது. அவனது மேனியைச் சுற்றியிருந்த நூலும் {பூணூலும்} வெள்ளையாகவே இருந்தது.(247) தனக்கு இணையான ஆற்றலைக் கொண்டவர்களும், ஆடுபவர்களும், பாடுபவர்களும், பல வகை இசைக்கருவிகளை இசைப்பவர்களுமான அவனது துணைவர்களால் {கணங்களால்} அவன் சூழப்பட்டிருந்தான்.(248) வெண்ணிறம் கொண்ட பிறைச் சந்திரன் அவனது மகுடமாக அமைந்து, அவனது நெற்றியில் கூதிர் கால ஆகாயத்தில் எழும் சந்திரனைப் போலத் தெரிந்தது. மூன்று சூரியர்களைப் போலத் தெரிந்த அவனது முக்கண்களின் விளைவால் அவன் காந்தியில் பளிச்சிடுபவனாகத் தெரிந்தான்.(249) அவனது உடலில் இருந்த தூய வெண்ணிற மாலை, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தூய வெண்ணிற தாமரைச் சரத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(250)

ஓ! கோவிந்தா, அளவிலா ஆற்றலைக் கொண்டவையும், பவனுக்குச் சொந்தமானவையும், அனைத்து வகைச் சக்திகளும் நிறைந்தவையுமான ஆயுதங்களை அவற்றின் உடல் கொண்ட வடிவங்களை நான் கண்டேன்.(251) அந்த உயர் ஆன்ம தேவன் வானவில்லுக்கு ஒப்பான நிறங்களைக் கொண்ட ஒரு வில்லை ஏந்தியிருந்தான். பிநாகம் என்ற பெயரில் கொண்டாடப்படும் அந்த வில் உண்மையில் ஒரு பெரும்பாம்பாகும்.(252) உண்மையில் ஏழு தலைகள், பேருடல், கூரிய பற்கள், கடும் நஞ்சு, பெருங்கழுத்து ஆகியவற்றைக் கொண்ட ஓர் ஆண் பாம்பே அதைச் சுற்றிலும் நாண்கயிறாகக் கட்டப்பட்டிருந்தது.(253) சூரியன் அல்லது யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போன்ற காந்தியுடன் ஒரு கணையும் அதில் இருந்தது. உண்மையில் அந்தக் கணையானது, வலிமைமிக்கதும், பயங்கரமானதும், தனக்கு இணையான மற்றொன்று இல்லாததும், விவரிக்க முடியாத சக்தியைக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய ஆயுதமுமான சிறப்புமிக்கப் பாசுபதமே ஆகும். பெரும் வடிவத்தில் இருந்த அஃது இடையறாமல் நெருப்புப் பொறிகளைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(254,255)

அஃது {ஒரே} ஒரு காலையும், பெரிய பற்களையும், ஓராயிரம் தலைகளையும், ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களையும், ஆயிரம் நாவுகளையும், ஆயிரம் கண்களையும் கொண்டிருந்தது. உண்மையில் அது தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(256) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உண்மையில் அவ்வாயுதம், பிரம்ம, நாராயண, ஐந்திர, ஆக்நேய, வருண ஆயுதங்களைவிட மேன்மையானதாகும். உண்மையில் அண்டத்தில் உள்ள வேறு எந்த ஆயுதத்தையும் தணிவடையச் செய்யவல்லதாக அஃது இருந்தது.(257) பழங்காலத்தில் சிறப்புமிக்க மஹாதேவன் அவ்வாயுதத்தைக் கொண்டே அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} ஒரு கணத்தில் எரித்து அழித்தான். ஓ! கோவிந்தா, மஹாதேவன் அந்த ஒரே கணையைக் கொண்டு மிக எளிமையாக அந்தச் சாதனையைச் செய்தான்.(258) மஹாதேவனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அவ்வாயுதம், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டத்தையும் கண்ணிமைக்க ஆவதில் பாதி நேரத்திலேயே நிச்சயம் எரித்து விடும் ஆற்றலைக் கொண்டதாகும்.(259) இந்த அண்டத்தில் பிரம்மன், விஷ்ணு மற்றும் தேவர்கள் உட்பட இந்த ஆயுதத்தால் கொல்லப்பட முடியாத வேறு எவனும் இல்லை. ஓ! ஐயா, சிறப்பானதும், அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதுமான அந்த ஆயுதத்தை நான் மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.(260)

பாசுபதத்திற்கு இணையானதும், ஒருவேளை மேன்மையானதும், பெரும் பலம் வாய்ந்ததுமான புதிர்மிக்க மற்றுமோராயுதம் இருக்கிறது. நான் அதையும் கண்டேன். சூலபாணியான மஹாதேவனின் சூலம் என்று அஃது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது.(261) அந்தச் சிறப்புமிக்கத் தேவனால் ஏவப்படும் அவ்வாயுதத்தால், மொத்த பூமியைப் பிளக்கவும், கடலின் நீரை வற்ற செய்யவும், மொத்த அண்டத்தையே அழிக்கவும் இயலும்.(262) பழங்காலத்தில் யுவனாஸ்வனின் மகனும், மூவுலகங்களையும் வென்றவனும், ஏகாதிபத்திய ஆட்சியைக் கொண்டவனும், அளவிலா ஆற்றலைக் கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, அவனது துருப்பினர் அனைவருடன் சேர்த்து {லவணாசுரன் கையில் இருந்த} அவ்வாயுதத்தாலேயே அழிக்கப்பட்டான்.(263) ஓ! கோவிந்தா, பெரும் வலிமையும், பெருஞ்சக்தியும் கொண்டு ஆற்றலில் சக்ரனுக்கு ஒப்பான அந்த மன்னன் {மாந்தாதா}, சிவனிடம் இருந்து பெற்ற சூலத்தின் துணையால் ராட்சசன் லவணனால் கொல்லப்பட்டான்.(264) அந்தச் சூலம் மிகக் கூரிய முனையைக் கொண்டதாகும். மிகப் பயங்கரமான அஃது அனைவருக்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தச் செய்வதாகும். நெற்றியில் மூன்று சுருக்கங்களுடன் சீற்றத்துடன் முழங்கிக் கொண்டு அது மஹாதேவனின் கரத்தில் இருப்பதைக் கண்டேன்.(265) ஓ! கிருஷ்ணா, அது புகையற்ற நெருப்புக்கோ, யுக முடிவில் எழும் சூரியனுக்கோ ஒப்பானதாகும். அந்தச் சூலத்தின் கைப்பிடி ஒரு பெரும்பாம்பினாலானதாகும். அஃது உண்மையில் விவரிக்கப்பட முடியாததாகும். கையில் பாசத்துடன் நிற்கும் யமனைப் போலவே அது தெரிந்தது.(266) ஓ! கோவிந்தா, நான் அவ்வாயுதத்தை மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.

ராமரிடம் {பரசுராமரிடம்} நிறைவடைந்த மஹாதேவனால், க்ஷத்திரியர்களை அழிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட கூர்முனை போர்க்கோடரியான மற்றொரு ஆயுதத்தையும் நான் கண்டேன். (பிருகு குலத்தின்) ராமர் {பரசுராமர்} இந்த ஆயுதத்தைக் கொண்டுதான் உலகமனைத்தின் ஆட்சியாளனாக இருந்த பெரும் கார்த்தவீரியனைப் பயங்கரமான போரில் கொன்றார்.(267,268) ஓ! கோவிந்தா, அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, அந்த ஆயுதத்தைக் கொண்டுதான் இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(269) சுடர்மிக்க முனையைக் கொண்டதும் மிகப் பயங்கரமானதுமான அந்தக் கோடரியானது, பாம்பால் அலங்கரிக்கப்பட்டிருந்த மஹாதேவனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், அது மஹாதேவனின் மேனியில் சுடர்மிக்க நெருப்பின் தழலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(270)

பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனிடம் நான் எண்ணற்ற வேறு தெய்வீக ஆயுதங்களையும் கண்டேன். இருப்பினும், ஓ! பாவமற்றவனே, முக்கியக் குணங்களைக் கொண்ட சிலவற்றின் பெயரை மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(271) அந்தப் பெருந்தேவனின் இடப்புறத்தில், மனோவேகம் கொண்ட அன்னப்பறவைகளுடன் பூட்டப்பட்டதும், பெரும்பாட்டனான பிரம்மன் அமர்ந்திருந்ததுமான தேர் நின்று கொண்டிருந்தது.(272) அதே புறத்திலேயே, சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதங்களைத் தரித்து, வினதையின் மகன் {கருடன்} மீது அமர்ந்திருக்கும் நாராயணனும் தென்பட்டான்.(273) உமா தேவியின் அருகில், பயங்கர ஈட்டி {வேல்} மற்றும் மணிகளைத் தரித்தவனும், மற்றொரு அக்னியைப் போலத் தெரிந்தவனுமான ஸ்கந்தன் {முருகன்} தன் மயில் மீது அமர்ந்திருந்தான்.(274) மஹாதேவனுக்கு முன்பாக, (ஆற்றலிலும், சக்தியிலும்) இரண்டாம் சங்கரனைப் போலத் தெரிந்த நந்தி தன் சூலத்துடன் நிற்பதையும் நான் கண்டேன்.(275)

சுயம்புவான மனுவின் தலைமையிலான முனிவர்கள், பிருகுவைத் தங்களில் முதல்வராகக் கொண்ட முனிவர்கள், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.(276) பூத கணங்கள், தெய்வீகத் தாய்மார்கள்[25] அனைவரும் மஹாதேவனைச் சூழ்ந்து நின்று மதிப்புடன் அவனை வழிபட்டனர்.(277) தேவர்கள் பல்வேறு பாடல்களைப் பாடுவதன் மூலம் மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். ரதந்தரம் {சாம வேத மந்திரம்} சொல்லும் பெரும்பாட்டன் பிரம்மனும் மஹாதேவனைத் துதித்தான்.(278) ஜியேஷ்ட சாமன் சொல்லும் நாராயணனும், பவனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தான். வேத மந்திரங்களில் முதன்மையான சதருத்ரீயத்தின் துணையுடன் சக்ரனும் {இந்திரனும்} துதித்துக் கொண்டிருந்தான்.(279) உண்மையில், பிரம்மன், நாராயணன், சக்ரன் {இந்திரன்} ஆகிய உயர் ஆன்ம தேவர்கள் மூவரும் மூன்று வேள்வி நெருப்புகளைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(280) கூதிர் கால மேகங்களுக்கிடையில் தன் ஒளிவட்டத்திற்கு மத்தியில் உள்ள சூரியனைப் போல அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(281) ஓ! கேசவா, நான் வானில் கூட்டங்கூட்டமாகப் பல சூரியர்களையும், சந்திரர்களையும் கண்டேன். பிறகு அண்டத்தின் பரகுருவான அனைத்தின் சிறப்புமிக்கத் தலைவனைத் துதித்தேன்”.(282)உபமன்யு தொடர்ந்தார் {உபமன்யு கிருஷ்ணனிடம் நான் தொடர்ந்தேன் என்று சொல்கிறார்}, “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! அனைத்துப் பொருட்களின் புகலிடமே, ஓ! மஹாதேவன் என்றழைக்கப்படுபவனே, உன்னை வணங்குகிறேன். சக்ரனின் ஆடை மற்றும் வடிவம் பூண்டு, சக்ரனின் வடிவை ஏற்றுச் சக்ரனாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(283) வஜ்ரதாரியாக, பழுப்பாக, சிவப்பாக இருக்கும் உன்னை வணங்குகிறேன். எப்போதும் பிநாகம் தரித்திருப்பவனும், சங்கு மற்றும் சூலத்தை ஏந்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(284) கருப்பு உடை உடுப்பவனும், கரியவனும், சுருள் முடி கொண்டவனும், கருப்பு மான் தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், தேய்பிறையின் எட்டாம் திதிக்கு {கிருஷ்ணபக்ஷஅஷ்டமிக்குத்} தலைமை தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(285)

வெள்ளை நிறம் கொண்டவனும், வெண்மை என்று அழைக்கப்படுபவனும், வெள்ளுடை உடுத்துபவனும், அங்கமெங்கும் வெண்சாம்பல் {திருநீறு} பூசியவனும், வெண்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(286) செந்நிறம் கொண்டவனும், செவ்வாடை உடுத்துபவனும், செங்கொடிகளுடன் கூடிய செம்பதாகைகள் கொண்டவனும், செம்மாலை சூடுபவனும், செஞ்சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(287) பழுப்பு {பொன்} நிறம் கொண்டவனும், பழுப்பு ஆடை உடுத்துபவனும், பழுப்புக் கொடிகளுடன் கூடிய பழுப்புப் பதாகைகள் கொண்டவனும், பழுப்பு மாலைகளைச் சூடுபவனும், பழுப்புச் சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.தலைக்கு மேலே அரசக்குடை கொண்டவனும், முதன்மையான மகுடத்தைச் சூடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(288) மனோ வேகம் கொண்டவனும், பெரும்பிரகாசம் கொண்டவனும், பாதிப் பாகத்தில் ஹாரம், தோள்வளை மற்றும் குண்டலம் அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(289) தேவர்களில் முதன்மையானவனும், முனிவர்களில் முதன்மையானவனும், இந்திரர்களில் முதன்மையானவனுமான உன்னை வணங்குகிறேன். பாதிப்பாகத்தில் தாமரை மாலை அணிந்தவனும், உடலில் பல தாமரைகளைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(290)

பாதி உடலில் சந்தனக் குழம்பு பூசப்பட்டவனும், பாதி உடலில் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், நறுமணப்பொருட்களால் பூசப்பட்டவனுமான உன்னை வணங்குகிறேன்[26].(291) சூரியனின் நிறத்தைக் கொண்டவனும், சூரியனையே போன்றவனும், சூரியன் போன்ற முகத்தைக் கொண்டவனும், சூரியனைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(292) சோமனாக இருப்பவனும், சோமனைப் போன்று மென்மையானவனும், சந்திர வட்டிலைத் தரிப்பவனும், சந்திரனின் குணத்தைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அழகிய பற்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(293) கருப்பு நிறம் கொண்டவனும், வெள்ளை நிறம் கொண்டவனும், பாதி மஞ்சள் பாதி வெள்ளையான வடிவம் கொண்டவனும், பாதி ஆண், பாதிப் பெண்ணாக இருக்கும் உடலைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(294) காளையை வாகனமாகக் கொண்டவனும், முதன்மையான யானையைச் செலுத்துபவனும், அரிதாக அடையப்படுபவனும், பிறரால் அணுக முடியாத இடங்களுக்குச் செல்ல வல்லவனுமான உன்னை வணங்குகிறேன்.(295)கணங்களால் புகழ் பாடப்படுபவனும், பல்வேறு கணங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், கணங்கள் நடக்கும் பாதையைப் பின்பற்றுபவனும், கணங்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதை நோன்பாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(296) வெண்மேக நிறம் கொண்டவனும், மாலைவேளை மேகங்களின் காந்தியைக் கொண்டவனும், பெயர்களால் விவரிக்கப்பட முடியாதவனும், (அண்டத்தில் வேறு எதனுடனும் ஒப்பிடப்பட முடியாத) சுய வடிவைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(297) செந்நிறத்தில் அழகிய மாலை சூடியிருப்பவனும், செவ்வாடை உடுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(298) தலையில் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மகுடம் கொண்டவனும், அரைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்டவனும், கிரீடத்தில் பல அழகிய ரத்தினங்களைச் சூடுபவனும், தலையில் எட்டு மலர்களைக்[27] கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(299) நெருப்பு வாயும், நெருப்புக் கண்களையும் கொண்டவனும், ஓராயிரம் சந்திரர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், நெருப்பின் வடிவே ஆனவனும், அழகனும், இனிமையானவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், புதிரானவனுமான உன்னை வணங்குகிறேன்.(300)ஆகாயத்தில் திரிபவனும், பசுக்கள் மேயும் புல்வெளிகளில் வசிப்பதை விரும்புபவனும், பூமியில் நடப்பவனும், பூமியாகவே இருப்பவனும், முடிவிலாதவனும், மங்கலம் மிகுந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(301) உடையற்றவனும் (அல்லது திசைகளை மட்டுமே ஆடையாகக் கொண்டவனும்), இருக்கும் ஒரு கணத்திலேயே ஒவ்வோர் இடத்தையும் மகிழ்ச்சிமிக்க இல்லமாக மாற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன். அண்டத்தையே இல்லமாகக் கொண்டவனும், ஞானத்தையும், இன்பத்தையும் ஆன்மாவாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(302) எப்போதும் கிரீடம் தரிப்பவனும், பெரிய தோள்வளையை அணிபவனும், கழுத்தைச் சுற்றும் மாலையாகப் பாம்பைக் கொண்டவனும், மேனியில் அழகிய ஆபரணங்கள் பலவற்றை அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(303) சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களைக் கொண்டவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனும், பாலினமற்றவனும், சாங்கியனும், யோகியுமான உன்னை வணங்குகிறேன்.(304) வேள்விகளில் வழிபடப்படும் தேவர்களின் அருளாக இருப்பவனும், அதர்வணமாக இருப்பவனும், அனைத்து வகை நோய் மற்றும் துன்பங்களைக் குறைப்பவனும், கவலைகள் யாவையும் அகற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(305)

மேகங்களைப் போல ஆழ முழங்குபவனும், பல்வேறு வகை மாயைகளைச் செய்பவனும், மண்ணுக்கும், அதில் விதைக்கப்படும் வித்துக்கும் தலைமை தாங்குபவனும், அனைத்தையும் படைத்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(306) தேவர்கள் அனைவரின் தலைவனும், அண்டத்தின் ஆசானும், காற்றின் வேகம் கொண்டவனும், காற்றின் வடிவே ஆனவனுமான உன்னை வணங்குகிறேன்.(307) பொன்மாலை அணிபவனும், மலைகளிலும், குன்றுகளிலும் விளையாடுபவனும், தேவர்களின் பகைவர் அனைவராலும் துதிக்கப்படுபவனும், கடும் வேகமும், சக்தியும் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(308) பெரும்பாட்டனான பிரம்மனின் தலைகளில் ஒன்றைத் துண்டித்தவனும், மஹிஷன் என்ற பெயர் கொண்ட அசுரனைக் கொன்றவனும், மூன்று வடிவங்களை ஏற்பவனும், அனைத்த வடிவங்களையும் தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(309) அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனும், (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், காம தேவனின் உடலை அழித்தவனும், தண்டக்கோலைத் தரிப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(310)

ஸ்கந்தனும், விசாகனும், பிராமணத் தண்டமும், பவனும், சர்வனும், அண்ட வடிவுமான உன்னை நான் வணங்குகிறேன்.(311) ஈசானனும், பகனை அழித்தவனும், அந்தகனைக் கொன்றவனும், அண்டமேயானவனும், மாயைகளைக் கொண்டவனும், புலப்படுபவனும், புலப்படாதவன் என இரண்டாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(312) உயிரினங்கள் அனைத்தின் கதியும், முதன்மையானவனும், அனைத்தின் இதயமும் நீயே. தேவர்கள் அனைவரிலும் பிரம்மன் நீயே, ருத்திரர்களில் சிவப்பும், நீலமும் {நீல லோகிதன்} நீயே.(313) அனைத்து உயிரினங்கள் ஆன்மா நீயே, சாங்கிய தத்துவத்தில் புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே. புனிதப் பொருட்கள் அனைத்திலும் ரிஷபம் {சிறந்தவன்} நீயே. மங்கலம் என்றும் அங்கங்கள் இல்லாதவன் (பகுபடாதவன்) என்றும் யோகியரால் அழைக்கப்படுபவன் நீயே.(314) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} நோற்பவர்களில் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} நீயே, அண்டத் தலைவர்களில் பெருந்தலைவன் நீயே. யக்ஷர்கள் அனைவரிலும் குபேரன் நீயே, வேள்விகள் அனைத்திலும் விஷ்ணு {முதன்மையான வேள்வி} நீயே.(315)

மலைகளில் மேரு நீயே, ஆகாயத்து ஒளிக்கோள்களில் சந்திரன் நீயே, முனிவர்களில் வசிஷ்டர் நீயே, கோள்களில் சூரியன் நீயே.(316) காட்டு விலங்குகளில் சிங்கம் நீயே, வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் அனைத்து மக்களாலும் வழிபடப்படும் காளை நீயே.(317) ஆதித்தியர்களில் விஷ்ணு (உபேந்திரன்) நீயே, வசுகளில் பாவகன் நீயே, பறவைகளில் வினதையின் மகன் (கருடன்) நீயே, பாம்புகளில் அனந்தன் (சேஷன்) நீயே.(318) வேதங்களில் சாமங்கள் நீயே, யஜுஸ்களில் சதருத்ரீயம் நீயே, யோகிகளில் சனத்குமாரர் நீயே, சாங்கியர்களில் கபிலர் நீயே.(319) மருத்துகளில் சக்ரன் {இந்திரன்} நீயே, பித்ருக்களில் தேவராதன் நீயே, (படைக்கப்பட்டவை வசிப்பதற்கான) உலகங்கள் அனைத்திலும் பிரம்மலோகம் நீயே, உயிரினங்கள் அடையும் கதிகள் அனைத்திலும் விடுதலை {முக்தி}, அல்லது மோக்ஷம் நீயே.(320) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, மலைகளில் இமய மலை நீயே, வகைகள் {வர்ணங்கள்} அனைத்திலும் பிராமணன் நீயே, கல்விமான்களான பிராமணர்கள் அனைவரிலும் தீக்ஷை {யாகதீக்ஷை} பெற்றவன் நீயே.(321)

உலகில் உள்ள பொருட்கள் அனைத்திலும் சூரியன் நீயே, அனைத்தையும் அழிக்கும் காலன் நீயே. அண்டத்தில் உள்ள மேன்மையான சக்தி மற்றும் திறன்கள் அனைத்தும் நீயே.(322) உயர்ந்த பலத்தைக் கொண்டவன் நீயே. இதுவே என் நிச்சயமான தீர்மானமாகும். ஓ! பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, ஓ! வழிபடுபவர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவனே, உன்னை வணங்குகிறேன்.(323) ஓ! யோகியரின் தலைவா, உன்னை வணங்குகிறேன். ஓ! அண்டத்தின் மூலக் காரணனே, உனக்குத் தலைவணங்குகிறேன். உன்னை வழிபடுபவனும், ஏழையும், ஆதரவற்றவனுமான என்னிடம் நிறைவடைவாயாக.(324) ஓ! நித்திய தலைவா, உன்னை வழிபடுபவனும், மிகப் பலவீனனும், வறியவனுமான இவனுக்கு {எனக்குப்} புகலிடமாவாயாக. ஓ! பரமனே, நான் செய்த பிழைகளை மன்னித்து, உன்னை அர்ப்பணிப்புடன் வழிபடுபவன் என்ற அடிப்படையில் என்னிடம் கருணை கொள்வதே உனக்குத் தகும்.(325) ஓ! தேவர்கள் அனைவருக்கும் தலைவா, நீ எனக்கு முன் தோன்றிய தோற்றத்தின் விளைவால் நான் மயக்கமடைந்தேன். {எனவே}, ஓ! மஹேஸ்வரா, நான் உன் பாதங்களைக் கழுவ நீர், அல்லது அர்க்கியம் கொடுக்க வில்லை” {என்று சொல்லி சிவனை வணங்கினேன்}.(326)

கிருஷ்ணனின் சிவத் துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஊ-சிவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற உபமன்யு; சிவனை நோக்கித் தவமிருந்த கிருஷ்ணன்; கிருஷ்ணன் சொன்ன சிவத் துதி…

{உபமன்யு {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தார்}, ஈசானனின் புகழை இவ்வாறு பாடிவிட்டு, பெரும் அர்ப்பணிப்புடன் அவனது காலைக் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியப் பொருட்களும் கொடுத்து, அவன் இடப்போகும் எந்த ஆணைக்கும் கீழ்ப்படியத் தயாராக என் கரங்களைக் கூப்பி நின்றேன்.(327) ஓ! ஐயா, அப்போது, தெய்வீக நறுமணத்தைக் கொண்டதும், குளிர்ந்த நீர் படர்ந்ததுமான மங்கல மலர்மாரி என் தலையில் பொழிந்தது.(328) தேவ இசைக்கலைஞர்கள் தங்கள் பேரிகைகளை இசைக்கத் தொடங்கினர். ஏற்புடைய, நறுமணமிக்க இனிய தென்றல் வீசத் தொடங்கி என்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(329) அப்போது காளையைத் தன் சின்னமாகக் கொண்டவனும், மனைவியின் துணையுடன் கூடியவனுமான மஹாதேவன் என்னைப் பெரும் மகிழ்ச்சியில் நிறைக்கும் வகையில் தேவர்களிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்,(330) “தேவர்களே உயர் ஆன்ம உபமன்யுவின் அர்ப்பணிப்பைப் பாருங்கள். உண்மையில் அந்த அர்ப்பணிப்பு மாறாமல் நீடித்திருப்பதும், நிலையானதும், பெரியதும், முற்றிலும் மாற்றமில்லாததுமாகும்” என்றான்.(331)

சூலபாணியான அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஓ!கிருஷ்ணா, அவனுக்குத் தலைவணங்கிய தேவர்கள் மதிப்புடன் தங்கள் கரங்களைக் குவித்துக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்,(332) “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் ஆசானே, ஓ!அனைவருக்கும் தலைவா, இந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடையட்டும்” என்றனர்.(333)

பெரும்பாட்டனான பிரம்மனுடன் கூடிய தேவர்கள் அனைவராலும் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஈசன் மற்றும் சங்கரன் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படும் சர்வன், புன்னகைத்தவாறே என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(334) அந்தச் சிறப்புமிக்கச் சங்கரன் {உபமன்யுவிடம்}, “ஓ! அன்புக்குரிய உபமன்யு, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். ஓ! முனிவர்களில் முதன்மையானவனே, என்னைப் பார். ஓ! கல்விமானான முனிவனே, என்னிடம் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்ட நீ என்னால் சோதிக்கப்பட்டாய்.(335) சிவனிடம் நீ கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் நான் உன்னிடம் மிக உயர்வான நிறைவை அடைந்தேன். எனவே, உன் இதயத்தில் நீ கொண்டுள்ள எந்த விருப்பமும் கனியும் தன்மையை நான் இன்று உனக்கு அளிக்கப் போகிறேன்” என்றான்.(336)

பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சியால் என் கண்கள் கண்ணீரால் குளமானது, (அதே உணர்ச்சியின் மூலம்) எனக்கு மயிர்ச்சிலிர்ப்பும் ஏற்பட்டது.(337) மண்டியிட்டு மீண்டும் மீண்டும் அவனை வணங்கிய நான், மகிழ்ச்சியால் அடைபட்ட குரலுடன், அவனிடம்,(338) “ஓ! சிறப்புமிக்கத் தேவா, நான் இவ்வளவு நாளும் இறந்திருந்ததாகவும், இன்றுதான் பிறந்ததாகவும் தெரிகிறது, தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானின் முன்பு இப்போது இருப்பதால் இன்றுதான் நான் என் பிறவிப்பயனை அடைந்தேன்.(339) தேவர்களும் கூட இதயப்பூர்வமான வழிபாட்டைச் செலுத்தாமல் காண முடியாத அளவிலா ஆற்றல் கொண்டவனை நான் என் கண்களால் காண்பதால் என்னைவிடப் பெருமைமிக்கவன் எவன் இருக்க முடியும்?(340) தத்துவங்கள் அனைத்திலும் உயர்ந்தது, நித்தியமானது, அனைத்திலிருந்து வேறுபட்டது, பிறப்பில்லாதது, அறிவே ஆனது, அழிவற்றது என்று கல்வியும் ஞானமும் கொண்டோர் எதைச் சொல்வார்களோ, ஓ! பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, அது தத்துவங்கள் அனைத்தின் தொடக்கமாக இருப்பவனும், அழிவற்றவனும், மாற்றமற்றவனும், தத்துவங்கள் அனைத்தையும் ஆளும் விதிகளை அறிந்தவனும், புருஷர்களில் முதன்மையானவனும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனுமான உன்னுடன் அடையாளங்காணப்படுகிறது.(341,342)

வலப்புறத்தில் இருந்து பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தவனும், அனைத்துப் பொருட்களைப் படைத்தவனும் நீயே. படைப்பைப் பாதுகாக்க இடப்புறத்தில் இருந்து விஷ்ணுவைப் படைத்தவன் நீயே.(343) யுக முடிவு வந்த போதும், படைப்பு மீண்டும் அழிக்கப்படும்போதும் ருத்திரனைப் படைக்கும் பலமிக்கத் தலைவன் நீயே. உன்னிலிருந்து எழுந்த அந்த ருத்திரன், பெருஞ்சக்தி கொண்ட காலன் மற்றும் (பெருங்கடலும் கொள்ள முடியாத அளவு நீரைக் கொண்ட) சம்வர்த்தக மேகம் மற்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவங்களை ஏற்று அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட படைப்பை அழித்தான். உண்மையில் அண்ட அழிவுக்கான காலம் நேரும்போது, அண்டத்தை விழுங்கத் தயாராக ருத்திரன் நிற்கிறான்.(344,345) அசைவன மற்றும் அசையாதன என அனைத்தையும் கொண்ட அண்டத்தின் மூலப் படைப்பாளனான அந்த மஹாதேவன் நீயே. கல்பத்தின் முடிவில் அனைத்துப் பொருட்களையும் உன்னுள் ஈர்த்துக் கொள்பவன் நீயே.(346) அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவும், அனைத்துப் பொருட்களைப் படைத்தவனையும் படைத்தவன் நீயே. தேவர்களாலும் காணப்பட இயலாதவனான நீ அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நீடித்து நிறைந்திருக்கிறாய்.(347) ஓ! தலைவா, என்னிடம் நீ நிறைவடைந்திருந்தால், நீ எனக்கு வரங்களை அளிக்க விரும்பினால், ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, உன்னிடம் நான் கொண்டுள்ள இந்த அர்ப்பணிப்பு எப்போதும் மாறாது நீடித்திருக்கட்டும்.(348) ஓ! தேவர்களில் சிறந்தவனே, உன் அருளின் மூலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் ஞானத்தை நான் அடைய வேண்டுகிறேன்.(349) மேலும் நான் என் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் அனைவருடன் எப்போதும் பால் கலந்த உணவை உண்ண வேண்டும். சிறப்புமிக்கவனான நீ எப்போதும் எங்கள் ஆசிரமத்தில் இருப்பாயாக” என்று கேட்டேன்.(350)

இவ்வாறு என்னால் சொல்லப்பட்டதும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆசானும், அண்டம் அனைத்தினாலும் வழிபடப்படுபவனும், சிறப்புமிக்க மஹேஸ்வரனுமான சிவன், இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னான்.(351) அந்தச் சிறப்புமிக்கத் தேவன், “துன்ப துயரங்கள் அனைத்தில் இருந்தும் நீ விடுபட்டிருப்பாயாக, முதுமைக்கும், மரணத்திற்கும் மேலானவனாக இருப்பாயாக. பெரும் சக்தியுடனும், ஆன்ம அறிவுடன் கூடியவனாகப் புகழடைவாயாக. என் அருளின் மூலம் முனிவர்கள் எப்போதும் உன்னை நாடி வருவார்கள். உன் நடத்தை நல்லதாகவும், அறம் நிறைந்ததாகவும் இருக்கட்டும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தும் உனதாகட்டும், அண்ட அறிவைப் பெற்று, ஏற்புடைய இனிய தோற்றத்துடன் இருப்பாயாக.(353) சிதைவற்ற இளமை உனதாகட்டும், நெருப்பைப் போன்ற சக்தி உனதாகட்டும். மேலும், உனக்கு மிக ஏற்புடையதாக இருக்கும் பாற்கடலானது, நீ விரும்பிய இடத்தில் (உனது மற்றும் உன் நண்பர்களின் உணவுத் தேவைக்காகத்) தோன்றும். நீயும் உன் நண்பர்களும், தேவ அமுதம் கலந்த பாலால் தயாரிக்கப்பட்ட உணவை எப்போதும் அடைவீர்கள்.(354,355) ஒரு கல்பம் நிறைவடைந்ததும் நீ என் தோழமையை அடைவாய். உனது குடும்பம், குலம் மற்றும் உற்றார் உறவினர் வற்றாதவர்களாக இருப்பார்கள்.(356) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, என்னிடம் நீ கொண்ட அர்ப்பணிப்பு நித்தியமானதாக இருக்கும். ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நான் எப்போதும் உன் ஆசிரமத்தில் இருப்பேன்.(357) ஓ! மகனே, நீ விரும்பிய இடத்தில் வாழ்வாயாக, எந்தக் கவலையும் உனதாக வேண்டாம். ஓ! கல்விமானான பிராமணா, நீ நினைத்த மாத்திரத்தில் நான் உன் முன் தோன்றுவேன்” என்றான் {சிவன்}.(358)

இவ்வார்த்தைகளைச் சொல்லி இந்த வரங்களை அளித்தவனும், கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடியவனுமான அந்தச் சிறப்புமிக்க ஈசானன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(359) ஓ! கிருஷ்ணா, கடுந்தவங்களின் துணையுடன் இவ்வாறே நான் அந்தத் தேவர்களின் தேவனைக் கண்டேன். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அந்தப் பெருந்தேவனால் சொல்லப்பட்ட அனைத்தையும் நான் அடைந்தேன்.(360) ஓ!கிருஷ்ணா, இங்கே வசிக்கும் சித்தர்கள், முனிவர்கள், வித்யாதரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரை உன் கண்களின் முன்பு பார்.(361) அனைத்து வகை மலர்களையும், கனிகளையும் விளைவிக்கும் இந்த மரங்களையும், செடி கொடிகளையும் பார். சுற்றிலும் இனிய நறுமணத்தைப் பொழிந்த படியே அழகிய இலைகளுடன் கூடிய அவை அனைத்துக் காலங்களுக்கும் உரிய மலர்களைச் சுமந்து கொண்டிருப்பதைப் பார்.(362) ஓ!வலிய கரங்களைக் கொண்டவனே, உயர்ந்த தலைவனும், உயர் ஆன்ம தேவனுமான அந்தத் தேவர்களின் தேவனுடைய அருளின் மூலம் இவை அனைத்தும் தெய்வீக இயல்பைக் கொண்டிருக்கின்றன” என்றார் உபமன்யு”.(363)

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அவரது வார்த்தைகளைக் கேட்டும், அவன் சொன்ன அனைத்தையும் என் கண்களாலேயே கண்டும் நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். பிறகு நான் பெருந்தவசியான அந்த உபமன்யுவிடம்,(364) “ஓ! கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவரே, தேவர்களின் தேவனே வந்து மதித்த ஆசிரமத்தைக் கொண்ட அறவோன், பெரும்புகழுக்குத் தகுந்து உம்மைத் தவிர வேறு எவன் இருக்கிறான்?(365) ஓ! தவசிகளின் தலைவரே, பலமிக்கவனும், பெரும் சங்கரனுமான அந்தச் சிவன் எனக்கும் காட்சி கொடுத்து எனக்கு நன்மையை அருள்வானா?” என்று கேட்டேன்.(366)

உபமன்யு {கிருஷ்ணனிடம்}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, ஓ! பாவமற்றவனே, நான் கண்டது போலவே நீயும் மஹாதேவனின் காட்சியை வெகு விரைவில் பெறுவாய்.(367) ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவனே, ஓ! மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, இன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து நீ மஹாதேவனின் காட்சியைப் பெறுவாய் என என் ஆன்மப் பார்வையில் நான் காண்கிறேன்.(368) ஓ! யதுக்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, மஹேஸ்வரனிடமிருந்தும், அவனது மனைவியிடமிருந்தும் நீ இருபத்துநான்கு வரங்களைப் பெறுவாய். எது உண்மை என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.(369) உயர்ந்த ஞானத்தைக் கொண்ட அந்தப் பெருந்தேவனுடைய அருளின் மூலம், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை நான் அறிவேன்.(370) ஆயிரக்கணக்காக இருக்கும் இம்முனிவர்களுக்கும், எண்ணற்ற வேறு பிறருக்கும் அந்தப் பெரும் ஹரன் நன்மையைச் செய்திருக்கிறான். ஓ! மாதவா, அந்தப் பெருந்தேவன் உனக்கு ஏன் நன்மையைச் செய்ய மாட்டான். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், கருணையும் நம்பிக்கையும் நிறைந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனைத் தேவர்கள் சந்திப்பது மெச்சத்தகுந்ததே. நான் சில மந்திரங்களை உனக்குச் சொல்கிறேன். நீ அவற்றைத் தொடர்ந்து சொல்வாயாக. இதன் மூலம் நீ நிச்சயம் சங்கரனைக் காண்பாய்” என்றார் {உபமன்யு}” {என்றான் கிருஷ்ணன்}.(372)

அருள்நிறைந்த விஷ்ணு {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “பிறகு நான் அவரிடம், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, ஓ! பெருந்தவசியே, திதியின் மகன்களைக் கூட்டங்கூட்டமாகக் கலங்கடித்த அந்தத் தேவர்கள் தலைவனை உமது அருளின் மூலம் நான் நிச்சயம் காண்பேன்.(373) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, மஹாதேவனைக் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த எட்டு நாட்களும் ஒரு மணி நேரத்தைப் போலக் கடந்து சென்றது.(374) எட்டாம் நாளில் நான் சடங்குகளின்படி அந்தப் பிராமணரின் கரங்களில் தீக்ஷையைப் பெற்றேன். நான் தண்டத்தை அவரது கரங்களில் இருந்து பெற்றேன். பரிந்துரைக்கப்பட்டபடி தலையையும் மழித்துக் கொண்டேன். என் கரங்களில் ஓரளவுக்குக் குசப் புற்களை எடுத்துக் கொண்டேன். மரவுரியை உடுத்திக் கொண்டேன். என் மேனியெங்கும் நெய் பூசிக் கொண்டேன். முஞ்சப் புற்களை நான் என் மடியைச் சுற்றிக் கட்டிக் கொண்டேன்.(375) ஒரு மாத காலம் நான் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். இரண்டாம் மாதத்தில் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் மாதங்களைக் காற்றை மட்டுமே உண்டு கடத்தினேன்.(376) அவ்வளவு காலமும் நான் கரங்களை உயர்த்தியபடி ஒற்றைக் காலில் நின்று கொண்டு, உறக்கத்தைத் துறந்திருந்தேன். ஓ! பாரதரே, பிறகு ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்துடன் தெரிந்த ஒரு ஒளியை நான் ஆகாயத்தில் கண்டேன்.(377)

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்தப் பிரகாசத்துக்கு மத்தியில் நீலமலைத் திரளைப் போலத் தெரிவதும், நாரைவரிசையால் அலங்கரிக்கப்பட்டதும், மகத்தான் வானவில்களால் துலங்கியதும், மின்னல் கீற்றுகள் மற்றும் கண்களுடன் கூடிய இடி நெருப்புடன் கூடியதுமான ஒரு மேகத்தைக் கண்டேன்.(378) அந்த மேகத்திற்கு மத்தியில் பலமிக்க மஹாதேவன் பெரும் பிரகாசத்துடனும், தன் மனைவியான உமையின் துணையுடனும் இருந்தான். உண்மையில் அந்தப் பெருந்தேவன், தவங்கள், சக்தி, அழகு, பிரகாசம் ஆகியவற்றுடன் தன் அருளில் தன் அன்புக்குரிய மனைவியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(379) மனைவியுடன் கூடிய அந்தப் பலமிக்க மஹேஸ்வரன் அந்த மேகத்தின் மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். மேக அடுக்குகளுக்கு மத்தியல் சூரியனும், சந்திரனும் இருப்பதைப் போல அந்தக் காட்சி தோன்றியது.(380) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தேவர்கள் அனைவரின் புகலிடமும், துயரங்கள் அனைத்தையும் விலக்குபவனுமான ஹரனைக் கண்டதால் என் உடலில் மயிர் சிலிர்ப்பு ஏற்பட்டு, என் கண்கள் ஆச்சரியத்தால் விரிவடைந்தன.(381)

மஹாதேவன் தன் தலையில் ஒரு கிரீடம் சூடியிருந்தான். அவன் சூலம் தரித்திருந்தான். புலித்தோல் உடுத்தி, தலையில் சடாமுடி தரித்து, தன் கரங்களில் ஒன்றில் (சந்நியாசிக்குரிய) தண்டத்தைக் கொண்டிருந்தான். மேலும் அவன் பிநாகத்தையும், வஜ்ரத்தையும் கொண்டிருந்தான். அவனது பற்கள் கூர்முனை கொண்டவையாக இருந்தன. தோளில் சிறந்த தோள்வளை பூட்டியிருந்தான். அவனது புனித நூலாக {பூணூலாக} ஒரு பாம்பு அமைந்திருந்தது.(382) பாதம் வரை தொங்குவதும், பலவண்ண மலர்களாலானதுமான சிறந்த மாலை அவன் மார்பில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், கூதிர் கால மாலைப் பொழுதில் மிகப் பிரகாசமாகத் தெரியும் சந்திரனைப் போல நான் அவனைக் கண்டேன்.(383) பல்வேறு வகைப் பூத கணங்களால் சூழப்பட்டிருந்த அவன், பளிச்சென்ற பிரகாசத்துடன் பார்க்கக் கடினமான கூதிர் காலச் சூரியனைப் போலத் தெரிந்தான்.(384) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவும், வெண்செயல்களும் கொண்டவனும், காளையில் அமர்ந்திருந்தவனுமான அந்தத் தேவனைச் சுற்றிலும் ஆயிரத்துநூறு {1100} ருத்திரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அவனைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தனர்.(385)

ஆதித்தியர்கள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் சாத்திரங்களில் உள்ள பாடல்களைச் சொல்லி அந்த அண்டத் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(386) அதிதியின் மகன்களான இந்திரன் மற்றும் அவனது தம்பியான உபேந்திரன் {விஷ்ணு} ஆகிய இருவரும், பெரும்பாட்டன் பிரம்மனும் என இவர்கள் அனைவரும் பவனின் முன்னிலையில் ரதந்தரச் சாமத்தைப் பாடினார்கள்.(387) எண்ணற்ற யோக ஆசான்கள், பிள்ளைகளுடன் கூடிய முனிவர்கள், தெய்வீக முனிவர்கள், பூமாதேவி, (பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடைப்பட்ட) வானம், நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, பருவங்கள், இரவு, வருடங்கள், க்ஷணங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள், தெய்வீக அறிவியல்கள், அறிவின் கிளைகள், வாய்மையை அறிந்தவர்கள் ஆகியோர் பெருந்தகப்பனும் யோகத்தை அளித்தவனுமான அந்த உயர்ந்த ஆசானுக்குத் தலை வணங்கினர்.(388-390)

சனத்குமாரர், வேதங்கள், வரலாறுகள், மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது,(391) மனுக்கள் எழுவர், சோமன், அதர்வணங்கள், பிருஹஸ்பதி, பிருகு, தக்ஷன், காசியபர், வசிஷ்டர், காசியர்,(392) ஓ! யுதிஷ்டிரரே, சந்தங்கள், தீக்ஷை, வேள்விகள், தக்ஷிணை, வேள்வி நெருப்புகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஹவிஸ் (தெளிந்த நெய்) வேள்விக்குத் தேவையான பொருட்கள் என உடல்கொண்ட வடிவங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தோர் அனைவரையும் நான் கண்டேன்.(393) லோகபாலர்கள், ஆறுகள், பாம்புகள், மலைகள், தெய்வீகத் தாய்மார், தேவர்களின் மனைவிமார் மற்றும் மகள்கள்,(394) ஆயிரமாயிரமாக, கோடிக்கணக்கில் இருந்த தவசிகள் ஆகியோர் அமைதியான ஆன்மா கொண்ட அந்தப் பலமிக்கத் தலைவனுக்குத் தலைவணங்குவதை நான் கண்டேன். மலைகள், பெருங்கடல்கள், திசைகள் ஆகியனவும் அதையே செய்தன, கந்தர்வர்கள், இசையில் திறம்பெற்ற அப்ரசரஸ்கள் ஆகியோர்,(395) அற்புதம் நிறைந்தவனான பவனின் புகழை தெய்வீகத் தொனியில் பாடிக் கொண்டிருந்தனர். வித்யாதரர்கள், தானவர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள்,(396) அசைவன, அசையாதன எனப் படைக்கப்பட்டவை அனைத்தும் எண்ணத்ததாலும், சொல்லாலும், செயலாலும் அந்தப் பலமிக்கத் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். தேவர்கள் அனைவரின் தலைவனான சர்வன் என் முன் தோன்றி, மகிமை அனைத்துடன் அமர்ந்திருந்தான்.(397) என் கண் முன்னே மகிமையுடன் அமர்ந்திருக்கும் ஈசானனைக் கண்டு, பெரும்பாட்டன் மற்றும் சக்ரனுடன் கூடிய மொத்த அண்டமும் என்னைப் பார்த்தது.(398) எனினும், மஹாதேவனைப் பார்க்கும் சக்தி எனக்கிருக்கவில்லை.

அப்போது அந்தப் பெருந்தேவன் என்னிடம், “ஓ! கிருஷ்ணா, பார், என்னிடம் பேசுவாயாக.(399) நீ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முறை என்னைத் துதித்திருக்கிறாய். மூவுலகங்களிலும் எனக்கு உன்னைவிட அன்புக்குரியவன் வேறு எவனும் கிடையாது” என்றான்.(400)

நான் அவனுக்குத் தலைவணங்கியதும், அவனது மனைவியான உமாதேவி என்னிடம் நிறைவடைந்தாள். பிறகு, பெரும்பாட்டனான பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படும் அந்தப் பெருந்தேவனிடம் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்”.(401)

அருள் நிறைந்த விஷ்ணு சொன்னான், “நான் மஹாதேவனிடம், ஓ! அனைத்துப் பொருட்களின் நித்திய மூலமா உன்னை வணங்குகிறேன். வேதங்களின் தலைவன் என்று முனிவர்கள் உன்னைச் சொல்கிறார்கள். தவம் என்றும், சத்வம் என்றும், ரஜஸ் என்றும், தமஸ் என்றும், வாய்மை என்றும் அறவோர் உன்னைச் சொல்கிறார்கள்.(402) பிரம்மன் நீயே, ருத்திரன் நீயே, வருணன் நீயே, அக்னி நீயே, மனு நீயே, பவன் நீயே, தாத்ரி நீயே, தாஷ்டிரி நீயே, விதாத்ரி நீயே, அனைத்துப் பொருட்களின் பலமிக்க ஆசான் நீயே, எங்கும் இருப்பவன் நீயே.(403) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் உன்னில் இருந்தே எழுந்தன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டன.(404) புலன்கள், மனம், உயிர் மூச்சுகள் {வாயுக்கள்}, ஏழு வேள்வி நெருப்புகள், நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மாவையே புகலிடமாகக் கொண்டோர், துதிக்கப்படுபவர்களும், துதிகளுக்குத் தகுந்தவர்களுமான தேவர்கள் அனைவரையும்விட மேன்மையானவன் என்று முனிவர்கள் உன்னைச் சொல்கிறார்கள்.(405)

ஓ! சிறப்புமிக்கவனே, வேதங்களும், வேள்விகளும், சோமன், தக்ஷிணை, பாவகன், ஹவிஸ் மற்றும் வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நீயே.(406) வேள்வியால் பெறும் தகுதி {புண்ணியம்}, பிறர் கொடுக்கும் கொடைகள், வேத கல்வி, நோன்புகள், கட்டுப்பாடுடையோரின் ஒழுக்க நெறிகள், பணிவு, புகழ், செழிப்பு, காந்தி, மனநிறைவு, வெற்றி ஆகியன உன்னிடம் வழிநடத்திச் செல்லவே நீடித்திருக்கின்றன.(407) ஓ!சிறப்புமிக்கவனே, ஆசை, கோபம், அச்சம், காமம், செருக்கு, மயக்கம், வன்மம், துன்பம், நோய்கள் ஆகியன உனது பிள்ளைகளே.(408) உயிரினங்கள் செய்யும் செயல்களும் நீயே, அந்தச் செயல்களால் விளையும் இன்பதுன்பங்களும் நீயே, இன்பதுன்பமற்ற நிலைகளும் நீயே, ஆசையின் அழிவில்லாத வித்தான அறியாமை நீயே, மனத்தின் உயர்ந்த மூலம் நீயே, பலம் நீயே, நிலைபேறும் நீயும்.(409) வெளிப்படாதவன் நீயே, பவனன் நீயே, புலப்படாதவன் நீயே, ஆயிரங்கதிர் சூரியன் நீயே, பிரகாசமான சித் நீயே, தத்துவங்கள் அனைத்திலும் முதல் தத்துவம் நீயே, உயிரின் புகலிடம் நீயே.(410)

மஹத், ஆன்மா, புத்தி, பிரம்மன், அண்டம், சம்பு, சுயம்பு, ஆகிய சொற்களின் மூலமும், (வேதங்களில்) அடுத்தடுத்து தோன்றும் இதுபோன்ற பிற சொல்களின் மூலமும், மஹத்துடனும், ஆன்மாவுடனும் உனது இயல்பு (வேதங்களை அறிந்த மனிதர்களால்) அடையாளம் காணப்படுகிறது. உண்மையில் இவையாவும் நீயெனக் கருதியே கல்விமானான ஒரு பிராமணன், உலகத்தின் வேராக இருக்கும் அறியாமையை வெல்கிறான்.(411,412) உயிரினங்கள் அனைத்தின் இதயம் நீயே, க்ஷேத்ரக்ஞன் என்று முனிவர்களால் துதிக்கப்படுபவன் நீயே. உன் கரங்களும் பாதங்களும் அனைத்து இடங்களிலும் நீண்டிருக்கின்றன, உன் கண்களும், தலையும், முகமும் எங்கும் இருக்கின்றன. அண்டத்தில் எங்கும் உள்ளதைக் கேட்பவன் நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே.(413) சூரியனின் விளைவால் எழும் நிமிஷங்கள் மற்றும் காலத்தின் வேறு பிரிவுகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கனியாக இருப்பதும் நீயே.(414) (உயர்ந்த சித்தின்) மூலப் பிரகாசம் நீயே. புருஷன் நீயே, அனைத்துப் பொருட்களில் வசிப்பவன் நீயே. வெற்றியின் யோக குணங்களான நுட்பம், திரள், கனி, மேன்மை, பிரகாசம் மற்றும் மாற்றமில்லாமை ஆகியவை நீயே.(415)

புத்தி, நுண்ணறிவு, மற்றும் உலகங்கள் அனைத்தும் உன்னைச் சார்ந்தே இருக்கின்றன. தியானத்தில் அர்ப்பணிப்பு மிக்கவர்களும், யோகத்தில் எப்போதும் ஈடுபடுபவர்களும் வாய்மையில் அர்ப்பணிப்பும் உறுதியும் கொண்டவர்களும், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களும் உன்னையே நாடுகிறார்கள், உன்னைச் சார்ந்திருக்கிறார்கள்.(416) மாற்றமில்லாதவனாக, அல்லது அனைத்து இதயங்களிலும் வசிப்பவனாக, அல்லது உயர்ந்த பலம் கொண்டவனாக, அல்லது ஆதி புருஷனாக, அல்லது தூய ஞானமாக, அல்லது பிரகாசமிக்கச் சித்தாக, அல்லது நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக உன்னை அறிபவர்கள் நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்களே. உண்மையில் அத்தகைய மனிதர்கள் புத்தியைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள்.(417) (மஹத், அகங்காரம், தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் நுட்பமான ஐம்பூதங்கள் ஆகியவை அடங்கிய) ஏழு நுட்பமான காரியங்கள், (அனைத்துமறிந்த நிலை, நிறைவு அல்லது முழுமை, தொடக்கமற்ற ஞானம், சார்பில்லா நிலை {சுதந்திரம்}, எக்காலத்திலும் பழுதில்லாததும், முடிவற்றதுமான பலம் ஆகிய) ஆறு குணங்கள், போலிக் கருத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட யோகத்தை அறிதல் ஆகியவற்றின் மூலம் ஞானம் கொண்ட மனிதன், பெரியவனான உனக்குள் நுழைவதில் வெல்கிறான்” என்றேன்.(418)

ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, துன்ப துயரங்களை அகற்றுபவனான பவனிடம் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னதும், அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டமானது (என் வார்த்தைகளில் உள்ள உண்மையை அங்கீகரிப்பதை வெளிப்படுத்தும் விதமாக) சிங்க முழக்கம் செய்தது.(419) அங்கிருந்த எண்ணற்ற பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், பல்வேறு ராட்சசர்கள், பூத கணங்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அந்தப் பெருந்தேவனுக்குத் தலைவணங்கினர்.(420) அப்போது பெரும் நறுமணத்தைக் கொண்ட தெய்வீக மலர்கள் என் தலையில் பொழிந்தன, அந்த இடத்தில் இனிமையான தென்றல் வீசியது.(421) பிறகு, அண்டத்தின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், பலமிக்கவனுமான சங்கரன், உமாதேவியையும், தேவர்கள் தலைவனையும், என்னையும் கண்டு, என்னிடம்,(422) “ஓ! கிருஷ்ணா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ எம்மிடம் பெரும் அர்ப்பணிப்பில் நிறைந்திருக்கிறாய் என்பதை நாம் அறிவோம். உன் நன்மைக்கானதைச் செய்வாயாக. நான் உன்னிடம் கொண்ட அன்பும், பாசமும் பெரியதாகும்.(423) நீ எட்டு வரங்களைக் கேட்பாயாக.[28] ஓ! கிருஷ்ணா, ஓ! மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, அவற்றை நான் உனக்கு நிச்சயம் தருவேன். ஓ! யாதவர்களின் தலைவா, அவை எவை என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ விரும்புபவற்றைச் சொல்வாயாக. அவை அடைவதற்கு மிகக் கடினமானவையாக இருந்தாலும் அவற்றை நிச்சயம் நீ பெறுவாய்” என்றான் {சிவன்}.(424)

கிருஷ்ணன் பெற்ற வரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 15-பார்வதியும், பரமேஸ்வரனும் தனக்குக் கொடுத்த வரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

அருள்நிறைந்த கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தச் சக்திமிக்க ஒளித்திரளுக்கு {சிவனுக்கு}, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் தலைவணங்கி, அவனிடம் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்,(1) “அறத்தில் உறுதி, போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல், உயர்ந்த புகழ், பெரும் வலிமை, யோகத்தில் அர்ப்பணிப்பு, {அனைவருடனும் அன்பாக இருத்தல்}, உன் அருகாமை, நூறு நூறாகப் {பத்தாயிரம்} பிள்ளைகள் ஆகியனவே நான் உன்னிடம் கேட்கும் வரங்களாகும்” என்றேன்.(2) சங்கரன் நான் சொன்ன வார்த்தைகளை மீண்டும் சொல்லி “அப்படியே ஆகட்டும்” என்றான்.

அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் தாங்குபவளும், அனைத்துப் பொருட்களையும் தூய்மையாக்குபவளும்,(3) சர்வனின் மனைவியும், தவங்களின் கொள்ளிடமுமான அண்டத்தின் அன்னை {பராசக்தி}, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள், “ஓ! பாவமற்றவரே, சாம்பன் என்று பெயர் சூட்டப்படும் மகன் ஒருவனைப் பலமிக்க மஹாதேவன் உமக்கு அருளியிருக்கிறார்.(4) நீர் என்னிடம் இருந்தும் எட்டு வரங்களைக் கேட்பீராக. நான் அவற்றை உமக்கு நிச்சயம் தருவேன்” என்றாள்.

ஓ! பாண்டுவின் மகனே, அவளுக்குத் தலைவணங்கிய நான், அவளிடம், “பிராமணர்களிடம் மாறாப் பற்று, என் தந்தையின் அருள், நூறு மகன்கள், உயர்ந்த இன்பங்கள், என் குடும்பத்தில் அன்பு, என் அன்னையின் அருள், அமைதி நிலையை அடைந்தல், ஒவ்வொரு செயலையும் புத்திசாலித்தனமாகச் செய்தல் ஆகியவற்றை நான் உன்னிடம் வேண்டுகிறேன்” என்றேன்.(5,6)

உமை {கிருஷ்ணனிடம்}, “ஓ தேவனுக்கு இணையான ஆற்றலையும், பலத்தையும் கொண்டவரே, உண்மையற்றதை {பொய்யை} நான் ஒருபோதும் சொன்னதில்லை. உமக்குப் பதினாறாயிரம் {16000} மனைவியர் வாய்ப்பர். அவர்களிடம் நீர் கொள்ளும் அன்பும், உம்மிடம் அவர்கள் கொள்ளும் அன்பும் அளவற்றதாக இருக்கும்.(7) உமது உற்றார் உறவினர் அனைவரிடம் இருந்தும் உயர்ந்த பாசத்தை நீர் பெறுவீர். உமது உடல் பேரழகு வாய்ந்ததாக இருக்கும். நீர் உம் அரண்மனையில் தினமும் ஏழாயிரம் விருந்தினர்களுக்கு உணவூட்டுவீர்” என்றாள்”.(8)

வாசுதேவன் தொடர்ந்தான், “ஓ! பாரதரே, ஓ! பீமரின் அண்ணனே, எனக்கு இவ்வாறு வரங்களை அருளிய தேவனும் தேவியும், பூத கணங்களுடன் அங்கேயே அப்போதே மறைந்தனர்.(9) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, (மஹாதேவனைத் துதிக்க நான் யாரிடம் தீக்ஷை பெற்றேனோ அந்தப்) பெருஞ்சக்தி கொண்ட பிராமணரான உபமன்யு குறித்து நான் உமக்குச் சொன்ன செய்திகள் முழுமையும் அற்புதம் நிறைந்தவையாகும்.

உபமன்யு, அந்தப் பெருந்தேவனை வணங்கிவிட்டு, என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(10) உபமன்யு, “சர்வனைப் போன்று வேறு தேவனில்லை. சர்வனைப் போன்றொரு கதியோ, புகலிடமோ வேறில்லை. இவ்வளவு உயர்ந்த வரங்களை வேறு எவனாலும் கொடுக்க முடியாது. போரில் அவனுக்கு இணையானவன் வேறு எவனும் கிடையாது” என்றார்.(11)

தண்டி முனிவரின் சிவத்துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 16-தண்டி முனிவர் பரமசிவனைப் புகழ்ந்து செய்த துதியை கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு…

உபமன்யு {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஐயா, கிருத யுகத்தில் தண்டி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட முனிவர் ஒருவர் இருந்தார். இதயத்தில் பெரும் அர்ப்பணிப்புடன் கூடிய அவர், தியான யோகத்தின் துணையுடன் பத்தாயிரம் {10000} வருடங்கள் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார். அத்தகைய இயல்புக்கு மீறிய அர்ப்பணிப்பின் மூலம் அவர் பெற்ற கனி அல்லது வெகுமதியை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக. மஹாதேவனைக் காண்பதில் வென்ற அவர், சில பாடல்களைப் பாடி அவனைப் புகழ்ந்தார்.(1,2) மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனுமான அந்தப் பரமாத்மாவை தவங்களின் துணையுடன் சிந்தித்து, ஆச்சரியத்தில் நிறைந்த தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(3) “உயர்ந்தவனாகச் சாங்கியர்களால் விளக்கப்படுபவனும், யோகியரால் நினைக்கப்படுபவனும், முதன்மையானவனும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், இருப்பிலுள்ளவை அனைத்தின் ஆசானும், அண்டத்தின் படைப்புக்கும், அழிவுக்கும் காரணன் என்று கல்விமான்களால் சொல்லப்படுபவனும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவனும், அனைத்தையும் விட உயர்ந்தவனும், பிறப்பற்றவனும், அனைத்துப் பொருட்களின் தலைவனும், தொடக்கமும், முடிவும் அற்றவனும், உயரந்த பலத்தைக் கொண்டவனும், உயர்ந்த இன்பநிலையில் இருப்பவனும், பிரகாசமானவனும், பாவமற்றவனுமான புருஷனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்” என்றார்.(4-6)

தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தவப் பெருங்கடலும், மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனும், ஒப்பில்லாதவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், நித்தியமானவனும், எந்த மாற்றமும் இல்லாதவனும், பகுபடாதவனும், முழுமையானவனும், பிரம்மமே ஆனவனும், குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், குணங்களுடன் கூடியவனும், யோகிகளின் உயர்ந்த மகிழ்ச்சியும், சிதைவற்றவனும், விடுதலை {மோக்ஷம் / முக்தி} என்றழைக்கப்படுபவனும், மனம், இந்திரன், காற்று தேவன், மொத்த அண்டம், பெரும்பாட்டனான பிரம்மன் ஆகியோரின் புகலிடமும், மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், எவ்வகை மாற்றமும் இல்லாதவனும், தூயனும், புத்தியால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக்கூடியவனும், மனத்தைப் போலப் பருப்பொருளற்றவனும்;(7-9) புரிந்து கொள்ளக் கடினமானவனும், அளவிடப்பட முடியாதவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அடைதற்கரியவனும், அண்டத்தின் தோற்றுவாயும், அண்டம் மற்றும் இருள் குணம் {தமஸ் குணம்} ஆகிய இரண்டையும் கடந்தவனும், புராதனமானவனும், புருஷனும், பிரகாசமிக்கவனும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனுமான அந்தப் பெருந்தேவனை அவர் தம்முன் கண்டார்.(10) அவனைக் காண விரும்பி, உயிர் மூச்சுகளுடன் தன்னை அமைத்துக் கொண்டு ஜீவனில் இருந்து விளைவதில் மனம் என்றழைக்கப்படும் பிரகாசத்தின் வடிவில் வசித்து, கடுந்தவங்களைப் பயில்வதில் பல வருடங்களைக் கடத்திய முனிவர் தண்டி, அத்தவங்களின் வெகுமதியாக அவனைக் காண்பதில் வென்றதும் , பின்வரும் வார்த்தைகளால் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார்.(11)

தண்டி {மஹாதேவனிடம்}, “புனிதங்கள் அனைத்திலும் புனிதமானவன் நீயே, ஓ! புத்தியுள்ளோர் அனைவரிலும் முதன்மையானவனே, அனைத்தின் புகலிடமும் நீயே. அனைத்து வகைச் சக்திகளிலும் கடுஞ்சக்தி நீயே. தவங்கள் அனைத்திலும் கடுந்தவம் நீயே.(12) ஓ! பலமிக்கவனே, அருள்களை வழங்கும் தயாளன் நீயே. உயர்ந்த வாய்மை நீயே. உன்னை வணங்குகிறேன்.(13) ஓ! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே, ஓ! அனைத்து இன்பங்களின் புகலிடமே, உன்னை வணங்குகிறேன். ஓ! பலமிக்கவனே, பிறப்பிறப்புக்கு அஞ்சி மிகக் கடுமையாக முயல்பவர்களுக்கு நிர்வாணத்தைக் கொடுப்பவன் நீயே.(14) பெரும்பாட்டனான பிரம்மன், நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்), விஷ்ணு, விஸ்வேதேவர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோரே கூட உனது உண்மை இயல்பைப் புரிந்து கொள்ள வல்லவர்களல்ல. அவ்வாறிருக்கையில் எங்களைப் போன்ற மனிதர்களால் எவ்வாறு உன்னைப் புரிந்து கொள்ள முடியும்?(15)

காலன் என்றழைக்கப்படுபவன் நீயே, புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே, பிரம்மன் என்றுமழைக்கப்படுபவன் நீயே. புராணங்களை அறிந்த தெய்வீக முனிவர்கள் மூவுடலைக் கொண்டவன் {மூன்று மூர்த்திகள் – பிரம்மா, விஷ்ணு, சிவன்} நீ என்று சொல்கின்றனர்.(16) அதிபுருஷன் {அதிபௌருஷம்-ஆத்மாவிலுள்ளவன்}, அத்யாத்மம் {உடலில் உள்ளவன்}, அதிபூதம் {ஐம்பூதங்களில் உள்ளவன்}, அதிதைவதம் {அதிதெய்வம்-தேவர்களில் உள்ளவன்}, அதிலோகம் {உலகங்களில் உள்ளவன்}, அதிவிஜ்ஞானம் {ஞானத்தில் உள்ளவன்}, அதியஜ்ஞம் {யாகத்தில் இருப்பவன்} நீயே.(17) ஞானிகள், தங்களில் வசிப்பவனும், தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனுமான உன்னை அறிவதில் வெல்லும்போது, பந்தங்களில் இருந்து விடுபட்டு, கவலைகள் அனைத்தையும் கடந்த இருப்பு நிலையை அடைகின்றனர்.(18) ஓ! பெரும்பலம் கொண்டவனே, உன்னை அறிய விரும்பாதவர்கள், எண்ணற்ற பிறப்பிறப்புகளை அடைகின்றனர். சொர்க்கம் மற்றும் விடுதலையின் {முக்தியின்} வாயிலாக இருப்பவன் நீயே. அனைத்துப் பொருட்களையும் இருப்பில் இருக்கச் செய்பவனும், மீண்டும் தன்னுள்ளேயே ஈர்த்துக் கொள்பவனும் நீயே. பெருங்கொடையாளன் நீயே.(19) சொர்க்கம் நீயே, விடுதலை {முக்தி} நீயே, (செயல்பாட்டின் வித்தாக விளங்கும்) ஆசை நீயே. உயிரினங்களை ஈர்க்கும் கோபம் நீயே. சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, கீழுலகங்கள் {பாதாளம் முதலான உலகங்கள்} நீயே, மேலுலகங்கள் நீயே.(20)

பெரும்பாட்டனான பிரம்மன் நீயே, பவன் நீயே, விஷ்ணு நீயே, ஸ்கந்தன் நீயே, இந்திரன் நீயே, சாவித்ரி நீயே, யமன் நீயே, வருணன் நீயே, சோமன் நீயே, தாத்ரி நீயே, மனு நீயே, விதாத்ரி நீயே, கருவூலத் தலைவனான குபேரன் நீயே.(21) பூமி நீயே, காற்று நீயே, நீர் நீயே, அக்னி நீயே, வெளி நீயே, வாக்கு நீயே, புத்தி நீயே, நிலைமாறாவுறுதி நீயே, நுண்ணறிவு நீயே, உயிரினங்கள் செய்யும் செயல்கள் நீயே, மெய் நீயே, பொய் நீயே, இருப்பு நீயே, இன்மை {இல்லாமை} நீயே.(22) புலன்கள் நீயே, பிரகிருதியைக் கடந்திருப்பவன் நீயே, மாற்றமில்லாதவன் நீயே. அண்டத்திலுள்ளவை அனைத்திலும் மேன்மையானவன் நீயே, அண்டத்தில்லாதவை அனைத்திலும் மேன்மையானவன் நீயே, சிந்தைக்கு எட்டுபவன் நீயே, சிந்தைக்கு எட்டாதவன் நீயே.(23) பரப்பிரம்மமும், உயர்ந்த தனிவடிவ உட்பொருள் நீயே, சாங்கியர்கள் மற்றும் உன்னைப் போன்ற யோகியர்கள் இருவரும் அடையும் கதி நிச்சயம் நீயே. (24) உண்மையில், உன் வடிவைக் காண அருள் செய்த விளைவால் நீ எனக்கு இன்று வெகுமதியளித்திருக்கிறாய். அறவோர் மட்டுமே எட்டும் கதியை நான் அடைந்திருக்கிறேன். அறிவால் தூய்மையடைந்த புத்தியைக் கொண்டோரால் வேண்டப்படும் கதியையே நான் வெகுமதியாக அடைந்திருக்கிறேன்.(25)

ஐயோ, இவ்வளவு காலம் நான் அறியாமையில் இருந்தேனே; ஞானிகள் அனைவராலும் அறியப்படும் நித்திய உட்பொருளும், உயர்ந்த தேவனுமான உன்னைக் குறித்த அறிவில்லாமல் இவ்வளவு நீண்ட காலம் உணர்வற்ற மூடனாக இருந்தேனே.(26) ஓ! அர்ப்பணிப்பு கொண்டருக்கு அருள் வழங்குபவனே, எண்ணற்ற பிறவிகளின் போக்கில் நீ காட்டிய கருணையின் விளைவால் இறுதியாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொள்வதில் வென்றேன். உன்னை அறிவதில் வெல்வபன் அழிவின்மையை அனுபவிக்கத் தகுந்தவனாகிறான்.(27) தேவர்கள், அசுரர்கள் மற்றும் தவசிகளுக்கு எப்போதும் புதிராக இருப்பவன் நீயே. பிரம்மம் குகைக்குள் மறைந்திருக்கிறது. தவசிகளாலேயே கூட அதைக் காணவோ, அறியவோ முடியவில்லை[1].(28) அனைத்தையும் படைத்தவனும், அனைத்துத் திசைகளிலும் முகத்தைக் கொண்டவனுமான பலமிக்கத் தேவன் நீயே. அனைத்துப் பொருட்களின் ஆன்மா நீயே, அனைத்துப் பொருட்களையும் காண்பவன் நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே. அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் நீயே.(29) உனக்கான உடலை உண்டாக்குபவன் நீயே. அவ்வுடலைச் சுமப்பவன் நீயே. உடல்படைத்தவன் நீயே. உடலை அனுபவிப்பவன் நீயே, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தின் புகலிடமும் நீயே. உயிர் மூச்சுகளைப் படைத்தவன் நீயே, உயிர்மூச்சுகளைக் கொண்டவன் நீயே, உயிர்மூச்சுகளோடு கூடியவன் நீயே, உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்தின் புகலிடமும் நீயே.(30)

[1] “ஒவ்வொரு உயிரினத்தின் இதயமே இங்குக் குகை என்று சொல்லப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும், முனிவர்களுக்கும் தெரியாமல் குகையில் வைக்கப்பட்டதும், வேதத்தால் அறியக்கூடாததுமான பரப்ரம்மம் எதுவோ அஃது இந்தப் பகவனான ஈஸ்வரர்தாம்” என்றிருக்கிறது.

தியான யோகத்தில் அர்ப்பணிப்பு மிக்கவர்களும், ஆன்மாவை அறிந்தவர்களும், மறுபிறவி தவிர்க்க வேண்டுபவர்களுமான அறவோர் அனைவரின் புகலிடமான அந்த அத்யாத்மம் நீயே. உண்மையில், அந்தப் புகலிடத்துடன் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவன் நீயே.(31) உயிரினங்கள் அனைத்திற்கும் இன்ப துன்பம் நிறைந்த கதிகளைக் கொடுப்பவன் நீயே. படைக்கப்பட்டவை அனைத்தின் பிறப்பிறப்பை விதிப்பவன் நீயே.(32) விருப்பங்கள் கனிவதில் வெற்றியால் மகுடம் சூட்டப்படும் முனிவர்களுக்கு வெற்றியை அருளும் பலமிக்கத் தலைவன் நீயே. பூலோகம் தொடங்கிச் சொர்க்கவாசிகள் அனைவருடன் சேர்ந்து அனைத்து உலகங்களையும் படைத்து அவை அனைத்தையும் பேணித் தாங்குபவனான நீ, நன்கறியப்பட்ட எட்டு வடிவங்களில் உன்னைப் பகுத்துக் கொள்கிறாய்.(33) உன்னில் இருந்தே அனைத்தும் உண்டாகின்றன. உன்னையே அனைத்தும் சார்ந்திருக்கின்றன. மேலும் அனைத்துப் பொருட்களும் உன்னிலையே மறைகின்றன. நித்தியமான ஒரே பொருள் நீயே.(34) அறவோரால் வேண்டப்படுவதும், அவர்களால் உயர்ந்ததாகக் கருதப்படுவதுமான வாய்மை உலகம் {சத்தியலோகம்} நீயே. யோகியர் வேண்டும் தனிப்பட்ட இருப்பு முறித்துக் கொள்ளும் நிலையாக இருப்பவன் நீயே. ஆன்மாவை ஆறிந்தோரால் நாடப்படும் விடுதலை {முக்தி} நீயே.(35)

தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் உன்னைக் காணாதிருக்க வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிரம்மன் முதலானவர்களால் குகையில் மறைத்து வைக்கப்பட்டவன் நீயே.(36) இதயத்தில் வசிப்பவனாக இருந்தாலும் மறைக்கப்பட்டிருப்பவன் நீயே. எனவே, ஓ! பவா, உன்னால் திகைப்படைந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் விபரங்கள் அனைத்துடன் உன்னைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாகின்றனர்.(37) ஓ! அனைவரின் இதயங்களிலும் வசிப்பவனே, அர்ப்பணிப்பால் இதயத் தூய்மை அடைவதில் வெல்லும் மனிதர்களுக்கு உன் விருப்பத்தின் பேரில் நீ காட்சியளிக்கிறாய்.(38) உன்னை அறிவதால் ஒருவன் இறப்பையும், மறுபிறப்பையும் தவிர்க்கலாம். உயர்ந்த அறிவுப்பொருள் {ஞானப்பொருள்} நீயே. உன்னை அறிவதால் ஒருவன் அறிய வேண்டிய உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை.(39) அடையத்தக்க உயர்ந்த பொருள் நீயே. உண்மையில் ஞானியாக இருப்பவன், உன்னை அடைந்ததும், அடையத்தக்க உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை என்று நினைக்கிறான். மிக நுட்பமானவனும், அடையத்தக்க உயர்ந்த பொருளுமான உன்னை அடைவதன் மூலம் ஒரு ஞானியானவன் அழிவற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் ஆகிறான்.(40)

தத்துவம் அறிந்தவர்களும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) குணங்களின் அறிவைப் பெற்றவர்களும், நுட்பமான அல்லது அழிவற்ற அறிவை அடைவதன் மூலம் அழிவுநிலையைக் கடப்பவர்களும், கல்விமான்களுமான சாங்கிய அமைப்பின் தொண்டர்கள், அனைத்துப் பந்தங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வதில் உன்னை அறிந்து வெற்றி அடைகிறார்கள்.(41) வேதங்களை அறிந்தவர்கள், வேதாந்தங்களில் விளக்கப்பட்டிருக்கும் அறிவுப்பொருள் என உன்னையே கருதுகிறார்கள். மூச்சுப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க இம்மனிதர்கள் எப்போதும் உன்னை நோக்கியே தியானித்து இறுதியாக உயர்ந்த கதியை அடைவதன் மூலம் உன்னில் நுழைகிறார்கள்.(42) அம்மனிதர்கள், ஓங்காரத்தால் அமைக்கப்பட்ட தேரைச் செலுத்திக் கொண்டு மஹேஸ்வரனுக்குள் நுழைகிறார்கள். தேவ பாதை என்றழைக்கப்படும் பாதையில் ஆத்தியம் என்றழைக்கப்படும் வாயில் நீயே.(43) பித்ரு பாதை என்றழைக்கப்படும் பாதையில் சந்திரமாஸ் {சந்திரன்} என்றழைக்கப்படும் வாயில் நீயே. காஷ்டை நீயே, திசைப்புள்ளிகள் நீயே, ஆண்டு நீயே, யுகங்களும் நீயே.(44) சொர்க்கங்களின் அரசு நீயே, பூமியின் அரசும் நீயே, வட மற்றும் தென் அயனங்களும் நீயே. ஓ! நீலம் மற்றும் சிவப்பு {நீலலோகிதன்} என்றழைக்கப்படுபவனே, பழங்காலத்தில் உன் புகழைப் பல்வேறு பாடல்களில் பாடி உயிரினங்களைப் படைக்குமாறுப் பெரும்பாட்டனான பிரம்மன் உன்னைத் தூண்டினான்.(45)

ரிக்குகளை அறிந்த பிராமணர்கள், அனைத்துப் பொருட்களிலும் பற்றற்றவனாகவும், வடிவங்களேதும் அற்றவனாகவும் உன்னைக் கருதி ரிக்குகளை ஓதி உன்னைப் புகழ்கிறார்கள். வேள்விகளில் அதர்யுக்கள், ஒரே ஞானப்பொருளான உன்னை மதிக்கும் வகையில் நன்கறியப்பட்ட மூன்று வழிகளில் யஜுஸ்களைப் பாடுகிறார்கள்.(46) தூய்மையடைந்த புத்தியைக் கொண்டவர்களும், சாமங்களை அறிந்தவர்களுமான மனிதர்கள், சாமங்களின் துணையுடன் உன்னைப் பாடுகிறார்கள். மேலும், அதர்வணங்களை அறிந்த மறுபிறப்பாளர்கள், ரிதன் என்றும், வாய்மை என்றும், மேன்மை என்றும், பிரம்மம் என்றும் உன்னைக் குறித்துப் பாடுகிறார்கள். வேள்வி நடைபெறும் இடங்களில் உயர்ந்த காரணமாக இருப்பவன் நீயே. தலைவனும், பரமனும் நீயே.(47) இரவும், பகலும் உன் கேள்விப் புலனாகவும், பார்வைப்புலனாகவும் இருக்கின்றன. பிறை நாட்களும், மாதங்களும் உன் தலையாகவும், கரங்களாகவும் இருக்கின்றன. பருவகாலங்கள் உன் சக்தியாகும், தவங்கள் உன் பொறுமையாகும் {தைரியமாகும்}, வருடம் உன் குதமும், தொடைகளும் பாதங்களுமாகும்.(48) மிருத்யு நீயே, யமன் நீயே, ஹுதாஸன் நீயே, காலன் நீயே, அழிவைத் தருவதில் வேகமாகச் செயல்படுபவன் நீயே, காலத்தின் மூலக் காரணம் நீயே, நித்திய காலம் நீயே.(49) ஆகாயத்தை நிறைத்திருக்கும் வெளி, கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் சேர்ந்த சந்திரமாஸும் {சந்திரனும்}, ஆதித்தியனும் நீயே. துருவ நட்சத்திரம் நீயே, சப்தமுனிவக் கூட்டம் நீயே, பூலோகம் முதலான ஏழு உலகங்கள் நீயே.(50)

பிரதானனும் {முக்கிய முதல்வனும்}, மஹத்தும் நீயே, வெளிப்படாதவன் நீயே, இவ்வுலகமும் நீயே. பிரம்மன் முதல் தாழ்ந்த செடி வடிவங்கள் வரையான அண்டம் நீயே. அனைத்து உயிரினங்களின் தொடக்கம் அல்லது மூலக் காரணன் நீயே. இருப்பு நீயே, இல்லாமையும் நீயே.(51) எட்டுப் பிரகிருதிகள் நீயே. அந்த எட்டு பிரகிருதிகளுக்கும் மேலானவன் நீயே. இருப்பில் உள்ள அனைத்தும் தெய்வீகமான உன் சுயத்தின் ஒரு பகுதியையே பிரதிபலிக்கின்றன.(52) நித்தியமான உயர்ந்த இன்ப நிலை {பரமானந்தம்} நீயே. அனைத்துப் பொருட்களாலும் அடையப்படும் கதி நீயே. அறவோரால் வேண்டப்படும் உயர்ந்த இருப்புநிலை நீயே.(53) கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட நிலை நீயே. நித்திய பிரம்மம் நீயே. சாத்திரங்கள் மற்றும் வேதாங்கங்களைக் கற்ற மனிதர்களின் தியானத்தில் அமையும் உயர்ந்த நிலை நீயே.(54) உயர்ந்த காஷ்டை நீயே, உயர்ந்த காலம் நீயே. உயர்ந்த வெற்றி நீயே, உயர்ந்த புகலிடமும் நீயே.(55) உயர்ந்த அமைதிநிலை நீயே. இருப்பின் உயர்ந்த முற்றுநிலை நீயே. உன்னை அடைவதால் உயர்ந்த வெற்றியை அடைவதாக யோகியர் நினைக்கின்றனர்.(56) மனநிறைவு நீயே, வெற்றி நீயே, ஸ்ருதி நீயே, ஸ்மிருதியும் நீயே. யோகிகள் முயற்சிக்கும் ஆன்மப் புகலிடம் நீயே, ஞானிகள் தொடரும் அழிவற்ற பிராப்தி நீயே.(57)

வேள்விக்கு அடிமைகளும், குறிப்பிட்ட ஆசைகளால் தூண்டப்பட்டு வேள்விகளில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், அத்தகைய தருணங்களில் பெருங்கொடைகளை அளிப்பவர்களும் தங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பவன் நிச்சயம் நீயே.(58) இடையறாத பாராயணம், கடும் நோன்புகள், அமைதியான வாழ்வுமுறைக்கு இணங்கும் உண்ணா நோன்புகள் மற்றும் தன்னொடுக்கத்திற்கான பிற வழிமுறைகளுடனும், கடுந்தவங்களாலும் தங்கள் உடல்களை வீணாக்கும் மனிதர்களால் நாடப்படும் உயர்ந்த கதி நீயே.(59) ஓ! நித்தியமானவனே, அனைத்துச் செயல்களையும் துறந்தவர்களும், அனைத்துப் பொருட்களிலும் பற்றற்றவர்களுமாக இருக்கும் மனிதர்களின் கதி நீயே.(60) ஓ! நித்தியமானவனே, மறுபிறப்பில் இருந்து விடுதலை {முக்தி} அடைய விரும்புவோர், இன்பங்கள் அனைத்தின் தொடர்பறுந்து வாழ்வோர், பிரகிருதி பூதங்களின் அழிவை விரும்புவோர் ஆகியோரின் கதி நீயே.(61) ஓ! சிறப்புமிக்கவனே, விளக்க முடியாததும், களங்கமற்றதும், மாற்றமில்லாததும், ஞானம் மற்றும் அறிவியலில் அர்ப்பணிப்பு மிக்கோருக்குச் சொந்தமானதுமான உயர்ந்த கதி நீயே.(62) வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் புராணங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஐந்து கதிகள் இவையே. உன் அருளின் மூலமே அம்மனிதர்கள் அக்கதிகளை அடைகிறார்கள் அல்லது அடையத் தவறுகிறார்கள், உன் அருளின் மூலமே அவை அவர்களுக்கு மறுக்கவும் படுகின்றன” என்றார் {தண்டி}.(63) தவங்களின் பெருங்குவியலான தண்டி இவ்வாறே ஈசானனைப் புகழ்ந்தார் {துதித்தார்}. மேலும் அவர், (மஹாதேவனை மகிமை படுத்தும் வகையில்) படைப்பாளனால் பழங்காலத்தில் படாடப்பட்ட உயர்ந்த பிரம்மத்தையும் பாடினார்”[2].(64)

[2] கும்பகோணம் பதிப்பில், “தவங்களுக்கெல்லாம் இருப்பிடமாகிய தண்டி மஹாமுனிவர் முன்னர் உலகம் படைத்த ப்ரம்மதேவர் எந்தப் பரப்பிரம்மத்தைத் துதித்தாரோ அந்தப் பரப்ரம்மமாகிய ஈஸ்வரரை மனமாரத் துதித்தார்” என்றிருக்கிறது.

உபமன்யு {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தார், “பிரம்மத்தை ஓதுபவரான தண்டியால் இவ்வாறு துதிக்கப்பட்டவனும், சிறப்புமிக்கவனும், உயர்ந்த தேவனுமான மஹாதேவன், தன் மனைவியான உமையின் துணையுடன் வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(65) தண்டி மேலும், “பிரம்மனோ, இந்திரனோ, விஷ்ணுவோ, விஸ்வேதேவர்களோ பெரும் முனிவர்களோ உன்னை அறிய மாட்டார்கள்” என்றார். இதனால் நிறைவடைந்த சிவன் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(66)

அந்தப் புனிதமானவன் {சிவன்}, “நீ அழிவற்றவனாகவும், நித்தியமானவனாகவும் இருப்பாய். நீ கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவாய். பெரும் புகழ் உனதாகும். நீ சக்தியுடனிருப்பாய். ஆன்ம அறிவு உனதாகும்.(67) முனிவர்கள் அனைவரும் உன்னை நாடுவார்கள், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, என் அருளின் மூலம் உன் மகன் சூத்திரங்களின் ஆசானாவான்.(68) நான் இன்று உனக்கு என்ன வரங்களைத் தர வேண்டும்? ஓ! மகனே, நீ விரும்பும் பொருட்களை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான். இதன் பேரில் தண்டி, தமது கரங்களைக் கூப்பிக் கொண்டு, “ஓ! தலைவா, உன்னிடம் நான் கொண்டுள்ள அர்ப்பணிப்பு நிலையான உறுதியுடன் இருக்கட்டும்” என்று கேட்டார்”.(69)

உபமன்யு தொடர்ந்தார், “அந்தப் பெருந்தேவன், தண்டிக்கு இந்த வரங்களைக் கொடுத்து, தேவர்கள் மற்றும் முனிவர்களின் துதிகளை ஏற்றுக் கொண்டு அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(70) ஓ! யாதவர்களின் தலைவா, அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் தொண்டர்களுடன் இவ்வாறு மறைந்ததும், அந்த முனிவர் {தண்டி} என் ஆசிரமத்திற்கு வந்து அவருக்கு நேர்ந்த அனைத்தையும் எனக்குச் சொன்னார்.(71) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தண்டியால் எனக்குச் சொல்லப்பட்ட (மஹாதேவனின்) அந்தக் கொண்டாடப்படும் பெயர்கள் அனைத்தையும் உன் வெற்றிக்காகக் கேட்பாயாக.(72) பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு காலத்தில் மஹாதேவனுக்குப் பொருந்தும் பத்தாயிரம் பெயர்களைச் சொன்னான். அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் ஓராயிரம் பெயர்கள் சாத்திரங்களில் இருக்கின்றன.(73) இந்தப் பெயர்கள் அனைவராலும் அறியப்பட்டவை அல்ல. ஓ! அழிவைக் கடந்தவனே, பழங்காலத்தில் அந்த உயர் ஆன்ம தேவனைத் துதிப்பதற்காகப் பெரும்பாட்டனான பிரம்மன் இந்தப் பெயர்களைச் சொன்னார். பெரும்பாட்டனின் அருள் மூலம் அவற்றை அடைந்த தண்டி, அவற்றை எனக்குச் சொன்னார்” {என்றார் உபமன்யு}.(74)

சிவஸஹஸ்ரநாமம் – சிவனின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 17-தண்டி முனிவரால் அருளப்பட்டதாக உபமன்யு சொன்ன சிவஸஹஸ்ரநாமத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! யுதிஷ்டிரரே, மறுபிறப்பாள முனிவர் உபமன்யு, தம் மனத்தைக் குவித்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி (மஹாதேவனுக்குப் பொருந்தும்) இந்தப் பெயர்களின் தொகுப்பைத் தொடக்கமுதல் சொல்லத் தொடங்கினார்.(1)

உபமன்யு, “பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட சிலவற்றையும், முனிவர்களால் சொல்லப்பட்ட சிலவற்றையும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களில் தோன்றும் சிலவற்றைக் கொண்டவையும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவையுமான பெயர்களைச் சொல்லி அனைத்து உயிரினங்களின் துதிக்குத் தகுந்தவனான அந்தப் பெருந்தேவனைத் துதிக்கப் போகிறேன்.(2) திறம்பெற்ற மனிதர்களால் (பெருந்தேவனுக்குப் பொருத்தமான) அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் அவை, வாய்மையும் வெற்றியும் நிறைந்தவையும், {அந்தப் பெயர்களைச்} சொல்வோரின் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லவையுமாக இருக்கின்றன. வேத உரைகளால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும், தமது அர்ப்பணிப்பின் துணையால் அப்பெயர்களைக் கண்டடைந்தவருமான தண்டியால் அவை மஹாதேவனுக்குப் பயன்படுத்தப்பட்டன.(3) உண்மையில், நன்கறியப்பட்ட அறவோர் மற்றும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்த தவசிகள் பலரால் சொல்லப்பட்ட அப்பெயர்களைக் கொண்டு, முதன்மையானவனும், முதல்வனே ஆனவனும், சொர்க்கத்திற்கு வழிவகுப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மைகளைக் கொடுப்பவனுமான அந்த மங்கலனை நான் துதிக்கப் போகிறேன்.(4) (அவை உண்மையில் எங்கிருந்து உண்டானதோ அந்தப்) பிரம்ம லோகத்தில் இருந்து பரவிய அப்பெயர்கள் அண்டம் முழுவதும் கேட்கப்படுகின்றன. அவை அனைத்தும் உண்மை நிறைந்தவையாக இருக்கின்றன. வேதங்களின் மூலம் (அண்டத்திற்கு) அறிவிக்கப்பட்டவனும், நித்தியமானவனுமான அந்தப் பரப்பிரம்மனை அப்பெயர்களைக் கொண்டு நான் துதிக்கப் போகிறேன்.(5)

ஓ! யது குலத் தலைவா {கிருஷ்ணா}, நான் இப்போது அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. நீ {கிருஷ்ணா} அந்தப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளனாவாய். தேவர்கள் அனைவரிலும் தனித்துவமானவனும், சிறப்புமிக்கவனுமான அந்தப் பவனை நீ வழிபடுவாயாக.(6) நீ அவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருப்பதாலேயே நீ கேட்கும்படி நான் அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். மஹாதேவனே நித்திய பிரம்மமாவான். நூறு வருடங்கள் தொடர்ந்து சொன்னாலும், யோக பலம் கொண்டவர்களாலும் அந்தப் பெருந்தேவனின் மகிமையையும், பலத்தையும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. உண்மையில் மஹாதேவனின் தொடக்கமும், நடுவும், முடிவும் தேவர்களாலேயே கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை.(7,8) ஓ! மாதவா, உண்மை இவ்வாறிருக்கையில், மஹாதேவனின் குணங்களை வேறு யாரால் உரைக்க முடியும்? இருப்பினும், சிறப்புமிக்கவனும், முற்றான ஞானம் கொண்டவனுமான அந்தப் பரமதேவனின் கருணையால், நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால் சில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளின் தொகுதி என்ற வடிவில் நான் அவனது குணங்களைச் சொல்லப் போகிறேன்.(9) அந்த உயர்ந்த தலைவனின் அனுமதி பெறாமல் எவராலும் அவனைத் துதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், அவனது அனுமதி பெறுமளவுக்கு நற்பேறு பெற்ற பிறகே அவனைத் துதிப்பதில் வென்றேன்.(10)

பிறவியும், அழிவும் அற்றவனும், அண்டத்தின் மூலக் காரணனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், வெளிப்படாத தோற்றம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனின் பெயர்களில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிடுகிறேன்.(11) ஓ! கிருஷ்ணா, வரமளிப்பவனும், துதிக்கத்தக்க தேவனும், பலமிக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான அந்தத் தேவனின் பெயர்களில் பிரம்மன் மூலம் சொல்லப்பட்ட சிலவற்றைக் கேட்பாயாக.(12) நான் சொல்லப் போகும் இந்தப் பெயர்கள், தயிரில் இருந்து வெண்ணையை எடுப்பதைப் போல, பழங்காலத்தில் பெரும்பாட்டனால் சொல்லப்பட்ட பத்தாயிரம் பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.(13) தங்கமானது மலைப்பாறைகளின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், தேனானது மலர்களின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், மந்தமானது {நெய்யானது} வெண்ணையைப் பிரதிபலிப்பதைப் போலவும், தொகுக்கப்பட்டிருக்கும் இப்பெயர்கள், பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தப் பத்தாயிரம் பெயர்களின் சாரத்தையே பிரதிபலிக்கின்றன.(14) இந்தப் பெயர்களின் தொகுப்பானது, மிகக் கொடிய பாவத்தையும் கழுவும் வல்லமை பெற்றதாகும். நான்கு வேதங்களின் தகுதி இதற்கும் உண்டு. இது முயற்சியுடன் புரிந்து கொள்ளப்பட்டு, குவிந்த ஆன்மாவுடன் நினைவில் செதுக்கப்பட வேண்டும்.(15)

இது மங்கலம் நிறைந்ததாகும். இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கும்[1]. இது பரிசுத்தமடையச் செய்யும் பெருமை கொண்டது. பெருந்தேவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவனிடம் அர்ப்பணிப்புள்ளவனும், நம்பிக்கையுள்ளவனுமான ஒருவனுக்கு மட்டுமே இது சொல்லப்பட வேண்டும். அர்ப்பணிப்பில்லாதவனும், நம்பிக்கையில்லாதவனும், தன் ஆன்மாவை வெல்லாதவனுமான ஒருவனுக்கு ஒருபோதும் இதைச் சொல்லக் கூடாது[2].(16) ஓ! கிருஷ்ணா, அனைத்துப் பொருட்களின் மூலக் காரணனும், பரமாத்மாவும், பெருந்தேவனும், சிறப்புமிக்கவனுமான மஹாதேவனிடம் வன்மத்தை வளர்க்கும் உயிரினம் தனக்கு முன்பான மூதாதையருடனும், தனக்குப் பின் வரும் தன் பிள்ளைகள் அனைவருடனும் நிச்சயம் நரகத்திற்கே செல்வான்.(17) இப்போது நான் சொல்லப்போகும் இந்தப் பெயர்களின் தொகுப்பு தியான யோகமாகப் பார்க்கப்படுகிறது. இது யோகமாகவும் காணப்படுகிறது. தியானத்தின் உயர்ந்த நோக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஒருவன் ஜபமாக இதைத் தொடர்ந்து உரைக்க வேண்டும். இஃது அறிவுக்கு இணையானதாகும். இஃது உயர்ந்த புதிரைக் கொண்டதாகும்.(18) ஒருவன் தன் இறுதிக் கணத்திலாவது, இதை உரைத்தாலோ, உரைப்பதைக் கேட்டாலோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான். இது புனிதமானதாகும். அனைத்து வகை நன்மைகளும் நிறைந்த இது மங்கலமானதாகும். இஃது அனைத்துப் பொருட்களிலும் சிறந்ததாகும்.(19) அண்டமனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனால் பழங்காலத்தில் தொகுக்கப்பட்டு, சிறந்த துதிகள் {ஸ்தோத்திரம்} அனைத்திலும் முதன்மையான இடத்தில் அவனால் இது வைக்கப்பட்டது.(20)

அந்தக் காலத்திலிருந்து உயரான்ம மஹாதேவனின் மகிமையையும், பெருமையையும் சொல்லும் இந்தத்துதி தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு, துதிகள் அனைத்தின் மன்னனாக {ஸ்தோத்திர ராஜவெனக்} கருதப்படுகிறது.(21) துதிகள் அனைத்தின் மன்னனான இது, முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்திற்குச் சொல்லப்பட்டது. தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பெற்றார். எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்ட துதியாக அறியப்படுகிறது.(22) தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார். இது மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாகும், இது கொடும்பாவங்களையும் கழுவவல்லதாகும்.(23) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துதிகள் அனைத்திலும் சிறந்த துதியான இதை நான் உனக்கு உரைக்கப் போகிறேன். வேதங்களின் வேதமானவனை, புராதனப் பொருட்கள் அனைத்திலும் பழமையானவனை,(24) சக்திகள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவனை, தங்கள் அனைத்திற்கும் தவமாக இருப்பவனை, அமைதியான உயிரினங்கள் அனைத்திலும் பேரமைதி கொண்டவனை, காந்திகள் அனைத்திலும் காந்தி கொண்டவனை,(25) கட்டுப்பாடு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் கட்டுப்பாடுடையவனை, நுண்ணறிவு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நுண்ணறிவைக் கொண்டவனை, தேர்களின் தேவனாகவும், முனிவர்களின் முனிவனாகவும் காணப்படுபவனை,(26) வேள்விகள் அனைத்தின் வேள்வியாகவும், மங்கலம் நிறைந்த பொருட்கள் அனைத்திலும் பெரும் மங்கலம் கொண்டவனாகவும் கருதப்படுபவனை, ருத்திரர்கள் அனைவரின் ருத்திரனை, பிரகாசத்துடன் கூடிய அனைத்திலும் பிரகாசமிக்கவனை,(27) யோகிகள் அனைவரின் யோகியை, காரணங்கள் அனைத்தின் காரணனை, இல்லாமையில் உலகங்கள் அனைத்தும் சென்று சேர்பவனை,(28) இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனை, அளவற்ற சக்தியுடைய ஹரன் என்று அழைக்கப்படுபவனையே இந்தத் துதி குறிப்பிடுகிறது. அந்தப் பெரும் சர்வனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களை {சிவசஹஸ்ரநாமத்தை} உரைக்கப் போகிறேன் கேட்பாயாக.(29) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, அந்தப் பெயர்களைக் கேட்பதால் நீ உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாயாக {என்றார் உபமன்யு}.{உபமன்யு சொன்னார்}, “ஓம் {ௐ}. அசைவற்றவன் {ஸ்திரன்} நீயே. நிலையானவன் {ஸ்தாணு} நீயே, பலமிக்கவன் {ப்ரபு} நீயே, பயங்கரன் {பாநு / பீமன்} நீயே, முதன்மையானவன் {பரவரன்} நீயே, வரமளிப்பவன் {வரதன்} நீயே, மேன்மையானவன் {வரன்} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தாலும் கொண்டாடப்படுபவன் {ஸர்வவிச்யாதன்} நீயே, அனைத்துப் பொருட்களும் {ஸர்வன்} நீயே, அனைத்தையும் படைத்தவன் {ஸர்வகன்} நீயே, பவன் நீயே.(30-1) தலையில் சடாமுடி தரித்தவன் {ஜடி} நீயே, விலங்கின் தோலை ஆடையாக அணிபவன் {சர்மி} நீயே, மயிலைப் போலத் தலையில் கொண்டை கொண்டவன் {சிகண்டி/சீகி/கட்கீ} நீயே, மொத்த அண்டத்தையும் அங்கங்களாகக் கொண்டவன் {ஸர்வாங்கன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் {ஸர்வபாவநன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருக்கும் விளைவால் ஹரன் நீயே. மானுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {ஹரிணாக்ஷன்} நீயே, அனைத்து உயிரினங்களையும் அழிப்பவன் {ஸர்வபூதஹரன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கும் உயர்ந்தவன் {ப்ரபு} நீயே.(31-2)

அனைத்துச் செயல்பாடுகளும் உண்டாகும் ப்ரவ்ருத்தி நீயே, செயலின்மை {நிவ்ருத்தி} நீயே, நோன்புகளை நோற்பவன் {நியதன்} நீயே, நித்தியமானவன் {சாஸ்வதன்} நீயே, மாற்றமில்லாதவன் {த்ருவன்} நீயே, சுடலையில் வசிப்பவன் {ஸ்மசாநவாஸி} நீயே, தலைமை முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந} நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பவன் {கசரன்} நீயே, புலன்களால் அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {கோசரன்} நீயே, பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிப்பவன் {அர்த்தநன்} நீயே.(32-3) அனைவரும் வணங்கத்தக்கவன் {அபிவாத்யன்} நீயே, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மன்} நீயே, தவங்களையே செல்வமாகக் கொண்டவன் {தபஸ்வி} நீயே, பூதங்கள் அனைத்தையும் விரும்பியபடி படைத்தவன் {பூதபாவநன்} நீயே, பித்தன் போல வேடமிட்டு உண்மை இயல்பை மறைப்பவன் {உந்மத்தவேஷப்ரச்சந்நன்} நீயே, உலகங்கள் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆசான் {ஸர்வலோகப்ரஜாபதி} நீயே.(33-4) அளவிடமுடியாத வடிவம் கொண்டவன் {மஹாரூபன்} நீயே, பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே, அறத்தின் வடிவம் {வ்ருஷரூபன்} நீயே, பெரும்புகழ் {மஹாயசஸ்} நீயே, உயர்ந்த ஆன்மா {மஹாத்மா} நீயே, அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வபூதாத்மா} நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஸ்வரூபன்} நீயே, (அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் காலத்தில் அண்டத்தை விழுங்குவதற்கான) பெரும் கோரப்பற்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(34-5)

உலகங்கள் அனைத்தின் பாதுகாவலன் {லோகபாலன்} நீயே, அறியாமை எனும் இருளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆன்மா {அந்தர்ஹிதாத்மா} {வெளிப்படா குணம் கொண்டவன்} நீயே, மகிழ்ச்சி {ப்ரஸாதன்} நீயே. கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஹயகர்த்தபி} நீயே. மறுபிறவியெனும் இடியில் இருந்து ஜீவனைப் பாதுகாப்பவன் {பவித்ரன்} நீயே, துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே, தூய்மை, தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளால் அடையத்தக்கவன் {நியமன்} நீயே. தூய்மை மற்றும் தற்கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நோன்புகள் மற்றும் நியமங்களின் புகலிடம் {நியமாச்ரிதன்} நீயே.(35-6) அனைத்துக் கலைகளையும் அறிந்த தெய்வீகக் கைவினைஞன் {ஸர்வகர்மா} நீயே, (எவராலும் படைக்கப்படாத) சுயம்பு {ஸ்வயம்பூதன்} நீயே. அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தொடக்கம் {ஆதி} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைக்கும் ஹிரண்யகர்ப்பன் {ஆதிகரன்} நீயே, வற்றாத பலமும் இன்பநிலையும் {நிதி} நீயே, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்} நீயே, பெரும் சக்தியுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {விசாலாக்ஷன்} நீயே, ஸோமன் நீயே. ஆகாயத்தில் ஒளிர்வதற்காக உயிரினங்களில் அறவோரை மகிமையின் வடிவங்களை ஏற்கச் செய்பவன் {நக்ஷத்ரஸாதகன்} நீயே.(36-7)

சந்திரமாஸ் {சந்திரன்} நீயே, ஸூர்யன் நீயே, சனிக்கோள் {சநி} நீயே, சந்திரனின் இறங்கு கணு {கேது} நீயே, ஏறு கணுவும் {க்ரஹன் / ராஹு} நீயே,  மங்கலன் (செவ்வாய் கோள்) {கோள்களின் தலைவன்} {க்ரஹபதி} நீயே, பிருஹஸ்பதி (வியாழன் கோள்) நீயே, சுக்கிரன் (வெள்ளி கோள்) நீயே, புதன் (புதன் கோள்) நீயே, அத்ரியின் மனைவியை வழிபடுபவன் {அதரி} நீயே, {அத்ரியாநமஸ்கர்த்தன்}, கோபம் கோண்ட வேள்வியானது மானின் வடிவில் தப்பி ஓடிய போது அந்த வேள்வியை நோக்கி கணை ஏவியவன் {ம்ருகபாணார்ப்பணன்} நீயே, பாவமண்டாதவன் {அநகன்} நீயே.(37-8) அண்டத்தைப் படைக்கும் சக்தி கொண்ட தவங்களை உடையவன் {மஹாதபஸ்} நீயே, அண்டத்தை அழிக்கும் சக்தி கொண்ட தங்களை உடையவன் {கோரதபஸ்} நீயே, (பக்தர்களிடம் கொண்ட பெருங்கருணையின் விளைவால்) உயர்ந்த மனம் கொண்டவன் {அதீநன்} நீயே, உன்னிடம் வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தீநஸாதகன்} நீயே, (சூரியனாகவும், கோள்களாகவும் வடிவத்தை ஏற்றுக் காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பதால்) வருடத்தை உண்டாக்குபவன் {ஸம்வத்ஷரகரன்} நீயே, (பிரணவ வடிவம், வேறு புனிதச் சொற்கள் மற்றும் அசைகளின் வடிவில் இருக்கும்} மந்திரன் {மந்தரன்} நீயே, (வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் வடிவில்) அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதிகாரம் கொடுப்பவன் {ப்ரமாணன்} நீயே, உயர்ந்த தவம் {பரமதபன்} நீயே.(38-9)

யோகத்தில் அர்ப்பணிப்புமிக்கவன் {யோகி} நீயே, (தியான யோகத்தின் மூலம்) பிரம்மத்தில் கலக்கச் செய்பவன் {யோஜ்யன்} நீயே, (காரணங்களுக்குக் காரணனான) பெரும் வித்து {மஹாபீஜன்} நீயே, அண்டத்தில் வெளிப்பட்ட வடிவத்தில் வெளிப்படாததைக் காட்டுபவன் {மஹாரேதஸ்} நீயே, அளவிலா வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே, தங்கத்தையே வித்தாகக் கொண்டவன் {ஸ்வர்ணரேதஸ்} நீயே, (அனைத்துப் பொருட்களாகவும் இருந்து பேரறிவைக் கொண்டவனாக இருப்பதால்) அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்} நீயே, அனைத்துப் பொருட்களின் காரணன் {ஸுபீஜன்} நீயே, இம்மையிலிருந்து மறுமைக்குச் செல்லும் வழிமுறைகளுக்கான (அறியாமை மற்றும் ஆசை எனும்) செயல்பாட்டு வித்தாக இருப்பவன் {பீஜவாஹனன்} நீயே.(39-10) பத்துக் கரங்களைக் கொண்டவன் {தசபாஹு} நீயே, (எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதால்) இமைக்காத கண்களைக் கொண்டவன் {அநிமிஷன்} நீயே, நீலமிடறு (தொண்டை) கொண்டவன் {நீலகண்டன்} நீயே, உமையின் தலைவன் {உமாபதி} நீயே, அண்டத்தில் தோன்றும் எண்ணற்ற வடிவங்கள் அனைத்தின் தோற்றுவாயும் {விஷ்வரூபன்} நீயே, சுயமேன்மை கொண்டவன் {ஸ்வயம்ஸ்ரேஷ்டன்} நீயே, வலிமையில் வீரன் {பலவீரன்} நீயே, செயலாற்றலற்ற பருப்பொருள் {பலன்} நீயே, (சாங்கியர்களால் சொல்லப்படும்) தத்துவங்கள் அனைத்தும் {கணன்} நீயே.(40-11) தத்துவங்களை விதிப்பவனும் ஆள்பவனும் {கணகர்த்தன்} நீயே, கணங்கள் என்றழைக்கப்படும் உன் தொண்டர்களின் தலைவன் {கணபதி} நீயே, முடிவிலா வெளியை மறைப்பவன் {திக்வாஸஸ்} நீயே, ஆசையின் தேவனான காமன் நீயே, (ஞானத்தையே தவமாகக் கொண்ட) மந்திரங்களை அறிந்தவன் {மந்தரவித்} நீயே, (ஆத்மாவின் இயல்பையும், குணங்களையும் உறுதி செய்வதும், ஆத்மா அல்லாதவற்றிலிருந்து வேறுபடுவதுமான தத்துவமாக நீயே இருப்பதால்) உயர்ந்த மந்திரம் {பரமோமந்த்ரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் உன் ஆத்மாவில் இருந்து பிறந்ததால்) அண்டத்தின் காரணன் {ஸர்வபாவகரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் மறையும்போது, வெளிப்படாத பிரம்மமான உன்னிலேயே கலப்பதால்) அண்டத்தை அழிப்பவன் {ஹரன்} நீயே.(41-12)

உன் கரங்களில் ஒன்றில் கமண்டலம் தரிப்பவன் {கமண்டலுதரன்} நீயே. மற்றொன்றில் வில்லைத் தரிப்பவன் {தந்வி} நீயே. மற்றொன்றில் கணைகளைத் தரிப்பவன் {பாணஹஸ்தன்} நீயே. மற்றொன்றில் மண்டையோட்டைத் தரிப்பவன் {கபாலவாந்} நீயே. வஜ்ரத்தைத் தரிப்பவன் {அசநி} நீயே. நூறு கொல்லியை {சதக்நியைத்} தரிப்பவன் நீயே. வாள் தரிப்பவன் {கட்கி} நீயே. போர்க்கோடரி தரிப்பவன் {பட்டிசி} நீயே. சூலந்தரித்தவன் {ஆயுதங்கள் அனைத்தையும் தரிப்பவன்} {ஆயுதி} நீயே. துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே.(42-13) உன் கரங்களில் ஒன்றில் வேள்விக் கரண்டியைக் கொண்டிருப்பவன் {ஸ்ருவஹஸ்தன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {ஸுரூபன்} நீயே. அபரிமிதமான சக்தியைக் கொண்டவன் {தேஜஸ்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரை அலங்கரிக்கும் அனைத்தையும் அளவில்லாமல் கொடுப்பவன் {தேஜஷ்கரன்} நீயே. தலையில் தலைப்பாகை அணிபவன் {உஷ்ணீஷி} நீயே. அழகிய முகம் கொண்டவன் {ஸுவக்த்ரன்} நீயே. காந்தியிலும் பலத்திலும் பெருகுபவன் {உதக்ரன்} நீயே. எளிமையும், பணிவும் கொண்டவன் {விந்தன்} நீயே.(43-14) மிக நெடியவன் {தீர்க்கன்} நீயே. புலன்களையே கதிர்களாகக் கொண்டவன் {ஹரிகேசன்} நீயே. ஆசான்களில் பேராசான் {ஸுதீர்த்தன்} நீயே. (இருப்பிலுள்ள தூய இன்ப நிலையான)[3] பரப்பிரம்மம் {க்ருஷ்ணன்} நீயே. (செல்வந்தனான ஒரு வைசியனால் அவமதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்த பிராமணனுக்கு ஆறுதலளிக்க) நரியின் வடிவை ஏற்றவன் {ஸ்ருகாலரூபன்} நீயே. (தவங்களில் இருந்து பெறும்) பலத்திற்காகக் காத்திராமல் நோக்கங்களை அனைத்தும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தார்த்தன்} நீயே. (துறவின் குறியீடாக) மொட்டைத் தலையுடன் இருப்பவன் {முண்டன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவன் {ஸர்வசுபங்கரன்} நீயே.(44-15)பிறப்பற்றவன் {அஜன்} நீயே. எண்ணற்ற வடிவங்களைக் கொண்டவன் {பஹுரூபன்} நீயே. அனைத்து வகை நறுமணங்களையும் மேனியில் தரிப்பவன் {கந்தகாரி} நீயே. (மன்னன் பகீரதனின் மெய்யுறுதியுடன் கூடிய வேண்டுதலால் கங்கை நீரைக் கொடுத்தாலும்) சொர்க்கத்தில் இருந்து கங்கை ஆறு பாய்ந்த போது, தலையில் உள்ள சடாமுடியில் அதனை உறிஞ்சிக் கொண்டவன் {கபர்த்தி} நீயே. அரசையும், தலைமைத்துவத்தையும் கொடுப்பவன் நீயே. காமமடக்கும் கடும் நோன்பிலிருந்து ஒருபோதும் வீழாத பிரம்மச்சாரி {ஊர்த்வரேதஸ்} நீயே. பாலுறவுக் காமம் அடக்கலில் புகழ்பெற்றவன் {மேல்நோக்கிய குறியைக் கொண்டவன்} {ஊர்த்வலிங்கன்} நீயே. எப்போதும் அண்ணாந்து {மல்லாந்து / மேல்நோக்கிப்} படுப்பவன் {ஊர்த்வசாயி} நீயே. பலத்தையே வசிப்பிடமாகக் கொண்டவன் {நபஸ்தலன்} நீயே.(45-16) தலையில் மூன்று சடைகளைக் கொண்டவன் {த்ரிஜடி} நீயே. மரவுரி தரித்தவன் {சீரவாஸஸ்} நீயே. (கடுஞ்சீற்றத்தின் விளைவால்) ருத்திரன் நீயே. தேவர்களின் படைத்தலைவன் {ஸேநாபதி} நீயே, அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விபு} நீயே. பகலில் உலவுபவன் {அஹஸ்சரன்} நீயே. இரவில் உலவுபவனும் {நக்தஞ்சரன்} நீயே[4]. கடுங்கோபம் கொண்டவன் {திக்மமந்யு} நீயே. (வேத கல்வி மற்றும் தவங்களால் பிறக்கும்) பளிச்சென்ற பிரகாசம் கொண்டவன் {ஸுவர்ச்சலன்} நீயே.(46-17) உன் புனித நகரான வாராணசியை அழிப்பதற்காக மதங்கொண்ட யானையின் வடிவில் வந்த பெரும் அசுரனைக் கொன்றவன் {கஜஹன்} நீயே. அண்டத்தை ஒடுக்குபவர்களான தைத்தியர்களைக் கொல்பவன் {தைத்யஹன்} நீயே. அண்டத்தை அழிக்கும் காலன் நீயே. அண்டத்தின் தலைமை ஆணையாளன் {லோகதாதா} நீயே. சிறந்த சாதனைகள் அனைத்தின் சுரங்கம் {குணாகரன்} நீயே. சிங்கம் மற்றும் புலியின் வடிவம் {ஸிம்மசார்த்தூலரூபன்} நீயே. {குருதியால் நனைந்த} யானைத் தோலை உடுத்தியிருப்பவன் {ஆர்த்ரசர்மாம்பராவ்ருதன்} நீயே.(47-18) காலத்தின் தடுக்கப்பட முடியாத ஆதிக்கத்தைக் கடந்த, காலத்தை வஞ்சிக்கும் யோகி {காலயோகி} நீயே. அசல் ஒலி {மஹாநாதன்}நீயே. விருப்பங்கள் அனைத்தின் கனியும் {ஸர்வகாமன்} நீயே. நான்குவழிகளில் துதிக்கப்படுபவன் {சதுஷ்பதன்} நீயே[5]. (வேதாளம் மற்றும் பிறவற்றைப் போன்ற) இரவுலாவி {நிசாசரன்} நீயே. சடலங்களின் துணையுடன் திரிபவன் {பிரேதசாரி} நீயே. பூதங்களின் துணையுடன் திரிபவன் {பூதசாரி} நீயே. இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும் உயர்ந்த தலைவன் {மஹேஸ்வரன்} நீயே.(48-19) இருப்பிலுள்ள மற்றும் இருப்பில் இல்லாத அனைத்துப் பொருட்களின் வடிவில் உன்னை முடிவிலாமல் பெருக்கிக் கொண்டவன் {பஹுபூதன்} நீயே. மஹத் மற்றும் ஐம்பூதங்களின் எண்ணற்ற கலவைகளைத் தாங்குபவன் {பஹுதரன்} நீயே. ராஹு என்ற பெயரில் அறியப்படும் ஆதி அறியாமை, அல்லது தமஸ் {ஸ்வர்ப்பாநு} நீயே. அளவற்றவன் {அமிதன்} நீயே. விடுதலை அடைந்தவர்களால் {முக்தர்களால்} அடையப்படும் உயர்ந்த கதி நீயே. நடன விரும்பி {ந்ருத்யப்ரியன்} நீயே. எப்போதும் நடனமாடிக் கொண்டிருப்பவன் {நித்யநர்த்தன்} நீயே. பிறரை நடனமாடச் செய்பவன் {நர்த்தகன்} நீயே. அண்டத்தின் நண்பன் {ஸர்வலாலஸன்} நீயே.(49-20)அமைதியான, மென்மையான குணம் கொண்டவன் {கோரன்} நீயே. அண்டத்தை உண்டாக்கவும், அழிக்கவும் வேண்டிய தவப் பலத்தைக் கொண்டவன் {மஹாதபஸ்} நீயே. மாயையின் பந்தங்களால் உயிரினங்கள் அனைத்தையும் கட்டியிருப்பவன் {பாசன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {நித்யன்} நீயே. (கைலாச) மலையில் வசிப்பவன் {கிரிருஹன்} நீயே. பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், வெளி போன்ற பொருட்கள் அனைத்திலும் பற்றற்றவனும் {நபன்} நீயே. ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரஹஸ்தன்} நீயே. வெற்றி {விஜயன்} நீயே. சோம்பலற்றவனும், விடாமுயற்சி தேவைப்படும் காரியங்களில் தாமதம் செய்யாதவனும் {வ்யவஸாயன், அதந்த்ரிதன்} நீயே.(50-21) அச்சமற்றவன் {அதர்ஷணன்} நீயே. அச்சமும் {தர்ஷணாத்மா} நீயே. பலியின் வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் {யஜ்ஞஹன்} நீயே. பக்தர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமநாசகன்} நீயே. தக்ஷனின் வேள்வியை அழித்தவன் {தக்ஷாயாகபஹாரி} நீயே. இனிமையானவன் {ஸுஸஹன்} நீயே. சற்றே இனிமையானவன் {சார்பற்றவன்} {மத்யமன்} நீயே.(51-22) கடுஞ்சீற்றம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் சக்தியை அபகரிப்பவனும் {தேஜோபஹாரி} நீயே. அசுரன் பலனைக் கொன்றவன் {பலஹன்} நீயே. எப்போதும் மகிழ்ச்சிமிக்கவன் {முதிதன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் செல்வத்தின் {அர்த்தன்} வடிவம் நீயே. ஒருபோதும் வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. உன்னைத் தவிரத் துதிக்கத்தக்கவன் எவனும் இல்லாதவன் {அவரன்} நீயே. (பெருங்கடலின் வடிவில்) ஆழ்ந்த முழக்கங்களை இடுபவன் {கம்பீரதோஷன்} நீயே. (வெளியின் வடிவில் இருப்பதால்) எவராலும் அளக்க முடியாத ஆழத்தைக் கொண்டவன் {கம்பீரன்} நீயே. எவராலும் அளக்க முடியாத பலமும், வலிமையும் கொண்ட துணைவர்கள் மற்றும் காளையைக் கொண்டவன் {கம்பீரபலவாஹநன்} நீயே.(52-23) (மேல் நோக்கிய வேர்களைக் கொண்டதும், கீழ்நோக்கித் தங்கும் கிளைகளைக் கொண்டதுமான உலக மரம் {ந்யக்ரோதரூபன்} நீயே. ஆலமரம் {ந்யக்ரோதன்} நீயே. அண்டத்திற்கு அழிவு நேரும் வேளையில், அளவற்ற நீரில் ஓர் ஆலம் இலையில் உறங்கிக் கொண்டிருப்பவன் {வ்ருக்ஷகர்ணஸ்திதி} நீயே. ஹரி, ஹரன், கணேசன், அர்க்கன், அக்னி, வாயு முதலி வடிவங்களில் வழிபாட்டாளர்கள் அனைவருக்கும் கருணை காட்டுபவன் {விபு} நீயே. (கடலைகளை மெல்வதைப் போல எண்ணற்ற உலகங்களை மென்று விரைவாக அவற்றை விழுங்க வல்லவன் என்பதால்) கூரிய பற்களைக் கொண்டவன் {ஸுதீக்ஷ்ணதசநன்} நீயே. வடிவத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவு கொண்டவன் {மஹாகாயன்} நீயே. அண்டத்தை உடனே விழுங்கும் அளவுக்குப் பெரிய வாயைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே.(53-24) எவனுடைய துருப்புகள் எங்கும் துதிக்கப்படுமோ அவன் {விஷ்வக்ஸேநன்} நீயே. யானைகளின் இளவரசன் கைப்பற்றப்பட்ட போது தேவர்களின் அச்சங்கள் அனைத்தையும் அகற்றியவன் {ஹரி} நீயே. அண்டத்தின் வித்து {யஜ்ஞன்} நீயே. போர்க்கொடியில் சின்னமாகக் கொண்ட அதே காளையை வாகனமாகவும் கொண்டவன் {ஸம்யுகாபீடவாஹநன்} நீயே. அக்னியையே ஆன்மாவாகக் கொண்டவன் {தீக்ஷ்ணதாபன்} நீயே. தேரில் பச்சை குதிரைகள் பூட்டப்பட்ட சூரியன் {ஹர்யச்வன்} நீயே. ஜீவனின் நண்பன் {ஸஹாயன்} நீயே. அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய முறையான காலத்தை அறிந்தவன் {கர்மகாலவித்} நீயே.(54-25)

(கொண்டாடப்படும் சக்கரத்தை அடைவதற்காக) விஷ்ணுவால் துதிக்கப்பட்டவன் நீயே. விஷ்ணு நீயே. {ப்ரஸாதிதன், யஜ்ஞன்} பெருங்கடல் {ஸமுத்ரன்} நீயே. நெருப்பைக் கக்கிக் கொண்டும், வேள்வி நெய்யைப் போல உப்பு நீரைக் குடித்துக் கொண்டும் பெருங்கடலுக்குள் திரியும் குதிரைத் தலை {படபாமுகன்} நீயே. அக்னியின் நண்பனான காற்று {வாயு / ஹுதாசநஸஹாயன்} நீயே. மென்மையான தென்றலாலும் கலக்கப்படாதபோது ஓய்ந்திருக்கும் பெருங்கடலைப் போல அமைதியான ஆன்மா கொண்டவன் {ப்ரசாந்தாத்மா} நீயே. மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யெனும் ஆகுதிகளைப் பருகுபவன் {ஹுதாசநன்} நீயே.(55-26) அணுகப்பட முடியாதவன் {உக்ரதேஜஸ்} நீயே. முடிவிலா அண்டத்தில் பிரகாசத்தைப் பரப்புபவன் {மஹாதேஜஸ்} நீயே. போரில் வல்லவன் {ஜந்யன்} நீயே. வெற்றியடையும்பொருட்டுப் போரில் எப்போது ஈடுபட வேண்டும் என்ற காலத்தை நன்கறிந்தவன் {விஜயகாலவித்} நீயே. கோள்களின் நகர்வுகளைக் குறித்த அறிவியல் {ஜோதிடம்} {ஜ்யோதிஷாம்அயநன்} நீயே. வெற்றியின் வடிவம் {ஸித்தி} நீயே. (உடல் ஒருபோதும் சிதைவடையாதவனாக இருப்பதால்) எப்போதும் உடலைக் கொண்டவன் {ஸர்வவிக்ரஹன்} நீயே.(56-27) தலையில் குடுமி தரிப்பதால் இல்லறத்தான் {கிருஹஸ்தன் / சிகி} நீயே. தலை மொட்டையாக இருப்பதால் சந்நியாசி {முண்டி} நீயே. (வானப்ரஸ்தனாக இருப்பதால்) தலையில் சடாமுடி தரிப்பவன் {ஜடி} நீயே. (உன்னோடு அடையாளங்காணப்படும் அறவோர் நடந்து செல்லும் பாதை பிரகாசமானதாக இருப்பதால்) உன் கடுங்கதிர்களுக்காகப் புகழ்பெற்றவன் {ஜ்வாலி} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் உடலில் பொதிந்திருக்கும் இதய ஆகாயத்தில் தோன்றுபவன் {மூர்த்திஜன்} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் மண்டையோட்டுக்குள் (மூளைக்குள்) நுழைபவன் {மூர்த்தகன்} நீயே. வயதின் தோல்சுருக்கங்களைத் தரித்தவன் {பலி} நீயே. மூங்கில் புல்லாங்குழலைத் தரிப்பவன் {வேணவி} நீயே. சிறு முரசும் {பணவமும்} கொண்டவன் {பணவி} நீயே. தாளி என்றழைக்கப்படும் இசைக்கருவியைத் தரிப்பவன் {தாளி} நீயே. தானியங்களின் உமி நீக்க மரக்கலத்தைப் பயன்படுத்துபவன் {கலி} நீயே. யமனை மறைக்கும் மாயையை மறைப்பவன் {காலகடங்கன்} நீயே[6].(57-28) ஆகாயக் கோள்களால் அமைந்த காலச்சக்கர நகர்வுகளில் எப்போதும் புத்தியைச் செலுத்துவதால் கணியன் {சோதிடன் / நக்ஷத்ரவிக்ரஹமதி} நீயே. சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களின் விளைவாக இருக்கும் பொருட்களில் புத்தியைச் செலுத்தும் ஜீவன் {குணபுத்தி} நீயே. அழிவேற்படும்போதும் அனைத்துப் பொருட்களும் எதில் கலக்குமோ அந்நிலை {லயன்} நீயே. எவ்வகை மாற்றத்திற்கும் உட்படும் எந்தப் பொருளையும் தன்னில் கொள்ளாத நிலையாவன் {அகமன்} நீயே. அனைத்து உயிரினங்களின் தலைவன் {ப்ரஜாபதி} நீயே. பரந்த அண்டம் முழுவதும் பரவும் கரங்களைக் கொண்டவன் {விஸ்வபாஹு} நீயே. நுணுக்கமான எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுபவன் {விபாகன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகன்} நீயே. (படைக்கும் பொருட்களை அனுபவிக்காதவனாக இருப்பதால்) வாயில்லாதவன் {முகமில்லாதவன் /  அறிவாயிருப்பவன் {அமுகன்} நீயே.(58-29) உலகப் பந்தங்களில் இருந்து உயிரினங்களை விடுவிப்பவன் {விமோசநன்} நீயே. எளிமையாக அடையத்தக்கவன் {ஸுஸரணன்} நீயே. தங்கக் கவசத்துடன் வெளிப்படுபவன் {ஹிரண்யகவசோத்பவன்} நீயே. லிங்கச் சின்னத்தில் தோன்றுபவன் {மேட்ரஜன்} நீயே. நீர்க்கோழிகள் மற்றும் விலங்குகளைத் தேடி காடுகளில் திரிபவன் {பலசாரி} நீயே. மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருப்பவன் {மஹீசாரி} நீயே. எங்குமிருப்பவன் {ஸ்ருதன்} நீயே.(59-30)மூவுலகங்களிலும் முழக்கப்படும் எக்காளங்கள் அனைத்தினாலும் உண்டாக்கப்படும் முழக்கம் {ஸர்வதூர்யநிநாதி} நீயே. அனைத்து உயிரினங்களையும் உறவினர்களாகக் கொண்டவன் {ஸர்வாதோத்யபரிக்ரஹன்} நீயே. (சேஷன் என்றழைக்கப்படும் வலிமைமிக்க நாகனைப் போல நீ இருப்பதால்) பாம்பின் வடிவம் கொண்டவன் {வ்யாலரூபன்} நீயே. (ஜைகிஷவ்யரையோ, பிற யோகியரையோ போல) மலைக்குகைகளில் வாழ்பவன் {குஹாவாசி} நீயே. (தேவர்ப்படைத்தலைவன்) குஹனைப் போன்றவன் {குஹன்} நீயே. மலர் மாலைகளை அணிபவன் {மாலி} நீயே. உலகப் பொருட்களை அடைவதால் எழும் மகிழ்ச்சியை அனுபவிப்பவன் {தரங்கவிதன்} நீயே.(60-31) பிறப்பு, இறப்பு மற்றும் அழிவு என்ற மூன்று நிலைகளை அனைத்து உயிரினங்களும் எதனிலிருந்து பெறுகின்றனவோ அந்நிலை {த்ரிதசன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று கால நிலைகளில் தோன்றும், அல்லது இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்குபவன் {த்ரிகாலத்ருக்} நீயே. முற்பிறவி செயல்கள் மற்றும் தற்காலத்தில் செய்த செயல்கள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும், அறியாமை மற்றும் ஆசைகளில் உள்ள பற்றுகள் அனைத்தில் இருந்தும் உயிரினங்கள் விடுவிப்பவன் {கர்மஸர்வபந்தவிமோசநன்} நீயே. அசுரத் தலைவர்களைக் கட்டுபவன் {அஸுரேநத்ராணாம்பந்தநன்} நீயே. போரில் பகைவர்களைக் கொல்பவன் {யுதிசத்ருவிநாசகன்} நீயே.(61-32) ஞானத்தால் மட்டுமே அடையப்படுபவன் {ஸாங்க்யப்ரஸாதன்} நீயே. துர்வாசர்கள் {துர்வாஸர்} நீயே. அறவோர் அனைவராலும் பணிவிடை செய்யப்படுபவனும், துதிக்கப்படுபவனும் {ஸர்வஸாதுநிஷேவிதன்} நீயே. பிரம்மன் மற்றும் பிறரின் வீழ்ச்சிக்குக் காரணன் {ப்ரஸ்கந்தநன்} நீயே. செயல்களுக்குத் தகுந்த இன்ப துன்பங்களை அனைத்து உயிரினங்களுக்கும் நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பவன் {விபாகஜ்ஞன்} நீயே. ஒப்பற்றவன் {அதுல்யன்} நீயே. வேள்விகளில் கொடுக்கப்படும், பெறப்படும் பங்குகளை நன்கறிந்தவன் {யஜ்ஞபாகவித்} நீயே.(62-33) எங்கும் வசிப்பவன் {ஸர்வவாஸன்} நீயே. எங்கும் திரிபவன் {ஸர்வசாரி} நீயே. அழிவற்றவன் {த்ரோத்தமன்} நீயே. {துர்வாசன், வாஸவன், அமரன் நீயே} இமய மலைகளைப் போன்றவன் {ஹைமன்} நீயே. பசும்பொன்னைச் செய்பவன் {ஹேமகரன்} நீயே. செயல்களற்றவன் {அயஜ்ஞன்} நீயே. செயல்கள் அனைத்தின் கனிகளையும் உன்னில் தாங்குபவன் {ஸர்வதாரி} நீயே. தாங்குபவர்களாகக் கருதப்படும் முதன்மையான உயிரினங்கள் அனைத்தும் {தரோத்தமன்} நீயே.(63-34) குருதி தோய்ந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்} நீயே. முடிவிலா அண்டம் முழுவதும் பரவும் பார்வையுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்} நீயே. எப்போதும் வெற்றிவாகை சூடும் சக்கரங்களுடன் கூடிய தேரைக் கொண்டவன் {விஜயாக்ஷன்} நீயே. பெரும் கல்வியுடையவன் {விசாரதன்} நீயே. பணியாட்களான உன் பக்தர்களை ஏற்பவன் {ஸங்க்ரஹன்} நீயே. புலன்களை அடக்கி ஒடுக்குபவன் {நிக்ரஹன்} நீயே. செயல்படுபவன் {கர்த்தன்} நீயே. பாம்புகளாலான இழைகளையும் துணிகளையும் கொண்ட ஆடைகளை உடுத்துபவன் {ஸர்ப்பசீரநிவாஸநன்} நீயே.(64-35)

பரமன் {முக்யன்} நீயே. தேவர்களில் இறுதியானவன் {அமுக்யன்} நீயே. நன்கு வளர்ந்தவன் {தேஹன்} நீயே. காஹளம் {எக்காளம் / காளம் / காகளம்} என்றழைக்கப்படும் இசைக்கருவியைக் கொண்டவன் {காஹலி} நீயே. அனைத்து ஆசைகளையும் அளிப்பவன் {ஸர்வகாமதன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று கால நிலைகள் அனைத்திலும் அருளின் உடல்கொண்ட வடிவம் {ஸர்வகாலப்ரஸாதன்} நீயே. எப்போதும் நன்கு பயன்படுத்தப்படும் வலிமையைக் கொண்டவன் {ஸுபலன்} நீயே. (கிருஷ்ணனின் அண்ணனான) பலராமனின் வடிவத்தை ஏற்றவன் {பலரூபத்ருதன்} நீயே.(65-36) விரும்பப்படும் அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான விடுதலையாக {முக்தியாக}, அல்லது உயிரினங்கள் அடையும் உயர்ந்த கதிகள் அனைத்துமாக இருப்பவன் {ஸர்வகாமவரன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் கொடுப்பவன் {ஸர்வதன்} நீயே. திசைகள் அனைத்திலும் முகத்தைக் கொண்டவன் {ஸர்வதோமுகன்} நீயே. வெளி அல்லது அந்தப் பூதத்தின் மாறுபாடுகளில் இருந்து அனைத்து வடிவங்களும் உதித்ததைப் போலவே பல்வேறு உயிரினங்கள் எவனிடம் உதித்தவனவோ அவன் {ஆகாசநிர்விரூபன்} நீயே. உடல் என்றழைக்கப்படும் குழிக்குள் விழுபவன் {நிபாதி} நீயே. (உடலால்அமைந்த குழிக்குள் விழுந்து உன் பங்குக்கான கவலையைக் கடக்க முடியாதவனாக இருப்பதால்) ஆதரவற்றவன் {யாருக்கும் உட்படாதவன்} {அவசன்} நீயே. இதய ஆகாயத்தில் வசிப்பவன் {ககன்} நீயே.(66-37) மிகக் கொடிய வடிவம் கொண்டவன் {ரௌத்ரரூபன்} நீயே. அம்சு என்றழைக்கப்படும் தேவன் நீயே. அம்சுவின் தோழன் நீயே, ஆதித்தியன் என்றழைக்கப்படுபவன் நீயே. எண்ணற்ற கதிர்களைக் கொண்டவன் {பஹுரச்மி} நீயே. பளிச்சென்ற பிரகாசத்துடன் கூடியவன் {ஸுவர்ச்சஸி} நீயே. காற்றை விடப் பெரும் வேகம் கொண்டவன் {வஸுவேகன், மஹாவேகன்} நீயே. மனோ வேகம் கொண்டவன் {மநோவேகன்} நீயே. அறியாமையுடன் கூடிய அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {நிசாசரன்} நீயே.(67-38) ஒவ்வொரு உடலிலும் வசிப்பவன் {ஸர்வவாஸி} நீயே. செழிப்பைத் தோழனாகக் கொண்டு வசிப்பவன் {ஸ்ரீயாவாஸி} நீயே. அறிவையும், கல்வியைக் கற்பிப்பவன் {உபதேசகரன்} நீயே. முற்றான அமைதி குறித்த கல்வியைக் கற்பிப்பவன் {அகரன்} நீயே. (அமைதியைப் போதிப்பவனாக இருப்பதால்) உள்ளடங்கிப் பேசாதவன் {முநி} நீயே. ஆன்மாவைக் காண உடலைக் கடந்தவன் {ஆத்மநிராலோகன்} நீயே. நன்கு துதிக்கப்படுபவன் {ஸம்பக்நன்} நீயே. (கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {குபேரன்} அந்தக் கருவூலங்களை உன்னிடம் இருந்தே பெற்றதால்) ஆயிரங்கணக்கானவற்றைக் கொடுப்பவன் {ஸஹஸ்ரதன்} நீயே.(68-39) (கசியபர் மற்றும் வினதையின் மகனான கருடனாக இருப்பதால்) பறவைகளின் இளவரசன் {பக்ஷி} நீயே. உதவி செய்யும் நண்பன் {பக்ஷன்} நீயே. (ஆயிரம் சூரியர்கள் சேர்ந்தது போன்ற காந்தியைக் கொண்டவனாக இருப்பதால்) பெரும் பிரகாசம் கொண்டவன் {ரூபன், அதிதீப்தன்} நீயே. படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆசான் {விசாம்பதி} நீயே. பசிகளைத் தூண்டுபவன் {மயங்கச் செய்பவன்} {உந்மாதன்} நீயே. காம தேவன் {மதநன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் அழகிய பெண்களின் வடிவம் {காமன்} நீயே. உலகின் மரம் {அச்வதன்} நீயே. கருவூலங்களின் தலைவன் {அர்த்தகரன்} நீயே. புகழைக் கொடுப்பவன் {யசஸ்} நீயே.(69-40)

உயிரினங்கள் அனைத்தின் செயல்களுக்காக (இன்ப துன்பங்கள் என்ற வடிவில்) அவற்றின் கனிகளைப் பகிர்ந்தளிக்கும் தேவன் {வாமதேவன்} நீயே. நீ பகிர்ந்து கொடுக்கும் அந்தக் கனிகளும் {ப்ராக்} நீயே. (இருப்பில் ஏதும் இல்லாத காலத்தில் இருப்பதால்) மிகப் பழமையானவன் {தக்ஷிணன்} நீயே. மூவுலகங்களையும் ஓரடியில் மறைக்கத் தகுந்தவன் {வாமனே} நீயே. அசுரத் தலைவன் பலியை வஞ்சித்து (அவனது அரசுரிமையை அபகரித்து இந்திரனுக்கு மீட்டளித்தவனான குள்ளனும் {வாமநன்} நீயே. (சனத்குமாரர் மற்றும் பிறரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட யோகி {ஸித்தயோகி} நீயே. (வசிஷ்டர் மற்றும் பிறரைப் போல) பெரும் முனிவன் {மஹரிஷி} நீயே. (ரிஷபர் மற்றும் தத்தாத்ரேயர் ஆகியவர்களைப் போல) எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுபவன் {ஹித்தார்த்தன்} நீயே. (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) சந்நியாசி {ஸித்தஸாதகன்} நீயே.(70-41) துறவி வகைக் குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்டவன் {பிக்ஷு} நீயே. அத்தகைய குறியீடுகள் அற்றவன் {பிக்ஷுரூபன்} நீயே. துறவி வகையினரின் நடைமுறைகளைக் கடந்து நிற்பவன் {விபணன்} நீயே. அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் காப்பவன் {மென்மையானவன்} {ம்ருது} நீயே. (மகிமையையும், அவமதிப்பையும் ஒன்றாகவே கருதுபவனாதலால்) ஆசைகளேதும் அற்றவன் {அவ்யபன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் என்றழைக்கப்படுபவன் {மஹாஸேநன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் மீது இந்திரன் வஜ்ரத்தை ஏவியபோது, அவனது உடலில் இருந்து எழுந்த விசாகன் நீயே. அறுபது தத்துவங்கள் அல்லது அண்டத்தின் தலைமைப் பொருட்களை அனுபவிப்பவன் {ஷஷ்டிபாகன்} நீயே. (புலன்கள் அதனதன் செயல்பாடுகளுக்கு உன்னாலேயே வழிநடத்தப்படுவதால்) புலன்களின் தலைவன் {கவாம்பதி} நீயே.(71-42) (மலைகளைப் பிளக்கும்) வஜ்ரத்தைத் தரிப்பவன் {வஜ்ரஹஸ்தன்} நீயே. முடிவற்றவன் {விஷ்கம்பி} நீயே. போர்க்களத்தில் தைத்தியர் படையைக் கலங்கடிப்பவன் {சமூஸ்தம்பநன்} நீயே. தன் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும், எதிரிகளின் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும் தேரில் வலம் வந்து, அவர்களை அழித்து, நலமாகவும், பாதுகாப்பாகவும் திரும்பி வருபவன் {வ்ருத்தாவ்ருத்தசரன்} நீயே. (பிரம்ம அறிவின் விளைவால்) உலகப் பெருங்கடலின் அடியாழத்தை அறிந்தவன் {தாலன்} நீயே. (கிருஷ்ணன் பிறந்த குலத்தைத் தோற்றுவித்த) மது என்றழைக்கப்படுபவன் நீயே. தேனுக்கு ஒப்பான நிறத்தில் கண்களைக் கொண்டவன் {மதுகலோசநன்} நீயே.(72-43) பிருஹஸ்பதிக்கு அடுத்து பிறந்தவன் {வாசஸ்பத்யன்} நீயே. வேள்விகளில் அதர்யுக்கள் செய்யும் செயல்களைச் செய்பவன் {வாஜஸநன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களாலும் எப்போதும் துதிக்கப்படுபவன் {நித்யம் ஆஸ்ரமபூஜிதன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்பு மிக்கவன் {ப்ரம்மசாரி} நீயே. (துறவியாக இருக்கும் விளைவால்) உலகில் மனிதர்களின் வசிப்பிடங்களில் திரிபவன் {லோகசாரி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வசாரி} நீயே. வாய்மை அறிந்தவன் {விசாரவித்} நீயே.(73-44) ஒவ்வொரு இதயத்தையும் அறிந்து, அவற்றுக்கு வழிகாட்டுபவன் {ஈசாநன்} நீயே. மொத்த அண்டத்திலும் பரவி இருப்பவன் {ஈச்வரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தின் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்களுக்கான கனிகளை அவற்றுக்கு வெகுமதியாகக் கொடுப்பதற்காக அச்செயல்களைத் திரட்டிச் சேகரிப்பவன் {காலன்} நீயே. அண்ட அழிவைப் பின்தொடரும் இரவிலும் உயிரோடு இருப்பவன் {நிசாசாரி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரித்தவன் {பிநாகவாந்} நீயே. உன் கணைகள் எட்டும் இலக்குகளான தைத்தியர்களுடனும் வசிப்பவன் {நிமித்தஸ்தன்} நீயே. செழிப்பின் ஆசான் {நிமித்தன்} நீயே. {நந்தி, நந்திகரன்}, ராமாவதாரத்தில் ராவணனுக்கு எதிரான படையெடுப்பில்  பெருங்குரங்கின் உதவி பெற்ற விஷ்ணு {ஹரி} நீயே.(74-45)

உன் தோழர்களாக இருக்கும் கணங்களின் தலைவன் {நந்தீஸ்வரன்} நீயே. பல்வேறு கணங்கள் ஒவ்வொன்றும் {நந்தி} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவன் {நந்தநன்} நீயே. {நந்திவர்த்தநன்}. அனைவரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவன் நீயே {பகஹாரி} நீயே. இந்திரனைப் போன்ற உயர்ந்தவர்களின் அரசுரிமையையும். செழிப்பை பறிப்பவன் {நிஹந்தன்} நீயே. மரணம் என்ற வடிவில் அண்டத்தை அழிப்பவனாக இருப்பவன் {காலன்} நீயே. அறுபத்து நான்கு கலைகளில் வசிப்பவன் நீயே. மிகப் பெரியவன் {ப்ரம்மன்} நீயே. (முப்பாட்டன்களின் தந்தையாக இருப்பதால்) பெரும்பாட்டன் {பிதாமஹன்} நீயே. {சதுர்முகன்}.(75-46) தேவர்களாலும். அசுரர்களாலும் துதிக்கப்படும் பெரும் லிங்கம் {மஹாலிங்கன்} நீயே. ஏற்புடைய அழகிய குணங்களைக் கொண்டவன் {சாருலிங்கன்} நீயே. இருப்பிலுள்ள அனைத்துக் கருத்துகளுக்கும் உள்ள பல்வேறு வகைச் சாட்சிகளைப் புரிந்து கொள்ளச் செய்பவன் {லிங்காத்யக்ஷன்} நீயே. பார்வை மற்றும் பிற புலன்களின் மூலம் பெறப்படும் கருத்துக்ள அனைத்தின் தலைவன் {ஸுராத்யக்ஷன்} நீயே. (புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் ஈர்த்து. அவ்விடத்தில் அவை அனைத்தையும் கலப்பதற்கு உன் துணை தேவை என்பதால்) யோகத்தின் தலைவன் {யோகாத்யக்ஷன்} நீயே. (யுகங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்து) கிருதம் மற்றும் பிற யுகங்களைத் தாங்குபவன் {யுகாவஹன்} நீயே.(76-47) (நற்செயல் மற்றும் தீச்செயல்கள் அனைத்தின் கனிகளையும் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) வித்துகளின் தலைவன் {பீஜாத்யக்ஷன்} நீயே. அத்தகைய வித்துகளின் மூலக் காரணன் {பீஜகர்த்தன்} நீயே. ஆன்மா தொடர்பாகச் சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள வழிகளில் செயல்படுபவன் {அத்யாத்மாநுகதன்} நீயே. வலிமைக்கும். பிற குணங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பலன்} நீயே. மஹாபாரதம் மற்றும் பிற வகை வரலாறுகள் அனைத்தும் {இதிஹாஸன்} நீயே. மீமாம்ஸை என்றழைக்கப்படும் சாத்திரங்கள் {கல்பன்} நீயே. (இயக்கவியலை நிறுவிய) கௌதமர் நீயே. சந்திரனின் பெயரில் உள்ள இலக்கணப் பெரும் சாத்திரத்தின் ஆசான் {நிசாகரன்} நீயே.(77-48) எதிரிகளைத் தண்டிப்பவன் {தம்பன்} நீயே. எவராலும் தண்டிக்கப்பட முடியாதவன் {அதம்பன்} நீயே. அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்திலும் உண்மையாக இருப்பவன் {வைதம்பன்} நீயே. அர்ப்பணிப்பு கொண்டோருக்குக் கீழ்ப்படிபவன் {வஸ்யன்} நீயே. பிறரை அடக்க வல்லவன் நீயே {வஸகரன்} நீயே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் சச்சரவுகளுக்கு ஒத்திசைபவன் {கலி} நீயே. (பூலோகம் முதலான) பதினான்கு உலகங்களைப் படைத்தவன் நீயே {லோககர்த்தன்} நீயே. பிரம்மன் முதல் (புல் மற்றும் துரும்பைப் போன்ற) இழிந்த தாவர வடிவங்கள் ஈராக அனைத்து உயிரினங்களையும் பேணிக் காப்பவன் {பசுபதி} நீயே. ஐம்பூதங்களைப் படைத்தவன் {மஹாகர்த்தன்} நீயே. (பற்றற்றவனாக எப்போதும் இருப்பதால்) எதையும் ஒருபோதும் அனுபவிக்காதவன் {அநௌஷதன்} நீயே.(78-49) அழிவற்றவன் {அக்ஷரன்} நீயே. இன்பநிலையின் உயர்ந்த வடிவம் {பரமம்ப்ரம்ம} நீயே. வலிமையில் செருக்குடைய தேவன் {பலவத்} நீயே. சக்ரன் நீயே. அறநெறி சாத்திரங்களில் காணப்படுவதும், குற்றவாளிகளைப் பீடிப்பதுமான தண்டனை {நீதி} நீயே. உலகத்தில் நிலவும் கொடுங்கோன்மையின் வடிவம் {அநீதி} நீயே. தூய ஆன்மா கொண்டவன் {சுத்தாத்மா} நீயே. (அனைத்து வகைக் களங்கங்களில் இருந்தும் மேம்பட்டவனான) களங்கமற்றவன் {சுத்தன்} நீயே. துதிக்கப்படத் தகுந்தவன் {மாந்யன்} நீயே. இடையறாமல் தோன்றி மறையும் உலகம் {கதாகதன்} நீயே.(79-50)

பெருமளவு அருளைக் கொண்டவன் {பஹுப்ரஸாதன்} நீயே. நல்ல கனவுகளைக் கொண்டவன் {ஸுஸ்வப்நன்} நீயே. அண்டத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி {தர்ப்பணன்} நீயே. அக மற்றும் புறப்பகைவர்கள் அனைவரையும் அடக்குபவன் {அமித்ரஜித்} நீயே. வேதத்தைப் படைத்தவன் {வேதகாரன்} நீயே. தந்திரங்களிலும், புராணங்களிலும், மனிதமொழி வடிவிலும் உள்ள சாற்று மொழியைப் படைத்தவன் {மந்த்ரகாரன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வித்வாந்} நீயே. போரில் எதிரிகளைக் கலங்கடிப்பவன் {ஸமரமர்த்தநன்} நீயே.(80-51) அண்ட அழிவுக் காலத்தில் தோன்றும் பயங்கர மேகங்களில் வசிப்பவன் {மஹாமேகநிவாஸி} நீயே. (அண்ட அழிவைக் கொண்டு வரும் விளைவால்) மிகப் பயங்கரன் {மஹாகோரன்} நீயே. மனிதர்கள் அனைவரையும், அனைத்துப் பொருட்களையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வெல்பவன் {வசீகரன்} நீயே. பேரழிவை உண்டாக்குபவன் {அக்நிஜ்வாலன்} நீயே. நெருப்பையே சக்தியாகக் கொண்டவன் {மஹாஜ்வாலன்} நீயே. நெருப்பைவிட வலிய சக்தி கொண்டவன் {அதிதூம்ரன்} நீயே. அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்பு {ஹுதன்} நீயே. வேள்வி ஆகுதிகளின் மூலம் நிறைவடைய வல்லவன் {ஹவி} நீயே.(81-52) மந்திரங்களின் உதவியுடன் வேள்விகளில் ஊற்றப்படும் நீரும், பிற நீர்மங்களும் {வ்ருஷ்ணன்} நீயே. நல்ல மற்றும் தீய செயல்களுடன் தொடர்புடைய கனிகளைச் சிதறடிக்கும் அற தேவனின் வடிவத்தில் இருப்பவன் நீயே, பேரின்பத்தைக் கொடுப்பவன் {சங்கரன்} நீயே. எப்போதும் பிரகாசத்துடன் கூடியவனும் {நித்யம்வர்ச்சஸ்வி} நீயே. நெருப்பின் வடிவம் {தூமகேதநன்} நீயே. வைடூரிய நிறம் கொண்டவன் {நீலன்} நீயே. லிங்கச் சினத்தில் எப்போதும் இருப்பவன் {அங்கலுப்தன்} நீயே. அருள் நிலையின் ஊற்றுக்கண் {சோபநன்} நீயே. நோக்கங்களைச் செயல்படுத்துவதில் எதனாலும் கலங்கடிக்கப்பட இயலாதவன் {நிரவக்ரஹன்} நீயே.(82-53) அருளை வழங்குபவன் {ஸ்வஸ்திதன்} நீயே. அருளின் வடிவம் {ஸ்வஸ்திபாவன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் பங்கு கொடுக்கப்படுபவன் {பாகி} நீயே. வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் ஒவ்வொரு பங்கையும் பகிர்பவன் {பாககரன்} நீயே. பெரும் வேகம் கொண்டவன் {லகு} நீயே. அனைத்துப் பொருட்களிலும் தொடர்பறுந்தவன் {பற்றற்றவன்} {உத்ஸங்கன்} நீயே. வலிமைமிக்க உறுப்புகளைக் கொண்டவன் {மஹாங்கன்} நீயே. உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுபவன் {மஹாகர்ப்பபராயணன்} நீயே.(83-54) (விஷ்ணுவின் வடிவத்தில் இருக்கும்) கரிய நிறத்தவன் {க்ருஷ்ணவர்ணன்} நீயே. (கிருஷ்ணனின் மகனான சாம்பனின் வடிவத்தில் இருக்கும்) வெண்ணிறத்தவன் {ஸுவர்ணன்} நீயே. உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் புலன்கள் {ஸர்வதேஹிநாம் இந்த்ரியன்} நீயே. பெரும் பாதம் கொண்டவன் {மஹாபாதன்} நீயே. பெருங்கரங்களைக் கொண்டவன் {மஹாஹஸ்தன்} நீயே. பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே. பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே.(84-55)

பெருந்தலை கொண்டவன் {மஹாமூர்த்தன்} நீயே. பேரளவுகளைக் கொண்டவன் {மஹாமாத்ரன்} நீயே. பரந்த பார்வையைக் கொண்டவன் {மஹாநேத்ரன்} நீயே. அறியாமையற்ற இரவின் இல்லம் {நிசாலயன்} நீயே. அழிப்பவனை அழிப்பவன் / யமனுக்கு யமன் {மஹாந்தகன்} நீயே. பெருங்காதுகளைக் கொண்டவன் {மஹாகர்ணன்} நீயே. பெரிய உதடுகளைக் கொண்டவன் {மஹோஷ்டன்} நீயே. பெரும் கன்னங்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(85-56) பெரும் மூக்கைக் கொண்டவன் {மஹாநாஸன்} நீயே. பெரும் தொண்டை கொண்டவன் {மஹாகம்பு} நீயே. பெரும் கழுத்தைக் கொண்டவன் {மஹாக்ரீவன்} நீயே. உடலின் பற்றுகளை அறுப்பவன் {ச்மசாநபாக்} நீயே. பரந்த மார்பைக் கொண்டவன் {மஹாவக்ஷஸ்} நீயே. பரந்த நெஞ்சம் {மஹோரஸ்கன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மா {அந்தராத்மா} நீயே. மடியில் மானைக் கொண்டவன் {ம்ருகாலயன்} நீயே.(86-57) மரத்தில் கனிகள் தொங்குவதைப் போல எண்ணற்ற உலகங்கள் எதில் தொங்குமோ அவன் {லம்பநன்} நீயே. அண்ட அழிவின் போது அண்டத்தை விழுங்க உதடுகளைத் திறப்பவன் {லம்பிதோஷ்டன்} நீயே. {மஹாமாயன்}. பாற்கடல் {பயோநிதி} நீயே. பெரிய பற்களைக் கொண்டவன் {மஹாதந்தன்} நீயே. பெரிய தாடைகளைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. பெரிய நாவைக் கொண்டவன் {மஹாஜிஹ்வன்} நீயே. பெரிய வாயைக் கொண்டவன் {மஹாமுகன்} நீயே.(87-58) பெரிய நகங்களைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே. பெரிய மயிர்களைக் கொண்டவன் {மஹாரோமன்} நீயே. முடிவிலா நீளம் கொண்ட முடிகளைக் கொண்டவன் {மஹாகேசன்} நீயே. பெரும் வயிறு படைத்தவன் {மஹாகோசனே} நீயே, பெரும் நீளம் கொண்ட சடாமுடி தரித்தவன் {மஹாஜடன்} நீயே. எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஸந்நன்} நீயே. அருளின் வடிவம் {ப்ரஸாதன்} நீயே. நம்பிக்கையின் வடிவம் {ப்ரத்யயன்} நீயே. (போரில் ஆயுதமாக அல்லது) வில்லாக மலைகளைக் கொண்டவன் {கிரிஸாதநன்} நீயே.(88-59) பிள்ளையிடம் தாயைப் போல அனைத்து உயிரினங்களிடமும் அன்பு நிறைந்தவன் {ஸ்நேஹநன்} நீயே. அன்பேதும் இல்லாதவன் {அஸ்நேஹநன்} நீயே. வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. தியான (யோகத்தில்) எப்போதும் அர்ப்பணிப்புள்ளவன் {மஹாமுநி} நீயே. உலக மரத்தின் வடிவம் கொண்டவன் {வ்ருக்ஷாகாரன்} நீயே. உலக மரத்தால் குறிப்பிடப்படுபவன் {வ்ருக்ஷகேது} நீயே. (பூதங்கள் அனைத்திலும், ஒருபோதும் தணிவடையாத நெருப்பைப் போல) உண்பதில் ஒருபோதும் தணிவடையாதவன் {நெருப்பு} {அநலன்} நீயே. (நெருப்போடு அடையாளம் காணப்படுவதன் விளைவால்) இடத்திற்கு இடம் செல்லம் காற்றையே வாகனமாகக் கொண்டவன் {வாயுவாஹநன்} நீயே.(89-60)

மலைகளிலும் சிறு குன்றுகளிலும் திரிபவன் {கண்டலி} நீயே. மேரு மலைகளில் வசிப்பிடம் கொண்டவன் {மேருதாமன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவாதிபதி} நீயே. தலையை அதர்வணங்களாகக் கொண்டவன் {அதர்வசீர்ஷன்} நீயே. வாயை சாமங்களாகக் கொண்டவன் {ஸாமாஸ்யன்} நீயே. எண்ணற்ற கண்களை ஆயிரம் ரிக்குகளாகக் கொண்டவன் {ரிக்ஸஹஸ்ராமிதேக்ஷணன்} நீயே.(90-61) பாதங்களையும, கரங்களையும் யஜுஸ்களாகக் கொண்டவன் {யஜுப்பாதபுஜன்} நீயே. உபநிஷதங்கள் {குஹ்யன்} நீயே. (சாத்திரங்களில் தோன்றும்) மொத்த சடங்குகளும் {ப்ரகாசன்} நீயே. அசைவன அனைத்தும் {ஜங்கமன்} நீயே. வேண்டுதல்களை ஒருபோதும் வீண்போகச்செய்யாதவன் {அமோகார்த்தன்} நீயே. எப்போதும் அருள் வழங்குபன் {ப்ரஸாதன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {அபிகம்யன்} நீயே. {ஸுதர்சநன் நீயே}.(91-62)  (பக்தர்கள் உன்னை நெருங்கும் அளவுக்கு) பக்தர்களை நெருங்குபவன் {உதவி செய்பவன்} {உபகாரன்} நீயே. அன்புக்குரியவன் {ப்ரியன்} நீயே. {ஸர்வன்}. அனைவருக்கும் பிடித்த தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்கள் {கநகன்} நீயே. புடம்போட்ட தங்கத்தைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {காஞ்சநச்சவி} நீயே. (அண்டத்தின்) தொப்புளாக இருப்பவன் {நாபி} நீயே. (உன் மகிமைக்காக வேள்வி செய்வோரின் நன்மைக்காக) வேள்விக் கனிகளை வளரச் செய்பவன் {நந்திகரன்} நீயே. வேள்விகளைப் பொறுத்தவரையில் அறவோர் கொள்ளும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வடிவம் {பாவன்} நீயே. அண்டத்தை வடிவமைத்தவன் {புஷ்கரஸ்தபதி} நீயே. (மலைகள் மற்றும் பொருட்களின்) வடிவில் அழிவற்றவனாக இருப்பவன் {ஸ்திரன்} நீயே.(92-63) ஒரு மனிதன் கடந்து செல்ல வேண்டிய பனிரெண்டு நிலைகள்[7] {த்வாதசன்} நீயே. (இப்பட்டியலில் உள்ள பத்து நிலைகளுக்கிடையில் ஏற்கப்படும் நிலைகளில்) அச்சத்தை உண்டாக்குபவன் {த்ராஸநன்} நீயே. அனைத்துப் பொருட்களின் தொடக்கம் {ஆத்யன்} நீயே. யோகத்தின் மூலமாகப் பரப்பிரம்மத்தில் ஜீவனைக் கலக்கச் செய்வன் {யஜ்ஞன்} நீயே. ஜீவன் மற்றும் பரப்பிரம்மத்திற்கிடையில் யோகத்தின் மூலம் கலப்பை எது உண்டாக்குமோ அது {யஜ்ஞஸமாஹிதன்} நீயே. (ஆழ்ந்த மயக்கத்துடன் கூடிய) வெளிப்படாதவன் {நக்தன்} (காமம், கோபம், பேராசை, தீய ஆசைகளை உண்டாக்குவதால்) நான்காம் யுகத்தின் தலைமைத் தேவன் {கலி} நீயே. (அண்டத்தில் அடுத்தடுத்து பிறப்பிறப்புகளை உண்டாக்கும்) நித்தியமான காலம் {காலன்} நீயே.(94) ஆமையின் வடிவில் இருப்பவன் {மகரன்} நீயே. காலனால் வழிபடப்படுபவன் {காலபூஜிதன்} நீயே. (93-64)தோழர்களின் {கணங்களின்} மத்தியில் வாழ்பவன் {ஸகணன்} நீயே. கணங்களின் பட்டியலில் உன் பக்தர்களைச் சேர்ப்பவன் {கணகாரன்} நீயே. உன் தேருக்குப் பிரம்மனை சாரதியாகக் கொண்டவன் {பூதவாஹநஸாரதி} நீயே. சாம்பலில் {திருநீற்றில்} உறங்குபவன் {பஸ்மசயன்}[8] நீயே. சாம்பலால் அண்டத்தைக் காப்பவன் {பஸ்மகோப்தன்} நீயே. சாம்பலாலான உடலைக் கொண்டவன் {பஸ்மபூதன்} நீயே. அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளும் மரம் {தரு} நீயே. கணங்களின் வடிவைக் கொண்டவன் {கணன்} நீயே.(94-65)

பதினான்கு உலகங்களையும் பாதுகாப்பவன் {லோகபாலன்} நீயே. அனைத்து உலகங்களையும் கடந்திருப்பவன் {அலோகன்} நீயே. (எந்தக் குறையுமில்லாத) முழுமையானவன் {மஹாத்மா} நீயே. அனைத்து உயிரினங்களாலும் துதிக்கப்படுபவன் {ஸர்வபூஜிதன்} நீயே. (தூய்மையானவனும், களங்கமற்றவனுமாக இருப்பதால்) வெண்மையானவன் {சுக்லன்} நீயே. உடல், வாக்கு மனம் ஆகியவற்றை முன்னிலும் களங்கமற்றவையாகக் கொண்டவன் {த்ரிசுக்லன்} நீயே. விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் தூய இருப்பை அடைந்தவன் {ஸம்பநநன்} நீயே. எவ்வகைத் தூய்மையின்மையாலும் களங்கப்பட இயலாதவன் {சுசி} நீயே. பழங்காலத்தின் பேராசான்களால் அடையப்பட்டவன் {பூதநிஷேவிதன்} நீயே.(95-66) அறம் அல்லது நான்கு வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} முறையான வடிவம் {ஆச்ரமஸ்தன்} நீயே. சடங்குகள் மற்றும் வேள்விகளின் வடிவில் உள்ள அறம் {க்ரியாவஸ்தன்} நீயே. அண்டத்தின் தெவ்வீக வடிவமைப்பாளனுடைய திறனின் வடிவம் {விச்வகர்மமதி} நீயே. அண்டத்தின் ஆதி வடிவமாகத் துதிக்கப்படுபவன் {வரன்} நீயே. பரந்த கரங்களைக் கொண்டவன் {விசாலசாகனே} நீயே. தாமிர வண்ணம் இதழ்களைக் கொண்டவன் {தாம்ரோஷ்டன்} நீயே. பெருங்கடலில் உள்ள பேரளவு நீரின் வடிவம் {அம்புஜாலன்} நீயே. (மலைகள் மற்றும் குன்றுகளின் வடிவில்) உறுதியாக நிலைத்திருப்பவன் {ஸுநிச்சலன்} நீயே.(96-67) கபிலர் நீயே. பழுப்பு நிறத்தவன் {கபிசன்} நீயே. வெண்கலவை கொண்ட வண்ணங்கள் அனைத்தும் {சுக்லன்} நீயே. வாழ்வுக்காலம் {ஆயுஸ்} நீயே. தொன்மையானவன் {பரன்} நீயே. அண்மையானவன் {அபரன்} நீயே. கந்தர்வன் நீயே. தேவர்களின் தாயான அதிதியின் வடிவில் இருப்பவன் (அல்லது அனைத்துப் பொருட்களின் தாயான பூமியின் வடிவில் இருப்பவன்) {அதிதி} நீயே. பறவைகளின் இளவரசனும், வினதையிடம் கசியபருக்குப் பிறந்தவனும் தார்க்ஷயன் என்று வேறுபெயரால் அழைக்கப்படுபவனும் {தார்க்ஷயன்} நீயே. எளிதில் புரிந்துகொள்ளப்படக்கூடியவன் {ஸுவிஜ்ஞேயன்} நீயே. ஏற்புடைய சிறந்த வாக்கை உடையவன் {ஸுசாரதன்} நீயே.(97-68) போர்க்கோடரி தரித்தவன் {பரச்வதாயுதன்} நீயே. வெற்றியை விரும்புபவன் {தேவன்} நீயே. திட்டங்களை நிறைவேற்றுவதில் பிறருக்குத் துணை புரிபவன் {அநுகாரி} நீயே. {கிருஷ்ணனைப் போன்ற} சிறந்த நண்பன் {ஸுபாந்தவன்} நீயே. துளையுள்ள இரு சுரைக்காய்களால் அமைந்த வீணையைச் சுமப்பவன் {தும்பவீணன்} நீயே. (அண்ட அழிவின்போது வெளிப்படும்) பயங்கரக் கோபம் {மஹாக்ரோதன்} நீயே. மனிதர்கள் மற்றும் தேவர்களைவிட உயர்ந்தவர்களை (பிரம்மன் மற்றும் விஷ்ணுவைப்) பிள்ளைகளாகக் கொண்டவன் {மேல்நோக்கிய உயிரணு கொண்டவன் / புலன்களை வென்றவன்}  {ஊர்த்வரேதஸ்} நீயே. அண்ட அழிவிக்குப் பிறகு நீரில் மிதக்கும் விஷ்ணுவின் வடிவம் {ஜலேசயன்} நீயே.(98-69) பெருஞ்சீற்றத்துடன் அனைத்தையும் எரிப்பவன் {உக்ரன்} நீயே. வாரிசுகளை உண்டாக்குபவன் {வம்சக்ரன்} நீயே. பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பமும், குலமும் {வம்சன்} நீயே. மூங்கிலாலான புல்லாங்குழலின் இசை {வம்சநாதன்} நீயே. களங்கமற்றவன் {அநிந்திதன்} நீயே. எவனுடைய உடலில் ஒவ்வொரு உறுப்பும் அழகாய் இருக்குமோ அவன் {ஸர்வாங்கரூபன்} நீயே. மாயை நிறைந்தவன் {மாயாவி} நீயே. திரும்பிவரும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் {பிரதிபலன் பாராமல்} பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருதன்} நீயே. {வாயு என்றழைகெகப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(99-70)ஜீவனைக் கட்டும் உலகபந்தங்கள் {பந்தநன்} நீயே. அந்தக் கட்டுகளைப் படைப்பவன் {பந்தகர்த்தன்} நீயே. அத்தகைய கட்டுகளை அறுப்பவன் {ஸுபந்தநவிமோசநன்} நீயே. (வேள்விகள் அனைத்திற்கும் பகைவர்களான} தைத்தியர்களிலும் வசிப்பவன் {ஸயஜ்ஞாரி} நீயே. (அனைத்துச் செயல்களையும் கைவிட்டவர்களான) செயல்கள் அனைத்தின் பகைவர்களில் வசிப்பவன் {ஸகாமாரி} நீயே. பெரும் பற்களைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. வலிமைமிக்க ஆயுதங்கள் {மஹாயுதன்} நீயே.(100-71) பெரிதும் நிந்திக்கப்படுபவன் {பஹுதாநிந்திதன்} நீயே. தாருகா வனத்தில் வசிக்கும் முனிவர்களைத் திகைக்கச் செய்தவன் {சர்வன்} நீயே. தாருகா வனத்தில் வசிப்பவர்களும், உன்னை இகழ்பவர்களுமான முனிவர்களுக்கும் நன்மை செய்பவன் {சங்கரன்} நீயே. அம்முனிவர்களின் அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, அவர்களுக்கு முக்தியளிப்பவன் {சங்கரன்} நீயே. (உடுக்கத் தேவையான ஆடையை அடைய இயலாத விளைவால்) செல்வமற்றவன் {அதநன்} நீயே. தேவர்களின் தலைவன் {அமரேசன்} நீயே. (தேவர்களில் உயர்ந்தவனாகக் கருதப்பட்டு இந்திரனாலும் துதிக்கப்படுவதன் விளைவால்) தேவர்களில் பெரியவன் {மஹாதேவன்} நீயே. விஷ்ணுவாலும் துதிக்கத்தக்கவன் {விச்வதேவன்} நீயே. தேவர்களின் பகைவர்களைக் கொல்பவன் {ஸுராரிஹா} நீயே.(101-72) அதளபாதாளத்தில் (சேஷன் என்ற பாம்பின் வடிவில்) வசிப்பவன் {அஹிர்புத்நியன்} நீயே. புலப்படாதிருக்கும் காற்றானது அனைவராலும் உணரப்படுவதைப் போலவே புலப்படாதவனாக இருப்பினும் புரிந்து கொள்ளப்படக்கூடியவன் {அநிலோபன் / அநிலாபன்} நீயே. அனைத்தின் வேர் வரை பரந்த ஞானம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் உள் இயல்பை அறிந்தவனும் {சேகிதாநன்} நீயே. உன்னில் இன்பம் கொள்பவனில் இன்பம் கொள்பவன் {ஹவிஸ்} நீயே. அஜைகபாத் என்றழைக்கப்படும் பதினோரு ருத்திரர்களில் ஒருவன் நீயே. மொத்த அண்டத்தின் ஆட்சியாளன் {காபாலி} நீயே. (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற நன்கறியப்பட்ட முக்குணங்களால் மறைக்கப்படுவதன் விளைவால்) அண்ட ஜீவன்கள் அனைத்தின் வடிவம் {த்ரிசங்கு} நீயே. முக்குணங்களுக்கு உட்படாதவன் {அஜிதன்} நீயே. குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், மொழி வழங்கும் எந்த உரிச்சொல்லின் துணையாலும் விளக்கப்பட இயலாதவனுமான தூய இருப்பு {சிவன்} நீயே.(102-73) தந்வந்தரி என்றழைக்கப்படும் மருத்துவ இளவரசன் நீயே. (பாவிகளுக்கு நேரும் பேரிடர்களை உண்டாக்கும் விளைவாக உள்ள) வால்நட்சத்திரம் {தூமகேது} நீயே. ஸ்கந்தன் என்றழைக்கப்படும் தேவர்ப்படைத்தலைவன் நீயே. இணைபிரியாத் தோழனும், உலகக் கருவூலங்கள் அனைத்தின் தலைவனும், குபேரன் என்றழைக்கப்படுபவனுமான யக்ஷர்களின் மன்னன் {வைச்ரவணன்} நீயே. தாத்ரி {தாதா} நீயே. சக்ரன் நீயே. விஷ்ணு நீயே. மித்ரன் நீயே. (தெய்வீகத் தச்சனான) தாஷ்டிரி {த்வஷ்டா} நீயே. துருவ நட்சத்திரம் {த்ருவன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்குபவன் {தரன்} நீயே.(103-74) வசுக்களில் பிரபாவன் என்றழைக்கப்படுபவன் {ப்ரபாவன்} நீயே. (அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இணைக்கும் ஆன்ம இழையாக) எங்கும் செல்லவல்ல காற்று {ஸர்வகோவாயு} நீயே. அர்யமான் {சூரியனின் பெயர்} {அர்யமா} நீயே. சாவித்ரி {ஸவிதா} நீயே. ரவி நீயே. உஷங்கு என்ற பெயரில் அறியப்பட்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான புராதன மன்னன் {எரியும் கதிர்களைக் கொண்டவன்} {உஷங்கு} நீயே. பல்வேறு வழிகளில் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன் {விதாதா} நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும் நிறைவளிக்கவல்ல) மாந்தாத்ரி {மாந்தாதா} நீயே. அனைத்து உயிரினங்களும் உயிர் பெறும் இடம் {பூதபாவநன்} நீயே.(104-75)

பல்வேறு வடிவங்களில் இருப்பவன் {விபு} நீயே. அண்டத்தில் இருக்கும் பல்வேறு வண்ணங்களை உண்டாக்குபவன் {வர்ணவிபாவி} நீயே. (உன்னில் இருந்து உண்டாகுபவையாக உள்ள_ ஆசைகள் அனைத்தையும், குணங்கள் அனைத்தையும் தாங்குபவன் {ஸர்வகாமகுணாவஹன்} நீயே. தொப்புளில் தாமரையைக் கொண்டவன் {பத்மநாபன்} நீயே. வலிமைமிக்க எண்ணற்ற உயிரினங்களுள்ள கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. சந்திரனைப் போன்ற அழகு நிறைந்த முகத்தைக் கொண்டவன் {சந்த்ரவக்த்ரன்} நீயே. {வாயு என்றழைக்கப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(105-76) பெரும் வலிமை {பலவாந்} நீயே. ஆன்ம அமைதி கொண்டவன் {திறனை வெளிக்காட்டாதவன்} {உபசாந்தன்} நீயே. பழைமையானவன் {புராணன்} நீயே. அறத்தின் துணையால் அறியப்படுபவன் {புண்யசஞ்சு} நீயே. {ஸ்ரீ என்றழைக்கப்படும்} லக்ஷ்மி {ஈ} நீயே. (பரமதேவனைத் துதிக்க மனிதர்களுக்குப் பயன்படும்) செயற்களத்தை அமைப்பவன் {குருகர்த்தன்} நீயே. செயற்களத்தில் வாழ்பவன் {குருவாஸி} நீயே. செயற்களத்தின் ஆன்மா {குருபூதன்} நீயே. அரச குணங்களைத் தூண்டுபவன் அல்லது அவற்றுக்கான மருந்து {குணௌஷதன்} நீயே.(106-77) (கனவற்ற உறக்க நிலையை வெளிக்காட்டும் நினைவற்ற இயல்பைக் கொண்ட நீயாகவே அனைத்துப் பொருட்களும் ஆகின்றன என்று ஸ்ருதிகள் அறிவிப்பதால்) அனைத்துப் பொருட்களும் கிடக்கும் இடம் {ஸர்வாசயன்} {தர்ப்பசாரி} நீயே. உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஷாம்ப்ராணிநாம்பதி} நீயே. தேவர்களுக்குத் தேவன் {தேவதேவன்} நீயே. இன்பநிலையுடன் தொடர்புடையவன் {ஸுகாஸக்தன்} நீயே. (காரண வடிவமான) ஸத் நீயே. (விளைவின் / காரிய வடிவமான) அஸத் நீயே. அனைத்திலும் சிறந்தவன் {ஸர்வரத்நவித்} நீயே.(107-78) கைலாச மலைகளில் வசிப்பவன் {கைலாஸகிரிவாஸி} நீயே. இமய மலைகளுக்குச் செல்பவன் {ஹிமவத்கிரிஸம்ச்ரயன்} நீயே. கரைகளில் நிற்கும் மரங்களை அடித்துச் செல்லும் பேரோடையைப் போல அனைத்தையும் அடித்துச் செல்பவன் {கூலஹாரி} நீயே. புஷ்கரை, பெருந்தடாகங்கள் மற்றும் இயற்கையான நீர்நிலைகள் அனைத்தையும் படைத்தவன் {கூலகர்த்தன்} நீயே. முடிவிலா ஞானவகைகளைக் கொண்டவன் {பஹுவித்யன்} நீயே. முடிவற்ற அருளை வழங்குபவன் {பஹுப்ரதன்} நீயே.(108-79) (மனிதர்களின் நன்மைக்காக இந்நாட்டுப் பொருட்களை வேறு நாட்டிற்கும், வேறு நாட்டுப் பொருட்களை இந்த நாட்டிற்கும் கொண்டு வரும்) வணிகன் {வணிஜன்} நீயே. மரத்தச்சன் {வர்த்தகி} நீயே. (உன் கோடரிக்குக் காம்பை வழங்கும் உலகமெனும்) மரம் {வ்ருக்ஷன்} நீயே. வகுளம் {மகிழம்} என்றழைக்கப்படும் மரம் நீயே. சந்தன மரம் {சந்தநம்} நீயே. {ஏழிலைப்பாலை என்றழைக்கப்படும்} சத மரம் {சதம்} நீயே. மிக உறுதியான கழுத்தைக் கொண்டவன் {ஸாரக்ரீவன்} நீயே. பெருந்தோள்களைக் கொண்டவன் {மஹாஜத்ரு} நீயே. (செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியானவனாக இருந்தாலும்) அமைதியற்றவன் {ஆசையற்றவன்} {அலோலன்} நீயே. (அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய வகைகளில் உள்ள) முக்கியப் பயிர்களும், செடிகளும் {மஹௌஷதன்} நீயே.(109-80)

பிறர் தங்கள் இதயங்களில் விரும்பும் பொருட்களை அடைய வெற்றியை அருள்பவன் {ஸித்தார்த்தகாரி}, {ஸித்தார்த்தன்} நீயே. வேதங்கள் மற்றும் இலக்கணத்தில் சரியான தீர்மானங்கள் {சந்தோவ்யாகரணோத்தரன்} நீயே. சிங்க முழக்கம் செய்பவன் {ஸிம்மநாதன்} நீயே. சிங்கப் பற்களுடன் கூடியவன் {ஸிம்மதம்ஷ்ட்ரன்} நீயே. பயணங்கள் செய்யச் சிங்கத்தில் செல்பவன் {ஸிம்மகன்} நீயே. சிங்கத்தால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஸிம்மவாஹநன்} நீயே.(110-81) உண்மையின் உண்மையென அழைக்கப்படுபவன் {ப்ரபாவாத்மா} நீயே. அண்டத்தின் காலனை உணவுத்தட்டாகக் கொண்டவன் {ஜகத்காலஸ்தாலன்} நீயே. உலகங்களுக்கு நன்மையை எப்போதும் நாடுபவன் {லோகஹிதன்} நீயே. (விடுதலையின் {முக்தியின்} இன்பநிலைக்கு வழிவகுக்கும் வகையில்) உயிரினங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்பவன் {தரு} நீயே. சாரங்கம் என்றழைக்கப்படும் பறவை {ஸாரங்கன்} நீயே. புதிய அன்னப்பறவை {நவசக்ராங்கன்} நீயே. (சேவலைப் போலவோ, மயிலைப் போலோ} நீ தலையில் கொண்டுள்ள மகுடத்தின் விளைவாக அழகுடன் தெரிபவன் {கேதுமாலி} நீயே. நீதியை நிலைநாட்ட ஞானிகள் அமரும் சபைகளைப் பாதுகாப்பவன் {ஸபாவநன்} நீயே.(111-82) அனைத்து உயிரினங்களின் வசிப்பிடம் {பூதாலயன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் பேணிப் பாதுகாப்பவன் {பூதபதி} நீயே. (நித்திய பூதங்களாக அமைந்திருக்கும்) பகலும், இரவும் {அஹோராத்ரன்} நீயே. குற்றமற்றிருப்பதால் ஒருபோதும் இகழப்படாதவன் {அநிந்திதன்} நீயே.(112-83) அனைத்து உயிரினங்களையும் தாங்குபவன் {ஸர்வபூதாநாம்வாஹிதன்} நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் {நிலயன்} நீயே. பிறப்பற்றவன் {விபு} நீயே. இருப்பவன் {பவன்} நீயே. எப்போதும் கனிநிறைந்தவன் {அமோகன்} நீயே. தாரணை, தியானம் மற்றும் சமாதியுடன் கூடியவன் {சார்ந்தோருக்குக் கட்டுப்பட்டவன்} {ஸம்யதன்} நீயே. உச்சைஸ்ரவஸ் முதலிய குதிரைகள் {அச்வன்} நீயே. உணவளிப்பவன் {போஜநன்} நீயே. உயிரினங்களின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பவன் {ப்ராணதாரணன்} நீயே.(113-84) பொறுமையுடன் கூடியவன் {த்ருதிமாந்} நீயே. நுண்ணறிவு கொண்டவன் {மதிமாந்} நீயே. முயற்சியும், புத்திசாலித்தனமும் கொண்டவன் {தக்ஷன்} நீயே. அனைவராலும் மதிக்கப்படுபவன் {ஸத்க்ருதன்} நீயே. அறம் மற்றும் மறத்திற்கான {புண்ணியபாவங்களுக்கான} கனிகளைக் கொடுப்பவன் {யுகாதிபன்} நீயே. (புலன்களுக்குத் தலைமை தாங்கி அவை தங்கள் தங்களுக்குரிய செயல்களைச் செய்ய வைப்பதால்) புலன்களைப் பேணிக் காப்பவன் {கோபாலி} நீயே. ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவன் {கோபதி} நீயே. பொருட்களின் திரட்டுகள் அனைத்தும் {க்ராமன்} நீயே. மாட்டுத் தோல்களாலான உடைகளைக் கொண்டவன் {கோசர்மவஸநன்} நீயே. பக்தர்களின் துயரை அகற்றுபவன் {ஹரி} நீயே.(114-85)

தங்கக் கரம் கொண்டவன் {ஹிரண்யபாஹு} நீயே. தங்கள் தங்களுக்குள் நுழைய முயலும் யோகியரின் உடல்களைப் பாதுகாப்பவன் {ப்ரவேசிநாம்குஹாபாலன்} நீயே. எதிரிகள் அனைவரையும் ஒன்றுமற்ற நிலைக்குக் குறைப்பவன் {ப்ரக்ருஷ்டாரி} நீயே. மகிழ்ச்சியைப் பெருமளவில் கொண்டவன் {மஹாஹர்ஷன்} நீயே. தடுக்கப்பட முடியாத காம தேவனை வென்றவன் {ஜிதகாமன்} நீயே. புலன்களை வென்றவன் {ஜிதேந்த்ரியன்} நீயே.(115-86) இசையின் எட்டாம் சுரமான காந்தாரம் நீயே. (இனிமை நிறைந்த கைலாய மலைகளில் அமைந்திருப்பதன் விளைவால்) சிறப்பான மற்றும் அழகிய இல்லம் கொண்டவன் {ஸுவாஸன்} நீயே. எப்போதும் தவங்களுடன் தொடர்புடையவன் {தபஸ்ஸக்தன்} நீயே. உற்சாகம் மற்றும் நிறைவின் வடிவம் {ரதி} நீயே. முடிவற்றவன் அல்லது பரந்தவன் {நரன்} நீயே. தொகுக்கப்பட்டவற்றுள் முதன்மையான பாடல் {மஹாகீதன்} நீயே. நீண்ட அடிகள் மற்றும் பெரும் தாவல்களுடன் ஆடுபவன் {மஹாந்ருத்யன்} நீயே. அப்ஸரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் மதிப்புடன் துதிக்கப்படுபவன் {அப்ஸரோகணஸேவிதன்} நீயே.(116-87) (காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட) பெரும் கொடிமரத்தைக் கொண்டவன் {மஹாகேது} நீயே. மேரு மலை {மஹாதாது} நீயே. பெரும் மலைச்சிகரங்கள் அனைத்தின் மத்தியிலும் திரிபவன் {நைகஸாநுசரன்} நீயே. பற்றிக்கொள்ள மிகக் கடினமான பெரும் வேகத்தைக் கொண்டவன் {சலன்} நீயே. சொற்களால் விளக்கப்பட முடியாதவனாக இருப்பினும் ஆசான்களால் சீடர்களுக்கு விவரிக்கப்படவல்லவன் {ஆவேதநீயன்} நீயே. ஆசான்களால் சீடர்களுக்குப் போதிக்கப்படும் கல்வயின் வடிவம் {ஆதேசன்} நீயே. இனிய நறுமணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் உணரக் கூடியவன் {ஸர்வகந்தஸ்ஸுகாவஹன்} நீயே.(117-88) நகரங்கள் மற்றும் அரண்மனைகளின் முகப்புவாயில் {தோரணன்} நீயே. அரணமைக்கப்பட்ட நகரங்களைச் சூழ்ந்திருப்பவையும், முற்றுகையிடப்பட்ட கோட்டைக் காவற்படைகளுக்கு வெற்றியை அளிப்பவையுமான அகழிகள் மற்றும் குழிகளின் வடிவம் {தாரணன்} நீயே. காற்று நீயே {வாதன்} நீயே. மதில்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்ட அரணமைக்கப்பட்ட நகரங்கள் மற்றும் ஊர்களின் வடிவம் {பரிதீபதி} நீயே. (கருடனின் வடிவில் நீயே இருப்பதால்) சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்தின் இளவரசன் {கேசரன்} நீயே. எதிர்பாலினக் கலவியால் உற்பத்தியைப் பெருக்குபவன் {ஸம்யோகன்} நீயே. அறங்கள் மற்றும் அறிவுகள் அனைத்திலும் முதன்மையானவன் {வர்த்தநன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் முதல்வன் {வ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் மூத்தவனுக்கும் மேன்மையானவன் {அதிவ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் குணங்கள் அனைத்தையும் கடந்தவன் {குணாதிகன்} நீயே.(118-89) நித்தியமானவனும், மாற்றமில்லாதவனும், சுயம்சார்ந்தவனும் {நித்யாத்மஸஹாயன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானும், பாதுகாவலனும் {தேவாஸுரபதி} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆசானும், பாதுபாவலனும் {பதி} நீயே. கவசம் தரிப்பவன் {யுக்தன்} நீயே. பகைவர்கள் அனைவரையும் கலங்கடிக்கவல்ல கரங்களைக் கொண்டவன் {யுக்தபாஹு} நீயே. சொர்க்கத்தில் ஸுபர்வன் என்றழைக்கப்படுபவனைக் காட்டிலும் துதிக்கத்தக்க பொருள் {திவிஸுபர்வணோதேவன்} நீயே.(119-90)

அனைத்துப் பொருட்களையும் தாங்கும், அல்லது சுமக்கும் சக்தியை அருள்பவன் {ஆஷாடன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் சுமக்கவல்லவன் {ஸுஷாடன்} நீயே. (ஒருபோதும் உறுதியற்றவனாக இல்லாத) நிலையுறுதி கொண்டவன் {த்ருவன்} நீயே. (எக்களங்கமும் இல்லாத) வெண்மையானவன், அல்லது தூயன் {ஹரிணன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும்) அழிக்கவல்ல திரிசூலம் தரிப்பவன் {ஹரன்} நீயே. அண்டத்தில் தொடர்ந்து பிறப்பிறப்பில் சுழன்று கொண்டிருப்போருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன் {ஆவர்த்தமாநேப்யோவபு} நீயே. செல்வத்தைவிட மதிப்புமிக்கவன் {வஸுச்ரேஷ்டன்} நீயே. (நன்மை மற்றும் பணிவன்பின் வடிவிலான) அறவழி அல்லது ஒழுக்கம் {மஹாபதன்} நீயே.(120-91) (வெறும் கோபத்தால் தூண்டப்படாமல்) ஆழமான முறையான ஆய்வுக்குப் பின் பிரம்மனின் தலையை அறுத்தவன் {சிரோஹாரி} நீயே. {விமர்சன் நீயே}. கைவரை நூல் {ரேகை சாஸ்திரம்}, அடிக்காலியல், தலை அமைப்பியல், மற்றும் விசித்திர மனத்தன்மைகளைக் குறிக்கும் உடல்வடிவம் தொடர்புடைய பிற அறிவுக்கிளைகள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மங்கலக்குறிகள் அனைத்தையும் கொண்டவன் {ஸர்வலக்ஷணலக்ஷிதன்} நீயே. தேரின் அக்ஷம் என்றழைக்கப்படும் மரச்சட்டமாக இருப்பவனும், உடலெனும் தேரில் தொடர்புடையவனும் {ரதயோகிஅக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களிலும் அவற்றின் ஆன்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களிலும் தொடர்புடையவன் {ஸர்வயோகி} நீயே. வீரர்களுக்கு வீரனான பெரும் வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே.(121-92) வேதம் {ஸமாம்நாயன்} நீயே. ஸ்மிருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் {அஸமாம்நாயன்} நீயே. ஒவ்வொரு புண்ணியத்தலத்தின் சிறப்புமிக்கத் தேவன் {தீர்த்ததேவன்} நீயே. பூமியைத் தேராகக் கொண்டவன் {மஹாரதன்} நீயே. ஒவ்வொரு உயிரின உடற்தொகுப்புக்குள்ளும் நுழையும் செயலாற்றலற்ற பூதங்கள் {நிர்ஜீவன்} நீயே. செயலாற்றலற்ற பூதங்களாலான ஒவ்வொரு தொகுப்புக்கும் உயிரைக் கொடுப்பவன் {ஜீவநன்} நீயே. உயிரற்ற பருப்பொருளில் உயிரை உட்செலுத்தும் புனித மந்திரங்களும், பிரணவமும் {மந்த்ரன்} நீயே. அமைதியான பார்வைகளைச் செலுத்துபவன் {சுபாக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருப்பதால்) மிகக் கடுமையானவன் {பஹுகர்க்கசன்} நீயே.(122-93) மதிப்புமிக்க எண்ணற்ற குணங்களையும், உடைமைகளையும் கொண்டவன் {ரத்நப்ரபூதன்} நீயே. சிவந்த உடல் கொண்டவன் {ரத்நாங்கன்} நீயே. நீ பருகுவதற்காகப் பல குளங்கள் நிறைவதால் பரந்த பெருங்கடல்கள் அனைத்தும் {மஹார்ணவநிபாநவித்} நீயே. உலக மரத்தின் வேர் {மூலன்} நீயே. பெருஞ்சிறப்புகளைக் கடந்து ஒளிர்பவனும், மிக அழகியவனும் {விசாலன்} நீயே. அமுதத்தின் வடிவம் {அம்ருதன்} நீயே. காரணம், விளைவு {காரியம்} ஆகிய இரண்டும் {வ்யக்தாவ்யக்தன்} நீயே. (பெரும் யோகியாக இருப்பதால்) தவப்பெருங்கடல் {தபோநிதி} நீயே.(123-94) இருப்பின் உயர்ந்த நிலைக்கு உயரச் செய்பவன் {ஆரோஹணன்} நீயே. அந்நிலையை ஏற்கனவே அடைந்தவன் {அதிரோஹன்} நீயே. தூய ஒழுக்கம், தூய செயல்கள் மற்றும் நோன்புகளுக்காகப் புகழ்பெற்றவன் {சீலதாரி} நீயே. (அறநடத்தையின் விளைவால்) பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே. (ஆற்றல் மற்றும் துணிவின் வடிவமாக நீயே இருப்பதால்) படைகளின் ரத்தினம் {ஸேநாகல்பன்} நீயே. தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {மஹாகல்பன்} நீயே. யோகம் நீயே. யுகங்கள் மற்றும் கல்பங்களால் அளக்கப்படும் நித்திய காலத்தை உண்டாக்குபவன் {யுகசரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்புபவன் {ஹரி} நீயே.(124-95)

(அடுத்தடுத்த யுகங்களில் வெளிப்படும் {யுகரூபத்தில்} அறம், மறம் மற்றும் அவற்றின் கலவைகளின் வடிவம்) {மஹாரூபன்} நீயே. பெரியவனும், வடிவமற்றவனும் {மஹாநாகஹநன்} நீயே. மதங்கொண்ட பெரும் யானையின் வடிவில் வாராணசி என்ற புனித நகரத்தை எதிர்த்து வந்த வலிமைமிக்க அசுரனைக் கொன்றவன் {வதன்} நீயே. காலனின் வடிவம் {ந்யாயநிர்வபணன்} நீயே. உயிரினங்கள்அனைத்தின் தகுதிகளுக்கு ஏற்ப அவற்றின் விருப்பங்களைக் கனியச் செய்பவன் {பாதன்} நீயே. {பண்டிதன்} நீயே. அணுகப்படக்கூடியவன் {அசலோபமன்} நீயே.(125-96) புலன்களின் உணர்வைக் கடந்த அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் {பஹுமாலன்} நீயே. தத்துவங்களை அறிந்தவன் (என்பதால் முற்றிலும் நிலையாக இருப்பவன்) {மஹாமாலன்} நீயே. இடைவிடாமல் அழகில் ஒளிர்பவன் {சுசீஹரஸுலோசநன்} நீயே. கழுத்தில் இருந்து பாதம் வரை நீளும் மாலைகளை அணிபவன் {விஸ்தாரன்} நீயே. சந்திரனைத் தன் அழகிய கண்களாகக் கொண்ட ஹரன் {லவணன்} நீயே. பரந்து விரிந்த உப்புப் பெருங்கடல் {கூபன்} நீயே. (கிருதம், திரேதம், துவாபரம் என்ற) மூன்று யுகங்கள் {த்ரியுகன்} நீயே. பிறருக்கான நற்பலன்கள் நிறைந்த தோற்றம் கொண்டவன் {ஸபலோதயன்} நீயே.(126-97) (சாத்திரங்கள், ஆசான் மற்றும் தியான வடிவங்களில்) மூன்று கண்களைக் கொண்டவன் {த்ரிலோசநன்} நீயே. (ஆதி பூதங்களின் நுண்வடிவங்களாக இருப்பதால்) மிக நுட்பமான வடிவங்களைக் கொண்டவன் {விஷண்ணாங்கன்} நீயே. குண்டலங்கள் அணிந்த காதுகளைக் கொண்டவன் {மணிவித்தன்} நீயே. சடாமுடி தரித்தவன் {ஜடாதரன்} நீயே. மூக்கொலியைக் குறிக்கும் (எழுத்தில்) புள்ளியாக இருப்பவன் {பிந்து} நீயே. ஹ என்ற மூச்சொலியைக் குறிக்கும் (எழுத்தில்) இரு புள்ளிகளாக இருப்பவன் {படைப்பவன்} {விஸர்க்கன்} நீயே. சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்} நீயே. பகைவனின் அழிவுக்காகப் போர்வீரனால் ஏவப்படும் கணை {சரன்} நீயே. போர்வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் {ஸர்வாயுதன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கவல்ல பொறுமையுடன் கூடியவன் {ஸஹன்} நீயே.(127-98) அக மற்றும் புறச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதால் எழும் ஞானம் கொண்டவன் {நிவேதநன்} நீயே. இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்துவதன் விளைவால் வெளிப்படும் உண்மை {ஸுகாஜாதன்} நீயே. காந்தாரம் என்றழைக்கப்படும் உலகத்தில் இருந்து எழும் காதுக்கு மிக இனிய சுரம் {ஸுகந்தாரன்} நீயே. (பிநாகம்) என்றழைக்கப்படும் பெரும் வில்லைத் தரிப்பவன் {மஹாதநு} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கும் தலைமையானவனாக இருப்பதல்லாமல் அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஆசைகளும் புத்தியும் {அண்ட அழிவு வரை செயல்மணத்தைக் காக்கும் தலைவன்} {கந்தபாலீபகவாந்} நீயே. செயல்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஸர்வகர்மணாம்உத்தாநன்} நீயே.(128-99) அண்ட அழிவுக்காலத்தில் எழுவதும், பாற்குடத்தில் பாலைக் கடையும் பெண்ணின் கரத்தில் இருக்கும் மத்தைப் போல மொத்த அண்டத்தையும் கடையவல்லவனுமான காற்று {மந்தாநோபஹுலோவாயு} நீயே. முழுமையாக இருப்பவன் {ஸகலன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் காண்பவன் {ஸர்வலோசநன்} நீயே. உள்ளங்கைகளைத் தட்டுவதால் எழும் ஒலி {தலஸ்தாலன்} நீயே. உணவிருக்கும் பாத்திரமாக, அல்லது உணவாகப் பயன்படும் உள்ளங்கையைக் கொண்டவன் {கரஸ்தாலி} நீயே. கடினமான உடல் படைத்தவன் {ஊர்த்வஸம்ஹநநன்} நீயே. மிகப் பெரியவன் {மஹாந்} நீயே.(129-100)

குடையின் வடிவில் இருப்பவன் {சத்ரன்} நீயே. சிறந்த குடையைக் கொண்டவன் {ஸுச்சத்ரன்} நீயே. அனைத்து உயிரினங்களுடனும் அடையாளம் காணப்படுபவனாக நன்கறியப்பட்டவன் {விக்யாதோலோகன்} நீயே. இரண்டு அடியால் அண்டத்தை மறைத்து, மூன்றாவது அடிக்கு இடத்தைக் கேட்டவன் {ஸர்வாச்ரயக்ரமன்} நீயே. மொட்டைத்தலை கொண்டவன் {முண்டன்} நீயே. மிகக் கோர வடிவம் கொண்டவன் {விரூபன்} நீயே. முடிவற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமானவன் {விக்ருதன்} நீயே. சந்நியாசத்தின் குறியீடாக நன்கறியப்பட்ட தண்டத்தைக் கொண்டவன் {தண்டி} நீயே. குண்டத்தைக் கொண்டவன் {குண்டி} நீயே. செயல் வழிமுறைகளின் மூலம் அடையப்பட இயலாதவன் {விகுர்வணன்} நீயே.(130-101) பச்சை நிறக் கண்களைக் கொண்ட விலங்குகளின் மன்னனோடு (சிங்கத்தோடு) அடையாளம் காணப்படுபவன் {ஹர்யக்ஷன்} நீயே. திசைகள் அனைத்தின் வடிவம் {ககுபன்} நீயே. வஜ்ரதாரி {வஜ்ரி} நீயே. நூறு நாவுகளைக் கொண்டவன் {சதஜிஹ்வன்} நீயே. ஆயிரம் கால்களையும் {ஸஹஸ்ரபாத்}, ஆயிரம் தலைகளையும் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவேந்த்ரன்} நீயே. தேவர்கள் அனைவருமாக அமைந்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. பேராசான் {குரு} நீயே.(131-102) ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாஹு} நீயே. அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்பவன் {ஸர்வாங்கன்} நீயே. அனைவராலும் நாடப்படும் பாதுகாப்பு {சரண்யன்} நீயே. அனைத்து உலகங்களையும் படைத்தவன் {ஸர்வலோகக்ருத்} நீயே. புனிதத்தலங்கள் மற்றும் புண்ணிய நீர்நிலைகள் என்ற விடவங்களில் பாவங்கள் அனைத்தையும் கழுவும் பெரும் தூய்மையாளன் {பவித்ரன்} நீயே. மூன்று உயர்ந்த மந்திரங்களைக் கொண்டவன் {த்ரிக்குந்மந்த்ரன்} நீயே. (அதிதி மற்றும் கசியபரின் மகனும், உபேந்திரன் என்று அறியப்பட்ட குள்ள வடிவம் கொண்டவனும், அசுரன் பலியை வஞ்சித்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பெற்று தேவர்களின் தலைவனிடம் மீண்டும் கொடுத்த) இளையவன் {கநிஷ்டன்} நீயே. (ஹரிஹரன் என்றழைக்கப்படும் வடிவத்துடன் இருப்பதால்) கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரண்டாகவும் இருப்பவன் {கருஞ்சிவப்பு நிறமாக இருப்பவன்} {க்ருஷ்ணபிங்களன்} நீயே.(132-103) பிராமணர்களின் தண்டத்தை அமைப்பவன் {ப்ரம்மதண்டவிநிர்மாதா} நீயே. நூற்றுவக்கொல்லி {சதக்னி}, பாயக்கயிறு, ஈட்டி {சக்தி} ஆகியவற்றைத் தரித்தவன் {சதக்நீபாசசக்திமாந்} நீயே. ஆதித் தாமரையில் பிறந்தவன் {பத்மகர்ப்பன்} நீயே. பெரும் கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. வேதங்களைத் தன் கருவறையில் கொண்டவன் {ப்ரம்மகர்ப்பன்} நீயே. அண்ட அழிவைத் தொடர்ந்து முடிவிலாதிருக்கும் நீரில் எழுபவன் {ஜலோத்பவன்} நீயே.(133-104) பிரகாச ஒளியின் கதிர்களுடன் கூடியவன் {கபஸ்தி} நீயே. வேதங்களைப் படைத்தவன் {ப்ரம்மக்ருத்} நீயே. வேத கல்வி {ப்ரம்மி} நீயே. வேதங்களின் பொருள் அறிந்தவன் {பிரம்மவித்} பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொண்டவன் {ப்ராம்மணன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் அனைவரின் புகலிடம் {கதி} நீயே. அளவற்ற வடிவு கொண்டவன் {அநந்தரூபன்} நீயே. எண்ணற்ற உடல்களைச் சுமப்பவன் {நைகாத்மா} நீயே. தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவன் {திக்மதேஜாஸ்வயம்புவன்} நீயே.(134-105)

(சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) உலகளாவிய முக்குணங்களைக் கடந்த இயல்பாக அல்லது ஆன்மாவாக இருப்பவன் {ஊர்த்வகாத்மா} நீயே. ஜீவன்கள் அனைத்தின் தலைவன் {பசுபதி} நீயே. காற்று வேகம் கொண்டவன் {வாதரம்ஹஸ்} நீயே. மனோவேகம் கொண்டவன் {மநோஜவன்} நீயே. சந்தனக் குழம்பை எப்போதும் பூசிக் கொள்பவன் {சந்தநி} நீயே. ஆதி தாமரையின் நுனி {பத்மநாளாக்ரன்} நீயே. தெய்வீகப் பசுவான சுரபியைச் சபித்து மேன்மையான இடத்தில் இருந்து தாழ்ந்த இடத்திற்கு அனுப்பியவன் {ஸுரப்யுத்தரணன்} நீயே. உன் எல்லையைக் காண முடியாத பிரம்மன் {நரன்} நீயே.(135-106) பெரும் கர்ணிகார மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன் {கர்நிகாரமஹாஸ்ரக்வி} நீயே. நீல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் கொண்டவன் {நீலமௌலி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவன் {பிநாகத்ருத்} நீயே. இமயத்தின் மகளான உமையின் கணவன் {உமாபதி} நீயே. {உமாகாந்தன்}, தலையில் கங்கையைத் தாங்குபவன் {ஜாஹ்நவீத்ருக்} நீயே.  {உமாதவன் நீயே}.(136-107) (மூழ்கிப்போன பூமியை உயர்த்த பெரும்பன்றியின் வடிவை ஏற்றதன் விளைவால்) வலிமைமிக்கவன் {வரோவராஹன்} நீயே. பல்வேறு அவதாரங்களை ஏற்று அண்டத்தைப் பாதுகாப்பவன் {வரதன்} நீயே. துதிக்கத்தகுந்தவன் {வரேண்யன்} நீயே. இடிபோன்ற குரலில் வேதங்களை உரைத்த குதிரைத்தலையுடன் கூடிய ஆதி இருப்பு {ஸுமஹரஸ்வநன்} நீயே. பேரருளாளன் {மஹாப்ரஸாதன்} நீயே. பெரிதாக அடக்கி ஒடுக்குபவன் {தமநன்} நீயே. (ஆசைகளின் வடிவில் இருக்கும்) பகைவர்கள் அனைவரையும் கொல்பவன் {சத்ருஹன்} நீயே. (ஆண்பாதி, பெண்பாதியாக இருப்பதால்) வெள்ளையும், பழுப்புமாக இருப்பவன் {ச்வேதபிங்களன்} நீயே.(137-108) தங்கம் போன்ற நிறத்தையுடைய உடலைக் கொண்டவன் {பீதாத்மா} நீயே. (அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் உள்ளிட்ட) ஜீவனின் ஐந்து உறைகளைக் கடந்திருக்கும் தூய இன்பத்தின் வடிவம் {பரமாத்மா} நீயே. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாவைக் கொண்டவன் {ப்ரயதாதத்மா} நீயே. பிரதானம் என்றழைக்கப்படும் அறியமை சார்ந்திருப்பதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதும், அண்டம் உண்டாகக் காரணமானதுமான அடித்தளம் {ப்ரதாநத்ருத்} நீயே. அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் {ஸர்வபார்ச்வமுகன்} நீயே. (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முக்கண்களைக் கொண்டவன் {த்ரியக்ஷன்} நீயே. (பேரளவில் அறத்தைக் கொண்டிருக்கும் விளைவால்) உயிரினங்கள் அனைத்திலும் மேன்மையானவன் {தர்மஸாதாரணவரன்} நீயே.(138-109) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மா {சராசராத்மா} நீயே. (புலப்படமுடியாத) நுட்பமான ஆத்மாவின் வடிவம் {ஸூக்ஷ்மாத்மா} நீயே. கனிகளில் ஆசையற்று உயிரினங்களால் அடையப்படும் அறச்செயல்கள் அனைத்தின் கனியாக விடுதலை {முக்தி} என்ற வடிவில் இறவாமையை அருள்பவன் {அம்ருதகோவ்ருஷேச்வரன்} நீயே. தேவர்களின் தேவர்களுக்கும் ஆசான் {ஸாத்யரிஷி} நீயே. அதிதியின் மகனான வசு {ஆதித்யவஸு} நீயே. எண்ணற்ற ஒளிக்கதிர்களைக் கொண்டவனும் {விவஸ்வாந்}, அண்டத்தை உண்டாக்குபவனும் {ஸவிதா}, வேள்விகளில் பருகப்படும் சோமத்தின் வடிவமும் {அம்ருதன்} நீயே.(139-110)

புராணங்கள் மற்றும் புனித வரலாறுகள் பிறவற்றின் ஆசானான வ்யாஸன் நீயே. (புராணங்கள் மற்றும் பிற புனித வரலாறுகளோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) வியாசரின் மூளையில் உதித்த சுருக்கப்பட்ட மற்றும் சுருக்கப்படாத படைப்புகள் {ஸம்க்ஷேபோவிஸ்தரஸ்ஸர்க்கன்} நீயே. ஜீவன்களின் மொத்த தொகை {பர்யயோநரன்} நீயே. பருவகாலம் {ருது} நீயே. வருடம் {ஸம்வத்ஸரம்} நீயே. மாதம் {மாஸம்} நீயே. அரைத்திங்கள் {பக்ஷம்} நீயே. இக்காலங்களை நிறைவு செய்யும் புனித நாட்கள் {ஸங்க்யாஸமாபநன்} நீயே.(140-111) கலை நீயே. காஷ்டை நீயே. லவம் நீயே. மாத்திரை நீயே. முஹூர்த்தம் நீயே. அஹஸ் {பகலாய் இருப்பவன்} நீயே. க்ஷபம் நீயே. க்ஷணம் நீயே. அண்டமெனும் மரம் நிற்கும் மண் {விச்வக்ஷேத்ரம்} நீயே. (எங்கே உயிரினங்கள் அனைத்தும் எழுமோ அந்த மாயையுடன் கூடிய புலப்படாத சைதன்யத்தின் வடிவமாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் வித்து {ப்ரஜாபீஜம்} நீயே. மஹத்தத்துவம் {லிங்கம்} நீயே. (மஹத் தத்துவத்தை உண்டாக்கும் நனவுநிலையின் வடிவமாக இருப்பதால்) ஜீவனின் அரும்பு {ஆத்யநிர்க்கமம்} நீயே.(141-112) ஸத் அல்லது விளைவு {காரியம்} நீயே. அஸத் அல்லது காரணம் நீயே. (புலன்களுக்குப் பிடிபடும் வகையில்) புலப்படுபவன் {வ்யக்தம்} நீயே. (புலன்களுக்குப் பிடிபடாத வகையில்) புலப்படாமல் இருப்பவன் {அவ்யக்தம்} நீயே. தந்தை {பிதா} நீயே. தாயும் {மாதா} நீயே. பாட்டன் {பிதாமஹன்} நீயே. (தவங்களோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) சொர்க்கத்தின் வாயில் {ஸ்வர்க்கத்வாரம்} நீயே. (ஆசையோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் உற்பத்தி வாயில் {ப்ரஜாத்வாரம்} நீயே. (எதனால் மட்டுமே பிரம்மத்தோடு கலக்கும் நிலைக்கு வழிநடத்த முடியுமோ அந்த ஆசையின்மையோடு அடையாளம் காணப்படுபவனாக இருக்கும் காரணத்தால்) விடுதலையின் {முக்தியின்} வாயில் {மோக்ஷத்வாரம்} நீயே. சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவக்கும் அறச்செயல்கள் {த்ரிவிஷ்டபம்} நீயே.(142-113) நிர்வாணம் (அல்லது தனிப்பட்ட இருப்பைத் தவிர்த்த விடுதலை {முக்தி} நிலை) நீயே. (ஒவ்வொரு உயிரினத்திற்கும் அனைத்து வகை இன்பங்களையும் கொடுத்து) மகிழ்ச்சிப்படுத்துபவன் {ஹ்லாதநன்} நீயே. (அறவோரில் முதன்மையானோர் அடையும்) வாய்மையின் உலகம் {ப்ரம்மலோகன்} நீயே. (அறவோரால் அடையப்படும்) வாய்மையின் உலகத்தைக் காட்டிலும் மேன்மையான நிலை {பரகதி} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களைப் படைத்தவன் {தேவாஸுரவிநிர்மாதா} நீயே. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரபராயணன்} நீயே.(143-114) (பிருஹஸ்பதி மற்றும் சுக்ரனின் வடிவில் இருப்பதால்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆசானாக இருப்பவன் {தேவாஸுரகுரு} நீயே. எப்போதும் வெற்றியடைபவன் {தேவன்} நீயே. தேவர்களாலும், அசுரர்களாலும் எப்போதும் வழிபடப்படுபவன் {தேவாஸுரநமஸ்க்ருதன்} நீயே. யானையை வழிநடத்தும் மஹாமாத்ரத்தைப் போலத் தேவர்களையும், அசுரர்களையும் வழிநடத்துபவன் {தேவாஸுரமஹாமாத்ரன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அனைவருக்கும் உரிய புகலிடம் {தேவாஸுரகணாச்ரயன்} நீயே.(144-115)

(இந்திரன் மற்றும் விரோசனன் ஆகிய இருவரின் வடிவிலும் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைவனாக இருப்பவன் {தேவாஸுரகணாத்யக்ஷன்} நீயே. (தேவ மற்றும் தைத்திய படைத்தலைவர்களான கார்த்திகேயன் மற்றும் கேசியின் வடிவில் நீயே இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் போர்த்தலைவன் {தேவாஸுரகணாக்ரணி} நீயே. புலன்களைக் கடந்து ஒளிர்ந்து கொண்டிருப்பவன் {தேவாதிதேவன்} நீயே. (நாரதர் மற்றும் பிறரைப் போன்ற) தெய்வீக முனிவர்களின் வடிவில் இருப்பவன் {தேவரிஷி} நீயே. (பிரம்மன் மற்றும் ருத்திரனின் வடிவில் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு வரங்களை அளிப்பவன் {தேவாஸுரவரப்ரதன்} நீயே.(145-116) தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களை ஆள்பவன் {தேவாஸுரேச்வரன்} நீயே. (அண்டம் அழியும்போது) அண்டம் நுழையப் போகும் இடம் {விச்வன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதங்களை ஆள்பவனுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரமஹேச்வரன்} நீயே. தேவர்கள் அனைவராலுமான உடல்படைத்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. சிந்திக்கத் தனக்கு மேம்பட்ட எதுவும் இல்லாதவன் {அசிந்த்யன்} நீயே. தேவர்களின் உள் ஆன்மாவாக இருப்பவன் {தேவதாத்மா} நீயே. சுயத்தில் பிறந்தவன் {ஆத்மஸம்பவன்} நீயே.(146-117) அசைவற்ற பொருட்களின் வடிவம் {மாயையைப் பிளந்து வெளிப்படுபவன்} {உத்பித்} நீயே. மூன்று அடிகளில் உலகை மறைத்தவன் {த்ரிவிக்ரமன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வைத்யன்} நீயே. களங்கமற்றவன் {விரஜன்} நீயே. ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவன் {நீரஜன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {அமரன்} நீயே. புகழ் துதிகளால் துதிக்கப்பட வேண்டியவன் {ஈட்யன்} நீயே. காலத்தைப் பிரதிபலிக்கும் தடுக்கப்பட முடியாத யானையின் ஆசான் {ஹஸ்தீச்வரன்} நீயே. கலிங்கர்களின் நாட்டில் வழிபடப்படும் புலிகளின் தலைவனுடைய வடிவம் {வ்யாக்ரன்} {வியாக்ரேஸ்வரன்} நீயே. (ஆற்றலில் ஏற்றம் கொண்டவனாக இருப்பதன் விளைவால்) தேவர்களுக்கு மத்தியில் சிங்கம் என்றழைக்கப்படுபவன் {தேவஸிம்மன்} நீயே. மனிதர்களில் முதன்மையானவன் {நரர்ஷபன்} நீயே.(147-118) பெரும் ஞானம் கொண்டவன் {விபுதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் முதல் பங்கை எடுத்துக் கொள்பவன் {அக்ரவரன்} நீயே. உணரப்பட முடியாதவன் {ஸூக்ஷ்மன்} நீயே. தேவர்கள் அனைவரின் மொத்தத் தொகை {ஸர்வதேவன்} நீயே. தவங்களால் மேம்பட்டிருப்பவன் {தபோமயன்} நீயே. எப்போதும் சிறந்த யோகத்தில் இருப்பவன் {ஸுயுக்தன்} நீயே. மங்கலமானவன் {சோபநன்} நீயே. வஜ்ரம் தரித்தவன் {வஜ்ரி} நீயே. பிராசங்கள் என்றழைக்கப்படும் பிறக்கும் தோற்றுவாய் {ப்ராஸாநாம்ப்ரபவன்} நீயே. பக்தர்களால் பல்வேறு வழிகளில் அடையப்படுபவன் {அவ்யயன்} நீயே.(148-119) (தேவர்ப்படைத்தலைவனான) குஹன் நீயே. இன்பநிலையின் உயர்ந்த எல்லை {காந்தன்} நீயே. படைப்போடு அடையாளம் காணப்படுபவன் {நிஜஸர்க்கன்} நீயே. (விடுதலையை {முக்தியை} அருளி) உயிரினங்களை மரணத்தில் இருந்து காப்பவன் {பவித்ரன்} நீயே. பிரம்மஹத்தி உட்பட அனைத்துப் பாவங்களையும் கழுவுபவன் {ஸர்வபாவநன்} நீயே. காளைகள் மற்றும் கொம்பு படைத்த பிற விலங்குகளின் வடிவில் இருப்பவன் {ஸ்ருங்கி} நீயே. மலைச்சிகரங்களை விரும்புபவன் {ஸ்ருங்கப்ரியன்} நீயே. சனிக்கோள் {பப்ரு} நீயே. யக்ஷர்களின் தலைவனான குபேரன் {ராஜராஜன்} நீயே. முற்றான களங்கமற்ற நிலை {நிராமயன்} நீயே.(149-120)

மகிழ்ச்சியை ஊக்கப்படுத்துபவன் {அபிராமன்} நீயே. தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தவன் {ஸுரகணன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் இடை நிறுத்துபவன் {தவிர்ப்பவன்} {விராமன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளின் தொடர்புடைய கடமைகள் அனைத்தும் {ஸர்வஸாதநன்} நீயே. நெற்றியிலும் ஒரு கண் கொண்டவன் {லலாடாக்ஷன்} நீயே. பளிங்குப் பந்தைப் போல அண்டத்தை வைத்து விளையாடுபவன் {விச்வதேவன்} நீயே. மானின் வடிவைக் கொண்டவன் {ஹரிணன்} நீயே. ஞானம் மற்றும் தவத்தின் வடிவிலான சக்தியுடன் கூடியவன் {ப்ரம்மவர்ச்சஸன்} நீயே.(150-121)(இமயம் மற்றும் மேரு முதலியவற்றின் வடிவிலான) அடையாத பொருட்கள் அனைத்தின் தலைவன் {ஸ்தாவராணாம்பதி} நீயே. பல்வேறு நோன்பு மற்றும் நியமங்களின் மூலம் புலன்களை அடக்கியவன் {நியமேந்த்ரியவர்த்தநன்} நீயே. நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்தவன் {ஸித்தார்த்தன்} நீயே. விடுதலையுடன் {முக்தியுடன்} அடையாளம் காணப்படுபவன் {ஸித்தபூதார்த்தன்} நீயே. நாங்கள் வழிபடுபவனிடத்தில் இருந்து வேறுபட்டவன் {அசிந்த்யன்} நீயே. வாய்மையையே தவமாகக் கொண்டவன் {ஸத்யவ்ரதன்} நீயே. தூய இதயம் கொண்டவன் {சுசி} நீயே.(151-122) (நோன்புகளுக்கான கனிகளைக் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) நோன்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் {வ்ரதாதிபன்} நீயே. (துரியத்தின் வடிவில் இருக்கும்) உயர்ந்தவன் {பரம்} நீயே, ப்ரம்மம் நீயே. பக்தர்களின் உயர்ந்த புகலிடம் {பக்தாநாம்பரமாகதி} நீயே. (விடுதலை கொண்டவனாக {முக்தனாக} இருப்பதால்) பந்தங்கள் அனைத்தையும் கடந்தவன் {விமுக்தன்} நீயே. லிங்க உடலில் இருந்து விடுபட்டவன் {முக்ததேஜஸ்} நீயே. அனைத்து வகைச் செழிப்புடன் கூடியவன் {ஸ்ரீமாந்} நீயே. பக்தர்களின் செழிப்பை அதிகரிப்பவன் {ஸ்ரீவர்த்தநன்} நீயே. இடையறாத மாற்றங்களுக்கு உட்படுபவன் {ஜகத்} நீயே[9].(152-123)ஓ! கிருஷ்ணா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்கத் தேவனுடைய பெயர்களை அவற்றின் முக்கியத்துவத்தின் வரிசையில் புகழ்ந்து பாடினேன். நமது துதிகள், வழிபாடு மற்றும் மதிப்புக்குத் தகுந்தவனும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் புகழப்பட முடியாதவனும், முனிவர்களாலும் துதிக்கப்பட முடியாதவனும், அனைவரின் பெருந்தேவனுமான அந்த அண்டத் தலைவனின் புகழை வேறு எவனால் துதிக்க முடியும்?(153) எனினும், உயர்ந்த பலத்தைக் கொண்ட தேவனும், நுண்ணறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த வேள்விகளின் தலைவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால், அவனிடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனைப் புகழ்ந்தேன்.(154) ஒருவனிடம் மங்கலத்தைப் பெருக்கும் இந்தப் பெயர்களால் அருள்நிலையின் பெருந்தேவனைப் புகழ்வதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க ஆன்மா மற்றும் தூய இதயத்துடன் கூடிய ஒரு வழிபாட்டாளன் தன்னை {சுயத்தை} அடைவதில் வெல்கிறான்.(155)

பிரம்மத்தை அடையும் சிறந்த வழிமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு துதியாக இந்தப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. இந்தத் துதியின் துணையுடன் நிச்சயம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வான். முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் இந்தத் துதியைத் துதிப்பதன் மூலம் அந்த உயர்ந்த தேவனைப் புகழ்கின்றனர் {துதிக்கின்றனர்}.(156) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவரால் துதிக்கப்படும்போது, இவ்வாறு தன் புகழைப் பாடுவோரிடம் மஹாதேவன் நிறைவை அடைகிறான். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் பக்தர்களிடம் எப்போதும் கருணை நிறைந்தவனாவான். எல்லாம் வல்லவனான அவன் தன்னை வழிபடுவோருக்கு விடுதலையை {முக்தியை} அளிக்கிறான்.(157) நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் {பக்தியும்} கொண்ட மனிதர்களில் முதன்மையானோர், உயர்ந்தவனும், நித்திய தேவனுமான ஈசானனின் {இந்தத்} துதியைக் கேட்டாலும், பிறருக்காக மதிப்புடன் உரைத்தாலும், அவர்கள் தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் கிடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், நடக்கும் போதும், விழித்திருக்கும்போதும், கண் இமைகளைத் திறக்கும்போதும், அவற்றை மூடும்போதும் என அனைத்து நேரங்களிலும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவனை இவ்வாறே துதித்து, அவனைக் குறித்தே மீண்டும் மீண்டும் நினைத்து, தங்கள் சக மனிதர்களுக்கு மத்தியில் மதிப்பிற்குரியவர்களாகி பெரும் நிறைவையும், பேரின்பத்தையும் அடைவார்கள்.(158-161)

பல்வேறு வகைகளில் பல கோடி பிறவிகளின் போக்கில் ஓர் உயிரினம் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ளும்போதே, அவனது இதயத்தில் மஹாதேவனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} உண்டாகும்.(162) (அண்டத்தின்) மூலக்காரணனான பவனை வழிபடும் ஒவ்வொரு வழிமுறையையும் அறிந்த ஒருவனுடைய இதயத்தில் நற்பேற்றால் மட்டுமே அந்தப் பெருந்தேவனிடம் சிதறாத அர்ப்பணிப்பானது {பக்தியானது} முழுமையாக எழும்.(163) ஒரே நோக்கத்தைக் கொண்டதும், நடைமுறையில் ஒருபோதும் தடுக்கப்பட முடியாததுமான ருத்திரனிடம் கொள்ளும் களங்கமற்ற தூய அர்ப்பணிப்பானது தேவர்களிடம் அரிதாகக் காணப்பட்டாலும் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படவில்லை.(164) ருத்திரனின் அருளின் மூலமே மனிதர்களின் இதயங்களில் இத்தகைய அர்ப்பணிப்பு எழுகிறது. இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால், மஹாதேவனுடன் முழுமையாகத் தங்களை அடையாளம் காணும் மனிதர்கள், உயர்ந்த வெற்றியை அடைவதில் வெல்கிறார்கள்.(165)

தன்னை நாடுவோருக்கு அருளை எப்போதும் வழங்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், முழு ஆன்மாவைத் தன்னிடம் செலுத்துவோரைப் பணிவன்புடன் இவ்வுலகத்தில் இருந்து மீட்கிறான்.(166) மறுபிறவியிலிருந்து உயிரினங்களைக் காக்கும் அந்தப் பெருந்தேவனைத் தவிர, பிற தேவர்கள் அனைவரும், மனிதர்களுக்குத் தவங்களைப் போல வேறு ஏதும் பலத்தின் ஊற்றுக்கண் இல்லாததால் அவற்றைத் தொடர்ந்து வீணாக்கச் செய்கின்றனர்.(167) ஆன்ம அமைதியைக் கொண்டவரும், காந்தியில் இந்திரனுக்கு ஒப்பானவருமான தண்டி, விலங்குத் தோல்களை உடுத்தியிருந்தவனும், இருப்பில் உள்ள மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தின் தலைவனுமான அந்தப் பெருந்தேவனை இவ்வாறே துதித்தார்.(168) இந்தத் துதியை பிரம்மனே சுமந்திருந்தான் (தனக்குள் வைத்திருந்தான்). உண்மையில் பிரம்மன் சங்கரன் முன்னிலையிலேயே இதைத் துதித்தான். (பிரம்மத்தை அறிந்தவனாகவும், பிரம்மத்தை அறிந்தோரிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் இருப்பதால்) பிராமணன் நீயே. எனவே, உன்னால் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.(169) இது பாவங்கள் அனைத்தையும் கழுவி தூய்மைப்படுத்தும். இது யோகத்தையும், விடுதலையையும் {முக்தியையும்}, சொர்க்கத்தையும், மனநிறைவையும் கொடுக்கும்.(170)

இந்தத் துதியைக் கொண்டு சிதறாத அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சங்கரனைத் துதிப்பவன், சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளில் அர்ப்பணிப்புள்ளோரின் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(171) ஒரே அர்ப்பணிப்புடன் இந்தத் துதியைக் கொண்டு தினமும் ஒரு வருடம் துதிக்கும் வழிபாட்டாளன் தான் விரும்பும் கதியை அடைவதில் வெல்கிறான்.(172) இந்தத் துதி பெரும் புதிரைக் கொண்டதாகும். இது தொடக்கத்தில் படைப்பாளனான பிரம்மனின் நெஞ்சத்தில் வசித்தது. பிரம்மன் இதைச் சக்ரனுக்குச் சொன்னான். சக்ரன் இதை மிருத்யுவுக்குச் சொன்னான்.(173) மிருத்யு இதை ருத்திரர்களுக்குச் சொன்னான். தண்டி ருத்திரர்களிடம் இருந்தே இதைப் பெற்றார். உண்மையில், தண்டி தமது கடுந்தவங்களுக்கு வெகுமதியாகப் பிரம்மலோகத்தில் இதைப் பெற்றார்.(174) தண்டி இதைச் சுக்கிரனுக்குச் சொன்னார், பிருகு குலச் சுக்கிரன் இதைக் கௌதமருக்குச் சொன்னார். ஓ! மதுவின் வழித்தோன்றலே, கௌதமர் தம் பங்குக்கு இதை வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார்.(175)

மனு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாராயணனுக்கு இதைச் சொன்னான். சாத்தியர்களில் ஒருவனாக எண்ணப்படுபவனும், குறைவில்லா மகிமை கொண்டவனும், சிறப்பு மிக்கவனுமான நாராயணன் இதை யமனுக்குச் சொன்னான்.(176) வைவஸ்வத யமன் இதை நசிகேதனுக்குச் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தவனே, நசிகேதன் இதை மார்க்கண்டேயருக்குச் சொன்னான்.(177) ஓ! ஜனார்த்தனா, என் நோன்புகள் மற்றும் நியமங்களுக்கு வெகுமதியாக நான் இதை மார்க்கண்டேயரிடம் இருந்து பெற்றேன். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, பிறரால் கேட்கப்படாத இந்தத் துதியை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(178) இத்துதி சொர்க்கத்திற்கு வழிவகுக்கும். இது நோய்களை விலக்கி, நீண்ட வாழ்நாளை அளிக்கும். இது {இந்தத் துதி} வேதங்களுக்கு இணக்கமானதும், உயர்ந்த புகழுக்குத் தகுந்ததுமாகும்” {என்றார் உபமன்யு}”[10].(சாந்தி பர்வம் -285 பகுதியில் தக்ஷன் சிவனை ஆயிரத்தெட்டு பெயர்களால் துதித்ததும் சிவ சஹஸ்ர நாமாவளி என்று அழைக்கப்படுகிறது. வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் வரும் சிவ சஹஸ்ர நாமாவளி அதனுடன் ஒத்துப் போகிறது. முனிவர் உபமன்யு சொன்ன துதியை யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் நினைவுகூர்கிறான். இதுவும் சிவஸஹஸ்ரநாமாவளி என்றே அழைக்கப்படுகிறது. லிங்க புராணத்திலும் சிவஸஹஸ்ரநாமாவளி இடம்பெற்றிருக்கிறது. அஃது இந்தச் சிவஸஹஸ்ரநாமாவளியோடு ஒத்துப் போகிறது. மஹாபாரத அனுசாசன பர்வம் 17ம் பகுதியில் வரும் இத்துதியே உண்மையில் சிவஸஹஸ்ரநாமாவளியாக அங்கீகரிக்கப்படுகிறது.)கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஓ! பார்த்தரே, பிரம்மச்சரிய நோன்பை நூற்று, புலன்களைக் கட்டுப்படுத்தி, தூய இதயத்துடன் முழுமையாக ஒரு வருடத்திற்கு இந்தத் துதியைத் துதிப்பவன், ஒரு குதிரை வேள்வியின் கனிகளை அடைவதில் வெல்கிறான். தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள் மற்றும் பாம்புகளால் அவனுக்கு {இத்துதியைத் துதிப்பவனுக்கு} எத்தீங்கையும் செய்ய முடியாது” {என்றான் கிருஷ்ணன்}.(179-180)

சிவமகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 18-வியாசர், கபிலர், சாருசீர்ஷர், வால்மீகி, பரசுராமர், விஷ்வாமித்ரர், அசிததேவலர், கிருத்ஸமதர், ஜைகீஷவ்யர், கர்க்கர், பராசரர், மாண்டவ்யர், காலவர் உள்ளிட்ட முனிவர்களும், கிருஷ்ணனும், உபமன்யுவும் பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வாசுதேவன் {கிருஷ்ணர்} பேசுவதை நிறுத்தியதும், பெரும் யோகியும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்}, யுதிஷ்டிரனிடம், “ஓ! மகனே, மஹாதேவனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைக் கொண்ட இந்தத் துதியைச் சொல்வாயாக, மஹேஸ்வரன் உன்னிடம் நிறைவை அடைவானாக.(1) ஓ! மகனே, பழங்காலத்தில், நான் ஒரு மகனை அடைய விரும்பி மேரு மலைகளின் சாரலில் கடுந்தவம் பயின்றேன். அப்போது இதே துதியைச் சொல்லித்தான் நான் துதித்தேன்.(2) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அதற்கான வெகுமதியாகத் தான் என் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை நான் அடைந்தேன். நீயும் இதே துதியைச் சொல்வதன் மூலம், உன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அந்தச் சர்வனிடம் இருந்து அடைவாய்” என்றார்.(3)

அதன்பிறகு, சாங்கியம் என்ற பெயரில் வரும் கோட்பாடுகளைச் செய்தவரும், தேவர்களாலேயே மதிக்கப்படும் முனிவருமான கபிலர், “பல பிறவிகளாகப் பெரும் அர்ப்பணிப்புடன் நான் பவனைத் துதித்தேன். இறுதியாக அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம் நிறைவை அடைந்து, மறுபிறவியைக் கடக்கும் அறிவை எனக்குக் கொடுத்தான்” என்றார்.(4)

அதன்பிறகு, சக்ரனின் நண்பரும், ஆலம்பனன் மகன் {ஆலம்பாயனர்} என்று வேறு பெயர் கொண்டவரும், கருணை நிறைந்தவருமான முனிவர் சாருசீர்ஷர்,(5) “நான் பழங்காலத்தில் கோகர்ண மலைகளுக்குச் சென்று நூறு வருடக் கடும் தவப்பயிற்சியில் அமர்ந்தேன். ஓ! மன்னன் பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அத்தவத்திற்கு வெகுமதியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் கூடியவர்களாக, அறமறிந்தவர்களாக, பெருங்காந்தி கொண்டவர்களாக, நோய் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவர்களாக, ஒரு லட்சம் வருடங்கள் வாழும் வாழ்நாட்களைக் கொண்டவர்களாக, எந்தப் பெண் தொடர்பும் இல்லாமல் பிறந்தவர்களாக நூறு மகன்களை அந்தச் சர்வனிடம் இருந்து அடைந்தேன்” என்றார்.(6,7)

அதன்பிறகு, சிறப்புமிக்க வால்மீகி- யுதிஷ்டிரனிடம், “ஒரு காலத்தில், ஒரு மெய்மை முரண் குறித்த ஒரு சர்ச்சையின் போது, ஹோம நெருப்பைக் கொண்ட தவசிகள் சிலர், பிராமணக்கொலை செய்த {பிரம்மஹத்தி எனும்} குற்றமிழைத்தவனாக என்னைப் பழித்து ஒதுக்கினர்.(8) ஓ! பாரதா, இவ்வாறு அவர்கள் என்னை ஒதுக்கிய பிறகு, பிராமணக்கொலை செய்தது போன்ற பாவம் என்னைப் பீடித்தது.[1] அப்போது என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக, பாவமற்றவனும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவனுமான ஈசானனின் பாதுகாப்பை நான் நாடினேன்.(9) என் பாவங்கள் அனைத்தில் இருந்தும் நான் தூய்மையடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விலக்குபவனும், அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனுமான அவன் என்னிடம், “உலகில் உன் புகழ் பெரிதாக இருக்கும்” என்றான் {சிவன்}” என்றார் {வால்மீகி}.(10)அதன்பிறகு, அறவோர் அனைவரிலும் முதன்மையானவரும், முனிவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் சுடர்மிக்கக் காந்தியுடன் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்},(11) “ஓ! பாண்டுவின் மூத்த மகனே, கற்றறிந்த பிராமணர்களாக இருந்த என் சகோதரர்களை {தமையன்களைக்} கொன்றதால் நான் பிராமணக் கொலை செய்த பாவத்தால் பீடிக்கப்பட்டிருந்தேன். ஓ! மன்னா, என்னைத் தூய்மை செய்து கொண்டு நான் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினேன்.(12) அந்தப் பெருந்தேவனின் பெயர்களைச் சொல்லி நான் அவனைத் துதித்தேன். இதனால் என்னிடம் நிறைவை அடைந்த பவன், எனக்கு ஒரு போர்க்கோடரியையும், இன்னும் பிற தெய்வீக அயுதங்களையும் கொடுத்தான்.(13) பிறகு அவன் என்னிடம், “நீ பாவத்தில் இருந்து விடுபட்டுப் போரில் வெல்லப்பட முடியாதவனாவாய். நோயில் இருந்து விடுபட்டவனாக இருப்பதால் உன்னைக் காலனாலும் வெல்ல முடியாது” என்றான்.(14) சிறப்புமிக்கவனும், {சடா} மகுடம் தரித்தவனும், மங்கல வடிவைக் கொண்டவனுமான அந்தத் தேவன் என்னிடம் இவ்வாறே சொன்னான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அந்தத் தேவனின் {ஸர்வஜ்ஞனின்} கருணையால் அவன் சொன்னதனைத்தையும் அடைந்தேன்” என்றார் {பரசுராமர்}.(15)

அதன்பிறகு விஷ்வாமித்ரர், “முன் நான் க்ஷத்திரியனாக இருந்தேன். பிராமணனாக விரும்பிய நான் என் துதிகளைப் பவனுக்குச் செலுத்தினேன். அந்தப் பெருந்தேவனின் கருணையால் அடைதற்கு மிக அரிதான உயர்ந்த பிராமண நிலையை நான் அடைந்தேன்” என்றார் {விஷ்வாமித்ரர்}.(16)

அதன்பிறகு, முனிவர் அசித-தேவலர், பாண்டுவின் அரச மகனிடம், “ஓ! குந்தியின் மகனே, பழங்காலத்தில், நான் செய்த அறச்செயல்கள் மூலம் பெற்றிருந்த தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தும் சக்ரனுடைய சாபத்தினால் அழிவடைந்தன. அந்தத் தகுதிகளுடன் சேர்த்து, பெரும் புகழையும், நெடும் வாழ்நாளையும் அந்தப் பலமிக்க மஹாதேவனே அன்புடன் எனக்குத் திருப்பிக் கொடுத்தான்” என்று சொன்னார்.(18)

சக்ரனின் அன்புக்குரிய நண்பரும், தெய்வீக ஆசானான காந்திமிக்கப் பிருஹஸ்பதிக்கு ஒப்பானவரும், சிறப்புமிக்கவருமான முனிவர் கிருத்ஸமதர், ஆஜமீட குலத்தைச் சார்ந்த யுதிஷ்டிரனிடம்,(19) “சிந்தைக்கெட்டாதவனான சக்ரன், பழங்காலத்தில் ஆயிரம் வருடங்களுக்கு நீண்ட ஒரு வேள்வியை {ஸத்ரயாகத்தைச்} செய்தான். அந்த வேள்வி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, {ரதந்தரமென்னும்} சாமங்கள் உரைக்கச் சக்ரனால் நான் ஈடுபடுத்தப்பட்டேன். பிரம்மனின் கண்களில் பிறந்தவரான மனுவின் மகன் வரிஷ்டர் அந்த வேள்விக்கு வந்து, என்னிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ரததந்தரங்களை நீர் முறையாகச் சொல்லவில்லை.(20,21) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, குறையுடன் படிப்பதன் மூலம் தகுதியிழப்பை ஈட்டாமல், உமது புத்தியின் துணையுடன் சாமங்களைச் சரியாகப் படிப்பீராக. ஓ! தீய புத்தி கொண்டவரே, வேள்வியை அழிக்கும் இத்தகைய பாவத்தை ஏன் நீர் செய்கிறீர்? என்று கேட்டார்.(22) பெரும் கோபக்காரரான முனிவர் வரிஷ்டர், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, கோபவசப்பட்டு மீண்டும் என்னிடம், “காற்றும், நீரும் இல்லாதவையும், வேறு விலங்குகளால் புறக்கணிக்கப்பட்டவையும், பாதைகளற்றவையுமான காடுகளில் அச்சத்தால் நிறைந்ததும், துயரத்துடன் கூடியதும், புத்தியற்றதுமான ஒரு விலங்காவீராக. இவ்வாறு பதினோராயிரத்து எண்ணூறு ஆண்டுகள் காலத்தை நீர் கழிப்பீராக.(23,24) இக்காலத்தை நீர் கழிக்கப்போகும் காடானது, புனித மரங்கள் ஏதும் இல்லாததாகவும், ருருக்களும் {புள்ளிமான்களும்}, சிங்கங்களும் நிறைந்ததாக இருக்கும். உண்மையில், பெருந்துயரத்தில் மூழ்கிய ஒரு கொடும் மானாவீராக” என்று சொன்னார்.(25) ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, அவர் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனேயே நான் ஒரு மானாக மாறினேன். பிறகு நான் மஹேஸ்வரனின் பாதுகாப்பை நாடினேன். அந்தப் பெருந்தேவன் என்னிடம்,(26) “அனைத்துவகை நோய்களில் இருந்தும் விடுபடுவதுடன் அழிவற்றவனாகவும் {மரணமற்றவனாகவும்} நீ இருப்பாயாக. துயரம் ஒருபோதும் உன்னைப் பீடிக்காதிருக்கட்டும். சக்ரனுடன் உன் நட்பு மாறாதிருக்கட்டும், இந்திரனுடைய மற்றும் உன்னுடைய வேள்விகள் பெருகட்டும்” என்றான்.(27) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வழியிலேயே அனைத்து உயிரினங்களுக்கும் உதவி செய்கிறான். அனைத்து உயிரினங்களின் இன்ப துன்பங்களை விதிப்பவனாகவும், விலக்குபவனாகவும் எப்போதும் அவனே இருக்கிறான்.(28) அந்தச் சிறப்புமிக்கத் தேவன், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புரிந்துகொள்ளப்பட இயலாதவனாவான். ஓ! மகனே, ஓ! போர்வீரர்களில் சிறந்தவனே, (மஹாதேவனின் கருணையால்) கல்வியில் இணையற்றவனாக நான் இருக்கிறேன்” என்றார் {கிருத்ஸமதர்}.(29)

அதன்பிறகு, புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான வாசுதேவன் {கிருஷ்ணன்}, மீண்டும் ஒருமுறை, “தங்கக் கண்களைக் கொண்ட மஹாதேவன் என் தவங்களால் என்னிடம் நிறைவை அடைந்தான்.(30) ஓ! யுதிஷ்டிரரே, நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம், “ஓ! கிருஷ்ணா, அனைவரும் ஆசைப்படும் செல்வத்தைவிட என் அருளால் அனைத்து மனிதர்களின் அன்புக்குரியவனாவாய்.(31) போரில் நீ வெல்லப்பட முடியாதவனாவாய். நீ நெருப்பு நிகரான சக்தியுடையவனாவாய்” என்றான். அச்சந்தர்ப்பத்தில் மஹாதேவன் ஆயிரக்கணக்கான வேறு வரங்களையும் எனக்களித்தான்.(32) முந்தைய அவதாரமொன்றில், மணிமந்தம் என்ற மலையில் கோடிக்கணக்கான வருடங்கள் {ஒரு கோடியே ஆயிரத்து நூறு வருடங்கள்} மஹாதேவனை நான் துதித்தேன்.(33) நிறைவையடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம் இந்த வார்த்தைகளில், “நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ விரும்பும் வரங்களை வேண்டுவாயாக” என்று சொன்னான்.(34) அவனுக்குத் தலைவணங்கிய நான் அவனிடம் இவ்வார்த்தைகளில், “பலமிக்க மஹாதேவன் என்னிடம் நிறைவை அடைந்திருந்தால்,(35) ஓ! ஈசானனே, நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பு மாறாதிருக்கட்டும். இதுவே நான் வேண்டும் வரமாகும்” என்றேன். அந்தப் பெருந்தேவன் என்னிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்து போனான்” என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(36)

ஜைகீஷவ்யர், “ஓ! யுதிஷ்டிரா, முன்பு வாராணசி {காசி} நகரத்தில் என்னைத் தேடி வந்த அந்தப் பலமிக்க மஹாதேவன், இறையாண்மையின் எட்டுக் குணங்களை {அணிமா முதலிய எண்குணங்களோடு கூடிய ஸித்தியை} எனக்கு அளித்தான்” என்றார்.(37)

கர்க்கர், “ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரஸ்வதி ஆற்றங்கரையில், நான் செய்த மனோவேள்வியின் விளைவால் என்னிடம் நிறைவை அடைந்த அந்தப் பெருந்தேவன், அற்புத அறிவியலும், அறுபத்துநான்கு அங்கங்களுடன் கூடியதுமான காலஞானத்தை {அறுபத்து நான்கு கலைகளிலும் அற்புத ஞானத்தை} எனக்குக் கொடுத்தான்.(38) வேதங்களை முழுமையாக அறிந்தவர்களும், இணையான தகுதிகளை உடையவர்களுமான ஓராயிரம் மகன்களையும் எனக்குக் கொடுத்தான். அவனது கருணையின் மூலம், அவர்களுடைய வாழ்நாளும், என்னுடைய வாழ்நாளும் பத்து லட்சம் ஆண்டுகளென நீண்டிருக்கின்றன” என்றார் {கர்க்கர்}.(39)

பராசரர், “ஓ! மன்னா, பழங்காலத்தில் நான் சர்வனை நிறைவடையச் செய்தேன். பிறகு நான், பெருந்தவத்தகுதியை உடையவனும், மேன்மையான சக்தியைக் கொண்டவனும், உயர்ந்த யோகத்தை அறிந்தவனும், பார்பரவும் புகழை ஈட்டுபவனும்,(40) வேதங்களைத் தொகுப்பவனும், செழிப்பின் இல்லமாக இருப்பவனும், வேதங்கள் மற்றும் பிராமணர்களிடம் அர்ப்பணிப்புள்ளவனும், கருணைக்காகப் புகழ்பெறக் கூடியவனுமான ஒரு மகனை அடைய விரும்பினேன். அத்தகைய ஒரு மகனையே நான் மஹேஸ்வரனிடமிருந்து பெற விரும்பினேன்.(41) என் இதய விருப்பம் இதுதான் என்பதை அறிந்து கொண்ட அந்த முதன்மையான தேவன், என்னிடம், “நீ என்னிடம் அடைய விரும்பும் உன் நோக்கம் கனிவதன் மூலம், கிருஷ்ணன் {கருப்பன்} என்ற பெயரில் நீ ஒரு மகனை அடைவாய். ஸாவர்ணி-மனு என்ற பெயரில் அறியப்படும் படைப்பில், உன்னுடைய மகன் ஏழு முனிவர்களில் ஒருவனாகக் கருதப்படுவான். அவன் வேதங்களைத் தொகுத்து, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனாக இருப்பான். இது தவிர அவன் பழைய வரலாறுகளின் ஆசானாக இருந்து, அண்டத்திற்கு நன்மை செய்வான். கடுந்தவங்களுடன் கூடிய அவன், சக்ரனின் அன்புக்குரிய நண்பனாக இருப்பான். உன் மகன் அனைத்து வகை நோய்களில் இருந்து விடுபட்டவனாக இருப்பதுடன், மரணமற்றவனாகவும் இருப்பான்” என்றான். அந்தப் பெருந்தேவன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அங்கேயே அப்போது மறைந்து போனான். ஓ! யுதிஷ்டிரா, அழிவற்றவனும், மாற்றமற்றவனும், உயர்ந்த தவங்கள் மற்றும் பரமசக்தியுடன் கூடியவனுமான அந்தத் தேவனிடம் இருந்து இத்தகைய நன்மையையே நான் அடைந்தேன்” என்றார் {பராசரர்}.(45)

மாண்டவ்யர், “பழங்காலத்தில், கள்வனாக இல்லாவிட்டாலும், கள்வனென்ற ஐயப்பாட்டினால் (மன்னனின் ஆணைகளின் பேரில்) நான் சூலத்தின் மேல் ஏற்றப்பட்டேன். அப்போது சிறப்புமிக்க மஹாதேவனை நான் துதித்தபோது அவன் என்னிடம்,(46) “சூலத்தில் இருந்து விரைவில் விடுபட்டு கோடிக்கணக்கான {நூறு கோடி} வருட காலம் வாழ்ந்திருப்பாய். சூலத்தினாலுண்டாகும் நோய் உனதாகாது.(47) அனைத்துவகைத் துயரங்கள் மற்றும் நோய்களில் இருந்து நீ விடுபடுவாய். ஓ! தவசியே, உன்னுடல் தர்மத்தின் (வாய்மையின்) நான்காவது காலில் இருந்து உண்டானதால்,(48) பூமியில் நீ ஒப்பற்றவனாக இருப்பாய். உன் வாழ்வைக் கனிநிறைந்ததாக்குவாயாக. பூமியின் புனித நீர்நிலைகள் அனைத்திலும் எத்தடையுமின்றி நீராட இயன்றவனாயிருப்பாய்.(49) ஓ! கற்றறிந்த பிராமணா, உன்னுடல் அழிவடைந்ததும், நீ சொர்க்கத்தின் இன்பநிலையை எல்லையில்லா காலத்திற்கு அனுபவிக்குமாறு நான் செய்வேன்” என்றான். காளையைத் தன் வாகனமாகக் கொண்டவனும், ஒப்பற்ற காந்தியைக் கொண்டவனும், விலங்குத் தோலை உடுத்தியவனும், துதிக்கத்தக்க தேவனுமான மஹேஸ்வரன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே, அப்போதே மறைந்து போனான்” என்றார் {மாண்டவ்யர்}.(50, 51)

காலவர், “முற்காலத்தில் நான் என் ஆசானான விஷ்வாமித்ரரின் பாதத்தில் கல்வி கற்று வந்தேன். என் தந்தையைக் காணும் நோக்கத்தோடு அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு என் இல்லத்திற்குப் புறப்பட்டேன். (விதவையாகியிருந்த) என் தாயார் கவலையால் நிறைந்து, அழுதுகொண்டே என்னிடம்,(52) “ஐயோ, வேத ஞானத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், இல்லம் திரும்ப ஆசானால் விடுவிக்கப்பட்டவனும், இளமையின் அருள்கள் அனைத்தையும் கொண்டவனும், தற்கட்டுப்பாடுடையவனுமான தமது மகனை உன் தந்தை ஒரு போதும் காணமாட்டார்” என்றாள்.(53) என் தாயாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, என் தந்தையைக் காண முடியாத வருத்தத்தால் நான் நிறைந்தேன். பிறகு குவிந்த ஆன்மாவுடன் நான் மஹேஸ்வரனுக்கு என் துதிகளைச் செலுத்தியபோது, அவன் என்னிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு,(54) “ஓ! மகனே, உன் தந்தை, உன் தாய் மற்றும் நீ ஆகியோர் அனைவரும் மரணத்தில் இருந்து விடுபட்டவர்களாவீர்கள். விரைவாகச் சென்று உன் வசிப்பிடத்திற்குள் நுழைவாக; அங்கே நீ உன் தந்தையைக் காண்பாய்” என்றான்.(55) ஓ! யுதிஷ்டிரா, அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு நான் என் இல்லத்திற்குத் திரும்பிய போது, தமது தின வேள்வியை நிறைவுசெய்து வெளியே வரும் என் தந்தையைக் கண்டேன்.(56) அவர் தமது கையில் ஹோமத்திற்கான விறகையும், குசப் புற்களையும் {தர்ப்பங்களையும்}, உதிர்ந்த கனிகளையும் கைநிறையச் சுமந்து வந்தார். முறையாகத் தம்மைக் கழுவிக் கொண்டிருந்ததால் அவர் ஏற்கனவே தம் தின உணவை உண்டுவிட்டதாகத் தெரிந்தது. ஓ! பாண்டுவின் மகனே, (மகிழ்ச்சியால்) கண்ணீரில் குளித்த கண்களுடன், தமது கரங்களில் வைத்திருந்த அப்பொருட்களைக் கீழே வீசிவிட்ட என் தந்தை, அவரது பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த என்னை உயர்த்தித் தழுவிக் கொண்டு, என் தலையை முகர்ந்து {உச்சி முகர்ந்து}, என்னிடம், “ஓ! மகனே, நான் உன்னைக் காண்பது நற்பேற்றினாலேயே. உன் ஆசானிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டு நீ திரும்பியிருக்கிறாய்” என்று சொன்னார் {என் தந்தை}” என்றார் {காலவர்}”.(58)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க மஹாதேவனின் அதிசயமிக்க, அற்புதம் நிறைந்த அருஞ்செயல்களைக் குறித்துத் தவசிகள் சொன்னது கேட்டு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} வியப்பை அடைந்தான்.(59) அப்போது புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவனான கிருஷ்ணன், புருஹுதனிடம் பேசும் விஷ்ணுவை {இந்திரனிடம் பேசும் ஈசுவரனைப்} போல அறப்பெருங்கடலான யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினான்.(60)

வாசுதேவன், “சூரியனைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசிப்பவராகத் தெரிந்த உபமன்யு, என்னிடம், “மறச்செயல்களால் {நியாயமற்ற செயல்களால்} களங்கமடைந்திருக்கும் பாவிகள்,(61) ஈசானனை அடைவதில் வெற்றி அடைய மாட்டார்கள். ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் களங்கமடைந்த மனோநிலைகளைக் கொண்ட அவர்களால் அந்தப் பரமதேவனை ஒருபோதும் அணுக முடியாது. தூய ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாளர்களால் மட்டுமே அந்தப் பரமதேவனை அடைவதில் வெல்ல முடியும்.(62) ஒரு மனிதன் அனைத்து வகை இன்பங்கள் மற்றும் ஆடம்பரங்களை அனுபவித்து வாழ்ந்தாலும், அந்தப் பரமதேவனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தானானால், அவன் தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட காட்டுத் துறவிகளுக்கு இணையானவனாகக் கருதப்படுவான்.(63) ஒரு மனிதனிடம் ருத்திரன் நிறைவையடைந்தால், பிரம்ம நிலையையோ, கேசவ நிலையையோ {விஷ்ணுவின் நிலையையோ}, தேவர்கள் அனைவருடன் கூடிய சக்ரனின் {இந்திரனின்} நிலையையோ, மூவுலகங்களின் அரசுரிமையையோ அவனால் வழங்க முடியும்.(64) ஓ! ஐயா, பவனை மனத்தில் வழிபடும் மனிதர்கள், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு, தேவர்கள் அனைவருடன் கூடிய சொர்க்கவாசத்தை அடைகிறார்கள்.(65) குளங்கள் மற்றும் தடாகங்களை அழித்துத் தன் இல்லங்களுக்கான அடித்தளத்தை எழுப்பி உண்மையில் மொத்த அண்டத்தையே அழிப்பவனுமாக உள்ள ஒருவனும், முக்கண்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவனை வழிபட்டுத் துதிப்பானானால், பாவத்தால் களங்கமடையமாட்டான்.(66) மங்கலக் குறியீடுகளேதும் அற்றவனும், பாவங்கள் அனைத்தாலும் கறைபடிந்தவனுமான ஒருவனும், சிவனைத் தியானிப்பதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறான்.(67) ஓ! கேசவா, மஹாதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்த புழு பூச்சிகள் மற்றும் பறவைகள் கூட முற்றிலும் அச்சமற்ற நிலையில் திரியவல்லவையாகின்றன.(68) மஹாதேவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்கள் நிச்சயம் மறுபிறவியில் இருந்து விடுதலை அடைவார்கள் {முக்தி அடைவார்கள்} என்பது திடநம்பிக்கையுடன் கூடிய என் தீர்மானமாகும்” என்றார் {உபமன்யு}.(69) அதன் பிறகு கிருஷ்ணன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் மீண்டும் பின்வரும் வார்த்தைகளில் பேசினான்.(70)

அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, “ஆதித்யன், சந்திரன், காற்று, நெருப்பு, சொர்க்கம், பூமி, வசுக்கள், விஸ்வேதேவர்கள், தாத்ரி {தாதா}, அர்யமான், சுக்கிரன், பிருஹஸ்பதி, ருத்திரர்கள், சாத்யர்கள், வருணன், கோபன்,(71) பிரம்மன், சக்ரன், மருத்துகள், பிரம்ம அறிவைக் கற்பிக்கும் உபநிஷத்கள், வாய்மை, வேதங்கள், வேள்விகள், வேள்விக் கொடைகள், வேதங்களை உரைக்கும் பிராமணர்கள், சோமம், வேள்வி செய்வபர், வேள்விக்காணிக்கைகளில் தேவர்களின் பங்குகள், வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய், தீக்ஷை, நோன்பு நியமங்கள் என்ற வடிவில் உள்ள நலந்தரும் அனைத்துவகைக் கட்டுப்பாடுகள்,(72) ஸ்வாஹா, வஷட், பிராமணர்கள், தெய்வீகப் பசு, முதன்மையான அறச் செயல்கள், காலச் சக்கரம், பலம், புகழ், தற்கட்டுப்பாடு, புத்தி கொண்டோர் அனைவரின் உறுதி, நன்மை தீமைகள் அனைத்தும், ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்},(73) முதல் தரமான புத்தி, அனைத்து வகைகளைச் சார்ந்த சிறந்த தீண்டல்கள், (அறச்) செயல்கள் அனைத்தின் வெற்றி, தேவர்களின் பல்வேறு இனக்குழுக்கள், வெப்பத்தைப் பருகுபவர்கள் {ஊஷ்ம்பர்கள்}, சோமத்தைப் பருகுபவர்கள் {ஸோமபர்கள்}, லேகர்கள், ஸுயாமர்கள், துஷிதர்கள், மந்திரங்களையே தங்கள் உடல்களாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் {பிரம்மகாயர்கள்},(74) ஆபாஸுரர்கள், மணங்களில் மட்டுமே வாழ்பவர்கள் {கந்தபர்கள்}, பார்வையில் மட்டுமே வாழ்பவர்கள் {தூமபர்கள்}, தங்கள் பேச்சைக் கட்டுபடுத்தியவர்கள் {வாசாவிருத்தர்கள்}, தங்கள் மனங்களைக் கட்டுப்படுத்தியவர்கள் {மனோவிருத்தர்கள்}, தூய்மையானவர்கள் {சுத்தர்கள்}, யோக பலத்தின் மூலம் பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்கள் {நிர்மாணரதர்கள்}, தீண்டலையே {தங்கள் உணவாகக்} கொண்டு வாழும் தேவர்கள் {ஸ்பர்சாசசனர்கள்}, பார்வையை உண்டு வாழும் தேவர்கள் {தர்சபர்கள்}, வேள்வியில் ஊற்றப்படும் நெய்யை உண்டு வாழும் தேவர்கள் {ஆஜ்யபர்கள்},(75) வேண்டி பொருட்களைத் தங்கள் விருப்பப்படிப் படைக்கும் வல்லமை கொண்டவர்கள் {சிந்த்யத்யோதர்கள்}, தேவர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுவோர், ஓ! ஆஜமீடரே {யுதிஷ்டிரரே}, சுபர்ணர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், தானவர்கள், யக்ஷர்கள், சாரணர்கள், பாம்புகள்,(76) திரளான அனைத்தும், மிக நுட்பமான அனைத்தும், மென்மையான அனைத்தும், நுட்பமில்லாத அனைத்தும், கவலைகள் அனைத்தும், இன்பங்கள் அனைத்தும், இன்பத்திற்குப் பின் வரும் கவலைகள் அனைத்தும், கவலைக்குப் பின் வரும் இன்பங்கள் அனைத்தும், சாங்கிய தத்துவம், யோகம், முதன்மையானவையாகவும், மிக மேன்மையானவையாகவும் கருதப்படும் பொருட்களைக் கடந்திருக்கும் துதிக்கத்தக்க பொருட்கள் யாவும், தேவர்கள் அனைவரும், அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் புராதனமான இந்தப் படைப்பைத் தாங்கி, அண்டத்தைப் பாதுகாக்கும் அனைவரும், அனைத்து உயிரினங்களையும் படைத்தவனிடம் இருந்தே பிறப்பை அடைந்தனர்.(77,78)

நான் சொன்ன இவை யாவும் தவங்களின் துணையுடன் ஞானிகள் சிந்திப்பதைவிடத் திரளானவையாகும். உண்மையில் நுட்பமான பிரம்மமே வாழ்வின் {உயிரின்} காரணமாகும். நான் மதிப்புடன் அதற்குத் தலைவணங்குகிறேன். மாற்றமற்றவனும், அழிவற்றவனும், நம்மால் எப்போதும் துதிக்கப்படுபவனுமான அந்தத் தலைவன் நாம் விரும்பிய வரங்களை நமக்கு அருளட்டும்.(79) எந்த மனிதன், தன் புலன்களை அடக்கி, தன்னைத் தூய்மை செய்து கொண்டு, இந்தத் துதியைத் தன் நோன்புக்குத் தடையில்லாமல் ஒரு மாத காலம் உரைப்பானோ, அவன் ஒரு குதிரை வேள்வி செய்ததற்கு இணையான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்வான்.(80) இத்துதியை உரைப்பதனால் ஒரு பிராமணன் வேதங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்; ஓ! பிருதையின் மகனே, ஒரு க்ஷத்திரியன், வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான்; ஒரு வைசியன் செல்வத்தையும், புத்திசாலித்தனத்தையும் அடைகிறான்; ஒரு சூத்திரன் இம்மையில் மகிழ்ச்சியையும், மறுமையில் நற்கதியையும் அடைகிறான்.(81) பெரும்புகழைக் கொண்ட மனிதர்கள், அனைத்துப் பாவங்களையும் கழுவவல்லதும், மிகப் புனிதமானதும், தூய்மையடையச் செய்வதுமான இந்தத் துதிகளின் இளவரசனை உரைப்பதால் தங்கள் இதயங்களை ருத்திரனில் நிலைக்கச் செய்கிறார்கள்.(82) இந்தத் துதிகளின் இளவரசனை உரைக்கும் மனிதன், தன் உடலில் உள்ள மயிர்க்கால்களின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வாழும் நிலையை அடைவதில் வெல்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(83)

கிழவியும், அஷ்டவக்கிரரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 19-வதான்யரின் மகளைத் திருமணம் செய்ய நினைத்த அஷ்டவக்கிரர், அவரது கட்டளையின் பேரில் வடக்குத் திசை சென்று அந்தத் திசையின் தேவனைக் கண்டு உரையாடியது; ஒரு முதிய பெண்ணுக்கும் அஷ்டவக்கிரருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஒரு மனிதன் திருமணத்தில் தன் துணைவியின் {ஸஹதர்மையின்} கரத்தை ஏற்கும் தருணத்தில், இருவரும் சேர்ந்து ஆற்றப்போகும் கடமைகள் {ஸஹதர்மங்கள்} அனைத்தையும் குறித்த உறுதிமொழியின் தோற்றுவாய் என்ன?(1) ஒன்றாகச் சேர்ந்து ஆற்றப்போகும் கடமைகள் {ஸஹதர்மங்கள்} அனைத்தின் உறுதிமொழியானது, பழங்காலத்தில் பெரும் முனிவர்களால் விதிக்கப்பட்டவையா? அஃது அறநோக்கங்களில் வாரிசுகளைப் பெறும் கடமையைக் குறிக்குமா? அல்லது பாலினக் கலவியால் ஏற்படும் உடலின்பத்தை மட்டுமே குறிக்குமா?(2) இது குறித்து என் மனத்தில் நிறையும் ஐயம் பெரியதாகும். நான் குறிப்பிடும் உறுதிமொழியானது, உண்மையில் பாலினக் கலவிக்கு வழிவகுக்கும் இயற்கையான தூண்டல்களுக்கு முரணாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இவ்வுலகத்தில் அனைத்துக் கடமைகளையும் சேர்ந்தே ஆற்றுவதற்காக ஏற்படும் சேர்க்கையானது, மறுமையில் நீடிக்காமல் மரணத்தோடு முடிந்துவிடுவதே காணப்படுகிறது.(3) அனைத்துக் கடமைகளையும் சேர்ந்தே ஆற்றுவதற்கான இந்தச் சேர்க்கை சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால், ஓ! பாட்டா, சொர்க்கமானது இறந்து போன மனிதர்களாலேயே அடையப்படுகிறது. திருமணம் செய்து கொண்ட இணையில் ஒரு நேரத்தில் ஒருவர் இறப்பதே காணப்படுகிறது. மற்றொருவர் எங்கே இருப்பார்? எனக்கு இதைச் சொல்வீராக.(4) பல்வேறு வகைக் கடமைகளைப் பயில்வதன் மூலம் மனிதர்கள் பல்வேறு வகைக் கனிகளை {பலன்களை} அடைகின்றனர். மேலும் மனிதர்கள் பல்வேறு வகைத் தொழில்களைச் செய்கின்றனர். மாறுபட்ட இத்தகைய கடமைகள் மற்றும் செயல்களின் விளைவால் அவர்கள் செல்லும் நரகங்களும் மாறுபட்டவையாக இருக்கின்றன.(5)

குறிப்பாகப் பெண்கள் போலி நடத்தை கொண்டவர்கள் {பொய்யர்கள்} என்று முனிவர்கள் சொல்கிறார்கள். மனிதர்கள் இவ்வாறு இருக்கும்போது, குறிப்பாகப் பெண்கள் பொய்யர்கள் என்று விதிகளில் அறிவிக்கப்படும்போது, ஓ! ஐயா, கடமைகள் அனைத்தையும் சேர்ந்தே செய்வதற்கான நோக்கத்தில் பாலினங்களுக்கிடையில் எவ்வாறு சேர்க்கை ஏற்பட முடியும்?(6) பெண்கள் பொய்யர்கள் என்பதை ஒருவன் வேதங்களிலிலேயே படிக்கலாம். கடமை {தர்மம்} என்ற சொல்லானது, வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள படி, முதலில் பொதுவான பயன்பாட்டுக்காக (தகுதியேதும் இல்லாத நடைமுறைகளில் பயன்படுத்துவதற்காக) அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, திருமணச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் அந்தச் சொல்லானது, சரியானதாக இருப்பதற்குப் பதில், பயன்பாடு ஏதும் இல்லாதவற்றில் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் பேச்சின் வடிவமாக மட்டுமே இருக்கிறது.(7) இக்காரியம் குறித்து இடையறாமல் சிந்தித்தாலும், எனக்கு விளக்க முடியாததாக இருக்கிறது. ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஸ்ருதியில் விதிக்கப்பட்டுள்ளபடி தெளிவாகவும், விரிவாகவும் எனக்கு இதை விளக்குவதே உமக்குத் தகும். உண்மையில், அஃது என்ன? அதன் தன்மைகள் என்னென்ன? அதை நடைமுறைப்படுத்தும் வழியென்ன? என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக”[1].(8,9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக அஷ்டவக்கிரருக்கும், திசை என்ற பெயரில் அறியப்படும் பெண்ணுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(10) பழங்காலத்தில் கடுந்தவங்களைச் செய்த அஷ்டவக்கிரர், திருமணம் செய்து கொள்ளவிரும்பி, உயர் ஆன்ம முனிவரான வதான்யரின் மகளை இரந்து கேட்டார்.(11) அந்தக் கன்னிகை சுப்பிரபை என்ற பெயரில் அறியப்பட்டிருந்தாள். பூமியில் ஒப்பிலா அழகுடையவளாக அவள் இருந்தாள். குணம், கண்ணியம், ஒழுக்கம் மற்றும் நடைமுறைகளில் அவள் அனைத்துப் பெண்களைவிட மேன்மையானவளாக இருந்தாள். (12) மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த காலத்தில் பார்வையாளரின் இதயத்தைக் களவாடும் இனிய தோட்டத்தை {மலர்வனத்தைப்} போலவே, அழகிய கண்களைக் கொண்ட அந்தப் பெண் ஒற்றைப் பார்வையிலேயே அவரது இதயத்தைக் களவாடினாள்.(13)

அந்த முனிவர் {வதான்யர்} அஷ்டவக்கிரரிடம், “சரி. நான் என் மகளை உனக்கு அளிக்கிறேன். எனினும், நான் சொல்வதைக் கேட்பாயாக. புனிதமான வடதிசை நோக்கிப் பயணிப்பாயாக. அங்கே நீ பலவற்றைக் காண்பாய்” என்றார்[2].(14)அஷ்டவக்கிரர் {வதான்யரிடம்}, “அந்தப் பகுதியில் நான் என்ன காண்பேன் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில் உம்மால் விதிக்கப்படும் எக்கட்டளையையும் செயல்படுத்த நான் ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார்.(15)

வதான்யர் {அஷ்டவக்கிரரிடம்}, “நீ கருவூலத்தலைவனின் {குபேரனின்} ஆட்சிப்பகுதிகளைக் கடந்து, இமய மலைகளையும் கடந்து செல்ல வேண்டும். அப்போது ருத்திரன் வசிக்கும் மேட்டு நிலத்தைக் காண்பாய். அது சித்தர்களும், சாரணர்களும் வசிக்கும் இடமாகும்.(16) ஆட விரும்பி துள்ளிக் குதிப்பவர்களும், பல்வேறு வடிவங்களிலான முகங்களைக் கொண்டவர்களுமான மஹாதேவனின் கணங்கள் அங்கே நிறைந்திருக்கின்றனர். ஓ! முதன்மையானவனே, பல்வேறு வண்ணங்களிலான நறுமணப்பொடிகளைப் பூசிக் கொண்டவர்களும், வெங்கலத்தாலான பல வகை இசைக்கருவிகளின் துணையுடனும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் ஆடிக்கொண்டிருக்கும் பல்வேறு வடிவங்களிலான பிசாசங்கள் பலவும் நிறைந்திருக்கின்றன. மின்னல் வேகத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்களும், முன்னே, பின்னே, குறுக்கே என அனைத்து வகை அசைவுகளையும் செய்பவர்களுமான இவை சூழவே அங்கே மஹாதேவன் வசித்து வருகிறான்.(17,18) நாம் கேள்விப்பட்டிருக்கும் மலைகளில் உள்ள அந்த இனிய இடமே அந்தப் பெருந்தேவனுக்குப் பிடித்தமான வசிப்பிடமாகும். அந்தப் பெருந்தேவன் தன் தோழர்களுடன் {கணங்களுடன்} எப்போதும் அங்கே இருக்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(19) முக்கண் தேவனின் (அவனைத் தன் தலைவனாக அடையும்) நிமித்தமாக உமாதேவி அங்கேதான் கடுந்தவங்களைச் செய்தாள். எனவே, மஹாதேவன் மற்றும் உமை ஆகிய இருவராலும் மிகவும் விரும்பப்படும் இடம் எனச் சொல்லப்படுகிறது.(20)

பழங்காலத்தில், மஹாதேவனின் புனித மலைகளுக்கு வடக்கே அமைந்திருக்கும் மஹாபார்ஷ்வ மலைகளின் உச்சியில், பருவகாலங்கள், இறுதி இரவு, தேவர்கள் பலர், (முதன்மையான வகையைச் சேர்ந்த) மனிதர்கள் பலர்,(21) தங்கள் உடல் கொண்ட வடிவங்களோடு மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்[3]. வடக்கு நோக்கிய உன் பயணத்தில் நீ அந்தப் பகுதியையும் கடந்து செல்ல வேண்டும். பிறகு, மேகத்திரளுக்கு ஒப்பானதும், நீலவண்ணம் கொண்டதுமான ஓர் அழகிய காட்டை நீ காண்பாய். அங்கே, அந்தக் காட்டில், ஸ்ரீயை {லட்சுமியைப்} போலத் தெரியும் ஓர் அழகிய பெண் தவசியை நீ காண்பாய்.(23) வயதின் காரணமாக மதிக்கப்படுபவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான அவள், தீக்ஷை நோற்றுக் கொண்டிருக்கிறாள். அங்கே அவளைக் கண்டு மதிப்புடன் நீ அவளை வழிபட வேண்டும்.(24) அவளைக் கண்ட பிறகு இவ்விடம் திரும்பியதும், என் மகளின் கரத்தைத் திருமணத்தில் பற்றுவாயாக. உன்னால் இந்த உடன்பாட்டை ஏற்க முடிந்தால், பயணம் சென்று நான் ஆணையிட்டதைச் செய்வாயாக” என்றார் {வதான்யர்}.(25)அஷ்டவக்கிரர்  {வதான்யரிடம்}, “அப்படியே ஆகட்டும். நான் உமதாணையைச் செய்வேன். ஓ! அற ஆன்மாவே, நீர் சொல்லும் பகுதிக்கு நிச்சயம் நான் செல்வேன். உமது தரப்பில், நீர் உமது வார்த்தைகளை வாய்மைக்கு இணக்கமானதாகச் செய்வீராக” என்றார்”.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க அஷ்டவக்கிரர் புறப்பட்டுச் சென்று பயணம் மேற்கொண்டார். அவன் மேன்மேலும் வடக்குநோக்கிச் சென்று இறுதியாகச் சித்தர்களும், சாரணர்களும் நிறைந்த இமய மலைகளை அடைந்தார்.(27) இமய மலைகளை அடைந்த பிறகு, அந்த முதன்மையான பிராமணர், பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும் பாஹுதை என்ற புனித ஆற்றுக்குச் சென்றார்.(28) அவர், சேறற்றவையும் {தெளிந்த நீரைக் கொண்டவையும்}, இனிமை நிறைந்தவையுமான அந்த ஆற்றின் தீர்த்தங்களில் நீராடி, நீர்க்காணிக்கைகளால் தேவர்களை நிறைவடையச் செய்தார். அவரது தூய்மைச் சடங்குகள் நிறைவடைந்ததும், குசப்புற்களை {தர்ப்பங்களைப்} பரப்பிச் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காகத் தம்மைக் கீழே கிடத்திக் கொண்டார்.(29) இவ்வகையில் அந்தப் பிராமணர் இரவைக் கழித்துப் பகலில் எழுந்தார். பாஹுதையின் புனித நீர்களில் மீண்டும் தமது தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, தமது ஹோம நெருப்பை மூட்டி, முதன்மையான வேத மந்திரங்கள் பலவற்றின் துணையுடன் அதை வழிபட்டார்.(30)

பிறகு அவர், ருத்திரன் மற்றும் அவனது மனைவியான உமை ஆகிய இருவரையும் முறையான சடங்குகளுடன் வழிபட்டு, அந்தப் பாஹுதையின் போக்கில் உள்ள ஒரு தடாகத்தின் அருகில் மேலும் சிறிது நேரம் ஓய்ந்திருந்தார். இத்தகைய ஓய்வினால் புத்துணர்ச்சியடைந்த அவர், அந்தப் பகுதியில் இருந்து கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.(31) அப்போது அவர் அழகில் சுடர்விடுவதாகத் தெரிந்த ஒரு தங்க வாயிலைக் கண்டார். மேலும் அவர் மந்தாகினியையும், கருவூலங்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரனின் நளினியையும் கண்டார்[4].(32) அழகிய தாமரைகள் நிறைந்த அந்தத் தடாகத்தைப் பாதுகாப்பவர்களும், மாணிபத்ரனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான ராட்சசர்கள் அனைவரும், அங்கே வந்த முனிவரைக் கண்டு, சிறப்புமிக்க அந்தப் பயணியை வரவேற்றுக் கௌரவிப்பதற்காக வெளியே வந்தனர்.(33) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்களைப் பதிலுக்கு வழிபட்ட அம்முனிவர், தமது வருகையைக் கருவூலங்களின் தலைவனுக்குத் தாமதமில்லாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.(34) இதைச் செய்ய அவரால் வேண்டப்பட்ட ராட்சசர்கள், அவரிடம், “மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்}, புலனாய்வுக்காகக் காத்திராமல் தமது விருப்பப்படியே உமது முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்.(35) சிறப்புமிக்கவரான கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, உமது பயணத்தின் நோக்கத்தை நன்கறிந்திருக்கிறார். சக்தியால் தாமே ஒளிர்பவரான அந்த அருளப்பட்ட தலைவரை இதோ காண்பீராக” என்றனர்.(36)அப்போது மன்னன் வைஸ்ரவணன், களங்கமற்ற அஷ்டவக்கிரரை அணுகி, முறையாக நலம்விசாரித்தான். மதிப்பு நிமித்தமான வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகு, அந்தக் கருவூலங்களின் தலைவன், அந்த மறுபிறப்பாள முனிவரிடம்,(37) “இங்கே வந்த உமக்கு நல்வரவு. என்னிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! மறுபிறப்பாளரே, நீர் நிறைவேற்றச் சொல்லும் எதையும் நான் நிறைவேற்றுவேன்.(38) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விருப்பத்துடன் என் வசிப்பிடத்திற்குள் நுழைவீராக. என்னால் முறையாக உபசரிக்கப்பட்டு, உமது காரியம் நிறைவடைந்த பிறகு, உமது வழியில் எத்தடையுமின்றி நீர் செல்லலாம்” என்றான் {குபேரன்}.(39)

குபேரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்த முதன்மையான பிராமணரிடம் இருந்து தன் கரத்தை எடுத்து, தன் அரண்மனைக்கு அவரை வழிநடத்திச் சென்றான். தன் இருக்கையையே அவருக்கு அளித்து, கால் கழுவ நீர்கொடுத்து, வழக்கமான பொருட்களுடன் கூடிய அர்க்கியத்தையும் கொடுத்தான். அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, மாணிபத்ரனின் தலைமையிலான குபேரனின் யக்ஷர்களும், கந்தர்வர்கள் மற்றும் கிண்ணரர்கள் பலரும் அவர்களுக்கு முன்னிலையில் அமர்ந்தார்கள்.(41)

அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, கருவூலனங்களின் தலைவன் {குபேரன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “எது உமக்குப் இன்பமெனப் புரிந்த பிறகு {உமது கருத்தை அறிந்த பிறகு}, அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் இங்கே தங்கள் ஆடலைத் தொடங்குவார்கள்.(42) நான் உம்மை விருந்தோம்பலுடன் உபசரிக்க வேண்டும், முறையான உதவிகளுடன் உமக்குத் தொண்டாற்றவும் வேண்டும்” என்றான்.

இவ்வாறு சொல்லப்பட்டதும், தவசியான அஷ்டவக்கிரர் இனிய குரலில், “ஆடல் தொடங்கட்டும்” என்றார்.(43)

அப்போது, உர்வரை, மிச்ரகேசி, ரம்பை, ஊர்வசி, அலம்புஸை, கிருதாசி, சித்ரை, சித்ராங்கதை, ருசி,(44) மனோஹரை, ஸுகேசி, ஸுமுகி, ஹாஸினி, ப்ரபை, வித்யுதை, ப்ரசமி, தாந்தை, வித்யோதை, ரதி ஆகியோரும்,(45) இன்னும் அழகிய பல அப்சரஸ்களும் ஆடத் தொடங்கினர். கந்தர்வர்கள் பல்வேறு வகையான இசைக்கருவிகளை இசைத்தனர்.(46) இத்தகைய சிறப்பான இசையும், ஆடலும் தொடங்கிய பிறகு, கடுந்தவங்களைக் கொண்ட முனிவர் அஷ்டவக்கிரர், தன்னினைவில்லாமலேயே மன்னன் வைஸ்ரவணனின் வசிப்பிடத்தில் முழுமையாக ஒரு தேவ வருடத்தைக் கழித்தார்.(47) பிறகு, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்}, அந்த முனிவரிடம், “ஓ! கற்றறிந்த பிராமணரே, நீர் இங்கே வந்து ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமான காலம் கடந்திருப்பதைக் காண்பீராக. குறிப்பாகக் கந்தர்வம் என்ற பெயரில் அறியப்படும் இந்த இசையும், ஆடலும், இதயத்தை (காலத்தைக்) களவாடுபவையாகும். உமது விருப்பப்படி செயல்படுவீராக, அல்லது இதுவே உமது இன்பமென்றால் {உமக்கு விருப்பமென்றால்} இது தொடரட்டும். நீர் என் விருந்தினர், எனவே, துதிக்கத்தகுந்தவராவீர். இஃது உமது இல்லமாகும். ஆணையிடுவீராக. நாங்கள் அனைவரும் உமக்குக் கட்டுப்படுகிறோம்” என்றான்.(50)

சிறப்புமிக்க அஷ்டவக்கிரர், மன்னன் வைஸ்ரவணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவனிடம், “நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டேன். ஓ! கருவூலங்களின் தலைவா, நான் இப்போது இங்கிருந்து செல்ல விரும்புகிறேன்.(51) உண்மையில் நான் உயர்வான மகிழ்ச்சியை அடைந்தேன். ஓ! கருவூலங்களின் தலைவா, இவை அனைத்தும் உனக்குத் தகும். ஓ! சிறப்புமிக்கவனே, உன் அருளாலும், உயர் ஆன்ம முனிவர் வதான்யரின் ஆணைக்கு ஏற்புடைய வகையிலும்,(52) என் பயணத்தின் எல்லைக்கு இப்போது புறப்படப் போகிறேன். வளர்ச்சியும், செழிப்பும் உனதாகட்டும்” என்றார். அந்தச் சிறப்புமிக்க முனிவர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு, வடக்கு நோக்கிச்சென்றார்.(53)

கைலாசம், மந்தரம் மற்றும் தங்க மலைகளையும் அவர் கடந்து சென்றார். எங்கே மஹாதேவன் எளிய தவசியாக உடுத்திக் கொண்டு தன் வசிப்பிடத்தை அமைத்திருக்கிறானோ, அஃது உயர்ந்தவையும், பெரியவையுமான அந்த மலைகளைக் கடந்து அமைந்திருக்கிறது.(54) அவர், குவிந்த மனத்துடனும், மதிப்புடன் தலைவணங்கியபடியும் அந்த இடத்தை வலம் வந்தார். பிறகு பூமிக்கு வந்த அவர், மஹாதேவனின் வசிப்பிடமான அந்தப் புனிதமான இடத்தைக் கண்டதால் புனிதமடைந்ததாகத் தம்மைக் கருதினார்.(55) அம்மலையை மும்முறை வலம் வந்த அந்த முனிவர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் {மேலும்} வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.(56)

பிறகு அவர் இனிமை நிறைந்த மற்றொரு காட்டைக் கண்டார். அஃது அனைத்துக் காலத்திற்குமுரிய கனிகளாலும், கிழங்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அது சிறகு படைத்த ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்களையும் {பறவைகளின் ஒலிகளையும்} எதிரொலித்துக் கொண்டிருந்தது.(57) அந்தக் காடு முழுவதும் இனிமைநிறைந்த சோலைகள் ஏராளம் இருந்தன. அப்போது அந்தச் சிறப்புமிக்க முனிவர் ஓர் அழகிய ஆசிரமத்தைக் கண்டார்.(58) அம்முனிவர், ரத்தினங்கள் நிறைந்தவையும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவையுமான பல தங்க மலைகளையும் கண்டார். ரத்தினங்கள் நிறைந்த அந்த மண்ணில் அவர் பல தடாகங்களையும், குளங்களையும் கூடக் கண்டார்.(59) மேலும் அவர் பெரும் இனிமைநிறைந்த பல்வேறு பொருட்களையும் கண்டார். இப்பொருட்களையெல்லாம் கண்டதும், தூய ஆன்மாகக் கொண்ட அந்த முனிவரின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.(60)

அப்போது அவர் தங்கத்தாலானதும், பல வகை ரத்திரனங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் அழகிய மாளிகையைக் கண்டார். அற்புதம் நிறைந்த வடிவமைப்புடன் கூடிய அம்மாளிகை, அனைத்து வகையிலும் குபேரனின் அரண்மையையும் விட மேம்பட்டிருந்தது.(61) அதைச் சுற்றிலும் பல மலைகளும், ரத்தினக் குவியல்களும் இருந்தன. அந்த இடத்தில் அழகிய பல தேர்களும், பல்வேறு வகைகளிலான ரத்தினக்குவியல்களும் காணப்பட்டன.(62) அங்கே அம்முனிவர் மந்தார மலர்கள் விரவிக்கிடக்கும் நீரைக் கொண்ட மந்தாகினி ஆற்றைக் கண்டார். தன்னொளி கொண்ட ரத்தினங்கள் பலவும் அங்கே காணப்பட்டன, சுற்றிலுமிருந்த மண்ணும் பல்வேறு வகை வைரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(63) முனிவர் கண்ட மாட மாளிகையில் பல்வேறு வகைக் கற்களால் அழகூட்டப்பட்ட வளைவுகளைக் கொண்ட அறைகள் பலவற்றைக் கொண்டிருந்தது. மேலும் அந்த அறைகள், இடையிடையே பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(64) இதயத்தையும், கண்ணையும் களவாடவல்ல பல்வேறு வகை அழகிய பொருட்கள் அந்த அரண்மனையில் இருந்தன. இனிமைநிறைந்த ஆசிரமத்தில் எண்ணற்ற முனிவர்கள் வசித்தனர்.(65)

சுற்றிலுமுள்ள இந்த அழகிய காட்சிகளைக் கண்ட முனிவர், தாம் எங்கே தங்குவது என நினைக்கத் தொடங்கினார். அந்த மாளிகையின் வாயிலுக்குச் சென்ற அவர்,(66) “(உறைவிடம் விரும்பி) ஒரு விருந்தாளி வந்திருக்கிறான் என இங்கே வாழ்பவர்கள் அறியட்டும்” என்ற வார்த்தைகளைச் சொன்னார். முனிவரின் குரலைக் கேட்டதும், அம்மாளிகையில் இருந்து கன்னிகைகள் பலர் வெளியே வந்தனர்.(67) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்ணிக்கையில் அவர்கள் எழுவராக இருந்தனர். அழகின் பல்வேறு வகைப் பாணிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும் பெருங்கவர்ச்சியுடன் இருந்தனர். முனிவர் தமது கண்களைச் செலுத்திய கன்னிகையர் ஒவ்வொருவரும் அவரது இதயத்தைக் களவாடினர்.(68) எவ்வளவு சிறப்பாக முயன்றாலும் அந்தத் தவசியால் தமது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உண்மையில், மிக மேன்மையான அழகைக் கொண்ட அந்தக் கன்னிகையரைக் கண்ட மாத்திரமே அவர் தமது இதயத்தின் அமைதி முழுமையையும் இழந்தார். இத்தகைய ஆதிக்கங்களுக்குத் தாம் வசப்படுவதைக் கண்ட முனிவர், பெரும் ஞானியாக இருந்ததால் கடுமுயற்சி செய்து இறுதியில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் வென்றார்.(69)

அப்போது அந்த வனிதையர் அம்முனிவரிடம், “சிறப்புமிக்கவரே, நீர் உள்ளே நுழையலாம்” என்றனர்.

அழகுமிக்கக் காரிகைகள் மற்றும் மாடமாளிகையால் ஆவலில் நிறைந்திருந்த அந்த மறுபிறப்பாள முனிவர், தாம் கேட்டுக்கொள்ளப்பட்ட படியே உள்ளே நுழைந்தார். மாளிகைக்குள் நுழைந்ததும், முதுமையின் தளர்ச்சிக் குறியீடுகளைக் கொண்டவளும், வெள்ளுடை உடுத்தியவளும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமாக ஒரு முதிய பெண்மணியைக் கண்டார்.

முனிவர் {அஷ்டவக்கிரர்}, “நன்மை விளையட்டும்” என்று அவளுக்கு ஆசி கூறினார்.

அந்த முதிய பெண்மணியும் உரிய வகையில் அவருக்கான நல்வாழ்த்துகளைத் திரும்பச் செலுத்தினாள். அவள் எழுந்திருந்து முனிவருக்கு ஓர் இருக்கையைக் கொடுத்தாள்.(70-72)

தமது இருக்கையில் அமர்ந்த அஷ்டவக்கிரர், “கன்னிகையர் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லட்டும். ஒருத்தி மட்டும் இங்கே இருக்கட்டும். எவள் ஞானம் படைத்தவளோ, எவள் தன் இதயத்தில் அமைதியைக் கொண்டவளோ அவள் மட்டும் போகாமல் இருக்கட்டும். உண்மையில், மற்ற அனைவரும் தங்கள் விருப்பப்படிச் செல்லலாம்” என்றார்.(73)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கன்னிகையர் அனைவரும் அம்முனிவரை வலம்வந்து அந்த அறையைவிட்டு வெளியேறினர். அந்த முதிய பெண்மணி மட்டும் போகாமல் அங்கேயே இருந்தாள்.(74) பகல் விரைவாகக் கடந்ததும், இரவும் வந்தது. மிக நல்ல படுக்கையில் அமர்ந்திருந்த முனிவர் அந்த முதிய பெண்மணியிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, இரவு ஆழ்கிறது. நீ உறங்குவாயாக” என்றார்.(75)

அம்முனிவரால் தங்கள் விவாதம் இவ்வாறு நிறுதப்பட்டதும், முதிய பெண்மணி பெருங்காந்திமிக்கச் சிறந்த படுக்கை ஒன்றில் தன்னைக் கிடத்திக் கொண்டாள்.(76) விரைவில் தன் படுக்கையில் இருந்து எழுந்த அவள், குளிரில் நடுங்குவதாகப் பாசாங்கு செய்தபடியே முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(77) சிறப்புமிக்க அஷ்டவக்கிரர் மதிப்புடன் நல்வரவு கூறினார். எனினும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தப் பெண்மணி தன் கரங்களை விரித்து அம்முனிவரை மென்மையாக அணைத்தாள்.(78) முனிவர் அசைவற்றவராகவும், மரக்கட்டையைப் போல அசைவற்றவராகவும் இருப்பதைக் கண்ட அவள், மிக வருத்தமடைந்து அவருடன் பேசத் தொடங்கினாள்.(79)

{அவள்}, “ஒரு பெண்ணுக்கு எதிர் பாலினத்திடம் {ஓர் ஆணிடம்} இருந்து ஆசை {காமம்} மூலம் கிட்டக்கூடியதைவிட இன்பம் வேறேதுமில்லை. நான் இப்போது ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தின் கீழிருக்கிறேன். அக்காரணத்திற்காகவே நான் உம்மை நாடுகிறேன். பதிலுக்கு நீரும் என்னை நாடுவீராக.(80) ஓ! கற்ற முனிவரே, உற்சாகமாக என்னுடன் கலப்பீராக. ஓ! கல்விமானே, உம்மை நான் பெரிதும் விரும்புவதால் என்னைத் தழுவிக் கொள்வீராக.(81) ஓ! அற ஆன்மாவே, என்னுடன் கலப்பது நீர் மேற்கொண்ட கடுந்தவங்களுக்கான மிகச் சிறந்த, விரும்பத்தக்க வெகுமதியாகும். முதல் பார்வையிலேயே உம்மை நாடும் மனநிலையை நான் அடைந்துவிட்டேன். நீரும் என்னை நாடுவீராக.(82) இந்தச் செல்வமனைத்தும், இங்கே நீர் காணும் மதிப்புமிக்க அனைத்தும் என்னுடையவையே. உண்மையில் இவை யாவற்றுக்கும், எனக்கும் என் இதயத்துக்கும் நீரே தலைவராவீராக.(83) நான் உமது விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றுவேன். எனவே, ஓ! பிராமணரே, அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல இந்த இனிமை நிறைந்த காட்டில் என்னுடன் திளைத்திருப்பீராக.(84) அனைத்துவகையிலும் நான் உமக்குக் கீழ்ப்படிந்தவளாக இருப்பேன். நீர் உமது விருப்பப்படி என்னுடன் இன்புற்றிருப்பீராக. மனித மற்றும் மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட தெய்வீக ஆசைகள் அனைத்தையும் நாம் அனுபவிப்போம்.(85) ஒரு பெண்ணுக்கு இதைவிட (எதிர்பாலினத் {ஆணின்} துணையால் கிட்டும் இன்பத்தைவிட) ஏற்புடைய இன்பம் வேறேதும் கிடையாது. உண்மையில் எதிர் பால் கலவியே நாம் அறுவடை செய்யக்கூடிய மிக இனிய இன்பக்கனியாகும்.(86) காமதேவனால் தூண்டப்படும்போது பெண்கள் கணிக்கமுடியாத பெருங்கிறுக்கர்களாகிவிடுவார்கள். அத்தகைய நேரங்களில் அவர்கள் பாலைவனச் சுடுமணலில் நடந்து சென்றாலும் எந்த வலியையும் உணரமாட்டார்கள்” என்றாள்.(87)

அஷ்டவக்கிரர், “ஓ! அருளப்பட்ட மங்கையே, மற்றவர் துணைவியை நான் ஒருபோதும் அணுகுவதில்லை. அடுத்தவர் மனைவியுடன் ஒருவன் கொல்லும் கலவியானது, அறநெறி சாத்திரமறிந்தவர்களால் கண்டிக்கப்படுகிறது.(88) அனைத்துவகை இன்பங்களுக்கும் நான் முற்றிலும் அறிமுகமற்றவனாவேன். ஓ! அருளப்பட்ட மங்கையே, சந்ததி அடைவதற்காகத் திருமணத்தில் நான் விருப்பம் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவாயாக. நான் வாய்மையின் மீது ஆணையாகக் கூறுகிறேன்.(89) நியாயமாக அடையப்பட்ட சந்ததியின் துணையுடன், அத்தகைய துணையில்லாமல் கிட்ட முடியாத இன்பலோகங்களுக்குச் செல்வேன். உத்தமியே, அறநெறிக்கு இணக்கமானதை அறிவாயாக, அறிந்து கொண்டு உன் முயற்சிகளில் இருந்து விலகுவாயாக” என்றார்[5].(90)அந்தப் பெண்மணி, “ஓ! மறுபிறப்பாளரே, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் {வருண} தேவர்களோ, பிற தேவர்களோ கூடக் காமதேவனைப் போலப் பெண்களுக்கு ஏற்புடையவர்கள் ஆகமாட்டார்கள். உண்மையில், பெண்கள் பாலினக்கலவியை மிகவும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.(91) ஆயிரம், அல்லது ஒருவேளை ஒரு லட்சம் பெண்களில் ஒருத்தி மட்டுமே தன் கணவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவளாகக் காணப்படுகிறாள்.(92) ஆசையின் {காம} ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் தங்கள் குடும்பத்தையோ, தந்தையையோ, தாயையோ, சகோதரனையோ, கணவனையோ, மகன்களையோ, கணவனின் சகோதரனையோ {மைத்துனனையோ} குறித்துக் கவலைப்படுவதில்லை (காமம் இழுக்கும் வழியிலேயே அவர்கள் செல்வார்கள்).(93) உண்மையில், தங்களைக் கொள்ளும் கரைகளை இடிக்கும் பேராறுகளைப் போலவே அவர்கள் தங்களுக்கு இன்பமெனக் கருதவதைத் தேடி {லீலை செய்து} (தாங்கள் பிறந்த அல்லது திருமணத்தின் மூலம் இணைந்த) குடும்பத்தை அழிக்கிறார்கள். படைப்பாளனே, பெண்களின் களங்கங்களை விரைவாகக் குறித்துக் கொண்டு இதைச் சொல்லியிருக்கிறான்” என்றாள்”.(94)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெண்களின் குறைகளை அறிந்து கொள்ள விரும்பிய அம்முனிவர் பிறகு அந்தப் பெண்ணிடம், “இவ்வகையில் என்னிடம் பேசுவதை நிறுத்துவாயாக. ஆசைகளில் {காமத்தில்} இருந்தே ஏக்கம் எழுகிறது. நான் (வேறு) என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றார் {அஷ்டவக்கிரர்}[6].(95)அதற்குப் பதிலாக அந்தப் பெண்மணி, “ஓ! சிறப்புமிக்கவரே, காலம் மற்றும் இடத்திற்கு ஏற்றபடி (என்னில் ஏற்புடைய எதையும்) நீர் காண்பீர். அதுவரை (சில காலத்திற்கு) நீர் இங்கே வாழ்வீராக, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே. போதிய வெகுமதியளிக்கப்பட்டவளாக நான் என்னைக் கருதிக் கொள்வேன்” என்றாள்.(96)

ஓ! யுதிஷ்டிரா, அவளால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த மறுபிறப்பாள முனிவர், அவளது வேண்டுகோளுக்கு இணங்கும் தீர்மானத்தை வெளிப்படுத்தும் வகையில், “உண்மையில், என்னால் முடிந்தவரை நான் இந்த இடத்தில் உன்னுடன் வசித்திருப்பேன்” என்றார்[7].(97)பிறகு அந்த முனிவர், முதுமையில் பீடிக்கப்பட்ட அந்தப் பெண்ணைக் கண்டு, அக்காரியம் குறித்து நியாயமாகச் சிந்திக்கத் தொடங்கினார். தமது எண்ணங்களால் கொதிப்புற்றவராக அவர் காணப்பட்டார்.(98) பிராமணர்களில் முதன்மையான அவர், அந்தப் பெண்ணின் மேனியில் எந்தப் பகுதியில் தமது கண்களைச் செலுத்தினாலும், அவரது கண்கள் எந்த மகிழ்ச்சியையும் அடையத் தவறின. மறுபுறம், அவ்வுறுப்புகளைக் கண்ட அருவருப்பினால் அவரது பார்வை விலகுவதாகத் தெரிந்தது.(99)

{அவர்}, “இந்தப் பெண்மணியே நிச்சயம் இந்த அரண்மனையின் தேவியாக இருக்க வேண்டும். ஏதாவது சாபத்தின் மூலம் இவள் அருவருப்பானவளாக்கப் பட்டாளா? இந்தக் காரணத்தை விரைவாக நான் உறுதி செய்து கொள்வது முறையாகாது” {என நினைத்தார்}.(100) தமது இதயத்தில் கமுக்கமாய் நினைத்து, காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் இருந்த அம்முனிவர், அந்த நாளின் எஞ்சிய நேரத்தையும் {பகலையும்} இக்கவலையுடனே கழித்தார்.(101)

அப்போது அந்தப் பெண் அவரிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, மாலை மேகங்களின் மூலம் சூரியன் சிவந்திருப்பதைக் காண்பீராக. நான் உமக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்ன?” என்று கேட்டாள்.(102)

முனிவர் அவளிடம், “என் தூய்மைச் சடங்குகளுக்காக நீர் கொண்டு வா. நீராடி முடித்ததும், என் நாவையும், புலன்களையும் அடக்கி நான் என் மாலைத் துதிகளைச் செலுத்த வேண்டும்” என்றார்.(103)

கன்னியான கிழவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 20-அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறியது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பெண்மணி, “அப்படியே ஆகட்டும்” என்றாள். பிறகு அவள் (முனிவரின் உடலில் பூசுவதற்காக) எண்ணெயும் {தைலமும்}, தூய்மைச்சடங்கின் போது அணியும் துண்டையும் கொண்டு வந்தாள்.(1) அந்தத் தவசியால் அனுமதிக்கப்பட்ட அவள், தான் கொண்டு வந்த நறுமணத் தைலத்தை அவரது உடல்முழுவதும் பூசினாள்.(2) மென்மையாக {தைலம் கொண்டு} பூசப்பட்ட அந்த முனிவர், பூச்சு முடிந்ததும், தூய்மைச் சடங்கிற்கான அறைக்கு {மஞ்சனமாடுமிடத்திற்குச்} சென்றார். அங்கே அவர் பெருங்காந்தியைக் கொண்டதும், சிறந்ததுமான புதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.(3) முனிவர் தமது இருக்கையில் அமர்ந்த பிறகு, அந்த முதிய பெண்மணி தன் மென்மையான கரங்களால் இனிமையாகத் தீண்டி அவரது உடலைக் கழுவத் தொடங்கினாள்.(4) முனிவரின் தூய்மைச்சடங்கு காரியத்தில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக மிக ஏற்புடைய தொண்டைச் செய்தாள். கடும் நோன்புகளைக் கொண்ட அம்முனிவர், தம்மைக் கழுவிய வெண்ணீருக்கும், தம்மைக் கழுவுவதில் ஈடுபடும் மென்கரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காணத் தவறியதால் மொத்த இரவும் இவ்வாறே கழிந்தது. நீராடலில் இருந்து எழுந்த முனிவர் மிகவும் ஆச்சரியமடைந்தார்[1].(5,6) கிழக்கு அடிவானில் சூரியன் எழுவதை அவர் கண்டார்.இதனால் ஆச்சரியமடைந்த அவர், தமக்குள்ளேயே, “இஃது உண்மையா? என் புத்திமயக்கமா?” எனக் கேட்டுக் கொண்டார்.(7) அம்முனிவர் ஆயிரங்கதிர் தேவனை {சூரியனை} முறையாக வழிபட்டார். அது முடிந்ததும், தாம் என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். அந்த முதிய பெண்மணி, அமுதத்தின் சுவைக்கு ஒப்பான சுவைமிக்க உணவை அம்முனிவருக்குப் படைத்தாள்.(8) உணவு சுவைமிக்கதாக இருந்ததன் விளைவால் முனிவரால் அதிகம் உண்ண முடியவில்லை. அவர் சிறிதளவே உட்கொண்டாலும் பகல் கடந்து மாலை வந்தது.(9) அப்போது அந்த முதிய பெண்மணி படுக்கைக்குச் சென்று உறங்கும்படி முனிவரிடம் கேட்டுக் கொண்டாள். முனிவருக்கு ஒரு சிறந்த படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, மற்றொரு படுக்கையில் அவள் படுத்துக் கொண்டாள்.(10) முதலில் முனிவரும், அந்த முதிய பெண்ணும் வெவ்வேறு படுக்கையில் படுத்திருந்தாலும், நள்ளிரவில் அந்தப் பெண் தன் படுக்கையைவிட்டு எழுந்து முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(11)

அஷ்டவக்கிரர், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, மாற்றான் மனைவியுடன் பாலினக் கலவியில் ஈடுபட என் மனம் மறுக்கிறது. உத்தமியே, என் படுக்கையைவிட்டுச் செல்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக, நீயே விரும்பி இதிலிருந்து விலகுவாயாக” என்றார்[2].(12)அந்தப் பெண், “ஓ! கல்விமானான பிராமணரே, நான் ஆசையால் {காமத்தால்} கொடுமைப்படுத்தப்படுகிறேன் {காமக்கொடுமையிலிருக்கிறேன்}. என் அர்ப்பணிப்பை {பக்தியைக்} குறித்துக் கொள்வீராக. என்னை அன்புடன் அழைக்க மறுப்பதால் நீர் பாவத்தை இழைக்கிறீர்” என்றாள்.(15)

அஷ்டவக்கிரர், “தான்விரும்பியபடி செயல்படும் மனிதன் பல்வேறு பாவங்கள் இழுத்துச் செல்லும். என்னைப் பொறுத்தவரையில், தற்கட்டுப்பாட்டின் மூலம் நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவல்லவனாக இருக்கிறேன். உத்தமியே, உன் படுக்கைக்குத் திரும்பிச் செல்வாயாக” என்றார்.(16)

அந்தப் பெண், “நான் உமக்குத் தலைவணங்குகிறேன். எனக்குக் கருணை காட்டுவதே உமக்குத் தகும். ஓ பாவமற்றவரே, நான் உம்முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறேன், நீர் எனது புகலிடமாவீராக.(17) உண்மையில், உமது துணைவியாக இல்லாத ஒருத்தியுடன் கலவியில் ஈடுபடுவதைப் பாவமாகக் கண்டீரெனில், நான் என்னை உமக்குக் கொடுக்கிறேன். ஓ! மறுப்பிறப்பாளரே, திருமணத்திற்காக என் கரத்தை நீர் ஏற்பீராக.(18) நீர் எப்பாவமும் இழைத்தவராக மாட்டீர். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். நானே எனக்கு அதிகாரி என்பதை அறிவீராக.[3] இதில் பாவமேதும் இருந்தால், அஃது என்னை மட்டுமே சேரட்டும். நீர் என்னை ஏற்பீராக” என்றாள்.(19)அஷ்டவக்கிரர், “ஓ! உத்தமியே, நீயே உனக்கு அதிகாரியாக இருப்பது எவ்வாறு? இதன் காரணத்தை எனக்கு நீ சொல்வாயாக. மூவுலகிலும் தனக்குத்தானே தலைவியாகக் கருதத்தக்க ஒரு பெண்ணாவது இல்லையே.(20) கன்னிகையாக இருக்கும்போது அவளைத் தந்தை பாதுகாக்கிறார். இளமையில் இருக்கும்போது அவளைக் கணவன் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். பெண்கள் தாங்கள் வாழுங்காலம் வரை ஒரு போதும் சார்பற்றவர்களாக {சுதந்திரமானவர்களாக} இருப்பதில்லை” என்றார்[4].(21)அந்தப் பெண், “கன்னிப்பருவத்தில் இருந்தே நான் பிரம்மச்சரிய நோன்பைக் கடைப்பிடித்து வருகிறேன். இதில் ஐயமேதும் கொள்ளாதீர். நான் இன்னும் கன்னியாகவே இருக்கிறேன். என்னை உமது மனைவியாக்கிக் கொள்வீராக. ஓ! பிராமணரே, நான் உம்மிடம் கொண்ட இந்த அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொன்றுவிடாதீர் {என் ஆசையைக் கெடாதீர்}” என்றாள்.(22)

அஷ்டவக்கிரர், “நீ என்னை விரும்புவதைப் போலவே நானும் உன்னை விரும்புகிறேன். எனினும், தீர்க்க வேண்டிய இந்தக் கேள்வியுமிருக்கிறது. என் விருப்பங்களுக்கு நான் வசப்படுவதால், முனிவரின் {வதான்யரின்} விருப்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டவனாகக் கருதப்படுவேனா?(23) இஃது ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கிறது. இது நன்மைக்கு வழிவகுக்குமா?”. {இந்தக் கணத்தில் கிழவி குமரியாகிறாள்}.

{அஷ்டவக்கிரர் தமக்குள்ளேயே}, “இதோ அழகிய ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னி இருக்கிறாள்.(24) இவள் பேரழகுடன் இருக்கிறாள். இவ்வளவு காலம் இவளது அழகை ஏன் முதுமை மறைத்திருந்தது? தற்போது ஓர் அழகிய கன்னியாகத் தெரிகிறாளே. இதன் பிறகு இவள் என்ன வடிவத்தை ஏற்கப்போகிறாள் என்பதை அறிய முடியாது[5].(25) ஆசைகள் மற்றும் விருப்பங்களிடம் நான் கொண்டுள்ள கட்டுப்பாட்டையோ, நான் ஏற்கனவே அடைந்திருக்கும் மனநிறைவிலிருந்தோ நான் ஒருபோதும் பிறழமாட்டேன். அத்தகைய பிறழ்வு நன்மையானதாகத் தெரியவில்லை. நான் வாய்மையுடனே என்னை ஒருங்கிணைத்துக் கொள்வேன்” {என்றார்}[6] {என்றார் பீஷ்மர்}.(26)

அஷ்டவக்கிரர் திருமணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 21-அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறிய வட திசை தேவி…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அஷ்டவக்கிரர் பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும் அந்தப் பெண் அஷ்டவக்கிரரின் சாபத்திற்கு ஏன் அஞ்சவில்லை என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் அஷ்டவக்கிரர் அந்த இடத்தில் இருந்து திரும்பி வந்தது எவ்வாறு?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அஷ்டவக்கிரர் அவளிடம், “நீ இவ்வாறு உன் வடிவை மாற்றிக் கொண்டது எவ்வாறு? உண்மையற்ற எதையும் நீ சொல்லக்கூடாது. இதை நான் அறிய விரும்புகிறேன். ஒரு பிராமணன் முன்பு உண்மையைப் பேசுவாயாக” என்றார்.(2)

அந்தப் பெண், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சொர்க்கத்திலோ, பூமியிலோ எங்கு நீர் வசித்தாலும், {எங்கும்} பாலினங்களுக்கிடையிலான கலவி ஆசை காணப்படுகிறது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, இவை யாவும் என்ன என்பதைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(3) ஓ! பாவமற்றவரே, நீர் சரியாக இருக்கிறீரா என்பதைச் சோதிக்க நான் வகுத்த சோதனையிது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, உமது மனோபலத்தால் உலகங்கள் அனைத்தையும் நீர் ஆடக்கிவிட்டீர்.(4) நான் வட திசைப்புள்ளியின் உடல் வடிவம் என்பதை அறிவீராக. நீர் பெண்மையின் மென்மையைக் கண்டீர். முதிய பெண்களும் கூடக் கலவியாசையின் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.(5) பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறார்கள். சிறப்புமிக்கவரான நீர் இங்கு வந்த நோக்கத்தை நான் அறிவேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமக்கான மணப்பெண்ணின் தந்தையும், முனிவருமான வாதன்யர், நான் உமக்குப் போதிக்கும் வகையில் உம்மை இங்கே அனுப்பி வைத்தார். அம்முனிவரின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் ஏற்கனவே உமக்குப் போதித்துவிட்டேன்[1].(7) நீர் பாதுகாப்பாக இல்லம் திரும்புவீர். நீர் திரும்பிப் பயணிக்கையில் உமக்குச் சிரமமேற்படாது. நீர் தேர்ந்தெடுத்த பெண்ணையே நீர் மனைவியாக அடைவீர். அவள் உமக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(8) ஆசையினாலே நான் உம்மை வேண்டினேன். நீர் எனக்குச் சிறந்த பதிலைக் கொடுத்தீர். பாலினக்கலவியாசையானது மூவுலகிலும் கடக்கப்பட முடியாததாகும்[2].(9) இத்தகைய தகுதியை அடைந்த நீர் உமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்வீராக. (என்னிடம் இருந்து) வேறு என்ன கேட்க விரும்புகிறீர்? ஓ! அஷ்டவக்கிரரே, வாய்மைக்குப் பொருந்தும் வகையில் அதை நான் உமக்குச் சொல்வேன்.(10) ஓ! மறுபிறப்பாள தவசியே, உம் நிமித்தமாக முனிவர் வதான்யரால் நான் முதலில் நிறைவடையச் செய்யப்பட்டேன் {வதான்யரால் நான் வேண்டிக் கொள்ளப்பட்டேன்}. அவரைக் கௌரவிக்கவே இவை யாவற்றையும் நான் உமக்குச் சொன்னேன்” என்றாள் {வடதிசைதேவி}”.(11)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், மறுபிறப்பாளருமான அஷ்டவக்கிரர் மதிப்புமிக்க மனோநிலையில் தமது கரங்களைக் கூப்பினர். பிறகு அவர் அந்தப் பெண்ணிடம் தாம் திரும்பிச் செல்வதற்கான அனுமதியைக் கேட்டார். வேண்டிய அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவர் தமது ஆசிரமத்திற்கே திரும்பிச் சென்றார்.(12) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, அவர் தமது இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தபிறகு, தம் உற்றார் உறவினரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பிராமணரான வதான்யரை நோக்கி முறையான வழியில் சென்றார்.(13) வழக்கமான விசாரிப்புகளுடன் வதான்யரால் நல்வரவு கூறப்பட்ட முனிவர் அஷ்டவக்கிரர், (தாம் வடக்கே பயணம் மேற்கொண்டிருந்தபோது) கண்ட அனைத்தையும் நன்கு நிறைவடைந்த இதயத்துடன் உரைத்தார்.(14)

அவர், “உம்மால் ஆணையிடப்படியே நான் கந்தமாதன மலைகளுக்குச் சென்றேன். அம்மலைகளுக்கு வடக்கே கிடக்கும் பகுதியில் மிக மேன்மையான தேவி ஒருத்தியைக் கண்டேன்.(15) அவள் அன்போடு என்னை வரவேற்றாள். நான் கேட்க அவள் உமது பெயரைச் சொன்னாள், மேலும் பல்வேறு காரியங்களில் போதனையும் செய்தாள். ஓ! தலைவரே, நான் அவள் சொன்னதைக் கேட்ட பிறகு அங்கிருந்து திரும்பி வந்தேன்” என்றார்.(16)

இவ்வாறு சொன்ன அவரிடம் {அஷ்டவக்கிரரிடம்} வதான்யர், “நல்ல நட்சத்திர நாளில் உரிய சடங்குகளுடன் என் மகளின் கரத்தைப் பெறுவாயாக. என் பெண்ணுக்கு மணமகனாக நீயே தகுந்தவனாவாய்” என்றார்”.(17)

பீஷ்மர் தொடர்ந்தார், “அஷ்டவக்கிரர், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அந்தப் பெண்ணின் கரத்தை ஏற்றார். உண்மையில், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட அந்த நீதிமிக்க முனிவர் இன்பத்தால் நிறைந்தார்.(18) அந்த அழகிய கன்னிகையைத் தம் மனைவியாக அடைந்த அம்முனிவர், அனைத்து வகை (மன) நோயிலிருந்தும் விடுபட்டவராகத் தமது ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்” {என்றார் பீஷ்மர்}[3].(19)

கொடைக்கான தகுதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 22-கொடைக்குத் தகுந்த தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கொடைகளுக்குத் தகுந்தவரென நித்திய பிராமணர்கள் யாரை அழைக்கிறார்கள்? வாழ்வு முறைக்கான குறியீடுகளைச் சுமப்பவன் பிராமணனாகக் கருதப்பட வேண்டுமா? அத்தகைய குறியீடுகள் இல்லாதவனும் அவ்வாறு கருதப்படலாமா?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, தன் வகைக்கான கடமைகளைப் பின்பற்றும் ஒரு பிராமணன், குறியீடுகளைச் சுமப்பவனாக இருந்தாலும், அவை அற்றவனாக இருந்தாலும், இரண்டும் குற்றமற்ற நிலைகளே என்பதால் அவன் பிரம்மச்சரியக் குறியீடுகளைத் தரித்திருக்கிறானோ இல்லையோ, அவனுக்குக் கொடைகள் வழங்கப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது” என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தூய்மையடையாத ஒருவன் வேள்வி நெய்யையோ, உணவையோ பெரும் அர்ப்பணிப்புடன் மறுபிறப்பாள வகையினருக்குக் கொடையாகக் கொடுத்தால் என்ன குற்றமேற்படும்?” என்று கேட்டான்[2].(3)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்], “தற்கட்டுப்பாடென்பதே சிறிதும் அற்றவனும்கூட அர்ப்பணிப்பின் மூலம் நிச்சயம் தூய்மையடைகிறான். ஓ! பெருங்காந்தி கொண்டவனே, அத்தகைய மனிதன், (கொடைகளால் மட்டுமல்லாமல்) அவன் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் தூய்மையடைகிறான்” என்றார்[3].(4)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தேவர்கள் சார்ந்த ஒரு செயலில் ஈடுபட ஒரு பிராமணன் முனையும்போது அவன் ஒருபோதும் சோதிக்கப்படக்கூடாது என்று சொல்லப்படுகிறது. எனினும், பித்ருக்கள் சார்ந்த அத்தகைய செயல்களில் ஈடுபட அந்தப் பிராமணன் முனையும்போது (ஒழுக்கம் மற்றும் தகுதி காரியங்களில்) அவன் சோதிக்கப்பட வேண்டும் என்று கல்விமான்கள் சொல்கின்றனர்” என்றான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தேவர்களைக் குறிக்கும் செயல்களைப் பொறுத்தவரையில் அவற்றைச் செய்வதில் ஈடுபடும் பிராமணரின் விளைவால் அல்லாமல், தேவர்களின் அருளாலேயே கனிதருகின்றன. வேள்விகளைச் செய்பவர்கள், அச்செயல்களுடன் பற்றியிருக்கும் தகுதியைத் தேவர்களின் மூலம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை[4].(6) ஓ! பாரதர்களின் தலைவா, பிராமணர்கள் எப்போதும் பிரம்மத்தை ஓதுபவர்களாவர். நுண்ணறிவுடன் கூடிய முனிவர் மார்க்கண்டேயர், உலகங்கள் அனைத்திலும் இதையே பழங்காலத்தில் சொன்னார்” என்றார்[5].(7)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறிமுகமற்றவன் {பழகாதவன்}, (தன் வகைக்கான கடமைகளுடன் தொடர்புடைய) கல்விமான், திருமணத்தின் மூலம் தொடர்புடையவன் {சுற்றத்தான்}, தவங்களுடன் கூடியவன், வேள்விச் செயல்களில் வேட்கை கொண்டவன் ஆகிய இந்த ஐவரும் ஏன் {கொடைக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்?” என்று கேட்டான்.(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறிமுகமற்றவர்கள், உறவினர்கள், தவசிகள் ஆகிய முதல் மூவரும், தூய பிறவி, அறச்செயல்களில் வேட்கை, கல்வி, கருணை, பணிவு, நேர்மை, வாய்மை ஆகிய குணங்களைக் கொண்டிருந்தால் {கொடைகளுக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதத்தக்கவராவர். கல்விமான்கள் மற்றும் வேள்விகளில் வேட்கை கொண்டோர் ஆகிய வேறு இருவரும், தூய பிறவி, கருணை, பணிவு, நேர்மை மற்றும் வாய்மை ஆகிய ஐந்து குணங்களைக் கொண்டிருந்தால் {கொடைகளுக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதத்தக்கவர்களாவர்.(9) ஓ! பிருதையின் மகனே, வலிமையும், சக்தியும் கொண்டவர்களான பூமாதேவி, முனிவர் காசியபர், நெருப்பு தேவன் {அக்னி}, தவசி மார்க்கண்டேயர் ஆகிய நால்வரின் கருத்துகளை இப்போது சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(10)

பூமியானவள், “பெருங்கடலில் போடப்பட்ட மண்கட்டி விரைவாகக் கரைந்துவிடுவதைப் போலவே, வேள்வி செய்யத் துணைபுரிதல், கல்வி கற்பித்தல் மற்றும் கொடை ஆகிய மூன்று உயர்ந்த குணங்களில் அனைத்து வகைப் பாவங்களும் மறைந்து போகின்றன” என்றாள்[6].(11)காசியபர், “ஒரு மறுபிறப்பாளன் நற்குணத்தில் இருந்து வீழ்ந்தால், ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்கள், சாங்கிய தத்துவம், புராணங்கள், உயர் குடி பிறப்பு ஆகியவற்றாலும் அவனைக் காக்க முடியாது” என்றார்.(12)

அக்னி, “கல்வியில் ஈடுபட்டு, தன்னைக் கல்விமானாகக் கருதும் பிராமணன், தன் கல்வியின் மூலம் பிறரின் மதிப்பை அழிக்க முனைந்தால், அறம்வீழ்ந்தவனாகி, வாய்மையிலிருந்து தொடர்பறுந்தவனாகக் கருதப்படுகிறான். இத்தகைய அழிவு மேதையான ஒருவனால் மறுமையில் இன்ப உலகங்களை ஒருபோதும் அடையமுடியாது” என்றான்.(13)

மார்க்கண்டேயர், “ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் தராசில் எடை பார்க்கப்பட்டால், முன்னது பின்னதின் பாதி எடைக்காவது நிற்குமா என்பதை நான் அறியவில்லை” என்றார்”.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அளவிலா சக்தி கொண்டவர்களான பூமாதேவி, காசியபர், அக்னி மற்றும் ஆயுததாரியான பிருகுவின் மகன் {மார்க்கண்டேயர்} ஆகிய நால்வரும் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு விரைவாகச் சென்றுவிட்டனர்”.(15)

யுதிஷ்டிரன், “இவ்வுலகில் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் பிராமணர்கள், (இறந்து போன மூதாதையருக்குச் சிராத்தங்களில்) ஒருவன் அளிக்கும் காணிக்கைகளை {உணவை} வேண்டி உண்டால், சிராத்தங்களைச் செய்பவன் அத்தகைய பிராமணர்களுக்குக் காணிக்கையளிப்பதால், அவற்றை {அந்த சிராத்தங்கள்} நன்கு செய்யப்பட்டவையாகக் கருத முடியுமா?” என்று கேட்டான்[7].(16)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “குறிப்பிட்ட கால அளவுக்கு (பனிரெண்டு ஆண்டுகள்) பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் திறமைடைந்த ஒரு பிராமணன், சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை வேண்டி உண்டால், அவன் தன் நோன்பில் இருந்து வீழ்ந்தவனாகக் கருதப்படுவான். எனினும், அந்தச் சிராத்தம், எவ்வழியிலும் களங்கமடைந்ததாகக் கருதப்படமுடியாது” என்றார்.(17)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறம் அல்லது கடமைக்குப் பல கதிகளும், எண்ணற்ற வாயில்களும் இருப்பதாக ஞானிகள் சொல்கின்றனர். எனினும், ஓ! பாட்டா, இக்காரியத்தில் முடிவான தீர்மானங்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, தீங்கிழையாமை, வாய்மை, கோபமின்மை (மனிக்கும் தன்மை), கருணை, தற்கட்டுப்பாடு, நேர்மை ஆகியவை அறத்தின் குறியீடுகளாகும்.(19) ஓ!! மன்னா, அறத்தைப் புகழ்ந்தாலும், அதன்படி செயல்படாமல், எப்போதும் பாவத்தில் ஈடுபட்டபடியே பூமியில் திரியும் மனிதர்கள் உண்டு.(20) அத்தகைய மனிதர்களுக்கு, தங்கமோ, ரத்தினங்களோ, பசுக்களோ, குதிரைகளோ கொடுப்பவன், இறந்து போன பசுக்கள் மற்றும் எருமைகளின் இறைச்சியை உண்டு வாழ்பவர்களும், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வெளியில் வாழ்பவர்களும், புகாசர்கள் என்றழைக்கப்படுபவர்களுமான மனிதர்கள் மற்றும் பிறர் செய்யும் செயல்களையும், செய்யாதவற்றையும் கோபம், மடமையின் ஆதிக்கத்தில் வெளியிடும் மனிதர்கள் ஆகியோரின் மலத்தை உண்டபடியே பத்துவருடங்கள் பாழ்நரகில் மூழ்கியிருப்பார்கள்[8].(21,22) ஓ! ஏகாதிபதி, பிரம்மச்சரிய நோன்பு நோற்கும் பிராமணன் ஒருவனுக்கு, (இறந்து போன மூதாதையருக்குச் செய்யும்) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைக் கொடுக்காத மூடர்கள், பெரும் துன்பம் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்றார்.(23)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பிரம்மச்சரியத்தைவிட மேன்மையானது எது? உயர்ந்த அறக் குறியீடு எது? உயர்ந்த வகைத் தூய்மை எது” என்று கேட்டான்.(24)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்த்தல் பிரம்மச்சரியத்தைவிட மேன்மையானது என நான் சொல்வேன். அறமானது எல்லைகள் அல்லது கட்டுப்பாடுகளுக்குள் கிடக்கிறது. துறவே சிறந்த அறக்குறியீடாகும் (அஃது உயர்வகைத் தூய்மையுமாகும்)” என்றார்.(25)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எக்காலத்தில் அறம்பயில வேண்டும்? எக்காலத்தில் செல்வம் நாடப்பட வேண்டும்? எக்காலத்தில் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரன், “ஒருவன் தன் வாழ்நாளின் முதற்பாகத்தில் {காலையில்} செல்வமீட்ட வேண்டும். பிறகு அறமீட்ட வேண்டும். அதன் பிறகு {இரவில்} இன்பத்தை அனுபவிக்க வேண்டும். எனினும், அவன் இவை எவற்றிலும் பற்றுக் கொள்ளக் கூடாது.(27) அவன் பிராமணர்களை மதிக்க வேண்டும், ஆசான்களையும், பெரியோரையும் வழிபட வேண்டும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்ட வேண்டும், மென்மனோநிலையுடனும், ஏற்புடைய வாக்குடனும் இருக்க வேண்டும்.(28) நீதிமன்றத்தில் பொய்யுரைப்பது, மன்னனை வஞ்சிப்பது, ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் போலியாக நடந்து கொள்வது ஆகியவை பிராமணக்கொலைக்கு {பிரம்மஹத்திக்கு} இணையானதாக (இணையான கொடுமையாகக்) கருதப்படுகின்றன.(29) அவன் மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது. பசுவை ஒருபோதும் அடிக்கக்கூடாது. இவ்விரு குற்றங்களும் கருக்கொலைக்கு இணையான பாவங்களாகும்.(30) அவன் தன் (ஹோம) நெருப்பை ஒருபோதும் கைவிடக்கூடாது. வேத கல்வியை ஒருபோதும் கைவிடக்கூடாது. அவன் ஒரு பிராமணனைச் சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக்கூடாது. இவை அனைத்தும் பிராமணக்கொலைக்கு இணையான குற்றங்கள் ஆகும்” என்றார்.(31)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எவ்வகைப் பிராமணர்கள் நல்லோராகக் கருதப்பட வேண்டும்? எந்தப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் ஒருவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்ட முடியும்? எவ்வகைப் பிராமணர்களுக்கு ஒருவன் உணவூட்ட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(32)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கோபத்தில் இருந்து விடுபட்டவர்களும், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், வாய்மையில் உறுதியுள்ளவர்ளும், தற்கட்டுப்பாட்டைப் பயில்பவர்களும் நல்ல பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டலாம்.(33) செருக்கிலிருந்து விடுபட்டவர்களும், அனைத்தையும் பொறுத்துக் கொள்ளக்கூடியவர்களும், தங்கள் நோக்கத்தை அடைவதில் உறுதியுள்ளவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத் தங்களை அர்ப்பணிப்பவர்களும், அனைவரிடமும் நட்பு மனோநிலையுடன் இருப்பவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டலாம்.(34) பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், தூய இதயம் கொண்டவர்களும், ஒழுக்கத் தூய்மை கொண்டவர்களும், கல்வி மற்றும் பணிவு கொண்டவர்களும், வாக்கில் வாய்மை கொண்டவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தங்கள் கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(35) நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் கற்பவனும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) நன்கறியப்பட்ட ஆறு கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனுமான பிராமணனே கொடைகளுக்குத் தகுந்தவன் என முனிவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். அத்தகைய தகுதிகளைக் கொண்ட பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(36)

தகுந்த பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் தன் தகுதியைப் பல்லாயிரம் மடங்கு பெருக்கிக் கொள்கிறான். ஞானமும், வேத அறிவும் கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்பவனும், ஒழுக்கத் தூய்மைக்காகப் புகழப்படுபவனும், அறம் சார்ந்தவனுமான தனியொரு பிராமணன், மொத்த குலத்தையும் மீட்கும் வல்லமை கொண்டவனாவான்[9].(37) ஒருவன், அத்தகைய தகுதிகளையுடைய பிராமணனுக்கு, பசுக்கள், குதிரைகள், செல்வம், உணவு மற்றும் பிறவகைப் பொருட்களைக் கொடையளிக்க வேண்டும். அத்தகைய மனிதர்களுக்கு அத்தகு கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைகிறான்.(38) நான் ஏற்கனவே சொன்னது போல, அத்தகைய ஒரே ஒரு பிராமணன் கூட, கொடையாளியின் மொத்த குலத்தையும் மீட்கவல்லவனாவான். எனவே, ஓ! அன்பு மகனே, அத்தகைய தகுதிகளைக் கொண்ட பல பிராமணர்களுக்குக் கொடுப்பதற்கு நான் என்ன சொல்ல முடியும்? ஒருவன் கொடையளிக்கும்போது அந்தக் கொடைக்குத் தகுந்தவனையே எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(39) சரியான தகுதிகளைக் கொண்டவனும், நன்மக்கள் அனைவராலும் மதிப்புடன் கருதப்படுபவனுமான ஒரு பிராமணனைக் குறித்துக் கேள்விப்படும் ஒருவன், அவன் தொலைவில் வசித்தாலும் அழைத்து, அவன் வரும்போது வரவேற்று, தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் அவனை வழிபட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(40)

கொடைகளும், கொடுக்கும் முறைகளும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 23-தேவ காரியங்கள் மற்றும் பித்ரு காரியங்கள், அவற்றுக்குரிய காலங்கள், அவற்றுக்கு அழைக்கப்படத்தக்கவர், தகாதவர் ஆகியோர் குறித்தும், கொடையறங்கள் குறித்தும், சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்பவர்கள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தேவ காரியங்கள் மற்றும் (இறந்து போன) மூதாதையருக்குச் சிராத்தங்களில் செய்யும் காரியங்களுக்காக விதிக்கப்பட்டட விதிகள் என்னென்ன என்பதை நீர் எனக்குச் சொல்வதை கேட்க விரும்புகிறேன்” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் (நீராடல் மற்றும் தூய்மையடையச்செய்யும் பிற செயல்களின் மூலம்) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, நன்கறியப்பட்ட மங்கலச் சடங்குகளைச் செய்த பிறகே, அவன் தேவர்களுக்குரிய காரியங்களை முற்பகலிலும், பித்ருக்களுக்குரிய காரியங்கள் அனைத்தையும் பிற்பகலிலும் செய்ய வேண்டும்.(2) மனிதர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவற்றை அன்பு மற்றும் மதிப்புடன் நடுப்பகலில் கொடுக்க வேண்டும். பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடையானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது[1].(3) எவராலும் தாண்டப்பட்ட, அல்லது நக்கப்பட்ட, அல்லது உறிஞ்சப்பட்ட, அமைதியற்ற நிலையில் கொடுக்கப்பட்ட, பருவகாலத்தின் விளைவால் தூய்மையற்றிருக்கும் பெண்களால் காணப்பட்டவையுமான கொடைகள் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும் / பலனையும்} உண்டாக்குவதில்லை. அத்தகைய கொடைகள் ராட்சசர்களின் பங்காகக் கருதப்படுகின்றன.(4) பலருக்கு முன்னிலையில் அறிவிக்கப்பட்ட, அல்லது ஒரு சூத்திரன் உண்டதில் ஒரு பகுதியாக உள்ள, அல்லது நாயால் பார்க்கப்பட்ட அல்லது நக்கப்பட்ட கொடைப் பொருட்கள் ராட்சசர்களின் பங்குகளாக அமைகின்றன.(5)முடியோ புழுவோ விழுந்த, அல்லது எச்சிலால் களங்கமடைந்த, அல்லது நாயால் பார்க்கப்பட்ட, அல்லது கண்ணீர் துளிகள் விழுந்த, அல்லது மிதிபட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(6) ஓ! பாரதா, ஓம் என்ற சொல்லைச் சொல்லத்தகாதவர்களால் உண்ணப்பட்ட, அல்லது ஆயுததாரிகளால் உண்ணப்பட்ட, அல்லது தீய மனிதனால் உண்ணப்பட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்[2].(7) வேறொருவரால் ஏற்கனவே உண்ணப்பட்ட, அல்லது தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் உண்ணப்படும் உணவானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது. அத்தகைய களங்கமடைந்த உணவை தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கும்போது, அஃது அவர்களால் ஏற்கபடாமல் ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது.(8) மந்திரங்கள் சொல்லப்படாத, அல்லது முறையாகச் சொல்லப்படாதவையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்காதவையும் சிராத்தங்களில் மூவகை மறுபிறப்பாளர்களால் கொடுக்கப்படும் உணவை, விருந்தினர்களுக்கும், பிற மக்களுக்கும் பரிமாறினால் அது ராட்சசர்களால் அபகரிக்கப்படும்.(9) புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளின் துணையுடன் தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அர்ப்பணிக்கப்படாத, அல்லது அறவொழுக்கமற்ற தீய மனிதனால் உண்ணப்பட்டதன் விளைவால் களங்கமடைந்த உணவை விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டால், அது ராட்சசர்களின் பாங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(10)எவை ராட்சசர்களின் பங்காகின்றன என்று நான் உனக்குச் சொன்னேன். இனி, கொடைகளுக்குத் தகுந்த பிராமணனை உறுதி செய்யும் விதிகளை விதிக்கப் போகிறேன் கேட்பாயாக.(11) (கொடும்பாவம் செய்த குற்றத்தால்) விலக்கப்பட்ட பிராமணர்கள் {பிரஷ்டப்ராமணர்கள்}, மூடர்களாகவும், பித்தர்களாகவும் இருக்கும் பிராமணர்கள் ஆகியோர், தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அளிக்கப்படும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல.(12) ஓ! மன்னா வெண்படை நோயால் பீடிக்கப்பட்ட, அல்லது ஆண்மையற்ற, அல்லது தொழுநோய் கொண்ட, அல்லது காசநோய் கொண்ட, அல்லது (மூளைத் திரிபுடன் கூடிய) வலிப்பு {காக்காய் வலிப்பு} நோய் கொண்ட, அல்லது கண்பார்வையற்ற எந்தப் பிராமணனும் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படக்கூடாது.(13) மருத்துவம் செய்பவர்களும், வளமிக்கோரால் நிறுவப்பட்ட தேவ சிலைகளுக்குத் தொண்டாற்றுவதற்காக ஊதியம் பெறும் வழக்கம் கொண்டவவர்களும், தேவர்களுக்குத் தொண்டாற்றி வாழ்பவர்களும், செருக்கு அல்லது வேறு போலி நோக்கங்களுக்காக நோன்பு நோற்பவர்களும், சோமத்தை விற்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(14) ஓ! மன்னா, தொழிலால் பாடகராக, நர்த்தகராக, விளையாட்டுவீரராக, இசைக்கருவி இசைப்பவராக, புனித நூல்களை உரைப்பவர்களாக, போர்வீரர்களாக, தடகள வீரராக உள்ள பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(15)

சூத்திரர்களின் புனித நெருப்பில் ஆகுதி ஊற்றுபவர்களும், சூத்திரர்களின் ஆசான்களும், சூத்திரத் தலைவர்களுக்குப் பணியாட்களாக இருப்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(16) ஆசானாகப் பணிபுரிவதற்கு ஊதியம் வழங்கப்படுபவர்களும், ஊதியம் பெற்றுக் கொண்டு சில ஆசான்களிடம் சீடனாக இருப்பவர்களுமான பிராமணர்கள் வேதங்களை விற்பவர்களாகக் கருதப்படுவதால் அவ்விரு வகையினரும் அழைக்கபடத் தகுந்தவர்களல்ல.(17) சிராத்தத்தின் தொடக்கத்திலேயே கொடையளிக்கப்பட்டவனும், சூத்திரப் பெண்ணை மனைவியாக மணந்து கொண்டவனுமான பிராமணன் அனைத்து வகை ஞானத்தையும் கொண்டிருந்தாலும் அவன் அழைக்கப்படத்தகுந்தவனல்ல[3].(18) ஓ! மன்னா, இல்லற நெருப்பற்றவர்களும், சடலங்களுக்குக் காரியம் செய்பவர்களும், கள்வர்களும், {வேறு வகைகளில்} வீழ்ந்துவிட்டவர்களுமான பிராமணர்கள் அழைக்கப்படத்தகாதவர்களாவர்[4].(19) ஓ! மன்னா, முன்பின் தெரியாதவர்களும், தீயவர்களும், புத்ரிகாபுத்திரர்களுமான பிராமணர்கள் சிராத்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல[5].(20) ஓ! மன்னா, கடனுக்குப் பணமளிப்பவனும், கடனில் கிட்டும் வட்டியில் வாழ்பவனும், உயிரினங்களை விற்று வாழ்பவனுமான பிராமணன் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவனாவான்.(21) ஓ! மன்னா, மனைவிகளுக்கு அடங்கியவர்களும், கற்பற்ற பெண்களுக்குக் கள்ளக் காதலனாக வாழ்பவர்களும், காலை மாலை துதிகளைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகாதவர்களாவர்.(22)இனி, தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் செய்யும் செயல்களுக்காக விதிக்கப்பட்ட பிராமணனைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், (மேற்கண்ட களங்கங்கள் இருந்தாலும்) ஒருவன் எதன் விளைவால் சிராத்தங்களில் கொடையளிப்பவனாகவோ, கொடையேற்பவனாகவோ ஆவானோ அந்தத் தகுதிகளை {சிறப்புகளை} உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! மன்னா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளையும், விழாக்களையும் நோற்பவர்களும், தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டவர்களும், காயத்ரி {மந்திரத்தை} அறிந்தவர்களும், பிராமணர்களின் பொதுக்கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்கள், உழவில் ஈடுபட்டு வாழ்பவர்களாக இருந்தாலும் சிராத்தங்களுக்கு அவர்கள் அழைக்கப்படத்தகுந்தவர்களாவர்.(24) நற்குடியில் பிறந்த ஒரு பிராமணன், பிறருக்காகப் போரில் ஈடுபடும் படைத்தொழில் செய்து கொண்டிருந்தாலும் அவன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தக்கவனாவான். எனினும், ஓ! மகனே, வாழ்வை நடத்துவதற்காக வணிகத்தில் ஈடுபடும் பிராமணன் (தகுதி கொண்டவனாகவே இருப்பினும்) அவன் {சிராத்தங்களில்} நிராகரிக்கப்பட வேண்டும்.(25)

ஓ! மன்னா, தினமும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், அல்லது வசிக்கத்தக்க நிலையான இடங்களில் {கிராமங்களில்} வசிப்பவனும், கள்வனல்லாதவனும், தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(26) ஓ! பாரதக் குலத் தலைவா, ஓ! மன்னா, காலையிலும், நடுப்பகலிலும், இரவிலும் சாவித்ரியை உரைப்பவன் {முக்காலமும் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவன்}, அல்லது ஈகையில் கிட்டும் பிச்சையில் வாழ்பவனும், தன் வகை மனிதர்களுக்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் மற்றும் விழாக்களை {கர்மானுஷ்டாங்களைச்} செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகுந்தவனாவான்.(27) காலையில் செல்வமீட்டி பிற்பகலில் வறியவனாகுபவன், அல்லது காலையில் வறியவனாக இருந்து மாலையில் செல்வந்தனாகுபவன், அல்லது வன்மமற்றவன், அல்லது சிறு குற்றத்தால் {மட்டுமே} களங்கப்பட்டவனாக இருக்கும் பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்[6].(28) செருக்கோ, பாவமோ அற்றவனும், வரட்டுச் சச்சரவுகளில் ஈடுபடாதவன், அல்லது வீட்டுக்குவீடு திரிந்து கிட்டும் பிச்சையில் வாழ்பவனுமான பிராமணன் வேள்விகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(29) நோன்புகளை நோற்காதவன், அல்லது (வாக்கிலும், ஒழுக்கத்திலும்) பொய்மைக்கு அடிமையாகவும், கள்வனாகவும் இருப்பவன், அல்லது உயிரினங்களை விற்று வாழ்பவன் அல்லது பொது வணிகத்தின் மூலம் வாழ்பவனான பிராமணன், வேள்விகளில் சோமத்தை அடுத்தடுத்து பருகி வருபவனாக இருந்தால், ஓ! மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(30)குற்ற வழிமுறைகள், அல்லது கொடிய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைந்து, அடுத்தடுத்த தேவர்களைத் துதிக்கவும், விருந்தோம்பல் கடமைகளைச் செய்தும் வந்தால், ஓ! மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(31) வேத விற்பனை மூலம் அடைந்த, அல்லது ஒரு பெண்ணால் ஈட்டப்பட்ட, அல்லது (நீதிமன்றங்களில் போலி சான்றுரைத்து) வஞ்சகமாக ஈட்டப்பட்ட செல்வத்தை ஒரு போதும் பிராமணர்களுக்குக் கொடுக்கவோ, பித்ருக்கான காணிக்கைகளில் செலவிடவோ கூடாது.(32) ஓ! பாரதக் குலத் தலைவா, தன் உதவியுடன் செய்யப்பட்ட ஒரு சிராத்த நிறைவின் போது, யுக்த சொற்களை {உசிதத்தைச்} சொல்ல மறுக்கும் பிராமணன், நில வழக்கில் போலி உறுதிமொழி அளிக்கும் பாவத்தை ஈட்டுகிறான்[7].(33) ஓ! யுதிஷ்டிரா, ஒரு நல்ல பிராமணன், தயிர், நெய், புது நிலவின் {அமாவாசை எனும்} புனித நாள், மான் மற்றும் காட்டு விலங்குகள் பிறவற்றின் இறைச்சி ஆகியவை கிட்டும் நேரமே சிராத்தம் செய்யப்பட வேண்டிய நேரமாகும்[8].(34)ஒரு பிராமணனால் செய்யப்படும் ஒரு சிராத்தம் நிறைவடையும் போது, ஸ்வதா என்ற சொல் சொல்லப்பட வேண்டும். ஒரு க்ஷத்திரியனால் செய்யப்பட்டால், “உன் பித்ருக்கள் நிறைவடையட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்.(35) ஒரு வைசியனால் செய்யப்பட்ட சிராத்தம் நிறைவடையும்போது, “அனைத்தும் வற்றாதிருக்கட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். அதே போல, ஒரு சூத்திரனால் செய்யப்படும் சிராத்தம் நிறைவடையும்போது, ஸ்வஸ்தி என்ற சொல் சொல்லப்பட வேண்டும். பிராமணர்களைப் பொறுத்தவரையில், புண்யாஹத் தீர்மானம் ஓம் என்ற அசையுடன் சொல்லப்பட வேண்டும். க்ஷத்திரியன் வழக்கில், அத்தகைய தீர்மானத்தை ஓம் என்ற அசையைச் சொல்லாமல் செய்ய வேண்டும். ஒரு வைசியனால் செய்யப்படும் செயல்களில் {சிராத்தம் அல்லது வேள்விகளில்}, ஓம் என்ற அசைக்குப் பதிலாக “தேவர்கள் நிறைவடையட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்[9]. (அனைத்து வகையினரின்) விதிகளுக்கு இணக்கமாகச் செய்யப்பட வேண்டிய சடங்குகளை உனக்கு ஒன்றபின் ஒன்றாகச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(36-38)ஓ! பாரதா, ஜாதகர்மம் என்ற பெயரில் உள்ள சடங்குகள் அனைத்தும் (மறுபிறப்பாளர்களான) மூவகையினருக்கும் தவிர்க்கப்படக்கூடாததாகும். ஓ யுதிஷ்டிரா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரின் வழக்கில் இந்தச் சடங்குகள் அனைத்தும் மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட வேண்டும்.(39) ஒரு பிராமணன் இடைக்கச்சை {உபநயனத்தில் இடையிற்கட்டும் கயிறு} முஞ்சப் புற்களால் ஆனதாக இருக்க வேண்டும். அரச வகையினுக்கு வில்லின் நாண்கயிறால் {மௌர்வி புற்களால்} ஆனதாக இருக்க வேண்டும். வைசியர்களின் இடைக்கச்சை, பல்பஜி புற்களால் {பல்பஜமென்னும் சணல் நாரினால்} ஆனதாக இருக்க வேண்டும். இவ்வாறே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(40)

கொடையளிப்பவர் மற்றும் கொடையளிப்பவரின் குறைநிறைகளை இப்போது விளக்கிச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(41) ஒரு பிராமணன் ஒரு பொய்யைச் சொல்வதால் கடமைதவறும் குற்றம்புரிந்தவனாகிறான். அவன் பங்குக்கு அத்தகைய செயல் பாவம் நிறைந்ததாகும். பொய் சொல்வதால் ஒரு பிராமணன் ஈட்டும் பாவத்தைப் போல ஒரு க்ஷத்திரியன் நான்கு மடங்கும், வைசியன் எட்டு மடங்கும் பாவத்தை ஈட்டுகிறான்.(42) உண்பதற்கு ஒரு பிராமணனால் முன்பே அழைக்கப்பட்ட மற்றொரு பிராமணன் {இவ்வாறு அழைக்கப்பட்ட பிறகு} வேறெங்கும் உண்ணச் செல்லக்கூடாது. காலத்தால் பிந்தி அழைத்தவனின் வீட்டில் உண்பதன் மூலம் அவன் கீழ்மையடைகிறான், மேலும், வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தையும் ஈட்டுகிறான்[10].(43) அதே போலவே, அரச வகையைச் சார்ந்த ஒருவன் {க்ஷத்திரியன்} அல்லது ஒரு வைசியனால் அழைக்கப்பட்ட பிறகு அவன் வேறு எங்கும் உண்டால், அவன் தன் நிலையில் இருந்து வீழ்ந்து, வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தில் பாதி அளவை ஈட்டுகிறான்.(44) ஓ! மன்னா, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்களாலும், க்ஷத்திரியர்களாலும், வைசியர்களாலும் செய்யப்படும் நிகழ்வுகளில், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் உண்ணும் பிராமணன், ஒரு பசுவுக்காக {ஒரு பசுவைக் கொடையாகப் பெறுவதற்காகப்} பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(45)தன் இனம் சார்ந்தோர் மத்தியில் உண்டான பிறப்பு, அல்லது இறப்பின் விளைவால் தூய்மையற்றவனாக இருந்து, தான் தூய்மையற்றிருப்பதை அறிந்தோ, சபலத்தினாலோ மூன்று உயர்வகையைச் சார்ந்தவர் எவராலும் செய்யப்படும் அத்தகைய நிகழ்வுகளில் உண்ணும் பிராமணனும், அதே பாவத்தையே ஈட்டுகிறான்[11].(46) ஓ! ஏகாதிபதி, புனிதத் தலங்களுக்குப் பயணம் செல்வது போலப் போலிப் பாசாங்கு செய்தோ, அறச்செயல்களுக்குச் செலவழிக்கப் போவதாக நடித்தோ கொடையாளியை வேண்டி அடைந்த செல்வத்தில் வாழ்பவன், பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(47) ஓ! யுதிஷ்டிரா, மூன்று உயர் வகையினரில் எவரும், சிராத்தங்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் மந்திரங்களில் உதவியுடன் உணவைப் பகிரும் போது, வேதங்கல்லாத, அல்லது நோன்பு நோற்காத, அல்லது ஒழுக்கத் தூய்மையற்ற பிராமணர்களுக்கு {உணவை} வழங்கினால் நிச்சயம் பாவத்தையே ஈட்டுவர்” என்றார் {பீஷ்மர்}.(48)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்படும் பொருட்களை எவருக்குக் கொடையாகக் கொடுத்தால் ஒருவனால் பேரளவு வெகுமதியை ஈட்ட முடியும் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(49)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, காலத்திற்கு ஏற்ற மழையை எதிர்பார்த்து மதிப்புடன் காத்திருக்கும் உழவர்களைப் போலவே, தங்கள் கணவர்கள் உண்ட மிச்சத்த்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவிகளைக் கொண்ட பிராமணர்களுக்கு நீ உணவூட்டுவாயாக.(50) ஓ! மன்னா, எப்போதும் ஒழுக்கத் தூய்மை நோற்பவர்களும், ஆடம்பரங்களையும், முழுவுணவை உண்ணாமலும் தவிர்த்து மெலிந்தவர்களும், உடல் மெலிவுக்கு வழிவகுக்கும் நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், கொடை பெறும் விருப்பத்தோடு கொடையாளிகளை அணுகுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(51) உணவுத் தேவை, மனைவிகள் மற்றும், பிள்ளைகளின் தேவை, பலத்திற்கான தேவை, இவ்வுலகைக் கடப்பதற்கான தங்கள் புகலிடத்திற்கும், மறுமையில் இன்பநிலையை அடைவதற்குமான தேவை இருக்கும் போதும் ஒழுக்கத்தை மதிப்பவர்களும் {ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருப்பவர்களும்}, நிச்சயம் தேவைப்படும்போது மட்டுமே செல்வத்தை வேண்டுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(52) ஓ! யுதிஷ்டிரா, கள்வர்களின் மூலமோ, பகைவர்களின் மூலமோ அனைத்தையும் தொலைத்தவர்களும், கொடுப்பவர்களை அணுகுபவர்களுமான மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(53) பிறரிடம் ஏதும் பெறும் தங்கள் வகையைச் சார்ந்த ஏழையின் கரங்களில் இருந்து உணவை வேண்டும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(54) உலகளாவிய பேரிடரின் போது தங்களுக்குச்சொந்தமான அனைத்தையும் இழந்தவர்களும், அத்தகைய நிகழ்வின் போது தங்கள் மனைவிகளை இழந்தவர்களும், பிச்சை கேட்டு வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(55)

நோன்புகளை நோற்பவர்களும், துன்பம் நிறைந்த விதிகள் மற்றும் வகைமுறைகளுக்குள் வலியத் தங்களை நிறுத்திக் கொள்பவர்களும், வேதங்களில் விதிக்கப்பட்டுள தீர்மானங்களுக்கு இணங்ககமாகத் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்பவர்களும், தங்கள் நோன்புகள் அல்லது நியமங்களின் நிறைவுக்குத் தேவைப்படும் சடங்குகளுக்கான செலவுக்காகச் செல்வத்தை வேண்டி வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(56) பாவிகள் மற்றும் தீயோரால் செய்யப்படும் செயல்களுக்குப் பெருந்தொலைவில் வாழ்பவர்களும், போதுமான ஆதரவில்லாமல் பலவீனமாக இருப்பவர்களும், உலகம் சார் உடைமைகளில் மிக வறியவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(57) முற்றிலும் அப்பாவிகளாக இருந்தும் வலிமையான மனிதர்களால் உடைமைகள் அனைத்தும் களவாடப்பட்டவர்களும், உணவின் தரத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் {உணவு} எவ்வாறிருந்தாலும் தங்கள் வயிறுகளை நிறைத்துக் கொள்ள விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(58) தவங்கள் நோற்பவர்கள் மற்றும் தங்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் சார்பில் பிச்சையெடுப்பவர்களும், சிறு கொடையிலும் நிறைவடைபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கொடையளிப்பதன் மூலம் பெருந்தகுதியை ஈட்டுவது தொடர்பான சாத்திரத் தீர்மானங்களையே நீ இப்போது கேட்டாய். இனி, நரகத்திற்கோ சொர்க்கத்திற்கோ வழிவகுக்கும் செயல்களை விளக்கப் போகிறேன், கேட்பாயாக.(60)

ஆசானின் காரியத்திற்குத் தொண்டாற்றுவதற்காக, அல்லது உயிருக்கான அச்சத்திலிருக்கும் மனிதனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தேவைப்படும் பொய்களைத் தவிர வேறு தருணங்களில் பொய் பேசுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(61) பிறர் மனைவிகளைக் கெடுப்பவர்கள், அல்லது அவர்களுடன் பாலினக்கலவியில் ஈடுபடுபவர்கள், அல்லது அத்தகைய தீச்செயல்களுக்குத் துணை புரிபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(62) பிறரின் செல்வத்தைக் களவாடுபவர்கள், அல்லது பிறரின் செல்வத்தையும், உடைமைகளையும் அழிப்பவர்கள், அல்லது பிறரின் குற்றங்களை அறிக்கையிடுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(63) தாகந்தணிக்கக் கால்நடையால் பயன்படுத்தப்படும் நீர்நிலைகளின் கரைகள், பொதுக்கூட்டங்களுக்குப் பயன்படும் மண்டபங்கள், மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் {சுமைதாங்கிகள்} ஆகியவற்றை இடிப்பவர்கள், வசிப்பதற்குப் பயன்படும் வீடுகளை இடிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(64) ஆதரவற்ற பெண்கள், அல்லது சிறுமிகள், அல்லது முதிய பெண்கள், அல்லது அச்சத்திலிருக்கும் அத்தகைய பெண்களை ஏமாற்றி வஞ்சிப்போர் நரகில் மூழ்குவார்கள்.(65)

பிறரின் வாழ்வுக்குத் தேவையானவற்றை அழிப்பவர்கள், பிறரின் வசிப்பிடங்களை அழிப்பவர்கள், பிறர் மனைவிகளைக் களவாடுபவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் வேற்றுமையை விதைப்பவர்கள், பிறரின் நம்பிக்கை அழிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(66) பிறரின் குறைகளை அறிக்கையிடுபவர்கள், மேம்பாலங்கள் அல்லது தரைப்பாலங்களை {சுமைதாங்கிகளை} உடைப்பவர்கள், பிறருக்காக விதிக்கப்பட்ட பிழைப்புத்தொழிலைப் பின்பற்றி வாழ்பவர்கள், நண்பர்களின் தொண்டு பெற்றும் நன்றிமறந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(67) வேதங்களில் நம்பிக்கையற்று, அவற்றை மதிக்காதவர்கள், தங்கள் உறுதிமொழிகளைப் பிளப்பவர்கள், அல்லது பிறரைக் கொண்டு பிளக்கச் செய்பவர்கள், பாவத்தால் தங்கள் நிலையில் இருந்து வீழ்ந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(68) ஒழுக்கத்தில் முறையற்றவர்கள், மிகை வட்டி வாங்குபவர்கள், விற்பனையில் முறையற்ற வகையில் பெரும் லாபம் மீட்டுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(69) சூதாடிகள், ஐயுணர்வேதுமின்றித் தீச்செயல்களில் ஈடுபடுபவர்களும், உயிரினங்களைக் கொல்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(70)

வெகுமதிகளை, அல்லது அவசியத் தேவைக்கானவற்றை, அல்லது கூலியையோ, ஊதியத்தையோ, அல்லது தான் செய்த மதிப்புமிக்கத் தொண்டுகளுக்கான பதில் உதவியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் பணியாட்களைப் பணிநீக்கம் செய்யும்படி முதலாளிகளைச் செயல்பட வைப்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்[12].(71) தங்கள் மனைவிகளுக்கு, அல்லது புனித நெருப்புக்கு, அல்லது பணியாட்களுக்கு, அல்லது தங்கள் விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களை மதிப்பதற்காகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைத் தவிர்ப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(72) வேதங்களை விற்பனை செய்வோர், வேதங்களில் குறை காண்போர், வேதங்களை எழுத்தாக்கி அவற்றைத் தாழ்த்துவோர் ஆகியோரனைவரும் நரகில் மூழ்குவார்கள்[13].(73) நன்கறியப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} சேராதவர்கள், ஸ்ருதிகள் மற்றும் சாத்திரங்களால் தடைசெய்யப்பட்ட நடைமுறைகளைச் செயல்படுத்துபவர்கள், தீய, அல்லது பாவம் நிறைந்த, அல்லது தங்கள் பிறப்பின் வகையைச் சாராத செயல்களைச் செய்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(74) தலைமயிரை விற்று வாழ்பவர்கள், நஞ்சை விற்று வாழ்பவர்கள், பாலை விற்று வாழ்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(75)ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள், பசுக்கள் மற்றும் கன்னிகைகளின் பாதையில் தடைகளை ஏற்படுத்துபவர்கள் {அவர்களின் குறுக்கே செல்பவர்கள்} நரகில் மூழ்குவார்கள்.(76) ஆயுதங்களை விற்பவர்கள், ஆயுதங்களைச் செய்பவர்கள், கணைகளைச் செய்பவர்கள், விற்களைச் செய்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(77) கற்களாலும், முட்களாலும், குழிகளாலும் பாதைகள் மற்றும் சாலைகளில் தடையேற்படுத்துபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(78) போதிய வயதை அடையாத இளங்காளைகளைப் பணியில் ஈடுபடுத்துவோர், பணியில் ஈடுபடுத்தும்போது இளங்காளைகள் மற்றும் பிற விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் மூக்குகளில் துளையிடுபவர்கள், விலங்குகளை எப்போதும் கட்டியே வைத்திருப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(80)

வயல் விளைச்சலில் ஆறிலொரு பங்கை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டும் தங்கள் குடிமக்களைக் காக்காத மன்னர்களும், இயன்றவர்களாக இருந்தும், வளமிருந்தும் கொடையளிப்பதைத் தவிர்ப்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(81) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தற்கட்டுப்பாடு, ஞானம் கொண்ட மனிதர்களையும், பல வருடங்களாகத் துணைபுரிந்தவர்களாக இருந்தும் அதற்கு மேலும் பணி செய்ய இயலாத மனிதர்களையும் கைவிடுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(82) சிறுவர்கள், முதியவர்கள், பணியாட்கள் ஆகியோருக்கு உணவைக் கொடுக்காமல் உண்ணும் மனிதர்கள் நரகில் மூழ்குவார்கள்.(83)

மேற்குறிப்பிடப்பட்ட மனிதர்கள் யாவரும் நரகத்திற்குச் செல்வார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, சொர்க்கத்திற்கு உயரும் மனிதர்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக.(84) தேவர்களைத் துதிக்கும் செயல்கள் யாவையும் செய்ய விடாததன் மூலம் ஒரு பிராமணனுக்கு எதிராக வரம்புமீறும் மனிதன் தன் பிள்ளைகள் அனைவரையும், விலங்குகள் அனைத்தையும் இழந்து துன்பப்படுவான். (அதாவது, பிராமணர்களின் அறச்செயல்களைத் தடுத்து அவர்களுக்கு எதிராக வரம்புமீறாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்).(85) ஓ! யுதிஷ்டிரா, சாத்திரங்களில் தங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, ஈகை, தற்கட்டுப்பாடு, வாய்மை ஆகிய அறங்களைப் பயிலும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(86) தங்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து பணிகள் செய்வதன் மூலம் அறிவை ஈட்டி, கடுந்தவங்களை நோற்று, கொடையேற்கும் விருப்பமற்றவர்களானவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(87)

அச்சம், பாவம், நிறைவேற்ற விரும்புவதற்குரிய வழியில் கிடக்கும் தடைகள், வறுமை, நோயின் துன்பம் ஆகியவற்றில் இருந்து பிறரை விடுவிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(88) மன்னிக்கும் மனோ நிலை, பொறுமை ஆகியவற்றைக் கொண்டவர்களும், அறச்செயல்கள் யாவையும் உடனே செய்பவர்களும், மங்கலவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(89) தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்ப்பவர்களும், பிறன் மனைவியருடன் பாலினக் கலவியைத் தவிர்ப்பவர்களும், மது, சாராயங்களைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(90) ஓ! பாரதா, தவசிகளுக்கான ஆசிரமங்களை நிறுவுவதில் உதவி செய்பவர்களும், குடும்பங்களை நிறுவுபவர்களும், மனிதர்கள் வசிக்கப் புதிய நாடுகளை உண்டாக்குபவர்களும், நகரங்கள் மற்றும் ஊர்களைப் பதிப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(91) உடைகள், ஆபரணங்கள், உணவு, பானம் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களும், பிறர் {ஆதரவற்றவர்கள்} திருமணம் செய்து கொள்ள உதவி செய்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(92)

உயிரினங்கள் அனைத்திற்கும் எவ்வகைத் தீங்கைச் செய்வதையும் தவிர்ப்பவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளவல்லவர்களும், அனைத்து உயிரினங்களின் புகலிடமாகத் தங்களை அமைத்துக் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(93) தங்கள் தந்தையர் மற்றும் தாய்மாரிடம் பணிவுடன் காத்திருப்பவர்களும், தங்கள் புலன்களை அடக்கியவர்களும், உடன்பிறந்தோரிடம் அன்புடன் நடந்து கொள்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(94) உலகம் சார்ந்த பொருட்களுடன் வளமாகவும், வலிமையும், பலமும் கொண்டவர்களாகவும், இளமை இன்பத்தில் இருப்பவர்களாகவும் இருந்தாலும், தங்கள் புலன்களை அடக்கிய மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(95) தங்களுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களிடமும் அன்பாக நடந்து கொள்பவர்களும், மென்மையான மனநிலை கொண்டவர்களும், மென்னடத்தைக் கொண்டோர் அனைவரிடமும் அன்பு கொண்டவர்களும், பணிவுடன் அனைத்து வகைத் தொண்டையும் செய்து பிறருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(96)

ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொடையளிப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களைத் துயரில் இருந்து மீட்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(97) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கம், பசுக்கள், வாகனங்கள் மற்றும் விலங்குகளைக் கொடையாள அளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(98) திருமணத்திற்குத் தேவையான பொருட்கள், பணியாட்கள், பணிப்பெண்கள், துணிமணிகள் போன்றவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(99) ஓ! பாரதா, பொதுமக்களுக்கான மகிழ்மன்றங்கள், தோட்டங்கள், கிணறுகள், ஓய்வில்லங்கள், பொதுக்கூட்டங்களுக்கான கட்டடங்கள், கால்நடை மற்றும் மனிதர்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளக்கூடிய குளங்கள், உழவுக்களங்கள் {வயல்கள்} ஆகியவற்றை அமைக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(100)

வேண்டி வரும் மனிதர்களுக்கு வீடுகள், களங்கள் {வயல்கள்}, கிராமங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(101) இன்சுவை கொண்ட கனிச்சாறுகள், வித்துகள், நெல் அல்லது அரசி {தானியங்கள்} ஆகியவற்றைப் பிறருக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(102) உயர்குடியில் அல்லது கீழ்க்குடியில் பிறந்தும், நூற்றுக்கணக்கான பிள்ளைகளைப் பெற்று நீண்ட நாள் வாழ்ந்து, கருணை பயின்று, கோபத்தை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(103) ஓ! பாரதா, மறுமைக்காகத் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவிக்கும் வகையில் மக்களால் செய்யப்படும் சடங்குகள், கொடைகள் குறித்த விதிகளையும், கொடைகள் மற்றும் அவற்றை அளிக்கும் செயல்முறைகள் ஆகியவற்றைக் குறித்த பழங்காலத்து முனிவர்களின் பார்வைகளையும் நான் உனக்கு விளக்கிச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(104)

பிரம்மஹத்தி! – அநுசாஸனபர்வம் பகுதி – 24-ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே பிரம்மஹத்தி பாவம் பீடிக்கக்கூடிய சூழ்நிலைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் அரச மகனே, நான் கேட்கும் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில் ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே ஒரு மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாகும் தருணங்கள் என்னென்ன?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, முன்பு ஒரு நாள் இதே காரியம் குறித்து விளக்கிச் சொல்லுமாறு வியாசரை வேண்டினேன். அத்தருணத்தில் வியாசர் சொன்னதை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2)

வியாசரிடம் சென்ற நான், “ஓ! பெருந்தவசியே, வசிஷ்டரின் நாலாம் தலைமுறை வழித்தோன்றல் {வாரிசு} நீர். இஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. உண்மையில் ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே ஒரு மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாகும் {பிரம்மஹத்தி பீடித்தவனாகும்} தருணங்கள் என்னென்ன?” என்று கேட்டேன்.(3) ஓ! மன்னா, இவ்வாறு என்னால் கேட்கப்பட்டவரும், பராசரர் மடியில் பிறந்த மகனும், அறநெறிகளில் திறம்பெற்றவருமான அவர், சிறப்பு நிறைந்த, உறுதியான பதிலை பின்வருமாறு அளித்தார்.(4)

{வியாசர்}, “அறமொழுகும் பிராமணர் ஒருவருக்குப் பிச்சை தருவதாக அவரைத் தானே அழைத்துவிட்டு, வீட்டில் ஏதுமில்லை என்ற பாசாங்குடன் ஏதும் கொடுக்க மறுக்கும் மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் {அவன் பிரம்மஹத்தி என்ற பாவத்தைச் செய்தவன்} என்பதை நீ அறிய வேண்டும்.(5)

ஓ! பாரதா, வேதங்களையும், அவற்றின் அங்கங்களை யாவையும் கற்றவரும், உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டவருமான ஒரு பிராமணருடைய வாழ்வாதாரங்களை அழிக்கும் ஒருவன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(6)

ஓ! மன்னா, தாகம் தணித்துக் கொண்டிருக்கும் பசுவை தண்ணீர் அருந்த விடாமல் தடை செய்பவன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(7)

காலகாலமாக ஆசான் மூலம் சீடனிடம் வரும் ஸ்ருதிகள், அல்லது முனிவர்களால் தொகுக்கப்பட்ட சாத்திரங்கள் ஆகியவற்றைப் படிக்காமலேயே அவற்றிடம் குறை காண்பவனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ கருத வேண்டும்.(8)

அழகையும், பிற சிறப்புகளைக் கொண்ட தன் மகளைத் தகுந்த மணமகனுக்கு {திருமணம் செய்து கொடுக்காத} அளிக்காத மனிதனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(9)

இதயம்பிளக்கும் துன்பத்தைப் பிராமணர்களுக்கு அளிக்கும் பாவம் நிறைந்த ஒரு மூடனை பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(10) பார்வையற்றவர்கள், முடவர்கள், மூடர்கள் ஆகியோரின் செல்வங்கள் அனைத்தையும் களவாடுபவனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(11) தவசிகளின் ஆசிரமங்களுக்கோ, காடுகளுக்கோ, கிராமத்திற்கோ, நகரத்திற்குத் தீ வைக்கும் மனிதனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்” என்றார் {என்றார் வியாசர் எனச் சொன்னார் பீஷ்மர்}.(12)

புண்ணியத்தீர்த்தங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 25-புனிதநீர்நிலைகளின் மகிமை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்வது பலன் நிறைந்தது {புண்ணியம் நிறைந்தது} என்றும்; அத்தகைய நீர்நிலைகளில் தூய்மைச்சடங்குகளைச் செய்வது பலன்மிக்கது என்றும்; அத்தகைய சிறப்புமிக்க நீர்நிலைகளைக் குறித்துக் கேட்பதும் பலன்மிக்கது என்றும் சொல்லப்படுகிறது. ஓ! பாட்டா, இக்காரியத்தில் உமது விளக்கத்தை நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளை எனக்குக் குறிப்பிட்டுச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பெரும்பலம் கொண்டவரே, இக்காரியத்தில் உமது உரையைக் கேட்க நான் விரும்புகிறேன்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெருங்காந்தி {பெரும்புகழ்} கொண்டவனே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளைக் குறித்த பின்வரும் பட்டியல் அங்கிரஸால் {அங்கிரஸ் முனிவரால்} செய்யப்பட்டதாகும். அருளப்பட்டிருப்பாயாக, நீ பெரும்பலனை அடையப் போகிறாய், அதைக் கேட்பதே உனக்குத் தகும்.(3)

ஒரு காலத்தில், கடும் நோன்புகளைக் கொண்டவரான கௌதமர், பெருமைமிக்கவரும், கல்விமானும், அமைதியான ஆன்மாவைக் கொண்ட முனிவருமான அங்கிரஸ் காட்டில் வசித்து வந்த போது அவரை அணுகி,(4) “ஓ! சிறப்புமிக்கவரே, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத்தலங்களோடு தொடர்புடைய பலன்கள் குறித்து எனக்குச் சில ஐயங்கள் உண்டு {எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை}. இக்காரியத்தில் உமது உரையை நான் கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ! தவசியே, எனக்கு அவற்றைக் குறித்துச சொல்வீராக.(5) ஓ! பெரும் ஞானியே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளில் நீராடுவதன் மூலம் ஒரு மனிதனால் மறுமையில் அடையப்படும் பலன்கள் என்னென்ன? இதுகுறித்து உண்மையாகவும், விதிப்படியும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்றார்.(6)

அங்கிரஸ், “எப்போதும் அலைகள் நடனமிடும் நீரைக் கொண்டவையான சந்திரபாகையிலோ {செனாபிலோ}, விதஸ்தையிலோ {ஜீலத்திலோ}[1] ஏழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து நீராடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திதையும் முற்றிலும் கழுவிக்கொண்டு, ஒரு தவசியின் {தவசி ஒருவர் பெறுவதைப் போன்ற} பலனை அடைவான்.(7) காஷ்மீரம் என்றழைக்கப்படும் நாட்டில் பல ஆறுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சிந்து (இண்டஸ்) என்றழைக்கப்படும் பேராற்றில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் நீராடுவதன் மூலம் ஒருவன் நிச்சயம் நற்குணத்தை அடைந்து, இவ்வுலகத்தில் இருந்து சென்ற பிறகு சொர்க்கத்திற்கு உயர்வான்.(8)புஷ்கரை, பிரபாஸம், நைமிசம் {நைமிசாரண்யத்தில் உள்ள தீர்த்தம்}, பெருங்கடல் {சமுத்திர தீர்த்தம்}, தேவிகை, இந்திரமார்க்கம், ஸ்வர்ணபிந்து ஆகிய ஆறுகளில் நீராடும் ஒருவன், தெய்வீகத் தேரில் அமர்ந்து கொண்டு, அப்ஸரஸ்கள் புகழ நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வான்[2].(9)ஹிரண்யபிந்துவின் நீரில் மூழ்கி குவிந்த மனத்துடன் அந்தப் புனித ஆற்றைத் துதிப்பதன் மூலமும், அடுத்ததாகக் குசேசயம் தேவாந்தம் ஆகியவற்றில் நீராடுவதன் மூலமும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் கழுவப் பெறுகிறான்[3].(10)கந்தமாதனத்தின் அருகில் இந்திரதோயைக்கும், அடுத்ததாகக் குரங்கம் என்றழைக்கப்படும் நாட்டில் உள்ள கரதோயைக்கும் செல்லும் ஒருவன் மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, குவிந்த இதயத்துடனும், தூய உடலுடனும் அந்தப் புனித நீர்நிலைகளில் நீராட வேண்டும். இதைச் செய்வதன் மூலம் ஒருவன் குதிரை வேள்வியொன்றைச் செய்த பலனை நிச்சயம் ஈட்டுவான்[4].(11)நீல மலைகளில் உள்ள கங்காத்வாரம், குசத்வாரம் {குசாவர்த்தம்}, வில்வகம் ஆகியவற்றிலும், கனகலத்திலும் நீராடும் ஒருவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்வான்[5].(12)ஒருவன் பிரம்மசாரியாக, தன் கோபத்தை அடக்கி, வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணையோடிருந்து, நீர்நிலைகளின் தடாகத்தில் {அபாம்ஹ்ரதம் எனும் தீர்த்தத்தில்} நீராடினால், அவன் நிச்சயம் ஒரு குதிரைவேள்வி செய்த பலனை அடைவான்.(13)

பாகீரதி-கங்கை வடதிசை நோக்கிப் பாயும் பகுதியானது, சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகியவை சேருமிடம் என்று அழியப்படுகிறது. ஒரு மாத காலம் நோன்பிருந்து, மஹேஸ்வரனுக்கு ஏற்புடையதாக அறியப்படும் அந்தப் புனிதத் தீர்த்ததில் {ஈஸ்வரஸ்தானத்தில்} நீராடும் ஒருவன் தேவர்களைக் காணத்தகுந்தவனாகிறான்.(14)

சப்தகங்கம், திரிகங்கம், இந்திரமார்க்கம் ஆகிவற்றில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன், மறுபிறவியடைய நேர்ந்தால் அமுதத்தையே உணவாக அடைகிறான்[6].(15)உடலையும் மனத்தையும் தூய நிலையில் வைத்துக் கொண்டு, நாள்தவறாமல் அக்னிஹோத்ரம் செய்து, ஒரு மாத காலம் உண்ணா நோன்பிருந்து மஹாஸ்ரமத்தில் நீராடும் மனிதன் நிச்சயம் ஒரே மாதத்தில் வெற்றியை அடைவான் {அம்மாதத்திலேயே தவசித்தி பெறுவான்}.(16)

மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, தீய ஆசைகள் அனைத்தில் இருந்தும் மனத்தூய்மையடைந்து, {மலைச்சிகரமான} பிருகுதுங்கத்தில் அமைந்திருக்கும் பெருந்தடாகத்தில் {மஹாஹ்ரதமெனும் தீர்த்தத்தில்} நீராடுவதன் மூலம் ஒருவன் பிராமணக் கொலை செய்த பாவத்தில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்தும் கழுவப்படுவான்[7].(17)கன்யாகூபத்தில் நீராடி, பலாகையில் {பலாகை ஆற்றில்} தூய்மைச்சடங்குகளை {தர்ப்பணங்களைச்} செய்யும் ஒருவன், அதன் மூலம் தேவர்களுக்கு மத்தியில் பெரும்புகழை அடைந்து மகிமையில் ஒளிர்வான்.(18)

தேவிகையிலும், சுந்தரிகை என்ற பெயரில் அறியப்படும் தடாகத்திலும், அஸ்வினி என்றழைக்கப்படும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், தனது மறுபிறவியில் பேரழகுடன் கூடிய வடிவத்தைப் பெறுவான்.(19)

ஒரு பிறைபக்க காலம் {பக்ஷம்} உண்ணா நோன்பிருந்து, மஹாகங்கையிலும், கிருத்திகாங்காரகையிலும் நீராடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான்[8].(20)வைமானிகை, கிங்கிணிகை ஆகியவற்றில் நீராடும் ஒருவன் விரும்பிய எங்கும் செல்லும் சக்தியை அடைந்து, அப்சரஸ்களின் தேவலோகத்தில் பெரிதும் மதிப்பிற்குரிய பொருளாவான்[9].(21)ஒரு மனிதன் தன் கோபத்தை அடக்கி, மூன்று நாட்கள் பிரம்மச்சரிய நோன்பிருந்து, காளிகை என்றழைக்கப்படும் ஆசிரமத்தில் {காளிகாஸ்ரமம் எனும் இடத்தில்} உள்ள விபாசை {பியாஸ்} ஆற்றில்[10] நீராடினால், அவன் மறுபிறவி எனும் கடப்பாட்டைக் கடப்பதில் நிச்சயம் வெல்வான்.(22)கிருத்திகைகளுக்குப் புனிதமான ஆசிரமத்தில் {கிருத்திகாஸ்ரமம் என்ற இடத்தில் உள்ள நீர்நிலையில்} நீராடி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை செலுத்தி, மஹாதேவனை நிறைவடையச் செய்யும் ஒருவன், தன் உடலும், மனமும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்கு உயர்வான்.(23)

ஒருவன், தூய்மையடைந்த உடல் மற்றும் மனத்துடன் மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து மஹாபுத்தில் {மஹாகூபத்தில்} நீராடினால், அசையாதனவற்றிடும், அசையும் விலங்குகள் அனைத்திடமும், இரு கால்களைக் கொண்ட விலங்குகள் அனைத்திடமும் {மனிதர்களிடமும்} கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(24)

தேவதாருக்காட்டில் நீராடி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து, தூய உடலுடனும், மனத்துடனும் ஏழு நாட்கள் அங்கேயே வசிப்பதன் மூலம் ஒருவன் இவ்வுலகை விட்டுச் சென்றதும் தேவர்களின் உலகை அடைவான் {தேவதை என்ற பெயர் பெறுவான்}.(25)

சரஸ்தம்பம், குசஸ்தம்பம், துரோணசர்மபதம் ஆகியவற்றில் உள்ள அருவிகளில் நீராடும் ஒருவன், நிச்சயம் அப்சரஸ்களின் உலகை அடைந்து, மனிதர்களைவிட அதிக ஆற்றல்களைக் கொண்ட அவர்களின் {அந்த அப்சரஸ்களின்} கடமையுணர்வுமிக்கப் பணிவிடைகளைப் பெறுவான்.(26)

ஒருவன் உண்ணா நோன்பிருந்து சித்திரகூடம், ஜனஸ்தானம்[11] மற்றும் மந்தாகினியின் நீரில் நீராடினால், அவன் நிச்சயம் அரச செழிப்பில் கலப்பான் {அரசுரிமை அடைவான்}.(27)சியாமை என்ற பெயரில் அறியப்படும் ஆசிரமத்திற்குச் சென்று, ஒருபிறைபக்க {பக்ஷ} தாகாலம் அங்கேயே வசித்து, அங்கே இருக்கும் புனித நீர்நிலையில் நீராடுவதன் மூலம் ஒருவன் விரும்பியபோது மறையும் சக்தியை அடைகிறான் (அந்தச் சக்தியை அடைந்து கந்தர்வர்களுக்காக விதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவிப்பான்).(28)

கௌசிகி என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திற்குச் சென்று, மூன்று நாட்கள் உணவும், பானமும் தவிர்த்து தூய இதயத்துடன் அங்கே வசித்திருப்பவன், (மறுமையில்) கந்தர்வர்களின் இன்பலோகத்தில் வசிக்கும் சக்தியைப் பெறுவான்[12].(29)காந்ததாரகை என்ற பெயரில் உள்ள இனிய தீர்த்தத்தில் நீராடி, உணவும், பானமும் துறந்து ஒரு மாத காலம் அங்கே வசித்திருக்கும் ஒருவன் விரும்பிய போது மறையும் சக்தியை அடைந்து இருபத்தோரு நாட்களில் சொர்க்கத்திற்கு உயர்வான்.(30)

மதங்கம் என்ற பெயரில் அறியப்படும் தடாகத்தில் {மதங்கவாபியென்னும் தீர்த்தத்தில்} நீராடும் ஒருவன் நிச்சயம் ஒரே இரவில் {அதே இரவில்} வெற்றியை அடைவான். நித்ய அந்தகை, அல்லது அநாலம்பத்திலோ,(31) நைமிசத்திலோ, ஸ்வர்க்கம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடி, தன் புலன்களை அடக்கி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் மனித வேள்வி {புருஷமேத யாகம்} செய்த பலனை அடைகிறான்[13].(32)கங்காஹ்ரதத்திலும், உத்பலாவனம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும் நீராடி, ஒரு மாதகாலத்தில் நாள்தோறும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைவான்.(33)

கங்கையும், யமுனையும் சேருமிடத்திலும், காலஞ்சர மலைகளின் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி, ஒரு மாதகாலத்தில் நாள்தோறும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் பத்து குதிரை வேள்விகளைச் செய்த பலனை அடைவான்[14].(34)சஷ்டி தடாகத்தில் {யஷ்டிஹ்ரதத் தீர்த்தத்தில்} நீராடும் ஒருவன், அன்னதானத்தின் பலனைவிடப் பெரிய பலனை அடைகிறான். ஓ! பாரதக் குலத் தலைவா, மக {மாசி} மாதத்தில், பத்தாயிரம் தீர்த்தங்களும், வேறு மூன்று கோடி தீர்த்தங்களும் (கங்கையும், யமுனையும் சேருமிடமான) பிரயாகைக்கு {இன்றைய அலாகாபாத், உத்திரபிரதேசம்} வருகின்றன. ஓ! பாரதக் குலத் தலைவா, கட்டுப்படுத்திய ஆன்மாவுடன் கூடிய ஒருவன், மக {மாசி} மாதத்தில் கடும் நோன்புகள் நோற்றுப் பிரயாகையில் நீராடினால் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்தை அடைவான்[15].(35,36)மருத்துக்களுக்குப் புனிதமான தீர்த்தத்திலும், பித்ருக்களின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தீர்த்தத்திலும், வைவஸ்வதம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், ஒரு தீர்த்தத்தைப் போலவே புனிதமும், தூய்மையும் அடைந்து, தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவனாவான்.(37)

பாகீரதியில் {கங்கையில்} பிரம்மஸரஸுக்குச் சென்று, நீராடி, ஒருமாதம் உணவனைத்தையும் துறந்து நாள்தோறும் பித்ருக்களுக்குக் காணிக்கை அளிக்கும் ஒருவன் நிச்சயம் சோமலோகத்தை அடைவான்.(38)

உத்பாதகத்திலும், அஷ்டாவக்ரத்திலும் நீராடி, அடுத்தடுத்து பனிரெண்டு நாட்கள் உணவைத் தவிர்த்து ஒவ்வொரு நாளும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் குதிரை வேள்விக்கான பலன்களை அடைவான்.(39)

கயையில் இருக்கும் அஸ்மப்ருஷ்டம், நிரவிந்த மலைகள், கிரௌஞ்சபதி ஆகிய மூன்றிலும் நீராடும் ஒருவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} என்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்[16].(40) முதலிடத்தில் நீராடுவது ஒற்றைப் பிராமணக் கொலை என்ற பாவத்தில் இருந்து தூய்மையாக்கும்; இரண்டாமிடத்தில் நீராடுவது அத்தன்மையிலுள்ள இரு குற்றங்களில் ஒன்றைத் தூய்மையாக்கும்; மூன்றாமிடத்தில் நீராடுவது அத்தகைய மூன்று குற்றங்களில் ஒன்றைத் தூய்மையாக்கும்.(40)கலவிங்கத்தில் நீராடும் ஒருவன் (மறுமையில் பயன்படுத்த) பேரளவு நீரை அடைகிறான். அக்னியின் நகரத்தில் {அக்னிபுரத்தில்} நீராடும் ஒரு மனிதன், அக்னி மகளின் நகரத்தில் மறுபிறவியை அடைந்து வாழும் பலனைப் பெறுவான்.(41)

கரவீரபுரத்தின் விசாலை ஆற்றில் நீராடி, தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து, தேவஹ்ரதத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்யும் ஒருவன் பிரம்மனைப் போன்றவனாகி அத்தகைய மகிமையில் ஒளிர்கிறான்.(42)

புனராவர்த்த-நந்தை மற்றும் மஹாநந்தையில் நீராடும் ஒரு மனிதன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உலகளாவிய கருணை கொண்டு இந்திரனுக்குச் சொந்தமான நந்தனம் என்றழைக்கப்படும் தெய்வீகத் தோட்டத்திற்குச் சென்று பல்வேறு அப்சரஸ்களால் பணிவிடை செய்யப்படுகிறான்.(43)

லோஹிதை ஆற்றில் அமைந்திருப்பதும், ஊர்வசி என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தின் முழுநிலவு {பௌர்ணமி} நாளில் குவிந்த ஆன்மாவுடன் நீராடும் ஒருவன், புண்டரீகம் என்றழைக்கப்படும் வேள்வியோடு தொடர்புடைய பலன்களை அடைவான்[17].(44)பனிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து ராமஹ்ரதத்தில் நீராடி, விபாசை {பியாஸ்} ஆற்றில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கையளிக்கும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(45)

ஒரு மாதகாலம் உண்ணாநோன்பிருந்து தூய இதயத்துடன் மஹாஹ்ரதம் என்றழைக்கப்படும் நீராடும் ஒருவன் நிச்சயம் தவசி ஜமதக்னியின் கதியை அடைவான்.(46)

விந்தியம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தின் வெப்பத்திற்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு மனிதன், வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டு, பணிவால் இயக்கப்படும் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் ஒரே மாத காலத்தில் நிச்சயம் தவ வெற்றியை அடைவான்.(47)

நர்மதையிலும், சுபாரகம் {சூர்ப்பாரகோதகம்} என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்தில் நீராடி, ஒரு முழுப் பிறைபக்க {பக்ஷ} காலம் உண்ணா நோன்பிருக்கும் ஒருவன் நிச்சயம் அடுத்தப் பிறவியில் அரசகுடியில் இளவரசனாகப் பிறப்பான்.(48)

ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடனும், குவிந்த ஆன்மாவுடனும், ஜம்புமார்க்கம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திற்குச் சென்றால், ஒரே பகல் மற்றும் இரவு அடங்கிய காலத்திற்குள் நிச்சயம் அவன் வெற்றியை அடைவான்.(49)

சாந்தாலிகாஸ்ரமம் சென்று, கோகாமுகம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடி, இலைகளை மட்டுமே உண்டு, மரவுரிகளை உடுத்தி வாழ்பவன் தன் மனைவிகளாகப் பேரழகுடன் கூடிய பத்து கன்னிகைகளை நிச்சயம் அடைவான்.(50)

கன்யாஹ்ரதம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தின் அருகில் வாழ்வபவன் ஒருபோதும் யமலோகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. அத்தகைய மனிதன் நிச்சயம் தேவர்களுக்குச் சொந்தமான இன்பலோகங்களுக்கு உயர்வான்.(51)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஒரு புதுநிலவு {அமாவாசை} நாளில் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் பிரபாஸை என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், உடனே வெற்றியையும், இறவாத்தன்மையும் நிச்சயம் அடைவான்.(52)

ஆர்ஷ்டிசேணரின் மகனுடைய ஆசிரமத்திற்கு அருகில் உஜ்ஜானகம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும், அடுத்ததாகப் பிங்கையின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவனாவான்.(53)

மூன்று நாட்கள் உண்ணாநோன்பிருந்து, குல்யை {ரிஷிகுல்யை} என்று அறியப்படும் தீர்த்தத்தில் நீராடி, அகமர்ஷணம் என்ற பெயரைக் கொண்ட புனித மந்திரங்களை உரைக்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைவான்.(54)

ஓரிரவு உண்ணாநோன்பிருந்து, பிண்டாரகையில் நீராடும் ஒருவன், அடுத்த நாளுக்குள் தூய்மையடைந்து, அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைவான்.(55)

தர்மாரண்யம் என்றழைக்கப்படும் காடுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மசரத்திற்குச் செல்லும் ஒருவன், தன் பாவங்களை அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து புண்டரீக வேள்வி செய்த பலனை அடைவான்.(56)

மைநாக மலையின் நீரில் நீராடி, காலையும், மாலையும் துதிகளைச் செய்து, ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு மாத காலம் அங்கே வசிக்கும் ஒருவன் அனைத்து வேள்விகளையும் செய்த பலனை அடைவான்.(57)

காலோதகம், நந்திகுண்டம், உத்தரமானஸம் ஆகியவற்றுக்குப் புறப்பட்டு அவற்றிலிருந்து நூறு யோஜனை தொலைவில் உள்ள இடத்தை அடைந்தாலே ஒருவன் கருவைக் கொன்ற பாவத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(58) அவன் நந்தீஸ்வரனின் தோற்றத்தைக் காண்பதில் வென்று, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான். ஸ்வர்க்கமார்க்கம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நிச்சயம் பிரம்மலோகத்திற்குச் செல்வான்.(59)

கொண்டாடப்படும் இமயம் புனிதமானதாகும். அந்த மலைகளின் இளவரசனே சங்கரனின் மாமனாவான். அவன் ரத்தினங்கள் அனைத்தின் சுரங்கமாகவும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் வந்து போகும் இடமாகவும் இருக்கிறான்.(60) வேதங்களை முழுமையாக அறிந்தவனும், இவ்வாழ்வை மிக நிலையற்றதெனக் கருதுபவனுமான ஒரு மறுபிறப்பாளன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணக்கமாக உணவு மற்றும் பானங்கள் அனைத்தையும் தவிர்த்து, தேவர்களைத் துதித்து, தவசிகளுக்குத் தலைவணங்கி இந்த மலைகளில் தன் உடலைக் கைவிட்டால் நிச்சயம் வெற்றியை அடைந்து, நித்தியமான பிரம்ம லோகத்தை அடைவான்.(61,62)

கோபத்தை அடக்கி, காமத்தைக் கட்டுப்படுத்தித் தீர்த்தத்தில் வசித்து வருபவன், அத்தகைய வாசத்தின் விளைவால் அவனுக்கு அடையப்பட முடியாத {பலன்} எதுவும் இல்லை.(63) உலகில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் செல்லும் நோக்கில் ஒருவன் அவற்றில் அடைதற்கரிதான, பயணிக்க மிகக் கடுமையான வழிகளைக் கொண்டவற்றையும் மனத்தால் நினைக்க வேண்டும் {அவற்றிற்கும் செல்ல நினைக்க வேண்டும்}.(64) தீர்த்தங்களுக்குப் பயணம் செய்வது வேள்விகள் செய்த பலனை உண்டாக்கவல்லதாகும். அனைவரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்பவை அவை. பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அவற்றால் சொர்க்கத்திற்கே வழிவகுக்க இயலும். இக்காரியம் உண்மையில் பெரும்புதிராகும் {பெரும் ரகசியமாகும்}. தேவர்களே கூடத் தீர்த்தங்களில் நீராடுகின்றனர். அவை அவர்களையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்கின்றன.(65) பிராமணர்களுக்கும், தனக்கான நன்மையை அடையும் நோக்கம் கொண்ட அறம் சார்ந்த நேர்மையாளர்களுக்கும் தீர்த்தங்கள் குறித்த இந்த உரை சொல்லப்பட வேண்டும். மேலும் அவனது நலன்விரும்பிகள், நண்பர்கள், அவனுக்குக் கீழ்ப்படிந்து அர்ப்பணிப்புடன் இருக்கும் சீடர்கள் ஆகியோரும் கேட்கும் வகையில் இது சொல்லப்பட வேண்டும்” {என்றார் அங்கிரஸ்}.(66)

பெரும் தவத்தகுதியைக் கொண்ட அங்கிரஸ் இந்த உரையைக் கௌதமருக்குச் சொன்னார். அங்கிரஸ், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கசியபரிடம் இருந்து இதைப் பெற்றார்.(67) இவ்வுரையானது பெரும் முனிவர்களாலும் சொல்லத்தகுந்ததாகக் கருதப்படுகிறது. {ஒருவனைத்} தூய்மையடையச் செய்யும் யாவற்றிலும் இது முதன்மையானதாகும். இதை விடாமல் நாள்தோறும் சொல்லும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, இவ்வாழ்வை விட்டுச் சொர்க்கத்தை அடைவான்.(68) “அங்கிரஸின் இவ்வுரை, புதிராகக் கருதப்படுகிறது” என்று இந்த உரை குறித்துக் கேட்கும் ஒருவன், அடுத்தப் பிறவியில் நற்குடியில் பிறந்தும் தன் முற்பிறவியின் நினைவுகளுடன் கூடியவனாக இருப்பான்” என்றார் {பீஷ்மர்}”.(69)

கங்கையின் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 26-தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு முனிவருக்கும், சீல நோன்புடன் கூடிய உஞ்சவிருத்தி செய்து வந்த ஒரு பிராமணருக்குமிடையில் கங்கையின் மகிமையைக் குறித்து நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கும், மன்னிக்கும் தன்மையில் {பொறுமையில்} பிரம்மனுக்கும் இணையானவரும், ஆற்றலில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, சக்தியில் சூரியனுக்கும் ஒப்பானவரும்,(1) அளவிலா வலிமை கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மர், போரில் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தார். மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் பல மக்கள் சூழ இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.(2) வீரர்கள் விரும்பும் படுக்கையில் கிடந்த அந்த முதிய வீரர், தமது உடலில் இருந்து விடுபெறும் மங்கல நேரத்திற்காகக் காத்திருந்தார். பாரதக் குலத்தில் முதன்மையானவரான அவரைக் காணப் பெரும் முனிவர்கள் பலர் அங்கே வந்தனர்.(3)

அவர்களில் அத்ரி, வசிஷ்டர், பிருகு, புலஸ்தியர், புலக்ஷர் மற்றும் கிரது ஆகியோரும் இருந்தனர். அங்கிரஸ், கௌதமர், அகஸ்தியர், நன்கு அடக்கப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஸுமதி,(4) விஷ்வாமித்திரர், ஸ்தூலசிரஸ், ஸம்வர்த்தர், பிரமதி, தமர் ஆகியோரும் அங்கிருந்தனர். பிருஹஸ்பதி, உசானஸ் {சுக்ராசாரியர்}, வியாசர், சியவனர், காசியபர், துருவர்,(5) துர்வாஸர், ஜமதக்நி, மார்க்கண்டேயர், காலவர், பரத்வாஜர், ரைப்யர், யவக்ரீதர், திரிதர் ஆகியோரும் அங்கிருந்தனர்.(6) ஸ்தூலாக்ஷர், சுபலாக்ஷர், கண்வர், மோதாதிதி, கிருசர், நாரதர், பர்வதர், ஸுதன்வா, ஏகதர், துவிதர்,(7) நிதம்பூ, புவனர், தௌம்யர், சதானந்தர், அக்ரதவ்ரணர், பரசுராமர், கசர் ஆகியோரும் அங்கிருந்தனர்.(8) உயர் ஆன்மா கொண்டவர்களான இந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும் கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மரைக் காண வந்தனர். தம்பிகளுடன் கூடிய யுதிஷ்டிரன், ஒருவர் பின் ஒருவரா அங்கே வந்த உயர் ஆன்ம முனிவர்களை வழிபட்டான். அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட அந்த முதன்மையான முனிவர்கள் அங்கே அமர்ந்து ஒருவரோடு ஒருவர் உரையாடத் தொடங்கினர்.(9,10)

பீஷ்மர் தொடர்பான அவர்களது உரையாடல் மிக இனிமையானதாகவும், புலன்கள் அனைத்திற்கும் ஏற்புடையதாகவும் இருந்தது. அவர்கள் தம்மைக் குறித்துப் பேசுவதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ச்சியால் நிறைந்து, ஏற்கனவே தாம் சொர்க்கத்தில் இருப்பதாகக் கருதினார்.(11) அப்போது அந்த முனிவர்கள் பீஷ்மரிடமும், பாண்டவ இளவரசர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, காண்போர் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கிருந்து மறைந்தனர்.(12) பாண்டவர்கள் அந்தப் பேரருள் கொண்ட முனிவர்கள் மறைந்த பிறகும் அவர்களை மீண்டும் மீண்டும் துதித்துக் கொண்டிருந்தனர்.(13) பிறகு உற்சாகமிக்க ஆன்மாக்களுடன் கூடிய அவர்கள், உதிக்கும் சூரியனுக்காகக் காத்திருக்கும் மந்திரங்களில் திறன்மிக்கப் பிராமணர்களைப் போலக் கங்கையின் மைந்தரிடம் காத்திருந்தனர்.(14) அவர்களது தவசக்தியின் விளைவால் திசைப்புள்ளிகள் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அக்காட்சியைக் கண்டு பாண்டவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(15) அம்முனிவர்கள் பெற்றிருந்த பேரருளையும், பலத்தையும் நினைத்துப் பார்த்த பாண்டவ இளவரசர்கள், அக்காரியம் குறித்துத் தங்கள் பாட்டனான பீஷ்மரிடம் உரையாடத் தொடங்கினர்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவ்வுரையாடல் முடிந்த பிறகு, பாண்டுவின் மகனான நீதிமான் யுதிஷ்டிரன், பீஷ்மரின் பாதங்களைத் தன் தலையால் தொட்டு, அதன் பிறகு அறம் மற்றும் நெறிகள் தொடர்பான தன் கேள்விகளை மீண்டும் கேட்கத் தொடங்கினான்.(17)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புனிதத்தின் நோக்கில் கண்டால் எந்த நாடுகள், எந்த மாகாணங்கள், எந்த ஆசிரமங்கள், எந்த மலைகள், எந்த ஆறுகள் முதன்மையானவை?” என்று கேட்டான்.(18)

சீலம் மற்றும் உஞ்ச {சீலோஞ்சவிருத்தி} நோன்புகளை ஒரு பிராமணருக்கும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு முனிவருக்கும் இடையில் இது தொடர்பாக நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் தென்படுகிறது.(19) ஒரு காலத்தில், மலைகளால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த ஒரு முதன்மையான மனிதன், இறுதியாகச் சீல {சீல விருத்தி} நோன்புக்கு இணக்கமான இல்லறவாழ்வு முறையைப் பின்பற்றி வாழும் ஒரு முதன்மையான மனிதரின் இல்லத்திற்கு {ஒரு கிருஹஸ்தனின் வீட்டுக்கு} வந்தார்.(20) பின்னவர் தமது விருந்தினரை உரிய சடங்குகளுடன் வரவேற்றார். இத்தகைய விருந்தோம்பலைப் பெற்று மகிழ்ந்த அந்த முனிவர், தமக்கு விருந்தளிப்பவரின் இல்லத்திலேயே அவ்விரவை மகிழ்ச்சியாகக் கடத்தினார்.(21) அடுத்தநாள் காலையில் சீல நோன்பை நோற்கும் அந்தப் பிராமணர், காலையில் தாம் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் சடங்குகளை முடித்து, தம்மை முறையாகத் தூய்மை செய்து கொண்டு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கும் தமது விருந்தினரை உற்சாகமாக அணுகினார்.(22) ஒருவரையொருவர் சந்தித்துச் சுகமாக அமர்ந்த அவ்விருவரும், வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள் தொடர்பான இனிமையான உரையாடலைத் தொடங்கினர்.(23) அந்த உரையாடலின் முடிவில் சீல நோன்பை நோற்கும் பிராமணர், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவரிடம் மதிப்புடன் பேசினார். ஓ! யுதிஷ்டிரா, நுண்ணறிவுடன் கூடிய அவர், நீ என்னிடம் கேட்ட அதே கேள்வியை முன்வைத்தார்.(24)

அந்த வறிய பிராமணர், “புனிதத்தின் நோக்கில் கண்டால் எந்தெந்த நாடுகள், எந்தெந்த மாகாணங்கள், எந்த ஆசிரமங்கள், எந்தெந்த மலைகள், எந்தெந்த ஆறுகள் முதன்மையானவையாகக் கருதப்பட வேண்டும்? இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(25)தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர், “ஆறுகள் அனைத்திலும் முதன்மையான பாகீரதி {கங்கை} பாயும் கரைகளுக்கு அருகே உள்ள நாடுகள், மாகாணங்கள், ஆசிரமங்கள், மலைகள் ஆகியவையே முதன்மையான புனிதம் கொண்டவை.(26) தவங்கள், பிரம்மச்சரியம், வேள்விகள், துறவு, ஆகியவற்றின் மூலம் ஓர் உயிரினம் அடையவல்ல கதியைப் பாகீரதியின் புனித நீரில் நீராடி அதன் அருகில் வாழ்வதால் மட்டுமே ஒருவன் நிச்சயம் அடைவான்.(27) மேனியில் பாகீரதியின் புனித நீர் தெளிக்கப்பட்டவை, அல்லது அந்தப் புனித ஆற்றில் எலும்புகள் இடப்பட்டவையான உயிரினங்கள் எக்காலத்திலும் சொர்க்கத்தில் இருந்து வீழ நேராது.(28) ஓ! கல்விமானான பிராமணரே, தங்கள் செயல்கள் அனைத்திலும் பாகீரதியின் நீரைப் பயன்படுத்தும் மனிதர்கள், இவ்வுலகில் இருந்து சென்றதும் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(29) தங்கள் வாழ்வின் முதல் பகுதியில் பாவம் நிறைந்த செயல்கள் பலவற்றைச் செய்த மனிதர்களும் கூட, வருடக்கணக்கில் கங்கையில் அருகில் வசிப்பதன் மூலம் மேன்மைமிக்கக் கதியை அடைவதில் வெல்வார்கள்.(30)

கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் கங்கையின் புனித நீரில் நீராடுவதன் மூலம் விளையும் பலனை நூறு வேள்விகளாலும் உண்டாக்க முடியாது.(31) கங்கையின் ஓடையில் ஒரு மனிதனின் எலும்புகள் கிடக்கும் காலம் வரை அவன் சொர்க்கத்தில் மதித்து வழிபடப்படுவான்.(32) நாள் புலர்கையில் இருளை அகற்றி, காந்தியில் சுடர்விட்டு எழும் சூரியனைப் போலவே, கங்கை நீரில் நீராடிய மனிதன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து காந்தியில் ஒளிர்வது காணப்படுகிறது.(33) கங்கையின் புனித நீர் இல்லாத நாடுகளும், திசைப்புள்ளிகளும் நிலவற்ற இரவுகள் போன்றவையோ, மலர்களற்ற மரங்களையோ போன்றவையாகும்.(34) உண்மையில், கங்கையில்லாத உலகம் என்பது, அறமற்ற பல்வேறு வகையினரையும், வாழ்முறைகளைக் கொண்டவர்களையும், அல்லது சோமமற்ற வேள்விகளைப் போன்றதாகும்.(35)

கங்கை இல்லாத நாடுகளும், திசைப்புள்ளிகளும், சூரியனற்ற ஆகாயத்தையோ, மலைகளற்ற பூமியையோ, காற்றில்லாத வெளியையோ போன்றவை என்பதில் ஐயமில்லை.(36) மூவுலகங்களில் உள்ள மொத்த உயிரினங்களும் கங்கையின் மங்கல நீரால் தொண்டாற்றப்பட்டால் {தர்ப்பணம் செய்யப்பட்டால்} எந்த ஆதாரத்தில் இருந்தும் அடையப்பட இயலாத இன்பத்தை அவை அடையும்.(37) சூரியனின் கதிர்களால் வெப்பமூட்டப்பட்ட கங்கையின் நீரைப் பருகும் ஒருவன், மாட்டுச் சாணத்தில் இருந்து சேகரிக்கப்படும் கோதுமை, அல்லது வேறு எந்தத் தானியத்தையும் உண்டு வாழும் நோன்பு தருவதை விடப் பெரும்பலனை அடைவான்.(38) தன்னுடலைத் தூய்மை செய்து கொள்ள ஓராயிரம் சாந்திராயணச் சடங்குகளைச் செய்யும் ஒருவன், கங்கை நீரைப் பருகும் ஒருவன் ஆகிய இருவரும் இணையானவர்களா? இல்லையா என்பதைச் சொல்ல முடியாது.(39) ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக் காலில் நிற்பவன், கங்கையின் கரையில் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்தவன் ஆகிய இருவரும் இணையானவர்களா? இல்லையா என்பதைச் சொல்ல முடியாது[1].(40)கங்கையின் கரையில் நிரந்தரமாக வாழும் ஒருவன், பத்தாயிரம் யுகங்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பவனை விடத் தகுதியில் மேம்பட்டவனாவான்.(41) நெருப்புடன் தொடர்பேற்படுகையில் மிச்சமில்லாமல் எரியும் பஞ்சைப் போலவே, கங்கையில் நீராடும் மனிதனின் பாவங்களும் மிச்சமில்லாமல் எரிக்கப்படுகின்றன.(42) துன்பத்தால் பீடிக்கப்பட்ட இதயங்களுடன் தங்கள் சோகத்தை விலக்கும் கதியை அடைய முனையும் உயிரினங்களுக்குக் கங்கையைவிட மேன்மையான கதி வேறேதும் இல்லை.(43) கருடனைக் கண்டதும் தங்கள் நஞ்சை இழக்கும் பாம்புகளைப் போலவே, கங்கையின் புனித ஓடையைக் கண்ட உடனேயே ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(44) அறப்புகழற்றவர்கள், பாவம் நிறைந்த செயல்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் ஆகியோர் கங்கையில் தங்கள் புகழையும், பாதுகாப்பையும், மீட்புக்கான வழிகளையும், தங்கள் புகலிடத்தையும், மறைவிடத்தையும் கொண்டுள்ளனர்[2].(45)கொடிய இயல்புடன் கூடிய பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இழிந்தவர்கள் பலர், நரகத்தில் மூழ்கப் போகும்போது (பாவிகளாக இருந்தாலும், அவர்கள் கங்கையின் துணையை நாடினால்) மறுமையில் கங்கையால் அவர்கள் மீட்கப்படுவார்கள் {கங்கை அவர்களைக் கரையேற்றுவாள்}.(46) ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே, கங்கையின் புனித நீரில் நாள்தோறும் மூழ்குபவர்கள், பெரும் முனிவர்களுக்கும், வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களுக்கும் இணையானவர்களாவார்கள்.(47) ஓ! பிராமணரே, பணிவோ, அடக்கமான நடத்தையோ இல்லாத மனிதர்களில் இழிந்தவர்களும், பாவம் நிறைந்தவர்களும், கங்கையில் அருகில் செல்வதால் அறவோராகவும், நல்லோராகவும் மாறுவார்கள்.(48) தேவர்களுக்கு அமுதம் போலவும், பித்ருக்களுக்கு ஸ்வதா போலவும், நாகர்களுக்குச் ஸுதா[3] போலவும் மனிதர்களுக்கு உள்ளதே கங்கையின் நீராகும்.(49) பசியால் பீடிக்கப்பட்ட பிள்ளைகள் தங்கள் அன்னையரிடம் உணவை வேண்டுவதைப் போலவே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பும் மனிதர்களும் கங்கையிடம் செல்கிறார்கள்.(50)சுயம்புவான பிரம்மனின் உலகமே இடங்கள் அனைத்திலும் முதன்மையாக இருப்பதைப் போல, நீராட விரும்புவோருக்கு ஆறுகள் அனைத்திலும் முதன்மையான கங்கையே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.(51) தேவர்களுக்குத் தலைமை ஆதாரங்களாகப் பூமியும், பசுக்களும் சொல்லப்படுவதைப் போலவே, வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கங்கையே தலைமை ஆதாரமாக இருக்கிறாள்[4].(52) சூரியனிலும், சந்திரனிலும் தோன்றும் அமுதத்தைக் கொண்டு தங்களை ஆதரித்துக் கொள்ளும் தேவர்களைப் போலவே மனிதர்கள் ஆதரித்துக் கொள்ளத்தக்கது கங்கையின் நீராகும்.(53) கங்கைக் கரைகளில் உள்ள மண்ணை எடுத்துப் பூசிக் கொள்பவன், தேவ களிம்புகளால் அலங்கரிக்கப்பட்டுச் சொர்க்கத்தில் இருக்கும் சொர்க்கவாசியைப் போலத் தன்னைக் கருதிக் கொள்ளலாம்.(54) கங்கைக் கரையில் உள்ள சேற்றைத் தன் தலையில் பூசிக் கொள்பவன், சுற்றிலும் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றும் சூரியனுக்கு இணையான பிரகாசத்தை அடைவான்.(55)கங்கை நீர்த்துகள்களால் ஈரமூறிய காற்று ஒருவனைத் தீண்டிய உடனேயே அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாகிறான்.(56) துன்பங்களால் பீடிக்கப்பட்ட மனிதன் கனம் தாங்காமல் மூழ்கப்போகும் நிலையில் அந்தப் புனித ஓடையைக் கண்டதும், இதயத்தில் எழும் இன்பத்தால் தன் துன்பங்கள் அனைத்தும் விலகுவதைக் காண்கிறான்.(57) கங்கையானவள், அன்னங்கள், கோகங்கள் மற்றும் தன் மார்பில் விளையாடும் பிற நீர்க்கோழிகளின் {சக்ரவாகங்களின்} இனிய ஒலியின் மூலம் கந்தர்வர்களையும், தன் உயர்ந்த கரைகளால் {மணல் மூடுகளினால்} பூமியில் உள்ள மலைகளையும் கங்கை அறைகூவி அழைக்கிறாள்[5].(58) அவளது பரப்பில் மொய்க்கும் அன்னங்கள் மற்றும் பிற வகை நீர்க்கோழிகளையும், பசுக்கள் மேயும் மேய்ச்சல் நிலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கரைகளைக் கொண்டிருப்பதையும் கண்டு சொர்க்கதேவி தன் செருக்கை அழிக்கிறாள்.(59) கங்கைக்கரையில் வசிப்பதின் மூலம் ஒருவன் அனுபவிக்கும் உயர்ந்த இன்பமானது சொர்க்கத்தில் வசிக்கும் ஒருவனுக்குக்கூடக் கிட்டாது.(60)வாக்கு, எண்ணம் மற்றும் வெளிப்படையான செயல் ஆகியவற்றின் மூலம் செய்த பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதனும் கங்கையைக் கண்ட உடனே தூய்மையடைவான் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(61) அந்தப் புனித ஓடையைக் கண்டு, அதைத் தொட்டு, அதன் நீரில் நீராடும் ஒருவன், தன்னுடைய ஏழு தலைமுறை மூதாதையர்களையும், ஏழு தலைமுறை வழித்தோன்றல்களையும் {வாரிசுகளையும்} இன்னும் அதிக மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் காப்பாற்றுவான்.(62) கங்கைக் குறித்துக் கேட்டு, அந்த ஆற்றுக்குச் செல்ல விரும்பி, அதன் நீரைப் பருகி, அதன் நீரைத் தொட்டு, அதனில் நீராடும் ஒரு மனிதன், தன் தந்தைவழி மற்றும் தாய்வழி குலங்கள் இரண்டையும் காப்பாற்றுகிறான்.(63) கங்கையின் நீரைக் கண்டு, தொட்டுப் பருவதன் மூலமோ, அதைப் புகழ்வதன் மூலமோ, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாவிகள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகின்றனர்.(64) பிறவி, வாழ்வு, கல்வி ஆகியவற்றைக் கனிநிறைந்ததாக்க விரும்புபவர்கள், கங்கைக்குச் சென்று, நீர்க்காணிக்கைகளை வழங்குவதன் மூலம் பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.(65)

கங்கையில் நீராடுவதன் மூலம் ஒருவன் ஈட்டும் தகுதியானது, மகன்களைப் பெறுவதாலோ செல்வத்தைப் பெறுவதாலோ, தகுதிமிக்கச் செயல்களைச் செய்வதாலோ ஈட்ட இயலாததாகும்.(66) உடல் திறனிருந்தும், புனித ஓடையான மங்கலக் கங்கையைக் காண முனையாதவர்களை, பிறவிக் குருடர்களாகவோ, இறந்தவர்களாகவோ, வாதம் அல்லது முடத்தன்மையின் மூலம் நகரும் சக்தியற்றவர்களாகவோ நிச்சயம் கருதலாம்.(67) நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த பெரும் முனிவர்களாலும், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் கூடத் துதிக்கப்படும் இந்தப் புனித ஓடையை எந்த மனிதன் மதிக்க மாட்டான்?(68) காட்டுத்துறவிகள், இல்லறவாசிகள், யதிகள், பிரம்மச்சாரிகள் போன்றோரால் பாதுகாப்பு நாடப்படும் கங்கையிடம் எந்த மனிதன் பாதுகாப்பை நாட மாட்டான்?(69) தன் உயிர் மூச்சானது தன் உடலை விட்டு வெளியேறப்போகும் காலத்தில் குவிந்த ஆன்மாவுடன் கங்கையை நினைக்கும் அறவொழுக்கம் கொண்ட மனிதன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்வான்.(70)

மரணகாலத்தில் கங்கையின் அருகில் வசித்து, மதிப்புடன் அவளைத் துதிக்கும் மனிதன், அனைத்து வகைத் துயரங்கள், பாவம் மற்றும் மன்னர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(71) மிகப்புனிதமான அந்த ஓடை {கங்கை} ஆகாயத்தில் இருந்து பாய்ந்த போது, மஹேஸ்வரன் அவளைத் தன் தலையில் தாங்கினான். இந்த ஓடையே சொர்க்கத்திலும் துதிக்கப்படுகிறது[6].(72) இந்தப் புனித ஓடையின் மூன்று பாதைகளால் மூவுலகங்களும் (பூமி, சொர்க்கம் மற்றும் பாதாள லோகங்களும்) அலங்கரிகப்பட்டிருக்கின்றன. அந்த ஓடையின் நீரைப் பயன்படுத்தும் மனிதன் நிச்சயம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான்.(73) சொர்க்கத்தில் தேவர்களுக்குச் சூரியக் கதிரைப் போலவும், பித்ருக்களுக்குச் சந்திரமாஸைப் போலவும், மனிதர்களுக்கு மன்னனைப் போலவும், அனைத்து ஓடைகளுக்கும் கங்கை இருக்கிறது.(74) கங்கையை இழக்கும்போது ஒருவன் அடையும் துயரத்தின் அளவுக்கு, தாயையோ, தந்தையையோ, மகன்களையோ, மனைவிகளையோ, செல்வத்தையோ இழப்பவன் துயரை உணர மாட்டான்.(75)கங்கையைக் காணும் ஒருவன் அடையும் இன்பத்தின் அளவுக்கு எவனும் பிரம்ம லோகத்திற்கு வழிவகுக்கும் செயல்களைச் செய்வதன் மூலமோ, சொர்க்கத்திற்கு வழிவகுக்கக்கூடிய வேள்விகள் மற்றும் சடங்குகளின் மூலமோ, பிள்ளைகள் அல்லது செல்வத்தின் மூலமோ அஃதை {இன்பத்தை} அடைய மாட்டான்.(76) கங்கையைக் காண்பதன் மூலம் மனிதர்கள் அடையும் மகிழ்ச்சியானது, அவர்கள் முழு நிலவைக் காணும் போது அடைவதற்கு {அடையும் மகிழ்ச்சிக்கு} இணையானதாகும்.(77) கங்கையிடம் முழுமையாக நிலைபெறச் செய்த மனத்துடனும், ஒப்பற்ற மதிப்புடனும், அவளைத் தவிர அண்டத்தில் துதிக்கத்தக்க வேறேதும் இல்லை {அவளே ஆதாரம், அவளே பரகதி} என்ற உணர்வுடனும், வீழாத உறுதியுடனும் உள்ள மனிதன் கங்கையின் அன்புக்குரியவனாகிறான் {அவளது அனுக்கிரகத்திற்குப் பாத்திரனாவான்}.(78) பூமி, ஆகாயம், அல்லது சொர்க்கத்தில் வாழும் உயிரினங்களும், உண்மையில் மிக மேன்மையானவர்களும் எப்போதும் கங்கையில் நீராட வேண்டும். உண்மையில், கடமைகள் அனைத்திலும் அறவோருக்கு இதுவே முதன்மையான கடமையாகும்.(79) சாம்பலாக்கப்பட்ட சாகரனின் மகன்கள் அனைவரையும் அடித்துச் சென்றதாலும் புனிதமான கங்கையின் புகழ் உம்மையில் இருந்து சொர்க்கம் வரை மொத்த அண்டத்திலும் பரவியிருக்கிறது[7].(80)கங்கையில் காற்றால் எழுப்பப்படுபவையும், பிரகாசமானவையும், அழகியவையும், உயர்ந்தவையும், வேகமாகப் பாய்பவையுமான அலைகளால் கழுவப்பட்ட மனிதர்கள், தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, ஆயிரங்கதிர் கொண்ட பகல் நட்சத்திரத்திற்கு ஒப்பான காந்தியைப் பெறுவார்கள்.(81) வேள்விகளில் ஊற்றப்படும் நெய் மற்றும் பிற பானங்களைப் போன்ற பெருமையும், புனிதமும் கொண்டதும், பெரும் வேள்விகளின் பலன்களைத் தரவல்லதுமான கங்கையின் நீரில் தங்கள் உடல்களை விட்டவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள், நிச்சயம் தேவர்களுக்கு இணையான நிலையை அடைவார்கள்.(82) உண்மையில், புகழையும், பெரும் பரப்பையும் கொண்டவளும், மொத்த அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவளும், மனிதர்களாலும், முனிவர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் மதிக்கப்படுபவளான கங்கையானவள், குருடர்கள், மூடர்கள், அனைத்தையும் இழந்தவர்கள் ஆகியோரின் விருப்பங்கள் அனைத்தையும் கனியும் நிலையை அளிக்கவல்லவளாவாள்.(83) அண்டமனைத்தையும் காப்பவளும், மூவோடைகளாகப் பாய்பவளும், அனைத்து வகை நன்மைகளை உண்டாக்கவல்லதும், உயர்ந்ததும், புனிதமானதும், தேனைப் போன்று இனியதுமான நீரால் எப்போதும் நிறைந்திருப்பவளுமான கங்கையைத் தஞ்சமடைந்தவர்கள் சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவதில் வெல்வார்கள்.(84) கங்கையின் அருகில் வசிப்பவனும், நாள்தோறும் அவளைக் காண்பவளுமான மனிதன், அவளைப் பார்ப்பதன் மூலமும், தொடுவதன் மூலமும் தூய்மையடைகிறான். தேவர்கள் அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் அனைத்து வகை மகிழ்ச்சியையும் கொடுப்பார்கள்.(85)

ஒவ்வொரு உயிரினத்தையும் பாவத்தில் இருந்து பாதுகாத்து, சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவகுக்கவல்லவளாகக் கங்கை கருதப்படுகிறாள். அவள் விஷ்ணுவின் தாயான பிருச்நியாகக்[8] கருதப்படுகிறாள். சொல் அல்லது வாக்காக அவளே கருதப்படுகிறாள். அவள் வெகு தொலைவுக்குச் செல்வபவளாகவும், எளியதில் அடையப்பட முடியாதவளுமாக இருக்கிறாள். அவள் மங்கலத்தன்மை மற்றும் செழிப்பின் உடல் வடிவம் ஆவாள். அவள், தலைமைத்தன்மை அல்லது பலம் முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொடுக்க வல்லவளாவாள். அவள் எப்போதும் தன் அருளை வழங்குகிக் கொண்டிருக்கிறாள். அவளே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களை வெளிக்காட்டுபவளும், அனைத்து உயிரினங்களின் உயர்ந்த புகலிடமும் ஆவாள். இம்மையில் அவளது பாதுகாப்பை நாடுபவர்கள், நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள்.(86) கங்கையின் புகழானது, ஆகாயம், சொர்க்கம், பூமி, திசைகள் மற்றும் துணைத்திசைகளின் புள்ளிகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. அந்த முதன்மையான ஓடையின் நீரைப் பயன்படுத்தவதுன் மூலம் மனிதர்கள் எப்போதும் உயர்ந்த வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறார்கள்.(87) கங்கையைக் கண்டு, அவளைப் பிறருக்குச் சுட்டிக் காட்டும் மனிதன், கங்கையானவள் தன்னை மறுபிறவியில் இருந்து மீட்பதையும், தனக்கு முக்தியை அருள்வதையும் காண்கிறான். கங்கையானவள், தேவர்களின் படைத்தலைவனான குஹனைத் தன் கருவறையில் சுமந்தாள். உலகங்களில் விலைமதிப்புமிக்கத் தங்கத்தையும் அவள் தன் கருவறையில் சுமக்கிறாள். ஒவ்வொரு நாளும் காலையில், அவளது நீரில் நீராடுபவர்கள், அறம் பொருள் இன்பமென்ற முத்தொகையையும் அடைவதில் வெல்கிறார்கள். மேலும் அந்த நீரானது, வேள்வி நெருப்பில் மந்திரங்களுடன் ஊற்றப்படும் நெய்யின் புனிதத்துக்கு இணையானதாக இருக்கிறது. பாவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்ல அவள், தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தவளாவாள், மேலும் அவளது ஓடையானது ஒவ்வொருவராலும் உயர்வாக மதிக்கப்படுகிறது.(88) கங்கையானவள், இமயத்தின் மகளும், ஹரனின் மனைவியும், சொர்க்கம் மற்றும் பூமி ஆகிய இரண்டின் ஆபரணமுமாவாள். அவள் மங்கலமான அனைத்தையும் வழங்குபவளும், தலைமைத்தன்மை அல்லது பலம் முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களை அளிக்கவல்லவளும் ஆவாள்.(89) உண்மையில், ஓ! ஏகாதிபதி, கங்கையானவள் அறத்தின் நீர் வடிவமாவாள். அவள் பூமியில் நீர் வடிவில் ஓடிக் கொண்டிருக்கும் சக்தியுமாவாள். அவள், வேள்வி நெருப்பில் மந்திரங்களுடன் ஊற்றப்படும் நெய்யுடைய காந்தியைக் கொண்டவள் ஆவாள். அவள் எப்போதும் பேரலைகளாலும், அவளது நீரில் தூய்மைச் சடங்குகளைச் செய்யும் பிராமணர்களாலும் எப்போதும் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். சொர்க்கத்தில் இருந்து பாய்ந்த அவளைச் சிவன் தன் தலையில் தாங்கினான். உண்மையில் சொர்க்கங்களின் தாயான அவள், சம வெளிகளில் பாய்ந்து, பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மதிப்புமிக்க நன்மைகளை வழங்குவதற்காகவும் உயர்ந்த மலையில் உதித்தாள்.(90)அவளே அனைத்துப் பொருட்களின் உயர்ந்த காரணமாகவும்; முற்றிலும் களங்கமற்றவளாகவும் இருக்கிறாள். அவள் பிரம்மத்தைப் போல நுட்பமானவளாக இருக்கிறாள். அவள் சிறந்த மரணப் படுக்கையை அளிக்கிறாள். அவள் உயிரினங்களை மிக விரைவில் சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறாள். பேரளவு நீருடன் அவள் பாய்கிறாள். அவள் அனைவருக்கும் பெரும்புகை அளிக்கிறாள். அவள் அனைத்து வடிவங்களுடனும் அடையாளம் காணப்படுகிறாள். வெற்றியால் மகுடம் சூட்டபட்ட மனிதர்களால் அவள் பெரிதும் விரும்பப்படுகிறாள். கங்கையில் நீராடியவர்களுக்கு அவளே சொர்க்கத்தின் பாதையாக இருக்கிறாள்.(91) கங்கையானவள் மன்னிக்கும் தன்மையில், பாதுகாப்பதில், தன்னால் வாழ்பவர்களை ஆதரிப்பதில் பூமாதேவிக்கு இணையானவள் என்றும், சக்தியிலும், காந்தியிலும் நெருப்புக்கும், சூரியனுக்கும் இணையானவள் என்றும், மறுபிறப்பாளர்களுக்குக் கருணை காட்டும் காரியத்தில் எப்போதும் குஹனுக்கு இணையானவள் என்றும் பிராமணர்கள் கருதுகிறார்கள்.(92) முனிவர்களால் புகழப்படுபவளும், விஷ்ணுவின் பாதத்தில் இருந்து உண்டாகுபவளும், மிகப் பழமையானவளும், மிகப் புனிதமானவளுமான அந்த ஓடையை இம்மையில் தங்கள் மொத்த ஆன்மாக்களுடன் மனத்தாலும் நாடும் மனிதர்கள், பிரம்மலோகம் செல்வதில் வெல்வார்கள்.(93) பிள்ளைகள், பிற உடைமைகள், அனைத்து வகை இன்ப நிலைகளையும் கொண்ட உலகங்கள் ஆகியவை நிலையற்றவை, அல்லது அழியத்தக்கவை என்று முழுமையாக நம்புபவர்களும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும், பிரம்மத்துடன் அடையாளம் காணப்படும் நிலையில் எப்போதும் நீடித்திருக்கும் நிலையை அடைய விரும்புபவர்களுமான மனிதர்கள், தாயிடம் மகன் கொள்ளும் அன்பையும், மதிப்பையும் கொண்டு கங்கைக்குத் தங்கள் துதிகளை எப்போதும் செலுத்துகின்றனர்.(94) வெற்றியை அடைய விரும்பும் தூய ஆன்மா கொண்ட மனிதன், சாதாரணப் பாலுக்குப் பதிலாக அமுதத்தைக் கொடுக்கும் பசுவைப் போன்றவளும், செழிப்பின் உடல் வடிவம் போன்றவளும், எங்கும் இருப்பவளும், உயிரினங்களின் மொத்த அண்டத்தில் இருப்பவளும், அனைத்து வகை உணவுகளின் ஊற்றுக்கண்ணாக இருப்பவளும், மலைகள் அனைத்தின் அன்னையும், அறவோர் அனைவரின் புகலிடமும், அளவிலா பலமும், சக்தியும் கொண்டவளும், பிரம்மனின் இதயத்திற்கு இன்பமளிப்பவளுமான கங்கையின் பாதுகாப்பை நாட வேண்டும்.(95)

பகீரதன் கடுந்தவங்களைச் செய்து, பரமத்தலைவனுடன் (விஷ்ணுவுடன்) கூடிய தேவர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்து, கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான். அவளிடம் செல்லும் மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் உள்ள அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவதில் வெல்கிறார்கள்.(96) கங்கை தரும் பலன்களில் சிறு பகுதியை மட்டுமே என் புத்தியின் துணையால் கண்டு நான் உமக்குச் சொல்லியிருக்கிறேன். எனினும், அந்தப் புனித ஆற்றின் தகுதிகள் அனைத்தையும், அல்லது உண்மையில் அவளது பலம் மற்றும் புனிதத்தன்மை அனைத்தையும் உரைக்க எனக்குச் சக்தி கிடையாது.(97) ஒருவனால் தன் சக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தி மேரு மலையில் உள்ள கற்களை எண்ணி விடவும், பெருங்கடலில் உள்ள நீரை அளந்துவிடவும் முடியலாம். ஆனால் கங்கை நீரின் பலன்கள் அனைத்தையும் அவன் எண்ணிவிட முடியாது.(98) எனவே, பெரும் அர்ப்பணிப்புடன் நான் சொன்ன கங்கையில் சில குறிப்பிட்ட பலன்களைக் கேட்ட ஒருவன், நம்பிக்கையுடனும், பக்தியுடனும், எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை அவற்றை மதிக்க வேண்டும்.(99) நான் சொன்ன பலன்களைக் கேட்டதன் விளைவால், நீர் மூவுலகங்களையும் உமது புகழால் நிறைத்து, எந்த மனிதனும் அடைவதற்கரியதும், அளவில் பெரியதுமான வெற்றியை நிச்சயம் அடைவீர். தன்னை மதிப்பவர்களுக்குக் கங்கையால் உண்டாக்கப்பட்ட இன்பமிக்கப் பல பகுதிகளை நீர் மிக விரைவில் அடைந்து, நிச்சயம் இன்பத்தில் திளைப்பீர்.(100) இதயப்பணிவுடன் தன்னிடம் அர்ப்பணிப்பு கொள்வோருக்குக் கங்கை எப்போதும் அருள்புரிவாள். தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோருக்கு அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அவள் அளிப்பாள். உயர்ந்த அருளைக் கொண்டவளான கங்கை, உமது இதயத்தையும் என் இதயத்தையும் அறம் நிறைந்த குணங்களில் ஈர்க்க வேண்டுகிறேன்” என்றார் {முனிவர்}”.(101)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மாவையும், பெருங்காந்தியையும் கொண்டவரும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், கல்விமானுமான அந்தத் தவசி, சீல நோன்பு நோற்கும் அந்த வறிய பிராமணரிடம் இவ்வகையில் கங்கையின் முடிவிலா பலன்களைக் குறித்துப் பேசி ஆகாயத்தில் உயர்ந்தார்.(102) சீல நோன்பை நோற்கும் அந்த வறிய பிராமணர், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசியின் சொற்களால் விழிப்படைந்து, கங்கையின் பாதுகாப்பை முறையாகப் பெற்று உயர்ந்த வெற்றியை அடைந்தார்.(103) ஓ! குந்தியின் மகனே, நீயும் பேரர்ப்பணிப்புடன் கங்கையை நாடி, அதன் மூலம் வெகுமதியையும், உயர்ந்த சிறப்பான வெற்றியையும் அடைவாயாக” {என்றார் பீஷ்மர்}.(104)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கங்கையின் புகழ் நிறைந்த இவ்வுரையைப் பீஷ்மரிடம் இருந்து கேட்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுடன் சேர்ந்து பெருமகிழ்ச்சியடைந்தான்.(105) கங்கையின் புகழ் நிறைந்த இந்தப் புனித உரையைச் சொல்லும், அல்லது கேட்கும் எந்த மனிதனும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்” {என்றார் வைசம்பாயனர்}.(106)

பிராமண நிலை! – அநுசாஸனபர்வம் பகுதி – 27- பிராமண நிலை அடைதற்கரியது என்பதைச் சொல்ல மதங்கனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்} யுதிஷ்திரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சாத்திரங்களில் ஞானமும், அறிவும் கொண்டராக, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக் கொண்டவராக, பல்வேறு வகையான சிறந்த குணங்களைக் கொண்டவராக, வயதில் முதியவராக நீர் இருக்கிறீர்.(1) புத்தி, ஞானம், தவங்களில் பிறருக்கு மேம்பட்டவராகப் புகழப்படுகிறீர். எனவே, ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, அறம் தொடர்பாக நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்.(2) ஓ! மன்னா, இத்தகைய காரியங்களில் கேள்வி கேட்கத்தகுந்த வேறொரு மனிதன் உலகங்கள் அனைத்திலும் கிடையாது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ உள்ள ஒருவன், பிராமண நிலையை அடைவதில் வெல்வதெவ்வாறு? அதற்கான வழிமுறைகளைச் சொல்வதே உமக்குத் தகும். தாழ்ந்த மூன்று வகைகளில் எதையும் சார்ந்த ஒரு மனிதன், பிராமண நிலையை அடவதில் வெல்வது மிகக் கடுமையான தவங்களாலா? அறச்செயல்களா? சாத்திரங்களில் உள்ள ஞானத்தாலா? ஓ! பாட்டா இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, மூன்றில் எந்த வகையைச் சார்ந்த எந்த மனிதரும் பிராமணநிலையை அடைய இயலாதவராவர். உயிரினங்கள் அனைத்திலும் உயர்ந்த நிலை அது.(5) மறுபிறவிகளுக்கு உட்பட்டு மீண்டும் மீண்டும் எண்ணற்ற வகை இருப்புகளில் பயணிப்பதன் மூலமே ஒருவன் இறுதியாக ஏதாவதொரு பிறவியில் பிராமணனாகப் பிறக்கிறான்.(6) ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக மதங்கருக்கும், ஒரு பெண் கழுதைக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல் ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(7) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் ஒரு மகனை அடைந்தான். அவன் வேறு வகை மனிதரால் உண்டாக்கப்பட்டவனாக இருந்தாலும்,[1] அவனது குழந்தைப்பருவ, இளமைப்பருவ சடங்குகள் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்பவே செய்யப்பட்டன. மதங்கன் என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை, அனைத்து சிறப்புகளையும் கொண்டவனாக இருந்தான்.(8) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவனது தந்தை, அச்செயலுக்குத் தேவைப்படும் பொருட்களைத் திரட்டி வருமாறு அவனைப் பணித்தார். தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, காரியத்தை நிறைவேற்றப் புறப்பட்ட அவன், ஒரு கழுதையால் இழுக்கப்பட்ட தேரை மிக வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.(9) அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த கழுதையானது வயதில் இளையதாக இருந்தது. எனவே, அந்த விலங்கு கடிவாளத்திற்குக் கட்டுப்படாமல், தன்னை ஈன்ற தாயான பெண்கழுதையின் அருகில் தேரைக் கொண்டு சென்றது. இதனால் பொறுப்பு நிறைவேற்படாத மந்தங்கன் சாட்டையினால் அந்த விலங்கின் மூக்கில் மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான்.(10)தன் பிள்ளையின் மூக்கில் உள்ள வன்முறைக் குறியீடுகளைக் கண்ட அந்தப் பெண் கழுதை அதனிடம் அன்பால் நிறைந்து, “ஓ! குழந்தாய், இவ்வாறு நடத்தப்படுவதற்காக வருந்தாதே. உன்னைச் செலுத்திச் செல்பவன் ஒரு சண்டாளனாவான்.(11) ஒரு பிராமணனிடம் கடுமையேதும் இருக்காது. ஒரு பிராமணன் அனைத்து உயிரினங்களின் நண்பன் எனச் சொல்லப்படுகிறான்.[2] அவனே அனைத்து உயிரினங்களுக்கும் ஆசானாகவும், அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறான். {அப்படிப்பட்ட} அவனால் எந்த உயிரினத்தையும் கொடுமைப்படுத்த இயலுமா?(12) எனினும் இவன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன். உன்னைப் போன்ற இளம் வயதுடைய உயிரினத்திடமும் அவன் கருணை காட்டவில்லை. இவ்வழியில் நடப்பதால் அவன் தன் பிறப்பின் வகையையே உறுதி செய்து கொண்டிருக்கிறான். தன் தந்தையிடம் இருந்து இவன் அடைந்திருக்கும் இயல்பானது, பிராமண இயல்பான கருணை, அன்பு ஆகியவை எழுவதைத் தடுக்கிறது” என்றது.(13)பெண் கழுதையின் இந்தக் கடுஞ்சொற்களைக் கேட்ட மதங்கன், தன் தேரில் இருந்து விரைவாகக் கீழே இறங்கி, அந்தப் பெண் கழுதையிடம், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, என் தாய் எக்குற்றத்தால் களங்கமடைந்தாள்?(14) நான் ஒரு சண்டாளன் என்பதை நீ எவ்வாறு அறிவாய்? தாமதிக்காமல் எனக்குப் பதிலளிப்பாயாக.(15) என் பிராமண நிலை எவ்வாறு தொலைந்தது. ஓ! பெரும் ஞானியே, தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(16)

அதற்கு அந்தப் பெண் கழுதை {மதங்கனிடம்}, “சவரத்தொழில் செய்யும் ஒரு சூத்திரன் மூலம் ஆசையால் தூண்டப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். எனவே, பிறப்பால் நீ ஒரு சண்டாளனாவாய். உனக்குப் பிராமண நிலை எப்போதும் கிடையாது” என்றது”[3].(17)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெண் கழுதையால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் தான் வந்த சுவடுகளின் வழியே மீண்டும் தன் இல்லம் நோக்கி சென்றான். அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது தந்தை,(18) “நான் செய்ய நினைத்த வேள்விக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் கடினமான பணியில் நான் உன்னை ஈடுபடுத்தினேன். உன் பொறுப்பை நிறைவேற்றாமல் நீ ஏன் திரும்பி வந்தாய்? உனக்கு ஏதும் {உடல்நலம்} சரியில்லையா?” என்று கேட்டார்.(19)

மதங்கன், “எவ்வித உறுதியுமற்ற வகையில், அல்லது மிகத் தாழ்ந்த வகையில் பிறந்த ஒருவன், சரியாக இருப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எவ்வாறு கருதமுடியும்? ஓ! தந்தையே, களங்கமுள்ள தாயைக் கொண்ட ஒருவனால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்?(20) ஓ! தந்தையே, மனிதர்களைவிட மேலானதாகத் தெரியும் இந்தப் பெண் கழுதை, நான் ஒரு சூத்திரனால் ஒரு பிராமணிப் பெண்ணிடம் பெறப்பட்டவன் என்று சொல்கிறது. இக்காரணத்தினால் நான் கடுந்தவங்களைச் செய்யப் போகிறேன்” என்றான்.(21)

அவன், தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தான் சொன்னதை உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பெருங்காட்டிற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(22) மகிழ்ச்சியாகப் பிராமண நிலையை அடையும் நோக்கத்திற்காகத் தவங்களைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்ட மதங்கன், தன் தவத்தின் கடுமையால் தேவர்களை எரிக்கத் தொடங்கினான்.(23)

இவ்வாறு தவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவனிடம் தேவர்களின் தலைவனான இந்திரன் தோன்றி, “ஓ! மதங்கா, அனைத்து வகை மனித இன்பங்களையும் தவிர்த்து இத்தகைய துன்பத்தில் நீ ஏன் உன் காலத்தைக் கழிக்கிறாய்?(24) நான் உனக்கு வரமளிக்கப் போகிறேன். நீ விரும்பும் வரங்களைச் சொல்வாயாக. தாமதிக்காமல் உன் நெஞ்சில் இருப்பதைச் சொல்வாயாக. அடைவதற்கரிதாக இருந்தாலும் நான் அஃதை உனக்களிப்பேன்” என்றான்.(25)

மதங்கன், “பிராமண நிலையை அடைய விரும்பியே நான் இந்தத் தவங்களைச் செய்யத் தொடங்கினேன். அஃதை அடைந்ததும் நான் இல்லந்திரும்புவேன். இதுவே என்னால் வேண்டப்படும் வரமாகும்” என்றான்”.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன், அவனிடம், “ஓ! மதங்கா, நீ அடைய விரும்பும் பிராமண நிலையானது உண்மையில் உன்னால் அடையப்பட முடியாத நிலையாகும்.(27) நீ அஃதை அடைய விரும்புகிறாய் என்பது உண்மையே என்றாலும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அஃது அடையப்பட இயலாது. ஓ! மூடப்புத்தி கொண்டவனே, நீ இந்நாட்டத்தில் பிடிவாதமாயிருந்தால் நிச்சயம் அழிவையே அடைவாய். எனவே தாமதிக்காமல் இந்த வீண்முயற்சியில் இருந்து விலகுவாயாக.(28) அனைத்திலும் முதன்மையான பிராமண நிலையை அடைய விரும்பும் இந்த உனது நோக்கமானது, தவங்களால் வெல்லப்பட இயலாததாகும். எனவே, அந்த முதன்மையான நிலையை அடைய ஆசைப்படுவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடைவாய்.(29) சண்டாளனாகப் பிறந்த ஒருவனால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் மிகப் புனிதமாகக் கருதப்படும் அந்நிலையை {பிராமண நிலையை} ஒருபோதும் அடைய முடியாது” என்றான் {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}”.(30)

மதங்கனின் தவம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 28-பிராமண நிலை அடைவதற்குக் கடுந்தவம் இருந்த மதங்கன்; அவனைத் தடுத்த இந்திரனென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மங்கா மகிமை கொண்டோனே, இந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கட்டுப்பாடுடைய நோன்புகள் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்மாவுடன் கூடிய மதங்கன், (தேவர்களின் தலைவனுடைய ஆலோசனைகளைக் கவனித்துக் கேட்காமல்), நூறு வருட காலம் ஒற்றைக் காலில் நின்றான்.(1)

பெரும்புகழைக் கொண்ட சக்ரன் மீண்டும் அவன் முன்பு தோன்றி, அவனிடம், “ஓ! குழந்தாய், பிராமண நிலை அடையத்தக்கதன்று. நீ அதில் நாட்டங்கொண்டாலும், அதை அடைவது உனக்குச் சாத்தியமில்லை.(2) ஓ! மதங்கா, அந்த உயர்ந்த நிலையில் ஆசை கொள்வதன் மூலம் நீ நிச்சயம் அழிவடையப் போகிறாய். ஓ! மகனே, இத்தகைய மூர்க்கத்தை வெளிப்படுத்தாதே. இஃது உன்னால் பின்பற்றத்தக்க அறப்பாதையல்ல.(3) ஓ! மூடப்புத்தி கொண்டோனே, இவ்வுலகில் நீ அதை அடைவது சாத்தியமில்லை. உண்மையில், அடையப்பட முடியாததில்ஆசை கொண்டுள்ள நீ எப்போதும் அழிவை அடையலாம்.(4) நான் மீண்டும் மீண்டும் உன்னைத் தடுத்து வருகிறேன். எனினும், தொடர்ந்து என் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் உன் தவங்களின் துணையுடன் உயர்ந்த நிலையை அடைய முனைவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடையப் போகிறாய்.(5)

விலங்கு வாழ்வில் இருந்து ஒருவன் மனித நிலையை அடைகிறான். மனிதனாகப் பிறக்கும்போது, நிச்சயம் அவன் புல்காஸ, அல்லது சண்டாள வகையிலேயே பிறப்பான்.(6) ஓ! மதங்கா, உண்மையில் ஒருவன் புல்காஸம் எனும் பாவம் நிறைந்த இருப்பு வகையில் {புல்காஸனாகப்}[1] பிறந்து நீண்ட காலம் திரிய வேண்டும்.(7) ஓராயிரம் {1000} வருடகாலம் அவ்வகையில் {சண்டாளனாகக்} கடத்திய ஒருவன் அடுத்ததாகச் சூத்திர நிலையை அடைவான்.(8) அதன் பிறகு அந்தச் சூத்திர வகையிலேயே அவன் நீண்ட காலம் திரிய வேண்டும். முப்பதாயிரம் {30,000} ஆண்டுகளுக்குப் பிறகு அவன் வைசிய நிலையை அடைவான். அந்த வகையிலும் அவன் நெருங்காலத்தைக் கடத்த வேண்டும்.(9) சூத்திர இருப்புக்குக் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில் அறுபது மடங்கு காலம் {18 லட்சம் வருடங்கள் (30,000 X 60 =18,00,000)} இருந்த பிறகு அவன் அரச {க்ஷத்திரிய} வகையை அடைவான். க்ஷத்திரிய வகையிலும் அவன் நீண்ட காலத்தைக் கடத்த வேண்டும்.(10)இறுதியாகக் குறிப்பிட்ட காலத்தில் அறுபது {60} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் வீழ்ந்த பிராமணனாகப் பிறக்கிறான்.
{அதாவது 18,00,000X60 =10,80,00,000 பத்து கோடியே எண்பது லட்சம் வருடங்களுக்குப் பிறகு அவன் சத்திரிய வகையிலிருந்து, வீழ்ந்த பிராமணனாகப் பிறக்கிறான்}

இவ்வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(11) இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் இருநூறு {200} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் ஆயுதந்தரித்து வாழும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான். 
{அதாவது 10,80,00,000X200 =2,160,00,00,000 இரண்டாயிரத்து நூற்று அறுபது கோடி வருடங்களுக்குப் பிறகு அவன் ஆயுதந்தரித்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.}

அந்த வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(12) இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் முன்னூறு {300) மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் காயத்ரி மற்றும் பிற மந்திரங்களை உரைக்கும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.(13)
{அதாவது 2,160,00,00,000X300 =6,48,000,00,00,000 ஆறு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி வருடங்களுக்குப் பிறகு அவன் மந்திரங்களை உரைக்கும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.}

அந்த வகையிலேயே அவன் நீண்ட காலம் திரிய வேண்டும். இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் நானூறு {400} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான். அந்த வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(14)
{அதாவது 6,48,000,00,00,000X400 =259200000,00,00,000 வருட காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்}

அந்த இருப்புநிலையில் அவன் திரிந்து கொண்டிருக்கும்போது இன்பதுன்பம், விருப்புவெறுப்பு, போலியான மற்றும் தீய பேச்சு ஆகியவை அவனுக்குள் நுழைந்து அவனை இழிந்தவனாக்க முனையும்.(15) அந்த எதிரிகளை அடக்குவதில் வென்றால், அவன் உயர்ந்த கதியை அடைகிறான். மறுபுறம், அவனை அடக்குவதில் அந்த எதிரிகள் வென்றால், பனைமர உச்சியில் இருந்து தரையில் விழும் மனிதனைப் போல அவன் உயர்ந்த நிலையில் இருந்து கீழே வீழ்கிறான்.(16) ஓ! மதங்கா, நான் உனக்குச் சொல்வதை உறுதியாகத் தெரிந்து கொண்டு, வேறேதேனும் வரத்தைக் கேட்பாயாக. (நீ ஒரு சண்டாளனாகப் பிறந்திருப்பதால்) பிராமண நிலையானது உன்னால் அடையப்பட முடியாததாகும்” {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}.(17)

மதங்கன் பெற்ற வரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 29-பிராமண நிலை அடைய தவம் செய்த மதங்கன்; இந்திரனால் தடுக்கப்பட்டது; மீண்டும் தவம் செய்தது; பிராமண நிலையன்றி வேறு வரங்களைக் கேட்டுப் பெற்ற மதங்கன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட மதங்கன், அவன் சொன்னதைக் கேட்க மறுத்தான். மறுபுறம், ஒழுங்கமைக்கப்பட்ட நோன்புகள் மற்றும் தூய ஆன்மாவுடன் கூடிய அவன், ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக்காலில் நின்று கொண்டு, தன் ஆன்மாவை ஆழமான தியான யோகத்தில் ஈடுபடுத்தி, கடுந்தவங்களைப் பயின்று வந்தான்.(1) ஓராயிரம் வருடங்கள் கடந்ததும், மீண்டும் அவனைக் காண சக்ரன் அங்கே வந்தான். உண்மையில், பலனையும், விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்} அதே சொற்களையே மீண்டும் அவனிடம் சொன்னான்.(2)

மதங்கன் {இந்திரனிடம்}, “நான் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, தியானத்தில் குவிந்த ஆன்மாவுடன் ஒற்றைக் காலில் நின்று ஓராயிரம் ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன். பிராமண நிலையை அடைவதில் நான் இன்னும் ஏன் வெல்லாமல் இருக்கிறேன்?” என்று கேட்டான்.(3)

சக்ரன், “சண்டாளனாகப் பிறந்தவனால் எந்த வழிமுறைகளின் மூலமும் பிராமண நிலையை அடைய முடியாது. எனவே, நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. உன் கடும் உழைப்புக் கனியற்றதாகிவிடக்கூடாது” என்று சொன்னான்.(4)

தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் துயரால் நிறைந்தான். அவன் கயைக்குச் சென்று ஒற்றைக் காலில் நின்றபடியே நூறாண்டு காலத்தைக் கழித்தான்.(5) பொறுத்துக் கொள்ள மிகக் கடினமான அத்தகைய யோகத்தை நோற்றதன் விளைவால் தன் நாடி நரம்புகள் புடைத்து, கண்ணுக்குத் தெரியும் வகையில் மிகவும் மெலிந்து போனான். வெறும் தோலும் எலும்புகளும் கொண்டவனாக அவன் குறைந்து போனான். உண்மையில், அந்த அற ஆன்மா கொண்ட மனிதன் {மதங்கன்}, கயையில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த போது, மிகவும் சோர்வடைந்து கீழே தரையில் விழுந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். வரங்களை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை அளிப்பதில் ஈடுபடும் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, அவன் விழுவதைக் கண்டு, விரைவாக அந்த இடத்திற்கு வந்து உடனே அவனைத் தாங்கிக் கொண்டான்[1].(7)சக்ரன், “ஓ! மதங்கா, நீ நாடும் பிராமண நிலை உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை. அந்நிலை உன்னால் அடையப்பட முடியாததாக இருக்கிறது. உண்மையில் உன் வழக்கில் அது பல ஆபத்துகள் சூழப்பட்டதாக இருக்கிறது.(8) ஒரு மனிதன் ஒரு பிராமணரை வழிபடுவதால் மகிழ்ச்சியை அடைகிறான்; அவ்வாறு வழிபடுவதைத் தவிர்க்கும்போது அவன் துயரத்தையும் இடர்களையும் அடைகிறான். அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை வெகுமதியாகக் கருதுவதை, அல்லது ஆசைப்படுவதைக் கொடுப்பவனாகவும், அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ளதைக் காப்பவனாகவும் பிராமணன் இருக்கிறான்.(9) பிராமணர்கள் மூலமே பித்ருக்களும், தேவர்களும் நிறைவை அடைகின்றனர். ஓ! மதங்கா, படைக்கப்பட்டவற்றுள் முதன்மையானவனாகப் பிராமணன் சொல்லப்படுகிறான். ஆசைப்படும் பொருட்கள் யாவையும், ஆசைப்படப்பட்ட அதே வகையிலேயே பிராமணன் அருள்கிறான்[2].(10) எண்ணற்ற வகையில் இருக்கும் படைப்புகளில் திரிந்து, மீண்டும் மீண்டும் மறுபிறவிகளில் சுழலும் ஒருவன், அடுத்தடுத்த பிறவிகளிலேயே பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான்.(11) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் உண்மையில் அந்நிலையை அடைய முடியாது. நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. நீ வேண்டிக் கேட்கும் இந்தக் குறிப்பிட்ட வரமானது, உனக்குக் கொடுக்கப்பட இயலாததாக இருக்கிறது” என்றான் {இந்திரன்}.(12)

மதங்கன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் என்னை, (இத்தகைய சொற்களால்) நீ மேலும் துன்புறுத்துகிறாயா? இந்நடத்தையால், ஏற்கனவே இறந்துவிட்டவனை நீ அடித்துக் கொண்டிருக்கிறாய். பிராமண நிலையை அடைந்தும் அதைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறிய (என்னைப் போன்ற ஒருவனுக்குக் கருணைக் காட்டாமல் இருக்கும்) உனக்காக நான் பரிதாபப்படுகிறேன்[3].(13) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, மூன்று வகையினர் எவராலும் பிராமண நிலையை உண்மையில் அடைய முடியாது என்றால், ஐயோ, அந்த உயர்ந்த நிலையை (இயற்கையான வழிமுறைகளின் மூலம்) அடைவதில் வென்றவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லையே (பிராமணர்கள் எந்தப் பாவத்தைச் செய்யவில்லை)?(14) அடைதற்கரிதான செல்வத்தைப் போன்ற பிராமண நிலையை அடைந்தும், (தேவையான கடமைகளைச் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள முனையாதவர்கள் இம்மையில் இழிந்த ஈனர்களாகக் கருதப்பட வேண்டும்.(15) பிராமண நிலையை அடைவது மிகக்கடினமானது, அடைந்த பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்வதும் கடுமையானது என்பதில் ஐயமில்லை. அஃது அனைத்து வகைத் துன்பத்தையும் போக்கவல்லதாகும். ஐயோ, மனிதர்கள் அஃதை அடைந்தும் (அதற்குண்டான அறத்தையும் பிற கடமைகளையும் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள எப்போதும் முனைவதில்லையே.(16)அத்தகைய மனிதர்களும் பிராமணர்களாகக் கருதப்படும்போது, தன்னில் நிறைவடைந்தவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்திற்கும் மேம்பட்டவனும், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்தவனும், அனைத்து உயிரினிங்களிடமும் கருணை என்ற கடமையை நோற்பவனும், தற்கட்டுப்பாடு எனும் ஒழுக்கத்துடன் கூடியவனுமான நான் ஏன் அந்த நிலைக்குத் தகுந்தவனாகக் கருதப்படவில்லை?(17) ஓ! புரந்தரா, நான் நடத்தையில் ஒழுக்கம் கொண்டவனாக இருப்பினும், என் தாயின் குற்றத்தால் இந்த நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேனே, எவ்வளவு கெடுபேறு கொண்டவன் நான்?(18) ஓ! தலைவா, அடைய வேண்டிய நோக்கம் என இதயத்தில் நிலைநிறுத்தி, தொடர்ந்து இவ்வளவு முயற்சிகளைச் செய்த போதிலும் என்னால் அஃதை அடையமுடியவில்லை என்றால், விதியைத் தவிர்க்க முடியாது, அல்லது தனிப்பட்ட முயற்சிகளால் வெல்ல முடியாது என்பதில் ஐயமில்லை.(19) ஓ! அறவோனே, நிலை இவ்வாறிருக்கையில், உண்மையில் நான் உன் அருளுக்குத் தகுந்தவன் என்றால், அல்லது சிறு தகுதியையேனும் கொண்டிருந்தால் வேறு வரங்களை அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {மதங்கன்}”.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பலனையும், விருத்திரனையும் கொன்றவன் {இந்திரன்}, அவனிடம் {மதங்கனிடம்}, “வேண்டும் வரத்தைச் சொல்வாயாக” என்றான். இவ்வாறு பெரும் இந்திரனால் தூண்டப்பட்ட மதங்கன் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(21)

மதங்கன், “விரும்பிய வடிவை ஏற்கும் சக்தியுடன், வானத்தின் ஊடாகப் பயணிக்கவும், என் இதயத்தில் நான் நிலைநிறுத்தும் எந்த இன்பத்தை அனுபவிக்கவும் கூடிய வல்லமை எனக்கு வேண்டும். பிராமணர்கள், மற்றும் க்ஷத்திரியர்களின் விருப்பத்துடன் கூடிய துதிகள் எனக்கு வேண்டும்.(22) ஓ! தேவா, நான் உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! புரந்தரா, இவ்வுலகில் என் புகழை எப்போதும் வாழச் செய்யவும் வேண்டும்” என்றான்.(23)

சக்ரன் {மதங்கனிடம்}, “ஒரு குறிப்பிட்ட மந்திரத்தின் தேவனாக {சந்தோதேவனாகக்} கொண்டாடப்பட்டு, அனைத்துப் பெண்களாலும் நீ வழிபடப்படுவாய். ஓ! மகனே, உன் புகழ் மூவுலகங்களிலும் ஒப்பற்றதாக இருக்கும்” என்றான்[4].(24) அவனுக்கு இவ்வரங்களை அளித்த வாசவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். மதங்கனும் தன் உயிர் மூச்சைக் கைவிட்டு உயர்ந்த இடத்தை அடைந்தான்.(25) ஓ! பாரதா, பிராமண நிலை எவ்வளவு உயர்ந்தது என்பதை நீ இவ்வாறு காணலாம். பெரும் இந்திரனால் சொல்லப்பட்டதைப் போல அந்த நிலையானது (இயற்கையான பிறப்பு வழியாலன்றி) இம்மையில் அடையக்கூடியதல்ல” என்றார் {பீஷ்மர்}[5].(26)

பிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 30-வத்ஸ நாட்டு மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலை அடைந்த வரலாறு; வத்ஸ நாட்டு வீதஹவ்யனின் முன்னோர்கள்; காசி நாட்டு பிரதர்த்தனனின் முன்னோர்கள்; இரு நாட்டுக்கும் இருந்த பகை; வத்ஸர்களால் பீடிக்கப்பட்ட காசி; வீதஹவ்யனை வீழ்த்திய பிரதர்த்தனன்; பிருகுவிடம் தஞ்சமடைந்த வீதஹவ்யன்; அவனைத் தேடி வந்த பிரதர்த்தனன்; வீதஹவ்யன் பிராமணனான பிறகு அவனுக்கு உண்டான வழித்தோன்றல்களின் பட்டியல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, இந்தக் கதையை நான் கேட்டிருக்கிறேன். ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, பிராமண நிலையானது அடைவதற்கு மிக அரிதானது என்று நீர் சொல்கிறீர்.(1) எனினும், பழங்காலத்தில் விஷ்வாமித்திரரால் பிராமண நிலை அடையப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். எனினும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, அந்நிலை அடையப்பட இயலாதது என எங்களுக்கு நீர் சொல்கிறீர்.(2) பழங்காலத்தில் மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலையை அடைவதில் வென்றான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! பலமிக்கவரே, ஓ! கங்கையின் மைந்தரே, மன்னன் வீதஹவ்யன் மேன்மையடைந்த கதையை நான் கேட்க விரும்புகிறேன்.(3) அந்த மன்னர்களில் சிறந்தவன், பிராமண நிலை அடைவதில் எந்தச் செயல்களின் மூலம் வென்றான்? (பெரும்பலம் கொண்ட எவரிடம் இருந்தாவது அடையப்பட்ட) ஏதாவது வரத்தின் மூலமோ, தவ அறத்தின் மூலமோ அது நடந்ததா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, பெரும் புகழைக் கொண்ட அரசமுனி வீதஹவ்யன், அடைதற்கரிதானதும், உலகில் உள்ள அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுவதுமான பிராமண நிலையை அடைவதில் பழங்காலத்தில் வென்றான்.(5) பழங்காலத்தில் உயர் ஆன்ம மனு தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுக் கொண்டிருந்த போது, அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனும், சர்யாதி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒரு மகனை அடைந்தார்.(6) ஓ! ஏகாதிபதி அந்தச் சர்யாதியின் குலத்தில் ஹைஹயன் மற்றும் தாலஜங்கன் என்ற இரு மன்னர்கள் பிறந்தனர். ஓ! வெற்றிமிக்க மன்னர்களில் முதன்மையானவனே, அந்த இருவரும் வத்ஸ மகன்களாக {வத்ஸ நாட்டைச் சார்ந்தவர்களாக} இருந்தனர்[1]. ஓ! ஏகாதிபதி ஹைஹயனுக்குப் பத்து மனைவியர் இருந்தனர். ஓ! பாரதா, அவன் புறமுதுகிடாத வீரர்களான நூறு மகன்களை அவர்களிடம் {தன் மனைவிகளிடம்} பெற்றான்.(8) அவர்கள் அனைவரும் குணத்திலும் ஆற்றலிலும் ஒத்தவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பெரும்பலம் கொண்டவர்களாகவும், போரில் பெருந்திறம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் முற்றாகக் கற்றனர்.(9)ஓ! ஏகாதிபதி, காசியில் திவோதாசனின் பாட்டனான ஒரு மன்னன் இருந்தான். வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் ஹர்யஸ்வன் என்ற பெயரால் அறியப்பட்டான்[2]. ஓ! மனிதர்களின் தலைவா (வீதஹவ்யன் என்ற வேறு பெயரிலும் அறியப்பட்டிருந்த) மன்னன் ஹைஹயன், காசி நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து, கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கிடையில் கிடக்கும் அந்நாட்டிற்குச் சென்று மன்னன் ஹர்யஸ்வனுடன் போரிட்டு அவனைக் கொன்றான்.(11) இவ்வழியில் மன்னன் ஹர்யஸ்வனைக் கொன்ற பிறகு, பெரும் தேர்வீரர்களான ஹைஹயனின் மகன்கள் வத்சர்களின் நாட்டில் உள்ள இனிமையான தங்கள் நகரத்திற்கு அச்சமில்லாமல் திரும்பிச் சென்றனர்.(12) அதே வேளையில், காந்தியில் தேவனைப் போலத் தெரிபவனும், இரண்டாம் நீதிதேவன் போல இருந்தவனும், ஹர்யஸ்வதனின் மகனுமான சுதேவன், காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(13) காசிக்கு மகிழ்ச்சியை அளிப்பவனான அந்த அற ஆன்மா கொண்ட இளவரசன் தன் நாட்டைச் சில காலம் ஆண்டு வந்தான். அப்போது வீதஹவ்யனின் நூறு மகன்களும் மீண்டும் அவனது ஆட்சிப்பகுதிக்குள் படையெடுத்து வந்து, போரில் அவனை வீழ்த்தினார்கள்.(14)இவ்வாறு மன்னன் சுதேவனை வென்ற வெற்றியாளர்கள் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர். அதன் பிறகு, சுதேவனின் மகனான திவோதாசன் காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(15) வீதஹவ்யனின் மகன்களான அந்த உயர் ஆன்ம இளவரசர்களின் ஆற்றலை உணர்ந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான திவோதாசன், இந்திரனின் ஆணையின் பேரில் வாராணசி நகரத்தை மீண்டும் கட்டுமானம் செய்து அரணமைத்தான்[3].(16) திவோதாசனுடைய நாட்டின் எல்லைகளில் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் நிறைந்திருந்தனர். அனைத்து வகைப் பொருட்களும், தனிவகைப் பொருட்களும் அங்கு நிறைந்திருந்தன. செழிப்பில் பெருகும் கடைகள் மற்றும் கடைவீதிகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அந்த எல்லைகள் கங்கைக்கரையின் வடக்குப்புறத்தில் இருந்து கோமதியாற்றின் தென்கரை வரை பரந்திருந்தது. அது {அந்த வாராணஸி நகரமானது} (இந்திரனின் நகரமான அமராவதியைப் போல) இரண்டாம் அமராவதிக்கு {இரண்டாம் அமராவதி என்று சொல்வதற்கு} ஒப்பாக இருந்தது.(17,18) ஓ! பாரதா, அந்த மன்னர்களில் புலி {திவோதாசன்} தன் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் ஹைஹயர்கள் தாக்கினார்கள்.(19) வலிமைமிக்க மன்னனான திவோதாசன், தன் தலைநகரைவிட்டு வெளியே வந்து அவர்களுடன் போரிட்டான். பழங்காலத்தின் தேவாசுரப் போரைப் போல இரு தரப்புகளுக்குமிடையே நடந்த அந்தப் போர் மிகக் கடுமையானதாக இருந்தது.(20)எதிரியுடன் ஆயிரம் நாட்கள் போரிட்ட மன்னன் திவோதாசன், இறுதியில் பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களும், விலங்குகளும் கொல்லப்பட்ட பிறகு மிகவும் துன்பமடைந்தான்(21) ஓ! ஏகாதிபதி, தன் படையை இழந்த மன்னன் திவோதாசன், தன் கருவூலம் தீர்ந்துவிட்டதைக் கண்டு தன் தலைநகரைவிட்டுத் தப்பிச் சென்றான்.(22) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அந்த மன்னன், பெரும் ஞானியான பரத்வாஜரின் இனிய ஆசிரமத்திற்குச் சென்று, தன் கரங்களை மதிப்புடன் கூப்பிக் கொண்டு அம்முனிவரின் பாதுகாப்பை நாடினான்.(23)

பிருஹஸ்பதியின் மூத்த மகனும், ஒழுக்கச் சிறப்பைக் கொண்டவரும், மன்னன் திவோதாசனின் புரோகிதருமான பரத்வாஜர், தம் முன் இருக்கும் அந்த ஏகாதிபதியைக் கண்டு, அவனிடம்,(24) “நீ இங்கு வந்திருக்கும் காரணம் என்ன? ஓ! மன்னா, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. எந்தத் தயக்கமுமின்றி உனக்கு ஏற்புடையதை நான் செய்வேன்” என்றார்.(25)

மன்னன் {திவோதாசன்}, “ஓ! புனிதமானவரே, வீதஹவ்யனின் மகன்கள் என் வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். எதிரியால் முற்றிலும் உருக்குலைக்கப்பட்ட நான் மட்டுமே உயிரோடு தப்பி வந்தேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(26) ஓ! புனிதமானவரே, ஒரு சீடனைக் காப்பதைப் போல என்னைப் பாதுகாப்பதே உமக்குத் தகும். பாவச் செயல்களைச் செய்யும் அந்த இளவரசர்கள், என்னை மட்டுமே உயிருடன் விட்டுவிட்டு, என் குலம் மொத்தத்தையும் கொன்றுவிட்டனர்” என்றான்”.(27)

பீஷ்மர் தொடர்ந்தார், “பெருஞ்சக்தியைக் கொண்ட பரத்வாஜர், தம்மிடம் பரிதாபகரமாக இரைஞ்சிக் கொண்டிருந்த அவனிடம் {திவோதாசனிடம்}, “அஞ்சாதே, ஓ! சுதேவன் மகனே, உன் அச்சங்கள் அகலட்டும். நீ ஆஞ்சாதே.(28) ஓ! ஏகாதிபதி, வீதஹவ்யன் தரப்பினரை ஆயிரமாயிரமாகத் தாக்கவல்ல ஒரு மகனை நீ பெறும் வகையில் நான் ஒரு வேள்வியைச் செய்யப் போகிறேன்” என்றார்.(29)

அதன்பிறகு திவோதாசனுக்கு ஒரு மகனைப் பெறும் நோக்கத்தில் அம்முனிவரால் ஒரு வேள்வி நடத்தப்பட்டது. அதன் விளைவாகத் திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான்[4].(30) அவன் பிறந்த உடனேயே பதிமூன்று வயது பாலகனாக வளர்ந்து, வேதங்களிலும், மொத்த ஆயுத அறிவியலிலும் விரைவாகத் திறம்பெற்றான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரத்வாஜர் தமது யோக சக்திகளின் துணையுடன் அந்த இளவரசனுக்குள் {பிரதர்த்தனனுக்குள்} நுழைந்தார். உண்மையில் பரத்வாஜர், அண்டத்தில் உள்ள பொருட்களின் சக்திகள் அனைத்தையும் திரட்டி அவற்றை, இளவரசன் பிரதர்த்தனனின் உடலுக்குள் நுழையச் செய்தார்.(32) ஒளிரும் கவசத்தைத் தன் மேனியில் பூட்டிக் கொண்டும், வில்லைத் தரித்துக் கொண்டும், வந்திகள் மற்றும் தெய்வீக முனிவர்களால் புகழப்பட்டும், உதிக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான் பிரதர்த்தனன்.(33) கச்சையில் வாளைக் கட்டிக் கொண்டு தன் தேரில் ஏறிய அவன், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான். வாள் மற்றும் கேடயத்துடனும், தன் கேடயத்தைச் சுழற்றிக் கொண்டும் அவன் தன் தந்தையிடம் {திவோதாசனிடம்} சென்றான்.(34) சுதேவனின் மகனான மன்னன் திவோதாசன், இளவரசனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தான். உண்மையில் அந்த முதிர்ந்த மன்னன், தன் எதிரியான வீதஹவ்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாக நினைத்தான்.(34)திவோதாசன் தன் மகன் பிரதர்த்தனனை யுவராஜனாக நிறுவி, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(36) அதன் பிறகு அந்த முதிர்ந்த மன்னன், எதிரிகளைத் தண்டிப்பவனான இளவரசன் பிரதர்த்தனனிடம், வீதஹவ்யனின் மகன்களை எதிர்த்துச் சென்று போரில் அவர்களைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.(37) பேராற்றல்வாய்ந்தவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பிரதர்த்தனன் தன் தேரில் கங்கையைக் கடந்து, வீதஹவ்யர்களின் நகரத்தை எதிர்த்துச் சென்றான்.(38) வீதஹவ்யனின் மகன்கள், அவனது தேரின் சக்கரங்கள் உண்டாக்கிய சடசடப்பொலியைக் கேட்டு, அரணமைக்கப்பட்ட மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், பகை வாகனங்களை அழிக்கவல்லவையுமான தங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு, தங்கள் நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(39) மனிதர்களில் புலிகளும், கவசம்பூண்ட திறமிக்கப் போர்வீரர்களுமான வீதஹவ்யனின் மகன்கள் யாவரும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பிரதர்த்தனனை நோக்கி விரைந்து, தங்கள் கணை மாரியால் அவனை மறைத்தனர்.(40)

ஓ! யுதிஷ்டிரா, எண்ணற்ற தேர்களில் சென்று பிரதர்த்தனனைச் சூழ்ந்து கொண்ட வீதஹவ்யர்கள், இமயச் சாரலில் மழைத்தாரையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு ஆயுதங்களின் மழையை அவன் மீது பொழிந்தனர்.(41) வலிமையும், சக்தியும் கொண்ட பிரதர்த்தனன், அவர்களுடைய ஆயுதங்களைத் தனதால் கலங்கடித்து, இந்திரனின் இடிநெருப்புக்கு ஒப்பான கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(42) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அகன்ற தலைக் கணைகளால் {அர்த்தச்சந்திர பாணங்களால்} தலை துண்டிக்கப்பட்ட வீதஹவ்யனனின் போர்வீரர்கள், கோடரிகளுடன் கூடிய மரவெட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் வெட்டி வீழ்த்தப்படும் கின்சுக {பலாச} மலர்களைப் போலக் குருதியால் நனைந்த உடல்களுடன் கீழே விழுந்தனர்.(43) மன்னன் வீதஹவ்யன், தனது போர்வீரர்களும், மகன்கள் அனைவரும் போரில் வீழ்ந்த பிறகு, தன் தலைநகரில் இருந்து பிருகுவின் ஆசிரமத்திற்குத் தப்பிச் சென்றான்.(44) உண்மையில், அங்கே வந்த அந்த அரச அகதி, பிருகுவின் பாதுகாப்பை நாடினான். ஓ! ஏகாதிபதி, தோல்வியடைந்த மன்னனின் பாதுகாப்பை முனிவர் பிருகு உறுதி செய்தார்.(45)

பிரதர்த்தனன், வீதஹவ்யனின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தான். முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த திவோதாசன் மகன் {பிரதர்த்தனன்} உரத்த குரலில்,(46) “ஹோ… உள்ளே இருக்கும் உயர் ஆன்ம பிருகவின் சீடர்களே கேட்பீராக. நான் அந்த முனிவரைக் காண விரும்புகிறேன். அவரிடம் சென்று இதைத் தெரிவிப்பீராக” என்றான்.(47)

வந்திருப்பது பிரதர்த்தன் என்பதை அறிந்து கொண்ட முனிவர் பிருகு, தமது ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்து அந்த மன்னர்களில் சிறந்தவனை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(48) அவனிடம் பேசிய முனிவர், “ஓ! மன்னா, என்ன காரியம் என்று எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார். இதனால் தான் வந்த காரணத்தை முனிவரிடம் சொன்னான் மன்னன்.(49)

மன்னன் (பிரதர்த்தனன்), “ஓ! பிராமணரே, மன்னன் வீதஹவ்யன் இங்கே வந்திருக்கிறான். அவனை என்னிடம் கொடுப்பீராக. ஓ! பிராமணரே, அவனது மகன்கள் என் குலத்தையே அழித்திருக்கின்றனர்.(50) காசியின் எல்லைகளும், செல்வமும் அவர்களால் வீணடிக்கப்பட்டன {அழிக்கப்பட்டன / அபகரிக்கப்பட்டன}. எனினும் வலிமையில் செருக்குற்றிருந்த இந்த மன்னனின் நூறு பிள்ளைகளும் என்னால் கொல்லப்பட்டனர்.(51) இந்த மன்னனை {வீதஹவ்யனைக்} கொல்வதன் மூலம் நான் என் தந்தைக்குப் பட்ட கடனை அடைத்தவனாவேன்” என்றான்.

நீதிமிக்க மனிதர்களில் முதன்மையானவரான முனிவர் பிருகு, கருணை கொண்டவராக அவனிடம்,(52) “இந்த ஆசிரமத்தில் எந்த க்ஷத்திரியனும் இல்லை. இங்கே இருப்பவர்கள் அனைவரும் பிராமணர்களே” என்றார்.

பிருகுவின் சொற்களைக் கேட்ட பிரதர்த்தனன்,(53) அஃதை உண்மையென்றெண்ணி, முனிவரின் பாதங்களைத் தொட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, மெதுவாக மெதுவாக, “ஓ! புனிதமானவரே, என் ஆற்றலின் விளைவால் இந்த மன்னன் தன் பிறவி வகையையே இழந்திருப்பதனால் நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டேன் என்பதில் ஐயமில்லை. ஓ!பிராமணரே, நான் விடைபெற்றுச் செல்ல அனுமதிப்பீராக, எனக்கான நன்மையை நான் உம்மிடம் வேண்டுகிறேன்.(55) ஓ! உமது பெயரால் ஒரு குலத்தை நிறுவியவரே, என் வலிமையால் இந்த மன்னன் தன் பிறவி வகையை இழந்திருக்கிறான்” என்றான்[5].முனிவர் பிருகுவால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட மன்னன் பிரதர்த்தனன் அந்த ஆசிரமத்தில் இருந்து வெளியேறி,(56) நஞ்சைக் கக்கும் பாம்பைப் போல நான் சொன்னது போலவே சொல்நஞ்சைக் கக்கிவிட்டு, தனது இடத்திற்குத் திரும்பிச் சென்றான். அதே வேளையில், மன்னன் வீதஹவ்யன், பிருகுவின் அறத்தகுதியால் மட்டுமே, மறுபிறப்பாள தவசி என்ற நிலையை அடைந்தான்.(57) மேலும், அதே காரணத்தின் மூலம் வேதங்கள் அனைத்தையும் முற்றாக அறிந்த நிலையையும் அடைந்தான்[6]கிருத்சமதன் என்ற பெயரில் இரண்டாம் இந்திரனைப் போன்ற அழகுடன் வீதஹவ்யனுக்கு ஒரு மகன் இருந்தான்.(58) ஒரு காலத்தில் அவனே இந்திரன் என்று நினைத்த தைத்தியர்களால் அவன் பீடிக்கப்பட்டான். அந்த உயர் ஆன்ம முனியை {கிருத்சமதனைப்} பொறுத்தவரையில், “ஓ! பிராமணரே, எங்கே கிருத்சமதர் இருக்கிறாரோ, அங்கே உள்ள மறுபிறப்பாள மனிதர்கள் அனைவராலும் அவர் உயர்வாக மதிக்கப்பட்டார்” என்று ஸ்ருதிகளில் முதன்மையான ரிக்கில் {ரிக் வேதத்தில்} இருக்கிறது. பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான கிருத்சமதன் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் மறுபிறப்பாள முனிவரானான்.(60)கிருத்சமதனுக்குச் சுதேஜஸ் {ஸாவைநஸன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சுதேஜஸுக்கு வர்ச்சஸ் {விதஸ்த்யன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். வர்ச்சஸின் மகன் விஹவ்யன் {சிவஸ்தன்} என்ற பெயரில் அறியப்பட்டான்.(61) விஹவ்யன் தன் மடியில் பிறந்த மகனாக விதத்யன் என்ற பெயரில் ஒருவனைக் கொண்டிருந்தான். விதத்யன் சத்யன் என்ற பெயரில் மகனைக் கொண்டிருந்தான். சத்யன் சந்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சந்தன் முனிவர் சிரவஸை மகனாகக் கொண்டிருந்தான். சிரவஸுக்கு தமன் {தமஸ்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். தமன், மிக மேன்மையான பிராமணனும், பிரகாசன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான்.(63) பிரகாசன், புனித மந்திரங்களை அமைதியாகச் சொல்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வாகிந்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான். வாகிந்திரன், வேதங்கள் மற்றும் அதன் அங்கங்கள் அனைத்திலும் முற்றிலும் திறன் பெற்றிருந்தவனும், பிரமதி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றிருந்தான். பிரமதி, அப்சரஸ் கிருதாசியிடம் ருரு என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ருரு தன் மனைவியான பிரம்மத்வரையிடம் ஒரு மகனைப் பெற்றான்[7]. அந்த மகன் மறுபிறப்பாள முனிவரான சுனகராவார். சுனகர், சௌனகர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இவ்வாறே, க்ஷத்திரியர்களின் தலைவா, மன்னன் வீதஹவ்யன் தன் பிறப்பின் வகையால் {வர்ணத்தால்} ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிருகுவுடைய அருளின் மூலம் பிராமண நிலையை அடைந்தான்.(66) அவனது மகனான கிருத்சமதனிடம் இருந்து உதித்த குலத்தின் பரம்பரைப் பட்டியலையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறென்ன கேட்கப் போகிறாய்?”[8] என்றார் {பீஷ்மர்}.(67)

வணக்கத்திற்குரியோர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 31-வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரியவர்கள் யாவர் என்பது குறித்து கிருஷ்ணனுக்கு நாரதர் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன், “ஓ பாரதக் குலத்தின் தலைவரே, மூவுலகிலும் மதிக்கத்தக்க வணக்கத்திற்குத் தகுந்த மனிதர்கள் யாவர்? உண்மையில் இக்காரியங்களைக் குறித்து நீர் பேசுவதைக் கேட்டு நான் ஒருபோதும் தணிவடைவதில்லை, இது குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர், “இது தொடர்பாக நாரதருக்கும், வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) ஒரு சந்தர்ப்பத்தில் நாரதர் பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபடுவதைக் கண்ட கேசவன், அவரிடம்,(3) “யாரை நீர் வழிபடுகிறீர். ஓ! புனிதமானவரே, இந்தப் பிராமணர்களுக்கு மத்தியில், பெருமதிப்புடன் நீர் யாரை வழிபடுகிறீர்? இஃது என்னால் கேட்கத்தக்கது என்றால் அதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ!அறவோரில் முதன்மையானவரே, இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

நாரதர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கோவிந்தா, ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, நான் யாரை வழிபடுகிறேன் என்பதைக் கேட்பாயாக. இவ்வுலகில் இதைக் கேட்கத் தகுந்தவன் வேறு யார் இருக்கிறான்?(5) ஓ! பலமிக்கவனே, வருணன், வாயு, ஆதித்தியன், பர்ஜன்யன் {மழை தேவனான இந்திரன்}, நெருப்பின் தேவன் {அக்நி}, ஸ்தாணு {சிவன்}, ஸ்கந்தன் {முருகன்}, லக்ஷ்மி, விஷ்ணு, பிராமணர்கள் {பிரம்மன்}, வாக்கின் தேவன் {வசஸ்பதி / பிருஹஸ்பதி}, சந்திரமாஸ் {சந்திரன்}, நீர், பூமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோரைத் தொடர்ந்து வழிபடுபவர்களை நான் வழிபட்டு வருகிறேன்.(6,7) ஓ! விருஷ்ணி குலத்துப் புலியே, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், வேத கல்வியில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், உயர்ந்த தகுதியைக் கொண்டவர்களுமான பிராமணர்களை எப்போதும் நான் வழிபடுகிறேன்.(8) ஓ! பலமிக்கவனே, தற்பெருமையில் இருந்து விடுபட்டவர்களும், தேவர்களை மதிக்கும் சடங்குகளை வெறும் வயிற்றுடன் வழிபாடு செய்பவர்களும், தாங்கள் கொண்டுள்ளதில் எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடியவர்களுமான மனிதர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.(9) ஓ! யாதவா, வேள்விகளைச்செய்பவர்களும், மன்னிக்கும் மனோ நிலையைக் கொண்டவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், புலன்களை ஆள்பவர்களும், வாய்மை மற்றும் அறத்தை வழிபடுபவர்களும், நல்ல பிராமணர்களுக்கு நிலத்தையும், பசுக்களையும் கொடையளிப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(10)

ஓ! யாதவா, தவநோற்பில் அர்ப்பணிப்புள்ளவர்களும், காடுகளில் வசிப்பவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களும், நாளைக்கென ஒருபோதும் எதையும் சேமிக்காதவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(11) ஓ! யாதவா, தங்கள் பணியாட்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்ப்பவர்களும், விருந்தாளிகளை எப்போதும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட்ட மிச்சங்களை மட்டுமே உண்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(12) வேத கல்வயின் மூலம் தடுக்கப்பட முடியாதவர்களானவர்களும், சாத்திரங்களை உரையாடுவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவர்களும், பிறருக்கு வேள்விகளைச் செய்து கொடுப்பது மற்றும் சீடர்களுக்குப் போதிப்பது ஆகிய கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(13) அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் நடந்து கொள்பவர்கும், சூரியன் முதுகைச் சுடும்வரை வேத கல்வியில் ஈடுபடுபவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(14) ஓ! யாதவா, தங்கள் ஆசான்களின் அருளை அடைய முனைபவர்களும், வேதங்களை அடைய உழைப்பவர்களும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருப்பவர்களும், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(15)

ஓ! யாதவா, சிறந்த நோன்புகளை நோற்பவர்களும், எண்ணங்களை வெளியிடாமல் பேசாநோன்பு நோற்பவர்களும், பிரம்மஞானம் கொண்டவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், தெளிந்த நெய் ஆகுதிகளை {ஹவ்யங்களை} காணிக்கையளிப்பவர்களும், இறைச்சியை {கவ்யங்களை} படையல் செய்பவர்களுமான[1] மனிதர்களை நான் வணங்குகிறேன்.(16) ஓ! யாதவா, பிச்சையெடுத்து உண்டு வாழ்பவர்களும், போதுமான உணவும் பானமும் இல்லாமல் மெலிந்திருப்பவர்களும், தங்கள் ஆசான்களின் வசிப்பிடங்களில் வாழ்பவர்களும், இன்பங்களை வெறுப்பவர்களும், பூமி சார்ந்த பொருட்களை வறியவர்களுமானவர்கள் நான் வணங்குகிறேன்.(17) ஓ!யாதவா, பூமியில் உள்ள பொருட்களில் எந்தப் பற்றும் இல்லாதவர்களும், பிறரிடம் சச்சரவு செய்யாதவர்களும், ஆடை அணியாதவர்களும், எந்தத் தேவையுமற்றவர்களும், வேதங்களை அடைந்து தடுக்கப்பட முடியாதவர்களாக ஆனவர்களும், அறத்தை விளக்குவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மத்தைச் சொல்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(18) அனைத்து உயிரினங்களிடம் கருணை என்ற கடமையைப் பயில்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், வாய்மை பயில்வதில் உறுதியாக இருப்பவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், நடத்தையில் அமைதி நிறைந்தவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(19) ஓ! யாதவா, தேவர்கள் மற்றும் விருந்தினர்களை வழிபடுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், இல்லற வாழ்வை நோற்பவர்களும், வாழ்வுக்கான காரியத்தில் புறாக்களின் நடைமுறையைப் பின்பற்றுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்[2].(20)தங்கள் செயல்கள் எதனிலும் பலவீனப்படாமல் முத்தொகையை[3] {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச்} செய்பவர்களும், வாய்மை பயின்று அறமொழுகுபவர்களுமான மனிதர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(21) ஓ! கேசவா, பிரம்மத்தை அறிந்தவர்களும், வேதங்களின் அறிவைக் கொண்டவர்களும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகையில் கவனமாக இருப்பவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், நடத்தையில் நீதியுடன் செயல்படுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(22) ஓ! மாதவா, நீரை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது காற்றை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் காணிக்கையளிப்பட்ட உணவில் மிஞ்சியதை உண்டு வாழ்பவர்கள் பல்வேறு வகைச் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள் ஆகியோரை நான் வணங்குகிறேன்.(23) (தாங்கள் நோற்கும் மணம்செய்யா நோன்பின் விளைவால்) மனைவிகளற்றவர்களையும், (தாங்கள் வாழும் இல்லற வாழ்வின் விளைவால்) இல்லற நெருப்பையும், மனைவிகளையும் கொண்டவர்களையும், வேதங்களின் புகலிடமாக இருப்பவர்களையும், (தாங்கள் உணரும் கருணையின் விளைவால்) அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாக இருப்பவர்களையும் எப்போதும் நான் வணங்குகிறேன்.(24) ஓ! கிருஷ்ணா, அண்டத்தைப் படைப்பவர்களும், அண்டத்தின் பெரியோர்களும், ஒரு குலம் அல்லது குடும்பத்தில் உள்ள மூத்தோரும், அறியாமை எனும் இருளை அகற்றுபவர்களும், (அறவொழுக்கம் மற்றும் சாத்திரஞானம் ஆகியவற்றுக்காக) அண்டத்தில் உள்ள மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான முனிவர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(25)ஓ! விருஷ்ணி குலத்தின் கொழுந்தே, இந்தக் காரணங்களுக்காக, நான் சொல்லும் இந்த மறுபிறப்பாளர்களை நாள்தோறும் நீயும் வழிபடுவாயாக. மதிப்புடன் வழிபடத்தகுந்த அவர்கள், ஓ! பாவமற்றவனே, வழிபடப்படும்போது, உனக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள்.(26) நான் சொல்லும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பவர்கள் ஆவர். அனைவராலும் மதிக்கப்பட்டு இவ்வுலகில் திரியும் அவர்கள், உன்னால் வழிபடப்பட்டால் நிச்சயம் உனக்கு மகிழ்ச்சியை வழங்குவார்கள்.(27) தம்மிடம் விருந்தினர்களாக வரும் மனிதர்கள் அனைவரையும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், பிராமணர்கள், பசுக்கள் மற்றும் (பேச்சு, ஒழுக்கத்தில்) வாய்மை ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(28) அமைதியான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களும், வேத கல்வியில் எப்போதும் கவனமாக இருப்பவர்களும், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(29) (எவரையும் முதன்மையாகக் கொள்ளாமல், சகிப்பை நிரூபிக்கும் வகையில்) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், வேதங்களில் ஒன்றைத் தங்கள் புகலிடமாகக் கொள்பவர்களும், நம்பிக்கை கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான மனிதர்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(30)

பிராமணர்களில் முதன்மையானோரை மதிப்புடன் வழிபட்டு, சிறந்த நோன்பை நோற்பதிலும், ஈகையறம் பயில்வதிலும் உறுதியாக இருப்போர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(31) தவப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், மணம்செய்யா நோன்பை எப்போதும் நோற்பவர்கள், தவங்களால் ஆன்மத் தூய்மை அடைந்தவர்கள் ஆகியோர் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(32) தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்தோர், பித்ருக்கள் ஆகியோரின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள், சார்ந்தோர் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்போர் ஆகியோர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(33) இல்லற நெருப்பை மூட்டி, அதைத் தொடர்ந்து எரியச் செய்து, மதிப்புடன் அதை வழிபடுபவர்களும், சோம வேள்விகளில் (தேவர்களுக்கு) ஆகுதிகளை முறையாக ஊற்றியவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(34) நீ நடந்து கொள்வது போலவே, தங்கள் தாய்மார், தந்தைமார், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் நடந்து கொள்பவர்கள் (துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்)” என்றார் {நாரதர்}. இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பேசுவதை நிறுத்தினார் அந்தத் தெய்வீக முனிவர்

“.(35)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காக, உன் மாளிகையில் தேவர்களையும், பித்ருக்களையும், பிராமணர்களையும், விருந்தினர்களையும் எப்போதும் வழிபடுவாயாக. இத்தகைய நடத்தையின் விளைவால் நிச்சயம் நீ விரும்பிய கதியை அடைவாய்”.(36)

மன்னன் சிபி! – அநுசாஸனபர்வம் பகுதி – 32-பாதுகாப்பை நாடி வருவோரைப் பாதுகாப்பதால் கிட்டும் பயன் குறித்துச் சொல்ல மன்னன் சிபியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, கடமை மற்றும் அறம் தொடர்பான காரியங்கள் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்.(1) ஓ!பாரதக் குலத்தின் தலைவா, நான்கு வகை உயிரினங்களில் பாதுகாப்பை வேண்டுவோருக்குப் பாதுகாப்பை அளிக்கும் மனிதர்கள் அடையும் பயனென்ன?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஞானமும், பரந்த புகழும் கொண்ட தர்மத்தின் மகனே {தர்மபுத்ரா}, பணிவுடன் பாதுகாப்பு நாடப்படும்போது, பிறருக்குப் பாதுகாப்பை அளிப்பதால் உண்டாகும் பெரும்பலன் குறித்த இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில் ஒரு பருந்தால் விரட்டப்பட்ட ஓர் அழகிய புறாவானது, வானத்தில் இருந்து விழுந்து, உயர்ந்த அருளைக் கொண்டவனான மன்னன் விருஷதர்பனின் பாதுகாப்பை நாடியது.(4) தூய ஆன்மாவைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அச்சத்தால் தன் மடியில் தஞ்சமடைந்த புறாவைக் கண்டு, அதற்கு ஆறுதலளித்து, “ஓ! பறவையே, ஆறுதலடைவாயாக. உனக்கு அச்சம் ஏதும் கிடையாது.(5) இத்தகைய பேரச்சம் உனக்கு எங்கிருந்து வந்தது? நீ என்ன செய்தாய்? எங்கே செய்தாய்? எதன் விளைவாக நீ அச்சத்தால் புலன்களை இழந்து இறந்தவன் போலிருக்கிறாய்?(6) ஓ! அழகிய பறவையே, உன் நிறமானது, நீல வகையைச் சார்ந்ததும், புதிதாக மலர்ந்ததுமான கருநெய்தல் மலருக்கு ஒப்பாக இருக்கிறது. உன் கண்கள் அசோக மலர், அல்லது மாதுளையின் வண்ணத்தில் இருக்கிறது. அஞ்சாதே, ஆறுதலடைவாயாக.(7) நீ எனது பாதுகாப்பை நாடியிருக்கும்போது, உன்னைப் பாதுகாக்க இத்தகைய பாதுகாவலன் இருக்கும்போது, எவனும் உன்னைப் பிடிக்கவும் துணியமாட்டன் என்பதை அறிவாயாக.(8) உனக்காக நான் இன்று காசி நாட்டையே கொடுப்பேன், தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன். எனவே, ஓ! புறாவே, அச்சம் உனதாக வேண்டாம், ஆறுதலைவாயாக” என்றான் {விருஷதர்பன்}.(9)

பருந்து {மன்னன் விருஷதர்பனிடம்}, “இந்தப் பறவை {புறா} என் உணவாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, நீ இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது. நான் இந்தப் பறவையை விரட்டி வந்து பிடித்திருக்கிறேன். உண்மையில், பெரும் முயற்சி செய்த பிறகு இறுதியாகவே நான் இவனை அடைந்திருக்கிறேன்.(10) இவனது இறைச்சி, குருதி, மஜ்ஜை, கொழுப்பு ஆகியவை எனக்கும் பெரும் உணவாக இருக்கும். இந்தப் பறவை என்னைப் பெரிதும் நிறைவடையச் செய்யும் வாழ்வாதாரமாக இருக்கும். ஓ! மன்னா, எனக்கும் இவனுக்கும் இடையில் இவ்வழியில் நீ குறுக்கே நிற்காதே.(11) என்னைப் பீடிக்கும் தாகம் கடுமையானதாக இருக்கிறது. பசி என் வயிற்றை எரிக்கிறது. இந்தப் பறவையை விடுவித்து, அவனைக் கைவிடுவாயாக. இனியும் என்னால் பசிக்கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.(12) இவனை என் இரையாகவே விரட்டி வந்தேன். என் சிறகுகளாலும், அலகுகளாலும் இவனது உடல்கள் கிழிக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் காண்பாயாக. இவனது மூச்சும் பலவீனமடைவதைக் காண்பாயாக. ஓ! மன்னா, இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது.(13) உனக்குரிய அதிகாரத்தின்படி, பிற மனிதர்களின் மூலம் அழிவை அடையும் போது உன் பாதுகாப்பை நாடும் மனிதர்களை நீ காக்கலாம். எனினும், தாகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு வானுலாவி பறவையிடம் உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.(14) உன் எதிரிகள், உன் பணியாட்கள், உறவினர்கள் உன் குடிமக்களுக்கிடையில் நடைபெறும் சச்சரவுகள் ஆகியவற்றின் மீது உனக்கு அதிகாரம் பரவலாம். உண்மையில், உன் ஆட்சிப்பகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவலாம், உன் புலன்களுக்கும் பரவலாம். எனினும், உன் அதிகாரம் ஆகாயம் வரை பரந்திருப்பதல்ல.(15) உன் விருப்பங்களுக்கு எதிராகச் செயல்படும் எதிரிகளிடம் உன் ஆற்றலை வெளிப்படுத்தி, அவர்கள் மீது உன் ஆட்சி அதிகாரத்தை நிறுவலாம். எனினும், உன் ஆட்சி, வானத்தில் பறக்கும் பறவைகள் வரை பரந்திருக்கவில்லை. உண்மையில், (இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம்) நீ தகுதியை ஈட்ட விரும்பினால், என்னைப் பார்ப்பதும் (என் பசியைத் தணிக்க முறையானதைச் செய்து, என் உயிரைக் காப்பதும்) உன் கடமையே” என்றது {பருந்து}”.(16)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம} தொடர்ந்தார், “பருந்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அரசமுனி ஆச்சரியத்தால் நிறைந்தான். அவனது {பருந்தின்} இந்தச் சொற்களை அலட்சியம் செய்யாத மன்னன், அவனது {பருந்தின்} வசதிகளையும் கவனிக்க விரும்பி, பின்வரும் சொற்களில் அவனுக்கு மறுமொழி கூறினான்.(17)

மன்னன் {விருஷதர்பன்}, “ஒரு காளையோ, பன்றியோ, மானோ, எருமையோ இன்று உனக்காக உரிக்கப்படட்டும். இன்று அத்தகைய உணவை உட்கொண்டு உன் பசியைத் தணித்துக் கொள்வாயாக.(18) என் பாதுகாப்பை நாடிய எவரையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பது என் உறுதியான நோன்பாகும். ஓ! பறவையே, இந்தப் பறவை என் மடியை விட்டு அகலாமல் இருப்பதைக் காண்பாயாக” என்றான்.(19)

பருந்து, “ஓ! ஏகாதிபதி, பன்றி, எருது அல்லது பல்வேறு வகையிலான எந்த நீர்க்கோழியின் இறைச்சையையும் நான் உண்ண மாட்டேன். இந்த வகை, அல்லது அந்த வகை உணவில் எனக்கென்ன தேவையிருக்கிறது? என் வகை உயிரினங்களுக்காக நித்தியமாக விதிக்கப்பட்டிருக்கும் உணவைக் குறித்துத் தான் என் காரியம் இருக்க முடியும்? பருந்துகள் புறாக்களை உண்பது நித்திய விதியாகும்.(20,21) ஓ! பாவமற்ற உசீநரா, இந்தப் புறாவிடம் நீ இவ்வளவு பற்றை உணர்வாயெனில், இந்தப் புறாவின் எடைக்கு இணையாக உன் உடல் சதையில் இருந்து எனக்கு இறைச்சியை அளிப்பாயாக” என்றது.(22)

மன்னன், “நீ இந்த வகையில் என்னிடம் பேசியதன் மூலம் நீ இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறாய். ஆம், நீ சொன்னதை நான் செய்வேன்” என்றான். இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன்,(23) தன் சதையை அறுத்துத் தராசில் புறாவுக்கு எதிராக எடை நிறுத்தினான். அதே வேளையில் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான மன்னனின் மனைவிகள்,(24) நடைபெறும் காரியத்தைக் கேள்விப்பட்டு, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்துடன் அலறியபடியே வெளியே வந்தனர்.(25) பெண்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் இவ்வாறு அலறியதன் விளைவால் உண்டான ஆழ்ந்த இரைச்சல் அந்த அரண்மனையில் மேக முழக்கமென எழுந்தது. மிகத் தெளிவாக இருந்த வானம், அனைத்துப் புறங்களிலும் அடர்த்தியான மேகங்களால் சூழப்பட்டது.(26) அந்த ஏகாதிபதியின் வாய்மைக்கு இணக்கமான செயலின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள். மன்னன் தன் விலாப்புறங்கள், தோள்கள் மற்றும் தொடைகளில் இருந்து சதை அறுக்கத் தொடங்கி,(27) அந்தப் புறாவுக்கு எதிராக எடைபார்ப்பதற்காகத் தராசில் விரைவாக நிரப்பினான். அவ்வளவும் செய்து புறாவானது தொடர்ந்து எடை அதிகமாகவே இருந்தது.(28)

இறுதியாக மன்னன் சதைகளேதுமற்று குருதியால் மறைக்கப்பட்ட வெறும் எலும்புக்கூடாக ஆன பிறகு, தன் மொத்த உடலையே கைவிட விரும்பி, ஏற்கனவே தான் அறுத்த சதைகளை வைத்திருந்த தராசில் ஏறினான்.(29) அந்நேரத்தில், இந்திரனின் தலைமையிலான மூவுலகத்தாரும் அவனைக் காண அந்த இடத்திற்கு வந்தனர். ஆகாயத்தில் இருந்த கண்ணுக்குப்புலப்படாத பூதங்களின் மூலம் தெய்வீகப் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(30) மன்னன் விருஷதர்பன், தன் மீது பொழியப்பட்ட அமுத மழையில் நீராடினான். இனிய நறுமணமும், தீண்டலும் கொண்ட தெய்வீக மலர்களும் அவன் மீது மீண்டும் மீண்டும் அபரிமிதமாகப் பொழியப்பட்டன.(31) தேவர்களும், பெரும் எண்ணிக்கையிலான கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரும், பெரும்பாட்டனான பிரம்மனைச் சுற்றி ஆடிப் பாடுவதைப் போல இவனை {இம்மன்னனைச்} சுற்றி ஆடவும் பாடவும் தொடங்கினர்.(32) அப்போது அந்த மன்னன், (அழகிலும், மகிமையிலும்) முற்றாகத் தங்கத்தாலான மாதும், தங்கம் மற்றும் ரத்தினங்களாலான வளைவுகளைக் கொண்டதும், வைடூரியங்களாலான தூண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மாளிகையைவிட விஞ்சி மிளிர்ந்து கொண்டிருந்த ஒரு தெய்வீகத் தேரில் ஏறினான்.(33) அரசமுனியான அந்தச் சிபி[1] தன் செயற்தகுதியின் மூலம் நித்தியமான சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! யுதிஷ்டிரா, நீயும் உன்னிடம் பாதுகாப்பை நாடி வருவோரிடம் இதே வழியில் நடப்பாயாக.(34)தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரையும், தன்னைச் சார்ந்திருப்பவர்களையும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களையும் காப்பாற்றும் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறான்.(35) நீதியும், ஒழுக்கமும் கொண்டவனும், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடியவனுமான ஒருவன் தன் நேர்மையான செயல்களின் மூலம் மதிப்புமிக்க வெகுமதிகள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36) தூய ஆன்மா கொண்டவனும், பெரும் ஞானியும், கலங்கா ஆற்றல் கொண்டவனும், காசிகளின் ஆட்சியாளனும், அரச முனியுமான சிபி, நீதிமிக்கத் தன் செயல்களுக்காக மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்டான்.(37) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பாதுகாப்பு நாடி வருவோரை (சிபியைப் போலவே) பாதுகாக்க முனையும் எவரும் அதே மகிழ்ச்சியான கதியையே அடைவார்கள்.(38) அரச முனியான விருஷதர்பனின் இந்த வரலாற்றை உரைப்பவன், நிச்சயம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான், இந்த வரலாற்றை மற்றொருவர் சொல்லி கேட்கும் மனிதனும் நிச்சயம் அதே கதியையே அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(39)

பிராமண மேன்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 33-ஒரு மன்னனின் முக்கியக் கடமை பிராமணர்களை வழிபடுவது என்பதையும், பிராமணர்களின் மேன்மையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மன்னனுக்காக விதிக்கப்பட்ட செயல்கள் அனைத்திலும் முதன்மையான செயல் எது? எந்தச் செயலைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் இம்மை மற்றும் மறுமை இரண்டிலும், இன்புறுவதில் வெல்கிறான்?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, முறையாக அரியணையில் நிறுவப்பட்ட ஒரு மன்னன் பெரும் மகிழ்ச்சியை அடைய விரும்பினால், செயல்கள் அனைத்திலும் பிராமணர்களை வழிபடுவதே அவனுக்கு முதன்மையானதாக விதிக்கப்பட்டிருக்கிறது.(2) முதன்மையான மன்னர்கள் அனைவரும் இதையே செய்ய வேண்டும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதை நன்கறிவாயாக. வேத கல்வி பெற்றவர்களும், நீதிமிக்கவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் ஒரு மன்னன் எப்போதும் மதிப்புடன் வழிபட வேண்டும்.(3)

ஒரு மன்னன், விற்கள், ஆறுதலளிக்கும் பேச்சுகள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் கொடையாகக் கொடுத்து, தன் நகரம் அல்லது மாகாணங்களில் வசிக்கக்கூடியவர்களும், பெருங்கல்வியைக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் வழிபட வேண்டும்.(4) இதுவே மன்னர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செயல்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில், ஒரு மன்னன் எப்போதும் தன் கண்களை இதில் நிலைநிறுத்தியிருக்க வண்டும். அவன், தன்னையும், தன் சொந்த பிள்ளைகளயும் பாதுகாப்பதைப் போல அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.(5) (கல்வி மற்றும் புனிதத்தன்மையில் தாங்கள் பெற்றிருக்கும் மேன்மைக்காக) பிராமணர்களுக்கு மத்தியில் பெரும் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருப்பவர்களை மன்னன் வழிபட வேண்டும். அத்தகைய மனிதர்கள் கவலையில் இருந்து விடுபடும்போது, மொத்த நாடும் அழகில் சுடர்விடுகிறது.(6)

அத்தகைய நபர்கள் துதிக்கப்படத்தக்கவராவர். மன்னன் அத்தகையோருக்குத் தலைவணங்க வேண்டும். உண்மையில் ஒருவன் தன் தந்தைமாரையோ, பாட்டன்மாரையோ எவ்வாறு மதிப்பானோ அதே வகையில் அவர்களை மதிக்க வேண்டும். உயிரினங்கள் அனைத்தின் இருப்பும் வாசவனைச் சார்ந்திருப்பதைப் போலவே மனிதர்கள் பின்பற்றும் ஒழுக்க வழிகள் அவர்களையே சார்ந்திருக்கின்றன.(7) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையும், பெரும் சக்தியையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சீற்றமடைந்தால், தங்கள் விருப்பத்தால் மட்டுமே, அல்லது மந்திரங்களைச் சொல்வதால் மட்டுமே, அல்லது (தவச் சக்தியின் மூலம் பெறப்பட்ட) பிற வழிமுறைகளின் மூலம் மொத்த நாட்டையும் எரித்து விட வல்லவர்களாக இருப்பார்கள்.(8) அவர்களை அழித்துவிடக்கூடிய ஏதொன்றையும் நான் காணவில்லை. அவர்களது சக்தி அண்டத்தின் இறுதி எல்லையையும் அடையவல்ல நிலையில் கட்டுப்படுத்தப்பட முடியாததாக இருக்கிறது. கோபத்தில் இருக்கும்போது, காட்டின் மீது விழும் சுடர்மிக்கத் தழலைப் போலவே மனிதர்கள் மற்றும் பொருட்களின் மீது அவர்களது பார்வைகள் விழும்.(9)

பெரும் துணிவுமிக்க மனிதர்களும் அவர்களது பெயரைக் கேட்டாலே அச்சத்தால் பீடிக்கப்படுவார்கள். அவர்களது குணங்களும், சக்திகளும் அளக்கமுடியாதனவும், இயல்புக்கு மீறியனவுமாகும். அவர்களில் சிலர், புற்கள் மற்றும் கொடிகளால் அமைக்கப்பட்ட வாய்களைக் கொண்ட கிணறுகள் மற்றும் குழிகளைப் போலவும், அதே வேளையில் வேறு சிலர், மேகங்களும் இருளும் அற்ற தெளிந்த வானம் போலவும் இருக்கிறார்கள்.(10) அவர்களில் (துர்வாசர் முதலியவர்களைப் போன்ற) சிலர் கடும் மனோநிலையைக் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களில் (கௌதமர் மற்றும் பிறரைப் போன்ற) சிலர் மென்மையான மனநிலை கொண்டவர்களும் இருக்கின்றனர். அவர்களில் (அசுரர் வாதாபியை விழுங்கிய அகஸ்தியரைப் போன்ற) சிலர் பெரும் தந்திரக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புமிக்கோராக இருக்கிறார்கள்.(11) அவர்களில் (உத்தாலகரின் ஆசானைப் போல) உழவுப் பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் சிலர் (ஆசானிடம் பணி செய்த உபமன்யுவைப் போல) பசுப் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலர் பிச்சையெடுத்து வாழ்கின்றனர். அவர்களில் சிலர் (ஆதிகாலத்து வால்மீகி போலவும், பஞ்ச கால விஷ்வாமித்திரரைப் போலவும்) கள்வராகவும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் (நாரதரைப் போல) சச்சரவுகளை உண்டாக்குவதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் சிலர், (பரதரைப் போல) நடிகர்களாகவும், நடனக் கலைஞர்களாகவும் இருக்கின்றனர்.(12)

அவர்களில் சிலர், (உள்ளங்கை நிறைய உள்ள நீரைப் போல மொத்த கடல்நீரையும் பருகிய அகஸ்தியரைப் போல) இயல்புக்குமீறிய செயல்கள் மற்றும் சாதாரணச் செயல்கள் அனைத்தையும் செய்யத்தகுந்தவர்களாவர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்கள் பல்வேறு இயல்புகளையும், நடத்தைகளையும் கொண்டவர்களாவர்.(13) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், அழமொழுகுபவர்களும், பல்வேறு செயல்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், பல்வேறு வகைத் தொழில்களில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வாதாரத்தை அடைபவர்களுமான பிராமணர்களை எப்போதும் ஒருவன் புகழவே வேண்டும்.(14) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பித்ருக்கள், தேவர்கள் மற்றும் (மூன்று வகை) மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோரைவிட முதிய பிராமணர்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர்.(15)

தேவர்களாலோ, பித்ருக்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, பிசாசங்களாலோ இந்த மறுபிறப்பாளர்களை வெல்ல முடியாது.(16) பிராமணர்கள், தேவனல்லாத ஒருவனையும் தேவனாக்கவல்லவர்களாவர். மேலும் தேவ நிலையில் உள்ளோரை அந்நிலையற்றவர்களாக்கவும் அவர்களால் இயலும். அவர்கள் எவனை மன்னனாக்க விரும்புவார்களோ அவனே மன்னனாவான். மறுபுறம், அவர்களால் விரும்பப்படாதவர்கள் {அனைத்தையும் தோற்று மீண்டும்} சுவற்றுக்கே செல்ல வேண்டும்.(17) ஓ! மன்னா, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், பிராமணர்களை இகழ்ந்து, அவர்களை நிந்திக்கும் மூடர்கள் நிச்சயம் அழிவையே அடைவார்கள்.(18)

ஓ! மன்னா, புகழ்வதிலும், இகழ்வதிலும் திறம் கொண்டவர்களும், பிறரின் புகழ் மற்றும் இழிவுக்குக் காரணம் அல்லது மூலமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், தங்களுக்குத் தீங்கிழைக்க முனைவோரிடம் எப்போதும் கோபம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(19) பிராமணர்கள் எந்த மனிதனைப் புகழ்கிறார்களோ, அவன் செழிப்பில் வளர்வான். பிராமணர்களால் நிந்திக்கப்பட்டுக் கைவிடப்படும் மனிதன் விரைவில் தோல்வியையும் ஏமாற்றத்தையும் அடைகிறான்.(20) சகர்கள், யவனர்கள், காம்போஜர்களில் பிராமணர்கள் இல்லாததன் விளைவால் க்ஷத்திரிய இனக்குழுக்களும் இழிந்த சூத்திர நிலையை அடைந்து வீழ்ச்சியடைந்தன.(21)

திராவிடர்கள் {திரவிடர்கள் / திரமிளர்கள்}[1], களிங்கர்கள், புலிந்தர்கள், உசீநரர்கள், கோலிஸர்ப்பர்கள், மாஹிஷர்கள் மற்றும் பிற க்ஷத்திரியர்களுக்கு(22) மத்தியில் பிராமணர்கள் இல்லாததால், அவர்கள் சூத்திரர்களாக இழிநிலையை அடைந்தனர். ஓ! வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, அவர்களை {பிராமணர்களை} வெல்வதை விட அவர்களிடம் தோற்பதே ஏற்புடையது.(23) இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் கொல்லும் எவனும், ஒற்றைப் பிராமணனைக் கொன்றதைப் போன்ற கொடிய பாவத்தை ஈட்டுவதில்லை.(24)ஒரு பிராமணனை இழித்தோ, பழித்தோ எவனும் ஒருபோதும் பேசக்கூடாது. எங்கே பிராமணர்கள் இகழப்படுகிறார்களோ, அங்கே (அதைச் சொல்பவனையும், அவனது வார்த்தைகளையும் தவிர்க்கும் வகையில்) ஒருவன் தன் தலையைத் தொங்கப் போட்டு அமர வேண்டும், அல்லது அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல வேண்டும்.(25) எந்த மனிதன் பிராமணர்களோடு சச்சரவு செய்வானோ, அவன் இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை, அல்லது பிறந்தால் மகிழ்ச்சியாகத் தன் வாழ்நாளைக் கடத்துவதில்லை.(26) காற்றை எவனும் தன் கையால் பிடிக்க முடியாது. நிலவை எவனும் தன் கரத்தால் தீண்ட முடியாது. பூமியை எவனும் தன் கரங்களில் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போலவே, ஓ! மன்னா, எவனாலும் இவ்வுலகில் பிராமணர்களை வெல்ல முடியாது” என்றார் {பீஷ்மர்}.(27)

பூமாதேவி சொன்ன மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 34-பிராமணர்களின் மேன்மை குறித்துக் கிருஷ்ணனிடம் பேசிய பூமாதேவியின் உரையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“ஒருவன் எப்போதும் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அவர்கள் சோமனைத் தங்கள் மன்னனாகக் கொண்டவர்கள், அவர்களால் பிறருக்கு மகிழ்ச்சியையும், துன்பத்தையும் தர முடியும்.(1) ஓ! மன்னா, ஒருவன் தன் தந்தைமாரையும், பாட்டன்மாரையும் எவ்வாறு பேணிப் பாதுகாப்பார்களோ அதே போன்று இவர்களும் பேணிப் பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்டு, உணவு மற்றும் ஆபரணக் கொடைகளையும், அவர்கள் விரும்பும் அனுபவிக்கத்தக்க பொருட்களையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தேவர்களின் தலைவனான வாசவனிடம் இருந்து அனைத்து உயிரினங்களுக்கும் பாயும் அமைதியும் மகிழ்ச்சியும் போல, பிராமணர்கள் இவ்வாறு மதிக்கப்படும் நாட்டில், அமைதியும் மகிழ்ச்சியும் பாயும்.(2) தூய ஒழுக்கம் கொண்டவர்களும், பிரம்ம ஒளி கொண்டவர்களுமான பிராமணர்கள் ஒரு நாட்டில் பிறக்க வேண்டும். (ஒரு நாட்டில் வந்து குடியேறுபவர்களுக்கு மத்தியில்) அற்புதமான தேர்வீரர்களும், எதிரிகள் அனைவரையும் எரிக்க வல்லவர்களுமான க்ஷத்திரியர்களும் விரும்பப்பட வேண்டும்.(3) இது நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! மன்னா, நற்குடி பிறப்பு, அறம் மற்றும் நெறிகள் குறித்த அறிவு ஆகியவற்றைக் கொண்டவனும், சிறந்த நோன்புகளை உறுதியுடன் நோற்பவனுமான ஒரு பிராமணனை ஒருவன் தன் மாளிகையில் வசிக்கச் செய்வதைவிட வேறு உயர்ந்தது ஏதுமில்லை. அத்தகைய செயல் அனைத்துவகை அருளையும் உண்டாக்கவல்லது.(4) பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் வேள்விக் காணிக்கைகள், அவற்றை ஏற்கும் தேவர்களையே சென்றடைகின்றன. பிராமணர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாராவர். ஒரு பிராமணனைவிட உயர்ந்தது ஏதுமில்லை.(5)

ஆதித்தியன் {சூரியன்}, சந்திரமாஸ் {சந்திரன்}, காற்று {வாயு}, நீர், பூமி, வானம், திசைப்புள்ளிகள் ஆகிய அனைத்தும் பிராமணனின் உடலுக்குள் நுழைந்து, பிராமணன் உண்பவற்றை எடுத்துக் கொள்கின்றன[1].(6) எந்த வீட்டில் பிராமணர்கள் உண்பதில்லையோ, அங்கே பித்ருக்களும் உண்ண மறுப்பார்கள்.(7) பிராமணர்களை வெறுக்கும் இழிந்தவனின் வீட்டில் தேவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. பிராமணர்கள் நிறைவடையும்போது, பித்ருக்களும் நிறைவடைகின்றனர்.(8) பிராமணர்கள் நிறைவடையும்போது, தேவர்களும் நிறைவடைகின்றனர். இதில் ஐயமேதும் இல்லை. பிராமணர்களுக்கு வேள்வி ஹவிஸைக் கொடுப்பவர்கள் (இம்மையிலும் மறுமையிலும்) நிறைவை அடைகின்றனர்.(9) அத்தகைய மனிதர்கள் அழிவை அடைவதில்லை. உண்மையில் அவர்கள் உயர்ந்த கதிகளையே அடைகின்றனர்.பிராமணர்களை நிறைவடையச் செயவதற்காகக் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வேள்வி காணிக்கைகள்,(10) பித்ருக்கள் மற்றும் தேவர்கள் ஆகிய இருவரையும் நிறைவடையச் செய்கின்றன. உயிரினங்கள் அனைத்தும் எங்கே தோன்றினவோ அந்த வேள்வியின் காரணன் பிராமணனே.(11) இந்த அண்டம் எதனில் உண்டாகிறதென்பதையும், அழிவில் இருந்து மீண்டும் எப்போதும் வெளிப்படையாகத் திரும்புகிறது என்பதையும் அறிந்தவன் பிராமணன். உண்மையில், சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதையையும், எதிரிடத்திற்கு வழிவகுக்கும் மறுபாதையையும் பிராமணன் அறிவான்.(12) நடந்தது, நடக்கப் போவது என அனைத்தையும் பிராமணன் அறிவான். இருகால் உயிரினங்கள் அனைத்திலும் பிராமணனே முதன்மையானவனாவான். ஓ! பாரதர்களின் தலைவா, பிரமாமணன் தன் வகைக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முழுமையாக அறிந்தவனாவான்.(13) பிராமணர்களைப் பின்பற்றும் மனிதர்கள் ஒருபோதும் வீழ்வதில்லை. இவ்வுலகில் இருந்து செல்லும்போது அவர்கள் ஒருபோதும் அழிவையடைவதில்லை. உண்மையில், வெற்றி எப்போதும் அவர்களுடையதே.(14) பிராமணர்களின் உதடுகளில் இருந்து உதிரும் சொற்களை ஏற்பவர்களும், தங்கள் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தியவர்களுமான உயர் ஆன்ம மனிதர்கள், ஒருபோதும் வீழ்வதில்லை. வெற்றி எப்போதும் அவர்களுடையதாகவே இருக்கிறது.(15)

தங்கள் சக்தியாலும், வலிமையாலும் அனைத்தையும் எரிக்கும் க்ஷத்திரியர்களின் சக்தி, பிராமணர்களுடன் மோதும்போது தணிவடைகிறது {அழிவை அடைகிறது}.(16) {பிராமண} பிருகுக்கள், {க்ஷத்திரிய} தாலஜங்கர்களை வென்றனர். அங்கிரஸின் மகன்கள் நிபர்களை வென்றனர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பரத்வாஜர் வீதஹவ்யர்களையும், ஐலர்களையும் வென்றார்.(17) இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் பல்வேறு வகை ஆயுதங்களைப் பயன்படுத்தவல்லவர்களாக இருந்தும், கருப்பு மான் தோலை மட்டுமே தங்களது சின்னமாகக் கொண்டவர்களும், அதையே பெயராகக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அவர்களை வென்று பயனடைந்தனர். பிராமணர்களுக்குப் பூமியை அளித்து, அத்தகைய செயலின் மூலம் {இம்மை, மறுமை என்ற} இரண்டு உலகங்களுக்கும் ஒளியூட்டும் ஒருவன், இறுதியாக அனைத்தும் பொருட்களின் கதியை அடைவதில் வெல்வான்[2].(18) மரத்திற்குள் மறைந்திருக்கும் நெருப்பைப் போல, இவ்வுலகில் சொல்லப்படும், அல்லது கேட்கப்படும், அல்லது, படிக்கப்படும் அனைத்தும் பிராமணனில் அடங்கிக் கிடக்கிறது.(19) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இது தொடர்பாக வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(20)வாசுதேவன், “ஓ! உயிரினங்களின் தாயே, ஓ! மங்கலத் தேவியே, என்னுடைய இந்த ஐயத்திற்கான தீர்வை நான் உன்னிடம் கேட்க விரும்புகிறேன். இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்கும் மனிதன் எச்செயலைச் செய்வதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான்” என்று கேட்டான்.(21)

பூமி, “ஒருவன் பிராமணர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். இந்த ஒழுக்கமே தூய்மையடையச் செய்வதும், சிறந்ததுமாகும். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றும் மனிதனின் மாசுகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.(22) இதிலிருந்தே (இந்த ஒழுக்கத்தில் இருந்தே) செழிப்பு எழுகிறது. இதிலிருந்து புகழ் எழுகிறது. இதிலிருந்தே புத்தியும், ஆன்ம அறிவும் எழுகிறது. இந்த ஒழுக்கத்தைக் கொண்ட ஒரு க்ஷத்திரியன் வலிமைமிக்க ஒரு தேர்வீரனாகவும், எதிரிகளை எரிப்பவனாகவும் ஆகி, பெரும் புகழை ஈட்டுவதில் வெல்கிறான்.(23) “அனைத்து வகைச் செழிப்பையும் அடைய விரும்பும் ஒருவன், நற்குடியில் பிறந்தவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனும், சாத்திரங்களை அறிந்தவனுமான ஒரு பிராமணனை எப்போதும் மதிக்க வேண்டும்” என்பதையே நாரதர் என்னிடம் சொன்னார்.(24) உயர்ந்த அல்லது தாழ்ந்த மனிதர்கள் அனைவருக்கும் மேலாகக் கருதப்படுபவர்களுக்கும் உயர்ந்த பிராமணர்களால் புகழப்படும் மனிதன் நிச்சயம் செழிப்பில் வளர்வான்.(25)

சுடப்படாத மண்ணாங்கட்டி கடலில் இடப்படும்போம் அழிவையடைவது போலவே பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசும் மனிதனும் விரைவில் தோல்வியையும், ஏமாற்றத்தையும் அடைகிறான்.(26) இதே வகையில் பிராமணர்களைத் துன்புறுத்தும் செயல்கள் அனைத்தும் நிச்சயம் தோல்வியையும், அழிவையும் கொண்டு வரும். நிலவில் கரும்புள்ளிகளையும், பெருங்கடலில் உப்பையும் காண்பீராக[3].(27) பெரும் இந்திரனே ஒருமுறை மேனியெங்கும் ஆயிரம் பாலினக்குறிகளை {பெண்குறிகளை} அடைந்தான். பிறகு பிராமணர்களின் சக்தியின் மூலமே அவை ஆயிரம் கண்களாக மாற்றமடைந்தன.(28) ஓ! மாதவரே, இவை யாவும் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் காண்பீராக. ஓ! மதுசூதனரே, புகழ், செழிப்பு, மறுமையின் பல்வேறு இன்பலோகங்கள் ஆகியவற்றை விரும்புபவனும், தூய நடத்தையும், தூய ஆன்மாவையும் கொண்டவனுமான ஒரு மனிதன், பிராமணர்களின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாக வாழ வேண்டும்” என்றாள் {பூமாதேவி}.(29)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குரு குலத்தோனே, பூமாதேவியின் இச்சொற்களைக் கேட்ட மதுசூதனன், “நல்லது, நல்லது” என்று சொல்லி உரிய வடிவில் அந்தத் தேவியைக் கௌரவித்தான்.(30) ஓ! பிருதையின் மகனே, பூமாதேவிக்கும், மாதவனுக்கும் இடையில் நடந்த இந்த உரையாடலைக் குவிந்த ஆன்மாவோடு கேட்ட நீ, மேன்மையான பிராமணர்கள் அனைவரையும் வழிபடுவாயாக. இதைச் செய்வதன் மூலம் நீ விரைவில் உனக்கான் உயர்ந்த நன்மையை அடைவாய்”.(31)

பிரம்ம விதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 35-பிராமணர்களின் சிறப்பு; அவர்களுக்கான விதிகளைப் பிரம்மன் சொன்னது; பிராமணர்களின் சக்தி ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! அருளப்பட்ட மன்னா, ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே அனைத்து உயிரினங்களால் துதிக்கப்படும் தகுதியையும், சமைக்கப்பட்ட உணவின் முதல் பங்கை உண்ணும் விருந்தினரெனும் தகுதியையும் அடைகிறான்.(1) (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) பெரும் நோக்கங்கள் அனைத்தும் அவர்களில் இருந்தே உண்டாகின்றன. அவர்கள் {பிராமணர்கள்} அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாவர். மேலும் (அவர்களின் வாயில் ஊற்றப்படும் உணவை தேவர்களே உண்பதால்) அவர்கள் தேவர்களின் வாயாகவும் இருக்கின்றனர். மதிப்புடன் வழிபட்டப்படும் அவர்கள், மங்கலம் நிறைந்த வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் நாம் செழிப்படையும்படி வாழ்த்துகின்றனர்.(2) நம் எதிரிகளால் அலட்சியம் செய்யப்படும் அவர்கள், தங்களை எதிர்ப்பவர்களிடம் {எதிரிகளிடம்} சினம்கொண்டு, கடும் சாபங்களை இட்டுத் அவர்களுக்குத் தீமையை விரும்பட்டும்[1].(3)பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள், பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களையும், அவர்களது கடமைகளைப் படைத்தபோது சொன்ன பின்வரும் பழைய ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {அந்த ஸ்லோகங்கள்}, “ஒரு பிராமணன், தனக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது. பாதுகாப்பை அடைந்திருக்கும் அவர்கள், பிறரைப் பாதுகாக்க வேண்டும். இவ்வழியில் நடப்பதால் அவர்கள் தங்களுக்கு உயர்ந்த பயனைத் தரும் கதியை நிச்சயம் அடைவார்கள்.(5) தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் செயல்களைச் செய்வதன் மூலம் அவர்கள் நிச்சயம் பிரம்ம செழிப்பை அடைவார்கள். நீங்களே அனைத்து உயிரினங்களுக்கும் முன்னுதாரணமாகவும், அவர்களைக் கட்டுப்படுத்தும் கடிவாளங்களாகவும் இருப்பீர்கள்.(6) கல்விமானான ஒரு பிராமணன், சூத்திரர்களுக்காக விதிக்கப்பட்டவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது. அத்தகைய செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் தகுதியை இழக்கிறான். வேத கல்வியின் மூலம் அவன் செழிப்பையும், புத்தியையும், சக்தியையும், அனைத்தையும் எரிக்கவல்ல சக்தியையும், மிக மேலான மகிமையையும் அவன் நிச்சயம் அடைவான்.(8) தேவர்களுக்குத் தெளிந்த நெய் ஆகுதிகளைக் காணிக்கையாக அளிப்பதன் மூலம் உயர்ந்த அருளை அடையும் பிராமணர்கள், பிரம்ம செழிப்புடன் சமைக்கப்படும் அனைத்து வகை உணவுகளையும் குழந்தைகளுக்கு முன்பே உண்ணக் கூடிய தகுதியைப் பெறுகிறார்கள்[2].(9) அனைத்து உயிரினங்களிடமும் கருணையால் நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாடு மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் கூடியவர்களுமான நீங்கள் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவீர்கள்.(10) மனிதர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ, தேவர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தும், தவங்கள் மற்றும் அறிவின் துணையுடனும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பதன் மூலமும் {உங்களால்} அடையப்படும்” {என்று சொல்கின்றன}.(11) ஓ! பாவமற்றவனே, பிரம்மனால் பாடப்பட்ட ஸ்லோகங்களையே நான் இவ்வாறு உனக்கு உரைத்தேன். உயர்ந்த நுண்ணறிவையும் ஞானத்தையும் கொண்ட படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களிடம் கொண்ட கருணையின் மூலம் இவற்றை விதித்தான்.(12)அவர்களில் தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்தோரின் பலம், மன்னர்களின் வலிமைக்கு நிகரானதாகும். அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாகவும், சீற்றமிக்கவர்களாகவும், மின்னலின் வேகத்தைக் கொண்டவர்களாகவும், தாங்கள் செய்யும் செயல்களை மிக விரைவாகச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) அவர்களில் சிங்கத்தின் வலிமையைக் கொண்டவர்களும், புலியின் வலிமையைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். காட்டுப்பன்றியின் பலத்தைக் கொண்ட சிலரும், மான் மற்றும் முதலைகளின் பலங்களைக் கொண்ட சிலரும் இருக்கின்றனர்.(14) கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சிலரும், சுறாக்களுக்கு ஒப்பாகக் கடிக்கும் {சுறாக்களின் கடிக்கு ஒப்பான வலியைத் தரும்} சிலரும் இருக்கின்றனர். தங்களை எதிர்ப்பவர்களைத் தங்கள் வாக்கால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும், தங்கள் கண்களின் பார்வையால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும் இருக்கிறார்கள்.(15) ஏற்கனவே சொல்லப்பட்டது போலக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலச் சிலரும், மிக மென்மையான மனநிலை கொண்ட சிலரும் இருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள் பல்வேறு மனோநிலைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(16)

மேகலர்கள், திராவிடர்கள் {திரமிடர்கள்}[3], லாடர்கள், பௌண்டரர்கள், கொன்வசிரர்கள், சௌண்டிகர்கள், தரதர்கள், தார்வர்கள், சௌரர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள்,(17) கிராதர்கள், யவனர்கள் மற்றும் எண்ணற்ற க்ஷத்திரிய இனக்குழுக்கள், பிராமணர்களின் கோபத்தின் மூலம் சூத்திர நிலைக்குத் தாழ்ந்திருக்கிறார்கள்[4].(18) பிராமணர்களை அலட்சியம் செய்ததன் விளைவால் அசுரர்கள் ஆழ்கடலைத் தஞ்சமாகக் கொள்ளும் நிலையை அடைந்தனர். பிராமணர்களுடைய அருளில் மூலமே தேவர்களும் சொர்க்த்தின் இன்பலோகவாசிகளாகும் நிலையை அடைந்தன்ர.(19)வெளி, அல்லது ஆகாயமென்ற பூதம் தீண்டப்பட முடியாதது. இமய மலைகள் தங்கள் நிலைகளில் இருந்து அசைக்கப்பட முடியாதன. கங்கையின் நீரோட்டம் அணைக்கு அடங்காதது. பிராமணர்கள் அடக்கப்பட இயலாதவர்களாவர்.(20) பிராமணர்களின் நல்விருப்பங்களை விளைவிக்காத {பேணி வளர்க்காத} க்ஷத்திரியர்கள் எவரும் பூமியை ஆள இயலாதவர்களாவர் {ஆளும் தகுதியற்றவர்களாவர்}. பிராமணர்கள் உயர் ஆன்மா கொண்டவர்களாவர் {மகாத்மாக்களாவர்}. அவர்கள் தேவர்களுக்கே தேவராவர்.(21) கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியின் அரசுரிமையை நீ உண்மையில் அனுபவிக்க விரும்பினால், கொடைகளாலும், கீழ்ப்படிந்த தொண்டுகளாலும் அவர்களை {பிராமணர்களை} எப்போதும் வழிபடுவாயாக.(22) ஓ! பாவமற்றவனே, பிராமணர்கள்  கொடைகளை ஏற்பதன் விளைவால், அவர்களது சக்தியும், வலிமையும் குன்றுகின்றன. ஓ!மன்னா, கொடைகளை ஏற்க விரும்பாத பிராமணர்களிடம் இருந்து நீ உன் குலத்தைப் பாதுகாத்துக் கொள்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(23)

சோம விதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 36-இந்திரனிடம் சம்பாசுரன் சொன்ன பிராமண மகிமை; சம்பரனின் தந்தை மற்றும் சோமனுக்கு இடையில் இது குறித்து நடந்த உரையாடல் ஆகியவற்றைக் யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகச் சக்ரனுக்கும், சம்பரனுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் சக்ரன் {இந்திரன்}, தலையில் சடாமுடி தரித்து உடல் முழுவதும் சாம்பலை {திருநீற்றைப்} பூசிக் கொண்டும் ஒரு தவசியின் வேடத்தை ஏற்றுக் கொண்டு, கோரமான தேரொன்றைச் செலுத்திக் கொண்டு அசுரன் சம்பரனின் முன்னிலையை அடைந்தான்.(2)சக்ரன் {அசுரன் சம்பரனிடம்}, “ஓ! சம்பரா, எந்த ஒழுக்கத்தின் மூலம் நீ உன் குலத்தின் தலைவனானாய்? எந்தக் காரணத்தினால் மக்கள் உன்னை அனைவருக்கும் மேம்பட்டவனாகக் கருதுகிறார்கள்? இதை நீ எனக்கு உண்மையாகவும், விரிவாகவும் சொல்வாயாக” என்று கேட்டான்.(3)

சம்பரன் {சக்ரனிடம்}, “பிராமணர்களிடம் நான் ஒரு போதும் தீய உணர்வுகளை வளர்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் எந்தப் போதனையையும் கேள்வி கேட்காத மதிப்புடன் அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். பிராமணர்கள் சாத்திரங்களை விளக்க முற்படும்போது, பெரும் மகிழ்ச்சியோடு நான் அதைக் கேட்கிறேன்.(4) அவர்களது விளக்கங்களைக் கேட்ட பிறகு நான் ஒருபோதும் அவர்களை அலட்சியம் செய்ததில்லை. அல்லது பிராமணர்களுக்கு எதிராக எவ்வகையான குற்றமும் இழைத்ததில்லை. புத்தியுள்ள பிராமணர்களை நான் எப்போதும் வழிபடுகிறேன். அவர்களிடம் இருந்தே செய்திகளை எப்போதும் நான் நாடுகிறேன். நான் எப்போதும் அவர்களது பாதங்களை வழிபடுகிறேன்.(5) அவர்கள் நம்பிக்கையுடன் என்னை அணுகி, எப்போதும் என்னிடம் அன்புடன் பேசி, என் நலத்தை விசாரிக்கின்றனர். அவர்கள் கவனமற்றிருந்தாலும் நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன். அவர்கள் உறங்கினாலும், நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன்.(6)

சாத்திரங்களால் சுட்டிக்காட்டப்படும் பாதையிலும், பிராமணர்களிடமும் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வன்மம் மற்றும் தீய ஆசைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டவனுமான நான், தேனீக்கள் தங்கள் கூட்டின் அடைகளை {தேனடைகளைத்} தேனால் நிறைப்பதைப் போல, என் ஆசான்களாக இருப்பவர்களும், என்னை ஆள்பவர்களுமான பிராமணர்கள், ஞானமெனும் அமுதத்தால் எப்போதும் என்னை நிறைக்கிறார்கள்.(7) உற்சாகமிக்க இதயங்களுடன் அவர்கள் சொல்லும் எதையும், நினைவு மற்றும் புத்தியின் துணையுடன் நான் எப்போதும் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களிடம் நான் கொண்டுள்ள நம்பிக்கையில் எப்போதும் கவனமாக இருக்கிறேன், மேலும், அவர்களை விட எவ்வாறு தாழ்ந்திருக்கிறேன் என்பதையும் எப்போதும் நினைக்கிறேன்.(8) அவர்களது நாவின் நுனியில் வசிக்கும் அமுதத்தை எப்போதும் பருகுவதன் காரணத்தால், நட்சத்திரங்கள் அனைத்தையும் விஞ்சியிருக்கும் நிலவைப் போல நான் என் குலத்தில் உள்ள பிறர் அனைவரையும் விட மேலான நிலையை அடைந்திருக்கிறேன்.(9) பிராமணர்களின் உதடுகளில் இருந்து விழும் சாத்திர விளக்கங்களையும், உலகின் ஞானிகள் ஒவ்வொருவரின செயல்களையும் கேட்பதே உலகத்தின் அமுதமாகவும், குறிப்பிடத்தகுந்த சிறப்பாகவும் கருதப்பட வேண்டும்.(10) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலைக் கண்டும், பிராமணர்கள் சொன்ன போதனைகளின் பலத்தைப் புரிந்து கொண்டும் என் தந்தை {கசியப முனிவர்} மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் நிறைந்தார்.(11) உயர் ஆன்ம பிராமணர்களின் பலத்தைக் கண்ட என் தந்தை, சந்திரமாஸிடம் {சந்திரனிடம்}, “பிராமணர்கள் எவ்வாறு வெற்றியை அடைகின்றனர்?” என்று கேட்டார்.(12)சோமன்{சந்திரன் முனிவர் கசியபரிடம்}, “பிராமணர்கள் தவங்களின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றனர். வாக்கே அவர்களது பலமாக அமைகிறது. அரச வகையைச் சார்ந்தோரின் ஆற்றல் அவர்களின் கரங்களில் {தோள்களில்} இருக்கிறது. எனினும் பிராமணர்கள், வாக்கையே தங்கள் பலமாகக் கொண்டுள்ளனர்.(13) ஒரு பிராமணன், வசதியேதுமில்லாத தன் ஆசானின் இல்லத்தில் வசித்து, வேதங்களையோ, குறைந்தது பிரணவத்தையோ கற்க வேண்டும். அவன் கோபத்தில் இருந்து விடுபட்டு, உலகம் சார்ந்த பற்றுகளைத் துறந்து, அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைப் பெற்று ஒரு யதியாக வேண்டும்.(14) ஒருவன் தன் தந்தையின் வசிப்பிடத்திலேயே வேதங்கள் அனைத்திலும் திறம்பெற்று, மரியாதைக்குறிய நிலையை அடையுமளவுக்குப் பெரும் ஞானத்தை ஈட்டினாலும், பயணிக்காதவன், அல்லது வீட்டில் வளர்ந்தவன் {ஸாமான்யன்} என்றே மக்கள் அவனை நிந்திப்பார்கள்.(15) பூமியானது, போரிட விரும்பாத மன்னன், இல்லத்தைவிட்டுச் சென்று ஞானம் அடைய விரும்பாத பிராமணன் ஆகிய இருவரையும் எலிகளை விழுங்கும் ஒரு பாம்பைப் போல விழுங்குகிறது {அவர்கள் புகழின்றிப் போகிறார்கள்}.(16) செருக்கானது சிறுமதி கொண்டோரின் செழிப்பை அழிக்கிறது. {மணமாகாத} ஒரு கன்னிகை கருவுறுவதால் களங்கமடைகிறாள் {கெட்டுப் போகிறாள்}. ஒரு பிராமணன் வீட்டிலேயே இருப்பதால் நிந்திக்கத்தகுந்தவனாகிறான் {கெட்டுப் போகிறான்}” {என்றான் சோமன்}.(17)

அற்புதத்தன்மை நிறைந்த சோமனிடமிருந்து என் தந்தை இதைக் கேட்டறிந்தார். இதன் விளைவால் என் தந்தை பிராமணர்களை மதிக்கவும், வழிபடவும் தொடங்கினார். நான் அவரைப் போலவே உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பிராமணர்கள் அனைவரையும் வழிபடுகிறேன்” என்றான் {சம்பரன்}”.(18)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தத் தானவ இளவரசனின் {சம்பரனின்} வாயில் இருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், பிராமணர்களை வழிபடத் தொடங்கி, அதன் விளைவாக அவன் தேவர்களின் தலைமையிடத்தை அடைவதில் வென்றான்” {என்றார் பீஷ்மர்}.(19)

கொடைபெறத் தகுந்தவர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 37-கொடைபெறத் தகுந்தவர் யாரென்பது குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அந்நியர் ஒருவர், அல்லது நீண்டகாலம் உடன் வாழ்ந்த ஒருவர், அல்லது தொலைவில் இருந்து வரும் ஒருவர் எனக் கொடையாளியின் முன் தோன்றும் மூவரில் கொடைபெறத் தகுந்தவராக எவரைக் கருத வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவர்கள் அனைவரும் சம தகுதி கொண்டவர்களே. வேள்விகள் செய்வதற்கோ, ஆசானுக்கான கட்டணத்தை {தட்சணையை} வழங்குவதற்கோ, மனைவி மக்களைப் பராமரிப்பதற்கோ பிச்சையெடுப்பதால் சிலர் தகுதி பெறுகின்றனர். பூமி முழுதும் திரிந்து, ஒருபோதும் எதையும் வேண்டாமல் இருந்து, கொடுக்கப்படுவதைப் பெற்றுக் கொள்ளும் நோன்பைப் பின்பற்றுவதால் சிலர் கொடைபெறும் தகுதியைப் பெறுகின்றனர். மேலும், ஒருவன் வேண்டுவதை நாம் கொடுக்க வேண்டும்.(2) எனினும், நம்மைச் சார்ந்திருப்பவர்கள் துன்பமடையாத வகையில் நாம் கொடையளிக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் ஒருவன் தன்னையே துன்புறுத்திக் கொள்கிறான்.(3) முதல் முறையாக வந்திருக்கும் அந்நியனும் உரிய கொடைக்குத் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும். தெரிந்தவரும், நன்கறியப்பட்டவரும், கொடையாளியுடன் வாழ்ந்து வருபவருமான ஒருவரும் அதே வகையிலேயே கருதப்பட வேண்டும். தொலையில் இருந்து வருபவரும் சமமாகவே கருதப்பட வேண்டும் என்றும் ஒரு கல்விமான் அறிவான்” என்றார் {பீஷ்மர்}.(4)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எவருக்கும் தீங்கிழைக்காமலும், சாத்திர விதிகளுக்கு முரண்படாமலும் கொடையளிக்க வேண்டும் என்பது உண்மைதான். எனினும், கொடை பெறுவதற்குத் தகுந்தவர் எவர் என்பதை ஒருவன் சரியாக உறுதி செய்ய வேண்டும். ஒருவனுக்குக் கொடுக்கப்படும் கொடைக்குக் குறைவேற்படாத வகையில் அவன் இருக்க வேண்டும்” என்றான்[1].(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ரித்விஜர், புரோஹிதர், ஆசான், ஆச்சாரியர், சீடன், (திருமண உறவின் மூலமான) உற்றார் உறவினர் ஆகியோர் கல்விமான்களாகவும், வன்மமற்றவர்களாகவும் இருக்கும்போது அவர்களை மதிப்பிற்கும், வழிபாட்டிற்கும் தகுந்தவர்களாக மதிக்க வேண்டும்.(6) அத்தகைய குணங்கள் அற்றவர்களைக் கொடைகளுக்கோ, விருந்தோம்பலுக்கோ தகுந்தவராக ஒருபோதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் தன்னோடு தொடர்பு கொள்ளும் மனிதர்களை எச்சரிக்கையுடன் ஆராய்ந்தறிய வேண்டும்.(7) கோபமின்மை, வாக்கில் வாய்மை, தீங்கிழையாமை, நேர்மை, அமைதி நிறைந்த நடத்தை, செருக்கின்மை, பணிவு, துறவு, தற்கட்டுப்பாடு, ஆன்ம நிறைவு அல்லது ஆன்ம அமைதி ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவனும், தீய செயல்கள் ஏதுமற்றவனுமான ஒருவனே {கொடைபெறத்} தகுதியுடையவனாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய மனிதனே கௌரவிக்கப்படத் தகுந்தவன்.(8,9)

ஒருவன் நற்கறியப்பட்டவனாகவோ, தெரிந்தவனாகவோ இருந்தாலும், ஒருவன் புதியவனானாலும், ஏற்கனவே காணப்படாதவனானாலும் இந்தத் தகுதிகளைக் கொண்டிருக்கும் அவன் கௌரவங்களுக்கும், விருந்தோம்பலுக்கும் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும்.(10) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவன், அல்லது சாத்திரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று காட்ட முனைபவன், அல்லது சமூகத்தில் உள்ள நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுவதை அங்கீகரிப்பவன் எவனும் வெறுமனே தனக்கான அழிவையே கொண்டு வருகிறான் (அவனைக் கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருத முடியாது).(11)

கல்வியை வீணாக்குபவனும், வேதங்களைப் பழித்துப் பேசுபவனும், பயனற்ற சர்ச்சைகளின் அறிவியலில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும்,(12) நல்லோரின் சபையில் (சச்சரவுகளில்) வெற்றியை ஈட்ட விரும்பி அறம் மற்றும் நெறிகளுக்கான காரணங்களை மறுத்து, அனைத்தையும் விதியின் மேல் சாத்துபவனும், மனிதர்கள் அனைவரிடமும் ஐயுணர்வு கொண்டவனும், மூடனும், தீர்மானம் கொள்ள இயலாதவனும், வாக்கில் கசந்தவனுமான ஒரு பிராமணன் வெறுப்பு நிறைந்த நாயாக அறியப்பட வேண்டும்.(14) நாயானது, குரைத்துக் கொண்டே கடிக்க முனைவதைப்போலவே, இத்தகைய மனிதனும் தன் மூச்சை வீணாகச் செலவழித்து, சாத்திரங்கள் அனைத்தின் அதிகாரங்களையும் அழிக்க முனைகிறான்.(15)

சமூகத்தை ஆதரிக்கும் நடைமுறைகள், அறம் சார்ந்த கடமைகள், சுயத்திற்கு நன்மையை உண்டாக்கவல்ல அனைத்துச் செயல்கள் ஆகியவற்றையும் ஒருவன் செய்ய வேண்டும். இவற்றைச் செய்து வாழும் மனிதன், காலத்தால் எப்போதும் நீடித்திருக்கும் அளவு செழிப்பில் வளர்கிறான்.(16) வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களுக்கும், வேத கல்வியின் மூலம் முனிவர்களுக்கும், பிள்ளைகளைப் பெறுவதன் மூலம் பித்ருக்களுக்கும், கொடைகளை அளிப்பதன் மூலம் பிராமணர்களுக்கும், உணவூட்டுவதன் மூலம் விருந்தினர்களுக்கும் பட்ட கடனைத் தூய நோக்கத்துடனும், சாத்திர விதிகளின் படியும் சரியாகத் திரும்பச் செலுத்தும் ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தாசிரமவாசி} அறத்தில் {தர்மத்தில்} இருந்து ஒருபோதும் வீழமாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(17,18)

பஞ்சசூடை! – அநுசாஸனபர்வம் பகுதி – 38-பெண்களின் இயல்பு குறித்து நாரதரிடம் பேசிய பஞ்சசூடையின் உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பெண்களின் மனோநிலை {இயல்பைக்} குறித்து நீர் உரையாடுவதை நான் கேட்க விரும்புகிறேன். தீமைகள் அனைத்திற்கும் வேராகப் பெண்களே சொல்லப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மிகவும் பலவீனமானவர்களாகவே கருதப்படுகிறார்கள்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தெய்வீக முனிவர் நாரதருக்கும், (தேவலோக) அரசவை மங்கை {வேசி} பஞ்சசூடைக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்த போது, பிரம்மலோகத்தில் தன் வசிப்பிடத்தைக் கொண்டவளும், குற்றமற்ற அழகைக் கொண்ட அப்ஸரஸுமான பஞ்சசூடை என்பவளைச் சந்தித்தார்.(3) உடலின் ஒவ்வொரு அங்கமும் பேரழகுடன் இருக்கக்கூடிய அந்த அப்சரஸைக் கண்ட அந்தத் தவசி, அவளிடம், “ஓ! கொடியிடையாளே, என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது. அதை எனக்கு விளக்கிச் சொல்வாயாக” என்று கேட்டார்”.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அம்முனிவரால் {நாரதரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த அப்சரஸ் அவரிடம், “{நீர் கேட்கும்} காரியம் நான் அறிந்ததாக இருந்தால், நான் அதைக் குறித்துப் பேசத் தகுந்தவள் என்று நீர் நினைத்தால், நிச்சயம் என் மனத்தில் இருப்பதை நான் சொல்வேன்” என்றாள்.(5)

நாரதர் {பஞ்சசூடையிடம்}, “ஓ! இனியவளே, உன் தகுதிக்கு அப்பாற்பட்ட எந்தப் பணியிலும் நிச்சயம் நான் உன்னை ஈடுபடுத்த மாட்டேன். ஓ! அழகிய முகம் கொண்டவளே, பெண்களின் மனோநிலையை {இயல்பை} நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்” என்றார்”.(6)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தத் தெய்வீக முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான அப்சரஸ் {பஞ்சசூடை}, அவரிடம், “நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பெண்களைக் குறித்துத் தவறாகப் பேச இயலாதவளாக இருக்கிறேன்.(7) பெண்கள் என்னவாக இருக்கிறார்கள், அவர்கள் எத்தகைய இயல்புடன் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீர். ஓ! தெய்வீக முனிவரே, இத்தகைய பணியில் என்னை ஈடுபடுத்துவது உமக்குத் தகாது” என்று மறுமொழி கூறினாள்.(8)

அவளிடம் அந்தத் தெய்வீக முனிவர், “ஓ! கொடியிடையாளே, அஃது உண்மைதான். பொய் பேசுவதன் மூலமே ஒருவர் குற்றமிழைத்தவராகிறார். எனினும், உண்மையைச் சொல்வதில் எக்குற்றமும் இருக்க முடியாது” என்றார்.(9)

அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், இனிய புன்னகையுடன் கூடியவளுமான அப்சரஸ் பஞ்சசூடை, நாரதரின் கேள்விக்குப் பதிலளிக்க உடன்பட்டாள். பெண்களிடம் நித்தியமாக {எப்போதும்} உள்ள உண்மையான குற்றங்களை அவள் சொல்லத் தொடங்கினாள்.

பஞ்சசூடை {நாரதரிடம்}, “பெண்கள், உயர்ந்த குடியில் பிறந்திருந்தாலும், அழகுடன் கூடியவர்களாக இருந்தாலும், பாதுகாவலர்களை {கணவர்களைக்} கொண்டிருந்தாலும், அவர்கள் {பெண்கள்} தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறவே விரும்புகிறார்கள். ஓ! நாரதரே, இக்குற்றம் உண்மையில் அவர்களைக் களங்கப்படுத்துகிறது.(11) பெண்களைவிடப் பாவம் நிறைந்தது வேறு எதுவுமில்லை. உண்மையில் பெண்களே குற்றங்கள் அனைத்தின் வேராக இருக்கிறார்கள். ஓ! நாரதரே, அதை நிச்சயம் நீர் அறிவீர்.(12) பெண்கள், புகழுடனும், செல்வத்துடனும், அழகிய பண்புகளுடனும், முற்றிலும் தங்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உள்ள கணவர்களைப் பெற்றிருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்களை அவமதிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்[1].(13) ஓ! பலமிக்கவரே, அடக்கத்தைக் கைவிட்டு, பாவம் நிறைந்த பழக்கவழக்கங்களையும், நோக்கங்களையும் கொண்ட மனிதர்களின் தோழமையை {துணையை} வளர்ப்பது, பெண்களாகிய நாங்கள் கொண்டுள்ள பாவம் நிறைந்த மனோநிலையாகும் {இயல்பாகும்}[2].(14) பெண்கள் தங்கள் முன்னிலையில் வந்து சிறிதளவு மதிப்புடன் பேசும் மனிதர்களையும் விரும்புகிறார்கள்.(15)கட்டுப்பாடுகள் எதையும் இயல்பாகவே பொறுத்துக் கொள்ளாத பெண்களும், வேறு பாலினத்தைச் சேர்ந்தவரால் {ஆண்களால்} வேண்டப்படாததாலோ, உறவினர்களிடம் கொண்ட அச்சத்தாலோ தங்களுக்காக விதிக்கப்பட்டவற்றை {கட்டுப்பாடுகளை} மீறாமல் தங்கள் கணவர்களிடமே உள்ளனர்.(16) தங்கள் உதவிகளுக்காக {விருப்பங்களுக்காக} அனுமதிக்க இயலாதவர்கள் என அவர்களுக்கு எவரும் இல்லை. அவர்கள் யாருக்கு உதவத் தயாராக இருக்கிறார்களோ, அந்த மனிதனின் வயதை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. அழகாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவன் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவனாக மட்டும் இருந்தாலே பெண்கள் அவனது துணையை அனுபவிக்கத் தயாராக இருக்கிறார்கள்.(17) பாவத்தில் கொண்ட அச்சம், அல்லது கருணை, அல்லது செல்வம், அல்லது உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகளுக்காகத் தங்கள் நெஞ்சங்களில் எழும் அன்பு ஆகியவற்றுக்காகப் பெண்கள் தங்கள் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதில்லை.(18) மதிப்பிற்குரிய குடும்பங்களின் மத்தியில் வாழும் பெண்களும் {குலப் பெண்களும் கூட}, இளமையானவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும், விடுதலையுடன் கூடிய வாழ்வை நோற்பவர்களுமான தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {வேசிகளின்} நிலையைக் கண்டு பொறாமை கொள்கின்றனர்.(19) கணவர்களால் காதலிக்கப்படுபவர்களும், பெரும் மதிப்புடன் நடத்தப்படுபவர்களுமான பெண்களும் கூட, கூனர்கள், குருடர்கள், மூடர்கள், அல்லது குள்ளர்களுக்கும் தங்கள் உதவிகளை அளிப்பது {அவர்களோடு சேர்வதும்} காணப்படுகிறது.(20)

நகரும் சக்தியை இழந்த மனிதர்கள் {முடவர்கள்}, அல்லது அழகற்ற இழிமனிதர்களின் துணையையும் பெண்கள் விரும்புவது காணப்படுகிறது. ஓ! பெரும் முனிவரே, பெண்கள், தங்களுக்குத் துணையாகக் கொள்ளத் தகாதவன் எனக் கருதப்படுபவன் இவ்வுலகில் எவனுமில்லை.(21) எனினும், பெண்கள் தங்கள் கணவனுக்காகக் காத்திராமல் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக, தங்களுக்குள்ளேயே ஒருவரோடொருவர் தவறாகக் கலக்க முற்படுவார்கள்[3].(22) எதிர் பாலினத்தவனை அடைய இயலாமை, அல்லது உறவினர்களிடம் கொண்ட அச்சம், அல்லது மரணம் மற்றும் சிறைவாசம் குறித்த அச்சம் ஆகியவற்றின் மூலமே பெண்கள் தங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் நிலைத்திருக்கிறார்கள்.(23) எப்போதும் புதிய துணைகளிடம் மிகுந்த விருப்பம் கொண்டவர்களான அவர்கள் {துருதுருவென} மிகவும் அமைதியற்றவர்களாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாத தங்கள் இயல்பின் விளைவால் அவர்களை அன்பாக நடத்துவதன் மூலம் கீழ்ப்படியச் செய்ய முடியாது. மீறும் எண்ணம் கொண்டிருக்கும்போது கட்டுபடுத்த முடியாதவர்களாகவே அவர்களது இயல்பு இருக்கிறது. உண்மையில் பெண்கள், ஞானிகளால் சொல்லப்படும் சொற்களைப் போன்றவர்களாவர்[4].(24) விறகால் நெருப்பு ஒருபோதும் தணிவடைவதில்லை. ஆறுகளின் நீரால் பெருங்கடல் ஒருபோதும் நிறைவை அடைவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதால் யமன் தணிவடைவதில்லை. அதே போலவே, பெண்களும் ஆண்களால் ஒருபோதும் தணிவடைவதில்லை.(25)ஓ! தெய்வீக முனிவரே, இது பெண்களுடன் தொடர்புடைய மற்றொரு புதிராகும். அவர்கள், அழகானவனாகவும், அழகிய பண்புகளைக் கொண்டவனாகவும் ஒரு மனிதனைக் கண்டால், அவர்களின் மேனியில் நிறைவில்லா ஆசையின் குறியீடுகள் தோன்றுகின்றன[5].(26) தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவர்களும், தங்களுக்கு ஏற்புடையவற்றை எப்போதும் செய்பவர்களும், ஆபத்து மற்றும் தேவைகளின் போது அவர்களைப் பாதுகாப்பவர்களுமாக இருக்கும் கணவர்களுக்குக் கூட அவர்கள் போதுமான மதிப்பை ஒருபோதும் காட்டுவதில்லை.(27) பெண்கள் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {ஆண்களின்} துணையைப் போல விருப்பத்திற்குரிய பொருட்களின் நிறைவையோ, ஆபரணங்களையோ, இனிய வகை உடைமைகளையோ கூட ஒருபோதும் உயர்வாகக் கருதுவதில்லை[6].(28) யமன், காற்று தேவன் {வாயு}, காலன், பாதாள லோகம், பெருங்கடலில் திரியும் இடையறாத நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரை வாய் {வடவாமுகம்}, கூரிய கத்தி, கடும் நஞ்சு, பாம்பு, நெருப்பு போன்ற இவை அனைத்தும் பெண்ணோடு கலந்திருக்கும் நிலையில் அவளோடு இருக்கின்றன.(29) ஐம்பெரும்பூதங்கள் எங்கிருந்து இருப்பில் உதித்தனவோ, படைப்பாளனான பிரம்மன் எங்கிருந்து அண்டத்தை விதித்தானோ, மனிதர்கள் எங்களிருந்து உதித்தனரோ அதே நித்திய பிரம்மத்தில் இருந்துதான் பெண்களும் இருப்பில் உதித்தனர். ஓ நாரதரே, பெண்கள் படைக்கப்பட்டபோதே, நான் பட்டியலிட்ட இந்தக் குற்றங்களும் அவர்களுக்குள் விதைக்கப்பட்டன” என்றாள் {பஞ்சசூடை}.(30)

பெண்களின் நடத்தை! – அநுசாஸனபர்வம் பகுதி – 39- பெண்கள் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்களாக இருப்பதைக் குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, இவ்வுலகில் உள்ள மனிதர் அனைவரும், தெய்வீக இருப்பால் படைக்கப்பட்ட மாயையில் மூழ்கி பெண்களிடம் தங்களை இணைத்துக் கொள்வது {பெண்களிடம் பற்று கொள்வது} காணப்படுகிறது.(1) அதே போலவே பெண்களும், ஆண்களிடம் தங்களை இணைத்துக் கொள்வதும் காணப்படுகிறது. இவையனைத்தும் உலகமெங்கும் காணப்படுகின்றன. இக்காரியத்தில் என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது.(2) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, (பெண்கள் இவ்வளவு குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும்போது) ஆண்கள் ஏன் தங்களைப் பெண்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள்? மேலும், பெண்களால் மிகவும் விரும்பப்படும் ஆடவர் யாவர்? அவர்கள் விரும்பாதவர்கள் யாவர்?(3) ஓ! மனிதர்களின் தலைவரே, மனிதர்கள் பெண்களைப் பாதுகாப்பது எவ்வாறு என்பதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்[1].(4)மனிதர்கள் பெண்களிடம் மகிழ்ந்து, அவர்களுடன் விளையாடும்போது, பெண்கள் அவர்களை வஞ்சிப்பதாகத் தெரிகிறது. மேலும், ஒரு மனிதன் ஒருமுறை அவர்களது கைகளில் வீழ்ந்துவிட்டால், பிறகு அவன் அவர்களிடம் இருந்து தப்புவது அரிதாகிவிடுகிறது. புதிய புல்வெளிகளை எப்போதும் பீடிக்கும் பசுக்களைப் போலப் பெண்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய மனிதர்களைப் பீடிக்கின்றனர்.(5) அசுரன் சம்பரன் கொண்டிருந்த மாயை, அசுரன் நமுசி கொண்டிருந்த மாயை, பலி அல்லது கும்பிநசி {லவணன்} கொண்டிருந்த மாயை ஆகியவற்றின் மொத்த தொகையையும் பெண்கள் கொண்டிருக்கின்றனர் {அந்த அசுரர்கள் அறிந்த மாயைகள் அனைத்தையும் பெண்களும் அறிவர்}.(6) ஆண் சிரித்தால், பெண்களும் சிரிப்பர். ஆண் அழுதால், அவர்களும் அழுவர். வாய்ப்பும், தேவையும் அமைத்தால் அவர்கள் தங்களுக்கு ஏற்பில்லாத {தங்களுக்குப் பிடிக்காத} மனிதனையும், ஏற்புடைய {இனிய} சொற்களால் வரவேற்பர்.(7) அசுரர்களின் ஆசான் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியல் கோட்பாடுகளையும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதி அறிந்த அறிவியல் கோட்பாடுகளையும், இயற்கையாகவே ஒரு பெண் கொண்டுள்ள நுண்ணறிவின் அளவுக்கு ஆழமானவையாகவோ, மிக நுட்பமானவையாகவோ கருத முடியாது. எனவே, உண்மையில், ஆண்களால் எவ்வாறு பெண்களைக் கட்டுப்படுத்த முடியும்?(8)

அவர்கள் பொய்யை உண்மையாகவும், உண்மையைப் பொய்யாகவும் தோன்றச் செய்வர். ஓ! வீரரே, நான் கேட்கிறேன், இதைச் செய்ய இயன்றவர்களை எதிர் பாலினத்தாரால் {ஆண்களால்} எவ்வாறு ஆள முடியும்?(9) ஓ! பகைவரை அழிப்பவரே, பெண்களின் புத்தியை அவதானித்தே {அவர்களின் புத்தியில் இருந்து தேடியெடுத்துத்தான்}, பிருஹஸ்பதியும், பெரும் சிந்தனையாளர்களும் அறிவியல் கோட்பாடுகளை {சாத்திரங்களைப்} படைத்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.(10) ஆண்களால் மதிப்புடன் நடத்தப்பட்டாலும், அசட்டையுடன் நடத்தப்பட்டாலும் பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்த்து அவர்களின் இதயங்களைக் கலங்கடிக்கின்றனர்[2].(11)ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வாழும் உயிரினங்கள் அறம்சார்ந்தவையாக இருக்கின்றன. இதுவே நம்மால் கேள்விப்படப்படுகிறது. (பிறகு, இஃது எவ்வாறு உண்மைகளுக்கு இணக்கமாக இருக்க முடியும்?) அன்பு, மதிப்பு ஆகியவற்றுடன் நடத்தப்படும் பெண்கள் (உயிரினங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளவர்களான இவர்கள்) ஆண்களிடம் தாங்கள் கொண்டுள்ள நடத்தைக்காக நிந்திக்கத்தகுந்தவர்களாக இருப்பதே காணப்படுகிறது.(12) அவர்களுடைய நடத்தை இவ்வாறு இருக்கும்போது, அவர்களை எந்த மனிதனால் அறக்கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்பது என் மனத்தில் பெரும் ஐயமாக நிறைகிறது.(13) ஓ! குருக்களின் தலைவரே, சாத்திரங்களால் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்குள் உண்மையில் பெண்களைக் கட்டுப்படுத்திவைக்க முடியுமா? அல்லது நாம் வாழும் காலத்திற்கு முன்பு, அவர்களைக் கட்டுப்படுத்துவதில் எவராவது உண்மையில் வென்றிருக்கிறார்களா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(14)

விபுலர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 40-விபுலர் மற்றும் தேவசர்மர் ஆகியோருடைய கதையைச் சொன்ன பீஷ்மர்; தேவசர்மர் வேள்வி செய்ய வெளிய செல்ல எண்ணியது; தமது மனைவியை இந்திரனிடம் இருந்து காக்கும்படி தமது சீடரான விபுலரிடம் சொல்லிச் சென்றது; விபுலர் தம் ஆசானின் மனைவியுடைய உடலுக்குள் புகுந்தது..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. ஓ! குரு குலத்தோனே, ஓ! ஏகாதிபதி, பெண்கள் குறித்து நீர் சொல்வது அனைத்திலும் பொய்யென்றேதும் இல்லை.(1) இது தொடர்பாகப் பழங்காலத்தில் உயர் ஆன்ம விபுலர், பெண்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் எவ்வாறு வென்றார் என்ற பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! மன்னா, மேலும் பெரும்பாட்டனான பிரம்மனால் பெண்கள் எவ்வாறு படைக்கப்பட்டனர்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அவனால் படைக்கப்பட்டனர்? என்பதையும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஓ! மகனே, பெண்களைவிட அதிகப் பாவம் நிறைந்த வேறு எந்த உயிரினமும் கிடையாது. பெண் என்பவள் சுடர்மிக்க நெருப்பாவாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தைத்தியன் மயனால் உண்டாக்கப்பட்ட மாயை அவள். கத்தியின் கூர்முனை அவள். நஞ்சவள். பாம்பவள். நெருப்பவள். உண்மையில் இவை அனைத்துமே கலந்திருப்பவள் அவள்.(4)

மனித குலத்தில் தோன்றிய அனைவரும் அறத்தன்மை கொண்டவர்களாக இருந்ததால் இயல்பான முன்னேற்றத்தின் போக்கில் அவர்கள் அனைவரும் தேவ நிலையை அடைந்து வந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். இந்தச் சூழ்நிலை தேவர்களை அச்சுறுத்தியது.(5) எனவே, ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனிடம் சென்றனர். தங்கள் மனத்தில் இருந்ததை அவனிடம் {பிரம்மனிடம்} சொல்லிவிட்டு, கண்களைக் கீழே செலுத்தியவாறு அவர்கள் அமைதியாக அவனது முன்னிலையில் {தலைகுனிந்து} நின்று கொண்டிருந்தனர்.(6) பலமிக்கப் பெரும்பாட்டன், தேவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொண்டு, ஓர் அதர்வணச் சடங்கின் உதவியுடன் பெண்களைப் படைத்தான்.(7) ஓ! குந்தியின் மகனே, முந்தைய படைப்பில் பெண்கள் அனைவரும் அறம்சார்ந்தவர்களாக இருந்தனர். எனினும், மாயையின் துணையுடன் பிரம்மனால் இப்போது படைக்கப்பட்டவர்கள் பாவம் நிறைந்தவர்களாக இருந்தனர். பெரும்பாட்டன் {பிரம்மன்} உடல்சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கும் ஆசை அவர்களுக்கு அளித்தான்.(8)

அனுபவிக்கும் ஆசையில் மயங்கிய அவர்கள் வேறு பாலினத்தவரைத் தேடத் தொடங்கினர். பலமிக்கவனான தேவர்களின் தலைவன் காமத்தின் துணையாகக் கோபத்தைப் படைத்தான்.(9) காமம் மற்றும் கோபத்தின் சக்திக்கு வசப்பட்ட ஆடவர்கள் பெண்களின் துணையை நாடினார்கள். பெண்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட செயல்கள் என்று ஏதும் கிடையாது. இதுவே விதிக்கப்பட்ட விதியாகும்.(10) மிக வலிமையான புலன்களைக் கொண்டவர்கள் பெண்கள், பின்பற்ற வேண்டிய சாத்திரமேதுமில்லை, அவர்கள் வாழும் பொய்கள் {பொய் சொல்பவர்கள்} என்று ஸ்ருதி அறிவிக்கிறது. படுக்கைகள், இருக்கைகள், ஆபரணங்கள், உணவு, பானம், மதிக்கத்தக்க, அறம்சார்ந்த அனைத்தும் இல்லாத நிலை,(11) ஏற்பில்லாத {இனிமையற்ற} சொல் பயன்பாடு, பாலியல் துணையில் விருப்பம் ஆகியவை பிரம்மனால் பெண்களுக்கு அளிக்கப்பட்டன. ஆண்கள் கிட்டத்தட்ட அவர்களைக் கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(12)

முறையான வரையறைகளுக்குள் அவர்களைப் படைப்பாளனாலேயே {பிரம்மனாலேயே} கட்டுப்படுத்த இயலாது எனும்போது, ஆண்களைக் குறித்து என்ன சொல்வது?(13) ஓ! மனிதர்களின் தலைவா, பழங்காலத்தில் விபுலர் தமது ஆசானின் மனைவியைக் காப்பதில் எவ்வாறு வென்றார் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(14) பழங்காலத்தில் உயர்ந்த அருளைக் கொண்டவரும், பெரும் புகழைக் கொண்டவருமாகத் தேவசர்மன் என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்தார். அவர், பூமியில் ஒப்பற்ற அழகுடன் கூடியவளும், ருசி என்ற பெயருடன் கூடியவளுமாக ஒரு மனைவியைக் கொண்டிருந்தார்.(15) தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்களில் காண்போர் ஒவ்வொருவரையும் அவளுடைய அழகானது மயக்கியது. ஓ! ஏகாதிபதி, பகனைத் தண்டித்தவனும், விருத்திரனைக் கொன்றவனுமான இந்திரன், அவள் மீது குறிப்பிட்ட மயக்கத்துடனும், அவளது மேனியில் ஆசை கொண்டவனுமாக இருந்தான்.(16)

பெரும் தவசியான தேவசர்மன் பெண்களின் மனோநிலையை {இயல்பை} முழுமையாக அறிந்தவராக இருந்தார். எனவே, அவர் தமது சக்தி மற்றும் ஆற்றலில் சிறந்ததைப் பயன்படுத்தி, (அனைத்து வகைத் தீய ஆதிக்கத்தில் இருந்தும்) அவளைப் பாதுகாத்து வந்தார்.(17) அடுத்தவர் மனைவிகளின் துணையை நாடும் காரியத்தில் இந்திரன் எந்தத் தயக்கமும் கொண்டவன் அல்ல என்பதை அம்முனிவர் அறிந்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் தன் சக்தி அனைத்தையும் செலவிட்டு தன் மனைவியைப் பாதுகாத்து வந்தார்.(18) ஓ! மகனே, ஒரு காலத்தில், அந்த முனிவர் ஒரு வேள்வியைச் செய்யும் விருப்பத்தை அடைந்தார். (அவர் வீட்டில் இல்லாத போது) தமது மனைவியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார்.(19) உயர்ந்த தவத்தகுதியைக் கொண்டிருந்த அவர் இறுதியில் தாம் பின்பற்றவேண்டிய வழிமுறையைக் கண்டடைந்தார். பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், விபுலர் என்ற பெயரைக் கொண்டவரும், தமக்குப் பிடித்தவருமான சீடரை அழைத்துப் பின்வருவனவற்றைச் சொன்னார்.(20)

தேவசர்மன், “ஒரு வேள்வியைச் செய்வதற்காக நான் (சிறிது காலம்) வீட்டை விட்டுச் செல்லப் போகிறேன். தேவர்களின் தலைவன் {இந்திரன்} எப்போதும் என் ருசியின் மீது பேராசை கொண்டிருக்கிறான். எனவே, நான் இல்லாதபோது, நீ உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி அவளைப் பாதுகாப்பாயாக.(21) புரந்தரனை {இந்திரனைக்} கருத்தில் கொண்டு நீ விழிப்புடன் உன் நேரத்தைக் கடத்துவாயாக. ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, அந்த இந்திரன் பல்வேறு வேடங்களைத் தரிப்பவனாவான்” என்றார்”.(22)

பீஷ்மர் தொடர்ந்தார், “புலன்களைக் கட்டுப்படுத்தியவரும், கடுந்தவங்களில் ஈடுபடுபவரும், நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்டவரும், அறக்கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், பேச்சில் வாய்மை நிறைந்தவரும், தவசியுமான விபுலர், தமது ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டதும் “அப்படியே ஆகட்டும்” என்றார். எனினும், தமது ஆசான் புறப்படும் நேரத்தில், விபுலர் மீண்டும் இந்த வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(23,24)

விபுலர், “ஓ! முனிவரே, சக்ரன் தோன்றும்போது என்னென்ன வடிவங்களை ஏற்பான் என்பதை எனக்குச் சொல்வீராக. அவனது உடல் எவ்வகையானது? அவனது சக்தி எப்படிப்பட்டது? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றார்”.(25)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, அப்போது அந்தச் சிறப்புமிக்க முனிவர், சக்ரனின் மாயைகளை அனைத்தையும் குறித்து உயர் ஆன்ம விபுலரிடம் உண்மையில் விரிவாக எடுத்துச் சொன்னார்.(26)

தேவசர்மன், “ஓ! மறுபிறப்பாள முனிவனே, பாகனைத் தண்டித்த அந்தப் பலமிக்கவன் மாயை நிறைந்தவனாவான். தான் விரும்பும் வடிவங்களையே அவன் ஒவ்வொரு கணமும் ஏற்கிறான்.(27) சில வேளைகளில் அவன் ஒரு கிரீடத்தை அணிந்து கொண்டு, வஜ்ரதாரியாக இருக்கிறான். சில வேளைகளில் கையில் வஜ்ரத்துடன், தலையில் மகுடம் அணிந்து கொண்டு, காது குண்டலங்களால் அவன் தனைன அலங்கரித்துக் கொள்கிறான். ஒரே கணத்தில் அவன் அந்த வடிவத்தில் இருந்து ஒரு சண்டாளனின் வடிவத்தை ஏற்பான்.(28) சில வேளைகளில் அவன் தலையில் மணிமுடி தரித்தவனாகத் தோன்றுவான்; ஓ! மகனே, மிக விரைவில் அவன் சடாமுடி தரித்துக் கொண்டு, மேனியில் மரவுரி தரித்தவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வான். சில வேளைகளில் அவன் நல்ல பெரிய உடல்வடிவத்தை ஏற்கிறான். அடுத்தக் கணமே அவன் மெலிந்த உடலைக் கொண்டவனாகவும், மரவுரி உடுத்தியவனாகவும் மாறுகிறான்.(29) சில வேளைகளில் அவன் வெள்ளையாகவும், சில வேளைகளில் பச்சையாகவும், சில வேளைகளில் கருப்பு நிறம் கொண்டவனாகவும் அவன் மாறுகிறான். சில வேளைகளில் அழகற்றவனுமாகவும், சில வேளைகளில் பேரழகு கொண்டவனாகவும் அவன் மாறுகிறான். சில வேளைகளில் இளைஞனாகவும், சில வேளைகளில் முதிர்ந்தவனாகவும் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.(30)

சில வேளைகளில் ஒரு பிராமணனாகவும், சில வேளைகளில் க்ஷத்திரியனாகவும், சில வேளைகளில் வைசியனாகவும், சில வேளைகளில் ஒரு சூத்திரனாகவும் அவன் தோன்றுகிறான். உண்மையில் அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, மேன்மையான தந்தை, தாழ்ந்த வகைத் தாய், அல்லது தாழ்ந்தவகைத் தந்தை, மேலான வகைத் தாயின் மூலம் தூய்மையற்ற வகையில் தோன்றிய பிறவியாகிறான்.(31) சில வேளைகளில் கிளியாகவும், சில வேளைகளில் காக்கையாகவும், சில வேளைகளில் அன்னப்பறவையாகவும், சில வேளைகளில் கோகிலமாகவும் {குயிலாகவும்} அவன் தோன்றுகிறான். சிங்கம், புலி அல்லது யானையின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(32) சில வேளைகளில் தேவனாகவும், சில வேளைகளில் தைத்தியனாகவும், சில வேளைகளில் மன்னனின் வேடத்தையும் அவன் ஏற்கிறான். சில வேளைகளில் பருமனாகவும், குண்டாகவும், சில வேளைகளில் வாயுக் கோளாறால் முடங்கிய அங்கங்களைக் கொண்டவனாகவும், சில வேளைகளில் பறவையாகவும், சில வேளைகளில் கோரமான பண்புகளைக் கொண்ட ஒருவனாகவும் அவன் தோன்றுகிறான்.(33) சில வேளைகளில் அவன் நான்கு கால் உயிரினமாகவும் தோன்றுகிறான். எவ்வடிவத்தையும் ஏற்கவல்ல அவன், சில வேளைகளில் புத்தியிழந்த மூடனாகவும் தோன்றுகிறான். கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(34)

ஓ! விபுலா, அவன் எண்ணற்ற வேடங்களை ஏற்கவல்லவனாக இருப்பதன் விளைவால் யாராலும் அவனை அடையாளங்காண முடியாது. இந்த அண்டத்தைப் படைத்தவனாலேயே கூட அவற்றைச் செய்ய முடியாது.(35) அவன் வேண்டிய போதும் புலப்படாதவனாகி தன்னை மறைத்துக் கொள்கிறான். அறிவுக்கண்ணைத் தவிர வேறு எதனாலும் பார்க்க முடியாதவனாகிறான். தேவர்களின் தலைவன் {இந்திரன்} சில வேளைகளில் காற்றாகவும் மாறுகிறான்.(36) பாகனைத் தண்டித்தவன் இந்த வேடங்களை எப்போதும் ஏற்பான். எனவே, ஓ! விபுலா, மெலிந்த இடை கொண்டவளான என் மனைவியைப் பெருங்கவனத்துடன் பாதுகாப்பாயாக.(37) ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, வேள்விக்காக வைக்கப்பட்டிருக்கும் ஹவிஸை நக்கும் ஓர் இழிந்த நாயைப் போல அந்தத் தேவர்களின் தலைவன் என் மனைவியைக் கெடுத்துவிடாமல் அனைத்து வகையிலும் கவனம் செலுத்துவாயாக” என்றார் {தேவசர்மன்}.(38)

உயர்ந்த அருளைக் கொண்ட முனிவரான தேவசர்மன், ஓ! பாரதர்களின் தலைவா, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஒரு வேள்வியைச் செய்ய எண்ணி தன் வசிப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(39) தன் ஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட விபுலர் தமது மனத்திற்குள், “நான் அந்தப் பலமிக்கத் தேவர்களின் தலைவனிடமிருந்து இந்தப் பெண்மணியை அனைத்து வகையிலும் நிச்சயம் காப்பேன்.(40) ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன? என் ஆசானின் மனைவியைக் காக்குங்காரியத்தில் என்னால் என்ன செய்ய முடியும்? தேவர்களின் தலைவன் பெரும் மாயசக்திகளைக் கொண்டவனாவான். பெருஞ்சக்தியைக் கொண்ட அவனைத் தடுப்பது மிகக் கடினமாகும்.(41) இந்திரனால் எண்ணற்ற வடிவங்களை ஏற்க முடியும் என்பதால் நமது ஆசிரமத்தை அடைப்பதாலோ, முற்றத்தில் வேலியடைப்பதாலோ, அவனை வெளியே நிறுத்த முடியாது.(42)

காற்றின் வடிவத்தை ஏற்றுத் தேவர்களின் தலைவனால் எனதாசானின் மனைவியை வலிய அபகரிக்க முடியும். எனவே, (யோக சக்தியின் மூலம்) இந்தப் பெண்மணிக்குள் நுழைந்து, நான் அங்கேயே இருப்பதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும்.(43) என் ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் என்னால் அந்தப் பெண்ணைப் பாதுகாக்க முடியாது, ஏனெனில், பாகனைத் தண்டித்த பலமிக்கவன், தான் விரும்பிய வடிவத்தை ஏற்கவல்லவன் என்பதை நான் கேட்டிருக்கிறேன்.(44) எனவே, என் யோக சக்தியின் மூலம் நான் இவளை இந்திரனிடம் இருந்து காக்கப்போகிறேன். என் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நான் இந்தப் பெண்மணியின் உடலுக்குள் நுழையப் போகிறேன்.(46) என் ஆசான் திரும்பிவரும்போதும் அவரது மனைவி கெட்டுப்போனதைக் கண்டால், கோபத்தால் அவர் நிச்சயம் என்னைச் சபிப்பார். பெரும் தவசியான அவர் ஆன்மப் பார்வையையும் கொண்டவராவார்.(46)

தேவர்களின் தலைவன் பெரும் மாயா சக்திகளுடன் கூடியவனாக இருப்பதால், வேறு பெண்களை மனிதர்கள் காப்பதைப் போல இந்தப் பெண்ணைக் காக்க முடியாது. ஐயோ, நான் இருக்கும் சூழ்நிலை நெருக்கடிமிக்கதாய் இருக்கிறதே.(47) என் ஆசானின் ஆணைக்கு நான் கீழ்ப்படி வேண்டும். எனவே, நான் என் யோக சக்தியின் மூலம் அவளைப் பாதுகாத்தால் அக்காரியம் அற்புதமான ஒன்றாய் அனைவராலும் கருதப்படும்.(48) என் யோக சக்தியின் மூலம் நான் என் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் புகப் போகிறேன். தாமரையில் உள்ள நீர்த்துளி இலையை நனைக்காதிருப்பதைப் போல, நான் அவளுக்குள் இருந்தாலும், அவளது மேனியைத் தீண்டாமல் இருப்பேன்.(49) ஆசையின் கறையில் இருந்து விடுபட்டவனாக நான் இருந்தால், நான் செய்யும் காரியத்தால் எந்தக் களங்கமும் உண்டாகாது. ஒரு பயணி, தன் பயணத்தின் ஊடாக (சற்று நேரம்) வெற்று மாளிகையில் வசிப்பதைப் போலவே,(50) நானும் என் ஆசானுடைய மனைவியின் உடலில் இன்று வசிக்கப்போகிறேன். உண்மையில், யோகத்தில் குவிந்த மனத்துடன் நான் இன்று இந்தப் பெண்ணின் உடலில் வசிக்கப் போகிறேன்” என்று நினைக்கத் தொடங்கினார் {விபுலர்}.(51)

இந்த அறக் காரியங்களைச் சிறப்பாகக் கருத்தில் கொண்டு, தமது ஆசானும் தாமும் பேரளவில் கொண்டுள்ள தவத்தில் பார்வையைச் செலுத்தி, வேதங்கள் அனைத்தையும் சிந்தித்து,(52) (தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக) யோக சக்தியின் மூலம் பெண்ணின் மேனிக்குள் நுழைந்து அவளைப் பாதுகாப்பது குறித்து மனத்தில் ஒரு தீர்மனத்தை அடைவதில் அந்தப் பிருகு குல விபுலர் பெருங்கவனம் கொண்டார். ஓ! ஏகாதிபதி, அவர் என்ன செய்தார் என்று இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(53) பெருந்தவங்களைக் கொண்ட விபுலர், குற்றமற்ற பண்புகளுடன் குடிசையில் அமர்ந்திருந்த தமது ஆசானுடைய மனைவியின் அருகில் அமர்ந்தார். பிறகு, அறம் மற்றும் வாய்மையில் அவளை நிலை நிறுத்துவதற்காக விபுலர் அவளிடம் பேசத் தொடங்கினார்.(54) விபுலர், தமது கண்களை {பார்வையை} அவளுடைய கண்களில் செலுத்தி, அவளது பார்வைப் புலனில் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்களுடன், தம் பார்வையின் ஒளிக்கதிர்களைக் கலந்து, காற்று எனும் பூதம், வெளி, அல்லது ஆகாயம் என்ற பூதத்துக்குள் நுழைவதைப் போலவே அந்தப் பெண்ணின் உடலுக்குள் (நுட்பமான வடிவில்) நுழைந்தார்.(55) விபுலர், தம் கண்களால் அவளுடைய கண்களையும், தம் முகத்தால் அவளுடைய முகத்தையும் ஊடுருவி, அவளுக்குள் புலப்படாமல் அவளது நிழலைப் போலவே அசைவற்றிருந்தார்.(56) இந்திரனிடம் இருந்து அவளைப் பாதுகாக்கும் நோக்கில் விபுலர் அவளது உடலின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்தியபடியே அவளுக்குள் தொடர்ந்து வசித்தார். அந்தப் பெண் இது குறித்து அறியாமல் இருந்தாள்.(57) ஓ! ஏகாதிபதி, இவ்வகையில் விபுலர், தமது உயர் ஆன்ம ஆசான் வேள்வி செய்துவிட்டுத் திரும்பி வரும் வரை அந்தப் பெண்ணை இவ்வாறே காப்பதில் தொடர்ந்தார்” என்றார் {பீஷ்மர்}.(58)

நாணி மறைந்த இந்திரன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 41-விபுலர் ருசி தேவியின் உடலுக்குள் இருந்த போது ஆசிரமத்திற்கு வந்த இந்திரன்; ருசியின் உடலுக்குள் இருந்து அவளது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திய விபுலர்; இவற்றை ஞானக்கண்ணால் கண்ட இந்திரன்; விபுலரின் எச்சரிக்கை; இந்திரன் நாணி மறைந்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு நாள் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தெய்வீக அழகுடன் கூடிய ஒரு வடிவத்தை ஏற்று, தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இறுதியாக வாய்த்ததென எண்ணி அந்த முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(1) ஓ! மன்னா, உண்மையில் அந்த இந்திரன் ஒப்பற்ற அழகுடன் கூடியதும், பெண்களைப் பெரிதும் மயக்கக்கூடியதும், மிக இனிமையானதுமான ஒரு வடிவத்தை ஏற்று, அந்தத் தவசியின் {தவசி தேவசர்மனின்} ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(2) அமர்ந்திருக்கும் நிலையில் இருப்பதும், மரத்தைப் போல அசையாமல் இருப்பதும், பார்வையற்ற விழிகளைக் கொண்டதும், துணியில் வரையப்பட்ட படத்தைப் போன்ற விபுலரின் உடலைக் கண்டான்.(3) மேலும் அவன், மிக அழகிய கடைக்கண்கள், சிறுத்த இடை, மற்றும் பருத்த முலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருசி அங்கே அமர்ந்திருப்பதையும் கண்டான். அவளது கண்கள் தாமரை இதழ்களைப் போல நீளமாகவும், பெரியதாகவும் இருந்தன, அவளது முகம் முழு மதியைப் போல அழகாகவும், இனிமையாகவும் இருந்தது.(4)

அந்த வேடத்தில் வந்திருக்கும் இந்திரனைக் கண்ட அந்தப் பெண்மணி (ருசி), எழுந்து அவனை வரவேற்க விரும்பினாள். அவனது ஒப்பற்ற அழகால் ஆச்சரியத்தால் தூண்டப்பட்ட அவள், அவன் யார் என்பதைக் கேட்க விரும்பினாள்.(5) ஓ! மன்னா, அவள் எழும்பி அவனை வரவேற்க விரும்பினாலும், அவளுக்குள் வசித்து வந்த விபுலரால் அவளது அங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டதால், அவளால் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை. உண்மையில் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவளால் நகர முடியவில்லை.(6) அப்போது தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவளிடம் இனிய குரலில் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசினான்.(7) உண்மையில் அவன், “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நான் இந்திரன், உனக்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! இனிய பெண்ணே, உன் நினைவின் மூலம் காம தேவனால் நான் பீடிக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிவாயாக. ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, நான் உன்னிடம் வந்திருக்கிறேன். காலம் கடந்து செல்கிறது” என்றான்.(8)

இந்திரனால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் தவசி விபுலரால் கேட்கப்பட்டது. தமது ஆசான் மனைவியின் உடலுக்குள் இருந்த அவர், நேரும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.(9) களங்கமில்லா அழகுடைய அப்பெண் (ருசி), இந்திரன் சொன்னதைக் கேட்டாலும், தேவர்கள் தலைவனை வரவேற்கவோ, கௌரவிக்கவோ அவளால் எழ முடியவில்லை. விபுலரால் அவளது புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் மறுமொழியாக அவளால் ஒரு சொல்லையும் சொல்ல இயலவில்லை.(10) வலிமையும், சக்தியும் கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்து {விபுலர்}, தமது ஆசான் மனைவியின் உடல் தரும் குறியீடுகளைக் கொண்டு, அவள் இந்திரனை அன்புடன் வரவேற்க விரும்பாமலில்லை என்று தீர்மானித்து, தமது யோக சக்திகளை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தி அவளது அங்கங்கள் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தினார்.(11) சச்சியின் தலைவன் {இந்திரன்}, கலக்கத்திற்கான எந்தக் குறியீட்டையும் மேனியில் காட்டாமல் அமர்ந்திருக்கும் அவளைக் கண்டு நாணமடைந்து, தன் கணவரின் சீடனுடைய யோக சக்தியின் மூலம் மயக்கத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் மீண்டும் பேசினான்.(12)

{இந்திரன்}, “ஓ! இனிய பெண்ணே, வா, வருவாயாக” என்றான். அப்போது அந்தப் பெண் {ருசி} அவனுக்கு {இந்திரனுக்குப்} பதிலளிக்க முயற்சி செய்தாள். எனினும், அவள் சொல்ல எண்ணிய சொற்களை விபுலர் கட்டுப்படுத்தினார்.(13) எனவே, (விபுலரின் ஆதிக்கத்தில் இருந்த) அவளது உதடுகள் உதிர்த்த சொற்கள் உண்மையில் “நீ இங்கு வந்த காரணமென்ன?” என்பதாகும். நிலவு போன்று அழகுடையவளாக இருந்த அவளது வாயில் இருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகள் இலக்கணச் சுத்தமாக இருந்தன[1].(14) வேறொருவரின் ஆளுகைக்குள் இருந்த அவள் இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், அவற்றைச் சொன்னதற்காக வெட்கப்பட்டாள். அவள் சொன்னதைக் கேட்டதும் புரந்தரன் உற்சாகத்தை இழந்தான்.(15) ஓ! ஏகாதிபதி, அந்த எதிர்பாராத விளைவைக் கண்டவனும், ஆயிரம் கண்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான தேவர்களின் தலைவன் அனைத்தையும் தன் ஆன்மப் பார்வையால் கண்டான்.(16)அவன் அந்தப் பெண்ணின் உடலுக்குள் இருக்கும் தவசியைக் கண்டான். உண்மையில், கண்ணாடியில் பிரதிபிம்பம் இருப்பது போலத் தன் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் அந்தத் தவசி இருந்தார்.(17) ஓ! ஏகாதிபதி, பயங்கரத் தவ வலிமை கொண்ட அந்தத் தவசியைக் கண்ட புரந்தரன், முனிவரின் சாபத்திற்கு அஞ்சி நடுக்கமடைந்தான்.(18) அப்போது, உயர்ந்த தவ வலிமையைக் கொண்ட விபுலர், தமது ஆசானுடைய மனைவியின் உடலைவிட்டு, அதன் அருகில் இருந்த தன் உடலுக்குத் திரும்பினார். பிறகு, பீதியடைந்திருந்த இந்திரனிடம் அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)

விபுலர் {இந்திரனிடம்}, “ஓ! தீய ஆன்மா கொண்ட புரந்தரா, ஓ! புலனடக்கம் இல்லாத பாவம் நிறைந்த மனத்தைக் கொண்டோனே, தேவர்களோ, மனிதர்களோ உன்னை நெடுங்காலம் வழிபடமாட்டார்கள்.(20) கௌதமர் கொடுத்த சாபத்தின் விளைவால், உன் மேனி ஆயிரம் பாலினக் குறிகளுடன் {பெண்குறிகளுடன்} சிதைவடைந்ததையும், அம்முனிவரின் கருணையால் அவை கண்களாக மாற்றப்பட்டதையும் மறந்து போனாயோ? அஃது உன் நினைவில் இல்லையா?(21) நீ அதீத மூட புத்தி கொண்டவன் என்பதையும், தூய்மையற்ற ஆன்மாவைக் கொண்டவன் என்பதையும், நிலையற்ற மனத்தைக் கொண்டவன் என்பதையும் நான் அறிவேன். ஓ! மூடா, இந்தப் பெண்மணி என்னால் பாதுகாக்கப்படுகிறாள் என்பதை அறிவாயாக. ஓ! இழிந்த பாவியே, எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்வாயாக.(22) ஓ! மூட ஆன்மாவைக் கொண்டவனே, நான் இன்று என் சக்தியால் உன்னைச் சம்பலாக எரிக்கப் போவதில்லை. உண்மையில், நான் உன்னிடம் கருணையால் நிறைந்திருக்கிறேன். ஓ! வாசவா, எனவே நான் உன்னை எரிக்காமலிருக்கிறேன்.(23) பெரும் நுண்ணறிவைக் கொண்ட என் ஆசான் பயங்கர வலிமையைக் கொண்டவராவார். அவர் பாவம் நிறைந்தவனான உன்னைக் கண்டால், கோபத்தால் சுடர்விடும் தமது கண்களைக் கொண்டு இன்றே உன்னை எரித்துவிடுவார்.(24) ஓ! சக்ரா, இது போல மீண்டும் செய்யாதே. பிராமணர்கள் உன்னால் மதிக்கப்பட வேண்டும். பிராமணர்களின் வலிமையால் பீடிக்கப்படுவதன் மூலம் உன் பிள்ளைகள் மற்றும் ஆலோசகர்களுடன் சேர்ந்து அழிவடையாமல் இருப்பாயாக.(25) நீ அழிவற்றவன் என நினைத்து இது போல விரும்பியவாறு செயல்படுகிறாய். பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. தவத்தால் அடையப்பட முடியாதது எதுவும் கிடையாது” என்றார் {விபுலர்}”.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம விபுலரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், எதுவும் சொல்லாமல் வெட்கத்தில் மூழ்கி, தன்னை {புலப்படாதவனாக} மறைத்துக் கொண்டான்.(27) அவன் சென்ற ஒரு கணத்தில் உயர்ந்த தவத்தகுதியைக் கொண்ட தேவசர்மன், தாம் நினைத்த வேள்வி நிறைவேற்றி விட்டுத் தமதாசிரமத்திற்குத் திரும்பினார்(28) ஏற்புடைய செயலைச் செய்திருந்த விபுலர், தமது ஆசான் திரும்பி வந்ததும், இந்திரனின் சதியில் இருந்து தம்மால் பாதுகாக்கப்பட்டவளும், களங்கமற்ற அழகைக் கொண்டவளுமான அவரது {தேவசர்மனின்} மனைவியை ஒப்படைத்தார்.(29) அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், தமது ஆசானிடம் பெரும் மதிப்பு கொண்டவருமான விபுலர், அவரை வணங்கி, அச்சமற்ற இதயத்துடன் அவரது முன்னிலையில் நின்றார்.(30)

அவரது ஆசான் சற்றே ஓய்வெடுத்து, தமது மனைவியுடன் சேர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்த போது, விபுலர் அவரிடம் சக்ரன் செய்தது அனைத்தையும் சொன்னார்.(31) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்த முதன்மையான முனிவர் {தேவசர்மன்}, விபுலரின் சொற்களைக் கேட்டு, அவரது ஒழுக்கம், இயல்பு, தவம் மற்றும் நோன்புகளில் மிகவும் நிறைவடைந்தார்.(32) விபுலரின் ஆசானும், பலமிக்கவருமான தேவசர்மன், தம்மிடம் அவர் {விபுலர்} கொண்ட நடத்தை மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டும், அவரது அறவுறுதியைக் கவனித்தும், “நன்று, நன்று” என்று சொன்னார்.(33)

உயர் ஆன்ம தேவசர்மன், அறம்சார்ந்த தமது சீடரை நல்வரவு சொல்லி வரவேற்று, ஒரு வரத்தைக் கொடுத்து அவரைக் கௌரவித்தார்.(34) உண்மையில், அறவுறுதி கொண்ட விபுலர், அறவுறுதியில் இருந்து ஒருபோதும் தவறாத வரத்தைத் தமது ஆசானிடம் இருந்து பெற்றார். பிறகு தமது ஆசானால் விடைகொடுத்து அனுப்பப்பட்டுத் தமது வசிப்பிடத்திற்குச் சென்று மிகக் கடுமையான தவங்களைப் பயின்றார்.(35) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனிடம் {இந்திரனிடம்} முற்றிலும் அச்சமற்று, அந்த நாளில் இருந்து தமது மனைவியுடன் அந்தத் தனிமையான காட்டில் வாழ்ந்து வந்தார்” {என்றார் பீஷ்மர்}.(36)

விபுலரின் வரம்புமீறல் ! – அநுசாஸனபர்வம் பகுதி – 42-பதிவின் சுருக்கம்: கடுந்தவங்களைச் செய்த விபுலர்; ருசி தேவிக்குக் கிட்டிய தெய்வீக மலர்கள்; சம்பையில் உள்ள தன் சகோதரியின் வசிப்பிடத்திற்குச் சென்ற ருசி; சகோதரி அம்மலர்களை விரும்பவே ஆசானின் ஆணையின் பேரில் மலர் கொணரச் சென்ற விபுலர்; மலர் கொணர்ந்து திரும்புகையில் விபுலர் கண்ட காட்சிகளும், கேட்ட உறுதிமொழிகளும்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விபுலர், தமது ஆசானின் ஆணையை நிறைவேற்றிய பிறகு, மிகக் கடும் தவங்களைச் செய்தார். பெரும் சக்தியைக் கொண்ட அவர் இறுதியாகப் போதுமான தவத்தகுதியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார்.(1) தாம் செய்திருக்கும் சாதனையில் செருக்கடைந்த அவர், ஓ! ஏகாதிபதி, தமது சாதனைக்கான பெரும் புகழால் அனைவராலும் மதிக்கப்பட்டு அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் உலகத்தில் திரிந்து கொண்டிருந்தார்.(2) அந்தப் பலமிக்கப் பார்க்கவர், தமது சாதனையாலும், கடுந்தவங்களாலும் இம்மையையும், மறுமையையும் தாம் வென்றுவிட்டதாகக் கருதினார்.(3)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சில காலம் கடந்ததும், ருசியின் சகோதரி செய்ய வேண்டிய கொடையளிக்கும் விழாவுக்கான {ஆதான விழாவுக்கான} தருணம் வந்தது. அபரிமிதமான செல்வமும், தானியங்களும் அதில் கொடுக்கப்பட வேண்டும்[1].(4) அதே வேளையில், பேரழகுடன் கூடிய ஒரு தெய்வீகக் காரிகை வானத்தினூடே சென்று கொண்டிருந்தாள்.(5) அவள் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது அவளது உடலில் இருந்து சில மலர்கள் பூமியில் விருந்தன. தெய்வீக நறுமணம் கமழ்ந்த அந்த மலர்கள் ருசியின் கணவருடைய {தேவர்சர்மனுடைய} ஆசிரமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் விழுந்தன.(6) தரையில் சிதறிக் கிடந்த அந்த மலர்கள், அழகிய கண்களைக் கொண்ட ருசியால் எடுக்கப்பட்டன. விரைவில் அங்க நாட்டில் இருந்து ருசிக்கு ஓர் அழைப்பு வந்தது {தூதன் வந்தான்}.(7)மேற்குறிப்பிடப்பட்ட ருசியின் சகோதரியுடைய பெயர் பிரபாவதியாகும். அவள் அங்கர்களின் ஆட்சியாளனான சித்திரரதனின் மனைவியாக இருந்தாள்[2].(8) மிக மேன்மையான நிறத்தைக் கொண்டவளான ருசி, அந்த மலர்களைத் தன் கூந்தலில் சூடிக் கொண்டு, தான் அழைக்கப்பட்ட அங்கர்களின் மன்னனுடைய அரண்மனைக்குச் சென்றாள்.(9) அவளது கூந்தலில் இருந்த மலர்களைக் கண்டவளும், அழகிய கண்களைக் கொண்டவளுமான அங்கர்களின் ராணி, தன் சகோதரியிடம் தனக்கும் சிலவற்றைத் தருமாறு கேட்டாள்.(10)

அழகிய முகத்தைக் கொண்ட ருசி, தன் சகோதரியின் கோரிக்கையைத் தன் கணவனிடம் {தேவர்சர்மனிடம்} விரைவாகத் தெரிவித்தாள். முனிவர் தமது மனைவின் சகோதரியுடைய {கொழுந்தியுடைய} வேண்டுதலை ஏற்றுக் கொண்டார்.(11) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மன், தமது சீடரான விபுலரைத் தம் முன் அழைத்து, “செல், செல்வாயாக” என்று சொல்லி அவரிடம் அதே வகையைச் சார்ந்த சில மலர்களைக் கொண்டு வரச் சொன்னார்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எந்தத் தயக்கமும் இல்லாமல் தமது ஆசானின் ஆணையை ஏற்றுக் கொண்ட அந்தப் பெருந்தவசியான விபுலர், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்துவிட்டு, ருசி தேவி தனது சகோதரி ஆசைப்பட்ட மலர்களை எங்கிருந்து எடுத்திருந்தாளோ அதே இடத்திற்குச் சென்றார்.(13) ஆகாயத்தில் இருந்து மலர்கள் விழுந்த (ருசியால் எடுக்கப்பட்ட மலர்கள் விழுந்த) இடத்திற்கு வந்த விபுலர், அங்கே இன்னும் சில மலர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். அந்த மலர்கள் அனைத்தும், தாங்கள் வளர்ந்த செடியில் இருந்து புதிதாகப் பறிக்கப்பட்டவை போல இருந்தன. அவற்றில் எதுவும் கொஞ்சம்கூட வாடாமல் இருந்தன.(14)

அவர் பேரழகுடைய அந்தத் தெய்வீக மலர்களை எடுத்துக் கொண்டார். ஓ! பாரதா, தெய்வீக நறுமணத்தைக் கொண்ட அம்மலர்களைத் தமது கடும் தவங்களின் விளைவால் விபுலர் அடைந்தார்.(15) தமது ஆசானின் ஆணைகளை நிறைவேற்றி, அவற்றை அடைந்த அவர் பெரும் மகிழ்ச்சியுடன் சம்பக மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சம்பை {சம்பா} நகரத்திற்கு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.(16) அவ்வாறு அவர் செல்லும்போது வழியில் இரண்டு மனிதர்கள் தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு வட்டமாக வலம் வந்து கொண்டிருந்தனர்.(17) அவர்களில் ஒருவன் அடிகளை வேகமாக வைத்து, அந்த இயக்கத்தின் இசைவைக் கெடுத்தான். ஓ மன்னா, இதன் காரணமாக அவர்களுக்குள் ஒரு சச்சரவு நேர்ந்தது.(18)

உண்மையில் அவர்களில் ஒருவன், “நீ வேகமாக அடி எடுத்து வைத்தாய்” என்று அடுத்தவனைக் குற்றஞ்சாட்டினான். மற்றவனோ, “இல்லை” என்றான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ஒவ்வொருவனும் அடுத்தவர் மறுத்ததை உறுதி செய்தும், அடுத்தவர் உறுதி செய்ததை மறுத்தும், தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தான்.(19) இவ்வாறு பெரும் நம்பிக்கையுடன் அவர்களுக்குள் சச்சரவு நடந்து வந்தபோது, அவர்களுக்கு மத்தியில் ஓர் உறுதிமொழி கேட்கப்பட்டது. உண்மையில், அவர்களில் ஒவ்வொருவனும் திடீரென விபுலரின் பெயரைச் சென்னான்.(20) அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட உறுதிமொழி இதுதான்: “நம்மிருவரில் எவன் பொய் சொல்கிறானோ, அவன் மறுமையில் மறுபிறப்பாளனான விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்” என்றனர்.(21)

அவர்களுடைய இச்சொற்களைக் கேட்டதும் விபுலரின் முகம் உற்சாகத்தை இழந்தது. அவர் தமக்குள், “நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். இந்த இருவருக்கிடையிலான சச்சரவு கடுமையாக இருக்கிறது. மேலும் இஃது எனக்குத் துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. உயிரினங்கள் அனைத்திற்காகவும் மறுமையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மிகவும் துன்பம் நிறைந்த கதியை நான் அடைவேன் என்று இவர்கள் இருவரும் குற்றஞ்சுமத்தும் வகையில் நான் என்ன பாவம் செய்தேன்?” என்று நினைத்தார்.(22,23) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, விபுலர், இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே, தமது தலையைத் தொங்கவிட்டு, உற்சாகமிழந்த மனத்துடன் தாம் என்ன பாவம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கத் தொடங்கினார்.(24)

அவர் தமது வழியில் சிறிது தொலைவைக் கடந்து சென்றதும் தங்கம் மற்றும் வெள்ளியாலான பகடைக் காய்களைக் கொண்டு சூதாடிக் கொண்டிருக்கும் ஆறு மனிதர்களைக் கண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் உடலில் ஏற்பட்டிருக்கும் மயிர்ச் சிலிர்ப்புடன் ஆவலோடு சூதாடுபவர்களாகத் தெரிந்தனர். (அவர்களுக்கு மத்தியில் சச்சரவு ஏற்பட்ட போது) அவர்களும் ஏற்கனவே முதல் இருவர் ஏற்ற உறுதிமொழியைப் போலவே ஏற்பதை விபுலர் கேட்டார். உண்மையில், அவர்களது சொற்களும் விபுலரை அதே வகையிலேயே குறிப்பிட்டன.(25,26) {அவர்கள்}, “நம்மில் எவன் பேராசையால் வழிநடத்தப்பட்டு முறையற்ற வழியில் செயல்படுகிறானோ அவன் மறுமையில் விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்” {என்றனர்}.(27)

எனினும், ஓ! குருகுலத்தோனே, எவ்வளவுதான் முயன்று நினைவுகூர்ந்தாலும், தமது சிறு வயதில் இருந்து கூடத் தாம் அத்துமீறலேதும் செய்ததாக விபுலரால் நினைவுகொள்ள முடியவில்லை.(28) உண்மையில், நெருப்புக்கு மத்தியில் உள்ள மற்றொரு நெருப்பைப் போல அவர் எரியத் தொடங்கினார். அந்தச் சாபத்தைக் கேட்டு அவரது மனம் துயரால் எரிந்தது.(29) இத்துன்ப நிலையிலேயே நீண்ட நேரம் கடந்து சென்றது. இறுதியாக, இந்திரனின் சதியில் இருந்து தமது ஆசானின் மனைவியைப் பாதுகாக்கத் தாம் மேற்கொண்ட வழிமுறைகளை நினைவுகூர்ந்தார்.(30) {அவர்}, “அங்கத்தோடும் அங்கமும், முகத்தோடு முகமும் வைத்து நான் அந்தப் பெண்ணின் உடலில் ஊடுருவினேன். இவ்வழியில் நான் செயல்பட்டிருந்தாலும் நான் இந்த உண்மையை என் ஆசானிடம் சொல்லவில்லையே” {என்று நினைத்தார்}.(31)

ஓ! குரு குலத்தோனே, விபுலர் தம்மிடம் கண்ட வரம்புமீறல் இதுவே. உண்மையில், ஓ! அருளப்பட்ட ஏகாதிபதி, அதுதான் அவர் செய்த அத்துமீறல் என்பதில் ஐயமில்லை.(32) அவர் சம்பை நகரத்திற்குத் திரும்பி தமது ஆசானிடம் மலர்களைக் கொடுத்தார். மூத்தோரிடமும், பெரியோரிடமும் அர்ப்பணிப்புமிக்க அவர், தமது ஆசானை முறையான வடிவில் வழிபட்டார்” என்றார் {பீஷ்மர்}.(33)

விபுலரின் கதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 43-விபுலர் செய்த வரம்புமீறலை விளக்கிச் சொன்ன தேவசர்மன்; ஆசானால் மீட்கப்பட்ட விபுலர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பெருஞ்சக்திமிக்கவரான தேவசர்மன், பணி செய்து திரும்பி வந்த தமது சீடரைக்{விபுலரைக்} கண்டு சொன்ன சொற்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(1)

தேவசர்மன், “ஓ! விபுலா, ஓ! சீடா, பெருங்காட்டில் நீ பயணித்தபோது கண்டதென்ன? ஓ! விபுலா, நீ யாவரைக் காண்டாயோ அவர்கள் உன்னை அறிவர். ருசியைப் பாதுகாக்கும் காரியத்தில் நீ எவ்வாறு செயல்பட்டாய் என்பதை நானும், என் மனைவியான ருசியும் அறிவோம்” என்றார்.(2)

விபுலர், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, நான் முதலில் கண்ட அந்த இருவர் யாவர்? அதற்கடுத்து நான் கண்ட அறுவர் யாவர்? அவர்கள் யாவரும் என்னை அறிந்திருந்தனர். உண்மையில், உமது பேச்சினூடாகக் குறிப்பாகச் சொல்லும் அவர்கள் யாவர்?” என்று கேட்டார்.(3)

தேவசர்மன் {விபுலரிடம்}, “ஓ! மறுபிறப்பாளா, நீ முதலில் கண்ட இருவர் பகலும், இரவும் ஆவர். அவர்கள் இடையறாமல் ஒரு வட்டத்தைப் போல நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும் உன் குற்றத்தின் வரம்புமீறலை அறிவார்கள்.(4) ஓ! கல்விமானான பிராமணா, உற்சாகமாகப் பகடையாடிக் கொண்டிருப்பவர்களாக (எண்ணிக்கையில் அறுவராக) நீ கண்ட வேறு மனிதர்கள் பருவ காலங்களாவர் {ருதுக்களாவர்}. அவர்களும் உன் வரம்புமீறல்களை அறிந்திருக்கின்றனர்.(5) கமுக்கத்தில் பாவமிழைத்த எந்தப் பாவியும், தன் வரம்புமீறலைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும், வேறு எவரும் அறியவில்லை என்பதாகவும் ஓர் உறுதியான எண்ணத்தை வளர்க்கக்கூடாது.(6) ஒரு மனிதன் கமுக்கத்தில் செய்யும் பாவச் செயலை பருவகாலங்களும் {ருதுக்களும்}, பகலும், இரவும் எப்போதும் காண்கின்றன.(7)

(நீ செய்த காரியத்திற்கு) பாவிகளுக்கான உலகமே உனதாகும். நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல்லவில்லை. உன் பாவத்தை யாரும் அறியவில்லை என்பதே உன் நம்பிக்கையாக இருந்தது, அந்தத் தீர்மானமே உன்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(8) நீ உன் ஆசானிடம் மொத்த உண்மையையும் சொல்லவில்லை; ஒரு குறிப்பிட்ட பகுதியை அவரிடம் மறைத்தாய். நீ கேட்கும் வகையில் இவ்வாறு பேசிய பருவகாலங்களும், பகலும், இரவும், இந்த உன் வரம்புமீறலை உனக்கு நினைவூட்டுவது முறை என நினைத்தன.(9) பகல், இரவு மற்றும் பருவகாலங்கள், ஒரு மனிதன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் எப்போதும் அறிபவையாக இருக்கின்றன.(10) ஓ! மறுபிறப்பாளா, தவறு செய்ததாக அஞ்சி நீ என்னிடம் சொல்லத் துணியாததை முழுதும் அறிந்தவர்களாக இருந்ததால் அவர்கள் இவ்வழியில் உன்னிடம் பேசினார்கள்.(11) இதன் காரணமாகப் பாவிகளுக்கான உலகங்களே உனதாகும். நீ செய்ததை என்னிடம் நீ சொல்லவில்லையே.(12)

ஓ! மறுபிறப்பாளா {விபுலா}, இயற்கையாகவே பாவம் நிறைந்த இயல்பைக் கொண்ட என் மனைவியைப் பாதுகாக்க முழு வல்லமையுடன் நீ இருந்தாய். நீ செய்த காரியத்தில் பாவமேதும் இல்லை. இதனாலேயே நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன்.(13) ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நீ தீச்செயலேதும் செய்திருந்தால் எத்தாமதமுமின்றி உன்னை மொத்தமாகச் சபித்திருப்பேன்.(14) பெண்கள் ஆண்களுடன் கலக்கிறார்கள். ஆண்கள் இத்தகைய கலவியை மிகவும் விரும்புகின்றனர். எனினும், நீ வேறுபட்ட ஆவலுடன் {பாதுகாக்கும் நோக்கத்துடனே} என் மனைவியைப் பாதுகாத்தாய்[1]. நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தால், நிச்சயம் ஒரு சாபம் கிட்டியிருக்கும். இதையே நான் நினைக்கிறேன்.(15) ஓ! மகனே, நீ என் மனைவியைப் பாதுகாத்தாய். நீ செய்த விதமும், நீ சொல்லியிருந்தால் எவ்வாறு அறிவேனோ அவ்வாறே என்னால் அறியப்பட்டது. ஓ! மகனே, நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விட்டு நீ சொர்க்கத்திற்குச் செல்வாயாக” என்றார் {தேவசர்மன்}.(16)பெரும் முனிவரான தேவசர்மன், விபுலரிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தமது மனைவியுடனும், தமது சீடருடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார்.(17) ஓ! மன்னா, இந்த வரலாற்றை முன்னொரு சந்தர்ப்பத்தில் கங்கைக்கரையில் வைத்து ஓர் உரையாடலின் போக்கில் பெரும் தவசியான மார்க்கண்டேயர் எனக்குச் சொன்னார்.(18) எனவே, நான் இஃதை உனக்குச் சொன்னேன். (அனைத்தை வகை மயக்கங்கள் மற்றும் வாய்ப்புகளில் இருந்தும்) பெண்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களில் அறம் சார்ந்தவர்கள் மற்றும் சாராதவர்கள் என்ற இருவகையினரும் காணப்படுகின்றனர்.(19)

அறம் சார்ந்த பெண்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர். (உயிரினங்கள் அனைத்தையும் எங்கும் பேணி வளர்ப்பதால்) அவர்களே இந்த அண்டத்தின் தாய்மார் {லோகமாதாக்கள்} ஆவர். நீர்நிலைகள் மற்றும் காடுகளோடு கூடிய இந்தப் பூமியைத் தாங்குபவர்கள் அவர்களே.(20) பாவம் நிறைந்தோரும், தீய நடத்தை கொண்டோரும், குலத்தை அழிப்போரும், பாவம் நிறைந்த செயல்களையே செய்யத் துணிந்தோருமான பெண்களை அவர்களின் உடல்களில் தோன்றி வெளிப்படும் தீய குறியீடுகளை {துர்லக்ஷணங்களைக்} கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.(21) உயர் ஆன்ம மனிதர்களாலும் இவ்வாறே பெண்களைப் பாதுகாக்க முடியும். ஓ! மன்னர்களில் புலியே, வேறு எந்த வகையிலும் அவர்களைப் பாதுகாக்க முடியாது.(22) ஓ! மனிதர்களின் தலைவா, பெண்கள் கொடியவர்களாவர். அவர்கள் கொடிய ஆற்றலைக் கொண்டவர்கள். அவர்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவர்களைவிட, அவர்களின் அன்புக்கோ, விருப்பத்திற்கோ உரியவர்கள் வேறு எவருமில்லை.(23) பெண்கள், உயிருக்கே அழிவை ஏற்படுத்தும் (அதர்வண) மந்திரங்களைப் போன்றவர்களாவர். ஒருவனோடு வாழ்வதாக உடன்பட்ட பிறகும், பிறரோடு செல்ல அவர்கள் அவனைக் கைவிடத் தயாராக இருப்பார்கள். ஓ! பாண்டுவின் மகனே, எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒரே ஒருவனிடம் ஒருபோதும் அவர்கள் நிறைவடைவதில்லை.(24)

மனிதர்கள் அவர்களிடம் அன்பேதும் உணர வேண்டியதில்லை. ஓ! மன்னா அவர்களிடம் பகைமையும் பாராட்ட வேண்டியதில்லை. அறத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் துணையைத் தயக்கத்துடனும், பற்றில்லாமலும் அனுபவிக்க வேண்டுமேயன்றி ஊக்கத்துடனும், பற்றுடனும் {அனுபவிக்கக்}கூடாது.(25) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வேறுவகையில் செயற்படும் ஒரு மனிதன் நிச்சயம் அழிவையே அடைவான். ஓ! மன்னர்களில் புலியே, அனைத்துக் காலங்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறிவே மதிப்பிற்குரியதாக இருக்கிறது.(26) பெண்ணைப் பாதுகாப்பதில் வென்ற ஒரே மனிதர் விபுலர் மட்டுமே. ஓ! மன்னா, மூவுலகிலும் பெண்களைப் பாதுகாக்கவல்லவர்களென வேறு எவரும் இல்லை” என்றார் {பீஷ்மர்}.(27)

ஐவகைத் திருமணங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 44-எவ்வகை மனிதனுக்கு ஒருவன் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்; திருமண வகைகள்; திருமணம் முழுமை பெற அவசியமானவை எவை; திருமணம் குறித்துப் பாஹ்லீகர் மற்றும் சத்தியவான் ஆகியோர் சொன்ன நீதிகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடமைகள் அனைத்தின் வேர் எது? உற்றார் உறவினரின் வேரெது? இல்லத்தின் வேரெது? பித்ருக்கள் மற்றும் விருந்தினர்களின் வேர்களெவை? என்பவை குறித்து எனக்குச் சொல்வீராக.(1) இந்தக் காரியமே (ஒருவனுடைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பதே) கடமைகள் அனைத்திலும் முதன்மையானது என்று நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மன்னா, ஒருவன் எவ்வகை மனிதனுக்குத் தன் மகளைக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“நன்மக்கள், ஒரு மனிதனின் ஒழுக்கம், இயல்பு {குணம்}, அவனது கல்வி, ஈட்டம் {சாதனைகள்}, அவனது பிறப்பு {குலம்} மற்றும் அவனது செயல்கள் ஆகியவற்றை விசாரித்த பிறகே தேர்ந்த ஒரு மணமகனுக்குத் தங்கள் மகளைத் கொடுப்பார்கள்.(3) ஓ! யுதிஷ்டிரா, அறம் சார்ந்த பிராமணர்கள் அனைவரும் (தங்கள் மகள்களை {திருமணம் செய்து} கொடுக்கும் காரியத்தில்) இவ்வழியிலேயே செயல்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, இது பிரம்மத் திருமணம் {பிரம்ம விவாகம்} என்று அறியப்படுகிறது.(4) ஒரு பெண்ணின் தந்தையானவன், தகுந்த மணமகனைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு வகைப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் அந்த மணமகனைத் தூண்டி, தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வகைத் திருமணமானது {பிராஜாபத்ய / க்ஷத்ர விவாகமானது}, நல்ல க்ஷத்திரியர்கள் அனைவரின் நித்திய நடைமுறையாக இருக்கிறது.(5) ஒரு பெண்ணின் தந்தையானவன், தன் சொந்த விருப்பங்களை அலட்சியம் செய்து, தன் மகளால் விரும்பப்படுபவனும், அந்தப் பெண்ணின் அவ்வுணர்வை ஏற்பவனுமான ஒருவனுக்குத் தன் மகளை அளிக்கும்போது, ஓ! யுதிஷ்டிரா, அவ்வகைத் திருமணமானது காந்தர்வம் {காந்தர்வ விவாகம்} என்று வேதங்களை அறிந்தோரால் அழைக்கப்படுகிறது.(6)

ஒரு பெண்ணின் உறவினர்களுடைய பேராசையை நிறைவடையச் செய்து, பெரும் விலை கொடுத்து அவளை வாங்கித் திருமணம் செய்து கொள்வது அசுரர்களின் நடைமுறை {இவ்வகைத் திருமணத்தை ஆசுர விவாகம்} என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றனர்.(7) சில வேளைகளில் ஒரு மணமகன், அழுது கொண்டிருக்கும் உறவினர்களின் தலைகளைக் கொய்து, அவர்களைக் கொன்று, அவர்களது பெண்ணை வலுக்கட்டாயமாக அபகரித்துச் செல்றான். ஓ! மகனே, அத்தகைய திருமணம் ராட்சசம் {ராக்ஷஸ விவாகம்} என்ற பெயரில் அழைக்கப்படுகிறது[1].(8) ஓ! யுதிஷ்டிரா, இவ்வைந்தில் (பிரம்மம், க்ஷத்ரம், காந்தர்வம், ஆசுரம், ராட்சசம் ஆகியவற்றில்) அறம்சார்ந்தவை {தர்மம்} மூன்றும், அறமற்றவை {அதர்மம்} இரண்டும் என இருக்கின்றன. பைசாச மற்றும் ஆசுர வகைகளை ஒருபோதும் செய்யக்கூடாது[2].(9) ஓ! மனிதர்களின் இளவரசே, பிரம்ம, க்ஷத்ர, காந்தர்வ வடிவங்கள் {திருமண வகைகள்} அறம்சார்ந்தவை ஆகும். இவற்றைத் தனித்தனியாகவும், சேர்த்தும் செய்யலாம் என்பதில் ஐயமில்லை.(10)ஒரு பிராமணன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். ஒரு க்ஷத்திரியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். வைசியனைப் பொறுத்தவரையில், அவன் தன் வகையைச் சார்ந்த ஒரு மனைவியைக் கொள்ள வேண்டும். இந்த மனைவிகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும்[3].(11) ஒரு பிராமணன் கொள்ளும் மூன்று மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு பிராமணி} முதன்மையானவளாகக் கருதப்பட வேண்டும். அதே போல ஒரு க்ஷத்திரியனுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு க்ஷத்திரியப் பெண்ணே} மேன்மையானவளாகக் கருதப்பட வேண்டும். உயர் வகையைச் சார்ந்தவர்கள் மூவரும் {முதல் மூன்று வர்ணத்தாரும்}, (அறத்திற்காக அல்லாமல்) இன்ப காரியங்களுக்காக மட்டும் தாழ்ந்த, அல்லது சூத்திர வகையில் மனைவிகளைக் கொள்ளலாம் என்று சிலர் சொல்கிறார்கள், எனினும், வேறு சிலர் இந்த நடைமுறையைத் தடை செய்கின்றனர்.(12) சூத்திரப் பெண்களிடம் பிள்ளை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை நல்லோர் கண்டிக்கின்றனர். ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிள்ளைகளைப் பெறுவதன் மூலம், ஈடு செய்யக்கூடிய {பரிகாரத்தோடு கூடிய} பாவத்தை ஈட்டுகிறான்.(13) முப்பது வயதுடைய ஒரு மனிதன், நக்நிகாம்[4] என்றழைக்கப்படும் பத்து வயதுடைய பெண்ணை மணக்கலாம். அல்லது இருபத்தோரு வயதுடைய ஒருவன், ஏழு வயதுடைய ஒரு பெண்ணை மணக்கலாம்.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சகோதரனோ, தந்தையோ இல்லாத ஒரு பெண், தன் தகப்பனுக்குப் புத்ரிகையாகக் கருதப்படலாம் என்பதால், அத்தகையவளை மணந்து கொள்ளக்கூடாது[5].(15)பூப்பெய்திய பிறகு (திருமணமாகாத) ஒரு பெண் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான்காம் ஆண்டில், (உறவினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் எனக் காத்திருக்காமல்) தானே தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.(16) அத்தகைய ஒரு பெண்ணின் வாரிசு {சமூக} மதிப்பை இழப்பதில்லை, அத்தகைய பெண்ணுடனான கலவியும் இழிவாவதில்லை. தானே கணவனைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக வேறுவகையில் செயல்பட்டால், அவள் பிரஜாபதியின் பழிமொழியை ஈட்டுகிறாள் {பிரம்மனால் இகழத்தக்கவள் ஆகிறாள்}.(17) ஒருவன், தன் அன்னைக்கு ஸபிண்டையாக[6] இல்லாத, அல்லது தன் தந்தையின் கோத்ரத்தையே கொண்டவளாக {ஸகோத்ரையாக} இல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுவே மனு அறிவித்திருக்கும் (புனித விதிக்கு இணக்கமாக) நடைமுறையாகும்” என்றார் {பீஷ்மர்}.(18)யுதிஷ்டிரன், “திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒருவன், பெண்ணின் உறவினர்களுக்கு மணக்கொடை {கன்னிகாசுல்கம்} அளிக்கிறான்; வேறொருவன் பெண்ணின் உறவினர்களிடம் மணக்கொடை தருவதாக உறுதியளிக்கிறான்; வேறொருவன், “நான் இந்தப் பெண்ணைப் பலவந்தமாக அபகரிக்கப் போகிறேன்” என்கிறான்; வேறொருவன் தன் செல்வத்தை (அந்தப் பெண்ணுக்குத் தன் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொண்டு மணக்கொடை அளிக்கும் நோக்கில் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு அவற்றை) வெளிக்காட்டுகிறான்;(19) மற்றொருவன் உண்மையில் திருமணச் சடங்குகளுடன் அப்பெண்ணின் கரத்தைப் பற்றுகிறான் {பாணிக்ரகணம் செய்கிறான்}. ஓ! பாட்டா, நான் உம்மைக் கேட்கிறேன், உண்மையில் அந்தப் பெண் {இவர்களில்} யாருடைய மனைவியாவாள்? உண்மையை அறிந்து கொள்ள விரும்பும் எங்களுக்குப் பார்வையைத் தரும் கண்ணாக நீரே இருக்கிறீர்” என்றான்.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஞானிகள் ஆலோசித்து, அங்கீகரித்த அல்லது தீர்மானித்த மனித செயல்கள் எவையும் நன்மையை உண்டாக்குபவையாகவே காணப்படுகின்றன. எனினும், பொய் பேசுவது எப்போதும் பாவம் நிறைந்ததாகும்[7].(21) ஒரு பெண்ணானவள், தான் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவனைத் தவிர வேறு ஒருவனிடம் தன் கரத்தைக் கொடுத்தால், {அவ்வாறு} மனைவியாகும் அந்தப் பெண், அவளுக்குப் பிறக்கும் மகன்கள், ரித்விஜர்கள், ஆசான்கள் {குருமார்}, சீடர்கள், அந்தத் திருமணத்தின் போது உள்ள உபாத்யாயர்கள் அனைவரும் பாவக்கழிவு {பிராயச்சித்தம்} செய்ய வேண்டியவர்களாகிறார்கள். அத்தகைய நடத்தைக்குப் பாவக்கழிவேதும் செய்ய வேண்டியதில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள்.(22) மனு, ஒரு பெண் தான் விரும்பாத ஒருவனுடன் வாழும் நடைமுறையை மெச்சவில்லை[8]. அவள் விரும்பாத ஒருவனுடன் மனைவியாக வாழ்வது இழுக்குக்கும், பாவத்திற்கும் வழிவகுக்கும். பின்வரும் வழக்குகள் எதனிலும் எவனும் அதிகப் பாவமீட்டுவதில்லை.(23) திருமணத்திற்காக ஒரு பெண் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படும் போது, பெண்ணின் உறவினர்கள் மூலம் உரிய சடங்குகளுடன் அப்பெண்ணானவள் கடத்தியவனுக்கே கொடுக்கப்படும் காரியத்திலும், மணக்கொடை கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் காரியத்திலும் பெரும் பாவமேதும் இல்லை.(24)பெண்ணின் உறவினர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்த பிறகே மந்திரங்களும், ஹோமங்களும் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் மந்திரங்களே உண்மையில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுகின்றன. உறவினர்களால் கொடுக்கப்படாத ஒரு பெண்ணின் வழக்கில் சொல்லப்படும் மந்திரங்களும், செய்யப்படும் ஹோமங்களும் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுவதில்லை.(25) ஒரு பெண்ணின் உறவினர்கள் மூலம் செய்யப்படும் ஏற்பாடுதான் கட்டமைப்புடன் கூடியதும், புனிதமிக்கதும் ஆகும் என்பதில் ஐயமில்லை. மந்திரங்களின் துணையுடன் திருமணம் செய்து கொடுப்பவர் மற்றும் திருமணம் செய்து கொள்பவர் ஆகியோர் செய்து கொள்ளும் ஏற்பாடு (கணவன் மனைவி என்ற உறவுமுறையை உண்மையில் உண்டாக்குவதால் இந்த ஏற்பாடே) மிகப் புனிதமானதாகும்.(26) சாத்திரவிதிகளின்படி, ஒரு கணவன், தன் முற்பிறவி செயல்கள், அல்லது கடவுளால் விதிக்கப்பட்டதன் விளைவாக அடைந்த உரிய உடைமையாகத் தன் மனைவியைக் கருத வேண்டும். எனவே, உறவினரால் மற்றொருவனுக்குக் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்பதன் மூலமோ, எந்தப் பெண்ணுக்காக மற்றொருவனிடம் இருந்து அவர்கள் {உறவினர்கள்} மணக்கொடை பெற்றார்களோ, அந்தப் பெண்ணைத் தன் மனைவியாக ஏற்பதன் மூலமோ ஒருவன் எந்தப் பழியையும் ஈட்டுவதில்லை” என்றார் {பீஷ்மர்}.(27)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு பெண்ணின் தந்தை, அவளுக்கான மணக்கொடையை {ஒருவனிடமிருந்து} பெற்ற பிறகு, தகுதிமிக்கவனும், சரியான விகிதங்களில் முத்தொகையை {அறம், பொருள் மற்றும் இன்பத்தைக்} கொண்டவனுமான மற்றொருவன் அவளது கரத்தைப் பெற முன்வந்தால், அந்தத் தகுதிமிக்கவனை ஏற்பதற்காக, {ஏற்கனவே} மணக்கொடை அளித்தவனை மறுப்பதன் மூலம் அந்தப் பெண்ணின் தந்தை பழியை ஈட்டுவானா?(28) இத்தகைய வழக்கில், பெண்ணைக் கொடுப்பதாக உறுதிமொழி அளித்துவிட்டு அவனை மறுப்பது மதிப்பிற்குரியதாகாது, அதே வேளையில் (மிகவும் தகுதி வாய்ந்த ஒருவனுக்குத் தன் மகளை அளிக்க வேண்டும் என்ற கடமையைக் கருத்தில் கொள்ளும்போது) தகுதிமிக்க ஒருவனை மறுப்பதும் ஒருபோதும் நன்மையைத் தராது என்பதால், இவ்விரண்டு நிலைகளும் குற்றம் நிறைந்தவையாகவே தெரிகின்றன. நான் கேட்கிறேன், அந்தத் தந்தை என்ன செய்தால் நன்மை செய்தவனாகச் சொல்லப்படுவான்? கடமைகள் அனைத்திலும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய நடவடிக்கையாக நமக்கு இது தெரிகிறது.(29) உண்மையை உறுதி செய்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். உண்மையில், நீரே எங்கள் கண்களாவீர். இதை நீர் எங்களுக்கு விளக்குவீராக. நீர் சொல்வதைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை” என்றான்.(30)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மணக்கொடையானது {கன்யாசுல்கம்} அப்பெண்ணை மனைவியின் நிலையை அடையச் செய்யாது. அதை {மணக்கொடையைச்} செலுத்தும் மனிதனும் இதை நன்கறிவான். அவன் அந்தப் பெண்ணுக்கான விலையாகவே அதைச் செலுத்துகிறான். மேலும், பிறர் கொடுக்கும் மணக்கொடைகளுக்காக நல்லோர் ஒருபோதும் தங்கள் மகள்களை அவர்களுக்கு அளிக்கமாட்டார்கள்.(31) திருமணத்தை விரும்பும் மனிதன் {முதுமை முதலிய} விரும்பாத குணங்களைக் கொண்டிருக்கும்போதே, பெண்ணின் உறவினர்கள் அவனிடம் மணக்கொடையைக் கோருகின்றனர். எனினும், ஒருவனுடைய சாதனைகளால் கவரப்பட்டு, “நீ என் மகளைத் தங்கம் மற்றும் ரத்தின ஆபரணங்களாக முறையாக அலங்கரித்து, அவளைத் திருமணம் செய்து கொள்வாயாக” என்று சொல்லும் மனிதனும்,(32) இந்த வேண்டுகோளுக்கு இணங்கும் மனிதனும், உண்மையில் இத்தகைய பரிமாற்றத்தால் விற்பனையில் ஈடுபடவில்லை என்பதால், அவர்களை மணக்கொடை கொடுத்தவர்களாகவோ, பெற்றவர்களாகவோ சொல்ல முடியாது. (அன்பினாலும், பாசத்தினாலும் கொடுக்கப்படும்) கொடைகளை ஏற்றுக் கொண்டு ஒரு மகளை அளிப்பது நித்திய நடைமுறையே.(33) திருமணக் காரியங்களில் சில தந்தைமார், “இத்தகைய, இத்தகைய மனிதனுக்கு நான் என் மகளை அளிப்பேன்” என்று சொல்கிறார்கள்; சிலர், “இத்தகைய ஒருவனுக்கு என் மகளை அளிக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள்; மேலும் சிலர், “இத்தகைய ஒருவனுக்கே நான் என் மகளை அளிப்பேன்” என்று உணர்ச்சித்துடிப்புடன் சொல்கிறார்கள்.(34)

இத்தகைய அறிவிப்புகள் உண்மையில் திருமணமாகாது. கன்னிகையரின் கரங்களுக்காக மக்கள் ஒருவருக்கொருவர் வேண்டுவது (உறுதிமொழி கொடுப்பதும், பின்வாங்குவதும்) காணப்படுகிறது. உரிய சடங்குகளுடன் உண்மையில் கரங்களை ஏற்காதவரையில் திருமணம் நடந்ததாகச் சொல்ல முடியாது. கன்னிகையரைப் பொறுத்தவரையில், பழங்காலத்தில் மருத்துகளால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட வரம் இதுவேன் என்று நாம் கேள்விப்படுகிறோம்[9].(35) மனிதர்கள் மிகத் தகுந்தவர்களாக இல்லாதவரையில் அவர்களுக்குக் கன்னிகையரை அளிக்கக்கூடாது என மனிதர்கள் அனைவருக்கும் முனிவர்கள் ஒரு கட்டளையை விதித்திருக்கின்றனர். ஒரு மகள் என்பவள், ஆசை மற்றும் இடையுறவு வழித்தோன்றல்களின் வேராக இருக்கிறாள். இதையே நான் நினைக்கிறேன்[10].(36) மகளை விற்பது மற்றும் வாங்குவது என்ற நடைமுறை மனிதர்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக இருக்கிறது. இந்நடைமுறைக்கு இத்தகைய பரிச்சயம் இருக்கும் விளைவால், கவனமிக்க ஆய்வில் அதில் எண்ணற்ற குற்றங்களை உன்னால் கண்டுபிடிக்க முடியும். மணக்கொடை கொடுப்பது, அல்லது ஏற்பது என்பவை மட்டுமே கணவன் மற்றும் மனைவி என்ற நிலையை உண்டாக்குவதாக ஒருபோதும் கருத முடியாது. இது குறித்து நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக.(37)முன்பொரு காலத்தில், மாகதர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள் அனைவரையும் வீழ்த்தி, விசித்திரவீரியனுக்காக இரு கன்னிகைகளை {அம்பிகை, அம்பாலிகை மற்றும் அம்பை ஆகிய மூவரை} நான் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தேன்.(38) அந்தக் கன்னிகையர் இருவரில் ஒருத்தி {அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய இருவரும்} உரிய சடங்குகளுடன் திருமணம் செய்யப்பட்டாள்[11]. மற்றொரு கன்னிகை {அம்பை} களத்தில் வீரம் என்ற வடிவில் மணக்கொடை கொடுக்கப்பட்டவள் ஆதலால் முறையாக மணக்கப்படவில்லை. குருகுலத்தைச் சேர்ந்தவரும் என் தந்தையின் சகோதரருமான மன்னர் பாஹ்லீகர், இவ்வாறு கொண்டு வரப்பட்ட கன்னிகை உரிய சடங்குகளுடன் மணக்கப்படவில்லையெனில் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்று சொன்னார். எனவே, அந்தக் கன்னிகையை முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்ளும்படி விசித்திரவீரியனுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.(39) என் தந்தையின் {தந்தையின் சகோதரரான பாஹ்லீகரின்} சொற்களில் ஐயம் கொண்டு நான் பிறரிடம் கருத்துக் கேட்டேன். அறநெறி குறித்த காரியங்கள் என் தந்தை {பாஹ்லீகர்} அதீத கவனத்துடன் இருந்தார் என நான் நினைத்தேன்.(40)ஓ! மன்னா, பிறகு திருமணம் குறித்த காரியங்களில் அறவோரின் நடைமுறை என்ன என்பதை அறியும் விருப்பத்தில் நான் என் தந்தையிடமே சென்று, இந்தச் சொற்களைச் சொன்னேன்: “ஓ! தந்தையே {தந்தையின் சஹோதரரான பாஹ்லீகரே}, அறம்சார்ந்த மக்களின் நடைமுறைகள் என்ன என்பதை உண்மையில் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டேன். என் ஆவலும் ஊக்கமும் அதிகமாக இருந்ததால் என் விருப்பத்தை நான் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தினேன்.(41) நான் இச்சொற்களைச் சொன்னதும், அறவோரில் முதன்மையானவரும், எனக்குத் தந்தை முறையுமான பாஹ்லீகர்,(42) “உண்மையில் உரிய சடங்குகளுடன் கன்னிகையின் கரத்தைப் பற்றாமல், மணகொடைக் கொடுப்பது மற்றும் ஏற்பதால் கணவன் மனைவி என்ற நிலை அடையப்படுவதாக நீ கருதினால், (மணக்கொடை அளித்தவனுடன் தன் மகளைச் செல்ல அனுமதிப்பதன் மூலம்) அந்தக் கன்னிகையின் தந்தையானவன் தன் குல நடைமுறையைப் பின்பற்றுவதாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளலாமேயன்றி சாத்திர நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஏற்றுக்கொள்ளப்படும் சாத்திரங்களை இதையே அறிவிக்கின்றன.(43) அறநெறி மற்றும் கடமைகளை அறிந்த மனிதர்கள், உரிய சடங்குகளுடன் கரத்தைப் பற்றாமல், மணக்கொடை கொடுப்பது மற்றும் ஏற்பதில் கணவன் மனைவி என்ற நிலை ஏற்படுகின்றது என்று சொல்பவர்களின் சொற்களை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(44)

ஒரு தந்தையால் அவனது மகள் கொடுக்கப்படும்போது (உரிய சடங்குகளுடன் அவளைக் கணவன் ஏற்றுக் கொள்ளும்போது) தான் கணவன் மற்றும் மனைவி என்ற நிலை ஏற்படுகிறது என்பது நன்கறியப்பட்ட சொலவடையாகும். விற்பனை அல்லது கொள்முதலின் மூலம் கன்னிகையர் மனைவி என்ற நிலையை அடைய முடியாது. விற்பனை, மணக்கொடை ஆகியவற்றின் மூலம் அத்தகைய நிலையை அடைவதாகக் கருதுவோர் நிச்சயம் சாத்திரங்களை அறிந்தோரல்ல.(45) எவரும் தம் மகளை இத்தகைய மனிதர்களுக்கு அளிக்கக்கூடாது. உண்மையில், அவர்கள் அவனுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய நபர்கள் அல்ல. ஒரு மனைவியானவள் ஒருபோதும் விலைக்கு வாங்கப்படக்கூடாது. அதே போல் ஒரு தந்தையும் தன் மகளை விற்பனை செய்யக்கூடாது.(46) பேராசையால் பீடிக்கப்பட்டவர்களும், பெண்களைப் பணிப்பெண்களாக அவர்களை அடிமைகளாக விற்பவர்களும், வாங்குபவர்களும் மட்டுமே, மணக்கொடை கொடுப்பது மற்றும் பெறுவதன் மூலம் மனைவி என்ற நிலை அடையப்படுவதாகக் கருதுகிறார்கள்.(47)

ஒரு சந்தர்ப்பத்தில் இதே காரியம் குறித்துச் சில மக்கள் இளவரசன் சத்யவானிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டனர். {அவர்கள்}, “கன்னிகையின் உறவினரிடம் மணக்கொடை கொடுப்பவன் திருமணத்திற்கு முன்பே மாண்டு போனால்,(48) வேறொருவன் அந்தக் கன்னிகையின் கரத்தைப் பற்றித் திருமணம் செய்து கொள்ளலாமா? இக்காரியத்தில் எங்களுக்கு ஐயம் இருக்கிறது. நீ பெரும் ஞானம் கொண்டவனாக இருப்பதாலும், ஞானிகளால் மதிக்கப்படுவதாலும் எங்களுடைய இந்த ஐயங்களை அகற்றுவாயாக.(49) வாய்மை கற்க விரும்பும் எங்களுக்கு நீ பார்வைப் புலனாக {கண்களாக} இருப்பாயாக” {என்று கேட்டனர்}. இளவரசன் சத்யவான், இச்சொற்களைச் சொன்னவர்களிடம்,(50) “கன்னிகையின் உறவினர்கள், எவனைத் தகுந்தவனாகக் கருதுகிறார்களோ அவனுக்கே அவளை அளிக்க வேண்டும். இதில் எத்தயக்கமும் வேண்டியதில்லை. மணக்கொடை அளித்தவன் உயிருடன் இருந்தாலே அறவோர் இவ்வழியில் செயல்படுவார்கள் எனும்போது, கொடை கொடுத்தவன் இறந்திருந்தால் இக்காரியத்தில் சிறு ஐயமும் கொள்ள வேண்டியதில்லை.(51) கணவன் இல்லாததாலோ, அவன் மாண்டுவிட்டதாலோ உண்மையில் பாலினக்கலவி மூலம் மணவுறவு ஏதும் நிகழாமல் கன்னி மனைவியாகவோ, விதவையாகவோ உள்ள ஒருத்தியை, அவளுடைய கணவனுடைய தம்பி, அல்லது அத்தகைய பிற உறவினருடன் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும். மணவுறவுக்கு முன்பே கணவன் இறந்த கன்னி விதவையானவள் தன்னை அவனது தம்பியிடம் ஒப்படைக்கலாம் அல்லது தவப்பயிற்சிகளில் ஈடுபடலாம்.(52)

கணவனின் தம்பி அல்லது அத்தகைய உறவினர், இவ்வாறு விதவையானவளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் கருதுகின்றனர், வேறு சிலரோ, இத்தகைய நடத்தை பரவலாக இருந்தாலும், சாத்திய விதியின் படி இல்லாமல் ஆசையில் இருந்து எழுந்ததாகவே இருக்கிறது என்கின்றனர். அவ்வாறு சொல்பவர்கள், மற்றொருவனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மற்றும் ஏற்கப்பட்ட மணக்கொடையை அலட்சியம் செய்து, அவளை எந்தத் தகுந்தவனுக்கும் அளிக்க ஒரு கன்னிகையின் தந்தைக்கு உரிமையுண்டு என்ற தெளிவான கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.(53) கன்னிகையின் கரத்தைக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு, திருமணத்திற்கு முன்பான தொடக்கச் சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தாலும், வாக்களிக்கப்பட்டவனுக்கல்லாமல் அந்தக் கன்னிகையை வேறு ஒருவனுக்கும் கொடுக்கலாம். கொடையளிப்பவனே பொய்மையின் பாவத்தை ஈட்டுகிறான்; எனினும், மனைவி என்ற நிலையைப் பொறுத்தவரையில் இஃது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.(54) திருமண மந்திரங்கள் ஏழாவது அடியிலேயே பிரிக்க முடியாத திருமணப் பந்தத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் நீர்க்கொடையுடன் ஒருவனுக்கு அளிக்கப்படும்போதே அந்தக் கன்னிகை அவனது மனைவியாகிறாள்[12].(55) கன்னிகைகளைக் கொடையளிப்பது {கன்னிகாதானம் செய்வது} பின்வரும் வழியிலேயே செய்யப்பட வேண்டும். ஞானிகள் இதை நிச்சயம் அறிவார்கள். மேன்மையான பிராமணன் ஒருவன், விருப்பமுள்ளவளும், தன் குடும்பத்திற்கு இணையான தூய்மையும், நிலையும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவளும், சகோதரனால் கொடுக்கப்படுபவளுமான ஒரு கன்னிகையை மணக்க வேண்டும். அத்தகைய பெண்ணையும், நெருப்பின் முன்னிலையில் வைத்து, உரிய சடங்குகளுடன், வழக்கமான எண்ணிக்கையில் தன்னை வலம்வரச் செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான் {சத்தியாவன்}” என்றார் {பீஷ்மர்}.(56)

மரபுரிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 45-மணக்கொடை கொடுக்கப்பட்ட கன்னிகைக்குக் கணவனில்லாத போது செய்ய வேண்டிய விதியும், பெண்களுக்கு உரிய தாய்ப்பாகம் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்]“ஒரு மனிதன், ஒரு கன்னிகைக்காக மணக்கொடையைக் கொடுத்த பிறகு சென்றுவிட்டால் {காணாமல் போய்விட்டால்}, அந்தக் கன்னிகையின் தந்தையோ, அவளை {பிறருக்குக்} கொடுக்கத்தகுந்த வேறு உறவினரோ எவ்வாறு செயல்பட வேண்டும்?[1] ஓ பாட்டா, அதனை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகைய கன்னிகை, மகனற்றவனும், வளமிக்கவனுமான ஒரு தந்தையின் மகளாக இருந்தால், (மணக்கொடை அளித்தவன் திரும்பட்டும் என்ற நோக்கில்) அந்தத் தந்தையே அவளைப் பராமரித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், அந்தத் தந்தை அந்த மணக்கொடையைக் கொடுத்தவனின் உறவினர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கவில்லையெனில், அந்தக் கன்னிகை மணக்கொடை கொடுத்தவனுக்கு உரியவள் என்றே கருதப்பட வேண்டும்.(2) அவள், (கொடையளித்தவன் இல்லாதபோதும்) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் எதனைக் கொண்டும் அவனுக்காக {கொடையளித்தவனுக்காக} வாரிசை உண்டாக்கலாம். எனினும், முறையான சடங்குகளுடன் அவளை மணந்து கொள்ளத் தகுந்தவன் வேறு யாரும் கிடையாது.(3) பழங்காலத்தில், தந்தையால் ஆணையிடப்பட்ட இளவரசி சாவித்ரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவனுடன் சேர்ந்திருந்தாள். அவளுடைய இச்செயல் சிலரால் மெச்சப்படுகிறது; ஆனால் சாத்திரங்களை அறிந்த பிறர் இதைக் கண்டிக்கின்றனர்.(4) அறவோரான வேறு சிலர் இவ்வழியில் செயல்படுவதில்லை. வேறு சிலர், அறவோரின் நடத்தையே, கடமை அல்லது அறநெறிக்கான முதன்மையான சான்றாகக் கருதப்பட வேண்டும் என்று சொல்கின்றனர்[2].(5)விதேஹர்களின் ஆட்சியாளனான உயர் ஆன்ம ஜனகனின் பேரனான சுக்ரது, இக்காரியத்தில் பின்வரும் கருத்தை அறிவித்தான்:(6) {சுக்ரது}, “பெண்கள், தங்கள் வாழ்வின் எக்காலத்திலும் விடுதலையை அனுபவிக்கத் தகுந்தவர்களில்லை என்ற நன்கறியப்பட்ட சாத்திரங்களின் தீர்மானம் இருக்கிறது. இஃது அறவோர் நடக்கும் பாதையாக இல்லாதிருந்தால், இந்தச் சாத்திரத் தீர்மானம் எவ்வாறு இருக்கும்? எனவே, அறவோரைப் பொறுத்தவரையில், இக்காரியத்தில் அவர்களுக்குக் கேள்வி என்றோ, ஐயம் என்றோ ஏது இருக்க முடியும்? வேறுவகையில் நடக்கத் தீர்மானிக்கும் மக்கள் எவ்வாறு அந்தத் தீர்மானத்தைக் கண்டிப்பார்கள்?[3](7) நித்திய வழக்கில் இருந்து அறமற்ற வகையில் தவறுதலே அசுரர்களின் நடைமுறையாகக் கருதப்படுகிறது. இத்தகையை நடைமுறையைப் பழங்கால ஒழுக்கமுறையில் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை[4].(8) (விதியால் பெறப்படுவதும், அதன் காரணமாக, சாத்திரத் தீர்மானங்களில் உள்ள ஈர்ப்பின் துணையால் மட்டுமே புரிந்துகொள்ளப்படக்கூடியதுமான) கணவன், மனைவி என்ற உறவுமுறை மிக நுட்பமானதாகும். இஃது, ஆண் பெண் பாலியல் இன்ப விருப்பத்தை மட்டுமே உள்ளடக்கிய இயற்கை உறவுமுறையில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும்” {என்றான் சுக்ரது}. ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னனால் {சுக்ரதுவால்} சொல்லப்பட்டது இதுவே[5]” என்றார் {பீஷ்மர்}.(9)யுதிஷ்டிரன், “மனிதர்களின் செல்வமானது, (அவர்களுக்கு மகள்கள் இருக்கும்போது, பிறரால்) எந்த அதிகாரத்தின் பேரில் மரபுரிமையாகப் பெறப்படுகிறது? மகளானவள், அவளது தந்தையைப் பொறுத்தவரையில் மகனைப் போலவே கருதப்பட வேண்டும்” என்றான்.(10)

பீஷ்மர், “மகன் என்பவன் தன் சுயத்தைப் போன்றவனாவான், மகளும் ஒரு மகனைப் போன்றவள்தான். எனவே, ஒருவன் தன் மகளின் வடிவில் வாழும்போது, வேறு எவராலும் அவனது செல்வத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும்? தாயின் யௌதுக உடைமை {சீர்வரிசை} என்று அழைக்கப்படும் செல்வம் எதுவும் {தாயின் ஸ்த்ரீதனமெல்லாம்}, கன்னிகையான மகளின் பங்காகிறது. தாய்வழி பாட்டனானவன், மகன்கள் இல்லாமல் இறந்தால், மகளின் மகனே அதை மரபுரிமையாகப் பெற வேண்டும்.(12) மகளின் மகன், தன் தந்தைக்கும், தன் தாயின் தந்தைக்கும் பிண்டங்களை அளிக்கிறான். எனவே, நீதியின் கருத்துக்கிணங்க மகனுக்கும், மகளின் மகனுக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது.(13) ஒரு மனிதன் ஒரு மகளை மட்டுமே பெற்றிருந்து, அவளே மகன் என்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும்போது, அவன் ஒரு மகனைப் பெற நேர்ந்தால், அத்தகைய மகன் (தன் தந்தையின் செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக) மரபுரிமையை அந்த மகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்[6]. மேலும், ஒரு மனிதன் ஒரு மகளைப் பெற்றிருந்து, அவள் மகன் என்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும்போது, அவன் ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொண்டாலும், விலைக்கு வாங்கினாலும், அப்போது அந்த மகளே அத்தகைய மகனைவிட மேன்மையானவளாகக் கருதப்படுவாள் (அப்போது அவள் தன் தந்தையின் செல்வத்தில் {ஐந்தில்} மூன்று பங்கையும், அந்த மகன் இரண்டு பங்கையும் எடுத்துக் கொள்ள வேண்டும்).(14)பின் வரும் வழக்கில், மகளுடைய மகனின் நிலையானது, ஒருவனுடைய மகளின் மகன்களுடன் {உண்மையில்} ஏன் தொடர்புப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. தந்தையால் விற்கப்பட்ட மகளைக் குறித்ததே அவ்வழக்கு. உண்மையாகத் தந்தையால் விலைக்கு விற்கப்பட்ட மகளுக்குப் பிறந்த மகன்கள், (அவர்களுடைய தந்தை தானே அவர்களைப் பெறாமல், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிறர் மூலம் சந்ததியைப் பெற்றிருந்தாலும்) அவர்களின் தந்தைக்கே முற்றிலும் உரியவர்கள் ஆவர். அத்தகைய மகன்கள், தங்கள் தாய் விலைக்கு விற்கப்பட்டதன் விளைவால் தங்கள் உரிமைகள் அனைத்தையும் இழப்பதால், அவர்கள் தங்கள் தாய்வழி பாட்டனுக்கு மகள்களின் பிள்ளைகளாக ஒருபோதும் கருதப்படமாட்டார்கள்[7].(15) மேலும் அத்தகைய மகன்கள், வன்மம் நிறைந்தவர்களாகவும், அறமற்ற ஒழுக்கம் கொண்டவர்களாகவும், அடுத்தவரின் சொத்துகளை அபகரிப்பவர்களாகவும், வஞ்சகம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆசுரம் என்றழைக்கப்படும் பாவம் நிறைந்த திருமண வகையில் பிறந்த பிள்ளைகள் நடத்தையில் தீமையானவர்கள் ஆகின்றனர்.(16)பழங்கால வரலாறுகளை அறிந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், சாத்திரங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அவற்றில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் உறுதியானவர்களுமான மனிதர்கள், இது தொடர்பாகப் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட சுலோகங்களைச் சொல்கின்றனர்.(17) யமன் பாடியது இதுவே. “தன் மகளை விற்றதன் மூலம் எவன் செல்வமீட்டுவானோ, அல்லது தன் வாழ்வாதாரத்திற்காக மணக்கொடையை ஏற்ற பிறகு எவன் தன் மகளை அளிக்கிறானோ,(18) அவன் காலஸம் {காலஸூத்ரம்} என்ற பெயரில் அறியப்படும் பயங்கரமான ஏழு நரகங்களில் அடுத்தடுத்து மூழ்குவான். அங்கே அந்த இழிந்தவன், முழு நேரமும் வியர்வையையும், சிறுநீரையும், மலத்தையும் உண்டு கொண்டிருப்பான்” {என்பதே யமன் பாடிய ஸ்லோகம்}.(19)

ஆர்ஷம் என்றழைக்கப்படும் திருமண வகையில், திருமணம் செய்து கொள்ளும் ஒருவன், கன்னிகையின் தந்தைக்கு ஒரு காளையையும், பசுவையும் கொடையாக அளிக்க வேண்டும். சிலர் இந்தக் கொடையை மணக்கொடையாக (அல்லது விலையாக) கருதுகின்றனர், அதே வேளையில், அஃதை அவ்வாறு கருதக்கூடாது என்று சிலர் கருதுகின்றனர். எனினும், ஓ மன்னா, அத்தகைய ஒரு நோக்கத்திற்காகக் கொடுக்கப்படும் கொடையானது, சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது மணக்கொடையாகவோ, விலையாகவோ கருதப்படும், அத்தகைய சூழ்நிலையில் மகளை அளிப்பது விற்பனையாகவே பார்க்கப்படும் என்பதே உண்மையான கருத்தாகும்.(20) சில மனிதர்களால் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், இதை ஒருபோதும் நித்திய வழக்கமாகக் கொள்ள முடியாது. உறவினர்களுக்கு மத்தியில் இருந்து வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்ற பிறகு அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வேறு திருமண வடிவங்களும் மனிதர்களால் செய்யப்படுகின்றன.(21) ஒரு கன்னிகையைப் பலத்தால் ஒடுக்கி அவளுடன் பாலினக் கலவியில் ஈடுபடும் மனிதர்கள், பாவமிழைத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் இருள் நிறைந்த நரகத்தில் மூழ்குவார்கள்[8].(22) குருதியுறவு இல்லாத மனிதன் எவனும் விற்பனைக்குரியவனாக மாட்டான். அவ்வாறிருக்கையில் ஒருவனுடைய சந்ததியைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் அடையப்படும் செல்வத்தைக் கொண்டு, புண்ணியத்திற்கு வழிவகுக்கும் எந்தச் செயலையும் செய்ய முடியாது” என்றார் {பீஷ்மர்}.(23)

பெண்களை மதிப்பீராக! – அநுசாஸனபர்வம் பகுதி – 46-பெண்களுக்குப் பொருள் கொடுத்தல் மற்றும் அவர்களை அன்போடு நடத்தல் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிம்}, “பழைய வரலாறை அறிந்தவர்கள், பிரசேதஸின் மகனான தக்ஷனின் பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்கிறார்கள். “எந்தக் கன்னிகையைப் பொறுத்தவரையில், அவளது உறவினர்களால் மணக்கொடையின் வடிவில் ஏதும் பெறப்படவில்லையோ, அவளை விற்பனை செய்யப்பட்டவளாகச் சொல்ல முடியாது” {என்பதே அந்த ஸ்லோகம்}[1].(1) திருமணத்தில் கரம்பற்றப்படும் கன்னிகையை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தி, ஏற்புடைய அனைத்தையும் கொடுக்க வேண்டும்.(2) அவளது தந்தை, சகோதரர்கள், மாமனார், மைத்துனர்கள் {கணவனின் சகோதரர்கள்} ஆகியோர் நன்மையை அறுவடை செய்யும் விருப்பம் கொண்டவர்களாக இருந்தால், அவளை அனைத்து வகையிலும் மதித்து, ஆபரணங்களால் அவளை அலங்கரிக்க வேண்டும். அத்தகைய நடத்தை அவர்களைப் போதுமான மகிழ்ச்சிக்கும், நன்மைக்கும் வழிநடத்திச் செல்லும்.(3)மனைவிக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலோ, இத்தகைய விருப்பமின்மை மற்றும் இன்பமில்லாமையால் {அவள்} அவனை மகிழ்ச்சியடையச் செய்யத் தவறினாலோ, அந்தக் கணவன் தன் குலத்தைப் பெருக்க ஒருபோதும் சந்ததியைப் பெறக்கூடாது.(4) ஓ! மன்னா, பெண்கள் எப்போதும் வழிபடப்பட்டு, அன்புடன் நடத்தப்பட வேண்டும். எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தேவர்களே மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(5) எங்கே பெண்கள் வழிபடப்படவில்லையோ, அங்கே செயல்கள் அனைத்தும் கனியற்றவையாகின்றன. ஒரு குடும்பத்திலுள்ள பெண்கள், தாங்கள் நடத்தப்படும் விதத்தால் துன்பத்தை அடைந்து கண்ணீர் விட்டால், அந்தக் குடும்பம் விரைவில் அழிந்து போகும்.(6)

பெண்களால் சபிக்கப்படும் வீடுகள், ஏதோ அதர்வணச் சடங்கால் எரிக்கப்பட்டதைப் போல அழிந்து, நிர்மூலமடையும். அத்தகைய வீடுகள் தங்கள் ஒளியை இழக்கும். ஓ! மன்னா, அவற்றின் வளர்ச்சியும், செழிப்பும் இல்லாமல் போகும்.(7) மனு, தாம் சொர்க்கத்திற்குச் செல்லுமுன், “பெண்கள் பலமில்லாதவர்கள், ஆண்களின் கவர்ச்சிமிக்க மயக்கும் தந்திரங்களுக்கு எளிதில் இரையாகிறவர்கள், தங்களுக்கு அளிக்கப்படும் அன்பை ஏற்கும் இயல்புடையவர்கள், வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்கள்” என்று சொல்லி ஆண்களின் பாதுகாப்பின்கீழ் அவர்களைக் கொண்டு வந்தார்.(8) அவர்களுக்கு மத்தியிலேயே வன்மம் நிறைந்தவர்களும், கௌரவங்களில் பேராசை கொண்டோரும், கொடிய மனம் கொண்டவர்களும், அன்பற்றவர்களும், ஊடுருவ முடியாத அறிவைக் கொண்டவர்களுமான சிலரும் இருக்கின்றனர். எனினும், பெண்கள் மதிக்கத் தகுந்தவர்களாவர். மனிதர்களே அவர்களை மதிப்பீராக.(9)

ஆண்களின் அறம் பெண்களையே சார்ந்திருக்கிறது. இன்பங்கள் மற்றும் கேளிக்கைகள் அனைத்தும் முற்றிலும் அவர்களையே சார்ந்திருக்கின்றன. நீங்கள் அவர்களுக்குத் தொண்டு செய்து, அவர்களை வழிபடுவீராக. நீங்கள் உங்கள் விருப்பங்களை அவர்களின் முன்னிலையில் தளர்த்துவீராக.(10) சந்ததியைப் பெறுதல், ஏற்கனவே பிறந்த பிள்ளைகளைப் பேணி வளர்த்தல், சமூகத்திற்குத் தேவையான அனைத்துச் செயல்களையும் செய்தல் ஆகிய இவை அனைத்தும் பெண்களையே தங்களுக்கான காரணமாகக் கொண்டிருக்கின்றன.(11) பெண்களைக் கௌரவிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நோக்கங்கள் அனைத்தும் கனியும் நிலையை நிச்சயம் அடைவீர்கள்.

இது தொடர்பாக, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகனின் வீட்டைச் சார்ந்த ஓர் இளவரசி {சீதை} பாடிய ஸ்லோகம் ஒன்றிருக்கிறது. அது பின்வருமாறு:(12) “பெண்களுக்கென விதிக்கப்பட்ட வேள்விகள் ஏதுமில்லை. அவர்கள் செய்ய வேண்டிய சிராத்தங்கள் ஏதுமில்லை. அவர்கள் நோற்க வேண்டிய நோன்புகள் ஏதுமில்லை. அவர்கள் தங்கள் கணவர்களுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதும், விருப்பத்துடன் கீழ்ப்படிருந்திருப்பதும் மட்டுமே அவர்களுடைய ஒரே கடமையாகும். அந்தக் கடமையைச் செய்வதன் மூலமே அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(13) குழந்தைப் பருவத்தில் தந்தை அவளைப் பாதுகாக்கிறான். இளமையில் கணவன் அவளைப் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். அவளது வாழ்வின் எக்காலத்திலும் பெண்ணானவள் விடுதலை பெறத் தகுந்தவளல்ல.(14) செழிப்பின் தேவிகள் பெண்களே. செல்வாக்கையும், செழிப்பையும் விரும்பும் மனிதன் அவர்களைக் கௌரவிக்க வேண்டும். ஓ! பாரதா, பெண்களைப் பேணிக் காப்பதன் மூலம் ஒருவன் செழிப்பின் தேவியையே பேணி வளர்க்கிறான் என்றும், அவளைப் பீடிப்பதன் மூலம் அவன் செழிப்பின் தேவியைத் துன்புறுத்துகிறான் என்றும் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(15)

மரபுரிமைச் சட்டம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 47-பலவர்ணப் பெண்களிடம் பிறந்த மகன்களுக்குத் தந்தையின் உடைமைகளையும், செல்வங்களையும் எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “சாத்திரங்கள் அனைத்தின் விதிகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். மன்னர்களின் கடமைகளை அறிந்தவர்களில் முதன்மையானவர் நீர். ஐயங்களை விலக்குவதில் பெரியவர் என்று உலகம் முழுவதும் நீர் கொண்டாடப்படுகிறீர்.(1) ஓ! பாட்டா, எனக்கோர் ஐயம் இருக்கிறது அஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்தைப் பொறுத்தவரையில், நான் வேறு எந்த மனிதனிடமும் அதற்கான தீர்வைக் கேட்க மாட்டேன்.(2) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, கடமை மற்றும் அறத்தின் பாதையில் நடக்க விரும்பும் ஒரு மனிதனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக.(3) ஓ! பாட்டா, ஒரு பிராமணன், தன் வகையைச் சேர்ந்த ஒருத்தி, க்ஷத்திரியரில் ஒருத்தி, வைசியரில் ஒருத்தி மற்றும் அந்தப் பிராமணன் கலவி இன்பத்தில் ஈடுபட விரும்பினால் சூத்ரரில் ஒருத்தி என நான்கு மனைவிகளை அவன் கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(4) ஓ! குருக்களில் சிறந்தவரே, அந்த மகன்களில் எவன் தந்தையின் செல்வத்தை மரபுரிமையாகப் பெறத் தகுந்தவன் என்பதை ஒருவன் பின் ஒருவராக எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, அவர்களில் எவரெவர், தங்கள் தந்தைவழி செல்வத்தில் எவ்வளவு பங்கை எடுத்துக் கொள்ளலாம்? அவர்களுக்கு மத்தியில் தந்தை வழி உடைமைகளை எவ்வாறு பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய மூவரும் மறுபிறப்பாள வகையினராகக் கருதப்படுகின்றனர். ஓ! யுதிஷ்டிரா, இந்த மூன்று வகைகளில் {வர்ணங்களில்} திருமணம் செய்து கொள்வதே பிராமணனின் கடமை என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(7) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஒரு பிராமணன், பிழையான தீர்மானம், அல்லது பேராசை, அல்லது காமம் ஆகியவற்றால் சூத்திரரில் ஒருத்தியை மனைவியைக் கொள்கிறான். எனினும், சாத்திரங்களின் படி அத்தகைய மனைவியை ஏற்க அவன் தகுந்தவனல்ல.(8) ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணைப் படுக்கைக்கு இட்டுச் செல்வதன் மூலம், மறுமையில் இழிந்த கதியை அடைகிறான். அத்தகைய செயலைச் செய்த அவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி பாவக்கழிப்பை {பரிகாரத்தைச்} செய்ய வேண்டும்.(9) ஓ! யுதிஷ்டிரா, அந்தப் பிராமணன் அத்தகைய ஒரு செயலின் விளைவால் சந்ததியைப் பெற்றிருந்தால், அந்தப் பாவக்கழிப்பு இரண்டு மடங்கு கனமானதாக, அல்லது கடுமையானதாக இருக்க வேண்டும். ஓ! பாரதா, (தந்தைவழி) செல்வத்தை (வெவ்வேறு மனைவிகளின் பிள்ளைகளுக்கு மத்தியில்) எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(10)

முதலிடத்தில், ஒரு பிராமணி மனைவியிடம் பிறந்த மகனானவன், தன் தந்தையின் செல்வத்திலிருந்து நற்குறிகளைக் கொண்ட ஒரு காளையையும், சிறந்த தேர், அல்லது வாகனத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(11) ஓ!யுதிஷ்டிரா, அதன் பிறகு அந்தப் பிராமணரிடம் எஞ்சியிருக்கும் உடைமைகளைச் சமமான பத்து பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். பிராமணி மனைவி மூலம் பிறந்த மகன், தன் தந்தைவழி செல்வத்தில் அத்தகைய நான்கு பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(12) க்ஷத்திரிய மனைவியிடம் பிறந்த மகன் பிராமண நிலையைக் கொண்டவன் என்பதில் ஐயமில்லை. எனினும், தன் தாயின் மூலம் உண்டான வேறுபாட்டின் விளைவாக அவன் பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடைமையில், மூன்று பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(13) மூன்றாவது வகையான வைசிய சாதியைச் சார்ந்த மனைவிக்குப் பிராமணத் தந்தையின் மூலம் பிறந்த மகன், அந்தத் தந்தையின் உடைமையில் எஞ்சியிருக்கும் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(14) பிராமணத் தந்தை மூலம் சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனை வாரிசாகக் கருத முடியாது என்பதால், அவன் தன் தந்தையின் செல்வத்தில் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லப்படுகிறது. எனினும், சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனுக்குத் தந்தை வழி செல்வத்தில் சிறிதளவேனும் கொடுக்க வேண்டும் என்பதால், எஞ்சியிருக்கும் ஒரு பகுதியைக் கருணையின் அடிப்படையில் அவனுக்குக் கொடுக்கலாம்.(15)

ஒரு பிராமணனின் செல்வம் இவ்வகையிலேயே பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒரே தாய்க்கு, அல்லது ஒரே வகைத் தாய்மாருக்குப் பிறந்த மகன்கள் அனைவரும் தங்களுக்குரிய பகுதியைத் தங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.(16) சூத்திர மனைவிக்குப் பிறந்த மகன், (பிராமணர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் சாத்திரங்கள் மற்றும் கடமைகளில்) திறமற்றவனாக இருப்பதன் விளைவால் அவனைப் பிராமண நிலை கொண்டவன் என்று கருத முடியாது. உயர்ந்த மூன்று வகையைச் சார்ந்த மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகள் மட்டுமே பிராமண நிலை கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டும்.(17) நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது, ஐந்தாவதாக வேறேதும் பட்டியலிடப்படுவதில்லை. சூத்திர மனைவியின் மகன், தன் தந்தையின் செல்வத்தில் (மேற்சொன்ன வகையில் பிறருக்கு ஒதுக்கிவிட்டு எஞ்சியிருக்கும்) பத்தாவது பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.(18) எனினும், அவனுடைய தந்தை அஃதை அவனுக்குக் கொடுத்தால் மட்டுமே அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். அவனது தந்தை அஃதை அவனுக்குக் கொடுக்காதிருந்தால் அவன் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஓ! பாரதா, தந்தையின் செல்வத்தில் சிறு பகுதியாவது சூத்திர மனைவியின் மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.(19) கருணையானது உயர்ந்த அறங்களில் ஒன்றாகும். கருணையின் மூலமே சூத்திர மனைவியின் மகனுக்கு ஏதாவது கொடுக்கப்படுகிறது. கருணை எழுவதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், இதயப்பூர்வமான அறமாக அஃது எப்போதும் புண்ணியத்தையே உண்டாக்கும்.(20)

ஓ! பாரதா, ஒரு தந்தைக்கு (பிற வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனைவிகள் மூலம்) பிள்ளைகள் இருந்தாலும், அல்லது (அத்தகைய மனைவிகள் மூலம்) இல்லாவிட்டாலும், சூத்திர மனைவியின் மகனுக்கு, தந்தையின் செல்வத்தில் பத்தில் ஒரு பகுதிக்கு மேல் எதுவும் கொடுக்கப்படக்கூடாது.(21) ஒரு பிராமணன், தன்னையும், தன் குடும்பத்தையும் மூன்று வருடங்கள் பராமரித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குச் செல்வத்தைக் கொண்டிருந்தால், அவன் அந்தச் செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்ய வேண்டும். ஒரு பிராமணன் ஏதுமில்லாமல் ஒருபோதும் செல்வமீட்டக்கூடாது[1].(22) ஒரு கணவன் தன் மனைவியிடம் கொடுக்க வேண்டிய உயர்ந்த தொகை (நடைமுறையில் நிலவும் நாணய முறையின்படி {பண வகையின்படி}) மூவாயிரம் நாணயங்கள் ஆகும். கணவன் மனைவிக்குக் கொடுக்கும் இந்தச் செல்வத்தை அவள் தான் விரும்பியவாறு செலவு செய்யலாம்.(23) கணவன், பிள்ளையில்லாமல் இறந்து போனால், அவனுடைய மனைவி அவனுடைய செல்வம் அனைத்தையும் அனுபவிக்கலாம். (எனினும், அவள் அவற்றில் எந்த ஒரு பகுதியையும் விற்கவோ, கொடுக்கவோ கூடாது). மனைவியானவள் (கணவன் அறியாமல்) ஒருபோதும் கணவனின் செல்வத்தில் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.(24) ஓ! யுதிஷ்டிரா, ஒரு பிராமணி மனைவி, தன் தந்தையிடம் இருந்து எந்தக் கொடையை அடைந்திருந்தாலும், மகளும் மகனைப் போன்றவளே என்பதால், (அவளது மரணத்திற்குப் பிறகு) அதை மகள் எடுத்துக் கொள்ளலாம்.(25) ஓ! மன்னா, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மகளானவள் ஒரு மகனுக்கு இணையானவளாகவே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, மரபுரிமை சட்டமும் {சொத்துரிமை சட்டமும்} அவ்வாறே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவன், செல்வத்தைப் பிரித்தல் மற்றும் கொடுத்தல் குறித்த இந்த விதிகளை நினைவுகூர்ந்து ஒருபோதும் பயனில்லாமல் செல்வத்தை ஈட்டக்கூடாது” என்றார் {பீஷ்மர்}.(26)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “சூத்திரப் பெண்ணிடம், பிராமணத் தந்தையின் மூலம் பிறந்த மகன், எந்தச் செல்வத்திற்கும் உரிமையில்லாதவனாகச் சாத்திரங்களால் அறிவிக்கப்பட்டிருந்தால், வேறு எந்த விதிவிலக்கின் மூலம் தந்தைவழி உடைமையில் பத்தில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படுகிறது?(27) ஒரு பிராமணி மனைவிக்கு, ஒரு பிராமணன் மூலம் பிறந்த மகன் ஒரு பிராமணனே என்பது கேள்விக்கப்பாற்பட்டது. க்ஷத்திரிய மனைவி, மற்றும் வைசிய மனைவி ஆகியோருக்கு ஒரு பிராமணக் கணவன் மூலம் பிறந்த ஒருவனும் பிராமண நிலையைக் கொண்டவனாகிறான்.(28) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அத்தகைய மகன்கள் தங்கள் தந்தைவழி செல்வத்தை ஏன் சமமற்ற வகையில் பகிர்ந்து கொள்கிறார்கள்? மறுபிறப்பாளர்கள் என்ற பெயரில் சமமான உரிமை பெற்ற மூன்று உயர்ந்த வகைகளைச் சார்ந்த தாய்மாருக்குப் பிறந்ததால் அவர்கள் அனைவரும் பிராமணர்கள் என்று நீர் சொன்னீர்” என்று கேட்டான்.(29)

பீஷ்மர், “ஓ! பகைவர்களை எரிப்பவனே, இவ்வுலகத்தில் உள்ள மனைவிகள் அனைவரும் தாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். அந்தப் பெயர் அனைவருக்கும் பயன்படுத்தப்பட்டாலும், இந்தப் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.(30) மூன்று பிற வகைகளைச் சேர்ந்த மூன்று மனைவிகளை மணந்து கொண்ட பிறகு, ஒரு பிராமணன் அவர்கள் அனைவருக்கும் இறுதியாக ஒரு பிராமணி மனைவியைக் கொண்டால், அவளே மனைவிகள் அனைவரின் மத்தியில் முதல்வியாகவும், பெரும் மதிப்புக்குத் தகுந்தவளாகவும் கருதப்படுவாள். உண்மையில், சக மனைவியர் அனைவருக்கும் மத்தியிலும் அவளே முதன்மையானவளாகக் கருதத்தக்கவளாவாள்.(31) கணவனுக்கான நீராடல், மேனி அலங்காரங்கள், பல் துலக்குதல், கண்களுக்கு மையிடுதல் போன்றவற்றிற்குத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் அவளது அறையிலேயே வைக்கப்பட வேண்டும். ஹவ்யம், கவ்யம் மற்றும் அறச்செயல்கள் செய்யக் கணவனுக்குத் தேவைப்படும் வேறு அனைத்தும் அவளது அறையிலேயே வைக்கப்பட வேண்டும்.(32) அந்தப் பிராமணி மனைவி வீட்டில் இருந்தால், கணவனின் தேவைகளைக் கவனிக்கும் உரிமை வேறு எந்த மனைவிக்கும் கிடையாது. ஓ!யுதிஷ்டிரா, பிராமணி மனைவியே கணவனுக்கு இச்செயல்களில் துணைபுரிய வேண்டும்.(33) கணவனின் மனைவிகள் அனைவரிலும், முதல்வியாகக் கருதப்படுவதால், கணவனின் உணவு, பானம், மலர்மாலைகள், ஆடைகள், ஆபரணங்கள் ஆகிய இவை அனைத்தும் பிராமணி மனைவியால் கணவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(34) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மனுவால் விதிக்கப்பட்ட சாத்திர விதிகள் இதுவே. ஓ! ஏகாதிபதி, இதுவே நித்திய நடைமுறையின் போக்காகக் காணப்படுகிறது.(35)

ஓ! யுதிஷ்டிரா, ஒரு பிராமணன், காமத்தால் வழிநடத்தப்பட்டு, வேறு வகையில் நடந்து கொண்டால் அவன் பிராமணர்களுக்கு மத்தியில் சண்டாளனாகக் கருதப்படுவான்[2].(36) க்ஷத்திரிய மனைவிக்குப் பிறந்த மகன், பிராமணி மனைவிக்குப் பிறந்த மகனின் நிலைக்கு இணையாகவே சொல்லப்படுகிறான். பிறப்பு வகையைப் பொறுத்தவரையில், க்ஷத்திரியரைவிடப் பிராமணி மேன்மையானவளாக இருப்பதன் விளைவால் பிராமண மனைவியின் மகனிடம் ஒரு வேறுபாடு உண்டு.(37) பிறவியின் அடிப்படையில் ஒரு க்ஷத்திரியரை ஒரு பிராமணிக்கு இணையாகக் கருதப்பட முடியாது. எனவே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிராமணி மனைவிக்குப் பிறந்த மகனே, க்ஷத்திரிய மனைவிக்குப் பிறந்த மகனை விட முதல்வனும், மேன்மையானவனுமாவான்.(38) பிறவியின் அடிப்படையில் க்ஷத்திரியர் பிராமணிக்கு இணையாக இல்லாததால், ஓ! யுதிஷ்டிரா, பிராமணி மனைவியின் மகன் தன் தந்தையின் உடைமைகளில் சிறந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்வான்.(39) அதே போலவே, பிறப்பின் அடிப்படையில் வைசியரை, க்ஷத்திரியருக்கு இணையாகக் கருத முடியாது. ஓ! யுதிஷ்டிரா, செழிப்பு, அரசு, கருவூலம் ஆகியவை க்ஷத்திரியரைச் சார்ந்தவை.(40)

இவை அனைத்தும் க்ஷத்திரியருக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியும் அவனுக்குச் சொந்தமானவையே. தன் வகைக்கான கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு க்ஷத்திரியன் பெரிய செல்வாக்கை ஈட்டுகிறான்.(41) அரச செங்கோலானது அவனால் ஏந்தப்படுகிறது. ஓ! மன்னா, க்ஷத்திரியரில்லாமல் பாதுகாப்புக் கிடையாது. பிராமணர்கள் தேவர்களுக்கும் தேவர்களாக இருப்பதால் அவர்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாவர்.(42) முனிவர்களால் விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றும் க்ஷத்திரியர்கள், உரிய சடங்குகளுடன் பிராமணர்களை வழிபட வேண்டும். இதுவே நித்திய வழக்கமாகும்.(43) கள்வர் முதலியோரால் பேராசையுடன் விரும்பப்படும் அனைத்து மனிதர்களின் உடைமைகளும் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் பாதுகாக்கப்படுகிறது. உண்மையில், மக்களுக்குச் சொந்தமான செல்வம், மனைவிகள் மற்றும் பற உடைமைகள் ஒவ்வொன்றும் க்ஷத்திரியரால் பாதுகாக்கப்படவில்லையெனில் அபகரிக்கப்படும்.(44) மன்னனாக இருக்கும் க்ஷத்திரியன், அனைத்து வகையினரையும் பாதுகாப்பவன், அல்லது மீட்பவனாகிறான். எனவே, க்ஷத்திரிய மனைவியின் மகன், வைசிய மனைவிக்குப் பிறந்தவனைவிட மேன்மையானவனாகக் கருதப்படுவான் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகத் தந்தையின் உடைமையில் க்ஷத்திரிய மனைவியின் மகனானவன், வைசியத் தாய்க்குப்பிறந்த மகனைவிடப் பெரிய பங்கை எடுத்துக் கொள்ளலாம்” என்றார் {பீஷ்மர்}.(45)

யுதிஷ்டிரன், “பிராமணர்களுக்கும் பொருந்தும் விதிகளை முறையாகச் சொன்னீர். எனினும், பிறருக்குப் பொருந்தும் விதிகள் என்னென்ன?” என்று கேட்டான்.(46)

பீஷ்மர், “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, க்ஷத்திரியன் இரண்டு மனைவிகளைக் கொள்ளலாம் என விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு க்ஷத்திரியன் சூத்திர வகையிலிருந்து மூன்றாம் மனைவியைக் கொள்ளலாம். அத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருப்பது உண்மையென்றாலும், சாத்திரங்களால் அஃது ஏற்கப்படவில்லை.(47) ஓ! யுதிஷ்டிரா, ஒரு க்ஷத்திரியனுக்கான மனைவிகளின் வகை இவ்வாறு இருக்க வேண்டும். ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனின் உடைமை எட்டு பங்குகளாகப் பிரிக்கபட வேண்டும்.(48) க்ஷத்திரிய மனைவியின் மகன் தந்தையின் உடைமையில் அத்தகைய பங்குகளில் நான்கை எடுத்துக் கொள்ளலாம். வைசிய மனைவியின் மகன் அத்தகைய பங்குகளில் மூன்றை எடுத்துக் கொள்ளலாம்.(49) எஞ்சியுள்ள ஒரு பங்கு, அல்லது எட்டாவது பங்கை சூத்திர மனைவியின் மகன் எடுத்துக் கொள்ளலாம். எனினும், சூத்திர மனைவியின் மகன் தந்தை கொடுத்தால் மட்டுமே எடுத்துக்கொள்ளலாமே அன்றி வேறு வகையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.(50)

வைசியனுக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. சூத்திர வகையில் இருந்து இரண்டாம் மனைவியைக் கொள்ளலாம். அத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருப்பது உண்மையென்றாலும், சாத்திரங்களால் அஃது ஏற்கப்படவில்லை.(51) ஒரு வைசியனுக்கு, வைசியரில் ஒருத்தி, சூத்திரரில் ஒருத்திய என இரு மனைவிகள் இருந்தால், அவர்களுக்கு இடையிலான நிலையில் வேறுபாடு இருக்கும்.(52) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒரு வைசியனின் செல்வமானது ஐந்து பங்குகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, ஒரு வைசியனுக்குத் தன் வகையைச் சார்ந்த மனைவியின் மூலமான மகன்கள் மற்றும் தாழ்ந்த வகையைச் சார்ந்தவளுடைய மகன்கள் குறித்தும், அவனுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் அவனது செல்வம் பிரிக்கப்பட வேண்டிய வகைக் குறித்தும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(53) வைசிய மனைவிக்குப் பிறந்த மகன் தன் தந்தையின் செல்வத்தில் அத்தகைய பங்குகளில் நான்கை எடுத்துக் கொள்ளலாம். ஓ! பாரதா, ஐந்தாம் பங்கானது சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனைச் சார்ந்தது எனச் சொல்லப்படுகிறது.(54) எனினும், அத்தகைய மகன் தன் தந்தை கொடுக்கும்போதே எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை அவனுக்குக் கொடுக்காதவரை அவன் எதையும் எடுக்கக் கூடாது. மூன்று உயர்ந்த வகையினரிலும், சூத்திர மனைவியால் பெறப்பட்ட மகன், தந்தையின் செல்வத்தில் எந்தப் பங்குக்கும் உரிமையற்றவனாகவே எப்போதும் கருதப்பட வேண்டும்.(55)

ஒரு சூத்திரன் தன் வகையைச் சார்ந்த ஒரே ஒரு மனைவியை மட்டுமே கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவன் மற்றொரு மனைவியைக் கொள்ளக் கூடாது. அத்தகைய மனைவியானவள் மூலம் அவன் நூறு மகன்களையே பெற்றிருந்தாலும், அவன் விட்டுச் செல்லும் செல்வத்தை அவர்கள் அனைவரும் சமமாகவே பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(56)

பிற வகையினரைப் பொறுத்தவரையில், கணவனின் சொந்த வகையில் கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தங்கள் தந்தையின் செல்வத்தைத் தங்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(57) மூத்த மகனானவன், தன் தந்தையின் சிறந்த பொருட்களில் தன் தம்பிகள் ஒவ்வொருவரையும்விட ஒரு பங்கு அதிகமாகப் பெறுவதால், அவனுடைய பங்கானது பிற மகன்கள் ஒவ்வொருவரையும் விட அதிகமானதாக இருக்கும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே சுயம்புவால் அறிவிக்கப்பட்ட மரபுரிமை {சொத்துரிமை / வாரிசுரிமைச்} சட்டமாகும்.(58) ஓ! மன்னா, கணவனின் சொந்த வகையிலேயே கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் அனைவருக்கும் மத்தியில் மற்றொரு வேறுபாடு இருக்கிறது. திருமணம் செய்து கொள்வதில், மூத்தவன் எப்போதும் இளைவர்களை முந்த வேண்டும்.(59) மனைவிகள் தங்கள் பிறப்பு வகையின் அடிப்படையில் சமமாகவும், பிள்ளைகள், தங்கள் தாய்மாரின் நிலையைப் பொறுத்தவரையில் சமமாகவும் இருக்கையில், முதலில் பிறந்த மகனானவன், தன் தம்பிகள் ஒவ்வொருவரையும் விட ஒரு பங்கு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் மகன், மதிப்பில் அடுத்ததாக இருக்கும் பங்கைக் கொள்ள வேண்டும். அதே வேளையில், அனைவரிலும் இளைய மகன், இளையவனுக்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்[3].(60) இவ்வாறு, அனைத்து வகை மனைவிகளுக்கும் மத்தியில், கணவனின் வகையையே சார்ந்த மனைவிகள் முதல்விகளாகக் கருதப்படுகிறார்கள். மரீசியின் மகனான பெரும் முனிவர் காசியபரால் இதுவே தீர்மானிக்கப்பட்டது[4]” என்றார் {பீஷ்மர்}.(61)

கலப்பு வர்ண சாதிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 48-கலப்பு வர்ண சாதிகளின் வரலாறு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “செல்வத்தின் தூண்டல் மூலமோ, வெறும் காமத்தின் மூலமோ, (ஆண், பெண் இருவரின்) உண்மையான பிறப்பு வகைக் குறித்த அறியாமையின் மூலமோ, அல்லது மடமையின் மூலமோ பல்வேறு வகையான கலப்புகள் {வர்ணங்களில் பல்வேறு வகை கலப்புகள்} ஏற்படுகின்றன.(1) ஓ! பாட்டா, கலப்பு வகுப்புகளில் பிறந்த மனிதர்களின் கடமைகள் மற்றும் அவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள செயல்கள் என்னென்ன? இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தொடக்கத்தில், அனைத்து உயிரினங்களின் தலைவன் நான்கு வகைகளைப் படைத்து, வேள்வியின் நிமித்தம் அவரவருக்குரிய செயல்களையும், கடமைகளையும் விதித்தான்[1].(3) பிராமணன், நான்கு வகைகள் ஒவ்வொன்றில் இருந்தும் ஒன்றென நான்கு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {பிராமண வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {க்ஷத்திரிய வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களின் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்). எனினும், அடுத்தடுத்த வகைகளில் (வைசிய மற்றும் சூத்திர வகைகளில்) அவன் கொள்ளும் இரு மனைவிகளிடம் பிறக்கும் மகன்கள், தந்தையுடைய நிலையால் தீர்மானிக்கப்படாமல், அவர்களுடைய தாய்மாரின் நிலையால் தீர்மானிக்கப்படுவதால் தாழ்ந்தவர்களாவர்.(4)சூத்திரப் பெண்ணின் உடலானது சடலத்தைப் போல மங்கலமற்றது என்பதால், ஒரு பிராமணனால் ஒரு சூத்திர மனைவியிடம் பெறப்படும் மகனானவன், சடலத்தைக் குறிக்கும் வகையில் அவன் பாராசவன் என்றழைக்கப்படுகிறான். அவன் தன் (தந்தையின்) குலத்தைச் சேர்ந்த மனிதர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். உண்மையில், அவனுக்காக விதிக்கப்பட்டிருக்கும் தொண்டெனும் கடமையைக் கைவிடுதல் அவனுக்கு முறையாகாது.(5) அவன் தன் சக்திக்குத்தக்க அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றித் தன் குடும்பச் சுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். வயதால் அவனே மூத்தவனாக இருப்பினும், தன் தந்தைக்குப் பிறந்தவர்களும், தன்னிலும் வயது குறைந்தவர்களுமான வேறு பிள்ளைகளுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றி, தான் ஈட்ட நேர்வதையெல்லாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(6)

ஒரு க்ஷத்திரியன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {க்ஷத்திரிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {வைசிய வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {க்ஷத்திரிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்). சூத்திர வகையைச் சார்ந்த அவனது மூன்றாவது மனைவி மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படுகிறாள். அவளிடம் அவன் பெறும் மகனானவன், ஓர் உக்ரன் என்றழைக்கப்படுகிறான்.(7)

வைசியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {வைசிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {சூத்திர வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வைசிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்).

சூத்திரன், தன் சொந்த வகையில் மட்டுமே ஒரே ஒரு மனைவியைக் கொள்ளலாம். அவனால் பெறப்படும் மகனும் சூத்திரனாகிறான்.(8)

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர வேறு சந்தர்ப்பங்களில் பிறக்கும் ஒரு மகன் மிகத் தாழ்ந்தவனாகப் பார்க்கப்படுகிறான். தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதன், மேன்மையான வகையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால் அத்தகைய மகன், நான்கு தூய வகைகளுக்கு வெளியே உள்ள வகையாகக் கருதப்படுவான். உண்மையில், அத்தகைய மகன், அடிப்படையான நான்கு வகைகளோடு பார்க்கப்படும்போது இகழத்தக்கவனாகிறான்.(9)

ஒரு க்ஷத்திரியன் ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால், அத்தகைய மகன், நான்கு தூய வகைகள் {வர்ணங்கள்} எதனிலும் சேர்த்துக் கொள்ளப்படாமல் ஒரு சூதனாகவே கருதப்படுவான். ஒரு சூதனின் கடமைகள் அனைத்தும், மன்னர்கள் மற்றும் வேறு பெரும் மனிதர்களின் புகழ்மாலைகள் மற்றும் துதிகளை உரைப்பது தொடர்புடையனவாகும்.

ஒரு வைசியனால், பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வைதேஹகன் எனக் கருதப்படுகிறான். அவனுக்கான கடமைகள், மதிக்கத்தக்க குடும்பங்களின் பெண்களின் தனிமையைப் பாதுகாக்கும் வகையில் தடிகளைத் தாங்குதல் மற்றும் அவர்கள் பின்னால் ஓடுதல் போன்ற பொறுப்புகளாகும்[2]. அத்தகைய மகன்களுக்குத் தூய்மைச் சடங்குகள் ஏதும் விதிக்கப்படவில்லை[3].(10)

ஒரு சூத்திரன், நான்கு வகைகளில் முதன்மையான வகை {பிராமண வர்ணப்} பெண்ணுடன் கலப்பதால் பெறப்படும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். கடும் இயல்புகளுடன் கூடிய அவன், நகரங்களுக்கும், ஊர்களுக்கும் வெளியில் வாழ வேண்டும். அவன் பொதுமக்களுக்குக் கொடுக்கப்படும் மரணதண்டனைகளை நிறைவேற்றும் தொழிலைச் செய்ய வேண்டும். இத்தகைய மகன்கள் தங்கள் குலத்தில் இழிந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் கலப்புவர்ண சந்ததியாவர்.(11)

ஒரு வைசியனால், ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வந்தியாகவோ, மாகதனாகவோ ஆகிறான். அவனுக்கான கடமைகள் சொற்திறமிக்கப் புகழுரைகளை உரைப்பதாகும் {பாடுவதாகும்}. வரம்புமீறப்பட்டு, ஒரு சூத்திரனால், ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் ஒரு நிஷாதனாகிறான். அவனுக்கான கடமைகள் மீன் பிடித்தலாகும்.(12)

ஒரு சூத்திரன் ஒரு வைசியப்பெண்ணிடம் கலந்து அவளிடம் பெறப்பட்ட மகன் ஆயோகவன் என்றழைக்கப்படுகிறான். அத்தகைய ஒரு மனிதனுக்கு ஒதுக்கப்பட்ட கடமையானது தக்ஷனுக்குரியதாகும் (தச்சனுக்குரியதாகும்) {தச்சு வேலையாகும்}. அவர்கள் எவ்வகைச் செல்வத்தை வைத்துக் கொள்ள உரிமையற்றவர்களாவர்.(13)

கலப்பு வர்ணங்களைச் சார்ந்த மனிதர்கள், தங்கள் சொந்த கலப்பு வர்ணங்களைச் சார்ந்த மனைவிகளிடம் பெறும் பிள்ளைகள் அதே வகையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் சாதிகளுக்குக் கீழான சாதி பெண்களிடம் பெறும் பிள்ளைகள், தங்கள் தாய் சார்ந்த நிலையை அடைவதால் தங்கள் தந்தையை விட இழிந்தவர்களாகிறார்கள்.(14)

நான்கு தூய வகைகளைப் பொறுத்தவரையில், மனிதர்கள் தங்கள் வகைகளிலும், தங்களுக்கு அடுத்த வகைகளிலும் மனைவிகளைக் கொண்டு பெறும் பிள்ளைகள் தங்கள் சொந்த வகைகளையே {வர்ணங்களையே} அடைகிறார்கள். எனினும், வேறு மனைவிகளிடம் பெறப்படும் சந்ததி, அடிப்படையான நான்கு தூய வகைகளுக்கு வெளியே உள்ள நிலையைக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள்.(15) அத்தகைய பிள்ளைகள் தங்கள் சொந்த வகுப்புப் பெண்களிடம் மகன்களைப் பெறும்போது, அந்த மகன்கள் தங்கள் தந்தைமாரின் நிலையை {வர்ணத்தையே} அடைகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சாதிக்கு {வர்ணத்திற்கு} வெளியே மனைவிகளைக் கொள்ளும்போது மட்டுமே, அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தாழ்ந்த நிலையை அடைகின்றனர்.(16)

ஒரு சூத்திரன், மிக மேன்மையான வகையை {பிராமண வர்ணத்தைச்} சார்ந்த ஒரு பெண்ணிடம் நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகையில் ஒரு மகனைப் பெறுவது (அத்தகைய மகன் மிகத் தாழ்ந்த சண்டாளனாகக் கருதப்படுவதால்) இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகையைச் சார்ந்த மகன், அடிப்படையான நான்கு வகைகளைச் சார்ந்த பெண்களிடம் கலப்பதன் மூலம், மிகத் தாழ்ந்த, இழிந்த நிலை கொண்ட சந்ததியை உண்டாக்குகின்றனர்.(17) நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகைகளைச் சார்ந்த மற்றும், அவ்வகைகளுக்கும் வெளியே உள்ள வகைகளைச் சார்ந்த பிள்ளைகள் தங்களை விட மேன்மையான வகுப்புகளைச் சார்ந்த பெண்களுடன் கலப்பதால் பெருகுகிறார்கள். இவ்வழியில் தாழ்ந்த நிலை வகுப்புகளைச் சார்ந்த மனிதர்களிடம் இருந்து பதினைந்து மிக இழிந்த நிலை கொண்ட வகுப்புகள் உண்டாகின்றன[4].(18)கலக்கத்தகாத பெண்களுடன் பாலினக் கலவி கொள்வதால் மட்டுமே கலப்பு வகுப்புகள் உண்டாகின்றன. அடிப்படையான அல்லது தூய்மையான நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகுப்புகளின் மத்தியில், சைரந்திரி என்றழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த பெண்களிடம், {வைசிய தந்தைக்கும், க்ஷத்திரிய தாய்க்கும் பிறந்த} மாகதன் என்றழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த ஆண்களால் பிள்ளைகள் பெறப்படுகின்றனர்.(19) அத்தகைய சந்ததியின் தொழிலானது, மன்னர்கள் மற்றும் பிறரின் மேனிகளை அலங்கரிப்பதாகும். அவர்கள் களிம்புகள் {மருந்துகள்} தயாரிப்பது, மலர்மாலைகள் தயாரிப்பது, மேனி அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்வது ஆகியவற்றை நன்கறிந்தவர்களாவர். அவர்கள் தங்கள் பிறப்பின் அடிப்படையில் சுதந்திரமானவர்களாக இருப்பினும், தொண்டுக்குரிய வாழ்வையே அவர்கள் நோற்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகை மாகதர்கள் மற்றும் சைரந்திரி என்றழைக்கப்படும் பெண்களுக்கு மத்தியில் ஏற்படும் கலப்பில் ஆயோகவம் என்றழைக்கப்படும் மற்றொரு சாதி உண்டாகிறது. அவர்களது தொழில் (மீன், நீர்க்கோழி மற்றும் விலங்குகளைப் பிடிக்க உதவும்) வலைகளை உண்டாக்குவதாகும். சைரந்திரி சாதி பெண்களிடம் வைதேஹகர்கள் கலப்பதன் மூலம், மது மற்றும் சாராயம் உற்பத்தி செய்யும் மைரேயகர்கள் என்றழைக்கப்படும் பிள்ளைகள் பிறக்கிறார்கள்.(20)

நிஷாதர்களில் இருந்து மத்குரன் என்றழைக்கப்படும் சாதியும், ஓடம் செலுத்துவதைத் தொழிலாகக் கொண்ட தாஸர்கள் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு சாதியும் உண்டாகிறது. சண்டாளனிலிருந்தும், பிணங்களைக் காக்கும் தொழிலைக் கொண்ட ஸ்வபாகன் என்றழைக்கப்படும் குலம் உண்டாகிறது.(21) மாகதி சாதிப் பெண்கள், தீய நிலைகளைக் கொண்ட இந்த நான்கு சாதிகளுடன் கலப்பதன் மூலம் வஞ்சத்தையே பயின்று வாழ்வை நடத்தும் இன்னும் மூன்று சாதிகளை உண்டாக்குகின்றனர். அவர்கள் மாம்ஸன் {இறைச்சி விற்பனை செய்பவர்கள்}, ஸ்வாதுகரன் {ருசிமிக்க உணவுவகைகளைச் செய்பவர்கள்}, க்ஷௌத்ரன் {தேனெடுப்பவர்கள்}, ஸௌகந்தன் {நறுமணப் பொருள் செய்பவர்கள்} ஆகியோராவர்.(22)

வைதேஹனிலிருந்து வஞ்சகத்தைப் பயின்றும் வாழும் கொடுமையும், பாவமும் நிறைந்த சாதி தோன்றுகிறது. நிஷாதர்களில் இருந்து, கழுதை பூட்டப்பட்ட தேரில் பயணிப்பவர்களான மத்ரநாப சாதியினர் தோன்றுகின்றனர்.(23)

சண்டாளர்களில் இருந்து, கழுதைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் இறைச்சியை உண்பவர்களான புல்கஸன் என்ற சாதி உண்டாகிறது. இவர்கள் மனித சடலங்களின் தோலுரிப்பதால் கிடைக்கும் ஆடைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். உடைந்த மண்கலங்களில் அவர்கள் உண்பதும் காணப்படுகிறது.(24) மிக இழிந்த இந்த மூன்று சாதிகளும் ஆயோகவ சாதிப் பெண்களிடம் (வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த தந்தைகள் மூலம்) பிறக்கின்றன.

க்ஷுத்ரன் என்றழைக்கப்படும் சாதி வைதேஹகனிலிருந்து உண்டாகிறது. புறநகரங்கள் மற்றும் ஊர்களுக்கு வெளியே வசிப்பவர்களான ஆந்திரன் என்றழைக்கப்படும் சாதியும் (வைதேஹகர்களிலிருந்து) உண்டாகிறது.(25)

ஒரு சர்மகாரன், ஒரு நிஷாத சாதி பெண்ணிடம் கலப்பதன் மூலம் காராவரன் என்றழைக்கப்படும் வகுப்பை உண்டாக்குகிறான். மேலும் ஒரு சண்டாளனில் இருந்து, கூடைகள் மற்றும் மூங்கில் வேலைப்பாடுகள் செய்யும் பாண்டுசௌபாகன் என்ற பெயரால் அறியப்படும் சாதி உண்டாகிறது.(26)

ஒரு நிஷாதன், வைதேஹி சாதிப் பெண்ணுடன் கலப்பதன் மூலம் ஆஹிண்டகன் என்ற பெயரில் அழைக்கப்படும் சாதி உண்டாகிறது. ஒரு சண்டாளன், ஒரு சௌபாகப் பெண்ணிடம் பெறும் மகன், சண்டாளன் என்ற நிலை அல்லது தொழிலில் இருந்து வேறுபடாதவனாக இருக்கிறான்.(27)

ஒரு நிஷாதிப் பெண், ஒரு சண்டாளனுடன் கலப்பதன் மூலம் கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கு வெளியே வாழும் {அந்தேவஸாயி {பாண்டுஸௌபகன்}-ஆன) ஒரு மகனைப் பெறுகிறாள். அத்தகைய சாதிக்காரர்கள் சுடலையில் வாழ்கிறார்கள். அவர்கள் மிக இழிந்த வகையினராகக் கருதப்படுகின்றனர்.(28)

இவ்வாறே வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த தந்தைமார் மற்றும் தாய்மாரின் முறையற்ற, பாவம் நிறைந்த கலவியின் மூலம் இந்தக் கலப்புச் சாதிகள் உண்டாகின்றன. அவர்கள் மறைந்து வாழ்ந்தாலும், வெளிப்படையாக வாழ்ந்தாலும், அவர்களை அவர்களின் தொழில் கொண்டு அறிய வேண்டும்.(29)

அடிப்படையான நான்கு வகையினருக்கு {வர்க்கத்தினருக்கு} மட்டுமே சாத்திரங்களில் கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பிறரைப் பொறுத்தவரையில் சாத்திரங்கள் முற்றிலும் அமைதியாக இருக்கின்றன. அனைத்து வகையினருக்கு மத்தியிலும், சாத்திரங்களில் கடமைகள் நிர்ணயிக்கப்படாத சாதிகளுக்கு, (தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட) என்ன செய்ய வேண்டும் என்பதில் அச்சங்கள் ஏதும் கிடையாது.(30)

வேள்வி செய்யும் வழக்கமில்லாத, அல்லது வேள்விகள் விதிக்கப்படாத மனிதர்களும், அடிப்படையான நான்கு வகைகள் {வர்ணங்களில்} இருந்தாலும், அவற்றுக்கு வெளியே இருந்தாலும், அறவோரின் தோழமையும், போதனையும் இல்லாதவர்களும், அறக்கருத்து ஏதுமின்றிக் கட்டுப்படுத்தப்பட முடியாத காமத்தினால் பிற சாதிப் பெண்களுடன் கலப்பதன் மூலம், எண்ணற்ற கலப்புச் சாதிகள் உண்டாகின்றன. அவற்றின் தொழிலும், வசிப்பிடங்களும் முறையற்ற கலவியின் மூலம் உண்டாகும் அவற்றின் பிறப்பைச் சார்ந்திருக்கின்றன.(31) நான்கு சாலைகள் சந்திக்கும் இடம், அல்லது சுடலை, அல்லது மலைகள் மற்றும் குன்றுகள், அல்லது காடுகள் மற்றும் மரங்கள் சார்ந்த இடங்களில் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் இரும்பாலான ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர்.(32) அத்தகைய இடங்களில் வாழ்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான தொழில்களை வெளிப்படையாகச் செய்கின்றனர். அவர்கள் தங்கள் மேனியை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பல்வேறு வகை வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வாழ்ந்து வருவது காணப்படுகிறது.(33) பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்கு உதவி செய்வதன் மூலமும், கொடுமையின்மை, கருணை, பேச்சில் வாய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகிய அறங்களைப் பயில்வதன் மூலமும்,(34) பிறருக்காகத் தங்களின் உயிர்களையே விடுவதன் மூலமும் கலப்பு சாதி மனிதர்கள் நிச்சயம் தங்கள் வெற்றியைத் தேடிக் கொள்கின்றனர். ஓ! மனிதர்களின் தலைவா, இவ்வறங்களே அவர்களின் வெற்றிக்கான காரணங்களாக அமைகின்றன என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(35)

புத்தியைக் கொண்ட ஒருவன், அனைத்தையும் கருத்தில் கொண்டு, சாத்திர விதிகளின் படி தனக்குத் தகுந்த அல்லது முறையெனத் தீர்மானிக்கப்பட்ட பெண்களிடம் சந்ததியை உண்டாக்க வேண்டும். இழிந்த சாதியைச் சார்ந்த பெண்ணிடம் பெறப்படும் மகன், நீர்நிலையைக் கடக்க விரும்பும் நீச்சற்காரனுக்குப் பெருங்கனத்தைப் போலவே தன் தந்தையைக் காப்பதற்குப் பதிலாகத் துயரைக் கொண்டு வருகிறான்.(36) ஒரு மனிதன் கல்விமானாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவ்வுலகில் காமமும், கோபமும் மனிதனுக்கு இயற்கையான குணங்களாகவே அமைகின்றன. எனவே, பெண்கள் ஆண்களைத் தவறான பாதையில் இழுத்துச் செல்வதே எப்போதும் காணப்படுகிறது.(37) ஆண்கள் தொடர்பு கொண்டால் துன்பத்தை விளைவித்துக் கெடுப்பதே பெண்களின் இயல்பான மனப்பான்மையாக இருக்கிறது. எனவே, ஞானம் கொண்ட மனிதர்கள், பெண்களிடம் பெரும்பற்று கொள்வதில்லை” என்றார் {பீஷ்மர்}.(38)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கலப்புசாதிகளைச் சார்ந்த, தூய்மையற்ற பிறப்பைக் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்சங்களைப் பார்க்கையில், அவர்கள் உண்மையில் மதிக்கத்தகுந்தவர்களாக இல்லை. இந்தப் புறத் தன்மைகளின் விளைவாக அவர்களுடைய பிறப்பைக் குறித்த உண்மையை நாம் அறிய முடியாது. ஓ! பாட்டா, இத்தகைய பிறப்பைக் கொண்ட மனிதர்களைக் குறித்த உண்மையை அறிய ஏதேனும் குறியீடுகள் இருக்கின்றனவா?” என்று கேட்டான்.(39)

பீஷ்மர், “முறையற்ற கலவியின் மூலம் பிறந்த ஒருவன், பல்வேறு குண இயல்புகளைக் கொண்டவனாக இருக்கிறான். மேலும், நல்லோராகவும், அறவோராகவும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்களின் செயல்களுடன் ஒருவனுடைய செயல்களை ஒப்பிடுவதன் மூலம் அவனது பிறப்பின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்.(40) மதிப்பில்லா நடத்தை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்று எதிரான செயல்கள், நேர்மையின்மை, கொடூரத்தன்மை, வேள்விகள் மற்றும் புண்ணியத்திற்கு வழிவகுக்கும் வேறு சாத்திரச் செயல்களைச் செய்யாமை ஆகியவை ஒருவனுடைய தூய்மையற்ற பிறப்பை அறிவிக்கும்.(41) ஒரு மகன் தன் இயல்புகளைத் தந்தையிடமிருந்தோ, தாயிடமிருந்தோ பெறுகிறான். சில வேளைகள் அவன் அவற்றை இருவரிடமிருந்தும் பெறுகிறான். தூய்மையற்ற பிறப்பைக் கொண்டவனால் ஒருபோதும் தன் உண்மை இயல்பை மறைக்க முடியாது.(42) ஒரு புலி அல்லது ஒரு சிறுத்தையின் குட்டி, மேனியில் உள்ள வரிகள் அல்லது புள்ளிகளில் தன் தந்தையையோ, தாயையோ பிரதிபலிப்பதைப் போலவே ஒரு மனிதனால் தன் பிறப்புச் சூழ்நிலைகளைக் குறித்து ஒருபோதும் வஞ்சனை செய்ய முடியாது. (43) ஒருவனுடைய பிறப்பின் வழியை எவ்வளவுதான் மறைத்தாலும், அந்தப் பிறப்புத் தூய்மையற்றதாக இருந்தால், அதன் குணமோ, இயல்போ, சிறிதாகவோ, பெரிதாகவோ நிச்சயம் வெளிப்படும்.(44) அறவொழுக்கம் பயில்பவனைப் போல ஒரு மனிதன் நேர்மையாற்ற பாதையில் நடக்கக்கூடும். எனினும், அவன் அந்தச் செயல்களைச் செய்யும் காரியத்தில், அவன் நல்ல வகையைச் சேர்ந்தவனா {ஆரியனா}, வேறு வகையானவனா என்று தன் இயல்பை எப்போதும் அவன் அறிவிக்கிறான்.(45)

இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் பல்வேறு வகை இயல்புகளைக் கொண்டனவாக இருக்கின்றன. இவ்வாறு உள்ள உயிரினங்களுக்கு மத்தியில், தூய பிறப்பு மற்றும் அறவொழுக்கம் ஆகியவற்றைப் போன்ற நன்மை, அல்லது மதிப்பு வேறு எதனிலும் இல்லை.(46) ஒரு மனிதன் இழிந்த வகையில் பிறந்தவனாக இருந்தால், சாத்திரக் கல்வியின் மூலம் எழும் நற்புத்தியானது, இழிந்த செயல்களில் இருந்து அவனது உடலைப் பாதுகாப்பதில் தவறுகிறது. முற்றான நற்புத்தி பல்வேறு அளவுகளில் இருக்கிறது. அஃது உயர்வாகவோ, நடுத்தரமாகவும், தாழ்வாகவோ இருக்கலாம். தாழ்ந்த வகை மனிதனிடம் அஃது இருந்தாலும், எவ்விளைவையும் உண்டாக்காமல் கூதிர் கால மேகங்களைப் போல அது மறைந்து போகும். மறுபுறம் நற்புத்தியானது, பிறந்திருக்கும் மனிதனிடம் உள்ள தன் அளவுக்கு ஏற்ப அவனது செயல்களில் வெளிப்படுகிறது[5].(47) ஒரு மனிதன் மேன்மையான வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவனாக இருந்தாலும், அவன் நன்னடத்தையற்றவனாக இருந்தால், எந்த மதிப்பையோ, வழிபாட்டையோ அவன் பெறத்தகுந்தவனல்ல. கடமைகளை அறிந்தவனும், நன்னடத்தைக் கொண்டவனுமான ஒரு சூத்திரனைக் கூட ஒருவன் வழிபடலாம்.(48) ஒரு மனிதன், தான் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமும், தான் கொண்ட நல்ல அல்லது தீய இயல்களின் மூலமும், பிறந்த குலத்தின் மூலமும் தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிறான். ஒருவன் பிறந்த குலமானது எக்காரணத்தினாலும் தாழ்ந்ததாக இருந்தால், அவன் தனது செயல்களின் மூலம் அதை விரைவில் உயர்த்தி, பிரகாசிக்கச் செய்து புகழடையச் செய்கிறான்.(49) ஞானம் கொண்ட மனிதர்கள், இந்தக் காரணங்களுக்காவே பலவகைக் கலப்புச் சாதிகள் மற்றும் தூய சாதிகளைச் சார்ந்த பெண்களில், தங்கள் சந்ததி உண்டாக்கத் தகாதவர்களைத் தவிர்க்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(50)

இருபது வகை மகன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 49-இருபது வகை மகன்ளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, வகைகள் {வர்ணங்கள்} மற்றும் வகுப்புகள் {கலப்பு சாதிகள்} ஆகியவற்றைத் தனித்தனியாகவும், எவ்வகைப் பெண்களிடம் எவ்வகை மகன் பெறப்படுகிறான்? மகன்களாக எவரை உரிமை கொண்டாடலாம்? என்னென்ன வகை மகன்கள் இருக்கின்றனர்? என்பவை குறித்தும் எங்களுக்குச் சொல்வீராக.(1) மகன்களைப் பொறுத்தவரையில் சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன. ஓ! மன்னா, எங்கள் மனத்தைப் பீடிக்கும் ஐயங்களைப் போக்குவதே உமக்குத் தகும். உண்மையில், இக்காரியத்தில் நாங்கள் கலக்கத்தில் {தெளிவற்ற நிலையில்} இருக்கிறோம்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் மடியில் பிறந்த பிள்ளையாக {அனந்தராஜனாக}{1} ஒருவனுடைய சுயமே கருதப்படுகிறது {தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் தானே பெறும் மகன் ஔரஸன் என்றழைக்கப்படுகிறான்}.

பிள்ளை பெறும் பணிக்காகத் தன்னால் அழைக்கப்பட்ட ஒருவன் மூலம் தன் மனைவியிடம் பிறந்த மகன் நிருக்தஜன்{2} என்றழைக்கப்படுகிறான்.

தன் மனைவியிடம் தன் அனுமதி இல்லாமல் வேறு எவராலோ பெறப்பட்ட மகன் பிரஸ்ருதஜன்{3} ஆவான்[1].(3)

தன் நிலையின் இருந்து வீழ்ந்தவிட்ட மனிதன் மூலம் தன் மனைவியிடம் பெறப்பட்ட மகன் பதிதஜன்{4} என்றழைக்கப்படுகிறான்.

கொடுக்கப்பட்டவன், ஆக்கப்பட்டவன் என மேலும் இரு மகன்களும்{5,6} இருக்கின்றனர்.

அத்யுதன்{7} என்றழைக்கப்படும் மற்றொருவனும் இருக்கிறான்[2].(4)

ஒரு கன்னிகையுடைய தந்தையின் இல்லத்தில் பிறந்த மகன் கானீனன்{8} என்றழைக்கப்படுகிறான்.

இவை தவிர்த்து அபத்வம்ஸஜர்கள் என்று அழைக்கப்படும் ஆறுவகை மகன்களும்{9….14},

அபஸதர்கள் என்றழைக்கப்படும் மேலும் அறுவரும்{15….20} இருக்கின்றனர்.

ஓ! பாரதா, சாத்திரங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு வகை மகன்கள் இவர்களே ஆவர் என்பதை அறிவாயாக” என்றார் {பீஷ்மர்}[3].(5)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அபத்வம்ஸஜர் என்றழைக்கப்படும் அறுவர் யாவர்? மேலும் அபஸதர்கள் என்பவர்கள் யாவர்? இவை யாவையும் விரிவாக எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தாழ்ந்த மூன்று வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு பிராமணனால் பெறப்படும் மகன்கள் {மூவர்}, தாழ்ந்த இரு வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு க்ஷத்திரியனால் பெறப்படும் மகன்கள் {இருவர்}, ஓ! பாரதா, தாழ்ந்த ஒரு வகையைச் சார்ந்த மனைவியிடம் ஒரு வைசியனால் பெறப்படும் மகன் {ஒருவன்} ஆகியோரே {இந்த அறுவரே} அபத்வம்ஸஜர்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறே ஆறு வகைகளாக விளக்கப்படுகின்றனர். இப்போது அபஸதர்கள் யார் என்பதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(8)

ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு சூத்திரன் பெறும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் சூத்திர வகையைச் சார்ந்த ஒருவன் பெறும் மகன் விராத்யன் என்றழைக்கப்படுகிறான். வைசியப் பெண்ணிடம், ஒரு சூத்திரத் தந்தை பெறும் மகன் வைத்யன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவகை மகன்களும் அபஸதர் என்று அழைக்கப்படுகின்றனர்.(9)

ஒரு வைசியன் பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணுடன் கலப்பதன் மூலம் மாகதன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான், அதே வேளையில் க்ஷத்திரியப் பெண்ணிடம் வாமகன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான்.

க்ஷத்திரியனால் மேன்மையான வகைப் பெண்ணிடம் ஒரு வகை மகனைப் பெற முடியும்.(10) உண்மையில் ஒரு க்ஷத்திரியனால், ஒரு பிராமணப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் சூதன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவரும் கூட அபஸதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஓ! மன்னா, இந்த ஆறு வகை மகன்களும் மகன்களல்ல என்று சொல்ல முடியாது” என்றார் {பீஷ்மர்}.(11)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவனுடைய நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனே அவனுடைய மகன் என்று சிலர் சொல்கின்றனர். மறுபுறம், ஒருவனுடைய வித்தில் இருந்து பெறப்பட்டவனே ஒருவனுடைய மகன் என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த இரு வகை மகன்களும் சமமானவர்கள்தானா? மேலும், அந்த மகன் யாருடையவன்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவனுடைய வித்தில் இருந்து பிறந்தவன் அவனுடைய மகனே. எனினும், வித்துக்குச் சொந்தக்காரன் அதில் இருந்து பிறக்கும் மகனைக் கைவிட்டால், அத்தகைய மகன் எவனுடைய மனைவியிடம் பெறப்பட்டானோ அவனுடையவனாவான். அத்யுதன் என்றழைக்கப்படும் மகனுக்கும் இதே விதியே பொருந்தும். அவன் எந்த மனிதனின் வித்திற்குப் பிறந்தானோ அவனுக்கே உரியவனாவான். இருப்பினும், வித்துக்குச் சொந்தக்காரன் அவனைக் கைவிட்டால், அவன் தன் தாயின் கணவனுடைய மகனாகிறான். சட்டம் இதையே அறிவிக்கிறது என்பதை அறிவாயாக” என்றார்.(13)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எவனுடைய வித்தில் பிறக்கிறானோ அவனுக்கு மகனாகிறான் என்பதை நாம் அறிவோம். அந்த மகனை ஈன்றெடுக்கும் பெண்ணின் கணவன் அவனிடம் {அந்த மகனிடம்} உரிமையைப் பெறுவது எவ்வாறு? அதே போல அத்யுதன் என்றழைக்கப்படும் மகன், எவனுடைய வித்தில் இருந்து பிறந்தானோ அவனது மகனாகவே அறியப்பட வேண்டும். உரிமையும் வளர்ப்பும் முறிந்து போனதன் விளைவால் அவன் பிறரின் மகனாவது எவ்வாறு?” என்று கேட்டான்.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தன் மடியில் பிறந்த மகனை ஏதோ ஒரு காரணத்திற்காகக் கைவிட்டால், உயிர் வித்து மட்டுமே மகன் என்ற நிலையை உண்டாக்க முடியாது என்பதால், அவனை அத்தகைய மகனின் தந்தையாகக் கருத முடியாது. நிலத்தை {மனைவியை} உரிமையாகக் கொண்ட மனிதனுக்கு உரியவனாகவே அத்தகைய மகன் கருதப்பட வேண்டும்.(15) ஒரு மனிதன் ஒரு மகனைப் பெற விரும்பி, கருவுற்றிருக்கும் பெண்ணை மணக்கும்போது, தன் மனைவிக்குப் பிறந்த மகனானவன், தன் நிலத்தில் விளைந்த கனியே என்பதால் அவனுக்கே உரியவனாவான். எந்த மனிதனின் உயிர்வித்தில் அந்த மகன் பிறந்தானோ, அவன் அத்தகைய மகனிடம் எந்த உரிமையும் கொள்ள முடியாது.(16) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒருவனது நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனும், தன்னால் பெறப்படாதவனுமான மகன், தன்னை உண்மையில் பெற்ற தந்தையின் அடையாளங்கள் அனைத்தையும் சுமக்கிறான் (தன் தாயின் கணவனுடைய அடையாளங்களைச் சுமப்பதில்லை). இவ்வாறு பிறக்கும் மகன், உடற்குறி அளிக்கும் சான்றுகளை மறைக்க முடியாது. அவன் கண் பார்வையிலேயே (மற்றொருவனுக்குரியவன் என்று) அறியப்படுவான்[4].(17) ஆக்கப்பட மகனைப் பொறுத்தவரையில், அவன் சில வேளைகளில் ஆக்கியவரின் பிள்ளையாகவும், வளர்த்தவரின் பிள்ளையாகவும் {கிருத்ரிமபுத்ரனாகக்} கருதப்படுகிறான். அவனது வழக்கில், மகன்தன்மைக்கான காரணமாக உயிர்வித்தோ, பிறந்த நிலமோ இருப்பதில்லை” என்றார்.(18)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மகனாக ஆக்கப்பட்டவனும், எடுத்து வளர்க்கப்பட்டதன் காரணமாக மகன் என்ற நிலை உண்டானவனும், உயிர்வித்தையோ, பிறந்த நிலத்தையோ மகன் என்ற நிலைக்குக் காரணமாகக் கொள்ளாதவனுமான மகன் எவ்வகை மகனாவான்?” என்று கேட்டான்.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தந்தை மற்றும் தாயால் சாலையில் கைவிடப்பட்ட ஒரு மகனை ஒருவன் எடுத்து வளர்க்கும்போது, அவ்வாறு எடுத்து வளர்ப்பவன், பெற்றோரைத் தேடியும் காணத்தவறும்போது, அவனே அத்தகைய மகனின் தந்தையாகிறான், பின்னவனும் ஆக்கப்பட்ட மகன் {கிருத்ரிமபுத்ரன்} என்று அழைக்கப்படுகிறான்.(20) சொந்தங்கொள்ள எவரும் இல்லாதபோது அவன் தன்னை வளர்ப்பவருக்கு உரிமையாகிறான். மேலும் அத்தகைய மகன், தன்னை வளர்ப்பவர் சார்ந்த வகைக்கு உரியவனாகவே கருதப்படுகிறான்” என்றார்.(21)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அத்தகைய ஒருவனின் தூய்மைசெய் சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எவருக்கு எத்தகைய சடங்குகள் செய்யப்பட வேண்டும்? அவன் எந்தப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டும்? ஓ!பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(22)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெற்றோரால் கைவிடப்பட்ட மகன், தன்னை எடுத்து வளர்த்தவரின் வகையையே அடைவதால், தன்னை எடுத்து வளர்ப்பவரின் வழக்கத்திற்கு இசைவாகவே அத்தகைய மகனின் {உபநயனம் முதலிய} தூய்மைச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.(23) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உண்மையில், அத்தகைய மகனை வளர்ப்பவன், தன் சொந்த குல மற்றும் உறவுகளின் நடைமுறைப்படி அவனுக்குண்டான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அத்தகைய மகனுக்குத் திருமணத்தில் அளிக்கப்படும் பெண்ணைப் பொறுத்தவரையிலும்கூட, அவள், அவனை வளர்ப்பவனின் வகையைச் சார்ந்தவளாகவே இருக்க வேண்டும்.(24) ஒரு மகனின் உண்மைத் தாயை உறுதி செய்ய முடியாதபோது மட்டுமே இவை யாவும் செய்யப்பட வேண்டும். மகன்களுக்கு மத்தியில், ஒரு கன்னிகைக்குப் பிறந்தவனும் {கானீனனும்}, திருமணத்திற்கு முன்பே கருவுற்ற தாய்க்குப்பிறந்து அதையடுத்து {திருமணத்திற்குப் பிறகு அவளால்} வளர்க்கப்பட்டு வருபவனும் {ஸஹோடனும்} மதிப்பற்றவர்களாகவும், மிக இழிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(25) எனினும், சட்டப்படியான திருமணத்தின் மூலம் தந்தையால் பெறப்பட்ட மகன்களுக்கு விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளையே இவர்கள் இருவரும் பெற வேண்டும். தந்தையின் வித்தில் பிறந்ததன் விளைவால் தந்தையின் மகனாகுபவன் {க்ஷேத்ரஜன்}, அபஸதர்கள் என்றழைக்கப்படும் மகன்கள், கன்னிப்பருவத்தில் மனைவியால் பெறப்பட்டு, திருமணத்திற்குப் பிறகு வளர்க்கப்படுபவர்கள் {ஸகோடர்கள்} ஆகியோரைப் பொறுத்தவரையில்,(26) பிராமணர்களும், பிறரும் தங்கள் தங்கள் வகைக்குரிய அதே தூய்மைச் சடங்குகளையே அவர்களுக்கும் செய்ய வேண்டும். பல்வேறு வகை மகன்கள் பொறுத்தவரையில் சாத்திரங்களில் காணப்படும் தீர்மானங்கள் இவையே. உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார் {பீஷ்மர்}.(27)

சியவனரும் மீன்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 50-தோழமையினால் ஏற்படும் கருணை குறித்துச் சொல்வதற்காக சியவனரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பனிரெண்டு வருடம் நீரில் தவமிருந்த சியவனர்; நீர்வாழ் உயிரினங்களுடன் அவருக்கு இருந்த தோழமை; மீன்பிடித்த மீனவர்கள்; இறந்த மீன்களைக் கண்டு துயருற்ற சியவனர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அடுத்தவர் துயரத்தைக் கண்டு உணரும் கருணை, அல்லது பரிதாப உணர்வின் இயல்பென்ன? ஒருவன் மற்றவனுடன் தோழமையுடன் வாழ்வதன் விளைவால் அந்த மற்றவனிடம் அவன் கொள்ளும் கருணை, அல்லது பரிவு உணர்வின் இயல்பென்ன? பசுக்கள் தொடர்புடைய உயர்ந்த அருளின் (அளவென்ன?) இயல்பென்ன? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, இதுதொடர்பாக ஒரு பழங்கதையில் நஹுஷனுக்கும், முனிவர் சியவனருக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில், பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவருமான பெரும் முனிவர் சியவனர், உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைச் சில காலத்திற்கு வாழ விரும்பி அதன் படியே வாழவும் தொடங்கினார்.(3) செருக்கு, கோபம், இன்பதுன்பங்கள் ஆகியவற்றைக் கைவிட்ட அந்தத் தவசி அந்நோன்பு நோற்கும் உறுதியேற்றுக் கொண்டு, உதவாஸ விதிகளின் படி பனிரெண்டு ஆண்டுகள் வாழத் தொடங்கினார்[1].(4) அம்முனிவர் அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதேபோலவே அவர் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அந்தப் பலமிக்கத் தவசி அனைவரும் நடந்து கொள்ளும் நடத்தையால் நிலவுக்கு ஒப்பானவராக இருந்தார்.(5)தேவர்கள் அனைவரையும் வணங்கி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தம்மைத் தூய்மை செய்து கொண்ட அவர், கங்கையும், யமுனையும் கலக்கும் இடத்தில் உள்ள நீரில் நுழைந்து, உயிரற்ற ஒரு மரக்கட்டையைப் போல அங்கே நின்று கொண்டிருந்தார்.(6) காற்றுக்கு ஒப்பான வேகத்தைக் கொண்டவையும், சீற்றத்துடன் முழங்கி வருபவையுமான அவ்விரு ஆறுகளின் நீரோட்டத்தை எதிர்த்து அஃதை அவர் தமது தலையில் தாங்கினார்.(7) பிரயாகையில் கலக்கும் கங்கை, யமுனை, பிற ஆறுகள், தடாகங்கள் ஆகியன அந்த முனிவரைப் பீடிக்காமல் (அவருக்கான மதிப்பைக் காட்டி) அவரைக் கடந்து சென்றன.(8) ஒரு மரக்கட்டையின் தன்மையை அடைந்த அந்தப் பெரும் முனிவர் சில வேளைகளில் அந்த நீரிலேயே கிடந்து சுகமாக உறங்கினார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சில வேளைகளில் அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி நிமிர்ந்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.(9) அந்த நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஏற்புடையவராக அவர் இருந்தார். இவை யாவும் சிறு அச்சமேதுமில்லாமல் அந்த முனிவரின் உதடுகளை முகர்ந்து பார்த்தனர்.(10)

அந்தப் பெரும் நீர்ச் சங்கமத்தில் அம்முனிவர் இவ்வழியிலேயே நெடுங்காலம் இருந்தார். ஒரு நாள், சில மீனவர்கள் அங்கே வந்தனர்.(11) ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, அம்மனிதர்கள் கைகளில் வலைகளுடன் அம்முனிவர் இருந்த இடத்திற்கு வந்தனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அவர்கள் அனைவரும் மீன் பிடிக்க விரும்பினர்.(12) நல்ல உடற்கட்டு, அகன்ற மார்பு, பெரும் பலம் தன்னுத் துணிவைக் கொண்டவர்களும், நீருக்கஞ்சி ஒருபோதும் திரும்பாதவர்களும், தங்கள் வலைகளின் மூலம் ஈட்டுவதைக் கொண்டு வாழ்பவர்களுமான அம்மனிதர்கள், மீன்பிடிக்கத் தீர்மானித்தனர்.(13) ஓ! பாரதர்களின் தலைவா, பல மீன்களைக் கொண்ட அந்த நீர்நிலைக்கு வந்த அந்த மீனவர்கள், தங்கள் வலைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டினர்.(14) மீனை விரும்பியவர்களும், எண்ணிக்கையில் பலராக இருந்தவர்களுமான அந்தக் கைவர்தர்கள் {செம்படவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் வலைகளுடன் கங்கை மற்றும் யமுனையின் நீரில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டனர்.(15)

உண்மையில் அவர்கள், புதுக் கயிறுகளால் அமைக்கப்பட்டதும், போதுமான அளவுக்கு நீள அகலங்களுடன் கூடிய ஒரு பெரிய இடத்தைக் கவரவல்லதுமான தங்கள் வலையை நீரில் வீசினர்.(16) நீருக்குள் இறங்கிய அவர்கள் அனைவரும், மிகப் பெரியதும், ஒரு பெரிய இடத்தில் நன்கு பரவியிருந்ததுமான தங்கள் வலையைப் பெரும்பலத்துடன் இழுக்கத் தொடங்கினர்.(17 அவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், ஒருவர் சொல்வதை மற்றவர் செய்ய முழுமையாகத் தீர்மானித்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வலைக்குள் சிக்க வைப்பதில் வென்றனர்.(18) ஓ! மன்னா, அவ்வாறு அவர்கள் தங்கள் வலையை இழுத்த போது, பெரும் எண்ணிக்கையிலான மீன்களுடன் சேர்த்து பிருகுவின் மகனான சியவனரையும் எளிதாக இழுத்தனர்.(19) அவரது உடலில் ஆற்றுப் பாசிகள் அதிகம் வளர்ந்திருந்தன. அவரது தாடியும், சடாமுடியும் பச்சைநிறத்தில் இருந்தன. அவரது மேனி முழுவதும் சங்குகளும், தலைகளுடன் கூடிய வேறு மெல்லுடலிகளும் {பன்றிமுட்களும்} காணப்பட்டன.(20)

வேதங்களை நன்கறிந்தவரான அம்முனிவர் நீரில் இருந்து இவ்வாறு இழுக்கப்பட்டதைக் கண்ட அந்த மீனவர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் நின்று, நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்தும், மீண்டும் மீண்டும் தலைவணங்கினர்.(21) வலையில் அகப்பட்ட மீன்கள், வலை இழுக்கப்பட்டதன் மூலம் உண்டான அச்சம் மற்றும் துன்பத்தினாலும், நிலத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் விளைவாலும், தங்கள் உயிரை விட்டன.(22) மீன்களுக்கு நேர்ந்த இந்தப் பெரும் படுகொலையைக் கண்ட அந்தத் தவசி, கருணையால் நிறைந்து மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டார்.(23)

மீனவர்கள், “அறியாமையின் மூலம் நாங்கள் (புனிதமானவரான உம்மை நீரில் இருந்து இழுத்து) இப்பாவத்தை இழைத்துவிட்டோம். எங்களிடம் நிறைவடைவீராக. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் எது? ஓ !பெருந்தவசியே, எங்களுக்கு ஆணையிடுவீராக” என்று கேட்டனர்”.(24)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தம்மைச் சுற்றிலும் மீன்குவியல்களுக்கு மத்தியில் இருந்த சியவனர், “நான் மிகவும் விரும்பும் விருப்பத்தைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக.(25) நான் இந்த மீன்களோடு இறக்கப் போகிறேன், அல்லது என்னை இவற்றோடு சேர்த்து விற்று விடுவீராக. நான் இவற்றோடு சேர்ந்து நீரில் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன். இத்தகைய நேரத்தில் நான் இவற்றைக் கைவிட விரும்பவில்லை” என்றார் {சியவனர்}.

அவர் இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னதும், அந்த மீனவர்கள் பெரும் அச்சமடைந்தனர். வெளிறிய முகங்களுடன் கூடிய அவர்கள் மன்னன் நஹுஷனிடம் சென்று, நடந்தது அனைத்தையும் தெரிவித்தனர்” {என்றார் பீஷ்மர்}.(27)

மீன்களும் மீனவரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 51-சியவனருக்கான விலையைச் சொன்ன நஹுஷன்; பசுவின் பெருமை; மீனவர்களிடம் இருந்து பசுவைப் பெற்றுக் கொண்ட சியவனர்; சொர்த்தையடைந்த மீன்களும், மீனவர்களும்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“மன்னன் நஹுஷன், சியவனர் அடைந்த நிலையைக் கேட்டு தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதரின் துணையுடன் அந்த இடத்திற்கு விரைவாகச் சென்றான்.(1) முறையாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட அந்த மன்னன் தன் கரங்களைக் கூப்பிக் குவிந்த கவனத்துடன் உயர் ஆன்ம சியவனரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.(2) அப்போது மன்னனின் புரோகிதர், ஓ! ஏகாதிபதி, வாய்மை நோன்பு நோற்றவரும், உயர் ஆன்மா கொண்டவரும், (காந்தியிலும், சக்தியிலும்) தேவர்களுக்கே ஒப்பானவருமான அந்த முனிவரை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(3)

நஹுஷன் {சியவனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, “உமக்கு ஏற்புடையவகையில் நான் செய்ய வேண்டிய செயலென்ன? ஓ! புனிதமானவரே, செய்வதற்குக் கடினமான செயலாக இருந்தாலும், உமது ஆணையின் பேரில் என்னால் நிறைவேற்ற முடியாத செயலேதும் கிடையாது” என்றான்.(4)

சியவனர், “மீன் பிடித்து வாழும் இம்மனிதர்கள் தங்கள் உழைப்பால் முற்றிலும் களைப்படைந்திருக்கின்றனர். இந்த மீன்களுடன் சேர்த்து எனக்குமான விலையை நீ இவர்களுக்குக் கொடுப்பாயாக” என்றார்.(5)

நஹுஷன், “இந்தப் புனிதமானவர் ஆணையிட்டபடியே இவரை விலைக்கு வாங்க என் புரோகிதர் இந்த நிஷாதர்களிடம் ஓராயிரம் நாணயங்களை {ஓராயிரம் பொன்னை} விலையாகக் கொடுக்கட்டும்” என்றான்.(6)

சியவனர், “ஓராயிரம் நாணயங்கள் {ஓராயிரம் பொன்} என் விலையாக முடியாது. கேள்வி உன் விவேகத்தைச் சார்ந்தது. அஃது என்னவாக இருக்க வேண்டும் என்பதை உன் புத்தியில் தீர்மானித்து ஒரு நல்ல விலையைக் கொடுப்பாயாக[1]” என்றார்.(7)நஹுஷன், “ஓ! கல்விமானான பிராமணரே, இந்த நிஷாதர்களிடம் நூறாயிரம் நாணயங்கள் கொடுக்கப்படட்டும். ஓ! புனிதமானவரே, இஃது உமது விலையாகுமா? அல்லது வேறு வகையில் நினைக்கிறீரா?” என்று கேட்டான்.(8)

சியவனர், “ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, நூறாயிரம் நாணயங்களால் என்னை விலைக்கு வாங்கக் கூடாது. இவர்களுக்குச் சரியான விலையைக் கொடுப்பாயாக. நீ உன் அமைச்சர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்.(9)

நஹுஷன், ” இந்த நிஷாதர்களிடம் ஒரு கோடி நாணயங்களை என் புரோகிதர் கொடுக்கட்டும். இதுவும் உமது விலையாகாது என்றால், மேலும் அதிகம் அவர்களுக்குக் கொடுக்கப்படட்டும்” என்றான்.(10)

சியவனர், “ஓ! மன்னா, ஒரு கோடி நாணயங்களாலோ, அதற்கு மேலோ கொடுத்து விலைக்கு வாங்க நான் தகுந்தவனன்று. எது முறையானதோ, சரியானதோ அந்த விலை இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். நீ பிராமணர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்.(11)

நஹுஷன், “என் நாட்டில் பாதி, அல்லது மொத்த நாடும் இந்த நிஷாதர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அஃது உமது விலையாகலாம் என நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே, நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டான்.(12)

சியவனர், “ஓ! மன்னா, நான் உன்னுடைய நாட்டில் பாதியையோ, முழு நாட்டையோ விலையாகக் கொள்ளத் தகுந்தவனல்ல. இந்த மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்த சரியான விலை கொடுக்கப்பட வேண்டும். நீ முனிவர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்”.(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தப் பெரும் முனிவரின் இந்தச் சொற்களைக் கேட்டு நஹுஷன் பெரும் துன்பத்தால் பீடிக்கப்பட்டான். அவன் தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதருடன் சேர்ந்து இக்காரியம் குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான்.(14) அப்போது அங்கே, கனி மற்றும் கிழங்குகளை உண்டு காட்டில் வாழ்பவரும், ஒரு பசுவுக்குப் பிறந்தவருமான ஒரு தவசியானவர் மன்னன் நஹுஷனிடம் வந்தார்.(15)

ஓ! மன்னா, அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் அந்த ஏகாதிபதியிடம், “நான் விரைவில் உன்னை நிறைவடையச் செய்கிறேன். இம்முனிவரும் நிறைவடைவார்.(16) கேலிக்காகக் கூட நான் பொய் பேசியவனல்ல, எனும் போது வேறு சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? நான் சொல்வதை நீ தயங்காமல் செய்ய வேண்டும்” என்றார்.(17)

நஹுஷன், “ஓ! சிறப்புமிக்கவரே, பிருகு குலத்தைச் சேர்ந்த இந்தப் பெரும் முனிவருக்கான விலை என்ன என்பதைச் சொல்வீராக. இந்தப் பயங்கர நிலையில் இருந்து என்னையும், என் நாட்டையும், என் குலத்தையும் காப்பீராக.(18) புனிதரான சியவனர் கோபமடைந்தால் மூவுலகங்களை அழித்துவிடுவார் எனும்போது, தவங்களில்லாதவனும், கர வலிமையை மட்டுமே சார்ந்திருப்பவனும், வேறொன்றுமில்லாதவனுமான என்னைக் குறித்துச் சொல்ல வேண்டுமா?(19) ஓ! பெரும் முனிவரே, எங்கள் அமைச்சர்கள் மற்றும் எங்கள் புரோகிதருடன் சேர்த்து அடியற்ற கடலில் வீழ்ந்து விட்ட எங்களுக்குத் தெப்பமாவீராக. இந்த முனிவருக்கான விலை என்ன என்பதைத் தீர்மானிப்பீராக” என்று கேட்டான்”.(20)

பீஷ்மர், “பசுவுக்குப் பிறந்தவரும், பெருஞ்சக்தியுடன் கூடியவருமான அந்தத் தவசி நஹுஷனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த ஏகாதிபதியையும், அவனது அமைச்சர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இவ்வாறு பேசினார்:(28) “ஓ! மன்னா, பிராமணர்கள் நான்கு வகையினரில் முதன்மையானவர்களாவர். எனினும் அவர்களுக்கு விலையேதும் நிர்ணயிக்க முடியாது. பசுக்களும் மதிப்பில்லாதவையே. எனவே, ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முனிவரின் விலையாக நீ ஒரு பசுவைக் கருதுவாயாக” என்றார்.(22)

ஓ! மன்னா, அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நஹுஷன், தன் புரோகிதர் மற்றும் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) கடும் நோன்புகளைக் கொண்டவரும், பிருகுவின் மகனுமான சியவனரின் முன்பு சென்ற அவன், ஓ! ஏகாதிபதி, தன்னால் இயன்றதில் சிறந்த முறையில் அவரை நிறைவடையச் செய்யும் வகையில் அவரிடம் இவ்வாறு பேசினான்.(24)

நஹுஷன், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, எழுவீராக, ஓ! பிருகுவின் மகனே, எழுவீராக, ஒரு பசுவை உமக்கான விலையாகக் கொண்டு நீர் விலைக்கு வாங்கப்பட்டீர். ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே. இதுவே உமது விலை என நான் நினைக்கிறேன்” என்றான்.(25)

சியவனர், “சரி, ஓ! மன்னர்களின் மன்னா, இதோ எழப் போகிறேன். ஓ! பாவமற்றவனே, நீ முறையாகவே என்னை விலைக்கு வாங்கியிருக்கிறாய். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, பசுவுக்கு நிகராக வேறு எந்தச் செல்வத்தையும் நான் காணவில்லை.(26) பசுவைக் குறித்துப் பேசுவது, அவற்றைக் குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்பது, பசுக்களைக் கொடையளிப்பது, பசுக்களைப் பார்ப்பது ஆகியவை மிக மெச்சத்தகுந்தவையும், உயர்மங்கலமானவையும், பாவம் போக்குபவையுமான செயல்களாகும்.(27) பசுக்களே செழிப்பின் வேராக எப்போதும் இருக்கின்றன. பசுக்களில் குற்றமேதும் கிடையாது. ஹவிஸ்-ன் வடிவில் தேவர்களுக்குச் சிறந்த உணவை எப்போதும் அளிப்பவை பசுக்களே.(28) ஸ்வாஹா மற்றும் வஷட் என்ற புனித மந்திரங்கள் எப்போதும் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. அவையே வேள்வியின் வாயாக இருக்கின்றன.(29) அவை பலத்தைக் கொடுக்கக் கூடிய சிறந்த அமுதத்தை விளைவிக்கின்றன. அனைத்து உலகங்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளும் அவை அமுதத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகின்றன(30). உண்மையில் பசுக்கள், உயர்ந்த சக்தியாகவும், அனைத்த உயிரினங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவையாகவும் கருதப்படுகின்றன.(31) எந்த நாட்டில் பசுக்கள், தங்கள் உரிமையாளர்களால் நிறுவப்பட்டு, அச்சமில்லாமல் அழகில் ஒளிர்கின்றனவோ, அந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.(32) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் படிக்கட்டுக்களாகப் பசுக்களே இருக்கின்றன. பசுக்கள் சொர்க்கத்திலேயே புகழப்படுகின்றன. பசுக்கள் ஒவ்வொரு விருப்பத்தையும் கொடுக்க வல்லவர்களும், அனைத்தையும் கொடுக்கவல்லவர்களுமான தேவிகளாக இருக்கின்றன. இவ்வளவு உயர்வானவையாகவும், மேன்மையானவையாகவும் இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது” என்றார்”.(33)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பசுக்களின் மகிமை மற்றும் மேன்மை குறித்து நானும் இதையே உனக்குச் சொல்கிறேன். பசுக்கள் தொடர்புடைய புண்ணியங்களில் ஒரு பகுதியைச் சொல்வதற்கு மட்டுமே நான் தகுந்தவன் ஆவேன். இக்காரியம் குறித்து முழுமையும் சொல்லும் தகுதி எனக்கில்லை.(34)

நிஷாதர்கள், “ஓ! தவசியே, நீர் எங்களைக் கண்டீர், எங்களிடம் பேசவும் செய்தீர். நல்லோருடன் நட்பு கொள்வது ஏழே சொற்களை மட்டுமே சார்ந்ததாகும் எனச் சொல்லப்படுகிறது.(35) சுடர்மிக்க வேள்வி நெருப்பு, அதன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகள் அனைத்தையும் உண்ணும். அற ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட நீர், மனிதர்களுக்கு மத்தியில் சுடர்மிக்க நெருப்பின் சக்தியுடன் இருக்கிறீர்.(36) ஓ! பெரும் கல்விமானே, நாங்கள் உம்மை அமைதிப்படுத்துகிறோம். நாங்கள் உம்மிடம் சரண் அடைகிறோம். எங்களுக்கு அருள் செய்ய, எங்களிடம் இருந்து இந்தப் பசுவை எடுத்துக் கொள்வீராக” என்றனர்.(37)

சியவனர், “வறியவர், அல்லது துயரில் வீழ்ந்த ஒருவரின் கண், ஒரு தவசியின் கண், அல்லது கடும் நஞ்சுமிக்க ஒரு பாம்பின் கண் ஆகியன, காற்றின் உதவியுடன் சுடர்விடுவதும், வைக்கோல் பொதியை எரிப்பதுமான நெருப்பைப் போல ஒரு மனிதனை அவனது வேர்வரை எரித்துவிடும் சக்தி கொண்டவையாகும்.(38) நீங்கள் எனக்கு அளிக்க விரும்பும் பசுவை நான் ஏற்றுக் கொள்கிறேன். மீனவர்களே, ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் விடுபட்டு, உங்கள் வலைகளில் பிடிபட்டிருக்கும் இந்த மீன்களுடன் சேர்த்து, எந்தத் தாமதமும் இல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்வீர்களாக” என்றார்”.(39)

பீஷ்மர் தொடர்ந்தார், “இதன்பிறகு, தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெரும் முனிவருடைய சக்தியின் விளைவால், அவர் சொன்ன அந்தச் சொற்களின் மதிப்பால், அந்த மீனவர்களும், அந்த மீன்களும், சொர்க்கத்திற்குச் சென்றனர்.(40) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னன் நஹுஷன், மீனவர்களும் அந்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(41) பிறகு பசுவிடம் பிறந்த முனிவரும், பிருகு குல சியவனரும் என அந்த இரு முனிவர்களும் மன்னன் நஹுஷனுக்குப் பல வரங்களை அளித்து அவனை மகிழ்வித்தனர்.(42)

அப்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பெரும் சக்தியைக் கொண்டவனும், பூமி அனைத்தின் தலைவனுமான மன்னன் நஹுஷன் மகிழ்ச்சியால் நிறைந்து, “போதும்” என்று சொன்னான்.(43) தேவர்களின் தலைவனான இரண்டாம் இந்திரனைப் போல இருந்த அவன், தன்னறத்தை உறுதி செய்ய அந்த வரங்களை ஏற்றுக் கொண்டான். முனிவர்கள் வரமளித்ததும் மகிழ்ச்சியால் நிறந்த அம்மன்னன் அவ்விருவரையும் பெரும் மதிப்புடன் வழிபட்டான்.(44) சியவனரைப் பொறுத்தவரையில், அவரது நோன்பு முடிந்ததால் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். பசுவில் பிறந்தவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான முனிவரும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(45) ஓ! ஏகாதிபதி, நிஷாதர்கள் அனைவரும், அவர்கள் பிடித்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்ந்தன. மன்னன் நஹுஷனும், மதிப்புமிக்க வரங்களை அடைந்து தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(46) ஓ! மகனே, இவ்வாறே நீ கேட்ட அனைத்தையும் குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டன். ஓ! யுதிஷ்டிரா, பிறரைப் பார்ப்பதாலும், அவர்களுடன் வாழ்வதாலும் உண்டாகும் பாசத்தையும், பசுக்களின் உயர்ந்த அருளையும், உண்மை அறத்தை உறுதி செய்வது போன்ற காரியங்களைக் குறித்து நான் உன்னுடன் உரையாடினேன். ஓ! வீரா, உன் நெஞ்சில் இன்னும் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(47,48)

சியவனரும், குசிகனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 52-பரசுராமர், விஷ்வாமித்ரர் பிறப்புக் காரியமாகச் சியவனர் குசிகனிடம் வசித்தது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனக்குக் கடலைப் போன்றொரு பெரிய ஐயம் உள்ளது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, அதைக் கேட்பீராக. அதை அறிந்து கொண்டு அதைக் குறித்து எனக்கு விளக்கம் அளிப்பீராக.(1) ஜமதக்னியின் மகனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான ராமர் {பரசுராமர்} குறித்து எனக்குப் பேராவல் இருக்கிறது. அந்த ஆவலை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(2) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட ராமர் {பரசுராமர்} எவ்வாறு பிறந்தார்? அவர் பிறப்பால் மறுபிறப்பாள முனிவர்களைச் சார்ந்தவர். அவர் எவ்வாறு க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவரானார்?(3) ஓ! மன்னா, ராமர் {பரசுராமரின்} பிறப்பு சூழ்நிலைகளைக் குறித்து எனக்கு விளக்கமாக உரைப்பீராக. மேலும் குசிக குலமகனான ஒரு க்ஷத்திரியன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு பிராமணர் ஆனார்?(4) ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்} மற்றும் விஷ்வாமித்ரரின் பலம் நிச்சயம் பெரியதாகும்.(5) ரிசீகரின் மகனுக்கு {ஜமதக்னிக்குப்} பதிலாக அவரது பேரன் {பரசுராமர்} க்ஷத்திரிய ஒழுக்கத்தைக் கொண்டதேன்? மேலும் குசிகனின் பேரன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு ஒரு பிராமணரானார்? அவர்கள் இருவரின் மகன்களுக்குப் பதிலாக, அவர்களுடைய பேரர்களுக்கு இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நேர்ந்ததேன்? இந்தச் சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் உண்மையை விளக்குவதே உமக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(6)

பீஷ்மர், “இது தொடர்பாகச் சியவனருக்கும், குசிகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவசிகளில் சிறந்தவரும், பிருகு குலத்தைச் சேர்ந்தவருமான சியவனர், இந்தக் களங்கம் (க்ஷத்திரிய நடைமுறைகளைச் செய்யும் தமது வழத்தோன்றலின் விளைவாக) தமது சொந்த குலத்தையும் பாதிக்கும் என்பதை (தமது ஆன்மப் பார்வையில்) கண்டார்.(8) அந்நிகழ்வின் நல்லது, கெட்டது, பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தவரும், தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான சியவனர் குசிகர்களின் குலத்தை (அந்தக் குலத்தில் இருந்துதான் தமது குலம் க்ஷத்திரிய நடைமுறைகளின் களங்கத்தை அடையப்போகிறது என்பதால் அக்குலத்தை) எரிக்க விரும்பினார்.(9)

மன்னன் குசிகனிடம் சென்ற சியவனர், அவனிடம், “ஓ! பாவமற்றவனே, உன்னுடன் சில காலம் வசிக்கும் விருப்பம் என் இதயத்தில் எழுந்துள்ளது” என்றார்.(10)

குசிகன், “ஓ! புனிதமானவரே, பெண்கள் கொடுக்கப்படும்போது ஒன்றாக வசிப்பது குறித்துக் கல்விமான்கள் விதிக்கின்றனர். ஞானம் கொண்டவர்கள் இத்தகைய தொடர்பிலான நடைமுறையை மட்டுமே பேசுகின்றனர்.(11) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவரே, என்னுடன் வசிப்பதற்கு நீர் நாடும் காரியம் விதிகளால் அங்கீகரிக்கப்படவில்லை. கடமை மற்றும் அறங்களின் விதிகளுக்கு முரணாக இருப்பினும், நீர் விரும்பி ஆணையிடுவதை நான் செய்வேன்” என்றான்”.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும் தவசியான சியவனரின் முன் ஓர் இருக்கையை வைக்க ஆணையிட்ட மன்னன் குசிகன், தன் மனைவயின் துணையுடன் அந்தத் தவசியின் முன்னிலையில் நின்றான்.(13) சிறு குடுவையில் உள்ள நீரைக் கொண்டு வந்த அந்த மன்னன், அவரது பாதங்களைக் கழுவிக் கொள்ள அந்நீரை அளித்தான். பிறகு அவன் தன் உயர் ஆன்ம விருந்தினரைக் கௌரவிக்கும் வகையில் முறையான சடங்குகள் அனைத்தையும் செய்தான்.(14) நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பவனான உயர் ஆன்ம குசிகன், தேன் மற்றும் பிற பொருட்கள் அடங்கிய உரிய வடிவத்திலான பொருட்களை அந்தப் பெரும் முனிவருக்குக் கொடுத்து, அவரை ஏற்கச் செய்தான்.(15)

கல்விமானான அந்தப் பிராமணரை இவ்வழியில் வரவேற்றுக் கௌரவித்த அந்த மன்னன் {குசிகன்} மீண்டும் அவரிடம் {சியவனரிடம்}, “உமது ஆணைகளுக்காக நாங்கள் இருவரும் காத்திருக்கிறோம். ஓ! புனிதமானவரே, உமக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென ஆணையிடுவீராக.(16) ஓ! கடும் நோன்புகளைக் கொண்டவரே, நாடோ, செல்வமோ, பசுவோ, வேள்விகளில் கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமோ, அஃது உமக்கு வேண்டுமோ அந்தச் சொல்லை எங்களுக்கச் சொன்னால் அவை அனைத்தையும் நாங்கள் உமக்கு அளிப்போம்.(17) இந்த அரண்மனை, இந்த நாடு, நீதிமிக்க இந்த இருக்கை {சிம்மாசனம்} ஆகியவை உமது விருப்பத்திற்காகக் காத்திருக்கின்றன. நீரே இவை அனைத்தின் தலைவராவீர். பூமியை நீர் ஆள்வீராக. என்னைப் பொறுத்தவரையில் முற்றிலும் நான் உம்மையே சார்ந்திருக்கிறேன்” என்றான்.(18)

மன்னனால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளில் பெரும் மகிழ்ச்சியடைந்த பிருகு குலத்தின் சியவனர், குசிகனிடம் மறுமொழியாக இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)

சியவனர் {குசிகரிடம்}, “ஓ! மன்னா, நான் உன் நாட்டிலோ, செல்வத்திலோ, நீ கொண்டிக்கும் கன்னிகையரிலோ, உன் பசுக்களிலோ, உன் மாகாணங்களிலோ, வேள்விக்குத் தேவையான பொருட்களிலோ பேராசை கொள்ளவில்லை. நான் சொல்வதைக் கேட்பாயாக.(20) உனக்கும், உன் மனைவிக்கும் விருப்பம் உண்டானால் நான் ஒரு குறிப்பிட்ட நோன்பை நோற்கத் தொடங்குவேன். அந்தக் காலத்தில் நீயும் உன் மனைவியும் எத்தயக்கமும் இல்லாமல் எனக்குத் தொண்டாற்ற விரும்புகிறேன்” என்றார்.(21)

ஓ! பாரதா, முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும் ராணியும் மகிழ்ச்சியால் நிறைந்து, “ஓ! முனிவரே, அப்படியே ஆகட்டும்” என்று அவருக்குப் பதிலளித்தனர்.(22)

முனிவரின் சொற்களில் மகிழ்ச்சியடைந்த மன்னன் அவரை அந்த அரண்மனையில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். அது காண்பதற்கினிய சிறப்பான ஒன்றாக இருந்தது. மன்னன் அந்த அறையில் உள்ள அனைத்தையும் அவருக்குக் காட்டினான்.(23)

மன்னன், “ஓ! புனிதமானவரே, இஃது என் படுக்கையாகும். நீர் விரும்பியவாறு இங்கே வாழலாம். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நானும், என் ராணியும் உமக்குத் தேவையான வசதிகள் மற்றும் இன்பங்கள் அனைத்தையும் கொடுப்பதற்குச் சிறப்பாக முனைவோம்” என்றான்.(24)

அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே சூரியன் நடுவானைக் கடந்தான். முனிவர் மன்னனிடம் உணவும், பானமும் கொண்டு வரும்படி ஆணையிட்டார்.(25)

முனிவரை வணங்கிய மன்னன் குசிகன், “என்ன வகை உணவு உமக்கு ஏற்புடையது? உண்மையில் உமக்கு என்ன உணவை நான் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டான்.(26)

ஓ! பாரதா, மகிழ்ச்சியால் நிறைந்த அம்முனிவர் அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {குசிகனிடம்}, “சரியான உணவு எனக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று கேட்டார்[1].(27)இச்சொற்களை மதிப்புடன் ஏற்றுக் கொண்ட மன்னன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி உரிய வகை உணவை அம்முனிவருக்குக் கொடுத்தான்.(28)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான புனிதர் சியவனர், அவரது உணவை முடித்துக் கொண்டு, மன்னன் மற்றும் ராணியிடம், “நான் உறங்க விரும்புகிறேன். ஓ! பலமிக்கவனே, உறக்கம் எனை ஆட்கொள்கிறது” என்று சொன்னார்.(29)

பிறகு அந்த முனிவர்களில் சிறந்தவர், அவருக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த ஓர் அறைக்குச் சென்று, ஒரு படுக்கையில் தம்மைக் கிடத்திக் கொண்டார். மன்னனும், ராணியும் அங்கே அமர்ந்தனர்.(30)

முனிவர், “நான் உறங்கும் போது என்னை விழிப்படையச் செய்யாதீர். நீங்கள் விழித்திருந்து, நான் உறங்கும் வரை என் கால்களை அழுத்துவீராக” என்றார்.(31)

கடமைகள் அனைத்தையும் அறந்த குசிகன், சிறு தயக்கமும் கொள்ளாமல், “அப்படியே ஆகட்டும்” என்றான்.

உண்மையில் மன்னனும், ராணியும் அன்றிரவு முழுவதும் விழித்திருந்து,(32) முனிவர் சொன்ன வகையிலேயே அவரைப் பார்த்துக் கொண்டு தொண்டாற்றினர். ஓ! ஏகாதிபதி, அந்த அரச இணை, பெரும் ஊக்கத்துடனும், கவனத்துடனும் அந்த முனிவரின் ஆணையை நிறைவேற்றினர்.(33) அதே வேளையில், மன்னனிடம் இவ்வாறு ஆணையிட்ட அம்முனிவர், தன் நிலை மாறாமல், ஒரு முறை கூடத் திரும்பிப் படுக்காமல், தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.(34)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மன்னன் தன் மனைவியுடன் சேர்ந்து, அந்த மொத்த காலத்திற்கும் உணவனைத்தையும் கைவிட்டு, அம்முனிவரை பார்த்துக் கொண்டு தொண்டாற்றினான்.(35) இருபத்தோரு நான்கள் கழிந்ததும் அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} தாமாக எழும்பினார். அந்தப் பெரும் தவசி, அவர்களை அழைக்காமலேயே அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.(36) பட்டினியால் களைத்துப் போயிருந்த மன்னனும், ராணியும் அவரைப் பின்தொடர்ந்தாலும் அந்த முனிவர்களில் முதன்மையானவர் அவர்கள் மேல் ஒரு பார்வையைக் கூடச் செலுத்தவில்லை.(37) சிறிது தொலைவு சென்றதும், அந்த அரச இணையரின் பார்வையில் இருந்து அந்தப் பிருகுவின் மகன் (தமது யோக சக்தியால் தம்மை மறைத்துக் கொண்டு) மறைந்து போனார். இதனால் துயரால் பீடிக்கப்பட்ட மன்னன் பூமியில் விழுந்தான்.(38) பிறகு, பெரும் காந்தியைக் கொண்ட அந்த ஏகாதிபதி, ஆறுதலடைந்து விரைவாக எழுந்து, தன் ராணியின் துணையுடன், அந்த முனிவரை எங்கும் தேடத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(39)

குசிகனைத் துன்புறுத்திய சியவனர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 53-மீண்டும் இருபத்தோரு நாட்கள் உறங்கிய சியவனர்;. நீராடச் சென்று மீண்டும் மறைந்தது; தனக்குப் பரிமாறப்பட்ட உணவை எரித்தது; மன்னனையும் அவனது மனைவியையும் தேரில் பூட்டி தம்மை இழுக்கச் செய்தது; சாட்டையால் அவர்களை அடித்தது; மன்னனின் அவல நிலையைக் கண்டு துயருற்ற குடிமக்கள்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “முனிவர் {சியவனர்} மறைந்ததும் மன்னன் {குசிகன்} என்ன செய்தான்? உயர்ந்த அருளைக் கொண்ட அவனது மனைவி என்ன செய்தாள்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த முனிவரை {சியவனரைக்} காணாத மன்னன் {குசிகர்}, களைத்துப் போனவனாக, பொறிகலங்கியவனாக, வெட்கமடைந்தவனாகத் தன் ராணியின் துணையுடன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.(2) உற்சாகமற்ற மனநிலையில் தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் யாரிடமும் எந்த வார்த்தையும் பேசாதிருந்தான். அவன் சியவனரின் நடத்தையை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான்.(3) பிறகு நம்பிக்கை இழந்த இதயத்துடன் தன் அறைக்குச் சென்றான். அங்கே அவன் {குசிகன்} தன் படுக்கைக்கு எதிரில் படுத்திருக்கும் பிருகுவின் மகனை {சியவனரைக்} கண்டான்.(4) அம்முனிவரை அங்கே கண்ட அவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். உண்மையில் அவர்கள், அந்த ஆச்சரியகரமான நிகழ்வைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினர். முனிவரைக் கண்டதும் அவர்களது களைப்பு மறைந்து போனது.(5)

அவரது அருகில் உள்ள தங்கள் இருக்கைகள் மீண்டும் அமர்ந்த அவர்கள், முன்பைப் போலவே அவரது பாதங்களை மெதுவாக அழுத்த {பிடித்துவிடத்} தொடங்கினர். அதே வேளையில் அந்தப் பெருந்தவசி முன்பைப் போலவே தமது ஆழ்ந்த உறக்கத்தைத் தொடர்ந்தார். இப்போது அவர் மறுபுறம் திரும்பிப் படுத்திருந்தது மட்டுமே வேறுபாடு.(6) பெரும் சக்தியைக் கொண்ட அவர் மீண்டும் இருபத்தோரு நாட்களை இவ்வாறு கழித்தார். அச்சத்தால் கலக்கமடைந்திருந்த அந்த அரச இணையர் அம்முனிவர் குறித்த தங்கள் மனநிலையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.(7) தமது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அந்தத் தவசி, மன்னன் மற்றும் ராணியிடம், “என் உடலில் எண்ணெய் பூசுங்கள். நாங்கள் நீராட விரும்புகிறேன்” என்றார்.(8) அவர்கள் களைத்துப் போனவர்களாக இருந்தாலும், உடனே சம்மதித்து, நூறு முறை கொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட விலைமதிப்புமிக்க எண்ணெயுடன் {சதபாகத் தைலத்துடன்} அம்முனிவரை அணுகினர்.(9) அந்த முனிவர் சுகமாக அமர்ந்திருந்தபோது, அந்த மன்னனும், ராணியும், பேசாமல் அவருக்குப் பூசிவிடுவதைத் தொடர்ந்தனர். உயர்ந்த தவத் தகுதியைக் கொண்ட அந்தப் பிருகுவின் மகன் போதும் என்ற சொல்லை ஒருமுறையேனும் சொல்லவில்லை.(10)

எனினும் அந்த அரச இணையர் முற்றிலும் வெறுப்பற்றவர்களாக இருப்பதைக் கண்டார். அவர், திடீரென எழுந்து, நீராடும் அறைக்குச் சென்றார்.(11), மன்னனின் பயன்பாட்டுக்குத் தகுந்தவையும், நீராடலுக்குத் தேவையானவையுமான பல்வேறு பொருட்கள் அங்கே தயாராக இருந்தன. எனினும், அந்தப் பொருட்களை எடுக்காமல், அவற்றிற்கு எம்மதிப்பையும் காட்டாமல் அந்த முனிவர் மன்னன் குசிகன் ({குசிகனும்} அவனது மனைவியும்) பார்த்துக் கொண்டிருக்கும்போதே தமது யோக சக்தியால் மீண்டும் அங்கேயே அப்போதே மறைந்து போனார். எனினும், ஓ! பாரதர்களின் தலைவா, இஃது அந்த அரச இணையரின் உள்ளச்சமநிலையைக் குலைக்கவில்லை.(12,13) அடுத்து அந்தப் பலமிக்க முனிவர், நீராடி முடித்து அரியணையில் அமர்ந்திருப்பவராகத் தென்பட்டார். உண்மையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, இந்த இடத்தில் தான் அவர் தம்மை அரசனுக்கும், அரசிக்கும் வெளிப்படுத்திக் கொண்டார்.(14) உற்சாகமிக்க முகத்துடன் கூடிய மன்னன் குசிகன் தன் மனைவியுடன் சேர்ந்து, பெரும் மதிப்புடன் சமைக்கப்பட்ட உணவை அம்முனிவருக்கு அளித்தான். ஞானத்துடனும், முற்றிலும் மனக்கலக்கம் ஏதும் இல்லாமலும் குசிகன் இந்தக் காணிக்கையை அளித்தான்.(15)

அந்தத் தவசி, “உணவு கொண்டவரப்படலாம்” என்ற சொற்களைச் சொன்னார். மன்னன் தன் மனைவியின் துணையுடன் விரைவில் அங்கே உணவைக் கொண்டு வந்தான்.(16) பல்வேறு வகை இறைச்சிகளும், அது போன்ற வெவ்வேறு தயாரிப்புகளும் அதில் இருந்தன. பல வகைக் காய்கறிகளும், கீரைகளும் அதில் இருந்தன.(17) பாகுகள், மாப்பண்டங்கள், ரஸாலை[1] ஆகியவை இருந்தன. அப்பம், பல்வேறு சுவைகளுடன் கூடிய மோதகங்களும் அதில் இருந்தன. முனிவர்கள் உண்ணும் காட்டு உணவுகள் அதில் இருந்தன.(18) மன்னர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் பலவகைக் கனிகள், இலந்து, புன்கம், காஸ்மரியம் {பெருங்குமிழம்பழம்}, பல்லாதகம் {சேங்கொட்டை} ஆகியவையும் இருந்தன.(19) இல்லற வாழ்வை நோற்பவர்கள் {கிருகஸ்தர்கள்} உண்ணத்தக்கவை, காட்டில் வசிப்பவர்களால் {வானப்ரஸ்தர்கள்} உண்ணத்தக்கவை ஆகியவையும் அதில் இருந்தன. இவ்வாறு அனைத்து வகை உணவுகளையும் முனிவரின் சாபத்திற்கு அஞ்சி மன்னன் கொண்டு வந்து, தன் விருந்தினரின் முன்பு வைத்தான்.(20)சமையலறையில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவனைத்தும் சியவனரின் முன்பு வைக்கப்பட்டது. அவருக்காக ஓர் இருக்கை வைக்கப்பட்டது, ஒரு படுக்கையும் விரிக்கப்பட்டது. உணவுவகைகள் வெண் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. எனினும், பிருகு குலத்தின் சியவனர் அந்தப் பொருட்கள் அனைத்திற்கும் நெருப்பிட்டு அவற்றைச் சாம்பலாகக் குறைத்தார்.(21,22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த அரச இணையர் முனிவரின் இந்த நடத்தையினால் கோபமேதும் அடையாதிருந்தனர். முனிவரும் முன்பைப் போலவே மன்னன் மற்றும் ராணியின் கண்களுக்கு முன்பாகவே அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(23) அரச முனியான குசிகன், ஒரு வார்த்தையும் பேசாமல் தன் அருகில் உள்ள தன் மனைவியுடன் அதே நிலையில் அந்த இரவு முழுவதும் அங்கேயே நின்றிருந்தான். பெருஞ்செழிப்புடன் கூடிய அவன் கோபவசப்படாமல் இருந்தான்.(24) பல்வேறு வகையிலான தூய மற்றும் நல்ல உணவுகளும், சிறந்த படுக்கைகளும், நீராடலுக்கு வேண்டிய அபரிமிதமான பொருட்களும், பல்வேறு வகைத் துணிகளும் ஒவ்வொரு நாளும் திரட்டப்பட்டு, முனிவருக்காக அந்த அரண்மனையில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. உண்மையில் சியவனரால் அந்த மன்னனின் நடத்தையில் எந்தக் களங்கத்தையும் காண முடியவில்லை.(25,26)

அப்போது அந்த மறுபிறப்பாள முனிவர், மன்னன் குசிகனிடம், “நீயும் உன் மனைவியும் ஒரு தேரில் உங்களைப் பூட்டிக் கொண்டு, நான் சொல்லும் இடங்களுக்கு என்னைச் சுமந்து செல்வீராக” என்றார்.(27) அம்மன்னன் {குசிகன்}, தவத்தையே செல்வமாகக் கொண்ட சியவனரிடம், “அப்படியே ஆகட்டும்” எனத் தயக்கமேதுமின்றிச் சொன்னான். மேலும் அவன் முனிவரிடம், “எந்தத் தேரை நான் கொண்டு வர வேண்டும்? இன்பமான பயணத்திற்குரிய தேர் வேண்டுமா? அல்லது என்னுடைய போர்த்தேரைக் கொண்டு வரவா?” என்று கேட்டான்.(28)

மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்ட மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தத் தவசி அவனிடம், “பகை நகரங்களை ஊடுருவ நீ பயன்படுத்தும் தேரை முறையாக ஆயத்தம் செய்வாயாக. உண்மையில், ஆயுதங்கள், கொடிமரங்கள், கொடிகள், ஈட்டிகள், கணைகள், தங்கத் தூண்கள், தடிகள், ஆகியவற்றுடன் உன் போர்த்தேரை ஆயத்தம் செய்வாயாக.(29,30) அதன் சடசடப்பொலி மணியோசைக்கு ஒப்பானதாகும். பசும்பொன்னாலான எண்ணற்ற வளைவுகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. உயர்ந்த மற்றும் சிறந்த ஆயுதங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் எப்போதும் அதில் இருக்கின்றன” என்றார்.

மன்னன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தன் பெரிய போர்த்தேரைத் தயார் செய்தான்.(31) பிறகு அவன் தன் மனைவியை {அத்தேரின்} இடதுபுறத்திலும், தன்னை வலப்புறத்திலும் பூட்டிக் கொண்டான். மூன்று கைப்பிடிகளைக் கொண்டதும், ஒரே நேரத்தில் வஜ்ரம்போன்ற கடினத்தையும், ஊசிபோன்ற கூர்மையையும் கொண்ட முனையுடன் கூடியதுமான சாட்டையை அந்தத் தேரில் வைத்தான்[2].(32)தேவையான அனைத்தையும் அந்தத் தேரில் வைத்த மன்னன், அம்முனிவரிடம், “ஓ! புனிதமானவரே, தேர் எங்கே செல்ல வேண்டும்? ஓ!, பிருகுவின் மகன் {சியவனர்} ஆணையிடட்டும்.(33) நீர் குறிப்பிட விரும்பும் இடத்திற்கு உமது தேர் செல்லும்” என்றான்.

இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தப் புனிதர் அம்மன்னனிடம் {குசிகனிடம்},(34) “இங்கிருந்து படிப்படியாக மிக மெதுவாக இந்தத் தேர் இழுக்கப்பட வேண்டும். நீங்கள் இருவரும் என் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து, களைப்பேதும் நான் உணராத வகையில் செல்ல வேண்டும்.(35) மிக இனிமையான வகையில் நான் சுமக்கப்பட வேண்டும். உன் மக்கள் அனைவரும் அவர்களுக்கு மத்தியில் செல்லும் போது இதைப் பார்க்க வேண்டும். நான் சாலையில் செல்லும்போது என்னிடம் வரும் எந்த மனிதனும் விரட்டப்படக்கூடாது. நான் அனைவருக்கும் செல்வக் கொடை கொடுப்பேன்.(36) வழியில் என்னை அணுகும் பிராமணர்கள் அனைவருக்கும் அவர்களுடைய விருப்பங்களையும், ரத்தினங்களையும், செல்வத்தையும் மிச்சமில்லாமல் கொடுப்பேன்.(37) ஓ! மன்னா, எத்தயக்கத்திற்கு இடமின்றி இவை அனைத்தையும் நிறைவேற்றுவாயாக” என்றார்.

முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தன் பணியாட்களை அழைத்து அவர்களிடம்,(38) “இந்தத் தவசி ஆணையிடும் எதையும் நீங்கள் அச்சமில்லாமல் கொடுக்க வேண்டும்” என்றான்.

முனிவர் அந்தத் தேரில் சுமக்கப்பட்டபோது, அபரிமிதமான ரத்தினங்கள், தங்கம், அழகிய பெண்கள், ஆடுகள்,(39) நாணயமாக்கப்பட்ட மற்றும் ஆக்கப்படாத தங்கம், குன்றுகள் அல்லது மலைச்சிகரங்களுக்கு ஒப்பான பெரும் யானைகள், மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தன.(40) இயல்புக்கு மீறிய இக்காட்சியைக் கண்டு துயரடைந்த அந்த நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன. கூர்முனை கொண்ட அந்தச் சாட்டையைக் கொண்டு முனிவர் திடீரென மன்னனையும், ராணியையும் தாக்கினார்.(41) முதுகிலும், கன்னங்களிலும் இவ்வாறு தாக்கப்பட்டாலும் அந்த அரச இணையர் கலக்கத்திற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. மறுபுறம் அவர்கள் அம்முனிவரை முன்பு போலவே தொடர்ந்து சுமந்தனர்.(42) ஐம்பது இரவுகளாக உணவேதும் அவர்களது உதடுகளைக் கடக்கவில்லை என்பதால் தலை முதல் பாதம் வரை நடுங்கியபடியே மிகப் பலவீனமாக இருந்த அந்த வீர இணை எவ்வாறோ அந்தச் சிறந்த தேரை இழுத்துக் கொண்டிருந்தனர்.(43) சாட்டையால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு ஆழமான வெட்டுக் காயங்களை அடைந்த அந்த அரச இணையர் குருதியால் நனைந்தவர்களாகினர். உண்மையில், ஓ! ஏகாதிபதி, பூவுண்டாகுங்காலத்தைச் சேர்ந்த இரு கின்சுக {பலாச} மரங்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(44)

தங்கள் மன்னனும், ராணியும் அடைந்திருக்கும் அவல நிலையைக் கண்ட குடிமக்கள் பெரும் துயரால் பீடிக்கப்பட்டனர். முனிவர் தங்களைச் சபித்துவிடப் போகிறார் என்ற அச்சத்தில் நிறைந்திருந்த அவர்கள் துன்பத்திலும் அமைதி காத்தனர்.(45) ஈரிருவராக ஒன்று சேர்ந்த அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “தவங்களின் வலிமையைப் பார். நாம் அனைவரும் கோபமடைந்திருந்தாலும் இந்த முனிவரைப் பார்க்கவும் இயலாதவர்களாக இருக்கிறோம்.(46) தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட இந்தப் புனித முனிவர் பெரும் சக்திமிக்கவராக இருக்கிறார். அரசன் மற்றும் அரசியின் பொறையை {உறுதியான தாங்கும் திறனைப்} பார்.(47) களைப்பு மற்றும் பசியில் சோர்வுற்றிருந்தாலும் அவர்கள் இன்னும் தேரை இழுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்றனர். பிருகுவின் மகன் {சியவனர்}, குசிகனுக்கும் அவனது ராணிக்கும் இந்தத் துயரை உண்டாக்கினாலும், அவர்களிடம் நிறைவின்மை அல்லது கலக்கத்தின் எந்தக் குறியீட்டையும் காணத் தவறினார்”.(48)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவர் {சியவனர்}, அரசனும், அரசியும் கலங்கமடையாதிருப்பதைக் கண்டு, தாமே இரண்டாவது கருவூலத் தலைவன் {குபேரன்} என்பதைப் போல (மன்னனின் கருவூலத்தில் இருந்து அடையப்பட்ட செல்வத்தை) பெரிய அளவில் கொடையளிக்கத் தொடங்கினார்.(49) இச்செயலாலும் மன்னன் குசிகன் நிறைவின்மைக்கான எந்தக் குறியீட்டையும் காட்டவில்லை. (அந்தக் கொடைகளின் காரியத்தில்) முனிவர் ஆணையிட்டவாறே அவனும் செயல்பட்டான். இவை யாவற்றையும் கண்ட அந்தச் சிறந்த தவசி (அந்த அரச இணையரிடம்) மகிழ்ச்சியடைந்தார்.(50) அந்தச் சிறந்த தேரில் இருந்து கீழே இறங்கிய அவர், அந்த அரச இணையரைப் பூட்டுகளில் இருந்து விடுவித்தார்.(51)

உண்மையில் அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்}, மென்மையான, ஆழமான, மகிழ்ச்சி மிக்கக் குரலில், “உங்கள் இருவருக்கும் நான் ஒரு சிறந்த வரத்தைத் தர ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார்.(52)

அவர்களுடைய உடல்கள் சாட்டையால் துளைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் மின் மென்மையானவர்களாக இருந்தனர். அன்பால் உந்தப்பட்ட அந்தச் சிறந்த தவசி, ஓ! பாரதர்களின் தலைவா, அமுதத்துக்கு ஒப்பாகக் குணம் செய்யும் அறங்களைக் கொண்ட தமது கரங்களால் அவர்களை மென்மையாகத் தீண்டினார்.(53)

பிறகு அம்மன்னன் {குசிகன்}, “நானும், என் மனைவியும் களைப்பேதும் உணரவில்லை” என்றான். உண்மையில் அவர்களது களைப்பனைத்தும் முனிவரின் பலத்தால் விலகின, அதனால்தான் மன்னனால் முனிவரிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது.(54)

அவர்களுடைய நடத்தையில் மகிழ்ச்சியடைந்த சிறப்புமிக்கச் சியவனர், அவர்களிடம், “நான் இதற்கு முன்பு ஒருபோதும் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் சொல்வது போல்தான் நடக்க வேண்டும்.(55) கங்கையின் கரையிலுள் உள்ள இவ்விடம் மிக இனிமை நிறைந்ததும், மங்கலமிக்கதாகவும் இருக்கிறது. ஓ! மன்னா, நான் ஒரு நோன்பிருந்து சிறிதுகாலம் இங்கே வசிக்கப் போகிறேன்.(56) நீ உன் நகரத்திற்குத் திரும்பிச் செல். நீ களைத்திருக்கிறாய். நீ மீண்டும் இங்கு வரலாம். ஓ! மன்னா, நாளை உன் மனைவியுடன் இங்கே மீண்டும் வந்து என்னைக் காண்பாயாக.(57) கோபம் அல்லது துயரத்தின் வசப்படாதே. பெரும் வெகுமதியை நீ அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. எது உன்னால் விரும்பப்படுகிறதோ, எது உன் இதயத்தில் இருக்கிறதோ, அது நிச்சயம் நிறைவேறும்” என்றார்.(58)

முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய மன்னன் குசிகன், முக்கியப் பொருள் கொண்ட இந்த வார்த்தைகளை அந்த முனிவருக்கு மறுமொழியாகச் சொன்னான்.(59) {குசிகன்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, நான் கோபத்தையோ, துன்பத்தையோ வளர்ப்பதில்லை. ஓ! புனிதமானவரே, நாங்கள் உம்மால் தூய்மையடையச் செய்யப்பட்டு, உம்மால் புனிதமடைந்தோம். நாங்கள் மீண்டும் இளமையை அடைந்திருக்கிறோம். எங்கள் உடல்கள் அதிக அழகையும், பெரும் பலத்தையும் கொண்டிருப்பதைப் பாரும்.(60) உம்மால் சாட்டையைக் கொண்ட உண்டாக்கப்பட்ட காயங்களையும், தழும்புகளையும் காண முடியவில்லை. உண்மையில் என் மனைவியுடன் கூடிய நான் மிக நல்ல உடல்நிலையில் இருக்கிறேன்.(61) என் தேவி ஓர் அப்ரசஸைப் போன்ற அழகிய உடல்படைத்தவளாகிவிட்டதைப் பார்க்கிறேன். உண்மையில் அவள் இதற்கும் முன்பு கொண்டிருந்த இனிமையையும் காந்தியையும் கொண்டிருக்கிறாள்.(62) ஓ! பெரும் தவசியே, இவை அனைத்தும் உமது அருளால் ஏற்பட்டது. உண்மையில், ஓ கலங்கடிக்க முடியாத பலத்தைக் கொண்ட புனிதமான முனிவரே, இவையாவற்றிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை” என்றான்.(63)

மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட சியவனர், அவனிடம், “ஓ! ஏகாதிபதி, நாளை மீண்டும் இங்கே உன் மனைவியுடன் வருவாயாக” என்றார்.(64)

இந்த வார்த்தைகளுடன் அரசமுனியான குசிகன் விடைகொடுத்து அனுப்பப்பட்டான். அழகிய உடலைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அந்த முனிவரை வணங்கிவிட்டு தேவர்களின் இரண்டாம் தலைவனை {இரண்டாம் இந்திரனைப்} போலத் தன் தலைநகருக்குத் திரும்பிச் சென்றான்.(65) அமைச்சர்களும், புரோகிதரும் அவனை வரவேற்க வெளியே வந்தனர். அவனது துருப்பினரும், ஆடல் மகளிரும், அவனது குடிமக்கள் அனைவரும் அவ்வாறே வந்தனர்.(66) அவர்கள் அனைவராலும் சூழப்பட்டவனும், அழகு மற்றும் காந்தியால் சுடர்விடுபவனுமான மன்னன் குசிகன், வந்திகளும், மாகதர்களும் அவனது புகழ்பாட, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(67)

தன் நகரத்திற்குள் நுழைந்து, காலைச் சடங்குகள் அனைத்தையும் செய்து, தன் மனைவியுடன் சேர்ந்து உண்டான். பெரும் காந்தியைக் கொண்ட அந்த ஏகாதிபதி அவ்விரவை மகிழ்ச்சியாகக் கடத்தினான்.(68) அவர்கள் ஒவ்வொருவரும் தங்களில் மற்றவரை புது இளமை பெற்றவராகக் கண்டனர். துன்பங்கள் மற்றும் கவலைகள் ஏதுமற்ற அவர்கள் தங்களில் ஒவ்வொருவரையும் ஒரு தேவராகக் கண்டனர். அந்த முதன்மையான பிராமணரிடம் இருந்து வரமாகப் பெற்ற காந்தியுடனும், தாங்கள் கொண்டிருந்த அழகிய, இனிமையான வடிவங்களுடனும் அவர்கள் இருவரும் அவ்விரவைத் தங்கள் படுக்கையில் மகிழ்ச்சியாகக் கடத்தினர்.(69) அதே வேளையில், பிருகு குலத்தின் புகழைப் பெருகச் செய்பவரான அந்த முனிவர் {சியவனர்}, தமது யோக சக்தியினால், கங்கைக்கரையில் உள்ள அந்த இனிய காட்டை, அனைத்து வகைச் செல்வங்களும் நிறைந்ததும், தேவர்களின் தலைவனுடைய வசிப்பிடத்தின் அழகையும், காந்தியையும் விஞ்சும் வகையில் பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் இடமாக மாற்றினார்” {என்றார் பீஷ்மர்}.(70)

குசிகனிடம் நிறைவடைந்த சியவனர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 54-மாய மாளிகையையும், பல அற்புதக் காட்சிகளையும் கண்ட மன்னன் குசிகன்; தன் மனைவியிடம் முனிவரின் பெருமைகளைச் சொன்னது; குசிகனின் எண்ணங்களை மனத்தால் அறிந்த சியவனர் அவனுக்கு ஒரு வரமளிக்க முன்வந்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த இரவு கடந்ததும், விழித்தெழுந்த அந்த உயர் ஆன்ம மன்னன் {குசிகன்} தன் காலைச் சடங்குகளைச் செய்தான். தன் வசிப்பிடமாக முனிவரால் {சியவனரால்} தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் காட்டுக்கு அவன் தன் மனைவியின் துணையுடன் சென்றான்.(1) அங்கே வந்ததும் அந்த ஏகாதிபதி {குசிகன்}, முற்றிலும் பொன்னாலானதும் அரண்மனை போன்றதுமான ஒரு மாளிகையைக் கண்டான். ரத்தினங்களாலும், விலைமதிப்பற்ற கற்களாலும் ஆன ஆயிரம் தூண்களைக் கொண்ட அது {மாளிகை} கந்தர்வர்களின் நீர்மாடக்கூடம் போல இருந்தது[1].(2) குசிகன், அந்தக் கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வீக வடிவமைப்புக்கான சான்றுகளைக் கண்டான். மேலும் அவன் அழகிய பள்ளத்தாக்குகளுடன் கூடிய மலைகளையும், தாமரைகளுடன் கூடிய தடாகங்களையும் அங்கே கண்டார்;(3) ஓ! பாரதா, விலைமதிப்புமிக்க, ஆச்சரியகரமான பொருட்கள் நிறைந்தவையும், வாயில்கள் மற்றும் தோரணங்களோடு கூடியவையுமான மாளிகைகளையும் கண்டான். பொன்வயல்களுக்கு ஒப்பான வகையில் செழித்து வளர்ந்த புற்களுடன் கூடிய திறந்தவெளிகளையும், இடங்களையும் அங்கே கண்டான்.(4)மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சஹகாரங்கள் {ஒட்டுமாமரங்கள்}, கேதகங்கள் {தாழைகள்}, உத்தாலகங்கள் {குறும்பலா}, தவங்கள், அசோகங்கள், மலரும்நிலையில் உள்ள குந்தங்கள் {குறுக்கத்தி மரங்கள்}, அதிமுகங்களையும் {முல்லைக்கொடிகள்} அவன் கண்டான்.(5) சம்பகங்கள் {சண்பக மரங்கள்}, திலகங்கள் {திலகமரங்கள்}, பவ்யங்கள் {பலா மரங்கள்}, பனசங்கள் {மகிழ மரங்கள்}, வியாஞ்ஜுலங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணீகாரங்களையும் {கொன்றைமரங்கள்} அவன் அங்கே கண்டான்.(6) அழகாக வளர்ந்திருக்கும் சியாமங்கள், வாரணபுஷ்பங்கள் அஷ்டபடிகம் என்றழைக்கப்படும் கொடிகள் பலவற்றையும் மன்னன் கண்டான்.(7) மேலும் அம்மன்னன், பல்வேறு வகைத் தாமரங்களைப் பேரழகுடன் மலரும் மரங்களையும் (!), ஒவ்வொரு பருவகாலத்திற்கும் உரிய மலர்களையும் சுமக்கும் சில மரங்களையும் அங்கே கண்டான்[2]. தெய்வீகத்தேர்களையோ, அழகிய மலைகளையோ போலத் தெரிந்த பல மாளிகைகளையும் அவன் கவனித்தான்.(8)ஓ! பாரதா சில இடங்களில் குளிர்ந்த நீர் நிறைந்த தடாகங்களும், வேறு சில இடங்களில் வெண்ணீர் நிறைந்த தடாகங்களும் இருப்பதைக் கண்டான். பல்வேறு வகைச் சிறந்த இருக்கைகளும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளும்,(9) பொன் மற்றும் இரத்தினங்களால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையும், மதிப்புமிக்கவையுமான துணிகள் மற்றும் போர்வைகள் விரிக்கப்பட்டவையுமான கட்டில்களும் அங்கே இருந்தன. நன்கு சமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு ஆயத்தமாக உணவு வகைகளும், பானங்களும் அங்கே இருந்தன.(10) பேசும் கிளிகள், பெண் கிளிகள், பிரிஞ்சராஜங்கள் {வண்டுகள்}, கோகிலங்கள் {குயில்கள்}, சதபத்ரங்கள் {மரங்குத்திகள்}, கோயஷ்டிகங்கள் {நாரைகள்}, குக்குபங்கள் {காட்டுக் கோழிகள்},(11) மயில்கள், சேவல்கள், தாத்யுஹங்கள் {குருட்டுக் காக்கைகள்}, ஜீவஜீவகங்கள் {கவுதாரிகள்}, சக்கோரங்கள், குரங்குகள், அன்னங்கள், சாரசங்கள் {கொக்குகள்}, சக்கரவாகங்கள் {வாத்துகள்} ஆகியன அங்கே இருந்தன.(12)

ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியாக இருக்கும் அப்சரஸ்களும், மகிழ்ச்சியான கந்தர்வக்கூட்டங்களும் ஆங்காங்கே இருப்பதை அவன் கண்டான்.(13) வேறு சில கந்தர்வர்கள் தங்கள் அன்புக்குரிய மனைவிகளுடன் அங்கே விளையாடிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான். மன்னன் சில வேளைகளில் இந்தக் காட்சிகளைக் கண்டான், சில வேளைகளில் அவனால் காண முடியவில்லை (ஏனெனில் அவை அவனது கண்களுக்கு முன்னால் தோன்றி மறைபவையாக இருந்தன).(14) மென்மையான குரலிசைகளையும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களைத் தங்கள் சீடர்களுக்கு எடுத்துரைக்கும் ஆசான்களின் இனிய குரல்களையும் அந்த ஏகாதிபதி கேட்டான். தடாகங்களில் விளையாடும் வாத்துகளின் இணக்கமான கொக்கரிப்புகளையும் கேட்டான்.(15)

இத்தகைய அழகிய காட்சிகளைக் கண்ட மன்னன் தனக்குள்ளேயே நினைக்கத் தொடங்கினான், “இது கனவா? இவை யாவும் என் மனத்தின் மயக்கத்தால் ஏற்படுகின்றனவா? அல்லது இவையனைத்தும் உண்மைதானா?(16) ஓ!, நான் என் பூலோகவாசத்தைக் கைவிடாமலேயே சொர்க்கத்தின் இன்பத்தை அடைந்துவிட்டேன். ஒருவேளை இஃது உத்தரக் குருக்களின் புண்ணிய நாடா? அல்லது அமராவதி என்றழைக்கப்படும் தேவர்த்தலைவனின் வசிப்பிடமா?(17) ஓ! காண்பதற்கினிய அற்புதக் காட்சிகளைப் பார்க்கிறேன்” {என்று நினைக்கத் தொடங்கினான்}. இவ்வகையில் நினைத்த அந்த ஏகாதிபதி இறுதியாக அந்த முதன்மையான முனிவரை {சியவனரைக்} கண்டான்.(18) ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அமைக்கப்பட்ட தூண்களுடன் கூடிய அந்தப் பொன்மாளிகையில் ஒரு விலைமதிப்புமிக்கச் சிறந்த படுக்கையில் பிருகுவின் மகன் {சியவனர்} கிடந்தார்.(19) தன் மனைவியுடன் கூடிய மன்னன், மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் முனிவர் கிடந்த படுக்கைக்குச் சென்றான். எனினும், சியவனர் தாம் கிடந்த படுக்கையுடன் சேர்ந்து விரைவில் மறைந்துபோனார்.(20)

மன்னன் காட்டின் மற்றொரு பகுதியில், அம்முனிவர் குசப்புல்லாலான விரிப்பில் {தர்ப்பாஸனத்தில்} அமர்ந்து கொண்டு, மனத்தில் சில உயர்ந்த மந்திரங்களை உரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(21) இவ்வாறே அம்முனிவர் தமது யோக சக்தியால் மன்னனை மலைப்படையச் செய்தார். அந்தக் கணத்திலேயே அந்த இனிய காட்டில் இருந்த அப்சரஸ் கூட்டங்களும், கந்தர்வக்கூட்டங்களும், அந்த அழகிய மரங்கள் அனைத்தும் மறைந்தன.(22) கங்கையின் கரை எப்போதும் போன்ற அமைதியை அடைந்து, குசப்புற்களாலும், எரும்புப்புற்றுகளாலும் மறைந்திருக்கும் பழைய தன்மையை அடைந்தது.(23) மன்னன் குசிகன், அந்த அற்புதக் காட்சியையும், உடனே அது மறைந்து போனதையும் தன் மனைவியுடன் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(24)

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன்கூடிய அம்மன்னன் தன் மனைவியிடம், “ஓ! இனியவளே, எங்கும் காண முடியாத இனிமையான காட்சிகள் பலவற்றை நாமிருவரும் கண்டோம்.(25) இவையனைத்தும் பிருகு மகனின் {சியவனரின்} அருளாலும், அவருடைய தவப் பலத்தாலும் நடைபெறுகிறது. ஒருவன் தன் கற்பனையில் காணும் அனைத்தையும் தவங்களின் மூலம் அடைய முடிகிறது.(26) மூவுலகங்களின் ஆட்சியுரிமையைவிடத் தவங்கள் மேன்மையானவை. நன்கு செய்யப்பட்ட தவங்களின் மூலம் விடுதலையையே {முக்தியையே} அடைய முடியும். உயர் ஆன்மா கொண்டவரும், தெய்வீகமானவருமான முனிவர் சியவனருடைய தவங்களின் வலிமையைப் பார். அவர் விரும்பினால் (இப்போது இருப்பதைத் தவிர இன்னும்) வேறு உலகங்களையும் உண்டாக்க முடியும்.(27,28) புனிதமான வாக்கு, புத்தி மற்றும் செயல்களை அடைவதற்காக மட்டுமே இவ்வுலகில் பிராமணர்கள் பிறக்கிறார்கள். சியவனரைத் தவிர வேறு யாரால் இவை அனைத்தையும் செய்ய முடியும்?(29) அரசுரிமையை எளிதில் அடைந்துவிடலாம். ஆனால் பிராமண நிலையானது அடைய முடியாததாகும். ஒரு பிராமணரின் பலத்தின் மூலமே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகளைப் போல நாம் ஒரு தேரில் பூட்டப்பட்டோம்” என்றான்.(30)

மன்னனின் மூளையில் தோன்றிய இந்நினைவுகளைச் சியவனர் அறிந்தார். மன்னனின் சிந்தனைகளை உறுதி செய்து கொண்ட முனிவர் அவனிடம் {குசிகனிடம்} “விரைவாக இங்கே வா” என்று சொன்னார்.(31)

இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும், ராணியும் பெரும் தவசியை அணுகி வழிபாட்டுக்குத்தகுந்த அவரிடம் தலைவணங்கி நின்றனர்.(32) ஓ! மனிதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு ஆசிகூறி அம்மன்னனுக்கு ஆறுதல் அளித்து, “இந்த இருக்கையில் அமர்வாயாக” என்றார்.(33)

இதன் பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பிருகுமகன் {சியவனர்} எவ்வகை வஞ்சனையோ, பொய்மையோ இன்றி மென்மையான சொற்கள் பலவற்றால் மன்னனை நிறைவடையச் செய்து,(34) “ஓ! மன்னா, செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட அறிவுப்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும் நீ முற்றிலும் அடக்கியிருக்கிறாய். அதன் காரணமாகவே நான் உனக்காகத் தயாரித்த கடுஞ்சோதனைகளில் இருந்து சிறுதீங்குமின்றி நீ வெளியேறியிருக்கிறாய்.(35) ஓ! மகனே, வாக்குடைய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டுத் துதிக்கப்பட்டேன். உன்னிடம் எப்பாவமும் இல்லை, மிகச் சிறிய பாவமும் உன்னிடம் இல்லை.(36) ஓ! மன்னா, எனக்கு விடை கொடுப்பாயாக, நான் எந்த இடத்தில் இருந்து வந்தேனோ அங்கே இப்போது திரும்பிச் செல்லப் போகிறேன். ஓ! ஏகாதிபதி, நான் உன்னிடம் பெரும் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குத் தரத் தயராக இருக்கும் வரத்தை ஏற்பாயாக” என்றார்.(37)

குசிகன் {சியவனரிட, “ஓ! புனிதமானவரே, நெருப்புக்கு மத்தியில் வசிப்பவனைப் போலவே நான் உமது முன்னிலையில் இருந்தேன். ஓ! பிருகு குலத்தின் தலைவரே, நான் இன்னும் எரியாமல் இருப்பதே போதுமானதாகும்.(38) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, இதுவே நான் அடைந்த உயர்ந்த வரமாகும். ஓ! பாவமற்றவரே, ஓ! பிராமணரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததும், நானும் என் குலம் அழியாமல் மீட்டதும் என் வழக்கில் சிறந்த வரங்களாகும்.(39) ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளுக்கான குறிப்பிடத்தகுந்த சான்றாக இதை நான் கருதுகிறேன். என் வாழ்வின் இலக்கு நிறைவேறியது. என் அரசுரிமைக்கான கதியாகவும் இதையே நான் கருதுகிறேன். என் தவங்களின் உயர்ந்த கனியாகவும் நான் இதையே கருதுகிறேன்.(40) ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, நீர் என்னிடம் நிறைவடைந்திருந்தால் என் மனத்தில் உள்ள ஐயங்கள் சிலவற்றை விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(41)

சியவனர் அருளிய வரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 55-ன் மனத்தில் இருந்த ஐயங்கள் அனைத்தையும் சியவனரிடம் கேட்ட குசிகன்; தமது செயல்பாடுகளுக்கான காரணங்களைக் குசிகனுக்கு விளக்கிச் சொல்லி அவனுக்கு வரமளித்த சியவனர்…

சியவனர் {மன்னன் குசிகனிடம்}“நீ என்னிடம் இருந்து ஒரு வரத்தை ஏற்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, உன் மனத்தில் இருக்கும் ஐயம் என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்” என்றார்.(1)

குசிகன் {முனிவர் சியவனரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பிருகுவின் மகனே, நீர் என்னிடம் நிறைவடைந்தீரானால், என் அரண்மனையில் சில காலம் நீர் வசித்த நோக்கத்தை எனக்குச் சொல்வீராக, அதை நான் கேட்க விரும்புகிறேன். என்னால் உமக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் பக்கம் திரும்பாமல் இருபத்தோரு நாட்கள் உறங்கியதில் உமது நோக்கம் என்ன?(2) மேலும், ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த அறையை விட்டுச் சென்றது ஏன்?(3) மேலும், வெளிப்படையான காரணம் ஏதும் இல்லாமல் ஏன் மறைந்தீர்? பிறகும் மீண்டும் ஏன் மறைந்தீர்? ஓ! கல்விமானான பிராமணரே, முன்பைப் போலவே மீண்டும் இருபத்தோரு நாட்கள் ஏன் படுக்கையில் கிடந்து உறங்கினீர்?(4) உமது நீராட்டத்திற்காக உம் மீது நாங்கள் எண்ணெய் பூசியதும் என்ன காரணத்தினால் நீர் சென்றுவிட்டீர்? பல்வேறு வகையான உணவு வகைகளை என் அரண்மனையில் திரட்டச் செய்துவிட்டு, அதன்பிறகு தீயின் துணையுடன் அவற்றை ஏன் எரித்தீர்?(5)

திடீரென என் தேரில் என் நகரில் நீர் செய்த பயணத்திற்கான காரணம் என்ன? அவ்வளவு செல்வத்தைக் கொடையளித்ததில் உமது நோக்கம் என்ன? உமது யோக பலத்தால் உண்டான காட்டில் உள்ள அதிசயங்களை எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(6) உண்மையில், ஓ! பெருந்தவசியே, பொன்னாலான மாட மாளிகைகள் பலவற்றையும், ரத்தினங்கள் மற்றும் கற்களாலான சட்டங்களால் தாங்கப்படும் படுக்கைக்ள பலவற்றையும் எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(7) அந்த அதிசயங்கள் அனைத்தும் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போனது ஏன்? இவை யாவற்றின் காரணங்களையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ!பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, உமது செயல்கள் இவ்வளவையும் நினைத்து நான் மீண்டும் மீண்டும் திகைப்படைகிறேன்.(8) உம்மில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையும் நான் காணத்தவறுகிறேன். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, உமது செயல்கள் அனைத்தையும் குறித்த உண்மைகளை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {குசிகன்}.(9)

சியவனர் {மன்னன் குசிகனிடம்}, “நான் செய்த இச்செயல்கள் அனைத்தையும் என்னைச் செய்யத் தூண்டிய காரணங்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, உன்னால் கேட்கப்பட்டுப் பிறகு உன்னைத் தெளிவடையச் செய்ய என்னால் மறுக்க முடியாது.(10) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் தேவர்கள் அனைவரும் கூடியிருந்தபோது, பெரும்பாட்டனான பிரம்மன் சில வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மன்னா, நான் அவற்றைக் கேட்டேன், அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(11) {பிரம்மன்}, “பிரம்ம, க்ஷத்திரிய சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் விளைவால் என் குலத்தில் கலப்பு நேரப் போகிறது” {என்றான் பிரம்மன்}[1]. ஓ! மன்னா, உன் பேரன் பெரும் சக்தியும் பலமும் கொண்டவனாக இருப்பான்.(12) இதைக் கேட்டதும், உன் குலத்தை அழிக்கும் தீர்மானத்துடன் நான் இங்கே வந்தேன். ஓ! குசிகா, உண்மையில் உன் குலத்தை முற்றாக அழித்து, உன் வழித்தோன்றல்கள் அனைவரையும் சாம்பலாக்கவே நான் வந்தேன்[2].(13) ஓ! ஏகாதிபதி, இந்நோக்கத்தால் தூண்டப்பட்டு உன் அரண்மனைக்கு வந்த நான் உன்னிடம், “நான் ஒரு நோன்பை நோற்கப் போகிறேன். என்னைக் கவனித்துக் கொண்டு கடமையுணர்வுடன் தொண்டு செய்வாயாக” என்றேன்.(14) எனினும் உன் வீட்டில் நான் வசித்திருந்தபோது, உன்னிடம் நான் எந்தக் களங்கத்தையும் காணத் தவறினேன். ஓ! அரசமுனியே, அந்தக் காரணத்தினால்தான் நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய். இல்லையெனில் இறந்தோருடன் நீ ஏற்கனவே கணக்கிடப்பட்டிருப்பாய்.(15)இந்தத் தீர்மானத்துடன், நானே எழுவதற்கு முன் யாராவது என்னை விழிப்படையச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் இருபத்தோரு நாட்கள் உறங்கினேன்.(16) எனினும், நீயும் உன் மனைவியும் என்னை விழிப்படையச் செய்யவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன்.(17) படுக்கையில் இருந்து எழுந்து உங்களிடம் ஏதும் பேசாமலேயே நான் அந்த அறையை விட்டு வெளியே சென்றேன். ஓ! ஏகாதிபதி, நீ என்னைக் கேட்பாய், அதனால் உன்னைச் சபிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே நான் அதைச் செய்தேன்.(18) பிறகு நான் என்னை மறைத்துக் கொண்டு, உன் அரண்மனையின் ஓர் அறையில் மீண்டும் என்னை வெளிப்படுத்திக் கொண்டு மீண்டும் இருபத்தோரு நாட்கள் யோகத்துயில் கொண்டேன்.(19) என்னைத் தூண்டிய நோக்கம் இதுதான். பசியாலும், களைப்பாலும் கோபமடையும் நீங்கள் இருவரும் நான் விரும்பாததைச் செய்வீர்கள் என்று நினைத்தேன். இந்த நோக்கத்துடன்தான் நான் உன்னையும் உன் மனைவியையும் பசியால் பீடிக்கச் செய்தேன்.(20)

எனினும், ஓ! மன்னா, உன் இதயத்தில் சிறு கோப உணர்ச்சியோ, எரிச்சலோ எழுவில்லை. ஓ! ஏகாதிபதி இதனால் நான் உன்னிடம் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.(21) பல்வேறு உணவு வகைகளைக் கொண்டுவரச் செய்து, அவற்றுக்குத் தீ மூட்டியபோது, அதைக் கண்டு நீயும் உன் மனைவியும் கோபமடைவீர்கள் என்று நினைத்தேன். எனினும், என்னுடைய அந்தச் செயலையும் நீங்கள் பொறுத்தீர்கள்.(22) பிறகு, ஓ! ஏகாதிபதி, தேரில் ஏறிக் கொண்டு உன்னிடம், “நீயும், உன் மனைவியும் என்னைச் சுமப்பீராக” என்றேன். ஓ! மன்னா, நான் சொன்னதை நீங்கள் சிறு தயக்கமுமின்றிச் செய்தீர்கள். இதனால் நான் மகிழ்ச்சியால் நிறைந்தேன். நான் கொடுத்த செல்வக் கொடைகளும் உங்கள் கோபத்தைத் தூண்டவில்லை.(23,24) ஓ! மன்னா, உன்னிடம் நிறைவடைந்த நான், நீயும் உன் மனைவியும் இங்கே கண்ட அந்தக் காட்டை என் யோக பலத்தின் உதவியால் உண்டாக்கினேன். ஓ! ஏகாதிபதி, நான் கொண்டிருந்த நோக்கத்தைக் கேட்பாயாக.(25)

உன்னையும், உன் ராணியையும் நிறைவடையச் செய்வதற்காக உன்னை நான் சொர்க்கத்தில் ஒரு பார்வை காணச் செய்தேன். ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டில் நீ கண்ட அனைத்துப் பொருட்களும் சொர்க்கத்தின் முன்சுவையாகும்.(26) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீயும் உன் மனைவியும் பூமிசார்ந்த உடல்களைக் கொண்டிருந்தாலும், உங்களைச் சில காலம் சொர்க்கத்தின் காட்சிகள் சிலவற்றைக்  காணும்படி செய்தேன்.(27) தவங்களின் பலத்தையும், அறத்திற்காகச் சேமிப்பில் இருக்கும் வெகுமதியையும் காட்டுவதற்காகவே இவை யாவும் செய்யப்பட்டன. ஓ! ஏகாதிபதி, அந்த இனிமைநிறைந்த பொருட்களைக் கண்டதும் உன் இதயத்தில் எழுந்த ஆசையை நான் அறிவேன்.(28) ஓ! பூமியின் தலைவா, பூமியின் அரசுரிமையையும், சொர்க்கத்தின் அரசையும் அலட்சியம் செய்து, பிராமணத் தன்மையையும், தவங்களின் தகுதியையும் நீ அடைய விரும்பினாய்.(29) ஓ! மன்னா, இதையே நீ நினைத்தாய். பிராமண நிலையை அடைவது மிகக் கடினமாகும்; பிராமணனான பிறகு, ஒரு முனிவரின் நிலையை அடைவது மிகக் கடினமாகும்; முனிவரான பிறகு ஒரு தவசியாவது மிகக் கடினமாகும்.(30)

நான் உனக்குச் சொல்கிறேன், உன் ஆசை நிறைவடையும். ஓ! குசிகா, உன் பெயரால் {கௌசிகர் [விஷ்வாமித்ரர்] என்று} அழைக்கப்படும் பிராமணன் ஒருவன் உன்னில் இருந்து எழுவான். உன்னிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவன் பிராமண நிலையை அடைவான்.(31) ஓ! ஏகாதிபதி, உன் பேரன், பிருகுக்களின் சக்தியின் மூலம் நெருப்பின் காந்தியுடன் கூடிய ஒரு தவசியாக இருப்பான்.(32) அவன் மனிதர்கள் அனைவருக்கும், மூவுலகங்களில் வசிப்போருக்கும் எப்போதும் அச்சத்தை ஊட்டுவான். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்.(33) ஓ! அரச முனியே, உன் மனத்தில் இப்போது இருக்கும் அந்த வரத்தை ஏற்பாயாக. நான் விரைவில் புனித நீர்நிலைகள் அனைத்திற்கும் பயணம் புறப்பட {தீர்த்த யாத்திரை செல்ல} இருக்கிறேன். காலம் கடந்து போகிறது” என்றார் {சியவனர்}.(34)

குசிகன், “ஓ! பெருந்தவசியே, என் வழக்கில் நீர் என்னிடம் நிறைவடைந்திருப்பதே எனக்கு உயர்ந்த வரமாகும். நீர் சொன்னது நடக்கட்டும். ஓ! பாவமற்றவரே, என் பேரன் ஒரு பிராமணனாகட்டும்.(35) உண்மையில், ஓ! புனிதமானவரே, பிராமணத்வ நிலை என் குலத்தைப் பற்றட்டும். நான் இந்த வரத்தையே கேட்கிறேன். ஓ! புனிதமானவரே, மீண்டும் நான் உம்மை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(36) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, பிராமணத்வ நிலை எவ்வழியில் என் குலத்தைப் பற்றும்? எவன் என் நண்பனாக இருப்பான்? என் அன்பையும், மதிப்பையும் எவன் பெறுவான்?[3]” என்று கேட்டான் {குசிகன்}.(37)

விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமர் பிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 56-பிருகு குலத்திலும், குசிக குலத்திலும் நேரப்போகும் வர்ணக் கலப்புக் குறித்துக் குசிகனிடம் சொன்ன சியவனர்; விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமரின் பிறப்பை முன்கூட்டியே அறிவித்தது…

சியவனர் {மன்னன் குசிகனிடம்*}, “ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! ஏகாதிபதி, உன் குலத்தை அழிப்பதற்காக நான் இங்கே வந்த சூழ்நிலைகள் அனைத்தையும் நிச்சயம் நான் உனக்குச் சொல்ல வேண்டும்.(1) ஓ! மன்னா, வேள்விக் காரியங்களில் க்ஷத்திரியர்களுக்குப் பிருகு மகன்களின் துணை எப்போதும் வேண்டும் என்பது நன்கறியப்பட்டதே. தடுக்கப்பட முடியாத அளவுக்கான விதியின் மூலம் க்ஷத்திரியர்களும், பார்க்கவர்களும் வீழப் போகிறார்கள்.(2) ஓ! மன்னா, பிருகுவின் வழித்தோன்றல்கள் அனைவரையும் க்ஷத்திரியர்கள் கொல்லப் போகிறார்கள். விதி விதிக்கும் விதியால் பீடிக்கப்படும் அவர்கள் தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளையும் விட்டுவிடாமல் பிருகு குலத்தை அழிக்கப் போகிறார்கள்.(3)
*குசிகன்= கௌசிகன், கவுசிகன்

அவுர்வன் {ஔர்வன்} என்ற பெயரில் பிருகு குலத்தில் ஒரு முனிவன் தோன்றுவான். பெருஞ்சக்தியுடன் கூடிய அவன் நிச்சயம் நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் இருப்பான்.(4) அவன் மூன்று உலகங்களையும் எரிக்கப் போதுமான அளவுக்குக் கோபத்தை வளர்ப்பான். மலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய மொத்த உலகத்தையும் சாம்பலாகக் குறைக்கத்தக்கவனாக அவன் இருப்பான்.(5) சிறிது காலத்திற்குப் பிறகு அந்தக் கோப நெருப்பின் தழல்களை, கடலில் உலவும் குதிரையின் {வடவையின்} வாயில் வீசித் தணிக்கப் போகிறான்.(6) அவன் {ஔர்வன்} ரிசீகன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான். ஓ! பாவமற்றவனே, மொத்த ஆயுத அறிவியலும் உடல்கொண்ட வடிவத்துடன் அவனிடம் வந்து சேரும்.(7) விதி விதிக்கும் விதியின்படி மொத்த க்ஷத்திரிய குலத்தையும் அழிப்பதற்காக அவனிடம் வந்து சேரும். உள்ளொளியின் மூலம் அந்த அறிவியலைப் பெற்றுக் கொள்ளும் அவன், உயர் ஆன்மா கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனுமான அவனது மகன் ஜமதக்னிக்குத் தன் யோக பலத்தின் மூலம் அதை {அந்த ஆயுத அறிவியலைக்} கொடுப்பான். அந்தப் பிருகு குலப் புலியும் {ஜமதக்னியும்} அதைத் தன் மனத்தில் தாங்குவான்.(8,9)

ஓ! அற ஆன்மா கொண்டவனே, ஓ! பாரதர்களின் தலைவனே, ஜமதக்னி உன் குலத்தின் {குசிக குலத்தின்} மகிமையைப் பரவச் செய்வதற்காக அக்குலத்தில் ஒரு பெண்ணை மணப்பான்.(10) காதியின் மகளும், உன் பேத்தியுமானவளைத் தன் மனைவியாகக் கொள்ளும் அந்தப் பெரும் தவசி {ஜமதக்னி}, க்ஷத்திரிய வித்தகங்களுடன் கூடிய ஒரு மறுபிறப்பாள மகனை {பரசுமாரமனைப்} பெறுவான்.(11) உன் குலத்தில் பிராமணக் குணங்களுடன் கூடிய க்ஷத்திரியனாக ஒரு மகன் {விஷ்வாமித்திரன்} பிறப்பான். பேரறத்துடன் கூடிய அவன் காதியின் மகனாக {விஷ்வாமித்ரனாக} இருப்பான். விஷ்வாமித்ரன் என்ற பெயரில் அறியப்படும் அவன், தேவர்க்காசானான பிருஹஸ்பதிக்கு இணையான சக்தி கொண்டவனாகக் கருதப்படுவான்.(12) சிறப்புமிக்க ரிசீகனே, பெரும் தவங்களுடன் கூடிய இந்த க்ஷத்திரியனை {விஷ்வாமித்ரனை} உன் குலத்திற்குக் கொடுப்பான். (பிருகு குலத்தில் ஒரு க்ஷத்திரியன் மற்றும் உன் குலத்தில் ஒரு பிராமணன் என்று) மகன்களைப் பரிமாறிக் கொள்ளும் இக்காரியத்திற்கு இரு பெண்களே காரணமாக இருப்பார்கள்.(13) இவை யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணைப்படியே நடந்தேறும். இஃது ஒருபோதும் வேறுவகையாகாது. உன்னில் இருந்து மூன்றாம் வழித்தோன்றலைப் பிராமணத்வம் என்ற நிலை பற்றும். (திருமண உறவின் மூலம்) நீ பார்க்கவர்களுக்கு உறவினனாவாய்” என்றார் {சியவனர்}”.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம தவசியான சியவனர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் குசிகன் இன்பத்தால் நிறைந்து பின்வரும் சொற்களில் பதிலுரைத்தான்.(15) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, உண்மையில் அவன், “அப்படியே ஆகட்டும்” என்றான். பெருஞ்சக்தியுடன் கூடிய சியவனர் மீண்டும் மன்னனிடம் பேசி,(16) ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அவனைத் தூண்டினார். மன்னன், “மிக்க நன்று. ஓ! பெரும் தவசியே, என் விருப்பம் கனியும் நிலையை நான் உம்மிடம் இருந்து பெறுவேன்.(17) என் குலம் பிராமணத்வ நிலை கொண்டதாகட்டும். அஃது எப்போதும் தன் இதயத்தில் அறத்தை நிலைநிறுத்திக் கொள்ளட்டும்” என்றான். இவ்வாறு வேண்டப்பட்ட தவசி சியவனர், மன்னனின் வேண்டுதலை அருளி,(18) அந்த ஏகாதிபதியிடம் விடைபெற்றுக் கொண்டு தாம் எண்ணியிருந்த புனிதநீர்நிலைகளுக்கான பயணத்திற்குப் புறப்பட்டார். ஓ! பாரதா, பிருகுக்களும், குசிகர்களும் {கௌசிகர்களும்} எவ்வாறு திருமணத்தின் மூலம் இணைந்தனர் என்பது குறித்த உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், ஓ! மன்னா, முனிவர் சியவனர் சொன்னவாரே அனைத்தும் நடந்தன. (பிருகு குலத்தில்) ராமர் {பரசுராமர்} பிறப்பும், (குசிக (கௌசிக) குலத்தில்) விஷ்வாமித்ரர் பிறப்பும் சியவனர் குறிப்பிட்ட வழியிலேயே நடந்தேறின” {என்றார் பீஷ்மர்}.(20)

தவமும் கொடையும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 57-தவம், கொடை ஆகியவற்றின் சிறப்புக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, உமது சொற்களைக் கேட்டு நான் திகைப்படைகிறேன். பெருஞ்செழிப்பைக் கொண்டிருந்த எண்ணற்ற மன்னர்கள் அனைவரும் இப்போது இந்தப் பூமியில் இல்லாததை நினைத்து என் இதயம் துயரால் நிறைகிறது.(1) ஓ! பாரதரே, ஓ! பாட்டா, நான் பூமியை வென்று, நூற்றுக்கணக்கான நாடுகளை அடைந்திருந்தாலும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்றிருப்பதை நினைத்து துயரடைகிறேன்.(2) ஐயோ, எங்களால் கணவர்களையும், மகன்களையும், தாய்மாமன்களையும், சகோதரர்களையும் இழந்திருக்கும் முதன்மையான பெண்மணிகளின் அவலநிலை என்னவாக இருக்கும்?(3) எங்கள் உறவினர்களும், நண்பர்களும், நலன்விரும்பிகளுமான குருக்களைக் கொன்றதால் நாங்கள் தலைகீழாக நரகில் மூழ்கப் போகிறோம். இதில் ஐயமேதும் கிடையாது.(4) ஓ! பாரதரே, நான் என் உடலைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்த விரும்புகிறேன். ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கதியை நோக்கில் கொண்டு நான் உம்மிடம் இருந்து போதனைகளைப் பெற விரும்புகிறேன்” என்றான்”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம பீஷ்மர், யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தம் புத்தியின் துணையுடன் அவை குறித்துக் கூர்மையாகச் சிந்தித்து யுதிஷ்டிரனுக்கு மறுமொழி கூறினார்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. அது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாகவும், பெரும் புதிராகவும் இருக்கிறது. உயிரினங்கள் செய்யும் குறிப்பிட்ட செயல்கள் அல்லது அவை பின்பற்றும் ஒழுக்க வழிகளின் வெகுமதியாக மரணத்திற்குப் பின்னால் அடையும் கதிகள் குறித்துச் சொல்லப் போகிறேன்.(7) ஒருவன் தவங்களின் மூலம் சொர்க்கத்தை அடைகிறான். ஒருவன் தவங்களின் மூலம் புகழை அடைகிறான். ஓ! பலமிக்க மன்னா, ஒருவன் தவங்களின் மூலம் நீண்ட வாழ்நாளையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்.(8) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவங்களின் மூலம் ஞானம், அறிவியல், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, மேனி அழகு, செழிப்பு, அருள் நிலை ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(9) தவங்களின் மூலம் ஒருவன் செல்வத்தை அடைகிறான். பேசாத அமைதி நோன்பை {மௌனவிரதம்} நோற்பதன் மூலம் ஒருவன் மொத்த உலகையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வருகிறான். கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய அனைத்துவகைப் பொருட்களையும் அடைகிறான். தீக்ஷை சடங்கைச் செய்வதன் {வேள்விதீக்ஷை செய்வதன்} மூலம் ஒருவன் நல்ல உயர்ந்த குடும்பத்தில் பிறக்கிறான்.(10)

(சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு தங்கள் வாழ்வைக் கழிப்பவர்கள் நாட்டையும், அரசு உரிமையையும் அடைவதில் வெல்கிறார்கள். செடி மற்றும் மரங்களின் இலைகளைத் தங்கள் உணவாக உண்டு வாழ்வோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(11) நீரை மட்டுமே உண்டு வாழும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறான். ஒருவன் தனது ஆசானுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் கல்வியை அடைகிறான். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாள்தோறும் சிராத்தங்கள் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பிள்ளைகளை அடைகிறான்.(12) கீரை மற்றும் காய்கறிகளில் தீக்ஷை {சாக விரதம்} நோற்கும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களை அடைகிறான். புற்கள் மற்றும் துரும்புகளை உண்டு வாழ்பவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தேவையான சடங்குகளுடன் மும்முறை நீராடும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான மனைவிகளை அடைகிறான். வெறும் காற்றை மட்டுமே குடிக்கும் ஒருவன் பிரஜாபதியின் உலகவாசத்தை அடைகிறான்.(13)

ஒவ்வொரு நாளும் நீராடி, இரு சந்தி வேளைகளிலும் புனித மந்திரங்களை உரைக்கும் பிராமணன், தக்ஷனின் நிலையை அடைகிறான் {நெடுங்காலம் உயிர்வாழ்வான்}. காடு மற்றும் பாலைவனத்தில் உள்ள தேவர்களை வழிபடுவதன் மூலம் ஒருவன் நாட்டையோ, அரசுரிமையையோ அடைகிறான். நீண்ட உண்ணா நோன்பின் மூலம் உடலைக் கைவிடும் நோன்பை நோற்கும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(14) தவச் செல்வத்துடன் கூடிய ஒருவன் எப்போதும் தன் நாட்களை யோகத்தில் கடத்துவதால், நல்ல படுக்கைகள், இருக்கைகள் மற்றும் வாகனங்களை அடைகிறான். சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைவதன் மூலம் உடலைக் கைவிடும் ஒருவன், பிரம்மலோகத்தில் மதிப்பிற்குரிய பொருளாகிறான்.(15) கடினமாக உள்ள வெறுந்தரையில் {கட்டாந்தரையில்} கிடப்பவர்கள், வீடுகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளை உடுத்துபவர்கள் நல்ல ஆடை மற்றும் ஆபரணங்களை அடைகிறார்கள்.(16)

இனிமையான சுவைகள் பலவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பை ஈட்டுவதில் வெல்கிறான். இறைச்சி மற்றும் மீனைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைக் கொண்ட பிள்ளைகளைப் பெறுகிறான்.(17) {நீரில் வசிக்கும்} உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் சில காலம் கழிக்கும் ஒருவன் சொர்க்கத்தின் தேவனாகவே ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வாய்மை பேசும் மனிதன், தேவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடுவதில் வெல்கிறான்.(18) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன், தனது உயர்ந்த சாதனைகளின் விளைவால் பெரும் புகழை ஈட்டுகிறான். கொடூரம் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைகிறான். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், அரசுரிமையையும், பிராமணன் என்ற உயர்ந்த நிலையையும் அடைகிறான்.(19) நீரையும், பிற பானங்களையும் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் உயர்ந்த சாதனையின் விளைவாக ஒருவன் நித்தியமான புகழை ஈட்டுகிறான். உணவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களை அடைகிறான்.(20)

(தீங்கிழைக்காமல் தவிர்ப்பதன் மூலம்) உயிரினங்கள் அனைத்திற்கும் அமைதியான நிலையைக் கொடுக்கும் ஒருவன் ஒவ்வொரு துயரத்தில் இருந்து விடுபடுகிறான். தேவர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், தெய்வீக அழகையும் அடைகிறான்.(21) மக்கள் அடிக்கடி செல்லக்கூடியவையும், இருளாக இருப்பவையுமான இடங்களுக்கு விளக்கை அளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல பார்வையை அடைகிறான். நல்ல மற்றும் அழகிய பொருட்களைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் நல்ல நினைவையும், புத்தியையும் அடைகிறான்.(22) நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் பெரும் பரப்பில் பரவியிருக்கும் புகழை அடைகிறான். தலைமுடி மற்றும் தாடிகளை மழிக்காமல் தவிர்ப்பவர்கள் சிறந்த பிள்ளைகளை அடைவதில் வெல்கிறார்கள்.(23) ஓ! பாரதா, நோன்புகள், தீக்ஷை மற்றும் நீராடல்களை (விதிப்படி) பனிரெண்டு ஆண்டுகள் நோற்கும் ஒருவன், திரும்பிவராத வீரர்களால் அடையப்படும் உலகத்தை விட மேன்மையான உலகத்தை அடைகிறான்.(24) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஒருவன் தன் மகளைத் தகுந்த மணமகனுக்குப் பிரம்ம வடிவத்தின் படி அளிப்பதன் மூலம் {திருமணம் செய்து கொடுப்பதன் மூலம்} அவன் ஆண், பெண் பணியாட்களையும், ஆபரணங்களையும், வயல்களையும், வீடுகளையும் அடைகிறான்.(25)

ஓ! பாரதா, வேள்விகள் செய்வது மற்றும் நோன்புகள் நோற்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். கனிகளையும், மலர்களையும் கொடையளிப்பவன் மங்கல ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(26) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய ஆயிரம் பசுக்களைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான். சொர்க்கத்தில் நடந்த தேவர்களின் கூட்டத்தில் இதுவே சொல்லப்பட்டது.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொண்டுகளுடன் கூடியதும், கன்றுடன் சேர்ந்ததுமான ஒரு கபிலைப் பசுவைப் பால் கறப்பதற்கான வெண்கலக் குடத்தோடு கொடையளிப்பவன் பல்வேறு சாதனைகளைச் செய்பவனாகி, அந்தப் பசுவிடம் இருந்து தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், தான் செய்த கொடையின் விளைவால், அந்தப் பசுவின் உடலில் உள்ள முடிகளுடைய எண்ணிக்கையின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து, மறுமையில் (நரகத் துன்பங்களிலிருந்து) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தன் குலத்தின் ஏழாம் தலைமுறை வரை மீட்கிறான்[1].(29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கொம்புளுடன் கூடிய பசுவையும், அதனுடன் சேர்த்து பால் கறப்பதற்கான வெங்கலக் குடத்தையும், தங்கத்தால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துணியையும், எள்ளையும் {திலதேனுவையும்}, ஒரு தொகை பணத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்கும் மனிதன் வசுக்களின் உலகை அடைகிறான்[2].(30)கடலில் மூழ்கும் மனிதனை ஒரு படகின் பாய்மரம் காற்றைப் பற்றிக் கொண்டு மீட்பதைப் போலவே, பசுவைக் கொடையளிப்பவன் மறுமையில் நரகத்தின் ஆழ்ந்த இருளில் வீழும்போது, இம்மையில் செய்த செயல்களால் அவன் தடுக்கப்படுவான்.(31) தன் மகளைப் பிரம்ம வடிவ திருமண முறையின்படி தகுந்த மனிதனுக்கு அளிக்கும் ஒருவன், அல்லது ஒரு பிராமணனுக்கு நிலத்தைக் கொடையாக அளிக்கும் ஒருவன், அல்லது உரிய சடங்குகளின்படி (ஒரு பிராமணனுக்கு) உணவைக் கொடையளிக்கும் ஒருவன் புரந்தரலோகத்தை அடைவதில் வெல்கிறான்.(32) அனைத்துவகை அறைகலன்களுடன் ஒரு வீட்டை, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அனைத்து வகைச் சாதனைகளையும், நல்லொழுக்கத்தையும் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் உத்தரக் குருக்களின் நாட்டில் ஒரு வசிப்பிடத்தை அடைவான்.(33) வண்டியிழுக்கும் காளைகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான். தங்கத்தைக் கொடையளிப்பது சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. பசும்பொன்னைக் கொடையளிப்பது இன்னும் பெரிய பலனுக்கு வழிவகுக்கிறது.(34) குடையைக் கொடையளிக்கும் ஒருவன் மாட மாளிகையை அடைகிறான். காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல வாகனங்களை அடைகிறான். துணிகளைக் கொடையளிப்பது மேனி அழகைத் தருகிறது, நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் நறுமணமிக்க மனிதனாகிறான்.(35)

ஒரு பிராமணனுக்கு மலர்கள், கனிகள், செடிகள் மற்றும் மரங்களைக் கொடையளிப்பவன், எந்த உழைப்பும் இல்லாமலேயே, அழகிய பெண்கள் மற்றும் அபரிமிதமான செல்வத்துடன் கூடிய மாட மாளிகையை அடைவான்.(36) பல்வேறு வகைச் சுவைகளுடன் கூடிய உணவு மற்றும் பானங்களையும், இன்பத்திற்குரிய பிற பொருட்களையும் கொடையளிப்பவன், அத்தகைய பொருட்களை அபரிமிதமாக அடைவதில் வெல்கிறான். வீடுகள் மற்றும் துணிகளைக் கொடையளிப்பவன் அதே வகைப் பொருட்களைப் பெறுவான். இதில் ஐயமேதும் கிடையாது.(37) மலர்மாலைகள், தூபங்கள், நறுமணப் பொருட்கள், களிம்புகள், நீராடலுக்குப் பிறகு மனிதர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், மலர் வளையங்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டு, மேனி அழகையும் அடைந்து, பெரும் மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்ட உலகத்தில் இன்பமாக விளையாடுவான்.(38) ஓ! மன்னா, தானியம் சேமித்து வைக்கப்பட்டதும், படுக்கைகள் அமைக்கப்பட்டும், செல்வங்கள் நிரம்பியதும், மங்கலமானதும், இனிமை நிறைந்ததுமான ஒரு வீட்டை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அரண்மனை போன்ற வசிப்பிடத்தை அடைகிறான்.(39) நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டதும், சிறந்த போர்வை விரிக்கப்பட்டதும், தலையணைகளுடன் கூடியதுமான ஒரு நல்ல படுக்கையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளும், இனிமையான குணங்களைக் கொண்டவளுமான ஓர் அழகிய மனைவியை எந்த முயற்சியுமின்றி அடைவதில் வெல்வான்.(30) போர்க்களத்தில் வீரனின் படுக்கையை {வீரசயனம்} ஏற்கும் மனிதன், பெரும்பாட்டனான பிரம்மனுக்கு இணையானவனாவான். இதைவிட உயர்ந்த கதி வேறேதும் இல்லை. இதையே பெரும் முனிவர்கள் அறிவித்திருக்கிறார்கள்” என்றார் {பீஷ்மர்}”.(41)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன், தன் பாட்டனின் சொற்களைக் கேட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் கதியை விரும்பினாலும், ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதில் எந்த அருவருப்பையும் அதற்கு மேலும் வெளிக்காட்டவில்லை[3].(42) ஓ! மனிதர்களின் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அதன்பிறகு பாண்டுவின் பிற மகன்களிடம் பேசிய யுதிஷ்டிரன், “நமது பாட்டன் சொன்ன சொற்கள் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கட்டும்” என்றான்.(43) இதைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களுக்கு மத்தியில் இருந்த புகழ்பெற்ற திரௌபதியும் யுதிஷ்டிரனின் சொற்களை மெச்சி, “சரி” என்று சொன்னார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(44)

குளமும், மரங்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 58-மரங்களை நடுதல் மற்றும் குளம் வெட்டல் ஆகியவற்றால் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! குருக்களில் சிறந்தவரே, மரங்களை நடுதல் {தோட்டம் வைத்தல்} மற்றும் குளங்களைத் தோண்டுதல் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களை நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பார்வைக்கு இனிமையானதும், வளமிக்கதும், பல்வேறு வகை உலோகங்களால் அலங்கரிக்கப்பட்ட {காவிக் கற்களினால் விளங்கிக் கொண்டு} இனிமை நிறைந்த காட்சிகளுக்கு மத்தியில் அமைந்திருப்பதும், அனைத்து வகை உயிரினங்கள் வசிப்பதுமான ஒரு நிலமே முதன்மையான இடமாகக் கருதப்படுகிறது.(2) அத்தகைய நிலத்தில ஒரு குறிப்பிட்ட பகுதியே ஒரு குளத்தைத் தோண்டத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பல்வேறு வகைக் குளங்களை முறையான வரிசையில் நான் உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும் (அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நீரைப் பெருகச் செய்யும் நோக்கில்) குளங்களைத் தோண்டுவதால் உண்டாகும் பலன்களையும் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஒரு குளத்தைத் தோண்டச் செய்யும் மனிதன் மூவுலகங்களிலும் மதிப்புக்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவனாகிறான்.(4) நீர் நிறைந்த ஒரு குளமானது, ஒரு நண்பனின் வீட்டைப் போல ஏற்புடையதும், நன்மையானதும் ஆகும். அது சூரியனையே நிறைவடையச் செய்வதாகும். தேவர்களின் வளர்ச்சியிலும் அது பங்காற்றுகிறது. (தோண்டச் செய்பவனின்) புகழுக்கு வழிவகுக்கும் பொருட்கள் அனைத்திலும் அதுவே {குளம் வெட்டுதலே} முதன்மையானதாகும்.(5)

குளம் வெட்டுதல், அறம், பொருள், இன்பம் என்ற முத்தொகைக்கும் பங்காற்றுகிறது[1]. மதிப்பிற்குரிய மனிதர்கள் வசிக்கும் நிலத்தில் ஏற்படுத்தப்படுவதையே முறையாகத் தோண்டப்பட்ட குளமாக ஞானிகள் சொல்கின்றனர். உயரினங்களுக்குத் தேவையான நான்கு காரியங்களுக்கும் தொண்டாற்றுவதே ஒரு குளம் என்று சொல்லப்படுகிறது. மேலும், குளங்களே ஒரு நாட்டின் மிகச் சிறந்த எழிலாக அமைகின்றன.(6,7) தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், உரகர்கள், ராட்சசர்கள், மேலும் அசைவற்ற உயிரினங்களும் கூட நீர் நிறைந்த ஒரு குளத்தையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(8) எனவே, குளங்களால் உண்டாகும் பயன்களையும், அவற்றைத் தோண்டச் செய்த மனிதர்களுக்குக் கிட்டும் பலன்களையும் குறித்துப் பெரும் முனிவர்களால் சொல்லப்பட்டதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(9)மழைக்காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன் ஓர் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்த பலனை அறுவடை செய்கிறான் என்று ஞானிகள் சொல்கின்றனர்.(10) கூதிர்காலத்திலும் {சரத்காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், ஆயிரம் பசுக்களைக் கொடையளித்தவன் இம்மையில் அறுவடையச் செய்த பலனை அடைகிறான்.(11) குளிர் காலத்தில் {ஹேமந்த காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், அபரிமிதமான தங்கத்தைக் கொடையளித்து வேள்வி செய்தவனின் பலனை அடைகிறான்.(12) பனிக்காலத்தில் {சிசிரருது காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன், ஓர் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(13) வசந்த காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் அதிராத்ர வேள்வியைச் செய பலனை அடைகிறான்.(14) கோடைக்காலத்திலும் {க்ரீஷ்மகாலத்திலும்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான் என்று முனிவர்கள் சொல்கிறார்கள்.(15)

எவன் செய்த குளத்தில் பசுக்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வது காணப்படுகிறதோ, எதிலிருந்து அறவோர் நீர் எடுக்கின்றனரோ அந்த மனிதன் தன் குலம் முழுவதையும் காக்கிறான்.(16) எவனுடைய குளத்தில் பசுக்களும், பிற விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கின்றனரோ அந்த மனிதன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(17) ஒருவனுடைய குளத்தில் இருந்து எவ்வளவு நீர் குடிக்கப்படுகிறதோ, நீராடுவதற்காகப் பிறரால் எவ்வளவும் நீர் எடுக்கப்படுகிறதோ, அவ்வள்ளவும் குளத்தைத் தோண்டியவனின் நன்மைக்காகச் சேமிக்கப்பட்டு, மறுமையில் அவன் முடிவிலாத நாட்களுக்கு அவற்றை அனுபவிக்கிறான்.(18) ஓ! மகனே, நீரானது, குறிப்பாக மறுமையில் அடைவதற்கரிதானதாக இருக்கும். நீரைக் கொடையளிப்பது நித்திய மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.(19) இங்கே எள்ளைக் கொடையளிப்பாயாக. நீரைக் கொடையளிப்பாயாக. விளக்குகளைக் கொடையளிப்பாயாக. உயிரோடு இருக்கும்போதும், விழிப்புடன் இருக்கும்போதும் நீ உறவினர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பாயாக. மறுமையில் இச்செயல்களை உன்னால் செய்யவே இயலாது.(20)

ஓ! மனிதர்களின் தலைவா, அனைத்துக் கொடைகளையும்விட நீரைக் கொடையளிப்பது உயர்ந்ததாகும். பலனைப் பொறுத்தவரையில் இது பிற கொடைகள் அனைத்திலும் மேலானதாக இருக்கிறது. எனவே, நீ நீரைக் கொடையளிப்பாயாக.(21) இவ்வாறே குளங்கள் வெட்டுவதில் கிட்டும் உயர்ந்த பலன்களை முனிவர்கள் அறிவித்திருக்கின்றனர். இப்போது மரங்களை நடுதல் {தோட்டம் அமைத்தல்} குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(22) ஆறு வகை அசைவற்ற பொருட்கள் {தாவரங்கள்} சொல்லப்படுகின்றன. அவை விருக்ஷங்கள் {மரங்கள்}, குல்மங்கள் {புதர்கள்}, லதைகள் {கொடிகள்}, வள்ளிகள் {செடிகள்}, த்வக்ஷாரங்கள் {மூங்கில்}, பல்வேறு வகைத் திரினங்கள் {புற்பூண்டுகள்} ஆகியனவாகும்.(23) இவையே பல்வேறு வகைக் காய்கறிகள் {தாவரங்கள்}. அவற்றை நடுவதால் ஏற்படும் பலனை இப்போது கேட்பாயாக. மரங்களை நடுவதன் மூலம் ஒருவன், மனிதர்களின் உலகில் புகழையும், மறுமையில் மங்கலப் பலன்களையும் அடைகிறான்.(24) அத்தகைய மனிதன், பித்ருக்களின் உலகில் மெச்சி மதிக்கப்படுகிறான். அத்தகைய மனிதன் தேவர்களின் உலகில் வசிப்பவனாக மாறினாலும் அவனுடைய பெயர் மறையாது.(25)

மரங்களை நடும் மனிதன், தனது தந்தை வழி மற்றும் தாய் வழிகளில் உள்ள மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ மரங்களை நடுவாயாக.(26) ஒரு மனிதன் நடும் மரங்களே அவனுடைய பிள்ளைகளாகின்றன. இதில் ஐயமேதும் இல்லை. அத்தகைய மனிதன் இந்த உலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்திற்கு உயர்கிறான். உண்மையில், நித்தியமான அருள் உலகங்கள் பலவும் அவனுடையவை ஆகின்றன.(27) மரங்கள் தங்கள் மலர்களால் தேவர்களையும், தங்கள் கனிகளால் பித்ருக்களையும், தாங்கள் தரும் நிழலால் விருந்தினர்கள் மற்றும் அந்நியர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன.(28) கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் மரங்களையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(29)

மலர்களையும், கனிகளையும் சுமக்கும் மரங்கள் மனிதர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன. மரங்களை நடுபவன், பிள்ளைகளால் மீட்கப்படும் ஒரு தந்தையைப் போல மறுமையில் மரங்களால் காக்கப்படுவான்.(30) எனவே, தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், குளக்கரைகளில் மரங்களை நட்டுத் தன் பிள்ளைகளைப் போலவே அவற்றை வளர்க்க வேண்டும். அறிவு மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டின்படியும் ஒரு மனிதன் நடும் மரங்கள், அவற்றை நடுபவனின் பிள்ளைகளே ஆகின்றன.(31) ஒரு குளத்தை வெட்டும் பிராமணன், மரங்களை நடுபவன், வேள்விகளைச் செய்பவன் ஆகியோர் அனைவரும் வாக்கில் வாய்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைப் போலவே சொர்க்கத்தில் வழிபடப்படுகிறார்கள்.(32) எனவே, ஒருவன் குளங்களை வெட்டச் செய்து, மரங்களை நடச் செய்து, பல்வேறு வேள்விகளில் தேவர்களை வழிபட்டு வாய்மை பேச வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)

பிராமண வழிபாடு! – அநுசாஸனபர்வம் பகுதி – 59- பிராமண வழிபாடு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தின் தலைவரே, வேதங்களைத் தவிர வேறு சாத்திரங்களில் குறிப்பிடப்படும் கொடைகளில் உமது கருத்தின்படி மிகச் சிறந்தது எது?(1) ஓ! பலமிக்கவரே, இக்காரியத்தில் நான் பேராவலைக் கொண்டுள்ளேன். கொடையளித்தவனின் கொடை மறுமையில் அவனைப் பின்தொடர்வதைக் குறித்தும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அனைத்து உயிரினங்களுக்கும் அன்பையும், பற்றையும் உறுதியளிப்பதும், அனைத்து வகைத் தீங்குகளையும் செய்யாதிருப்பதும், துயரில் இருக்கும் மனிதனுக்கு அன்போடு உதவி செய்வதும், தாகத்துடன் வேண்டுபவனுக்கு வேண்டிய பொருட்களைக் கொடையளிப்பதும்,(3) தன்னால் அளிக்கப்படும் கொடையென்று ஒருபோதும் நினைக்காமலேயே கொடையாளிகளால் கொடுக்கப்படும் கொடைகளும் உயர்ந்த மற்றும் சிறந்த கொடைகளாகும்.(4) தங்கத்தைக் கொடையளிப்பது, பசுவைக் கொடையளிப்பது, பூமியைக் கொடையளிப்பது ஆகிய இவையே பாவம் போக்குபவையாகக் கருதப்படுகின்றன. கொடையளிப்பவனைத் தீயச் செயல்களில் இருந்து இவை காக்கின்றன.(5) ஓ! மனிதர்களின் தலைவா, நீ எப்போதும் அறவோருக்கு அத்தகைய கொடைகளை அளிப்பாயாக. கொடைகள் கொடையளிப்பவனைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் பாதுகாக்கின்றன என்பதில் ஐயமில்லை.(6)

தன் கொடைகள் நித்தியமானவையாக இருக்க வேண்டும் என விரும்பும் மனிதன், அனைவராலும் விரும்பப்படும் பொருட்கள் எதையும், தன் வீட்டில் உள்ள சிறந்த பொருட்கள் எதையும் தேவையுள்ளோருக்கு எப்போதும் கொடுக்க வேண்டும்.(7) ஏற்புடைய பொருட்களைக் கொடையளிப்பவனும், பிறருக்கு ஏற்புடையவற்றைச் செய்பவனுமான மனிதன், தனக்கு ஏற்புடைய பொருட்களை அடைவதில் எப்போதும் வெல்கிறான். அத்தகைய மனிதன் நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான்.(8) ஓ! யுதிஷ்டிரா, வறியவனும், ஆதரவற்றவனும், உதவியை வேண்டுபவனுமான ஒருவனுடைய விருப்பங்களைப் போலிப் பகட்டுடன் தன் சக்திக்கு ஏற்ற வகையில் செய்யாத மனிதன் கொடியவனும், இழிந்தவனுமாவான்[2].(9)துயரில் வீழ்ந்திருப்பவனும், ஆதரவற்றவனுமான ஒரு பகைவன் உதவியை வேண்டிக் கேட்கும்போதும், அத்தகைய பகைவனுக்கும் உதவி செய்பவன் உண்மையில் மனிதர்களில் முதன்மையானவனாவான்.(10) இளைத்தவனும், கல்விமானும், ஆதரவேதுமில்லாதவனும், துயரால் பலவீனமடைந்தவனுமான ஒரு மனிதனின் பசியை நிறைவடையச் செய்யும் ஒருவனுக்கு எந்த மனிதனும் (தகுதியில்) இணையாகமாட்டார்கள்.(11) ஓ! குந்தியின் மகனே, மகன்கள் மற்றும் மனைவி இல்லாதவர்களாக, துயரில் மூழ்கியவர்களாக இருந்தாலும் பிறரிடம் எவ்வகை உதவியையும் வேண்டாதவர்களும், நோன்புகளையும், கர்மங்களையும் நோற்பவர்களுமான அறம் சார்ந்த மனிதர்களின் துயரத்தை அனைத்து வழிமுறைகளின் மூலமும், சக்திக்குத் தகுந்த வகையிலும் ஒருவன் எப்போதும் விலக்க வேண்டும்.(12)

(கொடை பெறும் எதிர்பார்ப்பில்) தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஆசி கூறாதோரும், மதிப்புக்குத் தகுந்தவர்களும், எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், எவ்வகையிலும் வேண்டாமல் பெறும் பிச்சையை உண்டு வாழ்பவர்களுமான மனிதர்கள்,(13) கடும் நஞ்சுமிக்கப் பெரும் பாம்பாகக் கருதப்படுகிறார்கள். ஓ! பாரதா, அவர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் அவர்களிடமிருந்து எப்போதும் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. அவர்கள் முதன்மையான ரித்விக்குகளாத் தகுந்தவர்களாவர். ஒற்றர்கள் மற்றும் முகவர்கள் மூலம் அவர்களைக் கண்டுபிடிப்பாயாக.(14) ஓ! குருவின் மகனே, தேவையான அனைத்துப் பொருட்களுடனும், பணியாட்கள், நல்ல ஆடைகள், இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய பொருட்கள் அனைத்துடனும் கூடிய நல்ல வீடுகளைக் கொடையளிப்பதன் மூலம் அம்மனிதர்களை நீ கௌரவிக்க வேண்டும்.(15) அறச்செயல்களைச் செய்யும் அறவோர், வெகுமதிகளை அறுவடை செய்யும் விருப்பத்தால் இவ்வழியில் செயல்படாமல், தங்கள் கடமை என்ற நோக்கத்தால் உந்தப்பட்டு இத்தகைய கொடைகளை அளிக்க வேண்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, மேற்கண்ட அறவோர், பக்தி மற்றும் நம்பிக்கையின் மூலம் புனிதப்படுத்தப்பட்ட அந்தக் கொடைகளை ஏற்காமல் போகும் வகையில் நல்ல மனிதர்கள் செயல்படக்கூடாது.(16)

கல்வியில் குளித்தவர்களும், நோன்புகளில் குளித்தவர்களுமான மனிதர்கள் இருக்கிறார்கள். எவரையும் சாராமல் அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடைகின்றனர். கடும் நோன்புகளைக் கொண்ட இந்தப் பிராமணர்கள், தங்கள் பயிற்சிகளை எவருக்கும் அறிவிக்காமல், வேத கல்வி மற்றும் தவங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கிறார்கள்.(17) தூய நடத்தை கொண்டோரும், புலனடக்கம் கொண்டோரும், ஆசையைப் பொறுத்தவரையில் தாங்கள் மணந்து கொண்ட மனைவிகளோடு எப்போதும் நிறைவாக இருப்பவர்களுமான அந்த மனிதர்களுக்கு நீ எந்தக் கொடைகளை அளித்தாலும், நீ செல்லப் போகும் உலங்கங்கள் அனைத்திலும் உனக்குத் துணையாக இருக்கும் புண்ணியத்தை நீ அடைவாய்.(19) காலையிலும், மாலையிலும் புனித நெருப்புக்குள் முறையாக ஆகுதிகளை ஊற்றுவதன் மூலம் ஒருவன் வெல்லும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாள மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலமும் அதே தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் அறுவடை செய்யலாம்.(19) பக்தி மற்றும் நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதும், தக்ஷிணையுடன் கூடியதுமான ஒருவேள்வி உனக்காகக் காத்திருக்கிறது. அதுவே வேள்விகள் அனைத்திலும் உயர்ந்ததாகும். நீ கொடையளிக்கும்போது அந்த வேள்வி தடையில்லாமல் பாயட்டும் {நடக்கட்டும்}[3].(20)ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய மனிதர்களை நோக்கில் கொண்டு செய்யப்படும் வேள்வியில், பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் அத்தகைய மேன்மையான மனிதர்களுக்குப் பக்தியுடனும், வழிபாட்டுடனும் கொடுக்கப்படும் கொடைகளை அர்ப்பணிக்கத் தெளிக்கப்படும் நீரானது, ஒருவன் தேவர்களுக்குப் பட்டிருக்கும் கடனிலிருந்து அவனை விடுவிக்கிறது[4].(21) கோபவசப்படாதவர்கள் பிறருக்குச் சொந்தமான துரும்பையும் எடுக்க விருப்பம் இல்லாதவர்கள், இனிமையான வாக்கை உடையவர்கள் ஆகியோர் உயர்ந்த மதிப்புமிக்க வழிபாட்டைப் பெறத் தகுந்தவர்களாவர்.(22) அத்தகைய மனிதர்களும், (ஆசையிலிருந்து விடுபட்டவர்கள்) பிறரும் கொடுப்பவர்களை மதிப்பதில்லை. அதே போலக் கொடைகளைப் பெறவும் முனைவதில்லை. எனினும், கொடையாளிகள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதைப் போல அவர்களைப் பேணி வளர்க்க வேண்டும். நான் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். அவர்களிடம் இருந்து ஒருவனுக்குச் சொர்க்கமும், நரகமும் கிடைக்கலாம்[5].(23) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் வேதங்களை அறிந்திருக்கும்போதும், சீடர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும்போதும் அவ்வாறு ஆகிறார்கள். க்ஷத்திரிய சக்தியானது ஒரு பிராமணனோடு மோதும்போது அதன் பலத்தை இழக்கிறது என்பதில் ஐயமில்லை.(24)ஓ! யுதிஷ்டிரா, நீ ஒரு மன்னன் என்றும், பெரும் சக்தியைக் கொண்டவன் என்றும், செல்வாக்குடையவன் என்றும் நினைத்துக் கொண்டு, பிராமணர்களுக்கு எதுவும் கொடுக்காமல் உன் செல்வத்தை அனுபவிக்காதே.(25) ஓ! பாவமற்றவனே, உன் வகைக்கான கடமைகளைச் செய்து, உன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உன்னிடமுள்ள செல்வத்தைக்கொண்டு பிராமணர்களை வழிபடுவாயாக.(26) பிராமணர்கள் அவர்கள் விரும்பியவண்ணம் வாழட்டும். நீ எப்போதும் அவர்களுக்கு மதிப்புடன் தலைவணங்க வேண்டும். உன் பிள்ளைகளைப் போலவே அவர்களும் தங்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து எப்போதும் இன்பமாக இருக்கட்டும்.(27) ஓ! குருக்களில் சிறந்தவனே, நித்திய நிறைவுடன் கூடியவர்களும், உன் நலம் விரும்பிகளும், சிறிதளவிலேயே நிறைவடைபவர்களுமான அத்தகைய பிராமணர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கத்தகுந்தவன் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?(28)

கணவர்களைச் சார்ந்திருந்து அவர்களுக்குக் கீழ்ப்படிவதை மட்டுமே நித்திய கடமையாகக் கொண்ட பெண்களுக்கு அத்தகைய கடமையே ஒரே கதியென்பதைப் போலவே, பிராமணர்களுக்குத் தொண்டாற்றுவதே நமது நித்திய கடமையும், கதியுமாகும்.(29) மதிக்கப்படாத பிராமணர்கள், க்ஷத்திரியர்களில் உள்ள கொடுமைகளையும், பாவம்நிறைந்த பிற செயல்களையும் கண்டு நம்மைக் கைவிடுவார்களேயானால், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, (30) பிராமணர்களின் தொடர்பில்லாமல், குறிப்பாக வேத கல்வி கற்பது, வேள்விகள் செய்வது, மறுமையில் அருள் உலகங்களை எதிர்பார்ப்பது, பெரும் சாதனைகளைச் செய்வது ஆகியவற்றைச் செய்ய இயலாமலேயே நாம் இருந்தால் அப்படிப்பட்ட உயிரால் நமக்கென்ன பயன்?(31) இது தொடர்பான நித்திய நடைமுறை என்ன என்பதை நான் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா பழங்காலத்தில் க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குத் தொண்டாற்றினார்கள்.(32)

அதே போலவே வைசியர்கள் அந்தக் காலத்தில் அரச வகையினரை {க்ஷத்திரியர்களை} வழிபடுவதும், சூத்திரர்கள் வைசியர்களை வழிபடுவதும் நடைமுறையில் இருந்தது. இதையே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பிராமணன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாவான். அந்தப் பிராமணனைத் தீண்டவோ, அவனது முன்னிலைக்குச் செல்லவோ இயலாத சூத்திரன் தொலைவிலிருந்தே அவனுக்குத் தொண்டாற்றினான்.(33) க்ஷத்திரியனும், வைசியனும் மட்டுமே அந்தப் பிராமணனைத் தொட்டு, அல்லது அவனது முன்னிலைக்குச் சென்று அவனுக்குத் தொண்டாற்ற முடியும். பிராமணர்கள் மென்மையான இயல்பைக் கொண்டவர்களாவர். அவர்கள் நடத்தையில் உண்மை நிறைந்தவர்கள். அவர்கள் உண்மையான அறத்தைப் பின்பற்றுபவர்களாவர்.(34) கோபமாக இருக்கும்போது அவர்கள் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாவர். ஓ! யுதிஷ்டிரா, இத்தகைய இயல்பைக் கொண்டவர்களை மதிப்புடன் கீழ்ப்படிந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுவாயாக. உயர்ந்தவர்களுக்கும் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் ஆகியோரை விடப் பிராமணர்கள் மேன்மையானவர்களாவர்.(35) சக்தி மற்றும் வலிமையில் சுடர்விடும் க்ஷத்திரியர்களின் சக்தியும் தவங்களும் கூடப் பிராமணர்களிடம் சக்தியற்றுப் போகும்.(36)

பிராமணர்களைவிட என் தந்தையே கூட எனக்கு அன்புக்குரியவரல்ல. என் தாயும் கூட அவர்களைவிட எனக்கு அன்புக்குரியவளல்ல. ஓ! மன்னா, என் பாட்டனும் அவர்களைவிட எனக்கு அன்புக்குரியவரல்ல. என் உயிரும் அவர்களைவிட எனக்கு அன்புக்குரியதல்ல.(37) ஓ! யுதிஷ்டிரா, இந்தப் பூமியில் உன்னைவிட எனக்கு அன்புக்குரியது வேறேதுமில்லை. ஆனால், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவர்களாவர்.(38) ஓ! பாண்டுவின் மகனே, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். சந்தனு அடைந்த அருள் உலகங்கள் அனைத்தையும் எதைக் கொண்டு நான் அடைவேன் என நம்புகிறேனோ அந்த வாய்மையின் மீது ஆணையாக உறுதிகூறுகிறேன்.(39) அவர்களுக்கு முன்னிலையில் பிரம்மனோடு ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் புனித உலகங்களைத் தெளிவாக நான் காண்கிறேன். ஓ! மகனே, நான் அங்கே சென்று முடிவிலா நாட்களுக்கு அவர்களுடன் வசிக்கப் போகிறேன்.(40) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஓ! ஏகாதிபதி, பிராமணர்களை மதிக்கும் வகையிலும், அவர்களுக்குத் துணையாகவும் செய்திருக்கும் இந்தச் செயல்கள் அனைத்தையும் சிந்தித்தும், (என் ஆன்மக் கண்களால்) இந்த உலகங்களைக் கண்டும் நான் மகிழ்ச்சியால் நிறைகிறேன்” என்றார் {பீஷ்மர்}[6].(41)

கொடை வேள்வி! – அநுசாஸனபர்வம் பகுதி – 60-வேண்டி நிற்பவர்கள், வேண்டாதவர்கள் ஆகிய இருவரில் யாருக்குக் கொடுக்கும் கொடை சிறந்தது என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தூய நடத்தை, கல்வி, பிறப்பு மற்றும் குருதித் தூய்மை ஆகியவற்றில் இணையானவர்களான இரு பிராமணர்களில், ஒருவர் வேண்டுபவர், மற்றொருவர் வேண்டாதவர் என்ற வேறுபாட்டை மட்டும் கொண்டிருந்தால், அவ்விருவரில் எவருக்குக் கொடையளிப்பது சிறந்தது என நான் கேட்கிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, வேண்டும் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, வேண்டாமல் இருக்கும் ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் கொடையே பெரும் பலனைத் தருமெனச் சொல்லப்படுகிறது. மனநிறைவுடைய ஒரு மனிதனே அக்குணமில்லாதவனும், உலகின் புயல்கள் மற்றும் உணவுகளுக்கு மத்தியில் ஆதரவற்றவனுமான ஒருவனை விட நிச்சயம் அதிகத் தகுதி வாய்ந்தவன்.(2) ஒரு க்ஷத்திரியனின் உறுதியானது, அவன் பிறரைப் பாதுகாப்பதில் இருக்கிறது. பிராமணனின் உறுதியானது, அவன் {பிறரை} வேண்ட மறுப்பதில் இருக்கிறது. உறுதி, கல்வி, மனநிறைவு ஆகியவற்றைக் கொண்ட பிராமணன் தேவர்களை மகிழச் செய்கிறான்.(3) ஒரு வறிய மனிதனின் தரப்பில் வேண்டி நிற்கும் செயலானது பெரும் நிந்தனைக்குரியது என ஞானிகள் சொல்கின்றனர். பிறரை வேண்டும் இந்த மனிதர்கள் கள்வர்களையும், கொள்ளையர்களையும் போல உலகிற்குத் தொல்லை கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(4) வேண்டி நிற்கும் மனிதன் இறப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், கொடுப்பவன் இறப்பதாகச் சொல்லப்படுவதில்லை. கொடுப்பவன் வேண்டுபவனுக்கு உயிரைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, ஒரு கொடையின் மூலம் அந்தக் கொடையாளி தன்னையே மீட்டுக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.(5)

கருணை மிக உயர்ந்த குணமாகும். கருணையால் வழிநடப்படும் மக்கள் வேண்டி நிற்போருக்குக் கொடையளிக்கிறார்கள். எனினும், இரக்காதவர்களும், ஆனால் வறுமையிலும், துயரிலும் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக மதிப்புடன் அழைக்கப்பட வேண்டும்.(6) தங்கள் வகையில் முதன்மையானவர்களாகக் கருதப்பட வேண்டிய அத்தகைய பிராமணர்கள் உன்னுடைய நாட்டில் வாழ நேர்ந்தால், சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பாக அவர்களை நீ கருத வேண்டும்.(7) தவங்களில் சுடர்விடும் அவர்கள், மொத்த பூமியையும் எரிக்கவல்லவர்களாவர். ஓ! குரு குலத்தின் மகனே, அத்தகைய மனிதர்கள் பொதுவாக வழிபடப்படுவதில்லை என்றாலும், அவர்களை அனைத்து வழியிலும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாகவே கருத வேண்டும்.(8) ஞானம், ஆன்மப் பார்வை, தவம், யோகம் ஆகியவற்றுடன் கூடிய அத்தகைய மனிதர்கள் எப்போதும் நமது வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. ஓ! பகைவர்களை எரிப்பவனே, அத்தகைய பிராமணர்களை நீ எப்போதும் வழிபடுவாயாக.(9) எவரிடமும் வேண்டி நிற்காத முதன்மையான பிராமணர்களிடம் ஒருவன் தானே சுயமாகச் சென்று, பல்வேறு வகைச் செல்வங்களை அபரிமிதமாக அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். வேத கல்வியும், உயர்ந்தவையும், சிறந்தவையுமான நோன்புகளைக் கொண்டவருமான ஒரு பிராமணருக்குக் கொடையளிக்கும் மனிதன், ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் புனித நெருப்பில் முறையாக ஊற்றப்படும் ஆகுதிகளில் இருந்து பாயும் பலனை அடைவதில் வெல்கிறான்.(10)

ஓ! குந்தியின் மகனே, கல்வி, வேதங்கள் மற்றும் நோன்புகளின் மூலம் தூய்மையடைந்தவர்களும், சார்பற்று {சுதந்திரமாக} வாழ்பவர்களும், வேத கல்வியும், தவங்களும் வீட்டின் உச்சியில் இருந்து அறிவிக்கப்படாமல் மறைத்து வைத்திருப்பவர்களும், சிறந்த நோன்புகளை நோற்பவர்களுமான முதன்மையான பிராமணர்களை அழைத்து, பணியாட்கள், ஆடைகள், அறைகலன்கள், இன்பத்திற்குரிய பிற பொருட்கள் ஆகியவற்றுடன் கூடியவையும், நன்கு கட்டப்பட்டவையுமான இனிமையான வீடுகளை நீ அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(11,12) ஓ! யுதிஷ்டிரா, கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், நுணுக்கமான பார்வை கொண்டவர்களுமான அந்த முதன்மையான பிராமணர்கள், பக்தியுடனும், மதிப்புடனும் கொடுக்கப்படும் கொடைகளை மறுப்பதால் கொடையாளியை வருத்தமடையச் செய்யக் கூடாது என நினைத்து அவற்றை ஏற்கலாம்.(13) மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழவர்களைப் போல எந்தப் பிராமணர்கள் திரும்பி வருவதற்காக அவர்களுடைய மனைவிமார் காத்திருப்பார்களோ அவர்களை {அந்தப் பிராமணர்களை} நீ அழைக்க வேண்டும். அவர்களுக்கு உணவைக் கொடுத்த பிறகு, அவர்கள் வீடு திரும்பியதும், அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவர்களுடைய மனைவிமார், உணவுக்காக உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுக் காத்திருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும் வகையில் மேலும் அதிகமான உணவை நீ கொடையளிக்க வேண்டும்[1].(14) ஓ! மகனே, கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் கூடிய பிரம்மசாரிகள், முற்பகலில் ஒருவனுடைய வீட்டில் உண்பதன் மூலம் அவர்கள் எந்த வீட்டில் உண்கிறார்களோ அந்த இல்லறத்தானிடம் மூன்று நெருப்புகளையும் நிறைவடையச் செய்கிறார்கள் {அது ப்ராதஸ்ஸவனம் [காலை ஹோமம்]}.(15)-ஓ! மகனே, உன் இல்லத்தில் கொடை வேள்வி நடுப்பகலில் நடைபெறட்டும், அப்போது (உன் விருந்தினர்களுக்கு நன்றாக உணவு அளித்த பிறகு) நீ பசுக்களையும், தங்கத்தையும், ஆடைகளையும் கொடையளிப்பாயாக. நீ இவ்வாறு நடந்து கொள்வதால் நிச்சயம் தேவர்களின் தலைவனை {இந்திரனை} நிறைவடையச் செய்வாய். {இது மாத்யாந்நஸவனம்}.(16) தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களுக்குக் காணிக்கையளிப்பது மூன்றாம்வேள்வியாகும். இத்தகைய வேள்வியால் நிச்சயம் நீ விஸ்வேதேவர்களை நிறைவடையச் செய்வாய். {இது மூன்றாவது ஸவனம்}.(17) அனைத்து உயிரினங்களிடமும் கருணை, அனைத்து உயிரினங்களுக்கும் உரியதைக் கொடையளித்தல், புலனடக்கம், துறவு, உறுதி, வாய்மை ஆகியவையே அந்தக் கொடை வேள்வியின் இறுதி நீராடலாக {அவபிருதங்களாக} அமைகிறது.(18) ஓ! மகனே, பக்தி மற்றும் நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதும், பெரும் தக்ஷிணையுடன் கூடியதுமான இந்த வேள்வி உனக்காகக் காத்திருக்கிறது. கொடையால் அமைந்த இந்த வேள்வியே பிற வேள்விகள் அனைத்தையும் விஞ்சி இருக்கிறது. ஓ! மகனே, இந்த வேள்வி உன்னால் எப்போதும் செய்யப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(19)

நான்கில் ஒரு பங்கு! – அநுசாஸனபர்வம் பகுதி – 61-ஒரு மன்னன் கொடுக்கக்கூடிய கொடைகள் மற்றும் செய்யத்தக்க வேள்விகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, கொடைகள் மற்றும வேள்விகளுக்கான உயர்வான வெகுமதிகளை ஒருவன் எங்கே அடைகிறான் என்பதைக் குறித்து விவரமாக அறிய விரும்புகிறேன். அவ்வெகுமதிகள் இம்மையில் ஈட்டப்படுகின்றனவா? மறுமையில் வருமா? இவை இரண்டில் மேன்மையான பலனை உண்டாக்கவல்லதாக எது சொல்லப்படுகிறது? யாருக்குக் கொடைகள் அளிக்கப்பட வேண்டும்? எந்த வகையில் கொடைகளும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்? எப்போது அவை செய்யப்பட வேண்டும்? ஓ! கல்விமானான ஐயா, நான் உம்மைக் கேட்கிறேன். கொடைகளுக்கான கடமை குறித்து என்னிடம் உரையாடுவீராக.(1,2) ஓ! பாட்டா, நான் உம்மைக் கேட்கிறேன், வேள்வி மேடையில் கொடுக்கப்படும் கொடைகள், அல்லது அந்த இடத்திற்கு வெளியே கொடுக்கப்படும் கொடைகள் ஆகியவற்றில் எது உயர்ந்த வெகுமதிக்கு வழிவகுக்கும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, பொதுவாகவே ஒரு க்ஷத்திரியன் கடுஞ்செயல்களில் ஈடுபடுபவனாவான். அவனது வழக்கில், வேள்விகளும், கொடைகளும் அவனைத் தூய்மைப்படுத்துவதாகவோ, புனிதப்படுத்துவதாகவோ கருதப்படுகிறது.(4) நல்லோராகவும், அறவோராகவும் இருப்பவர்கள், பாவச்செயல்களில் ஈடுபடும் அரச வகையினரின் கொடைகளை ஏற்பதில்லை. இதன் காரணமாகவே மன்னனானவன் தக்ஷிணையின் வடிவிலான அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்ய வேண்டும்[1].(5) ஓ! ஏகாதிபதி, நல்லோரும், அறவோரும் தங்களுக்கு அளிக்கப்படும் கொடைகளை ஏற்றால் க்ஷத்திரியனானவன் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இடையறாமல் கொடையளிக்க வேண்டும். கொடைகள் பெரும் பலன்களை உண்டாக்கவல்லவையும், பெரிதாகத் தூய்மை செய்பவையுமாகும்.(6) ஒருவன் நோன்புகளை நோற்று, வேள்விகளைச் செய்து, அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாக இருப்பவர்களும், அறவோரும், வேதங்களை அறிந்தவர்களும், செயல்கள், ஒழுக்கம் மற்றும் தவங்களில் பெரும் திறம் கொண்டவர்களுமான பிராமணர்களைச் செல்வத்தால் நிறைவடையச் செய்ய வேண்டும்.(7) அத்தகைய பிராமணர்கள் உன் கொடைகளை ஏற்கவில்லையெனில் எப்பலனும் உனதாகாது. அபரிமிதமான தக்ஷிணையுடன் வேள்விகளைச் செய்து, அறவோருக்கு ஏற்புடைய நல்ல உணவைக் கொடையளிப்பாயாக.(8)ஒரு கொடையைச் செய்வதன் மூலம் ஒரு வேள்வியைச் செய்தவனாக உன்னை நீ கருதிக் கொள்ளலாம். வேள்விகளைச் செய்யும் பிராமணர்களுக்குக் கொடைகள் கொடுத்து அவர்களைத் துதிக்க வேண்டும். அதைச் செய்தால், அவர்கள் செய்யும் அந்த வேள்விகளின் பலன்களில் ஒரு பங்கை நீ அடையலாம்.(9) அத்தகைய பிராமணர்களைப் பிள்ளைகளைப் போலவும், சொர்க்கத்திற்கு மக்களை அனுப்புபவர்களைப் போலவும் நீ ஆதரிக்க வேண்டும். இவ்வாறு செயல்படுவதால் நீ நிச்சயம் பெரும் சந்ததியை அடைவாய். உண்மையில் பிரஜாபதியைப் போலவே பெரும் சந்ததியை அடைவாய்.(10) அறவோரானவர்கள், அறச் செயல்கள் அனைத்தின் காரணங்களையும் ஆதரித்து முன்னேற்றமடையச் செய்வார்கள். ஒருவன் தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து அத்தகைய மனிதர்களையும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவர்களையும் ஆதரிக்க வேண்டும்.(11) ஓ! யுதிஷ்டிரா, செழிப்பை அனுபவிக்கும் நீ, பசுக்களையும், வண்டிக்காளைகளையும், உணவையும், குடைகளையும், ஆட்கள், பாதுகைகள் அல்லது காலணிகளையும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(12) வேள்வி செய்யும் பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யையும், உணவு, தேர்கள், குதிரைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், வசிக்கும் வீடுகள், மாளிகைகள் மற்றும் படுக்கைகளையும் கொடையளிப்பாயாக.(13) ஓ! பாரதா, அத்தகைய கொடைகள் கொடையாளியைச் செழிப்பிலும், செல்வத்தில் நிறையச் செய்யும், மேலும் தூய்மையானதாகவும் கருதப்படும். செய்யும் செயல்களுக்காக நிந்திக்கப்படாதவர்களும், தங்களுக்கென வாழ்வாதாரங்கள் ஏதும் இல்லாதவர்களுமான பிராமணர்களைத் தேட வேண்டும்.(14) அத்தகைய பிராமணர்களுக்கு வாழ்வாதாரங்களை ஒதுக்கி வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. எப்போதும் அத்தகைய ஒழுக்கம் க்ஷத்திரியர்களுக்கு ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகளைவிட உயர்ந்த நன்மையை அளிக்கும்.(15)

பாவத்தில் இருந்து தூய்மையடைந்தால் நிச்சயம் நீ சொர்க்கத்தை அடைவாய். உன் கருவூலத்தை நிறைத்து உன் நாட்டிற்கு நீ நன்மையைச் செய்ய வேண்டும்.(16) அத்தகைய ஒழுக்கத்தால் நீ நிச்சயம் அதிகச் செல்வத்தை அடைந்து (அடுத்த வாழ்வில்) {மறுமையில்} ஒரு பிராமணனாவாய். ஓ! பாரதா, (அறச்செயல்கள் செய்வதற்கான, ஆதரிப்பதற்கான) உன் வழிமுறைகளையும், வேறு மனிதர்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பாயாக.(17) நீ உன் பணியாட்களை உன் பிள்ளைகளைப் போல ஆதரிப்பாயாக. ஓ! பாரதா, பிராமணர்கள் என்ன கொண்டிருக்கிறார்களோ அதை அனுபவிக்க விட்டும், என்ன கொண்டிருக்கவில்லையோ அவற்றைக் கொடையளிக்கவும் செய்து அவர்களைப் பாதுகாப்பாயாக.(18) உன் வாழ்வு பிராமணர்களின் காரியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கட்டும். பிராமணர்களுக்கு நீ பாதுகாப்பை வழங்கவில்லை என்று ஒருபோதும் சொல்லப்படாதிருக்கட்டும். அதிகச் செல்வத்தை, ஒரு பிராமணன் கொண்டிருக்கும்போது; அஃது அவனுக்குத் தீமையின் ஊற்றுக்கண்ணாக மாறும்.(19) நிலையான செல்வம் மற்றும் செழிப்பின் தொடர்பு அவனை நிச்சயம் செருக்கால் நிறைத்து (உண்மைக் கடமைகளில் இருந்து) அவனைத் திகைப்படையச் செய்யும். பிராமணர்கள் திகைப்படைந்து, மடமையில் மூழ்கினால், அறமும், கடமைகளும் நிச்சயம் அழிந்து போகும். அறத்திற்கும், கடமைக்கும் ஒரு முடிவு ஏற்பட்டால், அஃது அனைத்து உயிரினங்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.(20)

செல்வத்தைத் திரட்டி, கருவூல அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் அதைக் கொடுத்துவிட்டு, தன் அதிகாரிகளிடம், “இந்நாட்டில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செல்வத்தை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்லி, மீண்டும் தன் நாட்டைக் கொள்ளையடிக்கத் தொடங்கும் ஒரு மன்னன்,(21) அச்சம் மற்றும் கடுஞ்சூழ்நிலைகளில் அவனது ஆணைகளுக்கிணங்க இவ்வாறு திரட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகள் செய்வதில் செலவிட்டால், அவ்வேள்விகள் ஒருபோதும் அறவோரால் மெச்சப்படுவதில்லை என்பதை நீ அறிவாயாக.(22) கொடுமைப்படுத்தப்படாத குடிமக்களின் மூலம் கருவூலத்தில் விருப்பத்துடன் செலுத்தப்படும் செல்வத்தைக் கொண்டே ஒரு மன்னன் வேள்விகளைச் செய்ய வேண்டும். கடுமை மற்றும் பலவந்த அபகரிப்பு மூலம் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு ஒருபோதும் வேள்விகள் செய்யக்கூடாது.(23) மன்னன் தன் குடிமக்களின் நலனில் அர்ப்பணிப்புடன் இருப்பதன் விளைவால் அவர்கள் அபரிமிதமானதும், நோக்கத்திற்காகவே விருப்பத்துடன் கொடுக்கப்பட்டதுமான செல்வமாரியால் மன்னனை நீராட்டும்போது, அவன் தக்ஷிணையின் வடிவிலான பெரும் கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்.(24) முதியோர், சிறார், குருடர், வேறுவகையில் தகுதியிழந்தோர் ஆகியவர்களின் செல்வங்களை மன்னன் பாதுகாக்க வேண்டும். வறட்சிக்காலத்தில் தன் மக்கள் கிணறுகளில் இருந்து பெற்ற நீரின் துணையுடன் ஏதோ தானியங்களை வளர்ப்பதில் வென்றால், மன்னன் அவர்களிடம் இருந்து செல்வமெதையும் ஒருபோதும் எடுக்கக்கூடாது. அதேபோல, அழுது கொண்டிருக்கும் பெண்களிடம்[2] இருந்தும் எந்தச் செல்வத்தையும் எடுக்கக்கூடாது.(25)வறியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களிடம் இருந்து எடுக்கப்படும் செல்வம் நாட்டையும், நாட்டின் செழிப்பையும் நிச்சயம் அழித்துவிடும். மன்னன் அறவோருக்கு எப்போதும் இன்பத்திற்குரிய பொருட்களை அபரிமிதமாகக் கொடையளிக்க வேண்டும். அம்மனிதர்கள் கொண்டுள்ள பட்டினி குறித்த அச்சத்தை நிச்சயம் அவன் விலக்க வேண்டும்.(26) முறையாக உண்ண இயலாத பிள்ளைகள், எவர்களுடைய உணவைப் பரிதாபமான ஏக்கத்துடன் பார்ப்பார்களோ அம்மனிதர்களைவிடப் பெரும்பாவிகள் வேறு யாரும் இல்லை.(27) உன் நாட்டிற்குள் அந்தப் பிள்ளைகளைப் போலக் கல்விமானான எந்தப் பிராமணராவது ஏக்கத்துடன் இருந்தால், அத்தகைய செயலை அனுமதித்தற்காகக் கருவைக் கொன்ற பாவத்தை நீ ஈட்டுவாய்.(28)

மன்னன் சிபி, “எவனுடைய நாட்டில் ஒரு பிராமணனோ வேறு எந்த மனிதனோ பசியால் ஏங்குகிறானோ அம்மன்னனுக்கு ஐயோ” என்று சொல்லியிருக்கிறான்.(29)

எந்த நாட்டில் ஸ்நாதக வகைப் பிராமணர்கள் பசியேக்கத்தில் இருக்கிறார்களோ அந்நாடு ஏழ்மையில் மூழ்கும். அத்தகைய நாடு அதன் மன்னனுடன் சேர்ந்து நிந்திக்கப்படும்.(30) எவனுடைய நாட்டில் கணவர்கள் மற்றும் மகன்களுக்கு மத்தியில் அழுது கதறி, உள்ளங்கொதித்துத் துன்பப்படும் பெண்கள் எளிதாகக் கடத்தப்படுகிறார்களோ அந்த மன்னன் உயிரோடிருந்தாலும் இறந்தவனேயாவான்.(31) தங்களைப் பாதுகாக்காதவனும், தங்கள் செல்வங்களை வெறுமனே கொள்ளையடிப்பவனும், வேறுபாடுகள் அனைத்தையும் போட்டுக் குழப்புபவனும், வழிநடத்த இயலாதவனும், கருணையற்றவனும், மன்னர்களிலேயே பெரும்பாவியாகக் கருதப்படுபவனுமான மன்னனைக் கொல்ல குடிமக்கள் ஆயுதமேந்த வேண்டும்.(32) எந்த மன்னன் தன் மக்களிடம் தானே அவர்களின் பாதுகாவலன் என்று சொன்னாலும் அவர்களைப் பாதுகாக்க இயலாதவனாக இருக்கிறானோ அவன் விசர்நோயால் பீடிக்கப்பட்டதும், வெறி கொண்டதுமான நாயைப் போலத் தன் குடிமக்களால் கொல்லப்பட வேண்டும்.(33) ஓ! பாரதா, பாதுகாப்பைக் கொடுக்காத மன்னன், குடிமக்கள் இழைக்கும் பாவங்களில் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான்.(34) மொத்த பாவங்களும் அத்தகையே மன்னனையே சேரும் எனச் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் பாதி அவனுடையதாகும் எனக் கருதுகிறார்கள். எனினும், மனுவின் அறிவிப்பை மனத்தில் சுமக்கும் நாம், பாதுகாப்பைக் கொடுக்காத மன்னர்கள் அத்தகைய பாவங்களில் நான்கில் ஒரு பகுதியை அடைவார்கள் என்று கருதுகிறோம்.(35)

ஓ! பாரதா, எந்த மன்னன் தன் குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறானோ அவன் தன் பாதுகாப்பின் கீழ் தன் குடிமக்கள் ஈட்டும் பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான்.(36) ஓ! யுதிஷ்டிரா, அனைத்து உயிரினங்களும் மழையின் தேவனுடைய புகலிடத்தை நாடுவதைப் போலவோ, சிறகுபடைத்த காற்றுவாசிகள் {பறவைகள்} ஒரு பெரும் மரத்தைப் புகலிடமாக நாடுவதைப் போலவே நீ உயிரோடுள்ளவரை, உன் குடிமக்கள் அனைவரும் உன்னைப் புகலிடமாக நாடும் வகையில் நீ செயல்படுவாயாக.(37) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ராட்சசர்கள் குபேரனை நாடுவதைப் போலவோ, தேவர்கள் இந்திரனை நாடுவதைப் போலவோ, உன் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் உன்னையே அவர்களது புகலிடமாக நாடட்டும்” என்றார் {பீஷ்மர்}.(38)

பூமி தானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 62-நிலக்கொடை குறித்தும், வேறு கொடைகளைக் குறித்தும் பிருஹஸ்பதி இந்திரனுக்குச் சொன்ன விபரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “’இதைக் கொடுக்க வேண்டும், இதையும் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லும் ஸ்ருதிகளின் அறிவிப்புகளை மக்கள் அன்புடன் ஏற்கிறார்கள். மேலும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பல்வேறு மனிதர்களுக்குப் பல்வேறு பருட்களைக் கொடையளிக்கிறார்கள். எனினும், ஓ! பாட்டா, கொடைகள் அனைத்திலும் சிறந்தது, அல்லது முதன்மையானது எது?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்து வகையான கொடைகளிலும் (பலனின் அடிப்படையில்) நிலக்கொடையே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. நிலம் அசைவற்றதாகவும், அழிவற்றதாகவும் இருக்கிறது. அதன் உரிமையாளன் தன் இதயத்தில் நிலைநிறுத்தும் சிறந்த பொருட்கள் அனைத்தையும் அது கொடுக்கவல்லது.(2) ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், விலங்குகள், நெல், வாற்கோதுமை ஆகியவற்றை அது கொடுக்கிறது. உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும், நிலக் கொடை கொடுப்பவன் என்றென்றைக்கும் செழிப்பில் வளர்வான்.(3) நிலம் நீடித்திருக்கும்வரை அந்தக் கொடையாளி செழிப்பில் வளர்வான். ஓ! யுதிஷ்டிரா, நிலக்கொடையை விட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை.(4) மனிதர்கள் அனைவரும் ஒரு சிறு அளவு நிலத்தையாவது கொடையளிப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். மனிதர்கள் அனைவரும் நிலக்கொடையளித்திருப்பதாலேயே அவர்கள் அனைவரும் சிறு அளவு நிலத்திலாவது இன்புற்றிருக்கிறார்கள்.(5)

இம்மையிலாகட்டும், மறுமையிலாகட்டும் எச்சூழ்நிலையில் வாழ்ந்தாலும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் செயல்களைச் சார்ந்தே வாழ்கின்றன. பூமாதேவி {நிலம்} செழிப்பின் சுயமாக இருக்கிறாள். அவள் வலிமைமிக்கத் தேவியாவாள். இம்மையில் பிறருக்குத் தன்னைக் கொடையளிப்பவனை (மறுமையில்) அவள் தன் தலைவனாக்கி {கணவனாக்கிக்} கொள்கிறாள்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அழிவற்றதான நிலத்தைத் தக்ஷிணையாகக் கொடையளிப்பவன், மறுமையில் மனிதனாகப் பிறந்து, பூமியின் தலைவனும் ஆகிறான்.(7) இம்மையில் ஒருவன் அடையும் இன்பம், முற்பிறவியில் அவன் அளித்த கொடைகளின் அளவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும். சாத்திரங்கள் சுட்டிக் காட்டும் தீர்மானம் இதுவே ஆகும். ஒரு க்ஷத்திரியன் நிலக் கொடை அளிக்க வேண்டும், அல்லது போர்க்களத்தில் தன் உயிரை விட வேண்டும்.(8) க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரையில் இதுவே செழிப்பின் உயர்ந்த ஊற்றுக்கண்ணாகிறது. நிலம் கொடையளிக்கப்படும்போது, அது கொடையாளியைத் தூய்மைப்படுத்துகிறது, புனிதப்படுத்துகிறது என நாம் கேள்விப்படுகிறோம்.(9) பாவம் நிறைந்த நடத்தை கொண்டவனும், பொய்யுரைத்தவனும், பிராமணக் கொலை செய்த குற்றவாளியுமான மனிதன் கூட நிலக்கொடையின் மூலம் தூய்மடைகிறான். உண்மையில் அத்தகைய கொடை அத்தகைய பாவியையும் கூட, அவன் செய்யும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் மீட்கிறது.(10)

அறவோரானவர்கள், பாவம் நிறைந்த மன்னர்களிடம் இருந்து நிலக்கொடையை மட்டுமே ஏற்பார்கள், வேறெதையும் ஏற்கமாட்டார்கள். பூமியானவள் கொடையளிக்கப்படும்போது ஒரு தாயைப் போலவே கொடுப்பவனையும், பெற்றுக் கொள்பவனையும் தூய்மையாக்குகிறாள்.(11) பிரியதத்தை என்பது பூமாதேவியின் நித்தியமான மற்றும் ரகசியமான மற்றுமொரு பெயராகும்[1]. கொடையாகக் கொடுக்கப்படுபவள், அல்லது ஏற்கப்படுபவளுமான அவளது அன்புக்குரிய பெயர் பிரியதத்தை என்பதாகும்.(12) நிலக்கொடை விரும்பத்தக்கதாகும். ஒரு கல்விமானான பிராமணனுக்கு நிலக்கொடையளிக்கும் மன்னன், ஒரு நாட்டையே கொடையாக அடைகிறான்.(13) அத்தகைய மனிதன், இவ்வுலகில் தன் மறுபிறவியில், ஒரு மன்னனுக்கு இணையான நிலையையே அடைகிறான். எனவே, ஒரு மன்னனானவன், தனக்குப் பூமி கிடைத்த உடனேயே பிராமணர்களுக்கு நிலக்கொடை அளிக்க வேண்டும்.(14) பூமியின் தலைவனான ஒருவனைத் தவிர வேறு எவனும் {அரசனல்லாதவன் எவனும்} நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல. அதே போலத் தகாத எவனும் நிலக்கொடையை ஏற்பதும் தகாததே[2].(15)நிலத்தை விரும்புபவர்கள் (நிலக்கொடை அளிக்கும்) இவ்வழியிலேயே தங்களைச் செலுத்திக் கொள்ள வேண்டும். அறம்சார்ந்த மனிதனுக்கு உரிமையான நிலத்தை அபகரிப்பவன் ஒருபோதும் நிலத்தை அடையமாட்டான்.(16) அறவோருக்கு நிலக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் நன்னிலத்தை அடைவான். அற ஆன்மா கொண்டவனான அத்தகைய கொடையாளி இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை ஈட்டுவான்.(17) பிராமணர்கள், எந்த மன்னனைக் குறித்து, “இவன் கொடையளித்த நிலத்தில் நாங்கள் வாழ்கிறோம்” என்று சொல்வார்களோ, அவனது நாட்டைக் குறித்த சிறு பழியையும் அவனுடைய எதிரிகளாலும் சொல்ல முடியாது[3].(18) வாழ்வாதாரம் இல்லாததால் ஒரு மனிதன் இழைக்கும் பாவங்கள் அனைத்தும், மாட்டுக் குளம்பினால் மறைக்கப்படும் அளவுக்கு நிலக்கொடையளிப்பதன் மூலம்கூடக் கழுவப்பட்டுவிடுகின்றன.(19) தங்கள் செயல்பாடுகளில் வஞ்சகமாக இருப்பவர்கள், அல்லது கடுச் செயல் புரியும் மன்னர்களுக்கு, நிலக்கொடையே அதிகம் தூய்மைப்படுத்தும், (பலனடிப்படையில்) அதுவே உயர்ந்த கொடையுமாகும் என்பது கற்பிக்கப்பட வேண்டும்.(20)ஒரு குதிரை வேள்வியை {அஸ்வமேதயாகத்தைச்} செய்யும் மனிதனுக்கும், ஓர் அறவனோக்கு நிலக்கொடை அளிக்கும் ஒருவனுக்கும் இடையில் மிகச் சிறிய வேறுபாடு மட்டுமே உண்டெனவே பண்டைக்காலத்தவர் எண்ணினர்.(21) வேறு அறச்செயல்கள் எதனையும் செய்வதன் மூலம் கிட்டும் பலனில் கல்விமான்கள் ஐயுறுவார்கள். உண்மையில், அவர்கள் ஐயுறாத ஒரே செயல், கொடைகள் அனைத்திலும் முதன்மையான நிலக்கொடையே ஆகும்.(22) நிலக்கொடை அளிக்கும் விவேகியானவன், பொன், வெள்ளி, ஆடை, ரத்தினங்கள், முத்துகள் மற்றும் விலமதிப்புமிக்கக் கற்கள் ஆகிய அனைத்தையும் கொடுத்தவனாகிறான்.(23) தவங்கள், வேள்வி, வேதப் புலமை, நன்னடத்தை, பேராசையின்மை, வாய்மையில் உறுதி {சொல்தவறாமை}, பெரியோர், ஆசான்கள் மற்றும் தேவர்களுக்குச் செய்யும் வழிபாடு ஆகிய இவை அனைத்தும் நிலக்கொடை அளித்தவனிடம் வசிக்கின்றன.(24) தங்கள் தலைவர்கள் நன்மையடைவதற்காகத் தங்களைத் துச்சமாக எண்ணிப் போரிட்டுத் தங்கள் உயிரைப் போர்க்களத்தில் விட்டுப் பிரம்ம லோகத்திற்கு உயர்ந்தவர்களும் கூட, நிலக்கொடையளிப்போர் அடையும் பலன்களை விஞ்சிவிட இயலாது.(25)

முலைப்பால் கொண்டு தன் பிள்ளைக்கு எப்போதும் உணவூட்டும் ஒரு தாயைப் போலவே பூமாதேவியானவள், நிலக்கொடை அளிக்கும் மனிதனை {தான் கொண்டுள்ள} சுவைகள் அனைத்திலும் நிறைவடையச் செய்கிறாள்.(26) மிகக் கொடிய மிருத்தியு, வைகின்கர, தண்டம், தமம், நெருப்பு மற்றும் பயங்கரமான மிகக் கொடிய பாவங்கள் அனைத்தும் நிலக்கொடை அளிக்கும் மனிதனை அணுக முடியாது[4].(27) நிலக்கொடையளிக்கும் அமைதியான ஆன்மா கொண்ட மனிதன், (அந்தச் செயலின் மூலம்) பித்ருலோகத்தில் வசிப்பவர்களையும், தேவலோகத்தில் வசிப்பவர்களையும் நிறைவடையச் செய்கிறான்.(28) உடல் மெலிந்தவனும், உற்சாகமற்றவனும், வாழ்வாதரமற்றவனும், பலவீனத்துடன் ஏங்கிக் கொண்டிருப்பவனுமான ஒருவனுக்கு நிலக்கொடையளிக்கும் மனிதன், அவனுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதால் ஒரு வேள்வி செய்த பலனுக்கும், கௌரவத்துக்கும் தகுந்தவனாகிறான்.(29) நிறைந்த மடியில் பால் வழியும் பசுவானது, அன்புடன் தன் கன்றை நோக்கி ஓடுவதைப் போலவே உயர்ந்த அருளைக் கொண்ட பூமியானவளும் நிலக்கொடையளிப்பவனை நோக்கி ஓடுகிறாள்.(30)உழப்பட்டதாகவோ, விதை தூவப்பட்டதாகவோ, பயிர் விளைந்திருப்பதாகவோ உள்ள நிலத்தை, அல்லது தேவைகள் அனைத்துடன் கூடிய ஒரு மாளிகையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் (மறுமையில்) அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றவல்லவனாகிறான்.(31) வாழ்வாதாரத்தையும் இல்லற நெருப்பையும் கொண்டவனும், தூய நோன்புகள் மற்றும் பயிற்சிகளைக் கொண்டவனுமான ஒரு பிராமணனை நிலக்கொடையை ஏற்கச் எசய்யும் மனிதன், எந்த ஆபத்திலோ, துயரத்திலோ ஒருபோதும் வீழ மாட்டான்.(32) நாளுக்கு நாள் நிலவு வளர்வதைப் போலவே நிலக்கொடை அளித்தவனின் பலனும் அந்நிலத்தில் ஒவ்வொரு முறை பயிர் விளையும்போதும் மேன்மையடைகிறது.(33) பண்டைய வரலாற்றை அறிந்தவர்கள், நிலக்கொடை தொடர்பாக இந்த ஸ்லோகத்தைப் பாடியிருக்கிறார்கள். அந்த ஸ்லோகத்தைக் கேட்ட ஜமதக்னியின் மகன் (ராமர்) மொத்த நிலத்தையும் கசியபருக்குக் கொடையளித்தார்.(34) “என்னைக் கொடையாகப் பெறுவாயாக. என்னைக் கொடையளிப்பாயாக. என்னைக் கொடையளிப்பதன் மூலம் (ஓ! கொடையாளியே) நீ மீண்டும் என்னையே அடைவாய். இம்மையில் கொடையளித்தது மறுமையில் மீண்டும் அடையப்படும்” என்பதே நான் குறிப்பிடும் ஸ்லோகமாகும்[5].(35)வேதங்களின் இந்த உயர்ந்த அறிவிப்பை சிராத்தம் செய்யும் நேரத்தில் உரைக்கும் பிராமணன் உயர்ந்த வெகுமதியை அடைகிறான்.(36) பிறருக்குத் தீங்கிழைப்பதற்காக அதர்வணச் சடங்குகளைச் செய்யும் பலமிக்க மனிதனின் பாவத்திற்கு நிலக்கொடையே உயர்ந்த பாவக்கழிவாகும். உண்மையில், நிலக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன், தனது தந்தைவழி மற்றும் தாய்வழியில் பத்து தலைமுறைகளை மீட்கிறான்[6].(37) நிலக்கொடையின் பலன்களைக் குறித்த இந்த வேதத் தீர்மானத்தை அறிந்தவன், தன் தந்தைவழி மற்றும் தாய் வழி குடும்பங்கள் இரண்டிலும் பத்து தலைமுறைகளை மீட்பதில் வெல்கிறான். (அனைத்து உயிரினங்களும் தங்கள் வாழ்வாதாரங்களை நிலத்திலேயே அடைவதால்) நிலமே அனைத்து உயிரினங்களின் அசல் தோற்றுவாயாகும் {காரணமாக இருக்கிறது}. நெருப்பின் தேவனே {அக்னியே} பூமிக்குத் தலைமைதாங்கும் மேதையாகச் சொல்லப்படுகிறான்.(38) ஒரு மன்னனின் பட்டமேற்பு விழா நடைபெற்றதும், அவன் நிலக்கொடைகளை அளிக்கும் வகையிலும், அறவோரிடம் இருந்து அவன் நிலத்தை ஒருபோதும் அபகரிக்காத வகையிலும் இந்த வேதத் தீர்மானமானது அவனுக்குச் சொல்லப்பட வேண்டும்.(39) மன்னனின் உரிமையில் இருக்கும் மொத்த செல்வமும் பிராமணர்களுக்குரியது என்பதில் ஐயமில்லை. அறநெறி அறிவியலை நன்கறிந்த மன்னனே அந்த நாட்டுடைய செழிப்புக்கான முதல் தேவையாக இருக்கிறான்.(40)நேர்மையற்ற ஒழுக்கமும், நாத்திக நம்பிக்கையும் உள்ள மன்னனைக் கொண்ட மக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அத்தகைய மக்கள் ஒருபோதும் அமைதியாக உறங்கவோ, விழிக்கவோ முடியாது.(41) அவனுடைய தீச்செயல்களின் விளைவால் அவனுடைய குடிமக்கள் எப்போதும் கவலையால் நிறைந்திருப்பார்கள். குடிமக்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் உடைமைகளையும், புதிய உடைமைகளையும் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி பாதுகாக்கும் நிகழ்வுகளை அத்தகைய ஆட்சியாளனின் நாட்டில் ஒருபோதும் காண முடியாது.(42) மேலும், ஞானியாகவும், அறம் சார்ந்தவனாகவும் உள்ள மன்னனைக் கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் உறங்கி, மகிழ்ச்சியாகவே விழிக்கிறார்கள்.(43) அத்தகைய மன்னனின் அருள்நிறைந்த அறச்செயல்களின் மூலம் அவனது குடிமக்கள் கவலையில் இருந்து விடுபடுகிறார்கள். தீச்செயல்களில் இருந்து தடுக்கப்படும் குடிமக்கள் தங்கள் ஒழுக்கத்தின் மூலம் செழிப்பில் வளர்கிறார்கள். தாங்கள் கொண்டுள்ளதைத் தக்கவைத்துக் கொள்ளவல்ல அவர்கள், புதிய உடைமைகளை மேலும் மேலும் அடைகிறார்கள்.(44) நிலக்கொடையளிக்கும் மன்னன் நற்பிறப்பைக் கொண்டவனாகக் கருதப்படுகிறான். அவனே ஆண்மகனாகக் கருதப்படுகிறான். அவன் நண்பனுமாவான். அவன் தன் செயல்களில் அறம் சார்ந்தவனாக இருக்கிறான். அவன் கொடையாளியாகவும் இருக்கிறான். அவன் ஆற்றல் படைத்தவனாகவும் கருதப்படுகிறான்.(45)

வளமான நிலத்தைப் போதிய அளவில் வேதமறிந்த பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் தங்கள் சக்தியின் விளைவால் பல சூரியர்களைப் போல இந்த உலகத்தில் ஒளிர்கிறார்கள்.(46) மண்ணில் தூவப்படும் விதைகள் வளர்ந்து நல்ல பயிராக விளைவதைப் போலவே, நிலக்கொடையளிப்பதன் விளைவால் ஒருவனுடைய விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையால் அவன் மகுடம் சூட்டப்படுகிறான்.(47) ஆதித்யன், வருணன், விஷ்ணு, பிரம்மன், சோமன், ஹுதாசனன் {அக்னி}, சிறப்புமிக்கவனும், திரிசூலபாணியுமான மஹாதேவன் ஆகியோர் அனைவரும் நிலக்கொடையளிக்கும் மனிதனை மெச்சுகிறார்கள்.(48) உயிரினங்கள் பூமியில் இருந்து உயிர்பெறுகின்றன, மேலும் அவை மறையும்போதும் பூமியிலேயே கலக்கின்றன. நால்வகை உயிரினங்களும் பூமியையே தங்கள் மூலக்கூறுகளின் சாரமாகக் கொண்டிருக்கின்றன {பூமியின் குணங்களையே கொண்டிருக்கின்றன}.(49) ஓ! ஏகாதிபதி, அண்டத்தின் உயிரினங்களுக்குத் தாயும், தந்தையும் பூமியே ஆவாள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பூமியோடு ஒப்பிடத்தக்க பூதம் வேறேதும் கிடையாது.(50)

ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகத் தேவ ஆசானான பிருஹஸ்பதிக்கும், சொர்க்கத்தின் ஆட்சியாளனான இந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(51) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய நூறு வேள்விகளில் விஷ்ணுவைத் துதித்த மகவத் {இந்திரன்}, நாநயமிக்கவர்கள் அனைவரிலும் முதன்மையான பிருஹஸ்பதியிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(52)

மகவத், “ஓ! சிறப்புமிக்கவரே, எக்கொடையை அளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு வருவதிலும், இன்பநிலையை அடைவதிலும் வெல்கிறான்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, உயர்ந்ததும், வற்றாததுமான பலனை உண்டாக்கவல்ல கொடையைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்”.(53)

பீஷ்மர் தொடர்ந்தார், “தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தேவர்களின் ஆசானும், பெருஞ்சக்தி கொண்டவருமான பிருஹஸ்பதி, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(54)

பிருஹஸ்பதி, “ஓ! விருத்திரனைக் கொன்றவனே, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, பொற்கொடை, பசுக்கொடை, நிலக்கொடை ஆகிய இவற்றாலேயே ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(55) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! பலமிக்கவனே, நிலக்கொடையை விட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை. ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ள படி இக்கொடையையே நான் மிக உயர்ந்ததாகக் கருதுகிறேன்.(56) போர்க்களத்தில் அச்சமில்லாமல் பகைவர்களுடன் மோதி தங்கள் உயிரை விடும் வீரர்கள் சொர்க்கத்திற்கு வருகிறார்கள். அவர்களின் கதி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நிலக்கொடையளிக்கும் கொடையாளியை அவற்றில் எதனாலும் விஞ்சமுடியாது.(57) தங்கள் உடல்களை அலட்சியம் செய்து, தங்கள் தலைவர்களின் நன்மைக்காக முயன்று போர்க்களத்தில் தங்கள் உயிரைவிடும் மனிதர்கள் பிரம்ம லோகத்திற்கே உயர்கிறார்கள். அவர்களும் கூட (ஒருவன் அடையும் பலன் அல்லது அவன் வெல்லும் இன்ப நிலையைப் பொறுத்தவரையில்) நிலக்கொடையளிப்பவனைக் கடக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(58) நிலக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன், தனது மூதாதையரில் ஐந்து தலைமுறையினரையும், வழித்தோன்றல்களில் ஆறு தலைமுறைகளையும் என இந்தப் பதினொருவரை மீட்கிறான்.(59) ஓ! புரந்தரா, பொன் மற்றும் ரத்தின வளம் கொண்ட நிலத்தைக் கொடையளிக்கும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறான்.(60)

ஓ! மன்னா, (விளைச்சலைப் பொறுத்தவரையில்) அனைத்து விருப்பங்களையும் தரவல்ல வளமிக்க நிலத்தைக் கொடையளிக்கும் ஒருவன் (மறுமையில்) மன்னர்களுக்கு மன்னன் என்ற நிலையை அடைவதில் வெல்கிறான். எனவே, நிலக்கொடையே கொடைகள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(61) ஓ! வாசவா, (விளைச்சலைப் பொறுத்தவரையில்) அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையால் மகுடம் சூட்டவல்ல நிலத்தைக் கொடையளிப்பவன் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(62) ஓ! ஆயிரம் கண்களைக் கொண்டவனே, அனைத்துச் சிறப்புகளையும் கொண்டதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையைக் கொடுக்கவல்லதுமான ஒரு பசுவைக் கொடையளிக்கும் மனிதன், சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(63) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையளிக்கும் கொடையாளி, சொர்க்கத்திற்கு வரும்போது, நூற்றுக்கணக்கான தேனாறுகள், நெய், பால் மற்றும் தயிராறுகளால் நிறைவடைகிறான்.(64) ஒரு மன்னன் நிலக்கொடைகளை அளிப்பதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். எனவே, நிலக்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை.(65)

பெருங்கடலால் சூழப்பட்ட பூமியைத் தன் ஆயுதங்களின் துணையுடன் வென்று அதைக் கொடையளிக்கும் மன்னன், மனிதர்கள் அனைவராலும் பேசப்படுவான், பூமியின் பரப்பில் மலைகள் இருக்கும் வரையிலும் அவனது நினைவுகளும் நீடித்திருக்கும்.(66) நிலக்கொடைக்கான பலனுடன் கூடியவன், அனைத்துச் சுவைகளுடன் கூடிய மங்கலமிக்க, வளமான நிலத்தைக் கொடையளிப்பவனுக்கு ஒதுக்கப்படும் வற்றாத இன்ப உலகத்தை அடைகிறான்.(67) ஓ! சக்ரா, செழிப்பையும், மகிழ்ச்சியையும் அடைய விரும்பும் மன்னன், உரிய சடங்குகளுடன் தகுந்தோருக்கு நிலக்கொடையை எப்போதும் அளிக்க வேண்டும்.(68) எண்ணற்ற பாவங்களைச் செய்த மனிதன், மறுபிறப்பாள வகையினருக்கு நிலத்தைக் கொடையளித்தால், பாம்பானது தன் சட்டையை உரித்துக் கொள்வதைப் போலத் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(69) நிலக்கொடையளிப்பவன், கடல்கள், ஆறுகள், மலைகள், காடுகள் என அனைத்தையும் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்.(70)

நிலத்தைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், தடாகங்களையும், குளங்களையும், கிணறுகளையும், ஓடைகளையும் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். நிலத்தில் உள்ள ஈரப்பதத்தின் விளைவால் ஒருவன் நிலக்கொடையளிப்பதன் மூலம் பல்வேறு சுவைகளுடன் கூடிய பொருட்களைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்.(71) நிலக்கொடையளிக்கும் மனிதன், பயன்விளைவிக்கும் உயர்ந்த குணங்களைக் கொண்ட மூலிகைகள் மற்றும் செடிகளையும், மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்களையும், இனிமை நிறைந்த காடுகளையும், சிறுகுன்றுகளையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(72) நிலத்தைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனானது, தக்ஷிணையின் வடிவில் அபரிமிதமான கொடைகளுடன் செய்யப்படும் அக்னிஷ்டோமம் மற்றும் பிறவற்றைப் போன்ற பெரும் வேள்விகளைச் செய்வதன் மூலமும் அடையப்பட முடியாததாகும்.(73) நிலக்கொடையளிப்பவன், தன் தந்தைவழி மற்றும் தாய்வழிக் குலங்களின் பத்து தலைமுறைகளை மீட்கிறான் என்று ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அதே போல, கொடையளிக்கப்பட்ட நிலத்தை அபகரிப்பதன் மூலம் ஒருவன் நரகில் மூழ்கித் தன் தந்தை வழி மற்றும் தாய் வழி குலத்தின் பத்து தலைமுறையினரை அதே துன்பத்தில் ஆழ்த்துகிறான்.(74) நிலக்கொடை அளிப்பதாக உறுதியளித்தவிட்டு அளிக்காத, அல்லது கொடையளித்துவிட்டு மீண்டும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்ட மனிதன், யமனின் ஆணையால் வருணனின் பாசத்தில் கட்டப்படுவதன் விளைவால் நீண்ட காலத்தைப் பெருந்துன்பத்தில் கடத்துவான்.(75)

இல்லற நெருப்பில் நாள்தோறும் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், மிகக் குறைந்த வாழ்வாதாரங்களைக் கொண்டவர்களும், தங்கள் வசிப்பிடங்களில் உறைவிடம் நாடி வரும் ஒவ்வொரு விருந்தினரையும் விருந்தோம்பலுடன் வரவேற்பவர்களுமான முதன்மையான பிராமணர்களை மதித்து வழிபடுவோர் ஒருபோதும் யமனிடம் செல்ல வேண்டியதில்லை.(76) ஓ! புரந்தரா, ஒரு மன்னன் பிராமணர்களுக்குத் தான் பட்ட கடனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பிற வகையினரில் உள்ள ஆதரவற்றவர்களையும், பலவீனர்களையும் பாதுகாக்க வேண்டும்.(77) ஓ! தேவர்களின் தலைவா, வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற ஒரு பிராமணனுக்கு வேறொருவனால் கொடையளிக்கப்பட்ட நிலத்தை ஒரு மன்னன் திரும்பப்பெறக்கூடாது.(78) உற்சாகமற்றவர்களும், ஏதுமற்றவர்களுமான அத்தகைய பிராமணர்களின் நிலங்கள் திரும்பப் பெறப்படுவதால் அவர்களது விழிகளில் இருந்து விழும் கண்ணீரானது, திரும்பப் பெறுபவனின் மூதாதையர்கள் மற்றும் வழித்தோன்றல்களில் மூன்று தலைமுறையனரை அழிக்கவல்லதாகும்.(79) நாட்டில் இருந்து விரட்டப்பட்ட ஒரு மன்னனை மீண்டும் நிறுவ முயற்சித்து அதில் வெல்லும் மனிதன், சொர்க்கவாசத்தை அடைந்து, அங்கே வசிப்பவர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறான்.(80)

கரும்போ, யவமோ {வாற்கோதுமையோ}, கோதுமையோ போன்ற பயிர்கள் விளையும், அல்லது பசுக்கள், குதிரைகள் மற்றும் இழுவைக்கான வேறு கால்நடைகள் நிரம்பியதும், கொடையாளின் கரவலிமையால் வெல்லப்பட்டதும், அடியில் கனிமவளம் கொண்டதும், பரப்பில் அனைத்து வகைச் செல்வங்களாலும் மறைக்கப்பட்டதுமான நிலத்தைக் கொடையளிக்கும் மன்னன், மறுமையில் வற்றாத இன்ப உலகங்களை அடைவான், மேலும் அத்தகைய மன்னன் பூமி வேள்வி {பூமிஸத்திரம்} செய்தவனாகச் சொல்லப்படுகிறான்.(81,82) நிலக்கொடை அளிக்கும் மன்னன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் கழுவப்பட்டு, அதன் மூலம் தூய்மையடைந்து, அறவோரால் அங்கீகரிக்கப்படுகிறான். இவ்வுலகில் அறம்சார்ந்த மனிதர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறான்.(83) நிலத்தைக் கொடையளிப்பதால் கிட்டும் பலனானது, நீரில் விழும் எண்ணெய்த் துளி அனைத்துப் பக்கங்களிலும் பரவி, நீர்ப்பரப்பை மறைப்பதைப் போலவே {நிலத்தினுடைய} உரிமையாளரின் நன்மைக்காக அந்நிலத்தில் பயிர் விளையும் ஒவ்வொரு முறையும் அதிகரிக்கிறது.(84) ஓ! சக்ரா, பகைவரை நோக்கிப் போர்க்களத்தில் தங்கள் உயிரை விடும் வீரர்களும், சபைகளின் ரத்தினங்களுமான மன்னர்கள் பிரம்ம லோகத்தை அடைகிறார்கள்.(85) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையளித்தவன் பூமிலிருந்து சொர்க்கத்திற்கு வரும்போது ஆடல் பாடலில் திறன்பெற்றவர்களும், தெய்வீக மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அழகிய காரிகையர் அவனை அணுகுகிறார்கள்.(86)

உரிய சடங்குகளுடன் மறுபிறப்பாள வகையினருக்கு நிலக்கொடையளிக்கும் மன்னன், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களால் எப்போதும் துதிக்கப்பட்டு தெய்வீக அருள் உலகங்களில் திளைத்திருக்கிறான்.(87) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையாளி ஒருவன் பிரம்மலோகத்திற்கு உயரும்போது தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நூறு அப்சரஸ்கள் அவனை அணுகுகின்றனர்.(88) நிலக்கொடையளிக்கும் ஒருவனுக்கு, சிறந்த நறுமணம் கொண்ட மலர்கள், ஒரு சிறந்த சங்கு, சிறந்த இருக்கை, ஒரு குடை, சிறந்த வாகனங்களுடன் கூடிய சிறந்த குதிரைகள் ஆகியவை எப்போதும் தயாராக இருக்கின்றன.(89) ஒரு மன்னன் நிலக்கொடையளிப்பதன் மூலம், நறுமணமிக்கச் சிறந்த மலர்களையும், பொற்குவியல்களையும் எப்போதும் பெறுகிறான். அனைத்துவகைச் செல்வங்களையும் பெறும் அத்தகைய மன்னனின் கட்டளைகள் எங்கும் மீறப்படுவதில்லை, அவன் எங்கே சென்றாலும் {ஜய எனும் ஒலியாலான} வெற்றிக்கூச்சல்கள் மட்டுமே அவனை வாழ்த்திக் கொண்டிருக்கும்.(90) ஓ! புரந்தரா, சொர்க்கவாசம், பொன், மலர்கள், மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் மற்றும் செடிகள், குசம், கனிமவளம் மற்றும் பசும்புற்கள் ஆகியன நிலக்கொடைக்கான வெகுமதிகளாக அமைகின்றன. நிலக்கொடையளிக்கும் ஒருவன் மறுமையில் அமுதம் விளையும் நிலத்தை அடைவான்.(91) நிலக்கொடைக்கு நிகரான கொடை வேறேதும் இல்லை. தாயைவிடப் பெருமதிப்புக்குத் தகுந்த பெரியோர் வேறெவரும் இல்லை. வாய்மையை விட உயர்ந்த கடமை வேறேதும் இல்லை. கொடையளித்ததைவிட விலைமதிப்புமிக்கச் செல்வம் வேறேதும் இல்லை” என்றார் {பிருஹஸ்பதி}”.(92)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அங்கிரஸ் மகனிடமிருந்து {பிருஹஸ்பதியிடமிருந்து} இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசவன், பொன், ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகைச் செல்வங்களுடன் கூடிய மொத்த பூமியையும் அவருக்குக் கொடையளித்தான்.(93) நிலக்கொடைக்கான பலன்களை அறிவிக்கும் இந்த ஸ்லோகங்களைச் சிராத்த நிகழ்வின் போது உரைத்தால், அதில் அளிக்கப்படும் காணிக்கைகளின் எந்தப் பகுதியையும் ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ அபகரிக்க முடியாது.(94) இத்தகைய சிராத்தத்தில் பித்ருக்களுக்கு ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் வற்றாதவை ஆகின்றன என்பதில் ஐயமில்லை. எனவே, சிராத்த நிகழ்வுகளின் போது, அழைக்கப்படும் பிராமணர்கள் உண்ணும்போது, கல்விமானான ஒருவன் நிலக்கொடையின் பலன்கள் தொடர்பான இந்த ஸ்லோகங்களை உரைக்க வேண்டும்.(95) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அனைத்திலும் முதன்மையான கொடையைக் குறித்து நான் சொல்லிவிட்டேன். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(96)

அன்னதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 63-உணவுக் கொடை குறித்துப் பீஷ்மருக்குச் சொன்ன நாரதர்; உணவுக்கொடையாளி செல்லும் உலகங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மன்னன் இவ்வுலகில் கொடைகளை அளிக்க விரும்பும்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே, உண்மையில் மேன்மையான சிறப்புகளைக் கொண்ட பிராமணர்களுக்கு அவன் வழங்க வேண்டிய கொடைகள் என்ன?(1) என்ன கொடையால் பிராமணர்கள் உடனே நிறைவடைவார்கள்? பதிலுக்கு அவர்கள் வழங்கும் பலன்கள் என்ன? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கொடைகளில் இருந்து எழும் பலன் மூலம் அடையத்தக்க உயர்ந்த வெகுமதி என்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, இம்மையிலும், மறுமையிலும் வெகுமதிகளை விளைவிக்கும் கொடைகள் என்னென்ன? இவை யாவற்றையும் நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இவை யாவற்றையும் குறித்து என்னிடம் விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தெய்வீகத் தோற்றமுடைய நாரதரிடம் முன்பொரு சந்தர்ப்பத்தில் இதே கேள்விகள் என்னால் முன்வைக்கப்பட்டன. அந்தத் தெய்வீகத் தவசி என்னிடம் மறுமொழியாகச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)

நாரதர், “தேவர்களும், முனிவர்கள் அனைவரும் உணவைப் புகழ்கிறார்கள். உலக நடைமுறையும், அறிவுசார் துறைகள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(5) இதற்கு முன்பு உணவுக்கொடைக்கு நிகரான கொடை வேறேதும் இருந்ததும் இல்லை, இனி இருக்கப்போவதுமில்லை. எனவே, மனிதர்கள் எப்போதும் உணவுக் கொடை அளிப்பதையே குறிப்பாக விரும்புகிறார்கள்.(6) இவ்வுலகில், சக்திக்கும், பலத்துக்கும் உணவே காரணமாகிறது. உயிர்மூச்சுகள் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(7) இல்லறத்தார், துறவிகள், தவசிகள் {கிருஹஸ்தர்கள், பிரம்மசாரிகள், ஸந்நியாசிகள், வானப்பிரஸ்தர்கள்} என மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் உணவைச் சார்ந்தே இருக்கின்றனர். உயிர்மூச்சுகள் உணவைச் சார்ந்தே இருக்கின்றன. இதில் ஐயமேதும் இல்லை.(8) (தேவையின் அடிப்படையில்) தன் உறவினர்களில் எவரையும் துன்புறுத்திய ஒருவன், தன் செழிப்பை விரும்பினால் அவன் உயர் ஆன்ம பிராமணர் அல்லது துறவி ஒருவருக்கு உணவுக்கொடை அளிக்க வேண்டும்.(9) சிறப்புகள் நிறைந்த பிராமணர் வேண்டுதலின் பேரில் உணவைக் கொடையளிக்கும் மனிதன், மறுமையில் பெரும் மதிப்புமிக்கச் செல்வத்தை அடைவான்.(10)

செழிப்பாக இருக்க விரும்பும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, இல்லத்திலிருந்து நெடுந்தொலைவு பயணத்தால் களைத்துப் போயிருக்கும் ஒரு தகுதியான முதிய மனிதர் அந்த இல்லறத்தானின் வசிப்பிடத்திற்கு வரும்போது அவரை மதிப்புடன் வரவேற்க வேண்டும்.(11) பந்தங்கள் அனைத்தையும் தாண்டும் கோபத்தைக் கைவிட்டு, அறம் சார்ந்த இயல்பை அடைந்து, வன்மத்திலிருந்து விடுபட்டு, உணவைக் கொடையளிக்கும் மனிதன், நிச்சயம் இம்மையிலும் {இப்பிறவியிலும்}, மறுமையிலும் {மறுபிறவியிலும்} மகிழ்ச்சியை அடைவான்.(12) ஓர் இல்லறத்தான் தன் வசிப்பிடத்திற்கு வரும் மனிதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தவோ, திருப்பி அனுப்புவதன் மூலம் அவனை அவமானப்படுத்தவோ கூடாது. ஒரு சண்டாளனுக்கோ, ஒரு நாய்க்கோ கொடுக்கப்பட்ட உணவுக்கொடை ஒருபோதும் தொலைவதில்லை {வீண்போகாது}.(13) முன்பின் அறியாதவனும், வழியில் களைப்படைந்தவனுமான ஒருவனுக்குத் தூய உணவைக் கொடையளிக்கும் மனிதன் நிச்சயம் பெரும்பலனை அடைவான்.(14) பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், பிராமணர்கள், தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்கள் ஆகியோரை உணவுக்கொடையால் நிறைவடையச் செய்யும் மனிதன், மிகப் பேரளவு பலன்களை அடைவான்.(15)

கொடும்பாவத்தைச் செய்த ஒருவனும், வேண்டி வரும் ஒருவனுக்கு, அல்லது குறிப்பாக ஒரு பிராமணனுக்கு உணவைக் கொடையளித்தால் அவன் அந்தக் கொடும்பாவத்தின் மூலம் ஒருபோதும் கலக்கமடையமாட்டான்.(16) ஒரு பிராமணனுக்கு அளிக்கும் உணவுக்கொடை வற்றாததாகிறது {அழியாததாகிறது}. ஒரு சூத்திரனுக்கு அளிக்கப்படும் உணவுக்கொடை பெரும் பலனை விளைவிக்கவல்லதாகும். இதுவே பிராமணர்களுக்கும், சூத்திரர்களுக்கும் கொடுக்கப்படும் உணவுக்கொடையால் உண்டாகும் பலன்களுக்கிடையிலான வேறுபாடு ஆகும்.(17) ஒரு பிராமணனால் வேண்டப்படும்போது ஒருவன் அவனது குலத்தையோ, ஒழுக்கத்தையோ, வேதப் புலமையையோ விசாரிக்கக்கூடாது. அவன் கேட்ட உணவை ஒருவன் கொடுக்க வேண்டும்.(18) ஓ! மன்னா, உணவுக்கொடை அளிப்பவன், உணவைத் தரும் பல மரங்களையும், இன்னும் பிற விருப்பத்திற்குரிய பொருட்களையும் இம்மையிலும் மறுமையிலும் அடைவான்.(19) மங்கல மாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழவர்களைப் போலப் பித்ருக்களும் (சிராத்தங்களில்) தங்கள் மகன்களும், பேரப்பிள்ளைகளும் உணவைக் கொடையளிப்பார்கள் என்று எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.(20)

பிராமணன் என்பவன் பெரும்பொருளாவான். அவன் ஒருவனுடைய வசிப்பிடத்தில் வந்து, “எனக்குக் கொடு {தேஹி}” என்று கேட்கும்போது, அந்த வசிப்பிடத்தின் உரிமையாளன் பலனடைய விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த வேண்டுதலைக் கேட்பதன் {கொடுப்பதன்} மூலம் நிச்சயம் பெரும் பலனை அடைகிறான்.(21) பிராமணன் இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் விருந்தினனாவான். அனைத்து உணவுகளிலும் முதல் பங்குக்கு அவன் உரியவனாகிறான்[1]. பிச்சை வேண்டும் விருப்பத்தில் வந்தடைந்ததும், பிராமணர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதன் விளைவால் மதிப்புடன் திரும்பிச் சென்றதுமான வீடு செழிப்பில் பெருகும். அத்தகைய வீட்டின் உரிமையாளன், மறுமையில் வாழ்க்கையின் அனைத்து ஆடம்பர வசதி வாய்ப்புகளுடன் கூடிய ஒரு குடும்பத்தில் பிறவியை அடைவான்.(22,23) இவ்வுலகில் உணவுக்கொடைகளை அளிக்கும் மனிதன் மறுமையில் நிச்சயம் சிறந்த இடத்தை அடைவான். இன்பண்டங்களையும், இனிப்பான உணவுகளையும் கொடையளிக்கும் ஒருவன் சொர்க்க வாசத்தை அடைந்து, அங்கே வசிக்கும் பிறராலும், தேவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவான்.(24) உணவே மனிதர்களின் உயிர் மூச்சுகளாக அமைகிறது. அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளது. உணவுக் கொடைகளை அளிப்பவன், (தன் செல்வமாக) பல விலங்களையும், பல பிள்ளைகளையும், (வேறு வடிவில்) குறிப்பிடத்தக்க செல்வத்தையும் அடைந்து, இன்புத்திற்குரிய ஆடம்பர வசதிகளுடன் கூடிய பொருட்களை அனைத்தையும் அபரிமிதமாக அடைவான்.(25)உணவுக் கொடையாளி ஒருவன் உயிரைக் கொடுத்தவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அவன் அனைத்தையும் கொடுத்தவனாகச் சொல்லப்படுகிறான். எனவே, ஓ! மன்னா, அத்தகைய மனிதன் இம்மையில் பலம் மற்றும் வடிவ அழகு ஆகிய இரண்டையும் அடைகிறான்.(26) கொடையாளியின் வீட்டுக்கு ஒரு விருந்தினனாக வந்த ஒரு பிராமணனுக்கு முறையாக உணவு கொடுக்கப்பட்டால், அந்தக் கொடையாளி பெரும் மகிழ்ச்சியை அடைந்து, தேவர்களாலேயே துதிக்கப்படுபவனாகிறான்.(27) ஓ! யுதிஷ்டிரா, பிராமணன் என்பவன் பெரும்பொருளாவான். அவன் வளமிக்க நிலமுமாவான். அந்த நிலத்தில் விதைக்கப்படும் எந்த வித்தும் பலனெனும் அபரிமிதமான பயிராக விளைகிறது.(28) உணவுக் கொடையானது கொடையாளிக்கும், கொடை பெறுபவனுக்கும் உடனே மகிழ்ச்சியை உண்டாக்குவது காணப்படுகிறது. வேறு கொடைகள் அனைத்தும் காணப்படாத {கண்ணுக்குத் தெரியாத} கனிகளையே {பலன்களையே} உண்டாக்குகின்றன.(29) உணவில் இருந்தே உயிரினங்கள் தோன்றின. ஓ! பாரதா, உணவில் இருந்து மகிழ்ச்சியும் இன்பமும் உண்டாகின்றன. அறம், செல்வம் ஆகிய இரண்டும் உணவில் இருந்தே பாய்கின்றன {உண்டாகின்றன}. நோய்த்தீர்வு அல்லது உடல்நலமும் உணவில் இருந்தே பாய்கிறது.(30)முந்தைய கல்பத்தில், அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உணவே அமுதம், அல்லது இறவாமையின் தோற்றம் என்று சொன்னார். உணவே பூமி, உணவே சொர்க்கம், உணவே ஆகாயம். அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(31) உணவு இல்லாத போது, உடலுயிராக அமையும் ஐம்பூதங்களும் ஒன்று கலந்த நிலையில் நீடிக்காது {அவை பிரிந்து போகின்றன}. உணவு இல்லையென்றால் பலவானின் பலமும் தவறுவது காணப்படுகிறது.(32) அழைப்புகள், திருமணங்கள் மற்றும் வேள்விகள் அனைத்தும் உணவில்லாமல் நின்று போகின்றன. உணவில்லாத போது வேதங்களும் மறைந்துபோகும்.(33) அண்டத்தில் உள்ள அசையும் மற்றும் அசைவற்ற உயிரினங்கள் அனைத்தும் உணவையே சார்ந்திருக்கின்றன. மூன்று உலகங்களிலும் அறமும், செல்வமும் உணவையே சார்ந்திருக்கின்றன. எனவே ஞானிகள் உணவுக்கொடை அளிக்க வேண்டும்.(34) ஓ! மன்னா, உணவுக்கொடையளிக்கும் மனிதனின் பலம், சக்தி, புகழ், சாதனைகள் ஆகியன மூவுலகங்களிலும் இடைவிடாமல் அதிகரிக்கின்றன.(35)

உயிர்மூச்சுகளின் தலைவனான காற்று தேவன் {வாயு}, (சூரியனால் உறிஞ்சப்படும் நீரைக் கொண்டு சென்று) மேகங்களுக்கு மேலே அமர்கிறான். இவ்வாறு மேகங்களுக்குச் சுமந்து செல்லப்படும் நீரானது, ஓ! பாரதா, சக்ரனால் பூமியின் மீது பொழியப்படுகிறது.(36) சூரியன் தன் கதிர்களின் மூலம் பூமியின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறான். காற்று தேவன் {வாயு} சூரியனிலிருந்து அந்த ஈரப்பதத்தை விழச் செய்கிறான்.(37) ஓ! பாரதா, மேகங்களில் இருந்து அந்த நீர் பூமியின் மீது விழும்போது பூமாதேவி ஈரமடைகிறாள்[2].(38) அப்போது மக்கள், அண்டத்தின் உயிரினங்கள் சார்ந்திருக்கும் மொத்த விளைச்சலைத் தரும் பல்வேறு வகைப் பயிர்களை விதைக்கிறார்கள். இவ்வாறு உண்டாக்கப்படும் உணவிலேயே இறைச்சி, கொழுப்பு, எலும்புகள், அனைத்து உயிரினங்களின் உயிர் வித்து ஆகியவற்றின் தோற்றம் இருக்கிறது.(39) ஓ! மன்னா, இவ்வாறு தோன்றும் உயிர் வித்தில் இருந்து பல்வேறு வகை உயிரினங்கள் உண்டாகின்றன. உடலுக்குள் உள்ள அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் உயிர்வித்தை உண்டாக்கிப் பராமரிக்கிறார்கள்.(40) இவ்வாறு உணவில் இருந்தே சூரியன், காற்று மற்றும் உயிர்வித்து உண்டாகி செயல்படுகின்றன. ஒரே பூதம், அல்லது ஒரே அளவு என்று சொல்லப்படுகிற இவை யாவற்றில் இருந்துதான் அனைத்து உயிரினங்களும் உண்டாகின்றன.(41) ஓ! பாரதர்களின் தலைவா, தன் வீட்டுக்கு வரும் ஒருவனுக்கு உணவைக் கொடுக்கும் மனிதன், உயிரினங்களுக்கு உயிர் மற்றும் சக்தி ஆகிய இரண்டையும் காணிக்கையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்” என்றார் {நாரதர்}”.(42)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட நான் எப்போதும் உணவுக் கொடைகளைக் கொடுத்து வருகிறேன். எனவே, நீயும் வன்மத்தில் இருந்து விடுபட்டு, உற்சாகமிக்க இதயத்துடன் உணவைக் கொடையளிப்பாயாக.(43) ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, உரிய சடங்குகளுடன் தகுந்த பிராமணர்களுக்கு உணவைக் கொடையளிப்பதன் மூலம் நீ சொர்க்கத்தை அடைவதில் உறுதிகொள்ளலாம்.(44) ஓ! ஏகாதிபதி, உணவைக் கொடையளிக்கும் கொடையாளிகளுக்காக ஒதுக்கப்படும் உலகத்தைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. சொர்க்கத்தில் உள்ள அந்த உயர் ஆன்ம மனிதர்களின் மாளிகைகள் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.(45) ஆகாயத்து நட்சத்திரங்களைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவையாக, பல தூண்களால் தாங்கப்பட்டவையாக, சந்திர வட்டிலைப் போன்று வெண்மையாக, கிங்கிணி மணிகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவையாக, புதிதாய் உதித்த சூரியனைப் போல நம்பிக்கையூட்டுபவையாக உள்ள அரண்மனை போன்ற அந்த வசிப்பிடங்கள் நிலையானவையாகவோ, அசைபவையாகவோ இருக்கின்றன.(46) அந்த மாளிகைகளில், தரையில் வாழும் விலங்குகளும், பொருட்களும், நீரில் வாழும் விலங்குகளும் பொருட்களும் நூற்றுக்கணக்கில் இருக்கும். அவற்றில் சில வைடூரியத்தின் பிரகாசத்துடனும், சில சூரியப்பிரகாசத்துடனும் இருக்கும். அவற்றில் சில வெள்ளியாலானவையாகவும், சில பொன்னாலானவையாகவும் இருக்கும்.(47) அந்த மாளிகையில் வசிப்போரின் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டவல்ல பல மரங்களும் அங்கே இருக்கும். சுற்றிலும் பல குளங்கள், சாலைகள், சபைகள், கிணறுகள், தடாகங்களும் இருக்கும்.(48) எப்போது உரத்த சடசடப்பொலியை வெளியிடும் சக்கரங்களுடன் கூடியவையும், குதிரைகளும் பிற விலங்குகளும் பூட்டப்பட்டவையுமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் அங்கே காணப்படும். உணவு மற்றும் அனுபவிக்கத்தக்க பொருட்களின் மலைகளும், ஆடை ஆபரணக் குவியல்களும் அங்கே காணப்படும்.(49) பாலோடும் ஆறுகள் எண்ணற்றவையும், அரிசிக் குன்றுகளும், வேறு உணவு வகைகளும் அங்கே காணப்படும். உண்மையில், பொன்னொளிப் படுக்கைகளுடன் கூடிய வெண்மேகங்கள் போன்ற பல அரண்மனைகள் அந்த உலகங்களில் காணப்படும்.(50)

இவ்வுலகில் உணவுக்கொடை அளித்த மனிதர்களால் இவை அனைத்தும் அடையப்படும். எனவே, நீ உணவுக் கொடையாளியாவாயாக. உண்மையில், இவ்வுலகில் உணவுக் கொடையளிக்கும் உயர் ஆன்மா கொண்ட அறவோருக்கு ஒதுக்கப்படும் உலகங்கள் இவையே. இக்காரணங்களுக்காகவே இவ்வுலகில் மனிதர்கள் எப்போதும் உணவுக்கொடையளிக்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(51)

தானத்திற்கான கால அட்டவணை! – அநுசாஸனபர்வம் பகுதி – 64-எந்தெந்த நட்சத்திரங்களில் என்னென்ன கொடையளிக்கலாம் என்பது குறித்து தேவகியிடம் சொன்ன நாரதர்; அவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உணவுக்கொடைக்கான விதிகளைக் குறித்த உமது உரையாடலை நான் கேட்டேன். இப்போது கொடைகள் அளிக்கக்கூடிய கோள்கள் மற்றும் விண்மீன் சேர்க்கைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தேவகிக்கும், முதன்மையான முனிவரான நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் தேவர்களைப் போன்ற இயல்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர் துவாரகைக்கு வந்த போது தேவகி அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(3) தம்மிடம் கேள்வி கேட்ட அவளுக்கு அந்தத் தெய்வீக முனிவர் பின்வரும் சொற்களில் முறையாகப் பதிலளித்தார். அவற்றை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)

நாரதர், “ஓ! அருளப்பட்ட பெண்மணியே, கிருத்திகை நட்சத்திரத்தில்[2], நெய் கலந்த பாயசத்தைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடுத்து நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் மகிழ்ச்சி நிறைந்த உலகங்களை அடைகிறான்.(5)பிராமணர்களுக்குத் தான் பட்ட கடனில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஒருவன், ரோகிணி நட்சத்திரத்தில் அரிசி, நெய், பால், பிறவகை உணவு மற்றும் பானங்களுடன் பல கைப்பிடிகள் நிறைந்த மான் இறைச்சியை அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} கொடையளிக்க வேண்டும்[3].(6)சோமதைவதம் (அல்லது மிருகசீரிஷ) நட்சத்திரத்தில் கன்றுடன் கூடிய பசுவை கொடையளிப்பவன் மனிதர்களின் இவ்வுலகில் இருந்து, பேரின்பம் நிறைந்த சொர்க்கலோகத்திற்குச் செல்கிறான்.(7)

{திருவாதிரை நட்சத்திரத்தில்} உண்ணா நோன்பிருந்து, எள் கலந்த கிருசர உணவைக் கொடையளிப்பதன் மூலம் மறுமையில் கத்தி போன்ற கூர் முனைகளைக் கொண்ட பாறைகளுடன் கூடிய மலைகள் உள்ளிட்ட கடினங்கள் அனைத்தையும் கடக்கிறான்[4].(8)ஓ! அழகு நிறைந்த பெண்மணியே, புநர்வஸு {புனர்பூசம்} நட்சத்திரத்தில், உணவுப்பண்டங்களைக் கொடையளிக்கும் ஒருவன் தன் மறுபிறவியில் மேனி அழகு கொண்டவனாக, பெரும் புகழைக் கொண்டவனாக, அபரிமிதமான உணவு இருக்கும் குடும்பத்தில் பிறப்பான்.(9)

புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தில் நாணயமாக்கப்பட்ட, அல்லது கட்டியாகவுள்ள பொன்னைக் கொடையாக அளிக்கும் ஒருவன், இருளால் சூழப்பட்ட உலகங்களில் {பகுதிகளில்} வசித்தாலும் சோமனைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருப்பான்.(10)

அஷ்லேஷ (ஆயில்யம்} நட்சத்திரத்தில் வெள்ளியையோ, காளையையோ கொடையாக அளிப்பவன் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு பெருஞ்செழிப்பையும் செல்வாக்கையும் ஈட்டுவான்.(11)

மகம் நட்சத்திரத்தில் எள் நிறைந்த மட்பாண்டங்களை {மடக்குகளைக்} கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இவ்வுலகில் பிள்ளைகளையும், விலங்குகளையும், மறுமையில் இன்பநிலையையும் அடைகிறான்[5].(12)பூர்வ பால்குனி {பூரம்} நட்சத்திரத்தில் உண்ணா நோன்பிருக்கும் கொடையாளி, பானிதம் {கற்கண்டு} கலந்த உணவை பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் அவனுக்குக் கிட்டும் வெகுமதி இம்மையிலும், மறுமையிலும் பெருஞ்செழிப்பாகும்[6].(13)உத்தர பால்குனி {உத்திரம்} என்றழைக்கப்படும் நட்சத்திரத்தில் ஷஷ்திகம் என்றழைக்கப்படும் அரிசியுடன் நெய்யும் பாலும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடையலாம்.(14) உத்திர பால்குனி {உத்திரம்} நட்சத்திரத்தில் மனிதர்களால் அளிக்கப்படும் எக்கொடையும் வற்றாததாகிறது. இது மிக நிச்சயமானதாகும்.(15)

ஹஸ்தம் நட்சத்திரத்தில் உண்ணா நோன்பை நோற்று நான்கு யானைகளுடன் கூடிய தேர் ஒன்றைக் கொடையாக அளிக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளவல்ல பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16)

சித்திரை நட்சத்திரத்தில் ஒரு காளையையும், நறுமணப் பொருட்களையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், நந்தனக் காடுகளில் விளையாடும் தேவர்களைப் போல அருள் நிறைந்த அப்சரஸ் உலகங்களில் விளையாடுகிறான்[7].(17)சுவாதி நட்சத்திரத்தில், செல்வக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் விருப்பம்போலவே சிறந்த உலகங்களை அடைந்து, அதையும் தவிரப் பெரும்புகழையும் அடைகிறான்.(18)

விசாக நட்சத்திரத்தில், ஒரு காளையையும், மிக அதிக அளவில் பாலைத் தரும் ஒரு பசுவையும், ஒரு வண்டி நிறைய நெல்லையும், அவற்றை மறைக்கும் பிராஸங்கத்தையும்[8], அணிந்து கொள்ள ஆடைகளையும் கொடையளிப்பதன் மூலம்(19) ஒரு மனிதன் பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்து மறுமையில் வற்றாத பலன்களை அடைகிறான். அத்தகைய மனிதன் எந்தப் பேரிடரையும் சந்திக்காமல் நிச்சயம் சொர்க்கத்தை அடைகிறான்.(20) பிராமணர்கள் வேண்டும் எப்பொருளையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தான் விரும்பும் வாழ்வாதாரங்களை அடைந்து, மரணத்திற்குப் பிறகு பாவிகள் அடையும் அனைத்து இடர்களில் இருந்தும் நரகத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான்.(21)அனுராதா {அனுஷம்} நட்சத்திரத்தில், உண்ணா நோன்பிருந்து, சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய துணிகள் மற்றும் வேறு ஆடைகளையும், உணவையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தில் நூறு யுக காலம் மதிக்கப்படுகிறான்.(22)

ஜியேஷ்டம் {கேட்டை} நட்சத்திரத்தில், {மூலகம் என்றழைக்கப்படும்} கிழங்குகளுடன் {முள்ளங்கியுடன்} சேர்த்துக் காலசாகம் என்றழைக்கப்படும் கீரையை {கருவேப்பிலையைக்} கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பையும், விரும்பத்தக்க கதியையும் அடைகிறான்.(23)

அடக்கப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஒருவன், மூல நட்சத்திரத்தில், பிராமணர்களுக்குக் கனிகள் மற்றும் கிழங்குகளைக் கொடையளிப்பதன் மூலம் பித்ருக்களை நிறைவடையச் செய்து, விரும்பத்தக்க கதியை அடைகிறான்.(24)

பூர்வாஷாதம் {பூராடம்} நட்சத்திரத்தில், உண்ணா நோன்பிருக்கும் ஒருவன், நற்குடியில் பிறந்தவரும், நல்லொழுக்கம் கொண்டவரும், வேதங்களை அறிந்தவருமான ஒரு பிராமணருக்கு தயிர் நிறைந்த குடுவைகளை {தயிர்ப்பாத்திரங்களைக்} கொடையளிப்பதன் மூலம், தன் மறுபிறவியில் பசுக்கள் நிறைந்த குடும்பத்தில் பிறக்கிறான்.

உத்தராஷாதம் {உத்திராடம்} நட்சத்திரத்தில், அபரிமிதமான நெய் மற்றும் கற்கண்டு ஆகியவற்றுடன் வாற்கோதுமைக் கஞ்சி நிறைந்த குடுவைகளைக் கொடையளிக்கும் ஒருவன் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(25,26) அபிஜித் என்றழைக்கப்படும் நட்சத்திரத்தில் {உத்தராட நட்சத்திரத்தின் நடுப்பகல் வேளையில்} தேனையும், நெய்யையும் ஞானிகளுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஓர் அறவோன் சொர்க்கத்தை அடைந்து அங்கே மதிக்கத்தகுந்தவனாகிறான்[9].(27)சிரவண {திருவோணம்} நட்சத்திரத்தில் கம்பளம் மற்றும் அடர்த்தியான இழைநய அமைப்புக் கொண்ட {தடிமனான} வேறு துணிகளையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தூய ஒளியுடன் கூடிய வெண்தேரைச் செலுத்திக் கொண்டு இன்பலோகமெங்கும் உலவுவான்.(28)

தனிஷ்டை {அவிட்ட} நட்சத்திரத்தில் காளைகள் பூட்டப்பட்ட ஒரு வாகனத்தையோ, துணிக்குவியல்கள் மற்றும் செல்வத்தையோ அடக்கப்பட்ட ஆன்மாவுடன் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தன் மறுபிறவியில் சொர்க்கத்தை அடைகிறான்.(29)

சதபிஷை {சதய} நட்சத்திரத்தில் அகில் மற்றும் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் அப்சரஸ்களின் தோழமையையும், பல்வேறு வகையான நித்திய நறுமணப் பொருட்களையும் அடைகிறான்.(30)

பூர்வபாத்ரபதம் {பூரட்டாதி} நட்சத்திரத்தில் ராஜமாஷத்தை {மொச்சைக் கொட்டையைக்}[10] கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து, அனைத்து வகை உணவுப் பொருட்களையும், கனிகளையும் ஏராளமாகக் கையிருப்பில் கொண்டிருப்பான்.(31)உத்தரா {உத்திரட்டாதி} நட்சத்திரத்தில் ஆட்டிறைச்சியை {செம்மறியாட்டு இறைச்சியைக்} கொடையாக அளிக்கும் ஒருவன், அத்தகைய செயலின் மூலம் பித்ருக்களை நிறைவடைச் செய்து, மறுமையில் வற்றாத பலன்களை அடைகிறான்.(32)

ரேவதி நட்சத்திரத்தில் கறப்பதற்குரிய வெண்கலப் பாத்திரத்துடன் ஒரு பசுவைக் கொடையாக அளிக்கும் ஒருவனை, அவ்வாறு கொடையளிக்கப்பட்ட பசுவானது, அவன் விரும்பும் அனைத்தும் கனியும் நிலையை அருளத் தயாராக மறுமையில் {அவனை} அணுகுகிறது.(33)

அஸ்வினி நட்சத்திரத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்து, பெரும் சக்தியுடன் திகழ்கிறான்.(34)

பரணி நட்சத்திரத்தில் பசுவையும், எள்ளையும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் பெரும்புகழையும் ஏராளமான பசுக்களையும் அடைகிறான்” என்றார் {நாரதர்}.(35)

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறே எந்தெந்த நட்சத்திர நாள்களில் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை நாரதர் தேவகிக்குச் சொன்னார். இதைக் கேட்ட தேவகியும் தன் மருமகள்களுக்கு (கிருஷ்ணனின் மனைவியருக்கு) அவற்றை மீண்டும் சொன்னாள்” {என்றார் பீஷ்மர்}.(36)

வேறு தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 65-பொன், வெள்ளி, நீர், நெய், குடை, தேர் ஆகியவற்றைக் கொடையளிபதால் உண்டாகும் பலன்களையும், அவை குறித்த பெரியோர்களின் கருத்துகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும்பாட்டன் பிரம்மனின் மகனான சிறப்புமிக்க அத்ரி, “பொன்னைக் கொடையளிப்பவர்கள் இவ்வுலகில் அனைத்தையும் கொடையளிபவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்” என்றார்.(1)

மன்னன் ஹரிச்சந்திரன், “பொன்னைக் கொடையளிப்பது பாவத்தைப் போக்கவல்லது, நெடுநாள் வாழ்வுக்கு {நீடித்த ஆயுளுக்கு} வழிவகுப்பது, பித்ருக்களுக்கு வற்றாத பலனை உண்டாக்கவல்லது” என்றான்.(2)

மனு, “நீர்க்கொடையே அனைத்துக் கொடைகளிலும் சிறந்தது” என்றார். எனவே, ஒரு மனிதன் கிணறுகளையும், குளங்களையும், தடாகங்களையும் தோண்ட வேண்டும்.(3) பல்வேறு உயிரினங்கள் நீரைப் பெறும் நிறைந்த கிணறானது, அதைத் தோண்டிய மனிதனின் பாவச்செயல்களில் பாதியை நீக்கிவிடுவதாகச் சொல்லப்படுகிறது.(4) பசுக்களும், பிராமணர்களும், அறவோரும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளப் பயன்படும் கிணறு, குளம் அல்லது தடாகங்களைத் தோண்டிய ஒரு மனிதன் சார்ந்த மொத்த குலமும் நரகம் மற்றும் பாவத்தில் இருந்து மீட்கப்படுகிறது.(5) கோடை காலத்தில் தடையில்லாமல் அனைவரும் நீர் பெறும் வண்ணம் கிணறு அல்லது குளத்தைத் தோண்டிய மனிதன் அனைத்து வகைப் பேரிடர்களையும் கடக்கிறான்.(6)

சிறப்புமிக்கப் பிருஹஸ்பதி, பூஷன், பகன், அஸ்வினி இரட்டையர்கள், நெருப்பு தேவன் {அக்னி} ஆகியோரை நெய் நிறைவடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது.(7) நெய்யானது உயர்ந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். அது வேள்விக்கான உயர்ந்த {மிக முக்கிய} தேவையாக இருக்கிறது. நீர்மங்கள் அனைத்திலும் அதுவே சிறந்தது. நெய்யைக் கொடையளிப்பது மிக மேன்மையான பலனை உண்டாக்குகிறது.(8) மறுமையில் இன்பத்தை வெகுமதியாக அடைய விரும்புபவனும், புகழையும் செழிப்பையும் விரும்புபவனுமான மனிதன், தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவுடன் பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்க வேண்டும்.(9) அஸ்வினி மாதத்தில் பிராமணர்களுக்கு நெய்க்கொடையளிக்கும் மனிதனிடம் நிறைவடையும் அஸ்வினிகள் அவனுக்கு மேனி அழகை அளிக்கின்றனர்.(10) பிராமணர்களுக்கு நெய்க் கலந்த பாயசத்தைக் கொடையாக அளிக்கும் மனிதனின் வசிப்பிடத்தை ராட்சசர்கள் தாக்குவதில்லை.(11)

நீர் நிறைந்த குடுவைகளைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் தாகத்தால் இறக்கமாட்டான். அத்தகைய மனிதன் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் அடைவான், அவன் எந்த வகைத் துன்பத்திற்கும் ஆளாகமாட்டான்.(12) பெரும் பக்தியுடனும், புலனடக்கத்துடனும் பிராமணர்களில் முதன்மையானோருக்கு கொடையளிக்கும் மனிதன், அந்தப் பிராமணர்கள் தங்கள் தவங்களின் மூலம் வென்ற பலன்களில் ஆறில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறான்.(13) பிராமணர்களுக்கு வாழ்வாதாரங்களையும், சமைப்பதற்கும், குளிர்விரட்டவும் உதவும் விறகுகளையும் கொடையளிக்கும் மனிதன், தன் நோக்கங்கள் அனைத்தும், செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவதைக் காண்பான். அத்தகைய ஒருவன், தன் பகைவர்கள் அனைவரையும் விட அதிகக் காந்தியுடன் ஒளிர்வது காணப்படுகிறது.(14,15) அத்தகைய மனிதனிடம் சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி} நிறைவடைகிறான். மற்றொரு வெகுமதியாக அவன் ஒருபோதும் கால்நடைகள் {விலங்குகள்} அற்றவனாக ஆவதில்லை, மேலும் போரில் அவன் நிச்சயம் வெற்றி அடைவான்.(16)

ஒரு குடையைக் கொடையளிக்கும் மனிதன், பிள்ளைகளையும் {சந்ததியையும்}, பெருஞ்செழிப்பையும் அடைகிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் கண் நோயால் பாதிக்கப்படுவதில்லை. ஒரு வேள்வியைச் செய்வதால் உண்டாகும் பலன் அவனுடையதாகிறது.(17) கோடை காலத்திலோ, மழைக்காலத்திலோ ஒரு குடையைக் கொடையளிக்கும் மனிதனின் இதயம், எக்காரணத்தினாலும் எரிச்சல் அடைவதில்லை.(18) அத்தகைய மனிதன் அனைத்து வகைக் கடினங்கள் மற்றும் தடைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் விரைவாக வெல்கிறான். ஓ! மன்னா, உயர்ந்த அருளைக் கொண்டவரும், சிறப்புமிக்க முனிவருமான சாண்டில்யர், அனைத்துக் கொடைகளிலும் தேர்க்கொடையே சிறந்தது” என்று சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(19-20)

தானபலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 66-காலணி, எள், நிலம், பசு, உணவு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சுடு மணலில் நடக்கும்போது, பாதம் சுடும் பிராமணர் ஒருவருக்குக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன் என்ன பலன்களை அடைகிறான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர்களின் பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்குக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன், முட்கள் அனைத்தையும் நசுக்குவதில் வென்று, அனைத்து வகைக் கடினங்களையும் கடகிறான்.(2) ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய மனிதன் தன் எதிரிகளை அனைவரின் தலைகளுக்கு மேல் இருக்கிறான். ஓ! ஏகாதிபதி, கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டவையும், பொன் மற்றும் வெள்ளியாலானவையுமான வாகனங்கள் அவனுக்குக் கிடைக்கும். காலணிகளைக் கொடையளிப்பவன், நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வாகனத்தைக் கொடையளித்த பலனை ஈட்டுவதாகச் சொல்லப்படுகிறது” என்றார்.(3,4)

யுதிஷ்டிரன், “ஓ! பாட்டா, எள், நிலம், பசு மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடையளிப்பதால் கிட்டும் பலன்களை மீண்டும் விரிவாக எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

பீஷ்மர், “ஓ! குந்தியின் மகனே, எள்ளைக் கொடையளிப்பதனால் கிட்டும் பலனென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் சொல்வதைக் கேட்ட பிறகு, விதிப்படி எள்ளைக் கொடையளிப்பாயாக.(6) எள்ளானது, பித்ருக்களுக்கான சிறந்த உணவாகச் சுயம்புவான பிரம்மனால் உண்டாக்கப்பட்டது. எனவே, எள்ளைக் கொடையளிப்பது பித்ருக்களை எப்போதும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. மாக {மாசி} மாதத்தில் பிராமணர்களுக்கு எள்ளைக் கொடையளிக்கும் மனிதன், அச்சுறுத்தும் அனைத்துவகை உயிரினங்களும் நிறைந்த நரகத்தை ஒருபோதும் காண வேண்டியதில்லை.(8) எள்ளைக் காணிக்கையளித்துப் பித்ருக்களைத் துதிக்கும் ஒருவன், அனைத்து வேள்விகளிலும் தேவர்களை வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். ஒருவன் எந்நோக்கமும் இல்லாமல் ஒரு சிராத்தத்தில் எள்ளைக் காணிக்கையளிக்கக்கூடாது[1].(9) பெரும் முனிவரான கசியபரின் அங்கங்களில் இருந்து எள் உண்டானது. எனவேதான் கொடை குறித்த காரியங்களில் அவை உயர்ந்த பலனைத் தரக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.(10)எள்ளானது செழிப்பையும், மேனி அழகையும் கொடுத்து அந்தக் கொடையாளியைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையச் செய்கிறது. இந்தக் காரணத்தினால்தான் எள்ளைக் கொடையளிப்பது வேறு எந்தப் பொருளையும் கொடையளிப்பதைவிடச் சிறப்புமிக்கதாகிறது.(11) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ஆபஸ்தம்பர், சங்கர், லிகிதர், பெரும் முனிவரான கௌதமர் ஆகியோரனைவரும் எள்ளைக் கொடையளித்ததன் மூலமே சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(12) பாலினக் கலவியைத் தவிர்த்து பிரவிருத்தி அறங்கள் அல்லது செயல்களை நோற்று, எள் காணிக்கையுடன் ஹோமம் செய்யும் பிராமணர்கள் (தூய்மையிலும், திறனிலும்) தடுப்பு மருந்தான ஹவிக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்[2].(13) எள்ளுக்கொடையானது அனைத்துக் கொடைகளுக்கும் மேலானதாகப் புகழ்பெற்றது. கொடைகள் அனைத்தின் மத்தியிலும் எள்ளுக்கொடையானது வற்றாத பலனை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுகிறது.(14) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஹவி (தெளிந்த நெய்) கிடைக்காத போது, ஓ! பகைவர்களை எரிப்பவனே, முனிவர் குசிகர் தன் வேள்வி நெருப்புக்ள மூன்றுக்கும் எள்ளையே காணிக்கையளித்துச் சிறந்த கதியை அடைவதில் வென்றார்.(15) ஓ! குருக்களின் தலைவா, இவ்வாறே சிறந்த எள்ளுக்கொடை குறித்த விதிமுறைகளை உனக்குச் சொன்னேன். இந்த விதிமுறைகளின் விளைவாலேயே எள்ளுக்கொடையானது மிக மேன்மையான பலனைக் கொண்டது எனக் கருதப்படுகிறது.(16)இதன்பிறகு நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, ஒரு காலத்தில் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், சுயம்புவான பிரம்மனின் முன்னிலைக்குச் சென்றனர்.(17) பூமியில் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவர்கள் பிரம்மனை சந்தித்து, “எங்கள் வேள்விக்காக இஃது எங்களுக்கு வேண்டும்” எனச் சொல்லி மங்கலப் பூமியில் ஓர் இடத்தை அவனிடம் இரந்து கேட்டனர்.(18)

தேவர்கள், “ஓ! சிறப்புமிக்கவரே, நீரே தேவர்கள் அனைவரின் மற்றும் பூமி அனைத்தின் தலைவராவீர். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, உமது அனுமதியுடன் நாங்கள் ஒரு வேள்வியைச் செய்ய விரும்புகிறோம்.(19) வேள்விப் பீடத்தை அமைக்கச் சட்டப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் பூமியைப் பெறாத மனிதன், தான் செய்யும் வேள்வியின் பலனை ஒருபோதும் ஈட்டுவதில்லை.(20) அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட அண்டமனைத்தின் தலைவன் நீரே. எனவே, நாங்கள் செய்ய விரும்பும் வேள்விக்காகப் பூமியில் ஒரு பகுதியை எங்களுக்கு அருள்வதே உமக்குத் தகும்” என்று கேட்டனர்.(21)

பிரம்மன், “தேவர்களில் முதன்மையானோரே, கசியபனின் மகன்களே, நீங்கள் நினைத்த வேள்வியை நீங்கள் எங்கே செய்வீர்களோ அந்த நிலப்பகுதியை நான் உங்களுக்குத் தருவேன்” என்றான்.(22)

தேவர்கள், “ஓ! புனிதமானவரே, எங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டன. நாங்கள் எங்கள் வேள்வியைப் பெரிய தக்ஷிணையுடன் இங்கே செய்யப் போகிறோம். எனினும், முனிவர்கள் இந்த நிலப்பகுதியை எப்போதும் துதிக்கட்டும்” என்றனர்.(23)

அப்போது அந்த இடத்திற்கு அகஸ்தியர், கன்வர், பிருகு, அத்ரி, விருஷாகபி, அசிதர் மற்றும் தேவர்கள் ஆகியோர் வந்தனர்.(24) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, அப்போது உயர் ஆன்ம தேவர்கள் அங்கே தங்கள் வேள்வியைச் செய்தனர். அந்த முதன்மையான தேவர்கள் அதை {அந்த வேள்வியை} உரிய நேரத்தில் நிறைவடையச் செய்தனர்.(25) மலைகளில் முதன்மையான இமயத்தின் சாரலில் தங்கள் வேள்வியை நிறைவடையச் செய்த தேவர்கள், தங்கள் வேள்வியில் இருந்து எழும் பலனில் ஆறில் ஒரு பகுதியை நிலக்கொடைக்குக் கொடுத்தனர்.(26) சாணளவு நிலத்தையாவது நம்பிக்கையுடனும், மதிப்புடனும் (ஒரு பிராமணனுக்குக்) கொடையளித்த மனிதன் எந்தக் கடின சூழ்நிலையிலும் ஒருபோதும் சோர்வடைய வேண்டியதில்லை, மேலும் அவன் எந்தப் பேரிடரையும் ஒருபோதும் சந்திக்க மாட்டான்.(27)

குளிர், காற்று, சூரியன் ஆகியவற்றை வெளியே வைப்பதும், ஒரு தூய நிலப்பகுதியில் நிற்பதுமான ஒரு வீட்டைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி தேவலோகத்தை அடைந்து, அவனது பலன் தீர்ந்தாலும் ஒருபோதும் அங்கிருந்து வீழாமல் இருப்பான்.(28) ஓ! மன்னா, ஞானம் கொண்ட ஒரு கொடையாளி, வசிப்பதற்குரிய ஒரு வீட்டைக் கொடையளிப்பதன் மூலம், சக்ரனின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான். அத்தகைய மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(29) புலனடக்கம் கொண்டவரும், வேதங்களை நன்கறிந்தவரும், பிறவியால் ஆசான்களின் குடும்பத்தைச் சார்ந்தவருமான ஒரு பிராமணர் எவனுடைய வீட்டில் மனநிறைவுடன் வசிக்கிறாரோ அவன் உயர்ந்த இன்ப உலகங்களை அடைவதில் வென்று இன்புற்றிருக்கிறான்[3].(30)ஓ! பாரதர்களில் சிறந்தவனே, குளிர் மற்றும் மழையை வெளியே வைப்பதும், கணிசமான அளவுக்குக் கட்டமைப்பைக் கொண்டதும், பசுவுக்கு உறைவிடமளிப்பதுமான ஒரு கொட்டகையைத் தானம் அழிப்பதன் மூலம் ஒரு கொடையாளி தன் குலத்தை ஏழு தலைமுறைக்கு (நரகத்திலிருந்து) மீட்கிறான்.(31) உழத்தகுந்த ஒரு நிலப்பகுதியைக் கொடையளிப்பதன்மூலம் அந்தக் கொடையாளி சிறந்த செழிப்பை அடைகிறான். கனிம வளம் உள்ள ஒரு நிலப்பகுதியைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி தன் குலம் மற்றும் குடும்பத்தின் செல்வாக்கைப் பெருக்குகிறான்.(32) தரிசு நிலத்தையோ, வறண்ட நிலத்தையோ ஒருவன் ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது; அதேபோலச் சுடலைக்கு அருகிலுள்ள நிலத்தையோ, அத்தகைய கொடையளிப்பதற்கு முன்னர் ஒரு பாவியால் அனுபவிக்கப்பட்டு, சொந்தங்கொண்டாடப்பட்ட நிலத்தையோ ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது.(33) ஒரு மனிதன், வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராதத்தைச் செய்யும்போது, அந்த நிலக்கொடையையும், சிராத்ததையும் பித்ருக்கள் கெட்டுப் போகச் செய்வார்கள்.(34) எனவே ஞானம் கொண்ட ஒருவன் சிறு நிலப்பகுதியையாவது விலைக்கு வாங்கி அதைக் கொடையளிக்க வேண்டும். முறையாக விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் ஒருவனுடைய மூதாதையர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் பிண்டம் வற்றாததாகிறது {அழிவடையாததாகிறது}.(35)

காடுகள், மலைகள், ஆறுகள், தீர்த்தங்கள் ஆகியவை உரிமையாளர்கள் அற்றவை எனக் கருதப்படுகின்றன. இங்கே சிராத்தம் செய்வதற்கு நிலமேதும் விலைக்கு வாங்கப்பட வேண்டியதில்லை.(36) ஓ! மன்னா, நிலக்கொடையின் பலன்கள் குறித்த காரியத்தில் இதுவே சொல்லப்படுகிறது. ஓ! பாவமற்றவனே, இதன் பிறகு, பசுக்கொடைகுறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(37) தவசிகள் அனைவரையும் விடப் பசுக்கள் மேன்மையானவையாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு இருப்பதாலேயே, இந்தக் காரணத்தினாலேயே தெய்வீகமான மஹாதேவன் அவற்றின் துணையுடன் தவங்களைச் செய்தான்.(38) ஓ! பாரதா, பசுக்கள் சோமனின் துணையுடன் பிரம்மலோகத்தில் வசிக்கின்றன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாள முனிவர்கள் உயர்ந்த கதியாக இருக்கும் இந்த உலகத்தை {பிரம்மலோகத்தை} அடையவே முயற்சிக்கிறார்கள்.(39) ஓ! பாரதா, பால், நெய், தயிர், சாணம், தோல், எலும்புகள், கொம்புகள் மற்றும் மயிர் ஆகியவற்றைக் கொடுத்துப் பசுக்கள் மனிதர்களுக்கு நன்மை செய்கின்றன.(40)

பசுக்கள் குளிரையோ, வெப்பத்தையோ உணர்வதில்லை. அவை எப்போதும் பணி செய்கின்றன. மழைக்காலங்களும் அவற்றைப் பாதிப்பதில்லை.(41) பசுக்கள், பிராமணர்களின் துணையுடன் உயர்ந்த கதியை (பிரம்மலோக வாசத்தை) அடைவதால், பசுக்களும், பிராமணர்களும் இணையானவர்கள் என ஞானிகள் சொல்கின்றனர்.(42) பழங்காலத்தில், மன்னன் ரந்திதேவனால் செய்யப்பட்ட ஒரு பெரும் வேள்வியில் பெரும் எண்ணிக்கையிலான பசுக்கள் கொன்று காணிக்கையளிக்கப்பட்டன. கொல்லப்பட்ட அவ்விலங்குகளின் தோல்களில் சுரந்த சாற்றிலிருந்து சர்மண்வதி என்ற பெயரில் அழைக்கப்படும் ஓர் ஆறே உண்டானது.(43) அதன் பிறகு, பசுக்கள் வேள்விக்குத் தகுந்த விலங்குகளாக கொள்ளப்படுவதில்லை[4]. அவை கொடைக்குத் தகுந்த விலங்குகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி முதன்மையான பிராமணர்களுக்குப் பசுக்கொடையளிக்கும் மன்னன், தனக்கு நேரும் ஒவ்வொரு இடரையும் நிச்சயம் கடப்பான். ஆயிரம் பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன் நரகத்திற்குச் செல்ல மாட்டான்.(44,45)ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அத்தகைய மனிதன் எங்கும் வெற்றியை அடைகிறான். பசுவின் பால் அமுதமெனத் தேவர்களின் தலைவனே சொல்லியிருக்கிறான்.(46) இதன் காரணமாகப் பசுக்கொடை அளிக்கும் ஒருவன் அமுதத்தைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான். நோய் தடுக்கும் பாலில் இருந்து உண்டாக்கப்படும் நெய்யானது வேள்வி நெருப்பில் ஊற்றத்தக்க ஆகுதிகள் அனைத்திலும் மிகச் சிறந்ததென வேதங்களை அறிந்த மனிதர்கள் அறிவித்திருக்கிறார்கள்.(47) இக்காரணத்தினால், ஒரு பசுவைக் கொடையளிக்கும் மனிதன், வேள்விக்கான ஆகுதியைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான். காளை மாடானது சொர்க்கத்தின் உடல்வடிவமாகும். சிறப்புகளைக் கொண்ட ஒரு பிராமணனுக்கு ஒரு காளையைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உயிரினங்களின் உயிர் மூச்சுகளாகப் பசுக்கள் சொல்லப்படுகின்றன.(48,49) எனவே, பசுக்கொடை அளிக்கும் மனிதன் உயிர்மூச்சுகளைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். வேதங்களை அறிந்த மனிதர்கள், வாழும் உயிரினங்களின் உயர்ந்த புகலிடமாகப் பசுக்கள் இருப்பதாகச் சொல்கின்றனர்.(50)

எனவே, பசுக்கொடையளிக்கும் மனிதன், அனைத்து உயிரினங்களுக்குமான உயர்ந்த புகலிடத்தைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். பசுவானது கொல்லப்படுவதற்காக (அவளைக் கொல்பவனிடம்) ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது; அதே போல மண்ணை உழுபவனுக்கும் பசுவைக் கொடுக்கக்கூடாது; அதே போல ஒரு நாத்திகனிடமும் பசுவைக் கொடுக்ககூடாது. ஓ! பாரதர்களின் தலைவா, பசுவை வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டவனுக்கும் பசுக்கொடை அளிக்கப்படக்கூடாது[5].(51) {பசுவுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்} அத்தகைய பாவிகளுக்குப் பசுவைக் கொடுக்கும் மனிதன் எப்போதும் நீடிக்கும் நரகத்தில் மூழ்குவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(52) ஒருவன், உடல் மெலிந்ததோ, வாழும் கன்றை உண்டாக்காததோ, மலடாகவுள்ளதோ, நோய்வாய்ப்பட்டதோ, அங்கக் குறைபாடு கொண்டதோ, களைத்திருப்பதோவான பசுவை ஒரு பிராமணனுக்கு ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது.(53) பத்தாயிரம் பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தை அடைந்து, இந்திரனின் துணையுடன் அருள்நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இலட்சக்கணக்கான பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன், வற்றாத இன்பலோகங்களை அடைவான்.(54) இவ்வாறே பசுக்கொடை மற்றும் எள்ளுக் கொடை மற்றும் நிலக்கொடை ஆகியவற்றின் பலன்களை உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதா, உணவுக்கொடை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(55)ஓ! குந்தியின் மகனே, உணவுக் கொடையானது மிக உயர்ந்த கொடையாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததன் மூலமே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(56) களைத்தவனும், பசித்தவனுமான ஒருவனுக்கு உணவுக்கொடையளிக்கும் மன்னன் சுயம்புவுக்குச் சொந்தமான உயர்ந்த இன்பலோகத்தை அடைகிறான்.(57) ஓ! பெரும்பலம் கொண்டவனே, உணவுக்கொடை அளிப்பவர்களுக்குக் கிட்டும் இன்ப நிலையைப் பொன், ஆடைகள், மற்றும் பிற பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் கூட மனிதர்கள் அடையத் தவறுகிறார்கள்.(58) உண்மையில் உணவே முதல் பொருளாகும். உணவே உயர்ந்த செழிப்பாகக் கருதப்படுகிறது. உணவிலிருந்து உயிர் தோன்றுகிறது, சக்தியும், ஆற்றலும் பலமும் தோன்றுகின்றன.(59) எப்போதும் கவனத்துடன் அறவோருக்கு உணவுக்கொடையளிக்கும் ஒருவன் ஒருபோதும் எந்தத் துன்பத்திலும் வீழ்வதில்லை. பராசரரால் இதுவே சொல்லப்படுகிறது.(60)

தேவர்களை முறையாக வழிபட்ட பிறகு, உணவே முதலில் அவர்களுக்குப் படைக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, குறிப்பிட்ட மனிதர்கள் என்ன வகை உணவை உண்பார்களோ, அந்த மனிதர்களால் வழிபடப்படும் தேவர்களும் அதே வகை உணவையே உண்பதாகச் சொல்லப்படுகிறது[6].(61) கார்த்திகை மாத வளர்பிறையில் உணவுக்கொடையளிக்கும் மனிதன் இம்மையில் ஒவ்வொரு கடினத்தையும் கடப்பதில் வென்று, மறுமையில் வற்றாத இன்பநிலையை அடைகிறான்.(62) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தன் வசிப்பிடத்தில் பசியுடன் வரும் விருந்தினருக்கு உணவுக்கொடையளிக்கும் மனிதன், பிரம்மத்தை அறிந்த மனிதர்களுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அனைத்தையும் அடைகிறான்.(63) உணவுக்கொடையளிக்கும் மனிதன், அனைத்து கடினங்களையும், துன்பத்தையும் நிச்சயம் கடப்பான். அத்தகைய மனிதன் ஒவ்வொரு பாவத்தையும் கடந்து, ஒவ்வொரு தீச்செயலில் இருந்தும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான்.(64) இவ்வாறு உணவு, எள், பூமி {நிலம்} மற்றும் பசுக் கொடைகள் அளிப்பதன் பலன்களை நான் உனக்குச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(65)

ஜல தானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 67-தண்ணீரைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, நீர் சொன்ன பல்வேறு வெகை கொடைகளின் பலன்களைக் கேட்டேன். ஓ! பாரதரே, குறிப்பாக உணவுக்கொடையே மெச்சத்தகுந்தது, உயர்வானது என நான் புரிந்து கொள்கிறேன்.(1) எனினும், நீர்க்கொடை அளிப்பதன் பெரும்பலன்கள் என்னென்னன? ஓ! பாட்டா, நான் இதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன்.(3) ஓ! பாவமற்றவனே, கொடைகளைக் குறித்து நீர் தொடங்கி உனக்குச் சொல்லப் போகிறேன். உணவுக்கொடை மற்றும் நீர்க்கொடை மூலம் ஒரு மனிதன் அடையும் பலனை, வேறு எந்தக் கொடையினாலும் அடைய இயலாது என்றே நான் நினைக்கிறேன். எனவே, உணவு அல்லது நீர் கொடுப்பதைவிட மேன்மையான கொடை வேறேதும் இல்லை. உணவாலேயே அனைத்து உயிரினங்களாலும் நீடித்திருக்கமுடிகிறது.(4,5)

இந்தக் காரணத்தினாலேயே உலகங்கள் அனைத்திலும் உணவே மிக மேன்மையான பொருளாகக் கருதப்படுகிறது. உணவிலிருந்தே உயிரினங்களுக்குப் பலமும் சக்தியும் நிலையாக அதிகரிக்கிறது.(6) எனவே, உணவுக்கொடையே மிக மேன்மையான கொடை என உயிரினங்கள் அனைத்தின் தலைவனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். ஓ! குந்தியின் மகனே, (உணவுக்கொடை குறித்து) சாவித்திரி சொன்ன மங்கலச் சொற்கள் என்னென்ன என்பதை நீ கேட்டிருக்கிறாய்.(7) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அச்சொற்கள் சொல்லப்படுவதற்கான காரணமென்ன, அச்சொற்கள் என்னென்ன, புனித மந்திரங்களின் போக்கில் அவை சொல்லப்பட்டதெவ்வாறு என்பதை நீ அறிவாய். உணவுக்கொடை அளிப்பதன் மூலம் ஒரு மனிதன் உயிரையே கொடையாக அளிக்கிறான்.(8)

உயிர்க்கொடையைவிட இவ்வுலகில் மேன்மையான கொடை வேறேதுமில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, லோமசர் சொன்ன வாக்கியத்தை நீ அறியாதவனல்ல.(9) ஓ! ஏகாதிபதி, முற்காலத்தில் மன்னன் சிபி ஒரு புறாவுக்கு உயிரளித்ததன் விளைவால் அடைந்த கதியானது, ஒரு பிராமணனுக்கு உணவை அளிக்கும் கொடையாளியால் அடையப்படுகிறது.(10) எனவே, உயிரைக் {கொடையாகக்} கொடுப்பவர்கள் மறுமையில் மிக மேன்மையான இன்ப உலகங்களை அடைவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! குருக்களில் சிறந்தவனே, உணவானது {உணவுக்கொடையானது}, நீருக்கு {நீர்க்கொடைக்கு} மேன்மையானதாகவோ, அல்லாததாகவோ இருக்கலாம்.(11) நீரின் துணையின்றி எதனாலும் நீடித்திருக்க இயலாது. கோள்கள் அனைத்தின் தலைவனான சிறப்புமிக்கச் சோமனே {சந்திரனே} நீரில் இருந்துதான உதித்தான்.(12)

அமுதம், சுதை, ஸ்வதை, பால், அனைத்து வகை உணவு, இலையுதிர் மூலிகைகள், செடிகொடிகள் ஆகியன நீரில் இருந்தே உண்டாகின்றன.(13) ஓ! மன்னா, இவற்றில் இருந்தே அனைத்து உயிரினங்களின் உயிர் மூச்சுகளும் உண்டாகின்றன. தேவர்கள் அமுதத்தையே தங்கள் உணவாகக் கொள்கின்றனர். நாகர்கள் சுதையை உணவாகக் கொள்கின்றனர்.(14) பித்ருக்கள் ஸ்வதையைத் தங்கள் உணவாகக் கொள்கின்றனர். விலங்குகள் செடி கொடிகளைத் தங்கள் உணவாகக் கொள்கின்றன. அரிசி முதலியன மனிதர்களின் உணவாக அமைகின்றன என ஞானிகள் சொல்கின்றனர்.(15) ஓ! மனிதர்களின் தலைவா, இவை அனைத்தும் நீரில் இருந்தே உண்டாகின்றன. எனவே, நீர்க்கொடைக்கு மேலான கொடை வேறேதும் இல்லை.(16)

ஒரு மனிதன் செழிப்படைய விரும்பினால் அவன் எப்போதும் நீர்க்கொடை அளிக்க வேண்டும். நீர்க்கொடையானது மிகவும் புகழத்தக்கதாகும். அது கொடையாளிக்கு பெரும் புகழையும் நீண்ட வாழ்நாளையும் அளிக்கிறது.(17) ஓ! குந்தியின் மகனே, நீர்க்கொடையாளியானவன், எப்போதும் தன்னுடைய பகைவர்களின் தலைகளுக்கு மேலேயே இருப்பான் {அவர்களைவிட உயர்ந்தவனாக இருப்பான்}. அத்தகைய ஒருவன் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, என்று நீடித்திருக்கும் புகழையும் ஈட்டுகிறான்.(18) ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! பேரொளி கொண்டவனே, அந்தக் கொடையாளி தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்குச் செல்லும்போது மறுமையில் முடிவிலா இன்பத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் மறுமையில் வற்றாத அருள் உலகங்களை ஈட்டுகிறான் என மனுவே சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(19)

யமன் சொன்ன தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 68-எள், விளக்கு, உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பது குறித்து யமனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, எள், இருள்விலக்கி ஒளிதரும் விளக்குகள், உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தில் இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், யமனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட கதை குறிப்பிடப்படுகிறது.(2) கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் உள்ள நாட்டில், யாமுனை என்றழைக்கப்படும் {யமுனை உற்பத்தியாகும் களிந்த} மலையடிவாரத்தில் பிராமணர்கள் வசித்து வந்த ஒரு பெரிய நகரம் இருந்தது.(3) ஓ! மன்னா, பர்ணசாலை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட அந்த நகரம் தோற்றத்தில் மிக இனிமை நிறைந்ததாக இருந்தது. அங்கே கல்விமானான பிராமணர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர்.(4)

ஒரு நாள், இறந்தோரின் ஆட்சியாளனான யமன், கறுப்பு உடை உடுத்தியிருந்தவனும், குருதிச்சிவப்பான கண்களுடன் கூடியவனும், நட்டவகையில் நிற்கும் முடியுடன் கூடியவனும், காகம் போன்ற கண்களும், மூக்கும் பாதங்களும் கொண்டவனான தன் தூதுவனை {கிங்கரனை} அழைத்து,(5) “பிராமணர்கள் வசிக்கும் நகரத்திற்குச் சென்று, அகஸ்திய குலத்தில் பிறந்தவனும், சர்மின் {சர்மி} என்ற பெயரைக் கொண்டவனுமான மனிதனை இங்கே கொண்டு வருவாயாக.(6) மன அமைதியையே நோக்கமாகக் கொண்ட அவன் கல்விமானாகவும் இருக்கிறான். அவன் வேதங்களைக் கற்பிப்பதில் ஈடுபடும் ஆசானாகவும் இருக்கிறான், அவனது நடைமுறைகள் நன்கு அறியப்பட்டவையாக இருக்கின்றன. அங்கேயே வாழும் அதே குலத்தைச் சேர்ந்த வேறு எவனையும் என்னிடம் கொண்டு வராதே.(7) அந்த மற்றொருவனும், குணங்கள், கல்வி மற்றும் பிறவியில் அவனுக்கு இணையானவனே. பிள்ளைகள் மற்றும் ஒழுக்கக் காரியங்களில் இவனும் நுண்ணறிவு மிக்கச் சர்மினுக்கு ஒப்பானவனே.(8) நான் கருத்தில் கொண்டவனையே நீ கொண்டு வருவாயாக. அவன் (இங்கே மதிப்பில்லாமல் இழுத்து வரப்படுவதற்குப் பதிலாக) மதிப்புடன் வழிபடப்பட வேண்டும்” என்றான். அந்த இடத்திற்குச் சென்ற தூதன், அவன் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு முரணாகவே செயல்பட்டான்.(9) கொண்டுவரப்பட யமனால் தடுக்கப்பட்ட மனிதனைத் தாக்கி அங்கே கொண்டு வந்தான். பெருஞ்சக்தி கொண்ட யமன் அந்தப் பிராமணனைக் கண்டதும் எழுந்திருந்து, முறையாக அவனை வழிபட்டான்.(10)

பிறகு, அந்த இறந்தோரின் மன்னன் {யமன்} தன் தூதனை அழைத்து, “இவனைக் கொண்டு சென்று, மற்றொருவனைக் கொண்டு வருவாயாக” என்றான்.

இறந்தோரின் பெரும் நீதிபதியான அவன் {யமன்} இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, அந்தப் பிராமணன் அவனிடம், “நான் என் வேத கல்வியை முடித்துவிட்டேன். மேலும் நான் இப்போது உலகப் பந்தத்தோடு இல்லை. என் உயிர் இருப்புக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவற்றை இங்கே வசித்துக் கடத்த விரும்புகிறேன்” என்றான்.(11,12)

யமன், “ஒருவன் உயிர்வாழ, காலத்தால் விதிக்கப்பட்ட சரியான கால அளவை என்னால் உறுதி செய்ய முடியாது. எனவே, காலத்தால் தூண்டப்படாத என்னால் ஒருவனை இங்கே வசிக்க அனுமதிக்க முடியாது. நான் இவ்வுலகில் ஒருவன் செய்யும் அறச்செயல்களை {அல்லது மறச்செயல்களைக்} குறித்துக் கொள்கிறேன்.(13) ஓ! கல்விமானும், பேரொளியும் கொண்ட பிராமணா, உடனே உன் வசிப்பிடத்திற்குத் திரும்புவாயாக. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் மனத்தில் இருப்பது என்ன என்பதையும், நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(14)

பிராமணன், “என்னென்ன செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் பலனை {புண்ணியத்தை} ஈட்டுகிறான். ஓ! அனைத்திலும் சிறந்தவனே, மூவுலகங்களில் (இக்காரியத்தில்) முதன்மையான அதிகாரங்களைக் கொண்டவன் நீயே” என்றான்.(15)

யமன், “ஓ! மறுபிறப்பாள முனியே, கொடைகள் குறித்த சிறப்புவிதிகளைக் கேட்பாயாக. எள்ளுக்கொடையளிப்பது மிக மேன்மையான கொடையாகும். அஃது என்றும் நிலைக்கும் பலனை உண்டாக்குகிறது.(16) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, ஒருவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எள்ளுக்கொடையை அளிக்க வேண்டும். நாள்தோறும் எள்ளுக்கொடையளிப்பதன் மூலம் தன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை நிச்சயம் அடைகிறான்.(17) சிராத்தங்களில் எள்ளுக்கொடையளிப்பது மெச்சப்படுகிறது. உண்மையில், எள்ளுக்கொடையானது மிக மேன்மையான கொடையாகும். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பாயாக.(18) வைசாக {வைகாசி} மாத முழு நிலவு நாளில் {பௌர்ணமியில்} ஒருவன், பிராமணர்களுக்கு எள்ளுக்கொடையளிக்க வேண்டும். ஒருவன் தன்னால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எள்ளை அவர்களை உண்ணச் செய்யவும், தீண்டச்செய்யவும் வேண்டும்.(19) தங்களுக்கு நன்மையை அடைய விரும்புபவர்கள், தங்கள் மொத்த ஆன்மாக்களுடன் தங்கள் வீடுகளில் இதைச் செய்ய வேண்டும்.[1] அதே போல மனிதர்கள் நீர்க்கொடை அளிக்கவும், குடிநீர் விநியோகிக்கும் ஓய்விடங்களை நிறுவவும் வேண்டும்[2].(20) ஒருவன் குளங்களையும், தடாகங்களையும், கிணறுகளையும் வெட்ட வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அத்தகைய செயல்கள் உலகில் அரிதானவையாகும்.(21) எப்போதும் நீர்க்கொடை அளிப்பாயாக. இச்செயல் புண்ணியம் நிறைந்ததாகும். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அத்தகைய கொடைகள் அளிப்பதற்காக நீ சாலையோரங்களில் நீர் பகிர்ந்து கொடுக்கும் ஓய்விடங்களை {நிழற்பந்தல்களை} நிறுவ வேண்டும்.(22) ஒருவன் உண்ட பிறகு, அவனுக்குக் குறிப்பாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடை குடிப்பதற்கான நீராகும்” என்றான் {யமன்}”.(23)பீஷ்மர் தொடர்ந்தார், “அவனிடம் {அந்தப் பிராமணனிடம்} இச்சொற்களை யமன் சொன்னதும், தூதுவன் அவனை மீண்டும் அவனது வசிப்பிடத்தில் கொண்டு விட்டான். அந்தப் பிராமணன் திரும்பியதும், தான் பெற்ற போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான்.(24) இவ்வாறு அவனை அவனது வசிப்பிடத்தில் திரும்ப விட்ட யமனின் தூதவன் {கிங்கரன்} யமனால் உண்மையில் வேண்டப்பட்ட சர்மினைப் பிடித்தான். சர்மினைக் கொண்டு சென்று தன் தலைவனிடம் {யமனிடம்} சொன்னான்.(25) பெருஞ்சக்தி கொண்டவனான அந்த இறந்தோரின் நீதிபதி {யமன்}, அறம்சார்ந்த அந்தப் பிராமணனை வழிபட்டு, சிறிது நேரம் அவனோடு உரையாடிவிட்டு, மீண்டும் அவனது வசிப்பிடத்திற்குக் கொண்டு செல்ல விடைகொடுத்தான். அவனிடமும் யமன் அதே போதனைகளையே சொன்னான். சர்மினும் மனிதர்களின் உலகிற்குத் திரும்பி வந்து யமன் சொன்ன அனைத்தையும் செய்தான்.(27) பித்ருக்குக்கு நன்மை செய்யும் விருப்பத்தின் மூலம் யமன் நீர்க்கொடையைப் போலவே, இருள் நிறைந்த இடங்களுக்கு விளக்கைக் கொடையளிப்பதையும் மெச்சுகிறான். எனவே, இருள்நிறைந்த இடத்தை ஒளியூட்ட விளக்கைக் கொடையளிப்பவன் பித்ருக்களுக்கு நன்மை செய்பவனாகக் கருதப்படுகிறான்.(28) எனவே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்ட ஒருவன் எப்போதும் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும். விளக்கைக் கொடையளிப்பது, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் சுயத்தின் பார்வைத்திறனை அதிகரிக்கிறது[3].(29)ஓ! மன்னா, ரத்தினங்களைக் கொடையளிப்பது மிக மேன்மையான கொடை என்று சொல்லப்படுகிறது. ரத்தினக்கொடையேற்ற ஒரு பிராமணன், ஒரு வேள்வியைச் செய்வதற்காக அவற்றை விற்றால் எப்பிழையும் இழைத்தவனாகான்.(30) ரத்தினக் கொடையேற்று, அவற்றை மீண்டும் பிராமணர்களுக்கே கொடையளிக்கும் பிராமணன் வற்றாத பலனை ஈட்டி, அவன் உண்மையில் யாரிடம் இருந்து அவற்றைப் பெற்றானோ அவனுக்கும் வற்றாத பலனை அளிக்கிறான்.(31) அனைத்துக் கடமைகளையும் அறிந்த மனு, முறையான கட்டுப்பாடுகளை நோற்பவனான ஒருவன், முறையான கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு பிராமணனுக்கு ரத்தினக் கொடையளிக்கும்போது, தானும் வற்றாத பலனை ஈட்டி, அவற்றைப் பெறுபவனுக்கும் வற்றாத பலனை அளிக்கிறான்.(32)

தான் மணந்து கொண்ட மனைவியுடனே மனநிறைவுடன் இருப்பவனும், ஆடைகளைக் கொடையளிப்பவனுமான மனிதன், சிறந்த நிறத்தையும், தனக்கான சிறந்த ஆடைகளையும் ஈட்டிக் கொள்கிறான்.(33) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பசு, பொன், எள் ஆகியவற்றைக் கொடையளிப்பதால் கிட்டும் பலன்களை வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் பல்வேறு பணிப்பாணைகளுக்கு ஏற்புடைய வகையில் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(34) ஒருவன் திருமணம் செய்து கொண்டு, தான் மணந்த மனைவியரிடம் சந்ததியை எழுப்ப {உண்டாக்க} வேண்டும். ஓ!குருகுலத்தின் மகனே, அனைத்து உடைமைகளைக் காட்டிலும் ஆண் குழந்தை {மகனைப்} பெறுவதே முதன்மையானதாகக் கருதப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(35)

கோதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 69-யுதிஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க பசுக்கொடை, நிலக்கொடை ஆகியவற்றைக் குறித்து மீண்டும் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, கொடைகள் குறித்த சிறப்பு விதிகளையும், முக்கியமாக நிலக்கொடை குறித்தும் எனக்கு மீண்டும் சொல்வீராக.(1) அறச்செயல்களைச் செய்யும் பிராமணனுக்கு ஒரு க்ஷத்திரியன் நிலக்கொடை அளிக்க வேண்டும். அத்தகைய பிராமணன் உரிய சடங்குகளுடன் அக்கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், க்ஷத்திரியனைத் தவிர வேறு எவனும் நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல.(2) இப்போது, பலனை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்த மனிதர்கள் கொடையளிக்ககூடிய பொருட்கள் யாவை என்பதைச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியம் குறித்து வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மூன்று கொடைகள் ஒரே பலன்களை உண்டாக்கவல்லவையாக, ஒரே பெயரைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. உண்மையில் அம்மூன்றும் அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கவல்லவையாகும். அத்தகைய குணங்களைக் கொண்டவை பசு, நிலம் மற்றும் அறிவு {கல்வி} என்ற மூன்று பொருட்கள் ஆகும்.(4) வேதங்களில் இருந்து பெறப்பட்ட அறச் சொற்களைத் தன் சீடர்களுக்குச் சொல்லும் மனிதன், நிலம் மற்றும் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டுவதற்கு இணையான பலனை அடைகிறான்.(5) அதே போல, பசுக்களும் (கொடைக்குத்தகுந்த பொருட்களாக) புகழப்படுகின்றன. அவற்றைவிட உயர்ந்த கொடையாக வேறு எந்தப் பொருளும் இருப்பதில்லை. பசுக்கள் உடனே பலனை அளிக்கவல்லவையாக இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய கொடை பெரும்பலனுக்கு வழிவகுக்குமேயன்றி வேறில்லை.(6) பசுக்கள் அனைத்து உயிரினங்களுக்கு அன்னைகளாகின்றன. அவை அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அளிக்கின்றன. தன் செழிப்பை விரும்பும் ஒருவன் எப்போதும் பசுக்கொடையளிக்க வேண்டும்.(7) எவனும் பசுவை உதைக்கவோ, பசுக்களுக்கு மத்தியில் செல்லவோ கூடாது. பசுக்கள், மங்கல இல்லங்களான தேவிகளாக இருக்கின்றன. இதன் காரணமாகவே எப்போதும் அவை வழிபடத்தகுந்தவையாக இருக்கின்றன.(8)பழங்காலத்தில தேவர்கள் ஒரு வேள்வியைச் செய்வதற்காக நிலத்தை உழுதபோது கலப்பையில் பூட்டப்பட்ட இளங்காளைகளைத் தாக்க சாட்டையைய்ப பயன்படுத்தினர். எனவே, அத்தகைய நோக்கத்திற்கு நிலத்தை உழும்போது, காளைகள் மீது சாட்டையைப் பயன்படுத்துவது நிந்தனையையோ, பாவத்தையோ ஈட்டாது. எனினும், வேறு செயல்களில் காளைகள் ஒருபோதும் சாட்டையால் தாக்கப்படக்கூடாது.(9) பசுக்கள் மேயும்போதோ, கிடக்கும்போதோ எவரும் எவ்வழியில் அவற்றை எரிச்சலூட்டக்கூடாது. தாகமாக இருக்கும் பசுக்களுக்குத் தண்ணீர் கிட்டாதபோது, (அவை குளத்திற்கோ, தடாகத்திற்கோ, ஆற்றுக்கோ செல்வதைத் தடுப்பதன் விளைவாக) {அவற்றை எரிச்சலூட்டும்} அத்தகைய மனிதனை வெறுமனே பார்ப்பதன் மூலமே அவற்றால் அவனையும், அவனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிட முடியும்.(10) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சிராத்தங்களில் அல்லது தேவர்களை வழிபடும் இடங்களில் உள்ள பீடங்களே கூடப் பசுஞ்சாணம் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு, புனிதப்படுத்தப்படுகின்றன எனும்போது பசுவை விடப் புனிதமான விலங்குகள் வேறு எவை இருக்கக்கூடும்?(11) தான் உண்பதற்கு முன்பாக, வேறு ஒருவனுக்குச் சொந்தமான பசுவுக்குக் கைப்பிடி நிறையப் புல்லைக் கொடுக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கும் நோன்பை நோற்பவனாகக் கருதப்படுகிறான்.(12) அத்தகைய ஒருவன் பிள்ளைகளையும், புகழ், செலவம், செழிப்பு ஆகியவற்றையும் அடைந்து, அனைத்துத் தீமைகளையும், தீய கனவுகளையும் விலக்குகிறான்” என்றார் {பீஷ்மர்}.(13)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கொடையளிக்கத்தகுந்த பசுக்களுக்கான குறியீடுகள் என்னென்ன? கொடைகளாகக் கொடுக்கக்கூடிய பசுக்கள் என்னென்ன? பசுக்கொடை கொடுக்கப்பட வேண்டிய மனிதர்களின் குணங்கள் என்னென்ன? மேலும், யார் யாருக்கெல்லாம் பசுக்கள் கொடுக்கப்படக்கூடாது?” என்று கேட்டான்.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒழுக்கத்தில் நேர்மையற்ற ஒருவனுக்கோ, பாவம் நிறைந்தவனுக்கோ, பேராசை நிறைந்தவனுக்கோ, வாக்கில் பொய்மை கொண்டவனுக்கோ, பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்குக் காணிக்கையளிக்காதவனுக்கோ பசுவை ஒருபோதும் கொடுக்கக்கூடாது.(15) வேதங்களைக் கற்றவனும், உலகம்சார்ந்த செல்வத்தில் வறியவனும், பல பிள்ளைகளைக் கொண்டவனும், இல்லற நெருப்பைக் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16) ஒரு மனிதன், வேறு ஒருவரிடம் இருந்து கொடையாகப் பெற்றதைத் துணையாகக் கொண்டு பலன் நிறைந்த செயல் எதைச் செய்யும்போதும், அச்செயலால் உண்டாகும் பலனில் ஒரு பகுதியானது, எவனுடைய செல்வத்தைக் கொண்டு அச்செயல் செய்யப்பட்டதோ அவனுக்குரியதாகிறது.(17) ஒருவனை உற்பத்தி செய்தவன் {தந்தை}, ஒருவனைக் காப்பாற்றியவன், ஒருவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்கியவன் ஆகியோர் மூன்று தந்தைமாராகக் கருதப்படுகிறார்கள்.(18) ஆசானுக்குக் கடமையுணர்வுடன் செய்யும் தொண்டு பாவத்தை அழிக்கிறது. செருக்கானது பெரும்புகழையும் அழித்துவிடும். மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது பிள்ளையில்லாப் பழியை அழிக்கிறது, பத்துப் பசுக்களை உடைமையாக்கிக் கொள்வது வறுமைப் பழியை அகற்றுகிறது.(19)

வேதாந்தத்தில் அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் கல்வியைக் கொண்டவனும், ஞானம் நிறைந்தவனும், புலன்களில் முழுக்கட்டுப்பாடு கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவனும், உலகம் சார்ந்த அனைத்துப் பற்றுகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களிடமும் இனிமையான சொற்களைச் சொல்பவனும், பசியால் உந்தப்பட்டாலும் ஒருபோதும் தீச்செயல் ஏதும் செய்யாதவனும், மென்மையானவனும், அமைதியான மனநிலையைக் கொண்டவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனுமான ஒரு பிராமணனுக்கு, அதே நடத்தைகளைக் கொண்டவனும், பிள்ளைகள் மற்றும் மனைவிகளைக் கொண்டவனுமான ஒரு மனிதன் வாழ்வாதாரங்களைக் கொடுக்க வேண்டும்.(20,21) தகுந்த மனிதனுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் எவ்வளவு பலன் கிட்டுமோ, அதே அளவு பாவம் ஒரு பிராமணனுக்கு உரியதைக் களவாடுவதன் மூலம் கிட்டுகிறது. அனைத்துச் சூழ்நிலைகளிலும் பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிடுவது தவிர்க்கப்பட வேண்டும், அவனது மனைவிகள் தொலைவில் வைக்கப்பட வேண்டும்[2]” என்றார் {பீஷ்மர்}.(22)

மன்னன் நிருகன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 70-மன்னன் நிருகனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வழிதவறி வந்த பசு; பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்த மன்னன் நிருகன்; ஓணானாக மாறியது; கிருஷ்ணன் நிருகனை விடுவித்தது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒரு பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிட்டதன் விளைவால் மன்னன் நிருகன் அடைந்த பேரிடரைக் குறித்த கதையை இது தொடர்பாக அறவோர் குறிப்பிடுகின்றனர்.(1) சில காலத்திற்கு முன்பு, யதுகுலத்தைச் சார்ந்த சில குறிப்பிட்ட இளைஞர்கள் நீர் தேடிச் சென்ற போது, புல் மற்றும் கொடிகளால் நன்கு மறைக்கப்பட்ட ஒரு பெரிய கிணற்றை அடைந்தனர்.(2) அதனிலிருந்து நீரெடுக்கும் விருப்பத்தில் அதன் வாயைச் சுற்றியிருந்த கொடிகளை அகற்ற பெரிதும் முயற்சி செய்தனர். அந்த வாயில் தூய்மையடைந்ததும், அதனுள் ஒரு பெரிய ஓணான் வசிப்பதைக் கண்டனர். அந்த இளைஞர்கள் அச்சூழலில் இருந்து அந்த ஓணானை மீட்க மீண்டும் மீண்டும் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(3,4) மலையின் அளவுக்கு ஒப்பாக இருந்த அந்த ஓணானைக் கயிறுகளாலும், தோல் வார்களாலும் விடுவிக்க முயன்றனர். தங்கள் நோக்கத்தில் வெல்ல முடியாத அந்த இளைஞர்கள் ஜனார்த்தனனிடம் சென்றனர்.(5)

அவர்கள் அவனிடம், “கிணற்றின் மொத்த இடத்தையும் ஒரு பெரிய ஓணான் மறைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. எங்கள் சிறந்த முயற்சிகளினாலும் அதை அச்சூழலில் இருந்து மீட்க முடியவில்லை” என்றனர். கிருஷ்ணனிடம் இதுவே சொல்லப்பட்டது.(6) அந்த இடத்திற்குச் சென்ற வாசுதேவன், அந்த ஓணானை வெளியே எடுத்து யாரது என அதனிடம் கேட்டான். அந்த ஓணான் பழங்காலத்தில் பல வேள்விகளைச் செய்து புகழ்பெற்ற மன்னன் நிருகனின் ஆன்மாவைத் தான் கொண்டிருப்பதாக அந்த ஓணான் சொன்னான்.(7)

இச்சொற்களைச் சொன்ன அந்த ஓணானிடம் மாதவன், “நீ அறச்செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறாய். நீ எப்பாவத்தையும் இழைக்கவில்லை. ஓ!மன்னா, உனக்கு ஏன் இந்தத் துன்பம் நிறைந்த கதி ஏற்பட்டது? இஃது ஏன்? எதனால் ஏற்பட்டது?(8) நூறும், ஆயிரமும், மீண்டும் நூறும், எண்ணூறும் பத்து லட்சமுமான பசுக்களை நீ கொடையளித்திருப்பதாக நாங்கள் கேட்டிருக்கிறோம். எனவே, இந்தக் கதி உனக்கு ஏன் ஏற்பட்டது?” என்று கேட்டான்.(9)

அப்போது நிருகன் கிருஷ்ணனிடம் மறுமொழியாக, “ஒருநாள், இல்லற நெருப்பை முறையாக வழிபட்டு வந்த ஒரு பிராமணருக்குச் சொந்தமான பசுவானது, உரிமையாளர் இல்லாதபோது அவரது வசிப்பிடத்தில் இருந்து தப்பி என் மந்தையில் நுழைந்துவிட்டது.(10) என்னுடைய மேய்ப்பர்கள் அந்தப் பசுவைத் தங்கள் ஆயிரம் பசுக்களையில் அதையும் சேர்த்துக் கொண்டனர். சமயத்தில், சொர்க்கத்தில் மகிழ்ச்சியை அடைய விரும்பி நான் அந்தப் பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்தேன்.(11) உண்னையான உரிமையாளர் வீடு திரும்பியதும், தொலைந்து போன தன் பசுவைத் தேடி இறுதியாக மற்றொருவருடைய வீட்டில் அதைக் கண்டடைந்தார். அவளைக் கண்டதும் அதன் உரிமையாளர், “இஃது என்னுடைய பசு” என்றார்.(12) மற்றொருவர் தன் கூற்றை ஆதரிக்கவும், அவ்விருவருக்குள்ளும் சச்சரவு எழுந்து இறுதியாகக் கோபத்துடன் என்னிடம் வந்தனர்.

அவர்களில் ஒருவர் என்னிடம், “இந்தப் பசுவை எனக்குக் கொடையளித்தவன் நீயே” என்றார். மற்றொருவர், “இந்தப் பசு என்னுடையவள், நீ அவளை என்னிடம் இருந்து களவு செய்துவிட்டாய்” என்றார்.(13)

நான் யாரிடம் பசுவைக் கொடுத்திருந்தேனோ அவரிடம் நூற்றுக்கணக்கான வேறு பசுக்களுக்கு மாற்றாக அந்தப் பசுவை வேண்டிக் கேட்டேன். ஆவல் நிறைந்த என் வேண்டுதலுக்கு இணங்காமல் அவர் என்னிடம்,(14) “நான் பெற்ற பசுவானவள் இடத்திற்கும் காலத்திற்கும் நன்கு பொருந்தியிருக்கிறாள். அவள் அமைதியானவளாகவும், எங்களை மிகவும் விரும்புபவளாகவும் இருப்பதையும் தவிர்த்து அபரிமிதமான பாலையும் தருகிறாள். அவள் தரும் பால் மிக இனிமையானதாக இருக்கிறது. அவள் என் வீட்டில் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாகக் கருதப்படுகிறாள்.(15) அதையும் தவிர, மெலிந்து பலவீனமாக இருக்கும் என் பிள்ளைக்கு அவளே உணவூட்டுக்கிறாள். என்னால் அவளைக் கொடுக்கவே இயலாது” என்றார். இச்சொற்களைச் சொல்லிவிட்டு அந்தப் பிராமணர் சென்று விட்டார்.(16)

பிறகு நான் அந்த மற்றொரு பிராமணரிடம் அவருக்கு ஒரு மாற்றைக் கொடுக்கும் வகையில், “இந்த ஒரு பசுவுக்குப் பதிலாக நூறாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொள்வீராக” என்றேன்.(17)

எனினும், அந்தப் பிராமணர் என்னிடம் மறுமொழியாக, “அரச வகையைச் சார்ந்தோரிடம் இருந்து நான் கொடைகளை ஏற்பதில்லை. ஆதரவில்லாமலே என்னால் செயல்பட இயலும். காலத்தைக் கடத்தாமல் என் பசுவையே எனக்குக் கொடுப்பாயாக” என்றார். ஓ! மதுசூதனா, இவ்வாறே அந்தப் பிராமணர் என்னிடம் பேசினார்.(18)

நான் அவருக்குப் பொன், வெள்ளி, குதிரைகள் மற்றும் தேர்களையும் கொடையாகக் கொடுக்க முன்வந்தேன். அந்த முதன்மையான பிராமணரோ அக்கொடைகள் எதையும் ஏற்க மறுத்துச் சென்றுவிட்டார்.(19) அதே வேளையில், தடுக்கப்படமுடியாத காலத்தின் ஆதிக்கத்தால் உந்தப்பட்டு நான் இவ்வுலகில் இருந்து சென்றேன். பித்ரு லோகத்திற்குச் சென்ற நான் அங்கிருந்து இறந்தோரின் மன்னனிடம் {யமனிடம்} அழைத்துச் செல்லப்பட்டேன்.(20)

என்னை முறையாக வழிபட்ட யமன், என்னிடம், “ஓ! மன்னா, உன் அறச்செயல்களின் கதியை உறுதிசெய்ய முடியவில்லை.(21) எனினும், ஒரு சிறிய பாவம் நீ அறியாமலேயே உன்னால் இழைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாவத்திற்கான தண்டனையை இப்போதோ, பிறகோ நீ விரும்பியவாறு அனுபவித்துக் கொள்வாயாக.(22) நீ (அரியணை ஏறியதும் சொந்த அனுபவம் கொண்ட அனைத்து மனிதர்களையும்) காப்பாய் என உறுதிமொழியேற்றாய். நீ கூறிய அந்த உறுதிமொழியானது உன்னால் கண்டிப்புடன் காக்கப்படவில்லை. நீ ஒரு பிராமணனுக்கு உரியதை அபகரித்தாய். இந்த இருவகைப் பாவத்தை நீ இழைத்திருக்கிறாய்” என்றான்.(23)

நான், “முதலில் தண்டனை எனும் துன்பத்தை நான் அனுபவிக்கப் போகிறேன், அது முடிந்ததும், ஓ! தலைவா, எனக்காகக் காத்திருக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பேன்” என்றேன். நான் இச்சொற்களை இறந்தோரின் மன்னனிடம் {யமனிடம்} சொன்னதும் பூமியில் விழுந்தேன்.(24)

அவ்வாறு விழுந்தாலும், யமனால் உரக்கச் சொல்லப்பட்ட சொற்களை என் காதுகள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தச் சொற்கள், “வசுதேவனின் மகனான ஜனார்த்தனன் உன்னைக் காப்பான்.(25) ஓராயிரம் வருடங்கள் நிறைவடைந்ததும், உன் பாவச்செயலுக்கான தண்டனை தீரும்போது, உன் அறச்செயல்களின் மூலம் நீ ஈட்டிய வற்றாத இன்ப உலகங்கள் பலவற்றை நீ அடைவாய்” என்பதாகும்.(26)

தலைகீழே விழுந்த நான், இடைநிலை வகையைச் சார்ந்த ஓர் உயிரினமாக வடிவம் மாறி இந்தக் கிணற்றுக்குள் கிடப்பதைக் கண்டேன். எனினும் என் நினைவு என்னைவிட்ட அகலவில்லை.(27) இன்று உன் மூலமாக நான் மீட்கப்பட்டேன். உன் தவங்களின் பலத்தைத் தவிரச் சாட்சியங்கூறக் கூடியது வேறென்ன? ஓ! கிருஷ்ணா, உன் அனுமதியுடன் நான் விடைபெற வேண்டும். நான் சொர்க்கத்திற்கு உயர விரும்புகிறேன்” என்றான் {நிருகன்}.(28)

கிருஷ்ணனால் அனுமதிக்கப்பட்ட மன்னன் நிருகன், அவனைத் தலைவணங்கியபிறகு ஒரு தெய்வீகத் தேரில் ஏறிச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(29) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நிருகன் இவ்வாறு சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வாசுதேவன் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான்.(30) {அவன்}, “ஒரு பிராமணனுக்கு உரிய எதையும் எவனும் அறிந்தே அபகரிக்கக்கூடாது. ஒரு பிராமணனின் உடைமை அபகரிக்கப்பட்டால் அஃது அந்தப் பிராமணனின் பசு மன்னன் நிருகனை அழித்தது போலவே அவ்வாறு அபகரித்தவனை அழித்துவிடும்” {என்றான் கிருஷ்ணன்}.(31)

ஓ! பார்த்தா, நல்லோரைச் சந்திப்பது ஒருபோதும் கனியற்றுப் போகாது என்பதை நான் மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ஒரு நல்லோனைச் சந்தித்ததால் நரகத்தில் இருந்து மன்னன் நிருகன் மீட்கப்பட்டதைப் பார்.(32) ஒரு கொடையானது பலனை விளைவிப்பதைப் போலவே, ஒரு கொள்ளைச் செயலும் பாவத்திற்கே வழிவகுக்கிறது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் பசுக்களுக்கு எத்தீங்கையும் இழைப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)

நாசிகேதன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 71-யமன் பசுக்கொடை குறித்து நாசிகேதனுக்குச் சொன்ன சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாவமற்றவரே, பசுக்கொடை அளிப்பதன் மூலம் அடையப்படும் பலன்களை இன்னும் விரிவாக எனக்குச் சொல்வீராக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது சொற்களில் ஒருபோதும் நான் தணிவடைவதில்லை” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழைய வரலாற்றில் முனிவர் ஔத்தாலகிக்கும் நாசிகேதன் என்றழைக்கப்பட்டவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2)

ஒரு காலத்தில் பெரும் நுண்ணறிவுடன் கூடிய முனிவர் ஔத்தாலகி தன் மகனான நாசிகேதனை அணுகி, அவனிடம், “நீ எனக்குப் பணிவிடை செய்து தொண்டாற்றுவாயாக” என்றார்.(3) தாம் நோற்றுவந்த நோன்பின் நிறைவுக்குப் பிறகு அந்தப் பெரும் முனிவர் மீண்டும் தமது மகனிடம், “தூய்மைச் சடங்கைச் செய்வதில் ஈடுபட்ட நான், வேத கல்வியில் ஆழமாக ஈர்க்கப்பட்டதால்,(4) விறகுகள், தர்ப்பை புற்கள், மலர்கள், நீர்க்குடுவை மற்றும் நான் சேகரித்து வைத்திருந்த கீரைகள் ஆகியவற்றைக் கொண்டுவர மறந்துவிட்டேன். ஆற்றங்கரையில் இருந்து அந்தப் பொருட்களை நீ என்னிடம் கொண்டு வருவாயாக” என்றார்.(5)

குறிப்பிடப்பட்ட அந்த இடத்திற்குச் சென்ற அந்த மகன், அந்தப் பொருட்கள் அனைத்தும் ஓடையால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டான். தன் தந்தையிடம் திரும்பி வந்த அவன், “அந்தப் பொருட்களை நான் காணவில்லை” என்றான்.(6)

பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தவரும், உயர்ந்த தவத்தகுதியைக் கொண்டவருமான முனிவர் ஔத்தாலகி, திடீரெனக் கோபமடைந்து, “நீ இன்று யமனைச் சந்திப்பாய்” என்று தன் மகனை சபித்துவிட்டார்.(7)

இவ்வாறு தன் தந்தையின் இடி வாக்கால் தாக்கப்பட்ட மகன், கூப்பிய கரங்களுடன் “என்னிடம் நிறைவடைவீராக” என்றான். எனினும், அவன் விரைவில் பூமியில் விழுந்து உயிரை இழந்தான்.(8)

பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் நாசிகேதனைக் கண்ட அவனது தந்தையும் துயரத்தால் தன் உணர்வுகளை இழந்தார். அவரும், “ஐயோ, நான் என்ன செய்துவிட்டேன்” என்று வருந்தி பூமியில் விழுந்தார்.(9) துயரத்தால் நிறைந்திருந்த அவர் அழுது புலம்பியதிலேயே எஞ்சிய நாள் முழுவதும் கடந்து இரவும் வந்தது.(10)

ஓ! குரு குலத்தவனே, அப்போது தன் தந்தையின் கண்ணீரால் நனைந்திருந்த நாசிகேதன், தான் கிடந்த தர்ப்பைப் புல் விரிப்பில் உயிர் திரும்புவதற்கான அறிகுறிகளை வெளியிட்டான். தந்தையின் கண்ணீரில் அவன் உயிர் மீண்டது, மங்கலமாரியில் நனைந்த வித்துகள் முளைப்பதற்கு ஒப்பானதாக இருந்தது.(11) அப்போதே நினைவு திரும்பியிருந்த மகன் இன்னும் பலவீனமாகவே இருந்தான். நறுமணக் களிம்புகள் பூசப்பட்ட உடலுடன் கூடிய அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து அப்போதுதான் எழுந்தவனைப் போலத் தெரிந்தான். முனிவர் {ஔத்தாலகி} அவனிடம்,(12) “ஓ! மகனே, உன் செயல்களின் மூலம் நீ மங்கல உலகங்களை அடைந்தாயா? நீ என்னிடம் மீண்டு வந்தது நற்பேறே. உன்னுடல் மானுட உடலாகத் தெரியவில்லையே” என்று கேட்டார்.(13)

இவ்வாறு உயர் ஆன்மாவான தந்தை கேட்டதும், தன் கண்களாலேயே அனைத்தையும் கண்ட நாசிகேதன், முனிவர்களுக்கு மத்தியில் பின்வரும் பதிலை அளித்தான்.(14) {அவன்}, “உமது ஆணைக்குக் கீழ்ப்படிந்து இனிமையான பிரகாசத்துடன் கூடிய பரந்த யமலோகத்திற்குச் சென்றேன். அங்கே ஆயிரம் யோஜனைகள் பரந்திருப்பதும், அனைத்துப் பகுதியிலும் பொன்னொளி வீசுவதுமான ஓர் அரண்மனையைக் கண்டேன்.(15) யமன், தன்னை முகம் நோக்கி வரும் என்னைக் கண்டதும், தன் பணியாட்களிடம், “இவனுக்கு நல்ல இருக்கையைக் கொடுப்பீராக” என்றான். உண்மையில் இறந்தோரின் மன்னனான அவன் உமது நிமித்தமாகவே அர்க்கியம் மற்றும் பிற பொருட்களுடன் என்னை வழிபட்டான்.(16)

யமனால் இவ்வாறு வழிபடப்பட்டு, அவனது அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்த நான், மென்மையாக அவனிடம், “ஓ! இறந்தோரின் நீதிபதியே {அறமன்னா}, நான் உன் வசிப்பிடத்திற்கு வந்திருக்கிறேன். என் செயல்களுக்குத் தகுந்த உலகங்களை எனக்கு ஒதுக்குவாயாக” என்றேன்.(17)

யமன் {நாசிகேதனிடம்}, “ஓ! இனியவனே, நீ இன்னும் இறக்கவில்லை. தவசக்தி கொண்ட உன் தந்தை “யமனைச் சந்திப்பாயாக” என்றார். உன் தந்தையின் சக்தி சுடர்மிக்க நெருப்பைப் போன்றதாகும். என்னால் அவரது வாக்கைப் பொய்யாக்க இயலாது.(18) நீ என்னைப் பார்த்துவிட்டாய். ஓ! குழந்தாய், இனி நீ செல்லலாம். உன் உடலை உண்டாக்கியவர் உனக்காக அழுது புலம்புகிறார். நீ என் அன்புக்குரிய விருந்தினனாவாய். உன் இதயத்தில் உள்ள விருப்பத்தைச் சொன்னால் நான் உனக்கு அருள்வேன். நீ வளர்க்கும் விருப்பம் எதையும் வேண்டுவாயாக” என்றான்.(19)

இறந்தோரின் மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட நான், அவனிடம், “எந்தப் பயணியும் திரும்பிச் செல்ல முடியாத உனது ஆட்சிப்பகுதிக்குள் நான் வந்துவிட்டேன். ஓ! இறந்தோரின் மன்னா, உண்மையில் நான் உன் கவனத்தை ஈர்க்கத்தகுந்தவனாக இருக்கிறேனெனில் அறச்செயல் செய்தோருக்கென ஒதுக்கப்படுபவையும், உயர்ந்த செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டவையுமான உலகங்களைப் பார்க்க விரும்புகிறேன்” என்றேன்.(20)

இவ்வாறு என்னால் கேட்டுக்கொள்ளப்பட்ட யமன், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட பிரகாசமிக்க ஒரு வாகனத்தில் என்னை ஏறச் செய்தான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அந்த வாகனத்தில் என்னைச் சுமந்து சென்று அறவோருக்கென ஒதுக்கப்பட்ட இன்பம் நிறைந்த உலகங்களை எனக்குக் காட்டினான்.(21) நான் அந்த உலகங்களில் உயர் ஆன்ம மனிதர்களுக்காக ஒதுக்கப்படும் பெரும் பிரகாசமிக்க மாளிகைகள் பலவற்றைக் கண்டேன். அந்த மாளிகைகள் பல்வேறு வடிவங்களிலும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன.(22) சந்திர வட்டிலைப் போலப் பிரகாசமாக இருந்த அவை கிண்கிணி மணி வரிசையால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கானவை பல அடுக்குக் கொண்டவையாக இருந்தன. அவற்றுக்குள் இனிய தோட்டங்களும், காடுகளும், தெளிந்த நீர்த்தேக்கங்களும் இருந்தன.(23) வைடூரியம் மற்றும் சூரியப் பிரகாசத்தைக் கொண்டவையும், வெள்ளி மற்றும் பொன்னாலானவையுமான அவை தங்கள் நிறத்தில் காலைச் சூரியனுக்கு ஒப்பானவையாக இருந்தன.(24) அவற்றுக்குள் பல உணவு மலைகளும், அனுபவிக்கத்தக்க பொருட்களும், ஆட்கள் மற்றும் படுக்கைகளும் அபரிமிதமாக இருந்தன. அவற்றுக்குள் அனைத்து விருப்பங்கள் கனியும் நிலையையும் அருளவல்ல மரங்கள் பலவும் இருந்தன.(25)

அங்கே பல ஆறுகளும், சாலைகளும், பரந்த மண்டபங்களும், தடாகங்களும், பெரிய ஏரிகளும் இருந்தன. சடசடப்பொலி கொண்ட சக்கரங்களுடன் கூடியவையும், சிறந்த தேர்கள் பூட்டப்பட்டவையுமான ஆயிரக்கணக்கான தேர்கள் அங்கே காணப்படுகின்றன.(26) பாலோடும் ஆறுகள் பலவும், நெய்யாலான மலைகள் பலவும், தெளிந்த நீரைக் கொண்ட பெரிய நீர்த்தேக்கங்களும் அங்கே இருந்தன. உண்மையில் இதற்கு முன்பு என்னால் காணப்படாதவையும், இறந்தோரின் மன்னனால அங்கீகரிக்கப்பட்டவையுமான இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை நான் கண்டேன்.(27) அப்பொருட்கள் அனைத்தையும் கண்ட நான், பழைமையானவனும், பலமிக்கவனுமான அந்த இறந்தோரின் நீதிபதியிடம் {யமனிடம்}, “பாலும், நெய்யும் நித்தியமாக ஓடும் இந்த ஆறுகள் யாருடைய பயன்பாட்டுக்கும் அனுபவத்திற்கும் விதிக்கப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டேன்.(28)

யமன் {நாசிகேதனிடம்}, “நோய் தடுக்கும் பால் மற்றும் நெய்யாலான இந்த ஓடைகள் மனிதர்களின உலகில் கொடையளிக்கும் அறவோரின் இன்பத்திற்காக இருக்கின்றன என்பதை அறிவாயாக. அனைத்து வகைக் கவலைகளில் இருந்தும் விடுபட்ட மாளிகைகள் நிறைந்த வேறு நித்திய உலகங்களும் இருக்கின்றன. அவை பசுக்கொடை அளிப்பதில் ஈடுபடும் மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.(29) வெறுமனே பசுக்கொடை மட்டுமே புகழத்தக்கதன்று. பொருத்தமுடைமை, அல்லது பசுக்கொடை கொடுக்கப்படும் நபர், அந்தக் கொடைகளை அளிக்கும் காலம், கொடையாக அளிக்கப்படும் பசுவின் வகை, கொடையளிக்கும்போது நோற்கப்படும் சடங்குகள் ஆகியனவும் கருத்தில் கொள்ளத்தக்கனவாகும். பசுக்கொடையானது, (அவற்றைப் பெறும்) பிராமணர்கள் மற்றும் (கொடுக்கப்படும்) பசுக்கள் ஆகிய இரண்டின் குறிப்பிடத்தக்க தகுதிகளையும் உறுதிசெய்து கொண்டபிறகு கொடுக்கப்பட வேண்டும். எவனுடைய வசிப்பிடத்தில் நெருப்பு அல்லது சூரியனால் துன்பப்பட நேருமோ அவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(30)

வேதங்களை அறிந்தவனும், கடுந்தவங்களைச் செய்தவனும், வேள்விகளைச் செய்பவனுமான பிராமணனே பசுக்கொடை பெறுவதற்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான். துன்பம் நிறைந்த சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவை, அல்லது உணவூட்டவும் வளர்க்கவும் போதிய வழிமுறைகள் இல்லாத வறிய இல்லறவாசிகளால் கொடுக்கப்படுபவை ஆகிய பசுக்கள் இந்தக் காரணங்களுக்காகவே உயர்ந்த மதிப்புள்ளவையாகக் கருதப்படுகின்றன[1].(31) பசுக்கொடையளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகளுக்கு உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே பருகி வாழ்ந்து, வெறும் நிலத்தில் உறங்கி, அவற்றைப் பெறும் பிராமணர்களை (வேறு கொடைகளாலும்) நிறைவடையச் செய்த பிறகு கொடையளிக்க வேண்டும்.(32) கொடையளிக்கப்படும் பசுவுடன் அவற்றின் கன்றுகளும் துணையாகச் செல்ல வேண்டும். மேலும் அவை உரிய பருவகாலங்களில் நல்ல கன்றுகளை ஈனக்கூடியவையாக இருக்க வேண்டும். அவ்வாறு கொடையளிகப்படும்போது அவற்றோடு சேர்த்து பிற பொருட்களுக்கும் துணையாகக் கொடுக்கப்பட வேண்டும். கொடையளித்த பிறகு, அந்தக் கொடையாளி, பிறவகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து, நோய் தடுக்கும் பாலை மட்டுமே மூன்று நாட்கள் உண்டு வாழ வேண்டும்.(33)குற்றமற்றதும், உரிய இடைவெளிகளில் நல்ல கன்றுகளை ஈனக்கூடியதும், உரிமையாளரின் வீட்டில் இருந்து தப்பி ஓடாததுமான ஒரு பசுவுடன் துணையாகக் கறப்பதற்குரிய வெண்கல பாத்திரத்தையும் கொடையாக அளிக்கும் ஒருவன் அந்த விலங்கின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுள்ள காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான். நன்கு பயிற்சியளிக்கப்பட்டதும், சுமைகளை இழுக்கவல்லதும், பலமுள்ளதும், வயதில் இளமையானதும், எந்தத் தொல்லையும் கொடுக்காததும், பெரிய வடிவில் உள்ளதும், சக்தியுடன் கூடியதுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் ஒருவன், பசுக்களைக் கொடையளிப்பவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், அறவோரால் அங்கீகரிக்கப்படுபவையுமான உலகங்களை அனுபவிக்கிறான்.(34)

பசுக்களிடம் மென்மையாக நடந்து கொள்பவனாக அறியப்படுபவனும், பசுக்களையே புகலிடமாகக் கொள்பவனும், நன்றி மறவாதவனும், தனக்கென வாழ்வாதாரம் ஏதுமற்றவனுமான ஒருவனே பசுக்கொடை பெறத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான். ஒரு முதிர்ந்த மனிதன் நோய்வாய்ப்படும்போதோ, ஒரு பஞ்சம் ஏற்படும்போதோ, ஒரு பிராமணன் ஒரு வேள்வியைச் செய்ய எண்ணும்போதோ, ஓர் உழவன் உழவுக்காக உழ விரும்பும்போதோ, பிள்ளை பெறும் நோக்கத்திற்காக ஹோமத் திறன் மூலம் ஒருவன் மகனைப் பெறும்போதோ,(35) ஒருவனுடைய ஆசானின் பயன்பாட்டிற்காகவோ, ஒரு குழந்தையை வளர்ப்பதற்காகவோ ஒருவன் தன் அன்புக்குரிய பசுவைக் கொடையளிக்கலாம். (பசுக்கொடை அளிக்கும் காரியத்தில்) காலம் மற்றும் இடம் குறித்த வகையில் மெச்சத்தகுந்த கருத்துகள் இவையே. பெருமளவு பாலைத் தருபவையோ, (பணிவு மற்றும் வேறு பண்புகளுக்கென) நன்கறியப்பட்டவையோ, விலைக்கு வாங்கப்பட்டவையோ, கல்விக்கான வெகுமதியாக அடையப்பட்டவையோ, (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) உயிரினங்களுக்கு மாற்றாகக் காணிக்கையாக அடையப்பட்டவையோ, கரங்களின் வலிமையால் வெல்லப்பட்டவையோ, (மாமனார் மற்றும் மனைவியின் உறவினர்களிடம் இருந்து) திருமண வரதட்சணையாகப் பெறப்பட்டவையோ அத்தகைய பசுக்களே கொடையளிக்கத் தகுந்தவை” என்றான் {யமன்}”.(36)

நாசிகேதன் {தந்தை ஔத்தாலகரிடம்} தொடர்ந்தான், “வைவஸ்வதனின் இச்சொற்களைக் கேட்ட நான் மீண்டும் அவனிடம், “பசுக்களைப் பெற முடியாத போது, எந்தப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் கொடையாளிகள் பசுக்கொடை அளிக்கும் மனிதர்களுக்காக ஓதுக்கப்படும் உலகங்களை அடைய முடியும்” என்று கேட்டேன்.(37)

என்னால் கேட்கப்பட்டவனும், ஞானியுமான யமன், பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம் அடையப்படும் கதியை மேலும் விளக்கினான். அவன், “பசுக்கள் இல்லாத போது ஒரு மனிதன் பசுக்களுக்குப் பதிலாகக் கருதப்படுபவற்றைக் கொடையளிப்பதன் மூலம் பசுக்கொடை அளித்த பலனைப் பெறுகிறான்.(38) பசுக்கள் இல்லாத போது, நோன்பை நோற்று, நெய்யாலான ஒரு பசுவைக் கொடையளிக்கும் ஒருவன் தன் பயன்பாட்டுக்கு நெய் ஆறுகளை அடைவான். அவை அன்புக்குரிய தன் குழந்தையை அணுகும் அன்னையைப் போல அவனை அணுகும்.(39) நெய்யாலான பசுவும் இல்லாத போது, நோன்பை நோற்று எள்ளாலான பசுவைக் கொடையளிக்கும் ஒருவன், இவ்வுலகின் துன்பங்கள் அனைத்தையும் கடந்து, மறுமையில் நீ காணும் பாலாறுகளில் இருந்து எழும் பெரும் மகிழ்ச்சிகளை அனுபவிக்கிறான்.(40) எள்ளாலான பசுவும் இல்லாத போது, நீராலான பசுவைக் கொடையளிக்கும் ஒருவன், மகிழ்ச்சிமிக்க இந்த உலகங்களுக்கு வருவதில் வென்று, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளவல்லதும், தெளிந்த நீரைக் கொண்டதும், குளுமையானதுமான இந்த ஆற்றையும் அனுபவிக்கிறான்” என்றான் {யமன்}.(41)

ஓ! மங்கா மகிமை கொண்டவரே, இறந்தோரின் மன்னன் {யமன்}, நான் அவனுடைய விருந்தினனாக இருக்கையில் இவையாவற்றையும் விளக்கிச் சொன்ன போது, அவன் காட்டிய அற்புதங்கள் அனைத்தையும் கண்டு பேரின்பத்தையே உணர்ந்தேன்.(42) இனி நான் உமக்கு நிச்சயம் ஏற்புடையதைச் சொல்லப் போகிறேன். நான் இப்போது அதிகச் செல்வம் தேவைப்படாத ஒரு பெரும் வேள்வியைப் பெற்றிருக்கிறேன். ஓ! தந்தையே, (பசுக்கொடையால் அமைந்த) அந்த வேள்வி என்னில் இருந்து உண்டாவதாகச் சொல்லப்படலாம். அதைப் பிறரும் அடைவார்கள். அது வேத விதிகளுக்கு இணக்கமற்றதல்ல.(43) இறந்தோரின் பெரும் மன்னனைக் காண இயன்றதால், நீர் என்னைச் சபித்தது எனக்குச் சாபமாக அமையாமல், உண்மையில் அருளாகவே அமைந்தது. அங்கே கொடைகளுக்குக் கிட்டும் வெகுமதிகளைக் கண்டேன். எனவே, ஓ! பேரான்மாவே, என் மனத்தில் ஐயமேதும் மறைந்திராமல் இனி கொடையெனும் கடமையைப் பயில்வேன்.(44)

ஓ! பெரும் முனிவரே, அறவோனான யமன், மகிழ்ச்சியால் நிறைந்தவனாக என்னிடம் மீண்டும் மீண்டும், “அடிக்கடி கொடையளிக்கும் ஒருவன் மனத்தூய்மையை அடைவதில் வென்ற பிறகு குறிப்பாகப் பசுக்கொடையை அளிக்கிறான்.(45) (கொடைகள் குறித்த) இவ்வுரை புனிதம் நிறைந்ததாகும். கொடைகள் குறித்த கடமைகளை ஒருபோதும் அவமதிக்காதே. மேலும், கொடைகளானவை தகுந்த மனிதர்களுக்கு, தகுந்த காலம் மற்றும் இடத்தில் வழங்கப்பட வேண்டும். எனவே, எப்போதும் நீ பசுக்கொடை அளிப்பாயாக. இக்காரியத்தில் ஒருபோதும் ஐயமேதும் கொள்ளாதே.(46) பழங்காலத்தில், கொடைகளின் பாதைகளில் அர்ப்பணிப்புள்ள உயர் ஆன்ம மனிதர்கள் பலர் பசுக்கொடைகளை அளித்துவந்தனர். கடுந்தவங்களைச் செய்வதற்கு அஞ்சிய அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கபடி கொடைகளை அளித்து வந்தனர்.(47) காலத்தில் அவர்கள் தங்கள் செருக்கு, பகட்டு ஆகிய மிகையுணர்வுகள் அனைத்தையும் கைவிட்டுத் தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தங்கள் மற்றும் அறச்செயல்கள் அனைத்திலும் ஈடுபடும் அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்க பசுக்கொடைகளை அளித்து, அச்செயல்களுக்கு வெகுமதியாகச் சொர்க்கத்தை அடைந்து, அத்தகைய அறத்திற்காகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.(48)

ஒருவன், காம்யாஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படும் சந்திரனின் எட்டாம் நாளில் (ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி) கொடைபெறுவோரின் தகுதியை உறுதி செய்து கொண்டு முறையாக ஈட்டப்பட்ட பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். கொடையளித்த பிறகு, ஒருவன் பத்து நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் (வேறு வகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து) பசுவின் பால், அவற்றின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ வேண்டும்.(49) ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன் தெய்வீகப் பசுவைக் கொடையளித்ததற்கு இணையானதாகும். இரு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வேதங்களின் தேர்ச்சி என்ற வெகுமதியை அடைகிறான். பசுக்கள் பூட்டப்பட்ட தேர்கள் மற்றும் வாகனங்களைக் கொடையாளிப்பதன் மூலம் ஒருவன் புனித நீர்நிலைகளில் நீராடிய பலனை அடைகிறான். கபிலை இனப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(50) உண்மையில், முறையான வழியில் அடையப்பட்டதும், கபிலை வகையைச் சார்ந்ததுமான ஒரே ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் தான் இழைத்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பசுத் தரும் பாலைவிட (சுவையில்) உயர்ந்தது வேறேதும் அல்ல. பசுக்கொடையே உண்மையில் மிக மேன்மையான கொடையாகக் கருதப்படுகிறது.(51) பசுவானது பாலைத் தருவதன் மூலம் உலகங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்கிறது. மேலும், பசுவே உயிரினங்கள் உண்ணும் உணவை உண்டாக்குகிறது. பசுச் செய்யும் தொண்டின் அளவை அறிந்த ஒருவன் தன் இதயத்தில் அதன் மீது அன்பை வளர்க்கவில்லையெனில் அவன் நிச்சயம் நரகில் மூழ்கக் கூடிய பாவியாவான்[2].(52)ஒருவன் ஆயிரம், நூறு, பத்து, அல்லது ஐந்து பசுக்களைக் கொடையளிப்பவனும், உரிய இடைவெளிகளில் நல்ல கன்றுகளை ஈனும் ஒரே ஒரு பசுவை அறம் சார்ந்த ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவனுமான ஒருவன், அந்தப் பசுவை அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் புனித நீர் கொண்ட ஆற்றின் வடிவில் நிச்சயம் சொர்க்கத்தில் காண்பான்.(53) பசு அளிக்கும் செழிப்பு மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தவரையில், பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் பசுக்கள் வழங்கும் பாதுகாப்புக் காரியத்தில் பசுக்கள் பூமியில் விழும் சூரியக் கதிர்களுக்கு இணையானவையாக இருக்கின்றன. பசுவைக் குறிக்கும் சொல், சூரியக்கதிர்களையும் குறிப்பதாக இருக்கிறது. பசுக்கொடையளிப்பவன், பூமியின் பெரும்பகுதியில் பரந்திருக்கும் ஒரு பெரிய குலத்தை உண்டாக்குவான். எனவே, பசுக்கொடையளிக்கும் ஒருவன் இரண்டாம் சூரியனைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்வான்.(54) பசுக்கொடை அளிக்கும் காரியத்தில் ஒரு சீடன் தன் ஆசானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய சீடன் ஒவ்வொருமுறையும் சொர்க்கத்திற்குச் செல்வதில் நிச்சயம் வெல்கிறான். (அறச் செயல்களைச் செய்யுங்காரியத்தில்) ஆசானைத் தேர்ந்தெடுப்பது, விதிகளுக்கு இணக்கமான மனிதர்களால் உயர்ந்த கடமையாகக் கருதப்படுகிறது. உண்மையில், இதுவே தொடக்க விதியாகும். (பசுக்கொடையைப் பொறுத்தவரையில்) அனைத்து விதிகளும் அதையே சார்ந்திருக்கின்றன.(55) ஆய்வுக்குப் பிறகு, பிராமணர்களுக்கு மத்தியில் தகுந்த மனிதனைத் தேர்ந்தெடுக்கும் ஒருவன், முறையான வழிமுறைகளில் அடையப்பட்ட ஒரு பசுவை அவனுக்குக் கொடையளித்து, அந்தக் கொடையை அவனை ஏற்கச் செய்ய வேண்டும். தேவர்கள், மனிதர்கள் மற்றும் நாமும், பிறருக்கு நல்லதை விரும்பும் காரியத்தில், “உன் அறத்தின் விளைவாகக் கொடைகளுக்குரிய பலன்கள் உனதாகாட்டும்” என்று சொல்கிறோம்” என்றான் {யமன்}.(56)

ஓ! மறுபிறப்பாள முனிவரே, இறந்தோரின் நீதபதி இவ்வாறே என்னிடம் பேசினான். பிறகு நான் அறவோனான அந்த யமனுக்குத் தலைவணங்கினேன். அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனது ஆட்சிப்பகுதிகளை விட்டகன்று உமது பாதங்களின் அடியில் வந்து சேர்ந்தேன்” என்றான் {நாசிகேதன்}[3].(57)

இந்திரன் கேள்விகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 72-பசுக்கொடை தொடர்பாகப் பிரம்மனிடம் இந்திரன் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, முனிவர் நாசிகேதர் பசுக்கொடை குறித்துப் பேசியதை நீர் எனக்குச் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, அந்தச் செயலின் பலனையும், முன்சிறப்புகளையும் குறித்தும் சொன்னீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கப் பாட்டா, ஒரே ஒரே பிழையின் விளைவாக உயர் ஆன்ம மன்னன் நிருகனுக்கு நேர்ந்த துன்பத்தின் அதீத விளவையும் எனக்குச் சொன்னீர்.(2) அவன் (ஓணானின் வடிவில்) நீண்ட காலம் துவாராவதியில் வசிக்க நேர்ந்ததையும், அவனது பரிதாபகரமான நிலையில் இருந்து கிருஷ்ணனால் எவ்வாறு மீட்கப்பட்டான் என்பதையும் சொன்னீர்.(3) எனினும், இதில் எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அது பசுக்கொடை குறித்ததாகும். நான் பசுக்கொடை அளித்தவர்கள் வசிப்பதற்காக ஒதுக்கப்படும் உலகங்களைக் குறித்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தொடக்ககாலத் தாமரையில் உதித்தவனுக்கும் {பிரம்மனுக்கும்}, நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5)

சக்ரன், “ஓ! பாட்டா {பிரம்மாவே}, கோலோகத்தில் வசிப்போர், தங்கள் பிரகாசத்தால் சொர்க்கலோகவாசிகளின் செழிப்பையும் விஞ்சியவர்களாக, (அவர்களைத் தாழ்ந்த நிலையடைந்தவர்களாக்கி) அவர்களைக் கடந்து நிற்பதாகக் காண்கிறேன். இஃது என் மனத்தில் ஓர் ஐயத்தை எழச்செய்கிறது.(6) ஓ! புனிதமானவரே, கோலோகங்கள் என்னவகைச் சார்ந்தவை? ஓ! பாவமற்றவரே, அவற்றைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. உண்மையில், பசுக்கொடை அளிப்போர் வசிக்கும் உலகங்களின் இயல்பு என்ன? அதை அறிய விரும்புகிறேன்.(7) அந்த உலகங்கள் என்ன வகைச் சார்ந்தவை? அவை என்ன பலன்களைக் கொடுக்கின்றன? அங்கே வசிப்பவர்கள் என்ன உயர்ந்த பொருளை அடைவதில் வெல்கிறார்கள்? அதன் குணங்கள் என்ன? மேலும் மனிதர்கள் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு அந்த உலகங்களை அடைவதில் எவ்வாறு வெல்கிறார்கள்?(8)

பசுக்கொடையளிப்பவன் தன் கொடையின் பலன்களை எவ்வளவு காலம் அனுபவிக்கிறான்? மனிதர்கள் எவ்வாறு பல பசுக்களைக் கொடையளிக்கலாம், மேலும் எவ்வாறு அவர்கள் கொடையளிக்கலாம்?(9) பல பசுக்களைக் கொடையளிப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? சிலவற்றை மட்டுமே கொடையளிப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? உண்மையில் எந்தப் பசுவையும் கொடையளிக்காமல் மனிதர்கள் எவ்வாறு பசுக்கொடையாளிகள் ஆகலாம்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக.(10) ஓ! பலமிக்கத் தலைவரே, பல பசுக்களைக் கொடையளித்தவனும், சில பசுக்களை மட்டுமே கொடையளித்தவனுக்கு இணையானவனாக ஆவது எவ்வாறு? சில பசுக்களை மட்டுமே கொடையளிப்பவன், பல பசுக்களைக் கொடையளித்தவனுக்கு இணையாவது எவ்வாறு?(11) பசுக்கொடையின் சிறப்புக்காக என்ன வகைத் தக்ஷிணை புகழ்பெற்றதாக இருக்கிறது? ஓ! புனிதமானவரே, வாய்மைக்கு ஏற்புடையவகையில் இவை யாவற்றையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {இந்திரன்}.(12)

பிரம்மனின் பதில்! – அநுசாஸனபர்வம் பகுதி – 73-பசுக்கொடை தொடர்பாக இந்திரன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரம்மன்…

பெரும்பாட்டன் {பிரம்மன், இந்திரனிடம்}, “ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பசுக்கொடை தொடங்கி, அவை குறித்து நீ கேட்ட கேள்விகள் மூவுலகிலும் வேறு யாராலும் சொல்ல முடியாதவையாக இருக்கின்றன.(1) ஓ! சக்ரா, நீ கூடக் காண முடியாத பலவகை உலகங்கள் இருக்கின்றன. ஓ! இந்திரா, அவ்வுலகங்கள் என்னாலும், கணவனுடன் பாசமாக உள்ள கற்புடைய பெண்களாலும் காணப்படுகின்றன.(2) பக்தி மற்றும் அறச்செயல்களின் மூலம் சிறந்த நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், அற ஆன்மாக்களான பிராமணர்களும் தங்கள் உடலுடன் அந்த உலகங்களுக்குச் செல்கிறார்கள்.(3) சிறந்த நோன்புகளை நோற்கும் மனிதர்கள், பிரகாசமான கனவுப்படைப்புகளுக்கு ஒப்பான அந்த உலகங்களைத் தங்கள் தூய்மையான மனங்களால் கண்டு, உடல் குறித்த தங்கள் நினைவை இழந்து (தற்காலிக) முக்தி நிலையை அடைவதில் வெல்கிறார்கள்[1].(4)ஓ! ஆயிரம் கண்களைக் கொண்டவனே {இந்திரா}, அந்த உலகங்களுக்குரிய பண்புகளை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அங்க காலத்தின் நடைமுறை இருப்பதில்லை. அங்கே முதுமையோ, அண்டத்தில் எங்குமிருக்கும் நெருப்போ இருப்பதில்லை. அங்கே சிறு தீமையோ, நோயோ எந்த வகைப் பலவீனமோ கிடையாது.(5) ஓ! வாசவா, அங்கே வாழும் பசுக்கள், தங்கள் இதயங்களில் வளர்க்கும் ஆசைகள் அனைத்தும் கனியும் நிலையை அடைகின்றன.(6) விரும்பிய எங்கும் செல்ல இயன்று, உண்மையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிமையாகச் சென்று தங்கள் மனங்களில் எழும் விருப்பங்கள் அனைத்தும் கனியை நிலையை அவை அடைகின்றன. தடாகங்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் பல்வேறு வகைக் காடுகள், மாளிகைள், குன்றுகள் மற்றும் உயிரினங்களுக்கு உரிய இனிமை நிறைந்த பொருட்கள் அனைத்தும் அங்கே காணப்படுகின்றன. நான் சொல்லும் இவை அனைத்திலும் மேன்மையாக வேறு எந்த இன்ப உலகமும் இல்லை.(7,8)

ஓ! சக்ரா, அனைத்து உயிரினங்களிடமும் மன்னிக்கும் குணத்துடன் கூடியவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ள வல்லவர்களும், அனைத்துப் பொருட்களிடமும் அன்புபாராட்டுபவர்களும், ஆசானிடம் கடமையுணர்வுடன் கீழ்ப்படிந்து நடந்து கொள்பவர்களும், செருக்கு மற்றும் பகட்டில் இருந்து விடுபட்டவர்களுமான முதன்மையான மனிதர்கள் உயர்ந்த இன்பநிலையைக் கொண்ட அவ்வுலகங்களுக்குச் செல்கிறார்கள்.(9) அனைத்து வகை இறைச்சியையும் தவிர்ப்பவனும், தூய்மையான இதயத்தைக் கொண்டவனும், அறமொழுகுபவனும், பெற்றோரை மதிப்புடன் வழிபடுபவனும், பேச்சு மற்றும் ஒழுக்கத்தில் வாய்மையைக் கடைப்பிடிப்பவனும், பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனும், குற்றமற்ற ஒழுக்கம் கொண்டவனும்,(10) பசுக்களிடமும், பிராமணர்களிடமும் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனும், அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புள்ளவனும், ஆசான்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுபவனும், மொத்த வாழ்வையும் வாய்மைக்கும், கொடைக்கும் அர்ப்பணித்தவனும், தனக்கு எதிரான வரம்புமீறல்கள் அனைத்தையும் எப்போதும் மன்னிப்பவனும், மென்மையானவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், தேவர்களிடம் மதிப்பு நிறைந்தவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனும், கருணை நிறைந்தவனுமான ஒருவன், மாறும் இயல்பற்றதும், நித்தியமானதுமான கோலோகத்தை அடைவதில் வெல்வான்.(12)

பிறன்மனையுறவில் ஈடுபடுபவன் அத்தகைய உலகத்தைக் காண மாட்டான்; ஆசானைக் கொன்றவனும், பொய்மை பேசுபவனும், பகட்டான வெற்றுப் பேச்சுகளில் ஈடுபடுபவனும், பிறருடன் எப்போதும் சச்சரவு செய்பவனும், பிராமணர்களிடம் எப்போதும் பகைமை பாராட்டுபவனும் ஒருபோதும் அத்தகைய உலகத்தைக் காண மாட்டார்கள். உண்மையில், அத்தகைய குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும் தீய பாவியால் அந்த இன்பலோகங்களைக் காணவும்முடியாது;(13) நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், கபடம் நிறைந்தவன், நன்றி மறந்தவன், வஞ்சனை செய்பவன், ஒழுக்கக்கேடன், அறத்தை அலட்சியம் செய்பவன், பிராமணர்களைக் கொன்றவன் ஆகியோராலும் அவ்வுலகங்களைக் காணவும் முடியாது. அத்தகைய மனிதர்களால், அறச் செயல்களைச் செய்வோரின் வசிப்பிடமாக இருக்கும் கோலோகத்தைக் கற்பனையிலும் காண முடியாது.(14) ஓ! தேவர்களின் தலைவா, கோலோகத்தின் நுட்பமான விளக்கம் உட்பட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! நூறு வேள்விகளைக் செய்தவனே, இனி பசுக்கொடை அளிப்போர் அடையும் பலன்களைக் குறித்துக் கேட்பாயாக.(15)

நியாயமாக அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு அவற்றை விலைக்கு வாங்கிப் பசுக்கொடையளிப்பவன், அத்தகைய செயலின் கனியாக வற்றாத இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை அடைகிறான்.(16) ஓ! சக்ரா, பகடையில் {சூதில்} வென்ற செல்வத்தைக் கொண்டு பசுக்கொடை அளிப்பவன் பத்தாயிரம் தேவ வருடங்களுக்கு இன்ப நிலையை அனுபவிக்கிறான்.(17) மூதாதையர் செல்வத்தில் தன் பங்காக ஒரு பசுவை அடையும் ஒருவன், அதை நியாயமாக அடைந்ததாகவே சொல்லப்படுகிறது. அத்தகைய பசுவையும் கொடையளிக்கலாம். அவ்வாறு அடைந்த பசுக்களைக் கொடையளிப்பவர்கள், வற்றாத நித்திய இன்ப உலகங்களை அடைகின்றனர்.(18) ஓ! சச்சியின் தலைவா, ஒரு பசுவைக் கொடையாக அடைந்தவன், தூய இதயத்துடன் அவளை {மீண்டும் வேறொருவனுக்கு} கொடையளித்தால் அவன் இன்பம் நிறைந்த நித்திய உலகங்கள் நிச்சயமாக அடைகிறான்.(19) பிறந்ததிலிருந்து (இறக்கும் காலம் வரையில்) புலனடக்கத்துடன் வாய்மையையே பேசுபவனும், ஆசான் மற்றும் பிராமணர்கள் செய்யும் அனைத்தையும் தாங்கிக் கொள்பவனும், பொறுமையைக் கடைப்பிடிப்பவனுமான ஒருவன் பசுவிற்கு இணையான கதியை அடைவதில் வெல்கிறான் {கோக்களுக்கும் அவற்றின் மீது தயையோடு இருப்பவனுக்கும் கதியொன்றே}.(20)

ஓ! சச்சியின் தலைவா, பிராமணர்களிடம் ஒருபோதும் முறையில்லாமல் {சொல்லத்தகாத சொல்லைப்} பேசக்கூடாது. மேலும் மனத்தாலும் ஒருவன் ஒரு பசுவக்கு எத்தீங்கையும் செய்யக் கூடாது. ஒருவன் பசுவின் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, பசுவிடம் கருணை காட்ட வேண்டும்[2].(21) ஓ! சக்ரா, வாய்மை எனும் கடமையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனுக்குக் கிட்டும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக. ஒருவன் ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்த ஒரு பசு ஆயிரம் பசுக்களுக்கு இணையானதாகிறது.(22) அத்தகைய தகுதிகளைக் கொண்ட {வாய்மையுடன் கூடிய} ஒரு க்ஷத்திரியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால் அவன் ஒரு பிராமணனுக்கு இணையான பலனைப் பெறுகிறான். ஓ! சக்ரா, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கும் அந்த ஒரு பசுவானது, அதே சூழ்நிலையில் ஒரு பிராமணன் கொடுக்கும் ஒற்றைப் பசுத் தரும் பலனைத் தருகிறது. இது சாத்திரங்களில் நிச்சயமான தீர்மானமாக இருக்கிறது.(23) அதேபோன்ற சிறப்புகளைக் கொண்ட ஒரு வைசியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தப் பசு ஐநூறு பசுக்களுக்கு இணையானதாகும் (ஐநூறு பசுக்களைக் கொடையளித்ததற்கு இணையான பலனைத் தரும்).(24)தவங்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புடனும், ஆசான்களிடம் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவதன் மூலம் (சாத்திரங்களிலும், அனைத்து செயல்களிலும்) திறனுடனும், மன்னிக்கும் மனநிலையுடனும், தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டும், அமைதியான ஆன்மாவுடனும், (உடல் மற்றும் மனத்தில்) தூய்மையுடனும், அறிவொளியுடனும், அனைத்துக் கடமைகளையும் நோற்றும், அனைத்து வகைத் தற்பெருமைகளில் இருந்தும் விடுபட்டும் இருக்கும் ஒரு மனிதன், ஒரு பிராமணனுக்கு ஒரு பசுவைக் கொடையளித்தால், உரிய சடங்குகளுடன் கொடையளித்த அந்தச் செயலின் மூலம் அவன் அபரிமிதமாகப் பாலைத் தரும் ஒரு பசு அடையும் பெரும் பலனை அடைகிறான். எனவே, ஒருவன் வாய்மையை நோற்று, தன் ஆசானிடம் பணிவுடன் தொண்டாற்றி, ஒற்றை அர்ப்பணிப்புடன் எப்போதும் பசுக்கொடையை அளிக்க வேண்டும்.(25,26) ஓ! சக்ரா, வேதங்களை முறையாகக் கற்று, பசுக்களிடம் மதிப்புள்ளவனாக, பசுக்களைப் பார்ப்பதாலேயே எப்போதும் மகிழ்ச்சியடைபவனாக, பிறவி முதல் பசுக்களிடம் எப்போதும் தலைவணங்குபவனாக உள்ள ஒருவன் அடையும் பலன்களைக் கேட்பாயாக.(27) ராஜசூய வேள்வி செய்வதனால் ஒருவன் அடையும் பலன், பொற்குவியல்களைக் கொடையளிப்பதால் ஒருவன் அடையும் பலன் ஆகிய உயர்ந்த பலன்களைப் பசுக்களிடம் மதிப்பு காட்டும் ஒருவன் அடைகிறான். அறம்சார்ந்த முனிவர்களும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயர் ஆன்ம மனிதர்களும் இவ்வாறே சொல்கின்றனர்.(28)

வாய்மையில் அர்ப்பணிப்புடனும், அமைதியான ஆன்மாவுடனும், பேராசையில் இருந்து விடுபட்ட நிலையுடனும், பேச்சில் எப்போதும் வாய்மையுடனும், பசுக்களிடம் மதிப்பு காட்டுவதை உறுதியான நோற்பாக நோற்று வருபவனும், தான் உணவு உட்கொள்வதற்கு முன் சீரான வகையில் பசுக்களுக்கு ஏதாவது உணவைக் கொடுத்து வருபவனுமான ஒரு மனிதன் அத்தகைய செயலின் மூலம் ஆயிரம் பசுக்களைக் கொடையளித்த பலனை அடைகிறான்.(29) ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு, மற்ற வேளை உணவுகளைப் பசுக்களுக்குக் கொடுப்பவனும், இத்தகைய கருணையையும், மதிப்பையும் அவற்றுக்குக் காட்டுபவனுமான மனிதன், பத்து வருடங்கள் அளவில்லாத இன்பத்தை அனுபவிப்பான்.(30) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு மற்ற வேளை உணவுக்கான பொருளைச் சேமித்து ஒரு பசுவை விலைக்கு வாங்கி, அதை (ஒரு பிராமணனுக்குக்) கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் மூலம் அந்த ஒரே ஒரு பசுவின் உடலில் உள்ள முடிகளின் எண்ணிக்கை அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்த பலனை ஈட்டுகிறான்.(31) பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் அடையும் பலன்களைக் குறித்த அறிவிப்புகள் இவையே. இனி க்ஷத்திரியர்கள் அடையும் பலன்களைக் கேட்பாயாக. இவ்வகையில் ஒரு பசுவை விலைக்கு வாங்கி அதை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் க்ஷத்திரியன் ஐந்து வருட காலத்திற்கான பேரின்ப நிலையை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு வைசியன் க்ஷத்திரியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு சூத்திரன், வைசியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான்.(32)

தன்னை விற்று அதன் மூலம் பசுக்களை விலைக்கு வாங்கி அவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் பசுக்கள் காணப்படும் காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான்.(33) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, தன்னையே விற்று அதன் மூலம் அடையப்படும் பசுவில் உள்ள ஒவ்வொரு முடியிலும் வற்றாத இன்பத்தைத் தரும் ஓர் உலகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. போரிட்டுப் பசுக்களை அடைந்து அவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையளிக்கும் மனிதன்,(34) தன்னையே விற்று பசுவை அடைந்து அதைக் கொடையளிப்பதால் கிட்டும் பலனை அடைகிறான். பசு இல்லாத போது, புலனடக்கத்துடன் கூடிய எள்ளால் ஆன பசுவைக் கொடையளித்தால், அவன் அத்தகைய பசுவின் மூலம் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்து மீட்கப்படுகிறான். அத்தகைய மனிதன் பெரும் இன்பநிலையில் திளைத்திருக்கிறான்.(35) வெறும் பசுக்கொடை மட்டுமே பலனைக் கொடுத்துவிடுவதில்லை. கொடை பெறுபவனின் தகுதி, காலம், பசுவின் வகை, நோற்கப்படும் சடங்கு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒருவன் பசுக்கொடை அளிப்பதற்கான காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். (கொடையளிக்கப்படும்) பசுக்கள் மற்றும் (அவற்றைப் பெற்றுக் கொள்ளப் போகும்) பிராமணர்களின் குறிப்பிடத்தக்க தகுதிகளும் உறுதிசெய்யப்பட வேண்டும். நெருப்பு, அல்லது சூரியனால் துன்பத்துக்கு ஆளாகக் கூடிய வசிப்பிடம் கொண்ட ஒருவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(36)

வேதமறிந்தவனும், தூய குலத்தில் வந்தவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவனும், பாவம் இழைக்க அஞ்சுபவனும், பல்வேறு வகை ஞானங்களைக் கொண்டவனும், பசுக்களிடம் கருணை கொண்டவனும், மென்மையான நடத்தையைக் கொண்டவனும், அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனும், தனக்கென உறுதியான வாழ்வாதார வழிமுறைகள் இல்லாதவனுமான ஒருவன், பசுக்கொடை பெறத் தகுந்த மனிதனாகக் கருதப்படுகிறான்.(37) வாழ்வாதார வழிமுறைகள் ஏதும் அற்றவனும், (எடுத்துக்காட்டாக, பஞ்சகாலத்தில்) உணவில்லாமையால் பெரிதும் பீடிக்கப்பட்டவனுமான ஒரு பிராமணனுக்கு, உழவு காரியங்களுக்காகவோ, ஹோமத்தின் விளைவால் பிறந்த ஒரு பிள்ளைக்காகவோ, அவனுடைய ஆசானுக்காகவோ, (இயற்கையான நடைமுறையில்) பிறந்த ஒரு பிள்ளையைக் காப்பதற்காகவோ ஒரு பசுவைக் கொடையளிக்கலாம். உண்மையில், அந்தக் கொடையானது உரிய காலத்தில், உரிய இடத்தில் கொடுக்கப்பட வேண்டும்.(38) ஓ! சக்ரா, இயல்புகள் நன்றாக அறியப்பட்டவையும், அறிவுக்கான வெகுமதியாக அடையப்பட்டவையும், (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) வேறு விலங்குகளுக்கு மாற்றாக விலைக்கு வாங்கப்பட்டவையும், கரங்களின் ஆற்றலால் வெல்லப்பட்டவையும், திருமணத்தில் வரதட்சணையாகப் பெறப்பட்டவையும், ஆபதான சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவையும், வறிய உரிமையாளர்களால் பராமரிக்கப்பட இயலாமல் வேறொருவனின் இல்லத்தில் வளர்த்துக் கொள்ளக் கொடுக்கப்பட்டவையுமான பசுக்களை உரிய கொடைப் பொருளாகக் கருதலாம்.(39) உறுதியான உடல்படைத்தவையும், நல்ல இயல்புகளைக் கொண்டவையும், இனிய நறுமணத்துடன் கூடியவையும், புகழத்தக்க கொடைகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓடைகள் அனைத்திலும் முதன்மையான கங்கையைப் போலவே மாட்டின விலங்குகள் அனைத்திலும் கபிலைப் பசுவே முதன்மையானதாகும்.(40)

பசுக்கொடை அளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகள் உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே உண்டு வாழ்ந்து, அதே காலத்திற்கு வெறும் தரையில் உறங்கி, பிராமணர்களுக்கு வேறு கொடைகளை அளித்து நிறைவடையச் செய்த பிறகு அவர்களுக்குப் பசுக்கொடை அளிக்க வேண்டும். குற்றங்குறையற்ற அத்தகைய பசுவும், மெலிந்ததாக இல்லாமல் நலமான கன்றுகளுடன் கொடுக்கப்பட வேண்டும். அந்தக் கொடையை அளித்த பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தக் கொடையாளி பசுத் தரும் பொருட்களை மட்டுமே உணவாக உண்ண வேண்டும்.(41) அமைதியாகப் பால் கறக்க விடுவதும், நலமிக்கக் கன்றுகளை ஈனுவதும், உரிமையாளரின் இல்லத்தில் இருந்து தப்பி ஓடாததுமான நல்ல இயல்பைக் கொண்ட ஒரு பசுவைக் கொடுப்பதன் மூலம், அந்தக் கொடையாளியானவன் அந்தப் பசுவின் உடலில் இருந்த மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் மறுமையில் இன்பத்தை அனுபவிப்பான்.(42) அதே போல, பெருஞ்சுமைகளை இழுக்க வல்லதும், இளமையானதும், பலமானதும், அடக்கமானதும், கலப்பையில் பூட்டப்படுவதை அமைதியாகப் பொறுத்துக் கொள்வதும், பெரும் உழைப்பைக் கோரும் பணிகளைச் செய்யும் சக்தி படைத்ததுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கும் ஒருவன், பத்துப் பசுக்களைக் கொடையளித்தவன் அடையும் உலகங்களை அடைவான்.(43) காட்டில் பசுக்களையும் பிராமணர்களையும் (ஆபத்திலிருந்து) காக்கும் மனிதன், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான். அவன் அடையும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(44)

அத்தகைய மனிதன் ஈட்டும் பலனானது, ஒரு குதிரை வேள்வி செய்த நித்திய பலனுக்கு இணையானதாகும். அத்தகைய மனிதன், மரணக் காலத்தில் தான் விரும்பும் கதியையே அடைவான்.(45) உண்மையில் அவன் த்ன இதயத்தில் எந்த வகை இன்பத்தை விரும்பினாலும், அவை அவனது செயலின் விளைவால் அடையத்தக்கதாகின்றன.(46) உண்மையில், பசுக்களால் அனுமதிக்கப்பட்ட அத்தகைய மனிதன், அனைத்து இன்ப லோகங்களிலும் கௌரவிக்கப்பட்டு வாழ்கிறான். இந்த நோக்கோடு காடுகளில் நாள்தோறும் பசுக்களைப் பின்தொடரும் மனிதன் ஒருவன்,(47) புல், சாணம் மற்றும் மரத்தின் இலைகளை உண்டு வாழ்ந்து, பலனில் உள்ள விருப்பத்தில் இருந்து விடுபட்டு, முறையற்ற பொருட்கள் ஒவ்வொன்றில் இருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அனைத்து வகைக் களங்கங்களில் இருந்து மனம் தூய்மையடைந்து, அவன் விரும்பும் எந்த உலகம், அல்லது மகிழ்ச்சியான வேறு எந்த உலகமாக இருந்தாலும், அங்கே ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான்” என்றான் {பிரம்மன்}.(48)

பொன்தானமும் தக்ஷிணையும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 74-பசுக்கொடை, பசுத்திருட்டு, பசு விற்பனை, பொற்கொடை மற்றும் தக்ஷிணை தொடர்பாக இந்திரனுக்குப் பதிலளித்த பிரம்மன்…

இந்திரன் {பிரம்மனிடம்}, “ஓ! பாட்டா, தெரிந்தே பசுவைக் களவு செய்பவன் அல்லது பேராசையின் காரணமாக அதை விற்பவன் என்ன கதியை அடைகிறான் என்பதை அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பெரும்பாட்டன் {பிரம்மன்}, “உணவுக்காகக் கொல்லவோ, செல்வத்திற்காக விற்கவோ, ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதற்காகவோ ஒரு பசுவைக் களவாடும் மனிதர்களுக்கு நேரும் விளைவுகள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக.(2) சாத்திரக் கட்டுப்பாடுகளை எண்ணிப் பார்க்காமல் ஒரு பசுவை விற்பவன், அல்லது கொல்பவன், அல்லது ஒரு பசுவின் இறைச்சியை உண்பவன், செல்வத்திற்காக ஒரு பசுவைக் கொல்லச் செய்பவன்(3) எனக் கொல்பவன், உண்பவன், கொலையை அனுமதிப்பவன் ஆகியோர் கொல்லப்பட்ட அந்தப் பசுவின் உடலில் உள்ள மயிரின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் நரகில் வாடுவார்கள்.(4) ஓ! பெரும்பலம் கொண்டவனே, இந்தக் குற்றங்களும், ஒரு பிராமணனின் வேள்வியைத் தடை செய்வதால் உண்டாகும் வகையிலான குற்றங்களும் பசுக்களை விற்பனை செய்வது மற்றும் களவாடுவது ஆகியனவற்றின் மூலம் {ஒருவனைப்} பற்றுகின்றன.(5) ஒரு பசுவைக் களவாடி அவளை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் வெகுமதியாகச் சொர்க்கத்தின் இன்ப நிலையை அனுபவித்தாலும், களவு செய்த பாவத்திற்காக நெடுங்காலம் நரகில் துன்பத்தை அனுபவிக்கிறான்.(6)

ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக் கொடையில் பொன்னே தக்ஷிணையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், வேள்விகள் அனைத்திலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகச் சொல்லப்படுகிறது.(7) பசுக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தன் மூதாதையரில் ஏழு தலைமுறையினரையும், வழித்தோன்றல்களில் ஏழு தலைமுறையினரையும் மீட்பதாகச் சொல்லப்படுகிறான். பொன் தக்ஷிணையுடன் பசுக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மேற்சொன்னதில் இரட்டிப்பு எண்ணிக்கையில் {பதினான்கு தலைமுறைக்கான} தன் மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான்.(8) கொடைகளில் சிறந்தது பொன் கொடையே. மேலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகவும் இருக்கிறது. ஓ! சக்ரா, பொன்னே தூய்மையடையச் செய்வதில் பெரியதாகும், மேலும் உண்மையில் தூய்மை செய்யும் பொருட்கள் யாவிலும் சிறந்ததுமாகும்.(9) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பொற்கொடையளிப்பவனின் மொத்த குலத்தையும் அந்தப் பொன்னே புனிதப்படுத்துகிறது. ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, இவ்வாறு நான் தக்ஷிணை குறித்து உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன்” என்றான் {பிரம்மன்}”.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதையே பிரம்மன் இந்திரனிடம் சொன்னான். இந்திரன் இதைத் தசரதனுக்கும், தசரதன் இதைத் தன் மகனான ராமனுக்கும் சொன்னார்கள்.(11) ரகுகுல ராமன் அதைத் தன் அன்புக்குரிய தம்பியும், பெரும்புகழைக் கொண்டவனுமான லக்ஷ்மணனுக்குச் சொன்னான். லக்ஷ்மணன் காட்டில் வசித்தபோது இதை முனிவர்களுக்குச் சொன்னான்.(12) அதன்பிறகு தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த அஃதை கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், பூமியின் அறமன்னர்களும் தங்களுக்கு மத்தியில் தாங்கிப் பிடித்தனர்.(13) ஓ! யுதிஷ்டிரா, என் ஆசான் இதை எனக்குச் சொன்னார். பிராமணர்களின் கூட்டங்களில், வேள்விகளில், அல்லது பசுக்கொடைகளில், அல்லது இருவர் சந்திக்கும்போது ஒவ்வொரு நாளும் இதை உரைக்கும் பிராமணன், மறுமையில் தேவர்களின் துணையுடன் வசிக்கும் வற்றாத இன்ப லோகங்கள் பலவற்றை அடைகிறான்.(14,15) உயர்ந்த தலைவனும், புனிதமானவனுமான பிரம்மன், (பசுக்கொடை குறித்து இந்திரனிடம்) இதையே சொன்னான்” என்றார் {பீஷ்மர்}.(16)

நோன்புகளும், நியமங்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 75-நோன்பு, நியமம், கற்றல், அடக்கம், வேதம் மறவாமை, கற்பித்தல், உரிய கடமைகளைச் சிறப்பாகச் செய்தல் முதலியவற்றின் பலன் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பலமிக்கவரே, கடமைகளைக் குறித்து என்னிடம் நீர் சொல்வதன் மூலம் எனக்குப் பெரிதும் நம்பிக்கையுண்டாகிறது. எனினும், நான் கொண்டுள்ள சில ஐயங்களைச் சொல்கிறேன். ஓ! பாட்டா, அவற்றை விளக்குவீராக.(1) மனிதர்கள் நோற்கும் நோன்புகளுக்காக {விரதங்களுக்காக} சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பலன்கள் என்னென்ன? ஓ! பெரும் காந்தி கொண்டவனே, வேறு வகை நியமங்களை நோற்பதற்குண்டான பலன்களின் இயல்பென்ன? மேலும், வேதங்களை முறையாகக் கற்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்கள் என்னென்ன?[1](2) கொடைகளின் பலன்கள் என்ன? வேதங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் உள்ள பலன்கள் என்ன? வேதங்களைக் கற்பிப்பதில் கிட்டும் பலன்கள் என்ன? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்.(3)ஓ! பாட்டா, இவ்வுலகில் கொடைகளை ஏற்காமல் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? அறிவைக் கொடையளிப்பதில் தெரியும் பலன்கள் என்ன?(4) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் மனிதர்களுக்கும், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடாத வீரர்களுக்கும் கிட்டும் பலன்கள் என்ன? தூய்மை மற்றும் பிரம்மச்சரிய ஒழுக்கம் ஆகியவற்றால் கிட்டும் பலன்கள் என அறிவிக்கப்பட்டவை என்னென்ன?(5) தாய் தந்தையருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? ஆசான்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? கருணை மற்றும் அன்புக்குரிய பலன்கள் என்ன?(6) ஓ! பாட்டா, ஓ!சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரே, இவை யாவற்றையும் உண்மையாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இதில் நான் கொண்டிருக்கும் ஆவல் பெரியதாகும்” என்று கேட்டான்.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு விரதத்தை (நோன்பை) முறையாகத் தொடங்கி ஒரு தடையும் இல்லாமல் அதைச் சாத்திரங்களின் படி நிறைவடையச் செய்யும் ஒருவன் நித்திய இன்ப உலகங்களைத் தனதாகக் கொள்கிறான்.(8) ஓ! மன்னா, நியமங்களின் பலன்கள் இம்மையிலேயே காணக்கிடைக்கின்றன. நீ வென்றுள்ள இந்த வெகுமதிகள் அனைத்தும் நியமங்கள் மற்றும் வேள்விகளுக்குரியவையாகும்.(9) வேத கல்வியின் பலன்கள் இம்மையிலும், மறுமையிலும் காணப்படுகின்றன. வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் இவ்வுலகத்திலும், பிரம்மலோகத்திலும் இன்பமாகத் திளைத்திருப்பதே காணப்படுகிறது.(10)

ஓ! மன்னா, தற்கட்டுப்பாட்டின் பலன்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக. தற்கட்டுப்பாடு கொண்டவர்கள் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தற்கட்டுப்பாடுடையவர்கள், ஆசையற்றதனால் அல்லது ஆசையை அடக்குவதனால் உண்டாகும் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.(11) தற்கட்டுப்பாடுடையவர்கள் பகைவர்கள் அனைவரையும் அழிக்கவல்லவர்களாவர். தற்கட்டுப்பாடுடையவர்கள் தாங்கள் நாடும் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தற்கட்டுப்பாடுடையவர்கள் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைகிறார்கள். தவங்கள் மற்றும் (கர) வலிமையின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தில் இன்புறும் மகிழ்ச்சியானது தற்கட்டுப்பாடும், மன்னிக்கும் தன்மையும் கொண்டோரின் உடைமையாகிறது.(13) கொடையை விடத் தற்கட்டுப்பாடே பலன்மிக்கதாகும். ஒரு கொடையாளி, பிராமணர்களுக்கு ஒரு கொடையை அளித்தபிறகு கோபவசப்படக்கூடும். எனினும், தற்கட்டுப்பாடுடைய மனிதன் ஒருபோதும் கோபவசப்பட மாட்டான். கோபவசப்படாமல் கொடையளிக்கும் மனிதனே நித்திய இன்பலோகங்களை அடைவதில் வெல்கிறான். கோபமானது கொடையின் பலனை அழிக்கிறது. எனவே தற்கட்டுப்பாடே கொடையைவிட மேன்மையானதாகும். (14-16)

ஓ! ஏகாதிபதி, சொர்க்கத்தில் பத்தாயிரக்கணக்கில் கண்ணுக்குத்தெரியாத பல்வேறு இடங்கள் இருக்கின்றன. சொர்க்கத்தில் உள்ள இந்த இடங்கள் யாவும் முனிவர்களுக்கு உரியனவாகும். இவ்வுலகை விட்டு அகலும் மனிதர்கள் அவற்றை அடைந்து, தேவர்களாக மாறுகிறார்கள்.(17) ஓ! மன்னா, பெரும் முனிவர்கள் தங்கள் தற்கட்டுப்பாட்டின் துணையால் மட்டுமே அங்கே செல்கின்றனர், பிறகு தங்கள் முயற்சிகளின் கதியாக மேலான மகிழ்ச்சிமிக்க உலகங்களை அடைகின்றனர். எனவே, தற்கட்டுப்பாடே (திறனில்) கொடையை விட மேன்மையானதாகும்.(18) ஓ! மன்னா, (வேதங்களைக் கற்பிப்பதற்காக) ஆசானாக ஆகிறவனும், நெருப்பை முறையாக வழிபடுபவனுமான மனிதன், இவ்வுலகத் துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மலோகத்தில் வற்றாத இன்பநிலையை அனுபவிப்பான்.(19) வேதங்களைக் கற்று, அறம்சார்ந்த சீடர்களுக்கு அந்த அறிவைக் கற்பித்தவனும், தன் ஆசானின் செயல்களைப் புகழ்பவனுமான மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(20)

வேத கல்வி கற்பவனும், வேள்விகளைச் செய்பவனும், கொடையளிப்பவனும், போரில் பிறரின் உயிர்களைக் காப்பவனுமான ஒரு க்ஷத்திரியனும் அதே போன்ற பெரும் கௌரவங்களைச் சொர்க்கத்தில் அடைகிறான்.(21) தன் வகைக்கான கடமைகளை நோற்பவனும், கொடைகளை அளிப்பவனுமான ஒரு வைசியன், மகுடம் சூடும் வெகுமதியாக அக்கொடைகளுக்கான பலன்களை அறுவடை செய்கிறான். தன் வகைக்கான கடமைகளை (மூன்று வகையினருக்கான தொண்டுகளை) முறையாக நோற்பவனான ஒரு சூத்திரன் தன் தொண்டுகளுக்கான வெகுமதியாகச் சொர்க்கத்தை வெல்கிறான்.(22)

(சாத்திரங்களில்) பல்வேறு வகை வீரர்கள் பேசப்படுகின்றனர். அவர்கள் அடைந்த வெகுமதிகள் என்னென்ன என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. வீர குலத்தைச் சார்ந்த ஒரு வீரனுக்கு வெகுமதிகள் நிலையானவையே.(23) வேள்வி வீரர்கள், தற்கட்டுப்பாட்டு வீரர்கள், வாய்மை வீரர்கள், வீரன் என்ற பெயருக்குத் தகுந்த பிறர் என்று பலர் இருக்கின்றனர். போர்க்கள வீரர்கள், மனிதர்களுக்கு மத்தியில் கொடைவீரர்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.(24) சாங்கிய நம்பிக்கை கொண்ட வீரர்கள் என்றழைக்கப்படும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், யோக வீரர்கள் என்றழைக்கப்படும் வேறு பலரும் இருக்கிறார்கள். காட்டு {வானப்பிரஸ்த} வாழ்வில், வீட்டு {கிருஹஸ்த} வாழ்வில், துறவு (அல்லது சந்நியாச) வாழ்வில் என வீரர்களாக வேறு சிலர் கருதப்படுகின்றனர்.(25)

அதே போலவே புத்திவீரர்கள் மற்றும் பொறுமைவீரர்கள் என்றழைக்கப்படுவோரும் உண்டு. அமைதிநிலையில் வாழ்பவர்களும், அறவீரர்களாகக் கருதப்படும் பிற மனிதர்களும் இருக்கிறார்கள்.(26) பல்வேறு வகை நோன்புகளையும், நியமங்களையும் பயிலும் பல்வேறு வகை வீரர்களும் இருக்கிறார்கள். வேதகல்வி வீரர்கள், அதையே கற்பிப்பதில் அர்ப்பணிப்புள்ள வீரர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.(27) மேலும், அர்ப்பணிப்புடன் ஆசான்களுக்குத் தொண்டாற்றுவதில் வீரர்கள், தங்கள் தந்தைமாரை மதிப்பதில் வீரர்கள் எனவும் சில மனிதர்கள் கருதப்படுகிறார்கள். தாய்க்குக் கீழ்ப்படிவதில் வீரர்கள், தாங்கள் நோற்கும் பிச்சைக்கார வாழ்வில் வீரர்களும் இருக்கிறார்கள்.(28) காட்டுத்துறவியாக {வானப்ரஸ்தராக} அல்லது இல்லறவாசியாக {கிருஹஸ்தராக} வாழ்ந்தாலும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பும் வீரர்களும் இருக்கிறார்கள். இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் செயல்களுக்காக வெகுமதியையும் அடையும் வகையில் மேன்மையான இன்ப உலகங்களை அடைகிறார்கள்.(29)

வேதங்கள் அனைத்தையும் நினைவில் கொள்வது, அல்லது புனித நீர்வெளிகள் அனைத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்வது ஆகியவை, ஒருவன் நாள்தோரும் வாய்மை பேசுவதற்கு இணையானவையாகவோ அல்லாதவையாகவோ இருக்கலாம்.(30) ஒரு காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் ஒரே தராசில் எடைபார்க்கப்பட்டன. அப்போது வாய்மையே ஓராயிரம் குதிரைவேள்விகளைவிட எடைமிக்கதாகத் தெரிந்தது.(31) வாய்மையினாலேயே சூரியன் வெப்பத்தைத் தருகிறான்; வாய்மையாலேயே நெருப்புச் சுடர்விடுகிறது; வாய்மையாலேயே காற்று வீசுகிறது; உண்மையில் அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(32)

தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களை வாய்மையே நிறைவடையச் செய்கிறது. வாய்மையே உயர்ந்த கடமையெனச் சொல்லப்படுகிறது. எனவே எவனும் ஒருபோதும் வாய்மையெனும் வரம்பை மீறக்கூடாது.(33) முனிவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களது ஆற்றல் வாய்மையைச் சார்ந்தே இருக்கிறது. அவர்கள் வாய்மையின் மூலமே உறுதியேற்கிறார்கள். எனவே வாய்மையே மேன்மையானதாகும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வாய்மை நிறைந்த மனிதர்கள் அனைவரும் தங்கள் வாய்மையின் மூலமே சொர்க்கத்தை அடைவதில் வென்று, அங்கே இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள்.(34) வாய்மை தரும் வெகுமதியே தற்கட்டுப்பாடாகும். நான் முழு இதயத்துடன் அதுகுறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். தற்கட்டுப்பாடுடையவனும், எளிய இதயம் கொண்டவனுமான மனிதன், நிச்சயம் சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளை அடைகிறான்.(35)

ஓ! பூமியின் தலைவா, பிரம்மச்சரியத்தின் பலன்களை உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன் இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, பிறப்பிலிருந்து மரணம் வரை பிரம்மச்சரிய நோன்பைப் பயிலும் மனிதனால் அடையமுடியாதது எதுவுமில்லை என்பதை அறிவாயாக. பல கோடி முனிவர்கள் பிரம்மலோகத்தில் வசிக்கின்றனர்.(36,37) இங்கே இருந்தபோது, அவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், உயிர்வித்தை மேலிழுத்தவர்களாகவும் இருந்தனர். ஓ! மன்னா, ஒரு பிராமணனால் பிரம்மச்சரிய நோன்பு முறையாக நோற்கப்பட்டால் அவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்துவிடுவான். அந்தப் பிராமணன் சுடர்மிக்க நெருப்பெனச் சொல்லப்படுகிறான். தவங்களில் அர்ப்பணிப்புள்ள அந்தப் பிராமணர்களில் நெருப்பு தேவன் {அக்னி} காணப்படுகிறான்.(38,39) ஒரு பிரம்மசாரியானவன் சிறு கோபத்தை அடைந்தாலும் தேவர்களின் தலைவனே அச்சத்தில் நடுங்குவான். இதுவே முனிவர்களால் நோற்கப்படும் பிரம்மச்சரிய நோன்பில் காணப்படும் பலனாகும்.(40)

ஓ! யுதிஷ்டிரா, தந்தை தாயை வழிபடுவதில் உள்ள பலனைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! மன்னா, எதனிலும் குறுக்கிடாமல் தன் தந்தைக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றும் ஒருவன், அதே போலத் தன் தாய்க்கோ, தன் அண்ணனுக்கோ, வேறு பெரியோருக்கோ, ஆசானுக்கோ தொண்டாற்றும் ஒருவன் ஆகியோர் சொர்க்கவாசத்தை ஈட்டுகிறார்கள் என்பது அறியப்பட வேண்டும். தூய்மையடைந்த ஆன்மைவைக் கொண்ட மனிதன், பெரியோர்களுக்குச் செய்யும் இத்தகைய தொண்டின் விளைவாக அவன் நரகை ஒருபோதும் காணவும் மாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(41,42)

கோதான விதிமுறைகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 76-பசுக்கொடைக்கு உரிய விதிமுறைகள் மற்றும் சிறப்புகள் முதலியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன பிருஹஸ்பதி…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, எவ்விதிகளின்படி (பசுக்) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற நித்திய இன்பலோகங்களை அடைகிறானோ, {எவ்விதிகள்} பசுக்கொடைகளை ஒழுங்கு படுத்துமோ, அந்த உயர்ந்த விதிகளைக் குறித்து நீர் விரிவாகச் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, பலன்களைப் பொறுத்தவரையில் பசுக்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை. நியாயமான முறையில் அடையப்பட்ட ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தக் கொடையாளியின் மொத்த குலமும் உடனே மீட்கப்படுகிறது.(2) அறவோரின் நன்மைக்கென உண்டான அந்தச் சடங்கு, அடுத்து அனைத்து உயிரினங்களுக்காக அறிவிக்கப்பட்டது. அந்தச் சடங்கு தொடக்கக் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அஃது அறிவிக்கப்படும் முன்பே இருந்தது. உண்மையில், ஓ! மன்னா, பசுக்கொடை குறித்த அந்தச் சடங்கைப் பற்றிச் சொல்கிறேன் கேட்பாயாக[1].(3) பழங்காலத்தில் எண்ணற்ற பசுக்கள் (கொடையளிப்பதற்காக) மன்னன் மாந்தாத்ரியிடம் {மாந்தாதாவிடம்} கொண்டுவரப்பட்ட போது, (உண்மையில் அவற்றைக் கொடையளிப்பதற்காக) நோற்கப்பட வேண்டிய சடங்குகளைக் குறித்த ஐயத்தால் நிறைந்த அவன், (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதியிடம் அந்த ஐயத்திற்கான விளக்கத்தை முறையாகக் கேட்டான்.(4)பிருஹஸ்பதி {மந்தாதாவிடம்}, “பசுக்கொடையாளி {கொடையளிப்பதற்கு} முந்தைய நாளே முறையாகக் கட்டுப்பாடுகளை நோற்று, பிராமணர்களை முறையாகக் கௌரவித்து, கொடைக்கான (சரியான) நேரத்தைக் குறிக்க வேண்டும். கொடையளிக்கப்பட வேண்டிய பசுக்களைப் பொறுத்தவரையில் அவை ரோகிணி என்றழைக்கப்படும் வகையைச் சார்ந்தவையாக {சிவப்பு பசுக்களாக} இருக்க வேண்டும்.(5) அந்தப் பசுக்களிடம் சமங்கே {அங்கங்கள் நிரம்பியவளே}, வாஹுலே {அபிவிருத்தியடைகிறவளே} என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். பசுக்களை நிறத்தப்பட்டிருக்கும் இடத்திற்குள் நுழைந்து, பின்வரும் ஸ்ருதி சொல்லப்பட வேண்டும்,(6) “பசுவே என் அன்னை. காளை என் தந்தை. சொர்க்கம் மற்றும் பூமி சார்ந்த செழிப்பை (எனக்குக் கொடுப்பாயாக). பசுவே என் புகலிடமாக இருக்கிறாள்” {என்பதே அந்த ஸ்ருதி}. அங்கே நுழைந்து இவ்வழியில் செயல்படும் கொடையாளி அங்கேயே அந்த இரவைக் கழிக்க வேண்டும். மேலும் அவன் அந்தப் பசுவைக் கொடையளிக்கும்போதும் அந்தச் சூத்திரத்தை {மந்திரத்தைச்} சொல்ல வேண்டும்[2].(7) பசுவோடு இருக்கும் அந்தக் கொடையாளி, அவற்றின் சுதந்திரத்தைத் தடுக்கும் எதையும் செய்யாமல், (பசுக்களை எரிச்சலூட்டுவது போலத் தன்னையும் எரிச்சலூட்டும் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டாமல்) வெறும் தரையில் படுப்பவன், தன்னைச் சரியாகப் பசுவின் நிலைக்கே குறைத்துக் கொள்வதன் விளைவாக அவனது பாவங்கள் அனைத்தும் உடனே தூய்மையடைகின்றன.(8)காலையில் சூரியன் எழும்போது, கன்று மற்றும் காளையுடன் பசுவானது கொடையளிக்கப்பட வேண்டும். அத்தகைய செயலின் வெகுமதியாக, நிச்சயம் சொர்க்கமே உன்னால் அடையப்படுகிறது. மந்திரங்களில் குறிப்பிடப்படும் அருள் அனைத்தும் உனதாகும்.(9) மந்திரங்களில் “பசுக்கள் பலம் மற்றும் சக்தியுடன் கூடிய முயற்சி ஆகியவற்றைக் கொண்டனவாகும். பசுக்கள் தங்களிடம் ஞானத்தையும் கொண்டிருக்கின்றன. வேள்வி அடையும் அமரநிலையை {இறவாநிலையை} அவை கொண்டிருக்கின்றன. சக்திகள் அனைத்திற்கும் அவை புகலிடமாக இருக்கின்றன. உலகம் சார்ந்த செழிப்பை வெல்லும் படிநிலைகள் அவையே. அண்டத்தின் நித்திய நடைமுறைகளை அவையே கொண்டிருக்கின்றன. ஒருவனுடைய குலத்தைப் பெருக்குபவை அவையே.(10) (நான் கொடையளிக்கும்) பசுக்கள் என் பாவங்களை அழிக்கட்டும். அவை சூரியன் மற்றும் சோமனின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. நான் சொர்க்கத்தை அடைவதற்கு இவை துணைபுரியட்டும். ஒரு தாயானவள் தன் பிள்ளையைக் காப்பது போல இவை என்னைக் காக்கட்டும். நான் சொல்லும் மந்திரங்களில் இல்லாத அருள்களும் எனதாகட்டும்” என்று சொல்லப்படுகிறது.(11) காச நோய், அல்லது வேறு நோய்களை ஒழிப்பதிலும், உடலில் இருந்து விடுபடும் காரியத்திலும், பசுவின் ஐந்து பொருட்களை ஒரு மனிதன் எடுத்துக் கொண்டால், பசுவானது சரஸ்வதியாற்றைப் போல அவனுக்கு அருளை வழங்குகிறது.

(ஒரு கொடையாளி), “பசுக்களே, நீங்களே அனைத்து வகைப் பலன்களையும் அழிப்பவர்கள். என்னிடம் நிறைவடையும் நீங்கள் எனக்கு விரும்பத்தக்க கதியைக் கொடுப்பீராக.(12) நான் இன்று நீங்களாகவே ஆகிறேன். உங்களைக் கொடையளிப்பதன் மூலம், நான் என்னையே கொடுக்கிறேன்” (என்று சொன்னதும், கொடையைப் பெற்றுக் கொள்பவன்), “நீங்கள் இனி உங்களைக் கொடுப்பவர்களுக்கு உரிமையானவர்கள் இல்லை. நீங்கள் இப்போது எனதாகிறீர்கள். சூரியன் மற்றும் சோமனின் இயல்பைக் கொண்ட நீங்கள் கொடையாளியையும், கொடை பெறுபவனையும் அனைத்து வகைச் செழிப்பாலும் சுடர்விடச் செய்கிறீர்கள்” (என்று சொல்ல வேண்டும்).(13) (ஏற்கனவே குறிப்பிட்டது போல) கொடையாளி, மேற்கண்ட ஸ்லோகத்தின் முதல் பகுதியைச் சொல்ல வேண்டும். அதைப் பெறுபவனும், பசுக்கொடையை ஒழுங்குபடுத்தும் சடங்கை அறிந்தவனுமான மறுபிறப்பாளன் {பிராமணன்}, பசுவைக் கொடையாகப் பெறும்போது, (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) மேற்கண்ட ஸ்லோகத்தின் பிற்பாதியைச் சொல்ல வேண்டும்.(14)

ஒரு மனிதன், பசுக்கொடை அளிப்பதற்குப் பதிலாக அதற்குரிய விலையையோ, துணிமணிகளையோ, பொன்னையோ கொடையளித்தாலும் பசுக்கொடை அளித்தவனாகவே கருதப்படுகிறான். (பசுவுக்குப் பதிலாக) பசுவுக்குரிய விலையைக் கொடையளிப்பவன், “மேல்நோக்கும் முகம் கொண்ட இந்தப் பசுவானவள் கொடையளிக்கப்படுகிறாள். நீ இவளை ஏற்பாயாக” என்று சொல்ல வேண்டும். (பசுவுக்குப் பதிலாக) துணிமணிகளைக் கொடையளிப்பவன், “(இந்தக் கொடை பசுவாகக்கருதப்படட்டும் என்ற பொருள் படும்) பவிதவ்யா” என்ற சொல்லைச் சொல்ல வேண்டும். (பசுவுக்குப் பதிலாகப்) பொன்னைக் கொடையளிக்கும் மனிதன், “(நான் கொடுக்கும் இந்தப் பொன், பசுவின் இயல்பையும் வடிவையும் கொண்டதாகும் எனப் பொருள்படும்படி) வைஷ்ணவி” என்ற சொல்லைச் சொல்ல வேண்டும்.(15) மேற்குறிப்பிட்ட வகையில் கொடையளிக்கும்போது இவ்வார்த்தைகளே சொல்லப்பட வேண்டும். பிறருக்காக இத்தகைய பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம், {உண்மையான பசுக்கொடைக்கு} முப்பத்தாறாயிரம் {36,000} வருடங்களும், {பசுவுக்குப் பதிலாகத் துணிமணிகளைக் கொடையளித்தால்} எட்டாயிரம் {8,000} வருடங்களும், {பசுவுக்குப் பதிலாகப் பொற்கொடை அளித்தால்} இருபதாயிரம் {20,000} வருடங்களும் சொர்க்கவாசம் வெகுமதியாக அறுவடை செய்யப்படுகின்றன[3].(16)பசுவுக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் கொடைகளின் முறையான பலன்கள் இவையே. அதே வேளையில், உண்மையான பசுவையே கொடையளிப்பவனைப் பொறுத்தவரையில், பசுவுக்குப் பதிலாகக் கொடையளிப்பதில் உள்ள பலன்கள் அனைத்தும், கொடை பெறுவனின் (அவன் தன் இல்லம் நோக்கி எடுத்து வைக்கும்) எட்டாவது அடியிலேயே கொடையாளிக்குக் கிட்டிவிடுகிறது[4].(17) உண்மையான பசுவைக் கொடையளிப்பவன் இவ்வுலகில் அற நடத்தை கொண்டவனாக மாறுகிறான். பசுவுக்கான விலையைக் கொடையளிப்பவன் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறான். (உண்மைப் பசுவைக் கொடையளிப்பதற்குப் பதில் இவ்வழியில்) பசுக்கொடையளிப்பவன் கவலைகள் எதையும் அடையமாட்டான். {உண்மையான பசுவைக் கொடையளிப்பவன், பசுவுக்கான விலையைக் கொடையளிப்பவன், பசுவுக்குப் பதிலாக வேறு ஒரு பொருளைக் கொடையளிப்பவன் ஆகிய} இந்த மூவரும், அதிகாலையிலேயே முறையாகத் தங்கள் தூய்மைச் சடங்குகளையும் பிற {வழிபாட்டுச்} செயல்களையும் செய்பவர்களும், மஹாபாரதத்தை நன்கறிந்தவனும் விஷ்ணு மற்றும் சோமனின் உலகங்களை அடைகிறார்கள்[5].(18) ஒரு பசுவைக் கொடையளித்த பிறகு அந்தக் கொடையாளி மூன்று இரவுகளுக்கு நோய் தடுக்கும் பால் நோன்பை {கோவிரதத்தைப்} பின்பற்றிப் பசுக்களுடன் ஓரிரவைக் கழிக்க வேண்டும். அந்தப் பிறைநாள் {திதி} தொடங்கி, காம்யம் என்ற பெயரில் அறியப்படும் எட்டாம் நாளில் இருந்து பசுவின் பால், சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றை மட்டுமே உண்டு அவன் மூன்று இரவுகளைக் கழிக்க வேண்டும்[6].(19)ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தெய்வீக நோன்புக்கு (பிரம்மச்சரிய நோன்புக்கு) உரிய பலனை அடைகிறான். இரண்டு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் அவன் வேதங்களில் திறன் பெறுகிறான். ஒரு வேள்வியைச் செய்து, விதிப்படியான சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடையளிக்கும் மனிதன், மேன்மையான தன்மையிலான பல உலகங்களை அடைகிறான். எனினும், அந்தச் சடங்கைக் குறித்து அறியாத மனிதனால் (சாத்திர அறிவுப்புகளைக் காணாது பசுக்கொடையளிப்பவனால்) அவற்றை ஒருபோதும் அடைய முடியாது.(20) அபரிமிதமான பாலைத் தரும் ஒற்றைப் பசுவைக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் ஒன்றாகத் திரட்டப்படும் விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் கொடையளித்த பலனை ஈட்டுகிறான். எனவே, நிறைந்த மடியைக் கொண்டதன் விளைவால் ஹவ்யகவ்யங்களைத் தரும் அத்தகைய பசுக்கள் பலவற்றைக் கொடையளிப்பதைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? மேன்மையான எருதொன்றைக் கொடையளித்தால் உண்டாகும் பலனானது, பசுக்கொடையால் கிட்டும் பலனைவிடப் பெரியதாகும்.(21)

ஒருவன், தன் சீடனாக இல்லாத, அல்லது நோன்புகளை நோற்காத, அல்லது நம்பிக்கையற்ற, அல்லது கோணல் புத்தி கொண்ட மற்றொருவனுக்கு இந்தச் சடங்கைக் குறித்த அறிவைப் போதிக்கக்கூடாது. உண்மையில் இவ்வறம், வெகுமக்கள் அறியாத ஒரு புதிராகும். அதையறிந்தவன் அனைத்து இடங்களிலும் அதைக் குறித்துப் பேசக் கூடாது.(22) இவ்வுலகில் நம்பிக்கையற்ற மனிதர்கள் பலர் இருக்கின்றனர். மனிதர்களுக்கு மத்தியில் ஈனர்களும், ராட்சசர்களுக்கு ஒப்பானவர்களுமானவர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு இவ்வறத்தைப் போதிப்பது தீமைக்கே வழிவகுக்கும். நாத்திகத்தை உறைவிடமாகக் கொண்ட அத்தகைய பாவிகளுக்குப் போதிக்கப்பட்டால் அதற்கு ஈடான தீமையே விளையும்” என்றார் {பிருஹஸ்பதி}”.(23)

{பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “ஓ! மன்னா, பிருஹஸ்பதியின் போதனைகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடையளித்து, பேரின்ப உலகங்களை அடைந்த அறம்சார்ந்த ஏகாதிபதிகளின் பெயரை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(24) உசீனரன், விஷ்வகசுவன், நிருகன், பகீரதன், யுவனாசுவன் மகனும் கொண்டாடப்பட்டவனுமான மாந்தாத்ரி {மாந்தாதா}, முசுகுந்தன், பூரித்யும்னன், நைஷதன், ஸோமகன்,(25) புரூரவன், பாரதர்களில் முதல்வனான பரதன், தசரதன் மகனும், வீரனுமான ராமன், மற்றும் பெரும் சாதனைகளைச் செய்த கொண்டாடப்பட்ட மன்னர்கள் பலரும்,(26) பரந்து அறியப்பட்ட செயல்களைச் செய்த மன்னன் திலீபனும், சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடை அளித்ததன் விளைவால் சொர்க்கத்தை அடைந்தனர். மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, வேள்விகள், கொடைகள், தவங்கள், அரச கடமைகள், பசுக்கொடைகள் ஆகியவற்றை எப்போதும் செய்து வந்தான்.(27) எனவே, ஓ! பிருதையின் மகனே, (பசுக்கொடை குறித்து) பிருஹஸ்பதி சொன்னதான, நான் உன்னிடம் சொன்ன போதனைகளை மனத்தில் கொள்வாயாக. குருக்களின் நாட்டை அடைந்ததும், உற்சாகமிக்க இதயத்துடன் நீ முதன்மையான பிராமணர்களுக்குப் பசுக்கொடையளிப்பாயாக” என்றார் {பீஷ்மர்}”.(28)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு பீஷ்மரால், பசுக்கொடையை அளிக்கும் சரியான வழிமுறைகள் குறித்துச் சொல்லப்பட்டவனான மன்னன் யுதிஷ்டிரன், பீஷ்மர் விரும்பிய அனைத்தையும் செய்தான். உண்மையில், மன்னன் யுதிஷ்டிரன், தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அரசன் மாந்தாத்ரிக்கு {மாந்தாதாவுக்குச்} சொன்ன அறம் முழுவதையும் தன் மனத்தில் கொண்டான்.(29) யுதிஷ்டிரன் அந்தக் காலத்தில் இருந்த பசுக்கொடைகளை அளிக்கவும், {அவ்வாறு பசுக்கொடையளிக்கும் போது} யவையரிசி நொய்களையும், பசுஞ்சாணத்தையும் தன் உணவாகவும் பானமாகவும் கொள்ளத் தொடங்கினான். மேலும் அம்மன்னன் அந்த நாள் முதலே வெறுந்தரையில் உறங்கத் தொடங்கி, ஆன்மக் கட்டுப்பாட்டுடனும், ஒரு காளையின் ஒழுக்கத்துடனும் முதன்மையான ஏகாதிபதியாக ஆனான்[7].(30) அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} அந்த நாள் முதலே பசுக்களைக் கவனிக்கவும், எப்போதும் அவற்றை வழிபடவும், அவற்றின்புகழைப் பாடவும் தொங்கினான். அந்த நாள் முதலே அம்மன்னன், பசுக்களைத் தன் வாகனங்களில் பூட்டும் நடைமுறையைக் கைவிட்டான். அவன் எங்குச் செல்ல நேர்ந்தாலும் நல்ல இனக் குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களிலேயே சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

கபிலைப் பசு! – அநுசாஸனபர்வம் பகுதி – 77-பசுக்கொடையின் சிறப்பு மற்றும் கபிலைப் பசுக்களின் வரலாறு குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்}, “பணிவுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் சந்தனுவின் அரசமகனிடம் {பீஷ்மரிடம்} பசுக்கொடை குறித்து விரிவாகக் கேள்வி எழுப்பினான்.(1)

மன்னன் {யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, பசுக்கொடையின் பலன்களை இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. ஓ! வீரரே, அமுதம் போன்ற உமது வார்த்தைகளைக் கேட்பது எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை” என்றான்”.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, பசுக்கொடையின் பலன்களைக் குறித்தும் விரிவாக மீண்டும் சொல்லத் தொடங்கினார்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கன்றுடன் கூடியதும், பணிவானதும், வேறு நற்குணங்களைக் கொண்டதும், வயதில் இளமையானதுமான ஒரு பசுவை துணியால் சுற்றிலும் மூடி ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாகிறான்.(4) (நரகத்தில்) சூரியனற்ற பல உலகங்கள் இருக்கின்றன. பசுக்கொடையளிக்கும் ஒருவன் அங்கே செல்லமாட்டான்.(5) எனினும், பருகவும், உண்ணவும் இயலாததும், பால் வற்றியதும், பலவீனமான புலன்களைக் கொண்டதும், நோய்வாய்ப்பட்டதும், முதுமையடைந்ததும், நீர் வற்றிய குளத்தைப் போன்றதுமான பசுவை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதன் மூலம், அவனுக்குத் துன்பத்தையும், ஏமாற்றத்தையும் அந்த மனிதன், காரிருள் நரகில் நிச்சயம் நுழைவான்.(6) கோபம் நிறைந்த, தீய, அல்லது நோய்வாய்ப்பட்ட, அல்லது பலவீனமான, அல்லது ஏற்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் வாங்கப்பட்ட, அல்லது ஏற்போனான மறுபிறப்பாளனை துன்பத்தாலும், ஏமாற்றத்தாலும் பீடிக்கச் செய்யும் பசுவை ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது. அத்தகைய மனிதன் (செய்த வேறு அறச்செயல்களின் வெகுமதியாக) அடையும் உலகங்கள் அவனுக்கு எந்த மகிழ்ச்சியையோ, எந்தச் சக்தியையோ அளிக்காது.(7) பலமானதும், நன்னடத்தைக் கொண்டதும், வயதில் இளையதும், நறுமணத்துடன் கூடியமான பசுக்கள் மட்டுமே (கொடையளிக்கும் காரியத்தில்) அனைவராலும் மெச்சப்படுகின்றன. உண்மையில், கங்கையே அனைத்து ஆறுகளிலும் முதன்மையானவளாக இருப்பது போலவே பசுக்கள் அனைத்திலும் முதன்மையானதாகக் கபிலைப் பசு ஆகும்” என்றார்.(8)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடையளிக்கப்படும் நல்ல பசுக்கள் அனைத்தும் சமமாகவே கருதப்படும் போது கபிலைப் பசுவைக் கொடையளிப்பது (அதிகப் பலனைத் தருவதாக) அறவோரால் ஏன் மெச்சப்படுகிறது? ஓ! பெரும்பலம் கொண்டவரே, கபிலைப் பசுவின் தனித்தன்மை என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், இக்காரியம் குறித்து எனக்குச் சொல்லத் தகுந்தவர் நீரே” என்றான்[1].(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, கபிலைப்பசு படைக்கப்பட்ட சூழ்நிலை குறித்த இந்த வரலாற்றைப் பழங்கால மனிதர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அந்தப் பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(10)

பழங்காலத்தில், சுயம்புவான பிரம்மன் முனிவர் தக்ஷரை அழைத்து, “உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய தக்ஷர் முதலில் உணவைப் படைத்தார்.(11) ஓ! பலமிக்கவனே, தேவர்கள் அமுதத்தைச் சார்ந்திருப்பதைப் போலவே, தக்ஷர் நிர்ணயித்த உணவைச் சார்ந்தே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன.(12) அசைபவை {உயிருள்ள} மற்றும் அசைவற்ற {உயிரற்ற} பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் அசைபவையே {உயிருள்ளவையே} மேன்மையானவை. அசையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்களே மேன்மையானவர்கள். வேள்விகள் அனைத்தும் அவர்களிலேயே நிறுவப்பட்டுள்ளன.(13) வேள்வியின் மூலமே சோமம் (அமுதம்) கிடைத்தது. வேள்வியானது பசுக்களில் நிறுவப்பட்டுள்ளது[2]. தேவர்கள் வேள்விகளின் மூலமே நிறைவடைகின்றனர். படைப்பைப் பொறுத்தவரையில், வாழ்வாதார வழிமுறைகளே முதலில் தோன்றின, அடுத்துதான் உயிரினங்கள் வந்தன.(14) உயிரினங்கள் பிறந்ததும் அவை உணவுக்காக உரக்க அழத் தொடங்கின. அவை அனைத்தும், தாயையோ, தந்தையையோ அணுகும் பிள்ளைகளைப் போல உணவைத் தரும் படைப்பாளனை அணுகின.(15)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)பாலை உறிஞ்சி கொண்டிருந்த கன்றுகளின் வாயில் இருந்த நுரைகள், அப்போது பூமியில் அமர்ந்திருந்த மஹாதேவனின் தலையில் விழுந்தது. பலமிக்க மஹாதேவன், கோபத்தால் நிறைந்து, தன் கண்களை அந்தப் பசுக்களின் மேல் செலுத்தினான்.(20) அவனது நெற்றியை அலங்கரித்திருந்த மூன்றாவது கண்ணால் அவன் அவற்றைப் பார்ப்பது, அவற்றை எரிப்பதைப் போலத் தெரிந்தது. மேகங்களைப் பல வண்ணங்களில் ஒளிரச் செய்யும் சூரியனைப் போலவே, மஹாதேவனின் மூன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட சக்தியானது, அந்தப் பசுக்களில் பல்வேறு நிறங்களை உண்டாக்கியது. எனினும், சோமலோகத்தில் நுழைந்ததன் மூலம் மஹாதேவனின் பார்வையில் இருந்து தப்பித்தவையின் நிறத்தில் எந்த மாற்றமும் உண்டாகததால் அவை பிறந்த போது இருந்த நிறத்துடனேயே இருந்தன.(21,22)

உயிரினங்கள் அனைத்தின் தலைவரான தக்ஷர், மஹாதேவன் பெருங்கோபம் கொண்டதைக் கண்டு, அவனிடம்,(23) “ஓ! பெருந்தேவா, நீ அமுதத்தால் நனைந்திருக்கிறாய். தாயிடம் பால் பருகும் கன்றுகளின் வாயில் இருந்து விழும் பாலோ, நுரையோ தூய்மையான எச்சமாக[4] ஒருபோதம் கருதப்பட்டதில்லை. அமுதத்தைப் பருகும் சந்திரமாஸ் {சந்திரன்}, மீண்டும் அதைப் பொழிகிறான். எனினும், அது தூய்மையற்றதாகப் பார்க்கப்படுவதில்லை.(24) அதே போலவே, பசுக்கள் தரும் பாலும், அமுதத்தில் இருந்தே பிறந்ததால், (கன்றின் வாயால் மடி தீண்டப்பட்டதால்) அஃது ஒருபோதும் தூய்மையற்றாகக் கருதப்படக்கூடாது. காற்று ஒருபோதும் தூய்மையற்றதாகாது. நெருப்பு ஒருபோதும் தூய்மையற்றதாகாது. பொன் ஒருபோதும் தூய்மையற்றதாகாது. கடல் ஒருபோதும் தூய்மையற்றதாகாது.(25) அமுதமானது, தேவர்களால் பருகப்பட்டாலும் கூட ஒருபோதும் தூய்மையற்றதாகாது. அதே போலவே, பசுவின் பாலும், கன்றால் மடி உறிஞ்சப்பட்டாலும் ஒருபோதும் தூய்மையற்றதாகாது. இந்தப் பசுக்கள், தாம் தரும் பாலின் மூலமும் அதிலிருந்து உண்டாகும் நெய்யின் மூலம் மூன்று உலகங்களையும் ஆதரிக்கப் போகின்றன.(26) அமுதத்தோடு அடையாளங்காணப் படக்கூடிய பசுவின் மங்கலச் செல்வத்தை அனைத்து உயிரினங்களும் அனுபவிக்க விரும்புகின்றன” என்றார் {தக்ஷர்}. உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, மஹாதேவனுக்கு ஒரு காளையையும், பசுவையும் கொடையளித்தார்.(27)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தக் கொடையின் மூலம் தக்ஷர், ருத்திரனின் இதயத்தை நிறைவடையச் செய்தார். இவ்வாறு நிறைவடைந்த மஹாதேவன், தன் வாகனமாக அந்தக் காளையை அமைத்துக் கொண்டான். அந்தப் பசுவின் வடிவத்தைக் கொண்டே மஹாதேவன் தன் போர்த்தேரில் மிதக்கும் கொடிமரத்தின் பொறியை அமைத்துக் கொண்டான். இந்தக் காரணத்தினாலேயே ருத்திரன், காளைக்கொடி தேவன் என்று அறியப்படுகிறான்.(28) அந்நிகழ்வில்தான் தேவர்கள் அனைவரும் கூடி மஹாதேவனை விலங்குகளின் தலைவனாக நிறுவினர். உண்மையில் பெரும் ருத்திரன் பசுக்களின் தலைவனாகி, காளைக்கொடி தேவனென்றும் பெயரிடப்பட்டான்.(29)

எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பசுக்கொடையளிக்கும் காரியத்தில், பெருஞ்சக்தி கொண்டதும், (வெண்மையிலிருந்து) மாறா நிறம் கொண்டதுமான கபிலைப்பசுவே அடிப்படையில் விரும்பப்படும் கொடையாகக் கருதப்படுகிறது.(30) இவ்வாறே உலகத்தின் உயிரினங்கள் அனைத்திலும் பசுக்களே முதன்மையானவையாக இருக்கின்றன. அவற்றில் இருந்தே உலகங்கள் அனைத்திற்கும் தேவையான வாழ்வாதாரங்கள் தோன்றின. அவை ருத்திரனையே தங்கள் தலைவனாகக் கொண்டவையாகும். அவை பாலின் வடிவில் சோமத்தை (அமுதத்தைக்) கொடுக்கின்றன. அவை மங்கலமானவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்து விருப்பங்களையும் அருள வல்லவையாகவும், உயிரைக் கொடுக்கவல்லவையாகவும் இருக்கின்றன. ஒரு பசுவைக் கொடையளிப்பவன், மனிதர்களால் விரும்பப்படும் அனுபவிக்கத்தக்க அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(31) செழிப்பை அடைய விரும்பும் மனிதன், தூய இதயத்துடனும், தூய உடலுடனும் பசுவின் தோற்றத்தைக் குறித்த இந்த ஸ்லோகங்களைப் படித்தால், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, செழிப்பு, பிள்ளைகள், செல்வம் மற்றும் விலங்குகளை அடைகிறான்.(32) ஓ! மன்னா, பசுக்கொடையளிப்பவன் ஹவ்ய மற்றும் கவ்ய கொடைகளுக்குரிய பலன்களையும், பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துவதற்குரிய, அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும் வேறு அறச்செயல்களுக்குரிய, வாகனங்கள் மற்றும் துணிமணிகளைக் கொடையளிப்பதற்குரிய, பிள்ளைகள் மற்றும் முதியோரைப் பேணிவளர்ப்பதற்குரிய பலன்களையும் அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}”.(33)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவனும், பிருதையின் மகனுமான அசரன் யுதிஷ்டிரன், தன் பாட்டனின் இச்சொற்களைக் கேட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, முதன்மையான பிராமணர்களுகு பல்வேறு நிறங்களிலான காளைகளையும், பசுக்களையும் கொடையளிக்கத் தொடங்கினான்.(34) உண்மையில், மறுமையில் இன்பலோகங்களை வெல்வதற்கும், இம்மையில் பெரும்புகழை அடைவதற்கும், மன்னன் யுதிஷ்டிரன் பல வேள்விகளைச் செய்து, பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களை வேள்விக் கொடையாக அளித்தான்”.(35)

கோமதி மந்திரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 78-பசுக்களின் சிறப்புகளையும், கோமதி மந்திரத்தையும் சௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பழங்காலத்தில், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் சௌதாசன்[1], தன் குடும்பப் புரோகிதரும், முனிவர்களில் முதன்மையானவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், எங்கும் செல்ல வல்லவரும், பிரம்மத்தின் கொள்ளிடமும், நித்திய வாழ்வை {மரணமற்ற வாழ்வைக்} கொண்டவருமான வசிஷ்டரை அணுகி அவரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(1,2)சௌதாசன் {வசிஷ்டரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, மூவுலகங்களில் புனிதமானது எது? எப்போதும் உரைப்பதால் ஒரு மனிதனை உயர்ந்த பலனை அடையச் செய்வதும் எது?” என்று கேட்டான்”.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், ” தம் முன்பு தலைவணங்கி நின்ற மன்னன் சௌதாசனிடம் கல்விமானான வசிஷ்டர், முதலில் பசுக்களை வணங்கி (உடலாலும், மனத்தாலும்) தம்மைத் தூய்மைசெய்து கொண்டு, அனைவருக்கும் உயர்ந்த நன்மைகளை விளைவிக்கும் பசுக்கள் குறித்த புதிரைக் குறித்து உரையாடினார்.(4)

வசிஷ்டர், “பசுக்கள் எபோதும் நறுமணமிக்கவை. குங்கிலியம் கசிவதன் மூலம் தோன்றும் நறுமணம் அவற்றின் உடலில் இருந்து வெளிப்படுகிறது. பசுக்களே அனைத்து உயிரினங்களின் பெரும்புகலிடமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்துக்குமான அருள் ஊற்றாக அமைகின்றன.(5) பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன. பசுக்களே வளர்ச்சியின் நித்திய ஊற்றாக இருக்கின்றன. பசுக்களே செழிப்பின் வேராக இருக்கின்றன. பசுக்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் தொலைந்து போவதில்லை.(6) பசுக்களே உயர்ந்த உணவாக அமைகின்றன. அவையே தேவர்களுக்குச் சிறந்த ஹவியாக இருக்கின்றன. ஸ்வாஹா மற்றும் வஷட் என்றழைக்கப்படும் மந்திரங்கள் பசுக்களிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கின்றன.(7) பசுக்கள வேள்விக்கனிகளாக அமைகின்றன. வேள்விகள் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன, அவற்றைச் சார்ந்தே வேள்விகளும் இருக்கின்றன.(8) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, ஹோமத்தில் பயன்படுத்தப்படும் ஹவியை முனிவர்களுக்குப் பசுக்களே காலையும், மாலையும் தருகின்றன.(9) ஓ! பெரும்பலம் கொண்டவனே, பசுக்களைக் கொடையளிப்போர், தாங்கள் இழைத்த பாவங்கள் அனைத்தையும் தாங்கள் வீழ நேரும் அனைத்து வகைத் துன்பங்களையும் கடக்கின்றனர்.(10)

தான் கொண்ட பத்துப் பசுக்களில் ஒரு பசுவைக் {10%} கொடையளிப்பவனும், நூறு பசுக்களில் பத்தைக் {10%} கொடையளிப்பவனும், ஆயிரம் பசுக்களில் நூறைக் {10%} கொடையளிப்பவனும் ஒரே அளவு பலனையே ஈட்டுகின்றனர்.(11) நூறு பசுக்களைக் கொண்டிருந்தாலும், நாள்தோறும் வழிபடுவதற்காக இல்லற நெருப்பை நிறுவாதவன், ஆயிரம் பசுக்களைக் கொண்டிருந்தாலும் வேள்விகளைச் செய்யாதவன், செல்வத்தைக் கொண்டிருந்தாலும் (கொடையளிக்காமல், விருந்தோம்பல் கடமைகளைச் செய்யாமல்) கஞ்சனாகச் செயல்படுபவன் ஆகிய மூவரும் மதிப்பெதற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்,(12) தீமையற்றவையும், துணிகளால் மறைக்கப்பட்டவையுமான கபிலைப்பசுக்களைக் கன்றுகளுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்களுடனும் கொடையளிக்கும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைகிறார்கள்.(13) பலமிக்கப் புலன்களைக் கொண்டதும், நூற்றுக்கணக்கான மந்தையில் முதன்மையானதாகக் கருதப்படுவதும், (பொன் அல்லது வெள்ளியிலான) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடியதுமான இளங்காளையை வேத கல்வி கொண்ட ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள், இவ்வுலகில் பிறப்பெடுக்கும்போதெல்லாம் பெருஞ்செழிப்பையும், செல்வாக்கையும் அடைவதில் வெல்கிறார்கள்.(14,15)

ஒருவன் பசுக்களின் பெயர்களை உரைக்காமல் ஒருபோதும் படுக்கைக்குச் செல்லக்கூடாது. அதே போல, காலையில் பசுக்களின் பெயர்களைச் சொல்லாமல் ஒருபோதும் படுக்கையில் இருந்து எழவும் கூடாது. அவன் காலையும், மாலையும் பசுக்களிடம் மதிப்புடன் தலைவணங்க வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(16) பசுக்களின் சிறுநீர் மற்றும் சாணத்தில் அவன் ஒருபோதும் வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது. அவன் ஒருபோதும் பசு இறைச்சி உண்ணக்கூடாது. இதன் காரணமாக அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(17) ஒருவன் எப்போதும் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அவன் ஒருபோதும் எவ்வகையிலும் பசுக்களை அவமதிக்கக்கூடாது. கெட்ட கனவுகளைக் கண்டால் மனிதர்கள் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(18) எப்போதும் பசுஞ்சாணம் பயன்படுத்தி நீராட வேண்டும். காய்ந்த பசுஞ்சாணத்திலே அமர வேண்டும். அவன் ஒருபோதும் பசுஞ்சாணத்தில் மலமும், சிறுநீரும் கழிக்கக்கூடாது, உமிழவும் கூடாது. அவன் ஒருபோதும் பசுவின் வழியில் தடங்கலேற்படுத்தக்கூடாது.(19) ஒருவன், நீரில் நனைத்துத் தூய்மை செய்யப்பட்ட பசுத்தோலில் அமர்ந்து, மேற்கு நோக்கிக் கண்களைச் செலுத்தி உண்ண வேண்டும். பேச்சை அடக்கி, வெறும் மண்ணை உணவாக்கி {தரையையே பாத்திரமாக்கி} அவன் நெய்யுண்ண வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் பசுக்களையே தோற்றுவாயாகக் கொண்ட செழிப்பை அடைவான்[2].(20)ஒருவன் நெய்யைப் பயன்படுத்தி நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் நெய்யைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அவன் நெய்க்கொடையளிக்க வேண்டும். அவன் நெய்யை உண்ணவும் வேண்டும். அத்தகைய செயல்களுக்கான வெகுமதியாக அவன் பசுக்கள் அழிக்கும் செழிப்பை நிச்சயம் அடைவான்.(21) கோமதி என்ற பெயரில் அழைக்கப்படும் வேத மந்திரங்களைச் சொல்லி எள்ளினாலான பசு வடிவத்தைச் செய்து, அனைத்து வகை ரத்தினங்களாலும் அஃதை அலங்கரித்துக் கொடையளிப்பவன், தான் செய்த செயல்கள் மற்றும் தவிர்த்த செயல்களின் காரணமாக எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(22) “பெரும் அளவில் பாலைத் தருபவையும், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையும், சுரபியின் மகள்களுமான பசுக்கள், பெருங்கடலை அணுகும் ஆறுகளைப் போலவே என்னை அடையட்டும்.(23) நான் எப்போதும் பசுக்களைக் காண்பேன். பசுக்களும் என்னைப் பார்க்கட்டும். பசுக்கள் எங்களுக்குரியவை. நாங்கள் அவற்றுக்குரியவர்கள் பசுக்கள் இருக்கும் இடத்திலேயே நாங்கள் இருப்போம்”(24) என்று {மேற்கண்ட கோமதி மந்திரத்தைப்}[3] பேரச்சம் நேரும் வேளைகளில் இரவிலோ, பகலிலோ, இன்பத்திலோ, துன்பத்திலோ ஒரு மனிதன் சொல்ல வேண்டும். இத்தகைய சொற்களைச் சொல்வதன் மூலம் அவன் நிச்சயம் அனைத்து அச்சங்களில் இருந்து விடுபடுவான்” என்றார் {வசிஷ்டர்}.(25)

கோதானப் பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 79-பல்வேறு வகைப் பசுக்களைக் கொடையளிப்பதால் கிட்டும் பல்வேறு வகையான பலன்கள் குறித்து ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {மன்னன் சௌதாசன் (அ) கல்மாஷபாதனிடம்}“முற்காலத்தில் படைக்கப்பட்ட பசுக்கள், பெரும் முன்சிறப்புகளுடன் கூடிய நிலையை அடையும் விருப்பத்தில் நூறாயிரம் வருடங்கள் கடுந்தவங்களைப் பயின்றன.(1) உண்மையில், ஓ! பகைவரை எரிப்பவனே, அவை தமக்குள்ளேயே, “இவ்வுலகின் வேள்விகளில் அனைத்து வகையிலும் சிறந்த தக்ஷிணையாக மாறுவோம், எக்குற்றமும் இல்லாதவராவோம்.(2) நமது சாணம் கலந்த நீரில் நீராடுவதன் மூலம் மக்கள் புனிதமடையட்டும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் தேவர்களும், மனிதர்களும் நமது சாணத்தைப் பயன்படுத்தட்டும். நம்மைக் கொடையளிப்பவர்களும் நமக்கான இன்பலோகங்களை அடையட்டும்” என்று {தங்களுக்குள்ளேயே} சொல்லிக் கொண்டன[1].(3,4)அவற்றின் தவங்கள் நிறைவடையும் தருணத்தில் அவற்றின் முன் தோன்றிய பலமிக்கப் பிரம்மன், அவை வேண்டிய வரங்களைக் கொடுத்து, “நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும். நீங்கள் உலகங்கள் அனைத்தையும் (இவ்வாறு) காப்பீராக” என்றான்.(5)

கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அன்னையரான அவை அனைத்தும், தங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு எழுந்தன. ஒவ்வொரு காலை வேளையிலும் மக்கள் மதிப்புடன் பசுக்களை வணங்க வேண்டும். இதன் விளைவாக அவர்கள் நிச்சயம் செழிப்பை வெல்வார்கள்.(6) ஓ! ஏகாதிபதி, பசுக்களின் தவங்கள் நிறைவடைந்தபோது அவை உலகின் புகலிடங்களாகின. இதன் காரணமாகவே பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்திலும் முதன்மையானவையாகவும் சொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவே பசுக்கள் அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(7)

தனக்கு ஒப்பான கன்றுகளுடன் கூடியதும், அபரிமிதமான அளவில் பாலைக் கொடுப்பதும், தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி பிரம்மலோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(8)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு சிவப்பு நிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சூரிய லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(9)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு பலவண்ணப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சோம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(10)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு வெண்ணிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இந்திர லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(11)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கருநிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அக்னி லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(12)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும், புகைவண்ணத்துடன் கூடியதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் யம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(13)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், நீர் நுரையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வருணலோகத்தை அடைகிறான்.(14)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், காற்றில் பறக்கும் தூசியின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் காற்றுதேவனின் உலகத்தில் {வாயுலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(15)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், பழுப்புநிறக் கண்களுடன் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், பொன் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் குபேரலோகத்தில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(16)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வைக்கோல் புகையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பித்ருக்களின் உலகத்தில் {பிதிருலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(17)

கன்றுடன் கூடியதும், தொண்டைச் சதை தொங்கும் ஒரு பருத்த பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எளிதாக விஸ்வேதேவர்களின் உயர்ந்த உலகத்தை அடைகிறான்.(18)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பாலைத் தருவதும், அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும்மான ஒரு கௌரி பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான்.(19)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வெண்கம்பளி நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சாத்தியர்களின் உலகை அடைகிறான்.(20)

ஓ! மன்னா {சௌதாசா}, உயர்ந்த திமிலைக்கொண்டதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(21)

வயதால் முழுமையாக வளர்ந்ததும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் நீல நிறமாக இருப்பதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களை அடைகிறான்.(22)

தொண்டைச் சதை தொங்குவதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி அனைத்துத் துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிரஜாபதிக்கே சொந்தமான உலகங்களை அடைகிறான்.(23)

ஓ! மன்னா, பசுக்கொடை அளிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், சூரியப் பிரகாசம் கொண்ட ஒரு தேரில் மேகங்களின் ஊடாகத் துளைத்துச் சென்று சொர்க்கத்தை அடைந்து அங்கே காந்தியுடன் ஒளிர்கிறான்.(24)

பசுக்கொடையளிப்பதை வழக்கமாகக் கொண்ட மனிதன் மனிதர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்லும்போது, அழகிய இடைகளைக் கொண்டவர்களும், அழகிய ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் தெய்வீகக் காரிகையரால் அவன் வரவேற்கப்படுகிறான். இப்பெண்கள் அங்கே அவனுக்குப் பணிவிடை செய்து, அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள்.(25) அமைதியாக அங்கே உறங்கும் அவன், அந்த மான்விழி மங்கையரின் வீணை இசையாலும், அவர்களுடைய வல்லகிகளின் மென்மையான சுரத்தாலும், நுபரங்களின் {காற்சிலம்புகளின்} இனிய கிண்கிணி ஒலியாலும், அவர்களுடைய சிரிப்பிசையாலும் விழிப்படைகிறான்[2].(26) பசுக்கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தில் வசிக்கிறான்; தான் கொடுக்கும் பசுக்களின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் அங்கே கௌரவிக்கப்படுகிறான். (புண்ணியம் தீர்ந்து) சொர்க்கத்தில் வீழ நேரும் அத்தகைய மனிதன் மனித வகையிலேயே பிறப்பெடுக்கிறான்; உண்மையில் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு மேம்பட்ட குடும்பத்திலேயே பிறப்பெடுக்கிறான்” என்றார் {வசிஷ்டர்}.(27)

கோ மந்திரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 80- பசுவைக் குறிக்கும் புனித மந்திரங்களை ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {மன்னன் சௌதாசனிடம்}“பசுக்கள் நெய்யையும், பாலையும் தருகின்றன. அவையே நெய்யின் ஊற்றுக்கண்ணாகவும், {அமுதம் போன்ற} நெய்யில் இருந்து உண்டானவையாகவும் இருக்கின்றன. அவையே நெய்யாறுகளாகவும், நெய்ச்சுழல்களாகவும் இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் வீட்டில் இருக்கட்டும்.(1) நெய்யே எப்போதும் என் இதயமாக இருக்கிறது. நெய்யானது என் தொப்புளிலும் நிறுவப்பட்டிருக்கிறது. நெய்யானது என் அங்கங்கள் யாவிலும் உள்ளது. நெய் என் மனத்தில் வசிக்கிறது.(2) பசுக்கள் எப்போதும் என் முன்னே இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் பின்னே இருக்கின்றன. என் மேனியின் அனைத்துப் பக்கங்களிலும் பசுக்கள் இருக்கின்றன. நான் பசுக்களின் மத்தியிலேயே வாழ்கிறேன்”(3) என்ற இந்த மந்திரத்தை நீரைத்தொட்டுத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு நாளும் ஒருவன் சொல்ல வேண்டும். இதனால் அந்த நாளில் தான் இழைக்கும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் அவன் விடுபடுவான்.(4)

ஆயிரம் {1,000} பசுக்களைக் கொடையளித்து இவ்வுலகத்தைவிட்டுச் செல்லும் ஒருவன், வசு என்றழைக்கப்படும் தெய்வீக கங்கை ஏங்கே பாய்கிறதோ, எங்கே பொன் மாளிகைகள் பல இருக்கின்றனவோ, எங்கே கந்தர்வர்களும், அப்சரஸ்களும் இருக்கின்றனரோ அந்த உலகங்களுக்குச் செல்கிறான்.(5) ஆயிரம் {1,000} பசுக்களைக் கொடையளித்தவர்கள், ஓடும் நீராகப் பாலையும், சேறாகப் பாலாடைக்கட்டிகளையும் {வெண்ணையையும்}, மிதக்கும் பாசியாகத் தயிரையும் கொண்ட பல ஆறுகள் எங்கே ஓடுகின்றனவோ அங்கே செல்கிறார்கள்.(6) சாத்திரங்களிலுள்ள சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன், (இம்மையில்) பெருஞ்செழிப்பை அடைந்து, சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(7) அத்தகைய மனிதன் தன் தந்தைவழி மற்றும் தாய்வழி மூதாதையரில் பத்து தலைமுறையினரை பேரின்பம் நிறைந்த உலகங்களை அடையச்செய்து தன் மொத்த குலத்தையும் புனிதப்படுத்துகிறான்.(8)

பசுக்கள் புனிதமானவை. அவை உலகில் உள்ள அனைத்திலும் முதன்மையானவை. அவையே உண்மையில் அண்டத்தின் புகலிடமாக இருக்கின்றன. அவையே தேவர்களின் அன்னையராகவும் இருக்கின்றன. அவை உண்மையில் ஒப்பற்றவையாகும். அவற்றை வேள்விக்கெனவே அர்ப்பணிக்க வேண்டும்.(9) ஒருவன் பயணம் புறப்படும்போது அவற்றுக்கு வலப்பக்கமாக (அவற்றைத் தனக்கு இடப்பக்கமாக வைத்துச்) செல்ல வேண்டும். சரியான காலத்தை உறுதிசெய்து கொள்ளும் அவர்கள் அவற்றைத் தகுந்த நபர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(10) பெருங்கொம்புகளைக் கொண்டதும், கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், அச்சத்தில் இருந்து விடுபட்டவனாக, நுழையக் கடினமான யமனின் அரண்மனைக்குள் நுழைவதில் வெல்லலாம்.(11)

ஒருவன் எப்போதும், “பசுக்கள் அழகிய வடிவைக் கொண்டவை. பசுக்கள் பல்வேறு வடிவங்களிலானவை. அவை அண்டத்தின் வடிவம் கொண்டவை. அவையே அண்டத்தின் அன்னையராக இருக்கின்றன. ஓ! பசுக்கள் என்னை அணுகட்டும்” என்ற புனித மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.(12)பசுக்கொடையைவிடப் புனிதமிக்க வேறு கொடையேதும் இல்லை. அதிக அருள் பலனைக் கொடுக்கவல்ல வேறு கொடையேதும் இல்லை. பசுவுக்கு இணையான வேறேதும் இல்லை, அதே போலவே பசுவுக்கு இணையான வேறேதும் இருக்கப் போவதுமில்லை.(13) பசுவின் தோல், மயிர், கொம்புகள், வால், பால், கொழுப்பு ஆகியவை அனைத்தும் வேள்வியை ஆதரிக்கின்றன. பசுவை விடப் பயன்மிக்கதாக இருப்பது வேறு எது?(14) கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் தாயும், அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மொத்த அண்டத்தையும் மறைத்திருப்பதுமான பசுவுக்கு நான் மதிப்புடன் தலைவணங்குகிறேன்.(15) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பசுத் தரும் உயர்ந்த பலன்களில் ஒரு பகுதியை மட்டுமே நான் உனக்கு உரைத்திருக்கிறேன். பசுக்கொடையைவிட மேன்மையான கொடை இவ்வுலகில் வேறேதும் இல்லை. பசுவை விட உயர்ந்த புகலிடமும் இவ்வுலகில் வேறேதும் இல்லை” என்றார் {வசிஷ்டர்}”.(16)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மா கொண்ட அந்த நிலக் கொடையாளி (மன்னன் ஸௌதாசன்) முக்கியமானவற்றில் முதன்மையான முனிவர் வசிஷ்டரின் இந்தச் சொற்களை நினைவுகூர்ந்து, புலனடக்கத்துடன் கூடியவனாகப் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மேலும், அக்கொடைகளின் விளைவாக அந்த ஏகாதிபதி மறுமையில் பல இன்பலோகங்களை அடைவதில் வென்றான்” {என்றார் பீஷ்மர்}.(17)

கோலோகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 81-அருளப்பட்டவர்கள் அடையும் பசுக்களின் உலகத்தைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புனிதப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் இவ்வுலகில் உயர்வானதும், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வேறு புனிதங்கள் யாவற்றையும் விட மிகப் புனிதமானது எது?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. அவை மிகப் புனிதமானவை மற்றும் அவையே மனிதர்களை (அனைத்து வகைப் பாவங்கள் மற்றும் துன்பங்களில் இருந்தும்) மீட்கின்றன. தாங்கள் தரும் பால், மற்றும் அதிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றின் மூலம் பசுக்களே அண்டத்தின் உயிரினங்கள் யாவற்றையும் தாங்கிப் பிடிக்கின்றன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பசுக்களைவிடப் புனிதமானது வேறேதும் இல்லை. மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் முதன்மையான பசுக்களே புனிதமானவையாகவும், பிறரைத் தூய்மைப்படுத்த வல்லவையாகவும் இருக்கின்றன.(3) பசுக்கள், தேவலோகத்தையும் விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன. கொடையளிக்கப்படும் போது தங்களைக் கொடையளித்தவர்களை அவை மீட்கின்றன. ஞானமுள்ள மனிதர்கள் பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(4)

யுவனாஸ்வனின் மகன் மாந்தாத்ரி {மாந்தாதா}, யயாதி, (அவனது தந்தையான) நஹுஷன் ஆகியோர் ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தனர்.(5) அந்தக் கொடைகளின் வெகுமதியாக அவர்கள் தேவர்களாலும் அடைய முடியாத அத்தகைய உலகங்களை அடைந்தனர். ஓ!பாவமற்றவனே, இது தொடர்பாகப் பழங்காலத்தில் ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. அதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) ஒரு காலத்தில், நுண்ணறிவுமிக்கச் சுகர், தமது காலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, மன அடக்கத்துடன் கூடியவராக, தீவில் பிறந்தவரும், முனிவர்களில் முதன்மையானவரும், மேன்மை, கீழ்மை ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாட்டை அறிந்தவரும், தமது தந்தையுமான கிருஷ்ணரை {வியாசரை} அணுகி, அவரை வணங்கி, அவரிடம், “வேள்விகள் அனைத்திலும் முதன்மையானது என உமக்குத் தோன்றும் வேள்வி யாது?(7,8) ஞானமுள்ள மனிதர்கள் எச்செயலைச் செய்வதன் மூலம் உயர்ந்த உலகத்தை அடைவதில் வெல்கின்றனர்? புனிதமான எச்செயலைச் செய்ததன் மூலம் தேவர்கள் சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறார்கள்?(9) எந்த வேள்விப் பண்பு வேள்வியாக அமைகிறது? {அதாவது, வேள்வியை நிறைவடையச் செய்வது எது?} வேள்வியானது எதைச் சார்ந்திருக்கிறது? தேவர்களால் சிறந்ததெனக் கருதப்படுவது எது? ஓ! ஐயா, அனைத்திலும் மிகப் புனிதமானது எது என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(10)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, தமது மகனின் இச்சொற்களைக் கேட்டவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசர் அவரிடம் பின்வருமாறு உரையாடினார்.

வியாசர் {சுகரிடம்}, “பசுக்களே அனைத்து உயிரினங்களின் ஆதாரமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கின்றன. பசுக்கள் புனிதமானவை, பசுக்களே அனைத்தையும் புனிதப்படுத்துபவையுமாகும்.(12) முன்பு பசுக்கள் கொம்பற்றவையாக இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொம்புகளைப் பெறுவதற்காக நித்தியமானவனும், பலமிக்கவனுமான பிரம்மனை அவை துதித்தன.(13) பலமிக்கப் பிரம்மன், பசுக்கள் பிராயத்தில் அமர்ந்து தங்கள் துதிகளைச் செலுத்துவதைக் கண்டு, அவை ஒவ்வொன்றும் விரும்பியதைக் கொடுத்தான்.(14) அதன் பிறகு அவற்றுக்குக் கொம்புகள் முளைத்தன, அவை ஒவ்வொன்றுக்கும் விரும்பியவை கிடைத்தன. ஓ! மகனே, பல்வேறு வண்ணங்களிலும் இருந்தவையும், கொம்புகளுடன் கூடியவையுமான அவை அழகில் ஒளிரத் தொடங்கின.(15)

பிரம்மனாலேயே வரமளிக்கப்படப் பசுக்கள் மங்கலமானவையாகவும், ஹவ்யகவ்யங்களைக் கொடுப்பவையாகவும் இருக்கின்றன. அவையே பலன்களின் உடல்வடிவமாக இருக்கின்றன. அவை புனிதமானவையாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. அவை சிறந்த வடிவங்களையும், குணங்களையும் கொண்டவையாக இருக்கின்றன.(16) பசுக்களில் உயர்ந்த மற்றும் சிறந்த சக்தி இருக்கிறது. பசுக்கொடை பெரிதும் மெச்சப்படுகிறது. செருக்கிலிருந்து விடுபட்டு, பசுக்கொடையளிக்கும் நல்லோர்(17) அறச்செயல்களைச் செய்பவர்களாகவும், அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஓ! பாவமற்றவனே, அத்தகைய மனிதர்கள் உயர்ந்ததும் புனிதமானதுமான பசுக்களின் உலகத்தை அடைகிறார்கள்.(18) அங்குள்ள மரங்கள் இனிய கனிகளை உண்டாக்குகின்றன. உண்மையில் அம்மரங்கள் சிறந்த மலர்களாலும், கனிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஓ!மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அம்மலர்கள் தெய்வீக நறுமணத்துடன் கூடியவையாக இருக்கின்றன.(19) அவ்வுலகத்தில் உள்ள மொத்த நிலமும் ரத்தினங்களால் ஆனதாக இருக்கிறது. மண் யாவும் பொன்னாக இருக்கின்றன. ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் உரிய சிறப்பான தட்பவெப்ப நிலையே அங்கே நிலவுகிறது. அங்கே புழுதியோ, தூசியோ இருப்பதில்லை. உண்மையில் உயர்ந்த மங்கலம் நிறைந்ததாக அஃது இருக்கிறது.(20)

அங்கே பாயும் ஓடைகள், மலர்ந்த செந்தாமரைகளைத் தங்கள் மார்பில் தாங்கி, ரத்தினங்களையும் பொன்னையும் தங்கள் கரைகளில் தாங்கி காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(21) விலைமதிப்புமிக்க ரத்தின இதழ்களையும், பொன்மயமாகப் பிரகாசிக்கும் மகரந்தங்களையும் கொண்ட கருநெய்தல் மற்றும் தாமரை மலர்கள் கலந்து நிலையில் நிரம்பியிருக்கும் மடுக்களும் அங்கே நிறைந்திருந்தன.(22) சுற்றிலும் கொடிகளால் பின்னப்பட்டு மலர்ந்திருக்கும் அலரிக் காடுகளாலும், மலர்ச்சுமைகளுடன் கூடிய ஸந்தானக {ஸகஸ்ராவர்த்த} காடுகளாலும் அவை {அந்த மடுக்கள்} அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.(23) பிரகாசமான முத்துகள், மிளிரும் ரத்தினங்கள் மற்றும் ஒளிரும் பொன் ஆகியவற்றால் பல வண்ணங்களை அடைந்திருக்கும் கரைகளைக் கொண்ட ஆறுகளும் அங்கே இருக்கின்றன.(24) அந்த உலகத்தின் சில பகுதிகள் அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறந்த மரங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில பொன்னாலானவையாகவும், சில நெருப்பின் காந்தியை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.(25)

பொன் மலைகள் பலவும், ரத்தினங்களாலான குன்றுகள் மற்றும் கொடுமுடிகள் பலவும் அங்கே இருக்கின்றன. அனைத்து வகை ரத்தினங்களாலும் அமைந்த நெடுஞ்சிகரங்களின் விளைவால் அவை அழகில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(26) அவ்வுலகதை அலங்கரிக்கும் மரங்கள் எப்போதும் மலர்களையும், கனிகளையும் விளைவிக்கின்றன, அவையும் எப்போதும் அடர்த்தியாக இருக்கும் இலைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா[1], அம்மலர்கள் எப்போதும் தெய்வீக நறுமணத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன, கனிகளும் பெரும் சுவைமிக்கவையாகவும் இருக்கின்றன.(27) ஓ! யுதிஷ்டிரா, அறச்செயல்களைச் செய்த மனிதர்க்ள எப்போதும் அங்கே இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். துன்பம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்ட அவர்கள் தங்கள் விருப்பங்கள் யாவும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டுத் தங்கள் காலத்தை அங்கே கழிக்கின்றனர்.(28) ஓ! பாரதா, அறச்செயல்களைச் செய்தவர்களும், புகழ் கொண்டவர்களுமான மனிதர்கள், பேரழகுடன் கூடிய இனிய வாகனங்களில் ஓரிடத்தில் இருந்து மறுஇடத்திற்குச் சென்று மகிழ்ச்சியில் அங்கே விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.(29) மங்கலமான அப்சரஸ் கூட்டங்கள், தங்கள் ஆடல் பாடல்களின் மூலம் அங்கே அவர்களை மகிழ்வித்துக் கொண்டு இருக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, உண்மையில் பசுக்கொடைகளை அளிப்பதற்கன வெகுமதியாக ஒரு மனிதன் அத்தகைய உலகத்திற்குச் செல்கிறான்.(30)பூஷன் மற்றும் பெரும்பலம் கொண்ட மருத்துகளைத் தங்கள் தலைவர்களாகக் கொண்ட உலகங்கள் பசுக்களைக் கொடையளிப்பவர்களால் அடையப்படுகின்றன. அரச வருணன் செல்வத்ததில் மேம்பட்டவனாகக் கருதப்படுகிறான். பசுக்கொடையாளியானவன், வருணனைப் போன்ற செல்வநிலையை அடைவான். ஒருவன், உறுதியான நோன்பு கொண்டவனாக, “யுகாந்தரா {காலத்தைத் தாங்குபவை}, சுரூபா {அழகான வடிவம் கொண்டவை}, பஹுரூபா {பல நிறங்களைக் கொண்டவை}, விஷ்வரூபா {அண்டந்தழுவியவை}, மாதரா {அன்னையராய் இருப்பவை ஆகிய பசுக்கள் என்னைக் காக்கட்டும்}” என்று (பசுக்களைப் பொறுத்தவரையில்) பிரஜாபதியாலேயே அறிவிக்கப்பட்ட இந்த மந்திரத்தை நாள்தோறும் சொல்ல வேண்டும்[2].(31,32)மதிப்புடன் பசுக்களுக்குத் தொண்டாற்றுபவனும், பணிவுடன் அவற்றைப் பின் தொடர்பவனுமான ஒருவன், தன்னிடம் நிறைவடைந்த பசுக்களிடமிருந்து மதிப்புமிக்கப் பல வரங்களை அடைவதில் வெல்கிறான்.(33) ஒருவன் தன் இதயத்தாலும் {மனத்தாலும்} ஒருபோதும் பசுக்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது. உண்மையில் அவன் அவற்றுக்கு மகிழ்ச்சியையே அளிக்க வேண்டும். அவன் எப்போதும் பசுக்களை மதித்து, தலைவணங்கி அவற்றை வழிபட வேண்டும்.(34) புலனடக்கத்துடனும், உற்சாகத்துடனும் கூடிய ஒருவன் பசுவால் அனுபவிக்கக்கூடிய (பசுவால் மட்டுமே கொடுக்கப்படக்கூடிய) இன்பநிலையை அனுபவிப்பதில் வெல்கிறான். அவன் மூன்று நாட்கள் பசுவின் சூடான சிறுநீரைக் குடிக்க வேண்டும். அடுத்த மூன்று நாளைக்கு அவன் பசுவின் சூடான பாலைக் குடிக்க வேண்டும்.(35) இவ்வாறு மூன்று நாட்கள் சூடான பாலைக் குடிக்கும் அவன் அடுத்த மூன்று நாள் சூடான நெய்யைக் குடிக்க வேண்டும். இவ்வகையில் மூன்று நாள் சூடான நெய்யைக் குடித்த ஒருவன், அடுத்த மூன்று நாட்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ வேண்டும்.(36) {இவற்றின் மூலம்} இன்ப உலகங்களை அனுபவிக்கத் தேவர்களுக்குத் துணை செய்வதும், புனிதமான பொருட்கள் அனைத்திலும் மிகப் புனிதமானதுமான நெய்யானது தலையில் தாங்கப்பட வேண்டும்[3].(37)நெய்யின் துணை கொண்டே ஒருவன் ஆகுதிகளைப் புனித நெருப்பில் ஊற்ற வேண்டும். நெய்க்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பிராமணர்களைத் தனக்கு ஆசி கூறச் செய்ய வேண்டும். ஒருவன் நெய்யுண்டு, நெய்க்கொடை அளிக்க வேண்டும். இந்நடத்தையின் வெகுமதியாக அவன் பசுக்களுக்குச் செந்தமான செழிப்பை அடைவான்.(38) ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் பசுஞ்சாணத்தில் இருந்து யவங்கள் எனும் அரிசியை உண்பதால் ஒருவன் பிராமணனைக் கொன்ற பாவத்தைப் போன்ற கொடும்பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(39) தைத்தியர்களிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு தேவர்கள் பாவக்கழிப்பாக இதையே செய்தனர். இந்தப் பாவக்கழிப்பின் விளைவாகவே அவர்களால் தேவர்கள் என்ற தங்கள் நிலையை மீண்டும் பெற முடிந்தது. உண்மையில் இதன் மூலமே அவர்கள் தங்கள் பலத்தை மீண்டும் அடைந்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(40) பசுக்கள் புனிதமானவை. அவை பலன்களின் {புண்ணியங்களின்} உடல் வடிவங்களாக இருக்கின்றன. அவை பாவங்களைப் போக்கவல்ல அனைத்திலும் எதிர்பார்க்கும் பலனைத் தரவல்லவையாகவும், உயர்வையாகவும்இருக்கின்றன. பிராமணர்களுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(41) பசுக்களுக்கு மத்தியில் தூய நிலையில் வாழும் ஒருவன், நீரைத் தீண்டிய பிறகு, கோமதி என்ற பெயரால் அறியப்படும் புனித மந்திரங்களை மனத்தால் உரைக்க வேண்டும். இதைச் செய்வதால் ஒருவன் (பாவங்கள் அனைத்தில் இருந்து) தூய்மையடைந்து புனிதமடைகிறான்.(42)

அறச்செயல்களைச் செய்வோரும், அறிவாலும், வேத கல்வியாலும், நோன்புகள் நோற்பதாலும் தூய்மையடைந்தோருமான பிராமணர்கள், புனித நெருப்புகளின் மத்தியிலோ, பசுக்கள், அல்லது பிராமணக் கூட்டங்களின் மத்தியிலோ மட்டுமே வசித்து, அனைத்து வகையிலும் ஒரு வேள்வியைப் போன்றதாக இருக்கும் (கோமதி மந்திரம் விளைவிக்கும் பலனுக்காக) கோமதி மந்திரத்தின் அறிவைத் தங்கள் சீடர்களுக்குப் போதிக்க வேண்டும். ஒருவன் கோமதி மந்திர ஞானம் எனும் வரத்தை அடைவதற்காக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(43,44) ஒரு மகனை அடைய விரும்பும் மனிதன் இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் அஃதை அடைவான். செல்வத்தை அடைய விரும்பும் ஒருவன் இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் தன் விருப்பம் நிறைவேறப்பெறலாம். நல்ல கணவரை அடைய விரும்பும் பெண்ணானவள், இதே வழிமுறைகளின் மூலம் தன் விருப்பம் வெற்றியால் மகுடம் சூடப்படும் நிலையை அடையலாம். உண்மையில், இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் ஒருவன் தான் விரும்பும் எதுவும் கனியும் {தான் விரும்பும் எதையும் பெறும்} நிலையை அடையலாம்.(45) ஒருவன் பசுக்களுக்குச் செய்யும் தொண்டினால் அவனிடம் நிறைவடையும் அவை, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள வல்லவையாக நிச்சயம் இருக்கின்றன. பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவை. அவையே வேள்விக்கான முக்கியத் தேவையாக இருக்கின்றன. அவை அனைத்து விருப்பங்களையும் அருளக்கூடியவை ஆகும். பசுவைவிட மேன்மையானது வேறேதும் இல்லை என்பதை அறிவாயாக” {என்றார் வியாசர்}.(46)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு தமது உயர் ஆன்மத் தந்தையால் சொல்லப்பட்டவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சுகர், அக்காலம் முதல் ஒவ்வொரு நாளும் பசு வழிபாட்டைச் செய்யத் தொடங்கினார். ஓ! மகனே, நீயும் அதே வழியில் உன்னை நடத்திக் கொள்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(47)

கோமயம் மற்றும் கோமியத்தில் ஸ்ரீதேவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 82-ஸ்ரீதேவிக்கும் பசுக்களுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பசுக்களின் சாணத்திலும், சிறுநீரிலும் அந்த ஸ்ரீதேவியே வசிப்பது குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்},[1] “பசுக்களின் சாணத்தில் ஸ்ரீ {லட்சுமி} இருக்கிறாள் என நான் கேட்டிருக்கிறேன். அஃது எவ்வாறு என்பதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, என் ஐயங்களை நீர் அகற்ற வேண்டும்” என்று கேட்டான்.(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாகப் பசுக்களுக்கும், ஸ்ரீக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் ஸ்ரீதேவி {லட்சுமி தேவி}, ஓர் அழகிய வடிவை ஏற்றுக் கொண்டு ஒரு பசுமந்தைக்குள் நுழைந்தாள். அவளது அழகெனும் செல்வத்தைக் கண்ட பசுக்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(3)

பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, “ஓ! தேவி, நீ யார்? பூமியில் ஒப்பற்ற இவ்வழகை நீ எங்கிருந்து பெற்றாய்? ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட தேவியே, உன் அழகெனும் செல்வத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியத்தால் நிறைகிறோம்.(4) நீ யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். உண்மையில், நீ யார்? நீ எங்கே செல்லப் போகிறாய்? ஓ! மிக மேன்மையான ஒளிமிக்க நிறத்தைக் கொண்டவளே, நாங்கள் அறிய விரும்பும் அனைத்தையும் எங்களுக்கு விரிவாகச் சொல்வாயாக” என்றன.(5)

ஸ்ரீ {பசுக்களிடம்}, “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நான் உயிரினங்கள் அனைத்தின் அன்புக்குரியவள் ஆவேன். உண்மையில் நான் ஸ்ரீ என்ற பெயரால் அறியப்படுகிறேன். என்னால் கைவிடப்பட்ட தைத்தியர்கள் என்றென்றும் கெட்டுப் போனார்கள்.(6) இந்திரன், விவஸ்வத் {விவஸ்வான்}, சோமன், விஷ்ணு, வருணன், அக்னி ஆகிய தேவர்கள் என்னை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.(7) உண்மையில், முனிவர்களும், தேவர்களும் தங்களிடம் என்னைக் கொண்டிருக்கும்போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூடப்படுகின்றனர். பசுக்களே, எந்த உயிரினங்களுக்கு மத்தியில் நான் நுழையவில்லையோ அங்கே அழிவு நேருகிறது.(8) அறம், பொருள், இன்பம் ஆகியவை என்னுடன் சேர்ந்திருக்கும்போது மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பசுக்களே, நான் அத்தகைய சக்தியைக் கொண்டவள் என்பதை அறிவீராக.(9) நான் உங்களில் ஒவ்வொருவரிடமும் வசிக்க விரும்புகிறேன். நானே முன்வந்து உங்களை வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் ஸ்ரீ உள்ளவர்களாவீராக” என்றாள்.(10)

பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, “நீ நிலையற்றவளாகவும், ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். மேலும் நீ பலரால் அனுபவிக்கப்படுபவளாகவும் இருக்கிறாய் {நீ பலருக்குப் பொதுவானவளாக இருக்கிறாய்}. நாங்கள் உன்னைக் கொள்ள விரும்பவில்லை. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(11) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் நல்வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது? நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. (எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்ததன் மூலம்) நீங்கள் ஏற்கனவே எங்களை மிகவும் நிறைவடையச் செய்துவிட்டாய்” என்றன.(12)

ஸ்ரீ, “பசுக்களே, நீங்கள் என்னை வரவேற்காதது முறையா? நான் அடைதற்கரிதானவள். என்னை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்?(13) சிறந்த நோன்புகளைக் கொண்ட உயிரினங்களே, வேண்டாமல் மற்றொருவரிடம் செல்லும் ஒருவன் அவமதிக்கப்படுவது நிச்சயம் என்ற உலகமறிந்த இப்பழமொழி உண்மை என்றே தெரிகிறது.(14) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள் ஆகியோர் மிகக் கடுந்தவங்களைச் செய்தபிறகு மட்டுமே என்னை அடைவதில் வெல்கிறார்கள்.(15) இத்தகைய சக்தியைக் கொண்ட நீங்கள் என்னை ஏற்பீராக. இனியவர்களே, அசையும், மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும் ஒருபோதும் எவராலும் நான் அவமதிக்கப்படுவதில்லை” என்றாள்.(16)

பசுக்கள், “ஓ! தேவி, நாங்கள் உன்னை அவமதிக்கவில்லை. நாங்கள் உன்னை அவதூறு செய்யவும் இல்லை. நீ நிலையற்றவளாகவும், இதயத்தில் ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக மட்டுமே நாங்கள் உன்னை விடுகிறோம்.(17) அதிகம் பேச என்ன இருக்கிறது? நீ தேர்ந்தெடுக்கும் இடத்திற்குச் செல்வாயாக. நாங்கள் அனைவரும் சிறந்த வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். ஓ! பாவமற்றளவே, உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது?” என்று கேட்டன.(18)

ஸ்ரீ, “கௌரவங்களை அளிப்பவர்களே, இவ்வகையில் உங்களால் கைவிடப்படும் நான் நிச்சயம் உலகமெங்கும் அவமதிப்புக்குரியவளாக இருப்பேன். எனக்கு அருள் புரிவீராக.(19) நீங்கள் அனைவரும் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். உங்களிடம் பாதுகாப்பை நாடுவோரைப் பாதுகாக்க எப்போதும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பை வேண்டியே நான் உங்களிடம் வந்திருக்கிறேன். என்னிடம் குற்றமேதுமில்லை. (இந்நிலையில் இருந்து) என்னைக் காப்பீராக.(20) நான் எப்போதும் உங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்பதை அறிவீராக. உங்கள் உடலில் உள்ள இழிவான பகுதி ஒன்றிலாவது நான் வசிக்க விரும்புகிறேன். உண்மையில், நான் உங்கள் குதத்திலாவது வசிக்க விரும்புகிறேன்.(21) பாவமற்றவர்களே, நீங்கள் புனிதமானவர்களாகவும், உயர்ந்த அருளைப் பெற்றவர்களாகவும் இருப்பதால் உங்கள் உடலில் யாதொரு பாகத்தையும் அருவருக்கத்தக்கதாகக் கருதவில்லை. எனினும், என் வேண்டுதலை அருள்வீராக. உங்கள் உடல்களில் எந்தப் பகுதியில் நான் வசிக்க வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டாள்”.(22)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஸ்ரீயால் இவ்வாறு சொல்லப்பட்டவையும், எப்போதும் மங்கலமாக இருப்பவையும், தங்களிடம் அர்ப்பணிப்புள்ளவர்களிடம் அன்பு பாராட்டுபவையுமான பசுக்கள், ஓ! மன்னா, ஒன்றோடொன்று ஆலோசித்து, ஸ்ரீயிடம் இந்தச் சொற்களைச் சொல்லின.(23)

பசுக்கள், “ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நாங்கள் உன்னைக் கௌரவிக்க வேண்டும் என்பது நிச்சயம் விரும்பத்தக்கதே. நீ எங்களது சிறுநீரிலும், சாணத்திலும் வாழ்வாயாக. ஓ! மங்கல தேவியே, இவை இரண்டும் புனிதமானவையே” என்றன.(24)

ஸ்ரீ, ” உதவ விரும்பி எனக்கு நீங்கள் அருள் புரிந்தது என் நற்பேறே. நீங்கள் சொன்னவாறே ஆகட்டும். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. மகிழ்ச்சியை அளிப்பவர்களே, நான் உண்மையில் உங்களால் கௌரவிக்கப்பட்டேன்” என்றாள்”.(25)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, பசுக்களுடன் இந்த உடன்படிக்கையைச் செய்து கொண்ட ஸ்ரீ, அங்கேயே, அப்போதே அந்தப் பசுக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னைக் காட்சியில் இருந்து மறைத்துக் கொண்டாள்.(26) ஓ! மகனே, இவ்வாறே நான் பசுஞ்சாணத்தின் மகிமை குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். பசுக்களின் மகிமை குறித்து மீண்டுமொருமுறை உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(27)

சுரபிக்காக உண்டான கோலோகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 83-சுரபி மேற்கொண்ட கடுந்தவத்தையும், பிரம்மன் சுரபிக்குக் கொடுத்த இறவாமை குறித்தும், கோலோகம் தேவலோகத்துக்கு மேலிருப்பதன் காரணத்தைக் குறித்தும் இந்திரனுக்குச் சொன்ன பிரம்மன்…

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, பசுக்கொடையளிப்போரும், புனித நெருப்பில் ஆகுதிகளாகக் காணிக்கையளிக்கப்பட்டவற்றில் எஞ்சியிருப்பதை உண்டு வாழ்வோரும் அனைத்து வகை வேள்விகளையும் எப்போதும் செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(1) தயிர் மற்றும் நெய்யின் துணையின்றி எந்த வேள்வியையும் செய்ய முடியாது. வேள்வியின் தன்மையே நெய்யைச் சார்ந்திருக்கிறது. எனவே, வேள்வியின் வேராகவே நெய் (அல்லது அதை உண்டாக்கிய பசு) கருதப்படுகிறது.(2) கொடைகளனைத்திலும் பசுக்கொடையே உயர்ந்ததென மெச்சப்படுகிறது. பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. புனிதமான அவை, தூய்மை செய்வதிலும், புனிதப்படுத்துவதிலும் சிறந்தவையாக இருக்கின்றன.(3) செழிப்பையும், அமைதியையும் அடைவதற்காக மக்கள் பசுக்களைப் பேணி வளர்க்க வேண்டும். பசுக் கொடுக்கும் பால், தயிர் மற்றும் நெய் ஆகியன அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்லவையாகும்.(4) பசுக்கள், இவ்வுலகிலும், மேலுலகிலும் பெருஞ்சக்தி கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசுக்களை விடப் புனிதமிக்கவை வேறு எதுவும் இல்லை.(5)

ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பெரும்பாட்டனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(6) தேவர்கள் வீழ்த்தப்பட்டு மூவுலகங்களின் தலைவனாகச் சக்ரன் ஆன பிறகு, அனைத்து உயிரினங்களும் செழிப்பில் வளர்ந்து, உண்மை அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவையாக மாறின.(7) அப்போது ஒரு சந்தரப்பத்தில், ஓ! குரு குலத்தின் காளையே, முனிவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், அசுரர்கள், சிறகு படைத்த உயிரினங்கள், பிரஜாபதிகள் என அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனைத் துதித்தனர். அங்கே நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹா-ஹுஹு ஆகியோர்,(8,9) அந்த அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனைத்} துதித்து தெய்வீகத் தொனியில் பாடிக்கொண்டிருந்தனர். காற்றின தேவன் அங்கே தெய்வீக மலர்களின் நறுமணத்தைச் சுமந்து வந்தான்.(10)

உடல்வடிவங்களுடன் கூடிய பருவகாலங்களும், தெய்வீக இசையின் துணையுடன் தெய்வீகக் கன்னியர் ஆடிப் பாடிக் கொண்டிருந்த தேவர்களின் கூட்டத்திற்கு மலர்களின் குறிப்பிட்ட நறுமணங்களைத் தனித்தனியாகச் சுமந்து வந்தன. அந்தச் சபைக்கு மத்தியில் தேவர்களின் தலைவனிடம் {பிரம்மனிடம்} தலைவணங்கிய இந்திரன், அவனிடம்,(11,12) “ஓ! பெரும்பாட்டா, ஓ! புனிதமானவரே, உலகங்கள் அனைத்தின் தலைவர்களான தேவர்களின் உலகத்தைவிடக் கோலோகம் ஏன் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.(13) ஓ! தலைவா, பசுக்கள் செய்த எந்தத் தவம் அல்லது எந்தப் பிரம்மச்சரியத்தின் விளைவால் அவை தேவர்களைவிட உயர்ந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வசிக்கவல்லவையாக இருக்கின்றன?” என்று கேட்டான் {இந்திரன்}.(14)

இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட பிரம்மன் அந்தப் பலனைக் கொன்றவனிடம், “ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, நீ எப்போதும் பசுக்களை அவமதித்திருக்கிறாய்.(15) எனவே, உன்னால் பசுக்களின் மகிமையை முன்கூட்டியே அறிய முடியவில்லை. ஓ! பலமிக்கவனே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்களின் மகிமையையும் பெருஞ்சக்தியையும் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பசுக்கள் வேள்வியின் அங்கங்களாகச் சொல்லப்படுகின்றன. ஓ! வாசவா அவை வேள்விக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. அவை இல்லாமல் வேள்வி ஏதும் இருக்க முடியாது.(17) அவற்றின் பால், அதனிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றால் அவை அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன.(18) அவற்றில் ஆண் கன்றுகள் உழவுக்குத் துணை செய்வதன் மூலம் நெல் முதலிய தானியங்களை விளைவிக்கன்றன.(19) அவற்றில் இருந்தே வேள்விகளும், ஹவ்யகவ்யங்களும், பால், தயிர் மற்றும் நெய்யும் உண்டாகின்றன. எனவே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்கள் புனிதமானவையாக இருக்கின்றன. பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்படும் அவை பல்வேறு சுமைகளைச் சுமக்கின்றன.(20)

பசுக்கள் முனிவர்களை ஆதரிக்கின்றன. அவை பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன. ஓ! வாசவா, பசுக்கள் தங்கள் நடத்தையில் வஞ்சனையற்றவையாகும். அத்தகைய நடத்தையின் விளைவாலும், நன்கு செய்யும் செயல்களின் விளைவாலும் அவை நம்மை விட உயர்ந்த உலகங்களில் எப்போதும் வாழ்கின்றன.(21) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பசுக்கள் ஏன் தேவர்களை விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன என்பதை நான் இன்று உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(22) ஓ! வாசவா, பல சிறந்த பல வடிவங்களைக் கொண்ட பசுக்களே (பிறருக்கு) வரங்களை அளிப்பவையாகவும் இருக்கின்றன. அவை சுரபிகள் என்றழைக்கப்படுகின்றன. புனிதமான செயல்பாடுகளையும், மங்கலக் குறிகள் பலவற்றையும் கொண்ட அவை புனிதப்படுத்துவனவற்றில் உயர்ந்தவையாக இருக்கின்றன.(23) ஓ! பலனைக் கொன்றவனே, ஓ! தேவர்களின் தலைவா, சுரபியின் பிள்ளைகளான பசுக்கள் ஏன் பூமிக்கு இறங்கிச் சென்றன என்ற காரணத்தை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(24)

ஓ! மகனே, பழங்காலத்தில் தேவயுகத்தில் உயர் ஆன்ம தேவர்கள் மூவுலகங்களின் தலைவர்களாக இருந்தபோது, அதிதி கடுந்தவங்களைச் செய்து (அதன் வெகுமதியாகத்) தன் கருவறையில் விஷ்ணுவைக் கொண்டாள். உண்மையில், ஓ! தேவர்களின் தலைவா, அவள் ஒரு மகனை விரும்பி நீண்ட பல வருடங்களாக ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(25,26) பெருந்தேவியான அதிதி இவ்வாறு கடுந்தவங்களைச் செய்வதைக் கண்டவளும், தக்ஷனின் மகளும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவளும், சிறப்புமிக்கவளுமான சுரபியும், அவளைப் போலவே தேவர்களும், கந்தர்வர்களும் செல்லும் அழகிய கைலாச மலைகளின் சாரலில் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினாள்.(27,28) உயர்ந்த யோகத்தில் நிறுவப்பட்ட அவள், பதினோராயிரம் {11,000} வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(29) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பெரும் நாகர்கள் அனைவரும் அவளது தவங்களால் கடுமையாகச் சுடப்பட்டனர். என்னுடன் சேர்ந்து வந்த அவர்கள் அனைவரும் அந்த மங்கலத் தேவியைத் துதிக்கத் தொடங்கினர்.(30)

அப்போது நான், “ஓ! தேவி, ஓ! களங்கமற்ற ஒழுக்கம் கொண்டவளே, எக்காரியத்திற்காக நீ இத்தகைய கடுந்தவங்களைச் செய்கிறாய்?(31) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஓ! அழகானவளே, உன் தவங்களால் நான் நிறைவடைந்தேன். ஓ! தேவி, நீ வரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் எதையும் நான் தருவேன்” என்றேன். ஓ! புரந்தரா, இவையே நான் சுரபியிடம் சொன்ன சொற்களாகும்.

என்னால் இவ்வாறு சொல்லப்பட்டதும், எனக்குப் பதிலளிக்கும் வகையில் சுரபி, “ஓ! பெரும்பாட்டனே, எனக்கு வரங்கள் தேவையில்லை. ஓ! பாவமற்றவரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததே எனக்குக் கிட்டிய பெரும் வரமாகும்” என்றாள்.(33)

ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, இச்சொற்களை என்னிடம் சொன்ன அந்தச் சிறப்புமிக்கச் சுரபியிடம் நான்,(34) “ஓ! தேவி, ஓ! அழகிய முகம்படைத்தவளே, ஆசை மற்றும் பேராசையில் இருந்து விடுப்பட்ட உனது வெளிப்பாட்டிலும், நீ செய்த தவங்களிலும் நான் மிகையான நிறைவை அடைந்தேன். எனவே நான் உனக்கு இறவாமையை வரமாகத் தருகிறேன்.(35) என் அருளின் மூலம் மூவுலங்களிலும் உயர்ந்த இடத்தில் உள்ள உலகத்தில் நீ வசிப்பாயாக. அந்த உலகம் கோலோகம் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படப் போகிறது.(36) எப்போதும் நற்செயல்களையே செய்யும் உன் சந்ததி, மனிதர்களின் உலகில் இருக்கட்டும். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, உண்மையில் உன் மகள்கள் அங்கே வசிக்கப் போகிறார்கள்.(37) தெய்வீக மற்றும் மானுட இன்பங்கள் அனைத்தும் நீ நினைத்த மாத்திரத்தில் உனதாகும். ஓ! அருளப்பட்டவளே, சொர்க்கத்தில் இருக்கும் இன்பம் எதுவும் உனதே ஆகும்” என்று பதிலளித்தேன்.(38)

ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, சுரபியின் உலகங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவடையச் செய்ய வல்லவையாகும். மரணமோ, முதுமையோ, நெருப்போ அங்கே வசிப்பவர்களைத் தாக்காது.(39) ஓ! வாசவா, தீயூழேதும் அங்கே ஏற்படாது. இனிய காடுகள் பலவும், இனிய ஆபரணங்கள் மற்றும் அழகிய பொருட்கள் யாவும் அங்கே காணப்படுகின்றன.(40) ஓ! வாசவா, சிறப்பான ஆயத்தங்களுடன் கூடியவையும், செலுத்துபவரின் விருப்பத்திற்கேற்பச் சொல்லக்கூடியவையுமான பல அழகிய தேர்களும் அங்கே இருக்கின்றன. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மச்சரியம், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு, கொடைகள், பல்வேறு வகை அறச்செயல்கள், புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்ளல் ஆகியவற்றாலும், உண்மையில், கடுந்தவங்கள், நன்றாகச் செய்யப்பட்ட அறச்செயல்கள் ஆகியவற்றாலும் மட்டுமே ஒருவன் கோலோகத்தை அடைய முடியும்.(41,42) ஓ! சக்ரா, நீ கேட்டவை அனைத்திற்கும் நான் முழுமையாகப் பதிலளித்துவிட்டேன். ஓ! அசுரர்களைக் கொல்பவனே, ஒருபோதும் பசுக்களை அவமதியாதே” என்றான் {பிரம்மன்}”.(43)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, சுயம்புவான பிரம்மனின் இச்சொற்களைக் கேட்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான சக்ரன், அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பசுக்களை வழிபடவும், அவற்றுக்குப் பெரும் மதிப்பளிக்கவும் தொடங்கினான்.(44) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக்களின் புனிதத்தன்மை குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இவ்வாறே, ஓ!மனிதர்களின் தலைவா, ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல பசுக்களின் புனிதத்தன்மை, முன்சிறப்புகள் மற்றும் மகிமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். பிற பொருட்களில் இருந்து புலன்விலக்கம் பெற்ற மனிதன், ஹவ்யகவ்யங்கள் காணிக்கையளிக்கப்படும் தருணங்கள், அல்லது வேள்விகளிலோ, பித்ருக்களைத் துதிக்கும் தருணங்களிலோ இதைக் குறித்துப் பிராமணர்களுக்குச் சொன்னால் அவன் தன் மூதாதையர்களின் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(45-47)

பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான். உண்மையில், பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட பெண்களும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(48) மகன்களைப் பெற விரும்புபவன் மகன்களை அடைகிறான். மகள்களைப் பெற விரும்புபவன் மகள்களைப் பெறுகிறான். செல்வத்தை விரும்புபவன், செல்வத்தை அடைவதில் வெல்கிறான், அறத்தகுதியை விரும்புபவன் அறத்தகுதியை ஈட்டுவதில் வெல்கிறான்.(49) அறிவை விரும்புபவன் அறிவை அடைகிறான். இன்பத்தை விரும்புபவன், இன்பத்தை அடைவதில் வெல்கிறான். உண்மையில், ஓ! பாரதா, பசுக்களிடம் அர்ப்பணிப்புள்ள ஒருவனால் அடைய முடியாதது ஏதுமில்லை” {என்றார் பீஷ்மர்}.(50)

பொன் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 84-தங்கத்தின் தோற்றம்; பொன்தானத்தின் முன்சிறப்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பலன் நிறைந்த பசுக்கொடை குறித்து எனக்குச் சொன்னீர். கடமைகளை நோற்பவர்களான மன்னர்களின் வழக்கில் அக்கொடை பெரும் பலன்மிக்கதாகும்.(1) கோன்மை {அரசுரிமை} எப்போதும் துன்பம் நிறைந்ததாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அது சுமக்கப்பட இயலாததாகும். பொதுவாகவே மன்னர்கள் மங்கல கதிகளை அடையத் தவறுகிறார்கள்.(2) எனினும், எப்போதும் நிலக்கொடை அளிப்பதன் மூலம் அவர்கள் தங்களை (தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும்) தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறார்கள். ஓ! குரு குலத்தின் இளவரசரே, பல கடமைகளைக் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர்.(3) பழங்காலத்தில் மன்னன் நிருகன் பசுக்கொடையளித்ததையும் எனக்குச் சொன்னீர். பழங்காலத்தில் முனிவர் நாசிகேதர் செய்த செயல்களின் பலன்களையும் எனக்குச் சொன்னீர்.(4)

அனைத்து வேள்விகளிலும், உண்மையில் அனைத்து வகை அறச்செயல்களிலும் நிலத்தையோ, பசுவையோ, பொன்னையோ கொடையளிக்க வேண்டும் என்று வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் விதிக்கப்பட்டிருக்கிறது.(5) எனினும், ஸ்ருதிகள் தக்ஷிணைகள் அனைத்திலும் மிக மேன்மையானதும், சிறந்ததும் பொன்னே என்று அறிவிக்கின்றன. ஓ! பாட்டா, இக்காரியம் குறித்து உண்மையில் நீர் சொல்ல விரும்புகிறேன்.(6) பொன் என்றால் என்ன? அஃது உண்டானது எவ்வாறு? அஃது எப்போது இருப்புக்கு வந்தது? அதன் சாரம் என்ன? அதற்குத் தலைமை தாங்கும் தேவன் யார்? அதன் கனிகள் {பலன்கள்} என்னென்ன? அனைத்திலும் முதன்மையானதாக அஃது ஏன் கருதப்படுகிறது?(7) ஞானிகள் பொற்கொடையை மெச்சும் காரணம் என்ன? அனைத்து வேள்விகளிலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகக் கருதப்படுவதற்கான காரணம் என்ன?(8) நிலம் மற்றும் பசுக்களை விடப் பொன்னே தூய்மையாக்குவதில் மேன்மையானதாக ஏன் கருதப்படுகிறது? உண்மையில் அஃது ஏன் மேன்மையான தக்ஷிணையாகக் கருதப்படுகிறது? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, என்னால் புரிந்து கொள்ள முடிந்த அளவுக்குப் பொன்னின் தோற்றம் தொடர்புடைய சூழ்நிலைகளை விரிவாகச் சொல்கிறேன், குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(10) பெருஞ்சக்தி கொண்ட என் தந்தை சாந்தனு இவ்வுலகை விட்டுச் சென்றபோது, நான் அவரது சிராத்தத்தைச் செய்யக் கங்காத்வாரத்திற்குச் சென்றேன்.(11) அங்கே சென்றதும் என் தந்தையின் சிராத்தத்தைத் தொடங்கினேன். என் தாயான ஜானவி அங்கே வந்து எனக்குப் பேருதவி புரிந்தாள்.(12) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பல தவசிகளை அழைத்து அவர்களை என் முன் அமரச் செய்து, நீர்க்கொடை மற்றும் பிற கொடைகள் உள்ளிட்ட தொடக்கச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினேன்.(13) குவிந்த மனத்துடன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தொடக்கச் சடங்குகள் அனைத்தையும் செய்து ஈமப்பிண்டத்தை முறையாகக் கொடையளிப்பதில் என்னை நிறுவிக் கொண்டேன்.(14) அப்போது, ஓ! மன்னா, தரையைத் துளைத்துக் கொண்டு நான் விரித்து வைத்திருந்த குசப் புற்களின் ஊடாக அங்கதங்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய கரம் எழுவதை நான் கண்டேன்.(15) தரையில் இருந்து எழும் அந்தக் கரத்தைக் கண்ட நான் ஆச்சரியத்தில் நிறைந்தேன். உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் கொடுக்க இருந்த பிண்டத்தை ஏற்பதற்காக என் தந்தையே வந்ததாக நான் எண்ணினேன்.(16)

பிறகு, சாத்திர ஒளியில் சிந்தித்தபோது, யாருடைய சிராத்தம் செய்யப்படுகிறதோ அவருடைய கையில் பிண்டத்தைக் கொடுக்கக்கூடாது என்று வேதங்களில் தோன்றும் விதி எனக்குத் திட நம்பிக்கையை அளித்தது. எவருடைய ஈமச் சடங்குகள் நடைபெறுகிறதோ அம்மனிதரின் கரத்தில் ஈமப் பிண்டத்தை ஒருபோதும் கொடுக்கக்கூடாது என்ற என் மனத்தில் இவ்வாறே ஒரு திடமான நம்பிக்கை எழுந்தது. பித்ருக்கள் பிண்டத்தைப் பெறுவதற்காகக் காணத்தக்க வடிவங்களில் வருவதில்லை. மறுபுறம், அதற்கெனப் பூமியில் விரிக்கப்பட்ட குசப்புற்களிலேயே அதை வைக்க வேண்டுமென விதி சொல்கிறது. என் தந்தையின் இருப்பைக் குறிப்பதாக அமைந்த அந்தக் கரத்தை அலட்சியம் செய்துவிட்டு,(17-19) பிண்டம் அளிக்கும் முறையைக் குறித்த சாத்திர அதிகாரத்தைச் சார்ந்த உண்மை விதியை நினைவகூர்ந்து, என் முன்னே பரப்பி வைக்கப்படிருந்த குசப்புற்களிலேயே முழுப் பிண்டத்தையும் காணிக்கையிட்டேன்.(20) ஓ! மனிதர்களின் இளவரசே, நான் செய்தது சாத்திர விதிக்கு முற்றிலும் இணக்கமானது என்பதை அறிவாயாக. ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு என் தந்தையின் கரம் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போயிற்று.(21)

அவ்விரவு நான் உறங்கிய போது, என் கனவில் பித்ருக்கள் தோன்றினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே} என்னிடம் நிறைவடைந்த அவர்கள், இச்சொற்களில், “நாங்கள் உன்னிடம் நிறைவடைந்தோம்.(22) விதியில் பற்றுடன் இருப்பதை நீ இன்று வெளிப்படுத்தினாய். சாத்திர விதிகளில் இருந்து நீ வழுவாததைக் கண்டு நாங்கள் நிறைவடைந்தோம். ஓ! மன்னா, சாத்திர விதிகள் உன்னால் பின்பற்றப்பட்டதால் மேலும் அதிகாரமிக்கவையாகிவிட்டன.(23) இத்தகைய உன் நடத்தையின் மூலம், நீ உன் அதிகாரத்தையும், சாத்திரங்கள், வேத திறன், பித்ருக்கள், முனிவர்கள், பெரும்பாட்டனான பிரம்மன், பெரியோர்களான பிரஜாபதிகள் ஆகியோரின் அதிகாரங்களையும் கௌரவித்துப் பராமரித்திருக்கிறாய். சாத்திரப் பற்றுப் பராமரிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நீ இன்று மிகச் சரியாகச் செயல்பட்டிருக்கிறாய்.(24,25) நீ நிலக்கொடையும், பசுக்கொடையும் அளித்தாய். நீ பொற்கொடையும் அளிப்பாயாக. பொற்கொடை தூய்மைடையச் செய்தவதில் பெரியதாகும். ஓ! கடமைகளை நன்கறிந்தவனே, அத்தகைய உன் செயல்பாடுகளின் மூலம் நாங்களும், உன்னுடைய மூதாதையர் அனைவரும் எங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைவோம் என்பதை அறிவாயாக. அத்தகைய கொடைகள் மூதாதையரிலும், வழித்தோன்றல்களிலும் பத்து தலைமுறையினரை மீட்கின்றன” என்றார்கள். என் கனவில் தோன்றிய என் மூதாதையரால் சொல்லப்பட்ட சொற்கள் இவையே. ஓ! மன்னா, பிறகு விழிப்படைந்த நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன்.(26-28)

உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் பொற்கொடை அளிப்பதில் என் இதயத்தை நிலைநிறுத்தினேன். ஓ! ஏகாதிபதி, இப்போது இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(29) இது மிகுந்த பாராட்டுக்குரியதும், கேட்பவரின் வாழ்நாள் காலத்தை நீட்டிப்பதும் ஆகும். இது முதலில் ஜமதக்னியின் மகனான ராமருக்கு {பரசுராமருக்கு} உரைக்கப்பட்டது. பழங்காலத்தில் பெருங்கோபத்தில் நிறைந்த ஜமதக்னியின் மகன் ராமர்,(30) பூமியின் பரப்பில் இருந்து இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தார். வீரரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவருமான ராமன், மொத்த பூமியையும் அடக்கிய பிறகு, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் அனைவராலும் புகழப்படுவதும், அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அருளவல்லதுமான குதிரை வேள்வியைச் செய்தற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.(31,32) அந்த வேள்வியானது அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்து, அதைச் செய்தவரின் சக்தி மற்றும் காந்தியையும் மேம்படுத்துகிறது. பெருஞ்சக்தி கொண்ட ராமர் அந்த வேள்வியைச் செய்ததன் மூலம் பாவமற்றவரானார்.(33) எனினும், அந்த முதன்மையான வேள்வியைச் செய்த உயர் ஆன்ம ராமர் முற்றிலும் மென்மையான இதயத்தை அடையத் தவறினார்.(34) பிருகு குல ராமர், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவர்கள் மற்றும் தேவர்களிடமும் சென்று அவர்களிடம் கேள்வி கேட்டார். பின்னிரக்கம் மற்றும் கருணையால் நிறைந்திருந்த அவர், அவர்களிடம், “உயர்ந்த அருளைக் கொண்டவர்களே, கடுஞ்செயல் புரிந்த மனிதர்களையும் தூய்மையாக்குவது எது என்பதை அறிவிப்பீராக” என்றார்.

இவ்வாறு அவரால் சொல்லப்பட்டவர்களும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களை முழுமையாக அறிந்தவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் அவரிடம்,(35,36) “வேத அதிகாரங்களால் வழிநடத்தப்பட்டுக் கல்விமான்களான பிராமணர்கள் அனைவரையும் நீ கௌரவிப்பாயாக. சில காலத்திற்கு இவ்வொழுக்கத்தைப் பின்பற்றிய பிறகு, உன்னைத் தூய்மை செய்து கொள்வதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை மறுபிறப்பாள முனிவர்களிடம் மீண்டும் கேட்பாயாக.(37) அந்தப் பெரும் ஞானிகள் உனக்குத் தரும் ஆலோசனையைப் பின்பற்றுவாயாக” என்றனர்.

பிறகு, பெருஞ்சக்தி கொண்டவரும், பிருகுக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் {பரசுராமர்}, வசிஷ்டர், அகஸ்தியர், கசியபர் ஆகியோரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்கும் வகையில், “பிராமணர்களில் முதன்மையானோரே, என் இதயத்தில் எழும் விருப்பம் இதுவே. உண்மையில் என்னைத் தூய்மை செய்து கொளவதில் வெல்வது எவ்வாறு?(38,39) எந்தச் செயல்கள் மற்றும் சடங்குகளின் மூலம் இதைச் செய்யலாம்? அல்லது கொடையின் மூலம் எட்டப்படும் என்றால், என்னுடைய இவ்விருப்பம் நிறைவேற எப்பொருள் கொடையளிக்கப்பட வேண்டும்? அறவோரில் முதன்மையானோரே, தவத்தையே செல்வமாகக் கொண்ட நீங்கள் எனக்கு உதவ விரும்பினால் என்னைத் தூய்மை செய்து கொள்வதில் நான் வெல்வது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக” என்றார்.(40)

முனிவர்கள், “ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, பாவம் செய்த மனிதன் பசு, நிலம் மற்றும் செல்வத்தைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைகிறான். இதையே நாம் கேள்விப்படுகிறோம்.(41) தூய்மையடைவதற்கு பெரிதும் உதவுவதாகக் கருதப்படும் மற்றொரு கொடையும் இருக்கிறது. ஓ! மறுபிறப்பாள முனிவா, நாங்கள் சொல்வதைக் கேட்பாயாக. அப்பொருள் சிறந்ததும், அற்புதத் தன்மை நிறைந்ததும், நெருப்பின் சந்ததியுமாக இருக்கிறது.(42) பழங்காலத்தில் அக்னி தேவன் உலகமனைத்தையும் எரித்தான். அவனது வித்தில் இருந்தே பிரகாச நிறம் படைத்த பொன் உண்டானது என நாம் கேள்விப்படுகிறோம். பொற்கொடை அளிப்பதன் மூலம் உன் விருப்பம் கனியும் நிலையால் நிச்சயம் மகுடம் சூட்டப்படுவாய்” என்றனர்.(43)

அப்போது, கடும் நோன்பைக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான வசிஷ்டர் குறிப்பாக, “ஓ! ராமா {பரசுராமா}, நெருப்பின் காந்தியைக் கொண்ட பொன் முதலில் இருப்பில் உதித்தது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக.(44) அந்தப் பொன்னே உனக்குப் பெரும் பலனை அளிக்கும். கொடையளிக்கப்படுவதில் பொன் மிகவும் மெச்சப்படுகிறது. தங்கம் என்றால் என்ன? அஃது எங்கிருந்து வந்தது? அது மேன்மையான தன்மைகளைப் பெற்றது எவ்வாறு? என்பனவற்றையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(45) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இவை குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக. பொன்னானது நிச்சயம் நெருப்பு மற்றும் சோமனின் சாரமாகும் என்பதை அறிவாயாக.(46)

செம்மறியாடு (அக்னிலோகத்துக்கு வழிவகுப்பதால்) நெருப்பாக (அக்னியாக) இருக்கிறது; வெள்ளாடு (வருணலோகத்துக்கு வழிவகுப்பதால்) வருணனாக இருக்கிறது; குதிரை (சூரியலோகத்துக்கு வழிவகுப்பதால்) சூரியனாக இருக்கிறது; யானைகள் (நாகலோகத்துக்கு வழிவகுப்பதால்) நாகர்களாக இருக்கின்றன; எருமைகள் (அசுரலோகத்துக்கு வழிவகுப்பதால்) அசுரர்களாக இருக்கின்றன;(47) கோழிகளும், பன்றிகளும் (ராட்சசலோகத்துக்கு வழிவகுப்பதால்) ராட்சசர்களாக இருக்கின்றன; ஓ!பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே. பூமி (வேள்வியின் பலனுக்கும், கோலோகத்துக்கும், வருணலோகத்துக்கும், சோமலோகத்துக்கும் வழிவகுப்பதால்) வேள்வியாக, பசுவாக, நீராக, சோமனாக இருக்கின்றன. இதையே ஸ்மிருதிகள் அறிவிக்கின்றன.(48) மொத்த அண்டத்தையும் கடைந்த போது திரளான ஒரு சக்தி கண்டடையப்பட்டது. அந்தச் சக்தியே பொன்னாகும். எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவா, (நான் ஏற்கனவே குறிப்பிட்ட) இந்தப் பொருட்கள் அனைத்துடனும் ஒப்பிடும்போது நிச்சயம் பொன்னே மேன்மையானது. அது விலைமதிப்புமிக்க, உயர்ந்த, சிறந்த பொருளாகும்.(49)

இதன் காரணமாகவே தேவர்களும், கந்தர்வர்களும், உரகர்களும், ராட்சசர்களும், மனிதர்களும் பிசாசங்களும் அதைக் கவனத்துடன் பற்றிக் கொள்கின்றனர்.(50) ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமா}, இவர்கள் அனைவரும் தங்கத்தை மகுடங்களாகவும், தோள்வளைகளாகவும், பலவகை ஆபரணங்களாகவும் மாற்றி அவற்றின் துணையுடனே ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.(51) ஓ! மனிதர்களின் இளவரசே[1], இதன் காரணமாகவே பொன்னானது தூய்மைப்படுத்தும் நிலம், பசு மற்றும் பிற வகைப் பொருட்கள் அனைத்தையும் காட்டிலும் மிகுந்த தூய்மைப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.(52) ஓ! பலமிக்க மன்னா, பொற்கொடையே உயர்ந்த கொடையாகும். அது நிலம், பசு மற்றும் பிற பொருட்களைக் கொடையளிப்பதைக் காட்டிலும் மேலான புகழைத் தருவதாகும்.(53)ஓ! தேவப் பிரகாசம் கொண்டவனே, பொன்னானது நித்தியமாகத் தூய்மைப்படுத்தும் பொருளாகும். அதுவே தூய்மைப்படுத்துவனவற்றில் முதன்மையானதாக இருப்பதால் பிராமணர்களில் முதன்மையானோருக்கு நீ அதைக் கொடையளிப்பாயாக.(54) தக்ஷிணைகள் அனைத்திலும் பொன்னே சிறந்ததாகும். பொன்னைக் கொடையளிப்பவர்கள் அனைத்தையும் கொடையளிப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(55) உண்மையில், பொன்னைக் கொடையளிப்பவர்கள் தேவர்களைக் கொடையளிப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அனைத்து தேவர்களும் சேர்ந்தவன் அக்னியாவான், தங்கம் அக்னியையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது.(56) எனவே, தங்கத்தைக் கொடையளிப்பவன் தேவர்கள் அனைவரையும் கொடையளித்தவனாகச் சொல்லப்படுகிறான். எனவே, ஓ! மனிதர்களின் தலைவா, பொற்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை” என்றார் {வசிஷ்டர்}.(57)

வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், “ஓ! மறுபிறப்பாள முனிவா, ஓ! ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனே, தங்கத்தின் முன்சிறப்புகளை மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(58) ஓ! பிருகு குலத்தின் மகனே, நான் இதை முன்பு புராணத்தில் கேட்டிருக்கிறேன். இது பிரஜாபதியின் பேச்சையே பிரதிபலிக்கிறது.(59) ஓ! பிருகு குலத்தின் மகனே, சிறப்புமிக்கவனும், உயர் ஆன்மாவைக் கொண்டவனும், திரிசூலபாணியுமான ருத்திரனுக்கும், அவனது மனைவியான {உமா} தேவிக்கும் முதன்மையான மலையான ஹிமவத்தின் {இமயத்தின்} சாரலில் திருமணம் முடிந்த பிறகு, சிறப்புமிக்கவனும், உயர் ஆன்மா கொண்டவனுமா அந்தத் தேவன் {சிவன்}, தேவியுடன் தன்னைக் கலக்க விரும்பினான்.

கவலை நிறைந்த தேவர்கள் அனைவரும் ருத்திரனை அணுகினார்கள். மஹாதேவனிடமும், வரமளிக்கும் அவனது மனைவியான உமைக்கும் மதிப்புடன் தலைவணங்கி, சேர்ந்து அமர்ந்திருக்கும் அவர்களை நிறைவடையச் செய்த அவர்கள், ஓ! பிருகு குலத்ததைத் தழைக்கச் செய்பவனே, ருத்திரனிடம், “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! பாவமற்றவனே, தேவியுடன் நீ கலப்பது என்பது,(60-62) தவங்களுடன் கூடிய ஒருவனுக்கும், தவங்களுடன் கூடிய மற்றொருவருக்கும் இடையே ஏற்படும் கடும் கலவியாகும். உண்மையில், ஓ! தலைவா, இது பெரும் சக்தி கொண்ட ஒருவனுக்கும், அதற்குச் சற்றும் குறையாத சக்தியுடன் கூடிய மற்றொருவருக்கும் இடையில் ஏற்படும் கலவியாகும். ஓ! சிறப்புமிக்கவனே, நீ தடுக்கப்பட முடியாத சக்தியுடன் கூடியவன். உமாதேவியும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவள்.(63) ஓ! சிறப்புமிக்கத் தேவா, இந்தக் கலவியால் உண்டாகும் சந்ததி நிச்சயம் பெரும்வலிமை கொண்டதாகவே இருக்கும். உண்மையில், ஓ! பலமிக்கத் தலைவா, அந்தச் சந்ததி மூவுலகங்களிலும் எதையும் எஞ்சவிடாமல் அனைத்துப் பொருட்களையும் எரித்துவிடும்.(64)

ஓ! அண்டமனைத்தின் தலைவா, ஓ! பெரிய கண்களைக் கொண்டவனே, மூவுலகங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தில், உன் முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் இந்தத் தேவர்களுக்கு ஒரு வரத்தை அருள்வாயாக.(65) ஓ! பலமிக்கவனே, சந்ததிக்குரிய வித்தாகும் இந்த உயர்ந்த சக்தியைக் கட்டுப்படுத்துவாயாக.(66) உண்மையில், இந்தச் சக்தி மூவுலகங்களில் உள்ள சக்திகள் அனைத்தின் சாரமாகும். நீங்கள் இருவரும் கலக்கும் செயலின் மூலம் இந்த அண்டத்தை நிச்சயம் எரிப்பீர்கள்.(67) உங்கள் இருவருக்கும் பிறக்கும் சந்ததி நிச்சயம் தேவர்களைப் பீடிக்க வல்லதாக இருக்கும். ஓ! பலமிக்கவனே, பூமாதேவியோ, ஆகாயமோ, சொர்க்கமோ, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தோகூட உன் சக்தியைத் தாங்க முடியாது என உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.(68,69) ஓ! பலமிக்கவனே, ஓ! சிறப்புமிக்கத் தேவா, நீ எங்களுக்குத் துணைபுரிவதே உனக்குத் தகும். ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உமாதேவியிடம் நீ ஒரு மகனைப் பெறாமல் இருப்பதிலேயே அந்த உதவி அடங்கியிருக்கிறது.(70) எனவே, கடுமையானது, பலமிக்கதுமான உன் சக்தியைப் பொறுமையுடன் தடுப்பாயாக” என்றனர்.

ஓ! மறுபிறப்பாள முனிவா, அப்படிச் சொன்ன தேவர்களிடம், காளை மாட்டைத் தன் சின்னமாகக் கொண்ட மஹாதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தான். இவ்வாறு சொன்னவனும், காளையைத் தன் வாகனமாகக் கொண்டவனுமான அந்தத் தேவன், தன் உயிர் வித்தை மேலிழுத்தான் {மேல்நோக்கச் செய்தான்}.(71,72) அந்தக் காலம் முதலே அவன் (உயிர்வித்தை மேல்நோக்கி இழுத்தவன் என்ற பொருள் கொண்ட) ஊர்த்தவரேதஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறான். எனினும் ருத்திரனின் மனைவி, உற்பத்தியைத் தடுத்த தேவர்களின் முயற்சியால் பெருஞ்சினமடைந்தாள்.(73) எதிர் பாலினமாக இருந்ததன் விளைவால் (கோபத்தைச் சிறிது கட்டுப்படுத்த முடியாதவளாக) அவள் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி, “என் தலைவர் என்னிடம் சந்ததியை உண்டாக்க விரும்பிய போது, அக்காரியத்தில் அவரை நீங்கள் எதிர்த்தீர்கள், அச்செயலின் விளைவால், தேவர்களே நீங்கள் மகனற்றவர்கள் ஆவீர்கள். உண்மையில், என்னிடம் சந்ததி பிறப்பை நீங்கள் எதிர்த்தீர்கள்,(75) எனவே, உங்களுக்குச் சந்ததி உண்டாகாமல் போகட்டும்” என்றாள்.

ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்நேரத்தில் நெருப்பின் தேவன் {அக்னி} அங்கே இல்லை.(76) அந்தத் தேவியுடைய சாபத்தின் விளைவாகவே தேவர்கள் பிள்ளையற்றவர்களானார்கள். அவர்களால் வேண்டப்பட்ட ருத்திரன், ஒப்பற்ற பலத்துடன் கூடிய தன் சக்தியை {வீரியத்தைத்} தானே தாங்கிக் கொண்டான்.(77) எனினும், அதிலொரு சிறு பகுதி அவனுடைய உடலில் இருந்து வெளியேறி பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த அந்த வித்தானது, சுடர்மிக்க நெருப்பில் குதித்து மிக ஆச்சரியகரமாக (அளவிலும், சக்தியிலும்) வளரத் தொடங்கியது.(78) ருத்திரனின் சக்தி, பெரும்பலமிக்க மற்றொமொரு சக்தியுடன் கலந்து ஒரே சாரமானது {ஒளியில் ஒளி சேர்ந்து ஒன்றாகிவிட்டது}. அதே வேளையில், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரும்,(79) தாரகன் என்ற பெயரைக் கொண்ட அசுரனால் நன்றாக வாட்டப்பட்டனர். ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத்துகள், அசுவினிகள்,(80) சத்யஸ்கள் ஆகியோரனைவரும், அந்தத் திதியின் மகனுடைய ஆற்றலின் விளைவால் மிகவும் பீடிக்கப்பட்டனர். அழகிய தேர்கள் மற்றும் மாட மாளிகைகளுடன் கூடிய தேவலோகங்கள் அனைத்தும்,(81) முனிவர்களின் ஆசிரமங்கள் ஆகியவையும் அசுரர்களால் அபகரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடியவர்களாகப் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனும், மங்கா மகிமை கொண்டவனுமான பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள்” {என்றார் வசிஷ்டர்}.(82)

பொன் வரலாறு! – அநுசாஸனபர்வம் பகுதி – 85அ-அக்னியை விரட்டிச் சென்று பிடித்த தேவர்கள்; தேவர்களால் வேண்டப்பட்ட அக்னி; அக்னி கங்கையைக் கருவூட்டியது; அதை மேருமலையின் சாரலில் விட்ட கங்கை; தத்தெடுத்துக் கொண்ட கிருத்திகை தேவி; தங்கமும், கந்தனும் பிறந்த கதை…

தேவர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! பலமிக்கவரே, உம்மிடம் இருந்து வரங்களைப் பெற்றவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் பீடித்து வருகிறான். அவனுக்கு மரணத்தை விதிப்பீராக.(1) ஓ! பெரும்பாட்டனே, ஓ! சிறப்புமிக்கவரே, அவனிடம் இருந்த எழும் பேரச்சத்திலிருந்து எங்களை மீட்பீராக. உம்மைத் தவிரே வேறு புகலிடம் எங்களுக்குக் கிடையாது” என்றனர்.(2)

பிரம்மன், “நான் அனைத்து உயிரினங்களிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன். எனினும், நீதியற்றதை என்னால் ஏற்க இயலாது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் எதிரியான தாரகன் விரைவில் அழிவை அடைவான்.(3) தேவர்களில் முதன்மையானோரே, வேதங்களும், நித்திய கடமைகளும் அடியோடு அழிக்கப்படாது. இக்காரியத்தில் நான் முறையான விதியைச் செய்திருக்கிறேன். உங்கள் இதய நோய் விலகட்டும்” என்றான்.(4)

தேவர்கள் {பிரம்மனிடம்}, “நீர் வரமளித்ததன் விளைவாலும் அந்தத் திதியின் மகன் தன் வலிமையில் செருக்குற்றிருக்கிறான். அவன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். பிறகு எவ்வாறு அவனைக் கொல்ல முடியும்?(5) ஓ! பெரும்பாட்டனே, தேவர்களாலோ, அசுரர்களலோ, ராட்சசர்களாலோ கொல்லப்பட முடியாதவகையில் அவன் உம்மிடம் இருந்து வரம்பெற்றிருக்கிறான்.(6) முற்காலத்தில் செய்த வினையின் விளைவால் தேவர்கள் பெருகாதவாறு ருத்திரனின் மனைவியால் {உமாதேவியால்} சபிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓ! அண்டத்தின் தலைவா, “நீங்கள் சந்ததியைப் பெற மாட்டீர்கள்” என்பதே அவள் விதித்திருக்கும் சாபமாகும்” என்றார்கள்.(7)

பிரம்மன், “தேவர்களில் முதன்மையானோரே, அந்தத் தேவி சபித்தபோது அக்னி அங்கில்லை. அவனே தேவர்களின் எதிரியை அழிக்கும் சந்ததியைப் பெறப் போகிறான்.(8) தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் மற்றும் இறகு படைத்த உயிரினங்கள் அனைத்தையும் கடந்தவனாகவும், ஒரு முறை ஏவினாலே எதிரியைக் கலங்கடிக்கும் ஆயுதமான ஈட்டியுடன் கூடியவனுமான அக்னியின் வாரிசு {ஸ்கந்தன்}, எவனை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அந்தத் தாரகனை அழிப்பான். உண்மையில் உங்கள் எதிரிகள் யாவரும் அவனால் அழிக்கப்படுவார்கள்.(9,10)

ஆசை என்பது அழிவற்றது. காமம் என்ற பெயரில் அறியப்படும் அந்த ஆசையும், அக்னியின் சுடர்மிக்க வடிவில் விழுந்த ருத்திரனுடைய வித்தின் ஒரு பகுதியும் ஒன்றே.(11) வலிமைமிக்கதும், இரண்டாவது அக்னிக்கு ஒப்பானதுமான அந்தச் சக்தியானது, தேவர்களின் எதிரிகளை அழிக்கக்கூடிய ஒரு வாரிசை உண்டாக்குவதற்காக அக்னியால் கங்கையில் விடப்படும்.(12) அக்னி உமையின் சாபத்திற்கு உள்ளாகவில்லை. அந்தச் சாபம் இடப்பட்ட போது வேள்வி ஆகுதிகளை உண்பவன் அங்கே இல்லை.(13) எனவே, நெருப்பின் தேவனை {அக்னி தேவனைத்} தேடுங்கள். அவனை இப்பணியில் நிறுவுங்கள். பாவமற்றவர்களே, தாரகனை அழிக்கு வழிமுறைகளை நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.(14)

சக்தியுடையவர்களின் சாபங்கள், சக்தியுடையவர்களிடம் எந்த விளைவையும் உண்டாக்காமல் தவறிப் போகும். பலமான சக்தியுடன் தொடர்பேற்படும்போது வேறு சக்திகள் பலவீனமடையும்.(15) தவங்களுடன் கூடியோர், அழிவற்றவர்களாக இருப்பவர்களும், வரமளிக்க இயன்றவர்களுமான தேவர்களையே அழிக்கத்தகுந்தவர்களாவர். பழங்காலத்தில் தோன்றிய விருப்பம், அல்லது ஆசை, அல்லது காமம் அனைத்து உயிரினங்களிடமும் அழிவற்றதாக இருக்கிறது.(16) அக்னி அண்டத்தின் தலைவனாவான். அவன் புரிந்து கொள்ளப்படவோ, விளக்கப்படவோ இயலாதவன். விரும்பிய எங்கும் செல்லவல்லவனும், அனைத்திலும் இருப்பவனுமான அவனே அனைத்தையும் படைத்தவனுமாவான். அவன் உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வாழ்கிறான். பெரும்பலம் கொண்ட அவன் {அக்னி} ருத்திரனைவிடவும் மூத்தவனாவான்.(17) பெரும் சக்தியின் திரளாக இருப்பவனும், வேள்வி ஆகுதிகளை உண்பவனுமான அவனைத் தேடுங்கள். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் உங்கள் இதயங்களில் உள்ள விருப்பத்தை நிறைவேற்றுவான்” என்றான் {பிரம்மன்}.(18)

பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மத் தேவர்கள், தங்கள் நோக்கம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால் உற்சாகமிக்க இதயங்களுடன் நெருப்பின் தேவனை {அக்னிதேவனைத்} தேடிச் சென்றனர்.(19) தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களின் ஒவ்வொரு பகுதிக்கும் அக்னியை நினைத்துக் கொண்டே அவனைக் காண விரும்பி தேடிச் சென்றனர்.(20) ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே {பரசுராமா}, தவமும், செழிப்பும் உடைவயர்களும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான அந்த உயர் ஆன்மாக்கள் {தேவர்கள்} அனைவரும் அண்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றனர்.(21) எனினும், வேள்வி ஆகுதிகளை உண்பவன் {அக்னி} தனக்குள்ளேயே தன்னை மறைத்துக் கொண்டதால் அவர்களால் அவனைக் காண முடியவில்லை. அந்த நேரத்தில், நீரில் வாழும் ஒரு தவளையானது, அக்னியின் சக்தி சுட்டதன் விளைவால் பாதாள லோகத்தின் ஆழத்தில் இருந்து உற்சாகமற்ற இதயத்துடன் தரையில் தோன்றியது.(22)

அச்சிறு உயிரினம் {தவளை}, அச்சத்தால் துளைக்கப்பட்டவர்களும், நெருப்பின் தேவனைக் காணும் ஆவலில் உள்ளவர்களுமான அந்தத் தேவர்களிடம்,(23) “தேவர்களே அக்னி இப்போது பாதாள லோகத்தில் வசித்து வருகிறான். அந்தத் தேவனின் சக்தியால் எரிக்கப்பட்டு, அதைத் தாங்கிக் கொள்ள இயலதாவனாகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.(24) தேவர்களே, வேள்வி ஆகுதிகளைத் தாங்கிச் செல்லும் சிறந்தவன் {அக்னி} இப்போது நீருக்கடியில் இருக்கிறான். நாங்கள் அனைவரும் அவனது சக்தியால் எரிக்கப்படுகிறோம்.(25) உங்களுக்கு அவனால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமெனில் அங்கே செல்வீராக. உண்மையில் அங்கே செல்வீராக. எங்களைப் பொறுத்தவரையில், அக்னி மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நாங்கள் இவ்விடத்தைவிட்டுத் தப்பிச் செல்லப் போகிறோம்” என்றது. இவ்வளவையும் சொல்லிவிட்டு அந்தத் தவளை நீருக்குள் குதித்தது.(27)

வேள்வி ஆகுதிகளை உண்பவன் {அக்னி} அந்தத் தவளையின் நயவஞ்சகத்தை அறியவந்தான். அவ்விலங்கிடம் வந்த அவன், அதன் மொத்த {தவளை} இனத்தையும் சபிக்கும் வகையில், “இது முதல் நீங்கள் சுவைப் புலன் இழந்தவர்களாக இருப்பீர்கள்” என்றான்.(28) தவளைகளுக்கு இந்தச் சாபத்தைக் கொடுத்து விட்டு அவன் அந்த இடத்தைவிட்டு அகன்று வேறு இடத்திற்கு வெகு வேகமாகச் சென்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தேவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.(29) ஓ! பிருகுக்களில் சிறந்தவனே, தங்களுக்குச் செய்த தொண்டின் காரணமாகத் தவளைகள் அடைந்த பரிதாப நிலையைக் கண்ட தேவர்கள் அவற்றுக்கு அருள் புரிய விரும்பினார்கள். அது தொடர்பான அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன். ஓ! வலிய கரங்களைக் கொண்ட வீரா, நான் சொல்வதைக் கேட்பாயாக.

தேவர்கள், “அக்னியின் சாபத்தால் நாக்குகளை இழந்து, அதன் காரணமாகச் சுவை உணர்வு இல்லாதிருந்தாலும், பல்வேறு வகை வாக்குகளைச் சொல்ல இயன்றவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.(31) உணவு இல்லாமல், தன்னினைவு இல்லாமல், களைத்து, வற்றிப் போய், உயிரற்ற ஒன்றைப் போலப் பொந்துகளுக்குள் வாழ்ந்தாலும், பூமி உங்கள் அனைவரையும் தாங்கிக் கொள்ளும் {ஆதரிக்கும்}.(32) இரவு நேரத்திலும், அனைத்தும் அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்தாலும் உங்களால் உலவ இயலும்” என்றனர்.

தவளைகளிடம் இதைச் சொன்ன தேவர்கள், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட தேவனைக் கண்டுபிடிக்கப் பூமியின் ஒவ்வொரு பகுதிக்கும் மீண்டும் செல்லத் தொடங்கினர். எனினும், அவர்களது முயற்சிகள் அனைத்திற்கும் பிறகும் அவர்கள் அவனை அடையத் தவறினார்கள்.(33)

அப்போது, ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, சக்ரனின் யானையின் அளவுக்குப் பெரியதும், வலிமைமிக்கதுமான மற்றொரு யானை, தேவர்களிடம், “அக்னி இப்போது அரச மரத்திற்குள் வசித்து வருகிறான்” என்றது.(34)

ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, சினத்தால் தூண்டப்பட்ட அக்னி, யானைகள் அனைத்தையும் சபிக்கும் வகையில், “உங்கள் நாவுகள் தலைகீழாக மாறிப் போகட்டும்” என்றான்.(35)

யானைகளால் சுட்டிக்காட்டப்பட்ட நெருப்பின் தேவன் இவ்வாறே யானைகள் அனைத்தையும் சபித்துவிட்டு, சில காலம் வன்னி மரத்தில் வசித்திருக்கலாம் என்றெண்ணி அதன் இதயத்திற்குள் நுழைந்தான்.(36) ஓ! பலமிக்க வீரா, ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, யானைகளின் பிரதிநிதி ஒன்று செய்த தொண்டில் நிறைவடைந்தவர்களும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான தேவர்கள் யானைகளுக்குக் காட்டிய அருளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(37)

தேவர்கள், “யானைகளே, மாறிப் போன இந்நாவைக் கொண்டே அனைத்தையும் உண்பீர்கள். இந்த நாவுகளைக் கொண்டே தெளிவற்ற உரத்த குரலைக் கொடுக்க இயன்றவையாக இருப்பீர்கள்” என்றனர்.(38)

இவ்வாறு யானைகளுக்கு அருள் வழங்கிய சொர்க்கவாசிகள் மீண்டும் அக்னியைத் தேடிச் சென்றனர். உண்மையில், அரச மரத்தைவிட்டுவெளியே வந்த நெருப்பின் தேவன் வன்னி மரத்தின் இதயத்திற்குள் நுழைந்தான்.(39) அக்னியின் இந்தப் புதிய வசிப்பிடத்தையும் ஒரு கிளி வெளிப்படுத்தியது. தேவர்கள் அந்த இடத்திற்குச் சென்றார்கள். கிளியின் நடத்தையில் சினம் மூண்ட சுடர்மிக்கத் தழல்களின் தேவன் {அக்னி}, மொத்த கிளி இனத்தையும் சபிக்கும் வகையில், “இந்நாள் முதல் நீங்கள் பேசும் சக்தியை இழப்பீர்கள்” என்றான்.(40)

உண்மையில், வேள்வி ஆகுதிகளை உண்பவனால் கிளிகள் அனைத்தின் நாவுகளும் புரட்டப்பட்டன. கிளியால் சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் அக்னியைக் கண்டு, அதன் மீது விதிக்கப்பட்ட சாபத்தையும் கண்ட தேர்கள், அந்தப் பாவப்பட்ட உயிரினத்திடம் கருணை கொண்டு,(41) “நீ கிளியாக இருப்பதன் விளைவால், உன் பேச்சு சக்தி முழுவதையும் இழக்க மாட்டாய். உன் நாவு புரட்டப்பட்டிருந்தாலும், கி என்ற எழுத்துடன் கூடிய பேச்சைக் கொண்டிருப்பாய்.(42) ஒரு குழந்தையையோ, ஒரு முதியவரையோ போன்று உன் பேச்சு இனிமையாகவும், தெளிவில்லாமலும், அற்புதமாகவும் இருக்கும்” என்றனர்.

கிளியிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு, வன்னி மரத்தின் இதயத்திற்குள் இருக்கும் நெருப்பின் தேவனைக் கண்ட தேவர்கள்,(43) அஃதை அறச்சடங்குகள் அனைத்திலும் நெருப்புண்டாக்குவதற்கான புனித விறகாக்கினர். அந்தக் காலத்தில் இருந்துதான் வன்னி மரத்திற்குள் வசிக்கும் வகையில் நெருப்பு காணப்படுகிறது.(44) மனிதர்கள், (வேள்விகளில்) நெருப்புண்டாக்குவத்றகு முறையான வழிமுறையாக வன்னிமரத்தையே கருதுகின்றனர். பாதாள லோகத்தில் உள்ள தண்ணீரும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.(45) ஓ! பிருகு குலத்தவனே, அந்தக் கொதி நீரே, மலையூற்றுகளில் கக்கப்படுகிறது. அக்னி அதில் சில காலம் வசித்ததன் விளைவால் அவனது சக்தியின் மூலம் அவை வெப்பமடைந்தன.(46)

அதே வேளையில் அக்னி, தேவர்களைக் கண்டு வருந்தினான். அவன் தேவர்களிடம், “என்ன காரணத்திற்காக இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டான். தேவர்களும், பெரும் முனிவர்களும் அவனிடம், “நாங்கள் உன்னை ஒரு குறிப்பிட்ட பணியில் நிறுவ விரும்புகிறோம். அதை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(48) அதைச் செய்வதனால் உனக்கும் மிகப் பெரிய நன்மை உண்டாகும்” என்றனர்.(49)

அக்னி, “உங்கள் காரியம் என்ன என்பதை எனக்குச் சொல்லுங்கள். தேவர்களே நான் அதை நிறைவேற்றுவேன். நீங்கள் விரும்பும் எந்தக் காரியத்திலும் நிறுவப்படவே எப்போதும் நான் விரும்புகிறேன். எனவே தயங்காமல் ஆணையிடுவீராக” என்றான்.(50)

தேவர்கள், “பிரம்மனிடம் பெற்ற வரத்தின் விளைவால் செருக்கால் நிறைந்திருப்பவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அசுரன் இருக்கிறான். அவனது சக்தியின் மூலம் அவன் எங்களை ஒடுக்கிப் பீடிக்கிறான். அவனது அழிவை நீ விதிக்க வேண்டும்.(51) ஓ! ஐயா, ஓ! உயர் அருளைக் கொண்ட பாவகா, இந்தத் தேவர்களையும், பிரஜாபதிகளையும், முனிவர்களையும் நீ காப்பாயாக.(52) ஓ! பலமிக்கவனே, ஓ! வேள்வி ஆகுதிகளைச் சுமப்பவனே, அந்த அசுரனிடமுள்ள எங்கள் அச்சங்களை எல்லாம் விலக்கக்கூடியவனும், உன் சக்தியுடன் கூடியவனுமான ஒரு வீர மகனைப் பெறுவாயாக.(53) நாங்கள் பெருந்தேவியான உமையால் சபிக்கப்பட்டிருக்கிறோம். உன் சக்தியைவிட எங்களுக்குப் புகலிடம் வேறேதும் இல்லை. எனவே, ஓ! பலமிக்கத் தேவா, எங்கள் அனைவரையும் நீ காப்பாயாக” என்றனர்.(54) இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறப்புமிக்கவரும், வேள்வி ஆகுதிகளைச் சுமப்பதில் தடுக்கப்பட முடியாதவனுமான அவன்{அக்னி}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி பாகீரதி என்ற வேறு பெயரால் அழைக்கப்படும் கங்கைக்குச் சென்றான்.(55)

அக்னியானவன், அவளோடு (ஆன்மக்) கலவி புரிந்து, அவளைக் கருவுறச் செய்தான். உண்மையில் (விறகும் ஊட்டப்பட்டு, காற்றின் துணையும் இருக்கும் போது) அக்னி வளர்வதைப் போலவே அக்னியின் வித்தும் கங்கையின் கருவறைக்குள் வளரத் தொடங்கியது.(56) அந்தத் தேவனின் சக்தியால் கங்கையின் இதயம் மிகவும் கலக்கமடைந்தது. உண்மையில், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் பெரும் துன்பத்தை அனுபவித்தாள்.(57) சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட தேவன், பெருஞ்சக்தி கொண்ட தன் வித்தைக் கங்கையின் கருவறைக்குள் விடும்போது, ஒரு குறிப்பிட அசுரன் (தன் சொந்த காரியம் எதற்காகவோ) அச்சுறுத்தும் வகையில் முழக்கமிட்டான்.(58) (அவளை அச்சுறுத்துவதற்காக அல்லாமல்) தன் சொந்த காரியத்திற்காக அந்த அசுரனால் வெளியிடப்பட்ட அச்சுறுத்தும் முழக்கத்தால், மிகவும் கலக்கமடைந்த கங்கையின் கண்கள் அச்சத்தால் உருளத் தொடங்கின, அவளது கலக்கத்தை வெளிப்படுத்தின.(59) தன்னினைவை இழந்த அவள், தன் உடலையும், தன் கருவறைக்குள் உள்ள வித்தையும் தாங்கிக் கொள்ள முடியாதவளானாள். சிறப்புமிக்கத் தேவனின் சக்தியால் கருவூட்டப்பட்டிருத ஜானுவின் மகள் {கங்கை} நடுங்கத் தொடங்கினாள்.(60)

ஓ! கல்விமானான பிராமணா {பரசுராமா}, அவள் தன் கருவறையில் சுமக்கும் வித்தின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சுடர்மிக்க நெருப்பின் தேவனிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, என்னால் இனியும் உமது வித்தை என் கருவறையில் சுமக்க முடியாது.(61) உண்மையில், உமது வித்தின் மூலம் நான் மிகவும் பலவீனமடைந்திருக்கிறேன். முன்பிருந்த உடல்நலம் இப்போதில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! பாவமற்றவரே, மிகவும் கலக்கமடைந்திருக்கும் எனது இதயம் எனக்குள் இறந்தேவிட்டது.(62) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, இன்னியும் என்னால் உமது வித்தைச் சுமக்க முடியாது. எனக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தின் காரணமாகவே நான் அதை விடப்போகிறேனேயன்றி உறுதியின்மையால் அல்ல.(63) ஓ! சுடர்மிக்கத் தழல்களின் சிறப்புமிக்கத் தேவா, உண்மையில் உமது வித்துடன் என் மேனி தொடர்பில் இல்லை. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, நமது கலவி, தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக நுட்பமாக நேர்ந்ததே அன்றி, சதைக்காக அல்ல.(64) ஓ! வேள்வி ஆகுதிகளை உண்பவரே, (நான் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட) இந்தச் செயலால் கிட்டும் பலனெதுவும் உம்மையே சேர வேண்டும். உண்மையில், இச்செயலின் அறமோ, மறமோ உம்மையே சாரவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றாள்.(65)

நெருப்பின் தேவன், அவளிடம், “என் வித்தைச் சுமப்பாயாக. உண்மையில், என் சக்தியுடன் கூடிய கருவைச் சுமப்பாயாக. அது பெரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.(66) நீ மொத்த பூமியையும் தாங்கிக் கொள்ளக் கூடியவளாவாய். இந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ளாததன் மூலம் உனக்கு எதுவும் கிடைக்காது” என்றான்.(67)

நெருப்பின் தேவனாலும், வேறு தேவர்களாலும் அறிவுறுத்தப்பட்டாலும் ஓடைகளில் முதன்மையான அவள் {கங்கை}, மலைகள் அனைத்திலும் முதன்மையான மேருவின் சாரலில் அந்த வித்தை விட்டாள்.(68) (ஏதோ வகையில்) அந்த வித்தைத் தாங்கிக் கொள்ள முடிந்தாலும், (அக்னியும், ருத்திரனும் ஒன்றென்பதால்) ருத்திரனின் சக்தியால் ஒடுக்கப்பட்ட அவளால், எரியும் சக்தியின் விளைவால் அந்த வித்தை அதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(69)

ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பெருந்துன்பத்துக்குப் பிறகு நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தச் சுடர்மிக்க வித்தை அவள் கைவிட்ட பிறகு, அக்னி அவளைக் கண்டு,(70) அந்த ஓடைகளில் முதன்மையானவளிடம், “நீ கைவிட்ட கரு நலமாக இருக்கிறதா? ஓ! தேவி, அஃது எந்த நிறத்தில் இருந்தது? அஃது என்ன வடிவத்தில் தெரிந்தது? அஃது எத்தகைய சக்தியைக் கொண்டிருந்தது? அதைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(71)

கங்கை {அக்னியிடம்}, “அந்தக் கரு தங்க நிறத்தில் இருந்தது. ஓ! பாவமற்றவனே, அதன் சக்தியில் உம்மைப் போல இருந்தது. முற்றிலும் களங்கமற்றதாக, சுடர்மிக்கக் காந்தியுடனும், சிறந்த நிறத்துடனும் கூடிய அது மொத்த மலையையே ஒளியூட்டியது.(72) ஓ! தவசிகள் அனைவரிலும் முதன்மையானவரே, அதன் மணம் தாமரைகளும், நெய்தல்களும் உள்ள மடுக்களின் மணம் போலவும், கடப்ப மலர்களின் மணம் போலவும் குளிர்ச்சியாக இருந்தது.(73) சூரியனின் கதிர்களின் மூலம், மலையில் உள்ள பொருட்களும், தாழ்நிலமும் பொன்னாக மாறுவதாகத் தோன்றுவதைப் போலவே அந்தக் கருவைச் சுற்றிலும் இருந்த அனைத்தும் அதன் காந்தியால் தங்கமாக மாறிவிட்டதாகத் தெரிந்தது.(74) உண்மையில், அந்தக் கருவின் காந்தியானது, மலைகளிலும், ஆறுகளிலும், ஊற்றுகளிலும் வெகு தொலைவுக்குப் பரவியிருக்கிறது.(75) உண்மையில், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகங்களும் அதன் மூலம் ஒளியூட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஓ! வேள்வி ஆகுதிகளைச் சுமக்கும் சிறப்புமிக்கவரே, உமது பிள்ளை இவ்வகையிலேயே இருக்கிறான்.(76) சூரியனையோ, சுடர்மிக்க உம்மைப் போன்றோ, அழகில் இரண்டாம் சோமனைப் போன்றோ அவன் இருக்கிறான்” என்றாள் {கங்கை}. இச்சொற்களைச் சொன்ன அந்தத் தேவி அங்கேயே, அப்போதே மறைந்து போனாள்.(77)

ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, பெருஞ்சக்தியைக் கொண்டவனான பாவகனும் {அக்னியும்}, தேவர்களின் காரியத்தை நிறைவேற்றிவிட்டு தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டான்.(78) இச்செயலின் விடைக்கான விளைவாலேயே முனிவர்களும், தேவர்களும், நெருப்பின் தேவனுக்கு ஹிரண்யரேதஸ் என்ற பெயரை அளித்தனர்[1].(79) (கங்கைக் கைவிட்ட பிறகு) அந்த வித்தைப் பூமி தாங்கிய காரணத்தால் அவளும் வசுமதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்.[2] அதேவேளையில், பாவகனிடம் இருந்து பிறந்து, குறிப்பிட்ட காலம் கங்கையால் தாங்கப்பட்டு,(80) நாணற்காட்டில் விழுந்த அந்தக் கருவானது, வளரத் தொடங்கி இறுதியாக ஓர் அற்புத வடிவை அடைந்தது. கிருத்திகை நட்சத்திரத்திற்குத் தலைமை தாங்கும் தேவி எழுஞாயிறுக்கு ஒப்பான அந்த வடிவைக் கண்டாள்.(81) அது முதல் அவள் தன் முலையை உண்ணக் கொடுத்து தன் மகனாகவே அந்தப் பிள்ளையை வளர்க்கத் தொடங்கினாள். இந்தக் காரணத்தினாலேயே சிறந்த காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை அவளது பெயரைக் கொண்டு கார்த்திகேயன் என்று அழைக்கப்படலானான்.(82) ருத்திரனின் உடலில் இருந்து வெளிய விழுந்த வித்தில் இருந்து அவன் வளர்ந்ததால், அவன் ஸ்கந்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். அவனது பிறப்புச் சம்பவம் தனிமையான நாணற்காட்டில் அனைவரின் பார்வைக்கும் மறைவில் நடந்ததால் அவன் குஹன் என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.

இவ்வழியிலேயே சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய வாரிசாகவே தங்கம் இருப்புக்கு வந்தது[3].(83) எனவே அந்தத் தங்கமே பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகக் காணப்பட்டு, தேவர்களின் ஆபரணங்களானது. இந்தச் சூழ்நிலையில் இருந்து அந்தத் தங்கம், ஜாதரூபம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[4].(84) விலைமதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகவும், ஆபரணங்களுக்கு மத்தியில் முதன்மையானதாகவும் அது {தங்கம்} இருக்கிறது. தூய்மைப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் அதிகத் தூய்மைப்படுத்துவதும், மங்கலப் பொருட்கள் அனைத்திலும் அதிக மங்கலமானதாகவும் அஃது இருக்கிறது. தங்கமானது, அனைத்தின் தலைவனும், பிரஜாபமதிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அக்னியே ஆகும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, புனிதப் பொருட்கள் அனைத்திலும் அதிகப் புனிதம் வாய்ந்தது தங்கமே. உண்மையில் தங்கமானது, அக்னி மற்றும் சோமனின் சாரத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது” {என்றார் வசிஷ்டர்}.(86)

பிருகு, அங்கிரஸ், கவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 85ஆ-பிரம்மனின் வேள்வியில் பிறந்தவர்கள்; மஹாதேவனின் மகனான பிருகு; அக்னியின் மகனான அங்கிரஸ்; பிரம்மனின் மகனான சுக்கிரன்; பிருகு, அங்கிரஸ் மற்றும் சுக்கிர சந்ததிகள்; பொற்கொடையளிப்பவர்கள் அடையும் கதி…

வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், “ஓ! ராமா, பரமாத்மாவோடு அடையாளம் காணப்படும் பெரும்பாட்டனின் சாதனை குறித்த பிரம்ம தரிசனம் என்றழைக்கப்படும் இவ்வரலாற்றை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(87) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, தேவர்களில் முதன்மையானவனும், அச்சந்தர்ப்பத்தில் வருணனின் வடிவை ஏற்றவனுமான தலைவன் ருத்திரன் பழங்காலத்தில் செய்த வேள்விக்கு(88) அக்னியைத் தலைமையாகக கொண்ட தேவர்களும் முனிவர்களும் வந்தனர். (உடல்வடிவத்துடன் கூடிய) வேள்வி அங்கங்கள் அனைத்தும், உடல்வடிவத்துடன் கூடிய வஷத் என்றழைக்கப்படும் மந்திரமும் அந்த வேள்விக்கு வந்தன.(89) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான சாமங்களும், யஜுஸ்களும் தங்கள் உடல்வடிவத்துடன் அங்கே வந்தன. சொற்களை உச்சரிக்கும் வதிகளால் அலங்கரிக்கப்பட்ட ரிக் வேதமும் அங்கே வந்தது.(90) லக்ஷணங்கள், ஸ்வரங்கள், ஸ்தோபங்கள், நிருக்தங்கள், ஸ்வரங்களின் வகைகள், ஓங்கார அசை, நிக்ரகம், பிரக்கிரகம் ஆகியவை அனைத்தும் மஹாதேவனின் கண்களில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டன.(91) உபநிஷத்துகள், வித்யை, சாவித்திரி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை அனைத்தும் அங்கே வந்து சிறப்புமிக்கச் சிவனால் ஆதரிக்கப்பட்டன.(92)

அனைவரிலும் பலமிக்க அத்தலைவன் {சிவன்} அப்போது தனக்குள் தானே ஆகுதிகளை ஊற்றினான். உண்மையில், பிநாகைபாணி பலவகை வடிவங்களைக் கொண்ட அந்த வேள்வியை அழகானதாகத் தெரியச் செய்தான்.(93) சொர்க்கம், ஆகாயம், பூமி, வானம் அவனே. அவன் பூமியின் தலைவன் என அழைக்கப்படுகிறான். தடங்கல்கள் அனைத்தையும் ஆளும் தலைவன் அவனே. அவன் ஸ்ரீயுடன் கூடியவன், மேலும் அவன் சுடர்மிக்கத் தழல்களின் தேவனோடு {அக்னியோடு} அடையாளம் காணப்படுகிறான்.(94) அந்தச் சிறப்புமிக்கத் தேவன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான். பிரம்மன், சிவன், ருத்திரன், வருணன், அக்னி, பிரஜாபதி ஆகியோரும் அவனே. அவனை உயிரினங்கள் அனைத்தின் மங்கலத் தலைவனாவான்.(95) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, (உடல்வடிவம் கொண்ட) வேள்வி, தவம், கலவிச் சடங்குகள், கடும் நோன்புகளுடன் சுடர்விடும் திக்ஷா தேவி, பல்வேறு திசைப்புள்ளிகள் மற்றும் அவற்றைத் தலைமை தாங்கும் தேவர்கள், அவர்களின் மகள்கள், தெய்வீக அன்னையர் ஆகியோர் அனைவரும் ஒரே திரளாக ஒன்றாகப் பசுபதியிடம் வந்தனர்.(96,97)

உண்மையில் வருணனின் வடிவத்தை ஏற்றிருந்த உயர் ஆன்ம மஹாதேவனின் வேள்வியைக் கண்ட அவர்கள் அனைவரும் மிகவும் நிறைவடைந்திருந்தனர். பேரழகுடன் கூடிய தெய்வீகக் காரிகையரைக் கண்டு பிரம்மனின் வித்து வெளியேறி பூமியில் விழுந்தது.(98) அந்த வித்துப் புழுதியில் விழுந்ததன் விளைவால், பூஷன் (சூரியன்), அந்தவித்தின் துகள்களோடு கலந்த மண்ணைத் தன் கையால் பூமியில் இருந்து எடுத்து வேள்வி நெருப்புக்குள் விட்டான்.(99) அதே வேளையில், சுடர்மிக்கத் தழல்களுடனும், புனித நெருப்புடனும் கூடிய வேள்வி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. (ஹோத்ரியாக) பிம்மன் நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்தான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும்பாட்டன் ஆசையால் தூண்டப்பட்டான் (எனவே அவனது வித்து வெளிவந்தது).(100) ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, அந்த வித்து வெளிவந்ததும், வேள்விக் கரண்டியில் அதை எடுத்த அவன், சுடர்மிக்க நெருப்பில் தேவையான மந்திரங்களுடன் ஆகுதி நெய்யாக அஃதை ஊற்றினான்.(101) பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் அந்த வித்திலிருந்தே நான்கு வகை உயிரினங்களை இருப்புக்குள் எழச் செய்தான். பெரும்பாட்டனின் வித்தானது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களுடன் கூடியதாக இருந்தது. அதில் உள்ள ரஜஸ் குணத்திலிருந்து பிரவிருத்தி, அல்லது செயற்கோட்பாட்டுடன் கூடிய அசையும் உயிரனங்கள் அனைத்தும் உண்டாகின.(102) தமஸ் குணத்திலிருந்து அசைவற்ற உயிரினங்கள் அனைத்தும் தோன்றின. எனினும், அந்தவித்துக்குள் வசித்த சத்வ குணம் இரு வகை இருப்புகளுக்குள் நுழைந்தது. அந்தச் சத்வ குணம், தேஜஸ் அல்லது ஒளியின் இயல்பாக (புத்தியுடன் அடையாளங் காணப்படுவதா) இருக்கிறது[5].(103)அனைத்து உயிரினங்களிலும் உள்ள சத்வ குணமானது, எது சரி, எது தவறு என்பதைக் காட்டும் ஒளியோடு அடையாளம் காணப்படுகிறது. பிரம்மனின் வித்தானது இவ்வாறு வேள்வி நெருப்பில் ஆகுதியாக ஊற்றப்பட்ட போது, ஓ! வலிமைமிக்கவனே, அதிலிருந்து மூவர் இருப்புக்குள் எழுந்தனர்.(104) தத்தமது காரணங்களினால் வந்த குணங்களைக் கொண்டவர்களும், சிறந்த உடல்களைக் கொண்டவர்களுமாக மூன்று ஆண்கள் {புருஷர்கள்} உண்டானார்கள். (பிரிக் என்றழைக்கப்படும்) நெருப்பின் தழல்களில் இருந்து முதலில் எழுந்ததன் காரணமாக ஒருவர் பிருகு என்ற பெயரில் அழைக்கப்பட்டார். (அங்காரம் என்றழைக்கப்படும்) எரியும் கரித்துண்டிலிருந்து {தணலிலிருந்து} இரண்டாமவர் வந்ததால் அவர் அங்கிரஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.(105) அணைந்த கரித்துண்டு குவியலில் இருந்து {தணலின் ஒளியிலிருந்து} மூன்றாமவர் வந்ததால், கவி {சுக்கிராச்சாரியர்} என்ற பெயரில் அவர் அழைக்கப்பட்டார். உடலில் இருந்து தழல்கள் வெளிப்பட முதலில் வந்தவர் பிருகு என்றழைக்கப்பட்டார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.(106)

வேள்வி நெருப்பின் கதிர்களில் இருந்து மரீசி என்ற மற்றொருவரும் எழுந்தார். மரீசியில் இருந்து (பின்னர்) கசியபர் எழுந்தார். (எரியும்) கரித்துண்டில் இருந்து அங்கிரஸ் எழுந்தார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அந்த வேள்வியில் பரப்பப்பட்டிருந்த குசப்புற்களில் {தர்ப்பைகளில்} இருந்து வாலகில்யர்கள் என்றழைக்கப்படும் (மிகக் குறுகியவர்களான) முனிவர்கள் உண்டாகினர். ஓ! பெரும்பலம் கொண்டவனே, அதே குசப்புற்களில் {தர்ப்பைகளில்} இருந்தே அத்ரி உண்டானார். நெருப்பின் சாம்பலில் இருந்து, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், சிறந்த சாதனைகள் அனைத்தும் கொண்டவர்களும், மறுபிறப்பாள முனிவர்களுமான வைகானசர்கள் தோன்றினர்.(108,109) அக்னியின் கண்களில் இருந்து பேரழகு மேனியுடன் அசுவினி இரட்டையர்கள் தோன்றினர். இறுதியாக அவனது காதுகளில் இருந்து பிரஜாபதிகள் அனைவரும் தோன்றினர்.(110)

அக்னியுடைய உடலின் மயிர்க்கால்களில் {வியர்வைத் துளைகளில்} இருந்து முனிவர்கள் உண்டாகினர். அவனது வியர்வையில் இருந்து சந்தங்களும் {வேதங்களும்}, அவனது பலத்திலிருந்து மனமும் உண்டாகின. இதன் காரணமாகவே அக்னியானவன், அனைத்துத் தேவர்களும் ஒன்றுதிரண்ட வடிவம்(11) என வேதமறிந்த முனிவர்களால் வேத அதிகாரத்தின் வழிகாட்டுதற்படி சொல்லப்படுகிறான். அக்னியின் தழல்களை உயிருடன் வைத்திருக்கும் மரத்துண்டுகள் மாதங்களாகக் கருதப்படுகின்றன. விறகு அளிக்கும் சாரம் பிறைநாட்களாக {பக்ஷங்களாக} அமைகின்றன.(112) அக்னியின் ஈரல் பகல் இரவு என்றழைக்கப்படுகிறது அவனது கடும் ஒளி முஹுர்த்தங்களாக அழைக்கப்படுகின்றன. அக்னியின் குருதியே ருத்திரர்களின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகிறது. அவனது குருதியில் இருந்து மைத்ரதேவதைகள் என்ற தங்க நிறம் கொண்ட தேவர்கள் உண்டாகிறார்கள்[6].(113) அவனது புகையில் இருந்து வசுக்கள் உண்டாகினர். அவனது தழல்களில் இருந்து ருத்திரர்களும், பிரகாசத்துடன் கூடிய (பனிரெண்டு) ஆதித்தியர்களும் உண்டாகினர்.(114) ஆகாயத்தில் நிறுவப்பட்டுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் பிற விண்மீன்கள் ஆகியவை அக்னியின் (எரியும்) கரித்துண்டுகளாகக் கருதப்படுகின்றன. அண்டத்தை முதலில் படைத்தவன் அக்னியையே பரப்பிரம்மமாகவும், நித்தியமானவனாகவும், அனைத்து விருப்பங்களையும் அருள வல்லவனாகவும் அறிவித்தான்.(115) இஃது உண்மையில் ஒரு புதிராகும்.இந்தப் பிறவிகள் அனைத்தும் உண்டான பிறகு, (வேள்விக்காக) வருண வடிவத்தை ஏற்றிருந்த மஹாதேவன், பவனனைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனிடம்,(116) “இந்தச் சிறந்த வேள்வி என்னுடையதாகும். நானே இதன் கிரஹபதி. வேள்வி நெருப்பில் இருந்து முதலில் உண்டான மூவரும் என்னுடையவராவர். அவர்கள் என் வாரிசுகளாகக் கருதப்படுவர் என்பதில் ஐயமில்லை. வானை அதிகாரம் செய்யும் தேவர்களே இஃதை அறிவீராக. அவர்கள் இவ்வேள்வியின் கனிகளாவர் {பயன்களாவர்}” என்றான் {சிவன்}.(117)

அக்னி, “இந்த வாரிசுகள் என் அங்கங்களில் இருந்து பிறந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உயிர்பெற என்னையே சார்ந்திருக்கின்றனர். எனவே, அவர்கள் என் பிள்ளைகளாகவே கருதப்பட வேண்டும். வருணனின் வடிவில் உள்ள மஹாதேவன் இக்காரியத்தில் பிழை செய்கிறான்” என்றான்.(118)

இதன்பிறகு, “உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும், உலகங்கள் அனைத்தின் தலைவனுமான பிரம்மன், “இவர்கள் என் பிள்ளைகளாவர். வேள்வி நெருப்புக்குள் ஊற்றபட்ட வித்து என்னுடையதாகும்.(119) நானே இவ்வேள்வியை நிறைவேற்றியவன். என்னில் இருந்து வெளிவந்த வித்தை வேள்வி நெருப்புக்குள் ஊற்றியவன் நானே. கனியானது, எப்போதும் வித்தை நட்டு வைத்தவனுக்கே உரியதாகும். என்னுடைய வித்தே இந்த மூவரின் பிறப்புக்கு அடிப்படைக் காரணமாகும்” என்றான்.(120)

பெரும்பாட்டனிடம் சென்ற தேவர்கள், தலைவணங்கி, மதிப்புடன் கைகூப்பியவாறு அவனிடம்,(121) “ஓ! சிறப்புமிக்கவரே, நாங்கள் அனைவரும், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் உம் வாரிசுகளே ஆவோம். ஓ! ஐயா, (வாரிசு குறித்த காரியத்தில்) சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட அக்னி,(122) சிறப்பும் பலமும்மிக்க மஹாதேவன் ஆகியோரின் விருப்பங்கள் நிறைவேறட்டும்” என்றனர்.

இந்த வார்த்தைகளின் மூலம், சூரியப் பிரகாசத்துடன் கூடியவரும், முதலில் பிறந்தவருமான பிருகு, பிரம்மனுக்குப் பிறந்தவராகவே இருந்தாலும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் ஆட்சியாளனும், வருண வடிவில் இருந்தவனுமான பலமிக்க மஹாதேவனே அவரை {பிருகுவைத்} தன் சொந்த பிள்ளையாகப் பெற்றுக் கொண்டான். பிறகு பெரும்பாட்டன் {பிரம்மன்} அங்கிரஸ் அக்னியின் மகனாக வேண்டும் என நினைத்தான்.(123,124) அனைத்து உண்மைகளை அறிந்த பெரும்பாட்டன் பிறகு கவியை {சுக்கிரரைத்} தன் மகனாக எடுத்துக் கொண்டான். பூமியில் மக்கள் பெருகுவதற்காக உயிரினங்களை உண்டாக்கும் காரியத்தில் ஈடுப்பட்டவரும், பிரஜாபதிகளில் ஒருவராகக் கருதப்படுபவருமான பிருகு, அதுமுதல் வருணனின் வாரிசாக {வாருணி என்று} அழைக்கப்பட்டார்.(125) அனைத்து செழிப்பையும் கொண்ட அங்கிரஸ் அக்னியின் வாரிசாக {ஆக்னேயர் என்று} அழைக்கப்பட்டார், கொண்டாடப்படும் கவி {சுக்கிரன்} பிரம்மனின் பிள்ளையாக அறியப்பட்டார். முறையே அக்னியின் தழல்கள் மற்றும் கரித்துண்டுகளில் இருந்து உண்டான பிருகுவும், அங்கிரஸும் உலகில் பேரினங்களையும் குலங்களையும் உண்டாக்கியவர்களானார்கள்.(126) உண்மையில், பிருகு, அங்கிரஸ் மற்றும் கவி ஆகியோரே பிரஜாபதிகளாகவும், பல குலங்கள் மற்றும் இனங்களை உண்டாக்கியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அனைவரும் இம்மூவரின் பிள்ளைகளே. ஓ! பலமிக்க வீரா, இஃதை அறிவாயாக.(127)

பிருகு தமக்கு இணையான தகுதிகளையும், சாதனைகளையும் கொண்ட ஏழு மகன்களைப் பெற்றார். சியவனர், வஜ்ரசீர்ஷர், சுசி, ஔர்வர்,(128) வரமளிக்கும் சுக்ரர், விபு {வரேண்யர்}, ஸவனர் என்பதே அவர்கள் பெயர்கள். இவர்கள் எழுவர். அவர்கள் பிருகுவின் பிள்ளைகளாதலால் பார்க்கவர்களாவார்கள். அவர்கள் தங்கள் மூதாதையான பிருகு, வருண வடிவில் இருந்த மஹாதேவனால் தத்தெடுக்கப்பட்டதால் வாருணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பிருகு குலத்தைச் சேர்ந்தவர்களாவர்.(129)

அங்கிரஸ் எட்டு மகன்களைப் பெற்றார். அவர்களும் வாருணர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள் பிருஹஸ்பதி, உதத்தியர் {உசத்தியர்}, வயஸ்யர், சாந்தி,(130) தீரர் {கோரர்}, விருபர், ஸம்வர்த்தர், எட்டாவதாக ஸுதன்வா என்ற பெயர்களைக் கொண்டவராவர். இந்த எண்மரும் அக்னியின் வாரிசுகளாகக் கருதப்படுகின்றனர். அனைத்துத் தீமைகளில் இருந்து விடுபட்ட அவர்கள் அறிவுக்கு மட்டுமே அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.(131)

பிரம்மனால் எடுத்துக் கொள்ளப்பட்ட கவியின் மகன்களும் வாருணர்கள் என்ற அறியப்படுகிறார்கள். எண்ணிக்கையில் எண்மரான அவர்கள் அனைவரும் (மணம்செய்து கொள்ளாமல் வாழும் வாழ்வை நோற்காமல்) இனங்களையும், குலங்களையும் உண்டாக்கினார்கள். இயல்பில் மங்கலர்களான இவர்கள் அனைவரும் பிரம்மத்தை அறிந்தவர்களாக இருந்தனர்.(132) கவியுடைய எட்டு மகன்களின் பெயர்கள், கவி, காவியர், திருஷ்ணு {விஷ்ணு}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட உசநஸ் {சுக்கிரர்}, பிருகு, விரஜர் {வருணன்}, காசி {காசியபர்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்த உக்ரர் {அக்னி} ஆகும்.(133) இவர்களே கவியின் எட்டு மகன்களாவர். இவர்களின் மூலமே மொத்த உலகத்திலும் மக்கள் பெருகினர். அவர்கள் அனைவரும் பிரஜாபதிகளாவர், அவர்களின் மூலமே பல சந்ததிகள் உண்டாக்கப்பட்டன.(134) ஓ! பிருகு குலத் தலைவா, இவ்வாறே மொத்த உலகமும், அங்கிரஸ், கவி மற்றும் பிருகுவின் சந்ததியால் பெருகியது.(135) ஓ! கல்விமானான பிராமணா, பலமிக்கவனும், வேள்விக்காக வருணனின் வடிவில் இருந்தவனும், பரமனுமான தலைவன் மஹாதேவனே முதலில் கவியையும், அங்கிரஸையும் தத்தெடுத்தவர். எனவே, அவர்கள் இருவரும் வருணனாகக் கருதப்படுகின்றனர்.(136) வேள்வி ஆகுதிகளை உண்பவனும், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்டவனுமான தேவன் அதன் பிறகே அங்கிரஸைத் தத்தெடுத்தான். எனவே, அங்கிரஸின் சந்ததி அக்னி குலத்திற்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது.(137)

பழங்காலத்தில் தேவர்கள், பெரும்பாட்டனான பிரம்மனை நிறைவடையச் செய்து, அவனிடம், “(பிருகு, அங்கிரஸ், கவி மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களைக் குறிப்பிட்டு) அண்டத்தின் தலைவர்களான இவர்கள் எங்கள் அனைவரையும் காக்கட்டும்.(138) அவர்கள் அனைவரும் (பூமியில் பெருகும்) வாரிசுகளை உண்டாக்குபவர்களாட்டும். அவர்கள் அனைவரும் தவம் செய்பவர்களாட்டும். உமது அருளால் இவர்கள் அனைவரும் (யாரும் வசிக்க முடியாத காடாகிவிடாமல்) உலகத்தைக் காக்கட்டும்.(139) இவர்கள் தங்கள் சக்தியால் பெரும் குலங்களையும், இனங்களையும் உண்டாக்கி சக்தியில் பெருகட்டும். இவர்கள் அனைவரும் வேதங்களின் ஆசான்களாகவும் பெரும் செயல்களைச் செய்பவர்களாகவும் ஆகட்டும். இவர்கள் அனைவரும் தேவர்களின் நண்பர்களாகட்டும். உண்மையில் இவர்கள் அனைவரும் மங்கலம் நிறந்திருக்கட்டும். இவர்கள் பெரும் இனங்களையும் குலங்களையும் நிறுவுபவர்களாகவும், பெரும் முனிவர்களாகவும் ஆகட்டும். பெரும் தவம் செய்பவர்களாகவும், உயர்ந்த பிரம்மச்சரியத்தில் அர்ப்பனிப்புமிக்கவர்களாகவும் ஆகட்டும்.(141) ஓ! பெரும் பலம் கொண்டவரே {பிரம்மாவே}, நாங்களும், இவர்கள் அனைவரும் உமது சந்ததியே. ஓ! பெரும்பாட்டனே, தேவர்களையும், பிராமணர்களையும் படைத்தவர் நீரே.(142) மரீசியே உமது முதல் வாரிசு. பார்க்கவர்கள் என்று அழைக்கப்படும் யாவரும் உமது சந்ததியே. (நாங்களும் அவ்வாறே ஆகிறோம்). ஓ! பெரும்பாட்டனே, இந்த உண்மையைக் கண்டு நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி ஆதரிப்போம்.(143) இவ்வழியில் இவர்கள் அனைவரும் தங்கள் சந்ததியைப் பெருக்கி, அண்ட அழிவுக்குப் பிறகு ஒவ்வொரு படைப்பின் போதும் உம்மை நிறுவட்டும்” என்றனர்.(144)

இவ்வாறு சொல்லப்பட்டவரும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான பிரம்மன், அவர்களிடம், “அவ்வாறே ஆகட்டும். நான் உங்கள் அனைவரிடமும் நிறைவடைந்தேன்” என்றார். தேவர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே சென்றான்.(145) பழங்காலத்தில், தேவர்களில் அனைவரிலும் முதன்மையானவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான வேள்விக்காரணத்திற்காக வருண வடிவத்தை ஏற்றிருந்தவனுமான மஹாதேவனின் வேள்வியில் இதுவே நடந்தது.(146) அக்னியே பிரம்மனாவான். அவனே பசுபதியுமாவான். அவன் சர்வனுமாவான். அவன் ருத்திரனுமாவான். அவன் பிரஜாபதியுமாவன்[7]. தங்கம் அக்னியின் வாரிசு என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(147) (வேள்வி காரியங்களுக்கு) நெருப்பு அடையப்பட முடியாத போது, தங்கம் அதற்கு மாற்றாக இருக்கிறது. வேத திறன்தேர்வின் மூலம் கொடுக்கப்படும் குறியீடுகளால் வழிநடத்தப்படுபவனும், அதிகாரங்களை அறிந்தவனும், நெருப்போடு தங்கம் அடையாளம் காணப்படுவதை அறிந்தவனுமான ஒருவன் இவ்வழியிலேயே செயல்படுவான்.(148)வேள்வி செய்பவன், தரையில் குசப்புற்களை {தர்ப்பங்களை} பரப்பி வைத்து விட்டு அதில் தங்கத்தை வைத்து, அதில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். எறும்புப்புற்றின் துளைகளிலும், வெள்ளாட்டின் வலக்காதிலும்,(149) சமமான தரைப்பகுதியிலும், தீர்த்தங்களின் நீரிலும், பிராமணன் கையிலும் ஆகுதிகள் ஊற்றப்பட்டால், அதனால் நிறைவடையும் சிறப்புமிக்க நெருப்பின் தேவன் {அக்னி}, தன் பெருக்கத்திற்காகவும், தன் மூலம் தேவர்கள் பெருக்கத்திற்காகவுமான ஆதாரமாக இதைக் கருதுவான்.(150) எனவேதான் தேவர்கள் அனைவரும் அக்னியைத் தங்கள் புகலிடமாகக் கொண்டு அவனிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் என நாம் கேள்விப்படுகிறோம். அக்னி பிரம்மனில் இருந்து உதித்தான், அக்னியில் இருந்து தங்கம் உதித்தது.(151) எனவே, பொற்கொடையளித்து அறம் நோற்கும் மனிதர்கள், தேவர்கள் அனைவரையும் கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(152) பொற்கொடை அளிக்கும் மனிதன் மிக உயர்ந்த கதியை அடைகிறான். சுடர்மிக்கப் பிரகாச உலகங்கள் அவனுடையவையாகும். உண்மையில், ஓ! பார்க்கவா, அவன் சொர்க்கத்தில் மன்னர்களுக்கு மன்னனாக நிறுவப்படுகிறான்.(153)

சூரியன் எழும்போது உரிய மந்திரங்களுடன் விதிப்படி பொற்கொடை அளிக்கும் மனிதன், கெட்ட கனவுகளால் முன்னறிவிக்கப்படும் தீய விளைவுகளை அகற்றுவதில் வெல்கிறான்.(154) சூரியன் எழுந்ததும் {முதல் சந்திப்பொழுதில்}, பொற்கொடை அளிக்கும் மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான். நடுப்பகலில் பொற்கொடை அளிப்பவன், எதிர்காலப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(155) இரண்டாம் சந்திப்பொழுதில் {மாலை வேளையில்} ஆன்ம அடக்கத்துடன் பொற்கொடை அளிக்கும் ஒருவன் பிரம்ம, வாயு, அக்னி, சோம தேவர்களுக்குரிய உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(156) அத்தகைய மனிதன் இந்திரனுக்கு உரிய பேரின்ப உலகங்களின் மங்கலப் புகழை ஈட்டுகிறான். இவ்வுலகில் பெரும்புகழை அடையும் அவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து இன்பத்திலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறான்.(157)

உண்மையில், அத்தகைய மனிதன் மகிழ்ச்சிகரமான உலகங்கள் பலவற்றை அடைந்து, புகழிலும், மகிமையிலும் ஒப்பற்றவனாகத் திகழ்கிறான். தடையற்ற பாதையைக் கொண்ட அவன், விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்வதில் வெல்வான்.(158) அவன் அடையும் உலகங்களில் இருந்து ஒருபோதும் விழ நேராமல், அவன் ஈட்டிய மகிமை பெரிதாகும். உண்மையில், பொற்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற இன்ப உலகங்களை அடைந்து நித்திய இன்பத்தை அனுபவிப்பான்.(159) சூரியன் எழும்போது நெருப்பை மூட்டி, ஒரு குறிப்பிட்ட நோன்பு நோற்கும் நோக்கில் பொற்கொடை அளிக்கும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(160) தங்கம் அக்னியோடு அடையாளங்காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, பொற்கொடை பேரின்பத்தை விளைவிக்கும். விரும்பப்படுபவையும், இதயத்தைத் தூய்மைப்படுத்துபவையுமான சாதனைகளும் பலன்களையும் அடைவதற்குப் பொற்கொடையானது வழிவகுக்கிறது.(161)

ஓ! பாவமற்றவனே, இவ்வாறு பொன்னின் தோற்றத்தைக் குறித்து உனக்குச் சொன்னேன். ஓ! பலமிக்கவனே, ஓ! பிருகு குலத்தைத் திளைக்கச் செய்பவனே, கார்த்திகேயன் எவ்வாறு வளர்ந்தான் என்பதை அறிவாயாக.(162) நீண்ட காலத்திற்குப் பிறகு கார்த்திகேயன் வளர்ந்தான். ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அதன் பிறகு அவன் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அனைவராலும் தேவ படையின் தளபதியாக {படைத்தலைவனாகத்} தேர்ந்தெடுக்கப்பட்டான்.(163) ஓ! பிராமணா, அவன் உலகங்கள் அனைத்திலும் நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுத் தேவர்களின் தலைவனுடைய ஆணையின் பேரில் தைத்தியன் தாரகனையும், அசுரர்கள் பலரையும் கொன்றான்.(164) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, பொற்கொடை அளிப்பதன் பலன்களைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன். எனவே, ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நீ பொற்கொடை அளிப்பாயாக” என்றார் {வசிஷ்டர்}”.(165)

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு வசிஷ்டரால் சொல்லப்பட்டவரும், பேராற்றல் கொண்டவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்குப் பொற்கொடை அளித்து, தம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தார்.(166) ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறே நான் பொற்கொடை குறித்த அனைத்தையும், பொன்னின் தோற்றம் குறித்தும் சொன்னேன்.(167) எனவே, நீ பிராமணர்களுக்கு அபரிமிதமாகப் பொற்கொடை அளிப்பாயாக. உண்மையில், ஓ! மன்னா, பொற்கொடையளிப்பதன் மூலம் நீ நிச்சயம் உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(168)

தாரக வதம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 86-குமரனுக்கு முலையுண்ணக் கொடுத்த கார்த்திகைப் பெண்கள்; தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் குமரனுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்கள்; தாரகன் கொல்லப்பட்டது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வேத கேள்வியில் குறிப்பிடப்படுவதும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடையதுமான பொற்கொடையால் உண்டாகும் பலன்களைக் குறித்து விரிவாகச் சொன்னீர்.(1) பொன்னின் தோற்றம் குறித்தும் நீர் சொன்னீர். இப்போது தாரகனின் அழிவு குறித்து எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, அந்த அசுரன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான் என நீர் சொன்னீர். அவனுடைய அழிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விரிவாக எனக்குச் சொல்வீராக.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, தாரகன் கொல்லப்பட்டதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன். அதைக் கேட்பதில் என் ஆவல் பெரிதாக இருக்கிறது” என்றான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, (தாரகனின் ஆற்றல் மூலமும், கங்கை அக்னியின் வித்தைக் கைவிட்ட நடத்தையின் மூலமும்) பெரும் துன்பத்தில் இருந்த தேவர்களும், முனிவர்களும், கிருத்திகை அறுவரிடமும் அந்தப் பிள்ளையை வளர்க்கத் தூண்டினர்.(5) தெய்வீக மங்கையரில் (அவர்களைத் தவிர வேறு) எவரும் அக்னியின் வித்தைத் தங்கள் கருவறையில் தாங்கும் சக்தி கொண்டவர்களாக இல்லை.(6) பெரும் சக்தி கொண்ட அக்னியின் வித்தைக் கைவிட்ட பிறகு அதைத் தாங்கத் தயாராக இருந்த அந்தத் தேவிகளிடம் நெருப்பின் தேவன் பெரும் நிறைவடைந்திருந்தான்.(7) ஓ! மன்னா, அக்னியின் சக்தி ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு (கருவறைக்குச் செல்லும்) வழியில் வைக்கப்பட்டபோது, கிருத்திகைகள் அறுவரும், தங்கள் கருவறையில் கொண்ட ஒவ்வொரு பகுதியையும் பேணி வளர்க்கத் தொடங்கினர்.(8)

எனினும், உயர் ஆன்மக் குமாரன் அவர்களின் கருவறைகளில் வளரத் தொடங்கியபோது, அவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்ட அவர்களது உடல்கள் (சொர்க்கத்திலோ, பூமியிலோ) எங்கும் அமைதியைக் காணத் தவறின.(9) அவர்களது உடல்களால் சக்தியால் நிறைக்கப்பட்டு ஈனும் காலமும் இறுதியாக வந்தது. ஓ! மனிதர்களின் இளவரசே, அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கருவை ஈன்றனர்.(10) ஆறு வெவ்வேறு கருவறைகளில் தாங்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதிகள் அனைத்தும் வெளியே வந்ததும் ஒன்றாகின. பூமாதேவி அப்பிள்ளையை, பொற்குவியலில் இருந்து எடுத்தாள்.(11) உண்மையில், சிறந்த வடிவத்தில் இருந்த அந்தப் பிள்ளை, நெருப்பின் தேவனை {அக்னியைப்} போலக் காந்தியுடன் சுடர்விட்டான். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், காண்பதற்கினிய நாணற்காடுகளில் வளரத் தொடங்கினான்.(12)

காந்தியில் காலைச் சூரியனைப் போல இருந்த அவர்களது பிள்ளையைக் கிருத்திகைகள் கண்டனர். அன்பால் நிறைந்தவர்களாக, உண்மையில் அவனிடம் அதிக அன்புடன் கூடிய அவர்கள் தங்கள் முலைகள் உண்ணக் கொடுத்து அவனை வளர்க்கத் தொடங்கினர்.(13) கிருத்திகைகளுக்குப் பிறந்து அவர்களாலேயே வளர்க்கப்பட்டதால் மூவுலகங்களிலும் அவன் கார்த்திகேயன் என்று அறியப்படலானான். ருத்திரனிடமிருந்து விழுந்த வித்தில் உதித்த அவன் ஸ்கந்தன் எனப் பெயரிடப்பட்டான், தனிமையான நாணற்காட்டில் பிறந்ததால் அவன் குஹன் (ரஹஸ்யமாகப் பிறந்தவன்) என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.(14) முப்பத்து மூன்று தேவர்கள், (உடல்வடிவங்களுடன் கூடிய) திசைப்புள்ளிகள், அவற்றுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {திக்பாலர்கள்}, ருத்திரன், தாத்ரி {தாதா}, விஷ்ணு, யமன், பூஷன், அர்யமன், பகன்,(15) அம்சன், மித்திரன், ஸாத்தியர்கள், வாசவன் {இந்திரன்}, வசுக்கள், அசுவினிகள், நீர், காற்று, ஆகாயம், சந்திரமாஸ், நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள், சூரியன்,(16] உடல்வடிவத்தோடு கூடிய ரிக், சாமம், யஜுஸ்கள் அனைத்தும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய {அக்னியுடைய} மகனான அந்த அற்புதமான பிள்ளையைக் காண அங்கே வந்தனர்.(17)

ஆறு தலைகளைக் கொண்டவனும், பனிரெண்டு கண்களைக் கொண்டவனும், பிராமணர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனும், குமாரன் என்றழைக்கப்படுபவனுமான அந்தப் பிள்ளையின் புகழை முனிவர்களும், கந்தர்வர்களும் பாடினர்.(18) அவனது தோள்கள் அகலமாக இருந்தன, அவனுக்குப் பனிரெண்டு கரங்கள் இருந்தன, அவனுடைய காந்தி நெருப்புக்கும், ஆதித்தியனுக்கும் ஒப்பானதாக இருத்தது. நாணற்புதரில் நீண்டு கிடக்கும் அக்குழந்தையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும்,(19) பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, அந்தப் பேரசுரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினர். தேவர்கள் அவனுக்கு உற்சாகமூட்ட பல்வேறு வகைகளிலான பொம்மைகளையும், பொருட்களையும் கொண்டு வந்தனர்.(20) அவன் குழந்தையைப் போல விளையாடியபோது, அவனுக்குப் பல்வேறு வகைப் பொம்மைகளும், பறவைகளும் கொடுக்கப்பட்டன. சிறந்த இறகுகளைக் கொண்டவனான கருடன், பலவண்ண தோகைகளை உடைய தன் பிள்ளையான மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(21)

ராட்சசர்கள் அவனுக்குப் பன்றியையும், எருமையையும் கொடுத்தனர். அருணன் அவனுக்கு, கடுங்காந்தியைக் கொண்ட சேவலொன்றைக் கொடுத்தான்.(22) சந்திரமாஸ் செம்மறியாட்டையும், ஆதித்தியன் தன் பளபளக்கும் கதிர்களையும் கொடுத்தனர். பசுக்கள் அனைத்தின் தாயான சுரபி அவனுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுத்தாள்.(23) அக்னி அவனுக்குப் பல நற்குணங்களைக் கொண்ட வெள்ளாடு ஒன்றைக் கொடுத்தான். ஐலன் அவனுக்குப் பெரும் அளவிலான மலர்களையும் கனிகளையும் கொடுத்தான். சூதன்வான் அவனுக்கு ஒரு வண்டியையும், அளவிலாத கூபரம் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான்.(24) வருணன் கடலில் விளையும் பல சிறந்த மங்கலப் பொருட்களைஉம், சில யானைகளையும் கொடுத்தான். தேவர்களின் தலைவன், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் பல்வேறு வகைப் பறவைகள்,(25) இரைதேடும் பயங்கர விலங்குகள், மற்றும் பல்வேறு வகைக் குடைகள் பலவற்றையும் கொடுத்தான். பெரும் கூட்டங்களாக இருந்த ராட்சசர்களும், அசுரர்களும் அந்தப் பலமிக்கப் பிள்ளையின் பின்னால் அணிவரிசையில் நடக்கத் தொடங்கினர்.(26)

அக்னியின் மகன் வளர்வதைக் கண்ட தாரகன், பல்வேறு வகைகளில் அவனை அழிக்க முயன்றாலும் அந்தப் பலமிக்கத் தேவனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.(27) சரியான நேரத்தில் தேவர்கள் தனிமையில் (நாணற்காட்டில்) அக்னிக்குப் பிறந்த மகனை தங்கள் படைத்தலைவனாக நிறுவினர். அசுரன் தாரகன் தங்களை ஒடுக்கு வருவது குறித்தும் அவனுக்குச் சொன்னார்கள்.(28) தேவர்களின் படைத்தலைவன் வளர்ந்ததும், பெரும் பலத்தையும், சக்தியையும் கொண்டவனாக இருந்தான். காலத்தில் அந்தக் குஹன் தன் தடுக்கப்பட முடியாத ஈட்டியை {வேலைக்} கொண்டு தாரகனைக் கொன்றான்.(29) உண்மையில், குமரன் அந்த அசுரனை விளையாட்டு போல எளிமையாகக் கொன்றான். தாரகனைக் கொன்ற பிறகு அவன் தேவர்களின் தலைவனை மூவுலகங்களின் அரசாட்சியில் மீண்டும் நிறுவினான்.(30)

வலிமையும், ஆற்றலும் கொண்ட அந்தத் தேவர் படைத்தலைவன் அழகிலும், காந்தியிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தான். பலமிக்க ஸ்கந்தன், தேவர்களின் பாதுகாவலனாகி, சங்கரனுக்கு ஏற்புடையதைச் செய்தான்.(31) பாவகனின் சிறப்புமிக்க மகன், தங்க வடிவம் கொண்டவனாக இருந்தான். உண்மையில் குமாரனே எப்போதும் தேவர்களின் படைத்தலைவனாக இருந்தான்.(32) நெருப்பு தேவனுடைய பலமும், சக்தியுமாக இருந்த தங்கம் கார்த்திகேயனுடன் (ஒரே வித்தில்) பிறந்ததாகும். எனவே, தங்கமானது, உயர்வானதும், மங்கலமானதும், மதிப்புமிக்கதும், சிறந்ததும், வற்றாத பலனைக் கொண்டதுமாக இருக்கிறது.(33) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே பழங்காலத்தில் பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} வசிஷ்டர் சொன்னார். எனவே, ஓ! மனிதர்களின் மன்னா, பொற்கொடை அளிப்பாயாக.(34) ராமர் {பரசுராமர்}, பொற்கொடை அளித்ததன் மூலம் தம் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, இறுதியாகப் பிற மனிதர்களால் அடைய முடியாத சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைந்தார்” என்றார் {பீஷ்மர்}.(35)

சிராத்த பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 87-நீத்தார் வழிபாட்டுக்குரிய விதிகள் மற்றும் ஒவ்வொரு திதியிலும் சிராத்தம் செய்வதன் பலன் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அற ஆன்மாவே, நான்கு வகைக்கான கடமைகள் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர். அதுபோலவே, ஓ! மன்னா, (இறந்து போன மூதாதையருக்கான) சிராத்தம் {நீத்தார் வழிபாடு} தொடர்பான விதிகள் அனைத்தையும் இப்போது எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்”.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டதும், அந்தச் சாந்தனுவின் மகன் {பீஷ்மர்}, விதிகளுக்கு இணக்கமாகச் சிராத்தம் தொடர்பான பின் வரும் சடங்கை அறிவிப்பதில் தம்மைத் தாமே நிறுவிக் கொண்டார்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, சிராத்த சடங்கு குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மங்கலமானதும், புகழத்தக்கதும், புகழையும், சந்ததியையும் உண்டாக்கவல்லதுமான அந்தச் சடங்கு, பித்ருக்களைக் கௌரவிப்பதில் ஒரு வேள்வியாகக் கருதப்படுகிறது.(3) தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, கந்தர்வர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, பிசாசங்கள் அல்லது கின்னரர்களோ எவராக இருந்தாலும் ஒருவன் பித்ரு வழிபாட்டை எப்போதும் செய்ய வேண்டும்.(4) மக்கள் பித்ருக்களை முதலில் வழிபடுவதும், அதன் பிறகு தேவர்களைத் துதித்து அவர்களை நிறைவடையச் செய்வதும் காணப்படுகிறது. எனவே, ஒருவன் மிகக் கவனமாக எப்போதும் பித்ரு வழிபாட்டைச் செய்ய வேண்டும்[1].(5)ஓ! மன்னா, பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தத்தைப் பின்னர்ச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் பொதுவிதி (புதுநிலவு {அமாவாசை} நாளின் பிற்பகலில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராத்தம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்) ஒரு சிறப்பு விதியால் தடுக்கப்பட்டிருக்கிறது[2].(6) (இறந்து போன) பாட்டனார்கள் {மூதாதையர்கள்} எந்த நாளில் சிராத்தம் செய்தாலும் நிறைவடைவார்கள்[3]. எனினும், (பின்பற்றத் தகுந்த சூழ்நிலைகளை நோக்கில் கொண்டு சிராத்தங்களைச் செய்யும்) குறிப்பிட்ட சந்திர நாட்களின் {திதிகளின்} நிறைகுறைகளை இப்போது சொல்லப் போகிறேன். (7) ஓ! பாவமற்றவனே, எந்த நாட்களில் சிராத்தங்களைச் செய்தால் என்ன கனிகள் அடையப்படும் என்பது குறித்துச் சொல்லப் போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(8)வளர்பிறையின்[4] ஒன்றாம் நாளில் {பிரதமையில்} பித்ருக்களைத் துதிப்பதன் மூலம் ஒருவன், விரும்பத்தக்க சாதனைகளைச் செய்யும் பிள்ளைகள் பலரைப் பெறவல்ல அழகிய மனைவிகளைத் தன் வசிப்பிடத்தில் அடைவான்.(9)வளர்பிறையின் இரண்டாம் நாளில் {துவிதியையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் மகள்கள் பலரை அடைகிறான். மூன்றாம் நாளில் {திருதியையில்} அதைச் செய்பவன் பல குதிரைகளை அடைகிறான். நான்காம் நாளில் {சதுர்த்தியில்} அதைச் செய்பவன் (வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் போன்ற) சிறு விலங்குகளின் பெரும் மந்தையைத் தன் வீட்டில் அடைகிறான்.(10)

ஓ! மன்னா, ஐந்தாம் நாளில் {பஞ்சமியில்} சிராத்தம் செய்பவர்கள் மகன்கள் பலரை அடைகிறார்கள். ஆறாம் நாளில் {சஷ்டியில்} சிராத்தம் செய்வோர் பெரும் காந்தியை அடைகிறார்கள்.(11)

ஏழாம் நாளில் {சப்தமியில்} அதைச் செய்யும் ஒருவன் பெரும் புகழை அடைகிறான். எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அதைச் செய்யும் ஒருவன் வணிகத்தில் பெரும் லாபங்கள் ஈட்டுகிறான்.(12)

ஒன்பதாம் நாளில் {நவமியில்} அதைச் செய்யும் ஒருவன் பிளவில்லாத {ஒற்றைக்} குளம்பைக் கொண்ட விலங்குகள் பலவற்றை அடைவான். பத்தாம் நாளில் {தசமியில்} அதைச் செய்யும் ஒருவன் பசுக்கள் என்ற பெருஞ்செல்வத்தை அடைகிறான்.(13)

பதினொன்றாம் நாளில் {ஏகாதசி} அதைச் செய்யும் ஒருவன் துணிமணிகள் மற்றும் (பித்தளை மற்றும் பிற உலோகங்களாலான) பாத்திரங்கள் போன்ற செல்வத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் பிரம்ம காந்தியுடன் கூடிய மகன்கள் பலரையும் அடைவான்.(14)

பனிரெண்டாம் நாளில் {துவாதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், விரும்பினால் வெள்ளி மற்றும் தங்கத்தினாலான பல்வேறு வகை அழகிய பொருட்களை எப்போதும் காண்பான்.(15)

பதிமூன்றாம் நாளில் {திரையோதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், தன் இனத்தில் சிறப்புமிக்கவனாவான். பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} சிராத்தம் செய்பவனுடைய குடும்பத்தில் உள்ள இளையோர் அனைவரும் {புருஷர்கள் அனைவரும் இளமைப் பருவத்திலேயே} மரணமடைவார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதன் போரில் சிக்குவான். புதுநிலவு நாளில் {அமாவாசையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைவான்.(16,17)

தேய்பிறையில் பத்தாம் நாள் {தசமி} தொடங்கி, (தசமி தொடங்கி அமாவாசை வரை வரும் நாட்களில்) பதினான்காம் நாளை {சதுர்த்தசியை} மட்டும் விட்டுவிட்டு வரும் அனைத்து நாட்களும் சிராத்தம் செய்வதற்கு மெச்சத்தகுந்த நாட்களே. தேய்பிறையின் மற்ற நாட்கள் {தேய்பிறையில் பிரதமை தொடங்கி நவமி வரையுள்ள நாட்கள்} அவ்வாறானவை அல்ல {சிராத்தம் செய்யத் தகுந்தவை அல்ல}.(18) மேலும், சிராத்த காரியங்களில் வளர்பிறையைவிடத் தேய்பிறை சிறந்ததாக இருப்பதைப் போலவே, முற்பகலைவிட, நாளின் பிற்பகலே சிறப்பானதாகும்[5]” என்றார் {பீஷ்மர்}.(19)

சிராத்த ஹவிஸுகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 88-சிராத்தத்தில் ஆகுதிகளாகப் பயன்படுத்தத் தகுந்த பொருட்களையும், அவற்றின் பலன்களையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும்பலம் கொண்டவரே, பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் எந்தப் பொருள் வற்றாததாகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் (காணிக்கை அளிக்கப்படும்) எந்த ஹவிஸ் {ஆகுதி பொருள்} காலத்திற்கும் நீடித்திருக்கிறது? உண்மையில் (கொடுக்கப்பட்டால்) நித்தியத் தன்மையை அடைவது எது?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, சிராத்த சடங்கை அறிந்த மனிதர்கள், சிராத்த நோக்கில் தகுந்ததெனக் கருதும் ஹவிஸ்கள் {வேள்வி நெருப்பில் இடத்தக்க பொருட்கள்} எவை என்பதையும், அவை ஒவ்வொன்றினாலும் விளையும் பலன்களையும் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, எள், அரிசி, வாற்கோதுமை, உளுந்து, நீர், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றைக் கொண்டு சிராத்தம் கொடுக்கப்பட்டால் ஒரு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருப்பார்கள்.(3) அதிக அளவிலான எள்ளைக் கொண்டு சிராத்தம் செய்யப்பட்டால், அத்தகைய சிராத்தம் வற்றாததாகிறது என மனு சொல்லியிருக்கிறார். அனைத்து வகை உணவுகளிலும், எள்ளே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.(4) சிராத்தங்களில் மீன்கள் காணிக்கையளிக்கப்பட்டால், இரண்டு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருக்கின்றனர். {செம்மறி} ஆட்டிறைச்சியினால் மூன்று மாதங்கள் வரையும், முயலிறைச்சியினால் அவர்கள் நான்கு மாதங்கள் வரையும் நிறைவடைந்திருக்கின்றனர்.(5)

ஓ! மன்னா, வெள்ளாட்டு இறைச்சியால் ஐந்து மாதங்கள் வரையும், பன்றியிறைச்சியால் ஆறு மாதங்கள் வரையும், பறவைகளின் இறைச்சியால் ஏழு மாதங்கள் வரையும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(6) பிருஷதம் {புள்ளிமான்} என்றழைக்கப்படும் மான்களில் இருந்து கிடைக்கும் இறைச்சியால் எட்டு மாதங்கள் வரையும், ருருவிடம் {கறுப்பு மானில் இருந்து} கிடைக்கும் இறைச்சியால் ஒன்பது மாதங்கள் வரையும், கவய {மற்றொரு வகை மான்} இறைச்சியால் பத்து மாதங்கள் வரையிலும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(7) எருமை இறைச்சியால் அவர்கள் பதினோரு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றனர். சிராத்தத்தில் அளிக்கப்படும் மாட்டிறைச்சியால் அவர்கள் ஒரு முழு வருடத்திற்கு நிறைவடைந்திருக்கிறார்கள்.(8) மாட்டிறைச்சியைப் போலவே நெய்யுடன் கலந்த பாயசம் பித்ருக்களுக்கு மிகவும் ஏற்புடையதாகும். வாத்ரீநச இறைச்சியால் பித்ருக்கள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் அளவுக்கு நிறைவடைந்திருக்கிறார்கள்[1].(9) பித்ருக்கள் இறந்த சந்திர நாளில் {திதியில்} ஆண்டுதோறும் காண்டாமிருகத்தின் இறைச்சி காணிக்கையளிக்கப்பட்டால் அது வற்றாததாகிறது. காலசாகம் என்றழைக்கப்படும் கீரை {அறைக்கீரை}, காஞ்சன மலரின் இதழ்கள், வெள்ளாட்டிறைச்சி ஆகியவை காணிக்கையளிக்கப்பட்டால் அவையும் வாற்றாதவையாகின்றன.(10)ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக உண்மையில் பித்ருக்களாலேயே பாடப்பட்ட சில ஸ்லோகங்கள் (இவ்வுலகில்) பாடப்படுகின்றன. இவை பழங்காலத்தில் சனத்குமாரரால் சொல்லப்பட்டவை.(11) {அந்த ஸ்லோகங்கள்}, “எங்கள் குலத்தில் பிறந்தவன் எவனும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்கையில் {தக்ஷிணாயனத்தில்}, மக நட்சத்திரத்தின் கீழ் வரும் (தேய்பிறையின்) பதிமூன்றாம் நாளில் {திரயோதசியில்} எங்களுக்கு நெய் கலந்த பாயசம் கொடுக்க வேண்டும்.(12) எங்கள் குலத்தில் பிறந்த ஒருவன், நோன்பு நோற்பவனைப் போலவே, மக நட்சத்திரத்தின் கீழ் வெள்ளாட்டு இறைச்சியையோ, காஞ்சன மலரின் இதழ்களையோ {எங்களுக்குக்} காணிக்கையளிக்க வேண்டும். அவன், ஒரு யானையின் நிழலால் மறைக்கப்படும் இடத்தில் உரிய சடங்குகளுடன் நெய் கலந்த பாயசத்தை எங்களுக்குக் காணிக்கையளிக்கும் வகையில் அர்ப்பணிக்க வேண்டும்” {என்று சொல்கின்றன}[2].(13)பல மகன்களைப் பெற ஆசைப்பட வேண்டும், ஏனெனில் அவர்களில் ஒருவனாவது, எது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறதோ, எதன் கிளைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றானவாகின்றனவோ அந்த ஆலமரம் நிற்கும் கயைக்கு (தன் மூதாதையருக்குச் சிராத்தம் செய்வதற்காகச்) செல்வான்[3].(14) சிறிதளவு நீர், கிழங்குகள், கனிகள், இறைச்சி, அரிசி ஆகியவற்றைத் தேனில் கலந்து ஆண்டுதோறும் {குறிப்பிட்ட மூதாதையரின்} இறந்த நாளில் காணிக்கையளித்தால் அவை வற்றாதனவாகின்றன” என்றார் {பீஷ்மர்}.(15)

சிராத்த நட்சத்திர பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 89-சிராத்தங்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் செய்யப்பட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை சசபிந்துவுக்குச் சொன்ன யமன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, வெவ்வேறு நட்சத்திரங்களில் விரும்பினால் செய்ய வேண்டிய {கட்டாயமில்லா} சிராத்தங்களைக் குறித்து மன்னன் சசபிந்துவிடம் யமன் சொன்னதை உனக்குச் சொல்லப்போகிறேன்; கேட்பாயாக[1].(1)எப்போதும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன், புனித நெருப்பை நிறுவி ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன் நோயில் இருந்து விடுபட்டு, தன் பிள்ளைகளுடன் சொர்க்கத்திற்கு உயர்கிறான்.(2)

பிள்ளைகளைப் பெற விரும்புபவன், ரோகிணி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும், அதே வேளையில் சக்தியைப் பெற விரும்புபவன் மிருசீரிஷ நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும். ஆர்த்திரா {திருவாதிரை} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒரு மனிதன் கடும் செயல்களைச் செய்தவனாகிறான் {அவன் கொடுஞ்செய்கையுள்ளவனாவான்}.(3)

புனர்பூசத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் உழவில் லாபம் ஈட்டுவான். வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் விருப்பமுள்ள மனிதன் புஷ்யத்தில் {பூசத்தில்} சிராத்தம் செய்ய வேண்டும்.(4)

அஷ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் அதைச் செய்யும் ஒருவன், வீரமைந்தர்களைப் பெறுகிறான். மகத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் தன் இனத்தில் சிறந்தவனாகிறான்.(5)

பால்குனியில் {பூரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் நற்பேறு பெறுகிறான். பிந்தைய பால்குனத்தில் {உத்தரத்தில்} அதைச் செய்பவன் பல பிள்ளைகளைப் பெறுகிறான்; ஹஸ்த நட்சத்திரத்தில் அதைச் செய்பவன் தன் விருப்பங்கள் கனியும் நிலையை அடைகிறான்.(6)

சித்திரை மாதத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் பேரழகுடன் கூடிய பிள்ளைகளைப் பெறுகிறான். ஸ்வாதி நட்சத்திரத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் வணிகத்தில் லாபம் ஈட்டுகிறான்.(7)

பிள்ளைகளைப் பெற விரும்பும் மனிதன், விசாக நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் தன் விருப்பம் கனியும் நிலையை அடைகிறான். அனுராதாவில் {அனுஷத்தில்} செய்வதன் மூலம் ஒருவன் மன்னர்களுக்கு மன்னனாகிறான் {சக்கரவர்த்தியாகிறான்}.(8)

ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, ஜியேஷ்ட {கேட்டை} நட்சத்திரத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பக்தியுடனும், பணிவுடனும் காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் அரசுரிமையை அடைகிறான்.(9)

மூல நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் ஒருவன் உடல் நலத்தை அடைகிறான், ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்பவன், சிறந்த புகழை ஈட்டுகிறான். ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் கவலைகள் அனைத்தில் இருந்து விடுபட்டு மொத்த உலகத்தையும் சுற்றுவதில் வெல்கிறான்.(10)

அபிஜித் {உத்திராடம்} நட்சத்திரத்தில் அதைச்செய்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த ஞானத்தை அடைகிறான். சிரவணத்தில் {திருவோணம்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் இவ்வுலகத்தில் இருந்து செல்லும்போது மிக உயர்ந்த கதியை அடைகிறான்.(11)

தனிஷ்ட {அவிட்டம்} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் ஒரு நாட்டின் ஆட்சியாளனாகிறான். வருணனால் தலைமைதாங்கப்படும் நட்சத்திரத்தில் (சதபிஷ {சதயம்} நட்சத்திரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் மருத்துவராக வெற்றி அடைகிறான்.(12)

முந்தைய பாத்திரபத {பூரட்டாதி} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் அளவிலான வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும் உடைமையாக அடைகிறான்; அதையே பிந்தைய பாத்திரபதத்தில் {உத்திரட்டாதியில்} செய்யும்போது அவன் ஆயிரம் பசுக்களை அடைகிறான்.(13)

ரேவதி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அதிகமான வெண்கல மற்றும் தாமிரப் பாத்திரங்களைச் செல்வமாக அடைகிறான். அஸ்வினியில் செய்வதன் மூலம் அவன் பல குதிரைகளை அடைகிறான். அதே வேளையில் பரணியில் செய்தால் அவன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்.(14)

சிராத்தம் குறித்த இந்த விதிமுறைகளைக் கேட்ட மன்னன் சசபிந்து, அதன்படியே செயல்பட்டு, மொத்த உலகையும் அடக்குவதில் எளிதாக வென்று {உலகம் முழுவதும்} ஆட்சி செலுத்தினான்” என்றார் {பீஷ்மர்}.(15)

நிமந்திரணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 90-சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படுவனவற்றை எவ்வகைப் பிராமணர்களுக்குக் கொடுக்கலாம்; பந்திக்குத் தகுந்த, தகாத பிராமணர்கள் யாவர் என்பவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை எவ்வகைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் என்பது குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கொடை குறித்த விதிகளை அறிந்த க்ஷத்திரியன், (கொடையளிக்கும்போது) ஒருபோதும் பிராமணர்களைச் சோதிக்கக்கூடாது. எனினும், தேவ மற்றும் பித்ரு வழிபாட்டுச் செயல்கள் {கர்மங்கள்} அனைத்திலும் பரிசோதனை செய்வது முறையே எனச் சொல்லப்படுகிறது.(2)

மனிதர்கள், தேவர்களிடம் இருந்து வரும் பக்தியால் நிறையும்போது மட்டுமே பூமியில் அவர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள். எனவே ஒருவன் தேவர்களுக்கே கொடையளிப்பதாகக் கருதி, பிராமணர்கள் அனைவருக்கும் கொடையளித்த பிறகே தேவர்களை அணுக வேண்டும்.(3) எனினும் சிராத்தங்களில், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு நுண்ணிறிவுமிக்க மனிதன், (சிராத்த சடங்குகளைச் செய்வதற்குத் துணை புரியவும், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளைக் கொடையளிக்கவும் தக்க) பிராமணர்களைச் பரிசோதித்தறிய வேண்டும். அத்தகைய ஆய்வு அவர்களுடைய பிறப்பு, நடத்தை, வயது, தோற்றம், கல்வி, பெற்றோரின் உன்னத நிலை ஆகியவை தொடர்புடையதாக இருக்க வேண்டும்.(4)

பிராமணர்களில் சிலர் தாங்கள் அமர்ந்த பந்தியைக் கெடுப்பவர்களாகவும், சிலர் அதைப் புனிதப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ! மன்னா, பந்தியில் தவிர்க்கப்பட வேண்டிய பிராமணர்கள் யாவர் என்பதைச் சொல்கிறேன், கேட்பாயாக[1].(5) சூதுநிறைந்தவனாகவோ, கருவைக் கொன்ற குற்றம் புரிந்தவனாகவோ, காச நோய் கொண்டவனாகவோ, விலங்குகளை வளர்ப்பவனாகவோ, வேத கல்வியற்றவனாகவோ, கிராமத்தின் பொதுப் பணியாளனாகவோ {ஊர்ப் பொதுவுக்கு ஏவல் தொழில் செய்பவனாகவோ}, கடன் கொடுத்து, அதில் வரும் வட்டியைக் கொண்டு வாழ்பவனாகவோ, பாடகனாகவோ, அனைத்துப் பொருட்களை விற்பவனாகவோ,(6) தீ வைப்பவனாகவோ, நஞ்சு கொடுப்பவனாகவோ, காமத்தரகு தொழில்புரிபவனாகவோ, சோமத்தை விற்பவனாகவோ, கைவரைநூல் {கைரேகை சாஸ்திர} அறிஞனாகவோ, மன்னனிடம் பணிசெய்பவனாகவோ {அரசு ஊழியனாகவோ}, எண்ணெய் விற்பவனாகவோ, வஞ்சகனாகவோ, பொய் உறுதி மொழியேற்பவனாகவோ,(7) தந்தையிடம் சச்சரவு செய்பவனாகவோ, தன் வீட்டில் தன் மனைவியின் கள்ளக்காதலைப் பொறுத்துக் கொள்பவனாகவோ {வேறு புருஷனை வைத்திருக்கும் மனைவியுள்ளவனாகவோ}, சபிக்கப்பட்டவனாகவோ, கள்வனாகவோ, ஏதோவொரு கைத்தொழில் செய்து பிழைப்பவனாகவோ,(8) வேடம் தரிப்பவனாகவோ {நடிகனாகவோ}, நடத்தையில் வஞ்சனையுள்ளவனாகவோ, நண்பர்களென அழைக்கப்படுபவர்களுக்குப் பகையாக நடப்பவனாகவோ {நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவனாகவோ}, பிறன்மனை நயப்பவனாகவோ, சூத்திரர்களின் ஆசானாகவோ {நோன்பு நோற்காதவர்களுக்குக் கற்பிப்பவனாகவோ}, ஆயுதந்தரிக்கும் தொழிற் செய்பவனாகவோ,(9) (வேட்டைக்காக) நாய்களுடன் திரிபவனாகவோ, நாயால் கடிபட்டவனாகவோ, மூத்த சகோதரர்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவனாகவோ, விருத்தசேதனம் செய்து கொண்டவனாகவோ {தோல் நோயுள்ளவனாகவோ / தொழுநோயாளியாகவோ}[2], தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனாகவோ,(10) நடிகனாகவோ, ஒரு தேவனை {தெய்வத்தை} அலங்கரித்து {பூஜை செய்து} வாழ்பவனாகவோ, கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களின் சேர்க்கைகளைக் கணிப்பதன் மூலம் வாழ்பவனாகவோ {ஜோதிடனாகவோ} இருப்பவர்கள் பந்தியில் தவிர்க்கப்படத் தகுந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(11)ஓ! யுதிஷ்டிரா, சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் அத்தகைய பிராமணர்களால் உண்ணப்பட்டால், அவை (பித்ருக்களின் வயிற்றை நிரப்புவதற்குப் பதிலாக) ராட்சசர்களின் வயிற்றை நிரப்புமென வேதமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(12) ஒரு சிராதத்தத்தில் உண்ட பிறகு, அன்றைய வேதகல்வியைத் தவிர்க்காதவனும், அந்த நாளில் ஒரு சூத்திரப் பெண்ணுடன் பாலினக் கலவி புரிந்தவனுமான ஒருவன், தன்னுடைய அத்தகைய செயல்களின் விளைவாகத் தன்னுடைய பித்ருக்கள் ஒரு மாத காலத்திற்குச் சாணத்தில் கிடக்க நேரிடும் என்பதை அறிய வேண்டும்.(13) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள், சோமத்தை விற்கும் பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை மனிதவுடற் கழிவுகளாக {மலஜலமாக} மாறும்; மருத்துவத் தொழில் பழகும் ஒருபிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை சீழாகவும், குருதியாகவும் மாறும்; தேவனை அலங்கரித்து {பூஜை செய்து} வாழும் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் எக்கனியையும் {எப்பலனையும்} கொடுக்கத் தவறும்; வட்டித் தொழிலில் வாழ்பவனுக்குக் கொடுக்கப்பட்டால் புகழ்க்கேட்டுக்கு வழிவகுக்கும்;(14) வணிகத்தில் ஈடுபடும் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை இம்மையிலும், மறுமையிலும் கனி {பலன்} கொடுக்காது. விதவையான தாய்க்கு (இரண்டாம் கணவன் மூலம்) பிறந்த பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால், அவை சாம்பலில் ஊற்றப்படும் ஆகுதிகளைப் போலக் கனியற்றவையாகிவிடும்.(15)

(சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும்) ஹவ்யகவ்யங்களை, தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாதவர்களும், தங்கள் வகைக்குரிய நல்லொழுக்க விதிகளைப் பின்பற்றாதவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பவர்கள், மறுமையில் எவ்வித பலனையும் அத்தகைய கொடைகள் உண்டாக்காததைக் காண்பார்கள்.(16) இத்தகைய மனிதர்களின் இயல்புகளை அறிந்தும், அவர்களுக்கு இத்தகைய பொருட்களைக் கொடையளிக்கும் சிறுமதியாளன், தன்னுடைய நடத்தையால் தன் பித்ருக்களை மறுமையில் மனிதக் கழிவுகளை உண்ணச் செய்கிறான்.(17) பிராமணர்களில் இழிந்தவர்களான இவர்கள் பந்தியில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறிவாயாக. சூத்திரர்களுக்குப் போதிக்கும் சக்தியற்ற பிராமணர்களும் அதே வகையைச் சார்ந்தவர்களே.(18) குருடனாக இருக்கும் பிராமணன் பந்தியில் உள்ள அறுபது பேரைக் களங்கப்படுத்துகிறான்; ஆண்மையற்ற ஒருவன் நூறு பேரைக் களங்கப்படுத்துகிறான். ஓ! மன்னா, வெண்குஷ்டம் கொண்டவன், எத்தனை பேரைப் பார்ப்பானோ அத்தனை பேரையும் களங்கப்படுத்துகிறான்.(19) தலையைத் துணியால் மூடிக் கொண்டும், தெற்கு நோக்கி அமர்ந்தும், கால்களில் பாதுகைகளை அணிந்த நிலையிலும் சிராத்தங்களில் உண்ணப்படும் எதுவும், அசுரர்களையே நிறைவடையச் செய்யும்.(20)

வன்மத்துடனும், மதிப்பில்லாமலும் கொடுக்கப்படும் எதுவும், அசுர இளவரசனின் (பலியின்) பங்காகிறது என்று பிரம்மனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது.(21) நாய்களையும், பந்தியைக் கெடுக்கும் இத்தகைய பிராமணர்களையும், சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் தங்கள் கண்களைச் செலுத்த அனுமதிக்கக்கூடாது. இந்தக் காரணத்திற்காக, பிறர் பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட இடங்களிலேயே சிராத்தங்கள் நடத்தப்பட வேண்டும். அந்த இடத்தில் எள்ளைத் தூவி {இறைத்து} வைத்திருக்க வேண்டும்.(22) எள் இல்லாமல் செய்யப்படும், அல்லது ஒரு மனிதனால் கோபத்துடன் செய்யப்படும் சிராத்தத்தில் ராட்சசர்களாலும், பிசாசங்களாலும் ஹவி களவாடப்படும்.(23)   பந்தியில் தவிர்க்கப்படத் தகுந்தவனை உண்ண அழைத்து சிராத்தம் செய்யும் மூடன், ஒப்பீட்டளவில் {அத்தகைய} ஒருவனால் பார்க்கப்படும் பிராமணர்களின் எண்ணிக்கை அளவுக்கான {அந்த சிராத்தத்திற்குரிய} பலனை இழப்பான்.(24)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பந்தியைப் புனிதப்படுத்துபவர்கள் யாவர் என்பதை இப்போது சொல்கிறேன், கேட்பாயாக. பரிசோதனையின் மூலம் அவர்களை நீ கண்டறிய வேண்டும்.(25) தூய அறிவு, வேத கல்வி, நோன்புகள், நியமங்களையும், நல்ல மற்றும் அற நடத்தையையும் கொண்ட பிராமணர்கள் அனைவரும் அனைத்தையும் புனிதப்படுத்துபவர்களாக அறியப்பட வேண்டும்.(26) பந்தியில் அமரத் தகுந்தவர்கள் யாவர் என்பதைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். நான் இப்போது குறிப்பிடும் வகையில் நீ அவர்களை அறிந்து கொள்ளலாம். மூன்று நாசிகேதங்கள்[3]ஐந்து வேள்வி நெருப்புகள்[4]ஐந்து சுபர்ணங்கள்[5], (வேத அங்கங்களெனும்) ஆறு கிளைகள் ஆகியவற்றை அறிந்தவனும்,(27) வேதங்களைப் போதித்த தந்தைமாரின் வழித்தோன்றலும், சந்தங்களை நன்கறிந்தவனும், ஜியேஷ்ட சாமத்தை அறிந்தவனும்[6], பெற்றோரின் ஆளுகைக்குக் கீழ்ப்படிந்தவனும், வேதங்களை அறிந்தவனும், பத்துத் தலைமுறை மூதாதையர்களைக் கொண்டவனும்,(28) தான் மணந்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே அவர்களுடைய பருவகாலங்களில் கலவிபுரிபவனும், அறிவாலும், வேதத்தாலும், நோன்புகள் மற்றும் நியமங்களாலும் தூய்மையடைந்தவனுமான ஒரு பிராமணன் பந்தியைப் புனிதப்படுத்துகிறான்.(29)அதர்வசிரசை {அதர்வண வேதத்தைப்} படிப்பவனும்[7], பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவனும், அற நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளனும், வாய்மை நிறைந்தவனும், அறவொழுக்கம் ஒழுகுபவனும், தன் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளை முறையாக நோற்பவனும்,(30) களைப்படையும் வகையில் தீர்த்த நீர்நிலைகளில் நீராடுதவற்கு முயற்சி செய்பவனும், உரிய மந்திரங்களுடன் வேள்விகளைச் செய்து இறுதி நீராடலைச் செய்தவர்களும்,(31) கோபத்தின் ஆளுகையில் இருந்து விடுபட்டவர்களும், கலக்கமடையாதவர்களும், மன்னிக்கும் இயல்பைக் கொண்டவர்களும் {பொறுமைசாலிகளும்}, புலனடக்கத்துடன் கூடிய தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்பட வேண்டும்.(32) இவர்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் வற்றாததாகிறது. உண்மையில் இவர்களே பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாவர். உயர்ந்த அருளைக் கொண்ட வேறு சிலரும் பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாகக் கருதப்பட வேண்டும்.(33)அவர்கள் யதிகள், மோக்ஷ அறத்தைக் குறித்து அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளர்கள், அற்புத நோன்புகளை முறையாக நோற்பவர்கள், குவிந்த மனத்தோடு (புனித) வரலாறுகளை முதன்மையான பிராமணர்களுக்கு உரைப்பவர்கள் ஆவர் {இவர்களும் பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாகக் கருதப்பட வேண்டும்}.(34) பாஷ்யங்களை {சாத்திர விரிவுரைகளை} அறிந்தவர்கள், இலக்கணக் கல்வியில் அர்ப்பணிப்புள்ளவர்கள், புராணங்களைப் படிப்பவர்கள், தர்மசாத்திரங்களைப் படிப்பவர்கள்,(35) (தர்ம சாத்திரங்கள் மற்றும் புராணங்களைப் படித்துவிட்டு) அவற்றில் விதிக்கப்பட்டுள்ள தரத்தில் செயல்படுபவர்கள், ஆசானின் வசிப்பிடத்தில் (குறிப்பிட்ட காலம்) வாழ்ந்தவர்கள், பேச்சில் வாய்மை நிறைந்தவன், ஆயிரங்களைக் கொடையளித்தவன்,(36) வேதங்கள், சாத்திரங்கள், தத்துவச் சூத்திரங்கள் அனைத்திலும் {இவை அனைத்தின் அறிவில்} முதன்மையானவர்கள் ஆகியோர் தாங்கள் காணும் தொலைவுக்குரிய அளவில் அப்பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாவர்.(37) பந்தியில் அமர்பவர்கள் அனைவரையும் அவர்கள் புனிதப்படுத்துவதாலேயே அவர்கள் பந்திகளைப் புனிதப்படுத்துபவர்கள் {பந்தி பாவனர்} என்றழைக்கப்படுகிறார்கள். வேத ஆசிரியராக இருந்த தந்தையின் வழித்தோன்றலும், தானே வேத ஆசிரியராக இருப்பவனுமாகிய ஒரே ஒருவனே கூடத் தன்னைச் சுற்றிலும் முழுமையாக ஏழு மைல்களை {இரண்டரை குரோசங்கள் தொலைவைப்} புனிதப்படுத்துகிறான் என்று பிரம்மஞானிகள் சொல்கிறார்கள்.(38) ரித்விக்காக இல்லாதவன், வேத ஆசிரியராக இல்லாதவன் ஆகியோர் ஒரு சிராத்தத்தில் முதன்மையான இருக்கையில் அமர்ந்தால், அங்கே இருக்கும் பிற ரித்விக்குகளின் அனுமதியோடே அவன் (தனது அச்செயலின் மூலம்) பந்தியில் அமர்ந்திருப்போர் அனைவரின் பாவங்களை எடுத்துக் கொள்கிறான்.(39) மறுபுறம், வேதங்களை அறிந்தவனும், பந்தியைக் கெடுக்கவல்லதாகக் கருதப்படும் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் (சிராத்தத்தில் முதன்மையான இருக்கையில் அமர்வதன் மூலம்) வீழ்ந்துவிட்டவனாகக் கருதப்பட மாட்டான். அத்தகைய மனிதன் நிச்சயம் அப்பந்தியைப் புனிதப்படுத்துபவனாகவே இருப்பான்.(40)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காகவே சிராத்தங்களுக்கு அழைப்பதற்கு முன் நீ பிராமணர்களை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். தன் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவர்களையும், நல்ல குடும்பங்களில் பிறந்தவர்களையும், பெருங்கல்வி கற்றவர்களையும் மட்டுமே நீ அழைக்க வேண்டும்.(41) தன் நண்பர்களுக்கு உணவூட்ட மட்டுமே சிராத்தங்களைச் செய்பவனுடைய ஹவி, தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்யாமல் சொர்க்கத்திற்கு உயர்வதில் தவறுகிறது.(42) தான் செய்யும் சிராத்தங்களில் (தகுந்த மனிதர்களை அழைத்து அவர்களுக்கு உணவூட்டுவதில் முறையான கவனம் செலுத்தாமல்) நண்பர்களையும், உறவினர்களையும் மட்டுமே திரட்டும் ஒருவன் (துன்பங்கள் மற்றும் தடைகளில் இருந்து விடுபட்டு ஒளியூட்டப்பட்ட பாதையாக இருக்கும்) தேவ பாதையில் நடக்கத் தவறுகிறான். நண்பர்களை மட்டுமே திரட்டி, சிராத்தம் செய்யும் மனிதன், சொர்க்கத்திற்கு உயர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உண்மையில், நண்பர்களைக் கவனிக்கும் நிகழ்வாகச் சிராத்தங்களை மாற்றும் மனிதன், கட்டியிருந்த சங்கலி அறுபடும்போதே, தான் அமர்ந்திருந்த கொம்பில் இருந்தும் விடுபடும் பறவையைப் போலவே அவன் சொர்க்கத்திலிருந்து தொடர்பறுந்தவனாகி விடுவான்[8].(43) எனவே, சிராத்தம் செய்பவன் (அத்தகைய நிகழ்வுகளின்போது) தன் நண்பர்களைக் கௌரவிக்கக்கூடாது. வேறு சந்தர்ப்பங்களில் அவர்களை ஒன்றாகத் திரட்டி, அவர்களுக்குச் செல்வக்கொடை அளிக்கலாம். சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும் ஹவியும், கவியும் நண்பர்களாகவும், பகைவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும் இல்லாதவர்களுக்கே அளிக்கப்பட வேண்டும்.(44) வறண்ட நிலத்தில் விதை விதைத்தால் அது முளைக்காததைப் போலவோ, விதைக்காதவன் விளைச்சலின் பங்கைப் பெறாததைப் போலவோ சிராத்தக் காணிக்கைகளும், தகாத மனிதனால் உண்ணப்பட்டால் இம்மையிலும், மறுமையிலும் எப்பலனையும் உண்டாக்காது[9].(45)வேத கல்வியற்ற பிராமணன், புல் அல்லது வைக்கோல் எரிவதால் உண்டாகும் நெருப்பைப் போன்றிருந்து, விரைவில் அத்தகை நெருப்பைப் போலவே அணைந்து போகிறான். வேள்வி நெருப்பின் சாம்பலில் ஆகுதிகளை ஊற்றக்கூடாது என்பதைப் போலவே சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை அத்தகைய ஒருவனுக்கு {வேத கல்வியற்ற பிராமணனுக்குக்} கொடுக்கக்கூடாது.(46) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் (தகுந்த மனிதர்களுக்குக் கொடையளிக்கப்படுவதற்குப் பதிலாக) {சிராத்தங்களைச்} செய்பவர்களுக்குள்ளேயே பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்போது, அவை பிசாசங்களுக்கான கொடைகளாகக் கருதப்படும் நிலையை அடைகின்றன. அத்தகைய காணிக்கைகள் தேவர்களையோ, பித்ருக்களையோ நிறைவடையச் செய்வதில்லை. மறுவுலகை அடைவதற்குப் பதிலாக அவை, கன்றையிழந்து கொட்டிலுக்குள் திரியும் பசுவைப் போல இங்கேயே சுற்றித் திரிகின்றன.(47) வேள்வி நெருப்பு அணைந்து உண்டாகும் சாம்பலில் ஊற்றப்படும் நெய் ஆகுதியானது தேவர்களையோ, பித்ருக்களையோ ஒருபோதும் அடையாததைப் போலவே, ஒரு நர்த்தகருக்கோ, பாடகருக்கோ, அளிக்கப்படும் கொடை, அல்லது வஞ்சகனுக்கோ, பொய்யனுக்கோ கொடுக்கப்படும் தக்ஷிணையும் ஒரு பலனையும் உண்டாக்குவதில்லை.(48) பொய்யனுக்கோ, வஞ்சகனுக்கோ அளிக்கப்படும் தக்ஷிணையானது, கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் எந்த நன்மையையும் அளிப்பதில்லை. அத்தகைய தக்ஷிணை அழிவைத் தருவதும், நிந்தனைக்குரியதுமாகும். அதைச் செய்யும் மனிதனின் பித்ருக்கள் தேவர்களின் பாதையில் இருந்து விழ நேரிடும்.(49)

ஓ! யுதிஷ்டிரா, கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களால் நிறுவப்பட்ட எல்லைகளுக்குள்ளேயே எப்போதும் நடப்பவர்களும், தங்கள் திறனில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களுமான மனிதர்களையே தேவர்கள் பிராமணர்களாக அறிகிறார்கள்.(50) ஓ! பாரதா, வேத கல்வி, அறிவு, தவம், செயல்கள் {கர்மங்கள்} ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களை முனிவர்கள் என்றறிய வேண்டும். சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் அறிவில் அர்ப்பணிப்புள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிராமணர்களைக் குறித்து ஒருபோதும் தவறாகப் பேசாதவர்களையே மனிதர்களாகக் கருத வேண்டும்.(52) சபைக்கூட்டங்களுக்கு மத்தியில் நேரும் உரையாடல்களில் பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசும் மனிதர்களுக்குச் சிராத்த நிகழ்வுகளில் ஒருபோதும் உணவு அளிக்கப்படக்கூடாது. ஓ! மன்னா, பிராமணர்கள் பழிக்கப்பட்டால், அவர்கள் தங்களைப் பழித்தவனின் மூன்று தலைமுறைகளை அளித்துவிடுவார்கள்[10].(53) ஓ! மன்னா, இதுவே வைகானச முனிவர்களின் அறிக்கையாகும். வேதங்களை அறிந்த பிராமணர்களை ஒரு தொலைவிலேயே கண்டுவிட முடியும்.(54) ஒருவன் பிராமணர்களை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சிராத்தங்களில் அத்தகையவர்களுக்கே காணிக்கை அளிக்க வேண்டும். ஓ! பாரதா, ஆயிரமாயிரம் போலிப் பிராமணர்களுக்கு உணவூட்டுவதால் விளையும் பலனை, வேத அறிவுள்ள ஒரேயொரு பிராமணனுக்கு உணவூட்டுவதன் மூலம் ஒருவன் அடைந்துவிடலாம்” என்றார் {பீஷ்மர்}.(55)

சிராத்தம் தோன்றிய வரலாறு! – அநுசாஸனபர்வம் பகுதி – 91-சிராத்தம் உண்டான வரலாறு மற்றும் சிராத்தத்தில் கைவிட வேண்டியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“சிராத்தம் என்பது முதலில் யாரால், எந்த நேரத்தில் கருதப்பட்டது? அதன் சாரம் என்ன? {அது எவ்வகையானது?} பிருகு மற்றும் அங்கிரஸின் வழித்தோன்றல்கள் மட்டுமே உலகத்தில் இருந்த நேரத்தில் எந்த முனிவர் சிராத்தத்தை நிறுவினார்?(1) சிராத்தத்தில் எச்செயல்களைச் செய்யக் கூடாது? கிழங்குகளும், கனிகளும் காணிக்கையளிக்கப்படும் சிராத்தங்கள் யாவை? சிராத்தங்களில் என்ன வகை அரிசி தவிர்க்கப்பட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, சிராத்தம் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது, அறிமுகம் செய்த காலம், அந்தச் சடங்கின் சாரம் {வகை}, அதைக் கருதிய முனிவர் யார் என்பனவற்றைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! குரு குலத்தவனே, சுயம்புவான பிரம்மனில் இருந்து அத்ரி உண்டானார். அத்ரியின் குலத்தில் தத்தாத்ரேயர் என்ற பெயரில் ஒரு முனிவர் பிறந்தார்.(4) தத்தாத்ரேயர், தவத்தையே செல்வமாகக் கொண்டவரும், நிமி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார். நிமி, பெரும் மேனியழகைக் கொண்ட ஸ்ரீமான் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றார்.(5) முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கழிந்ததும், கடுந்தவங்களைச் செய்தவரான ஸ்ரீமான் காலத்தின் ஆளுகைக்கு வீழ்ந்து, இவ்வுலகை விட்டுச் சென்றார்.(6) அவரது தந்தையான நிமி, சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்கின் படி தூய்மைக்கான கர்மங்களைச் செய்து, தன் மகனின் இழப்பையே தொடர்ந்து நினைத்துக் கொண்டு பெருந்துயரில் நிறைந்திருந்தார்[1].(7)அந்தக் கவலையின் காரணத்தை நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்ம நிமி, பதினான்காம் சந்திர நாளில் {சதுர்த்தசியில்} (உணவு பானம் உள்ளிட்ட) ஏற்புடைய பல்வேறு பொருட்களைத் திரட்டினார். அடுத்தக் காலையில் அவர் படுக்கையில் இருந்து எழுந்தார்.(8) துயரமிக்க இதயத்துடன் உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், ஒரு பொருளில் அஃது {இதயம்} ஈர்க்கப்பட்டிருப்பதிலிருந்து விலகுவதில் வென்றார். அவரது புத்தியானது வேறு காரியங்களில் சுறுசுறுப்பாக இயங்கத் தொங்கியது.(9) அப்போதுதான் அவர் குவிந்த கவனத்துடன் சிராத்தம் செய்யும் கருத்தை அடைந்தார். தவங்களையே செல்வமாகக் கொண்ட அந்தத் தவசியால், கனிகள் மற்றும் கிழங்குகள் உள்ளிட்ட தமது உணவுப் பொருட்கள் அனைத்தும், தமக்கு ஏற்புடைய அனைத்து வகைத் தானியங்களும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டன.(11) புதுநிலவு {அமாவாசை} நாளில் அவர் துதிக்கத்தக்க எண்ணற்ற பிராமணர்களை (தமது ஆசிரமத்திற்கு அழைத்தார்). பெரும் ஞானம் கொண்ட நிமி அவர்களை (குசப் புற்களாலான) இருக்கைகளில் அமரச் செய்து, அவர்களை வலம் வந்து கௌரவித்தார்.(12) தன் வசிப்பிடத்திற்கு அழைத்து வந்த ஏழு பிராமணர்களை அணுகிய அந்தப் பலமிக்க நிமி, உப்பு கலக்காத சியாமாக அரசியாலான {சாமையரிசியாலான} உணவை அவர்களுக்குக் கொடுத்தார்.(13) உணவுண்டு கொண்டிருந்த அந்தப் பிராமணர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் தெற்கு நோக்கிய நுனிகளைக் கொண்ட எண்ணற்ற குசப்புற்கள் {தர்ப்பங்கள்} அவர்களது பாதங்களை நோக்கி வைக்கப்பட்டன.(14) தூய உடல், மனம் மற்றும் குவிந்த கவனத்துடன் கூடிய நிமி, குறிப்பிட்ட வகையில் அந்தப் புனிதப் புற்களை வைத்து, இறந்து போன மகனின் பெயரையும், அவனது குடும்பத்தையும் {கோத்திரத்தையும்} சொல்லி அவனுக்கு அரிசி பிண்டத்தை அளித்தார் {பிண்டப் பிரதானம் செய்தார்}.(15)

முனிவர்களில் முதன்மையான அவர் {நிமி}, இதைச் செய்துவிட்டு, (தம் அறிவுக்கு எட்டிய வரையிலும்) எந்தச் சாத்திரத்திலும் விதிக்கப்படாத செயலைச் செய்துவிட்டோமெனக் கருதி வருத்தத்தால் நிறைந்தார். உண்மையில் இவ்வாறு வருத்தத்தால் நிறைந்த அவர், தாம் செய்ததை நினைக்கத் தொடங்கினார்.(16) “ஐயோ, இதற்கும் முன்பு முனிவர்களால் ஒருபோதும் செய்யப்படாததைச் செய்திருக்கிறேன். (விதிக்கப்படாத ஒரு செயலைச் செய்து வினோதமான சடங்குகளை அறிமுகம் செய்தவன் என்ற வகையில்) பிராமணர்களின் சாபங்களை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்” என்று அவர் நினைத்தார்.(17) அப்போது அவர் தம் குலத்தின் அசல் மூதாதையரை நினைத்தார். அவர் நினைத்த மாத்திரத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அத்ரி அங்கே வந்தார்.(18) இறப்பற்றவரான அத்ரி, மகன் நிமித்தமாகத் துன்பத்தில் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் அவரை {நிமியைக்} கண்டு, ஏற்புடைய ஆலோசனைகளின் மூலம் அவருக்கு ஆறுதல் வழங்கினார்.(19)

அவர் {அத்ரி} அவரிடம் {நிமியிடம்}, “ஓ! நிமியே, உன்னால் செய்யப்பட இந்தச் சடங்கு பித்ருக்களைக் கௌரவிக்கும் ஒரு வேள்வியாகும். ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவனே, அச்சமேதும் உனதாக வேண்டாம். பழங்காலத்தில் பெரும்பாட்டனே {பிரம்மாவே} இதைக் கண்டடைந்தார்.(20) நீ செய்த இந்தச் சடங்கு சுயம்புவாலேயே விதிக்கப்பட்டதாகும். சுயம்புவை {பிரம்மாவைத்} தவிர வேறு எவரால் சிராத்தத்திற்கான இந்தச் சடங்கை விதிக்க இயலும்?(21) ஓ! மகனே, சிராத்தங்கள் குறித்து விதிக்கப்பட்ட அந்தச் சிறந்த விதியை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மகனே, சுயம்புவால் விதிக்கப்பட்டதையே நீயும் பின்பற்றுவாயாக. முதலில் நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவனே, மந்திரங்களின் உதவியுடன் புனித நெருப்பில் முதலில் கரணம் செய்த பிறகு, அடுத்ததாக ஒருவன் நெருப்பின் தேவனுக்கும் {அக்னிக்கும்}, சோமன் வருணன் போன்ற தேவர்களுக்கும் எப்போதும் ஆகுதிகளை ஊற்ற வேண்டும்.(23) அடுத்ததாகப் பித்ருக்களின் துணைவர்களான விஸ்வேதேவர்களுக்கும் சுயம்பு காணிக்கைகளில் {அவிர்ப்பாகத்தில்} ஒரு பகுதியை விதித்தார்.(24)

சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைத் தாங்கும் தேவியான பூமாதேவியும் அப்போது வைஷ்ணவி, காசியபி, வற்றாதவள் {அக்ஷயை} என்ற பெயர்களில் புகழப்பட வேண்டும்.(25) சிராத்தத்திற்கான நீர் இறைக்கப்படும்போது, பெரும்பலம் கொண்டவனான வருணன் புகழப்பட வேண்டும். ஓ! பாவமற்றவனே, அதன் பிறகு அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் மதிப்புடன் இருப்புக்கு அழைக்கப்பட்டு (ஆகுதிகளால்) நிறைவடையச் செய்யப்பட வேண்டும்.(26) பித்ருக்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் தேவர்கள் சுயம்புவாலேயே படைக்கப்பட்டனர். உயர் ஆன்மாவைக் கொண்ட உஷ்மபர்களும் அவராலேயே படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்குகள் {அவிர்ப்பாகங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(27) சிராத்தங்களில் இந்தத் தேவர்கள் அனைவரும் துதிக்கப்படுவதன் மூலம், {துதிப்பவரின்} மூதாதையர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். சுயம்புவால் படைக்கப்பட்டவர்களான மேலே குறிப்பிடப்படும் பித்ருக்கள் எண்ணிக்கையில் எழுவராவர்.(28) அக்னியைத் தங்கள் வாயாகக் கொண்டிருக்கும் விஸ்வேதேவர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இப்போது சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்குகளுக்கு {அவிர்ப்பாகங்களுக்குத்} தகுந்த உயர் ஆன்ம தேவர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(29)

பலன் {ஸஹன்}, திருதி {கிருதி}, விபாப்மன், புண்ணியக்ருத், பாவனன், பார்ஷ்னி {கிராம்யன்}, க்ஷேமன் {க்ஷேம்யன்}, ஸமூஹன், திவ்யஸானு,(30) விவஸ்வத் {விவஸ்வான்}, வீரியவத் {வீர்யவான்}, ஹ்ரீமத் {ஸ்ரீமான்}, கீர்த்திமத் {கீர்த்திமான்}, கிருதன், ஜிதாத்மன், முனிவீர்யன், தீப்தரோமன், பயங்கரன்,(31) அனுகர்மன், பிரதீதன் {பிரீதன்}, பிரதாத்ரி {பிரதாதா}, அம்சுமான், சைலாபன், பரமன், குரோதி, தீரோஷ்ணி, பூபதி,(32) ஸ்ரஜஸ் {ஸ்ரஜன்}, வஜ்ரின் {வஜ்ரீ}, வரி ஆகியோர் நித்திய விஷ்வேதேவர்களாவர். வித்யுத்வர்ச்சஸ், ஸோமவர்ச்சஸ், ஸூர்யஸ்ரீ என்ற பெயர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர்.(33) அவர்களுக்கு மத்தியில் உள்ளவர்களான ஸோமபன், ஸூர்யஸாவித்ரன், தத்தாத்மன், புண்டரீயகன், உஷ்ணீநாபன், நபோதன், விஷ்வாயு, தீப்தி,(34) சமூஹரன், ஸுரேசன், வியோமாரி, சங்கரன், பவன், ஈசன், கர்த்திரி {கர்த்தா}, கிருதி, தக்ஷன், புவனன், திவ்யகர்மக்ருத்,(35) கணிதன், பஞ்சவீர்யன், ஆதித்யன், ரஷ்மிமத் {ரஷ்மிவான்}, ஸப்தக்ருத், ஸோமவர்ச்சஸ், விஷ்வக்ருத், கவி,(36) அனுகோப்திரி {அனுகோப்தா}, சுகோப்திரி {ஸுகோப்தா}, நப்திரி {நப்தா}, ஈஷ்வரன் ஆகிய இவர்கள் அனைவரும் விஸ்வேதேவர்களாவார்கள். நித்தியமானவர்களான அவர்கள், காலத்தில் நேர்வது அனைத்தையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.(37)

கோத்ரவம் {கேழ்வரகு}, புலகம் என்றழைக்கப்படும் தானிய வகைகளைச் சிராத்தத்தில் காணிக்கையளிக்கக்கூடாது. சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பெருங்காயம் சேர்ந்த உணவு வகைகள், கிழங்குகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு {உள்ளி},(38) முருங்கை, மலையாத்தி, {கஞ்சா, பூசணி வகைகள்}, நஞ்சு தடவிய கணைகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சி, பரங்கிக்காய், சுரைக்காய், கரியுப்பு வகைகள் அனைத்தும் காணிக்கையளிக்கப்படக்கூடாது.(39) ஊர்ப்பன்றி இறைச்சி, வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சி, கருஞ்சீரகம், இந்துப்பு வகைகள், சீதபாகியென்னும் கீரை,(40) முளை, இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டி செய்யப்படும் பலகாரங்கள், சிங்காரக் கொட்டை {சிருங்காடகம்} ஆகியவை சிராத்தத்தில் கைவிடப்பட வேண்டியவை ஆகும். சிராத்தங்களில் அளிக்கப்படும் அனைத்துக் காணிக்கைகளிலும் அனைத்து வகை உப்புகளும், நாவற்கனிகளும் கைவிடப்பட வேண்டும்.(41) உமிழப்பட்ட, கண்ணீர் விழுந்த பொருட்கள் யாவும் சிராத்தங்களில் கொடுக்கப்படக்கூடாது[2]. பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில், அல்லது ஹவ்யகவ்யங்களோடு தேவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில் சுதர்சனம் என்றழைக்கப்படும் கீரை தவிர்க்கப்பட வேண்டும்.(42) இவை கலந்த ஹவி பித்ருக்களால் ஏற்கப்படுவதில்லை. சிராத்தம் நடைபெறும் இடங்களில் சண்டாளனும், ஸ்வபசனும் {சக்கிலியனும்} தவிர்க்கப்பட வேண்டும்;(43) மஞ்சள் கலந்த துணிகளை அணிந்திருப்பவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், (வரம்புமீறலுக்காக) விலக்கப்பட்டவர்கள், பிராமணக் கொலைக் குற்றவாளிகள், கலப்பு பிராமணன், விலக்கப்பட்ட மனிதனின் உறவினர் ஆகியோரும் தவிர்க்கப்பட வேண்டும். சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருந்து ஞானம் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் விலக்கப்பட வேண்டும்” என்றார் {அத்ரி}.(44)பழங்காலத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான அத்ரி, தம் குலத்தைச் சேர்ந்த முனிவர் நிமியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு சொர்க்கத்திலுள்ள பெரும்பாட்டனின் சபைக்குத் திரும்பிச் சென்றார்” என்றார் பீஷ்மர்.(45)

செரிமானத் துணைவன் அக்னி! – அநுசாஸனபர்வம் பகுதி – 92-சிராத்தம் செய்த முனிவர்கள்; செரிமானம் அடையாத தேவர்களும், பித்ருக்களும்; துணை செய்த அக்நி; ஹோமத்தோடு சிராத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மேற்குறிப்பிட்ட வகையில் நிமி செயல்பட்டபிறகு, விதிகளில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி (சிராத்தம் என்றழைக்கப்படும்) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலான வேள்வியைப் பெருமுனிவர்கள் அனைவரும் செய்யத் தொடங்கினர்.(1) கடமைகள் அனைத்தையும் செய்வதில் உறுதியாகவுள்ள முனிவர்கள் சிராத்தங்களைச் செய்து, புனித நீர் காணிக்கைகளை (பித்ருக்களுக்குக்) கவனமாக அளிக்கத் தொடங்கினர்.(2) எனினும், அனைத்து வகை {வர்ண} மனிதர்களாலும் (பித்ருக்களுக்கு) அளிக்கப்படும் காணிக்கைகளின் விளைவாக, அவ்வுணவைப் பித்ருக்கள் செரிக்கத் தொடங்கினர்.(3) விரைவில் அவர்களும், தேவர்களும் செரியாமையால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், அனைத்து மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிய உணவுக் குவியல்களால் பீடிக்கப்பட்ட அவர்கள் {பித்ருக்களும், தேவர்களும்} சோமனிடம் சென்றனர்.(4)

சோமனை அணுகிய அவர்கள், “ஐயோ, சிராத்தங்களில் எங்களுக்கு அளிக்கப்படும் உணவின் விளைவால் உண்டான எங்கள் துன்பம் பெரிதாக இருக்கிறது. எங்கள் சுகத்திற்குத் தேவையானதை நீ விதிப்பாயாக” என்றனர்.(5)

அவர்களிடம் சோமன், “தேவர்களே, சுகமடைய விரும்புபவர்களே, நீங்கள் சுயம்புவின் {பிரம்மனின்} வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அவர் உங்களுக்கான நன்மையைச் செய்வார்” என்று பதிலளித்தான்.(6)

ஓ! பாரதா, சோமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும் மேரு மலைகளின் சிகரத்தில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனிடம் சென்றனர்.(7)

தேவர்கள், “ஓ! சிறப்புமிக்கவரே, வேள்விகளிலும், சிராத்தங்களிலும் எங்களுக்கு அளிக்கப்படும் உணவால் நாங்கள் பெரிதும் பீடிக்கப்படுகிறோம். ஓ! தலைவா, எங்களுக்கு அருள்புரிந்து எங்களுக்கான நன்மையைச் செய்வீராக” என்று கேட்டனர்.(8)

அவர்களுடைய சொற்களைக் கேட்ட சுயம்பு {பிரம்மன்} அவர்களிடம் மறுமொழியாக, “இதோ என்னருகில் அக்னி தேவன் அமர்ந்திருக்கிறான். அவனே உங்களுக்கான நன்மையைச் செய்வான்” என்றான்.(9)

அக்னி, “ஐயன்மீர், சிராத்தம் செய்யப்படும்போது, நமக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை நாம் சேர்ந்தே உண்போம். அக்காணிக்கைகளை என்னுடன் சேர்ந்து நீங்கள் உண்டால், அவற்றை எளிதிற் செரிப்பதில் வெல்வீர் என்பதில் ஐயமில்லை” என்றான்.(10)

நெருப்பு தேவனின் இச்சொற்களைக் கேட்ட பித்ருக்களின் இதயம் சுகமடைந்தது. இக்காரணத்தினாலேயே, ஓ! மன்னா, சிராத்தங்களில் காணிக்கை அளிக்கப்படும்போது, முதல் பங்கானது நெருப்பு தேவனுக்கு அளிக்கப்படுகிறது.(11) ஓ! மனிதர்களின் இளவரசே, சிராத்தத்தில் காணிக்கைகளின் முதல் பங்கு நெருப்பு தேவனுக்கு அளிக்கப்பட்டால், மறுபிறப்பாள வகையில் பிறந்த ராட்சசர்களால் அத்தகைய சிராத்தத்திற்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது[1].(12) சிராத்தத்தில் நெருப்பு தேவனைக் கண்டதும் ராட்சசர்கள் அதனைவிட்டுத் தப்பி ஓடுவார்கள். சிராத்த சடங்கென்பது, முதலில் பிண்டத்தை (இறந்துபோன) தந்தைக்கு அளிப்பதாகும். அடுத்ததாக மற்றொன்று பாட்டனுக்கு அளிக்கப்பட வேண்டும்.(13) அடுத்ததாக ஒன்று பூட்டனுக்கு {பெரும்பாட்டனுக்கு} வழங்கப்பட வேண்டும். இதுவே சிராத்த விதியாகும். ஒவ்வொரு பிண்டம் கொடுக்கப்படும் போதும், அந்தக் கொடையாளி குவிந்த கவனத்துடன் சாவித்திரி மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(14) இந்த மந்திரமானது பித்ருக்களுக்குப் பிடித்தவனான சோமனிடமும் சொல்லப்பட வேண்டும். பருவகாலம் தொடங்கிய ஒரு பெண், அல்லது காதறுந்த ஒருவன் ஆகியோர் சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருக்க அனுமதிக்கப்படக்கூடாது. அதேபோல, சிராத்தம் செய்யும் மனிதனின் கோத்திரத்தைத் தவிர வேறு கோத்திரப்பெண்ணையும் அங்கே கொண்டுவரக்கூடாது[2].(15)ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஒருவன் தன் பித்ருக்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி அவர்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிக்க வேண்டும். உண்மையில், வழியில் ஓர் ஆறு வரும்போது ஒருவன் தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து அவர்களை நிறைவடைச் செய்ய வேண்டும்.(16) முதலில் தன் சொந்த குலத்தைச் சேர்ந்த மூதாதையருக்கு நீர்க்காணிக்கைகளை அளித்துவிட்டு, அதன் பிறகே (இறந்து போனவர்களான) தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அத்தகைய காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(17) ஒருவன் ஓர் ஓடையைப் பலவண்ணங்களிலான இரு எருதுகள் பூட்டப்பட்ட தேரில் கடக்கும்போதோ, ஓர் ஓடையைப் படகுகளில் கடக்கும் போதோ அவனுடைய பித்ருக்கள் நீர்க்காணிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள்.(18) இதையறிந்தவர்கள் எப்போதும் பித்ருக்களுக்குக் குவிந்த கவனத்துடன் நீர்க்காணிக்கைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் அமாவாசை நாளில் ஒருவன் இறந்து போன தன் மூதாதையருக்குக் காணிக்கை அளிக்க வேண்டும்.(19)

பித்ருக்களிடம் அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் வளர்ச்சி, நீடித்த வாழ்வு, சக்தி, செழிப்பு ஆகியன அனைத்தும் அடையத்தக்கவையாகின்றன. பெரும்பாட்டனான பிரம்மன், புலஸ்தியர், வசிஷ்டர், புலஹர்,(20) அங்கிரஸ், கிரது, பெரும் முனிவரான கசியபர் ஆகிய இவர்கள், ஓ! குரு குலத்தின் இளவரசே, யோகப் பேராசன்களாகக் கருதப்படுகிறார்கள்.(21) அவர்கள் பித்ருக்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, இதுவே சிராத்தம் குறித்த உயர்ந்த சடங்காகும். பூமியில் செய்யப்படும் சிராத்தங்களின் மூலம் ஒருவனுடைய குலத்தைச் சேர்ந்த, இறந்து போனவர்கள், துன்பநிலையில் இருந்து விடுபடுகிறார்கள்.(22) ஓ! குரு குல இளவரசே, இவ்வாறே சிராத்த விதிகள் குறித்துச் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் விளக்கிச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(23)

உபவாஸம், விகஸம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93அ-உண்ணாநோன்பின் குறியீடுகள்; தவங்களுக்கும் உண்ணாநோன்புகளுக்கும் இடையிலான வேறுபாடு; ஒருவன் விகஸம் உண்பவனாகும் நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு பிராமணரின் அழைப்பின் பேரில், (உண்ணா) நோன்பை நோற்கும் பிராமணர்கள், (அந்தச் சிராத்தத்தில் அளிக்கப்படும்) ஹவியை உண்டால், தங்கள் நோன்பு தவறிய வரம்புமீறலுக்காக அவர்கள் குற்றம் சுமத்தப்படலாமா? (அல்லது அவர்கள் அத்தகைய அழைப்பைப் பெறும்போது அந்தப் பிராமணரின் அழைப்பை மறுக்க வேண்டுமா?) ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களில் குறிப்பிடப்படாத அத்தகைய நோன்புகளை {அவேதோக்த விரதங்களை} நோற்கும் பிராமணர்கள் தங்கள் விருப்பத் தூண்டுதலின் பேரில் உண்ணலாம். எனினும், வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்கும் பிராமணர்களைப் பொறுத்தவரை, ஓ! யுதிஷ்டிரா, சிராத்தம் செய்பவனின் வேண்டுகோளுக்கு இணங்க சிராத்த ஹவியை உண்பதன் மூலம் அவர்கள் தங்கள் நோன்பைக் கெடுத்த குற்றம்புரிந்தவராகக் கருதப்படுவார்கள்” என்றார்.(2)

யுதிஷ்டிரன், “சில மனிதர்கள் உண்ணா நோன்பை {உபவாஸத்தை} தவம் என்கின்றனர். உண்மையில் தவமானது உண்ணா நோன்புடன் அடையாளங்காணத் தக்கதா? இல்லையா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர், “ஒரு மாத காலமோ, அரை மாத {ஒரு பக்ஷ} காலமோ தொடர்ந்து உண்ணா நோன்பிருப்பதைத் தவம் என்றே மக்கள் கருதுகிறார்கள். எனினும், தன் உடலைத் துன்புறுத்திக் கொள்பவன் தவசியாகவோ, கடமைகளை அறிந்தவனாகவோ கருதத்தக்கவனல்ல என்பதே உண்மை[1].(4) எனினும், துறவானது தவங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு பிராமணன் எப்போதும் உணவைத் தவிர்ப்பவனாகவும், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்பவனாகவும் இருக்க வேண்டும்[2].(5) ஒரு பிராமணன் வாக்கையும் {பேச்சையும்} தவிர்த்து எப்போதும் தன்மறுப்பைப் பயின்று வேதமுரைக்க வேண்டும். அந்தப் பிராமணன், அறமீட்டும் விருப்பத்தால், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளும், உறவினர்களும் சூழ இருக்க வேண்டும். அவன் உறங்கக்கூடாது {எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கக்கூடாது}.(6) அவன் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். அவன் எப்போதும் வேதங்களையும், சாத்திரங்களையும் படிக்க வேண்டும். அவன் எப்போதும் வாய்மை பேசி, தன்மறுப்பைப் பயில வேண்டும்.(7) அவன் விகசம் (தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படைத்த பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். உண்மையில் அவன் தன் வசிப்பிடத்திற்கு வரும் அனைவரையும் விருந்தோம்பலுடன் வரவேற்க வேண்டும். அவன் எப்போதும் அமுதம் (விருந்தினர், பணியாட்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உண்ட பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். அவன் சடங்குகள் அனைத்தையும் முறையாக நோற்று, வேள்விகளைச் செய்ய வேண்டும்” என்றார்.(8)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எப்போதும் உண்ணா நோன்புகளை நோற்பவனாகக் கருதப்படுவது எவ்வாறு? அவன் நோன்புகள் நோற்பவனாவது எவ்வாறு? ஓ! மன்னா, அவன் விகசத்தை உண்பவனாவது எவ்வாறு? எதைச் செய்வதன் மூலம் அவன் விருந்தினர்களுக்குப் பிடித்தமானவன் ஆகிறான்” என்று கேட்டான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “காலையிலும், மாலையிலும் குறிப்பிடப்படும் நேரங்களில் மட்டுமே உணவை எடுத்துக் கொண்டு இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவையும் தவிர்ப்பவன், உணவைத் தவிர்ப்பவனாக {உண்ணா நோன்பிருப்பவனாகச்} சொல்லப்படுகிறான்.(10) ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியிடம் மட்டும், அவளது பருவகாலங்களில் மட்டும் கலவி புரிபவனாக இருந்தால் அவன் பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான். எப்போதும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வாக்கில் {பேச்சில்} வாய்மைநிறைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(11) {வேள்வியில்லாமல்} ஒன்றுமில்லாமல் கொல்லப்படும் விலங்குகளில் இருந்து கிட்டும் இறைச்சிகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் இறைச்சியைத் தவிர்ப்பவனாகிறான்[3]. கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பகல் நேரத்தில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடன் இருப்பவனாகக் கருதப்படுகிறான்.(12) விருந்தினர்கள், பணியாட்களின் தேவைகளுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சுவதையே எப்போதும் உண்பவன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(13)பிராமணர்கள் (உணவை) உண்ணும் வரை உண்ணாமல் தவிர்ப்பவன், அத்தகைய தவிர்த்தலின் மூலம் சொர்க்கத்தையே வெல்பவனாகக் கருதப்படுகிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், உறவினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்குப் படைத்த பிறகு எஞ்சுவதை உண்பவன் விகசம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15) அத்தகைய மனிதர்கள், பிரம்மனின் வசிப்பிடத்தில் பேரின்ப உலகங்கள் பலவற்றை அடைகிறார்கள். ஓ! மன்னா, அங்கே அவர்கள் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்கள் ஆகியோருடன் வசிக்கிறார்கள்.(16) உண்மையில், அவர்கள் தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் துணையுடனும், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் சூழவும் திளைத்து அனைத்து வகைகளிலும் அந்த உலகங்களில் இன்புற்றிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய உயர்ந்த கதியாகிறது” என்றார் {பீஷ்மர்}.(17)

தானம் – தக்கார் தகவிலார்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93ஆ-கொடைபெறத் தகுந்தவர், தகாதவர் யார் என்பதைக் குறித்து விருஷாதர்ப்பிக்கும் சப்தரிஷிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பிராமணர்களுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை மக்கள் கொடுப்பது காணப்படுகிறது. எனினும், ஓ! பாட்டா, கொடையாளிக்கும், கொடைபெறுபவருக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?” என்று கேட்டான்.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணன் நீதிமானிடம் இருந்தும், நியாயமற்றவனிடம் இருந்தும் கொடைகளைப் பெறுகிறான். கொடையாளி அறவோனாக இருந்தால் அதைப் பெறுபவன் சிறு களங்கத்தையே {பாவத்தையே} ஈட்டுவான். மறுபுறம் கொடையாளி அறமற்றவனாக {அதர்மியாக} இருந்தால் அதைப் பெறுபவன் நரகத்தில் மூழ்குவான்.(19) இது தொடர்பாக, ஓ! பாரதா, விருஷாதர்ப்பிக்கும், முனியெழுவருக்கும் {சப்தரிஷிகளுக்கும்} இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(20)

கசியபர், அத்ரி, வசிஷ்டர், பரத்வாஜர், கோதமர் {கௌதமர்}, விஷ்வாமித்திரர், ஜமதக்னி, கற்புக்கரசியான (வசிஷ்டரின் மனைவி) அருந்ததி ஆகியோர் அனைவருக்கும் பொதுவாகக் கண்டை என்ற பெயரில் பெண் பணியாள் ஒருத்தி இருந்தாள். பசுஸகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன் அளவது கணவனானான்.(21,22) கசியபரும், பிறரும், பழங்காலத்தில் தியான யோகத்தின் துணை கொண்டு பிரம்மத்தை அடைய விரும்பி கடுந்தவங்களைச் செய்தபடியே உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தனர்.(23) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அந்தக் காலத்தில் கடும் பஞ்சம் தோன்றியது. உலகம் முழுவதும் உள்ள உயிரினங்கள் பசியால் பீடிக்கப்பட்டு மிகவும் பலவீனமடைந்தன.(24) முன்பொரு காலத்தில் {அந்தப் பஞ்ச காலத்தில்} சிபியின் மகனால் {விருஷாதர்ப்பியால்} செய்யப்பட்ட வேள்வி ஒன்றில், அவன் தன் மகனையே {அநிலனை} வேள்விக் கொடையாக ரித்விக்குகளுக்கு அளித்தான்.(25) நீண்ட வாழ்நாளைப் பெறாத அவன் அக்காலத்தில் பசியால் இறந்தான். ஏற்கனவே சொல்லப்பட்டவர்களும், பசியால் பீடிக்கப்பட்டவர்களுமான அம்முனிவர்கள், இறந்து போன அந்த இளவரசனை {அநிலனை} அணுகி, அவனைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர்.(26) பசிக்கொடுமையால் தூண்டப்பட்ட அவர்கள், எவனுடைய வேள்வியைச் செய்து கொடுத்தார்களோ அவனுடைய மகனின் உடலையே ஒரு பாத்திரத்தில் இட்டுச் சமைக்கத் தொடங்கினர்.(27) மானுடலோகத்தில் {மனிதர்களின் உலகத்தில்} இருந்த உணவனைத்து மறைந்து போகவே, தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அந்தத் தவசிகள், தங்களைத் தாங்கிக் கொள்வதற்காக அத்தகைய துன்பகரமான மாற்றத்தை அடைந்தனர்.(28) அவர்கள் இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திரிந்து கொண்டிருந்த விருஷாதர்ப்பனின் மகனான மன்னன் சைப்யன், அந்த முனிவர்களிடம் வந்தான். உண்மையில் அவன், பசிக் கொடுமையால் தூண்டப்பட்டுச் சடலத்தைச் சமைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களைத் தன் வழியில் சந்தித்தான்.(29)

விருஷாதர்ப்பனின் மகன் {சைப்யன்}, “(என்னிடமிருந்து) நீங்கள் பெறும் கொடை உங்கள் அனைவரையும் உடனே விடுவிக்கும். எனவே, உங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்ட ஒரு கொடையே ஏற்பீராக. தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, என்னிடம் உள்ள செல்வத்தைச் சொல்கிறேன் கேட்பீராக.(30) எந்தப் பிராமணர் என்னிடம் (கொடைகளை) வேண்டுகிறாரோ அவரே எப்போதும் எனது அன்புக்குரியவர். உண்மையில், நான் உங்களுக்கு ஆயிரம் கோவேறு கழுதைகளைக் கொடுக்கிறேன். வெள்ளை மயிர் கொண்டவையும், வேகத்தில் முதன்மையானவையும், ஒவ்வொரு காளையைத் தன்னுடன் கொண்டவையும், நல்ல முறையில் கன்றீன்றவையும், பால் தருபவையுமான ஆயிரம் பசுக்களையும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறேன்.(31) வெண்ணிறம் கொண்டவையும், சிறந்த இனத்தில் பிறந்தவையும், கனமான சுமைகளை இழுக்க வல்லவையுமான ஆயிரம் காளைகளையும் உங்களுக்குத் தருகிறேன். நல்ல இயல்பைக் கொண்டவையும், தங்கள் வகையில் முதன்மையானவையும், கொழுத்தவையும், ஒவ்வொன்றும் முதல் கன்றை ஈன்றவையும், வயிற்றில் இரண்டாம் கன்றைக் கொண்டவையுமான பெரும் எண்ணிக்கையிலான பசுக்களையும் {தலையீற்றுப் பசுக்களையும்} கொடுக்கிறேன்[4].(32) முதன்மையான கிராமங்கள், தானியங்கள், பண்டங்கள், மிக அரிதானவையும், விலைமதிப்புமிக்கவையுமான ரத்தினங்கள் ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு வேறு என்ன கொடுக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்லுங்கள். உண்ணத்தகாத இவ்வுணவை உண்ண முயலாதீர். உங்கள் உடல்களைத் தாங்கிக் கொள்ள உங்களுக்கு என்ன தர வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(33)

முனிவர்கள், “ஓ! மன்னா, ஓர் ஏகாதிபதியிடம் இருந்து கொடையேற்பது முதலில் இனிமையாகத் தான் தெரியும், ஆனால் முடிவில் அது நஞ்சாக இருக்கும். ஓ! மன்னா, இதை நன்கறிந்தும், நீ ஏன் இந்தக் காணிக்கைகளால் எங்களுக்கு ஆசை காட்டுகிறாய்?[5](34) ஒரு பிராமணனின் உடலானது தேவர்களின் களமாகும் {வயலாகும்}. தவத்தின் மூலம் அது தூய்மையடைகிறது. மேலும் பிராமணனை நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் தேவர்களையே நிறைவடையச் செய்கிறான்.(35) ஒரு மன்னன் தனக்குக் கொடுக்கும் கொடைகளை ஒரு பிராமணன் ஏற்றுக் கொண்டால் அத்தகை ஏற்பின் மூலம் அவன் அந்த நாளின் தவத்தால் அவன் அடைய வேண்டிய பலனை இழக்கிறான். உண்மையில், இவ்வாறு ஏற்றுக் கொள்வது ஒரு காட்டையே எரிக்கும் சுடர்மிக்கக் காட்டுத்தீயைப் போலவே பலன்களை எரித்துவிடுகிறது.(36) ஓ! மன்னா, உன்னிடம் வேண்டுவோருக்குக் கொடையளிப்பதன் விளைவால் கிட்டும் மகிழ்ச்சி உனதாகட்டும்” என்ற சொற்களைச் சொல்லிவிட்டு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வேறு வழியில் சென்றுவிட்டனர்.(37)அந்த உயர் ஆன்மாக்கள் சமைக்க நினைத்த இறைச்சி சமைக்கப்படாமலேயே எஞ்சியது. உண்மையில் அந்த இறைச்சியைக் {இளவரசன் அநிலனைக்} கைவிட்டுச் சென்ற அவர்கள், உணவு தேடி காடுகளுக்குள் நுழைந்தனர்.(38) அதன் பிறகு, மன்னனின் அமைச்சர்கள், தங்கள் தலைவனால் தூண்டப்பட்டுக் காடுகளுக்குள் நுழைந்து அத்திக்கனிகளைப் பறித்து அவற்றை அந்த முனிவர்களுக்குக் கொடுக்க முயற்சித்தனர்.(39) மன்னனின் அதிகாரிகள் அவற்றில் சில அத்திகளைத் தங்கத்தால் நிரப்பி, அவற்றைப் பிறவற்றோடு கலந்து அந்தத் தவசிகளை ஈர்த்து, அவர்களை ஏற்கச்செய்ய முயன்றனர்.(40)

அந்த அத்திக்கனிகளில் சிலவற்றை எடுத்த அத்ரி, அவை கனமாக இருப்பதைக் கண்டு அவற்றை ஏற்க மறுத்தான். அவர் {அத்ரி}, “நாங்கள் அறிவற்றவர்கள் அல்ல. நாங்கள் மூடர்களும் அல்ல.(41) இந்த அத்திகளுக்குள் பொன்னிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். எங்களுக்குப் புலன்களிருக்கின்றன. உண்மையில் நாங்கள் உறங்காமல் விழித்திருக்கிறோம். இவ்வுலகில் ஏற்கப்பட்டால் அவை மறுமையில் கசப்பான விளைவுகளை உண்டாக்கும். இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை நாடும் எவனும் ஒருபோதும் இவற்றை ஏற்கக்கூடாது” என்றார்.(42)

வசிஷ்டர், “ஒரு பொன் நாணயத்தை நாங்கள் ஏற்றாலும்கூட, அது (அதனோடு தொடர்புடைய பாவம்) நூறாகவோ, ஆயிரமாகவோ கணக்கிடப்படும். எனவே, நாங்கள் பல நாணயங்களை ஏற்றால் நிச்சயம் மறுமையில் நாங்கள் மகிழ்ச்சியற்ற நிலையையே உறுதியாக அடைவோம்” என்றார்.(43)

கசியபர், “பூமியில் உள்ள நெல் மற்றும் யவம் யாவும், உலகில் தோன்றும் பொன், விலங்குகள் மற்றும் பெண்கள் யாவும், ஒரு தனி மனிதனின் ஆசையை நிறைவடையச் செய்ய இயலாதவையாகும். எனவே, ஞானம் கொண்ட ஒருவன் பேராசையைக் கைவிட்டு அமைதியைப் பின்பற்ற {ஒழிவடைய} வேண்டும்” என்றார்.(44)

பரத்வாஜர், “ருருவின் கொம்புகள் முதலில் தோன்றிய பிறகு, அந்த விலங்கோடு சேர்ந்து தானும் வளர்கிறது. மனிதனின் பேராசையும் அதுபோன்றதுதான். அதற்கு ஓர் அளவில்லை” என்றார்.(45)

கோதமர் {கௌதமர்}, “உலகிலுள்ள பொருட்கள் யாவும் ஒரு மனிதனை நிறைவடையச் செய்யவல்லவையல்ல. மனிதன் (ஆறுகளின் நீர் அனைத்தினாலும் நிறைவடையாத கடலைப் போலவே) நிறைவடையாதவன் என்பதால் அவன் பெருங்கடைப் போன்றவனாவான்” என்றார்.(46)

விஷ்வாமித்திரர், “ஒருவன் பேணிவளர்த்த ஆசை நிறைவடையும்போது, உடனே மற்றொன்று {மற்றொரு ஆசை} முளைத்து நிறைவைத் தேடி அவனைக் கணையாகத் துளைக்கிறது” என்றார்.(47)

ஜமதக்னி, “கொடையேற்காமையே அடித்தளமாக இருந்து தவங்களைத் தாங்குகிறது. எனினும், ஏற்பது செல்வத்தை (தவத்தின் பலன்களை) அழிக்கிறது” என்றார்.(48)

அருந்ததி, “உலகின் பொருட்கள் (வேள்விகள் மற்றும் கொடைகளின் மூலம்) அறமீட்டச் செலவு செய்யும் நோக்கில் சேமிக்கப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள். எனினும், உலகச் செல்வத்தைக் காட்டிலும் அறமீட்டுவதே சிறந்ததென நான் கருதுகிறேன்” என்றாள்.(49)

கண்டை, “பெருஞ்சக்தி கொண்ட என் தலைவர்களே பெரும்பயங்கரமாகத் தெரியும் இதற்கு இவ்வளவு அஞ்சுகிறார்கள் என்றால் பலவீனமான நான் இன்னும் அதிகம் அஞ்சுகிறேன்” என்றாள்.(50)

பசுஸகன், “அறச்செல்வமே மிக மேன்மையானதாகும். அதைவிட மேன்மையானது வேறேதும் இல்லை. அந்தச் செல்வத்தையே பிராமணர்கள் அறிகிறார்கள். அச்செல்வத்தின் மதிப்பைக் கற்பதற்காக மட்டுமே நான் இவர்களிடம் பணியாளாகப் பணிபுரிகிறேன்” என்றான்.(50)

முனிவர்கள் (அனைவரும் ஒன்றாக), “இந்நிலத்து மக்களின் மன்னன் அளிக்கும் கொடையால் மகிழ்ச்சி அவனுடையதாகட்டும். பொன்னை உட்பொதிந்து இக்கனிகளை எங்களுக்கு அனுப்பியவனின் கொடை வெற்றியடையட்டும்” என்றனர்”[6].(52)பீஷ்மர் தொடர்ந்தார், “உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட அம்முனிவர்கள் இச்சொற்களைச் சொல்லிவிட்டு பொன்னுள்ள அத்திகளைக் கைவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(53)

அமைச்சர்கள், “ஓ! மன்னா, அம்முனிவர்கள், அத்திகளுக்குள் பொன் இருப்பதை அறிந்து கொண்டு சென்று விட்டனர். இதை நீ அறிவாயாக” என்றனர்”.(54)

பீஷ்மர் தொடர்ந்தார், “அமைச்சர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட விருஷாதர்ப்பி, அந்த முனிவர்கள் அனைவரின் மீதும் கோபத்தால் நிறைந்தான். உண்மையில் அந்த ஏகாதிபதி அவர்களைப் பழிவாங்க விரும்பி தன் வீட்டிற்குள் சென்றான்.(55) கடுந்தவங்களை நோற்ற அவன், மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொரு முறையும் நெய்யாலான ஆகுதிகளைப் புனித நெருப்பில் {ஆகவனீயமெனும் அக்கினியில்} ஊற்றினான்.(56) அந்த ஓதலின் விளைவால் அனைவரையும் அச்சுறுத்தவல்ல வடிவம் ஒன்று {பேயொன்று} அந்நெருப்பில் இருந்து எழுந்தது. விருஷாதர்ப்பி அவளுக்கு யாதுதானி என்ற பெயரைச் சூட்டினான்.(57) மன்னனின் மந்திர ஓதலில் இருந்து வந்ததும், இறுதி இரவை {காளராத்திரியைப்} போன்று பயங்கரமானதுமான அந்த வடிவம் {அந்தப் பேய்}, அந்த ஏகாதிபதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் தோன்றியது. மன்னன் விருஷாதர்ப்பியிடம் அவள், “நான் நிறைவேற்ற வேண்டியதென்ன?” என்று கேட்டாள்.(58)

விருஷாதர்ப்பி, “செல், முனியெழுவரையும், அருந்ததியையும், பெண்பணியாளின் கணவனையும், பெண்பணியாளையும் தொடர்ந்து சென்று அவர்களுடைய பெயர்களின் பொருளைப் புரிந்து கொள்வாயாக.(59) அவர்களின் பெயர்களை உறுதி செய்து கொண்ட பிறகு, அவர்கள் அனைவரையும் கொல்வாயாக[7]. அவர்களைக் கொன்ற பிறகு, நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக” என்றான்”.(60)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தனக்குரிய வடிவத்தில், யாதுதானி என்று பெயரிடப்பட்ட அந்த ராட்சசி “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அந்தப் பெரும் முனிவர்கள் உணவு தேடி திரிந்து கொண்டிருந்த காட்டை நோக்கிச் சென்றாள்”.(61)

பேராசை தவிர்த்தல்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93c-சப்தரிஷிகளுக்கும், யாதுதானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; சப்தரிஷிகள் தங்கள் ஆசையை ஒழித்து சொர்க்கம் சென்றது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்….

{பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “உண்மையில், ஓ! மன்னா, அத்ரியைத் தங்களுக்கு மத்தியில் கொண்ட அம்முனிவர்கள் கிழங்குகளையும், கனிகளையும் உண்டு அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர்.(62) அப்படி அவர்கள் திரிந்து வரும்போது, அகன்ற தோள்களையும், பருத்த கரங்கள் மற்றும் கால்களையும், ஊட்டமிக்க முகம் மற்றும் வயிற்றைக் கொண்ட ஒரு துறவியை {சுனஸ்ஸகனைக்} கண்டனர். கொழுப்புநிறைந்த அங்கங்களைக் கொண்ட அவர் ஒரு நாயுடன் திரிந்து கொண்டிருந்தார்.(63)

நன்கு வளர்ந்து அழகாக இருந்த அங்கங்களுடன் கூடிய அந்தத் துறவியைக் கண்ட அருந்ததி, முனிவர்களிடம், “உங்களில் எவராலும் இத்தகைய நன்கு பருத்த தன்மையை ஒரு போதும் வெளிக்காட்ட இயலாது[8]” என்றாள்.(64)வசிஷ்டர், “இந்த மனிதரின் புனித நெருப்பு நம்மைப் போன்றதல்ல, ஏனெனில், காலையிலும் மாலையிலும் அவரால் அதில் ஆகுதிகளை ஊற்ற இயலும், நம்மில் எவரும் அதைச் செய்ய இயலாது. இதன் காரணமாகவே அவரும், அவரது நாயும் நன்கு பருக்கிறார்கள்” என்றார்[9].(65)அத்ரி, “இந்த மனிதன் நம்மைப் போலப் பசிக்கொடுமையை அனுபவிக்கவில்லை. இவனது சக்திக்கு நம்மைப் போல எந்தக் குறைவும் ஏற்படவில்லை. பெரும் சிரமத்துடன் அடையப்பட்ட அவனுடைய வேதங்கள் நம்முடையதைப் போலத் தொலைந்து போகவில்லை. எனவே, அவனும் அவனது நாயும் நன்கு பருத்திருக்கிறார்கள்” என்றார்.(66)

விஷ்வாமித்திரர், “இந்த மனிதன் நம்மைப் போலச் சாத்திரங்களில் உள்ள நித்திய கடமைகளை நோற்க இயலாதவனாக இல்லை. நான் சோம்பலானவனாக இருக்கிறேன். நான் பசிக்கொடைமையை அனுபவிக்கிறேன். நான் அடைந்த ஞானத்தைத் தொலைத்துவிட்டேன். இவ்வகையில் இந்த மனிதன் நம்மைப் போன்றவனில்லை. எனவே இவனும், இவனது நாயும் பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்[10].(67)ஜமதக்னி, “நம்மைப் போல, ஆண்டுக்குத் தேவையான தானியங்களையும், விறகுகளையும் சேமிக்க வேண்டிய எண்ணம் இந்த மனிதனுக்கு இல்லை. எனவே, இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்.(68)

கசியபர், “நம்மைப் போல, வீட்டுக்கு வீடு சென்று “கொடுப்பீராக, கொடுப்பீராக” என்று சொல்லி பிச்சையெடுப்பவர்களும், குருதியுடன் கூடியவர்களுமான நான்கு சகோதரர்கள் இம்மனிதனுக்கு இல்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாகக் காண்கிறேன்” என்றார்.(69)

பரத்வாஜர், “நம்மைப் போல இந்த மனிதன் தன் மனைவியை நிந்தித்துச் சபித்தற்காக வருந்த வேண்டியதில்லை. அவன் இவ்வளவு தீமையாகவும், உணர்வற்றவனாகவும் செய்படவில்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாகக் காண்கிறேன்” என்றார்[11].(70)கோதமர் {கௌதமர்}, “இந்த மனிதன் நம்மைப் போலக் குசப் புற்களாலான மூன்றே துண்டுகளாலான மறைப்பையும், மூன்று வருடம் பழைமையான ஒரே ஒரு ரங்கு தோலையும் {உடுத்திக்} கொண்டிருக்கவில்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்”[12].(71)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “திரிந்து கொண்டிருந்தவரான அத்துறவி, இந்தப் பெரும் முனிவர்களைக் கண்டு, அவர்களை அணுகி, வழக்கப்படியே அவர்கள் அனைவரின் கரங்களையும் தொட்டு வணங்கினார்.(72) அப்போது அந்தக் காட்டில் வாழ்வாதாரங்களை அடைவதற்கான சிரமத்தையும், அதன் விளைவாகத் தாங்கிக் கொள்ள வேண்டிய பசிக் கொடுமையையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிவிட்டு அனைவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.(73) உண்மையில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான கனிகளைப் பறித்தல் மற்றும் கிழங்குகளைத் தோண்டி எடுத்தல் போன்ற ஒரு பொதுக் காரியத்துக்காகவே அவர்கள் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர்.(74) ஒருநாள், அவர்கள் திரிந்து கொண்டிருந்தபோது, தாமரைகள் நிறைந்த ஓர் அழகிய தடாகத்தைக் கண்டனர். அதன் கரைகள் ஒன்றுக்கொன்று அருகில் அடர்த்தியாக நின்ற மரங்களால் மறைக்கப்பட்டிருந்தன. அத்தடாகத்தின் நீர் தூய்மையானதாகவும், தெளிவானதாகவும் இருந்தது.(75) உண்மையில், அத்தடாகத்தை அலங்கரித்திருந்த தாமரைகள் அனைத்தும் காலைச் சூரியனின் நிறத்தைக் கொண்டிருந்தன. நீரில் மிதந்த இலைகள் வைடூரிய நிறத்தில் இருந்தன.(76) பல்வேறு வகை நீர்க்கோழிகள் அதன் பரப்பில் விளையாடிக் கொண்டிருந்தன. அதனிடம் செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே இருந்தது. கரைகள் சேறாக இல்லை, நீரை அடைவதும் எளிதாக இருந்தது.(77)

பயங்கர முகத்தோற்றம் கொண்டவளும், மந்திரங்களில் இருந்து உண்டானவளும், விருஷாதர்ப்பியால் தூண்டப்பட்டவளுமான ராட்சசி யாதுதானி அத்தடாகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தாள்.(78) பசுஸகனின் துணையுடன் கூடிய அந்த முதன்மையான முனிவர்கள், சில தாமரைத் தண்டுகளை {தாமரைக் கிழங்குகளைத்} திரட்டும் நோக்கத்தில், யாதுதானியால் காக்கப்பட்ட அத்தடாகத்தை நோக்கிச் சென்றனர்[13].(79)தடாகத்தின் கரையில் நிற்கும் பயங்கரத் தன்மை கொண்ட யாதுதானியைக் கண்ட அந்தப் பெரும் முனிவர்கள், அவளிடம்,(80) “இந்தத் தனிமையான காட்டில் தனியாக நிற்கும் நீ யார்? யாருக்காக நீ இங்கே காத்திருக்கிறாய்? உண்மையில் உன் நோக்கம் என்ன? தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இத்தடாகத்தின் கரையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.(81)

யாதுதானி, “நான் யார் என்பது ஒரு பொருட்டில்லை. (என் பெயர், குலம் மற்றும் நோக்கம் குறித்து) நான் கேட்கத்தகாதவளாவேன். தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களே, இத்தடாகத்தைக் கண்காணிக்க நிறுவப்பட்டிருக்கும் காவலாளி நான் என்பதை அறிவீராக” என்றாள்[14].(82)முனிவர்கள், “நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். எங்களிடம் உண்பதற்கு வேறேதும் இல்லை. உன் அனுமதியுடன் நாங்கள் சில தாமரைத் தண்டுகளைத் திரட்டிக் கொள்கிறோம்” என்று கேட்டனர்.(83)

யாதுதானி, “ஓர் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டு நீங்கள் விரும்பிய அளவுக்குத் தாமரைத் தண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பின் ஒருவராக நீங்கள் உங்கள் பெயர்களை என்னிடம் சொல்ல வேண்டும். பிறகு, தாமதமில்லாமல் நீங்கள் தண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்” என்றாள்”.(84)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளுடைய பெயர் யாதுதானி என்பதையும், (அவர்களுடைய பெயர்களின் பொருள்களையும், தங்கள் சக்தியின் எல்லையையும் அறிந்த பிறகு) தங்களைக் கொல்லவே அவள் அங்கே நின்று கொண்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டவரும், பசியால் துடித்துக் கொண்டிருந்தவருமான அத்ரி, அவளிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்.(85)

அத்ரி, “நான் உலகத்தைப் பாவத்தில் இருந்து தூய்மையடையச் செய்கிறேன் என்பதால் நான் அத்ரி என்று அழைக்கப்படுகிறேன். மேலும், நாள்தோறும் வேதங்களை மும்முறை படிப்பதால் நான் என் இரவுகளைப் பகலாக்கியிருக்கிறேன். மேலும், நான் வேதங்கல்லாத இரவேதும் இல்லை. ஓ! அழகிய பெண்ணே, இந்தக் காரணங்களுக்காகவும் நான் அத்ரி என்று அழைக்கப்படுகிறேன்” என்றார்[15].(86)யாதுதானி, “ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, உமது பெயருக்கு நீர் கொடுத்த விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, சென்று தாமரைகள் நிறைந்த இந்தக் குளத்திற்குள் மூழ்குவீராக” என்றாள்.(87)

வசிஷ்டர், “நான் (பலம் முதலியவற்றின் யோக குணங்களைக் கொண்ட) செல்வத்தை உடையவன். மேலும், இல்லற வாழ்வுமுறையை நோற்கும் நான் அத்தகைய வாழ்வு முறையை நோற்கும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறேன். (இத்தகைய) செல்வத்துடன் கூடியவனாகவும், இல்லறத்தானாக வாழ்வதனாலும், இல்லறத்தார் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுவதாலும் நான் வசிஷ்டன் என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[16].(88)யாதுதானி, “உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. அசல் வேர்கள் அடைந்த சொல்வடிவ மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைத் தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்[17].(89)கசியபர், “நான் எப்போதும் என் உடலைப் பாதுகாக்கிறேன், என் தவங்களின் விளைவாகப் பிரகாசத்துடன் இருக்கிறேன். இவ்வாறு என் உடலைப் பாதுகாப்பதினாலும், என் தவங்களின் மூலம் உண்டான பிரகாசத்தினாலும் நான் கசியபன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்” என்றார்[18].(90)யாதுதானி, “ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(91)

பரத்வாஜர், “என் மகன்கள், சீடர்கள், தேவர்கள், பிராமணர்கள் மற்றும் என் மனைவி ஆகியோரை நான் எப்போதும் ஆதரிக்கிறேன். இவர்கள் அனைவரையும் சுகமாக ஆதரிப்பதன் விளைவால் நான் பரத்வாஜன் என்று அழைக்கப்படுகிறேன்” என்றார்[19].(92)யாதுதானி, “வேர்ச்சொல்லானது சொல்வடிவத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதன் விளைவால் உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(93)

கோதமர் {கௌதமர்}, “தற்கட்டுப்பாட்டின் உதவியால் நான் சொர்க்கத்தையும், பூமியையும் வென்றேன். அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களைச் சம பார்வையுடன் பார்ப்பதன் விளைவால் நான் புகையற்ற நெருப்பைப் போன்றவனாக இருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடக்கப்பட முடியாதவனாவேன். மேலும், நான் பிறந்த போது, என் உடற்பிரகாசம் சுற்றிலும் இருந்து இருளை விலக்கியது. இந்தக் காரணங்களினால் நான் கோதமன் என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[20].(94)யாதுதானி, “ஓ! பெருந்தவசியே, உமது பெயருக்கு நீர் என்னிடம் சொன்ன விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(95)

விஷ்வாமித்திரர், “அண்டத்தின் தேவர்கள் என் நண்பர்களாவர். நான் அண்டத்தின் நண்பனுமாவேன். எனவே, ஓ! யாதுதானியே நான் விஷ்வாமித்திரன் என்றறியப்படுகிறேன்” என்றார்[21].(96)யாதுதானி, “வேர்ச்சொல்லானது சொல்வடிவத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதன் விளைவால் உமது பெயருக்கான நீர் சொல்லும் விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(97)

ஜமதக்னி, “நான் தேவர்களின் வேள்வி நெருப்பில் இருந்து உண்டானவன். எனவே, ஓ! அழகிய பண்புகளைக் கொண்டவளே, நான் ஜமதக்னி என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[22].(98)யாதுதானி, “ஓ! பெருந்தவசியே, (வேர்ச்சொல்லின் பல்வேறு சொல்வடிவ மாற்றங்களின் விளைவால்) நீர் சொன்ன உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(99)

அருந்ததி, “நான் எப்போதும் என் கணவரின் அருகில் நின்று, அவரோடு சேர்ந்து பூமியைத் தாங்குகிறேன். நான் எப்போதும் என் கணவரின் இதயத்தை என்னை நோக்கித் திருப்புகிறேன். இக்காரணங்களுக்காக நான் அருந்ததி என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[23].(100)யாதுதானி, “வேர்ச்சொற்களில் உண்டாகியிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உமது பெயருக்கு நீ கொடுத்த விளக்கத்தை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(101)

கண்டை, “கண்ட என்றால், கன்னத்தின் ஒரு பகுதி என்பது பொருளாகும். ஓ! சைப்யனின் வேள்வி நெருப்பில் உதித்தவளே, என்னிடம் அந்தப் பகுதி பிறரைவிட உயர்ந்திருப்பதால் நான் கண்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன்” என்றாள்.(102)

யாதுதானி, “வேர்ச்சொல்லில் ஏற்பட்டிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உன் பெயருக்கு நீ சொன்ன விளக்கம் முற்றிலும் என்னால் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(103)

பசுஸகன், “நான் காணும் விலங்குகள் அனைத்தையும் நான் பாதுகாத்து வளர்க்கிறேன். மேலும் நான் விலங்குகள் அனைத்திற்கும் நண்பனாக இருக்கிறேன். எனவே, ஓ! நெருப்பில் பிறந்தவளே (மன்னன் விருஷாதர்ப்பி உண்டாக்கிய வேள்வி நெருப்பில் பிறந்தவளே), நான் பசுஸகன் என்றழைக்கப்படுகிறேன்” என்றான்[24].(104)யாதுதானி, “வேர்ச்சொல்லில் ஏற்பட்டிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உன் பெயருக்கு நீ சொன்ன விளக்கம் முற்றிலும் என்னால் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(105)

சுனஸ்ஸகன், “இத்தவசிகள் சொன்ன வகையில் என் பெயருக்கான உச்சரிப்பு விளக்கத்தை நான் சொல்ல இயலாதவனாக இருக்கிறேன். ஆனால், ஓ! யாதுதானி, சுனஸ்ஸகஸகாயன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன் என்பதை அறிவாயாக” என்றான்.(106)

யாதுதானி, “நீர் உன் பெயரை ஒரே ஒரு முறை மட்டும் சொன்னீர். நீர் சொன்ன விளக்கம் பிடிபடுவதாக இல்லை. எனவே, ஓ! மறுபிறப்பாளரே, மீண்டும் சொல்வீராக” என்றாள்[25].(107)சுனஸ்ஸகன், “நான் ஒரே ஒரு முறை சொன்னதன் விளைவால் என் பெயர் உனக்குப் பிடிபடவில்லை என்பதால், நான் என் திரிதண்டத்தால் உன்னைத் தாக்கப் போகிறேன். அதனால் தாக்கப்பட்ட நீ தாமதமில்லாமல் சாம்பலாக எரிந்து போவாயாக” என்றான்”.(108)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஒரு பிராமணனால் தரப்படும் தண்டைக்கு ஒப்பான அந்தச் சந்நியாசியின் திரிதண்டத்தால் தலையில் தாக்கப்பட்டவளும், மன்னன் விருஷாதர்ப்பின் மந்திரங்களினால் உண்டானவளுமான அந்த ராட்சசி, பூமியில் விழுந்து சாம்பலாகக் குறைந்து போனாள்.(109)

இவ்வாறு அந்த வலிமைமிக்க ராட்சசியை அழித்த சுனஸ்ஸகன் தன் தண்டத்தைப் பூமியில் ஊன்றி, புல் தரையில் அமர்ந்தான்.(110) அப்போது அந்த முனிவர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குத் தாமரைகளைப் பறித்து, தாமரைத் தண்டுகளையும் எடுத்துக் கொண்டு தடாகத்துக்கு மேலே வந்து மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(111) பெரும் முயற்சி செய்து தாங்கள் சேகரித்த தாமரைக் குவியைத் தரையில் வைத்த அவர்கள், பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை செலுத்துவதற்காக மீண்டும் அதற்குள் மூழ்கினர்.(112) மேலே வந்த அவர்கள், தாங்கள் தாமரைத் தண்டுகளைச் சேகரித்து வைத்திருந்த கரையின் பகுதிக்குச் சென்றனர். அந்த இடத்திற்கு வந்த அந்த முதன்மையான மனிதர்கள் அந்தத் தண்டுகள் எங்கும் காணப்படவில்லை என்பதைக் கண்டனர்.(113)

முனிவர்கள், “பசித்திருந்த எங்களால் உண்ணும் விருப்பத்தில் திரட்டப்பட்ட தாமரைத்தண்டுகளை எந்தப் பாவம் நிறைந்த, கடின இதயம் படைத்த மனிதன் களவாடினான்?” என்றனர்”.(114)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஐயமுற்று, “நாம் ஒவ்வொருவரும் குற்றமற்றவர் என்பது குறித்து உறுதிமொழியேற்போம்” என்றனர்.(115) அப்போது பசியாலும், களைப்பினாலும் பீடிக்கப்பட்டிருந்த அந்தத் தவசிகள் அனைவரும் இந்த முன்மொழிவுக்கு உடன்பட்டு, இந்த உறுதிமொழிகளை {சபதங்களை} ஏற்றனர்.(116)

அத்ரி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், பசுவைக் காலால் உதைத்தவனும், சூரியனைப் பார்த்து சிறுநீர் கழித்தவனும், ஓதல் விலக்கப்பட்ட நாட்களில் வேதம் ஓதுபவனும் ஆகட்டும்” என்றார்.(117)

வசிஷ்டர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், வேதங்கற்பதைத் தவிர்ப்பவனாகவோ, நாய்களை இழுத்துச் செல்பவனாகவோ, துறவு வாழ்வுமுறைக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்படாத துறவியாகத் திரிபவனாகவோ, தன் பாதுகாப்பை நாடி வந்தவனைக் கொல்பவனாகவோ, தன் மகளை விற்று வாழ்பவனாகவோ, கஞ்சனிடமும், இழிந்தோரிடமும் செல்வம் வேண்டுபவனாகவோ ஆகட்டும்” என்றார்.(118,19)

கசியபர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்து இடங்களிலும் அனைத்து வகைச் சொற்களையும் பேசுபவனாகவும், நீதிமன்றத்தில் பொய் சாட்சி கொடுப்பவனாகவும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்பவனாகவும், தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவனாகவும், தகுந்த மனிதர்களுக்குத் தகாத காலங்களில் கொடையளிப்பவனாகவும், பகல்வேளையில் பெண்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவனாகவும் ஆகட்டும்”(120,121)

பரத்வாஜர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், பெண்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களிடம் நீதியற்ற கொடும் நடத்தை கொண்டவனாகட்டும். அவன் தன் மேன்மையான அறிவையும், திறனையும் வெளிப்படுத்துவதன் மூலம் சச்சரவுகளில் பிராமணர்களை அவமதிக்கட்டும். ஆசானை அவமதித்து ரிக்குகளையும், யஜுஸ்களையும் படிக்கட்டும். வைக்கோல் அல்லது செத்தையில் உண்டாக்கப்பட்ட நெருப்பில் அவன் ஆகுதிகளை ஊற்றட்டும்” என்றார்.(122,123)

ஜமதக்னி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், நீரில் மலத்தையும் புழுதியையும் வீசிய குற்றம் புரிந்தவனாகட்டும். அவன் பசுக்களிடம் பகை பாராட்டட்டும். அவன் பருவகாலம் அல்லாமல் பெண்களிடம் பாலினக்கலவிசெய்த குற்றம்புரிந்தவனாகட்டும். அவன் அனைத்து மனிதர்களின் வெறுப்பையும் ஈர்க்கட்டும். அவன் தன் மனைவியின் ஊதியத்தில் இருந்து தன்னைப் பராமரித்துக் கொள்ளட்டும். அவன் நண்பர்கள் எவரையும் கொள்ளாதிருக்கட்டும், அவன் பல பகைவர்களைக் கொண்டிருக்கட்டும். அவன் மற்றொருவனுக்குச் செய்த விருந்தோம்பலுக்குப் பதிலாக அந்த மற்றொருவரின் விருந்தினராகட்டும்” என்றார்[26].(124,125)கோதமர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், தான் கற்ற வேதங்களை விட்ட குற்றம் புரிந்தவனாகட்டும். அவன் மூன்று புனித நெருப்புகளைக் கைவிட்டவனாகட்டும். அவன் சோமத்தை (சோமலதையை / சோமச்சாற்றை) விற்பனை செய்பவனாகட்டும். அனைத்து வகை {வர்ண} மக்களாலும் நீர் இறைக்கப்படும் ஒரேயொரு கிணற்றை மட்டுமே கொண்ட கிராமத்தில் வசிப்பவனும், ஒரு சூத்திரப் பெண்ணை மணம் செய்து கொண்டவனுமான ஒரு பிராமணனுடன் அவன் வாழட்டும்” என்றார்[27].(126,127)விஷ்வாமித்திரர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், தன் வாழ்நாளிலேயே தன் ஆசான்களையும், பெரியோர்களையும், பணியாட்களையும் பிறர் பராமரிக்கும் நிலையைக் காணும் விதியை அடையட்டும். அவன் நற்கதி அடையாதிருக்கட்டும். அவன் பல பிள்ளைகளின் தந்தையாகட்டும்.(128) அவன் எப்போதும் தூய்மையற்றவனாகவும், பிராமணர்களில் இழிந்தவனாகவும் இருக்கட்டும். அவன் தன் உடைமைகளில் செருக்குடையவனாக இருக்கட்டும். அவன் நிலத்தை உழுபவனாக இருக்கட்டும், அவன் வன்மம் நிறைந்தவனாக இருக்கட்டும்.(129) அவன் மழைக்காலங்களில் திரிபவனாக இருக்கட்டும். அவன் ஊதியம் கொள்ளும் பணியாளாகட்டும். அவன் மன்னனின் புரோகிதனாகட்டும். வேள்விக்குத் துணை புரியத் தகாத தூய்மையற்ற மனிதர்களின் வேள்விகளுக்கு அவன் துணை புரியட்டும்” என்றார்.(130)

அருந்ததி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள், தன் மாமியாரால் எப்போதும் அவமதிக்கப்படட்டும். அவள் எப்போதும் தன் கணவரிடம் எரிச்சலடையட்டும். அவள் தன் வீட்டிற்கு வரும் எந்த நல்ல பொருளையும் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் உண்ணட்டும்.(131) அவன் தன் தலைவனின் உறவினர்களை அவமதித்து, தன் கணவனின் வீட்டில் ஒவ்வொரு மாலை வேளையிலும் வறுத்த வாற்கோதுமை மாவை உண்டு வாழட்டும். அவள் (அவளைக் களங்கப்படுத்தும் கறைகளின் விளைவாக) அனுபவிக்கத்தகுந்தவளாகக் கருதப்படட்டும். அவள் ஒரு வீர மகனின் தாயாகட்டும்” என்றாள்[28].(132)கண்டை, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள், எப்போதும் பொய் பேசுபவளாக இருக்கட்டும். அவள் எப்போதும் தன் உறவினர்களுடன் சண்டையிடுபவளாகட்டும். அவள் பணத்தையே கருத்தில் கொண்டு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கட்டும்.(133) தான் சமைத்த உணவை யாருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் தனியாகவே அவள் உண்ணட்டும். அவள் தனது மொத்த வாழ்வையும் அடிமைத்தனத்தில் கழிக்கட்டும். உண்மையில், தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள் குற்றச் சூழ்நிலைகளில் பாலினக்கலவி புரிந்த விளைவால் கருவுற்றவளாகட்டும்[29]” என்றாள்.(134)பசுஸகன், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், அடிமைத் தாய்க்குப் பிறக்கட்டும். அவன் பயனற்ற பிள்ளைகள் பலரைப் பெறட்டும். அவன் ஒருபோதும் தேவர்களை வணங்காதிருக்கட்டும்” என்றான்.(135)

சுனஸ்ஸகன், “தாமரைத் தண்டுகளை அகற்றியவன், சாமங்கள் மற்றும் யஜுஸ்கள் அனைத்தையும் படித்தவனும், கவனமாகப் பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனுமான ஒரு பிராமணனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பலனை அடையட்டும். அவன் அதர்வணங்கள் அனைத்தையும் படித்த பிறகு இறுதி நீராடலைச் செய்யட்டும்” என்றான்.(136)

முனிவர்கள் அனைவரும், “நீ சொன்ன செயல்கள் அனைத்தும் பிராமணர்களால் விரும்பப்படுவது என்பதால் நீ ஏற்றது உறுதிமொழியே {சபதமே} அல்ல. ஓ! சுனஸ்ஸகா, எங்கள் தாமரைத் தண்டுகளை அபகரித்தவன் நீயே என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றனர்.(137)

சுனஸ்ஸகன்,“தாமரைத்தண்டுகள் உங்களால் வைக்கப்பட்டதைக் காணாமல், நானே அவற்றை உண்மையில் களவு செய்தேன் என்பதால் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.(138) நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தத் தண்டுகளை நான் மறைந்துபோகச் செய்தேன். பாவமற்றவர்களே, உங்களைச் சோதிக்கும் விருப்பத்திலேயே அச்செயல் என்னால் செய்யப்பட்டது.(139) நான் உங்களைக் காக்கவே இங்கே வந்தேன். கொல்லப்பட்டுக் கிடக்கும் அந்தப் பெண் யாதுதானி என்றழைக்கப்பட்டவள் ஆவாள். அவள் கடும் இயல்பைக் கொண்டவளாவாள். மன்னன் விருஷாதர்ப்பியின் மந்திரங்களில் உண்டான அவள் உங்கள் அனைவரையும் கொல்லும் விருப்பத்திலேயே இங்கே வந்தாள்.(140) தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, அந்த மன்னனால் அனுப்பப்பட்டு இங்கு வந்த அவள் என்னால் கொல்லப்பட்டாள். இல்லையென்றால், வேள்வித்தீயில் உண்டானவளும், தீயவளுமான அந்தப் பாவம் நிறைந்த உயிரினம் உங்கள் உயிர்களை வாங்கியிருப்பாள்.(141) கல்விமான்களான பிராமணர்களே அவளைக் கொல்லவும், உங்களைக் காக்கவுமே நான் இங்கே வந்தேன். நான் வாசவன் என்பதை அறிவீராக. நீங்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டீர்கள். இதன் விளைவாக நீங்கள் இதயத்தில் எழுந்தவுடனேயே விருப்பம் கனியும் நிலையைத் தரும் நித்திய உலகங்கள் பலவற்றை வென்றீர்கள். மறுபிறப்பாளர்களே, தாமதமில்லாமல் இந்த இடத்தில் இருந்து எழுந்து, உங்களுக்காக ஒதுக்கபட்ட அந்த அருள் உலகங்களுக்குச் செல்வீராக” என்றான்”.(142)

பீஷ்மர் தொடர்ந்தார், “புரந்தரனின் மறுமொழியால் உயர்ந்த நிறைவை அடைந்த அந்தப் பெரும் முனிவர்கள் “அப்படியே ஆகட்டும்” என்றனர். பிறகு அவர்கள் இந்திரனின் துணையுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(143) இவ்வாறே உயர் ஆன்மா கொண்ட அம்மனிதர்கள், பசிக்கொடுமையால் பீடிக்கப்பட்டாலும், அனுபவிக்கத்தகுந்த பல்வேறு பொருட்களைக் கொடுப்பதாக அத்தகைய நேரத்தில் ஆசை காட்டப்பட்டாலும், அந்த ஆசைக்கு வசப்படுவதைத் தவிர்த்தனர். அத்தகை தன் மறுப்பின் விளைவாலேயே அவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர். எனவே ஒருவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னிடத்திலிருந்து பேராசையைக் கைவிட வேண்டும் என்பது தெரிகிறது.(144,145) ஓ! மன்னா, இதுவே உயர்ந்த கடமையாகும். பேராசை கைவிடப்பட வேண்டும். (நீதிமிக்க முனிவர்களின் செயல்களைச் சொல்லும்) இக்கதையை மானுட சபைகளில் உரைக்கும் மனிதன்.(146) செல்வத்தை அடைவதில் வெல்கிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் துன்பகரமான கதியை அடைய வேண்டியதில்லை. பித்ருக்கள், முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும் அவனிடம் நிறைவடைகின்றனர். மேலும் மறுமையில் அவன் புகழ், அறத்தகுதி மற்றும் செல்வத்தைக் கொண்டவனாகிறான்” {என்றார் பீஷ்மர்}.(147)

களவும், சாத்திரமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 94-இந்திரனுடன் தீர்த்தயாத்திரை சென்ற ரிஷிகள்; தாமரை மலர் களவு போனதால் அனைவரும் சபதம் செய்தது; களவு செய்த இந்திரன் ரிஷிகளின் சொற்களை சாத்திரம் என்றது ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புனித நீர்நிலைகளை நோக்கிப் பயணம் செய்யும்போது (ஒருவர் பின் ஒருவராகப் பல முனிவர்கள்) ஏற்ற உறுதிமொழிகளைச் சொல்லும் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அந்தக் களவுச் செயல் இந்திரனால் செய்யப்பட்டது, அரச முனிகள் மற்றும் மறுபிறப்பாள முனிவர்கள் பலரால் உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.(2)

ஒரு காலத்தில் மேற்குப் பிரபாஸத்தை நோக்கி முனிவர்கள் கூட்டமாகச் சேர்ந்து சென்றனர். அங்கே அவர்கள் செய்த ஆலோசனையின் விளைவாக, பூமியின் புனித நீர் நிலைகளை அனைத்துக்கும் அவர்கள் பயணம் செய்வதெனத் தீர்மானித்தார்கள்.(3) ஓ! மன்னா, சக்ரன், அங்கிரஸ், பெருங்கல்வியுடையவரான கவி, அகஸ்தியர், நாரதர், பர்வதர், பிருகு, வசிஷ்டர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்திரர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் அங்கிருந்தனர்.(4) காலவர், அஷ்டகர், பரத்வாஜர், அருந்ததி, வாலகில்யர்கள், சிபி, திலீபன், நஹுஷன், அம்பரீஷன், அரசன் யயாதி, துந்துமாரன், பூரு ஆகியோரும் அங்கிருந்தனர்.(5) இந்த முதன்மையான மனிதர்கள், விருத்திரனைக் கொன்றவனான உயரான்ம சதக்ரதுவை தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, ஒன்றன்பின் ஒன்றாகப் புனித நீர்நிலைகள் அனைத்திற்குச் சென்று, இறுதியாக மாக {மாசி} மாதத்தின் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் உயர்ந்ததும், புனிதமானதுமான கௌசிகியை அடைந்தனர்.(6) புனித நீர்நிலைகள் அனைத்திலும் நீராடியதன் மூலம் தங்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவர்கள் இறுதியாக மிகப் புனிதமான பிரம்மசரஸுக்குச் சென்றனர். நெருப்பைப் போன்ற பெருஞ்சக்தி கொண்ட அம்முனிவர்கள், அத்தடாகத்தில் நீராடி, தாமரைத் தண்டுகளைத் திரட்டவும், உண்ணவும் தொடங்கினர்.(7) அந்தப் பிராமணர்களில் சிலர், தாமரையின் தண்டுகளையும், வேறு சிலர் கருங்குவளையின் {கருநெய்தல்/நீலோத்பல) தண்டுகளையும் பிரித்தெடுத்தனர். விரைவில் அவர்கள் அகஸ்தியரால் பிரித்தெடுக்கப்பட்ட (கரையில் வைக்கப்பட்டிருந்த) தண்டுகள் எவராலோ எடுக்கப்பட்டுவிட்டதைக் கண்டனர்.(8)

முனிவர்களில் முதன்மையான அகஸ்தியர், அவர்கள் அனைவரிடமும், “என்னால் பிரித்தெடுக்கப்பட்டு இங்கே வைக்கப்பட்டிருந்த நல்ல தண்டுகளை எடுத்தவர் யார்? உங்களில் எவரோ ஒருவர்தான் இச்செயலைச் செய்திருக்க வேண்டுமென நான் ஐயுறுகிறேன். அவற்றை எடுத்துக் கொண்டவன் என்னிடம் திருப்பித் தரட்டும். இவ்வாறு என் தண்டுகளைக் கையாடல் செய்வது உங்களுக்குத் தகாது.(9) அற சக்தியைக் காலங்கெடுக்கும் எனக் கேள்விப்படுகிறோம். எனவே, அறம் பீடிக்கப்படுகிறது. மறம் உலகைக் கெடுத்து, முழுமையாக இங்கே தன்னை நிறுவிக்கொள்ளும் முன்னர், நான் சொர்க்கம் செல்வது நல்லது[1].(10) காலம் வரும்போது, கிராமப் புறங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிராமணர்கள் சூத்திரர்கள் கேட்கும் வகையில் வேதங்களை உரக்கச் சொல்லும் காலம் வருவதற்கு முன்னர், கொள்கை நோக்கங்களின் மூலம் மன்னர்கள் அறவிதிகளுக்கு எதிராகச் செயல்படும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது.(11) உயர்ந்த, நடுத்தர, தாழ்ந்த வகைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை மக்கள் கருதாமல் விடும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது. உலகை அறியாமை பீடித்து, அனைத்துப் பொருட்களும் இருளில் மூழ்குவதற்கு முன்னார் நான் சொர்க்கம் செல்வது நல்லது[2].(12) பலமிக்கவர்கள் பலவீனர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை அடிமைகளாக நடத்தும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது. உண்மையில், இவற்றைப் பூமியில் காணும்வரை இருப்பதற்கு நான் துணியேன்” என்றார் {அகஸ்தியர்}.(13)அவர் சொன்னதில் மிகுந்த கவலையடைந்த முனிவர்கள் அந்தப் பெருந்தவசியிடம், “நாங்கள் உமது தண்டுகளைக் களவு செய்யவில்லை. நீங்கள் எங்களிடம் ஐயங்கொள்வது தகாது. ஓ! பெரும் முனிவரே, நாங்கள் மிகப் பயங்கர உறுதிமொழிகளை ஏற்கப் போகிறோம்” என்றனர்.(14) தங்கள் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அற விளைவைத் தாங்க விரும்பி இச்சொற்களைச் சொன்ன முனிவர்களும், அரச வழித்தோன்றல்களான தவசிகளும், ஒருவர் பின் ஒருவராகப் பின்வரும் உறுதிமொழிகளை {சபதங்களை} ஏற்கத் தொடங்கினர்.(15)

பிருகு, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வையப்படும்போது வைபவனும், தாக்கப்படும்போது தாக்குபவனும், (வேள்விகளில் கொல்லப்படும்) விலங்குகளின் முதுகெலும்புடன் இணைந்த இறைச்சியை உண்பவனுமாகட்டும்” என்றார்[3].(16)வசிஷ்டர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வேத கல்வியைப் புறக்கணித்து, நாயை இழுத்துக் கொண்டு ஒரு நகரத்திலோ, ஊரிலோ துறவியாக வாழட்டும்” என்றார்[4].(17)கசியபர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்துப் பொருட்களையும் அனைத்து இடங்களிலும் விற்பனைசெய்து, அடைக்கலப் பொருட்களைக் கையாடல் செய்து, பொய் சாட்சி சொல்பனாகட்டும்” என்றார்.(18)

கௌதமர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்து உயிரினங்களையும் சமபார்வையில் பார்க்காத புத்தியுடன், அனைத்திலும் செருக்கை வெளிப்படுத்திக் கொண்டு, எப்போதும் கோபம் மற்றும் ஆசையின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டவனாகட்டும். அவன் நிலத்தை உழுபவனாகவும், வன்மத்தால் ஈர்க்கப்பட்டவனாகவும் ஆகட்டும்” என்றார்[5].(19)அங்கிரஸ், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், எப்போதும் தூய்மையற்றவனாகட்டும். அவன் (தன் தீச்செயல்களுக்காக) நிந்திக்கத் தகுந்தவனாகட்டும். அவன் நாய்களை இழுத்துச் செல்லட்டும். அவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி பாவம்} செய்த குற்றவாளியாகட்டும். வரம்புமீறல்களைச் செய்த பிறகு பாவக்கழிப்புகளில் அவன் வெறுப்பு கொண்டவனாகட்டும்” என்றார்.(20)

துந்துமாரன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் நண்பர்களிடம் நன்றிமறந்தவனாகட்டும். அவன் ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிறக்கட்டும். அவன் (வீட்டுக்கு வரும்) எந்த நல்ல உணவையும் (பிறருக்குப் பங்களிக்காமல்) தனியாக உண்பவனாகட்டும்” என்றார்[6].(21)திலீபன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரே ஒரு கிணறு உள்ள கிராமத்தில் வசிப்பவனும், ஒரு சூத்திரப் பெண்ணுடன் பாலினக் கலவி கொண்டவனுமான ஒரு பிராமணனுக்காக ஒதுக்கப்படும் புகழ்க்கேடு கொண்ட துன்பகரமான உலகங்களை அடையட்டும்” என்றான்[7].(22)பூரு, “உமது தண்டுகளைக் களவு செய்தவன் மருத்துவத் தொழிலைப் பின்பற்றட்டும். அவன் தன் மனைவியுடைய ஊதியத்தின் மூலம் ஆதரிக்கப்படட்டும். அவன் தன் மாமனாரிடம் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டட்டும்” என்றான்.(23)

சுக்கிரன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்ணடும். அவன் பகற்பொழுதில் பாலினக் கலவி கொள்ளட்டும். அவன் மன்னனின் பணியாளாகட்டும்” என்றார்.(24)

ஜமதக்னி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தடைசெய்யப்பட்ட நாட்களில் அல்லது சந்தர்ப்பங்களில் வேதங்களைப் படிக்கட்டும். தன்னால் செய்யப்படும் சிராத்தங்களில் அவன் நண்பர்களுக்கு உணவூட்டட்டும். அவன் ஒரு சூத்திரனின் சிராத்தத்தில் உண்ணட்டும்” என்றார்.(25)

சிபி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், (நாள்தோறும் செய்யும் வழிபாட்டுக்கென) நெருப்பை நிறுவாமலேயே இறந்து போகட்டும். பிறர் செய்யும் வேள்விகளைத் தடை செய்த குற்றவாளியாகட்டும். தவம் நோற்பவர்களிடம் அவன் சச்சரவு செய்யட்டும்” என்றான்.(26)

யயாதி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் மனைவி பருவகாலத்தில் இல்லாத போதும் அவனே தன் தலையில் சடாமுடி தரித்து நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும்போதும் அவளிடம் பாலினக் கலவியில் ஈடுபட்ட குற்றவாளியாகட்டும். அவன் வேதங்களையும் அலட்சியம் செய்பவனாகட்டும்” என்றான்.(27)

நஹுஷன் {நகுஷன்}, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், துறவு நோன்பை ஏற்ற பிறகு இல்லற வாழ்வுமுறையில் வாழட்டும். ஒரு தனிப்பட்ட நோன்பு அல்லது ஒரு வேள்விக்கான தொடக்கச் சடங்குகளைச் செய்த பிறகு, அவன் (எவ்வகைக் கட்டுப்பாடுகளுமின்றி) விரும்பியவாறு செயல்படுபவனாகட்டும். (எவ்வகை அறிவுத்துறையிலும் கற்க வரும்) சீடர்களுக்கான உரைக்காகப் பணம் சார்ந்த நிறைவை ஏற்பவனாகட்டும்” என்றான்.(28)

அம்பரீஷன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், பெண்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களிடம் நீதியற்ற கொடூர நடத்தை கொண்டவனாகட்டும். அவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி பாவம்} செய்த குற்றவாளியாகட்டும்” என்றான்.(29)

நாரதர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், உடலோடு ஆன்மாவை அடையாளம் {உடலும், ஆன்மாவும் ஒன்றெனக்)காண்பவனாகட்டும். பழிக்கத்தக்க ஆசானிடம் அவன் சாத்திரங்களைப் பயிலட்டும். ஒவ்வொரு படிநிலையிலும் உச்சரிப்பு விதிகளுக்கு எதிரான குற்றம் செய்தபடியே அவன் வேதங்களை ஓதட்டும். அவன் பெரியோர் அனைவரையும் அவமதிக்கட்டும்” என்றார்.(30)

நாபாகன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், எப்போதும் பொய் பேசுபவனாகவும், அறவோரிடம் சச்சரவு செய்பவனாகவும் ஆகட்டும். அவன் தன் மருமகனால் அளிக்கப்படும் பணத்தில் நிறைவடைந்து அதை ஏற்றுத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கட்டும்” என்றான்.(31)

கவி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு பசுவதைத் தன் காலால் தாக்கிய குற்றவாளியாக்கட்டும். அவன் சூரியனைப் பார்த்து சிறுநீர் கழிக்கட்டும். தன்னிடம் உறைவிடம் நாடும் மனிதனை அவன் கைவிடட்டும்” என்றார்.(32)

விஷ்வாமித்திரர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் தலைவனிடம் வஞ்சகமாக நடந்து கொள்ளும் பணியாளாகட்டும். அவன் மன்னனின் புரோகிதனாகட்டும். வேள்விகளில் துணை செய்யத்தகாதவனுக்கு அவன் ரித்விக்காகட்டும்” என்றார்.(33)

பர்வதர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு கிராமத்தின் தலைவனாகட்டும். அவன் கழுதைகளில் பயணங்கள் போகட்டும். அவன் தன் வாழ்வுக்காக நாய்களை இழுத்துச் செல்லட்டும்” என்றார்.(34)

பரத்வாஜர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், கொடூர நடத்தையும், வாய்மையற்ற பேச்சும் கொண்ட ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் செய்த குற்றவாளியாகட்டும்” என்றார்.(35)

அஷ்டகர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஞானமற்றவனும், வினோத மனப்போக்கனும், பாவம் நிறைந்த நடத்தை கொண்டவனும், நீதியற்ற முறையில் பூமியை ஆளும் மனநிலை கொண்ட ஒரு மன்னனாகட்டும்” என்றார்.(36)

காலவர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு பாவம் நிறைந்த மனிதனைவிடப் புகழ்க்கேட்டை அடையட்டும். அவன் தன் உற்றார் உறவினரிடம் பாவச்செயல் புரிபவனாகட்டும். அவன் பிறருக்கு அளித்த கொடைகளை அறிவிப்பவனாகட்டும்” என்றார்.(37)

அருந்ததி, “உமது தண்டுகளைக் களவு செய்தவள், தனது மாமியாரைக் குறித்துக் குறைபேசுபவளாகட்டும். அவள் தன் தலைவனிடம் அருவருப்பு கொள்பவளாகட்டும். அவள் தன் வீட்டிற்கு வரும் எந்த நல்ல உணவையும் தனியாக உண்பவளாகட்டும்” என்றாள்.(38)

வாலகில்யர்கள், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், (தன் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக) ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கட்டும். அவன் தன் கடமைகளை அனைத்தையும் அறிந்தவனாக இருந்தாலும், அனைத்து அத்துமீறல்களையும் செய்த குற்றவாளியாகட்டும்” என்றனர்[8].(39)சுனஸ்ஸகன்“உமது தண்டுகளைக் களவு செய்தவன், நாள்தோறும் செய்ய வேண்டிய ஹோமத்தை அலட்சியம் செய்து மகிழ்ச்சியாக உறங்கும் பிராமணனாகட்டும். அவன் அறத் துறவியாகி, எக்கட்டுப்பாடையும் நோற்காமல் விரும்பியபடி நடந்து கொள்பவனாகட்டும்” என்றான்.(40)

{பசுஸகனோகு கூடிய} சுரபி, “உமது தண்டுகளைக் களவு செய்தவளுடைய பால், மனித மயிராலான கயிற்றால் கட்டப்பட்ட (பின்னங்) கால்களுடனும், தன்னுடையதல்லாத கன்றுடனும், வெண்கலப் பாத்திரத்தில் கறக்கப்படட்டும்” என்றாள்[9]“.(41)பீஷமர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குரு மன்னா, முனிவர்களும், அரச தவசிகளும் இவ்வாறு பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றதும், ஆயிரங்கண் கொண்ட தேவர்களின் தலைவன், கோபம் நிறைந்தவராக இருக்கும் முனிவர் அகஸ்தியரின் மீது தன் கண்களைச் செலுத்தி மகிழ்ச்சியால் நிறைந்தவனானான்.(42) தாமரைத் தண்டுகள் மறைந்து போனதால் மிகுந்த கோபத்தில் இருந்த அந்த முனிவரிடம் பேசிய மகவத் {மகவான்}, தன் மனத்தில் ஓடியதை இவ்வாறு அறிவித்தான். ஓ! மன்னா, மறுபிறப்பாளர்களும், தெய்வீகமானவர்களும், அரசர்களாகவும் இருந்த அந்தத் தவசிகளுக்கு மத்தியில் இந்திரன் சொன்னதைக் கேட்பாயாக.(43)

சக்ரன் {இந்திரன்}, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், பிரம்மச்சரிய நோன்புகளை முறையாக நோற்றவராகவோ, சாமங்கள் மற்றும் யஜுஸ்களை முறையாகப் படித்தவராகவோ உள்ள ஒரு பிராமணருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கட்டும். அதர்வ வேதங்கற்று நிறைவடைந்ததும் இறுதி நீராடலைச் செய்த பலன் அவனை அடையட்டும்.(44) உமது தண்டுகளைக் களவு செய்தவன் வேதங்கள் அனைத்தையும் கற்ற பலன்களை அடையட்டும். அவன் அனைத்துக் கடமைகளை நோற்பவனாகவும், அறவொழுக்கம் கொண்டவனாகவும் ஆகட்டும். உண்மையில், அவன் பிரம்மலோகத்தை அடையட்டும்” என்றான்.(45)

அகஸ்தியர், “ஓ! பலனைக் கொன்றவனே, சபிப்பதற்குப் பதிலாக நீ வாழ்த்துகிறாய். (என் தண்டுகளை நீயே எடுத்திருக்கிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது). அவற்றை என்னிடம் கொடுப்பாயாக. அதுவே நித்திய கடமையாகும்” என்றார்.(46)

இந்திரன், “ஓ! புனிதமானவரே, பேராசையால் வழிநடத்தப்பட்டு நான் உமது தண்டுகளை அகற்றவில்லை. உண்மையில், நாம் நோற்க வேண்டிய கடமைகளை {தர்மங்களை} இக்கூட்டத்தில் கேட்கும் விருப்பத்தாலேயே நான் அவற்றை அகற்றினேன்.(47) ஸ்ருதிகளில் முதன்மையானவை கடமைகளாகும். கடமைகளே (உலகக் கடலைக் கடப்பதற்கான) நித்திய பாதையாகின்றன. (கடமைகளைப் பொறுத்த வகையில்) நித்தியமானவையும், மாற்றமில்லாதவையும், மாற்றங்கள் அனைத்தையும் கடந்தவையுமான முனிவர்களின் உரையாடல்களை {ரிஷிவாக்கியத்தை} நான் கேட்டேன்[10].(48) ஓ! கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவரே, உமது தண்டுகளான இவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வீராக. ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துக் களங்கங்களில் இருந்தும் விடுபட்டவரே, என்னுடைய இந்த வரம்புமீறலை மன்னிப்பதே {பொறுப்பதே} உமக்குத் தகும்” என்றான்”.(49)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மிகுந்த கோபத்தில் இருந்த தவசி அகஸ்தியர் தன் தண்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் பெரும் உற்சாகத்தை அடைந்தார்.(50) அதன் பிறகு அந்தக் காட்டுவாசிகள் பல்வேறு புனித நீர்நிலைகளுக்குச் சென்றனர். உண்மையில், அந்தப் புனித நீர்நிலைகளுக்குச் சென்ற அவர்கள், எங்கும் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்தனர்.(51) ஒவ்வொரு பர்வ நாளிலும் இந்தக் கதையை மிகுந்த கவனத்துடன் படிக்கும் மனிதன், அறியாமை கொண்ட தீய மகன் ஒருவனை ஒருபோதும் பெறமாட்டான். அவன் ஒருபோதும் கல்வியை இழக்கமாட்டான்.(52) எந்தப் பேரிடரும் அவனைத் தீண்டாது. அதுவும் தவிர, அனைத்து வகைக் கவலைகளில் இருந்து அவன் விடுபடுவான். முதுமையும், தளர்வும் ஒருபோதும் அவனுடையவையாகாது. அனைத்து வகைக் களங்கங்கள் மற்றும் தீமைகளில் இருந்து விடுபட்டு, பலன் கிட்டுபவனான அவன் சொர்க்கத்தை அடைவான்.(53) ஓ! மனிதர்களின் இளவரசே, முனிவர்களால் நோற்கப்படும் இந்தச் சாத்திரத்தைப் படிப்பவன், இன்பம் நிறைந்ததும், நித்தியமானதுமான பிரம்மலோகத்தை நிச்சயம் அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(54)

மழைதருமோ என் மேகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 95-சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஈமச் சடங்குகளில் குடைகள் மற்றும் காலணிகள் கொடையளிக்கும் வழக்கம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது? எந்த நோக்கத்திற்காக அக்கொடைகள் கொடுக்கப்பட்டன? ஈமச் சடங்குகளில் மட்டுமல்லாமல் அவை வேறு அறச்சடங்குகளிலும் கொடுக்கப்படுகின்றன. அறத்தகுதியை அடையும் நோக்கில் அவை பல இடங்களில் கொடுக்கப்படுகின்றன. ஓ! மறுபிறப்பாளரே, நான் இவ்வழக்கத்தின் உண்மையான பொருளை விரிவாக அறிய விரும்புகிறேன்” என்றான்.(1-3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இளவரசே, அறச்சடங்குகளில் குடைகளும், காலணிகளும் கொடுக்கும் வழக்கம் எவ்வாறு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை விரிவாகச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக.(4) ஓ! இளவரசே, இது நிரந்தரமாக நோற்கப்படும் சக்தியை எவாறு அடைந்தது, பலன்தரக்கூடிய {புண்ணியச்} செயலாக எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைக் குறித்து உனக்கு முழுமையாகச் சொல்லப் போகிறேன்.(5)

இது தொடர்பாகக் குறிப்பிடப்படும் ஜமதக்னிக்கும், உயர் ஆன்ம சூரியனுக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! பலமிக்க மன்னா, பழங்காலத்தில் பிருகு குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்க ஜமதக்னி, விற்பயிற்சி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.(6) அவர் இலக்கு பாரத்துக் கொண்டே கணைக்குப் பின் கணையாக ஏவி கொண்டிருந்தார். அவரது மனைவியான ரேணுகை, அவ்வாறு ஏவப்படும் கணைகளை எடுத்துக் கொண்டு சுடர்மிக்க சக்தியுடன் கூடிய அந்தப் பிருகுக் குலக் கொழுந்திடம் அவற்றைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தமது கணைகளில் விஸ் ஒலிகளாலும், தமது வில்லின் நாணொலியாலும் நிறைவடைந்த அவர், ரேணுகை தம்மிடம் திரும்பத் தரும் கணைகளை மீண்டும் மீண்டும் மீண்டும் ஏவி தமக்குத் தாமே மகிழ்ச்சியடைந்து வந்தார். ஓ! ஏகாதிபதி, ஜேஷ்ட மூலத்தில் சூரியன் இருந்த மாதத்தில் ஒருநாள் நடுப்பகல் மதிய வேளையில்,(7-9) அந்தப் பிராமணர், தமது அம்புகள் அனைத்தையும் ஏவிவிட்டு, ரேணுகையிடம், “ஓ! அகன்ற விழிகளைக் கொண்ட பெண்ணே, என் வில்லில் இருந்து நான் ஏவிய கணைகளை எடுத்துக் கொண்டு வருவாயாக.(10) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, அவற்றை மீண்டும் என் வில்லில் இருந்து தொடுக்கப் போகிறேன்” என்றார்.

அந்தப் பெண்மணி அவ்வாறு சென்ற போது, சூரியனின் வெப்பத்தால் தலையும் பாதமும் சுட்டதன் விளைவால் மரநிழலில் அமர்ந்தாள். அருள் நிறைந்தவளும், கருங்கண்களைக் கொண்டவளுமான ரேணுகை, தன் கணவரின் சாபத்திற்கு அஞ்சியதால் ஒரு கணம் மட்டுமே ஓய்வெடுத்து, கணைகளைத் திரட்டிதிரும்பக் கடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். அருள் நிறைந்த குணங்கைக கொண்ட அந்தக் கொண்டாடப்பட்ட பெண்மணி, பாதங்களின் வலியோடும், மனக்கசப்போடும் அவற்றை எடுத்துத் திரும்பி வந்தாள். அச்சத்தால் நடுங்கியவாறே அவள் தன் கணவரை அணுகினாள்.(11-14)

போபத்தால் நிறைந்திருந்த அம்முனிவர், அழகிய முகம் படைத்த தம் மனைவியிடம், “ஓ! ரேணுகையே, நீ திரும்பி வருவதில் இவ்வளவு தாமதமேன்?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.(15)

ரேணுகை, “ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, சூரியனின் கதிர்களால் என் தலையும் பாதங்களும் சுடப்பட்டன. வெப்பத்தால் ஒடுக்கப்பட்ட நான் ஒரு மர நிழலில் ஒதுங்கினேன்.(16) என் தாமதத்திற்கு இதுவே காரணமாகும். ஓ! தலைவா, காரணத்தைச் சொல்லிவிட்டேன் நீர் என்னிடம் சினம் தவிர்ப்பீராக” என்றாள்.(17)

ஜமதக்னி, “ஓ! ரேணுகையே, சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்டவனும், இவ்வழியில் உன்னைப் பீடித்தவனுமான பகல் நட்சத்திரத்தை {சூரியனை} நான் இன்றே கடுஞ்சக்தி கொண்ட என் ஆயுதங்களால் அழிக்கப்போகிறேன்” என்றார்”.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஜமதக்னி, பல கணைகளை எடுத்துக் கொண்டு, தமது தெய்வீக வில்லை இழுத்து, சூரியனை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, அவனது (நாள்முறை) போக்கில் அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.(19) ஓ! குந்தியின் மகனே, போரிடத் தயாராக இருக்கும் அவரைக் கண்ட சூரியன், ஒரு பிராமணனின் வேடத்தில் அணுகி, அவரிடம், “நீர் வெறுப்படையும் அளவுக்குச் சூரியன் செய்ததென்ன?(20) ஆகாயத்தில் நகர்ந்து, பூமியின் ஈரப்பத்தத்தை மேலே ஈர்த்து மீண்டும் அதனை அவளிடமே மழையாகப் பொழிகிறான்.(21) ஓ! மறுபிறப்பாளரே, இதன் மூலமே மனிதர்களுக்கு ஏற்புடைய உணவு உண்டாகிறது. உணவே உயிர் மூச்சுகளாகிறது என்று வேதங்கள் சொல்கின்றன.(22) ஓ! பிராமணரே, மேகங்களில் மறைந்து தன் கதிர்களால் சூழும் சூரியன் ஏழு தீவுகளையும் மழைப்பொழிவால் நனைக்கிறான்.(23) ஓ! பலமிக்கவmரே, இவ்வாறு பொழியப்படும் ஈரப்பதமானது, இலைகள், கனிகள், காய்கறிகள், மூலிகை ஆகியவற்றுள் பரவி உணவாக மாறுகிறது.(24)

ஓ! பிருகுவின் மகனே, பிறப்புச் சார்ந்த சடங்குகள் {ஜாதகர்மம்}, அனைத்து வகை அற சோன்புகள் {சௌளம்}, புனித நூலைத் தரித்தல் {உபநயனம்}, பசுக்கொடைகள், திருமணங்கள், வேள்வியை நோக்கமாகக் கொண்ட பொருட்கள் அனைத்தும், மனிதர்கள் ஆட்சி செய்வதற்கான விதிமுறைகள் {தர்மங்கள்}, கொடைகள் {தானங்கள்}, (மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான) அனைத்து வகை உறவுமுறைகள் {திரவியத்தினால் உண்டாகும் ஜனச்சேர்க்கைகள்}, செல்வமீட்டல் ஆகியவை உணவிலேயே தங்கள் பிறப்பிடத்தைக் கொண்டிருக்கின்றன. இதை நன்கறிவீராக.(25,26) அண்டத்தில் உள்ள ஏற்புடைய நல்ல பொருட்கள் யாவும், உயிரினங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும் உணவில் இருந்தே உண்டாகின்றன. நீர் நன்கறிந்தவற்றையே நான் முறையாக உமக்குச் சொல்கிறேன். உண்மையில், நான் சொன்ன யாவற்றையும் நீர் அறிவீர்.(27) எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமது கோபத்தைத் தணித்துக் கொள்வீராக. சூரியனை அழிப்பதன் மூலம் உமக்கு லாபமென்ன?” என்று கேட்டான் {சூரியன்}.(28)

குடை, காலணி கொடை! – அநுசாஸனபர்வம் பகுதி – 96- குடை மற்றும் காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் உண்டாகும் பலன்களைக் குறித்துச் சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நாள் சமைப்பவனால் {சூரியனால்} இவ்வாறு வேண்டப்பட்டபோது, தவசிகளில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான ஜமதக்னி என்ன செய்தார்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குரு குல வழித்தோன்றலே, நெருப்பின் பிரகாசத்துடன் கூடியவரான ஜமதக்னி, சூரியனின் முறையீடுகள் அனைத்துக்குப் பிறகும், தமது கோபத்தை வளர்ப்பதையே தொடர்ந்தார்.(2)

ஓ! மன்னா, அப்போது பிராமண வேடத்தில் இருந்து சூரியன், கூப்பிய கரங்களுடன் அவரிடம் தலைவணங்கி இனிமையான சொற்களைச் சொல்லி,(3) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, சூரியன் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறான். தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பகலின் தேவனை நீர் எவ்வாறு துளைப்பீர்?” என்று கேட்டான்.(4)

ஜமதக்னி {சூரியனிடம்}, “நீ அசைபவனாகவும், அசைவற்றவனுமாக இருக்கிறாய் என்பதை நான் என் அறிவுவிழியால் {ஞானக்கண்ணால்} அறிவேன். இந்நாளில் நான் உனக்கு நிச்சயம் ஒரு பாடத்தைப் படித்துக் காட்டுவேன் {கற்பிப்பேன்}.(5) நடுப்பகலில் ஒரு கணம் சொர்க்கங்களில் நிற்பவனாக நீ தெரிகிறாய். ஓ! சூரியா, அப்போது நான் என் கணைகளால் உன்னைத் துளைப்பேன். என்னுடைய இந்தத் தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடையாது” என்றார்.(6)

சூரியன், “ஓ! மறுபிறப்பாளர முனிவரே, ஓ! வில்லாளிகளில் சிறந்தவரே, நீர் என்னை அறிவீர் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஓ! புனிதமானவரே, நான் குற்றமிழைத்திருந்தாலும், உமது பாதுகாப்புக்காக நான் பணிந்திருப்பதைக் காண்பீராக” என்றான்”.(7)

பீஷ்மர் தொடர்ந்தார், “இதைக் கேட்டதும் துதிக்கத்தகுந்த ஜமதக்னி நாள் சமைப்பவனிடம் புன்னகையுடனே, “ஓ! சூரியா, என் பாதுகாப்பை நீ நாடும்போது எனக்கு அச்சமேதும் கிடையாது.(8) பிராமணர்களில் உள்ள எளிமை {மனநேர்மை}, பூமியின் உறுதி {அசையாமை}, சந்திரனின் மென்மை {குளிர்ச்சி}, வருணனின் ஈர்ப்பு {கடலின் ஆழம்}, அக்னியின் பிரகாசம், மேருவின் ஒளி, சூரியனின் வெப்பம் {குபேரனின் செல்வம்} ஆகியவற்றைக் கடப்பவனே, பாதுகாப்பு நாடி வந்தவனைக் கொல்வான்.(9,10) வேண்டி வந்தவனைக் கொல்ல இயன்றவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தவும், பிராமணனைக் கொல்லவும், மதுபானம் பருகவும் இயன்றவனாவான்.(11) எனவே, உன் கதிர்களால் சுடப்படும்போது, அதிலிருந்து மக்கள் விடுபடும் வகையில் இத்தீமைக்கு ஏதாவதொரு தீர்வை நீ சிந்திப்பாயாக” என்றார்.(12)

சூரியன், “ஓ! பெரும் முனிவரே, என் கதிர்களைத் தடுத்துத் தலையைக் காத்துக்கொள்வதற்குரிய இந்தக் குடையைப் பெற்றுக் கொள்வீராக. தோலாலான இந்தக் காலணிகள் இரண்டும் பாதங்களைப் பாதுகாக்கும்.(14) இந்த நாள் முதல் அறச்சடங்குகள் அனைத்திலும் இப்பொருட்களைக் கொடையளிப்பது உறுதியான பயன்பாடாக நிறுவப்படட்டும்” என்றான்”.(15)

பீஷ்மர் தொடர்ந்தார், “குடைகளையும், காலணிகளையும் கொடையளிக்கும் இவ்வழக்கம் சூரியனாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஓ! பரதனின் வழித்தோன்றலே, இக்கொடைகள் மூவுலகங்களிலும் பலன்கொடுக்க வல்லவையாகக் கருதப்படுகின்றன.(16) எனவே நீயும் பிராமணர்களுக்குக் குடைகளையும், காலணிகளையும் கொடையளிப்பாயாக. இந்தச் செயலின் மூலம் நீ பெரும் அறத்தகுதியை ஈட்டுவாய் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(17) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, நூறு விலாக்களை {கம்பிகளைக்) கொண்ட ஒரு வெண்குடையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், இறந்த பிறகு இன்ப நிலையை அடைந்து, பிராமணர்கள், அப்சரஸ்கள் மற்றும் தேவர்களால் மதிக்கப்படும் இந்திரலோகத்தில் வசிப்பான்.(18,19)

ஓ! பலமிக்கவனே, சூரியனின் வெப்பத்தால் பாதம் சுடும் ஸ்நாதகப் பிராமணர்களுக்கும், அறச் சடங்குகளைப் பயிலும் பிராமணர்களுக்கும் காலணிகளை வழங்குபவன், தேவர்களாலேயே விரும்பப்படும் உலகங்களை அடைவான்.(20) ஓ! பாரதா, அத்தகைய மனிதன், தன் மரணத்திற்குப் பிறகு உயர்ந்த சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வசிப்பான்.(21) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அறச்சடங்குகளில் குடைகளையும், காலணிகளையும் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை நான் உனக்கு முழுமையாகச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(22)

கிருஹஸ்த தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 97-இல்லறத்தானின் கடமைகள், பலிக்காணிக்கைகள், மதுபர்க்கத்துடன் கூடிய விருந்தோம்பல், அவற்றுக்குரிய பலன்கள் குறித்து வாசுதேவனுக்கும், பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இல்லற வகையின் கடமைகள் {கிருஹஸ்தாஸ்ரமத் தர்மங்கள்}அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும், இவ்வுலகில் செழிப்பையடைவதற்காக ஒரு மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் பூமாதேவி ஆகியோரைக் குறித்த பழைய கதையை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் சிறந்த இளவரசே, பலமிக்கவனான வாசுதேவன், பூமாதேவியைப் புகழ்ந்து பாடிய பிறகு, இதே கேள்வியை அவளிடம் கேட்டான்.(3)

வாசுதேவன் {கிருஷ்ணன், பூமாதேவியிடம்}, “இல்லறத்தான் என்ற நிலையைப் பின்பற்றும் நானும் என் போன்றோரும் என்ன செயல்களைச் செய்ய வேண்டும்? அத்தகைய செயல்கள் எவ்வாறு நன்மைபயக்கும்?” எனக் கேட்டான்.(4)

பூமாதேவி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவரே, ஓர் இல்லறத்தானால் முனிவர்கள், தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் ஆகியோர் வழிபடப்பட வேண்டும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்.(5) தேவர்கள் வேள்விகளாலும், மனிதர்கள் விருந்தோம்பலாலும் எப்போதும் நிறைவடைகிறார்கள் என்பதை என்னிடம் இருந்து அறிந்து கொள்வீராக. எனவே, இல்லறத்தான் அவர்கள் விரும்பும் பொருட்களால் அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.(6) ஓ! மதுசூதனரே, அத்தகைய செயல்களின் மூலம் முனிவர்களும் நிறைவடைகிறார்கள். ஓர் இல்லறத்தான், நாள் தோறும் உணவுண்ணும் முன்னர், தன் புனித நெருப்பையும், தன் வேள்விக் காணிக்கைகளையும் கவனிக்க வேண்டும்[1].(7) ஓ! மதுசூதனரே, தேவர்கள் இத்தகைய செயல்களால் நிறைவடைகின்றனர். ஓர் இல்லறத்தான் நாள்தோறும் பித்ருக்களை நிறைவடையச் செய்வதற்காக, உணவு மற்றும் நீர் மற்றும் உணவுக் காணிக்கைகளையோ,(8) கனிகள், கிழங்குகள் மற்றும் நீர்க்காணிக்கைகளையோ அளித்து விஷ்வேதேவர்களுக்கு வெந்த உணவையும், அக்னி, சோமன் மற்றும் தன்வந்தரி ஆகியோருக்கு தெளிந்த நெய்யையும் காணிக்கையளிக்க வேண்டும்.(9,10)அவன் தனிப்பட்டவையும், தனித்துவம் வாய்ந்தவையுமான காணிக்கைகளைப் பிரஜாபதிக்கு {பிரம்மனுக்கு} அளிக்க வேண்டும். அவன் தென்பகுதியில் யமனுக்கும், மேற்குப் பகுதியில் வருணனுக்கும், வடக்குப் பகுதியில் சோமனுக்கும், வீட்டுக்குள்ளேயே பிரஜாபதிக்கும், வடகிழக்கில் தன்வந்தரிக்கும், கிழக்கில் இந்திரனுக்குமென முறையான வரிசையில் வேள்விக் காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(12) வீட்டின் வாயிலில் அவன் மனிதர்களுக்கு உணவுக்காணிக்கை அளிக்க வேண்டும்[2]. ஓ! மாதவரே, இவையே பலிக் காணிக்கைகள் என்றறியப்படுகின்றன. மருத்துகளுக்கும், தேவர்களுக்கும் ஒருவனுடைய வீட்டிற்குள்ளேயே பலிக்காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13) விஷ்வேதேவர்களுக்கு அது திறந்தவெளியிலும் {ஆகாயத்திலும்}, ராட்சசர்களுக்கும், பூதங்களுக்கும் இரவிலும் கொடுக்கப்பட வேண்டும்.(14) இந்தக் காணிக்கைகளை அளித்த பிறகு அந்த இல்லறத்தான், பிராமணர்களுக்குக் காணிக்கை அளிக்க வேண்டும். பிராமணர்கள் எவரும் இல்லையென்றால் உணவின் முதல் பகுதி நெருப்பில் வீசப்பட வேண்டும்.(15)ஒரு மனிதன் தன் மூதாதையருக்குச் சிராத்தம் அளிக்க விரும்பினால் அவன், சிராத்தச் சடங்கை நிறைவு செய்யும்போது, தன் மூதாதையர்களை நிறைவடையச் செய்து, முறையான வரிசையில் பலிக்காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(16) அதன் பிறகு அவன் விஷ்வேதேவர்களுக்குக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். அடுத்ததாக அவன் பிராமணர்களை அழைத்து, தன் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு உணவுடன் விருந்தளிக்க வேண்டும்.(17) ஓ! இளவரசே, இச்செயலால் விருந்தினர்கள் நிறைவடைவார்கள். எவன் நீண்ட காலம் வீட்டில் தங்காமல், வந்த குறுகிய காலத்தில் சென்றுவிடுவானோ அவனே விருந்தினன் என்றழைக்கப்படுகிறான்.(18) ஓர் இல்லறத்தான், தன் ஆசான், தந்தை, நண்பன் மற்றும் விருந்தினனிடம், “என் வீட்டில் உமக்குக் கொடுக்க இன்னது வைத்திருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும். மேலும் அதன்படியே அவன் ஒவ்வொரு நாளும் அதைக் கொடுக்க வேண்டும்.(19,20)

அந்த இல்லறத்தான் அவர்கள் செய்யச் சொல்லும் எதையும் செய்ய வேண்டும். இதுவே நிறுவப்பட்ட வழக்கமாகும். ஓ! கிருஷ்ணா, அந்த இல்லறத்தான், அவர்கள் அனைவருக்கும் உணவளித்த பிறகு இறுதியாகவே உணவை உட்கொள்ள வேண்டும்.(21) அந்த இல்லறத்தான், தன் மன்னன், புரோகிதர், ஆசான், மாமனார், ஸ்நாதகப் பிராமணர்கள் ஆகியோர் ஒரு வருடம் முழுவதும் தன் வீட்டில் தங்கினாலும் மதுபர்க்கக் காணிக்கைகளுடன் அவர்களை வழிபட வேண்டும்.(22) காலையிலும், மாலையிலும் நாய்கள், ஸ்வபசர்கள் {சக்கிலியர்கள்}, பறவைகளுக்குத் தரையில் உணவு காணிக்கையிடப்பட வேண்டும். இது வைஷ்வேதேவ காணிக்கை என்றழைக்கப்படுகிறது[3].(23) இந்தச் சடங்குகளைப் பேரார்வத்துடன் கூடிய தெளிந்த மனத்துடன் செய்யும் இல்லறத்தான் இவ்வுலகில் {இம்மையில்} முனிவர்களின் அருளையும், இறந்த பிறகு {மறுமையில்} சொர்க்கலோகங்களையும் அடைகிறான்” என்றாள் {பூமாதேவி}.(24)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பூமாதேவியிடம் இருந்து இவை யாவற்றையும் கேட்ட பலமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்} அதன்படியே செயல்பட்டான். நீயும் அதே வழியிலேயே செயல்படுவாயாக.(25) ஓ! மன்னா, ஓர் இல்லறத்தானின் கடமைகளான இவற்றைச் செய்வதன் மூலம் நீ இவ்வுலகில் புகழை அடைந்து, இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(26)

புஷ்பதூபதீப பலிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 98-மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளித்து, பலிக்காணிக்கைகளை அளிப்பது குறித்து மன்னன் பலிக்குச் சுக்ரன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விளக்குக்கொடை எந்த வகையைச் சார்ந்தது? இக்கொடை எவ்வாறு தோன்றியது? அதைச் செய்வதனால் கிட்டும் பலன்கள் என்னென்ன? இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிர்னிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக அனைத்து உயிரினங்களின் தலைவனான மனுவுக்கும், சுவர்ணருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழங்கதை சொல்லப்படுகிறது.(2) ஓ! பாரதா, பழங்காலத்தில், சுவர்ணர் என்ற பெயரில் ஒரு தவசி இருந்தார். அவரது நிறம் தங்கம் போன்றிருந்ததால் அவர் சுவர்ணர் (தங்க நிறம் கொண்டவர்) என்றழைக்கப்பட்டார்.(3) தூய குலம், நன்னடத்தை மற்றும் சிறந்த திறன்களைக் கொண்டவராகவும் இருந்த அவர் வேதங்கள் அனைத்திலும் ஆளுமைபெற்றவராக இருந்தார். உண்மையில், அவர் கொண்டிருந்த சிறப்புத் திறனகளால் அவர் உயர்ந்த குலத்தில் பிறந்த பலரைக் கடந்திருப்பவராக இருந்தார்.(4) ஒரு நாள், கல்விமானான அந்தப் பிராமணர், உயிரினங்கள் அனைத்தின் தலைவரான மனுவைக் கண்டு அவரை அணுகினார். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், வழக்கமாக மரியாதை நிமித்தமான விசாரிப்புகளைச் செய்தனர்.(5) அவர்கள் இருவரும் வாய்மை நோற்பதில் உறுதியுள்ளவர்களாக இருந்தனர். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், தங்க மலையான அந்த மேருவின் இனிமை நிறைந்த சாரலில் அமர்ந்தனர்.(6) அங்கே அமர்ந்த அவர்கள், பழங்காலத்தின் உயர் ஆன்மத் தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள் மற்றும் தைத்தியர்கள் தொடர்புடைய பல்வேறு காரியங்களை ஒருவருக்கொருவர் சொல்லி விவாதிக்கத் தொடங்கினர்.(7)

அப்போது சுவர்ணர், சுயம்புவான மனுவிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நான் கேட்கப் போகும் ஒரு கேள்விக்குப் பதிலளிப்பதே உமக்குத் தகும்.(8) ஓ! உயிரினங்கள் அனைத்தின் தலைவரே, மலர்கள் மற்றும் வேறு நல்ல நறுமணங்களைக் கொண்டு தேவர்கள் வழிபடப்படுவது காணப்படுகிறது. இஃது என்ன? இந்த நடைமுறை எவ்வாறு தோன்றியது? அதனுடன் தொடர்புடைய பலன்கள் என்னென்ன? இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(9)

மனு {சுவர்ணரிடம்}, “இது தொடர்பாகச் சுக்கிரனுக்கும், உயர் ஆன்ம (தைத்தியனான) பலிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழைய வரலாறு சொல்லப்படுகிறது.(10) ஒரு காலத்தில், பிருகு குலத்தின் சுக்கிரர், விரோசனனின் மகனான பலி மூவுலகங்களையும் ஆண்டுக் கொண்டிருந்தபோது, அவனை அணுகினார்.(11) வேள்விக் கொடைகளை அபரிமிதமாக அளிக்கும் அந்த அசுரர்கள் தலைவன் {பலி}, அர்க்கியத்துடன் அந்தப் பிருகுவின் வழித்தோன்றலை வழிபட்டு (அவருக்கு ஓர் இருக்கையை அளித்து) தன் விருந்தினர் அமர்ந்த பிறகு அவனும் அமர்ந்தான்.(12) அச்சந்தர்ப்பத்தில் மலர்கள், நறுமணப்புகைப்பொருள், விளக்குகளுடன் பிணைந்த பலன்கள் தொடர்பாக நீர் தொடங்கிய அதே காரியம் முன் வைக்கப்பட்டது. உண்மையில், தைத்தியர்களின் தலைவன் {பலி}, தவசிகள் அனைவரிலும் பெருங்கல்வியைக் கொண்ட சுக்ரரிடம் இந்த உயர்ந்த கேள்வியை வைத்தான்.(13)

பலி {சுக்கிரரிடம்}, “ஓ! பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உண்மையில் மலர்கள், நறுமணப்புகைப்பொருள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன் என்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, இது குறித்து நீர் என்னிடம் உரையாடுவது உமக்குத் தகும்” என்றான்.(14)

சுக்கிரர் {பலியிடம்}, “முதலில் தவம் உயிர்பெற்றது. அதன் பிறகு தர்மம் (அல்லது கருணை மற்றும் பிற ஒழுக்கங்கள்) வந்தது. அதன் இடைவெளியில் செடிகொடிகள் உயிர்பெற்றன[1].(15) அவை எண்ணற்ற இனங்களாக இருந்தன. அவை அனைத்தும் (தேவன்) சோமனையே {சந்திரனையே} தங்கள் தலைவனாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் செடிகொடிகளில் சில அமுதமாகவும், சில நஞ்சாகவும் கருதப்படுகின்றன. இதுவுமல்லாமல் அதுவுமல்லாமல் சில சேர்ந்து ஒருவகையாகின.(16) மனத்திற்கு நிறைவையும் இன்பத்தையும் அளிப்பது அமுதமாகும். தன் மணத்தின் மூலம் மனத்தை அதிகம் வாட்டுவது நஞ்சாகும்.(17) அமுதமானது உயர்வானது, மங்கலமானதெனவும், நஞ்சானது மங்கலமற்றது எனவும் அறிவாயாக. இலையுதிர் மூலிகைகள் {தாவரங்கள்} அனைத்தும் அமுதமாகும். நஞ்சானது நெருப்பின் சக்தியால் பிறக்கிறது.(18) மலர்கள் மனத்திற்கு மகிழ்வூட்டி செழிப்பை அளிக்கின்றன. எனவே அறச் செயல்களைச் செய்யும் மனிதர்க்ள அவற்றுக்குச் சுமனஸுகள் என்ற பெயரை அளித்தனர்.(19) தூயநிலையில் இருக்கும் மனிதன், தேவர்களுக்கு மலர்களைக் காணிக்கையளித்து அந்தந்த ஏவர்கள் நிறைவடைவதன் விளைவால் அவர்களுக்குச் செழிப்பை அளிக்கின்றனர்.(20)ஓ! தைத்தியர்களின் ஆட்சியாளா {பலியே}, ஓ! தலைவா, வழிபாட்டாளர்கள் தேவர்களின் பெயர்களைச் சொல்லி மலர்களைக் காணிக்கையளிக்கும்போது, காணிக்கையளிப்பவர்களுடைய பக்தியின் விளைவாகத் தேவர்கள் நிறைவடைகின்றனர்.(21) (இலையுதிர்) மூலிகைகள் பல்வேறு வகைகளைச் சேர்ந்தவையாகவும், பல்வேறு வகைச் சக்திகளைக் கொண்டவையுகாவும் இருக்கின்றன.(22) வேள்வி காரியங்களுக்குப் பயன்படும் மரங்கள் எவை, பயன்படாதவை எவை என்பதை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. அசுரர்களுக்கு ஏற்புடைய மலர்மாலைகள் எவை, தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும்போது பலன்தருபவை எவை என்பதையும் கேட்பாயாக.(23) ராட்சசர்கள், உரகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையே ஏற்புடைய மலர்மாலைகள் எவை என்பதையும் முறையான வரிசையில் சொல்லப் போகிறேன்.(24) பல்வேறு வகைகளைச் சேர்ந்த மலர்களில் சில காட்டு மலர்களாகவும், சில மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் வளர்பவையாகவும், சில நன்கு உழப்பட்ட நிலத்தில் நட்டாலன்றி ஒருபோதும் வளராத மரங்களுக்கு உரியவையாகவும்; சில மலைகளில் வளரும் மரங்களில் உள்ளவையாகவும்; சில முள்மரங்களில் உள்ளவையாகவும் இருக்கின்றன. நறுமணம், அழகிய வடிவம், சுவை ஆகியவற்றிலும் வகைப்பாடுகள் உண்டு.(25)

மலர்கள் ஏற்புடையவை, ஏற்பில்லாதவை என்ற இரு வகை மணங்களைத் தருகின்றன. ஏற்புடைய மணம் கொண்ட மலர்களே தேவர்களுக்குக் காணிக்கயளிக்கப்பட வேண்டும்.(26) முள்ளில்லா மரங்களின் மலர்கள் பொதுவாக வெண்ணிறத்தில் இருக்கின்றன. ஓ! தலைவா, அத்தகைய மலர்கள் எப்போதும் தேவர்களுக்கு ஏற்புடையனவாகும்.(27) ஞானம் கொண்ட ஒருவன், தாமரை போன்ற நீர் மலர்களாலான மாலைகளைக் கந்தர்வர்கள், நாகர்கள் மற்றும் யக்ஷர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டும்.(28) காரமணமிக்கச் சிவப்பு நிற மலர்களை உண்டாக்கும் செடிகொடிகள் எதிரிகளுக்குத் தீங்கிழைக்கும் மந்திரங்களுடன் கூடிய செயல்களுக்குத் தகுந்தவையென அதர்வணங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(29) கொடுஞ்சக்தியைக் கொண்டவையும், தீண்டினால் துன்பத்தைத் தருபவையும், முள் மரங்கள் மற்றும் செடிகளில் வளர்பவையும், குருதிச்சிவப்பு அல்லது கரு நிறமுள்ளவையுமான மலர்கள், பூமி சாராத (தீய) பிசாசுகளுக்கு {பூதங்களுக்குக்} கொடுக்கப்பட வேண்டும்.(30)

ஓ! தலைவா, மனத்திற்கும், இதயத்திற்கும் மகிழ்ச்சியூட்டுபவையும், கசக்கும்போது ஏற்புடையவையும் {இனிய மணத்தைத் தருபவையும்}, அழகிய வடிவம் கொண்டவையுமான மலர்கள், மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்தவை எனச் சொல்லப்படுகின்றன.(31) மயானங்கள் மற்றும் சுடலைகள், அல்லது தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்களில் வளரும் மலர்கள், வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைத் தங்கள் நோக்கங்களாகக் கொண்ட சடங்குகள் மற்றும் திருமணம் ஆகியவற்றிலோ, காமத்திளைப்பு மற்றும் கமுக்கமான இன்பச் செயல்களிலோ கொண்டுவரப்பட்டுப் பயன்படுத்தப்படக்கூடாது.(32) மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் பிறந்தவையும், ஏற்புடைய மணம் மற்றும் தன்மைகளைக் கொண்டவையுமான மலர்கள், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட வேண்டும். அத்தகைய மலர்களில் சந்தனம் தெளித்து, சாத்திர விதிகளின்படி முறையாகக் காணிக்கயளிக்கப்பட வேண்டும்.(33) தேவர்கள் மலர்களின் மணத்திலும், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அவற்றின் தோற்றத்திலும், நாகர்கள் அவற்றின் தீண்டலிலும், மனிதர்கள் மணம், பார்வை மற்றும் தீண்டல் ஆகிய மூன்றிலும் நிறைவடைகிறார்கள்.(34) மலர்கள் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும்போது, அவர்களை உடனே நிறைவடையச் செய்கின்றன. வெறுமே நிறைவேற்ற விரும்புவதன் மூலமே ஒவ்வொரு நோக்கத்தையும் அவர்கள் {தேவர்கள்} நிறைவேற்றவல்லவர்களாக இருக்கிறார்கள். மலர்களைக் காணிக்கையளிக்கும் பக்தர்களிடம் நிறைவடையும்போது தங்கள் வழிபாட்டாளர்களால் பேணி வளர்க்கப்படும் நோக்கங்கள் அனைத்தையும் அவர்கள் உடனே நிறைவடையச் செய்கிறார்கள்.(35) நிறைவை அடையும் அவர்கள் தங்களை வழிபடுபவர்களையும் நிறைவடைச் செய்கிறார்கள். கௌரவிக்கப்படும் அவர்கள் தங்களை வழிபடுபவர்களையும் அனைத்துக் கௌரவங்களிலும் இன்புறச் செய்கிறார்கள். அலட்சியமும் அவமதிப்பும் செய்யப்படும்போது அவர்கள் அந்தத் தீய மனிதர்களை எரித்து நிர்மூலமாக்குகிறார்கள்.(36)

நறுமணப்புகைப்பொருட்கள் கொடையளிப்பது {தூபங்கொடுத்தல்} குறித்த விதிகளின் படி உண்டாகும் பலன்களை இனி உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! அசுரர்களின் இளவரசே, நறுமணப்புகைப்பொருட்கள் பலவகைப்படும் என்பதை அறிவாயாக. அவற்றில் சில மங்கலமானவையாகவும், சில மங்கலமற்றவையாகவும் உள்ளன.(37) சில நறுமணப்புகை பொருட்கள் {பிசின் போன்ற} வடிநீர் கொண்டவையாகும். சில நெருப்பில் நிறுவப்படும் நறுமண மரத்தால் ஆனவையாக இருக்கின்றன. வேறு சில, பல்வேறு பொருட்கள் கலந்து செயற்கையாகக் கரங்களால் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றின் மணம் ஏற்புடையவை, ஏற்பில்லாதவையென இருவகைப்படும். இது குறித்து விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக[2].(38) ஸல்லகி மரத்தைத்[3] தவிர மற்ற மரவடிநீர்கள் {பிசின்கள்} தேவர்களுக்கு ஏற்புடையவையே. எனினும், வடிநீர்கள் {பிசின்கள்} அனைத்திலும் குங்கிலியம்[4] நிச்சயம் சிறந்ததாகும்.(39) சாரி வகைத் தூபங்கள் அனைத்திலும் அகில்[5] சிறந்ததாகும். யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் ஆகியோருக்கு அது மிகவும் ஏற்புடையதாகும். ஸல்லகி மரத்தின் பிசினும், அதே வகையைச் சார்ந்த பிறவும் தைத்தியர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.(40) கடும் நெடிகள் கொண்ட வேறு நீர்மங்களுடன் கலந்து, சால மரம் மற்றும், தேவதாரு மரங்களின் பிசினில் செய்யப்பட்ட தூபங்கள் மனிதர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன.(41) இத்தகைய தூபங்கள் தேவர்கள், தானவர்கள் மற்றும் பூதங்களை உடனே நிறைவடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது[6]. இவற்றையும் தவிர அன்பு நோக்கங்களுக்காக மனிதர்களால் பயன்படுத்தப்படும் பல வகைத் தூபங்களும் இருக்கின்றன.(42) மலர்க்காணிக்கையில் உண்டாவதாகச் சொல்லப்படும் அனைத்துப் பலன்களும் நிறைவை விளைவிக்கும் இத்தகைய தூபங்களைக் கொடையளிப்பதாலும் கிட்டும் என்று அறியப்பட வேண்டும்.(43)விளக்குகள் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்கள்; அவற்றை யார் எந்த நேரத்தில், எவ்வகையில் கொடுக்க வேண்டும்; என்ன வகை விளக்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்பவற்றைக் குறித்து இனி சொல்லப்போகிறேன்.(44) ஒளியானது சக்தி என்றும் புகழ் என்றும், மேல்நோக்கிய போக்குக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. எனவே, சக்தியாக இருக்கும் ஒளியைக் கொடையளிப்பது மனிதர்களின் சக்தியை அதிகரிக்கிறது[7].(45) அந்ததமஸ் என்ற பெயரிலான ஒரு நரகம் இருக்கிறது. சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் {தக்ஷிணாயன} காலமும் இருளானதாகக் கருதப்படுகிறது. அந்த நரகத்திலும், அந்தக் காலத்தின் இருளிலும் இருந்து தப்புவதற்கு ஒருவன் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் {உத்தராயனத்தில்} காலத்தில் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும். இத்தகைய செயல் நல்லோரால் மெச்சப்படுகிறது[8].(46) மேலும், ஒளியானது மேல்நோக்கிய போக்கைக் கொண்டிருப்பதாலும், இருளுக்கான தீர்வாகக் கருதப்படுவதாலும் ஒருவன் ஒளிக்கொடையாளியாக இருக்க வேண்டும். இதுவே சாத்திரங்களின் தீர்மானமாகும்.(47) விளக்குகளைக் கொடையளித்ததன் மூலமே தேவர்கள், அழகையும், சக்தியையும், பிரகாசத்தையும் கொண்டவர்களானார்கள். அத்தகைய செயல்களைச் செய்யாமல் இருந்ததால், ராட்சசர்கள் அதற்கு எதிரான குணங்களுடன் கூடியவர்களானார்கள். எனவே ஒருவன் எப்போதும் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும்.(48)விளக்குகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒரு மனிதன் கூரிய பார்வையையும் பிரகாசத்தையும் பெறுகிறான். விளக்குகளைக் கொடையளிப்பவன் வேறு எவரின் பொறாமைக்கான பொருளாக இருக்கக்கூடாது. மேலும், வேறு யாரும் கொடுக்கப்படும் விளக்குகளைக் களவாடுதலும், அணைப்பதும் கூடாது.(49) விளக்கைத் திருடுபவன் குருடனாகிறான். அத்தகைய மனிதன் (மறுமையில்) இருளில் திரிந்து ஒளியற்றவனாகிறான். விளக்குகளைக் கொடையளிப்பவன் தேவலோகத்தில் ஒளிரும் ஒளி வரிசையைப் போல அழகுடன் ஒளிர்கிறான்.(50) விளக்குகளிலும், நெய்யால் எரிபவை சிறந்தவையாகும். அந்த வரிசையில் அடுத்ததாக இலையுதிர்மூலிகைச் சாறுகளால் (எண்ணெய்யால்) எரிபவை வருகின்றன. வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புபவன், விலங்குகளின் எலும்புகளில் இருந்து பாயும், சாறு, அல்லது மஜ்ஜை அல்லது கொழுப்பில் ஒருபோதும் (விளக்கை) எரிக்கக்கூடாது[9].(51) தன் முன்னேற்றத்தையும் செழிப்பையும் விரும்பும் மனிதன், மலையிறக்கங்களிலும், காடுகளில் உள்ள சாலைகளிலும், அடைதற்கரிய பகுதிகளிலும், மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் உள்ள புனித மங்களுக்குக் கீழும், சாலைகளின் சந்திப்புகளிலும் எப்போதும் விளக்குகளைக் கொடுக்க வேண்டும்.(52) விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் எப்போதும் தன் குலத்திற்கு ஒளியூட்டி, ஆன்மத் தூய்மையையும், வடிவத்தில் பிரகாசத்தையும் அடைகிறான். உண்மையில் அத்தகைய மனிதன் மரணத்திற்குப் பிறகு, ஆகாயத்தில் உள்ள ஒளியுடல்களின் {நட்சத்திரங்களின்} தோழமையை அடைகிறான்.(53)தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், மனிதர்கள், பூதங்கள் மற்றும் ராட்சசர்களுக்குப் பலிக்காணிக்கைகளை அளிப்பதன் மூலம் கிட்டும் கனிகள் தொடர்பான பலன்களைக் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(54) பிராமணர்கள், தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகள் ஆகியோருக்கு முதலில் படைக்காமல் உண்ணும் இரக்கமற்ற தீய மனிதர்கள் ராட்சசர்களாக அறியப்பட வேண்டும்.(55) எனவே, ஒருவன் தான் தயாராக வைத்திருக்கும் உணவை முதலில் தேவர்களுக்குப் படைத்து, புலனடக்கத்துடனும், குவிந்த கவனத்துடனும் முறையாக அவர்களை வணங்க வேண்டும். அவன் மதிப்புடன் தலைவணங்கி தேவர்களுக்குப் பலியை காணிக்கையளிக்க வேண்டும்.(56) இல்லறத்தோர் அளிக்கும் உணவாலேயே தேவர்கள் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றனர். உண்மையில், அவர்களுக்குக் காணிக்கையளிக்கும் வீடுகளுக்கு அவர்கள் அருள்புரிகின்றனர். யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், விருந்தினர்கள், வீடற்ற மனிதர்கள் அனைவரும் இல்லற வாழ்வு முறையை நோற்கும் மனிதர்கள் அளிக்கப்படும் உணவாலேயே ஆதரிக்கப்படுகின்றனர்.(57) உண்மையில் தேவர்களும், பித்ருக்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இத்தகைய காணிக்கைகளின் மூலமே அடைகின்றனர். இத்தகைய காணிக்கைகளால் நிறைவடையும் அவர்கள், பதில் உதவியாகக் காணிக்கையளிப்பவனுக்கு நீண்ட வாழ்நாள், புகழ் மற்றும் செல்வத்தைக் கொடுத்து நிறைடையச் செய்கின்றனர்.(58)

ஏற்புடைய மணமும், தோற்றமும் கொண்ட தூய உணவில் பால் மற்றும் தயிரைக் கலந்து, மலர்களுடன் சேர்த்துத் அவற்றைத் தேவர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டும்.(59) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் பலிகள், சாராயத்தின் துணையுடனும் கூடியவையாகவும், நெற்பொரி மற்றும் அவல்களால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், குருதி மற்றும் இறைச்சி நிறைந்தவையாக இருக்க வேண்டும்[10].(60) தாமரைக்ள மற்றும் உத்பலங்களுடன் {நெய்தல்களுடன்} கூடிய பலிகள் நாகர்களுக்கு ஏற்புடையவையாகும். வெல்லத்தில் வேகவைக்கப்பட்ட எள்ளானது, பூமி சாராத பூதங்களுக்குக் காணிக்கையளிக்கப்பட வேண்டும்.(61) பிராமணர்கள், தேவர்கள், விருந்தினர்களுக்கு முதலில் படைக்காமல் எந்த உணவையும் உண்ணாதவன், உணவின் முதல் பங்குகளுக்கான உரிமையை அடைகிறான். அத்தகைய மனிதன் பலமும், சக்தியும் பெறுகிறான். எனவே உணவின் ஒரு பகுதியை தேவர்களுக்குப் படைத்து மதிப்புடன் அவர்களை வழிபடாமல் ஒருவன் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது.(62) இல்லத்தில் தேவர்கள் வாழ்வதன் விளைவால் ஒருவனுடைய வீடு அழகில் சுடர்விடுகிறது. எனவே, தனக்கான முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பும் ஒருவன், அனைத்து உணவுகளின் முதல் பகுதியையும் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குப் படைத்து அவர்களை வழிபட வேண்டும்” என்றார் {சுக்ரர்}.(63)இவ்வாறே, பிருகு குலத்தவரும், கல்விமானானுமான கவி {சுக்கிரர்} அசுரர்களின் தலைவனான பலியிடம் சொன்னார். அடுத்ததாக முனிவர் சுவர்ணருக்கு அந்த உரையாடலே மனுவால் சொல்லப்பட்டது. சுவர்ணரும் தம் பங்குக்கு அதை நாரதருக்கு உரைத்தார்.(64) தெய்வீக முனிவரான நாரதர் குறிப்பிடப்பட்ட பல்வேறு செயல்களுக்கான பலன்களை எனக்கு உரைத்தார். ஓ! மகனே, அந்தப் பலன்களை அறிந்து கொண்ட நீ குறிப்பிடப்பட்ட பல்வேறு செயல்களைச் செய்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(65)

பிருகுவும் அகத்தியரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 99-மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன் குறித்த நஹுஷன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பிருகு முனிவருக்கும் அகஸ்தியருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவரே, மலர்கள், நறுமணப்புகைப்பொருட்கள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களால் வெல்லப்படும் பலன்களை நான் கேட்டேன். பலி அளிப்பதில் விதிகளை முறையாகப் பின்பற்றுவதில் உள்ள பலன்களைக் குறித்தும் நான் கேட்டேன். ஓ! பாட்டா, இது குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(1) உண்மையில், ஓ! ஐயா, நறுமணப்புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக. இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தை} நோற்கும் மனிதர்களால் பலிகள் தரையில் இடப்படுவதேன்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக நஹுஷன் {நகுஷன்}, அகஸ்தியர் மற்றும் பிருகு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) ஓ! ஏகாதிபதி, தவங்களையே செல்வமாகக் கொண்ட அரச முனி நஹுஷன், தன் நற்செயல்களின் மூலம் சொர்க்கத்தின் ஆட்சி உரிமையை அடைந்தான்.(4) ஓ! மன்னா, புலனடக்கத்துடன் சொர்க்கத்தில் வசித்த அவன், மனித மற்றும் தேவ இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்வதில் ஈடுபட்டு வந்தான்.(5) ஓ! மனிதர்களின் தலைவா, அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடமிருந்தே பல்வேறு வகை மனிதச் செயல்களும் {கர்மங்களும்}, பல்வேறு வகைத் தெய்வீகச் செயல்களும் தோன்றின.(6) ஓ! ஏகாதிபதி, வேள்வி நெருப்பு, புனித விறகு, குசப்புல் {தர்ப்பை}, மலர்கள் ஆகியவற்றைத் திரட்டுவது, (மாவாக்கப்பட்ட) நெற்பொரியால் அலங்கரிக்கப்பட்ட உணவைக் கொண்ட பலி அளிப்பு, நறுமணப்புகைப்பொருள் மற்றும் விளக்குகளைக் காணிக்கையளிப்பது போன்ற அனைத்துக்கும் தொடர்புடைய பல்வேறு சடங்குகள், அந்த உயர் ஆன்ம மன்னன் சொர்க்கத்தில் வசித்தபோது நாள்தோறும் உண்டானவையே ஆகும். உண்மையில், அவன் சொர்க்கத்தில் வசித்திருந்தாலும், யப {ஜப} வேள்வியையும் (அமைதியாக மந்திரங்களை ஓதுவதையும்), தியான வேள்வியையும் செய்து வந்தான்.(7,8)

ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, நஹஷன் {நகுஷன்}, தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும், பழங்காலத்தில் தான் செய்து வந்ததைப் போலவே உரிய சடங்குகள் மற்றும் விழாக்களுடன் தேவர்கள் அனைவரையும் அவன் வழிபட்டு வந்தான்.(9) சில காலம் கழிந்த பிறகுதான் நஹுஷன் தான் தேவர்களின் அனைவரின் தலைவன் என்ற நிலையை உணர்ந்தான். இதனால் அவன் செருக்கில் நிறைந்தான். அந்தக் காலம் முதல் (இங்குச் சொன்ன வகையிலான) அவனுடைய செயல்கள் {கர்மங்கள்} அனைத்தும் நின்று போயின.(10) தேவர்கள் அனைவரிடம் இருந்தும் தான் பேற்ற வரத்தின் விளைவால் ஆணவத்தில் நிறைந்திருந்த நஹுஷன், முனிவர்களையே தங்கள் தோள்களில் அவனைச் சுமக்கச் செய்தான். எனினும் அறச்சடங்குகள் அனைத்தையும் அவன் கைவிட்டதன் விளைவால் அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களில் முதன்மையானோரைத் தன் வாகனங்களைச் சுமக்கச் செய்வதைத் தொடரும் அளவுக்கு நஹுஷன் மிக நீண்ட காலம் செருக்கால் நிறைந்திருந்தான்.(12) அவன் முனிவர்களை அவமதிக்கும் வகையில் இந்த வேலைகளை அவர்களைச் செய்ய வைத்தான். ஓ! பாரதா, ஒரு நாள் அகஸ்தியர் அவனுடைய {நகுஷனுடைய} வாகனத்தைச் சுமக்கும் நாள் வந்தது.(13)

அந்தக் காலத்தில், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான பிருகு, ஆசிரமத்தில் அமர்ந்திருந்த அகஸ்தியரின் முன்பு சென்று அவரிடம்,(14) “ஓ! பெருந்தவசியே, தேவர்களின் தலைவனாகியிருக்கும் இந்தத் தீய ஆன்மா கொண்ட நஹுஷனால் நம்மீது இழைக்கப்படும் இத்தகைய கண்ணியமின்மைகளுக்கு நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று கேட்டார்.(15)

அகஸ்தியர் {முனிவர் பிருகுவிடம்}, “ஓ! பெரும் முனிவரே, நஹுஷனை சபிப்பதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? வரங்களை அளிப்பவரே {பிரம்மரே}, நஹுஷனுக்குச் சிறந்த வரங்களை எவ்வாறு கொடுத்தார் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.(16) சொர்க்கத்திற்கு வந்த நஹுஷனால் வேண்டப்பட்ட வரம், தன் பார்வையில் பட்ட அனைத்தும் அதன் சக்தியனைத்தையும் இழந்து தன் ஆளுகைக்குள் வர வேண்டும் என்பதாகும்.(17) சுயம்புவான பிரம்மன் இவ்வரத்தையே அவனுக்கு அளித்திருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே உம்மாலோ, என்னாலோ அவனை எரிக்க இயலவில்லை. முனிவர்களில் முதன்மையான வேறு யாராலும் அவனை எரிக்கவோ, அவனது உயர்ந்த நிலையில் இருந்து தள்ள இயலாததும் இந்தக் காரணத்தினாலேயே ஆகும்.(18) ஓ! தலைவரே, முன்பொரு சமயம் நஹுஷன் குடிப்பதற்காகப் பிரம்மனால் அமுதம் கொடுக்கப்பட்டது. இந்தக் காரணத்தினாலும் நாம் அவன் எதிரில் பலமற்றவர்களாகிறோம்.(19) அந்தப் பரமதேவன், உயிரினங்கள் அனைத்தையும் துயரத்திற்குள் மூழ்கடிக்கவே நஹுஷனுக்கு அவ்வரத்தை அளித்ததாகத்தெரிகிறது. மனிதர்களில் இழிந்தவனான அவன் பிராமணர்களிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறான்.(20) ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இந்நிலையைக் கருத்தில் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்குச் சொல்வீராக. உமது அறிவுரைப்படியே நான் செயல்படுவேன் என்பதில் ஐயமில்லை” என்றார்{அகஸ்தியர்}.(21)

பிருகு {அகஸ்தியரிடம்}, “பெரும் சக்தி கொண்டவனும், ஆனால் விதியால் மயக்கப்பட்டிருப்பவனுமான நஹுஷனின் பலத்திற்கு எதிர்ச்செயல் செய்யும் நோக்கில் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலேயே நான் இங்கே வந்திருக்கிறேன்.(22) தேவர்களுக்குத் தலைவனாகியிருக்கும் தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன் இன்று உம்மையே அவனுடைய தேரில் பூட்டப் போகிறான். அவன் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்ததன் விளைவாலும், என் சக்தியின் துணையுடனும் அவன் இந்திரனின் நிலையில் இருந்து என்னால் வீசியெறியப்படப் போகிறான்.(23) நான் இன்று உம் பார்வையிலேயே தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான நஹுஷனை இந்திரனின் இருக்கையில் இருந்து வீசியெறிந்து, நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனை அதில் அமர்த்தப் போகிறேன்.(24) தேவர்களின் தலைவனாக இருக்கும் அந்த நேர்மையற்றவன், விதியால் பீடிக்கப்படிருக்கும் அவனது புத்தியின் விளைவால் அவனது வீழ்ச்சியைக் கொண்டு வரும்பொருட்டு ஓர் உதையின் மூலம் இன்று உம்மை அவமதிக்கப் போகிறான்.(25)

அத்தகைய அவமதிப்பால் சினமடையும் நான், பிராமணர்களின் எதிரியும், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த இழிந்தவனிடம், “நீ ஒரு பாம்பாவாயாக” என்று இன்று சபிக்கப் போகிறேன்.(26) ஓ! பெருந்தவசியே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ச்சீ ச்சீ என்று சொல்லப்படுவதன் விளைவால் சக்தி அனைத்தையும் இழந்திருக்கும் தீய ஆன்மாகக் கொண்ட நஹுஷனை நான் இந்து பூமிக்கு வீசப் போகிறேன்[1].(27) உண்மையில், தலைமைத்துவம் மற்றும் சக்தியால் மயங்கியிருப்பவனும், நியாயமற்ற செயல்களைச் செய்யும் அற்பனுமான நஹுஷனை நான் இன்று வீசியெறியப் போகிறேன். ஓ! தவசியே, உமக்கு ஏற்புடையதென்றால் நான் இதைச் செய்வேன்” என்றார் {பிருகு}.(28இவ்வாறு பிருகுவால் சொல்லப்பட்டவரும், மித்ராவருணனின் மகனும், மங்கா மகிமையும் பலமும் கொண்ட அகஸ்தியர், உயர்ந்த நிறைவை அடைந்து அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டார்” என்றார் {பீஷ்மர்}.(29)

தீபதானமும், நஹுஷனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 100-அகஸ்தியரின் சடையில் மறைந்திருந்த பிருகு; அகஸ்தியரைக் காலால் தாக்கிய நஹுஷன்; நஹுஷனைச் சபித்த பிருகு; தான் அளித்த கொடைகளால் சாபத்தில் இருந்து மீண்ட நஹுஷன்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“நஹுஷன் எவ்வாறு துன்பத்தில் மூழ்கினான்? அவன் எவ்வாறு பூமியில் வீசப்பட்டான்? உண்மையில் அவன் எவ்வாறு தேவர்களின் அரசுரிமையை இழந்தான்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பிருகு மற்றும் அகஸ்தியர் ஆகிய முனிவர்கள் இருவரும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நஹுஷன் முதலில் தேவர்களின் தலைவனான போது நல்ல வழியிலேயே செயல்பட்டான் என்பதை ஏற்கனவே சொன்னேன். உண்மையில் மனித மற்றும் தெய்வீக இயல்புடைய அனைத்துச் செயல்களும் அந்த உயர் ஆன்ம அரச முனியிடமிருந்தே உண்டாகின.(2) விளக்குகள் கொடை மற்றும் அதே வகைச் சடங்குகள் அனைத்தும், பலிகளை முறையாக அளிப்பது, குறிப்பாகப் புனித நாட்களில் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும்(3) என இவை யாவும் தேவர்களின் அரசுரிமையில் அமர்ந்த உயர்ந்த ஆன்ம நஹுஷனால் முறையாக நோற்கப்பட்டன. பக்திச் செயல்பாடுகள் அனைத்தும் ஞானம் கொண்ட மனிதர்களாலேயே மனிதர்களின் உலகிலும், தேவர்களின் உலகிலும் எப்போதும் நோற்கப்படுகின்றன. உண்மையில், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அத்தகைய செயல்பாடுகள் நோற்கப்பட்டால், இல்லறவாசிகள் எப்போதும் செழிப்பையும், முன்னேற்றத்தையும் அடைவதில் வெற்றி அடைகிறார்கள். தேவர்களுக்கு விளக்குகள், நறுமணப்புகைப்பொருட்களைக் கொடையளிப்பதும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும் அவ்விளைவுகளையே ஏற்படுத்தும்.(4,5)

உணவு சமைக்கப்படும்போது, அதன் முதல் பகுதியானது ஒரு பிராமணருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பலி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட காணிக்கைகள் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அத்தகைய கொடைகளால் நிறைவடைகின்றனர்.(6) அத்தகைய காணிக்கைகளால் தேவர்கள் எவ்வளவு நிறைவடைகிறார்களோ அதற்கு நூறு மடங்களவுக்குப் பெரிதாக அந்த இல்லறவாசியைப் பதிலுக்கு அவர்கள் நிறைவடையச் செய்வார்கள்.(7) பக்தியும் ஞானமும் கொண்ட மனிதர்கள் நறுமணப்புகைப் பொருட்களையும், விளக்குகளையும் கொடையளித்து நெடுஞ்சாண்கிடையாக வணங்கவும் செய்வார்கள். அத்தகைய செயல்கள் அவற்றைச் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தையும், செழிப்பையும் எப்போதும் கொண்டு வரும்.(8) தூய்மைச் சடங்குகளின் போது, நீரின் உதவியுடன் தேவர்களுக்குப் பணிந்து செய்யப்படும் சடங்குகள் யாவும் தேவர்களை நிறைவடையச் செய்யவே உதவுகின்றன.(9) முறையான சடங்குகளுடன் வழிபடப்படும்போது உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்களும், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும், வீட்டில் வசிக்கும் தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(10)

தேவர்களின் அரசுரிமையை அடைந்தபோது, இத்தகைய கருத்துகளால் நிறைந்திருந்த பெரும் மன்னன் நஹுஷன், பெரும் மகிமையால் நிறைந்த இந்தச் சடங்குகள் மற்றும் கடமைகள் அனைத்தையும் பின்பற்றினான்.(11) சில காலம் கழித்து நஹுஷனின் நற்பேறு தேய்வடைந்ததன் விளைவாக அவன் இந்த நோன்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, நான் ஏற்கனவே சொன்னவாறு கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறிச் செயல்படத் தொடங்கினான்.(12) நறுமணப் புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் காணிக்களிப்பதில் உள்ள விதிகளை நோற்காமல் தவிர்த்ததன் விளைவாகத் தேவர்களின் தலைவனான அவனிடம் சக்தி குன்றத்தொடங்கியது.(13) அவனுடைய வேள்விச் சடங்குகளும், கொடைகளும் ராட்சசர்களால் தடுக்கப்பட்டன. இந்தக் காலத்தில்தான் அவன் முனிவர்களில் முதன்மையானவரான அகஸ்தியரைத் தன்தேரில் பூட்டினான்.(14) பெரும்பலம் கொண்ட நஹுஷன், சிரித்துக்கொண்டே, சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்து (தான் குறிப்பிட்ட இடத்திற்கு) வாகனத்தைச் சுமக்க அந்தப் பெருமுனிவருக்கு ஆணையிட்டு, அவரை அந்தப் பணியில் நிறுவினான்.

அந்நேரத்தில, பெருஞ்சக்தி கொண்ட பிருகு, மித்ராவருணனின் மகனிடம் {அகஸ்தியரிடம்),(15) “நான் உமது தலையில் உள்ள சடாமுடிக்குள் நுழைவது வரை நீர் உமது கண்களை மூடிக் கொள்வீராக” என்றார். மங்கா மகிமை கொண்டவரும், வலிமையும், சக்தியும் கொண்டவருமான பிருகு இதைச் சொல்லவிட்டு, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நஹுஷனை வீசி எறிவதற்காக, மரக்கட்டையைப் போல அசையாமல் நின்றிருந்த அகஸ்தியரின் சடாமுடிக்குள் நுழைந்தார். விரைவில் நஹுஷன், தன் வாகனத்தைச் சுமக்க வரும் அகஸ்தியரைக் கண்டான்.(16,17)

தேவர்களின் தலைவனான அவனைக் கண்ட அகஸ்தியர், அவனிடம், “தாமதமில்லாமல் என்னை உன் வாகனத்தில் பூட்டுவாயாக. நான் உன்னை எந்த இடத்திற்குச் சுமந்து செல்ல வேண்டும்.(18) ஓ! தேவர்களின் தலைவா, நீ செல்ல விரும்பும் இடத்திற்கு நான் உன்னைச் சுமந்து செல்வேன்” என்றார். இவ்வாறு அவரால் சொல்லப்பட்ட நஹுஷன் அந்தத் தவசியைத் தன் வாகனத்தில் பூட்டினான்.(19) அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு, நஹுஷனின் இச்செயலால் பெரும் நிறைவடைந்தார். அவர் நஹுனனின் மீது தம் கண்களைச் செலுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார்.(20) பிரம்மனிடம் இருந்து சிறப்புமிக்க நஹுஷன் பெற்றிருக்கும் வரத்தின் சக்தியை முழுமையாக அறிந்தவரான பிருகு இவ்வழியில் செயல்பட்டார். அகஸ்தியரும் நஹுஷனால் இவ்வாறு நடத்தப்பட்டாலும் கோபவசப்படாமல் இருந்தார்.(21) ஓ! பாரதா, அப்போது மன்னன் நஹுஷன் தன் அங்குசத்தைக் கொண்டு அகஸ்தியரைத் தூண்டினான். அந்த உயர் ஆன்ம முனிவர் அப்போதும் கோபவசப்படாமல் இருந்தார். தேவர்களின் தலைவன் கோபமடைந்தவனாகத் தன் இடதுகாலால் அகஸ்தியரின் தலையைத் தாக்கினான்.

அம்முனிவர் இவ்வாறு தலையில் தாக்கப்பட்ட போது, அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு,(22,23) சினத்தால் தூண்டப்பட்டவராக, பாவம் நிறைந்த ஆன்மாவான நஹுஷனைச் சபிக்கும் வகையில், “இந்தப் பெரும் முனிவரின் தலையை உன் காலால் நீ தாக்கியதால்,(24) ஓ! தீய புத்தி கொண்ட அற்பனே, பாம்பாக மாறி பூமியில் விழுவாயாக” என்றார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு காணப்படாதவராக இருந்த பிருகுவால் சபிக்கப்பட்ட நஹுஷன் உடனடியாகப் பாம்பாக மாறி பூமியில் விழுந்தான். ஓ! ஏகாதிபதி, நஹுஷன் பிருகுவைக் கண்டிருந்தால், அவரால் தன் சக்தியைக் கொண்டு அவனைப் பூமியில் வீழ்த்துவதில் வெற்றியடைந்திருக்க முடியாது. நஹுஷன் அளித்திருந்த பல்வேறு கொடைகள், அவன் செய்திருந்த தவங்கள் மற்றும் அற நோன்புகளின் விளைவாக,(25-27) ஓ! மன்னா, அவன் பூமியில் வீசப்பட்டால் தன் நினைவை இழக்காமல் இருப்பதில் வென்றான். அப்போது அவன் சாபத்தில் இருந்து வெளியே வரும் நோக்கில் பிருகுவை அமைதிப்படுத்தினான்.(28) கருணையில் நிறைந்த அகஸ்தியரும் சாபத்தை முடிவுக்குக் கொண்டுவர பிருகுவை அமைதிப்படுத்துவதில் நஹுஷனுடன் சேர்ந்து கொண்டார். இறுதியாக நஹுஷனிடம் கருணை கொண்ட பிருகு, அந்தச் சாபத்தில் இருந்து வெளியே வரும் வழியைச் சொன்னார்.(29)

பிருகு {நஹூஷனிடம்}” குரு குலத்தின் முதன்மையானவனாக யுதிஷ்டிரன் என்ற பெயரில் (பூமியில்) ஒரு மன்னன் தோன்றுவான். அவனே உன்னை இந்தச் சாபத்தில் இருந்து விடுவிப்பான்” என்றார். இதைச் சொன்ன அம்முனிவர் நஹுஷனின் பார்வையில் இருந்து மறைந்தார்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட அகஸ்தியரும், நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனின் காரியத்தில் இவ்வாறு ஈடுபட்டு, மறுபிறப்பாள வகையினர் அனைவராலும் வழிபடப்பட்டுத் தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(31)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயே பிருகுவின் சாபத்தில் இருந்து நஹுஷனை மீட்டாய். உண்மையில் உன்னால் விடுவிக்கப்பட்ட அவன் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரம்மலோகத்திற்கு உயர்ந்தான்.(32) நஹுஷனை பூமியில் வீசியெறிந்த பிருகு பிரம்மலோகத்திற்குச் சென்று பெரும்பாட்டனிடம் அதைச் சொன்னார்.(33)

இந்திரனைத் திரும்ப அழைத்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தேவர்களிடம், “தேவர்களே, நான் கொடுத்த வரத்தின் மூலம் நஹுஷன் சொர்க்கத்தின் அரசுரிமையை அடைந்தான்.(34) எனினும், சினம் கொண்ட அகஸ்தியரால் அரசுரிமையை இழந்த அவன் பூமியில் வீசப்பட்டான். தேவர்களே, ஒரு தலைவன் இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாது.(35) எனவே, நீங்கள் மீண்டும் இந்திரனையே சொர்க்கத்தின் அரசுரிமையில் நிறுவுவீராக” என்றான்.

ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மகிழ்ச்சியால் நிறைந்த தேவர்கள் தங்களிடம் இவ்வாறு சொன்ன பெரும்பாட்டனிடம் மறுமொழியாக “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னார்கள். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தெய்வீகப் பிரம்மனும் சொர்க்கத்தின் அரசுரிமையில் இந்திரனை நிறுவினான். மீண்டும் தேவர்களின் தலைவனான வாசவன், அழகிலும், பிரகாசத்திலும் ஒளிரத்தொடங்கினான். பழங்காலத்தில் நஹுஷனின் வரம்புமீறலால் நேர்ந்தது இதுவே.(36-38) எனினும், நான் குறிப்பிட்ட வகையிலான செயல்களின் மூலம் அடைந்த பலன்களால் இழந்த தன் நிலையை மீண்டும் அடைவதில் நஹுஷன் வென்றான். எனவே, மாலை வந்ததும், இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள் ஒளிக்கொடையளிக்க வேண்டும்.(39) ஒளியைக் கொடையளிப்பவன் நிச்சயம் மரணத்திற்குப் பிறகு தெய்வீகப் பார்வையை அடைவான். உண்மையில், ஒளியைக் கொடையளிப்பவர்கள் முழு நிலவைப் போலப் பிரகாசமடைவார்கள்.(40) ஒளிக்கொடையளிப்பவர்கள், எத்தனை இமைப்பொழுதுகள் அவ்விளக்குகள் எரியுமோ அவ்வளவு வருடங்கள் வடிவு அழகுடன் கூடியவர்களாக, பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்” என்றார் {பீஷ்மர்}.(41)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம் உப பர்வம்-பகுதி 3–

October 17, 2025

சாங்கிய தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 302-உடலையும், ஆன்மாவையும் சாங்கியர்கள் புரிந்து கொள்ளும் வகை; அவர்கள் முக்தி அடையும் முறை; உடலின் களங்கங்கள்; அவற்றைச் சாங்கியர்கள் அகற்றும் வழிமுறை; சாங்கிய தத்துவத்தின் மேன்மை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, அன்புள்ள ஒரு குரு தன் சீடனிடம் சொல்வதுபோல, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட யோக பாதையை முறையாக எனக்கு விளக்கியிருக்கிறீர்.(1) நான் இப்போது சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளைக் குறித்துக் கேட்கிறேன். அந்தக் கோட்பாடுகளை முழுமையாக எனக்கு உரைப்பீராக. மூவுலகங்களில் உள்ள ஞானம் உம்மால் அறியப்பட்டிருக்கிறது” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தெளிவான ஆன்ம அறிவைக் கொண்டவர்களும், சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களுமான அனைவரின் நுண்கோட்பாடுகள் என்னென்ன என்பதை இப்போது கேட்பாயாக. அந்தக் கோட்பாடுகள், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களும், பலமிக்கவர்களுமான பெரும் யதிகள் {சாங்கியர்கள்} அனைவராலும் நிறுவப்பட்டவையாகும். ஓ! மனிதர்களின் தலைவா, அந்தக் கோட்பாட்டில் பிழைகள் {தோஷங்கள்} ஏதும் தென்படுவதில்லை.(4) அதன் தகுதிகள் {புண்ணியங்கள்} பலவாகும்.

அனைத்துப் பொருட்களும் பிழைகள் உள்ளவையே என்பதை அறிவின் துணையுடன் புரிந்து கொண்டும், மனிதர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், பாம்புகள், கந்தர்வர்கள், பித்ருக்கள், (பறவைகளாகவும், விலங்குகளாகவும்) இடைநிலை வகைகளில் உலவிக் கொண்டிருப்பவை, (கருடன் முதலிய) பெரும்பறவைகள், மருத்துகள், அரசமுனிகள், மறுபிறப்பாள தவசிகள், அசுரர்கள், விஸ்வேதேவர்கள், தெய்வீக முனிவர்கள், பரம் கண்ட யோகியர், பிரஜாபதிகள், பிரம்மன் ஆகியோரும் கைவிடுவதற்கு அரிதான பொருட்களைப் புரிந்து கொண்டும், இவ்வுலகில் ஒருவன் இருக்கப்போகும் காலத்தின் உயர்ந்த எல்லையை உண்மையில் புரிந்து கொண்டும், இம்மையில் இன்பநிலை என்று அழைக்கப்படும் பெரும் உண்மையையும் புரிந்து கொண்டும், ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே,(5-10) (நிலையற்ற) பொருட்களின் தொடர்புடைய கவலைகள் அனைத்தையும் குறித்த தெளிவான அறிவுடனும், இடைநிலை வகையில் வீழ்ந்தோர், நரகத்தில் மூழ்கியோர் ஆகியோரின் கவலைகளை முழுமையாக நன்றாக அறிந்து கொண்டும்,(11) சொர்க்கத்தின் தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் களங்கங்கள் {பாவங்கள்} அனைத்தையும் கண்டும், ஓ பாரதா, வேத தீர்மானங்களோடு தொடர்புடைய தகுதியின்மைகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய சிறப்புகள் அனைத்தையும் கண்டும்,(12) யோக மற்றும் சாங்கிய அமைப்பு தத்துவங்களின் நிறைகுறைகளை உணர்ந்தும்,(13) சத்வ குணம் பத்து தன்மைகளைக் கொண்டதென்றும்[1], ரஜஸ் குணத்திற்கு ஒன்பதென்றும்[2], தமஸ் குணத்திற்கு எட்டு என்றும்[3], புத்திக்கு ஏழு தன்மைகள் என்றும்[4],(14) மனத்திற்கு ஆறு என்றும்[5], வெளிக்கும் {ஆகாயத்திற்கு} ஐந்தென்றும் உணர்ந்து[6], அதற்கு மேலும் புத்திக்கு நான்கு தன்மைகளும்[7], தமஸ் குணத்திற்கு மூன்றும்[8],(15) ரஜஸ் குணத்திற்கு இரண்டும்[9], சத்வ குணத்திற்கு ஒரு தன்மையும் உண்டென்று உணர்ந்து கொண்டும்[10], அழிவடையும்போது பொருட்கள் அனைத்தும் பின்பற்றும் பாதையையும், தன்னறிவின் {சுயஞானத்தின்} போக்கையும் உண்மையில் புரிந்து கொண்டும்,(16) அறிவும், அனுபவமும் கொண்டவர்களும், காரணங்களில் தாங்கள் கொண்ட கருத்துகளால் மேன்மையடைந்தவர்களுமான சாங்கியர்கள், முற்றான மங்கல நிலையை அடைந்து, சூரியக் கதிர்களைப் போலவோ, காற்றைப் போலவோ வெளியில் {ஆகாயத்தில்} புகலிடத்தை அமைத்துக் கொண்டு, விடுதலையின் {முக்தியின்} இன்ப நிலையை அடைகிறார்கள்[11].(17)

வடிவத்தைச் சார்ந்தது பார்வை {கண்}; மணத்தைச் சார்ந்தது மணப்புலன் {மூக்கு}; ஒலிக்கு காது; சாறுகளுக்கு நாவு;(18) தீண்டலுக்குத் தோல் (அல்லது உடல்). காற்றானது வெளியையே {ஆகாயத்தையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. மயக்கமானது {அறியாமை} தமஸையே (இருளையே) தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. பேராசையானது புலன்நுகர் பொருட்களையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது.(19) அசைவை {நகர்வை} (அசைவுப்புலன்களைச்) சார்ந்தவன் விஷ்ணு. பலம் (பலத்தின் புலன்களைச்} சார்ந்தவன் இந்திரன். வயிற்றைச் சார்ந்தவன் நெருப்பு தேவன் {அக்னி}. நீர்நிலைகளைச் சார்ந்தவள் பூமாதேவி. நீர்நிலைகள் வெப்பத்தையே (அல்லது நெருப்பையே) தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன.(20) காற்றைச் சார்ந்தது வெப்பம்; காற்றானது வெளியையே {ஆகாயத்தையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; வெளியானது மஹத்-ஐயே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. மஹத்-க்கு புத்தியே அடித்தளமாக இருக்கிறது.(21) புத்தியானது தமஸ் குணத்தையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; தமஸ் குணமானது ரஜஸ் குணத்தையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; ரஜஸ் குணமானது சத்வ குணத்தையே அடைப்படையாகக் கொண்டுள்ளது; சத்வ குணமானது ஆன்மாவைச் சார்ந்திருக்கிறது.(22) ஆன்மாவானது மகிமையும் பலமும் மிக்க நாராயணனைத் தன் புகலிடமாகக் கொண்டிருக்கிறது. அந்த மகிமைமிக்கத் தேவன் விடுதலையை {முக்தியைத்} தன் புகலிடமாகக் கொண்டிருக்கிறான். விடுதலையானது அனைத்துப் புகலிடங்களின் சார்பும் அற்றதாக இருக்கிறது.(23)

இவ்வுடலானது, பதினாறு உடைமைகளைக் கொண்டது[12], சத்வ குணத்தின் விளைவாகவும் இருப்பது என்பதை அறிந்து கொண்டும், உயிரின உடலின் இயல்பையும், அதற்குள் வசிக்கும் சேதனையின் {பூர்வ வாசனையின்} தன்மையையும் முழுமையாகப் புரிந்து கொண்டும்,(24) உடலுக்குள் வாழும் ஓர் இருப்பும், உடலின் ஒவ்வொரு காரியத்தில் இருந்தும் தனித்திருப்பதும், எந்தப் பாவமும் பற்றமுடியாததுமான ஆத்மாவை உணர்ந்து கொண்டும், புலன் நுகர் பொருட்களில் பற்று கொண்டோரின் செயல்கள் எனும் இரண்டாம் பொருளின் இயல்பை உணர்ந்து கொண்டும்,(25) புலன்கள் மற்றும் ஆன்மாவைத் தங்கள் புகலிடமாகக் கொண்ட புலனின்பப் பொருட்களின் தன்மைகளைப் புரிந்து கொண்டும், அடைவதற்கரிதான {அடையக் கடினமான} விடுதலை {முக்தி} மற்றும் அதைச் சொல்லும் {வேதம் முதலிய} சாத்திரங்களை மெச்சிக் கொண்டும்,(26) முக்கிய உயிர் மூச்சுகளான பிராணன், அபானன், ஸமானன், வியானன், உதானன் ஆகியவற்றின் இயல்பையும், கீழ்நோக்கிச் செல்வதும், மேல்நோக்கிச் செல்வதுமான இரண்டு உயிர்மூச்சுகள் பிறவற்றின் {ஆவஹன், பிரவஹன் ஆகியவற்றின்} இயல்பையும் முழுமையாக அறிந்து கொண்டும்,(27) உண்மையில் ஏழு வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்ய விதிக்கப்பட்டிருக்கும், அவ்வேழு உயிர் மூச்சுகளை அறிந்து கொண்டும், பிரஜாபதிகள், முனிவர்கள், அறம் மற்றும் நீதியின்கண் எண்ணிக்கையில் பலவாக உள்ள உயர்ந்த பாதைகள் ஆகியவற்றின் இயல்பை உறுதிசெய்து கொண்டும்,(28) ஓ எதிரிகளை எரிப்பவனே, ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்}, எண்ணிலடங்கா அரசமுனிகள், தெய்வீகமான பெருமுனிவர்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய மறுபிறப்பாள முனிவர்கள் பலர் ஆகியோர்(29) அனைவரும் நெடுங்காலத்தின் போக்கில் தங்கள் பலங்களை இழந்ததைக் கண்டும், ஓ! ஏகாதிபதி, அண்டத்தின் வலிமைமிக்கவர்கள் அனைவரும் அழிவடைந்ததைக் கேள்விப்பட்டும்,(30) ஓ! மன்னா, பாவச் செயல்களைச் செய்த உயிரினங்கள் அடைந்த மங்கலமற்ற கதிகளையும், யமனின் ஆளுகைக்குள் உள்ள வைதரணி ஆற்றில் விழுந்தோரின் துயரங்களையும் புரிந்து கொண்டும்,(31) பல்வேறு கருவறைகளின் மூலம் உயிரினங்களுக்குள் மங்கலமற்ற வகையில் திரிவதையும், குருதி, நீர்,(32) சளி, சிறுநீர், மலம் மற்றும் அனைத்துத் துர்நாற்றங்களுக்கிடையில் அவை வசிக்கும் தன்மையையும், பிறகு குருதி மற்றும் உயிர் வித்து ஆகியவற்றின் கலவையின் விளைவால் மஜ்ஜை தசைக்கட்டுகளுடன்,(33) நூற்றுக்கணக்கான நரம்புகள் மற்றும் தமனிகள் நிறைந்ததும், ஒன்பது வாயில்களைக் கொண்டதுமான தூய்மையற்ற மாளிகையாக அமைந்த உடலைப் பெறுவதைத் புரிந்து கொண்டும், தனக்கான நன்மை எது, நன்மையை உண்டாக்கக்கூடிய பல்வேறு கலவைகள் என்னென்ன என்பதைப் புரிந்து கொண்டும்,(34) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இருள் {தமஸ்}, அல்லது ஆசை {ரஜஸ்}, அல்லது நல்லியல்பின் {சத்வ} குணங்களாலான இயல்பைக் கொண்ட உயிரினங்களின் அருவருக்கத்தக்க ஒழுக்கத்தைக் கண்டும்,(35) ஆன்மாவை முழுமையாக அறிந்தவர்களான சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களால் விடுதலையை {முக்தியை} அடைய இயலாததற்குக் காரணமெனக் கடிந்துரைக்கப்படும் {மேற்கண்ட வகையில் அருவருக்கத்தக்க} அந்த ஒழுக்கத்தைக் கண்டும், ராகுவால் விழுக்கப்படும் சந்திரனையும், சூரியனையும்,(36) தாங்கள் நிறுவப்பட்ட நிலையில் இருந்து விழும் நட்சத்திரங்களையும், தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பும் நட்சத்திரக்கூட்டங்களையும் கண்டும், ஒருங்கிணைந்த அனைத்துப் பொருட்களும் {ஸ்திரீ புருஷர்கள்} பிரியும் சோகத்தையும்,(37) ஒன்றையொன்று விழுங்கும் உயிரினங்களின் மிகக் கொடிய நடத்தையை அறிந்து கொண்டும், மனிதர்களின் குழந்தைப் பருவத்தில் இல்லாத புத்தியையும், உடல் அடையும் சிதைவையும், அழிவையும் கண்டும்,(38) கோபம் மற்றும் மயக்கத்தில் {அறியாமையில்} மூழ்கியதன் விளைவால் உயிரினங்கள் இழக்கும் சத்வ குணத்தைக் குறித்துக் கொண்டும், ஆயிரக்கணக்கான மனிதர்களில் ஒருவர் மட்டுமே விடுதலை {முக்தி} அடைவதற்குப் போராடும் தீர்மானத்தை எட்டுவதைக் கண்டும்,(39) சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி விடுதலையை {முக்தியை} அடைவதில் உள்ள கடினத்தைப் புரிந்து கொண்டும், அடையப்படாத பொருட்களில் உயிரினங்கள் கொள்ளும் அதிக அக்கறையையும், அடைந்த பொருட்களில் கொண்ட அக்கறையின்மையையும் கண்டும்,(40) ஓ! மன்னா, உயிரிழந்தவர்களுடைய வெறுத்தொதுக்கும் உடல்களையும், புலன்நுகர் பொருட்கள் அனைத்தாலும் விளையும் தீமையையும் குறித்துக் கொண்டும்,(41) ஓ! பாரதா, இல்லங்களில் (மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில்) எப்போதும் துன்பம் நிறைந்த வாசத்தைக் கண்டும், பிராமணர்களைக் கொன்ற குற்றத்தால் வீழ்ந்த மனிதர்களின் கொடுங்கதியை அறிந்து கொண்டும்,(42) ஓ! யுதிஷ்டிரா, கிளர்வூட்டும் சாராயத்தைப் பருகுவதில் அடிமையாக இருக்கும் தீய பிராமணர்கள், ஆசான்களின் மனைவியருடன் குற்றத்தொடர்புடன் இருப்பவர்கள்,(43) தாயை முறையாக மதிக்காதவர்கள், தேவர்களை முறையாக மதிக்காதவர்கள், அவர்களை வழிபடாதவர்கள் ஆகியோரின் கதியை அறிந்து கொண்டும்,(44) தீச்செயல்களைச் செய்வோரின் கதி மற்றும் இடைநிலை வகைகளில் {பறவை மற்றும் விலங்குகளாகப்} பிறப்பெடுத்தோரின் பல்வேறு முடிவுகளையும் (தங்கள் தத்துவம் கொடுக்கும்) அறிவின் உதவியால் புரிந்து கொண்டும்,(45) வேதங்களின் பல்வேறு தீர்மானங்கள், பருவகாலங்கள், மறையும் வருடங்கள், மாதங்கள்,(46) பிறை நாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றின் போக்குகளை உறுதி செய்து கொண்டும், சந்திரன் வளர்வதையும், தேய்வதையும் நேரடியாகக் கண்டும்,(47) பொங்கி அடங்கும் கடல்களையும், செல்வம் குறைந்து போவதையும், மீண்டும் அது பெருகுவதையும்,(48) ஒருங்கிணைந்த பொருட்களின் பிரிவையும், யுகங்களின் கழிவையும், மலைகளின் அழிவையும், ஆறுகள் காய்ந்து போவதையும்,(49) பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} (தூய்மை அடையும்) கேட்டையும், அந்தக் கேட்டுக்கும் மீண்டும் மீண்டும் நேரும் அழிவையும் கண்டும், பிறவி, முதுமை, மரணம், உயிரினங்களின் கவலைகள் ஆகியவற்றைக் கண்டும்,(50) உடல் தொடர்பான குறைகள், மனிதர்கள் அடையும் கவலைகள், உயிரினங்களின் உடல்கள் அடையும் மாற்றங்களையும் உண்மையாக அறிந்து கொண்டும்,(51) ஆன்மா தொடர்புடைய களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும், உடல்களைப் பற்றும் மங்கலமற்ற களங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டும் (சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறார்கள்) விடுதலை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(52)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அளவற்ற சக்தி கொண்டவரே, ஒருவனுடைய உடல் தொடர்பாக நீர் காணும் களங்கங்கள் யாவை? இந்த ஐயத்தை எனக்கு முழுமையாகவும், உண்மையாகவும் விளக்குவதே உமக்குத் தகும்” என்றான்.(53)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! எதிரிகளைக் கொல்பவனே, கேட்பாயாக. ஓ! பலமிக்கவனே, அனைத்துப் பாதைகளையும் அறிந்தவர்களும், ஞானத்துடன் கூடியவர்களுமான சாங்கியர்கள், அல்லது கபிலரைப் பின்பற்றுபவர்கள், மனித உடலில் ஐந்து களங்கங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.(54) அவை ஆசை, கோபம், அச்சம், உறக்கம் மற்றும் மூச்சு ஆகியவையே ஆகும்.(55) இந்த ஐந்து களங்கங்களும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் காணப்படுகின்றன. ஞானத்துடன் கூடியவர்கள், மன்னிக்கும் தன்மையின் துணையுடன் கோபத்தின் வேரை அறுக்கிறார்கள். அனைத்துக் காரியங்களையும் கைவிடுவதால் ஆசை அறுக்கப்படுகிறது.(56) நல்லியல்பின் (சத்வ) குணத்தை வளர்த்தெடுப்பதால் உறக்கம் வெல்லப்படுகிறது, விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதால் அச்சம் வெல்லப்படுகிறது. ஓ! மன்னா, எளிய உணவால் உயிர்மூச்சும் வெல்லப்படுகிறது.(57)

நூற்றுக்கணக்கான குணங்களின் துணையால் குணங்களையும், நூற்றுக்கணக்கான களங்கங்களால் களங்கங்களையும், நூற்றுக்கணக்கான காரணங்களால் பல்வேறு காரணங்களையும் உண்மையில் புரிந்து கொண்டு,(58) விஷ்ணுவின் நுற்றுக்கணக்கான மாயைகளால் மறைக்கப்பட்டதும், சித்திரங்கள் கொண்ட சுவற்றையும், நிலையற்ற நாணற்புல்லையும், நீரில் உள்ள நுரையையும் போன்றதே உலகம் என்பதை உறுதி செய்து கொண்டு,(59) இருள் நிறைந்த குழியாக (குழியினைப் போலப் பயங்கரமானதாக}, அல்லது (நித்திய தன்மையுடன் ஒப்பிடுகையில்) குறுகிய காலமே இருப்பதால் நீர்க்குமிழி போல உண்மையற்றதுமாக, உடனே அழியக்கூடியதாக, மகிழ்ச்சியற்றதாக, நிர்மூலத்தையே கதியாகக் கொண்டதாக, தப்பிக்கும் வழியே இல்லாததாக,(60) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் சகதியில் மூழ்கிய யானையைப் போல ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கியிருப்பதாக அதை {உலகத்தைக்} கண்டும், இவையாவற்றையும் குறித்துக் கொண்டும், ஓ! மன்னா, பெரும் ஞானம் கொண்ட சாங்கியர்கள், பிள்ளைகளிடம் கொண்ட உறவில் எழும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டு,(61) தங்கள் {சாங்கிய} அமைப்பு சொல்லும் அனைத்தையும் தழுவும் பரந்த அறிவின் துணையுடன், அந்த அறிவாயுதத்துடனும், தவங்களெனும் தண்டத்துடனும், ரஜஸ் குணத்தில் இருந்து பிறக்கும் மங்கலமற்ற அனைத்து மணங்களையும், தமஸ் குணத்தில் இருந்து எழும் இயல்பைக் கொண்ட மணங்கள் அனைத்தையும், சத்வ குணத்தில் இருந்து எழும் மங்கலமற்ற மணங்கள் அனைத்தையும், உடலில் பிரிக்க முடியாத வகையில் இருக்கும் அதே மூன்று குணங்களில் இருந்து பிறக்கும் தீண்டல் (மற்றும் பிற புலன்கள்) இன்பங்கள் அனைத்தையும் அறுத்து,(62,63) ஓ! பாரதா, வெற்றியால் மகுடம் சூடப்படும் இந்த யதிகள், உண்மையில் அறிவெனும் யோகத்தின் உதவியால் பிறவிப் பெருங்கடலைக் கடக்கிறார்கள்.

பயங்கரமான அந்தப் பெருங்கடல், துன்பத்தையே தன் நீராகக் கொண்டிருக்கிறது. கவலையும், துயரும் அதன் ஆழமான தடாகங்களாக இருக்கின்றன. நோயும் மரணமும் அதிலிருக்கும் பெரும் முதலைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு அடியிலும் இதயத்தைத் தாக்கும் பேரச்சங்கள் அதனில் இருக்கும் பெரும்பாம்புகளாகும்.(64) தமஸ் குணம் கொண்ட செயல்களே அதிலிருக்கும் ஆமைகளாகும். ரஜஸ் குணம் கொண்டவை அதன் மீன்களாகும். விவேகமே அதைக் கடக்கப் பயன்படும் தோணியாகும். புலன் நுகர்பொருட்களில் உள்ள பற்று அதிலுள்ள சகதியாகும். முதுமை துன்பம் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அறிவே அதனில் இருக்கும் தீவாகும். செயல்களே அதன் பேராழமாக அமைகிறது. உண்மையே அதன் கரைகளாக இருக்கின்றன. பக்தி நோன்புகள் அதன் பரப்பில் மிதக்கும் பச்சை பாசிகளாக இருக்கின்றன. பொறாமை அதிலுள்ள வலிமைமிக்கப் பெரும் நீரோட்டமாக இருக்கிறது. இதயத்தில் உள்ள பல்வேறு மிகையுணர்ச்சிகள் அதன் சுரங்கங்களாக இருக்கின்றன. பல்வேறு வகையான மனநிறைவுகள் அதன் மதிப்புமிக்க ரத்தினங்களாக இருக்கின்றன. துயரும், நோயும் அதிலுள்ள காற்றாக இருக்கிறது. அவலங்களும், தாகமும் வலிமைமிக்க அலைகளாக இருக்கின்றன. துன்பமிக்கவையும், மரணத்தை ஏற்படுத்தக்கூடியவையுமான நோய்கள் அதில் பெரும் யானைகளாக இருக்கின்றன. எலும்புக்கூட்டங்கள் அதன் படிக்கற்களாகவும், சளி அதன் நுரையாகவும் இருக்கின்றன. கொடைகள் அதன் முத்து வங்கியாக இருக்கின்றன. குருதித்தடாகங்கள் அதன் வைடூரியங்களாக இருக்கின்றன. உரத்த சிரிப்பு அதன் முழக்கமாக இருக்கிறது. பல்வேறு வகை அறிவியல்கள் {சாத்திரங்கள்} அதில் உள்ள கடக்கமுடியாத இடங்களாகும். கண்ணீர் அதன் உப்புநீராகும். தோழமை துறத்தல் (அதைக் கடப்பதற்க்காக முனைபவர்களுக்கு) பெரும் புகலிடமாக இருக்கிறது. பிள்ளைகளும், மனைவியரும் அதிலுள் உள்ள எண்ணிலடங்கா அட்டைப்பூச்சிகளாகும் {ஒட்டுண்ணிகளாகும்}. நண்பர்களும், உற்றாரும் அதன் கரைகளில் உள்ள பெருநகரங்களும், நகரங்களும் ஆகும். தீங்கிழையாமையும், வாய்மையும் அதன் எல்லைக் கோடுகளாகும். மரணம் அதன் புயலலை ஆகும். வேதாந்த அறிவு (நீரில் தூக்கி வீசப்படுபவர்களுக்குப் புகலிடம் அளிக்கவல்ல) அதிலுள்ள தீவாகும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையால் செய்யப்படும் செயல்கள் உயிர் காக்கும் மிதவைகளாக இருக்கின்றன. வணிகப் பொருட்களைத் தேடி நீரில் பயணிப்போருக்கு அழிக்கப்படும் விலைமதிப்பட்ட பொருளாக விடுதலை {முக்தி} இருக்கிறது. நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரைத் தலை கொண்ட அதன் தற்சார்பு முன்னோடியைப் போல இந்தப் பெருங்கடலும் பயங்கரமான நெருப்புகளைக் கொண்டிருக்கிறது. பருவுடலில் வசிக்கும் சாங்கியர்கள், கடப்பதற்கு அரியவையான அந்தக் கடப்பாடுகளைக் கடந்து, தூய வெளிக்குள் நுழைகிறார்கள்.(65-72)

அப்போது சூரியன், சாங்கிய கோட்பாடுகளைப் பயிலும் அந்த அறவோரைத் தன் கதிர்களால் சுமக்கிறான். தாமரைத் தண்டில் உள்ள இழைகள், தாங்கள் உறிஞ்சும் நீர் அனைத்தையும் மலருக்குக் கொடுப்பதைப்போல, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பருகும் சூரியன், அவற்றை ஞானிகளான அந்த நல்லோருக்குக் கொடுக்கிறான்.(73) ஓ! பாரதா, சக்தியும், தவங்களெனும் செல்வத்தையும் கொண்ட இந்த யதிகள், தங்கள் பற்றுகள் அனைத்தையும் அழித்து, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, நுட்பமானதும், குளுமையானதும், நறுமணமிக்கதும், தீண்டுதற்கினியதுமான தென்றலால் சுமக்கப்படுகிறார்கள்.(74) உண்மையில், ஓ! குந்தியின் மகனே, பேரின்ப உலகங்களில் வீசிக்கொண்டிருக்கும் ஏழு காற்றுகளில் சிறந்த காற்றானது வெளியில் {ஆகாயத்தில்} உள்ள உயர்ந்த கதியை அவர்களுக்கு அளிக்கிறது.(75) பிறகு அவர்கள் கொண்டு சேர்க்கப்படும் வெளியானது, அவர்களுக்கு ரஜஸ் குணத்தின் உயர்ந்த கதியை அளிக்கிறது.(76) பிறகு ரஜஸ் குணமானது அவர்களைச் சத்வத்தின் உயர்ந்த கதிக்குச் சுமந்து செல்கிறது. பிறகு, ஓ! தூய ஆன்மாவே, அந்தச் சத்வ குணமானது, அவர்களைப் பலமிக்கப் பரமன் நாராயணனிடம் கொண்டு செல்கிறது.(77) பலமிக்கவனும், தூய ஆன்மாகக் கொண்டவனுமான நாராயணன் இறுதியாக அவனைப் பரமாத்மாவிடம் சுமந்து செல்கிறான். ஓ! மன்னா, பரமாத்மாவை அடையும் அந்தக் களங்கமற்ற மனிதர்கள், அஃது (என்றழைக்கப்படும் அதன் {பிரம்மத்தின்}) உடலாகி, அழிவின்மையை அடைந்து, மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறார்கள். ஓ! பிருதையின் மகனே, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்தையும் கடந்த உயர் ஆன்மா மனிதர்களால் அடையப்படும் உயர்ந்த கதி அதுவே” என்றார் {பீஷ்மர்}.(79)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாவமற்றவரே, உறுதியான நோன்புகளைக் கொண்ட அந்த மனிதர்கள் பலமும், இன்பமும் நிறைந்த அந்தச் சிறந்த நிலையை அடைந்த பிறகு, அவர்களுடைய முற்பிறவிகளில் நேர்ந்த பிறப்பு மற்றும் மரணம் உள்ளிட்டவற்றை நினைவுகூர்வார்களா?(80) இந்தக் கேள்விக்கான உண்மையை முறையாக எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! குரு குலத்தவரே, உம்மைத் தவிர வேறு எவரிடமும் இதைக் கேட்பது முறை என்று நான் நினைக்கவில்லை.(81) விடுதலையை {முக்தியைச்} சொல்லும் சாத்திரங்களைக் கண்டதில், (விடுதலை {முக்தி} நிலையை அடைந்ததும் நனவு நிலை மறைந்து விடும் எனச் சில சாத்திரங்கள் சொல்கின்றன, அதே வேளையில் இதற்கு நேரெதினாதை சில சாத்திரங்கள் அறிவிக்கின்றன என்பதால்) இந்தப் பெரும் குறையை நான் காண்கிறேன். உயர்ந்த கதியை அடைந்த பிறகு, அந்த யதிகள் நனவுநிலையோடு தொடர்ந்து வாழ்ந்தால்,(82) ஓ மன்னா, பிருவிருத்தியின் அறமே உயர்ந்ததாகக் காணப்படும். மேலும், விடுதலை {முக்தி} நிலையில் நனவுநிலை மறைந்துபோகும் என்றால், அந்த முக்தியை அடைந்த மனிதன், கனவற்ற உறக்கத்தில் மூழ்கியவரே ஆவார். (கனவற்ற உறக்க நிலையில் ஒருவனுடைய நனவுநிலையானது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதேயன்றி ஒருபோதும் தொலைந்துபோவதில்லை. அந்த உறக்கத்தில் இருந்து அவன் விழிப்படைந்தால் மீண்டும் அது திரும்பிவிடும் என்றால்) முக்தி நிலையில் நனவுநிலை இல்லையென்று சொல்வதைவிட முறையற்ற வேறு எதுவும் இருக்க முடியாது” என்றான் {யுதிஷ்டிரன்}.(83)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே,பதிலளிக்க எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீ கேட்ட கேள்வி முறையானதே. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பெரும் கல்விமான்களே மலைப்படையும் வகையில் இந்தக் கேள்வி இருக்கிறது.(84) நான் விளக்கிச் சொல்லப்போகும் உண்மையைக் கேட்பாயாக. கபிலரைப் பின்பற்றும் உயர் ஆன்மாக்கள் {சாங்கியர்கள்}, இந்தக் காரியத்தில் தங்கள் உயர்ந்த புத்தியை நிறுவியிருக்கிறார்கள்.(85) ஓ! மன்னா, உடல் படைத்த உயிரினங்களில் நடப்பட்டிருக்கும் {நிறுவப்பட்டிருக்கும்} அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்}, தங்கள் தங்களுக்குரிய உணர்வுச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றின் மூலமே நுட்பமானவன் {ஆன்மா} உண்டாகிறதென்பதால் அவை ஆன்மாவின் கருவிகளாக இருக்கின்றன.(86) ஆன்மாவோடு கலக்காத புலன்கள், மரக்குவியல்களைப் போன்றனவாகும். மேலும் அவை பெருங்கடலின் பரப்பில் காணப்படும் நுரையைப் போல (தாங்கள் தொண்டாற்றும் செயல்பாடுகளில்) அழிவையே அடையும்.(87) ஓ!எதிரிகளை எரிப்பவனே, உடல் கொண்ட உயிரினமானது, தன் புலன்களுடன் உறக்கத்தில் மூழ்கும்போது, நுட்பமான ஆத்மாவானது, வெளியில் உலவும் காற்றைப் போல அனைத்துப் பொருட்களின் மத்தியிலும் திரிகிறது.(88) ஓ! மன்னா, உறக்கத்தில், நுட்பமான ஆத்மாவானது, விழிப்பில் இருப்பது போலவே, (அனைத்து வடிவங்களைக்) காணவும், தீண்டலுக்குரிய பொருட்கள் அனைத்தையும் தொடவும், பிற உணர்வுகளைப் பெறவும் செய்கிறது.(89) செயல்படுபவர் இல்லாமல் செயல்பட முடியாத விளைவால், உறக்கத்தின் போது புலன்கள் அனைத்தும் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் இல்லாமல் (தங்கள் சக்திகளை இழந்து) நஞ்சற்ற பாம்புகளைப் போல இருக்கின்றன.(90)

அத்தகைய வேளைகளில், நுட்பமான ஆத்மா, அனைத்துப் புலன்களுக்குமுரிய இடங்களுக்குச் சென்று, அவற்றின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.(91) ஓ! பாரதா, ஓ! யுதிஷ்டிரா, ஓ! பார்த்தா, சத்வத்தின் அனைத்து குணங்களும், புத்தியின், மனம், வெளி, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் குணங்களும், ஜீவ ஆத்மாக்கள் கொண்ட இந்தக் குணங்கள் அனைத்துடன் கூடிய புலன்களும், அதனுடன் கூடிய ஜீவ ஆத்மாவும் பரமாத்மா அல்லது பிரம்மத்தால் மூழ்கடிக்கப்படுகிறது {வெற்றி கொள்ளப்படுகிறது}. நல்ல மற்றும் தீய செயல்களும் அந்த ஜீவ ஆத்மாவை மூழ்கடிக்கிறது. தங்கள் ஆசானுக்காக மதிப்புடன் காத்திருக்கும் சீடர்களைப் போலப் புலன்களும் ஜீவாத்மாவிடம் காத்திருக்கின்றன.(94,95)

ஜீவாத்மா பிரக்ருதியைக் கடக்கும்போது, மாற்றமில்லாத பிரம்மமும், இரட்டைகள் அனைத்தையும் கடந்த உயர்ந்தவனும், பிரகிருதியைக் கடந்தவனுமான நாராயணனை அடைகிறது.(96) ஓ! பாரதா, ஜீவாத்மாவானது, தகுதி மற்றும் தகுதியின்மை ஆகிய இரண்டையும் கடந்து, குணங்கள் எதுவும் இல்லாததும், மங்கலங்கள் அனைத்தின் இல்லமுமான பரமாத்மாவுக்குள் நுழைந்து மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறது.(97) இவை பேராசானின் கட்டளைகளைச் செய்யக் குறிப்பிட்ட காலங்களில் மீண்டும் வர வேண்டியிருக்கிறது.(98) ஓ! குந்தியின் மகனே, (இந்த உடல் கைவிடப்பட்ட) உடனே விடுதலைக்கு முனைந்தவனும், ஞானத்துடன் கூடியவனும், குணமுடன் இருப்பதால் ஆசையுள்ளவனுமான யதி, உடலற்றவன் அடையும் விடுதலை {முக்தி} எனும் அமைதியை அடைவதில் வெல்கிறான்.(99) ஓ! மன்னா, சாங்கியர்கள் பெரும் ஞானத்தைக் கொண்டவர்கள் ஆவர். இவ்வகை ஞானத்தின் மூலமே அவர்கள் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள். இதற்கிணையான ஞானம் வேறில்லை.(100)

எவ்வகை ஐயத்திற்கும் வசப்படாதே. சாங்கிய அமைப்பில் விளக்கப்பட்டிருக்கு ஞானமானது உயர்ந்ததெனக் கருதப்படுகிறது. அந்த அறிவு அனைத்தையும் அறிந்த நிலையும், நித்தியமாக நிலைத்திருக்கும் நிலையுமாகும். அதுவே முழுமையான நித்திய பிரம்ம நிலையாகும்.(101) அதற்குத் தொடக்கமோ, நடுநிலையோ, முடிவோ கிடையாது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்த நிலையாகும். அண்டத்தின் படைப்புக்கு அதுவே காரணமாகும். அது முழுமையாக இருக்கிறது. எவ்வகைச் சிதைவுமில்லாததாக இருக்கிறது. சீரானதாகவும், எப்போதும் இருப்பதாகவும் அஃது இருக்கிறது. இவ்வாறு அதன் புகழ் ஞானிகளால் பாடப்படுகிறது.(102) அதனிலிருந்தே, படைப்பும், அழிவும், அனைத்து சீர்திருத்தங்களும் வருகின்றன. பெரும் முனிவர்கள் அதைக் குறித்துப் பேசுகின்றனர், சாத்திரங்களில் மெச்சுகின்றனர்.(103) கல்விமான்களான பிராமணர்கள் அனைவரும், அறவோர் அனைவரும் அதை {அந்நிலையை} பிரம்மம், பரநிலை, தெய்வீக நிலை, முடிவற்ற நிலை, அனைத்தையும் அறிந்த நிலை, சிதைவற்ற நிலை என்று கருதுகிறார்கள்.(104) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட பிராமணர்கள் அனைவரும், மாயைக்குரிய குணங்களோடு அதைத் தொடர்புப்படுத்தித் துதித்துப் புகழ்கின்றனர். தவங்களையும், தியானங்களையும் நன்றாக நோற்கும் யோகிகள் மற்றும் அளவற்ற உள்பார்வை கொண்ட சாங்கியர்கள் ஆகியோரின் பார்வைகள் ஒன்றே.(105) ஓ! குந்தியின் மகனே, சாங்கிய தத்துவத்தின் வடிவமே, வடிவமற்றவனின் வடிவம் என ஸ்ருதிகள் அறிவிக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, (அந்தத் தத்துவத்தின்படியான) அறிதல் நிலைகள் பிரம்ம அறிவே என்றே சொல்லப்பட்டுள்ளது.(106)

ஓ! பூமியின் தலைவா, அசைவன, அசைவற்றன எனப் பூமியில் இருவகை உயிரினங்கள் இருக்கின்றன. இவற்றில் அசைவனவே மேன்மையானவை.(107) ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி பிரம்மத்தை அறிந்தவர்களில் இருப்பதும், வேதங்களில் நேர்வதும், பிற சாத்திரங்களில் காணப்படுவதும், யோகத்தில் உள்ளதும் பல்வேறு புராணங்களில் காணப்படுவதுமான அந்த உயர்ந்த ஞானங்கள் அனைத்தும், சாங்கிய தத்துவத்தில் காணப்படுகின்றன.(108) உயர்ந்த வரலாறுகளில் காணப்படும் ஞானம் எதுவும், ஓ! மன்னா, ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட செல்வமீட்டல் தொடர்புடைய அறிவியல்களில் வரும் ஞானம் எதுவும், இவ்வுலகில் இருக்கும் ஞானம் எதுவும், சாங்கியர்களின் உயர்ந்த ஞானத்தில் இருந்து வந்தவையே ஆகும்.(109) ஓ! மன்னா, ஆன்ம அமைதி, உயர்ந்த பலம், சாத்திரங்கள் சொல்லும் நுட்பமான அறிவுகள் அனைத்தும், நுட்பமான சக்தியைக் கொண்ட தவங்களும், அனைத்து வகை இன்பநிலைகளும் என அனைத்தும், சாங்கிய அமைப்பில் முறையாக விதிக்கப்பட்டிருக்கின்றன.(110)

ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரனே}, தங்கள் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் அந்த முழுமையான அறிவை அடையத் தவறும் சாங்கியர்கள், தேவர்களின் நிலையை அடைந்து பல காலங்களை இன்ப நிலைகளில் கடத்துகின்றனர். தேவர்களாகத் தங்கள் விருப்பப்படித் தலைமை செலுத்திய பிறகு ஒதுக்கப்பட்ட காலம் தீர்ந்ததும் அவர்கள் கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் யதிகளின் மத்தியில் விழுகிறார்கள்.(111) ஆகாயத்தில் நுழையும் தேவர்களைக் போலவே சாங்கிய அமைப்பைப் பின்பற்றும் மறுபிறப்பாளர்களும், துதிக்கத்தக்க தங்கள் அமைப்பில் மொத்தமாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, இந்த உடலைக் கைவிட்டு, ஞானிகள் அனைவராலும் வழிபடப்படும் உயர்ந்த நிலையான பிரம்ம நிலைக்குள் நுழைகிறார்கள்.(112) சாங்கிய அமைப்பால் பரிந்துரைக்கப்படும் அறிவை அடைய தங்களை அர்ப்பணிக்கும் மறுபிறப்பாளர்கள், தங்கள் உயர்நிலையை அடையத் தவறினாலும், இடைநிலை உயிரினங்களின் மத்தியிலோ, பாவிகளின் மத்தியில் வீழும் நிலைக்குத் தள்ளப்படுவது காணப்படுவதில்லை.(113) ஓ! மன்னா, பரந்ததும், உயர்ந்ததும், புராதனமானதும், பெருங்கடலைப் போன்றதும், அளவிடமுடியாததும், தூய்மையானதும், முற்போக்கானதும், ஏற்புடையதுமான சாங்கிய அமைப்பை முழுமையாக அறிந்த உயர் ஆன்மா கொண்டவன் நாராயணனுக்கு இணையானவன் ஆவான்.(114) ஓ! மனிதர்களில் தேவனே, சாங்கிய அமைப்பைக் குறித்த உண்மையை உனக்குச் சொல்லிவிட்டேன். அது பழங்காலத்தில் இருந்து அண்டத்தில் நீடித்திருக்கும் நாராயணனின் உடல்வடிவமாகும். படைப்புக்கான வேளைவரும்போது, அவனே படைப்பை உண்டாக்குகிறான், அழிவுக்கான வேளை வருகையில் அவனை அனைத்தையும் விழுங்குகிறான். அனைத்தையும் தன் உடலுக்குள் ஈர்த்துக் கொள்ளும்போது, அண்டத்தின் உள்ளான்மாவான அவன் உறங்கச் செல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(115)

வசிஷ்டர் கராளன்! – சாந்திபர்வம் பகுதி – 303-அழிவற்றது மற்றும் அழியக்கூடியவை குறித்து ஜனக குலத்தின் மன்னன் கராளனுக்கும், பெருமுனிவர் வசிஷ்டருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எது சிதைவற்றது என்று அழைக்கப்படுகிறதோ, எதை அடைவதன் மூலம் எவரும் திரும்பி வர வேண்டிய அவசியமில்லையோ, அஃது என்ன? மேலும் எது சிதைவுள்ளது என்று அழைக்கப்படுகிறதோ, எதை அடைவதன் மூலம் ஒருவன் மீண்டும் திரும்ப வேண்டி வருமோ, அஃது என்ன?(1) ஓ! எதிரிகளைக் கொல்பவரே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, சிதைவுள்ளது, சிதைவற்றது ஆகிய இரண்டையும் உண்மையில் புரிந்து கொள்வதற்காக அவற்றுக்கிடையில் உள்ள வேற்றுமையை நான் உம்மிடம் கேட்கிறேன்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் உம்மை ஞானப் பெருங்கடல் எனச் சொல்கிறார்கள். உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட யதிகளும் அதையே சொல்கிறார்கள்.(3) நீர் வாழ இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சூரியன் தனது தென்பாதையில் இருந்து வடபாதைக்குத் திரும்பும்போது நீர் உயர்ந்த கதியை அடைவீர்.(4) நீங்கள் எங்களை விட்டுச் சென்றுவிட்டால், நாங்கள் எங்களுக்கான நன்மைகள் அனைத்தையும் யாரிடம் இருந்து கேட்போம்? நீரே குரு குலத்தின் விளக்காவீர். உண்மையில், நீர் ஞான ஒளியால் சுடர்விடுகிறீர்.(5) எனவே, ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நான் இவை யாவற்றையும் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். அமுதம் போல எப்போதும் இனிமையாக இருக்கும் உமது உரைகளைக் கேட்கும் ஆவல் தணிவடையாமல் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் வசிஷ்டருக்கும், ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னன் கராளனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஒரு காலத்தில் முனிவர்களில் முதன்மையானவரும், சூரியப்பிரகாசம் கொண்டவருமான வசிஷ்டர் சுகமாக அமர்ந்திருந்தபோது, மன்னன் ஜனகன் {கராளன்} அவரிடம் நமது பரமநன்மைக்கான {மோட்சத்துக்கான} உயர்ந்த ஞானத்தைக் குறித்துக் கேட்டான்.(8) ஆன்மா குறித்த அறிவுத்துறையில் உயர்ந்த திறனைக் கொண்டவரும், அந்த அறிவியலின் அனைத்துக் கிளைகளிலும் குறிப்பிட்ட தீர்மானங்களைக் கொண்டவரும்,(9) முனிவர்களில் முதன்மையானவருமான மைத்ராவருணி {வசிஷ்டர்} அமர்ந்திருந்தபோது, கூப்பிய கரங்களுடன் அவரை அணுகிய மன்னன் {கராளன்} அவரிடம் நன்கு உச்சரிக்கப்பட்ட, இனிமையான, சர்ச்சைக்குரிய நோக்கமேதும் இல்லாத, பணிவான வார்த்தைகள் மூலம் இந்தக் கேள்வியைக் கேட்டான்,(10) “ஓ! புனிதமானவரே, எதை அடைந்தால் ஞானிகள் மீண்டும் திரும்பி வர வேண்டியதில்லையோ, அந்தப் பரமநித்திய {உயர்ந்த அழிவற்ற} பிரம்மத்தைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்.(11) எது அழியத்தக்கது என்றழைக்கப்படுகிறது என்பதையும், இந்த அண்டம் அழிவடையும்போது, அஃது எதனுள் நுழைகிறது என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், அழிவற்றது, மங்கலமானது, நன்மையானது, அனைத்து வகைத் தீமையில் இருந்து விடுபட்டது என எது சொல்லப்படுகிறது?” என்று கேட்டான் {ஜனக குல மன்னன் கராளன்}.(12)

வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, இந்த அண்டம் எவ்வாறு அழிவடைகிறது என்பதையும், இதற்கு முன் எப்போதும் அழியாததும், இனி எந்தக் காலத்திலும் ஒருபோதும் அழிய முடியாததும் எது என்பதையும் கேட்பாயாக.(13) (தேவர்களுடைய அளவீடுகளின்படி) ஒரு யுகம் பனிரெண்டயிரம் {12,000} வருடங்களைக் கொண்டதாகும். அத்தகைய நான்கு யுகங்கள் ஆயிரம் முறை {12000 X 4 X 1000} நேர்வது ஒரு கல்பமாகும். அதுவே பிரம்மனுடைய ஒரு பகலின் அளவாகும்.(14) ஓ! மன்னா, பிரம்மனின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும். {அத்தகைய} பிரம்மனே அழிவடையும்போது, வடிவமற்ற ஆன்மாவைக் கொண்டவனும், அனிமா, லகிமா {ப்ராப்தி} முதலிய யோக குணங்களை இயற்கையிலேயே கொண்டவனுமான சம்பு விழிப்படைந்து, பெரும் அளவுகளைக் கொண்டவனும், முடிவிலா செயல்களைச் செய்பவனும், வடிவத்தோடு கூடியவனும், அண்டத்தைப் போன்றவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனை, அல்லது மூத்தவனை {ஹிரண்யகர்ப்பனை} மீண்டும் ஒருமுறை படைக்கிறான் {சம்பு ஹிரண்யகர்ப்பனைப் படைக்கிறான்}. அந்தச் சம்புவே வேறு வகையில் ஈசானன் (அனைத்தின் தலைவன்) என்று அழைக்கப்படுகிறான். அவன் தூய்மையானவனாகவும், பிரகாசமிக்கவனாகவும், சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனாகவும்,(15,16) அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிந்த கரங்களும் கால்களும் கொண்டவனாகவும், எங்கும் கண்களையும், தலையையும், வாயையும், காதுகளையும் கொண்டவனாகவும் இருக்கிறான்.(17)

{அப்படி படைக்கப்படும்} மூத்த பிறவி ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படுகிறான். (வேதாந்தத்தில்) இந்தப் புனிதமானவன் புத்தி என்றழைக்கப்படுகிறான். யோக சாத்திரங்களில் அவன் பெரியவன் {மஹத்}, விரிஞ்சி, பிறப்பில்லாதவன் என்று அழைக்கப்படுகிறான்.(18) சாங்கிய சாத்திரங்களில் முடிவின்மையையே தன் ஆன்மாவாகக் கொண்டவனாகக் கருதப்படும் அவன், பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறான். பல்வேறு வடிவங்களிலும், அண்டத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் அவன், ஒருவனாகவும் {ஓரக்ஷரமாகவும்}, அழிவற்றவனாகவும் கருதப்படுகிறான்.(19) முடிவிலா உட்பொருள்களைக் கொண்ட மூவுலகங்களும், எந்த மூலத்தின் துணையும் இல்லாமல் அவனால் படைக்கப்பட்டு, அவனாலேயே மூழ்கடிக்கப்படுகின்றன. அவனுடைய பலவகை வடிவங்களின் விளைவால் அவன் அண்ட வடிவத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(20) பல மாற்றங்களை ஏற்படுத்தித் தன்னைத் தானே அவன் படைத்துக் கொள்கிறான். வலிமையும், சக்தியும் கொண்ட அவன், முதலில் நனவுநிலையையும் {அஹங்காரத்தையும்}, நனவுநிலையுடன் கூடிய பிரஜாபதி என்றழைக்கப்படும் பெரும்பூதத்தையும் {அஹங்கார்ரத்தைச் செய்கின்ற விராட்டையும்} படைக்கிறான்.(21) புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்தே புலப்படுபவன் (அல்லது ஹிரண்யகர்ப்பன்) படைக்கப்பட்டான். இதுவே கல்விமான்களால் ஞானப்படைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஹிரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட மஹான் (அல்லது விராட்) மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} அறியாமையின் படைப்பாகும்[1].(22)

ஸ்ருதிகளை விளக்கும் கல்விமான்களால் அறியாமை மற்றும் ஞானம் {அறிவு} என்ற பெயர்களால் அழைக்கப்படும் (வழிபடத்தகுந்த) குணங்களின் துதி {வித்தை}, அதன்மூலம் நிகழும் அழிவு {அவித்தை}ஆகியவை இஃது, அஃது, அல்லது மூன்றில் உள்ள வேறொன்றை (அக்ஷரம்{1}, ஹிரண்யகர்ப்பன்{2}, அல்லது விராட் என்பனவற்றைக்) குறிப்பிடும் வகையில் எழுகின்றன[2].(23) ஓ! மன்னா, நனவுநிலையில் {அகங்காரத்தில்} இருந்து மூன்றாவதாக (நுட்பமான) பூதங்கள்{3} {ஸூக்ஷ்ம பூதங்கள்} படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக[3]. மூன்றாவதின் {பூதங்களின்} மாறுபாடுகளில் இருந்து நான்காவது படைப்பாக நனவுநிலையின் அனைத்து வகைகளும் {திரள் பூதங்களும் / ஸ்தூலபூதங்களும்} உண்டாகின[4].(24) இந்த நான்காவது படைப்பில் காற்று {வாயு}, ஒளி, வெளி {ஆகாயம்}, நீர், பூமி {நிலம்} ஆகியவையும், அவற்றின் குணங்களான ஒலி, ஊறு, வடிவம், சுவை மற்றும் மணமும்{13} அடங்கியிருக்கின்றன.(25) இந்தப் பத்தும் ஒரே வேளையில் உண்டாகின என்பதில் ஐயமில்லை. ஓ! ஏகாதிபதி, (மேலே குறிப்பிடப்பட்ட) மூல பூதங்களின் கலவையில் இருந்து எழுந்தவையே ஐந்தாவது படைப்பாகின.(26) இதில் {இந்த ஐந்தாம் படைப்பில்}, காது {சுரோத்திரம்}, தோல் {தவக்கு}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, ஐந்தாவதாக மூக்கு {கிராணம்}, வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் பிறப்புறுப்பு ஆகியன உள்ளடங்கும்.(27) இவற்றில் முதல் ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், இறுதி ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அமைகின்றன{23}. ஓ! மன்னா, மனத்துடன்{24} கூடிய இவையாவும் அடுத்தடுத்து எழுந்தன.(28) இவையே உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களிலும் உள்ள இருபத்துநான்கு காரியங்களாகின்றன {தத்துவங்களாகின்றன}. இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் வாய்மையின் உட்பார்வை கொண்ட பிராமணர்கள் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை.(29)உடல் என்றழைக்கப்படும் இவற்றின் கலவையையே மூவுலகங்களிலும் உள்ள உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தும் கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! மன்னா, அவற்றின் கலவைகளே தேவர்கள், மனிதர்கள், தானவர்கள்,(30) யக்ஷர்கள், பூதங்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், பெரும்நாகர்கள், சாரணர்கள், பிசாசங்கள்,(31) தெய்வீக முனிவர்கள், ராட்சசர்கள், கடிக்கும் வண்டுகள், புழுக்கள், கொசுக்கள், கழிவில் பிறக்கும் புழுக்கள், எலிகள், நாய்கள், சுவாபாகர்கள் {நாயை உண்ணும் புலையர்கள்}, சைநேயங்கள் {மான்களை உண்ணும் நீசர்கள்}, சண்டாளர்கள், புல்கசர்கள்,(32) யானைகள், குதிரைகள், கழுதைகள், புலிகள், மரங்கள், பசுக்கள் ஆகியவையாக அறியப்படுகின்றன. நீர், ஆகாயம், பூமி ஆகியவற்றைத் தவிர வேறு எதனிலும் உயிரினங்கள் இருப்பதாக நாம் கேள்விப்படாததால் இவற்றில் உள்ள எந்த உயிரினமும் இந்தக் கலவையையே கொண்டிருக்கின்றன.(33,34) ஓ! ஐயா, புலப்படுவது {வடிவமாக இருப்பவை} என்றழைக்கப்படும் வர்க்கத்தில் சேர்க்கப்படும் இவை அனைத்தும் நாளுக்கு நாள் அழிவடைவது காணப்படுகிறது. எனவே, இந்த இருபத்துநான்கின் கலவையால் உண்டான அனைத்து உயிரினங்களும் அழியத்தக்கன {சிதைவுள்ளவை} என்று சொல்லப்படுகின்றன.(35)

இதுதான் அழிவில்லாதது. புலப்படுவவை, புலப்படாதவை ஆகியவற்றால் உண்டான இந்த அண்டம் அழிவடைவதால் அஃது அழியத்தக்கது என்று சொல்லப்படுகிறது.(36) மூத்த பிறப்பான மஹான் என்றழைக்கப்படும் பூதமே அழியக்கத்தக்கது என்று எப்போதும் சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, நீ என்னிடம் கேட்ட அனைத்தையும் உனக்குச் இப்போது சொல்லிவிட்டேன்.(37) ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருபத்துநாலையும் கடந்து இருப்பத்தைந்தாக இருப்பவன் விஷ்ணு என்றழைக்கப்படுகிறான். அனைத்துக் காரியங்களிலும் படர்ந்தூடுருவி இருந்தாலும் (ஞான) காரியமாக இல்லாத அந்த விஷ்ணு, அனைத்து குணங்களும் அற்றிருக்கும் விளைவால் ஞானிகளால் அவ்வாறு அழைக்கப்படுகிறான்.(38) அழியத்தக்கவை புலப்படுபவை அனைத்தையும் உண்டாக்குவதால் இவை அனைத்தும் வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. இருபத்துநாலாவதான பிரகிருதியே (தன் மாறுதல்களின் மூலம் எழுந்த) இவை அனைத்திற்கும் தலைமை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது. இருபத்தைந்தாவதான விஷ்ணு வடிவமற்றவனாக இருப்பதால் அண்டத்திற்குத் தலைமை தாங்குவதாகச் சொல்ல முடியாது[5].(39) புலப்படாதது {பிரகிருதி}, (சித்-உடன் கலப்பதன் விளைவால் உண்டாகும்) உடல் கொள்ளும்போது, உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிக்கிறது. நித்தியமான சேதனத்தை (அழிவற்றவனைப்) பொறுத்தவரையில் அவன் குணங்களும் வடிவமும் அற்றவனாக இருந்தபோதிலும் (பிரகிருதியுடன் கலப்பதன்ன் விளைவால்) அனைத்து வடிவங்களையும் ஏற்கிறான்.(40) பிறப்பு இறப்பு என்ற குணங்களைக் கொண்ட பிரகிருதியுடன் கலக்கும் அவனும், பிறப்பிறப்பின் குணங்களை ஏற்கிறான். உண்மையில் அவன் குணங்களேதும் அற்றவனாக இருப்பினும், அத்தகைய கலவையின் விளைவால் அவன் உணரப்படும் பொருளாகிறான்.(41) இவ்வழியிலேயே மகத்-ஆன்மா (ஹிரண்யகர்ப்பன்), பிரகிருதியுடன் கலந்து, அறியாமையைக் கொண்டு, மாற்றங்களை அடைந்து தன்னுணர்வைப் பெறுகிறான்[6].(42)சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களுடன் கலக்கும் அவன், மறதியாலும், அறியாமையின் விளைவாலும் பல்வேறு வகைகளைச் சார்ந்த பல்வேறு உயிரினங்களாக அடையாளம் காணப்படுகிறான்.(43) பிரகிருதியுடன் கலந்து வசிப்பதால் எழும் அவனது பிறப்பு மற்றும் அழிவின் விளைவால், உண்மையில் அவன் யாரோ, அவனாகவே தன்னை நினைக்கிறான். இஃது, அல்லது அதுவாகத் தன்னைக் கருதும் அவன், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைப் பின்பற்றுகிறான்.(44) தமஸின் ஆதிக்கத்தில் அவன் தமஸால் பீடிக்கப்படும் பல்வேறு வகை நிலைகளை அடைகிறான். ரஜஸ் மற்றும் சத்வத்தின் ஆதிக்கத்தால் அவன் அதே போன்று ரஜஸ் மற்றும் சத்வத்தால் பாதிக்கப்பட்ட நிலைகளை அடைகிறான்.(45) இவை வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களாகும். அந்த நிறங்கள் அனைத்தும் பிரகிருதியின் தொடர்புடையவையாக இருக்கின்றன (வெள்ளையாக, சிவப்பாக அல்லது கருப்பாக இருப்பவன் அவனோடு தொடர்புடைய பிரகிருதியின் இயல்பின்படி காலத்திற்கேற்ற நிறத்தை அடைகிறான்).(46) தமஸ் குணத்தால் ஒருவன் நரகத்திற்குச் செல்கிறான். ரஜஸால் மானிட நிலையை அடைகிறான் (அல்லது தக்க வைத்துக் கொள்கிறான்). சத்வத்தின் மூலம் மக்கள் தேவர்களின் உலகங்களுக்கு உயர்ந்து, பேரின்ப நிலையின் பங்குதாரர்கள் ஆகின்றனர்.(47) தொடர்ந்து பாவச்செயல்களைச் செய்வதால் ஒருவன் இடைநிலை வகைகளில் {பறவை மற்றும் விலங்கு பிறப்பை அடைந்து} மூழ்குகிறான். அறம் சார்ந்து செயல்படுவதால் மட்டுமே ஒருவன் தேவர்களின் நிலையை அடைகிறான்.(48) இவ்வழியில், இருபத்தைந்தாவது காரியமான அக்ஷரம் (அழிவற்றது) புலப்படாததுடன் (பிரகிருதியுடன்) கலப்பதன் மூலம், க்ஷரமாக (அழிவுள்ளதாக) மாறுகிறது என ஞானியர் சொல்கின்றனர். எனினும், ஞான வழிமுறைகளின் மூலம் அழிவற்றவனானவன், தன் உண்மை இயல்பை வெளிப்படுத்துகிறான்” என்றார் {வசிஷ்டர்}.(49)

ஆன்ம அறியாமை! – சாந்திபர்வம் பகுதி – 304-அறியாமையில் கட்டுண்டிருக்கும் ஆன்மாவைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {ஜனக மன்னன் கராளனிடம்}, “இவ்வாறு, ஆன்மாவானது தன் மறதியின் விளைவால் அறியாமையைப் பின்பற்றி, ஒன்றன்பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான உடல்களை {பிறவிகளை} அடைகிறது. ஆயிரக்கணக்கான பிறவிகளை இடைநிலை வகைகளின் மத்தியிலும், சில வேளைகளில் (குறிப்பிட்ட) குணங்களுடன் ஏற்படும் கலவையின் விளைவாலும், மற்றும் அந்தக் குணங்களின் பலத்தாலும் தேவர்களுக்கு மத்தியிலும் எடுக்கிறது. மனித நிலையில் இருந்து சொர்க்கத்திற்கும், சொர்க்கத்திலிருந்து மீண்டும் மனித நிலைக்கும், பிறகு மனித நிலையில் இருந்து பல நீண்ட வருடங்களுக்கு நரகிலும் மூழ்குகிறது.(3) கூடுகளைக் கட்டும் {பட்டுப்}புழுவானது, தன்னைச் சுற்றிலும் நூல்களைப் பரப்பி அனைத்துப் பக்கங்களிலும் முழுமையாகத் தன்னை மறைத்துக் கொள்வதைப் போலவே, ஆன்மாவும், உண்மையில் குணங்கள் அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், அனைத்துப் புறங்களிலும் குணங்களை நிறுவிக் கொள்கிறது (அவ்வாறு நிறுவி தன் சுதந்திரத்தை இழக்கிறது).(4)

(உண்மை இயல்பில்) இன்பதுன்பங்களைக் கடந்த நிலையில் இருந்தாலும், இவ்வாறே அது தன்னைத் தானே இன்பதுன்பங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறது. இவ்வாறே அது அனைத்து நோய்களையும் கடந்ததாக இருந்தாலும், தலைவலி, கண்வலி, பல்வலி, தொண்டைபாதிப்புகள், குடற்புண் {ஜலோதரம்}, அதிகத் தாகம், நொதி வீக்கம் {ஜ்வரகண்டம்}, வாந்திபேதி {விஷூசி}, தொழுநோய் {வெண்குஷ்டம்}, தீக்காயங்கள் {அக்னிதக்தம்}, இளைப்பு {காகம்}, காசநோய் {அபஸ்மாத்திரம்}, காக்காய்வலிப்பு {த்வந்துவம்} மற்றும் உடல்படைத்த உயிரினங்களின் உடல்களில் தோன்றும் பல்வேறு நோய்களாலும் தான் பீடிக்கப்படுவதாகக் கருதுகிறது.(5-7) ஆயிரக்கணக்கான இடைநிலை வகைகளிலும், சில வேளைகளில் தேவர்களுக்கு மத்தியிலும் பிறப்பதாகப் பிழையாகக் கருதும் அது துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, நற்செயல்களின் கனிகளை அனுபவிக்கிறது.(8)

அறியாமையைக் கொண்ட அது {ஆன்மா}, சிலவேளைகளில் தான் வெள்ளுடை அணிந்திருப்பதாகவும், சிலவேளைகளில் நான்கு துண்டுகளைக் கொண்ட முழு உடை அணிந்திருப்பதாகவும் கருதுகிறது, அல்லது (படுக்கையில் விரிப்புகளுக்கு மத்தியில் இல்லாமல்) தரையில் கிடப்பதாகவோ, தவளையைப் போன்ற குறுகிய கை கால்களைக் கொண்டிருப்பதாகவோ, தவசியின் தியான மனோநிலையில் நிமிர்ந்து அமர்ந்திருப்பதாகவோ, மரவுரி உடுத்தியிருப்பதாகவோ, வானத்தையே கூரையாகக் கொண்டு அமர்ந்திருப்பதாகவோ, கிடப்பதாகவோ, செங்கற்கள் மற்றும் கற்களால் கட்டப்பட்ட மாளிகைக்குள் இருப்பதாகவோ, கரடு முரடான கற்களில் இருப்பதாகவோ, சாம்பலில் இருப்பதாகவோ, வெறுங்கற்களில் இருப்பதாகவோ, வெறும் தரையில் இருப்பதாவோ, படுக்கையில் இருப்பதாகவோ, போர்க்களங்களில் இருப்பதாகவோ, நீரில் இருப்பதாகவோ, புழுதியில் இருப்பதாகவோ, பலகைகளில் இருப்பதாகவோ, கனியின் விருப்பத்தால் தூண்டப்பட்டுப் பல்வேறு வகைப் படுக்கைகளில் இருப்பதாகவோ, புல்லாலான சிறிய உடையை அணிந்திருப்பதாகவோ, மொத்தமாக நிர்வாணமாக இருப்பதாகவோ, பட்டு உடுத்தியிருப்பதாகவோ, கருப்பு மானின் தோலை அணிந்திருப்பதாகவோ, பட்டாடை உடுத்தியிருப்பதாகவோ, ஆட்டுத்தோல், அல்லது புலித்தோல், அல்லது சிங்கத் தோல் உடுத்தியிருப்பதாகவோ, சணலாலான ஆடை உடுத்தியிருப்பதாகவோ, பூச்சமரப்பட்டை அணிந்திருப்பதாகவோ, முட்செடிகளால் உண்டான ஆடைகளை அணிந்திருப்பதாகவோ, புழுக்கள் வெளியிடும் நூல்களில் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதாகவோ, கிழிந்த கந்தலுடை அணிந்திருப்பதாகவோ, குறிப்பிட முடியாத அளவுக்கு எண்ணற்ற பிறவகை ஆடைகளை உடுத்தியிருப்பதாகவோ {ஆத்மா} கருதிக் கொள்கிறது. ஆத்மாவானது, பல்வேறு வகை ஆபரணங்களையும், ரத்தினங்களையும் அணிந்திருப்பதாகவோ, பல்வேறு வகை உணவுகளை உண்பதாகவோ தன்னைக் கருதிக் கொள்கிறது.(9-15)

ஆத்மாவானது, ஓரிரவு இடைவெளிகளில் உண்பதாகவோ, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உண்பதாகவோ, ஒவ்வொரு நாளும் நான்கு, ஆறு மற்றும் எட்டாவது மணி நேரத்தில் உண்பதாகவோ,(16) அல்லது ஆறு, அல்லது ஏழு, எட்டு இரவுகளுக்கு ஒருமுறை உண்பதாகவோ, பத்து அல்லது பனிரெண்டு நாட்களுக்கு ஒருமுறை உண்பதாகவோ,(17) ஒரு மாதத்திற்கு ஒருமுறை உண்பதாகவோ, கிழங்குகளை மட்டும் உண்பதாகவோ, கனிகளை உண்பதாகவோ, காற்று அல்லது நீரை மட்டுமே உட்கொள்வதாகவோ, பிண்ணாக்கோ, தயிரோ, பசுஞ்சாணத்தையோ,(18) பசுவின் சிறுநீரையோ, கீரைகளையோ, மலர்களையோ, பாசிகளையோ, கஞ்சியோ,(19) மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள், அல்லது தரையில் சிதறிக் கிடக்கும் கனிகளையோ, பல்வேறு உணவுகளையோ (தவ வெற்றியை அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு உண்பதாகவோ கருதுகிறது.(20)

ஆத்மாவானது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் பதி சாந்திராயன நோன்பைப் பின்பற்றுவதாகவோ, நான்கு வாழ்வுமுறைகளில் பரிந்துரைக்கப்படும் பல்வேறு நோன்புகள், வழிமுறைகள் மற்றும் கடமைகளையும் பின்பற்றுவதாகவோ,(21) நான்கு முக்கிய வகையில் சேர்க்கப்பட்ட துணை வாழ்வுமுறைகளின் கடமைகளைப் பின்பற்றுவதாகவோ, தீயோரையும், பாவிகளையும் தனித்துக் காட்டும் பல்வேறு வகைப் பயிற்சிகளைப் பின்பற்றுவதாகவோ தன்னைக் கருதிக் கொள்கிறது. ஆன்மாவானது ஓய்விடங்களை அனுபவிப்பதாகவும், மலைகளின் இனிமைநிறைந்த நிழல்களையும், ஊற்றுகள் மற்றும் நீரோடைகளின் அருகில் குளுமையையும்,(22) தனிமையான ஆற்றங்கரைகள், தனிமையான காட்டுப்பகுதிகள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்களுக்கு மத்தியில இருந்து விலகி தேவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனிதத்தலங்கள், தடாகங்கள், நீர்நிலைகள்,(23) இல்லங்களும், மாளிகைகளும் உள்ள அளவுக்கான தனிமையான மலைக்குகைகள் ஆகியவற்றில் தங்கி அனுபவிப்பதாகவும் கருதிக் கொள்கிறது. ஆன்மாவானது, பல்வேறு வகை மறைமந்திரங்களை உரைப்பதாகவும், பல்வேறு வகை நோன்புகளை நோற்பதாகவும், விதிகள், பல்வேறு வகைத் தவங்கள், பல்வேறு வகை வேள்விகள் மற்றும் பல்வேறு வகைச் சடங்குகளைச் செய்வதில் ஈடுபடுவதாகவும் கருதிக் கொள்கிறது.(25)

ஆன்மாவானது, சிலவேளைகளில் வணிகர்கள், வியாபாரிகளின் வழிகளைப் பின்பற்றுவதாகவும், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், இல்லாதோர், குருடர் மற்றும் ஆதரவற்றோருக்கு பல்வேறு வகைக் கொடைகளை அளிப்பதாகவும் கருதிக் கொள்கிறது.(26) ஆன்மாவானது, அறியாமையுடன் இருப்பதன் விளைவால் சத்வம், ரஜஸ், தமஸ், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பல்வேறு குணகளைப் பின்பற்றுகிறது.(27) ஆன்மாவானது, பிரகிருதியின் ஆதிக்கத்தால் மாறுபாடுகளுக்கு உட்பட்டு, இவையாவற்றையும், நோற்று, பின்பற்றி, பயின்று தன்னை அவ்வாறே கருதிக் கொள்கிறது. உண்மையில் ஆன்மாவானது புனித மந்திரங்களான ஸ்வாஹா, ஸ்வதா, வஷத் ஆகியவற்றைச் சொல்வதில் ஈடுபடுவதாகவும், பெரியோராகத் தான் கருதுவோரை வணங்குவதாகவும்;(28) பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பதாகவும், சீடர்களுக்குப் போதிப்பதாகவும், கொடை அளிப்பதாகவும், அவற்றை ஏற்பதாகவும், வேள்விகளைச் செய்வதாகவும், சாத்திரங்களைக் கற்பதாகவும், இவ்வகையிலான செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்வதாகவும் கருதிக் கொள்கிறது.(29) ஆன்மாவானது, பிறப்பு, இறப்பு, சச்சரவுகள் மற்றும் கொலை ஆகியவற்றில் தொடர்புடையதாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. இவை யாவும் நல்லோர் மற்றும் தீயோரின் செயற்பாதைகளாக அமைகின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள்.(30)

பிரகிருதி தேவியே பிறப்பையும், மரணத்தையும் உண்டாக்குகிறாள். அண்டப் பேரழிவுக்கான காலம் நேரும்போது, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களும் குணங்களும், மாலை வேளையில் தன் கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சூரியனைப் போலத் தனியாக இருக்கும் பரமாத்மாவிற்குள் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன;(31) படைப்புக்கான காலம் நேரும்போது, காலை வேளையில் கதிரைப் பொழியும் சூரியனைப் போல அது {பரமாத்மா} மீண்டும் அவற்றைப் படைத்துப் பரவச் செய்கிறது. இவ்வாறே ஆன்மாவானது, எண்ணிக்கையில் முடிவிலாதவையும், தனக்கு ஏற்புடையவையுமான தன் வடிவங்களும், குணங்களுமான இந்த வரம்புகள் அனைத்தையும் கொண்டதாக விளையாட்டாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. இவ்வழியிலேயே ஆன்மாவானது, உண்மையில் முக்குணங்களைக் கடந்ததாக இருந்தாலும், செயற்பாதைகளில் தன்னை இணைத்துக் கொண்டு, மாறுதல்களின் மூலம் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களின் தன்மைகளைக் கொண்ட வரம்புகள் மற்றும் செயல்கள் அனைத்துடன் கூடிய பிறப்பு, இறப்பு என்ற குணங்களைக் கொள்கிறது. ஆன்மாவானது செயற்பாதைக்கு வந்ததும், குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட தன்மைகளையும், குறிப்பிட்ட கதிகளை உண்டாக்குபவையாகவும் கருதுகிறது.(32-34) ஓ! ஏகாதிபதி, இந்த மொத்த அண்டமும் பிருகிருதியால் குருடாக்கப்பட்டு, (பிரகிருதியின் மூலம்) அனைத்துப் பொருட்களும் பல்வேறு வகைகளில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கடிக்கப்படுகின்றன.(35)

ஆன்மாவானது பிரகிருதியுடன் இருப்பதன் விளைவாலேயே இன்ப துன்பங்களை உண்டாக்கும் இந்த முரண்பட்ட இரட்டைகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. இந்த அறியாமையின் விளைவினாலேயே ஜீவனானது இந்தச் சோகங்கள் அனைத்தையும் தனதாகவும், அவை தன்னைத் தேடி வருவதாகவும் கருதிக் கொள்கிறது.(36) உண்மையில், ஓ! ஏகாதிபதி {கராளனே}, அந்த அறியாமையின் மூலமே ஜீவனானது, எவ்வாறேனும் அந்தக் கவலைகளைக் கடக்க வேண்டும் என்றும், தன் நற்செயல்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கும் இன்பங்களை அனுபவிக்கத் தேவர்களின் உலகிற்குச் செல்ல வேண்டும் என்று கற்பனை செய்கிறது. அந்த அறியாமையின் மூலமே அஃது {ஜீவன்}, இவ்வுலகின் இன்பதுன்பங்களைச் சகிக்கவும், அனுபவிக்கவும் வேண்டுமென நினைகிகறது.(37,38) ஜீவனானது அந்த அறியாமையின் மூலமே, “நான் மகிழ்ச்சியை அடைய வேண்டும். தொடர்ச்சியாக நற்செயல்கள் செய்வதால் என் வாழ்வின் முடிவு வரை நான் மகிழ்ச்சியைப் பெறுவேன். என் எதிர்காலப் பிறவிகள் அனைத்தும் இன்பமாக அமையும்.(39) மேலும் இப்பிறவியில் நான் செய்யும் (தீய) செயல்களின் மூலம் முடிவிலா கவலையே எனதாகும். மனித வாழ்வில் இருந்து ஒருவன் நரகிற்குள் மூழ்குவதால், மனித நிலையே பெருந்துன்பம் நிறைந்தது.(40) நரகத்திலிருந்து மீண்டும் நான் மனித நிலைக்குத் திரும்பப் பல வருடங்கள் ஆகும். மனித நிலையில் இருந்து மீண்டும் நான் தேவர்களின் நிலையை அடைவேன். அந்த மேன்மையான நிலையில் இருந்து மீண்டும் மனித நிலையை அடைந்து,(41) அங்கிருந்து மீண்டும் நான் நரகில் மூழ்குவேன்” என்று நினைக்கிறது.

அடிப்படை பூதங்கள், புலன்கள் ஆகியவற்றின் இந்தக் கலவையானது, அதனில் உள்ள சித்-ன் சிந்தனையுடன் இவ்வாறு ஆன்மாவின் தன்மைகளுடன் கூடியதாக இருக்கிறது என்று கருதும் ஒருவன்,(42) மீண்டும் மீண்டும் தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் திரிந்து நரகில் மூழ்க வேண்டியிருக்கும். எப்போதும் மமதையுடன் கூடிய ஜீவனானது இத்தகைய பிறவிகளில் சுழல வேண்டியிருக்கிறது.(43) ஜீவன் அடுத்தடுத்து கோடிக்கணக்கான பிறவிகளை அடைவதன் மூலம் அதனுக்குக் கிட்டும் வடிவங்கள் அனைத்தும் மரணத்திற்கு ஆட்படக்கூடியவையே. நல்ல மற்றும் தீய கனிகள் நிறைந்த இவ்வழியில் செயல்படும் ஒருவன்,(44) மூவுலகங்களிலும் அடுத்தடுத்த வடிவங்களை ஏற்று அதனோடு தொடர்புடைய இன்பதுன்பங்களையும் பொறுத்துக் கொள்ளவும் அனுபவிக்கவும் வேண்டும். நல்ல மற்றும் தீ செயல்கள் நிறைந்த செயல்களைப் பிரகிருதியே உண்டாக்குகிறது;(45) மூவுலங்களில் கிட்டும் கனிகளையும் பிரகிருதியே தாங்கிக் கொள்ளவும், அனுபவிக்கவும் செய்கிறது. உண்மையில் பிரகிருதியானது செயல்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. இடைநிலை வகைகள், மனித நிலை, தேவர்கள் ஆகிய இந்த மூன்று களங்களும்(46) பிரகிருதியில் இருந்து தோன்றுபவை என்பது அறியப்பட வேண்டும். பிரகிருதியானவள் குணங்கள் அனைத்தும் இல்லாதது என்று சொல்லப்படுகிறாள். (மஹத்-உடன் கூடிய தொடக்கத்தில்) அவளது செயல்களின் விளைவால் மட்டுமே அவளது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.(47) இதே வகையிலேயே புருஷன் (அல்லது ஆத்மா) குணங்கள் அற்றவனாக இருந்தாலும், சிந்தனையைப் பெறும்போது உடல் செய்யும் செயல்களின் விளைவால் தன் இருப்பை உறுதி செய்கிறது[1].ஆன்மாவானது எவ்வகை மாறுதலுக்கு உட்படாதது என்றாலும், செயற்கோட்பாடே பிரகிருதியை நகரச் செய்கிறது என்றாலும்,(48) அறிவு மற்றும் செயல்புலன்களோடு {ஞானகர்மேந்திரியங்களோடு} கலக்கும் அஃது, அந்தப் புலன்களின் செயல்கள் அனைத்தையும் தனதாகவே கருதுகிறது. காது முதலிய ஐந்து அறிவுப்புலன்களும்,(4) வாக்கு முதலிய செயற்புலன்களும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்களுடன் கலந்து எண்ணற்ற பொருட்களில் ஈடுபடுகின்றன. உண்மையில் ஜீவனுக்குப் புலன்கள் இல்லையென்றாலும், தன் வாழ்வின் செயல்களைத் தானே செய்வதாகவும், அறிவு மற்றும் செயற்புலன்கள் அனைத்தும் தனதே என்றும் அவன் {ஜீவன்} கருதுகிறான்.(50) உண்மையில் உடலில்லாமல் இருந்தாலும், அவன் தனக்கு உடலிருப்பதாகக் கருதுகிறான். குணங்களற்றவனாக இருப்பினும் அவற்றைக் கொண்டுள்ளதாகவும், காலத்தைக் கடந்தவனாக இருப்பினும், காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவனாகவும் தன்னைக் கருதிக் கொள்கிறான்.(51) புத்தியற்றவனாகயிருந்தாலும், அது தனக்கிருப்பதாகவும், (இருபத்து நான்கு) காரியங்களையும் கடந்திருந்தாலும், அவற்றுடன் ஒன்றாகவும் அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். மரணமற்றவனாக இருந்தாலும், தன்னை மரணத்திற்கு உட்பட்டவனாகவும், அசைவற்றவனாக இருந்தாலும், தன்னை அசைபவனாகவும் அவன் கருதிக் கொள்கிறான்.(52) உடல் கூடற்றவனாகாக இருந்தாலும், தனக்கு ஒன்று இருப்பதாகவும், பிறப்பற்றவனாக இருந்தாலும், தனக்குப் பிறந்து உண்டு என்றும் அவன் கருதுகிறான். தவங்களைக் கடந்தவனாக இருந்தாலும், தவங்களில் ஈடுபடுபவனாகவும், தனக்கு எந்தக் கதியும் கிடையாது என்றாலும், கதியடையத் தகுந்தவன் என்றும் தன்னை அவன் கருதிக் கொள்கிறான்.(53) அசைவும், பிறப்பும் அற்றவனாக இருந்தாலும், அவை இரண்டும் தனக்கு இருப்பதாகவும், அச்சத்தைக் கடந்தவனாக இருந்தாலும், அச்சம் கொண்டவனாகவும் அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். அழிவற்றவனாக இருந்தாலும் அவன் தன்னை அழியத்தக்கவனாகக் கருதுகிறான். அறியாமையுடன் கூடிய ஆன்மாவானது இவ்வாறே தன்னைக் குறித்து நினைத்துக் கொள்கிறது” என்றார் {வசிஷ்டர்}.(54)

ஆத்ம களங்கம்! – சாந்திபர்வம் பகுதி – 305-ஜீவனின் பதினாறு கலைகள்; பதினாறாவது கலையான சித்; ஜீவன் களங்கமடையும் தருணம் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {ஜனக மன்னன் கராளனிடம்}, “இவ்வாறே அறியாமையின் விளைவாலும், அறியாமையுடன் கூடிய பிறவற்றின் தொடர்பாலும் ஜீவனானவன், அழிவையே கதியாகக் கொண்ட ஆயிரம் கோடி பிறவிகளை அடைகிறான்.(1) ஜீவனானவன், அறியாமையுடன் கூடிய சித்-ஆக மாறுவதன் விளைவால், இடைநிலை வகைகள், மனிதர்கள், தேவர்களுக்கு மத்தியில் ஆயிரம் வசிப்பிடங்களை அடைகிறான்.(2) அறியாமையின் விளைவால் அந்த ஜீவன், ஆயிரமாயிரம் முறை சந்திரமாஸைப் போல வளரவும் தேயவும் செய்கிறான். இதுவே அறியாமையுடன் கூடிய ஜீவனின் உண்மையான இயல்பாகும். உண்மையில் சந்திரமாஸுக்கு பதினாறு பகுதிகள் {கலைகள்} முழுமையாக உண்டு என்பதை அறிவாயாக. அவற்றில் பதினைந்து மட்டுமே வளரவும், தேயவும் செய்கின்றன.(3) (புலப்படாதிருப்பதும், புதுநிலவின் {அமாவாசையின்} இரவில் தோன்றுவதுமான எஞ்சியிருக்கும் பாகமான) அந்தப் பதினாறாவது பாகம் நிலையானதாக இருக்கிறது. சந்திரமாஸைப் போலவே, ஜீவனுக்கும் முழுமையாகப் பதினாறு கலைகள் இருக்கின்றன. அவற்றில் (சித்-ன் பிம்பத்தோடு {சிந்தனையோடு} கூடிய பிரகிருதி, ஞானம் மற்றும் செயற்புலன்கள் பத்து, உட்பொருட்கள் நான்கு ஆகியவை) பதினைந்தும் தோன்றவும், மறையவும் செய்கின்றன. பதினாறாவது (தூய சித்-ஆனது) எந்த மாறுதலுக்கும் உட்படுவதில்லை.(4)

அறியாமையுடன் கூடிய ஜீவன், மேற்குறிப்பிட்ட பதினைந்து பாகங்களுடன் {கலைகளுடன்} மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறக்கிறான். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான ஜீவனின் பாகம் அடிப்படை பூதங்களுடன் கலக்கிறது, இந்தக் கலவை மீண்டும் மீண்டும் நேர்கிறது.(5) பதினாறாவது பாகம் {கலை} நுட்பமானதாகும் {சூக்ஷ்மமானதாகும்}. அது {தூய சித்} (நிலையானவனும், மாற்றமில்லாதவனுமான) சோமனாக அறியப்பட வேண்டும். அஃது ஒருபோதும் புலன்களால் தாங்கப்படுவதில்லை. மறுபுறம் புலன்களே அதனால் தாங்கப்படுகின்றன.(6) அந்தப் பதினாறும் உயிரினங்களின் பிறப்புக்குக் காரணமாக இருப்பதால், ஓ! ஏகாதிபதி {கராளனே}, அவற்றின் துணை இல்லாமல் ஒருபோதும் உயிரினங்களால் பிறவியை அடைய முடியாது. அவையே பிரகிருதி என்றழைக்கப்படுகின்றன. ஜீவன் பிரகிருதியுடன் கலக்க வேண்டிய காரியத்தின் அழிவே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுகிறது.(7)

இருபத்தைந்தாவதாக இருக்கும் மஹத்-ஆன்மாவானது, புலப்படாதது என்றழைக்கப்படும். பதினாறு பாகங்களை {கலைகளைக்} கொண்ட உடலைத் தனதெனக் கருதினால், அது மீண்டும் மீண்டும் வடிவத்தை ஏற்க வேண்டும். ஓ! மன்னா, களங்கமற்றதும், தூயதும் எது என்பதை அறியாததன் விளைவால், தூய்மை மற்றும் தூய்மையின்மை ஆகிய இரண்டின் கலவையில் விளையும் அர்ப்பணிப்புக்காக, உண்மையில் தூய்மையான ஆன்மாவானது தூய்மையற்றதாகிறது {களங்கமடைகிறது}.(8,9) அறியாமையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஜீவனானது, ஞானத்தின் தன்மையைக் கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அறியாமையுடன் தொடர்பு கொள்கிறது.(10) ஓ! ஏகாதிபதி, அனைத்து வகைக் குற்றங்களில் இருந்து விடுபட்டிருந்தாலும், பிரகிருதியின் முக்குணங்களில் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் அஃது அந்தக் குணங்களைக் கொண்டதாகிறது” என்றார் {வசிஷ்டர்}.(11)

உடல் மற்றும் வடிவம்! – சாந்திபர்வம் பகுதி – 306- உயிரினங்கள் உடல் மற்றும் வடிவம் ஆகியவை உண்டாகும் வழிமுறை; ஆத்மா, பரமாத்மா, விடுதலை ஆகியவை குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

ஜனகன் {கராளன் முனிவர் வசிஷ்டரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவானது, அழிவற்றதற்கும் {அக்ஷரத்திற்கும்}, அழிவுள்ளதற்கும் {க்ஷரத்திற்கும்} (அல்லது புருஷனுக்கும் {ஆன்மாவுக்கும்} பிரகிருதிக்கும்) இடையில் உள்ளதை {உள்ள உறவைப்} போன்றது எனச் சொல்லப்படுகிறது.(1) ஓர் ஆணில்லாமல் ஒரு பெண்ணால் ஒருபோதும் கருவுறமுடியாது. ஒரு பெண்ணில்லாமல் ஓர் ஆணாலும் ஒருபோதும் எந்தவொரு வடிவத்தையும் படைக்க முடியாது.(2) ஒருவரோடொருவர் கொள்ளும் கலவியின் விளைவாலும், ஒருவர் அடுத்தவரின் குணங்களைச் சார்ந்திருப்பதாலும் (உயிரினங்களின்) வடிவங்கள் உண்டாவது காணப்படுகிறது. அனைத்து வகைப் பிறவிகளிலும் இதுவே வழக்கமாக இருக்கிறது.(3) (பாலினப்) புணர்வு நோக்கங்களுக்காக ஒருவரோடொருவர் கொள்ளும் கலவியின் மூலமும், ஒருவர் மற்றவரின் குணங்களைச் சார்ந்திருப்பதன் மூலமும், மாதவிடாய் {ருது} காலங்களில் (உயிரினங்களின்) வடிவங்கள் உண்டாகின்றன. அதன் குறியீடுகளை நான் உமக்குச் சொல்கிறேன்.(4) தந்தைக்குரிய குணங்களையும், தாய்க்குரிய குணங்களையும் கேட்பீராக. ஓ! மறுபிறப்பாளரே {வசீஷ்டரே}, எலும்புகள், நரம்புகள், ஊன் ஆகியன தந்தையிடம் இருந்து பெறப்படுகின்றன என்று நாம் அறிகிறோம்.(5) தோல், சதை, குருதி ஆகியன தாயிடம் இருந்து பெறப்படுகின்றன எனக் கேள்விப்படுகிறோம். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, வேதங்களிலும், பிற சாத்திரங்களிலும் இதையே படிக்க முடிகிறது.(6)

வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டதாகப் படிக்கப்படும் எதுவும் அதிகாரமிக்கதாகக் கருதப்படுகிறது. மேலும், வேதங்கள் மற்றும் (வேதங்களுக்கு இணங்கிய) பிற சாத்திரங்களின் அதிகாரம் நித்தியத்தன்மை கொண்டதாகும்.(7) பிரகிருதி மற்றும் புருஷனால், ஒன்றையொன்று எதிர்த்தும், ஒன்றின் குணங்களை மற்றது சார்ந்துமென எப்போதும் கலந்திருக்க முடியுமென்றால்,(8) ஓ! புனிதமானவரே {வசீஷ்டரே}, விடுதலை {முக்தி} என்ற ஒன்று இருக்க முடியாது என்றே நான் காண்கிறேன். ஓ! புனிதமானவரே, அனைத்துப் பொருட்களும் உமது கண்ணெதிரே இருப்பது போன்ற ஆன்ம பார்வையைக் கொண்டவர் நீர். எனவே, விடுதலையின் {முக்தியின்} இருப்புக்கான நேரடி சான்று ஏதேனும் இருந்தால், அது குறித்து எனக்குச் சொல்வீராக.(9) நாம் விடுதலையை அடைய விரும்புகிறோம். உண்மையில், மங்கலமானதும், உடலற்றதும், முதுமையற்றதும், நித்தியமானதும், புலன்களின் திறனுக்கு எட்டாததும், தனக்கு மேன்மையான ஏதும் அற்றதுமான அஃதை அடையவே நாம் விரும்புகிறோம்” என்றான் {கராளன்}.(10)

வசிஷ்டர் {கராளனிடம்}, “(இக்காரியத்தைப் பொறுத்தவரையில்), வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் குறியீடுகள் நீ சொல்வது போலத்தான் இருக்கின்றன. அக்குறியீடுகளை நீ எடுத்துக் கொள்ள {புரிந்து கொள்ள} வேண்டிய வகையிலேயே எடுத்திருக்கிறாய் {புரிந்து வைத்திருக்கிறாய்}.(11) எனினும், வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் உரைகளை மட்டுமே நீ உன் புத்தியில் கொண்டிருக்கிறாய். ஓ! ஏகாதிபதி, அவ்வுரைகளின் உண்மையான பொருளை நீ உண்மையில் அறிந்து கொள்ளவில்லை.(12) எந்த மனிதன், வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் உரைகளுடைய உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாமல் வெறுமனே உரைகளை மட்டும் தன் புத்தியில் சுமக்கிறானோ, அவன் அவற்றைக் கனியில்லாமலேயே சுமக்கிறான்.(13) உண்மையில், ஒரு படைப்பின் பொருளைப் புரிந்துகொள்ளாமல், அதன் உள்ளடக்கத்தை நினைவில் கொள்பவன், பயனற்ற சுமையைச் சுமப்பதாகவே சொல்லப்படுகிறது. எனினும், ஓர் ஆய்வின் {கிரந்தத்தின்} உண்மைப் பொருளை அறிந்தவன், அவ்வாய்வின் நோக்கத்தைக் கற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(14) ஓர் உரையின் பொருளைக் குறித்துக் கேட்கப்படும்போது, கவனமாகக் கற்றதன் மூலம் தான் புரிந்து கொண்ட பொருளைச் சொல்வதே ஒருவனுக்குத் தகும்.(15)

எந்த மந்த புத்தியுள்ளவன், கல்விமான்களின் கூட்டத்திற்கு மத்தியில் உரைகளின் பொருளை விளக்க மறுப்பானோ அந்த மூடப் புத்தியுள்ளவனால், சரியான பொருளை ஒருபோதும் விளக்க முடியாது[1].(16) அறியாமை கொண்டவன், ஆய்வுகளின் உண்மைப் பொருளை விளக்கப் புகும்போது கேலிக்குள்ளாகிறான். ஆன்மாவைக் குறித்த அறிவைக் கொண்டவர்களும் கூட, (அவர்கள் விளக்குவது கல்வியால் {கவனத்துடன் படித்துப் புரிந்து கொண்ட கல்வியால்} அடைந்ததாக இல்லையென்றால்) அத்தக்கைய சந்தப்பங்களில் கேலிக்கே உள்ளவார்கள்.(17) ஓ! ஏகாதிபதி {கராளனே}, சாங்கிய மற்றும் யோக தத்துவ அமைப்புகளை அறிந்த உயர் ஆன்மாக்களுக்கு மத்தியில் (பழங்காலத்தில் இருந்து ஆசான்களால் சீடர்களுக்கு) விடுதலை குறித்து எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதை இப்போது கேட்பாயாக.(18) யோகிகள் காண்பதையே சரியாகச் சாங்கியர்களும் அடைய முனைகிறார்கள். எவன் சாங்கிய மற்றும் யோக அமைப்புகளை ஒன்றெனக் காண்கிறானோ அவன் புத்திமானெனச் சொல்லப்படுகிறான்.(19) நீ என்னிடம் சொன்ன தோல், சதை, குருதி, கொழுப்பு, பித்தம், ஊன், நரம்புகள், (ஞானம் மற்றும் செயல் என்ற இரு வகை) புலன்கள் ஆகியன {உண்மையில்} இருக்கின்றன.(20)பொருட்கள் பொருட்களிலிருந்தும், புலன்கள் புலன்களிலிருந்தும் உண்டாகின்றன. வித்தானது வித்திலிருந்து பெறப்படுவதைப் போலவே, ஓர் உடலிலிருந்தே ஒருவன் உடலை அடைகிறான்.(21) பரம்பொருளானவன், புலன்களற்றவனாக, வித்தற்றவனாக {வித்து அற்றவனாக}, பருப்பொருளற்றவனாக, உடலற்றவனாக இருக்கும்போது, அவன் குணங்கள் அனைத்தும் அற்றவனாகவே இருக்க வேண்டும்; அவன் அவ்வாறு இருப்பதன் விளைவால் அவன் எவ்வகைக் குணங்களையும் எவ்வாறு பெற்றிருக்க முடியும்?(22) வெளி {ஆகாயம்} மற்றும் பிற குணங்கள், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களில் இருந்து தோன்றி, இறுதியாக அவற்றிலேயே மறைகின்றன. இவ்வாறே குணங்கள் பிரகிருதியில் இருந்து எழுந்து பிரகிருதியிலேய மறைகின்றன.(23) பிரகிருதியிலான தோல், சதை, குருதி, கொளுப்பு, பித்தம், ஊன், எலும்புகள் மற்றும் நரம்புகள் ஆகிய இந்த எட்டும் (ஆணின்) உயிர் வித்தின் மூலம் உண்டாக்கப்படுகின்றன.(24) ஜீவாத்மா, அண்டம் ஆகிய இரண்டும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் மூலம் பிரகிருதியின் தன்மையைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. பரமாத்மாவானவான், ஜீவாத்மா மற்றும் அண்டம் ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டவனாவான்[2].(25)பருவகாலங்கள் வடிவமற்றவையாக இருந்தாலும், குறிப்பிட்ட கனிகள் மற்றும் மலர்களின் தோற்றங்களின் மூலம் {தோன்றும் காலத்தைக் கொண்டு அவை} ஊகிக்கப்படுவதைப் போலவே, பிரகிருதியும் வடிவமற்றதாக இருந்தாலும், மஹத்-ன் குணங்கள் மற்றும் அதனில் இருந்து எழும் எஞ்சிய குணங்களால் ஊகிக்கப்படுகிறது.(26) இவ்வழியிலேயே, உடலில் சைத்யன்யத்தின் இருப்பும், எந்தக் குணமும் இல்லாத, முற்றிலும் களங்கமற்ற பரமாத்மா ஆகியவை அறியப்படுகின்றன.(27) தொடக்கமும், அழிவும் இல்லாததும், முடிவு இல்லாததும், அனைத்துப் பொருட்களையும் மேற்பார்வையிடுவதும், மங்கலமானதுமான ஆன்மாவானது, தன்னை உடலோடும், பிற குணங்களோடும் அடையாளம் காண்பதன் விளைவால் மட்டுமே குணங்களுள்ளதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது {புரிந்து கொள்ளப்படுகிறது}.(28) குணங்களை உண்மையில் அறிந்தவர்கள், குணங்களுடன் கூடிய பொருட்களால் மட்டுமே குணங்களைக் கொண்டிருக்க முடியும் என்பதையும், ஆனால் எது குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கிறதோ, அதனால் எந்தக் குணத்தையும் கொண்டிருக்க முடியாது என்பதையும் அறிகிறார்கள்.(29) பிழையால் ஏற்கப்பட்டதையும், பிரகிருதியில் பிறந்த குணங்கள் அனைத்தையும், ஜீவாத்மா வெல்லும்போது மட்டுமே அது பரமாத்மாவைப் பார்க்கிறது.(30)

அறிவதாகக் கருதப்படுவதும், அறியாமை அல்லது பிழையின் குணத்தைக் கடந்ததும், புலப்படாததும், குணங்கள் அனைத்தையும் கடந்ததும், பரம் {உயர்ந்தது} என அழைக்கப்படுவதும், குணங்கள் அனைத்தின் தொடர்பறுத்ததும், அனைத்துப் பொருட்களையும் விதிப்பதும், நித்தியமானதும், மாற்றமில்லாததும், பிரகிருதியைப் புறக்கணிப்பதும், இருபத்துநான்கு தத்துவங்களைக் கடந்து இருப்பதைந்தாவதாக இருப்பதும், சாங்கியர்கள், யோகியர்கள் மற்றும் பிற அமைப்புகளை நம்புபவர்கள் அனைவராலும் புத்தியைக் கடந்தது எனச் சொல்லப்படுவதுமான பரமாத்மாவை சாங்கிய மற்றும் யோக அமைப்புகளை அறிந்த உயர்ந்த முனிவர்கள் மட்டுமே அறிகிறார்கள்.(31-33) பிறவியை அஞ்சுபவர்களும், வாழும் நனவின் {அகங்காரத்தின்} பல்வேறு நிலைகள் மற்றும் மரணத்தைக் கொண்டவர்களுமான ஞானிகள், புலப்படாததை அறிவதில் வெல்லும்போது, பரமாத்மாவைப் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(34) ஜீவாத்மாவானது, பரமாத்மாவுடன் கலப்பது சாத்திரங்களுக்கு இணக்கமானதும், முற்றிலும் சரியானதுமென ஒரு புத்திமான் கருதுகிறான்; அதே வேளையில் புத்தியற்றவனோ அவற்றை {ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும்} ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகப் பார்க்கிறான்.(35)

க்ஷரம் மற்றும் அக்ஷரம் (அழியத்தக்கது மற்றும் அழிவற்றது) ஆகிய இரண்டின் குறியீடுகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். அக்ஷரம் என்பது ஒருமை அல்லது ஒற்றுமை, அதே வேளையில் பலவகையானது க்ஷரமாகும்.(36) ஒருவன் இந்த இருபத்தைந்து தத்துவங்களை முறையாகப் புரிந்து கற்கத் தொடங்கும்போது, ஆன்மாவின் ஒருமை சாத்திரங்களுக்கு இணக்கமானது என்பதையும், அதன் பன்மை அவற்றுக்கு எதிரானது என்பதையும் புரிந்து கொள்கிறான்.(37) படைக்கப்பட்ட தத்துவங்கள் அல்லது கோட்பாடுகளில் சேர்க்கப்பட்டதும், அப்பட்டியலைக் கடந்து நிற்பதுமான இதன் பல்வேறு குறியீடுகள் இவையே. தத்துவங்களின் பட்டியல் எண்ணிக்கையில் இருபத்தைந்தை மட்டுமே கொண்டது என்று ஞானிகள் சொல்கிறார்கள்.(38) தத்துவங்களைக் கடந்து நிற்பதானது, எண்ணிக்கையைக் கடந்து இருபத்தாறாவதாக அமைகிறது. (எண்ணிக்கையில் இருப்பத்தைந்தாக இருக்கும்) படைக்கப்பட்ட பொருட்களை அவற்றின் (ஐந்து) பூதங்களோடு புரிந்து கொள்வது அல்லது கற்பதே, தத்துவங்களைப் புரிந்து கொள்ளும் கல்வி, அல்லது தத்துவப் புரிதலாகும். இவற்றைக் கடந்து நிற்கும் அதுவே நித்தியமானதாகும்” என்றார் {வசிஷ்டர்}[3].(39)

யோகம், சாங்கியம்! – சாந்திபர்வம் பகுதி – 307-யோக முறை மற்றும் சாங்கிய முறை; ஆன்மா, புருஷன், க்ஷேத்ரம், க்ஷேதரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

ஜனகன் {ஜனக மன்னன் கராளன் முனிவர் வசிஷ்டரிடம் }, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அக்ஷரம் (அழிவற்றது) என்பதன் குணம் ஒருமை என்றும், க்ஷரம் (அழியத்தக்கது) என்றழைக்கப்படுவதன் குணம் பன்மை என்று நீர் சொன்னீர். எனினும், இவ்விரண்டின் இயல்பைக் குறித்து நான் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் என் மனத்தில் ஐயங்கள் பதுங்கியிருக்கின்றன.(1) அறியாமையிலுள்ள மனிதர்கள் ஆன்மாவைப் பல நிகழ்வுகள் கொண்டதாகப் பார்க்கின்றனர். எனினும், அறிவும், விவேகமும் கொண்டோர் ஆன்மாவை ஒன்றே ஒன்றாகக் கருதுகின்றனர். எனினும், நான் மிக மந்த புத்தியுள்ளவனாக இருக்கிறேன். எனவே, இவை யாவும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறேன்.(2) அக்ஷரம் மற்றும் க்ஷரத்தின் ஒருமை மற்றும் பன்மைக்காக நீர் சொன்ன காரணங்களையும், என் நிலையற்ற புத்தியின் விளைவால் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன்.(3) எனவே, ஒருமை {அபேதம்} மற்றும் பன்மை {பேதம்}, ஞானி, அஜ்ஞானி, ஜீவாத்மா, ஞானம், அறியாமை, அக்ஷரம், க்ஷரம், சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஆகியவை குறித்து நீர் எனக்கு மீண்டும் சொல்லவும், நான் கேட்கவும் விரும்புகிறேன்” என்றான் {கராளன்}.(4,5)

வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “நீ கேட்பதை உனக்குச் சொல்கிறேன். எனினும், ஓ! ஏகாதிபதி, யோக நடைமுறைகளைத் தனியாக விளக்குகிறேன் கேட்பாயாக.(6) யோகிகளின் கட்டுப்பாடான தியானமே அவர்களுடைய உயர்ந்த பலமாகும்[1]தியானம் இருவகைப்பட்டது என யோகத்தை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(7) ஒன்று மனக்குவிப்பு மற்றொன்று (சுவாசத்தை முறைப்படுத்தும்) பிராணாயாமம் என்றழைக்கப்படுகிறது. பிராணாயாமம் பொருள் கொண்டதாகவும், மனக்குவிப்பு அதைக் கொள்ளாததாகவும் சொல்லப்படுகிறது[2].(8) சிறுநீர் கழிப்பு, மலக்கழிப்பு, உணவு உண்ணுதல் ஆகிய மூன்று வேளைகளைத் தவிர ஒருவன் தனது மொத்த காலத்தையும் தியானத்தில் அர்ப்பணிக்க வேண்டும்.(9) மனத்தின் துணையுடன் புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் இருந்து விலக்கும் புத்திமான், தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, பிராண மூச்சை வெளிப்படுத்தும் இருபத்திரண்டு {22} முறைகளுக்கு {ஏவல்களுக்கு} ஏற்புடைய வகையில், எது (அறியாமை அல்லது பிரகிருதி என்றழைக்கப்படும்) இருபத்துநான்கு தத்துவங்களைக் கடந்ததோ, எது உடலின் ஒவ்வொரு பகுதியில் இருப்பதாகவும், சிதைவு மற்றும் அழிவுக்கு அப்பாற்பட்டதாகவும் ஞானிகளால் கருதப்படுகிறதோ அதனுடன் {பரமாத்மாவுடன்} ஜீவாத்மாவைக் கலக்க வேண்டும்.(10,11)

அந்த இருபத்திரண்டு {22} முறைகளின் மூலம்தான் ஆன்மா எப்போதும் அறியப்படுகிறது என நாம் கேள்விப்படுகிறோம். தீய ஆசைகளால் ஒருபோதும் பாதிக்கப்படாத மனம் கொண்டவனுடையதே இந்த யோகப்பயிற்சி என்பது உறுதியாகும். அது வேறு யாருடையதுமல்ல.(12) ஓ! மிதிலையின் மன்னா {கராளா}, ஒருவன், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, எளிமையான உணவு உண்டு, புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, புலன்கள் அனைத்தின் செயல்பாடுகளையும் நிறுத்திய பிறகு, ஒரு பாறையைப் போன்ற அசைவற்ற நிலையை ஏற்று, புத்தியால் மனத்தை அமைதிப்படுத்தி, இரவின் முதல் மற்றும் இறுதிப் பகுதியில் தன் மனத்தை ஆன்மாவில் நிலைநிறுத்த வேண்டும்.(13,14) யோக விதிகளை அறிந்த ஞானிகள் ஒரு மரத்துண்டைப் போல நிலையாகவும், ஒரு மலையைப் போல அசைவில்லாமலும் இருக்கும்போதே அவர்கள் யோகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(15) ஒருவன் கேட்கவும், நுகரவும், சுவைக்கவும், காணவும் செய்யாதபோது; தீண்டலின் எந்த உணர்வும் பெறாதபோது; அனைத்துக் காரியங்களில் இருந்தும் மனம் முற்றிலும் விடுபட்டிருக்கும்போது;(16) அவன் எந்தப் பொருளையும் உணராதபோது, எந்தச் சிந்தனையையும் வளர்க்காதபோது; அவன் மரத்துண்டைப் போல ஆகும்போது, அவன் கச்சிதமான யோகத்தில் இருப்பதாக ஞானியரால் அழைக்கப்படுகிறான்.(17)

அத்தகைய நேரத்தில் அவன், காற்றில்லாத ஓர் இடத்தில் எரியும் விளக்கைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்; அத்தகைய நேரத்தில் அவன் தன் நுட்பமான வடிவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கச்சிதமாகக் கலக்கிறான். ஒருவன் அத்தகைய முன்னேற்றத்தை அடையும்போது, அவன் உயரவோ {உயர்ந்த நிலையை அடையவோ}, இடைநிலை வகைகளுக்கு மத்தியில் வீழவோ வேண்டிய தேவையேதும் இல்லை.(18) அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகியவற்றை முழுமையாக அடையாளங் கண்டதாக நம்மைப் போன்ற மனிதர்கள் சொல்லும்போது, யோகியானவன் பரமாத்மாவைக் காண்பதாகச் சொல்லப்படுகிறது.(19) யோகத்தில் இருக்கும்போது, அந்த யோகியின் இதயத்தில் சுடர்மிக்க நெருப்பைப் போலவோ, பிரகாசமான சூரியனைப் போலவோ, வானத்தில் தோன்றும் தீப்பிழம்பைப் போலவோ பரமாத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது[3].(20)பிறப்பற்றதும், அமுதச் சாரமும், புத்தி மற்றும் ஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான உயர் ஆன்ம பிராமணர்களால் காணப்படுவதுமான பரமாத்மாவானது,(21) நுட்பத்திலும் நுட்பமானதாகவும், பெரிதிலும் பெரிதானதாகவும் இருக்கிறது. ஆத்மாவானது, அனைத்து உயிரினங்களிலும் வசித்தாலும், அஃது அவற்றால் காணப்படுவதில்லை.(22) உலகங்களைப் படைத்தவன், மனமெனும் விளக்கின் துணையுடன் புத்தியெனும் செல்வம் கொண்ட மனிதனால் மட்டுமே காணப்படுகிறான். அவன் அடர் இருளின் அடுத்தக் கரையில் வசித்து, அதைக் கடந்திருப்பவன் ஈஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(23) வேதங்களை அறிந்தவர்களும், அனைத்தையும் அறிந்தவர்களுமான மனிதர்கள், அவனை இருளை விலக்குபவன், களங்கமற்றவன், இருளைக் கடந்திருப்பவன், குணங்கள் அற்றவன், அவற்றை {குணங்களைக்} கொண்டவன் என்று அழைக்கிறார்கள்.(24)

இதுவே யோகிகளின் யோகம் என்றழைக்கப்படுகிறது. யோகத்தின் குறியீடாக இருப்பது வேறெது? யோகிகள் இத்தகைய பயிற்சிகளின் மூலம் அழிவையும், சிதைவையும் கடந்த பரமாத்மாவைக் காண்பதில் வெல்கிறார்கள்.(25) யோக அறிவியல் காரியங்களைக் குறித்து இந்த அளவுக்கு விளக்கமாக நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.

இனி, பிழைகளைப் படிப்படியாக அழிப்பதன் மூலம் பரமாத்மாவைக் காணும் சாங்கிய மெய்யியல் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(26) பிரகிருதியில் கட்டப்பட்ட அமைப்பைக் கொண்ட சாங்கியர்கள், புலப்படாததான பிரகிருதியே முதன்மையானது எனச் சொல்கிறார்கள். ஓ!ஏகாதிபதி, பிரகிருதியில் இருந்து மஹத் என்றழைக்கப்படும் இரண்டாம் கோட்பாடு உண்டாவதாக அவர்கள் சொல்கிறார்கள்.(27) மஹத்திலிருந்து நனவுநிலை {அகங்காரம்} என்றழைக்கப்படும் மூன்றாம் கோட்பாடு தோன்றுவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஆன்ம பார்வையால் அருளப்பட்ட சாங்கியர்கள், அந்த நனவுநிலையில் இருந்து ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் ஐந்து {5} நுட்பமான சாரங்கள் தோன்றுவதாகச் சொல்கிறார்கள்.(28) இந்த எட்டையும் {8} அவர்கள் பிரகிருதி என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த எட்டின் மாறுபாடுகள் {விகாரங்கள்} எண்ணிக்கையில் பதினாறாக {16} இருக்கின்றன. அவை {அந்தப் பதினாறு விகாரங்கள்} வெளி {ஆகாயம்}, ஒளி, பூமி {நிலம்}, நீர் மற்றும் காற்று ஆகிய திரள் பூதங்கள் ஐந்தும், அறிவு மற்றும் செயற்புலன்கள் {ஞானக் கர்மேந்திரியங்கள்} பத்தும் {10}, மனமும் ஆகும்.(29) சாங்கிய பாதையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அதன் விதிகள் மற்றும் வகைமைகளை அறிந்தவர்களுமான ஞானிகள், இந்த இருபத்துநான்கு {24} காரியங்களையும் {தத்துவங்களையும்} மொத்த சாங்கிய விசாரணையின் எல்லையைத் தழுவியவையாகக் கருதுகிறார்கள்.(30)

எது உண்டாக்கப்பட்டதோ, அது படைக்கப்பட்ட காரணத்திலேயே கலக்கிறது. பரமாத்மாவால் ஒன்றன்பின் ஒன்றாகப்படைக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள், நேர்மாறான வரிசையில் அழிக்கப்படுகின்றன.(31) ஒவ்வொரு புதிய படைப்பின்போதும் குணங்கள் (மேற்சொன்ன வகையில்) மையம் விலகி வெளிநோக்கி இருப்புக்கு வருகின்றன. கடலில் பிறக்கும் அலைகள் அந்தக் கடலில் மறைவதைப் போலவே (அவை ஒவ்வொன்றும் அழிவடையும்போது அதன் மூலத்திற்குள்) நேர்மாறான வரிசையில் கலக்கின்றன.(32) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிரகிருதியின் படைப்பும் அழிவும் இவ்வாறே நடைபெறுகிறது. அண்டப் பேரழிவின் போது பரம்பொருள் மட்டுமே எஞ்சுகிறான்; மீண்டும் உயிர்கள் படைக்கப்படும்போது அவனே பல்வேறு வடிவங்களை ஏற்கிறான்.(33) ஓ! மன்னா, ஞானிகளும் இவ்வாறே இஃதை உறுதி செய்கிறார்கள். மேலோங்கும் புருஷனைப் பிரகிருதியே இவ்வாறு பன்மையை ஏற்கவும், மீண்டும் ஒருமைக்குத் திரும்பவும் வைக்கிறாள். பிரகிருதியே கூட இதே குறியீடுகளையே கொண்டிருக்கிறாள்.(34) விசாரணை தத்துவங்களின் இயல்பை முழுமையாக அறிந்தவன், பிரகிருதியும் அதே வகைப் பன்மையையும், ஒருமையையும் ஏற்கிறாள் என்று அறிவான். ஏனெனில், அழிவின் போது அவள் ஒருமைக்குத் திரும்புகிறாள், படைப்பின் போது மீண்டும் அவள் பன்மையை ஏற்கிறாள்.(35)

உற்பத்தி அல்லது வளர்ச்சிக் கோட்பாடுகளைக் கொண்ட பிரகிருதியை ஆன்மாவே பல்வேறு வடிவங்களை ஏற்கச் செய்கிறது. பிரகிருதி க்ஷேத்திரம் (அல்லது மண் {நிலம்}) என்றழைக்கப்படுகிறது. பெரியதான ஆன்மா, இருபத்துநான்கு காரியங்கள் அல்லது கோட்பாடுகளைக் கடந்திருக்கிறது. அஃது அந்தப் பிரகிருதி அல்லது க்ஷேத்திரத்திற்குத் தலைமை தாங்குகிறது.(36) எனவே, ஓ பெரும் மன்னா, யதிகளில் முதன்மையானோர், ஆன்மாவே தலைமை தாங்குபவன் {அதிஷ்டாதா} என்று சொல்கின்றனர். உண்மையில், க்ஷேத்திரங்கள் அனைத்தையும் ஆன்மா தலைமை தாங்குவதன் விளைவாகவே அவன் {ஆத்மா} தலைமை தாங்குபவன் {அதிஷ்டாதா} என்றழைக்கப்படுகிறான்.(37) அவன் {ஆத்மா} புலப்படாத க்ஷேத்திரத்தை அறிந்திருக்கிறான். எனவே, அவன் க்ஷேத்திரஜ்ஞன் {க்ஷேத்திரத்தை அறிந்தவன்} என்றும் அழைக்கப்படுகிறான். புலப்படாத க்ஷேத்திரத்திற்குள் (உடலுக்குள்) ஆன்மா நுழைவதன் காரணமாக அவன் புருஷன் என்றழைக்கப்படுகிறான்.(38) க்ஷேத்திரம் என்பது க்ஷேத்திரஜ்ஞனிலிருந்து வேறுபட்டதாகும். க்ஷேத்திரம் புலப்படாததாகும். இருபத்து நான்கு கோட்பாடுகளைக் கடந்த ஆன்மாவே அறிபவன் {ஞாதா} என்று அழைக்கப்படுகிறான்.(39) அறிவும், அறியப்படும் பொருளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும். மேலும் அறிவானது, புலப்படாததெனச் சொல்லப்படுகிறது, அதே வேளையில் அறியப்படும் பொருளானது இருபத்து நான்கு கோட்பாடுகளைக் கடந்த ஆன்மாவாகும்.(40)

புலப்படாதது க்ஷத்திரம் என்றும் சத்வம் (புத்தி) என்றும், ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன்) என்றும் அழைக்கப்படுகிறது; அதே வேளையில் இருபத்தைந்தாவது {25} கோட்பாடான புருஷன் தனக்கு மேம்பட்ட எதையும் கொண்டிராததால் (அனைத்துக் கோட்பாடுகளைம் கடந்து வழக்கத்திற்காக மட்டுமே கோட்பாடாக அழைக்கப்படுவதால்) கோட்பாடாக இருப்பதில்லை.(41) ஓ! மன்னா சாங்கிய தத்துவம் இவ்வளவே. சாங்கியர்கள், அண்டத்தின் காரணத்தைப் பிரகிருதி என்றழைத்து, திரள் கோட்பாடுகள் அனைத்தையும் சித்-க்குள் கலந்து பரமாத்மாவைக் காண்கிறார்கள்.(42) பிரகிருதியோடு சேர்ந்து இருபத்து நான்கு காரியங்களையும் {கோட்பாடுகளையும்} சரியாகக் கற்கும் சாங்கியர்கள், அவற்றின் உண்மையான இயல்பை உறுதி செய்து கொண்டு, அந்த இருபத்துநான்கு கோட்பாடுகளையும் கடந்திருப்பதை {கடந்திருக்கும் அதை [ஆன்மாவைக்]} காண்கிறார்கள்.(43) பிரகிருதியைக் கடந்திருப்பதும், இருபத்துநான்கு காரியங்களுக்கும் அப்பாலிருப்பதுமான ஆன்மாவே உண்மையில் ஜீவனாகும். அவன் {ஜீவன்}, பிரகிருதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பரமாத்மாவை அறிவதில் வெல்லும்போது, பரமாத்மாவாகவே அடையாளம் காணப்படுகிறான்.(44) சாங்கிய அமைப்பைக் குறித்து உண்மையில் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இந்தத் தத்துவத்தை அறிந்தவர்கள் அமைதியை அடைவதில் வெல்கிறார்கள்.(45)

அந்நிலையை அடைவதில் வென்றவர்கள், தங்கள் உடல்கள் அழிந்த பிறகு இவ்வுலகத்திற்கு ஒருபோதும் திரும்ப வேண்டியதில்லை; அதே வேளையில் அவர்கள், அழிவற்ற இயல்பை அடைந்ததன் விளைவால், இப்பிறவியில் இருந்து விடுபட்டவர்களாக, பலமடைந்ததாக, சமாதியின் இன்பநிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறார்கள்.(48) இந்த அண்டத்தை (ஒன்றாகச் சீராகக் காண்பதற்குப் பதிலாக) பலவாகக் காண்பவர்கள் தவறாகக் காண்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மனிதர்கள் பிரம்மத்தைக் காணாத குருடர்களாக இருக்கிறார்கள். ஓ பகைவர்களைத் தண்டிப்பவனே, அத்தகைய மனிதர்கள் மீண்டும் மீண்டும் இவ்வுலகத்திற்கு வந்து (பல்வேறு வகை உயிரினங்களின் மத்தியில்) உடல்களை ஏற்கின்றனர்.(48) மேலாகச் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிந்தவர்கள், இவ்வுடலைக் கடந்து, அதற்கு மேலும் எந்த உடற்கட்டுகளையும் ஏற்கும் கட்டாயதிற்கு உள்ளாகாத போதே அனைத்தையும் அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(49) அனைத்துப் பொருட்களும் (அல்லது மொத்த அண்டமும்) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} விளைவென்று சொல்லப்படுகிறது. இருபத்தைந்தாவதான ஆன்மா அனைத்துப் பொருட்களையும் கடந்திருக்கிறது. ஆன்மாவை அறிந்தவர்களுக்கு இவ்வுலகத்திற்குத் திரும்ப வேண்டிய அச்சம் கிடையாது” என்றார் {வசிஷ்டர்}.(50)

அறிவு, அறியாமை! – சாந்திபர்வம் பகுதி – 308-வித்தை மற்றும் அவித்தை குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {கராளனிடம்}, “நான் இவ்வளவு நேரம் சாங்கிய தத்துவம் குறித்து உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி வித்யை (அறிவு) எது, அவித்யை (அறியாமை) எது என்று ஒன்றன்பின் ஒன்றாக உனக்குச் சொல்லப்போகிறேன், கேட்பாயாக.(1) படைப்பு மற்றும் அழிவு எனும் குணங்கள் நிறைந்த பிரகிருதி அவித்யை (அறியாமை) என்றழைக்கப்படுவதாகவும்; அதே வேளையில் படைப்பு மற்றும் அழிவு ஆகிய குணங்களில் இருந்து விடுபட்டவனும், இருபத்துநான்கு {24} காரியங்கள் அல்லது கோட்பாடுகளைக் கடந்தவனுமான புருஷன் வித்யை (அறிவு) என்றழைக்கப்படுவதாகவும் கல்விமான்கள் சொல்கின்றனர்.(2) சாங்கிய தத்துவத்தில் அடுத்தடுத்து விளக்கப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் வித்யை எது என்று உனக்கு முதலில் சொல்கிறேன் கேட்பாயாக.(3) அறிவு மற்றும் செயற் புலன்களில் {ஞானகர்மேந்திரியங்களில்}, அறிவுப் புலன்களே {ஞானேந்திரியங்களே} வித்யையாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அறிவுப்புலன்கள் மற்றும் அவற்றின் பொருட்களுக்கிடையில் முன்னதே {ஞானேந்திரியங்களே} வித்யையைக் கொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம்.(4) புலன் நுகர் பொருட்கள் மற்றும் மனத்திற்கிடையில் மனமே வித்யையாக இருக்கிறதென ஞானிகள் சொல்கின்றனர். மனம் மற்றும் நுண்பூதங்கள் {சூக்ஷ்ம பூதங்கள்} ஐந்துக்கிடையில், ஐந்து நுட்பமான பூதங்களே வித்யையாக அமைகின்றன.(5)

ஐந்து நுண்பூதங்கள் மற்றும் நனவுநிலைக்கிடையில் {அகங்காரத்திற்கு இடையில்}, நனவுநிலையே {அகங்காரமே} வித்யையாக அமைகிறது. நனவுநிலை மற்றும் மஹத்-க்கு இடையில், ஓ! மன்னா {கராளா}, மஹத்தே வித்தையாகும்.(6) மஹத் முதலிய அனைத்துக் காரியங்கள் அல்லது கோட்பாடுகள் மற்றும் பிரகிருதிக்கிடையில், புலப்படாததும், உயர்ந்ததுமான பிரகிருதியே வித்யை என்றழைக்கப்படுகிறது. பிரகிருதி மற்றும் விதி என்றைழக்கப்படும் உயர்ந்ததற்கிடையில், பின்னதே {விதியே} வித்யை என்றறியப்பட வேண்டும்.(7) பிரகிருதியைக் கடந்திருக்கும் (புருஷன் என்றழைக்கப்படும்) இருபத்தைந்தாவதானது வித்யை என்றறியப்பட வேண்டும். ஓ! மன்னா, ஞானங்கள் அனைத்திலும், எது ஞானத்தின் பொருளாக இருக்கிறதோ, அது புலப்படாதது {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகிறது[1].(8) மேலும், ஞானம் புலப்படாதது என்றும், ஞானத்தின் பொருள், இருபத்துநான்கை {24 கோட்பாடுகளைக்} கடந்தது என்றும் சொல்லப்படுகிறது. மீண்டும் ஞானம் புலப்படாததென்றும், அறிபவன் {ஞேயன்} இருபத்துநான்கையும் கடக்கிறான் என்றும் சொல்லப்படுகிறது. நான் இப்போது வித்யை மற்றும் அவித்யை குறித்த செய்தியை உனக்குச் சொன்னேன்.(9) அழிவற்றவை மற்றும் அழியத்தக்கவை ஆகியவற்றைக் குறித்த அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் அழிவற்றவை என்றும், அவை இரண்டும் அழியத்தக்கவை என்றும் சொல்லப்பட்டுள்ளன.(10)இதன் காரணத்தை நான் புரிந்து கொண்டவாறு சரியாக உனக்குச் சொல்கிறேன். ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும், அல்லது அழிவும் அற்றவையாகும். (படைப்பின் காரியத்தில்) அவை இரண்டும் உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.(11) அவை இரண்டும் காரியங்கள் அல்லது கோட்பாடுகள் என்றழைக்கப்படவேண்டும் என்று ஞானம் கொண்டவர்கள் சொல்கிறார்கள். படைப்பு மற்றும் அழிவு (எனத் தொடரும்) குணங்களின் விளைவால் புலப்படாதது (அல்லது பிரகிருதி) அழிவற்றது என்று அழைக்கப்படுகிறது.(12) கோட்பாடுகளை உண்டாக்கும் நோக்கத்திற்காகப் புலப்படாதது மீண்டும் மீண்டும் மாறுதலுக்கு உட்படுகிறது.(13) மஹத் முதலிய கோட்பாடுகள் புருஷனாலும் உண்டாக்கப்படுவதாலும், புருஷனும், புலப்படாததும் {பிரகிருதியும்} ஒன்றையொன்று சார்ந்திருப்பதன் விளைவாலும், இருபத்தைந்தாவது {தத்துவமான} புருஷன் க்ஷேத்திரம் (அக்ஷரம் அல்லது அழிவற்றவன்) என்றும் அழைக்கப்படுகிறான்[2].(14) யோகியானவன் விடுபட்டு, புலப்படாத ஆன்மாவில் (அல்லது பிரம்மத்தில்) கோட்பாடுகள் அனைத்தையும் கலக்கும்போது, இருபத்தைந்தாவதும் (ஜீவன் அல்லது புருஷனும்) அந்தக் கோட்பாடுகள் அனைத்துடன் அதற்குள் மறைகிறான்.(15)கோட்பாடுகள் அதனதன் மூலங்களுக்குள் கலக்கும்போது, பிரகிருதி மட்டுமே எஞ்சுகிறது. ஓ மகனே, க்ஷேத்ரஜ்ஞனும் (ஜீவன் அல்லது ஆத்மாவும்) தன்னை உண்டாக்கிய காரணத்திற்குள் கலக்கும்போது,(16) (பிரம்மம் மட்டுமே எஞ்சியிருப்பதால்) பிரகிருதியானவள் கோட்பாடுகள் அனைத்துடன் சேர்ந்து க்ஷரமாகி (அல்லது அழிவடைந்து), கோட்பாடுகள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்ததன் விளைவால் குணங்களற்ற நிலையையும் அடைகிறாள்.(17) இவ்வாறே க்ஷேத்ரஜ்ஞன், க்ஷேத்திரத்தைக் குறித்த ஞானம் மறையும்போது, தன் இயல்பால் குணங்களற்றவனாகிறான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(18) அவன் க்ஷரமாகும்போது குணங்களை ஏற்கிறான். எனினும், அவன் தன் சொந்த இயல்பை அடையும்போது, தன்னுடைய குணங்களற்ற உண்மை நிலையைப் புரிந்து கொள்வதில் வெல்கிறான்.(19) பிரகிருதியைக் கைவிட்டு, அவளிடம் இருந்து தான் வேறுபட்டவன் என்று உணரத் தொடங்கும் புத்திமானான க்ஷேத்ரஜ்ஞன் அப்போது தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாகக் கருதப்படுகிறான்.(20) ஜீவன் பிரகிருதியுடன் ஒன்றாகக் கலந்திராத போது, அவன் பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுகிறான். எனினும், அவன் பிரகிருதியுடன் கலந்திருக்கும்போது, பிரம்மத்தில் இருந்து வேறுபட்டவனாகத் தெரிகிறான்.(21) உண்மையில், ஜீவன் பிரகிருதியிடமும், அவளது கோட்பாடுகளிடமும் எந்தப் பற்றும் காட்டாதபோது, அவன் பரமனைக் காண்பதில் வெல்கிறான், ஒருமுறை அவனை {பரமனைக்} கண்டதும் அந்த இன்பநிலையில் இருந்து வீழ்ந்துவிட அவன் விரும்புவதில்லை.(22)

உண்மையின் அறிவு தோன்றும்போது, ஜீவன் இவ்வகையில் அழுகிறான்: ஐயோ, வலையில் அகப்பட்ட மீனைப் போல, பிரகிருதியால் அமைந்த இந்த உடலில் அறியாமையால் வீழ்ந்ததன் மூலம் மடமையைச் செய்துவிட்டேன்.(23) ஐயோ, அறியாமையின் மூலம் மீனானது தன்னால் நீரில் மட்டுமே வாழ முடியும் என்று நினைத்து நீருக்கு நீர் மாறுவதைப் போலவே நான் உடலைவிட்டு உடல் மாறி வருகிறேன்.(24) உண்மையில், நீரைத் தவிர வேறு எதையும் தன் பூதமாக அறியாத மீனைப் போலவே, நானும் பிள்ளைகள் மற்றும் மனைவிகளைத் தவிர வேறு எதையும் என்னுடையதாக ஒருபோதும் அறியவில்லை.(25) (பரமாத்மாவைக் குறித்த) மறதியுடனும், அறியாமையின் மூலமும் மீண்டும் மீண்டும் உடல்விட்டு உடல் மாறிக் கொண்டிருக்கும் எனக்கு ஐயோ.(26) பரமாத்மா மட்டுமே என் நண்பனாவான். அவனுடன் நட்பு கொள்ளும் இயல்திறம் எனக்குண்டு. என் இயல்பு என்னவாக இருந்தாலும், நான் யாராக இருந்தாலும், நான் அவனைப் போல ஆகத் தகுந்தவனே, அவனைப் போன்ற நிலையை அடையவும் தகுந்தவனே.(27) நான் அவனுடனான ஒப்புமையைக் காண்கிறேன். உண்மையில், நான் அவனைப் போன்றவனே. அவன் களங்கமற்றவன். நானும் அதே இயல்பைக் கொண்டவன் என்பது தெளிவாகத் தெரிகிறது.(28)

அறியாமையாலும், திகைப்பினாலும் {மயக்கத்தினாலும்} நான் அசைவற்ற {உயிரற்ற ஜட} பிரகிருதியோடு தொடர்பையடைந்தேன். உண்மையில் பற்றில்லாதவனாக இருந்தாலும், பிரகிருதியுடனான பற்றுநிலையிலேயே நான் நீண்ட காலத்தைக் கடத்தியிருக்கிறேன்.(29) ஐயோ, இஃதை அறிய இயன்றவனாக இருந்தாலும், இவ்வளவு காலம் நான் அவளாலேயே {பிரகிருதியாலேயே} அடக்கப்பட்டேன். பிரகிருதியானவள் உயர்ந்த, நடுத்தரமான, இழிந்தவையான {வகைகளில்} பல்வேறு வடிவங்களை ஏற்கிறாள். ஓ!, நான் எவ்வாறு இந்த வடிவங்களில் வசித்தேன்?(30) நான் எவ்வாறு அவளோடு சேர்ந்து வாழ்ந்தேன்? என் அறியாமையின் விளைவால் மட்டுமே நான் அவளது {பிரகிருதியின்} துணை கொண்டேன். நான் இப்போது (சாங்கியத்திலோ, யோகத்திலோ} நிலைத்திருப்பேன்.(31) நான் இனியும் அவளது துணையைத் தக்கவைத்துக் கொள்ள மாட்டேன். அவளோடு சேர்ந்து {இவ்வளவையும்} கடந்து வந்த நான், இவ்வளவு காலம் அவளால் வஞ்சிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். ஏனெனில், உண்மையில் மாற்றமற்றவனான என்னால், மாறுதலுக்கு உட்படும் துணையை எவ்வாறு வைத்துக் கொள்ள முடியும்?(32) இதற்கு அவளைப் பொறுப்பாக்க முடியாது. பரமாத்மாவிடம் இருந்து திரும்பி, நானே அவளோடு பற்றுக் கொண்டேன் என்பதால் பொறுப்பு என்னுடையதே.(33) அந்தப் பற்றின் விளைவால் உண்மையில் வடிவமற்ற நான் பல்வேறு வடிவங்களை ஏற்க வேண்டியிருந்தது. உண்மையில் இயல்பாக வடிவமற்றவனாக இருப்பினும், மமதையின் விளைவால் பல்வேறு வடிவங்களை ஏற்று அவமதிப்பையும், துயரையும் அடைந்தேன்.(34)

பிரகிருதியுடைய விளைவுகளின் தொடர்பில் ஏற்பட்ட என் மமதையால் நான் பல்வேறு வகை உயிரினங்களாகப் பிறப்படைந்தேன். ஐயோ, உண்மையில் மமதையற்றவனாக இருப்பினும், நான் பிறவி எடுத்த வகைகளில், ஞானமனைத்தும் தொலைந்த ஆன்மாவைக் கொண்டனாகத் தீய இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்ததன் விளைவால் {மமதையெனும்} பாதிப்பை அடைந்தேன். நனவுநிலையின் {அகங்காரத்தின்} சாரமாக இருப்பவனிடமும் {சித்தத்திடமும்}, பல்வேறு துண்டுகளாய் தன்னைப் பிரித்துக் கொண்டு, அவற்றோடு என்னைச் சேர்க்க முனைபவளிடமும் {பிரகிருதியிடமும்} இனி எனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை. இப்போதுதான் நான் இயல்பாகவே மமதையற்றவன் என்றும், அனைத்திலும் என்னை ஈடுபடுத்தும் பிரகிருதியின் வடிவங்களை உண்டாக்கும் நனவுநிலை {அகங்காரம்} அற்றவன் என்றும் புரிந்து கொண்டு விழிப்படைந்திருக்கிறேன்[3].(35-37) எப்போதும் நனவுநிலையின் {அகங்காரத்தின்} சாரத்தால் செய்யப்பட்ட இந்த மமதையைக் கைவிட்டு, இந்தப் பிரகிருதியையே கைவிட்டு மங்கலமானவனை {அழிவற்ற பரமாத்மாவை} நான் புகலிடமாகக் கொள்வேன்.(38) நான் அவனிடமே கலந்திருப்பேன்; அசைவற்ற {ஜட} பிரகிருதியோடு கலந்திருக்க மாட்டேன். நான் அவனோடு கலந்திருந்தால் அஃது எனக்கு நன்மையை உண்டாக்கும். இயல்பிலேயே நான் பிரகிருதியில் இருந்து வேறுபட்டவன்” {என்று ஜீவன் அழுகிறான்}.(39) இருபத்தைந்தாவதாக இருப்பவன் (ஜீவன்), இவ்வாறு பரத்தைப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, அழியத்தக்கவற்றைக் கைவிட்டு, மங்கலமான அனைத்தின் சாரமாக இருக்கும் அழிவற்றதோடு {பரமாத்மாவோடு} சேர்த்துத் தன்னை அடையாளம் காண்கிறான் {அந்த ஜீவாத்மாவானவன் பரமாத்மாவோடு ஒன்றுகலக்கிறான்}.(40) உண்மை இயல்பில் குணங்களற்றவனும், உண்மையில் புலப்படாதவனுமான ஜீவன், புலப்படுபவையுடன் கூடி குணங்களை ஏற்கிறான். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {கராளா}, குணங்களற்றதும், புலப்படாததன் தோற்றுவாயுமான அதை {பரம்பொருளைக்} காண்பதில் அவன் வெல்லும்போது, அதனிலேயே அவன் தன்னை அடையாளம் காண்கிறான் {அதனுடன் நீக்கமறக் கலக்கிறான்}.(41)நான், என் அறிவுக்குத் தக்க வகையிலும், சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளபடியும் அழிவற்றது, அழியத்தக்கது ஆகியவற்றின் குறியீடுகளை இப்போது உனக்குச் சொன்னேன்.(42) நுட்பமானதும், களங்கமற்றதும், நிச்சயமானதுமான ஞானம் எவ்வாறு எழுகிறது என்பதை நான் கேள்விப்பட்டவாறே இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(43) சாங்கிய மற்றும் யோக அமைப்புகளுக்குரிய சாத்திரங்களின் படி அவற்றின் குறியீடுகளை நான் ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன். உண்மையில், சாங்கிய ஆய்வுகளில் விளக்கப்பட்டிருக்கும் அறிவியலும், யோக சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருப்பதும் ஒன்றாகவே இருக்கின்றன.(44) ஓ! ஏகாதிபதி {கராளா}, சாங்கியர்கள் சொல்லும் ஞானமானது அனைவரையும் விழிப்படையச் செய்யும் வல்லமை கொண்டதாகும். சாங்கிய சாத்திரங்களின் ஞானமானது, சீடர்களின் நன்மைக்காகவே மிகத்தெளிவாக மனத்தில் ஆழப்பதிய வைக்கப்படுகிறது.(45) இந்தச் சாங்கிய அமைப்பு மிகப் பரந்து விரிந்தது என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். யோகிகள், அந்த அமைப்பிலும், வேதங்களிலும் பெரும் மதிப்பை வைத்திருக்கிறார்கள்.(46) சாங்கிய அமைப்பில், இருபத்து நான்கைக் கடந்த எந்தக் காரியத்தையோ கோட்பாட்டையோ ஏற்பதில்லை. உயர்ந்த காரியம் அல்லது உயர்ந்த கோட்பாடு எனச் சாங்கியர்கள் கருதுவது முறையாக (என்னால்) விளக்கப்பட்டிருக்கிறது.(47) யோக தத்துவத்தில், இருமையற்ற {இரண்டற்ற} அறிவின் சாரமான பிரம்மமானது, அறியாமை கொள்வதாலேயே ஜீவனாகிறது என்று சொல்லப்படுகிறது. எனவே, யோக சாத்திரங்களில் பிரம்மம், ஜீவன் ஆகிய இரண்டும் பேசப்படுகின்றன {சாங்கியத்தில் பிரம்மம் பேசப்படுவதில்லை}” என்றார் {வசிஷ்டர்}.(48)

தக்கார் தகவிலார்! – சாந்திபர்வம் பகுதி – 309-பிரம்மம், சாங்கியம், யோகம் குறித்த அறிவுரையைப் பெறத்தக்கவர், தகாதவர் ஆகியோரைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “புத்தம் (பரமாத்மா) மற்றும் (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களின் வகைமுறையான அபுத்தம் (ஜீவன்) ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொல்லப்போவதைக் கேட்பாயாக. (மாயையின் ஆதிக்கத்தில்) பல வடிவங்களை ஏற்கும் பரமாத்மா, ஜீவனாகி அந்த வடிவங்கள் அனைத்தையும் உண்மையாகக் கருதுகிறான்[1].(1) அத்தகைய மாறுபாடுகளின் (அவற்றைத் தானாகவே கருதும்) விளைவால், (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களைக் கொள்ளும் ஜீவனானவன், படைப்பவனும், தான் படைத்தவற்றைத் தனக்குள்ளேயே ஈர்த்துக் கொள்பவனுமான பரமாத்மாவைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) ஓ! ஏகாதிபதி {கராளா}, இடைவிடாமல் விளையாட்டாக மாறுதலடையும் ஜீவன், புலப்படாததன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளவல்லவனாக இருக்கும் காரணத்தால், புத்யமானன் (புரிந்து கொள்பவன்) என்றழைக்கப்படுகிறான்[2].(3) குணங்களுடன் வெளிப்படும் பிரம்மமானது உண்மையில் குணங்களற்றது என்பதைப் புலப்படாததால் அல்லது பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. எனவே பிரகிருதியானது புத்தியற்றதாகச் சொல்லப்படுகிறது[3].(4) எப்போதாவது பிரகிருதியால் இருபத்தைந்தாவதை (ஜீவனை) அறியமுடியுமென்றால், அப்போது அந்தப் பிரகிருதியானது (ஜீவனிலிருந்து வேறுபட்ட ஒன்றாக அறியப்படாமல்) அதனோடு கலந்திருக்கும் ஜீவனாகவே அடையாளம் காணப்படும் என்று ஸ்ருதிகளில் ஒரு தீர்மானம் இருக்கிறது. (எனினும், கலப்படமில்லாததும், தொடர்பற்றதும், இருபத்தைந்தாவதைக் கடந்திருப்பதுமான பரமாத்மாவைப் பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது). இதன் விளைவால் புலப்படாதவனும், உண்மையான இயல்பின்படி மாற்றமில்லாதவனுமான ஜீவன், அல்லது புருஷனானவன், விழிப்பற்றவன் அல்லது அறியாமை கொண்டவன் என்று அழைக்கப்படுகிறான்.(5)உண்மையில், இருபத்தைந்தாவதால் {ஜீவனால்} புலப்படாததை {அவ்யக்தத்தைப்} புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவன் புத்யமானன் என்றழைக்கப்படுகிறான். எனினும், களங்கமானதும், இருமையற்ற அறிவானதும், அளக்க முடியாததும், நித்தியமானதுமான இருபத்தாறாவதை {பிரம்மத்தை} அவனால் உடனே புரிந்து கொள்ள முடியாது. இருபத்தாறாவதால் {பிரம்மத்தால்} இருபத்தைந்து மற்றும் இருபத்து நான்காவதாக இருக்கும் ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டையும் அறிந்து கொள்ள முடியும்.(6,7) ஓ! பேரொளி கொண்டவனே, புலப்படாததும், காணப்படுவது, காணப்படாதது ஆகிய அனைத்தின் உண்மை இயல்பையும் உட்பொதிந்திருப்பதும், அண்டத்தில் எச்சார்பும் அற்ற ஒன்றேயொன்றுமான பிரம்மத்தை அறிந்து கொள்வதில் ஞானம் கொண்ட மனிதர்கள் மட்டுமே வெல்கிறார்கள்.(8) ஜீவன் தன் உண்மை இயல்பில் இருந்து வேறுபட்டவனாகத் தன்னைத் தானே கருதிக் கொள்ளும்போது (அதாவது, தன்னைப் பருத்தவன், மெலிந்தவன், வெளுத்தவன், கருத்தவன், பிராமணன் அல்லது சூத்திரன் என்று கருதிக் கொள்ளும்போது), அவன் பரமாத்மாவையும், தன்னையும், தான் கலந்திருக்கும் பிரகிருதியையும் (அவள் தன்னில் இருந்து வேறுபட்டவள் என்பதையும்) அறிந்து கொள்ளத் தவறுகிறான்.(9) ஜீவன் பிரகிருதியைப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, அவன் தன் இயல்புக்கு மீண்டவனாகச் சொல்லப்படுகிறான். மேலும் அவன் (பிரம்மம் தொடர்பான) களங்கமற்றதும், தூய்மையானதும், உயர்ந்ததுமான புத்தியை அடைகிறான்.(10)

ஓ! மன்னர்களில் புலியே {கராளனே}, அந்தச் சிறந்த புத்தியை ஜீவன் அடையும்போது, இருபத்தாறாவதாக (அல்லது பிரம்மமாக) அழைக்கப்படும் (இருமையற்ற) தூய அறிவை அடைகிறான். பிறகு அவன் படைப்பு மற்றும் அழிவுக்குரிய குணங்கள் நிறைந்த புலப்படாதது அல்லது பிரகிருதியைக் கைவிடுகிறான்.(11) புத்தியற்றதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் ஆதிக்கத்தில் செயல்படுவதுமான பிரகிருதியை அறிந்து கொள்வதில் ஜீவன் வெல்லும்போது, அவன் குணங்களற்றவனாகிறான். இவ்வாறு புலப்படாததை {பிரகிருதியை} (தன்னில் இருந்து வேறுபட்டதாக) புரிந்து கொள்வதன் விளைவால் அவன் பரமாத்மாவின் இயல்பை அடைவதில் வெல்கிறான்.(12) (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) குணங்களில் இருந்து அவன் விடுபட்டு, பரமாத்ம இயல்பில் கலக்கும்போது, ஜீவன் அந்தப் பரமாத்மாவுடன் அடையாளம் காணப்படுகிறான் {பரமாத்மாவாகவே காணப்படுகிறான்}. பரமாத்மா, சிதைவு மற்றும் அழிவைக் கடந்த தத்துவமற்ற தத்துவம் என்றழைக்கப்படுகிறான்.(13) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, ஆன்மாவானது, (உடலின்) புலப்படும் கோட்பாடுகளைத் தன் ஓய்விடமாகக் கொண்டிருந்தாலும், அந்தக் கோட்பாடுகளின் இயல்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. (ஜீவாத்மாவையும் சேர்த்து) மொத்தம் இருபத்தைந்து கோட்பாடுகள் (தத்துவங்கள்) உள்ளதாக ஞானிகள் சொல்கிறார்கள்.(14) உண்மையில், ஓ! மகனே, ஆன்மாவானது (மஹத் உள்ளிட்ட) கோட்பாடுகள் எதையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதில்லை. புத்தியுடன் கூடிய அது {ஆன்மா}, கோட்பாடுகளைக் கடந்து நிற்கிறது. அறியும் (அல்லது விழிப்படையும்) ஒருவனுடைய குறியீடாக இருக்கும் கோட்பாட்டையும் அது விரைவில் கைவிடுகிறது[4].(15)

ஜீவன், சிதைவும் அழிவும் அற்ற இருபத்தாறாவதாகத் தன்னைக் கருதும்போது, அவன் தன் சக்தியால் இருபத்தாறாவதோடான ஒப்புமையை அடைகிறான்.(16) தூய புத்தியான இருபத்தாறவதால் விழிப்படையச் செய்யப்பட்டாலும், ஜீவன் அறியாமையை அடைகிறான். ஸ்ருதிகள் மற்றும் சாங்கிய சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளபடி இந்தக் காரணத்தினாலேயே ஜீவன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான்.(17) சேதனம் (மற்றும் புத்தியற்ற பிரகிருதி ஆகியவற்றுடன்) கூடிய ஜீவன், தன் நனவு அனைத்தையும் இழக்கும்போது, அவன் பல்வேறு வடிவங்களை இழந்து மீண்டும் ஒருமையை அடைகிறான்.(18) ஓ! மிதிலையின் ஆட்சியாளா {கராளா}, இன்ப துன்பங்களுடன் கலந்தவனாகக் காணப்படுபவனும், தன் நனவில் இருந்து அரிதாகவே விடுபடுபவனுமான ஜீவன், புத்தியைக் கடந்திருக்கும் பரமாத்மாவுடன் ஒப்புமையை அடைவதில் வெல்லும்போது, அவன் அறம் மற்றும் மறத்தில் {தர்ம அதர்மங்களில்} இருந்து விடுபடுகிறான்.(19) உண்மையில் ஜீவன், பிறப்பற்றதும், பலமிக்கதும், பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டதுமான இருபத்தாறாவதை {பிரம்மத்தை} அடைந்து, அதை முழுமையாகப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, தானே பலமிக்கவனாகி, புலப்படாதது, அல்லது பிரகிருதியை முற்றாகக் கைவிடுகிறான்.(20)

ஜீவனானவன், இருபத்தாறாவதைப் புரிந்து கொண்டதன் விளைவால், இருபத்து நான்கு கோட்பாடுகளும் அவனுக்கு உண்மையற்றவையாகவோ, மதிப்பற்றவையாகவோ ஆகிறது. ஓ! பாவமற்றவனே, புத்தியற்றது (அல்லது பிரகிருதி), ஜீவன், தூய அறிவு (பரமாத்மா) ஆகியவற்றை ஸ்ருதிகளில் குறிப்பிட்டுள்ளபடியும், உண்மைக்கு ஏற்புடைய வகையிலும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். பன்மையும், ஒருமையும் சாத்திரங்களின் வழிகாட்டலின்படி இவ்வாறே புரிந்துகொள்ளப்படுகின்றன.(21,22) கொசுவுக்கும், உடும்பரத்திற்கும் {அத்திக்கும்} இடையில் உள்ள, அல்லது மீனுக்கும் நீருக்கும் இடையிலான வேறுபாடுகள், ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்றன[5].(23) இவ்விரண்டின் {ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகியவற்றின்} பன்மை மற்றும் ஒருமை இவ்வழியிலேயே புரிந்து கொள்ளப்படுகிறது. புத்தியற்ற, அல்லது புலப்படாத பிரகிருதியில் இருந்து வேறுபட்ட ஒன்றைக் குறித்த இந்தப் புரிதலே, அல்லது தன்னறிவே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுகிறது.(24) உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் இருபத்தைந்தாவதானது {ஜீவாத்மாவானது}, புத்தியைக் கடந்திருக்கும் புலப்படாததை அல்லது பரமாத்மாவை அறிந்து விடுதலை {முக்தியை} அடைய வேண்டும்.(25)உண்மையில், இருபத்தைந்தாவதானது {ஜீவாத்மாவானது} இவ்வழியில் மட்டுமே விடுதலையை அடையவல்லதாக உள்ளதேயன்றி, வேறு எவ்வழிமுறைகளினாலும் அல்ல என்பது உறுதியானதாகும். தற்சமயம் தான் வசிக்கும் க்ஷேத்திரத்தில் இருந்து உண்மையில் வேறுபட்டவனாக இருப்பினும், அதனுடன் கலந்திருப்பதன் விளைவால் அவன் {ஜீவன் / க்ஷேத்திரஜ்ஞன் அந்த} க்ஷேத்திரத்தின் இயல்பையே அடைகிறான்.(26) தூய்மையானதுடன் சேர்ந்து அவன் தூய்மையடைகிறான். புத்தியுடன் சேர்ந்து அவன் புத்திமானாகிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, விடுதலையடைந்தவனுடன் {முக்தனுடன்} சேர்வதன் மூலம், அவன் விடுதலையடைகிறான்.(27) அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனுடன் சேர்வதன் மூலம் அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். விடுதலையை அடைய முனைபவனுடன் சேர்வதன் மூலம், அவனது தோழமையின் இயல்பால் ஈர்க்கப்பட்டு, தானும் விடுதலை அடைய முனைகிறான்.(28) தூய செயல்களைச் செய்பவனுடன் சேர்வதன் மூலம் அவன் தூய்மையான செயல்களைச் செய்பவனாகவும், சுடர்மிக்க ஒளியைக் கொண்டவனாகவும் தூயனாகிறான். களங்கமற்ற ஆன்மா கொண்டவனுடன் சேர்வதன் மூலம் அவனும் களங்கமற்ற ஆன்மா கொண்டவனாகிறான்.(29) சார்பற்ற ஒரே ஆன்மாவுடன் சேர்வதன் மூலம் அவன் ஒருவனாகவும், சார்பற்றவனாகவும் {சுதந்திரனாகவும்} ஆகிறான். தன்னான்மாவின் சார்பு கொண்ட ஒருவன், அதே இயல்பினனாகி சார்பற்ற {சுதந்திர} நிலையை அடைகிறான்.(30)

ஓ! ஏகாதிபதி {கராளா}, முற்றான உண்மையாக இருக்கும் அனைத்தையும் உனக்கு முறையாகச் சொல்லியிருக்கிறேன். நித்தியமான, களங்கமற்ற, தொடக்ககாலப் பிரம்மத்தைக் குறித்து நான் ஒருசார்பின்றி நேர்மையாக உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(31) ஓ! மன்னா, வேதங்களை அறியாதவனாக இருந்தாலும், பணிவானவனும், பிரம்ம அறிவை அடைவதில் விருப்பமும், ஆவலும் கொண்ட ஒரு மனிதனுக்கே ஆன்ம விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த உயர்ந்த அறிவைப் புகட்டலாம்.(32) பொய்மையையே புத்தியாகக் கொண்டவனுக்கோ, வஞ்சகனுக்கோ, ஒழுக்கமற்றவனுக்கோ, மனோபலம் அற்றவனுக்கோ, கோணல் புத்தி கொண்டவனுக்கோ, ஞானிகளிடம் பொறாமை கொண்டவனுக்கோ, பிறருக்குத் துன்பம் அளிப்பவனுக்கோ இஃது ஒருபோதும் புகட்டப்படக்கூடாது. இந்த ஞானத்தைப் பாதுகாப்பாக யாருக்கெல்லாம் புகட்டலாம் என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(33) நம்பிக்கையுடன் கூடியவனுக்கோ, தகுதி {புண்ணியம்} உடையவனுக்கோ, பிறரைக் குறித்துத் தீயன பேசுவதை எப்போதும் தவிர்ப்பவனுக்கோ, தூய நோக்கங்களில் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவனுக்கோ, அறிவும், விவேகமும் கொண்டவனுக்கோ, வேள்விகள் மற்றும் வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்குகளைச் செய்பவனுக்கோ, மன்னிக்கும் மனோநிலை கொண்டவனுக்கோ, அனைத்து உயிரினுக்கும் நன்மை செய்பவனுக்கோ, கருணை கொண்டவனுக்கோ,(34) தனியொருவனாகத் தனிமையில் வசிக்க விரும்புபவனுக்கோ, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களை அனைத்தையும் செய்ய விரும்புபவனுக்கோ, சண்டை சச்சரவுகளை வெறுப்பவனுக்கோ, பெரும் கல்விமானுக்கோ, ஞானம் கொண்டவனுக்கோ, மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, ஆன்ம அமைதி ஆகியவற்றைக் கொண்டவனுக்கோ இது கொடுக்கப்படலாம்.(35)

இத்தகைய குணங்கள் இல்லாதவனுக்குப் பிரம்மத்தைக் குறித்த இந்த உயர்ந்த அறிவு உபதேசிக்கப்படக்கூடாது. இதைத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த கொள்ளிடம் கொண்டவரெனக் கருதப்பட முடியாத எவருக்கும் இந்த அறிவைப் புகட்டுவன் மூலம் எந்தப் பயனோ, நற்கனியோ எழுவதில்லை எனச் சொல்லப்படுகிறது.(36) எந்த நோன்புகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாத ஒருவன், அனைத்து வகைச் செல்வங்கள் மற்றும் ரத்தினங்கள் நிறைந்த மொத்த பூமியையும் {இந்த உயர்ந்த ஞானத்தை அடைவதற்காக} பரிமாறிக் கொள்ள முன்வந்தாலும், அவனுக்கு இந்த உயர்ந்த அறிவானது ஒருபோதும் புகட்டப்படக்கூடாது. எனினும், ஓ! மன்னா, புலன்களை வென்ற ஒருவனுக்கு இது நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும்.(37) ஓ கராளா, நீ இன்று என்னிடமிருந்து உயர்ந்த பிரம்மத்தைக் குறித்த அனைத்தையும் கேட்டிருப்பதால் இனியும் நீ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தொடக்கமும், நடுநிலையும் (முடிவும்) இல்லாததும், அனைத்து வகைத் துன்பங்களையும் போக்கவல்லதும், உயர்ந்ததும், புனிதமானதுமான பிரம்மத்தைக் குறித்து நான் உனக்கு முறையாகச் சொல்லிவிட்டேன்.(38) ஓ!மன்னா, மங்கலம் நிறைந்ததும், அனைத்து அச்சங்களையும் போக்கவல்லதும், உயர்ந்த நன்மையை உண்டாக்கவல்லதும், பிறப்பு இறப்பை அகற்றவல்லதுமான பிரம்மத்தைக் கண்டும், அறிவனைத்தின் சாரத்தை அடைந்தும் பிழை மற்றும் திகைப்பனைத்தையும் {மோஹத்தை} இன்றே கைவிடுவாயாக.(39) ஓ! மன்னா, மிக மேன்மையான ஆன்மா கொண்ட பெரும்பூதமும், நித்தியமானவனுமான ஹிரண்யகர்ப்பனைக் கவனமாக நிறைவு செய்ததால், அவனிடம் இருந்தே இந்த அறிவை நான் அடைந்தேன். ஓ! ஏகாதிபதி, இன்று உன்னால் கேட்கப்பட்டதும், என் ஆசானிடம் இருந்து நான் பெற்றதைப் போலவே அந்தப் பிரம்ம அறிவை உனக்குப் புகட்டியிருக்கிறேன். உண்மையில், விடுதலையை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக உள்ள இந்த உயர்ந்த அறிவை, நான் பிரம்மனிடம் இருந்து பெற்றதைப் போன்றே சரியாக உனக்குப் புகட்டியிருக்கிறேன்” என்றார் {வசிஷ்டர்}”.(40,41)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “எதை அடைவதன் மூலம் இருபத்தைந்தாவது (அல்லது ஜீவன்) ஒருபோதும் திரும்ப வேண்டியதில்லையோ அந்த உயர்ந்த பிரம்மத்தைக் குறித்து (ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னன் கராளனிடம்) பெருமுனிவர் (வசிஷ்டர்) சொன்னதற்கு ஏற்புடைய வகையிலேயே நானும் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(42) சிதைவிற்கும், மரணத்திற்கும் உட்படாத பரமாத்மாவை உண்மையில் அறியாததன் விளைவால், ஜீவன் மீண்டும் மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பும் கடப்பாடு உண்டாகிறது. எனினும், அந்த உயர்ந்த அறிவை அடைவதில் ஜீவன் வெல்லும்போது, அவன் மீண்டும் திரும்ப வேண்டியதில்லை.(43) ஓ! மன்னா, ஓ! மகனே, அந்தத் தெய்வீக முனிவரிடம் {நாரதரிடம் இருந்து} நான் கேட்டதும், உயர்ந்த நன்மையை உண்டாக்க வல்லதுமான உயர்ந்த அறிவை நான் உனக்குப் புகட்டியிருக்கிறேன்.(44) இந்த அறிவானது உயர் ஆன்மா கொண்ட முனிவர் வசிஷ்டரால் ஹிரண்யகர்ப்பனிடம் இருந்து பெறப்பட்டதாகும்.முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரிடம் இருந்து அது நாரதரால் பெறப்பட்டது.(45) நித்தியமான பிரம்மத்துடன் உண்மையில் அடையாளங்காணப்படும் அந்த அறிவை நாரதரிடம் இருந்தே நான் அடைந்தேன். ஓ! குருக்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும், சிறந்த வார்த்தைகள் நிறைந்ததுமான இந்த உரையைக் கேட்ட நீ, இதற்கு மேலும் துன்ப வசப்படக்கூடாது.(46)

க்ஷரம் மற்றும் அக்ஷரம் ஆகியவற்றை அறிந்த மனிதன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான். உண்மையில், ஓ! மன்னா, இந்த ஞானத்தை அடையாதவனே அச்சத்தை வளர்ப்பான்.(47) மூட ஆன்மா கொண்ட மனிதன், (பிரம்மத்தைக் குறித்த) அறியாமையின் விளைவால், இந்த உலகத்திற்கு மீண்டும் மீண்டும் திரும்புகிறான். உண்மையில், இந்த வாழ்வில் இருந்து அகன்றதும் {இறந்ததும்}, மரணத்தையே கதியாகக் கொண்ட ஆயிரமாயிரம் பிறவி வகைகளில் அவன் பிறக்க வேண்டியிருக்கும்.(48) தேவர்களின் உலகிலும், மனிதர்களின் உலகிலும், இடைநிலை வகை {உயிரினங்களின்} உலகிலும் அவன் மீண்டும் மீண்டும் தோன்றவேண்டியிருக்கும். காலப்போக்கில் அவன் தான் மூழ்கிய அறியாமை எனும் பெருங்கடலைக் கடப்பதில் வென்று, மொத்தமாக மறுபிறவியைத் தவிர்ப்பதிலும் வென்று, பரமாத்மாவுடன் அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான்.(49) அறியாமையெனும் பெருங்கடல் பயங்கரமானதாகும். அடியற்ற அது புலப்படாதது என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, நாளுக்கு நாள் உயிரினங்கள் அந்தப் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்குவது காணப்படுகிறது.(50) ஓ! மன்னா, நித்திமானதும், அளவற்றதுமான அறியாமையெனும் பெருங்கடலில் இருந்து நீ விடுபட்டதால், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் இருந்தும் விடுபடுவாய்” என்றார் {பீஷ்மர்}.(51)

அறமீட்டல்! – சாந்திபர்வம் பகுதி – 310-ஆறமீட்டல் மற்றும் அறிவு ஈட்டல் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் வசுமானுக்கு விளக்கிச் சொன்ன பிராமண முனிவர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு காலத்தில், ஜனக குல மன்னன் ஒருவன் {மன்னன் வசுமான்}, வசிப்பாரற்ற காடுகளில் மானைத் தேடித் திரிந்து கொண்டிருந்தபோது, பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு மேன்மையான பிராமணரை அல்லது முனிவரைக் கண்டான்.(1) சுகமாக அமர்ந்திருந்த அந்த முனிவருக்குத் தலைவணங்கிய அந்த மன்னன் வசுமான், அவர் அருகில் அமர்ந்து, அவர் அனுமதியுடன் இந்தக் கேள்வியைக் கேட்டான்:(2) “ஓ! புனிதமானவரே, நிலையற்ற உடலைக் கொண்டவனும், ஆசைகளுக்கு அடிமையாக இருப்பவனுமான ஒரு மனிதனுக்கு இம்மையிலும், மறுமையிலும் எது உயர்ந்த நன்மையை உண்டாக்கும்?” என்று கேட்டான்(3) மன்னனால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு இவ்வாறு கேட்கப்பட்டவரும், தவத் தகுதி கொண்டவருமான அந்த முனிவர் நன்மைமிக்க வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(4)

முனிவர் {மன்னன் வசுமானிடம்}, “உன் மனத்திற்கு ஏற்புடைய வகையில் இம்மையையும், மறுமையையும் நீ விரும்பினால், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்பில்லாதவற்றைச் செய்வதை நீ தவிர்க்க வேண்டும்.(5) நல்லோருக்கு அறமே நன்மையானது. நல்லோருக்கு அறமே புகலிடமாக இருக்கிறது. அறத்திலிருந்தே அசையும் மற்றும் அசையாத உயிரனங்களுடன் கூடிய மூவுலகங்களும் உண்டாகின.(6) ஓ! ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் ஆவலும், விருப்பமும் கொண்டவனே, ஆசைக்குரிய பொருட்களில் நீ இன்னும் தெவிட்டாமல் இருப்பது எவ்வாறு? ஓ! சிறு மதிகொண்டோனே, நீ தேனைக் காண்கிறாயேயன்றி, பள்ளத்தைக் காணாத குருடனாக இருக்கிறாய்.(7) அறக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவன் அறமீட்டுவதில் தன்னை நிறுவிக் கொள்வதைப் போலவே அறிவுக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவனும் தன்னை அறிவை ஈட்டுவதில் நிறுவி கொள்ள வேண்டும்.(8) தீய மனிதன் ஒருவன், அற விருப்பத்தின் காரணமாக, களங்கமற்ற தூய செயலொன்றைச் செய்ய முனைந்தால், அவனது ஆசை நிறைவடைவது சாத்தியமில்லாமல் போகிறது. மறுபுறம், நல்லோனொருவன் அறமீட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டுக் கடினமான ஒரு செயலைச் செய்ய முனைந்தாலும், அஃது அவனுக்கு எளிதாக இருக்கிறது.(9) காட்டில் வசிக்கும் ஒருவன், நகரத்தில் வாழும் இல்லறத்தாரின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் காட்டுத் துறவியாக அல்லாமல் நகரவாசியாகவே பார்க்கப்படுவான். அதே போல நகரத்தில் வசிக்கும் ஒருவன், வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய இன்பநிலையை அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் நகரவாசியாக அல்லாமல் காட்டுவாசியாகவே பார்க்கப்படுவான்.(10)

செயல்களின் அறத்தகுதிகளை உறுதி செய்து கொண்டு, செயல்களைத் தவிர்த்து, குவிந்த புலன்களுடன், எண்ணம், சொல் மற்றும் செயலில் அறப்பயிற்சிக்கு உன்னை நீ அர்ப்பணிக்க வேண்டும்.(11) காலம், இடம் ஆகியவற்றின் ஆதிக்கத்தைத் தீர்மானித்து, நோன்புகளையும், தூய்மையாக்கும் பிற சடங்குகளையும் செய்து தூய்மையடைந்து, வன்மம் இல்லாமல் நல்லோருக்குப் பெருங்கொடைகளை அளிக்க வேண்டும்.(12) நேர்மையான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டும் ஒருவன், அதைத் தகுந்தோருக்குக் கொடையளிக்க வேண்டும். ஒருவன் கோபத்தைக் கைவிட்டு கொடையளிக்க வேண்டும்; கொடையளித்த பிறகு, அதுகுறித்து வருந்தவோ, அதைப் பற்றிப் பேசவோ கூடாது.(13) கருணை நிறைந்தவனும், தூய்மையானவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், பேச்சில் வாய்மை கொண்டவனும், வெளிப்படைத்தன்மை கொண்டவனும், பிறப்பால் தூய்மையானவனுமான பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(14) ஒரே கணவனைக் கொண்டவளும், தன் கணவன் சார்ந்த வகையைச் சார்ந்தவளுமான தாய்க்குப் பிறந்த ஒருவன் தூய பிறப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், ரிக், யஜுஸ் மற்றும் சாமம் எனும் மூன்று வேதங்களை அறிந்தவனும், (வேள்விகள் செய்வது, பிறரின் வேள்விகளைச் செய்து கொடுப்பது, கல்வி, கற்பித்தல், கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) ஆறு கடமைகளை முறையாகச் செய்பவனுமான அத்தகைய பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(15)

செயல்படுபவன், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தன்மைக்கேற்றபடி, அறம் மறமாகவும், மறம் அறமாகவும் மாறுகிறது.(16) பாவமானது, ஒருவனுடைய உடலில் உள்ள புழுதியைப் போல அகற்றப்பட வேண்டும். சிறியதை சிறு முயற்சியாலும், பெரியதை பெரிய முயற்சியாலும் அகற்ற வேண்டும்.(17) ஒரு மனிதன் தன் குடலின் மாசகற்றிய பிறகு, தன் உடலமைப்பில் (நலம் தரும் சத்து மருந்தாக) மிக நன்மையான செயலைச் செய்யும் நெய்யை உட்கொள்ள வேண்டும். அதே போலவே, ஒருவன் களங்கமனைத்திலும் இருந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அறமீட்டுவதில் தன்னை நிறுவி கொண்டால் அந்த அறமானது மறுமையில் உயர்ந்த மகிழ்ச்சியை நிச்சயம் உண்டாக்கும்.(18) உயிரினங்கள் அனைத்தின் மனத்திலும் நல்ல மற்றும் தீய எண்ணங்கள் இருக்கின்றன. தீய எண்ணங்களில் இருந்து மனத்தை விலக்கி, அதை நற்சிந்தனைகளை நோக்கிச் செலுத்த வேண்டும்.(19) ஒருவன் தன்னுடைய வகைக்குண்டான நடைமுறைகளை எப்போதும் மதிக்க வேண்டும். எனவே, நீ உன் வகைக்கான நடைமுறைகளில் நம்பிக்கை கொள்ளும் வகையில் செயல்படுவாயாக.(20)

ஓ! பொறுமையற்ற ஆன்மா கொண்டவனே, பொறுமையைப் பயில்வாயாக. ஓ! மூட புத்தி கொண்டவனே, புத்தியடைய முனைவாயாக. அமைதியற்றவனே அமைதியை நாடுவாயாக, ஞானமற்றவனே, ஞானத்துடன் செயல்பட முனைவாயாக.(21) அறவோரின் தோழமையுடன் திரியும் ஒருவன் இம்மைக்கும், மறுமைக்குமான நன்மையான வழிமுறைகளைத் தன் சொந்த சக்தியின் மூலமே அடைவான்.(22) அரசமுனியான மஹாபிஷன் உறுதியற்றவனாக இருந்ததால் சொர்க்கத்தில் இருந்து விழுந்தான். யயாதியும் கூட, (தற்பெருமை பேசியதன் விளைவால்) தன் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் (சொர்க்கத்தில் இருந்து வீசியெறியப்பட்டாலும்) அவன் தன் உறுதியினால் இன்பவுலகங்களை மீண்டும் அடைவதில் வென்றான்.(23) அறவோர் மற்றும் தவத்தகுதி கொண்ட கல்விமான்களுடன் சேர்வதால் நீ பெரும் புத்தியையும், உனக்கான உயர்ந்த நன்மையையும் நீ அடைவாய்” என்றார் {அந்த முனிவர்}”.(24)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தவசியின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், நல்ல மனோநிலை கொண்டவனுமான மன்னன் வசுமான், ஆசைத் தேடல்களைத் தன் மனத்தில் இருந்து விலக்கி, அதை {மனத்தை} அறமீட்டுவதில் நிறுவினான்”.(25)

யாஜ்ஞவல்கியர்! – சாந்திபர்வம் பகுதி – 311-பிரகிருதி மற்றும் படைப்புமுறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடமையில் இருந்து விடுபட்டதும், அதற்கு மாறானதும் {தர்ம அதர்மங்களில் இருந்து விடுபட்டதும்}, அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டதும், பிறப்பு, இறப்பு, அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகியவற்றைக் கடந்திருப்பதும், மங்கலமானதும், நித்திய அஞ்சாமையும், நித்தியமானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததும், எப்போதும் தூய்மையானதும், கடும் உழைப்பில் இருந்து எப்போதும் விடுபட்டதும் எதுவோ, அதைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1,2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் யாஜ்ஞவல்கியர் மற்றும் ஜனகன் {ஜனககுல மன்னன் தேவராதன்} ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில், கேள்விகள் அனைத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்தவனும், புகழ்பெற்றவனுமான ஜனக குல மன்னன் தேவராதன், முனிவர்களில் முதன்மையான யாஜ்ஞவல்கியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)

ஜனகன் {தேவராதன், யாஜ்ஞவல்கியரிடம்}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, புலன்கள் எத்தனை வகைப்படும்? பிரகிருதி எத்தனை வகைப்படும்? புலப்படாதது {அவ்யக்தம்} எது? உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} எது? பிரம்மத்தைவிட உயர்ந்தது எது?(5) பிறப்பும், இறப்பும் எது? கால அளவுகள் என்னென்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது அருளைப் பெற்று உம்மிடம் நான் வேண்டும் இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(6) நானோ அறியாதவன், நீரோ ஞானப் பெருங்கடல். எனவே, உண்மையில் கேட்க விரும்பியே இக் காரியங்கள் குறித்து உம்மைக் கேட்கிறேன்” என்றான்.(7)

யாஜ்ஞவல்கியர் {தேவராதனிடம்}, “ஓ! ஏகாதிபதி, உன் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கிறேன் கேட்பாயாக. யோகிகள் மதிப்பதும், சாங்கியர்களிடம் உள்ளதுமான உயர்ந்த ஞானத்தை நான் உனக்குச் சொல்கிறேன்.(8) நீ அறியாதது ஏதுமில்லை. இருந்தும் என்னைக் கேட்கிறாய். எனினும், கேள்வி கேட்கப்படுபவன் பதிலளிக்க வேண்டும். இதுவே நித்திய நடைமுறையாம்.(9) பிரகிருதி என்ற பெயரில் எட்டுக் {8} கோட்பாடுகள் அழைக்கப்படுகின்றன, அதே வேளையில் மாறுபாடுகள் என்று பதினாறு {16 விகாரங்கள்}அழைக்கப்படுகின்றன. புலப்படாதவை {அவ்யக்தம்} ஏழாகும் {7}. இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தோரின் கருத்துகளாக இருக்கின்றன.(10) புலப்படாதது (அல்லது மூலப் பிரகிருதி {அவ்யக்தம்}), மஹத், நனவுநிலை {அகங்காரம்}, பூமி, காற்று, வெளி, நீர், ஒளி(11) ஆகிய நுட்பமான ஐந்து பூதங்கள் உள்ளிட்ட இந்த எட்டும் பிரகிருதி என்ற பெயரில் அறியப்படுகின்றன. மாறுபாடுகள் {விகாரங்கள்} என்றழைக்கப்படுபவற்றின் பட்டியலை இப்போது கேட்பாயாக. காது, தோல், கண், நாக்கு, மூக்கு;(12) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம், வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் இன்பஉறுப்புகள் {மற்றும் மனம்} ஆகியவையே அவை[1].(13)இவற்றில் ஒலி முதலிய பத்தும், ஐம்பெரும் கோட்பாடுகளில்[2] பிறப்பவையும் விசேஷங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஓ! மிதிலையின் ஆட்சியாளா, அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும் சவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றன.(14) அத்யாத்ம அறிவியலை அறிந்த மனிதர்கள் மனத்தைப் பதினாறாவதாகக் கருதுகிறார்கள். இஃது உன் கருத்துகளுக்கும், கோட்பாடுகள் குறித்த உண்மைகள் அறிந்த பிற கல்விமான்களுக்கும் இணக்கமானதே ஆகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து மஹத்-ஆன்மா {ஹிரண்ய கர்ப்பனின் நான்கில் ஒரு பங்கு} உண்டாகிறது. பிரதானம் (அல்லது பிரகிருதி) தொடர்பான முதல் படைப்பு இஃது எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(16) ஓ! மனிதர்களின் மன்னா, மஹத்திலிருந்து நனவுநிலை {அஹங்காரம்} உண்டாகிறது. புத்தியைத் தன் சாரமாகக் கொண்ட இஃது இரண்டாம் படைப்பு என்றழைக்கப்படுகிறது[3].(17) நனவுநிலையில் {அஹங்காரத்தில்} இருந்து ஒலியைத் தன் சாரமாகக் கொண்ட மனமும், வெளியின் {ஆகாயத்தின்} குணங்களைக் கொண்ட பிறவும், எஞ்சியவையும எழுந்தன. இது நனவுநிலை தொடர்பானது மூன்றாம் படைப்பு என்று சொல்லப்படுகிறது.(18) ஓ! மன்னா, மனத்தில் இருந்து (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்கள் உண்டாகின. மனோநிலை {மானஸம்} என்று நான் சொல்வது போல அழைக்கப்படும் இதை, நான்காம் படைப்பாக அறிவாயாக.(19) (அடிப்படை) பெரும் பூதங்களின் தொடர்புடைய ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகியவை ஐந்தாம் படைப்பு எனப் பூதங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(20)காது, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகியவற்றின் {அறிவுப்புலன்களின் / ஞானேந்திரியங்களின்} படைப்பு ஆறாவதாகவும், எண்ணப் பன்மையின் சாரத்தைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது.(21) பிறகு, ஓ! ஏகாதிபதி, காது முதலியவற்றுக்கு அடுத்து வரும் புலன்கள் (செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} எழுகின்றன. ஏழாம் படைப்பு என்றழைக்கப்படும் இவை {இந்தச் செயற்புலன்கள் / இந்தக் கர்மேந்திரியங்கள்} அறிவுப்புலன்களுடன் {ஞானேந்திரியங்களுடன்} தொடர்பு கொள்கின்றன.(22) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகே மேல் நோக்கிய மூச்சுக் காற்றும் (பிராணனும்) குறுக்காக ஏழும் (சமானன், உதானன், வியானன் உள்ளிட்ட) மூச்சுக்காற்றுகளும் உண்டாகின்றன. எட்டாம் படைப்பான இஃது ஆர்ஜவம் என்றழைக்கப்படுகிறது[4].(23) அடுத்து உடலின் கீழ்ப்பகுதிகளில் குறுக்காகச் செல்லும் (சமானன், உதானன் மற்றும் வியானனும்) மூச்சுக்காற்றுகளும், கீழ்நோக்கிச் செல்லும் அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றும் வருகிறது. ஓ! மன்னா, ஒன்பதாம் படைப்பான இதுவும் ஆர்ஜவம் என்றே அழைக்கப்படுகிறது.(24) ஓ! ஏகாதிபதி, இந்த ஒன்பது வகைப் படைப்புகளும், இந்த இருபத்துநான்கு கோட்பாடுகளும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி அறிவிக்கப்படுகின்றன.(25) ஓ! மன்னா, இதன் பிறகு, இந்தக் கோட்பாடுகள் அல்லது குணங்களைப் பொறுத்தவரையில் கல்விமான்களால் குறிப்பிடப்படும் கால அளவை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(26)

இருபது பூதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 312-அவ்யக்த முதலியவற்றின் காலக்கணக்கையும், படைப்பையும் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..

யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, புலப்படாததை (அல்லது பரம புருஷனைப்) பொறுத்தவரையிலான காலக்கணக்கை உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக. பத்தாயிரம் {10000} கல்பங்கள் அவனுடைய ஒரு பகல் என்று சொல்லப்படுகிறது.(1) அவனது இரவின் காலமும் அதே அளவு {10000 கல்பங்கள்} கொண்டதாகும். ஓ! ஏகாதிபதி, அந்த இரவு முடிந்ததும் அவன் முதலில் உடல் கொண்ட உயிரினங்கள் வாழ்வதற்கான செடி கொடிகளைப் படைக்கிறான்.(2) பிறகு அவன் தங்க முட்டையில் இருந்து எழும் பிரம்மனைப் படைக்கிறான். அந்தப் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் வடிவமாவான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு முழு வருடம் அந்த முட்டைக்குள் இருந்தவனும், பெரும் தவசியும், பிரஜாபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றும் அழைக்கப்படுபவனுமான பிரம்மன் அதைவிட்டு {அந்த முட்டையை விட்டு} வெளியே வந்து, மொத்த பூமியையும், மேலுள்ள சொர்க்கத்தையும் படைத்தான்.(4)

பிறகு அந்தத் தலைவன் {பிரம்மன்}, வானத்தை இடையில் வைத்து சொர்க்கத்தையும், பூமியையும் பிரித்தான்.(5) பிரம்மனின் ஒரு பகல் ஏழாயிரத்து ஐநூறு {7500} கல்பங்களாகும்.(6) அத்யாத்ம அறிவியல் அறிந்த மனிதர்கள், அவனது இரவும் அதே அளவைக் கொண்டது என்று சொல்கிறார்கள். மஹான் என்றழைக்கப்படும் அந்தப் பிரம்மன், பிறகு பூதம் என்றழைக்கப்படுவதும், சிறந்த சாரத்தைக் கொண்டதுமான நனவுநிலையை {அகங்காரத்தைப்} படைக்கிறான்[1].(7) பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் உட்பொருள்களில் இருந்து எந்த உடலையும் படைப்பதற்கு முன்னால், தவங்களுடன் கூடிய மஹான் அல்லது பிரம்மன், அவனது மகன்கள் என்றழைக்கப்படும் நால்வரை படைத்தான்[2].(8)ஓ! ஏகாதிபதி, நான்கு உள் இயக்கங்களோடு கூடிய (அறிவுப்) புலன்கள் {ஞானேந்திரியங்கள்} பித்ருக்களில் (பித்ருக்கள் என்றழைக்கப்படும் பெரும்பூதங்களில்) இருந்து உண்டாகின. அசைவன மற்றும் அசையாதவற்றைக் கொண்ட இந்த மொத்த அண்டமும் அந்தப் பெரும்பூதங்களாலேயே நிறைந்திருக்கிறது[3].(9) பலமிக்க நனவுநிலையே {அகங்காரமே} ஐம்பூதங்களையும் படைத்தது. அவை பூமி, காற்று, வெளி {ஆகாயம்}, நீர் மற்றும் ஒளியென்று எண்ணிக்கையில் ஐந்தாக இருக்கிறது.(10) மூன்றாம் படைப்பான (பெரும் பூதமான) இந்த நனவுநிலை {அகங்காரம்}, தன் இரவுக்கு ஐயாயிரம் {5000} கல்பங்களையும், பகலுக்கு அதே கால அளவையும் கொண்டிருக்கிறது.(11) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகிய இந்த ஐந்தும் விசேஷங்கள் {தன்மாத்திரைகள்} என்றழைக்கப்படுகின்றன. அவை ஐம்பெரும் பூதங்களுக்குள் பொதிந்திருக்கின்றன.(12)ஓ! மன்னா, இந்த ஐந்தாலும் உடனே படர்ந்தூடுருவப்படும் {நீக்கமற நிறைக்கப்படும்} பூதங்கள் அனைத்தும், ஒன்றோடொன்று தோழமையை விரும்பி, ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன;(13) ஒன்றையொன்று சவாலுக்கழைத்து, ஒன்றையொன்று கடந்திருக்கின்றன; மாற்ற முடியாத மயக்கக் கோட்பாடுகளால் வழிகாட்டப்படும் உயிரினங்கள் ஒன்றையொன்று கொன்று, எண்ணற்ற இடைநிலை வகை உயிரினங்களில் புகுந்து இவ்வுலகில் திரிகின்றன.(14) அவற்றின் ஒருபகல் மூவாயிரம் {3000} கல்பங்களாகும். அவற்றின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, மனமானது {மூளையானது} புலன்களால் வழிகாட்டப்பட்டு அனைத்துப் பொருட்களிலும் திரிகிறது. புலன்கள் எதையும் உணர்வதில்லை. மனமே அவற்றின் மூலம் எதையும் உணர்கிறது.(16)

கண்ணானது, மனத்தின் {மூளையின்} துணையால் வடிவங்களைப் பார்க்கிறதேயன்றி தன்னாலல்ல. மனத்தின் கவனம் திரும்புகையில், கண்ணின் முன்பு ஒரு பொருள் இருந்தாலும் அதைக் காணத் தவறுகிறது.(17) புலன்கள் உணர்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. புலன்களின் மூலம் மனமே உணர்வதால் இதில் உண்மையில்லை.(18) மனத்தின் செயல்பாடு நிறுத்தப்படும்போது, அதைப் பின்தொடர்ந்து புலன்களின் செயல்பாடும் நின்று போகிறது. மனச்செயல்பாட்டின் நிறுத்தமே புலன்களின் செயல்பாட்டை நிறுத்தும். எனவே ஒருவன் புலன்கள் மனத்தின் ஆளுகையில் இருப்பதாகக் கருத வேண்டும்.(19) உண்மையில் மனமே, புலன்கள் அனைத்தின் தலைவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பெரும்புகழ் கொண்டவனே, அண்டத்தில் இருக்கும் இருபது பூதங்கள் இவையே” என்றார் {யாஜ்ஞவல்கியர்}[4].(20)

பிரளயம்! – சாந்திபர்வம் பகுதி – 313-அண்டம் அழிக்கப்படும் முறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்.

யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “நான் ஒன்றன்பின் ஒன்றாகப் படைப்பின் முறையை, அவற்றின் மொத்த எண்ணிக்கை, பல்வேறு கோட்பாடுகள் மற்றும் அவை ஒவ்வொன்றின் காலக்கணக்கீட்டுடன் உனக்குச் சொல்லிவிட்டேன். அவற்றின் அழிவைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) நித்தியமானவனும், சிதைவற்றவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமாக இருப்பவன், மீண்டும் மீண்டும் பொருட்கள் அனைத்தையும் எவ்வாறு படைத்து அழிக்கிறான் என்பதைக் கேட்பாயாக.(2) அவனது பகல் முடிந்து, இரவு வந்ததும் அவன் உறங்க விரும்புகிறான். அத்தகைய வேளையில் புலப்படாதவனான {அவ்யக்தனான} அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}, (உலகை அழிப்பதற்கான) தன் பெரும் சக்திகளை அறிந்தவனான {அஹங்காரபிமானியான} மஹாருத்திரன் என்று அழைக்கப்படுபவனைத் தூண்டுகிறான்.(3)

புலப்படாதவனால் தூண்டப்பட்ட அவன் {மஹாருத்திரன்}, நூறாயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனின் வடிவை ஏற்று, சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பனிரெண்டு பகுதிகளாகத் தன்னைப் பிரித்துக் கொள்கிறான்.(4) ஓ! ஏகாதிபதி, பிறகு அவன் பாலூட்டிகள், முட்டையிட்டு குஞ்சுபொறிப்பவை, {வியர்வை உள்ளிட்ட} கழிவில் பிறப்பவை, தாவரங்கள் எனப் படைக்கப்பட்ட நால்வகை உயிரினங்களையும் எந்தத் தாமதமும் செய்யாமல், தன் சக்தியின் மூலம் எரிக்கிறான்.(5) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் இவ்வாறு அழிக்கப்படுவதால், பூமியானது ஆமை ஓட்டைப் போல வெறுமையாகிறது.(6)

பூமியின் முகப்பில் உள்ள அனைத்தையும் எரித்தபிறகு, அளவிலா வலிமை கொண்ட ருத்திரன், விரைவாக அந்த வெற்று பூமியை பெரும் சக்தி கொண்ட நீரால் நிரப்புகிறான்.(7) பிறகு அவன் (பூமி மூழ்கியிருக்கும் அந்த) நீரை வற்றச் செய்வதற்காக யுக நெருப்பைப் படைக்கிறான். நீர் மறைந்ததும், நெருப்பெனும் பெரும்பூதம் சுடர்மிக்கதாய் சீற்றத்துடன் தொடர்ந்து எரிகிறது.(8) பிறகு, ஆழ்ந்த சக்தியைக் கொண்டதும், ஏழு தழல்களைக் கொண்டதும், அனைத்து உயிரினங்களிலும் வெப்பமாக இருப்பதுமான அந்தச் சுடர்மிக்க நெருப்பை, அளவிலா சக்தியும், வலிமையும் கொண்ட காற்று {வாயு} விரைவாக விழுங்குகிறது. அந்நெருப்பை விழுங்கிய காற்றானது, மேல்நோக்கி, கீழ்நோக்கி, குறுக்குவெட்டாக என அனைத்துத் திசைகளிலும் திரிகிறது.(9,10)

பிறகு ஆழ்சக்தி கொண்ட அக்காற்றை, அளவிலா இருப்பைக் கொண்ட வெளியானது விழுங்குகிறது. மனமானது, அந்த அளவற்ற வெளியையும் உற்சாகமாக விழுங்குகிறது.(11) பிறகு அனைத்தின் ஆன்மாவாக இருப்பதும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான நனவுநிலை {அகங்காரம்}, அந்த மனத்தை விழுங்குகிறது. பிறகு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த மஹத் ஆன்மாவானது அந்த நனவுநிலையை {அகங்காரத்தை} விழுங்குகிறது.(12)
ஒப்பற்ற மஹத் ஆன்மா அல்லது அண்டமானது, அனைத்துப் பொருட்களின் தலைவனும், அனிமா, லகிமா, பிராப்தி முதலிய யோக குணங்களைக் கொண்டவனும், இயல்பாகவே உள்ளீர்ப்பவனும், மாற்றமில்லாத தூய ஒளியைக் கொண்டவனும், பரமனாகக் கருதப்படுபவனுமான சம்புவால் {சிவனால்} விழுங்கப்படுகிறது.(13)

அவனது கைகளும், கால்களும் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிகின்றன; அவன் கண்களும், தலையும், முகமும் எங்குமிருக்கின்றன; அவனது காதுகள் ஒவ்வொரு இடத்தையும் அடைகின்றன, அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(14) அனைத்து உயிரினங்களின் இதயம் அவனே; அவன் கட்டைவிரல் அளவுள்ள அணுவாக இருக்கிறான். அனைத்தின் தலைவனும், எல்லையற்றவனும், பரமாத்மாவுமான அவன் இவ்வாறே அண்டத்தை விழுங்குகிறான்.(15) இதன்பிறகு, சிதைவற்றவனும், எவ்வகைக் களங்கமும் அற்றவனும், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை உண்டாக்குபவனும், முற்றிலும் களங்கமற்றவனுமான அந்த மாற்றமற்றவன் {சிவன்} மட்டுமே எஞ்சியிருக்கிறான்.(16)

ஓ! ஏகாதிபதி, இவ்வாறே அழிவை {பிரளயத்தைக்} குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டேன். இனி அத்யாத்மா, அதிபூதம், அதிதெய்வம் ஆகியவற்றைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(17)

முக்குணக் குறியீடுகள்! – சாந்திபர்வம் பகுதி – 314-அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், முக்குணங்கள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் இரு பாதங்களையும் அத்யாத்மா என்றும், {கால்களால்} நடக்கும் செயல்பாட்டை {மார்க்கத்தை} அதிபூதம் என்றும், விஷ்ணுவையே (அந்தப் பாதங்களின்) அதிதெய்வமாகவும் சொல்கின்றனர்.(1) குதம் {பாயு} அதியாத்மம்; அதன் செயல்பாடான மலம் வெளியேற்றுதல் அதிபூதம், மித்திரன் (சூரியன், அந்த உறுப்பின்) அதிதெய்வம்.(2) பிறப்புறுப்பு {குறி} அத்யாத்மம் என்றழைக்கப்படுகிறது. அதன் ஏற்புடைய செயல்பாடு {ஆனந்தம்} அதிபூதம் என்றழைக்கப்படுகிறது, பிரஜாபதி {பிரம்மன்} அதன் அதிதெய்வமாவான்.(3) கைகள் அத்யாத்மம்; அவற்றின் செயல்களைக் குறிக்கும் செயல்பாடு அதிபூதம்; இந்திரன் அந்த உறுப்பின் அதிதெய்வம்.(4) வாக்கு அத்யாத்மம்; அவற்றின் மூலம் சொல்லப்படும் சொற்கள் {சொல்லக்கூடிய விஷயம்} அதிபூதம்; அக்னி அதன் அதிதெய்வம்.(5) கண்கள் {நேத்திரம்} அதியாத்மம்; பார்வை அல்லது வடிவம் {ரூபம்} அவற்றின் அதிபூதம்; சூரியன் அவற்றின் அதிதெய்வம்..(6) காதுகள் {ஸ்ரோத்ரம்} அத்யாத்மம்; ஒலி {சப்தம்} அதன் அதிபூதம்; திசைப்புள்ளிகள் {திக்குகள்} அதன் அதிதெய்வம்.(7)

நாக்கு {ரசனை} அத்யாத்மம்; சுவை {ரஸம்} அதன் அதிபூதம்; நீர் {அப்பு} அதன் அதிதெய்வம்.(8) நுகர்வுணர்வு {கிராணம்} அத்யாத்மம்; மணம் {கந்தம்} அதன் அதிபூதம்; பூமி {பிருதிவி} அதன் அதிதெய்வம்.(9) தோல் {துவக்கு} அத்யாத்மம்; ஊறு {தீண்டல் /ஸ்பரிசம்} அதன் அதிபூதம்; காற்று {வாயு} அதன் அதிதெய்வம்.(10) மனம் அத்யாத்மம்; எதனுடன் மனம் ஈடுபடுகிறதோ அது {நினைக்கக்கூடிய விஷயம்} அதிபூதம்; சந்திரன் அதன் அதிதெய்வம்.(11) நனவுநிலை {அகங்காரம்} அத்யாத்மம்; பிரகிருதியாகத் தன்னைக் காணும் உறுதிப்பாடு {செருக்கு / கர்வம்} அதிபூதம்; மஹத் அல்லது புத்தி அதன் அதிதெய்வம்.(12) புத்தி அத்யாத்மம்; புரிந்து கொள்வது {அறியக்கூடிய விஷயம்} அதிபூதம்; க்ஷேத்ரஜ்ஞன் அதிதெய்வம் {என்றும் தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் சொல்கிறார்கள்}.(13) ஓ! மன்னா {தேவராதனா}}, மூல தத்துவங்கள் அல்லது கோட்பாடுகளின் இயல்பை முழுமையாக அறிந்தவனே, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் (பல்வேறு வடிவங்களில் வெளிப்படும்) பரமனின் பலத்தை {விபூதியை} உண்மையில் தனித்தனியாக, விவரமாக {ஸ்பஷ்டமாக} உனக்கு விளக்கியிருக்கிறேன்.(14)

ஓ! ஏகாதிபதி, பிரகிருதியானவள் தான் விரும்பியபடி விளையாடுவதைப் போல, தானே மாறுபாடுகளுக்கு {விகாரங்களுக்கு} உட்பட்டு, குணங்கள் என்றழைக்கப்படும் மூல மாறுபாடுகளின் கலவையை ஆயிரமாயிரமாகப் படைக்கிறாள்.(15) மனிதர்கள் ஒரே விளக்கில் இருந்து ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றுவதைப் போலவே, பிரகிருதியும், மாறுபாட்டின் மூலம், புருஷனின் (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும்) முக்குணங்களைச் சார்ந்த இருப்பிலுள்ள ஆயிரக்கணக்கான பொருட்களைப் பெருக்குகிறாள்.(16)

{சத்வ குணம்:}
பொறுமை {தைரியம்}, இன்பம் {ஆனந்தம்}, செழிப்பு {அபிவிருத்தி}, நிறைவு {பிரீதி}, மேலான காரியங்களில் விருப்பம், மகிழ்ச்சி {சுகம்}, {மனத்}தூய்மை, உடல்நலம் {ஆரோக்கியம்}, உள்ளடக்கம் {ஸந்தோஷம்}, நம்பிக்கை {ஸ்ரத்தை},(17) கொடை, கருணை, மன்னிக்கும் தன்மை, உறுதி, நன்மை, சமமாய் இருத்தல், வாய்மை, கடமைகளை அறிதல் {கடனில்லாமை}, மென்மை {நேராயிருத்தல்}, பணிவு {லஜ்ஜை}, அமைதி {சபலமில்லாமை},(18) புறத்தூய்மை {சரீரசுத்தி}, எளிமை {மேன்மை}, கடமை நடைமுறைகளைச் செய்தல் {ஆசாரம்}, ஆசையின்மை, இதயத்தில் அஞ்சாமை {மனத்தில் பரபரப்பில்லாமை}, தோற்றம் அல்லது முற்பிறவி செயல்களின் நன்மை தீமைகளில் அலட்சியம்,(19) கொடைகளைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே பொருட்களைப் பெறுவது, பேராசையின்மை {வைராக்கியம்}, பிறரின் நலத்தைக் கருத்தில் கொள்வது {பரோபகாரம்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை {தயை} ஆகிய இவை சத்வ குணத்தோடு தொடர்புடையன என்று சொல்லப்படுகிறது.(20)

{ரஜஸ் குணம்:}

ரஜஸ் குணம் தொடர்புடைய பண்புகளின் பட்டியல் மேனியழகில் செருக்கு, தலைமை நிலையை உறுதி செய்தல், போர் {கலகம்}, ஈயாமை, கருணையின்மை {தயையில்லாமை}, இன்பதுன்பங்களை அனுபவித்தல்,(21) பிறரை நிந்திப்பதில் விருப்பம், அனைத்து வகைச் சச்சரவுகளிலும் ஈடுபடல், ஆணவம், மதிப்பின்மை, கவலை, பகைமை பாராட்டல்,{22) பரிதாபம், பிறர் உடைமைகளை அபகரித்தல், வெட்கமின்மை, குறுக்கு புத்தி, ஒழுங்கின்மை, முரட்டுத்தனம், காமம், கோபம், செருக்கு,(23) மேன்மையை உறுதி செய்தல், வன்மம், அபிமானம் ஆகியற்றைக் கொண்டதாகும்.

{தமஸ் குணம்:}
தமஸில் இருந்த உண்டாகும் குணக்கூட்டங்களை இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(24) தீர்மான மயக்கம் {மோகம்}, ஒளியின்மை, இருள் {தாமிஸ்ரம்}, குருடாக்கும் இருள் {அந்ததாமிஸ்ரம்} ஆகியவையே அவை. இருளின் மூலம் மரணம் குறிப்பிடப்படுகிறது, குருட்டு இருள் என்பது கோபமாகும்.(25). இவற்றைத் தவிர்த்த தமஸின் பிற குறியீடுகள் அனைத்து வகை உணவிலும் பேராசை, உணவிலும் பானத்திலும் தீராப்பசி,(26) மணம், உடை, கேளிக்கை, படுக்கை, இருக்கை, பகலுறக்கம், விவாதம், அலட்சியவுணர்வில் பற்று, விழிப்பின்மையால் உண்டாகும் அனைத்து வகைச் செயல்கள்,(27) அறியாமையால் நடனம், கருவி மற்றும் குரலிசையில் பற்று, சிறப்புமிக்க அறங்கள் அனைத்திலும் வெறுப்பு ஆகியவையாகும். உண்மையில் இவையே தமஸின் குறியீடுகளாகும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.{28}

குணமும் கதியும்! – சாந்திபர்வம் பகுதி – 315-குணங்களும், வினைகளும் அடையும் கதிகளைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) இந்த மூன்றும் பிரகிருதியின் குணங்களாகும். இவை அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுடனும் தொடர்புடையவையாகவும், அவற்றை எப்போதும் உள்ளீர்ப்பவையாகவும் இருக்கின்றன.(1) யோக குணங்கள் ஆறைக் கொண்ட புலப்படாத {அவ்யக்தமான} புருஷன் (இந்த முக்குணங்களைத் தழுவுவதன் மூலம்) நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான வடிவங்களாகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறான்.(2) அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்கள் சத்வ குணம் அண்டத்தில் உயர்ந்த இடத்திற்கும், ரஜஸ் நடுநிலைக்கும், தமஸ் இழிந்த இடத்திற்கும் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.(3) கலப்பில்லாத அறத்தின் துணையின் மூலம் ஒருவன் (தேவர்களுக்குரிய) உயர்ந்த கதியை அடைகிறான். பாவத்துடன் கலந்த அறத்தின் மூலம் ஒருவன் மனித நிலையை அடைகிறான். அதே வேளையில் கலப்பில்லாத பாவத்தின் மூலம் (விலங்காகவோ, தாவரம் முதலியவையாகியோ) ஒருவன் இழிந்த கதியை அடைகிறான்.(4)

ஓ! மன்னா {தேவராதனா}, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கலவைகளைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக.(5) சிலவேளைகளில் ரஜஸானது சத்வத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. தமஸ் ரஜஸுடன் இருக்கிறது. தமஸுடன் சத்வமும் காணப்படுகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் சம அளவில் கலந்திருப்பதும் காணப்படுகிறது. அவை புலப்படாதவளாக, அல்லது பிரகிருதியாக அமைகின்றன.(6) புலப்படாதவன் (அவ்யக்தமான புருஷன்) சத்வத்துடன் சேரும்போது அவன் தேவர்களின் உலகங்களை அடைகிறான். சத்வம் மற்றும் ரஜஸ் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்போது, அவன் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பெடுக்கிறான்.(7) ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, அவன் இடைநிலை உயிரினங்களில் பிறப்பெடுக்கிறான். மூன்று குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என அனைத்தையும் கொண்டிருப்பவன், மனிதன் என்ற நிலையை அடைவான்.(8)

அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டையும் கடந்த உயர் ஆன்ம மனிதர்கள், நித்தியமானதும், மாற்றமில்லாததும், சிதைவற்றதும், அழிவற்றதுமான இடத்தை {கதியாக} அடைகிறார்கள்.(9) ஞானிகள், மிக மேன்மையான பிறவிகளை அடைந்து, களங்கமற்றதும், சிதைவற்றதும், புலன்களின் அறிவுக்கு எட்டியதைக் கடந்ததும், அறியாமையில் இருந்து விடுபட்டதும், பிறப்பு இறப்புக்கு மேலானதும், அனைத்து வகை இருளையும் விலக்கும் முழு ஒளி உள்ளதுமான இடத்தை {கதியாக} அடைகின்றனர்.(10) புலப்படாதவளில் {பிரகிருதியில்} வசிக்கும் பரமனின் (புருஷனின்) இயல்பைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, கேட்பாயாக. பிரகிருதியில் வசிக்கும்போது, பிரகிருதியின் இயல்பை ஏற்காமல் தன்னியல்பிலேயே அவன் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.(11) ஓ! மன்னா, பிரகிருதியானவள் அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருக்கிறாள். புருஷனால் தலைமை தாங்கப்படும்போது மட்டுமே, அவளால் படைக்கவும், அழிக்கவும் முடியும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(12)

ஜனகன் {தேவராதன்}, “ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இருவரும் தொடக்கமும், முடிவும் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வடிவமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டும் சிதைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(13) அவர்கள் இருவரும் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அவர்களில் ஒருவர் அசைவற்றவள் {உயிரற்றவள்}, புத்தியற்றவள் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் மற்றொருவர் அசைவுள்ளவன் {உயிருள்ளவன்}, புத்தியுள்ளவன் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் பின்னவன் ஏன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான்?(14) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விடுதலையறம் {மோக்ஷதர்மம்} குறித்து முற்றும் அறிந்தவர் நீர். அந்த விடுதலை அறத்தை உம்மிடமிருந்து நான் முற்றாக அறிய விரும்புகிறேன்.(15)

புருஷனின் இருப்பு, அவனது ஒருமை, பிரகிருதியில் இருந்து தனிப்பட்டிருக்கும் அவனது தன்மை, உடலுடன் தொடர்புடைய தேவர்கள்,(16) உடல்படைத்த உயிரினங்கள் இறந்ததும் செல்லும் இடம், காலப்போக்கில் அவை இறுதியாகச் சென்றடையக்கூடிய இடம் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக.(17) சாங்கிய அமைப்பிலும், யோக அமைப்பிலும் விளக்கப்படும் ஞானத்தைத் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, மரணம் குறித்த முன்னெச்சரிக்கை குறியீடுகளைக் குறித்தும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியங்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல நீர் நன்குஅறிந்திருக்கிறீர்” என்று கேட்டான் {ஜனக குல மன்னன் தேவராதன்}.(18)

சாங்கிய தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 316-சாங்கிய அமைப்பைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்

யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “ஓ! மகனே, குணங்கள் அற்ற ஒன்றை, அதன் குணங்களைச் சுட்டி ஒருபோதும் விளக்கமுடியாது. எனினும், எது குணங்களைக் கொண்டதென்றும், எது அவை அற்றதென்றும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) செம்மலரைப் பிரதிபலிக்கும் படிகத்தைப் போலவே, புருஷனானவன் குணங்களை ஏற்கும்போது, அவன் குணங்களைக் கொண்டவனாக அழைக்கப்படுகிறான்; ஆனாலும் பிரதிபலிப்பில் இருந்து விடுபட்ட படிகத்தைப் போல அவன் குணங்களில் இருந்து விடுபடும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்த தன் உண்மையான இயல்பில் அவன் காணப்படுகிறான் என்று தத்துவங்கள், அல்லது கோட்பாடுகள் அனைத்தின் உண்மையை அறிந்த உயர் ஆன்ம முனிவர்கள் சொல்கிறார்கள்[1].(2) புலப்படாத பிரகிருதியானவள், தன் இயல்பிலேயே குணங்களைக் கொண்டவளாக இருக்கிறாள். அவளால் அவற்றைக் கடக்க முடியாது. இயல்பிலேயே புத்தியற்றவளான அவள், குணங்களுடன் பிணைக்கப்பட்டவளாகவே இருக்கிறாள்.(3) புலப்படாத பிரகிருதியால் எதையும் அறிந்து கொள்ள முடியாத அதே வேளையில், புருஷனோ, “என்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை” என்று எப்போதும் தன் நினைவில் கொண்டிருக்கும் ஞானத்தைத் தன் இயல்பாகவே கொண்டிருக்கிறான்.(4)இந்தக் காரணத்தால், புலப்படாதவளாக இருப்பவள் (அல்லது பிரகிருதி), இயல்பிலேயே அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருந்தாலும், நித்தியமானவனும், அழிவற்றவனுமான புருஷனுடன் சேரும் விளைவால், தன் இயல்பில் அழியத்தக்கவளாகவே இருந்தாலும், அசைவுள்ளவளாகவும் {உயிருள்ளவளாகவும்}, புத்தியுள்ளவளாகவும் ஆகிறாள்[2].(5) {இந்த} அறியாமையின் மூலம் புருஷன் மீண்டும் மீண்டும் குணங்களுடன் தொடர்பு கொண்டு, தன் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ளத் தவறி, விடுதலையை {முக்தியை} அடைவதிலும் தவறுகிறான்.(6) புருஷன், பிரகிருதியில் இருந்து தோன்றும் கோட்பாடுகளுக்குத் தலைமை தாங்குவதன் விளைவால், அவன் அந்தக் கோட்பாடுகளின் இயல்பைக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. படைப்புக் காரியத்தில் அவனது இயக்கத்தின் விளைவால் அவன் படைக்கும் குணத்தைக் கொண்டவனாகவும் சொல்லப்படுகிறான்.(7) யோக காரியத்தில் அவனது இயக்கத்தின் விளைவால் அவன் யோக குணத்தைக் கொண்டவனாகவும் சொல்லப்படுகிறான். பிரகிருதிய என்றறியப்படும் குறிப்பிட்ட கோட்பாடுகளுக்கு {தத்துவங்களுக்குத்} தலைமை தாங்குவதால் அவன் பிரகிருதியின் இயல்பைக் கொண்டவன் எனவும் சொல்லப்படுகிறான்.(8)(அசைவற்ற பொருட்கள் அனைத்தின்) வித்துகளைப் படைக்கும் காரியத்தில் உள்ள அவனது இயக்கத்தின் விளைவால், அவன் அந்த வித்துகளின் இயல்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். பல்வேறு கோட்பாடுகள் அல்லது குணங்களை வாழ்வில் உண்டாக்கும் காரணத்தால் (அந்தக் கோட்பாடுகளே அழியத்தக்கன என்பதால்} அவன் சிதைவுக்கும், அழிவுக்கும் ஆட்படுவதாகச் சொல்லப்படுகிறான்.(9) மேலும், அனைத்திற்கும் சாட்சியாக இருப்பதன் விளைவாலும், தன்னைத் தவிர வேறு எதுவும் இல்லாததன் விளைவாலும், பிரகிருதியுடன் தன்னை அடையாளம் காணும் தன் நினைவின் விளைவாலும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், அத்யாத்மாவை அறிந்தவர்களும், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டவர்களுமான யதிகள், தன்னைத் தவிர இரண்டாமவன் இல்லாதவனும், மாற்றமில்லாதவனும், (காரணத்தின் வடிவில்) புலப்படாதவனும், நிலையற்றவனும், (விளைவுகளின் வடிவில்) புலப்படுபவனுமாக அவனை {புருஷனைக்} கருதுகிறார்கள்.(10) இதையே நாம் கேள்விப்படுகிறோம். எனினும் ஞானத்தை மட்டுமே (தங்கள் விடுதலைக்கு {முக்திக்கு}) சார்ந்திருப்பவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களுமான சாங்கியர்கள், பிரகிருதி ஒன்றே, புருஷர்கள் பலர் என்று சொல்கிறார்கள்[3].(11) உண்மையில், நிலையற்றதாக இருந்தாலும், நிலையாகத் தோன்றும் பிரகிருதியில் இருந்து புருஷன் வேறுபட்டவனாக இருக்கிறான். நாணற்குச்சியானது, வெளிப்புற உறையில் {தர்ப்பையில்} இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே புருஷனும் பிரகிருதியில் இருந்து வேறுபட்டிருக்கிறான்.(12)உண்மையில், அத்திக்குள் பதுங்கியிருக்கும் புழுவானது, அத்தியில் இருந்து வேறுபட்டதாகவே அறியப்பட வேண்டும். அந்தப் புழுவானது அத்திக்குள் இருந்தாலும், அஃது ஒரு போதும் அந்த அத்தியின் ஒருபகுதியாகக் கருதப்படுவதில்லை.(13) மீனானது, தான் வாழும் நீரில் இருந்து வேறுபட்டது, அதே போல நீரும், தன்னில் வாழும் மீனில் இருந்து வேறுபட்டதாகும். மீனும், நீரும் ஒன்றாகவே இருந்தாலும் அஃது ஒருபோதும் நீரால் நனைக்கப்படுவதில்லை.(14) மண்கடாயில் {உகையில்} உள்ள நெருப்பானது அந்தக் கடாயில் இருந்து வேறுபட்டது, அந்தக் கடாயும் தான் கொண்டிருக்கும் நெருப்பிலிருந்து வேறுபட்டதாகும். நெருப்பு அந்தக் கடாயில் இருந்தாலும், அஃது ஒருபோதும் அதன் பகுதியாகக் கருதப்பட முடியாது.(15) நீரில் மிதக்கும் தாமரை இலையானது, தான் மிதக்கும் நீரில் இருந்து வேறுபட்டதாகும். நீருடன் அஃது உடனுறைந்திருந்தாலும், அஃது ஒருபோதும் நீரின் ஒருபகுதியாகாது.(16)

இவ்வாறு குறிப்பிடப்படுபவை அந்தந்தப் பொருட்களில் நிலையாக உடனிருப்பது, சாதாரண மக்களால் ஒருபோதும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை[4].(17) பிரகிருதியையும், புருஷனையும் வேறு எவ்வொளியிலும் காண்போர், பார்வைப்பிழை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பயங்கர நரகில் நிச்சயம் மூழ்குகிறார்கள்.(18) அனைத்துப் பொருட்களையும் சரியாக உறுதி செய்யும் சிறந்த அறிவியலான சாங்கியர்களின் தத்துவத்தையே நான் உனக்குச் சொன்னேன். சாங்கியர்கள், புருஷன் மற்றும் பிரகிருதியின் இயல்பை இவ்வழியில் உறுதி செய்து கொண்டே விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(19) அண்டத்தின் பெருங்கோட்பாடுகளை அறிந்த பிற அமைப்புகளைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இனி நான் யோகிகளின் அறிவியலைக் குறித்து உனக்குச் சொல்கிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(20)

யோகம்! – சாந்திபர்வம் பகுதி – 317-யோக நிலைகளான சகுண பிராணாயாமம், நிர்க்குண பிராணாயாமம், சமாதி ஆகியவை குறித்தும் யோகிகளின் தத்துவம் குறித்தும் ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனுக்கு}, “நான் சாங்கியர்களின் அறிவியலை உனக்குச் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இப்போது, யோகிகளின் அறிவியலை நான் கேள்விப்பட்டவகையிலும், பார்த்த வகையிலும் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(1) சாங்கிய ஞானத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு ஞானம் ஏதும் இல்லை. யோக பலத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு பலம் ஏதும் கிடையாது. ஒரே நடைமுறைகளை விதிக்கும் இவ்விரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கவல்லவையாகக் கருதப்படுகின்றன.(2) புத்தியால் அருளப்படாத மனிதர்களே சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருப்பதாகக் கருதுகிறார்கள். எனினும், ஓ! மன்னா, அவற்றை (கற்று, சிந்தித்த பிறகு) நாம் அடையும் தீர்மானத்தின்படி அவற்றை ஒன்றாகவே நாம் காண்கிறோம்.(3) சாங்கியர்கள் பார்ப்பதையே யோகிகளும் பார்க்கிறார்கள். சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளை ஒன்றாகக் காண்பவன், அண்டத்தை விதிக்கும் தத்துவங்கள், அல்லது கோட்பாடுகளை உண்மையில் அறிந்தவனாகக் கருதப்படுகிறான்.(4)

ஓ! மன்னா {தேவராதனா}, உயிர் மூச்சுகளும், புலன்களுமே யோகம் பயில்வதற்கான முக்கிய வழிமுறைகள் என்பதை அறிவாயாக. அந்த உயிர் மூச்சுகளையும், புலன்களையும் ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே யோகிகள் தங்கள் விருப்பப்படி எங்கும் திரிகிறார்கள்[1].(5) பருவுடல் அழிவடையும்போது, (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலிய அட்டமா சித்திகளான) எட்டு யோக குணங்களைக் கொண்ட நுண்ணுடல்களுடன் அனைத்து வகை இன்பநிலைகளையும் (அவ்வுடலால்) அனுபவித்தபடியே அண்டத்தில் திரிகிறார்கள்.(6)

யோக பலம் எட்டு வகையெனச் சாத்திரங்களில் ஞானிகள் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் யோகத்தை எட்டு அங்கங்களைக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்[2].(7) உண்மையில், ஓ! மன்னா, அவர்கள் வேறு எவ்வகை யோகத்தைக் குறித்தும் பேசவில்லை. யோகிகளின் சிறந்த நடைமுறைகளில் (அவற்றின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு) இரண்டுவகை உண்டு எனச் சொல்லப்படுகிறது. சாத்திரங்களில் தோன்றும் குறியீடுகளின்படி அவை, குணங்களுடன் கூடிய நடைமுறை {சகுணயோகம்} மற்றும் குணங்களில் இருந்து விடுபட்ட நடைமுறை {நிர்க்குணயோகம்} என்று இருவகைப்படும்.(8)ஓ! மன்னா {தேவராதனா}, மூச்சை அடுத்தடுத்து ஒழுங்குசெய்து, (குறிப்பிட்ட பதினாறு பொருட்களில்) மனத்தைக் குவிப்பது (ஒரு வகை {யோகம்} ஆகும்). காலம் நெடுகிலும் புலன்களை அடக்கி (தியானிப்பவர், தியானிக்கப்படும் பொருள் ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் அழிக்கும் வழியில்) மனத்தைக் குவிப்பது (மற்றொரு வகை {யோகம்} ஆகும்). முதல் வகை யோகம் குணங்களைக் கொண்டதாக {சகுண யோகமாகச்} சொல்லப்படுகிறது; இரண்டாம் வகைக் குணங்களில் இருந்து விடுபட்டதாக {நிர்க்குண யோகமாகச்} சொல்லப்படுகிறது[3].(9) மேலும் மூச்சை ஒழுங்குமுறை செய்தல் குணங்களுடன் கூடிய யோகமாகும். குணங்களற்ற யோகத்தில் மனமானது, அதன் செயல்பாடுகளில் இருந்து விடுபட்டு நிலைத்திருக்க {குவிந்திருக்க} வேண்டும். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {தேவராதனா}, (உள்ளிழுத்து நிறுத்தப்படும்) மூச்சானது, (வரையறுக்கப்பட்ட மந்திரத்தின் மூலம்) ஒரு திட்டவட்டமான தோற்றத்தின் மீது மனத்தைச் செலுத்தாமல் வெளியேற்றப்பட்டால், அந்தப் புதிய பயிற்சியாளனின் {உடல்} அமைப்பில் காற்று {வாயு} பெருகி, அவனுக்குப் பெரும் தீங்கை இழைக்கும் என்பதால், குணங்களுடன் கூடிய மூச்சுப் பயிற்சி {சகுண பிராணாயாமம்} மட்டுமே அவனால் முதலில் செய்யப்பட வேண்டும்[4].(10) இரவின் முதல் யாமத்தில் {ஜாமத்தில்}, மூச்சைப் பிடிக்கும் பனிரெண்டு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உறங்கிய பிறகு, இரவின் இறுதி யாமத்தில், அதையே செய்வதற்கு வேறு பனிரெண்டு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(11) அமைதியாக இருப்பவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், ஓய்வில் வாழ்பவனும், தன்னில் மகிழ்பவனும், சாத்திரங்களின் கருத்துகளை முழுமையாக அறிந்தவனுமான ஒருவன், (இந்த இருபத்துநான்கு வழிமுறைகளின் மூலம் மூச்சை ஒழுங்குபடுத்தி) தனது ஆன்மாவை (பரமாத்மாவில்) நிலைநிறுத்த வேண்டும்[5].(12)ஐம்புலன்களின் ஐந்து களங்கங்களான ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணத்தை (அவற்றை அவை நுகரும் பொருட்களில் இருந்து விலகச் செய்து) களைந்து,(13) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, பிரதீபம், அபபங்கம் என்றழைக்கப்படும் நிலைகளைக் களைந்து, புலன்கள் அனைத்தும் மனத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(14) ஓ! மன்னா, மனமானது நனவுநிலையில் {அகங்காரத்தில்} நிலைநிறுத்தப்பட வேண்டும்; நனவுநிலையானது புத்தியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்; புத்தியானது பிரகிருதியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(15) இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைக் கலக்கும் யோகிகள், ஒன்றேயானவனும், ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவனும், களங்கமற்றவனும், நிலையானவனும், எல்லையற்றவனும், தூய்மையானவனும், குறையற்றவனும்,(16) நித்தியபுருஷன் என்றழைக்கப்படுபவனும், மாற்றமில்லாதவனும், பிரிக்கப்பட முடியாதவனும், சிதைவும், அழிவும் அற்றவனும், எப்போதும் இருப்பவனும், குறைவைக் கடந்தவனும், நிலையான பிரம்மமுமான பரமாத்மாவைத் தியானிக்கிறார்கள்.(17)

ஓ! ஏகாதிபதி, யோகத்தில் இருப்பவனின் குறியீடுகளைக் குறித்து இப்போது கேட்பாயாக. சமாதியில் இருப்பவனிடம் நிறைவாக உறங்குபவனிடம் காணப்படும் நிறைவும் மற்றும் உற்சாகக் குறியீடுகள் அனைத்தும் இருக்கும்.(18) சமாதியில் இருப்பவன், எண்ணெய் நிறைந்ததும், காற்று இல்லாத பகுதியில் எரிவதுமான விளக்கின் நிலைத்த மேல்நோக்கிய தழலைப் போலத் தெரிவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(19) மேகங்களில் இருந்து கனமழை பொழிந்தாலும், சற்றும் அசைக்கப்பட முடியாத ஒரு பாறையைப் போலவே அவன் இருப்பான்.(20) சங்கங்கள், பேரிகைகள், அல்லது பாடல்கள் அல்லது நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளின் ஒலி ஒன்றாக முழங்கும்போதும் அந்த ஆரவாரத்தால் அசைக்கப்பட முடியாதவனாக அவன் இருப்பான். இதுவே சமாதியில் இருப்பவனின் குறியீடாகும்.(21)

பதற்றமற்ற துணிவும், உறுதிப்பாடும் கொண்ட மனிதன், தன் கரங்களில் எண்ணெய் நிறைந்த பாத்திரத்துடன் படிகளில் ஏறும்போது, ஆயுதம் தரித்த மனிதர்களால் அச்சுறுத்தப்பட்டாலும், ஒரு துளி எண்ணெயையும் சிந்த விடாததைப் போலவே ஒரு யோகியும், தன் மனம் குவிந்த சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும்போது, தன் புலன்களின் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தியிருப்பதன் விளைவால் சற்றும் அசையாதவனாக இருப்பான். இதுவும் சமாதியில் இருக்கும் யோகியின் குறியீடாக அறியப்பட வேண்டும்.(22-24)

சமாதியில் இருக்கும்போது அந்த யோகி, நிலையானதும், அடர்ந்த இருளுக்கு மத்தியில் சுடர்மிக்க ஒளியாக இருப்பதுமான பரப்பிரம்மத்தைக் காண்கிறான்.(25) இவ்வழிமுறைகளின் மூலமே அவன் பல வருடங்கள் சென்றதும், தன் உயிரற்ற உடலைக் கைவிட்டு விடுதலையை {முக்தியை} அடைகிறான். இதையே நித்யமான ஸ்ருதி அறிவிக்கிறது.(26) இதுவே யோகிகளின் யோகம் என்று அழைக்கப்படுகிறது. அது வேறென்ன? ஞானம் கொண்டவர்கள் இஃதை அறிந்தே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுகிறார்கள்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(27)

மரணக்குறியீடுகள்! – சாந்திபர்வம் பகுதி – 318-உயிர் வெளியேறும் உறுப்புகள் குறிப்பிடும் கதி; மரணக் குறியீடுகள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! மன்னா, மரணமடைபவர்கள் செல்லும் இடங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன், கவனத்துடன் கேட்பாயாக. ஜீவாத்மா கால்களின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் விஷ்ணுலோகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.(1) ஆடுதசைகளின் வழியே வெளியேறினால் அவன் வசுக்களின் உலகத்திற்குச் செல்கிறான் என நாம் கேள்விப்படுகிறோம். முழங்கால் முட்டிகளின் வழியே வெளியேறினால் அவன் சத்யஸ்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(2) குதத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் மித்ரனின் உலகத்தை அடைகிறான். பின்தட்டுகளின் வழியே வெளியேறினால் அம்மனிதன் பூமிக்குத் திரும்புகிறான். தொடைகளின் வழியே வெளியேறினால் அவன் பிரஜாபதியின் உலகத்திற்குச் செல்கிறான்.(3)

விலாக்களின் வழியே வெளியேறினால், அம்மனிதன் மருத்துகளின் உலகத்திற்கும்,
மூக்குத்துளைகளின் வழியே வெளியேறினால் சந்திரனின் உலகத்திற்கும் செல்கிறான்.
கரங்களின் வழியே வெளியேறினால் அம்மனிதன் இந்திரலோகத்திற்கும்,
மார்பு வழியே வெளியேறினால் ருத்ரலோகத்திற்கும் செல்கிறான்.(4) கழுத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் நரன் என்ற பெயரில் அறியப்படும் முதன்மையான தவசியின் சிறந்த உலகத்திற்குச் செல்கிறான்.
வாயின் வழியே வெளியேறினால் அம்மனிதன் விஸ்வேதேவர்களின் உலகிற்கும்,
காதுகளின் வழியே வெளியேறினால் பல்வேறு திசைப்புக்களின் தேவர்களுடைய உலகத்திற்கும் செல்கிறான்.(5)
மூக்கின் வழியே என்றால் வாயுதேவனின் உலகத்திற்கும்;
கண்களின் வழியேயென்றால் அக்னிலோகத்திற்கும் அம்மனிதன் செல்கிறான்.
புருவங்களின் வழியேயென்றால் அஸ்வினிலோகத்திற்கும்,
நெற்றியின் வழியேயென்றால் பித்ருலோகத்திற்கும் அம்மனிதன் செல்கிறான்.(6)ஓ! மிதிலையின் ஆட்சியாளா,
உச்சந்தலையின் வழியே வெளியேறினால், அம்மனிதன் தேவர்களில் முதன்மையானவனும், பலமிக்கவனுமான பிரம்மனின் உலகத்திற்குச் செல்கிறான். ஜீவாத்மாக்கள் தங்கள் உடல்களில் இருந்து வெளியேறும் வழிகளின்படியே மனிதர்கள் செல்லும் பல்வேறு இடங்களைக்குறித்து நான் உனக்குச் சொன்னேன்.(7)

வாழ்வதற்கு ஒருவருடம் மட்டுமே கொண்டவர்களைக் குறித்து ஞானிகளால் விதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை குறியீடுகளை {மரணக் குறியீடுகளை / அரிஷ்டங்களை} இப்போது நான் சொல்லப் போகிறேன்.(8) அருந்ததி என்றழைக்கப்படும் நிலையான விண்மீனை முன்பே கண்டும், துருவம் என்றழைக்கப்படும் மற்றொரு விண்மீனைக் காணத் தவறும் ஒருவனுக்கு, அல்லது முழு நிலவையோ, எரியும் விளக்கின் தழலையோ தென்புறம் நோக்கி உடைந்திருப்பதைப் போலக் காணும் ஒருவனுக்கு வாழ்வதற்கு ஒரு வருடம் மட்டுமே உண்டு {அவர்கள் ஒரு வருடத்திற்கு மேல் இறந்து விடுவார்கள் என்பது பொருள்}.(9) ஓ! மன்னா, பிறரின் கண்களில் பிரதிபலிக்கப்படும் தங்கள் தோற்றங்களைக் காண முடியாத மனிதர்கள் வாழ்வதற்கு ஒரு வருடம் மட்டுமே உண்டு.(10)

காந்தியுடன் கூடிய ஒருவன் அஃதை இழப்பது, அல்லது ஞானத்துடன் கூடியவன் அஃதை இழப்பது என இவ்வாறு தங்கள் அக மற்றும் புற இயல்பில் மாற்றம் கொண்ட ஒருவன் வாழ்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே உண்டு.(11) தேவர்களை அவமதிப்பவன், அல்லது பிராமணர்களிடம் சச்சரவு செய்பவன், அல்லது, இயல்பாகக் கரிய நிறம் கொண்டிருந்தும் வெண்ணிறம் அடையும் ஒருவன் வாழ்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே உண்டு.(12)

சிலந்தி வலையைப் போலச் சந்திரனில் பல துளைகளைக் காணும் ஒருவன், அல்லது அதே போன்ற துளைகளைச் சூரியனில் காணும் ஒருவன் வாழ்வதற்கு ஒரு வாரம் மட்டுமே உண்டு.(13) வழிபாட்டுக்குரிய இடங்களில் நுகரும் நறுமணத்தைச் சவங்களின் நாற்றத்தைப் போல உணர்பவன் வாழ்வதற்கு ஒரு வாரம் மட்டுமே உண்டு.(14)

மூக்கு, அல்லது காதுகள் தளர்வது {வளைவது}, பற்கள் மற்றும் கண்கள் நிறமிழப்பது {அவற்றில் பசையற்றுப் போதல்}, நினைவுகள் அனைத்தையும் இழப்பது, உடல் வெப்பமனைத்தையும் இழப்பது ஆகியன அந்த நாளே ஏற்படப்போகும் மரணத்தைக் குறிப்பிடும் அறிகுறிகளாகும்.(15)

உணரத் தக்க எந்தக் காரணமுமின்றி இடது கண்ணில் இருந்து திடீரெனக் கண்ணீர் சிந்துவது, ஒருவனுடைய தலையில் இருந்து ஆவி வெளியேறுவது போலக் காணப்படுவது ஆகியன அந்த நாள் முடிவடைவதற்குள் அந்த மனிதன் இறக்கப் போகிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகளாகும்.(16)

இந்த முன்னெச்சரிக்கை அறிகுறிகள் அனைத்தையும் அறிந்து கொள்பவனும், தூய்மையான ஆன்மாகக் கொண்டவனுமான மனிதன், பகலும், இரவும் தன் ஆன்மாவை பரமாத்மாவோடு (சமாதியில்) கலக்க வேண்டும்.(17) இவ்வாறே அவன் அழிய வேண்டிய நாள்வரை செயல்பட வேண்டும். எனினும் அவன் இறக்க விரும்புவதற்குப் பதில் இவ்வுலகில் வாழ விரும்பினால், ஓ! மன்னா, மணம் மற்றும் சுவைகள் அனைத்திலும் உள்ள இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, துறவியாக வாழ வேண்டும்.(18,19)

உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஆன்ம ஞானத்தால் அருளப்பட்ட மனிதன், சாங்கியர்களால் பரிந்துரைக்கப்படும் வாழ்வுமுறையை நடைமுறையாக்கி, தன் ஆத்மாவைப் பரமாத்மாவுடன் கலப்பதன் மூலம் மரணத்தை வெல்கிறான்.(20) இறுதியாக அவன், முற்றிலும் அழிவற்றதும், பிறப்பற்றதும், மங்கலமானதும், மாற்றமில்லாததும், நித்தியமானதும், நிலையானதும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அடைய முடியாததுமான நிலையை அடைகிறான்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(21)

பரமஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 319-சூரியனிடமிருந்து யஜுர் வேதத்தை அடைந்தது; கந்தர்வ மன்னன் விஸ்வாவசுவின் இருபத்தைந்து கேள்விகள்; அவற்றுக்குத் தாம் அளித்த விடைகள்; பிரகிருதி, ஜீவாத்மா, பரமாத்மா தொடர்புடைய மோக்ஷ அறிவியல்; ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! ஏகாதிபதி, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} வசிக்கும் பரப்பிரம்மத்தைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்வி ஆழ்ந்த புதிருடன் தொடர்புடையதாகும். ஓ! மன்னா, குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, முனிவர்களால் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பணிவுள்ளவனாக என்னை ஒழுங்கு செய்து கொண்டு சூரியனிடமிருந்து நான் யஜுஸ்களை {யஜுர் வேதத்தைப்} பெற்றேன்.(2) முன்பு நான், வெப்பம் தரும் தேவனை {சூரியனைத்} துதித்தபடியே கடுந்தவத்தில் ஈடுபட்டேன். ஓ! பாவமற்றவனே, என்னிடம் நிறைவடைந்த பலமிக்கச் சூரியன், என்னிடம்,(3) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, எவ்வளவுதான் அடைவதற்கரிதாக இருந்தாலும் எதில் உமது இதயத்தை நிலைபெறச் செய்திருக்கிறீரோ, அந்த வரத்தைக் கேட்பீராக. உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் நான் அஃதை உமக்கு அருள்வேன். எனது அருளை அடைவது மிக அரிதானதாகும்” என்றான்.(4)

வெப்பம் தரும் ஒளிக்கோள்களின் முதன்மையானவனுக்கு {சூரியனுக்குத்} தலைவணங்கிய நான் இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னேன், “எனக்கு யஜுஸ்களைக் குறித்து எந்த அறிவும் கிடையாது. தாமதமேதுமின்றி நான் அவற்றை அறிய விரும்புகிறேன்” என்றேன்.(5)

இவ்வாறு கேட்கப்பட்ட அந்தப் புனிதனமானவன் என்னிடம், “நான் உமக்கு யஜுஸ்களைக் கொடுப்பேன். வாக்கையே சாரமாகக் கொண்ட தேவி சரஸ்வதி உமது உடலுக்குள் நுழைவாள்” என்று சொன்னான்.(6)

பிறகு அந்தத் தேவன், எனது வாயைத் திறக்குமாறு ஆணையிட்டான். ஆணையிடப்பட்டவாறே நானும் செய்தேன். ஓ! பாவமற்றவனே, தேவி சரஸ்வதி என்னுடலுக்குள் நுழைந்தாள்.(7) இதனால் நான் எரியத் தொடங்கினேன். தாங்கவொண்ணா வலியால் நான் ஓர் ஓடையில் விழுந்தேன். உயர் ஆன்ம சூரியன் எனக்குச் செய்த நன்மையைப் புரிந்து கொள்ளாத நான் அவனிடம் கோபமடைந்தேன்.(8)

தேவியின் சக்தியால் நான் எரிந்து கொண்டிருந்தபோது, புனிதமான சூரியன் என்னிடம், “இந்த எரிச்சல் உணர்வை சற்றே பொறுத்திருப்பீராக. இது விரைவில் தணிவடையும், நீரும் குளிர்வடைவீர்” என்றான்.(9) உண்மையில் நான் குளிர்வடைந்தேன். ஒளியைச்செய்பவன் {சூரியன்}, சுகம் மீண்ட என்னைக் கண்டு, என்னிடம், “ஓ! மறுபிறப்பாளரே, மொத்த வேதங்களும், பிற்சேர்க்கையாகக் கருதப்படும் பிற பகுதிகளும் {கில மந்திரங்களும்}, உபநிஷத்துக்களும் உள்ளொளியால் உமக்குத் தோன்றும்.(10) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மொத்த சதபதங்களையும் {சதபத பிராம்மணங்களையும்} நீர் தொகுக்கப் போகிறீர். அதன் பிறகு உமது புத்தி, விடுதலையின் {முக்தியின்} பாதையில் திரும்பும்.(11) சாங்கியர்கள் மற்றும் யோகியர்கள் இருவராலும் ஆசைப்படப்படுவதும், விரும்பப்படுவதுமான கதியையும் நீர் அடைவீர்” என்றான். இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தத் தெய்வீகமான சூரியன் அஸ்த மலைகளுக்குச் சென்றான்.(12)

அவனது இறுதி வார்த்தைகளைக் கேட்டு, நான் இருந்த இடத்தில் இருந்து அவன் சென்ற பிறகு, மகிழ்ச்சியாக இல்லம் திரும்பி தேவி சரஸ்வதியை நான் நினைவுகூர்ந்தேன்.(13) என்னால் நினைக்கப்பட்டதும், உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துகளால் அலங்கரிக்கப்பட்டவளும், ஓம் என்ற ஓரசையை {ஓங்காரத்தைத்} தன் முன்னிலையில் கொண்டவளுமான மங்கலகரமான சஸ்வதி என் கண்களுக்கு முன்பாக உடனே தோன்றினாள்.(14) பிறகு நான் விதிப்படி அந்தத் தேவிக்கு வழக்கமான அர்க்கியத்தையும், வெப்பம் தரும் தேவர்களில் முதன்மையான சூரியனுக்கு மற்றொன்றையும் அர்ப்பணித்தேன். இந்தக் கடமையைச் செய்துவிட்டு, அவ்விரு தேவர்களிடமும் அர்ப்பணிப்புடன் என் இருக்கையில் அமர்ந்தேன். அதன்பேரில் மொத்த சதபத பிராம்மணங்களும், அவற்றின் புதிர்கள், அவற்றின் சுருக்கங்கள், அவற்றின் பிற்சேர்க்கைகள் ஆகியனவும் என் மனக்காட்சியில் தானே தோன்றியதால், நான் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தேன்.(16)

நற்சீடர்களான நூறு பேருக்கு நான் அவற்றைக் கற்பித்தேன், அதன்காரணமாக, தன் சீடர்களால் சூழப்பட்டவரும், உயர் ஆன்மா கொண்டவருமான என் தாய்மாமனுக்கு (வைசம்பாயனருக்கு) ஏற்பில்லாததைச் செய்தேன்[1].(17) பிறகு, ஓ! மன்னா {தேவராதா}, கதிர்களுக்கு மத்தியில் உள்ள சூரியனைப் போலவே, என் சீடர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்த நான், உனது உயர் ஆன்ம தந்தையுடைய {ஜனகனுடைய} வேள்வியின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டேன்.(18) அந்த வேள்வியில், வேதங்களை ஓதியதற்காகக் கொடுக்கப்படும் தக்ஷிணையை யார் பெறுவது என்பதில் எனக்கும், என் தாய்மாமனுக்கும் {வைசம்பாயனருக்கும்} இடையில் ஒரு சச்சரவு ஏற்பட்டது.(19) தேவலரின் முன்னிலையிலேயே நான் தக்ஷிணையில் பாதியை எடுத்துக் கொண்டேன் (மற்றொரு பாதி என் தாய்மாமனுக்குச் சென்றது).(19) உன் தந்தை {ஜனகன்}, சுமந்தர், பைலர், ஜைமினி மற்றும் பிற தவசிகள் அனைவரும் அந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்டனர்[2].(20)ஓ! ஏகாதிபதி, நான் இவ்வாறே சூரியனிடம் இருந்து பத்து யஜுஸ்களை ஐந்து முறை {அதாவது ஐம்பது சாகைகளைப்} பெற்றேன். பிறகு நான் ரோமஹர்ஷனுடன் சேர்ந்து புராணங்களைக் கற்றேன்.(21) ஓ! மன்னா, அந்த (மூல) மந்திரங்கள் மற்றும் தேவி சரஸ்வதியுடன், சூரியனிடம் கிடைத்த உத்வேகத் துணையால், சிறந்த சதபத பிராம்மணங்களைத் தொகுப்பதில் என்னை நிறுவிக் கொண்டு, அதற்கு முன்பு வேறு எவராலும் செய்யப்படாத பணியைச் செய்வதில் வெற்றியை அடைந்தேன். நான் விரும்பிய பாதையைப் பின்பற்றினேன், அதையே என் சீடர்களுக்கும் கற்பித்தேன்.(22,23) உண்மையில், மொத்த வேதங்களும், அவற்றின் சுருக்கங்களும் என்னால் என் சீடர்களுக்குச் சொல்லப்பட்டன. என் போதனைகளின் விளைவால், மனம் மற்றும் உடல் தூய்மையடைந்த என் சீடர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(24) நான் சூரியனிடம் இருந்து பெற்ற ஐம்பது அங்கங்களைக் கொண்ட இந்த ஞானத்தை நிலைநிறுத்திய பிறகு, அந்த ஞானத்தின் பெரும்பொருளை {பிரம்மத்தை} இப்போது தியானித்துக் கொண்டிருக்கிறேன்.(25)

ஓ! மன்னா {தேவராதா}, வேதாந்த சாத்திரங்களை நன்கறிந்தவனான கந்தர்வன் விஸ்வாவசு, இந்த ஞானத்தால் பிராமணர்களுக்குக் கிட்டும் நன்மை, அதிலிருக்கும் உண்மை, இந்த ஞானத்தின் சிறந்த நோக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக என்னிடம் ஒரு காலத்தில் கேள்விகளைக் கேட்டான். ஓ! மன்னா வேதங்கள் தொடர்பாக மொத்தம் இருபத்து நான்கு கேள்விகளை அவன் என்னிடம் கேட்டான். இறுதியில் உள்ளுணரும் ஆய்வுமுறை குறித்த ஞானக் கிளை {மனனமெனும் யுக்தி} தொடர்பாக அவன் இருபத்தைந்தாவது கேள்வியையும் கேட்டான். அக்கேள்விகள் பின்வருமாறு: “அண்டம்{1} மற்றும் அண்டமற்றது{2} {விஷ்வாவிஷ்வம்} என்றால் என்ன? அஸ்வாம் {புருஷன்}{3} மற்றும் அஸ்வம் {பிரகிருதி}{4} என்றால் என்ன? மித்திரன்{5} என்றால் என்ன? வருணன்{6} என்றால் என்ன?(26-28) ஞானம்{7} என்றால் என்ன? ஞானத்தின் பொருள் {ஞேயம்}{8} என்றால் என்ன? புத்தியற்றது {அஜஞன் / அறியாதவன்}{9} என்றால் என்ன? புத்தியுடன் கூடியது {ஞன் / அறிகின்றவன்}{10} என்றால் என்ன? கம் {ஆனந்தம்}{11} என்றால் என்ன? மாற்றக் கொள்கை {தபஸ் / ஆலோசனை}{12} என்றால் என்ன? அஃது இல்லாதது {அதபஸ் / ஆலோசியாமை}{13} என்றால் என்ன? சூரியனை விழுங்குபவன்{14} மற்றும் சூரியன்{15} {ஸூர்யாதிஸூர்யர்கள்} என்றால் என்ன? வித்தை{16} மற்றும் அவித்யை{17} {வித்யாவித்யைகள்} என்றால் என்ன?(29) வேத்யம் {அறியக்கூடியது}{18} மற்றும் அவேத்யம் {அறியக்கூடாதது}{19} {வேத்யாவேத்யம்} என்றால் என்ன? அசைவற்றது {அசலம்}{20} மற்றும் அசைவுள்ளது {சலம்}{21} என்றால் என்ன? தொடக்கமற்றது {அக்ஷரம் / குறைவற்றது}{22}, அழிவற்றது {அவ்யயம்}{23}, அழியக்கூடியது {க்ஷேம்யம்}{24} ஆகியவை என்னென்ன?” {என்று கேட்டான்}. இந்தச் சிறந்த கேள்விகளே அந்த முதன்மையான கந்தர்வனால் {விஸ்வாவசுவால்} என்னிடம் கேட்கப்பட்டன.(30)

கந்தர்வர்களில் முதன்மையான மன்னன் விஸ்வாவசு, இந்தக் கேள்விகளை என்னிடம் ஒன்றன்பின் ஒன்றாகக் கேட்ட பிறகு, அவற்றுக்கு நான் முறையாகப் பதிலளித்தேன்.(31) எனினும் முதலில் நான் அவனிடம், “உன் கேள்விகளைக் குறித்து நான் சிந்திக்கும் வரை ஒரு குறுகிய {ஒரு முகூர்த்த} காலத்திற்குக் காத்திருப்பாயாக” என்று அவனிடம் சொன்னேன். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்தக் கந்தர்வன் அமைதியாக அமர்ந்தான்.(32) அப்போது நான், தேவி சரஸ்வதியை மீண்டும் மனத்தால் நினைத்தேன். அந்தக் கேள்விகளுக்கான மறுமொழிகள், தயிரில் இருந்து வரும் நெய்யைப் போல இயல்பாகவே என் மனத்தில் எழுந்தன.(33) உள்ளுணரும் ஆய்வுமுறையெனும் உயர்ந்த அறிவியலை நோக்கில் கொண்ட நான், ஓ! ஏகாதிபதி, உபநிஷத்துகளையும், வேதங்கள் தொடர்பான துணை சாத்திரங்களையும் என் மனத்தால் கடைந்தேன்.(34) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஏற்கனவே நான் உனக்குச் சொன்னதும், இருபத்தைந்தாவதான ஜீவனை அடிப்படையாகக் கொண்டதுமான விடுதலை {முக்தி} குறித்துச் சொல்லும் நான்காவது அறிவியலை அப்போது நான் அவனுக்கு விளக்கிச் சொன்னேன்[3].(35)ஓ! ஏகாதிபதி {தேவராதா}, மன்னன் விஸ்வாவசுவிடம் இவை அனைத்தையும் சொன்ன பிறகு நான் அவனிடம், “நீ என்னிடம் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்கிறேன் கேட்பாயாக.(36) ஓ! கந்தர்வா, அண்டம் மற்றும் அண்டமற்றது {விஷ்வாவிஷ்வம்} என்றால் என்ன? என்று நீ கேட்ட கேள்விக்கு இப்போது பதிலளிக்கிறேன். அண்டமானது புலப்படாததாகவும் {அவ்யக்தமாகவும்}, (விடுதலையை {முக்தியை} விரும்புவோருக்குப்} பயங்கரமான பிறப்பிறப்புக் கோட்பாடுகளுடன் கூடிய மூலப் பிரகிருதியாகவும் இருக்கிறது.(37) மேலும் அது (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களால் நிறைந்த படைப்புக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதன் விளைவால் அஃது {அண்டம் / விஷ்வம்} குணங்களுடையதாகவும் இருக்கிறது[4]. அண்டமற்றது {அவிஷ்வம்} என்பது குணங்களேதும் அற்ற புருஷனாகும். அஸ்வாம் மற்றும் அஸ்வம் ஆகியன, பெண் மற்றும் ஆணாகவும்,{38) முன்னது பிரகிருதியாகவும், பின்னது புருஷனாகவும் சொல்லப்படுகின்றன. அதேபோல, மித்ரன் என்பது புருஷனும், வருணன் என்பது பிரகிருதியுமாகின்றன[5].(39) மேலும் ஞானமானது பிரகிருதியாகவும், ஞானத்தின் பொருளாக அறியப்படுவது புருஷனாகவும் அழைக்கப்படுகின்றன. அறியாதது (ஜீவன்), அறிவது அல்லது புத்தி ஆகிய இரண்டும் குணங்களற்ற புருஷனாக இருக்கின்றன (ஏனெனில், புருஷன் அறியாமை கொள்ளும்போதே ஜீவனாகிறான்).(40)மாற்றக் கொள்கை கொண்டதாகவும் {தபஸ் / ஆலோசனை}, மாற்றக்கொள்கை இல்லாததாகவும் {அதபஸ் / ஆலோசனையற்றது} உள்ள கம் {ஆனந்தம்} குறித்து நீ கேட்டாய். நான் பதிலளிக்கிறேன், கம் என்பது புருஷனாகும்[6]. மாற்றக்கொள்கையுடன் கூடியது {தபஸ்} பிரகிருதியாகும். மாற்றக் கொள்கை இல்லாதது {அதபஸ்} புருஷனாகும்.(41) அதே போலவே, அவேத்யம் (அறியமுடியாதது) என்றழைக்கப்படுவது பிரகிருதியாகும்; வேத்யம் என்றழைக்கப்படுவது புருஷனாகும்.(42) அசைவற்றது {அசலம்} மற்றும் அசைவுள்ளது {சலம்} குறித்தும் நீ என்னிடம் கேட்டாய். என் பதில் என்ன என்பதைக் கேட்பாயாக. மாற்றங்களுக்கு உட்பட்டுப் படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருக்கும் அசைவுள்ளது {சலமானது} பிரகிருதியாகும். மாற்றங்களுக்கு உட்படாமல் படைப்பு மற்றும் அழிவுக்குத் துணை புரிவதால் அசைவற்றது {அசலமானது} புருஷனாகும்.(43) (வேறொரு தத்துவ அமைப்பின்படி) வேத்யம் பிரகிருதியாகும்; அதே வேளையில் அவேத்யம் புருஷனாகும். பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டும் புத்தியற்றவையாகவும், நிலையானவையாகவும், அழிவற்றவையாகவும்,(44) பிறப்பற்றவையாகவும், நித்தியமானவையாகவும் அத்யாத்மம் என்ற பெயரில் உள்ள தத்துவங்களை அறிந்த தத்துவ ஞானிகள் கொண்ட தீர்மானங்களின் படியே அறியப்படுகின்றன.(45)படைப்பின் காரியத்தில், பிரகிருதி அழிவற்றதாக இருப்பதன் விளைவால், பிறப்பற்ற அந்தப் பிரகிருதி, சிதைவுக்கோ, அழிவுக்கோ உட்படாததாகக் கருதப்படுகிறது. மேலும் புருஷன், மாறாததாக இருப்பதால், அழிவற்றதாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்கிறது.(46) பிரகிருதியில் வசிக்கும் குணங்களே அழியத்தக்கன, பிரகிருதியானவள் அழியத்தக்கவளல்ல. மேலும் பிரகிருதியானது, மாற்றங்களுக்கு உட்பட்டு, படைப்புக்கான காரணமாகச் செயல்படுகிறது. படைக்கப்பட்ட விளைவுகளாவன தோன்றவும், மறையவும் செய்கின்றன, மூலப்பிரகிருதியோ தோன்றுவதுமில்லை, மறைவதுமில்லை. எனவே பிரகிருதி அழிவற்றது என அழைக்கப்படுகிறது. இவ்வாறே, உள்ளுணர்வு ஆய்வுமுறையின் அடிப்படையிலானதும், விடுதலையையே {முக்தியையே} கதியாகக் கொண்டதுமான நான்காம் அறிவியலை நான் சொல்லிவிட்டேன்.(47) ஓ! விஸ்வாவசு, உள்ளுணர்வு ஆய்வுமுறை அறிவியலின் மூலமும், ஆசான்களிடம் காத்திருந்தும், ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்கள், நோற்கப்பட வேண்டிய கடமைகளின் அனைத்து நடைமுறைகள் மற்றும் வேதங்கள் அனைத்தும் மதிப்புடன் கற்கப்பட வேண்டும்.(48) ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே, வேதங்களையும், அதன் கிளைகள் அனைத்தையும் கற்றாலும், அனைத்துப் பொருட்களும் தங்கள் பிறப்பைக் கொள்வதும், அழிவடையும்போது அனைத்துப் பொருட்களும் சென்று கலப்பதும், வேதம் போதிக்க முனையும் ஞானப் பொருளுமான பரமாத்மாவை அறியாதவர்களின், உண்மையில், வேதங்கள் நிறுவ முனைவதைக் குறித்து எந்த அறிவும் இல்லாதவர்களின் வேத கல்வியானது எந்நோக்கமும் இல்லாததாக, வீணான சுமையாகவே அவர்களுக்கு இருக்கும்.(49,50)

நெய்யை விரும்பும் மனிதன், தான் முனைவது என்ன என்பதைக் காணாமல், கழுதைப்பாலைக் கடைந்தால், உடல்கழிவின் இழிமணத்திற்கு ஒப்பான ஒரு பொருளையே அடைவான்.(51) அதைப் போலவே, வேதங்கற்ற ஒருவன், எது பிரகிருதி, எது புருஷன் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறினால், அவன் தன் மூடப் புத்தியை மட்டுமே உறுதிசெய்து, (வேதக் கதை எனும் வடிவிலான) பயனற்ற சுமையையே சுமக்கிறான்[7].(52) ஒருவன், மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதைத் தவிர்ப்பதற்காகக் கவனமான அர்ப்பணிப்புடன், பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் சிந்திக்க வேண்டும்.(53) ஒருவனுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பிறப்புகள் நேர்வைக் குறித்துச் சிந்தித்து, அழியத்தக்க விளைவுகளை உண்டாக்கும் செயலறத்தைத் தவிர்த்து, அழிவற்ற யோக அறத்தை அவன் பின்பற்ற வேண்டும்.(54)ஓ! காசியபா[8], ஒருவன் ஜீவாத்மாவின் இயல்பையும், பரமாத்மாவுடன் அது கொண்டுள்ள தொடர்பையும் தொடர்ந்து சிந்திப்பதால், குணங்கள் அனைத்தையும் நீக்குவதிலும், பரமாத்மாவைக் காண்பதிலும் வெல்கிறான்.(55) மூடப் புத்தி கொண்ட மனிதர்களால் மட்டுமே, நித்தியமானதும், புலப்படாததுமான பரமாத்மாவானது, இருபத்தைந்தாவதிலிருந்து அல்லது ஜீவாத்மாவிலிருந்து வேறுபட்டதாகக் கருப்படுகிறது. ஞானத்துடன் கூடியவர்கள இவை இரண்டையும் உண்மையில் ஒன்றாகவே காண்கிறார்கள்.(56) மீண்டும் மீண்டும் நேரும் பிறப்பிறப்புகளை அஞ்சும் சாங்கியர்களும், யோகிகளும், ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்” என்றேன் {யாஜ்ஞவல்கியர் கந்தர்வன் விஸ்வாவசுவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்}.(57)அப்போது விஸ்வாவசு, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஜீவாத்மாவானது அழிவற்றது என்றும், உண்மையில் பரமாத்மாவில் இருந்து வேறாக இல்லாதது என்றும் நீர் சொல்கிறீர். எனினும், இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. இக்காரியம் குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(58) இது குறித்து, ஜைகீஷவ்யர், அசிதர், தேவலர், மறுபிறப்பாள தவசியான பராசரர், நுண்ணறிவைக் கொண்டவரான {புத்திமானான} வார்ஷகண்யர், பிருகு, பஞ்சசிகர், கபிலர், சுகர், கௌதமர், ஆர்ஷ்டிஷேணர், உயர் ஆன்மாவான கர்க்கர், நாரதர், ஆஸுரி, நுண்ணறிவைக் கொண்டவரான புலஸ்தியர், ஸனத்குமாரர், உயர் ஆன்மாக் கொண்ட சுக்கிரர் மற்றும் என் தந்தையான கசியபர் ஆகியோரின் உரையாடல்களை நான் கேட்டிருக்கிறேன். அதற்கடுத்து, ருத்திரன் மற்றும் நுண்ணறிவுமிக்க விஸ்வரூபர், பல்வேறு தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தைத்தியர்கள் இது குறித்த செய்த உரையாடல்களையும் நான் கேட்டிருக்கிறேன். ஞானங்கள் அனைத்தின் நித்திய பொருளையே அவர்கள் பொதுவாக உரையாடுவதால், நான் அவர்கள் சொல்லும் அனைத்தையும் அடைந்திருக்கிறேன்.(59-63)

எனினும், உமது நுண்ணறிவின் துணை கொண்டு அவற்றைக் குறித்து நீர் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். நீர் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவராகவும், சாத்திரங்களைக் கற்பிக்கும் கல்விமானாகவும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவராகவும் இருக்கிறீர்.(64) நீர் அறியாதது ஏதுமில்லை. ஓ! பிராமணரே, தேவர்கள் மற்றும் பித்ருக்களின் உலகங்களின் விளக்கப்படும் ஸ்ருதிகளின் பெருங்கடலாக நீர் இருக்கிறீர்.(65) ஒளிக்கோள்கள் அனைத்தின் நித்திய தலைவனான ஆதித்தியனே (இந்த ஞானக்கிளையின் காரியத்தில்) உமது ஆசான் என்று பிரம்மலோகத்தில் வசிக்கும் பெரும் முனிவர்கள் சொல்கின்றனர்.(66) ஓ! யாஜ்ஞவல்கியரே, ஓ! பிராமணரே, சாங்கியர்களின் மொத்த அறிவியலையும், அதிலும் குறிப்பாக யோகிகளின் சாத்திரங்களையும் நீர் அடைந்திருக்கிறீர்.(67) அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் குறித்து முழுமையாக அறிந்த நீர், விழிப்படைந்த ஞானத்தைக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை. தயிரிலிருந்து வெண்ணையைத் திரட்டி எடுப்பதைப் போல அந்த ஞானத்தைக் (குறித்து நீர் உரையாடுவதை நான்) கேட்க விரும்புகிறேன்” என்றான் {கந்தர்வன் விஸ்வாவசு}.(68)

யாஜ்ஞவல்கியர் {ஆகிய நான்}, “ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே, நீ ஞானங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளவல்லவனாவாய். எனினும், நீ கேட்பதால், என் ஆசானிடமிருந்து {சூரியனிடமிருந்து} பெற்ற வகையிலேயே நான் உனக்குச் சொல்கிறேன்.(69) புத்தியற்ற பிரகிருதியானது, ஜீவனால் உணரப்படுகிறது. எனினும், ஓ! கந்தர்வா, ஜீவனைப் பிரகிருதியால் உணர முடியாது.(70) ஜீவனானது பிரகிருதியில் பிரதிபலிக்கப்படுவதன் விளைவால், பின்னது {பிரகிருதியானது} சாங்கியர்களாலும், ஸ்ருதிகளில் குறிப்பிடப்படும் மூலக் கோட்பாடுகளை அறிந்த யோகிகளாலும் பிரதானம் என்றழைக்கப்படுகிறது.(71) ஓ! பாவமற்றவனே, மற்றது {ஆத்மாவானது}, இருபத்துநான்காவதும் (பிரகிருதியும்}, இருபத்தைந்தாவதும் {ஆன்மாவும்) காணப்படுவதைக் காண்கிறது; இருபத்தாறாவது காணப்படுவதைக் காணாதிருக்கிறது[9].(72) இருபத்தைந்தாவதானது {ஆன்மாவானது}, தன்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை எனக் கருதுகிறது. எனினும், உண்மையில், தன்னைக் காணும் அஃதை (இருபத்தாறாவதை {பரமாத்மாவை} ) அது {இருபத்தைந்தாவது} காண்பதில்லை[10].(73)ஞானம் கொண்ட மனிதர்கள், உண்மையில் சார்பற்ற இருப்பைக் கொண்ட இருபத்தைந்தாவதோடு அல்லது ஆன்மாவோடு, (புத்தியற்ற அல்லது செயலற்ற பிரகிருதியான) இருபத்துநான்காவது அடையாளங்காணப் படுவதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. மீனானது நீரில் வாழ்கிறது. அது தன் இயல்பால் தூண்டப்பட்டே அங்கே இருக்கிறது.(74) நீரில் வாழும் மீனானது, அதனிலிருந்து தனியாகக் கருதப்படுவதைப் போலவே, இருபத்தைந்தாவதும், அது தொடர்ந்து இருபத்துநான்காவது அல்லது பிரகிருதியுடன் தொடர்புநிலையில் இருந்தாலும், பிரகிருதியில் இருந்து தனிப்பட்ட சார்பற்ற உண்மையான நிலையிலேயே உணரப்பட வேண்டும். நான் என்ற மமதையில் மூழ்கும்போது, இருபத்தாறாவதோடு {பரமாத்மாவோடு} கூடிய தன் அடையாளத்தைப் புரிந்து கொள்ள முடியாத போது, பிரகிருதியுடன் தானே இருப்பதால் உண்டாகும் மாயையில் பீடிக்கப்படும் விளைவாலும், தான் சிந்திக்கும் முறையினாலும், ஜீவாத்மாவனது, எப்போதும் {மமதையில்} மூழ்கவே செய்தாலும், அத்தகைய மமதையில் இருந்து விடுபடும்போது மேல்நோக்கி எழுகிறது.(75,76) தான் ஒன்று என்றும், தான் வசிக்கும் பிரகிருதியானது மற்றொன்று என்றும் உணர்வதில் ஜீவாத்மா வெல்லும்போது, ஓ மறுபிறப்பாளனே {கந்தர்வன் விஸ்வாவசுவே}, அது பரமாத்மாவைக் காண்பதில் வென்று, அண்டத்தோடு ஒன்றும் நிலையை அடைகிறது.(77) ஓ! மன்னா, பரம் ஒன்றும், இருபத்தைந்தாவது (அல்லது ஜீவாத்மா) மற்றொன்றுமாகும். எனினும், பரமானது ஜீவாத்மாவுக்கு மேலிருப்பதன் விளைவால், ஞானிகள் அவை இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்.(78)

பிறப்பிறப்பை அஞ்சுபவர்களும், இருபத்தாறாவதன் {பரமாத்மாவின்} காட்சியால் அருளப்பட்டவர்களும், உடல் மற்றும் மனத்தூய்மை கொண்டவர்களும், பரமாத்மாவில் பக்தி கொண்டவர்களுமான யோகிகளும், சாங்கிய தத்துவ அமைப்பைப் பின்பற்றுபவர்களும், இந்தக் காரணங்களினாலேயே ஜீவாத்மாவை அழிவற்றதாக {ஜீவாத்மா அழிவற்றது என்ற கருத்தை} வரவேற்பதில்லை[11]. ஒருவன் பரமாத்மாவைக் கண்டு, தன் தனித்துவ நனவுநிலையை {அகங்காரத்தை} இழந்து, தன்னைப் பரத்துடன் அடையாளம் காணும்போது, அவன் அனைத்தையும் அறிந்தவனாகி, அனைத்தையும் அறிந்த அத்தகைய நிலையால், மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து விடுபடுகிறான். ஓ! பாவமற்றவனே, புத்தியற்ற பிரகிருதி, புத்தியுடன் கூடிய ஜீவாத்மா மற்றும் அனைத்தையும் அறிந்த பரமாத்மா ஆகியவற்றைக் குறித்து ஸ்ருதிகளில் உள்ள குறியீடுகளின்படியே நான் உனக்கு உண்மையாகச் சொல்லியிருக்கிறேன். அறிவது மற்றும் அறியப்படுவது ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனும், ஞானம் மற்றும் அறியப்பட்டது ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனுமான மனிதன், அண்டத்தின் மூலக் காரணமான கேவலம் {முழுமையாகவும்} மற்றும் கேவலமற்ற {முழுமையற்றதாகவும்} என இரண்டாகவும், ஜீவாத்மா {இருபத்தைந்தாவது} மற்றும் பரமாத்மாவாகிய {இருபத்தாறாவதுமாகிய} இரண்டாகவும் இருக்கிறான்” என்றேன் {யாஜ்ஞவல்கியன் என்கிற நான்}.(79-82)விஸ்வாவசு, “ஓ! பலமிக்கவரே, தேவர்களின் மூலப்பொருளாக இருக்கும் விடுதலையை {முக்தியைக்} குறித்துப் போதுமான அளவுக்கு முறையாக நீர் சொல்லிவிட்டீர். சிறந்த உண்மையை நீர் சொன்னீர். தீராத அருள் எப்போதும் உம்மிடம் இருக்கட்டும், உமது மனம் எப்போதும் புத்தியுடன் கலந்திருக்கட்டும்” என்றான்”.(83)

யாஜ்ஞவல்கியர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கந்தர்வ இளவரசன் {விஸ்வாவசு}, ஒளிமிக்க அழகில் ஒளிர்ந்தபடியே சொர்க்கத்தை நோக்கிச் சென்றான். என்னைவிட்டுச் செல்லும் முன் அந்த உயர் ஆன்மா {விஸ்வாவசு}, என்னை வலம் வந்து முறையாகக் கௌரவித்தான், நானும் உயர்வான நிறைவுடன் அவனைப் பார்த்தேன்.(84) ஓ! மன்னா {தேவராதா}, என்னிடம் இருந்து பெற்ற அறிவியலை, பிரம்மலோகத்தில் வசிக்கும் தேவர்கள், பிற தேவர்கள், பூமியில் வசிப்போர், பாதாளலோகவாசிகள் மற்றும் விடுதலை {முக்தி} பாதையைப் பின்பற்றுவோருக்கு அவனே {விஸ்வாவசுவே} கற்பித்தான்.(85) சாங்கியர்கள், தங்கள் அமைப்பின் நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். யோகிகள், தங்கள் அமைப்பில் கற்பிக்கப்படும் நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தங்கள் விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் வேறு பிறரும் இருக்கின்றனர். அவர்களிடம் இந்த அறிவியல் புலப்படத்தக்க கனிகளை உண்டாக்கும்.(86) ஓ! மன்னா, விடுதலையானது {முக்தியானது / மோக்ஷமானது}, ஞானத்தில் இருந்தே உண்டாகிறது. ஞானமில்லாமல் அஃதை ஒருபோதும் அடைய முடியாது. ஓ! ஏகாதிபதி, ஞானிகள் இதையே சொல்கின்றனர். எனவே, பிறப்பிறப்பில் இருந்து தன்னை விடுதலை அடையச் செய்யும் உண்மை ஞானத்தை அனைத்து விவரங்களுடன் அறிவதில் ஒருவன் முனைப்பைக் காட்ட வேண்டும்.(87) நம்பிக்கையுள்ள ஒருவன், பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியனிடமிருந்தோ, வைசியனிடமிருந்தோ, தாழ்ந்த பிறவியைச்சார்ந்த ஒரு சூத்திரனிடமிருந்தோ கூட அந்த ஞானத்தை அடைய வேண்டும். அத்தகைய ஞானத்தில் எப்போதும் அவன் மதிப்பைக் காட்ட வேண்டும். நம்பிக்கையுள்ள ஒருவனைப் பிறப்பிறப்பால் பீடிக்க முடியாது[12].(88)அனைத்துவகை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களும் பிராமணர்களே. அனைவரும் பிரம்மத்திலிருந்தே எழுந்தனர். அனைத்து மனிதர்களும் பிரம்மத்தையே சொல்கிறார்கள்[13]. பிரம்மத்தில் இருந்து பெறப்பட்டு, அதை {பிரம்மத்தை} நோக்கியே செலுத்தப்படும் புத்தியின் துணையுடன், பிரகிருதி மற்றும் புருஷன் ஆகியவற்றைக் குறித்த இந்த அறிவியலை நான் கற்பிக்கிறேன். உண்மையில் இந்த மொத்த அண்டமும் பிரம்மமே.(89) பிராமணர்கள் பிரம்மாவின் வாயிலிருந்தும், க்ஷத்திரியர்கள் கரங்களில் இருந்தும், வைசியர்கள் தொப்புளிலிருந்தும், சூத்திரர்கள் அவனது பாதங்களில் இருந்து உண்டானார்கள். (இவ்வழியிலேயே உண்டான) அனைத்து வகையினரும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாகக் கருதப்படக்கூடாது.(90) ஓ! மன்னா {தேவராதா}, அறியாமையால் தூண்டப்படும் மனிதர்கள் அனைவரையும், இறப்பையும், பிறப்பையும் அடையச் செய்யும் காரணமாக இருப்பது செயல்களே[14]. ஞானமற்றவர்களான அனைத்து வகை {வர்ண} மனிதர்களும், பயங்கர அறியாமையால் இழுத்துச் செல்லப்பட்டு, பிரகிருதியில் இருந்து உண்டாகும் கோட்பாடுகளின் மூலம் பல்வேறு வகைகளில் {வர்ணங்களில்} வீழ்கிறார்கள்.(91) இக்காரணத்தினாலேயே அனைவரும் ஞானத்தை அடைய முனைய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அஃதை {அந்த ஞானத்தை} அடைய முனைய வேண்டும் என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஞானம் கொண்ட ஒருவனே பிராமணனாவான். (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களாகிய) பிறரும் ஞானத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, இந்த விடுதலை {முக்தி} அறிவியல் அனைவருக்குமானதாகும். ஓ! மன்னா, ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது[15].(92) உன்னால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் வாய்மைக்கு ஏற்புடைய வகையில் என்னால் பதிலளிக்கப்பட்டது. எனவே, துன்பங்கள் அனைத்தையும் நீ களைவாயாக. இவ்விசாரணையின் {பொருளின்} மறு எல்லைக்குச் செல்வாயாக {ஞானத்தின் மறுகரையை அடைவாயாக}. உன் கேள்விகள் நன்றாக இருந்தன. எப்போதும் உன் சிரத்தில் அருளிருக்கட்டும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}”.(93)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “நுண்ணறிவைக் கொண்ட யாஜ்ஞவல்கியரால் இவ்வாறு கற்பிக்கபட்ட மிதிலையின் மன்னன் {தேவராதன்} மகிழ்ச்சியால் நிறைந்தான்.(94) அம்மன்னன், அந்த முதன்மையான தவசியை வலம் வந்து அவரைக் கௌரவித்தான். மன்னன் விடைகொடுத்ததும், அவர் {யாஜ்ஞவல்கியர்} அவனது சபையில் இருந்து புறப்பட்டார். விடுதலை {முக்தி} அறம் குறித்த ஞானத்தை அடைந்த மன்னன் தேவராதன் தன் ஆசனத்தில் அமர்ந்து,(95) பத்து லட்சம் பசுக்களையும், பெரும் அளவிலான தங்கத்தையும், பெரும் அளவிலான ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களையும் தீண்டி, அவற்றைப் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(96) அந்த முதிர்ந்த மன்னன் {தேவராதன்}, விதேஹர்களின் ஆட்சியுரிமையில் தன் மகனை நிறுவிவிட்டு, யதிகளின் நடைமுறைகளைப் பின்பற்றி வாழத் தொடங்கினான்.(97) அம்மன்னன், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) பொதுவான கடமைகள் மற்றும் கடமை தவறுதல்கள் {தர்மாதர்மங்கள்} அனைத்தையும் சிறுமையாக நினைத்து, சாங்கியர்கள் மற்றும் யோகிகளின் அறிவியலை முழுமையாகக் கற்கத் தொடங்கினான்.(98) முடிவற்றவனாகத் தன்னைக் கருதிய அவன், சார்பற்ற, நித்தியமான ஒருவனை {பரமனை} மட்டுமே சிந்திக்கத் தொடங்கினான். பொதுவான கடமைகள் மற்றும் கடமை தவறல்கள், அறம் மற்றும் மறம், வாய்மை மற்றும் பொய்மை,(99) பிறப்பு மற்றும் இறப்பு, பிரகிருதியால் உண்டாகும் கோட்பாடுகள் தொடர்புடைய பிற பொருட்கள் அனைத்தையும் அவன் கைவிட்டான்.(100)

சாங்கியர்களும், யோகிகளும், தங்கள் அறிவியல்களின் போதனைப்படியே, இந்த அண்டத்தைப் புலப்படுவது மற்றும் புலப்படாதது ஆகியவற்றின் செயல்பாட்டு விளைவு எனவே கருதுகிறார்கள்.(101) தற்சார்புடையதும், உயர்ந்ததில் உயர்ந்ததும், நித்தியமானதும், தூய்மையானதுமான பிரம்மமானது நன்மை மற்றும் தீமையில் இருந்து விடுபட்ட ஒன்றாக இருப்பதாகக் கல்விமான்கள் சொல்கிறார்கள். எனவே, ஓ! ஏகாதிபதி, நீ தூய்மையடைவாயாக.(102) கொடையாளி, கொடைபெறுபவன், கொடை, கொடையளிக்கப்பட விதிக்கப்பட்டவை ஆகியன அனைத்தும் புலப்படாத ஆன்மாவாகவே கருதப்படுகின்றன. ஆன்மாவே அந்த ஆன்மாவின் ஒரே உடைமையாகும். எனவே, ஒருவனுக்கு அந்நியனாக எவன் இருக்க முடியும்? நீ எப்போதும் இவ்வழியிலேயே சிந்திப்பாயாக. ஒருபோதும் வேறு வகையில் சிந்திக்காதே.(103,104) குணங்களுடன் கூடிய பிரகிருதி எது, குணங்களைக் கடந்த புருஷன் எது என்பதை அறியாதவனே, அந்த ஞானமற்றவனே, புனித நீர்நிலைகளுக்குச் சென்று வேள்விகளைச் செய்கிறான்[16].(105) ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரா}, ஒருவன் வேத கல்வியாலோ, தவங்களாலோ, வேள்விகளாலோ ஒருபோதும் பிரம்ம நிலையை அடைய முடியாது. புலப்படாதவன், அல்லது பரமனை உணர்வதில் வென்றால் மட்டுமே அவன் மதிப்புமிக்கவனாகக் கருதப்படுகிறான்.(106) மஹத்திடம் காத்திருப்பவர்கள் {மஹத்தை பூஜிக்கிறவர்கள்} மஹத்தின் உலகங்களை அடைகிறார்கள். நனவுநிலையிடம் {அகங்காரத்திடம்} காத்திருப்பவர்கள், நனவுநிலைக்குரிய இடத்தை அடைகிறார்கள். உயர்ந்ததிடம் காத்திருப்பவர்கள், இவற்றைவிட உயர்ந்த இடங்களை அடைகிறார்கள்[17].(107)சாத்திரங்களைக் கற்ற கல்விமான்களும், புலப்படாத பிரகிருதியைவிட உயர்ந்ததாக இருக்கும் நித்திய பிரம்மத்தை உணர்வதில் வென்றவர்களுமான மனிதர்கள், பிறப்பிறப்பைக் கடந்ததும், இருப்பில் உள்ளதும், இல்லாதிருப்பதும், குணங்களில் இருந்து விடுபட்டதுமான நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(108) நான் இந்த ஞானம் அனைத்தையும் ஜனகனிடம் இருந்து பெற்றேன். ஜனகன் அதை யாஜ்ஞவல்கியரிடம் இருந்து அடைந்தான். ஞானமே மிக மேன்மையானது. வேள்விகளை அதனோடு ஒப்பிட முடியாது. ஞானத்தின் துணையாலேயே ஒருவன், இக்கட்டுகளும், ஆபத்துகளும் நிறைந்த உலகமெனும் பெருங்கடலைக் கடப்பதில் வெல்கிறான். வேள்விகளின் மூலம் ஒருவனால் அந்தப் பெருங்கடலை ஒருபோதும் கடக்க முடியாது.(109) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறப்பிறப்பு மற்றும் பிற தடைகளை ஒருவன் சாதாரண முயற்சியின் மூலம் கடக்க முடியாது. வேள்விகள், தவங்கள், நோன்புகள் மற்றும் நியமங்களால் மனிதர்கள் {மோக்ஷத்தையடைவதில்லை;} சொர்க்கத்தையே அடைகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கிருந்து மீண்டும் பூமியிலேயே விழுகிறார்கள்.(110) எனவே, மிகத் தூய்மையானதும், அருளப்பட்ட நிலையும், களங்கமற்றதும், புனிதமானதும், (விடுதலையாக இருப்பதால்) அனைத்து நிலைகளையும் கடந்திருப்பதுமான பர நிலையை நீ மதிப்புடன் துதிப்பாயாக. ஓ மன்னா, க்ஷேத்திரத்தை உணர்வதன் மூலம், ஞானமீட்டும் வேள்வியைச் செய்வதன் மூலம் நீ உண்மையில் ஞானியாவாய்.(111) பழங்காலத்தில் யாஜ்ஞவல்கியர், உபநிஷதக் கல்வியின் மூலம் அடையப்படும் நன்மையை மன்னன் ஜனகனுக்குச் செய்தார். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான பரத்தைக் குறித்தே அந்தப் பெரும் முனிவர் {யாஜ்ஞவல்கியர்}, மிதிலையின் மன்னனிடம் {ஜனக குல தேவராதனிடம்} உரையாடினார். அஃது அவனை, மங்கலமானதும், அழிவற்றதும், அனைத்து வகைத் துன்பங்களையும் கடந்திருப்பதுமான பிரம்ம நிலையை அடையத்தக்கவனாக்கியது” {என்றார் பீஷ்மர்}.112.

ஜராமரணம்! – சாந்திபர்வம் பகுதி – 320-முதுமை மற்றும் மரணத்தைக் கடக்கும் வழிமுறை குறித்து ஜனகனுக்குச் சொன்ன பஞ்சசிகர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பெரும் சக்தியையும், பெரும் செல்வத்தையும் பெற்ற பிறகு, நெடுங்காலத்தை வாழ்நாளாகப் பெற்ற பிறகு, ஒருவன் எவ்வாறு மரணத்தைத் தவிர்ப்பதில் வெல்வான்?(1) தவங்கள், (வேதங்களில் விதிக்கப்பட்ட) பல்வேறு செயல்களைச் செய்வது, ஸ்ருதிகளில் ஞானம், மருந்துகள் உண்பது ஆகிய இந்த வழிமுறைகளில் எதன் மூலம் ஒருவன் முதுமையையும், மரணத்தையும் தவிர்ப்பதில் வெல்லலாம்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம், “இது தொடர்பாகப் பழங்கதையில், நடைமுறையில் பிக்ஷுவாக {சந்நியாசியாக} இருந்த பஞ்சசிகருக்கும், ஜனகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகன், வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், கடமைகள் {தர்மங்கள்} அனைத்தின் நோக்கம் மற்றும் பொருள் குறித்துத் தான் {ஜனகன்} கொண்டிருந்த ஐயங்கள் அனைத்தும் நீங்கியவருமான பெரும் முனிவர் பஞ்சசிகரிடம் கேள்வி கேட்டான்.(4) மன்னன் {ஜனகன்}, “ஓ! புனிதமானவரே, எவ்வொழுக்கத்தின் மூலம் ஒருவன் முதுமையையும், மரணத்தையும் கடக்கலாம்? தவங்களாலா? புத்தியாலா, (வேள்விகள் மற்றும் நோன்புகள் போன்ற) அறச்செயல்களாலா? சாத்திரக் கல்வி மற்றும் ஞானத்தாலா?” என்று கேட்டான்.(5)

விதேஹர்களின் ஆட்சியாளனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், புலப்படாத அனைத்தின் பொருட்களை அறிந்தவரும், கல்விமானுமான பஞ்சசிகர், “(முதுமை மற்றும் மரணம் ஆகிய) இவை இரண்டையும் தவிர்க்க முடியாது; எந்தச் சூழ்நிலையிலும் இதைத் தவிர்க்க முடியாது என்பதும் உண்மையுமல்ல.(6) பகல்களோ, இரவுகளோ, மாதங்களோ நிற்பதில்லை. நிலையற்றவனாக இருந்தாலும், (நிவிருத்தி அறம் அல்லது செயல்கள் அனைத்தையும் தவிர்த்தல் எனும்) நித்திய {நிலையான} பாதையைப் பின்பற்றும் மனிதனால் மட்டுமே பிறப்பிறப்பைத் தவிர்ப்பதில் வெல்ல முடியும்[1].(7) அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. முடிவிலா கால வெள்ளத்தில் உயிரினங்கள் அனைத்தும் நிற்காமல் பிறந்து கொண்டிருப்பது காணப்படுகிறது. (மீட்பதற்கு) ஓர் ஓடமும் இல்லாததும், முதுமை மற்றும் மரணம் என்ற இருபெரும் முதலைகளால் தொற்றப்பட்டதுமான முடிவிலா கால வெள்ளத்தில் பிறப்பவை, தம் துணைக்கு யாருமில்லாமல் மூழ்கிப்போகின்றன.(8)அந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் ஒருவன், உதவி பெற நண்பன் எவனையும் காண்பதிலும், வேறு எவனது நலத்தில் ஈர்க்கப்படுவதிலும் தவறுகிறான்.(9) அவன், தன் பாதையில் மட்டுமே மனைவிகளையும், பிற நண்பர்களையும் சந்திக்கிறான். எந்தக் காலத்திலும் எவருடனும் இத்தகைய தோழமையை அவன் அதற்கு முன்பு அனுபவிப்பதில்லை.(10) கால வெள்ளத்தில் பிறக்கும் உயிரினங்கள், காற்றால் அசைக்கப்பட்டுப் பேரொலியுடன் ஒன்றையொன்று சந்திக்கும் மேகத்திரள்களைப் போல ஒருவருக்கொருவர் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றனர்.(11) முதுமையும், மரணமும் ஓநாய்களைப் போல உயிரினங்கள் அனைத்தையும் விழுங்குபவையாகும். உண்மையில் அவை, பலமிக்கவை மற்றும் பலமற்றவை, குட்டை மற்றும் நெட்டையான அனைத்தையும் விழுங்குகின்றன.(12)

எனவே, நிலையற்றவையாக இருக்கும் உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் ஆன்மா மட்டுமே என்றென்றும் {நித்தியமாக} நிலைத்திருக்கிறது. உயிரினங்கள் பிறக்கும்போது அவன் ஏன் மகிழ வேண்டும்? அவை இறக்கும் போது அவன் ஏன் வருந்த வேண்டும்?(13) ‘எங்கிருந்து நான் வந்தேன்? நான் யார்? நான் எங்கே செல்லப் போகிறேன்? நான் யாருடையவன்? எதன் முன்னால் நான் ஓயப்போகிறேன்? {இனி எங்கே இருக்கப் போகிறேன்?} நான் என்னவாகப் போகிறேன்?’ என்று எந்தக் காரணத்திற்காகவும், எதற்காகவும் நீ ஏன் வருந்த வேண்டும்?(14) (உன் செயல்களுக்கு) உன்னைத் தவிர வேறு யார் சொர்க்கத்தையோ, நரகத்தையோ காணப் போவது? எனவே சாத்திரங்களை வீசியெறியாமல் ஒருவன் கொடைகளை அளிக்கவும், வேள்விகளைச் செய்யவும் வேண்டும்” என்றார் {பஞ்சசிகர்}.(15)

முக்தலக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 321-முக்தி அறிகுறிகள் முதலியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தர்மத்வஜனுக்கும், பிக்ஷுகினி ஸுலபைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தின் அரச முனியே, இல்லற வாழ்வுமுறையைக் கைவிடாமல், புத்தியையும் (பிற புலன்களையும்) அழிப்பதன் மூலம் கிட்டும் விடுதலையை {முக்தியை} எவரும் அடைந்திருக்கிறார்களா? இஃதை எனக்குச் சொல்வீராக.(1) திரள் மற்றும் நுட்பமான வடிவத்தை {லிங்க சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும்} எவ்வாறு கைவிடமுடியும்? ஓ! பாட்டா, விடுதலையின் உயர்ந்த மகிமை என்ன என்பதைச் சொல்வீராக?” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜனகனுக்கும் {தர்மத்வஜனுக்கும்}, சுலபைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) பழங்காலத்தில் ஜனககுலத்தைச் சார்ந்தவனும், தர்மத்யஜன் {தர்மத்வஜன்} என்ற பெயரைக் கொண்டவனுமான ஒருவன் மிதிலையின் மன்னனாக இருந்தான். அவன் துறவற நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தான்.(4) அவன் வேதம், மோக்ஷசாத்திரங்கள், மன்னர்களுக்குரிய கடமை சார்ந்த சாத்திரங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருந்தான். அவன் தன் புலன்களை அடக்கி இந்தப் பூமியை ஆண்டுக் கொண்டிருந்தான்.(5) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உலகில் அவனது நல்லொழுக்கத்தைக் கேள்விப்பட்டவர்களும், ஞானத்தை அறிந்தவர்களுமான ஞானிகள் பலர், அவனைப் போல இருக்க விரும்பினர்.(6) அதே சத்திய யுகத்தில், துறவியும் {பிக்ஷுகியும்}, சுலபை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு பெண்மணி யோக கடமைகளைப் பயின்று பூமி முழுவதும் திரிந்து கொண்டிருந்தாள்.(7) அவ்வாறு பூமியில் திரிந்து கொண்டிருந்த சுலபை, பல்வேறு இடங்களைச் சார்ந்த தண்டிகள் பலரிடமிருந்து விடுதலை அறத்தில் {மோக்ஷதர்மத்தில்} அர்ப்பணிப்புடன் இருந்த மிதிலையின் ஆட்சியாளனை {தர்மத்யஜனைக்} குறித்துக் கேள்விப்பட்டாள்.(8) மன்னன் ஜனகனை {தர்மத்யஜனைக்} குறித்த இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, இஃது உண்மையா, இல்லையா என்பதை உறுதி செய்ய விரும்பிய சுலபை, ஜனகனிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினாள்.(9)தன் யோக சக்தியால், தனது பழைய வடிவத்தையும், குணங்களையும் கைவிட்ட சுலபை, களங்கமற்ற குணங்களும், ஒப்பற்ற அழகும் கொண்ட வடிவத்தை ஏற்றாள்.(10) தாமரை இதழ்களைப் போன்ற விழிகளையும், அழகிய புருவங்களையும் கொண்ட அந்தப் பெண்மணி, கண்ணிமைக்கும் நேரத்தில் மிகவிரைவான கணையின் வேகத்தில் விதேஹர்களின் தலைநகரை அடைந்தாள்.(11) பெரும் மக்கள் தொகையால் நிறைந்த மிதிலையெனும் தலைநகரை அடைந்த அவள், துறவியின் தோற்றம் பூண்டு அம்மன்னன் முன்னிலையில் சென்றாள்.(12) அவளது அழகிய வடிவைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்த அந்த ஏகாதிபதி {தர்மத்யஜன்}, யார் அவள்? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாள் என்பதை விசாரித்தான்.(13) அவளை {சுலபையை} வரவேற்ற அவன் {தர்மத்வஜன்}, அவளுக்கான சிறந்த இருக்கையை அளித்து, அவளது கால்களைக் கழுவி கொள்ள நீரைக் கொடுத்து கௌரவித்து, புத்துணர்வைத் தரும் சிறந்த பொருட்களால் அவளை நிறைவு செய்தான்.(14) முறையாகப் புத்துணர்வை அடைந்து, தனக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பல் சடங்குகளால் நிறைவையடைந்த பெண் துறவியான சுலபை, அமைச்சர்கள் சூழ, கல்விமான்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த மன்னனை (விடுதலையறத்தில் {மோக்ஷதர்மத்தில்} அவனது பற்றை அறிவிக்கும்படி அவனைத்) தூண்டினாள்.(15)

நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுவதன் மூலம் விடுதலை அடைவதில் ஜனகன்{தர்மத்வஜன்} வென்றுவிட்டானா என்பதில் ஐயம் கொண்டவளும், யோக சக்தியுடையவளுமான சுலபை, தன் புத்தியைக் கொண்டு மன்னனின் புத்திக்குள் நுழைந்தாள்.(16) மன்னனின் கண்களில் இருந்து வெளிப்படும் கதிர்களைத் தன் கண்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்களால் தடுத்த அந்தப் பெண்மணி, உண்மையை உறுதி செய்ய விரும்பி, யோகக் கட்டுகளைக் கொண்டு மன்னன் ஜனகனை {தர்மத்வஜனைக்} கட்டினாள்[1].(17) தனது வெல்லப்பட முடியாத தன்மையில் செருக்குடைய அந்தச் சிறந்த ஏகாதிபதி {தர்மத்வஜன்}, சுலபையின் நோக்கங்களை வீழ்த்தி, தன் பிரிதிறனால் அவளது தீர்மானத்தை அறிந்தான்[2].(18) மன்னன் தன் நுட்பமான வடிவில் அரசக் குடையும், செங்கோலும் இல்லாதிருந்தான். அந்தப் பெண்மணியான சுலபை அவளது நுட்பமான வடிவில் திரிதண்டம் இல்லாதிருந்தாள். ஒரே (திரள்) வடிவில் {மன்னன் தர்மத்யஜனின் உடலுக்குள்} இருந்த அவர்கள் இருவரும் {தர்மத்யஜனும், சுலபையும்} ஒருவருடனொருவர் உரையாடினர். அந்த ஏகாதிபதிக்கும், சுலபைக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்பாயாக.(19)ஜனகன் {தர்மத்யஜன் சுலபையிடம்}, “ஓ! புனிதமான பெண்மணியே, நீ அர்ப்பணிப்புடன் உள்ள ஒழுக்கமுறை யாது? நீ யாருடையவள்? எங்கிருந்து நீ வந்திருக்கிறாய்? இங்கே உன் காரியம் முடிந்த பிறகு, நீ எங்கே செல்லப் போகிறாய்?(20) மற்றவரின் சாத்திர அறிவை, வயதை, பிறவி வகையைக் கேள்வி கேட்காமல் எவராலும் உறுதி செய்ய முடியாது. எனவே, என்னிடம் வந்திருக்கும் நீ என்னுடைய இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.(21) அரசக்குடை, செங்கோல் முதலிய செருக்கனைத்திலிருந்து உண்மையில் விடுபட்டவனாக என்னை அறிவாயாக. நான் உன்னை முழுமையாக அறிய விரும்புகிறேன். நீ என்னால் மதிக்கத்தகுந்தவளாவாய்.(22) (இவ்வுலகில்) வேறு எவராலும் சொல்ல முடியாத விடுதலை {முக்தி} குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. பழங்காலத்தில் இந்தப் புகழ்பெற்ற ஞானத்தை யாரிடம் இருந்து அடைந்தேன் என்பதையும் சொல்கிறேன் கேட்பாயாக[3].(23) பராசர குலத்தைச் சார்ந்தவரும், சந்நியாச ஆசிரமத்தை ஏற்றவரும், மதிப்புமிக்கவரும் உயர் ஆன்மா கொண்டவருமான பஞ்சசிகரின் அன்புக்குரிய சீடன் நான்.(24) நான் ஐயங்கள் விலகியவனாக, சாங்கிய, யோக அமைப்புகளையும், நன்கறியப்பட்ட விடுதலை {முக்தி} பாதைகள் மூன்றுக்குமுரிய வேள்விகள் மற்றும் பிற சடங்குகளையும் முழுமையாக அறிந்தவனாகவும் இருக்கிறேன்[4].(25)பூமியில் திரிந்து, சாத்திரங்களால் குறிப்பிடப்படும் பாதையைப் பின்பற்றிய கல்விமானான பஞ்சசிகர், முன்பொரு மழைக்காலத்தில் நான்கு மாதங்கள் என் வசிப்பிடத்தில் மகிழ்ச்சியாக வசித்தார்.(26) சாங்கியர்களில் முதன்மையான அவர், வாய்மைக்கு ஏற்புடைய வகையிலும், புத்தியால் உணரக்கூடிய வகையிலும், விடுதலை {முக்தி} அடைவது குறித்துப் பல்வேறு வழிமுறைகள் குறித்து என்னிடம் பேசினார். எனினும், அவர் என் நாட்டைக் கைவிடச் சொல்லி எனக்கு ஆணையிடவில்லை.(27) பற்றில் இருந்து விடுபட்டு, பரப்பிரம்மத்தில் என் ஆத்மாவை நிலைநிறுத்தி, தோழமையால் அசையாமல், விடுதலை {முக்தி} குறித்துச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள மூன்று ஒழுக்கங்களை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்து வருகிறேன்.(28) (அனைத்து வகைப் பற்றிலும்) துறவு கொள்வதே விடுதலைக்கான உயர்ந்த வழிமுறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவனை விடுதலையடையச் செய்யும் துறவு ஞானத்தில் இருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஞானத்தில் இருந்து யோக முயற்சி எழுகிறது, அம்முயற்சியின் மூலம் ஒருவன் தன்னறிவை, அல்லது ஆத்ம ஞானத்தை அடைகிறான். ஞானத்தின் மூலம் ஒருவன் இன்பதுன்பங்களைக் கடக்கிறான். அதுவே அவனை மரணத்தைக் கடக்கச் செய்து உயர்ந்த வெற்றியை அடையவல்லவனாக்குகிறது.(30)

அந்த உயர்ந்த புத்தி (தன்னறிவு {ஆத்மஞானம்}) என்னால் அடையப்பட்டிருக்கிறது, அதன் படியே நான் முரண்பட்ட இரட்டைகளைக் கடந்திருக்கிறேன். இம்மையிலும் நான் திகைப்பில் {மயக்கத்தில்} இருந்து விடுபட்டவனாகவும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனாகவும் இருக்கிறேன்.(31) நீரால் நிறைந்து மென்மையான மண், (விதைக்கப்படும்) வித்தைத் துளிர்க்கச் செய்வதைப் போலவே, மனிதர்களின் செயல்களே மறுபிறப்பை உண்டாக்குகின்றன.(32) வித்திற்குத் துளிர்க்கும் திறனிருந்தாலும், கடாயில் வறுக்கப்பட்டால் துளிர்க்க இயலாததைப் போலவே,(33) என் புத்தியானது, துறவறம் பயின்ற புனிதமான பஞ்சசிகரின் போதனைகளால், புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொள்ளும் பலனை உண்டாக்காமல், ஆசையால் விளையும் உற்பத்திக் கோட்பாட்டில் இருந்து {என் புத்தி} விடுபட்டிருக்கிறது.(34) என் மனைவியிடம் அன்பையோ, பகைவர்களிடம் வெறுப்பையோ நான் அனுபவிப்பதில்லை. உண்மையில், பற்று மற்றும் கோபம் ஆகியவற்றின் {விருப்பு வெறுப்பின்} கனியற்ற தன்மையைக் கண்டு நான் அவை இரண்டில் இருந்தும் விலகியிருக்கிறேன்.(35)

என் வலக்கரத்தில் சந்தனம் பூசுபவன், என் இடக்கத்தைக் காயப்படுத்துபவன் ஆகிய இருவரையும் நான் ஒன்றாகவே கருதுகிறேன்.(36) என் (உண்மை) நோக்கத்தை அடைந்துவனாகவும், மகிழ்ச்சியானவனாகவும், மண்ணாங்கட்டியையும், கல்லையும், தங்கக்குவியலையும் ஒன்றாகப் பார்ப்பவனாகவும் இருகிறேன். அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனாக நான் இந்நாட்டை ஆள்வதில் ஈடுபடுகிறேன். இதன் விளைவால் திரிதண்டதாரிகள் அனைவராலும் நான் எங்கும் புகழப்படுகிறேன்.(37) விடுதலையை {முக்தியை} அறிந்த சில முதன்மையான மனிதர்கள், விடுதலைக்கு மூன்று பாதைகள் உண்டு என்று சொல்கிறார்கள். (ஞானம், யோகம் மற்றும் வேள்விச்சடங்குகளே இவை). சிலர், உலகின் பொருள்கள் அனைத்தையும் நோக்கமாகக் கொண்ட ஞானத்தையே விடுதலைக்கான வழிமுறையாகக் கருதுகிறார்கள். சிலர், (அகம் மற்றும் புறம் என்ற) இரண்டு செயற்பாடுகளையும் துறப்பதே வழிமுறை என்கின்றனர்.(38) விடுதலை குறித்த சாத்திரங்களை அறிந்த மற்றொரு வகை மனிதர்கள், ஞானமே ஒரே வழிமுறை என்று சொல்கிறார்கள். நுண்பார்வையுடன் கூடிய யதிகள் செயல்களே வழிமுறை என்று சொல்கின்றனர்.(39) உயர் ஆன்ம பஞ்சசிகர், ஞானம் மற்றும் செயல்கள் குறித்த கருத்துகள் இரண்டையும் புறந்தள்ளி மூன்றாவதையே ஒரே வழிமுறையாக அல்லது விடுதலைக்கான பாதையாகக் கருதினார்.(40)

இல்லற வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள் {கிருஹஸ்தர்கள்}, யமம் மற்றும் நியமத்துடன் இருந்தால் அவர்கள் சந்நியாசிகளுக்கு இணையானவர்களாவர். மறுபுறம், விருப்புவெறுப்பு, மனைவிகள், கௌரவம், செருக்கு, பற்று ஆகியவற்றுடன் கூடிய சந்நியாசிகள் இல்லறவாழ்வுமுறையை நோற்கும் மனிதர்களுக்கு இணையானவர்களாவர்[5].(41) ஞானத்தால் ஒருவன் விடுதலையை அடையமுடியுமெனில் திரிதண்டத்தில் விடுதலை இருக்கும் (ஏனெனில் அத்தகைய தண்டங்களைத் தரிப்பவர்கள் அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வேறு எதுவும் தடுக்காது). அவ்வாறெனில், குடையிலும், செங்கோலிலும் ஏன் விடுதலை கிட்டாது?, குறிப்பாகத் திரிதண்டம் தரிக்கவும், செங்கோல் தரிக்கவும் ஒரே காரணம் இருக்கும்போது ஏன் விடுதலை கிட்டாது?(42) ஒருவனுக்குக் குறிப்பிட்ட காரணங்களால் தேவைப்படும் பொருட்கள் மற்றும் செயல்களில் அவன் பற்று கொள்கிறான்.(43) ஒரு மனிதன், இல்லற வாழ்வுமுறையின் களங்கங்களைக் கண்டு (பெரும் தகுதி நிறைந்ததாகத் தான் கருதும்) மற்றொரு வாழ்வுமுறைக்காக அதைக் கைவிடும்போது, அத்தகைய புறக்கணிப்புக்கும், பின்பற்றுதலுக்கும் அவன் பற்றுகளில் இருந்து உடனே விடுபட்டுவிட்டதாகக் கருத முடியாது (அவன் செய்திருப்பதெல்லாம் முந்தைய வாழ்வு முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புதிய வாழ்வுமுறையில் பற்று கொண்டதை மட்டுமே).(44) அரசுரிமையானது, பிறரை கௌரவிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய முறைகள் நிறைந்தது. ஒரு துறவியின் வாழ்வும் அதே போன்றவை நிறைந்தவையே (ஏனெனில் அவர்களும் பிறரை கௌரவிக்கவும், தண்டிக்கவும் செய்கிறார்கள்). எனவே, இவ்வகையில் துறவிகளும் மன்னர்களும் ஒரே நிலையில் இருக்கிறார்கள் எனும்போது ஏன் துறவிகள் மட்டும் விடுதலையை அடைய வேண்டும்? மன்னர்கள் ஏன் அடையக்கூடாது?(45)எனவே, அரசுரிமை இருந்தபோதிலும், ஞானத்தால் மட்டுமே அனைத்துப் பாவங்களையும் கழுவிக்கொண்டு, பரப்பிரம்மத்தில் அவன் வாழ்ந்திருக்கிறான்.(46) காவி உடை அணிந்து, தலையை மழித்துக் கொண்டு, திரிதண்டமும், கமண்டலமும் ஏந்துவது ஒருவனுடைய வாழ்வுமுறையின் புற அடையாளங்கள் மட்டுமே ஆகும். ஒருவன் விடுதலை அடைவதற்குத் துணை புரிவதில் இவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது.(47) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையின் புற அடையாளங்களைப் பின்பற்றியபோதிலும், ஞானம் மட்டுமே ஒருவனைத் துன்பத்தில் இருந்து விடுதலையடையச் செய்யும் காரணமாக இருக்கும் எனும்போது, வெறும் அடையாளங்களைப் பின்பற்றுவது முற்றிலும் பயனற்றதாகும்.(48) அல்லது, அவற்றால் துன்பங்களைத் தணிக்க முடியும் என்பதைக் கண்டு நீ சந்நியாச அடையாளங்களைத் தரித்தால், நான் தரிக்கும் குடை மற்றும் செங்கோலில் ஏன் அந்தத் துன்பத்தைக் காணக்கூடாது?(49) விடுதலை {முக்தி} வறுமையில் இல்லை; அதே போலப் பற்றும் செழிப்பில் காணப்படுவதில்லை. ஒருவன் வறுமையில் இருந்தாலோ, செழிப்பாக இருந்தாலோ அவன் ஞானத்தால் மட்டுமே விடுதலையை அடைய முடியும்.(50)

(பொதுவாக மனிதர்களிடம்) பற்றை உண்டாக்கும் நாடு, மனைவிகள் என்ற வடிவில் அறம், பொருள் மற்றும் இன்பத்தை அனுபவிப்பதாக மேம்போக்காகத் தெரிந்தாலும் இக்காரணங்களால் நான் சுதந்திரமான நிலையில் வாழ்வதாக அறிவாயாக.(51) நாடு மற்றும் செல்வத்தால் உண்டாகும் கட்டு {பந்தம்}, பற்றுகளாலான கட்டு {பந்தம்} ஆகியவற்றை, விடுதலையைச் சொல்லும் சாத்திரங்கள் எனும் கல்லில் கூராக்கப்பட்ட துறவு எனும் வாளால் வெட்டிவிட்டேன்.(52) என்னைப் பொறுத்தவரையில் நான் இவ்வழியிலேயே என்னை விடுவித்துக் கொண்டேன். ஓ! பெண் துறவியே, நான் உன்னிடம் அன்பை வளர்க்கிறேன். ஆனால், நீ பின்பற்றும் வாழ்வுமுறைக்கேற்ற நடைமுறைகள் தொடர்பானதாக உன் நடத்தை இல்லை என்பதை நான் உன்னிடம் சொல்வதை அது {உன்னிடம் நான் கொண்டுள்ள அன்பு} தடை செய்யாது.(53) உன் வடிவில் பெரும் மென்மையை {மார்த்தவத்தைக்} கொண்டிருக்கிறாய். நீ அழகாக இருக்கிறாய். சிறந்த வடிவமைப்பை நீ கொண்டிருக்கிறாய். வயதின் இளமையுடனும் இருக்கிறாய். இவை அனைத்தும் இருந்து நீ நியமத்துடன் (புலனடக்கத்துடன்) இருக்கிறார். உண்மையில் நான் இஃதை ஐயுறுகிறேன்.(54) உண்மையில் நான் விடுதலையடைந்திருக்கிறேனா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக (யோக சக்தியின் துணையுடன் என்னுள் புகுந்து) என் உடலை நிறுத்தியிருக்கிறாய். இந்தச் செயல்பாடு, நீ தரிக்கும் அடையாளங்களுக்குரிய வாழ்வுமுறைக்குக் களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது.(55)

ஒரு யோகி ஆசையுடன் இருந்தால் அவன் தண்டந்தரிக்கத் தகுந்தவனல்ல. உன்னைப் பொறுத்தவரையில் நீ உன் தண்டத்தில் பற்று கொள்ளவில்லை. விடுதலை பெற்றவர்களைப் பொறுத்தவரையில் அவர்களும் வீழ்ச்சியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(56) உன் புத்தியின் துணையுடன் என் திரள் உடலில் நுழைந்து என்னுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொண்ட விளைவால் ஏற்படும் வரம்புமீறுதலைச் சொல்கிறேன் கேட்பாயாக.(57) நீ என் நாட்டுக்கு, அல்லது என் அரண்மனைக்கும் வந்த காரணம் என்ன? யாருடைய குறிப்பின் மூலம் நீ என் இதயத்திற்குள் {மனத்திற்குள்} நுழைந்தாய்?(58) நீ பிராமணப் பெண்ணாக இருப்பதால், முதன்மையான வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவளாக இருக்கிறாய். எனினும் என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு க்ஷத்திரியனாவேன். நம் இருவருக்கும் ஒரு சேர்க்கையும் இல்லை. வர்ணக்கலப்பைச் செய்யாதே.(59) விடுதலைக்கு வழிவகுக்கும் கடமைகளின் நடைமுறையில் நீ வாழ்கிறாய். நானோ இல்லற வாழ்வுமுறையை வாழ்கிறேன். எனவே, எதிரெதிரான இரு வாழ்வு முறைகளின் இயல்பற்ற கலவையால் உன் செயல் மற்றொரு தீமையையும் செய்திருக்கிறது.(60)

நீ என் கோத்திரத்தைச் சேர்ந்தவளா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. உன்னைப் பொறுத்தவரையிலும், நீயும் என்னை (நான் சார்ந்த கோத்திரத்தை) அறிய மாட்டாய். நீ என் கோத்திரமாகவே இருந்தால், இயல்பற்ற சேர்க்கையாக என் உடலில் நுழைந்ததன் மூலம் நீ மற்றொரு தீமையைச் செய்திருக்கிறாய்.(61) உன் கணவர் உயிரோடிருந்து, தொலைவான இடத்தில் வசித்துக் கொண்டிருந்தால், நீ விதிப்படி சேர்ந்திருக்க வேண்டியவனுடன் இல்லாததால் என்னுடனான இந்தச் சேர்க்கையின் மூலம் நான்காவது தீமையையும் செய்திருக்கிறாய்.(62) எந்தக் குறிப்பிட்ட காரியத்தை நிறைவேற்றும் நோக்கத்தால் தூண்டப்பட்டு இந்தப் பாவச் செயல்கள் அனைத்தையும் நீ செய்தாய்? நீ இவற்றை அறியாமையில் செய்கிறாயா? அல்லது பிறழ்புத்தியால் செய்கிறாயா?(63) உன் தீய இயல்பின் விளைவால் நீ முற்றிலும் சுதந்திரமானவளாக இருந்தாலோ, தடையற்ற நடத்தை கொண்டவளாக இருந்தாலோ, உனக்குச் சாத்திர அறிவு என ஏதும் இருந்தால், நீ செய்திருக்கும் அனைத்தும் தீமையை உண்டாக்கவல்லவை என்பதை நீ புரிந்து கொள்வாய்.(64) நீ செய்த இந்தச் செயல்களின் விளைவால் மன அமைதியை அழித்ததும் மூன்றாம் களங்கமாகும். உன் மேன்மையை வெளிக்காட்ட முயற்சி செய்ததன் மூலம் தீய பெண்ணின் அடையாளம் உன்னில் காணப்படுகிறது.(65)

உன் வெற்றியை உறுதி செய்ய விரும்பி நீ என்னை மட்டும் வீழ்த்த விரும்பவில்லை, (கல்விமான்களும், மிக மேன்மையான பிராமணர்களும் அடங்கிய) என் முழு சபையையும் நீ வெல்ல விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.(66) தகுதிமிக்க இந்தப் பிராமணர்கள் அனைவர் மீதும் இவ்வழியில் உன் கண்களைச் செலுத்துவதன் மூலம், இவர்கள் அனைவரையும் அவமதிக்கவும், (அவர்களை அவமதித்து) உன்னை மகிமைப்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறாய் என்பதும் வெளிப்படையாகத் தெரிக்கிறது.(67) யோக பலத்தில் நீ கொண்டிருக்கும் செருக்கால் திகைப்படைந்தும், (என் பலத்தைக் கண்டதில்) பிறந்த பொறாமையினாலும், உன் புத்தியை என் புத்தியோடு கலந்ததன் மூலம் உண்மையில் அமுதத்துடன் நஞ்சைக் கலந்துவிட்டாய்.(68) ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பும்போது ஏற்படும் சேர்க்கை அமுதம் போன்ற இனிமையாகும். எனினும், ஒரு பெண் விரும்பி நேரும் ஆணுக்கும், பெண்ணுக்குமான சேர்க்கையில், அவள் தன்னை விரும்பாத எதிர் பாலினத்தானை அடைந்தால், தகுதிக்கு {புண்ணியத்திற்குப்} பதிலாக, நஞ்சு போன்ற களங்கம் மட்டுமே விளையும்[6].(69) என்னைத் தீண்டுவதைத் தொடராதே. நான் அறவோன் என்பதை அறிவாயாக. உன் சாத்திரங்களின்படியே நீ செயல்படுவாயாக. நான் விடுதைலயடைந்தவனா? இல்லையா? என்று நீ செய்ய விரும்பிய விசாரணை நிறைவடைந்தது.(70)உன் ரகசிய நோக்கங்கள் அனைத்தையும் என்னிம் இருந்து மறைப்பது உனக்குத் தகாது. இவ்வாறு வேடம் போடுவதும், உன் நோக்கத்தை மறைத்துக் கொள்வதும், உன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைச் செய்தாயா? அல்லது (எனக்கு எதிரியான) வேறு மன்னனின் நோக்கத்தை நிறைவேற்ற வந்தாயா? என்பதை மறைப்பதும் உனக்குத் தகாது.(71) ஒரு மன்னனின் முன்போ; ஒரு பிராமணனின் முன்போ; பெண்களுக்குரிய குணங்களைக் கொண்ட மனைவியின் முன்போ ஒருவன் தன்னை வஞ்சகமாக மறைத்துக் கொள்ளக்கூடாது. இந்த மூவரிடமும் வஞ்சகமான வேடத்தில் தோன்றுவோர் விரைவில் அழிவையே சந்திப்பார்கள்.(72) மன்னர்களின் பலம் அவர்களுடைய அரசுரிமையில் இருக்கிறது. வேதங்களை அறிந்த பிராமணர்களின் பலம் வேதங்களில் இருக்கிறது. பெண்கள் அழகு, இளமை மற்றும் அருள்நிலையின் விளைவால் உயர்ந்த பலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.(73) இந்தப் பலங்களைப் பெற்றவர்கள் பலமிக்கவர்களாவர். எனவே, நன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும ஒருவன், இந்த மூவரிடமும், நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் அணுக வேண்டும். (இந்த மூவரிடமும்) நேர்மையின்மையும், வஞ்சகமும் வெற்றியை உண்டாக்கத் தவறும்.(74) எனவே, பிறப்பால் நீ சேர்ந்த வகை, உன் கல்வி, ஒழுக்கம், மனோ நிலை, இயல்பு மற்றும் நீ இந்த இடத்திற்கு வந்த நோக்கம் ஆகியவற்றை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றான் {ஜனக மன்னன் தர்மத்யஜன்}”.(75)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மன்னனால் இவ்வாறு இனிமையற்ற, முறையற்ற வகையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிந்திக்கப்பட்டாலும் சுலபை வெட்கமடையாதிருந்தாள்.(76) மன்னன் இந்த வார்த்தைகளைச்சொன்ன பிறகு, அந்த அழகிய சுலபை, தன்னை விட அழகான மறுமொழியைப் பின்வரும் சொற்களில் சொன்னாள்.(77)சுலபை {ஜனகமன்னன் தர்மத்வஜனிடம்}, “ஓ! மன்னா, ஒன்பது சொற்குற்றங்களில் இருந்தும், ஒன்பது தீர்மானப் பிழைகளில் {சொற்குற்றம் மற்றும் புத்தியின் குற்றங்களில்} இருந்தும் வாக்கானது எப்போதும் விடுபட்டிருக்க வேண்டும். தெளிவான பொருளைத் தரும் அதே வேளையில் அது நன்கறியப்பட்ட பதினெட்டு தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.(78) பொருள் மயக்கம் {ஸூக்ஷ்மம்}, தொடக்கவுரை மற்றும் முடிவுரையின் குறை நிறைகளை உறுதி செய்தல் {ஸாங்கியம்}, ஒப்பீட்டளவில் அந்தக் குறை நிறைகளின் பலம் மற்றும் பலவீனத்தை எடை போடுதல் {கிரமம்}, முடிவை நிறுவுதல் {நிர்ணயம்}, நம்பத்தகுந்த ஏற்புடைய தன்மை, அல்லது முடிவுரையோடு தொடர்புடையது {பிரயோஜனம்}, ஆகிய பொருளுடன் தொடர்புடைய இந்த ஐந்து தன்மைகளும் {காரியங்களும்}, வாக்கின் தகுதிகளாக {வாக்கியமாக} அமைகின்றன.(79) பொருள் மயக்கம் {கருத்தில் தெளிவின்மை} முதலிய இந்தத் தேவைகளின் தன்மைகளை அவற்றின் கலவையின்படி விளக்குகிறேன் கேட்பாயாக.(80)

ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக அறியப்படும் பொருட்களின் விளைவால், ஞானமானது அந்த வேறுபாட்டைச் சார்ந்திருக்கும்போதும், (காரியத்தைப் புரிந்து கொள்வதைப் பொறுத்தவரையில்) புத்தியானது அடுத்தடுத்த சொற்கலவைகளின் பல்வேறு கருத்துகளைச் சார்ந்திருக்கும்போதும், அது {புத்தி} தெளிவில்லாமல் {பொருள் மயக்கத்துடன்} இருப்பதாகச் சொல்லப்படுகிறது[7].(81) சாங்கியம் என்றழைக்கப்படும் (குறை நிறைகளை) உறுதிசெய்தலின் மூலம், (தொடக்கவுரை, முடிவுரைகளில் உள்ள) குறை நிறைகளை நீக்கி தற்காலிகமானப் பொருள்கள் பின்பற்றப்படுகின்றன[8].(82) (மேற்கண்ட நடைமுறையின் மூலம் உறுதிசெய்யப்பட்ட) குறை நிறைகளின் ஒப்பீட்டளவிலான பலம் மற்றும் பலவீனங்களைக் கருத்தில் கொள்வது, அல்லது கிரமம் எனப்படுவது, முன்னுரிமைகளில் உரிமையைத் தீர்மானிப்பது, அல்லது ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்களின் துணைத்தொடர்புகளை உள்ளடக்கியதாகும். இதுவே கிரமம் என்ற சொல்லுக்குத் தொடர்புடைய பொருளாகும், என வாக்கியங்கள், அல்லது உரைகளின் விளக்கங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(83) முடிவுரை என்பது இறுதித் தீர்மானமாகும். அறம் {தர்மம்}, பொருள் {அர்த்தம்}, இன்பம் {காமம்}, வீடு {மோக்ஷம்} என்று சொல்லப்படுவதில் குறிப்பாக அவை ஒவ்வொன்றும் என்னென்ன என்று சொல்லும் உரையே முடிவுரையாகும்[9].(84) விருப்பு வெறுப்பில் இருந்து உண்டாகும் துன்பம் பெரும் அளவில் அதிகரிக்கும். ஓ! மன்னா, இக்காரியத்தில் ஒருவன் பின்பற்றும் ஒழுக்கமே (அனுபவிக்கப்படும் துன்பத்தை விலக்கவல்ல) பிரயோஜனம் என்றழைக்கப்படுகிறது[10].(85)ஓ! மன்னா {தர்மத்வஜா}, பொருள் மயக்கம் முதலிய (எண்ணிக்கையில் ஐந்து) தன்மைகள் ஒன்றாகத் தோன்றும்போதே, புரிந்து கொள்ளக்கூடிய ஒரு முழுமையான வாக்கியமாக அஃது அமையும்[11].(86) நான் சொல்லும் வார்த்தைகள் பொருள் நிறைந்தவையும்{1}, (சொல் ஒவ்வொன்றும் பல பொருட்களின் அடையாளங்களாக இல்லாததன் விளைவால்) பொருள் மயக்கத்தில் இருந்து விடுபட்டவையும்{2}, காரணக் காரியத் தொடர்புடையதும் {தர்க்கப்பூர்வமானதும்}{3}, கூறியது கூறல், அல்லது ஒருபொருட்பன்மொழி ஆகியவற்றில் இருந்து விடுபட்டதும்{4}, மென்மையானதும்{5}, நிச்சயமானதும்{6},(87) மிகைப்பேச்சில் இருந்து விடுபட்டதும்{7}, ஏற்புடையதும், அல்லது இனிமையானதும்{8}, உண்மை நிறைந்ததும்{8}, (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) முத்தொகுப்புக்கு ஏற்புடையதும்{9}, (பிராகிருதத்தில் இருந்து விடுபட்டதும்) பண்பட்டதும்{10},(88) கோளமற்றதும், அல்லது குற்றமில்லாததும்{11}, கடுமையற்றதும், அல்லது புரிந்து கொள்ளக் கடினமற்றதும்{12}, முறையாக வகைப்படுத்தப்பட்டதும்{13}, பொருளைப் பொறுத்தவரையில் வலிந்து பெறப்படாததும்{14}, காரணம் மற்றும் விளைவில் {காரணக் காரியங்களில்} ஒன்றுக்கொன்று சரியானதும்{15}, தனித்தனியான ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பொருளைக் கொண்டதுமாக{16} இருக்கும்[12].(89) ஆசை, கோபம், அச்சம், பேராசை, நம்பிக்கையற்ற தன்மை, வஞ்சனை, வெட்கம், கருணை, செருக்கு ஆகியவற்றால் தூண்டப்பட்ட நான் உன்னிடம் ஒன்றையும் சொல்லமாட்டேன். (நீ சொன்னதற்குப் பதிலளிப்பதே முறை என்பதால் பதிலளிக்கிறேன்).(90)பேசுபவன், கேட்பவன், சொல்லப்படும் வார்த்தைகள் ஆகியன, பேச்சின் போக்கில் ஒன்றோடொன்று முற்றிலும் ஏற்புடைய வகையில் இருக்கும்போது, பெருள் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.(91) என்ன சொல்லப்பட வேண்டும் என்ற காரியத்தில், தான் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் பேசுபவன் கேட்பவனின் புத்தியை அலட்சியம் செய்யும்போது {அவமதிக்கும் போது}, அந்த வார்த்தைகளை எவ்வளவுதான் நல்லவையாக இருந்தாலும், அவை கேட்பவனால் எடுத்துக்கொள்ளக்கூடியவையாக இருப்பதில்லை.(92) பேசுபவன் தான் பேசும் பொருளுக்கான மதிப்பைக் கைவிட்டு, சிறந்த ஒலியும் பொருளும் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், கேட்பவரின் மனத்தில் தவறான தாக்கத்தையே ஏற்படுத்துகிறான். அத்தகைய சொற்களின் அத்தகைய தொடர்பு நிச்சயம் களங்கத்தையே ஏற்படுத்தும்.(93) எனினும், பொருளை வெளிப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லிக் கேட்பவனுக்கு நன்றாகப் புரியும் வகையில் பேசுபவன், உண்மையில் பேச்சாளன் என்று அழைக்கப்படத் தகுந்தவனாவான். வேறு எந்த மனிதனுக்கும் அப்பெயர் தகுந்ததில்லை.(94) எனவே, ஓ! மன்னா, பொருள் நிறைந்தவையும், சொற்செல்வத்துடன் கூடியவையுமான என் வார்த்தைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(95)

நான் யார்? யாருடையவள்? எங்கிருந்து வந்தேன்? முதலிய கேள்விகளை நீ என்னிடம் கேட்டாய். ஓ! மன்னா, உன் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில் சிதறாத மனத்துடன் கேட்பாயாக.(96) அரக்கு மற்றும் மரமும், புழுதித் தூசி மற்றும் நீர்த்துளியும் ஒன்றாகக் கலந்திருப்பதைப் போலவே அனைத்து உயிரினங்களின் இருப்பும் இருக்கிறது.(97) ஒலி, ஊறு {தீண்டல்}, சுவை, வடிவம் மற்றும் மணம், புலன்கள், ஆகியவை தங்கள் சாரங்களில் வெவ்வேறானவையாக இருந்தாலும், அரக்கும், மரமும் போலக் கலந்த நிலையிலேயே நீடிக்கின்றன.(98) இவற்றில் எதனிடமும் எவனும் நீ யார் எனக் கேட்பதில்லை என்பது நன்கறியப்பட்டது. அவை ஒவ்வொன்றுக்கும் தன்னைக் குறித்தோ, பிறவற்றைக் குறித்தோ எந்த அறிவும் கிடையாது.(99) கண்ணால் தன்னைக் காணமுடியாது. காதால் தன்னைக் கேட்க முடியாது. மேலும் கண்ணால் பிற புலன்களின் செயல்பாடுகள் எதையும் செய்ய முடியாது., அதே போலப் புலன்களில் எதனாலும் தன்னுடையதைத் தவிர வேறொரு புலனின் செயல்பாட்டைச் செய்ய முடியாது.(100)

இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தாலும் கூட, எவ்வாறு புழுதியும், நீர்த்துளியும் ஒன்றாகக் கலந்திருந்தாலும் ஒன்றையொன்று அறிந்து கொள்ள முடியாதோ, அதே போலவே அவை அனைத்தும் தங்களை அறியத் தவறுகின்றன. தங்கள் தங்களுக்குரிய செயல்பாட்டைச் செய்வதற்காக அவை புறத்தில் இருக்கும் தங்கள் நுகர் பொருட்களின் தொடர்புக்காகக் காத்திருக்கின்றன.(101) கண், வடிவம் மற்றும் ஒளி ஆகியன பார்த்தல் என்ற செயல்பாட்டின் மூன்று தேவைகளாக இருக்கின்றன. பிற புலன்களின் செயல்பாடுகளிலும், அவற்றின் விளைவான கருத்துகளிலும் இதுவே நேர்கிறது.(102) மேலும், (பார்வை, கேட்டல் முதலிய) புலன்களின் செயல்பாடுகளுக்கும், அவற்றின் விளைவுகளான (வடிவம், ஒலி முதலிய) கருத்துகளுக்கும் இடையில் புலன்களைத் தவிர மற்றொரு உட்பொருளாக இருக்கும் மனமும் தனக்கென உரிய செயல்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அதன் உதவியாலேயே ஒருவன், இருப்பையும், இல்லாமையையும் வேறுபடுத்திப் பார்த்து (புலன்களில் இருந்து பெறப்படும் கருத்துகள் அனைத்தின் காரியத்திலும்) நிச்சயத் தன்மையை அடைகிறான்.(103) ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்}, ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} மற்றும் மனம் ஆகியவை சேர்த்து இவை மொத்தம் பதினொன்றாக இருக்கின்றன. பனிரெண்டாவது புத்தியாகும். எது அறியப்பட வேண்டும் என்பதில் ஐயம் எழும்போது புத்தியே முன்வந்து (சரியான புரிந்து கொள்ளத் துணை புரிந்து) ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கிறது.(104) இந்தப் பனிரெண்டாவதற்கு {புத்திக்குப்} பிறகு, எண்ணிக்கையில் பதிமூன்றாவதாக வருவது சத்வம் எனும் மற்றொரு தத்துவமாகும். அதன் உதவியால் உடல் அமைப்புகளில் அஃது எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு குறைபடுகிறது என்பதைக் கொண்டு உயிரினங்கள் அடையாளங்காணப் படுகின்றன.(105)

இதன் பிறகு, (எண்ணிக்கையில் பதினான்காவதாகத் தான் {சுயம்} என்ற) மற்றொரு கோட்பாடு நனவுநிலையாகும். அஃது ஒருவன் சுயத்துக்கும், சுயமல்லாததற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.(106) ஆசை என்பது பதினைந்தாவது தத்துவமாகும். அதற்குள்ளேயே மொத்த அண்டமும் இருக்கிறது.(107) அவித்யை பதினாறாம் தத்துவமாகும். பிரகிருதி மற்றும் வியக்தி (மாயை மற்றும் பிரகாசம்) என்றழைக்கப்படும் பதினேழாம் மற்றும் பதினெட்டாம் கோட்பாடுகள் அதனுள்ளேயே {அவித்யைக்குள்ளேயே} இருக்கின்றன.(108) இன்பம் மற்றும் துன்பம், முதுமை மற்றும் மரணம், ஈட்டல் மற்றும் இழத்தல், ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை ஆகிய முரண்பட்ட இரட்டைகள் பத்தொன்பதாம் தத்துவமாக அமைகின்றன. பத்தொன்பதாம் தத்துவத்தையும் கடந்து, இருபதாவது என்றழைக்கப்படும் மற்றொரு தத்துவமான காலம் இருக்கிறது. இந்த இருபதாம் தத்துவச் செயல்பாட்டின் மூலமே உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பிறப்புகள் நேர்கின்றன என்பதை அறிவாயாக.(110)

இந்த இருபதும் ஒன்றாகவே நீடித்திருக்கின்றன. இவற்றைத் தவிர ஐம்பெரும் பூதங்களும், இருப்பும், இல்லாமையும் சேர்ந்து பட்டியலை இருபத்தேழாக்குகின்றன. இதையும் கடந்து விதி {புண்ணியப் பாவங்கள்}, சுக்ரன் {வீரியம்}, பலம் ஆகிய மூன்றும் சேர்வதால் பட்டியல் முப்பதை அடைகிறது.(111) எதனில் இந்த முப்பது தத்துவங்களும் இருக்கின்றனவோ அஃது உடல் என்று சொல்லப்படுகிறது.(112) சில மனிதர்கள், புலப்படாத பிரகிருதியே இந்த முப்பது தத்துவங்களுக்கும் மூலம் அல்லது காரணம் என்று கருதுகிறார்கள். (இது நாத்திக சாங்கிய பள்ளியின் கருத்தாகும்). மொத்த பார்வை கொண்ட காணாதர்கள் புலப்படுவதை (அல்லது அணுக்களை) அவற்றின் காரணம் எனக் கருதுகிறார்கள்.(113) புலப்படாததோ, புலப்படுவதோ எது அவற்றின் காரணமாக இருந்தாலும், அல்லது (பரமன், அல்லது புருஷன் மற்றும் புலப்படுவதுஅல்லது அணுக்கள் ஆகிய) இரண்டுமே காரணமாகக் கருதப்பட்டாலும், அல்லது நான்காவதாக (பரமன், அல்லது புருஷன், அவனது மாயை, ஜீவன், அவித்யை அல்லது அறியாமை என்ற) நான்கும் காரணமாக இருந்தாலும், அத்யாத்மாவை அறிந்தவர்கள் பிரகிருதியையே அனைத்து உயிரினங்களின் காரணமாகப் பார்க்கிறார்கள்.(115)

புலப்படாததாக இருக்கும் பிரகிருதியானது, இந்தத் தத்துவங்களின் வடிவில் புலப்படுவதாகிறது. ஓ! ஏகாதிபதி, நான், நீ, உடலுடன் கூடிய பிறர் அனைவரும், (நம் உடல்களைப் பொறுத்தவரையில்) பிரகிருதியின் விளைவுகளாவே இருக்கிறோம்.(116) கருவூட்டல் மற்றும் (கரு தொடர்புடைய) பிற நிலைகள், உயிர்வித்து மற்றும் குருதியின் கலவையின் மூலமே நேர்கின்றன. கருவூட்டலின் பின்விளைவாக, முதலில் தோன்றும் விளைவானது கலலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(117) கலலத்தில் இருந்து புத்புதம் (குமுழி) என்றழைக்கப்படுவது எழுகிறது. புத்புதமென்றழைக்கப்படும் நிலையில் இருந்து பேசி என்றழைக்கப்படும் நிலை எழுகிறது. பேசி என்றழைக்கப்படும் நிலையிலிருந்து, பல்வேறு அங்கங்கள் வழிப்படும் நிலை எழுகிறது. இந்த இறுதி நிலையில் இருந்து நகங்களும், முடியும் தோன்றுகின்றன.(118) ஓ! மிதிலையின் மன்னா {தர்மத்யஜா}, ஒன்பதாம் மாதத்தில் பிறக்கும் உயிரினத்தின் பாலினம் அறியப்பட்டு, ஆண்பிள்ளை என்றும் பெண்பிள்ளை என்றும் அழைக்கப்படுகின்றன.(119) உயிரினம் கருவறையில் இருந்து வெளிவந்ததும், அதன் நகங்களும், விரல்களும் மெருகூட்டப்பட்ட தாமிரத்தின் வண்ணத்தில் தெரிகின்றன. பிறக்கும்போது காணப்பட்ட வடிவம் மாறும்போது நேரும் அடுத்த நிலை குழந்தைப்பருவம் என்றழைக்கப்படுகிறது.(120)

குழந்தைப் பருவத்தில் இருந்து இளமைப் பருவம் அடையப்படுகிறது, இளமையில் இருந்து முதுமையும் அடையப்படுகிறது. உயிரினங்கள் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, முந்தைய நிலையில் இருந்த வடிவம் மாற்றமடைகிறது.(121) பொதுப் பயன்பாட்டில் பல்வேறு செயல்களைச் செய்யும் உடலின் பூதங்கள் ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு கணமும் மாற்றமடைகின்றன. எனினும், அம்மாற்றங்கள் கவனிக்கப்பட முடியாத அளவுக்கு நுணுக்கமாக நடைபெறுகின்றன.(122) உயிரினங்கள் அனைத்தின் உடல்நிலைகளும் நல்ல இனத்தைச் சார்ந்த வேகமான குதிரையைப் போல இவ்வாறு தொடர்ந்து மாறுதலுக்கு உட்படுபவையாக இருக்கும்போது, யார் எங்கிருந்து வந்தவன்? எங்கிருந்து வரவில்லை?(124) யார் யாருடையவன்? யாருடையவனல்ல? அவன் எங்கே எழுவதில்லை? உயிரினங்களுக்கும், அவற்றின் உடல்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது?(125)

தீக்கல் இரும்புடன் தொடர்பு கொள்ளும்போதும், இரு கட்டைகள் ஒன்றோடொன்று உரசும்போதும் உண்டாகும் நெருப்பைப் போல ஏற்கனவே சொல்லப்பட்ட ஏற்கனவே பெயர் சொல்லப்பட்ட (முப்பது) தத்துவங்களின் கலவையால் உயிரினங்கள் உண்டாகின்றனர்.(126) உண்மையில், உன் உடலில் நீ உன் உடலையே காண்பது போலும், உன் ஆன்மாவில் உன் ஆன்மாவையே காண்பது போலும், நீ ஏன் உன் உடலையும், உன் ஆன்மாவையும் பிறரின் உடல்களிலும், ஆன்மாக்களிலும் காணவில்லை?(128) ஓ! மன்னா, “இஃது என்னுடையது, இஃது என்னுடையதல்ல” என்ற (பிழையான) இருமை {முரண்பட்ட இரட்டைகளின்} ஞானத்தில் இருந்து நீ விடுபட்டது உண்மையென்றால், யார் நீ? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாய்? போன்ற கேள்விகளினால் என்ன பயன் ஏற்படப்போகிறது?(129) பகைவர்கள், கூட்டாளிகள், நடுநிலையாளர்கள், வெற்றிக்காலம், அமைதிக்காலம் போர்க்காலங்களில் பிறர் செயல்படுவதைப் போலவே செயல்படும் ஒரு மன்னனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்?(130)

அனைத்துச் செயல்களிலும் ஏழுவகைகளில் வெளிப்படும் முத்தொகையின் {அறம், பொருள் மற்றும் இன்பத்தின்) உண்மை இயல்பை அறியாதவனும், அந்த முத்தொகையில் பற்று கொண்டவனுமான ஒருவனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்?[13](131) ஏற்பில்லாதவர், ஏற்புடையவர், பலவீனர் மற்றும் பலவான்களிடம் சம பார்வைச் செலுத்த தவறுபவனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்? அதற்குத் தகாத நீ செய்யும் விடுதலைக்கான {முக்திக்கான} பாசாங்கு உனது ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} தடுக்கப்பட வேண்டும்.(132) (உன்னிடம் இவ்வளவு களங்கங்கள் இருக்கும்போது) விடுதலையை {முக்தியை} அடைய நீ செய்யும் இந்த முயற்சியானது, தடுக்கப்பட்ட உணவுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் ஏற்கும் நோயாளி மருந்தைப் பயன்படுத்தவதைப் போன்றதே ஆகும்.(133) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, மனைவிகள் மற்றும் பற்றுக்கான பிற தோற்றுவாய்களைக் குறித்துச் சிந்திக்கும் ஒருவன் தன் ஆன்மாவில் உள்ள இவற்றைக் காண வேண்டும். விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடாக வேறு எதைத் தான் பார்க்க முடியும்?(134) இவற்றைக் குறித்தும், விடுதலை அறத்தைப் பின்பற்றுவதாகச் சொன்னாலும் நீ இன்னும் பற்றுக் கொண்டிருக்கும் நன்கறியப்பட்ட நான்கு செயல்கள் (உறக்கத்தில் கிடப்பது, அனுபவிப்பது, உண்பது, உடுத்துவது) தொடர்பான குறிப்பிட்ட சில தோற்றுவாய்களைக் குறித்தும் இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(135)மொத்த உலகையும் ஆள வேண்டிய மனிதன் உண்மையில் இரண்டாமவன் அற்ற ஒரே மன்னனாக இருக்க வேண்டும். மேலும் அவன் ஒரே ஓர் அரண்மனையில் மட்டுமே வாழும் கடப்பாடு கொண்டவனாவான்.(136) அந்த அரண்மனையில் அவனுக்கு ஒரே ஓர் உறங்கும் அறை மட்டுமே இருக்க வேண்டும். அந்த அறையிலும், இரவில் படுத்துக் கொள்ள அவனுக்கு ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருக்க வேண்டும்.(137) அந்தப் படுக்கையிலும் அவன் தன் மனைவியான ராணிக்குப் பாதியைக் கொடுக்கும் கடப்பாடு கொண்டவனாவான். மன்னனுக்குரிய பங்கு எவ்வளவு சிறியது என்பதை விளக்கும் எடுத்துக்காட்டாக இஃது அமையும்.(138) அவனது இன்பப் பொருட்கள், அவன் உண்ணும் உணவு, அவன் உடுக்கும் உடைகள் ஆகியவற்றிலும் இதுவே வழக்காகும். இவ்வாறு அவன் அனைத்துப் பொருட்களிலும் மிகச் சொற்பமான பங்கிலேயே பற்றுக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவன் வெகுமதி அளிக்கும், தண்டிக்கும் கடமைகளிலும் பற்றற்றவனாக இருக்கிறான்.(139) மன்னன் எப்போதும் பிறரைச் சார்ந்தவனாகவே இருக்க வேண்டும். அவனுக்கு உரிய அனைத்திலும் சிறு பகுதியை மட்டுமே அவன் அனுபவிக்கிறான், மேலும் அந்தச் சிறு பகுதியிலும் அவன் (பிறர் தங்கள் தங்களுக்குரிய உடைமைகளில் பற்று கொண்டிருப்பதைப் போலவே) கட்டாயமாகப் பற்றப்படுகிறான். அமைதி மற்றும் போர்க்காரியத்திலும் மன்னனைச் சார்பற்றவனாகச் சொல்ல முடியாது.(140)

பெண்கள், விளையாட்டு மற்றும் பிற வகை இன்பங்கள் குறித்த காரியத்தில் மன்னனின் விருப்பம் மிகவும் சுருக்கப்பட்டதாகும். ஆலோசனை பெறும் காரியத்திலும், தன் அமைச்சர்களின் சபையிலும் மன்னனுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?(141) எனினும், அவன் தன் ஆணைகளைப் பிற மனிதர்களின் மேல் நிறுவினால் அவன் முற்றிலும் சுதந்திரமானவனாகச் சொல்லப்படுகிறான். ஆனால், அடுத்தக் கணமே தன் வகைக்கான பல்வேறு காரியங்களில் தன்னால் ஆணையிடப்பட்ட மனிதர்களாலேயே அவனது சுதந்திரம் தடை செய்யப்படுகிறது.(142) மன்னன் உறங்க விரும்பினால், தொழில் தொடர்பாகத் தொடர்பு கொள்ளும் மனிதர்களால் தடுக்கப்பட்டு அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அனுமதிக்கப்படும்போதே அவன் உறங்க வேண்டும், உறங்கும் போதும், தொழில் நிமித்தமான அவசரம் கொண்டோரைக் கவனிப்பதற்கு அவன் விழிப்புடன் இருக்க வேண்டிய கடப்பாடும் அவனுக்கு உண்டு.(143) நீராடல், தீண்டல், பானம், உணவு, நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல், வேள்விகளைச் செய்தல், பேசுதல், கேட்டல் ஆகிய இந்த வார்த்தைகளை மன்னர்கள் பிறரிடம் கேட்டு, அவற்றைச் சொல்வோருக்கு அடிமையாக இருக்க வேண்டும்.(144) மனிதர்கள் கூட்டங்கூட்டமாக வந்து மன்னனிடம் கொடைகளை வேண்டுவார்கள். எனினும் பொதுக் கருவூலத்தின் பாதுகாவலனாக இருப்பதால் அவன் மிகுந்த தகுதியைக் கொண்டவருக்குக் கூடக் கொடைகளை அளிக்க முடியாது.(145)

அவன் கொடைகளை அளித்தால், கருவூலம் தீர்ந்துவிடும். அவன் கொடையளிக்கவில்லையெனில், வேண்டுபவர்கள் ஏமாற்றமடைந்து பகைக்கண்களுடன் பார்ப்பார்கள். இதன் காரணமாக எரிச்சலையும் அவன் {மன்னன்}, தன் மனத்தில் மானிட வெறுப்பைப் படரவிடுகிறான்.(146) ஞானிகளும், வீரர்களும், செல்வந்தர்களுமான பலர் சேர்ந்து ஒன்றாக வசித்தால், அதன் விளைவாக மன்னனின் மனம் நம்பிக்கையின்மையால் நிறைகிறது. அஞ்சுவதற்குக் காரணமேதும் இல்லாதிருந்தாலும், மன்னன் தன்னிடம் காத்திருப்போரையும் மற்றும் தன்னை வழிபடுவோரையும் அஞ்சுகிறான்.(147) ஓ! மன்னா, நான் குறிப்பிட்டவர்களும் அவனிடம் குற்றத்தைக் காண்கிறார்கள். எவ்வழியில் மன்னனுக்கு அவர்களிடம் அச்சமேற்படுகிறது என்பதைக் காண்பாயாக.(148) மேலும் தன் சொந்த வீடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் மன்னர்களே. மேலும் தன் சொந்த வீடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் இல்லற வாழ்வு முறையை வாழ்பவர்களே. ஓ! ஜனகா {தர்மத்வஜா}, மன்னர்களைப் போலவே சொந்த வீடுகளில் உள்ள மனிதர்களும் தண்டிக்கவும், வெகுமதியளிக்கவும் செய்கிறார்கள்.(149) மன்னர்களைப் போலவே பிறருக்கும், மகன்களும், மனைவியரும், தங்கள் சுயங்களும், கருவூலங்களும், நண்பர்களும், கிடங்குகளும் உள்ளன. இக்காரியங்களின் பிற மனிதர்களிடம் இருந்து மன்னன் வேறுபட்டவனல்ல.(150)

“நாடு அழிகிறது, நகரம் எரிகிறது, முதன்மையான யானை {பட்டத்து யானை} இறந்தது” ஆகிய இவை அனைத்தும் அறியாமை மற்றும் பிழையால் உண்டாகும் மனப்பதிவுகள் என்பதைக் கருத்தில் கொள்ளமால் மன்னனும் பிறரைப் போலவே {எனது என்ற அகங்காரத்தால் அவன்} துன்பவசப்படுகிறான்.(151) மன்னனானவன், ஆசை வெறுப்பு, மற்றும் அச்சம் ஆகியவற்றால் உண்டாகும் மனத்துன்பங்களில் இருந்து அரிதாகவே விடுபடுகிறான். தலைவலி மற்றும் பல்வேறு வகை நோய்களாலும் பொதுவாகவே பீடிக்கப்படுகிறான்.(152) (இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் மன்னன் (பிறரைப் போலவே) பீடிக்கப்படுகிறான். அவன் அனைத்திலும் அச்சங்கொள்கிறான். உண்மையில், எதிரிகளும், ஆளும் தடைகளும் நிறைந்த நாட்டை அனுபவித்துக் கொண்டே மன்னன் தன் இரவுகளை உறங்காமல் கழிக்கிறான்.(153) எனவே, அரசுரிமை இன்பத்தின் மிகச் சிறிய பகுதியால் மட்டுமே அருளப்பட்டிருக்கிறது. அது கொடுக்கும் துன்பமோ மிகப் பெரியதாகும். வைக்கோலை எரிக்கும் நெருப்பின் தழல்கள், அல்லது நீர்ப்பரப்பின் நுரையில் உள்ள குமிழி போல அது திடமற்றதாகும் {உறுதியற்றதாகும்}.(154) அரசுரிமையை அடைய விரும்பியோ, அஃதை அடைந்தோ அமைதியை வெல்வோம் என்ற நம்பிக்கை எவனுக்கு இருக்கும்? நீ இந்த நாட்டையும், இந்த அரண்மனையையும் உனதாகக் கருதுகிறாய்.(155)

இந்தப் படையும், இந்தக் கருவூலமும், இந்த அமைச்சர்களும் உனக்குச் சொந்தம் என நீ நினைக்கிறாய். எனினும், உண்மையில் அவை அவை யாருடையவை? யாருடையதில்லை? கூட்டாளிகள், அமைச்சர்கள், தலைநகரம், மாகாணங்கள், தண்டனை, கருவூலம், மன்னன் ஆகிய(156) நாட்டின் அங்கங்களான ஏழும், ஒன்றையொன்று தாங்கியிருக்கும் மூன்று குச்சுகளைப் போல ஒன்றையொன்று சார்ந்தவையாகும். இவை ஒவ்வொன்றின் தகுதியும், பிறவற்றின் தகுதியாலேயே நிறுவப்படுகின்றன. இவற்றில் எஞ்சியவற்றைவிட மேன்மையானது என்று எதைச் சொல்ல முடியும்(157) அந்தக் குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் தங்கள் இயக்கத்தின் மூலம் ஏதோ ஒரு முக்கிய முடிவைத் தருகின்றபோது அவை ஒவ்வொன்றும் தனித்துவமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு காணப்படும் திறனின் மூலமே அந்த நேரத்தில் மேன்மையானதாகச் சொல்லப்படுகிறது.(158) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஏழு அங்கங்களும், {விருத்தி, க்ஷயம் மற்றும் ஸ்தானம்} ஆகிய மூன்றும் சேர்ந்தவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையுமான இந்தப் பத்து தொகையும் {தசவர்க்கமும்} மன்னனைப் போலவே நாட்டை அனுபவிப்பதாகச் சொல்லப்படுகிறது.(159) பெருஞ்சக்தி கொண்டவனும், க்ஷத்திரிய நடைமுறைகளில் உறுதியான பற்றைக் கொண்டவனுமான மன்னன், குடிமக்களின் வயலில் விளைவதில் பத்தில் ஒரு பாகத்தில் மட்டுமே நிறைவு கொள்ள வேண்டும். சில மன்னர்கள் பத்தில் ஒரு பாகத்தைவிடக் குறைந்த அளவிலேயே நிறைவடைவதும் காணப்படுகிறது.(160)

இவ்வுலகில் உரிமையுள்ள எவரும் இல்லாமல் அரச அலுவலுக்கு உரிய ஒருவனுமில்லை, ஒரு மன்னன் இல்லாத எந்த நாடும் கிடையாது. நாடு என்ற ஏதும் இல்லையென்றால், அறம் என்ற ஏதும் இருக்காது, அறம் என்ற ஏதும் இல்லை என்றால் விடுதலை எங்கிருந்து எழும்?(161) மிகப் புனிதமானதும், உயர்ந்ததுமான தகுதிகள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் நாடுகளுக்கு உரியவையாகும். ஒரு நாட்டை நன்கு ஆள்வதன் மூலம் ஒரு மன்னன் மொத்த உலகையும் தக்ஷிணையாகக் கொடுத்த ஒரு குதிரை வேள்வியைச் செய்வதற்குரிய தகுதியை ஈட்டுகிறான். (ஆனால் எத்தனை மன்னர்கள் தங்கள் நாடுகளை நன்றாக ஆள்கிறார்கள்?(162) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, மன்னர்கள் மற்றும் நாடுகள் தொடர்புடைய இத்தகைய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான களங்கங்களை என்னால் சுட்டிக் காட்டமுடியும்.(163) மேலும், என் உடலிடம் கூட எனக்கு உண்மையான தொடர்பேதும் இல்லாத போது, பிறரின் உடல்களில் நான் எத்தொடர்பையும் கொண்டதாக எவ்வாறு கொள்ள முடியும்? வர்ணக்கலப்பை ஏற்படுத்தியதாக நீ என்னைக் குற்றஞ்சாட்ட முடியாது.(164) விடுதலை {முக்த} அறத்தையும், அதன் வழிகள், முறைகள், நடைமுறைகள், முடிவு ஆகியவற்றையும் சேர்த்து மொத்தமாகப் பஞ்சசிகரின் உதடுகளில் இருந்து நீ கேட்டாயா?(165)

ஓ! மன்னா, நீ உன் கட்டுகள் அனைத்தையும் கடந்து விட்டதாகவும், பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டதாகவும் இருந்தால் நீ ஏன் இன்னும் இந்தக் குடையையும், அரச சின்னங்களையும் தரிக்கிறாய்?(166) நீ சாத்திரங்களைக் கேட்டதே இல்லையென்றோ, எந்தப் பயனும் இல்லாமல் அவற்றைக் கேட்டிருக்கிறாய் என்றோ, ஒருவேளை, சாத்திரங்களைப் போலத் தெரியும் வேறு ஏதோ உடன்படிக்கைகளைக் கேட்டிருக்கிறாய் என்றோ நான் நினைக்கிறேன்.(167) உலகம் சார்ந்த அறிவை மட்டுமே கொண்டிருக்கிறாய் என்றும், சாதாரண மனிதர்களும் கட்டப்படும் தீண்டல், மனைவியர், மாளிகைகள் முதலியவற்றில் நீயும் கட்டப்பட்டிருக்கிறாய் என்றும் தெரிகிறது.(168) நீ அனைத்துக் கட்டுகளில் இருந்து விடுபட்டிருக்கிறாய் என்பது உண்மையானால், என் புத்தியால் மட்டுமே உன் மேனியில் நுழைந்த நான் உனக்கு என்ன தீங்கைச் செய்துவிட்டேன்?(169) அனைத்து வகை மனிதர்களுக்கு மத்தியில் யதிகள், வசிக்கப்படாத அல்லது கைவிடப்பட்ட வசிப்பிடங்களில் வசிப்பதே வழக்கமாகும். உண்மையான ஞானத்தில் வெறுமையான புத்தியால் நுழைந்ததன்மூலம் நான் உனக்கு என்ன தீங்கைச் செய்துவிட்டேன்?(170)

ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே, நான் என் உள்ளங்கைகளாலோ, கரங்களாலோ, பாதங்களாலோ, தொடைகளாலோ, என் உடலின் எந்தப் பாகத்தாலோ நான் உன்னைத் தீண்டவில்லை.(171) நீ உயர்ந்த குலத்தில் பிறந்தவனாவாய். நீ பணிவுள்ளவன். முன்னறிதிறனும் கொண்டிருக்கிறாய். நான் உன் உடலுக்குள் நுழைந்த செயலானது நன்மையோ, தீமையோ அது நம் இருவர் மட்டுமே தொடர்புடைய தனிப்பட்ட செயலாகும். அந்தத் தனிப்பட்ட செயலை உன் சபையினர் அனைவரின் முன்பும் வெளிப்படுத்தியது முறையற்றதாகாதா?(172) இந்தப் பிராமணர்கள் மதிக்கத்தகுந்தவர்களாவர். இவர்கள் ஆசான்களில் முதன்மையானவர்களுமாவர். அவர்களுடைய மன்னனாகிய நீயும் மதிக்கத்தகுந்தவனே. அவர்களை மதிக்கும் நீ, அவர்களால் மதிகப்படவும் தகுந்தவனாவாய்.(173) இவையனைத்தையும் குறித்துச் சிந்திக்கும் நீ பேச்சுரிமை விதிகளை உண்மையாக அறிந்தவனாக இருந்தால். எதிர்பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கிடையில் நடந்த சேர்க்கையை இந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்கு அறிவித்தது முறையாகாது.(174) ஓ! மதிலையின் மன்னா, தாமரை இலையைத் தொடாமல் அதைச் சற்றும் நனைக்காமல் இருக்கும் நீர்த்துளியைப் போலவே நான் உன்னை முற்றிலும் தீண்டாதிருக்கிறேன்.(175)

இவ்வாறு இருக்கும்போதிலும் நீ என் தீண்டலை உணர்வாயெனில், துறவி வகையைச் சார்ந்த பஞ்சசிகரின் போதனைகள் மூலம் உன் புத்தியானது புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகியிருக்கிறது என்பதை எவ்வாறு நம்ப முடியும்?(176) இல்லற வாழ்வு முறையில் இருந்து விழுந்திருந்தாலும், அடைவதற்கரிய விடுதலையை {முக்தியை} நீ இன்னும் அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. விடுதலை என்ற இலக்கை அடைந்துவிட்டதாகப் பாசாங்கு செய்யும் நீ அவ்விரண்டு நிலைகளுக்கு இடையிலேயே இருக்கிறாய்.(177) விடுதலையடைந்த ஒருவன் மற்றொருவனுடன் கொள்ளக்கூடிய தொடர்பானது, நீ அஞ்சும் வகையிலான கலப்புக்கு வழிவகுக்காது. அது புருஷனுக்கும், பிரகிருதிக்கும் இடையிலான கலப்பைப் போன்றதாகும்.(178) உடலையும் ஆன்மாவையும் ஒன்றெனக் கருதுபவர்கள் மட்டுமே, பல்வேறு வகைகளையும் {வர்ணங்களையும்}, வாழ்வுமுறைகளையும் {ஆசாரங்களையும்} வெவ்வேறென நினைத்தும், கலப்பின் சாத்தியத்தை அனுமானித்தும் பிழை செய்வார்கள். என் உடல் உன்னிலிருந்து வேறுபட்டதாகும். ஆனால் என் ஆன்மா உன் ஆன்மாவிலிருந்து வேறுபட்டதல்ல. என்னால் இஃதை உணர முடியும்போது, யோகத்தின் மூலம் நான் உனக்குள் நுழைந்திருந்தாலும், என் புத்தி உன்னில் உண்மையில் இல்லை என்பதில் சிறு ஐயமும் ஏற்படவில்லை.(179)

கையில் பானை தாங்கப்படுகிறது. அந்தப் பானையில் பால் இருக்கிறது. அந்தப் பாலில் ஓர் ஈ இருக்கிறது. கை மற்றும் பானை, பானை மற்றும் பால், பால் மற்றும் ஈ ஆகியன ஒன்றாக நீடித்திருந்தாலும், அவை ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும்.(180) அந்தப் பானை பாலின் இயல்பைக் கொள்வதில்லை. பாலும் ஈயின் இயல்பை அடைவதில்லை. அவற்றின் நிலை ஒன்றையொன்று சார்ந்திருந்தாலும், அவை கொண்ட தற்காலிக நிலையால் என்ற மாற்றமும் ஏற்படாது.(181) இதே வகையிலேயே நிறமும், நடைமுறைகளும் விடுதலையடைந்த மனிதனில் ஒன்றாக நீடித்திருந்தாலும், உண்மையில் அவனைப் பற்றவில்லை. நான் உன்னுடன் கொண்ட சேர்க்கையின் விளைவால் எவ்வகையான கலப்பு {வர்ணக்கலப்பு} ஏற்பட முடியும்?(182) நிறத்தால் நான் உனைனவிட மேம்பட்டவளல்ல. நான் வைசியருமல்ல, சூத்திரருமல்ல. ஓ! மன்னா, நான் உன் வகையைச் சார்ந்த ஒரு தூய {க்ஷத்திரிய} குலத்திலேயே பிறந்தேன்.(183) பிரதானர் என்ற பெயரில் ஓர் அரசமுனி இருந்தார். நீ அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய் என்பது வெளிப்படை. நான் அவரது குலத்தில் பிறந்தவள், என் பெயர் சுலபையாகும்.(184) (பெரும் மலைகளில் வசிக்கும் தலைமை மேதைகளான) துரோணர், சதசிருங்கர் மற்றும் சக்ரத்வாரர் ஆகியோரின் துணையுடன் தேவர்களில் முதன்மையான இந்திரன், என் மூதாதையர்கள் செய்த வேள்விகளுக்கு வழக்கமாக வருவான்.(185) அத்தகைய குலத்தில் பிறந்த எனக்குத் தகுந்த கணவனைக் காண முடியாது என்பது தெரிந்தது. விடுதலை அறம் கற்பிக்கப்பட்டவளான நான் தவப் பயிற்சிகளை நோற்றுக் கொண்டு பூமியில் மட்டுமே திரிந்து வருகிறேன்.(186) நான் பின்பற்றும் துறவு வாழ்வில் எந்தப் போலித்தனமும் எனக்குக் கிடையாது. நான் பல்வேறு வகையினரின் நடைமுறைகளைக் குழப்புவதில்லை. எனக்குச் சொந்தமான முறையான வாழ்வுமுறையையே நான் உறுதியாகப் பின்பற்றுகிறேன்.(187)

நான் என் நோன்புகளில் உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறேன். சொல்லின் உரிமையைச் சிந்திக்காமல் நான் எவ்வார்த்தையையும் சொல்வதில்லை. ஓ! ஏகாதிபதி, முறையாகச் சிந்திக்கமால் நான் உன்னிடம் வரவில்லை.(188) விடுதலை அறத்தின் மூலம் உன் புத்தி தூய்மையடைந்திருக்கிறது என்று நான் கேள்விப்பட்டதால், சில நன்மைகளை விரும்பி நான் இங்கே வந்தேன். உண்மையில், நீ முயலும் விடுதலை குறித்து விசாரிக்கவே நான் இங்கே வந்தேன்.(189) என்னை மகிமைப்படுத்திக் கொள்வதற்காகவோ, என் எதிராளிகளை அவமதிக்கவோ நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் நேர்மையால் மட்டுமே தூண்டப்பட்டு நான் இதைச் சொல்கிறேன். விடுதலையை {முக்தியை} அடைந்தவன், வெற்றிக்காக வாக்குப்போரின் மூலம் ஒருபோதும் அறிவுப் போராளியாவதில்லை. மறுபுறம், உண்மையில் விடுதலையை அடைந்தவன், முற்றிலும் அமைதியான இடமாக இருக்கும் பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொள்கிறான்.(190) ஒரு துறவி வெறும் வீட்டில் ஓரிரவு மட்டும் வசிப்பதை (வசித்து மறுநாள் காலையில் செல்வதைப்) போலவே நானும் (ஏற்கனவே சொன்னது போல உண்மை ஞானமற்ற வெற்று அறையைப் போன்ற) உன்னில் வசிக்கப் போகிறேன்.(191) வாக்கு மற்றும் பிற காணிக்கைகளால் நீ ஒரு விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய விருந்தோம்பலைக் கொண்டு என்னை முறையாகக் கௌரவித்தாய். ஓ! மிதிலையின் ஆட்சியாளா, இந்த ஓரிரவு என் அறை போன்றதேயான உன்னில் உறங்கிவிட்டு, நாளை நான் செல்வேன்” என்றாள் {சுலபை}”.(192)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறந்த பொருளும், காரணமும் நிறைந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனகன் {தர்மத்யஜன்} அவளுக்கு {சுலபைக்கு} பதிலேதும் சொல்லத்தவறினான்”.(193)

பாவகாத்யயனம்! – சாந்திபர்வம் பகுதி – 322-உலகம் நிலையற்றது; பிரம்மஞானத்தைக் கொண்டு பிறப்பிறப்பில் இருந்து விடுதலையடைய வேண்டிய அவசியம்; இதயத்தைத் தூய்மையாக்கும் பாடத்தைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பழங்காலத்தில், வியாசரின் மகனான சுகர் எவ்வாறு விடுதலை நிலையை வென்றெடுத்தார்? நீர் சொல்லி அக்கதையைக் கேட்க நான் விரும்புகிறேன். இதில் நான் தணியாத ஆவல் கொண்டிருக்கிறேன்.(1) ஓ! குரு குலத்தவரே, புலப்படாதது ({வெளிப்படாத} காரணம்), புலப்படுவது ({வெளிப்படும்} விளைவுகள்), அவற்றில் இருந்தாலும், அவற்றில் பற்றில்லாத உண்மை (அல்லது பிரம்மம்), சுயம்புவான நாரயாணனின் செயல்கள் ஆகியவற்றைக் குறித்த தீர்மானங்களை உமது புத்திக்கு அறிந்தவரை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாதாரண மனிதர்களால் தீங்கற்றவை என்று கருப்படும் செயல்களைச் செய்து கொண்டு, அச்சமில்லாமல் வாழ்ந்து வரும் தம் மகன் சுகரைக் கண்ட வியாசர், அவருக்கு வேதம் முழுமையும் கற்பித்து, ஒருநாள் அவரிடம் இவ்வார்த்தைகளில் பேசினார்.(3)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! மகனே, உன் புலன்களை வென்று, அதீத குளிர், அதீத வெப்பம், பசி, தாகம், காற்று ஆகியவற்றையும் வென்று, (யோகிகள் செய்வதைப் போல) அவற்றை வென்ற பிறகு, அறம் பயில்வாயாக.(4) வாய்மை {ஸத்யம்}, நேர்மை {ருஜுவாயிருத்தல்}, கோபம் மற்றும் வன்மத்தில் இருந்து விடுதலை {குரோதமின்மை மற்றும் அஸூயையில்லாமை}, தற்கட்டுப்பாடு {தமம்}, தவங்கள், நற்கடமைகள் {துன்பம் செய்யாமை}, கருணை {குரூரத் தன்மையில்லாமை} ஆகியவற்றை நீ முறையாகப் பயில்வாயாக.(5) வாய்மையைச் சார்ந்திருக்கும் நீ, அனைத்துவகை நேர்மையின்மைகளையும், வஞ்சனைகளையும் கைவிட்டு, அறத்தில் உறுதியான அர்ப்பணிப்புக் கொள்வாயாக. தேவர்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு எஞ்சும் உணவில் உன் வாழ்வைத் தாங்கிக் கொள்வாயாக.(6) நீர்ப்பரப்பில் இருக்கும் நுரையைப் போலவே உன் உடலும் நிலையற்றதாகும். ஜீவாத்மாவானது, ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையைப் போலப் பற்றில்லாமல் அதில் {உடலில்} அமர்ந்திருக்கிறது. ஏற்புடைய பொருட்கள் அனைத்தின் துணையும் மிகக் குறுகிய காலம் வருபவையே. ஓ! மகனே பிறகேன் நீ இத்தகைய மறதியில் உறங்குகிறாய்?(7) உன் எதிரிகள் {ஆசைகள்} கவனத்துடனும், விழிப்புடனும், (உன்மீத பாய) எப்போதும் தயாராகவும், தங்கள் வாய்ப்புக்காக எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இஃதை அறியாமல் நீ ஏன் மூடனாயிருக்கிறாய்?(8)

நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடக்கும்போது, உன் வாழ்நாள் காலமும் குறைகிறது. உண்மையில், உன் வாழ்நாள் காலம் இடையறாமல் குறைந்து கொண்டிருக்கும்போது, (மீட்பின் வழிமுறைகளைக் கற்க) நீ ஏன் ஆசான்களை நோக்கி ஓடாமல் இருக்கிறாய்?(9) (மறுமை இருப்பில்) நம்பிக்கையற்றவர்களே, குருதியின் சதையும் பெருகச் செய்யும் விளைவை மட்டுமே கொண்ட இவ்வுலகம் சார்ந்த பொருட்களில் தங்கள் இதயத்தை நிலைநிறுத்துகிறார்கள். மறுமையைப் பொறுத்தவரையில் அவர்கள் முற்றிலும் கவலையற்றவர்களாகவே இருக்கிறார்கள்.(10) பிழையான புரிதல்களின் மூலம் மலைப்படைந்த மனிதர்கள், அறத்தில் வெறுப்பை வெளிக்காட்டுகிறார்கள். சுற்றி வளைந்து செல்லும் தவறான பாதையில் தவறாக வழிநடத்தப்படும் மனிதர்களுக்குப் பின்னால் செல்லும் மனிதனும் அவர்களைப் போலவே இணையாகப் பீடிக்கப்படுகிறான்.(11) எனினும், நிறைவடைந்தவர்கள், சாத்திரங்களில் அர்ப்பணிப்புள்ளவர்கள், உயர் ஆன்மா கொண்டவர்கள், பெரும் வலிமையைக் கொண்டவர்கள் ஆகியோர் அறப்பாதையிலேயே நடக்கின்றனர். நீ அவர்களிடம் காத்திருந்து, அவர்களின் போதனைகளை நாடுவாயாக.(12) அறத்தில் கண்கள் நிறுவப்பட்ட ஞானிகளிடம் இருந்து பெறப்படும் போதனைகளின் படி நீ செயல்படுவாயாக. மேன்மையாகச் சொல்லப்படும் அந்தப் பாடங்களின் மூலம் தூய்மையடைந்து புத்தியைக் கொண்டு, சரியான பாதையில் இருந்து பிறழ எப்போதும் தயாராக இருக்கும் உன் இதயத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(13) தற்காலம் தொடர்புடையவற்றிலேயே எப்போதும் புத்தியைக் கொண்டோர், நாளையென்பது வெகுதொலைவில் உள்ளது என்று கருதி அச்சமில்லாமல் இருப்போர், உணவுக் காரியங்களில் எத்தகைய கட்டுப்பாடுகளையும் கொள்ளாதோர் ஆகிய உணர்வற்ற மனிதர்கள் இவ்வுலகமானது தகுதி காணும் களம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(14)

அறத்தால் அமைந்த படிக்கட்டுகளுக்குச் சென்று, ஒன்றன்பின் ஒன்றாக அதில் ஏறுவாயாக. தற்போது நீ, தன்னைச் சுற்றி வலையைப் பின்னி, தப்பும் வழிமுறைகள் அனைத்தையும் இழக்கும் ஒரு புழுவைப் போன்றவனாகவே நீ இருக்கிறாய்.(15) கட்டுப்பாடுக்ள அனைத்தையும் மீறுபவனும், காட்டாற்றின் அருகில் இருக்கும் வீட்டைப் போன்றவனும், செருக்கால் தலையை உயர்த்தி நிற்கும் மூங்கிலைப் போலப் (பிறருக்குத்) தெரிபவனுமான நாத்திகவாதியை எந்தத் தயக்கமும் இல்லாமல் உன் இடப்பக்கத்தில் நிறுத்துவாயாக {அவனை உன்னிடமிருந்து இருந்து விலக்குவாயாக}[1].(16) ஆசை, கோபம், மரணமெனும் கடும்பூதங்களை {முதலைகளைக்} கொண்டதும், பிறப்பெனும் சுழலைக் கொண்டதும், ஐம்புலன்களெனும் நீரைக் கொண்டதுமான வாழ்வெனும் பெருங்கடலை யோகமெனும் ஓடத்தைக் கொண்டு கடப்பாயாக.(17) மரணத்தால் பாதிக்கப்படுவதும், முதுமையால் பீடிக்கப்படுவதும், பகல்கள் மற்றும் இரவுகள் என்ற இடிகள் இடையறாமல் விழுவதுமான இவ்வுலகத்தை அறம் எனும் ஓடத்தைக் கொண்டு கடப்பாயாக.(18) நீ அமர்ந்திருக்கும்போதோ, கிடக்கும்போதோ எக்கணத்திலும் மரணம் உன்னைத் தேடிக் கொண்டிருக்கும்போது, எந்நேரத்தில் மரணம் உன்னைத் தன் பலியாகக் கொள்ளும் என்பது நிச்சயமாகும். மீட்பை நீ எங்கிருந்து அடையப்போகிறாய்.(19) செம்மறியாட்டை அபகரித்துச் செல்லும் காலனைப் போலவே, ஒருவன் செல்வம்மீட்டுவதிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபட்டு அவற்றில் நிறைவடையாதிருக்கும்போதே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(20)

இருளில் நுழைய விதிக்கப்படும்போது, நன்கு வளர்க்கப்பட்ட தழலைக் கொண்ட அற புத்தியாலான விளக்கை நீ ஏந்துவாயாக.(21) மனிதர்களின் உலகில் ஒன்றுக்குப் பின் ஒன்றெனப் பல்வேறு வடிவங்களில் வீழும் ஓர் உயிரினம், பெரும் கடின காலத்திற்குப் பிறகே பிராமண நிலையை அடைகிறது. நீ அந்நிலையை அடைந்திருக்கிறாய். ஓ! மகனே, நீ அதை (முறையாகப்) பராமரிக்க முயற்சி செய்வாயாக.(22) ஒரு பிராமணன், ஆசைகளில் நிறைவு கொள்வதற்காகப் பிறப்பை அடைவதில்லை. மறுபுறம், மறுமையில் ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைவதற்காக இவ்வுலகில் தன்னை வருத்திக் கொள்ளவும், தவங்கள் செய்யவுமே அவன் {பிராமணன்} உடலைக் கொள்கிறான்.(23) நீண்ட நெடிய கடுந்தவங்களின் துணையுடனே பிராமணத் தன்மை என்ற நிலை அடையப்படுகிறது. அந்நிலையை அடைந்த ஒருவன், புலன்களில் ஈடுபடுவதால் தன் காலத்தை வீணடிக்கக்கூடாது. தவங்கள் மற்றும் தற்கட்டுப்பாட்டில் எப்போதும் ஈடுபட்டு, உனக்கான நன்மையை விரும்பி, அமைதியில் அர்ப்பணிப்புடன் நீ வாழவும், செயல்படவும் செய்வாயாக.(24) ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் காலமும் ஒரு குதிரையைப் போன்றதாகும். அந்தக் குதிரையின் இயல்பு புலப்படாததாகும். (ஏற்கனவே சொல்லப்பட்ட பதினாறு) தத்துவங்களே {கலைகளே} உடலாகின்றன. அதன் இயல்பு மிக மிக நுட்பமனாதாகும். க்ஷணங்கள், திருதிகள், நிமிஷங்கள் ஆகியன அதன் உடலில் உள்ள ரோமங்களாகும். சந்தி வேளைகள் அதன் தோள்பூட்டுகளாக இருக்கின்றன. தேய்பிறையும், வளர்பிறையும் சம சக்தியைக் கொண்டு அதன் இரு கண்களாக இருக்கின்றன. மாதங்கள் அதன் உறுப்புகளாகும். அந்தக் குதிரை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.(25)

உன் கண்கள் குருடாகவில்லையெனில், அக்குதிரை பார்வைக்குப் புலப்படாத பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, மறுமை குறித்த கேள்விக்கு உன் ஆசான்கள் என்ன சொல்கின்றனர் என்பதைக் கேட்டு உன் இதயத்தை அறத்தில் நிலைநிறுத்துவாயாக.(26) அறத்தில் இருந்து வீழ்பவர்களும், பொறுப்பற்ற ஒழுங்கில் தங்களை நடத்திக் கொள்பவர்களும், பிறரிடம் எப்போதும் வன்மத்தைக் காட்டுபவர்களும், தீய வழிகளில் நடப்பவர்களும், யமலோகத்தில் (இருப்புசார்ந்த) உடலை அடைந்து, பல்வேறு வகையான தங்கள் நீதியற்ற செயல்களின் விளைவால் பல்வேறு துன்பங்களை அடைகின்றனர்.(27) அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், நல்லோரிடமும், தீயோரிடமும் வேறுபாடு பார்க்காமல் பாதுகாத்து, தண்டிப்பவனுமான மன்னன், அறச்செயல்கள் செய்த மனிதர்களின் உலகை அடைகிறான். பல்வேறுவகை நற்செயல்களைச் செய்வதன் விளைவால் களங்கமற்றதும், ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்தாலும் அடைய முடியாததுமான இன்பநிலையை அவன் அடைகிறான்.(28) பெற்றோர் மற்றும் ஆசான்களின் ஆணைகளை மீறும் மனிதன், இறந்த பிறகு நரகத்தை அடைந்து பயங்கர முகத்தோற்றம் கொண்ட சீற்றமிகு நாய்களும், இரும்பு அலகுகளைக் கொண்ட காகங்களும், கருங்காக்கை, கழுகுகள் மற்றும் பிற பறவை கூட்டங்களும், குருதி உறிஞ்சும் புழுக்களும் அவனைத் தாக்குகின்றன.(29) சுயம்புவால் விதிக்கப்பட்ட பத்து கட்டளைகளை, பொறுப்பற்ற தன்மையின் விளைவால் மீறும் இழிந்த பாவி, பித்ருக்களின் மன்னனுடைய ஆட்சிப்பகுதிகளில் உள்ள காட்டுக் கழிவுகளில் பெரும் துன்பத்துடன் தன் காலத்தைக் கழிக்கும் கடப்பாட்டை அடைகிறான்[2].(30)பேராசையால் களங்கமடைந்தவனும், பொய்மையில் அன்பு பாராட்டுபவனும், ஏமாற்று மற்றும் வஞ்சனையில் எப்போதும் திளைப்பவனும், போலித்தனம் மற்றும் வஞ்சகம் பயில்வதன் மூலம் பிறருக்குத் தீங்கிழைப்பவனுமான மனிதன், ஆழ்நரகிற்குச் சென்று, தன் தீச்செயல்களுக்காகப் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறான்.(31) அத்தகைய மனிதன், கொதிக்கும் நீரைக் கொண்ட வைதரணி என்றழைக்கப்படும் பேராற்றில் நீராட வற்புறுத்தப்பட்டு, வாட்களைப் போன்ற கூரிய இலைகளைக் கொண்ட மரங்கள் நிறைந்த வனத்திற்குள் அனுப்பப்பட்டு, போர்க்கோடரிகளாலான படுக்கையில் கிடத்தப்படுகிறான். அவன் தன் நாட்களைப் பெருந்துன்பத்துடன் பயங்கர நரகில் இவ்வாறே கழிக்கிறான்.(32) நீ பிரம்மலோகத்தையும், தேவர்களின் உலகங்களையும் மட்டுமே காண்கிறாய், ஆனால் உயர்ந்ததை (மோக்ஷத்தைக்) காணாத குருடனாக இருக்கிறாய். ஐயோ, (தளர்ச்சி, முதுமை என்ற) வரிசையில் மரணத்தைக் கொண்டு வருவதை எப்போதும் காணாத குருடனாக இருக்கிறாய்.(33) (விடுதலையின் {முக்தியின்} பாதையில்) செல்வாயாக. ஏன் தாமதிக்கிறாய்? உன் மகிழ்ச்சியை அழிக்கும் பேரச்சம் உன் எதிரில் இருக்கிறது. விடுதலை அடைவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பாயாக.(34) மரணம் அடைந்தவுடன் யமனின் ஆணைக்காக அவன் முன்னிலைக்கு நிச்சயம் எடுத்துச் செல்லப்படுவாய். மறுமையில் இன்பநிலையை அடைவதற்காகப் பயிலக் கடினமான கடும் நோன்புகள் மூலம் அறத்தை ஈட்ட முனைவாயாக.(35)

பிறரின் துன்பங்களைக் கருத்தில் கொள்ளாத யமன், உன்னையும், உன் நண்பர்களையும் போன்ற மனிதர்கள் அனைவரின் உயிரையும் விரைவில் எடுத்துக் கொள்வான். அவனைத் தடுக்கவல்லவன் எவனுமில்லை.(36) வெகு விரைவில் உன் முன்னிலையில் யமனின் காற்று வீசும் (உன்னை அவனது முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்). வெகுவிரையில் நீ பயங்கரத் தனிமையை அடைவாய். அங்கே உன் நன்மைக்கானதை அடைவாயாக.(37) மிக விரைவில் உன் முன்னிலைக்கு வரப்போகும் அந்த மரணக்காற்று இப்போது எங்கிருக்கிறது? (அந்தக் கவனத்துடன் நீ இருக்கிறாயா?) அந்தக் கணம் நேரும்போது, திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கண் முன்பு சுழலத் தொடங்கும். (அந்தக் கவனத்துடன் நீ இருக்கிறாயா?)(38) ஓ! மகனே, (அந்தக் கணம் நேரும்போது) அந்தப் பயங்கர இருப்பில் ஆதரவற்றவனாக இருக்கும்போது உன் வேதங்கள் உன் பார்வையில் இருந்து விரைவில் மறையும். எனவே, சிறப்புவாய்ந்த தியான யோகத்தில் நீ உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக.(39) (மரணத்திற்குப் பிறகு) பிழையின் இயல்பிலான உன் கடந்த கால நல்ல மற்றும் தீய செயல்களை நினைத்து வருந்தாமல் இருக்கச் செய்யும் ஒரே புதையலை அடைய முனைவாயாக[3].(40)முதுமை வெகுவிரைவில் உன் உடலைப் பலவீனப்படுத்தி, உன் பலத்தையும், அங்கங்களையும், அழகையும் களவாடிவிடும். எனவே அந்த ஒரே புதையலை நீ நாடுவாயாக.(41) நோயைச் சாரதியாகக் கொண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தகன், உன் உடலைத் துளைத்து நொறுக்கவும், உன் உயிரை எடுக்கவும் வெகுவிரைவில் வருவான். எனவே, கடுந்தவங்களைச் செய்வாயாக.(42) உன் உடலுக்குள் வசிக்கும் அந்தப் பயங்கர ஓநாய்கள் {ஆசைகள்} வெகுவிரைவில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உன்னைத் தாக்கும். எனவே, அறச் செயல்கள் செய்ய முயற்சி செய்வாயாக.(43) வெகுவிரையில் அடர்த்தியான இருளில் நீ தனியாக இருப்பதைக் காண்பாய், வெகுவிரைவில் மலையின் உச்சியில் தங்க மரணங்கள் இருப்பதையும் காண்பாய். எனவே, அறச்செயல்களைச் செய்ய விரைவாயாக[4].(44) நட்பின் போர்வையில் உள்ள உன் தீய தோழர்களான உன் எதிரிகள் (புலன்கள்) வெகுவிரைவில் உன்னைச் சரியான பார்வையில் இருந்து திரும்பச் செய்வார்கள். எனவே, ஓ! மகனே, உயர்ந்த நன்மையை அடைய முனைவாயாக.(45)மன்னர்களிடமோ, கள்வர்களிடமோ அச்சத்தை ஏற்படுத்தாததும், மரணத்தின்போதும் கைவிடத்தகாததுமான அந்தச் செல்வத்தை நீ ஈட்டுவாயாக.(46) ஒருவனுடைய செயல்களால் ஈட்டப்படும் அந்தச் செல்வத்தை யாருடனும் நீ பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தான் ஈடிய அந்தச் செல்வத்தையே (மறுமையில்) அனுபவிக்கிறான்.(47) ஓ! மகனே {சுகரே}, மறுமையில் வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பிறருக்குக் கொடுப்பாயாக. அழிவற்றதும், நீடித்திருப்பதுமான அந்தச் செல்வத்தை ஈட்டுவதில் நீ உன்னை நிறுவிக் கொள்வாயாக.(48) இன்பங்களில் தணிவு ஏற்படும் முன்பே மரணம் நேரலாம் என்பதால் முதலில் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்க நினைக்காமல், உன் இதயத்தை விடுதலையை {முக்தியை} நோக்கித் திருப்புவாயாக. இதை நோக்கில் கொண்டு நற்செயல்களைச் செய்வதில் விரைவாயாக.(49) தாயோ, மகனோ, உறவினர்களோ, உற்ற நண்பர்களோ வெகுமதிகளை அளித்து வேண்டிக் கேட்டாலும் இறக்கும் மனிதனுடன் துணைக்கு வர மாட்டார்கள். யம லோகத்திற்கு ஒருவன் துணைக்கு யாருமில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(50)

மரணத்திற்கு முன்பு அவன் செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே அடுத்த உலகத்திற்குச் செல்லும் அவனோடு உடன் செல்லும்.(51) நல்ல மற்றும் தீய வழிமுறைகள் மூலம் ஒருவனால் ஈட்டப்பட்ட தங்கமும், ரத்தினங்களும், அவனது உடல் அழிவை அடையும்போது எந்த நன்மையையும் உண்டாக்குவதில்லை.(52) அடுத்த உலகிற்குச் சென்ற மனிதர்களால், இவ்வாழ்வில் செய்யப்பட்ட, செய்யப்படாத செயல்களின் சாட்சியாக ஆன்மாவைத் தவிர வேறு சிறந்த சாட்சி ஏதும் கிடையாது.(53) செயல்படும் சைதன்யம் (ஜீவாத்மா) சாட்சியான சைதன்யத்திற்குள் நுழையும்போது உடல் அழிவை அடைகிறது என்பது, யோகிகள் தங்கள் யோக புத்தியின் மூலம் தங்கள் இதயங்களால் ஆகாயத்தில் நுழையும்போது காணப்படுகிறது[5].(54) இங்கேயும் நெருப்பின் தேவன் {அக்னி}, சூரியன் மற்றும் காற்று {வாயு} ஆகிய மூவரும் உடலில் வசிக்கிறார்கள். ஒருவன் தன் வாழ்நாளில் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் இவர்கள் சாட்சியாக இருக்கின்றனர்.(55)அனைத்துப் பொருட்களையும் வெளிக்காட்டும் குணத்தைக் கொண்ட பகல்களும், அனைத்துப் பொருட்களையும் மறைக்கும் குணத்தைக் கொண்ட இரவுகளும், அனைத்துப் பொருட்களையும் தீண்டியபடியே இடையறாமல் கடந்து போகின்றன (அதன்படி அந்தப் பொருட்களுக்காக ஒதுக்கப்பட்ட இருப்பின் காலத்தைக் குறைத்து வருகின்றன). எனவே, நீ உன் வகைக்கான கடமைகளை நோற்பாயாக.(56) (யமலோகத்திற்கு வழிவகுக்கும்) மறுமையின் சாலையானது, (இரும்பு அலகைக் கொண்ட பறவைகள் மற்றும் ஓநாய்களின் வடிவிலான) பல எதிரிகளாலும், வெறுத்தொதுக்கும் பயங்கரப் பூச்சிகள் மற்றும் புழுக்களாலும் தொற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் உனக்குத் துணையாக வரப்போவது செயல்கள் மட்டுமே என்பதால் நீ உன் செயல்களைக் கவனமாகச் செய்வாயாக.(57) அங்கே ஒருவன் தன் செயல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை, ஆனால் தன்னால் செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்களுக்கான கனிகளை அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்.(58) அப்சரஸ்களும், பெரும் முனிவர்களும் பேரின்பநிலைகளின் கனிகளை அடைவதைப் போலவே, அறச்செயல்கள் செய்யும் மனிதர்களும் தங்கள் தங்கள் அறச்செயல்களின் கனிகளாகச் செலுத்துபவர்களின் விருப்பத்திற்கேற்ப எங்கேயும் செல்லக்கூடிய ஒளி பொருந்திய தேர்களை மறுமையில் அடைகிறார்கள்.(59) களங்கமற்ற செயல்களையும், தூய்மையான ஆன்மாக்களையும், தூய பிறவியையும் கொண்ட மனிதர்கள், இம்மையில் {இவ்வுலகில்} செய்யப்பட்ட தங்கள் சொந்த அறச் செயல்கள் தொடர்பான மறுமையின் {அவர்கள் செல்லக்கூடிய வேறு உலகங்களின்} கனிகளை அடைகிறார்கள்.(60)

மனிதர்கள், இல்லறக் கடமைகளாலமைந்த நெடுஞ்சாலையில் நடந்து செல்வதன் மூலம் பிரஜாபதி, அல்லது பிருஹஸ்பதி அல்லது நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} ஆகியோரின் உலகங்களை அடைந்து மகிழ்ச்சியான கதிகளை அடைகிறார்கள்.(61) என்னால் ஆயிரமாயிரம் போதனைகளை உனக்குத் தர முடியும். எனினும், பலமிக்கத் தூய்மையாளியே (அறம்) {பரிசுத்தமாகச் செய்கிற தர்மமே}, மூட மனிதர்கள் அனைவரையும் இருளில் வைத்திருக்கிறது என்பதை அறிவாயாக[6].(62) நீ இருபத்துநான்கு {24} வயதைக் கடந்துவிட்டாய். இப்போது முழுமையாக நீ இருபத்தைந்து வயதை அடைந்தவனாக இருக்கிறாய். உன் வயது கடந்து செல்கிறது. அறக்கொள்முதல் செய்யும் கிடங்கை விரிக்கத் தொடங்குவாயாக {அறமீட்டுவாயாக}.(63) பிழையிலும், விழிப்பற்ற தன்மையிலும் வசிக்கும் யமன் மிக விரைவாக உன் புலன்களை அவற்றுக்குரிய சக்திகளைக் கொண்டே இழக்கச் செய்வான். அந்த அழிவு ஏற்படும் முன்னர் நீ இன் உடலை மட்டுமே சார்ந்துஉன் கடமைகளை விரைவாகச் செய்வாயாக.(64) நீ மட்டுமே முன்னும் பின்னும் இருக்கக்கூடிய சாலையில் செல்லும் உன் கடமையின் போது, உன் உடலாலோ, உன் மனைவியாலோ, உன் பிள்ளையாலோ உனக்கு என்ன தேவை இருக்கிறது?[7](65)மனிதர்கள் யமலோகத்திற்கு எந்தத் துணையும் இல்லாமல் தனியாகச் செல்ல வேண்டிய இந்தப் பயங்கரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், முற்றான ஒரே செல்வக்குவியலை {புதையலை} (அறம் அல்லது யோக சமாதியை) அடைவதற்கு நீ முனைய வேண்டும் என்பதே தெளிவாகத் தெரிகிறது.(66) பிறரைப் பீடிப்பதைக் கருத்தில் கொள்ளாத பலமிக்க யமன், ஒருவனுடைய நண்பர்களையும், உறவினர்களையும், அவனது குலத்தையும் வேரோடு அபகரித்துச் செல்கிறான். அவனைத் தடுக்க வேறு எவனுமில்லை. எனவே, அறத்தைத் திரட்ட நீ முனைவாயாக.(67) ஓ! மகனே, நான் பின்பற்றும் சாத்திரங்களுக்கு ஏற்புடைய இந்தப் பாடங்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(68) தன் வகைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் தன் உடலை ஆதரித்துக் கொள்பவனும், அத்தகைய செயல்களுடன் பிணைக்கப்பட்ட எந்தக் கனியையும் ஈட்ட கொடையளிப்பவனுமான மனிதன், அறியாமை மற்றும் பிழையால் பிறக்கும் விளைவுகள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான்.(69) அறச் செயல்களைச் செய்யும் மனிதன் வேத அறிவிப்புகளில் இருந்து அடையும் ஞானம் எல்லாமறிந்த நிலைக்கு {கடவுளுக்கு} வழிவகுக்கிறது. அந்த எல்லாமறிந்த நிலையானது {கடவுள்} மனிதன் அடையக்கூடிய உயர்ந்த பொருளின் அறிவியலை (விடுதலையை {முக்தியை}) போன்றதாகும். நன்றியுள்ளவர்களுக்குச் சொல்லப்படும் போதனையானது, (மனிதர் அடையக்கூடிய உயர்ந்த பொருளை அடைவதற்கு வழிவகுப்பதன் விளைவால்) நன்மையாகிறது.(70)

மனித வாழிடங்களுக்கு மத்தியில் ஒருவன் கொள்ளும் இன்பமானது உண்மையில் அவனை இறுகப் பற்றும் கயிறாகும். அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அந்தக் கயிற்றை அறுத்து, பேரின்ப உலகங்களுக்குச் செல்கிறார்கள். எனினும், தீய மனிதர்கள் அந்தக் கயிற்றை அறுக்கத் தவறுகிறார்கள்.(71) ஓ! மகனே, நீ இறக்கப் போவதால் செல்வத்தாலோ, உறவினர்களாலோ, பிள்ளைகளாலோ உனக்கென்ன பயனேற்படப் போகிறது? குகைக்குள் மறைந்திருக்கும் உன் ஆன்மாவைத் தேடுவதில் ஈடுபடுவாயாக. உன் பாட்டான்கள் அனைவரும் எங்கே சென்றனர்? நாளை செய்ய வேண்டியதை நீ இன்று செய்வாயாக. பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலில் செய்வாயாக. ஒருவன் தன் பணியைச் செய்துவிட்டானா இல்லையா என்று பார்த்து மரணம் காத்திருப்பதில்லை.(73) ஒருவன் இறந்ததும் (சுடலைக்கு) உடலைப் பின்தொடர்ந்து செல்லும் அவனது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அஃதை {உடலை} ஈமச் சிதைக்குள் வீசிவிட்டு திரும்பிவிடுகின்றனர்.(74) ஐயுறுவாதிகள், கருணையற்றவர்கள், தீய வழிகளில் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆகியோரைப் புறக்கணிக்கத் தயங்காமல், அக்கறையற்றதன்மையோ, உணர்வின்மையோ இல்லாமல் உனக்கான உயர்ந்த நன்மையைத் தேட முயற்சிப்பாயாக.(75) எனவே, உலகம் காலனால் இவ்வாறு பீடிக்கப்படும்போது, அசைக்கமுடியாத பொறுமையின் துணையுடனும், உன் முழு இதயத்துடனும் அறத்தை ஈட்டுவாயாக[8].(76)விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை நன்கறிந்தவனும், தன் வகைக்குரிய கடமைகளை முறையாகச் செய்பவனுமான மனிதன் மறுமையில் நிச்சயம் பேரின்ப நிலையை அடைவான்.(77) வேறொரு உடலை அடைவதே மரணம் என்று உணர்ந்தவனும், அறவோர் நடக்கும் பாதையில் இருந்து விலகாதவனுமான உனக்கு அழிவே கிடையாது. அறப்பங்குகளைப் பெருக்குபவனே உண்மையில் ஞானியாவான். மறுபுறம், அறத்திலிருநுத வீழ்பவனோ மூடனாவான் என்று சொல்லப்படுகிறது.(78) நற்செயல்களைச் செய்வதில் ஈடுபடும் ஒருவன் சொர்க்கத்தையும், பிற வெகுமதிகளையும் அச்செயல்களின் கனிகளாக அடைகிறான்; ஆனால் தீயச் செயல்களில் பற்று கொண்டவனோ நரகத்தில் மூழ்குகிறான்.(79) அடைவதற்கரிதானதும், சொர்க்கத்திற்கான முதற்படியுமான மானிட நிலையை அடைந்து ஒருவன், மீண்டும் வீழ்ந்துவிடாதவாறு தன் ஆன்மாவை பிரம்மத்தில் நிலைநிறுத்த வேண்டும்.(80)

சொர்க்கத்தின் பாதையில் செலுத்தப்படும் புத்தியைக் கொண்டவனும், அங்கிருந்து விலகாதவனும், ஞானிகளால் உண்மையில் அறவோனாக {தர்மவானாகக்} கருதப்படுபவனுமான மனிதன் இறக்கும்போது அவனது நண்பர்கள் துயரில் ஈடுபடக்கூடாது.(81) பிரம்மத்தை நோக்கிச் செலுத்தப்படாத அமைதியான புத்தியைக் கொண்டவனும், சொர்க்கத்தை அடைந்தவனுமான மனிதன் (நரகம் எனும்) பேரச்சத்தில் இருந்து விடுபடுகிறான்.(82) தவசிகளின் ஆசிரமங்களில் பிறந்து, அங்கேயே இறப்பவர்கள், தங்கள் வாழ்வு முழுவதும் இன்பங்கள் மற்றும் ஆசையில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருப்பதன் மூலம் அதிகத் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில்லை.(83) எனினும், இன்பத்திற்குரிய பொருட்களைக் கொண்டிருந்தாலும், அவற்றைக் கைவிட்டு, தவப் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவன் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்[9].(84) நூற்றுகணக்கான, ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தைமார்கள், மகன்கள், மனைவிகள் இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் உண்டு, இனியும் உண்டாவார்கள். எனினும், அவர்கள் யார்? நாம் யாருடையவர்கள்?(85)நான் தனியாகவே இருக்கிறேன். என்னுடையவர் என்று சொல்ல எனக்கு யாரும் கிடையாது. நான் யாருக்கும் உரியவனுமல்ல. நான் யாருடையவன் என்று சொல்ல ஒருவரையும், என்னுடையவர் என்று சொல்ல ஒருவரையும் நான் காணவில்லை.(86) உன்னைக் கொண்டு அவர்களுக்குச் செய்ய ஒன்றுமில்லை. அவர்களைக் கொண்டு நீ செய்ய வேண்டியதும் ஒன்றுமில்லை. உயிரினங்கள் அனைத்தும் தங்கள் முற்பிறவி செயல்களுக்கு ஏற்புடைய வகையிலேயே தங்கள் பிறப்பை அடைகின்றன. நீயும் உன் செயல்களின் மூலம் தீர்மானிக்கப்படும் (ஒரு புதிய வகையிலான பிறப்பை அடைவதற்குரிய) இடத்திற்குச் செல்ல வேண்டும்.(87) செல்வந்தர்களின் நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே அவர்களிடம் பற்றுடன் நடந்து கொள்வது காணப்படுகிறது. எனினும், வறியவனின் நண்பர்களும், தொண்டர்களும் அவன் வாழும்போதே வீழ்ந்துவிடுகின்றனர்.(88) மனிதன் தன் மனைவி (மற்றும் பிள்ளைகளின்) நிமித்தம் எண்ணற்ற தீச்செயல்களைச் செய்கிறான். அந்தத் தீச்செயல்களில் இருந்தே அவன் இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தை அடைகிறான்.(89) வாழும் ஒவ்வொரு உயிரினத்தாலும் செய்யப்படும் செயல்களின் மூலம் இவ்வுலக வாழ்வு கெட்டுப்போவதை ஞானமுள்ள மனிதன் காண்கிறான். எனவே, ஓ! மகனே, நான் உனக்குச் சொன்ன அறிவுரைகளின்படியே நீ செயல்படுவாயாக.(90)

உண்மைப் பார்வை கொண்ட மனிதன், இவ்வுலகைச் செயற்களமாக மட்டுமே கண்டு, மறுமையில் பேரின்பநிலையை அடைய விரும்பி நற்செயல்களைச் செய்ய வேண்டும்.(91) மாதங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} எனும் கரண்டிகளின் துணையைக் கொண்டதும், சூரியனையே நெருப்பாகக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தாலும் செய்யப்படும் ஒவ்வொரு செயலின் கனிகளையும் சாட்சியாகக் காணும் இரவு பகலெனும் விறகுகளைக் கொண்டதுமான காலம், தடுக்கப்படமுடியா தன் பலத்துடன் முயன்று (தன் கொப்பரையில்_ உயிரினங்கள் அனைத்தையும் சமைக்கிறது.(92) கொடையளிக்கப்படாததும், அனுபவிக்கப்படாதமான செல்வத்திற்கான நோக்கம்தான் என்ன? {அந்த செல்வத்தினால் என்ன பயன்?} ஒருவனுடைய எதிரிகளைத் தடுப்பதிலோ, அடக்குவதிலோ ஈடுபடதா பலத்திற்கான நோக்கம்தான் என்ன? {அந்த பலத்தினால் என்ன பயன்?} ஒருவனை அறச்செயல்கள் செய்யத்தூண்டாத சாத்திர அறிவின் நோக்கம்தான் என்ன? {அந்த சாத்திர அறிவினால் என்ன பயன்?} புலன்களை அடக்காததும், தீச்செயல்களில் இருந்து விலகாததுமான அன்மாவின் நோக்கம்தான் என்ன? {அந்த ஆன்மாவினால் என்ன பயன்?}” என்றார் {வியாசர்}”.(93)

பீஷமர் தொடர்ந்தார், “தீவில் பிறந்தவரால் {துவைபாயனரான} வியாசரால் சொல்லப்பட்ட இந்த நன்மையான வார்த்தைகளைக் கேட்ட சுகர், தன் தந்தையை விட்டகன்று, தனக்கு விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} கற்பிக்கக்கூடிய ஓர் ஆசானைத் தேடிச் சென்றார்”[10].(94)

விதைத்த வினையே முளைக்கும்! – சாந்திபர்வம் பகுதி – 323- செய்த வினை செய்தவனையே சரியாக வந்தடையும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், நன்கு செய்யப்படும் தவங்கள், ஆசான்களுக்கும், மதிப்புமிக்கப் பெரியோருக்கும் செய்யப்படும் கடமையுணர்வுமிக்கத் தொண்டுகள் ஆகியவற்றுக்குச் செயற்திறன் {பலாபலன்} உண்டென்றால் அதைக்குறித்து எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீமையுடன் தொடர்புடைய புத்தியானது மனத்தைப் பாவத்தில் வீழச் செய்கிறது. இந்நிலையில் தன் செயல்களைத் தானே களங்கம் செய்யும் ஒருவன் பெரும் துன்பத்தில் வீழ்கிறான்.(2) பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்கள் மிகவறிய நிலையில் உள்ள மனிதர்களாகப் பிறக்க வேண்டிவரும். பஞ்சத்துக்குப் பஞ்சம், துன்பத்துக்குத் துன்பம், அச்சத்திற்கு அச்சம் என்பதே அவர்களது மாற்றமாக இருக்கும். இறந்தவர்களைக் காட்டிலும் இவர்களே இறந்தவர்களாக இருக்கிறார்கள்.(3) நம்பிக்கை கொண்டவர்கள், தற்கட்டுப்பாடு கொண்டவர்கள், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்கள் ஆகியோர் செழிப்பை அடைந்தவர்களாக, இன்பத்துக்கு இன்பம், சொர்க்கத்திற்குச் சொர்க்கம், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி என்ற மாற்றமடைகின்றனர்.(4) நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள், இரைதேடும் விலங்குகளாலும், யானைகளாலும் தொற்றப்பட்டதும், பாம்புகள், கள்வர்கள் மற்றும் அச்சத்திற்குரிய பிற காரணங்கள் நிறைந்ததுமான பாதையற்ற தடத்தில் கையைப் பிசைந்தபடியே கடக்க நேரிடும். இவற்றைத் தவிர வேறு என்ன சொல்லப்பட வேண்டும்?(5)

மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்பவர்கள், பரந்த மனம் கொண்டவர்கள், நல்லோரை முறையாக மதிப்பவர்கள் ஆகியோர் தூய்மையடைந்த, வெல்லப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களுக்குச் சொந்தமான (இன்பம்நிறைந்த) பாதையைத் தங்களுடையதாகக் கொள்கிறார்கள்.(6) தானியங்களுடன் பதர்களும், பறவைகளுடன் கரப்பான்பூச்சிகளும் கணக்கிடப்படாததைப் போலவே மனிதர்களுடன் அறவோர் கணக்கிடப்படுவதில்லை.(7) ஒருவன் செய்யும் செயல்கள், அவன் வீழும்போது அவனோடு கிடக்கிறது.(8) உண்மையில், ஒருவன் செய்யும் பாவங்கள் அவன் அமரும் போது அமர்கின்றன, அவன் ஓடும்போது ஓடுகின்றன. செய்தவன் செயல்படும்போது பாவங்களும் செயல்படுகின்றன. உண்மையில் அவை செய்தவனின் நிழல் போல அவனைப் பின்தொடர்கின்றன.(9) எந்த வழிமுறையிலும், எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயலும், (அவற்றின் கனிகளைப் பொறுத்தவரையில்) அதைச் செய்தவனால் மறுமையில் நிச்சயம் அனுபவிக்கப்படவும், தாங்கிக் கொள்ளப்படவும் வேண்டும்.(10)

உயிரினங்கள் வீசப்படும் தொலைவு மற்றும் அவற்றின் செயல்களோடு தொடர்புடைய விதியை முறையாகக் காணும் காலம் அவற்றை {அந்த உயிரினங்களை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எப்போதும் இழுத்துக் கொண்டிருக்கிறது.(11) மலர்களும், கனிகளும் தூண்டப்படாமலே தாமதிக்காமல் உரிய காலத்தில் தோன்றுவதைப் போலவே, முற்பிறவியில் செய்த செயல்களும் {வினைகளும்} உரிய காலத்தில் தோன்றுகின்றன.(12) கௌரவம் மற்றும் கௌரவமின்மை, ஈட்டல் மற்றும் இழத்தல், அழிவு மற்றும் வளர்ச்சி ஆகியவை தோன்றுவது காணப்படுகிறது. (அவை வரும்போது) அவற்றை யாராலும் தடுக்க முடியாது. தோன்றியதும் மறைவதால் அவற்றில் எதுவும் நீடித்திருக்காது.(13) ஒருவன் அனுபவிக்கும் துன்பம் அவனது செயல்களின் விளைவேயாகும். ஒருவனுடைய மகிழ்ச்சி அவனது செயல்களில் இருந்தே உண்டாகிறது. ஒருவன் தாயின் கருவறைக்குள் கிடக்கும் காலத்திலிருந்து தன் முற்பிறவி செயல்களை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் தொடங்குகிறான்.(14) குழந்தைப் பருவம், இளமை, அல்லது முதுமையில் ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் எதன் விளைவையும் அவனது மறுமையில் அதே வயதுகளில் அவன் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறான்.(15)

ஆயிரம் பசுக்களுக்கு மத்தியில் கன்று தன் தாயை அடையாளம் காண்பதைப் போலவே முற்பிறவியில் ஒருவன் செய்த செயல்கள், அடுத்தபிறவியில் அவன் தன் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் நின்றாலும் (தவறேதும் இல்லாமல்) அவனையே வந்து அடையும்.(16) அழுக்கடைந்த துணியானது நீரால் வெளுக்கப்படுவதைப் போலவே, அறவோரும் நோன்புகள் தவங்களெனும் நெருப்பில் தொடர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் தூய்மையடைந்து, இறுதியாக எல்லையில்லா மகிழ்ச்சியை அடைகின்றனர்.(17) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, நன்கு செய்யப்படும் நீடித்த தவங்களால் பாவங்கழுவப்பட்டவர்களின் ஆசைகளும், நோக்கங்களும், கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றன.(18) வானத்தில் பறவைகளின் பாதையைய் போன்றோ, நீரில் மீன்களின் பாதையைப் போன்றோ அறவோரின் பாதையையும் பிரித்தறிய முடியாது.(19) பிறரை நிந்திப்பதற்கு எந்தத் தேவையுமில்லை; அதே போலப் பிறர் தவறிய தருணங்களைச் சொல்ல வேண்டியதுமில்லை. மறுபுறம் ஒருவன், தனக்கு இனிமையானதையும், ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்துகொள்ள வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(20)

வியாசரின் தவம்! – சாந்திபர்வம் பகுதி – 324-: மகனைப் பெற வியாசர் தவமிருந்தது; சிவன் வரமருளியது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடுதவங்களைக் கொண்ட உயர் ஆன்மா சுகர் வியாசரின் மகனாக எவ்வாறு பிறந்தார்? உயர்ந்த வெற்றியை அடைவதில் அவர் எவ்வாறு வென்றார்?(1) தவத்தையே செல்வமாகக் கொண்ட வியாசர் எந்தப் பெண்மணியிடம் தன் மகனைப் பெற்றார்? சுகரின் தாயார் யார் என்பதை நாம் அறியவில்லை, மேலும் அந்த உயர் ஆன்ம தவசியின் பிறப்பைக் குறித்த எதையும் நாம் அறியவில்லை.(2) சிறுவனாக இருந்தபோதே இவரது மனம் எவ்வாறு நுட்பமான ஞானத்தில் (பிரம்மத்தில்) செலுத்தப்பட்டது? உண்மையில், இவ்வளவு இளம் வயதில் இத்தகைய மனநிலை வாய்த்த வேறு இரண்டாவது மனிதனை இவ்வுலகில் காண முடியாது.(3) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, இவை யாவையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அமுதம் போன்ற உமது சிறந்த வார்த்தைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை.(4) ஓ! பாட்டா, சுகரின் மகிமை, ஞானம் மற்றும் அவரது ஆத்மயோகத்தையும் (பரமாத்மாவுடன் அவர் கலந்த வகையையும்) முறையான வரிசையில் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வயது, முதுமை, செல்வம் அல்லது நண்பர்களைச் சார்ந்து முனிவர்கள் தகுதியை அடைவதில்லை. வேத கல்வியில் ஈடுபடுபவனே பெரியவன் என அவர்கள் சொல்கிறார்கள்.(6) நீ கேட்கும் இவை அனைத்தும் தவங்களையே தங்கள் வேராகக் கொண்டவையாகும். மேலும், ஓ! பாண்டுவின் மகனே, அந்தத் தவமானது புலனடக்கத்தில் இருந்தே எழுகிறது.(7) தன் புலன்களிடம் கடிவாளத்தை ஒப்படைக்கும் ஒருவன் நிச்சயம் களங்கத்தை ஈட்டுகிறான். அவற்றைக் கட்டுப்படுத்துவதாலேயே அவன் வெற்றியை ஈட்டுகிறான்.(8) ஆயிரம் குதிரை வேள்விகள், அல்லது நூறு வாஜபேயங்களோடு தொடர்புடைய தகுதியானது, யோகத்தில் இருந்து எழும் தகுதியின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது.(9) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் புரிந்து கொள்ள முடியாதவையான சுகரின் பிறந்த சூழ்நிலைகள், தன் தவங்களால் அவர் வென்ற கனிகள், (தன் செயல்களால்) அவர் அடைந்த முதன்மையான கதி ஆகியவற்றைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(10)

ஒரு காலத்தில், கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} அலங்கரிக்கப்பட்ட மேருவின் சிகரத்தில், தன் தோழர்களான பயங்கரமான பூதகணங்களின் துணையுடன் மஹாதேவன் விளையாடிக் கொண்டிருந்தான்.(11) மலைகளின் மன்னனுடைய மகளான தேவி பார்வதியும் அங்கிருந்தாள். தீவில் பிறந்தவர் ({துவைபாயனரான} வியாசர்}, இயல்புக்குமீறிய கடுந்தவங்களை அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே செய்து கொண்டிருந்தார்.(12) ஓ! குருக்களில் சிறந்தவரே, யோகப் பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்தப் பெரும் தவசி, யோகத்தின் மூலம் தன் ஆன்மாவுக்குள் தன்னையே ஈர்த்துக் கொண்டும், தாரணையில் ஈடுபட்டும், ஒரு மகனுக்காக (மகனைப் பெறுவதற்காக) கடுந்தவங்கள் பலவற்றைச் செய்து வந்தார்.(13) அவர் அந்தப் பெருந்தேவனிடம், “ஓ! பலமிக்கவனே {விபுவே}, நெருப்பு {அக்னி}, பூமி {நிலம்}, நீர் {அப்பு}, காற்று {வாயு} மற்றும் வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் பலத்துடன் கூடிய ஒரு மகன் எனக்குக் கிடைக்கட்டும்” என்று வேண்டிக் கொண்டிருந்தார்.(14) தீவில் பிறந்த முனிவரான அவர் {வியாசர்} மிகக் கடுமையான தவங்களில் ஈடுபட்டு, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அணுக முடியாத பெருந்தேவனிடம் (வார்த்தைகளாலல்லாமல்) தன் யோகத் தீர்மானத்தின் மூலம் வேண்டினார்.(15)

பலமிக்கவரான வியாசர், காற்றை மட்டுமே உண்டு பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனுமான மஹாதேவனைத் துதித்தபடியே நூறு வருடங்கள் அங்கேயே இருந்தார்.(16) அங்கே மறுபிறப்பாள முனிவர்கள், அரசமுனிகள், லோகபாலகர்கள், சாத்யர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், ருத்திரர்கள், சூரியன், சந்திரமாஸ், மருத்துகள், பெருங்கடல்கள், ஆறுகள்,(17) அசுவினிகள், தேவர்கள், கந்தர்வர்கள், நாரதர் மற்றும் பர்வதர், கந்தர்வன் விஸ்வாவசு, சித்தர்கள் மற்றும் அப்ரசஸ்கள் அனைவரும் இருந்தனர்.(18) அங்கே ருத்திரன் என்ற பெயராலும் அழைக்கப்படும் மஹாதேவன் {சிவன்}, கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} ஆன சிறந்த மாலையை அணிந்து கொண்டு, கதிர்களால் ஒளிரும் நிலைவைப் போலச் சுடர்விட்டுபடியே அமர்ந்திருந்தான்.(19) தேவர்களும், தெய்வீக முனிவர்களும் நிறைந்த இனிமையான தெய்வீக வனத்தில் அந்தப் பெரும் முனிவர் ஒரு மகனைப் பெறும் விருப்பத்தால் உயர்ந்த தியான யோகத்திலேயே நீடித்திருந்தார்.(20)

அவரது பலம் குன்றவில்லை, எந்தத் துன்பத்தையும் அவர் உணரவில்லை. இதனால் மூன்று உலகங்களும் மிகவும் ஆச்சரியமடைந்தன.(21) அளவிலா சக்தியைக் கொண்ட அந்த முனிவர் {வியாசர்}, யோகத்தில் அமர்ந்திருந்தபோது, அவரது சக்தியின் விளைவால் அவரது சடாமுடி நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(22) சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் இருந்தே நான் இவற்றைக் கேட்டறிந்தேன். அவரே எப்போதும் தேவர்களின் செயல்களைக் குறித்து எனக்குச் சொல்வார்.(23) உயர் ஆன்மா கொண்டவரும் (தீவில் பிறந்தவருமான) கிருஷ்ணரின் {வியாசரின்} சடாமுடி இவ்வாறு அவரது சக்தியால் எரிந்து கொண்டிருந்த காரணத்தாலேயே இந்த நாள்வரை அது நெருப்பின் நிறத்துடன் கூடியதாக இருக்கிறது.(24) ஓ! பாரதா, முனிவரின் இத்தகைய தவங்கள் மற்றும் அர்ப்பணிப்பில் நிறைவடைந்த பெருந்தேவன் (அவர் விரும்பியதைக் கொடுக்கத்) தீர்மானித்தான்.(25)

முக்கண் தேவன் {சிவன்}, மகிழ்ச்சியாகப் புன்னகைத்தபடியே அவரிடம், “ஓ! தீவில் பிறந்தவரே {துவைபாயனரே}, நீர் விரும்பியதைப் போன்றே ஒரு மகனைப் பெறுவீர்.(26) மகிமை நிறைந்த அவன், நெருப்பைப் போல, காற்றைப் போல, பூமியைப் போல, நீரைப் போல, வெளியைப் போலத் தூய்மையானவனாக இருப்பான்.(27) அவன் தன்னுணர்வில் பிரம்ம விழிப்பு நிலையில் இருப்பான்; அவனது புத்தியும், ஆன்மாவும் பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும்; அவன் பிரம்மத்தைப் போன்றவனாகவே அதையே முழுமையாகச் சார்ந்திருப்பான்” என்றான் {சிவன்}[1].(28)

சுகப்ரம்மத்தின் தோற்றம்! – சாந்திபர்வம் பகுதி – 325- சுகப்பிரம்மத்தின் பிறப்பு மற்றும் உபநயனம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெருந்தேவனிடம் {சிவனிடம்} இருந்து உயர்ந்த வரத்தை அடைந்த சத்தியவதியின் மகன் {வியாசர்}, நெருப்பை உண்டாக்குவதற்காக ஒரு நாள் அரணிக் கட்டைகளை எடுத்துக் கடைவதில் ஈடுபட்டார்.(1) ஓ! மன்னா, அந்தச் சிறப்புமிக்க முனிவர் அவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தன் சக்தியின் விளைவால் பேரழகைக் கொண்டிருந்த அப்சரஸ் கிருதாசியைக் கண்டார்.(2) ஓ! யுதிஷ்டிரா, அந்தக் காட்டில் அப்சரஸைக் கண்ட சிறப்புமிக்க முனிவர் வியாசர் திடீரென ஆசையால் பீடிக்கப்பட்டார்.(3) ஆசையால் இதயம் பீடிக்கப்பட்ட முனிவரைக் கண்ட அந்த அப்சரஸ், தன்னை ஒரு பெண்கிளியாக மாற்றிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.(4) அந்த அப்சரஸ் மற்றொரு வடிவத்தால் தன்னை மறைத்திருப்பதை முனிவர் கண்டாலும், அவரது இதயத்தில் எழுந்த ஆசை (மறையாமல்) அவரது உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் பரவியது.(5)

பொறுமையை வேண்டிய அந்தத் தவசி அந்த அசையை அடக்கப் பெரும் முயற்சி செய்தார். எனினும், வியாசர் எவ்வளவுதான் முயன்றாலும், கலக்கமடைந்த தன் மனத்தை அடக்குவதில் அவர் வெல்லவில்லை. நடக்கப் போவதைத் தவிர்க்க முடியாததால், முனிவரின் இதயம் கிருதாசியின் அழகிய வடிவில் ஈர்க்கப்பட்டது.(6) அவர் தன் உணர்வை அடக்கி நெருப்பை உண்டாக்கும் பணியில் தன்னை நிறுவிக் கொள்ள உண்மையில் மெய்யுறுதிப்பாட்டுடன் முயன்றாலும், அவரது உயிர்வித்து {அந்த அரணிக்கட்டைகளிலேயே} வெளியேறியது.(7) ஓ! மன்னா, இருந்தாலும் அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் {வியாசர்}, நடந்ததற்காக எந்த ஐயுணர்வும் அடையாமல் தன் அரணிக் கட்டைகளைக் கடைவதைத் தொடர்ந்தார். விழுந்த அந்த வித்தில் இருந்து, சுகர் என்றழைக்கப்படும் ஒரு மகன் அவருக்குப் பிறந்தார்.(8) அவரது பிறப்பு தொடர்பான இந்தச் சூழ்நிலையின் விளைவாலேயே அவர் சுகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். உண்மையில் இவ்வாறே முனிவர்களில் முதன்மையானவரும், யோகிகளில் உயர்ந்தவருமான அந்தப் பெருந்தவசி (தன் தந்தை நெருப்பை உண்டாக்க வைத்திருந்த) ஈர் அரணிக் கட்டைகளில் இருந்து தன் பிறப்பை அடைந்தார்[1].(9) வேள்வியில் தெளிந்த நெய் ஆகுதியாக ஊற்றப்படும்போது சுடர்மிக்க நெருப்பானது சுற்றிலும் ஒளியைப் பொழிவதைப் போலவே, சுகரும் தன் சக்தியின் விளைவால் ஒளியால் சுடர்விட்டபடி தன் பிறப்பை அடைந்தார்.(10)ஓ! குருவின் மகனே, தூய ஆன்மாவைக் கொண்ட சுகர், தன் தந்தையின் சிறந்த வடிவத்தையும், நிறத்தையும் ஏற்று, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) ஓ! மன்னா, ஆறுகளில் முதன்மையான கங்கை,  தன் உடல் கொண்ட வடிவுடன் மேருவின் சாரலுக்கு வந்து, தன் நீரால் சுகரை (அவரது பிறப்புக்குப் பிறகு) நீராட்டினாள்.(12) ஓ! குருவின் மகனே, ஓ! ஏகாதிபதி, அப்போது அந்த உயர் ஆன்ம சுகர் பயன்படுத்த ஒரு தண்டமும் ஒரு கரிய மான்தோலும் {கிருஷ்ணாஜினமும்} ஆகாயத்தில் இருந்து விழுந்தது.(13) கந்தர்வர்கள் மீண்டும் மீண்டும் பாடினார்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் ஆடினார்கள்; தெய்வீகப் பேரிகைகள் உரக்க முழங்கத் தொடங்கின.(14) கந்தர்வன் விஸ்வாவசு, தும்புரு, நாரதர் மற்றும் ஹாஹா மற்றும் ஹுஹு என்ற பெயர்களில் அழைக்கப்படும் கந்தர்வர்கள் சுகரின் பிறப்பைத் துதித்தனர்.(15)

சக்ரனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட லோகபாலகர்களும், தேவர்களும், தெய்வீக மறுபிறப்பாள முனிவர்களும் அங்கே வந்தனர்.(16) காற்றின் தேவன் {வாயு}, அந்த இடத்தில் தெய்வீகப் பூமாரியைப் பொழிந்தான்.(17) அசைபவற்றையும், அசையாதவற்றையும் கொண்ட அண்டம் முழுமையும் இன்பத்தால் நிறைந்தது.(18) பேரொளி கொண்ட உயர் ஆன்ம மஹாதேவன் {சிவன்}, {உமா} தேவியின் துணையுடன், அன்பால் உந்தப்பட்டு அங்கே வந்து, முனிவரின் மகன் பிறந்ததும் அவருக்குப் புனித நூலை தரித்துவிட்டான்.(19) தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்} சிறந்த வடிவிலான ஒரு கமண்டலத்தையும், சில தெய்வீக ஆடைகளையும், அன்புடன் அவருக்குக் கொடுத்தான்.(20)

ஓ! பாரதா, அன்னங்கள், சதபத்ரங்கள் {நூறு சிறகுகளைக் கொண்ட அன்னங்கள்}, ஆயிரக்கணக்கான நாரைகள் மற்றும் பல கிளிகளும், சாஸங்களும் அவரது தலையை வட்டமிட்டன {வலம் வந்தன}.(21) பெரும் காந்தியையும் நுண்ணறிவையும் கொண்ட சுகர், அந்த அரணிக் கட்டைகள் இரண்டில் பிறப்பை அடைந்து, பல நோன்புகள் மற்றும் நியமங்களைக் கவனமாக நோற்றபடி அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.(22) சுகர் பிறந்த உடனேயே, ஓ மன்னா, புதிர்கள் அனைத்துடன் கூடிய வேதங்களும், அவற்றின் பொழிப்புரைகளும் அவரது தந்தையுடன் வசிப்பதைப் போலவே அவரிடமும் வசிக்க வந்தன.(23) அதன் பிறகும் சுகர், உலக நடைமுறையின்படியே, அங்கங்கள் மற்றும் உரைகளுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும் அறிந்தவரான பிருஹஸ்பதியைத் தன் ஆசானாகத் தேர்ந்தெடுத்தார்[2].(24)ஓ! பலமிக்க ஏகாதிபதி, புதிர்கள் மற்றும் பொழிப்புரைகள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், வரலாறுகள் அனைத்தையும், அரசு அறிவியலையும் படித்த அந்தப் பெருந்தவசி,(25) தன் ஆசானுக்குரிய கட்டணத்தை அளித்துவிட்டு {குருவுக்குத் தக்ஷிணை கொடுத்துவிட்டு} வீடு திரும்பினார். பிரம்மச்சாரியின் நோன்பைப் பின்பற்றிய அவர், அது முதல் தன் கவனம் அனைத்தையும் குவித்துக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(26) குழந்தைப்பருவத்திலும் கூட அவர், தனது ஞானத்திற்காகவும், தவங்களுக்காகவும் தேவர்களாலும், முனிவர்களாலும் மதிக்கப்பட்டார்.(27) ஓ! மன்னா, அந்தப் பெருந்தவசியின் மனமானது, இல்லறத்தைத் தங்களில் ஒன்றாகக் கொண்ட மூன்று வகை வாழ்வு முறைகளிலும் {மூவகை ஆசிரமங்களிலும்} இன்பங்கொள்ளாமல் விடுதலை {முக்தி} அறத்தையே தன் மனத்தில் நோக்கமாகக் கொண்டு, அதையே செய்தார்” என்றார் {பீஷ்மர்}.(28)

வியாசரின் ஆணை! – சாந்திபர்வம் பகுதி – 326-வியாசரின் ஆணையை ஏற்று, விதேஹர்களின் தலைநகரான மிதிலைக்குச் சென்று, மன்னன் ஜனகனின் அரண்மனையை அடைந்த சுகர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விடுதலையைக் குறித்து எண்ணிய சுகர் தன் தந்தையை {வியாசரை} அணுகி, பணிவுடன் கூடியவராக, தனக்கான உயர்ந்த நன்மையை அடைய விரும்புபவராக அந்தப் பேராசானை {வியாசரை} வணங்கி, அவரிடம்,(1) “விடுதலை {முக்தி} அறத்தை {மோக்ஷதர்மத்தை} நீர் நன்கறிந்தவராவீர். ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! பலமிக்கவரே, உயர்ந்த மனோ அமைதி எனதாகும் வகையில் அதைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(2)

தன் மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும் முனிவர், அவரிடம், “ஓ! மகனே, விடுதலையறத்தையும் {மோக்ஷதர்மத்தையும்}, வாழ்வின் பல்வேறு கடமைகள் அனைத்தையும் நீ கற்பாயாக” என்றார்.(3)

அறவோர் அனைவரிலும் முதன்மையான சுகர், ஓ! பாரதா, தன் தந்தையின் கட்டளையின் பேரில் யோக சாத்திரங்கள் அனைத்திலும், கபிலரிடம் இருந்து உண்டான அறிவியலிலும் {சாங்கிய அறிவியலிலும்} தேர்ச்சியடைந்தார்.(4)வியாசர், தன் மகன் வேதங்களின் ஒளியைக் கொண்டிருப்பதையும், பிரம்மசக்தியைக் கொண்டிருப்பதையும், விடுதலையறத்தை {மோக்ஷதர்மத்தை} அறிந்திருப்பதையும் கண்டு அவரிடம்,(5) “மிதிலையின் ஆட்சியாளனான ஜனகனிடம் செல்வாயாக. உன் விடுதலைக்கான அனைத்தையும் அந்த மிதிலையின் மன்னன் உனக்குச் சொல்வான்” என்றார்.(6)

ஓ! மன்னா, சுகர் தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, கடமைகளின் உண்மையையும், விடுதலை தரும் புகலிடத்தையும் குறித்து மன்னனிடம் தெரிந்து கொள்வதற்காக மிதிலைக்குச் சென்றார்.(7)

அவர் புறப்படுவதற்கு முன்னர் அவரது தந்தை அவரிடம், “சாதாரண மனிதர்கள் செல்லும் பாதையிலேயே நீ அங்கே செல்வாயாக. வானத்தினூடாகச் செல்வதற்காக நீ உன் யோகபலத்தைப் பயன்படுத்த வேண்டாம்” என்றார்.(8)சுகர் (எளிய இயல்பினரென்பதால்) இதில் எந்த ஆச்சரியத்தையும் அடையவில்லை. மேலும் அவர் அந்த இடத்திற்கு எளிமையுடன் செல்ல வேண்டும் என்றும், இன்பத்திற்கான ஆசையில் செல்லக்கூடாது என்றும் சொல்லப்பட்டார், {வியாசர்}, “நண்பர்களும், மனைவிகளும் உலகப் பற்றுக்கான காரணங்கள் என்பதால், நீ செல்லும் வழியில் நண்பர்களையோ, மனைவிகளையோ தேடாதே.(9) வேள்வி செய்வதில் நம் உதவியைப் பெறுபவர்களில் ஒருவனான மிதிலையின் ஆட்சியாளன் {ஜனகன்} இருந்தாலும், அவனோடு வாழும்போது நீ உயர்வு மனப்பான்மையுடன் எதிலும் ஈடுபடக்கூடாது. நீ அவனது இயக்கத்தின் கீழ், அவனுக்குக் கீழ்ப்படிந்தே வாழ வேண்டும். அவனே உன் ஐயங்கள் அனைத்தையும் அகற்றுவான்.(10) அம்மன்னன், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவன், விடுதலை {முக்தி} குறித்த சாத்திரங்களையும் நன்கறிந்தவனாவான். நான் வேள்வி நடத்திக் கொடுப்பவர்களில் அவனும் ஒருவன். அவன் சொல்வதை நீ எந்த ஐயுணர்வுமின்றிச் செய்ய வேண்டும்” {என்றார்}.(11)

இவ்வாறு கற்பிக்கப்பட்ட அற ஆன்ம சுகர், கடல்களுடன் கூடிய பூமி முழுமையிலும் வானத்தின் ஊடாகச் செல்லவல்லவரென்றாலும் அவர் கால்நடையாகவே மிதிலைக்குச் சென்றார்.(12) பல குன்றுகள், மலைகள், ஆறுகள், நீர்நிலைகள், தடாகங்கள், தோப்புகள், இரைதேடும் விலங்குகளும், பிற விலங்குகளும் நிறைந்த காடுகள் ஆகியவற்றைக் கடந்து,(13) மேரு மற்றும் ஹரி என்ற இரு வர்ஷங்களை அடுத்தடுத்து கடந்து, அடுத்ததாக இமய வர்ஷத்தையும் கடந்து இறுதியாகப் பாரதம் என்ற பெயரில் அறியப்பட்ட வர்ஷத்தை வந்தடைந்தார்.(14) வழியில் சீனர்களும், ஹூணர்களும் வசித்த பல நாடுகளைக் கண்ட அந்தத் தவசி இறுதியாக ஆர்யவர்த்தத்தை அடைந்தார்.(15)

அவர் தன் தந்தையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தும், அவற்றைத் தொடர்ந்து தன் மனத்தில் கொண்டும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போலப் பூமியில் படிப்படியாகத் தன் வழியில் கடந்து சென்றார்.(16) பல இனிய ஊர்களையும், மக்கள் கூட்டம் நிறைந்த நகரங்களையும் கடந்து சென்ற அவர், அவதானிக்கக் காத்திராமல் பல்வேறு வகைச் செல்வங்களையும் காணாமல் சென்றார்.(17) அவர் தன் வழியில் பல இனிய தோட்டங்களையும், தளங்களையும், புனித நீர்நிலைகளையும் கடந்து சென்றார்.(18)அதிகக் காலம் கடக்கும் முன் அறம் சார்ந்த உயர் ஆன்ம ஜனகனால் பாதுகாக்கப்பட்ட விதேஹர்களின் நாட்டை அவர் அடைந்தார்.(19) அங்கே அவர் மக்கள் தொகை நிறைந்த கிராமங்களையும், பல வகை உணவு மற்றும் பானங்களையும், மனிதர்களாலும், கால்நடைக் கூட்டங்கள் பலவற்றாலும் நிறைந்திருந்த மாட்டிடையர்களின் வசிப்பிடங்களையும் கண்டார்.(20)

நெல், கோதுமை மற்றும் பிற தானியங்கள் நிறைந்த வயல்கள் பலவற்றையும், அன்னங்கள், நாரைகள் வசித்தவையும், அழகிய தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தடாகங்கள் மற்றும் நீர்நிலைகள் பலவற்றையும் கண்டார்.(21) வசதிவாய்ப்புள்ள மக்கள் நிறைந்த விதேஹ நாட்டின் ஊடே கடந்து சென்று, பல்வேறு வகை மரங்கள் நிறைந்த, இனிமைநிறைந்த மிதிலையின் தோட்டங்களை {உபவனத்தை} அடைந்தார்.(22) யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்து, ஆண் பெண் மக்களால் நிரம்பிய அதனில் தன் கண்ணுக்கு விருந்தளிக்கப்பட்ட எந்தப் பொருளையும் காணக் காத்திராமல் கடந்து சென்றார்.(23) (விடுதலை அறத்தில் {மோக்ஷதர்மத்தில்} திறம்பெற விரும்பிய) தன் மனச்சுமையைத் தாங்கிக் கொண்டும், இடையறாமல் அந்நிலையிலேயே வசித்துக் கொண்டும் சென்றவரும், உற்சாக ஆன்மா கொண்டவருமான சுகர், அக ஆய்வில் மட்டுமே திளைப்பை அடைந்து இறுதியில் மிதிலையை அடைந்தார்.(24) வாயிலை வந்தடைந்த அவர், வாயில்காப்போர் மூலம் {தன் வருகையைச்} சொல்லியனுப்பினார். மன அமைதி கொண்டவரும், தியானத்திலும், யோகத்திலும் அர்ப்பணிப்புள்ளவருமான அவர், அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்நகருக்குள் {மிதிலைக்குள்} நுழைந்தார்.(25)

வசதிவாய்ப்புள்ள மனிதர்களால் நிறைந்த முக்கியச் சாலையின் {ராஜமார்க்கத்தின்} வழியே சென்ற அவர், மன்னனின் அரண்மனையை அடைந்து, எந்த ஐயுணர்வுமின்றி அதனுள் நுழைந்தார்.(26) சுமைதூக்குபவர்கள் கடுமொழிகளால் அவரைத் தடுத்தார்கள். அதன்பேரில் சுகர் கோபமேதும் அடையாமல் நின்று அங்கேயே காத்திருந்தார்.(27) சூரியனோ, அவர் நடந்து வந்த நெடுந்தொலைவோ அவரைக் களைப்படையச் செய்யவில்லை. பசியோ, தாகமோ, களைப்பாலோ அவர் பலவீனமடையவில்லை. சூரியனின் வெப்பத்தால் அவரை எரிக்கவோ, துன்புறுத்தவோ, தளர்வடையச் செய்யவோ முடியவில்லை.(28) அந்தச் சுமைதூக்கிகளில், பிரகாசத்துடன் கூடிய நடுப்பகல் சூரியனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த அவரிடம் கருணை கொண்ட ஒருவன் இருந்தான்.(29) முறையான வடிவில் அவரை வழிபட்டு, அவரை முறையாக வணங்கி, கூப்பிய கரங்களுடன் அந்த அரண்மனையின் முதல் அறைக்கு அவரை அழைத்துச் சென்றான்.(30)

ஓ! மகனே {யுதிஷ்டிரா}, அங்கே அமர்ந்த அவர் விடுதலையை {முக்தியை} மட்டுமே சிந்திக்கத் தொடங்கினார். ஒரே தன்மையிலான காந்தியைக் கொண்ட அவர், நிழல்விழுந்த இடத்தையும், சூரியனின் கதிர்களுக்கு வெளிப்பட்ட இடங்களையும் சமகண்ணுடனே பார்த்தார்.(31)வெகு விரைவில் மன்னனின் அமைச்சர், கரங்களைக் கூப்பியபடியே அந்த இடத்திற்கு வந்து அரண்மனையின் இரண்டாம் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார்.(32) அந்த அறையானது, அரண்மனையின் அந்தப்புரத்தில் ஒரு பகுதியாக அமைந்திருந்த ஓர் அகன்ற நந்தவனத்திற்கு வழிவகுத்தது. அஃது இரண்டாம் சைத்ரரதம் போல இருந்தது. முறையான இடைவெளிகளில் அழகிய நீர்த்தடாகங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. அந்த வனத்தில் இருந்த இனிமைநிறைந்த மரங்கள் அனைத்தும் மலரும் பருவத்தில் இருந்தன.(33)

ஒப்பற்ற அழகுடைய காரிகையர் கூட்டம் அங்கே இருந்தது. அந்த அமைச்சர் சுகரை இரண்டாம் அறையில் இருந்து அந்த இனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தத் தவசிக்கு இருக்கை அளிக்கும்படி அந்தக் காரிகைகளுக்கு ஆணையிட்ட அமைச்சர், அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.(34) நன்கு உடுத்தியிருந்த அந்தக் காரிகையர், அழகிய அம்சங்களையும், சிறந்த இடைகளையும், இளங்காதுகளையும் கொண்டவர்களாகவும், மெலிதான சிவப்பாடைகளை அணிந்தவர்களாகவும், புடம்போட்ட தங்கத்தாலான ஆபரணங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.(35) ஏற்புடைய உரையாடல்களைச் செய்வதிலும், பித்துகொள்ளச் செய்யும் களியாட்டங்களில் நன்கு திறம்பெற்றவர்களாகவும், ஆடல் மற்றும் பாடல் கலைகளில் முற்றான தலைவிகளாகவும் திகழ்ந்தனர். எப்போதும் புன்னகையுடன் உதடுகளைத் திறக்கும் அவர்கள், அழகில் அப்ஸரஸ்களைப் போலவே இருந்தனர்.(36) பாலுறவுச் செயல்கள் அனைத்திலும் திறம்பெற்றவர்களாகவும், தாங்கள் காத்திருக்கக்கூடிய {பணிவிடை செய்யக்கூடிய} மனிதர்களின் எண்ணங்களைப் படிக்கும் திறன் கொண்டவர்களாகவும், சிறப்புத் திறன்கள் அனைத்தையும் கொண்டவர்களாகவும், மிக மேன்மையான வகையைச் சேர்ந்தவர்களாகவும், எளிய ஒழுக்கத்தையே கொண்டவர்களாகவும் இருந்த ஐம்பது காரிகையர் அந்தத் தவசியை {சுகரைச்} சூழ்ந்து கொண்டனர்[1].(37) அவரது காலைக் கழுவிக் கொள்ள நீரையும், வழக்கமான பொருட்களையுங்கொடுத்து மதிப்புடன் அவரை வழிபட்ட அவர்கள், அந்தப் பருவகாலத்திற்குரிய சிறந்த, ஏற்புடைய உணவுவகைகளையுங்கொடுத்து அவரை நிறைவு செய்தார்கள்.(38)

அவர் உண்ட பிறகு, அந்தக் காரிகையர் ஒருவர் பின் ஒருவராக அவரைத் திடலுக்கு அழைத்துச் சென்று, விருப்பத்திற்குரிய ஒவ்வொரு பொருளையும் அவருக்குக் காட்டினார்கள்.(39) மனிதர்கள் அனைவரின் எண்ணங்களையும் அறியவல்லவர்களான அந்தக் காரிகையர், விளையாடிக் கொண்டும், நகைத்துக் கொண்டும், பாடிக் கொண்டும், உன்னத ஆன்மாவைக் கொண்ட அந்த மங்கலமான தவசியை உபசரித்தனர்.(40) தூய ஆன்மாவைக் கொண்டவரும், அரணிக்கட்டைகளில் பிறந்தவரும், தன் கடமைகளில் எவ்வகையையும் ஐயமில்லாமல் செய்பவரும், தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டவரும், கோபத்தை முற்றாக ஆள்பவருமான அந்தத் தவசி {சுகர்}, இவை யாவற்றிலும் விருப்பமோ, கோபமோ கொள்ளவில்லை.(41) அப்போது, அழகிய பெண்களில் முதன்மையானவர்களான அவர்கள் அவருக்கு ஒரு சிறந்த இருக்கையை அளித்தனர்.(42)தன் பாதங்களையும், பிற அங்கங்களையும் கழுவிக் கொண்ட சுகர், தன் மாலை வேளை வேண்டுதல்களைச் சொல்லி, அந்தச் சிறந்த இருக்கையில் அமர்ந்து, தான் அங்கே வந்த நோக்கத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(43) இரவின் முதல் பகுதியில் அவர் தன்னை யோகத்தில் அர்ப்பணித்தார். அந்தப் பலமிக்கத் தவசி, இரவின் நடுப்பகுதியை உறக்கத்தில் கழித்தார்.(44) வெகுவிரைவில் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அவர், தன் உடலின் தூய்மைக்குத் தேவையான சடங்குகளைச் செய்த பிறகு அழகிய பெண்களால் சூழப்பட்டிருந்தாலும் மீண்டும் யோகத்தில் தன்னை அர்ப்பணித்தார்.(45) ஓ! பாரதா, தீவில்பிறந்தவரான கிருஷ்ணரின் {வியாசரின்} மகன், இவ்வாறே அந்த நாளின் இறுதிப் பகுதியையும், அந்த இரவு முழுமையையும் மன்னன் ஜனகனின் அரண்மனையில் கடத்தினார்”{என்றார் பீஷ்மர்}.(46)

பிரம்ம ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 327-சுகரை வரவேற்று, வழிபட்டு அவருக்கு பிரம்மஞானத்தை உபதேசித்த மன்னன் ஜனகன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, அடுத்த நாள் காலையில், மன்னன் ஜனகன் தன் அமைச்சர்கள் மற்றும் மொத்த குடும்பத்தின் துணையுடனும், தன் புரோகிதரை முன்னணியில் நிறுத்திக் கொண்டும் சுகரிடம் வந்தான்.(1) அந்த ஏகாதிபதி, விலைமதிப்புமிக்க இருக்கைகள் பல்வேறு வகையான ரத்தினங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்தும், தன் தலையில் அர்க்கிய உட்பொருட்களைச் சுமந்து கொண்டும் தன் மதிப்புமிக்க ஆசானின் {வியாசரின்} மகனை {சுகரை} அணுகினான்.(2) மன்னன், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த விரிப்பு விரிக்கப்பட்டதும், அனைத்துப் பகுதியிலும் அழகாக இருந்ததும், மிக்க விலைமதிப்புமிக்கதுமான இருக்கையைத் தன் புரோகிதரின் கைகளில் இருந்து, தன் கைகளாலேயே பெற்று, தன் ஆசானின் மகனான சுகரிடம் பெரும் மதிப்புடன் கொடுத்தான்.(3,4) (தீவில் பிறந்த) கிருஷ்ணரின் மகன் {கிருஷ்ண துவைபாயணரான வியாசரின் மகன் சுகர்} அதில் அமர்ந்தபிறகு, பரிந்துரைக்கப்படும் சடங்குகளின்படி மன்னன் அவரை முறையாக வழிபட்டான். முதலில் அவரது பாதங்களைக் கழுவிக் கொள்ள நீரைக் கொடுத்த அவன், பிறகு அர்க்கியத்தையும், பசுவையும் அவருக்குக் கொடுத்தான்.(5)

அந்தத் தவசியும் {சுகரும்} தனக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை முறையான சடங்குகளுடனும், மந்திரங்களுடனும் ஏற்றுக் கொண்டார். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரான அவர், மன்னனால் {ஜனகனால்} அளிக்கப்பட்ட காணிக்கையை இவ்வாறு ஏற்றுக் கொண்டு,(6) அவருக்கு அளிக்கப்பட்ட பசுவையும் பெற்றுக் கொண்டு அந்த ஏகாதிபதியை வணங்கினார். பெரும் சக்தியைக் கொண்ட அவர், மன்னனின் நலனையும், செழிப்பையும் விசாரித்தறிந்தார்.(7) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உண்மையில் சுகர் அந்த ஏகாதிபதியின் {ஜனகனின்} தொண்டர்கள் மற்றும் அலுவலர்களின் நலத்தையும் விசாரித்தார்.(8) உயர் ஆன்மாவையும், உயர்ந்த பிறப்பைக் கொண்ட அந்த ஏகாதிபதி {ஜனகன்}, கூப்பிய கரங்களுடன் வெறுந்தரையில் அமர்ந்து அந்த வியாசர் மகனின் {சுகரின்} நலத்தையும், அவரது குறைவற்ற செல்வத்தையும் குறித்து விசாரித்தான்.(9) பிறகு அந்த ஏகாதிபதி தன் விருந்தினர் வந்த நோக்கத்தைக் கேட்டான்.(10)

சுகர் {ஜனகனிடம்}, “நீர் அருளப்பட்டு இருப்பீராக. விதேஹர்களின் ஆட்சியாளரும், ஜனகன் என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான தமது எஜமானர் விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து நன்கறிந்தவர் என்று என் தந்தை {வியாசர்} சொன்னார்.(11) பிரவிருத்தி, அல்லது நிவிருத்தி ஆகிய அறக்காரியங்களில் தீர்மானத்தை எட்டுவதில் ஐயமேதும் எழுந்தால் தாமதமில்லாமல் அவரிடம் செல்லும்படியும் {ஜனகரான உம்மிடம் செல்லும்படியும்} அவர் ஆணையிட்டார். மிதிலையின் மன்னர் என் ஐயங்கள் அனைத்தையும் அகற்றுவார் என்றும் அவர் சொன்னார்.(12) எனவே, என் தந்தையுடைய {வியாசருடைய} ஆணையின் பேரில் உம்மிடம் பாடங்கள் கேட்கும் நோக்கத்தில் நான் இங்கு வந்துள்ளேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, எனக்குக் கற்பிப்பதே உமக்குத் தகும்.(13) பிராமணர்களின் கடமைகள் என்னென்ன? விடுதலையை {முக்தியை} நோக்கமாகக் கொண்ட அந்தக் கடமைகளின் சாரமென்ன? {மோக்ஷரூபமான புருஷார்த்தமானது என்ன ஸ்வரூபமுடையது?} மேலும், விடுதலை {முக்தி} எவ்வாறு அடையப்படுகிறது? அது ஞானத்தின் துணையால் அடையத்தக்கதா? தவங்களின் உதவியால் அடையத்தக்கதா?” என்று கேட்டார்.

ஜனகன் {சுகரிடம்}, “ஒரு பிராமணன் பிறந்தது முதல் அவனுடைய கடமைகள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மகனே, புனித நூலை ஏற்ற {உபநயனம் செய்யப்பட்ட} பிறகு அவன் தன் கவனத்தை வேத கல்வியில் அர்ப்பணிக்க வேண்டும்.(15) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் தான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவதற்காகத் தவங்கள் பயின்று, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்குத் தொண்டு செய்து, பிரம்மச்சாரியின் கடமைகளை நோற்பதன் மூலம் அவன், தீய நோக்கங்கள் அனைத்தையும் கைவிடவேண்டும்.(16) மிகக் கவனமாக வேதங்களைப் பயின்று, தன் புலன்களை அடக்கி, தன் ஆசானுக்குரிய தக்ஷிணையைக் கொடுத்த பிறகு அவன் தன் ஆசானின் அனுமதியுடன் இல்லம் திரும்ப வேண்டும்.(17) இல்லம் திரும்பிய அவன், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொண்டு ஒரு துணைவியை மணந்து அவளிடம் மட்டுமே கட்டுப்பட்டு, அனைத்துவகைத் தீய நோக்கங்களில் இருந்தும் தன்னை விடுவிக்கும் வகையில் வாழ்ந்து தன் இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ள வேண்டும்.(18) இல்லறத்தில் வாழும் அவன் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற வேண்டும். அதன் பிறகு, காட்டுக்குள் ஓய்ந்து சென்று அதே நெருப்புகளை வழிபடுவதைத் தொடர்ந்து, இதயப்பூர்வமான விருந்தோம்பலுடன் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் {வானப்ரஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்}.(19) அதன்பிறகு அவன், காட்டில் அறவோனாக வாழ்ந்து, தன் நெருப்பைத் தன் ஆன்மாவில் நிறுவி, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆன்மாவின் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டுச் சந்நியாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில், அல்லது பிரம்மம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் தன் நாட்களைக் கடத்த வேண்டும்” என்றான் {ஜனகன்}.(20)

சுகர் {ஜனகனிடம்}, “ஒருவன், சாத்திரக் கல்வி மற்றும் அனைத்துப் பொருட்களின் உண்மைப் பொருளை உணர்தல் ஆகியவற்றின் மூலம் தெளிந்த புத்தியை அடைந்தால், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும் அவனது இதயம் நிரந்தரமாக விடுபட்டால், அத்தகைய மனிதனும் பிரம்மச்சர்யம், கார்ஹஸ்தியம், வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் மூன்று வாழ்வு முறையையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்பற்ற வேண்டுமா?(21) இதையே நான் உம்மிடம் கேட்கிறேன். எனக்கு இதைச்சொல்வதே உமக்குத் தகும். உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வேதங்களின் உண்மை பொருளின்படி இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(22)

ஜனகன் {சுகரிடம்}, “சாத்திரக் கல்வியின் மூலமும், விஞ்ஞானம் என்ற பெயரில் அறியப்படும் அனைத்துப் பொருட்களின் உண்மைப் பொருளை உணர்தலின் மூலமும் தூய்மையடைந்த புத்தியின் துணையில்லாமல் விடுதலையை {முக்தியை} அடைவது சாத்தியமற்றதாகும். மேலும் அந்தத் தூய்மையடைந்த புத்தியும், ஓர் ஆசானின் தொடர்பில்லாமல் அடையப்பட முடியாது என்றும் சொல்லப்படுகிறது.(23) (உலகமெனும் பெருங்கடலைக் கடப்பதில் ஒருவன் வெல்வதிலும், அதில் துணை செய்வதிலும்) ஞானம் படகாகிறது, ஆசானே படகோட்டியாகிறார். அப்படகை அடைந்த பிறகே ஒருவன் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான். உண்மையில், பெருங்கடலைக் கடந்ததும் அவன் அவை இரண்டையும் {படகான ஞானத்தையும், படகோட்டியான ஆசானையும்} கைவிடலாம்.(24) உலகங்கள் அனைத்தையும் அழிவில் இருந்து காப்பதற்கும், (உலகங்கள் எவற்றைச் சார்ந்திருக்க்கிறதோ அந்தச்) செயல்களை அழிவில் இருந்து காப்பதற்கும் பழங்கால ஞானிகளால் இந்த நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} தொடர்புடைய கடமைகள் பயிலப்பட்டன.(25) ஒருவன் பல பிறவிகளின் போக்கில் இவ்வகைமுறை சார்ந்த செயல்களுக்கு ஏற்புடைய வகையில் நல்ல மற்றும் தீய செயல்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலையை அடைகிறான்[1].(26) எந்த மனிதன் பல பிறவிகளில் செய்யும் தவங்களின் மூலம் மனம், புத்தி மற்றும் ஆன்மத் தூய்மையை அடைவதில் வெல்கிறானோ அவனால் (தன் புதிய பிறவியில்) முதல் வாழ்வுமுறையிலேயே {பிரம்மச்சரிய வாழ்வுமுறையிலேயே} கூட நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைய முடியும்.(27)

தூய்மையடைந்த புத்தியை அடைகையில் விடுதலை அவனுடையதாவதன் மூலம் அவன் புலப்படும் அனைத்துப் பொருட்களின் ஞானத்தையும் அடைவான் எனும்போது, {கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என்ற} மூன்று பிற வாழ்வுமுறைகளை நோற்பதன்மூலம் அடையத்தக்க விருப்பமான பொருள் வேறென்ன இருக்க முடியும்?[2](28) ரஜஸ் மற்றும் தமஸில் {குணங்களில்} பிறக்கும் களங்கங்கள் அனைத்தையும் ஒருவன் கைவிட வேண்டும். அவன், சத்வத்தின் {சத்வ குணத்தின்} பாதையைப் பின்பற்றித் தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} அறிய வேண்டும்[3].(29) தன்னை {தன் சுயத்தை} அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களில் தன்னையும் {தன் ஆன்மாவென்ற சுயத்தையும்} காணும் ஒருவன், (எதனிலும் பற்றுக் கொள்ளாமல்) நீரில் வாழ்ந்தும், நீரில் நனையாமல் இருக்கும் நீர்வாழ் உயிரினங்களைப் போல வாழ வேண்டும்.(30) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடப்பதிலும், அவற்றின் ஆதிக்கத்தைத் தடுப்பதிலும் வெல்லும் ஒருவன், பற்றுகள் அனைத்தையும் கைவிடுவதில் வென்று, கீழே இருந்து வானத்திற்குப் பறந்து செல்லும் பறவையைப் போல, மறுமையில் முடிவிலா இன்ப நிலையை அடைகிறான்.(31) இது தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் யயாதியால் பாடப்பட்டதும், விடுதலை {முக்தி} குறித்த சாத்திரங்களை {மோக்ஷசாத்திரங்களை} அறிந்த மனிதர்கள் அனைவராலும் நினைவில் கொள்ளப்படுவதுமான ஒரு சொலவடை இருக்கிறது.(32) (பரமாத்மா எனும்) பிரகாசமிக்கக் கதிர், ஒருவனின் ஆன்மாவுக்குள்ளேயே இருக்கிறது, வேறு எங்கும் இல்லை. அஃது அனைத்து உயிரினங்களிலும் சமமாக இருக்கிறது. யோகத்தில் அர்ப்பணிப்புள்ள இதயத்துடன் கூடிய ஒருவனால் அதைத் தனக்குள்ளேயே காண முடியும்.(33)தன்னைப் பார்த்தவுடனே மற்றவன் அஞ்சாத வகையில் வாழ்பவனும், பிறரைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதவனும், விருப்பு வெறுப்பு வளர்ப்பதை நிறுத்துபவனுமான ஒருவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(34) எண்ணம், சொல் மற்றும் செயலில் அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் பாவம் நிறைந்த மனோநிலையை நிறுத்துபவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(35) மனம் மற்றும் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மனத்தைக் கலங்கடிக்கும் தீய நோக்கத்தைக் கைவிடுவதன் மூலமும், ஆசை மற்றும் மயக்கத்தை விடுவதன் மூலமும் ஒருவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(36) ஒரு மனிதன், கேட்கும் பொருட்கள் மற்றும் பார்க்கும் பொருட்கள் அனைத்திலும், (பிற புலன்களின் செயல்பாடுகளிலும்), வாழும் உயிரினங்கள் அனைத்திலும் சம மனநிலையைக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடக்கும்போது அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(37) ஒரு மனிதன், புகழ் மற்றும் இகழ், தங்கம் மற்றும் இரும்பு, இன்பம் மற்றும் துன்பம், வெப்பம் மற்றும் குளிர், நன்மை மற்றும் தீமை, ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றில் சமமாகக் கண்களைச் செலுத்தும் போது அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(38, 39)

துறவி வகையினரின் கடமைகளை நோற்கும் ஒருவன், நீட்டப்பட்ட தன் அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் புலன்களையும், மனத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.(40) இருளில் மூழ்கிய ஒரு வீட்டை தூண்டப்பட்ட விளக்கின் துணையுடன் பார்ப்பதைப் போலவே, புத்தி எனும் விளக்கின் துணையால் ஆன்மாவையும் காண முடியும்.(41) ஓ!புத்திசாலிகளில் முதன்மையானவனே, நான் உனக்குச் சொல்லும் இந்த ஞானம் அனைத்தும் உன்னிடம் வசிப்பதை நான் பார்க்கிறேன். விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} கற்க விரும்பும் ஒருவனால் அறியப்பட வேண்டிய எதையும் நீ ஏற்கனவே அறிந்திருக்கிறாய்.(42) ஓ! மறுபிறப்பாள முனிவனே, உனது ஆசானின் அருள் மூலமாகவும், நீ பெற்ற கல்வியின் மூலமும், நீ ஏற்கனவே புலன்நுகர் பொருட்கள் அனைத்தையும் கடந்துவிட்டாய் என நான் நம்புகிறேன்.(43) ஓ! பெரும் தவசியே, உனது தந்தையின் அருள் மூலம் அனைத்தையும் அறிந்தவன் நான், எனவே உன்னை அறிந்து கொள்வதில் வென்றிருக்கிறேன்.(44)

நீ உனக்கு இருப்பதாக நினைப்பதைவிட உன் ஞானம் மிகப் பெரியதாகும். உள்ளுணர்வின் மூலம் விளையும் உன் கருத்துகளும் நீ கொண்டிருப்பதாக நினைப்பதைவிட மிகப் பெரியவையாகும். நீ அறிந்ததைவிட உன் பலம் மிகப் பெரியது.(45) உன் இளம் வயதினாலோ, ஐயங்களை அகற்ற இயலாததாலோ, விடுதலை {முக்தி} அடையாததால் உண்டாகும் அச்சத்தாலோ, உள்ளுணர்வின் மூலம் உன் மனத்தில் ஏற்கனவே எழுந்த ஞானத்தை நீ அறியாமல் இருக்கிறாய்.(46) எங்களைப் போன்றோரின் மூலம் ஐயங்கள் விலக்கப்பட்ட பிறகே ஒருவன் தன் இதய முடிச்சுகளைத் திறப்பதில் வெல்கிறான். அதன்பிறகு செய்யும் அறம் சார்ந்த முயற்சியின் மூலம் அவன் அந்த ஞானத்தை அடைந்து அறிந்து கொள்கிறான்.(47)

உன்னைப் பொறுத்தவரையில் நீ ஏற்கனவே ஞானத்தை அடைந்தவனாவாய். உன் புத்தி நிலையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. நீ பேராசையில் இருந்து விடுபட்டவனாக இருக்கிறாய். ஓ! பிராமணா, இவையாவும் இருந்தாலும், முயற்சி இல்லாத ஒருவனால், அடைவதற்கரிய உயர்ந்த பொருளான பிரம்மத்தை அடைவதில் ஒருபோதும் வெல்லமுடியாது.(48) இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையில் நீ எந்த வேறுபாட்டையும் காணவில்லை. நீ பேராசையுடன் இல்லை. ஆடுவதிலும், பாடுவதிலும் உனக்கு விருப்பமில்லை. உனக்குப் பற்றுகள் ஏதும் இல்லை.(49) நண்பர்களிடம் உனக்குப் பிணைப்பேதும் கிடையாது. அச்சத்தைத் தூண்டும் பொருட்களில் உனக்கு அச்சமேதுமில்லை. ஓ! அருளப்பட்டவனே, தங்கக் குவியலிலும், மண்ணாங்கட்டியிலும் நீ சமகண்களைக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.(50) நானும், ஞானம் கொண்ட பிறரும், உயர்ந்த, அழிவற்ற அமைதி வழியில் நீ நிறுவப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.(51) ஓ! பிராமணா, ஒரு பிராமணன் அடையத்தக்க கனிகளைப் பெற்றுத் தருபவையும், விடுதலை {முக்தி} என்று சொல்லப்படும் பொருள் சாரங்களைப் போன்றவையுமான கடமைகளிலேயே நீ இருக்கிறாய். இன்னும் என்னிடம் நீ கேட்பதற்கு வேறென்ன இருக்கிறது?” என்று கேட்டான் {ஜனகன்}”.(52)

வேதக்கல்விக்கான வழிமுறை! – சாந்திபர்வம் பகுதி – 328-உலகையும், தேவர்களையும் அவமதித்த முருகன்; வேலை அசைத்த விஷ்ணு; வேலை அசைக்க முடியாமல் வீழ்ந்த பிரகலாதன்; கடுந்தவம் செய்த சிவன்; சிவனின் தவத்தைப் பாதுகாத்த அக்னி; சீடர்களுக்கு வேதங்களைப் போதித்த வியாசர்; சீடர்கள் வியாசரிடம் வேண்டிய வரம்; வேத கல்வியை வழங்க வேண்டிய வழிமுறைகளை வகுத்த வியாசர் …

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் ஜனகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், தூய்மையான ஆன்மாவையும், நிறுவப்பட்ட தீர்மானங்களையும் கொண்டவருமான சுகர், தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} கண்டு, தன்ஆன்மாவை தன் ஆன்மாவிலேயே நிலைக்கச் செய்யத் தொடங்கினார்.(1) தன் நோக்கம் நிறைவடைந்த அவர், அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைந்தவராக, மேலும் ஜனகனிடம் கேள்விகளைக் கேட்காமல், காற்றின் வேகத்தில் காற்றைப் போலவே வடக்கு நோக்கி இமய மலைகளுக்குச் சென்றார்[1].(2)அந்த மலைகள் பல்வேறு அப்சரஸ் இனங்களால் நிறைந்ததாகவும், மென்மையான பல ஒலிகளை எதிரொலிப்பதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான கின்னரர்கள் மற்றும் பிருங்கராஜங்களால் {வண்டுகளாலும்} நிறைந்திருந்த அது, மதகங்கள் {நீர்க்காக்கைகள்}, கஞ்சரிதங்கள் {கருங்குருவிகள்}, பல்வேறு வண்ணங்களிலான ஜீவஜீவகங்கள் {சகோரப்பறவைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(3,4) கண்கவர் வண்ணங்களிலான பல மயில்கள் அங்கே தங்கள் கீச்சுக்குரலால் காதுக்கினியவகையில் அகவிக் கொண்டிருந்தன.(5) அன்னங்களின் கூட்டங்கள் பலவும், கோகிலங்களின் {குயில்களின்} கூட்டங்கள் பலவும், அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. பறவைகளின் இளவரசனான கருடன் அந்தச் சிகரத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தான்.(6) லோகபாலர்கள் நால்வர், தேவர்களும், முனிவர்களில் பல்வேறு வகையினரும் உலகிற்கு நன்மை செய்ய விரும்பி எப்போதும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.(7) உயர் ஆன்ம விஷ்ணு ஒரு மகனைப் பெறும் நோக்கத்துடன் அங்கே கடுந்தவம் செய்திருந்தான்.(8)

இங்கேதான் குமாரன் என்ற பெயரிலான தேவ தளபதி, தன் இளம் வயதில், மூவுலகங்களையும், தேவலோகவாசிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, தன் ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால் / வேலால்} பூமியைப் பிளந்தான். தன் ஈட்டியை வீசிய ஸ்கந்தன், அண்டத்திடம்,(9) “வலிமையிலோ, பிராமணர்களிடம் அதிக அன்பு கொள்வதிலோ என்னிலும் மேன்மையானவனாகவோ, பிராமணர்கள் மற்றும் வேதங்களிடம் கொள்ளும் அர்ப்பணிப்பில் என்னுடன் ஒப்பிடத்தக்கவனாகவோ, சக்தியில் என்னைப் போன்றவனாகவோ எவனாவது இருந்தால்,(10) அவன் இந்த ஈட்டி {சக்தியை / வேலைத்} தூக்கட்டும், அல்லது அசைக்கவாவது செய்யட்டும்” என்றான்.

இந்த அறைகூவலைக் கேட்ட மூவுலகங்களும் கவலையால் நிறைந்தன. அனைத்து உயிரினங்களும் தங்களுக்குள் “இவ்வீட்டியைத் தூக்கப் போவது யார்?” என்று ஒன்றையொன்று கேட்டுக் கொண்டன.(11) தேவர்கள், அசுரர்கள் மற்றும் ராட்சசர்கள் அனைவரும் புலன்களாலும், மனத்தாலும் கலங்கியிருப்பதை விஷ்ணு கண்டான்.(12) அந்தச் சூழ்நிலையில் எதைச் செய்வது சிறந்ததென அவன் சிந்தித்தான். ஈட்டிவீசுவதைக் குறித்த அந்த அறைகூவலைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {விஷ்ணு}, நெருப்பு தேவனின் {அக்னியின்} மகனான ஸ்கந்தனின் மீது தன் கண்களைச் செலுத்தினான்.(13) தூய ஆன்மாவைக் கொண்ட விஷ்ணு, சுடர்மிக்க அந்த ஈட்டியைத் தன் இடக்கையால் பற்றி அஃதை அசைக்கத் தொடங்கினான்.(14) பெரும் வலிமையைக் கொண்ட விஷ்ணுவால் இவ்வாறு அந்த ஈட்டி அசைக்கப்பட்டபோது, மலைகள், காடுகள், கடல்களுடன் கூடிய பூமியானவள் அந்த ஈட்டியுடன் சேர்ந்து மொத்தமாகக் குலுங்கினாள்.(15)

அந்த ஈட்டியை உயர்த்த விஷ்ணு முழுத் தகுதியுடையவன் என்றபோதிலும், அவன் {விஷ்ணு} அஃதை {ஈட்டியை} அசைத்ததோடு நின்றுவிட்டான். இதன் மூலம் அந்தப் பலமிக்கத் தலைவன் {விஷ்ணு}, ஸ்கந்தனின் கௌரவத்திற்குக் குறைவு நேராமல் பார்த்துக் கொண்டான்.(16) அஃதை அசைத்த பிறகு, அந்தத் தெய்வீக விஷ்ணு, பிரஹலாதனிடம், “குமாரனின் வலிமையைப் பார். இந்த அண்டத்தில் வேறு எவராலும் இந்த ஈட்டியைத் தூக்க முடியாது” என்றான்.(17) இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரஹலாதன் அந்த ஈட்டியைத் தூக்கத் தீர்மானித்தான். அதைப் பிடித்த அவனால் அதைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை.(18) அவன் உரக்க அலறியபடியே மயக்கமடைந்து மலையுச்சியில் இருந்து கீழே விழுந்தான். உண்மையில், அந்த ஹிரண்யகசிபுவின் மகன் {பிரஹலாதன்} பூமியில் விழுந்தான்.(19)

காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட மஹாதேவன் {ருத்ரன்}, வடக்குப்பக்கத்தில் இருந்த அந்தப் பிரம்மாண்ட மலைகளுக்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தான்.(20) மஹாதேவன் தவம் செய்த ஆசிரமமானது அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க நெருப்பால் சூழப்பட்டிருந்தது. தூய்மையடையாத ஆன்மா கொண்ட மனிதர்களால் அணுகப்பட முடியாத அம்மலை ஆத்தியம் என்ற பெயரில் அறியப்பட்டது.(21) அதைச் சுற்றிலும் பத்து யோஜனைகள் அகலத்தில், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், தானவர்களாலும் அணுகப்பட முடியாத அளவுக்கு ஒரு நெருப்பு வளையம் இருந்தது.(22) வலிமையும், சக்தியும் கொண்ட சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி}, ஒற்றைக் காலில் ஆயிரம் தேவ வருடங்கள் நின்றிருந்த பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனின் அருகில் இருந்து {அந்தத் தவத்திற்கான} தடைகள் அனைத்தையும் அகற்றுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(23) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட மஹாதேவன், அந்த முதன்மையான மலையின் அருகில் வசித்து, (தன் தவங்களின் மூலம்) தேவர்களைத் தகிக்கச் செய்தான்.(24)

அந்த மலைகளின் அடிவாரத்தில்தான், பெரும் தவத்தகுதியைக் கொண்ட பராசரரின் மகன் வியாசர், தமது சீடர்களுக்கு வேதங்களைக் கற்பித்தார்.(25) சுமந்து, வைசம்பாயனர், பெரும் ஞானியான ஜைமினி, பெரும் தவத்தகுதியைக் கொண்ட பைலர் ஆகியோரே உயர்வாக அருளப்பட்ட அந்தச் சீடர்களாவர்.(26)

சுகர், தம் தந்தையும், பெரும் தவசியுமான வியாசர், தமது சீடர்கள் சூழ வசித்து வந்த இனிமை நிறைந்த ஆசிரமத்திற்குச் சென்றார்.(27) ஆசிரமத்தில் அமர்ந்திருந்த வியாசர், சிதறிய தழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, பிரகாசமான சூரியனுக்கு ஒப்பாகவோ வந்து கொண்டிருக்கும் தம் மகனைக் கண்டார்.(28) சுகர் வந்து கொண்டிருந்தபோது, அவர் மரங்களையோ, மலையின் பாறைகளையோ தீண்டுவது போன்று தெரியவில்லை. புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் முழுமையாகத் தொடர்பறுந்து, யோகத்தில் ஈடுபட்டிருந்த அந்த உயர் ஆன்ம தவசி {சுகர்}, வில்லில் இருந்து ஏவப்பட்ட ஒரு கணையின் வேகத்திற்கு ஒப்பாக வந்து கொண்டிருந்தார்.(29) அரணிக் கட்டைகளில் பிறந்தவரான சுகர் தமது தந்தையை அணுகி அவரது பாதங்களைத் தீண்டினார். பிறகு வழக்கமான நடைமுறைகளின் படியே தன் தந்தையின் சீடர்களை வணங்கினார்.(30) பிறகு, மன்னன் ஜனகனுடனான தமது உரையாடலின் விபரங்கள் அனைத்தையும் தம் தந்தையிடம் பெரும் உற்சாகத்துடன் சொன்னார்.(31) பராசரரின் மகனான வியாசர், தமது பலமிக்க மகன் வந்த பிறகும், தமது சீடர்களுக்கும், தமது மகனுக்கும் கற்பிப்பதில் ஈடுபட்டவாறு அங்கே இமயத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.(32) ஒரு நாள் அவர் அமர்ந்திருந்தபோது, வேதங்களில் நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்கள், அமைதியான ஆன்மாவுடன் கூடியவர்களுமான அவரது சீடர்கள் அவரைச் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள்.(33) அவர்கள் அனைவரும் வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் முழுமையாகத் திறம்பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் தவங்களை நோற்பவர்களாகவும் இருந்தனர். கூப்பிய கரங்களோடு அவர்கள் தங்கள் ஆசானிடம் பின்வரும் வார்த்தைகளில் பேசினர்.(34)

அந்தச் சீடர்கள், “உமது அருளால், நாங்கள் பெரும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறோம். எங்கள் புகழும் பரவியிருக்கிறது. நீர் எங்களுக்கு அருள ஓர் ஆதரவை நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறோம்” என்றனர்.(35)

அவர்களுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மறுபிறப்பாள முனிவர்  {வியாசர்} அவர்களிடம், “பிள்ளைகளே, என்ன வரத்தை நான் அருள நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றார்.(36)

தங்கள் ஆசானின் இந்தப் பதிலைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மீண்டும் தங்கள் ஆசானுக்குத் {வியாசருக்குத்} தலைவணங்கிய அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் கரங்களைக் கூப்பியபடி இந்தச் சிறந்த வார்த்தைகளை ஒரே குரலில் சொன்னார்கள்: “ஓ! தவசிகளில் சிறந்தவரே, எங்கள் ஆசான் எங்களிடம் நிறைவுடன் இருந்தால், நிச்சயம் நாங்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களே.(37,38) ஓ! பெரும் முனிவரே, நீர் எங்களுக்கு ஒரு வரத்தை அருள வேண்டுமென நாங்கள் அனைவரும் உம்மிடம் வேண்டுகிறோம். நீர் எங்களிடம் அருள்கூர்வீராக. (எங்கள் ஐவரைத் தவிர) ஆறாவது சீடன் புகழை அடைவதில் வெல்ல வேண்டாம்.(39) நாங்கள் நால்வர். எங்கள் ஆசானின் மகன் ஐந்தாவதாக அமைகிறார். வேதங்கள் எங்கள் ஐவரில் மட்டுமே ஒளிரட்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரமாகும்” என்றனர்.(40)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், வேதங்களின் பொருளை நன்கறிந்தவரும், அற ஆன்மாவைக் கொண்டவரும், மறுமையில் மனிதர்களுக்கான நன்மைகளை அளிக்கும் பொருட்களை நினைப்பதிலேயே எப்போதும் ஈடுபடுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களின் வார்த்தைகளைக் கேட்டு, பெரும் நன்மை நிறைந்த இந்த நீதிமிக்க வார்த்தைகளைத் தன் சீடர்களுக்குச் சொன்னார்: “ஒரு பிராமணனுக்கோ, பிரம்மலோக வாசத்தை அடைய ஆவலுடன் விரும்புபவனின் மூலம் வேதக் கருத்துகளைக் கேட்க விரும்பும் ஒருவனுக்கோ வேதங்கள் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்[2].(41,42) நீங்கள் பெருகுவீராக. வேதங்கள் (உங்கள் முயற்சிகளின் மூலம்) பரவட்டும். முறையாகச் சீடனாகாத ஒருவனுக்கு வேதங்கள் ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது. நல்ல நோன்புகளை நோற்காதவனுக்கும் அவை கொடுக்கப்படக்கூடாது. தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்டவனுக்குள் வசிப்பதற்கும் அவை கொடுக்கப்படக்கூடாது.(43) (வேத அறிவைக் கற்பிக்க) சீடர்களாக ஏற்கக்கூடிய மனிதர்களின் முறையான தகுதிகளாக இவையே அறியப்பட வேண்டும். ஒருவனுடைய குணத்தை முறையாக ஆராயாமல் எந்த அறிவியலும் அவனுக்குக் கொடுக்கப்படக் கூடாது. தூய தங்கமானது, வெப்பம், வெட்டுதல், தேய்த்தல் ஆகியவற்றின் மூலம் சோதிக்கப்படுவதைப் போலவே சீடர்களும் அவர்களுடைய பிறப்பு {குலம்} மற்றும் சாதனைகளின் மூலம் சோதிக்கப்பட வேண்டும்.(45)நிறுவப்படக்கூடாத பணிகளிலோ, ஆபத்து நிறைந்த பணிகளிலோ உங்கள் சீடர்களை நீங்கள் ஒருபோதும் நிறுவக்கூடாது. ஒருவனுடைய ஞானமானது, எப்போதும் அவனுடைய புத்தி மற்றும் கல்வியில் அவனுடைய தளரா உழைப்பு ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கதாகும்.(46) சீடர்கள் அனைவரும் அனைத்துக் கடினங்களையும் {சிரமங்களையும்} வெல்லட்டும், அவர்கள் அனைவரும் மங்கலமான வெற்றியை அடையட்டும். அனைத்து வகைகளை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களுக்கும் நீங்கள் சாத்திரங்களைக் கற்பிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அவ்வாறு கற்பிக்கும்போது, ஒரு பிராமணனை முன்னே வைத்துக் கொண்டு அவனிடம் மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டும்[3].(47) இவையே வேத கல்வியின் விதிகளாகும். மேலும் இதுவே உயர்ந்த பணியாகவும் கருதப்படுகிறது. வேதங்களைக் கொண்டு தேவர்களைத் துதிக்கும் நோக்கத்திற்காகவே சுயம்புவால் அவை படைக்கப்பட்டன.(48) புத்தி மயக்கத்தின் மூலமாக எந்த மனிதன், வேதமறிந்த ஒரு பிராமணனை நிந்திக்கிறானோ, அத்தகைய தீய பேச்சின் விளைவால் அவன் நிச்சயம் அவமானத்தை அடைவான்.(49) அறவிதிகள் அனைத்தையும் அலட்சியம் செய்து ஞானத்தை வேண்டுபவன், அறவிதிகளை அலட்சியம் செய்து ஞானத்தைப் போதிப்பவன் ஆகிய இருவரும் வீழ்கிறார்கள். மேலும், இத்தகைய வேண்டலும், இத்தகைய போதனையும் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நீடிக்க வேண்டிய பற்றுக்குப் பதிலாக, நம்பிக்கையின்மையையும், ஐயுணர்வையுமே நிச்சயம் உண்டாக்கும்.(50) வேதங்களைக் கற்கவும், கற்பிக்கப்படவும் வேண்டிய வழி குறித்த அனைத்தையும் நான் இப்போது உங்களுக்குச் சொன்னேன். இந்த அறிவுரைகளை உங்கள் மனத்தில் கொண்டே நீங்கள் உங்கள் சீடர்களிடம் செயல்பட வேண்டும்” என்றார் {வியாசர்}”.(51)

ஏழு மருத்துகள்! – சாந்திபர்வம் பகுதி – 329-வியாசரிடம் விடைபெற்றுச் சென்ற அவரது சீடர்கள்; களங்கங்கள் என்னென்ன என்பதைச் சொன்ன நாரதர்; வியாசரை வேதமோதத் தூண்டிய நாரதர்; வேதமோதக்கூடாத வேளை; ஏழு வாயுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர் …

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தங்கள் ஆசானின் {வியாசரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான வியாசரின் சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து ஒருவொரையொருவர் தழுவிக் கொண்டனர்.(1) அவர்கள் தங்களுக்குள், “நமது எதிர்கால நன்மையைக் கருதி சிறப்புமிக்க நமது ஆசானால் சொல்லப்பட்டதை நாம் எப்போதும் நினைவில் கொண்டு, அதன்படியே நிச்சயம் செயல்படுவோம்” என்றனர்.(2)

மகிழ்ச்சி நிறைந்த இதயங்களோடு ஒருவருக்கொருவர் இவ்வாறு சொல்லிக் கொண்டவர்களும், வார்த்தைகளை முற்றாக ஆள்பவர்களுமான வியாசரின் சீடர்கள், மீண்டும் தங்கள் ஆசானிடம், “ஓ! பலமிக்கவரே, ஓ! பெருந்தவசியே, உமக்கு நிறைவுண்டானால், வேதங்களை வகுப்பதற்காக {பரவச் செய்வதற்கு} நாங்கள் இம்மலையில் இருந்து பூமிக்குச் செல்ல விரும்புகிறோம்” என்றனர்.(4)

தமது சீடர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்கப் பராசரர் மகன், அறம் மற்றும் லாபம் தாண்டி நன்மை நிறைந்த வார்த்தைகளால் அவர்களுக்கு மறுமொழிகூறினார்.(6) {வியாசர்}, “விரும்பியபடி நீங்கள் பூமிக்கும் செல்லலாம், தேவலோகத்திற்கும் செல்லலாம். வேதங்கள் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட நேரிடும், எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்[1].(6)வாய்மை நிறைந்த தங்கள் ஆசானால் {வியாசரால்} அனுமதிக்கப்பட்ட அந்தச் சீடர்கள், அவரை வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர்.(7) பூமிக்கு இறங்கி வந்த அவர்கள் அக்னிஷ்டோமத்தையும் பிற வேள்விகளையும் செய்தனர்; அவர்கள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்கான வேள்விகளைச் செய்து கொடுக்கத் தொடங்கினர்.(8) இல்லறவாழ்வுமுறையில் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தி வந்த அவர்கள், பிராமணர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். பெரும்புகழையும், செழிப்பையும் கொண்ட அவர்கள், {பிறருக்குப்} போதிப்பதிலும், {பிறரின்} வேள்விகளைச் செய்து கொடுப்பதிலும் ஈடுபட்டனர்.(9) வியாசர், தமது சீடர்கள் சென்ற பிறகு, தமது மகனின் {சுகரின்} துணையுடன், தமது ஆசிரமத்திலேயே இருந்தார். கவலைநிறைந்த நினைவுகளுடன் தன் நாட்களைக் கடத்திவந்த அந்த முனிவர், ஆசிரமத்தின் ஓர் ஓரத்தில் அமைதியாக ஓய்ந்து அமர்ந்திருந்தார்.(10) அந்நேரத்தில், பெரும் தவத்தகுதியைக் கொண்ட நாரதர், வியாசரைக் காண அந்த இடத்திற்கு வந்து, செவிக்கினிய ஒலியிலமைந்த வார்த்தைகளால் அவரிடம் பேசினார்.(11)

நாரதர், “ஓ! வசிஷ்ட குலத்தைச் சேர்ந்த மறுபிறப்பாள முனிவரே, ஏன் இப்போது வேதவொலிகள் அமைதியடைந்தன? ஆழ்ந்த எண்ணங்களின் சிந்தனையில் உள்ள ஒருவரைப் போலத் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டு ஏன் நீர் தனியாக அமைதியாக அமர்ந்திருக்கிறீர்?(12) ஐயோ, வேத எதிரொலிகள் இல்லாத இந்த மலையானது, ராகுவால் தாக்கப்படும்போதோ, புழுதியால் மறைக்கப்படும்போதோ காந்தியை இழக்கும் சந்திரனைப் போலத் தன் அழகனைத்தையும் இழந்திருக்கிறது.(13) தெய்வீக முனிவர்கள் வசித்திருந்தாலும், வேதவொலிகளை இழந்திருக்கும இந்த மலை அழகனைத்தையும் இழந்து நிஷாதர்களின் கிராமத்துக்கு ஒப்பாக இருக்கிறது.(14) வேதவொலியை இழந்ததன் விளைவால் முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் ஒளியில்லாமல் இருக்கிறார்கள்” என்றார்.(15)

நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, “ஓ! பெரும் முனிவரே, வேத வெளிப்பாடுகளை நன்கறிந்தவரே, நீர் சொல்பவை அனைத்தும் எனக்கு ஏற்புடையவையாகவும், உண்மையில் உம்மால் சொல்லத்தகுந்தவையாகவும் உள்ளன. நீர் அனைத்தையும் அறிந்தவர். நீர் அனைத்தையும் கண்டவர். உமது ஆர்வம் அனைத்துப் பொருட்களையும் தழுவியதாக இருக்கிறது.(16,17) மூவுலகங்களில் நேர்ந்தவை அனைத்தையும் நீர் நன்கறிந்திருக்கிறீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் எனக்கு ஆணையிடுவீராக. ஓ!, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(18) ஓ! மறுபிறப்பாள முனிவரே, இப்போது என்னால் செய்யத்தகுந்தவற்றை எனக்குச் சொல்வீராக. என் சீடர்களிடமிருந்து பிரிந்திருக்கும் என் மனம் இப்போது உற்சாகமற்றதாக இருக்கிறது” என்றார்.(19)

நாரதர் {வியாசரிடம்}, “வேதமோதுவதை நிறுத்துவதே அதன் {வேதத்தின்} களங்கமாகும் பிராமணர்கள் நோன்பு நோற்காததே அவர்களின் களங்கமாகும். பாஹ்லீக குலம் இந்தப் பூமியின் களங்கமாகும். ஆர்வம் பெண்களின் களங்கமாகும்.(20) நீர் நுண்ணறிவைக் கொண்ட உமது மகனுடன் வேதங்களை ஓதி, ராட்சசர்களிடம் இருந்து எழும் அச்சங்களை அந்த வேதவொலிகளின் எதிரொலியால் அகற்றுவீராக” என்றார்”.(21)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கடமைகளை {தர்மங்களை} அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், வேதமோதுவதில் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டவருமான வியாசர், நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, நாரதரிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று பதிலளித்தார்[2].(22)அவர், தமது மகனான சுகருடன் சேர்ந்து, உச்சரிப்பு ஆய்வின் விதிகள் அனைத்தையும் நோற்று, மூவுலகங்களையும் நிறைக்கும் வகையில் மிக உரத்த குரலில் வேதமோதுவதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(23) ஒரு நாள், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவர்களான அந்தத் தந்தையும் மகனும் வேதமோதுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெருங்கடலின் மத்தியில் வீசும் வலுவான காற்றால் உந்தப்பட்டது போல் தெரிந்த கடுங்காற்று எழுந்தது.(24) அந்த வேளை புனித பாராயணத்திற்குத் தகுந்ததல்ல என்பதை அந்தச் சூழ்நிலையில் புரிந்து கொண்ட வியாசர், உடனே பாராயணத்தை நிறுத்துமாறு தமது மகனுக்கு ஆணையிட்டார். தமது தந்தையால் இவ்வாறு தடுக்கப்பட்ட சுகர் ஆர்வத்தால் நிறைந்தார்.(25)

அவர் தமது தந்தையிடம், “ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் காற்று எங்கிருந்து வருகிறது? இந்தக் காற்றின் போக்கைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(26)

சுகரின் இந்தக் கேள்வியைக் கேட்ட வியாசர் ஆச்சரியத்தால் நிறைந்தார். அது வேத பாராயணம் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடும் ஒரு சகுனம் என்று சொல்லி சுகருக்கு அவர் பதிலளித்தார்,(27) “நீ ஆன்ம பார்வையைப் பெற்றிருக்கிறாய். உன் மனமும், ஒவ்வொரு மாசிலிருந்தும் தூய்மையடைந்திருக்கிறது. ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்களில் இருந்து நீ விடுபட்டிருக்கிறாய். நீ இப்போது நல்லியல்பின் {சத்வ} குணத்தில் நிலைபெற்றிருக்கிறாய்.(28) ஒருவன் தன் பிம்பத்தை ஒரு கண்ணாடியில் காண்பதைப் போலவே நீ இப்போது உன் ஆன்மாவால் ஆன்மாவைக் காண்கிறாய். உன் ஆன்மாவிலேயே நிலைபெற்றிருக்கும் நீ வேதங்களைக் குறித்தும் சிந்திக்கிறாய்.(29) பரமாத்மாவின் பாதை தேவயானம் (தேவர்களின் பாதை) என்றழைக்கப்படுகிறது. தமஸ் குணத்தாலான பாதை பித்ருயானம் (பித்ருக்களின் பாதை) என்றழைக்கப்படுகிறது. இவையே மறுமைக்கான இரு பாதைகளாகும். ஒன்றின் வழியே மக்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். மற்றொன்றின் மூலம் மக்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.(30)

காற்றானது {வாயுவானது} பூமியின் பரப்பிலும், ஆகாயத்திலும் வீசுகிறது. அவை ஏழு வழிகளில் {மார்க்கங்களில்} வீசுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக நான் சொல்கிறேன் கேட்பாயாக.(31) உடலானது புலன்களைக் கொண்டுள்ளது. புலன்களானவை, சத்யஸ்களாலும், வலிமையும், பலமும் கொண்ட பெரும்பூதங்கள் பலவற்றாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இவையே {புலன்களே} சமானன் என்ற பெயரில் வெல்லப்பட முடியாத ஒரு மகனை ஈன்றது.(32) சமானனிலிருந்து உதானன் என்றழைக்கப்படும் மகன் ஒருவன் எழுந்தான். உதனானிலிருந்து வியானன் எழுந்தது. வியானனிலிருந்து அபானன் எழுந்தது, இறுதியாக அபானனிலிருந்து பிராணன் என்றழைக்கப்படும் காற்று எழுந்தது.(33) எதிரிகள் அனைத்தையும் எரிப்பவனான அந்த வெல்லப்பட முடியாத பிராணன் பிள்ளையற்றவனானான். அந்தக் காற்றுகளின் {வாயுக்களின்} வெவ்வேறு செயல்பாடுகளைக் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(34) உயிரினங்கள் அனைத்தின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் காற்றே {வாயுவே} காரணமாக இருக்கிறது. உயிரினங்கள் அதன் மூலம் வாழத்தகுந்தவையாவதாலேயே அக்காற்று பிராணன் (அல்லது உயிர்) என்றழைக்கப்படுகிறது.(35)

மேற்கண்ட பட்டியலில் முதலாவதாக இருப்பதும், பிரவஹம் (சமானன்) என்ற பெயரில் அறியப்படுவதுமான காற்றானது {வாயுவானது}, முதல் வழியில் புகை மற்றும் வெப்பத்தில் பிறக்கும் மேகத்திரள்களைத் தூண்டுகிறது. ஆகாய வழியில் நீர்நிறைந்த மேகங்களின் தொடர்பை அடையும் அந்தக் காற்றானது, மின்னல் கீற்றுகளின் பிரகாசத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(36)

ஆவஹம் {நமது உடலுக்குள் உதானன்} என்றழைக்கப்படும் இரண்டாம் காற்று {வாயு} பேரொலியுடன் வீசுகிறது. இந்தக் காற்றே சோமனையும் {சந்திரனையும்}, பிற ஒளிக்கோள்களையும் எழவும், தோன்றவும் செய்கிறது. (அண்டத்தின் நுண்ணுயிரான இந்த) உடலுக்குள் உள்ள அந்தக் காற்று ஞானிகளால் உதானன் என்றழைக்கப்படுகிறது.(37)

நான்கு பெருங்கடல்களில் இருந்து நீரை உறிஞ்சி, ஆகாயத்திலுள்ள மேகங்களுக்கு அளித்து, அம்மேகங்களை மழை தேவனுக்கு {பர்ஜன்யனுக்கு} அளிக்கும் காற்றானது, பட்டியலில் மூன்றாவதாக உத்வஹம் {நமது உடலுக்குள் வியானன்} என்ற பெயரில் அறியப்படுகிறது.(38,39)

மேகங்களை ஆதரிப்பதும், அவற்றைப் பல்வேறு பகுதிகளாக வகுப்பதும், மழைபொழிவிற்காக அவற்றை உருக்குவதும், மீண்டும் அவற்றைத் திடமாக்குவதும், முழங்கும் மேகங்களின் ஒலியாக உணரப்படுவதும், உலகைப் பாதுகாப்பதற்காக மேகங்களின் வடிவைத் தானே ஏற்றுக் கொண்டிருப்பதும், தேவர்கள் அனைவரின் தேர்களையும் வானத்தில் சுமந்து செல்வதுமான காற்றானது {வாயுவானது} ஸம்வஹம் {நமது உடலுக்குள் அபானன்} என்ற பெயரில் அறியப்படுகிறது. பட்டியலில் நான்காவதான அது {ஸ்வஹம் / அபானன்} மலைகளையே பிளக்கும் வல்லமையும், பெரும் பலமும் கொண்டதாகும்.(40,41)

ஐந்தாவது காற்றானது {வாயுவானது}, பெரும் சக்தியையும், வேகத்தையும் கொண்டதாகும். உலர்ந்ததாக இருக்கும் அது, மரங்களை வேரோடு பிடுங்கி கீழே வீழ்த்தவல்லதாகும். அதனுடன் இருக்கும் மேகங்கள், வலாஹம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.(42) அந்தக் காற்றானது, பல வகைகளிலான பேரிடர் நிகழ்வுகளை உண்டாக்கியபடி, ஆகாயத்தில் முழங்கும் ஒலிகளையும் உண்டாக்குகிறது. அது விவஹம் {நமது உடலில் பிராணன்} என்ற பெயரில் அறியப்படுகிறது.(43,44)

ஆறாவது காற்றானது {வாயுவானது}, தெய்வீக நீர்நிலைகள் அனைத்தையும் சுமந்தபடி, அவை கீழே விழாமல் பாதுகாக்கிறது. தெய்வீக கங்கையின் புனித நீரை நீடிக்கச் செய்து வீசும் அந்தக் காற்றானது, அது {அந்தக் கங்கை நீர்} கீழ்நோக்கிப் பாயாமல் தடுக்கிறது.(45) உண்மையில் ஆயிரம் கதிர்களின் தோற்றுவாயும், உலகிற்கு ஒளியூட்டுவதுமான சூரியன், அந்தக் காற்றால் தொலைவிலேயே தடுக்கப்பட்டு ஒற்றைக் கதிரைக் கொண்ட ஒளிக்கோளாகத் தோன்றுகிறது.(46) அந்தக் காற்றின் செயல்பாட்டினாலேயே சந்திரன் தேயும் சந்திரன், முழு வட்டில் வெளிப்படும்வரை மீண்டும் வளர்கிறது. ஓ! தவசிகளில் முதன்மையானவனே, அந்தக் காற்று {வாயு}, பரிவஹம் என்ற பெயரில் அறியப்படுகிறது[3].(47)உரிய நேரத்தில் உயிரினங்கள் அனைத்தின் உயிரை அபகரித்துச் செல்வதும், மரணம் {மிருத்யு} மற்றும் சூரியனின் மகனான யமன் ஆகியோர் பின்பற்றும் பாதையைக் கொண்டதும்,(48) எப்போதும் தியான யோகத்தில் ஈடுபடும் நுட்பமான பார்வை கொண்ட யோகிகளால் அடையப்படும் இறவாமையின் ஊற்றுக் கண்ணாக இருப்பதும்(49), பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனான தக்ஷனின் பத்து பிள்ளைகளின் மூலம் பிறந்தவர்களான ஆயிரக்கணக்கான {தக்ஷனின்} பேரப்பிள்ளைகள் அண்டத்தின் எல்லையை அடைவதில் துணைபுரிந்ததும், உலகத்திற்குத் திரும்பிவரும் கடப்பாட்டில் இருந்து விடுவித்து ஒருவனைத் தன் தீண்டலினாலேயே விடுதலையை {முக்தியை} அடையச் செய்வதுமான காற்றானது {வாயுவானது} பராவஹம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. காற்றுகள் அனைத்திலும் முதன்மையான அஃது, எவராலும் தடுக்கப்பட முடியாததாக {ஏழாவது காற்றாக / வாயுவாக} இருக்கிறது.(50,51)

இந்தக் காற்றுகள் {வாயுக்கள் / மருத்துகள்} அனைவரும் அதிதியின் மகன்களாவர்[4]. எங்கும் செல்லவல்லவையும், அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவையுமான அவை {வாயுக்கள்}, எந்த நேரத்திலும் உன்னோடு இணையாமல் உன்னைச் சுற்றிலும் வீசிக் கொண்டே இருக்கின்றன.(52) எனினும், வீசத்தொடங்கியிருக்கும் இந்தக் காற்றால் இந்த முதன்மையான மலையே திடீரென நடுங்குவது ஆச்சரியம் நிறைந்ததாகும்.(53) இந்தக் காற்று விஷ்ணுவின் மூக்குத்துளைகளில் வரும் அவனது மூச்சுக்காற்றாகும். இது வேகத்தால் தூண்டப்பட்டுப் பெருஞ்சக்தியுடன் வீசத் தொடங்கும்போது மொத்த அண்டமும் கலக்கமடைகிறது {பீடையடைகிறது}.(54) எனவே, காற்று வலுவாக வீசத்தொடங்கும்போது, வேதமறிந்த மனிதர்கள் வேதபாராயணம் செய்வதில்லை. வேதங்களும் காற்றின் வடிவமேயாகும். எனவே {வேதமானது} சக்தியுடன் சொல்லப்படும்போது, புறக்காற்றுப் பீடிக்கப்படுகிறது” என்றார் {வியாசர்}.(55)பராசரரின் பலமிக்க மகன் {வியாசர்}, இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, (காற்றன் பலம் குறைந்ததும்) தமது மகனை {சுகரை} வேதபாராயணம் செய்யும்படி ஆணையிட்டார். பிறகு அவர், தெய்வீகக் கங்கையின் நீரில் மூழ்குவதற்காக அந்த இடத்தை விட்டுச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(56)

உலக இயல்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 330-வியாசர் சென்றதும் சுகரிடம் வந்த நாரதர்; நன்மையானவை எவை என சுகர் கேட்டது; நன்மையானவற்றையும், உலக இயல்பையும் சுகருக்குச் சொன்ன நாரதர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வியாசர் அந்த இடத்தைவிட்டுச் சென்றவுடன், நாரதர் வானத்தின் ஊடாகப் பயணித்து, சாத்திரக் கல்வியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுகரிடம் வந்தார். வேதங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குரிய பொருளைச் சுகரிடம் கேட்கும் நோக்கத்திலேயே அந்தத் தெய்வீக முனிவர் வந்தார்.(1) தெய்வீக முனிவரான நாரதர் தமது ஆசிரமத்திற்கு வந்ததைக் கண்ட சுகர், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி அர்க்கியம் கொடுத்து அவரை வழிபட்டார்.(2)

தமக்கு அளிக்கப்பட்ட கௌரவங்களில் நிறைவடைந்த நாரதர், சுகரிடம், “ஓ! அறவோரில் முதன்மையானவனே, ஓ! அன்புக்குரிய குழந்தாய், நான் உனக்கு என்ன நன்மையைச் செய்ய வேண்டும் எனச் சொல்வாயாக” என்று கேட்டார்.(3)

நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சுகர், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளை அவரிடம் {நாரதரிடம்} சொன்னார், “எது எனக்கு நன்மையானது என்பதை எனக்குக் கற்பிப்பதே உமக்குத் தகும்” {என்று சுகர் கேட்டார்}.(4)

நாரதர் {சுகரிடம்}, “பழங்காலத்தில் சிறப்புவாய்ந்த சனத்குமாரர், தம்மிடம் உண்மையை விசாரிக்க வந்தவர்களும், தூய ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான சில குறிப்பிட்ட முனிவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(5) ஞானத்தைப் போன்று வேறொரு கண்ணில்லை. வாய்மையைப் போன்று வேறொரு தவமில்லை. பற்றை {ஆசையைப்} போன்று வேறொரு கவலையில்லை. துறவைப் போன்று வேறொரு மகிழ்ச்சியில்லை.(6) பாவச் செயல்களைத் தவிர்த்தல், நிலையான அறப்பயிற்சி, நல்லொழுக்கம், அனைத்து அறக்கடமைகளையும் முறையாக நோற்பது ஆகியனவே உயர்ந்த நன்மையாகும்.(7) கவலைநிறைந்த மனித நிலையை அடைந்த பிறகு, எவன் அதில் பற்றுக் கொண்டு கலக்கமடைகிறானோ {மயக்கமடைகிறானோ}, அத்தகைய மனிதன், கவலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றுக் கொள்வது துன்பத்தின் குறியீடாகும்.(8) உலகம் சார்ந்த பொருட்களில் பற்றுக் கொண்ட மனிதனின் புத்தியானது மேலும் மேலும் மயக்கவலையில் சிக்கிக் கொள்கிறது. மயக்கவலையில் சிக்கிக் கொள்ளும் மனிதன் இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தையே அடைகிறான்.(9) ஒருவன் தன் நன்மையை நாடினால் அவன் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையினாலும் ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டிலிருந்தும் {காமகுரோதங்களில் இருந்தும்} விலக வேண்டும். அவை இரண்டும் ஒருவனுக்கான நன்மையை அழிப்பதற்காக மட்டுமே உண்டாகிறது.(10)

ஒருவன் எப்போதும் தன் தவங்களைக் கோபத்திலிருந்தும் {குரோதத்திலிருந்தும்}, செழிப்பைச் செருக்கிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். ஒருவன் எப்போதும் தன் ஞானத்தை மதிப்பு மற்றும் அவமதிப்பு {மான அவமானம்} ஆகியவற்றில் இருந்தும், அவனது ஆன்மாவைப் பிழையிலிருந்தும் {அஜாக்ரதையிலிருந்தும்} பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(11) கருணையே {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். மன்னிக்கும் தன்மையே {பொறுமையே} உயர்ந்த தகுதியாகும் {பலமாகும்}. தன்னறிவே {சுயஞானமே} உயர்ந்த ஞானமாகும். வாய்மையைவிட உயர்ந்ததேதும் கிடையாது.(12) உண்மையைப் பேசுவதே எப்போதும் முறையானதாகும். உண்மையைப் பேசுவதைவிட நன்மைக்கானதைப் பேசுவதே மிகச் சிறப்பானதாகும். உயிரினங்கள் அனைத்திற்குமான பெரும் நன்மை நிறைந்ததே வாய்மை என நான் கருதுகிறேன்.(13) ஒருபோதும் நம்பிக்கையில் ஈடுபடாமல் {எதிர்பார்ப்பில் ஈடுபடாமல்} ஒவ்வொரு செயலையும் கைவிடுபவனும், உலகச் சூழலில் இருந்து முற்றிலும் தொடர்பறுந்தவனும், உலகம் சார்ந்த அனைத்தையும் துறந்தவனுமான மனிதனே உண்மையில் கல்விமான் என்றும் ஞானம் கொண்டவன் என்றும் சொல்லப்படுகிறான்.(14) தன் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள புலன்களின் துணையுடன் புலன்நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டும் அவற்றில் பற்றில்லாமல் இருப்பவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், இன்பதுன்பங்களால் ஒருபோதும் அசைக்கப்படாதவனும், தியான யோகத்தில் எப்போதும் ஈடுபடுபவனும்,(15) புலன்களில் ஆதிக்கம் செலுத்தும்தேவர்களுடன் எப்போதும் தோழமையுடன் வாழ்பவனும், அவற்றில் இருந்து தொடர்பறுந்தவனும், உடலைக் கொண்டிருந்தாலும், அதனோடு ஒருபோதும் தன்னை ஒப்பிடாதவனுமான ஒருவன் விடுதலையடைந்து, மிக விரைவில் உயர்ந்த நன்மையை அடைகிறான்.(16)

ஓ! தவசியே, பிறரை ஒருபோதும் காணாதவனும், பிறரை ஒருபோதும் தீண்டாதவனும், பிறருடன் ஒருபோதும் பேசாதவனுமான ஒருவன் விரைவில் தனக்கான உயர்ந்த நன்மையை அடைகிறான்.(17) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் எந்தத் தீங்கையும் இழைக்கக்கூடாது. மறுபுறம் அவன் அனைத்திடமும் முற்றான நட்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனித நிலையை அடைந்த ஒருவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் பகைமையுடன் நடந்து கொள்ளக்கூடாது.(18) உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் முற்றான அலட்சியம், முற்றான நிறைவு, அனைத்து வகை எதிர்பார்ப்புகளையும் கைவிடல், பொறுமை ஆகியவை புலன்களைக் கட்டுப்படுத்தித் தன்னறிவை அடைந்த ஒருவனுக்கான உயர்ந்த நன்மையாக அமைகின்றன.(19) ஓ! குழந்தாய், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டு உன் புலன்கள் அனைத்தையும் அடக்கி, அதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் இன்பநிலையை அடைவாயாக.(20)

பேராசையில் {காமத்தில்} இருந்து விடுபட்டோர் ஒருபோதும் எந்தக் கவலையையும் அடைய வேண்டியதிராது. எனவே ஒருவன் தன் ஆன்மாவில் இருந்து பேராசைகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஓ! இனியவனே, அருளப்பட்டவனே, பேராசையைக் கைவிடுவதன் மூலம் கவலை மற்றும் துன்பத்தில் இருந்து நீ விடுபட இயன்றவனாவாய்.(21) வெல்லமுடியாததை {விடுதலையை / முக்தியை} வெல்ல விரும்பும் ஒருவன், தவங்கள், தற்கட்டுப்பாடு, பேசாமை {மௌனம்}, ஆன்ம அடக்கம் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ வேண்டும்.(22) பற்றுகளுக்கு மத்தியில் அவற்றில் பற்றில்லாமல் வாழ்பவனும், எப்போதும் தனிமையில் வாழ்பவனுமான பிராமணன், மிக விரைவில் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(23) பாலுறவுக் கலவி வாழ்வில் திளைப்பையடையும் உயிரினங்களுக்கு மத்தியில் தன்னிலேயே மகிழ்ச்சியுடன் வாழும் மனிதன், ஞானத்தால் தாகம் தணிக்கப்பட்ட மனிதனாக அறியப்பட வேண்டும். ஞானத்தால் தாகம் தணிக்கப்பட்ட மனிதன் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(24) நற்செயல்களின் மூலம் ஒருவன் தேவர்களின் நிலையை அடைகிறான்; அதே வேளையில் உண்மையில் தீமையான செயல்களைச் செய்யும் ஒருவன், இழிந்த விலங்குகளின் மத்தியில் ஆதரவற்ற நிலையில் வீழ்கிறான்.(25)

கவலை, துன்பம் மற்றும் மரணம் ஆகியவற்றால் எப்போதும் பீடிக்கப்படும் ஓர் உயிரினம் (காலத்தின் கொப்பரையில்) இவ்வுலகில் சமைக்கப்படுகிறது. அதை நீ அறிவாயா?(26) உண்மையில் தீங்கானதை நன்மையென்றும்; உண்மையில் உறுதியில்லாததை உறுதியானதென்றும்; விரும்பத்தகாததை விரும்பத்தக்கது என்றும், நன்மையற்றதை நன்மையானது என்றும் கருதுவதைத் தொடர்கிறாய். ஐயோ, இவற்றைச் சரியாக உணர்ந்து நீ ஏன் விழிக்காமல் இருக்கிறாய்?(27) தன் வலைக்குள் தானே அடைபடும் பட்டுப்புழுவைப் போல உன் எண்ணற்ற செயல்களால் பிறக்கும் மயக்கம் மற்றும் பிழையால் அமைந்த வலைக்குள் நீ தொடர்ந்து அடைபட்டுக் கொண்டிருக்கிறாய். ஐயோ, இந்தச் சூழ்நிலையைச் சரியாக உணர்ந்து நீ ஏன் விழிக்காமல் இருக்கிறாய்?(28) இவ்வுலகப் பொருட்களில் எந்தப் பற்றும் கொள்ளும் தேவை உனக்கில்லை. உலகம்சார்ந்த பொருட்களில் பற்றுக் கொள்வது தீமையையே உண்டாக்கும். தன்னைச் சுற்றிலும் வலையைப் பின்னும் பட்டுப்புழு இறுதியில் அதன் செயலாலேயே அழிவையடையும்.(29) மகன்கள், மனைவிகள், உறவினர்களிடம் பற்றுள்ள மனிதர்களோ, புதைகுழியில் மூழ்கும் காட்டு யானைகள் படிப்படியாகப் பலவீனமடைந்து மரணமடைவதைப் போல இறுதியில் அழிவையே சந்திக்கிறார்கள்.(30)

பாசவலையால் இழுக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், பெரும் வலைகளால் மண்ணுக்கு இழுக்கப்படும் மீன்களைப் போலப் பெருந்துன்பத்தையே அடைகிறார்கள்.(31) உறவினர்கள், மகன்கள், மனைவிகள், இந்த உடல், கவனமாகப் பாதுகாக்கப்படும் ஒருவனுடைய உடைமைகள் அனைத்தும் நிலையற்றவையாக, மறுமையில் எத்தொண்டுமாற்றாதவையாகவும் இருக்கின்றன. ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே ஒருவனை மறுமையில் பின்தொடர்கின்றன.(32) மறுமையில் இவை அனைத்தையும் விட்டுவிட்டு, நிச்சயம் நீ ஆதரவற்றவனாகவே செல்லப்போகிறாய் எனும்போது, ஐயோ, உண்மையான நிலையான செல்வத்தைக் கவனிக்காமல், எம்மதிப்புமில்லாத நிலையற்ற பொருட்களின் மீது நீ ஏன் பற்று கொள்கிறாய்?(33) நீ செல்ல வேண்டிய பாதையானது (ஓய்வெடுப்பதற்கான) எவ்வகை ஓய்விடங்களும் இல்லாததாக இருக்கிறது. அவ்வழியில் ஒருவன் ஆதரவாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய ஏதும் கிடையாது. அது {அந்தப் பாதை} கடக்கும் நாடு அறியப்படாததாகவும், கண்டுபிடிக்கப்படாததாகவும் இருக்கிறது. மேலும் அஃது அடர்த்தியான இருளில் மூழ்கியிருக்கிறது. ஐயோ, தேவையான செலவுக்கு ஆயத்தமாகாமல் நீ எவ்வாறு அவ்வழியில் செல்லப் போகிறாய்?(34) நீ அந்தச் சாலையில் செல்லும்போது, உன்னைப் பின்தொடர்ந்து எவரும் வரப் போவதில்லை. இம்மையிலிருந்து நீ மறுமைக்குச் செல்லும்போது, நீ செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே உன்னைப் பின்தொடரப்போகின்றன.(35)

கல்வி, செயல்கள், (அக மற்றும் புறத்) தூய்மை, பெரும் ஞானம் {பேரறிவு} ஆகிய வழிமுறைகளின் மூலமே ஒருவன் பொருட்களின் பொருளைத் தேடுகிறான். பொருட்களில் முதன்மையானது அடையப்படும்போது, அவன் (மறுபிறப்பிலிருந்து) விடுபடுகிறான்.(36) மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் ஒருவன் வாழ உணரும் விருப்பமானது கட்டும் கயிற்றைப் போன்றதாகும். நற்செயல்களைச் செய்வோர் அந்தக் கட்டை அறுப்பதில் வென்று, தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். தீச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் மட்டுமே அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(37) வாழ்வு (அல்லது உலகம்) எனும் ஆறு பயங்கரமானதாகும். மேனி அல்லது வடிவழகு அதன் கரைகளாக இருக்கிறது. மனம் அதன் ஓட்டத்தின் வேகமாக இருக்கிறது. தீண்டல் அதன் தீவாக இருக்கிறது. சுவை அதன் ஓட்டமாக இருக்கிறது. மணம் அதன் சகதியாக இருக்கிறது. ஒலி அதன் நீராக இருக்கிறது. அதில் சொர்க்கத்தை நோக்கி வழிவகுக்கும் குறிப்பிட்ட பகுதி பெரும் சிரமங்களைக் கொண்டதாகும். ஒருவன் அந்த ஆற்றைக் கடக்கும் படகாக உடல் இருக்கிறது. மன்னிக்கும் தன்மை {பொறுமை} அதைத் தூண்டும் படகுத்துடுப்பாக இருக்கிறது. வாய்மை அப்படகை நிலைபெறச் செய்யும் சரளையாக {அடிச்சுமையாக} இருக்கிறது. அறம்சார்ந்த நடைமுறையானது, கடினமான நீர்நிலைகளில் அந்தப் படகை இழுக்கப் பயன்படும் கொடிக்கம்பத்தை இணைக்கும் இழையாக இருக்கிறது. ஈகை அல்லது தானம், அந்தப் படகைத் தூண்டும் காற்றாக இருக்கிறது. நிலையான வேகத்துடன் கூடிய அந்தப் படகைக் கொண்டுதான் ஒருவன் வாழ்வெனும் ஆற்றைக் கடக்க வேண்டும்.(38,39) அறம் மற்றும் மறம், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவாயாக. வாய்மை மற்றும் பொய்மையைக் கைவிட்ட பிறகு, இவற்றைக் கைவிடச் செய்வதையும் கைவிடுவாயாக.(40)

நோக்கங்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் நீ அறத்தைக் கைவிடுவாயாக; ஆசைகள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் நீ பாவத்தையும் கைவிடுவாயாக. புத்தியின் துணையோடு நீ வாய்மையையும், பொய்மையையும் கைவிடுவாயாக; இறுதியாக, உயர்ந்த தத்துவத்தின் (பரமாத்மாவின்) ஞானத்தின் மூலம் அந்தப் புத்தியையும் கைவிடுவாயாக.(41) எலும்புகளைத் தூண்களாகக் கொண்டதும்; நரம்புகளைக் கட்டும் கயிறுகளாகவும், இழைகளாகவும் கொண்டதும்; சதை மற்றும் குருதியை புறப் பூச்சாகக் கொண்டதும்; தோலைப் புறக் கூடாகக் கொண்டதும்; மலமும் சிறுநீரும் நிறைந்தும், அதனால் கெட்ட மணம் கொண்டதும்; முதுமை மற்றும் துன்பம் என்ற தாக்குதல்களுக்கு உட்பட்டதும்; நோயின் இருக்கையாகவும், துன்பத்தில் பலவீனமடைவதாகவும் இருப்பதும்; ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தைப் பெற்றதும்; நிலையற்றதும், உள்வசிக்கும் உயிரினத்தின் (தற்காலிக) வசிப்பிடமாகத் தொண்டுபுரிவதுமான இவ்வுடலை நீ கைவிடுவாயாக.(42,43) பருப்பொருளாலான இந்த மொத்த அண்டமும், மஹத் அல்லது புத்தி என்றழைக்கப்படுவதும், (ஐந்து) பெரும்பூதங்களால் ஆனவையாகும். பர செயல்பாட்டின் மூலமே அது மஹத் என்றழைக்கப்படுகிறது.(44) ஐம்புலன்களும், தமஸ், சத்வம் மற்றும் ரஜஸ் என்ற முக்குணங்களும் (ஏற்கனவே சொல்லப்பட்டவற்றுடன் சேர்த்து) பதினேழாகிறது[1].(45)புலப்படாதவை {அவ்யக்தம்} என்ற பெயரில் அறியப்படும் இந்தப்பதினேழும், புலப்படுபவை {வியக்தம்} என்று அழைக்கப்படும், ஐந்து புலன் நுகர் பொருட்களும் (வடிவம், சுவை, ஒலி, தீண்டல் மற்றும் மணம்), நனவுநிலை மற்றும் புத்தி ஆகியவையும் சேர்ந்து நன்கறியப்பட்ட பட்டியலான இருபத்து நான்காக {24} அமைகிறது[2].(46) இந்த இருபத்து நான்கு உடைமைகளையும் கொள்ளும்போது ஒருவன் ஜீவன் (புமான்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்.(47) (அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற) முத்தொகை, மகிழ்ச்சி, கவலை, வாழ்வு, மரணம் ஆகியவற்றின் உண்மையையும், அவற்றின் விபரங்களையும் அறிந்தவன், வளர்ச்சியையும், சிதைவையும் அறிந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அறிவுக்கு எட்டும் பொருட்கள் எதுவும் ஒன்றன்பின் ஒன்றாகப் படிப்படியாக அறியப்பட வேண்டும்.(48) புலன்களால் உணரத்தக்க பொருட்கள் அனைத்தும் புலப்படுபவை {வ்யக்தம்} என்றழைக்கப்படுகின்றன. புலன்களைக் கடந்தவையும், குறியீடுகளின் மூலம் மட்டுமே உணரப்படுபவையுமான பொருட்கள் புலப்படாதவை {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகின்றன.(49) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், இனிய மழையில் தாகம் கொண்ட காய்ந்த பயணியைப் போலப் பெரும் நிறைவை வெல்கிறான். புலன்களை அடக்கிய ஒருவன், தன் ஆன்மா அனைத்துப் பொருட்களையும் தழுவப் பரவுவதையும், அனைத்துப் பொருட்களும் தன் ஆன்மாவுக்குள் அடங்குவதையும் காண்கிறான்.(50)(இவ்வாறு) பரமனைத் தன் ஆன்மாவிலேயே காண்பவன், அல்லது அனைத்து நிலைகளிலும் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் (தன்ஆன்மாவிலேயே) எப்போதும் காணும் மனிதனிடம் உள்ளதும், ஞானத்தையே தன் வேராகக் கொண்டதுமான பலம் ஒருபோதும் தொலைந்து போவதில்லை[3].(51) பிழை மற்றும் மயக்கத்தில் உண்டாகும் அனைத்து வகைத் துண்பங்களையும் ஞானத்தின் துணையுடன் கடக்கும் ஒருவன், அனைத்து உயிரினங்களுடனான தொடர்பை அடைவதால் எந்தத் தீமையையும் ஒருபோதும் பற்றுவதில்லை[4].(52) புத்தி முழுமையாக வெளிப்படும் அத்தகைய மனிதன், உலகில் நீடித்திருக்கும் ஒழுக்க நடைமுறையில் ஒருபோதும் களங்கம் காண்பதில்லை. விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், பரமாத்மா தொடக்கமும் முடிவுமற்றது; அனைத்து உயிரினங்களாகவும் பிறப்பெடுக்கிறது; ஜீவாத்மாவில் (சாட்சியாக) அது வசிக்கிறது; அது செயலற்றதாவும், வடிவற்றதாகவும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். தவறான தன் செயல்களின் விளைவால் துன்பத்தைச் சந்திக்கும் மனிதன் மட்டுமே,(53,54) அந்தத் துன்பத்தைக் களையும் நோக்கத்திற்காக எண்ணற்ற உயிரினங்களைக் கொல்கிறான்[5]அத்தகைய வேள்விகளைச் செய்யும் விளைவால், நிகழ்த்துபவர்கள் {அந்த வேள்வியைச் செய்பவர்கள்} மறுபிறப்பையும், அனைத்துப் புறத்திலும் எண்ணற்ற செயல்களைச் செய்யும் தேவையையும் அடைகிறார்கள்.(55)பிழையால் குருடாகும் ஒரு மனிதன் {மோகமடைந்தவன்}, உண்மையில் துன்பத்தின் ஊற்றுக்கண்ணான அதையே இன்பநிலையென்று கருதி, முறையற்ற உணவை உண்ணும் ஒரு நோயாளியைப் போலவே, தொடர்ந்து துன்பத்தை அடைகிறான்.(56) அத்தகைய மனிதன் கடையப்படும் எந்தப் பொருளையும் போலவே, தன் செயல்களால் ஒடுக்கப்பட்டுக் கடையப்படுகிறான். தன் செயல்களால் கட்டப்பட்ட அவன் மறுபிறப்பை அடைகிறான். அவனது செயல்களின் இயல்பே அவனது வாழ்வின் வகையைத் தீர்மானிக்கிறது.(57) பல்வேறு வகைக் கொடுமைகளை அனுபவிக்கும் அவன், நிற்காமல் சுழலும் சக்கரத்தைப் போலவே மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் வளையத்தில் பயணிக்கிறான். எனினும், நீ உன் கட்டுகள் அனைத்தையும் அறுத்திருக்கிறாய். நீ செயல்கள் அனைத்தையும் தவிர்க்கிறாய்.(58) அனைத்தையும் அறிந்தவனும், அனைத்துப் பொருட்களிலும் திறம்பெற்றவனுமான நீ வெற்றியையடைந்து, இருப்பிலுள்ள பொருட்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவாயாக. புலனடக்கம், தவசக்தி ஆகியவற்றின் மூலம் (பழங்காலத்தில்) பல மனிதர்கள் செயற்கட்டுகளை அறுத்து, உயர்ந்த வெற்றியையும், தடையில்லாத இன்பநிலையையும் அடைந்திருக்கிறார்கள்” என்றார் {நாரதர்}.(59)

விடுதலை உத்தி! – சாந்திபர்வம் பகுதி – 331-உலக இயல்பையும் முக்திக்கான உத்திகளையும் சுகருக்குச் சொன்ன நாரதர்…

நாரதர் {சுகரிடம்}, “அருளப்பட்டவையும், அமைதி குறித்தவையும், துயரை விலக்குபவையும், மகிழ்ச்சியை உண்டாக்குபவையுமான சாத்திரங்களைக் கேட்பதன் மூலம், ஒருவன் தூய புத்தியை அடைந்து, அதன் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(1) கவலைக்கான ஆயிரம் காரணங்களும், அச்சத்திற்கான நூறு காரணங்களும் புத்தியற்றவனையே நாளுக்குநாள் பீடிக்கின்றனவேயன்றி ஞானியையோ, கல்விமானையோ அல்ல.(2) எனவே, உன் துன்பங்களை விலக்கும் நோக்கில் நான் சொல்லப்போகும் சில பழங்கதைகளைக் கேட்பாயாக. ஒருவனால் தன் புத்தியை அடக்க முடியுமென்றால் {புத்தியானது அவனது வசத்திலிருக்குமென்றால்}, அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்.(3) விரும்பத்தகாததை அடைவது மற்றும் ஏற்புடையதில் இருந்து விலகுவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சிறு மதி கொண்ட மனிதர்கள் அனைத்து வகை மனதுக்கங்களையும் அடைகிறார்கள்.(4) காரியங்கள் கடந்து சென்ற பிறகு ஒருவன் அவற்றின் தகுதிகளை நினைத்து வருந்தக்கூடாது. அத்தகைய கடந்த காரியங்களைப் பற்றுடன் நினைப்பவனால் ஒருபோதும் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது.(5)

தான் பற்றுக் கொள்ளத் தொடங்கும் பொருட்களில் ஒருவன் எப்போதும் களங்கங்களைக் காண வேண்டும். அவன் அத்தகைய பொருட்களை மிகத் தீமை நிறைந்தவையாக எப்போதும் கருத வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் விரைவில் அவற்றிலிருந்து விடுதலையடைவான்.(6) கடந்ததை நினைத்து வருந்தும் மனிதன் செல்வத்தையோ, அறத்தகுதியையோ, புகழையோ ஈட்டத் தவறுகிறான். இருப்பில் இல்லாததை ஒருபோதும் அடையமுடியாது. அத்தகைய பொருட்கள் கடந்து சென்றால், (ஒருவன் எவ்வளவுதான் அவற்றுக்காக வருத்தப்பட்டாலும்) மீண்டும் அவை திரும்பாது.(7) உயிரினங்கள் உலகம் சார்ந்த பொருட்களைச் சில வேளைகளில் அடைகின்றன, சில வேளைகளில் இழக்கின்றன. இவ்வுலகில் தனக்கு நேரும் அனைத்து நிகழ்வுகளிலும் எந்த மனிதனும் வருத்தமடைவதில்லை.(8) கடந்து சென்ற ஒன்றின் இறப்பிலோ, இழப்பிலோ ஒருவன் கொள்ளும் துக்கத்திற்காகத் துக்கத்தை மட்டுமே அடைகிறான். ஒரு துன்பத்திற்குப் பதிலாக அவன் இரு துன்பங்களை அடைகிறான்.(9) உலகில் வாழ்வு மற்றும் மரணம் என்ற நடைமுறையைத் தங்கள் புத்தியின் துணையுடன் கண்ணீர் சிந்தாமல் காணும் மனிதர்கள் சரியாகப் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய மனிதர்கள் (என்ன நடந்தாலும்) ஒருபோதும் கண்ணீர் சிந்துவதில்லை.(10)

ஒருவன் தன்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தவிர்க்க முடியாததும், உடல், அல்லது மனத் துன்பத்தை உண்டாக்கவல்லதுமான அத்தகைய பேரிடரேதும் நேரும்போது, ஒருவன் அதைக்குறித்துத் துன்பத்துடன் சிந்திப்பதை நிறுத்த வேண்டும்.(11) துன்பத்திற்கான மருந்து இதுவே, அதைக் குறித்துச் சிந்திப்பதல்ல. அதை நினைப்பதால் ஒருவனால் ஒருபோதும் அதை அகற்ற முடியாது; மறுபுறம், துன்பத்தை நினைப்பதால் அஃது அதிகரிக்கவே செய்கிறது.(12) மனத்துயரங்கள் ஞானத்தால் கொல்லப்பட வேண்டும்; அதே வேளையில் உடல் துயரங்கள் மருந்துகளால் விலக்கப்பட வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இத்தகைய காரியங்களில் ஒருவன் புத்தி குறைந்த மனிதர்களைப் போல நடந்து கொள்ளக்கூடாது.(13) இளமை, அழகு, உயிர், செல்வம், உடல்நலம், அன்புக்குரியோரின் தோழமை ஆகிய இவையாவும் நிலையற்றவையே. ஞானம் கொண்ட ஒருவன் இவற்றில் ஒருபோதும் ஆசை கொள்ளக்கூடாது. மொத்தமாக ஒரு சமூகத்துக்கே தொடர்புடைய துன்பம் நிறைந்த காரியங்களில் ஒருவன் தனியாக அழக்கூடாது. அவ்வாறு ஈடபடாமல், துயரம் வரும்போது அதைத் தவிர்க்கமுனையும் ஒருவன், தீர்வுக்கான வாய்ப்பைக் கண்டவுடன் அதைச் செய்ய வேண்டும்.(15)

இந்த வாழ்வில் மகிழ்ச்சியின் அளவைவிடத் துன்பம் மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை. மனிதர்கள் அனைவரும் புலன் நுகர் பொருட்களில் பற்றை வெளிப்படுத்தி, மரணத்தை ஏற்பில்லாததாகக் கருதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.(16) எந்த மனிதன் இன்பதுன்பங்கள் இரண்டையும் கைவிடுகிறானோ, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் இவ்வுலகில் இருந்து செல்லும்போது, அவனது காரியத்தில் ஞானிகள் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை.(17) செல்வத்தைச் செலவழிப்பதில் துன்பம் இருக்கிறது. அதைப் பாதுகாப்பதிலும் துன்பமிருக்கிறது. எனவே, ஒருவன் தனது செல்வம் அழிவடையும்போது எத்துன்பத்திலும் ஈடுபடக்கூடாது.(18) புத்தி குறைந்த மனிதர்கள் பல்வேறு தரத்திலான செல்வத்தை அடைந்து, நிறைவை வெல்லத் தவறி இறுதியில் துன்பத்தில் அழிவடைகிறார்கள். எனினும் ஞானிகளோ எப்போதும் நிறைவுடன் இருக்கிறார்கள்.(19) சேர்க்கைகள் அனைத்தும் இறுதியில் கலையவே {பிரியவே} போகின்றன. உயர்ந்த பொருட்கள் அனைத்தும் வீழவும், தாழ்வடையவும் விதிக்கப்பட்டிருக்கின்றன. சேர்க்கைகள் நிச்சயம் பிரிவிலேயே முடியப்போகின்றன, வாழ்வும் நிச்சயம் மரணத்திலேயே முடிவடையும்.(20)

தாகம் தணிவடையாது {ஆசைக்கு முடிவில்லை}. மனநிறைவே உயர்ந்த மகிழ்ச்சியாகும். எனவே, ஞானிகள் மனநிறைவையே மிக மதிப்புமிக்கச் செல்வமாகக் கருதுகிறார்கள்.(21) ஒருவனுக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது {கடந்து செல்கிறது}. அஃது ஒருக்கணம் கூடத் தன் பாதையில் நிற்பதில்லை. ஒருவனுடைய உடல் நீடிக்க முடியாதபோது, அவன் (இவ்வுலகத்தில்) வேறு எந்தப் பொருளை நீடிக்கப்போவதாகக் கருத முடியும்?(22) உயிரினங்கள் அனைத்தின் இயல்பையும் சிந்தித்து, அது மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதது எனத் தீர்மானிக்கும் மனிதர்கள், தங்கள் கவனத்தை உயர்ந்த பாதையை நோக்கித் திருப்பி, அதில் நல்ல முன்னேற்றத்தை அடைபவர்கள் துன்பத்தில் ஈடுபடவேண்டியதில்லை[1].(23) தன் இரையை அபகரித்து ஓடும் புலியைப் போலக் காலனானவன், மனிதன் ஆசை மற்றும் அனுபவிப்பதில் தணிவடையாமல் அத்தகைய (லாபமில்லா) தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவனை அபகரித்துச் செல்கிறான்.(24) ஒருவன் எப்போதும் தன்னைக் கவலையில் இருந்து விடுவித்துக் கொள்ள முனைய வேண்டும். உற்சாகச் செயல்பாடுகளைத் தொடங்குவதன் மூலம் ஒருவன் கவலையை விலக்க முனைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட கவலையில் இருந்து விடுபட்டதும், மேலும் கவலையில் ஈடுபடாமல், களங்கமான நடத்தைகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் கவலையைத் தொலைவில் வைக்கும் வழியில் ஒருவன் செயல்பட வேண்டும்[2].(25)ஒலி, தீண்டல், வடிவம், மணம், சுவை ஆகியவற்றை அனுபவிப்பதில் செல்வந்தனும், வறியவனும் ஒரே வகையிலேயே எதையும் காண்பதில்லை[3].(26) சேர்க்கைக்கு முன்பு உயிரினங்கள் ஒருபோதும் துன்பமடைவதில்லை. எனவே, தன் உண்மை இயல்பில் இருந்து வீழாத ஒருவன், அந்தச் சேர்க்கை முடிவடையும்போது ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை[4].(27) ஒருவன் தனது பாலுறவு பசியையும், வயிற்றின் பசியையும் பொறுமையின் துணை மூலம் அடக்க வேண்டும்[5]. அவன் தனது கைகளையும், கால்களையும் கண்ணின் துணையால் பாதுகாக்க வேண்டும். கண்களும், காதுகளும், பிற புலன்களும் அவனது மனத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். மனமும், வாக்கும் ஞானத்தின் துணையால் ஆளப்பட வேண்டும்.(28) அறிந்த மனிதர்களிடமும், அறியாதவர்களிடம் போலவே அன்பு மற்றும் பாசத்தை அவன் கைவிட்டு, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய மனிதனே ஞானி என்று சொல்லப்படுகிறான், அவனே நிச்சயம் மகிழ்ச்சியைக் காண்கிறான்.(29) எந்த மனிதன் தன் ஆன்மாவிலேயே நிறைவடைகிறானோ[6], எவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எதையும் சார்ந்திருக்கவில்லையோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எந்தத் துணையுமில்லாமல் நடந்து கொள்கிறானோ அவனே இன்பநிலையை அடைவதில் வெல்கிறான் {சுகம் அடைகிறான்}” என்றார் {நாரதர்}.(30)

கயிலாயம் சென்ற சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 332-சுகருக்கு உலக இயல்புகளையும், மோக்ஷதர்மத்தையும் தொடர்ந்து கற்பித்தது; மோக்ஷமடைய விரும்பிய சுகர்; வியாசரிடம் விடைபெற்றுக் கொண்டு கயிலாயம் சென்ற சுகர்…

நாரதர் {சுகரிடம்}, “இன்பதுன்பங்களின் மாற்றங்கள் தோன்றும்போது, அல்லது மறையும்போது, அந்த நிலைமாற்றங்கள் ஞானத்தின் மூலமோ, கொள்கைகள் அல்லது முயற்சியின் மூலமோ தவிர்க்கமுடியாதவையாக இருக்கின்றன.(1) ஒருவன் தன் உண்மை இயல்பில் இருந்து வீழ்ந்துவிட அனுமதியாமல், அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தன்னால் இயன்ற சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும். அத்தகைய கவனம் மற்றும் முயற்சியைக் கொள்ளும் ஒருவன் ஒருபோதும் சோர்வடைய வேண்டியதில்லை. தன்னை {சுயத்தை} அன்புக்குரிய ஏதோ ஒன்றைப் போலக் கருதும் அவன், முதுமை, மரணம் மற்றும் நோயில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(2) மன மற்றும் உடல் நோய்கள், பலமிக்க வில்லாளியின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூர்முனைக் கணைகளைப் போல உடலைப் பீடிக்கும்.(3) தாகத்தால் கொடுமைக்குள்ளாவதும், வேதனையால் கலக்கமடைவதும், முற்றிலும் ஆதரவற்றதும், நீண்ட வாழ்நாளை விரும்புவதுமான ஒரு மனிதனின் உடல் அழிவை நோக்கியே இழுக்கப்படுகிறது.(4)

பகல்களும், இரவுகளும், தங்கள் ஓட்டத்தில் மனிதர்கள் அனைவரின் வாழ்நாள் காலங்களைச் சுமந்தபடியே இடையறாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆறுகளின் ஓட்டத்தைப் போல அவை திரும்பிப் பாறாமல் இடையறாமல் பாய்ந்து கொண்டிருக்கின்றன.(5) வளர் பிறை நாட்களும், தேய்பிறை நாட்களும் இப்பணியில் ஒரு கணமும் நிற்காமல் மனித உயிரினங்களைத் தொடர்ந்து இடையறாமல் வீணடித்து வருகின்றன.(6) நாளுக்கு நாள் எழுவதும், மறைவதுமாக இருப்பவனும், சிதைவற்றவனுமான சூரியன், மனிதர்களின் இன்ப துன்பங்களைத் தொடர்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறான்.(7) விதியைச் சார்ந்திருப்பவையும், மனிதனால் எதிர்பார்க்கப்படாதவையுமான அவனது நல்ல மற்றும் தீய நிகழ்வுகளை இரவுகள் தங்களுடன் எடுத்துக் கொண்டு இடையறாமல் சென்று கொண்டிருக்கின்றன.(8)

மனிதச் செயல்களின் கனிகள், பிற சூழ்நிலைகளைச் சாராமல் இருந்தால், அவன் தான் விரும்பிய எந்தப் பொருளையும் அடைவான்.(9) புலன்களை அடக்கியவர்களும், புத்திசாலிகளும், நுண்ணறிவு கொண்டவர்களுமான மனிதர்களும் கூட, செயல்களற்றவர்களாக இருந்தால், எந்தக் கனிகளையும் ஈட்டுவதில் அவர்கள் ஒருபோதும் வெல்வதில்லை[1].(10) புத்தியற்றவர்களாகவும், எந்தவகைச் சாதனைகளும் இல்லாதவர்களும், மனிதர்களில் இழிந்தவர்களுமான மற்றவர்கள், வெற்றியை எதிர்பார்க்காதிருந்தாலும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றனர்.(11) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்ய எப்போதும் ஆயத்தமாக இருப்பவனும், உலகமனைத்தையும் வஞ்சிப்பதில் ஈடுபடுபவனுமான வேறொருவன் மகிழ்ச்சியில் புரள்வதும் காணப்படுகிறது.(12)சோம்பலாக அமர்ந்திருக்கும் வேறொருவன் பெருஞ்செழிப்பை அடைகிறான்; அதேவேளையில், மெய்யுறுதியுடன் முயற்சி செய்பவன் கிட்டத்தட்ட அடையும் தருவாயில் இருக்கும் விரும்பத்தகுந்த கனிகளைத் தவறவிடுவதும் காணப்படுகிறது.(13) நீ இதை மனிதனின் களங்கங்களில் ஒன்றாக ஏற்பாயாக. ஒருவரைப் பார்ப்பதன் மூலம் ஒருவனின் இயல்பில் உண்டாகும் உயிர் வித்தானது, மற்றொருவருக்குச் செல்கிறது.(14) அது கருவறைக்குச் செல்லும்போது, சில வேளைகளில் கருவை உண்டாக்கிறது, சில வேளைகளில் தவறுகிறது. பாலுறவு கலவி பொய்க்கும்போது, ஒரு கனியையும் உண்டாக்காமல் பெரும் மலர்கள் பலவற்றை மலரச் செய்யும் ஒரு மாமரத்திற்கு அஃது ஒப்பாகிறது[2].(15) வாரிசைப் பெற விரும்பும் சில மனிதர்களைப் பொறுத்தவரையில், தங்கள் நோக்கம் கனிவதற்காக (பல்வேறு தேவர்களை வழிபடுவதன் மூலம்) இதயப்பூர்வமாக முயன்றும் கருவறையில் கருவை உண்டாக்க அவர்கள் தவறுகிறார்கள்.(16)கடும் நஞ்சுமிக்கப் பாம்பைக் கண்டு அஞ்சும் ஒருவனைப் போலக் கரு உண்டாவதை அஞ்சும் வேறொருவன், நீண்ட வாழ்வைக் கொண்டவனும், தான் கடந்த வாழ்நிலைகளில் இருந்து தானே திரும்பி வந்ததைப் போலத் தெரிபவனுமான மகன் தனக்குப் பிறப்பதை அவன் காண்கிறான்.(17) வாரிசுக்கான ஆவலும், ஏக்கமும் கொண்டவர்களும், அக்காரியத்தினால் உற்சாகமற்றிருப்பவர்களுமான பல மனிதர்கள், பல தேவர்களுக்கு வேள்வி செய்து, கடும் தவங்களை மேற்கொண்டு இறுதியாகத் தங்கள் குலத்திலேயே இழிந்தவர்களாகத் தங்களை நிரூபித்துக் கொள்ளும் பிள்ளைகளைப் பத்து நீண்ட மாதங்கள் முறையாகச் சுமந்து பெறுகின்றனர்.(18) அத்தகைய சடங்குகள் மற்றும் நியமங்களுடைய அறத்தின் மூலம் பெறப்பட்ட வேறு சிலர், தங்கள் தந்தைமாரால் ஈட்டப்பட்டு, சேமிக்கப்பட்ட செல்வத்தையும், தானியங்களையும், அனுபவிக்கத்தகுந்த பல்வேறு ஆதாரங்களையும் உடனே அடைகின்றனர். பாலுறவு செயலில் எதிர் பாலினங்களைச் சேர்ந்த இருவர் ஒருவரோடொருவர் கலவி புரியும்போது, தாயைப் பீடிக்கும் பேரிடரைப் போலக் கருவறையில் கரு உண்டாகிறது.(20)

உயிர் மூச்சுகள் நின்ற உடனேயே, திரள் உடல் அழிவடைந்தாலும், சதை மற்றும் கபத்தால் உண்டான அந்தத் திரள் உடலால் செய்யப்பட்ட செயல்கள் அழிவடையாமல் உடல்படைத்த உயிரினம் கொண்டிருக்கும் பிற உடல் வடிவங்களைப் பீடிக்கிறது[3].(21) உடல் அழிந்த பிறகு, அழிவடைந்த அந்த உடலைப் போன்றே அழிவடையக்கூடிய மற்றொரு உடல், பயணிகளை ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாற்ற மற்றொன்றிற்குச் செல்லும் படகைப் போலவே, எரிக்கப்பட்டதும் அழிவையடைந்ததுமான அந்த உயிரினத்திற்காக (அதனிடம் செல்ல) ஆயத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.(22) கலவிச் செயலின் விளைவால், அசைவற்றதான ஒரு துளி உயிர்வித்தானது, கருவறையில் விடப்படுகிறது. யாருடைய, அல்லது எதன் கவனிப்பால் அந்தக் கரு உயிருடன் வைக்கப்படுகிது என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்.(23) உண்ணும் உணவு உடலின் எந்தப் பகுதிக்குள் செல்கிறதோ, எங்கே அது செரிக்கப்படுகிறதோ, அந்த இடத்திலேயே இந்தக் கரு வசித்தாலும் அங்கே அது செரிக்கப்படாமல் இருக்கிறது.(24)கருவறையில், சிறுநீருக்கும் மலத்திற்கும் மத்தியில் ஒருவனுடைய பயணம் இயற்கையால் ஒழுங்குமுறை செய்யப்பட்டுள்ளது. அங்கே வசிக்கும் காரியத்தில், அல்லது அங்கிருந்து தப்பிக்கும் காரியத்தில் பிறக்கப் போகும் உயிரினம் சுதந்திரம் கொண்டதல்ல. உண்மையில், அது முற்றிலும் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறது.(25) சில கருக்கள் (வளர்ச்சிநிலை அடையாமலேயே) கருவறையில் இருந்து விழுகின்றன. சில உயிரோடு வெளியே வருகின்றன (தொடர்ந்து வாழ்கின்றன). அதே வேளையில் சில, (தங்கள் செயல்களின் இயல்பின் மூலம்) தங்களுக்காக வேறு உடல்கள் ஆயத்தமாக இருப்பதன் விளைவால் வாழ்வை இழந்து அழிவைச் சந்திக்கின்றன.(26) எந்த மனிதன் பாலுறவுக் கலவிச் செயலில் உயிர்நீரை உட்செலுத்துகிறானோ, அவன் ஒரு மகனையோ, மகளையோ அடைகிறான். அவ்வாறு அடையப்படும் வாரிசு, காலம் நேரும்போது, அதே போன்ற கலவியில் ஈடுபடுகிறது.(27) ஒரு மனிதனின் வாழ்வுக்கு ஒதுக்கப்பட்ட காலம் நெருங்கும்போது, அவனது உடலில் உள்ள ஐம்பூதங்களும், ஏழாவது மற்றும் ஒன்பதாவது நிலைகளை அடைந்து, பிறகு இல்லாமல் போகிறது. எனினும், மனிதன் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை[4].(28)வேடர்களால் தாக்கப்படும் சிறு விலங்குகளைப் போல நோய்களால் மனிதர்கள் பீடிக்கப்படும்போது, அவர்கள் எழுவதற்கும், அசைவதற்குமான தங்கள் சக்த்தியை அப்போது இழக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(29) நோய்களின் மூலம் மனிதர்கள் பீடிக்கப்பட்டால், மருத்துவர்கள் சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தங்கள் துன்பத்தைத் தணிக்க முடியவில்லையெனினும் அவர்கள் தங்கள் திரண்ட செல்வத்தைச் செலவழிக்கவே விரும்புகிறார்கள்.(30) நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் சாத்திரங்களை நன்கு கற்றவர்களும், சிறந்த மருந்துகளால் நன்கு ஆயத்தமடைந்தவர்களுமான மருத்துவர்களேகூட, வேடர்களால் தாக்கப்படும் விலங்குகளைப் போல நோய்களால் பீடிக்கப்படுகின்றனர்.(31) வலுவூட்டும் பானங்களையும், பல்வேறு வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட நெய்யையும் பருகும் மனிதர்களும் கூடப் பலமான யானைகளால் ஒடிந்த மரங்களைப் போல முதுமையால் உடைந்து போவது காணப்படுகிறது.(32)

விலங்குகள், பறவைகள், இரைதேடும் விலங்குகள் ஆகியவையும், வறியவர்கள் ஆகியோரும் பிணியால் பீடிக்கப்படும்போது, மருந்துகளால் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பவன் எவன்? உண்மையில் அவர்கள் நோய்வாய்ப்படுவது காணப்படுவதில்லை.(33) சிறு விலங்குகளைத் தாக்கும் பெரும் விலங்குகளைப் போலவே பிணிகளும் கடுஞ்சக்தி கொண்டவர்களும், வெல்லப்பட முடியாத ஆற்றலைகள் கொண்டவர்களையும் பீடிப்பது காணப்படுகிறது.(34) சக்தியிழந்த மனிதர்கள் அனைவரும் துன்பத்தைக் குறிக்கும் ஓலமிட்டு, பிழையிலும், துன்பத்திலும் மூழ்கி, வீசப்பட்ட கடும் ஓடையிலேயே சுமந்து செல்லப்படுவதும் காணப்படுகிறது.(35) உடல் கொண்ட உயிரினங்கள், இயற்கையை வெல்ல முனையும்போது, செல்வம், அரசு சக்தி அல்லது கடுந்தவங்களின் துணையுடன் அதை வெல்ல இயலாமல் போகிறது.(36)

மனிதர்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டால், அப்போது மனிதர்கள் ஒருபோதும் சாக மாட்டாரகள், ஒருபோதும் முதுமைக்கு ஆட்பட மாட்டார்கள், ஒருபோதும் ஏற்புடைய எதையும் அடைய மாட்டார்கள், இறுதியாகத் தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிந்து மகுடம் சூட்டப்படுவார்கள்.(37) மனிதர்கள் அனைவரும் தங்கள் நிலையில் படிப்படியாக மேன்மையடையவே விரும்புகிறார்கள். இந்த விருப்பத்தை நிறைவு செய்யவே அவர்கள் தங்கள் சிறந்த சக்தியால் முயற்சிக்கிறார்கள். எனினும் விளைவானது அவர்களது விருப்பத்திற்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.(38) முற்றிலும் விழிப்புணர்வுடன் இருப்பவர்களும், நேர்மையானவர்களும், துணிவுமிக்கவர்களும், ஆற்றல்மிக்கவர்களுமான மனிதர்களும் கூட, செழிப்பின் செருக்கிலும், மதுவிலும் போதையுண்ட மனிதர்களைத் துதிப்பது காணப்படுகிறது.(39) இடர்களைக் கவனிக்குமுன்பே அவை காணாமல் போகும் சில மனிதர்களும் காணப்படுகிறார்கள். எந்தச் செல்வமும் இல்லாதிருந்தாலும் அனைத்து வகைத் துயரங்களில் இருந்து விடுபட்ட வேறு சிலரும் காணப்படுகிறார்கள்.(40)

செயல்களின் ஒன்றுதலில் உள்ள கனிகளைப் பொறுத்தவரையில் பேரமைதியே காணப்படுகிறது. சிலர் வாகனங்களைத் தங்கள் தோள்களில் சுமப்பதும், சிலர் அந்த வாகனங்களைச் செலுத்துவதும் காணப்படுகிறது.(41) மனிதர்கள் அனைவரும் செழிப்பையும், செல்வாக்கையும் விரும்புகிறார்கள். சிலர் மட்டுமே தேர்களை (யானைகளையும், குதிரைகளையும்) தங்கள் உடைமைகளாகக் கொண்டிருக்கிறார்கள். முதல் மனைவி இறந்து, வேறு மனைவியை அடையத் தவறுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்; அதே வேளையில் நூற்றுக்கணக்கான மனைவிகளைக் கொண்ட பிறரும் இருக்கிறார்கள்.(42) துன்பமும் இன்பமும் அருகருகே நீடிக்கும் இரு பொருட்களாகும். மனிதர்கள் இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள். இந்த ஆச்சரியத்தைப் பார். எனினும், அத்தகைய காட்சியின் பிழையால் நீ மயக்கமடையாதே.(43) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கைவிடுவாயாக. வாய்மையையும், பொய்மையையும் கைவிடுவாயாக. வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிட்ட பிறகு, எதனுடைய துணையின் மூலம் அவற்றைக் கைவிட்டாயோ, அதனையும் கைவிடுவாயாக.(44) ஓ! முனிவர்களில் சிறந்தவனே, எது பெருந்துன்பம் என்பதை நான் இப்போது உனக்குச் சொன்னேன். (மனிதர்களாக இருந்த) தேவர்கள் அனைவரும் சொர்க்கவாசிகளாவதற்காக, இத்தகைய அறிவுரைகளின் துணையுடன், இந்தப் பூமியை விட்டுச் செல்வதில் வெல்கிறார்கள்” என்றார் {நாரதர்}.(45)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், அமைதியான மனத்தைக் கொண்டவருமான சுகர், நாரதரின் வார்த்தைகளைக் கேட்டு, தாம் பெற்ற அறிவுரைகளின் வேறுபாட்டைக் குறித்துச் சிந்தித்தாலும், முடிவான எந்தத் தீர்மானத்தையும் அவரால் எட்ட முடியவில்லை.(46) பிள்ளைகள் மற்றும் மனைவிகளைப் பெறுவதால் பெருந்துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதையும்; அறிவியலையும், வேதங்களையும் அடைவதற்காக ஒருவன் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவர் தமக்குள்ளேயே, “நித்தியமானதும், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் விடுபட்டுமாக இருந்தாலும், பெருஞ்செழிப்பைக் கொண்டதுமான நிலை எது?” என்று கேட்டுக் கொண்டார்.(47) கடமைகள் அனைத்தின் தொடக்கத்தையும், முடிவையும் நன்கறிந்தவரான சுகர், தாம் செல்வதற்காக விதிக்கப்பட்ட நடைமுறையைக் குறித்து ஒருக்கணம் சிந்தித்து, பெரும் இன்பநிலை நிறைந்த உயர்ந்த கதியை அடையத் தீர்மானித்தார்.(48)

அவர் {சுகர்} தமக்குள்ளேயே, “பற்றுகள் அனைத்தையும் களைந்து, முற்றிலும் விடுப்பட்டவனாகி எவ்வாறு நான் சிறந்த கதியை அடையப் போகிறேன்? உண்மையில், பல்வேறு வகைப் பிறவிகளைக் கொண்ட இந்தப் பெருங்கடலுக்குத் திரும்பாமல் இருக்கக்கூடிய சிறந்த நிலையை நான் எவ்வாறு அடையப் போகிறேன்?(49) எங்கிருந்து திரும்பிவர வேண்டாமோ அந்த இருப்புநிலையை அடையவே நான் விரும்புகிறேன். அனைத்து வகைப் பற்றுகளையும் கைவிட்டு, மனத்தின் துணையால் சிந்தித்து ஒரு நிச்சயத் தன்மையை அடைந்து நான் அந்தக் கதியை அடையப் போகிறேன்.(50) ஆன்மா அமைதியாக இருக்கக்கூடியதும், முதுமைக்கோ, மாற்றத்திற்கோ ஆட்படாமல், நித்தியமாக வசிக்ககூடியதுமான அந்த நிலையை நான் அடையப் போகிறேன்.(51) எனினும், யோகத்தின் துணையில்லாமல் அந்த உயர்ந்த கதியை நிச்சயம் அடைய முடியாது. முற்றான ஞான நிலை மற்றும் தெளிவு நிலையை அடைந்த ஒருவன் ஒருபோதும் செயல்களின் மூலம் இழிந்த பற்றுகளை அடைய முயல மாட்டான்.(52)

எனவே, நான் யோகம் பயின்று, என் தற்போதைய இருப்பிடமான இவ்வுடலைக் கைவிட்டு, காற்றாக மாறி, சூரியனால் பிரதிபலிக்கப்படும் பிரகாசத் திரளுக்குள் நுழையப் போகிறேன்.(53) ஜீவன் அந்தப் பிரகாசத் திரளுக்குள் நுழையும்போது, தேவர்களுடன் கூடிய சோமனைப் போல அவன் தகுதி {புண்ணியம்} தீர்ந்தவனாக, பூமியில் வீழ்ந்து, மீண்டும் போதிய தகுதியை அடைந்து மீண்டும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.(54) சந்திரன் தேய்ந்து மீண்டும் வளர்வது காணப்படுகிறது. மீண்டும் மீண்டும் நேரும் இந்தத் தேய்தல் மற்றும் வளர்தலைக் காணும் நான் இத்தகைய மாறுபாடுகளைக் கொண்ட இருப்பின் வடிவத்தைக் கொள்ள விரும்பவில்லை.(55) சூரியன் தனது கடுங்கதிர்களால் உலகங்கள் அனைத்திற்கும் வெப்பமூட்டுகிறான். அவனது வட்டில் எந்தவொரு ஒளி குறைவையும் அடைவதில்லை. மாறாமல் நீடிக்கும் அவன், அனைத்துப் பொருட்களின் இருந்தும் சக்தியை உறிஞ்சுகிறான். எனவே நான் சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட சூரியனுக்குச் செல்ல விரும்புகிறேன்[5].(56)அனைவராலும் வெல்லப்படமுடியாதவனாக, என் உள் ஆன்மாவில் உள்ள அச்சமனைத்தில் இருந்தும் விடுபட்டவனாக, இந்த என் உடலைக் கைவிட்டவனாக நான் அங்கே சூரியலோகத்தில் வாழப் போகிறேன்.(57) பொறுத்துக் கொள்ளமுடியாத சக்தியைக் கொண்ட சூரியனுக்குள் நான் பெரும் முனிவர்களுடன் சேர்ந்து நுழையப் போகிறேன். அனைத்து உயிரினங்கள், இந்த மரங்கள், இந்த யானைகள், இந்த மலைகள், பூமி, திசைகளின் பல்வேறு புள்ளிகள், ஆகாயம்,(58) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரிடம் உண்மையில் நான் உலகின் உயிரினங்கள் அனைத்திற்குள்ளும் நுழையப் போகிறேன் என்பதை அறிவிக்கப் போகிறேன்[6].(59) முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் இன்று என் யோக ஆற்றலைக் காணட்டும்” என்று {தமக்குள்ளேயே} சொல்லிக் கொண்டார் {சுகர்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன சுகர், தன் நோக்கத்தை உலகப் புகழ்பெற்ற நாரதரிடம் தெரிவித்தார்.(60)சுகர், நாரதரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தமது தந்தை {வியாசர்} இருந்த இடத்திற்குச் சென்றார். பெருமுனிவரும், உயர் ஆன்மா கொண்டவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} கிருஷ்ணரின் {வியாசரின்} முன்னிலையை அடைந்த அவர், வழக்கமான விசாரிப்புகளைச் செய்தார்.(61) சுகரின் நோக்கத்தைக் கேட்ட அந்த உயர் ஆன்ம முனிவர் {வியாசர்} பெரிதும் நிறைவடைந்தார். அவரிடம் பேசிய அந்தப் பெரும் முனிவர், “ஓ! மகனே, ஓ! அன்புக்குரிய மகனே, என் கண்கள் நிறைவடையும் வண்ணம் நான் சிறிது காலம் உன்னைப் பார்க்கும் வகையில் இன்று இங்கேயே தங்குவாயாக” என்றார்”.(62) எனினும் பற்றில் இருந்தும், ஐயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட சுகர், விடுதலையை மட்டுமே சிந்திக்கத் தொடங்கிப் பயணத்தில் தம் இதயத்தை நிலை நிறுத்தினார்.(63) தமது தந்தையை விட்டுச் சென்ற அந்த முதன்மையான முனிவர் {சுகர்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசிகளின் கூட்டம் வசிக்கும் பரந்த கயிலாயச் சாரலுக்குச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(64)

முக்தியின் பாதையில் சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 333-யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட சுகர்; முக்தியின் வழியைக் அவர் கண்டடைந்தது; தாம் கண்ட பாதையை நாரதருக்குச் சொன்னது; மீண்டும் யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டது; தமது தந்தை அழைத்தால் மறுமொழி கூறுமாறு தேவதேவிகளுக்கு ஆணையிட்டது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, {கயிலாய} மலையின் சிகரத்தில் ஏறிய வியாசரின் மகன் {சுகர்}, பிற உயிரினங்களின் நடமாட்டம் இல்லாத புற்களற்ற சமதரையில் அமர்ந்தார்.(1) யோகத்தினுடைய அடுத்தடுத்த படிநிலைகளின் வரிசையை அறிந்தவரான அந்தத் தவசி {சுகர்}, சாத்திரங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்புடைய வகையிலும், விதிக்கப்பட்ட விதிகளின்படியும், முதலில் தம் ஆன்மாவை ஓர் இடத்திலும், பிறகு மற்றுமோர் இடத்திலுமென {படிப்படியாக} நிலை நிறுத்தி, பாதம் தொடங்கி அங்கங்கள் அனைத்தையும் கடந்து சென்றார்.(2) பிறகு சுகர், சூரியன் உதித்து வெகு நேரமாகாத போது, தமது முகத்தைக் கிழக்குப்புறம் நோக்கித் திருப்பி, கைகால்களை மடக்கிப் பணிவான மனோநிலையில் அமர்ந்தார்.(3)

நுண்ணறிவைக் கொண்டவரான அந்த வியாசரின் மகன், யோகத்தில் {தமக்குள்} தம்மையே காண ஆயத்தமாக இருந்த அந்த இடத்தில் எந்தப் பறவைக்கூட்டமுமில்லை, எந்த ஒலியும் இல்லை, வெறுத்தொதுக்கும், அல்லது அச்சத்தைத் தூண்டும் எந்தக் காட்சியும் தென்படவில்லை.(4) பிறகு அவர் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட தமது ஆன்மாவைக் கண்டார். அனைத்துப் பொருட்களிலும் உயர்ந்ததைக் கண்டு அவர் இன்பமாகச் சிரித்தார்.(5) பிறகு அவர் விடுதலையின் பாதையை {மோக்ஷ மார்க்கத்தை} அடைவதற்காக மீண்டும் தம்மை யோகத்தில் நிறுவிக் கொண்டார். யோகத்தின் பேராசானாக ஆன அவர், வெளியெனும் பூதத்தைக் கடந்தார்.(6) அதன்பிறகு, தெய்வீக முனிவரான நாரதரை வலம் வந்து, உயர்ந்த யோகத்தைத் தாமே அடைந்த உண்மையை முனிவர்களில் முதன்மையான அவரிடம் {நாரதரிடம்} சொன்னார்.(7)

சுகர் {நாரதரிடம்}, “நான் (விடுதலையின் {முக்தியின்}) பாதையைக் காண்பதில் வென்றேன். நானே அதைக் கண்டுகொண்டேன். ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, மிகவும் விரும்பத்தக்க கதியை உமது அருளால் நான் அடையப் போகிறேன்” என்றார்”.(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீவில் பிறந்த வியாசரின் மகனான சுகர், தெய்வீக முனிவரான நாரதரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வணங்கி, மீண்டும் தம்மை யோகத்தில் நிலைநிறுத்தி வெளியெனும் பூதத்திற்குள் நுழைந்தார்.(9) அவர், கயிலாய மலைச் சாரலில் இருந்து உயர்ந்து வானத்திற்குள் எழுந்தார். ஆகாயத்தினூடாகப் பயணிக்கவல்லவரும், நிலைத்த தீர்மானத்தால் அருளப்பட்டவருமான சுகர், அப்போது தம்மைக் காற்றெனும் பூதமாகக் கண்டார்.(10) கருடனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர் {சுகர்}, மனோ வேகத்தில், அல்லது எண்ணத்தின் வேகத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அனைத்து உயிரினங்களும் தங்கள் கண்களை அவர் மேல் செலுத்தின.(11) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட சுகர், மூவுலகங்கள் முழுமையையும் ஒரே தன்மையைக் கொண்ட பிரம்மமாகக் கருதி, நெடுநீளம் கொண்ட அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தார்.(12)

அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், குவிந்த கவனத்தோடும், அமைதியான, அச்சமற்ற ஆன்மாவோடும் சென்று கொண்டிருந்த அவர் மீது தங்கள் கண்களைச் செலுத்தின.(13) அனைத்து உயிரினங்களும், விதிக்கு ஏற்புடைய வகையிலும், தங்கள் சக்திக்குத் தகுந்த வகையிலும் அவரை மதிப்புடன் வழிபட்டன.(14) அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வ குலங்கள் அனைத்தும் அவரைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்களும் கூட அதற்கிணையான வியப்பையே அடைந்தனர்.(15)

அவர்கள் {முனிவர்கள்}, “தவங்களால் வெற்றியை அடைந்த இவன் யார்? தன் உடலில் இருந்து {பார்வை} விலகியவனும், மேல் நோக்கிய பார்வையுடன் கூடியவனுமான இவன், நம் அனைவரையும் தன் பார்வையின் மூலம் இன்பத்தால் நிறையச் செய்கிறான்” என்றனர்.(16)

உயர்ந்த அற ஆன்மாவைக் கொண்டவரும், மூவுலகங்களிலும் முழுமையாகக் கொண்டாடப்படுபவருமான சுகர், தம் முகத்தைக் கிழக்கு நோக்கித் திருப்பிக் கொண்டு, சூரியனை நோக்கிச்செலுத்தப்பட்ட பார்வையுடன் அமைதியாக {மௌனமாகச்} சென்று கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சென்ற போது, அவர் அனைத்திலும் பரவும் ஒலியால் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர் அவ்வழியில் வருவதைக் கண்டு பிரமிப்படைந்த அப்ஸரஸ் குலங்கள் அனைத்தும் வியப்பால் நிறைந்தன.(18) அவர்கள் ஒருவருக்கொருவர், “இவர் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவராகவும், ஆசைகள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்தவராகவும் இங்கே வருகிறார் என்பதில் ஐயமில்லை. இத்தகைய உயர்ந்த கதியை அடைந்திருக்கும் இந்தத் தேவன் யார்?” என்று கேட்டனர்.(19)

பிறகு அவர் {சுகர்} ஊர்வசியும், பூர்வசித்தியும் எப்போதும் வசிக்கும் மலய மலைகளுக்குச் சென்றார்.(20) அவர்கள் இருவரும், அந்தப் பெரும் மறுபிறப்பாள முனிவரின் சக்தியைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் {ஊர்வசி}, “வேதங்களை ஓதுவதையும், அவற்றைக் கற்பதையும் வழக்கமாகக் கொண்ட ஒரு மறுபிறப்பாள இளைஞனின் இந்தக் குவிந்த கவனம் ஆச்சரியம் நிறைந்ததாகும். விரைவில் இவன் நிலவைப் போல ஆகாயம் முழுவதும் செல்லப் போகிறான். இவன் தன் தந்தையிடம் கொண்ட கடமைநிறைந்த தொண்டுணர்வு மற்றும் பணிவிடையினால் இந்தச் சிறந்த புத்தியை அடைந்திருக்கிறான்.(21,22) இவன் கடுந்தவங்களைச் செய்த தன் தந்தையிடம் உறுதியான பற்றுடன் இருக்கிறான், மேலும் இவனது தந்தையால் மிகவும் விரும்பப்படுபவனாகவும் இருக்கிறான். ஐயோ, கவனமில்லாத இவனது தந்தையால், திரும்பிவராத பாதையில் ஏன் இவன் அனுப்பப்பட்டான்?” என்றனர் {என்றாள்}.(23)

ஊர்வசியின் இந்த வார்த்தைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் கவனித்து, தம் கண்களை அனைத்துப் பக்கங்களிலும் செலுத்தி,(24) மீண்டும் ஆகாயம் முழுமையையும், மலைகள், நீர்நிலைகள், காடுகள், தடாகங்கள் மற்றும் ஆறுகள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகத்தையும் கண்டார்.(25) தேவர்கள் மற்றும் தேவிகள் அனைவரும், தீவில் பிறந்த முனிவரின் மகனை {வியாசரின் மகனை} மதிக்கும் வகையில் தங்கள் கரங்களைக் குவித்து, ஆச்சரியத்துடனும், மதிப்புடனும் அவனைக் கண்டனர்.(26) அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான சுகர் அவர்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “என் தந்தை {வியாசர்} என்னைப் பின்தொடர்ந்து வந்து, மீண்டும் மீண்டும் என் பெயரைச் சொல்லி அழைத்தால்,(27) நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்காக அவருக்குப் பதிலளியுங்கள். என்னிடம் அன்பு கொண்ட நீங்கள் அனைவரும் இந்த என் வேண்டுகோளை நிறைவேற்றுவீராக” என்றார் {சுகர்}.(28)

சுகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திசைப்புள்ளிகள் அனைத்தும், காடுகள் அனைத்தும், கடல்கள் அனைத்தும், ஆறுகள் அனைத்தும், மலைகள் அனைத்தும், ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் அவருக்குப் பதிலளித்தன,(29) “ஓ! மறுபிறப்பாளரே, நாங்கள் உமது ஆணையை ஏற்கிறோம். நீர் சொன்னது போலவே ஆகட்டும். அந்த முனிவரால் {வியாசரால்} சொல்லப்படும் வார்த்தைகளுக்கு நாங்கள் இவ்வழியிலேயே பதிலளிக்கப் போகிறோம்” {என்றன}” என்றார் {பீஷ்மர்}.(30)

மோக்ஷமடைந்த சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 334-முக்திக்கான பாதையில் சுகர் கண்ட காட்சிகள்; சுகர் முக்தியடைந்தது; சுகரைப் பின்தொடர்ந்து சென்ற வியாசர், சுகருக்காக வருந்தி அழுதது; வியாசருக்கு வரமளித்த சிவன்; சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வைக் கேட்பதால் கிட்டும் பரமகதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கடும் தவங்களைக் கொண்ட மறுபிறப்பாள முனிவரான சுகர், இவ்வாறு தம் வழியில் (அனைத்துப் பொருட்களிடமும்) பேசி, நான்கு வகைக் களங்கங்களை {தோஷங்களைக்}[1] கைவிட்டு, வெற்றியில் {யோக ஸித்தியில்} நிலைத்திருந்தார்.(1) எட்டுவகைத் தமஸ்களைக் கைவிட்டு, ஐந்து வகை ரஜஸ்களையும் விட்டுவிட்டார்[2]. பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர், பிறகு சத்வ குணத்தையும் கைவிட்டார். இவை யாவும் மிக ஆச்சரியமானவைகளாகத் தோன்றின.(2) பிறகு அவர் குணங்களற்றதும், ஒவ்வொரு குறியீட்டிலிருந்தும் விடுபட்டதுமான பிரம்மம் என்ற அந்த நித்திய நிலையிலேயே வசித்து, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(3)விண்கற்கள் விழத் தொடங்கின[3]. திசைப்புள்ளிகள் அனைத்தும் எரிவதாகத் தெரிந்தன. பூமி நடுங்கினாள். இந்தத் தோற்றப்பாடுகள் அனைத்தும் மிக ஆச்சரியமானவைகளாகத் தெரிந்தன.(4) மரங்கள் தங்கள் கிளைகளையும், மலைகள் தங்கள் சிகரங்களையும் உதிர்க்கத் தொடங்கின. (இடியின்) உரத்த ஒலியானது இமய மலைகளையே பிளப்பது போலக் கேட்டது.(5) சூரியன் அந்தக் கணத்தில் ஒளியற்றவனாகக் காணப்பட்டான். நெருப்பு ஒளியை வெளியிட மறுத்தது. தடாகங்கள், ஆறுகள் மற்றும் கடல்கள் அனைத்தும் கலக்கமடைந்தன.(6) வாசவன் {இந்திரன்}, சிறந்த சுவையும், மணமும் கொண்ட மழையைப் பொழிந்தான். தூய தென்றல், சிறந்த நறுமணங்களைச் சுமந்தபடி வீசத் தொடங்கியது.(7)ஆகாயத்தினூடாகச் சுகர் சென்று கொண்டிருந்தபோது, இமயத்திற்குரிய ஒன்றும், மேருவுக்குரிய ஒன்றுமென அழகிய இரண்டு சிகரங்களைக் கண்டார். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடன் நெருங்கி இருந்தன. அதிலொன்று தங்கத்தாலானதால் மஞ்சள் நிறத்திலும், மற்றொன்று வெள்ளியாலானதால் வெள்ளை நிறத்திலும் இருந்தன.(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் உயரமும், அதே அளவு அகலமும் கொண்டவையாக இருந்தன. உண்மையில் சுகர் வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த அழகிய சிகரங்கள் இரண்டையும் கண்டார்.(9) அவர், அச்சமற்ற இதயத்துடன் ஒன்றோடொன்று கலந்திருந்த அந்த இரு சிகரங்களையும் மோதிச் சென்றார். அந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இரு சிகரங்களும் திடீரென இரண்டாகப் பிளந்தன.(10) ஓ! ஏகாதிபதி, அந்தக் காட்சியைக் காண மிக அற்புதமாக இருந்தது. அந்தச் சிகரங்கள், சுகர் செல்வதைத் தடுக்க இயலாதவையாக இருந்ததால் அவர் அவற்றைத் துளைத்துச் சென்றார். இதனால் சொர்க்கத்தில் வசித்தவர்களிடமிருந்து பேரொலி எழுந்தது.(11,12)

அந்த மலையில் வசித்து வந்த கந்தர்வர்கள் மற்றும் பிறர் அந்த மலை பிளக்கப்பட்டதையும், சுகர் அதைக் கடந்து சென்றதையும் ஆரவாரத்துடன் கண்டனர். உண்மையில், ஓ! பாரதா, அந்தக் கணத்தில் “நன்று, நன்று” என்ற வார்த்தைகள் எங்கும் கேட்டன.(13) கந்தர்வர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்கள் கூட்டத்தினாலும், வித்யாதரர் குலங்கள் அனைத்தினாலும் அவர் துதிக்கப்பட்டார்.(14) ஓ! ஏகாதிபதி, ஊடுருவமுடியாத அந்த அரணை சுகர் இவ்வாறு துளைத்துச் சென்ற அக்கணத்தில், சொர்க்கத்திலிருந்து பொழியப்பட்ட தெய்வீக மலர்களால் ஆகாயம் நிறைந்திருந்தது.(15) அற ஆன்மா கொண்ட சுகர் அப்போது, மலர்ந்திருக்கும் சோலைகள் மற்றும் காடுகள் பலவற்றினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பகுதியின் கீழே பேரழகுடன் ஓடிக் கொண்டிருக்கும் தெய்வீக ஓடையான மந்தாகினியை {தேவ கங்கையை} உயர்ந்த பகுதியில் {வானத்தில்} இருந்து கண்டார்.(16) அந்த நீரில் அழகிய அப்சரஸ்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடையற்றிருந்த அந்த விண்ணுலகவாசிகள், உடலற்றவராக இருந்த சுகரைக் கண்டு வெட்கமேதும் அடையவில்லை.(17)

சுகர் பெரும்பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்த அவரது தந்தை வியாசர், அன்பால் நிறைந்தவராக அதே விண்பாதையில் அவரை {சுகரைப்} பின்தொடர்ந்து சென்றார்.(18) அதேவேளையில் சுகர், காற்றுப் பகுதிக்கு {வளிமண்டலத்திற்கு}[4] மேலிருக்கும் ஆகாயப்பகுதியில் சென்று, தமது யோக ஆற்றலை வெளிப்படுத்தி, பிரம்மத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார் {பிரம்மத்தோடு கலந்தார்}.(19) கடுந்தவங்களைக் கொண்ட வியாசர், உயர்ந்த யோகத்தின் நுண்பாதையைப் பின்பற்றி, சுகர் முதலில் பயணம் தொடங்கிய இடத்தைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அடைந்தார்.(20) அதே வழியில் சென்ற வியாசர், எதன் ஊடாகச் சுகர் கடந்து சென்றாரோ, அந்த மலைச்சிகரம் பிளந்து கிடப்பதைக் கண்டார். தீவில் பிறந்த அந்தத் தவசியைச் சந்தித்த முனிவர்கள், அவரது மகனின் சாதனைகளை அவருக்குச் சொல்லத் தொடங்கினர்.(21) எனினும் வியாசர், தமது மகனின் பெயரைச் சொல்லி உரக்க அழைத்து, தாமுண்டாக்கிய ஒலியால் மூவுலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அழுது புலம்பத் தொடங்கினார்.(22)அதே வேளையில், அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அவற்றின் ஆன்மாவாக ஆனவரும், எங்கும் நிறைந்த நிலையை அடைந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான {தர்மாத்மாவுமான} சுகர், எதிரொலியின் வடிவில் “போ” {Bho} என்ற ஓரசையைச் சொல்லித் தமது தந்தைக்குப் பதிலளித்தார்.(23) இதனால், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் “போ” என்ற ஓரசையைச் சொல்லிச் சுகரின் பதிலை எதிரொலித்தது.(24) அந்நேரத்தில் இருந்து, மலைக்குகைகளிலோ, மலைச்சாரல்களிலோ ஒலிகள் ஒலிக்கப்படும்போது அவை சுகரின் பதிலைச் சொல்வது போல இன்னும் {இப்போது வரை} அதை (போ என்ற ஓரசையை} எதிரொலிக்கின்றன.(25) சுகர், இவ்வழியிலேயே ஒலி முதலிய குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, மறையும் வகையில் தமது யோக ஆற்றலைக் காட்டி உயர்ந்த நிலையை அடைந்தார்.(26)

அளவிலா சக்தி கொண்ட தமது மகனின் மகிமையையும், பலத்தையும் கண்ட வியாசர், அந்த மலைச்சாரலில் அமர்ந்து, துயரத்துடன் தமது மகனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(27) தெய்வீக ஓடையான மந்தாகினியில் {தேவ கங்கையின்} கரைகளில் விளையாடிக் கொண்டிருந்த அப்சரஸ்கள் அனைவரும், அந்த முனிவர் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டு, வெட்கத்தால் இதயம் இழந்தவர்களாகக் கலக்கமடைந்தனர்.(28) அம்முனிவரைக் கண்டதும், அவர்களில் சிலர் தங்கள் நிர்வாணத்தை மறைக்க ஓடைக்குள் குதித்தனர், சிலர் புதர்களில் நுழைந்தனர், சிலர் விரைவாகத் தங்கள் ஆடைகளை எடுத்தனர்.(29) (அவர்களில் எவரும் அவரது மகனைக் கண்டு கலக்கக் குறியீடுகளைக் காட்டவில்லை). இந்த அசைவுகளைக் கண்ட முனிவர் {வியாசர்}, தமது மகன் {சுகர்} பற்றுகள் அனைத்தில் இருந்து விடுதலை அடைந்ததையும், தாம் அவற்றில் இருந்து விடுபடாததையும் புரிந்து கொண்டார். இதனால் அவர் மகிழ்ச்சி மற்றும் வெட்கம் ஆகிய இரண்டாலும் நிறைந்தார்.(30)

வியாசர் அங்கே அமர்ந்திருந்தபோது, மங்கல தேவனும், பிநாகைபாணியும் {பிநாகை என்ற வில்லைத் தரித்தவனும்}, தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் பலரால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், பெரும் முனிவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனுமான சிவன் அங்கே வந்தான்.(31) தமது மகனைக் குறித்த கவலையில் எரிந்து கொண்டிருந்தவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} அம்முனிவருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மஹாதேவன் {சிவன்},(32) “நெருப்பு {அக்னி}, பூமி {பிருத்வி}, நீர் {அப்பு}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் சக்தியைக் கொண்ட மகனை முன்பு நீர் வேண்டினீர்.(33) உமது தவங்களால் அதே போன்றவொரு மகன் உண்டானான். என் அருளால் அவன் தூயனாகவும், பிரம்ம சக்தியால் நிறைந்தவனாகவும் இருந்தான்.(34) புலன்களை முழுமையாக அடக்காதவர்களாலோ, தேவர்களில் எவராலோ கூட வெல்ல முடியாத உயர்ந்த கதியை அவன் அடைந்திருக்கிறான். ஓ! மறுபிறப்பாள முனிவரே, அந்த மகனுக்கான ஏன் நீர் வருந்துகிறீர்? எவ்வளவு காலம் மலைகள் இருக்குமோ, எவ்வளவு காலம் பெருங்கடல் இருக்குமோ, அவ்வளவு காலம் உமது மகனின் புகழ் மங்காதிருக்கும்.(36) ஓ! பெரும் முனிவரே, என் அருளால், உமது மகனுக்கு ஒப்பான ஒரு நிழல்வடிவம், உம்மைவிட்டு ஒருக்கணமும் அகலாமல், உமதருகிலேயே இருப்பதை நீர் இவ்வுலகில் காண்பீர்” என்றான்.(37)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்க ருத்திரனாலேயே இவ்வாறு ஆதரிக்கப்பட்ட அம்முனிவர், தம் அருகிலேயே தமது மகனின் நிழலைக் கண்டார். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.(38) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வு குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(39) தெய்வீக முனிவரான நாரதரும், பெரும் யோகியான வியாசரும், பழங்காலத்தில் இக்காரியம் குறித்து உரையாடல்களில் கேட்கப்பட்ட போது, இவையனைத்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(40) எந்த மனிதன் அமைதிநிலைக்குத் தன்னை அர்ப்பணித்து, விடுதலை {முக்தி} குறித்த நேரடி தொடர்புடைய இந்தப் புனித வரலாற்றைக் கேட்பானோ, அவன் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(41)

நரநாராயணர்! – சாந்திபர்வம் பகுதி – 335-நாரத முனி, நாராயண முனி ஆகியோருக்கிடையிலான உரையாடல்; நரனும் நாராயணனும் செய்த தினசரி சடங்குகள்; நரநாராயணர்களால் துதிக்கப்பட்ட தேவன் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மனிதன், இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ}, பிரம்மச்சாரியாகவோ, காட்டுத்துறவியாகவோ {வானப்பிரஸ்தனாகவோ}, சந்நியாசியாகவோ இருந்து வெற்றியடைய விரும்பினால், அவன் எந்தத் தேவனைத் துதிக்க {ஆராதிக்க} வேண்டும்?(1) எங்கிருந்து அவன் சொர்க்கத்தையும், உயர்ந்த நன்மையையும் (விடுதலையையும் {முக்தியையும்}) நிச்சயமாக அடையலாம். எந்த விதிமுறைகளின்படி அவன் தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் ஹோமத்தைச் செய்ய வேண்டும்?(2) ஒருவன் விடுதலை {முக்தியை} அடையும்போது எந்தக் கதியை அடைகிறான்? விடுதலையின் சாரம் என்ன? சொர்க்கத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து வீழாதிருக்க ஒருவன் என்ன செய்ய வேண்டும்?(3) தேவர்களின் தேவன் யார்? பித்ருக்களின் பித்ரு யார்? தேவர்களின் தேவருக்கும், பித்ருக்களின் பித்ருவுக்கும் மேலானவர் யார்? ஓ! பாட்டா இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! கேள்வி கேட்கும் கலையை நன்கறிந்தவனே, ஓ! பாவமற்றவனே, நீ கேட்ட இந்தக் கேள்வி ஆழ்ந்த புதிரைக்கொண்டதாகும். ஒருவன் நூறு ஆண்டுகள் முயன்றாலும், பொருள்முறைப்படி விவாதிக்கும் அறிவியலின் {தர்க்க சாஸ்திரத்தின்} துணை கொண்டு இதற்குப் பதிலளிக்க முடியாது.(5) ஓ! மன்னா, நாராயணனின் அருளில்லாமலோ, உயர்ந்த ஞானத்தை அடையாமலோ, இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. இக்காரியம் ஆழ்ந்த புதிரோடு தொடர்புடையதென்றாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே, நான் அஃதை உனக்கு விளக்குகிறேன்[1].(6)இது தொடர்பாக, நாரதருக்கும் நாராயண முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது.(7) ஓ!ஏகாதிபதி, கிருத யுகத்தில் தான்தோன்றியான {சுயம்புவான} மனுவின் காலகட்டத்தில் {மன்வந்தரத்தில்}, அண்டத்தின் ஆன்மாவான நித்திமான நாராயணன், தர்மனுக்கு மகனாக நரன், நாராயணன், ஹரி மற்றும் சுயம்புவான கிருஷ்ணன் என்ற நால்வராகப் பிறந்தான்[2].(8,9) அவர்கள் அனைவரிலும், நாராயணனும், நரனும் பதரி என்ற பெயரில் அறியப்படும் இமய ஆசிரமத்திற்குத் தங்கத் தேர்களில் சென்று கடுந்தவங்களைச் செய்தனர்.(10) அந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் எட்டுச் சக்கரங்கள் இருந்தன. ஐம்பூதங்களால் செய்யப்பட்ட அந்தத் தேர்கள் மிகவும் அழகானவையாக இருந்தன.தர்மனின் மகன்களாகப் பிறந்த அந்த உண்மையான லோகபாலர்கள், கடுந்தவத்தின் விளைவால் மிகவும் மெலிந்தவர்களானார்கள். உண்மையில், அந்தத் தவங்களுக்காகவும், அவர்களின் சக்திக்காகவும், தேவர்களாலேயே அவர்களைப் பார்க்க இயலவில்லை.(11) அவர்கள் எந்தத் தேவனிடம் அன்பு கொள்கிறார்களோ, அந்தத் தேவனால் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.(12)

நாரதர், அவர்களிடம் அர்ப்பணிப்பாலும், அவர்களைக் காணும் நீண்ட ஆவலாலும் மேரு மலைகளின் உயர்ந்த சிகரத்தில் இருந்து கந்தமாதனத்திற்குக் கீழே இறங்கிவந்து உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தார்.(13) பெரும் வேகம் கொண்ட அவர் இறுதியாகப் பதரி ஆசிரமம் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்தார். ஆவலால் உந்தப்பட்ட அவர், நரனும் நாராயணனும் தங்கள் தினசரி சடங்குகளைச் செய்து கொண்டிருந்த வேளையில் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தார்.(14)

அவர் {நாரதர்} தமக்குள்ளேயே, “தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள மற்றும் பெரும்பாம்புகள் உள்ளிட்ட உலகங்கள் அனைத்தும் எவரில் நிறுவப்பட்டுள்ளனவோ, உண்மையில் இஃது அவரது ஆசிரமமே.(15) முன்பு இந்தப் பெரும் பொருளுக்கு ஒரே வடிவமே இருந்தது. அந்த வடிவமானது, அந்தத் தேவனால் வளர்க்கப்பட்ட தர்மனின் குலம் பெருகுவதற்காக நான்கு வடிவங்களில் பிறவியை அடைந்தது.(16) நரன், நாராயணன், கிருஷ்ணன், ஹரி என்ற நான்கு பெருந்தேவர்களால் தர்மன் இவ்வாறு கௌரவிக்கப்பட்டது அற்புதம் நிறைந்ததாகும்.(17) இந்த இடத்திலேயே முன்பு கிருஷ்ணனும், ஹரியும் வசித்தனர். எனினும் இப்போது நரன் மற்றும் நாராயணன் ஆகிய இந்த இருவர் தங்கள் தகுதியை {புண்ணியத்தைப்} பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தில் இங்கே வசித்துத் தவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.(18) இந்த இருவரும் அண்டத்தின் பெரும்புகலிடமாக இருக்கிறார்கள். இந்த இருவரும் செய்யும் தினசரி சடங்குகளின் இயல்புகள் என்ன? அவர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாரும், அனைத்துப் பொருட்களின் சிறப்புமிக்கத் தேவர்களும் ஆவர். பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்த இருவரும் வழிபடும் அந்தத் தேவன் யார்? அனைத்துப் பொருட்களின் பித்ருக்களான இவ்விருவரும் துதிக்கும் அந்தப் பித்ருக்கள் யார்?” என்று கேட்டுக் கொண்டார்.(19)

நாராயணனிடம்
 பக்தியில் நிறைந்திருந்த நாரதர், தமது மனத்தில் இதை நினைத்துத் திடீரென அந்தத் தேவர்கள் இருவரின் முன்பும் தோன்றினார்.(20) அந்தத் தேவர்கள் இருவரும் தங்கள் தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கான துதிகளை நிறைவு செய்த பிறகு, தங்கள் ஆசிரமத்திற்கு வந்திருந்த அந்தத் தெய்வீக முனிவரைக் கண்டனர். பின்னவர் {நாரதர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகளின்படி கௌரவிக்கப்பட்டார்.(21) சிறப்புமிக்கவரான முனிவர் நாரதர், உண்மை தேவர்களான அவர்கள் இருவரும் வேறு தேவர்களையும், பித்ருக்களையும் வழிபடும் இயல்புக்குமீறிய நடத்தைக் கண்டு, தாம் பெற்ற கௌரவங்களால் நன்கு நிறைவடைந்து அங்கே அமர்ந்தார்.(22) உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் கூடிய அவர், மஹாதேவனை வணங்கி, தமது கண்களை நாராயணன் மீது செலுத்திக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23)

நாரதர், “வேதங்களிலும், புராணங்களிலும், அங்கங்களிலும், உப அங்கங்களிலும் நீயே மதிப்புடன் பாடப்படுகிறாய். நீ பிறப்பற்றவனாகவும், நித்தியமானவனாகவும் இருக்கிறாய். படைப்பாளன் நீயே. அண்டத்தின் அன்னை நீயே. அழிவின்மையின் உடல்வடிவம் நீயே, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. கடந்த காலமும், எதிர்காலமும், உண்மையில், மொத்த அண்டமும் உன்னிலேயே நிறுவப்பட்டுள்ளன.(24) ஓ!தலைவா, இல்லறத்தை முதலாகக் கொண்ட நான்கு வாழ்வுமுறைகளும் {ஆசிரமங்களும்}, பல்வேறு வடிவங்களிலான உன்னையே இடையறாமல் துதிக்கின்றன.(25) அண்டத்தின் தந்தையாகவும், தாயாகவும், ஆசானாகவும் நீயே இருக்கிறாய். இன்று நீ துதிக்கும் அந்தத் தேவன் அல்லது பித்ரு யார் என்பதை நாங்கள் அறியவில்லை” என்றார்.(26)

அதற்கு அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “இக் காரியம் குறித்து ஒருவனால் எதுவும் சொல்லப்படக்கூடாது. இஃது ஒரு புராதனப் புதிராகும். நீர் என்னிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாகும். எனவே, ஓ!மறுபிறப்பாளரே, வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்.(27) நுட்பமானதும், புலப்படாததும், வெளிப்படாததும், அசைவற்றதும், நீடித்து நிலைத்திருப்பதும், புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுடனான எந்தத் தொடர்பும் இல்லாததும்,(28) (ஐந்து) பூதங்களிடம் இருந்து தொடர்பறுந்ததும் எதுவோ, அதுவே இருப்பிலுள்ள உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் ஆத்மாவாக அழைக்கப்படுகிறது. அது க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரில் அறியப்படுகிறது. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய முக்குணங்களையும் கடந்திருக்கும் அதுவே புருஷன் என்று சாத்திரங்களில் கருதப்படுகிறது.(29) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவனிலிருந்தே சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்ட புலப்படாதவள் தோன்றினாள். உண்மையில் புலப்படாதவளாக இருப்பினும் அவள் அழிவில்லாத பிரகிருதி என்று அழைக்கப்பட்டு, புலப்படும் வடிவங்கள் அனைத்திலும் வசித்து வருகிறாள்.(30)

நாங்கள் இருவரும் எங்கிருந்து உதித்தோமோ அந்தத் தோற்றுவாய் அவளே {பிரகிருதியே} என்பதை அறிவீராக. இருப்பில் உள்ள மற்றும் இருப்பில் இல்லாத பொருட்கள் அனைத்தினாலும் உண்டானதும், நீக்கமற நிறைந்திருப்பதுமான ஆன்மாவானவன் எங்களால் துதிக்கப்படுகிறான். தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாங்கள் செய்யும் சடங்குகள் அனைத்திலும் அவனையே நாங்கள் வழிபடுகிறோம்.(31) ஓ! மறுபிறப்பாளரே, அவனைத் தவிர வேறு உயர்ந்த தேவர் எவரும், அல்லது பித்ரு எவரும் இல்லை. அவனே எங்கள் ஆன்மா என்பது அறியப்பட வேண்டும். அவனையே நாங்கள் வழிபடுகிறோம்.(32) ஓ! மறுபிறப்பாளரே, மனிதர்களால் பின்பற்றப்படும் இந்தக் கடமையின் நடைமுறைகள் அவனிடம் இருந்த வெளிவந்தன. தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான சடங்குகள் அனைத்தும் முறையாகச் செய்யப்பட வேண்டும் என்பதை அவனே விதித்திருக்கிறான்.(33) பிரஜாபதிகள் என்றழைக்கப்படும் பிரம்மன், ஸ்தாணு, மனு, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது,(34) வசிஷ்டர், பரமேஷ்டி, விவஸ்வத், சோமன் கர்த்தமர் என்றழைக்கப்படுபவர், குரோதர், அவாக், கிருதர்(35) ஆகிய இந்த இருபத்தோரு பேரும் முதலில் பிறந்தவர்களாவர். அவர்கள் அனைவரும் பரம்பொருளின் நித்திய விதிகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தனர்.(36)

தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிப்பதற்காக விதிக்கப்பட்ட சடங்குகள் அனைத்தையும் விரிவாக நோற்ற அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், தாங்கள் வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அடைந்தனர்.(37) உடலற்ற தேவலோகவாசிகளே அந்த உயர்ந்த தேவனை வணங்கி, அவனது அருளின் மூலம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கனிகளையும், கதிகளையும் அடைகின்றனர்.(38) (அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, உயிர் மூச்சுகள் ஐந்து, மனம் மற்றும் புத்தி அடங்கிய) பதினேழு குணங்களில் இருந்து விடுபட்டவர்களும், செயல்கள் அனைத்தையும் கைவிட்டவர்களும், திரள் உடலாக அமையும் பதினைந்து கலைகளுமற்றவர்களும் முக்தர்கள் என்று சொல்லப்படுவதே சாத்திரங்களின் இறுதித் தீர்மானமாகும்[3].(39) முக்தர்கள் தங்கள் இறுதி கதியாக எதை அடைகிறார்களோ அதுவே க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. (சாத்திரங்களின்படி) அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} குணங்கள் அனைத்தையும் கொண்டவனாகவும், அவை அனைத்தும் அற்றவனாகவும் கருதப்படுகிறான்.(40)அவனை {க்ஷேத்ரஜ்ஞனை} ஞானத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நாங்கள் இருவரும் அவனிலிருந்தே உதித்தோம். இவ்வழியில் அவனை அறிந்திருக்கும் நாங்கள் அனைத்துப் பொருட்களின் நித்திய ஆன்மாவான அவனைத் துதிக்கிறோம்.(41) வேதங்களும், வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தும் விரிந்த கருத்துகளின்படி அறியப்பட்டாலும் அவனை அனைவரும் பக்தியுடன் வழிபடுகின்றனர். அவனே விரைந்து அருள் வழங்கி அவர்களுக்கு இன்பம் நிறைந்த உயர்ந்த கதிகளை அளிக்கிறான்.(42) இவ்வுலகில் அவனால் நிறைந்தவர்கள், அவனிடம் முற்றான முழுமையான பக்தியைக் கொண்டு மிக உயர்ந்த கதிகளை அடைகின்றனர். எனெனில், அவர்கள் அவனில் நுழைந்து, அவனது சுயத்திலேயே கலக்கிறார்கள்.(43) ஓ! நாரதரே, நீர் என்னிடம் கொண்ட பக்தியாலும், நான் உம்மிடம் கொண்ட அன்பினாலும் அசைக்கப்பட்டு உயர்ந்த புதிரை உமக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், நீர் என்னிடம் கொள்ளும் பக்தியின் விளைவாலேயே எனது உரையை உம்மால் கேட்க முடிந்தது” என்றான் {நாராயணன்}.(44)

உலகின் முதல் சாத்திரம்! – சாந்திபர்வம் பகுதி – 336-ஸ்வேதத்வீபத்திற்குச் சென்ற நாரதர்; பாஞ்சராத்ர சாத்திரத்தின் வரலாறு; உலகின் முதல் நீதி சாத்திரத்தைத் தொகுத்த சப்தரிஷிகள்; நீதி சாத்திரத்தை அடைந்த மன்னன் உபரிசரன்; நாராயணன் சொன்ன வார்த்தைகள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முதன்மையான நாராயணனால் இந்த வார்த்தைகளால் சொல்லப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான நாரதர், உலக நன்மைக்காக நாராயணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

நாரதர், “ஓ! சுயம்புவே, தர்மனின் இல்லத்தில் நான்கு வடிவங்களில் நீர் பிறப்பெடுத்த நோக்கம் நிறைவேறட்டும். நான் இப்போது உன் உண்மை இயல்பைக் காண்பதற்காக (வெண் தீவுக்கு {ஸ்வதேத்வீபத்திற்குச்}) செல்லப் போகிறேன்.(2) நான் எப்போதும் பெரியோரை வழிபடுகிறேன். நான் ஒருபோதும் பிறரின் இரகசியங்களை வெளியிட்டதில்லை. ஓ! அண்டத்தின் தலைவா, நான் வேதங்களைக் கவனமாகக் கற்றிருக்கிறேன். நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். நான் ஒருபோதும் பொய்மை பேசியதில்லை.(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடியே நான் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய நான்கைப் பாதுகாத்திருக்கிறேன்[1]. நான் நண்பர்களிடமும் பகைவர்களிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன். தேவர்களின் முதல்வனான பரமாத்மாவிடம் முற்று முழுதான அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொண்ட நான் அவனை இடையறாமல் துதித்து வருகிறேன்.(4) சிறப்புத்தகுதிகளான இந்தச் செயல்களின் மூலம் என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பிறகு, எல்லையில்லாதவனான அண்டத்தின் தலைவனுடைய காட்சியைப் பெறுவதில் நான் ஏன் வெல்ல மாட்டேன்?” என்றார் {நாரதர்}.பரமேஷ்டியின் மகனான அவர் {நாரதர்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், சாத்திரங்களைப் பாதுகாப்பவனுமான நாராயணன், “ஓ! நாரதரே, செல்வீராக” என்று சொன்னான்.(5) உயர்ந்த யோக பலத்தைக் கொண்ட நாரதர் திடீரென ஆகாயத்தில் எழுந்து, மேரு மலைகளின் சிகரத்தை அடைந்தார். அந்தச் சிகரத்தில் ஒரு தனிமையான இடத்தை அடைந்த அந்தப் பெருந்தவசி சிறிது நேரம் ஓய்ந்திருந்தார்.(7) பிறகு அவர் தமது கண்களை வடமேற்குத் திசையில் செலுத்தி மிக அற்புதமான காட்சியை ஒன்றைக் கண்டார். வடக்கில் உள்ள பாற்கடலில் வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரைக் கொண்ட ஒரு பெரிய தீவு இருக்கிறது.(8) மேரு மலைகளில் இருந்து அதன் தொலைவு முப்பத்திரண்டாயிரம் யோஜனைக்கும் மேல் எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குப் புலன்கள் ஏதும் கிடையாது. அவர்கள் எந்த உணவும் உட்கொள்ளாமலேயே வாழ்கிறார்கள். அவர்களது கண்கள் இமைப்பதில்லை. அவர்கள் சிறந்த மணங்களை வெளியிடுகிறார்கள்.(9)

அவர்களது நிறம் வெண்மையானதாகும். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருந்தனர். அவர்களது எலும்புகளும், உடல்களும் வஜ்ரத்தைப் போன்று கடினமானதாக இருந்தன. அவர்கள் மான அவமானங்களை ஒரே ஒளியில் கருதினர். அவர்கள் அனைவரும் தேவர்களைப் போலத் தெரிந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் மங்கலக் குறிகளையும், பெரும் பலத்தையும் கொண்டிருந்தனர்.(10) அவர்களது தலைகள் குடைகளைப் போல இருந்தன. அவர்களது குரல்கள் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்டவர்களாவர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முஷ்கங்களைக் கொண்டிருந்தனர்[2]. அவர்களது பாதங்கள் நூறு கோடுகளால் குறிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரும் அறுபது பற்களையும், எட்டு சிறு பற்களையும் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பல நாவுகள் இருந்தன. அந்த நாவுகளைக் கொண்டு அனைத்துத் திசைகளையும் நோக்கும் சூரியனையே தீண்டுவதைப் போலத் தெரிந்தது.(11) உண்மையில் அவர்கள், மொத்த அண்டமும், வேதங்களும், கடமைகள், அமைதியான குணம் கொண்ட முனிவர்களும் எதனில் இருந்து எழுந்தார்களோ அந்தப் பெருந்தேவனையே விழுங்கிவிட வல்லவர்களைப் போலத் தெரிந்தனர்” என்றார் {பீஷ்மர்}.(12)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அவர்களுக்குப் புலன்கள் ஏதும் கிடையாது, அவர்கள் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள எதையும் உண்பதில்லை, அவர்களது கண்கள் இமைப்பதில்லை; அவர்கள் எப்போதும் சிறந்த மணத்தைப் பரப்புகிறார்கள் என்று சொன்னீர். நான் கேட்கிறேன், அவர்கள் எவ்வாறு பிறந்தார்கள்? அவர்கள் அடையும் பரகதி எது?(13) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விடுதலை {முக்தி} அடையும் மனிதர்களின் அடையாளங்களும், வெண்தீவுவாசிகளைப் போன்றதாகுமா? என் ஐயங்களை விலக்குவீராக. {கேட்பதற்கு} நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். வரலாறுகள் மற்றும் உரையாடல்களின் பெருங்கொள்ளிடமாக நீர் இருக்கிறீர். எங்களைப் பொறுத்தவரையில், ஞானம் மற்றும் அறிவுரைகளுக்கு உம்மையே நாங்கள் முற்றிலும் சார்ந்திருக்கிறோம்” என்றான்.(15)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, என் தந்தையிடம் இருந்து நான் கேட்ட இந்தக் கதை மிகப் பெரியதாகும். அதை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். உண்மையில், இது கதைகள் அனைத்தின் சாரமாகக் கருதப்படுகிறது.(16) ஒரு காலத்தில் உபரிசரன் என்ற பெயரில் பூமியில் ஒரு மன்னன் இருந்தான். அவன் தேவர்களின் தலைவனான இந்திரனுடைய நண்பனாக அறியப்பட்டார். அவன் ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் நாராயணனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தான் {பக்தி கொண்டிருந்தான்}.(17) அவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகள் {தர்மங்கள்} யாவையும் நோற்பவனாக இருந்தான். எப்போதும் தன் தந்தையிடம் அர்ப்பணிப்புடன் இருந்த அவன், எப்போதும் விழிப்புணர்வு நிறைந்தவனாகவும், செயலுக்கு ஆயத்தமானவனாகவும் இருந்தான். அவன் நாராயணனிடம் இருந்து பெற்ற வரத்தின் விளைவால் உலகின் அரசுரிமையை வென்றான்.(18) பழங்காலத்தில் சூரியனால் அறிவிக்கப்பட்ட சாத்வத சடங்கை {பாஞ்சராத்ரவிதியைப்}[3] பின்பற்றிய மன்னன் உபரிசரன் அந்தத் தேவர்களின் தேவனை (நாராயணனை) வழிபடுவதை வழக்கமாகக் கொண்டு, தன் வழிபாடு நிறைவடைந்ததும் அண்டத்தின் பெரும்பாட்டன்களைத் துதித்துக் கொண்டிருந்தான்.(19) பெரும்பாட்டன்களை (பித்ருக்களை) வழிபட்ட பிறகு அவன் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன் தன்னைச் சார்ந்திருந்தவர்களுக்குக் காணிக்கைகளைப் பகிர்ந்தளித்தான். அவர்களுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சியதிலேயே மன்னன் தன் பசியைத் தணித்துக் கொண்டான். வாய்மையில் அர்ப்பணிப்புள்ள அந்த ஏகாதிபதி, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து வந்தான்.(20)தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாத தேவர்களின் தேவனும், அண்டத்தின் படைப்பாளனும், எவ்வித சிதைவும் இல்லாதவனுமான ஜனார்த்தனனிடம் மொத்த ஆன்மாவுடன் கூடிய அர்ப்பணிப்புடன் அவன் இருந்தான்.(21) பகைவர்களைக் கொல்பவனான அவன் நாராயணனிடம் கொண்ட அர்ப்பணிப்பை {பக்தியைக்} கண்ட தேவர்களின் தலைவன், தன் இருக்கையையும், படுக்கையையும் அவனுடன் பகிர்ந்துகொண்டான்.(22) அவனது நாடு, செல்வம், மனைவிகள், விலங்குகள் அனைத்தும் நாராயணனிடம் இருந்து பெறப்பட்டதாகவே அவனால் கருதப்பட்டன. எனவே அவன் தன் உடைமைகள் அனைத்தையும் அந்தப் பெருந்தேவனுக்கே காணிக்கையாக்கினான்.(23) சாத்வதச் சடங்கைப் பின்பற்றிய மன்னன் உபரிசரன், குவிந்த ஆன்மாவுடன் கட்டாயமற்ற மற்றும் கட்டாயமான தன் வேள்விச் செயல்கள் மற்றும் நியமங்கள் அனைத்தையும் {காம்யகங்களையும், நைமித்திகங்களையும்} செய்து வந்தான்.(24) அந்தச் சிறப்புமிக்க மன்னனின் அரண்மனையில், பாஞ்சராத்ர சடங்கை நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலர், தேவன் நாராயணனுக்குப் படைக்கப்படும் உணவை அனைவருக்கும் முன்பு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(25)

பகைவர்களைக் கொல்பவனான அவன் தன் நாட்டைத் தொடர்ந்து அறம் சார்ந்து ஆண்டு வந்த வரை, அவனது உதடுகளில் இருந்து எந்தப் பொய்மையும் நழுவி வந்ததில்லை, எந்தத் தீமையும் அவனது மனத்துக்குள் நுழைந்ததில்லை.(26) அவன் தன் அங்கங்களைக் கொண்டு ஒருபோதும் சிறு பாவத்தையேனும் செய்ததில்லை. சித்திர சிகண்டிகள்[4] என்ற பெயரில் அறியப்பட்ட மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் பெருஞ்சக்தியைக் கொண்ட வசிஷ்டர் என்று கொண்டாடப்படும் ஏழு முனிவர்களும், மலைகளில் முதன்மையான மேருவின் சாரலில் ஒன்றுகூடி, நான்கு வேதங்களுக்கு இணக்கமான கடமைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த சிறந்த சாத்திரத்தை உண்டாக்கினார்கள். அந்தச் சாத்திரத்தின் உள்ளடக்கம் ஏழு வாய்களால் சொல்லப்படுவதாகவும், மனித கடமைகள் மற்றும் நடைமுறைகளின் சுருக்கமான சிறந்த தொகுப்பாகவும் இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல, சித்திர சிகண்டிகள் என்ற பெயரால் அறியப்பட்ட அந்த ஏழு முனிவர்களும், (மஹத், அகங்காரம் முதலிய) ஏழு (பிரகிருதி) பூதங்களாகவும், பட்டியலில் எட்டாவதாகச் சுயம்புவான மனுவும் மூலப் பிரகிருதியின் உள்ளடக்கமாக இருந்தனர். இந்த எண்மரே அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களும், கவனம் திரும்பியிருக்கும் அந்தச் சாத்திரத்தை உண்டாக்கியவர்களும் ஆவர்.(27-30)முழுக் கட்டுப்பாட்டுடன் கூடிய புலன்கள் மற்றும் மனத்துடன், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்த எட்டு தவசிகளும், குவிந்த ஆன்மாக்களுடன், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவர்களாக வாய்மை எனும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருந்தனர்.(31) “இது நன்மையானது, இது பிரம்மம், இஃது உயர்ந்த நன்மையானது” என்று இவ்வழியில் தங்கள் மனத்தில் சிந்தித்த அந்த முனிவர்களே, உலகங்களையும், அறநெறி அறிவியலையும், உலகங்களை ஆளும் கடமைகளையும் உண்டாக்கினர்.(32) அறம், செல்வம் மற்றும் இன்பம், அதைத் தொடர்ந்து விடுதலை {முக்தி} குறித்தும் அந்த ஆசிரியர்கள் அந்தச் சாத்திரத்தில் உரை செய்திருந்தார்கள். அவர்கள் பூமிக்கும், சொர்க்கத்திற்குமான பல்வேறு கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் அதில் விதித்திருந்தனர்.(33) பலமிக்கவனும், சிறப்புமிக்கவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை, பல முனிவர்களின் துணையுடன் ஆயிரம் தேவ வருடங்கள் தவங்களால் வழிபட்டு அந்தச் சாத்திரத்தை அவர்கள் உண்டாக்கினார்கள்.(34) அவர்களது தவங்கள் மற்றும் வழிபாட்டால் நிறைவடைந்த நாராயணன், வாக்கின் தேவியான சரஸ்வதியை அந்த முனிவர்களின் மேனியில் நுழையும்படி ஆணையிட்டான். அந்தத் தேவியும் உலகங்களுக்கு நன்மை செய்வதற்காக, தனக்கு ஆணையிடப்பட்ட வகையிலேயே செயல்பட்டாள்.(35)

வாக்கின் தேவி அவர்களது மேனியில் நுழைந்ததன் விளைவால் தவங்களை நன்கறிந்தவர்களான அம்முனிவர்கள், சொல், கருத்து {பொருள்}, காரணம் ஆகியவற்றாலான அந்த முதன்மையான சாத்திரத்தைத் தொகுப்பதில் வென்றார்கள்.(36) ஓம் என்ற ஓரசையால் புனிதமடைந்த அந்தச் சாத்திரத்தைத் தொகுத்தபிறகு அந்த முனிவர்கள், முதலில் அதை அன்புடன் கேட்டுக் கொண்டிருந்த நாராயணனிடம் படித்துக் காட்டினார்கள்.(37) சிறப்புமிக்கவனும், உடலற்றவனுமான நாராயணன் தான் கேட்டதில் மிக உயர்ந்த நிறைவை அடைந்தான்.

பிறகு பொருட்கள் அனைத்திலும் முதன்மையான அவன் {நாராயணன்} அம்முனிவர்களிடம் உடலற்ற குரலில் {அரூபக் குரலில் / அசரீரியாக}, “நூறாயிரம் சுலோகங்களில் நீங்கள் தொகுத்திருக்கும் இந்தச் சாத்திரம் சிறப்பானதாகும். இதனிலிருந்தே உலகங்கள் அனைத்தின் கடமைகளும், நடைமுறைகளும் உண்டாகும்.(39) யஜுஸ், ரிக், சாமம் மற்றும் அங்கிரசின் அதர்வணம் என்ற நான்கு வேதங்களுக்கும் முழு இணக்கத்துடன் இருக்கும் உங்கள் சாத்திரம், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி ஆகிய இரண்டிலும் அங்கீகரிக்கப்பட்டதாக உலகமெங்கும் கொண்டாடப்படும்.(40) சாத்திரங்களின் அதிகாரத்திற்கு ஏற்புடைய வகையிலேயே நான் அருள் எனும் குணத்தின் மூலம் பிரம்மனையும், எனது கோபத்திலிருந்து ருத்திரனையும், (மஹத், அகங்காரம் முதலிய) பிரகிருதிகளால் உங்களையும், பிராமணர்களையும் உண்டாக்கினேன்.(41) சூரியன், சந்திரமாஸ், காற்று, பூமி, நீர், நெருப்பு, விண்மீன்கள், கோள்கள், நட்சத்திரக்கூட்டங்கள், உயிரினங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் அனைத்தும், (வேதம் அல்லது) பிரம்மம் ஓதுபவர்கள் ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் செயல்பட்டு வாழ்கிறார்கள். நீங்கள் தொகுத்திருக்கும் இந்தச் சாஸ்திரமும், உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட படைப்பாக மனிதர்கள் அனைவராலும் அதே ஒளியில் கருதப்படும். இஃது என் ஆணையாகும். இந்தச் சாத்திரத்தின் வழிகாட்டுதலின்படி சுயம்புவான மனு, உலகின் கடமைகள் மற்றும் நடைமுறைகளை அறிவிப்பார்.(42-44) உசனஸும் {சுக்கிராச்சாரியரும்}, பிருஹஸ்பதியும் உண்டாகும்போது, அவர்கள் இந்தச் சாத்திரத்தால் வழிநடத்தப்பட்டும், மேற்கோளாகக் கொண்டும் அறம் மற்றும் அறநெறி குறித்த சாத்திரங்களை உண்டாக்குவார்கள்[5].(45)சுயம்புவான மனுவும், உசனஸும், பிருஹஸ்பதியும் தங்கள் சாத்திரங்களை வெளியிட்ட பிறகு,(46) உங்களால் தொகுக்கப்பட்ட இந்த அறிவியல், (உபரிசரன் என்ற பெயராலும் அறியப்படும்) மன்னன் வசுவால் அடையப்படும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, உண்மையில், அம்மன்னன் இந்தப் படைப்பின் ஞானத்தைப் பிருஹஸ்பதியிடம் இருந்து அடைவான்.(47) நல்ல சிந்தனைகள் அனைத்தாலும் நிறைந்திருக்கும் அம்மன்னன் என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவானாக இருப்பான். இந்தச் சாத்திரத்தால் வழிநடத்தப்பட்டு அவன் தன் அறச்செயல்களையும் நடைமுறைகளையும் அமைத்துக் கொள்வான்.(48) உண்மையில் உங்களால் தொகுக்கப்பட்ட இந்தச் சாத்திரம், அறம் மற்றும் நெறிகள் குறித்த சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாக இருக்கும். சிறப்பு நிறைந்த இந்தச் சாத்திரம், செல்வத்தையும், அறத்தகுதியையும் ஈட்டுவதற்கு உரிய அறிவுரைகள் நிறைந்ததாகவும், புதிர்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.(49) உங்களுடைய இந்தச் சாத்திரத்தை வெளியிடுவதன் விளைவால், நீங்கள் பெரும் குலம் ஒன்றின் மூதாதையர்களாவீர்கள். மன்னன் உபரிசரனும், மகிமையும் செழிப்பும் கொண்டவனாக இருப்பான்.(50) எனினும் அந்த மன்னனின் மரணத்திற்குப் பிறகு இந்த நித்திய சாத்திரம் உலகில் இருந்து மறைந்துவிடும். இவை யாவையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான் {நாராயணன்}.(51)

புலப்படாதவனான நாராயணன், அந்த முனிவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவர்களை விட்டுவிட்டு, அவர்களால் அறியப்படாத வேறொரு இடத்திற்குச் சென்றான்.(52) அப்போது உலகத்தின் தந்தைகளான அந்த முனிவர்கள், உலகம் அடையப்போகும் கதியை நினைத்துக் கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தின் நித்திய மூலமாகச் சாத்திரத்தை வெளியிட்டனர்.(53) அதற்கடுத்து முதல், அல்லது கிருத யுகத்தில் பிருஹஸ்பதி அங்கிரஸக் குலத்தில் பிறந்தபோது, அந்த ஏழு முனிவர்களும், உபநிஷத்துகள் மற்றும் வேதங்களின் பல்வேறு கிளைகளுக்கு இணைக்கமான தங்கள் சாத்திரத்தை வெளியிடும் பணியை அவருக்குக் கொடுத்தனர்.(54) உலகங்கள் அனைத்தையும் தாங்குபவர்களும், தர்மங்கள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் முதலில் வெளியிட்டவர்களுமான அவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்து இடத்திற்குச் சென்று தவங்களில் தங்களை அர்ப்பணிக்கத் தீர்மானித்தனர்” என்றார் {பீஷ்மர்}.(55)

நாராயணீயம்! – சாந்திபர்வம் பகுதி – 337-உபரிசர வசு செய்த யாகம்; பிருஹஸ்பதிக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன ஏகதர் மற்றும் பிறர்; ஸ்வேதத்வீபம் என்ற வெண்தீவு; அங்கே வசிக்கும் வெண் மனிதர்கள்; ஸ்வேதத்வீபத்தில் நாராயணனைக் காணாத முனிவர்கள்; உபரிசரவசு அடைந்த கதி..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “பெரும் கல்பம் {மஹாகல்பம்} நிறைவடைந்ததும், அங்கிரஸ குலத்தில் தேவபுரோஹிதர் பிருஹஸ்பதி பிறந்தபோது, தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(1) பிருஹத், பிரம்ம, மஹத் என்ற சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைக் கொண்டனவாகும்[2]. ஓ! மன்னா, தேவ புரோஹிதர் இந்தக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்ததால் பிருஹஸ்பதி என்று அழைக்கப்படலானார்.(2) வசு என்றும் அழைக்கப்படும் மன்னன் உபரிசரன், பிருஹஸ்பதியின் சீடனாகி விரைவில் அவனது முதன்மையான சீடனானான். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அவன், தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, சித்திர சிகண்டிகள் என்ற பெயரில் அறியப்பட்ட ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அந்த அறிவியலை {சாத்திரத்தைக்} கற்கத் தொடங்கினான்.(3) வேள்விகள் மற்றும் பிற அறச்சடங்குகள் மூலம் தீமைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவன் {உபரிசரன்}, சொர்க்கத்தை ஆளும் இந்திரனைப் போல இந்தப் பூமியை ஆண்டு வந்தான்.(4)அந்தச் சிறப்புமிக்க மன்னன் தன் ஆசானான பிருஹஸ்பதி ஹோத்ரியாக அமைந்த ஒரு பெரும் குதிரை வேள்வியை {அஸ்வமேதயாகத்தைச்} செய்தான்.(5) பிரஜாபதியின் (பிரம்மனின்) மகன்களான ஏகதர், துவிதர், திரிதர் ஆகியோர் அந்த வேள்வியின் சத்யஸ்களானார்கள்.(6) இன்னும் தனுஷர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு, மேதாதி, பெரும் முனிவரான தாண்டியர்,(7) அருள் நிறைந்தவரான சாந்தி முனிவர், வேதசிரஸ் என்று அழைக்கப்பட்டவர், சாலிஹோத்திரரின் தந்தையும், முனிவர்களில் முதன்மையானவருமான கபிலர்,(8) முதன்மையானவரான கல்பர் {கடர்}, வைசம்பாயனருக்கு மூத்தவரான {அண்ணனான} தைத்திரி, கண்வர், தேவஹோத்தர் ஆகிய வேறு பதினாறு பேரும் சத்யஸ்களாக இருந்தனர்.(9)

ஓ! ஏகாதிபதி அந்தப் பெரும் வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் திரட்டப்பட்டன. அதில் எந்த விலங்கும் கொல்லப்படவில்லை. மன்னன் அவ்வாறே அதை விதித்திருந்தான்(10) அவன் கருணை நிறைந்தவனாக இருந்தான். தூய்மையான, தயாள மனம் கொண்ட அவன், ஆசைகள் அனைத்தையும் கைவிட்டவனாகவும், சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருந்தான். அவ்வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் காட்டில் விளைபவையாகவே இருந்தன.(11) புராதன தேவர்களுக்குத் தேவன் (ஹரி), அந்த வேள்வியினால் மன்னனிடம் உயர்ந்த நிறைவை அடைந்தான். வேறு எவராலும் காணப்பட முடியாதவனான அந்தப் பெருந்தேவன், தன் வழிபாட்டாளனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(12) அவன் {ஹரி}, அதன் மணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பங்கான புரோடாசத்தை[3] எடுத்துக் கொண்டான். அந்தப் பெருந்தேவன் யாரும் காணாதவண்ணம் அந்தக் காணிக்கைகளை எடுத்துக் கொண்டான்.(13) இதனால் பிருஹஸ்பதி கோபம் அடைந்தார். அவர், வேள்விக் கரண்டியை எடுத்து வானத்தில் வேகமாக வீசி எறிந்துவிட்டு, கோபத்தில் கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.(14)அவர் {பிருஹஸ்பதி} மன்னன் உபரிசரனிடம், “நாராயணனுக்குரிய வேள்விக் காணிக்கைகளை இங்கே வைக்கிறேன். என் கண்களுக்கு முன்பாகவே இதை அவன் எடுக்கப் போகிறான் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(15)

யுதிஷ்டிரன், “உபரிசரனின் பெரும் வேள்வியில் தேவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் வந்து அனைவரும் காணும்படி தங்கள் பங்குகளை எடுத்துக் கொண்டனர். பலமிக்க ஹரி மட்டுமே ஏன் வேறுவகையில் மறைமுகமாகத் தன் பங்கை எடுத்துக் கொண்டான்?” என்று கேட்டான்.(16)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதி கோபமடைந்த போது, மாமன்னன் வசுவும், அவனது சத்யஸ்கள் அனைவரும் அந்த மாமுனிவரைத் தணிவடையச் செய்ய முயன்றனர்.(17) அவர்கள் அனைவரும் மிக அமைதியாகப் பிருஹஸ்பதியிடம், “நீர் கோபவசப்படக்கூடாது. இந்தக் கிருத யுகத்தில், நீர் கொள்ளும் கோபத்தை யாரும் கொள்ளக்கூடாது.(18) உம்மால் வேள்வி காணிக்கையளிக்கப்பட்ட பெருந்தேவனே கோபத்தில் இருந்து விடுபட்டவனாவான். ஓ! பிருஹஸ்பதி, அவன் உம்மாலோ, எங்களாலோ காணப்பட முடியாதவனாவான்.(19) அவனது அருள் கொண்டவர்கள் மட்டுமே அவனைக் காண முடியும்” என்றனர்.

அப்போது, ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அறநெறிகள் மற்றும் கடமைகளை நன்கறிந்தவர்களான ஏகதர், திவிதர், திரிதர் முதலிய முனிவர்கள், அந்தச் சபையில் பின்வருமாறு உரையாடத் தொடங்கினர்,(20) “நாங்கள் பிரம்மன் நினைவில் பிறந்த அவரது மகன்களாவோம் {பிரம்மாவின் மானஸபுத்திரர்களாவோம்} (சாதாரண வழியில் பிறக்கவில்லை). ஒரு காலத்தில் நாங்கள் எங்கள் உயர்ந்த நன்மையை அடைவதற்காக வடக்கே சென்றோம்.(21) ஆயிரம் வருடங்கள் தவமிருந்து, பெரும் தவத் தகுதியை ஈட்டிய நாங்கள், மீண்டும் நிலையான மரக்கட்டைகளைப் போல ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தோம்.(22) நாங்கள் தவமிருந்த நாடானது, மேரு மலைகளுக்கு வடக்கே, பாற்கடலின் கரைகளில் இருக்கிறது.(23) நாங்கள் எங்கள் மனத்தில் கொண்டிருந்த நோக்கமானது, தெய்வீகமான நாரயாணனை அவனது வடிவிலேயே காண்பதாகும். எங்கள் தவங்கள் நிறைவடைந்ததும், இறுதியான தூய்மைப்படுத்தும் சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பலமிக்கப் பிருஹஸ்பதி, மேக முழக்கம் போல ஆழமானதும், மிக இனிமையானதும், எங்கள் இதயத்தை இன்பத்தால் நிறைப்பதுமான ஓர் அரூபக் குரலை நாங்கள் கேட்டோம்.(24)

அந்தக் குரல், “பிராமணர்களே, உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். நாராயணனிடம் பக்தி கொண்ட நீங்கள், பெரும்பலம் கொண்ட அந்தத் தேவனைக் காண்பதில் எவ்வாறு வெல்வது என அறியும் வகையை நாடுகிறீர்கள்.(25) பாற்கடலின் வடகரையில் வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரைக் கொண்டதும், பெரும் காந்தியைக் கொண்டதுமாக ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவில் வசிக்கும் மனிதர்கள், சந்திரனின் கதிர்களைப் போன்ற வெண்நிறத்தைக் கொண்டவர்களாகவும், நாராயணனிடம் பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.(26) அனைத்திலும் முதன்மையானவனான அவனை வழிபடும் அவர்கள், தங்கள் முழு ஆன்மாவுடன் அவனிடம் அர்பணிப்புக் கொண்டவர்கள் {பக்தி செலுத்துபவர்கள்} ஆவர். அவர்கள் அனைவரும், நித்தியமானவனும், சிறப்புமிக்கவனுமான ஆயிரம் கதிர்களைக் கொண்ட தேவனில் நுழைகிறார்கள்.(27) அவர்கள் புலன்களற்றவர்களாவர். அவர்கள் உயிர்வாழ்வதற்காக எவ்வகை உணவையும் உட்கொள்வதில்லை. அவர்களது கண்கள் இமைப்பதில்லை. அவர்களது உடல்கள் எப்போதும் நறுமணத்தை வெளியிடுகின்றன. உண்மையில் வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்பவர்கள் ஒரே தேவனை மட்டுமே நம்பவும், வழிபடவும் செய்கிறார்கள். தவசிகளே, நான் அங்கே வெளிப்பட்டிருக்கிறேன் என்பதால் அங்கே செல்வீராக” என்றான் {நாராயணன்}.(28)

அரூபக் குரலின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் அனைவரும், குறிப்பிட்டு விளக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில் சென்றோம்.(29) அவனைக் காணும் ஆவலிலும், அவனுக்காக நிறைந்த இதயத்துடனும் இறுதியாக நாங்கள் வெண்தீவு என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரிய தீவை அடைந்தோம். அங்கே எங்களால் எதையும் காண முடியவில்லை. உண்மையில், அந்தப் பெருந்தேவனின் சக்தியால் எங்கள் பார்வை குருடாக்கப்பட்டதால் எங்களால் அவனைக் காண முடியவில்லை.(30) இதன் காரணமாக அந்தப் பெருந்தேவனின் கருணையால், ’போதுமான அளவு தவங்களைச் செய்யாதவனால் நாராயணனை விரைவாகக் காண முடியாது’ என்ற கருத்து எங்களின் மனத்தில் எழுந்தது.(31) இந்தக் கருத்தின் ஆதிக்கத்தால், காலத்திற்கும், இடத்திற்கும் தக்க வகையில் மீண்டும் நாங்கள் நூறு வருடங்களுக்குக் கடுந்தவங்களைச் செய்தோம். எங்கள் நோன்புகள் நிறைந்தவடைந்ததும், நாங்கள் மங்கலமான குணங்களைக் கொண்ட எண்ணற்ற மனிதர்களைக் கண்டோம்.(32) அவர்கள் அனைவரும் (நிறத்தில்) சந்திரனைப் போலத் தெரிந்தனர், அவர்களிடம் அருள் குறியீடுகள் அனைத்தும் இருந்தன. அவர்களது கரங்கள் எப்போதும் வேண்டும் வகையில் கூப்பியே இருந்தன. சிலரின் முகங்கள் வடக்கு நோக்கியும், சிலரின் முகங்கள் கிழக்கு நோக்கியும் இருந்தன.(33) அந்த உயர் ஆன்ம மனிதர்களால் செய்யப்பட்ட ஜபம் மனோஜபமாகும் (அவை வார்த்தைகளாலான மந்திரச் சொற்களைச் சொல்வதாக இல்லை). அவர்களது இதயங்கள் முழுமையாக அவனில் நிறுவப்பட்டிருப்பதன் விளைவால், ஹரி அவர்களிடம் உயர்வான நிறைவை அடைந்திருந்தான்.(34)

ஓ! தவசிகளில் முதன்மையானவரே {பிருஹஸ்பதியே}, அம்மனிதர்கள் வெளிப்படுத்திய பிரகாசமானது, அண்ட அழிவின்போது சூரியன் வெளிப்படுத்தும் காந்திக்கு ஒப்பானதாக இருந்தது.(35) உண்மையில் நாங்கள் அத்தீவே சக்திகள் அனைத்தின் வீடு என நினைத்தோம். அங்கே வசித்த அனைவரும் முற்றிலும் சமமான சக்தியுடன் இருந்தனர்.(36) பிறகு, ஓ! பிருஹஸ்பதி, நாங்கள் ஆயிரம் சூரியர்களின் குவிந்த பிரகாசத்துக்கு ஒப்பான ஓர் ஒளி எழுவதைக் கண்டோம்.(37) அங்கே வசித்தவர்கள் ஒன்றுகூடி, மதிப்புமிக்க மனோநிலையுடன் கரங்களைக் கூப்பி, முழு மகிழ்ச்சியுடன் நமஸ் (வணங்குகிறோம்) என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லிக் கொண்டே அந்த ஒளியை நோக்கி ஓடினார்கள்.(38) அவர்கள் அனைவரும் சேர்ந்து பேரொலி எழுப்பியதை நாங்கள் கேட்டோம். அந்த மனிதர்கள் அனைவரும் அந்தப் பெருந்தேவனுக்கு ஒரு வேள்வியைக் காணிக்கையாக்குவதில் ஈடுபடுவதாகத் தெரிந்தது.(39) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் அவனது சக்தியால் திடீரென எங்கள் புலன்களை இழந்தவர்களானோம். பார்வை, பலம் மற்றும் புலன்கள் அனைத்தையும் இழந்த எங்களால் வேறு எதையும் காணவோ, உணரவோ முடியவில்லை.(40)

அங்கே வசித்திருந்தவர்களின் கூட்டம் எழுப்பிய பேரொலியை மட்டுமே நாங்கள் கேட்டோம். அது {அந்தப் பேரொலி}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, வெற்றி உனதாகட்டும். ஓ! அண்டத்தைப் படைத்தவனே, உன்னை வணங்குகிறோம்.(41) ஓ! ரிஷிகேசா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! முதல் பிறவியே உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்றது. தனித்தவகையிலும், சொல் உச்சரிப்பு விதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் உண்டான அந்த ஒலி இதுவாகவே இருந்தது.(42)

அதே வேளையில், தெய்வீக மலர்கள், குறிப்பிட்ட மூலிகைகள், அச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படும் செடிகள் ஆகியவற்றின் மணங்களைக் கொண்டதுமான நறுமணமிக்க, தூய்மையான தென்றல் அங்கே வீசியது.(43) பெரும் அர்ப்பணிப்புடன் கூடியவர்களும், இதயம் நிறைந்த மதிப்பைக் கொண்டவர்களும், பஞ்சராத்ரத்தில் விதிக்கப்பட்ட விதிகளை அறிந்தவர்களுமான அந்த மனிதர்கள், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் அந்தப் பெருந்தேவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்[4].(44) அவ்வொலி எழுந்தபோது அவ்விடத்தில் ஹரி தோன்றினான் என்பதில் ஐயமில்லை. எங்களைப் பொறுத்தவரையில், அவனது மாயையால் மயங்கியிருந்த எங்களால் அவனைக் காண முடியவில்லை.(45) ஓ! அங்கிரஸ குலத்தில் முதன்மையானவரே, தென்றல் வீசுவது நின்று, வேள்வி முடிந்த பிறகு எங்களது இதயங்கள் கவலையால் கலக்கமடைந்தன.(46) தூய பரம்பரையில் வந்த அந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் நின்று கொண்டிருந்தபோது, எவரும் எங்களைக் கண்ணாலாவது, மனத்தாலாவது மதிக்கவில்லை.(47) உற்சாகம் நிறைந்தவர்களும், அர்ப்பணிப்பால் நிறைந்தவர்களும், பிரம்மமனோநிலையில் பயிற்சிகளைச் செய்பவர்களுமான அந்தத் தவசிகள் எங்களுக்கு எவ்வகை உணர்வையும் வெளிப்படுத்தவில்லை[5].(48)நாங்கள் மிகக் களப்படைந்திருந்தோம். எங்கள் தவங்கள் எங்களை மெலிவடையச் செய்திருந்தன. அந்நேரத்தில், வானத்தில் இருந்து ஓர் அரூபக் குரல் இந்த வார்த்தைகளில் எங்களிடம் பேசியது,(49) {அந்தக் குரல்}, “புறப்புலன்கள் அனைத்தும் இல்லாதவர்களான இந்த வெண்மனிதர்களே (நாராயணனைக்) காணத்தகுந்தவர்கள். இந்த வெண்மனிதர்களின் பார்வையால் கௌரவிக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள் மட்டுமே அந்தப் பெருந்தேவனைக் காணத்தகுந்தவர்கள்.(50,51) முனிவர்களே, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள். அர்ப்பணிப்பில்லாத {பக்தியற்ற} ஒருவனால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைக்} காண இயலாது.(52) அவனது பளிச்சிடும் பிரகாசத்தின் விளைவால் காணப்பட இயலாதவனாக இருக்கும் அந்தப் பெருந்தேவனை, முற்றுமுழுதாக அவனிடம் மட்டுமே நீண்ட காலமாக அர்ப்பணிப்பு பக்தி} கொண்ட மனிதர்களால் மட்டுமே காண முடியும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் செய்ய வேண்டிய பெருங்கடமை இருக்கிறது.(53) கிருத யுகம் முடிந்து, திரேதா யுகம் நேரும்போது, விவஸ்வானின் காலத்தில் {மன்வந்திரத்தில்} உலகங்களுக்குப் பேரிடர் நேரிடும். முனிவர்களே, அப்போது நீங்கள் (அந்தப் பேரிடரை விலக்குவதற்காக) தேவர்களின் கூட்டாளிகளாக வேண்டும்” {என்றது}.(54)

அமுதம் போன்ற இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட நாங்கள், அந்தப் பெருந்தேவனின் கருணையின் மூலம் நாங்கள் விரும்பிய இடத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தோம்.(55) அத்தகைய கடுந்தவங்கள், மற்றும் அர்ப்பணிப்பு மிக்க வேள்வி காணிக்கைகளின் {ஹவ்யகவ்யங்களின்} துணையின் மூலம் கூட அந்தப் பெருந்தேவனை எங்களால் காண முடியவில்லை எனும்போது, அவ்வளவு எளிதாக அவனைக் காணலாம் என நீர் எவ்வாறு நினைக்கலாம்?(56) நாராயணனே பெரும்பொருளாவான். அவனே அண்டத்தைப் படைத்தவனாவான். வேத மந்திரங்களின் துணையுடன் தெளிந்த நெய் மற்றும் வேறு உணவு வகைக் காணிக்கைகளுடன் அவனே வேள்விகளில் துதிக்கப்படுகிறான். அவன் தொடக்கமும், முடிவுமில்லாதவனாவான். அவன் வெளிப்படாதவனாவான். தேவர்கள் மற்றும் தானவர்கள் ஆகிய இருவரும் அவனையே வழிபடுகிறார்கள்” என்றனர்.(57) ஏகதரால் பேசப்பட்டவையும், அவரது தோழர்களான திவிதர் மற்றும் திரிதரால் அங்கீகரிக்கப்பட்டவையுமான இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டவரும், சத்யஸ்களால் வேண்டப்பட்டவருமான உயர்ந்த மனத்தைக் கொண்ட பிருஹஸ்பதி தேவர்களுக்குரிய துதிகளை முறையான சடங்குகளுடன் செய்து அந்த வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.(58)

மன்னன் உபரிசரனும், தனது பெரும் வேள்வியை நிறைவு செய்த பிறகு, தன் குடிமக்களை அறம்சார்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினான். இறுதியில் அவன் தன் உடலைக் கைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு, பிராமணர்களின் சாபத்தால் அவன் இன்ப உலகங்களில் இருந்து வீழ்ந்து, பூமியின் குடல்களுக்குள் ஆழமாக மூழ்கிப் போனான்.(59) ஓ! ஏகாதிபதிகளில் புலியே {யுதிஷ்டிரா}, அந்த வசுவானவன் {உபரிசரன்}, வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்தான். அவன் பூமியின் குடல்களுக்குள் ஆழ மூழ்கினாலும் அவனது அற அர்ப்பணிப்பு தணியவில்லை.(60) நாராயணனிடம் எப்போதும் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனும், நாராயணனையே தங்கள் தேவனாகக் கொண்ட புனித மந்திரங்களை எப்போதும் உரைப்பவனுமான அவன், நாராயணனின் அருளின் மூலம் மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான்.(61) பூமியின் குடல்களுக்குள் இருந்து எழுந்த மன்னன் வசு {உபரிசரன்}, தான் அடைந்த உயர்ந்த கதியின் விளைவால் பிரம்மலோகத்திற்கும் மேலான ஓர் உயர்ந்த இடத்திற்குச் சென்றான்” என்றார் {பீஷ்மர்}.(62)

உபரிசரன் அடைந்த சாபம்! – சாந்திபர்வம் பகுதி – 338-வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? விலங்குகளைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? என்பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நேர்ந்த சச்சரவு; மன்னன் உபரிசரன் சொன்ன தீர்ப்பு; பிராமணர்களால் சபிக்கப்பட்ட உபரிசரன்; தேவர்களின் கருணையாலும், நாராயணனின் அருளாலும் உயர்ந்த கதியை அடைந்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மாமன்னன் வசு நாராயணனிடம் முழுமையான பக்தியுடன் இருந்தபோது, என்ன காரணத்தினால் அவன் சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தான்? மேலும் அவன் ஏன் பூமியின் பரப்புக்குக் கீழே மூழ்கிப் போனான்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஒரு காலத்தில், பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசிய தேவர்கள், அவர்களிடம் அஜஸ் என்ற பலிகளைக் காணிக்கையாக்குவதன் மூலம் வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அஜ என்ற சொல்லின் மூலம் வெள்ளாடு என்று புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி வேறு எந்த விலங்கையும் அல்ல.(3)

முனிவர்கள், “வேத ஸ்ருதியானது, வேள்விகளில் வித்துகள் {தானியங்கள்} காணிக்கைகளாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்துகளே {தானியங்களே} அஜஸ் என்று அழைக்கப்படுகின்றன. வெள்ளாடுகளைக் கொல்வது உங்களுக்குத் தகாது.(4) தேவர்களே, விலங்குகளைக் கொல்ல விதிக்கப்படுவது நல்லோருக்கும், அறவோருக்குமான அறமல்ல. மேலும் இது கிருத யுகமாகும். அறம்சார்ந்த இந்த யுகத்தில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படலாம்?” என்றனர்”.(5)

பீஷ்மர் தொட்ரந்தார், “முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் இந்த உரையாடல் நேர்ந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் முதன்மையானவனான வசு அவ்வழியில் வந்தான். பெருஞ்செழிப்பைக் கொண்ட அந்த மன்னன், தன் துருப்புகள், வாகனங்கள் மற்றும் விலங்குகளுடன் ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தான்.(6)

வானத்தின் மூலம் அந்த இடத்திற்கு வரும் மன்னன் வசுவைக் கண்ட அந்தப் பிராமணர்கள், தேவர்களிடம், “இவன் எங்கள் ஐயங்களை விலக்குவான்.(7) இவன் வேள்விகளைச் செய்பவன். இவன் கொடைகளை அளிக்கும் ஈகையாளன். இவன் எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுபவனாவான்” என்றனர்.(8)

இவ்வாறு தங்களுக்குள் பேசிக்கொண்ட முனிவர்களும் தேவர்களும் விரைவாக மன்னன் வசுவிடம் வந்து அவனைக் கேள்வி கேட்டனர். {அவர்கள்}, “ஓ! மன்னா, எதைக் கொண்டு ஒருவன் வேள்விகளைச் செய்ய வேண்டும்?(9) அவன் வெள்ளாட்டைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? மூலிகைகள் மற்றும் செடிகளைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? எங்களுடைய இந்த ஐயங்களை நீ விலக்குவாயாக. இக்காரியத்தில் நாங்கள் உன்னையே நீதிபதியாகக் கொள்கிறோம்” என்றனர்.(10)

இவ்வாறு அவர்களால் சொல்லப்பட்ட வசு {உபரிசரன்}, பணிவுடன் தன் கரங்களைக் கூப்பியபடி அவர்களிடம், “பிராமணர்களில் முதன்மையானவர்கள், இக்காரியத்தில் உங்கள் கருத்து என்ன என்பதை உண்மையில் எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான்.(11)

முனிவர்கள், “ஓ! மன்னா, வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். எனினும், தேவர்களோ விலங்குகளைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டும் எனச் சொல்கின்றனர். எங்களுக்கிடையில் நீதிபதியாக இருந்து இந்தக் கருத்துகளில் எது சரி என்பதைச் சொல்வாயாக” என்றனர்”.(12)

பீஷ்மர் தொடர்ந்தார், “தேவர்களால் சொல்லப்படும் கருத்து என்ன என்பதை அறிந்த வசு {உபரிசரன்}, அவர்களுக்குச் சாதகமாக விலங்குகளைக் கொண்டே வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னான்.(13)

சூரியனின் காந்தியுடன் கூடிய முனிவர்கள் அனைவரும் இந்தப் பதிலால் மிகவும் கோபமடைந்தனர். தேரில் அமர்ந்திருந்தவனும், (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்தவனுமான வசுவிடம் அவர்கள்,(14) “நீ (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்ததால், சொர்க்கத்தில் இருந்து வீழ்வாயாக. ஓ! ஏகாதிபதி, இந்த நாள் முதல் நீ வானத்தில் பயணிக்கும் உன் சக்தியை இழப்பாயாக. எங்கள் சாபத்தால் நீ பூமியின் பரப்புக்கு அடி ஆழத்தில் மூழ்குவாய்” என்றனர்.(15)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முனிவர்கள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், உடனே கீழே விழுந்த மன்னன் உபரிசரன், பூமியின் குழிக்குச் சென்றான். எனினும், நாராயணனின் ஆணையின் பேரால் அவனது நினைவு தவறவில்லை.(16) பிராமணர்களால் வசுவுக்கு இடப்பட்ட சாபத்தால் துன்புற்ற தேவர்கள், அவனுடைய நற்பேற்றின் காரணமாக, அந்தச் சாபத்தை எவ்வாறு சமன் செய்வது {தணிப்பது} என்பதைக் கவலையுடன் நினைக்கத் தொடங்கினர்.(17)

அவர்கள், “இந்த உயர் ஆன்ம மன்னன் நம் நிமித்தமாகவே சபிக்கப்பட்டிருக்கிறான். சொர்க்கவாசிகளான நாம் ஒன்று சேர்ந்து அவன் நமக்குச் செய்ததற்குப் பதிலாக அவனுக்கு நன்மையைச் செய்ய வேண்டும்.” என்றனர்.(18)

நினைவின் துணைகொண்டு இதைத் தங்கள் மனங்களில் தீர்மானித்த தேவர்கள் மன்னன் உபரிசரன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவனது முன்னிலைக்குச் சென்ற அவர்கள்,(19) பிராமணர்களின் பெருந்தேவனிடம் (நாராயணனிடம்) நீ அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருக்கிறாய். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெருந்தேவனாக இருக்கும் அவன், உன்னில் நிறைவடைந்திருப்பதால், உன் மீது விழுந்திருக்கும் சாபத்தில் இருந்து உன்னை மீட்பான்.(20) எனினும், உயர் ஆன்ம பிராமணர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே முறையானது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உண்மையில் அவர்களது தவங்கள் கனி தர வேண்டும்[1].(21) உண்மையில் நீ வானத்தில் இருந்து பூமிக்கு ஏற்கனவே விழுந்துவிட்டாய். எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்.(22) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ இந்தக் குழியில் இருக்கும்வரை (எங்கள் வரத்தின் மூலம் உனக்குரிய வாழ்வாதாரத்தைப்) பெறுவாயாக.(23) பிராமணர்களால் குவிந்த மனத்துடனும், புனித மந்திரங்களின் துணையுடனும் வேள்விகளில் ஊற்றப்படுவதும், வசுதாரம் {வஸோர்த்தாரை / ஆஜ்யதாரை} என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான தெளிந்த நெய்யின் இழையானது, எங்களது பொறுப்பில் உனதாகட்டும். உண்மையில், பலவீனமோ, மனத்தளர்வோ உன்னைப் பற்றாது[2].(24) ஓ! மன்னர்களின் மன்னா, பூமியின் குழிக்குள் வாழும்போது நீ வசுதாரம் என்றழைக்கப்படும் தெளிந்த நெய்க்கீற்றுகளைக் குடிக்கப் போவதால், பசியோ, தாகமோ உன்னைப் பீடிக்காது. உன் சக்தியும் குன்றாது. நாங்கள் உனக்குத் தரும் இந்த வரத்தின் விளைவால், தேவர்களின் தேவனான நாராயணன், எங்களிடம் நிறைவடைந்து, உன்னை இங்கிருந்து பிரம்மலோகத்திற்குக் கொண்டு செல்வான்” என்றார்கள்.(25)மன்னனுக்கு இந்த வரங்களை அளித்த பிறகு, மன்னனுக்கு இவ்வரங்களை அளித்த தேவலோகவாசிகளும், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்த முனிவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றனர்.(26) அப்போது அந்த வசுவானவன், ஓ! பாரதா, அண்டத்தைப் படைத்தவனைத் துதிக்கத் தொடங்கி, பழங்காலத்தில் நாராயணனின் வாயில் இருந்து வெளிவந்த புனித மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டிருந்தான்[3].(27) அம்மன்னன் பூமியின் குழிக்குள் வசித்துவந்தாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகளில் செய்யப்படும் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்கள் அனைவரின் தலைவனான அந்த ஹரியை வழிபட்டு வந்தான்.(28) ஹரி என்றும் அழைக்கப்படும் நாராயணன், அந்தத் துதிகளின் விளைவால், நிறைவடைந்து, தன்னையே ஒரே புகலிடமாக எண்ணி தன்னையே முழுமையாகச் சார்ந்திருந்தவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான அவனிடம் உயர்ந்த நிறைவையடைந்தான்.(29)அப்போது, வரங்களை அளிப்பவனான சிறப்புமிக்க விஷ்ணு, பணியாளனாகத் தன்னிடம் காத்திருந்தவனும், பறவைகளில் முதன்மையானவனும், பெரும் வேகம் கொண்டவனுமான கருடனிடம் இந்த இனிய இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(30) “ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. அற ஆன்மா கொண்டவனாகவும், கடும் நோன்புகளைக் கொண்டவனாகவும், வசு என்ற பெயரில் ஒரு பெரும் மன்னன் இருக்கிறான். பிராமணர்களின் கோபத்தால் அவன் பூமியின் குழிக்குள் வீழ்ந்திருக்கிறான்.(31) பிராமணர்கள் (தங்கள் சாபம் பலித்திருப்பதால்) போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டு இருக்கின்றனர். நீ இப்போது அந்த மன்னனிடம் செல்வாயாக.(32) ஓ! கருடா, பூமியின் குழிக்குள் இப்போது வசித்து வருபவனும், வானத்தில் பறக்க முடியாதவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான அந்த உபரிசரனிடம் என் ஆணையின் பேரில் சென்று, தாமதமில்லாமல் அவனை உயர்ந்த ஆகாயத்திற்குக் கொண்டு வருவாயாக” என்றான் {விஷ்ணு}.(33)

விஷ்ணுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தன் சிறகுகளை விரித்து, காற்றின் வேகத்தில் விரைந்து, மன்னன் வசு வாழ்ந்துவந்த பூமியின் குழிக்குள் நுழைந்தான்.(34) திடீரென அந்த வினதையின் மகன் {கருடன்}, அம்மன்னனைத் தூக்கிக் கொண்டு வானத்தில் உயரப் பறந்து, அங்கேயே தன் அலகுகளில் இருந்து மன்னனை விடுவித்தான்.(35) அந்தக் கணத்தில் மீண்டும் தன் தேவ வடிவத்தை அடைந்த மன்னன் உபரிசரன், பிரம்மலோகத்திற்குள் மீண்டும் நுழைந்தான்.(36) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியிலேயே அந்தப் பெரும் மன்னன் பேச்சின் களங்கத்திற்காகப் பிராமணர்களின் சாபத்தின் மூலம் முதலில் விழுந்து, பெருந்தேவனின் (விஷ்ணுவின்) ஆணையின் பேரில் மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(37) அனைத்திலும் முதன்மையானவனும், பலமிக்கவனுமான தலைவன் ஹரியை மட்டுமே அவன் {உபரிசரன்} அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} வழிபட்டு வந்தான். இந்த அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டின் காரணமாகத்தான் அம்மன்னன், பிராமணர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட சாபத்தில் இருந்து தப்புவதிலும், பிரம்மனின் பேரின்ப உலகத்தை மீண்டும் அடைவதிலும் மிக விரைவாக வென்றான்”.(38)

பீஷ்மர் தொடர்ந்தார், “பிரம்மனின் ஆன்ம மகன்களின் தோற்றம் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் எவ்வாறு வெண்தீவிற்கு {ஸ்வேதத்வீபத்திற்குச்} சென்றார் என்பதை நான் இப்போது சொல்லப் போகிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பாயாக”.(39)

நாராயணத் துதி! – சாந்திபர்வம் பகுதி – 339-நாராயணனைக் காணச் சென்ற நாரதர்; நாரதர் சொன்ன நாராயணத் துதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்றழைக்கப்படும் பரந்த ஆட்சிப்பகுதியை அடைந்த சிறப்புமிக்க முனிவர் {நாரதர்}, (நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னது போன்ற) சந்திர காந்தியைக் கொண்ட அதே வெண்மனிதர்களைக் கண்டனர்.(1) நாராயணனைக் காண விரும்பிய அவர், மிகக் கடினமான நோன்புகளை நோற்றபடியே, புனிதமான மந்திரங்களை அமைதியாக உரைப்பதில் அமைதியாகவும், கவனமாகவும் ஈடுபட்டு அங்கே வசிக்கத் தொடங்கினார்.(2) குவிந்த மனத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர், கரங்களை உயர்த்தி, யோகத்தில் நின்றபடி, குணங்கள் கொண்ட மற்றும் குணங்கள் அனைத்தும் அற்ற ஆன்மாவான {சகுண மற்றும் நிர்க்குண பரமாத்மாவான} அண்டத்தின் தலைவனிடம் பின்வரும் பாடலைப் பாடினார்.(3)

நாரதர், “ஓ! தேவர்களின் தேவா {தேவதேவேசனே}, ஓ! செயல்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனே {நிஷ்கிரியனே}, குணங்கள் அற்றவனே {நிர்க்குணனே}, உலகங்கள் அனைத்திற்கும் சாட்சியாக இருப்பவனே {லோகஸாக்ஷியே}, க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுபவனே {க்ஷேத்ரஜ்ஞனே}, அனைத்திலும் முதன்மையானவனே {புருஷோத்தமனே}, எல்லையற்றவனே {அநந்தனே}, புருஷன் என்றழைக்கப்படுபவனே {புருஷனே}, பெரும்புருஷனே {மஹாபுருஷனே}, புருஷர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {புருஷோத்தமனே}, முக்குணங்களின் ஆன்மாவானவனே {த்ரிகுணனே}, முதன்மையானவன் என்று அழைக்கப்படுபவனே {பிரதாநனே}, அமுதமாக இருப்பவனே {அம்ருதனே}, இறப்பற்றவன் என்று அழைக்கப்படுபவனே {அம்ருதாக்யனே}, அனந்தன் (சேஷன்) என்றழைக்கப்படுபவனே {அநந்தாக்யனே}, வெளியாக {ஆகாயமாக} இருப்பவனே {வியோமனே}, தொடக்கமற்றவனே {அம்ருதாத்மாவே}, வெளிப்பட்டும், வெளிப்படாமலும், இருந்தும், இல்லாமலும் இருப்பவனே {ஸதஸத்வ்யக்தாவ்யக்தனே}, வாய்மையின் இல்லமாக இருப்பவனே {ருத்தாமனே}, தேவர்களில் முதல்வனே {அதிதேவனே} (நாராயணனே),

செல்வங்களை (அல்லது செயல்களின் கனிகளை) அளிப்பவனே {வஸ்பிரதனே}, தக்ஷன் மற்றும் படைப்பின் தலைவர்கள் பிறரோடு அடையாளங்காணப் படுபவனே {பிரஜாபதியே}, அஸ்வதம் {அரசமரம்} மற்றும் பெரும் மரங்களாக இருப்பவனே {ஸுப்ரஜாபதியே}, நான்கு தலை பிரம்மனே {வநஸ்பதியே}, படைக்கப்பட்ட பொருட்கள் அடைதிலும் தலைவனே {மஹாபிரஜாபதியே}. வாக்கின் தலைவனே {ஊர்ஜஸ்பதியே}, அண்டத்தின் (அல்லது இந்திரனின்) தலைவனே {வாஸ்பதியே}, நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மாவே {ஜகத்பதியே}, சூரியனாக இருப்பவனே {மநஸ்பதியே}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சாக இருப்பவனே {திவஸ்பதியே}, நீர்நிலைகளின் தலைவனே (வருணனே) {மருத்பதியே}, பேரரசனே {ஸலிலபதியே}, அல்லது மன்னனோடு அடையாளங்காணப்படுபவனே {பிருதிவீபதியே}, திசைப்புள்ளிகளைச் சார்ந்த லோகபாலர்களோடு அடையாளம் காணப்படுபவனே {திக்பதியே}, இறுதி அழிவின் போது அண்டத்தின் புகலிடமாக இருப்பவனே {பூர்வநிவாஸனே}, வெளிப்படாதிருப்பவனே {குஹ்யனே},

பிரம்மனுக்கு வேதங்களைக் கொடுத்தவனே {பிரம்மபுரோஹிதனே}, வேள்விகளோடு அடையாளம் காணப்படுபவனே {பிரம்மகாயிகனே}, உடல்களின் துணையுடன் பிராமணர்களால் அடையப்படும் வேத கல்வியும், தேவர்களின் நால்வகைக் கோட்பாடுகளோடு அடையாளம் காணப்படுபவனே {ராஜகனே}, நான்கு வர்ணங்களாக இருப்பவனே {சாதுர்மஹராஜிகனே}, பிரகாசம் கொண்டவனே {ஆபாஸுரனே}, பெரும் பிரகாசம் கொண்டவனே {மஹாபாஸுரனே}, காயத்ரி மற்றும் பிற புனித மந்திரங்களுடன் ஏழு பெரும் வேத காணிக்கைகளை ஏற்பவனே {சப்தமஹாபாகனே}, யமனே {யாம்யனே}, சித்திரகுப்தனும், யமனின் தொண்டர்களாக ஆனவனே {மஹாயாம்யனே}, யமனின் மனைவியே {ஸம்ஜ்ஞாஸம்ஜ்ஞனே}, துஷிதன் என்றழைக்கப்படும் தேவ வகையைச் சேர்ந்தவனே {துஷிதனே}, மஹா துஷிதன் என்றழைக்கப்படும் வேறு தேவ வகையைச் சேர்ந்தவனே {மஹாதுஷிதனே}, காலனாக இருப்பவனே {பிரமர்த்தநனே}, ஆசையாகவும், காலனுக்குத் துணை புரிய படைக்கப்படும் நோய்கள் அனைத்தாகவும் {பரிநிர்மிதனே} இருப்பவனே, உடல்நலமாகவும், நோயில் இருந்துவிடுபட்ட நிலையாகவும் {அபரிநிர்மிதனே} இருப்பவனே, ஆசைகள் மற்றும் விருப்பங்களுக்கு உட்படுபவனே {வசவர்த்தினே}, ஆசைகள் மற்றும் விருப்பங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனே {அவசவர்த்தினே}, பல்வேறு இனங்களில், வடிவங்களில் எல்லையில்லாமல் வெளிப்படுபவனே {அபரிமிதனே}, தண்டிக்கப்படுபவனே {வசவர்த்தினே}, தண்டிப்பவனே {அவசவர்த்தினே},

(அக்னி ஹோத்ரம் முதலிய) சிறு வேள்விகளாக இருப்பவனே {யஜ்ஞனே}, (பிரம்ம வேள்வி முதலிய) பெரும் வேள்விகளாக இருப்பவனே {மஹாயஜ்ஞனே}, ரித்விஜர்களாக இருப்பவனே {அஸம்யஜ்ஞனே}, வேள்விகள் அனைத்தின் தோற்றமாக (வேதங்களாக) இருப்பவனே {யஜ்ஞஸம்பவனே}, நெருப்பாக இருப்பவனே {யஜ்ஞயோநியே}, {யஜ்ஞகர்ப்பனே} வேள்விகள் அனைத்தின் இதயமாக (மந்திரங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்படும் ஸ்லோகங்களாக) இருப்பவனே {யஜ்ஞஹ்ருதயனே}}, வேள்விகளில் பாடப்படும் பொருளாக இருப்பவனே {யஜ்ஞஸ்துதனே}, வேள்வி காணிக்கைகளின் பங்குகளை எடுத்துக் கொள்பவனே {யஜ்ஞபாகஹரனே}, ஐந்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவனே {பஞ்சயஜ்ஞனே}, (பகல், இரவு, மாதம், பருவகாலங்கள், வருடம் என்ற) ஐந்து காலப்பிரிவுகளை, அல்லது காலப்பகுதிகளை உண்டாக்குபவனே {பஞ்சகாலகர்த்ருபதியே}, பஞ்சராத்ரம் என்றழைக்கப்படும் சாத்திரங்களைத் தவிர வேறு எதனாலும் புரிந்துகொள்ளப்பட முடியாதவனே {பஞ்சராத்ரிகனே}, எதிலிருந்தும் சுருங்காதவனே {வைகுண்டனே}, வெல்லப்படமுடியாதவனே {அபராஜிதனே}, (உடற்கட்டு இல்லாமல்) மனமாக மட்டுமே இருப்பவனே {மானஸிகனே}, {நாவமிகனே} பெயரால் மட்டுமே அறியப்படுபவனே {நாமநாமிகனே},

தலைவன் பிரம்மனாகவே இருப்பவனே {பரஸ்வாமியே}, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நோன்புகள் மற்றும் நியமங்களை நிறைவு செய்தவனே {ஸுஸ்நாதனே}, (திரிதண்டம்தரித்த) அன்னப்பறவையாக இருப்பவனே {ஹம்சனே}, (ஒரே தண்டம் தரிக்கும்) பேரன்னப்பறவையாக இருப்பவனே {பரமஹம்சனே}, (தண்டமில்லாத) முதன்மையான அன்னப்பறவையாக இருப்பவனே {மஹாஹம்ஸனே}, {பரமஜ்ஞேயனே} வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவனாக இருப்பவனே {பரமயாஜ்ஞிகனே}, {சாங்கிய யோகமாக இருப்பவனே {ஸாங்க்யயோகனே}, சாங்கிய தத்துவத்தின் உடல்வடிவமாக இருப்பவனே {ஸாங்க்யமூர்த்தியே}, ஜீவன்கள் அனைத்திலும் வசிப்பவனே {அம்ருதேசயனே}, அனைவரின் இதயங்களிலும் வாழ்பவனே, ஒவ்வொரு புலனிலும் வசிப்பவனே {ஹிரண்யேசயனே}, பெருங்கடலின் நீரில் மிதப்பவனே, வேதங்களில் வாழ்பவனே {வேதேசயனே}, (அண்டம் உண்டாகும்போது முட்டையின் தோற்றத்தில்) தாமரையில் கிடப்பவனே {பத்மேசயனே}, அண்டத்தின் தலைவனே {தேவேசயனே}, வழிபாட்டாளர்களைக் காப்பதற்கு எங்கும் செல்லும் துருப்புகளைக் கொண்டவனே {விஷ்வக்ஸேநனே}, உன்னை வணங்குகிறேன்.

உயிரினங்கள் அனைத்துமாகப் பிறப்பவன் {ஜகதந்வயன்} நீயே. (அனைத்து உயிரினங்களையும் கொண்ட) அண்டத்தின் தோற்றுவாய் {ஜகத்ப்ரக்ருதி} நீயே. நெருப்பையே வாயாகக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் நீரில், குதிரைத் தலையுடன் வெளிப்பட்டுச் செல்லும் நெருப்பு {வடவாமுகாக்நி} நீயே. வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் புனிதமாக்கப்பட்ட நெய் {ஆகுதி} நீயே. (உடலின் நெருப்பு, அல்லது வெப்பத்தைத் தூண்டி, அதை வாழவும் வளரவும் செய்யும்) தேரோட்டி {ஸாரதி என்ற அக்நி} நீயே. வஷட் {வஷட்காரம்} நீயே. ஓம் ஏன்ற ஓரசை {ஓங்காரம்} நீயே. தவங்கள் நீயே. மனம் நீயே. சந்திரமாஸ் {சந்திரன்} நீயே. வேள்வி நெய்யைப் புனிதமாக்குபவன் ச்சக்ஷுராஜ்யம்} நீயே. சூரியன் நீயே. திசைகளின் நான்கு முக்கியப் புள்ளிகளில் நின்றிருக்கும் யானைகள் {திக்கஜம்} நீயே. திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுபவன் {திக்பாநு} நீயே. துணைத்திசைகள் அனைத்திற்கும் ஒளியூட்டுபவன் {விதிக்பாநு} நீயே.

குதிரை தலை கொண்டவன் {ஹயசிரஸ்} நீயே. ரிக் வேதத்தின் முதல் மூன்று மந்திரங்கள் {பிரதமத்ரிஸுபர்ணன்} நீயே. (பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற) பல்வேறு வகை மனிதர்களின் பாதுகாவலன் {வர்ணதரன்} நீயே. (கார்ஹபத்தியத்தின் தொடக்கத்தில் உள்ள) ஐந்து நெருப்புகள் பஞ்சாக்நி} நீயே. நாசி என்றழைக்கப்படும் வேள்வி நெருப்பை மூன்றுமுறை முடுக்கியவன் {திரிணாசிகேதன்} நீயே. (வேதங்களுடைய) ஆறு அங்கங்களின் புகலிடம் {ஷடங்கநிதாநன்} நீயே. வேள்விகள் மற்றும் பிற அறச் சடங்குகளில் சாமங்களைப் பாடுவதில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்கள் நீயே. பிராக்ஜோதிஷன் நீயே, முதல் சாமத்தைப் பாடுபவன் நீயே {ஜியேஷ்டஸாமகன்}. அதர்வசிரஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் உபநிஷத்தின் உடல்வடிவம் {அதர்வசிரஸ்} நீயே. (சூரிய, சக்தி, கணேச, சிவ மற்றும் விஷ்ணு வழிபாடு தொடர்புடைய) முதன்மையான ஐந்து சாத்திரங்களின் பொருள் {பஞ்சமஹாகல்பன்} நீயே.

நீரின் நுரையை மட்டுமே உண்டு வாழும் ஆசான் என்று அழைக்கப்படுபவன் {பேநபாசார்யன்} நீயே. வாலகில்யன் நீயே. யோகத்தில் இருந்து வீழாதவனின் உடல்வடிவம் {வைகாநஸன்} நீயே. சரியான தீர்மானம் அல்லது அறிவின் உடல்வடிவம் {அபக்நயோகனும், அபக்நபரிஸங்க்யாநனும்} நீயே. யுகங்களின் தொடக்கம் {யுகாதி} நீயே. யுகங்களின் நடுப்பகுதி {யுகமத்யன்} நீயே. அவற்றின் முடிவும் {யுகநித்நன்} நீயே. ஆகண்டலன் (இந்திரன்) நீயே. பிராசீனகர்ப்பனும், கௌசிகனும் நீயே. புருஷ்டுதன் நீயே. புருஹூதன் நீயே, அண்டத்தின் கைவினைஞன் நீயே. அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஷ்வகிருத்} நீயே. எல்லையற்ற அசைவுகளைக் கொண்டவன் {விஷ்வஜித்} நீயே. எல்லையில்லா உடல்களைக் கொண்டவன் {விஷ்வரூபன்} நீயே. முடிவில்லாதவன் {அநந்தகதி} நீயே, தொடக்கமில்லாதவன் {அநந்தபோகன்} நீயே, நடுவுநிலை இல்லாதவன் {அநாதி} நீயே. வெளிப்படாத நடுப்பகுதியைக் கொண்டவன் {அமத்யன்} நீயே.

வெளிப்படாத முடிவைக் கொண்டவன் {அவ்யக்தமத்யனும், அவ்யக்தநிதநனும்} நீயே. நோன்புகளை இல்லமாகக் கொண்டவன் {விரதாவாஸன்} நீயே. பெருங்கடலில் வசிப்பவன் {ஸமுத்ராதிவாஸன்} நீயே. புகழ், தவங்கள், தற்கட்டுப்பாடு, செழிப்பு, அறிவு, பெருஞ்சாதனைகள் மற்றும் அண்டத்திற்குரிய அனைத்தின் இல்லமாக இருப்பவன் {ய்யோவாஸனும், தபோவாஸனும், தமர்வாஸனும், லக்ஷ்ம்யாவாஸனும், வித்யாவாஸனும், கீர்த்யாவாஸனும், ஸ்ரீவாஸனும், ஸர்வவாஸனும்} நீயே. வாசுதேவன் நீயே. அனைத்து விருப்பங்களையும் அருள்பவன் {ஸர்வச்சந்தகன்} நீயே. ராமனைத் தன்தோள்களில் சுமந்த குரங்கு {ஹரிஹரயன்} நீயே. பெருங்குதிரை வேள்வி {ஹரிமேதன்} நீயே. பெரும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளைப் பங்காகப் பெறுபவன் {மஹாயஜ்ஞபாகஹரன்} நீயே. வரங்களையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அளிப்பவன் {வரப்ரதனும், ஸுகப்ரதனும், தனப்ரதனும்} நீயே. ஹரிக்கு அர்ப்பணிப்புள்ளவன் நீயே. புலனடக்கம் கொண்டவன் {ஹரிமேதன்} நீயே. நோன்புகளும், நியமங்களும் {யமனும், நியமனும்} நீயே. பேரழிவுகள் {கிருச்ரன்} நீயே, கடும் பேரழிவுகள் {அதிக்ருச்ரன்} நீயே, மிகக் கடும் பேரழிவுகளும் {மஹாக்ருச்ரன்} நீயே.

நோன்புகள் மற்றும் அற, பக்திச் சடங்குகளைச் செய்பவன் {நியமதரனும், நிவ்ருத்தப்ரதமனும்} நீயே. பிழைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் {நிவ்ருத்திதர்ம்பரவசகதன்} நீயே. பிரம்மச்சாரி {பிரவசநகதனே} நீயே. பிருசினியின் கருவறையில் பிறந்தவன் {பிருச்நிகர்ப்பப்ரவருததனே} நீயே. வேதசடங்குகள் மற்றும் செயல்கள் அனைத்தும் பிறப்பெடுத்த இடம் {பிரவ்ருத்தவேதவிக்ரியன்} நீயே. பிறப்பில்லாதவன் {அஜன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகதி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் கண்களைச் செலுத்துபவன் {நக்ராஹ்யன்} நீயே. புலன்களால் புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {அக்ஷயன்} நீயே. சிதைவுக்கு உள்ளாகாதவன் {அசலன்} நீயே. பெரும்பலம் கொண்டவன் {மஹாவிபூதி} நீயே. பார்க்கமுடியாத அளவுக்குப் பரந்த உடலைக் கொண்டவன் {மஹாத்ம்யசரீரன்} நீயே. புனிதமானவனும் {பவித்ரனும்}, மிகப் புனிதமானவனும் {மஹாபவித்ரனும்} நீயே. தங்கமயமானவன் {ஹிரண்யமயன்} நீயே.

பரந்தவன் {பிருஹத்} நீயே. தர்க்கம் அல்லது வாதத்தின் கருத்துக்கு அப்பாற்பட்டவன் {அப்தர்க்யன்} நீயே. அறிந்து கொள்ளப்பட முடியாதவன் {அவிஜ்ஞேயன்} நீயே. காரணங்களில் முதன்மையானவன் {பிரம்மாக்ரியன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் படைப்பவனும் {பிரஜஸர்க்ககரன்}, அவற்றை அழிப்பவனும் {பிரஜாநித்னகரன்} நீயே. பெரும் மாயசக்திகளைக் கொண்டவன் {மஹாமாயாதரன்} நீயே. சித்திரசிகண்டி என்றழைக்கப்படுபவன் நீயே. வரங்களை அளிப்பவன் {வரப்ரதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளின் பங்கை ஏற்பவன் {புரோடோசபாகஹரன்} நீயே. வேள்விகள் அனைத்தில் இருந்தும் தகுதியை அடைபவன் {கதாத்வரன்} நீயே.

ஐயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் {சிந்நத்ருஷ்ணன்} நீயே. எங்கும் நிறைந்தவன் {ஸர்வதோவ்ருத்தன்} நீயே. பிராமணனின் வடிவம் கொண்டவன் {பிராம்மணரூபன்} நீயே. பிராமணர்களிடம் அன்பு கொண்டவன் {பிராம்மணபிரியன்} நீயே. அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஷ்வமூர்த்தி} நீயே. மிகப் பரந்த வடிவைக் கொண்டவன் {மஹாமூர்த்தி} நீயே. நண்பர்களில் பெரியவன் {பாந்தவன்} நீயே. வழிபாட்டாளர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவன் {பக்தவத்ஸலன்} நீயே. பிராமணர்களின் பெருந்தேவன் {பிராம்மண்யதேவன்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட சீடன் நானே. நான் உன்னைக் காண விரும்புகிறேன். விடுதலையின் வடிவில் இருக்கும் {நிர்வகல்பகஜ்ஞானத்தின் பொருட்டு} உன்னை நான் வணங்குகிறேன்” {என்று வேண்டினார் நாரதர்}.(4)

நோய் நீக்கும் புராணம்! – சாந்திபர்வம் பகுதி – 340-நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாராயாணன்; நாரதருக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; தன் இயல்பையும், தனது அவதாரங்களையும் நாரதருக்கு எடுத்துச் சொன்ன நாராயணன்; பிரம்மன் காணாத நாராயணனின் வடிவத்தைக் கண்ட நாரதர்; நாராயணீயத்தின் மகிமையை உரைத்த பீஷ்மர்; படிப்பதாலும், கேட்பதாலும், நோய் நீங்கும் பலனைத் தரும் புராணம்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பிறர் அறியாத பெயர்களால் பாடப்பட்டவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான தெய்வீக நாராயணன், தவசி நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(1) அவனது வடிவம் சந்திரனை விடத் தூய்மையானதாகவும், சில தன்மைகளில் சந்திரனில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தது. அவன் சுடர்மிக்க நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். அந்தப் பலமிக்கத் தலைவன் விஷ்டி என்ற வடிவத்தில் இருந்தான்.(2) சில தன்மைகளில் கிளியின் இறகுகளுக்கு ஒப்பானவனாகவும், சில தன்மைகளில் தூய படிகத் திரளுக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் மை மலைக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் தூய்மையான தங்கத் திரளுக்கு ஒப்பாகவும் அவன் இருந்தான்.(3) அவனது நிறம் முதலில் அமையும் பவளத்திற்கு ஒப்பானதாகவும், வெண்மையாகவும் இருந்தது. சில தன்மைகளில் அந்த நிறம் தங்கவண்ணமாகவும், சில தன்மைகளில் வைடூரியத்திற்கு ஒப்பாகவும் இருந்தது.(4) சில தன்மைகளில் நீலவைடூரிய வண்ணத்திற்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் இந்திரநீலக்கல்லுக்கு ஒப்பாகவும் இருந்தது. சில தன்மைகளில் மயில்கழுத்தின் வண்ணத்திற்கும், சிலவற்றில் முத்து மாலைக்கும் ஒப்பானதாக இருந்தது.(5)

அந்த நித்திய தேவன், தன் மேனியில் பல்வேறு வகைகளிலான இந்த வண்ணங்களைச் சுமந்தபடி நாரதரின் முன்பு தோன்றினான். ஆயிரங்கண்களைக் கொண்டவனாகவும், பேரழகுவாய்ந்தவனாகவும் அவன் இருந்தான். நூறு தலைகளையும், நூறு கால்களையும் கொண்டிருந்தான்.(6) ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களைக் கொண்டிருந்தான். இருப்பினும் அவன் மனத்திற்கு முழுமையாகப் புலப்படாதவனாகவே தோன்றினான். அவனது ஒரு வாயால் ஓம் என்ற ஓரசையையும், ஓம்-மைத்தொடர்ந்து காயத்ரியையும் {காயத்ரி மந்திரத்தையும்} சொன்னான்.(7) மனத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைந்திருந்தவனும், ஹரி மற்றும் நாராயணன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவனுமான அந்தப் பெருந்தேவன், நான்கு வேதங்களில் அரண்யகம் என்ற பெயரில்அறியப்பட்ட பல மந்திரங்களைச் சொன்னான்.(8) தேவர்கள் அனைவரின் தலைவனும், வேள்விகளில் துதிக்கப்படுபவனுமான அந்தப் பெருந்தேவன், தன் கரங்களில் ஒரு வேள்வி பீடத்தையும், ஒரு கமண்டலுவையும், சில வெண் ரத்தினங்களையும், பாதணிகள் இரண்டையும், தர்ப்பைப் புற்கட்டு ஒன்றையும், ஒரு மான் தோலையும், பற்குச்சி ஒன்றையும், சுடர்மிக்கச் சிறு நெருப்பையும் கொண்டிருந்தான்[1].(9) உற்சாகம் மிக்க ஆன்மா கொண்டவரும், மறுபிறப்பாளரும், வாக்கைக் கட்டுப்படுத்தியவருமான நாரதர், அந்தப் பெருந்தேவனை வணங்கித் துதித்தார்.(10) அவ்வாறு மதிப்புடன் தலைவணங்கி நின்றவரிடம் {நாரதரிடம்}, சிதைவறியாதவனும், தேவர்கள் அனைவரிலும் முதல்வனுமான அவன் {நாராயணன்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(11)அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “பெரும் முனிவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர் என்னைக் காண்பதற்காக இந்த ஆட்சிப்பகுதிக்கு வந்தனர்.(12) எனினும், அவர்களால் தங்கள் விருப்பங்களைக் கனியச் செய்ய இயலவில்லை. தங்கள் மொத்த இதயங்களுடன் என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்களைத் தவிர வேறு எவராலும் என்னைக் காண முடியாது. உம்மைப் பொறுத்தவரையில், என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் நிச்சயம் முதன்மையானவர் நீர்.(13) இந்த உடல்கள் நான் ஏற்கும் சிறந்த உடல்களாகும். ஓ! மறுபிறப்பாளரே, இவை தர்மனின் இல்லத்தில் பிறந்தன. நீர் எப்போதும் அவர்களை வணங்கி, அந்த வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட விதிகளுடன் கூடிய சடங்குகளைச் செய்வீராக.(14) ஓ! பிராமணரே, நீர் விரும்பும் வரங்களை என்னிடம் கேட்பீராக. இன்று நான் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறேன், இப்போது சிதைவிலும், அழிவிலும் இருந்து விடுபட்ட என அண்ட வடிவில் உமக்கு முன்பு தோன்றியிருக்கிறேன்” என்றான் {நாராயணன்}.(15)

நாரதர், “ஓ! புனிதமானவனே, இன்று உன் காட்சி கிடைக்கப்பெற்றதால், ஓ! தேவா, நான் நோற்று வந்த என் தவங்கள், தற்கட்டுப்பாடு, நோன்புகள் மற்றும் நியமங்கள் அனைத்தும் தாமதமில்லாமல் கனிந்திருப்பதாகக் கருதுகிறன்.(16) உண்மையில், ஓ! நித்திய தலைவா, இன்று உன்னை நீ எனக்கு வெளிப்படுத்தியதே நான் வேண்டிய உயர்ந்த வரமாகும். ஓ! புனிதமானவனே, அண்டத்தையே உன் கண்ணாகக் கொண்டவன் நீயே. சிங்கம் நீயே. உன் வடிவம் அனைத்துடனும் அடையாளங்காணத்தக்கது. ஓ! தலைவா, பலம் கொண்டவனான நீ பரந்தவனாகவும், எல்லையற்றவனாகவும் இருக்கிறாய்” என்றார்”.(17)

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு பரமேஷ்டியின் மகனான நாரதரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அந்தப் பெருந்தேவன் அந்தத் தவசியிடம் {நாரதரிடம்}, “ஓ! நாரதரே, செல்வீராக, தாமதிக்காதீர்.(18) சந்திர நிறத்தைக் கொண்ட இந்த வழிபாட்டாளர்கள் அனைவரும், அனைத்துப் புலன்களும் இல்லாதவர்கள், அவர்கள் எவ்வகை உணவை உண்டும் உயிர்வாழவில்லை. மேலும் அவர்கள் அனைவரும் விடுதலையடைந்தவர்களாவர் {முக்தியடைந்தவர்களாவர்}. என்னிடம் முழுமையாகக் குவிந்த மனங்களுடன் மக்கள் என்னைக் குறித்துச் சிந்திக்க {தியானிக்க} வேண்டும். அத்தகைய வழிபாட்டாளர்கள் எவ்வகைத் தடைகளையும் ஒருபோதும் எதிர்கொள்ளமாட்டார்கள்.(19) இந்த மனிதர்கள் அனைவரும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே இவர்கள் என்னிடம் முழு அர்ப்பணிப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் இருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னில் நுழையவும், என் சுயத்தில் கலக்கவும் தகுந்தவர்களாக இருக்கிறார்கள்.(20)

கண்களால் காணப்பட முடியாதவனும், தீண்டும் புலனால் தீண்டப்பட முடியாதவனும், மணப்புலனால் நுகரப்பட முடியாதவனும், சுவை புலனின் உணர்தலுக்கு அப்பாற்பட்டவனும்,(21) சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களால் தீண்டப்பட முடியாதவனும், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டத்தின் சாட்சியாக இருப்பவனும், மொத்த அண்டத்தின் ஆன்மாவாக விளக்கப்படுபவனும்,(22) படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் உடல் அழிவிலும் அழிக்கப்படாதவனும், பிறப்பற்றவனும், மாற்றமில்லாதவனும், நித்தியமானவனும், குணங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், பிரிக்கப்பட முடியாதவனும், முழுமையானவனும்,(23) இருபத்து நான்கு தத்துவங்களைக் கடந்து நிற்கும் இருபத்தைந்தாவதாகக் கருதப்படுபவனும், புருஷன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், செயலற்றவனும், ஞானத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக்கூடியவனும்,(24) மறுபிறப்பாளர்களில் முதன்மையானோர் நுழைந்து விடுதலை அடையும் இடமாக இருப்பவனும், நித்தியமான பரமாத்மாவுமான அவன் வாசுதேவன் என்ற பெயரால் அறியப்படுகிறான்.(25)

ஓ! நாரதரே, அந்தத் தேவனின் மகிமையையும், பலத்தையும் காண்பீராக. அவன் ஒருபோதும் நற்செயல்களாலோ, தீச்செயல்களாலோ தீண்டப்படுவதில்லை. சத்வ, ரஜஸ், தமஸ் என்பன (மூலமான) முக்குணங்களாகச் சொல்லப்படுகின்றன. இவை அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசித்துச் செயல்படுகின்றன.(27) க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் ஜீவாத்மாவானவன், இந்த முக்குணங்களின் செயல்பாட்டை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்கிறான். எனினும், அவன் அவற்றைக் கடந்தவனாகவும், அவற்றால் தீண்டப்பட முடியாதவனாகவும் இருக்கிறான். இந்தக் குணங்களில் இருந்து விடுபட்ட அவன் அவற்றை அனுபவிப்பவனாகவும், தாங்கிக் கொள்பவனாகவும் இருக்கிறான். அவற்றைத் தானே உண்டாக்கிய அவன் அவை அனைத்திற்கும் மேலானவனாவான்.(28)

ஓ! தெய்வீக முனிவரே, அண்டத்தின் புகலிடமான பூமியானது (அண்ட அழிவின் வேளையில்) நீரில் மறைந்து போகும். நீரானது ஒளியில் மறைந்து போகும், ஒளியானது காற்றில் மறைந்து போகும்.(29) காற்றானது வெளியில் மறைந்து போகும், வெளியானது மனத்தில் மறைந்து போகும். மனமான பெரும்பூதம், புலப்படாதவளான பிருகிருதியில் மறைந்து போகும். புலப்படாதவளான பிருகிருதி, ஓ! பிராமணரே, செயலற்ற புருஷனில் மறைந்து போவாள். புருஷனை விட உயர்ந்ததும், நித்தியமானதுமான வேறு எதுவும் கிடையாது.(31) அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதனவற்றிற்கு மத்தியில் நித்திய புருஷனான வாசுதேவனைத் தவிர வேறு எதுவும் மாற்றமில்லாதது இல்லை.(32) பெரும்பலம் கொண்ட வாசுதேவனே அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாவான். பூமி, காற்று, வெளி, நீர் , ஐந்தாவதாக ஒளி,(33) ஆகியனவே பெரும்பலம் கொண்ட அடிப்படை பூதங்களாகும். இவை ஒன்றுக்கொன்று கலந்து உடலென்று அழைக்கப்படும் வடிவை அடைகின்றன. ஓ! பிராமணரே, நுட்பமான ஆற்றலைக் கொண்டவனும், அனைவரின் கண்களுக்கும் புலப்படாதவனும், பலமிக்கவனுமான வாசுதேவன், உடல் என்றழைக்கப்படும் அந்த ஐந்து அடிப்படை பூதக் கலவையில் நுழைகிறான். அத்தகைய நுழைவே பிறப்பு என்றழைக்கப்படுகிறது, பிறவியடையும் அவன் அந்த உடலை அசையவும், செயல்படவும் வைக்கிறான்.(34) அடிப்படையான இந்த ஐந்து பூதங்களின் கலப்பு இல்லாமல் எந்த உடலும் அமையமுடியாது.(35)

மேலும், உடலுக்குள் ஜீவன் நுழையாமல், அதனுள் வசிக்கும் மனத்தால் இயங்கவோ, செயல்படவோ முடியாது. உடலுக்குள் நுழையும் பெரும்பலம் கொண்டவனே ஜீவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் சேஷன் மற்றும் சங்கர்ஷணன் என்ற வேறு பெயர்களாலும் அறியப்படுகிறான்.(36) எவன் தன் செயல்களின் மூலம் சங்கர்ஷணனிலிருந்து எழுகிறானோ அவன் சனத்குமாரன் என்றும், அண்ட அழிவு நேரும்போது எவனில் அனைத்து உயிரினங்களும் கலக்குமோ, எவன் அனைத்து உயிரினங்களின் மனமாக இருக்கிறானோ அவன் பிரத்யும்னன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.(37) அவனிடம் இருந்து காரணமாகவும், விளைவாகவும் இருக்கும் படைப்பாளன் எழுகிறான். இந்த இறுதியானவனிலிருது, அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டமனைத்தும் எழுகிறது. இவனே அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான். அவன் வேறு வகையில் ஈசானன் என்றும் அழைக்கப்படுகிறான், அவன் செயல்கள் அனைத்திலும் வெளிப்படுகிறான்.(38) க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுபவனும், குணங்களற்றவனும், சிறப்புமிக்கவனுமான வாசுதேவனே, ஜீவனாகப் பிறப்பெடுக்கும்போது பலமிக்கச் சங்கர்ஷணனாக அறியப்படுகிறான்.(39) சங்கரஷ்ணனிலிருந்து ‘மனமாகப் பிறப்பவன்’ என்றழைக்கப்படும் பிரத்யும்னன் எழுகிறான். பிரத்யும்னனிலிருந்து அநிருத்தன் எழுகிறான். அவன் அகங்காரமாகவும், ஈஸ்வரனாகவும் (உயர்ந்த தலைவனாகவும்) இருக்கிறான்.(40)

என்னிலிருந்தே அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட மொத்த அண்டமும் எழுகிறது. ஓ! நாரதரே, அழிவில்லாதவையும், அழிவடைபவையும், இருப்பவையும், இல்லாதவையும் என்னிலேயே எழுகின்றன.(41) என்னில் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோர் என்னில் நுழைந்து விடுதலையை {முக்தியை} அடைகின்றனர். நான் புருஷன் என்று அறியப்படுகிறேன். செயல்களற்ற நான் இருபத்தைந்தாவதாக {25வது தத்துவமாக} இருக்கிறேன்.(42) குணங்களைக் கடந்த நான் முழுமையானவனாகவும், பிரிக்கப்பட இயலாதவனாகவும் இருக்கிறேன். நான், முரண்பட்ட இரட்டைகளைக் கடந்தவனாகவும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனாகவும் இருக்கிறேன். ஓ! நாரதரே, இதைப் புரிந்து கொள்ள நீர் தவறுவீர். வடிவுடையவனாக என்னை நீர் காண்கிறீர். நான் விரும்பினால், ஒரு கணத்தில் என்னால் இந்த வடிவத்தை மறைக்க முடியும். நானே உயர்ந்த தலைவனாகவும் {ஈஸ்வரனாகவும்}, அண்டத்தின் ஆசானாகவும் இருக்கிறேன்.(43) ஓ! நாரதரே, எதை நானாக நீர் காண்கிறீரோ அது என் மாயை மட்டுமே ஆகும். நான் இப்போது படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் குணங்களைக் கொண்டவனாகக் காணப்படுகிறேன். நீர் என்னை அறிந்து கொள்ள இயலாதவராக இருக்கிறீர்.(44) நான் என் நான்கு வகை வடிவங்களை உமக்குச் சொல்லியிருக்கிறன். ஓ! நாரதரே, நானே செயல்படுபவன், நானே காரணன், நானே விளைவும் ஆவேன்.(45)

நான் உயிரினங்கள் அனைத்தின் மொத்த கூட்டுத் தொகையாக இருக்கிறேன். அனைத்து உயிரினங்களும் என்னையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன. ஜீவாத்மாவைக் கண்டதாக நீர் நினைக்க வேண்டாம்.(46) ஓ! பிராமணரே, அனைத்துப் பொருட்களிலும் நான் படரந்தூடுருவி இருக்கிறேன், அனைத்து உயிரினங்களின் உள்ளும் ஆன்மாவாக இருக்கிறேன். எனினும், உயிரினங்கள் அனைத்தின் உடல்களும் அழிக்கப்படும்போதும் நான் அழிவடைவதில்லை.(47) தவ வெற்றியை அடைந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட மனிதர்கள், ஓ! பெருந்தவசியே, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்கள் இரண்டிலிருந்தும் விடுபட்டவர்களாக என்னில் மொத்தமாக அர்ப்பணிப்புக் கொண்டு, எனக்குள் நுழைவதில் வெற்றியடைந்தார்கள்.(48) ஹிரண்யகர்ப்பன் என்றழைக்கப்படுபவனும், உலகின் தொடக்கமாக இருப்பவனும், நான்கு முகங்களைக் கொண்டவனும், நிருக்தத்தின் உதவியின்றிப் புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், பிரம்மன் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுபவனுமான நித்திய தேவன், என் காரியங்களைச் செய்வதிலேயே ஈடுபடுகிறான்.(49) என் கோபத்தில் பிறந்த தேவன் ருத்திரன், என் நெற்றியில் இருந்து உண்டானவனாவான். என் உடலின் வலப்பகுதியில் பதினோரு ருத்திரர்கள் (வலிமையுடன்) பெருகியிருப்பதைப் பார்பீராக.(50) என் உடலின் இடப்பக்கத்தில் பனிரெண்டு ஆதித்தியர்கள் இருக்கின்றனர். என் முன்னே இருக்கும் தேவர்களில் முதன்மையான எட்டு வசுக்களையும்,(51) என் பின்னே இருக்கும் தேவ மருத்துவர்களான நாஸத்யன் மற்றும் தஸ்ரன் ஆகிய இருவரையும் பார்ப்பீராக. பிரஜாபதிகள் அனைவரையும், ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்} என் உடலில் பார்ப்பீராக.(52)

வேதங்களையும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கான வேள்விகள் அனைத்தையும், அமுதத்தையும், மூலிகைகள், செடிகள், தவங்கள், நோன்புகள் மற்றும் பல்வேறு வகை நியமங்களையும் என்னில் காண்பீராக.(53) ஒன்று கலந்த உள்ளார்ந்த வடிவில் என்னில் மொத்தமாக வசிப்பவையும், வலிமையின் குறியீடுகளாக இருப்பவையும், தலைமையின் குணங்கள் என்று குறிப்பாக அழைக்கப்படுபவையுமான எட்டு குணங்களையும் என்னில் காண்பீராக. ஸ்ரீ, லட்சுமி, கீர்த்தி மற்றும் கூன்முதுகுடன் கூடிய பூமியையும் காண்பீராக.(54) வேதங்களின் தாயான தேவி சரஸ்வதி என்னில் வசிப்பதைக் காண்பீராக. ஓ! நாரதரே, ஆகாயத்தில் திரியும் ஒளிக்கோள்களில் முதன்மையானவனாகத் துருவனைக் காண்பீராக.(55) நீரின் கொள்ளிடங்களான பெருங்கடல்கள் அனைத்தையும், தடகாங்களையும், ஆறுகளையும் காண்பீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உள்ளார்ந்த வடிவங்களில் உள்ள பித்ருக்களில் முதன்மையான நால்வரையும் காண்பீராக. வடிவமற்றவையான (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்கள் என்னில் வசிப்பதையும் காண்பீராக.(56)

தேவர்களைக் கௌரவிக்கச் செய்யப்படும் செயல்களைவிடப் பித்ருக்களைக் கௌரவிக்கச் செய்யப்படும் செயல்கள் (தகுதியின் அடிப்படையில்) மேன்மையானவையாகும். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகிய இருவரின் பித்ருவான நான் (அவர்கள் இல்லாத காலத்திலிருந்தே) தொடக்கத்தில் இருந்தே இருக்கிறேன்.(57) குதிரைத் தலையாகி, மேற்கத்திய மற்றும் வடக்கத்திய பெருங்கடலில் திரிந்து, மந்திரங்களுடன் முறையாக ஊற்றப்படும் வேள்விக் காணிக்கைகளையும், மதிப்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் திடமான வேள்வி உணவுகளையும் உட்கொள்கிறேன்.(58) பழங்காலத்தில் வேள்விகளில் என்னைத் துதித்த பிரம்மனை நானே படைத்தேன். அதனால் அவனிடம் நிறைவடைந்த நான், அவனுக்குச் சிறந்த பல வரங்களை அளித்தேன்.(59) கல்பத்தின் தொடக்கத்தில் அவன் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும், அகங்காரம் இருப்புக்கு வரும் தொடக்கத்தின் விளைவால் பல்வேறு பெயர்கள் சூட்டப்படும் பல்வேறு பொருட்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தின் அரசுரிமையையும் அவனுக்குக் கிடைக்கும் என்று அவனிடம் சொன்னேன்.(60)

(உயிரினங்களின் பழக்க வழக்கத்திற்கு) அவனால் கொடுக்கப்படக்கூடியவையும், எவராலும் மீற முடியாதவையுமான எல்லைகளையும், வரைமுறைகளையும் அவனுக்குச் சொன்னேன். அவனிடம் (வேள்விகளில் முறையான செயல்களின் மூலம்) வேண்டுவோருக்கு வரங்கள் கொடுக்கக்கூடியவனாக அவன் இருப்பான் என்பதையும் அவனுக்குச் சொன்னேன்.(61) தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், பித்ருக்கள், படைப்பில் அமைந்திருக்கும் பல்வேறு உயிரினங்கள் அனைத்தினாலும் துதிக்கத்தக்கவனாக அவன் இருப்பான் என்பதையும் அவனுக்கு உறுதிகூறினேன்.(62) தேவர்களின் காரியத்தை நிறைவேற்ற நான் எப்போதும் வெளிப்படுவேன் என்பதையும், அக்காரியத்திற்காக அவன் ஒரு தந்தை தன் மகனை அழைப்பதைப் போல என்னை அழைப்பதையும் ஏற்பேன் என்பதையும் அவனுக்குப் புரிய வைத்தேன்.(63) நான் பிரம்மனிடம் நிறைவு கொண்டதன் விளைவால் அளவிலா சக்தி கொண்ட அவனுக்கு ஏற்புடைய பல உயர்ந்த வரங்களை அருளினேன். (மீண்டும்) நான் நிவிருத்தி சொல்லும் நடைமுறையைப் பின்பற்றினேன்.(64) உயர்ந்த நிவிருத்தியானது கடமைகள் மற்றும் செயல்கள் அனைத்தையும் அழிப்பதில் அடையாளம் காணப்படும். எனவே, நிவிருத்தியைப் பின்பற்றும் ஒருவன் மற்றான இன்பநிலையை அடைய வேண்டும்.(65) சாங்கிய தத்துவ உண்மைகளில் இருந்து பெறப்பட்ட தீர்மானமான முடிவுகளுடன் கூடிய கல்விமான்களான ஆசான்கள், ஞானப் பலத்தைக் கொண்ட கபிலரைப் போலவே, சூரியனின் பிரகாசத்திலும், யோகத்தின் குவிந்த நிலையிலும் வசிப்பவனாக என்னைக் குறித்துச் சொல்லியிருக்கின்றனர்.(66)

(வேத) சந்தங்களில் சிறப்புமிக்க ஹிரண்யகர்ப்பனால் மீண்டும் மீண்டும் பாடப்படுபவன் நானே. ஓ! பிராமணரே, யோக சாத்திரங்கள், யோகத்தில் திளைப்பவனாக என்னைக் குறித்துச் சொல்கின்றன.(67) நான் நித்தியமானவன். வெளிப்படும் ஒரு வடிவை ஏற்கும் நான், தற்போது சொர்க்கத்தில் வசித்து வருகிறேன். ஆயிரம் யுகங்களின் முடிவில் நான் மீண்டும் இந்த அண்டத்தை என்னுள் ஈர்த்துக் கொள்வேன்.(68) அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் என்னுள் ஈர்த்துக் கொண்ட பிறகு, ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு நான் நீடித்திருப்பேன்.(69) பல காலங்கள் கழிந்ததும், மீண்டும் என் ஞானத்தின் துணையுடன் நான் அண்டத்தைப் படைப்பேன். என்னுடைய நான்காவது வடிவமானது அழிவற்ற சேஷனை உண்டாக்குகிறது.(70) சேஷன் சங்கர்ஷணன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறன். சங்கர்ஷணன் பிரத்யும்னனை உண்டாக்குவான். பிரத்யும்னனிலிருந்து நான் அநிருத்தனாகப் பிறப்பெடுக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் (என்னை) படைத்துக் கொள்கிறேன்.(71) அநிருத்தனிலிருந்து பிரம்மன் உண்டாகிறான். பின்னவன் அநிருத்தனின் தொப்புலிலிருந்து பிறப்பை அடைகிறான். பிரம்மனிலிருந்து அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் எழுகின்றன.(72)

ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்திலும் படைப்பானது இவ்வழியிலேயே மீண்டும் மீண்டும் நேர்கிறது என்பதை அறிவாயாக. இவ்வுலகில் நேரும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனன் போலவே படைப்பும், அழிவும் அடுத்தடுத்து நேர்கின்றன.(73) மேலும் அளவிலா சக்தி கொண்ட காலமானது மறைந்த சூரியனை மீண்டும் கொண்டு வருவதைப் போலவே, பூமியானவள் நீருக்கடியில் மூழ்கும் போது, அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் பன்றியின் வடிவை ஏற்று, கடலெனும் கச்சையைக் கொண்ட பூமியை மீண்டும் தன் நிலையில் நிறுத்துவேன். அதன்பிறகு, பலத்தின் செருக்கால் நிறைந்த ஹிரண்யாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட திதியின் மகனைக் கொல்வேன்.(74,75) பிறகு தேவர்களுக்கு நன்மை செய்வதற்காகச் சிங்கமனிதன் {நரசிங்க} வடிவை ஏற்று, வேள்விகளை அழிப்பவனான திதியின் மகன் ஹிரண்யகசிபுவைக் கொல்வேன்.(76)

(பிரஹலாதனின் மகனான) விரோசனனுக்குப் பலி என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகன் பிறப்பான். அந்தப் பேரசுரன் தேவர்களாலும், அசுரர்களாலும், ராட்சசர்களாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பான். அவன் சக்ரனை அண்டத்தின் ஆட்சியுரிமையில் இருந்து தூக்கி வீசுவான்.(77) சசியின் தலைவனை முறியடித்த பிறகு, மூவுலகங்களின் அரசுரிமையையும் அவன் எடுத்துக் கொண்ட பிறகு, நான் கசியபரின் மூலமாக அதிதியின் கருவறையில் பனிரெண்டாவது ஆதித்தியனாகப் பிறப்பேன்.(78) ஓ! நாரதரே, அளவற்ற காந்தியைக் கொண்ட இந்திரனிடம் அதை (பலியிடம் இருந்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பறித்து) மீட்டளித்து, தேவர்களை அவர்களுக்குரிய இடங்களில் மீண்டும் நிறுவுவேன்.(79) தானவர்களில் முதன்மையான பலியைப் பொறுத்தவரையில், அவனைப் பாதாள உலகங்களில் வசிக்கச் செய்வேன்.(80)

திரேதா யுகத்தில் பிருகு குலத்தில் ராமனாக {பரசுராமராகப்} பிறந்து, பலத்திலும், உடமைகளிலும் செருக்கடைந்திருக்கும் க்ஷத்திரியர்களை அழிப்பேன்.(81) திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகத்தின் தொடக்கத்தில் நான் இக்ஷ்வாகு அரச குலத்தைச் சார்ந்த தரசரதனின் மகன் ராமனாக நான் பிறப்பெடுப்பேன்.(82) அந்நேரத்தில், ஏகதர், திவிதர் என்ற பெயர்களால் அழைக்கப்படும் பிரஜாபதியின் இரண்டு மகன்கள், தங்கள் தம்பியான திரிதருக்குச் செய்த தீங்கின் விளைவால், மனித வடிவின் அழகை இழந்து குரங்குகளாகப் பிறப்பை அடைவர்.(83) ஏகதர் மற்றும் திவிதரின் குலத்தில் பிறக்கும் குரங்குகள், பெரும்பலத்திலும், வலிமையிலும், சக்தியிலும் பெருகி, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைப் பெற்றிருப்பர். ஓ! மறுபிறப்பாளரே, அந்தக் குரங்குகள் அனைத்தும், தேவ காரியங்களை நிறைவேற்றுவதில் எனக்குக் கூட்டாளிகளாவர்.(84) பிறகு நான், ராட்சசர்களின் பயங்கரத் தலைவனும், புலஸ்திய குலத்தில் இழிந்தவனும், சீற்றமிக்கவனும், உலகங்கள் அனைத்துக்கும் முள்ளாக இருப்பவனுமான ராவணனை அவனது பிள்ளைகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்துக் கொல்வேன்.(85)

துவாபர மற்றும் கலியுகங்களின் சந்திக்கு நெருக்கமான காலத்தில், மதுரா நகரத்தில் பிறப்பை அடைந்து, கம்சனை அழிக்கும் நோக்கத்திற்காக நான் உலகில் மீண்டும் தோன்றுவேன்.(86) அங்கே தேவர்களுக்கு முட்களாக இருக்கும் தானவர்களில் எண்ணற்றவர்களைக் கொன்ற பிறகு, நான் துவாரகை நகரத்தின் குசஸ்தலியில் என் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வேன்.(87) அந்நகரத்தில் வசித்திருக்கும்போது, அதிதிக்குத் தீங்கை இழைத்தவனும், பூமியின் மகனுமான அசுரன் நரகனையும், முரன் மற்றும் பீடன் என்ற வேறு சில தானவர்களையும் கொல்வேன்.(88) மற்றொரு முதன்மையான தானவனான பிராக்ஜோதிஷத் தலைவனையும் கொன்று, அந்த இனிமை நிறைந்த நகரத்தில் இருந்து பல்வேறு வகைச் செல்வங்களைத் துவாரகைக்குக் கொண்டு வருவேன்.(89) {பேரனான அநிருத்தனுக்காகச் சோணிதபுரமென்கிற பாணாஸுரனுடைய நகரத்தை அடைந்து பெரும்போர் புரிவேன், [அப்பொழுது]} தானவன் பாணனுக்கு {பாணாசுரனுக்கு} நன்மை செய்வதில் பற்றுள்ளவர்களும், தங்கள் வழிபாட்டாளர்களுக்காக என்னுடன் போரிட முயல்பவர்களும், தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவர்களுமான மஹேஸ்வரனையும் {சிவனையும்}, மஹாசேனனையும் {முருகனையும்} நான் வெல்வேன்[2].(90) தானவன் பலியின் மகனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான பாணனை வென்று, அடுத்ததாகச் சௌபம் என்றழைக்கப்படும் தானவ நகரத்தில் வசிப்போர் அனைவரையும் அழிப்பேன்.(91) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, அடுத்ததாக நான், கர்க்கரின் சக்தியின் விளைவால் பெரும் வலிமை பெற்றிருக்கும் தானவனான கால யவனனைக் கொல்வேன்[3].(92)உலகின் பிற மன்னர்கள் அனைவருடனும் சச்சரவு செய்பவனும், ஜராசந்தன் என்ற பெயரைக் கொண்டவனுமாக ஒரு செருக்குமிக்க அசுரன் கிரிவ்ரஜத்தின் மன்னனாகத் தோன்றுவான். அவனது மரணம் என் புத்தியின் துணையால் வேறு ஒருவரால் ஏற்படுத்தப்படும்.(93) அடுத்ததாக நான், உலகின் மன்னர்கள் அனைவராலும் கப்பம் கட்டப்படுவதும், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனால் செய்யப்படுவதுமான வேள்வியில் சிசுபாலனைக் கொல்வேன். இந்தச் செயல்கள் சிலவற்றில் வாசவனின் மகனான அர்ஜுனன் மட்டுமே எனக்குத் துணைவனாக இருப்பான்.(94,95) யுதிஷ்டிரனையும், அவனது தம்பிகள் அனைவரையும் அவர்களது மூதாதையரின் நாட்டில் நிறுவுவேன். உலகிற்கு நன்மை செய்யும் பொருட்டு, நானும் அர்ஜுனனும் பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்களை எங்கள் பலத்தால் எரிக்கும்போதும், என்னையும் அவனையும் {அர்ஜுனனையும்} மக்கள் நாராயணன் என்றும், நரனென்றும் அழைப்பார்கள். எங்கள் விருப்பப்படி பூமியின் கனத்தைக் குறைத்தபிறகு, அனைத்தையும் தழுவும் என் சானத்தை நினைவுகூர்ந்து, முக்கியச் சாத்வதர்கள் அனைவரையும், எனக்கு மிகப் பிடித்த நகரமான துவாரகையையும் என்னுள் கலப்பேன்.(96-98)

நான்கு வடிவங்களைக் கொண்ட நான் இவ்வாறு பெரும் ஆற்றலைக் கொண்ட பல செயல்களைச் செய்து, என்னால் படைக்கப்பட்டதும், பிராமணர்கள் அனைவராலும் மதிக்கப்படுவதுமான பேரின்ப உலகங்களுக்குள் இறுதியாக நுழைவேன்.(99) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அன்னப்பறவை, ஆமை, மீன் எனத் தோன்றிய பிறகு நான் பன்றியாக வெளிப்பட்டு, பின்னர்ச் சிங்கமனிதனாகவும் {நரசிங்கமாகவும்}, குள்ளனாகவும் {வாமனனாகவும்}, பிருகு குலத்தின் ராமனாகவும், தசரதனின் மகன் ராமனாகவும், சாத்வதக் குலக்கொழுந்தான கிருஷ்ணனாகவும், இறுதியில் கல்கியாகவும் வெளிப்படுவேன்.(100) வேதங்களிலுள்ள திறன் தேர்வுகள் இவ்வுலகில் இருந்து மறையும்போது அவற்றை நான் மீண்டும் கொண்டுவருவேன். கிருத யுகத்தில், வேதங்களும், அவற்றின் திறன் தேர்வுகளும் என்னால் மீண்டும் படைக்கப்பட்டன.(101) அவை மீண்டும் மறைந்து போகின்றன, அல்லது புராணங்களில் இருந்து பகுதி அளவில் மட்டுமே கேட்கப்படுகின்றன. என் சிறப்புத் தோற்றங்கள் பலவும் உலகில் கடந்த காலச் செய்திகளாகிவிட்டன.(102) நான் தோன்றிய வடிவங்களில் உலகின் நன்மையை அடைந்து மீண்டும் நான் எனச் சொந்த இயல்புக்குத் திரும்பியிருக்கிறேன். ஓ! நாரதரே, உமது முழுமையான பக்தியின் விளைவால் நீர் இன்று காணும் இந்த எனது வடிவத்தைப் பிரம்மனே கூடக் கண்டதில்லை. ஓ! பிராமணரே, என்னில் முழுமையான பக்தி கொண்டிருக்கும் உமக்கு நான் இப்போது அனைத்தையும் சொல்லிவிட்டேன். ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் கடந்த காலத் தோற்றங்களையும், எதிர்காலத் தோற்றங்களையும், அவற்றின் புதிர்கள் அனைத்துடன் சேர்த்து உமக்குச் சொல்லிவிட்டேன்” என்றான் {நாராயணன்}.(104)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மாற்றமில்லாத அண்டந்தழுவிய வடிவைக் கொண்டவனும், புனிதமானவனுமான அந்தச் சிறப்புமிக்கத் தேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அப்போதே அங்கேயே மறைந்து போனான்.(105) பெருஞ்சக்தி கொண்ட நாரதர், வேண்டிய உயர்ந்த ஆதரவை அடைந்து, நரனையும், நாராயணனையும் காண பதரி என்றழைக்கப்படும் ஆசிரமத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றார்.(106) நான்கு வேதங்களுக்கு முற்றிலும் இணக்கமானதும், சாங்கிய யோகத்துடன் ஒத்திசைவதும், பஞ்சராத்ர சாத்திரங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுவதும், நாராயணனின் வாயாலேயே சொல்லப்பட்டதுமான இந்தப் பெரும் உபநிஷதத்தை, நாராயணனின் உதடுகளில் இருந்து தாம் கேட்டதுபோலவே, நாரதர் (தமது தந்தையான) பிரம்மனின் வசிப்பிடத்தில் கேட்கும் பலரின் முன்னிலையில் சரியாக அதே முறையில் மீண்டும் சொன்னார்” {என்றார் பீஷ்மர்}.(107,108)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நுண்ணறிவைக் கொண்ட நாராயணனின் மகிமையைச் சொல்லும் இந்த அற்புத உரையை, அனைத்துப் பொருட்களையும் படைத்தவரான பிரம்மன், நாரதரின் உதடுகளில் இருந்து கேட்டான் என்றால், இது குறித்து அவர் அறியாதவரா? (109) உலகங்கள் அனைத்தின் சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் எவ்வகையிலாவது பெரும் நாராயணனிடம் இருந்து வேறுபட்டவரா அல்லது தாழ்ந்தவரா? அளவற்ற சக்தியைக் கொண்ட நாராயணனின் பலத்தை அவர் எவ்வாறு அறியாமல் இருந்தார்?” என்று கேட்டான்.(110)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னர்களின் மன்னா, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெருங்கல்பங்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான படைப்புகளும் அழிவுகளும் ஏற்கனவே நேர்ந்து, கடந்த கால நிகழ்வுகள் ஆகிவிட்டன.(111) ஒவ்வொரு படைப்பின் தொடக்கத்திலும், பெரும் பலம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களைப் படைப்பவனுமான பிரம்மன் (நாராயணனால்) நினைக்கப்படுகிறார். ஓ! மன்னா, தேவர்கள் அனைவரிலும் முதன்மையான நாராயணன் தம்மைவிட மேம்பட்டவன் என்பதைப் பிரம்மா நன்கறிவார்.(112) நாராயணனே பரமாத்மா என்பதையும், அவனே உயர்ந்த தலைவன் {நியந்தா} என்பதையும், அவனே பிரம்மனையும் படைப்பவன் என்பதையும் அவன் அறிவான். பிரம்மனின் வசிப்பிடத்திற்கு வந்திருந்தவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவர் கூட்டத்திற்கே நாரதர், பழமையானதும், வேதங்களுக்கு இணக்கமானதுமான இந்தப் பழைய புராணத்தைச் சொன்னார். தேவன் சூரியன், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அந்த முனிவர்களிடம் இருந்து அந்தப் புராணத்தைக் கேட்டு, ஓ! மன்னா, தன் பரிவாரத்தில் தொடர்பவர்களும் தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோருமான அறுபத்தாறாயிரம் முனிவர்களுக்கு அதை மீண்டும் சொன்னான்.(113-11¬5)

உலகங்கள் அனைத்திற்கும் வெப்பத்தைக் கடத்தும் தேவனான சூரியன், தனக்கு முன்பு எப்போதும் பயணிப்பதற்காக (பிரம்மனால்) படைக்கப்பட்ட அவர்களுக்கு மீண்டும் அந்தப் புராணத்தைச் சொன்னான்.(116) ஓ! மகனே, சூரியனின் பரிவாரத்தைப் பின்தொடர்பவர்களான அந்த உயர் ஆன்ம முனிவர்களும், மேருவின் சாரலில் கூடும் தேவர்களுக்கு இந்தச் சிறந்த புராணத்தை மீண்டும் சொன்னார்கள்.(117) ஓ! மன்னர்களின் மன்னா, தவசிகளில் சிறந்தவரும், மறுபிறப்பாளருமான அசிதர், தேவர்களிடமிருந்து இந்தப் புராணத்தைக் கேட்டுப் பித்ருக்களுக்கு அதை மீண்டும் சொன்னார்.(118) ஓ! மகனே, முற்காலத்தில் இந்தப் புராணத்தை என் தந்தையான சந்தனு எனக்குச் சொன்னார். ஓ! பாரதா, என் தந்தையிடமிருந்து அதைக் கேட்ட நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(119) புராணம் என்றழைக்கப்படும் இந்தச் சிறந்த பழங்கதையைக் கேட்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் பரமாத்மாவைத் துதிக்கின்றனர்.(120)

ஓ! மன்னா, முனிவர்களுக்குச் சொந்தமானதும், இப்படி ஒருவருக்கொருவர் வழிவழியாகச் சொல்லப்படுவதுமான இந்தப் புராணத்தை, வாசுதேவனை வழிபடாத எவருக்கும் நீ சொல்லக்கூடாது.(121) ஓ! மன்னா, நீ என்னிடம் இருந்து கேட்டிருக்கும் இந்தப் புராணம் உண்மையில் வேறு நூறு புராணங்களின் சாரங்களைக் கொண்டதாகும்.(122) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலைக் கடைந்து அமுதத்தை உண்டாக்கினர். அதே போலவே, பழங்காலத்தில் ஒன்றுகூடிய பிராமணர்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கடைந்து, அமுதத்துக்கு ஒப்பான இந்தப் புராணத்தை உண்டாக்கினர்.(123) ஓர் ஓய்வான இடத்தில் குவிந்த கவனத்துடனும், நிறைந்த அர்ப்பணிப்புடனும் இந்தப் புராணத்தை அடிக்கடி படிப்பவனும், அடிக்கடி கேட்பவனும்,(124) வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு பெரிய தீவில், சந்திரனின் நிறத்தைக் கொண்ட சொர்க்கவாசியாவதில் வெல்கிறான். அத்தகைய ஒரு மனிதன் ஆயிரம் கதிர்களைக் கொண்ட நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறான் என்பதில் ஐயமில்லை.(125)

நோயாளி ஒருவன், இந்தப் புராணத்தைத் தொடக்கத்தில் இருந்து கேட்பதால் தன் நோயில் இருந்து விடுதலையடைகிறான். இந்தப் புராணத்தைப் படிக்கவோ, கேட்கவோ விரும்பும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான். அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளன், இதைப் படிப்பதினாலோ, கேட்பதினாலோ, அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டாளர்களுக்காக முன்பதிவு செய்யப்படும் உயர்ந்த கதியை அடைகிறான்.(126) ஓ! ஏகாதிபதி, அனைத்திலும் முதன்மையான அவனை நீயும் எப்போதும் துதித்து வழிபட வேண்டும். அவனே அனைத்து உயிரினங்களின் தந்தையும், தாயுமாக இருக்கிறான். மொத்த அண்டத்திலும் அவனே மதிப்புமிக்கப் பொருளாகிறான்.(127) ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, பிராமணர்களின் சிறப்புமிக்க நித்திய தேவனும், உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் உன்னிடம் நிறைவு கொள்ளட்டும்” {என்றார் பீஷ்மர்}”.(128)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, இந்தச் சிறந்த புராணத்தைக் கேட்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனும், அவனது தம்பிகள் அனைவரும் நாராயணனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோராகினர்.(129) ஓ! பாரதா, (அந்த நாளில் இருந்து) அவர்கள் அனைவரும் நாராயணனை அமைதியாகத் தியானிக்கும் பயிற்சியை மேற்கொண்டு, “சிறப்புமிக்கவனான அந்தப் புனிதமானவனுக்கே வெற்றி” என்ற வார்த்தைகளை அவனை மகிமைப்படுத்தும் வகையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.(130) மேலும், ஆசான்களில் சிறந்தவரும், தீவில் பிறந்தவரும் {துவைபாயனரும்}, தவங்களில் அர்ப்பணிப்புமிக்கவருமான கிருஷ்ணர் {வியாசர்}, அமைதியாக உரைக்கத்தகுந்த உயர்ந்த மந்திரமான “நாராயணா” என்ற சொல்லைச் சொல்லி பாடினார்.(131) அவர், எப்போதும் அமுதத்தின் வசிப்பிடமாக இருக்கும் பாற்கடலுக்கு ஆகாயத்தின் மூலம் பயணித்து, அங்கே அந்தப் பெருந்தேவனை வழிபட்டு, மீண்டும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(132)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “(பிரம்மனின் வசிப்பிடத்தில் கூடியிருந்த முனிவர் கூட்டத்திற்கு) நாரதரால் சொல்லப்பட்ட புராணத்தையே நான் இப்போது உனக்கு மீண்டும் சொன்னேன். இந்தப் புராணம், பழங்காலத்தில் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இறங்கி வந்திருக்கிறது. நான் முற்காலத்தில் இதை எனக்குத் திரும்பச் சொன்ன என் தந்தையிடம் இருந்து கேட்டேன்”.(133)

சூதர் {சௌதியானவர் சௌனகரிடம்} தொடர்ந்தார், “வைசம்பாயனர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அனைத்தையும் நான் இப்போது உமக்குச் சொன்னேன். வைசம்பாயனரின் விவரிப்பைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி தன் கடமைகள் அனைத்தையும் செய்தான்.(134) நீங்கள் அனைவரும் கடுந்தவங்களைச் செய்தவர்களாகவும், உயர்ந்தவையும், சிறந்தவையுமான பல நோன்புகளையும் நோற்பவர்களாகவும் இருக்கிறீர்கள். நைமிசம் என்ற பெயரில் அறியப்படும் இந்தப் புனிதமான காட்டில் வசிக்கும் நீங்கள் வேதங்கள் அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையாவர்கள் ஆவீர்கள்.(135) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் அனைவரும் சௌனகரின் இந்தப் பெரும் வேள்விக்கு வந்திருக்கிறீர்கள். சிறந்த வேள்விகளில் நீங்கள் அனைவரும், தெளிந்த நெய்யிலான ஆகுதிகளை மந்திரங்களின் துணையுடன் நெருப்புக்குள் முறையாக ஊற்றியும், அவற்றை நாராயணனுக்குக் காணிக்கையாக்கியும், நித்தியமானவனும், உயர்ந்த தலைவனுமான அவனையே வழிபட்டுத் துதிப்பீராக. என்னைப் பொறுத்தவரையில், நான் இந்தச் சிறந்த புராணத்தைப் பரம்பரைவழியாக முற்காலத்தில் என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்” {என்றார் சௌதி}.(136)

வியாசரின் நாராயணீயம்! – சாந்திபர்வம் பகுதி – 341-பிரம்மன் முதலிய தேவர்கள் தவமிருந்ததையும்; நாராயணன் அவர்களுக்கு வரமளித்ததையும், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி அறங்களை நாராயணன் பிரம்மனுக்குச் சொன்னதையும் தமது சீடர்களுக்குச் சொன்ன வியாசர்…

சௌனகர் {சௌதியிடம்}, “வேதங்களையும், அதன் அங்கங்களையும் முழுமையாக அறிந்தவனும், சிறப்புமிக்கத் தேவனும், பலமிக்கவனுமான நாராயணன், ஒரே நேரத்தில் வேள்விகளைச் செய்பவனாகவும், அவற்றை அனுபவிப்பவனாகவும் எவ்வாறு இருக்கிறான்?(1) மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன், (தவிர்க்கும் தன்மையான) நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுகிறான். உண்மையில், நிவிருத்தியின் கடமைகளை அந்தப் பலமிக்கப் புனிதமானவனே விதித்திருக்கிறான்.(2) அவ்வாறிருக்கையில், பிரவிருத்தி அறத்தின் மூலம் விளையும் வேள்விப் பங்குகளைத் தேவர்கள் பலர் ஏன் எடுத்துக் கொள்கின்றனர்? தவிர்க்கும் அறத்தின் விதிகளைச் சிலர் பின்பற்றுகின்றனர், அவன் ஏன் தன் மனோநிலைக்கு முரணாகச் சிலரை படைத்திருக்கிறான்?(3) ஓ! சூதா, இந்த எங்கள் ஐயங்களை விலக்குவாயாக. இந்த ஐயம் நித்தியமானதாகவும், பெரும்புதிர் தொடர்புடையதாகவும் தெரிகிறது. (பிற) சாத்திரங்களுக்கு இணக்கமானவையும், நாராயணன் குறித்தவையுமான கதைகள் அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய்” என்றார் {சௌனகர்}.(4)

சௌதி, “ஓ! சிறந்த சௌனகரே, வியாசரின் சீடரான வைசம்பாயனர், இக்காரியம் குறித்து ஜனமேஜயனால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னவற்றை உமக்குச் சொல்கிறேன்.(5) உயிரினங்கள் அனைத்தின் உள்ளார்ந்த ஆன்மாவாக இருப்பவனான நாராயணனின் மகிமையைக் கேட்டவனும், நுண்ணறிவும், ஞானமும் மிக்கவனுமான ஜனமேஜயன் சரியாக இக்காரியங்களைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்டான்.(6)

ஜனமேஜயன் {வைசம்பாயனர்}, “பிரம்மன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியோருடன் கூடிய மொத்த உலகங்களும், செழிப்பை உண்டாக்குபவையாகச் சொல்லப்படும் செயல்களுடன் ஆழமான தொடர்புடையவையாகத் தெரிகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, இருப்பை இல்லாமலாக்குவதும், உயர்ந்த நிலையுமான விடுதலை {முக்தி} நிலையானது உம்மால் சொல்லப்பட்டது. தகுதி, தகுதியின்மை ஆகிய இரண்டுமற்று விடுதலையடைபவர்கள் {முக்தியடைபவர்கள்}, ஆயிரம் கதிர்களைக் கொண்ட பெருந்தேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள் என நாம் கேட்கிறோம்.(8) ஓ! பிராமணரே, நித்தியமான விடுதலை அறத்தை {மோக்ஷ தர்மத்தைப்} பயில்வது மிகக் கடினமானதாகத் தெரிகிறது. இதிலிருந்து மாறுபடும் தேவர்கள் அனைவரும், வேள்வி நெருப்புகளிலும், இதே வழிமுறைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் பிற காணிக்கைகளிலும், மந்திரங்களுடன் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள்.(9) மேலும், பிரம்மன், ருத்திரன், வலனைக் கொன்றவனான பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, சூரியன், விண்மீன்களின் தலைவன் (சத்திரமாஸ்), காற்றின் தேவன் {வாயு}, நெருப்பின் தேவன் {அக்னி}, நீர்நிலைகளின் தேவன் {வருணன்}, (உயிரோட்டமான) அளவற்ற வெளி {ஆகாயம்}, (விழிப்புணர்வு கொண்ட) அண்டம், எஞ்சிய சொர்க்கவாசிகள் ஆகிய இவர்கள், தன் முயற்சியால் கொண்டுவரப்படும் விழிப்புடன் கூடிய இருப்பை அழிக்கும் வழிமுறையை அடைவது குறித்து அறியாதவர்களாக இருப்பதாகத் தெரிகிறது[1].(10,11) எனவே, அழிவற்ற, மாற்றமில்லாத பாதையை அவர்கள் அடையவில்லை என்பது உறுதியானதாகும். அந்தப் பாதையைவிட்டு விலகி, காலத்தால் அளக்கப்படும் விழிப்புடன் கூடிய இருப்புநிலைக்கு வழிவகுக்கும் பிரவிருத்தி அறத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.(12) உண்மையில், நிலையற்ற வெகுமதிகளைக் கொடுக்கும் செயல்களுடன் பற்றுடைய இது பெருங்களங்கமாகும். ஓ! மறுபிறப்பாளரே, இந்த ஐயம் என் இதயத்தில் குத்திய வாளாக {தைத்த முள்ளாக} இருக்கிறது. இதுகுறித்த பழைய கதைகளைச் சொல்லி அஃதை அகற்றுவீராக.(13) ஓ! மறுபிறப்பாளரே, பல்வேறு வகை வேள்விகளில் மந்திரங்களின் துணையுடன் தேவர்களுக்கு அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளில் அவர்கள் தங்களுக்குரிய பங்குகளை எடுத்துக் கொள்வதாக எக்காரணத்தினால் சொல்லப்படுகிறது? மேலும் தேவர்கள் வேள்விகளில் ஏன் துதிக்கப்படுகின்றனர்?(14) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பிறர் செய்யும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்கை எடுத்துக் கொள்ளும் அவர்கள் யாருக்காகப் பெரும் வேள்விகளைச் செய்கிறார்கள்?” என்று கேட்டான்.(15)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி ஓர் ஆழ்ந்த புதிர் தொடர்புடையதாகும். தவங்களைச் செய்யாதவனும், புராணங்களை அறியாதவனுமான எந்த மனிதனாலும் இதற்கு விரைவாகப் பதிலளிக்க முடியாது.(16) எனினும், வியாசர் என்று அழைக்கப்படுபவரும், தீவில் பிறந்தவரும், வேதங்களை வகுத்த பெரும் முனிவருமான எங்கள் ஆசான், முன்பொரு காலத்தில் எங்களால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னதை உனக்குச் சொல்கிறேன்.(17) சுமந்தர், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலர், நான்காவதாக {வைசம்பாயனனாகிய} நான், ஐந்தாவதாக உகர் ஆகியோர் சிறப்புமிக்க வியாசரின் சீடர்களாக இருந்தோம்.(18) எண்ணிக்கையில் ஐவராக இருந்த நாங்கள் தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளில் தூய்மை கொண்டவர்களாகவும், கோபத்தையும் எங்கள் புலன்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தோம். எங்கள் ஆசான் மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட வேதங்களை எங்களுக்குக் கற்பித்து வந்தார்.(19) ஒரு காலத்தில், மலைகளில் முதன்மையானதும், சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த இடமும், இனிமை நிறைந்ததுமான மேருவின் சாரலில் வேத கல்வியில் நாங்கள் ஈடுபட்டு வந்தபோது, நீ இன்று வெளிப்படுத்திய இதே ஐயம் எங்கள் மனங்களில் எழுந்தது.(20) எனவே, நாங்கள் இது குறித்து எங்கள் ஆசானிடம் கேட்டோம். எங்கள் ஆசான் சொன்ன பதிலை நான் கேட்டேன். ஓ! பாரதா, அந்தப் பதிலை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன்.(21)

அறியாமையால் ஏற்படும் அனைத்து வகை இருளையும் அகற்றுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(22) “உண்மையில் நான் மிகக் கடுமையான தவங்களைச் செய்திருக்கிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.(23) பாற்கடலின் கரைகளில் நான் வசித்திருந்தபோது, என் தவங்கள் மற்றும் புலன்களில் நான் கொண்டிருந்த கட்டுப்பாட்டின் விளைவால் நாராயணன் என்னிடம் நிறைவு கொண்டான். அந்தப் பெருந்தேவன் கொண்ட நிறைவின் விளைவால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் குறித்து முழுதுணரும் அறிவு என் மனத்தில் எழுந்தது.(24) உங்கள் மனங்களைக் கலக்கமடையச் செய்தும் இந்தப் பெரும் ஐயங்களைக் குறித்து முறையான வரிசையில் சொல்கிறேன் கேட்பீராக. ஞானக் கண் மூலம் நான் கல்பத்தின் தொடக்கத்தில் நேர்ந்தவை அனைத்தையும் கண்டேன்.(25) சாங்கியர்கள் மற்றும் யோகத்தை அறிந்தவர்கள் ஆகிய இருவரும் பரமாத்மா என்ற பெயரில் எவனை அழைக்கிறார்களோ, அவனே தன் செயல்களின் விளைவால் முதன்மையான புருஷனாகக் கருதப்படுகிறான். கல்விமான்களால் புலப்படாதது {அவ்யக்தம்} அல்லது பிரதானம் என்றழைக்கப்படும் பிரகிருதி அவனிலிருந்தே எழுகிறது.(26) பலமிக்கதான அந்தப் புலப்படாததிலிருந்தே உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்காக அநிருத்தன் என்றழைக்கப்படுபவன் எழுந்தான். அந்த அநிருத்தனே, உயிரினங்களுக்கு மத்தியில் பேரான்மா என்ற பெயரால் அறியப்படுகிறான்.(27) அந்த அநிருத்தனே புலப்படுபவனாகி {வியக்தனாகி}, பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தான். அனைத்து வகைச் சக்திகளையும் கொண்ட அநிருத்தனே, நனவுநிலை {அகங்காரம்} என்ற மற்றொரு பெயரால் அறியப்படுகிறான்.(28)

அந்த நனவுநிலையிலிருந்து {அகங்காரத்திலிருந்து} பூமி, காற்று, வெளி, நீர் மற்றும் ஐந்தாவதாக ஒளி என்ற ஐம்பெரும்பூதங்கள் எழுந்தன.(29) (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்களைப் படைத்த பிறகு அவன் அவற்றின் குணங்களைப் படைத்தான்[2]. பிறகு அவன் அந்தப் பெரும்பூதங்களைக் கலந்து உடல்கொண்ட பல்வேறு வடிவங்களைப் படைத்தான். அவர்களைச் சொல்கிறேன் கேட்பீராக.(31) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, உயர் ஆன்ம வசிஷ்டர், சுயம்புவான மனு ஆகிய எண்மர் பிருகிருதியின் தனிமங்களாக அறியப்பட வேண்டும். உலகங்கள் அனைத்தும் இவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(31) அப்போது, உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், உயிரினங்கள் அனைத்தின் வெற்றிக்காக அங்கங்கள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், அங்கங்களோடு கூடிய வேள்விகளையும் படைத்தான். பிருகிருதியின் இந்த எட்டுத் தனிமங்களில் இருந்தே இந்தப் பரந்த அண்டம் எழுந்தது.(32) பிறகு, கோபம் எனும் கோட்பாட்டில் இருந்து ருத்திரன் எழுந்தான். உயிர் கொண்ட அவன், தன்னைப் போன்ற இன்னும் பத்து பேரைப் படைத்தான். இந்தப் பதினோரு ருத்திரர்களும், விகார புருஷர்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.(33) ருத்திரர்கள், (எட்டு) பிரகிருதிகள், தெய்வீகமான பல்வேறு முனிவர்கள் ஆகியோர் உயிர் பெற்று, அண்டத்தைத் தாங்குவதற்காகவும், அதன் இயக்கத்தை நோக்கில் கொண்டும் பிரம்மனை அணுகினார்கள்.(34)பெரும்பாட்டனிடம் பேசிய அவர்கள், “ஓ! புனிதமானவரே, ஓ! பெரும்பலமிக்கவரே, நாங்கள் உம்மால் படைக்கப்பட்டோம். ஓ! பெரும்பாட்டனே, எங்களில் எவரெவர் எந்தெந்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக.(35) எந்தக் குறிப்பிட்ட காரியங்களைக் கண்காணிப்பதற்காக எந்த அதிகாரம் உம்மால் படைக்கப்பட்டிருக்கிறது? எங்களில் எவர், எந்த வகை நனவுநிலையை {அகங்காரத்தைக்} கொண்டு, இவற்றில் எந்த அதிகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்?(36) எங்கள் அதிகாரத்திற்குத் தக்கப்படி கடமைகளையாற்ற எங்கள் ஒவ்வொருவருக்கும் எந்தெந்த அளவுக்குப் பலம் விதிக்கப்பட்டிருக்கிறது?” {என்று கேட்டனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, பின்வரும் வழியில் அவர்களுக்கு மறுமொழி கூறினான்.(37)

பிரம்மன், “தேவர்களே, இக்காரியத்தைக் குறித்து என்னிடம் கேட்பதில் நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. உங்கள் கவனத்தில் உள்ள அதே காரியம் குறித்தே நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.(38) மூவுலகங்களும் எவ்வாறு தாங்கப்பட வேண்டும்? எவ்வாறு அதை முன்னெடுக்க வேண்டும்? உங்களுடைய பலமும், என்னுடைய பலமும் எவ்வாறு கதியை நோக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும்?(39) நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டு அகன்று, உலகத்தின் சாட்சியாகவும், இருப்பில் உள்ளவர்களில் முதன்மையானவனுமான அந்தப் புலப்படாதவனிடம் {அவ்யக்தனிடம்} செல்வோம். எது நமக்கான நன்மை என்பதை அவன் நமக்குச் சொல்வான்” என்றான்.(40)

இதன்பிறகு, அந்தத் தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி, பாற்கடலின் வடகரைக்குப் பிரம்மனுடன் சென்றனர்.(41) அங்கே வந்ததும் அவர்கள் வேதங்களில் பிரம்மன் அறிவித்தபடியே கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினர். அந்தக் கடுந்தவங்கள் மஹாநியமம் (நோன்புகள் மற்றும் நியமங்களில் முதன்மையானது) என்ற பெயரால் அறியப்பட்டன.(42) மேல் நோக்கிய கண்களுடனும், மேலுயர்த்திய கரங்களுடனும், நிலையான மனத்துடனும் அங்கே அவர்கள் மரக்கட்டைகளைப் போல அசையாதிருந்தனர்.(43) அவர்கள் ஆயிரம் தேவ வருடங்களுக்கு இந்தக் கடுந்தவங்களைச் செய்தனர். அந்தக் காலம் நிறைவடைந்ததும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களுடன் இணைக்கமான இந்த இனிய வார்த்தைகளை அவர்கள் கேட்டனர்.(44)

அருளப்பட்டவனும், புனிதமானவனுமான அவன் {அவ்யக்தன்}, “தேவர்களே, பிரம்மனின் துணையுடன் கூடியவர்களும், தவச் செல்வத்தைக் கொண்டவர்களுமான முனிவர்களே, உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி மதித்து, இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்.(45) உங்கள் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன். உண்மையில், உங்கள் சிந்தனைகள் மூவுலங்களின் நன்மைக்கானவையே. உங்கள் சக்தியையும், பலத்தையும் பெருக்கி, (செயல்களுக்கான ஒருதலைச்சார்பு கொண்ட) பிரவிருத்தியை உங்களுக்குக் கொடுப்பேன்.(46) தேவர்களே, என்னைத் துதிக்கும் விருப்பத்தில் நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, நீங்கள் மேற்கொண்ட அந்தத் தவங்களுக்கான சிறந்த கனிகளை இப்போது அனுபவிப்பீராக.(47) இந்தப் பிரம்மன் உலகங்கள் அனைத்தின் தலைவனாவான். பலம் கொண்ட அவன் உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனாவான். நீங்கள் தேவர்களில் முதன்மையானவர்களாகவும் இருக்கிறீர்கள். என் மகிமைக்காக நீங்கள் அனைவரும் குவிந்த மனங்களுடன் வேள்விகளைச் செய்வீராக.(48) நீங்கள் செய்யப்போகும் அந்த வேள்விகளின் காணிக்கைகளில் எப்போதும் எனக்கு ஒரு பங்கைக் கொடுப்பீராக. படைப்பின் தலைவர்களே, அதன் பிறகு உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய அதிகாரங்களையும், உங்கள் நன்மைக்காக விதிக்கப்பட்டவற்றையும் ஒப்படைப்பேன்” என்றான் {அவ்யக்தன்}.(49)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தேவர்களின் தேவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், பெரும் முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர் அனைவரும், தங்கள் உடலில் மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(50) அவர்கள், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி விஷ்ணுவைக் கௌரவிப்பதற்கான ஒரு வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த வேள்வியில் பிரம்மனே கூட விஷ்ணுவுக்கான காணிக்கைகளில் ஒரு பகுதியை அர்ப்பணித்தான்.(51) பிரம்மனைப் போலவே தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் ஒவ்வொருவரும் அதே போன்ற பகுதிகளை அந்தப் பெருந்தேவனுக்குக் காணிக்கையாக அளித்தனர். இவ்வாறு பெருமதிப்புடன் விஷ்ணுவுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டும் கிருத யுகத்திற்காக விதிக்கப்பட்ட விதிகளின்படியே இருந்தன.(52) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர், அந்த வேள்வியில், சூரியனின் நிறத்தைக் கொண்டவனாகவும், இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனாகவும், தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்திருப்பவனாகவும், பரந்தவனாகவும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், அனைத்தின் உயர்ந்த தலைவனாகவும், வரங்களை அளிப்பவனாகவும், பலங்கொண்டவனாகவும் அந்தப் பெருந்தேவனைத் துதித்தனர்.(53)

வரமளிப்பவனும், புலப்படாதவனும், உடலற்றவனுமான அந்தப் பெருந்தேவன் {நாராயணன்}, இவ்வாறு துதிக்கப்பட்டு, அங்கே கூடியிருந்த சொர்க்கத்தின் தேவர்களிடம்:(54) “இவ்வேள்வியில் உங்களால் அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் என்னை வந்தடைந்தன. நான் உங்கள் அனைவரிடமும் நிறைவுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு வெகுமதிகளை அளிக்கப் போகிறேன். இருப்பினும், அவை நீங்கள் திரும்பி வரவேண்டிய கதிகள் நிறைந்தவையாகவே இருக்கும்[3].(55) தேவர்களே, நான் உங்களிடம் கொண்ட அன்பு மற்றும் என் அருளின் விளைவால், இந்த நாள் முதல், இதுவே உங்கள் தனித்துவமான சிறப்பியல்பாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு யுகத்திலும் பெரும் அளவிலான காணிக்கைளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, பிரவிருத்தியில் பிறக்கும் கனிகளை அனுபவிப்பவர்களாக இருப்பீர்கள்.(56) தேவர்களே, வேதங்களில் விதிகளின்படி வேள்விகளைச் செய்யப் போகும் மனிதர்கள், தங்கள் வேள்விக் காணிக்கைகளில் உங்கள் அனைவருக்குமுரிய பங்குகளைக் கொடுப்பார்கள்.(57) இந்த வேள்வியில் எவன் எந்தக் காணிக்கையைக் கொடுத்தானோ, அவன் (இத்தகைய வேறு வேள்விகளில்) இதே போன்ற பங்கைப் பெறுபவனாக வேத சூத்திரங்களில் அமைப்பேன்.(58) உங்கள் அதிகாரத்திற்குரிய காரியங்களைக் கவனிக்கப் படைக்கப்பட்ட நீங்கள், அந்த வேள்விகளில் நீங்கள் புறம் {காணிக்கைகளின்} பங்குகளைச் சார்ந்த உங்கள் பலத்துடன் உலகங்களைத் தாங்குவீர்களாக.(59)உண்மையில், நீங்கள் பல்வேறு உலகங்களில் நடைபெறும் சடங்குகள் மற்றும் நோன்புகளின் மூலம் பிருவிருத்தியின் கனிகளில் எழும் உங்கள் பலத்தைப் பெற்று அந்த உலகக் காரியங்களைத் தொடர்ந்து தாங்குவீராக.(60) மனிதர்களால் செய்யப்படும் வேள்விகளில் இருந்து உங்கள் பலத்தைப் பெறும் நீங்கள் என்னைப் பலப்படுத்துவீர்கள். இவையே உங்கள் அனைவருக்காகவும் நான் சிந்திப்பதாகும்.(61) இந்நோக்கத்திற்காகவே நான் வேதங்களையும், வேள்விகளையும், செடிகள் மற்றும் மூலிகைகளையும் படைத்திருக்கிறேன். பூமியில் மனிதர்களின் மூலம் இவற்றால் முறையாகத் தொண்டாற்றப்படும் தேவர்கள் நிறைவை அடைவார்கள்.(62) தேவர்களில் முதன்மையானவர்களே, இந்தக் கல்பத்தின் முடிவு வரை, பிரவிருத்தி அறத்தின் விளைவைச் சார்ந்திருக்கும் வகையில் உங்கள் அமைப்புகளை உண்டாக்கி, உங்கள் படைப்பை விதித்திருக்கிறேன். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, அவரவருக்குரிய அதிகாரத்தின்படி நீங்கள் மூவுலகங்களின் நன்மையை நாடுவதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீராக.(63) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} என் மனோவிருப்பத்தாலேயே படைக்கப்பட்டார்கள் {இவர்கள் என் மானஸபுத்திரர்கள்}. இவர்கள் வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். உண்மையில் அவர்கள் வேத ஆசான்களாக ஆவார்கள். வாரிசுகளை உண்டாக்கும் செயலுக்குத் தங்களை அர்ப்பணிப்பதையே இவர்கள் {சப்தரிஷிகளும்} நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதால் பிரவிருத்தி அறத்தில் பற்றுள்ளவர்களாகவே இவர்கள் இருப்பார்கள்.(65)

செயல்கள் மற்றும் நோன்புகளில் ஈடுபடும் உயிரினங்களுக்கு இதுவே நான் சொல்லும் நித்திய பாதையாகும். உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கு அதிகாரம் படைத்த பலமிக்கத் தலைவன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான்.(66) ஸனர், ஸநத்ஸுஜாதர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர், கபிலர், ஏழாவதாக ஸநாதனர்(67) ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} பிரம்மனின் ஆன்ம மகன்களாவர் {பிரம்மனின் மானஸ புத்திரர்களாவர்}. (கல்வி அல்லது முயற்சியைச் சார்ந்திராமலேயே) ஞானம் தானாக இவர்களை அடையும். இவர்கள் எழுவரும் நிவிருத்தி அறத்தில் பற்றுடையவர்களாவர். இவர்களே யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். இவர்கள் சாங்கிய தத்துவத்தில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்களே கடமை குறித்த சாத்திரங்களின் ஆசான்களாக இருப்பார்கள், இவர்களே நிவிருத்தி அறத்தின் கடமைகளை அறிமுகம் செய்து, அவற்றை உலகங்களில் பாயச் செய்வார்கள்.(69)

புலப்படாததிலிருந்து (பிரகிருதியிலிருந்து) நனவுநிலையும் {அகங்காரமும்}, (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முப்பெரும் குணங்களும் உண்டாகின. பிரகிருதியைக் கடந்திருப்பவன் க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறான்.(70) நானே அந்த க்ஷேத்ரஜ்ஞன் ஆவேன். செயல்களில் பற்றுடையோருக்குரிய பாதையானது, மறுபிறவிகளைக் கொண்டதாகும். அந்தப் பாதையில் ஒருவனால் திரும்பாத இடத்தை அடையமுடியாது. பல்வேறு உயிரினங்கள் பல்வேறு கதிகளுக்காகப் படைக்கப்படுகின்றன. சில பிரவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும், சில நிவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும் படைக்கப்படுகின்றன. ஓர் உயிரினம் எந்தப் பாதையைப் பின்பற்றுகிறோ, அதற்குரிய வெகுமதியையே அஃது அனுபவிக்கிறது. இந்தப் பிரம்மனே, உலகங்கள் அனைத்தின் ஆசானாவான். பலம் கொண்ட இவனே அண்டத்தைப் படைக்கிறான்.(71,72) அவனே உங்கள் தாயும், தந்தையும், பாட்டனும் ஆவான். என் ஆணையின் பேரில் அனைத்து உயிரினங்களுக்கு அவன் வரங்களை அளிக்கிறான்.(73) அவனது ஆணையின் பேரில் அவனது புருவத்தில் இருந்து உதித்தவனும், பலம் கொண்டவனுமான அவனுடைய மகன் ருத்திரன், படைக்கப்பட்டவை அனைத்தையும் தாங்குவான்.(74) நீங்கள் உங்களுக்குரிய அதிகாரங்களை அடைந்து, விதிப்படி உலகங்களின் நன்மையை நாடுவீராக. உலகங்கள் அனைத்திலும் சாத்திரச் செயல்பாடுகள் நடைபெறட்டும். இதில் எந்தத் தாமதமும் வேண்டாம்.(75)

தேவர்களில் முதன்மையானோரே, அனைத்து உயிரினங்களின் செயல்களையும், அதன்மூலம் அவை அடையப்போகும் கதிகளையும் நீங்களே விதிப்பீராக. உயிரினங்கள் அனைத்தும் வாழக்கூடிய கால அளவையும் நீங்களே நிர்ணயிப்பீராக.(76) யுகங்கள் அனைத்திலும் முதன்மையானதும், இப்போது நடைபெறுவதுமான இந்த யுகம், கிருதம் என்ற பெயரில் அறியப்பட வேண்டும். இந்த யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில் உயிரினங்கள் கொல்லப்படக்கூடாது. என் ஆணையன்றி வேறுவகையில் இது நடைபெறக்கூடாது.(77) இந்த யுகத்தில் அறம் முழுமையாகத் தழைக்கும். இதன் பிறகு திரேதம் என்றழைக்கப்படும் யுகம் நேரும். அந்த யுகத்தில் வேதங்கள் ஒரு பகுதியை இழக்கும். அவற்றில் மூன்று மட்டுமே நீடித்திருக்கும்.(78) அந்த {திரேத} யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில், விலங்குகள் புனித மந்திரங்களின் துணையால் காணிக்கையாக்கப்பட்ட பிறகு கொல்லப்படும். அறத்தைப் பொறுத்தவரையில் ஒரு பகுதியை இழந்து மூன்று பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(79) திரேதம் முடிந்ததும், துவாபரம் என்ற பெயரிலான கலப்பு யுகம் நேரும். அந்த யுகத்தில் அறம் இரண்டு பகுதிகளை இழக்கும், இரண்டு பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(80) துவாபரம் முடிந்ததும் நேரும் யுகம் திஷ் என்றழைக்கப்படும், அது தனக்கு முன்பு கலியை {கலிபுருஷனைக்} கொண்டுவரும். அறம் மூன்று பகுதிகளை இழக்கும். அனைத்து இடங்களிலும் ஒரேயொரு பகுதி மட்டுமே நீடித்திருக்கும்” என்றான் {நாராயணன்}.(81)

அந்தப் பெருந்தேவன் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, தேவர்களும், தெய்வீக முனிவர்களும் அவனிடம், “அந்த யுகத்தில் ஒவ்வொரு இடத்திலும் அறத்தின் நான்காவது பகுதி மட்டுமே நீடித்திருக்கும் என்றால், ஓ! புனிதமானவனே, நாங்கள் எங்கே செல்வோம்? என்ன செய்வோம்?” என்று கேட்டனர்.(82)

அதற்கு அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “தேவர்களில் முதன்மையானோரே, அந்த யுகத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை நிறைந்த கடமைகளின் துணையுடன் எங்கெல்லாம் வேதங்கள், வேள்விகள், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை அப்போதும் நீடித்திருக்குமோ அத்தகைய இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும். பாவத்தால் உங்களை ஒருபோதும் தீண்ட முடியாது” என்றான்”.(83)

வியாசர் தொடர்ந்தார், “அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட தேவர்களும், அவர்களுடன் கூடிய முனிவர்கள் அனைவரும், அவனுக்குத் தலைவணங்கிய பிறகு, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(84) சொர்க்கவாசிகள் அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகு, அப்போது அநிருத்தனின் வடிவில் வசித்திருந்த அந்தப் பெருந்தேவனைக் காணும் விருப்பத்தில் அங்கேயே இருந்தான்.(85) அந்தத் தேவர்களில் முதன்மையானவன் ஒரு பெரிய குதிரைத் தலையைக் கொண்ட வடிவை ஏற்றுப் பிரம்மனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். வேதங்களையும், அதன் அங்கங்களையும் உரைத்தபடியே அவன் ஒரு கமண்டலத்துடனும், திரிதண்டத்துடனும், பிரம்மனின் முன்னிலையில் தோன்றினான்.(86) உலகங்கள் அனைத்தையும் படைப்பவன் {பிரம்மன்}, அளவிலா சக்தி கொண்ட அந்தப் பெருந்தேவனைக் குதிரைத் தலை மகுடம் சூட்டப்பட வடிவில் கண்டு, அந்த வரமளிக்கும் தலைவனைத் தலைவணங்கி வழிபட்டு, அவனது முன்னிலையில் மதிப்புடன் கரங்கூப்பி நின்றான். அந்தப் பெருந்தேவன் பிரம்மனை ஆரத்தழுவி இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்.(88)

அந்தப் புனிதமானவன் {அஸ்வசிரஸுடன் கூடிய பெருந்தேவன்}, “ஓ! பிரம்மாவே, உயிரினங்கள் பின்பற்றவேண்டிய செயல் நடைமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக. நீயே அண்டத்தின் தலைவனாகவும், ஆசானாகவும் இருக்கிறாய். உன் மேல் சுமையை நிறுத்திபிறகு விரைவில் நான் கவலையில் இருந்து விடுபடுவேன்.(89) எனினும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் கடினமான நிலை ஏற்படும் நேரங்களில், அந்த நெருக்கடி நிலையின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ளும் வகையிலான வடிவங்களில் வந்து பிறப்பேன் {அவதாரம் எடுப்பேன்}” என்றான்.(90)

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, குதிரைத் தலையைக் கொண்ட அந்த மகத்தான வடிவம் அங்கேயே, அப்போதே மறைந்தது. அவனது ஆணையை ஏற்ற பிரம்மனும் விரைவில் தன் உலகத்திற்குச் சென்றான்.(91) இதனாலேயே, ஓ! அருளப்பட்டவர்களே, தொப்புளில் தாமரையைக் கொண்ட அந்த நித்திய தேவன், வேள்விகளில் முதல் பங்கை ஏற்பவனாகி, அதன் காரணமாகவே வேள்விகள் அனைத்தையும் நித்தியமாகத் தாங்குபவன் என்றழைக்கப்படுகிறான்.(92) அழிவில்லாத கனிகளை விரும்பும் உயிரினங்கள் எந்தக் கதியை அடைய விரும்புகின்றனவோ அந்தக் கதியைக் கொண்ட நிவிருத்தி அறத்தையே அவன் பின்பற்றுகிறான். அதே நேரத்தில் அண்டத்தில் பல்வேறு கருத்துகளைக் கொடுக்கும் நோக்கத்தில் அவனே பிறருக்காகப் பிரவிருத்தி அறத்தையும் விதித்தான்.(93) இருப்பிலுள்ள படைக்கப்பட்ட அனைத்திற்கும் அவனே தொடக்கமும், நடுநிலையும், முடிவுமாக இருக்கிறான். அவனே அவர்களது படைப்பாளனாகவும், தியானிக்கத் தகுந்து பொருளாகவும் இருக்கிறான். செயல்படுபவனாகவும், செயலாகவும் அவனே இருக்கிறான். யுக முடிவில் அண்டத்தைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, உறங்கச் சென்று மற்றொரு யுகம் தொடங்கும்போது மீண்டும் அண்டத்தைப் படைக்கிறான்.(94)

உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், முக்குணங்களைக் கடந்தவனும், பிறப்பற்றவனும், அண்டமே வடிவானவனும், சொர்க்கவாசிகள் அனைவரின் வசிப்பிடமாகவும், புகலிடமாகவும் இருப்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனை நீங்கள் அனைவரும் வணங்குவீராக.(95) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனாகவும், ருத்திரர்களின் தலைவனாகவும், ஆதித்தியர்கள் மற்றும் வசுக்களின் தலைவனாகவும் உள்ள அவனை நீங்கள் வணங்குவீராக.(96) அசுவினிகளின் தலைவனும், மருத்துகளின் தலைவனும், வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகள் அனைத்தின் தலைவனும், வேதாங்கங்களின் தலைவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக.(97) பெருங்கடலில் எப்போதும் வசிப்பவனும், ஹரி என்றழைக்கப்படுபவனும், தர்ப்பைப் புற்களைப் போன்ற முடியைக் கொண்டவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக. அமைதி மற்றும் நிலையமைதியாக இருப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மோக்ஷ அறத்தைப் புகட்டுபவனுமான அவனை வணங்குவீராக.(98) தவங்கள், அனைத்துவகைச் சக்திகள், புகழ் ஆகியவற்றின் தலைவனும், வாக்கின் தலைவனும், ஆறுகளின் தலைவனுமான அவனை வணங்குவீராக.(99) கபர்தின் {சடையுள்ளவன்} என்றழைக்கப்படுபவனும், பெரும் பன்றியும், ஒற்றைக் கொம்புடன் கூடிய குதிரையும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், சூரியனும், நன்கறியப்பட்ட குதிரைத் தலையைக் கொண்டவனும், எப்போதும் நான்கு வகை வடிவங்களில் வெளிப்படுபவனுமான அவனை வணங்குவீராக.(100) வெளிப்படாதவனும், அறிவால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், அழியத்தக்கதாகவும், அழிவில்லாததாகவும் இருப்பவனுமான அவனை வணங்குவீராக. மாற்றமில்லாதவனாக இருக்கும் அந்த உயர்ந்த தேவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(101) அவன் ஞானக் கண்ணின் துணையால் மட்டுமே அறிய முடிந்த உயர்ந்த தலைவனாக இருக்கிறான். இவ்வாறு, பழங்காலத்தில் ஞானக்கண்ணின் துணையால் நான் அந்த முதன்மையான தேவனைக் கண்டேன்.(102) சீடர்களே, நீங்கள் கேட்ட அனைத்தையும் சொல்லிவிட்டேன். நீங்கள் என் சொற்களின்படி செயல்பட்டு, ஹரி என்றழைக்கப்படும் அந்த உயர்ந்த தலைவனுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவீராக. வேத சொற்களில் அவன் புகழைப் பாடித் துதித்து, முறையான சடங்குகளின்படி அவனை வழிபடுவீராக” என்றார் {வியாசர்}”.(103)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வேதங்களைத் தொகுத்தவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான அவர், இது குறித்து எங்களால் கேட்கப்பட்ட போது இவ்வாறே சொன்னார். உயர்ந்த அறவனோனான அவரது மகனும் {சுகரும்}, சீடர்கள் {நாங்கள்} அனைவரும் இஃதை அவர் சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்தோம்.(104) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, எங்கள் ஆசானும், நாங்களும், நான்கு வேதங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரிக்குகளால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைத்} துதித்தோம்.(105) இவ்வாறே நீ கேட்டது குறித்த அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஓ! மன்னா, தீவில் பிறந்தவரான எங்கள் ஆசான் இவ்வாறே எங்களுக்குச் சொன்னார்.(106)

“அந்தப் புனிதமான தலைவனை வணங்குகிறோம்” என்ற வார்த்தைகளை எவன் சொல்கிறானோ, குவிந்த கவனத்துடன் இந்த உரையாடலை எவன் கேட்கிறானோ, எவன் படிக்கிறானோ, எவன் பிறருக்குச் சொல்கிறானோ,(107) அவன் புத்தியும், உடல்நலமும் கொண்டவனாகவும், அழகையும், பலத்தையும் உடையவனாகவும் ஆவான். நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த நோயில் இருந்து அவன் விடுபடுவான்; கட்டுகளில் {பந்தங்களில்} அகப்பட்டிருந்தால் அந்தக் கட்டுகளில் இருந்து அவன் விடுபடுவான். ஆசைகளைப் பேணி வளர்க்கும் மனிதன், (இதன் மூலம்) தன் விருப்பங்கள் அனைத்தும் கனியப்பெற்று, நீண்ட வாழ்நாளையும் எளிதாக அடைவான்.(108)

ஒரு பிராமணன் இதைச் செய்வதால் வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாவான். ஒரு க்ஷத்திரியன் இதைச் செய்வதால் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவான். ஒரு வைசியன் இதைச் செய்வதால் பெரும் லாபங்களையும், ஒரு சூத்திரன் இதைச் செய்வதால் பேரின்பத்தையும் அடைவார்கள்.(109) மகனற்ற மனிதன் ஒரு மகனை அடைவான். கன்னிப்பெண் விரும்பத்தக்க கணவனை அடைவாள். கருவுற்ற பெண்மணி {இதைச் செய்தால்} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(110) மலட்டுப் பெண்ணும் கருவுற்று, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்ற செல்வத்தை அடைவாள். பயணத்தில் இந்த உரையை வரிசை மாறாமல் உள்ளடியே கூறுபவன், தன் வழியில் எந்தத் தடங்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் செல்வான். உண்மையில், ஒருவன் இந்த உரையைப் படிப்பதாலோ, உரைப்பதாலோ {கேட்பதாலோ}, தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(111) நிறைவான முடிவைக் கொண்டதும், இருப்பிலுள்ள அனைத்திலும் முதன்மையான உயர்ந்த ஆன்மாவின் {பரமனின்} குணங்களைச் சுமந்திருப்பதுமான அந்தப் பெரும் முனிவரின் {வியாசரின்} இந்த வார்த்தைகளையும், முனிவர்களின் பெருங்கூட்டமும், சொர்க்கவாசிகளும் {தேவர்களும்} சொல்லும் இந்த உரையைக் கேட்டுப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைவார்கள். {இது வியாஸமகரிஷியின் உறுதியான வார்த்தை}” {என்றார் வைசம்பாயனர்}.(112)

பெயர்களின் தனிப்பொருள்! – சாந்திபர்வம் பகுதி – 342-கிருஷ்ணன் தனது மகிமையையும், தன் பெயர்களின் தனிப்பட்ட பொருள்களையும் அர்ஜுனனுக்குச் சொன்னது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! புனிதமானவரே, பெருமுனிவரான வியாசர் தமது சீடர்களுடன் மதுசூதனின் புகழைப் பாடியபோது குறிப்பிட்ட பல்வேறு பெயர்களின் தனிப்பொருள்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனான {பகவானான} ஹரியின் அந்தப் பெயர்களைக் கேட்க நான் விரும்புகிறேன். உண்மையில் அந்தப் பெயர்களைக் கேட்பதன் மூலம் நான் பிரகாசமான கூதிர் கால நிலவைப் போலத் தூய்மையடைந்து புனிதமடைவேன்” என்று கேட்டான்.(1,2)

வைசம்பாயனர் சொன்னார், “குணங்கள் மற்றும் செயல்களின் மூலம் அமைந்த ஹரியின் பல்வேறு பெயர்களுடைய தனிப்பொருள்களை அந்தப் பலமிக்க ஹரியே உற்சாகம் நிறைந்த ஆன்மாவோடு பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} விளக்கியதைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில், பகைவீரர்களைக் கொல்பவனான பல்குனன், எந்தப் பெயர்களால் உயர் ஆன்ம கேசவன் துதிக்கப்படுகிறானோ அவற்றில் சிலவற்றின் பொருளைக் கேசவனிடமே கேட்டான்.(4)

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! புனிதமானவனே, ஓ! கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை விதிப்பவனே, ஓ! இருப்பிலுள்ள அனைத்தையும் படைத்தவனே, ஓ! மாற்றமில்லாதவனே, ஓ! உலகங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனே, ஓ! அண்டத்தின் தலைவா, ஓ! அனைத்து மனிதர்களின் அச்சங்களை விலக்குபவனே,(5) ஓ! கேசவா, ஓ! தேவா, உன்னுடைய பல்வேறு செயல்களின் விளைவால் வேதங்களிலும், புராணங்களிலும் பெரும் முனிவர்களால் குறிப்பிடப்படும் உன்னுடைய பெயர்கள் அனைத்தின் தனிப்பொருள் விளக்கத்தை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். ஓ! தலைவா, அந்தப் பெயர்களின் தனிப்பொருட்களை உன்னையன்றி வேறெவரும் விளக்கத்தகுந்தவர் அல்ல” என்று கேட்டான்[1].(6,7)அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “ஓ! அர்ஜுனா, ரிக்வேதம், யஜுர் வேதம், அதர்வணங்கள், சாமங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், கணிய சாத்திரம் {சோதிட சாத்திரம்},(8) சாங்கிய சாத்திரங்கள், யோக சாத்திரங்கள், மற்றும் வாழ்வியல் சாத்திரங்கள் ஆகியவற்றில் பெரும் முனிவர்களால் சொல்லப்படும் பெயர்கள் பலவாகும்.(9) அந்தப் பெயர்களில் சில என் குணங்களுக்கும், சில என் செயல்களுக்கும் தொடர்புடையனவாகும். ஓ! பாவமற்றவனே, (குறிப்பாக) என் செயல்களைக் குறித்த பெயர்கள் ஒவ்வொன்றின் பொருளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(10) பழங்காலத்தில் நீ என் உடலின் பாதியாக இருந்தாய் என்று சொல்லப்படுகிறது. பெரும் மகிமை கொண்டவனும், உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தின் பரமாத்மாவாக இருப்பவனுமானவனை வணங்குகிறேன்[2].(11) அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படையான) முக்குணங்களைக் கடந்தவனும், அந்தக் குணங்களின் ஆன்மாவுமான நாராயணனை வணங்குகிறேன். அவனது அருளிலிருந்து பிரம்மன் எழுந்தான், அவனது கோபத்திலிருந்து ருத்திரன் எழுந்தான்.(12) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எங்கிருந்து எழுந்தனவோ, அதன் தோற்றுவாயாக அவனே இருகிறான். சத்வ குணம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையானவனே, சத்வ குணம் பதினெட்டுக் குணங்களைக் கொண்டதாகும்[3].வானத்தையும், பூமியையும் தன் ஆன்மாவாகக் கொண்டவளும், தன் படைப்பு சக்தியால் அண்டத்தைத் தாங்குவதில் வெல்பவளுமான பரம இயற்கையின் குணம் அதுவே {சத்வ குணமே}. அந்த இயற்கையானவள் செயல்கள் அனைத்தின் கனியினோடு (உயிரினங்கள் தங்கள் செயல்களின் மூலம் அடையும் பல்வேறு இன்ப உலகங்களின் வடிவில்) அடையாளம் காணப்படுகிறாள்.(13) அவள் தூய சித்-ஆகவும் இருக்கிறாள். அவள் இறப்பற்றவளாகவும், வெல்லப்பட முடியாதவளாகவும், அண்டத்தின் ஆன்மாவாகவும் அழைக்கப்படுகிறாள். அவளிடமிருந்தே படைப்பு மற்றும் அழிவு என்ற இரண்டு மாறுபாடுகளும் {விகாரங்களும்} தோன்றுகின்றன.(14) (அவள் எனது பிரகிருதி அல்லது இயற்கையோடு அடையாளம் காணப்படுகிறாள்). பாலினமற்ற அவளே, அல்லது அவனே மக்கள் செய்யும் தவங்களாக இருக்கிறாள்/ன். செய்யப்படும் வேள்வியாகவும், வேள்வியைச் செய்யும் வேள்வியாளனாகவும் அவனே இருக்கிறான். அவனே புராதனனும், முடிவற்றவனுமான புருஷனாவான். வேறு பெயரில் அநிருத்தன் என்றழைக்கப்படும் அவன், அண்டத்தின் படைப்பு மற்றும் அழிவுக்கான தோற்றுவாயாக இருக்கிறான்[4].(15)ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மனின் இரவு முடிந்த போது, அந்த அளவிலா சக்தி கொண்டவனுடைய {அநிருத்தனுடைய} அருளின் மூலம் முதலில் ஒரு தாமரை தோன்றியது.(16) அநிருத்தனின் அருளின் மூலம் அந்தத் தாமரையினுள் பிரம்மன் தோன்றினான். பிரம்மனுடைய பகல்பொழுதின் மாலை வேளையில் அநிருத்தன் கோபத்தால் நிறைந்ததன் விளைவால், (அண்ட அழிவுக்கான வேளை நேரும்போது) அனைத்தையும் அழிக்க வல்லவனாகவும், ருத்திரன் என்றழைக்கப்படுபவனாகவும் அவனது நெற்றியில் இருந்து ஒரு மகன் பிறந்தான். (அநிருத்தனின்) உற்சாகம் மற்றும் கோபம் ஆகியவற்றில் இருந்து உண்டான பிரம்மன் மற்றும் ருத்திரன் என்ற இவ்விருவரும் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாவர்.(17,18)அநிருத்தனின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் தேவர்கள் இருவரும் படைக்கவும், அழிக்கவும் செய்கின்றனர். அனைத்து உயிரினங்களுக்கும் வரங்களை அளிக்கவல்லவர்களாக இருப்பினும், (படைப்பு மற்றும் அழிவு என்று) தாங்கள் கவனிக்கும் அலுவலின் காரியத்தில் அவர்கள் அநிருத்தனின் கைகளில் இருக்கும் கருவிகளே ஆவர். (அண்டத்தைப் பொறுத்தவரையில் வெளிப்படையாகச் செயல்படுபவர்களாகப் பிரம்மனையும், ருத்திரனையும் அமைத்து, அநிருத்தனே அனைத்தையும் செய்கிறான்).(19)

ருத்திரன் வேறுபெயரில் கபர்தின் என்றும் அழைக்கப்படுகிறான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்தவனாக இருக்கிறான், சில வேளைகளில் வழுக்கைத் தலையை வெளிப்படுத்துகிறான். அவன் தன் இல்லமாக அமைந்த சுடலைக்கு மத்தியிலேயே வசிக்க விரும்புகிறான். அவன் கடும் நோன்புகளை நோற்பவனாக இருக்கிறான். அவன் பெரும் பலமும், சக்தியும் கொண்ட ஒரு யோகியாவான்.(20) தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும் அவனே. ஓ! பாண்டுவின் மகனே, ருத்திரன் தன் ஆன்மாவாக நாராயணனையே கொண்டிருக்கிறான் என்று எப்போதும் அறியப்பட வேண்டும்.(21) ஓ! பார்த்தா, தேவர்களின் தேவனான மஹேஸ்வரன் வழிபடப்படும்போது, பலமிக்க நாராயணனும் வழிபடப்பட வேண்டும்.(22) ஓ! பாண்டுவின் மகனே, அண்டமனைத்தின், உலகங்களனைத்தின் ஆன்மாவாக நானே இருக்கிறேன். அதே போல ருத்திரனே என் ஆன்மாவாக இருக்கிறான். இதன் காரணமாகவே நான் எப்போதும் அவனைத் துதிக்கிறேன்.(23) மங்கலனும், வரமளிப்பவனுமான ஈசானனை நான் துதிக்கவில்லையெனில், எவனும் என்னைத் துதிக்கமாட்டார்கள்.(24) நான் நிறுவும் விதிகளையே உலகங்கள் அனைத்தும் பின்பற்றுகின்றன. அந்த விதிகள் எப்போதும் துதிக்கப்பட வேண்டும், அதன் காரணமாகவே நான் அவற்றைத் துதிக்கிறேன்.(25)

எவன் ருத்திரனை அறிவானோ, அவன் என்னை அறிவான், எவன் என்னை அறிவானோ அவன் ருத்திரனை அறிவான். எவன் ருத்திரனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னையே பின்பற்றுகிறான். ருத்திரனே நாராயணனாவான். அவர்கள் இருவரும் ஒருவரே; ஒருவனே இரண்டு வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான்.(26) ஒருவராகவே உள்ள ருத்திரனும், நாராயணனும் வெளிப்படும் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்து, அவற்றை {அந்தப் பொருட்களைச்} செயல்பட வைக்கின்றனர். ஓ! பாண்டுவின் மகனே, ருத்திரனைத் தவிர வேறு எவனும் எனக்கு வரமருளத் தகுந்தவனல்ல.(27) இஃதை என் மனத்தில் தீர்மானித்துக் கொண்டு, ஒரு மகனைப் பெறும் வரத்தை அடைவதற்காகப் பழங்காலத்தில் நான் ருத்திரனைத் துதித்தேன். இவ்வாறு ருத்திரனைத் துதிப்பதால் நான் என்னையே துதிக்கிறேன்.(28) விஷ்ணு தன்னையன்றி {தன் சுயத்தையன்றி} வேறு எந்தத் தேவனுக்கும் தலைவணங்குவதில்லை. இதன் காரணமாகவே (ஏற்கனவே நான் உனக்குச் சொன்னது போலவே ருத்திரனாக நானே இருப்பதால்) நான் ருத்திரனைத் துதிக்கிறேன்.(29) பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மற்றும் பெரும் முனிவர்கள் அனைவரும், ஹரி என்று வேறு பெயரில் அழைக்கப்படும் தேவர்களில் முதன்மையான நாராயணனையே துதிக்கின்றனர்.(30) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றில் இருப்பில் உள்ள அனைத்திலும் முதன்மையானவனாக விஷ்ணு எப்போது துதிக்கப்பட்டு, மதிப்புடன் வழிபடப்பட வேண்டும்.(31) விஷ்ணுவுக்கு நீ தலைவணங்குவாயாக. அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனுக்கு நீ தலைவணங்குவாயாக. ஓ! குந்தியின் மகனே, தேவர்களில் முதன்மையானவனும், வேள்விகளில் தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்பவனுமான அந்தப் பெரும் வரமளிக்கும் தேவனை வணங்குவாயாக.(32)

நான்கு வகை வழிபாட்டாளர்கள் இருப்பதாக நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவரிலும், வேறு எந்தத் தேவனைத் துதிக்காமல் என்னிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோரே முதன்மையானவர்கள் ஆவர். நானே அவர்கள் தேடும் கதியாக இருக்கிறேன். அவர்கள் செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றின் கனிகளை ஒருபோதும் நாடுவதில்லை.(33) என் வழிபாட்டாளர்களில் எஞ்சிய மூன்று வகையினர், தங்கள் செயல்களுக்கான கனிகளை விரும்புபவர்கள் ஆவர். அவர்கள் பெரும் இன்ப நிலை கொண்ட உலகங்களை அடைந்தாலும், அவர்களது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் மீண்டும் அங்கிருந்து வீழ்வார்கள். எனவே என் வழிபாட்டாளர்களில், முழு விழிப்புநிலையை அடைந்தவர்கள் (அத்தகைய விழிப்பு நிலையின் மூலம், என்னோடும் அடையாளங்காணப்படும் மனிதர்களால் அடையப்படும் கதியைத் தவிர வேறு இன்பங்கள் அனைத்தும் நிலையில்லாதவை என்பதை அறிந்து) முதன்மையான (அருமதிப்புள்ள) கதியை அடைகின்றனர்[5].(34) இத்தகைய தெளிவை வெளிப்படுத்தும் ஒழுக்கம் கொண்டவர்களும், விழிப்படைந்தவர்களுமான அவர்கள், பிரம்மன், அல்லது மஹாதேவன், அல்லது சொர்க்கத்தில் தோன்றும் பிற தேவர்களைத் துதிப்பதில் ஈடுபட்டாலும், இறுதியாக அவர்கள் என்னையே அடைவதில் வெல்கிறார்கள்.(35) ஓ! பார்த்தா, என் வழிபாட்டாளர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையே இவ்வாறு உனக்குச் சொன்னேன்.(36)ஓ! குந்தியின் மகனே, நீயும், நானும் நரன் மற்றும் நாராயணன் என்று அறியப்படுகிறோம். பூமியின் சுமையைக் குறைக்கும் நோக்கத்திற்காகவே நாமிருவரும் மனித உடல்களை ஏற்றோம்.(37) ஆன்மாவைச் சார்ந்திருக்கும் பல்வேறு வகை யோகங்களை நானறிவேன். ஓ! பாரதா, நான் யார் என்பதையும், நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நானறிவேன். நிவிருத்தி அறத்தையும், உயிரினங்களின் செழிப்புக்குப் பங்களிக்கும் அனைத்தையும் நானறிவேன்.(38) நான் நித்தியமானவன், மனிதர்கள் அனைவருக்கும் நானே ஒரே புகலிடமாக இருக்கிறேன். நரன் என்றழைக்கப்படுவனிடமிருந்து தோன்றியதால் நீர்நிலைகள் நாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பழங்காலத்தில் இருந்து நீர்நிலைகளையே என் புகலிடமாக நான் கொள்வதால், நாராயணன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(39) சூரியனின் வடிவை ஏற்கும் நான், என் கதிர்களால் அண்டத்தைத் தழுவுகிறேன். அனைத்து உயிரினங்களின் வசிப்பிடமாக நானே இருப்பதால் வாசுதேவன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(40)

ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களின் கதியாகவும், அவற்றின் தந்தையாகவும் நானே இருக்கிறேன். ஆகாயம் மற்றும் பூமி முழுமையிலும் நான் நீக்கமற நிறைந்திருக்கிறேன், என் காந்தியானது காந்திகள் அனைத்தையும் கடந்திருக்கிறது.(41) ஓ! பாரதா, உயிரினங்கள் அனைத்தும் முடிவில் அடைய விரும்பும் கதியாக நானே இருக்கிறேன். அண்டமனைத்திலும் நான் விஸ்தரித்திருப்பதால் {நிறைந்திருப்பதால்} விஷ்ணு என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(42) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெற்றியை அடைய விரும்பும் மக்கள், சொர்க்கமாகவும், பூமியாகவும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ள ஆகாயமாகவும் உள்ள என்னையே அடைய முனைகின்றனர். இதன் காரணமாக நான் தாமோதரன்[6] என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(43) பிருச்னி என்ற சொல்லில் உணவு, வேதங்கள், நீர் மற்றும் அமுதம் ஆகியவையும் அடங்கும். இவை நான்கும் எப்போதும் என் வயிற்றில் இருக்கின்றன. எனவே நான் பிருச்னிகர்ப்பன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(44) ஒரு காலத்தில், ஏகதர் மற்றும் திவிதரால் முனிவர் திரிதர் கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்ட போது, மனம் தளர்ந்த திரிதர், “ஓ பிருச்னிகர்ப்பா, வீழ்ந்துவிட்ட திரிதனைக் காப்பாயாக” என்று என்னை இருப்புக்கு அழைத்ததாக முனிவர்கள் சொல்கின்றனர்.(45) முனிவர்களில் முதன்மையானவரும், பிரம்மனின் (ஆன்ம) மகனுமான திரிதர், இவ்வாறு என்னை அழைத்ததும், அந்தக் குழியில் இருந்து அவர் காக்கப்பட்டார்.(46) உலகிற்கு வெப்பத்தை வழங்கும் சூரியனிலிருந்தும், சுடர்மிக்க நெருப்பிலிருந்தும் {அக்னியிலிருந்தும்}, சந்திரனிலிருந்தும் வெளிப்படும் கதிர்களே என் மயிராகின்றன. எனவே, கல்வியாளர்களான பிராமணர்களில் முதன்மையானோர் என்னைக் கேசவன் என்ற பெயரால் அழைக்கின்றனர்.(47)உயர் ஆன்ம உதத்தியர், தமது மனைவியைக் கருவுறச் செய்து, தேவர்களின் மாயையால் அவளிடமிருந்து மறைந்தார். தம்பியான பிருஹஸ்பதி, அந்த உயர் ஆன்மாவுடைய {உதத்தியருடைய} மனைவியின் முன் தோன்றினார்.(48) ஓ! குந்தியின் மகனே, உதத்தியருடைய மனைவியின் கருவறையில் இருந்தவனும், ஏற்கனவே அடிப்படையான ஐம்பூதங்களால் உடலமைந்ததுவனுமான குழந்தை, கலவி விருப்பத்தால் அங்கே வந்த அந்த முதன்மையான முனிவரிடம் {பிருஹஸ்பதியிடம்},(49) “ஓ! வரங்களை அளிப்பவரே, நான் ஏற்கனவே இந்தக் கருவறையில் நுழைந்துவிட்டேன். என் தாயைத் தாக்குவது உமக்குத் தகாது” என்றான். இன்னும் பிறக்காதவனான அந்தக் குழந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருஹஸ்பதி, கோபத்தால் நிறைந்து, ஒரு சாபத்தை அளிக்கும் வகையில்,(50) “கலவி இன்பத்தை விரும்பி இங்கே நான் வந்தபோது, இவ்வழியில் நீ எனக்குத் தடங்கலாக அமைந்ததால், என் சாபத்தின் மூலம் நீ குருடனாகப் பிறப்பாய் என்பதில் ஐயமில்லை” என்றார்.(51) அந்த முதன்மையான முனிவர் அளித்த இந்தச் சாபத்தின் மூலம், உதத்தியரின் பிள்ளை குருடாகப் பிறந்து, நீண்ட நாட்கள் குருடனாகவே இருந்தார். இதன் காரணமாக, பழங்காலத்தில் அந்த முனிவர் தீர்க்கதமஸ் என்ற பெயரால் அறியப்பட்டார்.(52)

எனினும் அவர், நான்கு வேதங்களையும், அவற்றின் நித்திய அங்கங்கள் மற்றும் உப அங்கங்களையும் அடைந்தார். அதன் பிறகு அவர், இந்த எனது இரகசிய பெயரைச் சொல்லி, அடிக்கடி என்னை இருப்புக்கு அழைத்தார். உண்மையில், விதிக்கப்பட்ட விதியின்படியே மீண்டும் மீண்டும் அவர் என்னைக் கேசவன் என்ற பெயரைக் கொண்ட அழைத்தார்.(53) இந்தப் பெயரை மீண்டும் மீண்டும் சொன்னதனால் அடைந்த தகுதியின் {புண்ணியத்தின்} மூலம், தனது குருட்டு நிலையில் இருந்து குணமடைந்த அவர், அதுமுதல் கௌதமர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். எனவே, ஓ! அர்ஜுனா, தேவர்கள் மற்றும் உயர் ஆன்ம முனிவர்கள் அனைவருக்கும் மத்தியில் என்னுடைய இந்தப் பெயரைச் சொல்வது வரங்களை விளைவிக்கும். நெருப்பின் தேவனும், சோமனும் ஒன்றாகக் கலந்து ஒன்றாகவும், ஒரே பொருளாகவும் ஊடுகலந்தனர். இதன் காரணமாகவே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் இவ்விரு தேவர்களால் நீக்கமற நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது[7].(55) புராணங்களில், அக்னியும் சோமனும் ஒரே இயல்பைக் கொண்டவர்களாகவும், ஒரே விளைவைக் கொண்டவர்களாகவும் சொல்லப்படுகின்றனர். ஒரே விளைவுக்கு வழிவகுக்கும் இயல்பைக் கொண்ட இவை இரண்டின் விளைவால், அவர்கள் ஒருவருக்கொருவர் தகுந்தவரென்றும், அண்டத்தைத் தாங்குபவர்கள் என்றும் சொல்லப்படுகின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.(56)

ருத்திர நாராயணப் போர்! – சாந்திபர்வம் பகுதி – 343-அக்னி மற்றும் சோமனின் இயல்பொற்றுமை; ருத்திரனுக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த போர்…

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “பழங்காலத்தில், அக்னியும், சோமனும் எவ்வாறு தங்கள் சொந்த இயல்பில் சீரான தன்மையை அடைந்தனர்? இந்த ஐயம் என் மனத்தில் எழுகிறது. ஓ! மதுசூதனா, இதை விலக்குவாயாக” என்றான்.(1)

உயர்ந்தவனான அந்தப் புனிதமானவன் {ஸ்ரீ கிருஷ்ண பகவான்}, “ஓ! பாண்டுவின் மகனே, என் சக்தியில் இருந்து எழும் நிகழ்வுகளைக் கொண்ட ஒரு புராதனக் கதையைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அதைக் கேட்பாயாக.(2) தேவ அளவின்படி நாலாயிரம் {4000} யுகங்கள் கடந்ததும், அண்ட அழிவு ஏற்படுகிறது. புலப்படுவது, புலப்படாததில் மறைகிறது. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் அழிவை அடைகின்றன.(3) ஒளி, பூமி, காற்று ஆகிய அனைத்தும் மறைந்து போகின்றன. அண்டத்தில் இருள் பரவி, அஃது ஒரே நீர்ப்பரப்பாகிறது.(4) இரண்டாவது ஒன்றில்லாத பிரம்மத்தைப் போல முடிவில்லாமல் நீர் மட்டுமே இருக்கும்போது, பகலும் இருப்பதில்லை, இரவும் இருப்பதில்லை. இருப்பும், இல்லாமையும் இருப்பதில்லை; புலப்படுவதும், புலப்படாததும் இருப்பதில்லை.(5) அண்டத்தின் நிலை இவ்வாறு இருக்கும்போது, அழிவற்றவனும், இறப்பற்றவனும், புலன்களற்றவனும், உணரப்பட முடியாதவனும், பிறப்பற்றவனும், கருணை நிறைந்த வாய்மையின் சுயமும், சிந்தாமணி என்றழைக்கப்படும் ரத்தினத்தின் கதிர்கள் எனும் இருப்பின் வடிவத்துடன் கூடியவனும், பகைமை, சிதைவு, மரணம், மூப்பு ஆகிய கோட்பாடுகள் அற்றவனும், வடிவமற்றவனும், நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டப்படைப்பின் கோட்பாடாகவும், தொடக்கம், நடுநிலை, முடிவு இல்லாது நித்தியமாக இருப்பவனுமான நாராயணனின் குணக் கலவையான தமஸில் இருந்து இருப்பவற்றில் முதன்மையானவனும், நித்தியமானவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி எழுகிறான்.(6) இந்தத் துணிவுரைக்கு அதிகாரம் இருக்கிறது.

ஸ்ருதி {வேதம்}, “பகல் இல்லை. இரவு இல்லை. இருப்பு இல்லை. இல்லாமை இல்லை. தொடக்கத்தில் தமஸ் மட்டுமே இருந்தாள்” என்று சொல்கிறது[1].(7)அவள் அண்டத்தின் வடிவில் இருந்தாள், அவள் நாராயணனுடைய அண்ட வடிவத்தின் இரவாக இருந்தாள். இதுவே தமஸ் என்ற சொல்லின் பொருளாகும்.(8) இவ்வாறு தமஸில் பிறந்த (ஹரி என்றழைக்கப்படும்) அந்தப் புருஷனிலிருந்து பிரம்மத்தைக் காரணமாகக் கொண்டு பிரம்மன் என்றழைக்கப்படுபவன் இருப்புக்கு வந்தான். உயிரினங்களைப் படைக்க விரும்பிய பிரம்மன், தன் கண்களிலிருந்து அக்னியையும், சோமனையும் உண்டாக்கினான். அதன் பிறகு உயிரினங்கள் படைக்கப்பட்டபோது, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் என்ற முறையான வரிசையில் மனிதர்கள் படைக்கப்பட்டனர். சோமனாகப் பிறந்தவன் பிரம்மாவன்றி வேறு எவனுமல்ல; பிராமணராகப் பிறந்தோர் அனைவரும்உண்மையில் சோமனே ஆவர். அக்னியாகப் பிறந்தவன் க்ஷத்திரியனன்றி வேறு எவனுமல்ல. பிராமணர்கள் க்ஷத்ரர்களைவிடப் பெருஞ்சக்தி கொண்டவர்களாக இருந்தனர். இதன் காரணம் யாதென நீ கேட்டால், க்ஷத்திரியர்களை விடப் பிராமணர்கள் மேன்மையானவர்கள் என்பது உலகம் முழுவதிலும் வெளிப்படும் ஒரு குணமாகும் என்பதே பதிலாகும். இது பின்வருமாறு நேர்ந்தது. மனிதர்களைப் பொறுத்தவரையில் பிராமணர்களே மூத்த படைப்பாக இருக்கின்றனர். பிராமணர்களை விட மேன்மையான எவரும் அவர்களுக்கு முன்பு படைக்கப்பட்டதில்லை. எவன் ஒரு பிராமணனின் வாயில் உணவூட்டுவானோ அவன் (தேவர்களை நிறைவு செய்வதற்காக) சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவபவனாகக் கருதப்படுகிறான். பிரம்மன் உயிரினங்களைப் படைக்கும் காரியம், இவ்வழியில் பொருட்களை விதித்தே நிறைவடைந்தது எனச் சொல்கிறேன். அவன் {பிரம்மன்} படைக்கப்பட்ட அனைத்தையும் அதனதன் நிலைகளில் நிறுத்தி மூவுலங்களையும் தாங்கினான். ஸ்ருதிகளின் மந்திரங்களில் இதே போன்ற தீர்மானம் ஒன்றிருக்கிறது.(9) {ஸ்ருதியில்}, “ஓ! அக்னி, வேள்விகளில் ஹோத்ரி நீயே, அண்டத்திற்கு நன்மை செய்பவன் நீயே. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், உலகங்கள் அனைத்திற்கும் நன்மை செய்பவன் நீயே” {என்றிருக்கிறது}.(10)

இதற்கு (வேறொரு) சான்றாதாரமும் இருக்கிறது. {ஸ்ருதியில்}, “ஓ! அக்னி, அண்டம் மற்றும் வேள்விகளின் ஹோத்ரி நீயே. தேவர்களும், மனிதர்களும் எதன் மூலம் அண்டத்திற்கு நன்மை செய்வார்களோ, அந்தத் தோற்றுவாய் நீயே” {என்றிருக்கிறது}.(11) “உண்மையில் அக்னியே ஹோத்ரியாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்கிறான். மேலும் வேள்வியின் பிரம்மாவாக அக்னியே இருக்கிறான்.(12) மந்திரங்கள் சொல்லாமல் வேள்வி நெருப்புக்குள் ஆகுதிகள் ஏதும் ஊற்றப்படக்கூடாது; தவங்களைச் செய்யும் மனிதர்களில்லாமல் தவங்களில்லை; மந்திரங்களுடன் ஆகுதிகள் ஊற்றுவதாலேயே தேவர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்களின் வழிபாடுகள் நிறைவடைகின்றன. எனவே, ஓ அக்னி, வேள்விகளின் ஹோத்ரியாக நீயே கருதப்படுகிறாய். மனிதர்களின் ஹோமச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கும் மந்திரங்கள் அனைத்தும் நீயே” {என்றுமிருக்கிறது}. பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுக்கும் கடமை பிராமணர்களுக்கு விதிக்கப்படுகிறது. மறுபிறப்பாள, அல்லது இரு பிறப்பாள வகையைச் சேர்ந்தவர்களான க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்ற வேறு இருவகையினனுக்கு அதே கடமை பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, பிராமணர்களே அக்னியைப் போல வேள்வியைத் தாங்குகின்றனர். (பிராமணர்கள் செய்து கொடுக்கும்) வேள்விகள் தேவர்களைப் பலமடையச் செய்கின்றன. இவ்வழியில் பலமடையும் தேவர்கள், (வாழும் உயிரினங்கள் அனைத்தையும் ஆதரிப்பதன் மூலம்) பூமியைக் கனியச் செய்கின்றனர். ஆனால் முதன்மையான வேள்விகளின் மூலம் அடையப்படும் விளைவானது, பிராமணர்களின் வாயின் மூலமும் அடையப்படலாம்.(13) பிராமணனின் வாயில் உணவை அளிக்கும் கல்விமான், தேவர்களை நிறைவு செய்வதற்காகப் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(14) இவ்வழியில் பிராமணர்களே அக்னியாகக் கருதப்படுகின்றனர். கல்வியைப் பெற்றவர்கள் அக்னியைத் துதிக்கின்றனர். மேலும் அக்னியே விஷ்ணு ஆவான். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் நுழையும் அவனே அவற்றின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப்பிடிக்கிறான்.(15)

இது தொடர்பாகச் சநத்குமாரரால் பாடப்பட்ட ஒரு சுலோகம இருக்கிறது. பிரம்மன் அண்டத்தைப் படைத்த போது, முதலில் பிராமணர்களைப் படைத்தான். பிராமணர்கள் வேத கல்வியின் மூலம் இறவாமையை அடைந்து, அத்தகைய கல்வியின் துணையால் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். பிராமணர்களின் நுண்ணறிவு, வாக்கு, செயல்கள், நோன்புகள், நம்பிக்கை மற்றும் தவங்கள் ஆகியன பசுவின் அமுதத்தை {வெண்ணையைத்} தாங்கும் உறியைப் போலப் பூமியையும் சொர்க்கத்தையும் தாங்குகின்றன.(16) வாய்மையைவிட உயர்ந்த கடமை வேறேதும் இல்லை. தாயைவிட மதிக்கத்தகுந்த மேன்மையானவர்கள் வேறு எவரும் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் இன்பநிலையை அளிப்பதற்குப் பிராமணனைவிட மிகத் தகுந்தவன் வேறு எவனும் இல்லை.(17) பிராமணர்கள் (தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் மற்றும் பிற வகை உடைமைகளிலிருந்து) வாழ்வாதாரத்திற்கு எந்தக் குறிப்பிட்ட வழிமுறையும் இல்லாத ஆட்சிப்பகுதிகளில் வசிப்போர் துன்பத்தை அடைவார்கள். அங்கே எருதுகள் மக்களைச் சுமக்கவோ, ஏர் உழுவோ செய்வதில்லை, அதே போல எந்த வகை வாகனங்களும் அவற்றை ஏற்பதில்லை. குடுவைகளில் உள்ள பால் ஒருபோதும் வெண்ணைப் பெறுவதற்காகக் கடையப்படுவதில்லை. மறுபுறம், அங்கே வசிப்பவர்கள், அனைத்து வகைச் செழிப்புகளையும் இழந்து, (அமைதியின் அருளை அடைவதற்குப் பதிலாக) திருடர்களாகிறார்கள்.(18)

வேதங்கள், புராணங்கள், வரலாறுகள், மற்றும் அதிகாரமிக்கப் பிற எழுத்துகளில் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும், அனைத்துப் பொருட்களையும் படைப்பவர்களும், இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அடையாளங்காணப்படுகிறவர்களுமான பிராமணர்களே நாராயணனின் வாயாக இருக்கிறார்கள். உண்மையில், அந்த வரமளிக்கும் பெருந்தேவன் பேச்சைக் கட்டுப்படுத்தித் தவமிருந்தபோது, அவனது வாயில் இருந்து முதலில் வந்தவர்கள் பிராமணர்களே. விளக்கப்படமுடியாத வடிவத்தில் பிரம்மனாக நானே இருந்து, தேவர்கள், அசுரர்கள் மற்றும்பெரும் முனிவர்களைப் படைத்து, அவரவருக்குரிய நிலைகளில் நிறுத்தி, தேவைப்படும் நேரத்தில் தண்டிக்கவும் செய்வதால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மேம்பட்ட நிலையைப் பிராமணர்கள் அடைகிறார்கள். அஹல்யை சிற்றின்ப வன்தாக்குதலுக்கு உள்ளான விளைவால், அவளது கணவரான கௌதமரால் இந்திரன் சபிக்கப்பட்டான், அதன் மூலமே அவன் தன் முகத்தில் பச்சை தாடியைக் கொண்டான். கௌசிகரின்அந்தச் சாபத்தின் மூலம் இந்திரன் தன் விதைப்பைகளையும் (அண்டத்தை) இழந்தான், பின்னர், (பிற தேவர்கள் அவன் மீது கொண்ட அன்பால்) ஓர் ஆட்டின் விதைப்பைகளால் (அஜத்தின் விருஷணத்தால்) அந்த இழப்பு சமன் செய்யப்பட்டது.

மன்னன் சர்யாதியின் வேள்வியில், பெரும் முனிவரான சியவனர், அசுவின் தேவர்கள் இருவரையும் வேள்விக்காணிக்கைகளின் பங்காளிகளாக்க விரும்பியபோது, இந்திரன் அதைத் தடுத்தான். சியவனர் இவ்வாறு வற்புறுத்தியபோது, அவர் மீது வஜ்ரத்தை வீச நினைத்தான் இந்திரன். அந்த முனிவர் {சியவனர்} இந்திரனின் கரங்களை முடக்கினார். ருத்திரனால் தமது வேள்வி அழிந்த பெரும் முனிவர் தக்ஷர், மீண்டும் தம்மைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டு அடைந்த உயர்ந்த பலத்தின் விளைவால், ருத்திரனின் நெற்றில் மூன்றாவது கண் போன்ற ஒன்றைத் தோன்றச் செய்தார். ருத்திரன், அசுரர்களுக்குச் சொந்தமான முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்க முயன்ற போது, சகிப்புத்தன்மையைக் கடந்து தூண்டப்பட்டவரும், அசுரர்களின் ஆசானுமான உசானஸ், தமது தலையின் சடாமுடியில் இருந்து ஒன்றைப் பிடுங்கி, அந்த ருத்திரன் மீது வீசினார். அந்தச் சடாமுடியில் இருந்து பல பாம்புகள் எழுந்தன. அந்தப் பாம்புகள் ருத்திரனைக் கடித்ததால் அவனது தொண்டை நீல நிறமானது. கடந்த காலமான {யுகமான} சுயம்புவான மனுவின் காலத்தில், நாராயணன் ருத்திரனின் தொண்டையைப் பற்றியதாகவும், அதனால் ருத்திரனின் தொண்டை நீலமானதாகவும் சொல்லப்படுகிறது[2].அமுதத்திற்காகப் பெருங்கடல் கடையப்பட்ட நிகழ்வின்போது, அங்கிரஸ் குலத்தைச் சார்ந்த பிருஹஸ்பதி, புருஷ்சாரணம் என்ற சடங்கைச் செய்வதற்காகப் பெருங்கடலின் கரையில் அமர்ந்தார். தொடக்க ஆசமனத்திற்காக {நீராடலுக்காக} அவர் சிறிதளவு நீரை எடுத்தபோது, அது புழுதி நிறைந்ததாகக் காணப்பட்டது. இதனால் கோபமடைந்த பிருஹஸ்பதி, “நான் உன்னைத் தீண்ட வந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நீ இவ்வளவு தூய்மையில்லாமல் இருப்பதாலும், தெளிவடையாமல் இருப்பதாலும், இந்த நாள் முதல் மீன்கள், சுறாக்கள், ஆமைகள் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகளால் நீ கறைபடிந்திருப்பாய்” என்று சொல்லி பெருங்கடலுக்குச் சாபமளித்தார். அந்தக் காலத்திலிருந்து பெருங்கடலின் நீரானது, பல்வேறு வகைக் கடல் விலங்குகளாலும், ராட்சசர்களாலும் நிறைந்திருக்கிறது.

முன்பொரு சமயம் தாஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகன் விஷ்வரூபர், தேவர்களின் புரோகிதரானார். அவருடைய தாயானவள் ஓர் அசுரனின் மகள் என்பதால் அவர் தாய்வழியில் அசுரர்களோடு தொடர்புடையவராக இருந்தார். வேள்வி காணிக்கைகளில் தேவர்களுக்குரிய பங்கை பொதுவெளியில் கொடுத்தாலும், தனிப்பட்ட முறையில் அசுரர்களுக்கும் பங்கைக் கொடுத்தார். ஹிரண்ய கசிபுவைத் தங்கள் தலைமையில் கொண்ட அசுரர்கள், விஷ்வரூபரின் தாயான தங்கள் தங்கையிடம் சென்று, அவளிடம், “தாஷ்டிரியின் மூலம் உண்டானவனும், திரிசிரிஸ் என்ற வேறு பெயரால் அழைக்கப்படுபவனுமான உன் மகன் விஷ்வரூபன், இப்போது தேவர்களின் புரோகிதராக இருக்கிறான். பொது வெளியில் வேள்விக் காணிக்கைகளில் தேவர்களுக்குரிய பங்கை அவன் கொடுக்கும்போது, அதில் எங்கள் பங்கையும் தனிப்பட்ட முறையில் கொடுத்து வருகிறான். இதன் விளைவால் தேவர்கள் பெருக்கத்தையும், நாங்கள் பலவீனதைதயும் அடைகிறோம். எனவே, அவனை எங்கள் தரப்பை அடையச் செய்வதே உனக்குத் தகும்” என்றார்கள்.

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட விஷ்வரூபரின் தாய், (இந்திரனின்) நந்தன வனத்தில் இருந்து தன் மகனிடம் சென்று அவரிடம், “ஓ! மகனே, நீ ஏன் உன் எதிரிகளைப் பெருக்கி உன் தாய் மாமன்களின் தரப்பை பலவீனப்படுத்துகிறாய்? இவ்வழியில் செயல்படுவது உனக்குத் தகாது” என்றாள்.

தன் தாயால் இவ்வாறு வேண்டப்பட்ட விஷ்வரூபர், அவளது வார்த்தைகளைக் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைத்து, அந்தச் சிந்தனையின் விளைவால், தன் தாய்க்கு உரிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு, ஹிரண்யகசிபுவின் தரப்பை அடைந்தார். திரிசிரஸ் {விஷ்வரூபர்} வந்ததும், மன்னன் ஹிரண்யகசிபு, பிரம்மனின் மகனும், தன் பழைய ஹோத்ரியுமான வசிஷ்டரை அனுப்பிவிட்டு, {ஹோத்ரி என்ற} அந்த அலுவலில் திரிசிரஸை நியமித்தான். இதனால் கோபமடைந்த வசிஷ்டர், “என்னை அனுப்பிவிட்டு, வேறொருவரை உன் ஹோதிர்யாக நியமித்துக் கொண்டதால் இந்த உனது வேள்வி நிறைவு பெறாது, இதற்கு முன் இல்லாத ஓர் உயிரினம் உன்னைக் கொல்லும்” என்று அவனுக்குச் சாபமளித்தார். இந்தச் சாபத்தின் விளைவால், ஹிரண்யகசிபு சிங்க மனிதனின் {நரசிம்மத்தின்} வடிவில் இருந்த விஷ்ணுவால் கொல்லப்பட்டான்.

விஷ்வரூபர், தமது தாய்வழி உறவினர்களின் தரப்பை அடைந்து, அவர்களைப் பெருக்குவதற்காகக் கடுந்தவங்களைச் செய்தார். அவரைத் தமது நோன்புகளில் இருந்து பிறழச் செய்ய விரும்பிய இந்திரன் அழகிய பல அப்சரஸ்களை அவரிடம் அனுப்பினான். ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களும், தெய்வீகமானவர்களுமான அந்தத் தேவகன்னிகளைக் கண்டு விஷ்வரூபரின் இதயம் கலக்கமடைந்தது. குறுகிய காலத்திற்குள் அவர் அவர்களிடம் மிகுந்த பற்றைக் கொண்டார். அவர் அவர்களிடம் பற்றுக் கொண்டார் என்பதை அறிந்த அந்தத் தெய்வீக தேவ கன்னிகள், ஒருநாள் அவரிடம், “இனியும் நாங்கள் இங்கே இருக்க மாட்டோம். உண்மையில் நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்லப் போகிறோம்” என்றனர்.

தம்மிடம் அவ்வாறு சொன்னவர்களிடம் அந்தத் தாஷ்டிரியின் மகன், “நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்? என்னோடே இருங்கள். நான் உங்களுக்கு நன்மையைச் செய்வேன்” என்றார்.

அவர் இவ்வாறு சொல்வதைக் கேட்ட அந்த அப்சரஸ்கள், “நாங்கள் அப்சரஸ்கள் என்றழைக்கப்படும் தெய்வீகமான தேவகன்னிகளாவோம். சிறப்புமிக்கவனும், பெரும் பலம் கொண்டவனும், வரமளிப்பவனுமான இந்திரனையே பழங்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்தோம்” என்றனர்.

அப்போது விஷ்வரூபர் அவர்களிடம், “இந்த நாளே, தேவர்கள் அனைவரையும், அவர்களின் தலைமையில் உள்ள இந்திரனையும் இல்லாமல் செய்வேன்” என்றார்.

இதைச் சொன்ன திரிசிரஸ், பெரும் திறம் கொண்ட குறிப்பிட்ட புனிதமான மந்திரங்களை மனதிதல் சொல்லத் தொடங்கினார். அந்த மந்திரங்களின் சக்தியால் அவரது சக்தி அதிகரிக்கத் தொடங்கியது. வேள்விகளுக்கு அடிமையாக இருந்த பிராமணர்கள், முறையான சடங்குகளுடன் புனித நெருப்பில் ஊற்றிய சோமம் அனைத்தையும் ஒரு வாயினால் பருகத் தொடங்கினார். இரண்டாவது வாயினால் அவர் (வேள்விகளில் கொடுக்கப்பட்ட) உணவுகள் அனைத்தையும் உண்ணத் தொடங்கினார். மூன்றாம் வாயினால் அவர் இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரின் சக்தியையும் பருகத் தொடங்கினார. அவர் குடித்துஃக கொண்டிருந்த சோமத்தினால், அவரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சக்தியில பெருகுவதைக் கண்ட தேவர்கள் அனைவரும், இந்திரனுடன் சேர்ந்து பெரும்பாட்டன் பிரம்மனிடம் சென்றனர்.

அவனது {பிரம்மனின்} முன்னிலையை அடைந்த அவர்கள், “எங்கும் செய்யப்படும் வேள்விகளில் முறையாக அளிக்கப்படும் சோமம் அனைத்தும் விஷ்வரூபரால் பருகப்படுகிறது. எங்களுக்குரிய பங்குகள் ஏதும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அசுரர்கள் பெருகுகிறார்கள், நாங்களோ பலவீனமடைகிறோம். எனவே, எங்களுக்கான நன்மை எதுவோ, அதை விதிப்பதே உமக்குத் தகும்” என்றனர்.

தேவர்கள் நிறுத்தியதும், பெரும்பாட்டன் அவர்களிடம், “பிருகு குலத்தைச் சேர்ந்த பெரும் முனிவர் ததீசி இப்போதும் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தேவர்களே, அவர்களிடம் சென்று ஒரு வரத்தை வேண்டுங்கள். அவர் தமது உடலைக் கைவிடும்படி ஏற்பாடு செய்யுங்கள். பிறகு அவரது எலும்புகளைக் கொண்டு வஜ்ரம் என்றழைக்கப்படும் புதிய ஆயுதம் ஒன்றை உண்டாக்குங்கள்” என்றான்.

பெரும்பாட்டனால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட தேவர்கள், புனிதமான முனிவர் ததீசி தமது தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அந்தத் தவசியிடம், “ஓ! புனிதமானவரே, உமது தவங்கள் தடையில்லாமல் நன்றாக நடைபெறுகிறது என நம்புகிறோம்” என்றனர்.

அதற்குத் தவசியான ததீசி அவர்களிடம், “உங்கள் அனைவருக்கும் நல்வரவு. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக. நீங்கள் சொல்வதை நிச்சயம் நான் செய்வேன்” என்றார்.

அப்போது அவர்கள் அவரிடம் {தேவர்கள் முனிவர் ததீசியிடம்}, “உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக நீர் உமது உடலைக் கைவிடுவதே உமக்குத் தகும்” என்றனர்.

பெரும் யோகியும், இன்ப துன்பங்களை ஒரே ஒளியில் காண்பவரும், உற்சாகத்துடன் இருப்பவருமான தவசி ததீசி இவ்வாறு வேண்டப்பட்டதும், தமது யோக சக்தியால் தம் ஆன்மாவைக் குவித்துத் தமது உடலைக் கைவிட்டார்[3]. களிமண்ணாலான அந்தத் தற்காலிகமான வசிப்பிடத்தை அவரது ஆன்மா கைவிட்டபோது, தாத்ரியானவர் {பிரம்மன்}, அவரது எலும்புகளை எடுத்து வஜ்ரம் என்றழைக்கப்படும் ஒரு தடுக்கப்பட முடியாத ஆயுதத்தை உண்டாக்கினார்.ஒரு பிராமணரின் எலும்புகளால் இவ்வாறு செய்யப்பட்டதும், பிற ஆயுதங்களால் ஊடுருவப்பட முடியாததும், தடுக்கப்பட முடியாததும், விஷ்ணுவின் சக்தியால் நிறைந்ததுமான அந்த வஜ்ரத்தைக் கொண்டு இந்திரனானவன், தாஷ்டிரியின் மகனான விஷ்வரூபரைத் தாக்கினான். இவ்வாறு தாஷ்டிரியின் மகனைக் கொன்ற இந்திரன், அவரது தலையை உடலில் இருந்து துண்டித்தான். எனினும், விஷ்வரூபரின் உயிற்ற உடல் கடையப்பட்ட போது, அதனுள் இருந்த சக்தி, விருத்திரன் என்ற பெயரைக் கொண்ட வலிமைமிக்க அசுரன் ஒருவனை உண்டாக்கியது. விருத்திரன் இந்திரனின் பகைவனானான், ஆனால் அவனையும் இந்திரன் வஜ்ரத்தால் கொன்றான். இவ்வாறு பிரம்மஹத்தி என்ற பாவம் இரண்டுமுறை செய்யப்பட்ட விளைவால், பேரச்சமடைந்த இந்திரன் சொர்க்கத்தின் ஆட்சியுரிமையைக் கைவிட்டான். பிறகு அவன் மானஸத் தடாகத்தில் வளர்ந்த ஒரு குளிர்ந்த தாமரைத் தண்டில் நுழைந்தான். அனிமா என்ற யோக குணத்தின் விளைவால் மிக நுட்பமான வடிவை அடைந்த அவன் அந்தத் தாமரைத் தண்டின் இழைகளுக்குள் நுழைந்தான்.

மூவுலகங்களின் தலைவனான, சச்சியின் கணவன், பிரம்மஹத்தி என்ற பாவத்தில் கொண்ட அச்சத்தினால் காணாமல் போன போது, இந்த அண்டம் தலைவனற்றதானது. ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தேவர்களைத் தாக்கின. பெரும் முனிவர்களால் சொல்லப்பட்ட மந்திரங்கள் தங்கள் திறன்கள் அனைத்தையும் இழந்தன. எங்கும் ராட்சசர்கள் தோன்றினர். மன்னனற்றவர்களாக இருந்த அனைத்து உலகவாசிகளும் பலத்தை இழந்தவர்களாக ராட்சசர்களுக்கும், பிற தீய உயிரினங்களுக்கும் எளிய இரையாக வீழத் தொடங்கினர். அப்போது தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து ஆயுஷின் மகனான நஹுஷனை மூவுலகங்களின் மன்னனாக அவனுக்கு முறையாக முடிசூட்டினர். நஹுஷன் தன் நெற்றியில் முழுமையாகக் கொண்டிருந்த ஐநூறு ஒளிக்கோள்களின் சுடர்மிக்கப் பிரகாசம், ஒவ்வொரு உயிரினத்தின் சக்தியையும் குன்றச் செய்தது. இவ்வாறு இருந்த நஹுஷன் தொடர்ந்து சொர்க்கத்தை ஆளத் தொடங்கினான். மூவுலகங்களும் இயல்பான நிலைக்குத் திரும்பின. அண்டத்தில் வசித்தவர்கள் மீண்டும் மகிழ்ச்சியானவர்களாகவும், உற்சாகமானவர்களாகவும் ஆனார்கள்.

அப்போது நஹுஷன், “அந்த இந்திரன் அனுபவித்த அனைத்தும் என் முன்னிலையில் இருக்கின்றன. அவனது மனைவியான சச்சி மட்டுமே இல்லை” என்றான்.

இதைச் சொன்ன நஹுஷன் சச்சி {இந்திராணி} இருந்த இடத்திற்குச் சென்று, அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, நான் தேவர்களின் தலைவன் வந்திருக்கிறேன். என்னை ஏற்பாயாக” என்றான்.

சச்சி அவனுக்கு மறுமொழியாக, “நீர் இயல்பாகவே அறவொழுக்கத்தில் பற்று கொண்டவராவீர். மேலும் நீர் சோம {சந்திர} குலத்தைச் சார்ந்தவராக இருக்கிறீர். நீர் மாற்றான் மனைவியைப் பீடித்தல் தகாது” என்றாள்.

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட நஹுஷன், அவளிடம், “இந்திரனின் நிலை {பதவி} இப்போது என்னால் அடையப்பட்டது. நான் இந்திரனின் ஆட்சிப்பகுதிகளையும், அவனுடைய மதிப்புமிக்க உடைமைகள் அனைத்தையும் அனுபவிக்கத் தகுந்தவனாவேன். உன்னை அனுபவிக்க நினைப்பதில் பாவமேதும் இல்லை. முன்பு நீ இந்திரனுடையவளாக இருந்ததால் இப்போது எனதாக வேண்டும்” என்றான்.

சச்சி அவனிடம், “நான் நோற்கும் நோன்பொன்று நிறைவடையாமல் இருக்கிறது. {நோன்பின்} இறுதியான சடங்குகள் நிறைவடைந்ததும், ஒரு சில நாட்களில் நான் உம்மிடம் வருகிறேன்” என்றாள்.

இந்திரனின் மனைவியிடம் இந்த உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு நஹுஷன் அவளது முன்னிலையில் இருந்து அகன்றான். அதே வேளையில் துயரத்தாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்ட சச்சி, தன் தலைவனைக் காணும் ஆவலாலும், நஹுஷன் மீது கொண்ட அச்சத்தாலும் (தேவர்களின் தலைமைப் புரோஹிதரான) பிருஹஸ்பதியிடம் சென்றாள். முதல் பார்வையிலேயே பிருஹஸ்பதி அவள் கவலையடைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டார். உடனே அவர், அவள் தன் கணவனை மீட்கத் தேவையானவற்றைச் செய்யும் நோக்கம் கொண்டிருப்பதைத் தியான யோகத்தின் மூலம் அறிந்தார்.

பிருஹஸ்பதி அவளிடம், “தவத்தகுதியையும், நீ இப்போது நோற்கும் நோன்பின் விளைவால் உண்டாகும் தகுதியையும் கொண்டு, வரமளிக்கும் தேவியான உபஸ்ருதியை இருப்புக்கு அழைப்பாயாக. உன்னால் இருப்புக்கு அழைக்கப்படும் அவள், உடனே தோன்றி உன் கணவன் வசிக்கும் இடத்தைக்காட்டுவாள்” என்றார்.

அவள் அந்தக் கடும் நோன்பு நோற்றுக் கொண்டிருந்த போது, உரிய மந்திரங்களின் துணையுடன் வரமளிக்கும் தேவியான உபஸ்ருதியை இருப்புக்கு அழைத்தாள்.

சச்சியால் இருப்புக்கு அழைக்கப்பட்ட அந்தத் தேவி அவள் முன் தோன்றி, “உன் விருப்பத்தைக் கேட்க நான் இங்கிருக்கிறேன். உன்னால் இருப்புக்கு அழைக்கப்பட்டதால் நான் வந்திருக்கிறேன். நீ பேணி வளர்க்கும் எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்?” என்று கேட்டாள்.

அவளுக்குத் தலைவணங்கிய சச்சி, “ஓ! அருளப்பட்ட மங்கையே {பகவதி}, என் கணவர் எங்கிருக்கிறார் என்பதைக் காட்டுவதே உனக்குத் தகும். வாய்மை நீயே. ரிதம் {ஸத்துக்களுக்குத் தாய்} நீயே” என்றாள்.

இவ்வாறு சொல்லப்பட்ட தேவி உபஸ்ருதி, அவளை மானஸத் தடாகத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே வந்த அவள், தாமரைத் தண்டின் இழைகளுக்குள் வசிக்கும் சச்சியின் தலைவனான இந்திரனை அவளுக்குச் சுட்டிக் காட்டினாள். தன் மனைவி நிறம் குன்றி, மெலிந்திருப்பதைக் கண்ட இந்திரன், மிகவும் கவலையடைந்தான்.

அந்தச் சொர்க்கத்தின் தேவன் தனக்குள்ளேயே, “ஐயோ, பெருஞ்சோகம் என்னை மூழ்கடிக்கிறது. நான் என் நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டேன். என் நிமித்தமாகக் கவலையடைந்திருக்கும் என் மனைவி காணாமல் போன என்னைக் கண்டுபிடித்து இங்கே வந்திருக்கிறாள்” என்றான்.

இவ்வாறு சிந்தித்த இந்திரன், அன்புக்குரிய தன் மனைவியிடம், “இப்போது நீ எந்நிலையில் இருக்கிறாய்?” என்று கேட்டான்.

அவள், “நஹுஷன் என்னை அவனது மனைவியாகும்படி அழைக்கிறான். நான் அவனிடம் செல்லப் போகும் காலத்தை நிர்ணயித்து அவகாசம் பெற்றிருக்கிறேன்” என்றாள்.

இந்திரன் அவளிடம், “நீ நஹுஷனிடம் சென்று, ’இதற்கும் முன் ஒருபோதும் பயன்படுத்தப்படாததும், சில முனிவர்கள் பூட்டப்பட்டதுமான வாகனத்தில் உன்னிடம் வந்து, அந்நிலையிலேயே உன்னை மணக்க வேண்டும்’ என்றும், ’இந்திரன் மிக அழகிய பல வாகனங்களைக் கொண்டிருந்தான், அவை அனைத்தும் அவனைச் சுமந்திருக்கின்றன’ என்றும், ’எனினும், இந்திரனுக்கே இல்லாத அத்தகைய வாகனத்தில் அவன் வர வேண்டும்’ என்றும் சொல்வாயாக” என்றான்.

இவ்வாறு தன் தலைவனால் ஆலோசனை கூறப்பட்ட சச்சி, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள். இந்திரன் மீண்டும் தாமரைத் தண்டின் இழைகளுக்குள் நுழைந்தான்.

இந்திரனின் ராணி மீண்டும் சொர்க்கத்திற்குத் திரும்பியதைக் கண்ட நஹுஷன், அவளிடம், “நீ நிர்ணயித்த காலம் முடிவடைந்தது” என்றான். இந்திரன் அவளிடம் செய்யச் சொன்னதைச் சச்சி அவனிடம் சொன்னாள்.

நஹுஷன், தான் செலுத்திய வாகனத்தில் பெரும் முனிவர்கள் பலரைப் பூட்டி, சச்சி வாழ்ந்து வந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டான். மைத்ரவருணனின் உயிர்வித்தின் மூலம் கும்பத்தில் பிறந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அகஸ்தியர், இவ்வழியில் நஹுஷனால் அவமதிக்கப்படும் அந்த முதன்மையான முனிவர்களைக் கண்டார். அவரை {அகஸ்தியரை} நஹுஷன் தன் காலால் தாக்கினான்.

அவனிடம் அகஸ்தியர், “இழிந்தவனே, பெரும் முறையற்ற செயலைச் செய்வதால் நீ பூமியில் விழுவாயாக. பாம்பாக மாறி, இந்தப் பூமியும் மலைகளும் உள்ளவரை அந்த வடிவத்திலேயே தொடர்ந்து வாழ்வாயாக” என்று சபித்தார்.

அந்தப் பெரும் முனிவரால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டவுடனே நஹுஷன் அந்த வாகனத்தில் இருந்து கீழே விழுந்தான். மூவுலகங்களும் மீண்டும் தலைவனற்றவையாகின. தேவர்களும் முனிவர்களும் ஒன்றுசேர்ந்து விஷ்ணு இருக்கும் இடத்திற்குச் சென்று, இந்திரனை மீட்டுக் கொண்டு வரக் கோரினர்.

அவனை {விஷ்ணுவை} அணுகிய அவர்கள், “ஓ! புனிதமானவனே, பிரம்மஹத்தி என்ற பாவத்தில் மூழ்கியிருக்கும் இந்திரனை மீட்பாயாக” என்றனர்.

வரமளிப்பவனான விஷ்ணு அவர்களிடம், “இந்திரன் ஒரு குதிரை வேள்வியை விஷ்ணுவை மதிக்கும் வகையில் செய்யட்டும். அப்போது அவன் தனது முந்தைய நிலையை அடைவான்” என்றான்.

தேவர்களும், முனிவர்களும் இந்திரனைத் தேடத் தொடங்கினர், ஆனால் அவர்களால் அவனைக் காண முடியாததால் சச்சியிடம் சென்று, “ஓ! அருளப்பட்ட மங்கையே, இந்திரனிடம் சென்று அவனை இங்கே கொண்டு வருவாயாக” என்றனர்.

அவர்களால் வேண்டிக்கொள்ளப்பட்ட சச்சி {இந்திராணி} மீண்டும் மானஸத் தடாகத்திற்குச் சென்றாள். இந்திரன், அத்தடாகத்திலிருந்து எழுந்து பிருஹஸ்பதியிடம் வந்தான். தேவ புரோஹிதரான பிருஹஸ்பதி, ஒரு நல்ல குதிரைக்குப் பதில் அனைத்து வழியிலும் வேள்விக்குத் தகுந்த ஒரு கருப்பு மானை வைத்து, குதிரை வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பிருஹஸ்பதி, மருத்துகளின் தலைவனான இந்திரனை (கொல்வதில் இருந்து காக்கப்பட்ட) அந்தக் குதிரையிலேயே அவனது இடத்திற்கு வழிநடத்தினார்[4]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவராலும் துதிகளால் துதிக்கப்பட்டான். பிரம்மஹத்தி பாவமானது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பெண், நெருப்பு, மரங்கள், பசு ஆகியவற்றில் வசிக்கும்படி விதிக்கப்பட்டு, அதனிலிருந்து தூய்மையடைந்த அவன் தொடர்ந்து சொர்க்கத்தை ஆளத் தொடங்கினான். இவ்வாறே ஒரு பிராமணரின் சக்தியால் பலமடைந்த இந்திரன், தன் பகைவனைக் கொல்வதில் வென்றான் (அந்தச் செயலின் விளைவாகப் பாவத்தில் மூழ்கியபோது, மற்றொரு பிராமணரின் சக்தியால் மீட்கப்பட்டான்). இவ்வாறே இந்திரன் மீண்டும் தன் நிலையை அடைந்தான்.பழங்காலத்தில், பெரும் முனிவரான பரத்வாஜர் தெய்வீக கங்கையின் கரையில் தமது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு மூன்று அடி வடிவைக் கொண்டு {வாமனனாக} அந்த இடத்திற்கு வந்தான்[5]. அந்த இயல்புக்குமீறிய காட்சியைக் கண்ட பரத்வாஜர், கை நிறையக் கொண்ட நீரால் விஷ்ணுவைத் தாக்கினார். இதனால் விஷ்ணுவின் மார்பில் (ஸ்ரீவத்ஸம் என்றழைக்கப்படும்) ஒரு வடுவை அடைந்தான்[6].முனிவர்களில் முதன்மையானவரான பிருகுவால் சபிக்கப்பட்ட அக்னி, அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் கடப்பாடு உடையவனாகச் செய்யப்பட்டான்.(19-57) ஒரு காலத்தில் தேவர்களின் தாயான அதிதி, தன் மகன்களுக்காக உணவு சமைத்திருந்தாள். அந்த உணவை உண்டு, அதன் மூலம் பலமடையும் தேவர்கள் அசுரர்களைக் கொல்வார்கள் என்று அவள் நினைத்திருந்தாள். உணவு சமைக்கப்பட்ட பிறகு, புதன் (என்ற பெயரால் அறியப்படும் கோளின் தலைமைத் தேவன்) ஒரு கடும் நோன்பை நிறைவு செய்து, அதிதி முன்னிலையில் வந்து, “எனக்குப் பிச்சை கொடு” என்று கேட்டான். இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட அதிதி, தன் மகன்களான தேவர்கள் முதலில் உண்ணாமல் வேறு யாரும் உணவை உண்ணக்கூடாது என்று நினைத்து அவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. இவ்வாறு தனக்குப் பிச்சை அளிக்க மறுத்த அதிதியின் நடத்தையால் கோபமடைந்தவனும், பிரம்மனின் சுயமுமான புதன், தான் நிறைவு செய்திருந்த கடும் நோன்பின் மூலம் சபித்தான். அதிதி தனக்குப் பிச்சையிட மறுத்ததால் விவஸ்வான் {சூரியன்} தனது இரண்டாம் பிறவியில் அவளது கருவறையில் முட்டையின் {அண்டத்தின்} வடிவில் பிறப்படையும்போது அவள் பெரும் வலியை உணர்வாள் {துன்பமடைவாள்} என்று சபித்தான். அந்த நேரத்தில் அதிதி விவஸ்வானிடம் புதனின் சாபத்தை நினைவு கூர்ந்தாள், அதன் காரணமாகவே சிராத்தங்களில் துதிக்கப்படும் தேவனான விவஸ்வான் அதிதியின் கருவறையில் இருந்து வெளி வந்ததும், மார்த்தாண்டன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(58)

பிரஜாபதியான தக்ஷன் அறுபது {60} மகள்களின் தந்தையானான். அவர்களில் இருபத்துமூவர் கசியபருக்கும்; பத்து பேர் தர்மனுக்கும்; பத்து பேர் மனுவுக்கும், இருபத்தெழுவர் சோமனுக்கும் அளிக்கப்பட்டனர். நக்ஷத்திரங்கள் என்றழைக்கப்படுபவர்களும், சோமனுக்கு அளிக்கப்பட்டவர்களுமான அந்த இருபத்தெழுவரும் அழகிலும், சாதனைகளிலும் இணையானவர்களாகவே இருப்பினும், சோமன், எஞ்சியோரைவிட ரோகிணியிடமே அதிகப் பற்றுடன் இருந்தான். அவனது மனைவிகளில் எஞ்சியோர் அனைவரும், பொறாமையில் நிறைந்து, அவனை விட்டு அகன்று தங்கள் தந்தையிடம் சென்று தங்கள் கணவனின் நடத்தை குறித்துச் சொல்லும் வகையில், “ஓ! புனிதமானவரே, அழகில் நாங்கள் அனைவரும் இணையானவர்களாகவே இருப்பினும், எங்கள் கணவரான சோமர், எங்கள் சகோதரியான ரோஹிணியிடம் அதிகப் பற்றுடன் இருக்கிறார்” என்றனர். தன் மகள்கள் சொன்ன வெளிப்பாடுகளில் கோபமடைந்த தெய்வீக முனிவரான தக்ஷன், தன் மருமகனை காச நோய் தாக்கி அவனிடமே வசிக்கட்டும் என்று சாபமளித்தான். தக்ஷனின் இந்தச் சாபத்தினால் பலமிக்கச் சோமனைப்ப பீடித்த காசநோய் அவனது உடலுக்குள் நுழைந்தது. இவ்வழியில் காசநோயால் பீடிக்கப்பட்ட சோமன், தக்ஷனிடம் வந்தான். பின்னவன் {தக்ஷன்} அவனிடம், “நீ உன் மனைவியரிடம் சமமாக நடந்து கொள்ளாததால் நான் உன்னைச் சபித்தேன்” என்றான். பிறகு அந்த முனிவன் {தக்ஷன்}, சோமனிடம், “உன்னைப் பீடித்திருக்கும் காசநோயால் நீ குறைவை அடைகிறாய். மேற்குப் பெருங்கடலில் ஹிரண்யசரம் என்றழைக்கப்படும் புனித நீர்நிலை இருக்கிறது. அந்தப் புனித நீருக்குச் சென்று அங்கே நீராடுவாயாக” என்றான். அந்த முனிவனின் ஆலோசனையின் பேரில் சோமன் அங்கே சென்றான். சோமன் அந்த ஹிரண்யசிரத்தை அடைந்து அங்கே நீராடினான். தூய்மைச் சடங்குகளைச் செய்து அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான். சோமனால் அந்தப் புனித நீர்நிலை ஒளிர்ந்ததால் (அபாசிதம் அடைந்ததால்), அந்த நாள் முதல் அது பிரபாஸை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எனினும், பழங்காலத்தில் தக்ஷன் அளித்த சாபத்தின் விளைவால் முழு நிலவின் {பௌர்ணமியின்} இரவிலிருந்து தேயத்தொடங்கிப் புது நிலவின் {அமாவாசையின்} இரவில் முற்றாக மறைவதும், அதன் பிறகு மீண்டும் முழு நிலவின் இரவு வரை வளர்வதும் இன்று வரை நடக்கிறது. பிரகாசமான சந்திர வட்டில் {இவ்வாறு} களங்கமடைந்த காலத்திலிருந்து சோமனின் உடலில் குறிப்பிட்ட சில கரும்புள்ளிகள் இருக்கின்றன. உண்மையில் நிலவின் அற்புத வட்டில் அந்த நாள் முதல் முயலின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.(59)

ஒரு காலத்தில் ஸ்தூலசிரஸ் என்ற பெயரைக் கொண்ட முனிவர் ஒருவர் மேரு மலைகளின் வடக்குச் சாரலில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தார். அவர் அந்தக் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தபோது, அனைத்து வகை இனிய நறுமணங்களையும் சுமந்தபடி ஒரு தூய்மையான தென்றல் அங்கே வீசத் தொடங்கி அவரது உடலுக்கு விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. அவன் செய்த கடுந்தவத்தால் அவரது உடல் வெந்து கொண்டிருந்ததாலும், அனைத்து வகை உணவையும் தவிர்த்து அவர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து கொண்டிருந்ததாலும் அவரைச் சுற்றிலும் வீசிய இனிய தென்றலின் விளைவால் அவர் உயர்வான நிறைவை அடைந்தார். தனக்கு விசிறிவிட்ட அந்த இனிய தென்றலிடம் அவர் இவ்வாறு நிறைவடைந்ததால், அவரைச் சுற்றிலும் இருந்த மரங்கள் (பொறாமையடைந்து) அவரது புகழைப் பழிக்கும் வகையில் மலர்களை வெளியிட்டன. மரங்களின் இந்நடத்தையால் வெறுப்படைந்த முனிவர், “இதுமுதல் உங்களால் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு உரிய மலர்களை வெளிப்படுத்த முடியாது” என்று சபித்தார்.(60)

பழங்காலத்தில் நாராயணன் உலகத்திற்கு நன்மை செய்வதற்காகப் பெரும் முனிவர் வடவாமுகராகப் பிறந்தான். மேருவின் சாரலில் கடுந்தவம் செய்து கொடிருந்தபோது அவர் பெருங்கடலை தன் முன்னிலைக்கு வருமாறு அழைத்தார். எனினும், பெருங்கடல் அவரது ஆணைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. இதனால் சினமடைந்த அந்த முனிவர்கள் வெப்பத்தோடு கூடிய தன் உடலைக் கொண்டு பெருங்கடலின் நீரைத் திடமாக்கி மனித வியர்வையின் சுவையுடன் அதை உப்புத்தன்மை அடையச் செய்தார். மேலும் அந்த முனிவர், “இனி உன் நீர் பருகும் நிலையில் இராது. உனக்குள் திரியும் குதிரைத் தலைக்கு மட்டுமே உன் நீர் பருகுவதற்கு இனிமையானதாக இருக்கும்” என்றார். இதன் காரணமாகவே பெருங்கடலின் நீரானது இந்த நாள்வரை சுவையில் உப்புத்தன்மை கொண்டதாகவும், குதிரைத் தலையைத் தவிர வேறு எவராலும் பருக முடியாததாகவும் இருக்கிறது[7].(61)உமை என்ற பெயரைக் கொண்ட இமய மலையின் மகளைத் திருமணம் செய்து கொள்ள ருத்திரன் விரும்பினான். (மஹாதேவனிடம உமையை அளிப்பதாக ஹிமவான் {இமயம்} உறுதியளித்த பிறகு) ஹிமவானை அணுகிய பெரும் முனிவர் பிருகு, அவனிடம், “உனது மகளான இவளை எனக்கு மணமுடித்துத் தருவாயாக” என்று கேட்டார். அதற்கு ஹிமவான், “என மகளுக்கு மணவாளனாக ருத்திரனை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று மறுமொழி கூறினான். இந்த மறுமொழியால் கோபமடைந்த பிருகு, “உன் மகளை அளிக்க மறுத்து இவ்வாறு என்னை அவமதித்ததால் இனி ஒருபோதும் நீ ரத்தினங்களாலும், தங்கத்தாலும் நிறைந்திருக்கமாட்டாய்” என்றார். அந்த {பிருகு} முனிவருடைய சொற்களின் விளைவால் இந்த நாள் வரை இமய மலைகளில் தங்கமோ, ரத்தினங்களோ இருப்பதில்லை. பிராமணர்களின் மகிமை இவ்வாறானதே.(62)

பிராமணர்களின் உதவியின் மூலமே, நித்தியமானவளும், சிதைவில்லாதவளுமான பூமியைத் தங்கள் மனைவியாகக் கொள்ளவும், அவளை அனுபவிக்கவும் க்ஷத்திரியங்களால் முடிகிறது. மேலும் பிராமணர்களின் சக்தியானது, அக்னி மற்றும் சோமனாலானதாகும். இந்த அண்டம் அந்தச் சக்தியாலேயே தாங்கப்படுவதால், ஒன்று சேர்ந்த அக்னி மற்றும் சோமனாலேயே அது தாங்கப்படுகிறது.(63)

சூரியனும், சந்திரமாஸும் நாராயணனின் கண்களாக இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. சூரியனின் கதிர்களே என் கண்களாக அமைகின்றன. சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் இந்த அண்டத்தை வலுவூட்டவும், வெப்பமூட்டவும் செய்கின்றனர்.(64) இவ்வாறு சூரியனும் சந்திரனும் அண்டத்திற்கு வலுவும், பலமும் ஊட்டுவதால் அவர்கள் அண்டத்தின் ஹர்ஷம் (இன்பம்) எனக் கருதப்படுகிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அக்னி மற்றும் சோமன் அண்டத்தைத் தாங்குவதற்குச் செய்யும் இச்செயல்களின் விளைவாலேயே நான் ரிஷிகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். உண்மையில் நானே அண்டத்தைப் படைப்பவனும், வரமளிப்பவனுமான ஈசானன் ஆவேன்[8].(65)புனித நெருப்பில் ஆகுதியாகத் தெளிந்த நெய் ஊற்றப்படும்போது சொல்லப்படும் மந்திரங்களின் சக்தியால், வேள்விகளில் அளிக்கப்படும் (முக்கிய) பங்கை நான் பெறுகிறேன். என் நிறமானது, ஹரித் என்றழைக்கப்படும் முதன்மையான ரத்தினத்தின் நிறத்தைக் கொண்டதாகும். இந்தக் காரணத்தால் நான் ஹரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன்.(66)

நான் உயிரினங்கள் அனைத்தின் நிலையான வசிப்பிடமாக இருக்கிறேன். சாத்திரங்களை அறிந்த மனிதர்களால் நான் உண்மை, அல்லது அமுதத்தோடு அடையாளம் காணப்படுகிறேன். இதன் காரணமாக, கல்விமானான பிராமணர்கள் என்னை ரிததாமன் (உண்மையின் வசிப்பிடம், அல்லது அமுதத்தின் வசிப்பிடம்) என்ற பெயரில் அழைக்கிறார்கள்.(67)

பழங்காலத்தில் பூமி நீருக்குள் மூழ்கிக் காணாமல் போன போது, பெருங்கடலின் ஆழங்களில் அவளைக் கண்டு அங்கிருந்துஅவளை உயர்த்தியவன் நானே. இதன் காரணமாகத் தேவர்கள், கோவிந்தன் என்ற பெயரால் என்னைத் துதிக்கின்றனர்.(68)

சிபி என்ற சொல், உடலில் முடியில்லாத ஒருவனைக் குறிக்கும். சிபியின் வடிவில் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் சிபிவிஷ்டன் என்ற பெயரால் அறியப்படுகிறான்.(69) இந்தக் காரணத்திற்காகவே நான் இந்த இரகசியப் பெயரைக் கொண்டிருக்கிறேன்.(70) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான யாஷ்கர் {யாஷ்க முனிவலர்}, சிபிவிஷ்டன் என்ற பெயரில் என்னைத் துதித்து, பூமியின் பரப்பிலிருந்து மறைந்து போனவையும், பாதாள லோகத்தில் மூழ்கிக் கிடந்தவையுமான நிருக்தங்களை மீட்பதில் வென்றார்.(71)

நான் ஒருபோதும் பிறந்ததில்லை. நான் ஒருபோதும் பிறப்பதில்லை. நான் ஒருபோதும் பிறக்கப்போவதுமில்லை. அனைத்து உயிரினங்களின் க்ஷேத்ரஜ்ஞன் நானே. எனவே, நான் அஜன் (பிறக்காதவன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[9].(72)இழிவான எதனையும், நயமற்ற எதனையும் நான் ஒருபோதும் சொன்னதில்லை. வாய்மையின் சுயமானவளும், பிரம்மனின் மகளும், ரிதை என்ற பெயரால் அழைக்கப்படுபவளுமான தெய்வீக சரஸ்வதி என் வாக்கைப் பிரதிபலித்து எப்போதும் என் நாவில் குடியிருக்கிறாள்.(73) இருப்பில் உள்ளவையும், இல்லாதவையும் என்னால் என் ஆன்மாவில் கலக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மனின் வசிப்பிடமாகக் கருதப்படும் புஷ்கரையில் வசிக்கும் முனிவர்கள் என்னை வாய்மை என்ற பெயரால் அழைக்கின்றனர்.(74) நான் சத்வ குணத்தில் இருந்து ஒருபோதும் பிறழ்ந்ததில்லை, சத்வ குணம் என்னில் இருந்தே தோன்றியது என்பதை அறிவாயாக. ஓ! தனஞ்சயா, இப்பிறவியிலும் கூட என் புராதன குணமான சத்வ குணம் என்னைவிட்ட அகலவில்லை. நான் என்னைச் சத்வ குணத்தில் நிறுவிக் கொண்டு, கனிகளை எப்போதும் விரும்பாமல் செயல்களைச் செய்வதில் ஈடுபடுகிறேன். என் இயல்பான சத்வக குணத்தின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையும் என்னை, சத்வ குணத்தைப் பின்பற்றுவதால் எழும் ஞானத்தின் துணையால் மட்டுமே காண முடியும். அந்தக் குணத்தில் பற்று கொண்டோரின் மத்தியில் மட்டுமே நான் அறியப்படுகிறேன். இந்தக் காரணத்திற்காகத் தான் நான் சாத்வதன் என்ற பெயரால் அறியப்படுகிறேன்.(75,76)

நான் இரும்பினால் செய்யப்பட்ட பெரிய கலப்பைக் கொழுவின் வடிவை ஏற்று, பூமியை உழுகிறேன். என் நிறம் கருப்பாக இருப்பதால், நான் கிருஷ்ணன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(77)

நான் பூமியை நீரோடும், வெளியை மனத்தோடும், காற்றை ஒளியோடும் இணைக்கிறேன். எனவே நான் வைகுண்டன் என்றழைக்கப்படுகிறேன்[10].(78)பரப்பிரம்மத்துடன் அடையாளம் காணப்படுவதன் மூலம் தனிப்பட்ட நனவுநிலை இருப்பைத் தவிர்ப்பது ஒரு வாழும் உயிரினம் அடையக்கூடிய உயர்ந்த குணம் அல்லது நிலையாகும். நான் அந்தக் குணம் அல்லது நிலையில் இருந்து ஒருபோதும் பிறழாதவனாக இருப்பதால் நான் அச்சுதன் {பிறழாதவன்} என்றழைக்கப்படுகிறேன்.(79)

பூமியும், ஆகாயமும் அனைத்துத் திசைகளிலும் விரிந்திருப்பதாக அறியப்படுகின்றன. அவை இரண்டையும் நானே தாங்குவதால் நான் அதோக்ஷஜன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(80) வேதங்களை அறிந்தவர்களும், சாத்திரங்களில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு விளக்கம் கூறுவதில் ஈடுபடுபவர்களுமான மனிதர்கள் அதே பெயரை அழைத்தே வேள்விகளில் என்னைத் துதிக்கின்றனர்.(81) பழங்காலத்தில் பெரும் முனிவர்கள் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, “அதோக்ஷஜன் என்ற பெயரால் அழைக்கப்படத்தகுந்தவன் பலமிக்க நாராயணனைத் தவிர வேறு எவனுமில்லை” என்றனர்.(82)

அண்ட உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் நீட்டிக்கச் செய்யும் தெளிந்த நெய்யானது என் பிரகாசமாக இருக்கிறது {என்னைப் பிரகாசிக்கச் செய்யும் தெளிந்த நெய்யானது அண்ட உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் நீட்டிக்கச் செய்கிறது}. வேதமறிந்தவர்களும், குவிந்த ஆன்மாக்களைக் கொண்டோருமான பிராமணர்கள் இதன் காரணமாகவே கிருதார்ச்சிஸ் என்ற பெயரால் என்னை அழைக்கின்றனர்.(83)

உடலில் {பித்தம், சிலேத்துமம், வாதம் என்று} நன்கு அறியப்பட்ட மூன்று தாதுக்கள் இருக்கின்றன. செயலையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அவை பித்த நீர் {பித்தம்}, சளி {சிலேத்துமம்}, காற்று {கபம்} என்றழைக்கப்படுகின்றன. உடலானது இம்மூன்றின் கலவையாகவே அழைக்கப்படுகிறது. இம்மூன்றால் தாங்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், இவை பலவீனமடையும் போது, தாங்களும் பலவீனமடைகின்றன. உயிர் அறிவியல் சார்ந்த சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அனைவரும் இதன் காரணமாகவே திரிதாது என்ற பெயரால் என்னை அழைக்கின்றனர்.(84,85)

ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் புனிதமான தர்மம் {அறம்} விருஷம் என்ற பெயரில் அறியப்படுகிறது. எனவே நிகண்டுகம் என்றழைக்கப்படும் வேத அகரமுதலியில் சிறந்த விருஷன் என்று நான் அழைக்கப்படுகிறேன்.(86) கபி என்ற சொல் முதன்மையான பன்றியைக் குறிக்கிறது, தர்மம் வேறுபெயரில் விருஷம் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் தலைவரும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் தந்தையுமான கசியபர், இதன் காரணமாகவே விருஷகபி என்ற பெயரால் என்னை அழைத்தார்.(87)

தேவர்களாலும், அசுரர்களாலும் எனது தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவை ஒருபோதும் காண இயன்றதில்லை. இதன் காரணமாகவே நான் அநாதி, அமத்தியன், அனந்தன் என்று பாடப்படுகிறேன். நானே பலமிக்க உயர்ந்த தலைவனாவேன் {ஈஸ்வரனாவேன்}, நானே அண்டத்தின் (அடுத்தடுத்த தோற்றங்களையும், அழிவுகளையும் காணும்) நித்திய சாட்சியாவேன்.(88) ஓ! தனஞ்சயா, நான் எப்போதும் தூய்மையான, புனிதமான சொற்களைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், ஒருபோதும் பாவம் நிறைந்ததைக் கேட்பதில்லை. எனவே நான் சுசிசிரவஸ் என்றழைக்கப்படுகிறேன்.(89)

ஓ! பிறரின் இன்பத்தை அதிகரிப்பவனே, பழங்காலத்தில் ஒற்றைக் கொம்புடைய பன்றியாகப் பிறந்து, கடலின் அடியில் மூழ்கிய பூமியை நான் உயர்த்தினேன். இதன் காரணமாக நான் ஏகசிருங்கன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(90) இந்நோக்கத்திற்காக நான் பெரும்பன்றியின் வடிவை ஏற்றபோது, என் முதுகில் மூன்று கூன்களைக் கொண்டிருந்தேன். உண்மையில், அந்த என் தனிப்பட்ட வடிவின் விளைவால் நான் திரிககுத் (மூன்று கூன் கொண்டவன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[11].(91)கபிலரால் எடுத்துரைக்கப்பட்ட அறிவியலை {சாங்கியத்தை} அறிந்தவர்கள் பரமாத்மாவை விரிஞ்சன் என்ற பெயரால் அழைக்கிறார்கள். அந்த விரிஞ்சனே வேறு பெயரில் பெரும் பிரஜாபதி (அல்லது பிரம்மன்) என்று அழைக்கப்படுகிறான். அண்டத்தின் படைப்பாளனான நான் உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரைக் கொடுத்ததன் விளைவால் விரிஞ்சன் என்றழைக்கப்படுபவனோடு அடையாளம் காணப்படுகிறேன்.(92) (அனைத்து தத்துவங்களிலும்) முடிவான தீர்மானங்களைக் கொண்ட சாங்கிய தத்துவ ஆசான்கள், ஞானத்தையே துணையாகக் கொண்டு சூரிய வட்டிலுக்கு மத்தியில் நிற்கும் நித்திய கபிலராக என்னை அழைக்கிறார்கள்.(93) வேத ஸ்லோகங்களில் பிரகாசமிக்க ஹிரண்யகர்ப்பனாகப் பாடப்படுபவனும், யோகியரால் எப்போதும் வழிபடப்படுபவனுமான அவனோடு பூமியில் எப்போதும் நான் அடையாளம் காணப்படுகிறேன்.(94)

இருபத்தோராயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட ரிக் வேதத்தின் உடல்வடிவமாக நான் கருதப்படுகிறேன். வேதங்களை அறிந்த மனிதர்கள், ஆயிரம் கிளைகளை {சாகைகளைக்} கொண்ட சாம வேதத்தின் உடல்வடிவமாக அழைக்கிறார்கள். அதே போலவே என்னை அர்ப்பணிப்புடன் வழிபடும் கல்விமான்களான பிராமணர்களில் சிலர் ஆரண்யகங்களில் என்னைப் பாடுகிறார்கள்.(95) அத்யார்யுக்களில் {அத்வரியுகாண்டத்தில்} என்னை ஆறும், ஐம்பதும், எட்டும், ஏழும், முப்பதுமான {அதாவது மொத்த எண்ணிக்கையில் நூற்றொரு} கிளைகளை {சாகைகளைக்} கொண்ட யஜுர் வேதமாக என்னைப் பாடுகிறார்கள்.(96) அதர்வணங்களை அறிந்த கல்விமான்களான பிராமணர்கள் ஐந்து கல்பங்களையும், அனைத்து கிரியைகளையும் கொண்ட அதர்வணங்களோடு அடையாளம் காணப்படுபவனாக என்னைக் கருதுகிறார்கள்.(97) ஓ! தனஞ்சயா, கிளைகளை {சாகைகளைப்} பொறுத்தவரையில் பல்வேறு வேதங்களில் இருக்கும் உட்பிரிவுகள், அந்த உட்பிரிவுகளில் அமைந்திருக்கும் ஸ்லோகங்கள், அந்த ஸ்லோகங்களில் உள்ள உயிரெழுத்துகள், உச்சரிக்கும் விதிகள் அனைத்தும் என் படைப்பே என்பதை அறிவாயாக.(98) ஓ! பார்த்தா, (படைப்பின் தொடக்கத்தில், பிரம்மன் மற்றும் தேவர்கள் அனைவரால் இருப்புக்கு அழைக்கப்பட்டு, பாற்கடலில் இருந்து) எவன் எழுகிறானோ, எவன் பல்வேறு தேவர்களுக்குப் பல்வேறு வரங்களை அளிக்கிறானோ அவன் நானன்றி வேறெவனுமல்ல. வேதங்களின் உப அங்கங்களில் உள்ள அசைகள் மற்றும் உச்சரிப்பு அறிவியலின் கொள்ளிடம் நானே.(99)

வாமதேவரால் சுட்டிக்காட்டப்பட்ட பாதையைப் பின்பற்றிய உயர் ஆன்ம பாஞ்சாலன், என் அருளால் (வேதங்களைப் படிப்பதில்) அசைகள் மற்றும் சொற்களின் பிரிவில் உள்ள விதிகளில் நித்திய தன்மையை அடைந்தான். பாப்ரவ்ய குலத்தில் {கோத்திரத்தில்} பிறந்த காலவர், உயர்ந்த தவ வெற்றியை அடைந்து, நாராயணனிடம் இருந்து வரத்தையும் அடைந்து, அசைகள் மற்றும் சொற்களின் பிரிவுகளையும், உச்சரிப்பு விதிகளையும் வகுத்து இவ்விரு காரியங்களையும் அறிந்த முதல் அறிஞரானார். குண்டரீகனும் {கோத்திரப் பெயர்}, பெருஞ்சக்தி கொண்டவனுமான மன்னன் பிரம்மதத்தன்,(100,101) பிறப்பிறப்பில் நேரும் துன்பத்தைச் சிந்தித்து, என் அருளால் தொடர்ந்த ஏழு பிறவிகளின் போக்கில் யோகத்தில் அர்ப்பணிப்புடைய மனிதர்களால் அடையப்படும் செழிப்பை அடைந்தான்.(102)

ஓ! பார்த்தா, ஓ! குரு குலத்தின் தலைவா, பழங்காலத்தில் ஒரு காரியத்திற்காகத் தர்மனின் மகனாகப் பிறப்படைந்த நான் தர்மஜன் என்ற பெயரால் கொண்டாடப்பட்டேன்.(103) நரன் என்றும் நாராயணன் என்றும் இரு வடிவங்களில் பிறப்பை அடைந்தேன். அவ்விரு வடிவங்களில் இருந்த நான், சாத்திரக் கடமைகள் மற்றும் வேறு கடமைகளைச் செய்வதற்கு உதவும் வாகனத்தைச் செலுத்தி, கந்தமாதன மலைகளில் ஓயாத தவத்தில் ஈடுபட்டேன்.(104)

அந்த நேரத்தில் தக்ஷன் பெரும் வேள்வியைச் செய்தான். எனினும், ஓ! பாரதா, அந்தத் தக்ஷன் வேள்விக் காணிக்கைகளில் ருத்திரனுக்கு ஒரு பங்கைக் கொடுக்க மறுத்துவிட்டான்.(105) தவசி ததீசியால் தூண்டப்பட்ட ருத்திரன் அந்தப் பெரும் வேள்வியை அழித்தான். ஒவ்வொரு கணமும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட ஓர் ஈட்டியை {சூலத்தை} அவன் ஏவினான்.(106) அவ்வீட்டி, தக்ஷன் வேள்விக்காக ஏற்பாடு செய்திருந்த அனைத்துப் பொருட்களையும் எரித்த பிறகு, பதரியின் ஆசிரமத்தில் (நரன் மற்றும் நாராயணனான) எங்களை நோக்கிப் பெருஞ்சக்தியுடன் வந்தது.(107) பெரும் வேகத்துடன் வந்த அந்த ஈட்டி {சூலம்} நாராயணனின் மார்பில் விழுந்தது. அந்த ஈட்டியின் சக்தியால் தாக்கப்பட்டதால் நாராயணனின் தலையில் இருந்த முடி பச்சை நிறமானது. உண்மையில் என் முடியின் நிறம் மாறியதன் விளைவால், நான் முஞ்சகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(108)

நாராயணன் ஹும் என்று சொல்லி, சக்தியை இழந்த அந்த ஈட்டி மீண்டும் சங்கரனின் கரங்களில் கொடுத்தான்.(109) இதனால் பெருங்கோபம் அடைந்த ருத்திரன், கடுந்தவப் பலத்துடன் கூடிய முனிவர்களான நரநாரயணர்களை நோக்கி விரைந்தான்.(110) அப்போது நாராயணன், அவ்வாறு விரைந்து வந்த ருத்திரனின் தொண்டையைத் தன் கரத்தால் பற்றினான். அண்டத்தின் தலைவனான நாராயணனால் பற்றபட்டதும், ருத்திரனுடைய தொண்டையின் நிறம் மாறி கருப்பானது. அந்நேரத்தில் இருந்து ருத்திரன் சிதிகாந்தன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்.(111) அதே வேளையில் நரன், ருத்திரனை அழிப்பதற்காக ஒரு புல்லை எடுத்து அதை மந்திரங்களால் ஈர்த்தான். இவ்வாறு ஈர்க்கப்பட்ட அந்தப் புல்லானது வலிமைமிக்க ஒரு போர்க்கோடரியாக மாறியது.(112) நரன் திடீரென அதை ருத்திரன் மீது வீசினான். ஆனால் அது துண்டுகளாக நொறுக்கி விழுந்தது. அவ்வாயுதம் துண்டுகளாக நொறுங்கியதன் விளைவால் நான் கண்டபரசு என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[12].(113)அர்ஜுனன், “ஓ! ஜனார்த்தனா, மூவுலகங்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய வெற்றியடைந்தது யார் என்பதை எனக்குச் சொல்வாயாக”என்றான்.(114)

அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “ருத்திரனும், நாராயணனும் போரில் ஈடுபட்டபோது அண்டம் முழுவதும் திடீரெனக் கவலையால் நிறைந்தது.(115) நெருப்பின் தேவன், வேத மந்திரங்களின் துணையுடன் வேள்வகளில் முறையாக ஊற்றப்படும் தூய, தெளிந்த நெய் காணிக்கைகளை ஏற்க மறுத்தான். அப்போது தூய்மையான ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்களின் மனங்களில் வேதங்கள் உள்ளொளியால் ஒளிரவில்லை.(116) ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தேவர்களைப் பீடித்தன. பூமி நடுங்கினாள். ஆகாய ஓடு இரண்டாகப் பிளந்ததாகக் காணப்பட்டது.(117) ஒளிக்கோள்கள் அனைத்தும் தங்கள் ஒளியை இழந்தன. படைப்பாளனான பிரம்மனே தன் இருக்கையில் இருந்து விழுந்தான். பெருங்கடல் வற்றியது. இமய மலைகள் பிளந்தன.(118)

ஓ! பாண்டுவின் மகனே, எங்கும் இத்தகைய பயங்கரச் சகுனங்கள் தோன்றியபோது, தேவர்கள் மற்றும் உயர் ஆன்ம முனிவர்கள் அனைவரும் சூழ பிரம்மன் போர் நடந்த அந்த இடத்திற்கு வந்தான். நிருக்தங்களின் துணையால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நான்முகப் பிரம்மன் தன் கரங்களைக் கூப்பி ருத்திரனிடம்,(119,120) “மூவுலகங்களுக்கு நன்மை ஏற்படட்டும். ஓ! அண்டத்தின் தலைவா, அண்டத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தில் உன் ஆயுதங்களைக் கீழே வீசுவாயாக.(121) அழிவற்றதும், மாற்றமில்லாததும், பரமும், அண்டத்தின் தோற்றுவாயும், சீரானதும், உயர்ந்த செயல்படு பொருளும், முரண்பட்ட இரட்டைகளைக் கடந்ததும், செயலற்றதும் எதுவோ,(122) அது வெளிப்பட விரும்பி (இரண்டாக இருந்தாலும் ஒன்றேயான) இந்த அருளப்பட்ட வடிவை ஏற்றிருக்கிறது. (பரப்பிரம்மத்தின் வெளிப்படு வடிவங்களான) இந்த நரனும், நாராயணனும், தர்மனின் குலத்தில் பிறந்தவர்களாவர்.(123) தேவர்களில் முதன்மையானவர்களான இவர்கள் உயர்ந்த நோன்புகளை நோற்று, கடுந்தவங்களைச் செய்து வருகிறார்கள். அவன் மட்டுமே அறியும் சிறந்த காரணத்தாலும், அவனது அருள் குணத்தாலும் அவனிடமிருந்தே எழுந்தவன் நான் என்பது அறியப்பட வேண்டும்.(124) அவனது கோபத்தில் இருந்து எழுந்தவனாக நீ இருந்தாலும், முன்படைப்புகள் அனைத்திற்கும் முன்பே நீடித்திருப்பதால் நித்தியமானவன் நீ. நானும், தேவர்கள் மற்றும் பெரும் முனிவர்களான இவர்களும்,(125) நீயும், பிரம்மத்தின் இந்த வெளிப்படு வடிவத்தைத் துதிக்க வேண்டும். தாமதமில்லாமல் உலகங்கள் அனைத்திலும் அமைதி ஏற்படட்டும்” என்றான். பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்ட ருத்திரன், நெருப்பெனும் தன் கோபத்தை நிறுத்தி,(126) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான நாராயணனை நிறைவு செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான். உண்மையில், அவன் துதிக்கத்தக்கவனும், வரமளிப்பவனும், பலமிக்கவனுமான நாராயணனை அடைந்தான்.(127)

வரமருள்பவனும், கோபம் மற்றும் புலன்களை முழுக் கட்டுப்பட்டில் கொண்டவனுமான அந்தத் தேவன் {நாராயணன்} ருத்திரனிடம் நிறைவையும், சமாதானத்தையும் அடைந்தான்.(128) அண்டத்தின் தலைவனும், ஹரி என்ற பெயரால் அழைக்கப்படுபவனுமான அந்தப் பெருந்தேவன், முனிவர்கள், பிரம்மன், தேவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்ட பிறகு, சிறப்புமிக்க ஈனானனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(129) “எவன் உன்னை அறிவானோ அவன் என்னை அறிவான். எவன் உன்னைப் பின்பற்றுவானோ அவன் என்னைப் பின்பற்றுவான். எனவே, உனக்கும் எனக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது. நீ ஒருபோதும் வேறுவகையில் நினைக்காதே.(130) உன் சூலத்தால் என் மார்பில் ஏற்பட்ட இந்த அடையாளம் இந்த நாள் முதல் அழகிய சுழியின் வடிவை ஏற்கும், உன் தொண்டையில் என் கரம் ஏற்படுத்தியிருக்கும் அடையாளம் அழகிய வடிவை ஏற்கட்டும், இதன் விளைவால் நீ ஸ்ரீகண்டன் என்ற பெயரால் அழைக்கப்படுவாய்” என்றான் {நாராயணன்}.(131)

அருள் நிறைந்த புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “ஒருவருக்கொருவர் தங்கள் மேனிகளில் இத்தகைய அடையாளங்களை உண்டாகிக் கொண்டு, இவ்வாறே ருத்திரனிடம் நட்பை வளர்த்துக் கொண்ட நரன் மற்றும் நாராயணன் ஆகிய இரு முனிவர்களும்,(132) தேவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, அமைதியான ஆன்மாக்களோடு மீண்டும் தங்களைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பழங்காலத்தில் ருத்திரனுக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த போரில் பின்னவன் {நாராயணன்} எவ்வாறு வென்றான் என்பதைச் சொல்லிவிட்டேன்.(133) மேலும், அந்தப் பெருந்தேவனுக்கு முனிவர்கள் அளித்த தனிப்பொருள் கொண்ட இரகசிய பெயர்களையும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(134) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியில் பல்வேறு வடிவங்களை ஏற்கும் நான், பிரம்ம லோகத்திலும், அதற்கு மேலும் உயர்ந்த நித்திய உலகங்களிலும், கோலோகம் என்றழைக்கப்படும் உலகத்திலும் என் விருப்பப்படியே திரிந்து வருகிறேன்.(135)

பெரும்போரில் என்னால் பாதுகாக்கப்பட்டுப் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே, நீ செய்த போர்கள் அனைத்திலும் உனக்கு முன்பு நீ கண்டவன், தேவர்களுக்குத் தேவனும், கபர்தின் என்ற வேறு பெயரால் அழைக்கப்படுபவனுமான ருத்திரனையன்றி வேறு எவனுமல்ல.(137) வேறு பெயரில் காலன் என்றும் அறியப்படும் அவன் என் கோபத்தில் இருந்த உண்டானவன் என்பதை அறிவாயாக.(138) தேவர்களுக்குத் தேவனும், அளவிலா பலம் கொண்டவனுமான அந்த உமையின் தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்குவாயாக. அண்டத்தின் சிறப்புமிக்கத் தலைவனும், ஹரி என்ற பெயரில் அழைக்கப்படுபவனுமான அந்த அழிவற்ற தேவனுக்கும் {நாராயணனுக்கும்} குவிந்த ஆன்மாவோடு தலைவணங்குவாயாக. நான் மீண்டும் மீண்டும் சொன்னது போல அந்தத் தேவன் {ருத்திரன்}, என் கோபத்தில் இருந்து பிறந்தவனன்றி வேறெவனும் அல்ல. ஓ! தனஞ்சயா, இதற்கு முன்பு அவனது பலத்தையும், சக்தியையும் குறித்துக் கேட்டிருக்கிறாய்” என்றான் {கிருஷ்ணன்}”.(140)

நாரதரும் நரநாராயணர்களும்! – சாந்திபர்வம் பகுதி – 344-நாரதர் ஸ்வேதத்வீபத்தில் இருந்து திரும்பியது; அவர் மீண்டும் பதரியை அடைந்தது; நாரதருக்கும் நரநாராயணர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

சௌனகர், “ஓ! சௌதி, நீ சொன்ன இந்தக் கதை சிறப்பானதாகும். உண்மையில், இதைக் கேட்ட தவசிகள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருக்கின்றனர்.(1) ஓ! சௌதி, பூமியில் உள்ள புனிதத் தலங்கள், மற்றும் புண்ணிய நீர்நிலைகள் அனைத்திற்கும் சென்று தூய்மைச் சடங்குகளைச் செய்வதால் கிட்டும் தகுதியைவிட {புண்ணியத்தைவிட} நாராயணனைக் குறித்துச் சொல்லும் ஒரு கதை அதிகக் கனிதரும் என்று சொல்லப்படுகிறது.(2) புனிதமானதும், ஒவ்வொரு பாவத்தையும் கழுவ வல்லதும், நாராயணனைக் குறித்ததுமான உனது இவ்வுரையைக் கேட்டு நிச்சயம் நாங்கள் அனைவரும் புனிதமடைந்தோம்.(3) அனைத்து உலகங்களாலும் துதிக்கப்படுபவனும், சிறப்புமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேவன் {நாராயணன்}, பிரம்மனோடு கூடிய தேவர்களாலும், முனிவர்கள் அனைவராலும் கூடக் காணப்பட இயலாதவனாவான்.(4) இருப்பினும், ஓ! சூதரின் மகனே, ஹரி என்றழைக்கப்படும் நாராயணனை நாரதரால், காண முடிந்தது. தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான அந்தத் தலைவனின் அருளாலேயே அவரால் காண முடிந்தது.(5) எனினும், அண்டத்தின் உயர்ந்த தலைவனான அவன் அநிருத்த வடிவத்தில் இருந்த காட்சியைப் பெற்ற பிறகும் கூடத் தெய்வீக முனிவரான நாரதர் தேவர்களில் முதன்மையானவர்களான நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரையும் காண (இமயச் சாரலில் உள்ள பதரி ஆசிரமத்தை நோக்கி) ஏன் மீண்டும் விரைந்து வந்தார்? ஓ! சௌதி, நாரதரின் அந்த நடத்தைக்கான காரணத்தை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(6)

சௌதி, “பரிக்ஷித்தின் அரசமகனான ஜனமேஜயன் தன் (பாம்பு) வேள்வி தொடர்ந்து கொண்டிருந்தபோது, ஓ! சௌனகரே, வேள்விச் சடங்குகளின் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மன்னர்களின் மன்னன் {ஜனமேஜயன்}, தன் பாட்டின் பாட்டனும், வியாசர் என்றழைக்கப்படுபவரும், பலத்துடன் கூடிய தவசிகளில் முதன்மையானவரும், தீவில் பிறந்தவருமான முனிவர் கிருஷ்ணர் அல்லது வியாசர் என்றழைக்கப்பட்டவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(8)ஜனமேஜயன் {வியாசரிடம்}, “தெய்வீக முனிவரான நாரதர், வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} இருந்து திரும்பியதும், புனிதனான நாராயணன் அவரிடம் சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்து, அடுத்ததாக என்ன செய்தார்?(9) இமய மலைகளின் சாரலில் உள்ள பதரி என்றழைக்கப்படும் ஆசிரமத்திற்கு வந்து, அவ்விடத்தில் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரன் மற்றும் நாராயணன் ஆகிய இரு முனிவர்களைக் கண்டு எவ்வளவு காலம் அங்கே வசித்தார்? அவருக்கும் அந்த முனிவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்களின் பொருள் என்ன?(10)உண்மையில் ஞானப் பெருங்கடலாக இருக்கும் நாராயணனைக் குறித்த இந்த உரையாடலானது, நூறாயிரம் {ஒரு லட்சம்} ஸ்லோகங்களாலான பாரதம் என்றழைக்கப்படும் பெரும் வரலாற்றை நுண்ணறிவைக் கொண்ட நீர் கடந்ததனால் எழுந்தது.(11) தயிரில் இருந்து வெண்ணைப் போலவும், மலய மலைகளில் இருந்து சந்தன மரம் போலவும், வேதங்களில் இருந்து ஆரண்யகங்களைப் போலவும், மருத்துவ மூலிகைகள் அனைத்தில் இருந்தும் வரும் அமுதம் போலவும், ஓ! தவப்பெருங்கடலே, ஓ! பிராமணரே, நாராயணனைக் குறித்ததும், அமுதம் போன்றதுமான இந்த உரையாடலானது, உலகில் உள்ள பல்வேறு வரலாறுகள் மற்றும் புராணங்களில் இருந்து உம்மால் எழுப்பப்பட்டிருக்கிறது.(13) நாராயணனே உயர்ந்த தலைவனாவான் {ஈஸ்வரன்} ஆவான். சிறப்புமிக்கவனும், பெரும்பலம் கொண்டவனுமான அவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருக்கிறான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உண்மையில் அந்த நாராயணனின் சக்தி தடுக்கப்பட முடியாததாகும்.(14)

கல்பத்தின் முடிவில் பிரம்மன் முதலான தேவர்களும், கந்தர்வர்களுடன் கூடிய முனிவர்களும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் யாவும் நாராயணனுக்குள்ளேயே நுழைகின்றன.(15) எனவே, நாராயணனைத் தவிர உயர்ந்த வேறு எதுவும், புனிதமான வேறு எதுவும் பூமியிலோ, சொர்க்கத்திலோ இல்லை என நான் நினைக்கிறேன். புனிதத் தலங்கள் அனைத்திற்கும் செல்வது, புனித நீர் நிலைகள் அனைத்திலும் நீராடி தூய்மையடைவது ஆகியனவும், நாராயணனைக் குறித்த ஓர் உரையாடலைவிட அதிகத் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை. அண்டத்தின் தலைவனான ஹரி குறித்ததும், பாவங்கள் அனைத்தையும் அழிப்பதுமான இந்த உரையாடலைத் தொடக்கம் முதல் கேட்டதனால், எங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்ததாகவும், முற்றிலும் புனிதமடைந்ததாகவும் நாங்கள் உணர்கிறோம். என் மூதாதையான தனஞ்சயன், தன் கூட்டாளியாக வாசுதேவனைக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தால், அவன் குருக்ஷேத்திரப் பெரும்போரில் வெற்றியடைந்து ஒருபோதும் ஆச்சரியமாகாது. அண்டத்தின் பெருந்தலைவனான விஷ்ணுவையே தன் கூட்டாளியாகக் கொண்ட ஒருவனால் மூவுலகங்களிலும் அடையமுடியாதது எதுவுமில்லை என நான் நினைக்கிறேன். என் மூதாதையர்களின் உலகம் சார்ந்த செழிப்பு மற்றும் ஆன்ம செழிப்பைக் கவனித்துக் கொள்ள ஜனார்த்தனன் இருந்தான் எனும்போது அவர்கள் நிச்சயம் பெரும் பெரும் நற்பேற்றைப் பெற்றவர்களே, புகழத்தக்கவர்களே. உலகங்கள் அனைத்தினாலும் துதிக்கப்படும் புனிதமான நாராயணனை, கடுந்தவத்தின் துணையால் மட்டுமே காண முடியும்.(17-21) எனினும், மார்பில் அழகிய சுழியுடன் கூடிய நாராயணனைக் காண்பதில் அவர்கள் வெற்றியடைந்தனர். என் மூதாதையர்களைவிட, பரமேஷ்டியின் மகனான தெய்வீக முனிவர் நாரதர் பெரும் நிற்பேற்றைப் பெற்றவரே.(22) உண்மையில் அழிவுகள் அனைத்தையும் கடந்திருக்கும் நாரதர், வெண்தீவுக்குச் சென்று ஹரியைக் காணப் பெரும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.(23) உண்மையில் அவர் அந்த உயர்ந்த தலைவனை {ஈஸ்வரனைக்} கண்டது அவனது அருளால் மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது. அநிருத்தனின் வடிவில் உள்ள நாராயணனை நாரதர் கண்டது அவரது நற்பேற்றாலேயே.(24) நாராயணனை அவ்வடிவில் கண்ட நாரதர், பதரியில் இருக்கும் நர நாராயணர்களைக் காண மீண்டும் ஏன் விரைந்து வந்தார்? ஓ! தவசியே, பரமேஷ்டியின் மகனான நாரதர் வெண்தீவில் இருந்து திரும்பி, பதரியை அடைந்து, நர நாராயண முனிவர்களைக் கண்ட பிறகு, அங்கே எவ்வளவு காலம் வாழ்ந்தார்? அவர்களிடம் என்ன பேசினார்? உயர் ஆன்மா கொண்ட அவ்விருவரும் அந்த முதன்மையான முனிவரிடம் என்ன சொன்னார்கள்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {ஜனமேஜயன்}.(26-28)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,[1] “அளவிலா சக்தி கொண்ட புனித வியாசருக்கு வணக்கம். நாராயணனைக் குறித்த இந்தக் கதை அவரது {வியாசரின்} அருளால் சொல்லப் போகிறேன்.(29) வெண்தீவை அடைந்த நாரதர் மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டார். ஓ! மன்னா, அந்த உயர்ந்த தலைவன் சொன்ன கனமான வார்த்தைகளைத் தம் மனத்தில் சுமந்தபடியே அந்த இடத்தைவிட்டு அகன்று விரைவாக மேரு மலைகளை நோக்கிச் சென்றார். ஓ! மன்னா, மேருவை அடைந்ததும், தான் பெற்ற அனுபவத்தை நினைத்து ஆச்சரியத்தால் நிறைந்தார்.(30,31) அவர் தமக்குள்ளேயே, “இஃது எவ்வளவு ஆச்சரியமானது. நான் மேற்கொண்டது நீண்ட பயணமாகும். இத்தகைய நெடுந்தொலைவுக்குச் சென்று உடல்நலத்தோடும், பாதுகாப்பாகவும் திரும்பியிருக்கிறேன்” என்று நினைத்தார். பிறகு அவர் மேரு மலைகளில் இருந்து கந்தமாதனத்தை நோக்கிச் சென்றார்.(32)வானத்தில் பறந்து சென்ற அவர், பதரி என்ற பெயரில் அறியப்படும் அந்தப் பெரிய ஆசிரமத்தில் விரைவாக இறங்கினார். அங்கே அவர் (நரன் என்றும், நாராயணன் என்றும் அழைக்கப்படும்) அந்தப் புராதனத் தேவர்கள், தங்கள் சுயத்தையே சார்ந்திருந்து, உயர்ந்த நோன்புகளை நோற்றுக் கொண்டு, தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்.(33) துதிக்கத்தக்கவர்களான அவ்விருவரும் தங்கள் மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் அழகிய சுழிகளையும், தங்கள் தலைகளில் சடாமுடிகளையும் தரித்திருந்தனர். உலகத்திற்கு ஒளியூட்டும் அவர்களது பிரகாசமானது சூரியனின் சக்தியைக் கடந்ததாக இருந்தது.(34) அவர்கள் இருவரின் உள்ளங்கைகளிலும் அன்னப்பறவையின் பாதம் {ஹம்ஸரேகை} என்றழைக்கப்படும் அடையாளத்தைக் கொண்டிருந்தன. அவர்களது உள்ளங்கால்களில் சக்கரத்தின் அடையாளம் இருந்தது. அவர்களது மார்பு மிக அகலமாக இருந்தது; அவர்களது கரங்கள் கால்மூட்டு வரை நீண்டிருந்தன.(35) அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முஷ்கங்களைக்[2] கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அறுபது பற்களையும், நான்கு கரங்களையும் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் குரலும் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமானதாக இருந்தது. அவர்களது முகம் அழகானதாகவும், அவர்களது நெற்றி அகலமானதாகவும், புருவங்கள் அழகானதாகவும், கன்னங்கள் நன்கு அமையப்பெற்றனவாகவும், மூக்குகள் நீண்டவையாகவும் இருந்தன.(36) அந்த இரண்டு தேவர்களின் தலையும் பெரியவையாகவும், உருண்டையாகவும், திறந்த குடைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இந்த அடையாளங்களைக் கொண்டிருந்த அவர்கள் தோற்றத்தில் மிக மேன்மையானவர்களாகத் தெரிந்தனர்.(37)அவர்களைக் கண்ட நாரதர், மகிழ்ச்சியால் நிறைந்தார். அப்போது அவர் அவர்களை மதிப்புடன் வணங்கினார், பதிலுக்கு அவர்களும் அவரை வணங்கினர். அவர்கள் அந்தத் தெய்வீக முனிவரை “நல்வரவு” கூறி வரவேற்று வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். முதன்மையானவர்களான அவ்விருவரையும் கண்ட நாரதர் தமக்குள்ளேயே இவ்வாறு நினைக்கத் தொடங்கினார்,(38) “அனைத்து உயிரினங்களாலும் மதிக்கப்படும் இந்த முதன்மையான முனிவர்கள் இருவரும், வெண்தீவில் நான் கண்டவனைப் போன்ற அதே தோற்றத்தைக் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள்” {என்று நினைத்தார்}.(39) இவ்வழியில் சிந்தித்த அவர், அவர்கள் இருவரையும் வலம் வந்து, அவருக்கு வழங்கப்பட்ட குசப் புற்களால் அமைந்த சிறந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.(40) இதன் பிறகு, தவங்களின் வசிப்பிடமானவர்களும், புகழ்மிக்கச் சாதனைகளைச் செய்தவர்களும், சக்தி மிக்கவர்களுமான அந்த முனிவர்கள் இருவரும், அமைதியான இதயத்துடனும், தற்கட்டுப்பாட்டுடனும் தங்கள் காலை சடங்குகளைச் செய்தனர்.(41) பிறகு அவர்கள் ஆவல் நிறைந்த இதயத்துடன், நாரதருக்கு அவரது கால்களைக் கழுவ நீரையும், வழக்கமான அர்க்கிய பொருட்களையும் கொடுத்து அவரை வழிபட்டனர். தங்கள் காலைச் சடங்குகளைச் செய்து, தங்கள் விருந்தினரை வரவேற்று தேவையான விருந்தோம்பல்களையும் செய்த பிறகு அவர்கள் மரப்பலகைகளால் ஆன இரண்டு இருக்கைகளில் அமர்ந்தனர்.(42) அந்த இரு முனிவர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது, புனித நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றுவதன் விளைவால் ஒளிரும் வேள்விப் பீடங்களைப் போலவே அந்த இடம் ஒருவித அழகுடன் ஒளிரத் தொடங்கியது.(43) அப்போது நாராயணர், களைப்பில் இருந்து புத்துணர்வை அடைந்து, தமக்குள் அளிக்கப்பட்ட விருந்தோம்பலுடன் கூடிய வரவேற்பில் நிறைவடைந்து, சுகமாக அமர்ந்திருக்கும் நாரதரைக் கண்டு, அவரிடம் இவ்வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார்.(44)

நரனும், நாராயணனும், “நித்தியமானவனும், தெய்வீகமானவனும், எதிலிருந்து நாம் பிறந்தோமோ அந்த உயர்ந்த தோற்றுவாயுமான பரமாத்மாவை வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} கண்டீரா?” என்று கேட்டனர்.(45)

நாரதர், “மாற்றமில்லாதவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான அந்த அழகனை நான் கண்டேன். உலகங்கள் அனைத்தும், முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் அவனிலேயே வசிக்கின்றனர்.(46) இப்போதும் நித்தியமானவர்களான உங்கள் இருவரையும் காணும்போது அவனையே காண்கிறேன். அந்த ஹரியின் அடையாளங்கள் மற்றும் குறியீடுகள், புலன்களுக்கு முன்பு வெளிப்படும் உங்கள் இருவரின் வடிவங்களிலும் தெரிகின்றன. உண்மையில் நான் உங்கள் இருவரையும் அந்தப் பெருந்தேவனின் அருகிலேயே காண்கிறேன். பரமாத்மாவால் விடைகொடுத்து அனுப்பப்பட்டே இன்று நான் இங்கே வந்தேன்.(47-49) சக்தி, புகழ் மற்றும் அழகில் அவனுக்கு இணையானவர்களாகத் தர்மனின் குலத்தில் பிறந்த உங்கள் இருவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?(50) க்ஷேத்ரஜ்ஞன் குறித்த கடமைகளின் மொத்த நடைமுறைகளையும் அவன் எனக்குச் சொன்னான். எதிர்காலத்தில் அவன் இவ்வுலகத்தில் எடுக்கப்போகும் அவதாரங்கள் அனைத்தையும் எனக்குச் சொன்னான்.(51)

வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்பவர்கள், சாதாரண மனிதர்களுக்குச் சொந்தமான ஐம்புல்களில் ஏதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விழிப்படைந்த ஆன்மா கொண்டவர்களாகவும், உண்மை ஞானத்துடன் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் அண்டத்தின் உயர்ந்த தலைவனான அந்த முதன்மையானவனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அந்தப் பெருந்தேவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள் அவனும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(52) புனிதமானவனான அந்தப் பரமாத்மா தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் எப்போதும் அன்புடன் இருக்கிறான். மறுபிறப்பாளர்களை அவன் விரும்புகிறான். தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் எப்போதும் அன்பாக இருக்கும் அவன், தன்னை வழிபடுபவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(53) அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டத்தை அனுபவிப்பவனும், சிறப்புமிக்கவனுமான மாதவன் தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் அன்புடன் இருக்கிறான். அவனே செயல்படுபவன்; அவனே காரணன்; அவனே விளைவுமாக {காரியமாகவும்} இருக்கிறான். அவன் எல்லாம் வல்லவனாகவும், அளவிலா காந்தியைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.(54) அனைத்துப் பொருட்களும் எங்கே பிறக்கின்றனவோ அதன் காரணமாக அவனே இருக்கிறான். சாத்திர விதிகள் அனைத்தின் உடல்வடிவமாக அவனே இருக்கிறான். தத்துவங்கள் அனைத்தின் உடல்வடிவமாகவும் அவனே இருக்கிறான். அவன் பெரும்புகழைக் கொண்டவனாக இருக்கிறான்.(55)

தவங்களின் மூலம் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளும் அவன், வெண்தீவில் (நேரும்) சக்தியைவிட உயர்ந்த காந்தியுடன் தன்னை ஒளியூட்டிக் கொள்கிறான். தவங்களால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அவன், மூவுலகங்களிலும் அமைதியை விதித்திருக்கிறான்.(56) இத்தகைய மங்கல புத்தியைக் கொண்ட அவன், புனிதத்தையே உடல்வடிவமாகக் கொண்ட மிக மேன்மையான நோன்பை நோற்பதில் ஈடுபடுபட்டிருக்கிறான். கடுந்தவங்களில் ஈடுபட்டபடியே அவன் வசிக்கும் ஆட்சிப்பகுதியில், சூரியன் சுடுவதில்லை, சோமன் அந்தப் பகுதியை அலங்கரிப்பதில்லை. அங்கே காற்று வீசுவதில்லை.(57) சிறப்புமிக்கவனான அண்டப் படைப்பாளன், எட்டு விரற்கட்டைகளின் அளவில் ஒரு பீடத்தை அமைத்துக் கொண்டு, கிழக்கு நோக்கிய முகத்துடன் கரங்களை உயர்த்தியபடியே ஒற்றைக் காலில் நின்று கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறான்.(58)

அங்கங்களுடன் கூடிய வேதங்களை ஓதியபடியே அவன் கடுந்தவங்களில் ஈடுபட்டு வருகிறான். பிரம்மனின் விதிகளுக்கு ஏற்ப முனிவர்களாலும், பசுபதியாலும், எஞ்சியிருக்கும் முக்கியத் தேவர்களாலும், தைத்தியர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான, அல்லது இறைச்சியாலான ஆகுதிகள் எதுவும் அந்தப் பெருந்தேவனின் பாதங்களையே அடைகின்றன.(59-61) அவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்களால் செய்யப்படும் எந்தச் சடங்கையும், எந்த அறச் செயலையும் அந்தப் பெருந்தேவன் தன் தலையால் பெற்றுக் கொள்கிறான்.(62) விழிப்படைந்தவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்களைவிட மூவுலகிலும் வேறு எவரும் அவனுக்கு அன்புக்குரியவர் இல்லை. அவனிடம் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டவன் {பக்திமான்} அந்த மனிதர்களைவிட அன்புக்குரியவன் ஆவான்.(63) அந்தப் பரமாத்மாவால் விடைகொடுத்தனுப்பப்பட்டே நான் இங்கே வந்தேன். சிறப்புமிக்கவனும், புனிதமானவனுமான ஹரி இஃதையே எனக்குச் சொன்னான். எனவே நான் இதுமுதல் அநிருத்தனின் வடிவில் உள்ள நாராயணனிடம் அர்ப்பணிப்புடன் உங்கள் இருவருடன் வசிக்கப் போகிறேன்” என்றார் {நாரதர்}.(64)

பதரியில் வசிக்கும் நாரதர்! – சாந்திபர்வம் பகுதி – 345-பரமாத்மாவின் மகிமையைச் சொன்ன நரனும், நாராயணனும்; தவத்தில் ஈடுபட்ட நாரதர்…

நரனும், நாராயணனும் {நாரதரிடம்}, “(அநிருத்தனின் வடிவில்) பலமிக்க நாராயணனை நீர் கண்டதால் உயர்ந்த அருளைக் கொண்டவராகவும், உயர்ந்த புகழுக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். வேறு எவராலும், ஏன் ஆதி தாமரையில் பிறந்த பிரம்மனாலும் கூட அவனைக் காண முடிந்ததில்லை.(1) பலமிக்கவனும், புனிதம் நிறைந்தவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், வெளிப்படாத மூலத்தையும், காணப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் ஓ! நாரதரே, நாங்கள் உமக்குச் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே.(2) அர்ப்பணிப்புடன் அவனைத் துதிப்பவனைவிட இந்த அண்டத்தில் வேறு எவனும் அவனுக்கு அன்புக்குரியவன் இல்லை. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதன் காரணமாகவே அவன் உம்மிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தவங்கள் நோற்பதில் ஈடுபட்டுவரும் அந்தப் பரமாத்மாவின் ஆட்சிப்பகுதிக்கு எங்கள் இருவரைத் தவிர வேறு எவராலும் செல்ல முடியாது.(4) அந்த இடம் அவனால் அலங்கரிக்கப்பட்டிருப்பதன் விளைவால், அஃது {அவ்விடம் / வெண்தீவு / ஸ்வேதத்வீபம்} ஆயிரம் சூரியர்கள் ஒன்றுதிரண்டதற்கு ஒப்பான காந்தியைக் கொண்டிருக்கிறது.(5)

ஓ! பிராமணரே {நாரதரே}, சிறப்புமிக்கவனும், அண்டப் படைப்பாளனின் தோற்றுவாயுமான அவனிடம் இருந்தே பூமியுடன் தொடர்புடைய மன்னிக்கும் குணம் பிறந்தது.(6) அனைத்து உயிரினங்களின் நன்மைக்கான குணங்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவனில் இருந்தே ரசம் (சுவை) எழுந்தது. நீருடன் தொடர்புடைய ரஸம் என்ற குணம் நீராகவே இருக்கிறது.(7) அவனிடமிருந்தே வடிவம் அல்லது பார்வையை ஆன்மாவாகக் கொண்ட குணத்துடன் கூடிய வெப்பம் அல்லது ஒளி எழுந்தது. அது சூரியனைப் பற்றுவதன் விளைவால், சூரியனால் ஒளிரவும், வெப்பத்தைத் தரவும் முடிகிறது.(8) சிறப்புமிக்கவனும், முதன்மையானவனுமான அவனிடமிருந்தே தீண்டலும் எழுந்தது. அது காற்றைப் பற்றுவதன் விளைவால் காற்றானது தீண்டல் உணர்வை உண்டாக்கியபடியே உலகம் முழுவதும் திரிகிறது.(9) மொத்த அண்டத்தின் பலமிக்கத் தலைவனான அவனிடம் இருந்தே ஒலி எழுந்தது. அது வெளியுடன் பற்று கொள்வதன் விளைவால் மறைக்கப்படாததாகவும், அடைக்கப்படாததாகவும் இருக்கிறது.(10) அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மனம் இந்தச் சிறப்புமிக்கவனிடம் இருந்தே எழுந்தது. சந்திரனுடன் பற்று கொள்வதன் விளைவால் சந்திரன் அனைத்துப் பொருட்களையும் வெளிப்படுத்தும் குணத்தைக் கொண்டிருக்கிறான்.(11)

வேள்விகளில் அளிக்கப்படும் ஆகுதிகள் மற்றும் பிற காணிக்கைகளை உண்ணும் தெய்வீக நாராயணன், ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு எந்த இடத்தில் வசிக்கிறானோ, அந்த இடமே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கும் காரணமான சத் என்ற பெயரில் அறியப்படுகிறது.(12) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, களங்கமற்றவர்களும், அறம் மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் விடுபட்டவர்களுமான மனிதர்களின் பாதையானது மங்கலமும், இன்பமும் நிறைந்ததாகும்.(13) உலகங்கள் அனைத்தின் இருளை விலக்கும் சூரியனே (முக்தன் ஒருவன் கடந்து செல்லும்) வாயிலாகச் சொல்லப்படுகிறான். சூரியனுக்குள் நுழையும் அத்தகைய மனிதர்களின் உடல்கள் அவனது நெருப்பில் எரிக்கப்படுகின்றன. அதன் பிறகு அவர்கள் எக்காலத்திலும், எவராலும் காண முடியாத நிலையை அடைகிறார்கள்.(14) புலப்படாத அணுக்களாகக் குறைக்கப்படும் அவர்கள் பிறகு (சூரியனின் நடுப்பகுதியில் வசிக்கும்) நாராயணனுக்குள் நுழைகிறார்கள். அவனிலிருந்தும் கடந்து செல்லும் அவர்கள் அநிருத்தன் என்ற வடிவத்திற்குள் நுழைகிறார்கள்.(15)

உடல்சார்ந்த குணங்கள் அனைத்தையும் மொத்தமாக இழந்து, மனமாக மட்டுமே மாறும் அவர்க்ள பிரத்யும்னனுக்குள் நுழைகிறார்கள். பிரத்யும்னனிலிருந்தும் கடந்து செல்பவர்களும், சாங்கிய தத்துவத்தை அறிந்தவர்களும், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், ஜீவன் என்றழைக்கப்படும் சங்கர்ஷணனுக்குள் நுழைகிறார்கள். அதன் பிறகு, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படை முக்குணங்களையும் இழக்கும் அந்த மறுபிறப்பாளர்கள் அந்த அடிப்படை முக்குணங்களைக் கடந்தவனான க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் பரமாத்மாவுக்குள் நுழைகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் அசல் புகலிடம் அல்லது வசிப்பிடம் வாசுதேவனே என்பதை நீர் அறிய வேண்டும்.(16-18) குவிந்த மனத்தைக் கொண்டவர்களும், அனைத்து வகைக் கட்டுப்பாடுகளையும் நோற்பவர்களும், புலனடக்கம் கொண்டவர்களும், மொத்த ஆன்மாவுடன் சேர்த்து அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களே வாசுதேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(19)

ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நாங்கள் இருவரும் தர்மனின் இல்லத்தில் பிறப்பை அடைந்தோம். மேலும் நாங்கள் இனிமையான இந்தப் பெரிய ஆசிரமத்தில் கடுந்தவங்களைச் செய்து வருகிறோம்.(20) ஓ! மறுபிறப்பாளரே, பரம்பொருளால் வெளிப்படுத்தப்பட்டவையும், மூவுலகங்களிலும் தேவர்கள் அனைவருக்கும் அன்புக்குரியவையுமான பொருட்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிற உயிரினங்களால அடையப்பட முடியாத பல்வேறு சாதனைகளை அடைவதற்காக) நாங்கள் இவ்வாறு தவத்தில் ஈடுபடுகிறோம்.(21) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பொதுவில் இல்லாதவையும், எங்கள் இருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடியவையுமான விதிகளுக்கு இணக்கமாகச் சிறந்த மற்றும் உயர்ந்த நோன்புகள் நிறைந்த கடுந்தவங்களை நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செய்து வருகிறோம்.(22) ஓ! தெய்வீக முனிவரே, தவங்களைச் செல்வமாகக் கொண்ட தெய்வீக முனிவரான உம்மை நாங்கள் வெண்தீவில் கண்டோம். நாராயணனைச் சந்தித்த பிறகு நீர் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறீர்.(23) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மூவுலகங்களிலும் நாங்கள் அறியாதது ஏதுமில்லை. ஓ! பெருந்தவசியே, {மூவுலகங்களிலும்} நடக்கப் போகும், அல்லது நடந்த, அல்லது நடந்து கொண்டிருக்கும் நன்மை அல்லது தீமையை அந்தத் தேவதேவன் உமக்குச் சொன்னான்” என்றனர்”.(24)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கடுந்தவங்களில் ஈடுபட்டுவந்த நரநாராயணர்கள் இருவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தெய்வீக முனிவரான நாரதர், மதிப்புடன் தன் கரங்களைக் கூப்பி நாராயணனில் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டார்.(25) நாராயணனால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணற்ற புனித மந்திரங்களை அவர் காலத்திற்கும் தன் மனத்தில் முறையான நோன்புகளுடன் உரைத்துக் கொண்டே இருந்தார். பெரும் சக்தியுடன் கூடிய நாரதர், பரம தேவனான நாராயணனை வழிபட்டும், தர்மனின் இல்லத்தில் பிறந்த புராதன முனிவர்கள் இருவரையும் துதித்துக் கொண்டும், இமயச் சாரலில் உள்ள நரநாராயணர்களுக்குச் சொந்தமான பதரி எனும் ஆசிரமத்தில் ஓராயிரம் தேவ வருடங்களுக்குத் தொடர்ந்து வசித்து வந்தார்”.(26-27)

பித்ரு வழிபாடு! – சாந்திபர்வம் பகுதி – 346-பித்ருக்களுக்குச் செய்யும் சடங்குகளின் சிறப்பை நாரதருக்குச் சொன்ன நரனும், நாராயணனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு சமயத்தில் பரமேஷ்டியின் மகனான நாரதர், நர நாரயணரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தேவர்களை மதிக்கும் சடங்குகளையும், நோன்புகளையும் முறையாகச் செய்துவிட்டு, பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்கைச் செய்வதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(1) இவ்வாறு அவர் ஆயத்தமாவதைக் கண்ட தர்மனின் மூத்த மகனான பலமிக்க நாராயணர், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் தொடர்புடைய இந்தச் சடங்குகள் மற்றும் நோன்புகளில் யாரை நீர் வழிபடுகிறீர்? ஓ! புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவரே, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் எனக்கு இது குறித்துச் சொல்வீராக. நீர் செய்வது என்ன? நீர் செய்யும் இந்தச் சடங்குகளால் என்ன கனிகளை {பலன்களை} நீர் விரும்புகிறீர்” என்று கேட்டார்.(2,3)

நாரதர், “முந்தைய நிகழ்வொன்றில் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் சடங்குகளும், நோன்புகளும் செய்யப்பட வேண்டும் என்று நீர் என்னிடம் சொன்னீர். தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சடங்குகள் உயர்ந்த வேள்வியாகும் என்றும், நித்தியமான பரமாத்மாவை வழிபடுவதற்கு இணையானவை என்றும் நீர் சொன்னீர்.(4) அந்தப் போதனையில் அறிவுரை பெற்ற நான், தேவர்களை வழிபட்டுச் செய்யப்படும் இந்தச் சடங்குகளின் மூலம் நித்தியமானவனும், மாற்றமில்லாதவனான விஷ்ணுவைக் கௌரவித்து வேள்வி செய்கிறேன். அந்தப் பரம தேவனிலிருந்த உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன் பழங்காலத்தில் உதித்தெழுந்தான்.(5) பரமேஷ்டி என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் அந்தப் பிரம்மன் என் தந்தையை (தக்ஷனை) உண்டாக்கினான். (தக்ஷ முனிவரின் சாபத்தால் பின்னாளில் அவருடைய மகனாகப் பிறப்பை அடைந்தாலும்) நான் அனைவருக்கும் முன்பாகப் பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவருடைய ஆன்ம மகனாவேன் {பிரம்மனின் மானஸபுத்திரனாவேன்}.(6) ஓ! சிறப்புமிக்கவரே, அறவோரே, நாராயணனால் விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களைக் கௌரவிக்கும் இந்தச் சடங்குகளை நான் நாராயணனுக்காகவே செய்கிறேன். சிறப்பு மிக்க நாராயணனே, (அனைத்து உயிரினங்களின்) தந்தையும், தாயும், பாட்டனுமாவான்.(7) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகள் அனைத்திலும் அண்டத்தின் தலைவனான அவனே துதிக்கப்படுகிறான், வழிபடப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தந்தைமாரான தேவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்ருதிகளைச் சொல்லிக் கொடுத்தனர்.(8) ஸ்ருதிகளில் ஞானத்தை இழந்த அந்தத் தந்தைமார் தாங்கள் சொல்லிக் கொடுத்தவற்றை மீண்டும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து அடைந்தனர். இந்நிகழ்வின் விளைவால், தங்கள் தந்தைமாருக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்த மகன்கள் தந்தையின் நிலையை அடைந்தனர் (தங்கள் மகன்களிடம் மந்திரங்களைப் பெற்ற தந்தைமார் மகன்களின் நிலையை அடைந்தனர்)[1].(9) அச்சந்தர்ப்பத்தில் தேவர்கள் என்ன செய்தனர் என்பதை நீங்கள் இருவரும் நன்கு அறிவீர்கள். (அந்தச் சந்தர்ப்பத்தில்) மகன்களும், தந்தைமாரும் ஒருவரையொருவர் இவ்வாறு வழிபட்டுக் கொண்டனர்.(10) முதலில் சில தர்ப்பை புற்களைப் பரப்பி வைத்துக் கொண்ட தேவர்களும், பித்ருக்களும் (தேவர்களின் பிள்ளைகளும்) மூன்று பிண்டங்களை அதில் வைத்து இவ்வழியில் ஒருவரையொருவர் வழிபட்டனர். எனினும், பழங்காலத்தில் பிண்டங்கள் என்ற பெயரை பித்ருக்கள் ஏன் அடைந்தனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றார்.(11)நரனும், நாராயணனும், “பழங்காலத்தில், கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி காட்சியில் இருந்து மறைந்து போனாள். பெரும் பன்றியின் வடிவையேற்ற கோவிந்தனர் (தன் வலிமைமிக்கத் தந்தத்தால்) அவளை மேலே உயர்த்தினான்.(12) பூமியை மீண்டும் அவளது பழைய நிலையிலேயே நிலைநிறுத்தியவனும், நீரும், புழுதியும் பூசப்பட்டவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், உலகத்திற்கும், அதில் வசித்தவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(13) ஓ! நாரதரே, சூரியன் நடுவானை அடைந்து, காலை துதிகளுக்கான வேளை {ஆந்நிக காலம்} வந்த போது, அந்தப் பலமிக்கத் தலைவன் {வராகன்}, தன் தந்தத்தைக் கொண்டு, திடீரென மூன்று மண் உருண்டைகளை உருட்டி, ஏற்கனவே புல் பரப்பப்பட்ட பூமியில் வைத்தான். நித்திய விதியில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி அந்தப் பலமிக்க விஷ்ணு அந்த மண் உருண்டைகளைத் தன் சுயத்திற்கே அர்ப்பணித்தான்.(14,15) அந்தப் பலமிக்கத் தலைவன் தன் தந்தங்களால் உருட்டிய மண் உருண்டைகளைப் பிண்டங்களாகக் கருதி, தன் உடல் வெப்பத்தால் எழுந்தவையும், உள்ளே எண்ணெய் உள்ளவையுமான எள்வித்துகளைக் கொண்டு, கிழக்கு முகமாக அமர்ந்து அந்த அர்ப்பணிப்புச் சடங்கைத் தானே செய்தான். அப்போது அந்தத் தேவர்களில் முதன்மையானவன், மூவுலகங்களில் வசிப்போருக்கு உண்டான ஒழுக்க விதிகளை நிறுவும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(16,17)

அந்த விருஷாகபி, “உலகங்களைப் படைத்தவன் நானே. நான் பித்ருக்கள் என்றழைக்கப்படுவோரை உண்டாக்கத் தீர்மானித்திருக்கிறேன்” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், பித்ருக்களைக் கௌரவிப்பதற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படுத்தும் உயர்ந்த விதிகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(18)

அவன் அவ்வாறு ஈடுபட்டிருந்தபோது, தன் தந்தத்தால் உருட்டப்பட்ட மண் உருண்டைகள் மூன்றும் தெற்கு நோக்கி விழுந்திருப்பதைக் கண்டான். அப்போது அவன், “என் தந்தத்தால் உருட்டப்பட்ட இந்த உருண்டைகள், பூமியின் பரப்பில் தென் திசை நோக்கி விழுந்திருக்கின்றன. இதனால் வழிநடத்தப்படும் நான், இதுமுதல் இவை பித்ருக்கள் என்ற பெயரில் அறியப்பட வேண்டும் என அறிவிக்கிறேன்.(19) உருண்டையாக எந்தக் குறிப்பிட்ட வடிவத்திலும் இல்லாத்த இவை மூன்றும், உலகின் பித்ருக்களாகக் கருதப்பட வேண்டும். இவ்வாறே நான் நித்திய பித்ருக்களை உண்டாக்குகிறேன்.(20) தந்தையும், பாட்டனும், பெரும்பாட்டனுமான நானே இந்த மூன்று பிண்டங்களில் வசிப்பதாகக் கருதப்பட வேண்டும்.(21) எனக்கு மேன்மையானவன் வேறு எவனும் இல்லை. நான் வழிபடவோ, சடங்குகளுடன் துதிக்கவோ வேறு எவன் இருக்கிறான்? இந்த அண்டத்தில் என் தந்தையென எவன் இருக்க முடியும்? நானே என் பாட்டனாவேன்.(22) உண்மையில் நானே பெரும்பாட்டனாகவும் தந்தையாகவும் இருக்கிறேன். (அண்டமனைத்திற்கும்) நானே ஒரே காரணனாவேன்” என்றான்.ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, விருஷாகபி என்றழைக்கப்படும் அந்தத் தேவர்களின் தேவன் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வராஹ மலைகளின் சாரலில் பெரும் சடங்குகளுடன் அந்தப் பிண்டங்களுக்குக் காணிக்கையளித்தான். அந்தச் சடங்குகளின் மூலம் அவன் தன்னையே வழிபட்டான். அந்த வழிபாட்டை நிறைவு செய்த அவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(23,24) இதனாலேயே பித்ருக்கள் பிண்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இதுவே அந்தப் பொறுப்புப் பெயரின் அடித்தளமாகும். அச்சந்தர்ப்பத்தில் விருஷாகபியால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்புடைய வகையிலேயே அனைவராலும் செய்யப்படும் வழிபாட்டைப் பித்ருக்கள் அடைகிறார்கள்.(25) பித்ருக்கள், தேவர்கள், ஆசான் அல்லது மதிப்புமிக்கப் பெரியவர், வீட்டிற்கு வரும் விருந்தினர், பசு, மேன்மையான பிராமணர்கள், பூமாதேவி, தாய்மார் ஆகியோரை எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் துதித்துக் கௌரவித்து வேள்வி செய்பவர்கள் விஷ்ணுவையே துதிப்பதாகவும், அவனுக்கே அவர்கள் வேள்வியைச் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவனே அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருக்கிறான்.(26,27) இன்ப துன்பங்களால் பாதிப்படையாத அவன் அனைத்திடமும் சமமாக நடக்கும் மனோநிலையைக் கொண்டவனாவான். மகிமை கொண்டவனும், பேரான்மாவுமான நாராயணனே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகச் சொல்லப்படுகிறான்” என்றனர் {நரனும், நாராயணனும்}”.(28)

நாராயண மகிமை! – சாந்திபர்வம் பகுதி – 347-தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற நாரதர்; ஜனமேஜயனுக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன வைசம்பாயனர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நரனும், நாராயணனும் சொன்ன இந்த வார்த்தைகளைக்கேட்ட முனிவர் நாரதர், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பில் {பக்தியில்} நிறைந்தார்.(1) நரநாராயணர்களின் ஆசிரமத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் வசித்து, மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டு, நாராயாணனைக் குறித்த சிறந்த உரையாடல்களைக் கேட்ட பிறகு அந்தத் தெய்வீக முனிவர், இமயச் சாரலில் உள்ள தன் சொந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(2) எனினும், முதன்மையான தவசிகளான நரனும், நாராயணனும், கடுந்தவப் பயிற்சிகளில் ஈடுபட்டபடியே இனிமை நிறைந்த தங்கள் பதரி ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தனர்.(3) நீ பாண்டவ குலத்தில் பிறந்தவனாவாய். நீ அளவிலா சக்தி கொண்டவனாவாய். ஓ! பாண்டவ குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, நாராயணனைக் குறித்த இந்த உரையைத் தொடக்கம் முதல் கேட்ட உனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் கழுவப்பட்டு, ஆன்ம புனிதம் அடைந்தவனாக நீ இருக்கிறாய்.(4)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மாற்றமில்லாதவனான ஹரியை விரும்பி மதிப்பதற்குப் பதிலாக வெறுக்கும் ஒருவனுக்கு இம்மையுமில்லை, மறுமையுமில்லை.(5) தேவர்களில் முதன்மையானவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை வெறுக்கும் மனிதனுடைய மூதாதையர்கள் நிச்சயம் நித்திய நரகில் மூழ்குவார்கள்.(6) ஓ! மனிதர்களில் புலியே, விஷ்ணுவே இருப்பிலுள்ள அனைத்தின் ஆன்மாவாக இருக்கிறான். அவ்வாறிருக்கையில், ஒருவன் விஷ்ணுவை வெறுப்பதன் மூலம் தன்னையே வெறுப்பதால், எவ்வாறு எவனாலும் அவனை வெறுக்க முடியும்?(7) நமது ஆசானும், காந்தவதியின் {சத்தியவதியின்} மகனுமான முனிவர் வியாசரே, உயர்ந்த மற்றும் மாற்றமில்லாத மகிமையான நாராயணனின் மகிமையைக் குறித்த இந்த உரையை நமக்குச் சொல்லியிருக்கிறார். ஓ! பாவமற்றவனே, நான் அவரிடமிருந்தே இதைக் கேட்டேன், நான் கேட்டவாறே சரியாக இதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(8)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, புதிர்களுடன் கூடியதும், விவரங்களின் சுருக்கமுமான இந்த வழிபாட்டு மரபானது, அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே நாரதரால் அடையப்பட்டது.(9) இந்தப் பெரும் வழிபாட்டு மரபின் விபரங்கள் இவ்வாறே இருக்கின்றன. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதற்கு முன்பே ஹரி கீதையில், விதிகளுடன் கூடிய சுருக்கமான குறிப்புடன் இதை நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன்[1].(10) வியாசர் என்றும் அழைக்கப்படும் தீவில் பிறந்தவரான கிருஷ்ணரே பூமியில் நாராயணர் என்பதை அறிவாயாக. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, மஹாபாரதத்தைப் போன்ற ஓர் ஆய்வை அவரைத் தவிர வேறு எவனால் தொகுக்க முடியும்?(11) நீ ஒரு பெரும் வேள்வியைச் செய்யத் தீர்மானித்திருக்கிறாய். நீ தீர்மானித்தவாறே அந்த வேள்வி நடைபெறட்டும். பல்வேறு வகைக் கடமைகள் மற்றும் வழிபாட்டு மரபுகளைக் கேட்டவனான உனது குதிரை வேள்வி நடைபெறட்டும்” {என்றார் வைசம்பாயனர்}”.(12)சௌதி {சௌனகரிடம்} தொடர்ந்தார், “அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜனமேஜயன்}, இந்தப் பெரும் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, தன் பெரும் வேளிவியின் நிறைவுக்காக விதிப்படி விதிக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சடங்குகளையும் செய்யத் தொடங்கினான்.(13) ஓ! சௌனகரே, உம்மால் கேட்கப்பட்ட நான், நாராயணனைக் குறித்த அந்தப் பெரும் சொற்பொழிவை {நாராயணீயத்தை} உமக்கும், நைமிசக் காட்டில் வசிப்பபோரான இந்த முனிவர்கள் அனைவருக்கும் முறையாகச் சொல்லிவிட்டேன்.(14) இதற்கு முன்பு, கிருஷ்ணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையில், பல முனிவர்களும், பாண்டுவின் மகன்களும் கேட்டுக் கொண்டிருந்தபோது நாரதர் என் ஆசானுக்கு இதைச் சொன்னார்[2].(15) பரமதேவனான நாராயணனே மூவுலகங்களுக்கும், முனிவர்களில் முதன்மையான அனைவருக்கும் தலைவனாவான். பேரளவு கொண்ட இந்தப் பூமியைத் தாங்குபவன் அவனே. ஸ்ருதிகள் மற்றும் பணிவெனும் குணம் ஆகியவற்றின் கொள்ளிடம் அவனே. அமைதியான இதயத்தை அடையச்செய்யும் பயிற்சி விதிகள் அனைத்திற்கும், யமன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனிடம் செல்வோர் அனைவருக்கும் பெருங்கொள்ளிடம் அவனே. எப்போதும் முதன்மையான மறுபிறப்பாளர்கள் சூழ இருப்பவன் அவனே. அந்தப் பெருந்தேவனே உன் புகலிடமாக இருக்கட்டும்.(16)சொர்க்கவாசிகளுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் செய்பவன் ஹரியே. (மூவுலகங்களுக்குத் தொல்லையாக அமையும்) அசுரர்களை எப்போதும் கொல்பவனும் அவனே. தவங்களின் கொள்ளிடம் அவனே. பெரும் புகழ் கொண்டவன் அவனே. மது மற்றும் கைடபன் என்ற பெயர்களில் அறியப்படும் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. சாத்திரங்கள் மற்றும் பிற கடமைகளை {தர்மங்களை} அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அடையப்படும் கதிகளை விதிப்பவன் அவனே. வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் முதன்மையான காணிக்கைகளை எடுத்துக் கொள்பவன் அவனே. உன் புகலிடமும், பாதுகாப்பும் அவனே.(17) குணங்களுடன் கூடியவன் அவன். குணங்களில் இருந்து விடுபட்டவனும் அவனே. நான்கு வகை வடிவங்களில் இருப்பவன் அவனே. குளங்களை அர்ப்பணித்தல், அதே வகையிலான அறச் சடங்குகளைச் செய்தல் ஆகியவற்றில் இருந்து எழும் தகுதிகளை {புண்ணியங்களைப்} பகிர்ந்து கொடுப்பவன் அவனே. வெல்லப்பட முடியாதவனாகவும், பெரும் வலிமை கொண்டவனாகவும் இருந்து, அறச்செயல்கள் செய்த முனிவர்களின் ஆன்மாவால் மட்டுமே அணுகக்கூடிய கதியை எப்போதும் விதிப்பவனும் அவனே.(18) உலகங்களின் சாட்சி அவனே. பிறப்பில்லாதவன் அவனே. புராதனப் புருஷன் அவனே. சூரியனின் நிறத்திலான உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்} அவனே, அனைத்தின் புகலிடமும் அவனே. நீரில் இருந்து எழுந்தவனே (நாராயணனே) அவனுக்கு {வாசுதேவனுக்குத்} தலைவணங்குவதால் நீங்கள் அனைவரும் அவனுக்கு {வாசுதவேனுக்குத்} தலைவணங்குவீராக.(18) அண்டத்தின் தோற்றுவாய் அவனே. அமிர்தம் என்றழைக்கப்படும் இருப்பு அவனே. நுட்பமானவன் அவனே. அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் புகலிடம் அவனே. மாற்றமில்லாத தன்மை பொருந்திய ஒருவன் அவனே. சாங்கியர்களும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்ட யோகியரும் நித்தியமான அவனையே தங்கள் புத்திகளில் தாங்கியிருக்கின்றனர்” {என்றார் சௌதி}[3].(20)

ஹயக்ரீவனும் மதுகைடபர்களும்! – சாந்திபர்வம் பகுதி – 348-பிரம்மனைப் படைத்த நாராயணன்; ஹயக்ரீவ வடிவத்தை ஏற்றது; மது கைடபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்ட வரலாறு…

ஜனமேஜயன் {அல்லது சௌனகர்}, “தெய்வீகமான பரமாத்மாவின் மகிமையை நான் உம்மிடம் இருந்து கேட்டேன். தர்மனின் இல்லத்தில், நரன் மற்றும் நாராயணரின் வடிவத்தில் பரமதேவன் பிறந்ததையும் கேட்டேன்.(1) (மூழ்கிப் போன பூமியை உயர்த்துவதற்காகப் பரமதேவன் ஏற்ற வடிவமான) வலிமைமிக்கப் பன்றியில் இருந்து பிண்டம் தோன்றியதையும் கேட்டேன். பிரவிருத்தி அறம் மற்றும் நிவிருத்தி அறம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களைக் குறித்தும் நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(2) ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, நீர் எங்களுக்கு வேறு கதைகளையும் சொல்லியிருக்கிறீர். பெருங்கடலின் வடகிழக்கில் தோன்றிய வடிவமும், வேள்விக் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகளை உண்பவனும், குதிரைத் தலை கொண்டவனும், பெருவடிவம் கொண்டவனுமான விஷ்ணுவைக் குறித்தும் நீர் எங்களுக்குச் சொன்னீர். பரமேஷ்டி என்ற பெயரில் அறியப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனால் அந்த வடிவம் காணப்பட்டது.(3,4)

எனினும் அந்தச் சந்தர்ப்பத்தில், அதற்கு முன்பு ஒரு போதும் தோன்றியிராத பெரும்பொருளைப் போன்றவனும், அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவனுமான அந்த ஹரியின் வடிவம், சரியாக என்ன தன்மைகளைக் கொண்டிருந்தது? என்ன சக்தியைக் கொண்டிருந்தது?(5) ஓ! தவசியே, அதற்கு முன்பு ஒருபோதும் காணப்படாதவனும், அளவிலா சக்தி கொண்டவனும், குதிரைத் தலை கொண்டவனும், புனிதத்தையே சுயமாகக் கொண்டவனுமான அந்த முதன்மையான தேவனைக் கண்டதும் பிரம்மன் என்ன செய்தான்?(6) ஓ! மறுபிறப்பாளரே, இந்தப் புராதன ஞானப்பொருளைக் குறித்த இந்த ஐயம் எங்கள் மனங்களில் எழுகிறது. ஓ! புத்திமான்களில் முதன்மையானவரே, அந்தப் பரமதேவன் என்ன காரணத்திற்காக அந்த வடிவை ஏற்றான்? பிரம்மனின் முன்பு ஏன் அவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்?(7) இந்தப் பல்வேறு புனித காரியங்களைக் குறித்து எங்களிடம் உரையாற்றி நிச்சயம் நீர் எங்களைப் புனிதமடையச் செய்திருக்கிறீர்” என்றான் {ஜனமேஜயன்}[1].(8)சௌதி சொன்னார், “வேதங்களுக்கு முற்றிலும் இணக்கமானதும், பெரும் பாம்பு வேள்வியில் பரிக்ஷித்தின் மகனுக்குச் {ஜனமேஜயனுக்குச்} சிறப்புமிக்க வைசம்பாயனரால் சொல்லப்பட்டதுமான புராதன வரலாற்றை நான் உமக்குச் சொல்லப் போகிறேன்.(9) குதிரைத் தலையுடன் கூடிய விஷ்ணுவின் வலிமைமிக்க வடிவைக் குறித்துக் கேட்ட பரிக்ஷித்தின் அரச மகனும் {ஜனமேஜயனும்} இதே ஐயத்தையே கொண்டு, இதே கேள்விகளையே வைசம்பாயனரிடம் கேட்டான்.(10)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவரே, நீர் சொன்ன நிகழ்வின் போது வடக்குப் பெருங்கடலின் கரைகளில் படைப்பாளனான பிரம்மனால் காணப்பட்டதும், குதிரைத்தலையுடன் கூடியதுமான அந்த வலிமைமிக்க வடிவத்தை ஹரியானவன் என்ன காரணத்திற்காக ஏற்றான்?” என்று கேட்டான்.(11)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, இவ்வுலகில் இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களும், மற்றும் உயர்ந்த தலைவனின் புத்தியின் மூலம் உண்டாகும் கலவையான அடிப்படையான ஐம்பூதக் கலவையின் விளைவால் உண்டானவையே.(12) முடிவிலாத் தன்மையைக் கொண்ட பலமிக்க நாராயணனே உயர்ந்த தலைவனும் {ஈஸ்வரனும்}, அண்டப்படைப்பாளனும் ஆவான். அனைத்துப் பொருட்களின் அக ஆன்மாவாகவும், வரங்களை அளிப்பவனாகவும் அவனே இருக்கிறான். குணங்கள் அற்ற அவனே அவற்றைக் கொள்ளவும் செய்கிறான்.(13) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அனைத்துப் பொருட்களுக்கும் அழிவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. முதலில் நிலம் எனும் பூதம் நீருடன் கலந்து அனைத்துப் பக்கங்களிலும் ஒரே பரப்பாக நீர் மட்டுமே காணப்படும்.(14) அதன்பிறகு நீரானது ஒளிக்குள்ளும், ஒளியானது காற்றுக்குள்ளும் கலக்கின்றன. பிறகு காற்றானது வெளிக்குள்ளும், வெளியானது மனத்துக்குள்ளும் கலக்கின்றன.(15) மனமானது புலப்படுவதற்குள் (அல்லது நனவுநிலை, அல்லது அகங்காரத்திற்குள்) கலக்கிறது. புலப்படுவது, புலப்படாததற்குள் (அல்லது பிரகிருதிக்குள்) கலக்கிறது. புலப்படாதது (பிரகிருதியானது) புருஷனுக்குள் (ஜீவாத்மாவுக்குள்) கலக்கிறது, புருஷன் பரமாத்மாவுக்குள் (அல்லது பிரம்மத்திற்குள்) கலக்கிறான்.(16) அப்போது ஏதும் உணரப்படாதவகையில் அண்டம் முழுவதும் இருள் பரவுகிறது. அந்த ஆதி இருளுக்குள் இருந்து (படைப்புக் கொள்கையுடன் கூடிய) பிரம்மம் எழுகிறது. அந்த இருள் ஆதியானதாகவும், அழிவில்லா தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.(17)

அந்த ஆதி இருளில் இருந்து எழும் பிரம்மம், (தன் சொந்த ஆற்றலின் மூலம்) அண்டமெனும் கருத்தாக வளர்ந்து புருஷனின் வடிவை ஏற்கிறது. அத்தகைய புருஷன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான். பாலினமற்ற அவன், பிராதானம் (உயர்ந்தது, தொடக்கம்) என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுகிறான்.(18) ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, அவன் முக்குணங்களின் கவலை, அல்லது புலப்படாதது என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு நிலைத்திருக்கிறான். அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கவன் விஷ்வக்ஸேனன் அல்லது ஹரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறான்.(19) யோக உறக்கத்தின் வசப்படும் அவன் நீரில் தன்னைக் கிடத்திக் கொள்கிறான். பிறகு அவன், பல்வேறு வகைத் தோற்றப்பாடுகள் மற்றும் அளவிலா குணங்கள் நிறைந்த அண்டத்தைப் படைப்பது குறித்துச் சிந்திக்கிறான்.(20)

அவன், படைப்புக் குறித்துச் சிந்திக்கும்போதே தன் உயர்ந்த குணங்களை நினைவுகூர்கிறான். இதிலிருந்து அநிருத்தனின் புத்தியைப் பிரதிபலிக்கும் நான்முகப் பிரம்மன் எழுகிறான்.(21) ஹிரண்யகர்ப்பன் என்றும் அழைக்கப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனே உலகங்கள் அனைத்தின் பாட்டனாவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன், அநிருத்தனில் (அவனது தொப்புளில்) இருந்து எழும் தாமரைக்குள் தன் பிறப்பை அடைகிறான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், நித்தியமானவனும், அற்புதக்கூறுகளைக் கொண்டவனுமான பிரம்மன் அந்தத் தாமரைக்குள அமர்ந்தபடியே அனைத்துப் பக்கங்களில் இருக்கும் நீரைக் கண்டான்.(23) பரமேஷ்டி என்றும் அழைக்கப்படும் பிரம்மன் சத்வ குணத்தைப் பின்பற்றி அண்டத்தைப் படைக்கத் தொடங்கினான். சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த ஆதி தாமரையில் நாராயணன் பெரும் தகுதி நிறைந்த இரு நீர்த்துளிகளை விட்டான். தொடக்கமும், முடிவும் இல்லாதவனும், அழிவைக் கடந்திருப்பவனுமான நாராயணன், தன் கண்களை அந்த இரு நீர்த்துளிகளில் செலுத்தினான்.(24,25)

அந்த இரு நீர்த்துகளில் மிக அழகாகவும், பிரகாசமாகவும் இருந்த ஒரு துளி தேன்துளியைப் போலத் தெரிந்தது. நாராயணனின் ஆணையின் பேரில் அந்தத் துளியில் இருந்து தமஸ்குணத்தால் அமையப்பெற்றவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு தைத்தியன் உதித்தான். அந்தத் தாமரைக்குள் இருந்த மற்றொரு நீர்த்துளி மிகக் கடினமானதாக இருந்தது. அதிலிருந்து ரஜஸ் குணத்தைக் கொண்ட தைத்தியன் கைடபன் உதித்தான்.(26) தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களைக் கொண்டவர்களும், வலிமையுடன் கூடியவர்களும், கதாயுதங்கள் தரித்தவர்களுமான அந்தத் தைத்தியர்க்ள இருவரும், தங்கள் பிறப்பை அடைந்த உடனேயே அந்தப் பரந்த ஆதி தாமரைக்குள் திரியத் தொடங்கினர்.(27) மிக இனிய வடிவைக் கொண்ட நான்கு வேதங்களையும் படைப்பதில் ஈடுபட்டுவரும் அளவிலா பிரகாசம் கொண்ட பிரம்மன் அதற்குள் {அந்தத் தாமரைக்குள்} இருப்பதை அவர்கள் கண்டனர்.(28) உடல்படைந்த அந்த முதன்மையான அசுரர்கள் இருவரும், நான்கு வேதங்களையும் கண்டு, அதைப் படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவற்றை அவனிடம் இருந்து பறித்தனர்.(29) நித்தியமான வேதங்களைப் பறித்த அந்த வலிமைமிக்கத் தானவர்கள் இருவரும், தாங்கள் கண்ட பெருங்கடலின் நீருக்குள் பாய்ந்து அதனடியை நோக்கிச் சென்றனர்.(30) தன்னிடம் இருந்த வேதங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டதைக் கண்ட பிரம்மன் துயரத்தால் நிறைந்தான். இவ்வழியில் வேதங்களைக் களவு கொடுத்த பிரம்மன், இவ்வார்த்தைகளில் உயர்ந்த தலைவனிடம் {ஈஸ்வரனிடம்} பேசினான்.(31)

பிரம்மன், “வேதங்களே என் பெருங்கண்களாகும். வேதங்களே என் பெரும்பலமும் ஆகும். வேதங்களே என் பெரும்புகலிடமாகும். வேதங்களே என் உயர்ந்த பிரம்மம் ஆகும்.(32) இருப்பினும் என்னிடமிருந்த அந்த வேதங்களை அவ்விரு தானவர்களும் பலவந்தமாக அபகரித்துச் சென்றனர். நான் படைத்த உலகங்கள் வேதங்களை இழந்து இருளில் மூழ்குகின்றன.(33) (என்னிடம்) வேதங்கள் இல்லாமல், என் சிறந்த படைப்பை இருப்புக்குக் கொண்டுவர எவ்வாறு என்னால் இயலும்? ஐயோ, (இத்தகைய செயல்பாட்டின் மூலம்) வேதங்களை இழந்ததன் விளைவால் நான் அடையும் துயரம் பெரியதாகும்.(34) என் இதயம் மிகவும் துன்புறுகிறது. அது பெருஞ்சோகத்தின் வசிப்பிடமாகிவிட்டது. என் இழப்பினால் நான் மூழ்கியிருக்கும் இந்தத் துன்பப் பெருங்கடலில் இருந்து என்னை மீட்கப் போவது யார்? நான் தொலைத்த வேதங்களைக் கொண்டுவரப் போவது யார்? என்னிடம் கருணை கொள்ள யார் இருக்கிறார்?” என்றான்.(35)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவனே, பிரம்மன் இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, திடீரென ஹரியை இவ்வார்த்தைகளில் துதிக்கும் எண்ணம் அவனுக்கு எழுந்தது. அப்போது பலமிக்கப் பிரம்மன், மதிப்புடன் தன் கரங்களைக் குவித்த படி, தன் மூதாதையின் பாதத்தைப் பற்றியபடியும், நாராயணனைக் கௌரவிக்கும் இந்த உயர்ந்த துதிகளைப் பாடினான்.(36)

பிரம்மன், “ஓ! பிரம்மனின் இதயமே, உன்னை நான் வணங்குகிறேன். எனக்கு முன்பே பிறந்திருந்த {எனக்கு முன்னிருப்பவனே} உன்னை நான் வணங்குகிறேன். அண்டத்தின் தோற்றுவாய் நீயே. அனைத்திலும் முதன்மையான வசிப்பிடம் நீயே. ஓ! பலமிக்கவனே, அனைத்துக் கிளைகளுடன் கூடிய யோகப் பெருங்கடல் நீயே.(37) புலப்படுவது {ஸ்தூலம்} மற்றும் புலப்படாதது {ஸூக்ஷ்மம்} ஆகிய இரண்டையும் படைத்தவன் நீயே. உணரப்படமுடியாத பரப்பைக் கொண்ட மங்கலப் பாதையில் நடப்பவன் நீயே. அண்டத்தை உண்பவன் நீயே. உயிரினங்கள் அனைத்தின் உள்ளான்மா {அந்தராத்மா} நீயே. எந்தத் தோற்றுவாயும் இல்லாதவன் நீயே.(38) அண்டத்தின் புகலிடம் நீயே. தோற்றுவாயேதும் அற்றவனாக இருப்பதால் சுயம்புவாக இருப்பவன் நீயே. என்னைப் பொறுத்தவரையில் நான் உன் உற்சாகநிலையில் இருந்து உதித்தேன். உன்னில் இருந்தே நான் பிறப்பை அடைந்தேன். மறுபிறப்பாளர்கள் அனைவராலும் புனிதமானதாகக் கருதப்படும் {மானஸம் என்றழைக்கப்படும்} என் முதல் பிறவி உன் விருப்பத்தின் மூலம் அடைந்தேன். பழங்காலத்தில் {சாக்ஷுஷம் என்கிற} என் இரண்டாம் பிறவி உன் கண்களில் இருந்து உண்டானது.(39,40)

உன் அருளால் {வாசிகம் என்கிற} என் மூன்றாம் பிறப்பு உன் வாக்கில் இருந்து உண்டானது. ஓ! பலமிக்கத் தலைவா, {ஸ்ரோத்ரஜம்} என் நான்காம் பிறப்பு உன் காதுகளில் இருந்து உண்டானது.(41) ஓ! தலைவா, {நாஸத்யம் என்கிற} என் ஐந்தாம் பிறப்பு அனைத்து வகையிலும் சிறப்பான உன் மூக்கில் இருந்து உண்டானது. {அண்டஜம் என்கிற} என்னுடைய ஆறாம் பிறப்பு உன் மூலம் ஒரு முட்டையில் உண்டானது.(42) இது {பத்மஜென்மம் என்கிற} என் ஏழாம் பிறவியாகும். ஓ! தலைவா, இஃது இந்தத் தாமரைக்குள் நேர்ந்திருக்கிறது. ஓ! முக்குணமுமற்றவனே, ஒவ்வொரு படைப்பிலும் நான் உன் மகனாகவே பிறக்கிறேன்.(43) ஓ! தாமரை இதழ் கண்ணனே, உண்மையில் முக்குணங்களிலும் முதன்மையான சத்வ குணத்தால் அமைந்த உன் மூத்த மகனாக நான் பிறக்கிறேன். பரம {உயர்ந்த} இயல்பைக் கொண்டவன் நீ. உன்னிலிருந்தே உதிப்பவன் நீ.(44) உன்னால் படைக்கப்பட்டவன் நான். வேதங்களே என் கண்கள். எனவே நான் காலங்கடந்தவனாக இருக்கிறேன். இந்த யோக உறக்கத்தில் இருந்து எழுவாயாக. என் கண்களை மீண்டும் எனக்குத் தருவாயாக. நான் உனக்கு அன்பானவன், நீ எனக்கு அன்பானவன்” என்று துதித்தான் {பிரம்மன்}.(45)

பிரம்மனால் இவ்வாறு துதிக்கப்பட்டவனும், அனைத்துப் பக்கத்திலும் முகம் கொண்டவனுமான சிறப்புமிக்கப் புருஷன், தன் உறக்கத்தை உதறி, வேதங்களை (அவற்றைப் பலவந்தமாக அபகரித்துச் சென்ற தைத்தியர்களிடம் இருந்து) மீட்கத் தீர்மானித்தான். அவன், தனது யோகபலத்தைப் பயன்படுத்தி இரண்டாம் வடிவம் ஒன்றை ஏற்றான்.(46) சிறந்த மூக்கைக் கொண்ட அவனது உடல் சந்திரனைப் போலப் பிரகாசமடைந்தது. அவன் வேதங்களின் வசிப்பிடமான பெரும்பிரகாசமுடைய குதிரைத் தலை கொண்ட வடிவை ஏற்றான்.(47) ஒளிக்கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களுடன் கூடிய ஆகாயமே அவனது தலையின் மகுடமானது. நீண்டு பாயும் அவனது தலை முடிகள் சூரியக் கதிர்களின் காந்தியுடன் இருந்தன.(48) மேலுலகமும், கீழுலகமும் அவனது இரு காதுகளாகின. பூமியே அவனது நெற்றியானது. கங்கை மற்றும் சரஸ்வதி ஆகிய ஆறுகள் இரண்டும் அவனது இடைகளாகின. பெருங்கடல்கள் இரண்டும் அவனது இரு புருவங்களாகின.(49) சூரியனும், சந்திரனும் அவனது இரு கண்களாகினர். சந்தியொளி அவனது மூக்கானது. ஓம் என்ற அசை அவனது நினைவும், புத்தியுமானது. மின்னல் அவனது நாவானது.(50)

இரண்டு இன்பலோகங்களான கோலோகமும், பிரம்மலோகமும் அவனது மேலுதடும், கீழுதடுமாகின. அண்ட அழிவை ஏற்படுத்துவதும், முக்குணங்களையும் கடந்திருப்பதுமான பயங்கரமான இரவு {காளராத்ரியானது} அவனது கழுத்தானது.(51) பல்வேறு பொருட்களைப் பல்வேறு அங்கங்களாகவும், குதிரைத் தலையையும் கொண்ட அந்த {ஹயக்ரீவ} வடிவை ஏற்றபிறகு, அந்த அண்டத்தின் தலைவன் அங்கேயே அப்போதே மறைந்து பாதாள லோகத்திற்குச் சென்றான்.(52) அந்த உலகத்தை அடைந்ததும் அவன் தன்னை உயர்ந்த யோகத்தில் நிறுவிக் கொண்டான். சிக்ஷை என்றழைக்கப்படும் அறிவியல் விதிகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட குரலைப் பின்பற்றி வேத மந்திரங்களை அவன் உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.(53) தனித்தன்மை வாய்ந்த அவனது உச்சரிப்பு அனைத்து வகையிலும் இனிமையாகக் காற்றின் ஊடாக எதிரொலித்தது. அவனது குரல் பாதாளலோகத்தின் எல்லை முதல் மறுயெல்லை வரை நிறைந்திருந்தது. அனைத்து பூதங்களின் தன்மைகளையும் கொண்ட அது பெரும் நன்மைகளை உண்டாக்கவல்லதாக இருந்தது.(54) அப்போது அந்த அசுரர்கள் இருவரும், மீண்டும் வந்து எடுத்துக் கொள்ளும் வகையில் காலத்தால் வேதங்களிடம் ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டு {ஸங்கேதத்தால் [இரகசிய மொழியால்] வேதங்களைக் கட்டி}, அவ்வொலி வருவதாகத் தென்பட்ட இடத்தை நோக்கி ஓடினர்.(55)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே வேளையில் பாதாள லோகத்தில் இருந்தவனும், குதிரைத் தலையுடன் கூடியவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான அந்த உயர்ந்த தலைவன் {ஹயக்ரீவன்}, வேதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.(56) அவன், பிரம்மன் இருந்து இடத்தில் மீண்டும் வந்து வேதங்களை அவனிடம் கொடுத்தான். வேதங்களை மீட்டுப் பிரம்மனிடம் கொடுத்த அந்த உயர்ந்த தலைவன் மீண்டும் தன் சொந்த இயல்பை அடைந்தான்.(57) மேலும் அந்த உயர்ந்த தலைவன், குதிரைத் தலையுடன் கூடிய தன் வடிவை {ஹயக்ரீவனைப்} பெருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் நிறுவினான். (இவ்வழியில்) வேதங்களின் வசிப்பிடமான அவனை நிறுவியபிறகு, மீண்டும் குதிரைத் தலைக் கொண்ட வடிவை ஏற்றான்[2].(58) மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்களும், ஒலியை வெளியிடும் எவரையும் காணாது மீண்டும் அதே இடத்திற்கு விரைவாகத் திரும்பி வந்தனர். அவர்கள் தங்கள் கண்களைச் சுற்றிலும்சுழல விட்டும், வேதங்களை அவர்கள் வீசிய அந்த இடம் வெறுமையாக இருப்பதைக் கண்டனர்.(59) வலிமையானவர்களில் முதன்மையான அவர்கள் இருவரும் பெரும் வேகத்துடன் பாதாள லோகத்தில் இருந்து எழுந்தார்கள்.(60)தாங்கள் பிறப்படைந்த ஆதி தாமரைக்குத் திரும்பி வந்த அவர்கள், பலமிக்கவனும், வெண்ணிறத்தையும், சந்திரனுக்கு ஒப்பான காந்தியையும் கொண்டவனும், அநிருத்தனின் வடிவில் இருந்தவனுமான அந்த உண்மையான படைப்பாளனைக் கண்டார்கள்.(61) அளவிலா ஆற்றலைக் கொண்டவனான அவன் யோக உறக்கத்தின் ஆதிக்கத்தில் தன் உடலைப் பரந்த நீர்ப்பரப்பை ஆக்கிரமிக்கும் வகையில் கிடத்தியிருந்தான்.(62) பெரும் பிரகாசத்தைக் கொண்டதும், சத்வமெனும் களங்கமிலா குணத்துடன் கூடியதுமான அந்தப் பரம தேவனின் உடலானது, நெருப்பைக் கக்குவதாகத் தெரிந்த ஒரு பாம்பின் சிறந்த தலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது[3].(63)அந்தத் தலைவன் இவ்வாறு கிடப்பதைக் கண்ட அந்த முதன்மையான தானவர்கள் இருவரும், உரக்கச் சிரித்து முழங்கினார்கள். ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுடன் கூடிய அவர்கள்,(64) “இவனே வெண்ணிறமுடைய அவன். இப்போது உறக்கத்தில் கிடக்கிறான். இவனே பாதாளலோகத்தில் இருந்து வேதங்களைக் கொண்டு வந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(65) இவன் யாருடையவன்? யார் இவன்? பாம்பின் தலையில் ஏன் இவ்வாறு உறங்குகிறான்?” என்றனர். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தானவர்கள் இருவரும் யோகத்துயிலில் இருந்த ஹரியை விழிப்படைச் செய்தனர்.(66)இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவன் (நாராயணன்) இவ்வாறு விழிப்படையச் செய்யப்பட்டதும், அந்தத் தானவர்கள் இருவரும் தன்னோடு போரிடும் நோக்கம் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். தன்னோடு போரிட ஆயத்தமாக இருக்கும் அந்த முதன்மையான அசுரர்கள் இருவரையும் கண்ட அவனும் அவர்களது அசையை நிறைவு செய்வதில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(67) அதன் பேரில் ஒரு புறம் அவர்கள் இருவரும் மறுபுறம் நாராயணன் என அவர்களுக்கிடையில் போர் நடைபெற்றது. அசுரர்களான மதுவும், கைடபனும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களின் உடல்வடிவங்களாக இருந்தனர். பிரம்மனை நிறைவு செய்வதற்காக நாராயணன் அவ்விருவரையும் கொன்றான். அது முதல் அவன் மதுசூதனன் (மதுவைக் கொன்றவன்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.(68) அந்தப் பரம்பொருளானாவன், அவ்விரு அசுரர்களுக்கும் அழிவை ஏற்படுத்தி, பிரம்மனிடம் வேதங்களை மீட்டுத் தந்து, பிரம்மனின் துயரை விலக்கினான்.(69) பிறகு பிரம்மன், ஹரியின் துணையுடனும், வேதங்களின் உதவியுடனும் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தையும் படைத்தான்.(70) இதன்பிறகு, படைப்பு தொடர்புடைய முதன்மையான வகையிலான புத்தியைப் பெரும்பாட்டனுக்கு அருளிய ஹரி, தான் எங்கிருந்து வந்தானோ அந்த இடத்திற்குச் செல்வதற்காக அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(71) இவ்வாறே, குதிரை தலை கொண்ட வடிவை ஏற்ற நாராயணன் {ஹயக்ரீவன்}, மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்களையும் கொன்றான் (கொன்ற பிறகு, பிரம்மனின் பார்வையில் இருந்து மறைந்தும் போனான்). எனினும், அண்டத்தில் பிரவிருத்தி அறத்தை உண்டாக்கும் நிமித்தமாக மீண்டும் அவன் அவ்வடிவை {ஹயக்ரீவ வடிவத்தை} ஏற்றான்.(72)இவ்வாறே அருள் நிறைந்த ஹரியானவன் பழங்காலத்தில் குதிரை தலை கொண்ட அந்த மகத்தான வடிவத்தை ஏற்றான். அவனது அனைத்து வடிவங்களிலும், பலத்துடன் கூடிய இந்த வடிவமே மிகப் பழமையானதாகக் கொண்டாடப்படுகிறது.(73) நாராயணன் குதிரைத் தலை தரித்த இந்த வரலாற்றை அடிக்கடி கேட்பவன், அல்லது மனத்தால் பாராயணம் செய்பவன் ஒருபோதும் வேதங்களையோ, பிற சாத்திரங்களையோ மறக்கமாட்டான். குதிரை தலை கொண்ட சிறப்புமிக்கத் தேவனைக் கடுந்தவங்களுடன் துதித்த முனிவர் பாஞ்சாலர் (காலவர் என்று வேறு பெயரால் அழைக்கப்படுபவர்) தேவனால் (ருத்திரனால்) சுட்டிக்காட்டப்பட்ட பாதையில் சென்று கிரம அறிவியலை அடைந்தார்[4].(75) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேதங்களுக்கு இசைவானதும், நீ என்னிடம் கேட்டதுமான ஹயசிரஸின் பழங்கதையை நான் உனக்குச் சொன்னேன்.(76) அண்டத்தின் காரியங்களைச் சீரமைக்க அந்தப் பரம தேவன் என்னென்ன வடிவங்களை ஏற்பானோ, அவற்றை அவன் தன் உள்ளார்ந்த சக்திகளைப் பயன்படுத்தி உடனே ஏற்கிறான்.(77) அனைத்து செழிப்பையும் கொண்ட அந்தப் பரமதேவனே வேதங்களின் கொள்ளிடமாவான். அவனே தவங்களின் கொள்ளிடமும் ஆவான். பலமிக்க அந்த ஹரியே யோகமுமாவான். சாங்கிய தத்துவத்தின் உடல்வடிவமாகவும் அவனே இருக்கிறான். அவனே நாம் கேள்விப்படும் முதன்மையான பிரம்மமுமாக இருக்கிறான்.(78)வாய்மை நாராயணனையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ரிதம் {கர்ம பயன் / செயற்கனி} நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. திரும்பி வராத நிவிருத்தி அறமும் நாராயணனையே தன் உயர்ந்த வசிப்பிடமாகக் கொண்டுள்ளது.(79) பிரவிருத்தியின் அடிப்படையிலான மற்றொரு அறமும் இணையாக நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. பூமி என்ற பூதத்திற்குரிய குணங்கள் அனைத்திலும் முதன்மையானது மணமாகும். அந்த மணமும் தன் ஆன்மாவாக நாராயணனையே கொண்டுள்ளது.(80) ஓ! மன்னா {ஜனமேஜயா}, நீரின் குணங்கள் (பல்வேறு வகையான) சுவைகள் என்றழைக்கப்படுகின்றன. இந்தச் சுவைகளும் நாராயணனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. ஒளியின் முதன்மைக் குணம் வடிவமாகும். வடிவமும் நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(81) காற்றின் குணமான தீண்டலும் நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. காற்றின் {ஆகாயத்தின் என்றிருக்க வேண்டும்} குணமான ஒலியும் பிறவற்றைப் போன்றே நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(82) புலப்படாததன் (பிருகிருதியின்) குணமான மனமும், நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. தெய்வீக ஒளிக்கோள்களின் நகர்வுகளால் கணக்கிடப்படும் காலமும் அதே போல நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(83)

புகழ், அழகு மற்றும் செழிப்பின் தலைமைத் தேவர்களும் அதே உயர்ந்த தேவனையே தங்கள் ஆன்மாக்களாகக் கொண்டுள்ளனர். சாங்கியம் மற்றும் யோக தத்துவங்கள் இரண்டும் நாராயணனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(84) பரம்பொருளே இவை அனைத்தின் காரணமான புருஷனாக இருக்கிறான். மேலும் அவன் அனைத்தின் காரணமான பிரதானனாகவும் (அல்லது பிரகிருதியாகவும்) இருக்கிறான்.(85) அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் அடித்தளம் அவனே. செயல்படுபவன் அவனே, அண்டத்தில் காணப்படும் பலவகைகளின் காரணம் அவனே. அண்டத்தில் செயல்படும் பல்வேறு வகைச் சக்திகள் அவனே. ஐந்தாவதாக, மக்களால் பேசப்படும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் புலப்படாத ஆதிக்கம் அவனே.(86) பரந்த பயன்பாட்டில் உள்ள இத்தகைய காரணங்களின் துணையுடன் பல்வேறு காரியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபடுவோர் மேலே சொல்லப்படும் ஐந்து காரணங்களுடனும், அனைத்துப் பொருட்களின் இறுதிப் புகலிடத்துடனும் ஹரியையே அடையாளம் காண்கின்றனர்.(87) உண்மையில், உயர்ந்த யோகபலத்துடன் கூடிய நாராயணனே ஒரே தத்துவமாக இருக்கிறான். ஆன்மாவை அறிந்தவர்களான பிரம்மன், உயர் ஆன்ம முனிவர்கள், சாங்கியர்கள், யோகியர், யதிகள் உள்ளிட்ட உலகவாசிகள் அனைவரின் பொதுவான எண்ணங்களும் கேசவனால் முழுமையாக அறியப்படுகின்றன, ஆனால் இவர்கள் எவராலும் அவனது எண்ணங்கள் ஒருபோதும் அறியமுடியாது.(88,89)

தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் எந்தச் செயலும், கொடுக்கப்படும் எந்தக் கொடையும், செய்யப்படும் எந்தத் தவமும்,(90) தனது உயர்ந்த விதிகளில் நிறுவப்பட்டிருக்கும் அந்த விஷ்ணுவையே புகலிடமாகக் கொண்டிருக்கின்றன. உயிரினங்கள் அனைத்தின் வசிப்பிடமாக இருப்பதாலேயே அவன் வாசுதேவன் என்ற பெயர் சூட்டப்பட்டான்.(91) அவன் மாற்றமில்லாதவன். அவன் பரமன் {உயர்ந்தவன்}. அவன் முனிவர்களில் முதன்மையானவன். அவன் உயர்ந்த பலத்தைக் கொண்டவன். அவன் முக்குணங்களையும் கடந்தவன் எனச் சொல்லப்படுகிறான். (அந்த அறிகுறியுமின்றி வேகமாக ஓடும்) காலமானது, அடுத்தடுத்த பருவகாலங்களின் வடிவில் வெளிப்படும்போது இவ்வாறே குறியீடுகளை ஏற்கிறது. அவன் குணங்களற்றவனாக இருந்தாலும், (தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக) குணங்களை ஏற்கிறான்.(92) உயர் ஆன்மாவைக் கொண்டவர்கள் கூட அவனது இயக்கங்களை {செயல்பாடுகளைப்} புரிந்து கொள்வதில் வெல்வதில்லை. ஞானத்தையே தங்கள் ஆன்மாக்களாகக் கொண்ட முதன்மையான முனிவர்கள் மட்டுமே குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்தப் புருஷனைத் தங்கள் இதயங்களில் காண்பதில் வெல்கிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(93)

பக்தி அறம் – ஏகாந்தம்! – சாந்திபர்வம் பகுதி – 349-பக்தி அறத்தை முதலில் தொடங்கியவர்; தொடக்க காலத்தில் இருந்து வழிவழியாக வந்த அறத்தின் வரலாறு; பக்திஅறத்தை ஏன் அனைத்து மனிதர்களும் பின்பற்றுவதில்லை; இந்த ஏகாந்த அறத்தின் மூலம் பிரம்மத்தை அடையும் வகையை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “சிறப்புமிக்கவனாக ஹரி, தன்னிடம் முழு ஆன்மாக்களோடு தங்களை அர்ப்பணிப்போரிடம் அருள் நிறைந்தவனாகிறான். விதிக்கு ஏற்புடைய வகையில் அவனுக்கு அளிக்கப்படும் வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஏற்கிறான்.(1) தங்கள் விறகை எரித்தவர்களும், தகுதி மற்றும் தகுதியின்மை {புண்ணியப் பாவங்கள்} ஆகிய இரண்டும் இல்லாதவர்களுமான மனிதர்கள் ஆசானிலிருந்து ஆசான் மூலமாக வழிவழியாக அடையும் ஞானத்தையும், இறுதியில் அவர்கள் அடையும் வெற்றியைக் குறித்தும் சொன்னீர்[1].(2) அத்தகைய மனிதர்கள், வேறு மூன்றின் மூலமாக நான்காவதான புருஷர்களில் முதன்மையான சாரத்தை, அல்லது வாசுதேவனையே எப்போதும் அடைகிறார்கள்[2]. எனினும், தங்கள் முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் {ஏகாந்திகள்} உடனே உயர்ந்த கதியை {பரமபதத்தை} அடைகிறார்கள்[3].(3) பக்தி அறமே (ஞானத்தை விட) மேன்மையானதாகவும், நாராயணனின் விருப்பத்திற்குரியதாகவும் தெரிகிறது என்பதில் ஐயமில்லை. இவர்கள் (அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற) அடுத்தடுத்த மூன்று நிலைகளைக் கடக்காமல் மாற்றமில்லாத ஹரியை உடனே அடைகிறார்கள்.(4) முறையான நோன்புகள், ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளின்படியான உபநிஷத்துகளுடன் கூடிய வேத கல்வி ஆகியவற்றால் பிராமணர்களாலும், யதிகளின் அறத்தைப் பின்பற்றுவோராலும் அடையப்படும் கதியானது,(5) முழு ஆன்மாக்களுடன் ஹரியிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்களால் அடையப்படும் கதியைவிடக் குறைந்ததாக நான் நினைக்கிறேன். பக்தி அறத்தை முதலில் தொடங்கியது யார்? அஃதை அறிவித்தது தேவனா? முனிவரா?(6) முழு ஆன்மாக்களோடு அர்ப்பணிப்பில் ஈடுபடுபவர்களால் பயிலப்படும் நடைமுறைகள் என்னென்ன? அந்த நடைமுறைகள் எப்போது தொடங்கின? இவற்றில் எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. இவ்வையங்களை நீர் விலக்குவீராக. நீர் விளக்கப் போகும் பல்வேறு கூறுகளைக் கேட்க நான் பேராவலுடன் இருக்கிறேன்” என்றான் {ஜனமேஜயன்}.(7)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்கள் மற்றும் குரு படைகளின் பல்வேறு பிரிவுகள் போருக்காக அணிவகுத்தபோதும், அர்ஜுனன் உற்சாகமிழந்த போதும், அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களால் அடையப்படும் கதி எது, அடையப்படாத கதி எது என்ற கேள்வியை விளக்கினான். இதற்கு முன்பு நான் அந்தப் புனிதமானவனின் வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறேன். அச்சந்தர்ப்பத்தில் அந்தப் புனிதமானவனால் போதிக்கப்பட்ட அறம் புரிந்த கொள்ளக் கடினமானதாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது.(8,9) ஓ! மன்னா, பழங்காலமான கிருதயுகத்தில் சாமங்களுக்கு {சாம வேதத்திற்கு} முற்றிலும் ஏற்புடைய வகையில் படைக்கப்பட்ட இந்த அறம், உயர்ந்த தலைவனான {ஈஸ்வரனான} நாராயணனாலேயே தாங்கப்படுகிறது.(10) உயர்ந்த அருளைக் கொண்டவனான பார்த்தன் {யுதிஷ்டிரன்}, முனிவர்களுக்கு மத்தியிலும், கிருஷணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையிலும் நாரதரிடம் (அவரது சொற்பொழிவுக்காக) இதையே கேட்டான்.(11) தீவில் பிறந்த கிருஷ்ணரான என் ஆசான் {வியாசர்} நாரதர் சொன்னதைக் கேட்டார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீக முனிவரிடம் இருந்து அடைந்து, அந்தத் தெய்வீக முனிவரிடம் இருந்து பெற்ற அதே வகையிலேயே எனக்கு அதைச் சொன்னார். ஓ! ஏகாதிபதி, நாரதரிடம் இருந்து அடையப்பட்ட அதே வழியிலேயே இப்போது நான் அஃதை உனக்குச் சொல்லப் போகிறேன். எனவே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(12)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதா, படைப்பாளனான பிரம்மன் நாராயணனின் மனத்தில் பிறந்து அவனது வாய்வழியே வெளிப்பட்ட கல்பத்தில், இந்த அறத்திற்கு ஏற்புடைய வகையில் தனது தைவ மற்றும் பைத்ர சடங்குகளை நாராயணனே செய்தான். நீரின் நுரையை உண்டு வாழும் முனிவர்கள் {பேனபர்கள்} அதை நாராயணனிடம் இருந்து அடைநனர்.(13,14) நுரையுண்ணும் முனிவர்களிடம் {பேனபர்களிடம்} இருந்து இந்த அறமானது, வைகானஸர்கள் என்ற பெயரைக் கொண்ட முனிவர்களால் அடையப்பட்டது. வைகானஸர்களிடம் இருந்து அதைச் சோமன் அடைந்தான். அதன்பிறகு அஃது அண்டத்தில் இருந்து மறைந்து போனது.(15)

ஓ! மன்னா, நாராயணனின் கண்களில் இருந்து உதித்த பிரம்மனின் {சாக்ஷுஷம் என்கிற} இரண்டாம் பிறப்புக்குப் பிறகு, பெரும்பாட்டன் (பிரம்மன்) மீண்டும் சோமனிடமிருந்து இவ்வறத்தைப் பெற்றான்.(16) இவ்வாறு நாராயணனின் ஆன்மாவாக இருக்கும் அவ்வறத்தைப் பெற்ற பிரம்மன், அதை ருத்திரனுக்குக் கொடுத்தான். ஓ! ஏகாதிபதி, அந்தப் புராதனக் கல்பத்தின் கிருத யுகத்தில் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ருத்திரன்,(17) வாலகில்யர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர்கள் அனைவருக்கும் அதைச் சொன்னான். பிறகு நாராயணனின் மாயை மூலமாக அது மீண்டும் அண்டத்தில் இருந்து மறைந்து போனது.(18)

ஓ! மன்னா, நாராயணனின் வாக்கில் உண்டான பிரம்மனின் {வாசிகம் என்ற} மூன்றாம் பிறப்பில், இவ்வறமானது மீண்டும் நாராயணனிடமிருந்து உண்டானது.(19) பிறகு, சுபர்ணர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் அஃதை அந்த முதன்மையானவனிடம் இருந்தே அடைந்தார்.(20) முனிவர் சுபர்ணர் முதன்மையான வழிபாட்டு மரபான இந்தச் சிறப்பான அறத்தை {தினமும்} பகல் வேளையில் மூன்று முறை சொல்லிக் கொண்டிருந்தார். இதன் விளைவால் அது திரிசௌபர்ணம் என்ற பெயரால் உலகத்தில் அழைக்கப்பட்டது.(21) இவ்வறம் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்படும் கடமைகள் அவதானிக்க மிகக் கடினமானவையாக இருக்கின்றன. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவ்வறமானது அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் தக்க வைக்கும் காற்றின் தேவனால் {வாயுவால்} முனிவர் சுபர்ணரிடமிருந்து அடையப்பட்டது. காற்றின் தேவன், விருந்தினர்களும் பிறரும் உண்ட பிறகு எஞ்சும் வேள்விக் காணிக்கைகளில் வாழும் முனிவர்களுக்கு அதைச் சொன்னான்.(22,23) இந்தச் சிறந்த அறமானது அந்த முனிவர்களிடம் இருந்து பெருங்கடலால் அடையப்பட்டது. பிறகு அது மீண்டும் அண்டத்தில் இருந்து மறைந்து நாராயணனில் கலந்தது.(24)

ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம பிரம்மன், நாராயணனின் காதிலிருந்து பிறந்த {ஸ்ரோத்ரஜம் என்ற} அடுத்த {நான்காவது} பிறப்பைக் கொண்ட கல்பத்தில் என்ன நடந்தது என்பதைக் கேட்பாயாக.(25) ஹரி என்றழைக்கப்படும் சிறப்புமிக்க நாராயணன், படைப்பைச் செய்யத் தீர்மானித்தபோது, அண்டத்தைப் படைக்கக்கூடிய பலமிக்க ஒருவனைக் குறித்துச் சிந்தித்தான்.(26) அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய காதுகளில் இருந்து அண்டத்தைப் படைக்கத்தகுந்த ஒருவன் எழுந்தான். அனைவரின் தலைவன் {நாராயணன்}, அவனைப் பிரம்மன் என்ற பெயரில் அழைத்தான்.(27)

உயர்ந்தவனான {பரமனான} நாராயணன் பிரம்மனிடம், “ஓ! மகனே, என் வாயிலிருந்தும், பாதத்திலிருந்தும் அனைத்து வகை உயிரினங்களையும் படைப்பாயாக. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, இந்தப் பணியை நீ செய்வதற்குப் போதிய சக்தியையும் பலத்தையும் நான் தருவேன் என்பதால் உனக்கு நன்மையானதையே செய்யப் போகிறேன்.(28) சாத்வதம் என்ற பெயரில் அறியப்படும் இந்தச் சிறந்த அறத்தையும் என்னிடம் இருந்து நீ பெறுவாயாக. இவ்வறத்தின் துணை கொண்டு நீ கிருத யுகத்தைப் படைத்து, முறையாக அதை விதிப்பாயாக” என்றான்.(29)

இவ்வாறு சொல்லப்பட்ட பிரம்மன், அந்தச் சிறப்புமிக்க ஹரிமேதஸுக்குத் தலைவணங்கி, நாராயணனின் வாயில் இருந்து பிறந்ததும், புதிர்கள், விளக்கங்களின் சுருக்கங்கள்(30) மற்றும் ஆரண்யகங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் முதன்மையானதுமான அந்த வழிபாட்டு மரபை அவனிடம் இருந்து பெற்றான். அந்த வழிபாட்டு மரபை அளவிலா சக்தி கொண்ட பிரம்மனுக்குக் கற்பித்த நாராயணன், அவனிடம்(31) “ஒவ்வொரு யுகத்திலும் பின்பற்றப்பட வேண்டிய கடமைகளைப் படைப்பவன்” என்றான். பிரம்மனிடம் இதைச் சொன்ன நாராயணன், அங்கேயே மறைந்து, தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்ததும், புலப்படாதது வசித்திருப்பதும், கனியில் விருப்பமில்லா செயல்களின் பெயரில் அறியப்படுவதுமான இடத்திற்குச் சென்றான்.(33) இதன் பிறகு, வரங்களை அளிப்பவனும், உலகங்களின் பெரும்பாட்டனுமான பிரம்மன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட பல்வேறு உலகங்களைப் படைத்தான்.(33) முதலில் தொடங்கிய யுகம் உயர்ந்த மங்கலமுடையதாக இருந்து கிருதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அந்த யுகத்தில் சாத்வத அறம் அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து நீடித்திருந்தது.(34) அனைத்து உலகங்களையும் படைத்தவனான பிரம்மன், அந்த ஆதி அறநீதியின் துணையுடன் தேவர்கள் அனைவரின் தலைவனும், ஹரி என்றழைக்கப்படுபவனுமான பலமிக்க நாராயணனை வழிபட்டான்.(35)

அப்போது அவ்வறம் பரவுவதற்கும், உலகங்களுக்கு நன்மை செய்யவும் விரும்பிய பிரம்மன், ஸ்வாரோசிஷ் என்ற பெயரால் அறியப்பட்ட மனுவுக்கு அந்த வழிபாட்டு மரபைக் கற்பித்தான்.(36) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உலகங்கள் அனைத்தின் தலைவனும், பலமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ஸ்வாரோசிஷ் மனு, சங்கபதன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தன் மகனுக்கு அந்த வழிபாட்டு மரபின் ஞானத்தை உற்சாகமாக அளித்தான்.(37) மனுவின் மகனான சங்கபதன், முக்கிய மற்றும் துணைத்திசைகளை ஆட்சி செய்யும் {திக்பாலனான} தன் மகன் சுவர்நபானுக்கு {ஸுதர்மாவுக்கு} அந்த வழிபாட்டு மரபின் ஞானத்தை அளித்தான். கிருத யுகம் முடிந்து திரேதா யுகம் தொடங்கியதும், மீண்டும் அந்த வழிபாட்டு மரபு உலகில் இருந்து மறைந்துபோனது.(38)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, நாராயணனின் மூக்கில் இருந்து பிறந்த பிரம்மனின் {நாஸத்யம் என்ற} அடுத்தப் பிறப்பில், ஓ! பாரதா, சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான நாராயணன், அல்லது தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஹரியே பிரம்மனின் முன்னிலையில் இவ்வறத்தைக் குறித்துப் பாடினான். பிறகு பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவனது மகன் சனத்குமாரர் இந்த வழிபாட்டு மரபைக் கற்றார்.(39,40) ஓ! குருக்களில் புலியே, கிருத யுகத்தின் தொடக்கத்தில் பிரஜாபதியான வீரணன் சனத்குமாரரிடம் இருந்து இந்த வழிபாட்டு மரபை அடைந்தான்.(41) இவ்வழியில் அதைக் கற்ற வீரணன் அதைத் தவசி ரைப்யருக்குக் கற்பித்தான். பதிலுக்கு ரைப்யர் தூய ஆன்மாவையும், நல்ல நோன்புகளையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனும், முக்கிய மற்றும் துணைத் திசைகளை அறம்சார்ந்து ஆளும் திக்பாலனுமான தன் மகன் குக்ஷிக்கு {குக்ஷிபாலனுக்கு} அதைச் சொன்னார். இதன்பிறகு நாராயணனின் வாயில் இருந்து பிறந்த அந்த வழிபாட்டு மரபானது மீண்டும் உலகத்தில் இருந்து மறைந்து போனது.(42,43)

ஹரியில் இருந்து உதித்த ஒரு முட்டையில் இருந்து பிரம்மன் அடைந்த {அண்டஜம் என்ற} அடுத்தப் பிறப்பில், மீண்டும் இவ்வறம் நாராயணனின் வாயில் இருந்தே வெளிப்பட்டது.(44) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதைப் பெற்றுக் கொண்ட பிரம்மன், அதை முறையாக முழுமையாகப் பின்பற்றினான். ஓ! ஏகாதிபதி, பிறகு பிரம்மன், பர்ஹிஷதர்கள் என்ற பெயரால் அறியப்பட்ட முனிவர்களுக்கு அதைச் சொன்னான். பிறகு, சாம வேதத்தை நன்கறிந்தவரும், ஜியேஷ்டர் என்ற பெயரால் அறியப்பட்டவருமான ஒரு பிராமணர் பர்ஹிஷதர்களிடம் இருந்து அஃதை அடைந்தார். அவர் சாமங்களை நன்கறிந்தவராக இருந்ததாலேயே ஜியேஷ்டசாமவிரத ஹரி என்ற பெயரால் அறியப்பட்டார்.(46) ஜியேஷ்டர் என்ற பெயரால் அறியப்பட்ட பிராமணரிடம் இருந்து அவிகம்பனன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மன்னன் இந்த வழிபாட்டு மரபை அடைந்தான். இதன் பிறகு, பலமிக்க ஹரியிடம் இருந்து பெறப்பட்ட இந்த வழிபாட்டு மரபானது உலகத்தில் இருந்து மீண்டும் மறைந்துபோனது.(47)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, நாராயணனின் தொப்புளில் உதித்த தாமரையின் முலம் பிரம்மன் அடைந்த {பத்மஜென்மம் என்ற} ஏழாம் பிறப்பில், இந்தக் கல்பத்தின் தொடக்கத்தில் இந்த வழிபாட்டு மரபானது அனைத்து உலகங்களையும் படைத்தவனும், தூய ஆன்மாவைக் கொண்டவனுமான பெரும்பாட்டனுக்கு நாராயணனாலேயே அறிவிக்கப்பட்டது. பழங்காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, (தன் விருப்பத்தால் படைக்கப்பட்ட தன் மகன்களில் ஒருவனான) தக்ஷனுக்குக் கொடுத்தான்.(48,49) பதிலுக்குத் தக்ஷன், ஓ! ஏகாதிபதி, தன் மகன்களின் மகன்கள் அனைவரிலும் மூத்தவனும், வயதில் சாவித்ரிக்கு மூத்தவனுமான ஆதித்யனுக்கு அதைக் கொடுத்தான். ஆதித்யனிடம் இருந்து விவஸ்வான் அஃதை அடைந்தான்.(50) திரேதா யுகத்தின் தொடக்கத்தில் விவஸ்வான் இந்த வழிபாட்டு மரபை மனுவுக்குக் கொடுத்தான். மனு, அனைத்து உலகங்களைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் அதைத் தன் மகனான இக்ஷ்வாகுவுக்குக் கொடுத்தான்.(51) இக்ஷ்வாகுவால் வெளியிடப்பட்ட அந்த வழிபாட்டு மரபானது மொத்த உலகிலும் பரவியது. அண்ட அழிவு நேரும்போது அது மீண்டும் நாராயணனிடமே திரும்பி அவனிலேயே கலக்கும்.(52)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, யதிகளால் பயிலப்பட்டுப் பின்பற்றப்படு அறமானது ஏற்கனவே ஹரிகீதையில் {பகவத்கீதையில்}, சுருக்கமான விதிகளுடன் உனக்குச் சொல்லப்பட்டது.(53) ஓ! மன்னா, தெய்வீக முனிவரான நாரதர், புதிர்கள் மற்றும் விளக்கங்களின் சுருக்கம் ஆகிய அனைத்துடன் அஃதை அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே பெற்றார்.(54) இவ்வாறே இந்த முதன்மையான அறமானது, மிகப் பழமைவாய்ந்ததும், நித்தியமானதுமாகும். எளிதில் புரிந்துகொள்ளப்பட முடியாததும், பயில்வதற்கு மிகக் கடினமானதுமான அது {இந்த அறமானது}, சத்வ குணத்தில் பற்றுக் கொண்ட மனிதர்களால் எப்போதும் ஆதரிக்கப்படுகிறது.(55) கடமைகளின் முழு அறிவுடன் நன்கு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவையும், எந்த உயிரினத்திற்கும் எந்தத் தீங்கையும் செய்யாதவையுமான செயல்களின் மூலமே உயர்ந்த தலைவனான {ஈஸ்வரனான} ஹரி நிறைவை அடைகிறான்.(56)

சிலர் அநிருத்தன் என்ற ஒரேயொரு வடிவத்தைக் கொண்டவனாக நாராயணனைத் துதிக்கிறார்கள், சிலர் அநிருத்தன் மற்றும் பிரத்யும்னன் என்ற இரு வடிவங்களைக் கொண்டவனாக அவனைத் துதிக்கிறார்கள். சிலர், அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற மூன்று வடிவங்களைக் கொண்டவனாகத் துதிக்கின்றனர். நான்காம் வகையினரோ, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டவனாக அவனைத் துதிக்கின்றனர்.(57) ஹரியே க்ஷேத்ரஜ்ஞன் (ஆன்மா) ஆவான். (எப்போதும் முழுமையான அவன்) பிரிவுகள் இல்லாதவனாக இருக்கிறான். ஐந்து அடிப்படை பூதங்களைக் கடந்து அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஜீவன் அவனே. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி அவற்றைச் செலுத்தும் மனமும் அவனே ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அவனே அண்டத்தைப் படைத்தவனும், விதிப்பவனுமாவான். அவன் செயல்பாடு உள்ளவனாகவும், செயல்பாடு இல்லாதவனாக இரண்டாகவும் இருக்கிறான். காரணம், விளைவு {காரணக் காரியங்கள்} ஆகிய இரண்டும் அவனே. ஓ! மன்னா, தான் விரும்பியபடி விளையாடும் மாற்றமில்லாத ஒரே புருஷன் அவனே.(60)

இவ்வாறே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாததும், என் ஆசானின் {வியாசரின்} அருளால் என்னால் அடையப்பட்டதுமான பக்தி அறத்தை நான் உனக்குச் சொல்லுவிட்டேன்.(61) ஓ! மன்னா, முழு ஆன்மாக்களுடன் நாராயணனில் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் மிக அரிதானவர்களே. ஓ! குரு குலத்தின் மகனே {ஜனமேஜயனே}, உலகளாவிய கருணையால் நிறைந்தவர்களும், ஆன்ம அறிவை {ஆத்மஞானத்தைக்} கொண்டவர்களும், பிறருக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களுமான மனிதர்களே உலகம் முழுவதும் இருந்தால், கிருத யோகம் தோன்றி, மனிதர்கள் அனைவரும் கனியில் விருப்பமில்லாமல் செயல்களை நிறைவேற்றுவார்கள்.(62,63) ஓ! ஏகாதிபதி, சிறப்புமிக்கவரும், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவரும், என் ஆசானுமான வியாசர், பல முனிவர்களின் முன்னிலையில், கிருஷ்ணனும், பீஷ்மரும் கேட்டுக் கொண்டிருந்தபோது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இந்தப் பக்தி அறத்தைக் குறித்து இவ்வகையிலேயே உரையாடினார். தவங்களின் செல்வத்துடன் கூடிய தெய்வீக முனிவரான நாரதரிடமிருந்தே அவர் அஃதை அடைந்தார்.(64,65) முழுமையான ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள், தேவர்களில் உயர்ந்தவனும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவனும், தூய நிறம் கொண்டவனும், சந்திரனின் பிரகாசம் கொண்டவனும், மாற்றமில்லாதவனுமான நாராயணனையே தங்கள் கதியாக அடைவதில் வெல்கிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(66)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பல்வேறு வகைக் கடமைகளைப் பயின்று விழிப்படைந்த ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாளர்களை நான் காண்கிறேன். பிராமணர்கள் அவ்வகைக் கடமைகளைப் பயிலாமல் ஏன் பிற வகை நோன்புகளையும், சடங்குகளையும் செய்கிறார்கள்?” என்று கேட்டான்.(67)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தையும் பொறுத்தவரையில் சத்வ குணம் தொடர்புடையது என்றும், ரஜஸ் குணத்தின் தொடர்புடையது என்றும், தமஸ் குணத்தின் தொடர்புடையது என்றும் மூன்று வகை மனோநிலைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.(68) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! மனிதர்களில் புலியே, உடல்படைத்த உயிரினங்களைப் பொறுத்தவரையில், சத்வ குணத்தில் பற்றுக் கொண்ட முதன்மையான மனிதன் நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்.(69) சத்வ குணத்தைக் கொண்டு, அதன் துணையால் மட்டுமே ஒருவன் பிரம்மத்தை அறிந்த மனிதனைப் புரிந்து கொள்ள முடியும். விடுதைலையை {முக்தியைப்} பொறுத்தவரையில் அது முற்றிலும் நாராயணனையே சார்ந்திருப்பதாகும். எனவே, சத்வ குணத்தால் ஆனதே விடுதலையாக {முக்தியாகக்} கருதப்படுகிறது.(70)

இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனை நினைப்பதன் மூலம் முழு ஆன்மாவுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதன் பெரும் ஞானத்தை அடைகிறான்.(71) ஞானம் கொண்டவர்களும், யதிகளின் நடைமுறைகளையும், விடுதலையறத்தை {முக்தி அறத்தைப்} பின்பற்றுபவர்களும், தாகம் தணிந்தவர்களுமான மனிதர்கள், தங்கள் விருப்பம் கனிவதற்கு உதவும் ஹரியையே எப்போதும் காண்கிறார்கள்.(72) பிறப்புக்கு (மற்றும் இறப்புக்கு) உட்பட்டு, ஹரியின் கருணை பார்வையை அடைந்த மனிதன், சத்வ குணத்தைக் கொண்டவனாகவும், விடுதலை அடைவதில் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் அறியப்பட வேண்டும்.(73) நாராயணனிடம் முழு ஆன்மாவுடன் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதனால் பின்பற்றப்படும் அறமானது, சாங்கியர்களின் அமைப்புக்கு இணையான அல்லது அதே போன்ற தகுதியுடையதாகக் கருதப்படுகிறது.(74) ஒருவன், அவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம், நாராயணனையே ஆன்மாவாகக் கொண்ட விடுதலையை {முக்தியை} அடைவதால் உயர்ந்த கதியை அடைகிறான். நாராயணனால் கருணையுடன் பார்க்கப்படும் மனிதன் விழிப்படைந்தவனாகிறான் {புத்தனாகிறான்}.(75)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, எவனாலும் தன் விருப்பத்தால் விழிப்படைய முடியாது. ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரு குணங்களையும் கொண்டிருக்கும் இயல்பானது கலப்பு எனச் சொல்லப்படுகிறது.(76) இத்தகைய கலப்பு இயல்பைக் கொண்டவனும், பிறப்புக்கு (மற்றும் இறப்புக்கும்) உட்படுபவனும், அவ்வகையில் பிரவிருத்தி {செயல்} கோட்பாட்டைப் பின்பற்றுபவனுமான மனிதன் மீது ஹரி ஒருபோதும் தன் கருணை பார்வையைச் செலுத்துவதில்லை.(77) பிறப்பிறப்பிற்கு உட்படும் மனிதன், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரண்டு தாழ்ந்த குணங்களில் மூழ்கிய மனத்தைக் கொண்டிருப்பதால் உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மனே அவனைப் பார்க்கிறான்[4].(78) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, தேவர்களும் முனிவர்களும் சத்வ குணத்தில் பற்றுக் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் நுட்பமான வடிவைக் கொண்ட அந்தக் குணம் {சத்வ குணம்} இல்லாதவர்கள் எப்போதும் மாறும் இயல்பைக் கொண்டவர்களாகவே கருதப்படுவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}[5].(79)ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “மாற்றக் கோட்பாடுகள் நிறைந்த ஒருவனால் எவ்வாறு இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானதை அடைய முடியும்? இவற்றை நிச்சயம் நீர் அறிவீர் என்பதால் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும் பிரவிருத்தியையும் முறையான வகையில் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(80)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “(சாங்கிய அமைப்பின் தத்துவப் பட்டியலில்) இருபத்தைந்தாவதாக உள்ள ஜீவனால், செயல்களை முற்றிலும் தவிர்க்க இயலும்போது, மிக நுட்பமானதும், (நுட்பமான வடிவிலான) சத்வ குணத்தால் நிறைந்ததும், (அ, உ, ம என்ற) மூன்று எழுத்துகளைக் கொண்ட {ஓம் என்ற} அசையின் சாரத்தால் நிறைந்ததுமான முதன்மையான இருப்பை அடைவதில் வெல்ல முடியும்[6].(81) சாங்கிய அமைப்பு, வேத ஆரண்யகம், பஞ்சராத்ர சாத்திரங்கள் என அனைத்தும் ஒன்றாகவும், முழுமையான ஒன்றின் பகுதிகளாகவும் இருக்கின்றன. நாராயணனையே சாரமாகக் கொண்ட அறமே, நாராயணனிடம் முழு ஆன்மாக்களுடன் அர்ப்பணிப்பு கொள்வரின் அறமாகும்[7].(82) பெருங்கடலின் அலைகள் எழுந்து, வெளியே சென்றாலும் முடிவில் மீண்டும் திரும்பிவிடுவதைப் போலவே பல்வேறு வகை ஞானங்களும் நாராயணனிலிருந்து எழுந்து முடிவில் மீண்டும் நாராயணனையே அடைகின்றன.(83) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே நான் உனக்குச் சாத்வத அறத்தைக் குறித்து விளக்கியிருக்கிறேன். ஓ! பாரதா, நீ அதற்குத் தகுந்தவனாக இருந்தால் முறையாக அவ்வறத்தையே பயில்வாயாக.(84)இவ்வாறே உயர்ந்த அருளைக் கொண்டவரான நாரதர், வெள்ளையர்களாலும், யதிகளாலும் பின்பற்றப்படுவதும், ஏகாந்தம் என்றழைக்கப்படுவதுமான இந்த நித்தியமான மாற்றமில்லாததை என் ஆசானான தீவில் பிறந்த கிருஷ்ணருக்கு {வியாசருக்குச்} சொன்னார்[8].(85) தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் நிறைவடைந்த வியாசர், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இவ்வறத்தைச் சொன்னார். என் ஆசானிடம் இருந்து அதைப் பெற்ற நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(86) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இந்தக் காரணங்களாலே இவ்வறமானது பயில்வதற்கு மிகக் கடினமானதாக இருக்கிறது. உன்னைப் போலவே இதைக் கேட்ட பிறரும் கலக்கமடைகின்றனர் {மோகமடைந்து இதைப் பின்பற்றுவதில்லை}.(87) ஓ! மன்னா, அண்டத்தைப் பாதுகாப்பவனும், வஞ்சிப்பவனும் கிருஷ்ணனே ஆவான். ஓ! ஏகாதிபதி, அழிப்பவனாகவும், காரணமாகவும் அவனே இருக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.(88)

வியாசரின் முற்பிறவி – அபாந்தரதமஸ்! – சாந்திபர்வம் பகுதி – 350-வியாசர் விஷ்ணுவுக்கு மகனாகப் பிறந்த பழங்கதை; பல்வேறு வழிபாட்டு மரபுகளும்; அவை சுட்டும் இறுதி கதியும்..

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, சாங்கிய அமைப்பு, பஞ்சராத்திர சாத்திரங்கள், வேத ஆரண்யகங்கள் ஆகிய பல்வேறு ஞான அமைப்புகள் அல்லது அற அமைப்புகளே தற்போது உலகில் இருக்கின்றன.(1) இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே போன்ற கடமை நடைமுறைகளைப் போதிக்கின்றனவா? அல்லது ஓ! தவசியே, அவற்றால் போதிக்கப்படும் கடமைகளின் நடைமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவையா? என்னால் கேட்கப்படும் நீர், பிரவிருத்தி குறித்து முறையான வகையில் உரைப்பீராக” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இருளை விலக்குபவரும், தீவுக்கு மத்தியில் பராசரருக்கு சத்தியவதியால் பெறப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவரும், பெருந்தகைமையுடன் கூடிய ஆன்மாவைக் கொண்டவருமான பெரும் முனிவரை {வியாசரை} நான் வணங்குகிறேன்.(3) அவரே பெரும்பாட்டனான பிரம்மனின் தோற்றுவாய் என்றும்; அவரே நாராயணனின் ஆறாவது வடிவம் என்றும்; அவர் யோக பலம் கொண்டவர் என்றும்; தம் பெற்றோருக்கு ஒரே மகனான அவர் நாராயணனின் அவதாரம் என்றும்; இயல்புக்கு மீறிய சூழ்நிலைகளில் ஒரு தீவில் பிறந்த அவர் வற்றாத வேதக் கொள்ளிடம் என்றும் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(4) கிருத யுகத்தில் பெரும் பலம் கொண்டவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான நாராயணன் அவரைத் தன் மகனாகப் படைத்தான். உண்மையில் உயர் ஆன்ம வியாசர், பிறப்பற்றவரும், புராதனமானவரும், வற்றாத வேதக் கொள்ளிடமும் ஆவார்” என்றார்.(5)

ஜனமேஜயன் {வைசம்பாயனிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, முனிவர் வசிஷ்டருக்கு, சக்திரி என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தச் சக்திரிக்கு, பாராசரர் என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தப் பராசரர் பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணன் {கருப்பன்_வியாசர்} என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெற்றார் என்றும் நீரே இதற்கு முன்பு சொன்னீர்.(6) இப்போது மீண்டும் நீரே வியாசர் நாராயணனின் மகன் என்றும் சொல்கிறீர். அளவிலா சக்தியைக் கொண்டவரான வியாசர், தமது முற்பிறவியில் நாராயணனில் இருந்து உதித்தவரா? ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நாராயணன் மூலம் ஏற்பட்ட வியாசரின் பிறப்பு குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஸ்ருதிகளின் பொருளைப் புரிந்து கொள்ள விரும்பியவரும், தவப் பெருங்கடலும், சாத்திரக் கடமைகள், அறிவை ஈட்டுவது ஆகியவை அனைத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பவருமான என் ஆசான் {வியாசர்}, சில காலம் இமய மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசித்து வந்தார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் {வியாசர்}, மஹாபாரதத்தைத் தொகுக்கும்போது சக்தியில் நேர்ந்த கடுஞ்சோர்வின் விளைவால் அவர் தம் தவங்களில் களைப்படைந்தார். அந்நேரத்தில் சுமந்தன், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலன், நான்காவதாக நான் {வைசம்பாயனர்}, அவருடைய மகனான சுகர் ஆகியோர் அவருக்குச் சீடர்களாக இருந்தோம். ஓ! மன்னா, எங்கள் ஆசான் உணர்ந்த களைப்பை நோக்கில் கொண்ட நாங்கள் அவரது களைப்பைப் போக்கத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டு அவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்தோம்.(9,10) தமது சீடர்களால் சூழப்பட்ட வியாசர், கணங்களுக்கு மத்தில் உள்ள கணங்களின் தலைவனான மஹாதேவனைப் போல இமய மலையின் சாரலில் அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) அங்கங்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும், மஹாபாரத ஸ்லோகங்கள் அனைத்தின் பொருட்களையும் தொகுத்த பிறகு ஒரு நாள், குவிந்த கவனத்தோடு கூடிய நாங்கள் அனைவரும் புலனடக்கம் கொண்டவரும், அந்த நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவருமான எங்கள் ஆசானை அணுகினோம்.(12) உரையாடலுக்கான ஓர் இடைவேளையை உண்டாக்கிக் கொண்ட நாங்கள், வேதங்கள், மஹாபாரத ஸ்லோகங்கள் ஆகியவற்றின் பொருட்களை எங்களுக்கு விளக்கிச் சொல்லுமாறும், நாராயணனிடம் இருந்து அவர் {வியாசர்} அடைந்த பிறவி குறித்த நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லுமாறும் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம் கேட்டுக் கொண்டோம்.(13) தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவரான அவர், முதலில் ஸ்ருதிகள் மற்றும் மஹாபாரதத்தின் விளக்கங்களையும் சொல்லி, பிறகு நாராயணனிலிருந்து தாம் அடைந்த பிறப்பு சம்பந்தமான பின்வரும் நிகழ்வுகளை எங்களுக்குச் சொன்னார்.(14)

வியாசர், “சீடர்களே, ஒரு முனிவரின் பிறப்பு தொடர்புடைய வரலாறுகளில் சிறந்தந்தும், உரைகளில் முதன்மையானதுமான இவ்வுரையை நீங்கள் கேட்பீராக. மறுபிறப்பாளர்களே, கிருத யுகத்தில் நடந்த இந்தக் கதையை என் தவங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.(15) ஆதி தாமரையில் நேர்ந்த {பிரம்மனின் பத்மஜென்மம் என்கிற} ஏழாம் பிறப்பின் போது, கடுந்தவங்களைக் கொண்ட நாராயணன், நன்மை தீமைகள் இரண்டையும் கடந்தும், ஒப்பற்ற காந்தியை ஏற்று முதலில் பிரம்மனைத் தன் தொப்புகளில இருந்து படைத்தான்.

பிரம்மன் பிறப்படைந்ததும் நாராயணன் அவனிடம்,(16,17) “நீ என் தொப்புளில் இருந்து பிறந்திருக்கிறாய். படைப்பின் பலத்தைக் கொண்ட நீ, பகுத்தறிவுடைய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல்வேறு வகையிலான உயிரினங்களைப் படைப்பதில் உன்னை நிறுவிக் கொள்வாயாக” என்றான்.(18)

இவ்வாறு தன்னிருப்பின் ஆசிரியனால் சொல்லலப்பட்ட பிரம்மன், கவலையடைந்த மனத்துடன், தன் பணியின் கடினத்தை உணர்ந்து, தனக்கு இடப்பட்ட அணையைச் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தான். வரமளிப்பவனும், அண்டத்தின் தலைவனுமான சிறப்புமிக்க ஹரிக்குத் தலைவணங்கி இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(19) “ஓ! தேவர்களின் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன், ஆனால் பல்வேறு உயிரினங்களைப் படைக்க எனக்கென்ன பலம் இருக்கிறது என்று கேட்கிறேன்? நான் ஞானமில்லாதவன். இதை நோக்கில் கொண்டு என்ன விதிக்கப்பட வேண்டுமோ அதை விதிப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அண்டத்தின் தலைவனான நாராயணன், பிரம்மனின் பார்வையில் இருந்து அங்கேயே அப்போதே மறைந்து போனான். புத்தியுடன் கூடியவை அனைத்திலும் முதன்மையான அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, அப்போது புத்தியைக் குறித்துச் சிந்தித்தான்.(21) ஹரியின் வடிவத்திற்கு ஒப்பான வடிவத்துடன் கூடிய புத்தியானவள், பலமிக்க ஹரியின் முன்பு தோன்றினாள். யோகமனைத்தையும் கடந்தவனான நாராயணன் இப்போது புத்தியெனும் தேவியிடம் முறையாக யோகத்தைப் பயன்படுத்தினான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி, செயல்பாடு, நன்மை மற்றும் யோகபலம் அனைத்துடன் கூடிய புத்தியெனும் தேவியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(23) “உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கான பணியை நிறைவு செய்வதற்காக நீ பிரம்மனுக்குள் நுழைவாயாக” என்றான். இவ்வாறு அந்த உயர்ந்த தலைவனால் {ஈஸ்வரனால்} ஆணையிடப்பட்ட புத்தியானவள், அதன் பேரில் பிரம்மனுக்குள் நுழைந்தாள்.(24)

ஹரியானவன், புத்தியுடன் கலந்தவனாகப் பிரம்மனைக் கண்டபோது, மீண்டும் அவனிடம், “இப்போது நீ பல்வேறு வகை உயிரினங்களையும் படைப்பாயாக” என்றான்.(25) “சரி” என்ற சொல்லை நாராயணனிடம் மறுமொழியாகக் கூறிய பிரம்மன் மதிப்புடன் தன் மூதாதையின் ஆணையை ஏற்றான். அப்போது பிரம்மனின் முன்னிலையில் இருந்து மறைந்த நாராயணன்,(26) ஒளி அல்லது பிரகாசம் என்ற பெயரில் அறியப்பட்ட தன் இடத்தில் ஒரு கணத்தில் சென்று சேர்ந்தான். (புலப்படாத்தன்மையுடன் கூடிய) தன் சுயநிலைக்கு மீண்டும் திரும்பிய ஹரி, ஒரே அண்ட இயல்பில் தன்னை இருத்திக் கொள்ளத் தீர்மானித்தான்.(27)

எனினும், பிரம்மனால் படைப்பின் பணி நிறைவடைந்ததும், நாராயணனின் மனத்தில் மற்றொரு எண்ணம் எழுந்தது. உண்மையில் அவன் இவ்வாறே சிந்தித்தான், “பரமேஷ்டி என்றழைக்கப்படும் பிரம்மன், தைத்தியர்கள், தானவர்கள், கந்தர்வகள் மற்றும் ராட்சசர்களை உள்ளடக்கிய இந்த உயிரினங்கள் அனைத்தையும் படைத்துவிட்டான். ஆதரவற்றவளான பூமாதேவி இந்த உயிரினங்களின் கனத்தால் சுமை நிறைந்தவளாகிவிட்டாள்.(29) உலகத்தில் உள்ள தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலர் பெரும்பலத்துடன் கூடியவர்களாவார்கள். தவங்களைச் செய்யும் அவர்கள், பல்வேறு நேரங்களில் பல அற்புத வரங்களை அடைவதில் வெல்வார்கள்.(30) தாங்கள் பெற்ற அந்த வரங்களின் விளைவால் செருக்கிலும், வலிமையிலும் பெருகும் அவர்கள், தேவர்களையும், தவ வலிமை கொண்ட முனிவர்களையும் ஒடுக்கிப் பீடிப்பார்கள். எனவே, சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு அடுத்தடுத்து பல்வேறு வடிவங்களை ஏற்று நான் இப்போது பூமியின் சுமையைக் குறைக்க வேண்டும்.(32) தீயவர்களைத் தண்டித்தும், நல்லோரை ஆதரித்தும் நான் இப்பணியை நிறைவேற்றுவேன். (இவ்வாறு என்னால் கவனித்துக் கொள்ளப்படுபவளும்) வாய்மையின் உடல்வடிவமுமான பூமியானவள், உயிரினங்களின் சுமையைச் சுமப்பதில் வெல்வாள்.(33) ஒரு பெரும்பாம்பின் வடிவை ஏற்கும் நான், வெட்டவெளியில் பூமியைத் தாங்க வேண்டும். இவ்வாறு என்னால் தாங்கப்படும் அவள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் தாங்குவாள். எனவே, பூமியில் பல்வேறு வடிவங்களில் அவதரிக்கும் நான், அத்தகைய நேரங்களில் அவளை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும்” {என்று நினைத்தான்}.(34) இவ்வழியில் சிந்தித்த அந்த மதுசூதனன், தன் நோக்கத்தில் கொண்ட பணியை நிறைவேற்றுவதற்காகக் காலாகாலத்தில் தோன்றப்போகும் பல்வேறு வடிவங்களைத் தன் மனத்தில் படைத்தான்.(35)

“பன்றி {வராஹம்}, சிங்க மனிதன் {நரசிம்மம்}, குள்ளன் {வாமனன்} மற்றும் {இராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட} மனிதர்களின் வடிவை ஏற்கும் நான், தீயவர்களாகவும், அடங்காதவர்களாகவும் மாறிவிட்ட தேவர்களின் எதிரிகளைக் கொல்வேன்” என்று நினைத்தான்.(36)

இதன்பிறகு அண்டத்தை உண்மையில் படைத்தவனான அவன் மீண்டும் “போ” என்ற ஓரசையைச் சொல்லி, சுற்றிலும் அஃதை எதிரொலிக்கச் செய்தான். இந்த வாக்கின் அசையில் (சரஸ்வதியில்} இருந்தே சாரஸ்வதர் என்ற பெயரைக் கொண்ட முனிவர் எழுந்தார்.(37) இவ்வாறு நாராயணனின் வாக்கில் பிறந்தவரான அந்த மகன் அபாந்தரதமஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் பலம் கொண்டவரான அவர், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை முழுமையாக அறிந்தவராக இருந்தார். நோன்புகளை நோற்பதில் உறுதிமிக்க அவர் வாக்கில் வாய்மை நிறைந்தவராக இருந்தார்.(38) பிறந்ததும் நாராயணனுக்குத் தலைவணங்கிய அந்த முனிவரிடம், தேவர்கள் அனைவரையும் உண்மையில் படைத்தவனும், மாற்றமில்லாத இயல்பைக் கொண்டவனுமான அவன் {நாராயணன்}, “ஓ! புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, வேதங்களை வகுப்பதில் நீ உனது கவனத்தை அர்ப்பணிக்க வேண்டும். எனவே, ஓ! தவசியே, நான் ஆணையிட்டதைச் செய்வாயாக” என்றான்.(39)

சுயம்புவான மனுவின் பெயரைக் கொண்ட கல்பத்தில், நாராயணனின் வாக்கில் இருந்து இருப்புக்கு வந்த முனிவர் அபாந்தரதமஸ் அந்த உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} இந்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து, வேதங்களை வகுத்துத் தொகுத்தார்.(40) சிறப்புமிக்கவனான ஹரி, முனிவரின் அச்செயலுக்காகவும், அவரால் நன்கு செய்யப்பட்ட தவங்களுக்காகவும், நோன்புகள் மற்றும் நியமங்களுக்காகவும், அவரது புலனடக்கத்திற்காகவும் அவனிடம் நிறைவை அடைந்தான்.(41)

அவரிடம் பேசிய நாராயணன், “ஓ! மகனே {அபந்தரமஸே}, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேதங்களைப் பொறுத்தவரையில் நீ இவ்வழியிலேயே செயல்படுவாய். ஓ! மறுபிறப்பாளனே, நீ செய்த இந்தச் செயலின் விளைவால் நீ மாற்றமில்லாதவனாகவும், எவராலும் விஞ்ச முடியாதவனாகவும் ஆவாய்.(42) கலியுகம் தோன்றும்போது, கௌரவர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பாரதக் குலத்தின் குறிப்பிட்ட இளவரசர்கள் உன்னில் இருந்து பிறப்பை அடைவார்கள். அவர்கள், பலமிக்க நாடுகளை ஆளும் உயர் ஆன்ம இளவரசர்களாகப் பூமியில் கொண்டாடப்படுவார்கள்.(43) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உன் மூலம் பிறந்தவர்களான அவர்களுக்கிடையில், நீ இல்லாத போது, ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் வகையில் பிணக்கு ஏற்படும்.(44) அந்த யுகத்திலும் கடுந்தவங்களைச் செய்யும் நீ, வேதங்களைப் பல்வேறு வகைகளாக வகுப்பாய். உண்மையில் அந்த இருள் யுகத்தில் உன் நிறம் கருமையாகும்.(45)

நீ பல்வேறு வகைக் கடமைகளையும், பல்வேறு வகை ஞானங்களையும் தோன்றச் செய்வாய். கடுந்தவங்களைச் செய்பவனாக இருந்தாலும், உலகின் மீது கொண்ட ஆசை மற்றும் பற்றில் இருந்து ஒருபோதும் விடுபட இயலாதவனாகவே இருப்பாய்.(46) எனினும் உன் மகன் {சுகர்}, மாதவனின் அருளால் பரமாத்மாவைப் போல அனைத்துப் பற்றுகளில் இருந்தும் விடுபடுவான். இது வேறு வகையில் ஆகாது.(47) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் பிறந்த மகன் என்று கல்விமான்களான பிராமணர்களால் அழைக்கப்படுபவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவப்பெருங்கடலைப் போன்றவரும், சூரியனின் காந்தியையே கடந்தவருமான வசிஷ்டர்,(48) வலிமையும், சக்தியும், ஆற்றலும் கொண்டவரும், பராசரர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெரும் முனிவர் பிறக்கப் போகும் குலத்தின் மூதாதையாக இருப்பார். வேதப் பெருங்கடலும், தவங்களின் வசிப்பிடமுமான அந்த முதன்மையான மனிதர் {பராசரர்} (அந்தக் கலியுகத்தில் நீ பிறக்கும்போது) உன் தந்தையாவார்.(49) தந்தையின் இல்லத்தில் வசித்து வரும் ஒரு கன்னிப் பெண், பெரும் முனிவரான பராசரரிடம் கொள்ளும் கலவிச் செயல்பாட்டின் மூலம் அவளுக்கு நீ மகனாகப் பிறப்பாய்.(50)

கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த முக்கியப் பொருட்களில் உனக்கு எந்த ஐயமும் ஏற்படாது. தவங்களுடன் கூடியவனும், என்னால் கற்பிக்கப்பட்டவனுமான நீ, ஆயிரமாயிரம் யுகங்கள் கடந்த நிகழ்வுகளையும் காண்பாய். எதிர்காலத்தில் நேரப்போகும் ஆயிரமாயிரம் யுகங்களையும் நீ காண்பாய்.(51,52) ஓ! தவசியே, அப்பிறவியில் நீ, பிறப்பிறப்பற்றவனான நான், சக்கரம் தரித்துப் பூமியில் (யது குலத்தின் கிருஷ்ணனாக) அவதரிக்கப் போவதைப் பார்ப்பாய். ஓ! தவசியே, நீ என்னிடம் கொள்ளும் இடையறாத அர்ப்பணிப்பின் விளைவால் அடையப்படும் உன் தகுதியின் மூலம் இவை அனைத்தும் உனக்கு நடக்கும். நான் சொல்லும் இந்த வார்த்தைகள் வேறுவகையாகாது.(53) நீ உயிரினங்களில் முதன்மையான ஒருவனாக இருப்பாய். உன் புகழ் மகத்தானதாக இருக்கும். எதிர்காலக் கல்பத்தில் சூரியனின் மகனான சனியே, அந்தக் காலத்திற்கான பெரும் மனுவாகப் பிறப்பை அடைவான்.(54) ஓ! மகனே, அந்த மன்வந்தரத்தில், தகுதிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு காலங்களைச் சார்ந்த மனுக்களைவிட மேன்மையானவனாக இருப்பாய். என் அருளால் நீ அவ்வாறே ஆவாய் என்பதில் ஐயமில்லை.(55) இந்த உலகில் நீடித்திருக்கும் எதுவும் என் முயற்சியின் விளைவாக இருப்பவையே. பிறரின் எண்ணங்கள் அவர்களுடைய செயல்களுடன் பொருந்தாது. எனினும் என்னைப் பொறுத்தவரையில், சிறு தடையுமின்றி நான் நினைப்பதையே எப்போதும் விதிக்கிறேன்” {என்றான் நாராயணன்}.(56)

சாரஸ்வதர் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரதமஸிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, “செல்வாயாக” என்று சொல்லி அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.

{வியாசர் தொடர்ந்தார்} ஹரியின் ஆணையின் பேரில் பிறந்த அபாந்தரதமஸ் நானே. மேலும் நான் வசிஷ்ட குலத்தைத் திளைப்படைச் செய்பவனாக, கொண்டாடப்படும் கிருஷ்ண துவைபாயனன் என்ற பிறப்பை அடைந்திருக்கிறேன்.(57,58) என் முற்பிறவியில் நாராயணனின் அருளால் நான் அந்த நாராயணனின் ஒரு பகுதியாகவே பிறப்பை அடைந்தேன் என்பதை என் அன்புக்குரிய சீடர்களான உங்களுக்குச் சொன்னேன்.(59) நுண்ணறிவுமிக்கவர்களில் முதன்மையானவர்களே, பழங்காலத்தில் உயர்ந்த மன ஒருங்கமைப்பின் உதவியுடன் நான் கடுந்தவங்களைச் செய்தேன்.(60) பிள்ளைகளே, என்னிடம் பெரும் மதிப்புக் கொண்ட உங்களிடம் பேரன்பு கொண்டே, பழங்காலத்தில் என் முந்தைய பிறப்பில் நடந்தவையுமான நீங்கள் அறிய விரும்பிய அனைத்தையும் சொன்னேன்” என்றார் {வியாசர்}”.(61)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, களங்கமில்லா மனம் கொண்ட எங்கள் மதிப்புமிக்க ஆசானான வியாசரின் முற்பிறவி தொடர்புடைய சூழ்நிலைகளை நீ கேட்டதால் நான் உனக்குச் சொன்னேன். மீண்டும் நான் சொல்வதைக் கேட்பாயாக.(62) ஓ! அரசமுனியே, சாங்கியம், யோகம், பஞ்சராத்ரம், வேதங்கள் மற்றும் பசுபதி போன்ற பல்வேறு பெயர்களில் பல்வேறு வகை வழிபாட்டு மரபுகள் இருக்கின்றன.(63)

சாங்கிய வழிபாட்டு மரபானது பெரும் முனிவரான கபிலரால் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யோக அமைப்பை அறிவித்தது ஆதி ஹிரண்யகர்ப்பனை {பிரம்மனைத்} தவிர வேறு எவனும் அல்ல.(64) பிராசீனகர்ப்பர் என்ற சிலரால் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரந்தமஸ் வேதங்களின் ஆசானாகச் சொல்லப்படுகிறார்.(65) உமையின் தலைவனும், அனைத்து உயிரினங்களின் ஆசானும், ஸ்ரீகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், பிரம்மனின் மகனும், உற்சாகமிக்கவனுமான சிவனே, பாசுபதம் என்ற பெயரில் அறியப்படும் வழிபாட்டு மரபை அறிவித்தவன்.(66) சிறப்புமிக்க நாராயணனே, பஞ்சராத்ர சாத்திரங்களை உள்ளடக்கிய வழிபாட்டு மரபு மொத்தத்தையும் அறிவித்தவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும், பலமிக்க நாராயணனே ஒரே விளக்கப் பொருளாகக் காணப்படுகிறான்.(67) இந்த வழிபாட்டு மரபுகளைச் சார்ந்த சாத்திரங்களின்படியும், அவற்றில் உள்ளடங்கியிருக்கும் ஞானத்தின் அளவுகளின் படியும், அவை நாராயணனையே ஒரே வழிபாட்டுப் பொருளாக அறிவிக்கின்றன.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இருளால் {அறியாமையால்} குருடான பார்வையைக் கொண்ட மனிதர்கள், நாராயணனையே அண்டத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாகப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(68) சாத்திரங்களின் ஆசிரியர்களான ஞானிகள், முனிவனான நாராயணனே அண்டத்தில் மதிப்புடன் வழிபடத்தக்க பொருளாவான் என்று சொல்கின்றனர். அவனைப் போன்ற வேறு எவனும் இல்லை என்று நான் சொல்கிறேன்.(69) ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் பரமதேவன், ஐயங்கள் அனைத்தையும் (சாத்திரங்கள் மற்றும் உள்ளுணர்வின் துணையால்) விலக்குவதில் வென்றோரின் இதயங்களில் வசிக்கிறான். போலி மொழிகளின் துணையுடன் அனைத்திலும் சச்சரவு செய்பவர்கள் மற்றும் ஐயத்தின் ஆதிக்கத்தில் உள்ளோரின் இதயங்களில் மாதவன் ஒருபோதும் வசிப்பதில்லை.(70) பஞ்சராத்திர சாத்திரங்களை அறிந்தவர்களும், அதில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நோற்பவர்களும், முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும் நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(71) சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் நித்தியமானவையாகும். மேலும், ஓ! ஏகாதிபதி, வேதங்கள் அனைத்தும் நித்தியமானவையாகும். இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் பழங்காலத்தில் இருந்து நீடித்திருக்கும் இந்த அண்டம் நாராயணனின் சுயமே என்று முனிவர்கள் அறிவிக்கின்றனர்.(72) வேதங்களில் விதிக்கப்பட்டவையும், சொர்க்கத்திற்கும், பூமிக்கும், வானத்திற்கும், நீருக்கும் இடையில் நேரும் நன்மையான அல்லது தீமையான எந்தச் செயலும் புராதன முனிவனான நாராயணனால் செய்யப்பட்டு, அவனிலிருந்தே உண்டாகின்றன” {என்றார் வைசம்பாயனர்}.(73)

வைஜயந்த மலை! – சாந்திபர்வம் பகுதி – 351-பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, புருஷர்கள் பலரா? அல்லது ஒரே ஒருவரா? அண்டத்தில் புருஷர்களில் முதன்மையாவன் எவன்? அனைத்துப் பொருட்களின் மூல காரணம் எனச் சொல்லப்படுவது எது?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளின் ஊகங்களில் பல்வேறு புருஷர்கள் பேசப்படுகிறார்கள். ஓ! குரு குலத்தின் ஆசானே, இவ்வமைப்புகளைப் பின்பற்றுவோர் அண்டத்தில் ஒரே புருஷனே இருக்கிறான் {வேறு எவரும் இல்லை} என்பதை உறுதிப்படுத்த விரும்பவில்லை[1].(2) இதே வகையிலேயே பரம புருஷன் எனும் ஒரே மூலத்தில் இருந்து பல புருஷர்கள் வந்ததாகச் சொல்லப்படுவதில், இந்த மொத்த அண்டமும் மேன்மையான குணங்களைக் கொண்ட அந்த ஒரே புருஷனோடு அடையாளம் காணப்படுவதே என்றும் சொல்லலாம். முனிவர்களில் முதன்மையானவரும், ஆன்மாவைக் குறித்து அறிந்தவரும், தவங்கள், தற்கட்டுப்பாடு மற்றும் மதிக்கத்தக்க வழிபாட்டுக்குத் தகுந்தவரும் என் ஆசானுமான வியாசரை வணங்கி, இப்போது இதைக் குறித்து விளக்கப் போகிறேன்.(3,4)ஓ! மன்னா {ஜனமேஜயா}, புருஷனைக் குறித்த இந்த ஊகம் வேதங்கள் அனைத்திலும் நேர்கிறது. அது ரிதம் மற்றும் வாய்மையுடன் அடையாளம் காணப்படுவதாக நன்கறியப்பட்டிருக்கிறது. முனிவர்களில் முதன்மையான வியாசர் இது குறித்துச் சிந்தித்தார்.(5) ஓ! மன்னா, அத்யாத்மா என்றழைக்கப்படுவதைக் குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டவர்களும், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களுமான பல்வேறு முனிவர்கள், இக்காரியத்தில் பொதுவாகவும், குறிப்பிட்ட வகையிலும் தங்கள் கருத்துகளை அறிவித்திருக்கின்றனர்.(6) அளவிலா சக்தி கொண்ட வியாசரின் அருளின் மூலம், புருஷனின் ஒருமையைக் குறித்த கேள்வியை விளக்க வியாசர் சொன்னதை விவரிக்கப் போகிறேன்.(7) ஓ! மன்னா, இது தொடர்பாகப் பிரம்மனுக்கும், முக்கண் மஹாதேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! ஏகாதிபதி, பாற்கடலுக்கு மத்தியில் வைஜயந்தம் என்ற பெயரில் தங்கத்தைப் போன்ற பெரும் பிரகாசமுடைய மலை ஒன்று இருக்கிறது.(9) சிறப்புமிக்கவனான பிரம்ம தேவன் பெருங்காந்தியும், இன்பநிலையையும் கொண்ட தன் வசிப்பிடத்தில் இருந்து தனியாக அங்கே சென்று அத்யாத்ம நடைமுறை குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(10)

பெரும் நுண்ணறிவைக் கொண்ட நான்முகப் பிரம்மன் அங்கே அமர்ந்திருக்கையில், ஒருநாள் அவனது {பிரம்மனது} நெற்றியில் இருந்து பிறந்தவனும், அவனுடைய மகனுமான மஹாதேவன் அண்டத்தில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைச் சந்தித்தான்.(11) பலமிக்கவனும், உயர்ந்த யோகத்தைக் கொண்டவனுமான முக்கண்ணனான சிவன், பழங்காலத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மலையில் அமர்ந்திருக்கும் பிரம்மனைக் கண்டதால் அதனுச்சியில் விரைவாக இறங்கினான்.(12) தன் மூதாதையின் முன் உற்சாகமிக்க இதயத்துடன் சென்று அவனது பாதங்களை வழிபட்டான். மஹாதேவன் தன் பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்ததைக் கண்ட பிரம்மன், அவனைத் தன் இடது கையால் உயர்த்தினான்.(13) பலமிக்கவனும், அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே தலைவனுமான பிரம்மன் இவ்வாறு மஹாதேவனை உயர்த்தி, நீண்ட காலம் கழித்துக் கண்ட தன் மகனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(14)

பெரும்பாட்டன் {பிரம்மன் சிவனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உனக்கு நல்வரவு. நற்பேற்றாலேயே நீண்ட நாள் கழித்து என் முன்னிலையில் உன்னைக் காண்கிறேன். ஓ! மகனே, உன் தவங்கள், வேத கல்வி மற்றும் பாராயணம் ஆகியவை அனைத்தும் சரியாக நடைபெறுகின்றன என நம்புகிறேன். நீ எப்போதும் கடும் தவங்களைச் செய்பவன். எனவேதான் நான் உன் தவங்களின் முன்னேற்றம் மற்றும் நன்னிலை குறித்து உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.(15,16)

ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, உமது அருளால் வேதகல்வி மற்றும் என் தவங்கள் அனைத்தும் நன்றாக நடைபெறுகின்றன. மேலும் அண்டமும் நன்றாகவே இருக்கிறது.(17) சிறப்புமிக்கவரான உம்மை நீண்ட காலத்திற்கு முன்பு இன்பமும், பிரகாசமும் நிறைந்த உமது இல்லத்தில் கண்டேன். இப்போது உமது பாதத்தின் வசிப்பிடமாக இருக்கும் இந்த மலைக்கு வந்திருக்கிறேன்.(18) இன்பமும், காந்தியும் நிறைந்த உமது வழக்கமான இடத்தைவிட்டு இத்தகைய ஒரு தனிமையான இடத்திற்கு நீர் வந்திருப்பது என் மனத்தில் பெரும் ஆவலைத் தூண்டுகிறது. ஓ! பெரும்பாட்டா, நீர் இவ்வாறு செயல்படுவதற்குப் பெருங்காரணம் இருக்க வேண்டும்.(19) வசிப்பிடங்களில் முதன்மையான உமது வசிப்பிட, பசி மற்றும் தாகமெனும் துன்பங்களில் இருந்து விடுபட்டதாகவும், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும், அளவிலா காந்தி கொண்ட முனிவர்களாலும், கந்தர்வார்களாலும், அப்சரஸ்களாலும் வசிக்கப்படுவதாகவும் இருக்கிறது. அத்தகைய இன்பமான இடத்தைக் கைவிட்டு, இந்த முதன்மையான மலையில் தனிமையில் வசிக்கிறீர். இதற்கான காரணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்காது” என்றான்.(21)

பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “மலைகளில் முதன்மையான இந்த வைஜயந்த மலையே எப்போதும் என் வசிப்பிடமாகும். இங்கே குவிந்த மனத்துடன் முடிவிலா அளவுகளுடன் கூடிய அண்டத்தின் ஒரே புருஷனைத் தியானிக்கிறேன்” என்றான்.(22)

ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, “நீர் சுயம்பு ஆவீர். உம்மால் படைக்கப்பட்ட புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். ஓ! பிரம்மாவே, மேலும் பிறரும் உம்மால் படைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் நீர் சொல்லும் இந்த முடிவிலா புருஷனை தனித்தவனாகவும், ஒருவனாகவும் சொல்கிறீர்.(23) ஓ! பிரம்மாவே, உம்மால் தியானிக்கப்படும் முதன்மையான புருஷன் யார்? இதில் நான் பேராவல் அடைகிறேன். என் மனத்தைப் பீடித்திருக்கும் இந்த ஐயத்தை நீர் கருணையுடன் விலக்குவீராக” என்றான்.(24)

பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “ஓ! மகனே, நீ சொல்லும் புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். எனினும், புருஷர்கள் அனைவரையும் விஞ்சியிருப்பவனும், புலப்படாதவனுமான ஒரே புருஷனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.(25) அண்டத்தில் நீடித்திருக்கும் பல புருஷர்கள் இந்த ஒரே புருஷன் எனும் அடித்தளத்திலேயே அமைந்திருக்கின்றனர்; இந்த ஒரே புருஷன் என்ற மூலத்தில் இருந்தே எண்ணிலடங்கா புருஷர்கள் பிறந்தனர்  என்று சொல்லப்படுகிறது,(26) எனவே, அவர்கள் அனைவரும் குணங்களை இழப்பதில் வென்றால், அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், உயர்ந்தவனும் {பரமனும்}, முதன்மையிலும் முதன்மையானவனும், நித்தியமானவனும், மேற்கண்ட அனைத்து குணங்களும் இல்லாதவனுமான அந்த ஒரே புருஷனுக்குள் நுழையத் தகுந்தவர்கள் ஆவார்கள்” என்றான்.(27)

மஹாபுருஷன்! – சாந்திபர்வம் பகுதி – 352-பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் தொடர்ச்சி…

பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “ஓ! மகனே, அந்தப் புருஷன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறான் என்பதைக் கேட்பாயாக. அவன் நித்தியமானவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறான். அவன் சிதைவற்றவனாகவும், அளவிடமுடியாதவனாகவும் இருக்கிறான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்[1].(1) ஓ! அனைத்து உயிரினங்களிலும் சிறந்தவனே, அந்தப் புருஷனை உன்னாலோ, என்னாலோ, பிறராலோ காண முடியாது. புத்தியையும், புலன்களையும் கொண்டிருந்தாலும், தற்கட்டுப்பாடும், ஆன்ம அமைதியும் இல்லாது இருப்பவர்களால் ஒருபோதும் அவனைக் காண முடியாது. பரமபுருஷன் ஞானத்தின் துணையால் மட்டுமே காணப்படக்கூடியவனாகச் சொல்லப்படுகிறது.(2) உடலற்றவனாக இருந்தாலும் அவன் அனைத்து உடல்களிலும் வசிக்கிறான். உடல்களில் வசித்தாலும் அவன் அவ்வுடல்களால் செய்யப்படும் செயல்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.(3) அவன் உடல்கொண்ட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அனைத்தையும் காணும் சாட்சியாக வசித்து அவற்றின் செயல்களைக் குறித்துக் கொள்வதில் ஈடுபடுகிறான். எப்போதும் எவராலும் அவனைப் புரிந்து கொள்ள முடியாது.(4)இந்த அண்டமானது அவனது தலையின் மகுடமாகும். அண்டமானது அவனது கரங்கள் ஆகும், அண்டமானது அவனது பாதமாகும். அண்டமானது அவனது கண்களாகும். அண்டமானது அவனது மூக்காகும். தனியொருவனாக க்ஷேத்திரங்கள் {உடல்கள்} அனைத்திலும் தன் விருப்பப்படி வரையறைகளின்றிச் சுகமாக உலவுகிறான்.(5) க்ஷேத்திரம் என்பது உடலுக்கான மற்றொரு பெயராகும். யோகத்தின் ஆன்மாவான அவன், க்ஷேத்திரங்கள அனைத்தையும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அறிந்திருப்பதால், க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்[2].(6) உடல் கொண்ட உயிரினங்களுக்குள் அவன் எவ்வாறு நுழைகிறான், அவற்றை விட்டு எவ்வாறு வெளியேறுகிறான் என்பதை உணர்வதில் ஒருவரும் வெல்வதில்லை. சாங்கிய முறைக்கு ஏற்புடைய வகையிலும், யோகத்தின் துணை மூலமும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை முறையாகச் செய்வதன் மூலமும், அந்தப் புருஷனுக்கான காரணத்தைக் குறித்துச் சிந்திப்பதில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அந்தச் சிறந்த காரணத்தால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், நான் கொண்டிருக்கும் ஞானத்தின் அளவுக்கு ஏற்ப அந்த நித்திய புருஷனையும், அவனது ஒருமையையும், உயர்ந்த மகிமையையும் உனக்குச் சொல்கிறேன்.(7,8)கல்விமான்கள் ஒரே புருஷன் என்றே அவனைக் குறித்துச் சொல்கிறார்கள். இருப்பில் நித்தியமாக இருக்கும் அவன், மஹாபுருஷன் (பெரியவனும், உயர்ந்தவனுமான புருஷன்) என்ற குறிச்சொல்லுக்குத் தகுந்தவனாவான்.(9) நெருப்பு ஒரு பூதமாக இருந்தாலும், ஆயிரம் பல்வேறு சூழ்நிலைகளில் ஆயிரம் இடங்களில் அது சுடர்விட்டு எரிவது காணப்படுகிறது. ஒரே ஒரு சூரியனாக இருந்தாலும், அவனது கதிர்கள் பரந்த அண்டம் முழுதும் விரிந்திருக்கின்றன. பல்வேறு வகைகளில் தவங்கள் இருந்தாலும், அவை உண்டான ஒரே பொதுவான மூலத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரே காற்றாக இருந்தாலும், அஃது உலகில் பல்வேறு வடிவங்களில் வீசுகிறது. ஒரே பெருங்கடலானது, உலகில் பல்வேறு சூழ்நிலைகளில் காணப்படும் நீர்நிலைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருக்கிறது. குணங்கள் அற்றவனான அந்தப் புருஷனே எல்லையற்ற வெளியாக வெளிப்படும் அண்டமாக இருக்கிறான். அவனிடம் இருந்து உண்டான எல்லையற்ற அண்டமானது, அழிவுக்காகக் காலம் நேரும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்த ஒரே புருஷனுக்குள்ளேயே நுழைகிறது.(10)

உடல் மற்றும் புலன்களின் நனவுநிலையைக் கைவிடுவதன் மூலமும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலமும், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவதன் மூலமும் ஒருவன் தன்னிடமுள்ள குணங்களைக் கைவிடுவதில் வெல்கிறான்.(11) புலப்படாத புருஷனை உணர்ந்து கொண்டு, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேன் என்ற நான்கு வடிவங்களின் நுட்பமான இருப்பைப் புரிந்து கொள்பவனுமான ஒருவன், அத்தகைய புரிதலின் விளைவால் இதயத்தில் முற்றான அமைதிநிலையை அடைந்து, அந்த ஒரே மங்கலப் புருஷனுக்குள் நுழைவதிலும், அவனோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலும் வெல்கிறான்.(12)

கல்விமான்களான சிலர் அவனையே பரமாத்மா என்று சொல்கின்றனர்.
வேறு சிலர் அவனை ஒரே ஆத்மாவாக {ஏகாத்மாவாகக்} கருதுகிறார்கள்.
மூன்றாம் வகைக் கல்விமான்கள் அவனையே ஆன்மாவாக விளக்குகிறார்கள்[3].(13)

உண்மை என்னவென்றால், பரமாத்மாவானவன் எப்போதும் குணங்களற்றவனாக இருக்கிறான் என்பதாகும். அவனே நாராயணன். அவனே அண்டத்தின் ஆன்மாவும், அவனே ஒரே புருஷனும் ஆகிறான். நீரில் வீசப்பட்டாலும் அதனால் ஒருபோதும் நனையாத தாமரை இலையைப் போலவே, செயல்களின் கனிகளால் அவன் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(14) செயல்படும் ஆன்மா வேறு வகையானது. அந்த ஆன்மா சில நேரங்களில் செயல்களில் ஈடுபடுகிறது. அது செயல்களைக் கைவிடுவதில் வெல்லும்போது, விடுதலையை, அல்லது பரமாத்மாவோடு அடையாளங்காணப்படும் தன்மையை அடைகிறது.(15) செயல்படும் ஆன்மாவானது பதினேழு உடைமைகளைக் கொண்டிருக்கிறது[4]. எனவே, முறையான வரிசையில் எண்ணற்ற வகைப் புருஷர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(16)எனினும், உண்மையில் ஒரேயொரு புருஷனே இருக்கிறான். அண்டத்தைப் பொறுத்தவரையில் அவனே விதிமுறைகள் அனைத்தின் வசிப்பிடமாவான். அவனே ஞானத்தின் உயர்ந்த பொருளாவான். அவனே, அறிபவனாகவும், அறியப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே சிந்திப்பவனாகவும், சிந்திக்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே உண்பவனாகவும், உண்ணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே நுகர்பவனாகவும், நுகரப்படும் மணமாகவும் இருக்கிறான். அவனே தீண்டுபவனாகவும், தீண்டப்படும் பொருளாகவும் இருக்கிறான்.(17) அவனே காண்பவனாகவும், காணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கேட்பவனாகவும், கேட்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கருத்தில் கொள்பவனாகவும், கருதுபொருளாகவும் இருக்கிறான். அவனே குணங்களைக் கொண்டவனாகவும், அவற்றில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான். ஓ! மகனே, அவனே நீடித்திருப்பதும், நித்தியமானதும், மாறாததுமான பிரதானம் என்ற பெயரில் இருகிறான்.(18) தாத்ரியைப் பொறுத்தவரையில் ஆதி விதியைப் படைப்பவன் அவனே. கல்விமான்களான பிராமணர்கள் அவனை அநிருத்தன் என்ற பெயரில் அழைக்கிறார்கள். வேதங்களில் இருந்து உண்டானவையும், சிறந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டவையும், அருள் நிறைந்தவையுமான செயல்கள் அனைத்தும் அவனாலேயே உண்டாகின்றன.(19)

அமைதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும், வேள்விப்பீடங்களில் தங்கள் இடங்களை அடைந்து, தங்கள் வேள்விக் காணிக்கைகளின் முதல் பங்கை அவனுக்கே அளிக்கின்றனர்[5].(20) அனைத்து உயிர்களின் ஆசானாகிய பிரம்மனான நான், அவனிலிருந்தே பிறப்பை அடைந்தேன், நீயோ {சிவனாகிய நீயோ} என்னில் இருந்து பிறப்பை அடைந்தாய். ஓ! மகனே {சிவனே}, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட அண்டமும், புதிர்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தும் என்னில் இருந்து உண்டாகின.(21) நான்கு பிரிவுகளாகப் பிரிந்து அவன் விரும்பும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இத்தகைய சிறப்புமிக்க தெய்வீகத் தலைவனும் கூட, தன் சொந்த ஞானத்தாலேயே விழிப்படைகிறான்.(22) ஓ! மகனே {சிவனே}, நீ கேட்ட கேள்விகளின்படியும், சாங்கிய அமைப்பு மற்றும் யோக தத்துவம் ஆகியவற்றில் இக்காரியம் விளக்கப்பட்டிருக்கும் வழியின்படியும் இவ்வாறே நான் உனக்குப் பதிலளித்தேன்” என்றான் {பிரம்மன்}.(23)

மேன்மையான ஆசிரமம் எது? – சாந்திபர்வம் பகுதி – 353-மேன்மையான ஆசிரமம் குறித்து பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; இந்திரனுக்குக் கதை சொல்லத் தொடங்கிய நாரதர்…

சௌதி {சௌனகரிடம்}, “வைசம்பாயனர், நாராயணனின் மகிமையை ஜனமேஜயனுக்கு இவ்வகையில் விளக்கிய பிறகு அவர், மற்றொரு காரியம் குறித்து யுதிஷ்டிரன் கேட்ட கேள்வியையும், கிருஷ்ணன், முனிவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் முன்னிலையிலும் பீஷ்மர் அவற்றுக்கு அளித்த பதில்களையும் சொல்லத் தொடங்கினார். உண்மையில் வைசம்பாயனர் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்[1].யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, ஓ! பாட்டா, முக்தி அறம் தொடர்புடைய கடமைகள் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர். இப்போது பல்வேறு வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் மக்களுக்கான முதன்மையான கடமைகளை எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்[2].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒவ்வொரு வாழ்வுமுறையைப் பொறுத்தவரையிலும் அவற்றில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நன்கு நடைமுறைப்படுத்தினால் அவை சொர்க்கத்திற்கும், வாய்மையின் உயர்ந்த கனிக்கும் {முக்திக்கும்} வழிவகுக்கவல்லவையே. கடமைகள் பல வாயில்களைக் கொண்டவையாகும். அவற்றால் கற்பிக்கப்படும் நடைமுறைகள் எதுவும் விளைவுகளைப் பொறுத்தவரையில் பயனற்றுப் போனதில்லை.(2)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நிலையான மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் எந்தக் கடமைகளையும் பின்பற்றும் எவனும், தன்னால் பின்பற்றப்படும் கடமைகளைப் புகழ்ந்து, எஞ்சியவற்றைத் தவிர்க்கிறான்.(3)

எனினும், நான் சொல்ல வேண்டும் என நீ விரும்பும் இந்தக் குறிப்பிட்ட காரியம் பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதருக்கும், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலின் பொருளாக இருந்தது.(4)

ஓ! மன்னா, உலகங்கள் அனைத்தினாலும் மதிக்கப்படும் பெரும் முனிவரான நாரதர், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவார். அவர், நீக்கமற நிறைந்திருக்கும் காற்றைப் போல, எதனாலும் தடுக்கப்பட முடியாதவராக உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருக்கிறார்.(5)

ஒரு காலத்தில் அவர் இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார். தேவர்களின் தலைவனால் முறையாகக் கௌரவரிக்கப்பட்ட அவர், அவனது அருகில் அமர்ந்தார்.(6)

அவர் களைப்பு நீங்கி சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட சச்சியின் தலைவன் {இந்திரன்}, அவரிடம் {நாரதரிடம்}, “ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, ஏதாவது ஆச்சரியம் நிறைந்ததை நீர் கண்டீரா?(7) ஓ! மறுபிறப்பாள முனிவரே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட நீர், அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய அண்டத்தின் ஊடாக அனைத்தையும் சாட்சியாகக் கண்டபடி ஆவலுடன் திரிந்து வருகிறீர்.(8) ஓ! தெய்வீக முனிவரே, இந்த அண்டத்தில் நீர் அறியாதது ஏதுமில்லை. எனவே, நீர் கண்ட, அல்லது கேட்ட, அல்லது உணர்ந்த ஆச்சரியமான நிகழ்வு எதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பேசுபவர்களில் முதன்மையான நாரதர் இவ்வாறு கேட்கப்பட்டதும், பின்வரும் பெரிய வரலாற்றை அந்தத் தேவர்களின் தலைவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(10)

நாரதர் தம் கருத்தில் கொண்டிருந்த அதே நோக்கத்திற்காகவே, இந்திரனிடம் அவர் சொன்ன அந்தக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக” என்றார் {பீஷ்மர்}.(11)

மூவகை கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 354-ஒரு பிராமணரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மூவகை கடமைகளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த பிராமணர்; அந்தப் பிராமணரின் இல்லத்திற்கு விருந்தினராக வந்த மற்றொரு பிராமணர்..

{இந்திரனிடம் நாரதர் சொல்வதாக} பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, கங்கையாற்றின் தென்கரையில் அமைந்திருந்ததும், மஹாபத்மம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான ஒரு சிறந்த நகரத்தில் குவிந்த ஆன்மாவுடன் கூடிய ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1)

அத்ரி குலத்தில் பிறந்த அவர் இனிமையானவனாக இருந்தார். (நம்பிக்கையாலும், தியானத்தாலும்) ஐயங்கள் அனைத்தையும் விலக்கிய அவர், தாம் பின்பற்றும் பாதையை நன்கறிந்தவராக இருந்தார். அறக்கடமைகளை எப்போதும் நோற்பவரான அவர், தமது கோபத்தை முற்றான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். எப்போதும் மனம் நிறைந்திருந்த அவர், தமது புலன்களை முழுமையாக ஆள்பவராக இருந்தார்.(2)

தவங்கள் மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், நல்ல மனிதர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டார். அறவழிகளின் மூலம் செல்வமீட்டிய அவரது ஒழுக்கமானது, அனைத்து பொருட்களிலும் அவர் சார்ந்ததும், அவர் பின்பற்றுவதுமான வாழ்வுமுறைக்குத் தொடர்புடையதாக இருந்தது.(3)

அவரது குடும்பம் மிகப் பெரியதாகவும், கொண்டாடப்படுவதாகவும் இருந்தது. அவருக்கு உற்றார், உறவினர், பிள்ளைகள், மனைவிகள் எனப் பலர் இருந்தனர். அவரது ஒழுக்கம் எப்போதும் மதிக்கத்தக்கதாகவும், களங்கமற்றதாகவும் இருந்தது.(4)

தாம் பல பிள்ளைகளைப் பெற்றிருப்பதைக் கண்ட அந்தப் பிராமணர், பெரிய அளவிலான அறச்செயல்களைச் செய்து வந்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவரது அற நோன்புகள், அவரது குடும்ப வழக்கங்கள் தொடர்புடையவையாகவே இருந்தன[1].(5)மூன்று வகைக் கடைமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று அந்தப் பிராமணர் சிந்தித்தார். ’தாம் பிறந்த வகைக்கெனவும் {வர்ணத்துக்கெனவும்}, தாம் பின்பற்றும் (இல்லறம் நோற்கும் ஒரு பிராமணனின்) வாழ்வுமுறைக்கெனவும் {ஆசிரமத்திற்கெனவும்} வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் முதல்வகை. தர்ம சாஸ்திரங்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகள் இரண்டாம் வகை. வேதங்களிலும், சாத்திரங்களிலும் இல்லாவிட்டாலும் பழங்காலத்தில் இருந்து மதிப்புமிக்க, திறன்மிக்க மனிதர்களால் பின்பற்றப்படும் கடமைகள் மூன்றாம் வகை’ {எனச் சிந்திதார்}.(6)

“இதில் எந்தெந்த கடமைகளை நான் பின்பற்ற வேண்டும்? நான் பின்பற்றப்போகும் எந்தெந்த கடமைகள் எனக்கான நன்மைக்கு வழிவகுக்கும்? உண்மையில் எது என் புகலிடமாக இருக்க வேண்டும்?” என்பது போன்ற சிந்தனைகள் அவரை {அந்தப் பிராமணரைக்} கலங்கடித்தன. அவரால் தமது ஐயங்களுக்கு விடைகாண முடியவில்லை.(7)

இத்தகைய சிந்தனைகளால் கலக்கமடைந்திருந்த அந்த வேளையில், குவிந்த ஆன்மாவைக் கொண்டவரும், மிக மேன்மையான ஓர் அறத்தைப் பின்பற்றுபவருமான ஒரு பிராமணர் அவரது இல்லத்திற்கு விருந்தினராக வந்தார்.(8)

அந்த இல்லறத்தான் {முதல் பிராமணர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வழிபாட்டு விதிகளின் படி தமது விருந்தினரை முறையாகக் கௌரவித்தார். தமது விருந்தினர் புத்துணர்வடைந்ததையும், சுகமாக அமர்ந்திருப்பதையும் கண்ட அந்த விருந்தோம்பி {முதல் பிராமணர்}, அவரிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(9)

சொர்க்கத்தின் கதவுகள்! – சாந்திபர்வம் பகுதி – 355-பிராமணர் தன் விருந்தினரிடம் முக்திக்கான வழிமுறை குறித்துக் கேட்டது; தமக்கும் அதில் ஐயமிருப்பதாக விருந்தினர் சொன்னது…

பிராமணர் {தன் இல்லத்திற்கு விருந்தினராக வந்த பிராமணரிடம்}, “ஓ! பாவமற்றவரே, உமது இனிய உரையாடலின் விளைவால் நான் உம்மிடம் மிகுந்த பற்றைக் கொண்டிருக்கிறேன். நீர் என் நண்பராகிவிட்டீர். நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; கேட்பீராக.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஓர் இல்லறத்தானாக {கிருஹஸ்தாஸ்ரமத்தைச் சேர்ந்தவனாக} என் மகனிடம் கடமைகளை ஒப்படைத்துவிட்டு, மனிதனின் உயர்ந்த கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளரே, என் பாதை எதுவாக இருக்க வேண்டும்?(2) ஆன்மாவைச் சார்ந்திருந்து ஒரே ஆன்மாவின் இருப்பை அடைய விரும்புகிறேன். ஐயோ, பற்றுகளில் கட்டப்பட்டிருக்கும் என்னால் அந்தப் பணியை நிறைவேற்றுவதில் என்னை நிறுவிக் கொள்ளும் இதயம் உண்மையில் வாய்க்கவில்லை[1].(3) இல்லற நோற்பில் என் வாழ்வின் சிறந்த பகுதி கடந்து விட்டதால், வரப்போகும் காலத்தில் எஞ்சியுள்ள என் வாழ்நாளில் என் {வாழ்வெனும்} பயணத்திற்கான செலவுகளைக் கொடுப்பதற்கான {பரலோகம் செல்வதற்கான} வழிமுறைகளை ஈட்ட விரும்புகிறேன்.(4) உலகமெனும் பெருங்கடலைக கடக்கும் விருப்பம் என் மனத்தில் எழுந்துள்ளது. ஐயோ, (என் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும்) அறமெனும் தெப்பத்தை எப்போது அடையப் போகிறேன்?(5) தேவர்களே கூடத் தங்கள் செயல்களின் கனிகளைப் பொறுத்துக் கொள்ளவும், தண்டிக்கப்படவும் செய்கிறார்கள் என்பதைக் கேட்டும், அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலும் யமனின் கொடிக்கம்ப வரிசைகளையும், பறக்கும் கொடிகளையும் கண்டும்,(6) நான் சந்திக்கும் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களில் என் இதயம் இன்பத்தை அடையத் தவறுகிறது. பிச்சையெடுத்துத் திரிந்து கிடைக்கும் பிச்சையில் தங்கள் வாழ்வாதாரத்தைச் சார்ந்திருக்கும் யதிகளைக் கண்டு, யதிகளின் அறத்தில் எனக்கு மதிப்பேதும் உண்டாகவில்லை. ஓ! மதிப்புமிக்க விருந்தினரே, புத்தியின் மற்றும் காரணத்தின் அடிப்படையிலான அறத்தின் துணை கொண்டு, குறிப்பிட்ட கடமைகளின் நடைமுறையில் {அறத்தில்} என்னை நீர் நிறுவுவீராக” என்றார் {முதல் பிராமணர்}”.(7)பீஷ்மர் தொடர்ந்தார், “பெரும் ஞானத்தைக் கொண்ட அந்த விருந்தினர், அறம் சார்ந்த தம் விருந்தினரின் இந்தப் பேச்சைக் கேட்டு, இனிமையானதும், மென்மையானதும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(8)

அந்த விருந்தினர் {இரண்டாம் பிராமணர்}, “இக்காரியம் குறித்து நானும் குழப்பத்திலேயே இருக்கிறேன். இதே எண்ணமே என் மனத்திலும் இருக்கிறது. இதில் ஒரு நிச்சயமான தீர்மானத்தை என்னால் அடையமுடியவில்லை. சொர்க்கத்திற்குப் பல கதவுகள் இருக்கின்றன.(9) விடுதலையை {முக்தியை} மெச்சும் சிலர் இருக்கிறார்கள். சில மறுபிறப்பாளர்கள், வேள்விகளைச் செய்வதால் கிட்டும் கனிகளைப் புகழ்கின்றனர். சிலர் காட்டு வாழ்க்கைமுறையை {வானப்ரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுகின்றனர்.(10) சிலர், மன்னர்களின் கடமைகளை நோற்பதால் அடையப்படும் தகுதிகளை {புண்ணியங்களைச்} சார்ந்திருக்கின்றனர். சிலர் ஆன்மக் கட்டுப்பாடு எனும் பண்பாட்டில் விளையும் கனிகளைச் சார்ந்திருக்கின்றனர். ஆசான்கள் மற்றும் பெரியோர்களுக்குக் கடமையுணர்வுடன் கீழ்ப்படிவதால் விளையும் தகுதிகள் நன்மையானவை என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் வாக்குக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகின்றனர்.(11) சிலர் தங்கள் தாய் தந்தையரைக் கடமையுணர்வுடன் பார்த்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றிருக்கின்றனர். வாய்மை மற்றும் கருணை என்ற கடமைகளைப் பின்பற்றிச் சிலர் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கின்றனர்.(12) சிலர் போரிட விரைந்து, தங்கள் உயிர்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்திருக்கின்றனர். மேலும் சிலர் உஞ்சம் என்றழைக்கப்படும் நோன்பைப் பின்பற்றி வெற்றியை அடைந்து சொர்க்கத்தின் பாதையை அடைந்திருக்கின்றனர்.(13) சிலர் தங்களை வேத கல்விக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். மங்கலங்கூடிய அத்தகைய கல்வியில் பற்று கொண்டவர்களும், நுண்ணறிவையும் அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், தங்கள் புலன்களை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுமான இந்த மனிதர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர்.(14) எளிமையும், வாய்மையும் கொண்ட வேறு சிலர் தீய மனிதர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். வாய்மையும், எளிமையும், தூய்மையான ஆன்மாவையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சொர்க்கவாசிகளாகக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர்.(15) எப்போதும் அகலத் திறந்திருக்கும் கடமைகள் {அறங்கள்} எனும் ஆயிரம் வாசல்களின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவது இவ்வுலகில் காணப்படுகிறது. காற்றின் முன்பான மேகத் திரள் போல உமது இந்தக் கேள்வி என் புத்தியைக் கலங்கடிக்கின்றன” என்றார் {விருந்தினர்}.(16)

நாகன் பத்மநாபன்! – சாந்திபர்வம் பகுதி – 356-நாகன் பத்மனிடம் செல்லும்படி விருந்தளிப்பவரிடம் சொன்ன விருந்தினர்…

விருந்தினர் தொடர்ந்தார், “ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் உமக்கு முறையாக விளக்க முயற்சிக்கிறேன். நான் என் ஆசானிடமிருந்து கேட்டதை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(1)

முந்தைய படைப்பில் அறச்சக்கரம் சுழலத் தொடங்கிய இடமும், கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருப்பதும், நைமிஷம் என்ற பெயரில் அறியப்படுவதுமான காட்டில் {காட்டின் அருகில்} நாகர்களின் பெயரில் அழைக்கப்படும் ஒரு நகரம் இருக்கிறது.(2)

பழங்காலத்தில் தேவர்கள் அனைவரும் அந்த இடத்தில் ஒன்றுகூடி ஒரு மகத்தான வேள்வியைச் செய்தனர். அங்கே உலகமன்னர்களில் முதன்மையான மாந்தாத்ரி {மாந்தாதா}, இங்கேதான் தேவர்களின் தலைவனான இந்திரனை வென்றான்.(3)

அற ஆன்மா கொண்ட வலிமைமிக்க நாகன் ஒருவன், அந்தப் பகுதியில் இருக்கும் அந்த நகரத்தில் வசித்து வருகிறான். அந்தப் பெரும் நாகன், பத்மநாபன் அல்லது பத்மன் என்ற பெயரில் அறியப்படுகிறான்.(4)

(செயல்கள், அறிவு, துதி என்ற) முப்பாதையில் நடக்கும் அவன் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைத்து உயிரினங்களையும் நிறைவு செய்கிறான்.(5)

அனைத்திலும் பெருங்கவனத்துடன் சிந்தித்து, நல்லோரைப் பாதுகாத்து, இணக்கம் {சாம}, கொடை, அல்லது கையூட்டளித்தல் {தான}, வேற்றுமையை உண்டாக்கல் {பேத}, பலத்தைப் பயன்படுத்தல் {தண்டம்} என்ற நால்வகைக் கொள்கையைப் பின்பற்றித் தீயோரைத் தண்டித்தும் வருகிறான்.(6)

அங்கே சென்று நீர் விரும்பும் கேள்விகளை அவனிடம் கேட்பீராக. உயர்ந்த அறம் எது என்பதை உண்மையில் அவன் உமக்குக் காட்டுவான்.(7)

அந்த நாகன் விருந்தினர்களை எப்போதும் விரும்புபவன் ஆவான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் சாத்திரங்களையும் நன்கறிந்தவனாவான். அவன், வேறு எந்த மனிதனிலும் காணப்படாதவையும், விரும்பத்தக்கவையுமான ஒழுக்கங்கள் அனைத்தையும் கொண்டவனாவான்.(8)

அவன், நீருடனோ, நீரில்லாமலோ செய்யப்படும் கடமைகளை எப்போதும் நோற்கும் மனநிலை கொண்டவனாவான். வேத கல்வியில் அவன் அர்ப்பணிப்புமிக்கவனாவான். அவன் தவங்களையும், தற்கட்டுப்பாட்டையும் கொண்டவனாவான். அவன் பெருஞ்செல்வத்தைக் கொண்டவனாவான்.(9)

அவன் வேள்விகளைச் செய்கிறான், கொடையளிக்கிறான், தீங்கிழைப்பதைத் தவிர்க்கிறான், மன்னிக்கவும் செய்கிறான். அவன் ஒழுக்கம் அனைத்து வகையிலும் சிறப்பானதாகும். பேச்சில் வாய்மை கொண்டவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான அவன் நன்னடத்தைக் கொண்டவனும், தன் புலன்களை முறையாகக் கட்டுப்படுத்துபவனுமாக இருக்கிறான்.(10)

அவன் தன் விருந்தினர்கள் மற்றும் பணியாட்கள் அனைவரும் உண்ட பிறகே உண்கிறான். அவன் அன்புடன் பேசக்கூடியவனாவான். அவன், எது நன்மையானது, எது எளிமையானது, எது சரியானது, எது கண்டிக்கத்தக்கது என்ற அறிவைக் கொண்டவனாவான். அவன் செய்வதையும், செய்யாமல் விடுவதையும் கணக்கில் கொள்கிறான். அவன் எவரிடமும் ஒருபோதும் பகைமையுடன் நடந்து கொள்வதில்லை. அவன் எப்போதும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுகிறான். அவன், கங்கையின் மத்தியில் உள்ள ஒரு தடாகத்தின் நீரைப் போலத் தூய்மையானதும், களங்கமற்றதுமான ஒரு குடும்பத்தைச் சார்ந்தவனாவான்” {என்றார் விருந்தினர்}.(11)

பிராமணரின் புறப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 357-சரியான பாதை காட்டியதற்காகத் தமது விருந்தினரை மெச்சிய பிராமணர்; இரவு முழுவதும் தமது விருந்தினருடன் உரையாடி, காலையில் நாகன் இருக்கும் நகரம் நோக்கிப் புறப்பட்டது…

விருந்தளிப்பவர் தம் மறுமொழியாக, “ஆறுதலளிக்கும் உமது இந்த வார்த்தைகளைக் கேட்டு, கனமான சுமையைத் தூக்கிக் கொண்டிருக்கும் ஒருவனது தலையில் இருந்தோ, தோள்களில் இருந்து அந்தச் சுமை எடுக்கப்பட்டால் அவனுக்கு உண்டாகும் அந்த அளவு நிறைவை நானும் அடைகிறேன்.(1)

நான்கு சக்கரங்களில் நீண்ட பயணத்தை மேற்கொண்ட ஒருபயணி, படுக்கையில் கிடக்கும்போது உணர்வதும், இடமில்லாததால் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன், ஓர் இருக்கைக் கிடைக்கும்போது உணர்வதும், அல்லது தாகத்தில் இருக்கும் மனிதன் குளிர்ந்த நீரைக் காணும்போது உணர்வதும், அல்லது பசித்த மனிதன் தன் முன் சுவைமிக்க உணவைக் காணும்போது உணர்வதும்,(2) அல்லது ஒரு விருந்தாளி சரியான நேரத்தில் தன் முன்பு விரும்பத்தக்க உணவு வைக்கப்படும்போது உணர்வதும், அல்லது நீண்ட காலம் ஆசைப்பட்டு ஒரு மகனைப் பெற்ற ஒரு முதிய மனிதன் உணர்வதும், ஒருவன் எவனை நினைத்து அதிகக் கவலைப்படுவானோ அந்த அன்புக்குரிய நண்பனையோ, உறவினனையோ சந்திக்கும்போது உணர்வதுமான நிறைவுக்கு ஒப்பாக உம்மால் சொலப்பட்ட இந்த வார்த்தைகளின் விளைவால் நான் நிறைவடைந்திருக்கிறேன்.(3,4)

மேல்நோக்கிய பார்வை கொண்ட ஒரு மனிதனைப் போல நான், உமது உதடுகளில் இருந்து விழுந்தவற்றைக் கேட்டும், அதன் முக்கியத்துவத்தைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறேன். விவேகமிக்க இந்த வார்த்தைகளால் நீர் உண்மையில் எனக்கு அறிவுரையை வழங்கியிருக்கிறீர்.(5)

ஆம், நீ சொன்னது போலவே நான் செய்யப் போகிறேன். இந்த இரவை என்னோடு மகிழ்வாகக் கழித்து, அத்தகைய ஓய்வின் மூலம் உமது களைப்பை அகற்றிக் கொண்டு நாளை விடியற்காலையில் நீர் செல்லலாம்.(6) தெய்வீகச் சூரியனின் கதிர்கள் மங்கியிருப்பதையும், பகலின் தேவன் கீழ்நோக்கிய பாதையில் செல்வதையும் காண்பீராக” என்றார் {விருந்தளிப்பவர்}”.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகைவர்களைக் கொல்பவனே, அந்தப் பிராமணரால் விருந்தோம்பலுடன் கவனிக்கப்பட்டவரும், கல்விமானுமான அந்த விருந்தாளி, தனக்கு விருந்தளிப்பவரின் துணையுடன் அந்த இரவைக் கழித்தார்.(8)

உண்மையில் அவர்கள் இருவரும் நான்காவது வாழ்வுமுறையான சந்நியாச {துறவுக்} கடமைகள் குறித்து ஒருவருக்கொருவர் உற்சாகமாகப் பேசியபடியே அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். கவரும் வகையிலான அவர்களது உரையாடும் இயல்பினால் அந்த இரவு பகலைப் போலக் கழிந்து சென்றது.(9)

காலை விடிந்ததும், (விருந்தாளியின் உரையாடலின்படி) தமக்கு நன்மையானது எனக் கருதப்பட்டதை நிறைவேற்றும் ஆவல் நிறுவப்பட்ட இதயத்தைக் கொண்ட அந்தப் பிராமணரால் அந்த விருந்தாளி உரிய சடங்குகளுடன் வழிபடப்பட்டார்.(10)

அறவோரான அந்தப் பிராமணர் தமது விருந்தினருக்கு விடைகொடுத்தனுப்பி, தன் நோக்கத்தை அடையத் தீர்மானித்து, தமது உற்றார் உறவினரிடம் விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் முதன்மையான வசிப்பிடத்தில் தம் இதயத்தை உறுதியாக நிலைக்கச் செய்து, சரியான நேரத்தில் அதை நோக்கிப் புறப்பட்டார்” {என்றார் பீஷ்மர்}.(11)

நாகனின் மனைவி! – சாந்திபர்வம் பகுதி – 358-வழிவிசாரித்து நைமிஷவனத்தில் உள்ள நாகப்பட்டணத்தை அடைந்த பிராமணர்; நாகனின் மனைவியைக் கண்டது; நாகன் அங்கில்லாதது; நாகன் வரும் வரை கோமதி ஆற்றங்கரையில் காத்திருந்த பிராமணர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இனிய காடுகள், தடாகங்கள் மற்றும் புனித நீர்நிலைகளைக் கடந்து சென்ற அந்தப் பிராமணர் இறுதியாக ஒரு குறிப்பிட்ட தவசியின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(1)

அங்கே வந்த அவர், தமது விருந்தினரிடம் கேட்ட நாகனைக் குறித்து அவரிடம் {அந்தத் தவசியிடம்} சரியான வார்த்தைகளில் விசாரித்து, அவரது அறிவுறுத்தலின் படி தம் பயணத்தைத் தொடர்ந்தார்.(2)

தமது பயண நோக்கத்திற்கான தெளிவான கருத்துடன் கூடிய அந்தப் பிராமணர், நாகனின் இல்லத்தை அடைந்தார். அதற்குள் முறையாக நுழைந்த அவர், சரியான வார்த்தைகளால் தம்மை அறிவித்தபடியே, “ஹோ, இங்கே இருப்பது யார்? நான் ஒரு பிராமணன் இங்கே விருந்தினனாக வந்திருக்கிறேன்” என்றார்.(3)

பேரழகு படைத்தவளும், கடமைகள் அனைத்தையும் நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவளும், கற்புடையவளுமான அந்த நாகனின் மனைவி இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.(4)

விருந்தோம்பும் கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருக்கும் அவள், முறையான சடங்குகளுடன் விருந்தினரை வழிபட்டு, அவரை வரவேற்று, “நான் உமக்குச் செய்யக்கூடியது என்ன?” என்று கேட்டாள்.(5)

அந்தப் பிராமணர், “ஓ! பெண்ணே, நீ என்னிடம் சொன்ன இனிமையான வார்த்தைகளால் நான் போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டேன். என் பயணத்தால் உண்டான களைப்பும் அகன்றது. ஓ! அருள்நிறைந்த பெண்ணே, நான் சிறப்புமிக்கவனான உன் கணவனைக் காண விரும்புகிறேன்.(6) இதுவே என் உயர்ந்த நோக்கமாகும். இஃது ஒன்றே என் விருப்பத்திற்குரிய பொருளுமாகும். இந்தக் காரணத்திற்காகவே நான் இன்று உன் கணவனான நாகனின் வசிப்பிடத்திற்கு வந்திருக்கிறேன்” என்றார்.(7)

நாகனின் மனைவி, “மதிப்புமிக்க ஐயா, என் கணவர் ஒரு மாத காலம் சூரியனின் தேரை இழுப்பதற்காகச் சென்றிருக்கிறார். ஓ! கல்விமானான பிராமணரே, அவர் பதினைந்து நாட்களில் திரும்பி, உமக்குக் காட்சியளிப்பார்.(8) என் கணவர் இல்லத்தில் இல்லாத காரணத்தை உமக்குச் சொன்னேன். உள்ளபடி இஃது இவ்வாறிருக்கட்டும், நான் உமக்கு வேறென்ன செய்ய வேண்டும்? இதைச் சொல்வீராக” என்றாள்[1].(9)பிராமணர் {நாகனின் மனைவியிடம்}, “ஓ! கற்புடைய பெண்ணே, உன் கணவனைக் காணும் நோக்கத்துடனே நான் இங்கே வந்திருக்கிறேன். ஓ !மதிப்புமிக்க இல்லத்தலைவியே, நான் அருகில் இருக்கும் காட்டில் வசித்தபடியே, அவன் திரும்பி வருவதற்காகக் காத்திருப்பேன்.(10) உன் கணவன் திரும்பியதும், அவனைக் காணும் விருப்பத்தால் தூண்டப்பட்டு நான் இவ்விடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதை அவனிடம் கருணையுடன் சொல்வாயாக. அவன் திரும்பி வந்ததும் அஃதை எனக்குச் சொல்வாயாக.(11) ஓ! அருளப்பட்ட மங்கையே, அது வரை நான் சொற்ப உணவை உண்டு, உன் கணவன் திரும்பி வருவதற்காகக் கோமதியாற்றங்கரையில் காத்திருப்பேன்” என்றார்.(12)

நாகனின் மனைவியிடம் இதை மீண்டும் மீண்டும் சொன்ன அந்த முதன்மையான பிராமணர், அந்த நாகன் திரும்பி வரும் காலம் வரை வசித்திருப்பதற்காகக் கோமதியாற்றங்கரைக்குச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(13)

பிராமணரின் உண்ணாநோன்பு! – சாந்திபர்வம் பகுதி – 359-உணவு உண்ணும்படி பிராமணரிடம் கேட்டுக் கொண்ட நாகர்கள்; நாகர்களின் கோரிக்கையை மறுத்த பிராமணர்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நகரத்தைச் சார்ந்த நாகர்கள், தவப்பயிற்சியில் அர்ப்பணிப்பு மிக்க அந்தப் பிராமணர், நாகத்தலைவனின் வரவை எதிர்பார்த்து, உணவை முற்றிலும் துறந்து காட்டில் தொடர்ந்து வசித்து வருவதைக் கண்டு மிகவும் துன்புற்றனர்.(1)

அந்தப் பெரும் நாகனின் சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் மனைவி உள்ளிட்ட உற்றார் உறவினர்கள் ஒன்றாகத் திரண்டு அந்தப் பிராமணர் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.(2)

கோமதி ஆற்றங்கரைக்கு வந்த அவர்கள், அற்புத நோன்புகளை நோற்றபடியே அனைத்துவகை உணவுகளையும் துறந்து, அமைதியாகக் குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு தனிமையான ஓரிடத்தில் அமர்ந்திருந்த அந்த மறுபிறப்பாளரைக் {பிராமணரைக்} கண்டனர்.(3)

அந்தப் பெரும் நாகனின் உற்றார் உறவினர், அந்தப் பிராமணரின் முன்பு வந்து, அவருக்கு உரிய வழிபாட்டைச் செய்து, கள்ளங்கபடற்ற தன்மை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(4) “ஓ! தவச் செல்வத்தைக் கொண்ட பிராமணரே, நீர் இங்கு வந்து ஆறு நாட்கள் ஆகின்றன. ஓ! அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள மறுபிறப்பாளரே, இருப்பினும் உணவுக்கென ஒரு வார்த்தையும் நீர் சொல்லவில்லை.(5) நீர் எங்களிடம் வந்திருக்கிறீர். உம்மைக் கவனிக்க நாங்கள் இருக்கிறோம். உமக்கான விருந்தோம்பல் கடமைகளை நாங்கள் அவசியம் செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும் உமக்குக் காரியம் இருக்கும் அந்த நாகத் தலைவனின் உறவினர்கள் ஆவோம்.(6) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, கிழங்குகள், அல்லது கனிகள், இலைகள், அல்லது நீர், அல்லது அரிசி, அல்லது இறைச்சியை உமது உணவாக உட்கொள்வதே உமக்குத் தகும்.(7) முற்றிலும் உணவைத் தவிர்த்த நிலையில் இந்தக் காட்டில் நீர் வசிப்பதன் விளைவால், இளைஞர்களும், முதியவர்களுமான மொத்த நாகச் சமூகமும் பீடிக்கப்பட்டிருக்கிறது.(8) எங்களில் எவரும் பிராமணக்கொலை என்ற குற்றத்தைச் செய்தவர்களல்ல. எங்களில் எவரும் பிறந்த உடனே மகனை இழந்தவர்களுமல்ல. எங்கள் குலத்தில், தன் வசிப்பிடத்திற்கு வந்த தேவர்கள், அல்லது விருந்தினர்கள் அல்லது உறவினர்கள் உண்பதற்கு முன்னர் எவரும் உண்டதில்லை” என்றனர்.(9)

அந்தப் பிராமணர், “உங்கள் அனைவருடைய வேண்டுகோளின் விளைவால் என் நோன்பு முறிந்ததாகக் கருதப்படலாம். நாகத் தலைவன் திரும்பி வருவதற்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கின்றன.(10) எட்டாம் இரவு கடந்த பின்னும் நாகர்களின் தலைவன் திரும்பி வரவில்லையெனில், உணவை உண்பதன் மூலம் நான் என் நோன்பை முறித்துக் கொள்வேன். நாகத் தலைவனிடம் நான் கொண்ட மதிப்பின் விளைவாலேயே உணவனைத்தையும் துறக்கும் இந்த நோன்பை நோற்கிறேன்.(11) என் செயலுக்காக நீங்கள் வருந்தக்கூடாது. நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள். இஃது அவன் நிமித்தமாகச் செய்யப்படும் நோன்பாகும். என்னுடைய இந்த நோன்பு முறியும் வகையில் எதையும் நீங்கள் செய்யக்கூடாது” என்றார்.(12)

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கூடிவந்த நாகர்கள் அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்டு அவரால் விடைகொடுத்து அனுப்பப்பட்டனர். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அதன் பேரில் அவர்களும் தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” என்றார் {பீஷ்மர்}.(13)

திரும்பி வந்த நாகன்! – சாந்திபர்வம் பகுதி – 360-திரும்பி வந்த நாகன்; அவனது மனைவி அவனைப் பிராமணரிடம் போகச் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முழுமையாகப் பதினைந்து நாள் நிறைவடைந்ததும், சூரியனின் தேரை இழுக்கும் பணியை முடித்து, அவனது {சூரியனின்} அனுமதியைப் பெற்றுக்கொண்டு அந்த நாகத் தலைவன் (பத்மநாபன்) தன் வீட்டுக்குத் திரும்பினான்.(1)

அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது மனைவி, அவனது காலைக் கழுவி விடவும், அதே இயல்பிலான பிற பணிகளைக் கடமையுணர்வுடன் செய்யவும் அவனை அணுகினாள். இந்தப் பணிகளைச் செய்த பிறகு அவள் அவன் அருகில் அமர்ந்தாள். அப்போது களைப்பில் இருந்து புத்துணர்வு அடைந்த நாகன், கடமையுணர்வுமிக்கவளும், கற்புடையவளுமான தன் மனைவியிடம்,(2) “என் அன்பு மனைவி நான் இல்லாதபோது, நான் சொன்னவற்றுக்கு ஏற்புடைய வகையிலும், சாத்திர விதிகளின்படியும் தேவர்களையும், விருந்தினர்களையும் வழிபடுவதைக் கண்டுகொள்ளாமல் இல்லையென நம்புகிறேன்.(3) உன் பாலினத்திற்கு {பெண்களுக்கு} இயல்பான தூய்மையற்ற புத்திக்கு வசப்படாமல், இல்லத்தில் நானில்லாத போது, விருந்தோம்பல் கடமைகளை உறுதியாகப் பின்பற்றியிருப்பாய் என நம்புகிறேன். கடமை மற்றும் அறத்தின் தடைகளை நீ கடக்காமல் இருக்கிறாய் என நம்புகிறேன்” என்றான்.(4)

நாகனின் மனைவி, “சீடர்களின் கடமை, தங்கள் ஆசான் சொல்வதை மதிப்புடன் நிறைவேற்றுவது; பிராமணர்களின் கடமை வேத கல்வியும், அவற்றை நினைவில் கொள்வதும்; பணியாட்களின் கடமை தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது; மன்னனின் கடமை, நல்லோரைப் பாதுகாத்து, தீயோரைத் தண்டித்து மக்களைப் பாதுகாப்பதாகும்.(5) க்ஷத்திரியனின் கடமைகள் தீமையில் இருந்து ஒடுக்குமுறையில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதைத் தழுவியது என்று சொல்லப்படுகிறது.(6) சூத்திரனின் கடமை, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்ற மூன்று மறுபிறப்பாள வகையினரிடம் {வர்க்கத்தினரிடம்} பணிவுடன் தொண்டாற்றுவது. ஓ! நாகர்களின் தலைவரே, ஓர் இல்லறத்தானின் அறம் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதில் அடங்கியிருக்கிறது.(7) சொற்ப உணவை உண்பது, உரிய வகையில் நோன்புகளை நோற்பது ஆகியவை புலன்களுக்கும், அறக்கடமைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பின் விளைவான (அனைத்து வகை {வர்க்க} மக்களின் தகுதியில் {புண்ணியத்தில்} அடங்கியிருக்கிறது.(8)

விடுதலைக்கு வழிவகுக்கும் வாழ்க்கையைப் பின்பற்றுபவன், “நான் யார்? எங்கிருந்து வந்திருக்கிறேன்? பிறக்கு எனக்கு என்னவாக இருக்கிறார்கள்? நான் பிறருக்கு என்னவாக இருக்கிறேன்?” என்ற இந்த நினைவுகளையே தன் மனத்தை எப்போதும் செலுத்த வேண்டும்.(9) கற்புடைமை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியனவே மனைவியின் உயர்ந்த கடமையாக அமைகிறது. ஓ! நாகர்களின் தலைவரே, உமது போதனைகளால் நான் இதை நன்கறிந்திருக்கிறேன்.(10) எனவே, என் கடமையை அறிந்தவளும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் உம்மை என் கணவனாக அடைந்தவளுமான நான் ஏன் கடமையின் பாதையில் இருந்து நழுவி, கீழ்ப்படியாமை மற்றும் பாவத்தின் பாதையில் நடக்கப் போகிறேன்?(11) நீர் இல்லத்தில் இல்லாத போது, எவ்வகையிலும் தேவர்களுக்கான துதி நிற்கவில்லை. சிறு புறக்கணிப்பும் இல்லாமல் உமது வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்களை விருந்தோம்பல் கடமைகளுடன் நான் கவனித்துக் கொண்டேன்.(12) 

பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு பிராமணர் இங்கே வந்தார். அவர் தமது நோக்கத்தை என்னிடம் வெளிப்படுத்தவில்லை. அவர் உம்மைச் சந்திக்க விரும்பினார்.(13) கோமதி ஆற்றங்கரையில் உம் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து வசித்து வருகிறார். கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பிராமணர், பிரம்மத்தைச் சொல்வதில் ஈடுபட்டபடியே அங்கே அமர்ந்திருக்கிறார்.(14) ஓ! நாகர்களின் தலைவரே, நீர் உமது வசிப்பிடத்திற்குத் திரும்பிய உடனேயே உம்மை அங்கு அனுப்பி வைப்பதாக அவருக்கு உறுதியளித்திருக்கிறேன்.(15) ஓ! நாகர்களில் சிறந்தவரே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு அங்கே செல்வதே உமக்குத் தகும். ஓ! கண்களால் கேட்பவரே, அந்த மறுபிறப்பாளரை இங்கே கொண்டு வந்த அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்” என்றாள் {நாகனின் மனைவி}[1].(16)

கோபமடைந்த நாகன்! – சாந்திபர்வம் பகுதி – 361-மனிதன் நாகனை அழைப்பதா என மனைவியிடம் கோபித்துக் கொண்ட நாகன்; தன் கணவனை அமைதிப்படுத்தி பிராமணரிடம் செல்லச் சொன்ன அவனது மனைவி…

நாகன் {பத்மநாபன் தன் மனைவியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, அந்தப் பிராமணன் யாரென நினைக்கிறாய்? அவர் உண்மையில் மனிதன்தானா? அல்லது பிராமணரின் வடிவில் வந்த தேவனா?(1) ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நோக்கத்திற்குத் தக்க என்னைக் காணவிரும்பும் மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? என்னைக் காண விரும்பும் மனிதனால், அவன் வசிக்கும் இடத்திற்கு வந்து தன்னைப் பார்க்குமாறு இவ்வாறு எனக்கு ஆணையிடமுடியுமா?(2) ஓ! இனிய பெண்ணே, தேவர்கள், அசுரர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்கு மத்தியில் நாகர்கள் பெருஞ்சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் சிறந்த நறுமணத்தையும் கொண்டிருக்கிறார்கள்.(3) அவர்கள் {மனிதர்களால்} வழிபடத்தக்கவர்கள். அவர்கள் வரம் அருளவல்லவர்கள். உண்மையில், நாமும் பிறரால் பின்பற்றப்படத் தகுந்தவர்கள். ஓ! பெண்ணே, நாம் மனிதர்களால் காண இயலாதவர்களாக இருக்கிறோம்” என்றான்.(4)

அந்த நாகத்தலைவனின் {பத்மநாபனின்} மனைவி, “அந்தப் பிராமணரின் எளிமை மற்றும் கவர்ச்சியில் இருந்து, அவர் காற்றில் வாழும் எந்தத் தேவனும் அல்ல என அறிகிறேன். ஓ! பெருங்கோபம் கொண்டவரே, அவர் தம் முழு இதயத்துடன் உம்மை மதிக்கிறார் என்பதையும் நான் அறிவேன்.(5) உமது துணையைக் கொண்டு நிறைவேற வேண்டிய நோக்கம் ஏதோ அவரது இதயத்தில் நிலைத்திருக்கிறது. மழையை விரும்புவதும், சாதகம் என்றழைக்கப்படுவதுமான பறவை, (தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக) மழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதைப் போலவே, உம்மைச் சந்திப்பதற்காக அந்தப் பிராமணரும் காத்துக் கொண்டிருக்கிறார்.(6) உம்மைக் காண இயலாமையின் விளைவால் பேரிடர் அவரை அணுகாதிருக்கட்டும். உம்மைப் போன்ற மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்த எந்த மனிதனும், வீட்டிற்கு வந்த விருந்தினரைப் புறக்கணிப்பதன் மூலம் மதிப்புடன் நீடித்திருக்க முடியாது.(7)

உமக்கு இயல்பான கோபத்தைக் கைவிட்டு அந்தப் பிராமணரைக் காணச் செல்வதே உமக்குத் தகும். அந்தப் பிராமணரை ஏமாற்றுவதன் மூலம் தாழ்மையை அடைவது உமக்குத் தகாது.(8) துயர் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வந்த மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க மறுக்கும் மன்னன் அல்லது இளவரசன் கருவைக் கொன்ற குற்றத்தை இழைத்தவனாவான். பேச்சைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் ஞானத்தை அடைகிறான்.(9) கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்புகழை அடைகிறான். பேச்சியில் வாய்மையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் நாநலமென்ற கொடையை அடைந்து, சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான்.(10) நிலத்தைக் கொடையளிப்பதால் ஒருவன் புனித வாழ்வு முறையைப் பின்பற்றும் முனிவர்களுக்கு விதிக்கப்படும் உயர்ந்த கதியை அடைகிறான். அறவழிகளின் மூலம் செல்வம் ஈட்டுவதால் ஒருவன் விரும்பத்தக்க பல கனிகளை அடைகிறான்.(11) தனக்கான நன்மையை முழுமையாகச் செய்வதால் ஒருவன் நரகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கிறார். அறவோர் இதையே சொல்கின்றனர்” என்றாள்.(12)

நாகன், “செருக்கால் நான் ஆணவமேதும் அடையவில்லை. எனினும், என் பிறப்பின் விளைவால் ஓரளவு ஆணவம் என்னால் கருதத்தக்கதே. ஓ! அருளப்பட்ட பெண்ணே, என்னிடம் ஆசையில் பிறக்கும் கோபமேதும் கிடையாது. அவை அனைத்தும் உன் சிறந்த போதனைகளெனும் நெருப்பால் எரிக்கப்பட்டன.(13) ஓ அருளப்பட்ட இல்லத் தலைவியே, கோபத்தை விட அடர்ந்த இருள் எதனையும் நான் காணவில்லை. எனினும், நாகர்கள் கொண்டிருக்கும் மிகுந்த கோபத்தின் விளைவால், அவர்கள் மனிதர்கள் அனைவராலும் நிந்திக்கப்படும் பொருட்களாகின்றனர்.(14)

பேராற்றலைக் கொண்டவனான பத்து தலை இராவணன், கோபத்தின் ஆதிக்கத்திற்கு வீழ்ந்து இந்திரனின் பகைவனாகி, அந்தக் காரணத்தினாலேயே போரில் இராமனால் கொல்லப்பட்டான்.(15) பிருகு குல முனிவர் இராமர் {பரசுராமர்}, தமது தந்தையின் ஹோமப்பசுவுடைய கன்றைக் கொண்டு வருவதற்காகத் தங்கள் அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்ததைக் கேட்ட கார்த்தவீரியனின் மகன்கள், இவ்வாறு தங்கள் அரசக்குடிலில் நுழைந்ததை அவமதிப்பாகக் கருதி கோபவசப்பட்டதால், இராமரின் கரங்களில் அழிவை அடைந்தனர்.(16) உண்மையில் பெரும்பலத்தைக் கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனுக்கு ஒப்பானவனவனுமான கார்த்தவீரியன் கோபவசப்பட்டதால் ஜமதக்னி குலத்தின் இராமரால் போரில் கொல்லப்பட்டான்.(17)

ஓ! இனிய பெண்ணே, உண்மையில் தவங்களுக்குப் பகையும், எனக்கான நன்மை அனைத்தையும் அழிப்பதுமான என் கோபத்தை உன் வார்த்தைகளால் கட்டுப்படுத்திக் கொண்டேன்.(18) அனைத்து அறங்களையும், தீராத தகுதிகளையும் {புண்ணியங்களையும்} கொண்ட உன்னை என் மனைவியாக அடைந்த நற்பேற்றினால் என்னை நானே பெரிதாகப் புகழ்ந்து கொள்கிறேன்.(19) நான் இப்போது அந்தப் பிராமணர் இருக்கும் இடத்திற்குச் செல்லப் போகிறேன். நிச்சயம் நான் அந்தப் பிராமணரிடம் முறையான வார்த்தைகளைப் பேசுவேன். அவர் நிச்சயம் தமது விருப்பங்கள் நிறைவேறியே இங்கிருந்து செல்வார்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(20)

தர்மாரண்யர்! – சாந்திபர்வம் பகுதி – 362-பிராமணரைக் கண்ட நாகன்; பிராமணர் தன் பெயரைச் சொல்லி தன் விருப்பத்தையும் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நாகர்களின் தலைவன் {பத்மநாபன்} தன் அன்புக்குரிய மனைவியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்தப் பிராமணர் தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்திற்குச் சென்றான். அவ்வாறு செல்லும் போதே அந்தப் பிராமணரைக் குறித்துச் சிந்தித்த அவன், அவர் நாக நகரத்திற்கு வந்த காரணம் எது என ஆச்சரியமடைந்தான்.(1) ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முதன்மையான நாகன், தன்னுடைய இயல்பான அற அர்ப்பணிப்பால் அவர் முன்பு சென்று, தன் விருந்தாளியான அவரிடம் இனிய வார்த்தைகளில்,(2) “ஓ! பிராமணரே, கோபவசப்படாதீர். நான் உம்மிடம் அமைதியாகப் பேசுகிறேன். கோபம் கொள்ளாதீர். யாரை எதிர்பார்த்து நீர் இங்கு வந்தீர்? உமது நோக்கம் என்ன?(3) கோமதி ஆற்றங்கரையின் இந்தத் தனிமையான இடத்தில் நீர் யாரைத் துதித்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(4)

அந்தப் பிராமணர் {நாகன் பத்மநாபனிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, என் பெயர் தர்மாரண்யன் என்றும், நான் நாகன் பத்மநாபனைக் காண இங்கே வந்திருக்கிறேன் என்றும் அறிவாயாக. அவனிடம் எனக்கு ஒரு காரியம் இருக்கிறது.(5) அவன் இப்போது இல்லத்தில் இல்லை எனக் கேள்விப்பட்டேன். எனவே, இப்போது நான் அவன் அருகில் இல்லை. மேகங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாதகப் பறவையைப் போல எனக்கு அன்பானவனாக நான் கருதும் ஒருவனுக்காக நான் காத்திருக்கிறேன்.(6) அவனுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் களையவும், அவனுக்கு நன்மையைக் கொண்டுவரவும், அவன் வரும் வரை வேதங்களை உரைப்பதில் ஈடுபட்டு, யோகத்தில் மகிழ்ச்சியாக என் நேரத்தைக் கடத்தி வருகிறேன்” என்றார் {தர்மாரண்யர்}.(7)

நாகன், “உண்மையில் உமது ஒழுக்கம் மிக நல்லதாக இருக்கிறது. பக்திமானான நீர், அறவோர் அனைவருக்கும் நன்மை செய்வதில் அர்ப்பணிப்புள்ளவராக இருக்கிறீர். ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணரே, உமக்கு எல்லாப் புகழும் உண்டாகட்டும். நீர் அந்த நாகனைக் கருணைக் கண்களுடன் காண்கிறீர்.(8) ஓ! கல்விமானான முனிவரே, நீர் தேடும் அந்த நாகன் நானே. உமக்கு ஏற்புடைய எந்தக் காரியத்தை நான் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆணையிடுவீராக.(9) ஓ! மறுபிறப்பாளரே, நீர் இங்கிருக்கிறீர் என்பதை என் மனைவியிடம் இருந்து அறிந்து, உம்மைக் காண்பதற்காக நான் இவ்விடம் வந்திருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, எந்தப் பணியையும் நம்பிக்கையுடன் எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்.(11) உமது நன்மையை அலட்சியம் செய்து, எங்கள் நன்மை நாடுவதில் உமது நேரத்தை ஈடுபடுத்தும் உமது தகுதிகளால் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கிவிட்டீர்” என்றான்.(12)

அந்தப் பிராமணர் {தர்மாரண்யர்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட நாகா, உன்னைக் காணும் விருப்பத்தால் உந்தப்பட்டே நான் இங்கே வந்தேன். ஓ! பாம்பே, அனைத்திலும் அறியாமையைக் கொண்டிருக்கும் நான் உன்னிடம் ஒன்றைக் கேட்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.(13) ஆன்மாவைச் சார்ந்திருக்கும் நான், ஜீவாத்மாவின் கதியான பரமாத்மாவை அடைய விரும்புகிறேன். நான் இவ்வுலகத்தில் மீது பற்றுடனோ, அதனுடன் தொடர்பறுத்துக் கொண்டோ இல்லை.(14) நீ சந்திரனைப் போன்ற ஏற்புடைய {இனிமையான} பிரகாசத்துடனும், தூய புகழில் மறைக்கப்படும் தகுதிகளின் பிரகாசத்திலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்.(15) ஓ! காற்றை மட்டுமே உண்டு வாழ்பவனே, நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு முதலில் பதிலளிப்பாயாக. அதன்பிறகு, என்னை இங்கே கொண்டு வந்த நோக்கத்தைக் குறித்து உனக்குச் சொல்கிறேன்” என்றார் {தர்மாரண்யர்}.(16)

சூரிய அற்புதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 363-சூரியனிலுள்ள அதிசயங்களை தர்மாரண்யர் என்ற பிராமணருக்குச் சொன்ன நாகன் பத்மநாபன்..

பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, “ஒரே சக்கரமுடைய விவஸ்வானின் தேரை உன் முறைப்படி இழுக்கச் சென்று வந்தாய். நீ பயணம் செய்த உலகங்களில் ஆச்சரிக்கரமாக நீ கவனித்த எதையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்” என்றார்.(1)

அந்த நாகன் {தர்மாரண்யரிடம்}, “தெய்வீகமான சூரியனே எண்ணற்ற ஆச்சரியங்களின் இல்லமாகவும், புகலிடமாகவும் இருக்கிறான். மூவுலகங்களில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் சூரியனில் இருந்து உண்டானவையே.(2) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான எண்ணற்ற முனிவர்களும், தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மரக்கிளைகளில் அமரும் பறவைகளைப் போலச் சூரியனின் கதிர்களிலேயே வசிக்கின்றனர்.(3)

சூரியனில் இருந்து வெளிப்படும் பெருங்காற்றானது {வாயுவானது}, அதன் {சூரியனின்} கதிர்களையே புகலிடமாகக் கொண்டு, அங்கிருந்து அண்டத்தைக் கண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட அதிக ஆச்சரியம் தரத்தக்கது வேறு எது?(4) ஓ! மறுபிறப்பாள முனிவரே {தர்மாரண்யரே}, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தில் காற்றை {வாயுவை} பல பகுதிகளாகப் பிரிக்கும் சூரியன், அதை மழைக்காலங்களில் பொழியும் மழையாகச் செய்வதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(5) சூரிய வட்டிலுக்குள் இருக்கும் பரமாத்மா, சுடர்மிக்கப் பிரகாசத்தில் குளித்தபடியே அண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(6) சூரியனின் கருங்கதிர்கள் {சுக்கிரன் எனும் கோளின் சக்தி} மழை நிறைந்த மேகங்களாகி, பருவகாலத்தில் மழையாகப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(7) தான் பொழியும் மழையை எட்டு மாதங்கள் பருகியிருந்து, மழைக்காலங்களில் மீண்டும் அதைப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(8)

சூரியனின் குறிப்பட்ட கதிர்களில் அண்டத்தின் ஆன்மா வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவனிலேயே அனைத்துப் பொருட்களின் வித்துகளும் இருக்கின்றன. அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய பூமியைத் தாங்குபவன் அவனே {சூரியனே}.(9) ஓ! பிராமணரே, புருஷர்களில் முதன்மையானவனும், பெரும் பிரகாசத்தைக் கொண்டவனும், நித்தியமானவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமானா முதன்மையான புருஷன் சூரியனில் வசிக்கிறான் என்பதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(10) எனினும், நான் இப்போது சொல்லப் போவதைக் கேட்பீராக. இஃது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதாகும். சூரியனுக்கு அருகிலேயே இருந்ததால் தெளிந்த வானில் நான் இதைக் கண்டேன்.(11)

பழங்காலத்தில் ஒரு நாள் நடுப்பகலில் சூரியன் மகிமையுடன் ஒளிர்ந்து அனைத்திற்கும் வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, சூரியனின் பிரகாசத்திற்கு இணையாக ஒளிர்வதாகத் தெரிந்த ஒருவன் சூரியனை நோக்கி வந்தான்.(12) நான் ஏற்கனவே சொன்னது போலத் தன் சக்தியால் உலகங்கள் அனைத்தையும் தன் மகிமையால் சுடர்விடும்படியும், தன் சக்தியால் நிறையும்படியும் ஆகாயத்தைப் பிளந்து அதனுடாகத் தனக்கான பாதையை உண்டாகிக் கொள்பவனைப் போல அவன் வந்தான்.(13) அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட கதிர்கள், வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதியின் சுடர்மிக்கப் பிரகாசத்துக்கு ஒப்பாகத் தெரிந்தது. தன் சக்தியாலும், காந்தியாலும் அவன் பார்க்கப்பட முடியாதவனாக இருந்தான். அவனுடைய வடிவம் விளக்கப்பட முடியாததாக இருந்தது. உண்மையில் அவன் இரண்டாம் சூரியனைப் போலவே இருந்தான்.(14)

அவன் அருகே வந்ததும், சூரியன் (மதிப்புமிக்க வரவேற்பைக் கொடுக்கும் வகையில்) தன் கரங்கள் இரண்டையும் விரித்தான். பதிலுக்குச் சூரியனைக் கௌரவிக்கும் வகையில் அவனும் தன் வலக்கரத்தை நீட்டினான்.(15) பிறகு அவன், ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு, சூரியனின் வட்டிலுக்குள் நுழைந்தான். சூரியனின் சக்திக்குள் கலந்த அவன், சூரியனாகவே மாறிவிட்டதாகத் தெரிந்தது.(16) இவ்வாறு அவ்விரு சக்திகளும் சந்தித்துக் கொண்டபோது, எது எதுவாக இருக்கிறது என்பதில் நாங்கள் குழப்பமடைந்தோம். உண்மையில், நாங்கள் தேரில் சுமந்த சூரியன் யார், வானத்தின் ஊடாக வந்தவன் யார் என்பதை அடையாளங்காண்பதில் நாங்கள் தவறினோம்.(17) குழப்பமடைந்த நாங்கள் சூரியனிடம், “ஓ! சிறப்புமிக்கவனே, உன்னில் கலந்தவனும், இரண்டாமவனாக உன்னைப் போல மாறியவனும் யார்?” என்று கேட்டோம்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(18)

உஞ்ச விருத்தி! – சாந்திபர்வம் பகுதி – 364-தன்னுள் நுழைந்த ஒளியின் வரலாற்றைச் சொன்ன சூரியன்…

சூரியன் {நாகன் பத்மநாபனிடம்}, “இவன் அக்னி தேவனல்ல, இவன் அசுரனல்ல. இவன் நாகனுமல்ல. உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கப்படும் நோன்பை நோற்பதில் வெற்றி மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால், சொர்க்கத்தை அடைந்த பிராமணன் இவன்[1].(1)இந்த மனிதன், மரத்தில் இருந்து விழுந்த பழங்கள், கிழங்குகள் மற்றும் இலைகளை உண்டு வாழ்ந்து வந்தான். சில வேளைகளில் இவன் நீரையும், சில வேளைகளில் காற்றை மட்டுமே உண்டும் குவிந்த ஆன்மாவோடு தன் நாட்களைக் கடத்தி வந்தான்.(2)

இவன் தொடர்ந்து உரைத்த சம்ஹிதைகளால் தேவன் மஹாதேவன் இவனிடம் நிறைவடைந்தான். இவன் சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் செயல்கள் நிறைவேற்றுவதில் முயற்சி செய்து வந்தான். அந்தச் செயல்களின் தகுதியாலேயே இவன் இப்போது சொர்க்கத்தை அடைந்திருக்கிறான்.(3)

செல்வம் இல்லாமல், எவ்வகை ஆசையும் இல்லாமல் இருக்கும் இவன், தன் வாழ்வாதாரக் காரியத்தில் உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கும் நோன்பை நோற்று வந்தான். நாகர்களே, கல்விமானான இந்தப் பிராமணன், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தான்.(4), {என்றான் சூரியன்}.

{நாகன் தர்மாரண்யரிடம்}, “சூரிய வட்டிலுக்கு வரும் இந்தச் சிறந்த கதியை அடையும் உயிரினங்களைவிடத் தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, நாகர்களோ மேன்மையானவர்கள் கிடையாது. ஓ! மறுபிறப்பாளரே {தர்மாரண்யரே}, அந்தச் சந்தர்ப்பத்தில் நான் கண்ட அற்புத நிகழ்வு இதுவே.(5)

ஓ! மறுபிறப்பாளரே, உஞ்ச நோன்பை நோற்றதால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்படும் மனிதர்களால் அடையப்படும் கதியை அடைந்தவருமான அந்தப் பிராமணர், இந்த நாள் வரை சூரிய வட்டிலிலேயே தங்கி இருக்கிறார்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(6)

விடைபெற்றுக்கொண்ட பிராமணர்! – சாந்திபர்வம் பகுதி – 365- தாம் வந்த நோக்கத்திற்கான விடையை நாகனின் பதில் இருந்து அடைந்த பிராமணர்; பத்மநாபனிடம் விடைபெற்றுச் சென்ற தர்மாரண்யர்…

பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, “ஓ! நாகா, உண்மையில் இது மிகுந்த அற்புதம் நிறைந்ததாகும். நீ சொன்னதைக் கேட்டதால் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். நுட்பமான பொருள் நிறைந்த உன் வார்த்தைகள், நான் பின்பற்ற வேண்டிய வழியை எனக்குக் காட்டுகின்றன.(1) ஓ !நாகர்களில் சிறந்தவனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். என்னைக் குறித்து விசாரிக்க உன் பணியாட்களை அனுப்பி, இப்போதும், எப்போதும் என்னை நீ நினைவுகூற வேண்டும்” என்றார்[1].(2)நாகன் {பத்மநாபன்}, “உம்மை இங்கே கொண்டு வந்த நோக்கம் இன்னும் உமது நெஞ்சில் இருக்கிறது. நீர் இன்னும் எனக்கு அதை வெளிப்படுத்தவில்லை. பிறகு நீர் எங்கே செல்லப் போகிறீர்? ஓ! மறுபிறப்பாளரே {தர்மாரண்யரே}, என்னால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும், உம்மை இங்கே கொண்டு வந்த நோக்கத்தையும் எனக்குச் சொல்வீராக.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது காரியம் என்னவாக இருந்தாலும், அதை நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னை வணங்கி, வாக்கால் அதை வெளிப்படுத்தியோ, வெளிப்படுத்தாமலோ, என்னால் விடைகொடுக்கப்பட்டு, உற்சாகம் நிறைந்தவராக நீர் செல்லலாம்.(4) நீர் என்னிடம் நட்பைக் கொண்டிருக்கிறீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, இந்த மரநிழலில் அமர்ந்திருக்கும் உம்மை நான் காண மட்டுமே செய்திருக்கிறேன், இந்நிலையில் நீர் செல்வது உமக்குத் தகாது.(4) நீர் எனக்கு அன்புக்குரியவராகவும், நான் உமக்கு அன்புக்குரியவனாகவும் ஆகிவிட்டோம் என்பதில் ஐயமில்லை. இந்த நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் உம்முடையவர்களேயாவர். ஓ! பாவமற்றவரே, என் இல்லத்தில் சில காலத்தைக் கழிப்பதில் உமக்குத் தடையென்ன இருக்கிறது?” என்று கேட்டான்.(6)

அந்தப் பிராமணர் {தர்மாரண்யர் பத்மநாபனிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! ஆன்ம ஞானத்தை அடைந்த நாகா, இஃது இவ்வாறே இருக்கிறது. தேவர்கள் எவ்வகையிலும் உனக்கு மேன்மையானவர்களாக இல்லை என்பது உண்மையே.(7) நீயாக இருப்பவன் நானே, நானாக இருப்பவன் உண்மையில் நீயே. நானும், நீயும், பிற உயிரினங்கள் அனைத்தும், பரமாத்மாவுக்குள் நுழைய வேண்டியவர்களே.(8) ஓ! நாகர்களின் தலைவா, அறம் அல்லது தகுதியை வென்றெடுக்கும் சிறந்த வழிமுறைகளுக்கான காரியத்தில் என் மனத்தில் ஓர் ஐயம் ஊடுருவியிருக்கிறது. உன்னிடம் இருந்து உஞ்ச நோன்பைக் குறித்து அறிந்ததால், உன் சொற்பொழிவின் மூலம் அந்த ஐயம் விலகப்பெற்றேன்.(9) எனவே, நன்மையான விளைவுகளைக் கொடுக்கும் காரியத்தில் மிகவும் திறன்மிக்கதான அந்த நோன்பை இதுமுதல் நான் பின்பற்றப் போகிறேன். ஓ! அருளப்பட்டவனே, சிறந்த காரணங்களின் அடிப்படையிலான இந்த நிச்சயத் தீர்மானத்தை நான் இப்போது அடைந்திருக்கிறேன். நான் உன்னிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். உனக்கு ஆசிகள். ஓ! நாகா, என் நோக்கம் நிறைவடைந்தது” என்றார் {தர்மாரண்யர்}”.(10)

நாகப் பிராமண வரலாறு! – சாந்திபர்வம் பகுதி – 366-தர்மாரண்யருக்கும் நாகன் பத்மநாபனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் உலகில் வரலாறான கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இவ்வழியில் அந்த முதன்மையான நாகனை வணங்கிய (தர்மாரண்யர் என்ற பெயரைக் கொண்ட) அந்தப் பிராமணர், உஞ்ச வகை வாழ்வுமுறையைப் பின்பற்றுவதில் உறுதியான தீர்மானதைத அடைந்து, அந்த நோன்பை முறையாகக் கற்கவும், தொடங்கவும் பிருகு குலத்தின் சியவனரிடம் சென்றார்.(1)

சியவனர் அந்தப் பிராமணருக்கான சம்ஸ்கார சடங்குகளைச் செய்து, முறையாக அவரது உஞ்ச வகை வாழ்வுமுறையைத் தொடங்கி வைத்தார். ஓ !ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தப் பிருகுவின் மகனே இந்த வரலாற்றை மன்னன் ஜனகனின் அரண்மனையில் உரைத்தார். மன்னன் ஜனகனும் பதிலுக்கு உயர் ஆன்மாவைக் கொண்ட தெய்வீக முனிவரான நாரதருக்கு இதைச் சொன்னான்.(2,3)

களங்கமற்ற செயல்களைக் கொண்டவரான முனிவர் நாரதரும் ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்று, இந்த வரலாறு கேட்கப்பட்ட போது இதை இந்திரனுக்குச் சொன்னார்.(4) நாரதரிடம் இருந்து இவ்வாறு இஃதை அடைந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, ஓ! ஏகாதிபதி, பிராமணர்களில் முதன்மையானோர் அனைவரும் அடங்கிய ஒரு கூட்டத்தில் இந்த அருளப்பட்ட வரலாற்றைச் சொன்னான்.(5)

ஓ! மன்னா, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்} நான் பிருகு குலத்தின் ராமருடன் {பரசுராமருடன்} பயங்கரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, தெய்வீக வசுக்கள் இந்த வரலாற்றை எனக்குச் சொன்னார்கள்.(6)

ஓ! அறவோரில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உன்னால் கேட்கப்பட்ட நான் பெருந்தகுதி நிறைந்ததும், புனிதமானதும், சிறந்ததுமான இந்த வரலாற்றை உனக்குச் சொன்னேன்.(7)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த கடமை எது என்று நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்விக்கான என் பதில் இந்த வரலாறே ஆகும். ஓ! ஏகாதிபதி, எந்தக் கனியையும் எதிர்பாராமல் இவ்வழியில் உஞ்ச நோன்பைப் பின்பற்றி அவர் {தர்மாரண்யர் நிச்சயம்} துணிவுமிக்க மனிதரே.(8) நாகர்களின் தலைவனால் {பத்மநாபனால்} தமது கடமை குறித்துக் கற்பிக்கப்பட்ட அந்தப் பிராமணர், உறுதியான தீர்மானத்தை அடைந்து, யமம் மற்றும் நியமம் என்ற நடைமுறைகளைப் பின்பற்றி, மற்றொரு காட்டிற்குச் சென்று, உஞ்ச நோன்பில் அனுமதிக்கப்பட்ட வகையிலான உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார்” என்றார் {பீஷ்மர்}.(8)

மோக்ஷதர்மம் உபபர்வம் முற்றும்

சாந்தி பர்வம் முற்றிற்று*

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 2-ஸ்ரீ பராசர கீதை-

October 17, 2025

இந்திரன் விருத்திராசுரன் போர்! – சாந்திபர்வம் பகுதி – 281-இந்திரனுக்கும், விருத்தாசுரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அளவிலா சக்தி கொண்டவனும், ஒப்பிலா அறிவைக் கொண்டவனும், விஷ்ணுவிடம் பெரும் பக்தி கொண்டவனுமான விருத்திரன் அறத்தின் பால் கொண்டிருந்த விருப்பம் மிகப் பெரியதாகும்.(1) அளவிலா சக்தியைக் கொண்ட விஷ்ணுவால் நிரப்பப்படும் இடத்தைப் புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருக்கிறது. ஓ! மன்னர்களில் புலியே, அஃதை (அசுரனான) விருத்திரனால் எவ்வாறு (இவ்வளவு நன்றாகப்) புரிந்து கொள்ள முடிந்தது?(2) நீர் விருத்திரனின் செயல்களைக் குறித்துப் பேசினீர். நானும் முழு நம்பிக்கையுடன் உம்மைக் கேட்டேன். எனினும், (உமது பேச்சில்) ஒரு காரியம் அறிவுக்குப் பொருத்தமாக எனக்குத் தெரியாததால் (எனவே, அதற்கான விளக்கம் தேவைப் படுவதால்), உம்மைக் கேள்வி கேட்கும் ஆவல் எனக்கு வளர்ந்திருக்கிறது[1].(3)ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, அறவோனும், விஷ்ணுவிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும் {விஷ்ணு பக்தனும்}, உபநிஷத்துகள் மற்றும் வேதாந்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதால் கிட்டும் உண்மை அறிவைக் கொண்டவனுமான விருத்திரன், எவ்வாறு இந்திரனால் வீழ்த்தப்பட்டான்?(4) ஓ! பாரதர்களின் தலைவரே, இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக. உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, எவ்வாறு விருத்திரன் சக்ரனால் {இந்திரனால்} வெல்லப்பட்டான் என்பதை எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, (தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரர்களில் முதன்மையானவனுக்கும் {விருத்திரனுக்கும்} இடையில் நடந்த) அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. அதைக் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்காலத்தில், தெய்வீகப் படைகளின் துணையுடன் தன் தேரில் சென்ற இந்திரன், தன் முன்னே ஒரு மலையைப் போல நின்று கொண்டிருந்த அசுரன் விருத்திரனைக் கண்டான்.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அவன் {விருத்திரன்} முழுமையாக ஐந்நூறு யோஜனைகள் உயரத்தையும், முந்நூறு யோஜனைகள் சுற்றளவையும் கொண்டிருந்தான்.(8) மூவுலகங்கள் ஒன்றுசேர்ந்தாலும் வெல்லப்படமுடியாத விருத்திரனின் அவ்வடிவத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் ஊடுருவப்பட்டு முழுக் கவலை அடைந்தனர்.(9) உண்மையில், ஓ! மன்னா, தன் எதிராளியின் மிகப் பெரும் வடிவைத் திடீரெனக் கண்ட இந்திரனின், அடிமுனைகள் {கால்கள்} வாதத்தால் பீடிக்கப்பட்டன[2].(10) பிறகு, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போர் தொடங்கியதும், இருபுறங்களில் இருந்தும் பேரொலி எழுந்தது, பேரிகைகளும், பிற இசைக்கருவிகளும் முழங்கின.(11) ஓ! குருகுலத்தவனே, தன்னெதிரே சக்ரனை {இந்திரனைக்} கண்ட விருத்திரன், அச்சத்தை உணரவுமில்லை, போருக்காகத் தன் சக்திகள் அனைத்தையும் திரட்டும் மனநிலையிலும் இல்லை.(12)அப்போது, மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், உயர் ஆன்மாவான விருத்திரனுக்கும் இடையில் போர் தொடங்கியது.(13) இருபுறத்தில உள்ள போராளிகளின் வாள்கள், போர்க்கோடரிகள் {பட்டஸங்கள்}, சூலங்கள், வேல்கள், தோமரங்கள், கனத்த கதாயுதங்கள், பல்வேறு அளவுகளிலான கற்பாறைகள், உரத்த நாணொலி கொண்ட விற்கள், பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்கள், நெருப்புகள், எரிகொள்ளிகள் ஆகியவற்றால் மொத்த ஆகாயமும் மறைக்கப்பட்டது.(14,15) பெரும்பாட்டனை {பிரம்மனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் அனைவரும் அப்போரைக் காண அங்கே வந்தனர்,(16) ஓ! பாரதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, சித்தர்களும், அப்சரஸ்களுடன் கூடிய கந்தர்வர்களும், தங்கள் முதன்மையான அழகிய தேர்களில் (அதே காரியத்திற்காக {போரைக் காண்பதற்காக})அங்கே வந்தனர்.(17)

அப்போது, அறவோரில் முதன்மையான விருத்திரன், ஆகாயத்தையும், தேவர்களின் தலைவனையும் அடர்த்தியான பாறைகளின் மழையால் வேகமாக மறைத்தான்.(18) இதனால் சினத்தில் நிறைந்த தேவர்கள், அப்போரில் விருத்திரனால் பொழியப்பட்ட அடர்த்தியான பாறைகளின் மழையைத் தங்கள் கணைகளின் மழையால் விலக்கினர்.(19) பிறகு, ஓ! குருக்களில் புலியே {யுதிஷ்டிரனே}, வலிமை மற்றும் பலத்தைக் கொண்டவனும், பெரும் மாயாசக்திகளைக் கொண்டவனுமான விருத்திரன், தன் மாயாசக்திகளின் துணையோடு மட்டுமே போரிடுவதன் மூலம் தேவர்களின் தலைவனைத் திகைக்கச் செய்தான்.(20) நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, இவ்வாறு விருத்திரனால் பீடிக்கப்பட்டு மலைப்படைந்த போது {மயங்கிய போது}, தவசி வசிஷ்டர் சாமங்களைச் சொல்லி அவனது புலன்களை மீண்டெழச் செய்தார் {அவனது மயக்கத்தைத் தெளிவித்தார்}[3].(21)வசிஷ்டர் {இந்திரனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஓ! தைத்தியர்கள் மற்றும் அசுரர்களைக் கொல்பவனே, தேவர்களில் முதன்மையானவன் நீயே. மூவுலகங்களின் பலம் உன்னில் இருக்கிறது. ஓ! சக்ரா, பிறகு ஏன் நீ இவ்வாறு சோர்வடைகிறாய்?(22) பிரம்மன், விஷ்ணு, அண்டத்தின் தலைவனான சிவன், சிறப்புமிக்கவனும், தெய்வீகமானவனுமான சோமன், உயர்ந்த முனிவர்கள் அனைவரும் (உன்னைப் பார்த்தபடியே) அதோ நிற்கின்றனர்.(23) ஓ! சக்ரா, சாதாரண மனிதனைப் போல நீ பலவீனத்திற்கு வசப்படாதே. ஓ தேவர்களின் தலைவா, போரில் உறுதியான தீர்மானத்துடன் உன் எதிரிகளைக் கொல்வாயாக.(24) உலகங்கள் அனைத்திற்கும் குருவும், உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனுமான முக்கண்ணன் (சிவன்) அதோ உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓ! தேவர்களின் தலைவா, இந்த உன் மயக்கத்தைக் கைவிடுவாயாக.(25) பிருஹஸ்பதியால் தலைமைதாங்கப்பட்ட மறுபிறப்பாள முனிவர்கள், உனது வெற்றிக்காக தெய்வீகப் பாடல்களால் அதோ உன்னைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார் {வசிஷ்டர்}”.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெருஞ்சக்தி கொண்ட வாசவன் {இந்திரன்}, உயர் ஆன்ம வசிஷ்டரால் இவ்வாறு நனவுநிலை மீண்ட போது, அவனது பலம் பெரிதும் அதிகரித்திருந்தது.(27) அப்போது பகனைத் தண்டிக்கும் அந்தச் சிறப்புமிக்கவன், தன் நுண்ணறிவைச் சார்ந்து, உயர் யோகத்தின் துணையுடன் விருத்திரனின் மாயைகளை அகற்றினான்.(28) பிறகு அங்கிரஸின் மகனான பிருஹஸ்பதியும், பெருஞ்செழிப்புடைய அந்த முனிவர்களில் முதன்மையானவர்களும், விருத்திரனின் ஆற்றலைக் கொண்டு மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்று, மூவுலகங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, அந்தப் பேரசுரனை அழிக்குமாறு அவனை {சிவனைத்} தூண்டினர்.(29) அண்டத்தின் சிறப்புமிக்கத் தலைவனுடைய சக்தி, ஒரு கடும் நோயின் வடிவை ஏற்று, அசுரர்களின் தலைவனான விருத்திரனின் உடலில் ஊடுருவியது.(30) உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனும், அண்டத்தைப் பாதுகாப்பவனும், சிறப்புமிக்கவனும், தெய்வீகமானவனுமான விஷ்ணு, இந்திரனின் வஜ்ராயுதத்திற்குள் நுழைந்தான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதி, பெருஞ்சக்தியைக் கொண்ட வசிஷ்டர், முனிவர்களில் முதன்மையான பிறர் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனும், உலகங்கள் அனைத்தாலும் புகழப்படுபவனும் வரமளிப்பவனுமான வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, “ஓ! பலமிக்கவனே, தாமதமில்லாமல் விருத்திரனைக் கொல்வாயாக” என்றனர்.(33)

மஹேஸ்வரன், “ஓ! சக்ரா {இந்திரா}, பெரும் படையின் துணையுடன் கூடிய பெரும் விருத்திரன் அதோ நிற்கிறான். எங்கும் செல்லவல்லவனும், பெரும் மாயாசக்திகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான அவனே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறான்.(34) எனவே, இந்த அசுரர்களில் முதன்மையானவன் {விருத்திரன்}, மூவுலகங்கள் ஒன்றாகச் சேர்ந்தாலும், வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். ஓ! தேவர்களின் தலைவா, யோகத்தின் துணையுடன் நீ அவனைக் கொல்வாயாக. அவனை அலட்சியம் செய்யாதே.(35) ஓ! தேவர்களின் தலைவா, பலத்தை அடைவதற்காக அவன் முழுமையாக அறுபதாயிரம் {60,000} வருடங்கள் கடுந்தவம் செய்திருக்கிறான். பிரம்மன் அவன் வேண்டிய வரங்களான,(36) யோகிகளுக்குச் சொந்தமான மகிமை, பெரும் மாயாசக்திகள், அதீத வலிமை, மிக அபரிமிதமான சக்தி ஆகியவற்றை அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.(37) ஓ! வாசவா, நான் என் சக்தியை உனக்குத் தருகிறேன். அந்தத் தானவன் இப்போது தன் பொறுமையை இழந்திருக்கிறான். எனவே, இப்போது நீ உன் வஜ்ரத்தால் அவனைக் கொல்வாயாக” என்றான் {சிவன்}.(38)

சக்ரன், “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உன் அருளின் மூலம் என் வஜ்ரத்தைக் கொண்டு இந்த வெல்லப்பட முடியாத திதியின் மகனை உன் கண்ணெதிரே கொல்லப் போகிறேன்” என்றான்”.(39)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தப் பேரசுரன் அல்லது தைத்தியன் {விருத்திரன்}, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட போது, மகிழ்ச்சியில் நிறைந்த தேவர்களும், முனிவர்களும் உற்சாகப் பேரொலி எழுப்பினர்.(40) அப்போது துந்துபிகள், சங்கங்கள், மத்தளங்கள், டிண்டிமங்கள், ஆகியவை ஒரே நேத்தில் முழங்ககப்பட்டன.(41) திடீரென அசுரர்கள் அனைவரும் நினைவிழப்பால் பீடிக்கப்பட்டனர். ஒரு கணத்தில் அவர்களது மாயாசக்திகளும் மறைந்து போயின.(42) முனிவர்களும், தேவர்களும் தங்கள் எதிரிகள் இவ்வாறு பீடிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு, இந்திரன் மற்றும் ஈசானன் ஆகிய இருவரையும் புகழ்ந்து, (விருத்திரனை அழிப்பதில் தாமதிக்காதவாறு) முன்னவனை {இந்திரனைத்} தூண்டத் தொடங்கினர்.(43) அந்த மோதலின் போது, முனிவர்களால் துதிபாடல்கள் பாடப்பட்டபோது தேரில் அமர்ந்திருந்த இந்திரன் ஏற்ற வடிவமானது, அச்சமின்றி யாராலும் பார்க்க முடியாததாக இருந்தது” என்றர் {பீஷ்மர்}[4].(44)

விருத்திரன் வதம் – பிரம்மஹத்தி! – சாந்திபர்வம் பகுதி – 282-சிவனின் சக்தியில் பிறந்த நோயால் விருத்திரனின் உடலில் தோன்றிய அறிகுறிகள்; விருத்திரனைக் கொன்றதும் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி; அக்னி முதலிய நால்வருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவம் பிரித்துக் கொடுக்கப்பட்டது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட விருத்திரனின் உடலில் தோன்றிய அடையாளங்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(1) வீரனான அந்த அசுரனின் வாய் நெருப்புத் தழல்களை வெளியிடத் தொடங்கியது. அவனது நிறம் மிகவும் குன்றியது. அவன் மேனியெங்கும் நடுங்கத் தொடங்கியது. அவனது மூச்சு கனமாகவும், அடர்த்தியாகவும் ஆனது.(2) அவனது முடி சிலிரிப்படைந்தது. ஓ! பாரதா, அவனது நினைவு, கடுமையான, பயங்கரமான, மங்கலமற்ற ஓநாயுடைய ஊளையின் வடிவில் அவனது வாயில் இருந்து வெளிப்பட்டது. சுடர்மிக்க எரி கோள்கள் அவனது வலப்புறத்திலும், இடப்புறத்திலும் விழுந்தன.(3) கழுகுகள், கங்கங்கள், நாரைகள் ஆகியன ஒன்றாகத் திரண்டு கடுமையாக அலறியபடியே விருத்திரனின் தலைக்கு மேல் வட்டமிட்டன.(4) பிறகு அம்மோதலில், தேவர்களால் துதிக்கப்பட்டவனும், வஜ்ரம் தரித்தவனுமான இந்திரன், தேரில் அமர்ந்திருந்த அந்தத் தைத்தியனைக் கடுமையுடன் பார்த்தான்.(5)

கடும் நோயால் பீடிக்கப்பட்ட அந்த அசுரன், ஓ! ஏகாதிபதி, கொட்டாவி விட்டபடியே மனிதத்தன்மையற்ற கூச்சலிட்டான்.(6) அந்த அசுரன் கொட்டாவி விட்ட போது, இந்திரன் தன் வஜ்ரத்தை அவன் மீது வீசினான். பெரும் சக்தியைக் கொண்டதும், யுக முடிவில் படைப்பை அழிக்கும் நெருப்புக்கு ஒப்பானதுமான அந்த வஜ்ரம், பெரும் வடிவிலான விருத்திரனை ஒரு கணத்தில் வீழ்த்தியது.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, விருத்திரன் கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து உரத்த கூச்சலிட்டனர்.(8) தானவர்களின் எதிரியும், பெரும் புகழைக் கொண்டவனுமான மகவத் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்ற பிறகு, விஷ்ணுவால் ஊடுருவப்பட்டிருந்த வஜ்ரத்துடன் சொர்க்கத்திற்குள் நுழைந்தான்.(9) ஓ! குரு குலத்தவனே, சரியாக அப்போது, பிராமணக் கொலை என்ற பாவமானது {பிரம்மஹத்தியானது}, கடுமையான, பயங்கரமான வடிவில் (உடல் படைத்த வடிவில்) அனைத்து உலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி, கொல்லப்பட்ட விருத்திரனின் உடலில் இருந்து வெளிப்பட்டாள்.(10)

ஓ! அற ஆன்மாவே {யுதிஷ்டிரனே}, பயங்கரப் பற்களும், கோரமான முகமும், கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில், கலைந்த முடியுடன், பயங்கரக் கண்களுடன் இருந்த அவள் {பிரம்மஹத்தி}, தன் கழுத்தில் கபால மாலையுடன் (உடல் கொண்டு வந்த அதர்வன) மந்திரத்தைப் போல, முழுவதும் குருதியால் மறைக்கப்பட்டு, மரவுரி உடுத்திக் கொண்டு விருத்திரனின் உடலில் இருந்து வெளியே வந்தாள். ஓ !ஏகாதிபதி, அத்தகைய பயங்கரத் தோற்றத்தையும், முகத்தையும் கொண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்},  வஜ்ரதாரியை {இந்திரனைப்} பீடிக்க அவனைத் தேடினாள்.(13) ஓ! குரு குலத்தவனே, சிறிது நேரங்கழித்ததும், விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, மூவுலகங்களின் நன்மைக்குத் தொடர்புடைய ஏதோவொரு காரணத்திற்காகச் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.(14) பெரும் சக்தியுடன் கூடிய இந்திரன் தன் காரியத்திற்காகச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, தேவர்களின் தலைவனைப் பற்றிக் கொண்டு, அந்தக் கணமுதல் அவனைப் பீடித்தாள்.(15)

பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} தன் மேனியை இவ்வாறு பீடித்ததும், அச்சமடைந்த இந்திரன், தாமரைத் தண்டின் இழைகளில் புகுந்து பல நீண்ட வருடங்களாக அங்கேயே வசித்தான்.(16) ஆனால் அந்தப் பிராமணக் கொலை என்ற பாவம் {பிரம்மஹத்தி} அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரா}, உண்மையில் அவளால் பற்றப்பட்ட இந்திரன் தன் சக்திகள் அனைத்தையும் இழந்தான்.(17) அவளை விரட்டுவதற்காக அவன் பெரும் முயற்சிகளைச் செய்தாலும், அந்த முயற்சிகள் அனைத்தும் பலிக்காமலாகின.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவளால் பீடிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் இறுதியாகப் பெரும்பாட்டனின் முன்னிலைக்குச் சென்று, சிரம் தாழ்த்தி அவனை வணங்கினான்.(19) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, சக்ரன் {இந்திரன்}, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்ட பிரம்மன், (தன்னை வேண்டுபவனை விடுவிக்கும் வழிமுறைகளைக் குறித்து) சிந்திக்கத் தொடங்கினான்.(20)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இறுதியாகப் பெரும்பாட்டன் {பிரம்மன்} அந்தப் பிரம்மஹத்தியிடம் இனிய குரலில் அவளைத் தணிப்பதற்காக,(21) “ஓ! இனியவளே, எனப் பிடித்தமான இந்தத் தேவர்களின் தலைவன் உன்னால் விடுபடட்டும். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிறைவேற்ற வேண்டிய உனது விருப்பமென்ன?” என்று கேட்டான்.

அப்போது பிரம்மஹத்தி {பிரம்மனிடம்}, “மூவுலகங்களின் படைப்பாளனும், அண்டத்தால் துதிக்கப்படுபவனுமான சிறந்த தேவனே என்னிடம் நிறைவுடன் இருக்கும்போது, என் விருப்பங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாக நான் கருதுகிறேன். என் வசிப்பிடம் இப்போது உறுதி செய்யப்படட்டும்.(23) உலகங்களைப் பராமரிக்க வேண்டிய இந்த விதி உம்மால் அமைக்கப்பட்டது. ஓ! தலைவா, இந்த முக்கியமான விதியை நீரே அறிமுகப்படுத்தினீர்.(24) ஓ அறத் தலைவா, ஓ! உலகங்கள் அனைத்தின் பலமிக்கக் குருவே, நீர் என்னிடம் நிறைவுடனிருப்பதால் நான் நிச்சயம் சக்ரனை விட்டகல்வேன். ஆனால் நான் வசிப்பதற்கு ஒரு வசிப்பிடத்தை எனக்கு அருள்வீராக” என்று கேட்டாள் {பிரம்மஹத்தி}”.(25)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும்பாட்டன் {பிரம்மன் பிரம்மஹத்தியிடம்}, “அவ்வாறே ஆகட்டும்” என்று பிரம்மஹத்தியிடம் சொன்னான். உண்மையில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, இந்திரனின் மேனியில் இருந்து பிரம்மஹத்தியை அகற்றும் வழிமுறைகளைக் கண்டடைந்துவிட்டான்.(26) அந்தச் சுயம்பு உயர் ஆன்ம அக்னியை நினைத்தான். பின்னவன் {அக்னி தேவன்} உடனடியாகப் பிரம்மனின் முன்பு தோன்றி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! சிறப்புமிக்க, தெய்வீகத் தலைவா, ஓ! எந்தக் குறையும் இல்லாதவரே, நான் உம் முன்பு தோன்றியிருக்கிறேன். நான் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(28)

பிரம்மன் {அக்னிதேவனிடம்}, “நான் இந்தப் பிராமணக் கொலை என்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} பல பகுதிகளைப் பிரிக்கப் போகிறேன். அவளிடம் இருந்து சக்ரனை {இந்திரனைக்} காப்பதற்காக, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பங்கை நீ ஏற்பாயாக” என்று கேட்டான்.(29)

அக்னி {பிரம்மனிடம்}, “ஓ! பிரம்மாவே, நான் எவ்வாறு அவளிடம் இருந்து மீட்கப்படுவேன்? ஓ! பலமிக்கத் தலைவா, அதற்கு ஒரு வழியைச் சொல்வீராக. ஓ! அனைத்து உலகங்களாலும் புகழப்படுபவரே, (நான் காக்கப்படும்) வழிமுறைகளை விவரமாக அறிய நான் விரும்புகிறேன்” என்றான்.(30)

பிரம்மன் நெருப்பிடம், “தமஸ் குணத்தில் மூழ்கிய எந்த மனிதன், உன்னைச் சுடர்மிக்க வடிவில் கண்டும், தானியங்களையும், மூலிகைகளையும், சாறுகளைக் காணிக்கையாக்கி, ஹவிஸை உனக்கு அளிக்காமல் தவிர்க்கிறானோ,(21) அந்த மனிதனுக்குள், நீ கொண்ட பிரம்மஹத்தியின் {முதல்} பகுதி உடனடியாக நுழைந்து, அதுமுதல் அவனிலேயே வசித்திருக்கும். ஓ! ஹவிஸை சுமப்பவனே, உன் இதய நோய் அகலட்டும்” என்றான்”[1].(32)

பீஷமர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், ஹவிசையும், வேள்விக்காணிக்கைகளையும் உண்பவனுமான அவன் {அக்னி} அவனது கட்டளையை ஏற்றுக் கொண்டான். ஓ! மன்னா, அப்போது அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதி அவனது உடலுக்குள் நுழைந்தது.(33) பிறகு பெரும்பாட்டன், மரங்களையும், மூலிகைகளையும், புல் வகைகள் அனைத்தையும் அழைத்து, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அக்னியைப் போலவே அந்த வேண்டுதலால் கலக்கமடைந்த மரங்கள், மூலிகைகள் மற்றும் புற்கள், பெரும்பாட்டனிடம், (35) “ஓ! பெரும்பாட்டா, உலகங்கள் அனைத்திலும் உள்ள நாங்கள் எவ்வாறு இந்தப் பாவத்தில் இருந்து காக்கப்படுவோம். ஏற்கனவே விதியால் பீடிக்கப்பட்டிருக்கும் எங்களை மேலும் பீடிப்பது உமக்குத் தகாது.(36) ஓ! தேவா, நாங்கள் எப்போதும் வெப்பம், குளிர் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்கிறோம், காற்றால் இழுத்து வரப்படும் (மேகங்களின்) மழை ஆகியவற்றாலும், (மனிதர்களின் கரங்களால்) வெட்டப்படுவதாலும் பாதிக்கப்படுகிறோம்.(37) ஓ! மூவுலகங்களின் தலைவா, பிராமணக் கொலை என்ற பாவத்தின் (இந்தப் பிரம்மஹத்தியிலன் ஒரு பகுதியை) உமது உத்தரவின் பேரில் ஏற்றுக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். எனினும், நாங்கள் எவ்வாறு மீட்கப்படுவோம் என்பதை எங்களுக்குச் சுட்டிக்காட்டுவீராக” என்றன.(38)

பிரம்மன் மரங்களிடம், “நீங்கள் ஏற்கும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் இரண்டாம் பகுதி}, தீர்மான மயக்கத்தால், உங்களைப் பருவ காலங்களில் வெட்டும் மனிதனைப் பீடிக்கப் போகிறது” என்றான்.(39)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு உயர் ஆன்ம பிரம்மனால் சொல்லப்பட்டதும், மரங்களும், செடிகளும், புற்களும் அந்தப் படைப்பாளனைப் புகழ்ந்துவிட்டு, அங்கே மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்று விட்டன.(40) பிறகு, ஓ! பாரதா, அனைத்து உலகங்களின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அப்சரஸ்களை அழைத்து, அவர்களை நிறைவு கொள்ளச் செய்யும் வகையில் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்:(41) “பெண்களில் முதன்மையான இந்தப் பிரம்மஹத்தி, இந்திரனின் உடலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள். என்னால் வேண்டப்படும் நீங்கள், (தேவர்களின் தலைவனைக் காப்பதற்காக) இவளது நான்கில் ஒரு பகுதியை உங்கள் மேனியில் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.(42)

அதற்கு அந்த அப்சரஸ்கள் {பிரம்மனிடம்}, “ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தப் பாவத்தின் ஒரு பகுதியை நாங்கள் முழுமையாக விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஓ! பெரும்பாட்டா, (நாங்கள் உம்மிடம் செய்து கொள்ளும்) இந்தப் புரிந்துணர்வால் (விளையும் விளைவுகளில் இருந்து) நாங்கள் விடுபடும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திக்க வேண்டும்” என்றனர்.(43)

பிரம்மன் பெண்களிடம், “உங்கள் இதயங்களின் நோய் அகலட்டும். நீங்கள் ஏற்றுக் கொள்ளும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் மூன்றாம் பகுதி}, பெண்கள் மாதவிடாயில் இருக்கும்போது அவர்களுடன் கலவியை நாடும் மனிதனை உடனே பீடித்து, உங்களிடம் இருந்து அகன்றுவிடும்” என்றான்”.(44)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே, பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்சரஸ்களும், உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு, தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று இன்பமாக விளையாடத் தொடங்கினர்.(45)

பிறகு, பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான, மூவுலகங்களின் சிறப்புமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, நீர்நிலைகளை நினைத்தவுடன் அவை உடனே அவனிடம் வந்தன.(46) அளவிலா சக்தியைக் கொண்ட பிரம்மனின் முன்னிலைக்கு வந்த அந்த நீர்நிலைகள், அவனை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னன:(47) “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது உத்தரவின் பேரில் நாங்கள் உமது முன்னிலையை அடைந்திருக்கிறோம். ஓ! அனைத்துலகங்களின் பலமிக்கக் குருவே, நாங்கள் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டன.(48)

பிரம்மன் {நீர்நிலைகளிடம்} , “விருத்திரனைக் கொன்றதன் விளைவால் இந்தக் கொடிய பாவம் இந்திரனைப் பீடித்திருக்கிறது. பிரம்மஹத்தியின் நான்கில் ஒரு பகுதியை நீங்கள் ஏற்றுக் கொள்வீராக” என்றான்.(49)

நீர்நிலைகள் {பிரம்மனிடம்}, “ஓ! உலகங்கள் அனைத்தின் குருவே, நீர் அணையிட்டவாறே ஆகட்டும். எனினும், ஓ! எங்களின் பலமிக்கத் தலைவா, இந்தப் புரிந்துணர்வில் (இதன் விளைவில்) இருந்து நாங்கள் காக்கப்படும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திப்பதே உமக்குத் தகும்.(50) தேவர்கள் அனைவரின் தலைவரும், அண்டத்தின் உயர்ந்த புகலிடமும் நீரே ஆவீர். துதிகளால் துயரில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்?” என்று கேட்டன.(51)

பிரம்மன் நீர்நிலைகளிடம், “புத்தி மயக்கம் கொண்ட எந்த மனிதன், உங்களை இழிவாகக் கருதி, சளி, சிறுநீர் மற்றும் மலத்தை உங்களில் விடுவானோ,(52) அவனை இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் நான்காம் பகுதி} உடனடியாகப் பீடித்து, அதுமுதல் அவனிலேயே வசித்துவரும். உண்மையில், இவ்வழியிலேயே நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான்”.(53)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அப்போது பிராமணக் கொலை என்ற அந்தப் பாவம் {பிரம்மஹத்தி}, தேவர்களின் தலைவனை விட்டு அகன்று, தனக்காகப் பெரும்பாட்டனின் ஆணையால் விதிக்கப்பட்ட வசிப்பிடங்களுக்குச் சென்றாள்.(54)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, இவ்வாறே இந்திரன் அந்தப் பயங்கரப் பாவத்தால் பீடிக்கப்பட்டான், (இவ்வாறே அவளிடம் இருந்து விடுதலையும் பெற்றான்). பிறகு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அனுமதியுடன் இந்திரன் ஒரு குதிரை வேள்வியைச் செய்யத் தீர்மானித்தான்.(55) ஓ! ஏகாதிபதி, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கபட்ட இந்திரன், அந்த வேள்வியின் மூலமே தூய்மையடைந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(56) ஓ! பூமியின் தலைவா, தன் செழிப்பை மீண்டும் பெற்று, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்று, வாசவன் அடைந்த மகிழ்ச்சி மிகப்பெரியதாக இருந்தது.(57) ஓ! பிருதையின் மகனே, விருத்திரனின் குருதியில் இருந்து உயர்ந்த மகுடங்களைக் கொண்ட சேவல்கள் பிறந்தன. இந்தக் காரணத்தினாலேயே அந்த வளர்ப்புப் பறவைகள் {சேவல்கள்} மறுபிறப்பாள வகையினரும், தொடக்கச் சடங்கை மேற்கொண்ட தவசிகளுகும் (உணவாகக்) கொள்ளத் தூய்மையற்றதானது[2].(58)

ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, இருபிறப்பாளர்களே {பிராமணர்களே} பூமியில் தேவர்களாக அறியப்படுவதால், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு ஏற்புடையதையே செய்வாயாக.(59) ஓ! குரு குலத்தவனே, இவ்வழியிலேயே, நுட்பமான நுண்ணறிவின் துணையுடனும், வழிமுறைகளைச் செயல்படுத்தியதன் மூலமும், அளவிலா சக்தி கொண்ட சக்ரனால் வலிமைமிக்க அசுரன் விருத்திரன் கொல்லப்பட்டான்.(60) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் வெல்லப்படஇயலாதவனான நீயும் கூட மற்றொரு இந்திரனாகி உன் எதிரிகள் அனைவரையும் கொல்பவனாகலாம்.(61) ஒவ்வொரு பர்வ நாளிலும், விருத்திரனின் இந்தப் புனிதக் கதையைப் பிராமணர்களுக்கு மத்தியில் சொல்வோர், எந்தப் பாவத்தினாலும் ஒருபோதும் களங்கப்படமாட்டார்கள்.(62) விருத்திரன் தொடர்புடைய இந்திரனின் மிகப் பெரிய, அற்புதம் நிறைந்த சாதனையை நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்” என்று கேட்டார் {பீஷ்மர்}.(63)-

தக்ஷன் வேள்வி! – சாந்திபர்வம் பகுதி – 283-தக்ஷனின் வேள்வியை அழித்த சிவன்; தன் நெற்றி வியர்வையில் உதித்த நோயைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பெரும் ஞானத்தைக் கொண்ட நீர், கல்வியின் ஒவ்வொரு துறையையும் முழுமையாக அறிந்திருக்கிறீர். விருத்திரன் கொல்லப்பட்ட கதையில் இருந்தே உம்மிடம் கேட்க என்னில் ஒரு கேள்வி எழுந்துள்ளது.(1) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ! பாவமற்றவரே, விருத்திரன் (முதலில்) நோயால் பீடிக்கப்பட்டான் என்றும், அதன் பிறகே வாசவனின் வஜ்ரத்தால் கொல்லப்பட்டான் என்றும் நீர் சொன்னீர்.(2) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்த நோய் எவ்வாறு உண்டானது? ஓ! தலைவா, அந்நோயின் தோற்றம் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நோயின் தோற்றத்தைக் கேட்பாயாக. ஓ! பாரதா, நோயானது முதலில் இருப்பில் எவ்வாறு உதித்தது என்பது குறித்து முழுமையாக விளக்கி விரிவாகப் பேசப் போகிறேன்.(4) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் மேரு மலைகளில் சாவித்ரி என்ற பெயருடைய ஒரு சிகரம் இருந்தது. உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்ட அது, பெரும் காந்தியுடனும், அனைத்து வகை ரத்தினங்கள் மற்றும் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(5) அளவிலா பரப்பைக் கொண்டிருந்த அந்தச் சிகரத்திற்கும் யாரும் செல்ல முடியாது. அந்த மலையின் சிகரத்தில் தெய்வீக மஹாதேவன் {சிவன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தான்.(6)

மலைகளின் மன்னனுடைய மகள் {உமை / பார்வதி} அவனது பக்கத்தில் பிரகாசத்துடன் ஒளிர்ந்தபடி அமர்ந்திருந்தாள். உயர் ஆன்ம தேவர்கள், அளவிலா சக்தி கொண்ட வசுக்கள்,(7) மருத்துவர்களில் முதன்மையான உயர் ஆன்ம அசுவினிகள், குஹ்யர்கள் பலரால் பணிவிடை செய்யப்பட்டவனும், பலமும் செழிப்பும் கொண்டவனும், கைலாச சிகரத்தையே தன் வசிப்பிடமாகக் கொண்டவனுமான யக்ஷர்களின் தலைவன் மன்னன் வைஸ்ரவணன் ஆகியோர் அனைவரும் உயர் ஆன்ம மஹாதேவனுக்காக அங்கே காத்திருந்தனர். பெரும் தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியர்},(8,9) முனிவர்களில் முதன்மையானவர்கள் தங்களில் முதன்மையானவராகக் கொண்ட ஸனத்குமாரர், அங்கிரஸின் தலைமையிலான பிற தெய்வீக முனிவர்கள்,(10) கந்தர்வர்கள், விஸ்வாவசு, நாரதர், பர்வதர், அப்சரஸ்களின் பல்வேறு இனங்கள் ஆகியோர் அனைவரும் அந்த அண்டத்தின் குருவுக்காக அங்கே காத்திருந்தனர்.(11) தூய்மையான, மங்கலமான காற்று, பல்வேறு நறுமணங்களைச் சுமந்தபடி அங்கே வீசிக் கொண்டிருக்கும். அனைத்துப் பருவங்களுக்கும் உரிய மலர்களுடன் கூடிய மரங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன.(12) ஓ! பாரதா, எண்ணற்ற வித்யாதரர்களும், சித்தர்களும், தவசிகளும் அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவனிடம் காத்திருப்பதற்காக அங்கே சென்றனர்.(13)

பல்வேறு வடிவங்களையும் தன்மைகளையும் கொண்ட பல பூதங்களும், பயங்கரமான பல ராட்சசர்களும், பல்வேறு தன்மைகளைக் கொண்ட வலிமைமிக்கப் பிசாசங்களும்,(14) இன்பத்தில் பித்துப் பிடித்து, பல்வேறு வகை ஆயுதங்களை உயர்த்தியபடி, சக்தியில் சுடர் நெருப்புக்கு ஒப்பாக மஹாதேவனின் அணிவரிசையில் காத்திருந்தனர்.(15) சிறப்புமிக்க நந்தி, அந்தப் பெருந்தேவனின் ஆணையின் பேரில், தன் சுடர்மிக்க சக்தியுடன், நெருப்பின் தழலுக்கு ஒப்பான ஒரு வேலுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(16) ஓ! குருகுலத்தின் மகனே, ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளும், அண்டத்தின் புனித நீர்கள் அனைத்திற்கும் பிறப்பிடமானவளுமான கங்கையும், தன் மெய்யுடலுடன் அந்தச் சிறப்பு மிக்கத் தேவனிடம் காத்திருந்தாள்.(17) இவ்வாறு தெய்வீக முனிவர்களாலும், தேவர்களாலும் துதிக்கப்பட்டவனும், அளவிலா சக்தி கொண்ட சிறப்புமிக்கவனுமான மஹாதேவன் அந்த மேருவின் சிகரத்தில் வசித்திருந்தான்.(18)

சில காலம் கழிந்ததும், பிரஜாபதியான தக்ஷன், (வேதங்களில் விதிக்கப்பட்ட) பழங்காலச் சடங்குகளின் படி ஒரு வேள்வியைச் செய்யத் தொடங்கினான்.(19) தக்ஷனின் அந்த வேள்விக்கு, சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்கள் அனைவரும் கூடி செல்வதெனத் தீர்மானித்திருந்தனர்.(20) அந்த உயர் ஆன்ம தேவர்கள், மஹாதேவனின் அனுமதியுடன், காந்தியில் நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான தங்கள் தெய்வீகத் தேர்களில் ஏறி, (இமயத்தில்) கங்கை வெளிப்படுகிறது என்று சொல்லப்படும் இடத்திற்குச் சென்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(21)

தேவர்கள் செல்வதைக் கண்டதும், மலைகளின் மன்னனுடைய சிறந்த மகள் {உமை} தன் கணவனிடம் {சிவனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, சக்ரனின் தலைமையிலான அந்தத் தேவர்கள் எங்கே செல்கின்றனர்? ஓ! உண்மையை அறிந்தவரே, என் மனத்தில் பெரும் ஐயம் நிறைந்திருப்பதால் எனக்கு உண்மையைச் சொல்வீராக” என்று கேட்டாள்.(23)

மஹேஸ்வரன், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, சிறந்தவனான பிரஜாபதி தக்ஷன் ஒரு குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிக்கிறான். இந்தச் சொர்க்கவாசிகள் அங்கேதான் செல்கின்றனர்” என்றான்.(24)

உமை, “ஓ! மஹாதேவரே, நீர் அவ்வேள்விக்குச் செல்லவில்லையா? அவ்விடத்திற்குச் செல்ல உமக்கென்ன தடை இருக்கிறது?” என்று கேட்டாள்.(25)

மஹேஸ்வரன், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, பழங்காலத்தில் தேவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்தனர், அதன் விளைவாக வேள்விகள் அனைத்திலும் என் பங்கெனக் காணிக்கைகளேதும் ஒதுக்கப்படுவதில்லை.(26) ஓ! அழகிய நிறம்படைத்தவளே, அந்த ஒப்பந்தத்தின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்புடைய வகையிலும், பழைய வழக்கத்தைப் பின்பற்றியும், தேவர்கள் வேள்விக் காணிக்கைகளில் எந்தப் பங்கையும் எனக்குத் தருவதில்லை” என்றான்.(27)

உமை, “ஓ! சிறப்புமிக்கவரே, உள்ளவை அனைத்திலும் நீரே பலத்தில் முதன்மையானவர். தகுதி, சக்தி, புகழ், செழிப்பு ஆகியவற்றில் நீர் யாருக்கும் வசப்பட்டவரில்லை, உண்மையில் நீர் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவர்.(28) எனினும், ஓ! பாவமற்றவரே, வேள்விக் காணிக்கையைப் பொறுத்தவரையில் உள்ள இயலாமையின் விளைவால் நான் பெருந்துயரமடைகிறேன், தலை முதல் பாதம் வரை எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது” என்றாள்”.(29)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தத் தேவி (பார்வதி), உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தன் தெய்வீகத் துணைவரிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, துயரில் இதயம் எரிய அமைதியாக இருந்தாள்.(30)

அப்போது மஹாதேவன், அவளது இதயத்தில் இருப்பதையும், அவளது எண்ணங்களையும் புரிந்து கொண்டு, (அந்த அவமதிப்பைத் துடைப்பதற்காக) நந்தியிடம், “(தேவியுடன்) இங்கேயே காத்திருப்பாயாக” என்றான்.(31) தேவர்களின் தேவனும், பிநாகைதாரியும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், யோகத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவனும் அவன் {சிவன்}, தன் யோக சக்தி அனைத்தையும் திரட்டி, பயங்கரமான தன் தொண்டர்கள் (பூத கணங்கள்) அனைவரின் துணையுடன் (தக்ஷன் வேள்வி செய்து கொண்டிருந்த) அந்த இடத்திற்குச் சென்று அவ்வேள்வியை அழித்தான். ஓ! மன்னா, அவனது தொண்டர்களில் சிலர் உரத்த கூச்சலிட்டனர், சிலர் பயங்கரமாகச் சிரித்தனர்,(32,33) சிலர் அந்த (வேள்வி) நெருப்புகளைக் குருதியால் தணித்தனர்; பயங்கர முகங்களைக் கொண்ட சிலர், வேள்விப்பீடங்களைத் தள்ளி அவற்றைச் சுழற்றத் தொடங்கினர். வேறு சிலர் அந்த வேள்வியில் துணை புரிந்து கொண்டிருந்தவர்களை விழுங்கத் தொடங்கினர். பிறகு, இவ்வாறு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீடிக்கப்பட்ட அந்த வேள்வி மானின் வடிவை ஏற்று வானத்தினூடாகத் தப்பிச் செல்ல முனைந்தது.(35)

அவ்வடிவில் வேள்வியே அவ்வாறு தப்பிச் செல்வதை உறுதிசெய்து கொண்ட மஹாதேவன், வில் மற்றும் கணையுடன் அதைப் பின்தொடரத் தொடங்கினான்.(36) அளவிலா சக்தி படைத்தவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனது இதயம் கோபத்தில் நிறைந்ததன் விளைவால், பயங்கரமான ஒரு வியர்வைத் துளி அவனது நெற்றியில் தோன்றியது.(37) அந்த வியர்வைத்துளி பூமியில் விழுந்த போது, அதிலிருந்து, யுகத்தின் முடிவில் (அனைத்தையும்) அழிக்கும் நெருப்புக்கு {காலாக்னிக்கு} ஒப்பான சுடர்மிக்க நெருப்பு தோன்றியது.(38) ஓ ஏகாதிபதி, அந்நெருப்பிலிருந்து குட்டையான வடிவம் கொண்டவனும், குருதிசிவப்பிலான கண்களைக் கொண்டவனும், பச்சை {மஞ்சள்} நிற மீசை கொண்டவனுமான ஒருவன் தோன்றினான்.(39)

ஒரு பருந்தையோ, ஓர் ஆந்தையையோ போல அவனது உடல் முழுவதும் மயிரால் மறைக்கப்பட்டிருந்தது, அவனது தலைமயிர் சிலிர்த்து நின்று கொண்டிருந்தது. பயங்கரமானவனான அவனுடைய நிறம் கரியதாகவும், அவனது ஆடை குருதி சிவப்பாகவும் இருந்தது. வைக்கோற்பொதியை எரிக்கும் நெருப்பைப் போல, பெருஞ்சக்தி கொண்ட அவன், வேள்வியின் மெய்யுடலை {அந்த மானை / மானின் வடிவில் இருந்த வேள்வியை} விரைவாக எரித்தான்.(40) காரியத்தைச் சாதித்த அவன், அங்கே கூடியிருந்த தேவர்களையும், முனிவர்களையும் நோக்கி விரைந்தான். அச்சத்தால் நிறைந்த தேவர்கள் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(41) ஓ ஏகாதிபதி, அவனுடைய நடையின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள்.(42) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அண்டமெங்கும் கதறல்கள் கேட்டன. இதைக் குறித்துக் கொண்ட பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன்னை மஹாதேவனிடம் வெளிப்படுத்திக்கொண்டு, பின்வார்த்தைகளில் அவனிடம் பேசினான்.(43)

பிரம்மன் {மஹாதேவனிடம்}, “ஓ! பலமிக்கவனே, இது முதல் தேவர்கள் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பங்கை உனக்குத் தருவார்கள். ஓ தேவர்கள் அனைவரின் தலைவா, இந்த உன் கோபம் உன்னால் விலக்கப்பட வேண்டும்.(44) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஓ! மஹாதேவா, அதோ தேவர்களும், முனிவர்களும் உன் கோபத்தின் விளைவால் மிகவும் கலக்கமடைந்திருக்கின்றனர்.(45) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! அற ஆன்மாவே, உன் வியர்வையில் இருந்து உதித்தவன், நோய் என்ற பெயரில் உயிரினங்களின் மத்தியில் உலவுவான்.(46) ஓ! பலமிக்கவனே, இவனது சக்தி அனைத்தும் திரண்ட நிலையிலேயே எஞ்சியிருந்தால் இவனைப் பூமாதேவியால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, அவனைப் பல்வேறு பகுதிகளாகப் பிரிப்பாயாக” என்றான்.(47)

வேள்விக்காணிக்கைகளில் தனக்குரிய பங்கு முறையாக ஒதுக்கப்படும் என்று பிரம்மன் இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, பெரும் சக்தி கொண்ட அந்தப் பெரும்பாட்டனிடம் மஹாதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறினான்.(48) உண்மையில், பிநாகைதாரியான அந்தப் பவன் {சிவன்}, சற்றே புன்னகைத்து மகிழ்ச்சியால் நிறைந்தான். வேள்விக்காணிக்கைகளில் இருந்து தனக்கெனப் பெரும்பாட்டனால் ஒதுக்கப்பட்ட பங்கை அவன் ஏற்றான்.(49) அனைத்தின் தன்மைகளையும் அறிந்த மஹதேவன், அனைத்து உயிரினங்களின் அமைதிக்காக அந்த நோயை பல பகுதிகளாகப் பிரித்தான். ஓ மகனே, அஃதை அவன் எவ்வாறு செய்தான் என்பதைக் கேட்பாயாக.(50) யானைகளின் தலையில் உணரப்படும் வெப்பம் {மண்டை கொதிப்பு}, மலைகளின் தாது {நிலக்கீல்}, நீரில் மிதக்கும் பாசி, பாம்புகளின் சட்டை,(51) காளைகளின் குளம்புகளில் தோன்றும் புண், விளைச்சலற்ற பூமிப் பகுதிகளின் உப்பு, விலங்குகள் அனைத்தின் மங்கலான பார்வை,(52) குதிரைகளுக்குக் தொண்டையில் தோன்றும் நோய்{கண்டத்தில் தோன்று சதையடைப்பு}, மயில்களுக்குத் தலையில் தோன்றும் கொண்டை {மண்டை வெடிப்பு}, குயில்களின் கண்ணோய் ஆகியன அந்த உயரான்ம மஹாதேவனால் நோயெனப் பெயரிடப்பட்டன.(53)

இதையே நாம் கேள்விப்படுகிறோம். ஆட்டின் ஈரல் நோய், கிளிகளின் விக்கல் ஆகியனவும் நோயின் வடிங்களாகவே அறியப்படுகின்றன. ஓ! அற மன்னா, புலிகளின் களைப்பும் நோயெனவே அறியப்படுகிறது.(54) ஓ! பாரதா, இவற்றைத் தவிர்த்து, மனிதர்களுக்கு மத்தியில் நோயானாது, பிறப்பின்போதும், மரணத்தின் போதும், அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் அனைவரின் உடலுக்குள்ளும் நுழைகிறது.(55) நோய் என்றழைக்கப்படும் இவையும், அவையும் பயங்கர சக்தி கொண்ட மஹேஸ்வரனாகவே அறியப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் மேலும் அதிகாரம் கொண்டவன் அவன் என்பதால் அவன் அனைவராலும் வழிபடத்தகுந்தவனாவான்.(56)

அவனே {மகாதேவனே} அறவோரில் முதன்மையான விருத்திரன் கொட்டாவி விட்டபோது அவனை வென்றவனாவான். அதன் பிறகே சக்ரன் {இந்திரன்} அவன் மீது வஜ்ரத்தை ஏவினான்.(57) ஓ! பாரதா, விருத்திரனின் உடலுக்குள் புகுந்த அந்த வஜ்ரம் அவனை இரண்டாகப் பிளந்தது. வஜ்ரத்தால் இரண்டாகப் பிளக்கப்பட்டவனும், பெரும் யோக சக்திகளைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தச் சூரன், அளவிலா சக்தியுடன் கூடிய விஷ்ணுவின் உலகத்திற்கு {வைகுந்தத்திற்குச்} சென்றான்.(58) விஷ்ணுவிடம் அவன் கொண்ட பக்தியின் விளைவால் அவன் மொத்த அண்டத்தையும் மூழ்கடிப்பதில் வென்றான். விஷ்ணுவிடம் அவன் கொண்ட பக்தியின் விளைவாலேயே அவன் கொல்லப்பட்ட போது விஷ்ணுவின் உலகத்திற்கு உயர்ந்தான்.(59) ஓ! மகனே, இவ்வாறு விருத்திரனின் கதையைச் சொன்னதன் வழியாக நோயைக் குறித்த விவரங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு எதைக் குறித்து நான் உன்னிடம் பேச வேண்டும்?(60) மிகுந்த கவனத்துடனும், உற்சாகம் நிறைந்த இதயத்துடனும் நோயின் தோற்றத்தைக் குறித்த இந்தக் கதையைப் படிப்பவன், நோயில் இருந்து விடுபட்டு, தன் பங்காக மகிழ்ச்சியையே எப்போதும் பெறுவான். மகிழ்ச்சியால் நிறையும் அவன், தனது இதயத்தில் நிறுவும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்” {என்றார் பீஷ்மர்}”.(61)

வீரபத்ரன், பத்ரகாளி! – சாந்திபர்வம் பகுதி – 284-மஹாதேவன் வீரபத்ரனைக் கொண்டு தக்ஷனின் வேள்வியை அழித்ததையும், பத்ரகாளியின் தோற்றத்தையும், சிவனிடம் தக்ஷன் பெற்ற வரத்தையும் ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்.

{நாகவேள்வியில்} ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, பிரசேதஸின் மகனான பிரஜாபதி தக்ஷனின் குதிரை வேள்வி வைவஸ்வத மனுவின் காலத்தில் எவ்வாறு அழிக்கப்பட்டது?(1) உமா தேவி சினத்திலும், துயரத்திலும் நிறைந்ததைப் புரிந்து கொண்டவனும், பலமிக்கவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மா ஆனவனுமான மஹாதேவன் கோப வசப்பட்டான். பிறகு பிரிந்து போன அந்த வேள்வியின் அங்கங்களை அவனது {சிவனின்} அருளைக் கொண்டு தக்ஷனால் எவ்வாறு ஒன்றுதிரட்ட முடிந்தது? இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பிராமணரே, உண்மையில் நடந்தவாறே இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் சொன்னார், “பழங்காலத்தில் தக்ஷன், மலைகளில் கங்கை வெளிப்படும் இடமும், முனிவர்களும் சித்தர்களும் வசிக்கும் புனிதமான இடமுமான இமயச் சாரலில் ஒரு வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.(3) மரங்கள் மற்றும் பல்வேறு வகைக் கொடிகளால் அடர்ந்த அந்தப் பகுதியில் கந்தர்வர்களும், அப்சரஸ்களும் நிறைந்திருந்தனர். முனிவர் கூட்டங்களால் சூழப்பட்டவனும், அறவோரில் முதன்மையானவனும், உயிரினங்களை உண்டாகச் செய்பவனுமான தக்ஷனிடம் மரியாதையுடன் கைகூப்பியவாறு பூலோகவாசிகளும், ஆகாயவாசிகளும், சொர்க்கவாசிகளும் ஒன்றாகக் காத்திருந்தனர்.(4,5) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள், ஹாஹா, ஹுஹு என்ற பெயரைக் கொண்ட இரு கந்தர்வர்கள், தும்புரு, நாரதர்,(6) விஸ்வாவசு, விஸ்வசேனன், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சாத்தியர்கள், மருத்துகள்,(7) ஆகியோர் அனைவரும் வேள்வியில் பங்கெடுக்க இந்திரனுடன் அங்கே வந்தனர். வெப்பத்தைப் பருகுபவர்கள், சோமத்தைப் பருகுபவர்கள், புகையைப் பருகுபவர்கள், ஆஜ்யத்தைப் பருகுபவர்கள்,(8) முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோரும் பிராமணர்களுடன் அங்கே வந்தனர். இவர்களும், ஜராயுஜம், அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் எனும் நான்கு வகை உயிரினங்களும் அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டன. மதிப்புடன் அழைக்கப்பட்ட தேவர்களும் தங்கள் துணைகளுடன் அங்கே தெய்வீகத் தேர்ஃகளில் வந்திருந்து சுடர்மிக்க நெருப்புகளைப் போல ஒளிர்ந்தபடியே அமர்ந்திருந்தனர்.(9,10)

அவர்களைக் கண்ட முனிவர் ததீசி துயராலும், கோபத்தாலும் நிறைந்து, “இந்த வேள்வியில் ருத்திரன் துதிக்கப்படாததால், இஃது ஒரு வேள்வியுமல்ல, தகுதியைத் தரும் அறச்சடங்கும் அல்ல.(11) உங்களை நீங்களே மரணத்திற்கும், கட்டுகளுக்கும் நிச்சயம் வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள். ஐயோ, காலத்தின் போக்கு எவ்வாறு இப்படி அமைந்தது? பிழையால் திகைக்கும் நீங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும் அழிவைக் காணவில்லை. இந்தப் பெருவேள்வியின் போக்கில் உங்கள் வாயிலில் ஒரு பயங்கரப் பேரிடர் நிற்கிறது. அதை நீங்கள் காணவில்லை” என்றார்.(12)

இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெரும் யோகி {ததீசி}, (யோக) தியானத்தின் கண்களைக் கொண்டு எதிர்காலத்தைக் கண்டார். அவர் மஹாதேவனையும்ம், சிறந்த வரங்களை அளிப்பவளான அவனது தெய்வீக மனைவியையும்,(13), அந்தத் தேவிக்கு அருகில் உயர் ஆன்ம நாரதரையும் (கைலாச மலைச் சிகரத்தில் அர்ந்திருப்பதையும்) கண்டார். யோகத்தை அறிந்தவரான ததீசி நடக்கப் போவதை உறுதி செய்து கொண்டு உயர்வான நிறைவை அடைந்தார்.(14) தேவர்கள் அனைவரும், அங்கே வந்திருந்த பிறரும், அனைத்து உயிரினங்களின் தலைவனை அழைக்கத் தவறுவதில் ஒரே மனமாய் இருந்தனர்.

ததீசி மட்டுமே, அந்த இடத்தை விட்டு அகல விரும்பி,(15) “எவன் வழிபடப்படக் கூடாதோ அவனை வழிபட்டு, வழிபட வேண்டியவனை வழிபட மறுப்பதன் மூலம் ஒரு மனிதன் கொலை செய்த பாவத்தை எப்போதும் பெற்றிருப்பான்.(16) நான் ஒருபோதும் பொய் பேசியவனில்லை, ஒரு பொய்யையும் நான் ஒரு போதும் பேச மாட்டேன். இங்கே தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு மத்தியில் நான் உண்மையைச் சொல்கிறேன்.17) அண்டத்தைப் படைத்தவனும், அனைவரின் தலைவனும், பலமிக்கக் குருவும், வேள்விக் காணிக்கைகளை ஏற்பவனுமான அனைத்துயிரினங்களின் பாதுகாவலன் விரைவில் இந்த வேள்விக்கு வருவான், நீங்கள் அனைவரும் அவனைக் காண்பீர்கள்” என்றார்.(18)

தக்ஷன், “சூலபாணிகளாகவும், தலையில் சடாமுடி தரித்தவர்களாகவும் பல ருத்திரர்களை நாம் கொண்டிருக்கிறோம். அவர்கள் எண்ணிக்கையில் பதினொருவராக இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் நான் அறிவேன், ஆனால் இந்த (புதிய ருத்திரனான) மஹேஸ்வரனை நான் அறியவில்லை” என்றான்.(19)

ததீசி, “மஹேஸ்வரனை அழைக்கக்கூடாது என்பது இங்குள்ளவர் அனைவரின் ஆலோசனையாகத் தெரிகிறது. எனினும், அவனை விட மேன்மையாகச் சொல்லக் கூடிய எந்தத் தேவனையும் நான் காணவில்லை. முன்மொழியப்பட்டிருக்கும் இந்தத் தக்ஷனின் வேள்வி நிச்சயம் அழிவடையப் போகிறது என நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.(20)

தக்ஷன், “இங்கே இந்தத் தங்கக் கலசத்தில், மந்திரங்களாலும், (சடங்குளின்) விதிப்படியும் புனிதமாக்கப்பட்ட வேள்விக் காணிக்கையானது வேள்விகள் அனைத்தின் தலைவனுக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. நான் இந்தக் காணிக்கையை, ஒப்பீட்டைக் கடந்து விஷ்ணுவுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அவனே பலமிக்கவனும், அனைவரின் குருவுமாவான். அவனுக்காகவே வேள்விகள் செய்யப்படுகின்றன” என்றான்”.(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதேவேளையில் தன் தலைவனுடன் அமர்ந்திருந்த உமாதேவி இந்த வார்த்தைகளைச் சொன்னாள். “வேள்விக் காணிக்கைகளில் பாதியையோ, மூன்றில் ஒரு பகுதி பங்கையோ சிறப்புமிக்க என் கணவர் பெறுவதற்கு நான் என்ன கொடைகளைக் கொடுக்க வேண்டும்? என்ன நோன்புகளை இருக்க வேண்டும், என்ன தவங்களைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டாள்.(22)

துயரால் கலக்கமடைந்து திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் மனைவியிடம் சிறப்புமிக்க அந்த மஹாதேவன் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன், “ஓ! தேவி, நீ என்னை அறியவில்லை. ஓ! மென்மையான அங்கங்களையும், இடையையும் கொண்டவளே, வேள்விகளின் தலைவனிடம் பேச வேண்டிய சரியான வார்த்தைகளை நீ அறியவில்லை.(23) ஓ! நீண்ட கண்களை உடையவளே, தியானமற்ற பாவிகளால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். உன் மாயா சக்தியால்தான் இந்திரனின் தலைமையிலான தேவர்களும், மூன்று உலகங்கள் அனைத்தும் திகைப்படைகின்றன[1].(24) வேள்விகளில் ஓதுவார்கள் என்னையே துதிக்கிறார்கள். சாமங்கள் பாடுபவர்கள் தங்கள் ரதந்தரங்களில் என்னையே பாடுகிறார்கள். வேதங்களை அறிந்த பிராமணர்கள் தங்கள் வேள்விகளை எனக்காகவே செய்கிறார்கள். மேலும், அதர்யுக்கள், வேள்விக் காணிக்கைகளின் பங்குகளை {ஹவிர்ப்பாகத்தை} எனக்கே அர்ப்பணிக்கிறார்கள்” என்றான்.(25){உமா} தேவி, “சாதாரணத் திறன் கொண்டவர்கள் கூட, தங்கள் மனைவியரின் முன்னிலையில் தங்களையே மெச்சிக் கொண்டு, தற்பெருமையில் ஈடுபடுவார்கள். இதில் எந்த ஐயமும் இல்லை” என்றாள்.(26)

புனிதமானவன் {சிவன்}, “ஓ! தேவர்கள் அனைவரின் ராணியே {தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியே}, நிச்சயமாக என்னை நானே மெச்சிக் கொள்ளவில்லை. ஓ! கொடியிடையாளே, நான் செய்யப் போவதை இப்போது பார். ஓ! அழகிய நிறம் படைத்தவளே, ஓ! என் அழகிய மனைவியே, (உனக்கு நிறைவைத் தராத) இந்த வேள்விக்காக (இந்த வேள்வியை அழிப்பதற்காக) நான் உண்டாக்கப்போகும் ஒருவனைக் காண்பாயாக” என்றான்.(27)

உயிரினும் அன்புக்குரிய தன் மனைவி உமையிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன பலமிக்க மஹாதேவன், காண்போருக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தச் செய்யும் ஒரு பயங்கரப் பூதத்தைத் தன் வாயில் இருந்து உண்டாக்கினான். அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கத் தழல்களுடன் அவனைக் காண இன்னும் பயங்கரமாக இருந்தது. அவனது கரங்கள் எண்ணிக்கையில் பலவாக இருந்தன, அவை ஒவ்வொன்றிலும் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தும் ஓர் ஆயுதமும் இருந்தது.(28)

அவ்வாறு உண்டாக்கப்பட்ட அந்தப் பூதம், அந்தப் பெருந்தேவனின் முன்பு கூப்பிய கரங்களுடன் நின்று, “நான் நிறைவேற்ற வேண்டிய கட்டளைகள் என்ன?” என்று கேட்டது. மஹேஸ்வரன், “சென்று, தக்ஷனின் வேள்வியை அழிப்பாயாக” என்றான்.(29)

இவ்வாறு அணையிடப்பட்டதும், சிங்கத்தின் ஆற்றலைக் கொண்டதும், மஹாதேவனின் வாயில் இருந்து வெளிவத்துமான அந்தப் பூதம், தன் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தாமல், வேறு எவரின் துணையும் இல்லாமல் உமையின் கோபத்தைத் தணிக்கத் தக்ஷனின் வேள்வியை அழிக்க விரும்பியது.(30) கோபத்தால் தூண்டப்பட்டவளான மஹேஸ்வரன் மனைவியும், மஹாகாளி என்று பெயரில் அறியப்பட்ட ஒரு பயங்கர வடிவத்தைத் தானே ஏற்று, (தனக்காக அந்த வேள்வியை அழிக்கத் தன் தலைவனைத் தூண்டியது அவளே என்பதால்) தனது அழிக்கும் செயலைத் தானே தன் கண்களால் காண்பதற்காக, மஹாதேவனின் வாயிலிருந்து வெளிப்பட்ட அந்தப் பூதத்திற்குத் துணையாகச் சென்றாள். அந்த வலிமைமிக்கப் பூதம், மஹாதேவனிடம் தலைவணங்கி அனுமதிபெற்ற பிறகு புறப்பட்டது.(31) சக்தியிலும், பலத்திலும், வடிவத்திலும் அவன் {அந்தப் பூதம்}, தன்னைப் படைத்த மஹேஸ்வரனுக்கு ஒப்பாக இருந்தான். உண்மையில் அவன் (மஹாதேவனின்) கோபம் வாழும் உடலாக இருந்தான்.(32)

அளவிலா வலிமையும், சக்தியும், அளவிலா துணிவும், ஆற்றலும் கொண்ட அவன், தேவியின் கோபத்தைப் போக்குபவனான வீரபத்ரன் என்ற பெயரால் அழைக்கப்படலானான். அப்போது அவன், தன் உடலின் மயிர்க்கால்களில் இருந்து ரௌம்மியர்கள் என்ற பெயரில் அறியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணங்களைப் படைத்தான்.(33) பயங்கர சக்தியும், ஆற்றலும் கொண்டவையும், அக்காரியத்தில் ருத்திரனுக்கு ஒப்பானவையும், கடுமை நிறைந்தவையுமான அந்தக் கணக்கூட்டம், தக்ஷனின் வேள்வியை அழிக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு இடியின் விசையுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றது. பயங்கரம் நிறைந்தவையும், பெரும் வடிவங்களையும் கொண்ட அவை, எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன.(34) அவை தங்கள் குழப்பமான கதறல் மற்றும் அலறல்களால் வானத்தை நிறைத்தன. அவ்வொலி சொர்க்கவாசிகளை அச்சத்தில் நிறைத்தது.(35)

மலைகள் பிளந்து விழுந்தன, பூமி நடுங்கியது. சுழற்காற்றுகள் வீசத்தொடங்கியது. பெருங்கடல் பொங்கியது.(36) தூண்டப்படும் நெருப்புகள் சுடர்விட மறுத்தன. சூரியன் மங்கினான். கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன் ஆகியவை ஒளிரவில்லை.(37) முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் நிறம் மங்கினர். அண்டந்தழுவிய இருள் வானத்திலும் பூமியிலும் பரவியது. அவமதிக்கப்பட்ட ருத்திரர்கள் அனைத்திற்கும் தீமூட்டத் தொடங்கினர்.(38) பயங்கர வடிவிலான அவர்களில் சிலர் அடிக்கவும், தாக்கவும் தொடங்கினர். சிலர் கலங்கடிக்கவும், பிறரை நசுக்கவும் தொடங்கினர்.(39) காற்று அல்லது மனோவேகத்தைக் கொண்ட சிலர், நெருக்கத்திலும், தொலைவிலும் விரையத் தொடங்கினர். சிலர் வேள்விப்பாத்திரங்களையும், தெய்வீக ஆபரணங்களையும் நொறுக்கத் தொடங்கினர். ஆகாயத்தில் மினுங்கும் நட்சத்திரங்களைப் போலத் துண்டுகள், தரையில் சிதறிக் கிடந்தன.(40)

சிறந்த பண்டங்கள், பானக்குடுவைகள் மற்றும் உணவுக் குவியல்கள் மலைகளைப் போலத் தெரிந்தன. தெளிந்து நெய்யையும், பாயசத்தையும் சகதியாகவும், கட்டித் தயிரை நீராகவும், சர்க்கரைக் கட்டிகளை மணலாகவும் கொண்ட பாலாறுகள் அனைத்துப் பக்கங்களிலும் ஓடின. அந்த ஆறுகள் அறுசுவைகளைக் கொண்டவையாக இருந்தன. பாகாலான மிக அழகிய தடாகங்களும் அவற்றில் இருந்தன.(41,42) பல்வேறு சிறந்த வகைகளிலான இறைச்சி, பல்வேறு வகையான உணவுகள், பல அற்புத வகைகளிலான பானங்கள், நக்கவும், உறிஞ்சவும் தக்க பல்வேறு வகைகளிலான உணவுகள் ஆகியவற்றைப்(43) பல்வேறு வாய்களைக் கொண்ட அந்தக் கணங்களின் படை உண்ணத் தொடங்கியது. பிறகு அவை, அந்தப் பல்வேறு வகை உணவுகளை வீசவும், சிதறவும் செய்தன. ருத்திரனுடைய கோபத்தின் விளைவால் அந்தப் பெரும் பூதங்கள் ஒவ்வொன்றும் அனைத்தையும் அழிக்கும் யுக நெரிப்பைப் போலத் தெரிந்தன.(44) தெய்வீகத் துருப்புகளைக் கலங்கடித்த அவை, அவர்களை அச்சத்தால் நடுங்கச் செய்து, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடச் செய்தன. கடுமைநிறைந்த அந்தக் கணங்கள், ஒன்றோடொன்று விளையாடிக் கொண்டு, தெய்வீகக் காரிகைகளைப் பிடித்துத் தள்ளவும், வீசவும் செய்தன.(45)

ருத்திரனின் கோபத்தால் தூண்டப்பட்டுக் கடுஞ்செயல்களைச் செய்த அந்தக் கணங்கள், தேவர்கள் அனைவராலும் பெருங்கவனத்துடன் பாதுகாக்கப்பட்ட அந்த வேள்வியை மிக விரைவில் எரித்தன.(46) ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தால் பீடிக்கச் செய்த அவற்றின் முழக்கங்கள் மிக உரத்தவையாக இருந்தன. அவை வேள்வித் தலையைக் கொய்து முழக்கமிட்டபடியே மகிழ்ந்தன.(47) பிறகு, பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், உயிர்களின் மூதாதையான தக்ஷனும் மரியாதையுடன் அந்த வலிமைமிக்கப் பூதத்திடம் தங்கள் கரங்களைக் கூப்பி, “நீ யார் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர்.(48)

அதற்கு வீரபத்ரன், “நான் ருத்திரனுமல்லேன், அவனது மனைவியான உமாதேவியும் அல்லேன். (இந்த வேள்வியில் அளிக்கப்படும்) கூலியைப் பெறுவதற்காகவும் நான் இங்கே வரவில்லை. உமை கோபமடைந்த செய்தியை அறிந்து, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவான பலமிக்கத் தலைவன் {சிவன்} கோப வசமடைந்தான்.(49) பிராமணர்களில் முதன்மையானவர்களைக் காண நான் இங்கே வரவில்லை. ஆவலால் தூண்டப்பட்டும் நான் இங்கே வரவில்லை. நான் உங்களுடைய இந்த வேள்வியை அழிக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவீராக.(50) வீரபத்ரன் என்ற பெயரால் அறியப்படும் நான், ருத்திரனின் கோபத்தில் இருந்து எழுந்தவனாவேன். பத்திரகாளி என்று அழைக்கப்படும் (என் தோழியான) இந்த மங்கை, தேவியின் கோபத்தில் இருந்து உதித்தவளாவாள். தேவர்களின் தேவனால் அனுப்பப்பட்டே நாங்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறோம்.(51) ஓ! பிராமணர்களில் முதன்மையானவர்களே, தேவர்களின் தலைவனான உமையின் கணவனிடம் பாதுகாப்பை நாடுவீராக. வேறு எந்தத் தேவனிடம் இருந்தும் வரங்களைப் பெறுவதைவிட அந்த முதன்மையான தேவனின் கோபத்தைத் தூண்டுவதைத் தவிர்ப்பதே கூடத் தகுந்ததாகும்” என்றான் {வீரபத்ரன்}.(52)

வீரபத்ரனின் வார்த்தைகளைக் கேட்டவனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவனுமான தக்ஷன், மஹேஸ்வரனை வணங்கி, அவனை நிறைவு செய்வதற்காகப் பின்வரும் ஸ்லோகத்தைச் சொன்னான்.(53) {தக்ஷன்} “பிரகாசமானவனும், நித்தியமானவனும், நிலையானவனும், அழிவற்றவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், அண்டமனைத்தின் தலைவனுமான ஈசானின் பாதங்களின் நான் வீழ்கிறேன்” {என்றான்}[2].(54)இவ்வாறு புகழப்பட்ட பெருந்தேவனான அந்த மஹாதேவன், பிராணன் மற்றும் அபானன் (ஐந்து உயிர் மூச்சுகளில் முதன்மையான இரண்டு) ஆகிய இரண்டையும் நிறுத்தி, தன் வாயைச் சரியாக மூடி,(60) அனைத்துப் புறங்களிலும் (நலம் பயக்கும்) தன் பார்வையைச் செலுத்தி, அங்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பல கண்களைக் கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், தேவர்கள் அனைவரின் தேவர்களுக்கே தலைவனுமான அவன், வேள்வி நெருப்புள்ள குளியில் இருந்து திடீரென எழுந்தான்.(61) ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், மற்றொரு சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தவனுமான அந்தப் பெருந்தேவன், (தக்ஷனைக் கண்டு) மென்மையாகச் சிரித்து, அவனிடம், “ஓ பிராமணா, நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(62)

சரியாக அந்த நேரத்தில், தேவர்கள் அனைவரின் குருவானவர் {பிருஹஸ்பதி}, மோக்ஷ பகுதிகள் அடங்கிய வேத ஸ்லோகங்களைக் கொண்டு மஹாதேவனைத் துதித்தார். அப்போது அனைத்து உயிரினங்களின் மூதாதையான தக்ஷன், அதீதக் கலக்கமடைந்தும், அச்சத்தாலும், பீதியாலும் நிறைந்து, மரியாதையுடன் தன் கரங்களைக் குவித்து, கண்ணீரால் குளித்த கண்கள் மற்றும் முகத்துடன் அந்தப் பெருந்தேவனிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(63)

தக்ஷன், “பெருந்தேவன் என்னிடம் மனம் நிறைந்திருந்தால், அனைத்துயிரினங்களின் பெருந்தலைவன் எனக்கு வரமருளும் மனநிலையில் இருந்தால்,(64) பெருங்கவனத்துடன் நீண்ட வருட காலங்கள் சேகரிக்கப்பட்டவையும், இப்போது எரிக்கப்பட்டு, உண்ணப்பட்டு, பருகப்பட்டு, விழுங்கப்பட்டு, அழிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, சீர்குலைக்கப்பட்டவையுமான இந்த என் பொருட்கள் அனைத்தும்,(65) ஒன்றுக்குமாகாமால் போக வேண்டாம் {வீணாக வேண்டாம்}. இந்தப் பொருட்கள் எனக்குப் பயன்பட வேண்டும். இதுவே நான் வேண்டிக் கேட்கும் வரமாகும்” என்று கேட்டான்.(66)

பகனின் கண்களைப் பிடுங்கியவனான சிறப்புமிக்க ஹரன் அவனிடம் {தக்ஷனிடம்}, “நீ கேட்பது போலவே ஆகட்டும்” என்றான். அனைத்து உயிரினங்கள்ளின் சிறப்புமிக்க மூதாதையும், அறத்தின் பாதுகாவலனுமான அந்த முக்கண் தேவனால் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(67) பவனிடம் இருந்து அந்த வரத்தைப் பெற்ற தக்ஷன், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவனின் முன்பு முழங்காலில் விழுந்து, அவனது ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்தான்” {என்றார் வைசம்பாயனர்}[3].(68)

சிவசஹஸ்ரநாமாவளி! – சாந்திபர்வம் பகுதி – 285-சிவபெருமானின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்த தக்ஷன்; தக்ஷனுக்கு வரமளித்த சிவன்; பாசுபத விரதம் குறித்துச் சொன்ன சிவன்; சிவசஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் உண்டாகும் பயனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்}, “யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, உயிரினங்களின் மூதாதையான தக்ஷன் பெருந்தெய்வத்தை {மஹாதேவனைத்துதித்த அந்தப் பெயர்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, மதிப்புடன் கூடிய ஆவல் என்னை அவற்றைக் கேட்கத் தூண்டுகிறது” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இயல்புக்கு மீறிய செயல்களைச் செய்பவனும், இரகசிய நோன்புகளையுடையவனுமான அந்தத் தேவதேவனின் இரகசியமான மற்றும் வெளிப்படையான பெயர்களை இப்போது கேட்பாயாக.(2)

தக்ஷன், ஓ! தேவதேவர்கள் அனைவருக்கும் தலைவா {ஈஸ்வரா}, அசுரர்களின் படைகளை அழிப்பவனை நான் வணங்குகிறேன். தேவர் தலைவனின் பலத்தை முடக்குபவன் நீயே. தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படுபவன் நீயே.(3) ஆயிரங்கண் கொண்டவன் நீயே, கடுமை நிறைந்த கண் கொண்டவன் நீயே, முக்கண்ணன் நீயே. யக்ஷ ஆட்சியாளனின் நண்பன் நீயே. அனைத்து இடங்களிலும், அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் கரங்களையும் கால்களையும் கொண்டவன் நீயே. அனைத்துப் புறங்களிலும் திரும்பும் கண்களும், தலையும், வாயும் கொண்டவன் நீயே.(4) அண்டத்தில் எங்கும் காதுகளைக் கொண்டவன் நீயே, ஓ! தலைவா, எங்கும் இருப்பவன் நீயே. கணை போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே, பெரிய காதுகளைக் கொண்டவன் நீயே, குடம் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் கொள்கலன் நீயே.(5) யானை, அல்லது காளை, அல்லது விரிந்த உள்ளங்கையைப் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. உன்னை வணங்குகிறேன். நூறு வயிறுகளைக் கொண்டவனே, நூறு மயிர்ச்சுழிகளைக் கொண்டவனே, நூறு நாவுகளைக் கொண்டவனே. நான் உன்னை வணங்குகிறேன்.(6)

காயத்ரியை பாடுபவர்கள், உன் பெருமைகளையே துதித்தே அந்தக் காயத்ரியைப் பாடுகின்றனர், சூரிய வழிபாட்டாளர்கள், சூரியனைத் துதிப்பதில் உன்னையே துதிக்கின்றனர். பிரம்மன் என்றும், இந்திரன் என்றும், (அளவற்ற) ஆகாயம் {ஊர்த்தவன்} என்றும் முனிவர்கள் உன்னையே கருதுகின்றனர்.(7) ஓ! வலிமைமிக்க வடிவம் கொண்டவனே, பெருங்கடலும் வானும் உன் இரு வடிவங்களாகும். கொட்டிலுக்குள் உள்ள பசுவைப் போல அனைத்துத் தேவர்களும் உன் வடிவத்திலேயே வசிக்கின்றனர்.(8) சோமன், அக்னி, நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, ஆதித்தியன், விஷ்ணு, பிரம்மன், பிருஹஸ்பதி ஆகியோரை நான் உன் உடலிலேயே காண்கிறேன்.(9) ஓ சிறப்புமிக்கவனே, காரணனும், விளைவும் {காரியமும்}, செயல்பாடும் {ப்ரிகையை}, உண்மை மற்றும் உண்மையற்ற அனைத்திற்கான கருவியும் நீயே, படைப்பும், அழிவும் நீயே.(10)

பவன் என்றும், சர்வன் என்றும் ருத்திரன் {பாவத்தை விலக்குபவன்} என்றும் அழைக்கப்படும் உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவனான {வரதனே} உன்னை நான் வணங்குகிறேன்.(11) அனைத்து உயிரினங்களின் தலைவனான உன்னை வணங்குகிறேன். அந்தகனைக் கொல்பவனான உன்னை வணங்குகிறேன்.(12) மூன்று சடை, மூன்று தலை ஆகியவற்றைக் கொண்டு, சிறந்த திரிசூலத்தைத் தரித்து, மூன்று கண்களைக் கொண்டவன் நீயே, எனவே, திரயம்பகம் என்றும் திரிநேத்திரன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே. மூன்று நகரத்தை {திரிபுரத்தை} அழித்த உன்னை வணங்குகிறேன்.(13) சண்டன் {குரூர வடிவத்தக் கொண்டன்} என்றும் குண்டன் {சட்டி போன்றவன்} என்றும் அழைக்கப்படுவனும், (அண்ட) முட்டையாய் இருப்பவனும், (அண்ட) முட்டையைச் சுமப்பவனும், தவசியின் தண்டத்தைத் தரித்தவனும், எங்கும் காதுகளைக் கொண்டவனும், தந்திமுண்டன் என்றழைக்கப்படுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(14) மேல்நோக்கிய கோரப் பற்களும், தலைமயிரும் கொண்டவனும், களங்கமற்று வெண்மையாயிருப்பவனும் {சுக்லனும்}, அண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருப்பவனும் {அவத்தன்}, {ரஜோ குணத்தால்} சிவப்பானவனும் {விலோஹிதனும்}, பழுப்பானவும் {தூம்ரனும்}, நீலத் தொண்டை கொண்டவனுமான {நீலகண்டனுமான} உன்னை வணங்குகிறேன்.(15)

ஒப்பிலாத பயங்கர வடிவம் கொண்டவனே {விரூபனே}, மிக மங்கலமானவனே {சிவனே} உன்னை நான் வணங்குகிறேன். சூரியனே, கழுத்தில் சூரியர்களின் மாலை தரித்தவனே, சூரியச் சின்னம் பொறித்த கொடிமரங்களையும், கொடிகளைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்.(16) பூத கணங்களின் தலைவனே, காளையின் கழுத்தைக் கொண்டவனே, வில்லைத் தரித்தவனே {தந்வியே}, எதிரிகள் அனைவரையும் நொறுக்குபவனே, தண்டனையின் வடிவமே {தண்டனே}, மரவுரியாடை தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்.(17) வயிற்றில் தங்கம் கொண்டவனே, தங்கக் கவசம் பூண்டவனே, தங்க மகுடம் கொண்டவனே, உலகில் உள்ள தங்கமனைத்திற்கும் தலைவனே, உன்னை வணங்குகிறேன்.(18) துதிக்கப்படுபவனே {ஸ்துதனே}, துதிக்கத் தகுந்தவனே {ஸ்துத்பனே}, துதிக்கப்பட வேண்டியவனே {ஸ்தூயமானவனே}, அனைத்துப் பொருளும் ஆனவனே {சர்வனே}, அனைத்தையும் விழுங்குபவனே, அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(19) (வேள்விகளில்) ஹோத்ரியே {ஹோதாவே}, (வேள்விகளில்) ஓதப்படும் (வேத) மந்திரமே {மந்திரனே}, வெள்ளைக் கொடிகளையும், கொடிமரங்களையும் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். அண்டத்தின் தொப்புளாய் இருப்பவனே {நாபனே, நாப்யனே}, ஐம்பூதங்களின் வடிவில் காரணக் காரியமாய் இருப்பவனே, மறைப்பவை அனைத்தையும் மறைப்பவனே உன்னை வணங்குகிறேன்.(20)

கிருசநாசன் {மெல்லிய மூக்குடையவன்} என்றழைக்கப்படுபவனே, மெல்லிய அங்கங்களைக் கொண்டவனே, மெலிவானவனே {கிருசனே} உன்னை வணங்குகிறேன். எப்போதும் உற்சாகமாய் இருப்பவனே {ஸம்ஹ்ருஷ்ட விஹ்ருஷ்டனே}, குழப்பமான ஒலிகள் மற்றும் குரல்களின் உடல்வடிவமே {கிலகிலனே}, உன்னை வணங்குகிறேன்.(21) பூமியில் படர்ந்திருப்பவனே {சயமே}, ஏற்கனவே படர்ந்து விரிந்திருப்பவனே {சயிதனே}, செங்குத்தாக எழுந்து நிற்பவனே {உத்திதனே} உன்னை வணங்குகிறேன். நிலையானவனே {ஸ்திதனே}, ஓடுபவனே {தாவமே}, வழுக்கைத் தலை கொண்டவனே {முண்டனே}, தலையில் சடாமுடி தரித்தவனே {ஜடிலனே} உன்னை வணங்குகிறேன்.(22) ஆடல் விருப்பம் கொண்டவனே, காற்றால் நிறைந்த கன்னங்களைத் தட்டி வாயை உடுக்கையாக்குபவனே {முக வாத்தியம் வாசிப்பவனே} உன்னை வணங்குகிறேன்[1]. ஆறுகளில் மலரும் தாமரைகளை விரும்புபவனே, பாடுவதையும், இசைக்கருவிகளை இசைப்பதையும் விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(23) மூத்த பிறவியே {ஜ்யேஷ்டனே}, உயிரினங்கள் அனைத்தில் முதன்மையானவனே {ச்ரேஷ்டனே}, அசுரன் பலனைக் கொன்றவனே உன்னை வணங்குகிறேன். காலத்தின் உரிமையாளனே {காலனின் கடவுளே}, கல்பத்தின் வடிவமே {கல்யனே}; அனைத்து வகைச் சிறு மற்றும் பேரழிவுகளின் வடிவமே {க்ஷயனே, உபக்ஷயனே} உன்னை வணங்குகிறேன்.(24) பயங்கரமாகவும், பேரிகையொலிக்கு ஒப்பாகவும் சிரிப்பவனே, பயங்கர நோன்புகளை நோற்பவனே உன்னை வணங்குகிறேன். கடுமையானவனும், பத்துக் கரங்களைக் கொண்டவனுமான உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.(25)கைகளில் எலும்புகளை {மண்டையோட்டைத்} தரித்தவனே, ஈமச்சிதைகளின் சாம்பலை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். அச்சத்தை ஏற்படுத்துபவனே {விபீஷ்ணனே}, காண்பதற்குப் பயங்கரனே {பீஷ்மனே}, பயங்கர நோன்புகளையும், நடைமுறைகளையும் கொண்டவனே {பீமனே} உன்னை வணங்குகிறேன்.(26) விகார வாயை {முகத்தைக்} கொண்டவனே, கத்தி போன்ற நாக்கைக் கொண்டவனே, பெரிய பற்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சமைத்த மற்றும் பச்சை இறைச்சியை விரும்புபவனே, சுரைக்காய் வீணையில் மிகுந்த விருப்பமுள்ளவனே உன்னை வணங்குகிறேன்[2].(27) மழையைப் பொழியச் செய்பவனே {வ்ருஷனே}, அறம் விளைய உதவுபவனே {வ்ருஷ்யனே}, நந்தி வடிவனே {நந்திரூபனே}, அறத்தின் சுயமே உன்னை வணங்குகிறேன். காற்றையும், பிற சக்திகளையும் போல எப்போதும் நகர்பவனே {கடங்கடனே}, அனைத்துப் பொருட்களையும் கட்டுப்படுத்துபவனே {தண்டனே}, (காலமெனும் கொப்பரையில்) அனைத்து உயிரினங்களையும் சமைப்பதில் எப்போதும் ஈடுபடுபவனே {பசபசனே} உன்னை வணங்குகிறேன்.(28) அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனே, மேன்மையானவனே, வரங்களை அளிப்பவனே {வரதனே} உன்னை வணங்குகிறேன். சிறந்த மாலைகளையும், சிறந்த நறுமணப் பொருட்களையும், சிறந்த ஆடைகளையும் கொண்டவனே, சிறந்த உயிரினங்களுக்குச் சிறந்த வரங்களை அளிப்பவனே உன்னை வணங்குகிறேன்.(29) பற்றுள்ளவனே {ஆசையுள்ளவனே}, பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவனே {ஆசையற்றவனே}, தியான யோகத்தின் வடிவமே {பாவநனே}, அக்ஷங்களின் மாலைகளால் {ருத்ராக்ஷமாலைகளால்} அலங்கரிக்கப்பட்டவனே உன்னை வணங்குகிறேன். காரணத்தில் கலந்தவனே {ஸம்பந்நனே}, விளைவுகளில் விலகுபவனே {விபிந்நனே}, நிழலாகவும், ஒளியாகவும் இருப்பவனே {சாயனே, ஆத்பனரூபனே} உன்னை வணங்குகிறேன்.(30)இனிமையானவனே, பயங்கரமானவனே, மிகப் பயங்கரமானவனே உன்னை வணங்குகிறேன். மங்கலமானவனே {சிவனே}, அமைதியானவனே {சாந்தனே}, பேரமைதிமிக்கவனே உன்னை வணங்குகிறேன்.(31) ஒரு காலைக் கொண்டவனே, பல கண்களைக் கொண்டவனே, ஒரே தலை கொண்டவனே, கடுமையானவனே {ருத்ரனே}, அற்ப காணிக்கைகளில் நிறைவடைபவனே, ஒப்புரவை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(32) அண்டத்தின் கைவினைஞனே {பஞ்சாலனே}, அமைதிக் குணத்துடன் எப்போதும் கலந்தவனே உன்னை வணங்குகிறேன். பகைவரை அச்சுறுத்தும் மணியை {கண்டாமணியைக்} கொண்டவனே, மணியில் உண்டாகும் கிங்கிணி வடிவானவனே {கண்டாநாதரூபனே}, காதுகளால் உணர முடியாத ஒலியின் வடிவானவனே உன்னை வணங்குகிறேன்.(33) ஒன்றுசேர்ந்த ஆயிரம் மணியொலியைப் போன்றவனே, மணிமாலைகளை விரும்புபவனே, உயிர் மூச்சு உண்டாக்கும் ஒலியைப் போன்றவனே, மணங்கள் அனைத்தின் வடிவமே {கந்தனே}, கொதிக்கும் நீர்மங்களின் குழம்பிய ஒலியின் வடிவமே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(34) மூன்று ஹுங்களைக் கடந்தவனே, இரண்டு ஹுங்களை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். மிக அமைதியானவனே, மலையின் மரங்களுடைய நிழலையே வசிப்பிடமாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்[3].(35)உயிரினங்கள் அனைத்தின் இதயச் சதையை விரும்புபவனே, பாவங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவனே {தாரகரே}, வேள்விக் காணிக்கைகளின் வடிவமே {தரனே} உன்னை வணங்குகிறேன். வேள்வியின் வடிவமே {யஜ்ஞனே}, வேள்வி செய்பவனே {யஜியே}, வேள்வி நெய் ஊற்றப்படும் வாயுடைய பிராமணனே {ஹுதனே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட நெய் ஊற்றப்படும் நெருப்பே {ப்ரஹுதனே} உன்னை வணங்குகிறேன்[4].(36) (வேள்வியின்) ரித்விஜர்களின் வடிவமே {யஜ்ஞவாஹனே}, புலன்களைக் கட்டுக்குள் கொண்டவனே {தாந்தனே}, சத்வமே ஆனவனே {தப்யனே}, ரஜஸையும் கொண்டவனே {ஆத்மநனே} உன்னை வணங்குகிறேன். ஆற்றங்கரை வடிவானவனே {தடனே}, ஆறுகளே ஆனவனே {தட்யனே}, ஆறுகள் அனைத்தின் தலைவனே (பெருங்கடலே) {ஸமுத்திரமே} உன்னை வணங்குகிறேன்.(37) உணவை அளிப்பவனே {அந்நதனே}, உணவுகள் அனைத்தின் தலைவனே, உணவை உண்பவனுக்கு ஒப்பானவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரம் கரங்களைக் கொண்டவனே, ஆயிரம் கால்களைக் கொண்டவனே,(38) கரங்களில் ஆயிரம் திரிசூலங்களை உயர்த்திப் பிடிப்பவனே, ஆயிரம் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உதிக்கும் சூரியனின் வடிவானவனே, குழந்தையின் வடிவானவனே,(39) பிள்ளைகளின் வடிவில் உள்ள ஊழியர்கள் {நண்பர்கள்} அனைவரின் பாதுகாவலனே, பிள்ளைகளின் பொம்மை வடிவானவனே உன்னை வணங்குகிறேன். முதியவனே {வ்ருத்தனே}, பேராசைமிக்கவனே {லுப்தனே}, ஏற்கனவே கலக்கமடைந்தவனே {க்ஷுப்தனே}, கலக்கமடையப் போகிறவனே {க்ஷோபணனே} உன்னை வணங்குகிறேன்.(40)கங்கை அலைகளின் அடையாளம் கொண்ட சடையைக் கொண்டவனே, முஞ்ச {தர்ப்பைப்} புற்களுக்கு ஒப்பான சடைமயிர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். (நன்கறியப்பட்ட) ஆறு செயல்களில் நிறைவடைபவனே, மூன்று செயல்களைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனே உன்னை வணங்குகிறேன்[5].(41) {நான்கு} வாழ்வுமுறைகளுக்குரிய {ஆசிரமங்களுக்குரிய} கடமைகளை வகுத்தவனே உன்னை வணங்குகிறேன். ஒலிகளால் துதிக்கத்தகுந்தவனே {குஷ்யனே}, கவலை வடிவானவனே, ஆழ்ந்த குழப்பமான ஒலியின் வடிவானவனே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(42) வெண்மையும், பழுப்பும், கருப்பும், சிவப்புமெனக் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உயிர்மூச்சுகளை வென்றவனே, ஆயுதங்களின் வடிவானவனே {தண்டனே}, அனைத்துப் பொருட்களையும் பிளப்பவனே {ஸ்போடநனே}, மிக மெலிதானவனே {க்ருசனே} உன்னை வணங்குகிறேன்.(43) அறம், இன்பம், பொருள் மற்றும் விடுதலையை எப்போதும் சொல்பவனே உன்னை வணங்குகிறேன். சாங்கியனே, சாங்கியர்களில் முதன்மையானவனே, சாங்கிய யோகத்தை அறிமுகம் செய்தவனே உன்னை வணங்குகிறேன்.(44) (பயணங்களில்) தேருள்ளவனே, தேரில்லாதவனே உன்னை வணங்குகிறேன். நாற்சந்தி சாலைகளைத் தேராகக் கொண்டவனே, கருப்பு மானின் தோலை மேலாடையாக {உத்தரீயமாகக்} கொண்டவனே, பாம்பை புனித நூலாகக் கொண்டவனே {ஸர்ப்பயஜ்ஞோபவீதமுடையவனே} உன்னை வணங்குகிறேன்.(45)ஈசானனே {மிக விரும்பப்படுபவனே}, வஜ்ரம் போன்ற கடின உடல் கொண்டவனே, பச்சை {மஞ்சள்} சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். முக்கண்ணனே, அம்பிகையின் தலைவனே, புலப்படுபவனே {வ்யக்தனே}, புலப்படாதவனே {அவ்யக்தனே} உன்னை வணங்குகிறேன்.(46) ஆசையே {காமனே}, ஆசைகளைக் கொடுப்பவனே {காமதனே}, ஆசைகள் அனைத்தையும் கொல்பவனே {காமகநனே}, நிறைவு மற்றும் நிறைவின்மையைப் பாகுபடுத்துபவனே உன்னை வணங்குகிறேன். அனைத்துப் பொருளாக இருப்பவனே {ஸர்வனே}, அனைத்துப் பொருளையும் கொடுப்பவனே {ஸாவதனே}, அனைத்துப் பொருளையும் அழிப்பவனே {ஸாவகநனே} உன்னை வணங்குகிறேன். மாலை வானில் தோன்றும் வண்ணங்களாக {சிவப்பு வண்ணமாக} இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(47) வலிமையும், பலமும் ஆனவனே, வலிமைமிக்கக் கரங்களாக இருப்பவனே, வலிமைமிக்கவனே, பெரும் பிரகாசம் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். பெரும் மேகத் திரளைப் போலத் தெரிபவனே, நித்தியத்தன்மையின் வடிவமே உன்னை வணங்குகிறேன். நன்கு வளர்ந்த உடலைக் கொண்டவனே {மஹாகாலரூபியே}, மெலிந்த அங்கங்களைக் கொண்டவனே, தலையில் சடாமுடி தரித்தவனே, மரவுரியும், விலங்குத் தோலும் அணிபவனே உன்னை வணங்குகிறேன்.(48) சூரியனையோ, நெருப்பையோ போன்ற பிரகாசத்தையுடைய சடாமுடி கொண்டவனே, மரவுரியும், தோலும் ஆடையாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரஞ்சூரியப் பிரகாசம் கொண்டவனே, எப்போதும் தவங்களில் ஈடுபடுபவனே உன்னை வணங்குகிறேன்.(49) நோய்த்தூண்டல் உள்ளவனே {உந்மாதநனே / மயக்கமடையச் செய்பவனே}, நூற்றுக்கணக்கான அலைகளைக் கொண்ட கங்கை நீரால் நனைந்த சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சந்திரன், யுகங்கள் மற்றும் மேகங்களை மீண்டும் மீண்டும் சுழற்றுபவனே உன்னை வணங்குகிறேன்[6].(50)உணவே {அந்நமே}, உணவை உண்பவனே {அத்தா}, உணவைக் கொடுப்பவனே {போக்தா}, உணவை வளர்ப்பவனே {அந்நதனே}, உணவை உண்டாக்குபவனே உன்னை வணங்குகிறேன். உணவை சமைப்பவனே, சமைத்த உணவை உண்பவனே {பக்வபுக்}, காற்றும் நெருப்புமாக இருப்பவனே {பவனனே, அநலனே} உன்னை வணங்குகிறேன்.(51) ஓ! தேவதலைவர்கள் அனைவரின் தலைவனே {தேவேசனே}, பாலூட்டிகள் {ஜராயுஜங்கள்}, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை {அண்டஜங்கள்}, கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜங்கள்}, தாவரங்கள் {உத்பிஜ்ஜங்கள்} ஆகிய நான்கு வகை உயிரினங்களாக இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(52) அசைபவை மற்றும் அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தைப் படைத்தவனே, அவற்றை அழிப்பவனே உன்னை வணங்குகிறேன். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனே, பிரம்மத்தை அறிந்தவர்கள் உன்னையே பிரம்மமாகக் கருதுகின்றனர்.(53) பிரம்மத்தைச் சொல்பவர்கள் உன்னையே மனத்தின் உயர்ந்த தோற்றமாகவும், ஆகாயம், காற்று மற்றும் ஒளி உறங்கும் புகலிடமாகவும் சொல்கின்றனர். ரிக்குகள், சாமங்கள் மற்றும் ஓம் எனும் அசை நீயே.(54) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, சாமங்களைப் பாடி பிரம்மத்தைச் சொல்பவர்கள், ஹாயி-ஹாயி, ஹுவா-ஹாயி, ஹுவா-ஹோயி என்ற அசைகளைச் சொல்லும்போது உன்னையே தொடர்ந்து பாடுகின்றனர்[7].(55)யஜுஸ்கள், ரிக்குகள் மற்றும் வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் காணிக்கைகளால் ஆனவன் நீயே. வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் உள்ள துதிகளில் துதிக்கப்படுபவன் நீயே.[8](56) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், கலப்பு வர்ணங்களும் நீயே. வானத்தில் தோன்றும் மேகத்திரள்கள் நீயே; மின்னல் நீயே; இடிமுழக்கம் நீயே.(57) வருடங்கள் நீயே, பருவ காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பிறைநாட்களும் நீயே. யுகம் நீயே, கண் இமைப்பால் பிரதிபலிக்கப்படும் நேரம் {நிமிடம்} நீயே, காஷ்டை நீயே, நட்சத்திரங்கள் நீயே, கோள்கள் நீயே, கலையும் நீயே.(58) மரங்கள் அனைத்தின் உச்சி நீயே, மலைகள் அனைத்தின் சிகரங்கள் நீயே. இழிந்த விலங்குகளில் புலி நீயே, பறவைகளில் கருடன் நீயே, பாம்புகளில் அனந்தன் நீயே.(59) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, ஆயுதம் ஏவும் கருவிகளில் வில் நீயே. ஆயுதங்களில் வஜ்ரம் நீயே, நோன்புகளில் வாய்மை நீயே.(60)வெறுப்பும் நீயே, விருப்பும் நீயே; பற்றும் நீயே, (தீர்மான) மயக்கமும் நீயே; மன்னிக்கும் தன்மை நீயே, மன்னிக்கா தன்மையும் நீயே. முயற்சி நீயே, பொறுமை நீயே, பேராசை நீயே, காமம் நீயே, கோபம் நீயே; வெற்றி நீயே, தோல்வியும் நீயே.(61) கதாயுதம் தரித்தவன் நீயே, கரங்களில் கட்டாங்கமும், ஜர்ஜ்ஜரமும் தரித்தவன் நீயே. வெட்டுபவன், துளைப்பவன், அடிப்பவன் நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும்) வழிகாட்டுபவனும், இன்ப துன்பங்களைக் கொடுப்பவனும் நீயே.(62) {யமம் ஐந்து, நியமம் ஐந்து என்ற} பத்து ஒழுக்கங்களால் குறிப்பிடப்படும் அறம் நீயே; அனைத்து வகைச் செல்வம், அல்லது பொருள் நீயே; இன்பமும் நீயே. கங்கை நீயே, பெருங்கடல்கள் நீயே, ஆறுகள் நீயே, குளங்கள் {பல்வலங்கள் / குட்டைகள்} நீயே, தடாகங்கள் {ஸரஸ்கள் / ஏரிகள்} நீயே.(63) மெல்லிய கொடிகள் நீயே, அடர்த்தியான செடிகொடிகள் நீயே, அனைத்து வகைப் புற்களும் நீயே, உதிர்களின் மூலிகைகள் நீயே. இழிந்த விலங்குகள் நீயே, பறவைகள் நீயே. அனைத்துக் காரியங்கள் மற்றும் செயல்களின் தோற்றம் நீயே, கனிகளும், மலர்களும் விளையும் பருவகாலங்கள் நீயே.(64) வேதங்களின் தொடக்கம் நீயே, அவற்றின் முடிவும் நீயே; காயத்ரி நீயே, ஓம் எனும் அசை நீயே.(65)

பச்சையானவன் {ஹரிதம்} நீயே, சிவப்பானவன் {ரோஹிதம்} நீயே, நீலமானவன் {நீலம்} நீயே, கருப்பானவன் {கிருஷ்ணம்} நீயே, குருதி வண்ணம் {ரத்தம்} நீயே, சூரிய வண்ணம் {அருணம்} நீயே, அடர்பழுப்பானவன் {கத்ரு} நீயே, {கபிலம் / கரிக்குருவியின் நிறம் நீயே}, மென்பழுப்பவானவன் {கபோதம்} நீயே, அடர் நீலமானவன் {மேசகம் / மயில்தோகையின் நிறம்} நீயே[9].(66) நிறமற்றவன் நீயே, சிறந்த நிறம் நீயே, நிறங்களை உண்டாக்குபவன் நீயே, ஒப்பற்றவன் நீயே. தங்கப் பெயர் கொண்டவன் நீயே, தங்கத்தை விரும்புபவன் நீயே.(67) இந்திரன் நீயே, யமன் நீயே, வரமளிப்பவன் நீயே, செல்வத்தின் தலைவன் நீயே, அக்னி நீயே, கிரகணம் {ஒளி மறைப்பு} நீயே, சித்திரபானு என்றழைக்கப்படும் நெருப்பு நீயே, ராஹு நீயே, சூரியன் நீயே.(68) வேள்வி நெய் ஊற்றப்படும் நெருப்பு நீயே. நெய்யை ஊற்றுபவன் நீயே. நெய் ஊற்றி கௌரவிக்கப்படுபவன் நீயே, ஊற்றப்படும் நெய்யே ஆனவன் நீயே, அனைவரின் பலமிக்கத் தலைவன் நீயே. திரிசுபர்ணர்கள் என்றழைக்கப்படும் பிராமண வகையினர் நீயே; வேதங்கள் அனைத்தும் நீயே; யஜுஸ்களில் சதருத்ரீயம் என்றழைக்கப்படும் பகுதிகள் நீயே.(69) புனிதங்களில் புனிதன் நீயே, மங்கலமான அனைத்துப் பொருட்களிலும் மங்கலமானவன் நீயே. அசைவற்ற உடலில் அசைவு {ஹிண்டுகள்} நீயே. மனித வடிவில் வசிக்கும் சித் நீயே. குணங்களை அடைந்து, அழிவை அடையத்தக்கவனாகுபவனும் நீயே. ஜீவன் நீயே, குணங்கள் இல்லாதிருக்கையில் ஒருபோதும் அழிவில்லாதவன் நீயே. ஜீவனுடன் கூடிய உடலின் வடிவில் சிதைவுக்கும், மரணத்திற்கும் தகுந்தவனாக இருப்பினும் முழுமையானவன் நீயே.(70)உயிர்மூச்சு நீயே, சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, குற்றமில்லாதவன் நீயே. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள் நீயே. விழிதிறப்பும் {உந்மேஷமும்}, விழி அடைப்பும் {நிமேஷமும்} நீயே. தும்மலும் {க்ஷுதமும்}, கொட்டாவியும் {ஜ்ரும்பிதமும்} நீயே, எப்போதும் உள்நோக்கித் திரும்பிய சிவந்த கண்களைக் கொண்டவன் நீயே. பெரிய வாயும், வயிறும் படைத்தவன் நீயே.(72) ஊசிகளைப் போல உன் உடலில் மயிர் கொண்டவன் நீயே. பச்சையான தாடி கொண்டவன் நீயே {செம்பட்டையான மீசை கொண்டவன் நீயே}. மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவன் நீயே. வேகத்திலும் வேகமானவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையின் கோட்பாடுகளை அறிந்தவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையை விரும்புபவன் நீயே.(73) நீரில் உலவும் மீன் {மத்ஸ்யன்} நீயே, வலையில் சிக்கிய மீனும் {ஜலசரன்} நீயே. நிறைவானவன் நீயே, விளையாட்டை விரும்புபவன் நீயே, அனைத்து வகைச் சச்சரவுகளின் வடிவமாக இருப்பவன் நீயே. காலம் {கலி} நீயே, கெட்ட காலம் {துஷ்காலன்} நீயே, முதிரா காலம் {அகாலன்} நீயே, மிகைமுதிர்ந்த காலம் {அதிகாலன்} நீயே[10].(74) கொலை {மரணம் / மிருத்யு} நீயே, (கொல்லும்) கத்தி {க்ஷுரம்} நீயே, கொல்லப்படுபவனும் {க்ருத்யன்} நீயே. துணைவன் {பக்ஷன்} நீயே, எதிரி நீயே, துணைவர்களையும், எதிரிகளையும் அழிப்பவன் நீயே. மேகங்கள் தோன்றும் காலம் நீயே, பெரும்பற்கள் நீயே, சம்வர்த்தகமும், வலாஹமும் நீயே[11].(75)காந்தியின் வடிவில் புலப்படுபவன் {கண்டன்} நீயே. மாயையால் பீடிக்கப்பட்டதன் விளைவால் மறைந்திருப்பவன் {புலப்படாதவன் / அகண்டன்} நீயே. உயிரினங்களை அவற்றின் செயல்களின் கனிகளால் இணைப்பவன் {கடி} நீயே. கையில் மணியைக் கொண்டவன் {கண்டி} நீயே. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் (உன் பொம்மைகளாக வைத்துக் கொண்டு) விளையாடுபவன் {சருசேலி} நீயே. காரணங்கள் அனைத்தின் காரணம் {மிலீமிலி} நீயே. (பிரணவத்தின் வடிவிலான) பிரம்மம் நீயே, ஸ்வாஹா நீயே, தண்டதாரி {தண்டி} நீ, வழுக்கை {மொட்டைத்} தலையன் {முண்டன்} நீயே, சொற்கள், செயல்கள் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியவன் நீயே.(76) நான்கு யுகங்கள் நீயே, நான்கு வேதங்கள் நீயே, நான்கு (வேள்வி) நெருப்புகள் உற்பத்தியாகும் மூலம் நீயே. நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகள் அனைத்தையும் இயக்குபவன் நீயே. நான் வகைகளை {வர்ணங்களை} உண்டாக்குபவனும் நீயே.(77) பகடையில் எப்போதும் விருப்பம் கொண்டவன் நீயே. வஞ்சகன் {சூதாடி / தூர்த்தன்} நீயே. கணங்களாகப் பிரிந்திருக்கும் பூதங்களின் தலைவன் நீயே, அவர்களின் ஆட்சியாளனும் நீயே. சிவப்பு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, செவ்வாடைகளை உடுத்துபவன் நீயே. மலைச்சாரலில் உறங்குபவன் {கிரிசன்} நீயே, சிவப்பு வண்ணத்தை {காஷாயன்} விரும்புபவன் நீயே.(78) கலைஞன் {சில்பிகன்} நீயே; கலைஞர்களில் முதன்மையானவன் நீயே; கலைகள் அனைத்தின் தோற்றமும் நீயே. பகனின் கண்களைப் பிடுங்கியவன் நீயே; கடுமையானவன் நீயே, பூஷனின் பற்களைச் சிதைத்தவன் நீயே.(79) ஸ்வாஹா நீயே, ஸ்வதா நீயே, வஷட் நீயே, வணக்கத்தின் வடிவம் நீயே, வழிபாட்டாளர்கள் அனைவராலும் சொல்லப்படும் நமஸ் நமஸ் {நமோநமஹ} என்ற சொற்கள் நீயே. பிறர் அறியாத நோன்புகளையும், தவங்களையும் கொண்டவன் நீயே. பிரணவம் {தாரகன்} நீயே; நட்சத்திரக்கூட்டங்கள் மின்னிக் கொண்டிருக்கும் ஆகாயம் நீயே.(80)

தாத்ரி {தாதா / விஷ்ணு}, விதாத்ரி {விதாதா / நான்முகப் பிரம்மன்}, சந்தாத்ரி {சந்தாதா / அனைத்தையும் ஒன்றாகச் செய்பவன்}, விதாத்ரி {விதிகளை வடிவமைப்பவன் / மஹேஸ்வரன்}, உயர்ந்த காரணமான அனைத்துப் பொருட்களின் புகலிடமாகவும் {தாரணனாகவும்}, புகலிடங்கள் அனைத்தின் சார்பற்றவனாகவும் {அதரனாகவும்} இருப்பவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் {பிரம்மம்} நீயே, தவம் நீயே, வாய்மை நீயே, பிரம்மச்சரியத்தின் ஆன்மா நீயே, எளிமை {ஆர்ஜவம்} நீயே.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா {பூதாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தின் படைப்பாளன் {பூதக்ருத்} நீயே, முழு இருப்பு {பூதன்} நீயே, கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவை எழுந்த காரணன் நீயே. பூமி {பூ:} நீயே, ஆகாயம் {புவ:) நீயே, சொர்க்கம் {ஸ்வ:) நீயே. நித்தியமானவன் நீயே, தற்கட்டுப்பாடு கொண்டவன் {தாந்தா} நீயே, பெருந்தேவன் {மஹாதேவன்} நீயே.(82) தொடக்கம் {தீக்ஷிதன்} நீயே, தொடக்கமில்லாதவன் {அதீக்ஷிதன்} நீயே. மன்னிப்பவன் {க்ஷாந்தன்} நீயே, மன்னிக்காதவன் நீயே; புரட்சியாளர்கள் {அடங்காதவர்கள்} அனைவரையும் தண்டிப்பவன் நீயே. சந்திர மாதம் நீயே, யுகச்சக்கரம் (கல்பம்) நீயே, அழிவு {ஸம்வர்த்தன்} நீயே, படைப்பும் {ஸம்பரவர்த்தகன்} நீயே.(83) காமம் {காமன்} நீயே, உயிர் வித்து {பிந்து} நீயே, நுட்பமானவன் {அணு} நீயே, திரளானவன் {ஸ்தூலன்} நீயே, கர்ணிகார மலர்களாலான மாலைகளை விரும்புபவன் நீயே. நந்தி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே, பயங்கர முகத்தைக் கொண்டவன் நீயே, அழகிய முகம் கொண்டவன் {ஸுமுகன்} நீயே, கொடூர முகம் {துன்முகன்} கொண்டவன் நீயே, முகமற்றவன் {அமுகன்} நீயே.(84) நான்கு முகம் கொண்டவன் நீயே, பல முகங்களைக் கொண்டவன் நீயே, போரில் ஈடுபடும்போதும் நெருப்பின் முகம் {அக்நிமுகன்} கொண்டவன் நீயே. தங்க வயிற்றைக் கொண்டவன் (நாராயணன்) {ஹிரண்யகர்ப்பன்} நீயே, (உணவும், உடைமைகளும் அற்ற பூமியில் பற்று கொள்ளாத) பறவை {சகுநி} நீயே, (வலிமைமிக்கப் பாம்புகளின் தலைவன்) அனந்தன் நீயே, (பெரிதிலும் பெரிதான) விராட் நீயே.(85)

மறத்தை {அநீதியை} அழிப்பவன் நீயே, மஹாபார்ஸ்வன் என்றழைக்கப்படுபவன் நீயே, சண்டதாரன் நீயே, பூதகணங்களின் தலைவன் நீயே. பசுவைப் போன்ற இழிந்தவன் நீயே, பசுவின் பாதுகாவலன் நீயே, காளைகளின் தலைவனை {நந்தியை} உன் பணியாளாகக் கொண்டவன் நீயே.(86) மூவுலகங்களின் பாதுகாவல் நீயே, கோவிந்தன் நீயே, புலன்களை இயக்குபவன் நீயே, புலன்களால் புரிந்து கொள்ள முடியாதவன் நீயே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே, நிலையானவனே நீயே, அசைவற்றவன் {நிஷ்கம்பன்} நீயே, நடுங்காதவன் {கம்பன்} நீயே, நடுக்கத்தின் வடிவம் நீயே.(87) தடுக்கப்பட முடியாதவன் நீயே, நஞ்சுகள் அனைத்தையும் முறிப்பவன் நீயே, (போரில்) தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் நீயே, கடந்து செல்லப்பட முடியாதவன் நீயே, நடுங்கச்செய்ய முடியாதவன் நீயே, அளவிட முடியாதவன் நீயே, வெல்லப்பட முடியாதவன் நீயே, வெற்றி {ஜயன்} நீயே.(88) வேகம் {சசன்} நீயே, சந்திரன் நீயே, (அண்டத்தை அழிப்பவனான) யமன் நீயே, (செல்லவிடாமல்) குளிர், வெப்பம், பசி, பலவீனம் மற்றும் நோயை பொறுப்பவன் நீயே. மனத்துயர்கள் அனைத்தும் நீயே, உடல் நோய்கள் அனைத்தும் நீயே, அந்த நோய்களற்றவன் நீயே.(89) மானின் வடிவில் தப்பிச் செல்ல முயற்சித்த என் வேள்வியை அழித்தவன் நீயே. நோய்கள் அனைத்தின் தோற்றமும், விலக்கமும் நீயே. உயர்ந்த முகடு {சிகண்டி} நீயே. தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் நீயே. காட்டுத் தாமரைகளின் மத்தியில் வசிப்பவன் நீயே.(90)

தவசியின் தண்டத்தைத் தரித்தவன் நீயே. மூன்று வேதங்களை முக்கண்களாகக் கொண்டவன் நீயே. கடுமையான தண்டனைகளைக் கொடுப்பவன் நீயே. (அண்டம் உதித்தபோது தோன்றிய) முட்டையை அழிப்பவன் நீயே. நஞ்சு மற்றும் நெருப்பு ஆகிய இரண்டையும் பருகுபவன் நீயே, தெய்வங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. சோமம் பருகுபவன் நீயே, மருத்துகளின் தேவன் நீயே.(91) அமுதம் பருகுபவன் நீயே. அண்டத்தின் ஆண்டவன் நீயே. மகிமையில் ஒளிப்பவன் நீயே, ஒளிர்வதனைத்தின் தலைவன் நீயே. நஞ்சிலிருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாப்பவன் நீயே. பாலும், சோமமும் பருகுபவன் நீயே. சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தவர்களைப் பாதுகாப்பவர்களில் முதன்மையானவன் நீயே. தேவர்களில் முதல்வனை {பிரம்மனைப்} பாதுகாப்பவன் நீயே.(92) தங்கமே உயிர் வித்தாகக் கொண்டவன் {ஹிரண்யரேதஸ்} நீயே. ஆண் நீயே, பெண் நீயே, அலி நீயே. குழந்தை நீயே, இளைஞன் நீயே, பற்கள் உதிர்ந்த முதிர்ந்தவன் {ஸ்தவிரன்} நீயே, நாகர்களில் முதன்மையானவன் {ஐராவதன்} நீயே, சக்ரன் {இந்திரன்} நீயே, அண்டத்தை அழிப்பவன் நீயே, படைப்பாளன் நீயே.(93) பிரஜாபதி நீயே, பிரஜாபதிகளில் துதிக்கப்படுபவன் நீயே, அண்டத்தை ஆதரிப்பவன் நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் நீயே, பெருஞ்சக்தி கொண்டவன் நீயே, அனைத்துத் திசைகளிலும் திரும்பி முகங்களைக் கொண்டவன் நீயே. சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாய் கொண்டவன் நீயே, பெரும்பாட்டனை இதயமாகக் கொண்டவன் நீயே. பெருங்கடல் நீயே. சரஸ்வதி தேவியை உன் வாக்காகக் கொண்டவன் நீயே, நெருப்பையும் {அநலனையும்}, காற்றையும் {அநிலனையும்} உன் வலிமையாக {பலமாகக்} கொண்டவன் நீயே. பகலும், இரவும் நீயே. இமை திறத்தல் மற்றும் அடைத்தல் உள்ளிட்ட செயல்கள் அனைத்தும் நீயே.(94) ஓ! மங்கல தேவனே {சிவ பெருமானே}, பிரம்மனோ, கோவிந்தனோ {விஷ்ணுவோ}, புராதன முனிவர்களோ உண்மையில் உன் மகிமையைப் புரிந்து கொள்ளத் தகுந்தவர்களல்ல.(95)

நீ கொண்ட நுட்பமான வடிவங்கள் எங்களுக்குப் புலப்படவில்லை. ஓ!, தந்தையானவன் தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் பாதுப்பத்தைப் போல என்னைக் காப்பாயாக.(96) ஓ! என்னைப் பாதுகாப்பாயாக. நான் உன் பாதுகாப்புக்குத் தகுந்தவனாவேன். ஓ! பாவமற்றவனே நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சிறப்பு மிக்கவனே, உன் பக்தர்களிடம் கருணை நிறைந்தவன் நீயே. நான் எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்.(97) பெருங்கடலின் அடுத்தக் கரையில், புரிந்து கொள்ளக் கடினமான வடிவில், பல்லாயிரம் மனிதர்களை மறைத்துத் தனிமையில் உள்ளவன் என் பாதுகாவலனாகட்டும்.(98) புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், சத்வ குணத்தைக் கொண்டவர்கள், தங்கள் உயிர் மூச்சுகளை ஒழுங்கு செய்தவர்களும், உறக்கத்தை வென்றவர்களுமான மனிதர்களால் பிரகாசமான ஒளியின் வடிவில் காணப்பட்ட யோகத்தின் ஆன்மாவை நான் வணங்குகிறேன்.(99) சடாமுடி தரித்தவனும், தவசியின் தண்டத்தைக் கையில் கொண்டவனும், நீண்ட வயிற்றுப் பகுதியைக் கொண்ட உடலைக் கொண்டவனும், முதுகில் கமண்டலம் கட்டப்பட்டவனும் பிரம்மனின் ஆன்மாகவும் இருப்பவனை நான் வணங்குகிறேன்.(100)

நீரின் ஆன்மாவாக இருப்பவனை, மேகத்தை முடியாய் கொண்டவனை, மூட்டுகளில் ஆறுகளைக் கொண்டவனை, வயிற்றில் நான்கு கடல்களைக் கொண்டவனை நான் வணங்குகிறேன்.(101) யுக முடிவு நேரும்போது உயிரினங்களை அனைத்தையும் விழுங்கி அண்டத்தை மறைக்கும் நீர்ப் பரப்பில் (உறங்குவதற்கு) பரந்து விரிந்து கிடப்பவனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(102) ராஹுவின் வாய்க்குள் நுழைந்து இரவில் சோமனைப் பருகுபவனும், சுவர்பானுவாகி சூரியனையும் விழுங்குபவனும் என்னைப் பாதுகாக்கட்டும்.(103) பிரம்மனின் படைப்புக்குப் பிறகு உன்னில் இருந்து எழுந்த குழந்தனைகளான தேவர்கள் (வேள்விக் காணிக்கைகளில்) தங்களுக்குரிய பங்குகளை அனுபவிக்கிறார்கள். ஸ்வாஹா மற்றும் ஸ்வதாவுடன் செய்யப்படும் காணிக்கைகளை அவர்கள் (அமைதியாக) அனுபவிக்கட்டும், அந்தக் கொடைகளில் இருந்து அவர்கள் இன்பத்தை அடையட்டும். நான் அவர்களை வணங்குகிறேன்.(104) அனைத்து உடல்களிலும் கட்டைவிரல் அளவில் வசிக்கும் மூர்த்திகள் {ருத்திரர்கள் / மஹாருத்திரனின் பகுதிகள்} என்னை எப்போதும் பாதுகாத்து, நிறைவு கொள்ளச் செய்யட்டும்.(105)

உடல்படைத்த உயிரினங்களில் வசித்து, தாங்கள் துன்புற்று அழாமல் அவற்றைத் துயரில் அழச் செய்து, தாங்கள் மகிழ்ச்சியடையாமல் அவற்றை மகிழ்ச்சியடைச் செய்யும் அந்த மூர்த்திகளை எப்போதும் நான் வணங்குகிறேன்.(106) ஆறுகள், பெருங்கடல்கள், குன்றுகள், மலைகள், மலைக்குகைகள், மரத்தின் வேர்கள், பசுக்கொட்டில்கள், அடைதற்கரிய காடுகள், நாற்சந்திகள், சாலைகள், வெட்ட வெளிகள், (ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடல்களின்) கரைகள், யானைச்சாலைகள், குதிரைச் சாலைகள், தேர்ச்சாலைகள், கைவிடப்பட்ட தோட்டங்கள் மற்றும் வீடுகள், ஐம்பூதங்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகளில் வசிக்கும் ருத்திரர்களை நான் எப்போதும் வணங்குகிறேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட வெளியிலும், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களிலும் வசிப்பவர்களையும், பாதாள லோகத்தில் வசிப்பவர்களையும், துறவை மேற்கொண்டவர்களையும், உயர்ந்ததை அடைவதற்கான பிற மேன்மையான நடைமுறைகளில் ஈடுபடுபவர்களையும் நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(107-110)

எண்ணமுடியாதவர்களும், அளவிடமுடியாதவர்களும், வடிவமில்லாதவர்களும், முடிவிலா குணங்களைக் கொண்டவர்களுமான ருத்திரர்களை நான் வணங்குகிறேன்.(111) ஓ! ருத்திரா, அனைத்து உயிரினங்களையும் படைதவன் நீயே, ஓ! ஹரனே, அனைத்து உயிரினங்களின் ஆண்டவன் நீயே, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மாவும் நீயே என்பதால்தான் (என் வேள்விக்கு) உன்னை நான் அழைக்கவில்லை.(112) அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகள் அனைத்திலும் துதிக்கப்படுபவனே நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நீயே என்பதால்தான் நான் உன்னை அழைக்கவில்லை.(113) அல்லது, ஓ! தேவா, உன் நுட்பமான மாயையில் திகைப்படைந்த நான் உன்னை அழைக்கத் தவறிவிட்டேன்.(114) என்னிடம் நிறைவு கொள்வாயாக, ஓ! பவா, ரஜஸ் குணத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னிடம் அருள்கூர்வாயாக. ஓ! தேவா, என் மனம், புத்தி, சித்தம் அனைத்தும் உன்னிலேயே வசிக்கிறது” என்றான் {என்று துதித்தான் தக்ஷன்}[12].(115)அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவன் {சிவன்}, இந்தத் துதிகளைக் கேட்டு (மேலும் தக்ஷனுக்குத் தீங்கிழைக்க எண்ணாமல்) நின்றான். உண்மையில், மிகவும் நிறைவடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, தக்ஷனிடம், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்ட தக்ஷா, உன் துதிகளால் நான் நிறைவடைந்தேன். மேலும் என்னைத் துதிக்க வேண்டாம். நீ என் உதவியைப் பெறுவாய்.(117) ஓ! உயிரினங்களின் மூதாதையே, (நிறைவடையாத இந்த ஒரு வேள்வியின் விளைவாக) என் அருளால் ஆயிரம் குதிரை வேள்விகள் மற்றும் நூறு வாஜபேயங்களின் கனியை நீ ஈட்டுவாய்” என்றான்.(118)

சொற்களின் முற்றான ஆசானான மஹாதேவன் மீண்டும் தக்ஷனிடம், உயர்ந்த ஆறுதல் கூறும் வகையில், “உலகின் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனே நீயே இருப்பாயாக.(119) ஓ! தக்ஷா, இந்த வேள்வியில் நிகழ்ந்த தீங்குகளுக்கான நீ துயரடையாதே. முந்தைய கல்பங்களில் கூட நான் உன் வேள்வியை அழித்திருக்கிறேன்[13].(120) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, நான் மேலும் உனக்குச் சில வரங்களைக் கொடுக்கப் போகிறேன். என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. உன் முகத்தில் பரவியிருக்கும் இந்த உற்சாகமற்ற தன்மையைக் களைந்து, சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(121){சிவன் தொடர்ந்தான்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களிலிருந்தும், ஸாங்கியத்திலிருந்தும் பெற்ற அறிவுக்குப் பொருத்தமான வாதத்தின் துணையால், பல நீண்ட வருடங்கள் செய்யக்கூடிய கடுந்தவங்களைத் தேவர்களாலும், தானவர்களாலும் செய்ய முடிந்தது.(122) எனினும், நான் வகுத்த சாரமானது ஒப்பற்றதும், அனைத்து திசைகளிலும் நன்மையை உண்டாக்கவல்லதுமாகும். இஃது அனைத்து வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} கொண்ட மனிதர்களாலும் செய்யப்படலாம். இது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. பல வருடங்கள், அல்லது புலன்களை அடங்கிய மனிதர்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் இஃது அடையப்படுகிறது. இது புதிரால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானமற்றவர்கள் இதைக் கண்டிக்கத்தக்கதாகக் கருதுகிறார்கள்.(123) இது நான்கு வகைகள் {வர்ணங்கள்} மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} ஆகியவற்றில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு முரண்பட்டதும், மிகச் சொற்பமான கடமைகளில் மட்டுமே உடன்பட்டதுமாக இருக்கிறது. (அனுமானங்களில் இருந்து) தீர்மானங்களை (வரையறுக்கும்) அறிவியலில் நன்கு திறம்பெற்றவர்களாலும் அனைத்து வாழ்வுமுறைகளையும் கடந்து, அதைப் பின்பற்றத் தகுந்தவர்களாலும் அதன் ஏற்புடைமையைப் புரிந்து கொள்ள முடியும்.(124) ஓ! தக்ஷா, பழங்காலத்தில், பாசுபதம் என்றழைக்கப்பட்ட மங்கலமான அறம் {விரதம்} என்னால் உண்டாக்கப்பட்டது. அவ்வறத்தைச் சரியாகப் பின்பற்றுவது அபரிமிதமான நன்மைகளை உண்டாக்கும்.(125) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, அந்த நன்மைகள் யாவும் உனதாகட்டும். உன் இதயத்தில் உள்ள இந்த நோயை விலக்குவாயாக” என்றான்{சிவன்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன் {சிவன்}, தன் மனைவி (உமை) மற்றும் தன் தொண்டர்கள் அனைவருடன் அளவிலா ஆற்றலைக் கொண்ட தக்ஷனின் பார்வையில் இருந்து மறைந்து போனான்.(126)

தக்ஷனால் முதலில் சொல்லப்பட்ட இந்தத் துதியை உரைப்பவன், அல்லது மற்றொருவனால் உரைக்கப்படுவதைக் கேட்பவன், சிறு தீமையையும் சந்திக்காமல் நீண்ட வாழ்நாளை அடைவான்.(127) உண்மையில், தேவர்களில் முதன்மையானவனாகச் சிவன் இருப்பதைப் போலவே துதிகள் அனைத்திலும் முதன்மையாக ஸ்ருதிகளுக்கு ஏற்புடைய இந்தத் துதியும் இருக்கிறது.(128)  புகழ், அரசாட்சி, மகிழ்ச்சி, இன்பம், பொருள் {லாபம்}, செல்வம் ஆகியவற்றை விரும்பும் மனிதர்களும், கல்வியில் விருப்பமுள்ளவர்களும் இந்தத் துதியைப் பக்தியுணர்வுடன் கேட்க வேண்டும்.(129)  நோயால் பீடிக்கப்பட்டவன், துன்பத்தால் வருந்துபவன், துயரில் மூழ்கியவன், கள்வர்கள் அல்லது அச்சத்தால் பீடிக்கப்பட்டவன், அரசனின் வெறுப்புக்கு உள்ளானவன் ஆகியோர் (இந்தத் துதியை உரைப்பதால், அல்லது கேட்பதால்) அச்சத்தில் இருந்து விடுபடுவார்கள்.(130)
இந்தத் துதியைக் கேட்பது, அல்லது உரைப்பதன் மூலம் ஒருவன் உலகம் சார்ந்த இந்த உடலுடனே, மஹாதேவனின் தொண்டர்களாக அமைந்திருக்கும் கணங்களுக்கு இணையான தன்மையை அடைவான். (இந்தத் துதியின் மூலம்) ஒருவன் சக்தியையும், புகழையும் பெறுவான், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(131) இந்தத் துதி உரைக்கப்படும் இல்லத்தில் ராட்சசர்களாலோ, பிசாசங்களாலோ, பூதங்களாலோ, விநாயகர்களாலோ எந்த அமளிகளிலும் ஈடுபடமுடியாது.(132)

பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்று இந்தத் துதியைக் கேட்கும் பெண்ணானவள், தன் தந்தை மற்றும் தன் கணவனின் இல்லத்தில் ஒரு தேவியின் வழிபாட்டை வெல்வாள்.(133) இந்தத் துதியைக் கவனத்துடன் கேட்பவன் அல்லது உரைப்பவனின் செயல்கள் அனைத்தும் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும்.(134) இந்தத் துதியை உரைப்பதன் விளைவால் ஒருவன் தன் மனத்திற்குள் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும், வார்த்தைகளில் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும் அவை கனிவதால் மகுடம் சூட்டப்படும்.(135) தற்கட்டுப்பாட்டைப் பயின்று மஹாதேவன், குஹன், உமை, நந்தி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உரிய சடங்குகளை உரிய முறையில் அர்ப்பணிப்புடன் செய்யும் மனிதன், தான் விரும்பிய அனைத்துப் பொருட்களையும், அனுபவிக்கத்தக்க, இன்பத்திற்குரிய அனைத்தையும் அடைவான்.(136) அத்தகைய மனிதன் இப்பிறவியை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தால், இடைநிலை உயிரினங்களான விலங்குகளாகவோ, பறவைகளாகவோ மீண்டும் ஒருபோதும் பிறப்பை அடைய மாட்டான். இதைப் பராசரரின் மகனான பலமிக்க வியாசரும் சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(137)

ஆன்மிகவியல்! – சாந்திபர்வம் பகுதி – 286-அத்யாத்மா குறித்து மீண்டும் விசாரித்த யுதிஷ்டிரன்; ஆத்மா, புத்தி, பூதங்கள், புலன்கள் மற்றும் கொணங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விவரித்த பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மனிதனைப் பொறுத்தவரையில் அத்யாத்மா என்பது என்ன? அஃது எங்கிருந்து எழுகிறது” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்யாத்ம அறிவியலின் துணையுடன் ஒருவனால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் அஃது அனைத்து பொருட்களிலும் மேன்மையானது. நான் என் புத்தியின் உதவியைக் கொண்டு நீ கேட்கும் அத்யாத்மா குறித்து உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, என் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி ஆகியவையே பெரும்பூதங்களாகும். இவையே தோற்றமும், அழிவுமாகும் (தோற்றம் மற்றும் அழிவிற்கான காரணங்களாகும்).(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உயிரினங்களின் உடல்கள் (நுண்ணுடல் மற்றும் பருவுடல் ஆகிய இரண்டும்) இந்த ஐந்தின் பண்புகளுடைய கலவையின் விளைவேயாகும். அந்தப் பண்புகள் மீண்டும் மீண்டும் தொடங்கி, மீண்டும் மீண்டும் (அனைத்துப் பொருட்களுக்கும் மூலக் காரணமான பரமாத்மாவுக்குள்) கலக்கிறது.(4) பெருங்கடலின் முடிவிலா அலைகள் எழுந்து, தங்களுக்குக் காரணமான கடலிலேயே கலப்பதைப் போல, இந்த ஐந்து அடிப்படை பூதங்களில் இருந்து படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும், இந்த ஐந்து பெரும்பூதங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கலக்கின்றன.(5) ஓர் ஆமை தன் கால்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போல, எண்ணிலா உயிரினங்கள் அனைத்தும் இந்த ஐந்து நிலையான பெரும்பூதங்களில் இருந்து எழுந்து (அதனுள்ளேயே நுழைகின்றன).(6)

உண்மையில் ஒலியானது ஆகாயத்தில் இருந்து உண்டாகிறது, அடர்த்தியான பொருள் அனைத்தும் பூமியின் குணத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரானது காற்றில் இருந்து வருகிறது. சுவை நீரில் இருந்து வருகிறது. வடிவமானது ஒளியின் தன்மையாகும்.(7) இவ்வாறே அசையும் மற்றும் அசையாதவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும், இந்த ஐந்து பெரும்பூதங்களின் பல்வேறு கலவைகளிலேயே ஒன்றாக நீடித்திருக்கின்றன. அழிவு நேரும்போது, பல்வேறு வகையான முடிவற்ற உயிரினங்களும் தங்களை மீண்டும் அந்த ஐந்தினுக்குள் கலக்கின்றன, பிறகு படைப்புத் தோன்றும்போது மீண்டும் அந்த அந்த ஐந்தில் இருந்து உதிக்கின்றன.(8) படைப்பாளன், அனைத்து உயிரினங்களிலும் தான் சரியென நினைக்கும் அளவுகளில் இந்த ஐம்பூதங்களையும் கலந்து வைக்கிறான்.(9)

ஒலி, காதுகள் மற்றும் துளைகள் அனைத்தும் – ஆகிய இம்மூன்றும் – வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றத்தின் காரணமாகக் கொண்டிருக்கின்றன. சுவை, நீர்மங்கள் அனைத்தும் மற்றும் நாக்கு ஆகியவை நீரின் தன்மையைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(10) வடிவம், கண், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு ஆகியன ஒளியின் இயல்பைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மணம், நுகரும் உறுப்பு {மூக்கு}, உடல் ஆகியன பூமியின் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.(11) உயிர், தீண்டல் மற்றும் செயல்பாடு ஆகியன காற்றின் தன்மைகளாகச் சொல்லப்படுகின்றன. ஓ மன்னா, ஐம்பூதங்களைக் குறித்தும் நான் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(12)

ஓ! பாரதா, இவற்றைப் படைத்த பரமன், சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் நனவுநிலையின் {அகங்காரத்தின்}செயல்பாடுகள் மற்றும் ஆறாவதாக அமையும் மனத்துடன் சேர்த்து இவற்றைக் கலந்து வைத்தான்.(13) புத்தி என்றழைக்கப்படும் ஒன்று, உள்ளங்காலுக்கு மேலும், உச்சந்தலைக்குக் கீழும் நீ காணும் உட்பகுதியில் வசிக்கிறது.(14) மனிதனில் ஐந்து (அறிவுப்) புலன்கள் இருக்கின்றன. ஆறாவதாக (ஆறாவது புலனாக) மனம் இருக்கிறது. ஏழாவதே புத்தி என்றழைக்கப்படுகிறது. க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மா எட்டாவதாகும்.(15) புலன்களும், செயல்படும் பொருள்களும், அதனதனுக்குரிய செயல்பாடுகளை உணர்வதன் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். சத்வம், ரஜஸ், தமஸ் என்றழைக்கப்படும் நிலைகள், அவற்றின் புகலிடத்திற்காகவோ, அமைப்பிற்காகவோ புலன்களையே சார்ந்திருக்கின்றன.(16) புலன்களானவை, தங்கள் தங்களுக்குரிய பொருட்களின் தாக்கத்தைப் பற்றுவதற்காகவே நீடித்திருக்கின்றன. மனமானது ஐயத்தையே தன் செயல்பாடாகக் கொண்டுள்ளது. புத்தியானது உறுதி {செய்வதையே தன் செயல்பாடாகச்} செய்கிறது. க்ஷேத்ரஜ்ஞன் (பிறவற்றின் {ஏழின்} செயல்பாட்டைக் காணும்) செயல்பாடற்ற சாட்சியாக மட்டுமே சொல்லப்படுகிறான்.(17) சத்வம், ரஜஸ், தமஸ், காலம், செயல்கள் ஆகிய குணங்கள் புத்தியை இயக்குகின்றன. புலன்களும், மேற்குறிப்பிட்ட ஐந்து குணங்களுமே புத்தியாகிறது.(18) புத்தி இல்லாத போது, புலன்களோடு கூடிய மனமும் இன்னும் பிற குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் செயல்கள் ஆகிய) ஐந்தும் இயங்குவதில்லை.

எதைக் கொண்டு புத்தியானது பார்க்கிறதோ அது கண் என்று அழைக்கப்படுகிறது.
புத்தி கேட்கும்போது, அது காது என்று அழைக்கப்படுகிறது.
அவள் {புத்தி} நுகரும்போது, அவள் மணத்தின் புலனாகிறாள்;
அவள் சுவைக்குரிய பல்வேறு பொருட்களைச் சுவைக்கும்போது, அவள் நாக்கு என்ற பெயரின் மூலம் அழைக்கப்படுகிறாள்.(19)
மேலும் அவள் தீண்டலின் பல்வேறு பொருட்களைத் தீண்டும்போது அவள் தீண்டும் புலனாகிறாள்.
புத்தியே பல்வேறு வகையில் அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகிறாள். புத்தியானவள் எதையும் விரும்பும்போது மனமாகிறாள்.(20)

(புத்தி எனும்) தனிப்பட்ட அமைப்பின் அடிப்படைகளான மனத்தோடு கூடிய ஐம்புலன்களும் புத்தியின் படைப்புகளேயாகும். அவை இந்திரியங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை களங்கப்படும்போது, புத்தியும் களங்கமடைகிறது.(21) ஜீவனில் புத்தியானவள் மூன்று நிலைகளில் இருக்கிறாள். சில வேளைகளில் அவள் இன்புறுகிறாள்; சில வேளைகளில் அவள் துன்புறுகிறாள்;(22) சில வேளைகளில் இன்பமும் துன்பமும் அற்ற நிலையில் இருக்கிறாள். புத்தியானவள், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) இந்த மூன்று நிலைகளையே தன் சாரமாகக் கொண்டு, இந்த மூன்று நிலைகளிலேயே சுழன்று கொண்டிருக்கிறாள்.(23) ஆறுகளின் தலைவனான பொங்கும் கடலானது, எப்போதும் தன் கரைகளுக்குள்ளே இருப்பதைப் போலவே, புத்தியும், இந்த (மூன்று) நிலைகளின் தொடர்புடன் (புலன்கள் உள்ளிட்ட) மனத்தில் இருக்கிறாள்.(24)

ரஜஸ் நிலை விழிப்படையும்போது, புத்தியானவள் ரஜஸாக மாறுகிறாள். மகிழ்ச்சி, இன்பம், திளைப்பு, உற்சாகம், இதய நிறைவு ஆகியன(25) ஏதோவொருவகையில் தூண்டப்படும்போது சத்வ தன்மையுள்ளதாகின்றன. குறிப்பிட்ட காரணங்களில் இருந்து எழும் இதய எரிச்சல், துயரம், கவலை, நிறைவின்மை, மன்னிக்கும்தன்மையின்மை(26) ஆகியன ரஜஸின் விளைவுகளாகும். அறியாமை, பற்று, பிழை {குற்றம்}, கவனமின்மை, திகைப்பு, கிலி,(27) அற்பத்தனம் {சிறுமை}, உற்சாகமின்மை, உறக்கம், தாமதித்தல் ஆகியன குறிப்பிட்ட காரணங்களால் உண்டாகும்போது அவை தமஸின் தன்மைகளாகின்றன.(28)

உடல் அல்லது மனமானது இன்பம் அல்லது மகிழ்ச்சியின் தொடர்புடைய எந்நிலையில் எழுந்தாலும், அது சத்வ நிலையின் விளைவாகக் கருதப்பட வேண்டும்.(29) மேலும் ஒருவனுக்குக் கவலைநிறைந்ததாகவும், ஏற்பில்லாததாகவும் இருக்கும் எதுவும் ரஜஸில் இருந்து எழுந்ததாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய செயல் எதையும் தொடங்காமலேயே (அதைத் தவிர்ப்பதற்காக) ஒருவன் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்.(30) உடல் அல்லது மனத்தில், உணர இயலாத, புதிரான வகையில் பிழை நிறைந்து அல்லது திகைப்படையச் செய்யும் எதுவும் தமஸுடன் தொடர்புடையதாக அறியப்பட வேண்டும்.(31) இவ்வாறே நான் இவ்வுலகில் புத்தியில் வசிக்கும் பொருட்கள் அனைத்தையும் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன். இவற்றை அறிவதன் மூலம் ஒருவன் விவேகியாகிறான். ஞானத்தின் குறியீடாக வேறு எது இருக்கு முடியும்?(32)

புத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரு நுண்ணியப் பொருட்களுக்கிடையிலான வேறுபாட்டை இப்போது அறிவாயாக. இவற்றில் ஒன்றான புத்தியே குணங்களை உண்டாக்குகிறது. மற்றொன்றான ஆன்மா அவற்றை உண்டாக்குவதில்லை.(33) இயல்பில் அவை ஒன்றுக்கொன்று வேறானவையாக இருந்தாலும் அவை எப்போதும் ஒரே நிலையில் கலந்தே இருக்கின்றன. ஒரு மீனானது, தான் வசிக்கும் நீரிலிருந்து வேறான ஒன்றாகும், ஆனால் மீனும், நீரும் ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும்.(34) குணங்களால் ஆன்மாவை அறிய முடியாது. எனினும் ஆன்மாவானது அவற்றை அறியும். அறியாமை கொண்டோர் புத்தியில் குணங்கள் இருப்பதைப் போல இந்தக் குணங்கள் ஆன்மாவில் கலந்த நிலையிலேயே இருக்கின்றன என்று கருதுகிறார்கள். எனினும், ஆன்மாவானது செயல்பாடின்றி அனைத்தையும் காணும் சாட்சி மட்டுமே என்பதால் உண்மை அவ்வாறானதாக இல்லை.(35) புத்திக்கு எந்தப் புகலிடமும் கிடையாது. (புத்தியின் இருப்பில் ஈடுபடும்) உயிர் என்றழைக்கப்படுவது, குணங்கள் ஒன்றாகச் சேர்வதன் விளைவுகளில் இருந்தே உண்டாகிறது. (புத்தியின் மூலம் உண்டாக்கப்பட்ட இந்தக் குணங்களைத் தவிர) காரணங்களாகச் செயல்படும் வேறு சில, உடலில் வசிக்கும் புத்தியைப் படைக்கின்றன. குணங்களின் உண்மை இயல்பையோ அவற்றுடைய இருப்பின் வடிவத்தையோ எவராலும் உணர முடியாது.(36)

ஏற்கனவே சொல்லப்பட்டது போலப் புத்தியே குணங்களைப் படைக்கிறது. ஆன்மாவானது (செயலற்ற சாட்சியாக) அவற்றைக் காண மட்டுமே செய்கிறது. புத்திக்கும், ஆன்மாவுக்கு இடையில் நீடிக்கும் இந்த ஒற்றுமை நித்தியமானதாகும்.(37) உள் வசிக்கும் புத்தியானது, உயிரற்றவையும், புரிந்து கொள்ளாதவையுமான புலன்களின் மூலமே அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்கிறது. உண்மையில் புலன்களானவை (தன்னால் பொருட்களைக் காண முடியாது என்றாலும், பிறர் காண ஒளியை வீசும்) விளக்குகளைப் போன்றவை மட்டுமே.(38) இதுவே (புலன்கள், புத்தி மற்றும் ஆன்மாவின்) இயற்கையாகும். இதை அறியும் ஒருவன், துயரத்திற்கோ இன்பத்திற்கோ வசப்படாமல் உற்சாகமாக வாழ வேண்டும். அத்தகைய மனிதனே செருக்கின் ஆதிக்கத்தைக் கடந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(39) புத்தியானவள் தன் இயல்பின் மூலம் இந்தக் குணங்கள் அனைத்தையும் உண்டாக்குகிறாள் என்பது – சிலந்தியானது (தன் இயல்பின் விளைவால்) வலை பின்னுவதைப் போன்றதாகும். இந்தக் குணங்களைச் சிலந்தி பின்னும் வலையாக அறிய வேண்டும்.(40)

அழிவடையும்போது குணங்கள் இருப்பதில்லை; அவற்றின் இருப்பு புலப்படுவதில்லை. எனினும், ஒரு பொருள் புலன்களின் திறனைக் கடக்கும்போது அதன் இருப்பு (அல்லது இல்லாமை) உள்ளுணர்வால் உறுதி செய்யப்படுகிறது. இஃது ஒரு குழுவினருடைய கருத்தாகும். வேறு சிலர், அழிவோடு சேர்த்து குணங்களும் இல்லாமல் போகின்றன என்று உறுதி செய்கின்றனர்.(41) புத்தி மற்றும் சிந்தனை குறித்துச் சொல்லப்படும் முடிச்சுகள் நிறைந்த இந்தப் பிரச்சனையை அவிழ்த்து, ஐயமனைத்தும் களையும் ஒருவன் கவலையை விட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(42) அதன் ஆழத்தை அறியாத மனிதர்கள், மயக்கமெனும் நீரால் நிறைந்த ஓர் ஆற்றைப் போன்ற இந்தப் பூமியில் விழும்போது துயரடைவதைப் போலவே, புத்தியில் ஒற்றுமை இருக்கும் இந்த நிலையில் இருந்து விழும் மனிதனும் துயரடைகிறான்.(43) எனினும் அத்யாத்மாவை அறிந்து மனோவுறுதி கொண்ட ஞானிகள், அந்த நீரின் மறுகரையை அடைய இயன்றவர்கள் என்பதால் அவர்கள் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. உண்மையில், ஞானமே (அந்த ஆற்றில்) திறமிக்கத் தோணியாகும்.(44) ஞானமற்றவர்களை அச்சுறுத்தும் பீதி நிறைந்த கிலிகளை ஞானிகள் சந்திக்க வேண்டியதில்லை. அறவோரைப் பொறுத்தவரையில், அவர்களில் எந்த மனிதனும் அடைந்த கதிக்கு மேன்மையான கதியை அவர்களில் எவரும் அடைவதில்லை. உண்மையில், இவ்வகையில் அறவோர் தங்கள் சமத்தன்மையை வெளிக்காட்டுவர்.(45) ஞானியைப் பொறுத்தவரையில், (அவன் அறியாமையில் மூழ்கியிருந்த) கடந்த காலங்களில் அவனால் செய்யப்பட்ட எந்தச் செயல்களையும், (ஞானமடைந்த பிறகு) அவன் செய்த கொடுமைநிறைந்த எந்தச் செயல்களையும் ஞானத்தையே தன் ஒரே வழிமுறையாகக் கொள்வதன் மூலம் அழிக்கிறான். பிறகு, அவன் ஞானமடைந்த பிறகு, பிறரின் தீச்செயல்களைக் கண்டிப்பது, பற்றின் ஆதிக்கத்தில் தானே தீச்செயல்களைச் செய்வது என்ற அந்த இரண்டு தீமைகளையும் செய்வதை நிறுத்துகிறான்” என்றார் {பீஷ்மர்}.(46)

துன்பமற்ற நிலை! – சாந்திபர்வம் பகுதி – 287-துக்கத்தையும், மரணத்தையும் தவிர்ப்பது எவ்வாறு என்று கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயிரினங்கள் எப்போதும் துன்பத்தையும், மரணத்தையும் கண்டு அஞ்சுகின்றன. ஓ! பாட்டா, இந்த இரண்டும் நேராமல் தவிர்ப்பது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2)

நாரதர் {சமங்கரிடம்}, “(பெரியோரை வணங்க சிலர் தங்கள் தலைகளை மட்டுமே தாழ்த்துகின்றனர்) நீர் பெரியோர்களை வணங்க உமது மார்பு தரையைத் தொடும் வரை நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்து வணங்குகிறீர். நீர் உமது கரங்களைக் கொண்டே (வாழ்வெனும் ஆற்றைக்) கடப்பதாகத் தெரிகிறது[1]. நீர் எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டவராகவும், மிகுந்த உற்சாகம் நிறைந்தவராகத் தென்படுகிறீர். நீர் எப்போதும் நிறைவுடையவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஒரு குழந்தையைப் போல (இன்பமாக) விளையாடிக் கொண்டிருப்பவராகவும் தென்படுகிறீர்” என்றார்.(4)

சமங்கர் {நாரதரிடம்}, “ஓ! கௌரவங்களை அளிப்பவரே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களைக் குறித்த உண்மையை நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் உற்சாகமிழப்பதில்லை[2].(5) இவ்வுலகில் செயல்களின் தொடக்கம் எது, அவற்றால் அடையப்படும் கனிகள் என்னென்ன, அந்தக் கனிகள் எவ்வாறு பல்வேறு வகைகளில் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை[3].(6) ஓ! நாரதரே, கல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், செல்வந்தர்கள், குருடர்கள், மூடர்கள், பித்தர்கள் என நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பாரும்[4].(7) இவர்கள் தங்கள் முற்பிறவிச் செயல்களின் மூலம் வாழ்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட்டவர்களான தேவர்களே கூட, முற்பிறவிகளின் செயற் தன்மையின் மூலம் (அந்நிலையில்) இருக்கிறார்கள். பலவீனர்களும், பலவான்களும் என அனைவரும் தங்கள் முற்பிறவி செயல்களின் தன்மையால் வாழ்கின்றனர். எனவே, நீர் நம்மை மதிப்பதே உமக்குத் தகும்.(8) ஆயிரங்களைக் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். நூறுகளைக் கொண்டவர்களும் வாழ்கிறார்கள். துன்பத்தில் மூழ்கியவர்களும் வாழ்கிறார்கள். நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் பாரும்.(9)ஓ! நாரதரே, நாம் துன்பவசப்படாமல் இருக்கும்போது, (அறக்) கடமை பயிற்சியோ, (அறச்) செயல் நோற்போ நமக்கு என்ன செய்துவிட முடியும்? இன்ப துன்பங்கள் அனைத்தும் முறிவற்றவை என்பதால், அவற்றால் ஒருபோதும் நம்மைக் கலங்கடிக்க முடிவதில்லை[5].(10) ஞானிகள் என்று எதனால் மனிதர்கள் சொல்லப்படுகிறார்கள், அது பிழையில் {குற்றத்தில்} இருந்து புலன்களை விடுபடச் செய்யும் ஞானமே ஆகும். புலன்களே பிழைக்கும் {குற்றத்திற்கும்}, துயரத்திற்கும் வசப்படுகிறது. பிழைக்கு {குற்றத்திற்கு} ஆட்படும் புலன்களைக் கொண்ட ஒருவன் ஞானத்தை அடைவான் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.(11) பிழையின் ஆதிக்கத்தால் மனிதன் கொள்ளும் செருக்கானது, அவன் அடங்கியிருக்கும் பிழையின் {குற்றத்தின்} வடிவம் மட்டுமே ஆகும். பிழை செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இம்மையும் கிடையாது, மறுமையும் கிடையாது. துன்பங்கள் எப்போதும் நீடித்திருப்பதில்லை, இன்பமும் எப்போதும் இருக்காது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்[6].(12) திருப்பங்கள் மற்றும் துன்ப நிகழ்வுகள் நிறைந்த இந்த உலகவாழ்வை என்னைப் போன்ற ஒருவன் ஒருபோதும் பின்பற்ற மாட்டான். அத்தகைய ஒருவன், இன்பத்திற்குரிய பொருட்களை விரும்புவதில் கவனம் கொள்ள மாட்டான், அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை நினைக்க மாட்டான், அல்லது அவை கொண்டு வரும் துன்பங்களையும் நினைக்க மாட்டான்.(13) தற்சார்பு கொள்ள இயன்ற ஒருவன், பிறரின் பொருள்களில் ஒருபோதும் பேராசை கொள்ள மாட்டான்; அடையப்படாத லாபங்களைக் குறித்து நினைக்க மாட்டான்; அபரிமிதமான செல்வத்தை அடைவதால் மகிழ்ச்சியை உணர மாட்டான்; செல்வத்தை இழப்பதால் துன்பவசப்பட மாட்டான்.(14) நண்பர்களாலோ, செல்வத்தாலோ, உயர்ந்த பிறப்பாலோ, சாத்திரக் கல்வியாலோ, மந்திரங்களாலோ, சக்தியாலோ மறுமையின் துன்பத்தில் ஒருவனை மீட்க முடியாது. ஒழுக்கத்தின் மூலமே ஒருவனால் அங்கே இன்பத்தை அடையமுடியும்.(15)யோகத்தை அறியாத மனிதனின் புத்தியை ஒருபோதும் விடுதலையை {முக்தியை} நோக்கிச் செலுத்த முடியாது. யோகத்தை அறியாத ஒருவனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. பொறுமையும், கவலையைக் கைவிடும் மனோவுறுதியுமே மகிழ்ச்சி உண்டாவதற்கான இரண்டு அறிகுறிகளாகும்.(16) ஏற்புடைய {இனிமையான} எதுவும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இன்பம் செருக்கைத் தூண்டுகிறது. மேலும் செருக்கானது கவலையை உண்டாக்குகிறது. இந்தக் காரணங்களுக்காகவே நான் இவை அனைத்தையும் தவிர்க்கிறேன்.(17) என் உடல் உயிருள்ளதாகத் திரிந்து கொண்டிருப்பதால், இதயத்தைத் திகைப்படையச் செய்யும் துயரம், அச்சம், செருக்கு ஆகியவற்றையும், இன்ப துன்பங்களையும் நான் (கவலையற்ற) சாட்சியாக மட்டுமே காண்கிறேன்[7].(18) செல்வம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும், தாகம் மற்றும் பிழையையும் கைவிட்டு, துயரத்தில் இருந்தும், அனைத்து வகை இதயக் கவலைகளிலும் இருந்தும் விடுபட்டுப் பூமியில் திரிந்து விருகிறேன்.(1) அமுதம் பருகிய ஒருவனைப்போல, இம்மையிலோ, மறுமையிலோ, மரணத்திலோ, கொடூரத்திலோ, காமத்திலோ, அவ்வகையான எவற்றிலோ எனக்கு அச்சமேதும் இல்லை.(20) ஓ! பிராமணரே, நான் செய்த கடுமையான, அழிவற்ற தவங்களின் விளைவாக நான் இந்த ஞானத்தை அடைந்திருக்கிறேன். ஓ! நாரதரே, இதன் காரணமாகவே, என்னிடம் வரும் துன்பத்தால் என்னைப் பீடிப்பதில் வெல்ல முடிவதில்லை” என்றார் {சமங்கர்}” {என்றார் பீஷ்மர்}.(21)

தற்கட்டுப்பாடு அற்றவனுக்கான நன்மையும் சிறப்பும்! – சாந்திபர்வம் பகுதி – 288-ஆன்ம ஞானத்தைத் தேடாத மனிதர்கள் எவ்வழியில் மேன்மையடையலாம், நன்மையும், சிறப்பும் அடையலாம் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சாத்திரங்களின் உண்மைகளை அறியாதவனும், எப்போதும் ஐயத்தில் இருப்பவனும், தற்கட்டுப்பாட்டையும், ஆன்ம ஞானத்தை நோக்கமாகக் கொண்ட பிற பயிற்சிகளையும் தவிர்ப்பவனுமான ஒருவனுக்கு எது நன்மை என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆசானை வழிபடுதல், முதியோரிடம் மதிப்புடன் காத்திருத்தல் {அவர்களுக்குப் பணிவிடை செய்தல்}, (தகுந்த பிராமணர்களால் சொல்லப்படும்) சாத்திரங்களைக் கேட்டல் ஆகியவையே (நீ சொன்னதைப் போன்ற ஒருவனுக்கு) உயர்ந்த நன்மையை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது.(2) இது தொடர்பாகக் காலவருக்கும் தெய்வீக முனிவரான நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(3)

ஒரு காலத்தில், தனக்கான நன்மையை அடைவதில் விருப்பம் கொண்ட காலவர், பிழை மற்றும் களைப்பில் {குற்றங்குறைகளில்} இருந்து விடுபட்டவரும், சாத்திரங்களில் கல்விமானும், அறிவில் நிறைவுடையவரும், தன் புலன்களை முற்றாக ஆள்பவரும், யோகத்தில் அர்ப்பணிப்புள்ள ஆன்மாவுடன் கூடியவருமான நாரதரிடம்,(4) “ஓ! முனிவரே, இவ்வுலகத்தில் ஒரு மனிதன் மதிக்கப்படுவதற்குத் தகுந்த ஒழுங்கங்கள் அனைத்தும் உம்மில் நிரந்தரமாக வசிக்கின்றன.(5) பிழையில் {குற்றத்தில்} இருந்து விடுபட்டவரான உமக்கு, பிழைக்கு ஆட்படுபவர்களும், உலகின் உண்மைகளை அறியாதவர்களுமான எங்களைப் போன்ற மனிதர்களின் மனங்களில் நிறைந்திருக்கும் ஐயங்களை அகற்றுவதே தகும்.(6) சாத்திரத் தீர்மானங்கள் செயல்களைச் செய்யத் தூண்டும் அதே வேளையில் ஞானம் (அடைவதற்கான) தூண்டலையும்  உண்டாக்குகின்றன என்பதால் எங்களுக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. இக்காரியம் குறித்து எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்[1].(7) ஓ சிறப்புமிக்கவரே, வெவ்வேறு ஆசிரமங்கள் {வாழ்வுமுறைகள்} வெவ்வேறு ஒழுக்க நடைமுறைகளை அங்கீகரிக்கின்றன. “இது நன்மையானது, இந்த மற்றொன்று நன்மையானது” என்ற வகையிலேயே சாத்திரங்கள் எப்போதும் நம்மைத் தூண்டுகின்றன.(8)சாத்திரங்களால் இவ்வாறு தூண்டப்பட்டு, தங்களுக்காக அந்தச் சாத்திரங்கள் விதித்திருப்பதை முழுமையாக அங்கீகரித்து, அதன்படியே பல்வேறு பாதைகளில் பயணித்து அந்த நான்கு ஆசிரமங்களைப் பின்பற்றுவோரைக் கண்டும், எங்கள் சாத்திரங்களில் நிறைவோடு இருக்கும் எங்களைப் பார்த்தும்  உண்மையில் எது நன்மையானது என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் தவறுகிறோம்.(9) சாத்திரங்கள் அனைத்தும் சமச்சீரானவை என்றால், எது உண்மையில் நன்மையானது என்பது வெளிப்பட்டிருக்குமே. எனினும், பல்வேறு வகைப்பட்ட சாத்திரங்களின் விளைவால் உண்மையான நன்மை எது என்பது புதிராகிப் போகிறது.(10) இந்தக் காரணங்களால் எது உண்மையில் நன்மையானது என்பது எனக்குக் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. எனவே, ஓ! சிறப்புமிக்கவரே, இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக. (இதற்காகவே) நான் உம்மை அணுகினேன். ஓ!, எனக்குப் போதிப்பீராக” என்றார் {காலவர்}.(11)

நாரதர் {காலவரிடம்}, “ஓ! குழந்தாய், ஆசிரமங்கள் எண்ணிக்கையில் நான்காகும். அவை அனைத்தும், தாங்கள் வடிவமைக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும், தங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும் கடமைகளுக்காகவும் தொண்டாற்றுகின்றன. ஓ! காலவா, நல்ல திறன் கொண்ட ஆசானிடம் அவற்றை முதலில் உறுதிசெய்து கொண்டு, பிறகு அவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்[2].(12) ஆசிரமங்களின் தகுதிகள் {புண்ணியங்கள்}, தங்கள் தங்களுக்குரிய வடிவில் வெவ்வேறானவையும், பொருளில் வேறுபட்டவையும், தாங்கள் தழுவும் நோன்புகளில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையுமாகும்[3].(13) அகன்ற நோக்கில் கண்டால், ஆசிரமங்கள் அனைத்தும், (ஆன்ம அறிவு என்ற) தங்கள் உண்மை நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்த மறுக்கின்றன. எனினும், நுட்பமான பார்வையைக் கொண்டவர்கள் தங்கள் உயர்ந்த கதியை அதில் காண்கிறார்கள்.(14) எது உண்மையில் நன்மையானதோ, எதில் நண்பர்களுக்கான நன்மைகள், எதிரிகளை ஒடுக்குதல்,(15) (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்றையும் அடைவதில் ஐயமேற்படவில்லையோ, அதுவே உயர்ந்த சிறப்பு {நன்மை} என்று ஞானிகளால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாவச் செயல்களைத் தவிர்ப்பது, தொடர்ந்த அற மனோநிலை, நல்லோர் மற்றும் பக்திமான்களிடம் நன்னடத்தை ஆகிய இவையே மிகச் சிறந்தவையாகும்.(16)உயிரினங்கள் அனைத்திடமும் மென்மை, நடத்தையில் உண்மை, இனிய சொற்களைப் பயன்படுத்துதல் ஆகிய இவையே சிறப்பானவை {நன்மையானவை} என்பதில் ஐயமில்லை.(17) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோரிடம் சமமான பகிர்தலையும், பணியாட்களிடம் பற்றையும் ஒருவன் கொண்டால் அவையே மிகச் சிறந்தவையாகும்.(18) பேச்சில் வாய்மை சிறந்தது. எனினும், உண்மை குறித்த அறிவை அடைவது மிகக் கடினமானதாகும். வாய்மையே உயிரினங்களுக்கு மிக நன்மையானது என நான் சொல்வேன்.(19) செருக்கைத் துறத்தல், கவனமின்மையைக் களைதல், மனோநிறைவு, தற்சார்புடன் வாழ்தல் ஆகியவையே உயர்வான சிறப்புகளாக {நன்மைகளாகச்} சொல்லப்படுகின்றன.(20)

நன்கறியப்பட்ட விதிகளின் படி வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களைக் குறித்த கல்வி, ஞானம் அடைவதற்காகச் செய்யப்படும் ஆனைத்து வகை ஆய்வுகள், மற்றும் தேடல்கள் ஆகியவை சிறப்பானவை என்பதில் ஐயமில்லை.(21) எது சிறப்பானதோ, அஃதை அடைய விரும்பும் ஒருவன், ஒலி, வடிவம், சுவை, தீண்டல் மணம் ஆகியவற்றை அதிகமாகவும், தங்களுக்காக மட்டுமே என்ற வகையிலும் ஒருபோதும் அனுபவிக்கக்கூடாது.(22) சிறப்படைய விரும்பும் ஒருவனால், இரவில் உலவுதல், பகலில் உறங்குதல், சோம்பலில் ஈடுபடுதல், அயோக்கியத்தனம், ஆணவம், புலன் நுகர் பொருட்களில் அதிகமாக ஈடுபடுதல், அவற்றை முற்றிலும் தவிர்த்தல் என்ற இவை அனைத்தும்  துறக்கப்பட வேண்டும்.(23) பிறரை இகழ்வதன் மூலம் ஒருவன் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ள முனையக்கூடாது. உண்மையில், அவன் தன் தகுதிகளால் மட்டுமே புகழ்பெற்றவர்களில் இருந்து தனித்தன்மையை {விசேஷ மேன்மையை} நாட வேண்டுமேயன்றி, ஒருபோதும் தாழ்ந்தவர்களிடம் அதைச் செய்யக்கூடாது.(24) உண்மையில் தகுதியற்ற {புண்ணியமற்ற} மனிதர்கள், தன்னையே வியந்து பாராட்டிக் கொள்ளும் உணர்வால் நிறைந்து, தங்கள் சிறப்புகள் மற்றும் செல்வாக்கை உறுதி செய்வதன் மூலம் உண்மையான தகுதியுள்ள மனிதர்களை {புண்ணியவான்களை} இகழ்கிறார்கள்.(25)

தன் முக்கியத்துவம் என்ற உணர்வில் பெருகும் இம்மனிதர்கள், (சரியான உணர்வுக்கு மீளும் வகையில்) தங்களோடு எவரும் தலையிடாதபோது, அவர்கள் உண்மையில் தனிச் சிறப்புடைய மனிதர்களைவிடத் தங்களை மேன்மையானவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள்.(26) உண்மை ஞானமும், உண்மையான தகுதிகளையும் கொண்ட ஒருவன், பிறரைக் குறித்து இழிவாகப் பேசுதல் மற்றும் தற்புகழ்ச்சி செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பெரும் புகழை அடைகிறான்.(27) மலர்கள் தங்கள் சிறப்பை ஊதி முழக்காமல், தூய்மையும், இனிமையும் நிறைந்த தங்கள் நறுமணத்தை வீசுகின்றன. பிரகாசமான சூரியனும், முற்றான அமைதிநிலையில் ஆகாயத்தில் தன் காந்தியைப் பொழிகிறான்.(28) அவ்வகையிலேயே, தங்கள் நுண்ணறிவின் துணையுடன் இது போன்ற பிற குற்றங்களைக் களைந்து, தற்சிறப்புகளைப் புகழ்ந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்களே இவ்வுலகில் புகழுடன் சுடர்விடுகிறார்கள்.(29) தன் புகழையே ஊதிக்கொள்ளும் மூடனால் ஒருபோதும் இவ்வுலகில் ஒளிர முடியாது. எனினும், உண்மைத் தகுதியும், கல்வியும் கொண்ட மனிதன், குழிக்குள்ளேயே மறைந்திருந்தாலும் புகழை அடைவான்.(30)

எவ்வகைக் குரல்வளத்தோடு தீய வார்த்தைகள் சொல்லப்பட்டாலும், அஃது உடனே மறைந்துவிடும். நல்ல வார்த்தைகள் எவ்வளவு மென்மையாகச் சொல்லப்பட்டாலும் இவ்வுலகில் சுடர்விடும்.(31) சூரியன் தனது நெருப்பு வடிவத்தை (சூரியகாந்தம் என்றழைக்கப்படும் ரத்தினத்தில்) வெளிக்காட்டுவதைப் போலவே, பகட்டு நிறைந்த மூடர்களால் சொல்லப்படுபவையும் சிற்றறிவைக் கொண்டவையுமான வார்த்தைகள், அவர்களுடைய இதயங்களை (அவற்றின் அற்பத்தனைத்தை) மட்டுமே வெளிப்படுத்தும்.(32) இந்தக் காரணங்களால் மனிதர்கள் பல்வேறு ஞானங்களை அடைய முனைகிறார்கள். ஞானம் தொடர்பாக அடையப்படும் அனைத்தும் மதிப்புமிக்கவையாகவே எனக்குத் தோன்றுகின்றன.(33) ஒருவன் தன்னை எவரும் கேட்காதவரை பேசக்கூடாது; முறையற்ற வகையில் கேட்கப்படும்போதும் பேசக்கூடாது. அவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் கொண்டிருந்தாலும் (பேசுமாறு தன்னை எவரும் கேட்டுக் கொள்ளும் வரை, உரிய முறையில் கேட்கப்படும் வரை) அவன் மூடனைப் போலவே அமர்ந்திருக்க வேண்டும்.(34) அறம், ஈகையில் அர்ப்பணிப்புள்ள நேர்மையாளர்கள் மற்றும் தங்களுக்குரிய வகையின் {வர்ணக்} கடமைகளைச் செய்பவர்கள் ஆகியோருக்கு மத்தியிலேயே ஒருவன் வசிக்க வேண்டும்.(35)

சிறப்பை அடைய விரும்பும் ஒருவன், பல வகையினரின் கடமைகளில் குழப்பங்கள் நேரும் {மக்கள் தங்களுக்குத் தகாத காரியங்களைச் செய்யும்} இடங்களில் ஒருபோதும் வசிக்கக்கூடாது.(36) (வாழ்வாதார வழிமுறைகளை ஈட்டும்) பணிகள் அனைத்தையும் தவிர்த்து, முயற்சியில்லாமல் கிடைத்தவற்றில் நிறைவுடன் வாழும் மனிதனும் இங்கே காணப்படுகிறான். அறவோருக்கு மத்தியில் வாழ்வதன் மூலமே ஒருவன் தூய அறத்தை அடைவதில் வெல்கிறான். அதே வகையில், பாவிகளுக்கு மத்தியில் வாழும் ஒருவன் பாவத்தால் களங்கப்படுகிறான்.(37) நீர், நெருப்பு, நிலவின் கதிர் ஆகியவை தீண்டிய உடனேயே குளிர் அல்லது வெப்பத்தை உணர்த்துவதைப் போலவே, அறம் மற்றும் மறத்தின் சுவடுகளே இன்பதுன்பங்களை உண்டாக்குகின்றன.(38) விகாசத்தை {வேள்வியில் எஞ்சியவற்றை} உண்பவர்கள், தங்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் சுவையைக் கவனிக்காமலேயே உண்கிறார்கள். எனினும், தங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சுவையை வேறுபடுத்திப் பார்த்துக் கவனமாக உண்பவர்கள், இன்னும் செயல்பாட்டு பந்தங்களின் மூலம் கட்டப்பற்றவர்களாகவே அறியப்பட வேண்டும்.(39) எங்கே ஒரு பிராமணர், அறிவின் அடிப்படையில் ஆன்மா குறித்த அறிவை அடைய விரும்பும் சீடர்களிடம் கடமைகளைக் குறித்து உரையாடினாலும், அத்தகைய அறிவை அவர்கள் {சீடர்கள்} மதிக்கவில்லையோ அந்த இடத்தில் இருந்து அறவோன் அகல வேண்டும்[4].(40)எனினும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு முழு இணக்கமாகச் சீடர்கள் மற்றும் ஆசான்களுக்கு இடையிலான நடத்தை இருக்கும் எந்த இடத்தையும்விட்டு யார்தான் விலகிச்செல்வார்?(41) எந்த இடத்தில் கல்விமான்களின்மேல் அடிப்படையற்ற களங்கத்தை மக்கள் சொல்வார்களோ, அந்த இடத்தில் தன் மதிப்பை {சுயகௌரவத்தை} விரும்பும் எந்தக் கல்விமான்தான் இருப்பான்?(42) எங்கே பேராசைமிக்க மனிதர்கள் அறத்தின் எல்லைகளை {அறம் நிலைப்பதற்குரிய தடைகளைத்} தகர்ப்பார்களோ, அந்த இடத்தைவிட்டு ஆடையில் நெருப்பு பற்றியதைப் போல எவன்தான் விலகாமல் இருப்பான்?(43) எங்கே பணிவுடனும், அச்சமில்லாமலும் அறக்கடமைகளைப் பயிலும் மனிதர்கள் இருப்பார்களோ, அந்த இடத்தில் அறமனம் கொண்ட நல்லோருக்கு மத்தியிலேயே ஒருவன் நீடித்து வசிக்க வேண்டும்.(44) எங்கே மனிதர்கள் செல்வத்தை ஈட்டுவதற்காகவும், தற்காலிகமானப் பயன்கள் பிறவற்றிற்காகவும் அறக்கடமைகளைப் பயில்வார்களோ அந்த இடத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாவிகளாகக் கருதப்படுவதால் அங்கே அவன் வசிக்கக்கூடாது. (45)

எங்கே மனிதர்கள் வாழ்வாதாரத்தை அடைய விரும்பி பாவச்செயல்களில் ஈடுபடுவார்களோ, அங்கேயிருந்து அறையில் பாம்பைக் கண்ட ஒருவனைப் போல அவன் மிக வேகமாகத் தப்பிச் செல்ல வேண்டும்.(46) நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், எந்தச் செயலின் விளைவால் முள் படுக்கையில் கிடப்பதைப் போல உணர்வானோ, முற்பிறவிகளின் செயல்களில் பிறந்த ஆசையால் பீடிக்கப்படுவானோ, அந்தச் செயலைத் தொடக்கத்தில் இருந்தே துறக்க வேண்டும்.(47) எந்த நாட்டில் மன்னனும், மன்னனின் அலுவலர்களும் சம அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்களோ, எங்கே (விருந்திற்கு வந்த) உறவினர்களுக்கு உணவூட்டும் முன்பே உண்ணும் வழக்கம் கொண்டோர் இருக்கிறார்களோ, அந்த நாட்டை விட்டு அறவோன் விலக வேண்டும்.(48) சாத்திர அறிவைக் கொண்ட பிராமணர்களுக்கு முதலில் எங்கே உணவூட்டப்படுகிறதோ; எங்கே அவர்கள் அறக்கடமைகளை முறையாகச் செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்களோ, எங்கே அவர்கள் சீடர்களுக்குப் போதித்து, பிறரின் வேள்விகளில் துணை புரிகிறார்களோ அந்த நாட்டிலேயே ஒருவன் வசிக்க வேண்டும்.(49) ஸ்வாஹா, ஸ்வதா, வஷத் ஆகிய ஒலிகள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் எந்த நாட்டில் ஒலிக்கிறதோ, அங்கே ஒருவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் வசிக்கலாம்.(50)

எந்த நாட்டில் நஞ்சூட்டப்பட்ட இறைச்சியைப் போலப் பிராமணர்கள் வாழ்வின் தேவைகளை அடைய முடியாத துன்பத்தில் புனிதமற்ற நடைமுறைகளில் ஈடுபடுவதை ஒருவன் காண்கிறானோ, அந்த நாட்டை விட்டு அவன் அகல வேண்டும்.(51) எந்த நாட்டில் வசிப்பவர்கள் கேட்கப்படுவதற்கு முன்பே உற்சாகமாகக் கொடுக்கிறார்களோ, அந்த நாட்டில் ஓர் அறவோன் தன் விருப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த ஒருவனைப் போல நிறைவான இதயத்துடன் வசிக்க வேண்டும்.(52) எந்த நாட்டில் தீயோர் தண்டிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட தூய ஆன்மா கொண்டோருக்கு நன்மைகள் கிடைக்கிறதோ, அந்த நாட்டில், அறச்செயல்களில் அர்ப்பணிப்புடைய மனிதர்களுக்கு மத்தியில் ஒருவன் வாழ வேண்டும்.(53) எந்த நாட்டில் மன்னன் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளானோ, எங்கே மன்னன் ஆசைகளைக் கைவிட்டு, செழிப்பை அடைந்து, அறவிதிகளின்படி ஆள்கிறானோ, எங்கே தற்கட்டுப்பாடுடைய மனிதர்களிடம் சச்சரவு செய்பவர்களுக்கும், நல்லோரிடம் தீச்செயல் புரிபவர்களுக்கும், வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், பேராசை மிக்கவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த நாட்டில் ஒருவன் எந்தத் தயக்கமுமில்லாமல் வசிக்கலாம்.(54,55)

அத்தகைய மனோநிலை கொண்ட மன்னர்கள், அந்நாட்டில் வசிப்போரின் செழிப்பு குன்றும்போது அந்நாட்டுக்குச் செழிப்பைக் கொண்டுவருவார்கள்.(56) ஓ! மகனே {காலவா}, நன்மையானது, அல்லது சிறந்தது எது என்ற உன் கேள்விக்கு நான் உனக்குப் பதில் சொல்லிவிட்டேன். ஆன்மாவுக்கான நன்மை, அல்லது சிறப்பு எது என்பது மிக உயர்ந்த பண்பைக் கொண்டதாகையால் அது குறித்து எவரும் விளக்க முடியாது.(57) ஒரு மனிதன் இங்கே நேரும் தன் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக மேலே குறிப்பிட்டபடி நடந்து கொண்டு, அனைத்து உயிரினங்களின் நன்மைக்குத் தன் ஆன்மாவை அர்ப்பணித்து, தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பதன் மூலம் அடையும் உயர்ந்த சிறப்புகள் {நன்மைகள்} பலவாகும்” என்றார் {நாரதர்}.(58)

மோக்ஷோபாயங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 289-மனோவுறுதி முதலிய முக்திக்கான வழிமுறைகள் குறித்து சகரனுக்கும், அரிஷ்டநேமிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நம்மைப் போன்ற மன்னர்கள், அடைய வேண்டிய பெரும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இவ்வுலகில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மேலும் அவன், பற்றுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையில் எந்தெந்த குணங்களை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்கதையில் இது தொடர்பாக ஆலோசனை கேட்ட சகரனுக்கு, அரிஷ்டநேமி[1] சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)சகரன் {அரிஷ்நேமியிடம்}, “ஓ! பிராமணரே, எந்த நன்மையைக் கொண்டு ஒருவனால் இம்மையில் பேரின்பத்தை அனுபவிக்க முடியும்? உண்மையில் துன்பத்தையும், கலக்கத்தையும் ஒருவனால் எவ்வாறு தவிர்க்க முடியும்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சகரனால் கேட்கப்பட்டவரும், சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரும், தர்க்ஷிய குலத்தைச் சேர்ந்தவருமான அரிஷ்டநேமி, கேள்வி கேட்பவன் அனைத்து வகையிலும் தன் போதனைகளுக்குத் தகுந்தவன் என்று கருதி இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(4) {அரிஷ்டநேமி}, “இவ்வுலகில் முக்தியால் உண்டாகும் பேரின்பநிலையே உண்மையான பேரின்பமாகும். அறியாமையில் உள்ள மனிதன், பிள்ளைகள் மற்றும் விலங்குகளிடம் கொண்ட பற்றாலும், செல்வம் மற்றும் தானியங்களால் பீடிக்கப்பட்டதாலும் அது குறித்து அறிவதில்லை.(5) உலகப் பொருட்களில் பற்றுடைய புத்தி, தாகத்தால் பீடிக்கப்பட்ட மனம் {எதுவும் வேண்டும் என்ற ஏக்கங்கொண்ட மனம்} என்ற இவை இரண்டும் திறன்மிக்க அனைத்து சீர்திருத்தங்களையும் கலங்கடித்துவிடும். பற்றுகளெனும் சங்கிலிகளால் கட்டப்பட்டு அறியாமையில் உள்ள மனிதன் விடுதலையை {முக்தியை} அடைய இயலாதவனாகிறான்.(6) நான் இப்போது பற்றிலிருந்து பிறக்கும் கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தையும் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன். கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. உண்மையில், ஞானம் கொண்ட ஒருவனால் பொருளுடன் அவற்றைக் கேட்க இயலும்.(7)

{உரிய} காலத்தில் பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் இளைஞர்களானதும் திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டத்தகுந்தவர்கள்தான் என்பது உறுதி செய்துகொண்டு, பற்றுகள் அனைத்தில் இருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு, மகிழ்ச்சியாகத் திரிவாயாக.(8) உன்னால் அன்புடன் பேணிக்காக்கப்பட்ட மனைவி வயதில் முதிர்ச்சியடைந்து, அவள் ஈன்ற மகனிடம் பற்றுடன் இருக்கும்போது, உயர்ந்த பொருளை (விடுதலையை {முக்தியை}) ஈட்டும் நோக்கத்தோடு, {உரிய} காலத்தில் அவளை விட்டு அகல்வாயாக.(9) உனது வாழ்வின் முதன்மையான வருடங்களில் உன் புலன்களைக் கொண்டு அவற்றுக்குரிய பொருட்களை முறையாக அனுபவித்த பிறகு, ஒரு மகனைப் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், பற்றுகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாகத் திரிவாயாக {சுகமாக நடப்பாயாக}.(10) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {போதிய அளவுக்கு} ஈடுபடுத்திய பிறகு, மேலும் மேலும் அவற்றில் ஈடுபடும் விருப்பத்தை நீ அடக்க வேண்டும். பிறகு பற்றுகளில் இருந்து விடுபட்டு, முயற்சி இல்லாமலும், ஏற்கனவே தீர்மானிக்கப்படாமலும், கிடைப்பதில் நிறைவடைந்து, அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களில் சமபார்வையைச் செலுத்தி மகிழ்ச்சியாகத் திரிவாயாக.(11)

ஓ! மகனே, (பற்றுகளில் இருந்து விடுபடும் வழி என்ன என்பதை) இவ்வாறே உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். விடுதலை {முக்தியை} அடையும் விருப்பம் குறித்து இனி உனக்கு விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.(12)

பற்றுகள் மற்றும் அச்சத்தில் இருந்து விடுபட்ட மனிதர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள். எனினும், உலகப் பொருட்களில் பற்றுடைய மனிதர்கள் அழிவடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை.(13) (மனிதர்களைப் போலவே) புழுக்களும், எறும்புகளும் உணவை அடைவதில் ஈடுபட்டு, தேடலிலேயே இறப்பது காணப்படுகிறது. பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள் மகிழ்ச்சியை அடைகிறார்கள், அதே வேளையில் உலகப் பொருட்களில் பற்றுடையோர் அழிவடைகிறார்கள்.(14) நீ விடுதலையை அடைய விரும்பினால், “நானில்லாமல் இவர்கள் எவ்வாறு இருப்பார்கள்?” என்று நினைத்து, ஒருபோதும் உன் உறவினர்களிடம் உன் எண்ணங்களைச் செலுத்தாதே.(15) ஓர் உயிரினம் தானே பிறப்படைந்து, தானே வளர்ந்து, இன்பதுன்பங்களையும், மரணத்தையும் தானே அடைகிறது.(16)

இவ்வுலகில் மக்கள் இன்புற்று, தங்கள் பெற்றோராலோ, தங்களாலோ ஈட்டப்பட்ட உணவு, ஆடை ஆகியவற்றையும், இன்னும் பிற உடைமைகளை அடைகின்றனர். முற்பிறவின் விளைவாலன்றி எதையும் இப்பிறவியில் அடைய முடியாது என்பதால், இது முற்பிறவிச் செயல்களின் விளைவேயாகும்.(17) பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் செயல்களால் பாதுகாக்கப்பட்டு, செயல்களின் கனிகளை வகுப்பவனால் {பரமனால்} விதிக்கப்பட்ட விளைவின் காரணமாகத் தங்கள் உணவை அடைகின்றன.(18) களிமண்கட்டியான மனிதன், பிற சக்திகளையே முழுமையாகச் சார்ந்திருக்கிறான். எனவே, இவ்வளவு உறுதியற்றவனாக இருக்கும் ஒருவனால், தன் உறவினர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு உணவளிப்பதற்கும் அவனிடம் உள்ள அறிவார்ந்த கருத்து {காரணம்} என்ன?(19) உன் உறவினர்களைக் காக்க மிகுந்த முயற்சிகளைச் செய்தும், நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்களைக் காலன் கொண்டு போகும் அந்தக் கணம் மட்டுமே உன்னை விழிப்படையச் செய்யும்.(20)

உன் உறவினர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைக் காத்து, உணவளிக்கும் உன் கடமை முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து, அவர்களை நீ கைவிடக்கூடும்.(21) உன் உறவினர்கள் இவ்வுலகில் இருந்து காலனால் கொண்டு போகப்பட்ட பிறகு, அங்கே அவர்கள் இன்புறுகிறார்களா, துன்புறுகிறார்களா என்பதை உன்னால் அறிய முடியாது.(22) நீ வாழ்ந்திருந்தாலும், இறந்திருந்தாலும், உன் உறவினர்கள் தங்களின் சொந்த செயல்களுடைய கனிகளின் விளைவால், தங்களை இவ்வுலகில் தக்கவைத்துக் கொள்வதில் வெல்லும்போது, உன் நன்மைக்கானதையே நீ செய்ய வேண்டும்[2].(23) அறியப்பட்ட வழக்கம் இதுவே எனும்போது, இந்த உலகில் உள்ள எவனையும் எவனைச் சேர்ந்தவனாகக் கருத முடியும்? எனவே, விடுதலை {முக்தி} அடைவதில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக. மேலும் நான் உனக்குச் சொல்லப் போவதைக் கேள்.(24)பசி, தாகம், அத்தகைய பிற உடல்நிலைகள், கோபம், பேராசை மற்றும் குற்றங்களை வென்றவனும், உறுதிமிக்க ஆன்மா கொண்டவனுமான மனிதன் நிச்சயம் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(25) மடமையினால் சூதாட்டம், குடி, கூத்தியாள் உறவு, வேட்டை ஆகியவற்றில் ஈடுபட்டுத் தன்னை மறக்காதவன் எப்போதும் விடுதலை அடைந்தவன் ஆவான் {முக்தனாவான்}.(26) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் உண்ணும் தேவையின் விளைவால் உண்மையில் கவலையடைபவன், வாழ்வின் களங்கங்களை {குற்றங்களை} நன்கு உணர்ந்தவன் என்று சொல்லப்படுகிறான்[3].(27) பெண்களுடன் நேரும் கலவியால் மட்டுமே மீண்டும் மீண்டும் தனக்குப் பிறவிகள் நேர்கின்றன என்று கவனமான சிந்தனையின் விளைவால் கருதுபவன், பற்றுகளில் இருந்து விடுபட்டவனாகக் கருதப்படுகிறான்.(28) உயிரினங்களின் பிறப்பு, அழிவு, முயற்சி (அல்லது செயல்கள்) ஆகியவற்றின் இயல்பை உண்மையில் அறிந்த மனிதன் நிச்சயம் விடுதலையடைந்தவனே {முக்தனே} ஆவான்.(29) தானியங்கள் நிறைந்த ஆயிரம் கோடி வண்டிகளில், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ள ஒரு கைப்பிடி தானியம் மட்டுமே (தன் ஏற்புக்குத் தகுந்தது) போதுமெனக் கருதுபவனும், மூங்கில் மற்றும் நாணல்களாலான கொட்டகைக்கும், மாளிகைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டில் அலட்சியம் கொள்பவனுமான மனதின் நிச்சயம் விடுதலை அடைவான் {முக்தனாவான்}[4].(30)உலகமானது, மரணம், நோய் மற்றும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காணும் மனிதன் நிச்சயம் விடுதலையடைவான்.(31) உண்மையில், உலகை அவ்வாறு காணும் ஒருவன் நிறைவடைவதில் வெல்வான்; அதே வேளையில், உலகை அத்தகைய ஒளியில் காணத்தவறும் ஒருவன் அழிவையே அடைவான். சிறிதளவில் மட்டுமே மனம் நிறையும் மனிதனும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(32) உண்பவர்களையும், உணவுகளையும் {உண்ணப்படுபவைகளையும்} கொண்டதாக உலகைக் காண்பவனும், மாயையில் பிறக்கும் இன்ப துன்பங்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாக {முக்தனாக} கருதப்படுகிறான்.(33) மஞ்சத்தோடு கூடிய மென்மையான படுக்கையையும், கடினமான தரையையும் ஒன்றாகக் கருதுபவனும், நெல்லரிசியையும், இழிவான அரிசியையும் ஒன்றாகக் கருதுபவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(34) பட்டுத்துணியையும், தர்ப்பையாலான துணியையும் ஒன்றாகக் கருதுபவனும், பீதாம்பரத்தையும், மரவுரியையும் ஒன்றாக மதிப்பவனும், தூய ஆட்டுத் தோலுக்கும் {ஆட்டுமயிர்க்கம்பளத்துக்கும்}, தூய்மையற்ற தோலுக்குமிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(35)

ஐம்பூதக் கலவையின் விளைவெனவே இவ்வுலகைக் காண்பவனும், இக்கருத்தையே முதன்மையாகக் கொண்டு இவ்வுலகில் நடந்து கொள்பவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(36) இன்ப துன்பங்களை ஒன்றாக, ஈட்டல், இழப்புகளை இணையாகக் கருதுபவனும், வெற்றி தோல்வியில் வேற்றுமை பாராட்டாதவனும், விருப்பு வெறுப்புகளை ஒன்றாகக் கொள்பவனும், அச்சம் மற்றும் கவலையில் மாற்றமடையாமல் இருப்பவனுமான மனிதன் முற்றாக விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(37) பல குறைபாடுகளைக் கொண்ட தன் உடலை குருதி, சிறுநீர், மலம் ஆகியவற்றின் திரளாகவும், சீர்கேடுகள் மற்றும் நோய்களின் திரளாகவும் கருதும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(38) முதுமையடையும்போது இவ்வுடலானது, தோல் சுருக்கங்கள், நரை முடிகள், உடல் மெலிவு, நிறக் குறைவு, வடிவச் சீர்குலைவு ஆகியவற்றால் தாக்கப்படும் என்பதை எப்போதும் நினைக்கும் மனிதன் விடுதலை அடைகிறான்.(39) ஆண்மை இழத்தல், கண்பார்வை மங்குதல், செவிட்டுத்தன்மை, பலத்தை இழத்தல் ஆகியவற்றுக்குத் தன்னுடல் ஆட்படும் என நினைக்கும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(40)

முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோரும் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் இருந்து செல்ல வேண்டியவர்களே என்று அறியும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(41) பெரும் பலமும், தாக்கமும் கொண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களும் கூட இந்தப் பூமியில் இருந்து செல்ல வேண்டியிருந்தது என்பதை அறிந்த மனிதன் விடுதலை {முக்தி} அடைவதில் வெல்கிறான்.(42) இவ்வுலகில் பொருட்களை அடைவது எப்போதும் கடினமானது, {அதனால் பெறும்} துன்பம் அதிகமானது, உறவினர்களைப் பராமரிப்பது துன்பத்தையே எப்போதும் தரும் என்பதை அறிந்த மனிதன் விடுதலை அடைகிறான் {முக்தனாகிறான்}.(43) பிள்ளைகள் மற்றும் பிற மனிதர்களின் அபரிமிதமான குறைகளைக் கண்ட எவன் தான் விடுதலையை {முக்தியைப்} புகழ மாட்டான்?(44) சாத்திரங்கள் மற்றும் உலக அனுபவத்தில் மூலம் விழிப்படைந்தவனும், இவ்வுலகின் ஒவ்வொரு மனிதக் கவலையும் நிச்சயமற்றவை என்பதைக் கண்டவனுமான மனிதன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(45) என்னுடைய இந்த வார்த்தைகளை மனத்தில் கொண்டு, இல்லற வாழ்விலோ {கிருஹஸ்தாஸ்ரமத்திலோ}, விடுதலைக்கு வழிவகுக்கும் எந்த வாழ்விலோ {சந்நியாசத்திலோ} உன் புத்தியைக் குழப்பிக் கொள்ளாமல் விடுதலையடைந்த ஒருவனைப் போல உன்னை அமைத்துக் கொள்வாயாக” என்றார் {அரிஷ்டநேமி}[5]. (46)அவரது இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேட்ட அந்தப் பூமியின் தலைவன் சகரன் விடுதலையை {முக்தியை} விளைவிக்கும் ஒழுக்கங்களை அடைந்து, அவற்றின் உதவியோடு தன் குடிமக்களை ஆள்வதைத் தொடர்ந்தான்” என்றார் {பீஷ்மர்}.(47)

சுக்கிராச்சாரியார்! – சாந்திபர்வம் பகுதி – 290-சுக்கிராச்சாரியார் தேவர்களின் பக்கம் சேராமல் அசுரர்களின் நன்மையை நாடிய காரணம்; சுக்கிரன் என்ற பெயர் தோன்றியதற்கான காரணம் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, இந்த ஆவல் எப்போதும் என் மனத்தில் இருக்கிறது. ஓ! குருக்களின் பாட்டா, அது குறித்த அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்.(1) தெய்வீக முனிவரும், கவி என்றும் அழைக்கப்படுபவரும், உயர் ஆன்மா கொண்டவருமான உசனஸ், அசுரர்களுக்கு ஏற்புடையதையும், தேவர்களுக்கு ஏற்பில்லாததையும் செய்வதில் ஏன் ஈடுபட்டார்?(2) தேவர்களின் சக்தியை மங்கச் செய்வதில் அவர் ஏன் ஈடுபட்டார்? தானவர்கள், தேவர்களில் முதன்மையானோரிடம் ஏன் எப்போதும் பகைமையில் ஈடுபட்டனர்.(3) ஒரு தேவனைப் போன்ற காந்தியைக் கொண்ட உசனஸ் என்ன காரணத்தால் சுக்ரன் என்ற பெயரை அடைந்தார்? இக்காரியங்கள் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(4) பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும், அவர் ஏன் ஆகாய மத்தியில் பயணிப்பதில் வெல்லவில்லை? ஓ! பாட்டா, இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்[1].(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இவை அனைத்தையும் உண்மையில் நேர்ந்தபடியே கவனத்துடன் கேட்பாயாக. ஓ! பாவமற்றவனே, நான் கேள்விப்பட்டு, புரிந்து கொண்ட வகையிலேயே இக்காரியங்களைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன்.(6) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், அனைவராலும் கௌரவிக்கப்படுபவரும், பிருகு குலத்தின் வழித்தோன்றலுமான உசனஸ், போதுமான காரணத்திற்காகவே தேவர்களுக்கு ஏற்பில்லாதவற்றைச் செய்வதில் ஈடுபடலானார்[2].(7) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவரான அரசன் குபேரன், அண்டத்தின் தலைவனான இந்திரனுடைய கருவூலத்திற்குத் தலைவனாவான்[3].(8) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பெருந்தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, குபேரனின் உடலுக்குள் நுழைந்து, தமது யோக சக்தியால் அந்தக் கருவூலத் தலைவனின் விடுதலையை {சுதந்திரத்தை} இழக்கச் செய்து, அவனது செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்தார்[4].(9) தன் செல்வம் தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்ட கருவூலத் தலைவன் {குபேரன்} மிகவும் மனம் வருந்தினான். கவலையால் நிறைந்து, கோபத்தால் தூண்டப்பட்ட அவன் தேவர்களில் முதன்மையான மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்றான்.(10)குபேரன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களில் முதல்வனும், கடுமையானவனும், இனிமையானவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனுமான சிவனிடம் இந்தக் காரியத்தை எடுத்துரைத்தான்.(11) அவன், “உசனஸ், யோகத்தினால் ஆன்மத் தூய்மை அடைந்து {தம்மைத் தூய்மையாக்கிக் கொண்டு}, என் வடிவத்திற்குள் {உடலுக்குள்} நுழைந்து, என் சுதந்திரத்தை அபகரித்து, என் செல்வம் அனைத்தையும் அபகரித்துவிட்டார். யோகத்தின் மூலம் என்னுள் நுழைந்த அவர், பின்னர் அதைவிட்டு அகன்றுவிட்டார்” என்றான்.(12)

இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், உயர்ந்த யோக சக்திகளைக் கொண்டவனுமான மஹேஸ்வரன் சினத்தால் நிறைந்தான். ஓ! மன்னா, அவனது கண்கள் குருதிச் சிவப்படைந்து, (உசனஸைத் தாக்கி வீழ்த்துவதற்குத் தயாராக) தன் சூலத்துடன் காத்திருந்தான்.(13)

உண்மையில், அந்த முதன்மையான ஆயுதத்துடன் கூடிய அந்தப் பெருந்தேவன், “அவன் எங்கே? அவன் எங்கே?” என்று கேட்கத் தொடங்கினான்.

அதே வேளையில் மஹாதேவனின் நோக்கத்தை (தமது யோக சக்தியின் மூலம்) உறுதி செய்து கொண்ட உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, தொலைவிலேயே அமைதியுடன் காத்திருந்தார்.(14) உண்மையில், யோக சக்தியில் மேன்மையான உயர் ஆன்ம மஹேஸ்வரனின் கோபத்தை உறுதி செய்து கொண்ட உசனஸ், மஹேஸ்வரனிடம் செல்லலாமா, தப்பிவிடலாமா அல்லது இருந்த இடத்திலேயே இருக்கலாமா என்று சிந்திக்கத் தொடங்கினார்.(15) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஆன்மாவைக் கொண்ட உசனஸ், கடுந்தவங்களின் துணையுடன் மஹாதேவனை எண்ணிப்பார்த்து, மஹாதேவனின் சூல முனையிலேயே தம்மை நிறுத்திக் கொண்டார்.(16) வில் தரித்த ருத்திரன், தவங்களில் வெற்றியடைந்த உசனஸ், தூய ஞானத்தின் வடிவில் தம்மை மாற்றிக் கொண்டு, தன் சூல முனையில் இருப்பதை அறிந்து, அந்த ஆயுதத்தைத் தன் கரத்தால் வளைத்தான்.(17) அளவிலா சக்தி கொண்டவனும், கடுமையான கரங்களைக் கொண்டவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வாறு தன் சூலத்தை (வில்லின் வடிவத்தில்) வளைத்த நேரம் முதல், அந்த ஆயுதம் பிநாகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[5].(18) அந்த உமையின் தலைவன் {சிவன்}, இவ்வாறு தன் உள்ளங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பார்க்கவரை {உசனஸைக்} கண்டு, தன் வாயைத் திறந்தான். பிறகு அந்தத் தேவர்களின் தலைவன், பார்க்கவரைத் தன் வாய்க்குள் வீசி உடனே அவரை விழுங்கிவிட்டான்.(19) பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், பலமிக்கவரும், உயரான்மா கொண்டவருமான உசனஸ், மஹேஸ்வரனின் குடலுக்குள் நுழைந்து அங்கே திரியத் தொடங்கினார்” என்றார் {பீஷ்மர்}.(20)யுதிஷ்டிரன், “ஓ! மன்னா, மேன்மையான புத்திமான்களில் முதன்மையானவனின் குடலுக்குள் திரிவதில் எவ்வாறு உசனஸால் வெல்ல முடிந்தது? அந்தப் பிராமணர் அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் குடலுக்குள் இருக்கையில், அவன் {அந்தத் தேவன்} என்ன செய்தான்?” என்று கேட்டான்[6].(21)பீஷ்மர், “பழங்காலத்தில், மஹாதேவன் (உசனஸை விழுங்கிய பிறகு) நீருக்குள் புகுந்து, பல கோடி வருடங்களுக்கு அங்கேயே அசைவில்லாமல் ஒரு மரக்கட்டையைப் போல (தியோன யோகத்தில் ஈடுபட்டு) இருந்தான்.(22) கடுமையான வகையைச் சார்ந்த அவனது யோகத் தவம் நிறைவடைந்ததும் அந்தப் பெரும் தடாகத்தில இருந்து அவன் எழுந்தான். அப்போது தேவர்களின் ஆதி தேவனான நித்தியமான பிரம்மன் அவனை அணுகி,(23) அவனது தவங்களின் முன்னேற்றத்தையும், அவனது நலத்தையும் குறித்து விசாரித்தான்.

காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவன் {சிவன்}, “என் தவங்கள் நன்கு பயிலப்பட்டன” என்றான்.(24)

நினைத்தற்கரிய ஆன்மா கொண்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான சங்கரன், தன் குடலுக்குள் இருந்த உசனஸ், தன் தவங்களின் விளைவால் இன்னும் மேன்மையடைந்திருப்பதைக் கண்டான்.(25) அந்த முதன்மையான யோகி (உசனஸ்), தவங்களில் கிட்டிய செல்வம் மற்றும் (குபேரனிடம் இருந்து அபகரித்த) செல்வம் ஆகியவற்றால் வளம்பெற்று, பெருஞ்சக்தியுடன் மூவுலகங்களிலும் பிரகாசமாக ஒளிருந்து கொண்டிருந்தார்.(26) இதன் பிறகு, பிநாகைதாரியும், யோகத்தின் ஆன்மாவுமான மஹாதேவன் மீண்டும் தியான யோகத்தில் தன்னை ஈடுபடுத்தினான். எனினும், கவலையால் நிறைந்த உசனஸ் அந்தப் பெருந்தேவனின் குடலுக்குள் திரியத் தொடங்கினார்.(27) தப்பிச் செல்லும் வழியை அறிய விரும்பிய அந்தப் பெருந்தவசி, தாம் எங்கே இருந்தாரோ அங்கேயே இருந்து அந்தத் தேவனின் துதிகளைப் பாடத் தொடங்கினார். எனினும், வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்த ருத்திரன், அவர் வெளியே வருவதைத் தடுத்தான்.(28)

எனினும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பெருந்தவசியான உசனஸ், மஹாதேவனின் குடலுக்குள் இருந்தபடியே, அந்தத் தேவனிடம், “எனக்குக் கருணை காட்டுவாயாக” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார்.(29)

அவரிடம் {உசனஸிடம்} மஹாதேவன், “என் சிறுநீர்க்குழாயின் {சிசினத்தின்} வழியே வெளியேறுவாயாக” என்றான்.

பிறகு, தன் உடலில் இருந்து வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்தான்.(30) அனைத்துப் பக்கங்களிலும் அடைக்கப்பட்டு, வெளியேறக் குறிப்பிடப்பட்ட வழியை அறியாமல், மஹாதேவனின் சக்தியில் எரிந்தபடியே அந்தத் தவசி அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருந்தார்.(31) இறுதியாக வெளியேறும் வழியை கண்டடைந்து, அதன் வழியே வெளியேறினார். இந்தச் செய்தியின் விளைவால் அவர் சுக்கிரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இந்தச் செய்தியின் விளைவாலேயே அவர் (தமது திரிதல்களின் போக்கில்) ஆகாயத்தின் மைய புள்ளிய அடைய முடியாதவரானார்.(32) தன் குடலில் இருந்து வெளியேறி, சக்தியால் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அவரைக் கண்ட பவன் {சிவன்}, கோபத்தால் நிறைந்து, சூலத்தைத் தன் கையில் உயர்த்திப்பிடித்தபடி நின்றான்.(33)

அப்போது உமாதேவி குறுக்கிட்டு உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், கோபம் நிறைந்தவனுமான தன் கணவன் {சிவன்}, அந்தப் பிராமணனைக் கொல்லாதவாறு தடுத்தாள். இவ்வாறு உமை, நோக்கத்தை நிறைவேற்றுவதிலிருந்து தன் தலைவனைத் தடுத்ததன் விளைவால், தவசியான உசனஸ் (அந்த நாள் முதல்) அந்தத் தேவியின் மகனானார்.(34)

தேவி {உமை}, “இந்தப் பிராமணன் இனியும் உம்மால் கொல்லத்தகுந்தவனல்ல. அவன் என் மகனாகிவிட்டான். ஓ! தேவா, உமது குடலுக்குள் இருந்து வெளியேறிய ஒருவனை உமது கரங்களால் கொல்வது தகாது” என்றாள்”.(35)

பீஷ்மர் தொடர்ந்தார், “தன் மனைவியின் இவ்வார்த்தைகளால் தணிவடைந்த பவன் {சிவன்}, ஓ! மன்னா, புன்னகைத்தபடியே, “இவன் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்” என்ற இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(36) வரம் அளித்த மஹாதேவனையும், அவனது மனைவியான உமாதேவியையும் வணங்கியவரும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவருமான பெரும் தவசி உசனஸ், தாம் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் சென்றார்.(37) ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்ட உயர் ஆன்ம பார்க்கவரின் கதையை உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(38)

கர்மபலன்! – சாந்திபர்வம் பகுதி – 291-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன்பிறகு எங்களுக்கு நன்மையானது எது என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! பாட்டா, அமுதம் போல எனக்குத் தோன்றும் உமது வார்த்தைகளால் என் தாகம் தீரவில்லை.(1) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! வரங்களை அளிப்பவரே, எந்த நற்செயல்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட மன்னன் ஜனகன், உயர் ஆன்ம பராசரரிடம் என்ன கேட்டான் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(3)

ஜனகன் {பராசரரிடம்}, “இம்மையிலும், மறுமையிலும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பது எது? இது தொடர்பாக அறியப்பட வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், ஒவ்வொரு அறத்தின் விதிகளையும் அறிந்தவருமான பராசரர்[1], மன்னனுக்கு உதவ விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)பராசரர் {ஜனகனிடம்}, “செயல்களால் ஈட்டப்படும் அறமே இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையைக் கொடுக்கும். அறத்தைவிட உயர்ந்ததேதும் கிடையாது எனப் பழங்காலத்துத் தவசிகள் சொல்லியிருக்கின்றனர்.(6) அறக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனகா}, உடல் கொண்ட உயிரினங்களின் அறமானது, செயல்கள் குறித்து (சாத்திரங்களில் விதிக்கப்பட்ட) விதிகளில் இருக்கிறது. பல்வேறு வாழ்வுமுறைகளில் உள்ள நல்ல மனிதர்கள் அனைவரும், அந்த அறத்திலேயே தங்கள் நம்பிக்கையை நிறுவி தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுகின்றனர்[2].(7) ஓ! குழந்தாய், இவ்வுலகில் நான்கு வகை வாழ்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (கொடைகளை ஏற்கும் பிராமணர்கள்; வரிகளைப் பெறும் க்ஷத்திரியர்கள்; உழவைச் செய்யும் வைசியர்கள், தொண்டாற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வர்ணங்களே அந்த நான்கு வாழ்வு வகைகளாகும்). மனிதர்கள் எங்கே வாழ்கின்றனரோ அங்கே அவர்களை ஆதரிக்கும் வழிமுறைகள் தோன்றுகின்றன.(8) அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களைப் பல்வேறு வழிகளில் நிறைவேற்றும் உயிரினங்கள், ஐம்பூதங்களுக்குள் கரைந்து போகும்போது {தங்கள் அழிவின் போது}, பல்வேறு கதிகளை அடைகின்றன[3].(9) வெங்கலப்பத்திரங்கள், நீர்மமாக்கப்பட்ட தங்கத்திலோ, வெள்ளியிலோ ஊறவைக்கபடும்போது அந்த உலோகங்களின் வண்ணத்தைப் பற்றிக் கொள்வதைப் போலவே முற்பிறவி செயல்களையே முற்றாகச் சார்ந்திருக்கும் ஓர் உயிரினமும், அந்தச் செயல்களின் தன்மையிலிருந்து தன் வண்ணத்தை ஏற்றுக் கொள்கிறது.(10) விதையில்லாமல் ஏதும் முளைக்க முடியாது. மகிழ்ச்சிக்கு வழிவகுக்கவல்ல செயல்களை நிறைவேற்றாமல் எவனும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஒருவனுடைய உடல் (அடிப்படை பூதங்களுக்குள்) கறைந்து போகும்போது (அழிவடையும்போது), அவன் முற்பிறவி நற்செயல்களின் விளைவால் மட்டுமே மகிழ்ச்சியை அடைகிறான்.(11)ஓ! குழந்தாய், ஓர் ஐயுறுவாதி, “விதியின் விளைவெனவோ, முற்பிறவிகளில் செய்த அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களின் விளைவெனவோ இவ்வுலகில் எதையும் நான் காணவில்லை. {அறிந்ததைக் கொண்டு, அறியாததைக் குறித்த கருத்தை அடையும்} ஊகத்தால் இருப்பையோ, விதியின் செயல்பாட்டையோ நிறுவமுடியாது[4]. தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர் (தங்கள் முற்பிறவி செயல்களால் அல்லாமல்) தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே அந்த நிலையை அடைந்தார்கள்.(12) மனிதர்கள் முற்பிறவியில் தாங்கள் செய்த செயல்களை அடுத்தப் பிறவியில் நினைவுகூர்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட பிறவியிலும் அடையப்பட்ட கனிகளை விளக்குவதற்காக, முற்பிறவியில் செய்யப்பட்டதாக நான்கு வகைச் செயல்களின் பெயர்களையே எப்போதும் குறிப்பிடுகின்றனர்[5].(13) வேதங்களையே அதிகாரமாகக் கொண்ட தீர்மானங்கள், இவ்வுலக மனிதர்களின் நடத்தையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும், மனிதர்களின் மனங்களை அமைதியடையச் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஓ குழந்தாய், (ஐயுறுவாதி தொர்ந்து கொண்டிருக்கிறார்), உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் சொல்பவற்றை இவற்றால் பிரதிபலிக்க முடியாது” {என்று ஓர் ஐயுறுவாதி சொல்கிறான்}.(14) இந்தக் கருத்துத் தவறானதாகும். உண்மையில், கண், மனம், நாக்கு மற்றும் தசைகளால் ஒருவன் செய்யும் நான்கு வகைச் செயல்களில் உள்ள கனிகளையே அவன் அடைகிறான்[6].(15)ஓ! மன்னா, ஒரு மனிதன் தன் செயல்களின் கனியாக முழு மகிழ்ச்சியை அடைகிறான், சில வேளைகளில் அதே வளியில் துன்பத்தை அடைகிறான், சிலவேளைகளில் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் சேர்ந்தே அடைகிறான். {செய்யப்படும் செயல்கள்} அறமோ {புண்ணியமோ}, பாவமோ செயல்கள் (அனுபவக்கப்படாமலோ, அவற்றின் கனிகளைத் தாங்கிக் கொள்ளாமலோ) ஒருபோதும் அழிவதில்லை[7].(16) ஓ! குழந்தாய், சிலவேளைகளில் நற்செயல்களால் உண்டாகும் மகிழ்ச்சி மறைக்கப்படும். வாழ்வெனும் கடலில் மூழ்கும் மனிதனின் கவலைகள் மறையும் வரை அது {மகிழ்ச்சி} வெளிப்படாது.(17) கவலை (பொறுத்துக் கொள்வதன் மூலம்) தீர்ந்த பிறகு, ஒருவன் தன் நற்செயல்களை (அதன் கனிகளை) அனுபவிக்கத் தொடங்குகிறான். ஓ மன்னா, நற்செயல்களின் கனிகள் தீர்ந்ததும், பாவச் செயல்களின் கனிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை அறிவாயாக.(18) தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, பொறுமை, சக்தி, நிறைவு, பேச்சில் வாய்மை, பணிவு, தீங்கிழையாமை, வியசனம் என்றழைக்கப்படும் தீச்செயல்களில் இருந்து விடுதலை, புத்திக்கூர்மை ஆகிய இவையே மகிழ்ச்சியை உண்டாக்குபவை.(19) எந்த உயிரினமும், நற்செயல்கள் அல்லது தீச்செயல்களின் கனிகளை நித்தியமாக அனுபவிப்பதில்லை. ஞானம் கொண்ட மனிதன், தன் மனத்தைத் திரட்டுவதிலும், நிலைக்கச் செய்வதிலும் முனைப்பைச் செலுத்த வேண்டும்.(20)ஒருவன் மற்றொருவனின் நற்செயல்களையோ, தீச்செயல்களையோ ஒருபோதும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ முடியாது. உண்மையில், அவன் தான் செய்யும் செயல்களின் கனிகளை மட்டுமே இன்புறவும், பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்.(21) எனினும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்று கொள்வோர் முற்றிலும் வேறுபட்ட பாதையில் நடக்கிறார்கள்.(22) அடுத்தவன் செய்வதால், தானும் நிந்திகக்கூடிய செயலை ஒருவன் செய்யக்கூடாது. உண்மையில், பிறரைக் கண்டிக்கும் செயலைத் தானே செய்வதின் மூலம் அவன் பரிகாசத்தையே ஈட்டுவான்.(23) துணிவற்ற க்ஷத்திரியன், அனைத்து வகை உணவையும் உண்ணும் பிராமணன், (உழவு மற்றும் வர்த்தகக் காரியங்களில்) முயற்சியற்ற வைசியன், சோம்பலுடன் கூடிய (எனவே, உழைப்பை வெறுக்கும்) சூத்திரன், நன்னடத்தை இல்லாத கல்விமான், அறவொழுக்கமற்ற உயர்குடி பிறவி, வாய்மையில் இருந்து வீழ்ந்த பிராமணன், கற்பற்ற, தீய பெண்,(24) பற்றுகளைக் கொண்ட யோகி, தனக்காக மட்டுமே சமைத்துக் கொள்ளும் ஒருவன், விவாதத்தில் ஈடுபடும் மூடன், மன்னன் இல்லாத நாடு, யோகத்தில் ஈடுபடாதவனும், குடிமக்களிடம் பற்றைப் பேணி வளர்க்காதவனுமான மன்னன் ஆகிய இவர்கள் அனைவரும் பரிதாபத்திற்குரியவர்கள்” என்றார் {பராசரர்}.(25)

தற்கட்டுப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 292-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதன் தொடர்ச்சியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

பராசரர் {ஜனகனிடம்}, “மனத்துடன் கூடிய உடலெனும் இந்தத் தேரை அடைந்து, ஞானம் எனும் கடிவாளத்தைக் கொண்டு, புலன்நுகர் பொருட்களெனும் குதிரைகளைக் கட்டுப்படுத்தும் மனிதனை நுண்ணறிவு கொண்டவன் {அவன் புத்திமான்} என நிச்சயம் கருதலாம்.(1) ஓ! மறுபிறப்பாளனே, தற்சார்புடைய மனம் கொண்டவனும், வாழ்வாதார வழிமுறைகளைக் கைவிட்டவனுமான ஒரு மனிதனால் (பரமனிடம் குவிந்த தியானம் மற்றும் பரமனிடம் கொள்ளும் பக்தியின் வடிவில்) செய்யப்படும் வணக்கமுறை மிகுந்தப் பாராட்டுக்குரியதாகும்; அந்த வணக்கமுறையானது, செயல்களைக் கடப்பதில் வென்ற மனிதனிடம் பெறப்பட்ட போதனையின் விளைவால் கிடைப்பதேயன்றி, {ஆன்ம} முன்னேற்றத்தில் ஒரே நிலையில் உள்ள மனிதர்களின் விவாதப் பரிமாற்றத்தால் கிடைப்பதல்ல[1].(2) ஓ! மன்னா {ஜனகனே}, இவ்வளவு கடினத்துடன் குறிப்பிட்ட அளவுக்கான வாழ்நாள் காலத்தை அடைந்து பிறகு, (புலன்களின் ஈடுபாட்டால்) அஃதை ஒருவன் குறைத்துக் கொள்ளக் கூடாது. மறுபுறம், மனிதன் எப்போதும் அறச்செயல்களின் மூலம் படிப்படியாக அடையக்கூடிய முன்னேற்றத்திற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும்[2].(3) ஜீவன் தன் வெவ்வேறு இருப்புக் காலங்களில் ஆறு வெவ்வேறு நிறங்களை அடைந்த பிறகு, மேன்மையான நிறத்தில் இருந்து கீழே விழுபவன் கண்டிப்புக்கும், நிந்தனைக்கும் தகுந்தவனாவான். எனவே, நற்செயல்களின் விளைவை அடைந்த ஒருவன் ரஜஸ் குணத்தால் களங்கமடைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும்[3].(4) மனிதன் செய்யும் அறச்செயல்களின் மூலம் மேன்மையான நிறத்தை அடைகிறான். அடைதற்கரிய மேன்மையான நிறத்தை அடைய இயலாத மனிதன், பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் (நரகில் மூழ்கி, தாழ்ந்த நிறத்தில் வீழ்வதன் மூலம்) தன்னைத் தானே கொன்று கொள்கிறான்.(5)விழிப்பற்ற நிலையிலோ, அறியாமையிலோ செய்யப்படும் பாவம்நிறைந்த செயல்கள் அனைத்தும் தவங்களின் மூலம் அழிக்கப்படுகின்றன. எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவச் செயலானது மிகுந்த துன்பத்தை உண்டாக்குகிறது.(6) எனவே, ஒருவன் கவலையை மட்டுமே கனியாகக் கொண்ட பாவச் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.(7) நுண்ணறிவுமிக்க மனிதன், பாவம் நிறைந்த தன்மையைக் கொண்ட ஒரு செயலானது, பெரும் பயனை விளைவிப்பதாக இருந்தாலும், சண்டாளனைத் தீண்டாத ஒரு தூய மனிதனைப் போல அஃதை {அந்தப் பாவச்செயலை} ஒருபோதும் செய்யமாட்டான்[4].(8) பாவச் செயல்கள் துன்பம் நிறைந்தவையாக இருப்பதையே நான் காண்கிறேன். பாவத்தின் மூலம், பாவியின் பார்வையே வக்கிரமடைவதால் அவன் தன் உடலையும், ஆன்மாவோடு கூடிய உடலின் அங்கங்களையும் சீர்குலைத்துக் கொள்கிறான்.(9) இந்த உலகில் துறவை மேற்கொள்ளாத மூடன், இம்மையில் விடைபெற்றுச் செல்லும்போது பெரும் துன்பத்தால் பீடிக்கப்படுகிறான்.(10)ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனத்துடன் கேட்பாயாக, நிறமற்ற துணி புழுதியடையும்போது, அதைத் தூய்மைப்படுத்தலாம், ஆனால் கருப்புச் சாயம் கொண்ட துணியைத் தூய்மைப்படுத்த முடியாது; பாவத்தின் வழக்கிலும் அதேதான் நேர்கிறது.(11) அறிந்தே பாவமிழைத்த மனிதன், அந்தப் பாவத்தைக் கழிப்பதற்காக அறச்செயல்களைச் செய்தால், அந்த நல்ல மற்றும் தீய செயல்களுக்குண்டான கனிகளைத் தனித்தனியாக அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்[5].(12) பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்}, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு, அறியாமையால் செய்யப்பட்ட தீங்கேற்படுத்தும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களால் கழிக்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள்.(13) எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவத்தை அறத்தால் ஒருபோதும் கழிக்க முடியாது. பிரம்ம சாத்திரங்களை அறிந்தவர்களும், பிரம்மத்தை ஓதுபவர்களுமான மறுபிறப்பாளர்கள் இவ்வாறே சொல்கிறார்கள். அறவோராலோ, பாவிகளாலோ அறிந்தும், அறியாமலும் செய்யப்படும் எந்தச் செயலும் (அவற்றின் கனிகள் அனுபவிக்கப்படாத, அல்லது தாங்கிக் கொள்ளப்படாத வரையில்) எஞ்சியேயிருக்கின்றன என்பதே என் பார்வையாகும்[6].(15)முழு ஆய்வுடன் மனமறியச் செய்யப்பட்ட செயல்கள், அதனதன் பருமை அல்லது நுண்மையின்படி திரளான, அல்லது நுட்பமான கனிகளை விளைவிக்கின்றன[7].(16) எனினும், ஓ! அற ஆன்மா கொண்டவனே {ஜனகனே}, பெரும் தீங்கு நிறைந்த செயல்கள், அறியாமையில் செய்யப்பட்டிருந்தால், அவற்றுக்குண்டான விளைவுகளைத் தவறாமல் உண்டாக்குபவையும், நரகத்திற்கே கூட வழிவகுப்பவையுமான அந்தச் செயல்கள், பொருத்தமற்ற வகையிலான விளைவுகளை {அற்பவிளைவுகளையே} அவனிடம் உண்டாக்கும்.(17) தேவர்கள், அல்லது மதிப்பிற்குரிய தவசிகள் போன்றோரால் செய்யப்படும் (ஐயம் நிறைந்த அல்லது அறமற்ற இயல்பைக் கொண்ட) செயல்களைப் பொறுத்தவரையில், அவற்றை ஓர் அறவோன் செய்யக்கூடாது; கேள்விப்பட்டாலும் அவற்றை நிந்திக்கக்கூடாது.(18) ஓ! மன்னா {ஜனகனே}, தன் திறனைக் குறித்துச் சிந்தித்து உறுதியடைந்து, அறச்செயல்களைச் செய்யும் மனிதன், நிச்சயம் தனக்கான நன்மையை அடைவான்.(19) சுடப்படாத {மண்} பாத்திரத்தில் ஊற்றப்படும் நீரானது படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மொத்தமாக வெளியேறிவிடும். எனினும், அது சுடப்பட்ட பாத்திரத்தில் ஊற்றப்பட்டால், அளவு குறையாமல் அப்படியே எஞ்சி நிற்கும். அதே போலவே, புத்தியின் துணையுடன் சிந்திக்காமல் செய்யப்படும் செயல்கள் நன்மையை விளைவிப்பதில்லை; அதே வேளையில் தீர்மானத்துடன் செய்யப்பட்ட செயல்கள், மங்கா சிறப்புடன் எஞ்சி தங்கள் விளைவாக மகிழ்ச்சியை விளைவிக்கும்.(20)நீருள்ள பாத்திரத்தில் மேலும் நீர் ஊற்றப்பட்டால், அங்கே ஏற்கனவே இருந்த நீரின் அளவு அதிகரிக்கும்; அதே போலவே தீர்மானத்துடன் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், அவை நியாயமானவையாக இருந்தாலும், வேறு வகையில் இருந்தாலும், அறத்தின் {புண்ணியத்தின்} அளவு அதிகரிக்கவே செய்கிறது.(21,22) ஒரு மன்னன், தன் எதிரிகளையும், தங்கள் மேன்மையை உறுதிசெய்ய முனையும் அனைவரையும் அடக்கி, முறையாக ஆண்டுத் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஒருவன், புனித நெருப்பைத் தூண்டி, பல்வேறு வேள்விகளில் அவற்றில் ஆகுதிகளை ஊற்றி, மத்திம வயதிலோ, முதிர் வயதிலோ காடுகளுக்குள் ஓய்ந்து, (இறுதி இரண்டு வாழ்வுமுறைகளைப் பயின்று) அங்கேயே வாழ வேண்டும்.(23) தற்கட்டுப்பாடு, அறவொழுக்கம் ஆகியவற்றைக் கொண்ட ஒருவன், தன்னைப் போலவே பிற உயிரினங்களையும் பார்க்க வேண்டும். மேலும், ஓ! மன்னா, அவன் பெரியோர்களை மதிக்க வேண்டும். வாய்மையும், நன்னடத்தையும் பயில்வதன் மூலம் அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்” என்றார் {பராசரர்}.(24)

அறஞ்செயவிரும்பு! – சாந்திபர்வம் பகுதி – 293-அறம் செய்ய விரும்புவதே மேன்மையடையும் வழி என ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “இவ்வுலகில் உள்ள எவரும், மற்றொருவருக்கு நன்மை செய்வதில்லை. எவரும் பிறருக்குக் கொடையளிப்பதும் காணப்படுவதில்லை. அனைவரும் தங்களுக்காகச் செயல்படுவதே காணப்படுகிறது.(1) மக்கள் அன்பில்லாதவர்களாகும்போது, தங்கள் பெற்றோரையும், தங்கள் உடன் பிறந்தோரையும் கைவிடுவது காணப்படுகிறது. வேறு வட்டங்களைச் சார்ந்த உறவினர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[1](2) புகழ்பெற்றவருக்குக் கொடுக்கப்படும் கொடை, புகழ்பெற்றவரால் கொடுக்கப்படும் கொடைகள் ஆகிய இரண்டும் சமமான தகுதிக்கே {புண்ணியத்திற்கே} வழிவகுக்கும். எனினும், இவ்விரு செயல்களில் கொடையேற்பதைவிடக் கொடையளிப்பது மேன்மையானது[2].(3) உரிய வழிமுறைகளில் அடையப்பட்டு, உரிய வழிமுறைகளில் பெருக்கப்படும் செல்வமானது, அறமீட்டும் நிமித்தமாகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்.(4) அறமீட்ட விரும்புபவன், பிறருக்குத் தீங்கிழைக்கும் வழிமுறைகளில் ஒருபோதும் செல்வத்தை ஈட்டக்கூடாது. ஒருவன் செல்வத்தைப் பற்றார்வத்துடன் தேடாமல், தன் சக்திக்குத்தக்க செயல்களையே செய்ய வேண்டும்.(5)

(தாகத்துடன் கூடிய) விருந்தினருக்கு குளிர்ந்த அல்லது நெருப்பில் சுடப்பட்ட நீரை அர்ப்பணிப்புமிக்க மனத்துடன் கொடுப்பதன்மூலம், பசித்தவனுக்கு உணவிட்ட செயலுக்குரிய தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் ஈட்டுகிறான்.(6) உயர் ஆன்ம ரந்திதேவன், கிழங்குகள், கனிகள் மற்றும் இலைகளைத் தவசிகளுக்குக் காணிக்கையளித்து அவர்களை வழிபட்டதன் மூலம் உலகங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்தான்.(7) சிபியின் அரச மகன் {சிபி எனும் நகரத்தைச் சேர்ந்த மன்னன் [சைப்யன்]}, தோழனுடன் {மாடானுடன்}[3] கூடிய சூரியனுக்கு அதே வகைக் காணிக்கைகளை அளித்து அவனை நிறைவடையச் செய்ததன் மூலம் இன்ப உலகங்களை அடைந்தான்.(8) மனிதர்கள் அனைவரும் பிறவி அடைவதன் மூலம் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் தங்கள் சுயத்திற்குக் கடன்பட்டவர்களாகிறார்கள். எனவே, ஒவ்வொருவரும் அந்தக் கடன்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளத் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.(9) ஒருவன், வேதங்களைக் கற்பதன் மூலம் பெரும் முனிவர்களிடம் தான் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். அவன் வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். சிரார்த்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அவன் பித்ருக்களிடம் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறான். நன்மை செய்வதன் மூலம் சக மனிதர்களிடம் பட்ட கடனை அவன் அடைக்கிறான்.(10)வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், அவற்றின் கருத்தைச் சிந்திப்பதன் மூலமும், வேள்விகளில் எஞ்சியவற்றை உண்பதன் மூலமும், தன் உடலைப் பராமரிப்பதன் மூலமும் ஒருவன் தன் சுயத்திற்கு {ஆன்மாவுக்குப்} பட்ட கடனை அடைக்கிறான். அவன் தன் பணியாட்களுக்குப் பட்ட கடனுக்காகத் தொடக்கத்தில் இருந்தே செயல்கள் அனைத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.(11) மனிதர்கள் செல்வமற்றவர்களாக இருந்தாலும், பெரும் முயற்சிகளின் மூலம்[4] வெற்றியை அடைவது காணப்படுகிறது. முனிவர்கள் தேவர்களை முறையாகத் துதிப்பதன் மூலமும், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை முறையாக ஊற்றுவதன் மூலமும், தவ வெற்றியை அடைவது காணப்படுகிறது.(12) ரிசீகரின் மகன், விஷ்வாமித்திரரின் மகனானான். வேள்விக் காணிக்கைகளில் பங்குகளை {அவிர்ப்பாகங்களைக்} கொண்ட தேவர்களை ரிக்குகளைக் கொண்டு துதிப்பதன் மூலம் அவன் மறுமையில் வெற்றியை அடைந்தான்[5].(13) உசனஸ், தேவர்களின் தேவை நிறைவு செய்ததன் மூலம் சுக்கிரனானார். உண்மையில், (உமா) தேவியின் புகழைத் துதித்தன் மூலம் அவர் ஆகாயத்தில் பெருங்காந்தியுடன் திளைக்கிறார்[6].(14)மேலும், அசிதர், தேவலர், நாரதர், பர்வதர், கக்ஷீவான், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, தூய ஆன்மாவைக் கொண்ட தாண்டியர்,(15) வசிஷ்டர், ஜமதக்னி, விஷ்வாமித்திரர், அத்ரி, பரத்வாஜர், ஹரிசமச்ரு, குண்டாதரர் சுருதச்ரவஸ்(16) ஆகிய இந்தப் பெருமுனிகள், ரிக்குகளின் துணையுடனும், குவிந்த மனங்களுடனும் விஷ்ணுவைத் துதித்ததன் மூலமும், தவங்களின் மூலமும், நுண்ணறிவுடன் கூடிய அந்தப் பெருந்தேவனின் அருளின் மூலமும் வெற்றியை அடைந்தனர்.(17) தகுதியில்லாத பல மனிதர்கள், அந்த நல்ல தெய்வத்தைத் துதித்ததன் மூலம் தனிச்சிறப்பு வாய்ந்த பெரும் நிலையை அடைந்தனர். ஒருவன் தீய அல்லது நிந்திக்கத்தக்க எந்தச் செயலையும் செய்வதன் மூலம் முன்னேற்றத்தை நாடக்கூடாது.(18) அறவழிகளில் ஈட்டப்பட்ட செல்வமே உண்மையான செல்வமாகும். அறமற்ற வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் நிந்தனைக்குரியதாகும். அறமே அழிவற்றதாகும். செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால் அஃது ஒருபோதும் இவ்வுலகில் கைவிடப்படக்கூடாது.(19) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், தேவர்களுக்குத் தன் தினத் துதிகளைக் காணிக்கையாக்குபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதனே அறவோர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, வேதங்கள் அனைத்தும் (தக்ஷிணை, கார்ஹபத்யம், ஆஹவனியம் என்ற) மூன்று புனித நெருப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.(20)

எந்தப் பிராமணன், {குறைவற்ற} செயல்களை முழுமையாகச் செய்வானோ அவன் {அந்த மூன்று நெருப்புகளடங்கிய} புனித நெருப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். செயல்களைச் செய்யாமல் இருப்பவன், அந்தப் புனித நெருப்பைப் பராமரிப்பதைவிட, அஃதை உடனே கைவிடுவதே சிறந்தது[7].(21) புனித நெருப்பும், தாய், பெற்ற தந்தை, ஆசான் ஆகியோரும், முறையாகப் பணிவிடை செய்யவும், பணிவுடன் தொண்டு புரியவும் தகுந்தவர்கள் ஆவர்.(22) செருக்கடையச் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கைவிட்டு, முதியோரிடம் காத்திருந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுபவனும், கல்விமானும், காமம் இல்லாதவனும், அன்பின் கண்ணோடு உயிரினங்கள் அனைத்தையும் பார்ப்பவனும், செல்வமற்றவனும், தன் செயல்களில் அறவோனும், (எவருக்கும்) எத்தீங்கையும் செய்யும் விருப்பம் இல்லாதவனுமான மனிதனே, இவ்வுலகில் உண்மையில் மதிப்பிற்குரிய மனிதனாக நல்லோராலும், பக்திமான்களாலும் வழிபடப்படுகிறான்” என்றார் {பராசரர்}.(23)

வர்ணதர்மங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 294-வர்ணங்களின் கடமைகளையும்; அறத்தைத் தக்கவைத்துக் கொள்ள வர்ணக்கடமைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “தாழ்ந்த வகையினர் {சூத்திர வர்ணத்தார்}, {பிராமண, க்ஷத்திரிய, வைசியர் என்ற} பிற மூன்று வகையினரிடம் தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதே முறையாகும். அன்புடனும், மதிப்புடனும் {பிற வர்ணத்தாரால்} கொடுக்கப்படும் அத்தகைய தொண்டு அவர்களை {சூத்திரர்களை} அறவோராக்கும்.(1) எந்தச் சூத்திரனின் மூதாதையராவது தொண்டில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட, அவன் (தொண்டைத் தவிர) பிற தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. உண்மையில், தொண்டையே அவன் தனது தொழிலாகக் கொள்ள வேண்டும்.(2) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள நல்லோருக்கே துணைபுரிய வேண்டும், ஒருபோதும் தீயோருக்குத் துணை புரியக் கூடாது என்பது என்னுடைய கருத்து.(3)

கிழக்கு மலைகளில் {உதயப் பர்வதத்தில்} உள்ள தங்கமும், உலோகங்களும், சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் பெரும் காந்தியுடன் சுடர்விடுவதைப் போலவே, தாழ்ந்த வகையினரும் நல்லோருடன் கொள்ளும் உறவால் காந்தியுடன் ஒளிர்வார்கள்.(4) வெள்ளைத் துணியானது சாயத்தின் நிறத்தை ஏற்கிறது. சூத்திரர்களின் வழக்கிலும் அவ்வாறே நடக்கிறது[1].(5) எனவே, ஒருவன் நல்ல குணங்கள் அனைத்துடனும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமேயன்றி ஒருபோதும் தீய குணங்களைப் பற்றக்கூடாது. இவ்வுலகில் மனிதர்களின் வாழ்நாள் மிகவேகமானதும், நிலையற்றதுமாகும்.(6)இன்பத்திலும், துன்பத்திலும் நல்லதை மட்டுமே ஈட்டும் ஞானியே உண்மையில் சாத்திரங்களை அவதானிப்பவனாகக் கருதப்படுகிறான்.(7) புத்தியுடைய மனிதன், அறம்பிறழ்ந்த எந்தச் செயலிலும் உயர்ந்த பயன்களே இருந்தாலும், அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அத்தகைய செயல்கள் உண்மையில் நன்மையானதாகக் கருதப்படுவதில்லை.(8) சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களை அபகரித்து, (தகுந்த மனிதர்களுக்கே) கொடையாக அளித்தாலும் கூட, சட்டத்தை மீறும் அம்மன்னன் (அவன் செய்த செயலை உணர்த்தும் வகையிலான) வெற்று ஒலியைத் தவிர (அந்த ஈகையிலிருந்து) வேறு எந்தக் கனியையும் அடையமாட்டான். மறுபுறம் களவு எனும் பாவத்தையே அவன் ஈட்டுகிறான்.(9)

அண்டந்தழுவிய மதிப்புடைய தாத்ரி என்றழைக்கப்படும் ஒருவனைச் சுயம்பு {பிரம்மன்} முதலில் படைத்தான். தாத்ரி அனைத்து உலகங்களையும் தாங்கிப்பிடிப்பதில் ஈடுபடும் ஒரு மகனை {பர்ஜன்யனைப்} படைத்தான்[2].(10) அந்தத் தேவனை {பர்ஜன்யனை} வழிபடும் வைசியன், தன்னை ஆதரித்துக் கொள்வதற்காக உழவிலும், கால்நடை வளர்த்தலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரியர்கள், பிற வகையினர் {பிற வர்ணத்தார்} அனைவரையும் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பிராமணர்கள் அனுபவிக்க மட்டுமே வேண்டும்[3].(11) சூத்திரர்களைப் பொறுத்தவரையில் அவர்கள், வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் பொருட்களைப் பணிவுடனும் நேர்மையுடனும் சேகரிக்கும் பணியிலும், வேள்விகள் செய்யப்பட்ட இடங்களையும் பீடங்களையும் தூய்மைப்படுத்துவதிலும் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வகையினரும் இவ்வழியில் செயல்பட்டால் அறத்திற்கு எக்குறைவும் நேராது.(12)அறம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டால், பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தின் மகிழ்ச்சியைக் காணும் சொர்க்கத்தின் தேவர்கள் மகிழ்ச்சியால் நிறைகிறார்கள்.(13) எனவே தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் பிற வகையினரைப் பாதுகாக்கும் மன்னன் மதிக்கத் தகுந்தவனாகிறான். அதே போல, சாத்திரக் கல்வியில் ஈடுபடும் பிராமணனும், செல்வமீட்டுவதில் ஈடுபடும் வைசியனும்,(14) குவிந்த கவனத்துடன் பிற மூன்று வகையினருக்கும் எப்போதும் தொண்டு செய்வதில் ஈடுபடும் சூத்திரனும் மதிப்புக்குத் தகுந்தவர்களாவர். ஓ! மனிதர்களின் தலைவா, வேறுவழிகளில் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} அறத்தில் இருந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.(15

ஆயிரக்கணக்கான கொடைகளை ஒருபுறம் வைத்தாலும், அறம் சார்ந்து ஈட்டப்பட்டு, துன்பத்துடன் ஒருவன் கொடுக்கும் இருபது சோழிகளே கூட {சோகிகளேகூட / இருபது பணம் கூட} பெரும் நன்மையை விளைவிக்கும். {அவ்வாறெனில் அறம்சார்ந்து ஈட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கொடைகள் எவ்வளவு பெரிய நன்மைகளை விளைவிக்கும்?} (16) ஓ! மன்னா {ஜனகனே}, பிராமணர்களை முறையாக மதித்து அவர்களுக்குக் கொடைகளை அளிக்கும் மனிதர்கள், அந்தக் கொடைகளுக்கு ஒப்பான சிறந்த கனிகளை அறுவடை செய்வார்கள்.(17) கொடையேற்பவரைத் தேடி, உரிய முறையில் அவரைக் கௌரவித்துக் கொடையாளியால் கொடுக்கப்படும் கொடை மதிப்புமிக்கதாகும். வேண்டுதலின் பேரில் கொடையாளி கொடுக்கும் கொடை நடுத்தரமானதாகும்.(18)

எனினும், அவமானப்படுத்தும் வகையில் எந்த மதிப்புமில்லாமல் கொடுக்கப்படும் கொடையானது (தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில்) மிகத் தாழ்ந்ததாகும். உண்மையைச் சொல்லும் தவசிகள் இதையே சொல்கின்றனர்.(19) வாழ்வெனும் பெருங்கடலில் மூழ்கும் மனிதன், பல்வேறு வழிகளின் மூலம் அந்தப் பெருங்கடலைக் கடக்கவே முனைய வேண்டும். உண்மையில், இவ்வுலகக் கட்டுகளில் இருந்து விடுபடும் வகையில் அவன் முயற்சிக்க வேண்டும்.(20) பிராமணன் தற்கட்டுப்பாட்டால் ஒளிர்கிறான்; க்ஷத்திரியன் வெற்றியாலும், வைசியன் செல்வத்தாலும்; சூத்திரன் (மூவகையினுக்கு) தொண்டு புரிவதில் {பணி செய்வதில்} உள்ள புத்திசாலித்தனத்தாலும் மகிமையில் ஒளிர்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(21)

காமகுரோதலோபம்! – சாந்திபர்வம் பகுதி – 295-மனிதர்களின் உடலுக்குள் புகுந்து காமம், குரோதம் மற்றும் லோபத்தைத் தூண்டிய அசுரர்கள்; சிவனிடம் தேவர்கள் செய்த முறையீடு; முப்புரமெரித்த சிவன்; சப்தரிஷிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தோன்றியது; பூமியில் மீண்டும் அறம் தழைத்தது ஆகியவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “கொடையேற்பதன் மூலம் பிராமணனாலும், போரில் வெல்லப்பட்ட வெற்றியால் க்ஷத்திரியனாலும், தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைசியனாலும், பிற மூன்று வகையினருக்கும் தொண்டு செய்வதன் மூலம் சூத்திரனாலும் ஈட்டப்படும் செல்வம், அளவில் சிறியதாக இருப்பினும் புகழத் தக்கதாகும். மேலும் அறமீட்டுவதில் செலவிடப்படும்போது, பெரும் நன்மைகளை அது விளைவிக்கும். பிற மூன்று வகையினருக்கும் சூத்திரனே நிலையான தொண்டாற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(2) வாழ்வின் அழுத்தத்தில், ஒரு பிராமணன் க்ஷத்திரிய, வைசிய வகைகளின் கடமைகளைச் செய்தால், அவன் அறத்தில் இருந்து வீழ்ந்தவனாக மாட்டான். எனினும், ஒரு பிராமணன் தாழ்ந்த வகையின் {சூத்திரனின்} கடமைகளைச் செய்யும்போது, நிச்சயம் அவன் வீழவே செய்கிறான்.(3) ஒரு சூத்திரன், பிற மூன்று வகையினரிடம் செய்யும் தொண்டில் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டமுடியவில்லையெனில், விதிப்படியே அவன் வணிகம், கால்நடை வளர்த்தல், சிற்பக் கலைகள் ஆகிவற்றைப் பின்பற்றலாம்.(4) உலகில் நிந்திக்கத்தக்கவையாகக் கருதப்படுபவையான அரங்க நாடகங்களில் தோன்றுதல், பல்வேறு வடிவங்களில் வேடந்தரித்தல், பதுமையாட்டம் {பொம்மலாட்டம்}, மது மற்றும் இறைச்சி விற்பனை, இரும்பு மற்றும் தோல் விற்பனை ஆகிய தொழில்களில் ஏற்கனவே ஈடுபடாத {தன் முன்னோர்கள் செய்யாத மேற்கண்ட தொழில்களில் இதுவரை ஈடுபடாத} ஒருவன், தன் வாழ்வாதரத்தை ஈட்டுவதற்காக அவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றில் ஈடுபடுவோர், அவற்றைக் கைவிட்டால் பெரும் தகுதியை ஈட்டலாம் என்றே நாம் கேள்விப்படுகிறோம்.(5,6)

வாழ்வில் வெற்றியடைந்தவன், ஆணவம் நிறைந்த மனத்தின் விளைவால் பாவம் நிறைந்தவனாக நடந்து கொள்ளும்போது, அச்சூழ்நிலையில் அவனது செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகின்றன.(7) முந்தைய காலங்களின் மனித இனம் தற்கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அறத்தை அவர்கள் பெரும் மதிப்போடு போற்றியதாகவும்; வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பின்பற்றிய நடைமுறைகள் அனைத்தும், சாத்திர விதிகளுக்கு ஏற்புடையதாக இருந்ததாகவும்; சீ! என்று சொல்வதே அவர்களுக்குரிய ஒரே தண்டனையாக இருந்ததாகவும் புராணங்களில் இருந்து நாம் கேள்விப்படுகிறோம்.(8) ஓ! மன்னா, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அறத்தைத் தவிர மனிதர்களுக்கு மத்தியில் வேறு எதுவும் மெச்சப்படுவதில்லை. அறத்தில் பெரும் முன்னேற்றமடைந்த அந்தக் காலத்து மனிதர்கள், அவர்கள் கண்ட நற்குணங்களை மட்டுமே வழிபட்டனர்.(9) எனினும், ஓ! குழந்தாய், உலகில் அறம் மேலோங்குவதை அசுரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (எண்ணிக்கையிலும், சக்தியிலும்) பெருகிய அசுரர்கள் (காமம் மற்றும் கோபம் என்ற வடிவில்) மனிதர்களின் உடல்களுக்குள் புகுந்தனர்.(10) அப்போதுதான் அறத்தை அழிக்கும் செருக்கு மனிதர்களிடம் உண்டானது. செருக்கில் இருந்து ஆணவமும், ஆணவத்தில் இருந்து கோபமும் எழுந்தன.(11) மனிதர்கள் இவ்வாறு கோபத்தில் மூழ்கியபோது, பணிவுடன் கூடிய நடத்தையும், நாணமும் மறைந்து, அலட்சியப்போக்கு அவர்களை மூழ்கடித்தது.(12)

கவனமின்மையால் பீடிக்கப்பட்ட அவர்களால் முன்பைப் போலப் பார்க்க முடியாததன் விளைவால், அவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல் ஒருவரையொருவர் ஒடுக்குவதன் மூலம் செல்வத்தை அடையத் தொடங்கினர்.(13) மனிதர்கள் இவ்வாறான போது, “சீ” என்று நிந்திக்கும் தண்டனையால் மட்டுமே குற்றவாளிகளிடம் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை. மனிதர்கள், தேவர்களுக்கோ, பிராமணர்களுக்கோ எந்த மதிப்பையும் அளிக்காமல் தங்கள் புலன்களை முழுமையாக {புலன்நுகர் பொருட்களில்} ஈடுபடுத்த தொடங்கினர்.(14) அந்நேரத்தில் தேவர்கள், பொறுமையுடையவனும், பலவடிவத் தன்மை கொண்டவனும் {பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும்}, முதன்மையான குணங்களைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான சிவனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(15) தேவர்கள் தங்கள் இணைந்த சக்தியை அவனுக்குக் {சிவனுக்குக்} கொடுத்தனர், அதன் பேரில் அந்தப் பெருந்தேவன் {சிவன்}, ஆகாயத்தில் வசித்து வந்த ஆசை {காமம்}, கோபம் {குரோதம்}, பேராசை {லோபம்} ஆகிய மூன்று அசுரர்களையும், அவர்களது வசிப்பிடங்களையும் தன்னுடைய ஒரே கணையால் பூமியில் வீழ்த்தினான்[1].(16) கடும் ஆற்றலைக் கொண்டவனும், தேவர்களைப் பீதியடையச் செய்தவனுமான அசுரர்கள் தலைவனும் {மஹாமோஹனும்}, சூலந்தரித்த மஹாதேவனால் கொல்லப்பட்டான்.(17) அசுரர்களின் தலைவன் கொல்லப்பட்டபோது, மனிதர்கள் மீண்டும் தங்கள் முறையான இயல்புகளை அடைந்து, முந்தைய காலங்களைப் போல மீண்டும் வேதகல்வியிலும், பிற சாத்திரங்களைக் கற்பதிலும் ஈடுபடத் தொடங்கினர்.(18)அப்போது பழங்காலத்தின் ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்} முன்வந்து தேவர்களின் தலைவனாகவும், சொர்க்கத்தின் ஆட்சியாளனாகவும் வாசவனை {இந்திரனை} நிறுவினார்கள். மேலும் அவர்கள் மனித இனத்தைத் தண்டிக்கும் தண்டக்கோலைத் தாங்களே தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டனர்.(19) அந்த ஏழு முனிவர்களுக்குப் பிறகு (மனிதர்களை ஆள்வதற்காக) மன்னன் விப்ருதுவும், க்ஷத்திரிய வகையைச் சார்ந்த இன்னும் பல மன்னர்களும் தனித்தனி மனிதக்குழுக்களைத் தனித்தனியாக ஆள்வதற்காக வந்தனர்.(20) (மஹாதேவன் உயிரினங்களின் மனத்தில் இருந்து தீய ஆசைகள் அனைத்தையும் அகற்றிய போது) அந்தப் பழங்காலத்தில் தீய உணர்வுகள் அகலாத குறிப்பிட்ட சில முதியவர்கள் இருந்தனர்.(21) அவர்களுடைய தீய மனநிலையின் விளைவாலும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளாலும், பயங்கர ஆற்றலைக் கொண்ட பல மன்னர்கள் தோன்றி, அசுரர்களுக்குத் தகுந்த செயல்களை மட்டுமே செய்யத் தொடங்கினர்.(22) அதீத மடமை கொண்ட மனிதர்கள் அந்தத் தீயச் செயல்களைக் கடைப்பிடித்து, அவற்றையே அதிகாரமிக்கவையாக நிறுவி, இந்த நாள் வரை அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்[2].(23) ஓ! மன்னா, இந்தக் காரணத்தினாலேயே நான், சாத்திரங்களின் உதவியுடன் முறையாகச் சிந்தித்து, ஒருவன் தீங்கு அல்லது வன்மம் நிறைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்த்து ஆன்ம ஞானம் அடைவதற்கு முயல வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(24) ஞானம் கொண்ட மனிதன், அறச்சடங்குகளைச் செய்வதற்காக நெறிகளைக் கைவிட்டு அறமற்ற வழிகளின் மூலம் செல்வத்தை நாடமாட்டான். அத்தகைய வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் ஒருபோதும் நன்மை பயக்காது.(25)நீ இவ்வகை க்ஷத்திரியனாக வேண்டும். உன் புலன்களை அடக்கி, உன் நண்பர்களுக்கு ஏற்புடையவனாகி, உனது வகைக்கான கடமைகளின்படி உன் குடிமக்கள், பணியாட்கள் மற்றும் பிள்ளைகளைப் பேணி வளர்ப்பாயாக.(26) (மனித வாழ்வில் தோன்றும்) செழுமை மற்றும் வறுமையின் கலவையின் மூலம் நட்புகளும், பகைமைகளும் எழுகின்றன. (ஒவ்வொரு ஜீவனையும் பொறுத்தவரையில்) ஆயிரமாயிரம் இருப்புகள் தொடர்ந்து சுழல்கின்றன, ஜீவ இருப்பின் ஒவ்வொரு நிலையிலும் இவை நேர்ந்தே ஆக வேண்டும்[3].(27) இந்தக் காரணத்தினால் நீ ஒவ்வொரு வகை நற்குணங்களிலும் பற்றுக் கொள்ள வேண்டும், ஒருபோதும் களங்கங்களின் {குற்றங்களில்} பற்றுக் கொள்ளக் கூடாது. எந்த அறமும் அற்றவனும், மிகுந்த மூடனுமான ஒரு மனிதன்கூட, தனது எந்த நல்ல குணத்திற்காகவும் புகழப்படுவதைக் கேட்டால், இன்பத்தால் நிறைவான். நற்குணத்தின் தன்மை இத்தகையதே ஆகும்[4].(28) ஓ! மன்னா, அறமும் {புண்ணியமும்}, பாவமும் மனிதர்களுக்கு மத்தியில் மட்டுமே இருக்கின்றன. இவை மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கு மத்தியிலும் இல்லை.(29) எனவே, உணவுத் தேவையோ, பிற அவசிய தேவைகளோ ஏற்படும்போது, அவற்றைக் கடக்கும் ஒருவன், அற மனநிலையுடனிருந்து, ஞானத்தை அடைந்து, எப்போதும் தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் பார்த்து, எந்த வகைத் தீங்கையும் செய்வதில் இருந்து முற்றாக விலக வேண்டும்.(30) ஒருவனுடைய மனம் ஆசையற்றதாகி, அதனிலிருந்து இருள் அனைத்தும் அகலும்போதுதான் ஒருவன் மங்கலமானதை அடைவதில் வெல்கிறான் {க்ஷேமத்தை அடைகிறான்}” என்றார் {பராசரர்}.(31)

தவம்! – சாந்திபர்வம் பகுதி – 296-பற்றால் விளையும் பேராசை, பேராசையால் நேரும் பாவங்கள், பாவங்களால் நேரும் அழிவு ஆகியவற்றையும்; தவத்தின் மேன்மையையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “இல்லறவாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் செய்ய வேண்டிய கடமை விதிகள் குறித்து நான் இப்போது உனக்குச் சொன்னேன். இனி தவங்களின் விதிகளைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன். இக்காரியத்தைச் சொல்லப்போகிறேன் நீ கேட்பாயாக.(1) ஓ! மன்னா, ரஜஸ் மற்றும் தமஸ் {ஆசை மற்றும் இருள் குணங்கள்}, பற்றிலிருந்து உண்டாகும் “நான்” என்ற அகந்தை {மமதை} ஆகியற்றால் நிறைந்த உணர்வானது இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} இதயத்தில் எழுவது பொதுவாகக் காணப்படுகிறது.(2) இல்லற வாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொள்ளும் ஒருவன், பசுக்கள், வயல்கள், பல்வேறு வகைச் செல்வங்கள், மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பணியாட்களை அடைகிறான்.(3) இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவன், இந்த நோக்கங்களிலேயே தன் கண்களைத் தொடர்ந்து செலுத்துகிறான். இச்சூழ்நிலைகளில் ஒருவனுடைய விருப்பு வெறுப்புகள் அதிகரித்து, (நிலையற்றவையான) தன் உடைமைகளை நித்தியமானவை என்றும், அழிவற்றவை என்றும் கருதுகிறான்.(4) ஓ! மன்னா, ஒருவன் விருப்பு வெறுப்பில் மூழ்கி, உலகப் பொருட்களை ஆள்வதில் வசப்படும்போது, கவனமின்மையிலிருந்து எழும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவனைப் பீடிக்கிறது {பற்றுகிறது}.(5)

இவ்வுலகின் இன்பங்களில் பெரும்பங்கைக் கொண்டிருக்கும் மனிதனே அருளப்பட்டவன் என்று நினைத்து இன்பத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் மனிதன், தன் பற்றின் விளைவால், புலன்களுக்கு நிறைவைத் தரும் காரியங்களைத் தவிர வேறு எந்த இன்பத்தையும் காணாதவனாகிறான்.(6) அத்தகைய பற்றால் விளையும் பேராசையில் மூழ்கும் அவன், தன் உறவினர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முனைந்து, பிறகு அவர்களை நிறைவு செய்வதற்காகத் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையாலும் செல்வத்தைப் பெருக்க முனைகிறான்.(7) பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் நிறையும் அத்தகைய மனிதன், செல்வத்தை அடைவதற்காக, தீமையென அவன் அறிந்த செயல்களைச் செய்து, செல்வத்தை இழக்கும்போது துயரில் வீழ்கிறான்.(8) கௌரவங்களை ஈட்டி, தன் திட்டங்களின் தோல்வியை எப்போதும் தடுக்கும் அவன், இன்பத்திற்கான தன் ஆசையை நிறைவு செய்யும் வழிமுறைகளிலேயே செயல்படுகிறான். இறுதியில், அவன் நாடும் நடத்தையின் தவிர்க்கமுடியாத விளைவாக அழிவை அடைகிறான்.(9) எனினும், புத்தியுடையவர்களும், அழிவற்ற பிரம்மத்தை ஓதுபவர்களும், மங்கலமான, நன்மையான செயல்களை மட்டுமே செய்ய முனைபவர்களும், ஆசையில் இருந்து மட்டுமே எழுபவையும், கட்டாயமற்றவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்களுமானவர்களே உண்மையான இன்பநிலையை அடைகிறார்கள் என்பது நன்கறியப்பட்டதாகும்.(10)

ஓ! மன்னா, பற்றை மையமாகக் கொண்ட அத்தகை பொருட்கள் அனைத்தையும் இழப்பது, செல்வத்தை இழப்பது, உடல்நோய் மற்றும் மனத்துன்பங்களின் வேதனை ஆகியவற்றில் மூலம் ஒரு மனிதன் மனத்தளர்ச்சியில் வீழ்க்கிறான். இந்த மனத்தளர்ச்சியின் மூலம் ஆன்ம விழிப்புணர்வு எழுகிறது. அத்தகைய விழிப்புணர்வில் இருந்து சாத்திரக் கல்வி எழுகிறது. ஓ! மன்னா, ஒருவன் சாத்திரக் கருத்துகளின் சிந்தனையில் இருந்து தவத்தின் மதிப்பைக் காண்கிறான்.(12) எது மிக முக்கியமானது, எது தற்செயலானது என்ற அறிவைக் கொண்ட அரிய மனிதன், ஏற்புடைய மனைவிகள், பிள்ளைகள் ஆகியவற்றைக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது முற்றான துன்பத்திற்கே வழிவகுக்கிறது என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டுத் தவங்களைச் செய்ய முனைகிறான்[1].(13) ஓ! குழந்தாய், தவங்கள் அனைவருக்குமானவை. தாழ்ந்த வகை மனிதர்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) அவை விதிக்கப்பட்டிருக்கின்றன. தவங்கள், தன் புலன்கள் அனைத்தையும் ஆளும் தற்கட்டுப்பாடுடைய மனிதனைச் சொர்க்கத்தின் வழியில் நிறுத்துகின்றன[2].(14) ஓ! மன்னா, பலமிக்கவனான உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவன் {ஹிரண்யகர்ப்பன்}, குறிப்பிட்ட இடைவெளிகளில் நோன்புகளைப் பயின்று, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தவங்களின் மூலமே படைத்தான்.(15)ஓ! குழந்தாய், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அக்னி, அஸ்வினிகள், மருதர்கள், விசுவேதேவர்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்துக்கள்,(16) யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சொர்க்கவாசிகளும், இன்னும் பிற தேவர்கள் அனைவரும் தங்கள் தவங்களின் மூலமே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(17) தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமணர்கள், பூமியை மட்டுமல்லாமல் சொர்க்கத்தையும் தங்கள் தவங்களால் கௌரவித்ததன் மூலம் வெற்றியடைந்து இன்பத்துடன் திரிந்தனர்.(18) மனிதர்களின் இந்த உலகில், மன்னர்களும், உயர் குடியில் பிறந்த இல்லறவாசிகள் பிறர் அனைவரும் தாங்கள் செய்த தவங்களின் விளைவால் மட்டுமே தங்கள் நிலையை அடைந்தனர்[3].(19) அவர்கள் அணியும் பட்டுத்துணிகள், தங்கள் மேனியில் அலங்கரித்துக் கொள்ளும் சிறந்த ஆபரணங்கள், அவர்கள் செலுத்தும் விலங்குகள் மற்றும் வாகனங்கள், அவர்கள் அமரும் இருக்கைகள் ஆகியன அனைத்தும் அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(20)ஆயிரக்கணக்கில் அவர்களால் அனுபவிக்கப்படும் அழகிய பெண்கள் மற்றும் அரண்மனை மாளிகை வாசம் ஆகியவை அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(21) விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், பல்வேறு வகைகளிலான இனிய உணவுப் பொருட்கள் ஆகியவை அறம் சார்ந்து செயல்படுபவர்களின் {நல்வினை செய்பவர்களின்} உடைமைகளாகின்றன.(22) ஓ! எதிரிகளை எரிப்பவனே, தவங்களால் அடைய முடியாத ஏதும் மூவுலகிலும் இல்லை. உண்மை ஞானம் அற்றவர்களும் கூடத் தங்கள் தவங்களின் விளைவால் துறவை வெல்கிறார்கள்[4].(23) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, செழிப்புடன் {மகிழ்ச்சியில்} இருந்தாலும், துன்பத்திலிருந்தாலும் ஒரு மனிதன் சாத்திரங்களை நினைவுகூர்ந்து, தன் புத்தி மற்றும் மனத்தின் துணை கொண்டு பேராசையைக் கைவிட வேண்டும்.(24) நிறைவில்லாமையே துயரை உண்டாக்குகிறது. (பேராசையின் விளைவே நிறைவின்மையாகும்). பேராசை புலன்களின் கலக்கத்திற்கே வழிவகுக்கும். ஒருவனுடைய புலன்கள் கலக்கமடைந்தால், தொடர்ந்து பயன்படுத்தாத ஞானத்தை {வித்தையைப்} போலவே அவனது விவேகம் {பிரஜ்ஞை} காணாமல் போகும்[5].(25)ஒருவனுடைய விவேகம் மறையும்போது, எது சரியானது எது முறையற்றது என்பதை வேறுபடுத்திப் பார்க்க அவன் தவறுகிறான். எனவே, ஒருவனுடைய மகிழ்ச்சி அழியும் (அழிந்து துன்பவசப்படும்) போது அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும்.(26) எது ஏற்புடையதோ அதுவே மகிழ்ச்சி {இன்பம்} என்றழைக்கப்படுகிறது. எது ஏற்பில்லாததோ அது துன்பம் என்று சொல்லப்படுகிறது. தவங்கள் பயிலப்படும்போது {அவற்றின் மூலம்} மகிழ்ச்சியே விளைகிறது. அவை பயிலப்படாத போது, துன்பமே விளைகிறது. தவங்களைப் பயில்வது மற்றும் தவிர்ப்பதால் உண்டாகும் கனிகளைக் காண்பாயாக.(27) களங்கமற்ற தவங்களைப் பயில்வதன் மூலம் மக்கள் எப்போதும் அனைத்து வகை மங்கல விளைவுகளையே அடைந்து, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் புகழை அடைகிறார்கள்[6].(28) எனினும், கனியில் விருப்பத்தால் {பலன் மீது கொண்ட ஆசையால்} அவற்றை (களங்கமற்ற தவங்களைக்) கைவிடும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைக் காரணமாகக் கொண்ட ஏற்பில்லாத விளைவுகள் பலவற்றையும், அவமதிப்பையும், பல்வேறு வகைத் துன்பங்களையும், அவற்றின் கனிகளையும் {பலன்களையும்} அடைவான்.(29) அறம், தவங்கள், ஈகை பயில்வதில் விருப்பமுடைமை இருந்தாலும், தடுக்கப்பட்ட அனைத்து வகைச் செயல்களைச் செய்யும் விருப்பமும் மனத்தில் எழுகிறது. இவ்வாறு பல்வேறு வகைப் பாவச் செயல்களைச் செய்யும் ஒருவன் நரகத்திற்கே செல்கிறான்[7].(30)ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனகனே}, இன்பத்திலும் துன்பத்திலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாத மனிதன் சாத்திரக் கண் கொண்டவன் {சாத்திரநேத்திரமுடையவன்} என்று சொல்லப்படுகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, தீண்டல், நாக்கு {சுவை}, பார்வை {ஒளி}, மணம் மற்றும் கேட்பது {ஒலி} ஆகியவற்றுக்கு உரிய புலன்களின் நிறைவால் ஒருவன் அடையும் இன்பமானது, வில்லால் ஏவப்பட்ட கணை பூமியில் விழுவதற்கு ஆகும் காலம் வரையே நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.(32) குறுகிய காலத்தையே கொண்ட அந்த இன்பம் முடிந்ததும், ஒருவன் மிகக்கூரிய துன்பத்தையே அனுபவிக்கிறான். விடுதலையால் {முக்தியின் மூலம்} விளையும் ஒப்பற்ற நிலையை மூடர்களே மெச்சமாட்டார்கள்.(33) புலன்களின் நிறைவில் உண்டாகும் துன்பத்தைக் காணும் ஞானிகள், விடுதலையை {முக்தி} அடையும் நோக்கில் அமைதி மற்றும் தற்கட்டுப்பாடெனும் நற்பண்புகளை வளர்க்கிறார்கள். அவர்களுடைய அறவொழுக்கத்தின் விளைவால் செல்வத்தாலோ, இன்பத்தாலோ அவர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில் வெல்ல முடியாது.(34) இல்லறவாசிகள் முயற்சியில்லாமல் அடையப்படும் செல்வத்தையும், பிற உடைமைகளையும் எந்தக் கழிவிரக்கமும் இல்லாமல் அனுபவிக்கலாம். எனினும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) அவர்களின் வகைக்கான கடமைகளைப் பொறுத்தவரையில், அவற்றை அவர்கள் முயற்சியின் உதவியுடனே வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து[8].(35)கௌரவம் அடைந்தவர்கள், உயர் குடியில் பிறந்தவர்கள், சாத்திரங்களின் கருத்தை நோக்கியே எப்போதும் தங்கள் கண்களைக் கொண்டவர்கள் ஆகியோரின் நடைமுறைகளை, கட்டுப்பாடில்லாத மனங்களைக் கொண்ட பாவிகளால் ஒருபோதும் பின்பற்ற இயலாது.(36) வீண்தற்பெருமையின் ஆதிக்கத்தில் மனிதனால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அழிவையே அடைகின்றன. எனவே, மதிப்பிற்குரியவர்களுக்கும், உண்மையான அறவோருக்கும் தவத்தைத் தவிர இவ்வுலகில் செய்ய வேறெந்த செயலும் இல்லை[9].(37) எனினும், செயல்களுக்கு அடிமைகளாக இருக்கும் இல்லத்தாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முழு இதயங்களுடன் தங்களை அச்செயல்களில் நிறுவிக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, தங்கள் வகைக்கான கடமைகளைப் பின்பற்று அவர்கள், கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் வேள்விகளையும், அறச்சடங்குகள் பிறவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்.(38) உண்மையில், நதி {ஆற்றின் பெண்பால்} மற்றும் நதங்களான {ஆற்றின் ஆண்பால்} ஆறுகள்[10] அனைத்தும் பெருங்கடலையே தங்கள் புகலிடமாகக் கொள்வதைப் போல, அனைத்து வகைகளைச் சார்ந்த மனிதர்களும், இல்லறத்தானையே புகலிடமாகக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(39)

வர்ண, கோத்திர வேறுபாடு! – சாந்திபர்வம் பகுதி – 297-தவம் குன்றியதால் விளைந்த வர்ண வேறுபாடு; நான்கு வர்ணங்களின் அடிப்படைத் தோற்றம்; வர்ணங்களின் கலப்பால் உண்டான கோத்திரங்கள்; வர்ணங்களுக்குத் தனிச்சிறப்புடைய கடமைகள் மற்றும் வர்ணங்களுக்குப் பொதுவான கடமைகள்; களங்கமேற்படுத்துவது பிறவியா? செயல்களா? போன்றவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் முனிவரே {பராசரரே}, பல்வேறு வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களின் மத்தியில் உள்ள இந்த வர்ண வேறுபாடு எங்கிருந்து வந்தது? இதை நான் அறிய விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) ஒருவன் ஈன்றெடுக்கும் வாரிசு தன் சுயமே ஆகும் என ஸ்ருதிகள் சொல்கின்றன. உண்மையில் பிரம்மனிலிருந்து எழுந்த அனைவரும் பிராமணர்களாகத்தானே இருந்திருக்க வேண்டும். பிராமணர்களில் இருந்து எழுந்த மனிதர்கள் ஏன் அந்தப் பிராமணர்களில் இருந்து வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்?” என்று கேட்டான்.(2)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, நீ சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. ஈன்றெடுக்கப்பட்ட வாரிசானவன் ஈன்றவனைத் தவிர வேறு எவனும் அல்ல. எனினும், தவத்தில் இருந்து வீழ்ந்ததன் விளைவால் பல்வேறு நிறங்களைக் கொண்ட வர்க்க {வர்ண} வேறுபாடுகள் தோன்றின. நிலமும் {தாயும்}, வித்தும் {தந்தையும்} நல்லவையாக {நல்லவர்களாக} இருந்த போது விளைந்த பயிர் {வாரிசானவன்} தகுதிமிக்கதாக {புண்ணியவானாக / பிராமணனாக} இருந்தது {இருந்தான்}. எனினும், நிலமும், வித்தும் வேறுவகையில் அல்லது தாழ்ந்த வகையில் இருக்கும்போது விளையும் பயிர் தாழ்வடைகிறது.(3,4) அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உலகங்களைப் படைக்கத் தன்னை நிறுவிக் கொண்டபோது, சில உயிரினங்கள் அவனது வாயிலிருந்தும், சில அவனது கரங்களில் இருந்தும், சில அவனது தொடைகளில் இருந்தும், சில அவனது பாதங்களில் இருந்து வந்ததைச் சாத்திரங்களை அறிந்தவர்கள் அறிவார்கள்.(5) ஓ! குழந்தாய், இவ்வாறு அவனது வாயிலிருந்து எழுந்தவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவனது கரங்களில் இருந்து எழுந்தவர்கள் க்ஷத்திரியர்கள் என்று பெயரிடப்பட்டார்கள். ஓ! மன்னா, அவனது தொடைகளில் இருந்து எழுந்தவர்கள், செல்வமிக்க வர்க்கமான {வர்ணத்தாரான} வைசியர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இறுதியாக, அவனது பாதங்களில் இருந்து பிறந்தவர்கள் தொண்டாற்றும் வர்க்கமான {வர்ணத்தாரான} சூத்திரர்களாகினர்.(6) ஓ! ஏகாதிபதி, இந்த நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இவ்வாறு படைக்கப்பட்டன. இதற்கு மேலும் உள்ள வர்க்கங்கள் {கலப்புவர்ணங்கள்}, மேலும் மேலும் இவற்றுக்குள் நேர்ந்த கலப்பால் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.(7) ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியர்கள் என்றழைக்கப்படும் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள், அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள், சண்டாளர்கள் ஆகியோர் அனைவரும் உண்மையில் இருந்த நான்கு வகையினர் ஒருவரோடொருவர் கலந்ததால் எழுந்தவர்களாவர்” என்றார் {பராசரர்}[1].(8,9)

ஜனகன் {பராசரரிடம்}, “அனைவரும் பிரம்மனில் இருந்து மட்டுமே எழுந்திருக்கும்போது, மனிதர்களிடம் எவ்வாறு இன {கோத்திர} வேற்றுமை உண்டானது? ஓ! தவசிகளில் சிறந்தவரே, இவ்வுலகில் முடிவில்லா வேற்றுமைகளைக் கொண்ட இனங்கள் {கோத்திரங்கள்} காணப்படுகின்றன.(10) வேற்றுமையற்ற தோற்றம் {பிறப்பைக்} கொண்டிருக்கும்போதும் தவங்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் எவ்வாறு பிராமணர்களின் நிலையை அடைவார்கள்? உண்மையில், தூய கருவறைகளில் பிறந்தவர்களும், தூய்மையற்ற கருவறைகளில் பிறந்தவர்களும் பிராமணர்களாகிறார்களே?” என்று கேட்டான்[2].(11)பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, தவங்களின் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வென்ற உயர் ஆன்ம மனிதர்களின் நிலையானது, அவர்கள் அடைந்த தாழ்ந்த பிறவிகளால் பாதிக்கப்பட்டது என்று கருத முடியாது.(12) ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் பாகுபாடற்ற கருவறைகளில் பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்கு {அந்தப் பிள்ளைகளுக்குத்} தங்கள் தவச் சக்தியின் மூலம் முனிவர்களின் நிலையை அளித்தனர்[3].(13) என் பாட்டா வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர், காசியபர், வேதர், தாண்டியர், கிருபர், காக்ஷீவான், கமடர் மற்றும் பிறரும்,(14) ஓ! மன்னா, யவக்ரீதர், பேசுபவர்களில் முதன்மையான துரோணர், ஆயு, மதங்கர், தத்தர், துருபதர் {திருமதர்}, மாத்ஸ்யர் ஆகியோர் அனைவரும்,(15) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா, தங்கள் தவத்தின் வன்மையால் தங்கள் தங்களுக்குரிய {முனிவர்களின் / பிராமண} நிலைகளை அடைந்தனர்.(16) ஓ! ஏகாதிபதி, முதலில் அங்கிரஸ், கசியபர், வசிஷ்டர் மற்றும் பிருகு என்ற நான்கு {மூலக்} கோத்திரங்கள் (இனங்கள்) மட்டுமே இருந்தன.(17) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, செயல்கள் மற்றும் ஒழுக்கத்தின் விளைவால் காலாகாலத்தில் பல கோத்திரங்கள் இருப்புக்கு வந்தன. அந்தக் கோத்திரங்களின் பெயர்கள், அவற்றை நிறுவியோரின் தவங்களால் உண்டானவையாகும். நல்ல மனிதர்கள் அவற்றை {கோத்திரங்களைப்} பயன்படுத்துகின்றனர்” என்றார் {பராசரர்}[4].(18)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! புனிதமானவரே, பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} சிறப்புக் கடமைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக. அவற்றின் பொதுவான கடமைகளையும் எனக்குச் சொல்வீராக. நீர் அனைத்தையும் அறிந்தவராவீர்” என்றான்.(19)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, கொடைளை ஏற்பது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, சீடர்களுக்குப் போதிப்பது ஆகியன பிராமணர்களின் சிறப்புக் கடமைகளாகும். பிற வகையினரை {வர்ணத்தாரைப்} பாதுகாப்பது க்ஷத்திரியனுக்கு முறையானதாகும்.(20) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியன வைசியர்களின் தொழில்களாகும். ஓ! மன்னா, அதே வேளையில் இந்த (மூன்று) மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவது சூத்திரர்களின் தொழிலாகும்.(21) ஓ! ஏகாதிபதி, நான்கு வகையினரின் {வர்ணத்தாரின்} சிறப்புக் கடமைகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! குழந்தாய், இந்த நான்கு வகையினருக்கும் {பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களுக்கும்} பொதுவான கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(22) கருணை{குரூரத்தன்மையில்லாமை}{1}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்சை}{2}, விழிப்புணர்வு {தவறுதலில்லாமை}{3}, பிறருக்கு உரியவற்றைக் கொடுத்தல் {விலகியிருத்தல்}{4}, இறந்து போன மூதாதையர்களைக் கௌரவிக்கும் வகையில் சிரார்த்தங்கள் செய்தல் {ச்ராத்தகர்மம்}{5}, விருந்தினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய விருந்தோம்பலைச் செய்தல் {அதிதிபூஜை}{6}, வாய்மை {ஸத்தியம்}{7}, கோபத்தை அடக்குதல் {குரோதமில்லாமை}{8},(23) தான் மணந்த மனைவியரிடம் நிறைவடைதல்{9}, (அக மற்றும் புறத்) தூய்மை {சுசியாயிருத்தல்}{10}, வன்மம் இல்லாமை {அஸூயையின்மை}{11}, தன்னறிவு அடைதல் {ஆத்மஜ்ஞானம்}{12}, துறவு {பொறுமை}{13} ஆகிய கடமைகள், ஓ! மன்னா, அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} பொதுவானவையாகும்.(24)

பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் மறுபிறப்பாளர்களாவர் {இரு பிறப்பாளர்கள் / த்விஜர்களாவர்}. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் அனைவருக்கும் இக்கடமைகளில் சம உரிமை உண்டு.(25) ஓ! ஏகாதிபதி, இந்த மூன்று வகையினரும் தங்கள் தங்களுக்குரிய வர்க்கங்களை {வர்ணங்களைச்} சார்ந்த ஏதோவொரு அறவோனை முன்மாதிரியாகக் கொண்டு பெரும் தகுதியை ஈட்டுவதைப் போலவே, தங்களுக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு கடமைகளைச் செய்து துன்பத்தையும் அடைகின்றனர்.(26) சூத்திரன் (தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்வதால்) ஒருபோதும் வீழ்வதுமில்லை, மறுபிறப்புச் சடங்குகளேதும் செய்யத் தகுந்தவனாவதுமில்லை. வேதங்களில் இருந்து வரும் கடமைகளின் நடைமுறைகள் அவனுடையவையல்ல. எனினும், அனைத்து வகையினருக்கும் பொதுவான {மேற்குறிப்பிடப்பட்ட} பதிமூன்று கடமைகளைப் பயில்வதில் இருந்து அவன் தடை செய்யப்படுவதில்லை.(27) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகனே}, ஓ! ஏகாதிபதி, வேதங்களைக் கற்ற பிராமணர்கள், {அறவோனான} ஒரு சூத்திரனைப் பிரம்மனுக்கு இணையானவனாகக் கருதுகிறார்கள். எனினும், நானோ அத்தகைய ஒரு சூத்திரனை உலகங்கள் அனைத்தில் முதன்மையானவனும், அண்டத்தில் பிரகாசிப்பவனுமான விஷ்ணுவாகவே பார்க்கிறேன்[5].(28) தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்த மனிதர்கள், (காமம் மற்றும் கோபம் முதலிய) தீய ஆசைகளை விட விரும்பி நல்லோரின் ஒழுக்கத்தை நோற்றுச் செயல்படலாம்; உண்மையில் அவ்வாறு செயல்படும்போது, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சடங்குகள் அனைத்தையும், அவற்றில் பிற வகையினரால் சொல்லப்படும் மந்திரங்களைத் தவிர்த்து அவற்றை {அந்தச் சடங்குகளைச்} செய்வதன் மூலம் அவர்கள் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறார்கள்.(29) எங்கெல்லாம் தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவர்கள் நல்லோரின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வென்று, அதன் விளைவாக இம்மையிலும், மறுமையிலும் தங்கள் காலத்தை இன்பமாகக் கழிக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(30)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் தவசியே, ஒரு மனிதன் தன் செயல்களால் களங்கமடைகிறானா? அல்லது, அவன் பிறக்கும் வகை அல்லது வர்க்கத்தின் {வர்ணத்தின்} மூலம் களங்கமடைகிறானா? இந்த ஓர் ஐயம் என் மனத்தில் எழுகிறது. இஃதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(31)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டும் களங்கத்தின் மூலங்களே ஆகும். அவற்றின் வேறுபாட்டை இப்போது கேட்பாயாக.(32) பிறப்பால் களங்கமடைந்தாலும், பாவம் செய்யாமல் இருக்கும் மனிதன் பிறவி மற்றும் செயல்களால் உண்டாகும் பாவங்களைத் தவிர்க்கிறான்.(33) எனினும், மேன்மையான பிறவியைக் கொண்ட ஒருவன் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்தால், அச்செயல்கள் அவனைக் களங்கப்படுத்தும். எனவே, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டிலும் (பிறவியை விட) அதிகக் களங்கத்தைச் செயல்களே உண்டாக்குகின்றன” என்றார்.(34)

ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் சிறந்தவரே, இவ்வுலகில் பிற உயிரினங்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காமல் செய்யப்படும் அறச்செயல்கள் என்னென்ன?” என்று கேட்டான்.(35)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! ஏகாதிபதி, மனிதர்களை எப்போதும் மீட்கும் தீங்கில்லா செயல்களைக் குறித்துக் கேட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக.(36) தங்கள் இல்லற நெருப்புகளை ஒருபுறம் வைத்து, உலகப் பற்றுகள் அனைத்தில் இருந்தும் தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்ளும் மனிதர்கள், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறார்கள். படிப்படியாக யோக பாதையில் அடியெடுத்து வைக்கும் அவர்கள், இறுதியாக உயர்ந்த பேரின்ப நிலையை (விடுதலையை {முக்தியைக்}) காண்கிறார்கள். நம்பிக்கையும் பணிவும் கொண்டு, எப்போதும் தற்கட்டுப்பாட்டைப் பயின்று, கூரிய புத்தியுடன், செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்கள் நித்தியமான இன்ப நிலையை அடைகிறார்கள்.(37,38) ஓ! மன்னா, மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் {வர்ணத்தாரும்} இவ்வுலகில் முறையான அறச்செயல்கள், வாய்மை பேச்சு, அறமற்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் சொர்க்கத்திற்கு உயர்கிறார்கள். இதில் எந்த ஐயமும் கிடையாது” என்றார் {பராசரர்}.(39)

மனிதப்பிறவியின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 298-மனிதப்பிறவியின் மேன்மை; அதற்குரிய பல தர்மங்கள் ஆகியவற்றைக் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “அர்ப்பணிப்பற்ற {குணமில்லாத} மனிதர்களுக்கு அவர்களின் தந்தைமார், நண்பர்கள், ஆசான்கள், ஆசான்களின் மனைவியர் ஆகியோரால் தங்கள் அர்ப்பணிப்பில் உள்ள தகுதிகளை {புண்ணியங்களை} அவர்களுக்குக் கொடுக்க இயலாது {இவர்கள் அவர்களுக்குப் பயன்படுவதில்லை}. அத்தகைய பெரியோரிடம் உறுமிக்க அர்ப்பணிப்பைக் கொண்டவர்களும், அவர்களுக்கு ஏற்புடையதைப் பேசுபவர்களும், அவர்களின் நன்மையை நாடுபவர்களும், நடத்தையால் அவர்களுக்கு அடங்கியிருப்பவர்களும் மட்டுமே அர்ப்பணிப்பின் தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியும். (1) தந்தையே தன் பிள்ளைகளுக்குத் தேவர்களில் உயர்ந்தவனாவான். தாயைவிட உயர்ந்தவன் தந்தை எனச் சொல்லப்படுகிறது. ஞானத்தை அடைவதே உயர்ந்த உடைமையாகக் கருதப்படுகிறது. புலன்நுகர் பொருட்களை அடக்கியவர்கள் (ஞானத்தை அடைவதன் மூலம்) உயர்ந்ததை (விடுதலையை {முக்தியை}) அடைகிறார்கள்.(2)

எந்த க்ஷத்திரிய இளவரசன், போர்க்களத்திற்குச் சென்று, அனைத்துத் திசைகளிலும் பறக்கும் நெருப்புக் கணைகளுக்கு மத்தியில் காயமடைந்து அவற்றால் எரிபடுகிறானோ, அவன் தேவர்களால் அடையப்படும் உலகங்களை நிச்சயம் அடைந்து, அங்கே முற்றிலும் நிறைவான சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறான்.(3) ஓ! மன்னா, களைப்படைந்தவனையோ, அச்சமடைந்தவனையோ, ஆயுதம் இல்லாதவனையோ, அழுது கொண்டிருப்பவனையோ, போரிட விருப்பமில்லாதவனையோ, கவசம் தரிக்காதவனையோ, தேர்கள், குதிரை மற்றும் யானை இல்லாதவனையோ, போரிடும் முயற்சியை நிறுத்தியவனையோ, நோயுற்றவனையோ, இடத்தை இரந்து கேட்பவனையோ, இளம் வயதினனையோ, முதிர்ந்தவனையோ ஒரு க்ஷத்திரியன் தாக்கக்கூடாது.(4) கவசம், தேர்கள், குதிரை, யானை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவனும், தன் நிலைக்கு இணையான நிலையைக் கொண்டவனுமான ஒருவனுடனேயே ஒரு க்ஷத்திரியன் போரிட வேண்டும்.(5) இணையானவன் அல்லது மேம்பட்டவனின் கைகளில் நேரும் மரணமே மெச்சத்தக்கது; இழிந்தவன், அல்லது கோழை, அல்லது வறியவனின் கைகளில் நேர்வதல்ல {அவ்வாறு நேரும் மரணம் மெச்சப்படுவதில்லை}. இது நன்கறியப்பட்டதாகும்.(6) பாவி, அல்லது இழி பிறவி, அல்லது தீய நடத்தை கொண்டவன் கைகளில் நேரும் மரணம் மகிமையற்றதும், நரகத்திற்கு வழிவகுப்பதுமாகும்.(7)

வாழ்நாள் காலம் தீர்ந்தவனை எவனாலும் காப்பாற்ற முடியாது. அதே போலவே, வாழ்நாள் காலம் தீராதவனை எவனாலும் கொல்லவும் முடியாது.(8) ஒருவன் தன் அன்புக்குரிய பெரியோர்களை, (தன் நன்மைக்காக) இழி செயல்கள் செய்வதிலிருந்தும், பிறருக்கு தீங்கு செய்யும் செயல்களில் இருந்தும் தடுக்க வேண்டும். அவன் பிறரின் உயிரை எடுப்பதன் மூலம் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பக்கூடாது.(9) புனிதத் தலங்களில் வசித்து மனிதர்களின் கடமைகளை நோற்கும் இல்லறவாசிகள் அனைவரும், தங்களை உயிரைவிட நேரும்போது, புனித ஓடைகளின் கரைகளில் {ஆற்றங்கரைகளில்} தங்கள் உயிரை விடுவதே மெச்சத்தகுந்ததாகும்.(10) ஒருவனுடைய வாழ்நாள் காலம் தீர்ந்ததும், ஐந்து பூதங்களுக்குள் அவன் கறைந்துபோகிறான். சில வேளைகளில் (விபத்துகளின் மூலம்) இது திடீரென நேர்கிறது, சில வேளைகளில் (இயற்கையின்) விளைவுகளால் இது நேர்கிறது.(11)

உடலை அடைந்த ஒருவன், (மகிமையற்ற விபத்தின் மூலம் ஒரு புனிதத்தலத்தில்) அழிவை அடைந்தால், அதே வகையிலான மற்றொரு உடலை அடைகிறான். விடுதலையின் {முக்தியின்} பாதையில் இருந்தாலும் ஒரு பயணியாகும் அவன், ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்குச் செல்லும் மனிதனைப் போல மற்றொரு உடலை அடைகிறான்.(12) அத்தகைய மனிதன் அடையும் இரண்டாம் உடலுக்கு (புனிதத்தலத்தில் அவனது மரணம் நேர்ந்தாலும் கூட) விபத்தாலான அவனது மரணம் மட்டுமே காரணமாகும். அதற்கு இரண்டாம் காரணம் வேறேதும் இல்லை. உடல்படைத்த உயிரினங்கள் (புனிதத்தலங்களில் நேரும் விபத்தாலான மரணத்தின் விளைவால்) அடையும் புதிய உடலானது இருப்பிற்கு வந்து ருத்திரர்கள் மற்றும் பிசாசங்களோடு பற்று கொள்கிறது[1].(13) அத்யாத்மாவை அறிந்த கல்விமான்கள், தோலால் மறைக்கப்பட்டிருக்கும் பெருநரம்புகள், சிறு நரம்புகள், எலும்புக்கூட்டங்கள், தூய்மையற்ற பொருட்கள்கள், ஐம்பூதக் கலவைகள், புலன்கள், ஆசையில் பிறக்கும் புலன்நுகர் பொருட்கள் ஆகியவற்றின் திரட்டே உடல் என்று சொல்கிறார்கள். (உண்மையில்) அழகும், பிற சாதனைகளுமற்ற இந்தத் திரட்டே, முற்பிறவி ஆசைகளின் சக்தியால் மனித வடிவத்தை ஏற்கிறது.(14,15)உரிமையாளனால் {ஆன்மாவால்} கைவிடப்பட்ட உடல் அசைவற்றதாகவும், உயிரற்றதாகவும் {ஜீவனற்றதாகவும்} ஆகிறது. உண்மையில், அடிப்படை உட்பொருட்கள் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளுக்குத் திரும்பும்போது, உடலானது தூசியுடன் கலக்கிறது.(16) செயல்களின் சேர்க்கையால் உண்டான இந்த உடல், அதன் செயல்களால் தீர்மானிக்கப்பட்ட சூழ்நிலைகளிலேயே மீண்டும் தோன்றுகிறது. ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகா}, உண்மையில் எந்தச் சூழ்நிலைகளில் இந்த உடல் அழிவடைகிறதோ, அந்தச் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் மறுபிறவியில், அதன் முற்பிறவி செயல்களின் கனிகளை அஃது அனுபவிப்பதும், தாங்கிக் கொள்வதும் காணப்படுகிறது.(17) ஓ! மன்னா, ஜீவன், தான் வசித்திருந்த உடலின் அழிவுக்குப் பிறகு, உடனே வேறு உடலில் பிறப்பெடுப்பதில்லை.(18) பரந்த மேகத்தைப் போல அது சில காலம் வானத்தில் திரிந்திருக்கிறது. ஓ! ஏகாதிபதி, புதிய கொள்ளிடத்தை அடைந்தபிறகே அது மறுபிறப்பை எடுக்கிறது.(19)

ஆன்மாவானாது மனத்தைவிட உயர்ந்ததாகும். மனமானது, புலன்களைவிட உயர்ந்ததாகும். அசையும் {ஜீவனுள்ள} உயிரினங்களே படைக்கப்பட்ட பொருட்களில் முதன்மையானவையாகும்.(20) அசையும் உயிரினங்களிலும், இரு கால்களைக் கொண்டவை மேன்மையானவையாகும். இரண்டு கால் உயிரினங்களில் மறுபிறப்பாளர்கள் மேன்மையானவர்களாவர்.(21) மறுபிறப்பாளர்களில் விவேகிகள் மேன்மையானவர்களாவர். விவேகிகளில் அன்ம அறிவை அடைபவர்கள் மேன்மையானவர்களாவர். ஆன்ம அறிவை அடைந்தவர்களில் பணிவுள்ளவர்கள் மேன்மையானவர்களாவர்.(22) மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் பிறப்பை மரணம் பின்தொடர்கிறது. இது தீர்மானிக்கப்பட்டதாகும். சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் ஆளுகையில் உள்ள உயிரினங்கள், முடிவைக் கொண்ட செயல்களையே நாடுகின்றன.(23) சூரியன் வடக்கத்திய சாய்வில் {உத்தராயணத்தில்} இருக்கும் போதும், புனிதமான, மங்கலமான காலம் {முகூர்த்தம்} மற்றும் நட்சத்திரத்தின் போதும் அழிவை அடையும் மனிதன் அறவோனாகக் கருதப்படுகிறான்.(24) பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைக் கழுவிக் கொண்டு, தான் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் தன் சக்திக்குத் தக்க செய்து, எந்த மனிதனுக்கும் துன்பத்தைத் தருவதைத் தவிர்த்து, தானாக நேரும் வேளையில் மரணத்தை அடைபவன் அறவோனாவான்.(25)

நஞ்சு உட்கொண்டு, தூக்கிட்டு, எரித்துக் கொண்டு, கள்வர்களின் கரங்களில், விலங்குகளின் பற்களில் மரணத்தை அடையும் ஒருவன் மகிமையற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(26) அறவோர், மிகுந்த வேதனைகளைத் தரும் வகையிலான மன மற்றும் உடல் நோய்களால் பீடிக்கப்பட்டாலும், இத்தகைய மரணங்களை அடைவதில்லை.(27) ஓ! மன்னா, அறவோரின் உயிர்கள் {ஜீவன்கள்}, சூரியனைத் துளைத்துக் கொண்டு, பிரம்மலோகங்களுக்கு உயர்கின்றன. அறமற்றோர் மற்றும் பாவிகளாக இருந்தோரின் உயிர்கள் {ஜீவன்கள்} நடு உலங்களில் திரிந்து கொண்டிருக்கின்றன. பாவிகளின் உயிர்கள் அடி ஆழங்களில் {பாதாளங்களில்} மூழ்கிப் போகின்றன. (மனிதனுக்கு) ஒரேயொரு எதிரிதான் உண்டு, மற்றொன்றில்லை. ஓ! மன்னா, அந்த எதிரியானது அறியாமையாகும். அதனால் மூழ்கடிக்கப்பட்ட ஒருவன், அச்சம் நிறைந்த, மிக் கொடூரச் செயல்களைச் செய்ய வழி நடத்தப்படுகிறான்.(28,29) ஓ! மன்னா, எந்த எதிரி ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் படி பெரியோர்களிடம் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} மூலம் ஒருவனின் சக்திக்குள் அடக்கப்பட வேண்டுமோ, எந்த எதிரியை நிலையான முயற்சிகளைத் தவிர வேறு எதனாலும் வெல்ல முடியாதோ, அந்த எதிரி {அறியாமை} ஞானம் எனும் கணைகளின் மூலம் மட்டுமே நொறுக்கப்படுகிறது.(30)

தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன் முதலில் பிரம்மச்சாரியாகி வேதங்களைப் பயின்று, நோன்புகளை நோற்க வேண்டும். அதன் பிறகு அவன் இல்லற வாழ்வுமுறையில் {கிருஸ்தாஸ்ரமத்தில்} நுழைந்து வழக்கமான வேள்விகளைச் செய்ய வேண்டும். தன் குலத்தை நிறுவிய பிறகு அவன் காட்டுக்குள் நுழைந்து, தன் புலன்களை அடக்கி, விடுதலையை {முக்தியை} வெல்ல விரும்ப வேண்டும்.(31) ஒருவன் ஒவ்வொரு இன்பத்தையும் தவிர்ப்பதன் மூலம் தனது ஆண்மையை ஒருபோதும் நீக்கிக் கொள்ளக் கூடாது. ஒருவன் சண்டாளனாகவே ஆனாலும், அனைத்துப் பிறவிகளிலும் மனித நிலையே அவனுக்கு விரும்பத்தக்கதாகும்.(32) ஓ ஏகாதிபதி, உண்மையில் மனிதனானால் தகுதிமிக்கச் செயல்களின் மூலம் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என்பதால் அந்த வகை (மனிதப்) பிறப்பே முதன்மையானதாகும்.(33) மனித நிலையில் இருந்து வீழ்ந்து விடக்கூடாது என்பதாலே மனிதர்கள் ஸ்ருதிகளின் அதிகாரத்தால் வழிநடத்தப்படும் அறச்செயல்களை எப்போதும் செய்கிறார்கள்.(34) அடைதற்கரிய மனித நிலையை அடைந்த எந்த மனிதன், வன்மத்தில் ஈடுபட்டு, அறவோரை அவமதித்து, ஆசையின் வசப்படுகிறானோ, அவன் நிச்சயம் தன் ஆசைகளால் வஞ்சிக்கப்படுவான்.(35) எந்த மனிதன் அன்பால் வழிநடத்தப்பட்ட கண்களுடன் அனைத்து உயிரினங்களையும் அன்பால் வளர்க்கத்தகுந்தவை என்று கருதுவானோ, எவன் அனைத்து வகைச் செல்வங்களையும் அலட்சியம் செய்வானோ,(36) எவன் அவற்றுக்கு ஆறுதல் அளித்து, உணவளித்து, ஏற்புடைய வார்த்தைகளைச் சொல்வானோ, எவன் அவற்றின் மகிழ்ச்சியில் மகிழ்ந்தும், துயரில் துன்புறுவானோ, அவன் மறுமையில் ஒருபோதும் துன்புறமாட்டான்.(37)

ஒருவன் சரஸ்வதி {சரஸ்வதி ஆறு}, நைமிசக்காடு {நைமிசவசன்}, புஷ்கரை நீர்நிலைகள் மற்றும் உலகில் உள்ள புனிதத்தலங்கள் அனைத்திற்கும் சென்று, கொடைகளை அளித்து, துறவைப் பயின்று, இனிய குணங்களைக் கொண்டு, நீராடல்கள் மற்றும் தவங்களின் மூலம் தன் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.(38) தங்கள் வீடுகளுக்குள்ளேயே மரணத்தை அடையும் மனிதர்களின் உடல்களுக்கு ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டும். சுடலைக்கு {சுடுகாட்டுக்கு} வாகனங்களின் எடுத்துச் செல்லப்படும் அவர்களது உடல்கள் {சடலங்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளின் படி அங்கே எரிக்கப்பட வேண்டும்.(39) அறச்சடங்குகள், நன்மைக்கான விழாக்கள், வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, கொடைகள், தகுதிமிக்கப் பிற செயல்களைச் செய்வது, இறந்து போன தன் முன்னோர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் தன் சக்திக்குத்தக்க செய்வது ஆகிய அனைத்தையும் ஒருவன் தன் {ஆன்ம} நன்மைக்காகவே செய்கிறான்.(40) ஓ !மன்னா, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களும், பிற சாத்திரங்களும், களங்கமற்ற செயல்களைக் கொண்ட ஒருவனின் நன்மைக்காகவே உண்டாகின” என்றார் {பராசரர்}”.(41)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, இவை அனைத்தும் விதேஹர்களின் ஆட்சியாளனுடைய {ஜனகனின்} நன்மைக்காக உயர் ஆன்ம தவசியால் {பராசரரால்} அவனுக்குச் சொல்லப்பட்டவையாகும்”.(42)

முக்திக்கான வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 299-முக்திக்கான வழிமுறைகள் குறித்து ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், அனைத்துக் கடமைகளிலும் குறிப்பிட்ட அறிவை கொண்ட உயர் ஆன்ம பராசரரிடம் மீண்டும் கேள்வி கேட்டான்.(1)ஜனகன் {பராசரரிடம்}, “எது நன்மையை விளைவிக்கும்? (உயிரினங்களுக்கு) எது சிறந்த பாதை? {அடையும் பொருளில் எது} எந்தச் சாதனை ஒருபோதும் அழிவடையாதது? எந்த இடத்திற்குச் சென்ற பிறகு ஒருவன் திரும்ப வேண்டியதில்லை? ஓ! உயர்ந்த புத்தியைக் கொண்டவரே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பராசரர் {ஜனகனிடம்}, “(பற்றுகளில் இருந்து) தொடர்பறுத்துக் கொள்வதே நன்மைக்கான வேர் ஆகும். அறிவே உயர்ந்த பாதை. பயின்ற தவங்கள் ஒருபோதும் அழிவடைவதில்லை. தகுந்தோருக்கு அளிக்கப்படும் கொடைகளும் தொலைந்துபோவதில்லை.(3) பாவத்தின் கட்டுகளை ஒருவன் உடைக்கும்போது, அவன் அறத்தில் இன்பம் கொள்ளத் தொடங்குகிறான். ஒருவன் கொடைகள் அனைத்திலும் உயர்ந்த கொடையான அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிமொழியை எடுக்கும்போது, அவன் வெற்றியை அடைகிறான்.(4) (தகுந்த மனிதர்களுக்கு) ஆயிரம் பசுக்களையும், நூறு குதிரைகளையும் கொடையளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதி மொழியை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களிடமிருந்தும் பதிலுக்குத் தீங்கிழையாமையையே உறுதிமொழியாகப் பெறுகின்றனர்.(5) அனைத்துவகைச் செல்வம் மற்றும் இன்பங்களின் மத்தியில் வாழும் ஒருவன், புத்தி அருளப்பட்டவனாக இருந்தால், அவற்றோடு வாழமாட்டான்; புத்தியில்லாதவனோ நிலையற்றவையான இன்பப் பொருட்களிலேயே முழுமையாக வாழ்கிறான்.(6) தாமரை இலையை நனைக்க முடியாத நீரைப் போல ஞானியிடம் பாவத்தால் ஒட்ட முடியாது. மரத்தோடு உறுதியாக ஒட்டிக் கொள்ளும் அரக்கைப் போலப் பாவமானது புத்தியில்லாதவனிடம் உறுதியாக ஒட்டிக் கொள்கிறது[1].(7)பலன்களைத் தாங்கிக் கொள்ளாமல் {அனுபவிக்காமல்} தீர்ந்துபோகாத பாவமானது, அதைச் செய்தவனை ஒருபோதும் விடுவதில்லை. அதேபோல, பாவம் செய்தவனும், நேரம் வரும்போது அதனிலிருந்து எழும் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவே வேண்டும்.(8) எனினும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், பிரம்மத்தின் இருப்பை உணர்ந்தவர்களும், தங்களுடைய செயல்களின் கனிகளால் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(9) அறிவு மற்றும் செயற்புலன்களை {ஞானகர்மேந்திரியங்களைப்} பொறுத்தவரையில் அவற்றில் கவனமில்லாதவனும், தன் தீச்செயல்களை அறிந்து கொள்ளாதவனும், நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டிலும் இதயப்பற்று கொண்டவனும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.(10) எப்போதும் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனும், கோபத்தை முழுமையாக அடக்கியவனுமான ஒருவன், உலகம் சார்ந்த பொருட்களில் இன்புற்று வாழ்ந்திருந்தாலும் பாவத்தால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(11) ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட மதில் {அணை} அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்வரை, நீரைப் பெருகச் செய்வதைப் போலவே, இன்ப நுகர் பொருட்களில் பற்றில்லாத மனிதன், சாத்திர வரையறைகளுடன் கூடிய அறமென்ற மதிலை உண்டாக்கிக் கொண்டு ஒருபோதும் தளர்வுறாமல் இருக்கிறான். மறுபுறம், அவனது தகுதிகளும், தவங்களும் அதிகரிக்கின்றன[2].(12)(சூரிய காந்தம் என்றழைக்கப்படும்) தூய ரத்தினமானது தன்னைத் தானே உறிஞ்சி ஈர்த்துக் கொள்வதைப் போலவே, சூரியக் கதிர்களை ஆளும் விதியின் படியே, குவிந்த கவனத்தின் {தியானத்தின்} உதவியுடன் யோகமானது விளைகிறது[3].(13) எள் வித்துகள், (நறுமணமிக்க) மலர்களுடன் மீண்டும் மீண்டும் கலப்பதன் விளைவால் மிகுந்த ஏற்புடைய குணத்தை அடைவதைப் போலவே, சத்வ குணமும் மனிதர்கள் எந்த அளவுக்குத் தூய ஆன்மாக்களைக் கொண்ட பிற மனிதர்களோடு பழகுகிறார்களோ அந்த அளவுக்கு {அவர்களிடம் சத்வ குணம்} உண்டாகிறது.(14) ஒருவன் சொர்க்கவாசத்தை விரும்பும்போது, அவன் தன் மனைவியர், செல்வம், பதவி, வாகனங்கள், பல்வேறு வகை நற்செயல்கள் ஆகியவற்றைக் கைவிடுகிறான். உண்மையில், ஒருவன் அத்தகைய மனநிலையை அடையும்போது, அவனது புத்தியானது, புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(15) (மறுபுறம்) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட புத்தியோடு கூடிய மனிதன், தனக்கான நன்மை எது என்பதைக் காண்பதில் குருடனாகி, தூண்டிலிலுள்ள இறைச்சியைக் கண்ட மீனை (மீனானது அழிவால் இழுத்துச் செல்லப்படுவதைப்) போல உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிடமும் தன் இதயத்தால் இழுத்துச் செல்லப்படுகிறான்.(16)பல்வேறு அங்கங்களாலான உடலைப் போல மரணமடையக்கூடிய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தே நீடித்திருக்கின்றன. அவை ஒரு வாழைத்தண்டைப் போலவே வீரியமற்றவையாக இருக்கின்றன. (தற்சார்புடன் இருக்க விட்டால்) அவை (பலவீனமான பொருட்களாலான) ஒரு படகைப் போல இந்த உலகப் பெருங்கடலில் மூழ்குகின்றன[4].(17) அறமீட்டுவதற்குக் குறிப்பிட்ட நேரம் என்று ஏதும் கிடையாது. மரணம் எந்த மனிதனுக்காகவும் காத்திருக்காது. மனிதன் தொடர்ந்து மரணத்தின் {காலனின்} கோரப்பற்களை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்போது, அனைத்து நேரங்களிலும் அறச்செயல்களைச் செய்வது முறையானதே.(18) கவனத்துடன் இருக்கக்கூடிய ஒரு குருட்டு மனிதனால் தன் சொந்த வீட்டுக்குள் உலவமுடிவதைப் போலவே, யோகத்தில் நிலைத்த மனம் கொண்ட ஞானியானவன், (தான் பின்பற்ற வேண்டிய) பாதையில் செல்வதில் வெற்றியடைகிறான்.(19) பிறப்பின் விளைவால் மரணம் எழுவதாகச் சொல்லப்படுகிறது. பிறவியானது மரணத்தின் ஆளுகைக்கு உள்ளடங்கியதே. விடுதலையின் {முக்தியின்} கடமை நடைமுறைகளை அறியாத ஒருவன், விதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாதவனாகப் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் சக்கரமாகச் சுழல்கிறான்.(20)புத்தியால் பரிந்துரைக்கப்பட்ட பாதையில் நடக்கும் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை ஈட்டுகிறான். விரிவானவை துன்பத்தில் நிறைந்திருக்கின்றன, அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை என்று சொல்லப்படுகிறது. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்ம மகிழ்ச்சியை விளைவிப்பதாகும்[5].(21) தாமரைத்தண்டு தன்னுடன் கூடிய சேற்றை விரைவாக விட்டகல்வதைப் போலவே, ஆன்மாவானது மனத்தை வேகமாகக் கைவிடுகிறது[6].(22) மனமே முதலில் ஆன்மாவை யோகத்தை நோக்கிச் செலுத்துகிறது. பிறகு யோகம் மனத்தினுள் கலக்கிறது. ஆன்மா யோகத்தில் வெற்றியடையும்போது, குணங்களற்ற தன் சுயத்தைப் பார்க்கிறது[7].(23) புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில் ஈடுபட்டு, அத்தகையே ஈடுபாட்டைத் தன்னுடைய பணியெனக் கருதும் ஒருவன், அந்தப் பொருட்களில் அவன் கொண்ட இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால் தன்னுடைய உண்மையான பணியில் இருந்து வீழ்கிறான்.(24) ஒரு ஞானியின் ஆன்மாவானது, அதன் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தில் உயர்ந்த இன்பநிலையை அடையும் அதே வேளையில், ஞானமில்லாத ஒருவன் மிகுந்த ஆழத்தில் மூழ்குகிறான், அல்லது இடைநிலை உயிரினங்களுக்கு மத்தியில் பிறப்பை அடைகிறான்.(25)சுடப்பட்ட மண் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரானது, ஒழுகாமல் குறைவில்லாமல் அங்கேயே எஞ்சியிருப்பதைப் போலவே, கடுந்தவங்களுக்கு உள்ளான ஒருவடைய உடலானது, (பிரம்மலோகத்தில் உள்ள) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் (மறுக்காமல்) அனுபவிக்கிறது.(26) அதே போல உலகம் சார்ந்த பொருட்களை அனுபவிக்கும் மனிதனால் ஒருபோதும் விடுதலை {முக்தியை} அடைய முடியாது. மறுபுறம், (இவ்வுலகில்) அத்தகைய பொருட்களைக் கைவிடும் மனிதன், இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(27) பிறவிக் குருடனான ஒருவன், தன் வழியைக் காண இயலாததைப் போலவே ஒளிபுகாத கூட்டுக்குள் மறைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவுடன் கூடிய ஒரு புலனின்பவாணன், மூடுபனியால் சூழப்பட்டு (தான் அடைய வேண்டிய உண்மைப் பொருளைக்) காணத் தவறுவதே காணப்படுகிறது.(28) வணிகன் கடலோடி தங்கள் மூலதனத்திற்குத் தகுந்த இலாபங்களை ஈட்டுவதைப் போலவே, மனிதர்களின் இந்த உலகில் உள்ள உயிரினங்களும், தங்கள் தங்களுக்குரிய செயல்களின்படியே தங்கள் கதிகளை அடைகின்றன.(29) காற்றை விழுங்கும் பாம்பைப் போலவே, காலனும் முதுமையெனும் வடிவில் பகல்களாலும், இரவுகளாலும் ஆன இந்த உலகில் திரிந்து அனைத்து உயிரினங்களையும் விழுங்குகிறான்.(30)

ஓர் உயிரினம், பிறக்கும்போது, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறது. ஒருவனுடைய முற்பிறவிகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாக அல்லாமல் ஏற்புடைய, அல்லது ஏற்பில்லாத எதையும் ஒருவன் அனுபவிப்பதோ, தாங்கிக் கொள்வதோ இல்லை.(31) கிடந்தாலும், நடந்தாலும், சும்மா அமர்ந்தாலும், தன் தொழில்களில் ஈடுபட்டாலும், ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், (முற்பிறவிகளில் அவன் செய்த) நல்ல மற்றும் தீய செயல்களே அவனை எப்போதும் அணுகுகின்றன.(32) பெருங்கடலின் மறுகரையை அடைந்த ஒருவன், தான் எங்கிருந்து பயணித்து வந்தானோ அதே இடத்திற்குத் திரும்புவதற்குக் கடலைக் கடக்க விரும்புவதில்லை[8].(33) (ஆறு அல்லது தடாகத்தின்) நீரில் மூழ்கிய தன் படகைக் கயிற்றின் உதவியால் எழுப்பும் மீனவனைப் போலவே, மனமும், உடல் உணர்வில் இருந்து விடுதலையடையாமல் உலகப் பெருங்கடலில் மூழ்கிய ஜீவனைத் தியான யோகத்தின் உதவியால் எழுப்புகிறது[9].(34) ஆறுகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடி, அதனுள் கலப்பதைப் போலவே மனமும், யோகத்தில் ஈடுபடும்போது, தொடக்ககாலப் பிரகிருதியுடன் கலக்கிறது[10].(35)பற்றின் சங்கிலிகள் பலவற்றால் கட்டப்பட்ட மனங்களைக் கொண்டவர்களும், அறியாமையில் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், நீரில் மணல் வீடுகளைப் போல அழிவை அடைகின்றனர்[11].(36) தன் உடலை ஒரு வீடாகவும், அதன் (அக மற்றும் புறத்) தூய்மையைப் புனித நீராகவும் கருதுவதும், புத்தியின் பாதையில் நடப்பதுமான உடல் படைத்த ஓர் உயிரினம், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறது.(37) விரிவானவை துன்பத்தை உண்டாக்குகின்றன; அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்மாவுக்கான நன்மையை விளைவிக்கிறது.(38) ஒருவனுடைய தீர்மானத்தால் எழும் அவனது நண்பர்களும், (தன்னல) காரணங்களுக்காகப் பற்றுக் கொள்ளும் அவனது உறவினர்களும், அவனது மனைவியர், மகன்கள் மற்றும் பணியாட்களும் அவனுடைய செல்வத்தை விழுங்க மட்டுமே செய்கின்றனர்.(39) தாயாலோ, தந்தையாலோ ஒருவனுடைய மறுமைக்கான சிறு நன்மையையும் அளிக்க முடியாது. ஒருவனுயை வாழ்வாதாரத்திற்கான உணவைக் கொடைகளே கொண்டிருக்கின்றன. உண்மையில், ஒருவன் தன்னுடைய செயல்களின் கனிகளை அனுபவிக்கவே வேண்டும்.(40) தாய், மகன், தந்தை, சகோதரன், மனைவி, நண்பர்கள் ஆகியோர் தங்கத்தின் அருகிலேயே தங்கக்கோடுகளால் வரையப்பட்டதைப் போன்றவர்களாவர்.(41)முற்பிறவியில் செய்யப்பட்ட நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தும் இழைத்தவனை வந்து சேரும். முற்பிறவியின் செயல்களுக்கான விளைவைத் தற்காலத்தில் அனைவரும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறார்கள் என்பதை அறிந்து ஆன்மாவானது, (இனிமையற்ற கனிகள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் செயல்பட) புத்தியைப் பல்வேறு திசைகளில் தூண்டுகிறது.(42) உரிய துணைகளுடனும், மெய்யுறுதியுடனும் கூடிய முயற்சியைச் சார்ந்து தன் பணிகளில் தன்னை நிறுவிக்கொள்ளும் ஒருவன் தோல்விகளை ஒருபோதும் சந்திப்பதில்லை.(43) ஒளிக்கதிர்கள் ஒருபோதும் சூரியனைக் கைவிடாததைப் போலவே, செழிப்பும் ஐயமில்லா நம்பிக்கையுடன் கூடிய ஒருவனை ஒருபோதும் கைவிடுவதில்லை.(44) களங்களமற்ற ஆன்மாவைக் கொண்ட மனிதனால், நம்பிக்கையுடனும், மெய்யுறுதியுடனும், உரிய வழிமுறைகளின் துணையுடனும், செருக்கில்லாமலும், புத்தியுடனும் செய்யப்படும் செயலானது ஒருபோதும் தொலைந்து போகாது.(45) ஓர் உயிரினம் தாயின் கருவறையில் வசிக்கும் காலத்திலேயே, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அடைகிறது. தடுக்கப்பட முடியாத மரணம் {மிருத்யு}, காலத்தின் {காலனின்} துணையுடன் கொண்டுவரும் உயிருக்கான அழிவானது, அரத்தால் அரியப்படும் மரத்தின் தூசியைச் சிதறடிக்கும் காற்றைப் போல அனைத்து உயிரினங்களையும் தங்கள் கதிக்கு வழிநடத்திச் செல்கிறது.(46) முற்பிறவியில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமே மனிதன் தங்கத்தையும், விலங்குகளையும், மனைவியரையும், பிள்ளைகளையும், கௌரவப் பிறவியையும், மதிப்புமிக்க உடைமைகளையும், தனது மொத்த செழிப்பையும் அடைகிறான்” என்றார் {பராசரர்}”.(47)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, வாய்மைக்கு இணங்க தவசியால் {பராசரரால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், அறவோர்களில் முதன்மையானவனுமான ஜனகன், முனிவர் {பராசரர்} சொன்ன அனைத்தையும் கேட்டு, அதன் மூலம் பேரின்பத்தை அடைந்தான்”.(48)

பராசர கீதை முற்றும்

சாத்யர்களும், அன்னமும்! – சாந்திபர்வம் பகுதி – 300-சாத்யர்களுக்கும், அன்னப்பறவைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கடுமொழியால் ஏற்படும் பாதிப்பு; கடுமொழியைப் பொறுத்துக் கொள்பவன் ஈட்டும் தகுதி ஆகியவற்றைச் சொன்ன அன்னப்பறவை…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, ஞானம் ஆகியவற்றைக் கல்விமான்கள் புகழ்கின்றனர். இவ்வறங்களில் உமது கருத்தென்ன?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் சாத்யர்களுக்கும் ஓர் அன்னப்பறவைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் சொல்லப் போகிறேன்.(2)

ஒரு காலத்தில், பிறப்பற்றவனும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமானவன் (பிரம்மன்) தங்கத்தாலான அன்னப்பறவையின் வடிவை ஏற்று, மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தபோது சாத்யர்களைச் சந்தித்தான்.(3)

சாத்யர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! தலைவா, நாங்கள் சாத்யர்கள் என்றழைக்கப்படும் தேவர்களாவோம். உன்னிடம் கேள்வி கேட்க விரும்புகிறோம். உண்மையில், விடுதலையின் அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} குறித்தே நாங்கள் உன்னிடம் கேட்கப் போகிறோம்.(4) ஓ! பறவையானவனே, உன்னைப் பெரும் கல்விமான் என்றும், சொல்திறமிக்கவன் என்றும், வாக்கில் ஞானம் உள்ளவன் என்றும் கேள்விப்படுகிறோம். ஓ! பறவையானவனே, அனைத்துப் பொருட்களிலும் எது உயர்ந்ததென நீ நினைக்கிறாய்? ஓ! உயர் ஆன்மா கொண்டவனே, எதனில் மனம் இன்பத்தை அடைகிறது? எனவே, ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! இறகு படைத்த படைப்புகளின் தலைவனே, எதைச் செய்தால் ஒருவன் அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபடலாம் என்று நீ கருதும் முதன்மையான செயலை எங்களுக்குப் போதிப்பாயாக” என்று கேட்டார்கள்.(6)

அன்னப்பறவை {பிரம்மன்}, “அமுதம் பருகியவர்களே, தவங்கள், தற்கட்டுப்பாடு, வாய்மை மற்றும் மனத்தை அடக்குதல் ஆகியவற்றைப் பயில வேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதயத்தில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்க்கும் ஒருவன், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.(7) ஒருவன் பிறருடைய முக்கிய அங்கங்களுக்குத் தீங்கேற்படுத்தக்கூடாது. அவன் கொடூரப் பேச்சுகளைப் பேசக் கூடாது. அவன் ஒருபோதும் இழிந்தவர்களிடம் இருந்து சாத்திர போதனைகளைப் பெறக் கூடாது. பிறரைத் துன்பத்தில் பீடிக்கச் செய்யும் வார்த்தைகள், அவர்களை (துன்பத்தில்) எரிப்பதற்கான காரணமாகவும், நரகத்திற்கு வழிவகுக்கும் செயலாகவும் இருப்பதால் அவற்றை ஒருபோதும் பேசக்கூடாது.(8) உதடுகளில் இருந்து வார்த்தைகள் கணைகளாகப் பாய்கின்றன. (யாரை நோக்கி அவை ஏவப்படுகின்றனவோ அந்த) ஒருவன் அவற்றால் பீடிக்கப்பட்டு, உடனே எரிகிறான். அந்தக் கணைகள், இலக்காக்கப்பட்ட மனிதனின் முக்கிய அங்கத்தைத் தவிர வேறு எந்தப் பாகத்தையும் தாக்குவதில்லை. எனவே, கல்விமானான ஒருவன் அவற்றை ஒருபோதும் பிறரின் மீது ஏவக்கூடாது.(9) ஒரு மனிதன் ஒரு ஞானியை சொற்கணைகளால் ஆழமாகத் துளைத்தால், அந்த ஞானியானவன் (கோபவசப்படாமல்) அமைதியைப் பின்பற்ற வேண்டும். கோபப்படத் தூண்டப்பட்டாலும் கோபத்தின் வசப்படாத மனிதன், அவ்வாறு தூண்டுபவனின் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அவனிடம் இருந்து அபகரித்துக் கொள்கிறான்.(10)

எதில் ஈடுபட்டால், அது பிறரைக் குறித்துக் குறை பேச வழிவகுத்து, அவனுக்கு {அவர்களை} எதிரியாக்குமோ, அந்த நெருப்பு போன்ற தன் கோபத்தை, எந்த அற ஆன்மா கொண்ட மனிதன், முழு இன்பத்துடன் கூடியவனாக, வன்மத்தில் இருந்து விடுபட்டவனாக அடக்குவானோ, அவன் பிறரின் தகுதிகளை {அவர்களிடம் இருந்து} எடுத்துக் கொள்கிறான்[1].(11) என்னைப் பொறுத்தவரையில், மற்றொருவர் என்னைக் குறித்துத் தவறாகப் பேசும்போது, ஒருபோதும் நான் அவற்றுக்குப் பதிலளிக்கமாட்டேன். தாக்கப்பட்டால் தாக்குபவனை எப்போதும் நான் மன்னிக்கவே செய்கிறேன். மன்னிக்கும் தன்மை, வாய்மை, கபடமின்மை {மனநேர்மை}, கருணை ஆகியனவே (அறங்கள் அனைத்திலும்) முதன்மையானவை என அறவோர் கருதுகின்றனர்.(12) வாய்மையே வேதங்களின் புதிராகும் {இரகசியமாகும்}. தற்கட்டுப்பாடே வாய்மையின் புதிராகும். விடுதலையே {முக்தியே} தற்கட்டுப்பாட்டின் புதிராகும். சாத்திரங்கள் அனைத்தின் போதனையும் இதுவேயாகும்[2].(13) எந்த மனிதன், கிளர்ந்தெழும் பேச்சுத் தூண்டலையும் {வாக்கின் வேகத்தையும்}, மனத்தில் தோன்றும் கோபத்தூண்டலையும் {கோபத்தின் வேகத்தையும்}, (தகாத பொருள்களில் கொள்ளும்) தாகத் தூண்டலையும், வயிறு மற்றும் இன்ப உறுப்பின் தூண்டல்களையும் {ஆசைகளின் வேகத்தையும்} அடக்குகிறானோ, அவனையே ஒரு பிராமணனாகவும், முனியாகவும் நான் கருதுகிறேன்.(14) எவன் கோப வசப்படாமல் இருக்கிறானோ, அவன் கோபப்படுபவனைவிட மேன்மையானவன். எவன் துறவைப் பயில்கிறானோ, அவன் துறவில்லாதவனை விட மேன்மையானவன், எவன் மனிதத்தன்மைகளைக் கொண்டிருக்கிறானோ, அவன் அவை இல்லாதவனைவிட மேன்மையானவன். எவன் ஞானத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன் அஃது இல்லாதவனைவிட மேன்மையானவன்[3].(15)

கடுஞ்சொற்களால் ஒருவன் தாக்கப்படும்போதும், பதிலுக்கு அவனும் தாக்கக்கூடாது. உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் கோபத்தைத் துறக்கும் ஒருவன், அவ்வாறு தன்னைத் தாக்குபவனை எரித்து, அவனுடைய தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அபகரித்துக் கொள்கிறான்.(16) எவன் கடுமொழியால் தாக்கப்படும்போது, பதிலுக்குக் கடுமொழி பேசவில்லையோ, எவன் புகழப்படும்போது, அந்தப் புகழுரைகளை ஏற்றுப் பேசுவதில்லையோ, எவன் தாக்கப்படும்போதும், பதிலுக்குத் தாக்காமலும், தாக்குபவனுக்குத் தீங்கை விரும்பாமலும் மனோவுறுதியுடன் இருக்கிறானோ, அந்த மனிதன், தேவர்களாலும் விரும்பப்படும் தோழமையையே எப்போதும் அடைகிறான்.(17) அவமதிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுப் பழித்துக் கூறப்படும் ஒருவனால், {இந்தப் பாவங்களைச் செய்த} பாவியானவன், ஓர் அறவோனைப் போலக் கருதப்பட்டு மன்னிக்கப்பட வேண்டும். இவ்வழியில் செயல்படுவதன் மூலம் ஒருவன் வெற்றியை அடைகிறான்.(18) என் நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டாலும், அறவோரிடம் எப்போதும் நான் மதிப்புடன் காத்திருக்கிறேன் {அவர்களுக்குப் பணீவிடை செய்கிறேன்}. எனக்கு எந்தத் தாகமும் {ஆசையும்} இல்லை. என் கோபம் அடக்கப்பட்டிருக்கிறது. பேராசையில் மயங்கி நான் ஒருபோதும் அறத்தின் பாதையில் இருந்து விழ மாட்டேன். செல்வத்திற்காக (செல்வத்திற்கான வேண்டுதல்களுடன்) நான் எவரையும் அணுகுவதில்லை[4].(19) சபிக்கப்பட்டால் பதிலுக்கு நான் சபிப்பதில்லை. தற்கட்டுப்பாடே அழிவின்மையின் {முக்தியின்} வாயில் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரும்புதிரை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மனிதபிறவியை விட மேன்மையான நிலை ஏதும் இல்லை[5].(20)

[4] கும்பகோணம் பதிப்பில், “எனக்கு ஆசையும், கோபமும் மேலோங்குகிறதில்லை. நான் எதையும் அடைய விரும்பித் தர்மத்தை விட்டு விலகுகிறதில்லை. ஒன்றையும் தீய வழியில் அடைகிறதில்லை” என்றிருக்கிறது.

[5] கும்பகோணம் பதிப்பில், “என்னை ஒருவன் சபித்தாலும் நான் திரும்ப அவனைச் சபிக்கிறதில்லை. இவ்வுலகத்தில் அடக்கத்தை மோக்ஷத்திற்கு வாயிலாக நினைக்கிறேன். அப்படிப்பட்ட இந்த அடக்கத்தை ரஹஸ்யமான பிரம்மமாகச் சொல்லுகிறேன். மானிட ஜன்மத்தைக் காட்டிலும் மிகவும் மேலானது ஒன்றுமில்லையன்றோ?” என்றிருக்கிறது.

இருளார்ந்த மேகங்களில் இருந்து {விடுபடும்} சந்திரனைப் போலப் பாவத்தில் இருந்து விடுபடும் ஞானியானவன், பிரகாசத்துடன் ஒளிர்ந்து, தன் காலத்திற்காகப் பொறுமையுடன் காத்திருப்பதன் மூலம் வெற்றியை அடைகிறான்.(21) எவன் அண்டத்தைத் தாங்கும் முதன்மையான தூணாவதன் மூலம் அனைவருடைய துதியின் பொருளாகிறானோ {புகழப்படுகிறானோ}, எவனிடம் அனைவராலும் ஏற்புடைய வார்த்தைகள் மட்டுமே பேசப்படுகிறதோ, அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதன் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(22) தூற்றுபவர்கள் {அவதூறு பேசுபவர்கள்}, ஒரு மனிதனின் தகுதியின்மைகளைக் குறித்துப் பேசத் தயாராக இருப்பதைப் போல அவனுடைய தகுதிகளைப் பேச ஒருபோதும் முன்வருவதில்லை.(23) எந்த மனிதன், தன் பேச்சையும், மனத்தையும் முறையாகக் கட்டுப்படுத்தி, பரமனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவனே வேதங்கள், தவங்கள் மற்றும் துறவின் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(24) ஞானியானவன், (பதிலுக்கு) இகழ்வதன் மூலமும், அவமதிப்பதன் மூலமும் தகுதியற்றவர்களை {புண்ணியமற்றவர்களை} ஒருபோதும் தூற்றக்கூடாது. அவன் {பிறரால் மிகைப்படப் புகழப்பட்டுப் பதிலுக்கு) பிறரை மிகைப்படப் புகழக்கூடாது. {மிகைப்படப் புகழ்வதன் மூலம்} தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது.(25)

ஞானம் கொண்டவனும், கல்விமானுமான ஒரு மனிதன் அவதூறுகளை அமுதமாகக் கருதுகிறான். தூற்றப்பட்டாலும் அவன் கவலையில்லாமல் உறங்குகிறான். மறுபுறம், தூற்றியவனோ அழிவை அடைகிறான்.(26) கோபத்துடன் ஒருவன் செய்யும் வேள்விகள், கோபத்துடன் ஒருவன் தரும் கொடைகள், கோபத்துடன் ஒருவன் செய்யும் தவங்கள், கோபத்துடன் ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகள் ஆகியவற்றின் தகுதிகளை {புண்ணியங்களை} யமன் அபகரித்துக் கொள்கிறான். கோபமடையும் மனிதனின் உழைப்பனைத்தும் முற்றிலும் கனியற்றவையாகின்றன.(27) தேவர்களில் முதன்மையானவர்களே, இன்ப உறுப்பு, வயிறு, கரங்கள் இரண்டு, வாக்கு ஆகிய நான்கு வாயில்களையும் நன்கு கட்டுப்படுத்தும் மனிதனே அறமறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(28) வாய்மை, தற்கட்டுப்பாடு, கபடமின்மை, கருணை, பொறுமை, துறவு ஆகியவற்றை எப்போதும் பயிலும் மனிதன் வேத கல்வியில் அர்ப்பணிப்புமிக்கவனாகி, பிறரின் உடைமைகளில் பேராசை கொள்ளாமல், ஒரே நோக்கத்துடன் நன்மையானதைத் தேடி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(29) தாயின் மடியில் உள்ள நான்கு காம்புகளை உறிஞ்சிக் குடிக்கும் கன்றைப் போலவே ஒருவன் இந்த அறப்பயிற்சிகள் அனைத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். வாய்மையை விடப் புனிதமான வேறு எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.(30)

மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில் திரிந்த பிறகு, பெருங்கடலைக் கடக்கும் தோணி மட்டுமே ஒரே வழிமுறையாக இருப்பதைப் போல, சொர்க்கத்தை அடைய வாய்மை மட்டுமே ஒரே வழி என்று நான் அறிவிக்கிறேன்.(31) ஒரு மனிதன் எவருடன் வசிக்கிறானோ அவரைப் போலவே, எவரை மதிக்கிறானோ அவரைப் போலவே, எவ்வாறு ஆக வேண்டும் என்று விரும்புகிறானோ அவ்வாறே ஆகிறான்.(32) ஒரு மனிதன் எந்த நல்லோனிடமோ அல்லோனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, தவத்தகுதியைக் கொண்ட எந்தத் தவசியிடமோ, கள்வனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, அந்த மனிதனின் பாதையிலேயே நடக்கும் அவன், மூழ்கிய சாயத்தின் வண்ணத்தை ஏற்கும் துணியைப் போல அவனது {அந்த மனிதனின்} வண்ணத்தை {குணத்தைப்} பற்றிக் கொள்கிறான்.(33) ஞானமும், நல்லியல்பும் கொண்டோரிடம் தேவர்கள் எப்போதும் உரையாடுகிறார்கள். எனவே, அவர்கள் மனிதர்கள் கொள்ளும் இன்பங்களைக் காண ஒருபோதும் விரும்புவதில்லை. (மனிதர்கள் பேணி வளர்க்கும்) இன்ப நுகர் பொருட்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வுகளையும், {ஒன்றுக்கொன்று} சில பகைமைகளையும் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்த மனிதன், சந்திரனையும் காற்றையும் விட மேன்மையானவனாக ஆகிறான்[6].(34) ஒருவனுடைய இதயத்தில் குடியிருக்கும் புருஷன் {ஆத்மா} களங்கமடையாமல், அறப்பாதையில் நடக்கும்போது, தேவர்கள் அவனிடம் மகிழ்ச்சியடைகிறார்கள்.(35)இன்பப் புலன் {பிறப்புறுப்பு} மற்றும் வயிறு ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், களவுக்கு அடிமையாக இருப்பவர்கள், எப்போதும் கடுமொழியில் பேசுபவர்கள் ஆகியோர் உரிய சடங்குகளுடன் தங்கள் குற்றங்களான பாவக்கழிவுகளைச் செய்து கொண்டாலும், தேவர்கள் அவர்களைத் தொலைவிலேயே கைவிடுகிறார்கள்.(36) இழிந்த ஆன்மா கொண்டவன், உணவில் கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவன், பாவச் செயல்களைச் செய்பவன் ஆகியோரிடம் தேவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்வதில்லை. மறுபுறம் அத்தேவர்கள், வாய்மை நோன்பைப் பயில்பவர்கள், நன்றிமறக்காதவர்கள், அறப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொள்கிறார்கள்.(37) பேச்சை விட அமைதியே சிறந்தது. அமைதியைவிட வாய்மை பேசுவது சிறந்தது. மேலும் சொல்வதாக இருந்தால், வாய்மை பேசுவதை விட அறத்தொடர்புடன் வாய்மை பேசுவது மிகச் சிறந்தது. வாய்மையும் அறமும் கொண்டிருந்தாலும் ஏற்புடையதைப் பேசுவது, அறத்தொடர்புடைய உண்மை பேச்சைவிடச் சிறந்ததாகும்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(38)

சாத்யர்கள், “இவ்வுலகம் எதனால் மறைக்கப்பட்டிருக்கிறது? எக்காரணத்தால் ஒருவன் ஒளிரத் தவறுகிறான்? எக்காரணத்தால் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகின்றனர்? எக்காரணத்தால் மக்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்?” என்று கேட்டனர்.(39)

அன்னப்பறவை {பிரம்மன்}, “உலகமானது அறியாமை (எனும் இருளால்) மறைக்கப்பட்டிருக்கிறது. வன்மத்தின் விளைவால் மனிதர்கள் ஒளிரத் தவறுகின்றனர் {புகழடையத் தவறுகின்றனர்}. பேராசையால் தூண்டப்படும் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகிறார்கள். பற்றின் விளைவால் மனிதர்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(40)

சாத்யர்கள், “பிராமணர்களில் எவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்? பலருக்கு மத்தியில் வசித்தாலும் அவர்களில் அமைதியின் நோன்பை எவனால் மட்டுமே நோற்க முடியும்? அவர்களுக்கு மத்தியில் பலவீனனாக இருந்தாலும் எவன் மட்டுமே பலவானாகக் கருதப்படுகிறான்? அவர்களுக்கு மத்தியில் எவன் மட்டுமே சச்சரவில் ஈடுபடுவதில்லை?” என்று கேட்டனர்.(41)

அன்னப்பறவை, “பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே, பலருக்கு மத்தியில் வசித்தாலும் அமைதியின் நோன்பை நோற்பதில் வெல்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே பலவீனனாக இருந்தாலும், பலவானாகக் கருதப்படுகிறான். அவர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே சச்சரவுகளைத் தவிர்ப்பதில் வெல்கிறான்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}[7].(42)சாத்யர்கள், “பிராமணர்களின் தெய்வீகத்தன்மை எதிலிருக்கிறது? எதில் அவர்களது தூய்மை இருக்கிறது? எதில் அவர்களது தூய்மையின்மை இருக்கிறது? எதில் அவர்களின் மனிதத்தன்மை இருக்கிறது?” என்று கேட்டனர்.(43)

அன்னப்பறவை, “வேத கல்வியிலேயே பிராமணர்களின் தெய்வீகத்தன்மை இருக்கிறது. அவர்களது நோன்புகளில் அவர்களின் தூய்மை இருக்கிறது. அவதூற்றில் {பரநிந்தனையில்} அவர்களது தூய்மையின்மை இருக்கிறது. மரணத்தில் அவர்களது மனிதத்தன்மை இருக்கிறது” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}”[7].(44)

பீஷ்மர் தொடர்ந்தார், “சாத்யர்கள் (மற்றும் அன்னப்பறவைக்கு) இடையில் நடைபெற்ற சிறந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உடலே (பருவுடன் மற்றும் நுண்ணுடல் ஆகிய இரண்டும்) செயல்கள் மற்றும் இருப்பு, அல்லது ஜீவன் ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது என்பது உண்மை”.(45)

யோக பலம்! – சாந்திபர்வம் பகுதி – 301-யோகத்திற்கும், சாங்கியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு; யோக முறை; யோகிக்கான உணவுமுறை; யோகிகளின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, சாங்கிய மற்றும் யோக அமைப்புகளின் தத்துவங்களுக்கிடையில் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவரே, நீர் அனைத்தையும் அறிதிருக்கிறீர்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாங்கியத்தைப் பின்பற்றுபவர்கள் சாங்கிய அமைப்பைப் புகழ்கின்றனர், யோகிகளாக இருக்கும் மறுபிறப்பாளர்கள் யோக அமைப்பைப் புகழ்கிறார்கள். தங்கள் தங்களுக்குரிய அமைப்புகளின் மேன்மையை நிறுவுவதற்காக ஒவ்வொருவரும் தன்னுடைய அமைப்பே சிறந்ததென்று சொல்கிறார்கள்.(2) ஓ! எதிரிகளை நொறுக்குபவனே, யோகத்தில் அர்ப்பணிப்புடைய ஞானிகள், கடவுளின் இருப்பை நம்பாதவர்களால் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது என்று காட்டுவதற்காக முறையான, மிக நல்ல காரணங்களைச் சொல்கிறார்கள்.(3) மேலும் சாங்கியக் கோட்பாடுகளை நம்பும் மறுபிறப்பாளர்கள், ஒருவன் அனைத்தின் முடிவுகளின் உண்மையான ஞானத்தை அடைவதன் மூலம், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு,(4) இந்த உடலைவிட்டுச் சென்ற பிறகு, அவன் விடுதலையடைய வேண்டுமேயன்றி வேறில்லை என்று காட்டுவதற்காக நல்ல காரணங்களை முன்வைக்கிறார்கள். பெரும் ஞானம் கொண்ட மனிதர்கள் விடுதலைக்கான {முக்திக்கான} சாங்கிய தத்துவத்தை இவ்வாறே விளக்கியிருக்கிறார்கள்.(5)

இரு தரப்பிலும் காரணங்கள் இவ்வாறு சமமாக இருக்கும்போது, ஒரு தரப்பில் இருப்பவன் மாற்றுத் தரப்பை தனதாக ஏற்றுக் கொள்ளத் துணிந்தால் அவனை {அத்தரப்பு} ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில், அத்தரப்பில் சொல்லப்படும் வார்த்தைகள் நன்மையானவை என்று கருதப்பட வேண்டும். இருதரப்பிலும் நல்ல மனிதர்கள் காணப்படுகிறார்கள். உன்னைப் போன்றவர்கள் இவற்றில் எக்கருத்தையும் பின்பற்றலாம்.(6) யோகத்தின் சாட்சிகள், நேரடியாகப் புலன்களின் உற்றறியும் திறனால் சொல்லப்படுகின்றன; சாங்கியத்தினுடையவை சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, இந்த இரு தத்துவ அமைப்புகளும் என்னால் அங்கீகரிக்கப்படுகின்றன.(7) ஓ! மன்னா, இந்த அறிவியல் அமைப்புகள் இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு, மேலும் நல்லோர் மற்றும் ஞானிகளின் உடன்பாடும் உண்டு. ஓ! மன்னா, விதிகப்பட்ட அறிவுரைகளின்படி பயிலப்பட்டால் இவை இரண்டும் ஒரு மனிதனை உயர்ந்த கதி அடைய வைக்கின்றன.(8) ஓ! பாவமற்றவனே, இவ்வமைப்புகள் இரண்டிலும் தூய்மையும், அனைத்து உயிரினங்களிடம் கொள்ளும் கருணையும் சமமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் நோற்க வேண்டிய நோன்புகளும் இவ்விரண்டிலும் சமமாக விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பாதைகளைச் சுட்டிக்காட்டும் சாத்திரங்கள் மட்டுமே வேறுபடுகின்றன” என்றார் {பீஷ்மர்}.(9)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இரண்டு அமைப்புகளிலும் பரிந்துரைக்கப்படும் நோன்புகள், தூய்மை, கருணை மற்றும் கனிகள் ஆகியன ஒன்றேயெனில், அவற்றின் சாத்திரங்கள் (அவை பரிந்துரைக்கும் பாதைகளைப் பொறுத்தவரையில்) என்ன காரணத்தால் ஒன்றாக இல்லை?” என்று கேட்டான்.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “யோகத்தின் துணை மூலம், பற்று {ராகம்}, கவனமின்மை {மோகம்}, பாசம் {ஸ்நேகம்}, காமம், கோபம் {க்ரோதம்} ஆகிய ஐந்து களங்கங்களை {தோஷங்களைக்} கைவிடுவதால் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(11) பெரிய மீன்கள், வலையை அறுத்துக் கொண்டு, (இன்பத்தில் உலாவ) தங்கள் சொந்த பூதத்திற்குள் {நீருக்குள்} செல்வதைப் போலவே யோகிகளும் (காமம், கோபம் முதலியவற்றை அறுத்துக் கொண்டு) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்து, விடுதலையெனும் {முக்தியெனும்} பேரின்பத்தை அடைகிறார்கள்.(12) வலிமைமிக்க விலங்குகள், தங்களைப் பிடிக்க வேடர்களால் விரிக்கப்படும் வலைகளை அறுத்துக் கொண்டு, விடுதலையெனும் இன்பநிலைக்குள் தப்பிச் செல்வதைப் போலவே, யோகிகளும் கட்டுகள் {பந்தங்கள்} அனைத்திலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கு வழிவகுக்கும் பாவமற்ற பாதையை அடைகிறார்கள்.(13) ஓ! மன்னா, உண்மையில் பேராசையில் பிறக்கும் கட்டுகளை அறுப்பவர்களும், பலத்துடன் கூடியவர்களுமான யோகிகள், விடுதலைக்கான {முக்திக்கான} பாவமற்ற மங்கலமான, உயர்ந்த பாதையை அடைகிறார்கள்.(14) ஓ! ஏகாதிபதி, வலைகளில் அகப்படும் பலவீனமான விலங்குகள் நிச்சயம் அழிவடையும். யோக பலமற்ற மனிதர்களின் வழக்கும் அவ்வாறே ஆகிறது.(15)

ஓ! குந்தியின் மகனே, ஓ! ஏகாதிபதி, வலையில் விழுந்து அதனில் சிக்கிக் கொள்ளும் பலவீனமான மீன்களைப் போலவே, யோக பலமற்றவர்கள் (உலகக் கட்டுகளின் மத்தியில்) அழிவை அடைகிறார்கள்.(16) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, வேடர்கள் விரிக்கும் நுட்பமான வலைகளில் பறவைகள் சிக்கும்போது, (பலவீனமாக இருந்தால்) அழிவைச் சந்தித்து, பலத்துடனிருந்தால் தப்பிச் செல்வதைப் போலவே,(17) யோகிகளுக்கும் நேர்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, செயல்பாட்டு பந்தங்களால் கட்டப்பட்ட பலவீனமானவர்கள் அழிவை அடைகிறார்கள், அதே வேளையில் பலமுடையவர்க்ள அவற்றை உடைக்கின்றனர்.(18) ஓ! மன்னா, வலுவில்லாத சிறு நெருப்பானது, தன் மீது பெரும் மரங்கள் போடப்பட்டால் அணைந்து போகிறது. ஓ! மன்னா, அதே போலவே பலமில்லாத யோகியானவன் (உலகத்துடனும், அதன் பற்றுகளிலும் தொடர்பு கொள்ளும்போது) அழிவை அடைகிறான்.(19) எனினும், ஓ! ஏகாதிபதி, அதே நெருப்பு வலுவடையும்போது (அணையாமல்) காற்றின் உதவியோடு மொத்த பூமியையும் எரிக்கக்கூடும்.(20) அதே போலவே, பலத்தில் வளர்ந்து, சக்தியுடன் எரிந்து வலிமையுடன் இருக்கும் யோகியானவன், அண்ட அழிவில் எழும் சூரியனைப் போல மொத்த அண்டத்தையே எரிக்கவல்லவனாகிறான்.(21)

ஓ! மன்னா, ஒரு பலவீனமான மனிதன் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போலவே, ஒரு பலவீனமான யோகி ஆதரவற்ற நிலையில் புலன்நுகர்பொருட்களால் அடித்துச் செல்லப்படுகிறான்.(22) ஒரு யானை பலமிக்கப் பெரிய ஓடையையும் தாக்குப்பிடிக்கிறது. அதே போலவே, யோகபலமடைந்த ஒரு யோகியும் புலன் நுகர் பொருட்கள் அனைத்தையும் தாக்குப்பிடிக்கிறான்.(23) அனைத்துப் பொருட்களின் சார்பற்றவர்களும், யோக பலமும், தலைமைப்பண்பும் கொண்டவர்களான யோகிகளானவர்கள், படைப்பின் தலைவர்கள், முனிவர்கள், தேவர்கள், அண்டத்தின் பெரும்பூதங்கள் ஆகியவற்றுக்குள் (ஆகியவர்களின் / ஆகியவற்றின் இதயங்களுக்குள்) நுழைகின்றனர்.(24) ஓ! மன்னா, யமனாலோ, அந்தகனாலோ, பயங்கர ஆற்றலைக் கொண்ட மிருத்யுவாலோ அளவில்லா சக்தி கொண்ட ஒரு யோகியைக் கோபத்தில் முறியடிக்க முடியாது.(25)

யோகபலமடையும் யோகியால், ஆயிரக்கணக்கான உடல்களை உண்டாக்கி, அவற்றுடன் பூமியில் உலவ முடியும்.(26) அவர்களில் சிலர் புலன் நுகர் பொருட்களை அனுபவித்துப் பிறகு மீண்டும் கடும் தவப்பயிற்சிகளில் தங்கள் நிறுவிக் கொண்டு (கதிர்களை விலக்கிக் கொள்ளும்) சூரியனைப் போல அத்தகைய தவங்களில் இருந்து மீண்டும் விலகுகிறார்கள்.(27) பலம் கொண்டவனும், கட்டுகளால் கட்டப்பட முடியாதவனுமான யோகி, விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்கிறான்.(28) ஓ! ஏகாதிபதி, யோக சக்திகள் குறித்து நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். யோகத்தின் நுட்பமான சக்திகளையும், அவற்றின் குறியீடுகளையும் நான் மீண்டும் சொல்கிறேன்.(29) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாரணை மற்றும் {யோகத்தால் ஏற்படும்} ஆத்மாவின் சமாதி நிலை ஆகியவற்றின் நுட்பமான குறியீடுகளைக் கேட்பாயாக[1].(30)விழிப்புடன், கவனத்துடனும் கூடிய ஒரு வில்லாளி தன் இலக்கை அடிப்பதில் வெல்வதைப் போலவே, ஆன்மாவில் ஈர்க்கப்பட்ட யோகியும் விடுதலை அடைகிறான் என்பதில் ஐயமில்லை.(31) (தலையில் வைக்கப்பட்ட) நீர் நிறைந்த பாத்திரத்தில் மனத்தை நிலைக்கச் செய்து படிகளில் விழிப்புடன் நடக்கும் ஒரு மனிதனைப் போலவே,(32) தன் ஆன்மாவில் நிலைத்து ஈர்க்கப்பட்ட யோகியும், அஃதை {ஆன்மாவைத்} தூய்மைப்படுத்தி, சூரியனைப் போலப் பிரகாசிக்கச் செய்கிறான்.(33) ஓ குந்தியின் மகனே, கடலின் பரப்பில் தூக்கிவீசப்படும் படகானது விழிப்புடன் கூடிய படகோட்டியால் மறுகரைக்கு விரைவாக எடுத்துச் செல்லப்படுவதைப் போலவே,(34) ஓ! ஏகாதிபதி, ஞானம் கொண்ட மனிதனும், தன் ஆன்மாவை சமாதியில் நிலைக்கச் செய்து, தன் உடலைக் கைவிட்ட பிறகு அடைதற்கரிய விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(35)

ஓ! மன்னா, விழிப்புடன் கூடிய தேரோட்டியானவன், (தேரில்) நல்ல குதிரைகளைப் பூட்டி, தேர்வீரன் விரும்பும் இடத்திற்கு அவனை இட்டுச் செல்வதைப் போலே,(36) ஓ! ஏகாதிபதி, தாரணையில் விழிப்புடன் இருக்கும் யோகியும், வில்லில் இருந்து ஏவப்பட்டு, இலக்காக வைக்கப்பட்ட இடத்தை அடையும் ஒரு கணையைப் போல உயர்ந்த இடத்தை (விடுதலையை {முக்தியை}) விரைவில் அடைகிறான்.(37) ஆன்மாவில் தன்னைச் செலுத்தி அங்கேயே அசையாமல் இருக்கும் யோகி, தன் பாவங்களை அழித்து, அறவோரால் அடையப்படும் அழிவற்ற இடத்தை அடைகிறான்.(38) ஓ! மன்னா, உயர்ந்த நோன்புகளை {மஹாவிரதத்தை} விழிப்புடன் நோற்கும் யோகியானவன், தன் ஜீவாத்மாவை நாபி {தொப்புள்}, மிடறு {தொண்டை}, தலை, இதயம், மார்பு, விலாப்புறங்கள், கண், காது, மூக்கு ஆகியவற்றில் இருக்கும் நுண் ஆத்மாவில் முறையாகக் கலந்து, மலையளவுக்கு இருக்கும் தன் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்கள் {புண்ணியப் பாவங்கள்} அனைத்தையும் எரித்து, சிறந்த யோகத்தைப் பயின்று விடுதலையை {முக்தியை} அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}, (39-41)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதரே, எந்த வகை உணவுகள் உண்டு, எந்தப் பொருட்களை வென்றால் ஒரு யோகியால் யோகபலத்தை அடைய முடியும் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(42)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, பிண்ணாக்கையும், நொய் அரிசியையும் உண்டு, எண்ணெயையும் {தைலங்களையும்}, வெண்ணையையும் தவிர்க்கும் யோகியானவன், யோக பலத்தை அடைவான்.(43) நீருடன் கலக்காத வாற்கோதுமை மாவை {யவபிஷ்டத்தை} நெடுங்காலம் உண்பதன் மூலமும், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே எனத் தன் உணவைச் சுருக்கிக் கொள்வதன் மூலமும், தூய ஆன்மா கொண்ட யோகியானவன் யோக பலத்தை அடைகிறான்.(44) முதலில் நாளின் ஒரே ஒரு வேளையும், பிறகு ஒரு பிறைநாளுக்கு {ஒரு பக்ஷகாலத்திற்கு} ஒரு முறையும், பிறகு மூன்று மாதங்களில் ஒரு முறையும், பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறையும் பாலுடன் கலந்த நீரை மட்டுமே பருகும் யோகியானவன் யோக பலத்தை அடைகிறான்.(45) ஓ! மன்னா, இறைச்சியை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் தூயஆன்மா கொண்ட யோகியானவன் பலத்தை அடைகிறான்.(46) காமம், கோபம், வெப்பம், குளிர், மழை, அச்சம், துயரம், மூச்சு, மனிதர்களுக்கு ஏற்புடைய அனைத்து ஒலிகள், புலன்நுகர் பொருட்கள்,(47) ஓ! மன்னா, வெல்வதற்கு அரிதானதும், கலவி இன்பத்தைத் தவிர்ப்பதால் பிறப்பதுமான மனஉலைவு, பயங்கரத் தாகம், தீண்டலாலும், உறக்கத்தாலும் கிட்டும் இன்பங்கள், கிட்டத்தட்ட வெல்லப்பட முடியாத காலதாமதம் ஆகியவற்றில் இருந்து, ஓ! மன்னர்களில் சிறந்தவனே,(48) பற்றில்லாதவர்களும், பெரும் ஞானம் கொண்டவர்களுமான யோகிகள், நுட்பமான ஆன்மாவைத் தங்கள் புத்திகளின் துணையாலும், கல்வி மற்றும் தியானம் எனும் செல்வங்களின் துணையாலும் விலகியிருக்கச் செய்கிறார்கள்.(49)

கல்விமான்களான பிராமணர்களின் இந்த உயர்ந்த (யோக) பாதையானது நடப்பதற்கு மிகக் கடினமானதாகும். எவராலும் இந்தப் பாதையில் எளிதாக நடக்க முடியாது.(50) இப்பாதையானது, எண்ணற்ற பாம்புகளும், தவழும் மண்புழுக்களும் நிறைந்ததும், எங்கும் (மறைவான) குழிகளைக் கொண்டதும், ஒருவனுடைய தாகத்தைத் தணிக்கும் நீரில்லாததும், முட்கள் நிறைந்ததும், அதனால் நடக்க முடியாத வகையில் இருக்கும் ஒரு பயங்கரக் காட்டைப் போன்றதாகும்.(51) உண்மையில் இந்த யோகப் பாதையானது, உணவுகள் கிடைக்காததும், காட்டுத்தீயில் எரிக்கப்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு பாலைவனத்தின் ஊடாகச் செல்வதும், கள்வர்க்கூட்டங்களால் மொய்க்கப்பட்டுப் பாதுகாப்பற்றதாக இருப்பதுமான ஒரு சாலையைப் போன்றதாகும். (இலக்கை அடைவதற்காக) வெகு சில இளைஞர்களால் மட்டுமே இதைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முடியும்.(52) இந்த இயல்பைக் கொண்ட பாதையைப் போலவே, சில பிராமணர்களால் {மட்டுமே} எளிதாகவும், சுகமாகவும் யோகபாதையில் நடந்து செல்ல முடியும். இப்பாதையை அடைந்து, நடப்பதை நிறுத்தும் (சற்று முன்னேறியதும் புறமுதுகிடும்) மனிதன், பல களங்கங்களைக் கொண்ட குற்றவாளியாகக் கருதப்படுகிறான்.(53) ஓ! பூமியின் தலைவா, தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால், கத்தியைப் போன்ற கூர்முனை கொண்ட தியான யோகத்தில் எளிதாக நிற்க முடியும். எனினும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டாரால் அவ்வாறு நிற்க முடியாது.(54) தியானயோகம் கலையும்போது, அல்லது அதற்குத் தடையேற்படும்போது, பயணிகளை மறுகரைக்குக் கொண்டு செல்ல இயலாத தலைவனில்லாத தோணியைப் போல, அஃது அந்த யோகியை மங்கலமான கதிக்கு வழிநடத்துவதில்லை.(55)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, உரிய சடங்குகளுடன் தியான யோகத்தைப் பயிலும் மனிதன், பிறப்பு மற்றும் இறப்பு, மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கைவிடுவதில் வெல்கிறான்.(56) நான் சொல்லும் இவை அனைத்தும் யோகம் குறித்த பல்வேறு சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. யோகத்தின் உயர்ந்த கனிகள் மறுபிறப்பாள வகையினரிடம் காணப்படுகின்றன.(57) அந்த உயர்ந்த கனியானது பிரம்மத்தைப் போன்றதாகும். மகிமை கொண்ட உயர் ஆன்ம யோகியால், தேவர்கள் அனைவரின் தலைவனான பிரம்மன், வரமளிக்கும் விஷ்ணு, பவன், தர்மன், ஆறுமுகம் கொண்ட கார்த்திகேயன், பிரம்மனின் (மானஸ) மகன்கள், அதிகத் துன்பத்தை உண்டாக்கும் இருள் குணம் {தமோ குணம்}, ஆசை குணம் {ரஜஸ் குணம்}, தூய்மையான சத்வ குணம், உயர்ந்ததான பிரகிருதி, வருணனைக் கணவனாகக் கொண்ட சித்தி தேவி, அனைத்து வகைச் சக்திகள், அனைத்தையும் தாங்கும் பொறுமை, சுற்றிலும் மின்னும் நட்சத்திரங்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் பிரகாசமான தலைவன் {சந்திரன்}, விஸ்வர்கள், (பெரும்) பாம்புகள், பித்ருக்கள், மலைகள், குன்றுகள், பயங்கரமான பெரிய கடல்கள், ஆறுகள், மழை நிறைந்த மேகங்கள், பாம்புகள், மரங்கள், யக்ஷர்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகள், கந்தர்வர்கள், ஆடவர்கள், பெண்கள் ஆகியோருக்குள் தன் விருப்பப்படியே நுழையவும் வெளியேறவும் முடியும்.(58-61) ஓ மன்னா, வலிமையான சக்தி கொண்ட பரம்பொருளுடன் தொடர்புடைய இந்த உரையாடல் மங்கலமானதாகக் கருதப்பட வேண்டும். யோகியானவன், நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கிறான். (பரமனில் ஆழ்ந்த தியானத்தின் மூலம்) அனைத்துப் பொருட்களையும் கடந்து நிற்கும் உயர் ஆன்ம யோகியால் அனைத்துப் பொருட்களையும் படைக்கவும் முடியும்” என்றார் {பீஷ்மர்}.(62)

சாந்தி பர்வம் – பாகம் 2 முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 1–

October 17, 2025

பிங்களை என்ற வேசி! – சாந்திபர்வம் பகுதி – 174-ஆன்மவிடுதலையை நாடுவதே கடமைகளில் முதன்மையானது; இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் மாறிமாறிச் சக்கரமாகச் சுழன்று வருவன என்று யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர், பிள்ளையை இழந்து வாடிக் கொண்டிருந்த மன்னன் சேனஜித்திடம் பேசிய ஒரு பிராமணரின் உரையை விளக்கமாகச் சொன்னது; துன்பத்திற்குக் காரணமான அறியாமை; விதியின் வலிமை ஆகியவற்றைச் சொல்லி மூடனும், அறிஞனும் துன்பமடைவதில்லை, மாறாக இந்த இரு நிலைகளுக்கு இடைப்பட்டவர்களே துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று மன்னன் சேனஜித்திடம் சொன்ன அந்தப் பிராமணர், பிங்களை என்ற வேசியின் கதையையும், அவள் பாடிய ஸ்லோகத்தையும் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மன்னர்களின் கடமைகள் தொடர்பான மங்கலக் கடமைகள் குறித்து நீர் உரையாடினீர். இப்போது, ஓ! மன்னா, (நான்கு) வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} வாழ்வோருக்குரிய முதன்மையான கடமைகளை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறம் பல வாயில்களைக் கொண்டதாகும். அறம் (பரிந்துரைக்கும் கடமைகளை) நோற்பது ஒருபோதும் பயனற்றதாகாது. ஒவ்வொரு வாழ்வுமுறைக்கும் {ஆசிரமத்திற்கும்} தனித்தனியே கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (மறுமையில் கிடைக்கக்கூடியவையாக இருக்கும் அக்கடமைகளின் கனிகள் புலப்படாதனவாக இருக்கின்றன). எனினும் ஆன்மாவை நோக்கிச் செய்யப்படும் தவத்தின் கனிகள் இம்மையிலேயே {இவ்வுலகிலேயே} அடையப்படுகின்றன[1].(2) எந்தப் பொருளில் ஒருவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அதைத் தவிர வேறு எதுவும் பேரருள் நிறைந்த உயர்ந்த உடைமையாக அவனுக்குத் தோன்றாது.(3) ஒருவன் முறையாகச் சிந்திக்கும்போது, (அத்தகைய சிந்தனையால் அவனது இதயம் தூய்மையடையும்போது), இவ்வுலகின் பொருட்கள் அனைத்தையும் அவன் வெறும் துரும்பைப் போலப் பயனற்றவையாக அறிந்து கொள்வான். அப்போது அவன் அந்தப் பொருட்கள் மீது கொண்ட பற்றிலிருந்து விடுபடுவான் என்பதில் ஐயமில்லை.(4) ஓ! யுதிஷ்டிரா, குறைகள் நிறைந்த இவ்வுலகம் இவ்வாறு இருக்கும்போது, நுண்ணறிவைக் கொண்ட ஒவ்வொரு மனிதனும், தன் ஆன்ம விடுதலையை {முக்தியை} அடைவதற்காக முயற்சிக்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(5)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒருவன் செல்வத்தை இழக்கும்போது, அல்லது ஒருவனுடைய மனைவியோ, மகனோ, தந்தையோ இறக்கும்போது, தன் துயரத்தை எந்த ஆன்ம நிலை கொண்டு கொல்ல வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் செல்வத்தை இழக்கும்போது, அல்லது அவனுடைய மனைவியோ, மகனோ, தந்தையோ இறக்கும்போது, அவன், “ஐயோ, இது பெருந்துன்பம்” என்று நிச்சயம் சொல்வான். ஆனால் அவன், சிந்தனையுடன் துணையுடன் அந்தக் கவலையைக் கொல்ல வேண்டும்.(7) இது தொடர்பாகச் {மன்னன்} சேனஜித்தின் சபைக்கு வந்த அவனுடைய மறுபிறப்பாள நண்பர், மன்னனிடம் பேசிய பேச்சைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) அந்த ஏகாதிபதி {சேனஜித்}, தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகத் துயரில் கலங்கி, கவலையில் எரிந்துகொண்டிருப்பதைக் கண்ட அந்தப் பிராமணர், உற்சாகமிழந்த இதயத்துடன் இருந்த அந்த ஆட்சியாளனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(9) “நீ ஏன் மயங்குகிறாய்? எந்த நுண்ணறிவும் இல்லாமல் இருக்கிறாய். நீயே துன்பத்திற்குப் பொருளாக இருக்கும்போது (பிறருக்காக) ஏன் வருந்துகிறாய்? சிலர் உனக்காகச் சில நாட்கள் வருந்துவார்கள், பிறகு அவர்களுக்கான சமயத்தில் அவர்களுக்காகப் பிறர் வருந்துவார்கள்.(10) ஓ! மன்னா, நானும், நீயும், உனக்காகக் காத்திருப்போரும் {உன்னிடம் பணிசெய்வோரும்} என அனைவரும் நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்லப்போகிறோம்” என்றார்.(11)

சேனஜித், “ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எதை அடைந்தால் நீர் கவலையடைய வேண்டாமோ, அந்த நுண்ணறிவு எது? அந்தத் தவம் எது? அந்த எண்ணம் எது? அந்த அறிவு எது? அந்தக் கல்வி எது?” என்று கேட்டான்.(12)

அந்தப் பிராமணர் {மன்னன் சேனஜித்திடம்}, “உயர்ந்தவையும், நடுத்தரமானவையும், தாழ்ந்தவையுமான உயிரினங்கள் அனைத்தும், அதனதன் செயல்களின் விளைவால் துயரில் சிக்கிக் கொள்வதைப் பார்.(13) என்னுடைய சுயத்தையே நான் எனதாகக் கருதவில்லை. மறுபுறம், மொத்த உலகத்தையும் நான் எனதாகக் கருதுகிறேன். மேலும், (நான் காணும்) இவை அனைத்தும் என்னைப் போலவே பிறருக்கும் சொந்தமானவை என்றும் கருதுகிறேன். இந்த எண்ணத்தின் விளைவால் என்னைத் துயரம் அணுகாது.(14) இந்த நுண்ணறிவை {புத்தியை} அடைந்தபிறகு, நான் இன்பத்திற்கோ, துன்பத்திற்கோ வசப்படுவதில்லை.(15) பெருங்கடலில் மிதக்கும் இரு மரத்துண்டுகள் ஒரு சமயத்தில் ஒன்றாகச் சேர்ந்து, பிறகு பிரிவதைத் போலவே இந்த உலகில் (வாழும்) உயிரினங்களின் சேர்க்கையும் நேர்கிறது.(16) மகன்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகியோர் அனைவரும் இவ்வகையினரே. ஒருவன் அவர்களிடம் இருந்து பிரியப்போவது நிச்சயம் என்பதால், அவன் அவர்களிடம் ஒருபோதும் பற்று கொள்ளக்கூடாது.(17) உன் மகன் புலப்படாத உலகில் இருந்து வந்தான். அவன் உன்னை அறிந்திருக்கவில்லை. நீயும் அவனை அறிந்திருக்கவில்லை. நீ யார்? யாருக்காக நீ வருந்திக் கொண்டிருக்கிறாய்?(18)

ஆசையெனும் நோயிலிருந்தே துயரம் எழுகிறது. மேலும், ஆசையெனும் நோய் நீங்குவதிலிருந்தே மகிழ்ச்சி விளைகிறது. இன்பத்தில் இருந்தே துன்பம் எழுகிறது, மேலும் துன்பமானது மீண்டும் மீண்டும் எழுகிறது.(19) இன்பத்திற்குப் பிறகு துன்பமும், துன்பத்திற்குப் பிறகு இன்பமும் {மாறி மாறி} வருகின்றன. மனிதர்களின் இன்பங்களும் துன்பகங்களும் ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன.(20) இன்பத்திற்குப் பிறகு உனக்குத் துன்பம் வரும். மீண்டும் நீ இன்பத்தை அடைவாய. எப்போதும் துன்பத்தையும், எப்போதும் இன்பத்தையும் ஒருவரும் அனுபவிப்பதில்லை.(21) இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்கும் புகலிடமாக இவ்வுடல் இருக்கிறது[2]. உடல்படைத்த உயிரினம், தன் உடலின் உதவியால் செய்யும் எந்தச் செயல்களின் விளைவுகளையும் அவனது அந்த உடலே அனுபவிக்கும்.(22) உடல் இருப்பில் எழும்போது அதனுடனே சேர்ந்தே உயிரும் எழுகிறது. இந்த இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன, ஒன்றாகவே அழிகின்றன[3].(23) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள், உலகம் சார்ந்த பல கட்டுகளால் கட்டப்பட்டு, நீரில் மணற்கரை போல அழிவைச் சந்திக்கின்றனர்.(24)அறியாமையில் பிறந்த பல்வேறு வகைத் துன்பங்கள், உயிரினங்கள் கொண்ட பற்றின் விளைவால் அவற்றைப் பீடித்து, எள்ளை நசுக்கும் செக்குகள் போலச் செயற்பட்டு, (தாங்கள் வசப்பட்டிருக்கும்) மறுபிறப்பு சுழற்சியைப் பிரதிபலிக்கும் செக்குகள் போல அவற்றை {உயிரினங்களை} நசுக்குகின்றன.(25) மனிதன், தன் மனைவிக்காக (மற்றும் பிறருக்காக) எண்ணற்ற தீச்செயல்களைச் செய்கிறான், ஆனால், இம்மையிலும், மறுமையிலும் அவன் தனியாகவே பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கிறான்.(26) பிள்ளைகள், மனைவியர், உற்றார் உறவினர் ஆகியோருடன் பற்றுடன் இருக்கும் மனிதர்கள் அனைவரும், பலமற்ற காட்டு யானைகள், புதைகுழியில் மூழ்குவதைப் போல, துன்பக்கடலெனும் சகதியில் மூழ்குகின்றனர்.(27) உண்மையில், ஓ! தலைவா, செல்வத்தின் இழப்பாலும், மகன் மற்றும் உற்றார், உறவினரின் இழப்பாலும் மனிதன் அனுபவிக்கும் பெருந்துயரானது, காட்டுத்தீயின் எரிசக்திக்கு ஒப்பானதாகும்.(28) இன்பம் துன்பம், இருப்பு இல்லாமை ஆகிய இவை அனைத்தும் விதியைச் சார்ந்தே இருக்கின்றன.(29) நண்பர்களைக் கொண்டவனாக இருந்து நண்பர்களற்றவனாக ஆனவன், எதிரிகளைக் கொண்டவனாக இருந்து எதிரிகளற்றவனாக ஆனவன், ஞானம் கொண்டவனாக இருந்து ஞானமற்றவனாக ஆனவன், ஆகிய இவர்களில் ஒவ்வொரும் விதியின் மூலமே இன்பத்தை அடைகின்றனர்.(30)

ஒருவனுடைய மகிழ்ச்சிக்கு நண்பர்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவனுடைய துன்பத்துக்கு எதிரிகள் காரணமாக இருப்பதில்லை. செல்வம் அடைவதை ஏற்படுத்த ஞானம் தகுந்ததல்ல {ஞானத்தால் செல்வத்தைக் கொண்டு வர முடியாது}; அதே போல இன்பம் அடைவதை ஏற்படுத்த செல்வம் தகுந்ததல்ல {செல்வம் இன்பத்தைத் தராது}.(31) செல்வத்திற்கு நுண்ணறிவு {புத்தி} காரணமல்ல, அதேபோவே எழைமைக்கு மடமையும் காரணமல்ல. வேறெதையும் அல்லாமல் ஞானத்தை மட்டுமே கொண்டவன் உலகின் வகையைப் புரிந்து கொள்கிறான் {ஒரு ஞானியாலன்றி வேறு எவராலும் இவ்வுலகத்தின் வகையைப் புரிந்து கொள்ள முடியாது}.(32) புத்திசாலி, வீரன், முட்டாள், கோழை, மூடன், கல்விமான், பலவீனன், பலமிக்கவன் ஆகியோரில் எவனிடம் இருந்து விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனிடம் இருந்தே மகிழ்ச்சி ஏற்படும்.(33) பசுவானவள், கன்று, உரிமையாளனான பசுமந்தையாளன் {இடையன்}, கள்வன் ஆகியோருக்கு மத்தியில், எவன் அவளது {அந்தப் பசுவின்} பாலைக் குடிப்பானோ அவனுக்கே உரிமையானவள் ஆவாள்[4].(34) முற்றிலும் செயலற்ற அறிவைக் கொண்டவர்கள், மேலான அறிவுக்கு அப்பாற்பட்ட மனநிலையை அடைந்தவர்கள் ஆகியோர் இன்பத்தை அடைவதில் வெல்கிறார்கள். இந்த இரண்டு வகையினருக்கு மத்தியில் உள்ளோரே துன்பத்தை அனுபவிக்கிறார்கள்[5].(35)ஞானம் கொண்டவர்கள், இரண்டு இறுதிநிலைகளிலேயே திளைக்கிறார்களேயன்றி நடுவில் உள்ள நிலைகளில் அல்ல. இந்த இரண்டு இறுதிநிலைகளில் எதை அடைந்தாலும் மகிழ்ச்சியை அடையலாம் என்று தவசிகள் சொல்கின்றனர். அந்த இரண்டிற்கும் இடையில் உள்ள நடுநிலைகளே துன்பத்தைக் கொண்டிருக்கின்றன[6].(36) (சமாதி நிலை கொண்டு வரக்கூடிய) உண்மையான பேரின்ப நிலையை அடைவதில் வென்றவர்கள், இவ்வுலகத்தின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டவர்கள், பொறாமையற்றவர்கள் ஆகியோர் செல்வத்தை அடைவதாலும், இழப்பதாலும் ஒருபோதும் கலங்குவதில்லை.(37) உண்மையான பேரின்பத்திற்கு வழிவகுக்கும் நுண்ணறிவை {புத்தியை} அடைவதில் தவறியவர்கள், ஆனால் (சாத்திரங்களுடைய அறிவின் துணையால்) மடமை மற்றும் அறியாமையை விஞ்சியவர்கள், அளவுக்குமீறி இன்பத்தையும், அளவுக்கு மீறிய துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.(38) சரியானது, அல்லது தவறானது என்ற கருத்தமைவுகள் எதுவும் இல்லாத மனிதர்கள் செருக்காலும், பிறரை வெற்றி கொண்டதாலும் உணர்வற்றவர்களாகி, சொர்க்கத்தின் தேவர்களைப் போல மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள்[7].(39) இன்பமானது துன்பத்திலேயே முடியும். செயலின்மையே துன்பம்; அதே வேளையில் புத்திசாலித்தனமே (செயல்படுவதே) மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. செல்வாக்கும், செழிப்பும் புத்திசாலியிடம் {செயல்படுபவனிடம்} வசிக்குமேயன்றி, ஒருபோதும் சோம்பேறியிடம் வசிக்காது.(40)இன்பமோ துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ இவற்றில் எது நேர்தாலும் அதை அனுபவிக்க வேண்டும், அல்லது வெல்லப்பட முடியாத இதயத்துடன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.(41) தினமும் நூற்றுக்கணக்கான துன்ப நிகழ்வுகளும், நூற்றுக்கணக்கான அச்சந்தரும் நிகழ்வுகளும் அறியாமையும், மடமையும் கொண்ட மனிதனைத் தாக்குகின்றனவேயன்றி, ஞானியையல்ல.(42) ஞானத்தை அடைந்தவனும், தன் நன்மைக்கான அறிவரைகளைக் கேட்பதில் கவனம் நிறைந்தவனும், பொறாமையற்றவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனுமான நுண்ணறிவுமிக்க மனிதனைத் துன்பத்தால் தீண்டமுடியாது.(43) ஞானமிக்க மனிதன், அத்தகைய அறிவைச் சார்ந்து, (விருப்பம் மற்றும் ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து) இதயத்தைப் பாதுகாத்துக் கொண்டு இங்கே செயல்பட வேண்டும். எதிலிருந்து அனைத்தும் எழுகிறதோ, எதற்குள் அனைத்தும் மறைந்துபோகிறதோ, அந்தப் பரமாத்மாவை அறிந்தவனை உண்மையில் துன்பத்தால் தீண்டமுடியாது[8].(44) எதன் நிமித்தமாகத் துன்பம், இதய எரிச்சல், கவலை ஆகியன ஏற்படுகின்றனவோ, எதன் நிமித்தமாக முயற்சி தூண்டப்படுகிறதோ, அந்த வேரானது ஒருவனின் உடல் பகுதியாகவே இருப்பினும் அதைக் கைவிட வேண்டும்[9].(45)எனது என்ற கருத்தில் பேணிவளர்க்கப்படும் எந்தப் பொருளாக இருந்தாலும், அது துயரம் மற்றும் இதய எரிச்சலின் தோற்றுவாயாக அமையும்.(46) விரும்பப்படும் எந்தப் பொருளும் கைவிடப்படும்போது, அது மகிழ்ச்சியின் தோற்றுவாயாக அமையும். ஆசைக்குரிய பொருட்களைத் தொடரும் மனிதன் அந்தத் தொடர்ச்சியின் போக்கில் அழிவையே அடைவான்.(47) புலன்களை நிறைவு செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியோ, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் பேரின்பமோ, ஆசைகள் அனைத்தின் அழிவில் இருந்து எழும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாது.(48) சரியோ, தவறோ முற்பிறவிச் செயல்களின் விளைவுகள், ஞானிகளையும், மூடர்களையும், துணிவுமிக்கோரையும், மருண்டோரையும் அடைந்தே தீரும்.(49) இவ்வாறே இன்பமும் துன்பமும், ஏற்புடையவையும், ஏற்பில்லாதவையும் தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு மத்தியில் (சக்கரமாகச்) சுழல்கின்றன.(50)

நுண்ணறிவுமிக்கவனும், ஞானியுமான மனிதன், இத்தகைய அறிவைச் சார்ந்து சுகமாக வாழ்கிறான். ஒரு மனிதன் தன் ஆசைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, தன் கோபமானது தன்னிடம் சிறந்ததைப் பெற ஒருபோதும் அனுமதிக்காமல் இருக்க வேண்டும்.(51) இந்தக் கோபம் இதயத்தில் எழுந்து, அங்கே சீற்றத்துடனும், வளத்துடனும் வளர்கிறது. மனிதர்களின் மனங்களில் பிறந்து, உடல்களில் வசிக்கும் இந்தக் கோபமே மரணம் என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது.(52) ஒரு மனிதன், ஓர் ஆமையானது தன் அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்வதைப் போலத் தன் ஆசைகள் அனைத்திலிருந்தும் விலகினால், தன்னொளியுடன் கூடிய அவனது ஆன்மா, தன்னைக் காண்பதில் வெற்றியடைகிறது[10].(53) எனது என்ற கருத்தில் பேணிவளர்க்கப்படும் அந்தப் பொருளாக இருந்தாலும், அது துயரம் மற்றும் இதய எரிச்சலின் தோற்றுவாயாக அமையும்[11].(54) ஒரு மனிதன் எந்த அச்சத்தையும் உணராமல், வேறு எவராலும் அஞ்சப்படாமல் இருக்கும்போது, விருப்பையோ, வெறுப்பையோ அவன் வளர்க்காதபோது, அவன் பிரம்ம நிலையை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(55)உண்மை, பொய்மை, துன்பம், இன்பம், அச்சம், துணிவு, ஏற்புடைமை, ஏற்பில்லாமை ஆகிய இருமைகளைக் கைவிட்டால், நீ அமைதிநிறைந்த ஆன்மாவாகலாம்.(56) ஒரு மனிதன், எந்த உயிரினத்துக்கும் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ தீங்கிழைக்காத போது, அவன் பிரம்ம நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறான்.(57) தவறான வழிநடத்தப்படுவதால் கைவிடமுடியாததும், முதுமையிலும் அழியாததும், மரண நோயாகக் கருதப்படுவதுமான தாகத்தை {ஆசையைக்} கைவிட்டவன் உண்மையான மகிழ்ச்சியை அடைவான்.(58) இதுதொடர்பாக, ஓ! மன்னா, சாதகமற்ற நிலையிலும் நித்திய தகுதியை {புண்ணியத்தை} அடைந்த பிங்களையால் {பிங்களை என்ற வேசியால்} பாடப்பட்ட சுலோகம் கேட்கப்படுகிறது.(59) பிங்களை என்ற பெயரைக் கொண்ட ஒரு வீழ்ந்த பெண்மணி, நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று, ஒரு விபத்தின் காரணமாகத் தன் காதலனின் தோழமை மறுக்கப்பட்டாள். பெரும் துன்பம் நிறைந்த அந்த நேரத்தில், அவள் ஆன்ம அமைதியை அடைவதில் வென்றாள்[12].(60)பிங்களை, “ஐயோ, அமைதிநிறைந்த சுயம் அருகில் இருக்க, வெறியின் வசப்பட்டு நான் நீண்ட பல வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். மரணம் என் வாயிலில் இருக்கிறது. எனினும், இதற்கு முன் நான் தூய்மையின் சாரத்தை நாடவில்லை.(61) ஒன்பது வாயில்களும் ஒரு தூணும் கொண்ட இந்த வீட்டை (உண்மை அறிவின் மூலம்) நான் மறைக்கப் போகிறேன்[13]. அருகில் இருக்கும் பரமாத்மாவை உண்மையில் அன்புக்குரியதாய் எந்தப் பெண்தான் கருதுகிறாள்?[14](62) நான் இப்போது விழித்துக் கொண்டேன். அறியாமையெனும் உறக்கத்தில் இருந்து இப்போது விழித்துவிட்டேன். நான் இனி ஆசைக்கு வசப்பட மாட்டேன். உண்மையில் நரகத்தின் உடல் வடிவங்களான மனிதக்காதலர்கள், காமத்துடன் அணுகி இனியும் என்னை வஞ்சிக்க இயலாது.(63) விதியின் மூலமோ, முற்பிறவி செயல்களின் மூலமோ தீமையும் நன்மையைத் தரும். (அறியாமை உறக்கத்திலிருந்து) விழிப்படைந்த நான், உலகப் பொருட்கள் மீது கொண்ட ஆசைகள் அனைத்தையும் கைவிடுகிறேன். என் புலன்களை முழுமையாக ஆட்சி செய்யப் போகிறேன்.(64) ஆசை மற்றும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் இன்பமாக உறங்குவான். நம்பிக்கை மற்றும் ஆசையில் இருந்து அடையும் விடுதலையே இன்ப நிலையாகும்” என்றாள் {என்பது அந்த ஸ்லோகமாகும்}. பிறகு, ஆசையையும், நம்பிக்கையையும் விலக்கியப் பிங்களை இன்பமாக உறங்கினாள்” என்றார் {அந்தப் பிராமணர்}”.(65)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கல்விமானான அந்தப் பிராமணர் சொன்ன இவற்றாலும் இன்னும் பிற சொற்களாலும் ஆறுதலடைந்த மன்னன் சேனஜித், (தன் துயரத்தைக் கைவிட்டு) இன்பத்தை உணர்ந்து மகிழ்ச்சியை அடைந்தான்”.(66)

மேதாவியின் நீதி! – சாந்திபர்வம் பகுதி – 175- காலம் வேகமாகச் செல்வதைக் கருத்தில் கொண்டு எந்த உயர்ந்த நன்மையை மனிதன் நாட வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; நிச்சயத்தன்மையற்ற வாழ்வைக் குறித்தும், பிரம்மத்தைத் தவிர அனைத்தும் ஒடுங்குதலைக் குறித்தும் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலை உரைத்த பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் அழிவைத் தரும் காலம் கடந்து கொண்டிருக்கிறது[1]. ஓ! பாட்டா, நாடப்பட வேண்டிய நன்மையான பொருள் எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு குறிப்பிட்ட பிராமணர், பெரும் நுண்ணறிவைக்கொண்டவனும், (இதன் காரணமாகவே) மேதாவி என்றழைக்கப்பட்ட ஒரு மகனைப் பெற்றிருந்தார்.(3) ஒரு நாள், மோக்ஷ அறம் குறித்த உண்மைகளை நன்கறிந்த அந்த மகன் {மேதாவி}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த தன் தந்தையிடம் பேசினான்.(4)

மகன் {மேதாவி}, “ஓ! தந்தையே, மனிதனின் வாழ்வுக்காலம் மிக விரைவாகக் கடந்து செல்வதைக் கொண்டு ஒரு ஞானம் கொண்ட மனிதன் என்ன செய்ய வேண்டும்? ஓ! தந்தையே, ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளின் போக்கை, அவற்றின் கனிகளைக் குறித்துத் தவறாமல் எனக்குச் சொல்வீராக. உம்மிடம் இருந்து கேட்டு, அந்தக் கடமைகளை நோற்க நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(5)

தந்தை, “ஓ! மகனே {மேதாவியே}, ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை {ஆசிரமத்தை} நோற்று, வேதங்களை முதலில் கற்க வேண்டும். பிறகு அவன் தன் மூதாதையர்களை மீட்பதற்காக {கிருஹஸ்தாசிரமத்தை ஏற்று} பிள்ளைகளைப் பெற வேண்டும். அடுத்ததாகத் தன் நெருப்பைக் கிண்டி, (பரிந்துரைக்கப்பட்டிருக்கும்) வேள்விகளை முறையான சடங்குகளுடன் செய்ய அவன் முனைய வேண்டும்[2]இறுதியாக, அவன் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் காட்டிற்குள் நுழைய வேண்டும்” என்று சொன்னார்.(6)மகன் {மேதாவி தன் தந்தையிடம்}, “இவ்வாறு அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டு, இவ்வாறு உலகம் தாக்கப்படும்போது, மரண விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய தடுக்கப்பட முடியாத காரியங்கள் அதன் மீது பாயும்போது, எவ்வாறு நீர் இவ்வார்த்தைகளை அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(7)

தந்தை {மேதாவியிடம்}, “எவ்வாறு உலகம் தாக்கப்படுகிறது? எதனால் அது சூழப்பட்டிருக்கிறது? மரண விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் தடுக்கப்பட முடியாத அளவில் அதன் {உலகத்தின்} மீது பாய்வதுமான அஃது எது? ஏன் நீ என்னை இவ்வாறு அச்சுறுத்துகிறாய்” என்று கேட்டார்.(8)

மகன் {மேதாவி தன் தந்தையிடம்}, “காலனே உலகத்தைத் தாக்குகிறான். முதுமையால் உலகம் சூழப்படுகிறது. (மனிதனின் வாழ்வுக்காலத்தைத் தொடர்ந்து குறைக்கும் வகையில்) வந்து போய்க் கொண்டிருக்கும் இரவுகளே அந்தத் தடுக்கப்பட முடியாத காரியங்கள்.(9) காலன் யாருக்காகவும் காத்திருக்க மாட்டான், (ஆனால் ஒவ்வொரு உயிரினத்தையும் நோக்கி உறுதியாக நகர்ந்து வருகிறான்) எனும்போது, அறிவு எனும் ஆடையால் மறைத்துக் கொள்ளாமல் என்னால் எவ்வாறு காலத்தைக் கடத்த முடியும்[3]?(10) அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு இரவும், ஒருவனின் இருப்புக்குரிய காலத்தைக் குறைத்தபடியே கடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஞானம் கொண்ட மனிதன் அந்த நாளை கனியற்றதாகவே கருத வேண்டும்.(11) (காலன் உறுதியாக அணுகி வரும்போது) ஆழமற்ற நீரின் மீனைப் போல மகிழ்ச்சியை உணர்பவன் எவன் இருக்கிறான்? மனிதனின் ஆசைகள் நிறைவேறும் முன்பே அவனிடம் காலன் வந்து விடுகிறான்.(12) ஒரு மனிதன் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, அவனது இதயம் வேறுவகையில் நிலைத்திருக்கும்போது, செம்மறியாட்டைக் கவர்ந்து செல்லும் பெண்புலியைப் போலக் காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(13)நீர் உமது நன்மைக்கானதை இந்த நாளிலேயே நிறைவேற்றிக் கொள்வீராக. இந்தக் காலன் உம்மிடம் வர வேண்டாம். காலன், தன் பலியாடுகளை அவர்கள் செயல்கள் நிறைவடையும் முன்பே இழுத்துச் செல்கிறான்.(14) நாளை செய்ய வேண்டிய செயல்களை இன்றே செய்ய வேண்டும், பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலிலேயே செய்துவிட வேண்டும். தன் பலியாடுகளின் செயல்கள் நிறைவேறிவிட்டனவா, இல்லையா என்று பார்த்துக் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(15) இன்று தன்னிடம் காலன் வரமாட்டான் என்பதை எவன் அறிவான்? இளம் வயதிலேயே ஒருவன் அறம்பயில வேண்டும். வாழ்வென்பது நிலையற்றதாகும். அறம்பயிலப்பட்டால், இம்மையில் புகழும், மறுமையில் பேரின்பமும் அதன் விளைவுகளாக இருக்கும்.(16) 

அறியாமையில் மூழ்கிய ஒருவன், மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் உழைக்க ஆயத்தமாக இருக்கிறான். நல்ல அல்லது தீய செயல்களைச் செய்யும் ஒருவன், அவற்றை வளர்த்துப் பெருக்குகிறான்.(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலவே, மகன்கள், விலங்குகளில் இன்புற்று, தன் ஆசைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அடிமையாக இருக்கும் மனிதனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(18) அவன் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் மலர்களைப் பறிக்க இயலும் முன்பே, தன் ஆசைக்குரிய பொருட்களை அடைந்து மனநிறைவடையும் முன்பே, இரையை அபகரிக்கும் புலியைப் போல அவனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(19) “இது செய்து முடிக்கப்பட்டது; இது செய்யப்பட வேண்டும்; இது பாதிச் செய்யப்பட்டிருக்கிறது” என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இன்பத்தை நிறைவு செய்வதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு மத்தியில் இருக்கும்போதே காலன் அவனை அடக்கி ஆட்கொள்கிறான்.(20)

மனிதன் தன் வயல், தன் கடை, அல்லது தன் இல்லம் என எத்தொழிலைப் பற்றுடன் செய்து கொண்டிருந்தாலும், அவன் தன் செயல்களின் கனியை அடையும் முன்பே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(21) பலவீனன், பலமிக்கவன், துணிவுமிக்கவன், அச்சம் கொண்டவன், மூடன், கல்விமான் இவர்களில் எவரும் தங்கள் செயல்களின் கனிகளை அடையும் முன்பே காலன் அவர்களை அபகரித்துச் செல்கிறான்.(22) பல்வேறு காரணங்களில் இருந்து எழும் மரணம், முதுமை, நோய், கவலை ஆகிய அனைத்தும் உமது உடலிலேயே வசித்து வரும்போது, எவ்வாறு உம்மால் முற்றிலும் {ஒன்றுமில்லாததுபோல} நலமாக வாழ முடிகிறது?(23) உடல்படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, அதன் அழிவுக்காக (அழிவைக் கொண்டுவர) முதுமையும், மரணமும் அதனைத் தொடர்ந்து வருகின்றன. இருப்பில் இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்களை அனைத்தும் இவ்விரண்டால் {முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால்} பாதிப்பை அடைகின்றன.(24) (தோழர்களுக்கு மத்தியில்) கிராமங்களிலும், நகரங்களிலும் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் பற்றே, காலனின் வாய் என்று சொல்லப்படுகிறது[4]. மறுபுறம், காடானது, புலன்களை அடைத்து வைக்கும் கொட்டகையாகக் கருதப்படுகிறது. இது ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது[5].(25)நல்லோர், அக்கட்டுகளை அறுத்து விடுதலையை அடைகின்றனர், அதே வேளையில் தீயோர் அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(26) எண்ணம், சொல், அல்லது செயலால் ஒருபோதும் உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காதவன், உயிருக்கும், உடைமைக்கும் அழிவைத்தரும் இத்தகையவற்றால் ஒருபோதும் தீங்குற மாட்டான்[6].(27) காலனின் தூதர்கள் (நோய் மற்றும் முதுமை) அணுகும்போது, பொய்மையை விழுங்கும் வாய்மையைத் தவிர எதனாலும் அவர்களை {நோய் மற்றும் முதுமையை} தடுக்க முடியாது. வாய்மையே அழிவில்லாதது[7].(28) இந்தக் காரணங்களுக்காகவே ஒருவன் வாய்மை எனும் நோன்பைப் பயில வேண்டும்; வாய்மையுடன் ஒன்று கலப்பத்தில் அவன் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்; வாய்மையே அவனின் வேதம் என அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்; தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, வாய்மையின் மூலம் அவன் காலனை வெல்ல வேண்டும்.(29) மரணமின்மை, மரணம் ஆகிய இரண்டும் உடலிலேயே விதைக்கப்பட்டிருக்கிறது. அறியாமை மற்றும் குழப்பம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் மரணமடைகிறான்; அதே வேளையில் வாய்மையின் மூலம் மரணமின்மை அடையப்படுகிறது.(30)எனவே, தீங்கிழைப்பதில் இருந்து விலகி, வாய்மையை அடைய முயன்று, ஆசை மற்றும் கோபத்தின் ஆதிக்கத்தை மீறி, இன்பம் மற்றும் துன்பத்தை ஒரே பார்வையில் கருதி, அமைதியை அடைந்து, மரணமில்லாதவனை {தேவனைப்} போல நான் மரணத்தைத் தவிர்க்கப் போகிறேன்.(31) சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் வரும் வரையில், என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சாந்தி வேள்வி, பிரம்ம வேள்வி, சொல்வேள்வி, மன வேள்வி, செயல் வேள்வி ஆகியவற்றில் நான் என்னை ஈடுபடுத்திப் போகிறேன்[8]பிசாசங்கள் மட்டுமே செய்யக்கூடியதும், நிலையற்ற கனிகளை உண்டாக்கக்கூடியதுமான கொடுமையான விலங்கு வேள்விகளையோ, உடல் வேள்விகளையோ {உடலைத் தியாகம் செய்வதையோ} என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு செய்ய முடியும்[9]?(33) எவனுடைய சொற்கள், எண்ணங்கள், தவங்கள், துறவு, யோகத் தியானம் ஆகியன அனைத்தும் பிரம்மத்தில் நிலைத்திருக்குமோ, அவன் உயர்ந்த நன்மையை ஈட்டுவதில் வெல்வான்.(34) அறிவுக்கு (அறிவுக்கண்ணுக்கு) இணையான வேறு எந்தக் கண்ணும் இல்லை. வாய்மை (வாய்மையில் உள்ளதைப்) போன்ற தவம் வேறேதும் இல்லை. பற்று (பற்றில் உள்ளதற்கு) இணையான துயரம் வேறேதும் இல்லை. துறவை (துறவில் அடைவதைப் போன்ற) மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(35)பிரம்மத்தில் இருந்து பிரம்மத்தின் மூலமாகப் பிறந்தவன் நான். நான் பிள்ளையற்றவனாக இருந்தாலும், என்னைப் பிரம்மத்திற்கே அர்ப்பணிப்பேன். நான் பிரம்மத்திற்கே திரும்புவேன். என்னை மீட்க ஒரு மகன் தேவையில்லை.(36) பயிலல், நன்னடத்தை, பொறுமை, தீங்கிழையாமை, எளிமை, சடங்குகள் மற்றும் காணும் வேள்விகள் அனைத்தையும் தவிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டு அனைத்தையும் சமமாகப் பார்ப்பதால் விளையும் நிலையான தனிமையை விட ஒரு பிராமணனுக்குச் செல்வம் வேறேதும் இல்லை.(37) ஓ! பிராமணரே, ஒருவன் மரணமடையப் போகிறான் எனும்போது, செல்வம், உற்றார் உறவினர், மனைவியர் ஆகியவற்றால் அவனுக்கு என்ன பயன் இருக்க முடியும்? குகைக்குள் மறைக்கப்பட்டிருக்கும் உமது சுயத்தை {ஆன்மாவை} நாடுவீராக. உமது பாட்டன்மாரும், உமது தந்தைமாரும் எங்கே இருக்கின்றனர்” என்று கேட்டான் {மேதாவி}”[10].(38)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, (இந்தக் கதையில்) மகனின் பேச்சைக் கேட்ட பிறகு, வாய்மை எனும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அந்தத் தந்தையின் வழியில் நீயும் நடப்பாயாக” என்றார்.(39)

சம்பாகர்! – சாந்திபர்வம் பகுதி – 176-இன்பமும், துன்பமும், செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எவ்வாறு ஏற்படுகின்றன என்று கேட்ட யுதிஷ்டிரன், துன்பத்தால் அவதிப்பட்டு, முக்தியை அடைந்த சம்பாகர் எனும் ஒரு ஏழைப் பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்கு உரைத்த பீஷ்மர்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, இன்பமும், துன்பமும், வெவ்வேறு நடைமுறைகளையும், சடங்குகளையும் நோற்று வாழும் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எங்கிருந்து எவ்வாறு உண்டாகுகின்றன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அமைதியையும், விடுதலையையும் {முக்தியையும்} தானே அடைந்த சம்பாகரால் {சம்யாகரால்} என்ன பாடப்பட்டது என்பது குறித்த பழங்கதையொன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், தீய மனைவி, தீய உடை, பசி ஆகியவற்றால் துன்பத்தை அடைந்தவரும், துறவு நோன்பை நோற்று வாழ்பவருமான ஒரு குறிப்பிட்ட பிராமணர் இந்த ஸ்லோகங்களை என்னிடம் சொன்னார்[2].(3) இந்தப் பூமியில் பிறந்த மனிதனை, அவன் பிறந்த நாள் முதலே பல்வேறு வகை இன்ப துன்பங்கள் அடைகின்றன.(4) அவன் அந்த இரண்டையும் விதியின் செயல் என ஏற்றுக் கொண்டால் இன்பம் வரும்போது மகிழ்ச்சியையும், துன்பம் வரும்போது துயரத்தையும் அவன் உணர மாட்டான்.(5)உன் மனம் ஆசையற்றிருந்தாலும், நீ இன்னும் பெருஞ்சுமையைச் சுமக்கிறாய். உனக்கான நன்மையை (விடுதலையை) அடைய நீ முயல வில்லை. உன் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் நீ வெல்லவில்லையா?(6) வீட்டையும், விருப்பத்திற்குரிய உடைமைகளையும் துறந்து சென்றால், நீ உண்மையான மகிழ்ச்சியைச் சுவைக்கலாம். அனைத்தையும் இழந்த மனிதன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான்.(7) இவ்வுலகில் முற்றான ஏழைமையே மகிழ்ச்சியாகும். அதுவே நல்ல உடற்கோட்பாடாகும், அதுவே அருள்களின் தோற்றுவாயாகும், அதுவே ஆபத்திலிருந்து விடுதலையாகும். எதிரியற்ற இவ்வழி (ஆசையை வளர்ப்பவர்களால்) அடையமுடியாததாகவும், (ஆசையில் இருந்து விடுபட்டவர்களால்) எளிதாக அடையத்தக்கதாகவும் இருக்கிறது.(8) மூன்று உலகங்களின் ஒவ்வொரு பகுதிகளிலும் என் கண்களைச் செலுத்தும் என்னால், தூய நடத்தையிலும், (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றில்லாமையிலும் ஓர் ஏழைக்கு இணையான மனிதனைக் காண முடியவில்லை.(9) நான் ஏழைமையையும், அரசுரிமையையும் தராசில் எடை பார்த்தேன். அரசுரிமையைவிட ஏழைமையே கனமானதாகவும், பெரும் தகுதிகளைக் கொண்டதாகவும் தெரிந்தது.(10)

செல்வத்தைக் கொண்ட அரசுரிமை எப்போதும் கவலையால் கலங்கடிக்கப்பட்டு, காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஏழைமைக்ககும், அரசுரிமைக்குமிடையில் இந்தப் பெரும் வேறுபாடு இருக்கிறது.(11) எனினும், ஏழையைப் பொறுத்தவரையில், செல்வம் ஏதும் இல்லாதவனாக இருப்பதால் அவன் நம்பிக்கைகளில் {எதிர்பார்ப்புகளில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நெருப்போ, எதிரியோ, மரணமோ, கள்வர்களோ அவனிடம் இருந்து அடைய முடியாத விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(21) தன் விருப்பப்படி திரிபவனும், தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் கிடப்பவனும், அமைதியை அடைந்தவனுமான அத்தகைய மனிதனை தேவர்களும் மெச்சுகின்றனர்.(13) கோபம் மற்றும் காமத்தால் பாதிக்கப்படும் செல்வந்தன், தீய இதயத்தால் களங்கப்பட்டவனாக இருக்கிறான். அவன் சரிந்த பார்வைகளையும், வெற்று பேச்சுகளையும் பார்க்கவும் பேசவும் செய்கிறான். பாவம் நிறைந்தவனாகும் அவனுடைய முகம் எப்போதும் சுருக்கங்களுடன் கரியதாக இருக்கிறது.(14) தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், கோபத்தால் தூண்டப்பட்டும், கடுமையான, கொடுஞ்சொற்களை அவன் பேசுகிறான். அத்தகைய மனிதன் மொத்த உலகத்திற்கும் ஒரு கொடையளித்தாலும், அவனைப் பார்க்கவும் யார் விரும்புவார்?(15)

செல்வத்துடன் தொடர்ந்த தோழமையானது, பலவீன அறிவுடைய மனிதனைக் கலங்கடிக்கிறது. காற்றானது கூதிர் கால மேகங்களை விரட்டுவதைப் போலவே, அது {செல்வத்தின் தோழமை} அவனது அறிவை விரட்டிவிடும். செல்வத்துடனான தோழமை, “நான் அழகானவன். நான் செல்வம்படைத்தவன்.(16) நான் உயர் பிறவி கொண்டவன். நான் செய்வதனைத்திலும் வெற்றியடைபவன். நான் சாதாரண மனிதன் கிடையாது” என்று அவனை நினைக்க வைக்கிறது. இந்த மூன்று காரணங்களின் விளைவால் அவனது இதயம் போதை கொள்கிறது.(17) உலகம் சார்ந்த உடைமைகளில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட இதயத்துடன் அவன் தன் தந்தைமாரால் திரட்டப்பட்ட செல்வத்தை வீணாக்குகிறான். தேவைகளால் செல்வம் குறைந்ததும் அவன் பிறரின் செல்வத்தை அபகரிப்பதை பழியற்றதாகக் கருதுகிறான்.(18) இந்நிலையில் அவன் தடைகள் அனைத்தையும் மீறி,அனைத்துப் பக்கங்களிலும் பிறரின் உடைமைகளை அபகரிக்கும்போது, காடுகளில் காணப்படும் மானைக் கூரிய கணைகளால் பீடிக்கும் விளையாட்டு வீரனைப் போல மனிதர்களின் ஆட்சியாளர்கள் அவனைத் தடுத்துப் பீடிக்கின்றனர்.(19)

அத்தகைய மனிதன், நெருப்பு மற்றும் ஆயுதங்களால் தோன்றும் இதே வகைத் துன்பங்கள் பலவற்றில் மூழ்குகிறான்.(20) எனவே, உலகம் சார்ந்த மனச்சார்புகளையும் (பிள்ளைகள் மனைவியர் போன்ற ஆசைகளையும்), கடந்து செல்பவையான அனைத்து உண்மையின்மைகளையும் (உடல் போன்றவற்றையும்) ஒருவன் தன் நுண்ணறிவின் துணையுடன் அலட்சியம் செய்து, அந்த வலிநிறைந்த துன்பங்களுக்கு உரிய மருந்துகளை இட்டுத் தீர்வு காண வேண்டும்.(21) துறக்காமல் ஒருவனால் இன்பத்தை ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் தனக்கான உயர்ந்த நன்மையை அவனால் ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் எளிதாக ஒருபோதும் உறங்க முடியாது. எனவே, அனைத்தையும் துறந்து, நீ மகிழ்ச்சியை அடைவாயாக” என்றார்.(22)

சம்பாகர் பாடிய இவையனைத்தும், ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது. இந்தக் காரணத்திற்காக நான் துறவை அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறேன்” {என்றார் பீஷ்மர்}[3].(23)

மங்கி! – சாந்திபர்வம் பகுதி – 177-ஒரு மனிதன் ஏழையாக இருந்தால் அவன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; தன் காளைகளை இழந்த மங்கியின் அவதானிப்புகள்; கவலைகள் நிறைந்ததே இன்பம் என்ற மங்கியின் அறிவுரையையும், அவர் அழிவின்மையை அடைந்த தகவலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(ஈகை மற்றும் வேள்விச்) செயல்களை நிறைவேற்ற விரும்பி, (தேவையான) செல்வத்தை அடையத் தவறும் எந்த மனிதனும், அவனை மூழ்கச் செய்யும் செல்வ தாகத்தை அடக்கவும், இன்பத்தை அடையவும் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(இன்பம், துன்பம், மதிப்பு, அவமதிப்பு போன்ற) அனைத்தையும் சமமாகப் பார்ப்பவனும், (பூமிசார்ந்த விருப்பங்களை நிறைவு செய்ய) ஒருபோதும் முயலாதவனும், பேச்சில் வாய்மை பயில்பவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனும், செயல்பாட்டில் {காரியத்தில்} விருப்பம் இல்லாதவனுமான ஒருவனே மகிழ்ச்சியான மனிதனாவான்.(2) இந்த ஐந்தும் முற்றான அமைதி, அல்லது விடுதலைக்கான {முக்தி /மோக்ஷத்துக்கான} வழிமுறைகள் எனப் பழங்காலத்தவர் சொல்லியிருக்கின்றனர். இவையே சொர்க்கமென்று அழைக்கப்படுகின்றன. இவையே அறம். இவையே பேரின்பம்.(3) பற்றுகளில் இருந்து விடுபட்ட போதும் மங்கியால் பாடப்பட்ட பழைய கதை ஒன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(4)

செல்வத்தை விரும்பியவரான மங்கி, ஏமாற்றங்களால் தாம் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுவதைக் கண்டார். இறுதியில் சிறிதாக எஞ்சியிருந்த தன் உடைமையைக் கொண்டு, இளம் காளைகள் இரண்டை (உழவில் ஈடுபடுத்த) பயிற்றுவிப்பதற்காக நுகத்தடியுடன் சேர்த்து வாங்கினார்.(5) ஒரு நாள் நுகத்தில் பூட்டப்பட்ட இரு காளைகளும், பயிற்சிக்காக (வயலுக்குக்) கொண்டு செல்லப்பட்டன. சாலையில் படுத்திருக்கும் ஓர் ஒட்டகத்தைக் கண்டு மிரண்ட அந்த விங்குகள் திடீரென அந்த ஒட்டகத்தை நோக்கி ஓடி,(6) அதன் கழுத்தின் மீது விழுந்தன. காளைகள் தன் கழுத்தில் விழுந்ததைக் கண்டு சினந்த ஒட்டகம், தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற அந்த இரண்டு உயிரினங்களையும் சுமந்து கொண்டே, விரைவான எட்டுகளை வைத்து, பெரும் வேகத்துடன் ஓடியது.(7)

தன் காளைகள் இரண்டும் அந்தப் பலமிக்க ஒட்டகத்தால் சுமந்து செல்லப்படுவதைக் கண்டும், அவை மரணத்தருவாயில் இருப்பதைப் பார்த்தும் மங்கி, “செல்வமானது விதியால் விதிக்கப்படவில்லையெனில், கவனத்துடன் முயன்று, சாதிக்கத் தேவைப்படும் திறனும், நம்பிக்கையும் உள்ள ஒரு புத்திசாலியால் கூட அஃதை {செல்வத்தை} ஒருபோதும் அடையமுடியாது.(9) செல்வத்தை ஈட்டுவதில் அர்ப்பணிப்புடன் கூடிய நான், இதற்கு முன்பே பல்வேறு வழிமுறைகளில் முயன்றுவிட்டேன். நான் கொண்ட உடைமைக்கு விதியால் கொண்டுவரப்பட்ட தீப்பேற்றைப் பார்.(10) அந்த ஒட்டகம் சமமற்ற பாதையில் ஓடிக் கொண்டிருப்பதால் என் காளைகள் விழுவதும் எழுவதுமாகச் சுமந்து செல்லப்படுகின்றன. இந்நிகழ்வு ஒரு விபத்தாகத் தெரிகிறது[1].(11) ஐயோ, என் அன்புக்குரிய காளைகள் இரண்டும் அந்த ஒட்டகத்தின் கழுத்தில் இரண்டு ரத்தினங்களைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இது விதியின் விளைவு மட்டுமே. {சூழ்நிலைக்கேற்ப மாறும்} வாய்ப்புக்குரியவற்றில் முயற்சி பயனற்றதாகும்.(12) அல்லது, முயற்சி போன்ற (விளைவுகளை உண்டாக்கும் காரணியான) ஏதாவது ஒன்றின் இருப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஆழ்ந்த தேடலின் அதன் அடியில் விதி இருப்பது கண்டடையப்படலாம்[2].(13) எனவே இன்பத்தை விரும்பும் மனிதன் பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். பற்றுகள் ஏதும் இல்லாமல், செல்வமீட்டும் ஆசையேதும் இல்லாமல் உள்ள மனிதன் மகிழ்ச்சியாக உறங்கலாம்.(14)சுகர், அனைத்தையும் துறந்து, தன் தந்தையின் {வியாசரின்} வசிப்பிடத்தில் இருந்து பெருங்காட்டுக்குச் சென்ற போது[3],(15) “தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தவன், தன் விருப்பங்களைக் கைவிட்டவன் ஆகிய இருவருக்கிடையில் அனைத்தையும் துறந்தவனான பின்னவனே அனைத்தின் கனிகளையும் அடைந்த முன்னவனைக் காட்டிலும் மேன்மையானவன்.(16) எவராலும் ஆசையின் எல்லையை அடைய முடியாது. அறிவும், தீர்மானமும் அற்ற ஒருவன் மட்டுமே, தன் உடலையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்வதில் ஓர் ஆர்வத்தை உணர்வான்” என்றார்.(17)செயல்படும் விருப்பம் ஒவ்வொன்றையும் தவிர்ப்பாயாக. ஓ! காமம் கொண்ட என் ஆன்மாவே, பற்றுகள் அனைத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு அமைதியை அடைவாயாக. (ஆசையாலும், நம்பிக்கையாலும் {எதிர்பார்ப்பாலும்}) நீ மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறாய். அவ்வாறிருப்பினும், நீ ஏன் இன்னும் பற்றுகளில் இருந்து விடுதலையடையவில்லை?(18) நான் உன்னால் அழிவடையத்தகாதவன், உன்னோடு விளையாடி களிக்கத் தகுந்தவன் என்றால், ஓ! செல்வத்தில் ஆசை கொண்ட ஆன்மாவே, என்னைக் காமத்தை நோக்கித் தூண்டாதே.(19) நீ திரட்டிய செல்வத்தை மீண்டும் மீண்டும் இழந்தாய். ஓ! செல்வத்தில் ஆசை பேராசை கொண்ட என் மூட ஆன்மாவே, செல்வத்தில் உள்ள ஆசையில் இருந்து எப்போதும் நீ விடுதலையடையப் போகிறாய்?(20) என் மடமையில் நான் நாணுகிறேன். நான் உனது பொம்மையாகிவிட்டேன். இவ்வாறே ஒருவன் பிறருக்கு அடிமையாகிறான்.(21) பூமியில் பிறந்த எவரும் இதற்கு முன்பு ஆசையின் எல்லையை அடைந்ததில்லை, இனி பிறக்கப் போகும் எவரும் அஃதை அடையப்போவதுமில்லை. செயல்கள் அனைத்தையும் கைவிடும் நான், இறுதியாக உறக்கத்தில் இருந்து விழிக்கிறேன். நாம் இப்போது விழித்துவிட்டேன்.(22) ஓ! ஆசையே, நூறு துன்பங்களால் எவ்வளவுதான் பாதிப்படைந்தாலும் நீ நூறு துண்டுகளாக உடைந்து போவதில்லை, ஆகையால் உன் இதயம் வஜ்ரம் போலக் கடினமானது என்பதில் ஐயமில்லை.(23) ஓ! ஆசையே, உன்னையும், உன் அன்புக்குரியவை அனைத்தையும் நான் அறிவேன். உன் அன்புக்குரியவற்றை நாடுவதால், நான் எனக்குள் மட்டுமே மகிழ்ச்சியை அடைவேன்[4].(24) ஓ! ஆசையே, நான் உன் வேரை அறிவேன். நீ விருப்பத்தில் இருந்து உதிக்கிறாய்[5]. எனவே, நான் விருப்பத்தைத் தவிர்ப்பேன். அப்போது நீ வேர்களோடு அழிக்கப்படுவாய்.(25)செல்வத்திற்கான ஆசை ஒருபோதும் மகிழ்ச்சியால் நிறைந்ததல்ல.  {செல்வம்} அடையப்பட்டால், அஃதை {செல்வத்தை} அடைந்தவன் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறான். அடைந்த பிறகு தொலைத்தால், அது மரணம் என்றே உணரப்படுகிறது. இறுதியாக, {செல்வத்தை} அடைவது என்பதே உறுதியற்ற ஒன்றாகும்.(26) ஒருவன் சரணடைவதாலேயே செல்வத்தை அடையமுடியாது. இதைவிட வேறு எது வலிநிறைந்ததாக இருக்க முடியும்? அடையப்படும்போது, அதன் அளவில் ஒருவன் ஒருபோதும் நிறைவடைவதில்லை, ஆனால் {மீண்டும் மீண்டும்} அடைய முனைவதைத் தொடர்கிறான்.(27) கங்கையின் இனிய நீரைப்போலச் செல்வமானது ஒருவனுடைய ஆவலை மட்டுமே தூண்டும். அதுவே என் அழிவாகும். நான் இப்போது விழித்துவிட்டேன். ஓ! ஆசையே, என்னைவிட்டு அகல்வாயாக. (ஐந்து) பூதங்களின் தொகையான {ஐம்பூதங்களாலான} என் உடலைப் புகலிடமாகக் கொண்ட அந்த ஆசை விரும்பிய இடத்திற்குச் சென்று அது விரும்பியவாறு மகிழ்ச்சியாக வாழட்டும்[6].(29) ஆன்மா இல்லாதவர்களே, நீங்கள் ஆசை மற்றும் காமத்தைப் பின்தொடர்வதால் எனக்கு உங்களிடம் இன்பமில்லை. உங்கள் அனைவரையும் கைவிட்டு, நற்பண்பின் குணத்திடம் {சத்வ குணத்தை} என் புகலிடமாகக் கொள்ளப் போகிறேன்[7].(30)என் உடல் மற்றும் மனத்திலேயே அனைத்து உயிரினங்களையும் கண்டு, யோகத்தில் என் அறிவையும், நல்லோரின் அறிவுரைகளில் என் வாழ்வையும், பிரம்மத்தில் ஆன்மாவையும் அர்ப்பணிக்கப்போகிறேன்.(31) எந்தப் பற்றும் இல்லாமல், எவ்வகை துன்பங்களும் இல்லாமல், இத்தகைய கவலைகளில் என்னை மீண்டும் நீ மூழ்கடிக்காதவாறு நான் இவ்வுலகில் இன்பமாகத் திரியப் போகிறேன்[8].(32) ஓ! ஆசையே, நான் தொடர்ந்து உன்னால் கலங்கடிக்கப்பட்டால், (என் மீட்பை அடையும்) பாதை ஏதும் அற்றவனாக இருப்பேன். ஓ! ஆசையே, நீயே தாகத்தையும், துயரத்தையும், களைப்பையும், உலைவையும் உண்டாக்குகிறாய்.(33) செல்வ இழப்பில் ஒருவன் உணரும் துயரமானது, வேறு எந்தச் சூழ்நிலையில் உணரப்படுவதைவிடக் கூரியதாகவும், பெரியதாகவும் இருக்கிறது என நான் நினைக்கிறேன். செல்வம் இழந்தவனை உற்றாரும், நண்பர்களும் அவமதிக்கின்றனர்.(34) பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான அவமதிப்புகளும், அதற்கு மேலான வலிநிறைந்த குற்றங்கள் பலவும் உடைமையிலேயே உள்ளன. மறுபுறம், செல்வத்தில் வசிக்கும் சிறு மகிழ்ச்சியும் கூட வலி மற்றும் துன்பத்துடன் கலந்தே இருக்கிறது[9].(35)செல்வம்படைத்தவன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கள்வர்களால் கொல்லப்படுகிறான், அல்லது பல்வேறு வகைக் கடுமைகளால் அவன் பீடிக்கப்படுகிறான், அல்லது எப்போதும் அச்சத்தால் நிறைந்திருக்கிறான்.(36) நீண்ட காலத்திற்குப் பிறகு, இறுதியாக, செல்வத்தில் விருப்பம் என்பது துன்பத்தால் நிறைந்தது என்பதைப் புரிந்து கொண்டேன். ஓ! ஆசையே, எந்த நோக்கத்தில் நீ உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கிறாயோ, அதையே நீ என்னைத் தொடரும்படி வற்புறுத்துகிறாய். நீ தீர்மானமில்லாமல் இருக்கிறாய். நீ ஒரு முட்டாள். நீ நிறைவடைவதற்குக் கடினமானவன். உன்னை நிறைவு செய்ய முடியாது. நீ நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறாய்.(37) (ஒரு பொருளைத் தொடர்வதில்) அடைவதற்கு அஃது எளிதானதா, கடினமானதா என்று நீ விசாரிப்பதில்லை. நீ பாதாளத்தைப் போலவே விளிம்பு வரை நிறைவுசெய்யப்பட முடியாதவன். நீ என்னைத் துன்பத்தில் மூழ்கடிக்க விரும்புகிறாய். ஓ! ஆசையே, இந்த நாள் முதல் நான் உன்னுடன் வாழ இயலவனாகிறேன்.(38) என் உடைமையை இழந்ததால் முதலில் துன்பமடைந்த நான், இப்போது பற்றுகளில் இருந்து முற்றாக விடுபடுவதில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறேன். உன்னையும், உன்னைத் தொடர்ந்து வருபவற்றையும் நான் இந்தக் கணமுதல் ஒருபோதும் நினைக்க மாட்டேன்.(39) உன் காரியத்தில் இந்தப் பெருந்துன்பத்தை ஏற்கனவே நான் உணர்ந்திருக்கிறேன். (இப்போது) நுண்ணறிவற்றவனாக நான் என்னைக் கருதவில்லை. என் உடைமையை இழந்ததன் விளைவால் துறவைப் பின்பற்றப் போகும் நான், அனைத்து வகை நோயிலிருந்தும் விடுபட்டவனாவேன்.(40)

ஓ! ஆசையே, என் இதயத்தில் இருக்கும் விருப்பங்கள் அனைத்தையும் உன்னோடு சேர்த்து நான் கைவிடப்போகிறேன். நீ மீண்டும் என்னுடன் வசிக்கமாட்டாய், அல்லது என்னோடு விளையாட மாட்டாய்.(41) என்னைக் குறித்துத் தவறாகப் பேசுவோரையோ, அவதூறாகப் பேசுவோரையோ நான் மன்னிப்பேன். தீங்கிழைக்கப்படும்போதும் நான் தீங்கிழைக்க மாட்டேன். வெறுப்புணர்வால் எனக்கு ஏற்பில்லாத வார்த்தைகளை யாரும் பேசினாலும், அவ்வார்த்தைகளை அலட்சியம் செய்து, ஏற்புடைய வார்த்தைகளிலேயே நான் அவனிடம் பேசுவேன். நிறைவான இதயத்துடனும், சுகமான புலன்களுடனும் என்னால் அடையப்படுபவற்றைக் கொண்டு மட்டுமே நான் எப்போதும் வாழப்போகிறேன்.(42) என் எதிரியான உன்னால் ஊக்குவிக்கப்படும் எந்த விருப்பத்திலும் நான் பங்கேற்கமாட்டேன். பற்றிலிருந்து விடுதலை, ஆசை துறப்பு, மனநிறைவு, அமைதி, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, உலகளாவிய கருணை ஆகிய பண்புகள் இப்போது என்னிடம் வந்திருக்கின்றன.(43) எனவே, ஆசை, காமம், தாகம், துயர்மிக்கநிலை ஆகியன என்னைத் தவிர்க்கட்டும். நான் இப்போது நற்பண்பின் பாதையைப் பின்பற்றுகிறேன்.(44) ஆசை, காமம் ஆகியவற்றைக் கைவிட்ட எனக்கு இப்போது மகிழ்ச்சி பெரிதாக இருக்கிறது. காமத்தின் ஆதிக்கத்துக்கு ஒருபோதும் இனி வசப்படாமல், தூய்மையற்ற ஆன்மா கொண்ட ஒரு மனிதனைப் போல இனி துன்பத்தில் உழலமாட்டேன்.(45)

ஒருவன் கைவிடப்போகும் ஆசைகளின் அளவின்படி அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான். உண்மையில், ஆசையின் ஆதிக்கத்திற்கு வசப்படுபவன் எப்போதும் துன்பத்திலேயே உழல்கிறான்.(46) ஆசை தொடர்பான எந்த விருப்பங்களையெல்லாம் ஒரு மனிதன் கைவிடுகிறானோ, அவை அனைத்தும் ஆசையின் பண்பைக் கொண்டவை {ரஜோ குணத்தைச் சார்ந்தவை}. கவலை, நாணமின்மை, நிறைவின்மை ஆகிய அனைத்தும் ஆசை மற்றும் செல்வத்தில் இருந்தே எழுகின்றன.(47) கோடை காலத்தில் குளிர்ந்த தடாகத்தில் மூழ்கும் மனிதனைப் போல நான் பிரம்மத்திற்குள் இப்போது நுழைகிறேன். செயலை நான் தவிர்க்கிறேன். துயரத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். என்னிடம் இப்போது தூய மகிழ்ச்சி வருகிறது.(48) ஆசையின் நிறைவின் மூலம் விளையும் இன்பநிலை, அல்லது, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் தூய இன்ப நிலை ஆகியவை, தாக வகைகள் அனைத்தையும் கைவிடுவதால் எழும் பேரின்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாதவையாகும்.(49) ஆசையின் கொள்கையைக் கொன்று, கசந்த எதிரியான உடலை ஏழின் தொகையாக்கி, பிரம்மம் எனும் அழிவில்லா நகரத்திற்குள் நுழைந்து ஒரு மன்னனைப் போல நான் என் நாட்களைக் கடத்தப்போகிறேன்” என்றார் {மங்கி}[10].(50)இத்தகைய நுண்ணறிவைச் சார்ந்த மங்கி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, உயர் இன்ப நிலையின் வசிப்பிடமான பிரம்மத்தை அடைந்தார்.(51) உண்மையில், மங்கி தன் காளைகள் இரண்டை இழந்ததன் விளைவால் அழிவின்மையை அடைந்தார். உண்மையில், அவர் ஆசையின் வேர்களை அறுத்ததால், அதன் மூலமே அவர் அந்த உயர்ந்த பேரின்பத்தை அடைந்தார்” என்றார் {பீஷ்மர்}.(52)

போத்யர்! – சாந்திபர்வம் பகுதி – 178-மிதிலையின் மன்னன் ஜனகனின் அவதானிப்புகளையும், பழங்காலத்தில் யயாதிக்கும் முனிவர் போத்யருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; போத்யரின் ஐந்து ஆசான்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பழங்கதையில் ஆன்ம அமைதியை அடைந்தவனும், விதேஹர்களின் ஆட்சியாளனுமான ஜனகனால் பாடப்பட்ட சுலோகம் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) அந்த ஏகாதிபதி {ஜனகன்}, “என் செல்வம் அளவற்றது. அதே வேளை நான் எதையும் கொண்டிருக்கவில்லை. (என் நாடான) மிதிலை மொத்தமும் எரிந்து போனாலும் எனக்கு எந்த இழப்பு இல்லை” என்று சொன்னான் {ஜனகன்}.(2)

பற்றிலிருந்து விடுபடுவது என்ற இது தொடர்பாகவே போத்யரின் உரையும் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக. ஒருகாலத்தில் நகுஷனின் அரச மகன் (யயாதி), ஆசையைக் கைவிட்டதன் விளைவாக ஆன்ம அமைதியை அடைந்தவரும், சாத்திரங்களை அணுக்கமாக அறிந்தவருமான முனிவர் போத்யரிடம் கேள்வி கேட்டான்.(4)

அந்த ஏகாதிபதி {யயாதி}, “ஓ! பெரும் ஞானியே, அமைதி குறித்து எனக்கு அறிவுரைகளை வழங்குவீராக. செயல்பாடுகள் எவற்றிலும் ஈடுபடமாலும், ஆன்ம அமைதியுடனும் எந்த அறிவைச் சார்ந்து நீர் இவ்வுலகில் திரிகிறீர்?” என்று கேடாடன்.(5)

போத்யர் {யயாதியிடம்}, “நான் பிறரின் அறிவுரைகளின்படியே என்னை நடத்திக் கொள்கிறேன், ஆனால் பிறருக்கு ஒருபோதும் நான் அறிவுரைகள் வழங்குவது கிடையாது. எனினும், (எதைக் கொண்டு என் நடத்தை கட்டமைக்கப்பட்டுள்ளதோ அந்த) அறிவுரைகளின் குறியீடுகளைக் குறிப்பிடுகிறேன். அதன் கருத்தை நீ தானாக அறிந்து கொள்வாயாக.(6) பிங்களை, அன்றில்[1]பாம்பு, காட்டின் வண்டுகள், (பின்வரும் கதையில் உள்ள) கணைகள் செய்பவன், (பின்வரும் கதையில் உள்ள) கன்னிகை ஆகிய இந்த ஆறுபேரும் எனக்கு ஆசான்களாவர்” என்றார் {போத்யர்}.(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (இதயத்தைக் கலங்கடிப்பதில்) நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மிகப் பலமிக்கதாகும். நம்பிக்கையிலிருந்து {எதிர்பார்ப்பிலிருந்து} விடுபடுவதே உயர்ந்த இன்பநிலையாகும். எதிர்பார்ப்பில்லாத அளவுக்கு நம்பிக்கையைக் குறித்த பிங்களை அமைதியாக உறங்கினாள்.(8) அலகில் இறைச்சியைக் கொண்டிருந்த அன்றிலைக் கண்டு பிற பறவைகள், வேறு இறைச்சி எதையும் காணாமல், அதைத் தாக்கி அழித்தன. ஒரு குறிப்பிட்ட அன்றிலானது, இறைச்சியை மொத்தமாகத் தவிர்த்து இன்பத்தை அடைந்தது[2].(9) தனக்கென வீட்டைக் கட்டிக் கொள்வது ஒருவனுக்குத் துன்பத்தை உண்டாக்குமேயன்றி இன்பத்தையல்ல. மற்றொரு உயிரினத்தின் வசிப்பிடத்தைத் தனதாக எடுத்துக் கொள்ளும் பாம்பு இன்பமாக வாழ்கிறது.(10)பிச்சையெடுக்கும் நிலையை அடைந்த தவசிகள், எந்த உயிரினத்திற்கும் தீங்கேற்படுத்தாமல் காட்டில் உள்ள வண்டுகளைப் போல மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.(11) கணைகளைச் செய்யும் ஒருவன் தன் அருகே மன்னன் கடந்து செல்வதையும் கவனிக்காத அளவுக்குத் தன் பணியில் ஆழ்ந்த கவனத்துடன் ஈடுபட்டு வந்தான்.(12) பலர் ஒன்றுகூடியிருக்கும்போது, சச்சரவுகள் உண்டாகும். இருவர் ஒன்றாக வசித்தால், நிச்சயம் உரையாடுவார்கள். எனினும், ஒரு கதையின் வரும் கன்னிகையின் மணிக்கட்டில் உள்ள {ஒற்றை} சங்கு வளையலை {சங்குகளாலான வளையலைப்} போல நான் தனியாகத் திரிந்து வருகிறேன்” என்றார் {பீஷ்மர்}[3].(13)(இந்தக் கதை மிகப் பழமையானது; இது பாகவதத்தில் முழுமையாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில், தன் தந்தையின் இல்லத்தில் வசித்து வந்த ஒரு கன்னிகை, எண்ணற்ற பிராமணர்களுக்கு ரகசியமாக உணவளிக்க விரும்பினாள். களஞ்சியத்தில் இருந்து தானியத்தை எடுக்கும்போது, சங்குகளாலான அவளது வளையல்கள் குலுங்கத்தொடங்கின. அவ்வொலியால் கண்டுபிடிக்கப்படுவோம் என அஞ்சிய அவள் ஒரு கைக்கு ஒரே ஒரு வளையலை மட்டும் விட்டுவிட்டு எஞ்சிய அனைத்தையும் உடைத்துவிட்டாள்”)

ஆஜகர நோன்பு! – சாந்திபர்வம் பகுதி – 179-இவ்வுலகில் வெற்றியடைவதற்குரிய ஒழுக்கத்தையும், சிறந்த கதியை அடைய மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், ஆஜகர முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; தவிர்க்கப்பட முடியாத மரணத்தைக் கருத்தில் கொண்டு உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் பாகுபாடில்லாமல் இருந்த ஆஜகரர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனிதர்களின் நடத்தைகளை அறிந்தவரே, எந்த நடத்தையின் மூலம் ஒரு மனிதன் துயரத்தில் இருந்து விடுபட்டு இவ்வுலகில் வெற்றியடைவான் என்பதை எனக்குச் சொல்வீராக. சிறந்த கதியை அடைவதற்கு ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு செயல்பட வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் உள்ளதும், பிரஹலாதனுக்கும், தவசி ஆஜகரருக்கும்[1] இடையில் நடந்ததுமான உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் பிரஹலாதன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தூய அமைதியான ஆன்மா கொண்டவருமான, திரிந்து கொண்டே இருப்பவருமான ஒரு பிராமணரிடம் கேள்வி கேட்டான்.(3)பிரஹலாதன் {தவசி ஆஜகரிடம்}, “ஆசையில் இருந்து விடுபட்டு, தூய ஆன்மாவுடன், பணிவு, தற்கட்டுப்பாடு, செயல்பாட்டில் விருப்பமின்மை, வன்மத்தில் இருந்து விடுதலை, ஏற்புடைய பேச்சு ஆகியவற்றுடனும், கண்ணியம், நுண்ணறிவு மற்றும் ஞானத்துடனும் (எளிமையாக) ஒரு குழந்தையைப் போல நீர் வாழ்கிறீர்.(4) நீர் ஒருபோதும் எந்த வகைப் பொருளை ஈட்டுவதில் மகிழ்ச்சியோ, இழப்பதில் துயரோ கொள்ளவில்லை. ஓ! பிராமணரே, நீர் எப்போதும் நிறைவுடன் இருக்கிறீர், உலகில் உள்ள எதையும் மதிப்பதாகவும் தெரியவில்லை.(5) ஆசை மற்றும் விருப்பத்தின் உந்துதலில் பிற உயிரினங்கள் அனைத்தும் சுமந்து செல்லப்படும்போது, அறம், பொருள், இன்பம் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் நீர் முற்றான பாகுபாடின்றி இருக்கிறீர். (கலக்கமடையும் தன்மை இல்லாதவராக) அமைதி நிலையில் நீடித்திருப்பவராக நீர் தெரிகிறீர்.(6) புலன்களுக்குரிய பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் நீர், விடுதலையடைந்த சுயத்துடன் (எதிலும் பங்கெடுத்துக் கொள்ளாமல்) அனைத்தையும் பார்த்துக் கொண்டே செல்கிறீர்.(7) ஓ! தவசியே, இந்த உமது ஞானம் என்ன? கல்வி என்ன? (எதன் விளைவாக இவையனைத்தும் சாத்தியப்படுகிறதோ அந்த) நடத்தை {ஒழுக்கம்} என்ன? ஓ! பிராமணரே, இஃது எனக்கு நன்மையைச் செய்யும் என்று நீர் நினைத்தால் இதை எனக்குத் தாமதமில்லாமல் சொல்வீராக” என்று கேட்டான் {யயாதி}”.(8)

பீஷ்மர் தொடர்ந்தார், “உலகக் கடமைகளை அறிந்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான அந்தப் பிராமணர் {ஆஜகர்}, பிரஹலாதனால் இவ்வாறு கேட்கப்பட்டுப் பெரும் முக்கியத்துவத் வாய்ந்த, இனிய வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(9)

{தவசி ஆஜகர்}, “ஓ! பிரஹலாதா, உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, சிதைவு, மரணம் ஆகியவை, (புத்திக்கு) எட்டக்கூடிய எந்தக் காரணமும் இல்லாதிருப்பதைப் பார். இந்தக் காரணத்திற்காகவே நான் இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதில்லை[2].(10) அண்டத்திலுள்ள (செயல்பாடுகளுக்கான) மனச்சார்புகள் அனைத்தும், உயிரினங்களின் (உள்ளுறை) இயல்புகளில் இருந்து பாய்வது காணப்படுகிறது. (அண்டத்தில் உள்ள) அனைத்துப் பொருட்களும், அதனதன் இயல்புகளைச் சார்ந்தவையாக இருக்கின்றன. எனவே, நான் எதிலும் திளைப்படைவதில்லை[3].(11) ஓ! பிரஹலாதா, அனைத்து வகைச் சேர்க்கையும், பிரிவின் இயல்திறனை {நாட்டத்தை} கொண்டவையாகும். அனைத்து உடைமைகளும் நிச்சயம் முடிவில் அழிவடையும். எனவே நான் எந்தப் பொருளையும் அடைவதில் என் இதயத்தை ஒருபோதும் நிலைநிறுத்துவதில்லை.(12) பண்புகளைக் கொண்ட அனைத்துப் பொருட்களும் அழிவடையப் போவது நிச்சயம். பொருட்களின் தோற்றம் மற்றும் முடிவு ஆகிய இரண்டையும் அறிந்த (என்னைப் போன்ற) ஒருவனுக்கு என்ன எஞ்சியிருக்கிறது?(13)பெருங்கடலின் நீரிலுண்டான பெரிய அல்லது சிறிய பொருட்கள் அனைத்திற்கும் முடிவு காணப்படுகிறது.(14) ஓ! அசுரர்களின் தலைவா {பிரஹலாதா}, நிலத்தைச் சார்ந்த அசைவன, அசையாதன ஆகிய பொருட்கள் அனைத்துக்கும் மரணம் ஏற்படுவதை நான் வெளிப்படையாகக் காண்கிறேன்.(15) ஓ! தானவர்களில் சிறந்தவனே, வானத்தில் பறக்கும் சிறகு படைத்த பலமான உயிரினங்களுக்கும் உரிய காலத்தில் மரணம் நேர்கிறது.(16) ஆகாயத்தில் நகர்ந்து வரும் பெரியனவும், சிறியனவுமான ஒளிக்கோள்களும் அவற்றின் காலம் நேர்கையில் கீழே வீழ்கின்றன.(17) படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மரணத்திற்கு ஆட்படக் கூடியன என்பதைக் கண்டு, அனைத்துப் பொருட்களும் அதே இயல்பைக் கொண்டனவே என்று நினைத்து, அறிவை அடைந்து, இதயத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் நான் அமைதியாக உறங்குகிறேன்.(18)

எந்தச் சிரமமுமின்றி அதிகமான உணவை அடைந்தால், அதை அனுபவிக்க நான் தயங்குவதில்லை. மறுபுறம், பல நாட்கள் சேர்ந்தாற்போல எதையும் உண்ணாமல் கடந்திருக்கிறேன்.(19) சில வேளைகளில் மக்கள் விலைமதிப்புமிக்க உணவு பொருட்களை அபரிமிதமகாவும், சில வேளைகளில் சிறு அளவும், சில வேளைகளில் சொற்ப அளவிலும் கொடுத்து உண்ணச் செய்கிறார்கள், சில வேளைகளில் எந்த உணவும் எனக்குக் கிடைப்பதில்லை.(20) சில வேளைகளில் நான் ஒரு தானியத்தின் ஒரு பகுதியை {நொய்யை} மட்டும் உண்கிறேன்; சில வேளைகளில் எண்ணெய் எடுக்கப்பட்ட காய்ந்த பிண்ணாக்கையும் உண்பேன். சில வேளைகளில் அரிசியும், இறைச்சியும், ஆடம்பர வகையிலான பிற உணவும் உண்பேன்.(21) சில வேளைகளில் சிறந்த வகையிலான உயர்வான படுக்க விரிப்பில் உறங்குகிறேன். சில வேளைகளில் வெறுந்தரையில் உறங்குகிறேன். சில வேளைகளில் என் படுக்கை அற்புதமான மாளிகையிலோ, அறையிலோ இருக்கிறது.(22) சில வேளைகளில் மரவுரி அணிகிறேன், சில வேளைகளில் சணலால் செய்யப்பட்ட ஆடைகளையும், சில வேளைகளில் பட்டாடைகளையும், சில வேளைகளில் மான் தோல்களையும், சில வேளைகளில் விலைமதிப்புமிக்க வையிலான ஆடைகளையும் உடுத்துகிறேன்.(23) முயற்சி இன்றி என்னால் அடையப்படும், அறத்திற்கு இசைவான எந்த இன்பங்களையும் நான் ஒருபோதும் புறக்கணிப்பது கிடையாது. அதே வேளையில் அடைவதற்கரிதான அத்தகைய பொருட்களை அடைய நான் முயற்சி செய்வதும் கிடையாது.(24) நான் பின்பற்றி வரும் கடும் நோன்பு ஆஜகரம் என்றழைக்கப்படுகிறது[4]. இந்த நோன்பால் அழியாத்தன்மையை அடையமுடியும். அது மங்கலமானதும், துன்பமற்றதுமாகும். அஃது ஒப்பற்றதும், தூய்மையானதுமாகும். அது நல்லோரின் ஆலோசனைகளுக்கு இசைவானதாகும். அதை ஒருபோதும் பின்பற்றாத மூடர்களால் அஃது அங்கீகரிக்கப்படுவதில்லை. தூய்மையான இதயத்துடன் நான் என்னை அந்த ஒழுக்கத்தின்படியே அமைத்துக் கொள்கிறேன்.(25)என் மனம் ஒருபோதும் இந்நோன்பிலிருந்து பிறழ்வதில்லை. என் வகைக்கான நடைமுறைகளில் இருந்து நான் பிறழ்ந்ததில்லை. நான் அனைத்தையும் தவிர்க்கும் நிலையில் இருக்கிறேன். நான் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் அறிவேன். அச்சம், கோபம், காமம், பிழையான தீர்மானம் ஆகியவை இல்லாமல், தூய இதயத்துடன் நான் இந்த நோன்பைப் பின்பற்றுகிறேன்.(26) இந்நோன்பில் உணவு, பானம் மற்றும் இன்பத்துக்குரிய பிற பொருட்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அனைத்தும் விதியைச் சார்ந்திருப்பது போல, எங்களைப் போன்றவர்களுக்குக் காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொள்ளும் நடைமுறை ஏதும் கிடையாது. நான் பின்பற்றும் நோன்பானது, இதயத்தின் உண்மையான மகிழ்ச்சிக்குப் பங்களிக்கிறது. தீயோரால் இஃது ஒருபோதும் பின்பற்றப்படுவதில்லை. நான் தூய இதயத்துடன் இதைப் பின்பற்றுகிறேன்.(27) காமத்தால் தூண்டப்பட்ட மனிதர்கள், பல்வேறு வகைகளில் செல்வத்தைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். அந்தத் தொடர்ச்சியில் கலங்கடிக்கப்படும் அவர்கள், கவலையுடன் மனச்சோர்வை அடைகின்றனர். பொருட்களின் உண்மைகளை ஊடுருவியிருக்கும் என் நுண்ணறிவின் துணையால் இவை அனைத்தையும் குறித்து முறையாகச் சிந்தித்து, தூய இதயத்துடன் நான் இந்நோன்பைப் பின்பற்றுகிறேன்.(28) துன்பத்தில் இருக்கும்போது, செல்வத்தை அடைவதற்காக நல்ல மற்றும் தீய மனிதர்களை நாடுவோரை நான் கண்டிருக்கிறேன். அமைதியில் பற்றுடன், விருப்பங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(29) இன்பம், துன்பம், இழப்பு, லாபம், பற்று, துறவு, மரணம், வாழ்வு ஆகிய அனைத்தும் விதியால் விதிக்கப்படுகின்றன என்பதை வாய்மையின் உதவியால் கண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(30)

அச்சம், பற்று, தீர்மானப்பிழை, செருக்கு ஆகியவை இல்லாமலும், ஞானம், நுண்ணறிவு, புரிதல், அமைதியில் பற்று ஆகியவற்றுடனும், பெரும்பாம்புகள் தன்னிடம் வரும் கனியில் அசையாமல் இன்புற்றிருக்கின்ற என்பதைக் கேட்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(31) படுக்கை மட்டும் உணவில் எந்த வகைக் கட்டுப்பாடுகளுமில்லாமல், என் இயல்புடன் கூடிய தற்கட்டுப்பாடு, சிக்கனம், தூய நோன்புகள், வாய்மை, ஒழுக்கத்தூய்மை ஆகியவற்றுடன், (எதிர்காலப் பயன்பாட்டுக்கென) செயல்களின் வெகுமதிகளில் எந்த ஆசையுமில்லாமல் மகிழ்ச்சியுடனும், தூய இதயத்துடனும் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(32) ஆசைக்குரிய நோக்கங்கள் விலக்கப்பட்டதன் விளைவால் சோகத்தின் காரணங்கள் அனைத்தும் என்னை விட்டுப் பறந்தோடிவிட்டன. ஒளியின் இணக்கத்தை அடைந்த பிறகு, தாகமுள்ளதும், கட்டுப்பாடில்லாதும், (முறையான பண்பாட்டில், வெளி பொருட்களின் எந்தத் தேவையுமின்றி) தன்னைச் சார்ந்திருப்பதில் கட்டுப்படக்கூடியதுமான என் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதற்காகத் தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(33)

என் இதயம், மனம், சொற்கள் ஆகியவை எவற்றுக்கு வழிவகுக்குமோ, அவற்றில் கவனம் கொள்ளாமல், அவை தொடர்பான மகிழ்ச்சியானது, அடைவதற்குக் கடினமானது, காலத்தைப் பொறுத்தவரையில் கடந்து போக்ககூடியது என்ற இரண்டையும் கண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(34) இக்காரியத்தைப் பொறுத்தவரையில், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கல்விமான்கள், தங்கள் சாதனைகளை அறிவிக்க விரும்பி, தங்கள் கோட்பாடுகளை நிறுவும்போது, பிறரின் கோட்பாடுகளை நிந்தித்து, சச்சரவுகளைத் தீர்க்க முடியாத இவை தொடர்பான இதையும் அதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.(35) மூடர்கள் சரியான ஒளியில் இந்நோன்பைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். எனினும், இஃதுவே அறியாமைக்கு அழிவைத் தரும் என நான் காண்கிறேன். இஃது அழிவின்மை நிறைந்தது, பல்வேறு வகையான தீமைகளுக்குத் தீர்வானது எனக் கருதி மனிதர்களுக்கு மத்தியில் திரியும் நான், குற்றங்கள் அனைத்தையும் அடக்கி, (உலகம் சார்ந்த நன்மைகளில் நான் கொண்ட) தாகங்கள் அனைத்தில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றார் (ஆஜகரர்}”.(36)

பீஷ்மர் தொடர்ந்தார், “பற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு அச்சம், காமம், மடமை, கோபம் ஆகியவை இல்லாமல், இந்த ஆஜகர நோன்பைப் பின்பற்றும், அல்லது இவ்வாறு அழைக்கப்படுவது போலவே இந்த விளையாட்டில் ஈடுபடும் உயர் ஆன்ம மனிதன், நிச்சம் பெரும் இன்பத்தில் தன் நாட்களைக் கழிப்பதில் வெல்கிறான்”.(37)

காசியபன்! – சாந்திபர்வம் பகுதி – 180-மனிதர்களின் புகலிடம் எது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அறிவே இன்பத்திற்குக் காரணம் என்பதை விளக்க இந்திரனுக்கும், காசியபருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ பாட்டா, உற்றார், செயல்கள், செல்வம், ஞானம் ஆகிய இவற்றில் ஒரு மனிதன் எதைப் புகலிடமாகக் கொள்ள வேண்டும்? என்னால் கேட்கப்படும் இதற்குப் பதில் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஞானமே உயிரினங்களின் புகலிடமாகும். ஞானமே உடைமைகளில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஞானமே உலகில் பேரின்ப நிலையாகும். ஞானமே சொர்க்கமாகும் என்பது நல்லோர் மற்றும் அறவோரின் மதிப்பீடாகும்.(2) பலி, பிரஹலாதன், நமுசி, மங்கி ஆகியோர் (உலகம்) சார்ந்த செழிப்பை இழந்தபோதும் ஞானத்தின் மூலமே பேரின்பத்தை அடைந்தனர். ஞானத்தைவிட மேன்மையானதாக வேறு என்ன இருக்கிறது?(3) இது தொடர்பாக இந்திரனுக்கும், காசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக.(4)

ஒரு காலத்தில் செழிப்புமிக்க வைசியன் ஒருவன், தன் செழிப்பை அனுபவித்துக் கொண்டு, தன் செல்வாக்கில் செருக்குடன், தன் தேரைக் கவனமில்லாமல் செலுத்தி, தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான ஒரு முனிவரின் மகனைக் கீழே தள்ளிவிட்டான்.(5) தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த அந்த இளைஞன், வலி மிகுதியாலும், கோபவசப்பட்டு, துன்பத்தின் ஆளுகையின் கீழ் தீர்மானமுள்ளவனாக, “நான் என் உயிரை விடப் போகிறேன். ஓர் ஏழையின் உயிருக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை” என்று சொன்னான்.(6)

கலக்கமடைந்தவனான அந்தப் பிராமணன், சக்தியை இழந்து, மரணத் தருவாயில் அமைதியாகக் கிடந்த போது, நரியின் வடிவில் காட்சியில் தோன்றிய இந்திரன், அவனிடம்,(7) “(தாழ்ந்த) உயிரினங்கள் அனைத்தும் மனித குலத்தில் பிறக்க ஆசைப்படுகின்றன. மேலும் மனிதர்களில், பிராமண நிலையே மிகவும் விரும்பத்தக்கதாகும்.(8) ஓ! காசியபா, நீ மனிதனாக இருக்கிறாய், மனிதர்களிலும் ஒரு பிராமணனாக இருக்கிறாய். பிராமணர்களிலும், நீ வேதங்களை அறிந்தவனாக இருக்கிறாய். அடைதற்கரிய நிலையை அடைந்திருக்கும் உனக்கு, மடமையால் உயிரை விடுவது தகாது.(9) (உலகம் சார்ந்த) அனைத்து வகை உடைமைகளும் செருக்கு நிறைந்தவையே. அவ்வகையில் ஸ்ருதிகளின் தீர்மானமே முற்றிலும் உண்மையாகும். உயிரைக் கைவிடும் இத்தகைய தீர்மானத்தை அமைத்ததில் நீ காமத்துடன் செயல்படுகிறாய்.(10)

ஓ!, கரங்களைக் கொண்டவர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறார்கள். கரங்களைக் கொண்ட உயிரினங்களின் நிலையை அடைய ஆவலுடன் நான் விரும்புகிறேன்.(11) செல்வங்களில் நீ பேராசை கொள்வதைப் போலவே நாங்களும் கரங்களில் பேராசை கொள்கிறோம். கரங்களை அடைவதைவிட மதிப்பிக்க உடைமை வேறு ஏதும் இல்லை.(12) ஓ! பிராமணா, என் உடலில் நுழைந்திருக்கும் இந்த முள்ளை என்னால் பிடுங்க முடியாது, அல்லது, என்னைக் கடித்துப் பெரிதும் துன்புறுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பூச்சிகளையும், புழுக்களையும் என்னால் நசுக்க முடியாது.(13) பத்து விரல்களுடன் கூடிய இரு கரங்கள் கொடுக்கப்பட்டவர்கள், தங்கள் அங்கங்களைக் கடிக்கும் புழுக்களை நசுக்கி வீசுகிறார்கள்.(14) அவர்கள், மழை, குளிர் மற்றும் வெப்பத்திற்காகத் தங்களுக்காக உறைவிடங்களைக் கட்டிக் கொள்கிறார்கள். சிறந்த உடைகள், நல்ல உணவு, வசதிமிக்கப் படுக்கைகள், சிறந்த உறைவிடங்களை அனுபவிக்கவும் செய்கிறார்கள்.(15)

கரங்களைக் கொண்டோர், பசுக்கள் மற்றும் பிற விலங்குகளால் பயன்பெற்று, சுமை சுமக்கவோ, தங்கள் வாகனங்களை இழுக்கவோ அவற்றைப் பயன்படுத்தி, (தங்கள் சொந்த காரியங்களுக்காக) பல்வேறு வழிமுறைகளில் அந்த விலங்குகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு இந்தப் பூமியில் வாழ்கிறார்கள்.(16) நாவற்றவையும், ஆதரவற்றவையும், சொற்ப பலம் கொண்டவையும், கரங்களற்றவையுமான அந்த உயிரினங்கள் அனைத்தும், (மேற்குறிப்பிட்டவாறு) பல்வேறு வகையான துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கின்றன. ஓ! தவசியே, நற்பேற்றினால் நீ அவற்றைப் போன்றவனாக இல்லை.(17) நற்பேற்றினாலேயே நீ நரியாகவோ, புழுவாகவோ, எலியாகவோ, பாம்பாகவோ, தவளையாகவோ, எந்த வகையைச் சேர்ந்த வேறு எந்த விலங்காகவோ பிறக்கவில்லை.(18) ஓ! காசியபா, இந்த அளவு ஈட்டியிருக்கும் நீ மனநிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். உயிரினங்களுக்கு மத்தியில் நீ மேன்மையான பிராமணனாக இருக்கிறாய் என்ற எண்ணமே எவ்வளவு மகிழ்ச்சியை உனக்கு அளிக்க வேண்டும்?(19) இந்தப் புழுக்கள் என்னைக் கடிக்கின்றன. கரங்கள் இல்லாததால் என்னால் அவற்றை விரட்ட முடியவில்லை. என்னுடைய இந்தப் பரிதாப நிலையைப் பார்.(20)

உண்மையில் நான் என் இருப்புக்காக இன்னும் அதிகமான துன்பங்களில் வீழ்கிறேன், கூடாது என்பதனாலும், பெரும் பாவச் செயல் என்பதனாலுமே, நான் என் உயிரை விடாதிருக்கிறேன்.(21) ஒரு நரியாக இருக்கும் இந்த வகை இருப்புச் சகித்துக் கொள்ள முடியாததாகும். இதேபோன்று துயர இருப்புக்கான பலவகைகளும், அதைவிடத் துயரமான இருப்பு வகைகளும் இருக்கின்றன.(22) பிறப்பால் சில குறிப்பிட்ட வகை உயிரினங்கள் மகிழ்ச்சியாகவும், சில பெருந்துன்பத்திலும் இருக்கின்றன. ஆனால், முற்றான மகிழ்ச்சியை உடைமையாகக் கொண்ட எந்த வகை உயிரினமும் இருப்பதாக நான் காணவில்லை.(23) செல்வத்தை அடையும் மனிதர்கள், அடுத்ததாக அரசுரிமையை விரும்புகின்றனர். அரசுரிமையை அடைந்த பிறகு, அவர்களுடைய அடுத்ததாக அவர்கள் தேவ நிலையை விரும்புகிறார்கள். அந்த நிலையையும் வென்ற பிறகு, அவர்கள் தேவர்களின் தலைமையை அடைய விரும்புகிறார்கள்.(24) (பிறப்பால் நீ பிராமணனாக இருப்பதால்) நீ செல்வந்தனானால், உன்னால் ஒருபோதும் மன்னனாக முடியாது. (உன் பிராமண நிலையானது, தேவ நிலைக்குச் சமமாகவோ, மேன்மையானதாகவோ இருப்பதால்) உன்னால் தேவனாகவும் முடியாது. எவ்வழிமுறையிலாவது (எவ்வழியிலாவது தெய்வீக அருள் கிடைத்து மேன்மையான நிலையை அடைவதற்குப் பதில்) நீ தேவனாகிவிட்டால், நீ தேவர்களின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படலாம். அப்போதும் நீ நிறைவடையமாட்டாய்.(25)

விரும்பிய பொருட்களை அடைவதால் மனநிறைவு விளையாது. அதிகமாக நீரை அருந்துவதால் தாகம் தணியாது[1]. அடைவதில் உள்ள தாகம், புதுவிறகுகள் இடப்படும் நெருப்பைப் போல, இன்னும் புதியவற்றை அடையவே சுடர்விடும்.(26) உன்னில் கவலை இருக்கிறது. ஆனால் உன்னில் மகிழ்ச்சியும் இருக்கிறது. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் உன்னிலேயே இருக்கின்றன. பிறகு, நீ ஏன் துன்பவசப்படுகிறாய்?(27) ஒருவன் தனது விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தின் புலன்களையும், அறிவையும், கூண்டில் உள்ள பறவைகளைப் போல அடைத்து வைக்க வேண்டும்.(28) இரண்டாவது தலையையோ, மூன்றாவது கரத்தையோ வெட்ட முடியாது. இருப்பில் இல்லாதவற்றால் அச்சத்தை உண்டாக்க முடியாது.(29) ஒரு குறிப்பிட்ட பொருள் வழங்கும் இன்பத்தை அறியமுடியாத ஒருவன் அந்தப் பொருளை ஒருபோதும் விரும்பமாட்டான். தீண்டல், பார்வை, கேள்வி ஆகியவை கொடுக்கும் இன்பங்களை உண்மையாக அனுபவிப்பதில் இருந்தே ஆசைகள் எழுகின்றன.(30)வாருணி என்றழைக்கப்படும் மதுவின் சுவையையோ, லட்வாகம் என்றழைக்கப்படும் பறவைகளின் இறைச்சியின் சுவையையோ குறித்து உனக்குக் கருத்தேதும் இருக்க முடியாது. எந்தப் பானமும், எந்த உணவும் இவைற்றைவிட இனிமையாக இருக்க முடியாது.(31) ஓ! கசியபா, நீ ஒருபோதும் சுவைத்ததில்லை என்பதால், மனிதர்களுக்கு மத்தியில் உள்ள பிறவகை மேன்மையான பானங்களையும், உணவையும் உனக்குத் தெரியாது.(32) எனவே, சுவைக்காமல் இருப்பது, தீண்டாமல் இருப்பது, பார்க்காமல் இருப்பது ஆகியவையே மகிழ்ச்சியை அடைவதற்கான மனிதனின் நோன்பாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.(33) கரங்களைக் கொண்ட உயிரினங்கள் பலமிக்கவையாகவும், செல்வமீட்டுபவையாகவும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. மரணம், சிறை மற்றும் இன்னும் பலவித சித்திரவதைகளால் (தங்கள் குலத்தினர் கைகளாலேயே) மீண்டும் மீண்டும் துன்புற்று, மனிதர்களே மனிதர்களால் அடிமைத்தன்மையை அடைகின்றனர். அவர்களது நிலை இவ்வாறிருப்பினும் (அதற்கு வருந்தாமல்), சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இன்பங்களில் ஈடுபடுகின்றனர்.(34,35)

இன்னும் பிறர், கரங்களின் வலிமையைக் கொண்டவர்களாக, அறிவு படைத்தவர்களாக, பெரும் மனோசக்தி கொண்டவர்களாக இருப்பினும், நிந்திக்கத்தக்க, பாவகர, பரிதாபகரமான தொழில்களையே பின்பற்றுகின்றனர்.(36) (கண்ணியமிக்க) வேறு தேவைகளுக்காக அத்தகைய தொழில்களிலிருந்து மாறும் அவர்கள், (முற்பிறவின்) செயல்களாகக் கட்டடப்பட்டவர்களாகவும், விதியின் சக்திக்குக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.(37) மிகத் தீய மனிதர்களான புல்கஸனும், சண்டாளனும்[2] கூடத் தன் உயிரைக் கைவிட ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் வகைப் பிறப்பில் நிறைவுடன் இருக்கிறார்கள். இக்காரியத்தில் மாயையைப் பார்.(38) கரங்களற்றவர்களாக, வாதநோயால் தாக்கப்பட்டவர்களாக, பிற வகை நோய்களால் பீடிக்கப்பட்டவர்களாக உன் இனத்தில் இருப்போரைக் காண்டால், நீ உன்னை மகிழ்ச்சி மிக்கவனாகவும், உன் வகையில் மதிப்புமிக்க உடைமைகளைக் கொண்டவனாகவும் உன்னைக் கருதிக் கொள்வாய்.(39) உன் மறுபிறப்பாள {பிராமண} உடல் பாதுகாப்பாக, நலமாக, நோயற்றதாக, அங்கப் பழுது ஏதும் அற்றதாக இருந்தால், மனிதர்களுக்கு மத்தியில் ஒருபோதும் நீ நிந்திக்கப்பட மாட்டாய் என்பது நிச்சயம்.(40)ஓ! பிராமணா, உண்மையின் அடிப்படையில் காணப்பட்ட எந்தப் பழி இருந்தாலும், உன்னை வர்ணத்திலிருந்து விலக்கினாலும் உன்னோடு ஒட்டியிருக்கும் உன் உயிரை விடுவது உனக்குத் தகாது. எழுவாயாக, அறம் பயில்வாயாக. உன் உயிரை விடுவது உனக்குத் தகாது.(41) ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்வதைக் கேட்டு, என் சொற்களில் நம்பிக்கை வைத்தால், வேதங்களில் சொல்லப்பட்ட உயர்ந்த அற வெகுமதியை நீ அடைவாய்.(42) வேத கல்வியில் நீ உன்னை நிறுவிக் கொள்வாயாக, புனித நெருப்பை முறையாகப் பராமரிப்பாயாக, வாய்மை, தற்கட்டுப்பாடு, ஈகை ஆகியவற்றை நோற்பாயாக. தற்புகழ்ச்சியுடன் ஒருபோதும் பிறருடன் உன்னை ஒப்பிடாதே.(43) வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்கள், தங்களுக்கும், பிறருக்கும் வேள்விகளைத் தாங்களே செய்யத் தகுந்தவர்களாகி, எந்த வகை வருத்தத்தையும், எந்த வகைத் தீமையையும் அடையாமல் இருக்கலாம்.(44) மங்கலமான திதியில், மங்கலமான நட்சத்திரக்கூட்டத்தில், மங்கலமான நேரத்தில் பிறந்தவர்கள், வேள்விகள் செய்யச் சிறப்பாக முயன்று, ஈகை பயின்று, பிள்ளைகளைப் பெற்று, நற்காரியங்களைச் செய்ய விருப்பமுள்ளவர்களாகப் பேரின்பத்தை அடைவார்கள்.(45) மறுபுறம், தீய நட்சத்திரக்கூட்டங்களில், மங்கலமற்ற திதியில், தீய காலங்களில் பிறந்தவர்கள், வேள்விகளற்றவர்களாக, பிள்ளைகளற்றவர்களாக இறுதியில் அசுர வகையில் வீழ்வார்கள்.(46)

என் முற்பிறவியில் பயனற்ற கல்வியைக் கற்றேன். நான் எப்போதும் காரணங்களைத் தேடுபவனாக, மிகச் சொற்பமான நம்பிக்கைக் கொண்டவனாக இருந்தேன். நான் வேதங்களை அவதூறு செய்பவனாகவும் இருந்தேன். வாழ்வின் நால்வை நோக்கங்கள் அற்றவனாக, கண்ணக்குரிய தெளிவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தர்க்க அறிவியலுக்கு அரப்பணிப்புடன் இருந்தேன்.(47) நான் எப்போதும் (சரியாகத் தோன்றும்) காரணங்கள் அடிப்படையிலான வார்த்தைகளைச் சொல்பவனாக இருந்தேன். உண்மையில் என் சபைகளில் நான் எப்போதும் காரணங்களைப் பேசுவேன் (நம்பிக்கையை அல்ல). ஸ்துரிதிகளின் தீர்மானங்களை மதிப்பில்லாமலும், பிராமணர்களிடம் சர்வாதிகத் தொனியில் நான் பேசுவேன்.(48) நான் நம்பிக்கையற்றவனாகவும், அனைத்திலும் ஐயம் நிறைந்தவனாகவும், உண்மையில் அறியாமை கொண்டவனாக இருந்தாலும், கல்வியில் செருக்குடையவனாக இருந்தேன். அந்த என் பாவங்களின் விளைவாலேயே, ஓ! மறுபிறப்பாளனே, இந்தப் பிறவியில் நான் ஒரு நரியின் நிலையை அடைந்தேன்.(49) நூறு பகல்களும், இரவுகளும் ஒரு நரியாக நான் இருந்தால் மீண்டும் மனித நிலையை என்னால் அடைய முடியுமென்றால்,(50) இருப்பின் உண்மை நோக்கங்களில் கவனத்துடன், வேள்விகளிலும், கொடைகளிலும் ஈடுபட்டு மனநிறைவுடன் என் வாழ்வைக் கடத்துவேன். எது அறியப்பட வேண்டும் எது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நான் அப்போது அறிவேன்” {என்றான் நரியின் வடிவில் இருந்த இந்திரன்}.(51)

இவ்வாறு சொல்லப்பட்ட தவசி காசியபன், “ஓ! அறிவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனே, இவை யாவற்றிலும் நான் உண்மையில் பெரிதும் ஆச்சரியமடைகிறேன்.” என்று சொல்லி எழுந்தான்.(52)

அறிவில் விரிவடைந்த கண்களுடன் கொண்ட பார்வையில், அந்தப் பிராமணன், தன்னிடம் பேசியது தேவர்களுக்கும், சச்சிக்கும் தலைவனான இந்திரன் என்பதைக் கண்டான்.(53) தன்னைச் சுமக்கும் சிறந்த வகைக் குதிரைகளைக் கொண்ட அந்தத் தேவனைக் {இந்திரனைக்} காசியபன் வழிபட்டான். பிறகு அந்தத் தேவனின் அனுமதியோடு, அந்தப் பிராமணன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான்” என்றார் {பீஷ்மர்}.(54)

முன்வினைப் பயன்! – சாந்திபர்வம் பகுதி – 181-முற்பிறவியின் நல்வினையும், தீவினையும் அடுத்தப் பிறவியில் அதற்குரிய பலன்களைக் கொடுப்பதன் நிச்சயத் தன்மை; அறம் பயில வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், தவங்கள், ஆசான்களுக்குக் கடமையுணர்வுடன் செய்யக்கூடிய தொண்டுகள் ஆகியவை ஞானத்தையும், உயர்ந்த இன்பத்தையும் உண்டாக்குமா என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மனமானது, ஆசை, கோபம் மற்றும் தீய விருப்பங்களின் நிமித்தமாகப் பாதிப்படைந்தால், அது {மனம்} பாவத்தை நோக்கி நகரும். ஒருவனின் செயல்கள் பாவத்தால் களங்கப்பட்டால், அவன் வலிநிறைந்த {துன்பமிக்க} பகுதிகளில் வசிக்கக் கட்டுப்பட்டவனாவான்.(2) பாவிகள் வறுமையான சூழ்நிலையில் பிறந்து, பஞ்சம், துன்பம், அச்சம், மரணம் ஆகியவற்றின் வேதனைகளுக்கு மீண்டும் மீண்டும் ஆட்படுவார்கள்.(3) தங்கள் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான அறம் சார்ந்த செயல்களைச் செய்வோர் {ஆத்திகர்கள்}, செல்வந்தர்களாகப் பிறந்து, விழாக்களிலும், சொர்க்கத்திலும், மகிழ்ச்சியிலும் மீண்டும் மீண்டும் திளைக்கிறார்கள்.(4) நம்பிக்கையில்லாதவர்கள் {நாத்திகர்கள்}, விலங்கிடப்பட்ட கைகளுடனும், ஊனுண்ணும் விலங்குகள், யானைகள், பாம்புகள் மற்றும் கள்வர்களின் விளைவால் பயங்கரம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(5)

மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்போர், ஈகையாளர்கள், நல்லோரையும், நேர்மையானோரையும் விரும்புவோர் ஆகியோர், தங்கள் ஈகைச் செயல்களின் விளைவால், தூய ஆன்மாக்களுக்குச் சொந்தமான இன்பமான வழியில் செல்கின்றனர்.(6) அறத்தை மதிக்காதவர்களான மனிதர்களில் தீயோர், தானியங்களில் பதர்களைப் போலவும், பறவைகளில் கொசுக்களைப் போலவும் ஆகிறார்கள்.(7) செயல்படுபவனுடைய முற்பிறவி செயல்களை அவன் விட்டுச் செல்ல விரும்பினாலும், அவற்றின் {முற்பிறவி செயல்களின்} விளைவால் விதிக்கப்பட்டவையே அவனைப் பின்தொடரும். அவன் உறங்கும்போது, அதுவும் {முன்வினையும்} உறங்குகிறது, அவன் என்ன செய்தாலும் அதுவும் அதையே செய்கிறது[1].(8) அஃது அவனுடைய நிழலைப் போலவே, அவன் ஓயும்போது ஓய்ந்து, செல்லும் போது சென்று, செயல்படும்போது செயல்படுகிறது.(9) ஒரு மனிதன் என்ன செயலைச் செய்தாலும் அதன் கனிகளை அவன் நிச்சயம் அடைவான்.(10)(தங்களுக்குத் தகுந்த வகை இருப்புகளில்) வீழ விதிக்கப்பட்டவையும், தங்கள் செயல்களின் விளைவால் இன்புறவோ, துன்புறவோ விதிக்கப்பட்டவையுமான உயிரினங்கள் அனைத்தையும் காலம் இழுத்துச் செல்கிறது.(11) முற்பிறவியின் செயல்கள், மலர்களையும், கனிகளையும் போல உரிய காலத்தில் தங்கள் விளைவுகளைப் பெருக்கிக் கொண்டு, உரிய காலத்தில் பெரிதான எவ்வகை முயற்சியுமின்றித் தோன்ற ஒருபோதும் தவறுவதில்லை.(12) மதிப்பு, அவமதிப்பு, ஈட்டல், இழப்பு, சிதைவு, வளர்ச்சி ஆகியவை விதிக்கப்பட்டதுபோலவே, முற்பிறவியல் செய்யப்பட்ட செயல்களின் விளைவுகள் (இன்புறுவதாலோ, துன்புறுவதாலோ) தீர்ந்ததும், எவனிடமும் பாயவோ, தோன்றவோ செய்யாது {வினைகள் தீர்நதாலும் புதிதாகச் செய்யப்படும் செயல்களால்} மீண்டும் மீண்டும் நேர்கின்றன[2].(13) தாயின் கருவறையில் இருக்கும் ஓர் உயிரினம் தன் செயல்களின் விளைவுகளால் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இன்பத்த்திலோ, துன்பத்திலோ இன்புறவோ துன்புறவோ செய்கிறது.(14) குழந்தைப் பருவத்திலோ, இளமைப் பருவத்திலோ, முதுமைப் பருவத்திலோ வாழ்வின் எந்தக் காலத்திலோ நல்ல, அல்லது தீய செயலைச் செய்யும் ஒருவன், தனது அடுத்தப் பிறவியின் அதே காலத்தில் நிச்சயம் அவற்றின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.(15)ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயை அடையாளம் கண்டு அணுகும் கன்றைப் போல, முற்பிறவியின் செயல்களும், அவற்றைச் செய்தவனைப் புதுப் பிறவியில் அடைகின்றன.(16) (அழுக்கான) துணி, நீரில் அலசப்பட்டால் தூய்மையடைகிறது. அதே போல, வருத்தத்தில் எரியும் மனிதர்களும் உரிய தவங்களின் மூலம் எல்லையில்லா இன்பத்தை அடைகின்றனர்[3].(17) காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடிந்தோர், நீண்ட காலத்திற்குத் தவங்களைச் செய்து, தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டு, தங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் நோக்கங்களை அடையலாம்.(18) வானத்தில் பறவைகளின் பாதையையோ, நீரில் மீன்களின் பாதையையோ யாராலும் குறிக்க முடியாததைப் போல, அறிவால் தூய்மையடைந்த ஆன்மாக்களை அடையும் மனிதர்களின் பாதையும் எவராலும் குறிப்பிடப்பட முடியாது[4].(19) பாவச் செயல்கள் குறித்து இதற்கு மேலும் எந்தக் குறிப்புக்கும், பேச்சுக்கும் அவசியமில்லை. உரிய தீர்மானத்துடனும், தனக்குத் தகுந்த சிறப்பான முறையிலும், ஒருவன் தனக்கு நன்மையானதை செய்து கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளிலேயே ஞானத்தையும், உயர்ந்த இன்பநிலையையும் அடைய முடியும்” என்றார் {பீஷ்மர்}.(20)

படைப்புக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 182-அண்டம் படைக்கப்பட்டது குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து படைக்கப்பட்டது? அழிவு நேரும்போது அது யாரிடம் செல்கிறது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) உண்மையில், பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இவ்வண்டம் யாரால் படைக்கப்பட்டது.(2) பொருட்கள் {உயிரினங்கள்} யாவும் எவ்வாறு படைக்கப்பட்டன? இருப்பின் வகைகள் {உயிரினங்களில்} தனித்தனி பிரிவுகள் {ஜாதிகள்} எவ்வாறு ஏற்பட்டன? அறம் மற்றும் மறம் குறித்த விதிகளும், அவற்றின் தூய்மையும், மாசும் எவ்வாறு உண்டாகின? இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இதைக் குறித்தும், மறுமை குறித்தும் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பரத்வாஜரின் கேள்விகளுக்குப் பிருகு சொன்ன புனிதச் சொற்கள் அடங்கிய பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5) சுடர்மிக்க சக்தியும், காந்தியும் கொண்ட பெருமுனிவர் பிருகு, கைலாச சிகரத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட பரத்வாஜர், பின் வரும் வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(6)

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இந்த உலகம் யாரால் படைக்கப்பட்டது?(7) தொடக்கத்தில் உயிரினங்கள் அனைத்தும் எவ்வாறு படைக்கப்பட்டன? சாதிப் பாகுபாடுகள் எவ்வாறு தோன்றின?[1] (ஒழுக்கத்தில்) தூய்மையும் மாசும் எவ்வாறு உண்டாகின? உயிரினங்களுக்கான அறம் மற்றும் மறத்திற்கான விதிகள் எவ்வாறு உண்டாகின?(8) இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இம்மை மற்றும் மறுமை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(9) இவ்வாறு தன் ஐயங்களைக் கேட்ட பரத்வாஜரிடம், சிறப்புமிக்கவரும், பிரம்மத்திற்கு ஒப்பானவரும், மறுபிறப்பாள முனிவருமான பிருகு இந்த வார்த்தைகளைத் தன் மறுமொழியாகச் சொன்னார்.(10)பிருகு {பரத்வாஜரிடம்}, “பெருமுனிவர்களால் மானஸம் {மானஸர்} என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு பழம்பொருள் இருந்தது. அது தொடக்கமும் முடிவும் அற்றதாக இருந்தது. அந்தத் தெய்வீகப் பொருள் ஆயுதங்களால் ஊடுருவப்படாததாக இருந்தது. அது சிதைவும், அழிவும் அற்றதாக இருந்தது.(11) அது வெளிப்படாத பொருளாகச் சொல்லப்படுகிறது. அது நித்தியமானதாக, சிதைவற்றதாக, மாற்றமில்லாததாக இருக்கிறது. அதன் மூலமே உயிரினங்கள் பிறக்கின்றன, அதன் மூலமே இறக்கின்றன.(12) அது மஹத் என்ற பெயரில் ஒரு தெய்வீகப் பொருளை முதலில் படைத்தது[2].(13) மஹத் நனவுநிலையைப் படைத்தது. அந்தத் தெய்வீகப் பொருள் {மஹத்} வெளியைப் படைத்தது. அந்தப் பலமிக்கப் பொருளே {மஹத்தே}, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.(14) வெளியில் இருந்து நீர் பிறந்தது, நீரில் இருந்து நெருப்பும், காற்றும் பிறந்தன. நெருப்பு மற்றும் காற்றின் கலவையில் பூமி பிறந்தது.(15)தான்தோன்றியான மானஸம், ஆற்றலைக் கருவில் கொண்ட ஒரு தெய்வீகத் தாமரையைப் படைத்தது. அந்தத் தாமரையில், வேதப் பெருங்கடலான பிரம்மன் எழுந்தான்[3].(16) அந்தத் தெய்வீகமானவன் பிறந்ததும், “நானே அஃது” என்ற வார்த்தைகளைச் சொன்னான் என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. இதன் காரணமாக அவன் நனவுநிலை என்ற பெயரில் அழைக்கப்படலானான். அவனே படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் உடலாக இருக்கிறான். அவனே அவற்றின் படைப்பாளனாகவும் இருக்கிறான். நாம் காணும் இந்த ஐந்து பூதங்களும் பேராற்றல் கொண்ட அந்தப் பிரம்மனே.(17) மலைகளே அவனது எலும்புகளாக இருக்கின்றன. பூமி அவனது கொழுப்பாகவும், சதையாகவும் இருக்கிறது. பெருங்கடல்கள் அவனது குருதியாக இருக்கின்றன. அண்டவெளி அவனது வயிறாக இருக்கிறது.(18) காற்று அவனது மூச்சாக இருக்கிறது. நெருப்பு அவனது ஆற்றலாக இருக்கிறது. ஆறுகள் அவனது நரம்புகளாக இருக்கின்றன. சூரியன், சந்திரன் என்று அழைக்கப்படும் அக்னியும், சோமனும், அவனது கண்களாகச் சொல்லப்படுகின்றனர்.(19) மேலுள்ள ஆகாயம் அவனது தலையாகச் சொல்லப்படுகிறது. பூமி அவனது இரு கால்களாக இருக்கிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் அவனது கரங்களாக இருக்கின்றன. அவன் அறியப்பட முடியாதவனாகவும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்களாலேயே உணரப்பட முடியா ஆன்மா கொண்டவனாகவும் இருக்கிறான்.(20) மொத்த அண்டத்திலும் படர்ந்தூடுவியிருக்கும் அந்தத் தெய்வீகமானவன், அனந்தன் (முடிவற்றவன்) என்ற பெயரில் அறியப்படுகிறான். நனவுநிலையில் வாழும் அவன், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அறியப்பட முடியாதவனாக இருக்கிறான்.(21) உன்னால் கேட்கப்பட்டதால், எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் இருப்புக்கு அழைக்க நனவுநிலையைப் படைத்தவனோ, எவனிலிருந்து இந்த அண்டம் எழுந்ததோ அவனைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பிருகு}.(22)பரத்வாஜர், “ஆகாயம், அடிவானின் புள்ளிகள், இந்தப் பூமியின் பரப்பு, காற்று ஆகியவற்றின் எல்லை எது? உண்மையை எனக்குச் சொல்வதன் மூலம் என் ஐயங்களைத் தீர்ப்பீராக” என்று கேட்டார்.(23)

பிருகு, “நீ மேலே காணும் வானம் எல்லையற்றதாகும். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுக்கும், தெய்வீகமானவர்களுக்கும் அதுவே வசிப்பிடமாக இருக்கிறது. அஃது இனிமை நிறைந்ததாகவும், பல்வேறு உலகங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதன் எல்லைகளை உறுதிப்படுத்த முடியாது.(24) சூரியனாலும், சந்திரனாலும் தங்கள் கதிர்களின் எல்லைக்கு அப்பால் மேலேயோ, கீழேயோ பார்க்க முடியாது. சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் அடைய முடியாத இடங்களில் சூரியனையோ, நெருப்பையோ போன்ற காந்தியைக் கொண்டவையும், தன்னொளி கொண்டவையுமான ஒளிக்கோள்கள்[4] இருக்கின்றன.(25) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அடைவதற்கரிதாக, முடிவிலா எல்லைகளைக் கொண்டதாக இருப்பதன் விளைவால், பரந்த புகழ்பெற்ற காந்தியைக் கொண்ட இவற்றாலும் {ஒளிக்கோள்களாலும்} கூட ஆகாயத்தின் எல்லைகளைக் காண முடியாது.(26) தேவர்களாலும் அளக்க முடியாத இந்த அண்டவெளியில், ஒன்றன் மேல் ஒன்றாகத் தன்னொளி கொண்ட சுடர்மிக்க உலகங்கள் பல இருக்கின்றன.(27) நிலத்தின் எல்லைகளுக்கு அப்பால் பெருங்கடலின் நீர் இருக்கிறது. நீருக்கு அப்பால் இருள் இருக்கிறது. இருளுக்கு அப்பால் நீரே இருக்கிறது, அதற்கும் அப்பால் நெருப்பிருக்கிறது.(28) கீழ்நோக்கி பாதாள உலகங்களுக்கு அப்பால் நீர் இருக்கிறது. அந்த நீருக்கு அப்பால், பெரும்பாம்புகளின் உலகம் இருக்கிறது. அதற்கும் அப்பால் மீண்டும் வானம் இருக்கிறது, வானத்திற்கு அப்பால் மீண்டும் நீர் இருக்கிறது.(29) இவ்வாறே நீரும் வானமும் மாறி மாறி முடிவில்லாமல் இருக்கின்றன. நீரால் பிரதிபலிக்கப்படும் தெய்வீகத்தின் எல்லைகள் இவ்வாறே இருக்கின்றன. நெருப்பு, காற்று மற்றும் நீரின் எல்லைகளைத் தேவர்களாலும் உறுதி செய்ய முடியாது.(30)நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் இயல்பு அண்டவெளியைப் போன்றதே. உண்மையான அறிவின்மையின் மூலம் அவை தனிப்பட்டவையாகத் தெரிகின்றன.(31) மூன்று உலகங்கள் மற்றும் பெருங்கடலின் எல்லைகளைத் தீர்மானிக்கும் பல்வேறு சாத்திரங்களைத் தவசிகள் படிக்கின்றனர்.(32) எனினும், அடையமுடியாததாகவும், பார்வையால் புரிந்து கொள்ள முடியாதாக இருக்கும் ஒன்றின் எல்லைகள் எவரால் தீர்மானிக்க முடியும்?(33) தேவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களின் பாதையாக இருக்கும் ஆகாயத்தின் எல்லைகளை உறுதி செய்வது சாத்தியமானால் கூட, அளவற்றதும், முடிவிலி என்ற பெயரால் அறியப்படுவதும், உயர் ஆன்ம மானஸம் என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான ஒன்றின் அளவுகளை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.(34) சில வேளைகளில் அதன் வடிவம் சுருங்கி இருக்கிறது, சில வேளைகளில் விரிந்திருக்கிறது, அதற்கு {மானஸத்திற்கு} இணையான ஒன்றைத் தவிர, அதன் எல்லைகளைப் புரிந்து கொள்ள வேறு எவரால் முடியும்?(35) அறத்தின் சாரத்தைக் கொண்டவனாகவும், அசையும் மற்றும் அசையாத பொருட்களின் படைப்பாளனாகவும் அனைத்தையும் அறிந்த தலைவன் பிரம்மன், (நான் ஏற்கனவே சொன்னது போல) அந்தத் தாமரையில் முதன்முதலில் வடிவத்துடன் படைக்கப்பட்டான்” என்றார் {பிருகு}.(36)

பரத்வாஜர், “அந்தத் தாமரையில் இருந்து பிரம்மன் எழுந்ததால், அந்தத் தாமரையே முதலில் பிறந்ததாகக் கருதப்பட வேண்டுமேயன்றி பிரம்மன் கிடையாது. எனினும், பிரம்மன் ஏன் முதல்வனாகச் சொல்லப்படுகிறான்? எனது இந்த ஐயத்தை நீர் நீக்குவீராக” என்று கேட்டார்.(37)

பிருகு, “பூமியே அந்தத் தாமரையாகச் சொல்லப்படுகிறது. பிரம்மனாக மாறிய அந்த மானஸத்தின் வடிவத்திற்கு ஓர் இருக்கை அளிப்பதற்காக அது {அந்தத் தாமரை} படைக்கப்பட்டது.(38) சொர்க்கத்தையே அடைந்த சுமேரு அந்தத் தாமரையின் கர்ணிகையானது[5]. அதிலிருந்தே, பலமிக்க அண்டத் தலைவன் {பிரம்மன்} உலகங்கள் அனைத்தையும் படைத்தான்” என்றார்.(பிருகு}.(38)

பூமியின் தோற்றம்! – சாந்திபர்வம் பகுதி – 183-பல்வேறு பொருட்களும், பூமியும் படைக்கப்பட்ட முறை குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அந்தப் பலமிக்கப் பிரம்மன், மேருவில் வசித்துக் கொண்டு, பல்வேறு வகைப் பொருட்களை எவ்வாறு படைத்தான் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம்}, “(பிரம்மனின் வடிவில் இருக்கும்) பெரும் மானஸம், மனவிருப்பத்தின் ஆணையால் பல்வேறு வகைப் பொருட்களைப் படைத்தது. அனைத்து உயிரினங்களின் பாதுகாப்புக்காக முதலில் அது நீரைப் படைத்தது.(2) நீரே அனைத்துயிரினங்களின் உயிராக இருக்கிறது, நீரே அவற்றின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. நீரில்லையென்றால் அனைத்து உயிரினங்களும் அழியவே வேண்டும். மொத்த அண்டமும் நீரால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(3) பூமி, மலைகள், மேகங்கள், வடிவம் கொண்ட பொருட்கள் என அனைத்தும் நீரின் நிலைமாற்றங்கள் என்றே அறியப்பட வேண்டும். அந்தப் பூதம் {நீர்} திண்மைப் பொருளாவதால் இவை அனைத்தும் உண்டாக்கப்பட்டன” என்றார் {பிருகு}.(4)

பரத்வாஜர், “நீர் எவ்வாறு உண்டானது? நெருப்பும் காற்றும் எவ்வாறு உண்டாகின? பூமியானது எவ்வாறு படைக்கப்பட்டது? இவற்றில் எனக்குப் பேரையங்கள் {பெரும் ஐயங்கள்} இருக்கின்றன” என்று கேட்டார்.(5)

பிருகு, “ஓ! மறுபிறப்பாளனே, பிரம்ம கல்பம் என்றழைக்கப்பட்ட பழங்காலத்தில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்று கூடிய போது, அண்டப் படைப்பு குறித்த இந்த ஐயத்தையே உணர்ந்தனர்.(6) அவர்கள் பேச்சைத் தவிர்த்து, அசைவற்றவர்களாக நீடித்து, (தவ) தியானத்தில் ஈடுபட்டார்கள். உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்ட அவர்கள், ஆயிரம் தேவ வருடங்களுக்கு இவ்வாறே நீடித்திருந்தனர்.(7) அந்தக் காலத்தின் முடிவில், வேதங்களைப் போன்ற புனிதமான சில குறிப்பிட்ட வார்த்தைகள் அடுத்தடுத்து அவர்கள் அனைவரின் காதுகளையும் அடைந்தன. உண்மையில், ஆகாயத்திலிருந்து இந்தத் தெய்வீகக் குரல் சொல்வது கேட்டது:(8)

{அக்குரல்},”முன்பு முற்றிலும் அசைவற்றதாக, அசைக்க முடியாததாக முடிவில்லா வெளி மட்டுமே இங்கே இருந்தது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று ஆகியவை இல்லாமல் அஃது உறங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(9) அப்போது இருளுக்குள் அதைவிடக் கரியதான ஏதோ ஒன்றைப் போல நீர் எழுந்தது. பிறகு நீரின் அழுத்தத்தால் காற்று எழுந்தது.(10) துளையில்லா வெற்றுப்பாத்திரம் முதலில் ஒலியேதும் அற்றதாக இருந்தாலும், நீரும், காற்றும் நிரப்பப்பட்டதும் பேரொலியை எழுப்புவதைப் போலவே,(11) முடிவிலா வெளி நீரால் நிரப்பப்பட்ட போது, அந்த நீரினூடாகத் துளைத்துக் கொண்டு பேரொலியுடன் காற்று எழுந்தது[1].(12) பெருங்கடலின் நீரழுத்தத்தால் இவ்வாறு உண்டான காற்றே இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது. (தடையில்லாமல்) வெளிக்கு வந்த அதன் இயக்கம் ஒருபோதும் நிற்காமல் இருக்கிறது.(13)அப்போது, காற்றுக்கும், நீருக்கும் இடையில் உண்டான உராய்வின் விளைவால், பெரும் வலிமையையும், சுடர்மிக்க ஆற்றலையும் கொண்டதும், மேல்நோக்கிய தழல்களுடன் கூடியதுமான நெருப்பு இருப்பில் எழுந்தது. வெளியை மறைத்திருந்த இருளை அந்நெருப்பு அகற்றியது.(14) காற்றின் துணையுடன் கூடிய நெருப்பு, வெளியையும், நீரையும் ஒன்றாக இழுத்தது. உண்மையில், நீருடன் இணைந்து நெருப்பு திண்மையடைந்தது.(15) நெருப்பின் நீர்ப்பகுதியானது, வானத்தில் இருந்து விழுந்தபோது திண்மையடைந்து, பூமி என்று அறியப்படும் ஒன்றாக ஆனது.(16) எதில் அனைத்தும் பிறந்தனவோ, அந்தப் பூமியே, அல்லது நிலமே, அனைத்து வகைச் சுவை, அனைத்து வகை மணம், அனைத்து வகை நீர்மங்கள், அனைத்து வகை உயிரினங்களுக்குத் தோற்றுவாயாக இருக்கிறது” என்றது {அக்குரல்}.(17)

பஞ்சபூதக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 184-தாவரங்களும் ஐம்பூதங்களைக் கொண்டன, எனவே அவைகளுக்கும் உயிர் உண்டு என்பதையும், அசையும் உயிரினங்களில் ஐம்பூதங்கள் எவ்வாறு கலந்திருக்கின்றன என்பதையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “உயர் ஆன்ம பிரம்மன் ஆயிரக்கணக்கான உயிரினங்களைப் படைத்திருக்கும்போது, அவன் முதலில் படைத்தவையும், பேருயிரினங்களும் {மஹா பூதங்களும்}, அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவையுமான ஐம்பூதங்களை மட்டுமே உயிரினங்கள் {பூதங்கள்} என்ற தனிப்பட்ட பெயரைக் கொண்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்.(1,2)

பிருகு {பரத்வாஜரிடம்}, “முடிவிலி அல்லது அகன்ற என்ற வகையைச் சார்ந்த அனைத்துப் பொருட்களும் பெரியது {மஹத்} என்ற பெயரைப் பெறுகின்றன. இதன் காரணமாகவே இந்த ஐம்பூதங்களும், பெரும் உயிரினங்கள் {மஹாபூதங்கள்} என்று அழைக்கப்படுகின்றன[1].(3) காற்றானது செயல்பாடாக இருக்கிறது. வெளியானது கேட்கப்படும் ஒலியாக இருக்கிறது. நெருப்பானது அதன் உள்ளிருக்கும் வெப்பாக இருக்கிறது. நீரானது அதில் உள்ள நீர்ச்சாரமாக இருக்கிறது. பூமியானது {நிலமானது} திண்மை அடைந்த பொருளாக {பருப்பொருளாக} சதைகளாக எலும்புகளாக இருக்கிறது. இவ்வாறே (உயிரினங்களின்) உடல்கள் (பழைமையான) ஐந்து பூதங்களால் ஆனவையாக இருக்கின்றன.(4) அசையும், அசையாத பொருட்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களால் ஆனவையாகவே இருக்கின்றன. உயிரினங்களின் ஐம்புலன்களிலும் ஐம்பூதங்களே கலந்திருக்கின்றன. காதில் வெளியின் பண்புத்தொகுதிகள் கலந்திருக்கின்றன. மூக்கில் பூமியும்; நாவில் நீரும்; தீண்டலில் காற்றும்; கண்களில் ஒளியும் (அல்லது நெருப்பும்) கலந்திருக்கின்றன” என்றார் {பிருகு}.(5)பரத்வாஜர், “அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் ஐம்பூதங்களின் தொகுதியாக இருக்குமானால், அசையாத பொருட்கள் அனைத்திலும் அந்தப் பூதங்கள் காணப்படாதது ஏன்?(6) மரங்களில் வெப்பமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவற்றுக்கு எந்த அசைவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் அவை அடர்ந்த துகள்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஐம்பூதங்கள் காணப்படவில்லை.(7) மரங்கள் கேட்பதில்லை; அவை காண்பதுமில்லை; மணம் மற்றும் சுவையையும் அவை உணரவல்லவையாக இல்லை. தீண்டல் உணர்வும் அவற்றிடம் இல்லை. எவ்வாறு அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதியாகக் கருதப்படலாம்?(8) மரங்களில் திரவபொருள், வெப்பம், பூமி {நிலம்} ஆகியவை ஏதும் இல்லாததன் விளைவால், அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதிகளாகக் கருதப்படக்கூடாது என்றே தெரிகிறது” என்றார் {பரத்வாஜர்}.(9)

பிருகு, “அடர்த்தியைக் கொண்டிருந்தாலும், மரங்களினுள் நிச்சயம் வெளி {ஆகாயம்} இருக்கிறது. மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவது அவற்றில் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.(10) அவற்றினுள் வெப்பம் இருப்பதன் விளைவாலேயே, அவற்றிலிருந்து இலைகள், பட்டைகள், கனிகள், மலர்கள் ஆகியன உதிர்கின்றன. அவை நோய்வாய்ப்பட்டு வாடுகின்றன. இது தீண்டல் உணர்வு அவற்றுக்கு இருப்பதையே காட்டுகிறது.(11) காற்றின் ஒலி, நெருப்பு, இடி ஆகிய அதிர்ச்சியின் மூலம், அவற்றின் கனிகளும் மலர்களும் விழுகின்றன. காதின் மூலம் ஒலி உணரப்படுகிறது. எனவே மரங்களுக்குக் காதுகள் இருக்கின்றன, அவை கேட்கின்றன.(12) ஒரு கொடி ஒரு மரத்தில் சுற்றி, அனைத்துப் பக்கங்களில் படர்கிறது. பார்வையில்லையென்றால் அதற்கு வழி தெரியாது. இதன் காரணமாக, மரங்களுக்குப் பார்வை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(13) மேலும் மரங்கள் நல்ல மற்றும் தீய மணங்களின் விளைவால் உயிரிவளம் தேறி, பல்வேறு வகைத் தூபங்களிலான புனித நறுமணங்களைத் தரும் மலர்களை மலரச் செய்கின்றன[2]. மரங்கள் மணத்தைக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படை[3].(14) அவை தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன. அவை பல்வேறு வகையான நோய்க்கு ஆட்படுகின்றன. அந்த நோய்களும் பல்வேறு வகைச் செயல்பாடுகளால் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மரங்களுக்குச் சுவையை உணரும் தன்மை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(15)ஒருவன் தாமரைத் தண்டின் மூலமாக நீரை உறிஞ்சுவதைப் போலவே, காற்றின் உதவியுடன், தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன.(16) அவை இன்பத்திற்கும், துன்பத்திற்கும் எளிதாக உட்படுகிறவையாகவும், வெட்டும்போதோ, கொய்யப்படும்போதோ வளர்பவையாகவும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளால் மரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதே எனக்குத் தெரிகிறது. அவை அசைவற்றவை கிடையாது.(17) இவ்வாறு உறிஞ்சப்படும் நீரை நெருப்பும் காற்றும் செரிக்கச் செய்கின்றன. மேலும், மரமானது எந்த அளவுக்கு நீரை எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவுக்கு வளர்ந்து ஈரத்தன்மை கொண்டதாகிறது.(18)

அசையும் பொருட்கள் அனைத்தின் உடல்களிலும் ஐம்பூதங்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் அளவுகள் வேறுபடுகின்றன. இந்த ஐம்பூதங்களின் விளைவாலேயே அசையும் பொருட்களால் தங்கள் உடல்களை நகர்த்திக் கொள்ள முடிகிறது.(19) தோல், சதை, எலும்புகள், மஜ்ஜை ஆகியன பூமியாலானவை {நிலத்தாலானவை}.(20) ஆற்றல், கோபம், கண்கள், உள்ளார்ந்த வெப்பம், உணவைச் செரிக்கச் செய்யும் வேறு வெப்பம் ஆகி இந்த ஐந்தும், உடல்படைத்த அனைத்து உயிரினங்களிலும் நெருப்பாக இருக்கின்றன.(21) காதுகள், மூக்கு, வாய், இதயம், வயிறு ஆகிய ஐந்தும், உயிரினங்களின் உடல்களில் வெளி பூதமாக இருக்கின்றன. சளி, பித்தநீர், வியர்வை, கொழுப்பு, இரத்தம் ஆகியவை அசையும் உடல்களில் ஐவகை நீராக இருக்கின்றன.(23) பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றின் மூலம் ஓர் உயிரினத்தால் நகர முடிகிறது. வியானம் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் செயல்பாட்டுக்குரிய பலத்தைப் பெற முடிகிறது. அபானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் கீழ்நோக்கி நகர முடிகிறது. சமானன் {ஸமானன்} என்றழைக்கப்படுவது {வாயு} இதயத்தில் வசிக்கிறது.(24) உதானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் ஒருவனால் ஏப்பம் விட {மூச்சுவிட} முடிகிறது, (நுரையீரல்கள், தொண்டை, வாய்) ஆகியவற்றைத் துளைப்பதன் விளைவால் பேசவும் முடிகிறது. இவையே உடல்படைத்த உயிரினம் வாழவும் நகரவும் வழிவகுக்கும் ஐவகைக் காற்றுகளாகும் {வாயுக்களாகும்}.(25)

உடல்படைத்த ஓர் உயிரினம் தன்னில் இருக்கும் பூமி {நிலம்} எனும் பூதத்தின் மூலம் மணத்தின் பண்புகளை அறிகிறது. நீர் எனும் பூதத்தின் மூலம் அது சுவையை உணர்கிறது. கண்களைப் பிரதிபலிக்கும் நெருப்பு எனும் பூதத்தின் மூலம், அது வடிவங்களைப் பார்க்கிறது, காற்று எனும் பூதத்தின் மூலம் அது தீண்டல் உணர்வை அடைகிறது.(26) மணம், தீண்டல், சுவை, பார்வை, ஒலி ஆகியவை அசையும் மற்றும் அசையாத பொருட்களின் (பொதுப்) பண்புகளாகக் கருதப்படுகின்றன. நான் முதலில் பல்வேறு வகை மணங்களைக் குறித்துப் பேசப் போகிறேன்.(27) ஏற்புடையமணம், ஏற்பில்லாத மணம், இனிய மணம், கடுமையான நாற்றம், தொலைதூரம் செல்கிற மணம், பல்வேறு வகையைக் கொண்ட மணங்களைக் கொண்டது, காய்ந்த மனம், மணமற்றது என அவை இருக்கின்றன[4].(28) இந்த ஒன்பது வகை மணங்கள் பூமி {நிலம்} என்ற பூதத்தால் அமைக்கப்படுகின்றன. கண்களால் ஒளி காணப்படுகிறது, காற்று எனும் பூதம் மூலம் தீண்ட முடிகிறது.(29) ஒலி, தீண்டல், பார்வை, சுவை ஆகியவை நீரின் பண்புகளாகும். இனி நான் சுவை எனும் உணர்வைக் குறித்து (விரிவாகப் பேசப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(30)உயர் ஆன்ம முனிவர்கள் பல்வேறு வகைச் சுவைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். அவை, இனிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு {காரம்} ஆகியனவாகும். இந்த ஆறுவகைச் சுவைகளும் நீரெனும் பூத்தைச் சார்ந்தவையாகும்.(32) வடிவத்தைப் பார்க்க ஒளி பங்களிக்கிறது. வடிவம் பல்வேறு வகைகளில் இருக்கிறது. குட்டை, நெட்டை {நீளம்}, பருமை, நான்கு முனை கொண்டது {சதுரம்}, உருண்டை,(33) வெளுப்பு, கறுப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், நீலச்சிவப்பு, கெட்டியானது, வெளிச்சமானது {பிசுக்குள்ளது}, வழுவழுப்பானது {மெழுக்குள்ளது}, எண்ணெய்ப்பசையுள்ளது, மென்மையானது, பயங்கரமானது.(34) இந்தப் பதினாறு வகை வெவ்வேறு வடிவங்களும் ஒளி, அல்லது பார்வையின் பண்பைக் கொண்டவை. காற்று எனும் பூதத்தின் பண்பு தீண்டல். தீண்டல் பல்வேறு வகைகளைக் கொண்டது.(35) வெப்பமானது, குளிரானது, ஏற்புடையது, ஏற்பில்லாதது, அக்கறையற்றது, எரிச்சலுள்ளது, கனிவானது, மென்மையானது, கனமில்லாதது, கனமிக்கது.(36) ஒலி, தீண்டால் ஆகிய இரண்டும் காற்றெனும் பூதத்தின் பண்புகளாக இருக்கின்றன. இந்தப் பதினோரு பண்புகளும் காற்றை {வாயுவைச்} சார்ந்தவை.(37)

வெளிக்கு {ஆகாயத்திற்கு} ஒரே ஒரு பண்பு மட்டுமே உண்டு. அஃது ஒலி என்று அழைக்கப்படுகிறது. நான் இப்போது பல்வேறு வகையான ஒலிகளைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(38) அவை, ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழு மூலக்குறிகளை {ஸ்வரங்களைக்} ஆகியவையே.(39) இந்த ஏழு வகைப் பண்புகளும் வெளி {ஆகாயம் எனும் பூதம்} தொடர்புடையவையாகும். ஒலியானது, குறிப்பாகப் பேரிகை முதலிய இசைக்கருவிகளில் வெளிப்படுவதாக இருந்தாலும் பரம்பொருளைப் போல வெளியெங்கும் பிரிக்க முடியாதவாறு உட்பொதிந்திருக்கிறது.(40) சிறி, பெரிய பேரிகைகள், சங்குகள், மேகங்கள், தேர்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் ஆகிய எதன் மூலம் கேட்கப்பட்டாலும் ஒலியானது, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட இந்த ஏழுவகை ஒலிகளையே கொண்டிருக்கிறது.(41) இவ்வாறு வெளியின் பண்பான ஒலி பல்வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கிறது. கல்விமான்கள் ஒலியானது வெளியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். காற்றின் பண்பான பல்வேறு வகைத் தீண்டல்களின் மூலம் எழுப்பப்படும்போது அது {ஒலி} கேட்கப்படுகிறது. எனினும், பல்வேறு வகையான தீண்டல்கள் தடுக்கப்பட்டால் அது {ஒலி} கேட்கப்படுவதில்லை[5]. உடலின் ஒத்த பகுதிகளில் பூதங்கள் கலந்து, பெருகி, வளர்கின்றன.(42,43) நீர், நெருப்பு, காற்று ஆகியவை உயிரினங்களின் உடல்களில் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றன. அவையே உடலின் வேர்களாக இருக்கின்றன. (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) ஐந்தும் உயிர் மூச்சுகளில் படர்ந்தூடுருவி அவை உடலில் வசித்து வருகின்றன” என்றார் {பிருகு}.(44)

உடல் இயக்கவியல்! – சாந்திபர்வம் பகுதி – 185-உடலில் உள்ள பிராண வாயு உள்ளிட்ட வாயுக்களின் செயல்பாடுகளைக் குறித்துப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “உடல்வெப்பம், அல்லது நெருப்பானது {அக்னி}, உடலுக்குள் புகுந்து எவ்வாறு அங்கே வசிக்கிறது? தனக்கென வெளியை அடையும் காற்று {வாயு} எவ்வாறு உடலை அசையச் செய்யவும், முயற்சி செய்யவும் வைக்கிறது?” என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம்}, “ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே}, ஓ! பாவமற்றவனே, வலிமைமிக்கப் பூதமான காற்று {வாயு}, உயிரினங்களின் உடல்களை எவ்வாறு அசையவும், முயற்சிக்கவும் வைக்கும் நடைமுறை குறித்து உனக்குச் சொல்கிறேன்.(2) வெப்பம் தலையில் (மூளையில்) வசித்துக் கொண்டு உடலை (அழியாமல்) பார்த்துக் கொள்கிறது. பிராணன் என்றழைக்கப்படும் காற்று {வாயு} அல்லது மூச்சானது, தலைக்குள் வசித்துக் கொண்டு, தன் வெப்பத்தால் அனைத்து முயற்சிகளுக்கும் காரணமாக இருக்கிறது.(3) அந்தப் பிராணனே, உயிரினமாகவும், அண்ட ஆன்மாவாவாகவும், அழிவில்லாததாகவும், உயிரினங்கள் அனைத்தின் மனமாகவும், அறிவாகவும், நனவு நிலையாகவும், புலன்நுகர்பொருட்களுக்குரிய அனைத்துப் பொருட்களாகவும் இருக்கிறது[1].(4) இவ்வாறு ஓர் உயிரினமானது, அனைத்து வகையிலும் பிராணனால் இயக்கப்பட்டு, {உடலை} முயற்சி செய்ய வைக்கிறது.சமானன் என்றழைக்கப்படும் மற்றொரு மூச்சின் விளைவாக, புலன்களில் ஒவ்வொன்றும் அதனதன் செயல்களுக்கேற்ப செயல்படுகின்றன.(5) அபானன் என்றழைக்கப்படும் மூச்சானது, சிறுநீர்ப்பை மற்றும் வயிற்றின் குடல்களில் உள்ள வெப்பத்தைக் கொண்டு அசைந்து, சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வைப்பதில் ஈடுபடுகிறது.(6) இம்மூன்றிலும் {மூன்று பகுதிகளிலும்} செயல்படும் ஒற்றை மூச்சானது, அறிவியல் அறிந்தவர்களால் உதானன் என்றழைக்கப்படுகிறது[2].(7) மனிதர்களின் உடல்களில் உள்ள இணைப்புகள் அனைத்தையும் இயங்கச் செய்யும் மூச்சானது வியானன் என்றழைக்கப்படுகிறது.(8) உயிரினங்களில் உடல்களில் உள்ள வெப்பமானது, சமானன் என்ற மூச்சினால் உடலியக்கம் முழுவதிலும் சுற்றிச் செலுத்தப்படுகிறது. இவ்வாறு உடலில் வசித்திருக்கும் அந்த மூச்சானது, பல்வேறு வகைத் திரவங்களிலும் {அன்னரஸங்களிலும்}, தாதுக்களிலும், குற்றமான பொருட்கள் அனைத்திலும் செயல்படுகிறது[3].(9) அபானன் மற்றும் பிராணனுக்கு இடையில் தொப்புகள் பகுதியில் வசிக்கும் வெப்பமானது {அக்நியானது}, இந்த இரண்டு மூச்சுகளின் {வாயுக்களின்} உதவியுடன், அந்த உயிரினம் உண்ணும் உணவுகள் அனைத்தையும் செரிக்கச் செய்கிறது.(10)வாயில் தொடங்கிக் குதம் {மலவாய்} வரையில் ஒரு நாளம் {குழாய்/குடல்} இருக்கிறது. அதன் எல்லையானது குதம் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் இந்த முக்கிய நாளத்திலிருந்து எண்ணற்ற துணைக் கிளைகள் {நாளங்கள்} பிரிந்து செல்கின்றன[4].(11) மேற்சொன்ன பெயர்களிலான பல்வேறு மூச்சுக்காற்றுகள் (இந்த நாளங்களின் வழியாக) விரைவதன் விளைவாக, அந்த மூச்சுகள் ஒன்றுகலக்கின்றன. (பிராணனில் வசிக்கும்) வெப்பமானது உஷ்மன் {உஷ்ணம்} என்றழைக்கப்படுகிறது. அந்த வெப்பமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் செரிமானத்திற்கும் காரணமாக இருக்கிறது.(12) வெப்ப ஊற்றைச் சுமந்து செல்லும் பிராணன் என்றழைக்கப்படும் மூச்சானது {வாயுவானது}, கீழ்நோக்கிச் சென்று குதக் கால்வாயெனும் எல்லையை அடைந்து, பிறகு மீண்டும் மேல்நோக்கி அனுப்பப்படுகிறது. மேலும் அதன் இருக்கையான தலைக்குத் திரும்பிவரும் அது {பிராணன்}, மீண்டும் வெப்பத்தைச் சுமந்து கொண்டு கீழே செல்கிறது.(13) தொப்புளுக்குக் கீழுள்ளது செரிக்கப்பட்டவற்றைக் கொண்ட பகுதியாகும். உடலைத் தக்கவைத்துக் கொள்ள உயிர் சக்திகள் அனைத்தும் தொப்புளில் இருக்கின்றன. பிராணனை முதலாகக் கொண்ட பத்து வகை மூச்சுகளால்[5] {வாயுக்களால்} தூண்டப்படுபவையும், {ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல} இதயத்தில் இருந்து கிளை விட்டு வருபவையுமான {ரத்த} நாளங்கள், உணவு கொடுக்கும் திரவச் சாறுகளை மேல்நோக்கியும், கீழ்நோக்கியும், குறுக்குத் திசையிலும் கொண்டு செல்கின்றன[6].(15) இன்பத்தையும், துன்பத்தையும் முற்றிலும் சமமாகக் கண்டு களைப்பை வென்றவர்களான யோகிகள், மூளைக்குள் ஆன்மாவைத் தாங்கி பிரம்மத்தை அடைவதில் வெல்வதற்கு, வாயிலிருந்து குதத்திற்குச் செல்லும் இந்த நாளமே பாதையாக இருக்கிறது[7].(16)இவ்வாறு, பிராணன், அபானன் மற்றும் பிறவாக அழைக்கப்படும் மூச்சுகளில் {வாயுக்களில்} வெப்பம் {அக்னி} வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வெப்பமானது, (புலப்படக்கூடிய) எந்தப் பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள ஒரு நெருப்பைப் போல அங்கே எரிந்து கொண்டே இருக்கிறது” என்றார் {பிருகு}.(17)

உயிர் எங்கே? – சாந்திபர்வம் பகுதி – 186-உடலைத் தவிர உயிர் என்று ஏதும் எங்கே இருக்கிறது என்று பிருகுவிடம் விளக்கம் கேட்ட பரத்வாஜர்..

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “காற்றுதான் {வாயுதான்} நம்மை உயிருடன் வைத்திருக்கிறது, நாம் அசையவும், நம்மை முயற்சி செய்யவும் வைக்கிறது, நம்மை மூச்சுவிடவும், பேசவும் வைக்கிறது என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாக {பயனற்றதாகத்} தெரிகிறது.(1) (உணவு அனைத்தையும் செரிக்கும்) விலங்கு வெப்பம் இயற்கை நெருப்பின் {அக்னியின்} இயல்பைக் கொண்டதாக இருந்தால், நாம் உண்ணும் உணவைக் கரைப்பதன் மூலம் செரிப்பதில் துணைபுரிவது அந்நெருப்பே என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாகத் தெரிகிறது.(2) ஒரு விலங்கு இறக்கும்போது, உயிர் என்று எது அழைக்கப்படுகிறதோ, அஃது அதைவிட்டு வெளியேறுவது ஒருபோதும் காணப்படுவதில்லை. மூச்சு மட்டுமே விட்டுச் செல்கிறது, உள்ளார்த வெப்பமும் அணைந்துவிடுகிறது.(3) உயிர் என்பது காற்றைத் தவிர வேறில்லை என்றாலோ, உயிரானது காற்றை மட்டுமே சார்ந்திருக்கிறது என்றாலோ, அது வெளிப்புற காற்றுக் கடலைப் போலத் தென்படும், மேலும் வெளியேறும்போது, அந்தக் காற்றுடன் கலக்கும்.(4) உயிரானது காற்றைச் சார்ந்திருக்கிறது என்றால், உடலில் இருந்து காற்று வெளியேறுவதால் அது முடிவடைகிறது என்றால், அது, நீரின் ஒரு பகுதி, பெருங்கடலுக்குள் செல்வதைப் போல, (வெளிப்புறத்தில் இருக்கும்) மற்றொரு காற்றுப்பகுதியுடன் கலந்து தன் வசிப்பிடத்தை மட்டுமே மாற்றிக் கொள்ளும்.(5)

ஒரு குறிப்பிட்ட அளவு நீர் கிணற்றுக்குள் இறைக்கப்பட்டாலோ, ஒரு விளக்கை சுடர்மிக்க நெருப்புக்குள் தூக்கி வீசினாலோ, அவை இரண்டும், ஓரின இயற்பியல் கொண்ட பூதத்துக்குள் நுழைந்து, தற்சார்பையோ, தனிப்பட்ட இருப்பையோ இழக்கின்றன. உயிரே காற்றென்றால் {வாயு என்றால்}, ஒரு விலங்கு இறக்கும்போது, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றுப் பெருங்கடலில் அது கலக்கவே செய்யும்.(6) பிறகு, ஐந்து (முக்கிய) பூதங்களால் ஆன இந்த விலங்குடம்பில் உயிர் இருக்கிறது என்று நாம் எவ்வாறு சொல்லலாம்? அந்தப் பூதங்களில் ஒன்று மறைந்தாலும், மற்ற நான்கு பூதங்களும் கரைந்துபோகின்றன.(7) உணவு உட்கொள்ளப்படவில்லையென்றால் நீரெனும் பூதம் வற்றிவிடுகிறது. மூச்சுக்காற்று தடுக்கப்பட்டால், காற்றெனும் {வாயு எனும்} பூதம் காணாமல் போகிறது. மலஜலக் கழிவுகள் நின்றால் வெளியெனும் {ஆகாயமெனும்} பூதம் மறைகிறது. உள்ளே உணவு செல்லவில்லை என்றால், நெருப்பெனும் பூதம் அணைகிறது.(8) நோய், காயங்கள் மற்றும் பிற துன்பங்களின் விளைவால் பூமியெனும் {நிலமெனும்} பூதம் துண்டுகளாக உடைகிறது. இந்த ஐந்தும் துன்புற்று, அந்தச் சேர்கை கரைந்தால் மட்டுமே, அந்த ஐந்தும் ஐந்து வெவ்வேறு திசைகளில் செல்லும்.(9) ஐந்து பூதங்களின் சேர்க்கையால் ஆன உடல் ஐந்து உள்ளடக்கங்களாகப் பிரிந்து சென்றால் உயிர் எங்கே போகும்? அஃது எதை அறிகிறது? அஃது எதைக் கேட்கிறது? அதென்ன சொல்கிறது?(10)

(பிராமணனுக்குத் தானமாக அளிக்கப்படும்) இந்தப் பசு, மறுமையில் என்னை மீட்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், தானமாகக் கொடுக்கப்பட்ட அந்த விலங்கே இறக்கிறது. அவ்வாறிருக்கையில் இந்தப் பசு யாரை மீட்கும்?(11) இந்தப் பசுவை (கொடையாகப்) பெறுபவனும், கொடுப்பவனும் (மரணத்திற்கு உட்படுவதைப் பொறுத்தவரை) இணையானவர்களே. அவர்கள் இருவரும் இவ்வுலகில் அழிவை அடைகிறார்கள். அவ்வாறிருக்கையில் இஃது எவ்வாறு பொருந்தும்?(12) பறவைகளால் உண்ணப்படக்கூடியவனாக, அல்லது மலையில் இருந்து விழுவதன் மூலம் துண்டுகளாக உடைந்து போகிறவனாக, அல்லது நெருப்பால் எரிக்கப்படுபவனாக இருப்பவன் எவ்வாறு உயிர் மீள முடியும்?(13) வேர் வெட்டப்பட்ட மரம் மீண்டும் வளராது. விதைகளால் மட்டுமே முளைவிட முடியும். இறந்து போனவன் (ஏதாவது ஒருவகையில் புதிய இருப்புக்கு) மீண்டு வருவது எங்கே காணப்படுகிறது?(14) உண்மையில் வித்துகளே படைக்கப்பட்டன. இந்த அண்டம் முழுமையும் அடுத்தடுத்து வந்த வித்துகளின் விளைவால் விளைந்தவையே. இறந்து செல்பவை அழிவடையவே இறக்கின்றன. வித்துகள் வித்துகளிலிருந்தே விளைகின்றன” என்றார் {பரத்வாஜர்}.(15)

ஆத்மா? – சாந்திபர்வம் பகுதி – 187-உடலைத் தவிர உயிர் என்ற வேறு ஒன்றும் இருக்கிறது என்று பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..

பிருகு {பரத்வாஜரிடம்}, “உயிரினத்திற்கோ, கொடுக்கப்பட்டவைக்கோ, நமது பிற செயல்களுக்கோ அழிவே கிடையாது. இறந்து போகும் உயிரினம் வடிவில் மட்டுமே மற்றொன்றாக மாறுகிறது. உடல் மட்டுமே கரைந்துபோகிறது.(1) உயிரினமானது, உடலைச் சார்ந்திருந்தாலும், உடல் அழியும் போது, அதனுடன் சேர்ந்து அழிவடைவதில்லை. விறகால் தூண்டப்பட்ட நெருப்பு, எரிந்த பிறகு எவ்வாறு காணப்படுவதில்லையோ அவ்வாறே உடல் கட்டுமானமும் அழிவுக்குப் பிறகு காணப்படுவதில்லை” என்றார் {பிருகு}.(2)

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “நெருப்பைப் போல, உயிரினத்திற்கு அழிவில்லையென்றால், (நெருப்பைத் தூண்டிய) விறகு எரிக்கப்பட்டபிறகு, நெருப்பு காணப்படுவதில்லை என்பதை ஏற்கிறேன். நான் அறிந்த மட்டிலும், எரிபொருள் ஊட்டம் நிறுத்தப்படும்போது, நெருப்பு அணைந்து, நிர்மூலமடைகிறது.(3) எது எந்தச் செயல்பாடும் இல்லாது போனதோ, எது இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையோ, எது வெளியை நிரப்பாமல் இருக்கிறதோ, அஃது அழிவடைந்ததாகவே கருதப்பட வேண்டும்” என்றார் {பரத்வாஜர்}.(4)

பிருகு {பரத்வாஜரிடம்}, “எரிபொருள் எரிக்கப்பட்டதும், நெருப்பு காணப்படாது என்பது உண்மையே. இயற்கூறாய் அமைய, புலப்படக்கூடிய எந்தப் பொருளும் இல்லாதபோது அது வெளியில் {ஆகாயத்தில்} கலக்கிறது. எனவே, அது நம்மால் உணரப்பட முடியாததாக ஆகிறது.(5) அதேபோலவே, உயிரினமானது உடலைவிட்டு அகன்றதும் வெளியில் வாழ்கிறது, {முன் சொன்ன} நெருப்பைப் போலவே மிக நுண்ணிய வடிவை ஏற்பதால் அது பார்வைக்குப் புலப்படாததாகிறது.(6) நெருப்பு, அல்லது வெப்பமே பிராணன் முதலியவையாக அழைக்கப்படும் மூச்சுக் காற்றுகளை நீடிக்கச் செய்கிறது. (இவ்வாறு நீடித்திருக்கும்) வெப்பமே உயிர் என்றோ, வாழும் ஒன்றாகவோ அழைக்கப்படுகிறது. எந்த வெப்பம் மூச்சுகளை நீடிக்கச் செய்கிறதோ, அது மூச்சு ஒடுங்குவதன் விளைவால் அணைகிறது.(7) உடல் கட்டுமானத்தில் உள்ள வெப்பம் அணைந்ததும், அந்தக் கட்டுமானமே அசைவூட்டத்தை இழக்கிறது. வீழும் அஃது {உடல் கட்டுமானம்}, இறுதியாகச் சேருமிடமான பூமியாக {நிலமெனும் பூதமாக} மாற்றமடைகிறது.(8) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்திலும் உள்ள மூச்சானது {வாயுக்கள்}, வெளியில் கலக்கும் போது, அவற்றில் உள்ள வெப்பமும் அந்த மூச்சையே {வாயுக்களையே} பின்தொடர்கிறது.(9) இம்மூன்றும் (வெளி, காற்று {வாயு} மற்றும் நெருப்பு ஆகியன) ஒன்றுகலக்கின்றன. மற்ற இரண்டும் (நீரும், பூமியும்) பூமியின் வடிவில் ஒன்று கலந்து நீடிக்கின்றன.(10) எங்கே வெளி {ஆகாயம்} இருக்கிறதோ, அங்கே காற்று {வாயு} இருக்கிறது, எங்கே காற்று இருக்கிறதோ, அங்கே நெருப்பு இருக்கிறது. அவை வடிவமற்றவை என்பது அறியப்பட வேண்டும், உடல்படைத்த உயிரினங்களைப் பொறுத்தே அவை வடிவங்கொள்கின்றன” என்றார் {பிருகு}.(11)

பரத்வாஜர், “உயிரினங்கள் அனைத்தின் உடற்கட்டுமானங்களிலும் வெப்பம், காற்று, பூமி, வெளி, நீர் ஆகியன இருக்கின்றனவென்றால், அப்போது உயிர் வாழும் ஒன்றின் {உயிரின் / ஜீவனின்} குறியீடுகள் என்ன? ஓ! பாவமற்றவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக.(12) ஐந்து முக்கியப் பூதங்களால் உண்டானவையும், ஐந்து செயல்களில் ஈடுபடுபவையும், ஐம்புலன்களைக் கொண்டவையும், அசைவூட்டம் கொண்டவையுமான உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிரின் {ஜீவனின்} இயல்பை நான் அறிய விரும்புகிறேன்.(13) சதை, குருதி, கொழுப்பு, தசைக்கட்டுகள் {நரம்புகள்}, எலும்புகள் ஆகியவற்றின் கலவையான உடல் அழிந்தபிறகு, எது உயிர் வாழ்கின்றதோ அந்த உயிர் {ஜீவன்} காணப்படுவதில்லை.(14) ஐம்பூதங்களாலான இவ்வுடல், உயிர் என்று அழைக்கப்படும் ஒன்று {ஜீவன்} இல்லாததாக இருந்தால், உடல், அல்லது மனத் துன்பம் தோன்றும்போது, அத்துன்பத்தை யார் உணர்வது? அல்லது எது உணர்கிறது?(15) எது சொல்லப்படுகிறதோ, அதைக் காதுகளின் உதவியுடன் உயிர் வாழும் ஒன்று {ஜீவன்} கேட்கிறது. எனினும், ஓ பெரும் முனிவரே, அதே ஒன்று {உயிர்}, மனம் வேறொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கேட்காமல் இருக்கிறது. எனவே, உயிர்வாழும் ஒன்று {ஜீவன்} என்றழைக்கப்படும் ஒன்றிற்கான குறிக்கோள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.(16) வாழும் உயிரானது {ஜீவனானது} மனத்தோடு இயைந்து செயல்பட்டு கண்களின் மூலமாக மொத்த காட்சியைப் பார்க்கிறது, ஆனால் மனம் வேறுவகையில் ஈடுபட்டிருக்கும்போது, கண்கள் தன் முன் இருப்பதைக் காண்பதில்லை.(17) மேலும் உறக்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அந்த ஒன்று {உயிரானது}, நுகர்வதோ, கேட்பதோ, பேசுவதோ, தீண்டல் மற்றும் சுவையின் உணர்வுகளை அனுபவிப்பதோ இல்லை.(18) கோபமடைவதும், கவலையடைவதும், பெருந்துயரை அனுபவிப்பதும் யார்? அல்லது எது? விரும்புவதும், எண்ணுவதும், வெறுப்பை உணர்வதும், சொற்களைப் பேசுவதும் எது?” என்று கேட்டார் {பரத்வாஜர்}.(19)

பிருகு, “உடலோடு சேர்ந்து பொதுவாக மனமும் ஐம்பூதங்களால் ஆனதே. இதன் காரணமாக, நீ சொன்ன எந்தச் செயல்பாடுகளின் விளைவாலும் இது நேரவில்லை. உள்ளார்ந்த ஒரே ஆன்மா மட்டுமே உடலை நீடிக்கச் செய்கிறது. மணம், சுவை, ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் (புற இயற்கையில் நீடிக்கும்) பிற பண்புகள் ஆகியவற்றை அதுவே {ஆன்மாவே} உணர்கிறது.(20) அந்த ஆத்மாவே, அங்கங்கள் அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஐம்பூதங்களால் தொகுக்கப்பட்ட உடலுக்குள் வசித்துக் கொண்டு, ஐந்து பண்புகளுடன் இருக்கும் மனத்திற்கு (மனத்தின் செயல்களுக்கு) சாட்சியாக இருக்கிறது. இன்பத்தையும், துன்பத்தையும் உணர்வது அதுவே {ஆன்மாவே}. அதனில் இருந்து உடல் பிரிக்கப்படும்போது, உடலானது அதற்குமேல் அவற்றை உணர்வதில்லை.(21) எந்த வடிவத்தையும், அல்லது தீண்டலையும் உணராதபோது, உடலில் வசிக்கும் நெருப்பில் வெப்பமேதும் இல்லாத போது, உண்மையில் அந்த விலங்குவெப்பம் அணையும்போது, ஆன்மாவால் கைவிடப்பட்டதன் விளைவால், அவ்வுடல் அழிவைச் சந்திக்கிறது.(22) இந்த மொத்த அண்டமும் நீரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீரே உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் வடிவமாக {ஸுக்ஷமசரீரமாக} இருக்கிறது. ஆன்மா என்பது அனைத்துப் பொருட்களிலும் நீடித்திருக்கும் படைப்பாளன் பிரம்மனே ஆவான்.(23)

ஆன்மா தீய பண்புகளை அடையும்போது, அது க்ஷேத்ரஜ்ஞன் என்ற அழைக்கப்படுகிறது. அப்பண்புகளில் இருந்து விடுபடும்போது, அது பரமாத்மா, அல்லது உயர்ந்த ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.(24) அஃதை ஆன்மா என்றறிவாயாக. அஃது அண்ட நல்லுணர்வால் ஊக்கமடைந்திருக்கிறது. அது {அவன்} தாமரையில் உள்ள நீர்த்துளி போல உடலில் வசிக்கிறது.(25) எது அண்ட நல்லுணர்வைக் கொண்டிருக்கிறதோ அதுவே க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறது என்பதை நன்கறிவாயாக. வாழும் உயிரானது, இருள் {தாமஸம்}, ஆசை {ரஜோ} மற்றும் நல்லுணர்வு {சத்துவம்} என்ற மூன்று பண்புகளைக் கொண்டதாகும்.(26) ஆன்மாவானது, நனவுநிலையைக் கொண்டிருக்கிறது, வாழ்வின் பண்புகளுடன் நீடித்திருக்கிறது என்று கல்விமான்கள் சொல்கின்றனர். ஆன்மாவே முயற்சி செய்கிறது, அனைத்தையும் முயற்சி செய்ய வைக்கிறது. ஆன்மா குறித்த அறிவுடையோர், ஆன்மாவானது உயிரிலிருந்து வேறானது என்று சொல்கின்றனர். ஏழு உலகங்களையும் படைத்த பரமாத்மாவே அவற்றை {ஆன்மாக்களை} இயக்குகிறது[1].(27) உடல் அழியும்போது வாழும் ஒன்று {உயிர்} அழிவதில்லை. அறிவற்ற மனிதர்களே அஃது இறக்கிறது என்று சொல்கிறார்கள். அது நிச்சயம் உண்மையல்ல. மரணம் என்று அழைக்கப்படுவது உடலின் அழிவு மட்டுமே ஆகும்.(28)இவ்வாறு பல்வேறு வடிவங்களில் பொதியப்படும் ஆன்மாவானது, ஒரு வடிவில் இருந்து மற்றொன்றாக மாறி, பிறரால் காணப்படாததாகவும், கவனிக்கப்படாததாகவும் இருக்கிறது. உண்மை ஞானத்தைக் கொண்டவர்கள், தங்கள் கூர்மையான நுண்ணறிவால் ஆன்மாவைக் காண்கிறார்கள்.(29) அனைத்துப் பாவங்களில் இருந்து தூய்மையடைந்த இதயத்துடன் எளிய உணவு உண்டு வாழும் ஞானி, யோகத் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொறு நாள் இரவு உறங்கும் முன்பும், உறங்கிய பின்னரும் தன் ஆன்மாவின் உதவியால் தன் ஆன்மாவையே காண்கிறான்[2].(30) உள்ளடங்கிய இதயத்தின் விளைவால், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, தன் ஆன்மாவைச் சார்ந்து ஒருவனால் முடிவற்ற மகிழ்ச்சியை அடைய முடியும்.(31) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டவனும், மனத்தில் வசிப்பவனுமான மன்னன், வாழும் ஒன்று என்று அழைக்கப்படுகிறான். அனைத்தின் தலைவனான அவனிலிருந்தே இந்தப் படைப்பு எழுந்தது. உயிரினங்கள் மற்றும் ஆன்மாவின் தோற்றம் குறித்த விசாரணையின் முடிவில், இந்தத் தீர்மானமே அடையப்படுகிறது” என்றார் {பிருகு}.(32)

வர்ண வேறுபாடு? – சாந்திபர்வம் பகுதி – 188-பிராமணர்கள் தத்தமது விருப்பப்படி நடந்து கொண்டதால் உண்டான வர்ண வேறுபாடு குறித்து பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..

பிருகு {பரத்வாஜரிடம்}, “பிரம்மன் முதலில் பிரஜாபதிகள் {படைப்பின் தலைவர்கள்} என்றழைக்கப்பட்ட சில பிராமணர்களைப் படைத்தான். நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியைக் கொண்ட அவர்கள், முதலில் தோன்றியவனின் {பிரம்மனின்} சக்தியின் மூலம் உண்டாக்கப்பட்டார்கள்.(1) பிறகு அந்தப் பலமிக்கத் தலைவன் {பிரம்மன்}, உயிரினங்கள் சொர்க்கத்தை அடையும்பொருட்டு, வாய்மை, கடமை, தவம், அழிவில்லா வேதங்கள், அனைத்து வகைப் பக்திச் செயல்பாடுகள், தூய்மை, ஆகியவற்றை (உயிரினங்கள் பயில்வதற்காகப்) படைத்தான்.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, அதன் பிறகு, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள், அசுரர்கள், பெரும் நாகர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், பிசாசங்கள், மனிதர்களில்(3) நான்கு பிரிவினரான பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும், படைப்பில் இருக்கும் பிற வகையைச் சார்ந்தவையும் படைக்கப்பட்டன.(4) பிராமணர்கள் வெண்ணிறத்தையும், க்ஷத்திரியர்கள் சிவப்பு நிறத்தையும் , வைசியர்கள் மஞ்சள் நிறத்தையும் அடைந்தனர், சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறம் கருப்பாகும்[1]” என்றார் {பிருகு}.(5)பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “(மனிதர்களின்) நால்வகையினருக்கிடையிலான வேறுபாடு வண்ணங்களால் (பண்புகளால்) மட்டுமே உண்டானவை என்றால், நால் வகையும் ஒன்றுகலந்ததாகவே தெரிகிறது.(6) காமம், கோபம், அச்சம், பேராசை, துயரம், கவலை, பசி, களைப்பு, ஆகியன மனிதர்கள் அனைவரையும் வசப்படுத்தி அவர்களில் நீடித்திருக்கின்றன. பண்புகள் உடைமையால் எவ்வாறு மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்?(7) மனிதர்கள் அனைவரின் உடல்களும், வியர்வை, சிறுநீர், மலம், சளி, கபம், குருதி ஆகியவற்றை வெளியிடுகின்றன. பிறகு, மனிதர்களை எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?(8) அசையும் பொருட்கள் முடிவிலா எண்ணிக்கையில் இருக்கின்றன; அசையாத பொருட்களைக் கொண்ட இனங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய வேற்றுமைகளைக் கொண்ட பொருட்களை {மனிதர்களை} எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?” என்று கேட்டார் {பரத்வாஜர்}.(9)

பிருகு {பரத்வாஜரிடம்}, “வெவ்வேறு வகைகளுக்கிடையில் உண்மையில் எந்த வேறுபாடும் கிடையாது. பிரம்மனால் (சமமாகப்) படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் செயல்பாடுகளின் விளைவால், பல்வேறு வகையினராகப் பிரிந்திருக்கிறார்கள்.(10) ஆசைகளிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடுடையவர்களும், கடுமை மற்றும் கோபம் என்ற பண்புகளைக் கொண்டவர்களும், துணிவுமிக்கவர்களும், பக்தி மற்றும் வழிபாட்டுக் கடமைகளில் கவனமில்லாதவர்களும், ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டவர்களுமான பிராமணர்களே க்ஷத்திரியர்களானார்கள்.(11) மேலும் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல், நற்பண்பு மற்றும் ஆசைப்பண்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், கால்நடை வளர்த்தல் மற்றும் உழவு என்ற தொழில்களை ஏற்று வைசியர்களானார்கள்.(12) பொய்மையில் விருப்பமுள்ளவர்களும், பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களும், பேராசை கொண்டவர்களும், வாழ்வதற்காக அனைத்து வகைச் செயல்களிலும் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத் தூய்மை தவறியவர்களும், இருளின் பண்பைக் கொண்டவர்களுமான பிராமணர்களே சூத்திரர்களானார்கள்.(13) இத்தொழில்களால் பிரிக்கப்பட்டவர்களும், தங்கள் வகையில் இருந்து வீழ்ந்தவர்களுமான பிராமணர்களே, மூன்று பிற வகையினரானார்கள். எனவே, பக்தி தொடர்புடைய கடமைகள் அனைத்தையும், வேள்விகளையும் செய்ய நான்கு வகையைச் சார்ந்த அனைவருக்கும் எப்போதும் உரிமையிருக்கிறது.(14) முதலில் சமமாகவே பிரம்மனால் படைக்கப்பட்டவர்களான இந்த நால்வகையைச் சேர்ந்த அனைவருக்கும், (வேதங்களில் உள்ள) பிரம்ம வார்த்தைகள் {அவற்றை அவர்கள் அனைவரும் பின்பற்ற} விதிக்கப்பட்டன. பலர் பேராசையால் மட்டுமே வீழ்ந்து, அறியாமை கொண்டவர்களானார்கள்.(15)

பிரம்மம் குறித்த சாத்திரங்களில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் எப்போதும் கவனம் கொண்டவர்களுமான பிராமணர்களே, பிரம்மம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வல்லர்களாக இருக்கிறார்கள்.(16) பிராமணர்களாக இல்லாதவர்கள், படைக்கப்பட்ட அனைத்தும் உயர்ந்த பிரம்மமே என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். வீழ்ந்தவர்களான இவர்கள், பல்வேறு (தாழ்ந்த) வகைகளின் உறுப்பினர்களாகின்றனர்.(17) அறிவொளியை இழந்து, கட்டுப்பாடற்ற ஒழுக்க நடைக்குப் பழகும் இவர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், பிரேதங்கள் மற்றும் பல்வேறு மிலேச்ச இனங்களில் பிறப்பை அடைகின்றனர்.(18) தொடக்கத்தில் (பிரம்மனின் மனோ விருப்பத்தால்) உயிருடன் எழுந்த பெரும் முனிவர்கள், தங்கள் தவங்களின் மூலமாக, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், அழிவற்ற வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளில் பற்றுடையவர்களுமான மனிதர்களை அடுத்தடுத்து உண்டாக்கினர்.(19) யோகத்தைப் புகலிடமாகக் கொண்டவனும், மனமே ஆனவனுமான ஆதி தேவனிலிருந்து {பிரம்மனில் இருந்து} எழுந்து, பிரம்மத்தையே அடிப்படையாகக் கொண்டு, அழிவற்ற, சிதைவற்ற மற்றொரு படைப்பும் இருக்கிறது[2]” என்றார் {பிருகு}.(20)

வர்ணக் குறியீடுகள்? – சாந்திபர்வம் பகுதி – 189-பிராமணர்களின் குறியீடுகளையும், பிரம்மத்துடன் கலப்பதற்கான தகுதிகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “ஒருவன் எந்தச் செயல்பாடுகளின் மூலம் ஒரு பிராமணனாகிறான்? எதனால் ஒரு க்ஷத்திரியனாகிறான்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, மேலும் என்ன செயல்பாடுகளின் மூலம் ஒருவன் வைசியானாகவும், சூத்திரனாகவும் ஆகிறான்? ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம், “ஜாதம் {ஜாதகர்ம} என்றழைக்கப்படும் சடங்குகள் மற்றும் அத்தகைய சடங்குகளால் புனிதமடைந்தவனும்; ஒழுக்கத்தில் தூய்மையானவனும்; வேத கல்வியில் ஈடுபடுபவனும்; நன்கு அறியப்பட்ட ஆறு செயல்களில் (காலையும், மாலையும் தூய்மைச் சடங்குகள் செய்தல்; மந்திரங்களை அமைதியாக ஓதுதல்; வேள்வி நெருப்பில் ஆகுதி ஊற்றுதல்; தெய்வங்களை வழிபடுதல், விருந்தோம்பல் கடமைகளின் படி விருந்தினர்கள் உபசரித்தல், விஸ்வதேவர்களுக்கு உணவளித்தல் ஆகிய ஆறு செயல்களில்) அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவனும்;(2) பக்திச் செயல்பாடுகள் அனைத்தையும் செய்பவனும்; தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் முறையாக உணவளிக்காமல் உண்ணாதவனும்; ஆசான் மீது பெரும் மதிப்பு கொண்டவனும்; நோன்புகள் மற்றும் வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(3) எவனிடம் வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு[1], தவம் ஆகியன உள்ளனவோ அவனே பிராமணனாக அழைக்கப்படுகிறான்.(4)போர்த்தொழிலில் ஈடுபடுபவனும், வேதம் கற்பவனும், (பிராமணர்களுக்குக்) கொடையளிப்பவனும், (தன்னால் பாதுகாக்கப்படுகிறவர்களிடம் இருந்து) செல்வத்தைப் பெறுபவனுமான ஒருவன் க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறான்.(5)

கால்நடை வளர்ப்பு, உழவுத் தொழில், செல்வம் ஈட்டுவதற்கான வழிமுறைகளின் {வணிகத்தின்} மூலம் புகழை ஈட்டுபவனும், ஒழுக்கத்தில் தூய்மை கொண்டவனும், வேத கல்வியில் ஈடுபடுபவனுமான ஒருவன் வைசியன் என்றழைக்கப்படுகிறான்[2].(6)அனைத்து வகை உணவை உண்பதில் இன்பங்கொள்கிறவனும், அனைத்து வகை வேலைகளிலும் ஈடுபடுபவனும், ஒழுக்கத்தில் மாசுள்ளவனும், வேதங்களைக் கல்லாதவனும், தூய்மையற்ற ஒழுக்கம் கொண்டவனுமான ஒருவன் சூத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) ஒரு சூத்திரனிடம் {வாய்மை உள்ளிட்ட} இந்தப் பண்பியல்புகள்[3] காணப்பட்டாலும், ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையென்றாலும், அத்தகைய சூத்திரன் சூத்திரனுமல்ல, அத்தகைய பிராமணன் பிராமணனுமல்ல[4].(8)பேராசையும், கோபமும் அனைத்துவகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவையும், தற்கட்டுப்பாடும் அறிவின் உயர்ந்த விளைவுகளாகும்.(9) அந்த ஆவல்கள் (பேராசை மற்றும் கோபம் ஆகிய) இரண்டையும் ஒருவன் முழு இதயத்துடன் தடுக்க வேண்டும். அவை ஒருவனுடைய உயர்ந்த நன்மையை அழிக்கவே தோன்றுகின்றன.(10) ஒருவன் தன் கோபத்திடம் இருந்து தன் செழிப்பையும், செருக்கிலிருந்து தவங்களையும், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் இருந்து அறிவையும், குற்றங்களில் இருந்து தன் ஆன்மாவையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,(11)

ஓ! மறுபிறப்பாளனே, எந்தப் புத்திசாலி கனியில் விருப்பமில்லாமல் அனைத்துச் செயல்களையும் செய்வானோ, எவனுடைய மொத்த செல்வமும் ஈகைக்காகவே இருக்கிறதோ, எவன் தினப்படியான ஹோமங்களைச் செய்வானோ அவனே உண்மையில் துறவியாவான் {தியாகியாவான்}. தீங்கிழைக்கும் செயல்கள் அனைத்தையும் தவிர்த்து உயிரினங்கள் அனைத்திற்கும் நண்பனாக ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்[5].(12) கொடைகள் யாவற்றையும் ஏற்காத ஒருவன், தன் நுண்ணறிவின் மூலம், தன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாக இருக்க வேண்டும். எந்தத் துன்பமும் இல்லாத தன் ஆன்மாவிலேயே அவன் வாழ வேண்டும். அப்போது அவன் இம்மையிலும் எந்த அச்சமும் கொள்ள மாட்டான், மறுமையிலும் அச்சமற்ற உலகத்தை அடைவான்.(13) ஒருவன், தவங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக, ஆசைகள் அனைத்தையும் முற்றாகத் தவிர்ப்பவனாக, எண்ணங்களை வெளியிடாத நோன்பை நோற்பவனாக, தன்னில் குவிந்த ஆன்மாவுடன் கூடியவனாக, வெல்லமுடியா புலன்களை வெல்ல விரும்புபவனாக, பற்றுகளுக்கு மத்தியில் பற்றற்றவனாக எப்போதும் வாழ வேண்டும்.(14)புலன்களுக்குப் புலப்படும் பொருட்கள் அனைத்தும் வெளிப்பாடு {வியக்தம்} என்றழைக்கப்படுகிறது. எனினும், புலன்களுக்கு எட்டாமல், வெளிப்பாடற்றதாக {அவியக்தமாக} இருப்பவையும், நுண்ணியப் புலனுணர்வால் மட்டுமே உறுதி செய்து கொள்ளக்கூடியவையுமான அனைத்தையும் அவன் அறிய முயல வேண்டும்[6].(15) நம்பிக்கையேதும் இல்லையென்றால், ஒருவனால் அந்த நுண்ணுணர்வை அடைய முடியாது. எனவே, அவன் நம்பிக்கையுடனே இருக்க வேண்டும். மனம் பிராணனிலும், பிராணன், பிரம்மத்திலும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.(16) பற்றுகள் அனைத்திலிருந்தும் தொடர்பறுத்துக் கொள்ளும் ஒருவனே பிரம்மத்துடன் கலக்கலாம். வேறு எதையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. துறவுப் பாதையில் ஒரு பிராமணனால் எளிதாகப் பிரம்மத்தை அடைய முடியும்.(17) தூய்மை, நல்லொழுக்கம், அனைத்துயிரினங்களிடமும் கருணை ஆகியவையே ஒரு பிராமணனின் குறியீடுகளாகும்” என்றார் {பிருகு}.(18)

பூமியே மூதன்னை! – சாந்திபர்வம் பகுதி – 190-உண்மை சொர்க்கத்திற்கும், பொய் நரகத்திற்கும் இட்டுச் செல்லும்; பொய்யாலுண்டாகும் துன்பங்கள்; இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றைப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..

பிருகு {பரத்வாஜரிடம்}, “உண்மையே பிரம்மம்; உண்மையே அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குகிறது. உண்மையின் மூலமே இந்த மொத்த அண்டமும் தாங்கப்படுகிறது; உண்மையின் துணை கொண்டே ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(1) பொய்மையானது இருளின் மற்றொரு வடிவமாக மட்டுமே இருக்கிறது. இருள் கீழ்நோக்கியே வழிகாட்டும். இருளால் பாதிப்படைந்தோரும், அதனால் மறைக்கப்பட்டோரும், சொர்க்கத்தின் ஒளிமிக்க உலகங்களைக் காணத் தவறுகின்றனர்.(2) சொர்க்கம் ஒளி என்றும், நரகம் இருள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அண்டத்தில் வசிக்கும் உயிரினங்கள் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் அடையலாம்.(3) இவ்வுலகிலும், உண்மையும் பொய்மையும், அறம் மற்றும் மறம், ஒளி மற்றும் இருள், இன்பம் மற்றும் துன்பம் என்பவைபோன்ற முரண்பட்ட வழிமுறைகளுக்கும், முரண்பட்ட குறியீடுகளுக்கும் வழிவகுக்கும்.(4) இவற்றில் எது உண்மையோ அஃது அறமாகும்; எஃது அறமோ அஃது ஒளியாகும்; எது ஒளியோ அஃது இன்பமாகும். அதேபோலவே, எது பொய்மையோ அது மறமாகும்; எது மறமோ அஃது இருளாகும்; எது இருளோ அது துன்பம் அல்லது துயரமாகும்.(5)

ஞானம் கொண்டோர், இவ்வுலக வாழ்வானது உடல் மற்றும் மனம் சார்ந்த கவலையிலும், நிச்சயம் துன்பத்தில் முடியக்கூடிய இன்பத்திலும் மூழ்கியிருப்பதைக் கண்டு, ஒருபோதும் திகைப்படையாதவர்களாக இருக்கிறார்கள்.(6) எவன் ஞானியோ அவன் கவலையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முனைவான். உயிரினங்களின் மகிழ்ச்சியானது, இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் நிலையற்றதாகும்[1].(7) இருளில் மூழ்கியிருக்கும் உயிரினங்களின் மகிழ்ச்சியானது, ராகுவால் பீடிக்கப்படும் சந்திரனின் காந்தியைப் போல மறைந்து போகிறது[2].(8) உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என்று இன்பம் இரு வகையாகச் சொல்லப்படுகிறது. இம்மையிலும், மறுமையிலும், புலப்படக்கூடியவையும், புலப்படாதவையுமான (செயல்களின்) கனிகள் இன்பத்தின் நிமித்தமாகவே (வேதங்களில்) குறிப்பிடப்படுகின்றன[3]. முத்தொகையின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின்} கனிகள், அல்லது விளைவுகளில், இன்பத்தைவிட முக்கியமானது வேறேதும் இல்லை. மகிழ்ச்சியே விரும்பத்தக்கது. அதுவே ஆன்மாவின் பண்பாகும். அறமும், பொருளும் அதற்காகவே நாடப்படுகின்றன. அறமே அதன் வேராகும். உண்மையில், இதுவே அதன் தோற்றுவாயாகும். அனைத்து செயல்களும் மகிழ்ச்சியை அடைவதையே முடிவான இலக்காகக் கொண்டிருக்கின்றன” என்றார் {பிருகு}.(9)பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “இன்பமே உயர்ந்த பொருள் என்று நீர் சொல்கிறீர். என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. (நீர் சொல்வது போல) இவ்வளவு விரும்பத்தக்கதாக உள்ள ஆத்மாவின் இந்தப் பண்பை அடைய முனையாமல் முனிவர்கள் வேறு ஏதோ உயர்ந்த வெகுமதியை அடைவதில் ஈடுபடுகிறார்கள். மூவுலகங்களின் படைப்பாளனான பலமிக்கப் பிரம்மன், பிரம்மச்சரிய நோன்பை நோற்றுத் தனியாக வாழ்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறோம். இன்பத்தை நிறைவு செய்வதன் மூலம் அடையப்படும் மகிழ்ச்சியில் அவன் ஒருபோதும் பற்றுடன் இல்லை. மேலும், அண்டத்தின் தெய்வீகத் தலைவனான உமையின் தலைவன் {சிவன்}, (இன்பத்திற்கான தேவனான) காமனை இல்லாமல் செய்தான். இதன் காரணமாக, உயர் ஆன்ம மக்கள் இன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்று நாம் சொல்கிறோம். மேலும் அஃது ஆன்மாவின் உயர்ந்த பண்பாகத் தெரியவில்லை. இன்பத்தைவிட வேறேதும் உயர்ந்ததில்லை என்று தெய்வீகமான நீர் {தேவரீர்} சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளாக, நற்செயல்களில் இருந்து இன்பமும், பாவச்செயல்களில் இருந்து துன்பமும் இரண்டு வகைகளில் எழுகின்றன என்று சொல்லப்படுவது வெற்றுமொழியாக மட்டுமே இவ்வுலகில் இருக்கிறது” என்றார் {பரத்வாஜர்}[4].(10)பிருகு {பரத்வாஜரிடம்}, “இது பின்வருமாறு சொல்லப்படுகிறது: பொய்மை இருளில் {அறியாமையில்} இருந்து எழுகிறது. இருளில் {அறியாமையில்} மூழ்கியிருப்போர் அறத்தையல்லாமல் {தர்மத்தையல்லாமல்}, மறத்தை {அதர்மத்தை} மட்டுமே பின்தொடர்ந்து, கோபம், பேராசை, வன்மம், பொய்மை, மற்றும் இவை போன்ற வேறு தீமைகளுக்கும் வசப்பட்டவர்களாகிறார்கள். அவர்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. மறுபுறம், பல்வேறு வகை நோய், துன்பம் மற்றும் தொல்லைகளில் அகப்படுகின்றனர். மரணம், சிறை மற்றும் இவ்வகைத் துன்பங்கள் பிறவற்றாலும், பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் உண்டாகும் கவலைகளாலும் அவர்கள் வதைக்கப்படுகின்றனர். மழை, காற்று, எரியும் வெப்பம், மிகைப்பட்ட குளிர் ஆகியவற்றில் இருந்து எழும் எண்ணற்ற உடல் துன்பங்களையும் அவர்கள் அடைகிறார்கள். செல்வ இழப்பு, நண்பர்களிடம் இருந்து பிரிவு, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால் உண்டாகும் எண்ணற்ற மனத் துன்பங்களிலும் மூழ்குகிறார்கள்.(11)

பல்வேறு வகை உடல் மற்றும் மனத் துன்பங்களால் தீண்டப்படாதவர்களே இன்பத்தை அறிவார்கள்.(12) இந்தத் தீமைகள் ஒருபோதும் சொர்க்கத்தில் காணப்படுவதில்லை. அங்கே இனிய தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. அங்கே சொர்க்கத்தில் இடையறாத நறுமணமும் வீசிக்கொண்டிருக்கிறது. சொர்க்கத்தில் பசியோ, தாகமோ, முதுமையோ, பாவமோ கிடையாது.(13) சொர்க்கத்தில் இடையறாத இன்பம் இருக்கிறது. இவ்வுலகில் {இம்மையில்} இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. நரகத்திலோ துன்பம் மட்டுமே இருக்கிறது. எனவே, இன்பமே அடையத்தக்க பொருளில் உயர்ந்ததாகும்.(14) இந்தப் பூமியே {பூமாதேவியே} அனைத்து உயிரினங்களின் மூதன்னையாக இருக்கிறாள். பெண்கள் அவளது இயல்பையே பெற்றிருக்கின்றனர். ஆண்விலங்கானது, பிரஜாபதியைப் போன்றதாகும். உயிர்வித்தானது, படைக்கும் சக்தி என அறியப்பட வேண்டும்.(15) இவ்வழியிலேயே படைப்பு நேர வேண்டுமெனப் பழங்காலத்தில் பிரம்மனால் விதிக்கப்பட்டது. தன் செயல்களால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும், இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள்” என்றார் {பிருகு}[5].(16)

ஆசிரமதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 191-தானம், அறம், ஒழுக்கம் முதலியவற்றின் பயன்களையும், நான்கு ஆசிரமங்களுக்கு உரிய கடமைகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…

பரத்வாஜர் {பிருகுவிடம்}, “கொடையின் {தானத்தின்} விளைவும், அறம், ஒழுக்கம், நன்கு பயிலப்படும் தவம், வேத கல்வி மற்றும் வேதம் ஓதல், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல் ஆகியவற்றின் விளைவுகளும் {பயன்களும்} என்னென்ன?” என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம்}, “புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதன் {ஹோமத்தின்} மூலம், பாவம் எரிக்கப்படுகிறது. வேத கல்வியின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த அமைதி மனத்தை அடைகிறான். கொடையின் மூலம் ஒருவன் இன்பங்களையும், இன்பநுகர் பொருட்களையும் அடைகிறான். தவங்களின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்.(2) மறுமைக்கானது, இம்மைக்கானது என இருவகைக் கொடைகள் சொல்லப்படுகின்றன. நன்மைக்காகக் கொடுக்கப்படும் எதுவும் கொடையாளியின் மறுமையைக் கவனித்துக் கொள்கின்றன.(3) நன்மையற்றவைக்குக் கொடுக்கப்படும் எதுவும் இம்மையில் இன்புறுவதற்கான விளைவுகளை உண்டாக்குகின்றன. கொடைகளின் விளைவுகள் அந்தக் கொடைகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன” என்றார் {பிருகு}.(4)

பரத்வாஜர் {பிருகுவிடம்}, “எவனால் எந்தக் கடமைகள் செய்யப்பட வேண்டும்? கடமையின் {தர்மத்தின்} பண்பியல்புகள் என்னென்ன? கடமைகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன? இவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றார்[1].(5)பிருகு {பரத்வாஜரிடம்}, “எந்த ஞானிகள் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைச் செய்வதில் ஈடுபடுவார்களோ, அவர்கள் சொர்க்கத்தையே தங்கள் வெகுமதியாக அடைகிறார்கள். வேறு வகையில் செய்யும் மக்கள் மூடக்குற்றம் செய்தவர்களாகிறார்கள்” என்றார்.(6)

பரத்வாஜர் {பிருகுவிடம்}, “முன்பு பிரம்மனால் விதிக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, அவை ஒவ்வொன்றின் நடைமுறைகளையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(7)

பிருகு {பரத்வாஜரிடம்}, “பழங்காலத்தில், தெய்வீகப் பிரம்மன், உலகின் நன்மைக்காகவும், அறத்தைப் பாதுகாப்பதற்காகவும் நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சட்டிக்காட்டினார். (கால வரிசையின் அடிப்படையில்) அவற்றில், ஆசானின் வசிப்பிடத்தில் வசிப்பது முதலாகக் குறிப்பிடப்படுகிறது. எவன் இந்த {பிரம்மச்சரிய} வாழ்வுமுறையில் இருக்கிறானோ, அவன் ஒழுக்கத்தூய்மை, வேத சடங்குகள், நலந்தரும் கட்டுப்பாடுகள், நோன்புகள், பணிவு ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை மற்றும் மாலை சந்திகளையும், சூரியனையும், தன் புனித நெருப்பையும், தெய்வங்களையும் அவன் வழிபட வேண்டும். தாமதம் மற்றும் சோம்பலை அவனைக் கைவிட வேண்டும். அவன் தன் ஆசானை வணங்குவது, வேத கல்வி, ஆசானின் போதனைகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் (காலை, நடுப்பகல், மாலை என) மூன்று வேளை தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(8) அவன் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும். தன் புனித நெருப்பைக் கவனிக்க வேண்டும். தன் ஆசானுக்குக் கடமை உணர்வுடன் தொண்டு செய்ய வேண்டும். (தன்னை ஆதரித்தக்கொள்ள) தினமும் பிச்சையெடுக்கச் செல்ல வேண்டும். ஆசான் சொல்லும் எந்தக் கட்டளையையும் விருப்பத்துடன் நிறைவேற்றி, தன் நன்மைக்காக ஆசானால் போதிக்கப்படும் வேத கல்வியைப் பெறத் தயாராக இருக்க வேண்டும்[2]. இது குறித்து ஒரு சுலோகம் இருக்கிறது {அது பின்வருமாறு}: தன் ஆசானை மதிப்புடன் கவனித்துக் கொள்வதன் மூலம் தன் வேதத்தை அடையும் பிராமணன், சொர்க்கத்தை அடைவதில் வென்று, தன் ஆசைக் கனிகள் அனைத்தையும் அடைவான்.(9)காலவரிசையின் படி) இரண்டாவதாக அழைக்கப்படுவது இல்லற வாழ்வுமுறையாகும் {கார்ஹஸ்த்ய ஆச்ரமம்}. அந்த வாழ்வுமுறையின் செயல்பாடுகள் மற்றும் குறியீடுகள் ஆகிய அனைத்தையும் நாம் உனக்குச் சொல்வோம். ஆசானிடம் வாசத்தை நிறைவு செய்து வீடு திரும்பியவர்கள், பக்தியொழுக்கம் கொண்டவர்கள், தங்கள் துணைவியரின் தோழமையோடு அறம் சார்ந்த ஒழுக்கத்தின் கனிகளை விரும்புவோர் இந்த வாழ்வுமுறையைத் தங்களுக்கெனக் கொள்கிறார்கள். அதில் அறம், செல்வம் {பொருள்}, இன்பம் ஆகிய அனைத்தையும் அடையலாம். (இவ்வாறே) அது {இல்லறம்} முத்தொகை {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} வளர்க்கத் தகுந்ததாக இருக்கிறது. வேதங்களை ஓதுவதன் மூலம் அடையப்படும் உயர்ந்த பயனுடன் கூடிய செல்வத்தின் மூலம், அல்லது மறுபிறப்பாள முனிவர்கள் வாழ்வதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மூலம், அல்லது மலைகள் மற்றும் சுரங்கங்களில் விளைவதன் மூலம், அல்லது வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் நோன்புகள் மற்றும் பிற சடங்குகளில், முடிவில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் தெய்வகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளின் மூலம் ஓர் இல்லறத்தான் குற்றமற்ற செயல்பாடுகளின் மூலம் செல்வத்தை அடைந்து, தன் வாழ்வுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வாழ்வுமுறையே {இல்லறமே} பிற வாழ்வுமுறைகள் அனைத்திற்குமான வேராகக் கருதப்படுகிறது. ஆசான்களின் வசிப்பிடங்களில் வசித்து, பிச்சையெத்து வாழ்வோரும், நோன்புகள் அல்லது உறுதியேற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளின் படி வாழ்வோரும், இந்த வாழ்வுமுறையில் வாழ்வோரிடமிருந்தே தங்கள் வாழ்வாதாரத்தை அடைய முடியும். அவர்கள் பித்ருக்களுக்கு அளிக்கும் காணிக்கைகள் மற்றும் தெய்வங்களுக்கு அளிக்கும் காணிக்கைகளின் மூலமே அவர்கள் தங்களை முழுமையாக ஆதரித்துக் கொள்ள முடியும்.(10)

மூன்றாவது வாழ்வுமுறையானது காட்டு வாழ்வு {வானப்ரஸ்தம்} என்றழைக்கப்படுகிறது. இந்த வாழ்வுமுறையை நோற்பவர்கள் செல்வத்தையோ, பொருட்களையோ சேர்த்துவைப்பதில்லை[3]. பொதுவாக, பக்திமிக்கவர்களும், நல்லவர்களுமான இம்மனிதர்கள், சிறந்த உணவை உண்டு, வேத கல்வியில் ஈடுபட்டு, பூமியில் உள்ள தீர்த்தங்களிலும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளிலும் திரிந்து கொண்டிருப்பார்கள். எழுந்து நிற்பது, முன் சென்று வரவேற்பது, நேர்மையுடன் இனிய பேச்சுகளைப் பேசுவது, கொடுப்பவரின் தகுதிக்கேற்ற அளவில் கொடைகள் அளிப்பது, இருக்கைகளை அளிப்பது, சிறந்த வகைப் படுக்கைகளை அளிப்பது, சிறந்த வகை உணவுகளை அளிப்பது ஆகியவை அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய சில வழிமுறைகளாகும்[4].(11) இது குறித்து ஒரு ஸ்லோகம் இருக்கிறது: ஒரு விருந்தினர் நிறைவடையாத எதிர்பார்ப்புடன் ஒருவீட்டில் இருந்து சென்றால், அந்த வீட்டு உரிமையாளனின் தகுதிகளைத் தான் எடுத்துக் கொண்டு, தனது பாவங்களை அவனுக்கு விட்டுச் செல்கிறான் என்று கருதப்படுகிறது.(12)மேலும், இல்லறவாழ்வில் வேள்விகள் மூலமும், பிற அறச் சடங்குகளின் மூலமும் தேவர்கள் நிறைவுசெய்யப்படுகிறார்கள்; ஈமச் சடங்குகளின் மூலம் பித்ருக்களையும், (வேத) அறிவை வளர்ப்பதாலும், ஆசான்களின் போதனைகளைக் கேட்பதாலும், சாத்திரங்களை நினைவுகூர்வதாலும் முனிவர்களையும், இறுதியாகப் பிள்ளைகளைப் பெறுவதால் படைப்பாளனையும் நிறைவு செய்கிறார்கள்[5].(13) இக்காரியத்தில் இரண்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன: இந்த வாழ்வுமுறையில் இருப்பவன், அனைத்து உயிரினங்களிடமும், பற்று நிறைந்த, காதுக்கு இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும். துன்பத்தை அளிப்பதும், அவமதிப்பதும், கடும் வார்த்தைகளைச் சொல்வதும் நிந்திக்கத்தக்கனவாகும்.(14) அவமதிப்பு, ஆணவம், வஞ்சனை ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்சை}, வாய்மை, கோபமின்மை ஆகியன (நான்கு) வாழ்வுமுறைகளில் வாழ்பவர்களுக்கும் தவங்களுக்குரிய தகுதியை உண்டாக்கும்.(15)மலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமண எண்ணெய்கள், களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, கருவி மற்றும் குரலிசை மற்றும் ஆடல்களின் மூலம் அடையப்படும் இன்பம்; கண்ணுக்கினிய காட்சிகளைக் காண்பது முக்கிய வகை உணவுப் பொருட்களைச் சேர்ந்த பல்வேறு வகைகளைச் சார்ந்தவையும், விழுங்கத்தக்கவை, பருகத்தக்கவை, உறிஞ்சத்தக்கவை ஆகிய உணவுகளையும் பானங்களையும் அனுபவிப்பது, விளையாட்டுகளின் மூலம் இன்பமடைவது; அனைத்து வகைக் கேளிக்கைகள் மற்றும் இன்ப நிகழ்ச்சிகளும் இல்லறவாழ்வில் அனுமதிக்கப்படுகின்றன.(16)

(அறம், பொருள், இன்பம் என்ற) முத்தொகையை அடைய முனையும் வாழ்வுமுறையை நோற்கும் மனிதன், நல்லுணர்வு {சத்வ}, ஆசை {ரஜோ}, இருள் {தமோ} ஆகிய மூன்று பண்புகளின் {குணங்களின்} பெருங்கதியை[6] அடைந்து, இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து இறுதியில் அறவோர் மற்றும் நல்லோருக்காக ஒதுக்கப்படும் கதியை அடைகிறான்.(17) தன் வாழ்வுமுறைக்கு ஏற்ற கடமைகளைச் செய்வதன் மூலம், வயல் பிளவுகளில் விழுந்து கிடக்கும் தானியங்களைத் திரட்டி உண்பவனும், புலன் இன்பத்தைக் கைவிடுபவனும், செயல்பாட்டில் பற்றில்லாதவனுமாக இருக்கும் இல்லறத்தான், சொர்க்கத்தை அடைவதைக் கடினமானதாகக் காண மாட்டான்” என்றார் {பிருகு}[7].(18)

இம்மையும் மறுமையும்! – சாந்திபர்வம் பகுதி – 192-வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாச ஆசிரமங்களுக்குரிய குறியீடுகளையும், இமயத்திற்கு வடக்கே சொர்க்கத்திற்கு இணையான ஒரு பகுதியைப் பற்றிய குறிப்பையும் பரத்வாஜருக்குச் சொன்ன பிருகு…

பரத்வாஜர் {பிருகுவிடம்}, “காட்டுத் துறவிகள் {வானப்ரஸ்தர்கள்}, அறமீட்ட முனைந்து புனிதநீர்நிலைகளுக்கும், ஆறுகளுக்கும், நீரோடைகளுக்கும் பயணம் செய்து, மான்களும், எருமைகளும், பன்றிகளும், புலிகளும், காட்டு யானைகளும் நிறைந்திருக்கும் காடுகளில் தனியாகத் தவம் செய்வார்கள். அவர்கள் சமூகத்தில் வாழும் மக்கள் சுவைக்கும் அனைத்து வகை ஆடைகள், உணவுகள் ஆகியவற்றைக் கைவிடுவார்கள். அவர்கள் பல்வேறு வகைகளிலான காட்டு மூலிகைகள் {கீரைகள்}, கனிகள், கிழங்குகள், இலைகள் ஆகியவற்றைக் குறைவான அளவில் உண்டு வாழ்வார்கள். வெறுந்தரையே அவர்களது இருக்கையாக இருக்கும். அவர்கள் வெற்று பூமியிலோ, பாறைகளிலோ, கூழாங்கற்களிலோ, சரளைக் கற்களிலோ, மணலிலோ, சாம்பலிலோ படுத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் அங்கங்களைப் புற்களாலும், விலங்கு தோல்களாலும், மரவுரிகளாலும் மறைத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் தலைமுடிகளையும், தாடிகளையும் சிரைப்பதோ, தங்கள் நகங்களைக் கழிப்பதோ கிடையாது. அவர்கள் தங்கள் தூய்மைச் சடங்குகளை முறையான இடைவெளிகளில் செய்வார்கள்.

அவர்கள் முறையான நேரங்களில் தவறாமல் ஆகுதிகளைத் தரையிலும், புனித நெருப்பிலும் ஊற்றுகிறார்கள். (தங்கள் ஹோமங்களுக்குத் தேவையான) புனித விறகு, (வேள்விக்கும், வழிபாட்டுக்கும் தேவையான) புனித புற்கள், மலர்கள் ஆகியவற்றைச் சேகரிக்காத வரையிலும், (தங்கள் வேள்விப் பீடங்களை) பெருக்கி, தூய்மைப்படுத்தாத வரையிலும் அவர்கள் ஓய்வெடுக்கமாட்டார்கள். தங்கள் மேனியெங்கும் புண்ணானாலும், தங்கள் சதை, குருதி, தோல் மற்றும் எலும்புகள் மெலிந்தாலும், குளிர், வெப்பம், மழை, காற்று ஆகியவற்றைக் கிஞ்சிற்றும் கருதிப்பாராமல், பல்வேறு வகைச் சடங்குகள், தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைச் செய்வார்கள்[1]. பெரும் பொறுமையும், மனோவுறுதியும் கொண்ட அவர்கள், நல்லுணர்வின் பண்பையே {சத்வ குணத்தையே} எப்போதும் பயில்வார்கள்.(1) {இந்த வானப்ரஸ்தாச்ரமத்தைப் பற்றி ஒரு ஸ்லோகமிருக்கிறது. அதன் பொருளாவது} எந்த மனிதன், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகளைக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் செய்கிறானோ, அவன் நெருப்பைப் போலத் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்து, அடைவதற்கரிதான இன்ப உலகங்களை அடைகிறான்.(2)நான் இப்போது பரிவ்ராஜகர்கள் {துறவிகள் / சந்நியாசிகள்} என்றழைக்கப்படுபவர்களின் ஒழுக்கத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அது பின்வருமாறு: அவர்கள், புனித நெருப்பு, செல்வம், மனைவி, பிள்ளைகள், ஆடைகள், இருக்கைகள், படுக்கைகள் போன்ற இன்ப நுகர் பொருட்களின் பற்றில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, பற்றின் கட்டுகளை அறுத்துக் கொண்டு, மண்ணாங்கட்டியையோ, பாறையையோ, தங்கத்தையோ சம கண்களுடன் கருதித் திரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் முத்தொகையை அடையவதிலோ, அனுபவிப்பதிலோ தங்கள் இதயங்களை ஒருபோதும் நிலைக்கச் செய்யக் கூடாது. எதிரிகள், நண்பர்கள், நடுநிலையாளர்கள், அந்நியர்கள் ஆகியோரைச் சமக் கண்களுடன் பார்க்க வேண்டும். அசையாத பொருட்கள் {மரங்கள்} அல்லது பாலூட்டிகள், முட்டையிடும் இனங்கள், கழிவுப்பொருட்களில் பிறப்பவை ஆகிய உயிரினங்கள், அல்லது காய்கறிகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு, எண்ணம், சொல், அல்லது செயலில் ஒருபோதும் தீங்கிழைக்கமாட்டார்கள்[2].அவர்களுக்கு வீடுகள் கிடையாது. அவர்கள் குன்றுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், மரநிழல்களிலும், தெய்வங்களில் கோவில்களில் திரிந்து கொண்டிருப்பார்கள். வசிப்பதற்காக அவர்கள் நகரங்களுக்கோ, கிராமங்களுக்கோ செல்லலாம். எனினும், ஒரு நகரத்தில் அவர்கள் ஐந்து இரவுகளுக்கு மேல் வாழக்கூடாது. அதே போல ஒரு கிராமத்தில் அவர்கள் ஓரிரவுக்கு மேல் வசிக்கக்கூடாது. ஒரு நகரத்திற்குள்ளோ, கிராமத்திற்குள்ளோ நுழையும் அவர்கள், தயாளச் செயல்களைச் செய்யும் பிராமணர்களின் வசிப்பிடங்களுக்கு மட்டுமே சென்று தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தாங்கள் சுமந்து செல்லும் (மரக்) கிண்ணத்தில் விழுவதைத் தான் பிச்சையாக ஏற்க வேண்டுமேயன்றி, தவிர  ஒருபோதும் பிச்சையேதும் கேட்கக்கூடாது. காமம், கோபம், செருக்கு, பேராசை, மாயை, கஞ்சத்தனம், வஞ்சனை, அவதூறு, பகட்டு, உயிரினங்களுக்குத் தீங்கிழைத்தல் ஆகியவற்றில் இருந்து அவர்க்ள விடுபட வேண்டும்[3].(3) இதுகுறித்துச் சில ஸ்லோகங்கள் இருக்கின்றன: எந்த மனிதன் தன் எண்ணங்களை வெளியிடாமை என்ற நோன்பை நோற்று, எந்த உயிரினத்தையும் அச்சுறுத்தாமல் உலவி வருகிறானோ, அவனுக்கு எந்த உயிரினத்திடம் இருந்து அச்சமேதும் எழாது.(4) (வெளிப்புற நெருப்பைக் கிண்டாமல்), தன் உடலுக்குள் உள்ள நெருப்பின் மீது தன் வாய்வழியாக ஆகுதிகளை ஊற்றி தன் உடலுக்குள் உள்ள நெருப்பின் துணையுடன் அக்னிஹோத்ரம் செய்யும் கல்விமான், ஈகைசார்ந்த வாழ்வின் மூலம் அடையப்படும் இத்தகைய ஆகுதிகளை அந்நெருப்பில் ஊட்டுவதன் விளைவாக எண்ணற்ற இன்ப உலகங்களை அடைகிறான்.(5) மேற்சொன்னது போல விடுதலையையே {முக்தியையே} முடிவாகக் கொண்ட வாழ்வு முறையை நோற்கும் மறுபிறப்பாளன், தூய இதயத்துடனும், மனவுறுதியில் இருந்து விடுபட்ட அறிவுடனும், எந்தச் சுடர்மிக்க எரிபொருளாலும் ஊட்டப்படாத அமைதியான ஒளிக்கீற்றைப் போலப் பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {பிருகு}.(6)பரத்வாஜர் {பிருகுவிடம்}, “(நாம் வசிக்கும்) இந்த உலகத்துக்கு அப்பால், ஓர் உலகம் இருப்பதாகக் கேள்விப்படுகிறோமேயன்றி ஒருபோதும் பார்த்ததில்லை. அது குறித்த அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன். அஃதை எனக்கு விளக்குவதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(7)

பிருகு {பரத்வாஜரிடம்}, “வடக்கு நோக்கிச் சென்றால், இமயத்திற்கு மறுபக்கத்தில் புனிதமானதும், அருள் நிறைந்ததும், மிகவும் விரும்பத்தக்கதுமான ஒரு பகுதி இருக்கிறது. அது வேறு உலகம் என்றழைக்கப்படுகிறது[4].(8) அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், செயல்களில் அறம் மற்றும் பக்தி சார்ந்தவர்களாக, தூய இதயங்களைக் கொண்டவர்களாக, பேராசை மற்றும் தீர்மானப்பிழைகளில் இருந்து விடுபட்டவர்களாக, எவ்வகைத் துன்பங்களுக்கும் ஆளாதாவர்களாக இருக்கிறார்கள்.(9) இத்தகைய பண்புகளைக் கொண்ட அந்தப் பகுதி உண்மையில் சொர்க்கத்திற்கு இணையானதாகவே இருக்கிறது. அங்கே மரணம் உரிய காலத்தில் மட்டுமே நேர்கிறது. அங்கே வசிப்பவர்களை நோய்கள் ஒருபோதும் தீண்டுவதில்லை[5].(10) பிறன் மனைவியர் மீது ஒருவனும் எந்த ஆசையும் வளர்த்துக் கொள்வதில்லை. அனைவரும் தங்கள் தங்கள் மனைவியிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இம்மக்கள் ஒருவரையொருவர் துன்புறுத்தாமலும், கொல்லாமலும், பிறரின் பொருளில் ஆசை கொள்ளாமலும் இருக்கின்றனர். அங்கே எந்தப் பாவமும் நேர்வதில்லை, எந்த ஐயங்களும் எழுவதில்லை[6].(11) அங்கே (அறச்) செயல்கள் அனைத்தின் கனிகளும் புலப்படுவதாக இருக்கின்றன. அங்கே சிலர், இருக்கைகளிலும், சிறந்த வகைப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களிலும் இன்பங்கொள்பவர்களாக, அரண்மனைகள் மற்றும் மாளிகைகளுக்குள் வாழ்கிறார்கள்.(12) சிலர், தங்க ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, சுற்றிலும் இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்கள் சூழ இருக்கிறார்கள். மேலும், சிலர் தங்கள் உடலையும் ஆன்மாவையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் மிகச் சொற்பமாகவே உண்கிறார்கள்.(13) அங்கே சிலர், பெரும் உழைப்புடன் தங்கள் உயிர் மூச்சைப் பிடித்துக் கொள்ள முனைகிறார்கள்[7].இங்கே (நாம் வசிக்கும் இந்தப் பகுதியில்) சில மனிதர்கள் அறத்திற்கும், சிலர் வஞ்சகத்துக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். சிலர் இன்பத்துடனும், சிலர் துன்பத்துடனும் இருக்கிறார்கள். சிலர் ஏழைகளாகவும், சிலர் செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள்.(14) இங்கே உழைப்பு, அச்சம், மாயை, வலிமிக்கப் பசி ஆகியன தோன்றுகின்றன. இங்கே செல்வத்திற்கான பேராசையும், கல்விமான்களையே மலைக்கச் செய்யும் ஆசையும் காணப்படுகிறது.(15) இங்கே நற்செயல்கள், அல்லது பாவச்செயல்கள் செய்வோரால் அளிக்கப்படும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றனஇருவகையாகப் பிரிந்திருக்கும் இந்தக் கருத்துகள் அனைத்தையும் அறிந்த ஞானி, ஒருபோதும் பாவத்தால் கறைபடியமாட்டான்.(16) ஏமாற்றத்துடன் கூடிய வஞ்சகம், களவு, அவதூறு, வன்மம், ஒடுக்குதல், தீங்கிழைத்தல், நம்பிக்கைக்குப்புறம்பாக நடத்தல், பொய்மை,(17) ஆகியவை தவங்களைச் செய்வோரின் தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கலைக்கின்றன. மறுபுறம் கல்விமானானவன், அவற்றைத் தவிர்த்து, தன் தவத்தகுதிகளை அதிகரித்துக் கொள்கிறான்.(18) இங்கே அறம் மற்றும் மறச் செயல்கள் குறித்த பல்வேறு சிந்தனைகள் இருக்கின்றன. நாம் வசிக்கும் இந்தப் பகுதி செயற்களமாகும். இங்கே நன்மையும், தீமையும் செய்யும் ஒருவன், தன் நற்செயல்களுக்காக நன்மையையும், தீச்செயல்களுக்காகத் தீமையையும் அடைகிறான்[8].(19)பழங்காலத்தில் இங்கே, முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும், படைப்பாளனும் {பிரம்மனும்} உரிய தவங்களைச் செய்து தூய்மையடைந்து பிரம்மத்தை அடைந்தனர்[9].(20) பூமியின் வட பகுதியானது மிக மங்கலமானதாகவும், புனிதமானதாகவும் இருக்கிறது. அறச்செயல்களைச் செய்பவர்களே (நாம் வசிக்கும்) இந்தப் பகுதியை உடையவர்களாக இருக்கிறார்கள், அல்லது யோகத்திற்கு மதிப்பளிப்பவர்களே இந்தப் பகுதியில் பிறக்கிறார்கள். (பல்வேறு மனநிலைகளைக் கொண்ட) பிறர் நடுத்தர இனங்களில் பிறக்கிறார்கள். மேலும் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலம் முடிந்ததும், இந்தப் பூமியிலேயே தொலைந்து போகிறார்கள்[10].(21,22) ஒருவொரையொருவர் உண்பதில் ஈடுபட்டு, பேராசை மற்றும் மாயையால் கறைபடிந்த இம்மனிதர்கள், (இறந்த பிறகு) வட பகுதிக்குச் செல்ல முடியாமல் இந்தப் பகுதிக்கே திரும்பி வருகிறார்கள்.(23) ஆசான்களின் போதனைகளை மதிப்புடன் கேட்பவர்களும், பிரம்மச்சரியத்தை நோற்பவர்களும், நோன்புகளைக் கொண்டவர்களுமான ஞானிகள், மனித வர்க்கங்கள் அனைத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள கதிகளை அறிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(24) பிரம்மனால் விதிக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகளை நான் இப்போது சுருக்கமாக உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், இவ்வுலகில் எது அறம், எது மறம் என்பதை அறிந்த ஒருவனே நுண்ணறிவு கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்” என்றார் {பிருகு}”.(25)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறே பிருகு, பெரும் சக்தி கொண்ட பரத்வாஜரிடம் பேசினார். உயரறம் சார்ந்த ஆன்மாவுடன் கூடிய பின்னவர் {பரத்வாஜர்}, ஆச்சரியத்தால் நிறைந்து, அந்தப் பெரும் முனிவரை {பிருகுவை} மதிப்புடன் வழிபட்டார்.(26) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே அண்டத்தின் தோற்றம் குறித்து உனக்கு விரிவாக உரைக்கப்பட்டது. ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இதன் பிறகு நீ என்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(27)

ஒழுக்கவிதிகள்! – சாந்திபர்வம் பகுதி – 193-ஒழுக்கம் குறித்து உரையாடுமறு பீஷ்மரைக் கேட்ட யுதிஷ்டிரன்; நல்லோர் மற்றும் தீயோரின் பண்பியல்புகளையும், ஒழுக்க விதிகளையும் சொன்ன பீஷ்மர்; மனிதர்கள் அனைவருக்குமுரிய கடமைகளைக் குறித்துச் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர் என நான் நினைக்கிறேன். ஓ! கடமைகளை அறிந்தவரே, ஓ! பாவமற்றவரே, ஒழுக்கம் குறித்த விதிகளைப் பற்றி நீர் என்னுடன் உரையாடுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீய செயல்களையும், தீய அறிவையும், அதீத மூர்க்கத்தையும் கொண்ட தீய ஒழுக்கத்தினர், தீயவர்கள் அல்லது கொடியவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனினும், நல்லோர் என்றழைக்கப்படுபவர்கள், தூய ஒழுக்கத்தாலும், நடைமுறைகளாலும் அடையாளம் காணப்படுகிறார்கள்.(2) நெடுஞ்சாலைகளிலோ, மாட்டுக் கொட்டகைகளிலோ, நெல் விளையும் வயல்களிலோ இயற்கையின் அழைப்புகளுக்கு ஒருபோதும் பதில் கூறாதவன் {மலஜலங்கழிக்காதவன்} நல்ல மனிதனாவான்[1].(3) ஒருவன் தேவையான செயல்களைச் செய்த பிறகு, ஆற்று நீரில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்து, நீர்க்காணிக்கையின் மூலம் தேவர்களை நிறைவு செய்ய வேண்டும். இது மனிதர்கள் அனைவரின் கடமையாகச் சொல்லப்படுகிறது.(4) சூரியன் எப்போதும் வழிபடப்பட வேண்டும். சூரியன் உதித்த பிறகு ஒருவன் உறங்கக்கூடாது. (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) காலை மற்றும் மாலை வேண்டுதல்களை முறையே கிழக்கு, மற்றும் மேற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.(5) ஒருவன், ஐந்து அங்கங்களைக் கழுவிய பிறகு[2], கிழக்கு நோக்கி அமர்ந்து அமைதியாக உண்ண வேண்டும். ஒருவன் உண்ண வேண்டிய உணவை ஒருபோதும் இழித்துரைக்கக்கூடாது. ஒருவன் நல்ல சுவைமிக்க உணவை உண்ண வேண்டும்.(6) உண்ட பிறகு அவன் தன் கைகளைக் கழுவிய பிறகே எழ வேண்டும்[3]. ஒருவன் ஈரக்காலுடன் ஒருபோதும் இரவு உறங்கச் செல்லக்கூடாது.-தெய்வீக முனிவரான நாரதர் நல்லொழுக்கத்தின் குறியீடுகள் இவையே என்று சொல்லியிருக்கிறார்.(7) ஒருவன் தினமும், ஒரு புனிதத்தலத்தையும், ஒரு காளையையும், ஒரு புனித சிலையையும் {தேவதையையும்}, பசுக் கொட்டகை, நாற் சந்தி சாலை, ஒரு பக்திமிக்கப் பிராமணன் மற்றும் ஒரு புனிதமான மரத்தை வலம் வர வேண்டும்[4].(8) உணவுக் காரியத்தில் ஒருவன் தன் விருந்தினர்கள், பணியாட்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணக்கூடாது. (இவ்வகையில்) பணியாட்களைச் சமமாக நடத்துவது மெச்சப்பட வேண்டும்.(9) (ஒரு நாளைக்கு இரண்டு வேளை) காலையும், மாலையும் உண்ண வேண்டும் என்பது தேவர்கள் விதித்ததாகும். இடைப்பட்ட எக்காலத்திலும் ஒருவன் (மீண்டுமொருமுறை) உண்ண வேண்டும் என்று விதிக்கப்படவில்லை. இவ்விதியின் படி உண்பவன் உண்ணாநோன்பிருந்த தகுதியை அடைகிறான்[5].(10)ஹோமத்திற்காக விதிப்பட்ட நேரங்களில் ஒருவன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அடுத்தவர் மனைவியரின் தோழமையை நாடாதவனும், உரிய பருவகாலத்தில் தன் மனைவியை நாடுபவனுமான ஞானி பிரம்மச்சரியத்தின் தகுதியை அடைகிறான்.(11) பிராமணர்கள் உண்டவற்றில் எஞ்சியவை அமுதம் போன்றவையாகும். அவை, வாழ்வாதாரமாகத் தாயின் மார்பு வழங்கும் பாலைப் போன்றவையாகும். அவ்வாறு எஞ்சியவற்றை உயர்ந்த மதிப்புள்ளதாகக் மக்கள் கருதுகிறார்கள். நல்லோர் அவற்றை உண்பதால் பிரம்மத்தை அடைகிறார்கள்[6].(12) (வேள்விப்பீடங்களை அமைப்பதற்காக) களிமண்ணைப் பிசைபவன், (வேள்வி எரிபொருளுக்காக) புற்களை வெட்டுபவன், (புனிதப்படுத்தப்பட்ட இறைச்சியை) உண்பதற்கு (எந்த வகை ஆயுதத்தையும் பயன்படுத்தாமல்) தன் நகங்களை மட்டுமே பயன்படுத்துபவன், பிராமணர்கள் உண்டவற்றில் எஞ்சியதையே எப்போதும் உண்பவன், வெகுமதியில் உள்ள விருப்பத்தால் செயல்படுபவன் ஆகியோர் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ மாட்டார்கள்[7].(13) (எந்த நோன்பிற்காகவும்) இறைச்சியை விலக்கியவன், இறைச்சியானது யஜுர்வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டதாகவே இருந்தாலும் அஃதை உண்ணக்கூடாது. (எந்த விலங்கின்) முதுகுத்தண்டில் உள்ள இறைச்சியையும் ஒருவன் தவிர்க்க வேண்டும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியையும் தவிர்க்க வேண்டும்.(14) ஒருவன் தன் சொந்த இடத்திலிருந்தாலும், அந்நியரின் நிலத்தில் இருந்தாலும் அவனுடைய விருந்தாளியை ஒருபோதும் பட்டினியிருக்க விடக்கூடாது. பிச்சைகளையும், மாற்றுச் செயல்களின் மூலமும் பிற கனிகளை அடையும் ஒருவன் அவற்றைப் பெரியோர்களுக்கு அளிக்க வேண்டும்.(15)ஒருவன் பெரியோர்களுக்கு இருக்கைகளை அளித்து அவர்களை மதிப்புடன் வணங்க வேண்டும். அவன் பெரியோர்களை வணங்குவதன் மூலம் நீண்ட வாழ்நாளையும், புகழையும், செழிப்பையும் அடைகிறான்.(16) உதிக்கும் கணத்தில் சூரியனை ஒருவன் பார்க்கக்கூடாது, அதே போலவே பிறன் மனைவியான ஒரு பெண்ணின் நிர்வாணத்திலும் தன் பார்வையைச் செலுத்தக்கூடாது. (உரிய பருவ காலத்தில்) தன் மனைவியுடனான கலவி பாவமாகாது, ஆனால் அஃது எப்போதும் தனிமையிலேயே நடைபெற வேண்டும்.(17) புனிதத் தலங்கள் மற்றும் தீர்த்தங்கள் அனைத்திற்கும் இதயமாக இருப்பவர் ஆசானே. தூய்மையான மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் அனைத்தின் இதயமும் நெருப்பே {அக்னியே}. பசுவாலில் உள்ள முடியைத் தீண்டுவதுடன் சேர்த்து, நல்லோரும், பக்திமான்களும் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையும், மெச்சப்படுபவையுமாகவே இருக்கும்.(18) ஒருவன் மற்றவனைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், மென்மையான நலன்விசாரிப்புகளை {ஸுகப்ரஸனங்களைச்} செய்ய வேண்டும். ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் பிராமணர்களை வணங்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(19) தேவர்களின் கோவில்களிலும், பசுக்களுக்கு மத்தியிலும், பிராமணர்களால் விதிக்கப்பட்ட அறச்சடங்குகளைச் செய்யும்போதும், வேதங்களைப் படிக்கும்போதும், உண்ணும் போதும், வலக்கரமே உயர்த்தப்பட வேண்டும்.(20)

உரிய சடங்குகளின் படி காலையிலும் மாலையிலும் பிராமணர்களை வழிபடுவது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும். இத்தகைய வழிபாட்டின் விளைவால், வணிகர்களின் கையிருப்பு பொருட்களும், உழவர்களின் விளைச்சலும் அதிகமாகும். அனைத்து வகைத் தானியங்களின் விளைச்சலும் அதிகமாகும், புலன்களால் இன்புறும் பொருட்கள் அனைத்தும் அதிகமாகப் பெறப்படும்.(21) (உண்ண அமர்ந்திருப்பவன்) மற்றவருக்கு உணவளிக்கும்போது, “போதுமானதாக இருக்கிறதா {ஸம்பந்நம்}” என்று கேட்க வேண்டும். குடிப்பதற்குப் பானம் கொடுக்கும்போது, “இது நிறைவு செய்யுமா? {தர்ப்பணம்}” என்று கேட்க வேண்டும். பாயசம், கஞ்சி, சித்திரான்னம் ஆகியவற்றை அளிக்கும்போது, “இது விழுந்துவிட்டதா? {ஸ்ரிகம்}’” என்று கேட்க வேண்டும்[8].(22) சிரைத்தபிறகும், துப்பிய பிறகும், குளித்த பிறகும், உண்ட பிறகும் மக்கள் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அத்தகைய வழிபாடு நோய்வாய்ப்பட்ட மனிதர்களுக்கு நீண்ட வாழ்நாளை நிச்சயம் அளிக்கும்.(23) ஒருவன் சூரியனை நோக்கித் திரும்பி சிறுநீர் கழிக்கக்கூடாது, அதேபோல ஒருவன் தன் மலத்தைத் தானே காணக் கூடாது. ஒருவன் ஒரே படுக்கையில் ஒரு பெண்ணுடன் படுக்கவும், அவளுடன் உண்ணவும் கூடாது[9].(24) பெரியோர்களிடம் பேசும்போது நீ என்று சுட்டும் பெயர்ச்சொல்லையோ, அவர்களுடைய பெயர்களையோ ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தாழ்ந்தவர்கள் {வயதில் இளையவர்கள்} அல்லது வயதில் சமமானவர்களிடம் நீ என்றோ, அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பதோ நிந்திக்கத்தக்கதல்ல[10].(25)பாவிகளின் இதயங்கள் அவர்களால் இழைக்கப்பட்ட பாவங்களைக் காட்டிக் கொடுக்கின்றன. தாங்கள் அறிந்தே செய்த பாவங்களை நல்லோரிடம் மறைக்கும் பாவிகள் அழிவைச் சந்திக்கிறார்கள்.(26) அறியாமை கொண்ட மூடர்களே தெரிந்தே செய்யப்பட்ட பாவங்களை மறைக்க முயல்வார்கள். அந்தப் பாவங்களை மனிதர்கள் பார்ப்பதில்லை என்பது உண்மையே, ஆனால் தேவர்கள் அவற்றைக் காண்கிறார்கள்.(27) ஒரு பாவத்தால் மறைக்கப்படும் மற்றொரு பாவம் புதிய பாவங்களுக்கு வழிவகுக்கும். அதே போலத் தகுதிமிக்க ஒரு செயல் மற்றொரு தகுதிமிக்கச் செயலால் மறைக்கப்பட்டால், அது தகுதிகளை அதிகரிக்கச் செய்கிறது. அறவோரின் செயல்கள் எப்போதும் அறத்தின் பார்வையிலேயே அவர்களைப் பின்தொடர்கிறது.(28) அறிவற்ற மனிதன் தான் இழைத்த பாவங்களை ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை. எனினும், சாத்திரங்களில் இருந்து வீழ்ந்து பாவங்களைச் செய்தவனை அவை {அந்தப் பாவங்கள்} அடையவே செய்கின்றன. (உரிய நேரத்தில்) சந்திரனிடம் வரும் ராகுவைப் போலவே, அந்தப் பாவச்செயல்கள் அந்த மூட மனிதனை வந்தடைகின்றன[11].(29) எதிர்பார்ப்புடன் திரட்டி வைக்கப்படும் {சேமிக்கப்படும்} பொருட்கள் அரிதாகவே அனுபவிக்கப்படுகின்றன. காலன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை (தன் இரை தயாராக இருக்கிறதோ, இல்லையோ அதைப் பறித்தே செல்கிறான்) என்பதால், அத்தகைய சேமிப்பு ஞானிகளால் ஒருபோதும் மெச்சப்படுவதில்லை.(30)அனைத்து உயிரினங்களுடைய மனத்தின் இயற்பண்பே அறம் என ஞானிகள் சொல்கிறார்கள். இதன் காரணமாக ஒருவன், தன் மனத்தால் அனைத்திற்கும் நன்மையைச் செய்ய வேண்டும்[12].(31) ஒருவன் அறத்தைத் தனியாகப் பயில வேண்டும். அறம் பயிலும் போது ஒருவன் பிறரின் உதவியை நாடக்கூடாது. ஒருவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளதை மட்டுமே அடைகிறான் எனும்போதும், ஒரு தோழனால் {உதவியால்} என்ன செய்ய முடியும்[13]?(32) அறமே மனிதனின் தோற்றுவாயாகும். அறமே தேவர்களின் அமுதமுமாகும். மரணத்திற்குப் பிறகு அறத்தின் மூலமே மனிதர்கள் நித்திய இன்பத்தை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(33)

அத்யாத்மா! – சாந்திபர்வம் பகுதி – 194-அத்யாத்மாவின் இயல்பைக் குறித்து விசாரித்த யுதிஷ்டிரன்; அத்யாத்மா குறித்துப் பீஷ்மரின் உரையாடல்; சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணகளின் இயல்புகளைச் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டிருப்பதும், அத்யாத்மா என்ற பெயரில் அழைக்கப்படுவதுமானது எது? அதன் இயல்பென்ன? என்பது குறித்து எனக்குச் சொல்வீராக[1].(1) ஓ! பிரம்மத்தைக் குறித்து அறிந்தவரே, அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் எங்கிருந்து உண்டாக்கப்பட்டது? அண்டப்பேரழிவு ஏற்படும்போது, அது யாரிடம் செல்கிறது? இக்காரியம் குறித்து என்னுடன் உரையாடுவதே உமக்குத் தகும்[2]” என்றான்.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நீ என்னிடம் கேட்கும் அத்யாத்மா குறித்து நான் இப்போது உன்னுடன் உரையாடப்போகிறேன். ஓ! ஐயா, அது மிகவும் ஏற்புடையதும், பெரும் இன்ப {பேரின்ப} நிலையை உண்டாக்குவதுமாகும்.(3) (இதற்கு முன்பு) பேராசிரியர்கள், (இந்த அண்டத்தின்) படைப்பு மற்றும் அழிவு குறித்த உண்மைகளைச் சுட்டிக்காட்டிச் சென்றிருக்கிறார்கள். அவ்வுண்மைகளை அறிந்த மனிதன், இம்மையில் பெரும் நிறைவையும், மறுமையில் இன்பநிலையையும் அடைகிறான். அத்தகைய அறிவானது, பெரும் கனிகளை அடைவதற்கும், அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த நன்மையை விளைவிப்பதற்கும் வழிவகுக்கும்.(4) பூமி {நிலம்}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்}, நீர், எண்ணிக்கையில் ஐந்தாவதாக ஒளி (அக்னி) ஆகியவை பேருயிரினங்களாக {மகாபூதங்களாக} கருதப்படுகின்றன. இவற்றிலேயே படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றமும் மறைவும் இருக்கிறது.(5) எவனிலிருந்து இந்த அடிப்படை பூதங்கள் தங்கள் தோற்றத்தைப் பெற்றனவோ, (எவனிடம் அவற்றின் தொகை நுழையுமோ) அவனிடமே அனைத்து உயிரினங்களிடமிருந்தும் தங்களைப் பிரித்துக் கொண்டு கடலின் அலைகளைப் போல (எதிலிருந்து எழுந்தனவோ அதிலேயே) மீண்டும் திரும்புகின்றன.(6) ஆமை எவ்வாறு தன் அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்கிறதோ, அவ்வாறே பரமாத்மாவும் அனைத்துப் பொருட்களையும் படைத்தும், மீண்டும் தனக்குள்ளேயே எடுத்தும் கொள்கிறது.(7)

படைப்பாளன், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும், இந்த ஐந்து அடிப்படை பூதங்களையும் பல்வேறு அளவுகளில் இடம்பெறச் செய்கிறான். எனினும், உயிரினமானது (அறியாமையின் மூலம்) அதைக் காண்பதில்லை.(8) ஒலி, கேட்பதற்கான உறுப்புகள் மற்றும் அனைத்துத் துளைகள் ஆகிய இந்த மூன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் பிறப்பிடமாகக் கொள்கின்றன. தீண்டல், செயல்பாடு, தோல் ஆகியவை காற்றின் {வாயுவின்} மூன்று பண்புகளாக இருக்கின்றன.(9) வடிவம், கண், செரிமானம் ஆகியவை நெருப்பு {அக்னி}, அல்லது சக்தியின் மூன்று பண்புகளாக இருக்கின்றன. சுவை, திரவங்கள் அனைத்தும், நாவு ஆகியவை நீரின் மூன்று பண்புகளாக இருக்கின்றன.(10) மணம், மூக்கு, உடல் ஆகியவை பூமியின் {நிலத்தின்} மூன்று தன்மைகளாக இருக்கின்றன. (அடிப்படையான) பெரும்பூதங்கள் ஐந்தாகும். ஆறாவது மனமாகும்.(11) ஓ! பாரதா, புலன்களும், மனமும் உயிரினங்களின் உணர்வுகள் (அனைத்திற்கும் மூலம்) ஆகும்[3]. ஏழாவதானது புத்தி {நுண்ணறிவு} என்றழைக்கப்படுகிறது, எட்டாவதோ ஆன்மா {ஜீவன்} என்றழைக்கப்படுகிறது[4].(12)புலன்கள் உள்ளுணர்பவை; (அந்த உள்ளுணர்தல்களைத் தொடர்பு கொள்ள இயலாத) மனம், உறுதியற்ற நிலையை உண்டாக்குகிறது. புத்தியானது அனைத்து அறிவுகளையும் உறுதியான நிலையை அடையச் செய்கிறது. ஆன்மாவானது (செயல்படாமல்) சான்றாக {சாட்சியாக} இருக்கிறது.(13) இரண்டு உள்ளங்கால்களுக்கு மேலே இருப்பவை அனைத்தும், பின்னே {கீழே} இருக்கும் அனைத்தும், குறுக்காக இருக்கும் அனைத்தும் ஆன்மாவால் காணப்படுகின்றன. ஆன்மாவானது, நிரப்ப எந்த வெளியும் இல்லாத அளவுக்கு மொத்த இருப்பிலும் {உயிரினத்திலும்} படர்ந்தூடுருவி இருக்கிறது.(14) புலன்கள், மனம் மற்றும் புத்தியை மனிதர்கள் அனைவரும் முழுமையாக அறிவார்கள். இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} ஆகிய மூன்று நிலைகள், அல்லது குணங்கள் புலன்கள், மனம் மற்றும் புத்தியைச் சார்ந்தே இருக்கின்றன[5].(15) மனிதன், உயிரினங்கள் எவ்வாறு இவ்வுலகிற்கு வந்து போகின்றன என்பதை நுண்ணறிவின் {புத்தியின் துணையுடன் புரிந்து கொள்வதன் மூலம், நிச்சயம் படிப்படியாக உறுதியான மன அமைதியை அடைவான்.(16) (ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோல, இருள், ஆசை, நல்லியல்பு ஆகிய) மூன்று குணங்களும் (உலகப் பற்றுகளை {புரிந்து கொள்வதற்கு}) புத்திக்கு வழிவகுக்கின்றன. இவ்வகையில், புத்தியானது (நுண்ணறிவானது), புலன்களையும், மனத்தையும் போன்றதாகும். எனவே, புத்தியானது (ஐம்புலன்களுடன், மனத்தையும் சேர்ந்த) ஆறையும், அவற்றை உட்கொள்ளும் பொருட்களையும் போன்றதாகும். எனினும், (இருள், ஆசை மற்றும் நல்லியல்பு ஆகிய) இந்த மூன்று குணங்களும் செயல்பாட்டுக்கு வழிவகுக்க இயலாதபோது புத்தி அழிவடைகிறது[6].(17)அசையாத மற்றும் அசையும் பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் இந்தப் புத்தியைக் கொண்டிருக்கிறது. புத்தியிலிருந்தே அனைத்தும் எழுகின்றன, அனைத்தும் அதனுள்ளேயே அடங்குகின்றன. இதன் காரணமாகவே அனைத்தும் புத்தியின் {நுண்ணறிவின்} வெளிப்பாடே என்று சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன.(18) எதைக் கொண்டு ஒருவன் பார்க்கிறானோ, அது கண்ணாகும், எதைக் கொண்டு ஒருவன் கேட்கிறானோ அது காதாகும். எதைக் கொண்டு ஒருவன் நுகர்கிறானோ, அது மணத்திற்கான உறுப்பு {மூக்கு} என்று அழைக்கப்படுகிறது. எதைக் கொண்டு ஒருவன் சுவையை வேறுபடுத்திப் பார்க்கிறானோ அது நாக்கு என்று அழைக்கப்படுகிறது.(19) தீண்டும் உணர்வை ஒருவன் உடலை மறைக்கும் தோலால் அடைகிறான். எது புத்தி என்றழைக்கப்படுகிறதோ, அது மாற்றங்களுக்கு உட்படுகிறது. புத்தியானது எதையும் விரும்பும்போது, அது மனம் என்றழைக்கப்படுகிறது.(20) எந்த அடித்தளங்களில் புத்தியானது ஓய்ந்திருக்கிறதோ, அவை {அந்த அடித்தளங்கள்} ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்திற்குத் தொண்டாற்றுபவையாகவும், எண்ணிக்கையில் ஐந்தாகவும் இருக்கின்றன. அவை புலன்கள் என்றழைக்கப்படுகின்றன. புலப்படாத கொள்கையான புத்தியானது, அவற்றிலேயே {அந்த அடித்தளங்களிலேயே} ஓய்ந்திருக்கிறது.(21)

ஓர் உயிரினத்தில் இருக்கும் புத்தியானது, (இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} என்றழைக்கப்படும்) மூன்று நிலைகளுடன் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்கிறது. சிலவேளைகளில் அஃது இன்பத்தை அடைகிறது, சில வேளைகளில் துன்பத்தை அடைகிறது.(22) சில வேளைகளில் அஃது இன்பமும், துன்பமும் அற்றதாக இருக்கிறது. இவ்வாறே புத்தியானது, மனிதர்கள் அனைவரின் மனங்களிலும் இருக்கிறது.(23) ஆறுகளின் தலைவனும், அலைகளுடன் கூடியதுமான பெருங்கடலானது கரைகளை மீறிச் செல்வதைப் போல, (ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல) மூன்று நிலைகளாலான புத்தியானது, சில வேளைகளில், (யோகத்தின் மூலம்) அந்த மூன்று நிலைகளையும் கடந்து செல்கிறது[7].(24) எந்தப் புத்தி முக்குணங்களைக் கடந்து செல்கிறதோ, அது தூய நிலையில் (மாற்றமடையாத இருப்பாக) மட்டுமே மனத்தில் இருக்கிறது. எனினும், செயல்படத் தூண்டும் இருள் குணம் {தமோகுணம்}, அதை விரைவில் பின்தொடர்கிறது.(25) அந்த நேரத்தில் புத்தியானது, புலன்கள் அனைத்தையும் செயல்பட வைக்கிறது. அந்த மூன்றின் தன்மைகள் இவ்வாறே இருக்கின்றன: நல்லியல்பில் {சத்வ குணத்தில்} இன்பமும்; ஆசையில் {ரஜோ குணத்தில்} துன்பமும், இருளில் {தமோ குணத்தில்} மாயையும் வசிக்கின்றன.(26) மனத்தில் இருக்கும் நிலைகள் அனைத்தும் (பெயர் குறிப்பிடப்பட்ட) மூன்றில் சேர்க்கப்படுகின்றன. ஓ! பாரதா, புத்தியின் போக்கு குறித்து உனக்கு இப்போது சொல்லிவிட்டேன்.(27)ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். நல்லியல்பு, ஆசை, இருள் ஆகிய முக்குணங்கள் எப்போதும் உயிரினங்களைப் பற்றியிருக்கின்றன.(28) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்லியல்பு, ஆசை, இருள் ஆகியவற்றைச் சார்ந்த மூன்று வகைப் புத்திகளும் {நுண்ணறிவுகளும்} ஒவ்வொரு உயிரினத்திலும் காணப்படுகினறன.(29) நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது; ஆசையின் குணம் {ரஜோ குணம்} கவலையை உண்டாக்குகிறது. இவ்விரண்டும், இருளின் குணத்துடன் {தமோ குணத்துடன்} சேர்ந்தால், அந்நிலை மகிழ்ச்சியையோ, கவலையையோ உண்டாக்காது (ஆனால் அதற்குப் பதில் மாயை, அல்லது குற்றத்தை மட்டுமே உண்டாக்கும்).(30) உடலிலோ, மனத்திலோ தோன்றும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிலையும், நல்லியல்பின் பண்பினாலேயே விளைகின்றன என்று சொல்லப்படுகிறது.(31) ஒருவனுக்கு ஏற்பில்லாத துன்ப நிலையானது, ஆசைப்பண்பினால் விளைகிறதேயன்றி வேறெதனாலும் அல்ல. ஒருவன் அதைக் குறித்து எப்போதும் அச்சத்துடன் நினைக்கக்கூடாது[8].(32) மேலும், மாயையுடனும், குற்றத்துடனும் சேர்ந்ததும், உறுதிசெய்யப்பட முடியாததும், அறியப்படமுடியாததுமான அந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவன் அறியவில்லையெனில், அந்நிலை இருள் பண்பைக் கொண்டது என்று கருதப்பட வேண்டும்.(33)உவகை {சந்தோஷம்}, நிறைவு {பிரியம்}, திளைப்பு {ஆனந்தம்}, {சுகம்}, இதய அமைதி {மனத்தில் நல்ல அடக்கம்} ஆகியவை நல்லியல்பு நிலையின் {சத்வ குணத்தின்} தன்மைகளாகும். இவை மனிதனுககு சில நேரங்களில் ஓரளவுக்கு உண்டாகின்றன.(34) நிறைவின்மை {சந்தோஷமில்லாமை}, இதய எரிச்சல் {பரிதாபம்}, துன்பம் {சோகம்}, பேராசை, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியவை அனைத்தும் ஆசை நிலையின் {ரஜோ குணத்தின்} குறியீடுகளாகும். அவற்றை விளைவிப்பதற்கான போதுமான தகுந்த காரணத்துடனோ, இல்லாமலோ அவை காணப்படுகின்றன.(35) அவமதிப்பு {அபிமானம்}, மாயை {அவிவேகம்}, குற்றம் {அஜாக்ரதை}, உறக்கம், மலைப்பு {சோம்பல்} மற்றும் ஒருவனின் தீயூழின் காரணமாக உண்டாகுபவை அனைத்தும் இருள் நிலையின் {தமோ குணத்தின்} பல்வேறு தன்மைகளாகும்.(36) எட்டாததை எட்டுவதும், பல திசைகளில் விரிந்து செல்லக்கூடியதும், ஆசைகளின் நோக்கங்களை வெல்லும் காரியத்தில் நம்பிக்கையில்லாததும், நன்கு கட்டுப்படுத்தப்பட்டதுமான மனத்தைக் கொண்ட மனிதன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருப்பான்[9].(37)புத்தி, ஆன்மா என்ற இரு நுண்ணியப் பொருட்களின் வேறுபாட்டைக் காண்பாயாக. இவற்றில் ஒன்று (புத்தி) குணங்களை வெளிப்படுத்துகிறது. மற்றது (ஆன்மா) அவ்வகையில் எதையும் செய்வதில்லை.(38) ஒரு கொசுவும், அத்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் காணலாம். இணைந்திருந்தாலும், அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகும்.(39) அதே போலவே, புத்தியும், ஆன்மாவும் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படி ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக இருந்தாலும், அவை எப்போதும் ஒன்றான நிலையிலேயே காணப்படுகின்றன. மீனும், நீரும் ஒன்று கலந்த நிலையிலேயே இருக்கின்றன. எனினும், அவை ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டவையாகும். இது புத்தி மற்றும் ஆன்மாவின் வழக்கிலும் அவ்வாறே ஆகிறது.(40) குணங்கள் ஆன்மாவை அறியாமல் இருக்கின்றன, ஆனால், ஆன்மாவோ அவை அனைத்தையும் அறிந்திருக்கிறது. ஆன்மாவானது, குணங்களின் சான்றாக இருந்து அவை அனைத்தும் தன்னில் இருந்தே உண்டாகின்றன என்று கருதுகிறது.(41) செயல்படாத ஆன்மாவானது, தன்னினைவற்ற {சுயநினைவற்ற} புலன்கள், மனம் மற்றும் ஏழாவதான அறிவு ஆகியவற்றின் மூலமாகச் செயல்படும் போது, அடைப்பில் உள்ள துளையின் வழியாக வரும் கதிர்களைப் பொழிந்து அனைத்துப் பொருட்களையும் காட்டும் ஒரு விளக்கைப் போல, (இருப்பில் உள்ளவற்றுக்கு மத்தியில் உள்ள) பொருட்களைக் கண்டறிகிறது.(42)

அறிவு அல்லது புத்தியே அனைத்துக் குணங்களையும் உண்டாக்குகிறது. ஆன்மாவானது அவற்றை (சான்றாக) பார்க்க மட்டுமே செய்கிறது. புத்தி மற்றும் ஆன்மாவுக்கிடையிலான தொடர்பு நிச்சயம் இத்தகையதே[10].(43) புத்தியோ, ஆன்மாவோ சார்ந்திருக்கக்கூடிய புகலிடம் ஏதும் கிடையாது. அறிவானது {புத்தியானது}, மனத்தை உண்டாக்குகிறது, ஆனால் ஒருபோதும் குணங்களை உண்டாக்குவதில்லை.(44) புலன்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள், போதுமான அளவுக்கு மனத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும்போது, ஆன்மாவானது, குடத்திலிட்ட விளக்கைப் போல, (அறிவுக்குத்) தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(45) இயல்பான செயல்கள் அனைத்தையும் துறக்கும் மனிதன், தவங்களைப் பயின்று, ஆன்ம கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, அதிலேயே திளைத்து, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே கருதுவானானால், அவன் உயர்ந்த கதியை அடைவான்.(46) நீரில் நகரும் நீர்க்கோழியானது, {நீரெனும்} அந்தப் பூதத்தால் நனையாமல் இருப்பதைப் போலவே ஒரு ஞானியும் (இவ்வுலகத்தில்) உயிரினங்களுக்கு மத்தியில் உலவுவான்.(47)ஒருவன் தனது நுண்ணறிவின் மூலம் இவ்வகையிலேயே, துன்பமும் இன்பமும் இல்லாமல், அனைத்திலும் சம கண்ணுடன், வன்மமும், பொறாமையும் அற்றவனாக இவ்வுலகில் செயல்பட வேண்டும்.(48) இவ்வழியில் வாழ்பவன், நூல்களை அறுக்கும் சிலந்தியைப் போல, (குணங்களில் சிக்கிக் கொள்வதற்குப் பதிலாக) குணங்களை உண்டாக்குவதில் வெல்கிறான். உண்மையில், குணங்கள் சிலந்தியின் நூல்களைப் போலவே கருதப்பட வேண்டும்[11].(49) அத்தகைய மனிதர்களைப் பொறுத்தவரையில் குணங்கள் தொலையாது எனச் சிலர் சொல்கின்றனர். அவை அனைத்தும் தொலைந்து போகும் என்று சிலர் சொல்கின்றனர். தொலைந்து போவதில்லை என்று சொல்பவர்கள், (ஸ்ருதிகளில்) வெளிப்படுத்தப்பட்டவையும், இதற்கு முரணான எந்த அறிவிப்பும் இல்லாதவையுமான சாத்திரங்களைச் சார்ந்திருக்கின்றனர். மறுபுறம், அனைத்துப் குணங்களும் தொலைந்து போகின்றன என்று சொல்பவர்கள், ஸ்மிருதிகளைச் சார்ந்திருக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இரண்டையும் சிந்தித்துப் பார்த்து, தனக்கு எது சரியெனத் தோன்றுவதை ஒருவன் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.(50,51) இவ்வாறே ஒருவன் கடினமானதும், முடிச்சு கொண்டதுமான, ஐயத்தால் அறிவைக் குலைக்க வல்லதுமான இந்தக் கேள்வியைக் கடந்து, அதைக் கடபபதன் மூலம் மகிழ்ச்சியை அடைய வேண்டும். அந்த ஐயம் அகன்றால், அதற்கு மேலும் அவன் எந்த வகைத் துன்பத்திற்கும் ஆளாக வேண்டாம்.(52)நன்கு நிரம்பிய நீரோடைகளில் அருவருக்கத்தக்க அனைத்துடன் சேர்ந்து மூழ்கித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்பவர்களைப் போல, அருவருக்கத்தக்க இதயங்களைக் கொண்ட மனிதர்களும் அறிவை அடைவதில் வெல்லக்கூடும்.(53) ஒரு பெரிய ஆற்றைக் கடக்க வேண்டிவன், மறுகரையைப் பார்ப்பதால் மட்டுமே மகிழ்ச்சியை உணர்ந்துவிட மாட்டான். இவ்வழக்கு வேறுமாதிரியாக இருந்தால், (பார்த்துவிடுவதால் மட்டுமே ஒருவனால் ஒரு படகைக் கொண்டு மறுகரையை அடைந்துவிட முடியுமென்றால்), அவன் ஒருவேளை மகிழ்ச்சியை அடையலாம். உண்மையை அறிந்தவனிடம் இக்காரியமோ, வேறுமாதிரி இருக்கிறது. உண்மையைக் குறித்த வெறும் அறிவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. அந்த அறிவானது, கனிகளைத் தாங்கத் தொடங்கியதும், அம்மனிதன் மறுகரையை அடைந்துவிட்டான் என்று கருதப்படலாம். ஆன்மாவை உலகப் பொருட்களில் இருந்து விடுபட்ட தனியான ஒன்றாக அறிபவர்கள், உயர்ந்ததும், சிறந்ததுமான அறிவை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(54) ஒரு மனிதன், உயிரினங்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் மறைவைக் குறித்து அறிவதன் மூலம், அக்காரியத்தைச் சிந்தித்து, படிப்படியாக முடிவிலா மகிழ்ச்சியை அடைகிறான்.(55) எவன் (அழிவற்றதாக இல்லாமல் அழியத்தக்கதாக இருக்கும்) இந்த முத்தொகையை {மூன்று குணங்களைச்} சிந்தித்துப் பார்த்து, அஃதை அறிந்து கொண்டு கைவிடுகிறானோ, அவன் யோகத்தின் மூலம் உண்மையைக் காண்பதில் வென்று, முற்றான இன்பநிலையை அடைகிறான்.(56) பல்வேறு பொருட்களில் ஈடுபாடு கொண்டவையும், கட்டுப்படுத்துவதற்குக் கடினமானவையுமான புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தாத வரையில் ஆன்மாவைக் காண முடியாது.(57)

இஃதை அறிந்தவன் உண்மையில் ஞானியாவான். ஞானிக்கு வேறென்ன குறியீடு இருக்க முடியும்? இந்த அறிவை அடைந்தவர்களும், நுண்ணறிவுமிக்கவர்களுமான மனிதர்கள், வெற்றிமகுடம் சூடியவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கிறார்கள்.(58) அறியாமையிலுள்ளோரை எது அச்சுறுத்துமோ, அஃது அறிவாளிகளை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. (விடுதலையை {முக்தியை} விட) எவருக்கும் வேறேதும் உயர்ந்த கதியில்லை. எனினும், அதீத நற்குணத்தின் விளைவாக, விடுதலையின் {முக்தியின்} அளவைப் பொறுத்தே வேறுபாடுகள் தெரிகின்றன என்று தவசிகள் சொல்கிறார்கள்.(59) கனிகளில் எதிர்பார்ப்பில்லாமல் செயல்படும் மனிதன், (அச்செயல்களின் மூலம்) முற்பிறவியில் இழைக்கப்பட்ட தன் பாவச்செயல்களை அழிக்கிறான். ஞானம் கொண்ட ஒருவனுக்கு, (இவ்வாறு கழுவப்படும்) முற்பிறவியின் செயல்களும், இப்பிறவியில் (கனியின் எதிர்பார்ப்பில்லாமல் நிறைவேற்றப்படும்) செயல்களும், (நரகத்தில் வீழ்வது போன்ற) ஏற்பில்லாத எந்த விளைவுகளையும் உண்டாக்காது. ஆனால், அவன் செயல்களைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அச்செயல்களால் எவ்வாறு ஏற்புடைய (விடுதலையை {முக்தியைக்}) கொண்டு வர முடியும்.(60) (காமம், பொறாமை மற்றும் பிற தீய ஆசைகளால்) பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனை மக்கள் நிந்திக்கிறார்கள். அத்தீமைகள் அம்மனிதனை அடுத்தப் பிறவியில் தாழ்ந்த பல வகைப் பிறப்புகளில் வீழ்த்துகின்றன[12].(61) இவ்வுலகில் (மகன்கள், மனைவியர் போன்ற) தங்கள் உடைமைகளின் இழப்பால் அதிகமாக வருந்தும் தீயோரை மிகக் கவனமாகப் பார். அதே போன்ற சூழ்நிலைகளில் ஒருபோதும் வருந்தாதவர்களையும், அறிவைக் கொடையாகக் கொண்டவர்களையும் பார். (படிப்படியான விடுதலை {முக்தி} மற்றும் உடனடி விடுதலை ஆகிய) இரண்டையும் அறிந்தோரே, உண்மையில் ஞானிகளாக அழைக்கத்தகுந்தவர்களாவர்” என்றார் {பீஷ்மர்}[13].(62)

தியானயோகம்! – சாந்திபர்வம் பகுதி – 195-தியான யோகம் குறித்துச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்தி தியானயோகத்தில் ஈடுபடச் செய்யும் வழிமுறைகள் குறித்துச் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, இனி நான் தியான யோகத்தின் நான்கு வகைகளைக் குறித்துப் பேசப் போகிறேன். அதைக்குறித்த அறிவை அடைந்த பெரும் முனிவர்கள், இம்மையிலேயே அழிவில்லா வெற்றியை அடைகிறார்கள்.(1) அறிவால் நிறைவடைந்த பெரும் முனிவர்கள், விடுதலையில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, யோகத்தை அறிந்து, தங்கள் தியான யோகம் சரியாகும் வழியில் செயல்படுகின்றனர்.(2) ஓ! பிருதையின் மகனே, உலகக் குற்றங்களில் இருந்து விடுபட்ட அவர்கள், ஒருபோதும் (மறுபிறவிக்காக இங்கே) திரும்பி வருவதில்லை. மறுபிறவியில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள், தங்கள் இயல்பான ஆன்ம நிலையிலேயே {ஆத்மரூபத்திலேயே} வாழ்கிறார்கள்[1].(3) (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் போன்ற) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டு, (பற்றுகளில் இருந்து) விடுதலையடைந்து, ஒருபோதும் (கொடையாக) எதையும் ஏற்காமல், தங்கள் (இயல்பான) நிலையிலேயே எப்போதும் நீடிக்கும் அவர்கள், மனைவியர் மற்றும் பிள்ளைகளின் தோழமையிலிருந்து விடுபட்டவையும், யாராலும் எந்தச் சச்சரவுகளும் எழாத நிலையில் இருப்பவையும், முற்றான இதய அமைதிக்கு ஏற்ற வகையில் இருப்பவையுமான இடங்களில் வாழ்கின்றனர்.(4) அத்தகைய மனிதன், பேச்சை அடக்கி, தியானத்தின் உதவியால் (பரமாத்மாவிடம்) பிரியாத ஒன்றிய மனத்துடன், தன் புலன்கள் அனைத்தும் நொறுங்கிய ஒரு மரத்துண்டைப் போல அமர்ந்திருக்கிறான்.(5)அவன் காதின் மூலம் எந்த ஒலியையும் உணர்வதில்லை; தோலின் மூலம் எந்தத் தீண்டலையும் உணர்வதில்லை; கண்ணின் மூலம் எந்த வடிவத்தையும் உணர்வதில்லை; நாவின் மூலம் எந்தச் சுவையையும் உணர்வதில்லை.(6) மணத்திற்கு உரிய உறுப்பின் மூலம் அவன் மணங்கள் எதையும் உணர்வதில்லை. யோகத்தில் மூழ்கிய அவன், தியானத்தில் மெய்மறந்து அனைத்துப் பொருட்களையும் கைவிடுகிறான்.(7) பெரும் மனோ சக்தியைக் கொண்ட அவன், ஐம்புலன்களைத் தூண்டக்கூடிய எதையும் விரும்புவதில்லை. ஐம்புலன்களையும் தன் மனத்திற்குள் இழுத்துக் கொள்ளும் ஞானி, உறுதியற்ற தன் மனத்தை அந்த ஐம்புலன்களைக் கொண்டு (அறிவில் {புத்தியில்}) நிலைநிறுத்த வேண்டும் {மனத்தை ஸமாதியிலிருக்கும்படி செய்வான்}.(8) பொறுமையைக் கொண்ட யோகியானவன், எந்தப் பொருட்கள் உறுதியில்லாதவையாக இருக்கின்றனவோ அவை உறுதியடையும் வகையில், (உலகம் சார்ந்த பொருட்களுக்கு மத்தியில்) எப்போதும் திரியும் தன் மனத்தை (பயிற்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள) தன் ஐந்து வாயில்களில் {புலன்களில்} நிலைநிறுத்த வேண்டும். அவன், உடலில் இருந்தோ, வேறு எந்தப் புகலிடத்திலிருந்தோ தன் மனத்தைச் சார்பற்றதாகச் செய்து, இதய ஆகாயத்தின் யோகப் பாதையில் அதை {இதயத்தை} நிலைநிறுத்த வேண்டும்[2].(9) யோகியானவன், முதலில் தன் புலன்களையும், மனத்தையும் நொறுக்கி (தியானப் பாதையில் செலுத்த வேண்டும்) என்பதால், நான் முதலில் தியானப் பாதையைக் குறித்துப் பேசினேன்.(10){புலன்களைத் தவிர்த்து} ஆறாவதாக இருக்கும் மனமானது இவ்வாறு அடக்கப்படும்போது, மேகங்களுக்கு மத்தியில் களித்தாடி கணிக்கப்படமுடியாத வேகத்தில் நகரும் மின்னலைப் போல மின்ன முனைகிறது.(11) ஒரு (தாமரை) இலையில் உள்ள நீர்த்துளி எவ்வாறு நிலையில்லாமல் அனைத்துத் திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கிறதோ, அவ்வாறே அந்த யோகியின் மனமும் தியானப் பாதையில் முதலில் நிலைக்கச் செய்யப்படும்போது {அப்பாதையில்} அலைபாய்கிறது.(12) இவ்வாறு நிலைக்கச்செய்யப்படும்போது, அந்த மனமானது சிறிது நேரத்திற்கு அந்தப் பாதையில் நிலைத்திருக்கிறது. எனினும், அது மீண்டும் காற்றின் பாதையில் சுற்றும்போது, காற்றைப் போலவே அது வேகம் கொள்கிறது.(13) தியான யோகத்தின் வழிகளை நன்கறிந்த மனிதன், இதனால் உற்சாகமிழக்காமல், உழைப்பு வீணானதை ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், சோம்பலையும், வன்மத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தைத் தியானத்தில் செலுத்த வேண்டும்.(14) ஒருவன், அமைதிநோன்பை {மௌனவிரதத்தை} நோற்று யோகத்தில் தன் மனத்தை நிலைபெறச் செய்யத் தொடங்கும்போது, பகுத்தறிவு {விகாரஸமாதி}, ஞானம் {விதர்க்கஸமாதி}, தீமையைத் தவிர்க்கும் சக்தி {விவேகஸமாதி} ஆகியவை அவனால் ஈட்டப்படுகின்றன[3].(15)மனோவேகத்தின் விளைவாக எரிச்சலை உணர்ந்தாலும், அவன் அதை {மனத்தை} (தியானத்திலேயே) நிலைநிறுத்த வேண்டும். அந்த யோகி, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல், தன் நன்மையை நாட வேண்டும்.(16) புழுதி, அல்லது சாம்பல், அல்லது எரிக்கப்பட்ட சாணக் குவியல் நீரால் நனைக்கப்படும்போது நனையாதிருப்பதாகத் தோன்றி,(17) உண்மையில், அரைகுறையாக நனைக்கப்படும்போது காய்ந்ததாகவே இருந்து, அவை {சாம்பற்குவியல்கள்} முற்றாக நனையும் முன் இடையறாமல் தொடர்ந்து நனைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பது போல,(18) அந்த யோகியும் தன் புலன்களைப் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அவன் அவற்றை {புலன்களை} (அனைத்துப் பொருட்களில் இருந்தும்) படிப்படியாக விலக்க வேண்டும். இவ்வழியில் செயல்படும் மனிதன் அவற்றை {புலன்களைக்} கட்டுப்படுத்துவதில் வெல்கிறான்.(19) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் தன் மனத்தையும், புலன்களையும் தானே தியானப் பாதையில் செலுத்துவதால், உறுதிமிக்க யோகத்தின் மூலம் அவற்றை {புலன்களை} முழுக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதில் வெல்கிறான்.(20) தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதில் எவன் வெல்கிறானோ, அவன் முயற்சியாலோ, விதியாலோ ஒருபோதும் அடைய முடியாத இன்பநிலையை உணர்வான்[4].(21) அத்தகைய இன்பநிலையில் ஒன்றியிருக்கும் அவன், தியானச் செயல்பாட்டில் தொடர்ந்து மகிழ்கிறான். இவ்வாறே யோகிகள் அருள்மிக்க உயர்ந்த நிலையான நிர்வாணத்தை அடைகின்றனர்” என்றார் {பீஷ்மர்}.(22)

ஜபம்! – சாந்திபர்வம் பகுதி – 196-ஜபம் செய்வதன் பலன்களையும், அவை செய்யப்பட வேண்டிய வழிமுறைகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நீர் நால்வகை வாழ்வு முறைகள் {ஆசாரங்கள்} மற்றும் அவற்றின் கடமைகளைக் குறித்து உரையாடினீர். அதே போல மன்னர்களின் கடமைகளைக் குறித்தும் உரையாடினீர். பல்வேறு வகை வரலாறுகளையும், அவை தொடர்பான பல்வேறு காரியங்கள் குறித்தும் உரைத்தீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அறநெறி தொடர்பான பல்வேறு உரைகளையும் நான் உம்மிடம் இருந்து கேட்டிருக்கிறேன். எனினும், எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அதைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(2) ஓ! பாரதரே, அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதுபவர்கள் {ஜபம் செய்பவர்கள்} (தங்கள் நடைமுறையால்) அடையும் கனிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அத்தகைய மனிதர்களுக்குக் குறிப்பிடப்படும் கனிகள் என்னென்ன? அவர்கள் இறந்த பிறகு எந்த உலகத்திற்குச் செல்வார்கள்?(3) ஓ! பாவமற்றவரே, அத்தகைய அமைதியான {மந்திர} ஓதலுக்கு {ஜபத்திற்கு} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓதுவார் {ஜபிப்பவர்} என்ற சொல்லைக் கேட்கும்போது, அதன் மூலம் நான் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? அத்தகைய மனிதன், சாங்கிய, அல்லது யோக, அல்லது கர்ம விதிகளைப் பின்பற்றுபவனாகக் கருதப்பட வேண்டுமா?[1](4) அல்லது, அத்தகைய மனிதன் (மனோ) வேள்விகளுக்குரிய விதிகளை நோற்பவனாகக் கருதப்பட வேண்டுமா? ஓதுவார்களின் {ஜபிப்பவர்களின்} பாதை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்? அண்ட அறிவைக் கொண்டவரென என்னால் கருதப்படும் நீர், இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, யமன், காலன் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராமணருக்கு இடையில் என்ன நிகழ்ந்தது என்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது[2].(6) விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை அறிந்த தவசிகள், சாங்கியம், யோகம் என்ற இரு வழிமுறைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். இவற்றில், வேதாந்தம் என்றும் அழைக்கப்படும் முன்னதில் {சாங்கியத்தில்), அமைதியான ஓதல் {ஜபம்} என்பதைப் பொறுத்தவரை துறவே போதிக்கப்படுகிறது. (சடங்குகளில் இருந்து) விலகப் போதிக்கும் வேதங்களின் அறிவிப்புகள், அமைதி நிரம்பியவையாகவும், பிரம்மம் தொடர்பானவையாகவும் இருக்கின்றன[3].(7) நன்மை அடைய தவசிகளால் சுட்டப்படும் சாங்கியம் {ஞானம்} மற்றும் யோகம் ஆகிய இரு பாதைகளும், (அமைதியான ஓதல்களுக்கு) தொடர்பானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்கின்றன[4].(8)(அந்த இரு பாதைகளிலும்) அமைதியான ஓதல் {ஜபம்} தொடர்பு கொண்டிருக்கும் முறையையும் {பிரவிருத்தி தர்மத்தையும்}, அதன் காரணத்தையும் நான் இப்போது விளக்கப் போகிறேன். அமைதியான ஓதலை {ஜபத்தைப்} பொறுத்தவரையில், இவ்விரண்டிலும் {சாங்கியம் மற்றும் யோகம் ஆகியவற்றில்}, புலன்களைக் கட்டுப்படுத்துவது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கி) மனத்தை நிலைநிறுத்துவது;(9) வாய்மை, (புனித) நெருப்பைப் பராமரித்தல், தனிமையில் வசித்தல், தியானம், தவம், தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, நன்மை செய்வதில் மனநாட்டம், உணவில் அளவோடிருத்தல்,(10) உலகம் சார்ந்த பற்றுகளில் இருந்து விலகல், பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர்த்தல், அமைதி ஆகியன அவசியமாகும். இவை (மறுபிறவியில் இன்பநிலைக்கோ, சொர்க்கத்திற்கோ செல்வது குறித்த ஆசையின் கனிக்கு வழிவகுக்கும்) ஒரு வேள்விக்கான {ஜபயஜ்ஞத்திற்கான} செயல்களாகும். (செயல்களில் இருந்து) விடுபடுவது தொடர்பான நடைமுறையை {நிவிருத்தி தர்மத்தை} இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.[5](11)பிரம்மச்சரிய நோன்பை நோற்று {புனித மந்திரங்களை} ஓதுபவனின் செயல்கள் {ஜபயஜ்ஞகர்மம்} நிற்கும் வகையைக் குறித்து நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். அத்தகைய மனிதன், என்னால் (ஏற்கனவே) சொல்லப்பட்ட ஒவ்வொரு வழியின்படியும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்[6].(12) துறவுப் பாதையில் நடக்கும் ஒருவன், புறம் மற்றும் அகச் சார்புகள் இரண்டையும் விடுவதில் முனைய வேண்டும்.(13) குசப்புல்லில் அமர்ந்து, கையில் குசத்துடன், அவனது சடாமுடியை குசத்தால் கட்டி, தன்னைச் சுற்றிலும் குசத்தை வைத்துக் கொண்டு அவன் குச ஆடைகளை உடுக்க வேண்டும்.(14) உலகம் சார்ந்த அனைத்தையும் வணங்கும் அவன், அவற்றில் இருந்து விடுபட்டு, ஒருபோதும் அவற்றை நினைக்காமல் இருக்க வேண்டும். தன் மனத்தின் துணையுடன் சமநிலையை அடையும் அவன், தன் மனத்தை அந்த மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும்.(15)உயர்ந்த நன்மையைத் தரும் (காயத்ரி என்ற) தொகுப்பை உரைத்துக் கொண்டும், அறிவின் துணையுடன் அவன் பிரம்மத்தை மட்டுமே தியானிக்க வேண்டும். அதன் பிறகு அவன், அதையும் கைவிட்டு, குவிந்த தியானத்தில் ஈர்க்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.(16) அவன் ஓதும் காயத்ரி {மந்திர} பலத்தைச் சார்ந்திருப்பதன் விளைவாக, குவிந்த தியானமானது தானே அவனுக்குக் கைக்கூடும். அவன் தவங்களின் மூலம் ஆன்மத் தூய்மை, தற்கட்டுப்பாடு, வெறுப்பின்மை மற்றும் ஆசைகளை அடைகிறான்.(17) பற்று மற்றும் மாயையிலிருந்து விடுபட்டு, (வெப்பம், குளிர், இன்ப துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கங்கள் அனைத்திற்கும் மேம்படும் அவன், ஒருபோதும் வருத்தம் அடையாமலும், உலகப் பொருட்களை நோக்கி இழுக்கப்படாமலும், ஒரு போதும் துன்பமடையாமலும் இருக்கிறான். அவன் தன்னைச் செயல்படுபவனாகவோ, தன் செயல்களின் விளைவுகளாலும் இன்புறுபவனாகவோ, துன்புறுபவனாகவோ கருதிக் கொள்வதில்லை.(18) தன்னலத்தின் மூலம் அவன் ஒருபோதும் வேறெதிலும் தன் மனத்தை நிலைநிறுத்துவதில்லை. செல்வத்தை அடைவதில் ஈடுபடாமல் இருக்கும் அவன், பிறரை அலட்சியம் செய்வதையோ, அவமதிப்பதையோ தவிர்க்கிறானேயன்றி செயல்படுவதைத் தவிர்ப்பதில்லை.(19)

அவன் தியானத்தில் ஈடுபடவே செயல்படுகிறான்; அவன் தியானத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான, மாறாத தியான நாட்டம் கொண்டவனாக இருக்கிறான். அவன் தியானத்தின் மூலம் குவிந்த தியான {ஸமாதி} நிலையை அடைந்து, படிப்படியாக {காலகர்மத்தில்} தியானத்தையே கைவிடுகிறான்.(20) அந்நிலையில் அவன் அனைத்துப் பொருட்களையும் கைவிடுவதால் உண்டாகும் இன்பநிலையை அனுபவிக்கிறான். ஆசையின் கோட்பாடுகளில் முழுமையான திறன் பெற்ற அவன் தன் உயிர் மூச்சுகளை {ப்ராணன்களைக்} கைவிட்டுப் பிரம்மவுடலில் {ப்ரம்மரூபமானசரீரத்தில்} நுழைகிறான்.(21) அல்லது, அவன் பிரம்மவுடலுக்குள் நுழைய விரும்பவில்லையெனில், உடனே அவன் பிரம்மலோகத்திற்கு மேல்நோக்கி {தேவயானமென்னும் மார்க்கத்தில்} சென்று, மறுபிறப்பென்பதை மீண்டும் ஒருபோதும் அடையாமல் இருக்கிறான்.(22) அமைதித்தன்மையை {ஆத்மஞானத்தை} அடைந்து, அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்ட அத்தகைய மனிதன், தன் நுண்ணறிவைச் சார்ந்திருந்து, தூயதும், அழிவற்றதும், ஒரு களங்கமும் அற்றதுமான ஆன்மாவை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(23)

ஜபமும் மறுபிறவிகளும்! – சாந்திபர்வம் பகுதி – 197- விதிப்படி ஜபிக்காதவன் அடையும் நரகங்களை யுதிஷ்டிரனுக்குப் பட்டியலிட்ட பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபம் செய்பவன் அடையும் உயர்ந்த கதியை நீர் சொன்னீர். இது மட்டுமே அவர்களது ஒரே கதியா? அல்லது அவர்கள் அடையக்கூடிய வேறேதும் கதிகள் உள்ளனவா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பலமிக்க ஏகாதிபதியே, ஓ! மனிதர்களில் காளையே, ஜபம் செய்பவர்கள் அடையும் கதியையும், அவர்கள் மூழ்கும் பல்வேறு வகையான நரகங்களையும் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(2) ஜபம் செய்யும் எந்த மனிதன், வழிமுறைப்படி விதிக்கப்பட்டுள்ள நடத்தையில் நடந்து கொள்ள வில்லையோ, எவன் விதிக்கப்பட்ட சடங்கு, அல்லது ஒழுக்க நடைமுறையில் முழுமையாக நடந்து கொள்ள வில்லையோ, அவன் நரகத்திற்குச் செல்வான்[1].(3) நம்பிக்கையில்லாமல் ஜபம் செய்பவன், தன் செயல்பாட்டில் நிறைவில்லாதவன், அதில் எந்த மகிழ்ச்சியும் கொள்ளாதவன் ஐயமில்லாமல் நரகத்திற்குச் செல்வான்.(4) தங்கள் இதயங்களில் செருக்குடன் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நரகத்திற்கே செல்வார்கள். ஜபம் செய்பவன் பிறரை அலட்சியம் செய்பவனாகவும், அவமதிப்பவனாகவும் இருந்தால், அவன் நரகத்திற்குச் செல்வான்.(5) ஜபம் செய்யும் மனிதன், உணர்வு முழுக்க ஆதிக்கத்தின் கீழும், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தின் கீழும் அதில் ஈடுபட்டால், தன் இதயத்தில் இருக்கும் அந்தப் பொருட்கள் அனைத்தையும் அடைவான்[2].(6)தெய்வப் பெயரைக் கொண்ட பண்புகளில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து ஜபம் செய்பவனும் நரகத்திற்கே சென்று, அதில் இருந்து ஒருபோதும் விடுபடமாட்டான்[3].(7) (உலகம் சார்ந்த நோக்கங்களான செல்வம், மனைவியர் போன்ற) பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழ் ஜபம் செய்பவன், தன் இதயத்தில் நிலைபெற்றிருக்கும் அந்த நோக்கங்களை அடைவான்.(8) தீய அறிவும், தூய்மையற்ற ஆன்மாவும் கொண்டு, நிலையில்லா மனத்துடன் பணியில் ஈடுபட்டு ஜபம் செய்யும் ஒருவன், நிலையற்ற கதியை அடைவான், அல்லது நரகத்திற்குச் செல்வான்.(9) ஞானமில்லாதவனும், மூடனுமான ஒருவன் ஜபம் செய்தால், மலைப்படையவோ, மாயைவசப்படவோ செய்வான்; அத்தகைய மாயையின் விளைவால் நரகத்திற்குச் சென்று வருந்துவான்.(10) உறுதியான இதயம் கொண்ட ஒரு மனிதன், முழு ஒழுக்கத்துடன் ஜபம் செய்தாலும், தங்கள் தீய குணத்தால், நேர்மையான நம்பிக்கையில்லாமல் பலவந்தமாகப் பற்றுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு {ஜப} நிறைவை அடையாமல் இருந்தால், அவனும் நரகத்திற்கே செல்வான்” என்றார் {பீஷ்மர்}.(11)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபம் செய்யும் ஒருவன், (படைக்கப்பட்ட எந்தப் பொருளையும் போலல்லாமல்) தன்னியல்பில் நிலைத்திருப்பதும், உயர்ந்ததும், விவரிக்க முடியாததும், புலப்பட முடியாததும் {நினைத்துப் பார்க்க முடியாததும்}, ஜபம் மற்றும் தியானத்தின் காரியமாக அமைந்திருக்கும் ஓம் எனும் அசையில் வசிப்பதுமான சாரத்தை அடையும்போது, (உண்மையில், ஜபம் செய்பவர்கள் பிரம்ம நிலையை அடையும்போது), அவர்கள் ஏன் உடல்கொண்ட வடிவங்களில் மீண்டும் மறுபிறப்படைய வேண்டியிருக்கிறது” என்று கேட்டான்.(12)

பீஷ்மர், “உண்மை அறிவும், ஞானமும் இல்லாததன் விளைவால் ஜபம் செய்பவர்கள் பல்வேறு நரகங்களை அடைகிறார்கள். ஜபம் செய்பவர்கள் பின்பற்றும் ஒழுக்கங்கள் நிச்சயம் மிக மேன்மையானவையாகும். எனினும், நான் சொன்னவை அனைத்தும் குற்றங்களால் நேர்பவையாகும்” என்றார் {பீஷ்மர்}.(13)

பரலோகம்! – சாந்திபர்வம் பகுதி – 198-பரலோகத்திற்கும் பிற உலகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும், பரலோகத்தைத் தவிர ஜபிப்பவன் அடையும் வேறு எந்த உலகமும் நரகமே என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபிப்பவன் எவ்விதமான நரகத்தை அடைகிறான்? ஓ! மன்னா {பீஷ்மரே}, இஃதை அறிய ஆவலாக இருகிறேன். இது குறித்து என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ நீதிதேவனின் {தர்மதேவன்/ எமதர்மன்} ஒரு பகுதியில் இருந்து எழுந்தாய் {பிறந்தாய்}. நீ இயல்பாகவே நீதியை நோற்பவனாக இருக்கிறாய். ஓ! பாவமற்றவனே, நீதியை அடிப்படையாகக் கொண்ட இவ்வார்த்தைகளைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு கூறுகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டவையும், பல்வேறு தன்மைகளையும், பல்வேறு கனிகளையும் உண்டாக்கவல்லவையும், பெரும் சிறப்பு வாய்ந்தவையும், செலுத்துபவர்களின் விருப்பங்களுக்கு ஏற்பச் செயல்படும் தேர்களைக் கொண்டவையும், தங்கத் தாமரைகள் பளபளக்கும் பல்வேறு இன்பத் தோட்டங்களைக் கொண்டவையும், அழகிய மாளிகைகள் மற்றும் நரகங்களைக் கொண்டவையும், உயர் ஆன்மத் தேவர்களுக்குச் சொந்தமானவையும், நான்கு லோகபாலர்கள், சுக்ரன், பிருஹஸ்பதி, மருத்துகள், விஸ்வதேவர்கள், சாத்யர்கள், அசுவினிகள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள் மற்றும் பிற தேவர்களுக்குச் சொந்தமானவையுமான உலகங்களேகூட, பரமாத்மாவின் உலகத்தோடு ஒப்பிடப்படுகையில் நரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.(3-6)

இறுதியாகப் பேசப்பட்ட உலகமானது, (இழிந்த நிலைக்கு மாறிவிடும் என்ற) அச்சமேதும் இல்லாததும், படைக்கப்படாததும் (அதனால் உண்மை இயல்பைக் கொண்டதும்), (அறியாமை, மாயை போன்ற) துன்பமேதும் இல்லாததும், ஏற்புடைய, அல்லது ஏற்கப்படாத ஏதும் இல்லாததும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதும், (அடிப்படையான ஐந்து பூதங்கள், புலன்கள், மனம், புத்தி ஆகிய) {புரிபஷடகமென்னும்} எட்டில் இருந்து விடுபட்டதும், (அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் செயல் ஆகியவற்றுக்குள்ள வேறுபாடுகள்) மூன்றும் இல்லாததும்;(7) (பார்த்தல், கேட்டல், நினைத்தல், அறிதல் என்ற) நான்கு பண்பியல்களில் இருந்து விடுபட்டைதும், (அறிவின்) நான்கு வகைக் காரணங்கள் இல்லாததும், இன்பம், திளைப்பு, கவலை, நோய் ஆகியவை இல்லாததுமான ஓர் உலகமாகும்[1].(8)(கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் என்ற வடிவங்களில் உள்ள) காலம் அங்கே பயன்பாட்டுக்காக எழுகிறது. அங்கே காலம் ஆட்சியாளனாக இருப்பதில்லை. இந்த உயர்ந்த உலகமே {பரலோகமே / பரமாத்மாவே} காலத்திற்கும், சொர்க்கத்திற்கும் ஆட்சியாளனாக இருக்கிறது.(9) ஜபிப்பவன் எவன் (அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் உள்ளிழுத்துக் கொண்டு அந்த) ஆன்மாவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறானோ, அவன் அங்கே செல்கிறான். அவன் அதற்குபிறகு எந்தக் கவலையையும் உணரமாட்டான். இதுவே பரலோகம் என்றழைக்கப்படுகிறது. (நான் உன்னிடம் முதலில் பேசிய) பிற உலகங்களே நரகங்கள் ஆகும்.(10) நரகம் என்றழைக்கப்படும் உலகங்கள் அனைத்தையும் நான் உன்னிடம் சொல்லிவிடவில்லை. உண்மையில், அந்த முதன்மையான உலகத்தோடு {பரலோகத்தோடு} ஒப்பிடுகையில், பிற உலகங்கள் அனைத்தும் நரகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன” என்றார் {பீஷ்மர்}.(11)

ஜப வலிமை! – சாந்திபர்வம் பகுதி – 199-ஜபத்தின் வலிமையை விளக்க ஜபம் செய்த ஒரு பிராமணர், தன்மன், மன்னன் இக்ஷ்வாகு, காலன், மிருத்யு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “காலம், மிருத்யு, யமன், இக்ஷ்வாகு மற்றும் ஒரு பிராமணருக்கு இடையில் நடந்த சச்சரவு ஒன்றை நீர் முன்னர்க் குறிப்பிட்டீர். அந்தக் கதையை முழுமையாக உரைப்பதே உமக்குத் தகும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் பேசிக் கொண்டிருக்கும் காரியம் தொடர்புடையதும், சூரியனின் மகனான இக்ஷ்வாகு, ஒரு குறிப்பிட்ட பிராமணர், காலம் {காலதேவன்}, மிருத்யு {யமன்}ஆகியோருக்கு இடையில் நடந்ததுமான உரையாடலைச் சொல்லும் இந்தக்கதை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) என்ன நடந்தது என்பதையும், அவர்களுக்குள் நடைபெற்ற அந்த உரையாடலையும், அஃது எங்கு நடைபெற்றது என்பதையும் என்னிடம் இருந்து கேட்பாயாக.(3) பெரும்புகழையும், பக்திமானுக்குரிய நடத்தையையும் கொண்ட குறிப்பிட்ட பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ஜபம் செய்பவராக இருந்தார். பெரும் ஞானத்தைக் கொண்டிருந்த அவர், (வேதங்களின்) ஆறு அங்கங்களையும் அறிந்தவராக இருந்தார். அவர் குசிக குலத்தைச் சேர்ந்தவராகவும், பிப்பலாதரின் மகனாகவும் இருந்தார்[1].(4) அவர் (தமது தவங்களின் மூலமாக) அங்கங்களின் ஆன்ம உட்பொருளை அடைந்தார்[2]. இமயத்தின் அடிவாரத்தில் வசித்து வந்த அவர் வேதங்களுக்குத் தம்மை அர்ப்பணித்தவராக இருந்தார்.(5)காயத்ரி தொகுப்பை அமைதியாக ஜபித்து வந்த அவர், பிரம்மத்தை அடைவதற்காகக் கடும் தவங்களைச் செய்து வந்தார். அவர் நோன்புகளிலும், உபவாசங்களிலும் ஈடுபட்டு வரும்போதே ஓராயிரம் {1000} வருடங்கள் கடந்தன.(6) (காயத்ரி அல்லது சாவித்ரி) தேவரி அவர் முன்பு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, “நான் உம்மிடம் நிறைவுகொண்டேன்” என்றாள். அந்தப் பிராமணரோ அமைதியாக அந்தப் புனித மந்திரம் உரைப்பதைத் தொடர்ந்தபடியே அந்தத் தேவியிடம் ஒருவார்த்தையும் பேசாதிருந்தார்.(7) அவரிடம் இரக்கமடைந்த அந்தத் தேவி மிகவும் நிறைவடைந்தவளானால். அப்போது அந்த வேதங்களின் மூதன்னை, அந்தப் பிராமணர் ஈடுபட்டிருந்த ஜபத்தை மெச்சினாள்.(8) அந்தப் பிராமணர் (அந்த நாளைக்கான) ஜபத்தை நிறைவு செய்து எழுந்து, தலை வணங்கி அந்தத் தேவியின் பாதங்களில் தம்மை நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்திக் கொண்டார்.

உயர் ஆன்மா கொண்டவரான அந்த ஜபம் செய்பவர், அந்தத் தேவியிடம்,(9) “ஓ! தேவி, என் நற்பேற்றினாலேயே நீ என்னிடம் நிறைவு கொண்டு, எனக்குக் காட்சியளிக்கவும் வந்தாய். உண்மையில், நீ என்னிடம் நிறைவு கொண்டவளாக இருந்தால், என் இதயம் ஜபத்திலேயே இன்புறுவதாக இருக்க வேண்டும் என்ற வரத்தையே நான் கேட்பேன்” என்றார்.(10)

சாவித்ரி {காயத்ரி}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் என்ன கேட்கிறீர்? நான் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் யாது? ஓ! ஜபிப்பவர்களில் முதன்மையானவரே, நீர் விரும்பும் அனைத்தையும் என்னிடம் சொல்வீராக” என்று கேட்டாள்.(11)

இவ்வாறு அந்தத் தேவியால் சொல்லப்பட்டவரும், கடமைகளை அறிந்தவருமான அந்தப் பிராமணர், “ஜபம் செய்வதில் எனக்குள்ள விருப்பமானது ஒவ்வொரு கணமும் அதிகரிக்க வேண்டும்.(12) ஓ! மங்கலகரமான தேவியே, என் மனத்திற்குள் ஈர்க்கப்படும் ஸமாதி நிலையானது இன்னும் அதிகமாக முழுமை பெற வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தேவி இனிமையாக, “நீர் விரும்பியவாறே ஆகட்டும்” என்றாள்.(13)

அந்தப் பிராமணருக்கு நன்மை செய்ய விரும்பிய அந்தத் தேவி மீண்டும் அவரிடம், “பெரும் பிராமணர்களும் செல்லத்தக்க நரகத்திற்கு நீர் செல்லமாட்டீர்.(14) படைக்கப்படாததும், அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுபட்டதுமான பிரம்ம லோகத்திற்கு நீர் செல்வீர். நான் இப்போது செல்கிறேன், நீர் என்னிடம் கேட்டது நடக்கும்.(15) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், {மெய்மறந்த நிலையில்} குவிந்த கவனத்துடனும் ஜபித்துக் கொண்டிருப்பீராக. தர்மதேவனே உம்மிடம் நேரில் வருவான். காலம், மிருத்யு, யமன் ஆகியோர் உம்மிடம் வருவார்கள். அறநெறி குறித்த கேள்வி ஒன்றின் நிமித்தமாக உமக்கும் அவர்களுக்குமிடையில் ஒரு சச்சரவு எழும்” என்றாள் {சாவித்ரி தேவி}”.(16)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தேவி தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றாள். அந்தப் பிராமணர் இன்னும் ஓராயிரம் தேவ வருடங்களுக்கு ஜபத்தில் ஈடுபட்டார். கோபத்தைக் கட்டுப்படுத்தி, எப்போதும் சுயத்தையும் கட்டுப்படுத்திய அவர், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடனும், வன்மத்தில் இருந்தும் விடுபட்டவராகவும் இருந்தார்.(17) நுண்ணறிவு மிக்கப் பிராமணருடைய நோன்பின் நிறைவில் அவரிடம் நிறைவடைந்த தர்மன் {தர்மதேவன்}, அந்த மறுபிறப்பாளரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(18)

தர்மன், “ஓ! மறுபிறப்பாளரே, தர்மனான என்னைப் பாரும். உம்மைக் காண்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நீர் ஈடுபட்டுவரும் இந்த ஜபத்திற்கான வெகுமதியை வென்றுவிட்டீர். அந்த வெகுமதியானது என்ன என்பதை என்னிடம் கேட்பீராக.(19) தேவர்கள் அல்லது மனிதர்கள் தொடர்புடைய அனைத்து இன்பலோகங்களையும் நீர் வென்றிருக்கிறீர். ஓ! நல்ல மனிதரே, தேவர்களின் வசிப்பிடங்கள் அனைத்திற்கும் மேலாக நீர் உயர்ந்திருப்பீர்.(20) ஓ! தவசியே, நீர் உமது உயிர் மூச்சை விட்டு, நீர் விரும்பிய உலகங்களுக்குச் செல்வீராக. உமது உடலைக் கைவிடுவதன் மூலம் நீர் இன்ப உலகங்கள் பலவற்றை நீர் வெல்வீர்” என்றான் {தர்மதேவன்}.(21)

அந்தப் பிராமணர், “நீர் சொல்லும் அந்த இன்ப உலகங்களில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? ஓ! தர்மா, நீர் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பலமிக்கத் தலைவா, இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படும் இவ்வுடலை நான் கைவிடமாட்டேன்” என்றார்.(22)

தர்மன், “ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது உடல் நிச்சயம் கைவிடப்பட வேண்டும். ஓ! பிராமணரே, நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. அல்லது, ஓ! பாவமற்றவரே, உமக்கு விருப்பமுள்ள வேறு எதையும் எங்களுக்குச் சொல்வீராக என்றான்.(23)

அந்தப் பிராமணர், “ஓ! பலமிக்கத் தலைவா, என்னுடைய இந்த உடல் இல்லாமல் நான் சொர்க்கத்தில் வசிக்க விரும்பவில்லை. ஓ! தர்மா, என்னைவிட்டுச் செல்வாயாக. என்னுடைய உடல் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை” என்றார்.(24)

தர்மன், “(இவ்வாறு) இந்த உம்முடைய உடலில் உமது இதயத்தை நிலைக்கச் செய்யாமல் அதைக் கைவிட்டு மகிழ்ச்சியை அடைவீராக. ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} இருந்து விடுபட்ட உலகங்களுக்குச் செல்வீராக. உண்மையில், நீர் அங்கே சென்றால எந்தத் துன்பத்தையும் உணர மாட்டீர்” என்றான்.(25)

அந்தப் பிராமணர், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் ஜபிப்பதிலேயே பேரின்பம் கொள்கிறேன். நீ சொல்லும் அந்த அழிவற்ற உலகங்களில் எனக்கு என்ன தேவை இருக்கிறது? உண்மையில், ஓ! பலமிக்கத் தலைவா, என்னுடைய இந்த உடல் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை” என்றார்.(26)

தர்மன், “ஓ! மறுபிறப்பாளரே, உமது உடலைக் கைவிட நீர் விரும்பவில்லையெனில், உம்மை அணுகிக் கொண்டிருக்கும் காலன், மிருத்யு, யமன் ஆகியோரைக் காண்பீராக” என்றான்”.(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! அருளப்பட்ட மன்னா {யுதிஷ்டிரா} தர்மன் இதைச் சொன்னதும், (இந்த உலகத்தில் இருந்து அனைத்து உயிரினங்களையும் பறித்துச் செல்பவர்களான) விவஸ்வானின் மகன் (யமன்), காலன் மற்றும் மிருத்யு ஆகிய மூவரும் அந்தப் பிராமணரை அணுகி, அவரிடம் இவ்வாறு பேசினார்கள்.(28)

யமன், “நானே யமன். உம்மால் நன்கு செய்யப்பட்ட இந்தத் தவங்களுக்காகவும், நீர் நோற்று வந்த பக்தி ஒழுக்கத்திற்காகவும் உமக்கு உயர்ந்த வெகுமதி காத்திருக்கிறது” என்றான்.(29)

காலன், “உண்மையில், நீர் செய்து வந்த ஜபத்தின் நிறைவாக உயர்ந்த வெகுமதியை வென்றிருக்கிறீர். நீர் சொர்க்கத்திற்கு உயர வேண்டிய காலம் வந்துவிட்டது. நானே காலன், நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றான்.(30)

மிருத்யு, “ஓ! அறமறிந்தவரே, நான் உரிய வடிவைக் கொண்ட மிருத்யுதேவியாவேன். ஓ! பிராமணரே, காலத்தால் தூண்டப்பட்டு உம்மைச் சுமந்து செல்வதற்காகவே நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றாள்.(31)

அந்தப் பிராமணர், “சூரியனின் மகனுக்கும் {யமனுக்கும்}, உயர் ஆன்மக் காலனுக்கும், மிருத்யுதேவிக்கும், தர்மனுக்கும் நல்வரவு. உங்கள் அனைவருக்கும் நான் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்டார்”.(32)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தச் சந்திப்பில், அந்தப் பிராமணர் அவர்களுடைய கால்களைக் கழுவிக் கொள்வதற்கு நீரும், அர்க்யத்திற்குத் தேவையான வழக்கமான பொருட்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். பிறகு, மிகவும் நிறைவடைந்த அவர், அவர்களிடம், “என் வலிமையைக் கொண்டு உங்கள் அனைவருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.(33)

சரியாக அதே நேரத்தில், புனித நீர்நிலைகள் மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த (மன்னன்) இக்ஷ்வாகு, தேவர்கள் ஒன்றுகூடியிருந்த அந்த இடத்திற்கு வந்தான்.(34) அரசமுனியான அந்த இக்ஷ்வாகு தலைவணங்கி அவர்கள் அனைவரையும் வழிபட்டான். மன்னர்களில் சிறந்த அவன் பிறகு அவர்கள் அனைவரின் நலன் குறித்தும் விசாரித்தான்.(35) அந்தப் பிராமணர் மன்னனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} ஓர் இருக்கையையும், அவனது பாதம் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான அர்க்யமும் கொடுத்தார். அடுத்ததாக வழக்கமான அன்பு விசாரிப்புகளுக்குப் பிறகு அவர்,(36) “ஓ! பெரும் ஏகாதிபதியே, உனக்கு நல்வரவு. உன் விருப்பங்கள் அனைத்தையும் என்னிடம் சொல்வாயாக. உன்னதமானவனான நீ, என் வலிமையைக் கொண்டு நான் உனக்கு நிறைவேற்ற வேண்டியற்றை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(37)

மன்னன் {இக்ஷ்வாகு}, “நான் ஒரு மன்னனாவேன். நீரோ நன்கறியப்பட்ட ஆறு கடமைகளைச் செய்யும் ஒரு பிராமணராவீர். (நான் கேட்க முடியாது), {எனவே} நான் உமக்குக் கொஞ்சம் செல்வம் தருகிறேன். அது நன்கறியப்பட்டது. நான் உமக்கு எவ்வளவு தரவேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(38)

அந்தப் பிராமணர், “ஓ ஏகாதிபதி, இரு வகைப் பிராமணர்கள் இருக்கிறார்கள். செயலுக்கு அடிமை, செயலின்மை என்ற இருவகை அறநெறிகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், கொடைகள் எதையும் ஏற்பதை நான் விலக்குகிறேன்.(39) ஓ! மன்னா, செயல் மற்றும் ஏற்பு ஆகிய கடமைகளுக்கு அடிமையாக இருப்போருக்கு அந்தக் கொடைகளை அளிப்பாயாக. எனவே, நான் கொடையாக எதையும் ஏற்க மாட்டேன். மறுபுறம், உனக்கு எது நன்மையானது என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்? உண்மையில், நான் உனக்கு என்ன தர வேண்டும்? ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, என் தவத்தின் மூலம் நான் அதை நிறைவேற்றுகிறேன், சொல்வாயாக” என்று கேட்டார்.(40)

மன்னன் {இக்ஷ்வாகு}, “நான் ஒரு க்ஷத்திரியன். கொடுப்பீர் என்ற சொல்லை எவ்வாறு சொல்வது என்பதை நான் அறியமாட்டேன். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நாங்கள் கேட்கக் கூடிய ஒன்றே ஒன்று போரை எங்களுக்குக் கொடுப்பீராக என்பது மட்டும்தான்” என்றான்.(41)

பிராமணர், “நீ உன் வகைக்கான கடமையைச் செய்வதில் நிறைவுடன் இருக்கிறாய். அதே போலவே, ஓ! மன்னா, நான் என் கடமைகளைச் செய்வதில் நிறைவுடன் இருக்கிறேன். எனவே, நம்மிடைய மிகச் சிறிய வேறுபாடுதான் இருக்கிறது. நீ விரும்பியவாறு செயல்படுவாயாக” என்றார்.(42)

மன்னன், “நீர், “என் வலிமைக்குத் தகுந்ததை நான் உனக்குக் கொடுப்பேன்” என்ற வார்த்தைகளை முதலில் சொன்னீர். எனவே, ஓ! மறுபிறப்பாளரே, “(நீர் செய்த) ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுப்பீராக” என்பதை நான் வேண்டுகிறேன்” என்றான்.(43)

பிராமணர், “நீ எப்போதும் போரையே கேட்பாய் என்று தற்பெருமை பேசிக் கொண்டிருந்தாய். பிறகு ஏன் நீ என்னிடம் போரைக் கேட்கவில்லை?” என்று கேட்டார்.(44)

மன்னன், “பிராமணர்கள், பேச்செனும் இடியைத் தரித்தவர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் கர வலிமையைக் கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, ஓ! கல்விமானான பிராமணரே, உனக்கும் எனக்கும் இடையில் இந்தச் சொற்போர் தொடங்கியிருக்கிறது” என்றான்.(45)

பிராமணர், “என்னைப் பொறுத்தவரையில், இன்று என்தீர்மானமும் அதுவேதான். என் வலிமைக்குத்தக்க நான் என்ன உனக்குக் கொடுக்க வேண்டும்? ஓ! மன்னர்களின் மன்னா, சொல்வாயாக, என் செல்வத்தைக் கொண்டு நான் உனக்குக் கொடுப்பேன். தாமதிக்காதே” என்றார்.(46)

மன்னன், “உண்மையில், நீர் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென விரும்பினால், இந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக ஜபம் செய்ததன் மூலம் நீர் ஈட்டிருக்கும் கனிகளை எனக்குக் கொடுப்பீராக” என்று கேட்டான்.(47)

அந்தப் பிராமணர், “நான் செய்த ஜபங்களின் உயர்ந்த கனியை எடுத்துக் கொள்வாயாக. உண்மையில், அந்தக் கனியில் பாதியை எந்த ஐயுணர்வுமின்றி எடுத்துக் கொள்வாயாக.(48) அல்லது, ஓ! மன்னா, நீ விரும்பினால் என் ஜபக்கனிகளை மொத்தமாகவும் எந்த ஐயுணர்வின்றி எடுத்துக் கொள்வாயாக” என்றார்.(49)

மன்னன், “நீர் அருளப்பட்டிருப்பீராக. நான் உம்மிடம் வேண்டிய உமது ஜபங்களின் கனிகளுக்கான எந்தத் தேவையும் எனக்கு இல்லை. உமது தலையின் மேல் அருள் நிலைக்கட்டும். நான் உம்மைவிட்டுச் செல்கிறேன். எனினும், (உமது ஜபங்களின்) அந்தக் கனிகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(50)

அதற்கு அந்தப் பிராமணர், “நான் வென்ற கனிகள் குறித்த எந்த ஞானமும் எனக்குக் கிடையாது. எனினும், ஜபத்தின் மூலம் நான் அடைந்த அந்தக் கனிகளை நான் கொண்டிருக்கிறேன். தர்மன், காலன், யமன், மிருத்யு ஆகியோர் (அந்தக் கொடைச் செயலின்) சாட்சிகளாவர்” என்றார்.(51)

மன்னன், “இந்த நோன்புகளின் மூலம் நீர் அடைந்த அந்தக் கனிகளால் எனக்கு என்ன செய்ய முடியும்? உமது ஜபங்களின் கனிகள் என்ன என்பதை எனக்கு உம்மால் சொல்ல முடியவில்லை என்றால், நிச்சயம் எனக்கு விருப்பமில்லாத அந்தக் கனிகள் உமதாகவே இருக்கட்டும்” என்றான்.(52)

பிராமணர், “நான் (உன்னிடம் இருந்து) வேறெதையும் ஏற்கமாட்டேன். ஓ! அரச முனியே, உன் வார்த்தைகளும், என் வார்த்தைகளும் உண்மையாக வேண்டும்.(53) என் ஜபத்தைப் பொறுத்தவரையில், சிறப்பான எந்த ஒரு விருப்பத்தையும் நான் பேணி வளர்த்ததில்லை. ஓ! மனிதர்களில் புலியே, பிறகு எவ்வாறு, அந்த ஜபங்களுக்கான கனிகளைக் குறித்த எந்த அறிவையும் நான் கொண்டிருப்பேன்?(54) நீ, “கொடுப்பீர்” என்றாய், நானும், “நான் கொடுத்தேன்” என்றேன். என்னால இந்த வார்த்தைகளைப் பொய்த்துக் கொள்ள முடியாது. வாய்மை காப்பாயாக. அமைதியாய் இருப்பாயாக.(55) ஓ! மன்னா, நீ என் வார்த்தையை மறுத்தால் பொய்மை மூலம் உனக்கு உண்டாகும் பாவம் பெரியதாக இருக்கும்.(56) ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, உண்மையற்ற ஒன்றைச் சொல்வது உனக்குத் தகாது. அதேபோல, நானும் நான் சொன்னதைப் பொய்த்துக் கொள்ள ஒருபோதும் துணியமாட்டேன்.(57) இதற்கு முன்பே, எந்தத் தயக்கமும் இல்லாமல் “நான் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டேன். எனவே, நீ வாய்மையில் உறுதியுள்ளவனாக இருந்தால், என் கொடையை ஏற்பாயாக.(58) ஓ! மன்னா, நீ இங்கே வந்து என் ஜபங்களின் கனிகளை வேண்டினாய். எனவே, நீ வாய்மையில் உறுதியுள்ளவனாக இருந்தால், நான் கொடுத்ததைப் பெற்றுக் கொள்வாயாக.(59) பொய்மைக்கு அடிமையாக இருப்பவனுக்கு இம்மையும் இல்லை, மறுமையும் இல்லை. அத்தகைய மனிதன் (இறந்து போன தன்) மூதாதையர்களை மீட்பதில் தவறுகிறான். அவ்வாறிருக்கையில், (பிறக்கப் போகும் அவனுடைய) வாரிசுக்கு நன்மை செய்வதால் அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(60)

ஓ! மனிதர்களில் காளையே, வேள்விகள், கொடைகள், நோன்புகள், அறச் சடங்குகள் ஆகியனவும் (ஒரு மனிதனைத் தீமையிலும், நரகத்திலும் இருந்து) இம்மையிலும், மறுமையிலும் மீட்பதில் வாய்மையை விடச் சிறந்தவை கிடையாது.(61) உன்னால் செய்யப்பட்ட தவங்கள் அனைத்தும், எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ செய்யப்போகும் தவங்கள் அனைத்தும் சிறப்பில் வாய்மையைவிடப் பெரியன கிடையாது.(62) வாய்மையே அழிவில்லா பிரம்மமாகும் {பரமாத்மரூபமாகும்}. வாய்மையே அழிவில்லாத தவமாகும். வாய்மையே அழிவல்லாத வேள்வியாகும். வாய்மையே அழிவில்லாத வேதமாகும்.(63) வாய்மை வேதங்களில் விழித்திருக்கிறது {விளங்கிக் கொண்டிருக்கிறது}. வாய்மையுடன் பிணைக்கப்பட்ட கனிகளே உயர்ந்தவையாகச் சொல்லப்படுகின்றன. வாய்மையிலிருந்து அறமும், தற்கட்டுப்பாடும் எழுகின்றன. அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன {வாய்மையிலேயே நிலைபெற்றிருக்கின்றன}.(64) வாய்மையே வேதங்களும், அவற்றின் அங்கங்களுமாகும். வாய்மையே அறிவாகும். வாய்மையே விதியாகும். வாய்மையே நோன்புகளும், உபவாசங்களுமாகும். வாய்மையே தொடக்கச் சொல்லான ஓம் ஆகும் {ஓங்காரமானது ஸத்யமாகவேயிருக்கிறது}.(65)

வாய்மையே உயிரினங்களின் தோற்றமாகும். வாய்மையே அவற்றின் சந்ததியாகிறது. வாய்மையின் மூலமே காற்று {வாயு} நகர்கிறது. வாய்மையின் மூலமே சூரியன் வெப்பத்தைக் கொடுக்கிறது.(66) வாய்மையின் மூலமே நெருப்பு எரிகிறது. வாய்மையிலேயே சொர்க்கமும் நிலைபெற்றிருக்கிறது. வாய்மையே, வேள்வி, தவம், வேதங்கள், சாம வேத சொற்கள்[3], மந்திரங்கள் மற்றும் சரஸ்வதி ஆகும்.(67) ஒரு காலத்தில் வாய்மையும், அனைத்து அறச்சடங்குகளையும் தராசின் இரு தட்டுகளில் நிறுத்தப்பட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். இரண்டையும் எடை பார்த்தபோது, வாய்மையிருந்த பக்கமே கனம் அதிகமாக இருந்தது.(68) எங்கே வாய்மை இருக்குமோ அங்கே அறம் இருக்கிறது. வாய்மையின் மூலமே அனைத்தும் அதிகரிக்கிறது. ஓ! மன்னா, பொய்மையின் களங்கம் கொண்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் விரும்புகிறாய்?(69) வாய்மையில் உறுதியுடன் இருப்பாயாக. ஓ! ஏகாதிபதி தவறாகச் செயல்படாதே. “(எனக்குக்) கொடுப்பீர்” என்று நீ சொன்ன வார்த்தைகளே ஏன் பொய்யாக்கப் போகிறாய்?(70) ஓ! ஏகாதிபதி, நான் உனக்குக் கொடுத்த என் ஜபங்களுக்கான கனிகளை நீ ஏற்க மறுத்தால், நீ அறத்தில் இருந்து வீழ்ந்து உலகத்தில் திரிய வேண்டியிருக்கும்.(71) உறுதிமொழியளித்த பிறகு கொடுக்காத மனிதனும், வேண்டிய பிறகு அஃதை ஏற்காத மனிதனும் என இருவரும் பொய்மையால் களங்கப்படுவார்கள். எனவே, நீன் உன் வார்த்தைகளைப் பொய்யாக்குவது உனக்குத் தகாது” என்றார் {பிராமணர்}.(72)மன்னன், “போரிடுவதும், (குடிமக்களைக்) காப்பதுமே க்ஷத்திரியர்களின் கடமைகளாகும். க்ஷத்திரியர்கள் (கொடைகளைக்) கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. பிறகு என்னால் எவ்வாறு நீர் (கொடையாகக் கொடுக்கும்) எதையும் ஏற்க முடியும்?” என்று கேட்டான்.(73)

அந்தப் பிராமணர், “ஓ! மன்னா, (முதலில் என்னிடம் இருந்து எதையும் ஏற்றுக்கொள்ளுமாறு ) ஒருபோதும் நான் சொல்லவில்லை. நான் வீட்டையும் நாடி வரவில்லை. நீயே இங்கு வந்து என்னிடம் வேண்டினாய். பிறகு ஏன் நீ ஏற்க மறுக்கிறாய்?” என்று கேட்டார்.(74)

தர்மன், “நானே தர்மன் என்று நீங்கள் இருவரும் அறிவீராக. உங்களுக்கிடையில் எந்தச் சச்சரவும் வேண்டாம். கொடையுடன் பிணைந்திருக்கும் வெகுமதி பிராமணருடையதாக இருக்கட்டும், வாய்மையின் தகுதியை {புண்ணியத்தை} இந்த ஏகாதிபதி அடையட்டும்” என்றான்.(75)

சொர்க்கம், “ஓ! பெரும் மன்னா, நான் உடல்வடிவம் கொண்டு இங்கே வந்திருக்கும் சொர்க்கம் என்பதை அறிவாயாக. உங்களுக்கிடையிலான இந்தச் சச்சரவு நிற்கட்டும். நீங்கள் ஈட்டிய தகுதி, அல்லது வெகுமதிகளைப் பொறுத்தவரையில் நீங்கள் இருவரும் சமமானவர்களே” என்றது.(76)

மன்னன் {இக்ஷ்வாகு}, “சொர்க்கத்தால் எனக்கு எந்தப் பயனும் கிடையாது. ஓ! சொர்க்கமே, நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே செல்வாயாக. கல்விமானான இதநப் பிராமணர் உன்னுடம் வர விரும்பினால், (வாழ்க்கையில் என் செயல்களின் மூலம்) நான் வென்ற வெகுமதிகளையும் எடுத்துக் கொண்டு உன்னோடு செல்லட்டும்” என்றான்.(77)

அந்தப் பிராமணர், “என் இளமைக் காலத்தில், அறியாமையின் மூலம் (கொடைகளை ஏற்பதற்காக) நான் என் கரங்களை நீட்டியிருக்கிறேன். எனினும், தற்போது துறவுக் {தவிர்க்கும்} கடமையை நோற்றபடி நான் காயத்ரியை ஜபித்து வருகிறேன்[4].(78) ஓ! மன்னா, துறவு {தவிர்க்கும்} கடமையை நீண்ட காலமாக நோற்கும் எனக்கு ஏன் இவ்வாறு ஆசை காட்டுகிறாய்? நான் என் கடமையை நானே செய்வேன். ஓ! ஏகாதிபதி உன்னால் வெல்லப்பட்ட வெகுமதிகளின் எந்தப் பங்கையும் பெற நான் விரும்பவில்லை. நான் தவங்களுக்கும் வேதங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து {பிச்சை} ஏற்பதைத் தவிர்த்து வருகிறேன்” என்றார்.(79)மன்னன் {இக்ஷ்வாகு}, “ஓ! பிராமணரே, நீர் உமது ஜபத்தின் சிறந்த வெகுமதியை எனக்கு உண்மையில் கொடுக்கிறீர் என்றால், அந்த வெகுமதியில் பாதி எனதாகட்டும். அதேபோல என் செயல்களின் மூலம் நான் வென்ற வெகுமதியில் பாதியை நீர் எடுத்துக் கொள்வீராக.(80) பிராமணர்கள் ஏற்புக் கடமையில் ஈடுபடுகிறார்கள். அரச வகையில் பிறந்த மனிதர்கள் கொடுக்கும் கடமையில் ஈடுபடுகிறார்கள். (இரு வகையினருக்கும் விதிக்கப்பட்டிருக்கும்) கடமைகளை நீ அறியாவிட்டால், (நான் பரிந்துரைத்தபடியே) நமது கனிகள் சமமாக இருக்கட்டும்.(81) அல்லது நமது வெகுமதிகளைப் பொறுத்தவரையில் நீர் எனக்கு இணையானவராக இருக்க விரும்பவில்லையென்றால், நான் வென்ற வெகுமதிகள் மொத்தத்தையும் நீரே எடுத்துக் கொள்ளும். நீன் எனக்கு அருள்தர விரும்பினால், நான் வென்ற தகுதியை {புண்ணியத்தைப்} பெற்றுக் கொள்வீராக” என்றான்”.(82)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த நேரத்தில் விரும்பத்தகாத தோற்றத்தைக் கொண்ட இருவர் {விரூபன், விக்ருதன்} அங்கே வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவன் தோள் மீது தன் கரத்தை வைத்திருந்தனர்; இருவரும் மோசமான ஆடைகளை உடுத்தியிருந்தனர். அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(83) “நீ எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம்” என்றும், “உண்மையில் நான் உனக்குக் கொடுக்க வேண்டும்” என்றும் சொல்லிக் கொண்டு, “நாம் இவ்வழியில் சச்சரவில் ஈடுபடுகிறோம். மனிதர்களை ஆளும் மன்னன் இதோ இருக்கிறான்.(84) உண்மையில் நீ ஏனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நீ பொய்யாகப் பேசுகிறாய். நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன்” என்றும் சூடான சச்சரவு செய்து கொண்ட அந்த இருவரும் மன்னனிடம், “ஓ! ஏகாதிபதி, எங்கள் இருவரில் எவரும் பாவத்தின் களங்கத்தை அடையாமல் பார்த்துக் கொள்வாயாக” என்றனர்.(86)

விரூபன், “ஓ! ஏகாதிபதி, என் தோழனான விக்ருதனுக்கு, ஒரு பசுக்கொடையின் தகுதிகளை நான் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை அடைக்க நான் விரும்புகிறேன். எனினும், இந்த விக்ருதன் இந்த மீட்டளிப்பை மறுக்கிறான்” என்றான்[5].(87)விக்ருதன், “ஓ! ஏகாதிபதி, இந்த விரூபன் எனக்கு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஓ! மன்னா, வாய்மையின் தோற்றத்தில் அவன் பொய்மையைப் பேசுகிறான்” என்றான்.(88)

மன்னன், “ஓ! விரூபா, நீ இங்கே உன் நண்பனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. முதலில் நீ சொல்வதைக் கேட்டு, அதன்பிறகு உரியதைச் செய்வதே என் தீர்மானமாக இருக்கிறது” என்றான்.(89)

விரூபன், “ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என் தோழனான இந்த விக்ருதனுக்குக் கொடுக்க வேண்டியவாறு அமைந்த அனைத்துச் சூழ்நிலைகளையும் விரிவாகச் சொல்கிறேன், கவனமாகக் கேட்பாயாக.(90) ஓ! பாவமற்றவனே, ஓ! அரசமுனியே, கடந்து சென்ற நாட்களில், இந்த விக்ருதன், தகுதியை {புண்ணியத்தை} வெல்லும் நிமித்தமாகத் தவங்களுக்கும், வேதகல்விக்கும் தம்மை அர்ப்பணித்திருந்த ஒரு பிராமணருக்கு ஒரு மங்கலப் பசுவைத் தானமாக அளித்தான்.(91) ஓ! மன்னா, அவனிடம் {விக்ருதனிடம்} சென்ற நான் அவனது அந்தச் செயலுக்கான வெகுமதியை இரந்து கேட்டேன். தூய இதயத்துடன் கூடிய விக்ருதன் அந்த வெகுமதியை எனக்குக் கொடையாக அளித்தான்.(92) பிறகு நான் தூய்மையடைவதற்காகச் சில நல்ல செயல்களைச் செய்தேன். மேலும் நான் கன்றுகளுடன் கூடியவையும், அதிக அளவில் பால் தரக்கூடியவையுமான இரண்டு கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களை} வாங்கினேன்.(93) பிறகு நான், அந்த இரு பசுக்களையும் உஞ்ச முறையில்[6] வாழ்ந்து வந்த ஓர் ஏழை பிராமணருக்கு உரிய சடங்குகளின் படி உரிய அர்ப்பணிப்புடன் கொடுத்தேன். ஓ! தலைவா, முன்பு என் தோழனிடம் இருந்து கொடையேற்ற நான், அவனுக்கு அந்த வெகுமதியை இரண்டு மடங்காகக் கொடுக்க விரும்புகிறேன்[7]. ஓ! மனிதர்களில் புலியே, சூழ்நிலைகள் இவ்வாறு இருக்கையில் (உன் தீர்மானத்தின்படி) எங்கள் இருவரில் அப்பாவி யார்? குற்றம் செய்தவன் யார்?(94,95) ஓ! ஏகாதிபதி, இதுகுறித்து ஒருவரோடொருவர் சச்சரவு கொண்டே நாங்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறோம். நீ சரியாகவோ, தவறாகவோ தீர்மானித்து, எங்கள் இருவருக்கிடையில் அமைதியை நிறுவுவாயாக.(96) இந்த எனது தோழன் ஏற்கனவே எனக்குக் கொடுத்ததற்குச் சமமானதை என்னிடமிருந்தும் திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லையெனில், நீயே பொறுமையாகத் தீர்மானித்து, எங்கள் இருவரையும் சரியான பாதையில் நிலைநிறுத்த வேண்டும்” என்றான் {விரூபன்}.(97)மன்னன், “கடனாகக் கொடுக்கப்பட்டது திருப்பிக் கொடுக்கப்படுகையில் நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்? தாமதிக்காமல், உனக்கு உரியயதைப் பெற்றுக் கொள்வாயாக” என்றான்.(98)

விக்ருதன், “இவன் எனக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறான். நான் கொடுத்ததைக் கொடுத்துவிட்டேன் என்று நான் அவனிடம் சொல்கிறேன். எனவே, அவன் எனக்குத் தரவேண்டியது ஏதும் இல்லை. அவன் விரும்பியவாறு எங்கும் செல்லட்டும்” என்றான்.(99)

மன்னன் {இக்ஷ்வாகு}, “அவன் உனக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனினும், நீ அதைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இஃது எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. இதற்கு நீ தண்டிக்கத்தகுந்தவன் என நான் நினைக்கிறேன். இதில் சிறு ஐயமும் இல்லை” என்றான்.(100)

விக்ருதன், “ஓ அரசமுனியே, நான் அவனுக்குக் கொடையளித்தேன். அஃதை எவ்வாறு என்னால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்? இதில் நான் குற்றவாளியென்றால், ஓ பலமிக்கவனே, எனக்குத் தண்டனையைச் சொல்வாயாக” என்றான்.(101)

விரூபன், “நான் கொடுக்கத் தயாராக இருக்கும்போது நீ மறுத்தால், நீதியை நிறுத்துபவனான இந்த மன்னன் உன்னை நிச்சயம் தண்டிப்பான்” என்றான்.(102)

விக்ருதன், “எனக்குச் சொந்தமானது அவனால் வேண்டப்பட்ட பிறகே நான் கொடுத்தேன். அதை நான் எவ்வாறு திரும்ப எடுத்துக் கொள்வேன்? நீ செல்லலாம். நான் உனக்கு விடைகொடுத்துவிட்டேன்” என்றான்.(103)

{பிப்பலாதரின் மகனான அந்தப்} பிராமணர், “ஓ! மன்னா, நீ இவ்விருவரின் வார்த்தைகளையும் கேட்டாய். நான் உனக்குக் கொடுப்பதாக உறுதியளித்ததை எந்தத் தயக்கமும் இல்லாமல் பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(104)

மன்னன், “உண்மையில் இக்காரியம் அடியற்ற குழியைப் போன்று (முக்கியத்துவத்தில்) மிக ஆழமானதாகும். ஜபிப்பவரான இவரின் பிடிவாதம் எவ்வாறு முடியப் போகிறது?(105) இந்தப் பிராமணரால் கொடுக்கப்பட்டதை நான் ஏற்கவில்லையெனில், பெரும் பாவத்தின் களங்கம் படிவதை நான் எவ்வாறு தவிர்க்க முடியும்?” என்றான்.(106)

பிறகு அந்த அரச முனி {இக்ஷ்வாகு}, “உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய நோக்கங்களை வென்றுவிட்டவர்களாக நீங்கள் இருவரும் செல்லலாம். என்னில் நிறுவப்பட்டுள்ள அரசகடமைகள் பயனற்றவையாகக் கூடாது {இந்த இடத்தில் இருந்து கொண்டு மன்னர்களுக்கான தர்மத்தைப் பொய்யாக்காதீர்கள்}.(107) மன்னர்கள் அவர்களுக்குரிய கடமைகளை நோக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். எனினும், என் தீப்பேற்றின் நிமித்தமாக இழிந்தவனான என்னைப் பிராமணர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகள் பற்றுகின்றன” என்றான்[8].(108)அதற்கு அந்தப் பிராமணன், “ஓ! மன்னா, ஏற்பாயாக. நான் உனக்குக் கொடுக்க வேண்டும். நீ வேண்டினாய், நானும் (உனக்குக் கொடுப்பதாக) உறுதியளித்துவிட்டேன். எனினும், ஓ! ஏகாதிபதி, நீ ஏற்க மறுப்பாயானால், நிச்சயம் நான் உன்னைச் சபிப்பேன்” என்றார்.(109)

மன்னன் {இக்ஷ்வாகு}, “அரச கடமைகளுக்கு ஐயோ. {கடமைகள் குறித்து} தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின் இயக்கம் இவ்வாறாகிவிட்டதே. எனினும், முற்றிலும் இணையான இரண்டு கடமைகளின் நடைமுறைகளை வெளிப்படுத்தும் ஒரே காரணத்திற்காக நீர் கொடுப்பதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்[9].(110) இதற்கு முன்பு ஒருபோதும் (கொடைகளை ஏற்க) நீட்டப்படாத என் கரமானது, கொடுப்பதற்காகவே இப்போது (ஏற்பதற்காகவும்) நீட்டப்படுகிறது. நீர் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுப்பீராக” என்றான்.(111)அந்தப் பிராமணர், “காயத்ரி ஜபத்தின் மூலம் நான் எந்தக் கனிகளையாவது வென்றிருந்தால், அவை அனைத்தையும் நீ பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(112)

மன்னன் {இக்ஷ்வாகு}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, என் கரங்களில் விழுந்திருக்கும் இந்த நீர்த்துளிகளைப் பாரும். நானும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன். என் கொடையை ஏற்பீராக. (நான் உமது கொடையை ஏற்றுக் கொண்டதைப் போல நீரும் என் கொடையை ஏற்றுக் கொள்வதன் மூலம்) நமக்கிடையில் ஒரு சமத்தன்மை இருக்கட்டும்” என்றான்.(113)

விரூபன், “ஓ! மன்னா, நாங்கள் இருவரும் ஆசையும், கோபமும் ஆவோம் என்பதை அறிவாயாக. எங்களாலேயே நீ இவ்வழியில் செயல்பட்டாய். நீ இந்தப் பிராமணருக்குப் பதில் கொடையை அளித்துவிட்டாய். மறுமையின் இன்பவுலகங்களைப் பொறுத்தவரையில் இந்த மறுபிறப்பாளருக்கும் உனக்கும் இடையில் சமத்தன்மை நிலைக்கட்டும். இந்த விக்ருதன் உண்மையில் எனக்குத் தர வேண்டியது ஏதுமில்லை. நாங்கள் உன் நிமித்தமாகவே அவ்வாறு நடந்து கொண்டோம். காலன், தர்மன், மிருத்யு மற்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து, உனக்கும் இந்தப் பிராமணருக்கும் இடையில் இந்தச் சச்சரவை உண்டாக்கி உன்னைக் குறித்த அனைத்தையும் உன் எதிரிலேயே ஆய்வு செய்தோம். உன் செயல்களின் மூலம் நீ வென்ற உலகங்களுக்கு உன் விருப்பப்படியே செல்வாயாக” என்றான் {விரூபன்}”.(116)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஜபம் செய்பவர்கள் (தாங்கள் செய்யும் ஜபத்தின்) கனிகளை எவ்வாறு அடைகிறார்கள் என்பதையும், ஜபம் செய்பவனின் கதி, அவர்கள் வெல்லும் உலகங்கள் ஆகியவற்றையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(117) காயத்ரி ஜெபம் செய்யும் ஒருவன், பரப்பிரம்மத்தை அடைவான், அல்லது அக்னியிடம் செல்வான், அல்லது சூரியலோகத்திற்குள் நுழைவான்.(118) அவன் சக்திமிக்கத் தனது (புதிய) உடலுடன் அங்கே விளையாடினால், அத்தகைய பற்றுகளில் திகைப்படையும் அவன், அந்தக் குறிப்பிட்ட உலகங்களின் பண்பியல்புகளைப் பற்றிக் கொள்வான்[10].(119) சோமன் {சந்திரன்}, வாயு, பூமி, வெளி ஆகியவற்றுக்குச் செல்பவனின் நிலையே அதே போன்றதே ஆகும். உண்மையென்னவெனில், இவை அனைத்திலும் வசிப்பவர்கள், அவற்றில் பற்றுக் கொண்டு, அந்தந்த உலகங்களின் குறிப்பிட்ட பண்பியல்புகளை வெளிக்காட்டுவார்கள். எனினும் ஒருவன் பற்றுகளில் இருந்து விடுபட்டு அந்த உலகங்களுக்குச் சென்று, (அங்கு அனுபவிக்கும் இன்பங்களில்) நம்பிக்கையில்லாமல் இருந்து, உயர்ந்ததையும், நினைத்தற்கரியதையும் விரும்பினால், அப்போது அவன் அதற்குள்ளும் நுழைவான்.(121) அவ்வழக்கில் அவன், ஆசையில் இருந்து விடுபட்டு, தனிப்பட்ட நனவு நிலை இல்லாதவனாக அமுதத்தின் அமுதத்தை அடைகிறான். முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, இன்பத்தையும் அமைதியை அடைந்து, துன்பமில்லாதவனாகப் பிரம்மமாகவே ஆகிறான்[11].(122)உண்மையில் அவன், துன்பத்தில் இருந்து விடுபட்டதும், அமைதியானதும், திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததும், ஒன்றேயானதும், நினைத்தற்கரியதுமான பிரம்ம நிலையை அவன் அடைகிறான்.(128) அச்சத்தின் நான்கு வழிமுறைகளில் இருந்தும்[12], ஆறு நிலைகளில் இருந்தும், மேலும் வேறு ஆறு மற்றும் பத்துப் பண்பியல்புகளில் இருந்தும் அவன் விடுபடுகிறான்[13]. படைப்பாளனையே விஞ்சி அவன் பரமாத்மாவுக்குள் உறிஞ்சப்பட்ட நிலையை அடைகிறான்.(124) அல்லது, பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழிருக்கும் அவன், அத்தகைய உறிஞ்சலுக்கு விரும்பாமல், அனைத்திற்கான பரம காரணத்தைச் சார்ந்த தனியான இருப்பாக இருக்க விரும்பினால், அவன் பேணி வளர்க்கும் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைவான்.(125) அல்லது (முன்னர்ச் சொல்லப்பட்டதுபோல) நரகங்கள் என்றழைக்கப்பட்ட இன்ப உலகங்கள் அனைத்தையும் (வெறுப்புடன்) கண்டு, ஆசையை விரட்டி, அனைத்திலிருந்தும் விடுபட்டு அந்தந்த உலகங்களிலேயே உயர்ந்த இன்ப நிலையை அனுபவிக்கிறான்[14].(126) ஓ ஏகாதிபதி, ஜபிப்பவர்கள் அடையும் கதியைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்லிவிட்டேன். வேறு என்ன கேட்க விரும்புகிறாய்” {என்றார் பீஷ்மர்}.(127)

ஜபிப்பவர்களின் கதி! – சாந்திபர்வம் பகுதி – 200-பிராமணரும், இக்ஷ்வாகுவும் அடைந்த கதியைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டின்; இருவரும் வெகுமதிகளை அடைந்து பிரம்மலோகத்தை அடைந்தது; அவர்கள் உயிரை விட்ட வழிமுறை; அவர்களைப் பிரம்மன் வரவேற்ற விதம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, விரூபன் பேசி முடித்ததும், அந்தப் பிராமணராலோ, அந்த ஏகாதிபதியாலோ {இக்ஷ்வாகுவாலோ} அவனுக்கு என்ன மறுமொழி கொடுக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக.(1) உம்மால் விவரிக்கப்பட்ட கதிகளுள் அவர்கள் அடைந்த கதியென்ன? உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் என்ன? அங்கே அவர்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தப் பிராமணர், “நீ சொன்னதுபோலவே ஆகட்டும்” என்று சொல்லி தர்மன், யமன், காலன், மிருத்யு, சொர்க்கம் ஆகியவர்களையும், வழிபாட்டுக்குத் தகுந்த அனைவரையும் வழிபட்டார்.(3) தம்மை வணங்கி அங்கே வந்திருந்த முதன்மையான பிராமணர்களை அனைவரையும் அவர் வழிபட்டார். பிறகு அந்த ஏகாதிபதியிடம் பேசிய அவர், “ஓ! அரசமுனியே, என் ஜபங்களுக்கான வெகுமதிகளுடன் கூடிய நீ உயர்ந்த நிலையை அடைவாயாக. நீ சென்றதும் நான் என்னை மீண்டும் ஜபங்களில் நிறுவிக் கொள்வேன்.(5) ஓ! பெரும் வலிமைமிக்கவனே, “ஜபத்தில் உனது அர்ப்பணிப்புத் தொடர்ச்சியானதாக இருக்கட்டும்” என்று சாவித்திரி தேவி எனக்கு வரமளித்திருக்கிறாள்” என்றார்.(6)

மன்னன்  {இக்ஷ்வாகு}, “(ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுத்துவிட்டதன் விளைவால்) உமது வெற்றிக் கனியற்றதாக இருந்தால், உமது இதயம் மீண்டும் பயிற்சியில் நிலைக்க வேண்டுமானால், என்னிடம் பாதி, பாதியைப் பகிர்ந்து கொண்டு, உமது ஜபங்களின் வெகுமதியை அடைவீராக” என்றான்[1].(7)அதற்கு அந்தப் பிராமணர், “(உன் செயல்பாடுகளின் விளைவுகளால் நீ அடைந்த வெகுமதிகளை என்னோடு பகிர்ந்து கொள்ள) இம்மனிதர்கள் அனைவரின் முன்னிலையிலும் நீ தளர்வுறாமல் முயற்சி செய்திருக்கிறாய். எனவே, (மறுமையில்) நமது வெகுமதிகள் நமக்கிடையில் சமமானவையாக இருக்கட்டும். நாம் நமது கதியை அடைவோமாக” என்றார்.(8)

தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவர்கள் அடைந்த தீர்மானத்தை அறிந்து லோகபாலர்கள் மற்றும் தேவர்களின் துணையுடன் அந்த இடத்திற்கு வந்தான்.(9) சத்யஸ்கள், விஸ்வர்கள், மந்திரர்கள், பல்வேறு வகை இசைகள், ஆறுகள், மலைகள், கடல்கள், புனித நீர்நிலைகள்,(10) தவங்கள், யோகம் குறித்த விதிமுறைகள், சாம வேத வரிகளைப் பாடுவதற்குத் துணை புரியும் ஒலிகள், சரஸ்வதி, நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹாக்கள், ஹுஹூக்கள்,(11) குடும்பத்துடன் கூடியவனான கந்தர்வன் சித்திரசேனன், நாகர்கள், சித்தர்கள், முனிவர்கள், தேவர்களின் தேவனான பிரஜாபதி ஆகியோரும்,(12) நினைத்தற்கரியவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனுமான விஷ்ணுவும் அங்கே வந்தனர். ஆகாயத்தில் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(13) உயர் ஆன்மா கொண்ட அவர்கள் மீது தெய்வீகப் பூமாரி பொழியப்பட்டது. சுற்றிலும் அப்சரஸ் கூட்டங்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.(14)

சொர்க்கமானவன், தன் உடல்வடிவத்துடன் அங்கே வந்தான். அந்தப் பிராமணரிடம் பேசிய அவன் {சொர்க்கம்}, “நீர் வெற்றியை அடைந்தீர். நீர் உயர்வாக அருளப்பட்டிருக்கிறீர்” என்றான். அடுத்ததாக அந்த ஏகாதிபதியிடம் {இக்ஷ்வாகுவிடம்} அவன் {சொர்க்கம்}, “ஓ! மன்னா, நீயும் வெற்றியடைந்தாய்” என்றான்.(15)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இருவரும் (அந்தப் பிராமணரும், மன்னனும்) ஒருவருக்கொருவர் நன்மை செய்து, உலக நோக்கங்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கொண்டனர்.(16) பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய உயிர்மூச்சுகளை {வாயுக்களைத்} தங்கள் இதயங்களில் {மனத்தில்} நிலைக்கச் செய்த அவர்கள், ஒன்றுகலந்த பிராணன் மற்றும் அபானனில் மனத்தை குவித்தார்கள்.(17) பிறகு அவர்கள் ஒன்று கலந்த அந்த இரு மூச்சுகளையும் வயிற்றில் நிறுத்தி, தங்கள் பார்வையை மூக்கு நுனியில் செலுத்தி, மெல்ல இரு புருவங்களுக்குக் கீழே அவற்றைச் செலுத்தினார்கள். பிறகு அவர்கள், தங்கள் மனத்தின் துணைகொண்டு அந்த இரு மூச்சுக்காற்றுகளையும் படிப்படியாகத் தங்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.(18) முற்றிலும் செயலற்ற உடல்களுடன் அவர்கள் தங்கள் நிலைத்த பார்வையிலேயே மூழ்கியிருந்தார்கள் {லயித்திருந்தார்கள்}. தங்கள் ஆன்மாக்களின் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர்கள், மூளையில் தங்கள் ஆன்மாவை நிறுத்தினார்கள்.(19) அப்போது அந்த உயர் ஆன்ம பிராமணரின் மகுடத்தை {பிரம்மரந்தரஸ்தானத்தைப்} பிளந்து கொண்டு ஒரு காந்திமிக்க ஒளித்தழல் {ஜ்யோதியின் ஜ்வாலை} சொர்க்கத்திற்கு உயர்ந்தது.(20)

அனைத்து உயிரினங்களின் துன்ப ஓலங்களும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. அனைவராலும் துதிக்கப்பட்ட அந்தக் காந்தி {ஜ்யோதி}, பிரம்மனின் சுயத்துக்குள் நுழைந்தது.(21) அப்போது எதிர்கொண்டு சென்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஒரு சாண் உயரமுள்ள வடிவத்தை ஏற்றிருந்த அந்தக் காந்தியிடம் {ஒளியிடம்}, “நல்வரவு” என்று சொல்லி,(22) மீண்டும் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்: “உண்மையில், ஜபிப்பவர்களும் யோகிகளின் அதே கதியையே அடைவார்கள்.(23) (இங்கே திரண்டிருக்கும்) இவை அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பதே, யோகி அடையும் கதியாகும். ஜபிப்பவர்களைப் பொறுத்தவரையில், ஒரு வேறுபாடு இருக்கிறது. (அவர்கள் பூமியில் இருந்து புறப்பட்டதும்) பிரம்மனே எதிர்கொண்டு வந்து அழைக்கும் கௌரவம் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.(24) நீ என்னில் வசிப்பாயாக” என்றான். இவ்வாறு பேசிய பிரம்மன் மீண்டும் அந்த ஒளிக்கு நனவுநிலையைக் கொடுத்தான். உண்மையில், அந்தப் பிராமணர், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு படைப்பாளனின் வாய்க்குள் நுழைந்தார்.(25)

அந்த ஏகாதிபதியும் {இக்ஷ்வாகுவும்}, அந்த முதன்மையான பிராமணரைப் போலவே அதே வழியில் தெய்வீகப் பெரும்பாட்டனுக்குள் நுழைந்தான்.(26) (அங்கே திரண்டிருந்த) தேவர்கள் அந்தத் தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, “ஜபிப்பவர்களுக்கு உண்மையில் மேன்மையான கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) (நாங்கள் காண நீர் செய்திருக்கும்) இந்த முயற்சியானது ஜபிப்பவர்களுக்கானதாகும். எங்களைப் பொறுத்தவரையில், இதைக் காணவே நாங்கள் இங்கே வந்தோம். சமமானவர்களான இவ்விருவருக்கும் சம கௌரவத்தைக் கொடுத்து, சமகதியையே அவர்களுக்கு அளித்திருக்கிறீர்.(28) யோகிகள் மற்றும் ஜபிப்பவர்கள் அடையும் உயர்ந்த கதியை நாங்கள் இன்று கண்டோம். (இன்ப) உலகங்கள் அனைத்தையும் விஞ்சி செல்லும் இவர்கள் இருவரும் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல வல்லவர்களாக இருப்பார்கள்” என்றனர் {தேவர்கள்}.(29)

பிரம்மன், “எவன் பெரிய ஸ்மிருதியை (வேதங்களைப்) படிப்பானோ, எவன் முன்னதை {வேதங்களைப்} பின்தொடரும் (மனு மற்றும் எஞ்சிய) பிற மங்கலமான ஸ்மிருதிகளைப் படிப்பானோ, அவனும் இவ்வழியிலேயே என்னுடன் இதே உலகத்தை அடைவான்.(30) எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறானோ, அவனும் தன் மரணத்திற்குப்பிறகு இவ்வழியிலேயே எனக்குச் சொந்தமான உலகங்களை அடைவான்.(31) நான் செல்கிறேன். நீங்கள் அனைவரும் உங்களுடைய காரிய நிறைவேற்றத்திற்காக அவரவர் இடங்களுக்குச் செல்வீராக” என்றான் {பிரம்மன்}”.(32)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த முதன்மையான தேவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். முன்பே அவனிடம் விடைபெற்றிருந்தவர்களும் அங்கே திரண்டிருந்தவர்களுமான தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(33) ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் தர்மனால் கௌரவிக்கப்பட்டு, நன்கு நிறைவடைந்த இதயங்களுடன் அந்தப் பெரும் தேவனின் பின்னால் நடந்து சென்றனர்.(34) இவையே ஜபிப்பவர்களின் வெகுமதிகளும், இதுவே அவர்களுடைய கதியுமாகும். நான் கேட்டவாறே இவற்றை நான் உனக்கு விளக்கிவிட்டேன். ஓ! ஏகாதிபதி, நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(35)

ஜீவாத்மா! – சாந்திபர்வம் பகுதி – 201-செயல், ஞானம், ஜீவன், பிரம்மம் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் மனுவுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேதங்கள் அனைத்திலும், (பல்வேறு} சடங்குகளிலும், நோன்புகளிலும் ஞானத்தைப் பிரதிபலிக்கும் யோகத்தின் கனிகள் {பயன்கள்} என்னென்ன? ஜீவனை எவ்வாறு அறியலாம்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக உயிரினங்களின் தலைவரான மனுவுக்கும், பெரும் முனிவரான பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் அடங்கிய பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவர்களில் முதன்மையானவரும், மனுவின் சீடருமான பிருஹஸ்பதி, தன் ஆசானை வணங்கி உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவரும், தலைவருமான அவரிடம்,(3) “(இந்த அண்டத்தின்) காரணம் என்ன? (வேள்விகள் மற்றும் பக்திச் செயல்பாடுகள் பிறவற்றையும் குறித்த) விதிகள் எங்கிருந்து பாய்ந்தன? கற்றோர் சொல்வது போன்ற ஞானத்துடன் பிணைக்கப்பட்ட கனிகள் என்னென்ன? ஓ! சிறப்புமிக்கவரே, வேதங்களாலேயே வெளிப்படுத்தப்பட இயலாதது எது? என்பவைக் குறித்து எனக்குச் சொல்வீராக[1].(4) வேள்விகள் மற்றும் அபரிமிதமான பசுக்கொடைகளின் மூலம், பொருள் அறிவியல் {அர்த்த சாஸ்திரம்}, வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை அறிந்த அறிஞர்களால் புகழப்படும் அந்தக்கனிகள் என்னென்ன? அக்கனிகள் எங்கிருந்து எழுகின்றன? அவற்றை எங்கே காணலாம்?(5) பூமி, பூமிசார்ந்த பொருட்கள், காற்று, வானம், நீர்வாழ் உயிரினங்கள், நீர், சொர்க்கம், சொர்க்கவாசிகள் ஆகிய அனைத்தும் எங்கிருந்து எழுந்தன என்ற பழைய வரலாற்றை எனக்குச் சொல்வீராக.(6)மனிதன் எந்த ஞானத்தை அடைய முயல்கிறானோ அந்தப் பொருளை நோக்கியே அவனது உள்ளுணர்வுகள் செல்ல முனைகின்றன. அந்தப் பழைமையான, பரமனைக் {புராதானமான பரவஸ்துவை [பரம்பொருளைக்]} குறித்து எனக்கு எந்த அறிவும் இல்லை. அவனை {பரமனை} நோக்கிய உள்ளுணர்வுகளின் போலி வெளிப்பாடுகளில் இருந்து நான் எவ்வாறு என்னைக் காத்துக் கொள்ள முடியும்[2].(7) ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்கள், சந்தங்கள் {சந்தஸ்கள்}, வானியல் {நக்ஷத்ரவித்யை}, நிருக்தம், இலக்கணம் {வ்யாகரணம்}, சங்கல்பம் {கல்பஸூத்ரங்கள்}, சிக்ஷை ஆகிய அனைத்தையும் நான் கற்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொன்றின் தொகைக்குள்ளும் நுழையும் பெரும்பூதங்களின் (ஐந்து அடிப்படை பூதங்களின்) இயல்பைக் குறித்த அறிவு எனக்கில்லை[3].(8) நான் கேட்ட அனைத்தையும், எளிய கூற்றுகளை மட்டுமே பயன்படுத்தி, உரிச்சொற்கள், அல்லது அடைமொழிகளைப் பிரித்து வேறுபடுத்தி எனக்குச் சொல்வீராக[4]. ஞானத்தின் கனிகள் என்னென்ன என்பதையும், வேள்வி மற்றும் பிற அறச்சடங்குகளில் பிணைக்கப்பட்ட கனிகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வீராக. ஒருவனின் உடலில் இருந்து ஜீவன் {ஜீவாத்மா} எவ்வாறு வெளியேறுகிறது என்பதையும் அது மற்றொன்றில் எவ்வாறு அடைகிறது என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {பிருஹஸ்பதி}.(9)மனு {பிருகஸ்பதியிடம்}, “எது ஒருவனுக்கு ஏற்புடையதோ, அதுவே அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதே போலவே எது ஒருவனுக்கு ஏற்பில்லையோ அதுவே அவனது துன்பமாகச் சொல்லப்படுகிறது. “இதன் மூலம் நான் மகிழ்ச்சியை அடைந்து துன்பத்தை விலக்குவேன்” என்ற உணர்விலிருந்தே அறச்சடங்குகள் அனைத்தும் பாய்கின்றன.(10) எனினும், ஞானத்தை அடைவதற்கான முயற்சிகளோ, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டையும் தவிர்ப்பதற்கான உணர்வில் இருந்து எழுகின்றன[5].(11) வேதங்களில் தோன்றும் வேள்விகள் மற்றும் பிற சடங்குகள் குறித்த விதிகள் அனைத்தும் ஆசையுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனினும், எவன் ஆசையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ அவனே பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். மகிழ்ச்சியை அடையும் ஆசையில், பல்வேறு வகைச் செயற்பாதைகளில் நடக்கும் மனிதனோ நரகத்தையே அடைகிறான்[6]” என்றார் {மனு}.(12)பிருஹஸ்பதி {மனுவிடம்}, “இன்பத்தில் முடியும் ஏற்புடையதை அடைவதிலும், துன்பத்தைக் கொடுக்கும் ஏற்பில்லாததைத் தவிர்ப்பதிலும் மனிதர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். மேலும், இத்தகைய அடைதலும், இத்தகைய தவர்த்தலும் செயல்களாலேயே நிறைவேற்றப்படுகின்றன” என்றார்[7].(13)மனு {பிருஹஸ்பதியிடம்}, “ஒருவன், செயல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமே பிரம்மத்திற்குள் நுழைகிறான். செயல்கள் {வேள்விகள்} குறித்த விதிகளும் இந்தக் கதிக்காகத்தான் பாய்ந்தன[8]. செயல்களைக் குறித்த விதிகள், ஆசையில் இருந்து விடுபடாதோரின் இதயங்களை மட்டுமே மயக்கும். (ஏற்கனவே சொன்னது போல) ஒருவன் செயல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் உயர்ந்த நிலையை {பரமனான வஸ்துவை} அடைகிறான்.(14) இன்பநிலையில் (விடுதலையில் {முக்தியில்}) விருப்பம் கொண்ட ஒருவன், அறச்செயல்களைச் செய்து, ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயல்களின் மூலம் (பற்றுகளில் இருந்து) தூய்மையடைந்து, இறுதியாகப் பெரும் காந்தியை வெல்கிறான். ஒருவன் தன்னைச் செயல்களில் இருந்து விடுவித்துக் கொள்வதன் மூலம், அந்தச் செயல்கள் கொடுக்கும் வெகுமதிக்கும் மேலான உயர்ந்த கதியான பிரம்மத்தை அடைகிறான்.(15) உயிரினங்கள் அனைத்தும் மனம் மற்றும் செயலாலேயே {கர்மத்தாலேயே} உண்டாக்கப்படுகின்றன. மேலும் இவை இரண்டே சிறந்த வழிகளாக அனைவராலும் துதிக்கப்படுகின்றன. புறச் செயல்கள் நிலையானவையும், நிலையற்றவையுமான கனிகளை உண்டாக்குகின்றன. நிலையான கனிகளை அடைவதற்கு, மனத்தால் கனிகளைக் கைவிடுவதைவிட வேறேதும் வழி இல்லை[9].(16) இரவு கடந்ததும், கண்ணானது, தன்னிலுள்ள இருள் திரை விலகி, தன் உடைமையாளரைத் தன் சக்தியின் மூலமே வழிநடத்துவதைப் போல, புத்தியானது ஞானத்தை அடையும்போது, தவிர்க்கத்தக்க தீமைகள் அனைத்தையும் காண்பதில் வெல்கிறது.(17)பாம்புகள், கூர்முனை குசப்புற்கள் {தர்ப்பைகள்} ஆகியவை வழியில் கிடப்பதைக் காணும்போது மனிதர்கள் அவற்றைத் தவிர்க்கிறார்கள். சிலர் அவற்றை மிதித்தாலும், அல்லது அவற்றில் விழுந்தாலும் அஃதை அறியாமையின் மூலமே செய்கிறார்கள். (அந்த அறியாமையைத் தவிர்த்து) ஞானக் கனிகளின் மேன்மையைப் பார்.(18) முறையாகச் சொல்லப்படும் மந்திரங்கள், வேள்விகள், தக்ஷிணை என்றழைக்கப்படும் கொடைகள், உணவு தானம், (தெய்வீகத் தியானத்திற்கான) மனக்குவிப்பு ஆகிய ஐந்து செயல்களே கனிகளை உண்டாக்கவல்லவை என்று சொல்லப்படுகின்றனவே தவிர வேறு எதுவும் {அவ்வாறு சொல்லப்படுவது} இல்லை.(19) செயல்கள் (மூன்று) குணங்களையே (சத்வம், ரஜஸ், தமஸ் {ஆகிய மூன்று குணங்களையே}) தங்கள் ஆன்மாவாகக் கொண்டிருக்கின்றன. இதை வேதங்கள் சொல்கின்றன. (வேதங்கள் மந்திரங்களைக் கொண்டிருக்கின்றன). எனவே, மந்திரங்களின் மூலமே செயல்கள் நிறைவேற்றப்படுவதால், மந்திரங்களுக்கும் அதே மூன்று குணங்கள் இருக்கின்றன. சடங்கும் அதே மூன்று குணங்களையே கொண்டிருக்கிறது. செயலின் கனிகள் மனத்தைச் சார்ந்திருக்கின்றன. ஜீவனே அந்தக் கனிகளை அனுபவிக்கிறது[10].(20)சிறந்த வகைகளிலான ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய அனைத்தும் செயல் உலகத்தில் {கர்மலோகத்தில்} (சொர்க்கத்தில்) அடையப்படுவதால் அவையே செயல்களின் கனிகளாக இருக்கின்றன. எனினும் ஞானத்தின் கனிகளைப் பொறுத்தவரையில், மனிதன் அவற்றை மரணத்திற்கு முன்பே இம்மையிலேயே அடைகிறான்.(21) உடல் மூலம் செய்யப்படும் எந்தச் செயல்களுக்குமான கனிகளையும் ஒருவன் உடல் சார்ந்த நிலையிலேயே அனுபவிப்பான். உண்மையில், மகிழ்ச்சி பொதிந்த கட்டுமானமான உடல், துன்பம் பொதிந்த ஒரு கட்டுமானமுமாகும்[11].(22) சொற்களால் நிறைவேற்றப்படும் எந்தச் செயல்களின் கனிகளும், பேசப்படும் சொற்கள் என்ற நிலையிலேயே அனுபவிக்கப்படும். அதே போல, மனத்தால் நிறைவேற்றப்பட்ட எந்தச் செயல்களின் கனிகளும், விடுபடாத நிலையிலுள்ள மனத்தினாலேயே அனுபவிக்கப்படுகின்றன.(23) செயல்களின் கனிகளில் பற்றுடன் ஒரு மனிதன் செய்யும் நன்மையோ, தீமையோவான எவ்வகைச் செயல்களின் கனிகளையும் அதனதன் பண்பியல்புகளுடனே அவன் அனுபவிக்கிறான்.(24) நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும் மீன்களைப் போல, முற்பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனை அடைகின்றன. ஜீவன் {ஜீவாத்மா} தன் நற்செயல்களுக்காக இன்பத்தையும், தீச்செயல்களுக்காகத் துன்பத்தையும் அனுபவிக்கிறது.(25)எவனிலிருந்து {எதனிலிருந்து}, இந்த அண்டம் எழுந்ததோ, எவனை அறிவதன் மூலம் தூய்மையான ஆன்மா கொண்ட மனிதர்கள் இவ்வுலகைக் கடக்கிறார்களோ, வேத மந்திரங்களும், வார்த்தைகளும் எவனை வெளிப்படுத்துகின்றனவோ, அவனை {அஃதை} இப்போது நான் சுட்டிக்காட்டுவேன். உயர்ந்தவற்றில் உயர்வான அவனைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக.(26) பல்வேறு வகைச் சுவை, மணம், தீண்டல், ஒலி மற்றும் வடிவங்களில் இருந்து விடுபட்டவனான அவன், புலன்களுக்குப் புலப்படாதவனும், வெளிப்படாதவனும், நிறமற்றவனும், ஒருவனாக இருப்பவனுமாவான். அவனே, ஐந்து வகைப் பொருட்களைத் தன் உயிரினங்களாக {ஜீவன்களாகப்} படைத்திருக்கிறான்[12].(27) அவன் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்லன். இருப்பாகவோ, இல்லாமையாகவோ, இருந்தும் இல்லாமையாகவோ அவன் இல்லை[13]பிரம்மத்தை அறிந்தவர்களால் மட்டுமே அவனை {பரம்பொருளைக்} காண முடியும். அவன் சிதைவில்லாதவனாவான்” {என்றார் மனு}.(28)

கர்மக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 202-பரம்பொருளுக்கும், ஐம்பூதங்களுக்குமிடையில் உள்ள உறவு; புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுக்கிடையில் உள்ள உறவும் அவற்றின் செயல்பாடுகளும்; ஆன்மாவின் தன்மையை உணரும் வழி; காரணக் காரியங்கள்; கர்மவினைகளின் தொடர்ச்சி; ஆன்மா உடல்களை உடையாகப் பயன்படுத்தல்; உடலின் அழிவுக்குப் பிறகு ஐம்பூதங்களுடன் கலக்கும் முறை; புதிய உடல் அடையும் நன்மை, தீமைகளின் தன்மைகள் ஆகியவற்றை பரத்வாஜருக்குச் சொன்ன மனு…

மனு {பரத்வாஜரிடம்}, “அழிவற்றவனும், சிதைவற்றவனுமான அவனிடமிருந்து {பரம்பொருளிடமிருந்து} முதலில் வெளி {ஆகாயம்} உண்டானது; வெளியில் இருந்து காற்று {வாயு} வந்தது; காற்றில் இருந்து ஒளி வந்தது; ஒளியில் இருந்து நீர் வந்தது. நீரில் இருந்து இந்த அண்டம் உண்டானது; அண்டத்திலிருந்து அதில் தோன்றும் அனைத்துப் பொருட்களும் உண்டாகின.(1) (பிரளயத்திற்குப் பிறகு), (உலகம் சார்ந்த) அனைத்துப் பொருட்களும் முதலில் நீருக்குள் நுழையும், அங்கிருந்து ஒளி அல்லது வெப்பத்திற்கும், அங்கிருந்து காற்றுக்கும் {வாயுவுக்கும்}, அங்கிருந்து வெளிக்குள்ளும் {ஆகாயத்திற்குள்ளும்} நுழையும். விடுதலையை {முக்தியை} நாடுவோர் வெளிக்கு {ஆகாயத்துக்குத்} திரும்ப வேண்டியதில்லை. மறுபுறம் அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள்.(2) முக்தியின் புகலிடமான பிரம்மம் வெப்பமானதோ, குளிந்ததோ, மென்மையானதோ, கடுமையானதோ, புளிப்பானதோ, துவர்ப்பானதோ, இனிமையானதோ, கசப்பானதோ கிடையாது. அவன் {பிரம்மத்தை அடைந்தவன்} ஒலியையோ, மணத்தையோ, வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. அவன் இவை அனைத்தையும் விஞ்சியவனாக, அளவுகள் அற்றவனாக இருக்கிறான்.(3) தோலானது தீண்டலை உணர்கிறது; நா சுவையையும், மூக்கு மணத்தையும், காதுகள் ஒலிகளையும், கண்கள் வடிவங்களையும் உணர்கின்றன. அத்யாத்மாவை {ஆன்ம யோகத்தை} அறியாத மனிதர்கள், இவற்றைத் தாண்டிய எதையும் காண மாட்டார்கள்.(4) சுவைகளில் இருந்து நாவையும், மணங்களில் இருந்து மூக்கையும், ஒலிகளில் இருந்து காதுகளையும், வடிவங்களில் இருந்து கண்களையும், தீண்டலில் இருந்து தோலையும் விலக்கிய ஒருவனே, (புலன்கள் மற்றும் மனத்தில் இருந்து விடுபட்ட) சுயத்தின் {ஆன்மாவின்} பண்பியல்புகளைக் {ஆத்மஸ்வபாவத்தைக்} காண்பான்.(5)

செயல், செயலுக்கான பொருள், இடம், செயலின் நேரம், விருப்பங்கள், இன்பம் மற்றும் துன்பம் குறித்த மனச்சார்புகள் ஆகியவற்றில் செயல்படுபவனின் காரணங்களாக இருப்பவையே சுயம் (அல்லது ஆத்மா) என்று அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது[1].(6) எது அனைத்தையும் ஊடுருவி {வ்யாபகமானாசுவரரூபமோ} இருக்குமோ, எது (உயிரினங்களின் வடிவை ஏற்று) அனைத்தையும் செய்யுமோ, எது மந்திரங்களை {வேதங்களைப்} போல அண்டத்தில் நிலைத்திருக்குமோ[2], எது அனைத்திற்கும் காரணமாக இருக்குமோ, எது உயர்ந்ததில் உயர்ந்ததாக இருக்குமோ, எது இரண்டாவதாக ஒன்றில்லாமல் ஒன்றாகவே இருந்து அனைத்தையும் செய்யுமோ அதுவே காரணமாகும். வேறு அனைத்தும் விளைவுகளேயாகும் {காரியங்கள் ஆகும்}.(7) ஒரு மனிதனால் செய்யப்படும் செயல்களின் விளைவால் அவன் அடையும் விளைவுகளில் நன்மையும், தீமையும் ஒன்றாக ஒற்றுமையுடன் வசிக்கின்றன. உண்மையில், செயல்களில் பிறக்கும் நன்மை மற்றும் தீமையின் கனிகள் {பலன்கள்}, உடலில் வசிக்கும் ஞானத்தைப் போலவே தங்களுக்கு {அந்தப் பலன்களுக்குப்} புகலிடமான உயிரினங்களின் உடல்களில் ஒன்றாகவே வசிக்கின்றன[3].(8) தூண்டப்பட்ட விளக்கு எரியும்போது, தன் முன்னே இருக்கும் பிற பொருட்களைக் காணச் செய்வதைப் போலவே, உயர்ந்த மரங்களில் நிறுவப்பட்ட விளக்குகளைப் போன்றவையான ஐம்புலன்களும், அறிவால் தூண்டப்படும்போது தங்கள் தங்களுக்குரிய பொருட்களைக் கண்டடைகின்றன[4].(9) ஒரு மன்னனின் பல்வேறு அமைச்சர்கள் எவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து அவனுக்கு ஆலோசனை வழங்குகிறார்களோ, அவ்வாறே உடலில் உள்ள ஐம்புலன்களும் அறிவுக்குப் பணிவிடை செய்கின்றன. அறிவே அவை அனைத்திலும் மேன்மையானதாகும்.(10) நெருப்பின் தழல்கள், காற்றோட்டம், சூரியனின் கதிர்கள், ஆறுகளின் நீர்கள் எவ்வாறு மீண்டும் மீண்டும் சென்று வருகின்றனவோ, அவ்வாறே உடல் கொண்ட உயிரினங்களின் உடல்களும் மீண்டும் மீண்டும் சென்று வருகின்றன {இறந்து பிறக்கின்றன[5].(11)ஒரு மனிதன் ஒரு கோடரியை எடுத்து ஒரு மரத்துண்டை வெட்டினாலும் கூட, புகையையோ, நெருப்பையோ காணாததைப் போலவே, ஒரு மனிதனின் கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றை வெட்டிப் பிரித்தாலும், வயிறு, கரங்கள் மற்றும் கால்களுக்கிடையில் உள்ள பொதுவான எந்த அறிவுக் கோட்பாட்டையும் {ஆன்மாவையும்} அவன் காணமாட்டான்[6].(12) மரத்தை ஒன்றோடொன்று உரசுவதால், ஒரு மனிதன் புகையையும், நெருப்பையும் காண்பதைப் போலவே, நன்கு செலுத்தப்பட்ட புத்தியையும், ஞானத்தையும் கொண்ட மனிதன், (யோகத்தின் மூலம்) புலன்களையும், ஆன்மாவையும் ஒருங்கிணைத்து, தன் இயல்பின் இருப்பில் இருக்கும் பரமாத்மாவைக் காணலாம்[7].(13) ஒருவன் கனவுக்கு மத்தியல், தன் உடலானது தன்னில் இருந்து வேறுபட்டுத் தரையில் கிடப்பதைக் காண்பதைப் போலவே, ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடன் கூடிய மனிதன், (தான் இறந்த பிறகு) தன் உடலைக் கண்ட பிறகு, வேறொரு வடிவிற்குள் செல்கிறான்.(14) பிறப்பு, வளர்ச்சி, சிதைவு மற்றும் அழிவு ஆகியவற்றுக்கு ஆன்மா ஒரு போதும் ஆட்படுவதில்லை. வாழ்வின் விளைவுகளுடன் கூடிய செயல்களின் விளைவால், உடலை ஆடையாக உடுத்தியிருக்கும் ஆன்மாவானது, (அசைவை இழந்து), பிறரால் பார்க்கப்படாதவாறு இந்த உடலில் இருந்து மற்றொன்றுக்குக் கடந்து செல்கிறது.(15)ஆன்மாவின் வடிவை ஒருவராலும் தங்கள் கண்களால் காண முடியாது. மேலும் ஆன்மாவானது, எவரின் தீண்டலுக்கும் ஆட்பட முடியாது. ஆன்மாவானது அவற்றை (புலன்களைக்) கொண்டு எந்தச் செயலையும் செய்யாது. புலன்கள் ஆன்மாவை அணுகாது. எனினும், ஆன்மாவானது அவை அனைத்தையும் உணர்கிறது.(16) பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு முன்னால் சுடர்மிக்க நெருப்புக்குள் வைக்கப்படும் எதுவும், அதில் உள்ள ஒளி மற்றும் வெப்பத்தின் விளைவால், வேறு எந்த வண்ணத்தையோ, இயல்பையோ ஏற்காமல் ஒரு குறிப்பிட்ட நிறத்தை ஏற்பதைப் போலவே, ஆன்மாவின் வடிவும் அதன் நிறத்தை உடலில் இருந்து எடுப்பதாகத் தெரிகிறது.(17) இந்த வகையிலேயே, உடலைக் கைவிடும் மனிதனும், எவராலும் பார்க்கமுடியாதவாறு மற்றொன்றில் நுழைகிறான். உண்மையில், தன் உடலை அடிப்படையான (ஐந்து) பெரும்பூதங்களில் கைவிடும் அவன், அதே போல (ஐந்து) பூதங்களால் செய்யப்பட்ட ஒரு வடிவை ஏற்கிறான்.(18) உடல் கொண்ட உயிரினமானது (தன் உடல் அழிந்ததும்), தன் உடலில் உள்ள ஒவ்வொரு குறிப்பிட்ட பூதத்தையும், (தன் உடலுக்கு வெளியே உள்ள) தன் மெய்க்கு இயல்பான குறிப்பிட்ட பூதத்தில் கலந்து வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் மற்றும் பூமி {நிலம்} ஆகியவற்றில் நுழைகிறது. பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவையும், (தங்கள் செயல்பாட்டுக்காக) ஐந்து பூதங்களைச் சார்ந்திருப்பவையுமான புலன்களும், அதனதனுக்குரிய பூதங்களில் நுழைகின்றன.(19)

காதானது தன் திறனை வெளியில் {ஆகாயத்தில்} இருந்து பெறுகிறது; மூக்கானது மணத்தின் உணர்வைப் பூமியில் இருந்து பெறுகிறது. கண்ணின் தன்மையான வடிவமானது, ஒளி அல்லது நெருப்பின் விளைவாகும். நெருப்பு அல்லது வெப்பமானது, நீரின் காரணத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறுது. சுவையைத் தன் தன்மையாகக் கொண்ட நாக்கானது, நீரில் கலக்கிறது. தீண்டலைத் தன் தன்மையாகக் கொண்ட தோலானது, அதன் இயல்பான காற்றில் {வாயுவில்} தொலைந்து போகிறது.(20) (ஒலி உள்ளிட்ட) ஐந்து வகைத் தன்மைகளும் (அடிப்படையான ஐந்து பூதங்களான) (ஐந்து) பேருயிரிகளில் வசிக்கின்றன. (வெளி உள்ளிட்ட) ஐந்து வகைப் புலன்நுகர் பொருட்களும், (ஐந்து) புலன்களில் வசிக்கின்றன. மேலும் (ஐந்து வகைத் தன்மைகள், ஐந்து வகைப் பூதங்கள், ஐம்புலன்கள் ஆகிய) இவை மனத்தின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கின்றன. மனமோ, புத்தியின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது, புத்தியோ அசுத்தமற்றதும், உண்மையானதும் எதுவோ, அதன் (பரமாத்மாவின் {ஆத்மாவின்}) வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது.(21) செயலைச் செய்தவன், தன் முற்பிறவியில் தான் செய்த செயல்கள் அனைத்திற்கு ஏற்பவும் தன் புதிய உடலின் மூலம் நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தையும் பெறுகிறான். இப்பிறவியில் செய்யப்படும் செயல்கள் மற்றும் அடுத்தடுத்த பிறவிகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், நல்ல நீரோட்டத்தில் {பிரவாஹத்தில்} அதற்கு இணக்கமாகக் கடந்து செல்லும் நீர் வாழ் விலங்குகளைப் போலவே மனத்தைப் பின்தொடர்கின்றன.(22) வேகமாக நகர்வதும், ஓய்வற்றதுமான பொருள் காணப்படுவதைப் போல, (கண்ணாடியின் மூலம் காணப்படும்) நுண்ணியப் பொருள் பெரும் அளவுகளில் தோன்றுவதைப் போல, (வேறு வகையில் காணமுடியாத) தன் முகத்தை ஒரு மனிதனுக்கு நிலைக்கண்ணாடி காட்டுவதைப் போல, ஆன்மாவும் (நுண்ணியதாகவும், புலப்படாததாகவும் இருப்பினும்) புத்தியின் உணர்வுப் பொருளாகிறது” என்றார் {மனு}[8].(23)

கர்மப்பயன்! – சாந்திபர்வம் பகுதி – 203-புலப்படாததாக இருக்கும் ஆன்மாவின் இருப்பையும், எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதையும் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…

மனு {பிருஹஸ்பதியிடம்}, “புலன்களுடன் ஒன்றிணையும் மனம், கடந்தகாலத்தில் பெறப்பட்ட பொருட்களின் மனப்பதிவுகளை நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவுகூர்கிறது. புலன்கள் அனைத்தும் (தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால்,[1] புத்தியின் வடிவில் உள்ள உயர்ந்தது (ஆன்மா), தன் உண்மையான இயல்பில் நீடித்திருக்கிறது.(1) (அத்தகைய நேரத்தில்) ஆன்மாவானது, புலன்நுகர் பொருட்களின் ஒருங்கமைவையோ, முரணையோ கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், அனைத்துத் திசைகளில் இருந்தும் அவற்றைத் திரட்டி ஒன்றாகப் பற்றி வைக்கும்போது, பொருத்தமற்ற பொருட்கள் அனைத்திற்கும் மத்தியில் அஃது அவசியம் உலவ நேர்கிறது. எனவே, அஃது (அமைதியான) சாட்சியாக இருக்கிறது. உடலுக்குள் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தனிப்பட்ட சுதந்திர இருப்பாக இருக்கிறது[2].(2)ரஜஸ், தமஸ், மற்றும் மூன்றாவதாகச் சத்வம் ஆகியவை {குணங்கள்} இருக்கின்றன. மேலும் புத்திக்கு, விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்று மூன்று நிலைகளும் இருக்கின்றன. ஆன்மாவானது, அந்த நிலைகள், முதலில் குறிப்பிட்டப்பட்ட மூன்று வகைக் குணங்களின் இயல்புகள், முரண்பட்டவையான இன்பங்கள் மற்றும் துன்பங்கள் ஆகியவற்றைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறது[3]. ஆன்மாவானது, மரத்துண்டில் உள்ள நெருப்பில் நுழையும் காற்றைப் போலப் புலன்களுக்குள் நுழைகிறது.(3) ஒருவன் தன் கண்ணால் ஆன்மாவின் வடிவத்தைக் காணவோ, புலன்களுக்கு மத்தியில் உள்ள தீண்டலின் புலனுணர்வால் அதை {ஆன்மாவை} உணரவோ முடியாது. மேலும் ஆன்மாவானது, காதால் உணரப்படும் பொருளாகவும் இல்லை. எனினும், ஸ்ருதிகளின் துணை மற்றும் ஞானியரின் போதனைகள் மூலம் அதை {ஆன்மாவைக்} காணலாம். புலன்களைப் பொறுத்தவரையில், அதை {ஆன்மாவைத்} தொடரும் குறிப்பிட்ட புலனானது, தன் உணர்வை இழந்து, புலன் என்ற தன் இருப்பையே இழக்கிறது.(4)புலன்களால் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களைத் தாங்களே உணர முடியாது. ஆன்மாவானது (அறிவதையும், அறியப்படுவதையும உணர்வதால்) அனைத்தையும் அறிந்ததாக இருக்கிறது. அஃது அனைத்துப் பொருட்களையும் பார்க்கிறது. அனைத்தையும் அறிந்ததாக இருப்பதால், (முன்னர்ச் சொன்னது போலப் புலன்களால் உணரப்படாத) ஆன்மாவே புலன்களைக் காண்கிறது.(5) இமய மலையின் மறு பக்கத்தை யாரும் பார்த்ததில்லை, அதே போலச் சந்திர வட்டிலின் பின்புறத்தையும் யாரும் பார்த்ததில்லை. எனினும் அவை இல்லை என்று சொல்ல முடியாது.(6) அதேபோலவே, புலன்களால் உணரப்படாததாக இருப்பினும், அனைத்து உயிரினங்களிலும் வசிப்பதும், நுட்பமானதும், அறிவையே தன் சாரமாகக் கொண்டதுமான ஆன்மா இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.(7)

நிலவின் களங்கங்களின் வடிவில் உலகம் பிரதிபலிக்கப்படுவதையே மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்தாலும் கூட, உலகமே அங்கே பிரதிபலிக்கப்படுகிறது என்பதை அறிவதில்லை. ஆன்ம அறிவும் அவ்வாறானதே ஆகும். அந்த அறிவு தானாகவே வர வேண்டும். ஆன்மாவானது ஆன்மாவையே சார்ந்திருக்கிறது.(8) பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பிறகும் புலப்படக்கூடிய பொருட்களின் வடிவமற்ற தன்மையைச் சிந்தித்த ஞானிகள், மேலீடான வடிவங்களாக இருக்கும் வடிவமற்ற பொருட்களைப் புத்தியின் துணையால் பார்க்கின்றனர். சூரியனின் நகர்வு காணப்படவில்லையெனினும், அஃது எழுவதையும் மறைவதையும் கண்டு, சூரியனுக்கு அசைவிருக்கிது என்று தீர்மானிக்கப்படுகிறது[4].(9) அதே போலவே, ஞானமும் கல்வியும் கொண்டவர்கள், ஆன்மாவானது எட்ட முடியாத தொலைவில் இருந்தாலும், நுண்ணறிவு {புத்தி} எனும் விளக்கின் உதவியுடன் அதை {ஆன்மாவைக்} கண்டு, அருகில் உள்ள ஐந்து வகைப் பூதங்களையும் பிரம்மத்துடன் கலக்க முனைகிறார்கள்.(10)உண்மையில், வழிமுறைகளைச் செயல்படுத்தாமல் எந்த நோக்கமும் நிறைவேற்றப்பட முடியாது. மீனவன், இழைகளால் செய்யப்பட்ட வலைகளின் வழியின் மூலமே மீனைப் பிடிக்கிறான்.(11) விலங்குகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற விலங்குகள் கைப்பற்றப்படுகின்றன. பறவைகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற பறவைகள் பிடிக்கப்படுகின்றன. யானைகளை நியமித்தே பிற யானைகள் பிடிக்கப்படுகின்றன. இவ்வழியில் ஆன்மாவை அறிவுக் கோட்பாட்டின் மூலம் உணரலாம்.(12) பாம்பின் கால்களைப் பாம்பே அறியும் என நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையிலேயே ஒருவன், மொத்த உடலுக்குள் நுட்பமான வடிவத்தில் வசிக்கும் ஆன்மாவைத் தன் அறிவின் மூலம் காண்கிறான்.(13) மக்கள் தங்கள் புலன்களின் மூலம் புலன்களை அறிவதில்லை. அதேபோல, உயர்ந்ததான ஆன்மாவை வெறும் உயர்ந்த புத்தியால் மட்டுமே காண முடியாது. (14)

தேய்பிறையின் பதினைந்தாவது நாள் {புது நிலவின் / அமாவாசை} இரவில் நிலவு மறைக்கப்படுவதால் அதைக் காண முடியாது. எனினும், அதற்கு அழிவு ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. உடலில் வசிக்கும் ஆன்மாவின் வழக்கும் அவ்வாறானது ஆகும்.(15) தேய்பிறையின் பதினைந்தாவது நாளில், நிலவின் மொத்த உடலும் புலப்படாத் தன்மையை அடைகிறது. அதே வகையிலேயே உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவையும் உணர முடியாது.(16) நிலவானது, ஆகாயத்தின் மற்றொரு புள்ளிக்கு நகர்ந்ததும், மீண்டும் ஒளிரத்தொடங்குவதைப் போலவே, ஆன்மாவும் புதிய உடலை அடைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறது.(17) நிலவின் பிறப்பு, வளர்ச்சி, மறைவு ஆகிய அனைத்தும், கண்களால் நேரடியாக உணரப்படுகிறது. எனினும், இந்தத் தோற்றப்பாடுகள், அந்த ஒளிக்கோளின் மொத்த வடிவுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. அவை ஆன்மாவின் குணங்களைப் போன்றவையல்ல.(18) தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} நிலவு மறைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, மறைந்து போன அதே ஒளிக்கோளாகவே அது கருதப்படுகிறது. அந்த வகையிலேயே, பிறப்பு, வளர்ச்சி, வயது ஆகிய மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும் ஒரு மனிதன் தன் அடையாளத்தில் ஐயங்கொள்ளாத வகையில் அதே நபராகவே கருதப்படுவான்.(19)

ராகு எவ்வாறு நிலவை அணுகுகிறது, விடுகிறது என்பது தெளிவாகக் காணப்படுவதில்லை. அந்த வகையிலேயே ஆன்மாவும், ஒருவனுடைய உடலை விட்டுப் பிரிவதையும், மற்றொன்றுக்குள் நுழையவதையும் காண முடியாது.(20) சூரியன் அல்லது நிலவுடன் இருக்கும்போது மட்டுமே ராகு புலப்படுகிறது. அதே போலவே ஆன்மாவும், உடலில் இருக்கும்போது மட்டுமே உணரப்படும் பொருளாக இருக்கிறது.(21) சூரியன் அல்லது சந்திரனிலிருந்து விடுபட்டதும் ராகுவைக் காண முடியாது. அதே போலவே, ஆன்மாவும் உடலைவிட்டு அகன்றதும் காணப்பட முடியாது.(22) மேலும், தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} சந்திரன் மறையும்போது, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களால் அது கைவிடப்படாதிருப்பதைப் போல, ஆன்மாவானதும் உடலில் இருந்து பிரிந்தாலும், அந்த உடலால் அடைந்த செயல்களின் கனிகளை {கர்மப்பலன்களைக்} கைவிடுவதில்லை” என்றார் {மனு}.(23)

ஆன்மவுணர்வு! – சாந்திபர்வம் பகுதி – 204- எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…

மனு {பிரஹஸ்பதியிடம்}, “இந்த வெளிப்பாடு (உடல்) {ஸ்தூலசரீரம்}, கனவின்போது (செயலின்றி) கிடந்து, ஜீவனானது {ஸூக்ஷமசரீரமானது} முன்னதிலிருந்து {உடலான ஸ்தூலசரீரத்திலிருந்து} தன்னை விடுவித்துக் கொண்டு நுண்ணிய வடிவில் நடப்பதைப் போல, ஆழ்ந்த உறக்கம் (அல்லது மரணம்) என்றழைக்கப்படும் நிலையில், புலன்கள் அனைத்துடன் கூடிய அந்த நுண்ணிய வடிவம் {ஜீவன் / சூக்ஷமசரீரம்} செயலற்றுப் போகவும், புத்தியானது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது. இவ்வாறு இருப்பு மற்றும் இல்லாமை {முக்தி} ஆகிய நிலைகளில நேர்கிறது[1].(1) தெளிந்த நீரில் கண்ணால் வடிவச் சாயல்கள் {பிரதிபிம்பங்கள்} காணப்படுவதைப் போல, புலன்கள் கலக்கமடையாமல் இருந்தால், ஆன்மாவானது புத்தியால் காணப்படவல்லதாக இருக்கிறது.(2) எனினும், அந்நீர் கலங்கினால், அதன் அருகில் இருக்கும் மனிதனால் அந்த வடிவத்தோற்றங்களைக் காண முடியாது. அதைப் போலவே, புலன்கள் கலக்கமடைந்தால், ஆன்மாவைப் புத்தியால் காண முடியாது.(3) அறியாமையானது மாயையைத் தோற்றுவிக்கிறது. மாயை மனத்தைப் பாதிக்கிறது. மனமானது, பழுதாகும்போது, மனத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்ட ஐம்புலன்களும் பழுதடைகின்றன.(4) அறியாமையால் மடக்கப்பட்டு, உலகம் சார்ந்த பொருட்களெனும் சகதிக்குள் மூழ்கும் ஒருவனால், மனநிறைவு அல்லது நிலையமைதியின் இனிமைகளை அனுபவிக்க முடியாது. (இவ்வாறான சூழ்நிலையில்} நன்மை மற்றும் தீமையான செயல்களின் தொடர்பறாத ஆன்மாவானது, மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த பொருட்களுக்கே திரும்புகிறது.(5)பாவத்தின் விளைவால் ஒருவனுடைய தாகம் ஒருபோதும் அடங்குவதில்லை. அவனுடைய பாவம் அழியும்போதே அவனது தாகமும் தணிகிறது.(6) தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளத்தக்க போக்கைக் கொண்ட உலகப் பொருட்களில் உள்ள பற்றின் விளைவால், ஒருவன் தான் விரும்ப வேண்டியவற்றை விடுத்து வேறு பொருட்களை விரும்புவதால், உயர்ந்ததை {பரமனை / பரம்பொருளை} அடையத் தவறுகிறான்[2].(7) அனைத்துப் பாவச் செயல்களின் அழிவிலிருந்தே மனிதர்களிடம் ஞானம் எழுகிறது. ஞானம் தோன்றியதும், ஒருவன், பளபளப்பான கண்ணாடியில் தன் வடிவத்தைக் காண்பதைப் போலவே, தன் புத்தியில் தன் ஆன்மாவைக் காண்பான்.(8) புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவால் ஒருவன் துன்பத்தை அடைகிறான். புலன்களைக் கட்டுப்படுத்தியதால் ஒருவன் இன்பத்தை அடைகிறான். எனவே, ஒருவன் புலன்களால் உணரப்படும் பொருட்களில் இருந்து தன் முயற்சியுடன் தனது மனத்தை விலக்க வேண்டும்[3].(9) புலன்களுக்கு மேலானதாக மனம் இருக்கிறது; மனத்திற்கு மேலானதாகப் புத்தி இருக்கிறது. புத்திக்கு மேலானதாக ஆன்மா இருக்கிறது; ஆன்மாவுக்கு மேலானதாக உயர்ந்தது அல்லது மிகப்பெரியது {பரம்பொருள் / பரமாத்மா} இருக்கிறது.(10)வடிவமற்றதிலிருந்து {பரம்பொருளில் இருந்து} ஆன்மா எழுந்தது; ஆன்மாவில் இருந்து புத்தி எழுந்தது; புத்தியிலிருந்து மனம் எழுந்தது. மனம் புலன்களோடு கலக்கும்போது, அஃது {மனம்} ஒலியையும், புலன் நுகர் பொருட்களான பிறவற்றையும் உணர்கிறது.(11) எவன் அந்தப் {புலன்நுகர்} பொருட்களையும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தையும் கைவிடுவானோ, எவன் மூலப் பொருளில் {ப்ரக்ருதியில்} இருந்து எழும் அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறானோ, அவன் அவ்வாறு விடுபடுவதால் அழிவின்மையை அனுபவிக்கிறான் {முக்தியை அடைகிறான்} [4].(12) உதிக்கும் சூரியன் தன் கதிர்களை வெளியிடுகிறான். அவன் மறையும்போது தன்னால் வெளியிடப்பட்ட கதிர்களைத் தானே விலக்கிக் கொள்கிறான்.(13) அந்த வகையிலேயே ஆன்மாவும், உடலுக்குள் நுழைந்து, புலன்களால் வெளியிடப்படும் கதிர்களால் புலன்களின் ஐந்து வகைப் பொருட்களை அடைகிறது. எனினும், அது திரும்பும்போது, தானே அந்தக் கதிர்களை விலக்கிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(14) செயல்களால் உண்டாக்கப்பட்ட பாதையில் மீண்டும் மீண்டும் வழிநடத்தப்படும் அது {ஆன்மா} செயல்கள் செய்யப்பட்டதைப் பின்தொடர்ந்ததன் விளைவால் தன் செயல்களுக்கான கனிகளை அடைகிறது[5].(15)புலன்நுகர் பொருட்களில் உள்ள ஆசையானது, அத்தகைய ஆசையில் ஈடுபடாத மனிதனிடம் இருந்து விலகி இருக்கிறது. எனினும், ஆசையில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனிடம் இருந்து ஆசையெனும் கோட்பாடே உண்மையில் விலகிச் செல்கிறது[6].(16) புத்தியை ஈர்த்திருக்கும் மனமானது இல்லாமல் போவது சாத்தியமென்பதால், புத்தியானது, புலன் நுகர் பொருட்களில் உள்ள பற்றில் இருந்து விடுபட்டு, மனத்தில் நிலைபெறும்போது, ஒருவன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(17) பிரம்மம் என்பது தீண்டவோ, கேட்கவோ, சுவைக்கவோ, பார்க்கவோ, நுகரவோ, ஆலோசிக்கவோ படக்கூடிய பொருள் அல்ல. (வேறு அனைத்தில் இருந்தும் விடுபட்ட) புத்தியால் மட்டுமே அஃதை அடைய முடியும்.(18) புலன்கள் மூலம் மனம் உணரும் அனைத்துப் பொருட்களும், மனத்திற்குள் ஈர்க்கப்படவல்லவை; மனமானது புத்திக்குள் ஈர்க்கப்படக்கூடியது; புத்தியானது ஆன்மாவுக்குள் ஈர்க்கப்படக்கூடியது, ஆன்மாவோ உயர்ந்ததற்குள் {பரம்பொருளுக்குள்} ஈர்க்கப்படக்கூடியது[7].(19) புலன்களால் மனத்தின் வெற்றிக்குப் பங்காற்ற முடியாது. மனத்தால் புத்தியை உணர முடியாது. வெளிப்படும் ஆன்மாவைப் புத்தியால் உணரமுடியாது. எனினும் நுட்பமான ஆன்மாவானது இவை அனைத்தையும் காண்கிறது[8]” என்றார் {மனு}.(20)

பரப்பிரம்மம்! – சாந்திபர்வம் பகுதி – 205-துன்பத்தைத் தவிர்ப்பதும், பிரம்மத்தை அடைவதும் எவ்வாறு என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…

மனு {பிரஹஸ்பதியிடம்}, “உடல் மற்றும் மனத் துன்பங்கள் தோன்றும்போது, ஒருவனால் யோகத்தைப் பயில முடியாது. எனவே, அத்தகைய கவலைகளை நினைத்தேங்கிக் கொண்டிருப்பவனுக்கு அது கைக்கொள்ளக்கூடியதல்ல.(1) கவலைகளை நினைத்து ஏங்காமல் இருப்பதே அதற்கான மருந்தாகும். துன்பங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், அவை மேலும் தீவிரமடைந்து, தீங்கை அதிகரிக்கச் செய்கிறது.(2) ஒருவன் ஞானத்தால் மனத்துன்பத்தில் இருந்தும், குணப்படுத்தும் மருந்துகளால் உடல் துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஞானம் இதையே கற்பிக்கிறது. கவலையில் இருக்கும்போது ஒருவன் குழந்தை போல நடந்து கொள்ளக்கூடாது.(3) ஞானம் கொண்ட மனிதன், நிலையற்றவையான இளமை, அழகு, நீடித்த வாழ்நாள் {ஆயுள்}, செல்வத் திரட்டு, அன்புக்குரியோரின் தோழமை ஆகிய ஆசைகளை ஒருபோதும் பேணி வளர்க்கக்கூடாது.(4) மொத்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைக்காக ஒருவன் தனியாக வருந்தக்கூடாது. வாய்ப்பைக் காணும்போது அவன் தீர்வை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.(5)

வாழ்வில் மகிழ்ச்சியை விடத் துன்பத்தின் அளவே பெரியது என்பதில் ஐயமில்லை. புலன்நுகர் பொருட்களில் நிறைவுடன் இருக்கும் ஒருவனுக்கு, அவனது மயக்கத்தின் விளைவால், ஏற்பில்லா {இனிமையற்ற} மரணம் ஏற்படுகிறது.(6) துன்பம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் தவிர்க்கும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் நிச்சயம் வெல்கிறான். அத்தகைய ஞானம் கொண்ட மனிதர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை.(7) உலகம் சார்ந்த உடைமைகள் கவலையையே கொண்டு வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பதால் உனக்கு எந்த மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியாது. மேலும் அவை துன்பப்பட்டே ஈட்டப்படுகின்றன. எனவே, ஒருவன் அவற்றின் இழப்பைக் கருத்தில் கொள்ளக்கூடாது.(8) தூய அறிவானது (அல்லது பிரம்மம்), அறிவு சார்ந்த பல்வேறு பொருட்களில் (வடிவங்களில்) இருக்கிறது என்று (அறியாமை கொண்டோரால்) கருதப்படுகிறது. மனமானது அறிவின் ஓர் இயல்பே என்று அறிவாயாக. மனமானது அறிவுப்புலங்களோடு கலக்கும்போது, (பொருள் வடிவங்களின் உடல்களை உண்டாக்கும்) புத்தியானது பிறக்கிறது.(9) புத்தியானது, செயலின் குணங்களில் இருந்து விடுபடும்போது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கப்பட்ட) மனத்தை நோக்கிச் செலுத்தப்பட்டு, தியானம், அல்லது யோக முடிவிலான முழுமையான ஈர்ப்பின் (சமாதிநிலையின்) மூலமாகப் பிரம்மத்தை அறிவதில் வெல்கிறது.(10)

அறியாமையில் இருந்து பாய்வதும், புலன்களுடன் கூடியதும், குணங்களைக் கொண்டதுமான புத்தியோ, மலை முகட்டில் இருந்து பிற பகுதிகளை நோக்கிப் பாயும் ஓர் ஆற்றைப் போலப் புறப்பொருட்களை நோக்கி ஓடுகிறது.(11) புத்தியானது, மனத்திற்குள் ஈர்க்கப்படும்போது, உரைகல்லைக் கொண்டு தங்கத்தைத் தீண்டுவதைப் போலக் குணங்களில் இருந்து விடுபட்ட சிந்தனையை ஈர்ப்பதில் வென்று பிரம்ம அறிவை அடைகிறது.(12) புலன் நுகர் பொருட்களை உணர்வது மனமே ஆகும். (பிரம்மத்தை அடைவதற்கு முன்பாக) அதுவே முதலில் அடக்கப்பட வேண்டும். தன் முன்னுள்ள பொருட்களின் குணங்களைச் சார்ந்த மனத்தால், குணங்களற்ற ஒன்றைக் காட்ட முடியாது.(13) புலன்களுக்குண்டான வாயில்களனைத்தும் அடைக்கப்பட்டு, புத்தியானது மனத்திற்குள் ஈர்க்கப்பட வேண்டும். தியானத்தில் ஈர்க்கப்பட்டிருக்கும் இந்நிலையிலேயே அது {புத்தியானது} பிரம்ம அறிவை அடைகிறது.(14) (மொத்த வடிவங்களிலான) ஐவகைப் பூதங்களும், குணங்கள் என்று அறியப்படுபவையின் அழிவுக்குப் பிறகு, (தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் தங்கள் நுட்பமான வடிவில்) விலகும் வகையிலேயே, புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகிய புலன்களுடன் கூடிய புத்தியானது மனத்திற்குள் மட்டுமே வசிக்கும்[1].(15)

நிச்சயமான குணத்தைக் கொண்டதாக இருப்பினும் புத்தியானது மனத்திற்குள் வசித்து, உட்புறத்தில் திரிந்தாலும், அது {புத்தி} மனமேயன்றி (தன்னைவிட உயர்ந்த) வேறேதுமாக இல்லை.(16) தியானத்தின் மூலம் சிறப்பை அடையும் மனம், அல்லது நனவுநிலையானது {அஹங்காரமானது}, குணங்களையும், அவற்றைக் கொண்டவைகளாகக் கருதப்படுபவற்றையும் அடையாளம் காண்பதில் வென்று, அந்தக் குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, குணங்களற்ற பிரம்மத்தை {நிர்க்குண பிரம்மத்தை} அடைகிறது[2].(17) வடிவமற்றதை (பிரம்மத்தை) {ஸூக்ஷ்மமானப்ரம்மத்தைக்} குறித்த அறிவைத் தருவதற்குப் போதுமானதாக, தகுந்ததாக எந்தக் குறியீடும் {த்ருஷ்டாந்தமும்} இல்லை. மொழியில் பொருள் அமைக்கப்பட முடியாத ஒன்று, எவராலும் அடையப்பட முடியாததாகும்[3].(18) தூய்மையடைந்த ஆன்மாவுடனும், தவங்கள், ஊகங்கள், தற்கட்டுப்பாடு, தன் வகைக்கென விதிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் பயிற்சிகள், வேதங்கள் ஆகியவை அளிக்கும் உதவியின் மூலமும் ஒருவன் உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைய முயல வேண்டும்.(19) (தங்களுக்குள் உள்ள உயர்ந்ததை {பரம்பொருளைக்} காண்பதைத் தவிர்த்து) தெளிந்த பார்வை கொண்ட மனிதர்கள், குணங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புற வடிவங்களிலும் அதை {பிரம்மத்தை} அடைய முயல்கிறார்கள். ஞேயம் (Jneya அறியப்பட வேண்டிய ஒன்று) என்ற பெயரால் அழைக்கப்படும் உயர்ந்தது {பிரம்மம்}, குணங்கள் இல்லாததன், அல்லது அவற்றின் இயல்பு இல்லாததன் விளைவாக, வாதத்தால் ஒருபோதும் உணரப்பட முடியாததாக இருக்கிறது {அது யுக்திக்கு எட்டாததாகும்}.(20)புத்தியானது, குணங்களில் இருந்து விடுபடும்போது மட்டுமே அதனால் பிரம்மத்தை அடையமுடியும். குணங்களில் இருந்து விடுபடாதபோது அஃது உயர்ந்ததிலிருந்து {பிரம்மத்திலிருந்து} மீண்டும் வீழ்கிறது. உண்மையில், குணங்களை நோக்கி விரைவதும், விறகுக்கு மத்தியில் நெருப்பைப் போல அவற்றின் மத்தியில் திரிவதுமே புத்தியின் இயல்பாகும்.(21) சுசுப்தி (கனவற்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், ஐம்புலன்களும் தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையிலேயே, உயர்ந்த பிரம்மமானது, குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்ட நிலையில், பிரக்ருதிக்கு {மூல இயற்கைக்கு} மேலாக உயர்ந்து நிலைத்திருக்கிறது[4].(22) இவ்வாறே, உடல்படைத்த உயிரினங்கள் குணங்களின் விளைவுகளால் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து அவை விலகும்போது விடுதலையை {முக்தியை} அடைகின்றன. (செயலின் மூலம்) சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன.(23) வாழும் பூதம் {ஜீவன்}, மூல இயற்கை {ப்ரக்ருதி}, புத்தி, புலன்நுகர் பொருட்கள் {விஷயங்கள்}, புலன்கள், நனவுநிலை {அஹங்காரம்}, தன்னடையாள நம்பிக்கை {அபிமானம்} ஆகியன (அழிவுக்குரியவையாக இருப்பதால்) பூதங்கள் என்றழைக்கப்படுகின்றன.(24) இவற்றின் மூலப் படைப்பு உயர்ந்ததில் {பரம்பொருளில்} இருந்து பாய்ந்தது. இரண்டாவது, அல்லது அடுத்தப் படைப்பானது, (எதிர்பாலின) இணைகள், அல்லது துணைகளின் மூலம், அடிப்படையான ஐந்தை {புலன்களைத்} தவிர்த்து அனைத்துப் பொருட்களையும்[5] உள்ளடக்கி, இனங்கள் அதே இனங்களைப் படைக்கும் விளைவிலான விதிகளுக்குக் கட்டுப்பட்டு உண்டாக்குகின்றன[6].(25) (வாழும்) உயிரினங்கள அறத்தின் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றன, பாவத்தின் மூலம் அவை இழிந்த கதியை ஈட்டுகின்றன. பற்றுகளில் இருந்து விடுதலையடையாதவன் மறுபிறப்பைச் சந்திக்கிறான்; அதே வேளையில் அவற்றில் இருந்து விடுதலை அடைந்தவன் அறிவை (அல்லது பிரம்மத்தை) {முக்தியை} அடைகிறான்” என்றார் {மனு}.(26)

செயல்விலக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 206-செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறம் என்பதைப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…

மனு {பிரஹஸ்பதியிடம்}, “ஐம்புலன்களோடும், மனத்தோடும் ஐவகை உடைமைகள் கலக்கும்போது, ரத்தினத்தின் ஊடாகக் கடக்கும் நூலைப் போலத் தனிப்பட்ட ஒருவனால் {ஆன்மாவால்} பிரம்மம் {பரம்பொருள்} காணப்படுகிறது.(1) மேலும் நூலானது எவ்வாறு தங்கம், முத்து, வைடூரியம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட எந்தப் பொருளிலும் நூலாகக் கிடக்குமோ,(2) அவ்வாறே ஒருவனின் ஆன்மாவும், அதன் செயல்களின் விளைவாக ஒரு பசுவுக்குள்ளோ, குதிரை, மனிதன், யானை, பிற விலங்கு, புழு, அல்லது பூச்சிக்குள்ளோ வாழ்கிறது.(3) தனிப்பட்ட ஒருவன் {ஆத்மா} குறிப்பிட்ட ஓர் உடலுக்குள் இருந்து செய்யும் நற்செயல்கள் உண்டாக்கும் வெகுமதிகளை அந்தக் குறிப்பிட்ட உடலுக்குள் உள்ள அந்த ஒருவனே {ஆத்மாவே} அனுபவிக்கிறான்[1].(4) குறிப்பிட்ட வகை நீர்மத்தால் நனைக்கப்பட்ட மண்ணானது, அதில் வளரும் ஒவ்வொரு வகை மூலிகை, அல்லது செடிக்கும் அதற்குத் தேவையான வகையில் உள்ள சாற்றைக் கொடுக்கிறது. அதே வகையில், ஆன்மாவை சாட்சியாகக் கொண்ட புத்தியானது, முற்பிறவிச் செயல்களால் குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றவே இணங்குகிறது[2].(5)அறிவில் இருந்து ஆசை எழுகிறது. ஆசையிலிருந்து தீர்மானம் {முயற்சி} எழுகிறது. தீர்மானத்திலிருந்து செயல் பாய்கிறது. செயலில் இருந்து கனிகள் (நல்ல மற்றும் தீய விளைவுகள்) உண்டாகின்றன.(6) எனவே கனிகள் தங்களுக்குக் காரணமான செயல்களையே சார்ந்திருக்கின்றன. செயல்களோ தங்களுக்குக் காரணமாகப் புத்தியைக் கொண்டிருக்கின்றன. புத்தி அதன் காரணமாக அறிவைக் கொண்டிருக்கிறது; அறிவு அதன் காரணமாக ஆன்மாவைக் கொண்டிருக்கிறது.(7) அறிவு, கனிகள் {பலன்கள்}, புத்தி, செயல்கள் ஆகியன அழிவதன் விளைவால் அடையப்பட்டும் சிறந்த முடிவே பிரம்ம அறிவு என்றழைக்கப்படுகிறது {அதுவே பரமாத்மரூபத்தில் நிலைபெற்ற ஞானமாகும்}[3].(8) யோகியர் காணும் தன்னிருப்பின் சாரம் {பரமாத்மரூபம்} பெரியதும், உயர்ந்ததுமாகும். ஞானமற்றவர்களும், உலக உடைமைகளில் பற்றுடைய புத்தியைக் கொண்டவர்களும், ஆன்மாவுக்குள் இருப்பதை ஒருபோதும் காண்பதில்லை.(9)

நீரானது அளவில் பூமியைவிடப் பெரியதாகும்; ஒளியானது நீரைவிடப் பெரியதாகும்; காற்றானது ஒளியைவிடப் பெரியதாகும்;(10) வெளியானது {ஆகாயமானது} காற்றைவிடப் பெரியதாகும்; மனமானது வெளியைவிடப் பெரியதாகும்; புத்தியானது மனத்தைவிடப் பெரியதாகும்; காலமானது புத்தியைவிடப் பெரியதாகும்.(11) இந்த அண்டம் எவனுடையதோ அந்தத் தெய்வீக விஷ்ணு, காலத்தைவிடப் பெரியவனாவான். அந்தத் தேவன் தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாதவனாக இருக்கிறான்.(12) அவனுக்குத் தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவு ஆகியவை இல்லாததன் விளைவால் அவன் மாற்றமில்லாதவனாக இருக்கிறான். கவலைக்கும் எல்லைகள் உண்டு என்பதால், அவன் கவலைகள் அனைத்தையும் விஞ்சியவனாக இருக்கிறான்[4].(13) அந்த விஷ்ணுவே உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} என்றழைக்கப்படுகிறான். உயர்ந்தது என்று எது அழைக்கப்படுமோ, அதன் பொருளாகவோ, புகலிடமாகவோ அவனே {விஷ்ணுவே} இருக்கிறான். அவனை அறிந்த ஞானியர், காலத்தின் ஆதிக்கத்திற்குள் உள்ள அனைத்தில் இருந்தும் விடுபட்டு, விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் நிலையை அடைகிறார்கள்.(14) (நம்மால் காணப்படும்) இவை அனைத்தும் குணங்களில் வெளிப்படுகின்றன. எது குணங்களற்ற பிரம்மம் என்றழைக்கப்படுமோ, அதுவே இவைகளைவிடப் பெரியதாகும். செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறமாகும். அவ்வறம் நிச்சயம் மரணமின்மைக்கு (விடுதலைக்கு {முக்திக்கு}) வழிவகுக்கும்.(15)ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள் ஆகியவை உடலையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அவை நாவின் நுனியில் இருந்து பாய்கின்றன. முயற்சியில்லாமல் அவற்றை அடையமுடியாது, மேலும் அவை அழிவுக்குள்ளாகுபவையே.(16) எனினும், (உடலைச் சாராத) பிரம்மம், உடலைப் புகலிடமாகக் கொண்டிருப்பவனை (அறிபவனை அல்லது ஆன்மாவைச்) சார்ந்திருப்பதால், அதை {பிரம்மத்தை} இவ்வழியில் அடையமுடியாது. (வேதங்களை அடைய எது தேவைப்படுமோ அந்த) முயற்சியால், தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாத பிரம்மத்தை அடைய முடியாது.(17) ரிக், சாமங்கள், யஜுஸ்கள் ஆகிய ஒவ்வொன்றும் தொடக்கத்தைக் கொண்டுள்ளன. தொடக்கத்தைக் கொண்டுள்ளவைக்கு முடிவும் உண்டு. ஆனால் பிரம்மம் தொடக்கமற்றது என்று சொல்லப்படுகிறது.(18) பிரம்மம் தொடக்கமோ, முடிவோ இல்லாதிருப்பதால், அளவற்றதென்றும், மாற்றமில்லாததென்றும் சொல்லப்படுகிறது. மாற்றமில்லாத் தன்மையின் விளைவால், கவலைகள் அனைத்தையும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் விஞ்சியிருக்கிறது அந்தப் பிரம்மம்.(19) சாதகமில்லாத விதியின் மூலமும், முறையான வழிமுறைகளைக் காண்பதில் உள்ள இயலாமையின் மூலமும், செயல்களால் அளிக்கப்படும் இடையூறுகளின் மூலமும், மனிதர்கள் பிரம்மத்தை அடையும் பாதையைக் காணாதிருக்கிறார்கள்.(20)

உலகம் சார்ந்த பொருட்களில் உள்ள பற்று, உயர்ந்த சொர்க்கத்தின் இன்பங்களில் உள்ள நாட்டம், பிரம்மத்தைத் தவிர வேறெதிலும் உள்ள ஆசை ஆகியவற்றின் விளைவால் மனிதர்கள் உயர்ந்ததை {பரமாத்மாவை} அடைவதில்லை.(21) உலகம் சார்ந்த பொருட்களைக் காணும் பிறர் அவற்றை அடைய ஆசை கொள்கிறார்கள். அத்தகைய பொருட்களை விரும்பும் அவர்கள், பிரம்மமானது குணங்கள் அனைத்தையும் விஞ்சியிருப்பதன் விளைவால் அஃதை அடைய ஏங்குவதில்லை.(22) தாழ்ந்தவையான குணங்களில் பிணைக்கப்பட்டவனால், மேன்மையான குணங்களைப் படைத்தவனை {பரமாத்மாவைக்} குறித்த அறிவை எவ்வாறு அடைய முடியும்? குணங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்ட அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பவனைக் குறித்த அறிவை ஒருவனால் ஊகத்தினால் மட்டுமே அடைய முடியும்.(23) நுட்பமான புத்தியினால் மட்டுமே நம்மால் அவனை அறிய முடியும். நம்மால் அவனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மனத்தை மனத்தாலும், கண்ணைக் கண்ணாலுமே கைப்பற்ற முடியும்[5].(24) கசடுகளுடன் கூடிய புத்தியை அறிவின் {ஆத்மஞானத்தின்} மூலம் தூய்மையடையச் செய்ய முடியும். மனத்தைத் தூய்மைப்படுத்த புத்தியை ஈடுபடுத்தலாம். மனத்தின் மூலம் புலன்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒருவன் இவை யாவற்றையும் அடைந்தால், மாற்றமில்லாதவனை {அழிவற்ற பரமாத்மாவை} அடையலாம்.(25)ஆழ்ந்த சிந்தனையின் {தியானத்தின்} மூலம் பற்றுகளில் இருந்து விடுபட்டு, தெளிவான மனத்தால் வளம்பெருகிய ஒருவன், ஆசையற்றதும், குணங்கள் அனைத்திற்கும் மேலானதுமான பிரம்மத்தை அடைவதில் வெல்லலாம். மரத்துண்டுக்குள் பொதிந்திருக்கும் நெருப்பில் இருந்து காற்று விலகி இருப்பதைப் போலவே, (உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள விருப்பத்தின் மூலம்) கலக்கமடைந்திருக்கும் மனிதர்கள், உயர்ந்ததில் {பரமாத்மாவில்} இருந்து விலகியே இருக்கிறார்கள்.(26) உலகம் சார்ந்த நோக்கங்கள் அனைத்தின் அழிவின் பேரில் மனமானது புத்தியைவிட உயர்ந்ததையே எப்போதும் அடைகிறது; அதே வேளையில், அவற்றின் பிரிவிலோ மனமானது புத்தியைவிடத் தாழ்ந்ததையே எப்போதும் அடைகிறது. எனவே, ஏற்கனவே விவரிக்கப்பட்ட வழிமுறைக்கேற்ப ஒருவன், உலகம் சார்ந்த நோக்கங்களை அழிப்பதில் ஈடுபட்டால், அவன் பிரம்ம உடலுக்குள் ஈர்க்கப்படும் நிலையை {பிரம்ம ரூபத்தை} அடைவான்[6].(27) ஆன்மாவானது புலப்படாததாக இருப்பினும், குணங்கள் எனும் ஆடை போர்த்தப்படும்போது, அதன் செயல்கள் புலப்படுகின்றன. (உடலுக்கு) அழிவு நேரும்போது, மீண்டும் அது புலப்படாததாகிறது. உண்மையில் ஆன்மா செயலற்றதாக இருக்கிறது. இன்பம் அல்லது துன்பத்தை உண்டாக்கவல்ல புலன்களுடன் அது கலந்திருக்கிறது.(28) புலன்களுடன் கலந்திருப்பதும், உடலுடன் கூடியதுமான அஃது {ஆன்மா} அடிப்படையான ஐந்து பூதங்களில் புகலிடத்தை அடைகிறது. எனினும், உயர்ந்ததும், மாற்றமில்லாததுமான ஒன்றின் {பரமாத்மாவின்} மூலம் சக்தியை இழக்கும்போது, அந்தச் சக்தி குறைபாட்டின் காரணமாக அது {ஆன்மா} செயல்படத் தவறுகிறது.(29)எந்த மனிதனும் இந்தப் பூமியின் முடிவைப் பார்த்ததில்லை, ஆனால் பூமிக்கும் நிச்சயம் முடிவு வரும் என்பதை அறிவாயாக. (பற்றுகளால்) இங்கே கலக்கமடையும் மனிதன், கடலில் தத்தளிக்கும் ஓடத்தைக் காற்றானது பாதுகாப்பான துறைமுகத்தில் சேர்ப்பதைப் போல, தன் இறுதி புகலிடத்திற்கு வழிநடத்தப்படுவான்.(30) தன் கதிர்களைப் பரப்பும் சூரியன், (உலகத்தின் ஒளி என்ற) ஒரு குணத்தை அடைகிறான்; (மறையும் வேளையில்) தன் கதிர்களை விலக்கிக் கொள்ளும் அவன் மீண்டும் குணங்களற்ற ஒரு பொருளாகிறான். அதே வகையில், வேறுபாடுகள் அனைத்தையும் கைவிட்டுத் தவங்களைச் செய்யும் ஒரு மனிதன், குணங்கள் யாவும் அற்றதான அழிவற்ற பிரமத்திற்குள் இறுதியாக நுழைகிறான்.(31) எவன் பிறப்பற்றவனோ, எவன் அறவோர் அனைவரின் உயர்ந்த புகலிடமோ, எவன் தான்தோன்றியோ {சுயம்புவோ}, எவனிடமிருந்து அனைத்தும் உண்டாகினவோ, எவனிடம் அனைத்தும் திரும்புமோ, எவன் தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாதவனோ, எவன் நிச்சயத்தன்மையைக் கொண்ட உயர்ந்தவனோ, அவனை {அந்தப் பரமாத்மாவைப்} பகுத்தறிவதன் மூலம் ஒரு மனிதன் அழிவின்மையை (விடுதலையை {முக்தியை}) அடைகிறான்” என்றார் {மனு}.{32)

தாமரைக் கண்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 207-விஷ்ணு உலகங்களை எவ்வாறு படைத்தான் என்று நாரதரால் சொல்லப்பட்டவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்; கிருஷ்ணன் சாதாரண மனிதனல்ல என்று சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! பாரதர்களின் தலைவரே, தாமரைக் கண்ணனும், அழிவில்லாதவனும், அனைத்தையும் படைத்தவனும் {கர்த்தனும்}, எவராலும் படைக்கப்படாதவனும், (அனைத்திலும் படர்ந்தூடுருவியிருப்பதன் விளைவால்) விஷ்ணு என்று அழைக்கப்படுபவனும், அனைத்து உயிரினங்களின் மூலமாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களும் திரும்பிச்செல்லும் இடமாக இருப்பவனும், நாராயணன், ரிஷிகேசன் {இந்திரியங்களுக்கு ஈஸ்வரனும்}, கோவிந்தன், கேசவன் என்ற பெயர்களில் அறியப்படுபவனும், எவராலும் வெல்லப்பட முடியாதவனுமான அந்த ஒருவனைக் குறித்து விபரமாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1,2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இக்காரியம் குறித்து நான் கிருஷ்ண துவைபாயனரிடமிருந்தும் {வியாசரிடமிருந்தும்}, முனிவர் நாரதரிடமிருந்தும், இது குறித்து உரையாடிய ஜமதக்னியின் மகனான ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்தும் கேட்டிருக்கிறேன்.(3) ஓ! மகனே, அசிதர், தேவலர், கடுந்தவங்களைக் கொண்ட வால்மீகி, மார்க்கண்டேயர் ஆகியோர், ஆச்சரியம் நிறைந்தவனும், உயர்ந்தவனுமான கோவிந்தனைக் குறித்துப் பேசுகின்றனர்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தெய்வீகமான கேசவனே, அனைத்தின் பலமிக்கத் தலைவனாவான். புருஷன் என்று அழைக்கப்படும் அவன், அனைத்திற்குள்ளும் படர்ந்தூடுருவி, தன்னையே பலராக ஆக்கியிருக்கிறான்.(5) ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, அந்த உயரான்ம சாரங்கபாணியின் குணங்களைக் குறித்துப் பெரும் பிராமணர்கள் சொல்வதை இப்போது கேட்பாயாக.(6)

ஓ! மனிதர்களின் இளவரசே {யுதிஷ்டிரனே}, பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள் சொல்லும் கோவிந்தனின் செயல்களையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(7) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகவும், உயர் ஆன்மா கொண்டவனாகவும், அனைத்திலும் முதன்மையானவனாகவும் அவனே சொல்லப்படுகிறான். அவனே {அந்தப் புருஷோத்தமனே} (தன் விருப்பத்தின் பேரில்) காற்று, ஒளி, நீர், வெளி {ஆகாயம்} மற்றும் பூமி {நிலம்} என்ற ஐவகைப் பூதங்களை உண்டாக்கினான்.(8) உயர் ஆன்மா கொண்டவனும், அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்து பொருட்களின் பலமிக்கத் தலைவனுமான அவன், பூமியை {நிலமெனும் பூதத்தைப்} படைத்த பிறகு, நீரின் பரப்பில் தன்னைக் கிடத்திக் கொண்டான்.(9) அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்து வகைச் சக்தி மற்றும் காந்திக்குப் புகலிடமாக இருப்பவனுமான அவன் இவ்வாறு நீரில் மிதந்து கொண்டிருந்தபோது, அண்ட உயிரினங்கள் அனைத்திற்கும் முதலாகப் பிறந்த நனவுநிலையை உண்டாக்கினான்.(10) படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புகலிடமாக உள்ள நனவுநிலையை மனத்துடன் சேர்த்தே அவன் படைத்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த நனவுநிலையே கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்கிப் பிடிக்கிறது.(11)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, நனவுநிலை என்ற பேரிருப்பு உதித்த பிறகு, சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட மிக அழகிய ஒரு தாமரையானது (நீரில் மிதந்து கொண்டிருந்த அந்தப்) பரம்பொருளின் தொப்புளில் இருந்து முளைத்தது.(12) ஓ! மகனே, அந்தத் தாமரையில் இருந்து சிறப்பு மிக்கவனும், தெய்வீகமானவனும், அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டனுமான பிரம்மன், தன் பிரகாசத்தால் அடிவானின் புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டியபடியே இருப்பிற்கு எழுந்தான்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவ்வாறு தொடக்ககாலத் தாமரையில் இருந்து உயர் ஆன்மப் பெரும்பாட்டன் உதித்த பிறகு, தொடக்கமேதும் இல்லாதவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு பேரசுரன் ,இருள் குணத்தில் (தமோ குணத்தில்) இருந்து உதித்துப் பிறப்பை அடைந்தான்.(14) பிரம்மனுக்கு நன்மை செய்வதற்காக, அனைத்திலும் முதன்மையானவன் (உயர்ந்த தேவன்), கடுஞ்செயல்களைச் செய்பவனும், (பெரும்பாட்டனைக் கொல்லும்) கடுஞ்செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அந்தக் கடும் அசுரனைக் கொன்றான்.(15) இவனை (மது என்ற பெயர் கொண்ட அசுரனைக்) கொன்றதிலிருந்தே, தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையான அவனை,[1] மதுசூதனன் (மதுவைக் கொன்றவன்) என்ற பெயரால் அழைக்கத் தொடங்கினர்.(16)இதன் பிறகு, பிரம்மன் தன் மனக்கட்டளையின் பேரில், தக்ஷன் முதலிய ஏழு மகன்களைப் படைத்தான். அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது (மற்றும் ஏற்கனவே குறிப்பிட்ட தக்ஷன்) ஆகியோராவர்.(17) இவர்களில் மூத்தவரான மரீசி, தன் மனக்கட்டளையின் பேரில், பெரும் சக்தி கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், கசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார்.(18) மரீசி பிறப்பதற்கு முன்பே பிரம்மன் தன் கால் பெரு விரலில் இருந்து ஒரு மகனைப் படைத்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்த மகனே, உயிரினங்களுக்கு மூதாதையான தக்ஷனாவான்[2].(19) ஓ! பாரதா, அந்தத் தக்ஷனுக்கு முதலில் பதிமூன்று மகள்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவள் திதி என்றழைக்கப்பட்டாள்.(10) ஓ! ஐயா, மரீசியின் மகனும், கடமைகள் அனைத்தையும், அவற்றின் தனிச்சிறப்புகளையும் அறிந்தவரும், அறச் செயல்களையும், பெரும்புகழையும் கொண்டவருமான கசியபரே அந்தப் பதிமூன்று மகன்களுக்குக் கணவரானார்.(21)உயர்ந்த அருளைக் கொண்டவனான தக்ஷன், (ஏற்கனவே சொல்லப்பட்ட பதிமூன்றைத் தவிர) அடுத்ததாக மேலும் பத்து மகள்களைப் பெற்றான். உயிரினங்களின் மூதாதையும், அறவோனுமான தக்ஷன் அவர்களைத் தர்மனுக்குக் கொடுத்தான்.(22) ஓ! பாரதா, தர்மனானவன், வசுக்கள், அளவிலா சக்தி கொண்ட ருத்திரர்கள், விஸ்வதேவர்கள், சத்யஸ்கள் மற்றும் மருத்துகளுக்குத் தந்தையானான்.(23) தக்ஷன் அடுத்ததாக இருபத்தேழு இளைய மகள்களைப் பெற்றான். உயர்ந்த அருளைக் கொண்ட சோமனே {சந்திரனே} அவர்கள் அனைவருக்கும் கணவனானான்.(24) கந்தர்வர்கள், குதிரைகள், பறவைகள், பசுக்கள், கிம்புருஷர்கள், மீன்கள், மரங்கள் மற்றும் செடிகளைக் கசியபரின் (பதிமூன்று) மனைவிகள் பெற்றெடுத்தனர்.(25)

{கசியபரின் பதிமூன்றிலொரு மனைவியான} அதிதியானவள், தேவர்களில் முதன்மையானவர்களும், பெரும் பலம் கொண்டவர்களுமான ஆதித்யர்களைப் பெற்றாள். அவர்களுக்கு மத்தியில் விஷ்ணு, குள்ளனின் வடிவில் {வாமன அவதாரமாகப்} பிறப்பை எடுத்தான். கோவிந்தன் என்றும் அழைக்கப்படும் அவன், அவர்கள் அனைவரிலும் முதன்மையானவனானான்.(26) அவனுடைய ஆற்றலின் மூலமே தேவர்களின் வளம் அதிகரித்தது. தானவர்கள் வெல்லப்பட்டனர். {கசியபரின் மற்றொரு மனைவியான} திதியின் வாரிசுகளாக அசுரர்கள் இருந்தனர்.(27) {கசியபரின் மற்றொரு மனைவியான} தனுவானவள், விப்ரசித்தியை முதன்மையானவனாகக் கொண்ட தானவர்களைப் பெற்றெடுத்தாள். திதியோ பெரும்பலம் கொண்ட அசுரர்கள் அனைவரையும் பெற்றெடுத்தாள்.(28)

பகல், இரவு, வரிசையான பருவகாலங்கள், காலை {முற்பகல்}, மாலை {பிற்பகல்} ஆகியவற்றையும் அந்த மதுசூதனன் படைத்தான்.(29) சிந்தனைக்குப் பிறகு, மேகங்களையும், அசையாத மற்றும் அசையும் பொருட்கள் அனைத்தையும் படைத்தான். அபரிமிதமான சக்தியைக் கொண்ட அவன் விஸ்வர்களையும், பூமியையும், அவள் மீது கொண்ட அனைத்துப் பொருட்களையும் படைத்தான்.(30) பிறகு, ஓ! யுதிஷ்டிரா, உயர்ந்த அருளைக் கொண்டவனும், பலமிக்கவனுமான கிருஷ்ணன், தன் வாயிலிருந்து {முகத்திலிருந்து} நூறு முதன்மையான பிராமணர்களைப் படைத்தான்.(31) தன்னிரு கரங்களில் இருந்தும் அவன் நூறு க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளில் இருந்து நூறு வைசியர்களையும் படைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே, அதன் பிறகு அந்தக் கேசவன் தன்னிரு பாதங்களில் இருந்து நூறு சூத்திரர்களைப் படைத்தான்.(32) பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான அந்த மதுசூதனன், இவ்வாறு நான்கு வகைகளைச் சேர்ந்த மனிதர்களையும் படைத்த பிறகு, அனைத்து உயிரினங்களின் தலைவனாகவும், ஆட்சியாளனாகவும் தாத்ரியை (பிரம்மனை) நிறுவினான்.(33)

அளவிலா பிரகாசம் கொண்ட பிரம்மன், வேத அறிவை விளக்குபவனாகவும் ஆனான். மேலும் அந்தக் கேசவன், விருபாக்ஷன் என்றழைக்கப்படுபவனை ஆவிகள், பேய்கள் {பூதங்கள், பிரமதகணங்கள்} மற்றும் மாத்ரிகைகள் (தாய்மார்) என்று அழைக்கப்படும் பெண்கள் ஆகியோரின் ஆட்சியாளன் ஆக்கினான்.(34) பிறகு அவன், பித்ருக்கள் மற்றும் பாவிகள் அனைவரின் ஆட்சியாளனாக யமனை {ஸமவர்தின்} நியமித்தான்[3]. உயிரினங்கள் அனைத்தின் பரமாத்மாவான அவன், கருவூலங்கள் அனைத்தின் {நிதிகளின்} தலைவனாகக் குபேரனையும் நியமித்தான்.(35) பிறகு அவன், நீர் நிலைகளின் தலைவனும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் ஆட்சியாளனுமான வருணனைப் படைத்தான். பலமிக்க அந்த விஷ்ணு, தேவர்கள் அனைவரின் தலைவனாக வாசவனை {இந்திரனை} நியமித்தான்.(36) அந்தக் காலங்களில் {சத்திய / கிருத யுகத்தில்}, யமனிடம் எந்த அச்சமும் இல்லாமல் மனிதர்கள் தாங்கள் விரும்பிய அளவு நீண்ட காலத்திற்கு வாழ்ந்தனர்.(37) அப்போது, கலவியானது இனவிருத்திக்கு அவசியமானதாக இருக்கவில்லை. அந்தக் காலங்களில் மனக்கட்டளையின் பேரிலேயே வாரிசுகள் பெறப்பட்டனர்.(38) அதைத் தொடர்ந்த திரேதா யுகத்தில், வெறும் தீண்டலால் மட்டுமே பிள்ளைகள் பெறப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, அப்போதும், அந்தக் காலத்தைச் சேர்ந்த மக்களுக்குக் கலவி அவசியமாக இருக்கவில்லை.(39) ஓ! மன்னா, அதற்கடுத்த காலமான துவாபர யுகத்தில் தான், கலவி நடைமுறை தோன்றி, மக்கள் மத்தியில் நீடித்தது. ஓ! ஏகாதிபதி, கலிகாலத்தில் மனிதர்கள் திருமணம் செய்து கொண்டு இணைகளாக வாழ்கின்றனர்[4].(40)அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனைக் குறித்து நான் இப்போது சொல்லிவிட்டேன். அவனே அனைத்தின் ஆட்சியாளன் என்று அழைக்கப்படுகிறான். ஓ! குந்தியின் மகனே, பூமியில் உள்ள பாவம் நிறைந்த உயிரினங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(41) ஓ! மன்னா, அவர்கள் தென் பகுதியில் பிறந்தவர்களான ஆந்திரகர்கள், குஹர்கள், புளிந்தர்கள், சபரர்கள், சூசுபர்கள் மத்ரகர்கள் ஆகியோர் ஆவர்.(42) வட பகுதியில் பிறந்தவர்களையும் நான் சொல்வேன். அவர்கள் யவனர்கள், காம்போஜர்கள், காந்தாரர்கள், கிராதர்கள், பர்ப்பரர்கள் ஆகியோராவர்.(43) ஓ! ஐயா, பாவிகளான அவர்கள் அனைவரும் சண்டாளர்கள், காக்கைகள் மற்றும் கழுகுகளுக்கு ஒப்பான நடைமுறைகளைக் கொண்டவர்களாக இந்தப் பூமியில் திரிகிறார்கள்.(44) ஓ! ஐயா, கிருத யுகத்தில் அவர்கள் இந்தப் பூமியில் எங்கேயும் இல்லை. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, திரேத யுகத்திலே தோன்றிய அவர்கள் பல்கிப் பெருகத் தொடங்கினர்.(45) திரேதா யுகமும், துவாபர யுகமும் சேர்ந்த பயங்கரக் காலத்தில், க்ஷத்திரியர்கள் ஒருவரையொருவர் அணுகி போரிட்டனர்[5].(46)ஓ! குருகுலத்தின் தலைவா, இவ்வாறே இந்த அண்டம் உயர் ஆன்ம கிருஷ்ணனால் தொடக்கி வைக்கப்பட்டது. உலகங்கள் அனைத்தையும் காண்பவரான தெய்வீக முனிவர் நாரதர், கிருஷ்ணனே உயர்ந்த தேவன் என்பதைச் சொல்லியிருக்கிறார். ஓ! மன்னா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாரதக் குலத் தலைவா, கிருஷ்ணனின் மேன்மையையும், அவனது நித்தியத்தன்மையையும் நாரதரே ஏற்றுக் கொள்கிறார்[6].(48) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, கேசவன் வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனாவான். அந்தத் தாமரைக் கண்ணன் வெறும் மனிதனல்ல. அவன் நினைத்தற்கரியவனாவான்” என்றார் {பீஷ்மர்}.(49)

பிரஜாபதிகளும், சாக்ஷீபூதங்களும்! – சாந்திபர்வம் பகுதி – 208-மரீசி முதலிய பிரஜாபதிகளையும், ஒவ்வொரு திக்கிலும் உள்ள முனிவர்களையும் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே முதல் பிரஜாபதிகள் யாவர்? இருப்பில் உள்ளவர்களான உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் யாவர்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தத் திசைப்புள்ளிகளில் {திக்குகளில்} வசிக்கிறார்கள்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்பதைக் குறித்துச் சொல்கிறேன், என்னிடம் இருந்து கேட்பாயாக. அந்தப் பிரஜாபதிகள் யாவர், அடிவானின் எந்தப் புள்ளியில் {திக்கில்} எந்தெந்த முனிவர்கள் வசிக்கிறார்கள் என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) நித்தியமானவனும், தெய்வீகமானவனும், தான் தோன்றியுமான {சுயம்புவான} பிரம்மனே முதலில் இருந்தான். தான் தோன்றியான அந்தப் பிரம்மன் சிறப்புமிக்க ஏழு மகன்களைப் பெற்றான்.(3) அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் அந்தத் தான்தோன்றிக்கே இணையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான வசிஷ்டர் ஆகியோராவர்.(4) இந்த ஏழு மகன்களே புராணங்களில் ஏழு பிரம்மர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்குப் பின் வந்த பிரஜாபதிகள் அனைவரையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(5)

அத்ரியின் குலத்தில், நித்தியமானவரும், தெய்வீகமானவரும், தவங்களையே தமது மூலமாகக் கொண்டவரும், பழமையானவருமான பர்ஹி {பராசீனபர்ஹி} பிறந்தார். {ப்ரசேதஸின் மகனான} பர்ஹியில் இருந்து பழமையானவர்களான பத்துப் பிரசேதகர்கள் எழுந்தனர்.(6) அந்தப் பத்து பிரசேதகர்களும் தங்களுக்கு மத்தியில் தக்ஷன் என்றழைக்கப்பட்ட பிரஜாபதியை ஒரு மகனாகக் கொண்டிருந்தனர். இந்த இறுதியானவருக்கு இவ்வுலகில் ’தக்ஷன்’ என்றும், ’க’ என்றும் இரண்டு பெயர் உண்டு.(7)

மரீசி, கசியபர் என்றழைக்கப்பட்ட ஒரு மகனைக் கொண்டிருந்தார். இவருக்கும் இரண்டு பெயர்கள் இருந்தன. சிலர் அவரை ’அரிஷ்டநேமி’ என்றும், சிலர் ’கசியபர்’ என்றும் அழைக்கிறார்கள்.(8)

அத்ரி, தன் மடியில் பிறந்தவனும், அழகனும், பெரும் சக்தி கொண்ட இளவரசனுமான சோமன் {சந்திரன்} என்ற மற்றொரு மகனை {ஔரசப் புத்ரனாகக்} கொண்டிருந்தார். அவன் ஓராயிரம் தேவ யுகங்கள் நெடுகிலும் தவங்களைச் செய்து கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமான அர்யமானும், அவனுக்குப் பிறந்த மகன்களும், உலகங்களைப் படைப்பவர்களென்றும், கட்டளையிடுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.(10) சசபிந்துவுக்குப் பத்தாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தலைவன் {சசபிந்து} ஓராயிரம் மகன்களைப் பெற்றார்.(11) இவ்வாறே அவருக்கு ஆயிரமாயிரம் {பத்து லட்சம்/ கோடி} மகன்கள் இருந்தனர். அந்த மகன்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் பிரஜாபதி என்று அழைக்க மறுத்தனர்.(12)

பழமையான பிராமணர்கள், சசபிந்துவிடம் இருந்து பெறப்பட்ட பட்டப்பெயரை உலகின் உயிரினங்களுக்கு அளித்தனர். பரந்த அளவில் இருந்த பிரஜாபதியான சசபிந்துவின் குலத்தவரே, காலப்போக்கில் விருஷ்ணி குலத்தின் முன்னோர்களானார்கள்.(13) என்னால் சொல்லப்படும் இவர்கள் சிறப்புமிக்கப் பிரஜாபதிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

இதன் பிறகு நான் மூவுலகங்களின் தலைவர்களாக இருக்கும் தேவர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(14) பகன், அம்சன், அர்யமான், மித்ரன், வருணன், சவிதன், தாத்ரி {தாதா}, பெரும் வலிமைமிக்க விவஸ்வான்,(15) துவஷ்டிரி {த்வஷ்டா}, பூஷன், இந்திரன், பனிரெண்டாவதாக அறியப்படும் விஷ்ணு ஆகிய இந்தப் பனிரெண்டு ஆதித்தியர்களும் கசியபரில் இருந்து எழுந்தவர்களாவர்.(16) நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினிகள் இருவராகச் சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மேற்கண்ட வரிசையில் எட்டாவதாக உள்ள {எட்டாவது பிரஜாபதியான} சிறப்புமிக்க மார்த்தாண்டரின் மகன்களாவர்.(17) இவர்களே தேவர்களில் முதல்வர்கள் என்றும், பித்ருக்களின் இரண்டு வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துவஷ்டிரிக்குப் பல மகன்கள் இருந்தனர். அழகர்களும், புகழ்மிக்கவர்களுமான அவர்களில் விஸ்வரூபன்,(18) அஜைகபாத், அஹி, பிரத்னன், விரூபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹுரூபன், தேவர்களின் தலைவனான திரியம்பகன்,(19) சாவித்ரியன், ஜயந்தன், வெல்லப்பட்ட முடியாத பினாகி ஆகியோர் {பதிமூன்று ருத்திரர்களாக அறியப்படும் இவர்கள்} அடங்குவர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் எட்டாக இருப்பவர்களுமான வசுக்கள் என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றனர்.(20) பிரஜாபதி மனுவின் காலத்தில் இவர்களே தேவர்களாக அறியப்பட்டனர். இவர்களே தேவர்கள் மற்றும் பித்ருக்களில் முதல்வர்களாக அழைக்கப்பட்டனர்.(21)

சித்தர்கள் மற்றும் சாத்யஸ்களில் நடத்தை மற்றும் இளமையின் விளைவால் இரண்டு வர்க்கத்தினர் இருந்தனர். முன்னர் ரிபுக்கள் மற்றும் மருத்துகள் என்று இரண்டு வர்க்கங்களாகத் தேவர்கள் கருதப்பட்டனர்.(22) விஸ்வர்கள், தேவர்கள்[1], அசுவினிகள் ஆகியோர் இவ்வாறே சொல்லப்படுகின்றனர். இவர்களில் ஆதித்தியர்கள் க்ஷத்திரியர்களும், மருத்துகள் வைசியர்களுமாவர்.(23) கடும் தவங்களில் ஈடுபடுபவர்களான அசுவினிகள் இருவரும் சூத்திரர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அங்கீரஸ குலத்தில் எழுந்த தேவர்கள் பிராமணர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இஃது உறுதியானதாகும்.(24) இவ்வாறே தேவர்களில் நால்வகை வர்ணங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஒரு மனிதன், காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்ததும், இந்தத் தேவர்களின் பெயர்களை உரைத்தால்,(25) தெரிந்தோ, தெரியாமலோ, பிறரது சேர்க்கையில் பிறந்தவையோவான தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைகிறான்.யவக்ரீதர், ரைப்யர், அர்வாவசு, பராவசு,(26) ஔஸிஜன், கக்ஷீவான், பலன் ஆகியோர் அங்கீரஸின் மகன்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவர்களும், முனிவர் மேதாதியின் மகனான கண்வர், பர்ஹிஷதன் ஆகியோரும்,(27) நன்கறியப்பட்டவர்களும், மூவுலகங்களுக்கும் மூதாதையராக இருப்பவர்களுமான ஏழு மனிவர்களும் {சப்தரிஷிகளும்} கிழக்கில் {கிழக்குத் திசையில்} வசிக்கிறார்கள்.

உன்முசர், விமுசர், பெரும் சக்தியைக் கொண்டவரான ஸ்வஸ்தாய்தரேயர், பிரமுசர், இத்மவாஹர், தெய்வீகமானவரான திருடவிரதர், மித்ரவருணர்களின் மகனும், பெரும் சக்தியைக் கொண்டவருமான அகஸ்தியர்(29) ஆகிய இந்த மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் தெற்கில் வசிக்கிறார்கள்.

உஷங்கு, கருஷர் {கவஷர்}, தௌம்யர், பெரும் சக்தியைக் கொண்டவரான பரிவ்யாதர்,(30) ஏகதர், திவிதர், திரிதர், அத்ரியின் மகனும், சிறப்புமிக்கவரும், பலமிக்கவருமான சாரஸ்வதர் {துர்வாசர்},(31) ஆகிய இந்த உயரான்மாக்களைக் கொண்டவர்கள் மேற்கில் வசிக்கிறார்கள்.

ஆத்ரேயர் {அத்ரி}, வசிஷ்டர், பெரும் முனிவரான காஸ்யபர்,(32) கௌதமர், பரத்வாஜயர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர், உயர் ஆன்மா கொண்டவரும், ரிசீகரின் சிறப்புமிக்க மகனுமான ஜமதக்நி(33) ஆகிய இந்த எழுவரும் வடக்கில் வாழ்கிறார்கள்.

இவ்வாறே, திசைகளின் பல்வேறு புள்ளிகளில் {திக்குகளில்} வாழும் கடும் சக்தி கொண்ட பெரும் முனிவர்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(34) அந்த உயர் ஆன்மாக்களே, இந்த அண்டத்தின் சாட்சிகளாகவும், உலகங்கள் அனைத்தையும் படைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறே அவர்கள் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.(35) இவர்களது பெயர்களைச் சொல்வதால் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அந்தந்தத் திசைகளில் பயணிக்கும் ஒரு மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, பாதுகாப்பாக வீட்டை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}[2].(36)

வராஹ அவதாரம்! – சாந்திபர்வம் பகுதி – 209-விஷ்ணுவின் வராஹ அவதாரம் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானமும், போரில் வெல்லப்பட முடியாத ஆற்றலும் கொண்டவரே, மாற்றமில்லாதவனும், எல்லாம் வல்லவனுமான கிருஷ்ணனைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவனது பெருஞ்சக்தி மற்றும் பழங்காலத்தில் அவனால் அடையப்பட்ட பெரும் சாதனைகள் குறித்த அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வீராக.(2) ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அந்தப் பலமிக்கவன் ஏன் ஒரு விலங்கின் வடிவை ஏற்றான்? ஓ! வலிமைமிக்கப் போர்வீரரே இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முன்பொரு காலத்தில் நான் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, மார்க்கண்டேயரின் ஆசிரமத்தை அடைந்தேன். அங்கே பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தவசிகள் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(4) அந்த முனிவர்கள் எனக்குத் தேனும், தயிர்க்கடைசலும் கொடுத்து என்னைக் கௌரவித்தனர். அவர்களது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட நான், பதிலுக்கு அவர்களை மரியாதையுடன் வணங்கினேன்.(5) அங்கே பெரும் முனிவரான கசியபர் உரைத்ததை நான் சொல்லப் போகிறேன். இனிமையான அந்தச் சிறந்த கதையைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6)

முன்பொரு காலத்தில், கோபமும், பேராசையும் நிறைந்த முக்கியத் தானவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், வலிமையில் போதையுண்டவர்களும், நரகனைத் தங்கள் முதல்வனாகக் கொண்டவர்களுமான வலிமைமிக்க அசுரர்களும்,(7) போரில் வெல்லப்பட முடியாத எண்ணற்ற தானவர்கள் பிறரும், தேவர்களின் ஒப்பற்ற செழிப்பில் பொறாமை கொண்டனர்.(8) (இறுதியாக) அந்தத் தானவர்களால் ஒடுக்கப்பட்ட தேவர்களும், தெய்வீக முனிவர்களும், அமைதியடையத் தவறிவர்களாக அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினார்கள்.(9) பூமியானவள் புண்பட்ட நிலையில் துயரத்தில் மூழ்கியிருப்பதைச் சொர்க்கவாசிகள் {தேவர்கள்} கண்டனர். பயங்கர முகத்தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்கத் தானவர்களால் நிறைந்திருந்த பூமி, பெரும் கனத்தால் ஒடுக்கப்படுவதாகத் தெரிந்தது. உற்சாகமிழந்தவளாகவும், துயரால் பீடிக்கப்பட்டவளாகவும் இருந்த அவள், பாதாளங்களின் ஆழங்களுக்குள் மூழ்கி விடுபவளைப் போலத் தெரிந்தாள்.(10)

அச்சத்தால் பீடிக்கப்பட்ட ஆதித்தியர்கள், பிரம்மனிடம் சென்று, அவனிடம், “ஓ! பிரம்மா, தானவர்களின் ஒடுக்குமுறையை நாங்கள் எவ்வாறு தொடர்ந்து தாங்கிக் கொள்வது?” என்று கேட்டனர்.(11) அதற்கு அந்தத் தான்தோன்றி {பிரம்மன்}, “இக்காரியத்தில் செய்ய வேண்டியதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன்.(12) வரங்களையும், வலிமையையும் கொண்டு, செருக்கில் பெருகியிருக்கும் உணர்வற்றவர்களான இந்த இழிந்தவர்கள், புலப்படாத வடிவைக் கொண்டவனும்,(13) ஒன்று சேர்ந்த தேவர்களாலும் வெல்லப்பட்ட முடியாத தேவனுமான விஷ்ணு, பன்றியின் வடிவை ஏற்றிருப்பதை அறிய மாட்டார்கள். அந்த உயர்ந்த தேவன் {விஷ்ணு}, பயங்கரத் தன்மையைக் கொண்டவர்களும், பூமிக்கடியில் ஆயிரக்கணக்கில் வாழ்பவர்களுமான தானவர்களில் இழிந்தவர்களின் இடத்திற்கு விரைந்து சென்று, அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறான்” என்றான். பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களில் முதன்மையானோர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(14,15)

சில காலம் கழித்து, பன்றியின் வடிவத்தில் பொதிந்திருந்தவனும், வலிமைமிக்க சக்தி கொண்டவனுமான விஷ்ணு, பாதாள உலகத்திற்குள் ஊடுருவி, அந்தத் திதியின் வாரிசுகளை எதிர்த்து விரைந்தான்.(16) இயல்புக்குமீறிய வகையில் இருந்த அந்த விலங்கைக் கண்ட தைத்தியர்கள் அனைவரும், காலத்தால் மயங்கியவர்களாக, ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் பலத்தை முயற்சி செய்து பார்க்க அதனை எதிர்த்து விரைந்து, அதைச் சூழ்ந்து கொண்டனர்.(17) பிறகு விரைவில் அந்தப் பன்றியை எதிர்த்து விரைந்த அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அதைக் கைப்பற்றினர். சினத்தால் நிறைந்த அவர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த விலங்கை இழுக்க முயற்சி செய்தனர்.(18) ஓ! ஏகாதிபதி, வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், பலத்தால் பெருகியவர்களும், பேருடல்களைப் படைத்தவர்களுமான அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களால் அந்தப் பன்றியை ஏதும் செய்ய முடியவில்லை.(19) இதனால் மிகவும் ஆச்சரியமடைந்த அவர்கள், அச்சத்தால் நிறைந்தனர். எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த அவர்கள் தங்கள் இறுதி வேளை வந்துவிட்டதெனக் கருதினார்கள்.(20)

பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா, யோகத்தைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனும், யோகத்தையே தன் தோழனாகக் கொண்டவனும், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்த தேவனுமான அவன், யோகத்தில் மெய்மறந்து, அந்தத் தைத்தியர்களையும், தானவர்களையும் கலங்கடித்தபடியே மகத்தான முழக்கங்களை வெளியிடத் தொடங்கினான்.(21) உலகங்கள் அனைத்தும், திசைகளின் பத்து புள்ளிகளும் இந்த முழக்கங்களை எதிரொலித்தன, அதன் காரணமாகக் கலக்கமடைந்த உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(22) இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட அச்சத்தால் பீடிக்கபட்டனர். அவ்வொலியின் விளைவால் மொத்த அண்டமே அசையாதிருந்தது. அது பயங்கரமான வேளையாக இருந்தது.(23) அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் யாவும் அவ்வொலியால் திகைப்படைந்தன. அவ்வொலியால் அச்சமடைந்த தானவர்கள்,(24) விஷ்ணுவின் சக்தியால் முடக்கம் அடைந்து உயிரற்றுக் கீழே விழத் தொடங்கினர். அந்தப் பன்றியானது {வராஹமானது}, தேவர்களின் எதிரிகளும், பாதாளலோகவாசிகளுமான அவர்களைத் தன் குளம்படிகளால் துளைக்கத் தொடங்கி, அவர்களது தசை, கொழுப்பு மற்றும் எலும்புகளைக் கிழிக்கத் தொடங்கியது.(25)

அந்த {பன்றியின்} மகத்தான முழக்கங்களின் விளைவால் அந்த விஷ்ணு, சனாதனன் என்ற பெயரால் அழைக்கப்படலானான்.(26) அவன் பத்மநாபன் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியரில் அவனே முதன்மையானவனாக இருக்கிறான். அவனை அனைத்துயிரினங்களின் குருவாகவும், அவர்களது உயர்ந்த தலைவனாகவும் இருக்கிறான். அப்போது, தேவ இனங்கள் அனைத்தும் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(27)

அந்த அண்டத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} வந்த அந்தச் சிறப்புமிக்கவர்கள் {தேவர்கள்}, “ஓ! பலமிக்கவரே, என்ன வகை ஒலியிது? இஃதை எங்களால் புரிந்து கொள்ள முடியவிலை. இது யார்? அல்லது அண்டமே திகைப்படையும் வகையில் உள்ள இந்த ஒலி யாருடையது?(28) இந்த ஒலி, அல்லது இதைச் செய்பவனின் சக்தி மூலம் தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்” என்றனர்.(29) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அதே வேளையில், பன்றிக்குரிய வடிவில் இருந்த விஷ்ணு, கூடியிருந்த தேவர்களின் பார்வையிலேயே, அவனது புகழைச் சொல்லும் துதிகளைக் கொண்டு பெரும் முனிவர்களால் பாடப்பட்டான்.(30)

பெரும்பாட்டன் {பிரம்மன்}, “அனைத்தையும் படைத்தவனும், அனைத்துயிரினங்களின் ஆன்மாவும், யோகியர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனே உயர்ந்த தேவனாவான். பெரும் உடலையும், பெரும் பலத்தையும் கொண்ட அவன் {விஷ்ணு}, தானவர்களில் முதன்மையானோரைக் கொன்றுவிட்டு இங்கே வந்து கொண்டிருக்கிறான்.(31) அனைத்தின் தலைவனும், யோகத்தின் குருவும், பெரும் தவசியும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும் அவனே ஆவான். நீங்கள் அனைவரும் அசையாதிருப்பீராக. அவனே, தடைகள் மற்றும் இடையூறுகள் அனைத்தையும் அழிக்கும் கிருஷ்ணன் ஆவான்.(32) அனைத்து ஆசிகளின் பெரும்புகலிடமும், அளவில்லா காந்தியைக் கொண்டவனுமான அந்த உயர்ந்த தேவன், பிறரால் நிறைவேற்ற முடியாத மிகக் கடினமான சாதனையைச் செய்து விட்டு, கலப்பில்லாத தன் சொந்த இயல்புக்கே திரும்பியிருக்கிறான்.(33) அவனுடைய தொப்புளில் {நாபியில்} இருந்தே தொடக்கக் காலத் தாமரை {ஆதி தாமரை} எழுந்தது. அவனே யோகியரில் முதன்மையானவன். பரமாத்மாவான அவனே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாவான்.(34) அவனே விதி சமைப்பவன். அவனே படைப்புக் கோட்பாடாவான். அவனே அனைத்தையும் அழிக்கும் காலம் ஆவான். அவனே அனைத்து உலகங்களையும் தாங்குபவனாவான். உங்களை அச்சுறுத்தும் இந்த முழக்கங்களை அந்த உயர் ஆன்மாவே செய்கிறான்.(35) வலிய கரங்களைக் கொண்ட அவனே உலகளாவிய வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான். சிதைவடைய இயலாதவனான அந்தத் தாமரைக் கண்ணனே அனைத்துயிரினங்களின் மூலமும், அவர்களது தலைவனுமாவான்” என்றான் {பிரம்மன்}” என்றார் {பீஷ்மர்}.(36)

யோகம்! – சாந்திபர்வம் பகுதி – 210-ஓர் ஆசானுக்கும், அவரது சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்; முற்பிறவியின் விருப்பங்களும், உள்ளுணர்வுகளும் புதிய பிறவியில் எவ்வாறு ஆன்மாவைப் பாதிக்கிறது என்பது குறித்துச் சொன்னது

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஓ! பாரதரே, நான் விடுதலையை {முக்தியை} அடைய வகைச் செய்யும் உயர்ந்த யோகத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, யோகம் குறித்த அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகவும், விடுலை {முக்தி / மோக்ஷம்} குறித்தும் ஓர் ஆசானுக்கும், ஒரு சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒரு பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) முனிவர்களில் முதன்மையான ஒருவர் மறுபிறப்பாள ஆசானாகவும் இருந்தார். அவர் காந்தியின் திரளைப் போலத் தெரிந்தார். உயர்ந்த ஆன்மாவைக் கொண்ட அவர், உண்மையில் உறுதியுள்ளவராகவும், தன் புலன்களின் முற்றான தலைவனாகவும் இருந்தார்.(3)

ஒரு காலத்தில், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நல்ல கவனம் கொண்டவனுமான சீடன் ஒருவன் தன் ஆசானின் பாதங்களைத் தீண்டி, அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்று,(4) “ஓ! சிறப்புமிக்கவரே, என் வழிபாட்டில் நீர் நிறைவடைந்தீரென்றால், என் பெரும் ஐயம் ஒன்றைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(5) நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? இதை எனக்கு முழுமையாகச் சொல்வீராக. இறுதிக் காரணம் யாது என்பதையும் எனக்குச் சொல்வீராக. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அனைத்து உயிரினங்களின் பொருள் காரணம் ஒன்றாக இருக்கும்போது, அவற்றின் தோற்றமும், அழிவும் இத்தகைய வேறுபட்ட வழிகளில் நேர்வதேன்? ஓ! பெரும் கல்வியைக் கொண்டவரே, (பல்வேறு வகை மனிதர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள பல்வேறு சடங்குகள் குறித்து) வேதங்களில் உள்ள தீர்மானங்களின் நோக்கம், அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் ஸ்மிருதி கட்டளைகளின் பொருள் ஆகியவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்[1].(6,7)

ஆசான், “ஓ!! சீடா, ஓ! பெரும் ஞானியே, கேட்பாயாக. நீ என்னிடம் கேட்பது வேதங்களில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் {வேத ரஹஸ்யமும்}, சிந்தனை, அல்லது உரையாடலுக்குத் தகுந்த உயர்ந்த காரியமும் ஆகும். அஃது அத்யாத்மா என்றழைக்கப்படுகிறது, மேலும் கல்விக் கிளைகள் மற்றும் புனித நிலைகள் அனைத்திலும் அது மதிப்புமிக்கதாக இருக்கிறது.(8) வாசுதேவனே இந்த அண்டத்தில் ({அண்டக்} காரணத்தில்) உயர்ந்தவனாவான். அவனே வேதங்களின் மூலம் ({மூலச் சொல்லான} ஓம்) ஆவான். அவனே வாய்மை, அறிவு, வேள்வி, துறவு, தற்கட்டுப்பாடு, அறம் ஆகியவை ஆவான்.(9) வேதங்களை அறிந்த மனிதர்கள், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருப்பவனாக, அழிவில்லாதவனாக, எங்கும் படர்ந்திருப்பவனாக, அழிப்பவனாக, புலப்படாதவனாக, பிரம்மமாக, மாறும் இயல்பற்றவனாக அவனையே அறிகிறார்கள்.(10)

விருஷ்ணி குலத்தில் பிறந்தவனின் {விஷ்ணுவின்} கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஒரு பிராமணன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களுக்குத் தேவனும், விஷ்ணு என்றழைக்கப்படுபனுமான அவனின் மகிமையைப் பிராமணர்களின் உதடுகள் மூலம் அறிய வேண்டும். அரச வகையைச் சார்ந்த மனிதனர் அதே வகையைச் சார்ந்த மனிதர்கள் மூலம் கேட்க வேண்டும். ஒரு வைசியன் வைசியர்களின் மூலமும், ஓர் உயர் ஆன்ம சூத்திரன், சூத்திரர்களின் மூலம் அதைக் கேட்க வேண்டும்.(11,12) நீ அதைக் கேட்கத் தகுந்தவனே. கதைகள் அனைத்திலும் முதன்மையான கதையான கிருஷ்ணனின் மங்கலக் கதையை இப்போது கேட்பாயாக.

வாசுதேவன், தொடக்கமும் முடிவும் இல்லாத காலச்சக்கரமாவான். இருப்பு, இல்லாமை ஆகிய குணங்களின் மூலமே அவனது உண்மையான இயல்பை அறிந்து கொள்ள முடியும்.(13) அனைத்து உயிரினங்களின் தலைவனான அவனைச் சார்ந்தே இந்த அண்டமானது சக்கரம் போலச் சுழல்கிறது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கேசவன், அழிவற்றவனாகவும், புலப்படாதவனாகவும், அழிவில்லாதவனாகவும், பிரம்மமாகவும், மாறும் இயல்பற்றவனாகவும் சொல்லப்படுகிறான்.(14) உயர்ந்ததில் உயர்ந்தவனும், மாற்றமும், சிதைவும் அற்றவனுமான அவனே, பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைப் படைத்தான்.(15) வேதங்களையும், அழிவற்ற கடமைகளையும், மனிதர்களின் பழக்கவழக்கங்களையும் அவனே படைத்தான். அனைத்தையும் இல்லாமைக்குள் குறைக்கும் {அழிக்கும்} அவன், மீண்டும் (புதிய) யுகத் தொடக்கத்தில் (தொடக்கப் பருப்பொருளான) பிரக்ருதியைப் படைக்கிறான்.(16) பருவகாலத்தின் படி, ஒன்றன்பின் ஒன்றாகப் பல பருவங்களில் தோன்றும் பல்வேறு தோற்றங்களைப் போன்ற வகையிலேயே ஒவ்வொரு (தேவ) யுகத்தின் தொடக்கத்திலும் உயிரினங்கள் தோன்றுகின்றன.(17) புதிதாகப் பிறக்கும் உயிரினங்கள் தொடர்புடையதே, உலக நடைமுறையின் ஒழுங்கை நோக்கமாகக் கொண்ட விதிகள் மற்றும் கடமைகளைக் குறித்த அறிவாகும்[2].(18)(தேவ) யுகங்கள் ஒவ்வொன்றின் முடிவிலும் (பிரளயம் தோன்றும்போது), வேதங்களும், பிற சாத்திரங்கள் அனைத்தும் (எஞ்சியவை போல) காணாமல் போகின்றன. பெரும் முனிவர்கள், தான்தோன்றியின் {சுயம்புவின்} அருளின் விளைவால், தங்கள் தவங்களின் மூலம், முதலில் தொலைந்து போன வேதங்களையும், சாத்திரங்களையும் மீண்டும் அடைகின்றனர்.(19) தான்தோன்றியே (பிரம்மனே) முதலில் வேதங்களை அடைந்தான். அங்கங்கள் என்றழைக்கப்படும் அவற்றின் கிளைகளை {வேதங்கங்களை} (தேவ குருவான) பிருஹஸ்பதி முதலில் அடைந்தார். அண்டத்திற்கு நன்மை பயக்கும் அறநெறி அறிவியலை {நீதி சாத்திரத்தை} பிருகுவின் மகன் (சுக்கிரன்) முதலில் அடைந்தார்.(20) இசை அறிவியல் {சங்கீத சாஸ்திரம்} நாரதரால் அடையப்பட்டது; ஆயுத அறிவியல் {தனுர் வேதம்} பரத்வாஜரால் அடையப்பட்டது; தெய்வீக முனிவர்களின் வரலாறு {சோதிடம் / வானியல்} கர்க்கரால் அடையப்பட்டது; மருத்துவ அறிவியல் கரிய நிறத்தவரான அத்ரியின் மகனால் {கிருஷ்ணாத்ரேயரால்} அடையப்பட்டது.(21) நியாயம் (வைசேஷிகம், சாங்கியம், பாதஞ்சலம் முதலியவை) போன்ற பல்வேறு பிற அறிவியல்களை அதன் தொடர்புடைய பெயரைக் கொண்ட பல்வேறு முனிவர்கள் அறிவித்தனர். வேதங்களின் மூலமும், புலன்களின் நேரடி சாட்சியம் மூலம் பெறப்பட்ட உள்ளுணர்வின் மூலமும் அறிவில் இருந்து ஈர்க்கப்பட்ட வாதங்களைக் கொண்டு அந்த முனிவர்களால் குறிப்பிடப்படும் பிரம்மம் துதிக்கப்படட்டும்[3].(22)(“கௌதமரானவர் ந்யாயசாஸ்திரமுழுமையையும் உண்மையாய் அறிந்தார். வேதங்களையறிந்தவரும், பிரம்மத்தையறிந்தவரும் பிரபுவுமான ஸ்ரீ வ்யாஸரானவர் வேதாந்தத்தையும், கர்மயோகத்தையும் அறிந்தார். ப்ருகுவானவர் சில்பசாஸ்த்ரத்தை அறிந்தார். அந்த அந்த வாதிகளால் பல தர்க்க சாஸ்த்ரங்களும் கற்பிக்கப்பட்டன. எது யுக்தியுடனும், ஆகமத்துடனும், ஸதாசாரத்துடனும் கூறப்பட்டதோ அஃது ஆதரிக்கப்படுகிறது”)தொடக்கமில்லாததும், உயர்ந்ததில் உயர்ந்ததுமான பிரம்மத்தைத் தேவர்களோ, முனிவர்களோ (முதலில்) அறியவில்லை. அனைத்தையும் படைத்தவனும், தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான நாராயணன் மட்டுமே பிரம்மத்தைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தான்.(23) முனிவர்கள், தேவர்களில் முதன்மையானோர், அசுரர்கள், பழங்காலத்தின் அரசமுனிகள் ஆகியோர் நாராயணனிடமிருந்தே கவலைத் தீர்க்கும் உயர்ந்த மருந்தின் அறிவை அடைந்தனர்.(24) தொடக்கத்திலிருந்த பருப்பொருள், தொடக்க சக்தியின் செயல்பாட்டின் மூலம் இருப்புகளை உண்டாக்கும்போது, அதிலிருந்து திறன்கள் அனைத்துடன் கூடிய அண்டமானது உண்டாகிறது[4].(25) ஒளி ஏற்றப்பட்ட ஒரு விளக்கிலிருந்து, ஆயிரக்கணக்கான பிற விளக்குகள் ஒளியேற்றப்படவல்லனவாக உள்ளன. அதே வகையிலேயே, தொடக்ககாலப் பருப்பொருள் இருப்புக்குரிய ஆயிரக்கணக்கான பொருட்களை உண்டாக்குகிறது. மேலும், அதன் முடிவிலாத் தன்மையின் விளைவால் அந்தப் பொருள் ஒருபோதும் தீர்ந்து போவதில்லை.(26)(“ப்ரக்ருதியானது எப்பொழுது ஈசனென்னும் புருஷனால் ஆலோசிக்கப்பட்ட பொருள்களை உண்டுபண்ணத் தொடங்குகிறதோ அப்பொழுது (தர்மம் அதர்மம் என்ற) காரணங்களுடன் கூடிய உலகமானது இந்த ப்ரக்ருதியினிடத்திலிருந்து முதலில் உண்டாகிறது)புலப்படாததில் {பரம்பொருளில்}<1> இருந்து தீர்மானிக்கப்பட்ட செயல்களால் புத்தி<2> எழுகிறது. புத்தி நனவுநிலையை {அஹங்காரத்தை}<3> உண்டாக்குகிறது. நனவுநிலையிலிருந்து {அஹங்காரத்திலிருந்து} ஆகாயம்<4> உண்டாகிறது. ஆகாயம் காற்றை<5> உண்டாக்குகிறது.(27) காற்று வெப்பத்தை<6> உண்டாக்குகிறது. வெப்பம் நீரை<7> உண்டாக்குகிறது, நீரானது பூமியை {நிலத்தை}<8> உண்டாக்குகிறது. இந்த எட்டும் தொடக்ககாலப் பிரகிருதியில் இருக்கின்றன. இந்த அண்டம் அவற்றையே சார்ந்திருக்கிறது.(28) இந்த எட்டிலிருந்தே ஐந்து அறிவுப்புலன்களும் {ஞானேந்திரியங்களும்}, ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரியங்களும்}, (முதல் ஐந்து) புலன்களுக்குரிய புலன்நுகர் பொருட்களும் {விஷயங்களும்}, பதினாறாவதாக அவற்றின் மாற்றத்தின் விளைவால் உண்டான ஒரு மனமும் {சேர்ந்து பதினாறு காரியங்களாகத்} தோன்றுகின்றன.(29) காது, தோல், இரு கண்கள், நாக்கு, மூக்கு ஆகியனவே ஐந்து அறிவுப்புலன்களாகும் {ஞானேந்திரியங்களாகும்}. இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {உபஸ்தம்}, இரு கரங்கள், வாக்கு ஆகியனவே ஐந்து செயற்புலன்களாகும் {கர்மேந்திரியங்களாகும்}.(30) ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம் {ஒளி}, சுவை, மணம் ஆகியவையே அனைத்தையும் மறைத்திருப்பவையும், புலன்களுக்குரியவையுமான புலன் நுகர் பொருட்கள் {விஷயங்களாகும் [தன்மாத்திரைகள்]} ஆகும். மனமானது அனைத்துப் புலன்களிலும், அவற்றுக்குரிய பொருட்களிலும் {விஷயங்களிலும்} வசிக்கிறது.(31) சுவை என்ற உணர்வில் மனமே நாவாக இருக்கிறது, வாக்கில் இந்த மனமே வார்த்தைகளாகிறது. பல்வேறு புலன்களுடன் கூடிய மனமே, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உணர்கிறது.(32)

தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் இருக்கும் இந்தப் பதினாறும் தேவர்களாக அறியப்பட வேண்டும். எவன் அறிவுகள் அனைத்தையும் படைத்தவனோ, எவன் உடலுக்குள் வசிக்கிறானோ அவனையே {பரமாத்மா / ஆத்மா} இவை வழிபடுகின்றன.(33) சுவையானது நீரின் குணமாகவும்; மணமானது பூமியின் {நிலத்தின்} குணமாகவும்; கேள்வியானது ஆகாயத்தின் குணமாகவும்; பார்வையானது {வடிவமானது} நெருப்பு அல்லது ஒளியின் குணத்தைக் கொண்டதாதாகவும்;(34) தீண்டல் {ஊறு} என்பது காற்றின் குணத்தைக் கொண்டதாகவும் அறியப்பட வேண்டும். இதுவே அனைத்துக் காலங்களிலும் அனைத்து உயிரினங்களின் வழக்காகும்.(35) மனமானது, இருப்பின் குணமாகச் சொல்லப்படுகிறது. இருப்பானது, இருப்பிலுள்ள அனைத்துக்கும் ஆன்மாவாக இருக்கும் புலப்படாததிலிருந்து {பரமாத்மாவிலிருந்து} (அல்லது பிரகிருதியிலிருந்து} உண்டாகிறது என்பதை நுண்ணறிவுமிக்க ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டும்.(36) பிரகிருதிக்கு மேலானதாக இருக்கும் உயர்ந்த தெய்வீகத்தைச் சார்ந்தவையும், செயல்படாமல் இருப்பவையுமான இந்த இருப்புகளே {அவ்யக்தம் முதலிய பொருட்களே}, அசையும் மற்றும் அசையாதன அடங்கிய மொத்த அண்டத்தையே தாங்கிப் பிடிக்கின்றன.(37) இந்தப் புனிதமான மாளிகையின் {உடலின்} ஒன்பது வாயில்களும் இந்த இருப்புகள் அனைத்தையும் கொண்டவையே. அவற்றிலும் உயர்ந்ததான ஆன்மாவானது, அதற்குள்ளேயே {உடலிலேயே} வசித்துக் கொண்டு, முழுமையாக அதனுள் படர்ந்தூடுருவி இருக்கிறது. இதன் காரணமாகவே அது {ஆன்மா} புருஷன் என்றழைக்கப்படுகிறது.(38)

ஆன்மாவானது சிதைவற்றதும், மரணத்திற்கு உட்படாததுமாகும். புலப்படும் மற்றும் புலப்படாதவற்றைக் குறித்த அறிவு அதற்கு இருக்கிறது. மேலும் அஃது அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதாகவும், குணங்களைக் கொண்டதாகவும், நுட்பமானதாகவும், இருப்புகள் மற்றும் குணங்கள் அனைத்திற்கும் புகலிடமாகவும் இருக்கிறது.(39) பெரியதாக அல்லது சிறியதாக இருக்கும் பொருட்கள் அனைத்தையும் (அதனதன் அளவைப் பொருட்படுத்தாமல்) காணச் செய்யும் ஒரு விளக்கைப் போலவே அனைத்து உயிரினங்களில் உள்ள ஆன்மாவும், (அதம உயிரினங்களின் குணங்களைக் கருத்தில் கொள்ளாத) அறிவின் கோட்பாடாக இருக்கிறது.(40) கேட்பதைக் கேட்க காதைத் தூண்டி ஆன்மாவே கேட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோலக் கண்ணைப் பயன்படுத்தி ஆன்மாவே பார்க்கிறது. ஆன்மா அடையும் அறிவுக்கு இந்த உடலே வழிமுறைகளைக் கொடுக்கிறது. உடலில் உள்ள உறுப்புகள் செயல்படுபவையல்ல. ஆன்மாவே அனைத்துச் செயல்களையும் செய்வதாக இருக்கிறது.(41) மரத்திற்குள் நெருப்பு இருக்கிறது, ஆனால் அந்த மரத்துண்டை வெட்டித் திறந்தால் அதைக் காண முடியாது. அதே போலவே ஆன்மா உடலுக்குள் வசித்தாலும், உடலைக் கூறுபோடுவதால் அஃதை ஒருபோதும் காணமுடியாது.(42) மரத்தை மற்றொரு மரத்துடன் சரியான வழிமுறைகளின்படி உரசும்போது மரத்திற்குள் வசிக்கும் நெருப்பானது காணப்படுகிறது. அதே வகையில், உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவும், யோகம் எனும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்தும்போது காணப்படும்.(43)

நீரானது ஆறுகளில் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் எப்போதும் சூரியனையே பற்றியிருக்கிறது. அதே வகையிலேயே ஆன்மாவுக்கும் ஓர் உடல் இருக்கிறது. ஆன்மாவானது அடுத்தடுத்த உடல்களில் நுழைய வேண்டிய காரணதால் இந்தத் தொடர்பு நிற்காமல் தொடர்கிறது[5].(44) ஒரு கனவில், ஐந்து வகைப் புலன்களுடன் கூடிய ஆன்மாவானது, உடலைவிட்டகன்று பரந்த பகுதிகளில் திரிகிறது. அதே வகையிலேயே மரணம் ஏற்படும்போதும், (நுண்ணிய வடிவங்களிலான புலன்களுடன் கூடிய) ஆன்மாவானது, மற்றொரு உடலுக்குள் நுழைவதற்காக, {தானிருக்கும்} ஓர் உடலைக் கடந்து செல்கிறது.(45) ஆன்மாவானது அதன் முற்பிறவி செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. ஓர் இருப்பு நிலையில் செய்யப்பட்ட செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்கும் அது, மற்றொரு நிலையை அடைகிறது. உண்மையில், பலமிக்க விளைவுகளைக் கொண்டவையான தன் செயல்களின் மூலமே அஃது ஓர் உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு வழிநடத்தப்படுகிறது.(46) ஒரு மனித உடலுக்குச் சொந்தக்காரன் {ஆன்மாவானது}, தன் உடலை விட்டகன்று, எவ்வாறு மற்றொரு உடலுக்குள் நுழைகிறான்? உண்மையில் (கடந்த கால மற்றும் தற்கால வாழ்வுகளில்) தங்கள் தங்களுக்குரிய செயல்களின் விளைவால் எவ்வாறு மொத்த உயிரினங்களும் உண்டாகின்றன? என்பதைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன்” என்றார் {அந்த ஆசான்}(47).(“ஆறுகளில் ஜலங்களும், ஸூர்யனிடத்தில் கிரணங்களும் சேர்ந்து கொண்டு தொடர்ந்தவைகளாக எவ்விதம் செல்லுகின்றனவோ அவ்விதம் சரீரிகளுக்குச் சரீரங்கள் செல்லுகின்றன)

ஆத்ம தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 211-செயல்களின் பிறப்பு மற்றும் ஞானத்தின் இயல்பு ஆகியவற்றைக் குறித்து ஓர் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{ஆசான் தன் சீடனிடம் தொடர்ந்தார்}, “நான்கு வகைகளில் பிரிந்திருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், புலப்படாத பிறப்பையும், புலப்படாத மரணத்தையும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. புலப்படாத ஆன்மாவில் மட்டுமே இருக்கும் மனமானது, புலப்படாத குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[1].(1) மலராத அஸ்வத மலருக்குள் பதுங்கிருந்த ஒரு பெரிய மரம், வெளியே வரும்போது மட்டுமே புலப்படுவதைப் போலவே, புலப்படாததிலிருந்து பிறப்பு நேர்கிறது.(2) அசைவற்றதாக இருக்கும் இரும்புத் துண்டானது, காந்தத் துண்டை நோக்கி ஓடும். அதே போலவே, இயற்கையான உள்ளுணர்வுகளின் மூலமான விளையும் விருப்பங்கள், மனச்சார்புகள் மற்றும் யாவும் புதுப்பிறவியில் ஆன்மாவை நோக்கி ஓடுகின்றன[2].(3) உண்மையில், அந்த மனச்சார்புகளும், உடைமைகளும், அறியாமை மற்றும் மாயையிலிருந்து உண்டாகி, இயல்பில் அசைவற்றவனவாக இருந்தாலும், அந்த ஆன்மாவானது மீண்டும் {புதிய} பிறப்பை அடையும்போது, ஆன்மாவில் கலந்துவிடுவதைப் போல, பிரம்மத்தில் இருந்தே நேரடியாக வரும் அந்த ஆன்மாவின் மனச்சார்புகளும், நாட்டங்களும் பிரம்மத்தை நோக்கித் தங்கள் பார்வையைச் செலுத்தி, தங்களை அதனுடன் இணைத்துக் கொள்கின்றன[3].(4) சித் எனும் ஆன்மாவை {ஜீவனைத்} தவிரப் பூமியோ, வானமோ, சொர்க்கமோ, பொருட்களோ, உயிர்மூச்சுகளோ, அறம் மற்றும் மறமோ, வேறு எதுவுமோ முன்பு இருந்ததில்லை. அறியாமையால் மாசடைந்த சித் எனும் ஆன்மாவிடம் {ஜீவனிடம்} அவை எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை[4].(5)ஆன்மா நித்தியமானதாகும் {நிலையானதாகும்}. அஃது அழிவற்றதாகும். ஒவ்வொரு உயிரினத்திலும் அது தோன்றுகிறது. மனத்திற்கு அதுவே காரணமாக இருக்கிறது. அது குணங்களற்றதாக இருக்கிறது. நாம் காணும் இந்த அண்டமானது, அறியாமை அல்லது மாயையின் காரணமாக விளைவது என்று (வேதங்களில்) தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆன்மாவானது, முற்பிறவி விருப்பங்களின் காரணமாகவே, வடிவம் முதலியவற்றை உணர்கிறது[5].(6) ஆன்மாவானது, அந்தக் காரணங்களுடன் (விருப்பங்களுடன்) கூடியதாகும்போது, செயல்களில் ஈடுபடும் நிலைக்கு வழிநடத்தப்படுகிறது. (அந்தச் செயல்கள் மீண்டும் ஆசைகளை உண்டாக்கி புதிய செயல்களைச் செய்ய வைக்கும்) அந்நிலையில் விளைவால், இருப்பெனும் {வாழ்வெனும்} இந்தப் பெருஞ்சக்கரம் தொடக்கமும், முடிவும் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கிறது[6].(7) புலப்படாதது (ஆசைகளுடன் கூடிய புத்தியானது), அந்தச் சக்கரத்தின் அச்சாக இருக்கிறது. புலப்படக்கூடியது (புலன்களுடன் கூடிய உடலானது) அதன் ஆரங்களின் கூட்டமாக இருக்கிறது. உணர்வுகளும் {ஞானமும்}, செயல்களும் {கர்மமும்} அதன் சுற்றளவாக {சக்கரத்தின் வட்டையாக} இருக்கின்றன. ரஜஸ் (ஆசை) குணத்தால் உந்தப்படும் ஆன்மாவானது (அதன் சுழற்சியைப் பார்த்துக் கொண்டே) அதைச் சுழலச் செய்கிறது.(8) காணிகர்கள் {எண்ணெய் ஆட்டுபவர்கள்} தங்கள் செக்கில் எள்ளையிட்டு ஆட்டுவதைப் போல, அறியாமையில் பிறந்த விளைவுகள் {காரியங்கள்}, ரஜஸ் {ஆசை} குணத்தால் நனைக்கப்பட்ட (உயிரினங்களுடன் கூடிய) அண்டத்தை அந்தச் சக்கரத்தில் இட்டு, அதைத் தாக்கி, நசுக்கவோ, அரைக்கவோ செய்கின்றன.(9) உயிரினமானது {ஜீவனானது}, இந்த அடுத்தடுத்த இருப்புகளில், ஆசையின் விளைவால் உண்டான சுயக் கருத்தால் பற்றப்பட்டுச் செயல்களில் ஈடுபடுகிறது. காரணம் மற்றும் விளைவின் {காரியத்தின்} கலப்பில் அந்தச் செயல்கள் மேலும் (புதிய) செயல்களை உண்டாக்குகின்றன[7].(10)விளைவுகள் {காரியங்கள்} காரணங்களுக்குள் நுழைவதில்லை. அல்லது காரணங்களும், விளைவுகளுக்குள் {காரியங்களுக்குள்} நுழைவதில்லை. விளைவுகளை {காரியங்களை} உண்டாக்குவதில் காலமே காரணமாக இருக்கிறது[8].(11) காரணங்களால் நிறைந்தவையாக இருக்கும் தொடக்ககாலச் சாரங்களும் (முன்னர்க் குறிப்பிட்ட எட்டு காரணங்கள்), அவற்றின் (பதினாறு) மாறுதல்களும் {காரியங்களும்} ஆன்மாவால் எப்போதும் நடத்தப்படுவதன் விளைவால் {காரணங்களும், காரியங்களும்} ஒன்றுகலந்த நிலையிலேயே இருக்கின்றன[9].(12) புழுதியானது காற்றால் அசைக்கப்பட்டு, அதைப் பின்தொடர்ந்து செல்வதைப் போலவே, உடலை இழந்ததும், இன்னும் ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த விருப்பங்களுடன் கூடியதும், முடிந்து போன பிறவியில் செய்த செயல்களுக்கான காரணக் கோட்பாடுகளுடன் கூடியதுமான ஜீவாத்மாவும், பரமாத்மாவால் அசைக்கப்பட்டு, அது {பரமாத்மா} காட்டும் திசையில் செல்கிறது.(13) எனினும், ஆன்மாவானது, ஒருபோதும் அந்த விருப்பங்கள் மற்றும் மனச்சார்புகளால் தீண்டப்படுவதில்லை. அதேபோல இவற்றிலும் மேன்மையான ஆன்மாவால் இவை தீண்டப்படுவதுமில்லை. தூய இயல்பைக் கொண்ட காற்றானது ஒருபோதும் அது தாங்கிச் செல்லும் காற்றால் களங்கமடைவதில்லை[10].(14)(“அவ்யக்தமான வாஸனையைக் குடமாகவும், வ்யக்தமான சரீர முதலியவைகளை ஆர்களாகவும், ஞானம் கர்மம் முதலிய காரியங்களைச் சுற்றிலுமுள்ள வட்டையாகவும், ஆசையென்ற பசையுள்ள ரஜோகுணத்தை அச்சாகவும் கொண்ட சம்ஸாரசக்ரமானது க்ஷேத்ரஜ்ஞனான ஜீவனால் ஏறப்பட்டு உறுதியாயிருக்கிறது. எண்ணெயென்னும் ஸ்நேகமுள்ளதாயிருப்பதால் எள்ளானது செக்கார்களால் பீடிக்கப்படுவது போல இவ்வுலகம் யாவும் ஆசையென்னும் ஸ்நேகமுள்ளதாயிருப்பதனால் அஜ்ஞானத்தாலுண்டாகும் போகங்களால் ஆக்ரமித்து இந்த ஸம்ஸாரசக்ரத்தில் பீடிக்கப்படுகிறது. இந்த உலகமானது போக விருப்பத்தாலுண்டான அபிமானத்தால் பிடிகப்பட்டுக் கர்மத்தைச் செய்கிறது. அந்தக் கர்மமானது அஜ்ஞானத்திற்கும் சரீரத்திற்கும் சேர்க்கையுண்டாவதற்குக் காரணமென்று உபதேசிக்கப்படுகிறது. காரணமானது கார்யத்தைப் போய் அடைகிறதில்லை. அதுபோலக் கார்யமும் காரணத்தை அடைவதில்லை. இக்கார்யங்கள் காரணத்திலிருக்கின்றன. இதர காரணங்களுடன் கூடிய காலமானது (அவைகளை வெளிபண்ணக்) காரணமாயிருக்கிறது”பரம்பொருள், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, ஆகாயம், காற்று, வெப்பம், நீர், பூமி ஆகிய எட்டும் தொடக்கக் காலப்ரகிருதியின் சாரங்களாகும் {காரணங்களாகும்}. அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும், செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், புலன்களுக்குரிய பொருட்கள் {விஷயங்கள்} ஐந்தும், மனமும் சேர்ந்த பதினாறும் காரியங்களாகும்.)காற்றானது, அது சுமந்து செல்லும் புழுதியில் இருந்து உண்மையில் தனித்திருப்பதைப் போலவே, ஒரு ஞானியானவன், இருப்பு அல்லது வாழ்வு என்றழைக்கப்படும் ஒன்றுக்கும், ஆன்மாவுக்கும் இடையில் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும். உடல், புலன்கள், பிற மனச்சார்புகள், நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள் ஆகியவற்றுடன் ஆன்மாவானது வெளிப்படையாகக் கலந்திருப்பதன் விளைவால், அதற்கு {ஆன்மாவுக்கு} அவை அவசியமானவை மற்றும் முழுமையான குணங்களாக இருப்பவை என்று உண்மையில் ஒருவரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மறுபுறம், ஆன்மாவானது தன்னியல்பிலேயே இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார் {ஆசான்}.(15) இவ்வாறே அந்தத் தெய்வீக முனிவர் தமது சீடனின் மனத்தில் இருந்த ஐயத்தைத் தீர்த்தார். இவை யாவும் இருந்த போதிலும், துன்பத்தைக் கைவிடுவதற்கும், மகிழ்ச்சியை வெல்வதற்கும் செயல்கள் மற்றும் சாத்திரச் சடங்குகள் அடங்கிய வழிமுறைகளையே மக்கள் சார்ந்திருக்கின்றனர்.(16) நெருப்பால் எரிக்கப்பட்ட வித்துகள் முளைப்பதில்லை. அதே வகையில், துன்பத்தை அளிக்கும் அனைத்தும் உண்மை ஞானம் என்ற நெருப்பால் எரிக்கப்பட்டால், ஆன்மாவானது இவ்வுலகில் மறுபிறவி என்ற கடப்பாட்டில் இருந்து தப்பித்துவிடும் {விடுதலை பெறும் / முக்தி அடையும்}” என்றார் {பீஷ்மர்}.(17)

தோஷங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 212-அறியாமையின் மூலம் பிறக்கும் களங்கங்கள்; மாயைகளை உண்டாக்கும் தமோ குணம்; களங்கங்களை விரட்டப் பயன்படும் ஆய்வு; குணங்களில் பிறக்கும் களங்கங்களை விரட்டி முக்தி அடையும் ஆன்மா ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் பேசிய பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “செயல்களை {கர்மங்களைச்} செய்வதில் ஈடுபடுபவர்கள் {ப்ரவ்ருத்தி தர்மத்திலிருப்பவர்கள்}, செயல்களைச் செய்வதையே உயர்வாகக் கருதுகிறார்கள். அதுபோலவே, அறிவில் ஈடுபாடு கொண்டவர்கள் {ஞானநிஷ்டையிலுள்ளவர்கள்} அறிவைத் தவிர வேறு எதையும் கருதுவதில்லை.(1) வேதங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்பட்டவற்றைச் சார்ந்தவைகளை முழுமையாக அறிந்தவர்கள் மிக அரிதானவர்களே. நுண்ணறிவுமிக்கவர்கள், சொர்க்கம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டைவிடச் சிறந்த பாதையாகச் செயல்களைத் துறக்கும் பாதையையே {ஞான வழியையே} விரும்புகிறார்கள்[1].(2) பெரும் ஞானம் கொண்டவர்களாலேயே செயல்களில் துறவு நோற்கப்படுகிறது. எனவே, அந்த ஒழுங்கே மெச்சத்தகுந்ததாகும். செயல்களில் இருந்து விடுபடத் தூண்டும் புத்தியாலேயே ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(3) உடலைக் கொண்ட ஒரு மனிதன், கோபம், பேராசை ஆகியவற்றுடனும், ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த மனச்சார்புகள் அனைத்துடனும், மடமையின் மூலமும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் பற்று கொள்கிறான்.(4) எனவே, ஒருவன், தன் உடலுடன் கொண்ட தொடர்பை அழிக்க விரும்பினால், அவன் தூய்மையற்ற எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது[2].(5)தங்கமானது, இரும்புடன் சேரும்போது, அதன் தூய்மையை இழந்து ஒளிரத் தவறுவதைப் போலவே, ஞானமானது, உலகம் சார்ந்த பற்று மற்றும் அத்தகைய களங்கங்களுடன் {தோஷங்களுடன்} இருக்கும்போது, காந்தியை வெளியிடத் தவறுகிறது.(6) பேராசையின் ஆதிக்கத்தில், கோபம் மற்றும் ஆசையின் ஆணைகளைப் பின்பற்றி, மறம் {அதர்மம்} பயின்று, அறத்தின் பாதையை மீறிச் செல்லும் ஒருவன் முற்றான அழிவையே அடைகிறான்.(7) தனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைப் பிரதிபலிக்கும் புலன்நுகர் பொருட்களில் ஒருபோதும் அதீதப் பற்றுக் கொள்ளக்கூடாது. ஒருவன் அதைச் செய்வானானால், கோபம், இன்பம் மற்றும் துன்பம் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்றாக எழும் (அவ்வாறு எழுந்து ஒருவனைத் துன்புறுத்தும்).(8) ஒவ்வொருவரின் உடலும், மூலமான ஐந்து பூதங்களாலும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ} குணம், இருள் {தமோ} குணம் ஆகிய குணங்களாலும் அமைக்கப்பட்டிருக்கும்போது, ஒருவன் யாரைத் துதிக்க வேண்டும்? எந்த வார்த்தைகளால் யாரை நிந்திக்க வேண்டும்?(9) மூடர்கள் மட்டுமே புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருக்கிறார்கள். மடமையின் விளைவால் அவர்கள், தங்கள் உடலானது, பூமியின் மாறுதல்கள் {பூமியில் உண்டான காரியங்கள்} மட்டுமே என்பதை அறியாதிருக்கிறார்கள்[3].(10)மண்ணால் அமைக்கப்பட்ட வீடானது, மண்ணால் பூசப்படுவதைப் போலவே, மண்ணாலான இந்த உடலும், பூமியின் மாறுதலான {காரியமான} உணவின் மூலம் அழிவில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.(11) தேன், எண்ணெய், பால், நெய், இறைச்சி, உப்பு, வெல்லம், அனைத்துவகைத் தானியங்கள், கனிகள், கிழங்குகள் ஆகிய அனைத்தும் நீருடன் கூடி பூமியின் மாறுதல்களே {காரியங்களே} ஆகும்.(12) காட்டில் வாழும் துறவிகள், (ஆடம்பர மற்றும் சுவைமிக்க உணவுக்கான) ஏக்கங்கள் அனைத்தையும் கைவிட்டு, உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே சுவையற்ற எளிய உணவை உண்கின்றனர்.(13) அதே வகையில், உலகின் காடுகளில் வசிக்கும் மனிதன், உழைப்புக்குத் தயாராக இருந்து, வாழ்வைக் கடந்து செல்வதற்காக மருந்தை உட்கொள்ளும் நோயாளியைப் போலவே உணவை உட்கொள்ள வேண்டும்[4].(14)உன்னத ஆன்மா கொண்ட மனிதன், தன்னிடம் வரும் உலகம்சார்ந்த பொருட்கள் அனைத்தின் இயல்பையும் ஆய்வு செய்து, வாய்மை, தூய்மை, வெளிப்படைத்தன்மை {நேர்மை}, துறவு {தியாகம்}, ஞானம், துணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி {தைரியம்}, நுண்ணறிவு {புத்தி}, சிந்தனை {மனம்}, தவங்கள், ஆகியவற்றின் உதவியுடனும், அமைதியை அடையும் விருப்பத்துடனும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.(15,16) அறியாமையின் விளைவால் திகைப்படையும் உயிரினங்கள் அனைத்தும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருளின் {தமோ குணத்தின்} மூலம் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழன்று {செயல்களில் ஈடுபட்டு} வருகின்றன.(17) எனவே அறியாமையில் பிறக்கும் களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து, அறியாமையைத் தோற்றுவாயாகக்கொண்டதும், துன்பத்தை உண்டாக்குவதுமான தன்னுணர்வைத் தவிர்க்க வேண்டும்.(18) ஐவகைப் பூதங்கள், புலன்கள், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {ரஜோ} குணங்கள், பரம்பொருளுடன் கூடிய மூவுலகங்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தன்னுணர்வை {சுயப்ரக்ஞையைச்} சார்ந்தவையாக இருக்கின்றன[5].(19) காலமானது, தன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, எப்போதும் பருவகாலத் தோற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டுவதைப் போலவே, அனைத்து உயிரினங்களிலும் உள்ள தன்னுணர்வானது, செயல்களைச் செய்யத் தூண்டுகிறது[6].(20)(எதில் தன்னுணர்வு பிறக்கிறதோ அந்த) தமஸ் {இருள் குணம்}, மாயைகளை உண்டாக்கவல்லது என்பது அறியப்பட வேண்டும். அஃது {இருள் குணமானது} இருளைப் போன்றதும் அறியாமையில் பிறந்ததும் ஆகும். நற்குணம், ஆசை குணம், இருள் குணங்கள் ஆகிய மூன்று குணங்களுடன் (உயிரினங்களின்) இன்ப துன்பங்கள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.(21) நற்குணம், ஆசை குணம் மற்றும் இருள் குணங்களில் இருந்து எழும் விளைவுகளை இப்போது கேட்பாயாக. மனநிறைவு, இன்பத்தில் இருந்து எழும் திருப்தி, உறுதித்தன்மை {ஐயமில்லாமை}, நுண்ணறிவு {தைரியம்}, நினைவு ஆகிய இவை நற்குணத்தில் பிறந்த விளைவுகளாகும். நான் இப்போது ஆசை மற்றும் இருள் குணங்களின் விளைவுகளைச் சொல்லப் போகிறேன்.(22) ஆசை, கோபம், குற்றம், பேராசை, மலைப்பு, அச்சம், களைப்பு ஆகியவை ஆசை குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும். உற்சாகமின்மை, துயரம், நிறைவின்மை, வறட்டுப் பெருமை, செருக்கு, தீமை ஆகிய அனைத்தும் இருள் குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும்.(23) இவற்றின் கனம், அல்லது கனமின்மையையும், ஆன்மாவில் வசிக்கும் பிற குறைகளையும் ஆய்வு செய்யும் ஒருவன், (அவற்றில் எவை இருக்கின்றன, எவை பலமானவை, எவை பலவீனமானவை, எவை விரட்டப்பட்டுவிட்டன, எவை இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பது உறுதி செய்வதற்காக) ஒன்றன்பின் ஒன்றாக அவை ஒவ்வொன்றையும் குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்றார் {பீஷமர்}.(24)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “விடுதலையை {முக்தியை} விரும்பும் மனிதர்கள் எந்தக் களங்கங்களைக் கைவிடுகிறார்கள்? எவற்றை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். (கைவிட இயலாத வகையில்) மீண்டும் மீண்டும் திரும்ப வரும் களங்கங்கள் யாவை?(25) உண்மையில், ஒரு ஞானியாவன், நுண்ணறிவும் மற்றும் காரணங்களின் துணையுடன் எந்தக் களங்கங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்துச் சிந்திக்க வேண்டும்? இவை குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. ஓ! பாட்டா, இவை குறித்து என்னிடம் உரையாடுவீராக” என்றான்.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் களங்கங்கள் அனைத்தையும் வேருடன் பிடுங்குவதன் மூலம், விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான். இரும்பாலான கோடரியொன்று இரும்புச் சங்கிலியைப் பிளப்பதைப் போலவே, தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், இருள் குணத்தில் உதித்தவையும், (மறுபிறவியில்) ஆன்மாவுடன் சேர்ந்து பிறப்பவையுமான அந்தக் களங்கங்கள் அனைத்தையும் அழித்து, உடலுடன் கூடிய தன் தொடர்பைக் கரைப்பதில் வெல்கிறான் (விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(27) ஆசையில் இருந்து பிறக்கும் குணங்களும், இருளில் இருந்து பிறக்கும் குணங்களும், தூய்மையில் இருந்து பிறக்கும் களங்கமற்றவைகளும் (நற்குணத்தின் கீழ் சேர்க்கப்படுபவையும்), உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் எதில் வளர்கின்றனவோ அந்த வித்திலேயே இருக்கின்றன. இவற்றில், நற்குணம் மட்டுமே, தூய ஆன்மாக்களைக் கொண்டோர் விடுதலை {முக்தி} அடைவதற்குக் காரணமாக இருக்கிறது.(28) எனவே, தூய்மைடைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோகுணம்} ஆகிய குணங்களில் பிறக்கும் அனைத்தையும் கைவிட வேண்டும். மேலும், ஆசை மற்றும் இருள் சார்ந்தவற்றிலிருந்து நற்குணம் விடுபெறும்போது, அது {அந்த நற்குணம்} மேலும் ஒளிர்வடைகிறது {பிரகாசிக்கிறது}.(29) மந்திரங்களின் உதவியுடன் செய்யப்படும் பிற செயல்கள், வேள்விகள், ஆன்ம தூய்மைக்கு நிச்சய காரணமாக இருப்பவை ஆகியவை தீய அல்லது கொடுஞ்செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர். (இக்கருத்து சரியானதல்ல). மறுபுறம் அச்செயல்கள், உலகப்பற்றுகள் அனைத்திலிருந்தும் ஆன்மாவின் தொடர்பை அறுப்பதற்கும், அமைதி அறம் நோற்பதற்கும் முக்கிய வழிமுறைகளாக இருக்கின்றன[7].(30)ஆசையில் பிறக்கும் குண ஆதிக்கத்தின் மூலம், மறச்செயல்கள் {அதர்ம செயல்கள்} அனைத்தும் செய்யப்படுகின்றன, மேலும் உலகம் சார்ந்த நோக்கங்கள் நிறைந்த அனைத்தும் செயல்களும், ஆசையில் இருந்து பிறக்கும் அத்தகைய செயல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன.(31) இருளில் பிறக்கும் குணங்களின் மூலம் ஒருவன், பேராசை நிறைந்தவையும், கோபத்தில் பிறப்பவையுமான செயல்கள் அனைத்தையும் செய்கிறான். இருள் குணத்தின் விளைவால் ஒருவன் உறக்கம் மற்றும் தாமதிக்கும் இயல்பு ஆகியவற்றைத் தழுவி, கொடூரச் செயல்கள் மற்றும் உடல் இன்பத்திற்கான செயல்கள் அனைத்தையும் செய்கிறான்.(32) எனினும், நம்பிக்கையுள்ளவனும், சாத்திர அறிவுள்ளவனும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} நோற்பவனுமான ஒருவன், நற்காரியங்கள் அனைத்தையும் செய்து, (அக) அழகுடன் கூடியவனாகவும், ஒவ்வொரு களங்கத்திலிருந்தும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனாகவும் மாறுகிறான்” என்றார் {பீஷ்மர்}.(33)

புலன்களை வெற்றிகொள்! – சாந்திபர்வம் பகுதி – 213-ஆன்ம மயக்கம்; அதில் பிறக்கும் உணர்வுகள்; உணர்வுகளின் மூலம் ஏற்படும் பற்று; பற்றில் பிறக்கும் செயல்; குணங்களின் சார்பு நிலைகள்; அவற்றின் காரணமாகப் பிறக்கும் புலனுறுப்புகள்; மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைந்து முக்தி அடைவதற்குப் புலன்களை வெற்றி கொள்வதன் அவசியம் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆசை குணத்தின் {ரஜோ குணத்தின்} மூலம் மயக்கம் அல்லது தீர்மான இழப்பு எழுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இருள் குணத்தில் {தமோகுணத்தில்} இருந்து கோபம், பேராசை, அச்சம் மற்றும் செருக்கு ஆகியன எழுகின்றன. இவை யாவும் அழிக்கப்படும்போது ஒருவன் தூய்மையடைகிறான்.(1) தூய்மை அடைவதன் மூலம் ஒரு மனிதன், புலப்படாதவனான முதன்மையான தேவனின் புகலிடத்தை அடைந்து, காந்தியுடன் ஒளிர்வதும், சிதைவடைய இயலாததும், மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதுமான பரமாத்ம ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(2) மாயையில் விழுந்த மனிதர்கள், அறிவில் இருந்து வீழ்ந்து, அறிவற்றவர்களாகி, அவர்களது ஞானம் இருளடைவதன் விளைவால் கோப வசப்படுகிறார்கள்[1].(3) கோபத்தின் மூலம் அவர்கள், ஆசையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ஆசையில் இருந்து பேராசை, மாயை, வீண் தற்பெருமை, செருக்கு, தன்னலம் ஆகியவை எழுகின்றன. இத்தகைய தன்னலத்தில் இருந்து பல்வேறு செயல்கள் பிறக்கின்றன[2].(4) செயல்களில் இருந்து பல்வேறு பற்றுகளும், பிணைப்புகளும் எழுகின்றன, அந்தப் பற்றுப் பிணைப்புகளில் இருந்து துன்பம் எழுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த செயல்களில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புக்கான கடப்பாடு எழுகிறது.(5)பிறப்புக் கடமையின் விளைவால், உயிர்வித்து {சுக்லம்} மற்றும் குருதியின் {சோணிதத்தின்} கலவையின் மூலம் கருவறையில் வசிக்கும் கடப்பாடு நேர்கிறது. அந்த வாசமானது {கருவறையில் வசிக்கும் நிலையானது}, மலம், சிறுநீர் மற்றும் சளி ஆகியவற்றுடன் {மலஜலசிலேத்தமங்களுடன்} சேர்ந்து மாசடைந்து, அங்கே உற்பத்தியாகும் குருதியால் எப்போதும் கசடுள்ளதாகிறது.(6) தாகத்தில் {ஏக்கத்தில்} மூழ்கும் சித்-ஆன்மா {ஜீவன்} கோபத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சியவற்றிலும் கட்டப்படுகிறது. எனினும், அத்தீமைகளில் இருந்து தப்புவதற்கு அது முனைகிறது. இதன் காரணமாகவே, படைப்பு எனும் ஓடையை ஓடச் செய்யும் கருவிகளாகப் பெண்கள் கருதப்பட வேண்டும்.(7) பெண்கள் தங்கள் இயல்பில் க்ஷேத்திரமாகவும், ஆண்கள் தங்கள் குணங்களைப் பொறுத்தவரையில் க்ஷேத்ரஜ்ஞனாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே, (உலகப் பொருட்கள் பிறவற்றுக்கு மத்தியில்) குறிப்பாகப் பெண்களை ஞானிகள் பின்தொடரக்கூடாது[3].(8) உண்மையில் பெண்கள் பயங்கரமான மந்திர சக்திகளைப் போன்றவர்களாவர். ஞானமற்ற மனிதர்களை அவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள். அவர்கள் ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் புலன்களின் நித்தியமான உடல்வடிவங்களாவர்[4].(9) பெண்களுக்காக ஆண்கள் அடையும் ஆசையின் விளைவாலும், உயிர் வித்தின் (செயல்பாட்டின்) காரணமாகவும் அவர்களில் இருந்து வாரிசுகள் உண்டாகின்றனர். ஒருவன் தன் உடலில் இருந்து பிறக்கும் புழுக்களைத் தங்களில் ஒருபகுதியாகக் கருதாமல் அவற்றைக் கைவிடுவதைப் போலவே, அவனது சுயமாகக் கருதப்படுபவர்களும், உண்மையில் அவ்வாறு அல்லாதவர்களுமான பிள்ளைகள் என்றழைக்கப்படும் அந்தப் புழுக்களையும் அவன் கைவிட வேண்டும்.(10)வியர்வையின் (மற்றும் பிற மாசுகளின்) மூலமாக உடலில் இருந்து உயிரினங்கள் எழுவதைப் போலவே, முற்பிறவிச் செயல்களின் ஆதிக்கத்தில் அல்லது இயற்கையின் போக்கில் உயிர்வித்தில் {உயிர் நீரில்} இருந்தும் அவை {உயிரினங்கள் / பிள்ளைகள்} எழுகின்றன. எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், அவர்களிடம் ஒரு மதிப்பையும் உணரக்கூடாது[5].(11) ஆசை குணம் {ரஜோ குணம்} அந்த இருளையே {இருள் குணத்தையே} சார்ந்திருக்கிறது. மேலும் நற்குணமோ {சத்வ குணமோ} அந்த ஆசையையே {ஆசை குணத்தையே} சார்ந்திருக்கிறது. புலப்படாத இருளானது, ஞானத்தை மறைத்து, புத்தி மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} எனும் குறிப்பிடத்தக்க கூறுகளை உண்டாக்குகிறது[6].(12) புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களைக் கொண்ட அறிவே, உடல்கொண்ட ஆன்மாக்களின் வித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும், எது அத்தகைய ஞானத்தின் வித்தாக இருக்கிறதோ, அது ஜீவன் (அல்லது சித்-ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது[7]. செயல்கள், கால ஒழுங்கு ஆகியவற்றின் விளைவால் ஆன்மாவானது, பிறப்பையும், மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் சுழற்சியையும் அடைகிறது.(13) கனவில் ஆன்மாவானது, உடலைக் கொண்டிருப்பது போல், மனச் செயல்பாட்டின் மூலம் விளையாடிக் கொண்டிருப்பதைப் போல (முற்பிறவி) செயல்களைத் தங்கள் மூலமாகக் கொண்ட குணங்கள் மற்றும் மனச்சார்புகளின் விளைவாக, அஃது {ஆன்மா} ஒரு தாயின் கருவறையில் ஓர் உடலை அடைகிறது.(14) அஃது அங்கே இருக்கும்போது, முற்பிறவிச் செயல்களையே செயல்படும் காரணமாகக் கொண்டு விழிப்படையும் புலன்கள் அனைத்தும், பற்றுகளுடன் கூடிய மனத்தின் விளைவால் நனவுநிலையை {அஹங்காரத்தை} அடைகிறது[8].(15)ஆன்மாவானது, ஒலி குறித்த முற்பிறவி எண்ணங்களின் விளைவால் விழிப்படைந்து, அத்தகைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து, கேட்கும் உறுப்பைப் பெறுகிறது. அதே போலவே, வடிவங்களில் உள்ள பற்றின் மூலம், அதன் கண்கள் உண்டாகிறது, மணத்தில் உள்ள ஏக்கத்தின் மூலம், நுகரும் உறுப்பையும் அது பெறுகிறது.(16) தீண்டல் குறித்த எண்ணங்களின் மூலம் அது தோலை அடைகிறது. அதே வழியில், உடலைச் செயல்படச் செய்வதில் பங்காற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் ஆகிய ஐவகை மூச்சுகளும் {வாயுக்களும்} அதனால் அடையப்படுகிறது.(17) (முன்னர்ச் சொன்னதுபோல) முற்பிறவி செயல்களின் விளைவால் முழுதாக வளர்ந்த உறுப்புகள் அனைத்துடன் கூடிய உடலில் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உடல் மற்றும் மனத் துன்பத்துடன் கூடிய பிறப்பை எடுக்கிறது.(18) (கருவறையில்) உடலை ஏற்கிறது என்ற உண்மையிலிருந்தே கவலையும் எழுகிறது என்பது அறியப்பட வேண்டும். அது தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து (பிறப்புக்குக் காரணமான பற்றுகளைத்) துறப்பதன் மூலமே கவலைக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. கவலையின் முடிவைக் குறித்து அறிந்தவன் விடுதலையை {முக்தியை} அடைவான்.(19) புலன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் ஆசை குணத்தை {ரஜோ குணத்தைச்} சார்ந்திருக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், சாத்திரங்களால் அமைக்கப்பட்ட கண்ணின் உதவியுடனும், தகுந்த ஆய்வுடனும் செயல்பட வேண்டும்[9].(20) அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஈட்டினாலும், தாகமில்லாத {ஏக்கமில்லாத} மனிதனை நிறைவு செய்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உடல்கொண்ட ஆன்மாவானது, அதன் புலன்களைப் பலவீனமடையச் செய்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறது” என்றார் {பீஷ்மர்}.(21)

பிரம்மச்சரியம்! – சாந்திபர்வம் பகுதி – 214-பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறை; பிரம்மச்சரியம் என்றால் என்ன? பிரம்மச்சரியமும் பெண்களும்; சுக்லம் பிரியும் முறை; பிறப்பறுக்கும் உயர்ந்த நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாத்திரக் கண் கொண்டு காணும்போது, (புலன்களை வெற்றிகொள்ளக்கூடிய) வழிமுறைகள் என்ன, என்பது குறித்து இப்போது நான் சொல்லப்போகிறேன். ஓ! மன்னா, அத்தகைய அறிவின் துணையுடனும், அதன் படியும் தன் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்வதன் மூலமும் ஒரு மனிதன் உயர்ந்த கதியை அடைவான்.(1) வாழும் உயிரினங்கள் அனைத்திலும் மனிதனே முதன்மையானவனாகச் சொல்லப்படுகிறான். மனிதர்களில் மறுபிறப்பாளர்களே முதன்மையானவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்; மறுபிறப்பாளர்களில், வேதங்களை அறிந்தோரே முதன்மையானவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(2) இறுதியாகச் சொல்லப்படும் இவர்களே வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாக்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில், வேதங்களை அறிந்த பிராமணர்கள், அனைத்தையும் கண்டவர்களாகவும், அனைத்தும் அறிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் பிரம்மத்தை அறிந்த மனிதர்களாவர்.(3) வழிகாட்டியில்லாத பார்வையிழந்த மனிதன் ஒருவன், சாலைகளில் பல சிரமங்களுக்கு ஆளாவதைப் போலவே, அறிவற்ற மனிதனும் இவ்வுலகில் பல இடையூறுகளைச் சந்திப்பான். இதன் காரணமாகவே எஞ்சியோரைக் காட்டிலும் அறிவுடையோர் மேன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) அறமீட்ட விரும்புவோர், சாத்திர விதிகளின்படியான பல்வேறு வகைச் சடங்குகளைச் செய்கிறார்கள். எனினும், அவர்கள் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வதில்லை. அந்த நற்குணங்களைக் கொண்டு அவர்கள் ஈட்டுவது அனைத்தையும் குறித்து நான் இப்போது பேசப் போகிறேன்[1].(5)இருவகை அறங்களை நோற்கும் அறவோரும், வாக்கு, உடல் மற்றும் மனத்தூய்மை, மன்னிக்கும் தன்மை, வாய்மை, நிலைமாறாவுறுதி {மனத்துணிவு}, புத்தி ஆகிய இந்த நற்குணங்களையே வெளிப்படுத்துகிறார்கள்.(6) எது பிரம்மச்சரியம் (விலகும் அறம், அல்லது யோகம்) என்றழைக்கப்படுகிறதோ, அது பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறையாகக் கருதப்படுகிறது. அதுவே அறங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். அந்த அறத்தை நோற்பதாலேயே ஒருவன் உயர்ந்த கதியை (விடுதலையை {முக்தியை}) அடைகிறான்.(7) ஐந்து முக்கிய மூச்சுக்காற்றுகள், மனம், புத்தி, ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} மற்றும் ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஆகியவற்றுடன் கூடிய அனைத்துத் தொடர்புகளும் அற்ற நிலையே பிரம்மச்சரியமாகும். உள்ளுணர்வுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட காரணத்தாலேயே புலன்கள் அந்நிலையை {பிரம்மச்சரிய நிலையைக்} கொடுக்கின்றன. அஃது ஒரு சொல்லாகக் கேட்கப்படுகிறது.(8) புலப்படாத அதன் வடிவத்தைக் கருத்தால் மட்டுமே உணர முடியும். அது புலன்களுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விடுபட்ட ஒரு நிலையாகும். அந்தப் பாவமற்ற நிலையைப் புத்தியால் மட்டுமே அடைய முடியும்.(9) எவன் அதை முறையாகப் பயில்கிறானோ, அவன் பிரம்மத்தை அடைகிறான்; அதைப் பாதியே பயில்பவன், தேவர்களின் நிலையை அடைகிறான்; அதே வேளையில் அஃதை அலட்சியமாகப் பயில்பவன், பிராமணர்களுக்கு மத்தியில் பிறப்பையும், கல்வியையும் அடைந்து, உயர்ந்த நிலையை அடைகிறான்.(10)

பிரம்மச்சரியம் நோற்பது மிகக் கடினமானதாகும். அதன் {அஃதை ஒருவன் பயிலத்தக்க} வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. அதைச் செய்வதில் ஈடுபடும் மறுபிறப்பாளன் {பிராமணன்}, ஆசை குணம் {ரஜோ குணம்} தோன்றும்போதெல்லாம், அல்லது பலமிக்கதாகும்போதெல்லாம் அஃதை அடக்க வேண்டும்.(11) அந்நோன்பை நோற்பவர்கள் பெண்களுடன் பேசக் கூடாது. ஆடையற்ற பெண்களின் மீது அவன் ஒருபோதும் கண்களைச் செலுத்தக் கூடாது. அக்கறையற்ற சூழ்நிலைகளிலும்கூடப் பெண்களைப் பார்க்கும்போது, பலவீன மனம் கொண்ட மனிதர்கள் அனைவரையும் ஆசை {ரஜோ குணம்} நிறைகிறது.(12) (இந்நோன்பை நோற்கும்போது) ஒரு மனிதன், தன் இதயத்தில் பெண்ணுக்கான விருப்பத்தை உணர்ந்தால், அவன் (அதற்கு ஈடு செய்ய {பரிகாரமாக}) கிருச்சரம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்று, மூன்று நாட்களை நீரில் கடத்த வேண்டும்[2]. அந்த ஆசையானது கனவில் தோன்றினால், அவன் நீருக்குள் பாய்ந்து, அகமர்ஷணரின் மூன்று ரிக்குகள் மூன்று முறை மனத்தில் சொல்ல வேண்டும்[3].(13) இந்நோன்பை {பிரம்மச்சரிய நோன்பை} நோற்கும் ஞானியானவன், ஆசை {ரஜோ} குணத்தின் மூலம் தன் மனத்தில் உண்டான பாவங்கள் அனைத்தையும் ஞானத்துடன் கூடிய பரந்த மனத்துடன் எரிக்க வேண்டும்.(14) உடலின் கழிவை {மலத்தைச்} சுமந்து செல்லும் நாளமானது {குழாயானது [குணபம் என்ற பையானது]}, உடலுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதைப் போலவே, உடல் படைத்த ஆன்மாவும், அது பொதியப்பட்டிருக்கும் உடலின் நெருக்கமான தொடர்பிலேயே இருக்கிறது {இடைவெளியில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது}.(15)தமனிப் பிணையத்தின் {நாடிக் கூட்டத்தின்} வழியாகக் கடந்து செல்லும் பல்வேறு வகையான சாறுகள் {ரசங்கள்}, மனிதர்களின் காற்று {வாதம்}, பித்தநீர் {பித்தம்}, சளி {கபம்}, குருதி {உதிரம்}, தோல், இறைச்சி, குடல்கள், எலும்புகள், மஜ்ஜை மற்றும் மொத்த உடலுக்கும் உணவூட்டுகின்றன.(16) பத்து முக்கிய நாளங்கள் {நாடிகள்} இருக்கின்றன என்பதை அறிவாயாக. இவை ஐம்புலன்களின் செயல்பாட்டுக்கும் உதவி செய்கின்றன. இந்தப் பத்தில் {பத்து நாளங்களில்} இருந்து நுண்ணிய வடிவிலான ஆயிரக்கணக்கான பிற நாளங்கள் {நாடிகள்} கிளைகளாகப் பிரிந்து செல்கின்றன.(17) உரிய பருவகாலத்தில் பெருங்கடலை நிறைக்கும் ஆறுகளைப் போலவே, சாறுகளைக் கொண்ட இந்த நாளங்கள் அனைத்தும் உடலுக்கு உணவூட்டுகின்றன.(18) மனோவஹம் என்ற பெயரில் இதயத்துக்குச் செல்லும் ஒரு நாளமிருக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஆசையில் பிறக்கும் உயிர் வித்தை அது திரட்டுகிறது.(19) முக்கியமான அந்தவொன்றில் இருந்து, கிளைகளாகப் பிரிந்து செல்லும் எண்ணற்ற நாளங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் விரிந்தபடியே வெப்பமுன் பூதத்தைச் சுமந்து சென்று, பார்வை (உள்ளிட்ட பிற) புலனுணர்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன.(20)

பாலில் மறைந்திருக்கும் நெய்யானது மத்தால் கடைந்து எடுக்கப்படுவதைப் போலவே, (பெண்களைப் பார்ப்பது, அல்லது அவர்களைக் குறித்து எண்ணுவதன் மூலம்) மனத்தில் உண்டாகும் ஆசைகளும், உடலுக்குள் கிடக்கும் உயிர் வித்துகளை {சுக்லத்தை} ஒன்றாகத் திரட்டுகின்றன.(21) நமது கனவுகளுக்கு மத்தியிலும், கற்பனையில் பிறக்கும் ஆசையானது {ரஜோ குணமானது} மனத்தைத் தாக்கி, மனோவஹம் என்று ஏற்கனவே பெயரிடப்பட்ட அந்த நாளத்தின் விளைவால், ஆசையில் பிறக்கும் உயிர்வித்தை {சுக்லத்தை} வெளியேற்றுகிறது.(22) மகத்தானவரும், தெய்வீகமானவருமான அத்ரி முனிவர், உயிர் வித்தின் {சுக்கிலத்தின்} உற்பத்தி குறித்த காரியத்தை நன்கறிந்தவராக இருந்தார். உணவால் பெறப்படும் சாறுகள் {ரஸங்கள்}, மனோவஹம் என்றழைக்கப்பட்ட நாளம் {நாடி}, கற்பனையில் பிறக்கும் ஆசை ஆகிய இம்மூன்றும் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட உயிர்வித்தை {சுக்கிலத்தைத்} தோற்றுவிக்கும் காரணங்களாக இருக்கின்றன. எனவேதான் இந்தத் திரவத்தை வெளியேற்ற உதவும் ஆசையானது, இந்திரியம் என்றழைக்கப்படுகிறது.(23) உயிர்வித்தின் போக்கே, சாதிக் கலப்பு (என்றழைக்கப்படும் பாவகர நிலைக்குக்) காரணம் என்பதை அறிந்த மனிதர்கள், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாவர்[4]. அவர்களது பாவங்கள் எரிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது, அவர்கள் ஒருபோதும் மறுபிறப்புக்கு ஆளாவதில்லை.(24) தன் உடலைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே செயலில் ஈடுபடுபவன், மனத்தின் துணையுடன் (நற்குணம் {சத்வம்}, ஆசை குணம் {ரஜஸ்}, இருள் குணம் {தமஸ்} ஆகிய மூன்று) குணங்களைச் சீரான நிலைக்குக் குறைத்து, தன் இறுதிக் கணங்களில் மனோவஹம் என்றழைக்கப்படும் நாளத்திற்கு உயிர்மூச்சுகளைக் கொண்டுவந்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறான்[5].(25)மனமானது நிச்சயம் அறிவை ஈட்டும். மனமே அனைத்துப் பொருட்களின் வடிவத்தை ஏற்கிறது. உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரின் மனங்களும், தியானத்தின் மூலம் வெற்றியை அடைந்து, ஆசையில் இருந்து விடுபட்டு, நித்தியமானதாகவும், ஒளிபொருந்தியதாகவும் ஆகின்றன.(26) எனவே, (மனமாக இருக்கும்) மனத்தை அழிப்பதற்காக ஒருவன் பாவமற்ற செயல்களை மட்டுமே செய்து, ஆசை மற்றும் இருள் குணங்களில் {ரஜோ மற்றும் தமோ குணங்களில்} இருந்து விடுபெற்றால், அவன் நிச்சயம் மிக உயர்ந்த கதியை அடைவான்.(27) (சாதாரணமாக) இளமையில் அடையப்படும் ஞானமானது முதுமையில் பலவீனமடைகிறது. எனினும், கனிந்த புத்தியைக் கொண்ட ஒரு மனிதன், முற்பிறவி மங்கல விளைவுகளின் மூலம் தன் ஆசைகளை அழிப்பதில் வெற்றி அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், இடையூறுகள் நிறைந்த ஒரு பாதையைக் கடக்கும் பயணி, தான் காணும் தடைகள் அனைத்தையும் மீறிச் செல்வதைப் போலவே, உடல்கட்டுகள் மற்றும் புலன்களை விஞ்சுவதன் மூலம், (விடுதலையெனும் {முக்தியெனும்}) அமுதத்தைச் சுவைப்பதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(29)

வைராக்கியம்! – சாந்திபர்வம் பகுதி – 215-அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளும் மனப்பயிற்சி; அறிவை நோக்கிச் செலுத்தப்பட வேண்டிய மனம்; புலன் கட்டுப்பாட்டில் உறுதி; வைராக்கியத்தின் மூலம் அடையும் பிரம்மநிலை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வாழும் உயிரினங்கள், எப்போதும் தீமை நிறைந்தவையான புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருப்பதால் ஆதரவற்றவையாகின்றன. எனினும், அவற்றில் பற்று கொள்ளாத உயர் ஆன்ம மனிதர்கள், உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(1) நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வுலகமானது பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம், நோய், கவலைகள் ஆகிய தீமைகள் நிறைந்தது என்பதைக் கண்டு, விடுதலையை {முக்தியை} அடைய முயல வேண்டும்.(2) அவன் பேச்சு, எண்ணம், உடல் ஆகியவற்றில் தூய்மையுள்ளவனாக; செருக்கில் இருந்து விடுபட்டவனாக இருக்க வேண்டும். அமைதிமிக்க ஆன்மாவையும், அறிவையும் கொண்ட அவன், பிச்சையெடுக்கும் வாழ்வை நோற்று, உலகப் பொருட்கள் எதனிலும் பற்றுக் கொள்ளாமல் மகிழ்ச்சியைப் பின்தொடர வேண்டும்.(3) மேலும், உயிரினங்கள் மீது கொண்ட கருணையின் விளைவால், பற்றானது ஒருவனது மனத்தைப் பீடிக்கிறதென்றால், அவன் இந்த அண்டமே செயல்களின் விளைவெனக் கருதி, அந்தக் கருணையையும் புறக்கணிக்க வேண்டும்[1].(4) என்னென்ன நற்செயல்கள் செய்யப்பட்டாலும், அல்லது பாவங்கள் இழைக்கப்பட்டாலும், அதைச் செய்பவன், அதனதன் விளைவுகளைச் சுவைக்கிறான். எனவே, ஒருவன் வாக்காலும், எண்ணத்தாலும், செயலாலும் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.(5)(பிறருக்கு) தீங்கிழைப்பதில் இருந்து விலகல், பேச்சில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கவனம் ஆகியவற்றைப் பயில்பவன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) எனவே, தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்துவான்.(7) எந்த மனிதன் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அறங்களைப் பயில்வதை உயர்ந்த கடமையாகவும், அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாக்குவதாகவும் கருதுகிறானோ அவன் உயர்ந்த அறிவை அடைந்தவனாக, மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். எனவே (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்த வேண்டும்.(8) ஒருவன் பிறருக்குத் தீங்கிழைக்க ஒருபோதும் நினைக்கக்கூடாது. ஒருவன், தன் சக்திக்கு அப்பாற்பட்ட எதனிலும் பேராசை கொள்ளக்கூடாது. இல்லாத பொருட்களை நோக்கி அவன் தன் எண்ணங்களைத் திருப்பக்கூடாது. மறுபுறம், அவன், நிச்சயம் வெல்லத்தக்க தொடர் முயற்சியுடன் தன் மனத்தை அறிவை நோக்கிச் செலுத்த வேண்டும்[2].(9)ஸ்ருதிகளின் தீர்மானங்கள் மற்றும் வெற்றியை அடைய கணக்கிடப்பட்ட தொடர் முயற்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் அந்த அறிவும் நிச்சயம் பாயும். நற்சொற்களைச் சொல்ல, அல்லது கசடுகள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்த ஓர் அறத்தைப் பயில விரும்பும் ஒருவன்,(10) எந்த வன்மமோ, நிந்தனையோ இல்லாத உண்மையை மட்டுமே பேச வேண்டும். நல்ல இதயத்தைக் கொண்ட ஒருவன், நேர்மையின்மையற்றவையும் {நேர்மையானவற்றையும்}, கடுமையற்றவையும் {மென்மையானவற்றையும்}, கொடூரமற்றவையும் {அன்பானவற்றையும்}, தீமையற்றவையும் {நல்லவற்றையும்}, வம்பளக்கும் இயல்பற்றவையுமான {நல்லியல்பைக் கொண்டவையுமான} வார்த்தைகளையே பேச வேண்டும். இந்த அண்டமானது பேச்சிலேயே கட்டப்பட்டிருக்கிறது. ஒருவன், (உலகப் பொருட்கள் அனைத்திலும்) துறவைக் கொண்டால்,(11,12) பணிவு நிறைந்த மனத்துடனும், தூய்மையடைந்த புத்தியுடனும், தன் சொந்த தீச்செயல்களை அறிக்கையிடவேண்டும்[3]. செயல்களில் ஈடுபடுபவன், ஆசை {ரஜோ} குணத்துடன் கூடிய மனச் சார்புகளால் தூண்டப்பட்டு,(13) இவ்வுலகில் துன்பத்தை அடைந்து, இறுதியாக நரகத்தில் வீழ்கிறான். எனவே அவன், உடல், வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றில் தற்கட்டுப்பாட்டைப் பயில வேண்டும்.(14) உலகச் சுமைகளைச் சுமக்கும் அறியாமை கொண்டோர், (மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்பட்ட மந்தையில் இருந்து தனிமைப்பட்ட) ஆட்டைத் தங்கள் கொள்ளைப் பொருளாகத் திருடிச் சுமந்து செல்லும் கள்வர்களைப் போன்றவர்களாவர். கள்வர்கள், தங்களுக்குச் சாதகமற்றவையாக இருக்கும் சாலைகளில் (மன்னனின் கண்காணிப்பில் அவை உள்ளதால்) எப்போதும் மிகக் கவனமாக இருப்பார்கள்[4].(15)உண்மையில் அந்தக் கள்வர்கள் தங்கள் பாதுகாப்பை விரும்பி, அவர்களது கொள்ளைப் பொருளை வீசிவிடுவதைப் போலவே, ஒரு மனிதன், இன்ப நிலையை அடையவிரும்பினால், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய செயல்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.(16) உலகப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும், ஆசையற்றவனும், தனிமைவாழ்வில் நிறுவுடையவனும், சொற்ப உணவை உண்பவனும், தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளவனும்,(17) (தான் அடைந்த) ஞானத்தால் தன் துன்பங்கள் அனைத்தையும் எரித்தவனும், யோக ஒழுக்கத்தின் விவரங்கள் அனைத்தையும் பயில்வதில் இன்புற்றிருப்பவனும், தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், தன் மனத்தை அதற்குள்ளேயே ஈர்த்ததன் விளைவால் பிரம்மத்தை, அல்லது விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்வான்.(18) தூய்மையடைந்த ஆன்மாவையும், பொறுமையையும் கொண்ட ஒருவன், தன் புத்தியை நிச்சயம் கட்டுப்படுத்துவான். (இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட) புத்தியுடன் கூடிய ஒருவன், அடுத்ததாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதன் பிறகு தன் மனத்தைக் கொண்டு புலன்நுகர் பொருட்களை வெல்ல வேண்டும்.(19) இவ்வாறு மனமானது கட்டுப்படுத்தப்பட்டு, புலன்கள் அனைத்தும் வெல்லப்பட்டதும், அந்தப் புலன்கள் ஒளிர்ந்து மகிழ்ச்சியாகப் பிரம்மத்திற்குள் நுழைகின்றன.(20)

ஒருவனுடைய புலன்கள் மனத்திற்குள் ஈர்க்கப்பட்டதும், அதன் விளைவாக, பிரம்மமே அதற்குள் {மனத்திற்குள்} வெளிப்படுகிறது. உண்மையில் புலன்கள் அழிக்கப்பட்டதும், ஆன்மாவானது தூய இருப்பெனும் குணத்தை மீண்டும் அடைந்து, பிரம்மமாகவே மீண்டும் மாற்றப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.(21) ஒருவன் தனது யோக சக்தியை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது. மறுபுறம் அவன், யோக விதிகளைப் பயில்வதன் மூலம் எப்போதும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்மையில், யோக விதிகளைப் பயிலும் ஒருவன், எந்தச் செயல்களின் மூலம் தன் ஒழுக்கமும், மனநிலையும் தூய்மையடையுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) அவன் (தனது யோக சக்திகளைத் தனது வாழ்வாதாரமாகக் கொள்ளாமல்), பிச்சையாக அடையப்படும் அவல், சுண்டல், பிண்ணாக்கு, கீரைகள், {காய்கள்}, பிட்டு {யாவகம்}, {வறுத்த பருப்பின்} மாவு, கனிகள் மற்றும் கிழங்கு ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(23) காலம் மற்றும் இடத்தின் பண்புகளைக் கருத்தில் கொண்டும், உரிய ஆய்வுக்குப் பிறகும் ஒருவன் நோன்புகள், மற்றும் உபவாசங்களின் விதிகளைத் தன் விருப்பத்தின்படி நோற்க வேண்டும்.(24) நோற்றல் தொடங்கிய பிறகு அஃதை அவன் நிறுத்தக்கூடாது. மெதுவாக நெருப்பை உண்டாக்குபவனைப் போல அவன், அறிவால் தூண்டப்பட்ட ஒரு செயலைப் படிப்படியாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், அவனுக்குள் உள்ள பிரம்மமானது சூரியனைப் போலப் படிப்படியாக ஒளிரத் தொடங்குகிறது.(25)

அறிவையே தன் சார்பு நிலமாகக் கொண்ட அறியாமையானது, (விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற ஆழ்ந்த உறக்கம் ஆகிய) மூன்று நிலைகளின் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. புத்தியைப் பின்பற்றிச் செல்லும் அறிவானது {ஞானமானது}, அறியாமையால் தாக்கப்படுகிறது.(26) தீய இதயம் படைத்த மனிதர்கள், உண்மையில் ஆன்ம அறிவானது, அம்மூன்று நிலைகளையும் கடந்ததாக இருந்தாலும், அவற்றுடன் ஒன்று கலந்திருக்கிறது என நினைத்துக் கொள்வதன் விளைவால் அவர்கள் அஃதை {ஆன்ம அறிவை} அடையத் தவறுகிறார்கள். எனினும் ஒருவன், அந்த மூன்று நிலைகளுடன் கலப்பு மற்றும் அவற்றில் இருந்து பிரிவு ஆகிய இரண்டு எல்லைகள் வெளிப்பட்டு, அவற்றை உணர்வதில் வெல்லும்போது, அவன் பற்றை இழந்து, விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(27) அத்தகைய உணர்வு அடையப்பட்ட பிறகு, வயதின் எல்லைகளை விஞ்சும் அவன், முதுமை, மரணம் ஆகியவற்றின் விளைவுகளில் இருந்து மேன்மையடைந்து, நித்தியமானதும், மரணமற்றதும், மாறும் இயல்பற்றதும், சிதைவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(28)

பிரம்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 216- கனவுகள் தோன்றும்போது உடலின் நிலை; கனவுகள் தோன்றும் காரணம்; மனமும் கனவும்; மனப்பதிவுகளுடைய குணத்தின் மூலம் மனம் ஏற்படுத்தும் தோற்றங்கள்; கனவுகளின் கதவாகச் செயல்படும் உடல்; ஆன்மாவில் நுழையும் மனம் விழிப்புடன் இருப்பது; தவத்தின் வல்லமை; பிரம்ம ஞானம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பாவமற்ற பிரம்மச்சரியத்தையே எப்போதும் பயில விரும்புபவனும், கனவுகளின் தொடர்புடைய களங்களின் மனப்பதிவுகளைக் கொண்டவனுமான ஒரு யோகி, தன் முழு இதயத்துடன் உறக்கத்தைக் கைவிட முனைய வேண்டும்.(1) கனவுகளில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களால் பாதிப்படைந்த உடல் படைத்த ஆன்மாவானது, மற்றொரு உடலைக் கொள்வது போல் தோன்றுவதுடன், ஆசையின் ஆதிக்கத்தில் அசைந்து செயல்படுகிறது.(2) ஞானம் பெறுதல், தொடர்ந்த சிந்தனை, தொகுத்துரைத்தல் ஆகியவற்றைச் செய்வதன் விளைவால் யோகியானவன், ஞானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கலாம்.(3) இக்காரியத்தில், உடல்படைத்த உயிரினமானது {ஜீவாத்மாவானது}, எந்தச் சூழ்நிலையில், எந்த நோக்கங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடுவதாக நினைக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில், செயல்முடக்கப்பட்ட புலன்களைக் கொண்ட உடல்படைத்த உயிரினமானது, அறிவுப்புலன்கள் மற்றும் செயற்புலன்களுடன் {ஞான மற்றும் கர்மேந்திரியங்களுடன்} கூடிய உடலைத் தான் கொண்டிருப்பதாகவே கருதுகிறது.(4) இங்கே எழுப்பப்பட்ட கேள்வியைப் பொறுத்தவரையில், ஹரி என்ற பெயரைக் கொண்ட யோகத்தின் தலைவனே, அஃது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புரிந்தவன் எனச் சொல்லப்படுகிறது. ஹரியால் சொல்லப்பட்ட விளக்கம் சரியானதாகவும், அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருப்பதாகப் பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள்.(5)

களைப்படைந்த புலன்களின் விளைவாலேயே உயிரினங்கள் அனைத்தும் கனவுகளைக் காண்கின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். (புலன்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும்) மனமானது, ஒருபோதும் மறைவதில்லை (அல்லது செயல்படாமல் இருப்பதில்லை), எனவே கனவுகள் எழுகின்றன. கனவுக்கான குறிப்பிட்ட காரணம் என்று இதையே அனைவரும் சொல்கிறார்கள்.(6) விழிப்புநிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடைய கற்பனைகள், மனத்தின் படைப்பு சக்தியால் மட்டுமே உண்டாவதைப் போல, கனவில் தோன்றும் மனப்பதிவுகளும் மனம் தொடர்புடையனவாக மட்டுமே இருக்கின்றன.(7) ஆசை மற்றும் பற்றுடன் கூடிய ஒரு மனிதன், எண்ணற்ற முற்பிறவிகளின் மனப்பதிவுகளின் அடிப்படையில் (கனவுகளில்) அந்தக் கற்பனைகளை அடைகிறான். ஒரே ஒரு முறை மனத்தில் பதிந்த எதுவும் ஒருபோதும் தொலைந்துபோவதில்லை, மேலும், அந்த மனப்பதிவுகள் அனைத்தையும் அறிந்த ஆன்மாவானது, இருண்மையில் {தெளிவற்ற நிலையில்} இருந்து அவற்றை முன்னே கொண்டு வருகிறது[1].(8) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய மூன்று குணங்களில் முற்பிறவி செயல்களின் ஆதிக்கத்தால் எது கொண்டு வரப்படுகிறதோ, இவற்றில் {இந்த மூன்று குணங்களில்} எதனால் எவ்வழியிலாவது மனம் பாதிப்படைந்திருக்கிறதோ, அதன்படியே (நுட்பமான வடிவில் உள்ள) பூதங்களாக {பொருட்களாக} (தோற்றங்களின் வடிவில்) அவை {மனப்பதிவுகள்} வெளிப்படுகின்றன[2].(9) இவ்வாறு தோற்றங்கள் உண்டான பிறகு, முற்பிறவி செயல்களால் கொண்டுவரப்படும் சத்வம், ரஜஸ், அல்லது தமஸ் என்ற அந்தக் குறிப்பிட்ட குணம் மனத்தில் எழுந்து இன்பம், அல்லது துன்பம் என்ற விளைவை விளைவிக்கிறது.(10)அறியாமையின் மூலமும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் நிறைந்த மனச் சார்புகளின் விளைவாலும், காற்று {வாதம்}, பித்தம், சளி {கபம்} ஆகியவற்றைத் தங்கள் முக்கியக் காரணங்களாகக் கொண்ட அந்தத் தோற்றங்களை எளிதாக விலக்கிவிட முடியாது என்று சொல்லப்படுகிறது[3].(11) (விழித்திருக்கும் நிலையில்) ஒரு மனிதன், நுண்ணறிவின் நிலையிலுள்ள புலன்களின் மூலம் தன் மனத்தில் காணும் பொருட்கள் யாவும், தெளிவற்ற நிலையில் அந்தப் புலன்கள் செயல்படும்போது, {அதே பொருட்கள்} மனத்தால் கனவுகளில் உண்டாக்கப்படுகின்றன.(12) மனமானது அனைத்துப் பொருட்களிலும் தடையற்ற நிலையிலேயே இருக்கிறது. இஃது ஆன்மாவின் இயல்பினால் விளைவதாகும். ஆன்மாவானது புரிந்து கொள்ளப்பட்ட வேண்டும். பூதங்கள் அனைத்தும், அவை தொகுக்கும் பொருட்களும் ஆன்மாவிலேயே இருக்கின்றன[4].(13) கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கம் (ஸுஸுப்தி) என்றழைக்கப்படும் நிலையில், கனவுகளின் கதவான வெளிப்படையான மனித உடலானது, மனத்திற்குள் மறைகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, புலப்படாதிருப்பதும், இருக்கும் மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதுமான ஆன்மாவுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட வகை உணர்வுடன் விழிப்புநிலையில் உள்ள சாட்சியாக அது {மனம்} மாறுகிறது. இவ்வாறு, அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் தூய நனவுநிலையில் வசிக்கும் அது, நனவுநிலை மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பதாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது[5].(14) எந்த யோகி, ஆசையின் விளைவால் (ஞானம், துறவு முதலிய) தெய்வீகக் குணங்களில் பேராசை கொள்கிறானோ, அவன், தான் ஆசைப்படும் பொருளுக்குச் சமமானதாகத் தூய மனத்தைக் கருத வேண்டும் அனைத்துப் பொருட்களும் தூய மனம், அல்லது ஆன்மாவையே சார்ந்திருக்கின்றன[6].(15)தவங்களில் ஈடுபடும் ஒருவன் இந்த விளைவையே அடைகிறான். எனினும், இருள் அல்லது அறியாமையைக் கடந்த யோகியானவன், மேம்பட்ட ஒளியுடன் கூடியவனாகிறான். இருள் அல்லது அறியாமை கடக்கப்படும்போது உடல் படைத்த ஆன்மாவானது, அண்டத்தின் காரணமாக இருக்கும் பரப்ரம்மம் ஆகிறது.(16) தேவர்கள், தவங்களையும், வேத சடங்குகளையும் கொண்டிருக்கின்றனர். முந்தையதை அழிக்கும் இருளானது {செருக்கு, கொடூரம் முதலியன), அசுரர்களால் பின்பற்றப்படுகிறது. அறிவை மட்டுமே தன் குணமாகக் கொண்ட பிரம்மமானது, தேவர்களாலோ, அசுரரர்களாலோ அடைவதற்குக் கடினமானதாக இருக்கிறது.(17) நல்லியல்பு {சத்வம்}, ஆசை{ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சொந்தமானவை என்பது அறியப்பட வேண்டும். நல்லியல்பு {சத்வம்} தேவர்களின் குணமாகும்; அதே வேளையில் மற்ற இரு குணங்களும் அசுரர்களுடையவையாகும்.(18) பிரம்மம் அந்தக் குணங்கள் அனைத்தையும் கடந்ததாகும். அது தூய அறிவாகும். அது மரணமற்ற நிலையாகும். அது தூய ஒளிநிலையாகும். அது சிதைவற்றதாகும். பிரம்மத்தை அறிந்தவர்களும், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(19) அறிவையே தன் கண்ணாகக் கொண்ட ஒருவனால், ஆய்வறிவு மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் துணையுடன் இவ்வளவே சொல்ல முடியும். அழிவற்றதான பிரம்மமானது, புலன்கள் மற்றும் மனத்தை (புறப் பொருட்களில் இருந்து ஆன்மாவுக்குள்) ஈர்ப்பதன் மூலம் மட்டுமே அடையப்படமுடியும்” என்றார் {பீஷ்மர்}.(20)

நிர்க்குண, சகுன பிரம்மம்! – சாந்திபர்வம் பகுதி – 217-நிவிருத்தி மற்றும் பிரவிருத்தி அறங்கள்; பிரகிருதி மற்றும் புருஷன்; நிர்க்குண மற்றும் சகுன பிரம்மம்; ஆன்மாவுக்குக் குணங்கள் ஏற்படும் முறை; பிரம்மச்சரியம் மற்றும் அஹிம்சை ஆகிய யோகங்கள்; சகுன பிரம்மத்தின் குணங்களை முக்குணங்களில் இருந்து வேறுபட்டதாக அறிய வேண்டியதன் அவசியம்; முக்தியை அடைதல்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(கனவுகள், கனவுகளற்ற ஆழ்நிலை உறக்கம், குணங்களால் குறிப்பிடப்படும் பிரம்மம், குணங்கள் அனைத்தையும் விஞ்சிய பிரம்மம் ஆகிய) நான்கு காரியங்களையும், புலப்படுவது (உடல்), தத்துவம் எனப் பெரும் முனிவரால் (நாராயணனால்) விளக்கப்பட்ட புலப்படாதது (சித்-ஆன்மா) ஆகியவற்றையும் அறியாதவனைப் பிரம்மத்தை அறிந்தவன் என்று சொல்ல முடியாது[1].(1) எது புலப்படுமோ அது மரணத்திற்கு உட்பட்டதாகும். எது புலப்படாததோ, அது (சித்-ஆன்மா) மரணத்தைக் கடந்தது என்று அறியப்பட வேண்டும். முனிவன் நாராயணன் நிவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான்.(2) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் அதனிலேயே நிலைத்திருக்கிறது. மேலும், நிவிருத்தி அறமானது புலப்படாததும், அழிவற்றதுமான பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது[2].(3) படைப்பாளன் (பிரம்மன்) பிரவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான். பிரவிருத்தியானது மறுபிறவி, அல்லது திரும்புதலைக் குறிப்பால் உணர்த்துகிறது. மறுபுறம் நிவிருத்தியோ, உயர்ந்த கதியைக் குறிப்பால் உணர்த்துகிறது.(4) நன்மை மற்றும் தீமைக்கிடையிலான நிச்சய வேறுபாடுகளைப் பகுத்துப் பார்க்க விரும்புபவனும், ஆன்மாவின் இயல்பைப் புரிந்து கொள்ள எப்போதும் முயல்பவனும், நிவிருத்தி அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான தவசி உயர்ந்த கதியை அடைகிறான்[3].(5)இதை நிறைவேற்ற விரும்பும் ஒருவன், நான் தற்போது பேசிக் கொண்டிருக்கும் புலப்படாதது மற்றும் புருஷன் குறித்த இரண்டையும் அறிய வேண்டும். மேலும், புலப்படாதது மற்றும் புருஷன் ஆகிய இரண்டிலிருந்தும் எது வேறுபட்டிருக்கிறது, அவை இரண்டையும் எது கடந்திருக்கிறது,(6) அனைத்தில் இருந்தும் எது தனிப்பட்டதாக இருக்கிறது என்பனவற்றை நுண்ணறிவுடன் கூடிய அவன் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்[4]. பிரகிருதி, புருஷன் ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும் அற்றனவாக இருக்கின்றன. அவற்றுக்கிடையிலுள்ள ஒற்றுமைகளை அறியாதவகையிலேயே அவ்விரண்டும் இருக்கின்றன.(7) இரண்டும் நித்தியமானவையும், அழிவற்றவையுமாக இருக்கின்றன. இரண்டும் பெரியனவற்றில் பெரியனவாக இருக்கின்றன. இவற்றில் அவை ஒரே தன்மையைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றுக்கிடையில் சில வேறுபாடுகளும் இருக்கின்றன. (அதைக் குறித்து இப்போது நான் பேசப் போகிறேன்).(8) பிரகிருதியானது, (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களால் நிரம்பியதாக இருக்கிறது. அது படைப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. க்ஷேத்திரக்ஜனின் (புருஷன், அல்லது ஆன்மாவின்) உண்மைக் குணங்கள் வெவ்வேறானவையாக அறியப்பட வேண்டும்[5].(9) புருஷனானவன், பிரகிருதியின் மாற்றங்கள் அனைத்தையும் உணர்பவனாக இருக்கிறான் (ஆனால் {பிறவற்றால்} உணரப்படாதவனாக இருக்கிறான்). (உண்மை இயல்பைப் பொறுத்தவரையில்) அவன் அனைத்துக் குணங்களையும் கடந்தவனாக {நிர்க்குண பிரம்மமாக} இருக்கிறான். மேலும், புருஷன் மற்றும் பரமாத்மாவைப் பொறுத்தவரையில், அவை இரண்டும் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. வேறுபாடு காண குணங்கள் எவற்றையும் அவை கொண்டிருக்காததால், அவை இரண்டும் அனைத்திலும் மிகவும் வேறுபட்டிருக்கின்றன[6].(10)தலைப்பாகை அணிந்த மனிதன், தன் தலையைச் சுற்றிலும் மூன்று வகைத் துணிகளால் சுற்றியிருக்கிறான். (எனினும், அவன் அணிந்திருக்கும் தலைப்பாகையானது அந்த மனிதனல்ல).(11) அதேவகையிலேயே உடல்படைத்த ஆன்மாவானது, நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய முக்குணங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வாறு கொண்டிருந்தாலும் ஆன்மாவும், அந்தக் குணங்களும் ஒன்றல்ல.(12) இதனால், நான்கு வகைக் கருத்துகளைக் கொண்ட இந்த நான்கு காரியங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்[7]. இவை யாவற்றையும் புரிந்து கொள்ளும் ஒருவன், (அனைத்தையும் விசாரிப்பதைப் பொறுத்தவரையில்) தீர்மானத்தை எட்ட வேண்டிய தருணத்தில் ஒருபோதும் திகைப்படைய மாட்டான்.(13) உயர்ந்த செழிப்பை அடைய விரும்பும் ஒருவன், மனத்தில் தூய்மையடைந்தவனாக, உடல் மற்றும் புலன்களைப் பொறுத்தவரையில் தவப்பயிற்சிகளில் ஈடுபட்டு, கனிகளில் {பலன்களில்} எந்த விருப்பமும் இல்லாமல் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(14) யோக சக்தியானது, அண்டத்தில் மறைமுகமாகப் படர்ந்தூடுருவி, அதன் {அண்டத்தின்} ஒவ்வொரு பகுதியிலும் சுழன்று கொண்டு, அதைப் பிரகாசமாக ஒளிரச் செய்து கொண்டிருக்கிறது.(15)யோகத்தின் விளைவு ஞானமாகும். உலகத்தில் யோகம் மிக உயர்வாகச் சொல்லப்படுகிறது. உண்மைப் பண்பைப் பொறுத்தவரையில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களை எந்தெந்த செயல்கள் அழிக்கின்றனவோ அவை யோகமாக அமைகின்றன.(16) பிரம்மச்சரியம், தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியன உடலின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது; அதே வேளையில், முறையான மனக்கட்டுப்பாடு மற்றும் பேச்சுக் கட்டுப்பாடு ஆகியன மனத்தின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.(17) சடங்குகளை அறிந்த மறுபிறப்பாளர்களிடம் இருந்து பிச்சையாகப் பெறப்படும் உணவானது, மற்ற உணவுகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டிருக்கிறது. அந்த உணவைச் சொற்பமாக உண்டாலும், ஆசை {ரஜோ} குணத்தில் பிறந்தவையான ஒருவனின் பாவங்கள் மங்கத் தொடங்குகின்றன.(18) அத்தகைய உணவில் வாழும் ஒரு யோகி, அவனது புலன்கள், தங்களுக்குரிய புலனுணர்வுப் பொருட்களில் இருந்து படிப்படியாக விலகுவதைக் காண்கிறான். எனவே அவன், தன் உடலைத் தாங்கிக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டுமே அத்தகைய உணவையும் உண்ண வேண்டும்.(19) யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனத்தின் மூலம், ஒருவன் படிப்படியாக அடையும் ஞானமானது, அவனது இறுதித் தருணங்களில் வலுக்கட்டாயமாகவும், உற்சாகமாகவும் அடையப்பட வேண்டும் (என்று மற்றொரு ஆசோலனையும் வழங்கப்படுகிறது)[8].(20)உடல்படைத்த ஆன்மாவானது, ரஜஸ் {ஆசை} குணமற்றிருக்கும்போது, (உடனடியாக விடுதலையை {முக்தியை} அடையாமல், புலனுணர்வுகளனைத்தின் நுண்ணிய வடிவை ஏற்று, வெளியில் {ஆகாயத்தில்} அசைந்து கொண்டிருக்கிறது. அவனது {அந்த ஆன்மாவின்} மனம் செயல்களால் பாதிப்படையாதபோது, அத்தகைய துறவின் விளைவால் அவன் (அந்த நுண்ணிய வடிவை இழந்து) பிரகிருதியில் கலக்கிறான் (எனினும் அவன், பிரகிருதிக்கும் மேன்மையான பிரம்மம், அல்லது விடுதலையை அடைவதில்லை).(21) இந்த உடல் திரட்டு அழிந்த பிறகு, கவனமற்ற தன்மை இல்லாமையின் மூலம், (திரள், நுட்பம் மற்றும் காரணம் என்ற) மூன்று உடல்களில் இருந்து தப்பி, விடுதலையை {முக்தியை} அடைவதில் அவன் வெல்கிறான்[9]. உயிரினங்களின் இறப்பும், பிறப்பும், அவற்றின் மூலமான அறியாமையில் (அல்லது அவித்யையில்) அமைந்த காரணத்தைச் சார்ந்தே இருக்கின்றன.(22) பிரம்மஞானம் எழும்போது, அம்மனிதனைத் தேவையேதும் பின்தொடர்வதில்லை. எனினும் (உண்மையில் சுயமல்லாததைச் சுயம் என்று நம்புவதன் மூலம்) உண்மைக்கு நேர்மாறானதை ஏற்கும் மனிதர்கள், இருக்கும் அனைத்துப் பொருட்களின் பிறப்பு மற்றும் இறப்பிலேயே எப்போதும் தங்கள் புத்தியைச் செலுத்துகின்றனர். (அத்தகைய மனிதர்கள் கனவில் கூட விடுதலையை ஒருபோதும் காண்பதில்லை)[10].(23) சில யோகிகள், பொறுமையின் துணை மூலம், தங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்டு, தங்கள் புத்தியின் துணை மூலம் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும்) தங்கள் இதயங்களை விலக்கிக் கொண்டு, புலன்களின் உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, நுட்பமாக இருப்பதன் விளைவால் அந்தப் புலன்களையே துதிக்கின்றனர்[11].(24) அவர்களில் சிலர், யோகத்தால் தூய்மையடைந்த மனத்துடன் சாத்திரங்களின்படி (சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள நிலைகளின்படி) செயல்பட்டு, புத்தியின் உதவியால் உயர்வானதை அறிவதில் வென்று, உயர்ந்ததை அடைந்து, வேறு எந்தப் பொருளையும் சாராமல் தன்னிலேயே நிலைத்திருக்கும் அந்த உயர்ந்ததிலேயே வசிக்கிறார்கள்[12].(25)சிலர் பிரம்மத்தைத் தோற்றங்களாக {வடிவங்களாக / சிலைகளாக} வழிபடுகின்றனர். சிலர் குணங்களுடன் கூடியவனாக {சகுன பிரம்மமாக} அவனை வழிபடுகிறார்கள். சிலர், அழிவற்றதும், மின்னலின் கீற்றைப் போன்றதுமாக விளக்கப்படும் அந்த உயர்ந்த தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் உணர்கிறார்கள்[13].(26) தவங்களின் மூலம் தங்கள் பாவங்கை எரித்தவர்களான வேறு சிலர், முடிவில் பிரம்மத்தையே அடைகிறார்கள். இந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் உயர்ந்த கதியையே அடைகிறார்கள். சாத்திரக்கண் கொண்ட ஒருவன், பல்வேறு வடிவங்களிலான நுண்ணியக் குணங்களை, மனிதர்களால் வழிபடப்படும் பிரம்மத்தில் இருந்து வேறுபட்ட குணங்களாகக் காண வேண்டும். உடலைச் சார்ந்திருக்கும் தேவையைக் கடந்தவனும், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவனும், தியானயோகத்தில் அர்ப்பணிப்புள்ள {தாரணையில் பற்றுள்ள} மனத்தைக் கொண்டவனுமான யோகியானவன், பரம்பொருள் அல்லது புலப்படாததைப் போன்ற மற்றொருவனாகவே கருதப்பட வேண்டும்.(28) ஞானம் அடைவதில் அர்ப்பணிப்புள்ள இதயங்களைக் கொண்டோர், மனிதர்களின் உலகில் இருந்து விடுபடுவதிலேயே முதலில் வெல்கிறார்கள். அடுத்தபடியாகப் பற்றுகளைக் கைவிட்டு, பிரம்மத்தின் இயல்பில் கலந்து, இறுதியாக அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(29) வேதங்களை அறிந்த மனிதர்கள், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும் அறத்தைக் குறித்து இவ்வாறே சொல்லியிருக்கின்றனர். தங்கள் தங்கள் அறிவின் அளவுக்குத் தக்கபடி அவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(30)(ஐயுறுவாதத்தின் தாக்குதல்கள் மூலம்) அசைக்கப்பட முடியாததும், உடையவர்களை அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபடச் செய்வதுமான அறிவை அடைவதில் வெல்லும் மனிதர்கள், மரணத்திற்குப் பிறகு பல்வேறு உயர்ந்த உலகங்களை அடைந்து, தங்கள் ஞானத்தின் அளவுக்குத்தக்கபடி விடுதலை {முக்தி} அடைகிறார்கள்.(31) அறிவின் மூலம் நிறைவை உள்ளீர்த்துக் கொள்பவர்களும், ஆசைகள் மற்றும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவர்களுமான தூய இதயம் கொண்டோர், தங்கள் இயல்பின்படி, புலப்படாத குணத்தைக் கொண்டதும், தெய்வீகமானதும், பிறப்பும் இறப்பும் அற்றதுமான பிரம்மத்தின் அருகே படிப்படியாக நெருக்கமடைந்து செல்கிறார்கள்.(32) தங்கள் ஆன்மாக்களில் வசிக்கும் {நிர்க்குண} பிரம்மத்தை உணர்ந்து, தாங்களே மாறும் இயல்பற்றவர்களாகும் அவர்கள் (பூமிக்கு) மீண்டும் திரும்ப வேண்டியதில்லை. அழிவற்றதும், நித்தியமானதுமான பரம நிலையை அடைந்த அவர்கள் அந்த இன்பநிலையிலேயே நிலைத்திருப்பார்கள்.(33)

இவ்வுலகத்தைப் பொறுத்தவரையில் ஞானமென்பது (பிழை செய்பவர்களின் வழக்கில்) இவ்வளவுதான். (பிழையால் திகைப்படையாதோர் வழக்கில்) அஃது {ஞானம்} இருப்பில் இருப்பதில்லை. ஆசையில் கட்டப்பட்டுள்ள மொத்த அண்டமும் ஒரு சக்கரத்தைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறது[14].(34) தாமரைத்தண்டின் இழைகள், அத்தண்டின் அனைத்து பகுதிகளிலும் படர்ந்திருப்பதைப் போலவே, ஆசை இழைகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் உடலில் படர்ந்திருக்கிறது.(35) நெசவாளன் ஒருவன், தனது நூல்களைத் தன் ஓடத்தின் {ஊசியின்} மூலம் ஓர் ஆடையில் நெய்வதைப் போலவே, அண்டமெனும் துணியில் உள்ள நூல்கள் {ஸம்ஸாரமெனும் நூலானது} ஆசையெனும் ஓடத்தால் {ஊசியால்} {அண்டத்திற்குள்} நெய்யப்படுகிறது.(36) பிரகிருதி, பிரகிருதியின் மாறுதல்கள் {விகாரம்} மற்றும் புருஷன் {பரமாத்மா} ஆகியவற்றை முறையாக அறிந்த ஒருவன், ஆசையில் இருந்து விடுபட்டவனாக விடுதலையை {முக்தியை} அடைகிறான்[15].(37) தெய்வீக முனிவரும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன், அனைத்து உயிரினங்களிடமும் கொண்ட கருணையின் நிமித்தமாக, அழிவின்மையை {மரணமில்லா நிலையை} அடைவதற்கான இந்த வழிமுறைகளைத் தெளிவாக வெளியிட்டிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(38)

நாஸ்திக மறுப்பு! – சாந்திபர்வம் பகுதி – 218-வேள்விகளும், சடங்குகளும் மாயையின் விளைவுகள் என்று சொன்ன பஞ்சசிகர்; ஆன்மா என்ற தனிப்பட்ட இருப்புக் கிடையாது என்ற நாத்திகர்களின் கோட்பாடு; இவ்வாதத்தால் அறச் செயல்கள் மற்றும் ஒழுக்கம் ஆகியவை பொருளற்றுப் போவதை விளக்கும் பஞ்சசிகர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஒழுக்கவழிமுறைகள் அனைத்தையும் அறிந்தவரே, விடுதலை {முக்தி / மோக்ஷ} அறத்தை நன்கறிந்தவனும் மிதிலையின் ஆட்சியாளனுமான ஜனகன், உலகம் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டபிறகு, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி விடுதலையை {முக்தியை} அடைவதில் வென்றான்?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒழுக்க வழிமுறைகள் அனைத்தையும் முற்றிலும் அறிந்தவனான அந்த ஆட்சியாளன் {ஜனகன்}, எந்தக் குறிப்பிட்ட ஒழுக்கத்தின் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைவதில் வென்றான் என்பது தொடர்பான பின்வரும் உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) மிதிலையில், ஜனக குலத்தைச் சேர்ந்தவனும், ஜனதேவன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் ஆட்சியாளன் இருந்தான். பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒழுக்க வழிமுறைகளைக் குறித்துச் சிந்திப்பதில் அவன் எப்போதும் ஈடுபட்டு வந்தான்.(3) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை நோற்கும் மக்களால் பின்பற்றப்படும் பல்வேறு கடமைகளின் வழிமுறைகளை அவனுக்குப் போதிக்க, அவனது அரண்மனையில் எப்போதும் நூறு ஆசான்கள் இருந்து வந்தனர்[1].(4) வேத கல்வியில் ஈடுபட்டிருந்த அவன் {ஜனதேவன்}, ஆன்மாவின் குணம் குறித்துத் தனது ஆசான்களின் ஊகங்கள் மற்றும் உடலை இழந்த பிறகு ஏற்படும் அழிவு அல்லது மரணத்திற்குப் பிறகான மறுபிறவி குறித்த அவர்களின் கோட்பாடுகளில் நிறைவடையாதவனாக இருந்தான்[2].(5)ஒரு காலத்தில், கபிலையின் மகனும், பஞ்சசிகர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெருந்தவசி, உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தபோது மிதிலையை வந்தடைந்தார்.(6) துறவு தொடர்புடைய பல்வேறு கடமைகள் குறித்த அனைத்து ஊகங்களிலும் {ஸந்யாச தர்மங்கள் அனைத்திலும்} சரியான தீர்மானங்களைக் கொண்டிருந்த அவர், (வெப்பம் மற்றும் குளிர், இன்பம் மற்றும் துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகள் {துவந்துவங்கள்} அனைத்தையும் கடந்தவராகவும், ஐயங்களேதும் இல்லாதவராகவும் இருந்தார்.(7) அவர் முனிவர்களில் முதன்மையானவராகக் கருதப்பட்டார். விரும்பிய இடத்தில் வசிக்கும் அவர், மனிதர்கள் அனைவரும் அடைவதற்கு மிகக் கடினமான இன்ப நிலையை அவர்கள் எட்டும்படி செய்ய விரும்பினார்.(8) சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், கபிலர் என்ற பெயரில் யாரை அறிவார்களோ, உயிரினங்களின் தலைவரான அந்தப் பெரும் முனிவரின் வடிவை ஏற்று உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அந்தப் பஞ்சசிகர் திரிந்து கொண்டிருந்தார் என்று தெரிகிறது[3].(9) ஆசுரியின் சீடர்கள் அனைவரிலும் முதன்மையானவராக இருந்த அவர் {பஞ்சசிகர்}, மரணமற்றவர் {சிரஞ்சீவி} என்றும் அழைக்கப்பட்டார். அவர் ஆயிரம் ஆண்டுகள் நீடித்த மனோவேள்வி {மானஸயாகம் / சத்ரயாகம்} ஒன்றைச் செய்தார்[4].(10)அவர் உறுதியுள்ள மனத்தைக் கொண்டவராக இருந்து, சாத்திரங்களோடு இணைந்தவையும், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுப்பவையுமான சடங்குகள் மற்றும் வேள்விகள் அனைத்தையும் நிறைவு செய்தார். அவர், ஆன்மாவை மறைக்கும் ஐந்து உறைகளையும் {உடல்களையும்} முழுமையாக அறிந்தவராக இருந்தார்[5]. பிரம்மத் துதியுடன் தொடர்புடையவையும், (அமைதி, தற்கட்டுப்பாடு முதலிய {சமம், தமம், உபரதி, திதிக்ஷை மற்றும் ஸமாதானம் ஆகிய) ஐந்து குணங்களைக் கொண்டவையுமான ஐந்து செயல்களில் அர்ப்பணிப்புள்ளவராக அவர் இருந்தார். (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) பஞ்சசிகர் என்ற பெயரில் அறியப்பட்டிருந்த அவர், {முன்பு} ஒருநாள், சாங்கிய கோட்பாடுகளைப் பின்பற்றும் பெரும் முனிவர்க்கூட்டத்தை அணுகி, புலப்படாததும், அல்லது ஐந்து புருஷர்களோ (ஏற்கனவே {அடிக்குறிப்பு 5ல்} பெயர் சொல்லப்பட்ட) உறைகளோ சார்ந்திருப்பதும், மனிதர்கள் அடையத்தக்க உயர்ந்த நோக்கமுமான ஒன்றை {பிரம்மத்தைக்} குறித்து அவர்களிடம் விசாரித்தார்[6].(11,12) ஆன்ம ஞானம் அடைவதன் நிமித்தமாக, ஆசுரி என்பவர் ஏற்கனவே தமது ஆசானிடம் விசாரித்திருந்தார். பின்னவரின் {ஆசுரியுடைய ஆசானின்} போதனைகள் மற்றும் தன் சொந்த தவங்கள் ஆகியவற்றின் விளைவால் அந்த ஆசுரி, உடல் மற்றும் ஆன்மாவுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டு, தெய்வீகப் பார்வையை அடைந்திருந்தார்.(13) மாறும் இயல்பற்றதும், ஒன்றேயானதும், அழிவில்லாததும், பல்வேறு வடிவங்களில் காணப்படுவதுமான பிரம்மம் குறித்து {இப்போது} அந்த முனிவர்க்கூட்டத்தில் ஆசுரி தமது விரிவுரையை அளித்தார்.(14) {அந்தக் கூட்டத்தில் இருந்த} பஞ்சசிகர் ஆசுரியின் சீடரானார். அவர் மானுடப் பாலில் {மானுடப்பெண்ணின் பாலை உணவாகக் கொண்டு} வாழ்ந்தார். கபிலை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பிராமணி இருந்தாள். அவள் ஆசுரியின் மனைவியாக இருந்தாள்[7].(15)பஞ்சசிகர் அவளால் ஒரு மகனாக ஏற்கப்பட்டார், அவர் அவளது முலைப்பால் அருந்தினார் {ஸ்தன்யாபானம் செய்தார்}. இதன் விளைவால் அவர், கபிலையின் மகன் {காபிலேயர்} என்று அறியப்பட்டார். அவரது புத்தி பிரம்மத்தில் நிலைத்திருந்தது.(16) அவரது பிறப்பு மற்றும் அவர் கபிலையின் மகனானது {காபிலேயரானது} ஆகிய சூழ்நிலைகள் குறித்த இவை யாவையும் எனக்குத் தெய்வீக முனிவரால் {மார்க்கண்டேயரால் / சனத்குமாரரால்} சொல்லப்பட்டது[8]. அவரே அனைத்தையும் அறிந்தவரான பஞ்சசிகர் குறித்து எனக்குச் சொன்னார்.(17) கடமைகள் அனைத்தின் வழிமுறைகளையும் அறிந்த பஞ்சசிகர், உயர்ந்த ஞானத்தை {ஆசுரியிடமிருந்து} அடைந்த பிறகு, (ஜனகனிடம் {ஜனதேவனிடம்} வந்து), அந்த மன்னன் தன் ஆசான்கள் அனைவரையும் சமமாக மதிப்பவன் என்பதை அறிந்து, அபரிமிதமான காரணங்களால் {பலயுக்திகளால்} அந்த நூறு ஆசான்களையும் வியக்கச் செய்தார்.(18) காபிலேயரின் {பஞ்சசிகரின்} திறன்களைக் கண்ட ஜனகன் {ஜனதேவன்}, அவரிடம் அதீதப் பற்றைக் கொண்டு, தன் நூறு ஆசான்களையும் கைவிட்டு, குறிப்பாக அவரையே பின்பற்றத் தொடங்கினான்.(19) அப்போது காபிலேயர் {பஞ்சசிகர்}, (ஒரு சீடன் செய்ய வேண்டிய முறையில்) தம்மிடம் விதிப்படி தலை வணங்கியவனும், அந்தத் தவசியின் போதனைகளைப் புரிந்து கொள்ளும் முழுத் தகுதி கொண்டவனுமான ஜனகனிடம் {ஜனதேவனிடம்}, சாங்கிய ஆய்வேடுகளில் விளக்கப்பட்டுள்ள விடுதலை {முக்தி / மோக்ஷம்} எனும் உயர்ந்த அறத்தைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(20)முதலிடத்தில் பிறப்பின் துன்பங்களைச் சொன்ன அவர், அடுத்ததாக (அறச்) செயல்களின் துன்பங்களைக் குறித்துப் பேசினார். அக்காரியத்தை நிறைவு செய்த அவர், படைப்பாளனின் உயர்ந்த உலகத்திலேயே முடிவடையும் வாழ்வின் அனைத்து நிலைகளுக்குரிய துன்பங்களையும் விளக்கினார்[9].(21) அற நடைமுறை {வேள்விகள் / சடங்குகள்}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் {பலன்கள்} ஆகியவை எதன் நிமித்தமாகச் செய்யப்படுகிறதோ, எது நம்பிக்கைக்குத் தகாததோ, அழியவல்லதோ, நிலையற்றதோ, நிச்சயமற்றதோ அந்த மாயையைக் குறித்தும் சொன்னார்[10].(22) {பஞ்சசிகர்} “(உடலின்) மரணம் அனைவராலும் காணப்படும்போது, உடலில் இருந்து வேறுபட்டதும், ஆன்மா என்று அழைக்கப்படுவதுமான ஒன்று இருக்கிறது என்று, சாத்திரங்களில் உள்ள நம்பிக்கையின் விளைவால் நம்புபவர்கள் {நாஸ்திகர்களின் எதிர்} வாதத்தில் வெல்லப்படுகிறார்கள் என்று ஐயுறுவாதிகள் {நாஸ்திகர்கள்} சொல்கிறார்கள்.(23) ஒருவன் இறந்துவிட்டால், அவனது ஆன்மாவும் அழிகிறது என்றும், எனவே, துன்பம், முதுமை, நோய் ஆகியன ஆன்மாவின் (பகுதியளவு) மரணத்தையே குறிக்கிறது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உடலில் இருந்து ஆன்மா வேறானது, உடலின் இழப்பிற்குப் பிறகும் அது நீடிக்கிறது என்று பிழையாகக் கருதுபவன், அறிவுக்குப் பொருந்தாத கருத்தைப் பேணி வளர்க்கிறான் {என்று அவர்கள் சொல்கிறார்கள்}.(24) உலகில் உண்மையில் இல்லாத அஃது {ஆன்மா}, இருக்கிறது என்று கருதப்பட்டால், மன்னனும்கூட முதுமைக்கோ, மரணத்திற்கோ ஆட்படமாட்டான் என்றும் குறிப்பிடலாம். ஆனால், அந்தக் காரியத்தில் அவன் தன்னை முதுமையையும், மரணத்தையும் கடந்தவனாக உண்மையில் நம்புவானா? {என்றும் அவர்கள் கேட்கிறார்கள்}[11].(25)ஒரு பொருள் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுகையில், உறுதிகூறப்பட்ட அதன் இருப்பானது, இல்லாமையின் அனைத்துக் குறியீடுகளையும் அளிக்கிற போது, சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கைக் காரியங்களைத் தீர்மானிக்க எதனைச் சார்ந்திருப்பார்கள்?[12](26) உள்ளுணர்வு {அனுமானம்} மற்றும் சாத்திரங்கள் {ஆகமம்} ஆகிய இரண்டிலும் நேரடி சாட்சியங்களே {பிரத்யக்ஷங்களே} வேராக இருக்கின்றன. சாத்திரங்கள் {ஆகமங்கள்} நேரடி சாட்சியத்தின் மூலம் மறுத்துக்கூற வல்லனவாக இருக்கின்றன. உள்ளுணர்வை {அனுமானத்தைப்} பொறுத்தவரையில், அதன் சாட்சிய பாதிப்பு அதிகமானதாக {போதுமானதாக} இல்லை.(27) எந்தக் காரியமாக இருந்தாலும், உள்ளுணர்வை மட்டுமே காரணமாகக் கொள்வது நிறுத்தப்பட வேண்டும். இந்த உடலைத் தவிர ஜீவன் என்றழைக்கப்படும் வேறேதும் இல்லை {என்றும் அவர்கள் சொல்கிறார்கள்}.(28)ஓர் ஆலமர விதையானது, இலைகள், மலர்கள், கனிகள், வேர்கள் மற்றும் பட்டை ஆகியவற்றை உண்டாக்கும் திறனைத் தன்னுள் கொண்டுள்ளது. ஒரு பசு உண்டு பருகும், புல் மற்றும் நீரின் மூலம், உற்பத்திக்கான காரணங்களில் இருந்து வேறுபட்ட இயல்பைக் கொண்ட பொருட்களான பாலும், நெய்யும் உண்டாக்கப்படுகின்றன. நீரில் சில காலத்திற்கு அழுக விடப்படும் பல்வேறு வகைப்பட்ட பொருட்கள், தங்கள் இயல்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மதுவை உண்டாக்குகின்றன. அதேவகையில், உயிர் வித்தில் இருந்து, உடலும், புத்தியுடன் கூடிய அதன் குணங்களும், நனவுநிலையும் {அஹங்காரமும்}, மனமும், பிற உடைமைகளும் உண்டாகின்றன. இரண்டு மரத்துண்டுகள் உரசப்படும்போது அவை நெருப்பை உண்டாக்குகின்றன. சூரிய காந்தம் என்றழைக்கப்படும் கல்லானது, சூரியக் கதிர்களின் தொடர்பேற்படும்போது நெருப்பை உண்டாக்குகிறது. கடினமான நீரில் சுடப்பட்ட எந்த உலோகப் பொருளும், நீருடன் தொடர்பேற்படும்போது அதை {நீரை} வற்ற செய்கிறது. அதே போலவே, பொருளாலான உடலானது, மனத்தையும், உணர்வு, நினைவு, கற்பனை முதலியவற்றுக்கான அதன் {மனத்தின்} குணங்களையும் உண்டாக்குகிறது. காந்தக் கல்லானது இரும்பை அசைப்பதைப் போலவே, புலன்களும் மனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன {என்றும் அவர்கள் சொல்கிறார்கள்}[13].(29)இவ்வாறே ஐயுறுவாதிகள் {தர்க்க மதத்தார் / நாத்திகர்கள்} காரணம் கூறுகின்றனர். எனினும் இந்த ஐயுறுவாதிகள் {தர்க்க மதத்தால் / நாத்திகர்கள்} பிழை செய்கின்றனர். உடல் (உடலின் அசைவு சக்தி மட்டுமே) மறைவதன் மூலம் உயிரற்றதாவதே (அந்த நிகழ்வு {மரணம்} நேரும் அதே நேரத்தில் உடல் அழியாததே) அதற்கு {அந்தப் பிழைக்கு} ஆதாரமாகும். (உடலானது, ஆன்மாவல்ல. ஆன்மாவானது உடலில் இருந்து தனிப்பட்ட ஒன்று, அது நிச்சயம் கடந்து வாழ்கிறது என்ற உண்மைக்கு இதுவே ஆதாரம். உண்மையில் உடலும், ஆன்மாவும் ஒரே பொருளாக இருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில் மறைந்திருக்கும். அதற்குப் பதில், மரணம் நேர்ந்த பிறகும் சடலம் {உயிரற்ற உடல்} சிலகாலத்திற்குக் காணப்பட்டுகிறது. எனவே, உடலிலிருந்து வேறுபட்ட ஏதோவொரு பொருள் அந்த உடலில் இருந்து தப்புவதே மரணம் என்றாகிறது). ஆன்மாவின் தனிப்பட்ட இருப்பை மறுக்கும் மனிதர்கள் {தர்க்க மதத்தார்} தேவர்களிடம் வேண்டுவது (ஆன்மாவானது உடலில் இருந்து தனிப்பட்டது, அல்லது பொருள் திரட்டின் சார்பற்ற தனியிருப்பு என்ற கூற்றுக்கு) மற்றொரு நல்ல வாதமாக அமையும். (இந்த மனிதர்கள் வேண்டும் தேவர்கள் காணப்படவோ, தீண்டப்படவோ இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நுட்பமான வடிவங்களில் இருப்பதாக நம்பப்படுகிறார்கள். உண்மையில் பொருள்திரள் வடிவங்களற்ற தேவர்களின் மீதுள்ள நம்பிக்கை அறிவுக்கு எந்தக் குந்தகத்தையும் விளைவிக்கவில்லையெனில், பொருளற்றதான ஆன்மாவின் இருப்பு மட்டும் அந்த அறிவுக்கு ஏன் குந்தகத்தை விளைவிக்க வேண்டும்?). ஐயுறுவாதியின் கருத்தே செயல்களின் அழிவைக் குறிப்பிடுகிறது என்பது அவருக்கு எதிரான மற்றொரு வாதமாகும். (ஏனெனில், உடலும், ஆன்மாவும் ஒன்றாகவே இறந்தால், இப்பிறவி வாழ்வின் செயல்களும் அழிந்து போகும். இக்கருத்து, அண்டத்தில் காணப்படும் சமமற்ற நிலைகளை எந்த மனிதனாலும் விளக்கப்படச் சாத்தியமில்லாத நிலையை உண்டாக்கும்)[14].(30)இவ்வாறு குறிப்பிடப்படுபவையும், பொருள்வடிவங்களைக் கொண்டவையுமான இவை {ஜடவஸ்துக்கள்}, (பொருளற்ற {வடிவமற்ற} ஆன்மா மற்றும் பொருளற்றவையான {ஜடமல்லாதவையான} உணர்வு, நினைவு போன்றவற்றுக்கு) காரணங்களாக அமைய சாத்தியமில்லை. பொருள்வடிவமற்ற இருப்புகளைப் பொருள் வடிவமுள்ள பொருட்களுடன் அடையாளம் கண்டு அறிந்து கொள்ள முடியாது. (எனவே, பொருள்வடிவமுள்ள பொருட்கள் எவ்வழியிலும் பொருள் வடிவமில்லாத பொருட்களை உண்டாக்கும் காரணங்களாக இருக்க முடியாது).(31) சிலர், மறுபிறப்பு இருக்கிறது, மேலும் அஃது, அறியாமை, செயல்களில் உள்ள விருப்பம், பேராசை, கவனமின்மை, பிற குற்றங்களில் ஈடுபாடு ஆகியனவற்றால் உண்டாகிறது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.(32) அவர்கள் அறியாமையே (அவித்யையே) மண் {இடம் / க்ஷேத்ரம்} என்று சொல்கிறார்கள். செயல்கள், அந்த மண்ணில் விதைக்கப்படும் விதையாகும். ஆசையென்பது, அந்த விதையை வளரச் செய்யும் காரணமான நீராக அமைகிறது. இவ்வழியிலேயே அவர்கள் {தர்க்க மதத்தார் / ஐயுறுவாதிகள் / நாத்திகர்கள்} மறுபிறப்பை விளக்குகிறார்கள்.(33) அந்த அறியாமையானது, புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு வழியில் உள்தோய்ந்து, ஒரு மனித உடல் அழிந்ததும், உடனே மற்றொறு உடல் பிறக்கிறது’ அது ஞானத்தின் துணையுடன் எரிக்கப்படும்போது, இருப்பின் அழிவே தொடர்கிறது, அல்லது அந்த மனிதன் நிர்வாணம் என்றழைக்கப்படும் நிலையை அடைகிறான் என அவர்கள் {தர்க்க மதத்தார்} வாதிடுகின்றனர்.(34) இக்கருத்துப் பிழையுள்ளதாகும். (இது பௌத்தர்களின் கோட்பாடாகும்). இவ்வாறு மீண்டும் பிறக்கும் ஒன்றின் இயல்பு, பிறப்பு, அறம் மற்றும் மறம் தொடர்புடைய நோக்கங்கள் வேறுபட்டிருக்கும்போது, அஃது ஏற்கனவே இருந்த ஒன்றின் எந்த அடையாளத்தையும் கொண்டிருப்பதாக ஏன் கருதப்பட வேண்டும்? உண்மையில், குறிப்பிட்ட ஒன்றில் மொத்தமாக இருக்கும் இருப்புகளின் சங்கிலியானது, உண்மையான தொடர் இணைப்புகளைக் கொண்ட ஒரு சங்கிலி கிடையாது (ஆனால் அந்த அடுத்தடுத்த இருப்புகள், ஒன்றோடொன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன) என்ற உள்ளுணர்வை {அனுமானத்தை} மட்டுமே அடையச் செய்யும்[15].(35)மேலும், மறுபிறப்பின் விளைவாக இருக்கும் ஒன்று, உண்மையில் முந்தைய இருப்பில் வேறாக இருக்கும்போது, ஒருவன் செய்யும் செயல்கள், அடுத்த இருப்பில் (அவற்றை அனுபவிக்க அந்தச் செயலைச் செய்தவன் இல்லாமல்) மற்றொருவனின் மீது குவிவதால், ஈகை பயில்வது, அல்லது அறிவு, தவசக்தி ஆகியவற்றை அடைவது ஆகியவை ஒரு மனிதனிடம் என்ன நிறைவை ஏற்படுத்த முடியும்?(36) இப்பிறவியில் ஒருவன், முற்பிறவியில் மற்றொருவனால் செய்யப்பட்ட செயல்களுக்காகத் துன்பத்தை அடைவான், அல்லது துன்பத்தை அடைந்து மீண்டும் இன்பத்தை அடைவான் என்ற விளைவை இப்போது மறுக்கப்படும் இந்தக் கோட்பாடு முன்வைக்கிறது. எனினும், இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் காண்பதன் மூலம், புலப்படாததைக் குறித்த சரியான தீர்மானத்தை நாம் அடைய முடியும்[16].(37) (பௌத்த வாழ்வுக் கோட்பாட்டின்படி) மறுபிறவியின் விளைவால் உண்டாகும் தனிப்பட்ட நனவுநிலை, முற்பிறவியில் இருந்த நனவுநிலையில் இருந்து வேறுபட்டதாகும். எனினும், அந்தத் தனிப்பட்ட நனவுநிலையின் எழுச்சி, அல்லது தோற்றம் குறித்து அந்தக் கோட்பாட்டில் விளக்கப்படுவதும் அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. (முற்பிறவியில் இருந்த) நனவுநிலையானது, உடல் அழிவது வரை மட்டுமே இருந்து நிலையற்றதாக மட்டுமே இருப்பதால் அது நித்திய தன்மைக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. எதற்கு முடிவு உண்டோ, அஃது அதன் முடிவுக்குப் பிறகு இரண்டாம் நனவுநிலையை உண்டாக்கவல்லது என்பது ஏற்புடையதல்ல. மேலும், இரண்டாம் நனவுநிலை உண்டாவதன் காரணமாக முந்தைய நனவுநிலை அழிகிறது எனக் கொண்டால், அப்போது, ஒரு கனத்த தடியின் மூலம் மனித உடல் இறந்தவுடன், அசைவிழந்த அந்த உடலில் இருந்து உடனே இரண்டாவது உடல் எழ வேண்டும்[17].(38)மேலும், அவர்களது உயிர் அழிவு (அல்லது நிர்வாணம், அல்லது சத்வசங்கியக்) கோட்பாடானது, பருவகாலங்கள், அல்லது வருடம், அல்லது யுகம், அல்லது வெப்பம், அல்லது குளிர், அல்லது ஏற்படைய, ஏற்பில்லாத பொருட்களைப் போல மீண்டும் மீண்டும் தோன்றும் தோற்றப்பாடே அழிவு என்பதற்கான மறுப்புக்கு வெளிப்பட்டிருக்கிறது[18].(39) இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், இந்த மறுப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு புதிய நனவு நிலையும் பற்றிக் கொள்ளும் நிரந்தரமான ஓர் ஆன்மாவின் இருப்பை உறுதிசெய்தால், நிரந்தரமான ஒரு பொருள் முதுமைக்கும், மரணத்திற்கும் ஆட்பட்டு அழிவைக் கொண்டுவந்து, அதே வேளையில் தானும் பலவீனமடைந்து அழிகிறது என்ற புதிய மறுப்புக்கு வெளிப்பட்டு நிற்பார்கள். ஒரு மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்கள் காலப்போக்கில் பலவீனமடைந்தால், இறுதியில் அந்த மாளிகையே விழப்போவது நிச்சயம்[19].(40) புலன்கள், மனம், காற்று, குருதி, இறைச்சி, எலும்புகள் அகியன (மற்றும் உடலில் உள்ளடங்கிய அனைத்தும்) ஒன்றன் பின் ஒன்றாக அழிவையடைந்து, அவை ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் உற்பத்திக் காரணங்களுக்குள் நுழைகின்றன[20].(41)மேலும், மாற்றப்பட முடியாததும், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்} மற்றும் வழக்கமான பிற குணங்கள் ஆகியவற்றின் புகலிடமும், இவை யாவற்றில் இருந்தும் பிரிந்திருப்பதும், நித்தியமானதுமான ஆன்மாவின் இருப்பு உறுதி செய்யப்பட்டால், அஃது இவ்வுலகில் வழக்கமாகச் செய்யப்படும் அனைத்தையும் பொருளற்றதாக்கும், குறிப்பாக ஈகை மற்றும் பிற அறச்செயல்களின் கனிகளைப் பொருளற்றதாக்கும் அத்தகைய உறுதிப்பாடு மற்றொரு மிக முக்கிய மறுப்புக்கு வெளிப்பட்டு நிற்கும். அச்செயல்களையும், உலகின் மனித ஒழுக்கம் தொடர்புடைய செயல்கள் அனைத்தையும் தூண்டும் ஸ்ருதிகளின் தீர்மானங்களும் பொருளற்றவையாகும். ஏனெனில், புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மாவின் தொடர்பறுந்தால், நற்செயல்கள் மற்றும் வேத சடங்குகளின் கனிகளை அனுபவிக்க ஒருவனும் இருக்கமாட்டான்[21].(42) இவ்வாறு பல்வேறு வகையான ஊகங்கள் மனத்தில் எழுகின்றன. இக்கருத்து சரியா, அக்கருத்து சரியா என்பதைத் தீர்மானிக்க எவ்வழியும் இல்லை.(43) இக்கருத்துகளைச் சிந்திப்பதில் ஈடுபடும் குறிப்பிட்ட மனிதர்கள், ஊகத்தின் அடிப்படையிலான குறிப்பிட்ட வரிகளையே பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட கோட்பாடுகளை நோக்கி செலுத்தப்படும் இவற்றைக் குறித்த புரிதல்கள் {புத்தி}, முற்றிலும் அவற்றிலேயே ஈடுபட்டு, இறுதியில் அவற்றிலேயே தொலைந்து போகின்றன.(44) இவ்வாறே மனிதர்கள் அனைவரும் நன்மை அல்லது தீமையின் தொடர்ச்சியால் துன்பத்தை அடைகிறார்கள். வேதங்களே, யானைகளை வழிநடத்தும் யானைவளர்ப்பவர்களைப் போல அவற்றை {தர்க்க மதக் கருத்துகளைச்} சரியான பாதைக்குக் கொண்டுவருகின்றன[22].(45)பலவீனமான மனம் படைத்த பல மனிதர்கள், பெரும் மகிழ்ச்சி நிறைந்த பொருட்களில் பேராசை கொள்கிறார்கள். எனினும், விரைவில் அவர்கள் அதைவிடப் பெரிய துயரத்தைச் சந்தித்து, ஆசைப்பட்ட இறைச்சியிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து, மரணத்தைச் சந்திக்கிறார்கள்.(46) மரணத்திற்கு விதிக்கப்பட்டவனும், நிலையற்ற வாழ்வைக் கொண்டவனும், சொந்தங்கள், நண்பர்கள், மனைவியர் போன்ற பிற வகை உடைமைகளைக் கொண்டவனுமான ஒருவனுக்கு இவற்றால் என்ன பயன்? இவை அனைத்தையும் கைவிட்டு மரணத்தைச் சந்திக்கும் ஒருவன், இவ்வுலகை எளிதாகக் கடந்து, மீண்டும் திரும்பாமல் இருக்கிறான்.(47) பூமி {நிலம்}, வெளி {ஆகாயம்}, நீர், வெப்பம் {நெருப்பு}, காற்று ஆகியன எப்போதும் உடலை ஆதரித்து வளப்படுத்துகின்றன. இதைச் சிந்திக்கும் ஒருவனால் எவ்வாறு ஒருவனுடைய உடலில் பற்றுக் கொள்ள முடியும்? உண்மையில், அழிவுக்கு உள்ளாகும் உடலில் எந்த இன்பமுமில்லை” {என்றார் பஞ்சசிகர்}.(48) கபடத்தில் இருந்து விடுபட்டவையும், (வேள்விகள் மற்றும் பிற வேதச் செயல்பாடுகளுக்கு உற்சாகமளிக்காமல்) மாயையின் தொடர்பற்றவையும், உயர்ந்த மதிப்பு கொண்டவையும், ஆன்மாவைக் குறித்தவையுமான பஞ்சசிகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன் ஆச்சரியத்தால் நிறைந்து மீண்டும் அந்த முனிவரிடம் பேச ஆயத்தமானான்” என்றார் {பீஷ்மர்}[23].(49)

கர்மபலன்கள்! – சாந்திபர்வம் பகுதி – 219- கர்ம பலன்களை ஜனதேவனுக்குச் சொன்ன பஞ்சசிகர்; அறியாமைக்கும் அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? மனிதர்கள் ஏன் செயலை விரும்ப வேண்டும்? உயர்ந்த கதியை அடைய அவர்கள் ஏன் முயற்சிக்க வேண்டும்? என்பவை குறித்த ஜனதேவனின் ஐயங்களுக்கு விடையளித்த பஞ்சசிகர்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பெரும் முனிவர் பஞ்சசிகரால் போதிக்கப்பட்ட ஜனக குலத்தின் ஜனதேவன், மீண்டும் அவரிடம் மரணத்திற்குப் பிறகான இருப்பு மற்றும் இல்லாமை குறித்துக் கேள்வி கேட்டான்.(1)

ஜனகன் {ஜனதேவன் பஞ்சசிகரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, இப்போது இருக்கும் நிலையில் இருந்து எந்த மனிதனும் எந்த ஞானத்தையும் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனில், உண்மையில், இஃது உண்மையெனில், அறியாமைக்கும், அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? ஞானத்தால் நாம் ஈட்டுவதென்ன? அறியாமையால் நாம் இழப்பதென்ன?(2) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விடுதலை {முக்தி} என்பது இத்தகையதென்றால், அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் முடிவில் அழிவை மட்டுமே அடையும். கவனமின்மை மற்றும் கவனமிக்கத்தன்மை ஆகியவற்றின் வேறுபாட்டால் என்ன பயன் விளைகிறது?(3) இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் தொடர்பறுப்பதும், அல்லது, இல்லாத பொருட்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும்தான் விடுதலை {முக்தி} எனில், மனிதர்கள் ஏன் செயலைச் செய்ய விரும்ப வேண்டும்? அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள், விரும்பத்தக்க கதிகளை அடையத் தேவையான வழிமுறைகளை ஏன் தொடர்ந்து வகுக்க வேண்டும்? (இக்காரியம் தொடர்பான) உண்மைதான் என்ன?” என்று கேட்டான்”.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கல்விமானான பஞ்சசிகர், அடர்ந்த இருளில் மறைந்திருப்பவனும், பிழையால் திகைப்படைந்தவனும், ஆதரவற்றவனுமான அந்த மன்னனை {ஜனதேவனைக்} கண்டு, பின்வரும் வார்த்தைகளைப் பேசி அவனை அமைதிப்படுத்தினார்.(5)

{பஞ்சசிகர்}, “இதில் (விடுதலையில் {முக்தியில்}) உறவு என்பது அழிவல்ல. அதே வேளையில் உறவு என்பது (ஒருவன் உடனடியாகக் காணத்தக்க) எந்த வகை இருப்பும் அல்ல. உடல், புலன்கள் மற்றும் மனத்தின் கலவையையே நாம் காண்கிறோம். எந்தச் சார்பும் இல்லாமலும் {சுதந்திரமாகவும்}, ஒன்றையொன்று கட்டுப்படுத்திக் கொண்டும் இவை செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன[1].(6) நீர், வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, வெப்பம் {அக்னி}, பூமி {நிலம்} ஆகிய பொருட்களே உடலை அமைக்கின்றன. இவை தங்கள் தங்கள் இயல்பின்படியே (உடலாக அமைந்து) ஒன்றாக நீடித்திருக்கின்றன. இவை மீண்டும் தங்கள் சொந்த இயல்பின்படியே பிரிகின்றன.(7) வெளி, காற்று, வெப்பம், நீர் மற்றும் பூமி ஆகிய இந்த ஐந்து பொருட்களும் கலந்த நிலையிலேயே உடல் அமைகிறது. உடலானது ஒரு பூதத்தால் ஆனதல்ல.(8) புத்தி, குடல்வெப்பம் {ஜாடராக்னி}, பிராணன் முதலியவைகளாக அழைக்கப்படும் காற்றுகள் {வாயுக்கள்} என்ற உயிர்மூச்சுகள் ஆகிய இவை மூன்றும் செயல்படும் உறுப்புகளாக {கர்ம காரணங்களெனச்} சொல்லப்படுகின்றன. புலன்கள், (ஒலி, வடிவம் முதலிய) பொருள் நுகர் பொருட்கள், எதன் மூலம் அவை உணரத்தக்கவையாக மாறுகின்றனவோ (அந்தப் பொருட்களில் வசிக்கும்) அந்தச் சக்தி, எதன்மூலம் உணர முடிகிறதோ அந்த (புலன்களில் வசிக்கும்) திறன்கள், மனம், பிராணன், அபானன் முதலியவையாக அழைக்கப்படும் உயிர்மூச்சுகள், செரிமான உறுப்புகளின் விளைவாக இருக்கும் பல்வேறு சாரங்கள் ஆகியன ஏற்கனவே சொல்லப்பட்ட மூன்று உறுப்புகளில் இருந்து பாய்கின்றன[2].(9) கேள்வி {காது}, தீண்டல் {ஊறு / தோல்}, சுவை {நாக்கு}, பார்வை {கண்கள்}, மணம் {மூக்கு} ஆகியவை ஐம்புலன்களாகும் {ஐம்புலன்களால் உணரப்படுபவை}. அவை தங்கள் குணங்களை, தங்களுக்குக் காரணமாக இருக்கும் மனத்தில் இருந்து பெறுகின்றன.(10)சித் எனும் ஒரு குணமாக இருக்கும் மனத்திற்கு, இன்பம், துன்பம் மற்றும் இன்பதுன்பம் இல்லாமை ஆகிய மூன்று நிலைகள் இருக்கின்றன.(11) ஒருவன் மரணமடையும் தருணம் வரை பிரிக்கப்பட முடியாமல் உள்பொதிந்திருக்கும் ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை, மணம் மற்றும் பிற பொருட்களே, ஒருவனுக்கு ஞானம் உண்டாக்கும் காரணங்களாக இருக்கின்றன.(12) (சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்) செயல்கள் அனைத்தும், (பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும்) துறவும், விசாரிக்கும் அனைத்துக் காரியங்களிலும் உண்மையை உறுதி செய்வதும் புலன்களையே சார்ந்திருக்கின்றன. (உண்மையை) உறுதி செய்வதே இருப்பின் உயர்ந்த நிலை, அதுவே விடுதலையின் {முக்தியின்} விதை அல்லது வேர் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். புத்தியானது, விடுதலை {முக்தி} மற்றும் பிரம்மத்தை நோக்கி அவற்றை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்[3].(13) (உடல் என்றும், புலன்நுகர் பொருட்கள் என்று அழைக்கப்படும்) அழியத்தக்க குணங்களுடன் சேர்ந்த இந்தக் கலவையை {உடலை} ஆன்மாவாகக் கருதும் மனிதன், அத்தகைய தவறான ஞானத்தின் விளைவால் முடிவில்லாத துன்பத்தை உணர்கிறான்.(14) மறுபுறம், உலகம் சார்ந்த பொருட்கள் எதுவும் ஆன்மாவல்ல என்று கருதுபவர்களும், எந்தப் பற்றும் இல்லாமல் இருப்பவர்களுமான மனிதர்களின் வழக்கில், துன்பம் சார்ந்திருக்க ஓர் அடித்தளம் தேவை என்பதால் அவர்கள் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டார்கள்.(15)இது தொடர்பாகத் துறவு சம்பந்தமான ஒப்பற்ற ஒரு ஞானக்கிளையொன்று இருக்கிறது. அது சம்யாகவாதம் {மோக்ஷசாஸ்திரம்} என்றழைக்கப்படுகிறது. அது குறித்துச் சொல்லப் போகிறேன். உன் விடுதலையின் நிமித்தமாக அதைக் கேட்பாயாக.(16) மனிதர்கள் அனைவருக்கும் (விதிக்கப்பட்டிருக்கும்) செயல்களில் துறவென்பது, மெய்யுறுதியுடன் விடுதலைக்காக முனையும் மனிதர்கள் அனைவருக்குமானதாகும் {விதிக்கப்பட்டதாகும்}. எனினும், சரியாகக் கற்பிக்கப்பட்டோர் (துறவின் மூலம் அமைதியை அடைய முடியும் என நினைப்போர்), துன்பத்தின் கனத்த சுமையைச் சுமக்க வேண்டும்.(17) வேத வேள்விகளும், பிற சடங்குகளும், செல்வம் மற்றும் பிற உடைமைகளின் துறவுக்காகவே இருக்கின்றன. அனைத்து இன்பங்களையும் துறப்பதற்காகவே, பல்வேறு நோன்புகளும், உபவாசங்களும் இருக்கின்றன. இன்பத்தையும், மகிழ்ச்சியையும் துறப்பதற்காகவே தவங்களும், யோகமும் இருக்கின்றன. எனினும், அனைத்தையும் துறப்பதே உயர்ந்த வகைத் துறவாகும்.(18) இப்போது நான் உனக்குச் சொல்லப்போவது, அனைத்தையும் துறப்பதற்காகக் கல்விமான்களால் சுட்டிக்காட்டப்படும் ஒரு பாதையாகும். அந்தப் பாதையில் செல்வோர், அனைத்து துன்பங்களையும் விரட்டுவதில் வெல்கிறார்கள். எனினும், அதனிலிருந்து விலகுவோர், துன்ப துயரங்களையே அறுவடை செய்கிறார்கள்[4].(19)ஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐந்து அறிவுப் புலன்களையும் {ஞானேந்திரியங்களையும்}, புத்தியில் வசிக்கும் அனைத்தையும் முதலில் சொன்னேன். ஆறாவதாகப் பலத்தைக் கொண்ட ஐந்து செயற்புலன்களையும் {இப்போது} நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(20) இரு கரங்களும் செயல்பாட்டின் ஈருறுப்புகளாக இருக்கின்றன. இரு கால்களும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்யும் இரண்டு உறுப்புகளாக இருக்கின்றன. இன்பம் மற்றும் இனத் தொடர்ச்சி ஆகிய இரண்டிற்காக இருப்பது பிறப்புறுப்பாகும். வயிற்றில் இருந்து வரும் குதம், பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களையும் வெளியே கழிக்கும் உறுப்பாகும்.(21) பேச்சுறுப்பு {வாய்}, ஒலி உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இருக்கிறது. இந்த ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரிங்களும்}, மனத்திற்குச் சொந்தமானது அல்லது மனத்தின் தொடர்புடையது என அறிவாயாக. (மனத்தோடு கணக்கிடப்படும்) இவையே அறிவு மற்றும் செயலுக்குரிய பதினோரு உறுப்புகளாகும். ஒருவன் புத்தியுடன் கூடிய மனத்தை விரைவாகக் கைவிட வேண்டும்[5].(22) கேட்கும் செயலுக்கு, இரு காதுகள், ஒலி மற்றும் மனம் ஆகிய மூன்று காரணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்; அதே போலவே ஒலி உணர்விற்கும்; வடிவத்தை உணர்வதற்கும், சுவை மற்றும் மணத்தை உணர்வதற்கும் அவை {அந்த மூன்று காரணங்கள்} வேண்டும்[6].(23) குறிப்பிடப்பட்ட பல்வேறு வகை உணர்வுகளை உணர இந்தப் பதினைந்து {ஐந்து மூன்று காரணங்கள்} சாதனங்கள், அல்லது குணங்கள் வேண்டும். இவற்றின் விளைவால் ஒவ்வொரு மனிதனும், அந்த உணர்வுகளைப் பொறுத்தவரையில் மூன்று தனிப்பட்ட நனவுநிலைகளை (அஃதாவது, ஓர் உறுப்பு, அதன் குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் அந்தச் செயல்கள் செயல்படும் மனம் ஆகியவற்றை) அடைகிறான்.(24) மேலும் (மனத்தின் உணர்வுகள் அனைத்தையும் பொறுத்தவரையில்) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய மூன்று வகை உணர்வுகள் {சாதனங்கள்} இருக்கின்றன. அவற்றினுள், உணர்வுகள் அனைத்தும் உள்ளிட்ட மூவகை நனவுநிலைகள் {அனுபவங்கள்} இயங்குகின்றன.(25)உணரத்தக்க காரணம், அல்லது வெளிப்படையான எந்தக் காரணமும் இன்றி மனத்தில் எழும் பேரானந்தம், நிறைவு, மகிழ்ச்சி, இன்பம் மற்றும் அமைதி ஆகியவை நல்லியல்புக்குரியவையாகும் {சத்வ குணத்திற்கு உரியவையாகும்}.(26) காரணமில்லாமல் அல்லது உணரத்தக்க எந்தக் காரணத்தின் மூலமும் நேரும், நிறைவின்மை, வருத்தம், துன்பம், பேராசை, வன்மம் ஆகியவை ஆசை {ரஜஸ்} என்று அறியப்படும் குணத்தின் குறியீடுகளாகும்.(27) தவறான தீர்மானம், மயக்கம், கவனமின்மை, கனவுகள், உறக்கக்கலக்கம் ஆகிவை எவ்வாறு உண்டானாலும், அவை இருள் {தமஸ்} குணத்திற்குரியவையாகும்.(28) உடல் அல்லது மனத்தைப் பொறுத்தவரையில், இன்பம் அல்லது நிறைவுடன் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அது நல்லியல்பின் {சத்வ} குணத்தின் மூலம் உண்டானது எனக் கருதப்பட வேண்டும்.(29) நிறைவின்மை, அல்லது உற்சாகமின்மை கொண்ட எந்த உணர்வுடனும் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அஃது ஆசை {ரஜஸ்} குணத்தினால் மனத்தில் நேர்ந்தவை என்று கருதப்பட வேண்டும்.(30) உடல், அல்லது மனத்தைப் பொறுத்தவரையில் பிழை, அல்லது கவனமின்மையுடன் கலந்து எந்நிலை நீடித்தாலும், அது புரிந்து கொள்ள முடியாததும், விவரிக்க இயலாததுமான இருளை {தமஸ் குணத்தைக்} குறிப்பிடுவதாக அறியப்பட வேண்டும்.(31)

கேட்கும் உறுப்பு {காது} வெளியை {ஆகாயத்தைச்} சார்ந்திருக்கிறது; அஃது (எல்லைகளுக்குட்பட்ட) வெளியே {ஆகாயமே} ஆகும். ஒலியானது அந்த உறுப்பையே {காதையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ஒலியை உணர்வதால் ஒருவன் கேட்கும் உறுப்பு {காது} மற்றும் வெளியைக் குறித்த அறிவை உடனே அடைய மாட்டான். ஆனால் ஒலி உணரப்படும்போது, கேட்கும் உறுப்பும், வெளியும் வெகு நாளைக்கு அறியப்படாமல் நீடிக்கு முடியாது. (காதை அழிப்பதால், ஒலியும் வெளியும் அழிக்கப்படலாம்; இறுதியாக மனத்தை அழிப்பதால் அனைத்தையும் அழிக்கலாம்).(32) {செவி}, தோல், கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு ஆகியவற்றின் வழக்கிலும் இதுவே பொருந்தும். அவை தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை மற்றும் மணமாக இருக்கின்றன[7].(33) செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், அறிவுப்புலன்கள் {ஞானேந்திரிங்கள்} ஐந்தும் சேர்ந்த இந்தப் பத்தின் கலவையில் வசிக்கும் பதினொன்றாவதான மனமும், மனத்தில் பனிரெண்டாவது வசிக்கும் புத்தியும் என ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட செயல்பாட்டில் ஈடுபடுகின்றன.(34) இந்தப் பனிரெண்டும் ஒன்றாக நீடித்தால், அதனால் விளையும் விளைவானது, கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணம் ஏற்படாமல், இந்தப் பனிரெண்டையும் பொறுத்தவரையில் ஒன்றாக இருக்கின்றன. ஆனால் அவை ஆன்மாவில் இருந்து தனியாக இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பனிரெண்டும் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன என்று பொதுவாகப் பேசுவது, உலகின் சாதாராண நோக்கங்களுக்காகப் பேசப்படும் தாழ்ந்த வடிவிலான சாதாரணப் பேச்சு மட்டுமே ஆகும்.(35)கடந்தகாலப் புலனின்ப உணர்வுகளின் விளைவால் கனவு காண்பவன், நுட்பமான வடிவிலிருக்கும் அவனது புலன்களை உணர்ந்து, ஏற்கனவே (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களைக் கொண்டவனாக, தன் புலன்கள் தங்கள் தங்கள் பொருட்களில் இருப்பதாகவும், எனவே, விழித்திருக்கும் போது செயல்படுவதைப் போலவே கற்பனை உடலுடன் அசைந்து செயல்படுவதாகவும் கருதுகிறான்[8].(36) விரைவில் மறைவதும், நிலையற்றதும், இருளின் {தமோ குணத்தின்} ஆதிக்கத்தில் மட்டுமே மனத்தால் உண்டாக்கப்படுவதுமான புலன்களுடன் {புலனுணர்வுகளுடன்} கூடிய புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மா விடுபட்டிருக்கும் நிலையானது, கல்விமான்கள் சொல்வதைப் போல, இருளின் இயல்பைக் கொண்டதும், திரள் உடலால் மட்டுமே அனுபவிக்கப்படுவதுமான இன்பநிலையாகும். (விடுதலையின் இன்பநிலை நிச்சயம் இதிலிருந்து மாறுபட்டதாகும்)[9].(37) முக்தியால் கிட்டும் இன்பநிலையிலும், வேத கல்வியில் ஈர்க்கப்பட்ட விழிப்புநிலையில் கிட்டும் இன்பத்திலும், எவ்வாறு ஒருவன் துன்பத்தைக் கிஞ்சிற்றும் காண்பதில்லையோ, அவ்வாறே விவரிக்கப்பட முடியாததும், உண்மையை மறைப்பதுமான இருள் பரவுவதாக {கிட்டச்செய்வதுபோலத் தோற்றமளிப்பதாகத்} தெரிகிறது. (ஆனால் உண்மையில் முக்தியால் கிட்டும் இன்பநிலை இருளால் களங்கப்படாததாகும்)[10].(38) கனவுகளற்ற உறக்கநிலையில் தோன்றுவதைப் போலவே, விடுதலையிலும் {முக்தி நிலையிலும்}, ஒருவனின் செயல்களைத் தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அக மற்றும் புறநிலை இருப்புகள் (நனவுநிலையிலிருந்து புலன்நுகர் பொருட்கள் வரை சேர்ந்த அனைத்தும்) அனைத்தும் விலக்கப்படுகின்றன. அவித்யையில் மூழ்கிய சிலரில், அவற்றுடன் இவை நீடித்திருக்கின்றன. அவித்யையைக் கடந்து அறிவை வென்றவர்களைப் பொறுத்தவரையில், அவை எந்நேரத்தில் அவர்களுக்கு நேராது[11].(39) ஆன்மா {ஆத்மா}, ஆன்மாவற்றது {அனாத்மா} குறித்த ஊகங்களை அறிந்தவர்கள், (புலன்கள் முதலிய) இந்தத் தொகையே உடல் (க்ஷேத்திரம்) என்று சொல்கிறார்கள். மனத்தைச் சார்ந்திருக்கும் இருப்புப் பொருள் ஆன்மா (க்ஷேத்ரக்ஜன்) என்றழைக்கப்படுகிறது.(40)இச்சூழ்நிலையில், (ஆன்மா மற்றும் உடல் கலந்த நிலை என்ற) நன்கறியப்பட்ட காரணத்தின் விளைவாகவும், அடிப்படை இயல்பின் மூலமும் ஒருவன் நீடித்திருக்கும்போது, (இவை இரண்டில் {அதாவது ஆன்மா மற்றும் உடல் ஆகிய இரண்டில்}) நித்தியமாகச் சொல்லப்படுவது {ஆன்மா} எவ்வாறு அழிவடைய முடியும்?[12](41) சிற்றாறுகள் பெரியனவற்றுக்குள் பாய்ந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கின்றன. (இவ்வாறு பெரிதாகிய) பெரியனவெல்லாம் {பெரிய ஆறுகள் அனைத்தும்} பெருங்கடலுக்குள் விழுந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கிறன்றன. அதே வகையிலேயே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் உயிர் இழப்பின் வடிவமும் நேர்கிறது[13].(42) இவ்வாறிருக்கையில், குணங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் ஜீவனானது, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} அடையப் பெறும்போதும், அதன் குணங்கள் அனைத்தும் மறையும்போதும், வேறுபாட்டினால் குறிப்பிடப்படக்கூடிய பொருளாக அஃது எவ்வாறு இருக்க முடியும்[14]?(43) விடுதலை {முக்தி} அடைவதை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியை அறிந்தவனும், ஆன்மாவை அறிந்து கொள்வதற்காகக் கவனமாக முனைபவனுமான ஒருவன், தண்ணீரில் நனைக்கப்பட்டாலும் ஒருபோதும் அதனால் நனையாத தாமரை இலையைப் போலவே, தன் செயல்களின் தீய கனிகளால் ஒருபோதும் களங்கப்படாதிருப்பான்.(44) ஒருவன், மிக வலுவானவையும், எண்ணிக்கையில் பலவாக இருப்பவையும், பிள்ளைகள், மனைவியரிடம் கொண்ட அன்பு, வேள்வி மற்றும் பிற சடங்குகளில் உள்ள பற்று ஆகிய பற்றுகளில் இருந்து விடுபடும்போதும், அவன் இன்ப துன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்துப் பற்றுகளையும் கடக்கும்போதும், உயர்ந்த கதியை அடைந்து, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} நுழைந்து பாகுபாடற்றவனாகிறான்.(45) (பிரம்மத்தைக் குறித்த) சரியான உள்ளுணர்வுகளுக்கு வழிவகுக்கும் ஸ்ருதிகளின் தீர்மானங்களை ஒருவன் புரிந்து கொண்டு, அறங்களும், பிற சாத்திரங்களும் கற்பிக்கும் அந்த மங்கள அறச் செயல்களைச் செய்யும்போது, அவன் முதுமை மற்றும் மரணம் குறித்த அச்சங்களைத் தவிர்த்துச் சுகமாக இருப்பான். தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்களும், இன்ப துன்பங்களின் வடிவங்களில் இருக்கும் அவற்றின் கனிகளும் {பலன்களும்} மறைந்து அழிவடையும்போது, அனைத்திலும் பற்றற்ற மனிதர்கள் அஃதிலிருந்து எழுந்து, ஆளுமை கொண்ட பிரம்மத்தை முதலில் புகலிடமாக அடைந்து, தங்கள் புத்திகளின் மூலம் பொருள்சாரா பிரம்மத்தைக் காண்கிறார்கள்[15].(46)ஜீவன், தன் கீழ்நோக்கிய இறக்கத்தில் (செயல்களால் அமைக்கப்பட்ட உயிரணுவுக்குள்) அவித்யையின் ஆதிக்கத்தின் கீழ், தான் விரித்த வலைகளுக்குள்ளேயே வசிக்கும் பட்டுப்பூச்சியைப் போலவே இம்மையில் {இவ்வுலகில்} வாழ்கிறது. அந்தப் பட்டுப்பூச்சி அதன் உயிரணுக்களைக் கைவிட்டு விடுபடுவதைப் போலவே, ஜீவனும் செயல்களால் உண்டாக்கப்பட்ட அதன் வீட்டைக் கைவிடுகிறது. அதன் இறுதி விளைவாக, மண்குவியல் பாறைத் திரளில் வேகமாக விழுந்து அழிவதைப் போலவே அதன் துன்பங்களும் அழிவை அடைகின்றன[16].(47) ருரு மான் தனது பழைய கொம்புகளைக் கைவிடுவதைப் போலவோ, பாம்பானது எந்த அறிவிப்பும் கொடுக்காமல் தன் சட்டையைக் கைவிடுவதுபோலவோ, பற்றறுத்த மனிதன் தன் துன்பங்கள் அனைத்தையும் கைவிடுகிறான்.(48) ஒரு பறவையானது, நீருக்குள் விழப்போகும் மரத்தை விட்டு அகன்று, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, (புதிய) ஓய்விடத்தில் இறங்குவதைப் போலவே, பற்றுகளில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும், இன்ப துன்பங்களைக் கைவிட்டுத் தனது நுட்பமான, மற்றும் நுட்பத்திலும் நுட்பமான வடிவங்களில் இருந்து தொடர்பை அறுத்துக் கொண்டு, செழிப்பைக் கொண்ட உயர்ந்த கதியை அடைகிறான்[17].(49) மிதிலையின் தலைவனான ஜனகன், தன் நகரம் எரிவதைக் கண்டு, “இந்தத் தீயில் என்னுடையது எதுவும் எரியவில்லை” என்று அறிவித்தான்” என்று {ஜனதேவனிடம் பஞ்சசிகர்} சொன்னார்[18].(50)இறவாமையை வழங்கவல்லவையும், பஞ்சசிகரால் சொல்லப்பட்டவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன், பஞ்சசிகர் சொன்ன அனைத்தையும் கவனமாகச் சிந்தித்துப் பார்த்து, உண்மையை அடைந்து, தன் துயரங்கள் அனைத்தையும் கைவிட்டு, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்துவந்தான்.(51) ஓ! மன்னா, விடுதலையை {முக்தியை} மதித்து, எவன் இந்த உரையைப் படிக்கிறானோ, எவன் அதைக் குறித்து எப்போதும் சிந்திக்கிறானோ, அவன், பஞ்சசிகரைச் சந்தித்த மிதிலையின் ஆட்சியாளனான ஜனதேவனைப் போலவே, எந்தத் துயரிலும் துன்புறாமல், கவலையில் இருந்து விடுபட்டு விடுதலையை {முக்தியை} அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(52)

தமம் – தற்கட்டுப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 220-தற்கட்டுப்பாடு கொண்டவனின் குறியீடுகளையும், தற்கட்டுப்பாட்டின் சிறப்புகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எதைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியையும், எதைச் செய்வதன் மூலம் துன்பத்தையும் ஒருவன் அடைகிறான்? ஓ! பாரதரே, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் அச்சத்தில் இருந்து விடுபட்டு, (வாழ்வின் நோக்கங்களைப் பொறுத்தவரையில்) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக இங்கே பயணிக்கிறான்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஸ்ருதிகளை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியைக் கொண்டிருந்த பழங்காலத்தவர், பொதுவாக அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்}, மிகக் குறிப்பாகப் பிராமணர்களுக்கும் தற்கட்டுப்பாடு {தமம்} எனும் கடமையையே உயர்வாக மெச்சினார்கள்.(2) அறச்சடங்குகளைப் பொறுத்தவரையில் தற்கட்டுப்பாடு {தமம்} இல்லாதவர்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. அறச்சடங்குகள், தவங்கள், வாய்மை ஆகிய இவை அனைத்தும் தற்கட்டுப்பாட்டிலேயே நிறுவப்பட்டுள்ளன.(3) தற்கட்டுப்பாட்டு ஒருவனின் சக்தியை அதிகரிக்கிறது. தற்கட்டுப்பாடு புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன் பாவமற்றவனாகவும், அச்சமற்றவனாகவும் ஆகி பெரும் விளைவுகளை வெல்கிறான் {அடைகிறான்}.(4) தற்கட்டுப்பாடு உடையவன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான். அவன் இவ்வுலகில் மகிழ்ச்சியாகவே திரிகிறான், அவனது மனம் எப்போதும் உற்சாகமாக இருக்கிறது.(5)

தற்கட்டுப்பாடு கொண்டவனால் அனைத்துவகைக் கிளர்ச்சிகளும் அமைதியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தற்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் அதே போன்ற முயற்சியில் தவறுகிறான். தற்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், (காமம், ஆசை, கோபம் முதலிய வடிவங்களில் இருக்கும்) தனது எண்ணற்ற எதிரிகளைத் தனிப்பட்ட உடல்களாக வசிப்பவையாகக் காண்கிறான்.(6) தற்கட்டுப்பாடு இல்லாத மனிதர்கள், புலிகளையும், ஊனுண்ணும் பிற விலங்குகளையும் போல எப்போதும் அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றனர். {தற்கட்டுப்பாடு இல்லாத} இம்மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே சுயம்பு (பிரம்மன்) மன்னர்களைப் படைத்தான்.(7) (நான்கு) வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும், பிற அறங்கள் அனைத்தைக் காட்டிலும் தற்கட்டுப்பாட்டைப் பயில்வதே தனிச்சிறப்புடையது. அனைத்து வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} மூலமும் அடைவதைவிடத் தற்கட்டுப்பாட்டின் மூலம் அடையப்படும் கனிகள் {பலன்கள்} மிக அதிகமாகும்.(8) நான் இப்போது, தற்கட்டுப்பாட்டை உயர்வாக மதிக்கும் மனிதர்களின் குறியீடுகளைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்[1]. உயர்ந்த பண்பு, அமைதியான மனநிலை {பரபரப்பின்மை}, மனநிறைவு, நம்பிக்கை,(9) மன்னிக்கும் தன்மை, மாறாத எளிமை, அதிகம் பேசாமை, பணிவு, பெரியோர்களிடம் மரியாதை, நலநாட்டம், அனைத்து உயிரினங்களிடமும் கருணை, வெளிப்படைத்தன்மை,(10) மன்னர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்போரைக் குறித்த பேச்சையும், போலியான, பயனற்ற விவாதங்களையும், பிறரைப் புகழ்வதையும், இகழ்வதையும் தவிர்த்தல் ஆகியவையே அவை {தற்கட்டுப்பாடு கொண்டவர்களின் குறியீடுகளாகும்}. தற்கட்டுப்பாட்டுடன் கூடிய மனிதன், விடுதலையை {முக்தியை} விரும்பி, தற்போதைய இன்பங்களையும், துன்பங்களையும் அமைதியாகத் தாங்கிக் கொள்பவனாக, எதிர்பார்ப்புகளைக் கொண்டோரின் மூலம் ஒருபோதும் கிளர்ச்சியடையவோ, சோர்வடையவோ மாட்டான்.(11)பழிவாங்கும் குணம் மற்றும் அனைத்து வகை வஞ்சனைகள் அற்றவனாக, புகழ்ச்சியாலோ, பழியாலோ அசைக்கப்பட முடியாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், நன்னடத்தை, நல்ல பழக்கவழக்கம், தூய ஆன்மா, உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், தன் ஆசைகளின் முற்றான தலைவனாகவும் இருப்பான்.(12) அத்தகைய மனிதன் இவ்வுலகில் வெகுமதிகளைப் பெற்று, மறுமையில் சொர்க்கத்திற்குச் செல்வான். அடைய முடியாதவற்றைத் தன் உதவியின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அடையச் செய்யும் அத்தகைய மனிதன், மகிழ்ச்சிக் களிப்படைபவனாகிறான்[2].(13) உலகளாவிய நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அத்தகைய மனிதன், எவருடனும் ஒருபோதும் பகையை வளர்க்க மாட்டான். ஆழ்ந்த அமைதி கொண்ட பெருங்கடலைப் போல அமைதியான அவன், ஞானத்தால் ஆன்மா நிறைந்தவனாகவும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாகவும் இருப்பான்.(14) புத்தியைக் கொண்டவனும், உலகளாவிய மதிப்புக்குத் தகுந்தவனுமான அத்தகைய தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன், எந்த உயிரினத்திடமும் அச்சத்தையூட்டாதவனாகவும், தானும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாதவனாகவும் இருப்பான்.(15)பெரும் பொருள்களை அடைகையில் ஒருபோதும் மகிழ்சியடையாமலும், துயரத்தில் ஒருபோதும் துன்பங்கொள்ளாமலும் இருக்கும் அவன், நிறைவான ஞானத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதனே தற்கட்டுப்பாடு உடையவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அத்தகைய மனிதனே மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான்.(16) சாத்திரங்களை அறிந்தவனாக, தூய ஆன்மா கொண்டவனாக இருக்கும் தற்கட்டுப்பாடுடைய மனிதன், நன்மைக்காகச் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் செய்து, உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவிக்கிறான்.(17) எனினும், தீய ஆன்மா கொண்டவர்களோ, நலநாட்டம், மன்னிக்கும்தன்மை, அமைதி, நிறைவு, இனிய பேச்சு, வாய்மை, ஈகை, ஆறுதல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பாதையில் செல்ல மாட்டார்கள்.(18) அவர்களுடைய பாதையானது, காமம், கோபம், பேராசை, பிறரிடம் பொறாமை, தற்புகழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டதாகும். காமம் மற்றும் கோபத்தை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தன் புலன்களின் முற்றான தலைவனாகும் ஒரு பிராமணன்,(19) தன்னை மிகக் கடுமையான தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டும், தனக்கு முழுமையான அழிவு கிடையாது என்பதை அறிந்தாலும் தன் காலம் வரும் வரை உடலைத் தாங்கிக் கொண்டிருப்பவனாகக் காத்திருந்து இந்த உலகில் வாழ்ந்து வர வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(20)

தவமும், உபவாசமும்! – சாந்திபர்வம் பகுதி – 221-தவம் மற்றும் உண்ணாநோன்பின் முறைகளையும், அவற்றின் பயன்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேள்விகள் மற்றும் பிற சடங்குகளுக்கு அடிமைகளாக உள்ள மூன்று மறுபிறப்பாள வகையினரும், வேள்விகளில் தேவர்களுக்கான படையலாக வைக்கப்பட்டு எஞ்சும் இறைச்சி மற்றும் மது ஆகியவற்றை, பிள்ளைகள் மற்றும் சொர்க்கத்தை அடையும் நோக்கத்துடன் உண்கிறார்கள். ஓ! பாட்டா, இந்தச் செயலின் பண்பியல்பு யாது?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகளையும், நோன்புகளையும் நோற்காமல், தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்யும் மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். (அவர்கள் இம்மையிலேயே வீழ்ந்துவிட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்). மறுபுறம், வேத வேள்விகள், நோன்புகளை நோற்கவும், சொர்க்கத்தின் வடிவிலான கனிகளில் உள்ள விருப்பத்தாலும், பிள்ளைகளைப் பெறுவதில் உள்ள விருப்பத்தாலும் உந்தப்பட்டு அத்தகைய உணவை உண்பவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள், ஆனால் அவர்களின் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் கீழே வீழ்வார்கள்” என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உண்ணாநோன்பும் {உபவாசமும்} தபமே {தவமே} என்று சாதாரண மக்கள் சொல்கிறார்கள். எனினும், உண்ணாநோன்பு அவ்வாறானதா? அல்லது தவம் வேறேதும் ஒன்றா?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றால் அளக்கப்படும் உண்ணாநோன்பை மக்கள் தவமாகக் கருதுகிறார்கள். எனினும், நல்லோரின் கருத்தின் படி அது தவமாகாது. மறுபுறம், உண்ணாநோன்பென்பது {உபவாசம் என்பது}, ஆன்மா ஞானம் அடைவதற்கான ஒரு தடையாகும்[1].(4) (அனைத்திலும் கடினமான ஒன்றான) செயல்களைத் துறப்பது, (அனைத்துயிரினங்களையும் சமமாகக் கருதி அவை அனைத்தையும் வழிபடுவதை உள்ளடக்கிய) பணிவு ஆகியவையே உயர்ந்த தவங்களாகும். இது தவங்கள் அனைத்திலும் மேன்மையான தனிச்சிறப்புக் கொண்டதாகும். அத்தகைய தவத்தைச் செய்பவன் எப்போதும் உபவாசம் இருப்பவனாகவும், எப்போதும் பிரம்மச்சரிய வாழ்வை நோற்பவனாகவும் கருதப்படுகிறான்.(5) எப்போதும் உறக்கமற்றவனும், எப்போதும் அறத்தைச் செய்வதில் மட்டுமே ஈடுபடுபவனுமான ஒரு பிராமணன், குடும்பத்தின் மையத்தில் வாழ்ந்து வந்தாலும் அவன் எப்போதும் ஒரு முனியாகவும், தேவனாகவும், அதற்கு மேலானவனாகவும் ஆகிறான்.(6) அவன் எப்போதும் அமுதத்தை உண்பவனாகவும், எப்போதும் தேவர்கள் மற்றும் விருந்தினர்களைத் துதிப்பவனாகவும் ஆகிறான்.(7) உண்மையில் அவன், எப்போதும் வேள்வியில் எஞ்சியவற்றை மட்டுமே உண்டு வாழ்பவனாகவும், விருந்தோம்பல் கடமையில் எப்போதும் ஈடுபடுபவனாகவும், நம்பிக்கை நிறைந்தவனாகவும், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை எப்போதும் வழிபடுபவனாகவும் கருதப்படுகிறான்” என்றார் {பீஷ்மர்}.(8)யுதிஷ்டிரன், “அத்தகைய தவத்தைப் பயில்பவன், எப்போதும் உண்ணா நோன்பிருப்பவனாகவோ, எப்போதும் பிரம்மச்சரிய நோன்பில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவோ, வேள்வியில் எஞ்சுபவற்றை எப்போதும் உண்டு வாழ்பவனாகவோ, விருந்தினர்களை எப்போதும் மதிப்பவனாகவும் எவ்வாறு கருதப்படலாம்?” என்று கேட்டான்.(9)

பீஷ்மர், “ஒருவன் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் பகலில் ஒருமுறையும், இரவில் ஒருமுறையும் உண்டு, இடைவேளையில் எதையும் உண்ணாதிருந்தால், அவன் எப்போதும் உண்ணாநோன்பு {உபவாசம்} இருப்பவனாகக் கருதப்படுவான்.(10) அத்தகைய பிராமணன், எப்போதும் வாய்மை பேசுவதன் மூலமும், எப்போதும் ஞானத்தை ஒட்டி ஒழுகுவது, வேறுகாலங்களில் அல்லாமல் பருவகாலத்தில் மட்டும் தன் மனைவியிடம் செல்வது ஆகியவற்றின் மூலமும் பிரம்மச்சாரி ஆகிறான்.(11) வேள்வியில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணாமல் இருப்பதன் மூலம், அவன் புலால் உண்ணாதவனாகிறான்[2]. ஈகையாளனாக இருப்பதன் மூலம் அவன் எப்போதும் தூய்மையானவனாகவும், பகலில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடைபவனாகவும் ஆகிறான்.(12) ஓ! யுதிஷ்டிரா, தன் பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு மட்டுமே உண்ணும் மனிதன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகிறான்.(13) தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உணவு அளிக்கும் வரை உண்ணாதிருக்கும் பிராமணன், அத்தகைய நோன்பின் மூலம் சொர்க்கத்தையே வெல்கிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், பணியாட்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியவற்றை மட்டுமே உண்பவன் வேள்வி எச்சங்களில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15)அத்தகைய மனிதர்கள், மறுமையில் எண்ணற்ற இன்ப உலகங்களை வெல்கிறார்கள். அவர்களுடைய இல்லங்களுக்குப் பிரம்மனுடன் கூடிய தேவர்களும், அப்சரஸ்களும் வருகிறார்கள்.(16) தேவர்கள் மற்றும் பித்ருக்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்பவர்கள், தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் நிலையான மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்களைக் கடத்தி, இறுதியாக இவ்வுடலை விட்ட மிக உயர்ந்த கதியை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(17)

ஸ்வபாவம் – இயல்பு! – சாந்திபர்வம் பகுதி – 222-உண்மையில் மனிதனே செயல்படுபவனாகக் கருதப்பட வேண்டுமா என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ கனிகளை உண்டாக்கும் நோக்கத்தில், நற்செயல்களும், தீச்செயல்களும் மனிதனைப் பற்றுகின்றன.(1) எனினும், மனிதனையே செயல்படுபவனாகக் கருதலாமா? அல்லது அவன் அவ்வாறு கருதப்படக்கூடாதா? இக்கேள்வியில் என் மனம் ஐயத்தால் நிறைகிறது. ஓ! பாட்டா, இதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக, பழங்கதையில் பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) தைத்தியர்களின் தலைவனான பிரஹலாதன் உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்றில்லாதவனாக இருந்தான். அவனது பாவங்கள் கழுவப்பட்டன. நற்குலத்தில் பிறந்த அவன், பெரும் கல்வியைக் கற்றிருந்தான். மயக்கம் மற்றும் செருக்கில் இருந்து விடுபட்டவனாகவும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} எப்போதும் நோற்பவனாகவும், பல்வேறு நோன்புகளை அர்ப்பணிப்புடன் நோற்பவனாகவும்(4) இருந்த அவன், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாகக் கருதினான். தற்கட்டுப்பாடுடைய அவன், ஒரு வெற்று அறையில் {சிறையில்} தன் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான். படைக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் அழிவை அறிந்த அவன்,(5) தனக்கு நிறைவு தராதவற்றில் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனாகவும், ஏற்புடைய பொருட்களை அடையும்போது ஒருபோதும் மகிழாதவனுமாக இருந்தான். அவன் தங்கத்தையும், மண்ணையும் சமமான பார்வையுடன் பார்ப்பவனாக இருந்தான்.(6) ஆன்மா குறித்த கல்வி, விடுதலையை {முக்தியை} அடைவது, உறுதியான ஞானம் ஆகியவற்றில் நிலையாக ஈடுபட்ட அவன் வாய்மையைக் குறித்த நிலையான தீர்மானங்களை அடைந்தவனாக இருந்தான்.(7)

பொருட்கள் அனைத்திலும் உயர்வானது, உயர்வல்லாதது ஆகியவற்றை அறிந்தவனாக, அனைத்துமறிந்தவனாக, உலகளாவிய பார்வை கொண்டவனாக இருந்த அவன், ஒருநாள் தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்திய நிலையில் ஒரு தனிமையான அறையில் இருந்தபோது, அவனை விழிப்படையச் செய்ய விரும்பிய சக்ரன் {இந்திரன்} அவனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(8) “ஓ! மன்னா {பிரஹலாதா}, ஒரு மனிதன் அனைவரின் மதிப்பை வெல்லத்தக்க அனைத்துக் குணங்களும் உன்னுள் நிரந்தரமாக இருப்பதை நான் காண்கிறேன்.(9) உன் புத்தியானது, ஒரு குழந்தையுடையதைப் போலப் பற்று மற்றும் வெறுப்பில் {விருப்புவெறுப்பில்} இருந்து விடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. நீ ஆன்மாவை அறிந்திருக்கிறாய். ஆன்மா குறித்த அறிவை அடைய எது சிறந்த வழிமுறையென நீ கருதுகிறாய்?(10) நீ உனது முந்தைய நிலையில் இருந்து வீழ்ந்தவனாக, உனது எதிரிகள் {தேவர்கள்} கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவனாக, செழிப்பை இழந்தவனாகக் கயிறுகளால் கட்டப்பட்டவனாக இப்போது இருக்கிறாய். நீ இருக்கும் தற்போதைய சூழ்நிலை துன்பத்தைத் தரவல்லது. இருப்பினும், ஓ! பிரஹலாதா நீ எவ்வாறு துன்பங்கொள்ளாமல் இருக்கிறாய்?(11) ஓ! திதியின் மகனே, இந்நிலை ஞானத்தை அடைந்ததால் ஏற்படுகிறதா? அல்லது உன் மனோவுறுதியால் ஏற்படுகிறதா? ஓ! பிரஹலாதா, உனக்கு நேர்ந்த பேரிடர்களைப் பார், இருப்பினும் நீ மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பவனைப் போலத் தெரிகிறாயே” என்று கேட்டான் {இந்திரன்}.(12)

இவ்வாறு இந்திரனால் தூண்டப்பட்டவனும், உறுதியும், வாய்மையில் தீர்மானமான முடிவுகளைக் கொண்டவனுமான அந்தத் தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்}, முன்னவனிடம் {இந்திரனிடம்}, பெரும் ஞானத்தைக் குறிக்கும் இந்த இனிய வார்த்தைகளில் மறுமொழி கூறினான்.(13)

பிரஹலாதன் {இந்திரனிடம்}, “படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றை அறியாதவன், அந்த அறியாமையின் மூலம் திகைப்படைகிறான். எனினும், அந்த இரண்டையும் அறிந்தவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(14) அனைத்து வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கும் உள்ள பொருட்கள், இல்லாத பொருட்கள் ஆகியவை தங்கள் சொந்த இயல்பின் விளைவால் தோன்றுகின்றன, அல்லது மறைகின்றன. (அத்தகைய தோற்றப்பாடு உண்டாவதற்கு) எந்தத் தனிப்பட்ட முயற்சியும் தேவைப்படுவதில்லை[1].(15) எனவே, தனிப்பட்ட முயற்சியேதும் இல்லாத போது, நாம் காணும் இவை அனைத்தையும் எந்த ஒரு தனிப்பட்டவனும் உண்டாக்கவில்லை {எந்த மனிதனின் செயலிலும் இவை உண்டாகவில்லை} என்பது வெளிப்படை. ஆனால், (உண்மையில்) அந்த ஒருவன் (அல்லது சித்) ஒருபோதும் எதையும் செய்வதில்லை, இருப்பினும் (அறியாமையின் ஆதிக்கத்தின் மூலம்) நாமே நிறுவுகிறோம் என்ற ஒரு நனவுநிலை {அஹங்காரம்} தானே படர்கிறது.(16) நல்ல அல்லது தீய செயல்களைச் செய்பவனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன், குறை ஞானத்தைக் கொண்டவனாவான். என் தீர்மானத்தின்படி அத்தகைய மனிதன் உண்மையை அறிந்தவனல்ல[2].(17)ஓ! சக்ரா {இந்திரா}, ஒருவன் {மனிதன்} என்றழைக்கப்படுபவன் உண்மையில் செயல்படுபவனாக இருந்தால், தன் நன்மைக்காக அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட வேண்டும். அந்தச் செயல்கள் ஏதும் தோல்வியடையக் கூடாது.(18) இயன்றதில் உயர்ந்த அளவுக்குப் போராடுபவர்களுக்கு மத்தியிலும், விரும்பப்படாதது நடக்காததும், விரும்புவது நடப்பதும் காணப்படவில்லை. அவ்வாறிருக்கையில், தனிப்பட்ட முயற்சியால் என்ன பயன் ஏற்படுகிறது?(19) சிலரின் வழக்கில், அவர்களது பங்காக எந்த முயற்சியும் செய்யப்படாமலே விரும்பாதது நடக்காததையும், விரும்புவது நிறைவேறுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாறெனில், இஃது இயற்கையின் {ஸ்வபாவத்தின்} விளைவாகவே இருக்க முடியும்.(20) இயல்புக்குமிக்கத் தன்மைகளை வெளிப்படுத்தும் சிலர், மேன்மையான புத்தியைக் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த குணமும், சிறுமதியும் கொண்ட பிறரிடம் இருந்து செல்வத்தை வேண்டி நிற்பதையும் காண முடிகிறது.(21) உண்மையில், இயற்கையின் தூண்டுதலின் பேரில், ஒருவனுக்குள் நல்ல, அல்லது கெட்ட குணங்கள் அனைத்தும் நுழையும்போது, அவன் (தன் மேன்மையான உடைமைகளைக் குறித்து) தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்கு என்ன இருக்கிறது?(22) இவை அனைத்தும் இயற்கையில் {ஸ்வபாவத்தில்} இருந்து பாய்கின்றன. இதுவே என் தீர்மானமான முடிவாகும். என்னைப் பொறுத்தவரையில் விடுதலையும் {முக்தியும்}, தன்னறிவும் {சுயஞானமும் / ஆன்ம ஞானமும்} அதே மூலத்தில் இருந்தே பாய்கின்றன.(23)

இவ்வுலகில், மனிதர்களைப் பற்றியிருக்கும் நல்ல அல்லது தீய கனிகள் அனைத்தும், செயல்களின் விளைவுகளாகவே கருதப்படுகின்றன. நான் இப்போது செயல்களைக் குறித்து முழுமையாக உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(24) ஒரு காகம், ஏதோ உணவை உண்ணும்போது, மீண்டும் மீண்டும் கரைந்து (தன் இனத்தைச் சேர்ந்த பிற காகங்களுக்கு) அந்த உணவின் இருப்பை அறிவிக்கிற வகையிலேயே நம் செயல்கள் அனைத்தும் இயற்கையின் அறிகுறிகளை மட்டுமே அறிவிக்கின்றன.(25) உயர்ந்ததும், தானே நிலைத்திருப்பதுமான இயற்கையை அறியாமல், அவளது {இயற்கையின்} மாறுபாடுகளை மட்டுமே அறிந்தவன், தனது அறியாமையின் விளைவால் திகைப்படைகிறான். எனினும், இயற்கை மற்றும் அதன் மாறுபாடுகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் ஒருவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(26) இருக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கையையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. இதில் ஒருவன் அடையும் தீர்மான உறுதியின் விளைவால் அவன் செருக்காலோ, ஆணவத்தாலோ ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(27) அறவிதிகள் அனைத்தின் தோற்றுவாயும் எதுவென நான் அறியும்போதும், அனைத்துப் பொருட்களின் நிலையில்லாமையையும் நான் அறியும்போதும், ஓ! சக்ரா, துயரில் ஈடுபட இயலாதவனாகிறேன். இவை அனைத்தும் ஓர் எல்லைக்குட்பட்டவையாக {முடிவு கொண்டவையாக} இருக்கின்றன.(28)

பற்றில்லாமல், செருக்கில்லாமல், ஆசையும், நம்பிக்கையும் {எதிர்பார்ப்பும்} இல்லாமல், கட்டுகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தோன்றுவதையும், மறைவதையும் பார்த்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் நான் என் காலத்தைக் கடத்தி வருகிறேன்.(29) ஓ! சக்ரா {இந்திரா}, ஞானம், தற்கட்டுப்பாடு, நிறைவு ஆகியவற்றைக் கொண்டவனும், ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாதவனும், தன்னறிவின் {சுயஞானத்தின்} ஒளியில் அனைத்துப் பொருட்களையும் காண்பவனுமான ஒருவனுக்கு எந்தத் தொல்லையோ கவலையோ இருக்காது.(30) இயற்கையின் மீதோ, அவளது {இயற்கையின்} மாற்றங்களின் மீதோ நான் எந்த விருப்பையோ, வெறுப்பையோ கொள்வதில்லை. இப்போது நான் ஒருவரையும் என் பகைவராகவோ, என் சொந்தக்காரனாகவோ காணவில்லை.(31) ஓ! சக்ரா, எக்காலத்திலும் நான் சொர்க்கத்திலோ, இவ்வுலகிலோ, பாதாள உலகங்களிலோ பேராசை கொள்ளவில்லை. ஆன்மாவைப் புரிந்து கொள்வதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்ற நிலையேதும் கிடையாது. ஆனால் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்த நிலையில் உள்ள ஆன்மாவால் பேரின்பத்தை அனுபவிக்க முடியாது. எனவே நான் எதையும் விரும்புவதில்லை” என்றான் {பிரஹலாதன்}[3].(32)சக்ரன் {இந்திரன் பிரஹலாதனிடம்}, “ஓ பிரஹலாதா, எந்த வழிமுறைகளின் மூலம் இவ்வகை ஞானத்தை அடையலாம், எதன் மூலம் இவ்வகை அமைதியை ஒருவன் தனதாக்கிக் கொள்ளலாம் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.(33)

பிரஹலாதன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, எளிமை, கவனமிக்கத் தன்மை, ஆன்மாவைத் தூய்மையாக்கல், ஆசைகளைத் திறமையாகக் கட்டுப்படுத்தல், பெரியோர்களுக்காகக் காத்திருத்தல் {பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல்} ஆகியவற்றின் மூலம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்லலாம்.(34) இயற்கையிலிருந்தே ஒருவன் ஞானம் அடைகிறான் என்பதையும், அதே காரணத்தின் மூலமே அமைதியையும் அடைகிறான் என்பதையும் அறிவாயாக. உண்மையில், அனைத்தையும் நீ இயற்கையின் மூலமே பார்க்கிறாய்” என்றான்.(35)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பிரஹலாதனால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து, உற்சாகமிக்க இதயத்துடன் அவ்வார்த்தைகளைப் பாராட்டினான்.(36) பிறகு, அந்த மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, தைத்தியர்களின் தலைவனை {பிரஹலாதனை} வழிபட்டு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் சொந்த வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்” என்றார் {பீஷ்மர்}.(37)

இந்திரனும் பலியும்! – சாந்திபர்வம் பகுதி – 223-இந்திரனுக்கும், பலிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பலியைத் தேடிய இந்திரன்; பிரம்மனிடம் விசாரித்தது; பலி இருக்கும் இடத்தைச் சொன்ன பிரம்மன்; கழுதையாகப் பிறந்திருந்த பலியைக் கண்ட இந்திரன் அவனை எள்ளி நகையாடியது; காலத்தின் வன்மை குறித்து இந்திரனுக்குப் பதிலளித்த பலி…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, செழிப்பை இழந்தவனும், காலத்தின் கனத்த தண்டத்தால் நொறுக்கப்பட்டவனுமான ஓர் ஏகாதிபதி, எவ்வகைப் புத்தியைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் அதற்கு மேலும் வாழ முடியும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனனின் மகனான பலிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) வாசவன், அசுரர்கள் அனைவரையும் அடைக்கிய பிறகு, ஒரு நாள், பிரம்மனிடம் சென்று, கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கி, பலி எங்கிருக்கிறான் என்பது குறித்து விசாரித்தான்.(3)

{இந்திரன் பிரம்மனிடம்}, “ஓ! பிரம்மா, தான் விரும்பிய அளவுக்குப் பெரிதாகத் தானம் செய்யப்பட்டாலும் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்த பலியை எங்குக் காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக.(4) அவன் காற்றின் தேவனாக இருந்தான். அவன் வருணனாக இருந்தான். அவன் சூரியனாக இருந்தான். அவன் சோமனாக இருந்தான். அனைத்து உயிரினங்களுக்கும் வெப்பமூட்டக்கூடிய அக்னியாக அவன் இருந்தான். (நம் அனைவரின் பயன்பாட்டுக்கான) நீராகவும் ஆனான். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்பதை நான் காணவில்லை.(5) முன்பு அவன் (சூரியனாக) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டி (மாலையில்) மறைந்தான். சோம்பலைக் கைவிட்ட அவன், உரிய காலங்களில் அனைத்து உயிரினங்களின் மீதும் மழையாகப் பொழிந்தான். அந்தப் பலியை நான் இப்போது காணவில்லை. ஓ! பிரம்மா, உண்மையில் இப்போது நான் அந்த அசுரர்களின் தலைவனை {பலியை} எங்கே காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)

பிரம்மன் {இந்திரனிடம்}, “ஓ! மகவத் {இந்திரா}, இப்போது நீ இவ்வாறு பலியைக் குறித்து விசாரிப்பது உனக்குத் தகாது. எனினும், ஒருவனால் கேட்கப்படும்போது மற்றொருவன் பொய் பேசக்கூடாது என்ற காரணத்தினால் நான் பலி எங்கிருக்கிறான் என்பதை உனக்குச் சொல்வேன்.(7) ஓ! சச்சியின் தலைவா, பலி இப்போது ஓட்டகங்களிலோ, காளைகளிலோ, கழுதைகளிலோ, குதிரைகளிலோ தன் பிறப்பை எடுத்து, தன் இனத்தில் முதன்மையானவனாக ஒரு வெற்று அறையில் இருக்கலாம்” என்றான்.(8)

சக்ரன் {இந்திரன்}, “ஓ! பிரம்மா, நான் பலியை ஒரு வெற்று அறையில் சந்தித்தால், அவனை நான் கொல்லவேண்டுமா? அல்லது விட வேண்டுமா? நான் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)

பிரம்மன், “ஓ சக்ரா, பலிக்குத் தீங்கிழைக்காதே. பலி மரணத்திற்குத் தகுந்தவனல்ல. ஓ வாசவா, ஓ சக்ரா {இந்திரா}, மறுபுறம், அவனிடம் அறநெறி குறித்த போதனையை நீ விருப்பத்துடன் வேண்ட வேண்டும்” என்றான்”.(10)

பீஷ்மர் தொடர்ந்தார், “தெய்வீகமான படைப்பாளனால் {பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்ட இந்திரன், பெரும் காந்தியுடன் கூடிய சூழ்நிலையில் ஐராவதத்தின் முதுகில் அமர்ந்து கொண்டு உலகத்தில் திரிந்தான்.(11) படைப்பாளன் சொன்னது போலவே அவன் {இந்திரன்}, ஒரு கழுதையின் வடிவத்தை உடுத்தி ஒரு வெற்று அறையில் வாழ்ந்திருந்த பலியைச் சந்தித்தான்.(12)

சக்ரன் {பலியிடம்}, “ஓ! தானவா, நீ இப்போது உமிகளை உணவாக உண்டு வாழும் ஒரு கழுதையாகப் பிறந்திருக்கிறாய். நீ இவ்வகையில் பிறந்தது நிச்சயம் ஓர் இழிநிலையே. இதற்காக நீ வருந்துகிறாயா? இல்லையா?(13) நான் இதற்கு முன் ஒருபோதும் காணாததைக் காண்கிறேன். செழிப்பு, நண்பர்கள் ஆகியவற்றை இழந்தவனாக, சக்தி மற்றும் ஆற்றல் குறைந்தவனாக உன் எதிரிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் உன்னை நான் காண்கிறேன்.(14) ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்களுடன் உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களை ஒன்றுமில்லாதவர்களாகக் கணக்கிட்டு முன்பு உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய். (15) உன்னையே தங்கள் பாதுகாவலனாகக் கருதிய தைத்தியர்கள், உன் ஆட்சியின் கீழ் வாழ்ந்தார்கள். உன் சக்தியின் மூலம், பூமியானது உழவுக்குக் காத்திராமலே பயிர்களை விளைவித்தது. எனினும், இன்றோ நீ பேரிடரில் மூழ்கியிருப்பதை நான் காண்கிறேன். இதற்காக நீ துன்புறுகிறாயா? இல்லையா?(16) முன்பு நீ செருக்கு படர்ந்த முகத்துடன், கிழக்குக் கடற்கரையில் உன் உற்றாருக்கு மத்தியில் பெருஞ்செல்வங்களைப் பிரித்துக் கொடுத்த போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(17)

முன்பெல்லாம் சுடர்மிக்கக் காந்தியுடன் இருந்த நீ உன் முன் நடனமிடும் ஆயிரக்கணக்கான தெய்வீகக் காரிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாய்.(18) அவர்கள் அனைவரும் தாமரை மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் தங்கத்தைப் போன்ற பிரகாசமிக்கத் தோழிகளையும் கொண்டிருந்தனர். ஓ! தானவர்களின் தலைவா, அப்போதெல்லாம் உன் மனநில்லை என்னவாக இருந்தது? இப்போது என்னவாக இருக்கிறது?(19) தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குடையை நீ கொண்டிருந்தாய். அந்நாட்களில் முழுமையாக நாற்பத்திரண்டாயிரம் கந்தர்வர்கள் உன் முன் நடனமிடுவார்கள்[1].(20) உன் வேள்விகளில் நீ மிகப் பெரியதும், முழுமையாகத் தங்கத்தாலானதுமான யூபத்தைக் கொண்டிருந்தாய். அத்தகைய தருணங்களில் நீ ஆயிரம் லட்சம் பசுக்களைத் தானமாக அளித்தாய். ஓ! தைத்தியா, அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(21) முன்பு நீ வேள்வியில் ஈடுபட்டு, சம்யையைச் சுழற்றும் விதியைப் பின்பற்றி முழுப் பூமியையும் வலம் வந்தாய். அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?[2](22) நான் இப்போது அந்தத் தங்கக் கலனையோ {தங்க ஜாடியையோ}, உனது குடையையோ, உனது விசிறிகளையோ காணவில்லை. மேலும், ஓ! அசுரர்களின் மன்னா, பெரும்பாட்டனால் {பிரம்மனால்} உனக்குக் கொடுக்கப்பட்ட உன் மலர்மாலையையும் நான் காணவில்லை” என்றான் {இந்திரன்}.(23)பலி {இந்திரனிடம்}, “ஓ! வாசவா {இந்திரா}, நீ இப்போது என் கலனையும், குடையையும், விசிறிகளையும் காணவில்லை. பெரும்பாட்டனால் எனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட எனது மலர்மாலையையும் நீ காணவில்லை.(24) நீ கேட்கும் அந்த என் மதிப்புமிக்க உடைமைகள் இப்போது ஒரு குகையின் இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் என் நேரம் வரும்போது நான் அவற்றை நிச்சயம் காண்பேன்.(25) எனினும், இந்த உன் நடத்தை உன் புகழுக்கோ, பிறப்புக்கோ தகுந்ததல்ல. செழிப்பில் இருக்கும் நீ, வறுமையில் மூழ்கியிருக்கும் என்னைக் கேலி செய்ய விரும்புகிறாய்.(26) ஞானத்தை அடைந்தவர்கள், அதன் மூலம் நிறைவை அடைந்தவர்கள், அமைதிமிக்க ஆன்மாக்கள், உயிரினங்களுக்கு மத்தியில் அறவோராகவும், நல்லோராகவும் இருப்பவர்கள், ஒருபோதும் துயரில் துன்புறுவதோ, இன்பத்தில் மகிழ்வதோ கிடையாது.(27) எனினும், ஓ! புரந்தரா, இழிபுத்தியினாலே நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடுகறாய். என்னைப் போல நீ ஆகும்போது, இது போன்ற பேச்சுகளில் நீ ஈடுபடமாட்டாய்” என்றான் {பலி}” என்றார் {பீஷ்மர்}.(28)

காலம்! – சாந்திபர்வம் பகுதி – 224-வாழும் உயிரினங்கள் இதையும், அதையும் தாங்களே செய்வதாகத் தற்புகழ்ச்சி செய்து கொண்டாலும், அனைத்துப் பொருட்களைப் படைப்பதும் அழிப்பதும் காலமே என்ற உண்மையை இந்திரனுக்குப் பலி விளக்கியதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த பலியைக் கண்டு சிரித்த சக்ரன் {இந்திரன்}, தான் முன்பு சொன்னதைவிடக் கூர்மையான ஒன்றைச் சொல்ல அவனிடம் மீண்டும் பேசினான்.(1)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “முந்தைய காலத்தில், ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்கள் புடைசூழ, உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களைப் புல்லாக மதித்து, உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய்.(2) எனினும், இப்போது நீ உற்றார் மற்றும் நண்பர்கள் ஆகிய இருவராலும் கைவிடப்பட்டிருக்கிறாய். உனக்கு நேர்ந்திருக்கும் இந்த வருந்தத்தக்க நிலையைக் கண்டு, நீ துயருறுகிறாயா? இல்லையா?(3) முன்பு உலகங்கள் முழுவதும் உன் ஆட்சியின் கீழ் இருந்தன, உன் இன்பமும் பெரிதாக இருந்தது. புற காந்தியில் உனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சிக்காக நீ துயருறுகிறாயா? இல்லையா? என நான் கேட்கிறேன்” என்று கேட்டான்.(4)

பலி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, உண்மையில், காலத்தின் போக்கில் அவை யாவற்றையும் நிலையற்றதாகக் கருதுவதால் நான் துயருறவில்லை. இந்தப் பொருட்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது.(5) ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்கள் கொண்டிருக்கும் இவ்வுடல்கள் அனைத்தும் நிலையற்றவையாகும். ஓ! சக்ரா, இந்தக் காரணத்தினால் (இந்த என் கழுதைத் தோற்றத்திற்காக) நான் வருந்தவில்லை. இந்த வடிவமும் என் தவறு எதனாலும் ஏற்படவில்லை.(6) இயக்கக் கோட்பாடும், உடலும் தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே ஒன்றாகின்றன. அவை ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே அழிவை அடைகின்றன.(7) இருப்பினும், இவ்வடிவை {கழுதை வடிவை} ஏற்ற நான், நிரந்தரமாக இதனுடனே பிணைக்கப்பட்டிருக்கவில்லை. ஞானத்தின் விளைவாக இஃதை அறிந்திருப்பதால் கவலைக்கான எந்தக் காரணமும் எனக்கில்லை.(8) ஆறுகள் அனைத்தின் இறுதி ஓய்விடமாகப் பெருங்கடல் இருப்பதைப் போல, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தின் கதியும் மரணம்தான். ஓ! வஜ்ரதாரியே, இதை நன்கறிந்த மனிதர்கள் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(9) எனினும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் தீர்மான இழப்பில் மூழ்குபவர்கள், இஃதை அறிவதில்லை. புத்தியை இழந்தவர்கள் பேறின்மையுடைய கனத்தின் அடியில் மூழ்கித் தொலைகிறார்கள்.(10)

கூரிய புத்தியை அடையும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் அழிப்பதில் வெல்கிறான். பாவமற்ற ஒருவன் நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} அடைந்து, அஃதை அடைந்ததன் மூலம் உற்சாகம் நிறைந்தவனாகிறான்.(11) எனினும், நல்லியல்பின் குணத்தில் இருந்து வழுவி மீண்டும் மீண்டும் மறுபிறப்பை அடைபவர்கள், ஆசை மற்றும் புலன்நுகர் பொருட்களால வழிநடத்தப்பபட்டு, கவலை மற்றும் துயரில் ஈடுபடும் கடப்பாட்டை அடைகிறார்கள்.(12) ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைவதில் வெற்றி, அல்லது தோல்வி, வாழ்வு, அல்லது மரணம், இன்பம், அல்லது துன்பத்தைக் கொடுக்கும் செயல்பாட்டின் கனிகள் ஆகியவற்றை நான் வெறுப்பதோ, விரும்புவதோ இல்லை.(13) ஒருவன் மற்றொருவனைக் கொல்லும்போது, அவன் அந்த மற்றொருவனின் உடலை மட்டுமே கொல்கிறான். தானே மற்றொருவனைக் கொன்றதாக நினைக்கும் மனிதன், தானே கொல்லப்படுகிறான். உண்மையில், அவர்களில் கொல்பவன் மற்றும் கொல்லப்படுபவன் ஆகிய இருவரும் உண்மையை அறியாதவர்களே[1].(14) ஓ! மகவத் {மகவான் / இந்திரா}, எவன் கொன்றானோ, அல்லது தன் ஆண்மையைத் தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்காக எவரையும் வென்றானோ, அவன், தான் செயல்படுபவனல்ல, (தான் எதைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறானோ) அது (முற்றிலும் வேறுபட்ட) உண்மையான இயக்குனரால் {கர்த்தாவால்} நிறைவேற்றப்பட்டது என்பதை அறியவேண்டும்.(15)இவ்வுலகில் உள்ள பொருட்களைப் படைப்பதற்கும், அழிப்பதற்கும் காரணமாக இருப்பது யார் என்ற கேள்வி எழும்போது, (தானே உண்டான, அல்லது தன்னைத் தானே படைத்துக் கொண்ட) எவனோ ஒருவன் அச்செயலுக்குக் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும், அவ்வாறு கருதப்படுபவன் (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) ஒரு படைப்பாளனைக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவாயாக.(16) பூமி, ஒளி அல்லது வெப்பம், வெளி, நீர், ஐந்தாவதாகக் காற்று ஆகிய இவற்றிலிருந்தே அனைத்து உயிரினங்களும் எழுகின்றன. (இஃது என்னால் அறியப்பட்டிருக்கும்போது, என் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்காக) என்ன துயரத்தை நான் உணர்வேன்?(17) பெரும் கல்வியைக் கொண்டவன், அதிகம் கல்லாதவன், பலம் கொண்டவன், பலமற்றவன், மேனி அழகுடையவன், கோரமானவன், நற்பேற்றைக் கொண்டவன், பேறற்றவன்(18) ஆகியோர் அனைவரும், அளக்க முடியாத ஆழம் கொண்ட காலத்தின் சக்தியால் அடித்துச் செல்லப் படுகிறார்கள். காலத்தால் நான் வெல்லப்பட்டேன் என்பதை நான் அறியும்போது, (என் சூழ்நிலைகளில் உள்ள இந்த மாற்றத்திற்காக) என்ன துயரத்தை நான் உணர்வேன்?(19) எதையும் எரிக்கும் ஒருவன், ஏற்கனவே எரிக்கப்பட்டதையே எரிக்கிறான். கொல்பவன், ஏற்கனவே கொல்லப்பட்ட ஒன்றை மட்டுமே கொல்கிறான். அழிவடைந்த ஒருவன், ஏற்கனவே அழிக்கப்பட்டவனாவான். ஒருவனால் அடையப்பட்ட பொருள், அவன் அஃதை அடையும் நோக்கத்திற்காகவே ஏற்கனவே வந்திருந்தது.(20)

இந்தக் காலமானது ஒரு பெருங்கடலைப் போன்றதாகும். அதில் எந்தத் தீவும் கிடையாது. உண்மையில் அதன் மறுகரை எங்கே இருக்கிறது? அதன் எல்லைகளைக் காண முடியாது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தாலும், அனைத்துப் பொருட்களின் பேரியக்கமாக இருப்பதும், நிச்சயமாக தெய்வீகமானதுமான இந்தத் தொடரோடையின் எல்லையை என்னால் காண முடியவில்லை. (21) ஓ! சச்சியின் தலைவா, காலமே அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளாமல் இருந்தால், ஒருவேளை நான் மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகிய உணர்வுகளை உணர்ந்திருப்பேன்.(22) உமியை உண்டு வாழ்வதும், மனிதர்களின் வசிப்பிடங்களில் இருந்து தனியான ஓரிடத்தில் தன் நாட்களை இப்போது கழித்துக் கொண்டிருப்பதுமான கழுதையின் வடிவை நான் இப்போது சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதை உறுதி செய்து கொண்டு, நீ என்னை நிந்திக்க வந்திருக்கிறாயா?(23) எந்த வடிவங்களைக் கண்டால், நீ என் முன்னிலையில் இருந்து வெகுவிரைவாக ஓடிவிடுவாயோ, அந்தப் பயங்கர வடிவங்களை இப்போதும் நான் விரும்பினால் என்னால் ஏற்க முடியும்.(24) காலமே அனைத்தையும் கொடுக்கிறது, மீண்டும் அதுவே அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது. காலமே அனைத்துப் பொருட்களையும் விதிக்கிறது. ஓ! சக்ரா, உன் ஆண்மை குறித்துத் தற்புகழ்ச்சி செய்யாதே.(25)

ஓ! புரந்தரா, முற்காலதில் நான் கோபப்படும் தருணங்களில் அனைத்தும் கலக்கமடையும். எனினும், ஓ! சக்ரா, இவ்வுலகில் அனைத்துப் பொருட்களின் நித்திய குணத்தை {ஸனாதனமான தர்மத்தை} நான் அறிந்திருக்கிறேன்.(26) நீயும் உண்மையை அறிவாயாக. ஆச்சரியத்தால் நிறையாதே. செழிப்பும், அதன் தோற்றமும் ஒருவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதில்லை.(27) உன் மனம் ஒரு குழந்தையுடைய மனம் போல் இருப்பதாகத் தெரிகிறது. அது முன்பு போலவே இன்னும் இருக்கிறது. ஓ! மகவத் {மகவான் / இந்திரா}, உன் கண்களைத் திறந்து, உறுதியுணர்வு மற்றும் வாய்மையில் நிறுவப்பட்ட புத்தியைப் பின்பற்றுவாயாக.(28) தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் சென்ற காலங்களில் என் ஆட்சியின் கீழ் இருந்தார்கள். ஓ! வாசவா {இந்திரா}, இதை நீ அறிவாய்.(29) அறியாமையால் திகைப்படைந்த புத்தியைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும், “விரோசனனின் மகனான பலி இப்போது எந்தத் திசைப்புள்ளியில் இருப்பானோ, அதை வணங்குகிறேன்” என்று சொல்லி என்னைத் துதித்தன.(30)

ஓ! சச்சியின் தலைவா, (இப்போது கிடைக்காத) அந்த மரியாதையை நினைத்து ஒருபோதும் நான் வருந்துவதில்லை. எனது இந்த வீழ்ச்சிக்காக நான் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. இயக்குபவனுடைய ஆளுகைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வேன் என்பதில் என் புத்தி உறுதியாக இருக்கிறது.(31) உன்னதப் பிறப்பு, அழகிய பண்புகள், பேராற்றல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் கூடியவனுமான எவனோ ஒருவன், அவலநிலையில் வாழும் நிலை காணப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதாலேயே இது நேர்கிறது[2].(32) அதே போலவே, ஓ சக்ரா, உன்னதமற்ற குலத்தில் பிறந்தவனும், அறிவற்றவனும், பிறப்பில் களங்கமுடையவனுமான எவனோ ஒருவன், தன் ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் காணப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்பட்டதாலேயே இதுவும் நேர்கிறது.(33) ஓ சக்ரா, மங்கலமான ஓர் அழகிய பெண்மணி, அவலநிலையில் தன் வாழ்வைக் கடத்துவதைக் காண முடிகிறது. அதேபோலவே, அனைத்து மங்கலமற்ற குறிகளையும் கொண்ட, கோரமான ஒரு பெண் பேரின்பத்தில் தன் நாட்களைக் கடத்துவதும் காணப்படுகிறது.(34) ஓ! சக்ரா, நம் செயல்பாடுகள் எதனாலும் நாம் இந்நிலையை அடையவில்லை. ஓ! வஜ்ரபாணியே, நீ இப்போது இருக்கும் இந்நிலை உனது எந்தச் செயலாலும் உண்டானதில்லை.(35)ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே}, நீ இப்போது அனுபவிக்கும் இந்தச் செழிப்புக்குக் காரணமாக இருக்கும் எந்தச் செயலையும் நீ செய்யவில்லை. இப்போதைய எனது செழிப்பற்ற நிலைக்குக் காரணமாக இருக்கும் எதையும் நானும் செய்யவில்லை. செழிப்பும், வறுமையும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்கின்றன.(36) காந்தியில் சுடர்விடுபவனாக, செழிப்புடையவனாக, அழகைக் கொண்டவனாக, தேவர்கள் அனைவருக்கும் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்டவனாக, என்னிடம் முழங்கிக் கொண்டிருப்பவனாக இப்போது நான் உன்னைக் காண்கிறேன்.(37) காலமே என்னைத் தாக்கி நிற்கிறது என்ற உண்மையைத் தவிர இதில் வேறொன்றுமில்லை. உண்மையில், காலம் என்னைத் தாக்காதிருந்தால், நீ கையில் வஜ்ரம் தரித்தவனாகவே இருந்தாலும் கூட, என் புறங்கையின் ஒரே குத்தில் இன்று உன்னை வீழ்த்திக் கொன்றிருப்பேன்.(38) எனினும், இஃது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான காலமில்லை. மறுபுறம், அமைதியான நடத்தையைப் பின்பற்றுவதற்கான காலமே வாய்த்திருக்கிறது. காலமே அனைத்துப் பொருட்களையும் நிறுவுகிறது. காலமே அனைத்துப் பொருட்களிலும் இயங்கி, அவற்றின் இறுதி உறவிற்கு அவற்றை வழிநடத்துகிறது[3].(39) நான் தானவர்களால் வழிபடப்பட்ட அவர்களுடைய தலைவனாவேன். என் சக்தியால் அனைத்தையும் எரித்தபடி, பலத்துடனும், செருக்குடனும் நான் முழங்கிக் கொண்டிருந்தேன். {அப்படிப்பட்ட} என்னையே காலம் தாக்கியிருக்கும்போது, எவன்தான் அதனால் தாக்கப்படாதிருப்பான்?(40)சிறப்புமிக்க ஆதித்தியர்களில் ஒருவனான உன்னையும் சேர்த்து, அவர்களில் பன்னிருவரின் சக்தி அனைத்தையும் முற்காலத்தில் தனியாக நான் தாங்கினேன்.(41) ஓ! வாசவா, நீரைத் தாங்கிப் பிடித்து மழையாகவும் நானே பொழியச்செய்தேன். மூவுலகங்களுக்கமான ஒளியையும், வெப்பத்தையும் நானே கொடுத்து வந்தேன்.(42) நானே பாதுகாப்பவனாகவும், அழிப்பவனாகவும் இருந்தேன். நானே கொடுப்பவனாகவும், எடுப்பவனாகவும் இருந்தேன். நானே கட்டுபவனாகவும், கட்டறுப்பவனாகவும் இருந்தேன். அனைத்து உலகங்களிலும் நானே பலமிக்க ஒரு தலைவனாக இருந்தேன்.(43) ஓ! தேவர்களின் தலைவா, அப்போது நான் கொண்டிருந்த அரசாட்சி இப்போது என்னிடம் இல்லை. நான் இப்போது காலத்தின் சக்திகளால் தாக்கப்படுகிறேன். எனினும், அப்பொருட்கள் இப்போது என்னில் ஒளிரவில்லை.(44) (வெளிப்படையாக என்னால் செய்யப்படும் செயல்களையும்) செய்பவன் நானில்லை. (உன்னால் செய்யப்படும் செயல்களையும்) செய்பவன் நீயில்லை. ஓ! சச்சியின் தலைவா, (அந்தச் செயல்களைச்) செய்பவன் வேறு எவனும் இல்லை. ஓ! சக்ரா, காலமே அனைத்துப் பொருட்களையும் பாதுகாக்கவும், அழிக்கவும் செய்கிறது.(45)வேதங்களை அறிந்த மனிதர்கள் காலமே (நித்தியமானதே) பிரம்மம் என்று சொல்கின்றனர். பிறைநாட்களும் {பக்ஷங்களும்}, மாதங்களும் அதன் உடலாகும். அந்த உடல், பகல்களையும், இரவுகளையும் தன் ஆடைகளாகக் கொண்டிருக்கிறது. பருவகாலங்களே அதன் புலன்களாகும். வருடமே அதன் வாயாகும்.(46) சிலர், இவை அனைத்தையும் (இந்த மொத்த அண்டத்தையும்) பிரம்மமாகவே காண வேண்டும் என்று தங்கள் மேன்மையான புத்தியின் விளைவால் சொல்கின்றனர். எனினும், வேதங்களோ, ஆன்மாவின் ஐந்து உறைகளே பிரம்மமாகக் கருதப்பட வேண்டும் எனப் போதிக்கின்றன.(47) பிரம்மமானது, பரந்த நீர்ப்பரப்பைக் கொண்ட பெருங்கடலைப் போல ஆழமானதும், அடைதற்கரியதுமாகும். அதற்குத் தொடக்கமோ முடிவோ இல்லை, அஃது அழியத்தகாததும் {ஆன்மாவாகவும்}, அழியத்தக்கதுமாக {பிரபஞ்சமாகவும்} இருக்கிறது என்று சொல்லப்படுகிறது[4].(48) அது தானே குணங்களற்றதாக இருப்பினும், இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அந்தந்தப் பொருளுக்குரிய குணங்களை ஏற்கிறது. வாய்மையை அறிந்தோர் பிரம்மத்தை நித்தியமானதாகக் கருதுகிறார்கள்.(49) அறியாமையுடன் கூடிய செயல்பாட்டின் மூலம், அந்தப் பிரம்மம், (ஞானத்தை மட்டுமே குணமாகக் கொண்ட) பொருளற்ற ஆவியான சித் அல்லது ஆன்மாவுக்குரிய பொருட்பாட்டுக் குணங்களை உண்டாக்குகிறது. எனினும், அனைத்தின் உண்மைக் காரணம் குறித்த அறிவு தோன்றும்போது, அந்தப் பொருட்பாடு ஆன்மாவுக்கு உரியதாக இல்லாமல் போவதால், அஃது {அந்தப் பொருட்பாடு} ஆன்மாவின் இன்றியமையாத குணமல்ல என்றாகிறது[5].(50)காலத்தின் வடிவிலுள்ள பிரம்மமே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கிறது. அந்தக் காலத்தைக் கடந்து எங்கே நீ செல்வாய்? உண்மையில், ஓடுவதாலோ நிற்பதாலோ காலம், அல்லது பிரம்மத்தைத் தவிர்க்க முடியாது.(51) ஐம்புலன்கள் அனைத்தும் பிரம்மத்தை உணர இயன்றவை அல்ல. சிலர் பிரம்மத்தை நெருப்பு {அக்னி} என்று சொல்கிறார்கள்; சிலர் பிரஜாபதி என்றும்;(52) சிலர் பருவகாலங்கள் என்றும்; சிலர் மாதம் என்றும்; சிலர் பிறைநாட்கள் {பக்ஷம்} என்றும்; சிலர் நாட்கள் என்றும்; சிலர் மணிநேரங்கள் என்றும்; சிலர் முற்பகல் என்றும், சிலர் நன்பகல் என்றும்; சிலர் பிற்பகல் என்றும்;(53) சிலர் கணம் என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு ஒன்றேயான அதைக் குறித்துப் பலவாறாகப் பல்வேறு மக்கள் பேசுகிறார்கள். அது {பிரம்மம்} நித்தியமானதென்றும், அனைத்துப் பொருட்களையும் ஆள்வதென்றும் அறிவாயாக.(54) ஓ! வாசவா, பெரும் பலத்தையும், பேராற்றலையும் கொண்ட பல்லாயிரம் இந்திரர்கள் கடந்து சென்று விட்டார்கள். ஓ! சச்சியின் தலைவா, நீயும் அவ்வழியிலேயே கடந்து செல்வாய்.(55)

உனக்கான காலம் வரும்போது, ஓ! சக்ரா, அனைத்திலும் வலிமையான காலமானது, பெருகும் வலிமையைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனாக இருப்பவனுமான உன்னையும் கூட அழித்துவிடும்.(56) காலம் அனைத்துப் பொருட்களையும் அடித்துச் செல்கிறது. இக்காரணத்தினால், ஓ! இந்திரா, நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடாதே. உன்னாலோ, என்னாலோ, நமக்குமுன்பு சென்றுவிட்டவர்களாலோ காலம் அடக்கப்பட முடியாததாகும்.(57) ஒப்பிலாததாக உன்னால் கருதப்படுவதும், நீ அடைந்திருப்பதுமான இந்த அரச செழிப்பானது, முன்பு என்னால் கொள்ளப்பட்டிருந்தது. இது திடமற்றதும், உண்மையற்றதுமாகும் {போலியானதுமாகும்}. இவள் {செழிப்பின் தேவி} நீண்டகாலம் ஓரிடத்தில் இருப்பதில்லை.(58) உண்மையில், உனக்கு முன்பிருந்தவர்களும், உன்னிலும் மிக மேன்மையானவர்களுமான ஆயிரக்கணக்கான இந்திரர்களிடம் இவள் வசித்திருந்தாள். ஓ! தேவர்களின் தலைவா, நிலையற்றவளான இவள், என்னைக் கைவிட்டு இப்போது உன்னிடம் வந்திருக்கிறாள்.(59) ஓ! சக்ரா, இத்தகைய தற்புகழ்ச்சியில் மீண்டும் ஈடுபடாதே. நீ அமைதிநிலையை அடைவதே உனக்குத் தகும். வீண் தற்பெருமை கொண்டவனாக உன்னை அவள் {செழிப்பின் தேவியானவள்} அறிந்தால், வெகு விரைவில் உன்னைக் கைவிடுவாள்” என்றான் {பலி}” {என்றார் பீஷ்மர்}.(60)

ஸ்ரீ! – சாந்திபர்வம் பகுதி – 225-பலியின் உடலில் இருந்து வெளியேறிய பெண்ணிடம் அவள் யார் என்பதைக் கேட்ட இந்திரன்; பலியின் உடலைவிட்டு வெளியேறிய காரணத்தைச் சொன்ன ஸ்ரீ; ஸ்ரீயை நான்கு இடங்களில் பிரித்து நிறுவிய இந்திரன்; ஸ்ரீக்கு எதிராகக் குற்றமிழைப்போரைத் தண்டிக்கப்போவதாகச் சொன்ன இந்திரன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அதன்பிறகு, உயர் ஆன்ம பலியின் வடிவத்தில் இருந்து, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய உடலுடன் செழிப்பின் தேவி வெளிவருவதை நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கண்டான்.(1) பாகனைத் தண்டித்தவனான அந்தச் சிறப்புமிக்கவன், ஒளியுடன் சுடர்விடும் அந்தத் தேவியைக் கண்டு, ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன், பலியிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(2)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “ஓ! பலியே, உன் உடலில் இருந்து வெளிப்படும் தன் சக்தியின் விளைவால் இவ்வாறு காந்தியுடன் சுடர்விடுபவளும், மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவளும், தோள்வளைகளை அணிந்தவளும், அனைத்துப் பக்கங்களிலும் மகிமையின் ஒளியை வெளியிடுபவளுமான இவள் யார்?” என்று கேட்டான்.(3)

பலி {இந்திரனிடம்}, “இவள் அசுர வனிதையா, தேவியா, மனிதப் பிறவியா என்பதை நானறியேன். நீ இவளிடம், கேட்கலாம், அல்லது கேட்காமலும் இருக்கலாம். உனக்கு விருப்பமானதைச் செய்வாயாக” என்றான்.(4)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இத்தகைய ஒளியுடன் கூடியவளும், மகுடம் சூடியவளும், பலியின் உடலில் இருந்து இவ்வாறு வெளிவந்தவளுமான நீ யார்? நான் உன்னை அறியேன். கருணைகூர்ந்து எனக்கு உன் பெயரைச் சொல்வாயாக.(5) உண்மையில், தைத்தியர்களின் தலைவனைக் {பலியைக்} கைவிட்டு வந்த மாயா தேவியைப் போல, சுயகாந்தியில் சுடர்விட்டுக் கொண்டு இங்கே நிற்கும் நீ யார்? ஓ! கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக” என்றான்.(6)

ஸ்ரீ {செழிப்பின் தேவி / லட்சுமி}, “விரோசனன் என்னை அறியமாட்டான். விரோசனனின் மகனான இந்தப் பலியும் என்னை அறியமாட்டான். கல்விமான்கள் என்னைத் துஸ்ஸஹை என்ற பெயரைச் சொல்லி அழைத்தார்கள்[1]. சிலர் என்னை விதித்ஸை என்ற பெயரில் அறிவார்கள்[2].(7) ஓ! வாசவா, எனக்கு வேறு பெயர்களும் உண்டு. அவை பூதி, லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ என்பவையாகும்[3]. ஓ சக்ரா, நீயும் என்னை அறியமாட்டாய். தேவர்களில் எவரும் என்னை அறியமாட்டார்கள்” என்றாள்.(8)சக்ரன் {செழிப்பின் தேவியான ஸ்ரீயிடம்}, “ஓ! சுமக்கக் கடினமான பெண்ணே, நீண்ட காலம் பலிக்குள் வாழ்ந்திருந்த நீ இப்போது ஏன் அவனைவிட்டு அகன்று செல்கிறாய்? இஃது என் செயலின் நிமித்தமாக நேர்கிறதா? அல்லது பலி செய்த எந்தச் செயலுக்காகவாவது நேர்கிறதா?” என்று கேட்டான்.(9)

ஸ்ரீ {இந்திரனிடம்}, “படைப்பாளனோ, விதி சமைப்பவனோ என்னை ஆள்வதில்லை. காலமே என்னை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்கிறது. ஓ! சக்ரா, பலியை அவமதியாதே” என்றாள்.(10)

சக்ரன் {ஸ்ரீயிடம்}, “ஓ! மகுடத்தால் அலங்கரிக்கப்பட்ட தேவி, என்ன காரணத்திற்காக நீ பலியைக் கைவிடுகிறாய்? (என்னுடன் வாழ்வதற்காக) ஏன் என்னை நீ அணுகுகிறாய்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(11)

ஸ்ரீ {இந்திரனிடம்}, “வாய்மை, கொடைகள், நன்னோன்புகள், தவங்கள், ஆற்றல் மற்றும் அறம் ஆகியவற்றில் நான் வாழ்கிறேன். பலி இவை அனைத்தில் இருந்து வீழ்ந்துவிட்டான்.(12) முன்பு அவன் பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு மிக்கவனாக இருந்தான். அவன் உண்மைநிறைந்தவனாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான். எனினும், பின்னாட்களில் அவன் பிராமணர்களிடம் பகையுணர்வை வளர்த்தான், மேலும் தெளிந்த நெய்யை அழுக்கான கரங்களுடன் தீண்டினான்[4].(13) முன்பு அவன் எப்போதும் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுவான். இறுதியாக, காலத்தால் பீடிக்கப்பட்டு அறியாமையில் குருடான அவன், என்னை இடையறாமல் துதிப்பதாக அனைவரிடமும் தற்புகழ்ச்சி செய்யத் தொடங்கினான்.(14) ஓ! சக்ரா, (இந்தக் குற்றங்களுக்காக) இவனைக் கைவிடும் நான், இதுமுதல் உன்னிடம் வசிக்கப் போகிறேன். நீ கவனமாகவும், தவங்கள் மற்றும் ஆற்றலுடனும் என்னைச் சுமக்க வேண்டும்” என்றாள்.(15)

சக்ரன், “ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, உன்னை எப்போதும் சுமப்பதற்குத் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் ஒருவர் கூட இல்லை” என்றான்.(16)

ஸ்ரீ, “ஓ! புரந்தரா {இந்திரா}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், அல்லது ராட்சசர்களில் எவராலும் என்னை எப்போதும் சுமக்க முடியாது” என்றாள்.(17)

சக்ரன், “ஓ மங்கலமான பெண்ணே, நீ எப்போதும் என்னிடமே வசிப்பதற்கு நான் என் நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் ஆணைகளை ஏற்பேன். எனக்கு உண்மையாகப் பதிலளிப்பதே உனக்குத் தகும்” என்றான்.(18)

ஸ்ரீ, “ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன்னுடன் எவ்வாறு இருக்க முடியும் என்பதைச் சொல்கிறேன். வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதியின் படி என்னை நான்கு பகுதிகளாகப் பிரிப்பாயாக” என்றாள்.(19)

சக்ரன், “நான் என் சக்திக்கும் பலத்துக்கும் தக்கபடியான வசிப்பிடங்கள் உனக்கு ஒதுக்குகிறேன். ஓ! லக்ஷ்மி, என்னைப் பொருத்தவரையில், எவ்வழியிலாவது உனக்குக் குற்றமிழைக்காதவாறு எப்போதும் கவனத்துடன் இருக்கப் போகிறேன்.(20) மனிதர்களுக்கு மத்தியில் உள்ளவளும், அனைத்துப் பொருட்களின் மூதன்னையுமான பூமியானவள் அவர்கள் அனைவரையும் சுமக்கிறாள். அவள் உன்னில் நான்கில் ஒரு பகுதியைச் சுமப்பாள். அதற்கான பலம் அவளுக்கு இருக்கிறதென நான் நினைக்கிறேன்” என்றான்.(21)

ஸ்ரீ, “இதோ என்னில் ஒரு கால் பகுதியைக் கொடுத்தேன். இது பூமியில் நிறுவப்படட்டும். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இரண்டாம் பகுதிக்கு உரிய நிலையை அமைப்பாயாக” என்றாள்.(22)

சக்ரன், “மனிதர்களுக்கு மத்தியில் உள்ள திரவ வடிவில் உள்ள நீர்நிலைகள் மனிதர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்கின்றன. அந்த நீர் நிலைகள் உன் மேனியின் நான்கில் ஒரு பகுதியைச் சுமக்கட்டும். உன்னில் ஒரு பகுதியைச் சுமக்கும் பலம் அவற்றுக்கு இருக்கிறது” என்றான்.(23)

ஸ்ரீ, “நீர்நிலைகளில் நிறுவப்படுவதற்காக எனது மற்றொரு கால்பகுதியையும் நான் கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன் பிறகு, எனது மூன்றாம் பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக” என்றாள்.(24)

சக்ரன், “வேதங்கள், வேள்விகள் ஆகியவையும், தேவர்கள் அனைவரும் நெருப்பிலேயே நிறுவப்பட்டுள்ளனர். உனது மூன்றாம் பகுதியை நெருப்பில் இடும்போது அதனை அது சுமக்கும்” என்றான்.(25)

ஸ்ரீ, “நெருப்பிலிடப்போகும் எனது மூன்றாம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இறுதி பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக” என்றாள்.(26)

சக்ரன், “நல்லோர், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோர், பேச்சில் உண்மை நிறைந்தோர் ஆகியோர் உன்னில் நான்காம் பகுதியைச் சுமக்கட்டும். அதைச் சுமக்கும் சக்தி நல்லோருக்குண்டு” என்றான்.(27)

ஸ்ரீ, “நல்லோருக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட இருக்கும் எனது நான்காம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, பல்வேறு உயிரினங்களுக்கு என் பகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன, நீ என்னைத் தொடர்ந்து பாதுகாப்பாயாக” என்றாள்.(28)

சக்ரன், “எனது இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக. நான் இவ்வாறே உன்னைப் பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அந்த உயிரினங்களுக்கு மத்தியில் உனக்கு எதிராகக் குற்றமிழைப்போர் என்னால் தண்டிக்கப்படுவார்கள்” என்றான்.

தைத்தியர்களின் தலைவன் பலி, ஸ்ரீயால் இவ்வாறு கைவிடப்பட்ட பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(29)

பலி, “தற்போது சூரியன், மேற்கைப் போலவே கிழக்கிலும், தெற்கைப் போலவே வடக்கிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(30) எனினும், இந்தச் சூரியன் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, சுமேருவுக்கு மத்தியில் உள்ள பிரம்மலோகத்தில் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும்போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நேரப்போகும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் முறியடிப்பேன்.(31) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு பிரம்மலோகத்தில் மட்டுமே நிலையாக ஒளிரும்போதும் மீண்டும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கு இடையில் தோன்றும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொள்வேன்” என்றான்[4].(32)சக்ரன் {பலியிடம்}, “பிரம்மன் உன்னை ஒருபோதும் கொல்லக்கூடாது என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஓ! பலியே இந்தக் காரணத்தினாலேயே நான் உன் தலையில் என் வஜ்ரத்தை வீசாமல் இருக்கிறேன்.(33) ஓ! தைத்தியர்களின் தலைவா, நீ விரும்பும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பேரசுரா, உன்னில் அமைதி நிலைக்கட்டும். நெடுங்கோட்டில் {தீர்க்கரேகையில்} மட்டுமே சூரியன் ஒளிரும் எந்தக் காலமும் நேராது.(34) சூரியனின் இயக்கத்தை முறைப்படுத்தும் சட்டங்களை ஏற்கனவே சுயம்பு (பிரம்மன்) விதித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களுக்கும் ஒளியையும், வெப்பத்தையும் கொடுத்தபடியே அவன் {சூரியன்} இடையறாமல் இயங்குவான்.(35) ஆறு மாதங்கள் வடக்கு நோக்கிய {உத்தராயண} போக்கிலும், அடுத்த ஆறு மாதங்கள் தெற்கு நோக்கிய {தக்ஷிணாயணப்) போக்கிலும் அவன் {சூரியன்} பயணிப்பான். சூரியன் (ஒன்றன்பின் ஒன்றாக) இவ்வழியிலேயே பயணித்து, உயிரினங்கள் அனைத்திற்காகக் குளிர்காலத்தையும் வெயில் காலத்தையும் உண்டாக்குவான்” என்றான்”.(36)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட தைத்தியர்களின் தலைவனான பலி, தெற்கு நோக்கிச் சென்றான். புரந்தரன் வடக்கு நோக்கிச் சென்றான்.(37) ஆயிரங்கண் இந்திரன், முற்றிலும் செருக்கற்ற வகையில் அமைந்த பலியின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு வானத்திற்கு உயர்ந்தான்” {என்றார் பீஷ்மர்}.(38)

நமுசியின் ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 226- இந்திரனுக்கும், நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சோகத்தை விலக்க வேண்டிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்ன நமுசி…

[1]பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் மரணம் குறித்து அறிந்தவனான அசுரன் நமுதி, செழிப்பை இழந்தவனாக இருந்தும், முற்றிலும் அசைவற்றதாக இருக்கும் பரந்த பெருங்கடலைப் போலக் கலங்காத இதயத்துடன் இருந்த போது, புரந்தரன் {இந்திரன்} இந்த வார்த்தைகளை அவனிடம் {நமுசியிடம்} சொன்னான்:(2) “ஓ! நமுசியே, உன் நிலையில் இருந்து வீழ்ந்து, கயிறுகளால் கட்டப்பட்டு, உன் எதிரிகளின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு, செழிப்பை இழந்தவனாக இருக்கும் நீ, துயரத்தில் ஈடுபட்டு வருகிறாயா? அல்லது உன் நாட்களை உற்சாகமாகக் கழித்து வருகிறாயா?” என்று கேட்டான்.(3)நமுசி {இந்திரனிடம்}, “விலக்கப்பட முடியாத இத்தகைய துயரத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் தன் உடலை வீணாக்கிக் கொண்டு, தன் பகைவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான். மேலும், அடுத்தவனின் துயரத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு எவனாலும் அதைக் குறைக்க முடியாது. ஓ! சக்ரா, இந்தக் காரணங்களினால் நான் துயரில் ஈடுபடுவதில்லை. நீ காணும் இவை யாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது[2].(4) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, துயரில் ஈடுபடுவதால், அது மேனி அழகு, செழிப்பு, வாழ்வு {உயிர்}, அறம் ஆகியவற்றை அழிக்கிறது.(5) உண்மை ஞானம் கொண்ட ஒருவன், சரியில்லாத மனநிலையில் பிறக்கும் துயரத்தை நிச்சயம் அடக்கி, உயர்ந்த நன்மையைத் தரவல்லதும், இதயத்தில் வசிப்பதுமான ஒன்றை அவனது மனத்தில் நன்றாகச் சிந்திக்க வேண்டும்.(6) ஒருவன் தன் மனத்தை உயர்ந்த நன்மையில் நிலைபெறச் செய்யும்போது, அவனது நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை[3].(7) ஆணை விதிப்பவன் ஒருவனே, இரண்டாமவன் எவனும் கிடையாது. கருவறைக்குள் கிடக்கும் உயிர் வரை அவனது கட்டுப்பாடு பரந்து விரிந்திருக்கிறது. அந்தப் பேரியக்குனரால் கட்டுப்படுத்தப்படும் நான், அவன் என்னை நிறுவியிருப்பதைப் போலவே கீழ் நோக்கி ஓடும் ஓடை நீரைப் போல ஓடிக் கொண்டிருக்கிறேன்.(8)

இருப்பு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? என்னவற்றை அறிந்து, முன்னதை {இருப்பை} விடப் பின்னதே {விடுதலையே} மேன்மையானது என்பதையும் புரிந்து கொண்டாலும், இன்னும் நான் அஃதை அடைய முனையவில்லை. அறத் திசையை நோக்கிச் செய்யப்படும் செயல்களையும், அதற்கு எதிர்மறையானவற்றையும் செயல்களையும் செய்ய முனையும் நான், அவன் என்னை நிறுவியபடியே ஓடிக் கொண்டிருக்கிறேன்.(9) ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட பொருட்களையே அடைகிறான். எது நடைபெற வேண்டுமோ, அதுவே நடைபெறுகிறது.(10) விதிப்பவன் நிறுத்தும் கருவறைகளிலே அவன் மீண்டும் மீண்டும் வசிக்க வேண்டியிருக்கிறது. இக்காரியத்தில் அவனுக்கு வேறு வாய்ப்பேதும் இல்லை.(11) எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் நிறுத்தப்பட்டாலும், தனக்கு விதிக்கப்பட்ட நிலையை அப்படியே ஏற்றுக் கொள்பவன் அதனால் திகைப்படைவதில்லை.(12) காலத்தின் போக்கில் மீண்டும் மீண்டும் வரும் இன்பம் மற்றும் துன்பத்தால் மனிதர்கள் பாதிப்பை அடைகின்றனர். இதில் (யார் ஒருவருக்கும் ஏற்படும் இன்ப துன்பங்களில்) தனிப்பட்ட யாதொன்றும் இல்லை. துன்பத்தை விரும்பாதவன் செயல்படுபவனாகத் தன்னைக் கருதிக் கொள்வதிலேயே இந்தத் துயரம் இருக்கிறது[4].(13)

முனிவர்கள், தேவர்கள், பேரசுரர்கள் ஆகியோருக்கு மத்தியில் மூன்று வேதங்களையும் முழுமையாக அறிந்தவர்களும், காட்டில் உள்ள தவசிகளிலும் யாரைத் தான் துயரங்கள் அணுகாது? எனினும், ஆத்மா, அனாத்மா ஆகியவற்றை அறிந்தோர் ஒருபோதும் துயர்களில் அஞ்சுவதில்லை.(14) இயல்பாகவே இமயத்தைப் போல அசையாதவனாக இருக்கும் ஞானி ஒருபோதும் கோபவசப்படமாட்டான்; புலன் நுகர் பொருட்களில் பற்றுதலுடன் ஒருபோதும் துன்புறமாட்டான்; அவன் ஒருபோதும் சோகத்தில் ஒப்பாரி வைப்பதோ, மகிழ்ச்சியில் இன்புறுவதோ கிடையாது. அத்தகைய மனிதன் பெரும் துன்பங்களில் பீடிக்கப்படும்போதும் ஒருபோதும் துயருக்கு வசப்படுவதில்லை.(15) பெரும் வெற்றிகளால் மகிழ்ச்சியடையாதவனும், பேரிடர்களில் திகைப்படையாதவனும், இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கிக் கொள்பவனும், அசையாத இதயத்துடன் அவை இரண்டுக்கும் நடுவான நிலையில் இருப்பவனுமான ஒருவன் மிக மேன்மையானவன் ஆவான்.(16) ஒருவன் எந்நிலைக்கு வீழ்ந்தாலும், அவன் துயரின் வசப்படாமல் உற்சாகமாக இருக்க வேண்டும். உண்மையில் ஒருவன், தன் மனத்தால் சுமக்கப்படுவதும், பெருகுவதும், (விலக்கப்படாமல் இருந்தால்) நிச்சயம் துன்பத்தைத் தரவல்லதுமான தனது துயரை இவ்வாறே விரட்ட வேண்டும்.(17)ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகள் ஆகிய இரண்டின் அடிப்படையில் கடமைகளைக் குறித்த விவாதங்களை நடத்தும் கல்விமான்களின் எந்தச் சபையில் ஒரு தீய மனிதன் நுழைந்தால் அச்சப்படவில்லையோ, அது நல்ல சபையல்ல, உண்மையில், அது சபை என்ற பெயரில் அழைக்கப்படத் தகாததாகும். எந்த மனிதன், அறம் குறித்த விசாரணையில் நுழைந்து, தான் அடைந்த தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படுவதில் வெல்வானோ அவன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான்[5].(18) ஒரு ஞானியின் செயல்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடியனவல்ல. ஞானியானவன், தனக்குத் துன்பங்கள் நேர்கையில் ஒருபோதும் திகைப்படைவதில்லை. அவன் முதிர் வயது கௌதமரைப் போல, மிகப் பயங்கரப் பேரிடரின் விளைவால், தன் நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டாலும் கூட ஒருபோதும் திகைப்படையாதவனாகவே இருப்பான்[6].(19)

மந்திரங்கள், பம், சக்தி, ஞானம், ஆற்றல், நடத்தை, ஒழுக்கம், செல்வச்செழிப்பு ஆகிய இவற்றில் எதைக் கொண்டும் ஒரு மனிதனால், தனக்கு விதிக்கப்படாத ஒன்றை அடையமுடியாது. பிறகு, ஒருவன் தன் இதயத்தை எதில் நிலைநிறுத்தியிருந்தானோ, அஃதை அடையாததில் என்ன சோகம் இருக்க முடியும்?(20) நான் பிறப்பதற்கு முன்னால், எவை தங்கள் கரங்களில் காரியங்களை வைத்திருந்தனவோ அவையே நான் என்ன செய்ய வேண்டும், துன்புற வேண்டும் என்பதை விதித்திருக்கின்றன. இவ்வாறு எனக்காக விதிக்கப்பட்டதையே நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். பிறகு, மரணத்தால் என்னை என்ன செய்ய முடியும்?(21) ஒருவன் தனக்காக விதிக்கப்பட்டதை மட்டுமே அடைகிறான். அவன் எங்கே செல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அங்கேயே செல்கிறான். விதிக்கப்பட்ட இன்ப துன்பங்கள் மட்டுமே அடையப்படுகின்றன.(22) எந்த மனிதன், இதை முழுமையாக அறிந்து திகைப்படையாமல் இருக்கிறானோ, எவன் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிலும் நிறைவுடன் இருக்கிறானோ, அவன் தன் இனத்தில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்” என்றான் {நமுசி}” {என்றார் பீஷ்மர்}.(23)

காலவொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 227-பயங்கரத் துயரில் மூழ்கியவனுக்கு நன்மையெது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; மனோவுறுதி குறித்த பீஷ்மரின் உரையாடல்; பலி மற்றும் இந்திரனின் உரையாடலை மீண்டும் சொன்ன பீஷ்மர், நித்தியத்தன்மை குறித்து பலியின் பெரும் உரையாடல்; பலியைப் புகழ்ந்த இந்திரன்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஏகாதிபதி, பயங்கரத் துயரத்தில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு நண்பர்களின் இழப்போ, நாட்டின் இழப்போ ஏற்படும்போது உண்மையில் நன்மையானது எது?(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவ்வுலகில் நீரே எங்கள் ஆசான்களில் முதன்மையானவராவீர். இதையே நான் கேட்கிறேன். கேட்கும் எனக்குப் பதில் அளிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, மகன்கள், மனைவியர், அனைத்து வகை இன்பங்கள், செல்வம் ஆகியவற்றை இழந்தவனும், பயங்கரத் துயரில் மூழ்கியவனுமான ஒருவனுக்கு மனோவுறுதியே உயர்ந்த நன்மையாகும். எப்போதும் மனோவுறுதி கொண்ட ஒருவனின் உடல் ஒருபோதும் இளைத்துப் போவதில்லை.(3) துயரற்றநிலையானது மகிழ்ச்சியையும், மேன்மையான உடைமையான உடல்நலத்தையும் {ஆரோக்கியத்தையும்} தன்னுள் கொண்டுள்ளது. உடல் நலத்தின் விளைவால் ஒருவன் மீண்டும் செழிப்பை அடைகிறான்.(4) ஓ! ஐயா, அறவொழுக்கம் ஒழுகும் ஞானியானவன், செழிப்பு, பொறுமை, தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(5) இது தொடர்பாகப் பழங்கதையில் பலிக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.(6)

பெரும் எண்ணிக்கையிலான தைத்தியர்களும், தானவர்களும் வீழ நேர்ந்த தேவாசுரப் போர் முடிந்தபோது, பலி மன்னனாக இருந்தான். உலகங்கள் அனைத்திலும் தன் ஆட்சியை மீண்டும் நிறுவிய விஷ்ணுவால் அவன் வஞ்சிக்கப்பட்டான். நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே} மீண்டும் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.(7) தேவர்களின் அரசாட்சி இவ்வாறு மீண்டும் நிறுவப்பட்டபிறகு, நால்வகை {நான்கு வர்ணங்களைச் சேர்ந்த) மனிதர்களும் தங்கள் தங்கள் கடமைகளில் மீண்டும் நிறுவப்பட்டு, மூவுலகங்களும் மீண்டும் செழிப்பில் பெருகியதால், சுயம்புவானவன் இதயத்தில் மகிழ்ச்சியடைந்தான்.(8) அந்த நேரத்தில், ருத்ரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள், தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், மேலும் உயர்ந்த வகை உயிரினங்கள் ஆகியவர்களுடன் கூடிய பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, நான்கு தந்தங்களையுடையதும், ஐராவதம் என்றழைக்கப்படுவதுமான யானைகளின் இளவரசனின் மேல் காந்தியுடன் அமர்ந்து கொண்டு உலகங்கள் முழுவதிலும் பவனிவந்தான்.(10)

ஒருநாள், இவ்வாறான பவனியின்போது, அந்த வஜ்ரதாரி {இந்திரன்}, கடற்கரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட மலைக்குகைக்குள் விரோசனன் மகனான பலியைக் கண்டான். அந்தத் தானவர்களின் இளவரசனைக் கண்டு அவனிடம் சென்றான்.(11) தேவர்களின் தலைவனான இந்திரன் இவ்வாறு ஐராவதத்தின் முதுகில் அமர்ந்திருப்பதையும், பல்வேறு வகைத் தேவர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்ட அந்தத் தைத்தியர்களின் இளவரசன் {பலி}, கவலை, அல்லது கலக்கத்திற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(12) இந்திரன், கலங்காமல், அஞ்சாமல் நிற்கும் பலியைக் கண்டு, தன் முதன்மையான யானையின் முதுகில் இருந்தபடியே அவனிடம் பேசினான்,(13) “ஓ! தைத்தியா, எவ்வாறு நீ கலக்கமடையாமல் இருக்கிறாய்? இதற்குக் காரணம் உன் வீரமா? பெரியோர்களுக்கு நீ செய்த பணிவிடையா {புண்ணியமா}? அல்லது தவங்களின் மூலம் தூய்மையடைந்த உன் மனம் இதற்குக் காரணமா? அஃது எக்காரணமாக இருந்தாலும், இந்த மனோநிலையை அடைவது மிகக் கடினமானதாகும்.(14) உண்மையில் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்த்தப்பட்ட நீ, இப்போது உடைமைகள் அனைத்தையும் இழந்தவனாவும், உன் எதிரிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! விரோசனன் மகனே, துயர்மிக்கத் தருணத்திலும் துயரமடையாதிருக்கும் வகையில் நீ என்ன வழிவகையை அடைந்திருக்கிறாய்?(15)

முன்பு உன் வகைக்கான அரசுரிமையில் நீ நிறுவப்பட்டிருந்தபோது, ஒப்பற்ற இன்பங்கள் உனதாயிருந்தன. எனினும், இப்போதோ உன் செழிப்பு, தங்கம், அரசுரிமை ஆகியவற்றை நீ இழந்திருக்கிறாய். நீ ஏன் கலங்காமல் இருக்கிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(16) நீ இதற்கு முன்பு உன் தந்தை மற்றும் பாட்டன்களின் அரியணையில் ஒரு தேவனாக அமர்ந்திருந்தாய். இன்று உன் எதிரிகளால் வீழ்ச்சியை அடைந்திருக்கும் நீ ஏன் வருந்தாமல் இருக்கிறாய்?(17) வருணனின் பாசக்கயிறுகளால் நீ கட்டப்பட்டவனாக, என் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டவனாக இருக்கிறாய். உன் மனைவியரும், செல்வமும் அபகரிக்கப்பட்டவனாக இருக்கிறாய். நீ ஏன் துயரமடையவில்லை என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(18) செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தும் நீ துயருறாமல் இருக்கிறாய். உண்மையில் இஃது ஏதோ தனிச்சிறப்புடைய ஒன்றாகும். ஓ பலியே, மூவுலகங்களின் அரசுரிமையை இழந்த பிறகும், இருப்பெனும் சுமையைத் தாங்கவல்லவனாக உன்னையன்றி வேறு எவனால் இருக்க முடியும்?” என்று கேட்டான்.(19)

இந்திரனின் இந்த வார்த்தைகளையும், தன் மேன்மையைப் பறைசாற்றிப் பிளப்பவையான இன்னும் பிறவற்றையும் கேட்டும், விரோசனனின் மகனான பலி தன்னைக் கேள்வி கேட்பவனிடம் {இந்திரனிடம்} பின் வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(20)

பலி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, துயரங்கள் என்னை ஒதுக்கும்போது, நீ ஏன் இத்தகைய தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய்? ஓ! புரந்தரா, என் முன்னே கையில் வஜ்ரத்தை உயர்த்திப் பிடித்தவனாக உன்னைக் காண்கிறேன்.(21) எனினும், முன்பு உன்னால் இவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. இப்போதோ நீ எவ்வழிமுறைகளினாலோ அதிகாரத்தை ஈட்டிவிட்டாய். உண்மையில், இத்தகைய கொடுஞ்சொற்களை உன்னைத் தவிர வேறு எவனால் பேச முடியும்?(22) எந்த மனிதன், தண்டிக்க வல்லவனாக இருந்தும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டவனும், வீழ்த்தப்பட்டவனும், வீரனுமான ஓர் எதிரியிடம் கருணை காட்டுகிறானோ அவனே உண்மையில் மிக மேன்மையானவனாவான்.(22) இரு மனிதர்கள் போரிடும்போது, போர்க்கள வெற்றியானது நிச்சயம் ஐயத்திற்கிடம் கொண்டதாகும். இருவரில் ஒருவன் நிச்சயம் வெற்றியாளனாகவும், மற்றவன் வெல்லப்பட்டவனாகவும் ஆவான்.(24) ஓ! தேவர்களின் தலைவா, உன் மனநிலை இவ்வாறாக வேண்டாம். உன் வலிமை மற்றும் ஆற்றலால் அனைத்தையும் கைப்பற்றிய பிறகு, அனைத்துயிரினங்களுக்கும் அரசனாக உன்னை நீ கருதிக் கொள்ள வேண்டாம்.(25) ஓ! சக்ரா, நமது {எமது} எந்தச் செயலின் விளைவாகவும் இவ்வாறு நேர்ந்ததெனக் கருதாதே[1]. ஓ வஜ்ரதாரியே {இந்திரனே}, உனது செயல் எதனாலும் நீ இவ்வாறு ஆகிவிட்டாயெனக் கருதாதே.(26)நான் இப்போது இருப்பது போல எதிர்காலத்தில் நீ இருப்பாய். நீ செயற்கரிய பெரிய செயலைச் செய்துவிட்டதாகக் கருதி என்னை அவமதிக்காதே.(27) ஒரு மனிதன் காலத்தின் போக்கில் இன்பத்தையும், துன்பத்தையும் மாறி மாறி அடைகிறான். ஓ! சக்ரா, காலத்தின் போக்கிலேயே நீ அண்டத்தின் அரசுரிமையை அடைந்திருக்கிறாயே அன்றி உனது குறிப்பிட்ட எந்த ஒரு தகுதியின் விளைவாலும் அல்ல.(28) காலமே என்னை இவ்வழியில் நடத்துகிறது. அந்தக் காலமே உன்னையும் வழிநடத்துகிறது. இதன் காரணமாகவே, நீ இன்று எவ்வாறிருக்கிறாயோ அவ்வாறு நானும், நாங்கள் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு நீயும் இல்லை.(29) பெற்றோருக்குச் செய்யும் பணிவிடை, தேவ வழிபாடு, எந்த நல்ல குணத்தையும் பயில்வது ஆகியவற்றில் எதனாலும் எவன் ஒருவனுக்கும் இன்பத்தை அளிக்க முடியாது.(30)

காலத்தால் பீடிக்கப்பட்ட ஒருவனை, அறிவு, தவங்கள், கொடைகள், நண்பர்கள் மற்றும் உற்றார் என எதனாலும் காக்க முடியாது.(31) எக்கணத்திலும் நிகழவல்ல ஒரு துயரை ஆயிரம் வழிமுறைகளினாலும் மனிதர்கள் தடுக்கவல்லவர்கள் அல்லர். இத்தகைய காரியங்களில் புத்தியும், பலமும் ஒன்றுமில்லாமல் போகின்றன.(32) காலத்தின் போக்கால் பீடிக்கப்பட்ட மனிதரை எவராலும் காக்க முடியாது. ஓ! சக்ரா, செயல்படுபவன் நீயே என்று கருதுவதிலேயே அனைத்துத் துன்பங்களின் வேரும் கிடக்கிறது.(33) மேம்போக்காக ஒரு செயலைச் செய்பவனே உண்மையாகச் செயல்படுபவன் என்றால், அவன் வேறொன்றின் (பரமாத்மாவின்) படைப்பாக இருக்க மாட்டான். எனவே, மேம்போக்காகச் செயல்படுபவனே மற்றொருவனின் படைப்பாக இருப்பதால், அந்த மற்றொருவன், உயர்ந்த வேறேதும் இல்லாத பரம்பொருளாக இருக்கிறான்.(34) காலத்தின் துணையுடன் நான் உன்னை வென்றேன். காலத்தின் துணையுடனே நீயும் என்னை வென்றாய். அசையும் உயிரினங்கள் அனைத்தையும் காலமே அசைக்கிறது. அனைத்து உயிரினங்களையும் காலமே அழிக்கிறது.(35)

ஓ! இந்திரா, நீ இழிபிறவின் புத்தியைக் கொண்டதன் விளைவால், அனைத்திற்கும் காத்திருக்கும் அழிவை நீ காணாதிருக்கிறாய். உண்மையில், நீ உன் சொந்த செயல்களின் மூலம் அண்டத்தின் ஆட்சியுரிமையை அடைந்தாய் என உன்னை உயர்வாகக் கருதுவோர் சிலர் இருக்கின்றனர்.(36) இவை யாவற்றுக்காகவும் உலகின் போக்கை அறிந்த எம்மைப் போன்ற ஒருவன், காலத்தால் பீடிக்கப்பட்டதன் விளைவால் எவ்வாறு துயரில் ஈடுபடவோ, புத்தி கலக்கமடையவோ, பிழையின் ஆதிக்கத்திற்கு வசப்படும் நிலையை அடையவோ செய்வான்?(37) காலத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்போதும் கூட, கடலில் உடையும் கப்பலைப் போல எனது புத்தியோ, என்னைப் போன்ற ஒருவனின் புத்தியோ அழிவை அடையுமா?(38) ஓ! சக்ரா, நானும், நீயும், எதிர்காலத்தில் தேவர்களின் தலைவர்களாக வரப்போகும் அனைவரும், உனக்கு முன்பு ஏற்கனவே நூறு இந்திரர்கள் எவ்வழியில் சென்றார்களோ அவ்வழியிலேயே செல்வோம்.(39) இப்போது வெல்லப்பட முடியாதவனாக, ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விடுபவனாக உள்ள நீயும் கூட உனக்கான நேரம் கனியும்போது, என்னைப் போலவே நிச்சயம் அழிவை அடைவாய்.(40)

காலத்தின் போக்கில் பல்லாயிரம் இந்திரர்களும், தேவர்களும், யுகந்தோறும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். உண்மையில் காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(41) உனது தற்போதைய நிலையை அடைந்த பிறகு, உன்னை நீயே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாகவும், தெய்வீகமானவனாகவும், நித்தியமான பிரம்மனாகவும் மிக உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(42) இந்த உனது நிலையை உனக்கு முன்பே பலர் அடைந்திருக்கின்றனர். எவரிடமும் அது நிலையானதாகவோ, முடிவற்றதாவோ இருந்ததில்லை. எனினும், மூடப் புத்தியின் விளைவால் நீ மட்டுமே அதை {இந்த உன் நிலையை} மாறும் இயல்பற்றதாகவும், நித்தியமானதாகவும் கருதுகிறாய்.(43) நம்பத்தகாததை நீ நம்புகிறாய். நித்திமில்லாததை நீ நித்தியமானதாக மதிக்கிறாய். ஓ தேவர்களின் தலைவா, காலத்தால் மூழ்கடிக்கப்பட்டுக் கலக்கமடைந்திருக்கும் ஒருவன், இவ்வகையிலேயே தன்னைக் கருதிக் கொள்வான்.(44) மடமையினால் வழிநடத்தப்படும் நீ தற்போதைய உன் அரச செழிப்பை உனதாகக் கருதுகிறாய். எனினும், அஃது உன்னிலோ, என்னிலோ, பிறரிடத்திலோ ஒருபோதும் நிலையானதாக இருக்காது என்பதை அறிவாயாக.(45)

அஃது உனக்கு முன்பு எண்ணற்றவர்களுக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. அவர்களைக் கடந்து வந்த அஃது இப்போது உனதாகியிருக்கிறது. ஓ! வாசவா, அஃது உன்னிடம் சில காலம் இருந்த பிறகு தனது நிலையில்லாமையை உறுதிசெய்யும். பசுவானது, {நீரருந்த} மற்றொரு தாழியை அடைவதற்காகத் தன் தாழியைக் கைவிடுவதைப் போலவே அதுவும் வேறொருவனுக்காக உன்னை நிச்சயம் கைவிடும்.(46) உனக்கு முன்பே சென்றுவிட்ட அரசுகளின் பட்டியலை நான் சொல்லத் துணியேன். ஓ! புரந்தரா, எதிர்காலத்திலும் உனக்குப் பிறகு எண்ணற்ற அரசுகள் எழும்.(47) மரங்கள், செடிகள், ரத்தினங்கள், வாழும் உயிரினங்கள், நீர்நிலைகள், சுரங்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்தப் பூமியை முன்பு ஆண்ட அந்த ஆட்சியாளர்களை நான் இப்போது காணவில்லை.(48) பிருது, ஐலன், மயன், பீமன், நரகன், சம்பரன், அஸ்வக்ரீவன், புலோமன், அளவற்ற உயரத்துடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டிருந்த ஸ்வர்ப்பானு, பிரஹ்லாதன், நமுசி, தக்ஷன், விப்ரசித்தி, விரோசனன், ஹ்ரீநிஷேவன், ஸுஹோத்ரன், பூரிஹன், புஷ்பவான், விருஷன்,(49,50) ஸத்யேஷு, விருஷபன், பாஹு, கபிலாஸ்வன், விரூபகன், பாணன், கார்த்தஸ்வரன், வஹ்நி, விஸ்வதம்ஷ்ட்ரன், நைரிதி {நைருருதி},(51) ஸங்கோசன், வரீதாக்ஷன், வராஹன், அஸ்வன், ருசிப்ரபன், விஸ்வஜித், பிரதிரூபன், விருஷாண்டன், விஷ்கரன், மது,(52) ஹிரண்யகசிபு, தானவன் கைடபன், மேலும் தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களாக இருந்த பலரும்,(53) இவர்களுடன் சேர்த்து நெடுகிலும் நெடுங்காலத்திற்கு முன்பிருந்த பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலரும், நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் பெயர்களைக் கொண்ட பெரும் தைத்தியர்களும்,(54) தானவர்களில் முதன்மையானோரும் இந்தப் பூமியைவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் காலத்தாலேயே பீடிக்கப்பட்டனர். காலம் அவர்கள் அனைவரையும் விடத் தானே பலமிக்கது என்பதை உறுதி செய்தது.(55)

அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான வேள்விகளில் படைப்பாளனை வழிப்பட்டிருக்கின்றனர். நீ மட்டுமே இவ்வாறு செய்தவன் கிடையாது. அறப்பற்றுடன் கூடிய அவர்கள் அனைவரும் எப்போதும் பெரும் வேள்விகளைச் செய்பவர்களாக இருந்தனர்.(56) அவர்கள் அனைவரும் வானத்தில் உலாவ வல்லவர்களாகவும், போர்க்களத்தில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் மிகப் பலத்த உடற்கட்டுகளைக் கொண்டவர்களாகவும், கனத்த தடிகளுக்கு ஒப்பான கரங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(57) அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான மாயைகளில் திறமிக்கவர்களாகவும், தாங்கள் விரும்பிய வடிவங்களை ஏற்க வல்லவர்களாகவும் இருந்தனர். எந்தப் போரில் அவர்கள் தோல்வியுற்றதாக நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.(58) அவர்கள் அனைவரும் வாய்மை நோன்பை உறுதியாக நோற்பவர்களாகவும், தாங்கள் விரும்பியபடி விளையாடுபவர்களாகவும் இருந்தனர். வேதங்கள் மற்றும் வேதச்சடங்குகளில் பற்றுதலுடன் இருந்த அவர்கள் அனைவரும் பெரும் கல்வியைப் பெற்றவர்களாக இருந்தனர்.(59) பெரும் வலிமையைக் கொண்டிருந்த அவர்கள் அனைவரும் உயர்ந்த செழிப்பையும், செல்வாக்கையும் பெற்றிருந்தனர். ஆனால் அந்த உயர் ஆன்ம அரசர்களில் எவரும், தங்கள் அரசுரிமையின் விளைவால் சிறு அளவிலான செருக்கையும் கொண்டிருக்கவில்லை.(60)

அவர்கள் அனைவரும் ஈகையாளர்களாகவும், தகுந்தர்களுக்குத் தகுந்ததைக் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அனைத்து உயிரினங்களிடத்திலும் முறையாகவும், சரியாகவும் நடந்து கொண்டனர்.(61) அவர்கள் அனைவரும் தக்ஷன் மகள்களின் வாரிசுகளாக இருந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்கள் அனைவரும் படைப்பின் தலைவர்களாக இருந்தனர். தங்கள் சக்தியால் அனைத்தையும் எரித்த அவர்கள் அனைவரும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.(62) ஓ! சக்ரா, உன்னைப் பொறுத்தவரையில், பூமியை அனுபவித்த பிறகு அவளை விட்டகலும்போது உன்னால் உன் துயரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(63) பற்று மற்றும் இன்பத்திற்குரிய பொருட்களில் நீ வளர்த்துவரும் ஆசையைக் கைவிடுவாயாக. செழிப்பில் இருந்து பிறக்கும் இந்தச் செருக்கைக் கைவிடுவாயாக. நீ இவ்வகையில் நடந்து கொண்டால், அரசிழப்பு அளிக்கும் துயரை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.(64) துயர்மிக்க நேரம் வரும்போது, துன்பத்திற்கு வசப்படாதே. அதேபோல இன்பமிக்க நேரம் வரும்போது திளைத்துப் போகாதே. கடந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்து, நிகழ்காலத்தில் நிறைவுடன் வாழ்வாயாக.(65)

ஒருபோதும் உறங்காத காலம், கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருந்த என்னிடமே வந்த அதே காலம், ஓ! இந்திரா, உன்னையும் மிகவிரைவில் அடையும் என்பதால் அமைதி வழிகளில் உன் இதயத்தைத் திருப்புவாயாக.(66) நீ உன் வார்த்தைகளால் என்னைத் துளைக்கிறாய், மேலும், என்னுள் நீ நடுக்கத்தை விதைப்பதாகவும் தெரிகிறது. உண்மையில், அடங்கி இருக்கும் என்னைக் கண்டு உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(67) காலமே என்னை முதலில் தாக்கிற்று. அஃது இப்போது உன்னருகில்தான் இருக்கிறது. நான் முதலில் காலத்தாலேயே வெல்லப்பட்டேன். அதன்காரணமாகவே பிறகு நீ என்னை வென்றாய். அதனால் இவ்வாறு செருக்குடன் முழங்குகிறாய்.(68) முந்தைய காலத்தில், நான் கோபப்பட்டால், என்னெதிரே நின்று போரிட பூமியில் எவன் இருந்தான்? எனினும், காலம் வலிமையானது. அவனே {காலமே} என்னை மூழ்கடித்தான். ஓ! வாசவா, இதன்காரணமாகவே உன்னால் என் முன்னிலையில் நிற்க முடிகிறது. உன் ஆளுகையின் அளவான ஆயிரமும் (ஆயிரம் தெய்வீக வருடங்களும்) நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும்.(69) வலிமையும், சக்தியும் கொண்டவனாக இருந்தாலும், நான் இப்போது துயர்மிக்க நிலையில் இருப்பதைப் போலவே நீயும் வீழ்வாய், உன் அங்கங்களும் துயருறும். மூவுலகங்களின் ஆட்சிக்கட்டிலை ஆக்கிரமித்திருந்த உயர்ந்த இடத்தில் இருந்து நான் வீழ்ந்துவிட்டேன். நீயே இப்போது சொர்க்கத்தின் உண்மையான இந்திரனாக இருக்கிறாய்.(70)

காலப்போக்கின் விளைவால் உயிரினங்களின் இந்த இனிய உலகில் உலகளாவிய புகழுக்கான பொருளாக நீ இப்போது இருக்கிறாய். என்ன செய்ததன் மூலம் நீ இன்று இந்திரனானாய் என்பதை உன்னால் சொல்ல முடியுமா? யாம் என்ன செய்ததனால் எமது நிலையில் இருந்து வீழ்ந்தோம் என்பதையும் சொல்ல முடியுமா?(71) காலன் ஒருவனே படைப்பாளனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான். (இவ்வண்டத்தில் எந்த விளைவையும் உண்டாக்க) வேறேதும் காரணமில்லை. சரிவு, வீழ்ச்சி, அரசு, இன்பம், துன்பம், பிறப்பு இறப்பு ஆகிய இவற்றில்(72) எதனையும் எதிர்கொள்ளும் கல்விமான் திளைப்பதோ, துயரில் ஈடுபடுவதோ இல்லை. ஓ! இந்திரா, நீ எமை அறிவாய். ஓ! வாசவா, நாமும் உன்னை அறிவோம்.(73) ஓ! வெட்கங்கெட்டவனே, நீ என்னவாக இருக்கிறாயோ அதைக் காலமே தந்தது என்பதை மறந்து நீ ஏன் என் முன்னிலையில் இவ்வாறு தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்? அந்தக் காலங்களில் என் ஆற்றல் யாது என்பதை நீ கண்டிருக்கிறாய்.(74) நான் செய்த போர்கள் அனைத்திலும் நான் வெளிப்படித்திய சக்தியும் வலிமையும் போதுமான சான்றுகளை அளிப்பனவாகும். ஓ! சச்சியின் தலைவா, ஆதித்யர்கள், ருத்திரர்கள், சாத்யஸ்கள், வசுக்கள்,(75) மருத்துக்கள் ஆகியோர் அனைவரும் என்னால் வெல்லப்பட்டனர். ஓ! சக்ரா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்மோதலில்,(76) என் தாக்குதலின் மூர்க்கத்தால் தேவர்கள் விரைவாக முறியடிக்கப்பட்டனர் என்பதை நீயே நன்கறிவாய். காடுகள் மற்றும் அந்தக் காடுகளில் வசிப்பவர்களுடன் கூடிய மலைகள், எம்மால் மீண்டும் மீண்டும் சுழற்றி வீசப்பட்டன.(77) நான் உன் தலையில் உடைத்தவையும், செங்குத்தான முனைகளைக் கொண்டவையுமான மலைமுகடுகள் பலவாகும். எனினும், என்னால் இப்போது என்ன செய்ய முடியும்? காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(78)

இஃது இவ்வாறில்லையென்றால், வஜ்ரதாரியாக இருக்கும் உன்னை என் புறங்கையின் ஒரே குத்தில் வீழ்த்திக் கொல்லத் துணிந்திருக்க மாட்டேன் என்று நினைக்காதே. எனினும், தற்போது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நேரம் இல்லை. இப்போது நான் அமைதியைப் பின்பற்றவும், அனைத்தையும் பொறுத்துக் கொள்வதற்குமான நேரமே வந்திருக்கிறது. ஓ! சக்ரா, இந்தக் காரணத்தினாலேயே நான் உன் அவமானம் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன். எனினும், நான் உன்னைவிடவும் ஆணவத்தைத் தாங்கிக் கொள்ள இயலாதவன் என்பதை அறிவாயாக.(79) காலத்தின் கட்டுகளால் பலமாகக் கட்டப்பட்டவனும், காலமெனும் நெருப்பால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், காலம் கனிந்தவனுமான ஒருவன் முன்பு நீ தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்.(80) உலகத்தால் தாங்கிக் கொள்ள இயலாதவனான கரியவன் அதோ நிற்கிறான். இழிந்த விலங்கைப் போல என்னைக் கயிறுகளால் கட்டி கடும் வடிவத்துடன் அங்கே நிற்கிறான்.(81) ஈட்டல், இழத்தல், இன்பம், துன்பம், காமம், கோபம், பிறப்பு, இறப்பு, சிறைபடுதல், விடுதலையடைதல் ஆகிய இவை அனைத்தையும் ஒருவன் காலத்தின் போக்கில் சந்திக்கவே வேண்டும்.(82) நான் செயல்படுபவனல்ல. நீயும் செயல்படுபவனல்ல. உண்மையில் அனைத்தையும் அறிந்தவனே செயல்படுபவனாவான். மரத்தில் தோன்றிய ஒரு கனியைப் போல இப்போது (என்னை வீழ்த்துவதற்காகக்) காலம் என்னைக் கனியச் செய்கிறது.(83)

காலத்தின் போக்கில் ஒரு மனிதன் இன்பத்தை அடைவதற்குச் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட செயல்கள் இருக்கின்றன. அதே செயல்களைக் காலப்போக்கில் மற்றொருவன் செய்வதன் மூலம் அவன் துன்பத்தையே அடைகிறான்.(84) காலத்தின் அறங்களை {காலத் தர்மங்களை} அறிந்த நான் காலத்தால் தாக்கப்படும்போது துயருறக் கூடாது. ஓ! சக்ரா, இதன்காரணமாகவே நான் வருந்தாமல் இருக்கிறேன். துயரத்தால் நமக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. துயரில் ஈடுபட்டு ஒருவன் அடையும் வருத்தத்தால் அவனைத் துன்பத்தில் இருந்து ஒருபோதும் காக்க முடியாது. மறுபுறம், துயரம் ஒருவனுடைய சக்தியை அழிக்கிறது. இதன்காரணமாகவே நான் துயரில் ஈடுபடவில்லை” என்றான் {பலி}”.(85,86)

இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பலியால்} சொல்லப்பட்டவனும், பலமிக்கவனும், ஆயிரங்கண் கொண்டவனும், பாகனைத் தண்டித்தவனுமான நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(87)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “வஜ்ரந்தரித்தபடி உயர்த்தப்பட்டிருக்கும் எனக் கரங்களையும், வருணனின் பாசக்கயிறுகளையும் கண்டு, அனைத்து உயிரினங்களுக்கும் அழிவைத் தரும் யமன் உட்பட எவனுடைய புத்தி கலக்கமடையாதிருக்கும்?(88) எனினும், மிக உறுதியானதும், உண்மைப் பார்வைகளைக் கொண்டதுமான உனது புத்தி கலக்கமடையாதிருக்கிறது. ஓ! வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன் மனோவுறுதியின் விளைவாலேயே நீ இன்று கலக்கமடையாதிருக்கிறாய்.(89) இந்த அண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டும், உடல்படைத்த எவன்தான், தனது உடலின் மீதோ, தன் ஆசைக்குரிய அனைத்துப் பொருட்களின் மீதோ நம்பிக்கையை வைக்கத் துணிவான்?(90) பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், பயங்கரமானதாக இருக்கும் காலநெருப்பினுள் வீசப்பட்டதும், தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதும், உண்மையில் முடிவில்லாததுமான இந்த அண்டம் நிலையில்லாதது என்பதை உன்னைப் போலவே நானும் அறிவேன்.(91) இங்கே ஒவ்வொருவனும் காலத்தால் தாக்கப்படுகிறான். உயிரினங்களில் நுட்பமானவையோ, திரளானவையோ காலத்தின் ஆட்சியில் எந்த எதிர்ப்புணர்வையும் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்களும் காலத்தின் கொப்பரையில் {கொதிகலனில்} சமைக்கப்படுகின்றன.(92) காலத்திற்குத் தலைவன் எவனும் இல்லை. காலம் எப்போதும் கவனத்துடன் இருக்கிறது. காலம் எப்போதும் தன்னுள் அனைத்துப் பொருட்களையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. நிற்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தின் ஆளுகைக்குள் நுழைந்த எவனும், அங்கிருந்து தப்பியதில்லை.(93)

உடல்படைத்த அனைத்தும் கவனமில்லாமல் இருக்கலாம், ஆனால் காலமானது எப்போதும் கவனமாகவும் விழித்தநிலையிலும் அவைகளுக்குப் பின்னால் இருக்கிறது. எவனும் தன்னில் இருந்து காலத்தை விரட்டிவிட்டதாகக் காணப்படுவில்லை.(94) பழமையானதும், நித்தியமானதும், நீதியின் உடல்வடிவமுமான காலமானது அனைத்து உயிரினங்களிலும் சீராகவே இருக்கிறது. காலம் தவிர்க்கப்பட முடியாததாகும், அதன் போக்கும் பின்னோக்கிச் செல்வதில்லை.(95) ஈட்டிக்காரன் {வட்டிக்குக் கடன் கொடுப்பவன்} தன் வட்டியைக் கூட்டிக் கொள்வதைப் போலவே காலமும், கலைகள், லவங்கள், காஷ்டைகள், க்ஷணங்கள், மாதங்கள், பகல்கள் மற்றும் இரவுகள் எனத் தன் நுண்ணியப் பகுதிகளைச் சேர்த்துக் கொள்கிறது.(96) மரங்களின் வேர்களை அடையும் ஓர் ஆற்றின் நீரோட்டம் அம்மரத்தையே அடித்துச் செல்வதைப் போலவே, காலமானது, “இன்று இதைச் செய்வேன், இந்த மற்றொரு செயலை நாளை செய்வேன்” என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை அடித்துச் செல்கிறது.(97) “சற்றுமுன்தான் அவனைப் பார்த்தேன். அதற்குள் எவ்வாறு அவன் இறந்தான்?” என்று கேட்பவர்களையும் காலம் அடித்துச் செல்கிறது.(98)

செல்வம், வசதிகள் {போகங்கள்}, பதவி, செழிப்பு ஆகிய அனைத்தும் காலத்திற்கு இரையாகின்றன. ஒவ்வொரு உயிரினத்தையும் அணுகும் காலம் அதன் உயிரைப் பறித்துச் செல்கிறது. செருக்குடன் தங்கள் தலைகளை உயர்த்தும் அனைத்தும் வீழவே விதிக்கப்பட்டிருக்கின்றன.(99) எது இருப்பில் இருக்கிறதோ, அஃது இல்லாமையின் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும். அனைத்தும் நிலையற்றவையாகவும், உறுதியற்றவையாகவுமே இருக்கின்றன. எனினும் அத்தகைய தீர்மானத்தை அடைவது மிக அரிதான காரியமாகும்.(100) இவ்வளவு உறுதியுடனும், உண்மைப் பார்வையுடனும் கூடிய உனது புத்தி கலக்கமடையாமல் இருக்கிறது. சிலகாலத்திற்கு முன்பு நீ எவ்வாறு இருந்தாய் என்பதை நீ மனத்தால் உணரவில்லை.(101) பலமிக்கக் காலமானது, அண்டத்தைத் தாக்கி, அதைத் தன்னுள்ளேயே சமைத்து வயதின் முதுமையையோ, இளமையையோ கருதிப்பாராமல் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. இவ்வளவுக்கும், காலத்தால் இழுத்துச் செல்லப்படும் ஒருவன், தன் கழுத்தில் வீசப்பட்டிருக்கும் சுருக்கை {பாசக்கயிற்றை} அறியாதவனாகவே இருக்கிறான்.(102) பொறாமை, பகட்டு, பேராசை, காமம், கோபம், அச்சம், ஆசை, கவனமின்மை, செருக்கு ஆகியவற்றில் பற்றுடன் இருக்கும் மக்களே கலக்கமடைகிறார்கள்.(103)

எனினும், நீ இருப்பின் உண்மையை அறிந்தவனாக இருக்கிறாய். கல்வியைப் பெற்றிருக்கும் நீ, ஞானமும், தவமும் கொண்டவனாக இருக்கிறாய். உள்ளங்கையில் இருக்கும் ஒரு நெல்லிக்கனியைக் காண்பதைப் போலக் காலத்தை நீ தெளிவாகக் காண்கிறாய்.(104) ஓ! விரோசனன் மகனே {பலியே}, நீ காலவொழுக்கம் குறித்து முழுமையாக அறிந்தவனாக இருக்கிறாய். அனைத்து வகை ஞானங்களையும் நன்கறிந்திருக்கிறாய். தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட நீ, உன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக நீ ஞானியர் அனைவரின் பற்றுக்குரியவனாகவும் இருக்கிறாய்.(105) நீ உன் புத்தியைக் கொண்டு மொத்த அண்டத்தையும் முழுமையாக உணர்ந்திருக்கிறாய். அனைத்து வகை இன்பங்களை அனுபவித்தவனாக இருப்பினும், எதிலும் பற்று கொள்ளாதவனாக இருப்பதால் நீ எதனாலும் கறைபடிந்தவனாக இல்லை.(106) நீ உன் புலன்களை வென்றிருப்பதால், ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்கள் உன்னைக் களங்கப்படுத்தவில்லை. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் அற்ற உன் ஆன்மாவுக்கு மட்டுமே நீ பணிவிடை செய்கிறாய்.(107) பகையில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருந்து, அமைதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் உன்னை இவ்வாறாகக் காண்பதன் மூலம் என் இதயம் உன்னிடம் கருணை கொள்கிறது.(108)

ஞானமடைந்த உன்னைப் போன்ற ஒருவனைச் சங்கிலியால் பிணைத்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்த நான் விரும்பவில்லை. தீங்கிழையாமை {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். நான் உன்னிடம் இரக்கம் கொள்கிறேன்.(109) உன்னைக் கட்டியிருக்கும் இந்த வருண பாசங்கள், காலப்போக்கில் ஏற்படும் மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் விளைவால் தளர்வடையும். ஓ! பேரசுரா, நீ அருளப்பட்டிருப்பாயாக.(110) எப்போது ஒரு மருமகள், முதிர்ந்த மாமியாரை வேலைவாங்குவாளோ, எப்போது ஒரு மகன் எண்ண மயக்கத்தால் தனது தந்தையை வேலை வாங்குவானோ,(111) எப்போது சூத்திரர்கள் தங்கள் கால்களைப் பிராமணர்களைக் கொண்டு கழுவிக் கொள்கிறார்களோ, எப்போது அவர்கள் {சூத்திரர்கள்} மறுபிறப்பாள வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுடன் அச்சமில்லாமல் கலவியில் ஈடுபடுவார்களோ,(112) எப்போது மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டிய கருவறைகளில் தங்கள் உயிர் நீரை வெளியிடுவார்களோ, எப்போது வீட்டின் கழிவுகள் வெங்கலப் பாத்திரங்கள் மற்றும் தட்டுகளில் தாங்கப்படுமோ, எப்போது தேவர்களுக்காகப் படைக்கப்பட்ட வேள்விக் காணிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டிய பாத்திரங்களில் ஏந்தப்படுமோ,(113) எப்போது நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நால்வகையினரும் மீறுவார்களோ, அப்போது உன்னைக் கட்டியிருக்கும் பாசங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தளர்வடையும்.(114) எம்மிடம் உனக்கு அச்சமேதும் வேண்டியதில்லை. அமைதியாகக் காத்திருப்பாயாக. மகிழ்ச்சியாயிருப்பாயாக. கவலைகள் அனைத்தையும் விடுவாயாக. உன் இதயம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கட்டும். உடல்நலக் குறைவேதும் உனதாகாதிருக்கட்டும்” என்றான் {இந்திரன்}.(115)

யானைகளின் இளவரசனை {ஐராவதத்தைத்} தன் வாகனமாகக் கொண்ட அந்தத் தெய்வீக இந்திரன், இந்த வார்த்தைகளை அவனிடம் {பலியிடம்} சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான். அசுரர்கள் அனைவரையும் வென்று மகிழ்ச்சியில் திளைத்த தேவர்களின் தலைவன், உலகங்கள் அனைத்தின் ஒரே தலைவனானான்.(116) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைவனான அவனைத் துதித்துப் பெரும் முனிவர்கள் பாடினார்கள். நெருப்பின் தேவன் {அக்னி}, காணத்தக்க தன் வடிவத்தில் (அனைவராலும்) ஊற்றப்படும் தெளிந்த நெய்யை மீண்டும் சுமக்கத்தொடங்கினான். மேலும் அந்தப் பெருந்தேவன் {இந்திரன்} தன் கவனிப்பில் விடப்பட்டிருந்த அமுதத்தைக் காக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டான்.(117) வேள்விகளில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்களால் புகழ்ந்து பாடப்பட்ட தலைவன் இந்திரன், சுடர்மிக்கக் காந்தியுடன் தன் கோபம் தணிக்கப்பட்டு, தன் இதயம் அமைதியடைந்து, சொர்க்கத்திலுள்ள தன் வசிப்பிடத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று பேரின்பத்துடன் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(118)

செழிப்பு மற்றும் வறுமைக்கான அறிகுறிகள்! – சாந்திபர்வம் பகுதி – 228-லக்ஷ்மிதேவி அசுரர்களை விட்டு விலகிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்னது; செழிப்பு மற்றும் வறுமையின் அறிகுறிகள்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மனிதனைப் பொறுத்தவரையில் எதிர்கால மேன்மை மற்றும் எதிர்கால வீழ்ச்சிக்கான அறிகுறிகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ அருளப்பட்டிருப்பாயாக, ஒருவனுடைய எதிர்காலச் செழிப்பு மற்றும் எதிர்கால வீழ்ச்சிக்கான முற்குறிகளை அவனது மனமே குறிப்பிடும்.(2) இது தொடர்பாக ஸ்ரீக்கும், சக்ரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(3) பிரம்மாவைப் போன்றே அளவிலா பிரகாசத்துடன் கூடிய சக்தியைக் கொண்டவரும், தன் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டவரும், தன் தவச் செழிப்பின் மூலம் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டையும் உடனே காணவல்லவரும், படைப்பாளனின் உலகத்தில் வசிக்கும் தெய்வீக முனிவர்களுக்கு இணையானவருமான பெருந்தவசி நாரதர், மூவுலகங்களிலும் தன் விருப்பப்படி உலவிக் கொண்டிருந்தார்.(4,5) ஒரு நாள் அதிகாலையில் விழித்தெழுந்த அவர், தூய்மைக்கான சடங்குகளைச் செய்ய விரும்பி, துருவம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட கணவாயின் {துவாரத்தின்} வழியே வெளிவந்த கங்கையாற்றுக்கு அந்நோக்கத்துடனே சென்று அந்த ஓடையில் மூழ்கினார்[1].(6)

ஆயிரம் கண்களைக் கொண்டவனும், வஜ்ரந்தரித்தவனும், சம்பரன் மற்றும் பாகனைக் கொன்றவனுமான இந்திரன், நாரதர் இருந்த அதே கரைக்கு அந்த நேரத்தில் வந்தான்.(7) ஆன்மாக்களை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த முனிவர் மற்றும் தேவன் ஆகிய அவர்கள் இருவரும், அமைதியாகத் தங்கள் ஜபங்களைச் செய்துவிட்டு ஒன்றாக அமர்ந்தனர்.(8) அவர்கள் அந்த நேரத்தில் ஜபிப்பதிலும், பெரும் தெய்வீக முனிவர்களால் சொல்லப்பட்ட பல நல்ல மற்றும் உயர்ந்த செயல்களைக் கொண்ட சிறந்த கதைகளைக் கேட்பதிலும் ஈடுபட்டனர். உண்மையில், அவர்கள் இருவரும் பழைய வரலாறு குறித்த இனிய உரையாடலில் இவ்வாறு ஈடுபட்டனர்.(9) அவ்வாறு அங்கே அமர்ந்திருந்தபோது, தங்கள் முன்னிலையில் ஆயிரங்கதிர்களைப் பொழிந்து கொண்டு உதிக்கும் சூரியனை அவர்கள் கண்டனர். அந்தக் கோளை முழுமையாகக் கண்ட அவர்கள் எழுந்து நின்று அவனது புகழ்பாடினார்கள்.(10)

சரியாக அதே நேரத்தில், அந்நாளில் உதிக்கும் நட்சத்திரத்திற்கு நேரெதிர் திசையில், சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் கூடியதும், அந்த நாளின் இரண்டாவது நட்சத்திரத்தைப் போலத் தெரிந்ததுமான ஏதோ ஓர் ஒளிப்பொருளை அவர்கள் கண்டனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்த ஒளிப்பொருள் படிப்படியாகத் தங்களை நோக்கி வருவதையும் அவர்கள் கண்டனர்.(11) கருடன் மற்றும் சூரியனால் அலங்கரிக்கப்பட்டிருந்த விஷ்ணுவில் அந்தப் பொருள், ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விட்டபடி, மூவுலகங்களுக்கு ஒளியூட்டிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(12) அவர்கள் கண்ட பொருளானவள், அபார அழகைக் கொண்ட அப்சரஸ்கள் பலருடன் கூடிய ஸ்ரீயைத் தவிர வேறு எவருமல்ல. உண்மையில், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த அவள், தானே ஒரு பெரிய சூரிய வட்டிலைப் போலத் தெரிந்தாள்.(13) முழுமையான நட்சத்திரங்களைப் போலத்தெரிந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவள், முத்து மாலைகளுக்கு ஒப்பான மாலையை அணிந்திருந்தாள். இந்திரன், தாமரைகளுக்கு மத்தியில் தனது வசிப்பிடத்தைக் கொண்டிருந்த பத்மை என்றழைக்கப்படும் தேவியைக் கண்டான்.(14) தனது முதன்மையான தேரில் இருந்து இறங்கிய அந்த ஒப்பற்ற பெண்மணி, மூவுலகங்களின் தலைவன் மற்றும் தெய்வீக முனிவர் நாரதர் ஆகியோரை நோக்கி வரத் தொடங்கினாள்.(15) நாரதரால் பின்தொடரப்பட்ட மகவானும் {மகவத் / இந்திரனும்} அந்தப் பெண்மணியை நோக்கிச் சென்றான். அனைத்தையும் அறிந்தவனான அவன், கூப்பிய கரங்களுடன் அவளிடம் சென்று, விஞ்சமுடியாத மதிப்பு மற்றும் மனநேர்மையுடன் அவளை வழிபட்டான். துதிகள் முடிந்ததும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனான அவன், அந்த ஸ்ரீயிடம் பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.(16,17)

சக்ரன் {இந்திரன் ஸ்ரீயிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நீ யார்? உண்மையில் என்ன காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறாய்? ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, ஓ! மங்கலமான பெண்ணே, எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்லப் போகிறாய்?” என்று கேட்டான்.(18)

ஸ்ரீ, “மங்கல வித்துகள் நிறைந்த மூவுலங்களில் உள்ள அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் தங்கள் மொத்த இதயத்தைக் கொண்டும், என்னுடன் தொடர்பை ஏற்படுதிக் கொள்ள முனைகின்றன.(19) நான் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீயும், அனைத்து உயிரினங்களின் செழிப்பின் நிமித்தமாகச் சூரியக் கதிர்களின் தீண்டலால் மலரும் தாமரையில் உதிப்பவளுமா பத்மையும் ஆவேன்.(20) ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, லக்ஷ்மி, பூதி, ஸ்ரீ என்று நான் அழைக்கப்படுகிறேன். நானே நம்பிக்கை {ஸ்ரத்தை}, நானே புத்தி {மேதை}, நானே செல்வாக்கு {ஸன்னதி}, நானே வெற்றி {விஜிதி}, நானே மாற்றமில்லாதவளுமாவேன் {ஸ்திதியுமாவேன்}.(21) நானே பொறுமை {தருதி}, நானே வெற்றி {ஸித்தி}, நானே செழிப்புமாவேன் {ஸம்பூதியுமாவேன்}. நானே ஸ்வாஹா, நானே ஸ்வதா, நானே மதிப்பு {ஸம்ஸ்துதி}, நானே விதி {நியதி}, நானே நினைவுமாவேன் {கிருதியுமாவேன்}.(22) நான் படைமுகப்பிலும், வெற்றிமிக்கக் கொடிமரங்களிலும், அறம்சார்ந்த அரசுகளிலும், அவற்றின் இல்லங்கள், நகரங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளிலும் வசிக்கிறேன்.(23) ஓ! பலனைக் கொன்றவனே, வெற்றியடைந்த பிறகு மூச்சை விடுபவர்களும் {சுவாசிப்பவர்களும்}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான முதன்மையான மனிதர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(24) அறப்பற்றில் உறுதியுடன் இருப்பவர்கள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்கள், பிரம்மத்தில் பற்றுடையவர்கள், பேச்சில் வாய்மை நிறைந்தவர்கள், பணிவுடையவர்கள், ஈகையாளர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(25) முன்பு என் மனநிலையானது, உண்மை மற்றும் புண்ணியத்தில் கட்டப்பட்டிருந்ததன் விளைவால், அசுரர்களிடம் வசித்து வந்தேன். எனினும், அசுரர்கள் முரணியல்களை ஏற்பதைக் கண்டதால் அவர்களை விட்டு வந்திருக்கும் நான் உன்னில் வசிக்க விரும்புகிறேன்” என்றாள்.(26)

சக்ரன், “ஓ! அழகிய முகம் கொண்டவளே, அசுரர்களின் எந்த நடத்தையால் நீ அவர்களிடம் வசித்தாய்? அவர்களிடம் எதைக் கண்டதால் நீ தைத்தியர்களையும், தானவர்களையும் கைவிட்டு இங்கே வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.(27)

ஸ்ரீ, “தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், பொறுமையை இழக்காதவர்கள், சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதையில் நடப்பதில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆகியோரிடம் நான் என்னை நிலையுறுதியுடன் இணைத்துக் கொள்வேன்.(28) சாத்திரக் கல்வி, வேதங்கள், வேதச் சடங்குகள், பித்ரு, தேவ, ஆசான், பெரியோர், விருந்தினர் வழிபாடுகள் ஆகியவற்றுக்காக ஈகையளிப்பதில் புகழ்பெற்றவர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(29) முந்தைய காலத்தில் தானவர்கள் தங்கள் வசிப்பிடங்களைத் தூய்மையாக வைப்பவர்களாக, தங்கள் பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக, வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாக, தங்கள் பெரியோருக்குப் பணிவிடை செய்பவர்களாக, தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்களாக, பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, பேச்சில் வாய்மை நிறைந்தவர்களாக இருந்தனர்.(30)

நம்பிக்கை நிறைந்தவர்களாக; கோபத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக; ஈகையறம் பயில்பவர்களாக; பிறரிடம் ஒருபோதும் பகை கொள்ளாதவர்களாக; நண்பர்கள், ஆலோசகர்கள், மனைவிகள் ஆகியோரைப் பராமரிப்பவர்களாக; ஒருபோதும் பொறாமை கொள்ளாதவர்களாக இருந்தனர்.(31) முந்தைய காலத்தில் அவர்கள் கோபத்தால் நிறைந்து ஒருபோதும் ஒருவரையொருவர் தாக்குபவர்களாக இல்லை. அவர்கள் அனைவரும் நிறைவுடையவர்களாகவும், பிற மக்களின் செழிப்பையும், செல்வாக்கையும் கண்டு துன்புறாதவர்களாகவும் இருந்தனர்.(32) அவர்கள் அனைவரும் அறப்பண்புடையவர்களாக, சிக்கனம் கொண்டவர்களாக, மதிப்பிற்குரிய நடத்தை கொண்டவர்களாக, கருணை கொண்டவர்களாக இருந்தனர். அருள், எளிய நடத்தை, நம்பிக்கையில் நிலையுறுதி ஆகியவற்றை அதிகம் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் தங்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.(33) அவர்கள் தங்கள் பணியாட்கள் மற்றும் ஆலோசகர்களை நிறைவுடன் வைத்திருந்தனர், மேலும் அவர்கள் நன்றியுடையவர்களாகவும், இனிய பேச்சைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஒவ்வொருவரின் நிலை {பதவி} மற்றும் மதிப்பிற்குத் தகுந்த பணிவிடைகளை அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் நாணம் கொண்டவர்களாக இருந்தனர். கடும் நோன்புகளை அவர்கள் நோற்றனர்.(34) புனிதமான ஒவ்வொரு நாளிகளும் அவர்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்தனர். அவர்கள் தங்கள் மேனியில் நறுமணப் பொருட்களையும், மங்கலமான களிம்புகளையும் முறையாகப் பூசிக் கொள்பவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் மேனியை நன்றாக அலங்கரித்துக் கொள்பவர்களாக இருந்தனர். உபவாசங்கள், தவங்களை நோற்பவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக, வேத பாடல்களைப் பாடுபவர்களாக அவர்கள் இருந்தனர்.(35)

அவர்கள் உறங்கிக் கிடந்தபோது சூரியன் ஒருபோதும் உதித்ததில்லை. அவர்கள் ஒருபோதும் நிலவு உறங்கிய பிறகு {விடியற்காலையில்} உறங்கியதில்லை. அவர்கள் எப்போதும் {இரவில்} தயிர் மற்றும் சத்துமாவைத் தவிர்த்தனர்.(36) அவர்கள் ஒவ்வொரு காலையிலும் தெளிந்த நெய் மற்றும் பிற மங்கலப் பொருட்களைக் கண்டனர், புலன்களில் இருந்து விடுபட்டு வேதங்களை உரைத்து, பிராமணர்களுக்குக் கொடை அளித்து வழிபாடு செய்தனர்.(37) அவர்களது உரையாடல்கள் எப்போதும் அறம்சார்ந்தவையாக இருந்தன, அவர்கள் ஒருபோதும் கொடைகளை ஏற்றதில்லை. அவர்கள் எப்போதும் நடுஇறவிலேயே உறங்கச் சென்றனர், பகலில் ஒருபோதும் உறங்கியதில்லை.(38) துயரடைந்தோர், ஆதரவற்றோர், முதியோர், பலவீனர், நோய்வாய்ப்பட்டோர், பெண்கள் ஆகியோரிடம் கருணை காட்டுவதில் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியடைந்தனர், மேலும் தங்கள் உடைமைகளை அனைத்தையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தும் இன்புற்றிருந்தனர்.(39) கலக்கமடைந்தோர், உற்சாகமிழந்தோர், கவலையடைந்தோர், அச்சமடைந்தோர், நோயால் பீடிக்கப்பட்டோர், பலவீனர், உடல் இளைத்தவர்கள், களவு கொடுத்தோர் மற்றும் துன்பத்திலிருப்போர் ஆகியோருக்கு அவர்கள் எப்போதும் ஆறுதலளித்து உறுதியடையச் செய்தனர்.(40)

அறவிதிகளைப் பின்பற்றிய அவர்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்ததில்லை. அவர்கள் (நிறைவேற்றத்தகுந்த) அனைத்தை வகைச் செயல்களைச் செய்யும் நல்ல மனநிலையில் ஆயத்தமாக இருந்தனர். அவர்கள் வயதில் முதிர்ந்தோர் மற்றும் பெரியோருக்கு எப்போதும் பணிவிடை செய்பவர்களாக இருந்தனர்.(41) அவர்கள் பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்கள் ஆகியோரை முறையாக வழிபட்டு, இவர்களை நிறைவு செய்தபிறகு எஞ்சியவற்றையே ஒவ்வொரு நாளும் உண்டனர். அவர்கள் வாய்மை மற்றும் தங்களில் உறுதியான பற்றுடன் இருந்தனர்.(42) அவர்களில் எவரும் நல்ல உணவைத் தனியாக உண்ணவில்லை, பிறர் மனைவியரிடம் கலவியில் ஈடுபடவில்லை. தங்களிடம் கொண்டதைப் போலவே அவர்கள் பிற உயிரினங்களிடமும் கருணை கொண்டிருந்தனர்.(43) அவர்கள் ஒருபோதும் தங்கள் உயிர்வித்தை வெட்டவெளியிலோ, இழிந்த விலங்குகளிலோ, தவிர்க்கப்பட்ட கருவறைகளிலோ, புனிதமான நாட்களிலோ விட்டதில்லை {வெளியேற்றியதில்லை}.(44) அவர்கள் எப்போதும் கொடைகள், புத்திசாலித்தனம், எளிமை, நம்பிக்கைநிறைந்த முயற்சி, பணிவு, நட்பு, மன்னிக்கும் தன்மை ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றவர்களாக இருந்தனர்.(45)

ஓ! பலமிக்கவனே {இந்திரனே}, வாய்மை, ஈகை, தவம், தூய்மை, கருணை, மென்மையான பேச்சுகள், நண்பர்களிடம் பகையில்லாமை ஆகிய இவை அனைத்தும் அவர்களிடம் இருந்தன.(46) குறைதூக்கம், எப்போதும் தாமதம் செய்தல், எரிச்சல், பொறாமை, முன்னறிதிறனின்மை, நிறைவின்மை, மனக்கவலை, பேராசை ஆகியவை ஒருபோதும் அவர்களைத் தாக்கியதில்லை.(47) இந்தப் பண்புகளுக்காகத் தானவர்கள் புகழ்பெற்றிருந்ததன் விளைவால் படைப்பின் தொடக்கமுதல், தொடர்ந்து பற்பல யுகங்களாக நான் அவர்களுடன் வசித்து வந்தேன்.(48) காலம் மாறியது, அந்த மாற்றம் தானவர்களின் பண்பிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அறமும், அறநெறியும் அவர்களைக் கைவிட்டுச் செல்வதையும், அவர்கள் காமம் மற்றும் கோபத்தின் வசப்படுவதையும் நான் கண்டேன்.(49) சாதனைகளில் தாழ்ந்தவர்களாக இருப்பினும்கூட, மேலான தகுதிகளைக் கொண்ட பெரியோரிடம் பகை வளர்க்கத் தொடங்கினர். மேலும் அறம் மற்றும் புண்ணியத்தைக் கொண்ட அந்தப் பெரியோர் சபைகளுக்கு மத்தியில் வைத்து முறையான காரியங்களைப் பேசும்போது அவர்களைக் கேலி பேசவும், அவர்களைப் பார்த்துச் சிரிக்கவும் தொடங்கினர்.(50)

வயதில் பெரியோர்கள் வரும்போது, இளையோர் வசதியாக அமர்ந்து கொண்டு, மரியாதையுடன் எழுந்திருந்து அவர்களை வணங்க மறுத்தனர்.(51) தந்தைமாரின முன்னிலையில் மகன்கள் (தந்தைக்கு மட்டுமே உரிய காரியங்களில்) ஆளுமையை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். கூலி பெறாதவர்களின் தொண்டுகளை ஏற்றுக் கொண்டு வெட்கமில்லாமல் அந்த உண்மையைச் சொல்பவர்களாக இருந்தனர்.(52) நீதியற்ற வகையில் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்து பெருஞ்செல்வத்தைத் திரட்டுவதில் வென்றவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்[2].(53) இரவு நேரத்தில் உரக்கக் கூச்சலிட்டு, அலறுவதிலும், கதறுவதிலும் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களது ஹோம நெருப்புகள் மேல்நோக்கிய பிரகாசமான தழல்களை வெளியிடுவதை நிறுத்தின. மகன்கள் தந்தைமாரிடம் அதிகாரம் செலுத்த தொடங்கினர், மனைவியர் கணவர்களை அடக்கி ஆண்டனர்.(54) தாய்மார், தந்தைமார், வயதில் முதிர்ந்த பெரியோர், ஆசான்கள், விருந்தினர்கள், வழிகாட்டிகள் மேன்மையான நிலையில் இருந்து அதிகாரம் செய்வதை நிறுத்தினர். மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றுடன் வளர்ப்பதை நிறுத்தி அவர்களைக் கைவிடத் தொடங்கினர்.(55)பிச்சையளிக்க ஒரு பகுதியைக் கொடாமலும், தேவர்களுக்குக் காணிக்கையளிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியைக் கொடாமலும் அனைவரும் தங்களிடம் இருந்ததை மொத்தமாக உண்டனர். உண்மையில், வேள்விகளில் தங்கள் பொருட்களைத் தேவர்களுக்குக் கொடாமல், அவற்றைப் பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்கள், மதிப்பிற்குரிய பெரியோர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வெட்கமில்லாமல் தங்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துக் கொண்டனர்.(56) அவர்களது சமையற்காரர்கள், மனம் செயல் மற்றும் சொல்லில் தூய்மையைக் கருத்தில் கொள்பவர்களாக இருக்கவில்லை. மூடப்படாமல் இருப்பவற்றையே அவர்கள் உண்டனர்.(57) அவர்களது தானியங்கள், காகங்களாலும், எலிகளாலும் பாழாகும்படி வயல்களில் திறந்த வெளியில் கிடந்தன. அவர்களது பால் திறந்தே கிடந்தது, உண்டபிறகு கை கழுவாமல் தெளிந்த நெய்யைத் தீண்டத் தொடங்கினர்[3].(58) அவர்களது மண்வெட்டி, சமையல் கத்தி, கூடைகள், பாத்திரங்கள், வெங்கலக் கிண்ணங்கள் மற்றும் பிற சமையலறை பொருட்கள் வீடுகளில் சிதறியிருக்கத் தொடங்கின.(59) அவர்களது இல்லத்தரசிகள் அவற்றைக் கவனிக்காமல் தவிர்ந்திருந்தனர். அவர்கள் வீடுகளையும், சுவர்களையும் மராமத்துச் செய்யாமல் இருந்தனர். விலங்குகளைக் கட்டி வைத்துவிட்டு அவற்றுக்கு உணவும் நீரும் கொடுக்காமல் இருந்தனர்[4].(60)உணவுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளைக் கருத்தில் கொள்ளாமல் அந்தத் தானவர்கள் தாங்களே உண்டு கொண்டிருந்தார்கள்.(61) அவர்கள் பாயசம், கிரிசரம், புலாலுணவு, காஷ்குளி {அப்பம்} ஆகியவற்றை (தேவர்களுக்காகவோ, விருந்தினர்களுக்காகவோ இல்லாமல்) தங்களுக்காகவே தயாரிக்கத் தொடங்கினர். வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சிகளையும் உண்ணத் தொடங்கினர்[5].(62) சூரியன் உதித்த பிறகும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இரவுகளையே பகலாக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய வீட்டில் இரவும் பகலும் சண்டைகளும், சச்சரவுகளும் பெருகிக் கொண்டிருந்தன.(63) அவர்களில் மதிக்கத்தகாதோர், மதிக்கத்தகுந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மதிப்பளிக்காமல் இருந்தனர். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழ்ந்த அவர்கள், அமைதியான வாழ்வை வாழவும், தெய்வீக தியானத்தில் இருக்கவும் காடுகளுக்குச் சென்றவர்களை மதிப்பதை நிறுத்தினர். அவர்களுக்கிடையில் வர்ணக்கலப்புச் சாதாரணமாக நடக்கத் தொடங்கியது. மேனி மற்றும் மனத்தூய்மை பராமரிப்பதை அவர்கள் நிறுத்தினர்.(64) வேதங்களைக் கற்ற பிராமணர்களுக்கு அவர்கள் மத்தியில் எந்த மரியாதையும் இல்லாமல் இருந்தது. ரிக்குகளை அறியாத பிராமணர்கள் கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. {பிராமணர்களில்} மதிக்கத்தகுந்தோர், மதிக்கத்தகாதோர் ஆகிய இருவரும் சமமான வகையில் தாழ்வாகவே நடத்தப்பட்டனர்.(65)அவர்களது பணிப்பெண்கள் தீய நடத்தை கொண்டவர்களாகி, தங்க ஆபரணங்கள் மற்றும் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு, தங்கள் இல்லங்களில் இருந்தார்கள், அல்லது அவர்களது கண் முன்பாகவே செல்வார்கள்.(66) அவர்களில் பெண்கள் ஆண்களாகவும், ஆண்கள் பெண்களாகவும் உடை உடுத்தி விளையாடி பெரும் இன்பத்தை அடையத் தொடங்கினர்.(67) அவர்களது மூதாதையரில் செழிப்புடன் இருந்தவர்கள் தகுந்த மனிதர்களுக்குச் செல்வக்கொடை அளித்தார்கள். அந்தக் கொடையாளிகளின் வழித்தோன்றல்கள், தாங்கள் செழிப்பான நிலையில் இருந்தாலும் கூட, தாங்கள் கொண்ட நம்பிக்கையின்மையால் {நாத்திக நிலைப்பாட்டால்}, அந்தக் கொடைகளைத் திரும்பப்பெறத் தொடங்கினர்.(68) எந்தக் காரியத்தையும் நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கையில் ஒரு நண்பனிடம் இன்னொரு நண்பன் ஆலோசனை கேட்கும்போது, அக்காரியத்தை நிறுத்துவதால் எந்தப் பயனும் இல்லையென்றாலும் அதை நிறுத்தினர்.(69) அவர்களில் சிறந்தோரில் கூட அடுத்தவர் செல்வத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்ட வணிக்கர்களும், வியாபாரிகளும் தோன்றினர். அவர்களில் சூத்திரர்கள் தவப்பயிற்சி செய்யத் தொடங்கினர்.(70)

அவர்களில் சிலர், தங்கள் நேரத்தையும், உணவையும் ஒழுங்கு படுத்திக் கொள்ள விதிகளை அமைக்காமலேயே கல்வியைத் தொடங்கினர். வேறு சிலர் பயனற்ற விதிகளை அமைத்துக் கொண்டு கல்வியைத் தொடங்கினர். சீடர்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாகத் தொண்டாற்றாதவர்களாக இருந்தனர். ஆசான்களும் தங்கள் சீடர்களை நட்புடன் கூடிய தோழர்களாக நடத்தத் தொடங்கினர்.(71) வேலையால் களைத்துப் போன தந்தைமாரும், தாய்மாரும் விழா கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். முதிர்வயது கொண்ட பெற்றோர், தங்கள் மகன்களால் அதிகாரத்தை இழந்து, உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.(72) அவர்களில் வேதங்களை அறிந்தவர்களும், ஒழுக்க ஆழத்தில் கடலுக்கு ஒப்பானவர்களுமான ஞானியர் கூட உழவு மற்றும் அத்தகைய பிற தொழில்களில் ஈடுபடத் தொடங்கினர். கல்லாதவர்கள் அறியாமை கொண்டோருமான மனிதர்கள் சிராத்தங்களில் உணவு படைக்கப்பட்டனர்[6].(73) ஒவ்வொரு நாள் காலையிலும், சீடர்கள், கடமைகள் குறித்து விசாரிப்பதற்கும், செய்ய வேண்டிய செயல்களை உறுதிசெய்வதற்கும், ஆணைகளை வேண்டி ஏற்பதற்கும் ஆசான்களை அணுகுவதற்குப் பதிலாக, அவர்களே ஆசான்களின் பணிவிடைகளை ஏற்றார்கள்.(74) மருமகள்கள், தங்கள் கணவர்களின் தாய்மார் மற்றும் தந்தைமாரின் முன்னிலையே தங்கள் பணியாட்களையும், பணிப்பெண்களையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்து, தங்கள் கணவர்களை அழைத்துப் பேசி அவர்களையும் கண்டித்தனர்.(75)தந்தைமார், தங்கள் மகன்களைப் பெருங்கவனத்துடன் நல்ல மனநிலையில் வைத்துக் கொண்டோ, அச்சத்தால் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தோ, துன்பம் மற்றும் துயரத்துடன் வாழ்ந்தனர்.(76) தீ, அல்லது கள்வர்கள், அல்லது மன்னனின் மூலம் செல்வத்தை இழந்தவர்களுடன் நட்பாயிருப்பவர்கள், அவர்களது இழப்பைக் கண்டு கேலியாகச் சிரிப்பதில் ஈடுபடத் தொடங்கினர்.(77) அவர்கள் நன்றிகெட்டவர்களாகவும், நாத்திகர்களாகவும், பாவிகளாகவும், ஆசான்களின் மனைவியருடன் கூட முறைகேடான கலவி புரியும் அடிமைகளாகவும் இருந்தார்கள். தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்களானார்கள். நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் மீறினார்கள். முன்பு அவர்களைத் தனித்துக் காட்டிய காந்தி இப்போது அவர்களிடம் இல்லாமல் போனது.(78) ஓ! தேவர்களின் தலைவா, இவற்றின் விளைவாலும், முந்தைய இயல்புக்கு முரணான பிற தீய ஒழுக்கங்களின் அறிகுறிகளினாலும், நான் இனியும் அவர்களுடன் வசிக்க மாட்டேன்.(79)

எனவே, நானே என் சொந்த விருப்பத்தின் பேரில் உன்னிடம் வந்துவிட்டேன். ஓ! சச்சியின் தலைவா, என்னை மதிப்புடன் ஏற்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா, உன்னால் கௌரவிக்கப்படும் நான் பிற தேவர்கள் அனைவரிடமும் கௌரவத்தை அடைவேன்.(80) நான் எங்கு வசிக்கிறேனோ, அங்கே என்னுடன் இணைபிரியாதவர்களாக இருப்பவர்களும், என்னையே சார்ந்திருப்பவர்களுமான ஜெயாவை எட்டாவதாகக் கொண்ட மற்ற ஏழு தேவிகளும் வாழ விரும்புவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு {ஆசை}, நம்பிக்கை {ஸ்ரத்தை}, புத்தி {த்ருதி}, நிறைவு {க்ஷாந்தி}, வெற்றி {விஜிதி}, முன்னேற்றம் {ஸன்னதி}, மன்னிப்பு {க்ஷமை} ஆகியோராவர். ஓ பாகனைத் தண்டித்தவனே, அவர்களில் எட்டாவதாக இருக்கும் ஜெயா {விருத்தி} முதன்மையான இடத்தைப் பெறுவாள்.(82) அவர்கள் அனைவரும், நானும் அசுரர்களைக் கைவிட்டுவிட்டு உன் ஆட்சிப்பகுதிக்குள் வந்திருக்கிறோம். இனிமேல் நாங்கள், அறம் மற்றும் நம்பிக்கைக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களான தேவர்களுக்கு மத்தியிலேயே வசிப்போம்” என்றாள் {ஸ்ரீ}”. (83)

அந்தத் தேவி இவ்வாறு சொன்ன பிறகு, அவளை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக தெய்வீக முனிவர் நாரதரும், விருத்திரனைக் கொன்றவனான வாசவனும் மகிழ்ச்சிமிக்க வரவேற்பை அவளுக்கு அளித்தனர்.(84) அப்போது அக்னியின் நண்பனான வாயு தேவன், இனிய நறுமணங்களைச் சுமந்தபடி மென்மையாகச் சொர்க்கத்தில் வீசி அனைத்து உயிரினங்களுக்கு உற்சாகத்தை அளித்து, புலன்கள் அனைத்திற்கும் இன்பத்தை அளித்தான்.(85) (இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) தேவர்கள் அனைவரும் மகவத்தின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மியைக் காணும் எதிர்பார்ப்பில் ஒரு தூய்மையான, இனிய இடத்தில் கூடி அங்கேயே காத்திருந்தனர்.(86) அப்போது, ஆயிரம் கண்களைக் கொண்டவனான தேவர்களின் தலைவன், தன்னுடன் ஸ்ரீயையும், தனது நண்பரான பெரும் முனிவரையும் அழைத்துக் கொண்டு, பச்சை குதிரைகளால் இழுக்கப்பட்ட அற்புதத் தேரைச் செலுத்திக் கொண்டு, அனைவரின் மதிப்பையும் ஏற்றபடியே தேவர்களின் சபைக்கு வந்தான்.(87) எவருடைய ஆற்றலை தேவர்கள் அனைவரும் அறிவார்களோ அந்தப் பெரும் முனிவர் நாரதர், ஸ்ரீயின் அங்கீகாரத்துடன் வஜ்ரதாரி செய்த சைகையைக் கண்டு, அங்கே அந்தத் தேவியின் வரவை வரவேற்று, அது மிக மங்கலமானது என்பதை அறிவித்தார்.(88) சொர்க்கத்தின் ஆகாயம் தெளிவானதாகவும், பிரகாசமானதாகவும் இருந்து, சுயம்புவான பெரும்பாட்டனின் உலகத்தில் அமுதத்தைப் பொழியத் தொடங்கியது. தெய்வீகத் துந்துபிகள் எவராலும் முழக்கப்படாமலே முழங்கத் தொடங்கின. அடிவானின் புள்ளிக்ள அனைத்தும் தெளிவடைந்து காந்தியில் சுடர்விடுனவாகத் தெரிந்தன.(89)

இந்திரன் உரிய காலங்களில் தோன்றி பயிர்களின் மேல் மழையைப் பொழிந்தான். அறப்பாதையில் இருந்து எவரும் வழுவவில்லை. பூமி பல சுரங்கங்களால் அலங்கரிக்கப்பட்டு, ரத்தினங்கள் மற்றும் தங்கத்தாலும், வேத ஒலிகள் மற்றும் இன்னும் பிற இனிய ஒலிகளாலும் நிறைந்து, தேவர்களின் வெற்றியால் பெருகிக் கொண்டிருந்தது.(90) உறுதியான மனங்களைக் கொண்டவர்களும், நல்லோரால் நடக்கப்படும் மங்கலப்பாதையைப் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் அனைவரும், வேதங்கள், அறச்சடங்குகள் மற்றும் அறச்செயல்களில் இன்பங்கொள்ளத் தொடங்கினர். மனிதர்கள், தேவர்கள், கிண்ணரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் செழிப்புடன் உற்சாகம் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(91) காற்று தேவன் ஒரு மரத்தைப் பலமாகக் குலுக்கினாலும் அகாலத்தில் எந்த மலரும் விழாது எனும்போது, கனிகளைக்குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது. பசுக்கள் அனைத்தும் மனிதர்களால் கறக்கப்படும்போது இனிமைமிக்கப் பாலைக் கொடுக்கத் தொடங்கின. கடும் மொழிகளும் கொடுமொழிகளையும் எவரும் சொல்லவில்லை.(92) முன்னேற விரும்புபவர்கள், பிராமணர்களின் சபையை அணுகி, அனைத்து விருப்புங்களையும் அருள வல்ல தேவர்கள் அனைவரின் தலைமையில் உள்ள இந்திரனையும், ஸ்ரீயையும் புகழும் இந்தக் கதையைப் படித்தால், பெருஞ்செழிப்பை வெல்வார்கள்.(93) ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இவையே செழிப்பு மற்றும் வறுமைக்கான முதன்மையான அறிகுறிகளாகும். உன்னால் தூண்டப்பட்ட நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். இங்கே சொல்லப்பட்ட போதனைகளைக் கவனமாகச் சிந்தித்து அதன்படி உன்னை அமைத்துக் கொள்வதே உனக்குத் தகும்” என்றார் {பீஷ்மர்}.(94)

பிரம்மஞானியின் அறிகுறிகள்! – சாந்திபர்வம் பகுதி – 229-பிரம்ம ஞானிகளின் குறியீடுகளைப் பற்றித் தேவலருக்கும் ஜைகீஷவ்யருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எந்த மனநிலை, கடமைகளின் எந்த வழிமுறை, எந்த ஞானம், எந்தச் சக்தி ஆகியவற்றைக் கொண்டு ஒருவன், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு {பிரகிருதிக்கு} எட்டாததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நிவிருத்தி எனும் அறமொழுகுவதில் ஈடுபடுபவனும், குறைவாக உண்பவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனால், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு மேலானதுமான பிரம்மத்தை அடையமுடியும்.(2) ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜைகீஷவ்யருக்கும், அசிதருக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் பெரும் ஞானம் கொண்டவரும், கடமை மற்றும் அறநெறி குறித்த உண்மைகளை முழுமையாக அறிந்தவருமான ஜைகீஷவ்யரிடம் அசித தேவலர் பேசினார்.(4)

தேவலர் {ஜைகீஷவ்யரிடம்}, “புகழப்படும்போது நீர் மகிழ்ச்சியடைவதில்லை. பழிகூறப்படும்போதோ, நிந்திக்கப்படும்போதோ நீர் கோபவசப்படுவதில்லை. உண்மையில் உமது ஞானம்தான் என்ன? இஃதை எங்கிருந்து பெற்றீர்? உண்மையில் அந்த ஞானத்தின் புகலிடம் எது?” எனக் கேட்டார்”.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு தேவலரால் கேட்கப்பட்டவரும், கடும் தவங்களை உடைய தூய்மையானவருமான ஜைகீஷவ்யர் நம்பிக்கை நிறைந்தவையும், ஆழமான கருத்தைக் கொண்டவையும், உயர்ந்த முக்கியத்துவம் கொண்டவையுமான வார்த்தைகளைச் சொன்னார்.(6)

ஜைகீஷவ்யர் {அசித தேவலரிடம்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அறச்செயல்களைச் செய்வோர் அனைவரின் மதிப்பீட்டில் எது உயர்ந்த கதியோ, எது உயர்ந்த லட்சியமோ, எது அமைதி நிலையோ அஃதை உமக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஓ! தேவலரே, புகழ்வோரிடமும், பழிப்போரிடமும் ஒன்றாகவே நடந்து கொள்பவர்களும், தங்கள் சொந்த நோன்புகள் மற்றும் நற்செயல்களை மறைப்பவர்களும்,(8) பதில்குற்றச்சாட்டுகளை வைப்பதில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், நன்மையாக இருந்தாலும் (நன்மையை உண்டாக்குவதற்குப் பதில்) தீமையை உண்டாக்கும் என்று கணக்கிடப்படுபவற்றை ஒருபோதும் செய்யாதவர்களும், அடைந்த தீங்கிற்குப் பதில்தீங்கு செய்ய விரும்பாதவர்களுமான மனிதர்களே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்[1].(9) வரப்போவதை நினைத்து அவர்கள் ஒருபோதும் வருந்துவதில்லை. தங்கள் முன்னிலையில் இருப்பவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்வார்கள். கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக ஒருபோதும் அவர்கள் துயரில் ஈடுபட மாட்டார்கள், அல்லது அவற்றைத் தங்கள் மனங்களில் நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.(10)ஓ! தேவலரே, சக்தியையும், ஒழுங்குபடுத்தப்பட்ட மனங்களையும் கொண்ட அவர்கள், மரியாதையுடன் வேண்டிக் கொள்ளப்பட்டால், எது எவ்வழியில் செய்யப்பட வேண்டுமோ, அஃதை அவர் அனைத்துப் பொருட்களைப் பொறுத்தவரையில் எவை அவர்களுக்காகக் காத்திருக்குமோ அவற்றைத் தங்கள் விருப்பப்படியே செய்வார்கள்[2].(11) முதிர்ந்த அறிவு, பெரும் ஞானம், முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் ஆசைகளைத் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் அவர்கள் எவருக்கும் எண்ணத்திலோ, சொல்லிலோ, செயலிலோ தீங்கிழைப்பதில்லை.(12) பொறாமை அற்ற அவர்கள் எவருக்கும் தீங்கிழைக்கமாட்டார்கள். தற்கட்டுப்பாடு கொண்ட அவர்கள், அடுத்தவரின் செழிப்பைப் பார்த்து ஒருபோதும் துன்பப்பட மாட்டார்கள்.(13) அத்தகைய மனிதர்கள் மிகைப்படுத்திப் பேசுவதையோ, மற்றவர்களைத் துதிபாடுவதில் ஈடுபடுவதையோ, அவர்களைக் குறித்துத் தவறாகப் பேசுவதையோ ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தங்களைப் புகழ்பவர்களாலோ, பழிப்பவர்களாலோ அவர்கள் ஒருபோதும் பாதிப்படைவதில்லை.(14) அவர்கள் தங்கள் ஆசைகள் அனைத்தையும் பொறுத்தவரையில் அமைதியான மனநிலையில் இருந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுவார்கள். அவர்கள் ஒருபோதும் கோப வசப்படுவதோ, மகிழ்ச்சிக்கூத்தாடுவதோ, எவ்வுயிருக்கும் தீங்கிழைப்பதோ கிடையாது.(15)அவர்கள், தங்கள் இதய முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து மிக மகிழ்ச்சியாகக் கடந்து செல்வார்கள். அவர்களுக்கு நண்பர்கள் எவருமில்லை, அதே போல அவர்களும் பிறருக்கு நண்பராயிருப்பதில்லை.(16) அவர்களுக்கு எதிரிகள் எவரும் கிடையாது, அதே போல அவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிரிகளாக இருப்பதில்லை. உண்மையில், இவ்வழியில் வாழக்கூடிய மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே தங்கள் வாழ்வைக் கடத்துவார்கள்[3].(17) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அறம் மற்றும் அறநெறிகளின் விதிகளில் ஞானத்தை அடைவோரும், அவ்விதிகளை நடைமுறையில் பயில்வோரும் இன்பத்தை அடைவதில் வெல்வார்கள், அதே வேளையில் அறவழியில் இருந்து வீழ்ந்தவர்கள் துன்பங்கள் மற்றும் துயரங்களால் பீடிக்கப்படுவார்கள்.(18) நான் இப்போது அறவழியைப் பின்பற்றுகிறேன். பிறரால் இகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் எரிச்சல் அடைய வேண்டும்? அல்லது பிறரால் புகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் நிறைவு கொள்ள வேண்டும்?(19) மனிதர்கள் தாங்கள் ஈடுபடும் செயல்களில் இருந்து அவர்கள் விரும்பிய எந்தப் பொருளையும் அடையட்டும். (ஈட்டல் மற்றும் இழத்தலில் நான் வேறுபாடற்றவனாக இருக்கிறேன்). புகழும், இகழும் என் வளர்ச்சிக்கோ, குறைவிற்கோ பங்களிக்க இயலாதவையாக இருக்கின்றன[4].(20)பொருட்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டவன், அவமதிப்பையே கூட அமுதமாக எண்ணி நிறைவை அடைவான். அறிவுள்ள மனிதன், மதிப்பையே நஞ்சாக எண்ணி உண்மையில் எரிச்சலடைவான்.(21) இந்தக் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் பிறரால் அவமதிக்கப்பட்டாலும் இம்மையிலும், மறுமையிலும் அச்சமில்லாமல் உறங்குவான். மறுபுறம், அவனை அவமதிப்பவனோ அழிவை அடைவான்.(22) எந்த ஞானியர் உயர்ந்த கதியை அடைய முனைவார்களோ அவர்கள் இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றியே வெற்றியை அடைவார்கள்.(23) தன் புலன்கள் அனைத்தையும் வென்ற மனிதன், வேள்விகள் அனைத்தையும் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன், அழிவில்லாத்தும், தொடக்கக் கால இயற்கையும் {பிரகிருதியும்} எட்டமுடியாமல் விஞ்சி நிற்கும் உயர்ந்த ஏணியுமான பிரம்மத்தை அடைவான்.(24) தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள் ஆகியோராலும் கூட இந்த உயர்ந்த கதியை அடைந்தவனின் ஏணியை எட்ட முடியாது” என்றார் {ஜைகீஷவ்யர்}”.(25)

நாரதரின் பெருமை! – சாந்திபர்வம் பகுதி – 230-நற்குணங்களே உலகை வசப்படுத்தும் என்பதைச் சொல்ல நாரதரைக் குறித்து உக்ரசேனருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அனைவரின் அன்புக்குரியவனாக, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துபவனாக, அனைத்துத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்}, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாக எவன் இருக்கிறான்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக முந்தைய சந்தர்ப்பம் ஒன்றில் உக்ரசேனனால் கேட்கப்பட்டுக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்போது நான் சொல்லப் போகிறேன்.(2)

உக்ரசேனன் {கிருஷ்ணனிடம்}, “மனிதர்கள் அனைவரும் நாரதரின் தகுதிகளைக் குறித்துப் பேசுவதில் பேராவல் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தெய்வீக முனிவர் உண்மையில் அனைத்து வகைத் தகுதிகளையும் கொண்டவராக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ! கேசவா, இதைக் குறித்த யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(3)

வாசுதேவன், “ஓ! குகுரர்களின் தலைவரே {உக்ரசேனரே}, ஓ! மன்னா, நான் அறிந்த வரையில் நாரதரின் நற்பண்புகளைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக. நாரதர் எந்த அளவுக்கு ஒழுக்கத்தில் நல்லவராகவும், பக்திமானாகவும் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் சாத்திரங்களைக் கற்றவராக இருக்கிறார்.(4) இருப்பினும், அவரது ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில், அவர் ஒருவனின் குருதியைக் கொதிக்கச் செய்யும் செருக்கை ஒருபோதும் பேணிவளர்ப்பதில்லை. இதன்காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(5) நிறைவின்மை, கோபம், அலட்சியப் போக்கு {சபலம்}, அச்சம் ஆகியவை நாரதரிடம் கிடையாது. அவர்கள் காரிய தாமதம் செய்வதில் இருந்து விடுபட்டவராகவும், துணிவுமிக்கவராகவும் இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(6) நாரதர் அனைவரின் மதிப்புமிக்க வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆசை அல்லது பேராசையின் மூலம் அவர் தனது வார்த்தைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(7) அவர், ஆன்ம ஞானத்திற்கு வழிவகுக்கும் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவராகவும், அமைதியான மனநிலை கொண்டவராகவும், பெருஞ்சக்தியைக் கொண்டவராகவும், தன் புலன்களுக்குத் தலைவராகவும் இருக்கிறார். அவர் வஞ்சனையில் இருந்து விடுபட்டவராக, பேச்சில் வாய்மைநிறைந்தவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(8) சக்தி, புகழ், நுண்ணறிவு, ஞானம், பணிவு, நற்பிறப்பு, தவங்கள் மற்றும் வயதால் அவர் புகழ்பெற்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(9) அவர் நன்னடத்தைக் கொண்டவராக இருக்கிறார். அவர் நன்றாக உடுத்தி நன்றாக அலங்கரித்துக் கொள்கிறார். தூய்மையான உணவை அவர் உண்கிறார். அவர் அனைவரிடமும் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் உடலாலும் மனத்தாலும் தூய்மையானவராக இருக்கிறார். அவர் இனிய பேச்சைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பொறாமை மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(10)

நிச்சயமாக அவர் எப்போதும் அனைத்து மக்களின் நன்மையில் ஈடுபடுகிறார். அவரிடம் எந்தப் பாவமும் வசிப்பதில்லை. பிறரின் தீப்பேற்றில் அவர் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(11) வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், புராணங்களைக் கவனிப்பதன் மூலமும் அவர் உலகம் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் வெல்ல எப்போதும் முனைகிறார். அவர் பெருந்துறவியாவார், மேலும் அவர் எவரையும் ஒருபோதும் அவமதிப்பதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(12) அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்; எனவே, அவர் எவரிடமும் அன்பு கொள்வதுமில்லை எவரையும் வெறுப்பதுமில்லை. அவர் எப்போதும் கேட்பவனுக்கு இனிமையானவற்றையே பேசுகிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(13) அவர் சாத்திரங்களின் பெரும் கல்வியைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பல்வேறு இனிமையான காரியங்களைக் குறித்து உரையாடுகிறார். அவரது அறிவும், ஞானமும் பெரியனவாகும். அவர் பேராசையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனையில் இருந்தும் விடுபட்டவராக இருக்கிறார். பெரிய இதயம் கொண்டவராக இருக்கிறார். கோபத்தையும், பேராசையையும் வென்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(14) ஈட்டல் அல்லது இன்பம் தொடர்புடைய எந்தக் காரியத்திற்காகவும் அவர் ஒருபோதும் எவரிடமும் சச்சரவு செய்ததில்லை. அனைத்துக் களங்கங்களும் அவரிடம் இருந்து கிழித்து எறியப்பட்டன. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(15)

(பிரம்மத்திடம்) அவரது அர்ப்பணிப்பு உறுதியானதாகும். அவர் ஆன்மா பழியற்றதாகும். அவர் ஸ்ருதிகளை நன்கறிந்தவராக இருக்கிறார். கொடுமையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனை அல்லது குற்றங்களின் ஆதிக்கத்தைக் கடந்தவராக அவர் இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(16) (பிறரின்) பற்றுக்குரிய அனைத்துப் பொருட்களிலும் அவர் பற்றில்லாதவராக இருக்கிறார்.[1] அவர் ஒருபோதும் நீண்ட காலம் ஐயத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கியதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(17) அவர் ஈட்டல் மற்றும் இன்பம் தொடர்புடைய பொருட்களில் எந்த ஏக்கமும் கொள்பவரில்லை. அவர் தன்னைத்தானே ஒருபோதும் புகழ்ந்து கொள்வதில்லை. அவர் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். பேச்சில் மென்மை கொண்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(18) அவர் ஒன்றுக்கொன்று வெவ்வேறான மனிதர்கள் அனைவரின் இதயங்களிலும் எந்தப் பழியும் சொல்லாமல் அவற்றை {அவர்களின் இதயங்களைக்} கவனிக்கிறார். பொருட்களின் தோற்றம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் அவர் நன்கறிந்தவராக இருக்கிறார்.(19) அவர் எவ்வகை அறிவியலையும் ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை, அல்லது அவற்றில் வெறுப்பைக் காட்டுவதில்லை. அவர் தனது சொந்த தகுதிக்குரிய அறநெறியின்படி வாழ்கிறார். அவர் ஒருபோதும் கனியற்ற வகையில் காலத்தைக் கடத்துவதில்லை. அவரது ஆன்மா எப்போதும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(20)

உழைப்பைச் செலுத்த வேண்டிய காரியங்களில் அவர் எப்போதும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் அறிவையும், ஞானத்தையும் ஈட்டியிருக்கிறார். அவர் யோகத்தில் ஒரு போதும் தணிவடைந்ததில்லை. அவர் எப்போதும் கவனத்துடனும், முயற்சிக்கான ஆயத்தத்துடனும் இருக்கிறார். அவர் எப்போதும் கவனமிக்கவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(21) அவர் தன் குறைகள் எதற்காகவும் ஒருபோதும் நாணமடைந்ததில்லை. அவர் மிகுந்த கவனம் கொண்டவராக இருக்கிறார். அவர் எப்போதும் பிறருக்கான நன்மையில் அவர்களுடன் சேர்ந்து எப்போதும் ஈடுபடுகிறார். அவர் பிறரது இரகசியங்களை ஒருபோதும் வெளியிடுவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(22) மதிப்புமிக்கப் பொருட்களை அடையும் சந்தர்ப்பங்களிலும் அவர் ஒருபோதும் திளைப்பின் வசப்படுவதில்லை. எந்த இழப்பிலும் அவர் ஒருபோதும் வருந்துவதுமில்லை. அவரது புத்தி உறுதியானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. அவரது ஆன்மா அனைத்துப் பொருட்களிலும் பற்றில்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(23) இவ்வாறு அனைத்துத் தகுதிகளையும், சாதனைகளையும் கொண்டவரும், அனைத்து காரியங்களிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்பவரும், தூய்மையான உடலும் மனமும் கொண்டவரும், முற்றிலும் மங்கலகரமானவரும், காலத்தின் போக்கு மற்றும் குறிப்பிட்ட செயல்களின் வாய்ப்புக்குரிய காலங்களையும் நன்கறிந்தவரும், இனிமையான பொருட்கள் அனைத்தையும் நன்கறிந்தவருமான அவரிடம் எவர்தான் அன்புபாராட்டாமல் இருப்பார்கள்?” என்று கேட்டான் {கிருஷ்ணன்}”.(24)

வியாசரும், சுகமுனியும்! – சாந்திபர்வம் பகுதி – 231-வியாசருக்கும் அவரது மகன் சுகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; காலத்தின் பல்வேறு பிரிவினைகள், ஒவ்வொரு யுகத்தின் கால அளவு, பல்வேறு யுகங்களில் மனிதர்களின் வாழ்நாட்கள் ஆகியவற்றை வியாசர் சுகருக்கு உரைப்பது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தவரே, உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும், முடிவையும் குறித்தும்; அவற்றின் தியான இயல்பு மற்றும் அவற்றின் செயல்கள் குறித்தும்; காலப்பிரிவினைகள் மற்றும் ஒவ்வொரு யுகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாள் காலங்கள் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன்.(1) உலகத்தின் தோற்றம் மற்றும் ஒழுக்கம் குறித்தும்; உயிரினங்களின் வருகை மற்றும் அவை செயல்படும் விதம் குறித்துமான முழு உண்மையையும் நான் அறிய விரும்புகிறேன். உண்மையில், அவற்றின் படைப்பும், அழிவும் எங்கிருந்து நடைபெறுகின்றன?(2) ஓ! அறவோரில் சிறந்தவரே, நீர் எங்களுக்கு உதவ எண்ணினால், நான் கேட்பது குறித்து எங்களுக்குச் சொல்வீராக.(3) இதற்கு முன்பு நீர் சொன்னவகையில் பிருகுவுக்கும், மறுபிறப்பாள தவசியான பரத்வாஜருக்கும் இடையில் நடந்த சிறந்த உரையாடலைக் கேட்டு என் புத்தி அறியாமையில் இருந்து நீங்கி,(4) உலகம் சார்ந்த பொருட்களில் இருந்து விலகி, யோகத்தில் மிகவும் பற்றுக் கொண்டு, தெய்வீகத் தூய்மையில் நிலைத்திருக்கிறது. எனவே, இக்காரியம் குறித்து மீண்டும் உம்மிடம் நான் கேட்கிறேன். (இது குறித்து மேலும் விரிவாக) என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தெய்வீகமான வியாசரிடம் அவரது மகனான சுகர் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பழைய உரையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) எல்லையற்ற வேதங்களையும், அதன் அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்று, சிறந்த அறத்தகுதியை ஈட்டியதன் விளைவால் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்க விரும்பிய சுகர்,(7) தீவில் பிறந்த முனிவரான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இதே கேள்விகளையே கேட்டு, அவரால் ஐயங்கள் தீர்க்கப்பட்டார். அவர் (கல்வி மற்றும் தியானத்தின் மூலம்) கடமைகளைக் குறித்த உண்மைகள் தொடர்பான அனைத்து ஐயங்களையும் நீக்கினார்.(8)

சுகர் {வியாசரிடம்}, “கால அறிவால்[1] அனைத்து உயிரினங்களின் படைப்பாளனென உறுதிசெய்யப்பட்டவன் எவன் என்பதையும், ஒரு பிராமணனால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்”.(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மகனால் {சுகரால்} கேள்வி கேட்கப்பட்டவரும், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் ஆகிய இரண்டின் அறிவைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், முற்றறிவு பெற்றவருமான தந்தை {வியாசர்}, அக்காரியம் குறித்து இவ்வாறே உரைத்தார்.(10)

வியாசர் {சுகரிடம்}, “தொடக்கமும் முடிவும் இல்லாததும், பிறப்பில்லாததும், ஒளியுடன் சுடர்விடுவதும், சிதைவுக்கு அப்பாற்பட்டதும், மாற்றமில்லாததும், அழிவில்லாததும், புலப்படாததும், மேன்மையான அறிவுமான பிரம்மம் மட்டுமே படைப்புக்கு முன்பே இருக்கிறது.(11) முனிவர்கள், காலத்தை அளந்து குறிப்பிட்ட பகுதிகளுக்குக் குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளனர். பதினைந்து கண் சிமிட்டல்களின் {கால} அளவு ஒரு காஷ்டை என்று அழைக்கப்படுகிறது. முப்பது காஷ்டைகள் ஒரு கலை என்று அழைக்கப்படுகிறது. முப்பது கலைகளும், கலைகளில் பத்தில் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு முகூர்த்தம் என்றறியப்படுகிறது. முப்பது முகூர்த்தங்கள் ஒரு பகலையும் இரவையும் உண்டாக்குகின்றன. முப்பது பகல்களும் இரவுகள் ஒரு மாதம் என்றழைக்கப்படுகிறது. பனிரெண்டு மாதங்கள் ஒரு வருடங்கள் என்றழைக்கப்படுகிறது.(12,13) கணித அறிவியலை அறிந்த மனிதர்கள், (சூரியனின் போக்கைச் சார்ந்து) ஒரு வருடத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு {உத்தராயணம், தக்ஷிணாயனம்} என்ற இரண்டு அயணங்களை அமைத்திருக்கின்றனர்.(14) சூரியன் மனித உலகிற்கான பகலையும், இரவையும் அமைக்கிறான். இரவானது அனைத்து உயிரினங்களும் உறங்குவதற்காகவும், பகலானது செயல்படுவதற்காகவும் இருக்கிறது.(15)

மனிதர்களின் ஒரு மாதமானது பித்ருக்களின் ஒரு பகலுக்கும் இரவுக்கும் {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (பித்ருக்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, (மனிதர்களின்) வளர்பிறை நாட்கள் {சுக்லபக்ஷம்} செயல்படுவதற்கானதாகவும் {பித்ருக்களின் பகலாகவும்}; தேய்பிறை நாட்கள் {கிருஷ்ணபக்ஷம்} உறங்குவதற்காகவும் {பித்ருக்களின் இரவாகவும்} இருக்கிறது.(16) (மனிதர்களின்) ஒரு வருடம் தேவர்களின் ஒரு பகல் மற்றும் இரவுக்கு {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (தேவர்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, இளவேனில் காலத்தில் இருந்து கூதிர் காலம் வரையில் சூரியன் பயணிக்கும் அரை வருடம் {உத்தராயணம்} தேவர்களின் பகலாகவும், கூதிர் காலத்தில் இருந்து இளவேனில் காலம் வரையில் அவன் பயணிக்கும் அரை வருடம் {தக்ஷிணாயனம்} அவர்களின் இரவாகவும் இருக்கிறது.(17) நான் உன்னிடம் சொன்னவாறு மனிதர்களின் பகலிரவுகளைக் கணக்கிடுவதன் மூலம், பிரம்மனின் பகலிரவு மற்றும் அவனுடைய வருடங்களையும் நான் சொல்லப் போகிறேன்.(18) கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலியுகங்களைப் பொறுத்தவரையில், (இவ்வாறு) பல்வேறு காரணங்களுக்காகப் பலவாறு கணக்கிடப்படும் வருடங்களின் எண்ணிக்கையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(19) (தேவர்களின்) நாலாயிரம் வருடங்கள் முதல் அல்லது கிருத யுகத்தின் காலமாகும். அந்த யுகத்தின் காலைப் பொழுது நானூறு வருடங்களையும், அதன் மாலைப் பொழுது நானூறு வருடங்களையும் கொண்டதாகும். (எனவே கிருத யுகத்தின் மொத்த கால அளவானது தேவர்களின் வருடங்களில் நாலாயிரத்து எண்ணூறு {4800} வருடங்ளாகும்).(20)

பிற யுகங்களைப் பொறுத்தவரையில், அவை ஒவ்வொன்றின் கால அளவும் ஒன்றிணைந்த பகுதியுடன் தனித்திருக்கும் நிலை மற்றும் ஒன்றிணைந்த பகுதி ஆகிய இரண்டையும் சேர்த்து கால்பகுதி அளவுக்குப் படிப்படியாகக் குறைகிறது. (இவ்வாறு கணக்கிட்டால் திரேதா யுகமானது மூவாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது முன்னூறு வருடங்களும், மாலைப் பொழுது முன்னூறு வருடங்களும் சேர்த்து மூவாயிரத்து அறுநூறு {3600} வருடங்களாகும்.

துவாபர யுகமானது இரண்டாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது இருநூறு வருடங்களும், மாலைப்பொழுது இருநூறு வருடங்களும் சேர்த்து இரண்டாயிரத்து நானூறு {2400} வருடங்களாகும்.

கலியுகத்தின் கால அளவானது, ஆயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது நூறு வருடங்களும், மாலைப்பொழுது நூறு வருடங்களும் சேர்த்து ஆயிரத்து இருநூறு {1200} வருடங்களாகும்)[2].(21) இந்த யுகங்கள் முடிவில்லாதவையும், நித்தியமானவையுமான உலகங்களை எப்போதும் நீடிக்கச் செய்கின்றன. ஓ! குழந்தாய், பிரம்மத்தை அறிந்தவர்கள் இதையே மாற்றமில்லாத பிரம்மமாகக் கருதுகிறார்கள்.(22) கிருத யுகத்தில் வாய்மையுடன் சேர்த்து அனைத்து கடமைகளும் {தர்மங்களும்} முழுமையாக இருந்தன. நீதியற்ற அல்லது தடுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் மனிதர்களிடம் எந்த அறிவும், பொருளும் சேரவில்லை.(23) பிற யுகங்கள் ஒவ்வொன்றிலும், வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் படிப்படியாகக் கால் பகுதி குறைவது காணப்படுகிறது. களவு, பொய்மை, வஞ்சகம் ஆகியவற்றின் விளைவால் பாவம் வளர்கிறது.(24) கிருத யுகத்தில், மனிதர்கள் அனைவரும் நோயற்றவர்களாக, அவர்களது நோக்கங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றவர்களாக நானூறு வருடங்கள் வாழ்கிறார்கள். திரேதா யுகத்தில் கால்பகுதி வாழ்நாள் அளவு குறைகிறது {அதாவது மனிதர்கள் முன்னூறு வருடங்கள் வாழ்கிறார்கள்}.(25)(கிருத யுகம் 4,800 வருடங்கள் கொண்டதாகும். திரேதா யுகம் 3,600; துவாபர யுகம் 2,400; கலியுகம் 1,200 வருடங்களைக் கொண்டதாகும். எனினும் இவை தேவ வருடங்களாகும் {தேவர்களின் ஒரு வருடம் மனிதர்களின் 360 வருடங்களைக் கொண்டதாகும்}. இங்கே சொல்லப்படும் 15-17 மற்றும் 20-21 சுலோகங்கள் மனுசாத்திரம் அதிகாரம் 1ல் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், “கிருதயுகமானது நாலாயிரம் வருஷங்களென்று கூறுகிறார்கள். அந்த யுகத்தின் ஸந்தியாகாலம் நானூறு வருஷங்களும், அப்படியே ஸந்தியாம்சம் நானூறுவருஷங்களுமாகும். அதைவிட வேறான மூன்று யுகங்களிலும் அவைகளின் ஸந்தியைகளிலும் ஸந்தியாம்சங்களிலும் ஒவ்வொன்று குறையக் கூறிய ஆயிரம் வருஷங்களும் நூறு வருஷங்களும் நூறு வருஷங்களுமாகும்”)அடுத்தடுத்த யுகங்களில் வேதங்களின் வார்த்தைகள், வாழ்நாள் காலம், (பிராமணர்கள் சொல்லும்) அருளாசிகள், வேத சடங்குகளின் கனிகள் ஆகியன அனைத்தும் படிப்படியாகக் குறைவதாக நாம் கேள்விப்படுகிறோம்.(26) கிருத யுகத்திற்காக நிறுவப்பட்டுள்ள கடமைகள் ஒருவகையாக உள்ளன. திரேதா யுகத்திற்காக நிறுவப்பட்டவை மறு வகையாக உள்ளன. துவாபர யுகத்திற்காக நிறுவப்பட்டவை வேறு வகையாக உள்ளன. மேலும் கலியுகத்திற்காக நிறுவப்பட்டவை மறுவகையாக உள்ளன. இவை அடுத்தடுத்த யுகங்களில் நேரும் வீழ்ச்சி குறிக்கும்படி அமைகின்றன.(27) கிருத யுகத்தில் தவமே முதன்மையான இடத்தைப் பெறுகிறது. திரேதா யுகத்தில் அறிவே முதன்மையானதாக இருக்கிறது. துவாபர யுகத்தில் வேள்வி முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. கலியுகத்தில் தானமே ஒரே பொருளாக விதிக்கப்பட்டிருக்கிறது.(28)
(தேவர்களின்) இந்தப் பனிரெண்டாயிரம் வருடங்களே யுகங்கள் என்றழைக்கப்படுபவையாக அமைகின்றன {ஒரு தேவயுகம் என்றழைக்கப்படுகிறது} எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். இத்தகைய ஆயிரம் யுகங்களே பிரம்மனின் ஒரு பகல் வேளையாக அமைகிறது[3].(29) பிரம்மனின் இரவும் அதே கால அளவைக் கொள்கிறது. பிரம்மனின் பகல் தொடங்கியதும், அண்டம் உயிர்பெறத் தொடங்குகிறது. அண்டத்தின் அழிவுக்காலத்தில், படைப்பாளன் {பிரம்மன்} தியான யோகத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறான். உறக்க காலம் முடிந்ததும் அவன் விழிப்படைகிறான்.(30) இத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு பகலாகின்றன. அதே போல ஆயிரம் யுகங்கள் அவனது ஓரிரவு ஆகின்றன. இஃதை அறிந்தவர்களே பகல் மற்றும் இரவை அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(31) பிரம்மன், இரவு கடந்து விழித்ததும், அழிவற்ற சித்-ஐ அவித்யையால் மறைத்துத் திருத்தி அமைக்கிறான். பிறகு அவன் எழச்செய்யும் நனவுநிலையில் இருந்து, புலப்படுபவைக்கு ஒப்பான மனம் உண்டாகிறது” என்றார் {வியாசர்}[4].(32)

யுகத்தன்மைகள்! – சாந்திபர்வம் பகுதி – 232-படைப்பு எழுந்த வகை; பல்வேறு யுகங்களின் தன்மைகள்; பல்வேறு யுகங்களில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகள் ஆகியவற்றைத் தன் மகனான சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தானே நீடித்துச் செயல்படும் பிரகாசமிக்க வித்தான பிரம்மனே, அசையும் மற்றும் அசையாத இருவகை உயிரினங்கள் இரண்டையும் கொண்ட மொத்த அண்டத்தையும் எழச் செய்கிறான்[1].(1) அவனது பகலின் அதிகாலையில் விழித்தெழும் அவன் அவித்யையின் உதவியுடன் இவ்வண்டத்தைப் படைக்கிறான். முதலில் மஹத் என்றழைக்கப்படுவது எழுகிறது. அந்த மகத்தே விரைவாகப் புலப்படுவதன் ஆன்மாவான {ஸ்தூலமான உருவமுள்ள} மனமாக விரைவாக மாறுகிறது[2].(2) மனமானது, பிரகாசமான சித்-ஐ அவித்யையால் மறைத்து ஏழு பெரும் பூதங்களைப் படைக்கிறது[3]. எட்டாததை எட்டுவதும், பல வழிமுறைகளைக் கொண்டதும், தனது அடிப்படை குறியீடுகளாக ஆசையையும், ஐயத்தையும் கொண்டதுமான மனமானது, படைக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, தன்னைத் தானே திருத்தி அமைத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகைப் பொருட்களைப் படைக்கிறது. அதனிலிருந்து முதலில் வெளி {ஆகாயம்} எழுகிறது. அதன் குணம் ஒலி என்பதை அறிவாயாக.(3,4) மேலும் திருத்தி அமைத்துக் கொள்வதன் மூலம் அந்த வெளியில் இருந்து, அனைத்து மணங்களையும் சுமப்பதும், தூய்மையானதும், வலிமைமிக்கதுமான காற்று எழுகிறது. அது தீண்டலின் குணத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(5)மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் காற்றிலிருந்தும் பிரகாசத்துடன் கூடிய ஒளி எழுகிறது. அழகை வெளிப்படுத்துவதும், சுக்ரம் என்றழைக்கப்படுவதும், இவ்வாறு இருப்பில் எழுவதுமான அது, வடிவத்தைத் தன் குணமாகக் கொண்டிருக்கிறது.(6) மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் ஒளியில் இருந்து சுவையைத் தன் குணமாகக் கொண்ட நீர் எழுகிறது. நீரிலிருந்து மணத்தைக் குணமாகக் கொண்ட பூமி எழுகிறது. இவையே தொடக்கப் படைப்பைக் குறிக்கின்றன என்று சொல்லப்படுகின்றன.(7) இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தங்களுக்கு முந்தையதும், தனது பிறப்பிடமுமான பூதங்களின் குணங்களை அடைகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்குண்டான குறிப்பிட்ட குணத்தை மட்டுமல்லாமல் தங்களுக்கு முந்தைய பூதங்களின் குணங்களையும் கொண்டிருக்கின்றன[4]. (எனவே, வெளியானது ஒலியை மட்டுமே தன் குணமாகக் கொண்டிருக்கிறது. வெளிக்குப் பிறகே காற்று {வாயு} வருவதால், அஃது ஒலி மற்றும் தீண்டல் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. காற்றில் இருந்து வரும் ஒளி அல்லது நெருப்பானது, ஒலி, தீண்டல் மற்றும் வடிவம் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. ஒளியில் இருந்து வந்த நீரானது ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் சுவை ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது. நீரில் இருந்து வந்த பூமியானது, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது).(8) நீரில் மணத்தை உணரும் எவரும் அறியாமையால் அது {மணமானது} நீருக்குச் சொந்தமானது என்றால் பிழையில் வீழ்ந்தவனாகிறான், ஏனெனில், மணம் என்பது நீர் மற்றும் காற்றிலும் பற்றுக் கொண்ட நிலையில் நீடித்திருந்தாலும், அது {மணம் என்பது} பூமியின் குணமே ஆகும்.(9)பல்வேறு வகைச் சக்திகளைக் கொண்ட இந்த ஏழுவகை இருப்புகளும் முதலில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாகவே இருந்து வந்தன. இவை அனைத்தும் ஒன்று கலந்த நிலையை அடையாமல் அவற்றால் எந்தப் பொருளையும் படைக்க முடியாது.(10) இந்தப் பெரும் இருப்புகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு, ஒன்றோடொன்று கலப்பதாலேயே அங்கங்கள் {அவயவ்யம்} என்றழைக்கப்படும் உடலின் பகுதிகள் அமைகின்றன[5].(11) அந்த அங்கங்கள் ஒருங்கிணைவதால் விளையும் இந்த மொத்த கூட்டுத் தொகையும் பதினாறு {16} கூறுகளைக் கொண்ட வடிவத்தை அடைந்து உடல் என்று அழைக்கப்படுகிறது. (திரள் உடல் இவ்வாறு அமையும்போது), நுட்பமான மஹத்-ஆனது வற்றாத செயல்களின் எச்சங்களுடன் திரள் உடல் என்றழைக்கப்படும் கலவைக்குள் நுழைகிறது[6].(12) அனைத்துப் பொருட்களையும் உண்மையில் படைத்தவன், தன் மாயையைக் கொண்டு தன்னைப் பிரித்துக் கொண்டு அனைத்தையும் பார்ப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும் அந்த நுட்பமான வடிவங்களுக்குள் நுழைகிறான். அவனே அனைத்து உயிரினங்களையும் உண்மையாகப் படைப்பவனாக இருப்பதால், அவன் அனைத்து உயிரினங்களின் தலைவன் என்று அழைக்கப்படுகிறான்[7].(13) அவனே அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் படைக்கிறான். இவ்வாறு பிரம்ம வடிவை ஏற்கும் அவன், தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், மற்றும் மனிதர்களின் உலகங்களைப் படைக்கிறான்.(14) ஆறுகள், கடல்கள், பெருங்கடல்கள், அடிவானின் புள்ளிகள் {திசைகள்}, நாடுகள், மாகாணங்கள், குன்றுகள், மலைகள், பெரும் மரங்கள், மனிதர்கள், கின்னரர்கள், ராட்சசர்கள், பறவைகள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் பாம்புகள் ஆகியவற்றையும் படைக்கிறான்.(15)உண்மையில் அவன், அசைவன, அசையாதன என்றும், அழியத்தக்கன, அழிவில்லாதன என்றும் இருப்பின் இருவகைப் பொருட்களைப் படைக்கிறான். படைக்கப்பட்ட இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும், படைப்புக்கும் முன்பு இருந்த அந்தக் குறிப்பிட்ட குணங்களை அடைகின்றன;(16) உண்மையில் அவை ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த ஒவ்வொரு படைப்பில் அதே குணங்களையே அடைகின்றன. தீங்கிழைப்பது அல்லது அமைதி, மென்மை அல்லது கடுமை, அறம் அல்லது மறம், வாய்மை அல்லது பொய்மை ஆகியவற்றில் ஏதோ ஒரு குணத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு புதிய படைப்பிலும், ஏற்கனவே அவை பேணி வளர்த்து வந்த அந்தக் குறிப்பிட்ட குணத்தையே அடைகின்றன. இதன் விளைவாகவே அந்தக் குறிப்பிட்ட குணம் அதனைப் பற்றுகிறது.(17) விதி சமைப்பவனே, (வெளி, பூமி முதலிய) அந்தப் பெரும் இருப்புகளை, இருப்பில் உள்ள பொருளின் (வடிவம் முதலிய) புலனுக்குரிய பொருட்களிலும், அளவுகளிலும் இணைத்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட இருப்புகளுடன் கூடிய உயிரினங்களின் உறவுகளை நியமனம் செய்கிறான்.(18) பொருள் அறிவியலுக்குத் தங்களை அர்ப்பணித்த மனிதர்களுக்கு மத்தியில் உள்ள சிலர், விளைவுகளை உண்டாக்குவதில் முயற்சியே {மனித உழைப்பே} உயர்வானதெனச் சொல்கிறார்கள். சில கல்விமான்கள், விதியே {தெய்வமே} உயர்வானதெனவும், சிலர் இயற்கையே {பூதத் தொகுப்பே} செயல்படும் ஒன்றாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.(19) மேலும் சிலர், (உடல்) உழைப்பு, விதி ஆகியவற்றில் இருந்து எழும் செயல்களே, இயற்கையின் துணையுடன் விளைவுகளை உண்டாக்குகின்றன எனச் சொல்கிறார்கள். இவற்றில் எதுவும் விளைவுகளைத் தனியாக உண்டாக்கவல்லவை என்று கருதுவதற்குப் பதிலாக இவை மூன்றின் கலவையே விளைவுகள் அனைத்தையும் உண்டாக்குகின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள்[8].(20)இக்காரியத்தைப் பொறுத்தவரையில்[9], இதுவே நேர்கிறது எனச் சிலர் சொல்கிறார்கள்; சிலர் இது நேர்வதில்லை என்று சொல்கிறார்கள்; சிலர் இவை இரண்டுமில்லை என்கிறார்கள்; சிலர் இவற்றின் முரண்நிலைகள் நேர்வதில்லை என்கிறார்கள். பொருட்களைப் பொறுத்தவரையில், செயல்களைச் சார்ந்திருப்போரின் வாதங்களே இவை. எனினும், உண்மையை நோக்கி பார்வை கொண்டோர், பிரம்மமே காரணம் என்று கருதுகின்றனர்[10].(21) வாழும் உயிரினங்களுக்குத் தவமே உயர்ந்த நன்மையாகும். அமைதி மற்றும் சுயக்கட்டுப்பாடே தவத்தின் வேர்களாகும். தவத்தின் மூலம் ஒருவன் தன் மனத்தில் விரும்பும் அனைத்தையும் அடைகிறான்.(22) தவத்தின் மூலம் அவன் இந்த அண்டத்தைப் படைப்பவனையே அடைகிறான். எவன் (தவத்தின் மூலம்) அவனை அடைவதில் வெல்கிறானோ, அவன் அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனாகிறான்.(23) முனிவர்கள் தங்கள் தவத்தின் மூலமே வேதங்களை இடையறாமல் படிக்க இயன்றவர்களாகிறார்கள். சுயம்பு தொடக்கத்திலேயே, அறிவின் வடிவங்களும், தொடக்கமும் முடிவும் இல்லாதவையும், (குருவிடம் இருந்து சீடனுக்கும்} பாய்கின்றவையுமான அந்தச் சிறந்த வேத ஒலிகளை உண்டாக்கினான். அந்த ஒலிகளில் இருந்து அனைத்தை வகைச் செயல்பாடுகளும் உண்டாகின.(24) முனிவர்களின் பெயர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இருப்பில் தெரியும் பல்வேறு வடிவங்கள், செயல்பாடுகள் அனைத்தின் நடைமுறைகள் ஆகியன வேதங்களிலேயே தங்கள் தோற்றுவாயைக் கொண்டிருக்கின்றன[11].(25)

உண்மையில், அனைத்துப் பொருட்களின் உயர்ந்த தலைவன், தொடக்கத்தில் வேத வார்த்தைகளில் இருந்தே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கினான். உண்மையில், முனிவர்களின் பெயர்களும், படைக்கப்பட்ட வேறு அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன. படைக்கப்படாதவனான பிரம்மன் தன் இரவு கடந்ததும் (விடியற்காலையில்), ஏற்கனவே இருந்த மூலப் படிமங்களில் இருந்து, உண்மையில் ஏற்கனவே அவனால் உண்டாக்கப்பட்டவையேயான அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[12].(26) வேதங்களில், இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுதல் {கிருகஸ்தாஸ்ரமம்}, தவங்கள், வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் பொதுவான கடமைகளை நோற்பது, வேள்விகள், தூய புகழுக்கு வழிவகுக்கும் செயல்கள் அனைத்தையும் செய்தல், மூவகைத் தியானங்கள், இம்மையிலேயே வெற்றி (ஸித்தி) என்று அழைக்கப்படும் ஒருவகை விடுதலை என வேத கல்வியின் மூலம் அமையும் பத்து வழிமுறைகளுடன் சேர்த்து ஆன்ம விடுதலை {முக்தி} குறித்தும் சொல்லப்படுகிறது[13].(27) வேத வார்த்தைகளில் அறிவிக்கப்படுவதும், வேதங்களில் கூர்மதி கொண்டோரின் மூலம் உபநிஷத்துகளில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்படுவதும், புரிந்துகொள்ளப்பட முடியாததுமான பிரம்மத்தை, மேலே குறிப்பிடப்படும் நடைமுறைகளைப் பின்பற்றியே படிப்படியாக உணரலாம்.(28) தான் ஓர் உடலைக் கொண்டிருப்பதாக நினைக்கும் ஒரு மனிதனிடம், முரண்பட்ட இரட்டைகள் நிறைந்த இந்த இரட்டை நனவுநிலையானது, அவன் ஈடுபடும் செயல்களின் மூலம் மட்டுமே பிறக்கிறது. (அந்த இரட்டை நனவுநிலையானது, கனவுகளற்ற உறக்கத்திலோ, விடுதலை {முக்தி} அடையப்படும்போதோ மறைகிறது). எனினும், விடுதலையை {முக்தியை} அடைந்த ஒருவன், தன் அறிவின் துணை கொண்டு, அந்த இரட்டை நனவுநிலையை விரட்டுகிறான்.(29) (வேதங்கள் எனும்) ஒலியின் மூலமாகத் தெரியும் பிரம்மம் மற்றும் இரண்டாவதாக வேதங்கள் மற்றும் பரம்பொருளைக் கடந்த பிரம்மம் என்ற இரு பிரம்மங்கள் அறியப்பட வேண்டும். ஒலியில் தெரியும் பிரம்மத்தை அறிந்தவன் பரம்பொருளான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[14].(30)விலங்குகளைக் கொல்வதே {உயிரினங்களைக் கொல்வதே} க்ஷத்திரியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தானியங்கள் வளர்ப்பதே வைசியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. மூவகையினருக்கும் தொண்டாற்றுவதே சூத்திரர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தவங்கள் (அல்லது பிரம்ம வழிபாடே) பிராமணர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது.(31) கிருத யுகத்தில் வேள்விகள் செய்வதற்கான தேவை ஏதும் இல்லாதிருந்தது. அத்தகய செயல்பாடு திரேதா யுகத்தில் அவசியமானது. துவாபர யுகத்தில் வேள்விகள் வீழத் தொடங்கின. கலியிலும் வீழ்ந்து கொண்டே இருக்கிறது.(32) கிருத யுகத்தில் மனிதர்கள் பிரம்மம் ஒன்றை மட்டுமே வழிபட்டு, முன்னேற்றம் காணும் பெரும் நோக்கத்தோடு செயல்படும் ரிக்குகள், யஜுஸ்கள், சடங்குகள், வேள்விகள் ஆகிய அனைத்தையும் தங்கள் வழிபாட்டில் இருந்து அந்நியமாகக் கருதி தவங்களின் மூலமாக யோகத்தை மட்டுமே செய்துவந்தனர்.(33) திரேதா யுகத்தில், பெரும் வலிமைமிக்க மனிதர்கள் பலர் தோன்றி அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் ஆட்சி செய்தனர். (பொதுவாக அந்த யுகத்தின் மனிதர்கள் இயல்பாகவே அறம் சார்ந்த நடைமுறைகளைச் செய்யவில்லையெனினும், பெரும் தலைவர்கள் அத்தகைய நடைமுறைகளிலேயே அவர்களைச் செலுத்தினர்). அதன்படி அந்த யுகத்தில் வேதங்கள், வேள்விகள் மற்றும் பல்வேறு வகையினருக்கிடையிலான வேறுபாடுகள், நான்கு வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} ஆகியன ஒரு கச்சிதமான நிலையிலேயே இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலம் குறைந்ததன் விளைவால் இவை அனைத்தும் அந்த யுகத்தில் {துவாபர யுகத்தில்} அந்தக் கச்சிதமான நிலையில் இருந்து வீழ்ந்தன.(34,35)

கலியுகத்தில், வேதங்கள் அனைத்தும் மனிதர்களால் காணப்பட முடியாதபடிக்கு மிக அரிதானதாகிவிடும். கொடுமையால் பீடிக்கப்படும் அவர்கள் {கலி யுகத்தில் வாழும் மனிதர்கள்} தங்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் வேள்விகளுடன் சேர்த்து அழிவை அடைகிறார்கள்.(36) கிருத யுகத்தில் காணப்படும் அறம், இப்போது {இந்தக் கலியுகத்தில்} தூய்மையான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தவங்களுக்கும், சாத்திரக் கல்விக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான அத்தகைய பிராமணர்களிடம் மட்டுமே காணப்படும்.(37) பிற யுகங்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள், ஒரேயடியாகத் தங்கள் கடமைகளையும், அறச்செயல்களையும் விட்டுவிடாமல், வேத விதிகளை அறிந்து, தங்கள் தங்களுக்குரிய நடைமுறைகளை நோற்று, சாத்திரங்களின் அதிகாரத்தில் வழிநடத்தப்பட்டு முன்னேறும் நோக்கத்தாலும் விருப்பத்தால் வேள்விகளையும் நோன்புகளையும் செய்து, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத் தலங்களுக்குச் செல்வார்கள்[15].(38)மழைக்காலத்தில், அசையாத வகையைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு புதிய பொருட்கள், மேகத்தில் இருந்து பொழியும் மழையின் மூலம் உயிர்பெறுவதைப் போலவே ஒவ்வொரு புதிய யுகத்திலும் பல்வேறு வகைப் புதி கடமைகளும், அறநோன்புகளும் தோன்றுகின்றன.(39) குறிப்பிடத்தக்க அதேவகைத் தோற்றப்பாடுகள் பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுடன் சேர்ந்து மீண்டும் தோன்றுவதைப் போலவே ஒவ்வொரு புதிய படைப்பின்போதும், ஒவ்வொரு புதிய பிரம்மன் மற்றும் ஹரனில் அதே குணங்கள் தோன்றுகின்றன.(40) இதற்கு முன்பே நான், தொடக்கமும், முடிவும் இல்லாததும், அண்டத்தில் இந்தப் பல்வேறு வகைகளை விதிப்பதுமான காலம் குறித்தும் உன்னிடம் பேசியிருக்கிறேன். அந்தக் காலமே உயிரினங்கள் அனைத்தையும் படைக்கவும் விழுங்கவும் செய்கிறது.(41) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்படும் எண்ணற்றவையும் இருப்பில் இருப்பவையுமான உயிரினங்கள் அனைத்தும், தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படியே காலத்தைத் தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன.(42) ஓ! மகனே, இவ்வாறே படைப்பு, காலம், வேள்விகள், பிற சடங்குகள், வேதங்கள், அண்டத்தில் உண்மையில் செயல்படும் இருப்பு, செயல்பாடு, செயல்பாட்டின் விளைவுகள் குறித்து நீ கேட்ட அனைத்து காரியங்களையும் குறித்துப் பேசிவிட்டேன்” என்றார் {வியாசர்}.(43)

பிரளயம்! – சாந்திபர்வம் பகுதி – 233-அண்டமே அழிந்து போகம் பிரளயம் எவ்வாறு நேர்கிறது என்பதைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} பகல் கடந்து, அவனது இரவு வேளை வரும்போது, அனைத்துப் பொருட்களையும் அவன் தன்னுள் எவ்வாறு ஈர்த்துக் கொள்கிறான், அல்லது அவன் திரளாக இருக்கும் இந்த அண்டத்தை மிக நுட்பமானதாக்கி, அனைத்தையும் எவ்வாறு தன் ஆன்மாவுக்குள் கலக்கச் செய்கிறான் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன். அண்ட அழிவுக்கான {பிரளயத்துக்கான} காலம் வரும்போது, பனிரெண்டு சூரியர்களும், ஏழு தழல்களுடன் கொண்ட அக்னியும் எரியத் தொடங்குகின்றன. அந்தத் தழல்களால் மறைக்கப்படும் மொத்த அண்டமும், பெருந்தீயாகச் சுடர்விட்டு எரியத் தொடங்கும்.(2) பூமியில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், இந்தக் கோளானது எந்தப் பொருளால் ஆனதோ அதற்குள் முதலில் கலந்து மறையும்.(3) இவ்வாறு அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் மறைந்தபிறகு, மரம் செடி கொடிகளை இழந்த பூமியானது வெறுமையான ஆமை ஓட்டைப் போலத் தெரியும்.(4)

அப்போது நீரானது, பூமியின் குணமான மணத்தை ஏற்கிறது. பூமி தன் அடிப்படை குணத்தை இழக்கும்போது அந்தப் பூதம் {நிலமெனும் பூதம்} அழிவின் விளிம்பில் நிற்கும்.(5) அப்போது நீரே மேலோங்கி நிற்கிறது. பெரும் அலைகள் பெருகி, பயங்கர முழக்கங்களை உண்டாக்கி இந்த வெளியை நீரே நிரப்பி அசையும் அல்லது அசையாமல் நிற்கும்.(6) பிறகு நீரின் குணம் வெப்பத்தால் எடுத்துக் கொள்ளப்படும். தன் குணத்தை இழக்கும் நீரானது அந்தப் பூதத்திலேயே ஓய்வெடுக்கும்.(7) சுற்றிலும் சுடர்விட்டெழும் பிரகாசமான நெருப்பின் தழல்கள் வெளியின் மையத்தில் உள்ள சூரியனை மறைக்கும். உண்மையில் அப்போது, சீற்றமிகு தழல்கள் நிறைந்த வெளியானது பெருந்தீயாக எரியும்.(8)

காற்று {வாயு} வந்து வெப்பம், அல்லது ஒளியின் குணமான வடிவத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் பெரும் வலிமை கொண்ட காற்றின் வசப்பட்டுத் தணிவடையும் அது {வெப்பம் / ஒளி}, பயங்கரமாகக் கலக்கமடையத் தொடங்கும்.(9) காற்றானது தன் சொந்த குணமாக ஒலியை அடைந்து மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் பத்துப் புள்ளிகள் அனைத்திலும் கடந்து செல்லும்.(10) அப்போது காற்றின் குணமான ஒலியை எடுத்துக் கொள்ளும் வெளியினால் தணிவடையும் அது, கேள்விப்படாத, அல்லது சொல்லப்படாத ஒலிக்கு ஒப்பான இருப்பு வட்டத்திற்குள் நுழையும்.(11) அப்போது வெறும் வெளி மட்டுமே எஞ்சும், ஒலியைத் தன் குணமாகக் கொண்ட அந்தப் பூதமானது, எவ்வகை வடிவமும் கொள்ளாமல், வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய பண்புகளை இழந்த பிற பூதங்கள் அனைத்துடன் சேர்ந்து இருப்பின் புலப்படா நிலையான ஒலியைப் போல வசிக்கும்.(12)

பிறகு, வெளியின் பண்பான ஒலியானது, புலப்படும் பொருட்கள் அனைத்தின் சாரமாக இருக்கும் மனத்தால் விழுங்கப்படுகிறது. தானே புலப்படாததாக இருக்கும் மனமானது, இவ்வாறே மனத்தின் மூலம் வெளிப்பட்ட அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது. புலப்படாததாக, அல்லது நுட்பமானதாக மனத்தில் தெரியும் இந்த மன ஈர்ப்புநிலையே பரந்த புற அண்ட அழிவு என்றழைக்கப்படுகிறது[1].(13) அப்போது சந்திரமாஸ் {சந்திரன்}, (இவ்வாறு) மனத்தை அதன் குணத்திற்குள் தானே ஈர்க்கும்படி செய்து அதை விழுங்குகிறது. சந்திரமாஸுக்குள் நுழைந்து மனம் இருப்பில் இல்லாமல் போகும்போது, ஈஸ்வரனுக்குச் சொந்தமான பிற குணங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.(14) சங்கல்பம் என்றழைக்கப்படும் இந்தச் சந்திரமாஸ், சித்தம் அல்லது தீர்மானம் என்ற அழைக்கப்படும் செயல்பாட்டில் ஈடுபடும் புலங்களை அழிப்பது என்ற மிகக் கடினமான செயலைச் செய்ய வேண்டிய காரணத்தால். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, அந்தச் சங்கல்பம் ஈஸ்வரனின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது. இதுவும் விளைந்த பிறகு அடையப்படும் நிலையென்பது உயர்ந்த அறிவு என்று சொல்லப்படுகிறது.(15) காலம் இந்த அறிவை விழுங்குகிறது, மேலும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போலக் காலமும் தனக்கான வேளையில் வலிமை அல்லது சக்தியால் விழங்கப்படுகிறது. எனினும் வலிமை அல்லது சக்தியானது, மீண்டும் காலத்தால் விழுங்கப்பட்டு, இறுதியில் வித்யையின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது.(16)வித்யையைக் கொண்ட ஈஸ்வரன், அந்த இல்லாமையையே தன் ஆன்மாவுக்குள் விழுங்கிக் கொள்கிறான். அதுவே புலப்படாததும் உயர்ந்த பிரம்மமுமாகும். அதுவே நித்தியமானதும், உயர்ந்ததில் உயர்ந்ததுமாகும்.(17) இவ்வாறே இருப்பில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுகின்றன.(18) உண்மையில், அறிவியல் காரியமும், (சாத்திரங்களின் துணையுடன்) உணரப்பட வேண்டியதுமான இஃது, உண்மையான அனுபவத்திற்குப் பிறகு, பரம ஆத்மாக்களைக் கொண்ட யோகியரால் இவ்வாறே அறிவிக்கப்பட்டிருக்கிறது.(19) இவ்வாறே, புலப்படாத பிரம்மமானது விரிந்து சுருங்கும் (அதாவது, படைத்து, அழிக்கும்) செயல்பாட்டை மீண்டும் மீண்டும் செய்கிறது. இவ்வாறே ஆயிரம் யுகங்களைக் கொண்ட பிரம்மனின் பகலும், இரவும் இருக்கின்றன” என்றார் {வியாசர்}[2].(20)

பிராமணக் கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 234-பிராமணர்களின் கடமைகள் குறித்தும், பிராமணர்களுக்குக் கொடையளித்து உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்களைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டது குறித்து நீ கேட்டதை இப்போது முழுமையாகச் சொல்லிவிட்டேன். ஒரு பிராமணனின் கடமைகள் யாவை என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஜாதகர்மம் தொடங்கி, சமாவர்த்தனம் வரையில் உள்ள விழாக்கள் அனைத்தின் சடங்குகளுக்குரிய வேள்விக் கட்டணம் {தக்ஷிணை}, வேதங்களில் தகுதிவாய்ந்த ஓர் ஆசானின் செயல்திறனைச் சார்ந்ததாகும்[1].(2) வேதங்கள் அனைத்தையும் கற்று, ஆசானிடம் வசிக்கும் காலத்தில் அவரிடம் பணிவுடன் நடந்து கொண்டு, ஆசானுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, வேள்விகள் அனைத்தின் முற்றான அறிவுடன் அந்த இளைஞன் வீடு திரும்ப வேண்டும் {ஸமாவர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்}[2].(3) தனது ஆசானின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் அவன், நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} ஏதாவதொன்றைப் பின்பற்றி, தன் உடலைக் கைவிடும்வரை அதற்குரிய கடமைகளை நோற்று வாழ வேண்டும்.(4) அவன் மனைவியருடன் சேர்ந்து இல்லற {கிருஹஸ்த} வாழ்வை வாழ்ந்து வாரிசுகளை உண்டாக்க வேண்டும், அல்லது பிரம்மச்சரியத்தை நோற்று வாழ வேண்டும்; அல்லது காட்டில் தன் ஆசானின் துணையுடனோ, ஒரு யதிக்கு {ஸந்நியாசிக்கு} விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பயின்றோ வாழ வேண்டும்.(5)இல்லறவாழ்வானது {கிருஹஸ்தாஸ்ரமமானது}, பிற வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திற்கும் வேராகச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டை உடையவனும், உலகப் பொருட்களில் உள்ள பற்றுகள் அனைத்தையும் வென்றவனுமான ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} (வாழ்வின் பெரும் நோக்கத்தைப் பொறுத்தவரையில்) வெற்றியை அடைவான்.(6) ஒரு பிராமணன், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமும், வேத அறிவைப் பெறுவதன் மூலமும், வேள்விகளைச் செய்வதன் மூலமும், தான் பட்டிருக்கும் மூன்று கடன்களை அடைக்கிறான்[3]பிறகு அவன், தன் செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வேறு வாழ்வுமுறைக்குள் {ஆசிரமத்திற்குள்} நுழைய வேண்டும்.(7) அவன், பூமியில் எதை மிகப் புனிதமான தலம் என்று உறுதி செய்வானோ, அங்கே வசித்து, மேன்மையான நிலையை அடைவதற்காகப் புகழுக்கு வழிவகுக்கும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.(8) பிராமணர்களின் புகழானது, மிகக் கடுமையான தவங்களின் மூலமும், அறிவின் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலமும், வேள்விகள் மூலமும், கொடைகள் மூலமும் அதிகரிக்கிறது.(9) உண்மையில் ஒரு மனிதன், இவ்வுலகில் தன் செயல்களோ, நினைவோ நீடிக்கும் வரை (மறுமையில்) அறவோரின் முடிவிலா உலகங்களில் இன்புறுகிறான்.(10)ஒரு பிராமணன், கல்வி கற்பிக்கவும், கற்கவும், பிற மக்களின் வேள்விகளை நடத்திக் கொடுக்கவும், தானே வேள்வி செய்யவும் வேண்டும். அவன் வீணான தானத்தை அளிக்கக்கூடாது, அல்லது பிறரிடம் இருந்து வீணான தானத்தை {வீணானப்ரதிக்ரகத்தைப்} பெறக் கூடாது.(11) ஒருவனுக்கு வேள்வியில் துணை புரிந்ததன் மூலமும், சீடனின் மூலமும், (திருமணத்தால்) மகளின் (உறவினர்) மூலமும் போதுமான அளவுக்குச் செல்வம் வருமென்றால், அது வேள்வி செய்வதற்கோ, தானமளிப்பதற்கோ செலவழிக்கப்பட வேண்டும். இந்த ஆதாரங்கள் எதனிலிருந்தும் வரும் செல்வம், ஒரு பிராமணனால் ஒருபோதும் தனியாக அனுபவிக்கப்படக்கூடாது[4].(12) இல்லற வாழ்வை வாழும் {கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள} பிராமணன் ஒருவனுக்கு, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், ஆசான், பெரியோர், நோய்வாய்ப்பட்டோர், பசித்தோருக்காக தானங்களை ஏற்று வாழ்வதைத் தவிர வேறு வழிமுறையேதும் கிடையாது[5].(13) புலப்படாத எதிரிகளின் மூலம் தண்டிக்கப்பட்டோருக்கு, அல்லது தங்கள் சக்திக்குரிய அளவில் அறிவை அடைய முயற்சிப்போருக்கு, சமைத்த உணவு உள்ளிட்ட தன் உடைமைகளில் இருந்து ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கும் அதிகமாகத் தானமளிக்க வேண்டும்.(14) தகுதிநிறைந்த ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படக்கூடாதது எதுவுமில்லை. நல்லோராகவும், ஞானிகளாகவும் இருப்பவர்கள், இந்திரனுக்குச் சொந்தமான உச்சைஸ்வர என்றழைக்கப்படும் குதிரைகளின் இளவரசனைப் பெறுவதற்கும் தகுந்தவர்களே[6].(15)உயர்ந்த நோன்புகளைக் கொண்டவனும், பணிவுடையவனுமான (மன்னன்) சத்யசந்தன், ஒரு பிராமணனைக் காப்பதற்காகத் தன் உயிர் மூச்சையே காணிக்கையளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(16) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு இளஞ்சூட்டுடன் கூடிய நீரை மட்டுமே கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே உயர்ந்த வெகுமதிகளைப் பெற்றான்.(17) அத்ரியின் அரசமகனும் {ஆத்ரேயனும்}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான இந்திரதமனன், தகுந்த ஒரு மனினுக்குப் பல்வேறுவகைச் செல்வங்களை அளித்து மறுமையில் பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(18) உசீனரனின் மகனான சிபி, ஒரு பிராமணனுக்காகத் தன் அங்கங்களையும், தன் மடியில் பிறந்த அன்புக்குரிய மகனையும் கொடுத்து இவ்வுலகில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(19) காசியின் ஆட்சியாளனான பிரதர்த்தனன், ஒரு பிராமணனுக்குத் தன் கண்களையே கொடுத்து இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை அடைந்தான்.(20)

மன்னன் தேவாவிருதன், தங்கத்தாலான எட்டுக் கம்பிகளுடன் கூடியதும், விலைமதிப்புமிக்கதுமான ஓர் அழகிய குடையைக் கொடுத்து, தன் நாட்டு மக்கள் அனைவருடன் சேர்ந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) அத்ரி குலத்தைச் சேர்ந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சாங்கிருதி, குணமற்ற {நிர்குண} பிரம்மத்தைக் குறித்த காரியத்தைத் தன் சீடர்களுக்குப் போதித்துப் பேரின்பத்திற்குரிய உலகங்களுக்குச் சென்றார்.(22) பேராற்றலைக் கொண்ட அம்பரீஷன், பதினோரு அர்ப்புதங்கள்{11,00,00,000} [7] அளவுக்குப் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்துத் தன் நாட்டு மக்கள் அனைவருடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(23) காது குண்டலங்களைக் கொடுத்த சாவித்ரி, தன் சொந்த உடலையே கொடுத்த மன்னன் ஜனமேஜயன் ஆகிய இருவரும் உயர்ந்த பேரின்ப உலகங்களுக்குச் சென்றனர்.(24) விருஷாதபனின் மகனான யுவனாஸ்வன், பல்வேறு வகை ரத்தினங்கள், ஓர் அழகிய மாளிகை மற்றும் பல அழகிய பெண்களைக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(25)

விதேஹர்களின் ஆட்சியாளனான நிமி தன் நாட்டையும், ஜமதக்னியின் மகன் (ராமர் ), மொத்த பூமியையும், கயன், நகரங்கள் மற்றும் ஊர்கள் அனைத்துடன் கூடிய பூமியையும் பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(26) ஒருகாலத்தில் மேகங்கள் பொழிவதை நிறுத்திக் கொண்டபோது, பிரம்மனுக்கே ஒப்பான வசிஷ்டர், ஒரு பிரஜாபதியைப் போல (தன் சக்தி மற்றும் அன்பின் மூலம்) அனைத்து உயிரினங்களையும் உயிரோடு பாதுகாத்தார்.(27) கரந்தனின் {கரந்தமனின்} மகனும், தூய்மையடைந்த ஆன்மா கொண்டவனுமான மருத்தன், தன் மகளை அங்கிரஸுக்குக் கொடுத்து விரைவாகச் சொர்க்கத்தை அடைந்தான்.(28) பாஞ்சாலர்களின் ஆட்சியாளனும், மேன்மையான புத்தியைக் கொண்டவனுமான பிரம்மதத்தன், நிதி என்றும் சங்கம் என்றும் அழைக்கப்பட்ட மதிப்புமிக்க இரு ரத்தினங்களைப் பிராமணர்களில் முதன்மையான சிலருக்குக் கொடுத்து பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(29) மன்னன் மித்ரஸஹன், தன் அன்புக்குரிய மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்து, அந்தத் தன் மனைவியுடனே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(30)

அரசமுனியும், பெரும்புகழைக் கொண்டவனுமான சஹஸ்ரஜித், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே கைவிட்டு, பேரின்ப உலகங்களுக்கு உயர்ந்தான்.(31) மன்னன் சத்யத்யும்னன், முத்கலருக்குத் தங்கத்தாலானதும் அனைத்து வசதிகளையும் கொண்டதுமான ஒரு மாளிகையை அளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(32) தியூதிமான் என்ற பெயரில் அறியப்பட்டவனும், பேராற்றலைக் கொண்டவனுமான சால்வர்களின் மன்னன், ரிசீகருக்குத் தன் மொத்த நாட்டையும் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(33) அரசமுனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்து, தேவர்களாலேயே பெரிதும் மதிக்கப்படும் உலகங்களுக்கு உயர்ந்தான்.(34) அரசமுனியும், பேராற்றலைக் கொண்டவனுமான லோம்பாதன், தன் மகள் சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குக் கொடுத்துத் தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தான்.(35)

பெருஞ்சக்தியைக் கொண்ட பிரஸேனஜித், கன்றுகளுடன் கூடிய ஒரு லட்சம் பசுக்களைக் கொடுத்து பேரின்பத்திற்குரிய சிறந்த உலகங்களுக்கு உயர்ந்தான்.(36) பெருமை கொண்டவர்களும், நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்களுமான இவர்களும், இன்னும் பிறரும், தானங்கள் மற்றும் தவங்களின் மூலம் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(37) அவர்களது புகழ் இந்தப் பூமி உள்ள வரையில் நீடித்திருக்கும். அவர்கள் அனைவரும், தாங்கள் கொடுத்த கொடைகள், வேள்விகள் மற்றும் சந்ததி உருவாக்கல் ஆகியவற்றின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றனர்” என்றார் {வியாசர்}.(38)

ஞானத்தின் சிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 235-பிராமணர்களின் கடமைகள் குறித்தும், ஞானத்தின் சிறப்பைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “வேதங்களிலும் அவற்றின் அங்கங்களிலும் தோன்றும் த்ரயி என்றழைக்கப்படும் அறிவு அடையப்பட வேண்டும். அவ்வறிவு ரிக்குகள், சாமங்கள், மற்றும் வர்ணம் என்றும் அக்ஷரம் என்றும் அழைக்கப்படும் அறிவியல்களில் இருந்து பெறப்படுகிறது. இதைத் தவிர யஜுஸ்கள் மற்றும் அதர்வணங்களும் இருக்கின்றன. இவற்றில் குறிப்பிடப்படும் ஆறு வகைச் செயல்களிலேயே {ஷட்கர்மங்களிலேயே}[1] தெய்வீகமானவன் வசிக்கிறான்.(1) வேத தீர்மானங்களை நன்கறிந்தோர், ஆன்ம அறிவைக் கொண்டோர், நற்குணத்தில் {சத்வ குணத்தில்} பற்றுடையோர், உயர்ந்த அருளைக் கொண்டோர் ஆகியோர் அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும் கதியையும் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(2) ஒரு பிராமணன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நோற்றபடியே வாழ வேண்டும். அவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட நல்லோனைப் போலத் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல் தன் வாழ்வாதாரங்களை ஈட்ட வேண்டும்.(3) நல்லோர் மற்றும் ஞானியரிடமிருந்து அறிவைப் பெறும் அவன், தன் ஆசைகளையும், மனச்சார்புகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சாத்திரங்களை நன்கறிந்தவனான அவன், தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் அக்கடமைகளைப் பயின்று, நற்குணத்தினால் வழிநடத்தப்பட்டு உலகச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லறவாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் பிராமணனும், ஏற்கனவே செல்லப்பட்ட ஆறு செயல்களைச் செய்ய வேண்டும்.(4)அந்தப் பிராமணன், நம்பிக்கை நிறைந்த இதயத்துடன் அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பொறுமை, கவனம், தற்கட்டுப்பாடு, கடமைகளை அறிதல் ஆகியவற்றுடனும், தூய்மையடைந்த ஆன்மாவுடனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவை இல்லாமல் ஒருபோதும் தளர்வுறாமல் இருக்க வேண்டும்.(5) கொடைகள், வேத கல்வி, வேள்விகள், தவங்கள், பணிவு, வஞ்சனையின்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை ஒருவனின் சக்தியைப் பெருக்கி அவனது பாவங்களை அழிக்கின்றன.(6) புத்தியுடன் கூடிய ஒருவன், குறைந்த உணவை உண்டு தன் புலன்களை வெல்ல வேண்டும். உண்மையில், காமம் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கி, தன் பாவங்கள் அனைத்தையும் கழுவி கொண்டு பிரம்மத்தை அடைய அவன் முயற்சிக்க வேண்டும்.(7) அவன் நெருப்பையும், பிராமணர்களையும் வழிபட்டு, தேவர்களை வணங்க வேண்டும். மங்கலமற்ற அனைத்து வகை உரையாடல்களையும், நீதியற்றவையும், தீங்கிழைப்பவையுமான அனைத்து செயல்களையும் தவிர்க்க வேண்டும். இந்த அடிப்படை ஒழுக்கமே ஒரு பிராமணனுக்கு முதலில் விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஞானத்தை அடைந்ததும் அவன், செயல்களிலேயே வெற்றி இருப்பதால் தன்னைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்[2].(9)புத்தியுடன் கூடிய ஒரு பிராமணன், கடப்பதற்கு அரிதானதும், கடுமையானதும், பயங்கரமானதும், ஐம்புலன்களையே நீராகக் கொண்டதும், பேராசையையே ஆதாரமாகக் கொண்டதும், கோபத்தையே சகதியாகக் கொண்டதுமான வாழ்வெனும் ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்.(10) அனைத்துப் பொருட்களையும் கலங்கடிப்பதும், விதி சமைப்பவனிடம் இருந்து வெளிவரும் தடுக்கப்பட முடியாத பெருஞ்சக்தியைக் கொண்டதுமான காலமானது, அச்சுறுத்தும் தன்மையுடன் தன் பின்னால் நின்று கொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டு அவன் தன் கண்களை மூடிக் கொள்ளக்கூடாது.(11) இயற்கையின் போக்கில் உண்டாகும் அண்டமானது இடையறாமல் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.(12) வருடங்களெனும் சுழிக்காற்றுகள் நிறைந்திருக்கும் பெரும் ஆறெனும் காலமானது {காலவெள்ளமானது}, மாதங்களையே தன் அலைகளாகவும், பருவகாலங்களையே தன் நீரோட்டமாகவும், பிறைநாட்களையே {பக்ஷங்களையே} தன்னில் மிதக்கும் புற்களாகவும், துரும்புகளாகவும்,(13) இமைகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் {இமைப்பொழுது / நிமிடங்களைத்} தன் நுரையாகவும், பகலிரவைத் தன் நீராகவும், ஆசை மற்றும் காமத்தை தன்னில் உள்ள பயங்கர முதலைகளாகவும், வேதங்கள் மற்றும் வேள்விகளைத் தன்னில் உள்ள தெப்பங்களாகவும்,(14) உயிரினங்களின் அறத்தையே தீவுகளாகவும், ஈட்டல் மற்றும் இன்பத்தைத் தன் நீரூற்றுகளாகவும், பேச்சில் வாய்மை மற்றும் விடுதலையை {முக்தியைத்} தன் கரைகளாகவும், நன்மையைத் தன்னில் மிதக்கும் மரங்களாகவும்,(15) யுகங்களைத் தன் போக்கில் நேரும் ஏரிகளாகவும் கொண்டுள்ளது. பிரம்மத்தைப் போன்றே உணரப்பட முடியாத தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்க ஆறான காலமானது, விதிசமைப்பவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் இடையறாமல் யமனின் வசிப்பிடத்தை நோக்கிச் சுமந்து செல்கிறது.(16)

ஞானமும், பொறுமையும் கொண்ட மனிதர்கள் அறிவு மற்றும் ஞானம் எனும் தெப்பங்களைப் பயன்படுத்தி, இந்தப் பயங்கர ஆற்றைக் கடப்பதில் எப்போதும் வெல்கிறார்கள். எனினும், (அந்தப் பயங்கர ஓடைக்குள் வீசப்படும்போது) இத்தகைய தெப்பங்கள் இல்லாமல் அறிவற்ற மூடர்களால் என்ன செய்ய முடியும்?(17) ஞானம் கொண்ட மனிதன் மட்டுமே இந்த ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்; அறிவுக்குப் பொருந்தும் ஞானம் இல்லாதவன் இவ்வாறு வெல்வதில்லை. முன்னவன் {ஞானம் கொண்டவன்} அனைத்தின் தகுதிகளையும், குறைகளையும் தொலைவிலிருந்தே கண்டு கொள்கிறான். (அதன்படியே அவன் பின்பற்றத் தகுந்ததைப் பின்பற்றுவதிலும், புறக்கணிக்கத்தக்கதைப் புறக்கணிப்பதிலும் வெல்கிறான்).(18) எனினும் நிலையற்ற குறை புத்தி கொண்டவனும், ஆசை மற்றும் பேராசை நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், எப்போதும் ஐயங்களாலேயே நிறைந்திருக்கிறான். எனவே, ஞானமற்ற மனிதன் அந்த ஆற்றைக் கடப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை. மேலும் (ஐயத்துடன்) செயல்படாமல் அமர்ந்திருக்கும் அவனால் ஒருபோதும் அதைக் கடக்க முடியாது.(19) ஞானமெனும் தெப்பம் இல்லாத மனிதன், பெரும் குறைகளின் கனத்தைச் சுமப்பதால் மூழ்கிவிடுகிறான். ஆசையெனும் முதலையால் பற்றப்பட்ட ஒருவன், ஞானத்தைக் கொண்டிருப்பவனாக இருந்தாலும் கூடத் தன் தெப்பம் எதுவென ஒருபோதும் அறிந்து கொள்ள மாட்டான்.(20)

ஞானமும், புத்தியும் கொண்ட ஒரு மனிதன் இந்தக் காரணங்களுக்காகவே காலமெனும் ஓடையில் (மூழ்கிவிடாமல்) மிதக்க முயற்சிக்க வேண்டும். உண்மையில், பிரம்மத்தை அறிந்தவனே {காலவெள்ளத்தில்} தன்னை மிதக்கச் செய்து கொள்வதில் வெல்கிறான்.(21) உன்னதக் குலத்தில் பிறந்த ஒருவன், இந்தக் காரணங்களுக்காகவே, கற்பித்தலின் மூன்று கடமைகளையும், பிறரின் வேள்விகளை நடத்துவதையும், கொடைகளை ஏற்பதையும் தவிர்த்து, கற்றல், வேள்வி செய்தல், கொடை அளித்தல் என்ற மூன்று செயல்களை மட்டுமே செய்து அந்த ஓடையில் {கால வெள்ளத்தில்} மிதக்க முயற்சிக்க வேண்டும். அத்தகைய மனிதன், ஞானமெனும் தெப்பத்தின் உதவியால் அதை நிச்சயம் கடப்பான்.(22) ஒழுக்கத்தில் தூய்மையாக இருப்பவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், நல்ல நோன்புகளை நோற்பவனும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவனும், ஞானம் கொண்டவனுமான ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நிச்சயம் வெல்வான்[3].(23) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுபவன், கோபம் மற்றும் பொறாமையை வென்று, ஏற்கனவே சொல்லப்பட்ட அறங்களைப் பயின்று, ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட்டு, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு உண்பவனாக இருக்க வேண்டும்.(24)

நல்லோரால் பின்பற்றப்படும் கடமைகளையே அவன் பின்பற்ற வேண்டும்; ஆளுமை செலுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதனைப் போல அவன் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்; அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல், நிந்திக்கப்படாத வழிமுறையைப் பின்பற்றித் தன் வாழ்வாதாரத்தை ஈட்ட வேண்டும்.(25) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களில் உள்ள ஞானத்தின் உண்மைகளை நன்கறிந்தவனும், நன்கு ஆளப்படும் ஆன்மாவைக் கொண்ட ஒருவனைப் போன்ற நடத்தையைக் கொண்டவனும், தெளிவான பார்வையைக் கொண்டவனும், தன் வகைக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பவனும், தன் செயல்களின் மூலம் கடமைகளில் {தர்மங்களில் / அறங்களில்} எந்தக் கலப்பையும் உண்டாக்காதவனும்,(26) சாத்திரங்களில் நிறுவப்பட்டுள்ளவற்றை நோற்பவனும், நம்பிக்கை நிறைந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், ஞானம் கொண்டவனும், பொறாமை மற்றும் வன்மம் இல்லாதவனும், நீதி மற்றும் அநீதிக்கிடையிலான வேறுபாட்டை நன்கறிந்தவனுமான ஒருவன் தன் சிரமங்களை அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(27) மனோவுறுதி கொண்டவனும், எப்போதும் கவனம் மிக்கவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், அறத்தை {நீதியை} அறிந்தவனும், தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவற்றைக் கடந்தவனுமான ஒரு பிராமணன், துயரால் ஒருபோதும் தளர்வடைய மாட்டான்.(28)

பழங்காலத்தில் ஒரு பிராமணனுக்கு இவ்வகை ஒழுக்க நடைமுறையே விதிக்கப்பட்டது. அவன் ஞானத்தை அடைய முயற்சி செய்து, சாத்திரச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இவ்வாறு வாழ்வதன் மூலம் அவன் நிச்சயம் வெற்றியை அடைவான்.(29) தெளிவான பார்வையில்லாத ஒருவன் {அறிவில்லாதவன்}, சரியானதையே செய்ய விரும்பினாலும் தவறையே செய்வான். அத்தகைய மனிதன், தன் அறிவைப் பயன்படுத்தினாலும், அநீதியின் இயல்பைக் கொண்ட அறச்செயல்களையே செய்கிறான்.(30) சரியானதைச் செய்ய விரும்பினாலும் அவன் தவறானதையே செய்கிறான். அதேபோலத் தவறானதைச் செய்ய விரும்பி, சரியானதைச் செய்கிறான். அத்தகைய மனதின் மூடனாவான். இருவகைச் செயல்களை அறியாதவன், மீண்டும் மீண்டும் மறுபிறவிகளையும் மரணங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார் {வியாசர்}.(31)

மோக்ஷகாரணம்! – சாந்திபர்வம் பகுதி – 236-முக்திக்கு வழிவகுக்கும் ஞானம்; யோக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “விடுதலை {முக்தி} விரும்பத்தக்கதானால் ஞானம் அடையப்பட வேண்டும். காலம் அல்லது வாழ்வெனும் ஓடையில் மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்படும் ஒருவன் கரையை அடைவதற்கு ஞானமே தெப்பமாகும் {படகாகும்}.(1) (உயிர் என்று அழைக்கப்படும் ஒன்று மற்றும் ஆன்மாவின் குணத்தைப் பொறுத்தவரையில்) ஞானத்தின் துணை கொண்டு குறிப்பிட்ட தீர்மானங்களை அடைந்த ஞானிகள், அந்த ஞானமெனும் தெப்பத்தைக் கொண்டு அறியாமை கொண்டோரைக் காலம் அல்லது வாழ்வெனும் ஓடையைக் கடக்க உதவ வல்லவர்களாக இருக்கிறார்கள். எனினும் அறியாமை கொண்டோர் தங்களையோ, பிறரையோ காத்துக் கொள்ள இயன்றவர்கள் அல்ல.(2) ஆசை மற்றும் பிற குறைகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்தவனுமான ஒருவன், இடம் {தேசம்}, செயல்கள் {கர்மா}, பற்று {அனுராகம்}, பொருட்கள் {திரவியம்}, வழிமுறைகள் {உபாயம்}, அழிவு {அபாயம்}, நிச்சயத்தன்மை {நிச்சயம்}, கண்கள், உணவு {ஆகாரம்}, ஒடுக்குமுறை {ஸம்ஹாரம்}, மனம் மற்றும் ஆய்வு {தரிசனம்} ஆகிய பனிரெண்டு யோகத் தேவைகளைக் கவனிக்க வேண்டும்[1].(3) மேன்மையான அறிவை அடைய விரும்புபவன், தன் புத்தியின் துணை கொண்டு, பேச்சு மற்றும் மனம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும். அமைதிநிலையை விரும்பும் ஒருவன் தன் அறிவின் துணை கொண்டு தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்த வேண்டும்.(4)கருணையுள்ளவனாகவோ, கொடூரனாகவோ, வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவோ, ரிக்குகளை அறியாதவனாகவோ, அறவோனாகி வேள்விகளைச் செய்பவனாகவோ, இழிந்த பாவியாகவோ, ஆற்றல் மற்றும் செல்வத்தில் மேம்பட்டவனாகவோ, துன்பத்தில் மூழ்கியவனாகவோ ஒருவன் இருந்தாலும், (நான் சொல்லும் குணங்களான) இவற்றை {யோகத் தேவைகளை / யோக சாதனங்களை} நோக்கி மனத்தைத் திருப்பும் அவன், கடப்பதற்கரிதான வாழ்வெனும் பெருங்கடலை நிச்சயம் கடப்பான்.(5,6) யோகத்தின் மூலம் பிரம்மத்தை அடைவதன் விளைவுகளைக் குறித்துப் பேசாமல், ஆன்ம விசாரணையில் மட்டுமே தன்னை நிறுவி கொள்ளும் ஒருவன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் தேவைகளைக் கடந்தவனாகிறான் என்று சொல்லப்படுகிறது.(7) ஜீவனைத் தன்னுள்ளே கொண்ட உடல் ஓர் அற்புதத் தேராகும். வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளைச் செய்கையில் அவை அதன் {உடலெனும் அந்த அற்புதத்தேரின்} உபஸ்தமாகவும் {அமரும் இடமாகவும்}, வெட்கம் அதன் வரூதமாகவும் {தேரைக் காக்கும் ஒரு பகுதியாகவும்}, உபாயம் மற்றும் அபாயம் ஆகியன அதன் கூபரமாகவும் {மூக்கணையாகவும்}, அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்று அதன் அக்ஷமாகவும் {அச்சாகவும்}, பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்று அதன் யுகமாகவும் {நுகமாகவும்}, அறிவு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இருப்புக் காலம் ஆகியன குதிரைகளைக் கட்டும் அதன் நுகத்தடியாகவும் {பிடிப்பாகவும்}, கவனம் அதன் அழகிய வந்தூரமாகவும் {சேர்க்கையாகவும்}, நன்னடத்தையை ஏற்றல் அதன் நேமியாகவும் {கட்டாகவும்}, பார்வை, தீண்டல், மணம், கேள்வி ஆகியன அதன் குதிரைகள் நான்காகவும், ஞானம் அதன் நாபியாகவும் {குடமாகவும்}, சாத்திரங்கள் அனைத்தும் அதன் பிரடோதமாகவும் {சாட்டையாகவும்}, குறிப்பிட்ட சாத்திரத் தீர்மானங்களின் அறிவு அதன் சாரதியாகவும், ஆன்மா உறுதியான இருக்கையைக் கொண்ட அதன் பயணியாகவும், நம்பிக்கை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியன அதன் முன்னோடியாகவும், துறவானது பின்னால் தொடர்ந்து வந்து நன்மை செய்யும் அதன் இணைபிரியாத் தோழனாகவும், தூய்மை அது செல்லும் பாதையாகவும், தியானம் (அல்லது பிரம்மத்தில் கலப்பது) இலக்காகவும் அமையும்போது, {உடலெனும்} அந்தத் தேரானது பிரம்மத்தை அடைந்து அங்கே பிரகாசத்துடன் ஒளிர்கிறது[2].(8-11)முதுமை, மரணம் ஆகியவற்றுக்கு மேலான பிரம்மமெனும் இலக்கை அடைவதற்காக இந்த உலகமெனும் காட்டைக் கடக்கும் வகையில் {உடலெனும்} தன் தேரை ஆயத்தம் செய்வதற்கான வேகமான வழிமுறைகளை நான் இப்போது சொல்லப் போகிறேன்.(12) ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனத்தை நிலை நிறுத்துவது தாரணை என்றழைக்கப்படுகிறது[3]. நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக நோற்கும் யோகியானவன் ஏழு வகைத் தாரணைகளைப் பயில்கிறான். மேலும், அருகாமை மற்றும் தொலைவு ஆகிய காரியங்களைப் பொருத்து அவற்றிலிருந்து பல்வேறு வகையான தாரணைகள் எழுகின்றன[4].(13) யோகியர் இதன் மூலம், பூமி {ப்ருதிவி}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்}, நீர் {அப்பு}, நெருப்பு {தேயு}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புத்தியில் படிப்படியாகத் தேர்ச்சி பெறுகின்றனர். அதன் பிறகு அவன் படிப்படியாகப் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} தேர்ச்சியடைகிறான்.(14) விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி யோகத்தில் ஈடுபடும் குறிப்பிடப்பட்ட தனிநபர்களால் உணரப்படும் கருத்துகளின் வகையை முறையே நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும், தன்னையே உள்நோக்கும் ஒருவனால் (விதிகளின் படி) தொடங்கப்படும் யோகத்தில் கிடைக்கும் வெற்றியின் இயல்பைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்[5].(15)

தன் திரள் உடலைக் கைவிடும் யோகி, தன் ஆசானின் போதனைகள் பின்பற்றிப் பின்வரும் நுட்பமான வடிவங்களை வெளிப்படுத்தும் தன் ஆன்மாவைக் காண்கிறான். முதல் நிலையில் அவனுக்கு ஆகாயம் என்பது பனி நிறைந்த ஆவி {புகை} போன்ற ஒரு நுட்பமான பொருளால் நிரம்பியதாகத் தெரிகிறது.(16) உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவின் வடிவமும் இத்தகையதாகவே இருக்கிறது. இந்தப் பனி மறையும்போது இரண்டாவது (அல்லது புதிய) தோற்றம் {உடல்} தென்படுகிறது.(17) அப்போது யோகி தன் இதயமெனும் ஆகாயத்தில் நீரின் வடிவத்தைக் காண்கிறான். அந்த நீர் மறைந்ததும், நெருப்பெனும் வடிவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(18) இது மறைந்ததும் உணரப்படும் வடிவம் நன்கு கடினமாக்கப்பட்டதும் பளபளப்பானதுமான ஓர் ஆயுதத்தைப் போன்ற பிரகாசமான காற்றாகும். காற்றால் வெளிப்படுத்தப்படும் அந்த வடிவம் மெல்ல மெல்ல சிலந்தி நூலை {ஆட்டு மயிரைப்} போல மெலிதாகிறது.(19) வெண்மையையும், காற்றின் நுட்பமான தன்மையையும் அடைந்த பிரம்மனின் ஆன்மா, மேலான வெண்மையையும், வெளியின் {ஆகாயத்தின்} நுட்பமான தன்மையையும் அடைவதாகச் சொல்லப்படுகிது.(20)

இந்தப் பல்வேறு சூழ்நிலைகளின் விளைவுகளை அவை நேர்வது போலவே உனக்குச் சொல்கிறேன்; கேட்பாயாக. பூமி எனும் பூதத்தை வெற்றிக் கொண்ட யோகியானவன், படைப்பு சக்தியின் தலைமைப் பொறுப்பை அடைகிறான்.(21) இரண்டாவது பிரஜாபதியைப் போல, எளிதில் கலக்கமடையாத முற்றிலும் அமைதியான இயல்பைக் கொண்ட அவனால் தன் உடலில் இருந்து பல்வேறு வகை உயிரினங்களைப் படைக்க முடியும். {வாயு எனும் பூதத்தை வென்று} காற்றின் தலைமைப் பொறுப்பை ஒருவன் அடைந்தால், அந்த மனிதனால், தன் கட்டைவிரல், அல்லது கை, அல்லது கால் ஆகியவற்றை மட்டுமே கொண்டு மொத்த பூமியையும் நடுங்கச் செய்ய முடியும்.(22) ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி இதுவே காற்றின் குணமாகும். வெளியின் தலைமைப் பொறுப்பை அடைந்த யோகி, அந்தப் பூதத்தில் கலப்பது அல்லது விரும்பியபடி மறைவது ஆகியவற்றை அடைந்ததன் விளைவால், வெளியிலேயே {ஆகாயத்திலேயே} பிரகாசமாக நிலைத்திருக்க முடியும்.(23) நீரின் தலைமைப் பொறுப்பை ஒருவன் அடைந்தால் (அகஸ்தியரைப் போல) ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடலையே கூடக் குடித்துவிட முடியும். நெருப்பின் மீதான தலைமைப் பொறுப்பை அடையும் யோகி, பார்க்கப்பட முடியாத {புலப்படாத} வடிவத்தை அடைந்து பிராகாசிக்கிறான். அவன் தன்னுள் உள்ள நெருப்பை அணைத்தால் மட்டுமே புலப்படுவான். யோகி தன் தனிப்பட்ட நனவுநிலையை {அகங்காரத்தை} அழிப்பதில் வென்றால் இந்த ஐம்பூதங்களும் அவனது ஆளுகையின் கீழ் வரும்.(24) ஐம்பூதங்கள் மற்றும் தனிப்பட்ட நனவுநிலை {அகங்காரம்}[6] ஆகியவற்றின் ஆன்மாவான புத்தியானது யோகியால் வெல்லப்படும்போது, அவன் அனைத்தையும் அறிந்தவனாக, (ஐயம் மற்றும் நிச்சமின்மையில் இருந்து விடுபட்ட உணர்வுள்ளவனாக) தன்னிடம் வரும் அனைத்துப் பொருட்களின் முற்றான அறிவைக் கொண்டவனாக ஆகிறான்.(25)

இதன் விளைவாகப் புலப்படும் நிலையில் இருக்கும் ஒன்று {ஸ்தூலமாகக் காணப்படும் ஆத்ம ரூபம்}, எதில் இருந்து இந்த உலகம் உண்டாகி புலப்பட்ட நிலையை அடைந்ததோ அந்தப் புலப்படாதது {ஸுக்ஷமம்}, அல்லது பரமாத்மாவுக்குள் கலக்கிறது[7].(26) புலப்படாதது குறித்த அறிவியலை இப்போது விரிவாக விளக்கப் போகிறேன் கேட்பாயாக. ஆனால் அனைத்திற்கும் முன்பாகச் சாங்கிய தத்துவ அமைப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி புலப்படும் அனைத்தையும் குறித்து என்னிடம் இருந்து கேட்பாயாக.(27) யோகம் மற்றும் சாங்கியம் என்ற ஈரமைப்புகளிலும் {கோட்பாடுகளிலும்}, இருபத்தைந்து வகை அறிவுகள் {தத்துவங்கள்} கிட்டத்தட்ட இதே வகையிலேயே சமமானவையாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியப் பண்புகளைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக.(28) எது புலப்படுவது {விக்தம்} என்று சொல்லப்படுகிறதோ அது பிறப்பு, வளர்ச்சி, சிதைவு {மூப்பு}, மற்றும் மரணம் என்ற நான்கு பண்புகளைக் கொண்டதாக இருக்கிறது.(29) எதில் இந்தப் பண்புகள் இல்லையோ அது புலப்படாதது {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகிறது. வேதங்களிலும், அறிவியல்களிலும் குறிப்பிடப்படும் ஈரான்மாக்கள் இவற்றின் அடிப்படையிலானவையே.(30)முதலாவதானது (ஜீவாத்மா என்றழைக்கப்படுவது) ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நான்கு பண்புகளையும், (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) நான்கு நோக்கங்களுக்கான ஏக்கத்தையும் கொண்டதாகும். ஆன்மாவானது புலப்படுவது (வ்யக்தம்) என்றழைக்கப்படுகிறது, மேலும் அது புலப்படாததிலிருந்து (பரமாத்மாவிலிருந்து) {அவ்யக்தத்திலிருந்து} பிறந்ததுமாயிருக்கிறது. அது புத்தியுள்ளதாகவும், புத்தியில்லாததாகவும் இருக்கிறது.(31) இவ்வாறே நான் சத்வம் (செயலற்ற பொருள்) {புத்தி}, க்ஷேத்ரக்ஜ்ஞன் (பொருளற்ற ஆவி) {ஜீவாத்மா} ஆகியவற்றைக் குறித்துச் சொன்னேன்[8]. வேதங்களில் இந்த இருவகை ஆன்மாக்களும் புலன்களுக்குரிய பொருட்களில் பற்றுடையவையாகவே சொல்லப்பட்டுள்ளன.(32) ஒருவன் புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுந்தவனாகத் தனிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதே சாங்கியர்களின் கோட்பாடாகும். பற்று, செருக்கு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், இன்பம் துன்பம், வெப்பம் குளிர், ஆகிய முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், கோபத்திற்கோ, வெறுப்புக்கோ வசப்படாதவனும், ஒருபோதும் பொய்மை பேசாதவனும்,(33) அவதூறு கூறப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ கூட அவதூறு செய்தவன் அல்லது தாக்கியவனிடம் நட்பை வெளிப்படுத்துபவனும், பிறருக்கு ஒருபோதும் தீங்கு நினையாதவனும், சொல், செயல் மற்றும் சிந்தை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்துபவனும்,(34) அனைத்து உயிரினங்களிடமும் சமமாக நடந்து கொள்பவனுமான யோகி பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.பூமி சார்ந்த பொருட்கள் எதனிலும் ஆசையை வளர்க்காதவனும், வருவனவற்றை விருப்பமுடன் ஏற்பவனும், தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே பூமிசார்ந்த பொருட்களைச் சார்ந்திருப்பவனும்,(35) பேராசையில் இருந்து விடுபட்டவனும், துயரங்கள் அனைத்தையும் விரட்டியவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்பவனும், மேனியின் தோற்றம் மற்றும் உடுப்பு {உடை அலங்காரங்களைக்} கருத்தில் கொள்ளாதவனும், (வாழ்வின் உண்மையான நோக்கங்களில் அர்ப்பணிப்புடன்) தன் புலன்கள் அனைத்தையும் குவித்தவனும், நிறைவேறாத காரியம் ஏதும் இல்லாதவனும்,(36) அனைத்து உயிரினங்களிடமும் சமமான நட்பைக் கொண்டவனும், மண்ணாங்கட்டியையும், தங்கக்குவியலையும் சமமான கண்ணுடன் கருத்தில் கொள்பவனும், நண்மன் மற்றும் எதிரிக்கிடையில் சமமான மனநிலையைக் கொண்டவனும், பொறுமையைக் கொண்டவனும், புகழையும் பழியையும் ஒன்றாகவே ஏற்பவனும்,(37) ஆசைக்குரிய பொருட்கள் அனைத்திலும் உள்ள ஏக்கங்களில் இருந்து விடுபட்டவனும், பிரம்மச்சரியத்தைப் பயில்பவனும், தன் நோன்புகள் மற்றும் பயிற்சிகள் அனைத்திலும் உறுதியாகவும், நிலையாகவும் இருப்பவனும், இவ்வண்டத்தில் உள்ள எந்த உயிரினத்திடமும் வன்மமோ, பொறாமையோ இல்லாதவனுமான ஒரு யோகியானவன், சாங்கிய அமைப்புமுறையின்படி வீடுபேற்றை {விடுதலையை / முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(38)

(பதஞ்சலியின் அமைப்பு முறை அல்லது) யோகத்தின் மூலம் விடுதலையை {முக்தியை} வெல்லும் மனிதனின் வழிகள் மற்றும் வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. (தொடக்கப் படிநிலைகளில்) யோகப் பயிற்சி அளிக்கும் பலத்தைக் கடந்து செயல்படுபவன், விடுதலை {முக்தி} அடைவதில் வெல்கிறான்[9].(39) (சாங்கியம், யோகம் என்ற அமைப்புமுறைகளின்படி விடுதலையை அடைவது என்பது குறித்துப்) பேசுபவர்களால் வெவ்வேறானவையாகச் சொல்லப்படும் (ஆனால் உண்மையில் ஒன்றேயான) இந்தக் காரியங்களைக் குறித்து உள்ளபடியே சொல்லிவிட்டேன்[10]. இவ்வாறே ஒருவன் முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடக்கலாம். இவ்வாறே ஒருவன் பிரம்மத்தையும் அடையலாம்” என்றார் {வியாசர்}.(40)

யார் பிராமணன்? – சாந்திபர்வம் பகுதி – 237-முக்திக்கு வழிவகுக்கும் ஞானத்தின் தன்மையைக் குறித்து வியாசரிடம் விசாரித்த சுகார்; செயல்கள் கட்டாயக் கடமையா, அல்லது விருப்பத்திற்குரியதா என்பது குறித்துச் சொன்ன வியாசர், உயிரினங்களின் உயர்வு தாழ்வையும், ஞானத்தின் சிறப்பையும் சுகருக்குச் சொன்னது…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தியானம் செய்ய வல்லவனான ஒருவன், வாழ்வெனும் பெருங்கடலில், மேலும் கீழும் சுமந்து செல்லப்படும்போது,  (வேறு எந்த ஆதரவையும் பற்றிக்கொள்வதற்காக அங்கேயும், இங்கேயும் தன் கரங்களையும் நீட்டாமல்) அறிவெனும் தெப்பத்தைப் பற்றிக் கொண்டு, விடுதலையை {முக்தியை} அடைவதற்காக அந்த அறிவையே கடைப்பிடிக்கிறான்” என்றார்.(1)

சுகர் {வியாசரிடம்}, “அந்த அறிவானது யாது? அது, பிழைகள் அகன்று உண்மை காணப்படும்போது அடையப்படும் கல்வியா? அல்லது புரிந்து கொள்ளப்படும், அல்லது அடையப்படும் எந்தப் பொருளின் உதவியின் மூலமாவது செய்யப்படும், அல்லது அடையப்படும் செயல்களைக் கொண்ட கடமைகளின் வழிமுறையா {பிரவிருத்தியா}? அல்லது, ஆன்ம அழிவை நாடுவதன் மூலம், செயல்களைத் தவிர்த்தல் என்றழைக்கப்படும் கடமைகளின் வழிமுறையா {நிவிருத்தியா}? பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டும் எதன் உதவியின் மூலம் தவிர்க்கப்படுமோ அஃது என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {சுகர்}[1].(2)

வியாசர் {சுகரிடம்}, “உண்மையில் எந்தப் புகலிடமோ, அடித்தளமோ இல்லாமல், அனைத்தும் தங்கள் இயல்பின் {ஸ்வபாவத்தின்} விளைவாலேயே நிலைத்திருக்கின்றன என்று நம்பும் {சூன்யவாதியான} மூடன், சீடர்களின் நாட்டத்தை இத்தகைய போதனையால் நிறைத்து, தன் வாதத் திறமையால் அந்தச் சீடர்கள் முன்வைக்கும் முற்றிலும் முரண்பட்ட காரணங்களைப் புறக்கணித்து, எந்த உண்மையையும் அடையாமல் போகிறான்[2].(3) மேலும், பொருட்களின் இயல்பின் {ஸ்வபாவத்தின்} மூலமே அனைத்துக் காரணங்களும் உண்டாகின்றன என்று உறுதியாக நம்புபவர்கள் {லோகாயதவாதிகள்}, (ஞானமுள்ள) மனிதர்களின், அல்லது (அவர்களுக்குப் போதிக்கவல்ல) முனிவர்களின் கூற்றைக் கேட்டாலும் உண்மையை அடைவதில் தவறுகிறார்கள்.(4) இந்த இரு கோட்பாடுகளில் ஒன்றைப் பின்பற்றி (தங்கள் ஊகங்களை) நிறுத்துபவர்களும், உண்மையில் இயற்கையே {அண்டத்திற்கான} காரணம் எனக் கருதுபவர்களுமான மனிதர்கள் {சூன்யவாதிகளும், லோகாயதவாதளும்}, தங்களுக்கான நன்மையை அடைவதில் ஒருபோதும் வெல்வதில்லை[3].(5)இயற்கையே {ஸ்வபாவமே} (படைப்பிற்கும், அது நீடித்திருப்பதற்கும்) காரணம் என்ற இந்த நம்பிக்கையானது, பிழையின் ஆதிக்கத்தினால் மனத்தில் எழுந்து, அதை {அந்த நம்பிக்கையைப்} பேணி வளர்ப்பவர்களுக்கு அழிவைக் கொண்டு வருகிறது. பொருட்கள் தங்கள் சொந்த இயல்பிலேயே இருக்கின்றன என்றும்{1}, அவை {பொருட்கள்} (தங்கள் சொந்த இயல்பின் விளைவால்) தங்களுக்கு முந்தைய வேறெதனிலும் இருந்து உண்டாகின்றன என்றும்{2} {வேறு சொற்களில் ஸ்வபாவவாதம் என்றும் பரிபாவவாதம் என்றும்} சொல்லப்படும் இந்த இரு கோட்பாடுகளைக் குறித்த உண்மையை இப்போது கேட்பாயாக[4].(6) ஞானிகள், வேளாண்மை, உழவு (என்ற வழிமுறைகளின் மூலம்) பயிர் சேகரிப்பு, வாகனங்கள், இருக்கைகள், விரிப்புகள், வீடுகள் அமைத்தல் ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.(7) மேலும் அவர்கள், இன்பத்தோட்டங்கள் அமைத்தல், மாடமாளிகைகளைக் கட்டுதல், அனைத்து வகை நோய்களுக்குமான மருந்துகளைத் தயாரித்தல் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.(8) (வழிமுறைகளைப் பயன்படுத்தும்) ஞானமே காரியங்கள் கனிவதற்கு வழிவகுக்கிறது. ஞானமே நன்மையான விளைவுகளை வென்றெடுக்கிறது. மன்னர்கள், தாங்கள் ஆட்சி செய்யும் மனிதர்களைப் போன்ற அதே பண்புகளைக் கொண்டிருந்தாலும், இந்த ஞானமே அரசுரிமையை அனுபவிக்கவும், அரசைச் செலுத்தவும் அவர்களுக்குத் தகுதியைக் கொடுக்கிறது[5].(9) இந்த ஞானத்தின் மூலமே உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் அடையாளங்காணப்படுகிறார்கள். படைக்கப்பட்ட பொருட்களில் மேன்மையானவையும், தாழ்ந்தவையும் இந்த ஞானத்தின் மூலமே புரிந்து பார்க்கப்படுகிறது. இந்த ஞானம் அல்லது அறிவே அனைத்துப் பொருட்களுக்கும் உயர்ந்த புகலிடமாக இருக்கிறது[6].(10)படைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகைப் பொருட்கள் {உயிரினங்கள்} அனைத்தும் நான்கு வகைப் பிறவிகளைக் கொண்டிருக்கின்றன. அவை கன்றீனும் பாலூட்டிகள் {ஜராயுஜம்}, முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை {அண்டஜம்}, காய்கறிகளில் பிறப்பவை {தாவரங்கள் / உத்பிஜ்ஜம்}, {வியர்வை, மலம் போன்ற} கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜம்} ஆகியவையாகும். மேலும் உயிரினங்களில் அசையாதனவற்றை விட அசைவன மேன்மையானவையாக அறியப்பட வேண்டும். (புத்தியில்லாத பொருளில் இருந்து) வேறுபட்டிருப்பதும், அறிவுக்குப் பொருத்தமானதுமான புத்தியுள்ள ஆற்றலே (புத்தியில்லாத) பொருளைவிட மேன்மையானதாகக் கருதப்பட வேண்டும்[7].(12) எண்ணற்றவையாக இருக்கும் அசையும் உயிரினங்களில் பல கால்களைக் கொண்டவை மற்றும் இரு கால்களைக் கொண்டவை என்ற இரு வகைகள் உள்ளன. எனினும், பிந்தையதே {இரு கால்களைக் கொண்டதே} முந்தையதைவிட மேன்மையானதாகும்.(13) மேலும் இரு கால் கொண்ட உயிரினங்களில் நிலத்தில் வாழ்பவை, பிறவற்றில் வாழ்பவை என்று ஈரினங்கள் உள்ளன. இவற்றில் முந்தையதே பிந்தையதைவிட மேன்மையானதாகும். மேன்மையானவை சமைக்கப்பட்ட பல்வேறு வகை உணவுகளை உண்கின்றன.(14) நிலத்தில் திரியும் இரு கால் உயிரினங்களிலும், நடுத்தரமானவை, முதன்மையானவை என்று இரு வகைகள் உள்ளன. இவற்றில், தங்கள் வகைக்கான கடமைகளை நோற்பதன் விளைவால் நடுத்தரமானவையே {முதன்மையானவற்றைவிட} மேன்மையானவை என்று கருதப்படுகின்றன[8].(15)நடுத்தரமானவர்களிலும், கடமைகளை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று இருவகையாகச் சொல்லப்படுகின்றனர். அவர்களில், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற வேறுபாட்டை அறிந்திருப்பதால் முந்தைய வகையினரே, பிந்தையவர்களைவிட மேன்மையானவர்களாவர்.(16) கடமைகளை அறிந்தவர்களிலும், வேதங்களை அறிந்தவர்கள், அவற்றை அறியாதவர்கள் என இருவகையினராகச் சொல்லப்படுகின்றனர். அவர்களில் முந்தைய வகையினரிலேயே வேதங்கள் வசிப்பதால் அவர்களே முதன்மையானவர்களாகச் சொல்லப்படுகின்றனர்[9].(17) வேதங்களை அறிந்தோரிலும், வேதங்களை உரைப்போர், அல்லாதோர் என இரு வகையினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்களில் வேதங்களை, அவற்றின் கடமைகள் மற்றும் அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள், அந்தச் சடங்குகள் மற்றும் கடமைகளின் கனிகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்த முந்தைய வகையினரே, அந்தக் கடமைகளையும், சடங்குகளையும் வெளியிடுபவர்களாக இருப்பதால் அவர்களே மேன்மையானவர்களாகச் சொல்லப்படுகின்றனர். உண்மையில், கடமைகள் மற்றும் அவற்றில் உள்ள விதிகள் ஆகியவற்றுடன் சேர்ந்த வேதங்கள் அனைத்தும் அவர்களில் இருந்து பாய்வதாகச் சொல்லப்படுகிறது.(18,19) வேத ஆசான்களிலும், ஆன்மாவை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று இருவகையினர் உள்ளனர். இவர்களில், பிறப்பு மற்றும் மரணம் என்பவை என்ன என்ற அறிவைக் கொண்டிருப்பதால் முந்தையவர்களே மேன்மையானவர்களாவர்[10].(20)கடமைகளைப் பொறுத்தவரையில், அவை (பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி என்று) இரு வகைகளில் இருக்கின்றன. கடமைகளை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகவோ அண்ட அறிவைக் கொண்டவனாகவோ கருதப்படுகிறான். அத்தகைய மனிதனே துறவியாவான். அத்தகைய மனிதனே தன் நோக்கங்களை நிறைவேற்றுவதில் உறுதியுள்ளவன் ஆவான். அத்தகைய மனிதனே உண்மை நிறைந்தவனும், (அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டிலும் தூய்மையானவனும்), {யோக சக்தியால் உண்டாகும்} பலம்படைத்தவனுமாவான்.(21) (பிரவிருத்தியின் கடமைகளை மட்டுமே அறிந்தவனாக இல்லாமல்} பிரம்ம அறிவுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒரு பிராமணனாக அவனைத் தேவர்கள் அறிவார்கள். அத்தகைய மனிதன் வேதங்களையும் நன்கறிந்தவனாக, ஆன்ம கல்வியில் மெய்யுறுதியான அர்ப்பணிப்புடன் கூடியவனாகவும் இருப்பான்.(22) உண்மையான ஞானத்தைக் கொண்டவர்கள் தங்கள் ஆன்மாவானது, அகம், புறம் என்ற இரண்டிலும் இருப்பதைக் காண்பார்கள். ஓ! குழந்தாய், அத்தகை மனிதர்களே உண்மையில் மறுபிறப்பாளர்கள், மேலும் அத்தகைய மனிதர்களே தேவர்களும் ஆவர்[11].(23) உயிரினங்களின் இந்த உலகம் இவர்களையே சார்ந்திருக்கிறது, இவர்களிலேயே மொத்த அண்டமும் வசிக்கிறது. இவர்களது மகிமைக்கு இணையான வேறேதும் கிடையாது.(24) பிறப்பு, இறப்பு, வேறுபாடுகள், அனைத்து வகைச் செயல்கள் ஆகியவற்றைக் கடந்த அவர்கள் நால்வகை உயிரினங்களின் தலைவர்களும், சுயம்புவுக்கே இணையானவர்களும் ஆவர்” என்றார் {வியாசர்}[12].(25)

யுக வேற்றுமை! – சாந்திபர்வம் பகுதி – 238-செயல்கள், ஞானம் மற்றும் யுக வேற்றுமைகள் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்..

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிராமணர்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய செயல்களாக இவையே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஞானம் கொண்ட ஒருவன் எப்போதும் (பரிந்துரைக்கப்பட்ட) செயல்களின் மூலமே வெற்றியை அடைவான்.(1) செயல்களில் ஐயம் எழவில்லையெனில், அப்போது செய்யப்படும் செயல்கள் நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும். செயல்கள் கட்டாயமானவையா, வாய்ப்பிருந்தால் மட்டும் செய்யப்படுபவையா {கட்டாயமில்லாதவையா} என்ற ஐயமே இங்கே குறிப்பிடப்படுகிறது[1].(2) (செயல்களின் உண்மைப் பண்பில் கொள்ளும் ஐயமான) இதைப் பொறுத்தவரையில், (எதனைக் கொண்டு மட்டுமே பிரம்மமோ, விடுதலையோ {முக்தியோ} அடையப்படுமோ அந்த) ஞானத்தை அடைவதற்கு மனிதனுக்குச் செயல்கள் விதிக்கப்பட்டிருக்கிறதென்றால், அவை (வாய்ப்புள்ளபோது செய்யப்படக்கூடியவையாக இல்லாமல்) கட்டாயமானவையாகவே கருதப்பட வேண்டும். உள்ளுணர்வுகள் மற்றும் அனுபவத்தின் வெளிச்சத்தில் நான் அஃதை இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக[2].(3) செயல்களைப் பொறுத்தவரையில் சில மனிதர்கள், முயற்சியே {புருஷ ஸாமர்த்தியமே} அவற்றின் காரணம் என்று சொல்கின்றனர். பிறரோ தேவையே {தெய்வமே / காலமே} அதன் காரணம் என்கின்றனர். இன்னும் பிறர், இயல்பே {ஸ்வபாவமே} அதன் காரணம் என்கின்றனர்.(4) சிலரோ முயற்சி மற்றும் தேவை {காலம்} ஆகிய இரண்டின் விளைவே செயல்கள் என்று சொல்கின்றனர். மேலும் சிலர், காலம், முயற்சி, இயல்பு ஆகியவற்றில் இருந்து செயல்கள் பாய்கின்றன என்று சொல்கின்றனர். (முயற்சி, தேவை {காலம்} மற்றும் இயல்பு ஆகிய) இம்மூன்றில் (வேறு இரண்டும் காரணமல்ல, அம்மூன்றில்) ஒன்று மட்டுமே காரணம் என்று சிலர் சொல்கின்றனர். இவை மூன்றும் சேர்ந்துதான் காரணம் உண்டாகிறது என்று சிலர் கருதுகிறார்கள்[3].(5)செயல்களைச் செய்வதில் ஈடுபடும் சில மனிதர்கள், அனைத்துப் பொருட்களையும் பொறுத்த வரையில், அவை {பொருட்கள்} இருக்கின்றன, அவை இல்லை, அவை இருக்கின்றன என்று சொல்ல முடியாது, அவை இல்லை என்று சொல்லமுடியாது, இருக்கின்றன என்று சொல்ல முடியாது என்பதல்ல, மற்றும் இறுதியாக இல்லை என்று சொல்ல முடியாது என்பதல்ல என்று சொல்கிறார்கள். (இவையே மனிதர்களால் சொல்லப்படும் பல கருத்துகளாகும்). எனினும், யோகியராக இருப்பவர்கள், பிரம்மத்தையே அண்டத்தின் காரணமாகக் காண்கிறார்கள்[4].(6) திரேத, துவாபர, கலி யுகங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஐயங்களால் அகத்தூண்டல் பெற்றவர்கள் ஆவர். எனினும் கிருத யுகத்தைச் சேர்ந்த மனிதர்கள் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களாக, அறம் நோற்பவர்களாக இருந்தார்கள்[5].(7) அந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும், ரிக்குகள், சாமங்கள் மற்றும் யஜுஸ்கள் ஆகியவை வெளிப்படையாகவே வெவ்வேறானவையாக இருந்தாலும் ஒன்றெனவே கருதினார்கள். ஆசை மற்றும் பேராசையை ஆய்வு செய்த அவர்கள் தவத்தை மட்டுமே வழிபாடு செய்தனர்[6].(8) தவப்பயிற்சிகளை அர்ப்பணிப்புடனும், அவற்றில் நிலையுறுதியுடனும், கடுமையுடனும் நோற்கும் ஒருவன், தன் ஆசைகள் அனைத்தின் கனிகளைத் தவங்களால் மட்டுமே அடைகிறான்.(9) தவத்தின் மூலம் ஒருவன் அண்டத்தைப் படைத்தவனின் நிலையை அடைகிறான். தவத்தின் மூலம் அனைத்துப் பொருட்களின் பலமிக்கத் தலைவனாகிறான்[7].(10)அந்தப் பிரம்மம், வேதத் தீர்மானங்களில் {கர்மகாண்டத்தில்} விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வளவையும் மீறி, அந்தத் தீர்மானங்களை அறிந்தவர்களால் கூடப் பிரம்மம் உணரப்பட முடியாததாக இருக்கிறது. மீண்டும் அந்தப் பிரம்மம் வேதாந்தத்தில் அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், பிரம்மத்தைச் செயல்களின் வழிமுறைகளால் காண முடியாது[8].(11) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியானது, யபத்தை (தியானம் மற்றும் ஜெபத்தைக்) கொண்டது, க்ஷத்திரியர்களுக்கானது {க்ஷத்திரியர்களுக்கான வேள்வியானது} தேவர்களை நிறைவு செய்வதற்கு (தூய) விலங்குகளைக் கொல்வதைக் கொண்டது; வைசியர்களுக்கானது பயிர்களை உண்டாக்குதல் மற்றும் வீட்டு விலங்குகளை வளர்த்தலைக் கொண்டது; சூத்திரர்களுக்கானது மூவகையினருக்குத் தொண்டு செய்வதைக் கொண்டது.(12) ஒருவன் தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நோற்பது, வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களைக் கற்பது ஆகியவற்றின் மூலம் ஒரு துவிஜன் {இரு பிறப்பாளன்} (மறுபிறப்பாளன்) ஆகிறான். ஒருவன் வேறு எந்தச் செயலையும் செய்கிறானோ இல்லையோ, அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாவதன் மூலம் ஒரு பிராமணனாகிறான்.(13) திரேதா யுகத்தின் தொடக்கத்தில் வேதங்கள், வேள்விகள், வர்ணபேதங்கள் மற்றும் பல்வேறு வகையான வாழ்வுமுறைகள் அதனதன் வகையில் முழுமையாக இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலத்தின் அளவு குறைந்ததன் விளைவால் அவையும் சரிவை அடைந்தன.(14) துவாபர யுகத்திலும், கலியுகத்திலும் வேதங்கள் மனக்கலக்கத்தால் மூழ்கடிக்கப்படுகின்றன. மேலும் கலியுகத்தின் முடிவில், அவை கண்ணுக்காவது தென்படுமா என்பது ஐயம்நிறைந்த ஒன்றுதான்.(15)

அந்த யுகத்தில் ஒவ்வொரு வகைக்குமுரிய கடமைகள் மறைந்து, மனிதர்கள் கொடுமையால் பீடிக்கப்படுகிறார்கள். பசு, பூமி, நீர் மற்றும் (மருத்துவக் குணம் கொண்ட உண்ணத்தக்க) மூலிகைகளில் அவற்றின் சாறு கொண்ட தன்மை மறைந்து போகின்றன[9].(16) (உலகளாவிய) கொடுமையின் மூலம் வேதங்கள் மறைகின்றன, அவற்றோடு சேர்ந்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் நான்கு வாழ்வுமுறைகளுக்கான கடமைகளும் மறைந்து போகின்றன. தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் பீடிக்கப்படுகின்றனர், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இழிவான மாற்றத்தை அடைகின்றன.(17) சொர்க்கத்தின் மழை பூமியில் பொருட்கள் அனைத்தையும் வளரச் செய்வதைப் போலவே வேதங்களும் ஒவ்வொரு யுகத்திலும் அங்கங்கள் அனைத்தையும் வளரச்செய்கின்றன.(18) காலம் பல்வேறுவடிவங்களை ஏற்கிறது என்பதில் ஐயமில்லை. அதற்குத் தொடக்கமோ முடிவோ கிடையாது. காலமே அனைத்து உயிரினங்களையும் படைத்து அவற்றை மீண்டும் விழுங்குகிறது. நான் இது குறித்து உன்னிடம் ஏற்கனவே பேசியிருக்கிறேன்.(19) அனைத்து உயிரினங்களின் தோற்றுவாயும் காலமே ஆகும்; காலமே அவற்றை வளரச் செய்கிறது; காலமே அவற்றை அழிக்கவும் செய்கிறது; இறுதியாகக் காலமே அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறது. முடிவிலா வகைகளிலான உயிரினங்கள், (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலியவை போன்ற) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்பட்டு, (பரப்பிரம்மத்தால் விதிக்கப்பட்டதைப்போலவே இருந்து, வேறுவகையில் இல்லாமல்) தங்கள் சொந்த இயல்புகளின் படியே காலத்தைச் சார்ந்திருக்கின்றன” என்றார் {வியாசர்}”.(20)

ஞானக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 239-ஞானம், தவங்கள், புலனடக்கம், துறவு ஆகியவை இல்லாமல் வெற்றியை அடைய முடியாது என்பதையும், சாங்கிய அமைப்பில் விளக்கப்படும் அறிவுக் கோட்பாட்டையும், பிரம்மஞானத்தை அடையு வழி குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு (தன் தந்தையால் {வியாசரால்}) சொல்லப்பட்ட சுகர், அந்தப் பெருமுனிவரின் {வியாசரின்} போதனைகளை உயர்வாக மெச்சி, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் கடமைகளைக் குறித்த பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.(1)

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “ஞானம் கொண்டவனும், வேதங்களை அறிந்தவனும், வேள்விகளைச் செய்பவனும், வன்மத்திலிருந்து விடுபட்டவனுமான ஒருவன், நேரடி சாட்சியம் மூலமோ, உள்ளுணர்வின் மூலமோ உணர முடியாததும், வேதங்களில் இவ்விதம் இருக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்ட முடியாததுமான பிரம்மத்தை அடைவதில் எந்த வழிமுறைகளினால் வெற்றியடைகிறான்?(2) என்னால் கேட்கப்படும் நீர் எந்த வழிமுறைகளின் மூலம் பிரம்மத்தை உணரலாம் என்பதைச் சொல்வீராக. தவம், பிரம்மச்சரியம், அனைத்தையும் துறத்தல், புத்தி, சாங்கிய தத்துவத்தின் உதவி, யோகம் ஆகியவற்றின் மூலம் அஃதை உணர முடியுமா?(3) மனம் மற்றும் புலன்கள் ஆகிய இரண்டைப் பொறுத்தவரையில், எந்த வழிமுறைகளின் மூலம் எந்த வகைக் காரிய ஒருமை {ஒரே காரியத்தில் நிலையுறுதியுடன் இருத்தல்} மனிதர்களால் அடையப்படுகிறது? இவை யாவற்றையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(4)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஞானம் அடைதல் {வித்தை}, தவம், புலனடக்கம், அனைத்தையும் துறத்தல் ஆகியவை இன்றி வேறு எந்த வழிமுறையினாலும் எந்த மனிதனாலும் ஒருபோதும் வெற்றியடைய முடியாது[1].(5) (எண்ணிக்கையில் ஐந்தாக உள்ள) பெரும்பூதங்கள் சுயம்புவின் முதல் (அல்லது அடிப்படை) படப்பைப் பிரதிபலிக்கின்றன. அவை உலக வாழ்வில் உள்ள உடல் படைத்த உயிரினங்களில் மிகப்பெரும் அளவில் அமைந்திருக்கின்றன.(6) உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களும் பூமியில் இருந்தே பெறப்படுகின்றன. அவற்றின் உதிரம் நீரில் இருந்து பெறப்படுகிறது. அவற்றின் கண்கள் ஒளியில் இருந்து பெறப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பிராணன், அபானன், (இன்னும் மூன்று மூச்சுக்காற்றுகள்) வாயுவைத் தங்கள் புகலிடமாகக் கொண்டிருக்கின்றன. இறுதியாக, அவற்றின் உள்ளிருக்கும் (மூக்குத்துளைகள், காது துளைகள் முதலிய) வெற்றிடங்கள் வெளியாக இருக்கின்றன.(7) (உயிரினங்களின்) பாதத்தில் விஷ்ணு இருக்கிறான். அவற்றின் கரங்களில் இந்திரன் இருக்கிறான். உண்ண விரும்பும் அக்னி அவற்றின் வயிற்றுக்குள் இருக்கிறான். காதுகளுக்குள், செவிப்புலனைப் பிரதிபலிக்கும் திசைப்புள்ளிகள் இருக்கின்றன. நாவில் வாக்காகச் சரஸ்வதி இருக்கிறாள்[2].(8)காதுகள், தோல், கண்கள், நாவு, ஐந்தாவதாக மூக்கு ஆகியன அறிவுப்புலன்களாக {ஞானேந்திரியங்களாகச்} சொல்லப்படுகின்றன. இவை தங்கள் தங்களுக்குரிய பொருட்களை உணரும் நோக்கத்திற்காக இருக்கின்றன.(9) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை ஐந்தாவதாக மணம் ஆகியன (ஐந்து) புலன்களுக்கு உரிய பொருட்களாக இருக்கின்றன. இவை புலன்களில் இருந்து தனிப்பட்டவையாகவே (அல்லது சார்பற்றவையாகவே) எப்போதும் கருதப்பட வேண்டும்.(10) தேரோட்டியானவன், தான் விரும்பும் பாதையில் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட அவனது குதிரைகளைச் செலுத்துவதைப் போலவே, மனமும் (தான் விரும்பும் திசைகளில்) இந்தப் புலன்களைச் செலுத்துகிறது. இதயத்தில் அமர்ந்திருக்கும் புத்தியோ மனத்தைச் செலுத்துகிறது[3].(11) புலன்கள் அனைத்தையும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும் அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் மனமே அவற்றுக்கு {புலன்களுக்குத்} தலைவனாக இருக்கிறது. அதேபோலவே, புத்தியே மனத்தின் தலைவனாக (அவற்றை எதிலும் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும், அல்லது கட்டுப்படுத்துவதிலும் தலைவனாக) இருக்கிறது[4].(12)

புலன்கள், புலன்நுகர் பொருட்கள், இயல்பு {ஸ்வபாவம்} என்ற வார்த்தையில் சொல்லப்படும் அந்தப் பொருட்களின் குணங்கள், புத்தி, மனம், உயிர்மூச்சுகள், மற்றும் ஜீவன் ஆகியன உடல் கொண்ட அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிக்கின்றன[5].(13) புத்தியானது எதற்குள் வசிக்கிறதோ அந்த உடலுக்கு உண்மையில் இருப்பு என்ற ஏதும் கிடையாது. எனவே, உடலானது புத்தியின் புகலிடம் கிடையாது. (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) முக்குணங்களைக் கொண்ட தொடக்கக் காலப் பிரகிருதியே, ஒலிவடிவமாக மட்டும் இருக்கும் புத்தியின் புகலிடமாக இருக்கிறது. ஆன்மாவும் புத்தியின் புகலிடமாக இல்லை. ஆசையே புத்தியை உண்டாக்குகிறது. எனினும், ஆசையானது ஒருபோதும் முக்குணங்களை உண்டாக்குவதில்லை[6].(14) புலன்களைக் கட்டுப்படுத்தவல்ல ஞானியானவன், பதினாறு குணங்கள் சூழ பதினேழாவதாகத் தன் புத்தியில் இருக்கும் ஆன்மாவை தன் மனத்தின் உதவியுடன் காண்கிறான்.(15) கண்கள் அல்லது புலன்கள் அனைத்தின் உதவியினாலும் ஆன்மாவைக் காண முடியாது. அனைத்தையும் கடந்த ஆன்மாவானது, மனமெனும் விளக்கின் ஒளியில் மட்டுமே புலப்படுகிறது.(16) அதே போலவே, ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம் ஆகிய தன்மைகளை இழந்து, சுவையும் மணமும் இல்லாமல், அழிக்கப்பட முடியாததாக, (திரளான அல்லது நுட்பமான) உடலற்றதாக, புலன்களற்றதாக இருக்கும் அஃது {ஆன்மாவானது} உடலுக்குள் காணப்படுவதில்லை.(17) புலப்படாததாகவும், உயர்ந்ததாகவும் இருக்கும் அஃது {ஆன்மாவானது}, மடியக்கூடிய உடல்கள் அனைத்திலும் வசிக்கிறது. ஆசான் மற்றும் வேதங்களின் வழிகாட்டலைப் பின்பற்றி அஃதை {ஆன்மாவைக்} காணும் ஒருவன், அதன் பிறகு பிரம்மமாகவே ஆகிறான்.(18)ஞானிகள், அறிவு மற்றும் சீடர்களைக் கொண்ட ஒரு பிராமணனையும், ஒரு பசுவையும், ஒரு யானையையும், ஒரு நாயையும், ஒரு சண்டாளனையும் சம கண்ணுடன் ஒன்றாகவே பார்ப்பார்கள்[7].(19) அனைத்துப் பொருட்களையும் கடந்திருக்கும் ஆன்மாவனாது, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்திலும் வசிக்கிறது. உண்மையில், அனைத்துப் பொருட்களும் அதனால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(20) ஓர் உயிரினமானது, அனைத்துப் பொருட்களிலும் தன் சொந்த ஆன்மாவைக் காணும்போதும், அனைத்துப் பொருட்களையும் தன் ஆன்மாவில் காணும்போதும் அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(21) வேத ஒலியின் மூலம் ஒருவனுடைய ஆன்மாவிற்குள் எது நிறைகிறதோ அதற்கு ஒப்பிடத்தக்க அளவில் அவன் பரமாத்மாவை நிரப்புகிறான் {பரமாத்மாவில் அந்த அளவுக்கான இடத்தைப் பெறுகிறான்}[8]. எவன் எப்போதும் அனைத்துப் பொருட்களையும் தன் சுயத்துடன் அடையாளம் காண்கிறானோ அவன் நிச்சயம் அழிவின்மையை அடைகிறான்.(22) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவில் தன்னை அமைத்துக் கொள்பவனும், அனைத்துயிரினங்களில் நன்மையில் ஈடுபடுபவனும், (அனைத்துப் பொருட்களின்) இறுதி கதியை (பிரம்மத்தை) அடைய விரும்புபவனுமான பாதையற்ற மனிதனின் பாதையில் தேவர்களே கூடக் கலக்கமடைகின்றனர் {மயக்கமடைகின்றனர்}[9].(23) உண்மையில், ஞானம் கொண்ட மனிதனால் பின்பற்றப்படும் பாதையானது, வானத்தில் பறவைகள் செல்லும் பாதை, அல்லது நீரில் மீன்கள் செல்லும் பாதையைப் போலப் புலப்படாததாகும்.(24)காலமானது தன் சொந்த சக்தியில் தனக்குள்ளேயே அனைத்தையும் சமைக்கிறது. எனினும், எந்தக் காலத்தில் எவரெவர் சமைக்கப்படுவர் என்பதை ஒருவரும் அறிவதில்லை[10].(25) (நான் எதைக் குறித்துப் பேசுகிறேனோ) அஃது {ஆத்மாவானது}, மேலேயோ, நடுவிலோ, கீழேயோ, குறுக்காகவோ, வேறு எந்தத் திசையிலோ தோன்றுவதில்லை. நிலையற்றதான அஃது எந்த இடத்திலும் காணப்படுவதில்லை[11].(26) இந்த உலகங்கள் அனைத்தும் அதற்குள்ளேயே இருக்கின்றன. அதற்கு வெளியே உள்ள எதுவும் இந்த உலகங்களில் இல்லை. வில்லின் நாணிலிருந்து தூண்டப்பட்ட ஒரு கணையின் வேகத்தில் நிற்காமல் ஒருவன் சென்று கொண்டே இருந்தாலும்,(27) மனோவேகத்திலேயே அவன் சென்றாலும், இவை அனைத்திற்கும் காரணமான அதன் {ஆத்மாவின்} எல்லையை அவன் ஒருபோதும் அடையமாட்டான்[12].(28) வேறெதுவும் திரளானதில்லை என்ற அளவுக்கு அது திரளானதாக இருக்கிறது. அதன் கரங்களும், பாதங்களும் எங்கும் நீண்டிருக்கின்றன. அதன் கண்கள், தலை மற்றும் முகம் ஆகியன எங்குமிருக்கின்றன. அதன் காதுகள் அண்டத்தில் எங்குமுள்ளன. அஃது அனைத்துப் பொருட்களையும் கடந்து நிலைத்திருக்கிறது.(29)

அது நுட்பத்திலும் நுட்பமானதாகவும், அனைத்தின் இதயமாகவும் இருக்கிறது. புலப்படாத நிலையிலேயே அஃது இருக்கிறது என்பதில் ஐயமில்லை.(30) இவையே (பரம) ஆத்ம இருப்பின் அழியத்தக்கன {க்ஷரம்}, அழியத்தகாதன {அக்ஷரம்} என்ற இரு வடிவங்களாகும். அசைவன மற்றும் அசையாதன என்ற அனைத்திலும் அஃது அழியத்தக்க இருப்பை வெளிப்படுகிறது; அதே வேளையில், தெய்வீக சைதன்யத்தில் அஃது அழிவில்லாத மற்றும் அழியத்தகாத இருப்பை வெளிப்படுத்துகிறது.(31) இருப்பில் உள்ள அசையும் மற்றும் அசையாதவை அனைத்தின் தலைவனாக இருப்பினும், செயலற்றதாக, குணங்களற்றதாக இருப்பினும், அஃது ஒன்பது வாயில்களைக் கொண்ட நன்கறியப்பட்ட மாளிகையில் நுழைந்து, செயல்பாட்டில் ஈடுபடுகிறது.(32) அடுத்தக் கரையைக் காணவல்ல ஞானம் கொண்ட மனிதர்கள், பிறப்பில்லாதவன் (அல்லது பரமாத்மா) அசைவு {சலனம்}, இன்பம், துன்பம், பல்வேறு வடிவங்கள், நன்கறியப்பட்ட ஒன்பது உடைமைகள் ஆகியவற்றின் விளைவால் செயல்பாடெனும் குணத்தைக் கொள்கிறான் என்று சொல்கின்றனர்[13].(33) செயல்பாடெனும் குணத்தை அடைவதாகச் சொல்லப்படும் அழிவற்ற ஆத்மாவானது, செயலில்லாததாகச் சொல்லப்படும் அழிவற்ற அதே ஆத்மாவேயன்றி வேறில்லை. ஞானம் கொண்ட மனிதன், அந்த அழிவற்ற சாரத்தை அடைவதன் மூலம், வாழ்வு மற்றும் பிறவி {ஜனனம் மற்றும் மரணம்} என்ற இரண்டையும் நன்மைக்காகக் கைவிடுகிறான்” என்றார் {வியாசர்}.(34)

யோகக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 240-யோக வழிமுறையையும், செயல்கள் மற்றும் செயல்களில் இருந்து விலகுதல் குறித்த வேத அறிவுப்புகளையும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! அருமை மகனே, உன்னால் கேட்கப்பட்ட நான், உன் கேள்விக்கான பதிலை உண்மையில் சாங்கிய அமைப்பில் விளக்கப்பட்டுள்ள ஞானக் கோட்பட்டின்படியே சொன்னேன்.(1) (அதே கதிக்காக) யோகக் கோட்பாட்டின்படி செய்யப்படும் அனைத்தையும் நான் இப்போது விளக்கப்போகிறேன்; கேட்பாயாக. புத்தி, மனம், புலன்கள்,(2) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மா ஆகியவற்றின் கலவையே ஞானத்தில் முதன்மையான வகையாகச் சொல்லப்படுகிறது. அமைதியான மனநிலையைக் கொண்டவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆள்பவனும், (தியானத்தின் மூலம்) ஆன்மாவை நோக்கித் தன் பார்வையைத் திருப்பவல்லவனும், (அத்தகைய) தியானத்தில் இன்புறுபவனும், புத்தியைக் கொண்டவனும், செயல்பாடுகளில் தூய்மையானவனுமான ஒருவன், (தன் ஆசானின் உதவியுடன்) அந்த ஞானத்தை அடைய வேண்டும். விவேகிகளால், யோகத்தின் ஐந்து களங்கங்கள் என்று அறியப்படும் ஆசை, கோபம், பேராசை, அச்சம் மற்றும் உறக்கம் ஆகியவற்றைக் கைவிட்டு இந்த ஞானத்தை அடைய அவன் முயல வேண்டும். அனைத்துக் காரியங்களைக் கைவிடுவதால் ஆசை வெல்லப்படுகிறது.(3-5)

பொறுமை கொண்ட ஒருவன், புத்தியின் துணை கொண்டு சிந்திக்கத்தகுந்தவற்றைச் சிந்திப்பதன் மூலம் உறக்கத்தைக் கைவிடுவதில் வெல்கிறான். அவன் உறுதியான முயற்சியின் மூலம் தன் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றை (தகாத பாவகர ஈடுபாடுகளில் இருந்து) கட்டுப்படுத்த வேண்டும். அவன் தன் கண்களின் (கண்களைப் பயன்படுத்துவதன்) மூலம் தன் கரங்களையும், கால்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவன் தன் மனத்தின் துணை கொண்டு, தன் கண்களையும், காதுகளையும், தன் செயல்களின் துணை கொண்டு தனது மனத்தையும் பேச்சையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வால் அச்சத்தையும், விவேகிகளுக்குப் பணிவிடை செய்வதால் செருக்கையும் தவிர்க்கவேண்டும்.(7) தாமதம் செய்வதை அடக்கும் அவன் இவ்வழிமுறைகளின் மூலம் இந்த யோகக் களங்கங்களை அடக்க வேண்டும். அவன் நெருப்பையும், பிராமணர்களையும் துதித்து, தேவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்.(8) அவன் மங்கலமற்ற அனைத்துவகை உரையாடல்களையும், வன்மம் நிறைந்த பேச்சுகளையும், பிறரின் மனங்களைப் புண்படுத்தும் சொற்களையும் தவிர்க்க வேண்டும்.

பிரம்மமே (அனைத்துப் பொருட்களின்) பிரகாசமிகு வித்தாக இருக்கிறது. மேலும் இந்த வித்தின் சாரத்திலேயே இவை அனைத்தும் இருக்கின்றன.(9) எதில் அனைத்தும் பிறக்கின்றனவோ அந்த அசைவற்ற, அசையாத அண்ட வடிவத்தில் பிரம்மமே கண்ணானது. தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, எளிமை, மன்னிக்கும் தன்மை,(10) உடல் தூய்மை, ஒழுக்கத் தூய்மை, புலனடக்கம் ஆகியன ஒருவனின் சக்தியைப் பெருக்கி, (அவ்வாறு பெருகும்போதே) அவனது பாவங்களை அழிக்கின்றன.(11) அனைத்து உயிரினங்களிடமும் சமமாக நடந்து கொள்வதன் மூலமும், எந்த முயற்சியும் இல்லாமல் எளிதாக அடையப்படுபவற்றைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்வதன் மூலமும் ஒருவன் தன் நோக்கங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்து, ஞானத்தைப் பெறுவதிலும் வெல்கிறான்.(12) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தும், சக்தியுடனும், எளிய உணவை உண்டும், புலன்களை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒருவன், ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கிய பிறகு பிரம்மத்தை அடைவதில் முனைய வேண்டும்.(13) புலன்களையும், மனத்தையும் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும் விலக்கியப் பிறகு அவற்றை) உறுதியாக ஒன்றிணைத்து, உள்நோக்கிய நிலையான பார்வையுடன், மாலை அல்லது அதிகாலையின் அமைதியான வேளைகளில் தன் மனத்தைப் புத்தியில் நிறுத்த வேண்டும்.(14) மனிதனின் ஐம்புலன்களில் ஒன்றேனும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமேயானால், ஒரு தோற்பையின் அடியில் உள்ள தடுக்கப்பட முடியாத துளையின் வழியே ஒழுகும் நீரைப் போல, அதன் {அந்தப் புலனின்} வழியே அவனது ஞானமனைத்தும் தப்பிச் செல்லும்.(15)

ஒரு மீனவன், தன் வலைகளுக்குப் பேராபத்தைத் தரும் சக்தியற்ற மீனை முதலில் பிடிக்க முனைவதைப் போலவே, ஒரு யோகியும், முதல் தருணத்திலேயே தன் மனத்தைக் கட்டுப்படுத்து முனைய வேண்டும். முதலில் மனத்தை அடக்கிவிட்ட யோகி, அடுத்ததாகத் தன் காதுகளையும், கண்களையும், அதன் பிறகு தன் நாவையும், பிறகு தன் மூக்கையும் அடக்க வேண்டும்.(16) இவை அனைத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, அவன் அவற்றைத் தன் மனத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும். பிறகு அனைத்துக் காரியங்களில் இருந்து மனத்தை விலக்கும் அவன் அதைப் புத்தியில் நிலைநிறுத்த வேண்டும்.(17) உண்மையில், ஐம்புலன்களைக் கட்டுப்படுத்திய யதியானவன், அவற்றை மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும். தங்களுடன் ஆறாவதாக மனத்தைக் கொண்ட இவை {புலன்கள்} புத்தியில் ஒருங்கே குவிந்து,(18) இவ்வாறு கலக்கமில்லாமல் அவை நிலையாகக் குவிவதால், பிரம்மமானது, சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட புகையற்ற நெருப்பைப் போலவோ, பிரகாசமான ஒளியைக் கொண்ட சூரியனைப் போலவோ உணரத்தக்கதாகிறது.(19) உண்மையில் அவன், வானத்தில் உள்ள மின்னலெனும் நெருப்பைப் போல, தன் ஆன்மாவுக்குள் தன்னையே காண்கிறான். பிறகு அதன் முடிவற்ற தன்மையின் விளைவால் அனைத்தும் அதனுள் தோன்றுகிறது, மேலும் அஃது அனைத்திலும் தோன்றுகிறது.(20)

ஞானமும், மனோவுறுதியும், உயர்ந்த அறிவையும் கொண்டவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபடுபவர்களுமான உயர் ஆன்ம பிராமணர்கள், அதை {ஆன்மாவைக்} காண்பதில் வெல்கிறார்கள்.(21) இவ்வாறு ஆறுமாதங்கள் கடுந்தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு யோகி, {யாருமற்ற} தனியான இடத்தில் அமர்ந்து, அந்த அழிவற்றதுடன் {பிரம்மத்துடன்} சமத்தன்மையை அடைவதில் {அதனுடன் கலப்பதில்} வெல்கிறான்.(22) அழிவு, வரிவு, ஒரே மனிதன் அல்லது உடலுக்குள் பல்வேறு தன்மைகளை அளிக்கும் சக்தி, தெய்வீக மணங்கள், ஒலிகள், பார்வைகள், சுவை மற்றும் தீண்டலின் இனிய உணர்வுகள், குளிர் மற்றும் வெப்பத்தின் இன்பமான உணர்வுகள், காற்றுடனான சமத்தன்மை,(23) (உள்நோக்கிய ஒளியின் மூலம்) சாத்திரங்களையும், மேதைகளின் அனைத்து படைப்புகளையும் புரிந்து கொள்ளும் வல்லமை, தெய்வீகக் காரிகையரின் தோழமை ஆகிய இவை அனைத்தையும் யோகத்தின் மூலமாக அடையும் யோகி, அவற்றை அலட்சியம் செய்து, அவை அனைத்தையும் தன் புத்தியில் கலக்க வேண்டும்[1].(24) ஒருவன் பேச்சையும், புலன்களையும் கட்டுப்படுத்தி அந்தி இருளுக்குப் பின்பும், விடியலுக்கு முன்பும், விடியலின் போதும் மலை முகட்டிலோ, ஒரு நல்ல மரத்தினடியிலோ, ஒரு மரத்திற்கு முன்பாகவோ அமர்ந்து யோகம் பயில வேண்டும்.(25)தன் புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் கட்டுப்படுத்தும் ஒருவன், புலங்கள் குவிந்த நிலையில், உலகின் மனிதன் செல்வத்தைக் குறித்தும், பிற மதிப்புமிக்க உடைமைகளைக் குறித்தும் சிந்திப்பதைப் போல நித்தியமானதும், அழிவற்றதுமான ஒன்றை {பிரம்மத்தைச்} சிந்திக்க வேண்டும். ஒருவன் யோகம் பயிலும்போது ஒருபோதும் தன் மனத்தை அதிலிருந்து விலக்கக்கூடாது.(26) யோகியானவன், அலைபாயும் மனத்தை எந்த வழிமுறைகளினால் கட்டுப்படுத்துவதில் வெல்ல முடியுமோ, அந்த வழிமுறைகளை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அவன் அதிலிருந்து ஒருபோதும் விழுந்துவிடத் தன்னை அனுமதிக்கக்கூடாது.(27) அனைத்திலிருந்தும் புலன்களும், மனமும் விடுபட்ட யோகி, (பயிற்சிக்காக) வெறுமையான மலைக்குகைகளுக்கும், தேவர்களுக்காக நேர்ந்துவிடப்பட்ட கோவில்களுக்கும், வெறுமையான வீடுகள் அல்லது அறைகளுக்கோ சென்று, அங்கே வாழ வேண்டும்.(28) அவன் மற்றொருவனுடன் பேச்சிலோ, செயலிலோ, எண்ணத்திலோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அனைத்துப் பொருட்களையும் அலட்சியம் செய்து, மிகச் சொற்பமாக உண்ணும் யோகி அடைந்த அல்லது இழந்த பொருட்களின் மீது சமமான கண்களையே செலுத்த வேண்டும்.(29)

தன்னைப் புகழ்பவனிடமும், பழிப்பவனிடமும் ஒரே வகையிலேயே நடந்து கொள்ள வேண்டும். அவன் எவருக்கும் நன்மையையோ தீமையையோ நாடக்கூடாது.(30) ஒன்றை அடைவதால் மகிழ்ச்சியையோ, தோல்வி அல்லது இழப்பால் கவலையையோ அடையக்கூடாது. அவன் காற்றை {வாயுவைப்} போல அனைத்து உயிரினங்களிடமும் சீரான நடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும்[2].(31) தன்னை நோக்கிய மனம் கொண்டவனும், தூய்மையான வாழ்வை வாழ்பவனும், அனைத்துப் பொருட்களின் மீதும் சமமாகக் கண்களைச் செலுத்துபவனும், உண்மையில் இவ்வகையிலேயே ஆறு மாதங்கள் யோகத்தில் ஈடுபடுபவனுமான ஒருவனுக்கு, ஒலியால் பிரதிபலிக்கப்படும் பிரம்மமானது மிக விளக்கமாக {பேரொளிமயமாகத்} தோன்றும்[3].(32) (செல்வம் மற்றும் வசதிகளை ஈட்டுவதில்) கவலையால் பீடிக்கப்படும் மனிதர்கள் அனைவரையும் காணும் யோகியானவன், மண்ணாங்கட்டியையும், ஒரு கல் துண்டையும், தங்கக் குவியலையும் ஒரே சமமான கண்ணுடன் பார்க்க வேண்டும். உண்மையில் அவன் (செல்வமீட்டும்) இந்தப் பாதையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதன் மீது வெறுப்பை அடைந்து, ஒருபோதும் திகைப்படையாதவனாக இருக்க வேண்டும்.(33) ஒருவன் {வர்ணத்தால்} தாழ்ந்த வகையைச் சார்ந்தவனாகவே இருப்பினும், ஒருத்தி பெண்ணாகவே இருப்பினும் அவர்கள் இருவரும் மேலே குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றினால் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்[4].(34) எவன் தன் மனத்தை அடக்குவானோ, அவன், நிலையுறுதியுடனான புலன்களைத் தவிர வேறு எதனைக் கொண்டும் அடைய முடியாததும், நுட்பத்திலும் நுட்பமானதும், திரளிலும் திரளானதும், விடுதலையேயானதும் {முக்தியேயானதும்}, படைக்கப்படாததும், பழமையானதும், சிதைவில்லாததும், நித்தியமானதுமான பிரம்மத்தைத் தன் புத்தியின் துணையால் தன்னிடமே காண்பான்” என்றார் {வியாசர்}”.(35)பீஷ்மர் தொடர்ந்தார், “ஞானம் கொண்ட மனிதர்கள், ஆசான்களின் வாயால் உறுதி செய்து கொள்வதன் மூலமும், உயர் ஆன்மாக் கொண்ட பெருமுனிவரால் இவ்வளவு சரியாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைத் தங்கள் மனத்தில் சிந்தித்துப் பார்ப்பதன் மூலமும், (சாத்திரங்கள் சொல்லும் வகையில்) பிரம்மத்துடனான சமநிலையை அடைந்து, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் பிரளய காலம் வரும்வரை அங்கேயே இருப்பார்கள்” {என்றார் பீஷ்மர்}.(36)

ஞானமும், கர்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 241-கர்மம் மற்றும் ஞானம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “வேத அறிவிப்புகள் இருவகையில் இருக்கின்றன. ஒருமுறை “செயல்கள் அனைத்தையும் செய்” என்று அவை கட்டளையிடுகின்றன. மறுமுறை (இதற்கு முரணாக) “செயல்கள் அனைத்தையும் கைவிடு” என்றும் அவை சொல்கின்றன. ஞானத்தின் துணை மூலம் மனிதர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}[1]? செயல்களின் துணை மூலம் அவர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். நீர் எனக்குச் சொல்வீராக. உண்மையில் ஞானம் மற்றும் செயல்கள் {கர்மம்} குறித்த இந்த அறிவிப்புகள் மாறுபாடு கொண்டவையாகவும், முரணானவையாகவும் இருக்கின்றன” என்று கேட்டார்”.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பராசரர் மகன் {வியாசர்}, தன் மகனிடம் {சுகரிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “முறையே செயல்கள் மற்றும் ஞானத்தைச் சார்ந்திருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவற்ற இரு பாதைகளை நான் உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! குழந்தாய், ஞானத்தின் துணை மூலம் ஒருவன் அடையும் இடத்தையும் {கதியையும்}, செயல்களின் துணை மூலம் அவன் அடையும் வேறு இடத்தையும் {கதியையும்} நான் உனக்குச் சொல்கிறேன்; குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. இந்த இரண்டு இடங்களுக்கு இடையிலான வேறுபாடானது எல்லையற்ற வானைப் போன்று மிகப் பெரிதானதாகும்.(3,4) நீ என்னிடம் கேட்டிருக்கும் இந்தக் கேள்வியானது, நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனுக்கு ஒரு நாத்திகனின் உரை அளிக்கும் வலியை எனக்குத் தருகிறது.(5)

வேதங்களில் நிறுவப்பட்டிருக்கும் இருவழிகள், பிரவிருத்தியின் மூலம் குறிப்பிடப்படும் (செயல்கள்) கடமைகள் மற்றும் நிவிருத்தியின் அடிப்படையிலான சிறப்புக் கடமைகள் ஆகியனவே ஆகும்.(6) செயல்களின் மூலம் ஓர் உயிரினம் அழிவடைகிறது. எனினும், ஞானத்தின் மூலம் அது விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}. இதன் காரணமாகவே, வாழ்வெனும் பெருங்கடலின் அடுத்தக் கரையைக் காணும் யோகியர், ஒருபோதும் தங்களைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை.(7) செயல்களின் மூலம், ஒருவன் தனது மரணத்திற்குப் பிறகு, பதினாறு உட்பொருள்களால்[1] தொகுக்கப்பட்ட உடலுடன் மறுபிறப்பெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகிறான். எனினும் ஞானத்தின் மூலம் அவன், எது நித்தியமானதோ, புலப்படாததோ, அனைத்தையும் அறிந்ததோ அதுவாகவே {பிரம்மமாகவே} மாற்றமடைகிறான்.(8) குறைந்த அறிவுள்ள ஒருவகை மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். இதன் விளைவால் அவர்கள் (ஒன்றன்பின் ஒன்றாக) இடையறாமல் உடல்களை ஏற்கின்றனர்.(9) கடமைகளைப் பொறுத்தவரையில் கூரிய உள்ளுணர்வுகளைக் கொண்டவர்களும், (ஞானத்திற்கு வழிவகுக்கும்) உயர்ந்த புத்தியை அடைந்தவர்களுமான மனிதர்கள், ஓடைகளில் நீர் அருந்துபவர்கள், எவ்வாறு கிணறுகள் மற்றும் குளங்களின் நீரை ஒருபோதும் மெச்சுவதில்லையோ அவ்வாறே செயல்களை ஒருபோதும் மெச்சுவதில்லை.(10)செயல்களின் மூலம் ஒருவன் அடையும் கனியானது, இன்பம் மற்றும் துன்பம், இருப்பு மற்றும் இல்லாமை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஞானத்தின் மூலமோ, எங்கே எந்தத் துன்பமும் இல்லையோ;(11) எங்கே ஒருவன் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிவற்றில் இருந்து விடுபடுவானோ; எங்கே ஒருவன் முதுமைக்கு ஆட்படுவதில்லையோ; எங்கே ஒருவன் நனவுநிலையிருப்பை {அகங்காரத்தைக்} கடந்த நிலையை அடைகிறானோ;(12) எங்கே உயர்வானதும், புலப்படாததும், அனைத்தையும் அறிந்ததும், எப்போதும் இருப்பதும், உணரப்பட முடியாததும், துன்பத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதும், அழிவில்லாததும், அழிவை விஞ்சி இருப்பதுமான பிரம்மம் இருக்கிறதோ;(13) எங்கே (இன்பம் மற்றும் துன்பம் முதலிய) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்தும், விருப்பம் அல்லது நோக்கத்தில் இருந்தும் அனைவரும் விடுபடுவார்களோ அந்த இடத்தை {பிரம்ம ஸ்வரூபத்தை ஞானத்தினால்} அவன் அடைகிறான். அவர்கள், அந்த நிலையை அடைந்து, அனைத்துப் பொருட்களின் மீதும் சமமான கண்களைச் செலுத்தி, உலகளாவிய நண்பர்களாகி, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் ஆகிறார்கள். ஓ! மகனே, ஞானத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுக்கும், செயல்களில் அர்ப்பணிப்புள்ளவனுக்கும் இடையில் ஒரு பெரிய வளைகுடா இருக்கிறது.(14) ஞானம் கொண்ட மனிதன் அழிவை அடையாமல், தேய்பிறையின் இறுதி இரவில் (அழிவடையாத) நுட்பமான வடிவில் இருக்கும் சந்திரனைப் போல எப்போதும் {நுட்பமாகவே} நீடித்திருக்கிறான்.(15)

(பிருஹதாரண்யகத்தில் யாக்ஞவல்கியர் எனும்) பெரும் முனிவர் இதைக் குறித்து இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதனைப் பொறுத்தவரையில், அவனது இயல்பானது {ஸ்வபாவமானது}, புதிதாகப் பிறந்த நிலவானது, ஆகாயத்தில் வளைவான நூலாகத் தெரிவதைப் போல ஊகித்தறியப்படுகிறது[2].(16) ஓ! மகனே, செயல்களைச் செய்யும் மனிதன் {கர்மமயமான புருஷன்}, மாறுதலின் விளைவுகளான பதினோரு உட்பொருள்களுடனும், பதினாறு நுட்பமான வடிவங்களுடனும் மறுபிறப்பெடுக்கிறான் என்பதை அறிவாயாக.(17) தாமரை இலையில் தண்ணீர் துளியைப் போல, அந்த (பொருள்) வடிவத்தில் {உயிரினத்தில்} புகலிடம் கொள்ளும் தேவன், நித்தியமானதும், மனம் மற்றும் புத்தியைக் கடந்து யோகத்தில் வெல்வதுமான க்ஷேத்ரஜ்ஞனாக (ஆன்மாவாக) அறியப்பட வேண்டும்[3].(18) தமஸ், ரஜஸ் மற்றும் சத்வம் ஆகியன புத்தியின் குணங்களாகும். புத்தியானது, உடலுக்குள் வசிக்கும் தனிப்பட்ட ஆத்மாவின் குணமாகும். மேலும், தனிப்பட்ட ஆன்மாவோ பரமாத்மாவில் {பரமாத்மாவின் குணத்தில்} இருந்து வருகிறது[4].(19) ஆன்மாவுடன் கூடிய உடலானது, ஜீவனின் குணமெனச் சொல்லப்படுகிறது. ஜீவனே செயல்பட்டு, அனைத்து உடல்களையும் உயிர்வாழச் செய்கிறது. எது க்ஷேத்திரம் (என்றும், எது க்ஷேத்ரஜ்ஞன்) என்று{ம்} அறிந்தவர்கள், ஏழு உலகங்களையும் படைத்தவனே {பரமாத்மாவே} மேற்கண்ட ஜீவன் {ஆத்மா} என்று சொல்கிறார்கள்” என்றார் {வியாசர்}[5].(20)

பிரம்மச்சரியம்! – சாந்திபர்வம் பகுதி – 242-செயல் பண்புகளின் கடமைகளை மீறாமல் எவ்வாறு முக்தியை அடைய முடியும் என்பது குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; ஆசிரமங்களைக் குறித்தும், நான்கு வகை ஆசிரமங்களில் பிரம்மச்சரியத்தின் நடைமுறை குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “(அண்டம் தழுவிய) க்ஷரம் என்பதோடு தொடங்கும் ஒன்று, (அண்ட) ஆன்மாவிலிருந்து மற்றொன்று என இருவகைப் படைப்புகள் இருப்பதாக நான் இப்போது புரிந்து கொள்கிறேன். புலன்கள் மற்றும் அவற்றுக்குரிய பொருட்களைக் கொண்ட அந்த மற்றொன்று புத்தியின் பலத்தால் காணத்தக்கதாக இருக்கிறது. இந்த இறுதியானது மற்றதைக் கடந்து இருப்பதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது[1].(1) எனினும் நான், எது இந்த உலகத்தை இயக்குகிறதோ, எது காலதர்மத்தால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறதோ, எதனைக் கொண்டு நல்லோர் அனைவரும் தங்கள் ஒழுக்கத்தை {நடத்தையை} அமைத்துக் கொள்கின்றனரோ அந்த அறவொழுக்கத்தைக் குறித்து நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்[2].(2) வேதங்களில், செயல்களைச் செய் என்றும், செயல்களைதப் புறக்கணி என்றும் இரு வகைத் தீர்மானங்கள் இருக்கின்றன. இஃது அல்லது அது குறித்த உண்மை உறுதி செய்வதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? இதைத் தெளிவாக விளக்குவதே உமக்குத் தகும்[3].(3) உமது போதனைகளின் மூலம் மனித ஒழுக்கத்தின் முழுமையான நடைமுறை ஞானத்தை அடைந்து, அறம் மட்டுமே பயின்று என்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, என் புத்தியையும் தூய்மையாக்கிக் கொண்டு என் உடலைக் கைவிட்டு, அழிவற்ற ஆன்மாவை நான் காணப் போகிறேன்” என்றார் {சுகர்}[4].(4)வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மனால் முதலில் நிறுவப்பட்ட ஒழுக்க நடைமுறையே {விருத்தியே}, பழங்காலத்தின் பக்திமான்களும், விவேகிகளுமான புராதானப் பெரும் முனிவர்களால் முறையாகப் பின்பற்றப்பட்டன.(5) பெரும் முனிவர்கள் பிரம்மச்சரியம் பயில்வதன் மூலம் அனைத்து உலகங்களையும் வெல்கிறார்கள். தன் நன்மைக்கான அனைத்து பொருட்களையும் நாடி, மனத்தைப் புத்தியில் நிலைக்கச் செய்து, காட்டில் வசித்துக் கடும் தவங்களைப் பயின்று, கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து, புனிதத் தலங்களுக்குச் சென்று, உலகளாவிய நன்மையைப் பயின்று,(7) புகையில்லாத, உலக்கையொலி ஓய்ந்த காலத்தில் காட்டில் உள்ள குடில்களில் பிச்சையெடுக்கச் செல்லும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[5].(8) முகத்துதியைத் தவிர்த்து, பிறருக்குத் தலைவணங்குவதையும் தவிர்த்து, நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் தவிர்த்து, வழியில் நேரும் எந்த வழிமுறையினாலும் பசியைத் தணித்துக் கொண்டு நீ காட்டில் வாழ்வாயாக” என்றார் {வியாசர்}.(9)சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “(செயல்களின் அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) வேத தீர்மானங்கள், இழிந்தோரின் கருத்துப்படி முரணானவையே. இஃது அதிகாரம் பெற்றதா அல்லது அஃது அதிகாரம் பெற்றதா? என்ற முரண் இருக்கும் போது எவ்வாறு அவற்றைச் சாத்திரம் என்று சொல்வது?(10) இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவை என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், செயற்பண்புகளின் கடப்பாடு குறித்த விதிகளை மீறாமல் {கர்மங்களுக்கு விரோதமில்லாமல்} எவ்வாறு விடுதலையை {முக்தி / மோக்ஷத்தை} அடைய முடியும்?” என்று கேட்டார்”.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், காந்தவதியின் மகனுமான அம்முனிவர் {வியாசர்}, அளவில்லா சக்தி கொண்ட தன் மகனின் {சுகரின்} இந்த வார்த்தைகளை மெச்சி, பின்வருமாறு அவருக்குப் பதிலுரைத்தார்.(12)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மச்சாரி, இல்லறவாசி {கிருஹஸ்தன்}, காட்டில் வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, (அறம்சார்ந்து) பிச்சையெடுக்கும் வாழ்வை வாழ்பவன் {ஸன்னியாஸி} ஆகிய அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} முறையாக நோற்பதன் மூலம் ஒரே உயர்ந்த கதியையே அடைகின்றனர்.(13) அல்லது, ஒரே மனிதன், விருப்பு வெறுப்பில் இருந்து விடுபட்டு இந்த வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கையும் (ஒன்றன்றபின் ஒன்றாக) அதனதன் விதிப்படி பயின்றால், (அத்தகைய ஒழுக்கத்தின் மூலம்) நிச்சயம் அவன் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளத் தகுந்தவனாகிறான்.(14) நான்கு வாழ்வுமுறைகளும் ஏணியையோ, படிகளையோ கொண்டிருக்கின்றன. அந்த ஏற்றம் பிரம்மத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்றத்தில் ஏறுவதன் மூலம் ஒருவன் பிரம்ம லோகத்தை அடைவதில் வெல்கிறான்.(15)

கடமைகளில் உள்ள வேறுபாடுகளை அறிந்தவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான பிரம்மச்சாரியானவன், தன் வாழ்வின் நான்கில் ஒரு பங்கைத் தன் ஆசான் அல்லது ஆசானின் மகனுடன் வசிக்க வேண்டும்.(16) அவன் தன் ஆசானின் வீட்டில் வசிக்கும்போது, ஆசான் படுக்கைக்குச் சென்ற பிறகே அவன் செல்ல வேண்டும், ஆசான் எழுவதற்கு முன்பே அவன் எழ வேண்டும். சீடனால் செய்யத்தக்கவையும், பணியாளால் செய்யபட வேண்டியவையுமான செயல்கள் அனைத்தும் அவனால் {பிரம்மச்சாரியால்} செய்யப்பட வேண்டும்.(17) அவன், இவற்றை முடித்துவிட்டுத் தன் ஆசானின் அருகில் பணிவுடன் நிற்க வேண்டும். அனைத்துவகைப் பணிகளிலும் தேர்ச்சி பெறும் அவன், தன் ஆசானின் செயல்கள் அனைத்தையும் செய்து, ஒரு பணியாளாகவே நடந்து கொள்ள வேண்டும்.(18) (எதையும் விட்டுவிடாமல்) அனைத்துச் செயல்களையும் நிறைவு செய்து, தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, கற்றுக் கொள்ளும் ஆவல் மற்றும் விருப்பத்துடன் அவன் கல்வி பயில வேண்டும். எளிமையுடனும், தீய பேச்சைத் தவிர்த்தும் நடந்து கொள்ளும் அவன், தன் ஆசான் அழைக்கும்போது மட்டும் பாடங்களைப் போதிக்க வேண்டும்.(19) உடலும் மனமும் தூய்மையடைந்து, புத்திசாலித்தனம் மற்றும் விரும்பத்தக்க பிற ஒழுக்கங்களையும் அடையும் அவன், இப்போதும் எப்போதும் ஏற்புடையதையே {இனிமையானவற்றையே} பேச வேண்டும். தன் புலன்களை அடக்கும் அவன், ஏக்கமில்லாத கண்களுடன் தன் ஆசானைக் காண வேண்டும்[6].(20)அவன் தன் ஆசான் உண்பதற்கு முன் உண்பதோ, தன் ஆசான் பருகுவதற்கு முன் பருகுவதோ, தன் ஆசான் அமர்வதற்கு முன் அமர்வதோ, அதன் ஆசானை படுக்கைக்குச் செல்லும் முன் படுக்கச் செல்வதோ ஒருபோதும் கூடாது.(21) அவன் நிமிர்ந்த உள்ளங்கைகளைக் கொண்டு, தன் ஆசானின் வலக்காலை வலக்கையாலும், இடக்காலை இடக்கையாலும் மென்மையாகத் தீண்ட வேண்டும்.(22) மதிப்புடன் தன் ஆசானை வணங்கும் அவன், அவரிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, எனக்குக் கற்பிப்பீராக. ஓ! சிறப்புமிக்கவரே, நான் இதை (இந்தப் பணியைச்) செய்வேன். இஃது (இந்த வேலை) ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. ஓ! மறுபிறப்பாளரே, மரியாதைக்குரிய நீர் விரும்பி இடும் எந்த ஆணையையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும்.(23) இவை அனைத்தையும் சொல்லி, (இவ்வாறு) முறையாகத் தன்னை அவரிடம் ஒப்படைக்கும் அவன், தன் ஆசான் செய்ய வேண்டிய எந்தச் செயலையும் செய்து, அவற்றைச் செய்த பிறகு, தன் ஆசானிடம் மீண்டும் ஒருமுறை அந்தச் செயல் முடிவடைந்ததைக் குறித்துச் சொல்ல வேண்டும்.(24) பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும்போது அந்தப் பிரம்மச்சாரியால் தவிர்க்கப்பட்ட மணங்கள் அல்லது சுவைகள் அனைத்தும், அவன் தன் ஆசானின் இல்லத்தில் இருந்து திரும்பிய பிறகு பயன்படுத்தப்படலாம். இது விதிக்கு இசைவானதே.(25)

(சாத்திரங்களில்) பிரம்மச்சாரிகளுக்கென விரிவாக விதிக்கப்பட்ட வழக்கங்கள் அனைத்தும் அவனால் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். மேலும் அவன் (அழைப்பிற்குத் தயாராகத்) தன் ஆசானின் அருகிலேயே எப்போதும் இருக்க வேண்டும்.(26) தன் சக்தியில் சிறந்த வகையில் தன் ஆசானின் நிறைவுக்கான பங்கை அளிக்கும் சீடனானவன், அந்த வாழ்வுமுறையில் இருந்து (ஒன்றன்பின் ஒன்றாக) அடுத்தடுத்த வாழ்வுமுறைகளை அதனதனுக்குரிய கடமைகளுடன் பயில வேண்டும்.(27) (இவ்வாறு) தான் வாழ்வின் நான்கில் ஒரு பகுதியை வேத கல்வியில் கடத்தி, நோன்புகள் மற்றும் உபவாசங்களை நோற்று, ஆசானுக்கு (இறுதி) கட்டணத்தைக் கொடுக்கும் சீடன், இல்லற வாழ்வு {கிருஹஸ்தனாக} வாழ விதிப்படி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்ப வேண்டும்[7].(28) பிறகு, விதிப்படி மனைவிகளைப் பெற்று, கவனமாக இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ளும் அவன், எப்போதும் நோன்புகளையும் உபவாசங்களையும் கடைப்பிடித்து இல்லறவாசியாகி {கிருஹஸ்தனாகி} தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தைக் கடத்த வேண்டும்” என்றார் {வியாசர்}.(29)

கிருஹஸ்தம்! – சாந்திபர்வம் பகுதி – 243-கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள நான் வகை விருத்திகள்; இல்லறத்தானின் கடமைகள்; விருந்தினர்கள் மேன்மை; விகஸம் மற்றும் அமுதம் போன்ற உணவுகள்; அவன் ஆதரிக்க வேண்டிய உற்றார் உறவினரால் அவனுக்குக் கிடைக்கும் வெற்றி; ஓர் இல்லறத்தான் அடையும் உயர்ந்த கதி ஆகியவற்றைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தகுதி {புண்ணியங்களைத்} தரும் நோன்புகளை நோற்கும் இல்லறத்தான், தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தில், விதி குறிப்பிடும் வழிகளின்படி மனைவிகளை ஏற்று, (தனக்கான) நெருப்பை நிறுவி {அக்னியை ஆதானஞ்செய்து}, தன் இல்லத்தில் வசிக்க வேண்டும்.(1) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பொறுத்தவரையில், கல்விமான்களால் நான்கு வகை ஒழுக்கங்கள் {விருத்திகள்} விதிக்கப்பட்டுள்ளன. முதல் வகையானது, மூன்று வருடங்கள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களைக் கிடங்கில் வைத்துக் கொள்வதைக் கொண்டதாகும். இரண்டாவது, ஒரு வருடம் நீடிக்கும் கிடங்கை வைத்துக் கொள்வதைக் கொண்டதாகும்.(2) மூன்றாவது, நாளையைக் குறித்துச் சிந்திக்காமல் இன்றைக்கானதைக் கொள்வதைக் கொண்டதாகும். நான்காவது, புறாவின் முறைப்படி தானியங்களைச் சேகரிப்பதைக் கொண்டதாகும்[1]. இவை ஒவ்வொன்றிலும் தனக்கும் முந்தையதைவிடப் பிந்தையதே சாத்திர விதிப்படி தகுதி வாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}[2].(3) முதல் வகை ஒழுக்கத்தைப் பயிலும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, (தானே வேள்வி செய்வது, பிறருக்கு வேள்வி செய்து கொடுப்பது, கற்பிப்பது, கற்பது, கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) நன்கறியப்பட்ட ஆறு கடமைகளையும் செய்ய வேண்டும். இரண்டாம் வகை ஒழுக்கதை {விருத்தியைப்} பின்பற்றுபவன், இவற்றில் (கற்பது, கொடுப்பது, ஏற்பது ஆகிய) மூன்றை மட்டுமே செய்யலாம். மூன்றாம் வகை ஒழுக்கத்தை {விருத்தியைக்} கடைப்பிடிப்பவன் இல்லறக் கடமைகளில் (கற்பது, கொடுப்பது ஆகிய) இரண்டை மட்டுமே செய்யலாம். இல்லறத்தின் நான்காம் வகையைக் கடைப்பிடிக்கும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, (சாத்திரங்களைக் கற்பது என்ற) ஒரே ஒரு கடமையை மட்டுமே செய்ய வேண்டும்.(4) ஓர் இல்லறத்தானின் கடமைகள் அனைத்தும் மிகத் தகுதி வாய்ந்தவையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஓர் இல்லறத்தான் தன் பயன்பாட்டுக்காக மட்டுமே எந்த உணவையும் சமைக்கக்கூடாது; அதேபோல, வேள்விகளில் தவிர (உணவுக்காக) விலங்குகளைக் கொல்லவும் கூடாது[3].(5)ஓர் இல்லறத்தான் (உணவுக்காக) ஒரு விலங்கைக் கொல்ல விரும்பினாலோ, (விறகுக்காக) ஒரு மரத்தை வெட்ட விரும்பினாலோ, அசையும் மற்றும் அசையாத இருப்புகளுக்கு முறையாக யஜுஸ்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி அவன் செயல்பட வேண்டும். ஓர் இல்லறத்தான் பகல் பொழுதிலோ, இரவின் முதல் பகுதியிலோ, இறுதிப் பகுதியிலோ உறங்கக்கூடாது[4].(6) காலை வேளைக்கும், மாலை வேளைக்கும் இடையில் அவன் ஒருபோதும் இருமுறை உண்ணக்கூடாது[5]. பருவகாலமின்றி அவன் தன் மனைவியை ஒருபோதும் படுக்கைக்கு அழைக்கக்கூடாது. அவனது வீட்டில் எந்தப் பிராமணனும் உணவு கொடுக்கப்படாமலோ, வழிபடப்படாமலோ துன்புறக்கூடாது.(7) அத்தகைய விருந்தினர்கள், வேள்விக் காணிக்கைகளை அளிப்பவர்களாகவும், வேதங்கள் மற்றும் சிறந்த நோன்புகளை நோற்பதன் மூலம் தூய்மையடைந்தவர்களாகவும், நற்பிறப்பு கொண்டவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தவர்களாகவும்,(8) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்பவர்களாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், அறச்சடங்குகள் அனைத்திலும் கவனம் கொண்டவர்களாகவும், தவங்களில் பற்றுள்ளவர்களாகவும் இருப்பதால் அவர்களை அவன் {இல்லறத்தான்} எப்போதும் வழிபட வேண்டும். வேள்விகளிலும், விருந்தினர்களுக்குத் தொண்டாற்றுவதற்காக உள்ள இது போன்ற அறச்சடங்குகளிலும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கை அளிக்க வேண்டும்.(9) இந்த வாழ்வுமுறையில் {கிருஹஸ்தாஸ்ரமத்தில்}, (சமைக்கப்படும்) உணவின் ஒரு பகுதியை, (ஒருவனின் பிறப்பு அல்லது குணத்தை அலட்சியம் செய்துவிட்டு), வெளிப்பகட்டுக்காக நகங்களும், தாடியும் வளர்ப்பவன், செருக்குடன் தன் (அறப்) பயிற்சிகளை வெளிக்காட்டுபவன், முறையில்லாமல் தன் புனித நெருப்பைக் கைவிட்டவன், தன் குருவுக்கே தீங்கிழைத்தவன் என அனைத்து உயிரினங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று சாத்திரங்கள் விதிக்கின்றன. இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுபவன், பிரம்மச்சாரிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் (உணவு) கொடுக்க வேண்டும்.(10,11)ஓர் இல்லறத்தான் ஒவ்வொரு நாளும் விகஸம் உண்பவனாகவும், ஒவ்வொரு நாளும் அமுதத்தை உண்பவனாகவும் இருக்க வேண்டும். வேள்விகளில் காணிக்கையளிக்கப்படுவதில் எஞ்சுவதில் தெளிந்த நெய்யைக் கலந்த உணவு அமுதமாகும்[6].(12) (அனைத்து உறவினர்கள் மற்றும்) பணியாட்களுக்கு உணவளித்த பிறகு உண்ணும் இல்லறத்தான் விகஸம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான். பணியாட்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சும் உணவே விகஸம் என்றழைக்கப்படுகிறது. வேள்விக் காணிக்கைகளை அளித்த பிறகு எஞ்சுபவை அமுதம் என்றழைக்கப்படுகிறது.(13) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே மனநிறைவுடன் இருக்க வேண்டும். அவன் தற்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவன் வன்மத்தைத் தவிர்த்து, புலன்களை அடக்கிக் கொள்ள வேண்டும்.(14)

அவன், ரித்விக், புரோகிதர், ஆசான், தாய்மாமன், விருந்தினர்கள், முதியோர் மற்றும் வயதில் இளையோராகத் தன்னைச் சார்ந்திருப்பவர்கள், நோயால் பீடிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், பெற்றோர், தந்தைவழி குடும்பத்தில் வந்த பெண்கள், உடன்பிறந்தான், மகன், மனைவி, மகள் மற்றும் தன் பணியாட்களுடன் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடக்கூடாது.(15,16) சச்சரவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஓர் இல்லறத்தான் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய சச்சரவுகளை வெல்வதன் மூலம் அவன், (இம்மைக்குப் பின்பான மறுமையில்) இன்ப உலகங்கள் அனைத்தையும் வெல்வான். இதில் எந்த ஐயமும் கிடையாது[7].(17) ஆசானானவர் (முறையாக மதிக்கப்பட்டால்) பிரம்மலோகத்திற்கே வழிகாட்டக் கூடியவராவார். தந்தையானவர் (மதிக்கப்பட்டால்) பிரஜாபதியின் உலகங்களுக்கு வழிகாட்டக் கூடியவராவார். ஒரு விருந்தினர், இந்திலோகத்திற்கு வழிகாட்டக்கூடிய பலம் கொண்டவராவார். தேவலோத்தைப் பொறுத்தவரையில் ஒரு ரித்விக்குக்கு அந்தச் சக்தியுண்டு. தந்தைவழி வந்த பெண் உறவினர்களுக்கு, அப்சரஸ்களின் உலக முகரிமை {தலைமை} உண்டு. (குருதியின் மூலமான) உற்ற சொந்தங்களுக்கு விஸ்வதேவர்களின் உலக முகரிமை உண்டு.(18) திருமணத்தின் மூலம் உண்டான உறவினர்கள் மற்றும் இணை உறவினர்களுக்கு {தூரத்து சொந்தங்களுக்கு} (வடக்கு உள்ளிட்ட) பல்வேறு திசைகளிலும், தாய் மற்றும் தாய்மாமனுக்கு உலகிலும் முகரிமை {தலைமை} உண்டு. முதிர்ந்தோர், இளையோர், துன்புறுவோர், வீணானோர் ஆகியோருக்கு வானத்தில் சக்தியுண்டு[8].(19)

மூத்த தமையன் (தனக்கு இளைய தம்பிகள் அனைவருக்கும்) தந்தையைப் போன்றவனே ஆவான். மனைவியும், மகனும் ஒருவனின் சொந்த உடலே ஆவர். பணியாட்கள் தன் நிழலே ஆவர். மகளானவள் பெரும் அன்புக்குரியவளாவாள்.(20) கல்விமானும், கடமைகளை நோற்பவனும், நீடித்திருக்கும் திறன் கொண்டவனுமான ஓர் இல்லறத்தான், இறுதியாகப் பெயர் குறிப்பிடப்பட்ட உறவினர்களைப் பொறுத்தவரையில், அவர்களே தன்னை நிந்தித்தாலும் இந்தக் காரணங்களினால் இதயத்தில் கவலையையோ வருத்தமோ அடையாமல் அவர்களை அவன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(21) அறம்சார்ந்த எந்த இல்லறத்தானும், செல்வத்தைக் கருத்தில் கொண்டு அத்தூண்டுதலின் பேரில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. இல்லற வாழ்வைப் பொறுத்தவரையில் கடமை வழிமுறைகள் மூன்று இருக்கின்றன. அவற்றில் (பட்டியல் வரிசையில்) அடுத்தடுத்து வருவது, அதனதற்கு முந்தையதைவிடப் பெரிதும் தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}[9].(22) (அடிப்படையான) நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைப்} பொறுத்தவரையிலும் கூட, பிந்தி வருவது முந்தையதைவிட மேன்மையானது என்ற இதே தகுவிதி பின்பற்றப்படுகிறது. (அதன்படியே, பிரம்மச்சரியத்தை விட இல்லறம் மேன்மையானது, இல்லறத்தைவிட வானப்பிரஸ்தம் மேன்மையானது, வானப்பிரஸ்தத்தைவிடப் பிச்சையெடுத்து வாழ்வது, அல்லது முற்றிலும் துறவு கொண்டு வாழ்வது மேன்மையானது).(23) செழிப்பில் விருப்பமுள்ளவன், அந்தந்த வாழ்வுமுறைகளைப் பொறுத்தவரையில் சாத்திரங்கள் விதித்திருக்கும் கடமைகள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.(24)கும்பதானிய வகை, உஞ்ச வகை மற்றும் காபோடி வகைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு இல்லறவாழ்வை வாழும் உயர்ந்த தகுதியுடையவர்கள் வாழும் நாடு செழிப்பில் வளரும்[10].(25) எந்த மனிதன் அக்கடமைகளை நோற்று இல்லற வாழ்வை உற்சாகமாக வாழ்கிறானோ அவன் தனக்கு முந்தைய பத்துத் தலைமுறை மூதாதையர்களையும், தனக்குப் பிந்தைய பத்துத் தலைமுறை வழித்தோன்றல்களையும் புனிதப்படுத்துகிறான்.(26) ஓர் இல்லறத்தான் தன் இல்லறக் கடமைகளை முறையாக நோற்பதன் மூலம், பெரும் மன்னர்களும், பேரரசர்களும் அடையும் உலகங்களுக்கு இணையான இன்பத்தை விளைவிக்கும் கதியை அடைகிறான். புலன்களை அடக்கியவர்களுக்கும் இதே கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) உயர் ஆன்மா கொண்ட இல்லறத்தார் அனைவருக்கும் சொர்க்கமானது விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சொர்க்கமானது, (செலுத்துபவனின் விருப்பப்படி நகரும்) இனிமை நிறைந்த தேர்களைக் கொண்டதாக இருக்கிறது. அதுவே வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிமைநிறைந்த சொர்க்கமாகும்.(28) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட இல்லறத்தார் அனைவருக்கும் சொர்க்கலோகமே உயர்ந்த வெகுமதியாக இருக்கிறது.(29) சுயம்புவான பிரம்மன் இல்லற வாழ்வுமுறையே சொர்க்கத்தை உண்டாக்கும் காரணமாக இருக்க வேண்டும் என்று விதித்திருக்கிறான். இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதால், படிப்படியாக இரண்டாம் வாழ்வுமுறையை அடையும் மனிதன் சொர்க்கத்தில் இன்பத்தையும், மதிப்பையும் அடைகிறான்.(30) இதன்பிறகு, தங்கள் உடல்களைக் கைவிட விரும்புவோருக்காக, உயர்ந்ததும், மேன்மையானதுமான மூன்றாவது என்றழைக்கப்படும் வாழ்வுமுறை {வானப்பிரஸ்தாஸ்ரமம்} வருகிறது. (பல்வேறு வகைத் தவங்களின் மூலம்) தங்கள் உடல்களைக் காய்ந்த தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளாகக் குறைத்துக் கொள்ளும் வானப்பிரஸ்த வாழ்வுமுறையானது, இல்லறத்தைவிட {கிருஹஸ்தாஸ்ரமத்தைவிட} மேன்மையானதாகும். அதைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக” என்றார் {வியாசர்}”.(31)

வானப்ரஸ்தம்! – சாந்திபர்வம் பகுதி – 244-காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றி வெற்றி கண்ட முனிவர்களின் பட்டியல்; நான்காவது வாழ்வுமுறையான துறவறத்தைப் பின்பற்ற வேண்டிய வேளை ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நல்லோரால் விதிக்கப்பட்ட இல்லறவிதிகள் உனக்குச் சொல்லப்பட்டது. ஓ! யுதிஷ்டிரா, அடுத்ததாகச் சொல்லப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(1) ஒருவன் படிப்படியாக இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைக்} கைவிட்டு, சிறந்ததான மூன்றாம் வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். தவங்களின் மூலம் தங்களைத் துன்புறுத்திக் கொண்டு, மனைவியரோடு சேர்ந்து வாழும் மனிதர்களுக்குச் சொந்தமானதே இந்த வாழ்வுமுறை {ஆசிரமம்} ஆகும். காட்டில் ஒதுங்கி வாழ்வோரால் {வானப்ரஸ்தர்களால்} பயிலப்படுவதே இந்த வாழ்வுமுறையாகும்.(2) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களின் நடைமுறைகளையும் {ஒழுக்கங்களையும்}, அனைத்து வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்} சந்திக்க நேரும் இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களால் நோற்கப்படும் கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக. உண்மையில், புனிதத்தலங்களில் வசிப்போருக்கும், உரிய ஆலோசனைக்குப் பிறகு இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களுக்குமான கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக.(3)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓர் இல்லறத்தான் தன் உடலில் சுருக்கங்களையும், தன் தலையில் நரைத்த முடியையும், தன் பிள்ளைகளின் பிள்ளைகளையும் {பேரர்களையும்} கண்ட பிறகு காட்டில் ஓயச் செல்ல வேண்டும்.(4) அவன், தன் வாழ்வின் மூன்றாம் பாகத்தை வானப்ரஸ்த வாழ்வுமுறையை நோற்பதில் கடத்த வேண்டும். அவன் இல்லறத்தானாக இருந்தபோது, கவனித்த {பராமரித்த ஹோம} நெருப்புகளை இப்போதும் கவனிக்க வேண்டும். வேள்வி செய்ய விரும்பும் அவன், (சடங்குகளின் விதிப்படி) தேவர்களைத் துதிக்க வேண்டும்.(5) நோன்புகளை நோற்று, எளிய உணவை உண்ணும் அவன், நாளின் ஆறாம் பாகத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே உண்ண வேண்டும்[1]. அவன் எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்கவேண்டும். தன் நெருப்புகளைக் கவனித்துக் கொள்ளும் {பராமரிக்கும்} அவன், சில பசுக்களையும் வைத்துக் கொண்டு, கடமை உணர்வுடன் அவற்றைப் பராமரிக்க வேண்டும்[2]. வேள்விச் சடங்குகள் அனைத்திலும் அவன் கவனமாக இருக்க வேண்டும்.(6) தான் இருக்கும் பகுதியில் (எவரின் உடைமையாகவும் இல்லாமல்) {உழவின்றி} தானாக விளையும் அரிசி, கோதுமை மற்றும் பிற வகைத் தானியங்களிலேயே அவன் வாழ வேண்டும். விருந்தினர்களுக்கு உணவூட்டிய பிறகு, எஞ்சுவதையே அவன் உண்ண வேண்டும். இந்த மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்}, அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக அளிக்க வேண்டும்[3].(7)வானப்ரஸ்த வாழ்வுமுறைக்கென்று நான்கு வகை ஒழுக்க நெறிகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலர் அந்த நாளுக்குத் தேவையானதை மட்டுமே திரட்டுகின்றனர். சிலர் ஒரு மாதம் நீடிக்கும் அளவுக்குத் திரட்டிச் சேமிக்கின்றனர்.(8) {சிலர் ஓராண்டு நீடிக்கும் அளவுக்குப் போதுமானவற்றைச் சேமிக்கின்றனர்}[4]. சிலர் பனிரெண்டு ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களையும், தேவையான பிற பொருட்களையும் சேகரிக்கின்றனர். காட்டில் ஒதுங்கி வாழ்பவர்கள் {வானப்ரஸ்தர்கள்}, விருந்தினர்களை வழிபடவும், வேள்விகளைச் செய்யவும் இவ்வழிமுறைகளில் செயல்படலாம்.(9) அவர்கள், மழைக்காலங்களில் தங்களை மழைக்கு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், கூதிர் காலத்தில் {பனிக்காலத்தில்} நீரில் மூழ்க வேண்டும். வேனிற்காலத்தில் அவர்கள் தலைக்கு மேலே சூரியன் சுட்டெரிக்க நான்கு நெருப்புகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்க வேண்டும். எனினும், வருடம் முழுவதும் அவர்கள் உணவில் எளிமையானவர்களாகவே இருக்க வேண்டும்.(10) அவர்கள் வெறுந்தரையிலேயே அமரவும், உறங்கவும் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கால் கட்டைவிரல்களில் {கால் நுனிகளில்} மட்டுமே நிற்கிறார்கள். (வேறு எந்த இருக்கையோ, படுக்கையோ கொள்ளாமல்) வெறுந்தரை மற்றும் சிறிய புல் விரிப்பிலேயே நிறைவடைபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் காலை, நடுப்பகல் மற்றும் மாலை வேளைகளில் (வேள்விக்குத் தயாராவதற்கான) தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்கிறார்கள்.(11)அவர்கள் தானியங்களைத் தூய்மையாக்க தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வேறு சிலர் அக்காரியத்திற்குக் கற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்[5]. அவர்களில் சிலர், மிதமாகக் கொதிக்க வைக்கப்பட்ட கோதுமை (அல்லது பிற தானியக்) கஞ்சியை வளர்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள்.(12) வேறு சிலர் அதே போன்ற கஞ்சியைத் தேய்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள். சிலர் (எதையும் அடைய நாடாமல்) தானாக வருவதை மட்டுமே உண்கிறார்கள். கடும் நோன்புகளைப் பின்பற்றும் சிலர் கிழங்குகளை மட்டுமே, சிலர் கனிகளை மட்டுமே, சிலர் மலர்களை மட்டுமே உண்டு, வைகானசர்களால் பின்பற்றப்படும் வழிமுறையை முறையாக நோற்கிறார்கள்.(13) விவேகமும், பக்தியும் கொண்ட மனிதர்களால் இவையும் இன்னும் பல்வேறு நோன்புகளும் பின்பற்றப்படுகின்றன. (துறவறம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையான) நான்காவது உபநிஷத்துகளின் அடிப்படையிலானதாகும்.(14) அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் சமமாக அனைத்து வாழ்வுமுறைகளிலும் நோற்கப்படலாம். பிறவற்றில் இருந்து வேறுபட்ட இந்த முறை, இல்லறம் மற்றும் காட்டுவாழ்வு ஆகியவற்றுக்குப் பிறகு வருகிறது.(15)ஓ! மகனே {சுகரே}, இந்த யுகத்திலேயே கூட, அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களும், கல்விமான்களுமான பல பிராமணர்கள் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றியதாக அறியப்படுகிறார்கள். அகஸ்தியர், {சப்தரிஷிகளான அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், வசிஷ்டர், நாரதர் மற்றும் கிரது ஆகிய} ஏழு முனிவர்கள், மதுச்சந்தர், அகமர்ஷணர்,(16) ஸாங்கிருதி, விரும்பிய எங்கும் வசித்தவரும், (எதையும் நாடிப் பெறாமல்) தானாக வந்ததை எடுத்துக் கொண்டவருமான {யதாவாஸரும், அக்ருதஸ்ரமருமான} சுதிவாதண்டி[6], அஹோவீர்யர், காவ்யர், தாண்டியர், கல்விமானான மேதாதி,(17) வலிமையும் சக்தியும் கொண்டவரான {புதரும், பலவானுமான} கர்மநிர்வாஹர், தவ வலிமையைப் பெறுவதற்காகப்) பெரிதும் முயற்சி செய்தவரான {கிருதஸ்ரமரான} சூன்யபாலர் ஆகியோர் அனைவரும் இந்தக் கடமை நடைமுறைகளின் ஆசான்களாகவும், அவற்றைப் பின்பற்றிச் சொர்க்கத்தை அடைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(18) ஓ! மகனே, தங்கள் தவத்தகுதியின் கனிகளை உடனே காணும் பலம் கொண்ட பெரும் முனிவர்கள் பலர்[7], யாயாவரர்கள் என்ற பெயரில் அறியப்படும் எண்ணற்ற தவசிகள், கடமைகளின் வேறுபாடுகளைக் குறித்த துல்லிய அறிவைக் கொண்டவர்களும் மிகக்கடுமையான தவங்களைச் செய்தவர்களுமான முனிவர்கள் பலர்,(19) குறிப்பிட எண்ணற்றவர்களாக இருக்கும் வேறு பிராமணர்கள் பலர் ஆகியோர் காட்டு வாழ்வுமுறையை {வானப்ரஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றினர். கடுந்தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அறத்தில் நிலையுறுதியுடன் கூடியவர்களும், புலன்களை அடக்கியவர்களும், தங்கள் தவங்களின் கனிகளை உடனே காண வல்லவர்களுமான வைகானஸர்கள், வாலகில்யர்கள், சைகதர்கள் ஆகியோர் அனைவரும் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றி இறுதியாகச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(21)அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாக, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கிடையில் கணக்கிடப்படாமல் உள்ள அவர்கள், ஆகாயத்தில் ஒளியுடல்களாகத் தெரிகின்றனர். வாழ்வின் நான்காவது அல்லது இறுதிப் பகுதியை அடைந்ததும், முதுமையால் பலவீனமடைந்து, நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் (துறவறம் என்றழைக்கப்படும் நான்காம் முறைக்காக) காட்டு வாழ்வு முறையைக் கைவிட வேண்டும். அவன், ஒரே நாளில் நிறைவடையக்கூடியதும், தனது உடைமைகள் அனைத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டிய நிகழ்வுமான ஒரு வேள்வியைச் செய்து,(22,23) தன் ஸ்ராத்தத்தையும் செய்ய வேண்டும். அனைத்துப் பொருள்களில் இருந்து விலகும் அவன், தன்னிடம் மட்டுமே அர்ப்பணிப்புக் கொண்டு, தன்னில் மட்டுமே இன்பமடைந்து, தன்னிடமே ஓய்வு கொள்ள வேண்டும்[8]. அவன் (அதுமுதல்) தன் வேள்வி நெருப்புகள் அனைத்தையும் தன்னிலேயே நிறுவி, அனைத்து வகைப் பற்று மற்றும் பந்தங்களைக் கைவிட வேண்டும்.(24) (ஒருவேளை முற்றான துறவை அடையத் தவறினால்) அவன் ஒரே நாளில் நிறைவடையக்கூடிய அத்தகைய வேள்விகளையும், சடங்குகளையும் எப்போதும் செய்ய வேண்டும்[9]. எனினும், வேள்வி செய்பவர்களின் (பொதுவான) வேள்விகளைச் செய்யும்போது அதிலிருந்து சுய வேள்வி பிறந்தால்,(25) அப்போது (அவன் பொதுவான அனைத்து வேள்விகள் செய்வதையும் தொடராமல்) தன் விடுதலையின் {முக்தியின்} நிமித்தமாக, தன் சுயத்தையே மூன்று நெருப்புகளில் வேள்வி {தியாகம்} செய்யலாம்[10]. அவன், தன் உணவில் குறை காணாமல், (ஒவ்வொரு முறையும் நன்கறியப்பட்ட) யஜுர்வேத மந்திரங்களைச் சொல்லி, அஃதை {அந்த உணவை} ஐந்து அல்லது ஆறு வாய்நிறைய {கவளம்} உண்டு, அவற்றை முறையாக ஐந்து உயிர் காற்றுகளுக்குக் காணிக்கையாக்க வேண்டும்[11].(26)காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வைப் பின்பற்றும்போது, தவம் நோற்பதில் ஈடுபடும் ஒருவன், தன் தலைமுடி, உடலில் உள்ள மயிர் ஆகியவற்றைச் சிரைத்து, தன் நகங்களை உரித்து, செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் புனிதம் நிறைந்த நான்காம் மற்றும் இறுதியான வாழ்வுமுறைக்குள் {ஸந்நியாச ஆசிரமத்திற்குள் / துறவறத்திற்குள்} கடந்து செல்ல வேண்டும்.(27) நான்காம் வாழ்வுமுறைக்குள் நுழையும் மறுபிறப்பாளன், அனைத்து உயிரினங்களுக்கும் (அபயமளிக்கும் {தீங்கிழையாமை / அஹிம்சை என்ற}) உறுதிமொழியைக் கொடுத்து, மறுமையில் சுடர்மிக்க ஒளியுலகங்கள் பலவற்றை ஈட்டுவதில் வென்று, இறுதியாக முடிவிலியை அடைகிறான்.(28) பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, சிறந்த மனநிலையையும், ஒழுக்கத்தையும் கொண்டவனும், தன்னை அறிந்தவனுமான மனிதன், இம்மைக்கோ மறுமைக்கோ தேவையான எந்தச் செயலையும் செய்ய ஒருபோதும் விரும்பமாட்டான். கோபமில்லாதவனாக, பிழை தவிர்த்தவனாக, கவலை மற்றும் நட்பில்லாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், இவ்வுலகக் காரியங்களில் முற்றாக எந்த விருப்பமும் இல்லாத ஒருவனைப் போல வாழ்கிறான்.(29) (சந்நியாசத்தை நோற்கும்) ஒருவன், யமம், மற்றும் அவற்றுக்குப் பின்னே நடக்கும் (நியமத்திலடங்கிய) கடமைகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டக்கூடாது. அத்தகைய ஒருவன், தன் வாழ்வுமுறைக்கான விதியின் படி வாழ்ந்து, வேத கல்வியையும், தன் பிறப்பின் வகையைக் குறிக்கும் புனித நூலையும் சக்தியுடன் வீசியெறிய வேண்டும். அறத்திற்கு அர்ப்பணிப்புடனும், முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள புலன்களுடனும் கூடியவனும், தன்னறிவைக் கொண்டவனுமான அவன், தான் அடைய விரும்பும் கதியை ஐயமற அடைகிறான்[12].(30) இது மூன்றாம் வாழ்வுமுறைக்கு {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்குப்} பிறகு வரும் நான்காவது வாழ்வுமுறையாகும் {சந்நியாசாஸ்ரமமாகும்}. இது மிக மேன்மையானதும், எண்ணற்ற உயர்ந்த அறங்கள் நிறைந்ததுமாகும். மற்ற மூன்று வகை வாழ்வுமுறைகளில் உள்ள தகுதியில் இஃது அவற்றை விஞ்சியிருக்கிறது. இதுவே மிக உயர்ந்த இடத்தைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. அறிவொழுக்கத்தில் சிறந்ததும், அனைவருக்கும் உயர்ந்த புகலிடமாக இருப்பதுமான அந்த வாழ்வுமுறைக்குரிய கடமைகளைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக” என்றார் {வியாசர்}.(31)

ஸந்நியாஸம்! – சாந்திபர்வம் பகுதி – 245-சன்னியாச வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; மறுபிறப்பாளர்களும், பிராமணர்களும் யார் என்பது குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “காட்டு வாழ்வுமுறையின் கடமைகளை நோற்று வாழும்போது, உயர்ந்த ஞானப்பொருளை அடைய முனையும் ஒருவன், எவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்கு, யோகத்தில் தன் ஆன்மாவை நிறுவிக் கொள்ள முடியும்?” என்று கேட்டார்.(1)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மச்சரியம் மற்றும் இல்லறம் என்ற முதல் இரண்டு வாழ்வுமுறைகளைச் செய்வதன் மூலம் (உடலும் ஒழுக்கமும்) தூய்மையடைந்த ஒருவன், அதன் பிறகு வரும் மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்} யோகத்தில் தனது ஆத்மாவை நிறுவிக் கொள்ள வேண்டும். உயர்ந்த இலக்கை உடைமையாக அடைவதற்குச் செய்ய வேண்டியதைக் குவிந்த கவனத்துடன் இப்போது கேட்பாயாக.(2) மனம் அல்லது இதயத்தின் களங்கங்கள் அனைத்தையும் முதலில் சொல்லப்பட்ட (பிரம்மச்சரியம், இல்லறம் {கிருஹஸ்தம்}, காட்டறம் {வானப்ரஸ்தம்} என்ற) மூன்று வாழ்வு முறைகளின் நடைமுறையெனும் எளிய வழிமுறைகளில் அடக்கி, அனைத்து வாழ்வுமுறைகளிலும் மிகச் சிறந்ததும், மிக மேம்பட்டதுமான சந்நியாசம் அல்லது துறவறத்திற்குச் செல்ல வேண்டும்.(3) அவ்வாறாகத் தூய்மையை அடைந்து, நீ உன் நாட்களைக் கடத்துவாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக. ஒருவன், தனக்கு உதவி செய்யவோ, தனக்குத் துணை புரியவோ ஒருவரும் இல்லாமல், (அவனது உயர்ந்த இலக்கை அடைவதைப் பொறுத்த வரையில்) வெற்றியை அடைவதற்காகத் தனியொருவனாக யோகம் பயில வேண்டும்.(4) தோழமை இல்லாமல் யோகம் பயில்பவனும், தனது பிரதிபலிப்பாகவே அனைத்தையும் காண்பவனும், (அண்ட ஆத்மாவால் அனைத்துப் பொருட்களும் படரந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருப்பதன்} விளைவால்) ஒருபோதும் எதையும் அலட்சியம் செய்யாதவனுமான ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் இருந்து ஒருபோதும் வீழ்வதில்லை. வேள்வி நெருப்பைப் பராமரிக்காமல், நிலையான வசிப்பிடம் ஏதுமில்லாமல் உள்ள அத்தகைய மனிதன் {ஒரு சந்நியாசி}, தன் உணவுக்காகப் பிச்சையெடுக்க மட்டுமே ஒரு கிராமத்திற்குள் நுழைய வேண்டும்.(5)

அவன் நாளைக்காகச் சேர்த்து வைக்காமல் அன்றைய நாளுக்குத் தேவையானதை மட்டுமே பெற வேண்டும். அவன் உயர்ந்ததில் {பரத்தில்} இதயத்தை நிலைநிறுத்தியபடி, தவங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். உரிய ஒழுங்குமுறையின்படி சிறிதளவே உண்ணும் அவன், ஒருநாளைக்கு ஒரு முறைக்கு மேல் உண்ணக்கூடாது.(6) மண்டையோடு, மரத்தடியில் உறைவிடம், அணிந்து கொள்ளக் கந்தை, எத்தோழமையுமின்றித் தனித்திருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் பாகுபாடில்லாமை ஆகியன (அறம் பயிலும் ஒரு) துறவியின் பிற குறியீடுகளாகும்.(7) அச்சமடைந்த யானைகள் கிணற்றுக்குள் விழுவதைப் போல வார்த்தைகள் எவனிடம் நுழையுமோ, எவனிடம் இருந்து அவை மீண்டும் பேசுபவனிடம் திரும்பி வராதோ, அவனே விடுதலையை {முக்தியை} இலக்காகக் கொண்ட இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றத் தகுந்தவனாவான்[1].(8) ஆண்டியானவன் (அல்லது துறவியானவன்) எந்த மனிதனின் தீச்செயல்களையும் ஒருபோதும் கவனிக்கக்கூடாது. பிறரை இகழ்ந்து சொல்லப்படும் எதையும் அவன் ஒருபோதும் கேட்கக்கூடாது. குறிப்பாக அவன் ஒரு பிராமணனைக் குறித்துத் தீமையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் எப்போதும் பிராமணர்களுக்கு ஏற்படையவற்றை மட்டுமே பேச வேண்டும். (தன்னைக் குறித்து) இகழ்வாக ஏதும் சொல்லப்படும்போது, அவன் (பதிலளிக்காமல்) முற்றான அமைதியை நீட்டிக்க வேண்டும். உண்மையில் அத்தகைய அமைதியே அவனுக்குப் பரிந்துரைக்கப்படும் மருத்துவச் சிகிச்சையாகும்.(10)எவன் கிழக்கு வானைப் போலத் தன் ஒருவனாலேயே தான் இருக்கும் இடத்தை நிறைக்கிறானோ, தனக்கு முற்றிலும் தனிமையான அல்லது வெறுமையாகத் தோன்றும் இடத்தை எவனால் ஆயிரக்கணக்கான மனிதர்களும், பொருட்களும் நிறைந்ததாக்க முடியுமோ, அவனே உண்மையான பிராமணன் என்று தேவர்களால் கருதப்படுகிறான்[2].(11) எவன் தானாகக் கிடைக்கும் எதையும் உடுத்திக் கொள்கிறானோ, எவன் தானாகக் கிடைக்கும் எதையும் உண்டு வாழ்கிறானோ, எவன் தான் காணும் எந்த இடத்திலும் உறங்குகிறானோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று அறிகிறார்கள்.(12) பாம்பைப் போன்றதே தோழமை என்றும்; (இனிய பண்டம் மற்றும் பானங்களில் இருந்து கிடைக்கும்) முழு அளவு நிறைவானது நரகம் என்றும்; சவத்தைப் போன்றவளே பெண் என்றும் எவன் அச்சம் கொள்கிறானோ, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(13) எவன் கௌரவிக்கப்படுகையில் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, எவன் அவமதிக்கப்படுகையில் ஒருபோதும் கோபம் கொள்வதில்லையோ, எவன் அனைத்து உயிரினங்களுக்கும் கருணையை உறுதியளித்திருக்கிறானோ {அபயம் அளித்திருக்கிறானோ}, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(14) இறுதி வாழ்வுமுறையை {ஸந்நியாச வாழ்வுமுறையை} நோற்கும் ஒருவன், மரணத்தை மகிழ்ச்சியாகக் காணக்கூடாது. அதே வேளையில் அவன் வாழ்வையும் மகிழ்ச்சியாகக் காணக்கூடாது. அவன் (தலைவனின்) ஆணைக்காகக் காத்திருக்கும் பணியாளைப் போலத் தன் வேளைக்காக மட்டுமே காத்திருக்க வேண்டும்.(15)அவன் தன் இதயக் களங்கங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் தன் வாக்கின் களங்கங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ள வேண்டும். எதிரிகள் அற்றவனான அவனுக்கு எது அச்சத்தை ஏற்படுத்த முடியும்?(16) எவனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சமில்லையோ, எவனிடம் எந்த உயிரினமும் அச்சங்கொள்வதில்லையோ அவன் அனைத்து வகைக் குற்றங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதால் எந்த இடத்தில் இருந்தும் அவனுக்கு அச்சம் ஏற்பட முடியாது.(17) காலால் நகரும் பிற உயிரினங்கள் அனைத்தின் காலடித் தடங்களும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதை போலவே அனைத்துப் பதவிகளும் நிலைகளும் யோகத்திற்குள் ஈர்க்கப்படும்[3].(18) அதே போலவே, பிற கடமைகள் மற்றும் நோன்புகள் எதுவும் (அனைத்து உயிரினங்களுக்கும்) தீங்கிழையாமை என்ற ஒற்றைக் கடமைக்குள் அடங்கிவிடும். பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்ப்பவன் எப்போதும் நீடித்திருக்கும் இன்ப வாழ்வை வாழ்வான்.(19) தீங்கிழையாமல் இருப்பவனும், அனைத்து உயிரினங்களிடமும் சம பார்வை கொண்டவனும், வாய்மையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், மனோவுறுதியுடன் கூடியவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பை வழங்குபவனுமான ஒருவன், ஒப்பீட்டைக் கடந்த கதியை அடைகிறான்.(20)மரணம் என்றழைக்கப்படும் நிலையானது, தன்னறிவில் நிறைவுடன் உள்ளவனும், அச்சத்திலிருந்து விடுபட்டவனும், விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புகள் அற்றவனுமான ஒரு மனிதனைக் கடப்பதில் வெல்வதில்லை. மறுபுறம் அத்தகைய மனிதனே மரணத்தைக் கடந்து செல்வதில் வெல்கிறான்.(21) எவன் அனைத்து வகைப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனோ, எவன் தவங்களைச் செய்பவனோ, எவன் அனைத்துப் பொருட்களையும் பற்றியிருந்தாலும், பற்றில்லாமல் இருக்கும் வெளியைப் போல வாழ்கிறானோ, எவனுக்குத் தான் என்று அழைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லையோ, எவன் தனிமையான வாழ்வை வாழ்வானோ, எவனுடைய ஆன்மா அமைதியானதோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(22) எவனுடைய வாழ்வு அறப்பயிற்சிக்கானதாக இருக்கிறதோ, எவனுடைய அறம், தன்னிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களின் நன்மைக்கானதாக இருக்கிறதோ, எவனுடைய பகல்களும், இரவுகளும் தகுதியை {புண்ணியத்தை} அடைவதற்காக மட்டுமே இருக்கின்றனவோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று அறிகிறார்கள்[4].(23) எவன் ஆசையிலிருந்து விடுபட்டவனோ, எவன் (உலக மனிதர்களால் செய்யப்படும் செயல்களைச் செய்ய) ஒருபோதும் முயற்சி செய்வதில்லையோ, எவன் எவனுக்கும் தலைவணங்குவதில்லையோ, எவன் மற்றொருவனைத் துதிபாடுவதில்லையோ, எவன் அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(24) அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியில் நிறைவடைந்து, துன்ப எதிர்பார்ப்பில் அச்சத்தால் நிறைகின்றன. எனவே, பிற உயிரினங்களைத் துன்பத்தில் நிறைக்கும் வாய்ப்பில் துயரடையுபவனான நம்பிக்கையுள்ள மனிதன், அனைத்து வகைச் செயல்களிலும் இருந்தும் முற்றாக விலக வேண்டும்.(25)எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிக்கொடையானது, அனைத்துக் கொடைகளையும் கடந்து நிற்பதாகும். எவன் தொடக்கத்திலேயே தீங்கிழைக்கும் அறத்தைக் கைவிடுகிறானோ, அவன் அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதியை அளிக்கும்போது விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(26) எந்த மனிதன் திறந்திருக்கும் தன் வாயில், காட்டில் ஒதுங்கி வாழ்வோருக்கு {வானப்ரஸ்தர்களுக்காக} விதிக்கப்பட்டிருக்கும் ஐந்து அல்லது ஆறு வாய்நிறையக்கூட உண்ணவில்லையோ அவன் உலகத்தின் நாபி என்றும், இந்த அண்டத்தின் புகலிடம் என்றும் சொல்லப்படுகிறான். {அவனது} தலை, பிற அங்கங்கள், நல்ல மற்றும் தீய செயல்கள் ஆகியன நெருப்பைக் கொண்டதாகின்றன.(27) தன்னைத்தானே தியாகம் செய்யும் அத்தகைய மனிதன், தன் புலன்களையும், மனத்தையும் தன் இதய வெளிக்குள் வசிக்கும் நெருப்பில் ஆகுதி செய்கிறான். தனக்குள் உள்ள அத்தகைய நெருப்புக்குள் அத்தகைய ஆகுதியை ஊற்றுவதன் விளைவால், தேவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுடன் கூடிய இந்த அண்டமே நிறைவடைகிறது[5].(28) ஒளியுடன் கூடியதும், மூன்று உறைகளில் மறைக்கப்பட்டதும், பரமாத்மாவின் முதன்மையான இயல்பைப் பகிர்ந்து கொள்ளும் ஈஸ்வரனின் தன்மைகளான முக்குணங்களுடன் கூடியதுமான ஜீவாத்மாவைப் புரிந்து கொண்டவர்கள், அனைத்து உலகங்களிலும் பெருமதிப்பிற்குரியவர்களாகிறார்கள். மனிதர்கள் அனைவருடன் கூடிய தேவர்களும் அவர்களது தகுதிகளை உயர்வாகப் பேசுகின்றனர்.(29) எவன் தன் உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவில், வேதங்கள் அனைத்தையும், வெளியையும் {ஆகாயத்தையும்}, உணரத்தக்க பிற பொருட்களையும், சாத்திரங்களில் தோன்றும் சடங்குகளையும், ஒலியால் உணரப்படும் யாவற்றையும், பரமாத்மாவின் மேன்மையான இயல்பையும் காண்பதில் வெல்கிறானோ, அவன் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகத் தேவர்களாலும் வழிபடப்படுகிறான்.(30)எவன் தன் உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவில், (அளவில்லா) ஆகாயத்தாலும் அளக்க முடியாததும், தங்கமயமானதும், முட்டையில் இருந்து பிறந்ததும், முட்டைக்குள்ளேயே வசிப்பதும், பல சிறகுகளைக் கொண்டதும், இரு சிறகுகளைக் கொண்ட ஒரு பறவையைப் போன்றதும், பல ஒளிக்கதிர்களால் ஒளிமயமானதும், பூமியில் பற்றில்லாததுமான முதன்மையான பொருளை {பரமாத்மாவைக்} காண்கிறானோ, அவன் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகத் தேவர்களாலும் வழிபடப்படுகிறான்[6].(31) தொடர்ந்து சுழல்வதும், சிதைவற்றதும், அனைத்து உயிரினங்களின் இருப்புக் காலத்தை விழுங்குவதும், ஆறு பருவ காலங்களை அச்சாகக் கொண்டதும், பனிரெண்டு மாதங்களாலான பனிரெண்டு ஆரங்களைக் கொண்டதும், சிறந்த இணைப்புகளைக் கொண்டதும், எதன் திறந்த வாய்க்குள் (விழுங்கப்படத் தயாராக) இந்த அண்டம் செல்கிறதோ அந்தக் காலச்சக்கரத்தில் நிறுவப்பட்டிருக்கும் புத்தியைக் கொண்டவனைத் தேவர்களும் வழிபடுகிறார்கள்.(32) கனவற்ற உறக்க நிலையே  அகன்ற உணர்வற்ற பரமாத்ம நிலையாக இருக்கிறது. அந்த உணர்வற்ற நிலையே இந்த அண்டத்தின் உடலாக இருக்கிறது. அது படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உணர்வற்ற அந்தப் பரந்த நிலையில் ஒரு பகுதியை அடையும் ஜீவன் தேவர்களை நிறைவடையச் செய்கிறது. இறுதியாக நிறைவடையும் அவர்கள், அந்த உணர்வற்ற நிலையின் திறந்த வாயை நிறைவு செய்கிறார்கள்.(33) ஒளியுடனும், நித்தியக் கொள்கையுடனும் கூடிய ஜீவன் தொடக்கமில்லாததாகும். அது (குறிப்பிட்ட பாதைகளைப் பின்பற்றுவதன் மூலம்) நித்திய மகிழ்ச்சியுடைய முடிவிலா உலகங்களை அடைகிறது. எவனைக் கண்டு எந்த உயிரினமும் அஞ்சாதோ, அவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(34) நித்திக்கத்தக்க எதையும் ஒருபோதும் செய்யாதவனும், மற்றொருவனை ஒருபோதும் நிந்திக்காதவனுமான ஒருவனே உண்மையில் மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் பரமாத்மாவைக் காண்பதில் வெல்கிறான். அறியாமை விலகியவனும், பாவங்கள் கழுவப்பட்டவனுமான ஒருவன், பிறரால் அனுபவிக்கப்படும் இன்பத்தை இம்மையிலும், மறுமையிலும் அனுபவிப்பதில்லை (ஆனால் அவன் முற்றான விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(35) நான்காம் வாழ்வுமுறையை {சந்நியாஸாஸ்ரமத்தை} நோற்கும் ஒருவன், அனைத்திலும் தொடர்பற்றவனாகப் பூமியில் உலவிக் கொண்டிருக்கிறான். அத்தகைய ஒருவன், கோபம் மற்றும் குற்றத்தில் இருந்து விடுதலை பெற்றவனாக இருக்கிறான். அத்தகைய ஒருவன் மண்ணாங்கட்டியையும், தங்கக் குவியலையும் சம கண்ணுடனே பார்ப்பான். அத்தகைய மனிதன் தன் பயன்பாட்டுக்காக ஒருபோதும் எதையும் சேகரிக்க மாட்டான். அத்தகைய ஒருவன் நண்பர்களையோ, பகைவர்களையோ கொள்ள மாடடான். அத்தகைய ஒருவன் புகழ் அல்லது பழி மற்றும் ஏற்புடையது மற்றும் ஏற்பில்லாதது ஆகியவற்றில் முற்றிலும் கவனமற்றவனாக இருப்பான்” என்றார் {வியாசர்}.(36)

ஆத்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 246-ஆத்மாவை அறிந்த கொள்ள இந்திரியங்கள், தன்மாத்திரைகள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஜீவாத்மாவானது, பிரகிருதியின் மாற்றங்கள் யாவற்றுடன் கூடியதாக இருக்கிறது. இவை {பிரகிருதியின் மாற்றங்கள்} ஆன்மாவை அறிவதில்லை, ஆனால் இவையனைத்தையும் ஆன்மா அறிந்திருக்கிறது.(1) பலமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், பேருறுதி கொண்டவையுமான குதிரைகளைத் தான் தேர்ந்தெடுக்கும் பாதையில் செலுத்தும் ஒரு நல்ல சாரதியின் செயல்பாட்டைப் போலவே, ஆன்மாவும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்கள் என்றழைக்கப்படுவனவற்றின் துணையுடன் செயல்படுகிறது.(2) புலன் நுகர் பொருட்களானவை {தன்மாத்திரைகளானவை}, புலன்களைவிட {இந்திரியங்களைவிட} மேன்மையானவையாக இருக்கின்றன[1]. அந்தப் பொருட்களைவிட {தன்மாத்திரைகளைவிட} மனம் மேன்மையானதாக இருக்கிறது. மனத்தைவிடப் புத்தி மேன்மையானதாக இருக்கிறது. மஹத் என்றும் அழைக்கப்படும் ஆன்மாவானது, புத்தியைவிட மேன்மையானதாக இருக்கிறது.(3) மஹத்தைவிட மேன்மையானதாகப் புலப்படாதது (அல்லது பிரகிருதி) இருக்கிறது. அந்தப் புலப்படாததுக்கும் மேன்மையானதாகப் பிரம்மம் இருக்கிறது. பிரம்மத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை. அதுவே சிறப்பின் உயர்ந்த எல்லையும், உயர்ந்த கதியுமாக இருக்கிறது.(4) பரமாத்மாவானது ஒவ்வொரு உயிரினத்திலும் மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அதைக் காண்பதில்லை. நுட்பமான பார்வை கொண்ட யோகியர் மட்டுமே தங்கள் கூரிய நுண்ணியப் புத்தியின் துணையுடன் பரமாத்மாவைக் காண்கிறார்கள்.(5)தங்களில் ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களையும், புலன்நுகர் பொருட்களையும், புத்தியின் துணையுடன் உள் ஆன்மாவில் கலந்து, சிந்தனையின் நோக்கம், சிந்தனை, சிந்திப்பவன் என்ற மூன்று நனவுநிலைகளைக் குறித்துச் சிந்தித்து,(6) தியானத்தின் மூலம் அனைத்து வகை இன்பங்களிலிருந்தும் விலகி, தானே பிரம்மம் என்ற அறிவை மனத்தில் தரித்து, அதே வேளையில் பலத்தின் நனவுநிலைகள் {அகங்காரங்கள்} அனைத்தையும் புறந்தள்ளி, அதன் மூலம் தன் ஆன்மாவை முற்றான அமைதியடையச் செய்யும் யோகி, அழிவின்மையை அடைகிறான்.(7) எனினும் தன் புலன்கள் அனைத்திற்கும் அடிமையாக இருப்பவனும், சரி மற்றும் தவறு என்ற கருத்துகளில் குழப்பமுள்ளவனும், ஏற்கனவே மரணமடையக்கூடிய நிலையிலுள்ளவனுமான மனிதன், உண்மையில் (ஆசைகளுக்கு) சுயத்தை அடிபணியச் செய்வதன் மூலமே மரணத்தைச் சந்திக்கிறான்.(8) ஒருவன் தன் ஆசைகள் அனைத்தையும் அழித்து, திரள் புத்தியை {சித்தத்தை} நுணுக்கமான புத்திக்குள் {சத்வத்திற்குள்} கலக்க வேண்டும். இவ்வாறு திரள் புத்தியை {சித்தத்தை} நுண்ணியப் புத்தியில் கலப்பதன் மூலம், ஒருவன் இரண்டாவது காலஞ்சர மலையாகிறான்[2].(9) யோகியானவன், தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கடந்தவனாகிறான். தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலமும், தன் உண்மையான இயல்பில் வாழ்வதன் மூலமும் அவன் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான்[2].(10)நான் சொன்ன அந்த இதயத் தூய்மை என்பது, ஒருவன் கனவற்ற தூக்கத்தில் (சுற்றமனைத்தையும் மறந்த) நனவற்ற நிலையில் உணர்வற்ற நிலையை அனுபவிப்பதாகும். அந்நிலையை அடைந்த யோகி, முற்றமைதியான சூழல் உள்ள இடத்தில் நிலையாக எரியும் விளக்கின் தழலைப் போல வாழ்கிறான்.(11) உணவில் எளிமையடைந்து, தன் இதயத்தைத் தூய்மை செய்து கொண்ட யோகி, தன் ஆன்மாவை ஆன்மாவுக்குள் செலுத்துவதால், ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் காண்பதில் வெல்கிறான்[4].(12) ஓ! மகனே, உனக்குப் போதிப்பதற்கான இந்த உரையாடல் வேதங்கள் அனைத்தின் சாரமாகும். இங்கே வெளிப்படுத்தப்படும் உண்மைகள், உள்ளுணர்வின் துணையால் மட்டுமோ, வெறும் சாத்திரக் கல்வியாலோ புரிந்து கொள்ள இயலாதனவாக இருக்கின்றன. ஒருவன் நம்பிக்கையின் துணை கொண்டே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்[5].(13) அறப்பணிகள் மற்றும் உண்மையின் அடிப்படையிலான உரையாடல்கள் அனைத்திலும் உள்ள செல்வத்தைக் கடைவதன் மூலமும், பத்தாயிரம் ரிக்குகளைக் கடைவதன் மூலமும் இந்த அமுதம் எழுகிறது {உதிக்கிறது}.(14)  உண்மையான அனைத்து விவேகிகளின் அறிவையும் கொண்ட இஃது, தயிரிலிருந்து வெண்ணெயைப் போலவும், மரத்திலிருந்து நெருப்பைப் போலவும் என் மகனுக்காகவே எழுந்திருக்கிறது {உதித்திருக்கிறது}.(15)ஓ! மகனே, திடமான போதனைகள் நிறைந்த இந்த உரையாடலானது, ஸ்நாதகர்களுக்குச் சொல்லப்படும் நோக்கம் கொண்டவையாகும்[6]. அமைதியான ஆன்மா இல்லாதவன், அல்லது தற்கட்டுப்பாடு இல்லாதவன், அல்லது தவங்களைச் செய்யாதவன் ஆகியோருக்கு இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது.(16) வேதங்களை அறியாதவன், அல்லது பணிவுடன் தன் ஆசானுக்குப் பணி செய்யாதவன், அல்லது வன்மத்திலிருந்து விடுபடாதவன், அல்லது உண்மையும், கபடமற்றநிலையும் கொள்ளாதவன், அல்லது ஒழுக்கம் குறித்த கவலையில்லாதவன் ஆகியோருக்கு இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது.(17) விவாத அறிவியலின் மூலம் விழங்கப்படும் அறிவைக் கொண்ட ஒருவனுக்கோ, இழிந்த அல்லது தாழ்ந்த ஒருவனுக்கோ இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது. எனினும், புகழ்கொண்டவன், (தன்னொழுக்கத்திற்காக) மெச்சத்தகுந்தவன், அல்லது அமைதியான ஆன்மாவைக் கொண்டவன், அல்லது தவத்தகுதியைக் கொண்ட(18) ஒரு பிராமணன், அல்லது தனது மகன், அல்லது கடமையுணர்வுமிக்கச் சீடன் ஆகியோருக்கு கடமைகளின் சாரத்தையே கொண்ட இந்த உரையாடலைச் சொல்லலாமேயன்றி, எக்காரணம் கொண்டும் வேறு யாருக்கும் இதைச் சொல்லக் கூடாது.(19) எந்த மனிதனும் செல்வங்கள் அனைத்துடன் கூடிய மொத்த பூமியையும், உண்மையை அறிந்த ஒருவனுக்குக் கொடையாக அளித்தாலும், {உண்மையை அறிந்தவனான} அவன் அந்த {செல்வக்} கொடையைவிட இந்த அறிவுக்கொடையையே மேன்மையானதாகக் கருதுவான்.(20)இதைவிடப் பெரிய புதிரானதும், ஆன்மா தொடர்புடையதும், மனிதர்களின் சாதாரணப் புத்தியைக் கடந்ததும், முதன்மையான முனிவர்களால் காணப்பட்டதும், உபநிஷத்துகளில் சொல்லப்பட்டதும், உன் கேள்வியின் பொருளாக அமைந்திருப்பதுமான காரியம் குறித்து நான் உன்னிடம் இப்போது உரையாடப் போகிறேன்.(21) இன்னும் உனக்கு எதனில் ஐயம் உள்ளது என்பதை எனக்குச் சொல்வாயாக? ஓ! மகனே, உனக்கு முன்பே அமர்ந்திருக்கிறேன், கேட்பாயாக. உண்மையில், எதைக் குறித்து நான் உன்னிடம் மீண்டும் ஒருமுறை பேச வேண்டும்?” என்று கேட்டார் {வியாசர்}.(22)

ஐம்பூத குணங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 247-அத்யாத்மா என்றால் என்ன? வெவ்வேறு பொருட்களில் ஐம்பூதங்களின் வெவ்வேறான பகிர்மானத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு? என்பன குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; வியாசரின் பதில்; மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புகள்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அத்யாத்மா குறித்து இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. உண்மையில் அத்யாத்மா என்பது என்ன? எங்கிருந்து அது வருகிறது?” என்று கேட்டார்[1].(1)வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! மகனே, மனிதர்களின் அத்யாத்மா என்று கருதப்படுவதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன், (அத்யாத்மா குறித்து) நான் தரப்போகும் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) நிலம், நீர், ஒளி, காற்று, வெளி ஆகியன அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அடங்கிய பெரும்பூதங்களாகும். ஒன்றாகவே இருப்பினும் அவை பெருங்கடலின் அலைகளைப் போல வெவ்வேறானவையாகக் கருதப்படுகின்றன (உள்ளடக்கப் பொருளால் ஒன்றாகவே இருப்பினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகவே கணக்கிடப்படுகின்றன).(3) ஓர் ஆமையானது தனது அங்கங்களை நீட்டி, மீண்டும் அவற்றைச் சுருக்கிக் கொள்வதைப் போலவே, (ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட) பெரும்பூதங்களும், எண்ணிலா சிறு வடிவங்களில் வசிப்பதன் மூலம், (படைப்பு என்றும் அழிவு என்றும் அழைக்கப்படும்) மாற்றங்களுக்கு உட்படுகின்றன.(4) அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டம் முழுமையும் இந்த ஐம்பூதங்களே இருக்கின்றன. படைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அனைத்திலும், இந்த ஐந்துவகைப் பூதங்களே குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன.(5) இந்த ஐம்பூதங்களும் இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் இருக்கின்றன. எனினும், அனைத்துப் பொருட்களையும் படைத்தவன், (வெவ்வேறு பொருட்களில் வெவ்வேறு அளவுகளில் அமைத்ததன் மூலம்) வெவ்வேறு முடிவுகளை எட்டுவதற்காக அந்தப் பூதங்களைச் சமமற்ற வகையில் பகிர்ந்திருக்கிறான்” என்றார் {வியாசர்}.(6)

சுகர், “அண்டத்தின் பல்வேறு பொருட்களில் (நீர் சொல்லும் இந்த ஐம்பெரும் பூதங்களின்) சமமற்ற பகிர்வை ஒருவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அவற்றில் புலன்கள் எவை? குணங்கள் எவை? இஃதை எவ்வாறு புரிந்து கொள்வது?” எனக் கேட்டார்.(7)

வியாசர், “இவற்றை முறையாக ஒன்றன்பின் ஒன்றாக உனக்கு விளக்குகிறேன். உண்மையில் எவ்வாறு, என்ன நடக்கிறது என்பதை நான் விளக்கும்போது, அதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(8) ஒலி {சப்தம்}, கேள்விப் புலன் {செவி /ஸ்ரோதரம்}, உடலில் உள்ள துளைகள் அனைத்தும் என இம்முன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. உயிர் மூச்சுகள் {வாயுக்கள் / பிராணன்}, அங்கங்களின் செயல்பாடு {சேஷ்டை}, ஊறு {தீண்டல் /ஸ்பர்சம்} ஆகியன காற்றின் குணத்தைக் கொண்டுள்ளன.(9) வடிவம் {ரூபம்}, கண்கள் {நேத்ரம்}, குடலுக்குள் உள்ள செரிமான நெருப்பு {அக்னி} ஆகியன ஒளியால் {தேயுவால்} தோன்றுகின்றன. சுவை, நாக்கு மற்றும் உடல் நீர்மங்கள் அனைத்தும் அடங்கிய இம்மூன்றும் நீரில் இருந்து வந்தனவாகும்.(10) மணம், மூக்கு மற்றும் உடலென்ற இம்மூன்றும் பூமியின் குணங்களாக இருக்கின்றன. நான் உனக்குச் சொன்ன இவையே புலன்களுடன் தொடர்புடைய ஐம்(பெரும்)பூதங்களின் மாற்றங்கள் ஆகும்.(11)

தீண்டல் காற்றின் குணமாகவும்; சுவை நீரின் குணமாகவும், வடிவம் ஒளியின் குணமாகவும் சொல்லப்படுகின்றன. ஒலி தன் தோற்றுவாயை வெளியில் {ஆகாயத்தில்} கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது, மணமோ பூமியின் {நிலத்தின்} தன்மையாகச் சொல்லப்படுகிறது.(12) மனம், புத்தி, இயற்கை ஆகிய இம்மூன்றும் தங்கள் முந்தைய நிலைகளில் இருந்து எழுந்து, (ஒவ்வொரு மறுபிறவியிலும் தங்களுக்குரிய) குணங்களை விட உயர்ந்த நிலையை அடைந்து, அந்தக் குணங்களைக் கடந்து செல்லாமல் இருக்கின்றன[2].(13) ஆமையானது தனது அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போலவே புத்தியும், புலன்களைப் படைத்து மீண்டும் தனக்குள்ளேயே அவற்றை இழுத்துக் கொள்கிறது[3].(14) உள்ளங்காலுக்கு {பாதங்களுக்கு} மேலும், உச்சந்தலைக்குக் கீழும் உள்ள பகுதியில் இருந்து எழும் தனிப்பட்ட அடையாளத்தின் நனவுநிலையானது, அடிப்படையில் புத்தியின் செயல்பாட்டாலேயே உண்டாகிறது[4].(15)புத்தியே (வடிவம், மணம் முதலிய ஐந்து) பண்புகளாக மாற்றமடைகிறது. புத்தியே, ஆறாவதாக மனத்தைக் கொண்டிருக்கும் (ஐந்து) புலன்களாக மாற்றமடைகிறது. புத்தி இல்லாத போது இந்தப் பண்புகள் எங்கே போகின்றன?[5](16) மனிதனில் ஐம்புலன்கள் இருக்கின்றன. மனமானது ஆறாவதாக (ஆறாம் புலனாகச்) அழைக்கப்படுகிறது. புத்தியானது ஏழாவதாக அழைக்கப்படுகிறது. ஆன்மாவானது எட்டாவதாகும்.(17) கண்கள் (முதலிய புலன்கள்), வடிவ (மற்றும் மணம் முதலிய) உணர்வுகளைப் பெறுவதற்காக மட்டுமே உள்ளன. மனமானது, (அந்த உணர்வுகளின் துல்லியத்தில்) ஐயங்கொள்வதற்காக இருக்கிறது. புத்தியானது இந்த ஐயங்களைத் தீர்க்கிறது {அந்த ஐயங்களில் ஒரு தீர்மானத்தை எட்டுகிறது}. ஆன்மாவானது, அவற்றுடன் கலந்துவிடாமல் சாட்சியாக மட்டுமே இருந்து செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் காண்கிறது.(18) ரஜஸ், தமஸ், சத்வம் ஆகிய இம்மூன்றும் தங்கள் தங்களுக்கு ஏற்றபகுதிகளில் இருந்து உண்டாகின்றன. இவை (தேவர்கள் மற்றும் மனிதர்கள் முதலிய) அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே இருக்கின்றன. இவை குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும் இவை தூண்டும் செயல்களின் மூலம் இவற்றை அறியலாம்[6].(19)அந்தச் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், ஒருவன் தன்னை உற்சாகம் அல்லது மகிழ்ச்சி, அமைதி மற்றும் தூய்மையுடன் கலந்து {செயல்பட்டு} உணரும் நிலைகள் அனைத்தும் சத்வ குணம் என்று அறியப்படுகிறது.(20) கவலையுடன் கலந்த உடல் அல்லது மன நிலைகள் அனைத்தும், ரஜஸ் என்றழைக்கப்படும் குணத்தின் ஆதிக்கத்தால் விளைவதாகக் கருதப்பட வேண்டும்.(21) உறுதியற்ற தன்மையைக் காரணமாகக் கொண்டு (புலன்கள், மனம் அல்லது புத்தி கொள்ளும்) மயக்கத்தோடு கூடியவையும், (அறிவின் மூலமோ உள்ளொளியின் மூலமோ) புரிந்து கொள்ள முடியாதவையுமான நிலைகள் அனைத்தும் தமஸ் செயல்பாட்டைச் சார்ந்தவையாக அறியப்பட வேண்டும்.(22) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, உற்சாகம் {ப்ரீதி), இன்பம் {ஆனந்தம்}, உள்ளச்சமநிலை {ஸம்பாவனை}, இதய நிறைவு {மனத்தின் தெளிவு} ஆகியன அனைத்தும் சத்வ குணத்தின் விளைவுகளாகும்.(23) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் செருக்கு {அபிமானம்}, வாக்கில் பொய்மை {பொய்யுரைத்தல்}, பேராசை {லோபம்}, மயக்கம் {மோகம்}, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியன ரஜஸ் குணத்தின் குறியீடுகளாகும்.(24) எந்தவொரு காரணத்திலுமிருந்து எழும், தீர்மான மயக்கம் {மோகம்}, கவனமின்மை {அஜாக்ரதை}, உறக்கம் {நித்ரை}, மயக்கநிலை {அறியாமை}, சோம்பல் ஆகியவற்றைத் தமஸ் குணத்தின் குறீயீடுகளாக அறியப்பட வேண்டும்” என்றார் {வியாசர்}.(25)

புத்தி! – சாந்திபர்வம் பகுதி – 248-மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புத் தொடர்ச்சி…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மனமானது, (பொருட்கள் அல்லது இருப்பிலுள்ளவற்றைக் குறித்த) எண்ணற்ற கருத்துகளை (தனக்குள்ளேயே) உண்டாக்கிக் கொள்கிறது. புத்தியானது எது, எதுவாக இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. எது ஏற்புடையது, எது ஏற்பில்லாதது என்பதை இதயம் {அகங்காரம்} பகுத்தறிகிறது. இந்த மூன்று சக்திகளே செயல்களைத் தூண்டுகின்றன[1].(1) புலன்களைவிடப் புலன்நுகர் பொருட்கள் {தன்மாத்திரைகள்} மேன்மையானவை. அந்தப் பொருட்களை {தன்மாத்திரைகளை} விட மனம் மேன்மையானது. மனத்தை விடப் புத்தி மேன்மையானது. புத்தியைவிட ஆன்மா மேன்மையானதாகக் கருதப்படுகிறது.(2) (மனிதனின் பொதுவான காரியங்களைப் பொறுத்தவரையில்) புத்தியே ஒருவனின் ஆன்மாவாகும். புத்தியானது தன்னியக்கமாக (பொருட்களைக் குறித்த) கருத்துகளைத் தனக்குள்ளேயே அமைத்துக் கொள்ளும்போது அது மனம் என்று அழைக்கப்படுகிறது[2].(3) (நோக்கம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டிலும்) புலன்கள் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருப்பதன் விளைவால், (ஒன்றாகவே இருக்கும்) புத்தியானது, பல்வேறு மாறுபாடுகளின் விளைவால் வெவ்வேறு தன்மைகளை வெளிப்படுத்துகிறது. கேட்கும்போது அது செவிப்புலனாகிறது, தீண்டும் போது அஃது ஊறுபுலனாகிறது {தீண்டல் புலனாகிறது}.(4) அதேபோலவே, காணும்போது அது பார்வைப்புலனாகிறது, சுவைக்கும்போது சுவைப்புலனாகிறது, நுகரும்போது அது மணப்புலனாகிறது. (பல்வேறு செயல்பாடுகளுக்காக) மாறுபடும்போது புத்தியே அவ்வாறு பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறது.(5) புத்தியின் இந்த மாறுபாடுகளே புலன்களாக அழைக்கப்படுகின்றன. புலப்படாத ஆன்மாவானது அவற்றுக்கு மேலான தலைமைப் பொறுப்பில் (அல்லது கண்காணிப்பாளராக) நிறுத்தப்பட்டிருக்கிறது. உடலில் வசிக்கும் புத்தியானது (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) மூன்று நிலைகளில் நீடிக்கிறது[3].(6)சில வேளைகளில் அது {புத்தி} உற்சாகமடைகிறது, சிலவேளைகளில் துன்பவயப்படுகிறது; சில வேளைகளில் அது மகிழ்ச்சியோ துன்பமோ இல்லாத நிலையை அடைகிறது.(7) எனினும், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) மூன்று காரியங்களை {குணங்களை} உண்டாக்கும் புத்தியானது, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், தனக்குள் விழும் ஆறுகளின் வலிமைமிக்க நீரோட்டங்களை எதிர்த்து நீடித்திருப்பதைப் போலவே அந்த மூன்று நிலைகளையும் {முக்குணங்களையும்} விஞ்சியிருக்கிறது[4].(8) புத்தியானது எதையும் விரும்பும்போது மனம் என்ற பெயரால் அஃது அழைக்கப்படுகிறது. மேலும் புலன்கள் அனைத்தும், (வெளிப்படையாக ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருந்தாலும்) புத்திக்குள் அடங்கியவையாகவே கொள்ளப்பட வேண்டும்.(9) வடிவம், மணம் முதலிய உணர்வுகளைப் பெறுவதில் ஈடுபடும் புலன்கள் அனைத்தும் அடக்கப்பட வேண்டும்.(10)ஒரு குறிப்பிட்ட புலனானது, புத்தியில் அடங்கியொடுங்கும்போது, உண்மையில் புத்தியானது (அந்தப் புலனிலிருந்து) வேறுபட்டதில்லை என்றாலும், இருப்பில் உள்ள பொருட்களின் வடிவில் அது மனத்துக்குள் நுழைகிறது. அவற்றை {இருப்பில் உள்ள பொருட்களைத்} தொடர்ந்து வருவதாகச் சொல்லப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே, (உடன் நிகழ்வாக இல்லாமல் தனித்தனியாக) அடுத்தடுத்த புலன்களுக்கும் இதுவே நேர்கிறது[5].(11) தேர்ச்சக்கரத்தின் சுற்றளவில் தாங்கள் கொண்டுள்ள பற்றின் விளைவால் செயல்படும் ஆரங்களைப் போல, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்களும், (மனம், புத்தி, நனவுநிலை [அகங்காரம்] என்ற} இந்த மூன்றையும் பற்றிக் கொண்டு, (மனம், புத்தி மற்றும் நனவுநிலையில் இருக்கும்) பல்வேறு பொருட்களைப் பின்தொடர்கின்றன[6].(12) சிறந்த யோக காரியத்தின் துணையுடன் யோகியரால் அடையப்படும் இந்த ஞானமானது, மனிதர்களின் எந்தச் சிறப்பான முயற்சியுமின்றி உலகம் சார்ந்த பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் அடையப்படுகிறது[7].(13) அண்டமானது (புத்தியின் படைப்பான) இவ்வியல்பின்படியே இருக்கிறது. எனவே, ஞானம் கொண்ட ஒரு மனிதன் (உலகப் பொருட்களின் மீது பற்று கொள்வதன் மூலம்) ஒருபோதும் திகைப்படைவதில்லை {மயக்கமடைவதில்லை}. அத்தகைய மனிதன் ஒருபோதும் துன்புறாதவனாகவும், ஒருபோதும் மகிழாதவனாகவும், (அதிக அளவு உலகப் பொருட்களைக் கொண்டிருக்கும் மற்றொருவரைக் கண்டு உண்டாகும்) பொறாமையில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(14) ஆசைக்குரிய (உலகம் சார்ந்த) பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் திரியும் இயல்பைக் கொண்ட புலன்களின் துணை மூலம் ஆன்மா காணப்பட முடியாததாக இருக்கிறது. தூய்மையான புலன்களைக் கொண்ட அறவோரும் கூட ஆன்மாவைக் காணத் தவறுகிறார்கள் என்றால், தூய்மையற்ற புலன்களைக் கொண்ட தீயோரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(15)எனினும், ஒருவன் தன் மனத்தின் துணையுடன், அவற்றின் {புலன்களின்} கடிவாளங்களை இறுகப் பற்றிக் கொள்ளும் போதுதான், அவனது ஆத்மாவானது, (பார்க்க முடியாத இருளில்) விளக்கொளியின் விளைவால் காட்சியில் தோன்றும் ஒரு பொருளைப் போலத் தன்னையே கண்டடைகிறது.(16) உண்மையில் அனைத்துப் பொருட்களும் அவற்றைச் சூழ்ந்திருக்கும் இருள் அகன்று தென்படுவதைப் போலவே, ஆத்மாவும் அதனைச் சூழ்ந்திருக்கும் இருள் அகலும்போது தென்படுகிறது[8].(17) நீரில் நகரும் நீர்க்கோழியானது அந்தப் பூதத்தால் நனைக்கப்படாததைப் போலவே விடுதலையடைந்த ஆன்மாவைக் கொண்ட யோகியானவன், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்களின் குறைபாடுகளால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(18) அதே வகையிலேயே, உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் எந்தப் பற்றும் கொள்ளாமல் அவற்றை அனுபவிக்கும் ஞானியும் (பிறரின் வழக்கில் இத்தகைய இன்பத்தால் எழும்) எந்த வகைக் குற்றங்களாலும் களங்கப்படாதிருப்பான்.(19) எவன் செயல்களை முறையாகச் செய்த பிறகு அவற்றைத் தவிர்த்து, உண்மையாக இருப்பிலுள்ள ஆன்மா ஒன்றில் மட்டுமே திளைப்படைகிறானோ, எவன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ[9], எவன் முக்குணங்களில் இருந்து தன்னைத் தனித்திருக்கச் செய்து கொள்வதில் வெல்கிறானோ,(20) அவன் ஆன்மாவால் உண்டாக்கப்படும் புத்தியையும், புலன்களையும் பெறுகிறான்.குணங்கள் ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. எனினும் ஆன்மாவானது, எப்போதும் அவற்றை {குணங்களைப்} புரிந்து கொள்கிறது. ஆன்மாவானது சாட்சியாக இருந்து குணங்களைக் கண்டு, முறையாக அவற்றை இருப்புக்கு அழைக்கிறது. மிக நுட்பமானவையான புத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரண்டிற்கும் இடையிலான இந்த வேறுபாட்டைக் காண்பாயாக.(22) அவற்றில் ஒன்றே {புத்தியே} குணங்களைப் படைக்கிறது. மற்றது {ஆன்மாவானது} அவற்றை ஒருபோதும் படைப்பதில்லை. இயல்பாகவே அவை ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருப்பினும் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றன.(23) நீரில் வாழும் மீனானது, அது வாழும் {நீரெனும்} அந்தப் பூதத்தில் இருந்து வேறானதாகும். ஆனால், மீனும் அதன் வீடான நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும் வகையிலேயே சத்வமும், க்ஷேத்ரஜ்ஞனும் {ஆன்மாவும்} கலந்த நிலையில் ஒன்றாகவே நீடிக்கின்றன. அழுகிய அத்திப்பழத்தில் பிறந்த கொசுவானது, அதனிலிருந்து வேறானதேயன்றி உண்மையில் அஃது அத்தியல்ல. கொசுவும், அத்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைப் போலவே சத்வமும், க்ஷேத்ரஜ்ஞனும் {ஆத்மாவும்} இணைந்திருக்கின்றன.(24) {முஞ்சப்} புற்கட்டில் உள்ள ஒரு புல்லானது, அந்தப் புற்கட்டில் தனித்திருந்தாலும், அதனுடன் கலந்த நிலையில் நீடித்திருப்பதைப் போலவே, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறானவையாக இருப்பினும், தங்கள் சுயத்திலேயே நீடித்து, நிலையாக ஒன்றுகலந்த நிலையிலேயே காணப்படுகின்றன” என்றார் {வியாசர்}.(25)

ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 249-ஞானம் மற்றும் ஞானியின் பெருமைகளைச் சுகருக்கு எடுத்துச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஒருவனைச் சூழ்ந்திருக்கும் பொருட்கள் புத்தியால் படைக்கப்படுகின்றன. ஆன்மாவானது, அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்திருந்து அவற்றைக் கண்காணிக்கிறது. புத்தியே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறது. (பொருட்களின் உற்பத்திக்காக) மூன்று அடிப்படை குணங்களும் மாற்றமடைகின்றன. பலம்பொருந்திய க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவானது, அவற்றுடன் கலக்காமலேயே அவையனைத்தையும் கண்காணிக்கிறது.(1) புத்தியால் படைக்கப்படும் பொருட்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகின்றன. உண்மையில், சிலந்தியானது (தன் உடல் பொருளைக் கொண்டே) இழைகளைப் படைப்பதைப் போலவே, புத்தியால் படைக்கப்படும் பொருட்களும், புத்தியின் இயல்பைக் கொள்கின்றன.(2) யோகம் அல்லது அறிவால் விரட்டப்படும் குணங்கள் இல்லாமல் போவதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அவை சென்ற பிறகு, அவை திரும்புவதற்கான குறியீடுகள் மட்டுமே காணப்படுவதில்லை (ஆனால் அவை உண்மையாக அழிந்ததற்கான எந்தச் சாட்சியமும் கிடையாது). ஞானத்தால் விரட்டப்படும்போது, அவை ஒருபோதும் திரும்பாமல் அழிந்தே போகின்றன என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.(3) ஒருவன் இவ்விரு கருத்துகளையும் முறையாகச் சிந்தித்து, எதைச் சரியென அவன் நினைக்கிறானோ அதன்வழியே சிறப்பாக முயற்சிக்க வேண்டும். அவன் அவ்வழியிலேயே மேம்பட்டு தன் சொந்த ஆன்மாவில் மட்டுமே புகலிடம் கொள்ள வேண்டும்[1].(4)ஆன்மாவானது தொடக்கமும் முடிவுமற்றதாகும். மனிதன் தன் ஆன்மாவை முறையாக அறிந்து கொண்டு, கோபவசப்படாமல், இன்பத்தில் மூழ்காமல், பொறாமையில் இருந்து விடுபட்டவனாகத் திரிந்து செயல்பட வேண்டும்.(5) புத்திப் புலங்களின் செயற்பாட்டில், இருப்பாக விளைவதும், (அறுப்பதற்குக்) கடினமானதும், அறிவால் அழியக்கூடியதுமான முடிச்சை இவ்வழிமுறையின் மூலம் அறுக்கும் ஒருவன், (எந்த நிகழ்விலும்) வருத்தங்கொள்ளாமல், ஐயங்கள் விலகியவனாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(6) இவ்வுலகக் காரியங்களில் கலப்பவர்கள், நிலத்திலிருந்து ஆழமான பெரிய ஆற்றில் விழும் நீச்சல் தெரியாதவர்களைப் போல, உடலாலும் மனத்தாலும் துன்புறுவார்கள்.(7) எனினும் உண்மையை அறிந்த கல்விமான், திடமான தரையில் நடக்கும் ஒருவனைப் போலத் தன்னை உணர்வதால் ஒருபோதும் துன்புறுதவதில்லை. உண்மையில் அவன், அறிவை மட்டுமே குறியீடாகக் கொண்ட சித்-ன் குணத்தை மட்டுமே வெளிப்படுத்தும் ஒன்றாக ஆத்மாவைப் புரிந்து கொள்வதால் ஒருபோதும் துன்புறுவதில்லை.(8)

உண்மையில், அனைத்து உயிரினங்களின் தோற்றத்தையும் மறைவையும், அவற்றின் ஏற்றத்தாழ்வுகளையும், வேறுபாடுகளையும் இவ்வாறு புரிந்து கொள்ளும் ஒருவன், உயர்ந்த இன்பநிலையை அடைவதில் வெல்கிறான்.(9) குறிப்பாக அறத்தையே தன் பிறப்பாகக் கொண்ட பிராமணனுக்கு இந்த அறிவே உடைமையாகும். ஆன்மாவையும், இவ்வாறு சொல்லப்படும் இன்பநிலை ஆகியவற்றின் ஞானங்கள் ஒவ்வொன்றும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கப் போதுமானவையாக இருக்கின்றன.(10) அத்தகைய ஞானத்தை அடைவதால் ஒருவன் கல்விமானாகிறான். ஒரு ஞானியின் குறியீடாக வேறு எது இருக்க முடியும்? அத்தகைய ஞானத்தை அடைந்த பிறகு அவர்களில் விவேகமிக்கவர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதி விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(11)

ஞானமற்ற மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ஞானிகளுக்கு ஒருபோதும் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு ஞானியால் அடையப்படும் அழிவற்ற கதியை விட உயர்ந்த கதி வேறேதும் இல்லை.(12) உண்மையில் ஒருவன், அனைத்துவகைக் குற்றங்களும் நிறைந்த பூமிசார்ந்த இன்பப் பொருட்கள் அனைத்தையும் வெறுப்புடன் காண்பான். பிறரைக் கண்டு அத்தகைய பொருட்களில் இன்பங்கொள்ளும் மற்றொருவன் துயரத்தால் நிறைகிறான். இக்காரியத்தைப் பொறுத்தவரையில், கற்பனையான மற்றும் அதற்கு மாறான இரு பொருட்களையும் அறிந்தவர்கள் ஒருபோதும் துயரில் ஈடுபடாமல் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்பாயாக.(13) கனிகளை எதிர்பாராமல் ஒரு மனிதன் செய்யும் எதுவும், அவனது முற்பிறவிச் செயல்களை அழிக்கும். எனினும், அத்தகைய மனிதன் இப்பிறவியிலும், முற்பிறவியிலும் செய்த செயல்களால் விடுதலைக்கு {முக்திக்கு} வழிகாட்ட முடியாது. மறுபுறம், ஒரு ஞானி செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், முற்பிறவி மற்றும் இப்பிறவியின் செயல்களுக்கு நேரும் இத்தகைய அழிவால் அவனை ஏற்பில்லாத ஒன்றுக்கு (நரகத்திற்கு} வழிநடத்திச் செல்ல முடியாது” என்றார் {வியாசர்}.(14)

ஆத்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 250- கடமைகள் அனைத்திலும் உயர்ந்த தவம்; ஆத்மஞானம்; ஆத்மஞானத்தை அடையும் வழி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “இவ்வுலகில் இருப்பனவற்றில் எந்தக் கடமை உயர்ந்ததோ, கடமைகள் அனைத்திலும் எது முதன்மையானதோ, அதை மதிப்பிற்குரிய நீர் எனக்குச் சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.(1)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “புராதானத் தோற்றுவாயைக் கொண்டவையும், முனிவர்களால் விதிக்கப்பட்டவையும், அனைத்திற்கும் மேலாகத் தனித்திருப்பவையுமான கடமைகளை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு தீய பழக்கங்களில் வீழக்கூடிய அனுபவமற்ற பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு தந்தையைப் போல, பித்துக் கொள்ளச் செய்யும் புலன்களைப் புத்தியின் மூலம் கவனமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.(3) தகுதியற்ற அனைத்துப் பொருட்களில் இருந்து மனத்தையும், புலன்களையும் விலக்கிக் கொள்வதும், (தகுந்த பெருட்களில்) முறையாகக் கவனத்தைக் குவிப்பதுமே உயர்ந்த தவமாகும். அதுவே கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில் அதுவே உயர்ந்த கடமையாகச் சொல்லப்படுகிறது.(4)

ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களைப் புத்தியின் துணை கொண்டு, எண்ணற வகைச் சிந்தனைகளைத் தூண்டுந்தன்மை கொண்ட உலகப் பொருட்களைக் குறித்துச் சிந்திக்காமல், ஒருவன் தன்னிலேயே நிறைவை அடைந்து வாழ வேண்டும்.(5) புலன்களும் மனமும், வழக்கமாகத் தறிகெட்டு ஓடும் மேய்ச்சல் இடங்களில் இருந்து விலக்கப்பட்டு, தங்களுக்கு உரிய வசிப்பிடத்தில் அவற்றை வசிக்கச் செய்யும் போதுதான் நித்தியமானதையும், பரமாத்மாவையும் நீ உனக்குள்ளேயே காண்பாய்[1].(6) ஞானம் கொண்ட உயர் ஆன்ம பிராமணர்கள், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்பாகவும், உயர்ந்ததாகவும் அண்ட ஆன்மாவாகவும் இருக்கும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(7) எண்ணற்ற கிளைகளையும், பல மலர்கள் மற்றும் கனிகளையும் கொண்ட ஒரு பெரிய மரமானது, தன்னுடைய எந்தப் பகுதியில் மலர்களையும், எந்தப் பகுதியில் கனிகளையும் கொண்டிருக்கிறது என்பதை அறியாததைப் போலவே,(8) ஆன்மாவும் {புத்தியும்}, பிறப்பு மற்றும் பிற குணங்களால் மாற்றமடைந்து, அஃது எங்கிருந்து வந்தது? எங்குச் செல்லப்போகிறது என்பதை அறியாமல் இருக்கிறது[2].(9) ஒருவன் ஞானம் எனும் விளக்கின் துணையால் தன் ஆன்மாவைக் காண்கிறான். எனவே, உன்னை உன்னிலேயே கண்டு, உனது உடலை நீ என்று கருதுவதை நிறுத்தி, அனைத்தையும் அறிந்த நிலையை அடைவாயாக.(10)சட்டையை உரித்த பாம்பைப் போலப் பாவங்கள் அனைத்தையும் கழுவிய ஒருவன், இங்கேயே உயர்ந்த புத்தியை அடைந்து, ஒவ்வொரு கவலையில் இருந்தும், (மறுபிறவியில்} புதிய உடலை அடையும் கடப்பாட்டில் இருந்தும் வடுபடுகிறான்.(11) பல்வேறு திசைகளில் பரந்து விரிந்து ஓடும் நீரோட்டங்களைக் கொண்டதும், தன் போக்கில் இவ்வுலகைச் சுமந்து செல்வதுமான வாழ்வெனும் ஆறு அச்சம்நிறைந்ததாக இருக்கிறது. ஐம்புலன்களே அதன் முதலைகளாக இருக்கின்றன. மனமும், அதன் காரணமும் கரைகளாக இருக்கின்றன.(12) பேராசையும், தீர்மான மயக்கமும் அதை மறைத்து மிதக்கும் புல்லாகவும், துரும்பாகவும் இருக்கின்றன. காமமும், கோபமும், அதனில் வாழும் சீற்றமிகு பாம்புகளாக இருக்கின்றன. வாய்மை அதன் சேறுநிறைந்த கரைகளில் தீர்த்தமாக அமைந்திருக்கிறது.(13) புலப்படாததிலிருந்து பிறக்கும் அதன் நீரோட்டம் வேகமானதாகவும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் கடக்க முடியாததாகவும் இருக்கிறது. நீ புத்தியின் துணை கொண்டு, ஆசைகளையே முதலைகளாகக் கொண்ட அந்த ஆற்றைக் கடப்பாயாக.(14) உலகமும், அதன் காரியங்களும் அந்த ஆறு எதை நோக்கி ஓடுமோ அந்தப் பெருங்கடலாக இருக்கிறது. உயிரினங்களும், பேருயிரினங்களும், ஒருவராலும் புரிந்து கொள்ளப்பட முடியாத அதன் ஆழமாக இருக்கின்றன. ஓ குழந்தாய், அந்த ஓடையானது ஒருவனின் பிறப்பையே தோற்றுவாயாகக் கொண்டிருக்கிறது. வாக்கே அதன் சுழல்களாகும். கடப்பதற்கு அரிதான அதை,(15) கல்வி, ஞானம் மற்றும் புத்தியைக் கொண்ட மனிதர்களே கடக்கிறார்கள்.

அதைக் கடந்து, அமைதியான இதயத்தை அடைந்து, ஆன்மாவை அறிந்தவனாக, ஒவ்வொரு தன்மையிலும் தூய்மையடைந்தவனாக, ஒவ்வொரு பற்றில் இருந்தும் விடுபடுவதில் வெற்றியடைவாயாக.(16) தூய்மையடைந்த, மேன்மையான புத்தியைச் சார்ந்து, பிரம்மமாகவே ஆவதில் நீ வெல்வாயாக. ஒவ்வொரு உலகப் பற்றிலிருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவை அடைந்து, ஒவ்வொரு வகை பாவத்தையும் கடந்து,(17) மலையுச்சியில் இருந்து பூமியின் பரப்பில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களைக் காணும் ஒருவனைப் போல நீ இந்த உலகைக் காண்பாயாக. கோபத்துக்கோ, மகிழ்ச்சிக்கோ வசப்படாமல், கொடூரமான ஆசை எதையும் அமைத்துக் கொள்ளாமல், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும், அழிவையும் காண்பதில் வெற்றியடைவாயாக.(18) ஞானம் கொண்ட மனிதர்கள், இத்தகைய செயலையே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறார்கள். உண்மையில், அறவோரில் முதன்மையானோராலும், உண்மையை அறிந்த தவசிகளாலும், வாழ்வெனும் ஆற்றைக் கடக்கும் இச்செயலே ஒருவன் நிறைவேற்ற வேண்டிய அனைத்து செயல்களிலும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.(19) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மாவைக் குறித்த இந்த அறிவே, ஒருவனுடைய மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதெனக் கருதப்படுவதாகும். புலன்களைக் கட்டுப்படுத்தி, நேர்மையான நடத்தையுடனும், அடக்கம் அல்லது பணிவுடனும் இருக்கும் ஒருவனுக்கு இதை {இந்த அறிவை} மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(20)

ஓ! குழந்தாய், நான் இப்போது உன்னிடம் சொன்னதும், ஆன்மாவின் மூலமே உண்மையாகச் சாட்சி காணப்படுவதுமான இந்த ஆன்ம அறிவானது, புதிர்கள் அனைத்திலும் பெரியதும், ஒருவன் அடையக்கூடியதிலேயே மிக உயர்ந்த அறிவுமாகும்.(21) ஆண், பெண், அலி என்ற பாலினமேதும் பிரம்மத்திற்குக் கிடையாது. அதற்குத் துன்பமோ இன்பமோ கிடையாது. அது தன் சாரமாகக் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தைக் கொண்டிருக்கிறது.(22) பிரம்ம அறிவை அடைபவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ, எந்தப் பாலினமாகவோ இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மறுபிறப்பை அடைய வேண்டியதில்லை. மறுபிறவியைத் தவிர்க்கும் நிலையை அடைவதற்காக இந்தக் கடமை (யோகக் கடமை) மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(23) இக்காரியத்தில் பல்வேறு தவசிகளின் சொன்ன பல்வேறு மேம்பட்ட கருத்துகள் வழிவகுக்கும் வகையிலேயே உன் கேள்விக்குப் பதிலளிக்க நான் பயன்படுத்திய இந்த வார்த்தைகளும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும். இக்காரியம் எவ்வாறு விளக்கப்பட வேண்டுமோ அவ்வகையிலேயே நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன். அக்கருத்துகள் சில வேளைகளில் கனியை உண்டாக்கின்றன, சில வேளைகளில் உண்டாக்குவதில்லை. (எனினும், நான் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் வேறுவகையைச் சார்ந்தவை, ஏனெனில், இவை நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும்).(24) ஓ! நற்குழந்தாய், இந்தக் காரணத்தினாலேயே, நிறைவு, தகுதி மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மகன் அல்லது ஒரு சீடனால் கேட்கப்படும்போது, ஓர் ஆசான் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், என் மகனான உனது நன்மைக்காக என்னால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட்ட இந்தப்போதனைகளை, உண்மையில் உள்ளது உள்ளபடியே அவனது மனத்தில் ஆழப் பதிய வைக்க வேண்டும்” என்றார் {வியாசர்}.(25)

வைராக்யம்! – சாந்திபர்வம் பகுதி – 251-எவன் பிராமணன்? பிராமண நிலையை அடைவதெவ்வாறு? முக்திக்கு வழிவகுக்கும் மனோவுறுதி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மணம், சுவை மற்றும் பிறவகை இன்பங்களில் ஒருவன் எந்தப் பற்றையும் வெளிக்காட்டக்கூடாது. மேலும் அவன் ஆபரணங்களையும், மணம் மற்றும் சுவைப் புலன்களால் நுகரும் பிற பொருட்களையும் ஏற்கக் கூடாது. அவன் கௌரவம், சாதனை மற்றும் புகழில் பேராசை கொள்ளக்கூடாது. கருத்துடைய பிராமணனின் ஒழுக்கம் இதுவேயாகும்.(1) வேதங்கள் அனைத்தையும் கற்று, தன் ஆசானிடம் கடமையுணர்வுடன் பணி செய்து, பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனும், ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்கள் அனைத்தையும் அறிந்தவனுமான ஒருவன் மறுபிறப்பாளன் {பிராமணன்} ஆகமாட்டான்[1].(2) அனைத்து உயிரினங்களிடமும் சொந்தக்காரனைப் போல நடந்து கொள்பவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவனே வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஆசையற்றவனாக, (ஆத்ம ஞானத்தில் நிறைவடைந்தவனாக) இருக்கும் ஒருவன் ஒருபோதும் இறப்பதில்லை. இத்தகைய ஒழுக்கமும், இத்தகைய மனோநிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.(3) கருணையற்றவனாகவும், ஆசையைக் கைவிடாதவனாகவும் இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தக்ஷிணையுடன் கூடிய பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே பிராமண நிலையை அடைந்துவிடமுடியாது. அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும் ஒருவன் நிறுத்தும்போதும், எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் இருக்கும்போதும், அவன் பிராமண நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(5)

எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் ஒருவன் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும்போது அவன் பிராமண நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(6) இவ்வுலகில் ஆசைப் பிணைப்பு என்ற ஒரே வகையின்றி வேறு பிணைப்பேதும் கிடையாது. அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் பிராமண நிலையை அடைகிறான்.(7) இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்ட ஞானியானவன், களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.(8) அனைத்து வகை ஆசைகளையும் மனத்துக்குள் நுழைத்துக் கொள்ளும் ஒருவனால் கூட, பல்வேறு ஆறுகள் பாய்ந்தும் தன் எல்லைகளைப் பெருக்கிக் கொள்ள இயலாத பெருங்கடலைப் போன்ற அமைதியை அடையலாம்; ஆனால் பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் ஆசையைப் பேணி வளர்த்துக் கொள்பவனால் அமைதியை அடையவே முடியாது.(9) அத்தகைய மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனிவதன் விளைவால் மகிழ்ச்சியை அடைகிறான்; ஆனால் பூமி சார்ந்த பொருட்களில் ஆசையைப் பேணி வளர்ப்பவனால் அம்மகிழ்ச்சியை அடையவே முடியாது. பின்னவன் சொர்க்கத்தையே அடைந்தாலும், அதனிலிருந்து வீழவே நேரிடும்.(10)

வேதங்கள், உண்மையைத் தங்கள் மறைபொருளாகக் கொண்டுள்ளன. உண்மை, புலனடக்கத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டிருக்கிறது. புலனடக்கம், ஈகையைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. ஈகை, தவத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது.(11) தவம், துறவைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. துறவு, மகிழ்ச்சியைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. மகிழ்ச்சி, சொர்க்கத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. சொர்க்கம், அமைதியைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது[2].(12) நீ மனநிறைவை அடைவதற்காக, மதிப்புமிக்க உடைமையும், விடுதலையை {முக்தியைச்} சுட்டுவதும், துன்பம் மற்றும் ஆவலுடன் {எதிர்பார்ப்புடன்} கூடிய ஐயங்கள் அல்லது நோக்கங்கள் அனைத்தையும் சுடுவதும் {எரிப்பதும்}, இறுதியில் அவற்றை முற்றாக அழிப்பதுமான அமைதியான புத்தியை அடைய விரும்ப வேண்டும்[3].(13) மனநிறைவு, துயரின்மை, பற்றிலிருந்து விடுதலை, அமைதி, உற்சாகம், பொறாமையில் இருந்து விடுதலை ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள், அல்லது நிறைவடைவார்கள்[4].(14) உடலின் நனவுநிலைகள் அனைத்தையும் கடந்தவர்கள், சத்வ குணத்தோடு இருக்கும்போது, உடலுக்குள் வசிப்பதும், (ஏற்கனவே சொல்லப்பட்ட வேதங்கள், உண்மை முதலிய) ஆறு காரியங்களின் துணையுடனும், (கல்வி, தியானம் மற்றும் யோகம் ஆகிய) இன்னும் மூன்று காரியங்களின் துணையுடனும் ஞானிகளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதுமான ஆன்மாவை அறிந்து, விடுதலையை அடைவதில் வெல்கிறார்கள்.(15)உடலுக்குள் தலைமை கொள்வதும், பிறப்பு மற்றும் இறப்பு எனும் பண்புகளற்றதும், தன்னியல்பிலேயே நிலைத்திருப்பதும், தூய்மைப்படுத்தும் எந்தச் செயலும் தேவைப்படாத குணங்களற்ற நிலையில் இருப்பதும், பிரம்மத்தைப் போன்றதுமான ஆன்மாவைப் புரிந்து கொள்வதன் மூலம் ஞானியானவன், முடிவை அறியாத பேரின்பத்தை அடைகிறான்.(16) அனைத்துத் திசைகளிலும் திரியும் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவில் மொத்தமாக நிலைக்கச் செய்வதன் மூலம் ஞானி அடையும் நிறைவானது, வேறு எந்த வழிமுறைகளினாலும் எவனாலும் அடையப்பட முடியாததாகும்.(17) வெறுமையான வயிற்றோடு இருப்பவனை எது நிறைவடையச்செய்யுமோ, ஏழ்மையில் இருப்பவனை எது நிறைவடையச்செய்யுமோ, பசையற்ற அங்கங்களைக் கொண்டவனை எது பலமடையச் செய்யுமோ, அதை {பிரம்மத்தை} அறிந்தவனே உண்மையில் வேதங்களை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) தகுதியற்ற ஈடுபாட்டில் இருந்து முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட தன் புலன்களை நிறுத்தி, தியான யோகத்தில் ஈடுபட்டு வாழும் ஒருவனே பிராமணனாகச் சொல்லப்படுகிறான். அத்தகையவன் பிறரைக் காட்டிலும் புகழ்பெற்றவன் எனச் சொல்லப்படுகிறான். அத்தகையவன் தன் ஆன்மாவில் இருந்து இன்பத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறான்.(19)

ஆசைகளைக் குறைத்து, இருப்பில் உள்ள உயர்ந்த காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவனைப் பொறுத்தவரையில், அவனது மகிழ்ச்சியானது, (வளர்பிறைச்) சந்திரனைப் போலத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.(20) அந்தப் பேரின்ப நிலையானது, திரள் மற்றும் நுட்பமான இருவகைப் பூதங்களையும், மகத்தையும், புலப்படாததையும் {பிரகிருதி / அவ்யக்தத்தையும்} கடந்த யோகியின் துயரங்களை, இருளை விலக்கும் சூரியனைப் போல அகற்றும்[5].(21)செயல்களைக் கடந்தவனும், குண அழிவைக் கடந்தவனும், உலகம்சாந்த பொருட்களில் பற்றில்லாதவனுமான ஒரு பிராமணனை முதுமையும், மரணமும் அடைவதில்லை.(22) உண்மையில், யோகியானவன் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பற்று மற்றும் வெறுப்பு ஆகிய இரண்டையும் கடந்த நிலையில் வாழும்போது, அவன் இவ்வாழ்விலேயே தன் புலன்களையும், அவற்றுக்குரிய பொருட்கள் அனைத்தையும் கடப்பதாகச் சொல்லப்படுகிறான்.(23) பிரகிருதியைக் கடந்து உயர்ந்த காரணத்தை அடைந்த யோகி, அந்த உயர்ந்ததை அடைந்ததன் விளைவால் இவ்வுலகத்திற்குத் திரும்பும் கடப்பாட்டில் இருந்து விடுபடுகிறான்” என்றார் {வியாசர்}.(24)

புலன்கள், தன்மாத்திரைகள், பூதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 252-புலன்கள், தன்மாத்திரைகள் மற்றும் ஐம்பூதங்களுக்கிடையில் உள்ள உறவு; ஐம்பூதங்களின் குணங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, அறம், பொருள் ஆகிய இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிய ஒரு சீடனிடம், திறம்பெற்ற ஓர் ஆசான் அத்யாத்மா குறித்து முன்சொன்ன பகுதியில் சொல்லப்பட்ட அனைத்தையும் முதலில் சொல்ல வேண்டும்.(1) ஐந்து பொருட்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, ஒளி, நீர், ஐந்தாவதாகக் கணக்கிடப்படும் பூமி, பாவம், அபாவம் ஆகியற்றைக் கொண்டுள்ளது[1].(2) வெளியானது {நிரம்பாமல்} வெறுமையாக இருக்கும் இடைவெளியாகும். கேள்விப் புலன்கள் வெளியைக் கொண்டிருக்கின்றன. வடிவம் கொண்ட பொருள்களின் அறிவியலை அறிந்தவர்கள், வெளியானது ஒலியைத் தன் குணமாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.(3)

(இடம்பெயர்வதில் துணைபுரியும்) கால்கள், காற்றையே {வாயுவையே} தங்கள் சாரமாகக் கொண்டுள்ளன. முக்கிய மூச்சுக்காற்றுகள் காற்றாலானவையாகும்.

ஊறுபுலன் {தீண்டலை உணரும் புலன்} (தோல்) தீண்டலைத் தன் குணமாகக் கொண்டுள்ளது.(4)

வெப்பம், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு, அனைத்துப் பொருட்களைக் காணும் ஒளி, உடலில் உள்ள சூடு, ஐந்தாவதாகக் கண் ஆகியன அனைத்தும் பல்வேறு நிறவடிவங்களைத் தன் குணமாகக் கொண்ட ஒளியாகும்.(5)

வெளியேறும் திரவங்கள் {வியர்வை, சிறுநீர்}, பசை, அனைத்து வகைத் திரவங்கள் ஆகியன நீராகும். குருதி, மஜ்ஜை, (உடலுக்குள்) பசையுடன் இருக்கும் அனைத்தும் நீரைத் தங்கள் சாரமெனக் கொண்டவையாக அறியப்பட வேண்டும். சுவைப்புலன் நாவாகும், சுவையானது நீரின் குணமாகக் கருதப்படுகிறது.(6)

எலும்புகள், பற்கள், நகங்கள், தாடி, உடலில் உள்ள முடிகள், தலை முடி, நரம்புகள், தசைநார்கள், தோல் ஆகியவற்றைப் போலவே திடப்பொருட்கள் அனைத்தும் பூமியாலானவை.(7)

மூக்கு மணப்புலனாக அழைக்கப்படுகிறது. அப்புலனின் நுகர் பொருளான மணமே பூமியின் குணமாக அறியப்பட வேண்டும்.(8)

அடுத்தடுத்த பூதங்கள் ஒவ்வொன்றும், தன் குணத்தையும் தவிர, தனக்கு முந்தைய பூதத்தின் குணத்தையும் பெற்றிருக்கின்றன. வாழும் உயிரினங்கள் அனைத்திலும், (அவித்யை {அறியாமை}, காமம் {ஆசை}, கர்மம் {செயல்} என்ற மூன்று) அடிப்படை காரியங்களும் இருக்கின்றன. ஐம்பூதங்களையும், அவற்றின் விளைவுகளையும், அவற்றில் இருந்து பாயும், அல்லது அவற்றுக்குச் சொந்தமான குணங்களையும் முனிவர்கள் இவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.(9)

{ஐம்பூதங்கள் மற்றும் மூன்று காரியங்களைப் பொறுத்த} கணக்கீட்டில் மனமானது ஒன்பதாவதாக அமைகிறது, புத்தியானது பத்தாவதாகக் கருதப்படுகிறது. முடிவிலியாக உள்ள ஆன்மாவானது பதினொன்றாவதாக அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் உயர்ந்தவையாகச் சொல்லப்படுகின்றன.(10) மனமானது ஐயத்தைத் தன் சாரமாகக் கொண்டுள்ளது. புத்தியானது, பகுத்தறிந்து, நிச்சயத்தன்மையை உண்டாக்குகிறது. (ஏற்கனவே முடிவிலியாகச் சொல்லப்பட்ட) ஆன்மாவனது, செயல்களில் இருந்து பெறப்பட்ட விளைவுகள் மூலம் உடல்படைத்த ஜீவன் (அல்லது ஜீவாத்மன்) என அழைக்கப்படுகிறது[2].(11) உயிரினங்கள் அனைத்தும், காலத்தைத் தங்கள் சாரமாகக் கொண்ட இவை அனைத்தையும் கொண்டிருந்தாலும், {முன் சொன்னவற்றால்} அவற்றால் களங்கப்படாதனவாக அவற்றை {அந்த உயிரினங்களைப்} பார்க்கும் மனிதன், குற்றத்தால் பாதிப்படைந்த செயல்களை ஒருபோதும் தொடர வேண்டியிருக்காது {ஒருபோதும் செயல்களில் கலக்கமடைய வேண்டியதில்லை}[3]” என்றார் {வியாசர்}.(12)

யோகதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 253-யோகதர்மம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “சாத்திரங்களை அறிந்தோர், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் துணை கொண்டு, நுண்ணியவுடலை உடுத்திக் கொண்டதும், மிக நுட்பமானதும், திரள் உடலுக்குள் வசித்துக் கொண்டே அதனுடன் தொடர்பறுந்த நிலையில் இருப்பதுமான ஆத்மாவைக் காண்கிறார்கள்[1].(1) அடர்த்தியான திரளாக ஆகாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் திரியும் சூரியக் கதிர்களின் இருப்பை அறிவால் உள்ளுணர முடியுமென்றாலும் வெறுங்கண்களுக்கு அவை தெரியாததைப் போலவே, இருப்பிலுள்ளவை {உயிரினங்கள்} தங்கள் திரள் உடல்களில் இருந்து விடுபட்டு அண்டத்தில் திரிந்து கொண்டிருப்பதைக் காண்பது மனிதக் கண்களின் உற்றறியும் திறனுக்கு அப்பாற்பட்டதாகும்[2].(2) சூரியனின் பிரகாசமான வட்டில் நீரின் எதிரொளியில் {பிரதிபிம்பத்தில்} தென்படுவதைப் போலவே, யோகியும் திரளுடல்களினுள் இருப்பிலுள்ள சுயத்தை அதன் எதிரொளியில் காண்கிறான்.(3)மேலும் நுண்ணிய உடல்களில் பொதிந்திருக்கும் அந்த ஆன்மாக்கள் அனைத்தும், தாங்கள் வசித்த திரள் உடல்களில் இருந்து விடுபட்ட பிறகு, புலன்களை அடக்கியவர்களும், ஆன்ம அறிவைப் பெற்றவர்களுமான யோகிகளால் உணரத்தக்கனவாக இருக்கின்றன. உண்மையில் யோகிகள் தங்கள் ஆன்மாக்களின் துணையுடனே புலப்படாத அப்பொருட்களைக் காண்கின்றனர்.(4) பகலில் இரவு போலும், இரவில் பகலைப் போலும் உறங்கிக் கொண்டிருந்தாலும், விழித்துக் கொண்டிருந்தாலும், புத்தி, ரஜஸில் பிறந்த செயல்கள், யோகம் தரும் பலம் ஆகியவற்றால் உண்டான அனைத்தையும் கைவிட்டு யோகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், தங்கள் லிங்க வடிவத்தை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறார்கள்.(5,6)

அத்தகைய யோகியரில் வசிப்பதும், எப்போதும் (மகத், நனவுநிலை {அகங்காரம்}, ஐந்து அடிப்படை புலன்களின் ஐந்து தன்மாத்திரைகள் உள்ளிட்ட) நுட்பமான ஏழு காரியங்களுடன் கூடியதுமான ஜீவனானது, முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டு, அருள் உலகங்கள் அனைத்திலும் உலவிக் கொண்டிருக்கிறது. “எப்போதும்” என்றும் “மரணத்தில் இருந்து விடுபட்டு” என்றும் பொதுவான பேச்சு வழக்கிலேயே நான் சொல்கிறேன். ஏனெனில் உண்மையில் அந்த லிங்க வடிவமும் தற்காலிகமானதே.(7) எனினும், (அவற்றைக் கடக்க இயலாமல்) மனம் மற்றும் புத்தியின் ஆதிக்கத்தில் இருக்கும் மனிதன், தன் கனவுகளில் கூடத் தன் உடலின் வடிவத்தையும், பிறவற்றையும் பகுத்துப்பார்த்து, இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்.(8) ஆம், அவனது கனவுகளில் கூட அவன் இன்பத்தையும் துன்பத்தை அனுபவிக்கிறான்; கோபம் மற்றும் பேராசையின் வசப்பட்டு அவன் பல்வேறு வகைப் பேரிடர்களைச் சந்திக்கிறான்.(9)

அவனது கனவுகளில் அவன் பெருஞ்செல்வத்தை அடைந்து பெரும் நிறைவை உணர்கிறான்; விழித்திருக்கும் வேளைகளில் போலவே அவன் தகுதிமிக்கச் செயல்களைச் செய்கிறான், பார்க்கிறான் (கேட்கிறான், இன்னும் பிறவற்றையும் செய்கிறான்).(10) கருப்பைக்குள்ளும், அதிகமான உள் வெப்பத்துக்கு மத்தியிலும் கிடக்க வேண்டியதும், முழுமையாகப் பத்து மாதங்களை அவ்விடத்திலேயே கடத்த வேண்டியதுமான ஜீவனானது, வயிற்றுக்குள்ளேயே உணவைப் போலச் செரித்து அழியாமல் போவதைக் காண்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.(11) உயரொளியுடன் கூடிய பரமாத்மாவின் ஒரு பகுதியும், அனைத்து உயிரினங்களின் இதயங்களுக்குள் கிடப்பதுமான ஜீவாத்மாவானது, தங்கள் திரளுடலுக்குள் இருப்பதைக் காண்பதில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கிய மனிதர்கள் ஒருபோதும் வெல்வதில்லை.(12)

ஆன்மாவை (ஆன்மாவைக் குறித்த அறிவை) அடையும் நோக்கத்தில் யோக அறிவியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், உயிரற்ற திரள் உடலையும், உணரப்பட முடியாத லிங்க உடலையும், அண்ட அழிவின் போதும் அழியாத காரண உடலையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(13) நான்காவது வாழ்வுமுறை (அல்லது சந்நியாச{ஆசிரம}ம்) உள்ளிட்ட பல்வேறு வாழ்வுமுறைகளில் விதிக்கப்பட்ட கடமைகளில், யோகத்தைத் தங்களில் முதன்மையானதாகக் கொண்டவையும், மனம் மற்றும் புத்தியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நிறுத்துபவையுமான நான் சொன்ன இவை {இந்தக் கடமைகள்} (சாந்தோக்ய உபநிஷத்தில்) சாண்டில்யரால் விதிக்கப்பட்டவையாகும்[4].(14) (மனத்தின் பொருட்களான புலன்கள், மனம், புத்தி, மஹத், புலப்படாதது அல்லது பிரகிருதி மற்றும் புருஷன் உள்ளிட்ட) ஏழு நுட்பமான காரியங்களைப் புரிந்து கொண்டும், (அனைத்தின் அறிவு, மனநிறைவு, அளவற்ற அறிவு, சார்பற்ற நிலை {சுதந்திரம்}, நித்திய விழிப்புத்தன்மை, எல்லையற்ற ஆற்றல் என்ற) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த காரணத்தை {சகுன பிரம்மத்தைப்} புரிந்து கொண்டும், முக்குணங்களுடன் கூடிய அவித்யையின் மாறுபாடே அண்டம் என்பதையும் இறுதியாகப் புரிந்து கொள்ளும் ஒருவன், (சாத்திரத்தின் மூலம் வழிநடத்தப்பட்டு) உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைவதில் வெல்கிறார்” என்றார் {வியாசர்}.(15)

புத்தியும், மனமும்! – சாந்திபர்வம் பகுதி – 254-ஆசையை வெல்லும் காரியம் குறித்தும், மனம், புத்தி, புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மனிதனின் இதயத்தில் ஆசை {காமம்} என்றழைக்கப்படும் ஆச்சரியமான ஒரு மரம் இருக்கிறது. அது பிழை {மோகம்} என்றழைக்கப்பட்ட வித்தில் இருந்து பிறந்ததாகும். கோபமும், செருக்கும் அதன் பெரிய அடிமரமாக இருக்கின்றன. செயல்பாட்டு விருப்பம், (அதை வளர்க்கும் நீரைத் தக்க வைத்துக் கொள்ள) அதனடியைச் சுற்றி வடிநிலமாக {பாத்தியாக} இருக்கிறது.(1) அறியாமையே அம்மரத்தின் வேராகும், கவனமின்மை அதற்கு ஊட்டமளிக்கும் நீராக இருக்கிறது. பொறாமை அதன் இலைகளாக இருக்கிறது. முற்பிறவிகளின் தீச்செயல்கள் அதற்கு உயிர்வளத்தைக் கொடுக்கிறது.(2) தீர்மானமிழப்பு {மயக்கம்} மற்றும் கவலை ஆகியன அதன் கொப்புகளாக இருக்கின்றன; துயரம் அதன் பெரும் கிளைகளாக அமைகின்றன; அச்சம் அதன் முளையாக இருக்கிறது. (வெளிப்படையாகப் பல்வேறு பொருள்களில் உள்ள) ஏற்புடைய தாகம் அனைத்துப் புறத்தில் அதன் சுற்றிப் பிணைக்கும் கொடிகளாக அமைகிறது.(3)

இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்ட பேராசை கொண்ட மனிதர்கள், கனிகொடுக்கும் அம்மரத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டு, அதனிடமிருந்து கனியைப் பெறும் எதிர்பார்ப்பில் அதற்குத் தங்கள் வணக்கங்களைச் செலுத்துகின்றனர்.(4) எவன் அந்தச் சங்கிலிகளை வென்று, அம்மரத்தை வெட்டி, இன்ப துன்பம் இரண்டையும் கைவிட முயற்சிக்கிறானோ அவன் இரண்டு கதியையும் அடைவதில் வெல்கிறான்.(5) புலன்நுகர் பொருட்களில் ஈடுபடுவதன் மூலம் இம்மரத்தை வளர்க்கும் மூடன், விஷமுள்ள மருந்து நோயாளியை அழிப்பதைப் போலவே அவன் ஈடுபாடு காட்டும் {புலன் நுகர்} பொருட்களாலேயே அழிகிறான்.(6)

எனினும், கைத்திறன்மிக்க ஒருவன், யோகத்துணையின் மூலம் வலுவடைந்தவனாக, அடியாழம் வரை செல்லும் அம்மரத்தின் வேரை சமாதி எனும் வாளால் வெட்டி வீழ்த்துகிறான்.(7) கனியில் உள்ள விருப்பத்தால் மட்டுமே செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கதியையும் மறுபிறவி அல்லது கட்டும் சங்கிலி என அறிந்த ஒருவன், கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(8) உடல் ஒரு நகரமாகச் சொல்லப்படுகிறது. புத்தியே அதன் தலைவியாக {அரசியாகச்} சொல்லப்படுகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, தீர்மானிப்பதையே முக்கியச் செயலாகக் கொண்ட அந்தத் தலைவியின் அமைச்சராகச் சொல்லப்படுகிறது.(9)

மனத்தால் (தலைவியின் தொண்டில்) ஈடுபடுத்தப்படும் புலன்களே அதன் குடிகளாகும். அந்தக் குடிகளைப் பேணி வளர்ப்பதற்காக மனமானது பல்வேறு வகைச் செயல்களில் பலமான விருப்பத்தை வெளிக்காட்டுகிறது. அச்செயல்களின் காரியத்தில் தமஸ், ரஜஸ் எனும் இரு பெரும்பிழைகள் காணக்கிடைக்கின்றன[1].(10) அச்செயல்களின் கனிகள், (மனம், புத்தி மற்றும் நனவுநிலை என்ற) அந்நகரின் தலைவர்களோடு கூடிய குடிகளிடமே இருக்கின்றன. (ஏற்கனவே சொல்லப்பட்ட) இரு பிழைகள், தடைசெய்யப்பட்ட வழிமுறைகளின் மூலம் நிறைவேறப்பட்டும் அச்செயல்களின் கனிகளிலேயே வாழ்கின்றன.(11) இவ்வாறிருக்கையில், (ரஜஸாலோ, தமஸாலோ) வெல்லப்படமுடியாத புத்தியானது, (தனக்குத் தொண்டாற்றும் மனத்தின் அளவுக்குக் களங்கமடைந்து அந்த) மனத்திற்கு இணையான ஒரு சமநிலைக்கு இறங்குகிறது. களங்கப்பட்ட மனத்தால் கலக்கமடையும் புலன்களும் தங்கள் நிலையுறுதியை இழக்கின்றன.(12)

புத்தியானது (நன்மையெனக் கருதி) அடைய விரும்பும் பொருட்கள் துன்பத்தை உண்டாக்குவதாக அமைந்து இறுதியில் அழிவைக் கொண்டு வருகிறது. அழிவடைந்த பிறகு, மனத்தால் மீண்டும் நினைத்துப் பார்க்கப்படும் அப்பொருட்கள், அவ்வாறே அழிந்த பிறகும் மனத்தைப் பீடிக்கின்றன.(13) மனமானது, தீர்மானிக்க முடியாத நிச்சயத்தன்மையற்ற உணர்வுகளை அடையும் தன் முக்கியச் செயல்பாட்டைச் செய்யும்வரையில் மட்டுமே புத்தியில் இருந்து வேறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் உண்மையில் மனமும் புத்தியும் ஒன்றாகவே இருக்கின்றன. புத்தியில் (துன்பத்தையும், அனைத்து வகைத் தீமைகளையும் மட்டுமே உண்டாக்கியபடி) இருக்கும் ரஜஸ், நிலைக்கண்ணாடியில் உள்ள பிம்பத்தைப்போல ரஜஸால் களங்கப்பட்ட புத்தியில் கிடக்கும் ஆன்மாவை அப்போது மறைக்கிறது[2].(14) மனமே ரஜஸுடன் முதலில் நட்பில் கலக்கிறது. அவ்வாறு தன்னைக் கலந்த பிறகு, (பகைவனுடன் சதியில் ஈடுபடும் போலி அமைச்சன் மன்னனையும் அதன் குடிமக்களையும் கைப்பற்றுவதைப் போல) ஆன்மா, புத்தி மற்றும் புலன்களைக் கைப்பற்றிப் பற்றி, அவற்றை (மனம் எதனுடன் கலந்ததோ அந்த) ரஜஸிடமே அளிக்கிறது” என்றார் {வியாசர்}”.(15)

எழுபத்தோரு தனியுருக்கள்! – சாந்திபர்வம் பகுதி – 255-ஐம்பூதங்களின் ஐம்பது குணங்களையும், மனத்தின் ஒன்பது குணங்களையும், புத்தியின் ஐந்து குணங்களையும், ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய எழுபத்தோரு தனியுருக்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே, பூதங்களின் கணக்கீட்டைக்குறித்துத் தீவிற்பிறந்த முனிவரின் {துவைபாயனரின் / வியாசரின்} உதடுகளிலிருந்து விழுந்த வார்த்தைகளை மிக்கப் பெருமையுடன் மீண்டும் கேட்பாயாக.(1) (அறியாமைகள் அனைத்தையும் கடந்து) சுடர்மிக்க நெருப்பைப் போல இருந்த அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, புகையால் மூடப்பட்ட நெருப்புக்கு ஒப்பான தனது மகனிடம் {சுகரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மகனே, அவர் சொன்னவற்றில் கற்பிக்கப்பட்ட நானும் கூட (அறியாமையை அகற்றும்) அந்தக் குறிப்பிட்ட ஞானத்தை மீண்டும் விளக்கப் போகிறேன்.(2)

அசையாமை, கனம், கடினத்தன்மை, படைக்குந்தன்மை, மணம், அடர்த்தி, அனைத்து வகை மணங்களையும் ஈர்க்கும் வல்லமை, இணக்கம் {பிணைப்பு}, (காய்கறிகள் மற்றும் விலங்குகளைப் பொறுத்தவரையில்) வசிக்கும்தன்மை, பொறுமை அல்லது தாங்கிக் கொள்ளும் வல்லமை என்றழைக்கப்படும் மனப்பண்பு ஆகியவை பூமியின் குணங்களாகும்.(3)

குளிர்ச்சி, சுவை, ஈரம், நீர்மை, மென்மை, ஏற்புடைமை, நாவு, பாயுந்தன்மை {பெருகுதல்}, உறையச் செய்யுந்தன்மை, பூமிய சார்ந்த பொருட்கள் பலவற்றை உருக்கும் சக்தி ஆகியவை நீரின் குணங்களாகும்.(4)

தடுக்கப்பட முடியாத சக்தி, எரியும் தன்மை, வெப்பம், மென்மையாக்கும் வல்லமை {சமைத்தல்}, ஒளி, துக்கம், நோய், வேகம், சீற்றம் மற்றும் மாற்றமில்லாத மேல்நோக்கிய அசைவு ஆகியன நெருப்பின் {தேயுவின்} குணங்களாகும்.(5)

வெப்பமும் {உஷ்ணமும்}, குளிர்ச்சியும் {சீதமும்} இல்லாத தீண்டல் {ஸ்பரிசம்}, பேச்சுப் புலனுக்குத் துணை செய்யும் வல்லமை, (அசைவைப் பொறுத்தவரையில்) சார்பற்றிருக்கும் {சுதந்திரத்} தன்மை, பலம், வேகம், {மலஜலம் உள்ளிட்ட} அனைத்து வகை உமிழ்வுக்கும், வெளியேற்றத்திற்கும் துணைபுரியும் சக்தி, பிற பொருட்களை உயர்த்தும் சக்தி, உள்ளிழுத்து வெளியிடும்மூச்சுகள், (சித்தின் குணமான) உயிர், (மரணத்தோடு கூடிய) பிறப்பு ஆகியவை காற்றின் {வாயுவின்} குணங்களாகும்.(6)

ஒலி, விரிவு {படர்ந்திருத்தல்}, உள்ளடக்கும் வல்லமை {துவாரத்தன்மை}, தேவைகளுக்கு ஆதாரமாக இல்லாத புகலிடமின்மை, புலப்படா நிலை, மாறும் வல்லமை, தடுப்பை உண்டாக்க இயலாமை, கேள்விப் புலனை உண்டாக்கும் பொருள் காரணம், மனித உடலில் உள்ள வெறுமையான இடங்கள் {துவாரங்கள்} ஆகியன வெளியின் {ஆகாயத்தின்} குணங்களாகும்.(7)

அறிவிக்கப்பட்டபடி இவையே ஐந்து அடிப்படை பூதங்களின் சாரங்களாக அமையும் ஐம்பது குணங்களாகும்[1].(8)பொறுமை, ஆராய்தல் அல்லது நீண்ட வாதம், நினைத்தல், மறதி அல்லது பிழை {ப்ரமம்}, கற்பனை {மனோரதம்}, பொறை {தாங்குந்திறன்}, நன்மை நோக்கிய மனச்சார்பு, தீமை நோக்கிய மனச்சார்பு, நிலையில்லாமை ஆகியவை மனத்தின் {ஒன்பது} குணங்களாகும்.(9)

நல்ல மற்றும் தீய சிந்தனைகள் இரண்டின் அழிவு (கனவற்ற உறக்கம்), விடாமுயற்சி, கவனக்குவிப்பு, தீர்மானம், நேரடி சான்றைச் சார்ந்து அனைத்து பொருட்களையும் உறுதிசெய்து கொள்வது ஆகியன புத்தியின் ஐந்து குணங்களாகும்” என்றார் {பீஷ்மர்}.(10)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “புத்திக்கு ஐந்து குணங்கள் இருக்கின்றன என எவ்வாறு சொல்லப்படுகிறது? மேலும், ஐம்புலன்களும் எவ்வாறு (ஐம்பூதங்களின்) குணங்களாகச் சொல்லப்படுகின்றன? ஓ! பாட்டா, இவை அனைத்தையும் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருப்பதால் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புத்தியானது, ஐம்பூதங்களையும் தன்னகத்தைக் கொண்டுள்ளதால் அது {புத்தி} மொத்தமாக அறுபது குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[2]. அந்தக் குணங்கள் அனைத்தும் ஆன்மாவோடு கலந்த நிலையிலேயே நீடித்திருக்கின்றன. ஓ! மகனே, பூதங்கள், அவற்றின் ( ஐம்பது) குணங்கள், (அவற்றோடு மனத்தின் ஒன்பது குணங்கள் மற்றும் புத்தியின் ஐந்து குணங்கள்) ஆகிய அனைத்தும் சிதைவடையாதவனால் படைக்கப்பட்டன என்று வேதங்கள் அறிவிக்கின்றன. எனவே இந்த எழுபத்தோரு {71} தனியுருக்களும் (ஆன்மாவைப் போல) நித்தியமானவை அல்ல[3].(12) ஓ! மகனே, (அண்டத்தின் தோற்றம் மற்றும் பிற நிகழ்வுகளைக் குறித்து) உன் முன்பு முன் சொன்ன சுலோகங்களில் வைக்கப்பட்ட வெளிப்பாடுகளுக்கு முரண்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் அறிவுக்கண்ணின் முன்பு பழுதானவையாக இருக்கின்றன. எனினும், பரப்பிரம்மம் குறித்து நான் சொன்ன அனைத்தையும் இவ்வுலகில் மிகக் கவனமாகக் கவனித்து, பிரம்மஞானம் அளிக்கும் பலத்தை அடைந்த பிறகு, இதய அமைதியை வெல்ல {அமைதியான புத்தியை அடைய} முனைவாயாக”[4] என்றார் {பீஷ்மர்}.(13)

பிரம்மனின் கோபாக்னி! – சாந்திபர்வம் பகுதி – 256-மரணம் குறித்துப் பீஷ்மரிடம் வினவிய யுதிஷ்டிரன்; நாரத முனிவர் மன்னன் அனுகம்பகனுக்குச் சொன்ன கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பிரம்மன் தன் கோபத்தீயால் உயிரினங்களை எரித்தது; அத்தீயைத் தணிக்கப் பிரம்மனிடம் சென்ற ஸ்தாணு…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தங்கள் தங்கள் படைகளுக்கு மத்தியில் பூமியின் பரப்பில் கிடக்கும் பூமியின் தலைவர்களும், பெரும் வலிமையைக் கொண்டவர்களுமான இந்த இளவரசர்கள் இப்போது அசைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(1) இந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். ஐயோ, சம ஆற்றலும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2)  இந்த மனிதர்களைப் போரில் கொல்லக்கூடிய ஒருவரையும் நான் (இவ்வுலகத்தில்) காணவில்லை[1]. இவர்கள் அனைவரும் பேராற்றலையும், பெரும் சக்தியையும், பெரும்பலத்தையும் கொண்டவர்களாவர்.(3)  பெரும் ஞானத்தைக் கொண்ட இவர்கள், இப்போது உயிரை இழந்து வெறுந்தரையில் கிடக்கிறார்கள். உயிரை இழந்து கிடக்கும் இந்த மனிதர்கள் அனைவரையும் குறிக்க இறந்தவர்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.(4) பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் இறந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இக்காரியத்தில், என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. அசைவு எங்கே இருந்து வருகிறது? மரணம் {மிருத்யு} எங்கே இருந்து வருகிறது?(5) இறப்பவன் யார்? (இறப்பது திரள் உடலா? நுண்ணுடலா? அல்லது ஆத்மாவா?) மரணம் எங்கே இருந்து வருகிறது? எக்காரணத்தினால் (வாழும் உயிரினங்களை) மரணம் அபகரித்துச் செல்கிறது? ஓ! பாட்டா, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, பழங்காலத்தில், கிருத யுகத்தில் அனுகம்பகன்[2] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். போரில் அவனது தேர்கள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து இறுதியில் அவனும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டான்.(7) ஹரி என்ற பெயரில், பலத்தில் நாராயணனுக்கு ஒப்பானவனாக இருந்த அவனது மகன், அந்தப் போரில் தனது பணியாட்கள் மற்றும் துருப்பினருடன் சேர்த்து தனது எதிரிகளால் கொல்லப்பட்டான்.(8) மகனின் மரணத்தால் உண்டான துயரால் பீடிக்கப்பட்டவனும், தானே எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டவனுமான அந்த மன்னன் {அனுகம்பகன்}, அதுமுதல் அமைதியான வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஒருநாள் எக்காரியமும் இன்றி உலவிக் கொண்டிருந்தபோது, தவசியான நாரதரைப் பூமியில் சந்தித்தான்.(9) அந்த ஏகாதிபதி {அனுகம்பகன்}, போரில் நேர்ந்த தன் மகனின் மரணம் மற்றும் எதிரிகளால் தான் கைப்பற்றப்பட்டது என நடந்ததனைத்தையும் நாரதரிடம் சொன்னான்.(10) அவனது வார்த்தைகளைக் கேட்டவரும், தவமெனும் செல்வத்தைக் கொண்டவருமான நாரதர், மகனின் மரணத்தால் நேர்ந்த அவனது துயரை விலக்க பின்வரும் கதையை உரைத்தார்.(11)நாரதர், “ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, நீண்ட விவரங்களைக் கொண்ட பின்வரும் கதையை அது நேர்ந்தவாறே இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, நானே இதை முன்பு கேட்டிருக்கிறேன்(12) பெரும் சக்தியைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, அண்டத்தைப் படைத்த வேளையில் பெரும் எண்ணிக்கையிலான உயிரினங்களைப் படைத்தான். அவை பல்கிப் பெருகின, அவற்றில் ஒன்றும் மரணமடையவில்லை.(13) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {அனுகம்பகா}, அண்டத்தில் உயிரினங்களால் நிரம்பாத எந்தப் பகுதியும் இருக்கவில்லை. உண்மையில், ஓ! மன்னா {அனுகம்பகா}, மூவுலகங்களும் உயிரினங்களால் நிறைந்து, மூச்சுவிடக் கூட இடமில்லாமல் இருந்ததாகத் தெரிந்தது.(14) அப்போது, ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, பல்கிப்பெருகியிருக்கும் உயிரினங்களின் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் உதித்தது.(15)

ஓ! மன்னா, அதன்பேரில் பிரம்மன் கோபமடைந்ததால், அந்தக் கோபத்தின் விளைவாக அவனது உடலில் இருந்து ஒரு நெருப்பு வெளிப்பட்டது. ஓ! ஏகாதிபதி, பெரும்பாட்டன் {பிரம்மன்}, தனது கோபத்தில் பிறந்த நெருப்பைக் கொண்டு அண்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் எரித்தான்.(16) உண்மையில், ஓ! மன்னா, தெய்வீகத் தலைவனின் {பிரம்மனின்} கோபத்தில் பிறந்த அந்த நெருப்பானது, சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தையும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்துடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரித்தது.(17) உண்மையில், இவ்வாறு பெரும்பாட்டன் கோப வசப்பட்டபோது, அந்த ஆசையின் தடுக்கப்பட முடியாத சக்தியால் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் எரியத் தொடங்கின.(18)

அப்போது, தெய்வீகமானவனும், மங்கலமானவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் தலைவனுமான ஸ்தாணு {சிவன்}, கருணையால் நிறைந்து, பிரம்மனை நிறைவு செய்ய முனைந்தான்.(19) ஸ்தாணு, நன்மைக்கான நோக்கங்களுடன் பிரம்மனிடம் வந்தபோது, சக்தியுடன் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} அவனிடம் {சிவனிடம்},(20) “என்னிடம் இருந்து வரங்களுக்குத் தகுந்தவன் நீ. உனது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்? உன் இதயத்தில் இருக்கும் எதையும் நிறைவேற்றுவதன் மூலம் நான் உனக்கு நன்மை செய்வேன்” என்றான் {பிரம்மன்}.(21)

மிருத்யு – மரணதேவி! – சாந்திபர்வம் பகுதி – 257-பிரம்மன் மிருத்யுவைப் படைத்து உயிரினங்களைக் கொல்ல ஏவிய கதையை அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்…

ஸ்தாணு, “ஓ! தலைவா {பிரம்மனே}, அண்டத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களின் சார்பாக என் வேண்டுதலை அறிவாயாக. இந்த உயிரினங்கள் உன்னாலேயே படைக்கப்பட்டன. ஓ! பாட்டா, அவற்றிடம் கோபங்கொள்ளாதே.(1) ஓ! சிறப்பானவனே, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், உன் சக்தியில் பிறந்த நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இத்தகைய அவல நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவற்றைக் கண்டு நான் கருணை கொள்கிறேன். ஓ! அண்டத்தின் தலைவா, அவற்றிடம் கோபங்கொள்ள வேண்டாம்” என்றான்.(2)

படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தின் தலைவன் {பிரம்மன்}, “நான் கோபமடையவில்லை; படைக்கப்பட்டவை அழிய வேண்டும் என்பது என் விருப்பமுமல்ல. பூமியின் கனத்தைக் குறைப்பதற்காக மட்டுமே இந்த அழிவு விரும்பத்தக்கதாகிறது.(3) ஓ மஹாதேவா, உயிரினங்களின் கனத்தால் பீடிக்கப்பட்டவளும், நீரில் மூழ்கி விடும் வகையில் காணப்பட்டவளுமான பூமாதேவியே, அவற்றை அழிக்குமாறு என்னிடம் வேண்டினாள்.(4) நீண்ட காலம் இது குறித்துச் சிந்தித்த பிறகும், இப்படிப் பல்கிப் பெருகியிருக்கும் தொகைக்கு அழிவை உண்டாக்கும் வழிமுறையேதும் அகப்படாததால், என் இதயத்தைக் கோபம் தன் உடைமையாக்கியது” என்றான்.(5)

ஸ்தாணு, “ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்களை அழிக்கும் இக்காரியத்தில் கோபவசப்படாதே. நிறைவு கொள்வாயாக. அசைவனவாகவும், அசையாதனவாகவும் இருக்கும் இவ்வுயிரினங்கள் அழிய வேண்டாம்.(6) அனைத்துக் குளங்களும், அனைத்து வகைப் புல் மற்றும் தாவரங்களும், அசைவற்ற அனைத்து இனங்களும், அசையும் நால்வகை உயிரினங்கள் அனைத்தும் எரிக்கப்படுகின்றன.(7) மொத்த அண்டமும் உயிரினங்களற்றதாகப் போகிறது. ஓ! தெய்வீகத் தலைவா, நிறைவு கொள்வாயாக. ஓ! நீதிமிக்க இதயம் கொண்டவனே, இதுவே உன்னிடம் நான் கேட்கும் வரமாகும்.(8) இவ்வுயிரனங்கள் அழிக்கப்பட்டால் மீண்டும் திரும்பாது. எனவே, இந்த உனது சக்தி அதனிலேயே தணிவடையட்டும்.(9) ஓ! பாட்டா, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தினிடமும் கருணை கொண்டு, இவை எரியாத வேறு வழிவகைகளைக் காண்பாயாக. ஓ! அண்டத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவா {பிரம்மா}, அனைத்து உயிரினங்களின் நனவுநிலைகளுக்குத் தலைமைதாங்குபவனாக என்னை நீயே நியமித்தாய்.(11) ஓ! அண்டத்தின் தலைவா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட இந்த அண்டம் உன்னில் இருந்தே பிறந்தது. ஓ தேவர்களின் தேவா, இந்த உயிரினங்கள் மீண்டும் மீண்டும் பிறந்த இறக்கும் தன்மையுடன் இவ்வுலகில் மீண்டும் தோன்றச் செய்து நீ அமைதியடைய வேண்டும் என நான் உன்னை வேண்டிக் கேட்கிறேன்” என்றான் {ஸ்தாணு}”.(12)

நாரதர் {அனுகம்பகனிடம்} தொடர்ந்தார், “ஸ்தாணுவின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வாக்கு மற்றும் மனக் கட்டுப்பாடு கொண்டவனுமான தெய்வீகப் பிரம்மன், அந்தச் சக்தியைத் தன் இதயத்திற்குள்ளேயே ஒடுக்கினான்.(13) இந்த அண்டத்தை அழித்துக் கொண்டிருந்த அந்நெருப்பை ஒடுக்கிய சிறப்புமிக்கவனும், அனைவராலும் துதிக்கப்படுபவனும், எல்லையற்ற பலம் கொண்டவனுமான பிரம்மன், அதன் பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டையும் ஏற்பாடு செய்தான்.(14) சுயம்பு {பிரம்மன்} அந்நெருப்பை ஒடுக்கி விலக்கிக் கொண்ட பிறகு, கருப்பு மற்றும் சிவப்பாடைகள் உடுத்தியவளும், கரிய கண்களைக் கொண்டவளும், கரிய உள்ளங்கைகளைக் கொண்டவளும், சிறந்த காதுகுண்டலங்கள் இரண்டை அணிந்தவளும், தெய்வீக ஆபரணங்கள் சூடியவளுமாக, அவனது உடலின் அனைத்துத் துளைகளில் இருந்தும் ஒரு பெண் வெளியே வந்தாள்.(15,16) பிரம்மனின் உடலில் பிறந்த அந்தப் பெண், அவனது வலப்புறத்தில் நின்றாள்[1]. முதன்மையானவர்களான அந்த இரு தேவர்களும் {பிரம்மனும், ஸ்தாணுவும்} அவளைக் கண்டனர்.(17)அப்போது, ஓ! மன்னா{அனுகம்பகா}, பலமிக்கவனும், உலகங்கள் அனைத்திற்கும் மூல காரணனுமான சுயம்பு {பிரம்மன்} அந்தப் பெண்ணை வணங்கி அவளிடம், “ஓ! மரணமே {மிருத்யு}, இந்த அண்டத்தின் உயிரினங்களைக் கொல்வாயாக.(18) கோபத்தில் நிறைந்து, படைப்புகளுக்கு அழிவைக் கொண்டுவரும் தீர்மானத்துடனே நான் உன்னை அழைத்தேன்.[2] எனவே, மூடராகவோ கல்விமானாகவோ உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தொடங்குவாயாக.(19) ஓ! பெண்ணே, எவருக்கும் உதவுவதை {அனுகூலம் செய்வதைத்} தவிர்த்து, அனைத்து உயிரினங்களையும் கொல்வாயாக. என் ஆணையின் பேரில் பெருஞ்செழிப்பை வெல்வாயாக” என்றான்.(20)இவ்வாறு சொல்லப்பட்டவளும், தாமரை மாலையால் அலங்கரிக்கப்பட்டவளுமான அந்த மரணதேவி {மிருத்யு}, கவலையுடன் சிந்திக்கத் தொடங்கிக் கண்ணீரை அபரிமிதமாகச் சிந்தினாள்.(21) எனினும், ஓ! மன்னா {அனுகம்பகா}, அந்தக் கண்ணீர் கீழே சிந்தாமல் அதைத் கூப்பிய கரங்களில் ஏந்தினாள். பிறகு அவள், மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுச் சுயம்புவிடம் வேண்டினாள்” என்றார் {நாரதர்}.(22)

மிருத்யுவின் தவங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 258-பிரம்மனுக்கும் மிருத்யுதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்களையும், அவளது தவங்களையும், இறுதியில் உயிர்களை வதைக்க அவள் சம்மதித்த காரணத்தையும் அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்…

நாரதர் {அனுகம்பனிடம்}, “தன் சக்தியால் துயரை அடக்கியவளும், பெரிய கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண் {மிருத்யுதேவி}, ஒரு கொடியைப் போன்ற பணிவான தன்மையுடனும், கூப்பிய கரங்களுடனும் பெரும்பாட்டனை {பிரம்மனை} வணங்கி, அவனிடம் பேசினாள்.(1) அவள், “ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, உம்மிலிருந்து பிறந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணால், அனைத்து உயிரினங்களையும் பீதியில் உறையவைக்கும் இந்தப் பயங்கரச் செயலை எவ்வாறு செய்ய இயலும்?(2) சிறுகொடுமையையும் செய்ய நான் அஞ்சுகிறேன். அறப்பணியில் என்னை நியமிப்பீராக. அஞ்சியவளாக என்னை நீர் காண்கிறீர். ஓ!, என் மேல் உமது கருணைப் பார்வையைச் செலுத்துவீராக.(3) குழந்தைகள், இளைஞர்கள், முதியோரென எனக்குத் தீங்கிழைக்காத உயிரினங்களை என்னால் அழிக்க இயலாது. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன், என்னிடம் நிறைவு கொள்வீராக.(4)

அன்பு மகன்களையும், அன்புக்குரிய நண்பர்கள், சகோதரர்கள், தாய்மார் மற்றும் தந்தைமாரையும் என்னால் அழிக்க முடியாது. (என் செயலின் மூலமாக) இவர்கள் அழிய நேர்ந்தால், அவர்களது உறவினர்களில் எஞ்சியிருப்போர் என்னை நிச்சயம் சபிப்பார்கள். இத்தன்மையில் நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன்.(5) உயிரோடு எஞ்சியவர்களின் கண்ணீர் என்னைக் காலத்திற்கும் எரித்துக் கொண்டிருக்கும். அவர்களிடம் (நான் கொல்ல வேண்டியவர்களின் உறவினர்களிடம்) நான் அச்சங்கொள்கிறேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(6) (என்னால் கொல்லப்படும்) பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் நரகலோகங்களில் மூழ்க வேண்டியிருக்கும்[1]. ஓ! வரமளிக்கும் தேவா, நான் உம்மை நிறைவு செய்ய முனைகிறேன். ஓ! பலமிக்கத் தலைவா, உமது கருணையை எனக்களிப்பீராக. ஓ! உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டா, என் இந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறேன். ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உமது அருளின் மூலம் கடுந்தவங்களைச் செய்யும் அனுமதியை நான் கோருகிறேன்” என்றாள் {மிருத்யு}.(8)பெரும்பாட்டன் {பிரம்மன்}, “ஓ! மரணமே {மிருத்யு}, அனைத்து உயிரினங்களின் அழிவுக்காகவே நீ என்னால் நினைக்கப்பட்டாய். செல்வாயாக, அனைத்தையும் கொல்லும் பணியில் உன்னை நிறுவிக் கொள்வாயாக. (இந்தச் செயலின் உரிமை அல்லது பிறவற்றைக் குறித்துச்) சிந்திக்காதே.(9) இது நிச்சயம் நடக்க வேண்டும். மாறாக இருக்க முடியாது. ஓ! பாவமற்றவளே, ஓ! பழுதற்ற அங்கங்களைக் கொண்டவளே, நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவாயாக” என்றான்.(10)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகை நகரங்களைக் கைப்பற்றுபவனே {அனுகம்பகா}, மரணம் {மிருத்யு} என்றழைக்கப்படும் அந்தப் பெண் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஒருவார்த்தையும் பேசாமல் உயிரினங்கள் அனைத்தின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனை} நோக்கிய கண்களுடன் பணிவுடன் அங்கே நின்றாள்.(11) பிரம்மன் மீண்டும் மீண்டும் அவளிடம் பேசினாலும், அந்தப் பெண் உயிரற்றவளைப் போலத் தெரிந்தாள். அவளை இவ்வாறு கண்ட தேவர்களின் தேவனான அந்தத் தலைவர்களின் தலைவன் {பிரம்மன்} அமைதியடைந்தான்.(12) உண்மையில் அந்தச் சுயம்பு, தன் விருப்பத்தின் முயற்சியால் நிறைவடைந்தான். உலகங்கள் அனைத்தின் தலைவனான அவன் புன்னகைத்தபடியே அண்டத்தில் தன் கண்களைச் செலுத்தினான்.(13) வெல்லப்பட முடியாதவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தேவன் தன் கோபத்தை அடக்கிய போது, (மரணம் என்றழைக்கப்பட்ட) அந்தப் பெண் அவனருகில் இருந்து சென்றுவிட்டாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(14) ஓ! மன்னா, உயிரினங்களை அழிப்பதாக உறுதிகூறாமலேயே பிரம்மனிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற மரணம் {மிருத்யு}, தேணுகம்[2] என்றழைக்கப்படும் ஒரு புனிதத்தலத்துக்குச் சென்றாள். அங்கே அந்தத் தேவி ஒற்றைக் காலில் நின்று கொண்டு ஆயிரத்தைநூறு கோடி ஆண்டுகளுக்குக் கடுந்தவத்தைப் பயின்றாள்[3].(16)அவ்விடத்தில் இத்தகைய கடுந்தவத்தைப் பயின்றபிறகு, பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் மீண்டும் அவளிடம்,(17) “ஓ! மரணமே, என் ஆணையை நிறைவேற்றுவாயாக” என்றான். அவனது {பிரம்மனது} கட்டளையை அலட்சியம் செய்த அந்தப் பெண், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மீண்டும் ஒற்றைக் காலில் நின்றபடியே இரண்டாயிரம் கோடி வருடங்கள் கடுந்தவம் இருந்தாள். ஓ! மகனே {அனுகம்பகா}, பிறகு அவள் பத்து லட்சம் கோடி வருடங்கள் அடங்கிய நீண்ட காலத்திற்கு மான்களோடு {விலங்குகளோடு விலங்காகக்} காட்டில் வாழ்ந்து வந்தாள்[4].(18,19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அனுகம்பகா}, மீண்டும் அவள் இருபதாயிரம் வருடங்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தாள். ஓ! ஏகாதிபதி, பிறகு அவள் எட்டாயிரம் வருடங்கள் முழுமையாக நீரில் கழித்தபடியே சிறந்த அமைதி நோன்பை நோற்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {அனுகம்பகா}, அதன்பிறகு அந்தக் கன்னிகை {மிருத்யு} கௌசிகி ஆற்றுக்குச் சென்றாள்.(20,21) அங்கே நீர் மற்றும் காற்றை மட்டுமே உண்டபடி மற்றொரு நோன்பை நோற்று தன் நாட்களைக் கடத்தினாள். ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அந்த அருள்நிறைந்த கன்னிகை {மிருத்யு}, கங்கைக்கும், அதன் பிறகு மேரு மலைக்கும் சென்றாள்.(22) அங்கே அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தோடு ஒரு மரத்துண்டைப் போல முற்றிலும் அசையாத நிலையில் நின்றாள். அதன் பிறகு, தேவர்கள் பெருவேள்வி செய்யும் இமயச் சிகரத்திற்குச் சென்ற அவள், கடுந்தவத்தின் மூலம் பெரும்பாட்டனை {பிரம்மனை} நிறைவு செய்யும் நோக்குடன், தன் காலின் கட்டைவிரலால் மட்டுமே தன் கனத்தைத் தாங்கியபடி பத்தாயிரம் கோடி வருடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.(24)அண்டத்தைப் படைத்து அழிப்பவன் {பிரம்மன்} அங்கே சென்று மீண்டும் அவளிடம், “ஓ! மகளே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என் வார்த்தைகளை நிறைவேற்றுவாயாக” என்றான்.(25)

மீண்டும் அந்தக் கன்னிகை {மிருத்யு} பெரும்பாட்டனிடம், “ஓ! தேவா, நான் உயிரினங்களைக் கொல்லவல்லவள் அல்ல. (இந்தக் கட்டளையில் இருந்து தப்பும் வகையில்) நான் உம்மை நிறைவு செய்யவே முனைகிறேன்” என்றாள்.(26)

கொடுந்தன்மையில் அச்சமடைந்தவளாகவும், பெரும்பாட்டனின் ஆணையில் இருந்து தப்ப அவனை வேண்டிக் கொண்டிருந்தவளுமான அந்தப் பெண்ணை அமைதியடையச் செய்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, மீண்டும் அவளிடம்,(27) “ஓ! மரணமே {மிருத்யு}, எக்கொடுமையும் உனதாகாது. ஓ! மங்கலக் கன்னியே, உயிரினங்களை அழிக்கும் பணியில் உன்னை நீ நிறுவிக் கொள்வாயாக. ஓ! இனிய பெண்ணே, நான் சொன்னது நிச்சயம் பொய்யாகாது.(28) இப்போது நித்திய அறம் உன்னைப் புகலிடமாகக் கொள்ளட்டும். நானும் தேவர்கள் அனைவரும் உன் நன்மையை நாடுவதிலேயே எப்போதும் ஈடுபட்டிருப்போம்.(29) உன் இதயத்தில் உள்ள மற்றொரு விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். வாழும் உயிரினங்கள் நோயால் பீடிக்கப்படும், (அவ்வாறு இறப்பவர்கள்) உன்னைப் பழி சொல்ல முடியாது.(30) நீ ஆண்களில் ஆணாகவும், பெண்களில் பெண்ணாகவும், அலியில் அலியாகவும் இருப்பாயாக” என்றான்[5].(31)ஓ! மன்னா {அனுகம்பகா}, இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை உயர் ஆன்மாவும், தேவர்கள் அனைவரின் அழிவில்லாத் தலைவனுமானவனிடம் இறுதியில் கூப்பிய கரங்களுடன், “நான் உமது கட்டளைக்குக் கீழ்ப்படிய இயலாதவளாக இருக்கிறேன்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(32)

அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, மனம் இரங்காமல், மீண்டும் அவளிடம், “ஓ! மரணமே {மிருத்யு} மனிதர்களைக் கொல்வாயாக.(33) ஓ! மங்கலப் பெண்ணே, இதனால் நீ எக்கொடுமையையும் ஈட்டாத வகையில் நான் விதிப்பேன். கூப்பிய உன் கரங்களுக்குள் நீ இன்னும் ஏந்திக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணீர் துளிகள் பயங்க நோய்களின் வடிவை ஏற்று, காலம் நேர்கையில் அவையே மனிதர்களை அழிக்கும்.(34) உயிரினங்களுக்கு முடிவு நேரும்போது, நீ அவற்றிடம் இருக்கும் ஆசை மற்றும் கோபத்தை விரட்டுவாய். அளவிலாத் தகுதி {புண்ணியம்} உனதாகும். முற்றிலும் பாகுபாடற்ற ஒழுக்கம் கொண்ட நீ எந்தக் கொடுமையையும் {பாவத்தையும்} ஈட்டமாட்டாய்.(35) இதைச் செய்வதன் மூலம் நீ கொடுமையில் மூழ்காமல் அறம் மட்டுமே நோற்றவளாவாய். எனவே, ஆசை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உயிரினங்களைக் கொல்லத் தொடங்கி, உன் பணியில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக” என்றான்.(36)

இவ்வாறு சொல்லப்பட்டவளும், மரணம் {மிருத்யு} என்ற பெயரில் அழைக்கப்படுபவளுமான அந்தப் பெண், பிரம்மனின் சாபத்திற்கு அஞ்சி, “சரி!” என்று அவனுக்குப் பதிலளித்தாள். அக்காலத்தில் இருந்து அவள், உயிரினங்களின் இறுதிக் காலத்தில் ஆசை மற்றும் கோபத்தை விரட்டத் தொடங்கி, அதன் மூலம் அவற்றின் உயிர்மூச்சை நிறுத்தினாள்.(37) மரணம் சிந்திய கண்ணீரே மனிதர்களின் உடலைப் பீடிக்கும் நோய்களாயிற்று. எனவே, உயிரினங்கள் அழியும்போது ஒருவன், புத்தியின் துணையுடன் இதைப் புரிந்து கொண்டு, துன்பவசப்படாமல் இருக்க வேண்டும்.(38) ஓ! மன்னர்களில் சிங்கமே! அனைத்து உயிரினங்களும் கனவுகளற்ற உறக்கத்தில் புலன்கள் மறைந்து, விழிப்புநிலையில் மீண்டும் தோன்றுவதைப் போலவே அவற்றின் உடல்களின் அழிவில், அவை மறு உலகத்திற்குச் சென்று மீண்டும் இங்கே திரும்ப வேண்டிருக்கிறது.(39) பயங்கர சக்தி, வலிமையான ஆற்றல் மற்றும் செவிடாகச் செய்யும் முழக்கம் ஆகியவற்றைக் கொண்ட காற்று {வாயு} என அழைக்கப்படும் பூதமே, அனைத்து உயிரினங்களிலும் உயிராக இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களின் உடல்கள் அழியும்போது, பழைய உடலில் இருந்து தப்பும் அந்தக் காற்று {வாயு} பல்வேறு புதிய உடல்களில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இதன் காரணமாகவே காற்றானது {வாயுவானது}, திரள் உடலில் அமைந்துள்ள பிற பூதங்களில் இருந்து வேறுபட்டு புலன்களின் தலைவனாக அழைக்கப்படுகிறது.(40) தேவர்களும் கூடத் தகுதிகள் {புண்ணியங்கள்} தீரும்போது) பூமியில் அழியத்தக்க {இறப்புடைய} உயிரினங்களாகப் பிறப்பை எடுக்கின்றனர். அதே போலவே அழியத்தக்க உயிரினங்களும் கூட (போதிய தகுதியை {புண்ணியத்தை} அடையும்போது) தேவர்களின் நிலையை அடைவதில் வெல்கின்றன. எனவே, ஓ! மன்னர்களில் சிங்கமே {அனுகம்பகா}, உன் மகனுக்காக வருந்தாதே. உன் மகன் சொர்க்கத்தை அடைந்து, அங்கே பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.(41) ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, இவ்வாறே சுயம்புவால் மரணம் {மிருத்யு} படைக்கப்பட்டாள், மேலும் இவ்வழியிலேயே அவள் உயிரினங்களின் காலம் முடிவுக்கு வரும் வேளையில் அவை அனைத்தையும் முறையாக அழிக்கிறாள். அவள் சிந்திய கண்ணீரே நோய்களாகி, உயிரினங்களின் இறுதி வேளை வரும்போது அவை அனைத்தையும் அபகரித்துச் செல்கிறாள்” என்றார் {நாரதர்}”.(42)

தர்மலக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 259-நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள், நன்னோக்கம், களவு செய்யாமை, தீங்கிழையாமை, ஈகை முதலியவையே அறத்தின் குறியீடுகளென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இந்தப் பூமியில் வசிக்கும் மனிதர்கள் அனைவரும், அறத்தின் {தர்மத்தின்} இயல்பு குறித்த ஐயங்களால் நிறைந்திருக்கின்றனர். அறம் என்றழைக்கப்படும் இஃது என்ன? அறம் எங்கிருந்து வந்தது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) அறம் இவ்வுலகத் தொண்டுக்குரியதா? மறுமைக்கான தொண்டுக்குரியதா? அல்லது இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிற்குமான தொண்டுக்குரியதா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள் ஆகிய இம்மூன்றும் அறத்தின் (மூலக்) குறியீடுகளாகும். இவை தவிர, கல்விமான்கள் (ஒரு செயலை நிறைவேற்றும்) நோக்கத்தை நான்காவதாக {மூலக் குறியீடாக} அறிவித்திருக்கிறார்கள்.(3) பழங்காலத்தின் முனிவர்கள் எவை அறச்செயல்கள் என்பதை அறிவித்து, தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில் அவற்றை மேன்மையானவை, தாழ்ந்தவை என்றும் வகுத்திருக்கிறார்கள். உலகக் காரியங்களின் ஒழுங்கிற்காகவே அறவிதிக்ள விதிக்கப்பட்டுள்ளன.(4) இம்மை மற்றும் மறுமை என்ற ஈருலகங்களிலும் அறமானது மகிழ்ச்சியையே தன் கனியாக விளைவிக்கிறது. நுட்பமான வழிகள் மூலம் தகுதியை {புண்ணியத்தை} அடைய இயலாத பாவம்நிறைந்த மனிதர்கள், பாவத்தால் மட்டுமே களங்கமடைகிறார்கள்.(5)

பாவிகளைத் தங்கள் பாவங்களில் இருந்து ஒருபோதும் தூய்மைப்படுத்த முடியாது என்ற கருத்தைச் சிலர் கொண்டுள்ளனர். அறமற்ற செயலைச் செய்தும், அதே வழிமுறையின் மூலம் அறச்செயலுக்கான தகுதியை ஒருவன் அடைவதைப் போலவே, ஆபத்துக் காலங்களில் பொய் பேசும் ஒருவன், மெய் பேசும் ஒருவனின் தகுதியை அடைகிறான். ஒழுக்கமே அறத்தின் புகலிடமாகும். ஒழுக்கத்தின் துணையுடன் கூடிய அறம் யாது என்பதை நீ அறிய வேண்டும்.(6) (தன் களங்கங்களைக் காணாமலும், அறிவிக்காமலும், பிறரின் களங்கங்களை அறிவிப்பது மனிதனின் இயல்பாகும்). {மறைமுகமாகப்} பிறருக்கு உடைமையானவற்றைக் களவு செய்யும் கள்வன், தன் களவால் உண்டான பயன்களை வெளிப்படையான அறச்செயல்களுக்குச் செலவிடுகிறான். அரசற்ற காலத்தில் பிறர் உடைமைகளை அபகரிப்பதில் அக்கள்வன் பேரின்பம் கொள்கிறான்.(7) எனினும், களவின் மூலம் தான் அடைந்ததைப் பிறர் களவாடும்போது, அவனே (அக்குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க) ஒரு மன்னனை விரும்புகிறான். உடைமையின் உரிமையில் குற்றமிழைக்கப்பட்டதாகப் பெரிய அளவில் உளக் கொதிப்படையும் அத்தகைய வேளையிலும் கூட, தங்கள் உடைமைகளில் நிறைவுடன் வாழ்வோரின் செல்வத்தில் அவனே ரகசியமாகப் பேராசை கொள்கிறான்.(8) (தானே களவால் பாதிப்படைந்தவனாக இருக்கும்போதும்) அவன், அச்சமில்லாமலும், தன் மனத்தில் எந்த ஐயமும் இல்லாமலும், பாவம் அனைத்தும் கழுவப்பட்ட மனத்துடன் மன்னனின் அரண்மனைக்குச் செல்கிறான். அவன் எந்தப் பாவச்செயலின் களங்கத்தையும் தன் இதயத்திற்குள் காண்பதில்லை.(9) உண்மை பேசுவதே தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}. வாய்மையைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வாய்மையாலேயே அனைத்தும் தாங்கப்படுகின்றன, அனைத்தும் வாய்மையையே சார்ந்திருக்கின்றன.(10)

பாவம் நிறைந்த கொடியவர்கள் கூட, தங்களுக்குள் உண்மையை {சத்தியத்தைக்} காக்க உறுதிபூண்டு, அனைத்து வகைச் சச்சரவுகளையும் புறந்தள்ளி, ஒற்றுமையடைந்து வாய்மை சார்ந்து தங்கள் (பாவச்) செயல்களில் தங்களை நிறுவிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் போலியாக நடந்து கொண்டால், நிச்சயம் அவர்கள் அழிவையே அடைவார்கள்.(11) பிறருக்குச் சொந்தமானதை ஒருவன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. இஃது ஒரு நித்தியக் கடப்பாடாகும். இது பலவீனரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என வலிய மனிதர்கள் கருதுகிறார்கள்.(12) எனினும், இம்மனிதர்களின் விதி எதிராக மாறும்போது, இந்தத் தடையாணை அவர்களது அங்கீகாரத்தைப் பெறுகிறது. மேலும் பலத்திலோ, ஆற்றலிலோ பிறரை விஞ்சி நிற்போர் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(13) எனவே, நீ எந்தத் தீய செயலிலும் ஒருபோதும் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே. இவ்வழியில் நடந்து கொள்பவனுக்கு நேர்மையற்ற மனிதர்களிடமோ, கள்வர்களிடமோ, மன்னனிடமோ அச்சமேதும் ஏற்படுவதில்லை. எவருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதன் தூய இதயத்துடன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(14) காட்டில் இருந்து வசிப்பாரற்ற ஒரு கிராமத்திற்கு விரட்டப்பட்ட மானைப் போலவே ஒரு கள்வன் அனைவரையும் {கண்டு} அஞ்சுவான். அவன் பிற மக்களையும் தன்னைப் போலப் பாவிகளாகவே நினைக்கிறான்.(15)

தூய இதயம் கொண்ட ஒருவன் எப்போதும் உற்சாகத்தில் நிறைந்தவனாக எத்திக்கிலும் அச்சமில்லாதவனாக இருப்பான். அத்தகையவன் ஒருபோதும் தன் ஒழுங்கீனத்தைப் பிறரிடம் காணமாட்டான்[2].(16) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடுவோர், ஈகை பயில்வதும் மற்றொரு உயர்ந்த கடமையெனச் சொல்லியிருக்கின்றனர். செல்வம் படைத்தோர், வறியவர்களே இந்தக் கடமையை விதித்திருக்கின்றனர் என நினைக்கிறார்கள்.(17) எனினும், அந்தச் செல்வந்தர்களின் ஊழில் திருப்பம் நேர்வதன் விளைவால் வறுமையைச் சந்திக்கும்போது ஈகை பயிற்சியானது தன்னை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறது. மிகப் பெரும் செல்வந்தர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(18) இஃது எவ்வளவு வலியைத் தரவல்லது என்பதையறிந்த ஒருவன், பிறர் தனக்கு இழைக்கும் போது விரும்பாத எதையும் ஒருபோதும் பிறனுக்கு இழைக்கக்கூடாது.(19) மாற்றான் மனைவியை விரும்பும் {காதலிக்கும்} ஒருவனால், (அதே வரம்புமீறலைச் செய்யும்) வேறொருவனுக்கு என்ன சொல்ல முடியும்? {அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?}. எனினும், அத்தகைய மனிதனும்கூடத் தன் மனைவியை மற்றொரு காதலனுடன் காணும்போது, அச்செயலை மன்னிக்க இயலாததைக் காணமுடிகிறது[3].(20)மூச்சு விட வேண்டும் என விரும்பும் ஒருவன், அதே செயலைச் செய்யும் மற்றொருவனை ஒரு கொலைபாதகச் செயலின் மூலம் எவ்வாறு தடுக்க நினைக்கலாம்?[4] ஒருவன் எதை எதைத் தனக்கு விரும்புவானோ, அவற்றை நிச்சயம் அடுத்தவருக்கும் விரும்ப வேண்டும்.(21) ஒருவன் தான் உடைமையாகக் கொண்டுள்ள அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு, வறியோரின் தேவைகளில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதன் காரணமாகவே (வணிகம் அல்லது வட்டிக்கு விடுதல் ஆகியவற்றின் மூலம்) ஒருவனுடைய செல்வத்தைப் பெருக்கும் நடைமுறையைப் படைப்பாளன் ஏற்படுத்தினான்.(22) ஒருவன் எவ்வழியில் நடந்தால் தேவர்களைச் சந்திப்பான் என்று நம்புவானோ அவ்வழியிலேயே நடக்க வேண்டும்; அல்லது செல்வம் ஈட்டப்படும் வேளைகளில், வேள்வி மற்றும் கொடை முதலிய கடமைகளைப் பின்பற்றுவது மெச்சத்தகுந்ததாகும்[5].(23)ஏற்புடைய (அமைதியான) வழிமுறைகளின் மூலம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதே அறம் எனத் தவசிகள் சொல்லியிருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, அறம் மற்றும் மறத்தின் {அநீதியின்} குறியீடுகளைத் தீர்மானிப்பதில் இதுவே நோக்கில் கொள்ளப்படும் அடிப்படைத் தத்துவம் என்பதைக் காண்பாயாக.(24) பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, உலகை ஒன்றாகத் தாங்கிக் கொள்ளும் ஊட்ட சக்தியுடன் அறத்தை {தர்மத்தை} ஏற்படுத்தினான். சிறப்புகள் நிறைந்த நல்லோரின் ஒழுக்கமானது, நுட்பமான பல கருத்துகளைச் சார்ந்த அறத்தை அடைவதற்கு (எண்ணற்ற) நலம்தரும் கட்டுப்பாடுகளைக் கொண்டதாகும்.(25) ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அறத்தின் குறியீடுகளே உனக்கு இப்போது மீண்டும் சொல்லப்பட்டது. எனவே, ஒருபோதும் நீ உன் புத்தியைத் தீச்செயலில் நிலைக்கச் செய்யாதே” என்றார் {பீஷ்மர்}.(26)

தர்மபிரமாணாக்ஷேபணை! – சாந்திபர்வம் பகுதி – 260-ஷ்மர் சொன்ன அறம் நிர்ணயிக்கும் வழிமுறைகளில் தன் மறுப்பைத் தெரிவித்த யுதிஷ்டிரன் …

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறம் அல்லது கடமை என்பது நுட்பமான கருத்துகளைச் சார்ந்தது என்றும், நல்லோர் என்றழைக்கப்படுவோரின் ஒழுக்கத்தால் குறிப்பிடப்படுகிறது என்றும், (எண்ணற்ற செயல்களில்) நலம் தரும் கட்டுப்பாடுகள் நிறைந்ததென்றும், அதன் குறியீடுகளை வேதங்களும் கொண்டிருக்கின்றன என்றும் நீர் சொல்கிறீர். எனினும், சரியான மற்றும் தவறான காரியங்களை உள்ளுணர்வின் மூலம் பகுத்தறிவதன் விளைவால் நிச்சயமாக நான் உள்ளொளியைக் கொண்டிருக்கிறேன் என்றே எனக்குப் படுகிறது[1].(1) நான் கேட்க நினைத்த எண்ணற்ற கேள்விகள் அனைத்திற்கும் நீர் பதிலளித்திருக்கிறீர். எனினும், தற்போதும் உம்மிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஓ! மன்னா {பீஷ்மரே}, வெற்றுச் சச்சரவு செய்யும் விருப்பத்தால் அது {அக்கேள்வி} தூண்டப்பட்டதில்லை.(2) உடல்படைத்த இந்த உயிரினங்கள் அனைத்தும், தங்கள் இயல்பிலேயே பிறப்பை அடைந்து, {சிறிது காலம்} நிலைத்திருந்து, உடல்களை விடுவதாகத் தெரிகிறது. எனவே, ஓ! பாரதரே, கடமையையும் அதற்கு முரணானதையும் {அறம் மற்றும் மறம் ஆகியவற்றை}, சாத்திரக் கல்வியால் மட்டுமே உறுதி செய்ய முடியாது[2].(3) நல்ல நிலையில் உள்ள ஒருவனின் கடமைகள் ஒரு வகையானவை. துயரில் வீழ்ந்த ஒருவனின் கடமைகளோ மற்றொரு வகையிலானவை. துயர்மிக்கக் காலங்களைப் பொறுத்தவரையில் சாத்திரங்களைப் படிப்பதால் மட்டுமே கடமையை {அறத்தை} எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?[3](4)நல்லோரின் செயல்கள் அறம் (அல்லது கடமையைக்) கொண்டவை என்று நீர் சொல்கிறீர். எனினும், நல்லோரை அவர்களின் செயல்களாலேயே உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது. எனவே, நல்லோரின் ஒழுக்கம் யாது என்ற கேள்விக்கு, அது தீர்மானிக்கப்பட முடியாது என்ற முடிவின் அடிப்படையிலேயே இவ்விளக்கம் இருக்கிறது.(5) சில சாதாரண மனிதர்கள் அறமற்ற செயலைச் செய்தாலும் வெளிப்படையாக அறமீட்டுவதைக் காண முடிகிறது. மேலும் இயல்புக்கு மீறிய சில மனிதர்கள் வெளிப்படையாக அறமற்ற செயல்களைச் செய்வதன் மூலம் அறமீட்டுவதையும் காணமுடிகிறது[4].(6) மேலும் (நான் சொல்வதற்கு) ஆதாரமாகச் சாத்திரத்தை நன்கறிந்தோரே சான்று பகர்கின்றனர். ஏனெனில், அடுத்தடுத்த ஒவ்வொரு யுகத்திலும் வேத விதிகள் படிப்படியாக மறைகின்றன என்று நாம் கேள்விப்படுகிறோம்.(7) கிருத யுகத்தின் கடமைகள் ஒருவகையானவை. திரேதா யுகத்தின் கடமைகள் மற்றொரு வகையிலானவே, துவாபர யுகத்திற்கானவை மேலும் வேறுபட்டவை. கலியுகத்தின் கடமைகளோ முற்றிலும் வேறொரு வகையிலானவை. எனவே, ஒவ்வொரு யுகத்தின் கடமைகளும், ஒவ்வொரு யுக மனிதர்கள் கொண்ட சக்தியின்படியே விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(8)எனவே, வேத தீர்மானங்கள் அனைத்தும், அனைத்து யுகங்களுக்கும் சமமான அளவில் பொருந்தாதபோது, வேத தீர்மானங்கள் உண்மையானவை என்ற சொலவடையானது வெகுமக்கள் நிறைவுக்காகச் சொல்லப்படும் பிரபல பேச்சுவடிவமாக மட்டுமே இருக்கிறது. ஸ்ருதிகளில் இருந்து தோன்றிய ஸ்மிருதிகளின் எல்லையும் மிக விரிவானதாக இருக்கிறது.(9) வேதங்களே அனைத்திற்குமான அதிகாரமெனில், அந்த அதிகாரம் ஸ்ருதியின் அடிப்படையிலான ஸ்மிருதிகளுக்கும் பொருந்தும். எனினும், ஸ்ருதிகளும், ஸ்மிருதிகளும் முரண்படும் போது அவை இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவையாக இருக்க முடியும்?(10) மேலும், பெரும் வலிமை கொண்ட சில தீய மனிதர்கள், குறிப்பிட்ட அறச்செயல்களின் குறிப்பிட்ட நடைமுறை பகுதிகளை நிறுத்திவிட்டால் இவை என்றைக்கும் அழிந்து போகும்[5].(11) நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும், உறுதி செய்தாலும் உறுதி செய்யாவிட்டாலும் கடமையின் வழியானது கத்தியின் முனையைவிடக் கூர்மையானதாகவும், மலையை விடவும் திரளானதாகவும் இருக்கிறது.(12)(வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் வடிவில் உள்ள) அறமானது தொலைவானில் காணப்படும் நீராவியாலான நயமிக்க மாளிகையின் வடிவில் முதலில் தோன்றுகிறது. எனினும், கல்விமான்களால் ஆய்வு செய்யப்படும்போது அது புலப்படாமல் மறைந்துபோகிறது[6].(13) கால்நடைகள் நீரருந்தும் சிறு குட்டைகள், அல்லது விளைநிலங்களோடு உள்ள ஆழமற்ற வாய்க்கால்கள் வெகுவிரைவில் வற்றிவிடுவதைப் போல, ஸ்மிருதிகளில் குறிப்பிடப்படும் நித்திய நடைமுறைகளும் தொடர்பறுந்தவையாக (கலியுகத்தில்) மொத்தமாக மறைந்து போகின்றன.(14) நல்லோருக்கு மத்தியிலும் சிலர் ஆசையின் தூண்டுதலின் பேரில் (ஆறமீட்டுவதற்காகத்} துன்புறுவதன் மூலம் கபடதாரிகளாகக் காணப்படுகின்றனர். மேலும் சிலர் பிறரின் ஆசைகளால் தூண்டப்படுகின்றனர். எண்ணிக்கையில் பலராக இருக்கும் வேறு சிலரும், அதே வகையிலான பல்வேறு நோக்கங்கள் பிறவற்றின் ஆதிக்கத்தால் அதே வழியிலேயே நடக்கின்றனர்[7].(15) (தீய ஆசைகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள மனிதர்களால் செய்யப்பட்டாலும்) அத்தகைய செயல்கள் அறமே என்பதை மறுக்க முடியாது. மேலும், நல்லோர் என்றழைக்கப்படுவோருக்கும் மத்தியில் ஒலிக்கும் வெற்றொலியே அறமென மூடர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அத்தகைய மனிதர்களைக் கேலி செய்து, அவர்களை அறிவற்றவர்களாகவே கருதுகிறார்கள்.(16)மேலும், பெரிய மனிதர்கள் பலர், (தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து) நடைபிறழ்ந்து அரச வகைக்கான கடமைகளைச் செய்கின்றனர். எனவே, (எந்த மனிதனும் பின்பற்றும்) உலகளாவிய நன்மை நிறைந்த எந்த ஒழுக்கமும் காணப்படவில்லை[8].(17) குறிப்பிட்ட ஓர் ஒழுக்க வழிமுறையின் மூலம் ஒருவன் உண்மையிலேயே தகுதிவாய்ந்தவனாகிறான். அதே ஒழுக்க வழிமுறையானது, மற்றொருவன் அறமீட்டுவதைத் தடை செய்கிறது. அவ்வொழுக்கத்தைத் தன் விருப்பப்படி பயிலும் மற்றொருவன் மாறாமல் அப்படியே இருப்பதும் காணப்படுகிறது[9].(18) எனவே எந்த ஒழுக்கத்தின் மூலம் ஒருவன் தகுதிவாய்ந்தவனாகிறானோ அதுவே மற்றொருவன் அறமீட்டுவதைத் தடுக்கிறது. இவ்வாறே ஒழுக்க நடைமுறைகள் அனைத்தும் காரியத்திலும், தன்மையிலும் தங்கள் தனித்தன்மையை இழப்பதைக் காணமுடிகிறது.(19) எனவே, பழங்காலத்தின் கல்விமான்களால் அறமென அழைக்கப்பட்டதே இந்த நாள் வரை அறமாக இருக்கிறது; (கல்விமான்களால் தீர்மானிக்கப்பட்ட) அந்த ஒழுக்க நடைமுறையின் மூலம் (உலகத்தை ஆளும்) வேறுபாடுகளும், வரம்புகளும் நிலைத்தவையாகிவிட்டன[10]” என்றான் {யுதிஷ்டிரன்}.(20)

ஜாஜலியும் துலாதாரனும்! – சாந்திபர்வம் பகுதி – 261-அறமீட்டல் அல்லது தகுதியடைதல் குறித்த யுதிஷ்டிரனின் ஐயத்திற்கு விடையளிப்பதற்காக தவசி ஜாஜலி மற்றும் வணிகன் துலாதாரனின் கதையைச் சொன்ன பீஷ்மர்; ஜாஜலி செய்த கடுந்தவங்கள்; அவரது தலையில் குருவிகள் கட்டிய கூடு; செருக்கடைந்த ஜாஜலி; வணிகனான துலாதாரனின் பெருமையை ஜாஜலிக்குச் சொன்ன வானொலி; கோபமடைந்த ஜாஜலி துலாதாரனைத் தேடிச் சென்றது; ஜாஜலியின் வரவை அறிந்த துலாதாரன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதுதொடர்பாகப் பழங்கதையில் துலாதாரனுக்கும், ஜாஜலிக்கும் இடையில் அறக்காரியம் குறித்து நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காட்டில், ஜாஜலி என்ற பெயரைக் கொண்டவரும், காட்டுத் துறவின் {வானப்பிரஸ்த வாழ்வுமுறையின்} வழிகளைப் பயின்று வந்தவருமான ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1) கடுந்தவங்களைக் கொண்ட அவர், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கடற்கரையை நோக்கிச் சென்று அங்கே மிகக் கடுமையான தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(2) பல நோன்புகளையும், நலந்தரும் கட்டுப்பாடுகளையும் நோற்றவரும், உபவாச விதிகள் பலவற்றால் ஒழுங்கமைக்கப்பட்ட உணவைக் கொள்பவரும், மரவுரி மறும் தோல்களை உடுத்திய உடலைக் கொண்டவரும், தலையில் சடாமுடி தரித்தவரும், உடல் முழுவதும் புழுதியாலும், களிமண்ணாலும் பூசப்பட்டவரும், புத்திமானுமான அந்தப் பிராமணர் {ஜாஜலி}, (தியான யோகத்தில் ஈடுபட்டபடியே) பேச்சை நிறுத்தி {மௌன விரதத்துடன்} பல வருங்களை அங்கே கடத்தி வந்தார்.(3) ஓ! ஏகாதிபதி, பெருஞ்சக்தியைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர், (கடலின்) நீருக்குள் வசித்து வந்த போது, அனைத்துப் பொருட்களையும் காணும் விருப்பத்தால் மனோவேகத்தில் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தார்.(4) கடலால் சூழப்பட்டதும், ஆறுகள், தடாகங்கள், காடுகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான மொத்த பூமியையும் கண்ட பிறகு ஒருநாள், அந்தத் தவசி நீருக்கடியில் அமர்ந்தபடியே இவ்வகையில் நினைக்கத் தொடங்கினார்.(5)

{அவர் தமக்குள்ளேயே}, “அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகில் எனக்கு இணையாக ஒருவரும் இல்லை. ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு மத்தியில் என்னுடன் உலவவும், நீருக்கடியில் வசிக்கவும் எவரால் முடியும்?” {என்று நினைத்தார்}.(6) ராட்சசர்களால் காணப்படாதவாறு அவர் தமக்குக்குள் இதை மீண்டும் சொல்லிக் கொண்டபோது, பிசாசங்கள் அவரிடம், “இவ்வாறு சொல்வது உமக்குத் தகாது. பெரும் புகழைக் கொண்டவனும், வாங்கி விற்கும் வணிகத்தில் ஈடுபடுபவனும், துலாதாரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மனிதன் {வாராணசியில்} இருக்கிறான். ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவனே கூட நீர் சொன்ன வார்த்தைகளைச் சொல்லத் தகுந்தவனல்ல” என்றன.(8) அந்தப் பூதங்களால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவருமான ஜாஜலி அவற்றிடம், “அத்தகைய ஞானம் கொண்டவனும், புகழ்பெற்றவனுமான துலாதாரனை நான் காண வேண்டும்” என்றார்.(9) அந்த முனிவர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்தப் பூதங்கள் அவரைக் கடலில் இருந்து உயர்த்தி, அவரிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தச் சாலைவழியே செல்வீராக” என்றன.(10) இவ்வாறு அந்தப் பூதங்களால் சொல்லப்பட்ட ஜாஜலி, உற்சாகமற்ற இதயத்துடன் முன்னேறிச் சென்றார். வாராணசியை அடைந்த அவர், துலாதாரனைச் சந்தித்துப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(11)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஜாஜலி அத்தகைய உயர்ந்த வெற்றியை அடைவதற்குக் காரணமான அந்தக் கடினமான சாதனைகள் என்னென்ன? அவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஜாஜலி கடுந்தவங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் காலையிலும் மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.(13) தன் நெருப்புகளை {ஹோமத்தீயைக்} கவனமாக வளர்த்த அவர், வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்தார். வானப்பிரஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நன்கறிந்தவரான ஜாஜலி, (தமது நடைமுறைகளின் விளைவாக) பிரகாசத்துடன் சுடர்விடுபவராகத் தெரிந்தார்.(14) அவர் தவங்களைச் செய்தபடியே காடுகளில் வாழ்ந்து வந்தார். தமது செயல்களின் மூலம் எந்தத் தகுதியையும் அடைந்தவராகத் தம்மை ஒருபோதும் அவர் கருதிக் கொண்டதில்லை. மழைக்காலங்களில் அவர் திறந்த வானத்துக்கு அடியிலேயே உறங்கினார். கூதிர் காலத்தில் அவர் நீரில் அமர்ந்திருந்தார்.(15) கோடை காலத்தில் அவர் தம்மைச் சூரியனுக்கும், காற்றுக்கும் வெளிப்படுத்திக் கொண்டார். எனினும் அத்தகைய செயல்களின் மூலமும் எந்தத் தகுதியையும் ஈட்டிவிட்டதாக அவர் ஒருபோதும் கருதியதில்லை. அவர் துன்பம் மிகுந்த பல்வேறு வகைப் படுக்கையிலும், வெறுந்தரையிலும் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.(16)

ஒரு மழைக்காலத்தில் அவர் வானத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தபோது, அவரது தலையில் மேகங்களில் இருந்து தொடர்ச்சியாக மழைத்துளிகள் விழுந்தன.(17) அவர் காடுகளின் ஊடாக மீண்டும் மீண்டும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. மழைக்கு வெளிப்பட்டதாலும், புழுதியடைந்ததாலும் அந்தப் பாவமற்ற முனிவரின் மயிர்கள் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டு சடைபிடித்தன.(18) ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெருந்தவசி உணவை முற்றும் துறந்து, காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து, ஒரு மரக்கட்டையைப் போலக் காட்டில் நின்று கொண்டிருந்தார். அவர், இதயத்தில் அசைவற்றவராகவும், ஓர் அங்குலமும் ஒரு முறை கூட நகராதவராகவும் அங்கே நின்று கொண்டிருந்தார்.(19) அவர் ஒரு மரக்கட்டையைப் போல முற்றிலும் அசையாமல் நின்று கொண்டிருந்தபோது, ஓ! பாரதா, ஓ! மன்னா, குளிங்கப் பறவைகளின் {சிட்டுக்குருவிகளின்} ஒரு ஜோடி அவரது {ஜாஜலி} தலையில் தங்கள் கூட்டைக் கட்டின.(20) கருணையால் நிறைந்த அந்தப் பெரும் முனிவர் {ஜாஜலி}, இறகு படைத்தவையான அந்த ஜோடி புற்கற்றைகளாலான தங்கள் கூட்டை அவரது சடாமுடியில் கட்டியதைப் பொறுத்துக் கொண்டார்.(21) அந்தத் தவசி மரக்கட்டை போல அங்கே நின்று கொண்டிருக்கையில், அந்த இரு பறவைகளும் முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக அவரது தலையில் வாழ்ந்து வந்தன.(22)

மழைக்காலம் முடிந்து கூதிர் காலம் தொடங்கியது. ஓ! மன்னா, ஆசையால் தூண்டப்பட்ட அந்த ஜோடி, படைப்பாளனின் விதிக்கிணங்க ஒன்றையொன்று அணுகி, முழு நம்பிக்கையுடன் தங்கள் முட்டைகளை அந்த முனிவரின் தலையில் இட்டன.(23) கடும் நோன்புகளையும் சக்தியையும் கொண்ட அந்தத் தவசி இஃதை அறிந்தார். பறவைகளின் இச்செயலை அறிந்த ஜாஜலி அசையாமலேயே இருந்தார். பிறருக்கு சிறு தீங்கையும் இழைக்கும் எந்தச் செயலையும் செய்யாமல் அறமீட்டுவதில் அவர் உறுதி பூண்டார்.(24) ஓ! பலமிக்க மன்னா, இறகுபடைத்த அந்த ஜோடி, ஒவ்வொரு நாளும் அவரது தலையில் இருந்து வெளியே சென்றும், திரும்பியும் முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக அங்கே வாழ்ந்து வந்தன.(25) ஜாஜலி சிறிதும் அசையாமல் இருந்ததால், காலம் கனிந்ததும் அந்த முட்டைகள் முதிர்ந்து குஞ்சுகள் வெளியே வந்து, அந்தக் கூட்டிலேயே வளரத் தொடங்கின.(26) தமது நோன்புகளில் உறுதியானவரும் உயர் ஆன்மா கொண்டவருமான அந்த முனிவர், தொடர்ந்து அந்தக் குஞ்சுகளைத் தாங்கியபடியே முற்றிலும் அசைவற்றவராக அந்த இடத்திலேயே தியான யோகத்தில் மூழ்கி நின்றிருந்தார்.(27)

காலப்போக்கில் அந்தக் குஞ்சுகள் வளர்ந்து, சிறகுகள் படைத்தவை ஆகின. குளிங்கக் குஞ்சுகள் வளர்ந்து விட்டதை அம்முனிவர் அறிந்தார்.(28) புத்திசாலி மனிதர்களில் முதன்மையான அவர், ஒரு நாள் அந்தக் குஞ்சுகளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார்.(29) தாய்தந்தை பறவைகள், தங்கள் குஞ்சுகள் சிறகு படைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நிறைவான முழு நம்பிக்கையுடன் அந்த முனிவரின் தலையிலே அவற்றுடன் வசிக்கத் தொடங்கின.(30) கல்விமானான ஜாஜலி, அந்தப் பறவைக்குஞ்சுகள் சிறகுபடைத்ததும் ஒவ்வொரு மாலையும் பறந்து சென்று, (வெகு தொலைவுக்குச் சென்றுவிடாமல்) மீண்டும் தம் தலைக்குத் திரும்பிவிடுவதைக் கண்டார். அவர் அந்த இடத்திலேயே இன்னும் அசைவற்றவராகவே நின்று கொண்டிருந்தார்.(31) சில காலத்திற்குப் பிறகு தாய் தந்தையர் இல்லாமலேயே அவை போவரும் வருவதுமாக இருப்பதை அவர் கண்டார். அப்போதும் ஜாஜலி அசையாமலேயே இருந்தார்.(32)

சில காலம் கழித்து, அந்தக் குஞ்சுகள் காலையில் சென்றபிறகு, முழு நாளையும் அவர் பார்வையில் இருந்து வெளியே கழித்து மாலையில் கூட்டில் வசிப்பதற்காகத் திரும்பி வந்தன.(33) மேலும் சில காலம் கழித்து, கூட்டிலிருந்து சென்று ஐந்து நாள் கழித்து ஆறாம் நாளில் அவை திரும்பின. ஜாஜலி அப்போதும் அசையவில்லை.(34) அடுத்ததாகப் பலத்தில் அவை முழுமையாக வளர்ந்து அவரை விட்டுச் சென்ற பின் பல நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை.(35) இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தில் அவரைவிட்டுச் சென்று ஒருமாதமாகியும் அவை திரும்பி வரவில்லை. ஓ! மன்னா, அப்போது ஜாஜலி அந்த இடத்தைவிட்டு அகன்றார்.(36) இவ்வாறு நன்மைக்காக அவை வெளியே சென்ற பிறகு மிகவும் ஆச்சரியமடைந்த ஜாஜலி, தவ வெற்றியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார். அப்போது அவரது இதயத்திற்குள் செருக்கு ஊடுருவியது.(37) நோன்புகளை உறுதியாக நோற்ற அந்தப் பெரும் தவசி, தம் தலையில் வளர்ந்த அந்தப் பறவைகள் இவ்வாறு அவரைவிட்டுச் சென்றதைக் கண்டு, தம்மைத் தாமே உயர்வாக நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார்.(38) பிறகு அவர், ஓடைக்குச் சென்று நீராடி, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, உதிக்கும் சூரியனுக்குத் தம் வணக்கங்களைச் செலுத்தினார்.(39)

உண்மையில், இவ்வாறு அந்தச் சாதகப் பறவைகளைத் தம் தலையில் வளரச் செய்தவரும், தவசிகளில் முதன்மையானவருமான அந்த ஜாஜலி, தமது கக்கங்களில் அறையத் தொடங்கி {தோள்களைதட்டத் தொடங்கி}, “நான் பெரும் தகுதியை வென்றேன்” என்று வானத்தினூடாக உரக்க அறிவித்தார்.(40)

அப்போது வானத்தில் இருந்து புலப்படாத ஒரு குரல் எழுந்தது, ஜாஜலியும் அவ்வார்த்தைகளைக் கேட்டார். “ஓ! ஜாஜலி, அறத்தின்கண் நீர் துலாதாரனுக்கு இணையாகமாட்டீர்.(41) பெரும் ஞானம் கொண்ட அந்தத் துலாதாரன் வாராணசியில் வாழ்கிறான். ஓ! மறுபிறப்பாளரே, அவனும் கூட நீர் சொல்வதைச் சொல்லத் தகுந்தவனாகான்” {என்று அக்குரல் சொன்னது}.(42)

இவ்வார்த்தைகளைக் கேட்ட ஜாஜலி, ஓ! ஏகாதிபதி, கோபத்தில் நிறைந்தவராக, துலாதாரனைச் சந்திக்கும் விருப்பத்தோடு, அமைதி நோன்பை {மௌன விரதத்தை} நோற்றும், மாலைவேளை சந்திக்கும் இடத்திலேயே அவ்விரவை கழித்தும் மொத்த பூமியிலும் திரிந்து கொண்டிருந்தார்.(43) ஒரு குறிப்பிட்ட அளவுக்கான காலத்திற்குப் பிறகு அவர் வாராணசி நகரத்தை அடைந்து சில்லறைப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துலாதாரனைக் கண்டார்[1].(44) கடைக்காரனான துலாதாரன், தன் இடத்திற்கு வந்த பிராமணரைக் கண்டதும், உற்சாகமாக எழுந்திருந்து, விருந்தினருக்கு உரிய வணக்கங்களுடன் அவரை வழிபட்டான்[2].(45)துலாதாரன் {ஜாஜலியிடம்}, “ஓ! பிராமணரே {ஜாஜலியே}, நீர் என்னிடம் வருகிறீர் என்பதை நான் அறிந்தேன். ஐயமில்லை. எனினும், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் சொல்வதைக் கேட்பீராக.(46) கடற்கரையின் அருகே பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டே நீர் கடுந்தவங்களைச் செய்து வந்தீர். அறத்தையோ, தகுதியையோ குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருந்தீர்.(47) இறுதியாக நீர் தவ வெற்றியை அடைந்த போது, குறிப்பிட்ட பறவைகளை நீர் உமது தலையில் தாங்கினீர். நீர் அந்தச் சிறு பறவைகளிடம் பெரும் கவனம் செலுத்தினீர்.(48) இறுதியில் அந்தப் பறவைகள் சிறகுகளைப் பெற்ற போது, இரை தேடி அங்கேயும் இங்கேயும் செல்வதற்காக அவை உமது தலையை விட்டுச் சென்ற போதும், ஓ! பிராமணரே, அந்தச் சாதகப் பறவைகளின் பிறப்புக்கு இவ்வாறு துணை புரிந்ததன் விளைவால், பெரும் தகுதியை அடைந்துவிட்டதாக நினைத்து, செருக்கின் தூண்டுதலை நீர் உணரத் தொடங்கினீர்.(49) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அப்போது என்னைக் குறிப்பிடும் வானொலி ஒன்றை நீர் கேட்டீர். நீர் கேட்ட வார்த்தைகள் உம்மைச் சினத்தில் நிறைத்தன, அதன் விளைவாக நீர் இங்கே வந்திருக்கிறீர். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, உமது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {தூலாதாரன்}”.(50)

தீங்கிழையாமை! – சாந்திபர்வம் பகுதி – 262-ஜாஜலிக்கு அறமுறைத்த துலாதாரன்; தீங்கிழையாமையே உயர்ந்த அறம் எனச் சொன்ன துலாதாரன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புத்திசாலியான துலாதாரனால் அந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லப்பட்டவரும், தவசிகளில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான ஜாஜலி, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(1)

ஜாஜலி {துலாதாரனிடம்}, “ஓ! வணிகனின் மகனே {வைஸ்யபுத்ரா}, சாறுகளும், நறுமணமும் கொண்ட அனைத்து வகைப் பொருட்களையும், பெரும் மரங்களின் கனிகளையும், (மரப்பட்டைகளையும், இலைகளையும்), கிழங்குகளையும் நீ விற்பனை செய்கிறாய்.(2) {இவ்வாறிருக்கையில்} மெய்யுறுதி அல்லது நிலைத்த புத்தியை அடைவதில் நீ எவ்வாறு வென்றாய்? இந்த ஞானம் எங்கிருந்து உன்னிடம் வந்தது? ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, இவை யாவற்றையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக” என்று கேட்டார்”.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும் புகழைக் கொண்ட அந்தப் பிராமணரால் {ஜாஜலியால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், வைசிய வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவனும், அறநெறி விளக்கங்களின் உண்மைகளை நன்கறிந்தவனும், ஞானத்தில் நிறைவு கொண்டவனுமான துலாதாரன், கடுந்தவங்களை மேற்கொண்ட ஜாஜலியிடம் அறத்தின் வழிமுறைகளைக் குறித்து உரையாடினான்.(4)

துலாதாரன், “ஓ! ஜாஜலி, நித்தியமான அறத்தை அதன் புதிர்கள் அனைத்துடன் நான் அறிவேன். அஃது உலகளாவிய நட்புறவு மற்றும் அனைத்துயிரினங்களுக்கான நன்மை ஆகியவற்றைக் கொண்டதும், அனைவராலும் அறியப்பட்டதுமான பழங்கால அறத்தை {சனாதன தர்மத்தைத்} தவிர வேறேதும் இல்லை.(5) அனைத்து உயிரினங்களுக்கு முற்றாகத் தீங்கிழையாமல் இருப்பது, அல்லது (உண்மையில் தேவைப்படும் இடங்களில் மட்டும்) குறைந்த அளவு தீங்கைச் செய்வது எனும் அடிப்படையில் அமைந்த வாழ்வுமுறையே உயர்ந்த அறமாகும். ஓ! ஜாஜலி, நான் அந்த வாழ்வுமுறையின்படியே வாழ்கிறேன்.(6) என்னுடைய இவ்வீடு, மரத்தையும், புல்லையும் பயன்படுத்திப் பிறரின் கைகளால் கட்டப்பட்டதாகும். ஓ! மறுபிறப்பாள முனிவரே, செம்பஞ்சு, நீலோத்பலமலரின் வேர் {பத்மகம்}, தாமரை இதழ்கள் {துங்கம்}, பல்வேறு வகையிலான நல்ல நறுமணப் பொருட்கள், மது தவிர்த்த பல்வேறு வகைத் திரவங்கள்[1] ஆகியவற்றை நான் பிறரிடம் இருந்து கொள்முதல் செய்து, வஞ்சனை ஏதுமின்றி விற்பனை செய்து வருகிறேன்.(8) ஓ! ஜாஜலி, அனைத்து உயிரினங்களுக்கு எப்போதும் நண்பனாக இருப்பவன் எவனோ, எண்ணம், வாக்கு, செயல் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவன் எவனோ, அவனே அறமறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(9) நான் எவரிடமும் ஒருபோதும் எதையும் வேண்டுவதில்லை, எவரிடமும் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடுவதில்லை; நான் ஒருபோதும் எவரையும் வெறுப்பதுமில்லை. நான் ஒருபோதும் எதனிலும் ஆசையை வளர்த்துக் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் நான் சமமான பார்வையையே செலுத்துகிறேன். ஓ! ஜாஜலி, இஃது என் நோன்பு என்பதைக் காண்பீராக.(10)ஓ! ஜாஜலி அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் என் தராசு முற்றிலும் சமமாகவே இருக்கும்.(11) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, வானத்தில் தென்படும் ஆச்சரியங்களைப் போலவே உலகின் வகைகளையும் காண்பதால் நான் பிறரின் செயல்களைப் புகழ்வதோ, பழிப்பதோ இல்லை[2].(12) ஓ! ஜாஜலி, நான் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைச் செலுத்துகிறேன் என்பதை அறிவீராக. ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே, மண்ணாங்கட்டி, சல்லிக்கற்கள் மற்றும் பொற்குவியல் ஆகியவற்றுக்கிடையில் நான் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை.(13) குருடர்கள், செவிடர்கள் மற்றும் அறிவிழந்தவர்கள் ஆகியோர் தங்கள் புலன்களை இழந்தததில் முற்றிலும் ஆறுதலடைவதைப் போலவே நானும் (இன்பங்களைத் தவிர்ப்பதில்) ஆறுதலடைகிறேன்[3].(14) முதுமையடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பலவீனர்கள், மெலிந்தவர்கள் ஆகியோர் எந்த வகை இன்பத்தையும் அனுபவிக்காததைப் போலவே, நானும் செல்வம் அல்லது இன்பத்தை அனுபவிப்பதை நிறுத்திவிட்டேன்.(15)ஒரு மனிதன் எப்போது எதையும் அச்சுறுத்தாமலும், எதற்கும் அஞ்சாமலும் இருக்கிறானோ, எப்போது அவன் ஆசையேதும் வளர்க்காமலும், வெறுப்பேதும் கொள்ளாமலும் இருக்கிறானோ, அப்போது அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(16) ஒரு மனிதன் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ பாவம்நிறைந்தவனாக எந்த உயிரினத்திடமும் நடந்து கொள்ளாதபோது, அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(17) கடந்த காலமோ, எதிர்காலமோ ஏதுமில்லை. அறமோ, மறமோ ஏதுமில்லை. எந்த உயிரினத்தின் அச்சத்திற்குரிய பொருளாகவும் இல்லாதவனே, அச்சமற்ற நிலையை அடைவதில் வெல்கிறான்[4].(18) மறுபுறம், பேச்சில் கடுமையும், தீவிரக் கோபமும் கொண்ட மனிதன், மரணத்தைப் போலவே அனைத்து உயிரினங்களின் தொல்லைக்கு மூலமாக அமைந்து, அச்சம் நிறைந்த நிலையை நிச்சயம் அடைகிறான்.(19) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதியை முறையாக நோற்றுப் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் பிள்ளைகள் {பேரர்கள்} ஆகியோருடன் சேர்ந்து வாழும் உயர் ஆன்ம நல்லோரின் நடைமுறைகளையே நான் பின்பற்றுகிறேன்.(20)உள்ளபடியே நல்லோராகவும், விவேகிகளாகவும் இருப்போரின் ஒழுக்கத்தில் காணப்படும் சில பிழைகளால் {குற்றங்களால்} திகைப்படையும் ஒருவன், (வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள) நித்திய நடைமுறைகளை முற்றிலும் கைவிடுகிறான். எனினும் கல்விமானான ஒருவன், அல்லது புலன்களை அடக்கிய ஒருவன், அல்லது மனோபலம் கொண்ட ஒருவன், அவ்வொழுக்கத்தால் வழிநடத்தப்பட்டே விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்[5].(21) ஓ! ஜாஜலி, தன் புலன்களை அடக்கி, பிறருக்குத் தீங்கிழைக்கும் ஆசைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த இதயத்துடன் நல்லோர் என்றழைக்கப்படுவோரால் பின்பற்றப்படும் ஒழுக்கத்தை நடைமுறையில் நோற்கும் ஞானியானவன் நிச்சயம் அறத்தகுதியை (அறத்தகுதியையும், அதன் கனியான விடுதலையையும் {முக்தியையும்}) ஈட்டுவான்.(22) ஆற்று நீரோட்டத்தின் போக்கில் அடித்துச் செல்லப்படும் மரத்துண்டு, அதே போல அடித்துவரப்படும் மற்றொரு துண்டுடன் (சில காலத்திற்குத்) தொடர்பில் இருப்பது இவ்வுலகில் காணப்படுகிறது. அந்நீரோட்டத்தில் அவ்வாறு சேர்ந்த மரத்துண்டுகள் மீண்டும் ஒன்றையொன்று விட்டுப்பிரிவதும் காணப்படுகிறது. புற்கள், குச்சிகள் மற்றும் சாணம் ஆகியவை ஒன்றோடொன்று கலப்பதும் காணப்படுகிறது. இந்தச் சேர்கை விபத்தின் மூலம் நேர்வதேயன்றி, அதற்கு ஒரு நோக்கமோ வடிவமைப்போ கிடையாது[6].(23,24) ஓ! தவசியே {ஜாஜலியே}, எவனைக் கண்டு எந்த உயிரினமும் கிஞ்சிற்றும் அஞ்சுவதில்லையோ, அவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ள மாட்டான்.(25)மறுபுறம், ஓ! கல்விமானே, எவனைக் கண்டதும் ஓநாயைக் கண்டது போல ஒவ்வொரு உயிரினமும் அஞ்சுகிறதோ, அவன் முழங்கும் வடவாக்னியிடம் கொண்ட அச்சத்தின் மூலம் கரைக்குத் தாவ நிர்ப்பந்திக்கப்படும் நீர்வாழ் விலங்கினங்களைப் போல அச்சத்தால் நிறைந்தவனாகிறான்.(26) அண்டந்தழுவிய {உலகந்தழுவிய} தீங்கிழையாமை நடைமுறை இவ்வாறே எழுந்தது. ஒருவன் தன் சக்திக்குத்தக்க அனைத்து வழிமுறைகளினாலும் இதைப் பின்பற்றலாம். தொண்டர்களுடையவனும், செல்வமுடையவனும் இதைப் பின்பற்ற முனையலாம். இது நிச்சயம் செழிப்புக்கும், சொர்க்கத்திற்கும் வழிவகுக்கும்.(27) செல்வமும் தொண்டர்களும் படைத்த மனிதர்கள், பிறரின் அச்சத்தை விலக்க இயன்றதன் விளைவாகக் கல்விமான்களால் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சாதாரண மகிழ்ச்சிக்காகவும், புகழுக்காகவும் மனிதர்கள் அண்டந்தழுவிய தீங்கிழையாமை எனும் கடமையைப் பயில்கிறார்கள்; அதே வேளையில் உண்மையில் திறனுடையவர்கள், பிரம்மத்தை அடைவதற்காக அதையே {உலகந்தழுவிய தீங்கிழையாமையை} பயில்கிறார்கள்.(28) தவங்கள், வேள்விகள், ஈகை, ஞானம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் என்னென்ன கனிகளை அனுபவிக்கிறானோ, அவை அனைத்தையும் தீங்கிழையாமை என்ற கடமையைப் பயில்வதால் பெறலாம்.(29) தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதியை அனைத்து உயிரினங்களுக்கு அளிப்பவன், வேள்விகள் அனைத்தின் மூலம் கிட்டும் தகுதியை அடைந்து, இறுதி வெகுமதியாக அச்சமற்ற தன்மையை அடைகிறான். பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்ப்பதைத் தவிர மேன்மையான கடமையேதும் கிடையாது.(30)

ஓ! பெரும் தவசியே, எவனைக் கண்டு எந்த உயிரினமும் கொஞ்சமும் அஞ்சவில்லையோ, அவன் அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அச்சமில்லாத தன்மையை அடைகிறான்.(31) (உறங்கும்) அறைக்குள் {படுக்கையறைக்குள்} புகுந்த பாம்பைப் போல எவனைக் கண்டு அனைவரும் அஞ்சுகிறார்களோ, அவன் இம்மையிலோ மறுமையிலோ ஒருபோதும் எந்தத் தகுதியையும் அடைய மாட்டான்.(32) எந்த மனிதன் அனைத்து நிலைகளையும் விஞ்சி இருக்கிறானோ, எவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ, எவன் அனைத்து உயிரினங்களையும் தன்னைப் போலவே நினைக்கிறானோ அந்த மனிதனின் பாதையில் தேவர்களே கூடத் திகைப்படைகிறார்கள்.(33) கொடைகள் அனைத்தைக் காட்டிலும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமையை உறுதியளிப்பதே (தகுதியின் அடிப்படையில்) உயர்ந்த கொடையாகும். ஓ! ஜாஜலி, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் என்னை நம்புவீராக.(34) செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன், முதலில் செழிப்பை வெல்கிறான், ஆனால் (தன் தகுதி {புண்ணியம்} தீரும்போது) அவன் மீண்டும் வறுமையையே அடைகிறான்.(35)

செயல்களில் (அவற்றின் தகுதிகளில்) அழிவைக் காணும் ஞானிகள், செயல்களை மெச்சுவதில்லை.(36) ஓ! ஜாஜலி, (மகிழ்ச்சிக்கான) ஏதோ ஒரு நோக்கத்தால் தூண்டப்படாத எந்தக் கடமையும் இங்கில்லை. எனினும் கடமை {அறம்} மிக நுட்பமானது. பிரம்மம் மற்றும் சொர்க்கம் ஆகிய இரண்டின் நிமித்தமாகவும் வேதங்களில் கடமைகள் {தர்மங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(37) கடமையின் காரியங்கள் பல ரகசியங்களையும், புதிர்களையும் கொண்டிருக்கின்றன. அவை எளிதில் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிக நுட்பமானவையாக இருக்கின்றன. முரண்பட்ட பல்வேறு விதிகளுக்கு மத்தியில், நல்லோரின் செயல்களைக் காண்பதன் மூலம் சிலர் கடமையைப் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(38) காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வோர், அவற்றின் நாசிகளில் துளையிடுவோர், அவற்றைப் பெருஞ்சுமைகளைச் சுமக்கச் செய்வோர், அவற்றைக் கட்டி, பல்வேறு வகைக் கட்டுப்பாடுகளில் அவற்றை நிறுத்துவோர்,(39) அவற்றைக் கொன்று உயிரினங்களின் இறைச்சியை உண்போர் ஆகியோரை நீர் ஏன் எரிக்காமலிருக்கிறீர் {நிந்திக்காமலிருக்கிறீர்}? மனிதர்கள் சக மனிதர்களை அடிப்பதன் மூலமும், கட்டுவதன் மூலமும், கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் அவர்களை அடிமையாக்கி, பகலும் இரவும் அவர்களைப் பணியில் ஈடுபடுத்துவது காணப்படுகிறது. இம்மனிதர்கள், அடிப்பது மற்றும் சங்கிலிகளில் பிணைப்பது ஆகியவற்றின் விளைவால் உண்டாகும் வலியை அறியாதவர்கள் அல்ல.(41)

ஐம்புலன்களோடு கூடிய ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் தேவர்கள் அனைவரும் வாழ்கின்றனர். சூரியன், சந்திரன், வாயு, பிரம்மன், பிராணன், கிரது, யமன் ஆகியோர் (வாழும் உயிரினங்களுக்குள்) வசிக்கின்றனர்.(42) உயிரினங்களைக் கொண்டு வாணிபம் செய்வதன் மூலம் வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு பாவம் நிறைந்த நடைமுறையின் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும்போது, உயிரற்ற உடல்களை {இறைச்சியை} விற்பதில் அவர்கள் ஐயமேதும் உணர்வார்களா? வெள்ளாடு அக்னியாகும். செம்மறி ஆடு வருணனாகும். குதிரை சூரியனாகும். பூமி விராட் தேவனாகும்.(43) பசுவும் கன்றும் சோமன் {சந்திரன்} ஆகும். இவற்றை விற்கும் மனிதர்கள் ஒருபோதும் வெற்றியை அடைவதில்லை. ஆனால், ஓ! மறுபிறப்பாளரே, எண்ணெய் {தைலம்}, கிருதம் {நெய்}, தேன், மருந்துகள் ஆகியவற்றை விற்பதில் என்ன களங்கம் இருக்கிறது?(44) கொசுக்களும், கடிக்கும் பூச்சிகளும் இல்லாத இடங்களில் பல விலங்குகள் சுகமாகவும், வசதியாகவும் வளர்கின்றன. அவை தங்கள் தாய்க்கு அன்புக்குரியவை என்பதை அறிந்தும் மனிதர்கள் அவற்றைப் பல்வேறு வகைகளில் தண்டித்து,(45) கடிக்கும் பூச்சிகள் உள்ள புழுதிகளுக்குள் அவற்றைச் செலுத்துகின்றனர். வண்டியிழுக்கும் பல விலங்குகள் கனமிக்கச் சுமைகளால் மிகவும் ஒடுக்கப்படுகின்றன. மேலும் வேறு சில, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத வகையில் நடத்தப்படுவதன் விளைவால் தளர்வடையச் செய்யப்படுகின்றன.(46) விலங்குகளுக்குத் தீங்கிழைக்கும் இத்தகைய செயல்கள், கருவைக் கொல்லும் செயலில் இருந்து எவ்வகையிலும் வேறுபட்டதில்லை என்று நான் நினைக்கிறேன்.

உழவுத்தொழில் பாவமற்றது என மக்கள் கருதுகிறார்கள். எனினும் அத்தொழிலும் நிச்சயம் கொடுமை நிறைந்ததாகும்.(47) இரும்புக்கொழுவுடன் சேர்ந்த கலப்பையானது, மண்ணுக்கும், மண்ணில் வாழும் பல உயிரினங்களுக்கும் காயத்தை ஏற்படுத்துகிறது. ஓ ஜாஜலி, கலப்பையில் பூட்டப்படும் எருதுகளில் உமது கண்களைச் செலுத்துவீராக.(48) ஸ்ருதிகளில் பசுக்கள் கொல்லத்தகாதன என்றழைக்கப்படுகின்றன. ஒரு காளையையோ, பசுவையோ கொல்வதன் மூலம் அந்த மனிதன் பெரும்பாவத்தை இழைக்கிறான்.(49)

பழங்காலத்தில் புலனக்கம் கொண்ட பல முனிவர்கள் நஹுஷனிடம், “ஓ! மன்னா, சாத்திரங்களில் ஒருவனின் தாயைப் போன்ற ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பசுவைக் கொன்றிருக்கிறாய். படைப்பாளனையப் போன்றே ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு காளையையும் கொன்றிருக்கிறாய்[7].(50) ஓ! நஹுஷா, {இதன் மூலம்} நீ தீச்செயலைச் செய்திருக்கிறாய், அதைக் கண்டு நாங்கள் மிகவும் துன்புறுகிறோம்” என்றனர். எனினும், அவர்கள் அந்த நஹுஷனைத் தூய்மைப்படுத்துவதற்காக, அந்தப் பாவத்தை நூற்றொரு பாகங்களாகப் பிரித்து, அவற்றை நோய்களாக்கி அனைத்து உயிரினங்களுக்கு மத்தியில் விட்டனர்[8].(51) ஓ! ஜாஜலி, இவ்வாறு அந்த உயர் ஆன்ம முனிவர்கள் அனைத்து உயிரினங்களின் மேலும் அந்தப் பாவத்தைச் செலுத்தி, கருவைக் கொன்ற குற்றத்தைச் செய்தவனான நஹுஷனிடம், “உன் வேள்வியில் நாங்கள் ஆகுதிகளை ஊற்ற இயலாது” என்றனர்[9].(52)உயர் ஆன்ம முனிவர்களும், அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களான யதிகளும், மன்னன் நஹுஷன் வேண்டுமென்றே அந்தப் பாவத்தைச் செய்ய வில்லை என்பதைத் தங்கள் தவச் சக்தியின் மூலம் உறுதி செய்த பிறகே இவ்வாறு சொன்னார்கள்[10].(53) ஓ! ஜாஜலி, இவை இப்போதும் இந்த உலகத்தில் உள்ள சில தீய மற்றும் பயங்கர நடைமுறைகளாகும். இவை பழங்காலத்தில் இருந்து அனைத்து மனிதர்களாலும் செய்யப்படுகிறது என்பதாலேயே நீர் அவற்றைச் செய்கிறீரேயல்லாமல், தூய்மையாக்கப்பட்ட உமது புத்தியின் விதிகளுக்கு ஏற்புடைய எந்தக் காரணத்தாலும் அல்ல.(54) ஒருவன், உலக நடைமுறைகளைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக அறிவின் மூலம் வழிநடத்தப்பட்டு எதைத் தன் கடமையாகக் கருதுகிறானோ அதையே செய்ய வேண்டும். ஓ! ஜாஜலி, தீங்கிழைப்பவன் மற்றும் என்னைப் புகழ்பவன் ஆகியோரிடம் என் நடத்தை என்ன என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பீராக.(55) அவை இரண்டையும் நான் ஒரே ஒளியிலேயே கருத்தில் கொள்கிறேன். நான் எவரையும் விரும்பவுமில்லை, எவரையும் வெறுக்கவுமில்லை. இத்தகைய ஒழுக்க நடைமுறையானது கடமை அல்லது அறத்திற்கு இணக்கமானது என ஞானிகள் மெச்சுகின்றனர்.(56) இந்த ஒழுக்க நடைமுறையே யதிகளால் பின்பற்றப்படுவதும், அறிவுக்கு இணக்கமானதுமாகும். மேன்மையான பார்வை கொண்ட கண்களுடன் எப்போதும் அறத்தை நோற்பீராக” என்றான் {துலாதாரன்}.(57)

புரோடாசயாகம்! – சாந்திபர்வம் பகுதி – 263-வேள்வியின் முக்கியத்துவத்தைத் துலாதாரனிடம் எடுத்துச் சொன்ன ஜாஜலி; வேள்விகளையும் அவற்றின் தன்மைகளையும் குறித்து ஜாஜலிக்குச் சொன்ன துலாதாரன் இறுதியில் மனோவேள்வியே அனைத்து வேள்விகளிலும் முதன்மையானது என்றது…

ஜாஜலி {துலாதாரனிடம்}, “ஓ! தராசை ஏந்துபவனே {துலாதாரா}, நீ சொல்லும் இந்தக் கடமையின் போக்கு அனைத்து உயிரினங்களுக்கும் எதிராகச் சொர்க்கத்தின் வாயிலை மூடி, அவற்றின் வாழ்வுத் தேவைக்கான வழிமுறைகளைத் தடை செய்கிறது.(1) உழவில் இருந்தே உணவு தோன்றுகிறது. உனக்கும்கூட அவ்வுணவே வாழ்வாதாரத்தைத் தருகிறது. ஓ! வணிகனே, விலங்குகள், பயிர்கள் {தானியங்கள்} மற்றும் மூலிகைகளின் துணை கொண்டு மனிதர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.(2) விலங்குகள் மற்றும் உணவில் இருந்தே வேள்விகள் தோன்றுகின்றன. உன் கோட்பாடுகள் நாத்திகத்தின் மணத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. வாழ்வாதார வழிமுறைகள் கைவிடப்பட்டால் இவ்வுலகமே ஒரு முடிவுக்கு வந்துவிடும்” என்றார் {ஜாஜலி}.(3)

துலாதாரன் {ஜாஜலியிடம்}, “வாழ்வாதார வழிமுறைகள் குறித்து நான் இப்போது சொல்லப்போகிறேன். ஓ! பிராமணரே, நான் நாத்திகனல்ல. நான் வேள்விகளைப் பழிக்கவுமில்லை. எனினும், {உள்ளபடியே} வேள்வியை அறிந்த மனிதன் மிக அரிதானவன்.(4) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியை நான் வணங்குகிறேன். அவ்வேள்வியை அறிந்தவர்களையும் நான் வணங்குகிறேன். ஐயோ, பிராமணர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேள்வியைக் கைவிட்டு க்ஷத்திரியர்களுக்குரிய வேள்விகளைச் செய்து வருகிறார்கள்[1].(5)ஓ! மறுபிறப்பாளரே, பேராசையும், செல்வத்தில் விருப்பமும் கொண்ட நம்பிக்கையாளர்கள் பலர், ஸ்ருதிகளில் உள்ள தீர்மானங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ளாமல், உண்மை போலத் தோன்றுபவையும், உண்மையில் போலியானவையுமானவற்றை அறிவித்து, பல்வேறு வகை வேள்விகளையும் அறிமுகம் செய்து,(6) “இந்த வேள்வியில் இதைக் கொடுக்க வேண்டும். இந்த மற்றொரு வேள்வியில் இந்த மற்றொரு பொருள் கொடுக்கப்பட வேண்டும். இதில் முதலில் வருவது மெச்சத்தகுந்தது” என்று சொல்கிறார்கள். எனினும், ஓ! ஜாஜலி, இவையனைத்தின் விளைவாக, களவும், பல தீச்செயல்களும் எழுகின்றன[2].(7) நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்டும் வேள்விக் காணிக்கை மட்டுமே தேவர்களை நிறைவு செய்யும் என்பது அறியப்பட வேண்டும். தேவர்களை வழிபடுவதற்குரிய வணக்கங்கள், நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள், வேதம் ஓதல், செடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் குறித்து  சாத்திரங்களில் அபரிமிதமான குறிப்புகள் இருக்கின்றன.(8) அறமில்லா மனிதர்கள் தங்கள் அறச்செயல்களின் மூலம் தீய வாரிசுகளை {சந்ததிகளைப்} பெறுகின்றனர். பேராசை கொண்ட மனிதர்களில் இருந்து பேராசைமிக்கப் பிள்ளைகள் தோன்றுகின்றனர், நிறைவானவர்களிடம் இருந்து நிறைவுடைய பிள்ளைகள் பிறக்கின்றனர்.(9) வேள்வி செய்பவனும், புரோகிதரும் கனியில் உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு (அவர்கள் செய்யும் வேள்விகள் அல்லது துணைபுரியும் வேள்விகளில்) செயல்பட்டால், அவர்களது பிள்ளைகள் களங்கமடைவார்கள். மறுபுறம், அவர்கள் கனியின் மீது ஆசை கொள்ளவில்லையெனில் அவ்வாறான ஆசையில்லாத பிள்ளைகள் அவர்களுக்குப் பிறப்பார்கள். ஆகாயத்தில் இருந்து தெளிந்த நீர் உண்டாவதைப் போல, வேள்விகளில் இருந்தே சந்ததி உண்டாகிறது.(10)வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் சூரியனை நோக்கி எழுகின்றன. சூரியனில் இருந்து மழை எழுகிறது. மழையிலிருந்து உணவு எழுகிறது. உணவிலிருந்து உயிரினங்கள் பிறக்கின்றன.(11) பழங்காலங்களில்  நீதிமிக்க அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த மனிதர்கள், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதையே அவற்றில் இருந்து வழக்கமாகப் பெற்றனர். உழாமலேயே பூமி பயிர்களை விளைவித்தது. முனிவர்கள் சொல்லும் வாழ்த்துகளே செடிகளையும், மூலிகைகளையும் உண்டாக்கின.(12) பழங்கால மனிதர்கள் ஒருபோதும், கனிகளின் மீதுள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்யவில்லை, மேலும், அவர்கள் கனிகளை அனுபவிப்பவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டதுமில்லை. தங்கள் திறனில் ஐயங்கொண்டிருந்தாலும், ஏதோவொரு வகையில் வேள்விகளைச் செய்வோர்,(13) தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் நேர்மையற்றவர்களாகவும், வஞ்சகர்களாகவும், செல்வத்தில் மிகுந்த ஆசை கொண்ட பேராசைக்காரர்களாகவும் பிறக்கிறார்கள். அங்கீகாரம்பெற்ற சாத்திரங்கள் அனைத்தும் தீமையால் நிறைந்தவை என்று போலி அறிவின் துணையுடன் சொல்லும் மனிதன், இத்தகைய அவனது பாவச்செயலுக்காகப் பாவம் நிறைந்த உலகங்களுக்கே நிச்சயம் செல்வான். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அத்தகைய மனிதன் நிச்சயம் பாவம் நிறைந்த ஆன்மாவாவான், மேலும் அவன் எப்போதும் இங்கேயே ஞானமற்றவனாக இருப்பான்[3].(14,15)எந்த மனிதன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளன செயல்கள் தினமும் நிறைவேற்றப்பட வேண்டியன என்று கருதுகிறானோ, எந்த மனிதன் எந்த நாளிலாவது அவற்றை நிறைவேற்றாமல் போனால் அச்சத்தால் நிறைகிறானோ, வேள்விக்கு அடிப்படையான அனைத்தையும் பிரம்மத்தைப் போன்றே எவன் பொருள் கொள்கிறானோ, தானே செயல்புரிபவன் என்று எவன் ஒருபோதும் கருதவில்லையோ, அவனே உண்மையில் பிராமணனாவான்.(16) அத்தகைய மனிதனின் செயல்கள் {வேள்விகள்} நிறைவுபெறாமல் போனாலோ, தூய்மையற்ற விலங்குகள் அனைத்தினாலும் அவற்றின் நிறைவுக்கு முன் தடுக்கப்பட்டாலோ கூட அந்தச் செயல்கள் மேன்மையான திறம்பெற்றவையே என்று நாம் கேள்விப்படுகிறோம். எனினும், அச்செயல்களின் கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் (அவை நிறைவடைவதற்கு முன்பு இத்தகைய தடங்கல்களால் தடை) செய்யப்பட்டால், பாவக்கழிவு {பரிகாரம்} நிச்சயம் தேவை.(17) வாழ்வின் உயர்ந்த நோக்கமான (விடுதலையை) அடைய ஆசைப்படுபவர்கள், உலகம் சார்ந்த அனைத்து வகைச் செல்வத்திலும் ஆசையற்றவர்கள், எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் அலட்சியம் செய்பவர்கள், பொறாமையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் வாய்மையையும், தற்கட்டுப்பாட்டையும் தங்கள் வேள்வியாக எடுத்துக் கொள்கிறார்கள்.(18) உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்கள், பிரணவத்தைத் தியானிப்பவர்கள் ஆகியோர் எப்போதும் பிறரை நிறைவு செய்வதில் வெல்கிறார்கள்.(19) தேவர்கள் அனைவரின் ஆன்மாவாகிய அண்டந்தழுவிய பிரம்மம் (பிரணவம்), பிரம்மத்தை அறிந்தவனிடமே வசிக்கிறது. எனவே, ஓ! ஜாஜலி அத்தகைய மனிதன் உண்டு நிறைவடையும்போது, தேவர்கள் அனைவரும் நிறைவடைந்தவர்களாகிறார்கள்.(20)

அனைத்து வகைச் சுவைகளிலும் நிறைவடைந்த ஒருவன், எந்த ஒரு குறிப்பிட்ட சுவையையும் விரும்பாததைப் போலவே ஞானத்தால் நிறைவடைந்தவன், முற்றான அருள் ஊற்றாக நீடிக்கும் நிறைவை அடைகிறான்.(21) அறத்தின் புகலிடமாக இருப்பவர்களும், அறத்தில் திளைப்பவர்களுமான ஞானிகளே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற நிச்சயமான ஞானத்தை அடைந்தவர்களாவர். அத்தகைய ஞானத்தைக் கொண்ட ஒருவன், இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் தன்னில் இருந்து எழுந்ததாகவே எப்போதும் கருதுவான்[4].(22) (வாழ்வெனும் இந்தப் பெருங்கடலின்) மறுகரையை அடைய முயல்பவர்களும், நம்பிக்கை நிறைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான சிலர், பேரருளை உண்டாக்குவதும், மிகப் புனிதமானதும், அறவோர் வசிப்பதும், கவலையில் இருந்து விடுபட்டு, எவ்வகையான கலக்கமோ, வலியோ இல்லாத, திரும்ப வேண்டிய அவசியமில்லாத இடமான பிரம்மலோகத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(23,24) அத்தகைய மனிதர்கள் சொர்க்கத்திற்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் ஆடம்பர வேள்விகளில் பிரம்மத்தைத் துதிப்பதில்லை. அவர்கள் அறவோரின் பாதையிலேயே நடக்கிறார்கள். அவர்கள் செய்யும் வேள்விகள் எவ்வுயிரினத்திற்கும் தீங்கிழைக்காமலேயே செய்யப்படுகின்றன.(25)இம்மனிதர்கள், மரங்கள், மூலிகைகள், கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே வேள்விக் காணிக்கையாக அறிகிறார்கள். பேராசைமிக்கப் புரோகிதர்கள், செல்வத்தை விரும்புபவர்களாக இருப்பதால், இந்த (ஏழை) மனிதர்களின் வேள்விகளை ஒருபோதும் செய்து கொடுப்பதில்லை.(26) இந்த மறுபிறப்பாளர்களோ, தங்கள் செயல்கள் அனைத்தும் நிறைவடைந்தாலும்கூட, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதற்காகவும், தங்களையே வேள்விக் காணிக்கையாக்கும் விருப்பத்தாலும் வேள்விகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.(27) இந்தக் காரணத்தினால், பேராசைமிக்கப் புரோகிதர்கள், தவறாக வழிநடத்தப்படுபவர்களின் வேள்விகளில் மட்டுமே செயல்பட்டு, விடுதலையை அடைய முயற்சி செய்யாமல் சொர்க்கத்தை நாடுகிறார்கள். எனினும், உண்மையில் நல்லவர்களாக இருப்போர், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிறரைச் சொர்க்கத்திற்கு உயரச் செய்கிறார்கள். ஓ ஜாஜலி, இந்த இருவகை நடத்தைகளையும் பார்த்து, (உலகில் உள்ள எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல்) சமமான இதயத்துடன் அனைத்து உயிரினங்களையும் நான் கருத்தில் கொள்கிறேன்.(28) ஞானம் கொண்ட முதன்மையான பிராமணர்கள் பலர், (சிலருக்குத் திரும்ப வேண்டிய அவசியமில்லாத விடுதலைக்கு வழிவகுப்பற்றையும், சிலருக்கு திரும்ப வேண்டிய அவசியமில்லாத அருள் உலகங்களுக்கு வழிவகுப்பவற்றையும் என இரு வகைக் கனிகளைத் தர வல்ல) வேள்விகளைச் செய்கிறார்கள். ஓ! பெரும் தவசியே, அவ்வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்கள் நடந்த பாதையில் அவர்கள் நடக்கிறார்கள்.(29) வேள்வி செய்பவர்களில் ஒருவகையினருக்கு (கனியில் உள்ள விருப்பத்தால் வேள்வி செய்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் உலகத்தில் இருந்து) திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும், உண்மையில் ஞானிகளாக இருப்போருக்கு (கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் தூண்டப்படாமல் வேள்வி செய்பவர்களுக்கு) திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஓ ஜாஜலி, வேள்வி செய்பவர்களில் இரு வகையினரும் (அவர்கள் செய்யும் வேள்விகளின் விளைவால்) தேவர்கள் நடந்த பாதையிலேயே நடந்தாலும், அவர்கள் அடையும் இறுதி கதிகளில் இத்தகைய வேறுபாடு இருக்கிறது.(30)

அத்தகைய மனிதர்கள், தங்கள் மனங்களில் அமையும் காரியங்களுக்குக் கிடைக்கும் வெற்றியின் விளைவால், உழவிற்குத் துணைபுரிவதற்காக காளைகள் எந்தவித கட்டாயமுமின்றித் தாங்களே தங்கள் தோள்களில் கலப்பையைச் சுமந்து, வண்டிகளை இழுக்கின்றன, பசுக்களும் மனிதக் கரங்களின் தீண்டலில்லாமலேயே தங்கள் மடியில் பாலைச் சுரந்து கொடுக்கின்றன.(31) அவர்கள், மனவிருப்பமெனும் எளிய செயலின் மூலம் வேள்விக் கம்புகளையும் {யூபங்களையும்} (வேள்விக்குத் தேவையான இன்னும் பிற பொருட்களையும்) உண்டாக்கி அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வகை வேள்விகளைச் செய்கிறார்கள்[5]இத்தகைய தூய ஆன்மாவைக் கொண்ட ஒருவனே (வேள்விக் காணிக்கையாக) ஒரு பசுவைக் கொல்லலாம்[6].(32) எனவே, அவ்வகையல்லாதோர் (விலங்குகள் இல்லாமல்) செடிகொடி மூலிகைகளுடன் கூடிய வேள்விகளையே செய்ய வேண்டும். துறவுக்கு இத்தகைய தகுதி {புண்ணியம்} இருக்கும் காரணத்தாலேயே உம்மிடம் பேசும்போது அஃதை என் கண்முன் நிறுத்தினேன்[7].(33) கனியில் {பலனில்} உள்ள விருப்பமனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, உலகக் காரியங்களில் எவன் எம்முயற்சியும் செய்வதில்லையோ, எவனிடமும் தலைவணங்காமல் எவன் இருக்கிறானோ, எவன் ஒருபோதும் பிறரைத் துதிப்பதில்லையோ, தனது செயல்கள் அனைத்தும் பலவீனமடைந்தாலும் எவன் பலவானாக இருக்கிறானோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(34) ஓ! ஜாஜலி, வேதங்களைப் பிறருக்கு எவன் உரைப்பதில்லையோ, வேள்விகளை எவன் (முறையாகச்) செய்வதில்லையோ, (தகுந்த பிராமணர்களுக்கு) எவன் கொடைகள் அளிப்பதில்லையோ, அனைத்து வகை ஆசைகளையும் கொண்ட வாழ்வமைப்பை எவன் பின்பற்றுகிறானோ அவன் அடையப் போகும் கதி என்ன? எனினும், துறவு தொடர்பான கடமைகளை முறையாக மதிப்பதன் மூலம் ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைவான்” என்றான் {துலாதாரன்}.(35)ஜாஜலி, “ஓ!வணிகனின் மகனே {வைஸ்யா}, மனோவேள்விகளை மட்டுமே செய்யும் தவசிகளின் இந்த மறைபொருள் கோட்பாடுகளை இதற்கு முன்னர் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இந்தக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே நான் (அவற்றைக் குறித்து) உன்னிடம் கேட்கிறேன். பழங்காலத்தின் தவசிகள் இந்த யோகக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களில்லை. எனவே அவர்களுக்கு அடுத்த வந்த தவசிகள் (பொதுவான ஏற்புக்கு) அவற்றை எடுத்துரைக்கவில்லை.(36) அறிவற்ற மனம் கொண்டோர் மட்டுமே ஆன்ம மண்ணில் வேள்விகளைச் செய்யத் தவறுபவர்கள் என நீ சொல்வாயென்றால், ஓ! வணிகனின் மகனே {துலாதாரா}, அவர்கள் எச்செயல்களைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள்? ஓ பெரும் ஞானியே, இஃதை எனக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் எனக்குப் பெரிதான நம்பிக்கை இருக்கிறது” என்றார் {ஜாஜலி}.(37)

துலாதாரன், “சில வேளைகளில் சிலரால் செய்யப்படும் வேள்விகள் (அவற்றைச் செய்பவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளைவால்) வேள்விகளாவதில்லை. இந்த மனிதர்கள் (அகம் மற்றும் புறமென) எந்த வேள்வியையும் செய்யத் தகாதவர்கள் என்று சொல்லப்பட வேண்டும். எனினும், நம்பிக்கை நிறைந்தவர்களைப் பொறுத்தவரையில், பசுவானவள் தன்னிடமிருந்து தெளிந்த நெய், பால், தயிர், வால் முனையிலுள் முடி, கொம்புகள், குளம்புகள் ஆகியவற்றை முழுமையாகக் காணிக்கை அளிப்பதன் மூலம் அவள் {பசு} மட்டுமே அனைத்து வேள்விகளையும் தாங்கத் தகுந்த ஒரே பொருளாக இருக்கிறாள்[8].(38) (திருமணமாகாத மனிதர்கள் வேள்விகளைச் செய்யக் கூடாது என வேதங்கள் அறிவிக்கின்றன). எனினும், நான் சொன்னபடியே (விலங்குகளைக் கொல்லாமல், தெளிந்த நெய் முதலிய காணிக்கைகளை மட்டுமே அர்ப்பணித்துச் செய்யப்படும்) வேள்விகளைச் செய்வதால் ஒருவன், தன் நம்பிக்கையையே மனைவியாகக் கொண்டு இத்தகைய (குற்றமற்ற) காணிக்கைகளைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்கலாம் . இத்தகைய வேள்விகளை முறையாக மதிப்பதால், ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைகிறான்.(39) (வேள்விக் காணிக்கையாக அளிக்கப்பட நிச்சயம் தூய்மையற்றவையான) விலங்குகள் அனைத்தையும் தவிர்த்து, வேள்விகளில் அரிசிப் பந்தைக் காணிக்கையாக அளிப்பதே {புரோடாசயாகமே} தகுந்ததாகும். அனைத்து ஆறுகளும் சரஸ்வதியைப் போன்று புனிதமானவையே, அனைத்து மலைகளும் புனிதமானவையே.(40) ஓ ஜாஜலி, ஆன்மாவே தீர்த்தமாகும் {புண்ணியத்தலமாகும்}. புனிதத்தலங்களுக்குச் செல்வதற்காக உலகில் திரியாதீர். (எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல் நான் சொன்ன வகையில்) இக்கடமைகளைச் செய்வதன் மூலமும், தன் திறனுக்குத்தகுந்த தகுதியை ஈட்டுவதன் மூலமும் ஒருவன் மறுமையின் அருள் உலகங்களை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்” என்றான் {துலாதாரன்}.(41)பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அறிவுக்குப் பொருத்தமானவையும், நல்லோர் மற்றும் ஞானிகளால் எப்போதும் பயிலப்படுபவையுமான இந்தக் கடமைகளையே துலாதாரன் மெச்சினான்” என்றார்.(42)

தர்மதர்சனர்! – சாந்திபர்வம் பகுதி – 264-ஜாஜலி உண்மையை அறிந்து கொள்ள, அவர் வளர்த்த பறவைகளை அழைக்குமாறு அவரிடம் சொன்ன துலாதாரன்; கொல்லாமையின் முக்கியத்துவம் குறித்து ஜாஜலியிடம் பறவைகள் பேசிய நீதிமொழி; தர்மதர்சனர் உரைத்த நீதிகள் என பறவைகள் சொன்னது; ஜாஜலியும், துலாதாரனும் சொர்க்கத்தை அடைந்தது…

துலாதாரன், “ஓ! ஜாஜலி, நான் சொன்ன கடமையின் பாதையைப் பின்பற்றிய நல்லோரும், அல்லோரும் யாவர் என்பதை உமது கண்களாலேயே காண்பீராக. அப்போதுதான் உண்மையின் நிலை என்ன என்பதை நீர் முறையாகப் புரிந்து கொள்வீர்.(1) வானத்தில் வட்டமிடும் பறவைகள் பலவற்றைக் காண்பீராக. அவற்றுக்கு மத்தியில் உமது தலையில் வளர்ந்த பறவைகளும், பருந்துகள் பலவும், பிற இனங்களைச் சேர்ந்தவை பலவும் இருக்கின்றன.(2) ஓ! பிராமணரே, அந்தப் பறவைகள் தங்கள் தங்களுக்குரிய கூடுகளில் நுழைய தங்கள் சிறகுகளையும், கால்களையும் சுருக்குவதைப் பாரும். ஓ! மறுபிறப்பாளரே, அவற்றை அழைப்பீராக.(3) உம்மால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட அந்தப் பறவைகள் தங்கள் தந்தையான உம்மீது தாங்கள் கொண்ட அன்பை அங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஓ! ஜாஜலி, நீரே அவற்றின் தந்தை என்பதில் ஐயமில்லை. உமது பிள்ளைகளை அழைப்பீராக” என்றான்”.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது ஜாஜலியால் அழைக்கப்பட்ட அந்தப் பறவைகள், எவ்வுயிருக்கும் எத்தீங்குமிழைக்காத அவ்வறத்தின் விதிகளுக்கு ஏற்ப பதிலளித்தன.(5) {அப்போது அந்தப் பறவைகள்}[1]“எவ்வுயிரினுக்கும் தீங்கிழைக்காமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் (அவற்றைச் செய்தவனுக்கு) பயன்படத்தக்கனவாக இருக்கின்றன. எனினும், பிறருக்குத் தீங்கு செய்து செய்யப்படும் செயல்களோ, நம்பிக்கையை அழிக்கின்றன, நம்பிக்கை அழிந்ததும், அஃதை அழித்தவனும் {அந்தச் செயல்களைச் செய்தவனும்} அழிவடைகிறான்.(6) அடைவதையும், அடையாமல் போவதையும் ஒரே ஒளியில் கருதுவோர், நம்பிக்கையுடன் கூடியோர், தற்கட்டுப்பாடுடையோர், அமைதியான மனம் கொண்டோர், (கனியின் மீது கொண்ட விருப்பத்தால் அல்லாமல்) கடமையுணர்வால் வேள்விகளைச் செய்வோர் ஆகியோரால் செய்யப்படும் வேள்விகள் கனியை உண்டாக்குகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, பிரம்மத்தைப் பொறுத்தவரையில் நம்பிக்கை {ஸ்ரத்தை} என்பவள் சூரியனின் மகளாவாள். நம்பிக்கை என்பது (வேத) மந்திரங்கள் மற்றும் தியானத்தின் மூலம் பிறக்கும் தகுதியை {புண்ணியத்தை} விட மிக மேன்மையானதாகும்.(8) பேச்சுக் குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலானது நம்பிக்கையின் மூலம் காக்கப்படுகிறது. மனக்குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலும் நம்பிக்கையால் காக்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கை இன்மையால் தரம் தாழ்ந்த ஒரு செயலை வாக்காலோ, மனத்தாலோ ஒருபோதும் காக்க முடியாது[2].(9)பழங்காலத்தில் நேர்ந்தவற்றை அறியும் மனிதர்கள், இது தொடர்பாகப் பிரம்மன் பாடிய பின்வரும் ஸ்லோகத்தைக் குறிப்பிடுகின்றனர். (உடலாலும் செயல்களாலும்) தூய்மையான, ஆனால் நம்பிக்கையில்லாத {ஸ்ரத்தையில்லாத / அக்கறையில்லாத} ஒரு மனிதனின் வேள்விக் காணிக்கைகளையும், (உடலாலும், செயல்களாலும்) தூய்மையற்ற, ஆனால் நம்பிக்கையுள்ள {ஸ்ரத்தையுள்ள / அக்கறையுள்ள} மற்றொருவனின் வேள்விக் காணிக்கைகளையும் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) ஒன்றாகவே கருதினார்கள். வேதங்களை அறிந்தவனும் கஞ்சனுமான ஒருவனின் உணவையும், வட்டித் தொழில் செய்பவனும் தயாளனுமான மற்றொருவனின் உணவையும்(10,11) கவனமாகக் கருத்தில் கொண்ட தேவர்கள் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) அவற்றை ஒன்றாகவே ஏற்றனர். அப்போது, உயிரினங்கள் அனைத்தின் உயர்ந்த தலைவன் (பிரம்மன்) அவர்கள் பிழை செய்துவிட்டதாக அவர்களிடம் சொன்னான்.(12) தயாளனின் உணவு நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டது. எனினும், நம்பிக்கையற்றவனின் உணவோ அத்தகைய நம்பிக்கையின்மையின் விளைவால் ஒன்றுக்குமாகாததாகிறது. வட்டிக்கு விடும் தயாளனின் உணவு ஏற்புடையது, ஆனால் கஞ்சனின் உணவோ ஏற்பில்லாததாகும்.(13) இவ்வுலகில், நம்பிக்கையில்லாதவன் {ஸ்ரத்தையில்லாதவன் / அக்கறையில்லாதவன்} என்ற ஒருவன் மட்டுமே தேவர்களுக்குக் காணிக்கையளிக்கத் தகாதவனாவான். அத்தகைய மனிதனின் உணவு மட்டுமே உண்ணத்தகாததாகும். இதுவே கடமைகள் அறிந்த மனிதர்களின் கருத்தாகும்.(14)

நம்பிக்கையின்மை {ஸ்ரத்தையின்மை / அக்கறையின்மை} பெரும்பாவமாகும். நம்பிக்கையே பாவங்களைக் கழுவுகிறது. பாம்பு தனது சட்டையை உரிப்பதைப் போலவே, நம்பிக்கையுள்ள ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்தையும் விலக்குகிறான்.(15) நம்பிக்கையுடன் கூடிய துறவறமானது, புனிதமாகக் கருதப்படும் அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் மேன்மையானதாகும். நடத்தையில் உள்ள களங்கள் அனைத்தையும் தவிர்க்கும் ஒருவன் நம்பிக்கையுடன் இருப்பதால் புனிதமடைகிறான்.(16) அத்தகைய மனிதனுக்குத் தவங்கள், நடத்தை அல்லது பொறை ஆகியவற்றிற்கான தேவையென்ன இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களே. எனினும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் பாதிக்கப்பட்ட மூன்று வகை நம்பிக்கைகள் இருக்கின்றன. அதன்படியாக ஒருவன் கொண்ட நம்பிக்கை வகையின் அடிப்படையிலேயே அவன் அழைக்கப்படுகிறான்.(17) நல்லியல்பு மற்றும் அறநெறியின் உண்மையான உள்ளொளியைக் கொண்டவர்களே இவ்வாறான கடமைகளை விதித்திருக்கின்றனர். எங்கள் விசாரணையின் விளைவால் இவை யாவற்றையும் தர்மதர்சனர் என்ற தவசியிடம் இருந்து நாங்கள் பெற்றோம்.(18) ஓ! பெரும் ஞானியே {ஜாஜலியே}, நம்பிக்கை கொண்டால் மேன்மையான நிலையை {பரத்தை} அடைவீர்; எனவே நம்பிக்கை கொள்வீராக. எவன் (ஸ்ருதிகளின் தீர்மானங்களில்) நம்பிக்கையுடனிருக்கிறானோ, (அவை தனக்கான நன்மைக்கானவை என்ற நம்பிக்கையில்) அவை சொன்னவற்றின்படி எவன் செயல்படுகிறானோ அவன் நிச்சயம் அற ஆன்மா {தர்மாத்மா} ஆவான். {நம்பிக்கையுடன் கூடிய இந்த வணிகன் {துலாதாரன்}, நம்பிக்கையெனும் அறத்தைப் பின்பற்றுகிறான்}. ஓ! ஜாஜலி, எவன் (நம்பிக்கையின் ஆதிக்கத்தின் கீழ்) தன் பாதையைப் பின்பற்றுவானோ அவன் மேன்மையானவனாவான்” {என்றன அப்பறவைகள்}”.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறிது காலத்திற்குப் பிறகு, பெரும் ஞானம் கொண்டவர்களான துலாதாரன் மற்றும் ஜாஜலி ஆகிய இருவரும் சொர்க்கத்திற்கு உயர்ந்து,(20) தாங்கள் செய்த செயல்களால் ஈடப்பட்ட தங்களுக்குரிய இடங்களை அடைந்து அங்கேயே மகிழ்ச்சியில் திளைத்தனர்.[3] இந்த வகையிலான பல உண்மைகள் துலாதாரனால் சொல்லப்பட்டன.(21) அந்தத் திறமிக்க மனிதன் (தீங்கிழையாமை என்ற) இவ்வறத்தை முழுமையாகப் புரிந்து கொண்டான். இந்த நித்திய கடமைகள் அவனாலேயே {துலாதாரனாலேயே} அறிவிக்கப்பட்டன.(22) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கொண்டாடத்தக்க சக்தியைக் கொண்ட துலாதாரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு மறுபிறப்பாளரான ஜாஜலி அமைதியடைந்தார். இவ்வழியில் துலாதாரன் சொன்ன பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பல உண்மைகள் போதனைக்கான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ கேட்க விரும்பும் பிற உண்மைகள் யாவை?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(23)

உடல் வாடா அறமீட்டல்! – சாந்திபர்வம் பகுதி – 265-கொல்லாமை குறித்து மன்னன் விசரக்கு சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கொல்லாமையைப் பயிலும்போது, உடலுக்குத் துன்பத்தைக் கொடுக்காமல் அறம் செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

{யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, “ஒரு விதமான தீங்கையும் செய்யாதவர்கள் தங்கள் உடலையும், ஆபத்துகளையும் அறியாமல் இருக்கிறார்கள். தொழில் இல்லாதவனுக்கு உடற்பயணம் எவ்வாறு நடக்கும்?” என்று கேட்டான்}.[1]பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதுதொடர்பாக, உயிரினங்கள் அனைத்திடமும் தான் கொண்ட கருணையின் மூலம் மன்னன் விசரக்கு {விசக்யு / விசக்நு /விசக்கண்ணன்} சொன்ன பழைய உரை குறிப்பிடப்படுகிறது.(1) உடல் சிதைக்கப்பட்ட ஒரு காளையைக் கண்டும், பசுவேள்வியில் கொல்லப்படும் பசுக்களின் வலிமிக்க வேதனைக் குரலைக் கேட்டும்,[2] விழாக்களில் துணைபுரிய அங்கே திரளும் கொடூரப் பிராமணர்களைக் கண்டும் அம்மன்னன் {விசரக்கு} இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் செழிக்கட்டும்” {என்றான்}. கொல்லத்தொடங்கும்போது (அந்த ஆதரவற்ற விலங்களுக்கு) ஆசி கூறும் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டன.(3) மேலும் அந்த ஏகாதிபதி, “வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறுபவர்கள், புத்தியற்றவர்கள், நாத்திகர்கள் மற்றும் ஐயுறுவாதிகள், வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளின் மூலம் புகழை அடைய விரும்புவோர் ஆகியோர் மட்டுமே வேள்விகளில் விலங்குகள் கொல்லப்படுவதை உயர்வாகப் பேசுகிறார்கள்.(4) அற ஆன்மாவான மனு, (அறச்) செயல்கள் அனைத்திலும் தீங்கிழையாமையை மெச்சுகிறார். உண்மையில் மனிதர்கள், கனியிலுள்ள {பலனில்} விருப்பத்தால் தூண்டப்பட்டே வேள்விகளில் விலங்குகளைக் கொல்கிறார்கள்.(5)எனவே, (கொலை மற்றும் கொல்லாமை அல்லது தீங்கிழையாமை ஆகியவற்றைப் பொறுத்தவரையில்) அதிகாரமுடையவற்றை (சாத்திரங்களை) அறிந்த ஒருவன், அவற்றால் வழிநடத்தப்பட்டு, இந்த மிக நுட்பமான, உண்மையான கடமையின் போக்கையே பின்பற்ற வேண்டும். உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும்.(6) ஒருவன், வசிப்பாரற்ற இடத்தின் அருகில் வாழ்ந்து, கடும் நோன்புகளைப் பயில்வதைப் பழகி, வேதச் செயல்களால் {அறச்சடங்குகளில்} குறிப்பிடப்படும் கனிகளை {பலன்களை} அலட்சியம் செய்து, இல்லறத்தைக் கைவிட்டு துறவற வாழ்வுமுறையைப் பின்பற்ற வேண்டும்.(7) வேள்விகள், மரங்கள் மற்றும் யூபங்களை உயர்வாக மதிப்பிடும் மனிதர்கள் களங்கமுடைய இறைச்சியை {மட்டும்} உண்ணமாட்டார்கள். எனினும், இந்நடைமுறை மெச்சத்தகுந்ததில்லை[3].(8) கள், மீன், இறைச்சி, மது {ஆஸவம் / சாராயம்}, அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் பண்டங்கள், எள் {திலான்னம்} ஆகியன கபடர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. (வேள்விகளில்) இவற்றைப் பயன்படுத்த வேதங்களில் விதிக்கப்படவில்லை.(9) செருக்கு, தீர்மானப்பிழை {மயக்கம்} மற்றும் பேராசை ஆகியவற்றிலிருந்து இவற்றின் மீது விருப்பம் ஏற்படுகிறது[4].உண்மையான பிராமணர்கள், ஒவ்வொரு வேள்வியிலும் விஷ்ணுவின் இருப்பை உணர்கிறார்கள்.(10) இனிய பாயசத்துடன் அவனது {விஷ்ணுவின்} வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களும் (அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள்),(11) தூய இதயம் கொண்டோர், தூய இயல்பு கொண்டோர் மற்றும் திறன்மிக்க ஞானமும், புனிதமும் கொண்டோரால் தகுந்ததாகக் கருதப்படும் எந்தச் செயலும், அவர்களால் தூய்மையானதாகக் கருதப்படும் வேறு எதுவும் அந்த உயர்ந்த தேவனுக்குக் காணிக்கையாக அளிக்கத்தகுந்தவையே; இவை அவன் ஏற்கத் தகாதவையல்ல” என்றார் {பீஷ்மர்}.(12)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உடலும், அனைத்து வகை ஆபத்துகளும், பேரிடர்களும் தொடர்ந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, தீங்கு செய்யும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவனும், இக்காரியத்தில் செயல்பட இயலாதவனுமான ஒருவன் தன் உடலைப் பராமரித்துக் கொள்வதில் எவ்வாறு வெல்ல முடியும்?” என்று கேட்டான்[5].(13)பீஷ்மர், “ஒருவன் தகுதியை அடைய இயலும்போது, தன் உடல் நலிவுறாமலும், வலியை அனுபவிக்காமலும், அவனுக்கு மரணம் நேராத வகையிலும் செயல்பட வேண்டும்” என்றார்[6].(14)

கௌதமர் அகலிகை! – சாந்திபர்வம் பகுதி – 266-காரணங்களை ஆராய்ந்து காரியம் செய்வதற்கு உதாரணமாகச் சிரகாரினின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சிரிகாரினிடம் அவரது தாய் அஹல்யையின் தலையை வெட்ட உத்தரவிட்ட கௌதமர்; தாமதித்த சிரகாரின்; வருந்திய கௌதமர்; சிரிகாரின் அகலிகையைக் கொல்லாததைக் கண்டு மகிழ்ந்த கௌதமர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, (ஒருபுறம் பெரியோரின் கட்டளைகளும், மறுபுறம் அவற்றில் உள்ள கொடூரங்களும் இருக்கும் விளைவால்) நிறைவேற்றக் கடினமான செயல்கள் அனைத்தின் காரியத்திலும் நீரே எங்களுடைய பேராசானாக {உத்தம குருவாக} இருக்கிறீர். ஒரு செயலானது ஒருவனுடைய கடமையா? அல்லது தவிர்க்கப்பட வேண்டியதா என்பதை அவன் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? அது விரைவாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா, தாமதமாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக அங்கிரஸக் குலத்தில் பிறந்த சிரகாரினின் {சிரகாரி} பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) செயல்படுவதற்கு முன்னால் நீண்ட காலம் சிந்திப்பவன் இரட்டிப்பாக அருளப்படுவானாக. செயல்படுவதற்கு முன்னால் நீண்ட காலம் சிந்திப்பவன் நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவான். அத்தகைய மனிதன் எந்தச் செயலிலும் ஒருபோதும் குற்றமிழைப்பதில்லை.(3) ஒரு காலத்தில் கௌதமரின் மகனும், சிரகாரின் என்ற பெயரைக் கொண்டவரும், பெரும் விவேகியுமான ஒரு மனிதர் இருந்தார். அவர் தாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களையும் மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டு, நீண்ட காலம் சிந்தித்த பிறகே அவற்றைச் செய்து வந்தார்.(4) அனைத்துக் காரியங்களிலும் நீண்ட காலம் சிந்திப்பதாலும், நீண்ட காலம் விழித்திருப்பதாலும், நீண்ட காலம் உறங்குவதாலும், தாம் நிறைவேற்றும் காரியங்கள் அனைத்திலும் தம்மை நிறுவி கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாலும் {ஒரு வேலையை நீண்ட காலம் செய்வதாலும்} சிரகாரின் என்ற பெயரால் அவர் அழைக்கப்படலானார்.(5)

இதனால் அவர் சோம்பேறி என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானார். சிறுமதி கொண்ட, முன்னறிதிறன் அற்ற ஒவ்வொருவராலும் அவர் மூடர் என்றே கருதப்பட்டார்.(6) ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தந்தை கௌதமர், தமது மனைவியிடம் {அகலிகையிடம் / அஹல்யையிடம்} பெரும் செயற்பிழையொன்றைக் கண்டு, தமது பிள்ளைகள் பிறரைக் கடந்து சென்று இந்தச் சிரகாரினிடம் கோபத்துடன், “இந்தப் பெண்ணைக் கொல்வாயாக” என்று சொன்னார்.(7) கல்விமானும், யோகப் பயிற்சியில் ஈடுபடுவோரில் முதன்மையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான கௌதமர், பெரிதாகச் சிந்திக்காமல் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.(8) “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ஏற்றுக் கொண்ட சிரிகாரின், தம் இயல்பின் விளைவாலும், நீண்ட காலம் சிந்திக்காமல் ஒருபோதும் எந்தவொரு செயலையும் செய்யாத அவரது வழக்கத்தாலும், (தமது தந்தை சொன்னதில் உள்ள முறைமை மற்றும் முறையின்மை குறித்து) நீண்ட காலம் சிந்திக்கத் தொடங்கினார்.(9)

{அவர் தமக்குள்ளேயே}, “என் தந்தையின் கட்டளைக்கு எவ்வாறு நான் கீழ்ப்படியப் போகிறேன்? என் தாயைக் கொல்வதை எவ்வாறு தவிர்க்கப் போகிறேன்? முரண்பட்ட கடமைகள் எதிரெதிர் திசையில் என்னை இழுக்கும் இந்தச் சூழ்நிலையில், தீய மனிதனைப் போல மூழ்கப் போவதை நான் எவ்வாறு தவிர்க்கப் போகிறேன்?(10) தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே உயர்ந்த தகுதியாகும் {புண்ணியமாகும்}. தாயைப் பாதுகாப்பதும் தெளிவாகக் கடமையே ஆகும். ஒரு மகனின் நிலை சார்பு நிறைந்ததாகும். பாவம் பீடிப்பதை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்?(11) ஒரு பெண்ணை, அதிலும் தன் தாயைக் கொன்றுவிட்டு எவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? மேலும் தன் தந்தையை அலட்சியம் செய்வதன் மூலம் எவனால் செழிப்பையும், புகழையும் அடைய முடியும்?(12) தந்தையின் ஆணையை மதிப்பதே கடமையாகும். என் தாயைக் காப்பதும் அதற்கு இணையான கடமையே ஆகும். இரு கடமைகளையும் செய்யும் வகையில் நான் எவ்வாறு என் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ளப் போகிறேன்?(13) தந்தையானவர், தமது நடைமுறைகள் {சீலம்}, ஒழுக்கம் {ஆசாரம்}, பெயர் {கோத்ரம்} மற்றும் குலம் ஆகியவற்றைத் தொடர்வதற்காகத் தாயின் கருவறையில் தம்மையே வைத்து மகனாகப் பிறக்கிறார்.(14) நான் என் தாயாலும், தந்தையாலும் அவர்களது மகனாகப் பெறப்பட்டேன். என் தோற்றத்தை அறிந்த நான் (அவர்கள் இருவரிடம் நான் கொண்ட உறவுமுறை குறித்த) இந்த அறிவை ஏன் கொள்ளக் கூடாது?(15)

பிறப்புக்குப் பிறகு நடக்கும் முதல் சடங்கை {ஜாதகர்மத்தைச்} செய்யும்போது தந்தையால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், (ஆசானின் வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு நடக்கும்) துணைச் சடங்கில் {உபகர்மத்தில்} அவரால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், அவருக்குரிய மரியாதையைத் தீர்மானிப்பதில் போதுமானவையாகவும் (போதுமான சாட்சியாகவும்), உண்மையில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை உறுதி செய்யும் வகையிலும் இருக்கின்றன[1].(16) மகனை வளர்த்து, அவனுக்குப் போதிக்கும் விளைவால் பெரியோர் அனைவரிலும் முதன்மையானவராக, உயர்ந்த அறமுமாகத் தந்தையே இருக்கிறார். தந்தை சொல்வதையே தன் உயர்ந்த கடமையாக மகன் கருத வேண்டும் என்று வேதங்களே விதித்திருக்கின்றன.(17) தந்தைக்கு மகன் மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாவான். எனினும் மகனுக்கோ அத்தந்தையே அனைத்துமாவார். மகன் கொண்ட உடலையும், வேறு அனைத்தையும் கொடுத்தவர் தந்தையே ஆவார்.(18) எனவே, ஒருபோதும் சிறு கேள்வியேனும் கேட்காமல் அவரது கட்டளைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். தன் தந்தைக்குக் கீழ்ப்படிபவனின் பாவங்கள் (அத்தகைய கீழ்ப்படிதலால்) கழுவப்படுகின்றன.(19) அனுபவிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும், உணவுப் பொருட்கள் அனைத்தையும், வேத போதனைகளையும், உலகம் குறித்த பிற அறிவு அனைத்தையும் தந்தையே கொடுக்கிறார். (மகன் பிறப்பதற்கு முன்னர்) கர்பாதானம் மற்றும் சீமாந்தோன்னயனம் ஆகிய சடங்குகளைத் தந்தையே செய்கிறார்[2].(20)தந்தையே அறமாவார். தந்தையே சொர்க்கமாவார். தந்தையே உயர்ந்த தவமுமாவார். தந்தை நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் நிறைவடைவார்கள்.(21) தந்தையால் சொல்லப்படும் எந்த வார்த்தைகளும், மகனுக்கு ஆசிகளாகவே அமையும். தந்தை மகிழ்ந்து சொல்லும் வார்த்தைகள் அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவிவிடும்.(22) தண்டில் இருந்து மலர் விழுவது காணப்படுகிறது. மரத்தில் இருந்து கனி விழுவதும் காணப்படுகிறது. ஆனால் எத்துயரிலிருந்தாலும் ஒரு தந்தை பெற்றபாசத்தால் தம் மகனை ஒருபோதும் கைவிட மாட்டார்.(23) ஒரு மகன் தன் தந்தைக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் குறித்த என் சிந்தனைகள் இவையே. தந்தையானவர் ஒரு மகனுக்குச் சாதாரணப் பொருளல்ல {மதிப்புமிக்கப் பொருளாவார்}.

தாயை (தாய்க்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக்) குறித்து இப்போது நான் சிந்திக்கப் போகிறேன்.(24) நெருப்புக்குத் தீக்குச்சிகளைப்[3] போல, மனிதனாகப் பிறந்த என்னில் உள்ள இந்த ஐம்பூதக் கலவைக்குத் தாயே (முக்கிய) காரணமாவாள்.(25) மனிதர்கள் அனைவரின் உடலைப் பொறுத்தவரையில், தாயே தீக்குச்சி {அரணிக் கட்டையாவாள்} ஆவாள். அனைத்து வகைப் பெருந்துயரங்களுக்கும் அவளே மருந்தாவாள் {சர்வரோகநிவாரணியாவாள்}. தாயின் இருப்பே ஒருவனைப் பாதுகாக்கிறது {அவனை ஸ்னாதன் ஆக்குகிறது}. {அவள்} இல்லாமை {அவனது} பாதுகாப்புகள் அனைத்தையும் இழக்கச் செய்கிறது {அவனை அநாதனாக்குகிறது}.(26) ஒரு மனிதன், தன் செழிப்பை இழந்திருந்தாலும், “ஓ! தாயே {அம்மா}” என்ற வார்த்தைகளைச் சொல்லி தன் வீட்டிற்குள் நுழைந்தால், அவன் எத்துயரையும் அடையமாட்டான். மேலும் முதுமையும் அவனை அண்டுவதில்லை.(27) ஒருவன் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் கொண்டிருந்தாலும், அவனுக்கு நூறு வயதே ஆகியிருந்தாலும், தாயிருப்பவன் இரு வயது குழந்தையைப் போலவே தெரிவான்.(28) மகனானவன் இயன்றவனானாலும், இயலாதவனானாலும், மெலிந்தவனானாலும், திடமானவனானாலும் தாயால் எப்போதும் பாதுகாக்கப்படுவான். விதியின்படி, {தாயைத் தவிர} வேறு எவரும் மகனின் பாதுகாவலர் ஆக முடியாது.(29) மகன் தன் தாயை இழக்கும்போதே, முதுமையடைகிறான், துயரமடைகிறான், அவன் கண்ணுக்கு உலகமே வெறுமையாகத் தெரிகிறது.(30)தாயைப் போன்ற உறைவிடமேதும் கிடையாது. தாயைப் போன்ற புகலிடம் வேறேதும் கிடையாது. தாயைப் போன்ற பாதுகாப்பு வேறேதும் கிடையாது. தாயைப் போன்று அன்புக்குரியவர் வேறு யாரும் கிடையாது.(31) மகனைத் தன் கருவறையில் சுமப்பதால் அவளே அவனின் தாத்ரீயாவாள். அவனுடைய பிறப்புக்கு மூல காரணமானதால் அவளே அவனது ஜநநீ ஆவாள். அவனது இளம் அங்கங்களை வளரச் செய்வதால் அவள் அம்பை என்றழைக்கப்படுகிறாள். ஒரு பிள்ளையை வீரத்துடன் வளர்ப்பதால் அவள் வீரஸூ என்றழைக்கப்படுகிறாள்.(32) செவிலிப் பணி செய்து அவனைக் கவனித்துக் கொள்வதால் அவள் சுஸ்ரூ என்றழைக்கப்படுகிறாள். தாயே ஒருவனுடைய சொந்த உடலாகும். எவருடைய கவனிப்பால் மட்டுமே ஒருவனின் தலை உலர்ந்த சுரைக்காயைப் போலத் தெருவோரத்தில் உருளாமல் இருக்கிறதோ அந்தத் தாயை எந்த அறிவுள்ள மனிதன் கொல்வான்?(33)

உற்பத்திக்காகக் கணவனும் மனைவியும் கலக்கும்போது, (பிறக்கப் போகும்) மகனுக்காக அவர்கள் இருவராலும் ஆசைகள் வளர்க்கப்பட்டாலும், அவை கனிவது தந்தையைவிடத் தாயையே அதிகம் சார்ந்திருக்கிறது[4].(34) மகன் எந்தக் குடும்பத்தில் பிறந்தான் என்பதையும், அவனைப் பெற்ற தந்தையையும் தாயே அறிவாள். கருவுற்ற கணத்தில இருந்து தாயானவள் தன் பிள்ளையிடம் அன்பைக் காட்டவும், அவனால் மகிழ்ச்சி கொள்ளவும் தொடங்குகிறாள். (இந்தக் காரணத்திற்காகவே மகனானவன {தந்தையிடம் நடந்து கொள்வதைப் போலவே} அவளிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும்). மறுபுறம், சந்ததி தந்தைக்கு மட்டுமே உரியது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன.(35)மனிதர்கள், திருமணத்தில் மனைவியரின் கரங்களை ஏற்று, அவர்களிடம் பிரியாமல் இருந்து அறமீட்டுவதாக உறுதியளித்த பிறகு, பிறர் மனைவியருடன் கலவியை நாடினால், அப்போது அவர்கள் தங்கள் மதிப்பையும், தகுதியையும் இழக்கிறார்கள்[5].(36) மனைவியை ஆதரிப்பதால் கணவன் பர்த்திரீ {பர்த்தா} என்றழைக்கப்படுகிறான். அவன் அவளைப் பாதுகாப்பதன் காரணமாகப் பதி என்றழைக்கப்படுகிறான். இந்த இரு செயல்பாடுகளும் அவனிடம் காணாமல் போகும்போது, அவன் பர்த்திரீ மற்றும் பதி என்ற இரண்டாகவும் இருக்க மாட்டான்[6].(37) மேலும் பெண் எப்பிழையையும் செய்வதில்லை. ஆண் மட்டுமே பிழைகளைச் செய்கிறான். முறைகெட்ட ஒரு செயலைச் செய்வதன் மூலம் ஆண் மட்டுமே குற்றத்தால் களங்கமடைகிறான்[7].(38) கணவனே மனைவியின் உயர்ந்த பொருளும், உயர்ந்த தெய்வமுமாவான் என்று சொல்லப்படுகிறது. என் அன்னை தன் கணவரைப் போன்ற வடிவிலும், தோற்றத்திலும் தம்மிடம் வந்த ஒருவனிடம் தன் புனித உடலைக் கொடுத்தாள்.(39) பெண்கள் குற்றமிழைப்பதில்லை. ஆணே குற்றத்தால் களங்கமடைகிறான். உண்மையில், பெண்கள் தங்கள் பாலின பலவீனத்தை ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்தும் விளைவால், அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதவே முடியாது.(40)பழங்காலத்தில் பெண்களால் இந்திரனிடம் வேண்டப்பட்டது (இந்திரன் செய்த பிராமணக் கொலையின் {பிரம்மஹத்தியின்} பாவத்தில் மூன்றில் ஒரு பகுதி பெண் பாலினத்திற்குக் கொடுக்கப்பட்டது) நினைவுகூரப்படுகையில், அவனே பாவம் நிறைந்தவன் என்பது (இவ்வழக்கில்) தெளிவாகிறது. என் தாய் அப்பாவி என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(41) எவளைக் கொல்ல ஆணையிடப்பட்டேனோ, அவள் ஒரு பெண்ணாவாள். அந்தப் பெண்ணும் என் தாயாக இருக்கிறாள். எனவே, அவள் பெரும் மதிப்பிற்குரிய ஓரிடத்தை என்னிடம் பெறுகிறாள். தாய் கொல்லத்தகாதவள் என்பதை அறிவற்ற விலங்குகள் கூட அறியும்.(42) தந்தையோ, தேவர்கள் அனைவரின் கலவையாக அறியப்பட வேண்டியவர். எனினும் தாயானவள், உயிரினங்கள் மற்றும் தேவர்கள் அனைத்தின் கலவையாக இருக்கிறாள்[8]” {என்று சிரகாரின் தமக்குள்ளேயே நினைத்தார்}.(43)நீண்ட காலம் சிந்திக்கும் பழக்கத்தின் விளைவால் கௌதமரின் மகனான சிரகாரின் (தமது தந்தை செய்ய ஆணையிட்ட செயலைச் செய்யாமல்) இச்சிந்தனைகளில் ஈடுபட்டே நீண்ட காலத்தைக் கழித்தார். பல நாட்கள் கழிந்ததும் அவரது தந்தை கௌதமர் திரும்பினார்.(44) கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தவப்பயிற்சியில் ஈடுபடுபவரும், பெரும் ஞானியுமான மேதாதிதி {கௌதமர்} (தமது ஆசிரமத்திற்குத்) திரும்பி, நீண்ட காலம் சிந்தித்துப் பிறகு, தமது மனைவியைப் பீடிக்கச் சொல்லி தாம் சொன்ன தண்டனை முறையற்றது என நினைத்தார்.(45) துயரால் எரிந்து, சாத்திர அறிவால் அடைந்த அமைதியான மனநிலையின் நன்மையான விளைவுகளின் காரணமாக அவர் வருத்தமடைந்ததால் பெரும் அளவில் கண்ணீரைச் சிந்தினார்.(46) அவர் {கௌதமர்}, “மூவுலகின் தலைவன் புரந்தரன் {இந்திரன்}, விருந்தோம்பலை வேண்டும் ஒரு பிராமணத் தோற்றத்தில் என் ஆசிரமத்திற்கு வந்தான்.(47) (உரிய) வார்த்தைகளால் ஏற்கப்பட்டு, (உரிய) வரவேற்பால் கௌரவிக்கப்பட்ட அவனுக்கு, கால் கழுவ நீரும், வழக்கமான அர்க்கிய காணிக்கைகளும் வழங்கப்பட்டன. அவன் கேட்ட ஓய்வையும் நான் அவனுக்கு அளித்தேன்.(48) அதற்கு மேலும் அவனைப் பாதுகாவலனாக அடைந்திருப்பதாக அவனிடமே நான் சொன்னேன். அத்தகைய நடத்தை அவனை என்னிடம் ஒரு நண்பனாக நடக்கத் தூண்டும் என்று எண்ணினேன். எனினும், இவை யாவற்றுக்கும் பிறகும், அவன் {இந்திரன்} தவறாக நடந்திருக்கும்போது, என் மனைவி அஹல்யை {அகலிகை} எக்குற்றத்தையும் இழைத்ததாகக் கருதப்படலாகாது.(49) என் மனைவியோ, நானோ, வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்த போது என் மனைவியைக் {அகலிகையைக்} கண்ட (என் மனைவியின் இயல்புக்கு மீறிய அழகைக் கண்டு புலன்களை இழந்த) இந்திரனோ குற்றவாளிகள் அல்ல என்றே தெரிகிறது. என் யோக பலத்தின் கவனமின்மையே உண்மையில் பழிக்கத்தக்கது[9].(50)அனைத்துத் துயரங்களும் பொறாமையில் இருந்தே எழுகின்றன, அதன் விளைவாகத் தீர்மானப் பிழையும் எழுகிறது. பாவக்கடலில் மூழ்கியிருந்த நான் (மனைவியைக் கொல்வது என்ற வடிவில்) அந்தப் பொறாமையின் மூலமே இழுக்கப்பட்டிருக்கிறேன்.(51) ஐயோ, நான் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டேன். அதிலும் தன் தலைவனின் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதால் வாசிஷ்டை என்றழைக்கப்படுபவளும், என்னால் ஆதரித்துப் பாதுகாக்கத் தகுந்தவள் என்ற கடமையின் விளைவால் பார்யை என்றும் அழைக்கப்படுபவளுமான ஒரு பெண்ணான என் மனைவியைக் கொன்றுவிட்டேன். இப்பாவத்திலிருந்து யாரால் என்னைக் காக்க முடியும்?(52) உயர் ஆன்ம சிரகாரினிடம் (என் மனைவியைக் கொல்லுமாறு) ஆணையிட்டுக் கண்மூடித்தனமாகச் செயல்பட்டிருக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் அவன் தன் பெயரை மெய்ப்பித்திருந்தால் இந்தக் குற்றத்திலிருந்து என்னைக் காத்தவனாவான்.(53) ஓ! சிரகாரிகா, உனக்கு இரட்டிப்பான அருள் கிட்டட்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பணியை நிறைவேற்றுவதில் நீ தாமதித்திருந்தால், உண்மையில் நீ உன் பெயருக்குத் தகுந்தவனாகவே இருப்பாய்.(54) என்னையும், உன் அன்னையையும், நான் அடைந்த தவங்களையும், உன் தவங்களையும் பெரும் பாவங்களில் இருந்து காப்பாயாக. இன்று நீ உண்மையிலேயே சிரகாரிகனாக இருப்பாயாக.(55) சாதாரணமாக, உன் பெரும் ஞானத்தின் விளைவால் எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நீண்ட காலம் ஆலோசிப்பாய். இன்று உன் நடத்தை வேறுவகையில் இருக்க வேண்டாம். இன்று நீ உண்மையான சிரகாரிகனாகவே இருப்பாயாக.(56)

உன் அன்னை உன் வரவை நெடுங்காலம் எதிர்பார்த்திருந்தாள். அவள் உன்னைத் தன் கருவறையில் நெருங்காலம் சுமந்திருந்தாள். ஓ! சிரகாரிகா, செயல்படுவதற்கு முன் நெடுங்காலம் சிந்திக்கும் உன் வழக்கம் இன்று நன்மையான விளைவுகளை உண்டாக்கட்டும்.(57) ஒருவேளை என் மகன் சிரகாரிகன் (அந்த ஆணையை அவன் செயல்படுத்துவதைக் கண்டு) நான் வருத்தமடைவேன் என்ற காரணத்தால் இன்றுவரை தாமதித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, (நினைவுடன் செயல்படுத்தும் எந்த நோக்கமும் இல்லாமல்) அந்த ஆணையைத் தன் இதயத்தில் சுமந்தபடி அவன் உறங்கிக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, அவனுக்கும் எனக்கும் உண்டாகப்போகும் துயரத்தைக் கருத்தில் கொண்டும், வழக்கின் சூழ்நிலைகளைச் சிந்தித்தும் தாமதித்துக் கொண்டிருக்கலாம்” என்று {தனக்குத் தானே} சொல்லிக் கொண்டார்.(58)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா{, இத்தகைய வருத்தத்தில் ஈடுபட்ட பெரும் முனிவர் கௌதமர், தன் மகன் சிரகாரின் தன் அருகிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்.(59) தங்கள் தந்தை திரும்பி வந்ததைக் கண்ட மகனான சிரகாரின், துயரத்தில் மூழ்கி, (தாம் ஏந்திய) ஆயுதத்தை வீசிவிட்டு, தலைவணங்கி கௌதமரை தணிவடையச் செய்யத் தொடங்கினார்.(60) தமது மகன் தம் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தலைவணங்குவதையும், அவமானத்தால் கிட்டத்தட்டக் கல்லாகிப் போயிருந்த தன் மனைவியையும் கண்டும் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தார்.(61) அந்தக் காலத்தில் இருந்து அந்த உயர் ஆன்ம முனிவர் {கௌதமர்}, தன் மனைவியிடமிருந்தோ, கவனமிக்கத் தன் மகனிடமிருந்தோ பிரிந்து வாழாமால் அந்தத் தனிமையான ஆசிரமத்திலேயே வசித்து வந்தார்.(62) தமது மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற ஆணையைச் சொல்லிவிட்டு, தமது காரியம் எதையோ நிறைவேற்றிக் கொள்ள ஆசிரமத்தைவிட்டு அவர் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் இருந்து அவரது மகன் கையில் ஆயுதத்துடன் தமது தாயாரிடம் அந்தக் கட்டளையை நிறைவேற்ற பணிவுடன் நின்று கொண்டிருந்தார்.(63) மகன் தமது பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட தந்தை {கௌதமர்}, ஆயுதமேந்தி (தன் தாயையைக் கொன்ற) குற்றத்திற்காக அவர் மன்னிப்புக் கேட்பதாக {அக்கணத்தில்} நினைத்து விட்டார்.(64) பிறகு தமது மகனை நீண்ட நேரம் புகழ்ந்து கொண்டிருந்த அந்தத் தந்தை, நீண்ட நேரம் அவரது உச்சியை முகர்ந்து, “நீண்ட காலம் வாழ்வாயாக” என்ற ஆசி கூறும் வார்த்தைகளைச் சொன்னார்.(65)

பிறகு, ஓ! பெரும் ஞானியே {யுதிஷ்டிரா}, மகிழ்ச்சியால் நிறைந்தவரும், நேர்ந்த காரியத்தால் நிறைவடைந்தவருமான கௌதமர், தமது மகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(66) “ஓ! சிரகாரிகா, நீ அருளப்பட்டிருப்பாயாக. செயல்படுவதற்கு முன் எப்போதும் நீண்ட நேரம் சிந்திப்பாயாக. என் ஆணையை நிறைவேற்றுவதில் நீ தாமதித்ததன் மூலம் இன்று நீ என்னை எப்போதும் மகிழ்ச்சியுடையவனாகச் செய்துவிட்டாய்” {என்றார் கௌதமர்}.(67) முனிவர்களில் சிறந்தவரும், கல்விமானுமான அவர், பிறகு, எந்தச் செயல்பாட்டிலும் நீண்ட காலம் சிந்திக்கும் அமைதியான மனிதர்கள் அடையும் தகுதிகளை {புண்ணியங்களைக்) குறித்த இந்த ஸ்லோகங்களைச் சொன்னார்.(68) {கௌதமர்}, “ஒரு நண்பனின் மரணக் காரியமென்றால், ஒருவன் அதை நீண்ட காலத்திற்குப் பிறகே நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தைக் கைவிடும் காரியமென்றால், அவன் நீண்ட காலத்திற்குப் பிறகே அதைக் கைவிட வேண்டும். நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைந்த ஒரு நட்பே நீண்ட காலத்திற்கு நிலைக்கும்.(69) கோபம், அகந்தை, செருக்கு, சச்சரவுகள், பாவச் செயல்கள் ஆகியவற்றின் வசப்படாமல், ஏற்கத்தகாத பணிகளை நிறைவேற்றும் காரியங்கள் அனைத்திலும் தாமதிப்பவன் மெச்சத்தகுந்தவனாவான்.(70) ஓர் உறவினர், நண்பர், பணியாள், அல்லது மனைவி ஆகியவர்களுக்கெதிரான குற்றம் தெளிவாக மெய்ப்பிக்கப்படாத போது, அவர்களைத் தண்டிப்பதில் தாமதிப்பவன் மெச்சத்தகுந்தவனாவான்” {என்றார் கௌதமர்}.(71)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஓ! குரு குலத்தோனே, இவ்வாறே தமது ஆணையை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தத் தமது மகனிடம் நிறைவடைந்தார் அந்தக் கௌதமர்.(72) ஒரு மனிதன் அனைத்துச் செயல்களிலும் இவ்வழியில் நீண்ட காலம் சிந்தித்து, தீர்மானத்தை அடைந்த பிறகே செயல்பட வேண்டும். இவ்வழியில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் ஒருவன், நீண்ட காலத் துன்பங்களை நிச்சயம் தவிர்ப்பான்.(73) எந்த மனிதன் நீண்ட காலம் கோபத்தைப் பணியச் செய்கிறானோ, எவன் எச்செயலையும் செய்வதற்கு முன்னால் நீண்ட காலம் ஆலோசிக்கிறானோ அவன் வருத்தம் தரும் எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான்.(74) ஒருவன் பெரியோரிடம் நீண்ட காலம் காத்திருந்து {பணிவிடை செய்து}, அவர்களின் அருகே அமர்ந்து அவர்களிடம் மதிப்பைக் காட்ட வேண்டும். ஒருவன் தனது கடமைகளை நீண்ட காலம் கவனித்து, அவற்றை உறுதி செய்வதில் நீண்ட காலம் ஈடபட வேண்டும்.(75)

கல்விமான்களிடம் நீண்ட காலம் காத்திருந்து, நடத்தையில் நல்லோராக இருப்போரிடம் நீண்ட காலம் மதிப்புடன் பணி செய்து, தன் ஆன்மாவை நீண்ட காலம் முறையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒருவன், நீண்ட காலம் உலகால் மதிக்கப்படும் நிலையை அனுபவிப்பதில் வெல்வான்.(76) அறம் மற்றும் கடமை குறித்த காரியங்களில் ஈடுபடும் ஒருவன், அக்காரியங்களின் செய்தியை மற்றொருவன் கேட்கும்போது, அவனுக்குப் பதிலைக் கொடுப்பதற்கு முன் நீண்ட காலம் சிந்திக்க வேண்டும். அப்போது (பாவத்திற்கு வழிவகுக்கும் நடைமுறை விளைவுகளைக் கொண்ட தவறான பதிலைக் கொடுக்கும்) வருந்தத்தக்க நிலையை அவன் தவிர்க்கலாம்.(77) கடுந்தவங்களைக் கொண்ட கௌதமரைப் பொறுத்தவரையில், அம்முனிவர் நீண்ட காலம் தமது ஆசிரமத்தில் தேவர்களைத் துதித்து, இறுதியாகத் தம் மகனுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தார்” என்றார் {பீஷ்மர்}.(78)

சத்தியவான் தியுமத்சேனன்! – சாந்திபர்வம் பகுதி – 267-குடிமக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாக்கும் காரியத்தில் சத்தியவானுக்கும் தியுமத்சேனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உண்மையில் ஒரு மன்னனால் எவருக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியும்? ஓ! பாட்டா, ஓ! நல்லோரில் முதன்மையானவரே, நான் இஃதை உம்மிடம் கேட்கிறேன், எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் தியுமத்சேனனுக்கும், மன்னன் சத்தியவானுக்கும் இடையில் நடந்த பழைய உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) தந்தையின் {தியுமத்சேனனுடைய} ஆணையின் பேரில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வரும்போது, அதற்கு முன் எவராலும் சொல்லப்படாத குறிப்பிட்ட வார்த்தைகளை இளவரசன் சத்தியவான் சொன்னான்[1].(3) {சத்தியவான்}, “சிலவேளைகளில் அறமானது கொடுமையின் வடிவையும், கொடுமையானது அறத்தின் வடிவையும் ஏற்கின்றன. தனி நபர்களைக் கொல்வது ஒருபோதும் அறச்செயலாகும் சாத்தியமில்லை” {என்றான்}.(4)தியுமத்சேனன் {சத்தியவானிடம்}, “கொல்லத்தகுந்தவர்களை விடுவது அறமென்றால், ஓ! சத்தியவான், கள்வர்களைத் தண்டிக்காமல் விட்டால், (அறத்திற்கும், மறத்திற்கும் இடையிலான) வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து போகும்.(4) (தீயோரைத் தண்டிக்காமல் விட்டால்) “இஃது என்னுடையது, இஃது என்னுடையதில்லை” (என்ற உடைமை ரீதியிலான) கருத்துகள் கலியுகத்தில் நீடிக்காது.(5) (தீயோர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால்) உலகக் காரியங்கள் முடங்கிப் போகும் நிலையை எட்டும். (தீயோரைத் தண்டிக்காமல்) உலகத்தை எவ்வாறு நடத்தலாம் என்பதை நீ அறிந்தால், அது குறித்து எனக்குச் சொல்வாயாக” என்றான்.(6)

சத்தியவான் {தியுமத்சேனனிடம்}, “மூவகையினரும் (க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரரும்) பிராமணர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட வேண்டும். இந்த மூவகையினரும் அறத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டால், அவர்களின் நடைமுறைகளை (கலப்பால் உண்டான) துணை வகையினர் பின்பற்றுவார்கள்[2].(7) அவர்களுக்கு மத்தியில் (பிராமணர்களின் ஆணைகளை) மீறுவோரைக் குறித்து மன்னனிடம் புகாரளிக்க வேண்டும். “இவன் என் ஆணைகளைக் கேட்கவில்லை” என்று ஒரு பிராமணனால் சொல்லப்படும் புகாரின் பேரில் அந்தக் குற்றவாளிக்கு மன்னன் தண்டனை அளிக்க வேண்டும்.(8) மன்னன், அந்தக் குற்றவாளியின் உடலை அழிக்காமல், சாத்திரங்களில் குறிப்பிடப்படும் தண்டனைகளை அளிக்க வேண்டும். மன்னன், குற்றத்தின் தன்மையை முறையாகச் சிந்திப்பது, அறநெறி ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டு வேறு வகையில் நடந்து கொள்ளக்கூடாது.(9) மன்னன் தீயோனைக் கொல்வதன் மூலம் (நடைமுறையில்) பெரும் எண்ணிக்கையிலான தனிப்பட்ட அப்பாவிகளைக் கொல்கிறான். ஒரு கள்வனைக் கொல்வதன் மூலம், அவனது மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் ஆகிய அனைவரும் (அவர்கள் வாழ்வதற்கான வழிமுறைகளை இழக்கும் காரணத்தால்) கொல்லப்படுகின்றனர் என்பதைக் காண்பீராக. எனவே, தீய மனிதனால் தீங்கை அடையும்போது, தண்டனை வழங்கும் கேள்வியில் மன்னன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.(10)சில வேளைகளில் ஒரு தீயவன், அறவோன் ஒருவனின் நன்னடத்தையை ஈர்த்துக் கொள்வதைக் காண முடிகிறது. மேலும் சில தீய மனிதர்களிடம் இருந்து நல்ல பிள்ளைகள் பிறப்பதும் காணப்படுகிறது.(11) எனவே, தீயவர்கள் வேரோடு அழிக்கப்படக்கூடாது. தீயோரைக் கொல்வது நித்திய நடைமுறைக்கு {ஸநாதன தர்மத்துக்கு} இணக்கமானதல்ல. சிறு தண்டனைகள் மூலம் அவர்களின் குற்றங்களை ஈடு செய்ய வேண்டும்.(12) அவர்களது செல்வம் அனைத்தையும் இழக்கச் செய்தல், சங்கிலியில் பிணைத்து நிலவறைகளில் சிறைவைத்தல், அவர்களது வடிவத்தை இழக்கச் செய்தல் {உடல் உறுப்புகளை அகற்றுதல்} ஆகியவற்றின் மூலம் அவர்களது குற்றம் ஈடுசெய்யப்பட வேண்டும். அவர்களுக்கு மரணத் தண்டை அளிப்பதன் மூலம், அவர்களது உறவினர்கள் தண்டிக்கப்படக்கூடாது. பாதுகாப்பை அடையும் விருப்பத்தால், புரோகிதர்கள் மற்றும் பிறரின் முன்னிலையில் அவர்கள், “ஓ! பிராமணரே, நாங்கள் மீண்டும் ஒருபோதும் எந்தப் பாவச் செயலையும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி உறுதி அளித்தால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் அளிக்காமல் விடுவதே தகுந்ததாகும்.(13,14) இதுவே படைப்பாளனின் ஆணையாகும். மான்தோலுடுத்தி, (துறவிகளுக்கான) தண்டம் தரித்து, தலைமழித்தவர்களாக இருக்கும் பிராமணனாகவே ஒருவன் இருந்தாலும் கூட, (அவன் வரம்பை மீறும்போது) தண்டிக்கப்பட வேண்டும்[3].(15) பெரிய மனிதர்கள் வரம்புமீறினால் அவர்களது பெருமைக்குத் தக்க அளவில் தண்டனை இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் முதல் தருணத்தில் விடப்படுவது போலத் தண்டனையின்றி விடத்தகாதவர்கள் ஆவர்” என்றான் {சத்தியவான்}.(16)

தியுமத்சேனன் {சத்தியவானிடம்}, “மனிதர்கள் தாங்கள் இருக்க வேண்டிய வரம்புகளை மீறாதவரை அவர்கள் அறத்தின் பெயரால் அமர்த்தப்படலாம்.(17) அந்த வரம்புகளை மீறும்போது, மரணத்தைக் கொண்டு அவர்களைத் தண்டிக்கவில்லையெனில், அந்த வரம்புகள் விரைவில் அழிந்துவிடும். நெடுங்காலத்துக்கு முந்தைய மனிதர்கள் வெகு எளிதாக ஆளப்படத் தகுந்தவர்களாக இருந்தனர்[4].(18) அவர்கள் (பேச்சிலும், ஒழுக்கத்திலும்) மிக உண்மையுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் சச்சரவுகளிலும், சண்டைகளிலும் குறைவாகவே ஈடுபட்டனர். அவர்கள் எப்போதாவதுதான் கோபவசப்பட்டார்கள், அல்லது அவர்களது கோபம் அடக்கத்தகாததாக ஒருபோதும் இருந்ததில்லை. அந்தக் காலங்களில் “சீ” என்று சொல்வதே குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனையாக இருந்தது. அதன் பிறகு, கடுமொழிகள் அல்லது நிந்தனைகளே தண்டனைகளாகின.(19) அதன் பிறகு, அபராதங்களும், பறிமுதல்களும் தண்டனைகளாகப் பின்தொடர்ந்தன. எனினும், இக்காலத்தில் மரணமே தற்போதைய தண்டனையாக இருக்கிறது. ஒருவரை மட்டும் கொல்வதாலேயே பிறரைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்ற அளவுக்குத் தீமையின் அளவு அதிகரித்திருக்கிறது[5].(20) கள்வனுக்கு மனிதர்களுடனோ, தேவர்களுடனோ, கந்தர்வர்களுடனோ, பித்ருக்களுடனோ தொடர்பேதும் கிடையாது. அவன் யாருக்கு என்னவாக இருக்கிறான்? அவன் எவருக்கும் எவருமாக இல்லை. இதுவே ஸ்ருதிகளின் தீர்மானமாகும்[6].(21) கள்வன் இடுகாடுகளில் உள்ள சடலங்களின் ஆபரணங்களையும் எடுத்துக் கொள்கிறான், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களின் (அதனால் அறிவிழந்தவர்களின்) உடைகளை அணிந்து கொள்கிறான். இந்த இழிந்த பாவிகளிடம் எந்த உடன்படிக்கையையோ, (அதைச் சார்ந்திருப்பதற்காக) அவர்களிடம் இருந்து எந்த உறுதிமொழியையோ ஏற்று ஏற்படுத்திக் கொள்ளும் மனிதன் மூடனாவான்” என்றான் {தியுமத்சேனன்}[7].(22)

சத்தியவான், “அந்த நேர்மையற்றமுரடர்களில் இருந்து நேர்மையான மனிதர்களை உருவாக்குவதிலும், கொலையோடு தொடர்பில்லாத வழிமுறைகளின் மூலம் அவர்களைக் காப்பதிலும் நீர் வெல்லவில்லையெனில், வேள்வி எதையாவது ஏற்பாடு செய்து அவர்களை அழிப்பீராக[8].(23) குடிமக்கள் தங்கள் வாழ்வின் தொழிலில் செழிக்க வேண்டும் என்பதற்காக மன்னர்கள் கடுந்தவங்களைப் பயில்கிறார்கள். அவர்களது நாடுகளில் கொள்ளையர்களும், கள்வர்களும் பெருகும்போது அவர்கள் {மன்னர்கள்} அவமானமடைகிறார்கள். எனவே, கொள்ளையையும், களவையும் ஒடுக்குவதற்காகவும், தங்கள் குடிமக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்யவும் அவர்கள் தவங்களைச் செய்கிறார்கள்.(24) அச்சுறுத்துவதால் மட்டுமே குடிமக்களை (மன்னனால்) நேர்மையானவர்களாக மாற்ற முடியும். நல்ல மன்னர்கள் பழிக்கு பழி செய்யும் நோக்கத்துடன் தீயவர்களை ஒருபோதும் கொல்வதில்லை. (மறுபுறம், அவர்கள் கொல்வார்கள் என்றாலும், கொல்லப்படுபவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு வேள்வியிலேயே அவர்களைக் கொல்வார்கள்). நல்ல மன்னர்கள் (கொடுமையான தண்டனைகளுக்குப் பதிலாக) நல்லொழுக்கத்தின் துணையுடன் தங்கள் குடிமக்களை முறையாக ஆள்வதன் மூலமே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.(25) மன்னர்கள் முறையுடன் செயல்பட்டால், மேன்மையான குடிமக்கள் அவர்களை {அந்த மன்னர்களைப்} போலவே செயல்படுவார்கள். தாழ்ந்த மக்களோ, தங்கள் பங்குக்கு, தங்களுக்கு அடுத்தபடியில் மேன்மையானவர்களாக இருப்போரைப் போலவே செயல்படுவார்கள். மனிதர்கள் தங்களைவிடச் சிறந்தவர்கள் என்று யாரைக் கருதுவார்களோ, அவர்களைப் போலவே செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்[9].(26) கட்டுப்பாடு இல்லாத மன்னன், (தீய வழிகளில் இருந்து) பிறரைத் தடுக்க முனைந்தால், புலன்களுக்கு அடிமையாக உலக இன்பங்கள் அனைத்திலும் ஈடுபடும் இயல்பின் விளைவால், அவன் மனிதர்கள் அனைவரின் பரிகாசத்திற்கான பொருளாகவே ஆவான்.(27) அகங்காரம் அல்லது தீர்மானப்பிழையின் மூலம் மன்னனுக்கெதிராக எவ்வழியிலாவது குற்றமிழைக்கும் மனிதன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தடுக்கப்பட வேண்டும்.(28) இவ்வழியின் மூலமே புதிய குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து அவனைத் தடுக்க முடியும். (தேவைப்பட்டால்) அவன் நண்பர்களையும், நெருக்கமான உறவினர்களையும் கூடக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.(29) ஒரு வெறுக்கத்தக்க குற்றவாளி எந்த நாட்டில் கடும் தண்டனைகளைச் சந்திக்கவில்லையோ, அங்கே குற்றங்கள் பெருகி, அறம் குறையும் என்பதில் ஐயமில்லை.(30)

கருணை கொண்டவரும், கல்விமானுமான ஒரு பிராமணர் முற்காலத்தில் இஃதை எனக்குப் போதித்தார். உண்மையில், ஓ! தந்தையே, மக்களிடம் கருணையால் உந்தப்பட்ட நமது முப்பாட்டன்களும், இதே அளவுக்கான தீங்கிழையாமையை அவர்களுக்கு உறுதி செய்திருக்கின்றனர்.(31) அவர்களது வார்த்தைகள், “கிருதயுகத்தில், முற்றிலும் தீங்கிழைக்காத வழிகளைப் பின்பற்றியே மன்னர்கள் தங்கள் குடிமக்களை ஆள வேண்டும்.(32) திரேதா யுகத்தில், முழு நிறைவில் இருந்து நான்கில் ஒரு பகுதி விழுந்த அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியே மன்னர்கள் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். துவாபர யுகத்தில், பாதி அளவுக்கு விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும், அதைத் தொடர்ந்து வரும் {கலி} யுகத்தில் நான்கில் மூன்று பகுதிகள் விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.(33) கலியுகம் நேரும்போது, மன்னர்களின் தீய தன்மையின் மூலமும், அந்த யுகத்திற்கே உரிய இயல்பின் விளைவாகவும் அறத்தின் நான்காவது பகுதியிலும் பதினைந்து பகுதிகள் மறைந்து, அதனில் பதினாறாவது பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும்.(34) ஓ! சத்தியவான், இதில் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் குழப்பம் நேர்ந்தால், அம்மன்னன், மனித வாழ்வின் கால அளவையும், மனிதர்களின் பலத்தையும், நேரும் நேரத்தின் இயல்பையும் கருத்தில் கொண்டு தண்டனைகளை அளிக்க வேண்டும்” {என்று முன்னோர்கள் சொன்னார்கள்}.(35) உண்மையில், சுயம்புவின் {பிரம்மனின்} மகனான மனு, மனிதர்களிடம் தாம் கொண்ட கருணையால், எந்த வழிமுறைகளின் மூலம் (தீங்கிற்குப் பதிலாக) விடுதலைக்கான {முக்திக்கான} அறிவை அவர்கள் அடைவார்களோ அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்” என்றான் {சத்தியவான்}”.(36)

கபிலர், ஸ்யூமரஸ்மி! – சாந்திபர்வம் பகுதி – 268-விலங்குகளைக் கொல்லாமல் வேள்வி செய்ய வேண்டும் என்பது குறித்து கபிலருக்கும் ஸ்யூமரஸ்மிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நன்கறியப்பட்ட ஆறு குணங்களுக்கு {செல்வம் [ஐஸ்வர்யம்], ஞானம், புகழ் [கீர்த்தி], அமைதி [சாந்தி], மனோவுறுதி [வைராக்யம்], அறம் [தர்மம்] என்ற ஆறு குணங்களுக்கு} வழிவகுக்கும் யோக அறத்தை எவ்வாறு பின்பற்றலாம்? எந்த உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு அதைப் பயிலலாம் என்பது குறித்து நீர் ஏற்கனவே எனக்கு விளக்கிச் சொன்னீர். ஓ! பாட்டா, இன்பம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டு விளைவுகளுக்கும் வழிவகுக்கும் அறத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக.(1) ஒரே கதியையே அடையச் செய்யும் இல்லறக்கடமைகள் {கிருகஸ்ததர்மம்} மற்றும் யோகக்கடமைகள் {யோகதர்மம்} ஆகிய இரண்டில் எது மேன்மையானது?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தக் கடமை நடைமுறைகள் இரண்டும் உயர்ந்த அருளைக் கொண்டவையே. இவை இரண்டும் சாதிப்பதற்கு மிகக் கடினமானவையே. இரண்டும் உயர்ந்த கனிகளை உண்டாக்கவல்லவையே. இவை இரண்டும் மறுப்பிற்கிடமின்றி நல்லோராக இருப்போரால் பயிலப்படுபவையே.(3) நான் இப்போது இந்தக் கடமை நடைமுறைகள் இரண்டின் உண்மைக் கருத்தில் நீ கொண்டுள்ள ஐயங்களை விலக்குவதற்காக அவற்றின் முக்கியத்துவத்தை உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) இது தொடர்பாகக் கபிலருக்கும், ஒரு பசுவுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(5)

பழங்காலத்தில், மன்னன் நஹுஷனின் அரண்மனைக்குத் தேவன் தாஷ்டிரி {த்வஷ்டா} வந்த போது, அவன் {நஹுஷன்} தன் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்துவதற்காக உண்மையானதும், புராதனமானதும், நித்திய தடையாணையுமான வேதங்களுக்கு ஏற்புடைய வகையில் ஒரு பசுவைக் கொல்ல ஆயத்தமானான்.(6) பரந்தமனம் கொண்டவரும், சத்வக் கடமைகளை எப்போதும் நோற்பவரும், தமது புலன்களைக் கட்டுப்படுத்துவதில் எப்போதும் ஈடுபடுபவரும், உண்மை ஞானம் கொண்டவரும், எளிய உணவை உண்பவரும்,(7) நம்பிக்கையுடன் கூடிய சிறந்த அறிவை அடைந்தவரும், முற்றிலும் அச்சமற்றவரும், நன்மையானவரும், உறுதியானவரும், எப்போதும் உண்மையை நோக்கித் தம்மைச் செலுத்திக் கொள்பவருமான கபிலர், கொல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள பசுவைக் கண்டு, “ஐயோ, வேதங்களே” என்ற வார்த்தைகளை ஒருமுறை சொன்னார். அந்த நேரத்தில, ஸ்யூமரஸ்மி என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் (யோக சக்தியின் மூலம்) அந்தப் பசுவின் வடிவத்திற்குள் நுழைந்து, யதியான அந்தக் கபிலரிடம், “ஓ! கபிலரே, ஆச்சரியமாக இருக்கிறது.(8) வேதங்கள் (அவற்றில் உள்ள தீர்மானங்களின் மூலம் உயிரினங்களைக் கொல்ல அனுமதிப்பதன் விளைவால்) நிந்திக்கத்தகுந்தவையென்றால், (உயிரினங்கள் அனைத்திற்கும் முற்றிலும் தீங்கிழையாமையைக் கொடுக்கும்) பிற கடமைகளை அதிகாரம் பெற்றவையாக எதைக் கொண்டு கருத முடியும்?[1](9) தவங்களுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், நுண்ணறிவுடன் கூடியவர்களும், ஸ்ருதிகளையும், ஞானத்தையும் தங்கள் கண்களாகக் கொண்டவர்களுமான மனிதர்கள், முனிவர்களால் தொகுக்கப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட வேதங்களின் தடையாணைகளை தெய்வத்தின் வார்த்தைகளாகவே கருதுகிறார்கள்.(10) வேதங்களின் உட்பொருளைப் பொறுத்தவரையில், கனியின் விருப்பில் விடுபட்டவனும், (பொறாமை மற்றும் வெறுப்பு என்ற) நோயற்றவனும், எதற்கும் அடிமையாக இல்லாதவனும், (தன் விருப்பங்கள் அனைத்தும் உடனே கனிவதன் விளைவால்) எந்த முயற்சியும் இல்லாதவனுமான பரம்பொருளின் வார்த்தைகளாகவே அவை இருக்கும்போது (அவற்றை நிந்திப்பதாலோ, புகழ்வதாலோ) எவராலும் என்ன சொல்ல முடியும்?” என்று கேட்டார் {ஸ்யூமரஸ்மி}[2].(11)கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “நான் வேதங்களை நிந்திக்கவில்லை. எவ்வகையிலும் அவற்றைக் குறைத்துப் பேசவும் நான் விரும்பவில்லை. பல்வேறு வாழ்வுமுறைகளுக்கு {ஆசிரமங்களுக்கு} விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகளின் நடைமுறைகளும் ஒரே கதிக்கே வழிவகுக்கின்றன என நாம் கேள்விப்படுகிறோம்.(12) ஒரு சந்நியாசி உயர்ந்த கதியை அடைகிறார். ஒரு காட்டுவாசியும் {வானப்ரஸ்தனும்} உயர்ந்த கதியை அடைகிறான். இல்லறத்தான் {கிருஹஸ்தன்} மற்றும் பிரம்மச்சாரியாகிய மற்ற இருவரும் கூட அதே கதியையே அடைகின்றனர்.(13) வாழ்வுமுறைகள் நான்கும் எப்போதும் தேவையான வழிகளாகவே கருதப்படுகின்றன[3]. ஒப்பீட்டளவில் இவற்றின் பலம், அல்லது பலவீனமானது, அவற்றுக்குரிய கதிகளின் தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.(14) ‘இவற்றை அறிந்து கொண்டு, சொர்க்கத்திற்கும் மற்ற அருள்களுக்கும் வழிவகுக்கும் செயல்களை நிறைவேற்றுவாயாக’ என்பது வேதத் தீர்மானத்தில் ஒன்றாகும். ’செயல்களைச் செய்யாதே’ என்பதும் மற்றொரு வேத தீர்மானமே ஆகும்.(15) செயல்களைத் தவிர்ப்பது தகுதியுடையதென்றால், அவற்றை நிறைவேற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். சாத்திரங்களின் நிலை இவ்வாறு இருக்கும்போது, குறிப்பிட்ட தீர்மானங்களின் பலம், அல்லது பலவீனத்தை உறுதி செய்வது மிகக் கடினமாகவே இருக்க வேண்டும்.(16) சாத்திரங்களில் அல்லாமல் நேரடி சாட்சியம் சார்ந்த, தீங்கிழையாமை எனும் அறத்தை விட மேன்மையான கடமையின் நடைமுறை எதனையும் நீர் அறிவீரென்றால், அஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {கபிலர்}.(17)ஸ்யூமரஸ்மி, “’ஒருவன் சொர்க்கத்ததில் உள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்ய வேண்டும்’ என்ற இந்த ஸ்ருதி நம்மால் அடிக்கடி கேட்கப்படுகிறது. (அடையப்பட வேண்டிய) கனியை முதலில் நினைத்தே ஒருவன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்கிறான்.(18) வெள்ளாடு, குதிரை, செம்மறியாடு, பசு, பறவையினங்கள் அனைத்தும், வளர்ப்பு விலங்குகள், காட்டு விலங்குகள், செடி கொடிகள் ஆகியன வாழும் உயிரினங்கள் பிறவற்றின் உணவாகின்றன. இதை நாம் கேள்விப்படுகிறோம்[4].(19) உணவானது, தினத்திற்கு தினம் காலையும் மாலையும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல ஸ்ருதியானது, விலங்குகள் மற்றும் தானியங்கள் வேள்விகளின் அங்கங்களாகும் எனத் தீர்மானிக்கிறது[5].(20)அண்டத்தின் தலைவன் அவற்றை {அந்த உயிரினங்களை} வேள்வியோடு சேர்த்துப் படைத்தான். அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவன், அவற்றின் உதவியுடனே தேவர்களை வேள்விகள் செய்ய வைத்தான்.(21) மொத்தம் ஏழு (வளர்ப்பு விலங்குகளும்), ஏழு (காட்டு) விலங்குகளும் வேள்விக்குத் தகுந்தவை எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை அனைத்தும் இணையான தகுதியைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அடுத்தடுத்தவை ஒவ்வொன்றும் தங்களுக்கு முந்தையவற்றுக்குத் தாழ்ந்தவையாக இருக்கின்றன. அதே போல, மொத்த அண்டமே வேள்விக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என வேதங்கள் அறிவிக்கின்றன. எவன் புருஷன் என்று அழைக்கப்படுகிறானோ, அவனையும் அதே காரியத்திற்காகவே வேதங்கள் நியமித்திருக்கின்றன[6].(22) மிகப் பழங்காலத்து மனிதர்களால் இஃது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கல்விமானான எந்த மனிதன், தன் திறனுக்குத் தக்கபடி வேள்விக்கான உயிரினங்களில் குறிப்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பான்?(23) தாழ்ந்த விலங்குகள், மனிதர்கள், மரங்கள், செடிகள் ஆகிய அனைத்தும் சொர்க்கத்தை அடைவதை விரும்புகின்றன. எனினும், அவை அஃதை அடைவதற்கு வேள்வியைத் தவிர வேறெந்த வழிமுறையும் கிடையாது.(24)உதிர்ந்த செடிகள், விலங்குகள், மரங்கள், கொடிகள், தெளிந்த நெய், பால், தயிர், இறைச்சி மற்றும் (வேள்வி நெருப்பில் ஊற்றப்படும்) அங்கீகரிக்கப்பட்ட பிற பொருட்கள், நிலம், திசைப்புள்ளிகள், நம்பிக்கை, காலம் எனப் பனிரெண்டும்,(25) அவற்றுடன் ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள், வேள்வி செய்பவன் ஆகியவற்றைச் சேர்த்தால் பதினாறும், இல்லறத்தானாக அறியப்படும் நெருப்பும் சேர்ந்த இந்தப் பதினேழும்(26) வேள்வியின் அங்கங்கள் எனச் சொல்லப்படுகின்றன. வேள்வியே உலகின் வேரென்றும், அதன் நடைமுறை என்றும் ஸ்ருதி {வேதம்} தீர்மானிக்கிறது. பசுக் கொடுக்கும் தெளிந்த நெய், பால், தயிர், சாணம், பாலுடன் கலந்த தயிர், தோல், வால்மயிர், கொம்புகள் மற்றும் குளம்புகள் ஆகியவற்றால் மட்டுமே வேள்விக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துவிட முடியும். இவற்றில் குறிப்பிட்ட வேள்விகளுக்கு விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்டவையும்,(27,28) ரித்விஜர்களும், (புரோகிதர்கள் மற்றும் பிற பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும்) கொடைகளும் சேர்ந்தே வேள்விகளை நீடிக்கச் செய்கின்றன[8]. மனிதர்கள் இவற்றை ஒன்றாகத் திரட்டி வேள்விகளைச் செய்கிறார்கள்.(29) வேள்வி செய்வதற்காகவே அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மைக்கு இணக்கமாக இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. இவ்வாறே பழங்காலத்தின் மனிதர்கள் அனைவரும் தங்களை வேள்வி செய்வதில் நிறுவிக் கொண்டார்கள்.(30)

எனினும், வேள்விகளைக் கனிக்காகவோ, வெகுமதிக்காகவோ செய்யாமல், அவை செய்யப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வின் காரணமாகச் செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில், அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்கவோ, எதனுடனும் பகைமை பாராட்டவோ, எந்த உலகக் காரியத்திலும் தன்னை நிறுவிக் கொள்ளவோ செய்வதில்லை என்பதே காணப்படுகிறது.(31) வேள்வியின் அங்கங்களென மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள், வேள்விக்குத் தேவையானவை எனச் சொல்லப்பட்ட பிற பொருட்கள், விதிகளில் குறிப்பிடப்பட்டவை ஆகிய அனைத்தும், (வேள்விகளின் நிறைவுக்கான) அங்கீகரிக்கப்பட்ட சடங்கிற்காகப் பயன்படுத்தப்படும்போது ஒன்றையொன்று தாங்கிப் பிடிக்கின்றன.(32) முனிவர்களால் எவை தொகுக்கப்பட்டவையோ, வேதங்களை எவை அறிமுகப்படுத்துகின்றவோ அந்த ஸ்மிருதிகளையும் நான் காண்கிறேன். அவை பிராமணங்களைப் பின்பற்றுவதன் விளைவால் கல்விமான்களால் அதிகாரமிக்கவையாகக் கருதப்படுகின்றன.(33) வேள்விகள் பிராமணங்களையே தங்கள் மூலமாகக் கொண்டிருக்கின்றன, அவை உண்மையில் பிராமணங்களையே சார்ந்திருக்கின்றன. மொத்த அண்டமும் வேள்வியைச் சார்ந்திருக்கிறது, வேள்வியும் அண்டத்தைச் சார்ந்திருக்கிறது.(34) ஓம் என்ற அசையே வேதங்கள் எழுந்த வேராக இருக்கிறது. (எனவே, பெரும் கருத்தைக் கொண்ட அந்த அசையைச் சொல்லியே எந்தவொரு சடங்கும் தொடங்கப்பட வேண்டும்). ஓம், நமஹ, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட் என்ற அசைகளைச் சொல்பவனும், தன் திறனுக்குத் தக்க வகையில் வேள்விகளையும் பிற சடங்குகளையும் செய்பவனுமான ஒருவனுக்கு(35) அடுத்தப் பிறவியில் நேரப்போகும் மூவுலகங்கள் அனைத்திலும் அச்சமேதும் ஏற்படாது. இவ்வாறே வேதங்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசிகளும், முதன்மையான முனிவர்களும் சொல்கின்றனர்.(36)

எவனிடம் ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள் மற்றும் வேத இலக்கணத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி சாமப்பாடல்களை நிறைவு செய்யத் தேவைப்படும் அசைநிலை {சொல்லின் தன்மை} ஆகியவை இருக்கின்றவோ அவனே உண்மையில் பிராமணனாவான்.(37) ஓ! துதிக்கத்தக்க பிராமணரே, அக்னிஹோத்ரம், சோம வேள்வி மற்றும் பெரும் வேள்விகள் பிறவற்றின் கனிகளை நீர் அறிவீர்.(38) இதன் காரணமாகவே, எவ்வகை ஐயுணர்வுமின்றி ஒருவன் வேள்வி செய்யவும், பிற மக்களின் வேள்விகளில் துணை புரியவும் வேண்டும் என நான் சொல்கிறேன். சொர்க்கத்திற்கு வழிவகுக்கத்தக்க (யோதிஷ்டோமம் முதலிய) வேள்விகளைச் செய்யும் ஒருவன், தெய்வீகப் பேரின்பத்தின் வடிவிலான உயர்ந்த வெகுமதிகளை அடைகிறான்.(39) வேள்விகளைச் செய்யாதவர்களுக்கு இம்மையுமில்லை மறுமையுமில்லை என்பது நிச்சயமானதாகும். வேதங்களின் தீர்மானங்களை உண்மையில் நன்கறிந்தவர்கள், (செயல்படத் தூண்டுபவை, அவற்றைச் செய்வதைத் தவிர்க்க போதிப்பவை ஆகிய) இரண்டு வகைத் தீர்மானங்களையும் சம அதிகாரம் கொண்டவையாகவே கருதுகின்றனர்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(40)

சாத்திரக் கள்வர்கள், பிரம்மக் கொள்ளையர்கள்! – சாந்திபர்வம் பகுதி – 269-இல்லறத்தைவிடத் துறவறம் ஏன் மேன்மையானது என்பதைச் சொன்ன கபிலர்; இல்லறவாழ்வின் முக்கியத்துவத்தையும், துறவின் தாழ்வையும் எடுத்துக் காட்டிய ஸ்யூமரஸ்மி; துறவின் பெருமையையும், எவன் பிராமணன் என்பதையும், பிராமண ஒழுக்கத்தையும் எடுத்துச் சொன்ன கபிலர்; முக்தியில் ஐயங்கொள்ளும் ஸ்யூமரஸ்மி.

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “சுயக்கட்டுப்பாட்டையும், அமைதியையும் பின்பற்றும் யதிகள், செயல்களால் அடையப்படும் கனிகள் அனைத்தும் அழிவற்றவையாக இல்லாமல் நிலையற்றவையாகவே இருக்கின்றன என்பதைக்கண்டு, அறிவுப்பாதையின் மூலமாகப் பிரம்மத்தை அடைகிறார்கள். (விரும்பியதும் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூடப்படுவதால்) அவர்களைத் தடுக்கக்கூடிய எதுவும் எந்த உலகத்திலும் கிடையாது.(1) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்திலிருந்தும் அவர்கள் விடுபடுகிறார்கள். அவர்கள் எதற்கும், அல்லது எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தலைவணங்குவதில்லை. அவர்கள் பந்த பாசங்கள் அனைத்தையும் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஞானம் அவர்களுடையதாக இருக்கிறது. அவர்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தூய்மையான, களங்கமற்ற வாழ்வை வாழ்ந்து, (பெரும் மகிழ்ச்சியுடன்) திரிந்து கொண்டிருக்கிறார்கள்.(2) அவர்கள் அழிவடையக்கூடிய அனைத்துப் பொருட்கள் மற்றும் துறவு வாழ்வு (ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம்) தங்கள் புத்தியினால் தீர்மானமான முடிவுகளை அடைந்திருக்கிறார்கள். பிரம்மத்திடம் அர்ப்பணிப்புடன், பிரம்மத்தைப் போன்று ஏற்கனவே ஆகிவிட்ட அவர்கள் பிரம்மத்திலேயே தங்கள் புகலிடத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.(3) துன்பத்தைக் கடந்து, ரஜஸிலிருந்து (ரஜஸ் என்ற குணத்தில் இருந்து) விடுபட்ட அவர்கள், அழிவற்றவற்றையே தங்கள் உடைமைகளாகக் கொள்கின்றனர். உயர்ந்த கதியானது இந்த மனிதர்கள் அடையும் தொலைவுக்குள் இருக்கும்போது, அவர்களுக்கு இல்லற வாழ்வுமுறையின் கடமைகளைப் பயிலும் தேவை என்ன இருக்கிறது?” என்று கேட்டார் {கபிலர்}[1].(4)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “உண்மையில், அதுவே {முக்தியே} அடையத்தக்க உயர்ந்த பொருளாக இருந்தால், உண்மையில் (துறவை பயில்வதால் அடையப்படும்) உயர்ந்த கதி அதுவேயென்றால், அப்போதும் இல்லற வாழ்வுமுறையின் முக்கியத்துவமே புலப்படுகிறது. ஏனெனில் இல்லற வாழ்வுமுறையில்லாமல் எந்த வாழ்வுமுறையும் சாத்தியமில்லை.(5) உண்மையில், உயிரினங்கள் அனைத்தும், அவற்றுக்குரிய தாய்மாரைச் சார்ந்திருப்பதன் விளைவாலே வாழ இயல்வதைப் போலவே, இல்லறவாழ்வுமுறையைச் சார்ந்திருக்கும் விளைவால் மட்டுமே பிற மூன்று வாழ்வுமுறைகளும் நீடித்திருக்கின்றன.(6) இல்லற வாழ்வுமுறையை நோற்கும் ஓர் இல்லறத்தான், வேள்விகளைச் செய்து, தவங்களையும் பயில்கிறான். மகிழ்ச்சிக்கான விருப்பத்தின் பேரில் எவராலும் செய்யப்படும் எதுவும், இல்லற வாழ்வுமுறையிலேயே தனது வேரைக் கொண்டிருக்கிறது.(7) சந்ததிகளை உண்டாக்குவதையே பேரின்பத்தின் ஊற்றுக்கண்ணாக உயிரினங்கள் அனைத்தும் கருதுகின்றன. எனினும், (இல்லற வாழ்வுமுறையைத் தவிர) பிற வாழ்வுமுறைகள் எதனிலும் சந்ததிகளை உண்டாக்குவது சாத்தியமற்றதாகிறது.(8) அனைத்து வகைப் புல்லும், துரும்பும், (தானியங்களையும், பயிர்களையும் விளைவிக்கும்) செடி கொடிகள் அனைத்தும், குன்றுகளிலும், மலைகளிலும் வளரும் அதே வகையைச் சார்ந்த பிறவும் தங்கள் வேர்களை இல்லற வாழ்வுமுறையிலேயே கொண்டுள்ளன. உயிரினங்கள் வாழ்வு இவற்றையே சார்ந்திருக்கிறது. (இந்த அண்டத்தில்) உயிரைத் தவிர வேறு எதுவும் காணப்படாததால், இந்த அண்டம் முழுமைக்குமான புகலிடமாக இல்லறமே பார்க்கப்படுகிறது.(9) இவ்வாறிருக்கையில், இல்லறமானது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்காது என்று சொல்லும் உண்மையைக் குறித்து யாரால் பேச முடியும்?

நம்பிக்கையற்றவர்கள், ஞானமற்றவர்கள், {சிந்தனையில்} ஆழமற்றவர்கள்,(10) மதிப்பற்றவர்கள், சோம்போறிகள், உழைப்பால் களைத்தவர்கள், கடந்த காலச் செயல்களின் விளைவால் துயரமடைந்தவர்கள் ஆகியோராலும் மட்டுமே துறவு வாழ்வில் பெரும் அமைதியைக் காண முடியும்.(11) (வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள) குறிப்பிட்ட அழிவற்ற வேறுபாடுகளே மூவுலகங்களையும் தாங்கிப் பிடிக்கும் காரணங்களாக இருக்கின்றன. உயர்ந்த வகையைச் சார்ந்தவனும், வேதங்களை அறிந்தவனுமான சிறந்த மனிதன், தான் பிறந்த நாள் முதலே வழிபடப்படுகிறான்.(12) கர்ப்பாதானம் செய்தலைத் தவிர, மறுபிறப்பாளர்களை இம்மையிலும் மறுமையிலும் செயல்களனைத்தையும் செய்ய வல்லவர்களாக்க வேத மந்திரங்களும் அவசியமாகின்றன[2].(13) (அவர்களின் மரணத்திற்குப் பிறகு) உடலைத் தகனம் செய்வது, இரண்டாவது உடலை அடையச் செய்வது, அத்தகைய அடைதலுக்குப் பிறகு பானம் மற்றும் உணவைக் கொடுப்பது, வாழும் உலகத்தையும் யமலோகத்தையும் பிரிக்கும் ஆற்றைக் கடக்க உதவும் பசுக்களையும் பிற விலங்குகளையும் கொடை அளிப்பது, ஈமப் பிண்டங்களை நீரில் மூழ்கச் செய்வது ஆகியவற்றில் வேத மந்திரங்கள் அவசியமாகின்றன.(14) இறந்தோரின் வழக்கில், அர்ச்சிஷ்மான்கள், பர்ஹிஷத்துக்கள், கிரவியாதர்கள் என்ற மூவகைப் பித்ருக்கள் மந்திரங்களின் தேவையை அங்கீகரிக்கின்றனர், மேலும் மந்திரங்களும் திறன்மிக்கக் காரணங்களாகக் கொள்ளப்பட்டு (நோக்கங்களை அடைவதற்காக இந்த விழாக்களையும் சடங்குகளையும் செய்ய வழிகாட்டப்பட்டு) அனுமதிக்கப்படுகின்றன.(15) வேதங்கள் இஃதை இவ்வளவு உரக்கச் சொல்லும்போதும், பித்ருக்கள், முனிவர்கள், தேவர்கள் ஆகியோருக்கு மனிதர்கள் கடன்பட்டிருக்கின்றனர் என்று சொல்லப்படும்போதும், எவராலும் விடுதலையை {முக்தியை} எவ்வாறு அடைய முடியும்?(6)வேத தீர்மானங்களின் உண்மைக் கருத்தை நிலைகுலைப்பதாக இருந்தாலும், (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் அருவ இருப்பைக் குறித்த) இந்தப் போலிக் கோட்பாடானது, செழிப்பிழந்தவர்களும், சோம்பலால் உண்ணப்பட்டவர்களுமான கல்விமானங்களால் வெளிப்படையாக உண்மையின் வண்ணங்களில் போர்த்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது[4].(17) வேத தீர்மானங்களின் அடிப்படையில் வேள்விகளைச் செய்யும் பிராமணன், ஒருபோதும் பாவத்தால் குற்றஞ்செய்யத் தூண்டப்படுவதில்லை. அத்தகைய மனிதன், வேள்விகள் மூலம், தான் வேள்விகளில் கொன்ற அந்த விலங்குகளுடன் சேர்ந்து இன்பலோகங்களை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தையும் அடைவதன் மூலம் நிறைவடைந்து, அவ்விலங்குகளின் விருப்பங்களையும் நிறைவேற்றி, அவற்றையும் நிறைவுகொள்ளச் செய்வதில் வெல்கிறான்.(18) வேதங்களை அலட்சியம் செய்வதன் மூலமும், வஞ்சனை மற்றும் தவறான வழிகாட்டுதலின் மூலமும் ஒருவன் உயர்ந்ததை {பரமனை} அடைவதில் வெல்வதில்லை. மறுபுறம், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்வதன் மூலமே ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(19)கபிலர், “(செயல்களே கடமை {கர்மமே தர்மம்} ஆனால்), நுண்ணறிவு கொண்ட மனிதன் செய்யத் தர்சம், பௌர்ணமாஸம், அக்னிஹோத்ரம், சாதுர்மாஸ்யம் மற்றும் பிற செயல்கள் இருக்கின்றன. அதைச் செய்வதில் அழிவில்லாத தகுதியும் {புண்ணியமும்} இருக்கிறது. (பிறகு, அவன் கொடுமை நிறைந்த செயல்களை ஏன் செய்ய வேண்டும்?).(20) செயல்கள் அனைத்தில் இருந்தும் விலகியவர்களாக, பொறுமையுடன் கூடியவர்களாக, (கோபம் மற்றும் அனைத்துக் களங்கங்களில் இருந்தும்) தூய்மையடைந்தவர்களாக, பிரம்மத்தை அறிந்தவர்களாகச் சந்நியாச வாழ்வுமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அத்தகைய பிரம்ம அறிவாலேயே வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளை மிகவும் விரும்பும் தேவர்களிடம் (முனிவர்களிடமும், பித்ருக்களிடமும்) பட்டிருக்கும் கடன்களை அடைப்பதில் வெல்கிறார்கள்.(21) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களையும் சமமான கண்ணில் பார்ப்பவனுமான பாதையற்ற ஒருவனின் {வித்வானின்} பாதையை அறிவதில் தேவர்களேகூட மலைத்துப் போகிறார்கள்.(22) ஆசான்களிடம் பெற்ற போதனைகளின் மூலம் ஒருவன், நான்கு வாயில்களையும், நான்கு வாய்களையும் கொண்டதும், நான்கு வகை இயல்பைக் கொண்டதுமான இந்தச் சட்டகத்திற்குள் {உடற்கட்டுக்குள்} வசிக்கும் ஒன்றை {ஆத்மாவை} அறிகிறான். இரு கரங்கள், வாக்கு புலன் {நாக்கு}, வயிறு, இன்ப புலன் ஆகியவற்றின் (ஆகியவற்றைக் கொண்டதன்) விளைவால் தேவர்களும் நான்கு வாயில்களைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். எனவே ஒருவன் அந்த வாயில்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்குத் தன்னால் இயன்ற அளவு சிறப்பாக முனைய வேண்டும்[5].(23) ஒருவன் பகடையைக் கொண்டு சூதாடக்கூடாது. அவன் பிறருக்குச் சொந்தமானதை அபகரிக்கக்கூடாது. உன்னதமற்ற பிறப்பைக் கொண்ட ஒரு மனிதனின் வேள்வியில் அவன் துணைபுரியக்கூடாது. அவன் கோபவசப்பட்டு மற்றொருவனைக் கைகளாலோ, கால்களாலோ தாக்கக்கூடாது. எந்தப் புத்திமான் இவ்வாறு தன் நடத்தையை அமைத்துக் கொள்கிறானோ, அவன் தன் கைகளையும், கால்களையும் கட்டுப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.(24) ஒருவன் உரத்துக் கூக்குரலிடும் நிந்தனையிலோ, கண்டிப்பதிலோ ஈடுபடக்கூடாது. அவன் வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது. குறும்புகள் செய்வதில் இருந்தும், பிறரைப் பழித்துக் கூறுவதில் இருந்தும் விலக வேண்டும். அவன் வாய்மை நோன்பை நோற்று, மிகக் குறைந்த அளவில் பேசி, எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தன்னை அமைத்துக் கொண்டால் அவன் தன் வாக்குப் புலனைக் கட்டுப்படுத்திக் கொள்வான்.(25)

ஒருவன் உணவை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. அவன் அதிகமாகவும் உண்ணக்கூடாது. அவன் பேராசையைக் கைவிட்டு, எப்போதும் நல்லோரின் தோழமையை நாட வேண்டும். அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். இவ்வழியில் ஒருவன் தன்னை அமைத்துக் கொள்வதால் வயிறு எனும் வாயிலை முறையாகக் கட்டுப்படுத்தவதில் அவன் வெல்கிறான்.(26) ஓ வீரரே, ஒருவன் மணந்து கொண்ட மனைவி இருக்கும்போது மற்றொருவனுடைய மனைவியைக் காமத்துடன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. அவன் ஒரு பெண்ணை அவளது பருவ காலத்திலன்றி ஒருபோதும் படுக்கைக்கு அழைக்கக்கூடாது. அவன் பிற பெண்களுடன் கலவியை நாடாமல் தன் சொந்த மனைவியிடம் மட்டுமே தன்னை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வழியில் தன்னை அமைத்துக் கொள்ளும் ஒருவன், தன் இன்ப உறுப்பை முறையாகக் கட்டுப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.(27) ஞானம் கொண்ட எந்த மனிதன், தன் இன்ப உறுப்பு, வயிறு, இரு கரங்கள் (மற்றும் இரு கால்கள்), வாக்கு உறுப்பு ஆகிய நான்கு வாயில்களில் அனைத்தையும் முறையாகக் கட்டுப்படுத்துகிறானோ, அவனே உண்மையில் ஒரு மறுபிறப்பாளனாவான்.(28) நன்கு கட்டுப்படுத்தப்படாத வாயில்களைக் கொண்ட மனிதன் அனைத்திலும் பயனற்றவனாவான். அத்தகைய மனிதனின் தவங்களால் என்ன செய்ய முடியும்? அவனது வேள்விகள் எதைக் கொண்டுவரும்? அவனது உடலால் எதை அடைய முடியும்?(29) தன் மேலாடையைக் கைவிட்டவன் எவனோ, தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் உறங்குபவன் எவனோ, அமைதிநிறைந்த இதயத்தைக் கொண்டவன் எவனோ, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(30)

தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்த எந்த மனிதன், மணந்து கொண்ட இணையர் அனுபவிக்கும் இன்பம் அனைத்தையும் தனியாகவே அனுபவிக்கிறானோ, பிறரின் இன்ப துன்பங்களில் எவன் தன் கவனத்தைச் செலுத்தவில்லையோ அவனே பிராமணனாக அறியப்பட வேண்டும்[6].(31) எந்த மனிதன் இவை அனைத்திலும் உண்மையில் உள்ளவற்றை உள்ளபடியே அவற்றின் பல வடிவ மாறுதல்களுடன் சரியாகப் புரிந்து கொள்கிறானோ, எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் கதியையும் அறிந்து கொள்கிறானோ, அவனே தேவர்களால் பிராமணனாக அறியப்படுகிறான்[7].(32) எவனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சமில்லையோ, எவனிடம் எந்த உயிரினிமும் அச்சங்கொள்வதில்லையோ, எவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ அவனே பிராமணனாக அறியப்பட வேண்டும்.(33) கொடைகள், வேள்விகள் போன்ற பக்திச் செயல்கள் அனைத்தின் உண்மை விளைவான இதயத் தூய்மையை அடையாத மூட புத்தி கொண்ட மனிதர்கள், ஆசான்களால் விளக்கப்பட்டாலும், ஒரு பிராமணனாவதற்குத் தேவையான ஞானத்தை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டார்கள். இவை யாவற்றின் அறிவும் இல்லாத இந்த மனிதர்கள், சொர்க்கம் மற்றும் அதன் இன்பங்களின் பல்வேறு வகைக் கனிகளையே விரும்புகிறார்கள்.(34)பழங்காலத்தில் இருந்தே தொடர்வதும், நித்தியமானதும், நிச்சயத்தன்மையை இயல்பாகக் கொண்டதும், நமது கடமைகள் அனைத்திலும் ஓர் இழையாக நுழைந்திருப்பதும், அனைத்து வகை வாழ்வுமுறைகளிலும் உள்ள ஞானிகள், எதைக் கொண்டு தங்கள் வகைக்குரிய கடமைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றை அறியாமையையும் உலகத் தீமைகளையும் அழிக்கும் பயங்கர ஆயுதங்களாக மாற்றிக் கொள்வார்களோ, அந்த நன்னடத்தையின் ஒரு சிறுபகுதியைக் கூட நடைமுறையில் பயில இயலாத மூட புத்தி கொண்ட மனிதர்கள், புலப்படும் கனிகளை உண்டாக்குவதும், உயர்ந்த பலம் நிறைந்ததும், மரணமற்றதுமான அந்நிலையை {ஒழுக்கத்தைக்} கனியற்றதாகவும், சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாததாகவும், (முறையான போக்கின்) பிறழ்வாகவும் கருதுகிறார்கள். எனினும் உண்மையில் அவ்வொழுக்கமானது, துயரில் காணப்படுவதற்கு எதிரான நடைமுறைகளைத் தழுவி, விழிப்புணர்வின் சாரமாகவும், காமத்தாலும், கோபத்தாலும், அதே வகையைச் சார்ந்த பிற ஆசைகளாலும் பாதிக்கப்படாததாகவும் இருக்கிறது.(36,37) வேள்விகளைப் பொறுத்தவரையில் அவற்றின் குறிப்புகள் அனைத்தையும் உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கிறது. உறுதி செய்யப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமாக இருக்கிறது. நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை வழிவகுக்கும் கனிகள் நிலையில்லாதவையாக இருக்கின்றன. இதை நன்றாகக் குறித்துக் கொள்வீராக. (இதைக் குறித்துக் கொண்டு, ஞானப்பாதையில் நடப்பீராக” என்றார் {கபிலர்}.(38)ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “வேதங்கள் செயல்களை முகத்தோற்றமாகக் கொள்ளவும் செய்கின்றன, அவற்றைப் புறக்கணிக்கவும் செய்கின்றன. அவற்றின் தீர்மானங்கள் இவ்வாறு ஒன்றோடொன்று முரண்படும்போது அவற்றில் அதிகாரம் எங்கே இருக்கிறது? மேலும் செயல்களைத் துறப்பதும் பெரும் நன்மையை உண்டாக்குகிறது. இந்த இரு பாதைகளும் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஓ! பிராமணரே, இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக” என்றார்.(39)

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “நல்ல பாதையில் (யோகத்தில்) உங்களைச் செலுத்திக் கொண்டு, உங்களது புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் இவ்வாழ்விலேயே அதன் கனிகளை உணர்வீர்களாக. எனினும், (செயல்களைச் செய்யும் மனிதர்களான) நீங்கள் தொடரும் பிற நோக்கங்களில் புலப்படும் விளைவுகள் என்னென்ன?” என்று கேட்டார்.(40)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “ஓ! பிராமணரே, என் பெயர் ஸ்யூமரஸ்மி ஆகும். நான் ஞானத்தை அடைவதற்காக இங்கு வந்தேன். எனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பிய நான், சச்சரவு செய்யும் விருப்பத்தால் அல்லாமல், கபடமற்ற வெளிப்படைத்தன்மையுடனேயே இந்த விவாதத்தைத் தொடங்கினேன்.(41) இந்த இருண்ட ஐயம் என் மனத்தைப் பீடித்திருக்கிறது. ஓ! சிறப்புமிக்கவரே, அஃதை எனக்குத் தீர்ப்பீராக. எதைக் கொண்டு பிரம்மம் அடையப்படுமோ, அந்த (யோகம் எனும்) நல்லோரின் பாதையில் நடப்பவர்கள், தங்கள் புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் அதன் கனிகளை உணர்வார்கள் என்று நீர் சொன்னீர். உண்மையில், புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் உணரப்படுவது எது? எதை நீர் பின்தொடர்கிறீர்?(42) சொற்போரை {தர்க்கத்தை} மட்டுமே தங்கள் முதன்மையான நோக்கமாகக் கொண்ட அறிவியல்கள் அனைத்தையும் தவிர்த்து, ஆகமத்தின் உண்மைப் பொருளை முறையாகப் புரிந்து கொள்ளும் வகையில் நான் அதை {ஆகமத்தைப்} படித்திருக்கிறேன். ஆகமத்தின் மூலமே நான் வேதத் தீர்மானங்களைப் புரிந்து கொள்கிறேன். வேதங்களின் உண்மைப் பொருளை வெளிக்கொணரும் நோக்கத்தைக் கொண்ட தர்க்கத்தின் அடிப்படையிலான அறிவியல்களை {ஆகமம் என்ற} அந்தச் சொல்லில் நான் சேர்க்கிறேன்[8].(43) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைத் தவிர்க்காமல், ஆகமத்தில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளையே ஒருவன் பின்தொடர வேண்டும். ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை நோற்பது, ஒருவனுக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டுகிறது. ஆகமத் தீர்மானங்களுடைய நிச்சயத்தன்மையின் விளைவால், அது வழிவகுக்கும் வெற்றியானது, நேரடியான சாட்சியத்தின் மூலம் கிட்டத்தட்ட உணரத்தக்கது என்று சொல்லப்படுகிறது.(44) ஒரு துறைக்குச் செல்ல இருக்கும் படகில் கட்டப்பட்ட மற்றொரு படகால், பயணிகள் அடைய விரும்பும் துறைக்கு இட்டுச் செல்ல முடியாததைப் போலவே, கடந்த கால ஆசைகளின் மூலம் செய்யப்பட்ட எங்கள் செயல்களால் இழுக்கப்படும் நாங்கள், பிறப்பு மற்றும் இறப்பு என்ற முடிவற்ற ஆற்றை ஒருபோதும் கடக்க முடியாதவர்களாக (மேலும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள ஓய்வு மற்றும் அமைதியின் புகலிடத்தையும் அடைய முடியாதவர்களாக) இருக்கிறோம். ஓ! சிறப்புமிக்கவரே, இக்காரியத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக. ஓர் ஆசான் தன் சீடனுக்குப் போதிப்பதைப் போல எனக்குப் போதிப்பீராக.(45)

மனிதர்களுக்கு மத்தியில், உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் முற்றிலும் துறந்தவர், தமக்குள்ளேயே முற்றிலும் நிறைவுடன் இருப்பவர், துயரத்தைக் கடந்தவர், நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டவர், (தம் சொந்த நன்மைக்காக) செயல்படும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர், தோழமையில் முற்றாகச் சுவையிழந்தவர், அனைத்து வகைச் செயல்களையும் முற்றிலும் தவிர்த்தவரென எவரையும் காண முடியவில்லை.(46) உம்மைப் போன்ற மனிதர்களும்கூட எங்களைப் போலவே இன்பத்திற்கு வசப்படுவதும், துயரத்தில் ஈடுபடுவதும் காணப்படுகிறது. உம்மைப் போன்ற மனிதர்களின் புலன்களும், பிற உயிரினங்களைப் போலவே தங்கள் செயல்பாடுகளிலும், நோக்கங்களிலும் ஈடுபடுகின்றன.(47) இன்பம் குறித்த கேள்வியை நாம் ஆராய்ந்தால், விருப்பங்களையும், ஒரே கதியையும் கொண்ட மனிதர்களின் நான்கு வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்}, நான்கு வாழ்வுமுறைகளுக்குமான {ஆசிரமங்களுக்குமான} தூய இன்பநிலை எதனில் இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {ஸ்யூமரஸ்மி}.(48)

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “ஒருவன் எந்தச் சாத்திரத்தின் அடிப்படையில் செயல்களில் ஈடுபட விரும்பினாலும், அந்தச் செயல்களை ஒழுங்குமுறைப்படுத்த அதில் {அந்த சாத்திரத்தில்} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் கனியற்றவையாவதில்லை. எந்தக் கருத்தின்படி ஒருவன் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டாலும், சுயக்கட்டுப்பாடு, அல்லது யோகக் கடமைகளை நோற்பதால் மட்டுமே அவனால் உயர்ந்த கதியை அடையமுடியும்.(49) ஞானத்தைத் தேடும் மனிதனுக்கு,(பிறப்பு மற்றும் இறப்பு என்ற முடிவிலாத ஆற்றைக்) கடந்து செல்ல அந்த ஞானமே துணைபுரிகிறது. எனினும், ஞானத்தின் பாதையில் இருந்து விலகிய பிறகு மனிதர்கள் தேடும் ஒழுக்கமானது, (பிறப்பு மற்றும் இறப்பு என்ற தீமைகளுக்கு உள்ளாக்கி) அவர்களைப் பீடிக்கவே செய்கிறது.(50) நீர் அறிவைக் கொண்டிருக்கிறீர், துன்பத்தை உண்டாக்கும் உலகம் சார்ந்த பொருட்களின் தொடர்பில்லாமல் இருக்கிறீர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களில் எவரேனும், ஒரே அண்ட ஆன்மாவைப் போல அனைத்தையும் காணச்செய்யும் அறிவை அடைவதில் எப்போதாவது வென்றிருக்கிறீர்களா?[9](51)சச்சரவில் மட்டுமே ஈடுபடும் விருப்பத்தில், சாத்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், விருப்புவெறுப்பில் மூழ்குவதன் விளைவால் செருக்குக்கும், ஆணவத்திற்கும் அடிமையாகும் சிலர் இருக்கிறார்கள்.(52) சாத்திரத் தீர்மானங்களின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத இந்தச் சாத்திரக் கள்வர்கள், இந்தப் பிரம்மக் கொள்ளையர்கள், ஆணவம் மற்றும் பிழையின் ஆதிக்கத்தால் அமைதியைத் தேடவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் மறுக்கிறார்கள்[10].(53) இம்மனிதர்கள் அனைத்துப் புறங்களிலும் கனியற்ற நிலையையே காண்கிறார்கள், (ஏதோ வாய்ப்பின் மூலம்) அவர்கள் ஞானப் பலத்தை அடைவதில் வென்றால், பிறரைக் காக்க ஒருபோதும் அவர்களுக்கு அதைச் சொல்லமாட்டார்கள். முற்றிலும் தமஸ் குணத்தாலான அவர்கள், தமஸை மட்டுமே தங்கள் புகலிடமாகக் கொள்கிறார்கள்.(54) ஒருவன் உள்ளீர்த்துக் கொள்ளும் இயல்பின் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவன் வசப்படுகிறான். அதன்படி, ஒருவனுடைய குணங்களே அவனுடைய இயல்பாக எழுகிறது என்பதால், தமஸைத் தன் புகலிடமாகக் கொண்ட ஒருவனிடம், பொறாமை உணர்வுகள் {பகை}, காமம் {விருப்பு}, கோபம் {சினம்}, செருக்கு {டம்பம்}, பொய்மை, போலித்தனம் {மதம்} ஆகியவை தொடர்ந்து வளர்கின்றன.(55) உயர்ந்த கதியை விரும்பும் யதிகள், இவ்வகையிலேயே சிந்தித்து, (ஆசான்களுடைய போதனைகளின் துணையால்) இந்தக் களங்கங்களைக் கண்டு, நன்மை தீமை ஆகிய இரண்டையும் விட்டு யோகத்தில் ஈடபடுகின்றனர்” என்றார் {கபிலர்}.(56)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “ஓ! பிராமணரே, (செயல்களின் மெச்சத்தக்க தன்மை, துறவின் முரண் தன்மை ஆகியவற்றைக் குறித்து) நான் சொன்ன அனைத்தும் கண்டிப்பாகச் சாத்திரங்களுக்குப் பொருந்தக் கூடியவையே ஆகும். எனினும், சாத்திரங்களின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒருவன், சாத்திரங்கள் உண்மையில் எதை அறிவிக்கிறதோ அதற்குக் கீழ்ப்படிய விரும்புவதில்லை என்பது நிச்சயம் உண்மையே.(57) நேர்மை நெறிக்கு இணங்கும் எந்த ஒழுக்கமும், சாத்திரங்களுக்கு இணக்கமாகவே இருக்கிறது. இதையே ஸ்ருதியும் தீர்மானிக்கிறது. அதே போல, நேர்மை நெறிக்கு இணங்காத எந்த ஒழுக்கமும், சாத்திரங்களுக்கு இணக்கமாக இருப்பதில்லை. இதுவும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.(58) சாத்திரங்களை மீறுவதன் மூலம் சாத்திரச் செயலெதையும் ஒருவனாலும் செய்ய முடியாது. மேலும் சாத்திரத்திற்குப் புறம்பானது நிச்சயம் வேதங்களுக்கு எதிரானதே. இதை ஸ்ருதி அறிவிக்கிறது[11].(59) புலன்களை எது நேரடியாகக் கவர்கிறதோ, அதை மட்டுமே நம்பும் பல மனிதர்கள், (நம்பிக்கைக்காக {எதிர்பார்ப்புக்காக} சாத்திரங்களில் சொல்லப்பட்டதைக் காணாமல்) இவ்வுலகத்தை மட்டுமே காண்கிறார்கள். சாத்திரங்கள் எவற்றைக் களங்கங்கள் என்று அறிவிக்கிறதோ, அவற்றைக் அவர்கள் காண்பதில்லை. அதன்படியே, எங்களைப் போலவே அவர்களும் துயரத்தின் வசப்படுகிறார்கள். உம்மைப்போன்ற மனிதர்கள் கவலைப்படும் புலன்நுகர் பொருட்களும், பிற உயிரினங்களும் கவலைப்படும் பொருட்களும் ஒன்றே. (இருப்பினும், ஆன்மா குறித்த உமது அறிவாலும், அவற்றின் {பிற உயிரினங்களின்} அறியாமையாலும், உமக்கும் அவற்றுக்கும் இடையில் உள்ள வேறுபாடு எவ்வளவு பெரியது?(60)

நான்கு வகை மனிதர்கள் அனைவரும், நான்கு வகை வாழ்வுமுறைகள் அனைத்தும் எவ்வளவுதான் தங்கள் கடமைகளில் வேறுபட்டிருந்தாலும் அவை அனைத்தும் (பேரின்ப நிலை என்ற) ஒரே கதியையே நாடுகின்றன. கேள்விக்கப்பாற்பட்ட திறன்களையும், ஆற்றல்களையும் நீர் கொண்டிருக்கிறீர். (பல்வேறு கடமைகளுக்கு மத்தியில்) விரும்பும் கதியை நிறைவேற்ற, நன்கு கணிக்கப்பட்ட, குறிப்பிட்ட ஒழுக்க நடைமுறையை உறுதி செய்வதற்காக, முடிவிலியை (பிரம்மத்தைக்) குறித்து எனக்குச் சொன்னதன் மூலம், என் ஆன்மாவை அமைதியால் நீர் நிறைத்துவிட்டீர். எங்களைப் பொறுத்தவரையில், ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாததன் விளைவால், நாங்கள் உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறோம். எங்கள் ஞானம், தாழ்ந்த பொருட்களின் தொடர்புடையதாக இருக்கிறது, நாங்கள் அடர்த்தியான இருளில் மூழ்கியிருக்கிறோம்.(61,62) (எனினும், விடுதலையை அடைய ஒருவனைத் தகுதியாக்குமென நீர் குறிப்பிட்ட ஒழுக்க நடைமுறையைப் பயில மிகக் கடினமாக இருக்கிறது). எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறானோ, எவன் தன் கடமைகள் அனைத்தையும் செய்கிறானோ, எவன் தன் உடலை மட்டுமே சார்ந்து எங்கும் திரிய வல்லவனாக இருக்கிறானோ, எவன் தன் ஆன்மாவை முற்றான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறானோ, எவன் அறநெறிகளின் தேவையைக் கடந்தவனாக இருக்கிறானோ, எவன் மொத்த உலகையும் (அதற்குச் சொந்தமான அனைத்தையும்) அலட்சியம் செய்கிறானோ, அவனால் மட்டுமே செயல்கள் குறித்த வேத தீர்மானங்களை மீறி, விடுதலை {முக்தி} இருக்கிறதென்று சொல்ல முடியும்[12].(63,64)

எனினும், உறவினர்களுக்கு மத்தியில் வாழும் ஒருவனுக்கு, இவ்வொழுக்க நடைமுறையைப் பின்பற்றுவது மிகக் கடினமாக இருக்கும். கொடை, வேதகல்வி, வேள்விகள், சந்ததியைப் பெறுதல், எதையும் கையாள்வதில் எளிமை,(65) ஆகிய இவற்றைப் பயின்றும் ஒருவனால் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்ல முடியவில்லையெனில், அந்த விடுதலையை அடைய முனைபவனுக்கும், வேண்டப்படும் அந்த விடுதலைக்கும் ஐயோ. அஃதை அடைய கொடுக்கப்படும் உழைப்பனைத்தும் கனியற்றதாகவே தெரிகிறது.(66) வேதங்களை அவமதித்து, அவை சொல்லும் செயல்களைச் செய்யாமல் இருக்கும் ஒருவன் நாத்திகனாகக் குற்றஞ்சாட்டத் தகுந்தவனே. ஓ! சிறப்புமிக்கவரே, செயல்களுக்குச் சாதகமான வேத தீர்மானங்களுக்குப் பிறகு வருவதை (விடுதலையை {முக்தியைக்}) குறித்து நான் தாமதமில்லாமல் கேட்க விரும்புகிறேன்.(67) ஓ! பிராமணரே, எனக்கு உண்மையைச் சொல்வீராக. ஒரு சீடனாக நான் உமது காலடியில் அமர்கிறேன். தயவுடன் எனக்குப் போதிப்பீராக. ஓ! கல்விமானே, விடுதலையை {முக்தியைக்} குறித்து நீர் அறிந்த அளவுக்கு நானும் அறிய விரும்புகிறேன்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(68)

பிரம்மம், முக்தி! – சாந்திபர்வம் பகுதி – 270-வர்ணாசிரமங்களால் அடையத்தக்க முக்தி மற்றும் பிரம்மம் குறித்து ஸ்யூமரஸ்மிக்கும் கபிலருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “வேதங்களே அதிகாரம் பெற்றவையாக அனைவராலும் கருதப்படுகிறது. மக்கள் அவற்றை ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை. ஒலியாலான பிரம்மம் {சப்தப்ரம்மம்}, (உணர்ந்தறிய முடியாத) உயர்ந்த பிரம்மம் {பரப்ரம்மம்} என்ற இருவகைப் பிரம்மங்கள் இருக்கின்றன[1].(1) ஒலியாலான பிரம்மத்தை அறிந்தவன், உயர்ந்த பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். கர்ப்பதானச் சடங்கில் தொடங்கி, வேத மந்திரங்களின் துணையுடன் தந்தை உண்டாக்கிய உடல், (பிறப்புக்குப் பிறகு) வேத மந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது.(2) (வேத மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட்ட) தூய்மைச் சடங்குகளால் உடல் தூய்மை ஆகும்போது, (அந்த உடலின்) உரிமையாளன் அதுமுதல் ஒரு பிராமணன் என்று அழைக்கப்பட்டு, பிரம்ம அறிவைப் பெறத் தகுந்த பாத்திரமாகிறான். செயல்களின் வெகுமதியானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் இதயத் தூய்மை என்பதை அறிவீராக. நான் தற்போது அதுகுறித்து உம்மிடம் பேசப் போகிறேன்.(3) (செயல்களைச் செய்வதால்) இதயத் தூய்மையானது அடையப்பட்டதா, அடையப்படவில்லையா என்பது எந்த மனிதன் அஃதை அடைந்தானோ அவனால் அறியப்படும். வேதங்கள் அல்லது உள்ளுணர்வின் துணையால் அஃதை அறியமுடியாது. எந்த எதிர்பார்ப்புகளையும் வளர்க்காதவர்கள், எதிர்காலப் பயன்பாட்டுக்குச் சேர்க்காமல் எந்த வகைச் செல்வங்களையும் துறப்பவர்கள், ஆசையற்றவர்கள், அனைத்து வகை விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்கள், வேள்விகள் செய்வது கடமை என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக அவற்றைச் செய்கிறார்கள். தகுந்தவர்களுக்குக் கொடையளிப்பதே செல்வங்கள் அனைத்தின் (சரியான பயன்பாட்டுக்குரிய) கதியாகும்.(4,5)எந்தக் காலத்திலும் பாவம் நிறைந்த செயல்களுக்கு அடிமையாகாமல், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அந்தச் சடங்குகளை நோற்று, தங்கள் விருப்பங்கள் அனைத்தின் கனியால் மகுடம் சூட வல்லவர்களாக, தூய அறிவின் மூலம் குறிப்பிட்ட தீர்மானங்களை உடையவர்களாக,(6) ஒருபோதும் கோபத்திற்கு வசப்படாதவர்களாக, பொறாமையில் ஒருபோதும் ஈடுபடாதவர்களாக, செருக்கு மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவர்களாக, யோகத்தில் உறுதியுடன் கூடியவர்களாக, களங்கமில்லா பிறவியுடைவர்களாக, களங்கமில்லா ஒழுக்கம் கொண்டவர்களாக, களங்கமில்லா கல்வியைக் கொண்டவர்களாக, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக,(7) இல்லற வாழ்வு வாழ்பவர்களாக, தங்கள் கடமைகளில் முற்றிலும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகப் பழங்காலத்தில் பல மனிதர்கள் இருந்தனர். அதே தகுதிகளைக் கொண்டவர்களாகவும், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், (ஜனகன் முதலியவர்கள் போன்ற) பல மன்னர்களும் இருந்தனர். அதே பண்புகளைக் கொண்ட (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) பிராமணர்கள் பலரும் இருந்தனர்[2].(8) அவர்கள் அனைத்து உயிரினங்களுடனும் சமமாகப் பழகுபவர்களாகவும், முற்றிலும் நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். மனநிறைவு மற்றும் நிச்சய ஞானம் ஆகியவை அவர்களுடையவையாக இருந்தன. அவர்களுடைய அறத்திற்கான வெகுமதிகள் புலப்படுவனவாக இருந்தன, அவர்களது நடத்தையும், இதயமும் தூய்மையானவையாக இருந்தன. அவர்கள் இரு வடிவிலான பிரம்மத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்[3].(9) முதலில் தங்கள் இதயங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளும் அவர்கள், (சிறந்த) நோன்புகள் அனைத்தையும் முறையாக நோற்கிறார்கள். அவர்கள் எதனில் இருந்தும் வீழ்ந்துவிடமால் துயரம் மற்றும் பெருங்கடினமான சந்தர்ப்பங்களிலும் அறக்கடமைகளை நோற்றனர்.(10)அவர்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து தகுதிமிக்கச் செயல்களைச் செய்தனர். இதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியைக் கண்டனர். அவர்கள் ஒருபோதும் பிறழாதவர்களான இருந்ததால், எந்தப் பாவக்கழிப்புகளையும் ஒருபோதும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.(11) அறத்தின் உண்மை வழியைச் சார்ந்திருந்த அவர்கள், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவர்களாகினர். தகுதி ஈட்டும் காரியத்தில் தன் புத்தியை ஒருபோதும் பின்பற்றாமல், அந்தக் கதியை அடைவதற்குச் சாத்திர விதிகளை மட்டுமே பின்பற்றினர். அதன்படி அவர்கள் அறச் செயல்களைச் செய்யும் காரியத்தில் வஞ்சிக்கும் குற்றமுள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை[4].(12) வேறு எதனிலும் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்யாமல் சாத்திரங்களின் மொத்த விதிகளையும் ஒற்றுமையுடன் நோற்பதன் விளைவால், அவர்களுக்குப் பாவக்கழிப்புச் செய்ய வேண்டிய தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.(13) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை நோற்று வாழும் மனிதர்களுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது. பலவீனர்கள், புனித சட்டத்திலுள்ள முழுமையான, உறுதியான விதிகளைப் பின்பற்ற இயலாத மனிதர்களுக்கு மட்டுமே ஸ்ருதி பாவக்கழிப்பை அறிவித்திருக்கிறது.(14) வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, வேதங்களின் ஆழ்ந்த அறிவுள்ளவர்களாக, தூய்மையும், நன்னடத்தையும் கொண்டவர்களாக, புகழ்மிக்கவர்களாகப் பல பிராமணர்கள் பழங்காலத்தில் இருந்தனர்.(15)அவர்கள் எப்போதும் வேள்விகளில் பிரம்மத்தை வழிபட்டு, ஆசையில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர். கல்விமான்களான அவர்கள், வாழ்வின் கட்டுகள் {பற்றுகள்} அனைத்தையும் கடந்தவர்களாக இருந்தனர். இம்மனிதர்களின் வேள்விகள், அவர்களது (அறிவு), விதிகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்களால் செய்யப்பட்ட செயல்கள்,(16) குறிப்பிட்ட நேரங்களில் அவர்களது சாத்திரக் கல்வி, அவர்களுடைய விருப்பங்கள், காமம் கோபத்தில் இருந்து அவர்கள் பெற்றிருந்த விடுதலை, அவர்களது பக்தி நடத்தை, அனைத்துச் சிரமங்களையும் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட அவர்களது செயல்கள்,(17) தங்கள் வகை {வர்ணம்} மற்றும் தங்கள் வாழ்வுமுறை {ஆசிரமங்களின்} கடமைகளைச் செய்வதால் பெறும் புகழ், அவர்களது சொந்த இயல்பின் விளைவால் கிட்டும் ஆன்மத் தூய்மை, மிக நேர்மையான அவர்களது பண்பு, அமைதியில் அவர்கள் கொண்ட அர்ப்பணிப்பு, தங்கள் நடைமுறைகளில் அவர்கள் கொண்ட கவனம்(18) ஆகியவை முடிவிலா பிரம்மத்தைப் போன்றே இருந்தன. இதுவே நித்தியமான ஸ்ருதி என்று நாம் கேள்விப்படுகிறோம்[5]. உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள், செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் கடினமான நடத்தை மற்றும் செயல்களைக் கொண்ட மனிதர்கள்,(19) தங்கள் கடமைகளைக் கறாராக வெளிப்படுத்துவதன் விளைவால் கனிகளால் மகுடம் சூட்டப்பட்ட விருப்பங்களைக் கொண்ட மனிதர்கள் ஆகியோரின் தவங்களே, உலக ஆசைகள் அனைத்தையும் அழிப்பதற்கான விளைவைத் தரவல்ல ஆயுதங்களாகின. அற்புதமானதும், பழங்காலத்திலேயே தோற்றம் காணப்பட்டும், நித்தியமானதும், மாற்றமில்லா பண்புகளைக் கொண்டதும், துன்பகாலங்களில் நல்லோரும் ஈடுபடும் நடைமுறையில் இருந்து வேறுபட்டு, பிற சூழ்நிலைகளில் அவர்கள் {அந்த நல்லோர்கள்} செய்யும் செயல்களைப் பிரதிபலிப்பதும், காமம், கோபம் மற்றும் பிற தீய ஆசைகள் மேம்பட முடியாத நிலையைத் தரும் கவனம் நிறைந்த தன்மையைப் போன்றதும், (ஒருகாலத்தில்) மனிதகுலம் அனைத்திலும் எந்த வரம்புமீறலையும் இல்லாமல் செய்த விளைவுமான அந்த நல்லொழுக்கமே, அதன் கடமைகளின் நுண்விபரங்களையும், அதன் தொகையையும் செயல்படுத்த இயலாத மனிதர்களால், நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} தொடர்பான நான்கு உபபிரிவுகளாகப் பின்னர்ப் பிரிக்கப்பட்டது என்று பிராமணர்கள் சொல்கிறார்கள்[6].(20-22)

நல்லோர், சந்நியாச வாழ்வுமுறையைப் பின்பற்றிய பிறகு, நன்னடத்தையின் அந்தப் போக்கை முறையாக நோற்பதன் மூலம் உயர்ந்த கதியை அடைகிறார்கள். காட்டு வாழ்வு முறையை {வானப்ரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுவோரும் கூட (அவ்வொழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம்.(23) இல்லற வாழ்வு முறையை {கிருஹஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுவோரும் கூட (அதே ஒழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம்; இறுதியாக, பிரம்மச்சரிய வாழ்வு முறையைப் பின்பற்றுவோரும் கூட (அதே ஒழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம். அந்தப் பிராமணர்களே ஆகாயத்தில் சுற்றிலும் நன்மையான ஒளிக்கதிர்களைப் பொழிந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளிக் கோள்களாகக் காணப்படுகிறார்கள்.(24) அந்த எண்ணற்ற பிராமணர்கள், நிலைத்த பாதையில் நிறுவப்பட்ட விண்மீன்களாகவும், நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆனார்கள். மனநிறைவின் (அல்லது துறவின்) விளைவால் அவர்கள் அனைவரும் வேதங்கள் அறிவித்த படியே முடிவிலாத் தன்மையை அடைந்தனர்.(25) அத்தகைய மனிதர்கள் உயிரினங்களின் கருவறைகள் மூலம் உலகிற்குத் திரும்பினால், முந்தைய செயல்களை மூலக்காரணமாகக் கொண்ட வற்றாத எச்சங்களான பாவங்களால் அவர்கள் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(26) பிரம்மச்சரிய வாழ்வை வாழ்ந்து, கடமையுணர்வுடன் தன் ஆசானிடம் காத்திருந்து {பணிவிடை செய்து கொண்டிருந்து}, (ஆன்மா குறித்த) தீர்மானமான முடிவுகளை அடைந்து, அவ்வாறே யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ஒருவனே உண்மையில் பிராமணனாவான். பிராமணன் என்றழைக்கப்பட வேறு எவன் தகுந்தவன்?(27)

எவன் பிராமணன், எவன் அல்ல என்பதைச் செயல்கள் மட்டுமே தீர்மானிக்கும் எனும்போது, (நல்ல அல்லது தீய) செயல்கள் ஒரு மனிதனின் இன்பம் அல்லது துன்பத்தைச் சுட்டிக்காட்டுவனவாக இருக்க வேண்டும். தீய ஆசைகள் அனைத்தையும் வெல்வதன் மூலம் தூய இதயத்தை அடைந்தவர்களைப் பொறுத்தவரையில், (அண்ட ஆன்மாவைக் காண்பதன் மூலம் அவர்கள் அடையும் முடிவிலாத் தன்மை மற்றும் (ஸ்ருதிகளுடைய தீர்மானங்களின் மூலம் அவர்கள் அடைந்த) பிரம்ம அறிவின் விளைவால், அவர்கள் அனைத்தையும் பிரம்மமாகவே காண்கிறார்கள் என்று சொல்லும் நித்தியமான {அழிவற்ற} ஸ்ருதியை நாம் கேள்விப்படுகிறோம்.(28) தூய இதயம் கொண்டவர்களும், ஆசையில் இருந்து விடுபட்டவர்களும், பிரம்ம அறிவை அடைவதற்காக விடுதலை {முக்தி} ஒன்றையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்களுமான மனிதர்களால் பின்பற்றப்படும் (அமைதி, தற்கட்டுப்பாடு, செயல்விலக்கம், துறவு, அர்ப்பணிப்பு {பக்தி}, சமாதியின் முழுமை ஆகியவற்றின்) கடமைகள், நால்வகை மனிதர்களுக்கும், நான்கு வாழ்வுமுறைகளுக்கும் சமமாகவே விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவானது, உண்மையில் தூய இதயங்களையும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களையும் பிராமணர்களால் எப்போதும் அடையப்படுகிறது[7].(29,30) மனநிறைவின் அடிப்படையிலான துறவிற்கான ஆன்மாவைக் கொண்ட ஒருவன், உண்மை ஞானத்தின் புகலிடமாகக் கருதப்படுகிறான். விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் அறிவைக் கொண்டதும், பிராமணர்களுக்கு மிகத் தேவையானதுமான துறவு, (எப்போதும் வழிவழியாக ஆசானிடம் இருந்து சீடனிடம் வந்து சேரும்) நித்தியமான {அழிவற்ற} ஒன்றாகும்.(31) துறவானது, சில வேளைகளில், பிற வாழ்வுமுறையின் கடமைகளுடன் கலந்திருக்கிறது. அந்நிலையில் இருந்தாலும், தனியாகவே இருந்தாலும், ஒருவன் (உலகம் சார்ந்த ஆசையின்மை அளவைச் சார்ந்த) தன் பலத்தின் அளவுக்குத் தக்கவே அதை {துறவை} நடைமுறைப்படுத்துகிறான். அனைத்து வகை மனிதர்களுக்கும் உயர்ந்த நன்மையைச் செய்வதற்கான விளைவே துறவாகும். பலவீனன் மட்டுமே அதைப் பயில்வதில் தவறுகிறான். பிரம்மத்தை அடைய முனையும் தூய இதயமுள்ள மனிதன் (துன்பங்களுடன் கூடிய) உலகில் இருந்து மீட்கப்படுகிறான்” என்றார் {கபிலர்}.(32)ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “(உடைமையை) அனுபவிப்பதைக் கைவிட்டவர்குக்கு மத்தியில், கொடையளிப்பவர்கள், வேள்வி செய்பவர்கள், வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள், செல்வத்தை அடைந்து, அதன் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்த பிறகு துறவு வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஆகியோரில்,(33) {மரணமடைந்து} இவ்வுலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்தில் முதன்மையான இடத்தை யார் அடைவார்? ஓ! பிராமணரே, இதை நான் உம்மிடம் கேட்கிறேன். எனக்கு உண்மையைச் சொல்வீராக” என்று கேட்டார்.(34)

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “இல்லற வாழ்வை வாழ்பவர்களே நிச்சயம் மங்கலமானவர்களாக, அனைத்துவகைச் சிறப்புகளையும் அடைகிறார்கள். எனினும், துறவு தொடர்புடைய பேரின்பத்தை அனுபவிக்க இயலாமல் போகிறார்கள். நீரும் இதைக் காணலாம்” என்றார்.(35)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “நீங்கள் (விடுதலையை {முக்தியை}) அடைவதற்கு வழிமுறையாக ஞானத்தையே சார்ந்திருக்கிறீர்கள். இல்லற வாழ்வை வாழ்பவர்களோ செயல்களில் தங்கள் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். எனினும், விடுதலையே {முக்தியே} அனைத்து வாழ்வுமுறைகளின் கதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.(36) எனவே, பலத்தின் மேன்மை அல்லது குறைவில் அவற்றுக்கிடையில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அவ்வாறெனில் உண்மைக் காரியம் எவ்வாறு நிலைபெறும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(37)

கபிலர் {ஸ்யூரஸ்மியிடம்}, “செயல்கள் உடலை மட்டுமே தூய்மைப்படுத்துகின்றன. எனினும், ஞானமோ (எவரும் அடைய முனையும் ஓர்) உயர்ந்த கதியாக இருக்கிறது. இதயத்தின் களங்கங்கள் அனைத்தும் (செயல்களால்) குணமாகும்போதும், பிரம்மத்தின் இன்பநிலை ஞானத்தில் நிறுவப்படும்போதும்,(38) நல்லுணர்வு, மன்னிக்கும் தன்மை, அமைதி, கருணை, வாய்மை, வெளிப்படைத்தன்மை, தீங்கிழையாமை, செருக்கின்மை, பணிவு, துறவு, செயல்விலக்கம் ஆகியவை அடையப்படுகின்றன.(39) இவையே பிரம்மத்திற்கு வழிவகுக்கும் பாதையாக அமைகின்றன. ஒருவன் அவற்றைக் கொண்டு உயர்ந்த நிலையை அடைகிறான். இதயக்களங்கங்கள் அனைத்தும் செயல்களின் விளைவால் குணமாவது இவற்றை {நல்லுணர்வு முதலியவற்றை} அடையும்போதே ஞானிகளுக்கும் புரிகிறது.(40) ஞானத்துடன் கூடியவர்களும், செயல்கள் அனைத்தில் இருந்தும் விலகியவர்களும், தூய்மை மற்றும் ஞானத்தின் நிச்சயத்தன்மை {உறுதியுணர்வு} ஆகியவற்றைக் கொண்ட பிராமணர்களால் அடையப்படுவதே உண்மையில் உயர்ந்த கதியாகக் கருதப்படுகிறது.(41) வேதங்கள், வேதங்களில் சொல்லப்படுபவை (செயல்களில் உள்ள பிரம்மம்) {கர்மப்ரம்மஸ்வரூபம்}, செயல்களின் நுண்விவரங்கள் ஆகியவற்றின் அறிவை அடைவதில் வெல்லும் ஒருவனே வேதங்களை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். வேறு எவனும் கற்றாலான தோல்துருத்தி மட்டுமே ஆவான்[8].(42)வேதங்களில் அனைத்தும் நிறுவப்பட்டிருப்பதால், வேதங்களை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாவான். தற்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன.(43) இவ்வண்டம் இருக்கிறது, இல்லை என்ற ஒரு தீர்மானத்தையே சாத்திரங்கள் அனைத்தில் இருந்தும் உய்த்தறிய முடிகிறது. ஒரு ஞானிக்கு இது (உணரப்படும் அனைத்தும்) சத் மற்றும் அசத் ஆகிய இரண்டாகும். அவனுக்கு இவை அனைத்தும் முடிவும் நடுவுமாக இருக்கிறது.(44) முற்றான துறவு நேர்கையில் ஒருவன் போதுமானதை அடைகிறான் என்ற இந்த உண்மை வேதங்கள் அனைத்தையும் சார்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு பின்தொடரும் மனநிறைவானது, முழுமையானதும், அழிவடையும் மற்றும் அழிவடையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மாவாக இருப்பதும் அண்ட ஆன்மாவாக நன்கறியப்பட்டதும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் உயர்ந்த ஞானப்பொருளும், நிறைவானதும், பேரின்பநிலையும், இரண்டற்றதும், அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானதும், பிரம்மமேயானதும், புலப்படாததும், புலப்படாதது பிறக்கும் இடத்தின் காரணமாக இருப்பதும், எவ்வகைச் சிதைவுமற்றதுமான விடுதலையை {முக்தியைச்} சார்ந்திருக்கிறது[9].(45,46) புலன்களை அடக்கும் திறன், மன்னிக்கும் தன்மை, ஆசையின்மையின் விளைவால் செயல்பாடு தவிர்த்தல் ஆகிய இம்மூன்றும் முற்றான பேரின்ப நிலையின் காரணிகளாகும். அறிவையே தங்கள் கண்களாகக் கொண்ட மனிதர்கள், இந்த மூன்று குணங்களின் துணையுன், படைக்கப்படாததும், அண்டத்தின் முதன்மை காரணமாக இருப்பதும், மாற்றமில்லாததும், அழிவைக் கடந்ததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள். அஃதை அறிந்தவனைப் போன்றதேயான பிரம்மத்தை நான் வணங்குகிறேன்” என்றார் {கபிலர்}[10].(47)

குண்டதாரன்! – சாந்திபர்வம் பகுதி – 271-அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் அறமே உயர்ந்தது என்பதை எடுத்துக் காட்ட குண்டதாரனிடம் பக்தி கொண்ட ஒரு பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்து வேதங்கள் பேசுகின்றன. எனினும், ஓ! பாட்டா, (இவை மூன்றில்) எதை அடைவது மேன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் தன்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்த ஒருவனுக்குக் குண்டதாரன் செய்த நன்மை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2)

ஒரு காலத்தில், செல்வமற்ற ஒரு பிராமணர், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு அறமீட்ட முற்பட்டார்[1]வேள்விகளைக் கொண்டாடுவதற்குத் தேவைப்படும் செல்வத்தில் அவர் தொடர்ந்து தம் இதயத்தை நிலைநிறுத்தினார். அவர், தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கடுந்தவப்பயிற்சியில் தம்மை நிறுவிக்கொண்டார்.(3) நன் நோக்கத்தைச் சாதிக்கத் தீர்மானித்த அவர் தேவர்களைப் பெரும் அர்ப்பணிப்புடன் வழிபடத் தொடங்கினார். ஆனால் அத்தகைய தேவ வழிபாட்டின் மூலம் அவர் செல்வத்தை அடையத் தவறினார்.(4) அப்போது அவர், “இதுவரை மனிதர்களால் துதிக்கப்படாத எந்தத் தேவன் இருக்கிறான்? தாமதமில்லாமல் எனக்கு உதவக்கூடிய எந்தத் தேவன் இருக்கிறான்?” என்று தமக்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கினார்.(5)பொறுமையான மனத்துடன் இவ்வகையில் சிந்தித்துக் கொண்டிருந்த அவர், தம் முன்பு இருப்பவனும், தேவர்களைத் தக்க வைத்துக் கொள்பவனுமான குண்டதாரன் என்று அழைக்கப்படுபவனைக் கண்டார்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அவனைக் கண்டதும் அந்தப் பிராமணரின் பற்றுணர்வுகள் {பக்தி} தூண்டப்பட்டு, அவர் தமக்குள்ளேயே, “இவன் நிச்சயம் எனக்குச் செல்வத்தை அளிப்பான். உண்மையில் இவனது வடிவமே அதைக் குறிப்பிடுகிறது.(7) இவன் தேவர்களுடன் மிக நெருக்கமாக வாழ்கிறான். மேலும் இவன் இன்னும் பிற மனிதர்களால் துதிக்கப்படவில்லை. இவன் தாமதமில்லாமல் நிச்சயம் அபரிமிதமான செல்வங்களை எனக்கு அளிப்பான்” என்று நினைத்தார்.(8) இவ்வாறு தீர்மானித்துக் கொண்ட அந்தப் பிராமணர், தூபங்கள், நறுமணப்பொருட்கள், மேன்மையான வகையைச் சார்ந்த மலர் மாலைகள் மற்றும் பல்வேறு வகைக் காணிக்கைகளுடன் {குண்டதாரன் என்ற} அந்த மேகத்தை வழிபட்டார்.(9) இவ்வாறு வழிபடப்பட்ட அம்மேகமானவன் {குண்டதாரன்}, தன்னை வழிபட்டவனிடம் மிகவிரைவில் நிறைவடைந்து, அந்தப் பிராமணனுக்கு நன்மை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)

{குண்டதாரன்}, “பிராமணக் கொலை {பிரம்மஹத்தி செய்தவன்}, மதுபானம் பருகல் {ஸுராபானம் செய்தவன்}, களவு செய்தல், தகுதிவாய்ந்த நோன்புகள் அனைத்தையும் புறக்கணித்தல் ஆகிய குற்றங்களுக்கு ஞானிகள் பாவக்கழிப்புகளை விதித்திருக்கின்றனர். எனினும் நன்றிமறந்தவர்களுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(11) எதிர்பார்ப்புக்கு, அநீதி என்ற பெயரைக் கொண்ட ஒரு பிள்ளை உண்டு. மேலும் கோபமானது, பொறாமையின் பிள்ளை என்று கருதப்படுகிறது. பேராசையானது வஞ்சனையின் பிள்ளையாகும். எனினும், நன்றி மறத்தலானது (சந்ததி இல்லாத) தரிசு நிலையாகும்” என்றான்.(12)

இதன்பிறகு, அந்தப் பிராமணர் குசப் புல்லாலான படுக்கையை விரித்து, குண்டதாரனின் சக்தியால் ஊடுருவப்பட்டு, ஒரு கனவில் உயிரினங்கள் அனைத்தையும் கண்டார்.(13) உண்மையில், தூய்மையான ஆன்மாவைக் கொண்டவரும், (உடல்சார்ந்த) இன்பங்கள் அனைத்திலிருந்தும் தனித்திருந்தவருமான அந்தப் பிராமணரிடம், ஆசை, தவங்கள், அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாததன் விளைவால், அவ்விரவில் குண்டதாரனிடம் தாம் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவைக் கண்டார்.(14) உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, அவர் பெரும் ஒளியைக் கொண்ட உயர் ஆன்ம மாணிபத்ரன், தேவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, தன் ஆணைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.(15) அங்கே மனிதர்கள் செய்த நற்செயல்களால் தூண்டப்பட்டு அவர்களுக்கு நாடுகளையும், செல்வங்களையும் அளிக்கவும், நல்லியல்பில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களிடம் இருந்து அவற்றை எடுப்பதிலும் அவர்கள் ஈடுபடுவதாகத் தெரிந்தது.(16) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, பேரொளி கொண்ட குண்டதாரன், யக்ஷர்கள் அனைவரின் முன்னிலையில் தேவர்களுக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.(17)

தேவர்களுடைய ஆணையின் பேரில் அந்த உயர் ஆன்மா மாணிபத்ரன், நெடுஞ்சான் கிடையாகக் கிடந்த குண்டதாரனிடம், “குண்டதாரனுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.(18) அதன் பேரில் குண்டதாரன், “உண்மையில், தேவர்கள் என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால்தான், அங்கே அந்தப் பிராமணர் என்னைப் பெரிதும் மதிக்கிறார். அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஏதாவதொன்றைக் கொடுத்து உதவ வேண்டும் என நான் வேண்டுகிறேன்” என்றான்.(19)

இதைக் கேட்ட மாணிபத்ரன், தேவர்களின் உத்தரவின் பேரில் மீண்டும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட குண்டதாரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(20) “ஓ! குண்டதாரா, எழு, எழுவாயாக. உன் காரியம் வெற்றியடைந்தது. மகிழ்ச்சியடைவாயாக. செல்வத்தில் விருப்பமுள்ள இந்தப் பிராமணன் எவ்வளவு செல்வத்தை விரும்புவானோ, அவ்வளவு அவனுக்குக் கொடுக்கப்படும். தேவர்களின் ஆணையின் பேரில் நான் அவனுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்” என்றான் {மாணிபத்ரன்}.(21,22)

அப்போது குண்டதாரன், மனிதத்தன்மையின் உண்மையற்ற நிலையையும், நிலையில்லாமையையும் சிந்தித்து, அந்தப் பிராமணரை தவங்களை நோக்கிச் செலுத்த தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(23) உண்மையில் குண்டதாரன், “ஓ! செல்வங்களை அளிப்பவரே, நான் இந்தப் பிராமணரின் சார்பாகச் செல்வத்தை வேண்டவில்லை. அவருக்கு மற்றொரு உதவியை அளிக்க விரும்புகிறேன்.(24) என் பக்தருக்காக நான் முத்துக்கள் மற்றும் ரத்தினங்கள் நிறைந்த மலைகளையோ, செல்வங்கள் அனைத்துடன் கூடிய மொத்த பூமியையோ வேண்டவில்லை. எனினும், அவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது இதயம் அறத்தில் இன்பத்தைக் காணட்டும்.(25) அவர் அறத்தைத் தம்முள் கொண்டிருக்கட்டும். அவரிடம் உள்ள பொருட்கள் அனைத்திலும் அறமே முதன்மையானதாக இருக்கட்டும். இந்த உதவியே எனக்கு ஏற்புடையதாகும்” என்றான்.(26)

மாணிபத்ரன் {குண்டதாரனிடம்}, “அரசுரிமையும், பல்வேறு வகை இன்பமும் எப்போதும் அறத்தின் கனிகளாக இருக்கின்றன. இவன் எப்போதும் அனைத்து வகை உடல் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு அக்கனிகளை அனுபவிக்கட்டும்” என்றான் {மாணிபத்ரன்}”.(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டும், பெரும்புகழைக் கொண்டவனான குண்டதாரன் மீண்டும் மீண்டும் அந்தப் பிராமணருக்கு அறத்தை மட்டுமே வேண்டினான். இதனால் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்தனர்.(28)

மாணிபத்ரன் {குண்டதாரனிடம்}, “உன்னிடமும், அந்தப் பிராமணனிடமும் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்திருக்கின்றனர். அவன் அறவோனாவான். அவன் தன் மனத்தை அறத்திற்கே அர்ப்பணிப்பான்” என்றான்.(29)

ஓ! யுதிஷ்டிரா, மேகமான அந்தக் குண்டதாரன், தன் விருப்பம் வெற்றியடைந்ததால் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். அவன் பெற்ற அந்த வரம், வேறு எவராலும் அடையப்பட முடியாததாகும்.(30) அப்போது அந்தப் பிராமணர் தம்மைச் சுற்றிலும் நுட்பமான ஆடைகள் {ஸூக்ஷ்மமான மரவுரிகள்} சிதறிக் கிடப்பதைக் கண்டார். (அவை விலைமதிப்புமிக்கவையாக இருந்தாலும்) அவற்றில் மனத்தைச் செலுத்தாத அந்தப் பிராமணர் உலகச் சுவையை இழந்தார்.

அந்தப் பிராமணர், “இவன் {குண்டதாரன்} என் நற்செயல்களில் எந்த மதிப்பையும் கொள்ளவில்லையெனில், வேறு எவன் கொள்வான்? அறவாழ்வை நோற்க நான் கானகம் செல்வதே சிறந்தது” என்றார்”[2].(32)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உலகம் சார்ந்த சுவையின்மை வளர்ந்ததாலும், தேவர்களுடைய அருளின் மூலமும் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் காட்டுக்குள் நுழைந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினார்.(33) ஓ! ஏகாதிபதி, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் கொடுத்த பிறகு எஞ்சிய கனிகள் மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து வந்த அந்த மறுபிறப்பாளரின் மனம் அறத்தில் உறுதியாக நிலைத்தது.(34) அந்தப் பிராமணர் படிப்படியாகக் கனிகளையும், கிழங்குகளையும் கூடத் துறந்து, மரங்களின் இலைகளை மட்டுமே தமது உணவாகக் கொண்டார். பிறகு இலைகளையும் துறந்து, நீரை மட்டுமே தம் உணவாகக் கொண்டார்.(35) அதன் பிறகு அவர் காற்றை மட்டுமே உண்டு பல வருடங்களைக் கழித்தார். எனினும் இக்காலம் முழுவதிலும் அவரது பலம் குன்றவில்லை. இது மிக அற்புதமான ஒன்றாகத் தெரிந்தது.(36) அறத்தில் அர்ப்பணிப்புடன், கடுந்தவங்களைச் செய்வதில் ஈடுபட்ட அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மப் பார்வையைப் பெற்றார்.(37)

பிறகு அவர் {அந்தப் பிராமணர்}, “நான் எவரிடமாவது நிறைவடைந்து செல்வத்தைக் கொடுத்தால், என் பேச்சு ஒருபோதும் பொய்யாகாது” என்று சொல்லித் தமக்குள்ளேயே சிந்தித்தார்[3].(38) புன்னகையால் ஒளிர்ந்த முகத்துடன் அவர் மீண்டும் கடுந்தவங்களில் ஈடுபட்டார்.(39) மீண்டும் (உயர்ந்த) வெற்றியை அடைந்த அவர், தாம் விரும்புவதன் மூலமே மிக உயர்ந்த பொருட்களைத் தம்மால் உண்டாக்க முடியும் என்று நினைத்தார். “நான் எவரிடமாவது நிறைவடைந்து அரசுரிமையைக் கொடுத்தாலும் கூட, என் வார்த்தைகள் பொய்க்காது என்பதால் அவன் உடனே மன்னனாவான்” {என்று நினைத்தார்}.(40)அந்தப் பிராமணர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த போதே, குண்டதாரன், அவரிடம் கொண்ட நட்பாலும், அந்தப் பிராமணர் அடைந்த தவ வெற்றியாலும் தூண்டப்பட்டு, (தன் நண்பரும், பக்தருமான அவரிடம்) தன்னைக் காட்டிக் கொண்டான்.(41) அவனைச் சந்தித்த அந்தப் பிராமணர், நடைமுறை விதிகளின் படி அவனுக்குண்டான வழிபாடுகளைச் செய்தார். எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பிராமணர் சற்றே ஆச்சரியமடையவும் செய்தார்.(42)

அப்போது, குண்டதாரன் அந்தப் பிராமணரிடம், “நீர் இப்போது சிறந்த ஆன்மக் கண்ணை அடைந்திருக்கிறீர். உமக்குக் கிட்டிய இந்தப் பார்வையைக் கொண்டு மன்னர்களால் அடையப்படும் கதியைக் காண்பீராக. அதையும் தவிர்த்து உலகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வீராக” என்றான்.(43) அப்போது அந்தப் பிராமணர், நரகத்தில் மூழ்கிய ஆயிரக்கணக்கான மன்னர்களைத் தமது ஆன்மப் பார்வையால் தொலைவில் இருந்தே கண்டார்.(44)

குண்டதாரன் {பிராமணரிடம்}, “பக்தியுடன் என்னை வழிபட்ட பிறகு, உமது பங்காக நீர் கவலையையே அடைந்தீரென்றால், நான் உமக்குச் செய்த நன்மை என்ன? நான் செய்த உதவியின் மதிப்பென்ன?(45) பாரும், என்ன கதியை அடைவதற்காக மனிதர்கள் உடல்சார்ந்த இன்பங்களில் நிறைவை விரும்புகிறார்கள் என்பதைப் பாரும். சொர்க்கத்தின் கதவு மனிதர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது” என்றான்”.(46)

பீஷ்மர் தொடர்ந்தார், “பிறகு அந்தப் பிராமணர், இவ்வுலகில் காமம், கோபம், பேராசை, அச்சம், செருக்கு, உறக்கம், எதிலும் தாமதம் {மயக்கம்}, செயலின்மை {சோம்பல்} ஆகியவற்றைத் தழுவி வாழும் மனிதர்கள் பலரைக் கண்டார்.(47)

குண்டதாரன், “மனிதர்கள் அனைவரும் இவற்றால் ({காமம் முதலிய} தீய ஒழுக்கங்களால்) கட்டப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களைக் கண்டு தேவர்கள் அஞ்சுகின்றனர். தேவர்களின் ஆணையின் பேரில் இந்தத் தீயொழுக்கங்கள் அனைத்துப் புறங்களிலும் அழித்துக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன[4].(48) தேவர்களின் அனுமதி இல்லாமல் எந்த மனிதனும் அறவோனாவதில்லை. (அவர்களுடைய அனுமதியின் விளைவால்) உமது தவங்களின் மூலம் நீர் நாடுகளையும், செல்வங்களையும் கொடுக்கும் தகுதியை அடைந்திருக்கிறீர்” என்றான்”.(49)பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், அற ஆன்மா கொண்டவருமான அந்தப் பிராமணர், அம்மேகத்திடம் {குண்டதாரனிடம்} தலைவணங்கி, நெடுஞ்சாண்கிடையாகத் தம்மைத் தரையில் கிடத்திக் கொண்டு, “உண்மையில், நீ எனக்குப் பேருதவியைச் செய்திருக்கிறாய்.(50) நீ என்னிடம் கொண்ட பெரும் பற்றை உணராமல், ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தால் நான் உனக்கு நன்மதிப்பைக் காட்டத் தவறிவிட்டேன் {நன்றி மறந்துவிட்டேன்}” என்றார்.(51)

அப்போது குண்டதாரன் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம், “நான் உம்மை மன்னித்தேன்” என்று சொல்லி அவரைத் தன் கரங்களால் ஆரத்தழுவிக் கொண்டு அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(52) பிறகு, குண்டதாரனுடைய அருளின் மூலம் தவ வெற்றியை அடைந்த அந்தப் பிராமணர், உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தார்.(53) அறம் மற்றும் தவங்களின் மூலம் பலத்தை ஈட்டிய ஒருவன், வானத்தில் மிதந்து பயணிக்கும் {கமனம் செய்யும்} தகுதியையும், தன் விருப்பங்கள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தகுதியையும் அடைந்து, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறான்.(54) தேவர்கள், பிராமணர்கள், யக்ஷர்கள், நல்லோர், சாரணர்கள் ஆகியோர் எப்போதும் அறவோரைத் துதிப்பாரேயன்றி, ஒருபோதும் வளமானவரையோ, ஆசைகளில் ஈடுபாடு கொள்பவர்களையோ துதிப்பதில்லை.(55) உன் மனம் அறத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பதால் தேவர்கள் உண்மையில் உனக்குச் சாதகமானவர்களாக இருக்கிறார்கள். செல்வத்தால் சிறு மகிழ்ச்சி ஏற்படலாம், ஆனால் அறத்தால் கிட்டும் இன்பத்தின் அளவு மிகப் பெரியதாகும்” என்றார் {பீஷ்மர்}.(56)

வேள்வியும் பிரம்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 272-வேள்வியில் உயிர்க்கொலை நேர்வதால் அஃது இழிந்ததென்பற்காக நாரதர் சொன்ன உஞ்சவிருத்தி பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(இதயத் தூய்மை, அல்லது தேவ மகிமை என்ற) ஒரே நோக்கத்திற்காக உள்ளவை எனக் கருதப்படும் பல்வேறு வகை வேள்விகளில், ஓ! பாட்டா, எந்த வேள்வியானது, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ அடைவதற்காக அல்லாமல் அறத்திற்காக (அல்லது அறமீட்டுவதற்காக) மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, வேள்விகளைச் செய்வதற்காக உஞ்ச முறையின்படி வாழ்ந்து வந்த ஒரு பிராமணரைக் குறித்து முன்பு நாரதரால் சொல்லப்பட்ட வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)

நாரதர் {பீஷ்மரிடம்}, “அறத்திற்காகத் தனித்தறியப்பட்ட ஒரு முதன்மையான நாட்டில் {விதர்ப்ப நாட்டில்} ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்[1]. தவங்களில் அர்ப்பணிப்புடன், உஞ்ச முறையின் படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர், வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதில் மெய்யுறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்தார்[2].(3) அவர், சியாமாகம் {சாமைத்தானியம்}, ஸூர்யபர்ணி {மாஷபருணி [ஒரு பயறு வகை]}, ஸுவர்ச்சலை {பிராமிசகம் / ஆளிவிதைகள்} மற்றும் கசப்பானவையும், சுவையில் இனிமையற்றவையுமான வேறுவகைக் கீரைகளை {சாகங்களையும்} தம் உணவாகக் கொண்டார். எனினும், அவரது தவத்தின் விளைவாக இவை அனைத்தும் இனிமையாகச் சுவைத்தன.(4) எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், வானப்பிரஸ்த வாழ்வை வாழ்ந்த அவர் தவ வெற்றியை அடைந்தார். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, கிழங்குகளையும், கனிகளையும் கொண்டு அவர், தமக்குச் சொர்க்கத்தை அளிக்கவல்ல வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3].(5)சத்தியர் என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிராமணருக்கு, பஷ்கரதாரிணி {புஷ்கரமாலினி / புஷ்கரசாரினி} என்ற பெயரில் ஒரு மனைவி இருந்தாள். அவள் தூய மனதைக் கொண்டவளாக இருந்தாள், மேலும் அவள் கடும் நோன்புகள் பலவற்றால் தன்னை மெலியச் செய்திருந்தாள். (அவள் நன்மையைத் தரும் மனநிலையில் இருந்தாலும், அவளது கணவர், இவ்வாறு கொடூரமான வேள்விகளுக்கு அடிமையாக இருந்தார்). அவள் தன் தலைவரின் ஒழுக்கத்தை அங்கீகரிக்கவில்லை. எனினும், (வேள்வி செய்வதற்காக) அவரது மனைவியாக அவரருகில் அமர அழைக்கும்போது, அவரது சாபத்திற்கு அஞ்சிய அவள், அவரது நடத்தைக்குத் தக்கவே தன்னைத் தகவமைத்துக் கொண்டாள். அவளது உடலை மறைத்திருந்த ஆடைகள் மயில்களின் (உதிர்ந்த) தோகைகளாலானதாக இருந்தது.(6,7) இதில் அவள் விருப்பமில்லாதவளாக இருந்தாலும், ஹோத்ரியாக {தீக்ஷிதராக} இருந்த தன் தலைவரின் ஆணையின் பேரில் அந்த வேள்வியைச் செய்தாள். அந்தக் காட்டில், அந்தப் பிராமணரின் ஆசிரமத்திற்கருகில், மானின் வடிவத்தை ஏற்றவரும் சுக்ர குலத்தைச் சேர்ந்தவரும், அறம்சார்ந்தவருமான பர்னாதர் என்பவர் வாழ்ந்து வந்தார்[4]. அவர் {பர்னாதர்}, சத்தியர் என்ற பெயர் கொண்ட அந்தப் பிராமணரிடம் வெளிப்படையாகப் பேசும் வகையில், “மந்திரங்கள் மற்றும் சடங்குகளுக்குரிய பிற பொருட்களில் குறைபாடுள்ள இதுபோன்ற வகையில் உமது வேள்வி நிறைவடைந்தால், நீர் மிகவும் முறையற்ற வகையில் செயல்பட்டவராவீர். எனவே, உமது வேள்வி நெருப்புக்கான ஆகுதிகளைச் செய்வதற்காக என்னைக் கொன்று துண்டுகளாக வெட்டுவீராக. இதைச் செய்து, பழியற்றவராகி, சொர்க்கத்திற்கு உயர்வீராக” என்றார்.(8-10)அப்போது சூரிய வட்டிலின் தலைமைத் தேவியான சாவித்திரி உடல் கொண்ட வடிவத்துடன் அந்த வேள்விக்கு வந்து, அந்த மான் செய்யச் சொன்னதை அந்தப் பிராமணர் {சத்தியர்} செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினாள். இவ்வாறு வற்புறுத்திய அந்தத் தேவியிடம் அந்தப் பிராமணர், “நான் வசிக்குமிடத்திற்கு அருகிலேயே வாழும் இந்த மானை நான் கொல்ல மாட்டேன்” என்று மறுமொழி கூறினார்.(11)

இவ்வாறு அந்தப் பிராமணரால் சொல்லப்பட்ட தேவி சாவித்திரி, விலகியவளாக அந்த வேள்வியின் (பிற) குறைகளைக் காண்பதைத் தவிர்க்கவும், பாதாள உலகை ஆய்வு செய்யவும் விரும்பி அந்த வேள்வி நெருப்புக்குள் நுழைந்தாள்.(12) பிறகு அந்த மானானது {கலைமானானது}, (தன்னைத் துண்டுகளாக வெட்டி வேள்வி நெருப்பில் ஊற்றுமாறு) சத்தியரிடம் மன்றாடிக் கேட்டது. எனினும், நட்புடன் அவரை {மானின் வடிவத்தில் இருந்த பர்னாதரை} ஆரத்தழுவி, “செல்வீராக” என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார்.(13) இதனால் அந்த மான் அந்த இடத்தை விட்டுச் செல்வதாகத் தெரிந்தது. ஆனால் எட்டு அடி எடுத்து வைத்ததும் மீண்டும் திரும்பி, “உண்மையில் என்னை நீர் கொல்வீராக. உம்மால் கொல்லப்படும் நான் நியாயமான கதியை நிச்சயம் அடைவேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். நான் உமக்கு (தெய்வீகப்) பார்வைக் கொடுக்கிறேன். தெய்வீக அப்சரஸ்களையும், உயர் ஆன்ம கந்தர்வர்களின் அழகிய வாகனங்களையும் காண்பீராக” என்றது.(15)

ஏக்கத்துடன் கூடிய கண்களால், நீண்ட நேரம் (அந்தக் காட்சியைக்) கண்டும், (வேள்விக்காக வேண்டும்) அந்த மானைக் கண்டும், கொலையால் மட்டுமே சொர்க்கவாசத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையிலும், (அந்த மான் சொன்ன ஆலோசனையை) அவர் அங்கீகரித்தார் {தீர்மானம் கொண்டார்}.(16) தர்மனே மானாகி அந்தக் காட்டில் பல வருடங்கள் மானாக வாழ்ந்து வந்தான். (வாய்ப்பைக் கண்டு மயங்கிய பிராமணரைக் கண்ட) தர்மன், அவரது விடுதலைக்கான ஆலோசனைகளைச் சொல்லும் வகையில், “வேள்வி குறித்த விதிகளுக்கு இஃது (உயிரினங்களைக் கொல்வது) இணக்கமானதில்லை” என்றான்[5].(17)அந்தப் பிராமணரின் மனம் மானைக் கொல்ல விரும்பிய இந்தச் சிந்தனையின் விளைவால், அவர் செய்த பெரிய அளவிலான தவங்கள் மிகவும் குறைந்த நிலையை அடைந்தன. எனவே, உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பது வேள்வியின் எந்தப் பகுதியுமாகாது[6].(18) சிறப்புமிக்கத் தர்மன், (தன் உண்மை வடிவை ஏற்று), அந்தப் பிராமணர் வேள்வி செய்வதற்காகப் புரோஹித அலுவலைச் செய்து துணைபுரிந்தான். அதன் பிறகு, அந்தப் பிராமணர் (புத்துயிர் பெற்ற) தமது தவங்களின் விளைவால், தமது மனைவியின் மனநிலையை அடைந்தார்[7]“.(19) வெகுமதிகளைப் பொறுத்தவரையில் தீங்கிழையாமை என்ற அறமே முழுமையானதாகும். எனினும், கொடுமையைக் கொண்ட அறமானது, (முடிவுடன் கூடிய) சொர்க்கம் என்ற அளவுக்கு மட்டுமே நன்மையைத் தரும். நான் உம்மிடம் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் அறமான வாய்மை அறத்தைக் குறித்துப் பேசிருக்கிறேன்” {என்றார் நாரதர்}.(20)

அறத்தின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 273-ஒருவன் மேன்மையடைவதற்கு அறமே காரணமென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எந்த வழிமுறைகளின் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்தவனாகிறான்? எதன் மூலம் அவன் அறமீட்டுகிறான்? எதன் மூலம் அவன் துறைவை அடைகிறான்? எதன் மூலம் அவன் விடுதலையை {முக்தியை} வென்றெடுக்கிறான்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கடமைகள் அனைத்தையும் அறிவாய். உன் தீர்மானங்களை உறுதி செய்து கொள்வதற்காக மட்டுமே நீ இக்கேள்வியைக் கேட்கிறாய். விடுதலை {முக்தி}, துறவு, பாவம், அறம் ஆகியவற்றை, அவற்றின் வேர் வரை இப்போது கேட்பாயாக.(2) ஐந்து {புலன் நுகர்} பொருட்களை (வடிவம் {ஒளி}, சுவை, மணம், ஒலி, தீண்டல் {ஊறு})[1] உணரும் எவனுடைய விருப்பமும் முதலில் அவற்றின் பின்னால் ஓடுவதிலேயே இருக்கிறது. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, புலன்களின் அகப்பாட்டெல்லைக்குள் அவை வந்ததும், விருப்போ வெறுப்போ எழுகிறது.(3) ஒருவன், அந்தப் பொருளை அடைவதற்காக (விரும்பியதை அடைவதற்காகவும், வெறுப்பதைத் தவிர்ப்பதற்காகவும்) முனைந்து, அதிக உழைப்பைக் கோரும் செயல்களைத் தொடங்குகிறான். அவனுக்கு மிக ஏற்புடையவையாகத் தோன்றும் வடிவங்களையும், மணங்களையும் (எஞ்சிய மூன்று புலன்களுக்குரிய மூன்று பொருட்களையும்) மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காகத் தன்னால் முடிந்த சிறந்த முறையில் முயற்சிக்கிறான்.(4)படிப்படியாக, பற்று {ராகம்}, வெறுப்பு {த்வேஷம்}, பேராசை {லோபம்}, தீர்மானப்பிழை {மோகம்} ஆகியவை எழுகின்றன.(5) பேராசை மற்றும் பிழையில் மூழ்கியதும், பற்று மற்றும் வெறுப்பினால் பாதிப்படைந்ததுமான மனம் ஒருபோதும் அறத்தை நோக்கிச் செல்லாது.(6) உண்மையில், அவன் கபடமான முறையில் அறத்தை அடைய முயற்சிக்கிறான், கபடமான முறையில் செல்வத்தை அடைய விரும்புகிறான். ஓ! குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, கபடத்தால் செல்வத்தை ஈட்டுவதில் ஒருவன் வெல்லும்போது,(7) அத்தகைய ஈட்டலில் முழுமையாகத் தன் இதயத்தை நிறுத்துகிறான். அப்போதுதான் அவன், நலன்விரும்பிகள் மற்றும் விவேகிகளால் நயமாகக் கண்டிக்கப்பட்டாலும், அறிவுக்குச் சரியாகப் பொருந்தக்கூடியவையும், சாத்திரவிதிகளுக்கு இணங்கக்கூடியவையுமான பதில்களை அனைவருக்கும் அளித்து, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யத் தொடங்குகிறான்.(8)

அவன் பாவம் நிறைந்த வகையில் சிந்திப்பதாலும், பாவம் நிறைந்த வகையில் பேசுவதாலும், பாவம் நிறைந்த வகையில் செயல்படுவதாலும், பற்று மற்றும் பிழையில் பிறந்த அவனது மூவகைப் பாவங்கள் மிக வேகமாக அதிகரிக்கின்றன.(9) அவன் பாவ வழியில் நடக்கத் தொடங்கும்போதே, நல்லோர் அவனது தீய தன்மையைக் குறித்துக் கொள்கின்றனர். எனினும், அந்தப் பாவம் நிறைந்த மனிதனுக்கு ஒப்பான மனநிலையுடன் கூடியவர்கள், அவனுடன் நட்பு கொள்கின்றனர்.(10) அவன் இம்மையில் மகிழ்ச்சி அடைவதில் வெல்வதில்லை. அவ்வாறிருக்கையில், மறுமையில் எவ்வாறு மகிழ்ச்சியை அடைவான்? இவ்வாறே ஒருவன் பாவம் நிறைந்தவனாகிறான். அறவோர் குறித்து இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(11) அத்தகைய மனிதன் எந்த அளவுக்குப் பிறரின் நன்மையை நாடுகிறானோ, அந்த அளவுக்குத் தனக்கான நன்மையை அடைவதில் வெல்கிறான். பிற மக்களுக்கான நன்மை நிறைந்த கடமைகளைப் பயில்வதன் மூலம், அவன் மிக உயர்ந்த கதியை இறுதியில் அடைகிறான்.(12)

எவன், தன் ஞானத்தின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட குற்றங்களைக் காண்கிறானோ, எவன் மகிழ்ச்சி எது, துன்பம் எது, அவை ஒவ்வொன்றும் எவ்வாறு அடையப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் திறம் பெற்றவனாக இருக்கிறானோ, எவன் நல்லோரிடம் மதிப்புடன் காத்திருக்கிறானோ {பணிவிடை செய்கிறானோ},(13) அவன் நல்லோருடனான பழக்கம் மற்றும் அத்தகைய தோழமை ஆகிய இரண்டின் விளைவால் அறத்தை ஈட்டுவதில் முன்னேற்றமடைகிறான். அத்தகையவனின் மனமானது, அறத்தில் திளைக்கும், அவன் அறத்தையே தன் ஆதரவாகச் செய்து கொண்டு வாழ்வான்.(14) அவன் செல்வத்தை ஈட்டுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினால், அத்தகைய செல்வத்தை நல்வழிகளில் அடைவதற்கு மட்டுமே அவன் விரும்புவான்.(15) உண்மையில், அவன் தகுதியை {புண்ணியத்தைக்} காணும் பொருட்களின் வேர்களில் மட்டுமே நீரை ஊற்றுவான். இவ்வழியிலேயே ஒருவன் அறவோனாகி, நல்லோரைத் தன் நண்பர்களாக அடைகிறான்.(16)

நண்பர்கள், செல்வம், பிள்ளைகள் ஆகியவற்றை அடைவதன் விளைவால் அவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறான். (இன்பத்தைப் பொறுத்தவரையில்) எந்த உயிரினமும், தான் பெறும் ஒலி, தீண்டல், சுவை, வடிவம் மற்றும் மணம் ஆகியவற்றில் சிறப்பாளுமையை அறத்தின் கனியாக {தர்ம பலமாக} அடைகிறது. இதை நினைவில் கொள்வாயாக. ஓ! யுதிஷ்டிரா, அறத்தின் கனியை {தர்மபலத்தைப்} பெற்ற மனிதன் இன்பத்திற்கு வசப்படுவதில்லை.(17,18) (புலப்படத்தக்க) இத்தகைய அறத்தின் கனிகளில் நிறைவடையாமல், ஞானக்கண்ணால் வழிநடத்தப்படும் அவன் துறவை மேற்கொள்கிறான். அவன் ஞானக்கண்ணை அடையும்போது, சுவை மற்றும் மணம் முதலிய ஆசைகளின் நிறைவில் இன்பங்கொள்வதை நிறுத்துகிறான்.(19) அவன் தன் மனத்தை ஒலி, தீண்டல், வடிவம் முதலியவற்றை நோக்கி ஓட அனுமதிக்காத போதுதான், ஆசையில் இருந்து விடுபடுவதில் வெல்கிறான். எனினும் அவன் அறத்தையோ, அறச்செயல்களையோ ஒருபோதும் கைவிடமாட்டான்.(20)

பிறகு, உலகங்கள் அனைத்தும் அழியத்தக்கனவே என்பதைக் காணும் அவன், (சொர்க்கம் மற்றும் இன்பம் ஆகிய வடிவங்களிலான வெகுமதிகளுடன் கூடிய) அறத்தைக் கைவிட முனைந்து, (நன்கறியப்பட்ட) வழிமுறைகளின் மூலம் விடுதலையை {முக்தியை} அடைய முயற்சிக்கிறான்.(21) பாவம் நிறைந்த அனைத்துச் செயல்களையும் படிப்படியாகக் கைவிடும் அவன், துறவை மேற்கொண்டு, அற ஆன்மாவாகி, இறுதியில் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(22) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, நீ கேட்ட பாவம், அறம், துறவு, விடுதலை {முக்தி} ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொன்னேன்.(23) எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறத்தையே பின்பற்ற வேண்டும். ஓ! குந்தியின் மகனே, அறத்தைப் பின்பற்றும் உனக்கு வெற்றி நித்தியமானதாகும்” என்றார் {பீஷ்மர்}[2].(24)

முக்தி! – சாந்திபர்வம் பகுதி – 274-முக்தி அடைவதற்கான வழிமுறைகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, விடுதலையை {முக்தியை} வழிமுறைகளால் வென்றெடுக்க முடியுமேயன்றி வேறு வகையிலல்ல என்று நீர் சொன்னீர். அவ்வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து நான் முறையாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஞானியே, வழிமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற எப்போதும் முனைபவனாக நீ இருப்பதால், ஓ! பாமற்றவனே, நுட்பமான காரியத்தைக் குறித்து நீ செய்யும் இந்த விசாரணை உண்மையில் உனக்குத் தகுந்ததே ஆகும்.(2) ஒருவன் தன் பயன்பாட்டுக்காக மண் குடத்தைச் செய்யும்போது இருந்த மனநிலை, அந்தக் குடம் {மண்குடத்தைச் செய்யும் அந்தப் பணி} நிறைவடைந்ததும் மறைந்தது போகிறது. அதே வகையிலேயே, எந்தக் காரணம் ஒரு மனிதனை முன்னேற்றத்திற்கும், செழிப்புக்குமான வேராக அறத்தைக் கருதச் செய்யுமோ, அது {அந்தக் காரணம்} விடுதலையை அடைய முனைபவர்களிடம் இல்லாமல் போகிறது[1].(3) கிழக்கத்திப் பெருங்கடலுக்கு வழிவகுக்கும் பாதையின் மூலம் ஒருவன் மேற்கத்திப் பெருங்கடலுக்குச் செல்ல முடியாது. விடுதலைக்கான {முக்திக்கான} வழிவகுக்க ஒரே பாதை மட்டுமே இருக்கிறது. (அடையத்தக்க வேறு எந்தப் பொருளுக்கும் வழிவகுக்கும் எதுவும் அதனோடு ஒப்பிடத்தக்கதல்ல). இது குறித்து விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)பிழைபொறுத்தல் பயில்வது {மன்னிப்பது}, கோபத்தை அழிப்பது, அனைத்து நோக்கங்களையும் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் ஆசையை வேரறுக்க வேண்டும். சத்வ குணத்தைப் பயில்வதன் மூலம்[2] ஒருவன் உறக்கத்தை {சோம்பலை} வெல்ல வேண்டும்.(5) விழிப்புணர்வின் மூலம் ஒருவன் அச்சத்தை விலக்க வேண்டும், ஆன்ம சிந்தனையின் மூலம் ஒருவன் மூச்சை வெல்ல வேண்டும்[3]. பொறுமையின் மூலம் ஒருவன் விருப்பு, வெறுப்பு, காமம் ஆகியவற்றை விலக்க வேண்டும்;(6) பிழை {குற்றம்}, அறியாமை, ஐயம் ஆகியவற்றை உண்மை கல்வியின் மூலம் விலக்க வேண்டும். ஞானத்தைத் தேடுவதன் மூலம் ஒருவன் அக்கறையின்மை மற்றும் விருப்பமில்லாத பொருட்களைக் குறித்த விசாரணை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்[4].(7) மிகக் குறைந்த அளவில் எளிய, செரிக்கத்த உணவின் மூலம் ஒருவன் சீரின்மை மற்றும் நோய்கள் அனைத்தையும் விலக்க வேண்டும். நிறைவின் மூலம் ஒருவன் பேராசை மற்றும் தீர்மான மயக்கம் ஆகியவற்றையும், உண்மை ஞானத்தின் மூலம் உலகம் சார்ந்த அனைத்து காரியங்களையும் தவிர்க்க வேண்டும்[5].(8)நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் ஒருவன் அநீதியை வெல்ல வேண்டும். அனைத்து உயிரினங்களையும் மதிப்பதன் மூலம் ஒருவன் அறத்தை ஈட்ட வேண்டும். எதிர்பார்ப்பு எதிர்காலம் தொடர்புடையது என்பதைச் சிந்திப்பதன் மூலம் ஒருவன் அதைத் தவிர்க்க வேண்டும்; ஆசையைக் கைவிடுவதன் மூலம் அவன் செல்வத்தைக் கைவிட வேண்டும்.(9) (இம்மையில் உள்ள) அனைத்தும் நிலையற்றவை என்பதைச் சிந்திப்பதன் மூலம் நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன் பற்றைக் கைவிட வேண்டும். அவன் யோகம் பயில்வதன் மூலம் பசியை அடக்க வேண்டும். நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் அவன் தன்முக்கியத்துவம் கொண்ட கருத்துகளை அனைத்தையும் விலக்கி, மனநிறைவின் மூலம் அனைத்து வகைத் தீவிர நாட்டங்களையும் விரட்ட வேண்டும்.(10) உழைப்பின் மூலம் ஒருவன் காரிய தாமதத்தையும், உறுதிப்பாட்டின் மூலம் அனைத்து வகை ஐயங்களையும், எண்ணங்களை வெளியிடாததன் மூலம் அளப்பளத்தலையும் {அதிகம் பேசுவதையும்}, துணிவின் மூலம் அனைத்து வகை அச்சங்களையும் அடக்க வேண்டும்[6].(11) புத்தியின் மூலம் வாக்கும், மனமும் அடக்கப்பட வேண்டும். ஞானக்கண்ணின் மூலம் புத்தி அடக்கப்பட வேண்டும். ஆன்ம அறிவின் மூலம் ஞானமும், இறுதியாக ஆன்மாவின் {பரமாத்மாவின்} மூலம் ஆன்மாவும் {அகங்காரம்} கட்டுப்படுத்தப்பட வேண்டும்[7].(12)தூய செயல்களையும், அமைதியான ஆன்மாவையும்[8] கொண்டோர், கல்விமான்களால் சொல்லப்படும் யோகத்தின் ஐந்து தடைகளை அடக்குவதன் மூலம் இந்த இறுதியான நிலையை {ஆன்மாவில் ஆன்மா கலக்கும் நிலையை} அடைகின்றனர்.(13) ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகியவற்றைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் பேச்சைக் கட்டுப்படுத்தி, யோகத்திற்குச் சாதகமான பழக்கங்களான(14) தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, வெளிப்படைத்தன்மை, பிழைபொறுக்கும் {மன்னிக்கும்} தன்மை, இதயத் தூய்மை, உணவுத்தூய்மை, புலனடக்கம் ஆகியவற்றைப் பயில வேண்டும்.(15) இவற்றின் மூலம் ஒருவனுடைய சக்தி பெருகி, பாவங்கள் அகன்று, விருப்பங்கள் கனியால் மகுடம் சூட்டப்பட்டு, (பல்வேறு வகைகளிலான) ஞானம் அடையப்படுகிறது.(16)ஒருவன் தன் பாவங்கள் கழுவப்பட்டு, சக்தி மற்றும் எளிய உணவைக் கொண்டு தன் புலன்களுக்குத் தலைவனாகி, ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் வெல்லும்போது, பிரம்மத்தை அடைய முனைகிறான்.(17) (சாத்திரங்களைக் கேட்பது மற்றும் கற்பதன் மூலம் கிட்டும்) அறியாமை தவிர்ப்பு, (துறவின் விளைவால் உண்டாகும்) பற்றின்மை, (மனநிறைவு மற்றும் பிழைபொறுத்தலைப் பின்பற்றுவதன் மூலம் கிட்டும்) கோபம் மற்றும் ஆசையில் இருந்து விடுதலை {கோபமின்மை மற்றும் ஆசையின்மை}, யோகத்தின் மூலம் வெல்லப்படும் பலம், செருக்கு மற்றும் அலட்சியம் இன்மை, (அனைத்து வகை அச்சத்தையும் அடக்குவதன் மூலம் கிட்டும்) கவலையில் இருந்து விடுதலை {கவலையின்மை} இல்லம் மற்றும் குடும்பம் போன்ற எதனிலும் பற்றின்மை(18) ஆகியவையே விடுதலையின் {முக்தியின்} பாதையாக அமைகின்றன. அந்தப் பாதை இனிமைநிறைந்ததும், களங்கமற்றதும், தூய்மையானதுமாகும். அதேபோல, ஆசையின்மையின் மூலம் செய்யப்படும் வாக்கு, உடல் மற்றும் மனக்கட்டுப்பாடு ஆகியவையும் விடுதலையின் பாதையாக அமைகின்றன” என்றார் {பீஷ்மர்}.(19)

பிறப்பிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 275-யிரினங்களின் பிறப்பு இறப்பு குறித்து நாரதருக்கும் தேவலருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் நாரதருக்கும் அசித-தேவலருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு காலத்தில் நாரதர், நுண்ணறிவு மிக்க மனிதர்களில் முதன்மையானவரும், முதிர்ந்த வயதைக் கொண்டவருமான தேவலர் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரிடம் உயிரினங்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் முறைவு குறித்துக் கேட்டார்.(2)

நாரதர் {அசிதரிடம்}, “ஓ! பிராமணரே, அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து உண்டானது? அனைத்தையும் தழுவும் அழிவானது எப்போது நேர்கிறது? எதனுள் அது கலக்கிறது? கல்விமானான நீர் இது குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(3)

அசிதர் {நாரதரிடம்}, “வேளை நேர்கையில், பல்வேறு வடிவங்களிலான இருப்பை விரும்பிய பரமாத்மாவால், எவற்றில் இருந்து அனைத்து உயிரினங்களும் உண்டாக்கப்பட்டனவோ, அவை ஐந்து பெரும் சாரங்களே {ஐம்பெரும்பூதங்களே} என்று பொருட்களை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(4) (அதன் பிறகு) புத்தியால் தூண்டப்பட்ட காலமானது, அவற்றில் இருந்து (அந்த ஐந்து அடிப்படை சாரங்களில் இருந்து) பிற பொருட்களை உண்டாக்குகிறது. எவன் இவற்றை (ஐந்து அடிப்படை சாரங்கள் {பூதங்கள்}, காலம் மற்றும் புத்தி ஆகியவற்றைத்) தவிர வேறெதனையும் சொல்கிறானோ அவன் உண்மையல்லாததைச் சொல்கிறான்.(5) ஓ! நாரதரே, இவ்வைந்தும் {இந்த ஐந்து பூதங்களும்} நித்தியமானவை, அழிவற்றவை, தொடக்கமும் முடிவும் அற்றவை என்பதை அறிவீராக. காலத்தை ஆறாவதாகக் கொண்ட இந்த ஐந்து அடிப்படை சாரங்களும் {பூதங்களும்} இயல்பாகவே பெருஞ்சக்தியைக் கொண்டிருக்கின்றன.(6) நீர், ஆகாயம், பூமி, காற்று மற்றும் வெப்பம் ஆகியவையே அந்த ஐந்து சாரங்களாகும். (பலத்திலோ, சக்தியிலோ) இவற்றுக்கு உயர்ந்தவையோ, மேன்மையானவையோ வேறெவையும் கிடையாது என்பதில் ஐயமில்லை.(7) ஸ்ருதிகளில் இருந்து அடையப்படும் தீர்மானங்கள் அல்லது அறிவில் இருந்து உண்டாகும் வாதங்களுக்கு ஏற்புடைய வகையில் (இந்த ஐந்தைத் தவிர) வேறெதன் இருப்பையும் எவராலும் உறுதி செய்ய முடியாது. எவராவது வேறெதன் இருப்பையும் உறுதி செய்தால், அவனது உறுதிப்பாடு வீணானதாகும். இந்த ஆறும் சேர்ந்து அனைத்து விளைவுகளையும் உண்டாக்குகின்றன. (நீர் உணரும்) இவை அனைத்தும் அசத் என்று அழைக்கப்படுகின்றன[1].(8)இந்த ஐந்தும், காலமும் (அல்லது ஜீவனும்), முற்பிறவி செயல்களின் ஆற்றலும், அறியாமையும் என்ற இந்த எட்டும் அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் அழிவை உண்டாக்கும் நித்திய சாரங்களாகும்[2].(9) உயிரினங்கள் அழிவடையும்போது இவற்றுக்குள்ளேயே அவை நுழைகின்றன; அவை பிறப்படையும்போது அவற்றில் இருந்தே அவை பிறக்கின்றன. உண்மையில், ஓர் உயிரினம் அழிவுக்குப் பிறகு அந்த ஐந்து அடிப்படை சாரங்களிலேயே {பூதங்களிலேயே} உறுதியடைகிறது.(10) அவனது உடல் பூமியால் ஆகிறது; அவனது காது ஆகாயத்தால் உண்டாகிறது; அவனது கண் ஒளியால் உண்டாகிறது; அவனது உயிர் (அசைவு) காற்றால் உண்டாகிறது; அவனது குருதி நீரால் உண்டாகிறது என்பதில் ஐயமில்லை.(11) இரண்டு கண்கள், மூக்கு, இரண்டு காதுகள், தோல், (ஐந்தாவதாக அமையும்) நாக்கு ஆகியவையே புலன்களாகும். இவை, அதனதனுக்குரிய பொருட்களை உணர்வதற்காக இருக்கின்றன எனக் கல்விமான்கள் அறிகிறார்கள்.(12) பார்வை, கேள்வி, நுகர்வு, தீண்டல், சுவை ஆகியன புலன்களின் செயல்பாடுகளாகும். ஐம்புலன்களும், ஐந்து வழிகளில் ஐந்து பொருட்களோடு தொடர்பு கொள்கின்றன. அறிவின் உள்ளுணர்வால் அவற்றின் குண ஒப்புமையை அறிவீராக[3].(13)வடிவம், மணம், சுவை, தீண்டல் மற்றும் ஒலி ஆகியன ஐந்து வெவ்வேறு வழிகளில் ஐம்புலன்களால் உணரப்படும் ஐந்து குணங்களாகும் {தன்மைகளாகும்}.(14) இந்த ஐந்து தன்மைகளான வடிவம், மணம், சுவை, தீண்டல் மற்றும் ஒலி ஆகியன (புலன்கள் செயலாற்றலற்றவை என்பதால்) உண்மையில் புலன்களால் உணரப்படுவதில்லை, புலன்களின் மூலம் ஆன்மாவை அவற்றை உணர்கின்றன.(15) சித்தம் என்று அழைக்கப்படும் ஒன்று, புலன்கூட்டத்தைவிட {ஐம்புலன்களைவிட} மேன்மையானதாகும். மனமானது சித்தத்தைவிட மேன்மையானதாகும். புத்தியானது மனத்தைவிட மேன்மையானதாகும். க்ஷேத்ரக்ஞன் புத்தியைவிட மேன்மையானதாகும்[4].(16) முதலில் ஓர் உயிரினம் பல்வேறு பொருட்களைப் புலன்களின் மூலம் உணர்கிறது. மனத்தைக் கொண்டு அவற்றைக் குறித்துச் சிந்திக்கிறது. பிறகு புத்தியின் துணை கொண்டு ஓர் உறுதியான அறிவை அடைகிறது. புத்தியுடைய ஒருவன், புலன்களின் மூலம் உணரப்படும் பொருட்களில் உறுதியான தீர்மானங்களை எட்டுகிறான்.(17) ஐம்புலன்கள், சித்தம், மனம், (இப்பட்டியலில் எட்டாவதான) புத்தி ஆகிய இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்களால் அறிவுப்புலன்களாக {ஞானேந்திரிங்களாகக்} கருதப்படுகின்றன.(18) கரங்கள், கால்கள், குதம், பிறப்புறுப்பு, (இப்பட்டியலில் ஐந்தாவதாக அமையும்) வாய் ஆகியவை செயற்புலன்களாக {கர்மேந்திரியங்களாக} இருக்கின்றன.(19)வாயானது, பேச்சு மற்றும் உண்ணும் கருவியைக் கொண்டிருப்பதால் அது செயற்புலன் {கர்மேந்திரயம்} என்றழைக்கப்படுகிறது. கால்கள் இடம்பெயரச் செய்யும் புலனாகவும், கரங்கள் பல்வேறு வகைப் பணிகளைச் செய்யும் புலனாகவும் இருக்கின்றன.(20) குதமும், பிறப்புறுப்பு கழிவுகளை வெளியேற்றும் ஒரே காரியத்திற்கு நீடிக்கும் இரு புலன்களாக இருக்கின்றன. முதலில் இருப்பது {குதம்} மலத்தை வெளியேற்றவும், இரண்டாவது {பிறப்புறுப்பு}, சிறுநீர் கழிக்கவும், ஒருவன் ஆசையின் ஆதிக்கத்தை உணரும்போது உயிர் வித்தைக் கழிக்கவும் இருக்கின்றன. இவற்றைத் தவிர ஆறாவதாக ஒரு செயற்புலன் இருக்கிறது. அது தசை சக்தி என்றழைக்கப்படுகிறது. இக்காரியத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) உடன்பாடுகளின் படி இவையே ஆறு செயற்புலன்களின் பெயர்களாகும். நான் இப்போது ஞானப்புலன்கள், செயற்புலன்கள் மற்றும் ஐந்து (அடிப்படை) சாரங்களின் {பூதங்களின்} அனைத்து குணங்களின் பெயர்களை உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(22) இந்தப் புலன்கள் களைப்படைவதன் விளைவாலும், அதனதனுக்குரிய செயல்பாடுகள் நின்று, அவை இடைநிற்பதன் காரணத்தாலும், அந்தப் புலன்களுக்குரியவன் உறங்குவதாகச் சொல்லப்படுகிறது.(23) இந்தப் புலன்களின் செயல்பாடுகள் இடைநிற்கும்போது, மனத்தின் செயல்பாடு நிற்காமல் அதனுக்குரிய பொருட்களுடன் தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருந்தால், அந்த நனவுநிலையே கனவு என்றழைக்கப்படுகிறது.(24)

விழிப்பு நிலையில், நல்லியல்பு {சத்வ}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருளோடு {தமஸ் குணங்களோடு} தொடர்புடைய மூன்று மனநிலைகள் இருக்கின்றன. கனவிலும் மனமானது அதே மூன்று நிலைகளுடன் தொடர்புகொள்கிறது. அந்த நிலைகளே இன்பத்திற்குரிய செயல்பாடுகளின் தொடர்புடன் கனவில் தோன்றும்போது, அவை மெச்சத்தகுந்ததாகக் கருதப்படுகிறது.(25) மகிழ்ச்சி, வெற்றி, அறிவு, பற்றின்மை ஆகியவை (விழித்த நிலையில் உள்ள மனிதனில் இருக்கும்) நல்லியல்பு {சத்வ} குணத்தின் குறியீடுகளாகும். உயிரினங்களால் அனுபவிக்கப்படும் (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, அல்லது இருள் {தமஸ் குணத்தின்}) எந்த நிலைகளும், அவை விழித்திருக்கும் நேரங்களின் செயல்களின் வெளிப்பட்டு, உறக்கத்தில் கனவு காண்கையில் அவற்றின் நினைவில் மீண்டும் தோன்றுகின்றன. விழிப்பு நிலையில் இருப்பது போலவே கனவில் தோன்றும் நம் கருத்துகளும், கனவு நிலையில் இருப்பது போலவே விழிப்புநிலையில் தோன்றும் கருத்துகளும், கனவுகளற்ற உறக்கம் என்றழைக்கப்படும் நனவுநிலையில் நேரடியாகப் புரிந்து கொள்ளத்தக்கனவாகின்றன. அதுவே நித்தியமானதும், அதுவே விரும்பத்தக்கதுமாகும்[5].(26,27) அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, தசை சக்தி, மனம், புத்தி, சித்தம், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்கள் என இப்பட்டியல் பதினேழு வரை வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்பட்டியலில் பதினெட்டாவதாக உடலுக்குச் சொந்தக்காரன் {தேஹி} வருகிறான். உண்மையில், எவன் அந்த உடலுக்குள் வாழ்கிறானோ அவன் நித்தியமானவனாவான்.(28)உடலுக்குள் வசிக்கும் அந்தப் பதினேழும் (அவித்யை அல்லது அறியாமையுடன் சேர்த்து பதினெட்டும்), உடலுக்கு உரியவனைப் பற்றிக் கொண்டிருக்கின்றன. உடலில் இருந்து அதற்கு உரியவன் மறையும்போது, (அவித்யையுடன் சேர்த்து எண்ணப்படும்) அந்தப் பதினெட்டும், அவ்வுடலில் வசிப்பதை ஒன்றாக நிறுத்துகின்றன.(29) அல்லது, ஐந்து (அடிப்படை) சாரங்களாலான {பூதங்களாலான} இந்த உடலானது (கரைந்து போக வேண்டிய) கலவை மட்டுமே. (அவித்யை உள்ளிட்ட) அந்தப் பதினெட்டுக் குணங்கள், உடலுக்கு உரியவன், இப்பட்டியலில் இருபதாவதாக எண்ணப்படும் குடல் வெப்பம் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்தின் கலவை {பஞ்சபூதவிகாரக் கூட்டம்} என்று அறியப்படும் ஒன்றாக {உடலாக} அமைகின்றன.(30) மஹத் என்றழைக்கப்படும் ஒன்று, (பிராணன் என்றழைக்கப்படும்) காற்றின் {வாயுவின்} துணையுடன், பெயர் செல்லப்பட்ட இந்த இருபதைக் கொண்ட கலவையைத் தாங்கிப் பிடிக்கிறது. அந்த உடல் அழியும் காரியத்தில், (அதற்குக் காரணமெனப் பொதுவாகச் சொல்லப்படும்) காற்றானது {வாயுவானது}, அதே மஹத்தின் கருவியாக மட்டுமே இருக்கிறது.(31) பிறக்கும் எந்த உயிரினமும், தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் தீர்ந்ததும், ஐந்து உறுப்புக்கூறுகளுக்குள் மீண்டும் கரைகிறது, பிறகு அந்த வாழ்வில் செயல்களின் விளைவால் வெல்லப்பட்ட தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளின் மூலம் மீண்டும் மற்றொரு உடலுக்குள் நுழைகிறது.(32) அவித்யை, ஆசை, செயல்கள் ஆகியவற்றில் இருந்தே எப்போதும் விளையும் அவனது வசிப்பிடங்களால் அவன் ஒவ்வொரு உடலையும் கைவிட்டு, காலத்தின் தூண்டுதலின் பேரில், வீடு விட்டு வீடு அடுத்தடுத்து மாறும் மனிதனைப் போல மீண்டும் மீண்டும் வெவ்வேறு உடலுக்குள் மாறுகிறான்.(33)

ஞானமும், உறுதியான அறிவும் கொண்டவர்கள், இதை (இந்த இடப்பெயர்வைக்} கண்டு துயருக்கு வசப்படாமல் இருக்கிறார்கள். அத்தகைய வசிப்பிட மாறுதல்களைக் கண்டு, (உண்மையில் உறவுநிலைகள் ஏதுமில்லாத போது) உறவுகளைப் பிழையாகக் கருதி மூடர்கள் மட்டுமே துயரில் ஈடுபடுகிறார்கள்.(34) இந்த ஜீவன் எவருடைய உறவுமல்ல; மேலும் அவனுக்கு உரியவரென்று சொல்ல எவரும் இல்லை. அவன் எப்போதும் தனியனாகவே இருக்கிறான், அவன் தானே தன்னுடலையும், தனது இன்ப துன்பங்களையும் படைத்துக் கொள்கிறான்.(35) ஜீவன் ஒருபோதும் பிறப்பதுமில்லை, ஒருபோதும் இறப்பதுமில்லை. உடல் பந்தத்திலிருந்து விடுபடும் அவன், சில வேளைகளில் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான்.(36) தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளின் விளைவான உடல்களின் செயல்கள் தீர்ந்து போவதன் மூலம் {உடலில் இருந்து} விடுபட்டு உடலை இழக்கும் ஜீவன், இறுதியாகப் பிரம்மத்தை அடைகிறான்.(37) சாங்கியப் பள்ளியில், தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} தீர ஞானமே காரணமாக விதிக்கப்பட்டிருக்கிறது. (சாத்திரங்களைக் கற்றவர்கள்), தங்கள் தகுதி மற்றும் தகுதியின்மை தீர்ந்து, ஜீவன் பிரம்ம நிலையை அடையும்போது, ஜீவன் உயர்ந்த கதியை அடைவதைக் (சாத்திரங்களின் கண்களைக் கொண்டு) காண்கிறார்கள்” என்றார் {அசித-தேவலர்}”.(38)

பேரின்பம்! – சாந்திபர்வம் பகுதி – 276- ஆசையைக் கைவிடுவதே சுகத்திற்குக் காரணமென மாண்டவ்யரிடம் ஜனகன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஐயோ, கொடூரர்களும், பாவிகளுமான நாங்கள் எங்கள் சகோதரர்கள், தந்தைமார், பேரர்கள், உற்றார், நண்பர் மற்றும் மகன்களைக் கொன்றோம்.(1) ஓ! பாட்டா, செல்வத்திற்கான தாகத்தை எவ்வாறு நாங்கள் தணிக்க வேண்டும்? ஐயோ, அந்தத் தாகத்தால் நாங்கள் பல பாவச் செயல்களை இழைத்துவிட்டோம்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக விசாரித்த மாண்டவ்யரிடம் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} சொன்னது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(3) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, “(இவ்வுலகில்) எனக்கு ஏதும் இல்லை, இருப்பினும் நான் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். (என் நாடு எனச் சொல்லப்படும்) மொத்த மிதிலையும் எரிந்தாலும், என்னுடையது எதுவும் எரிவதில்லை.(4) எவ்வளவு மதிப்புமிக்கவையாக இருப்பினும் உறுதியான {தொட்டரியக்கூடிய} உடைமைகளே ஞானிகளின் கவலைக்கான ஊற்றுக்கண்ணாக இருக்கும்; அதே வேளையில் சிறு மதிப்பைக் கொண்ட உடமையும் மூடர்களை ஆட்கொள்கிறது[1].(5)இம்மையில் உள்ள மகிழ்ச்சிகள் யாவும், ஆசைகளை நிறைவு செய்வதன் மூலம் அடையத்தக்கன, உயர் மதிப்பைக் கொண்ட தெய்வீக இன்பமேதும் கூட, முற்றான ஆசையின்மையில் கிட்டும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்கிற்கு ஈடாகாது.(6) மாட்டின் வளர்ச்சியுடன் சேர்ந்தே அதன் கொம்புகளும் வளர்வதைப் போல, செல்வம் ஈட்டல் பெருகுவதுடன், செல்வத்திற்கான தாகமும் பெருகுகிறது.(7) ஒருவன் பற்றுக் கொள்ளும் எந்தப் பொருளானாலும், அந்தப் பொருள் தொலையும்போது அதுவே துன்பத்திற்கான ஊற்றுக்கண்ணாகிறது.(8) ஒருவன் ஆசையைப் பேணி வளர்க்கக்கூடாது. ஆசையில் பற்று கவலைக்கே வழிவகுக்கும். செல்வம் ஈட்டப்படும்போது ஒருவன் அதை அறக்காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அவன் ஆசையைக் கைவிடுவான்[2].(9) ஞானியானவன், பிற உயிரினங்களைத் தன்னைப் போலவே எப்போதும் பார்க்கிறான். தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வெற்றியை அடையும் அவன் இம்மையிலேயே அனைத்தையும் கைவிடுகிறான்[3].(10)வாய்மை மற்றும் பொய்மை, துன்பம் மற்றும் இன்பம், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, அச்சமின்மை மற்றும் அச்சம் ஆகிய இரட்டைகளைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் அமைதியை அடைந்து, அனைத்து வகைக் கவலையில் இருந்தும் விடுபடுகிறான்.(11) மூடப்புத்தி கொண்டவர்களுக்குக் கைவிடக் கடினமானதும், உடல் மெலிந்தாலும் குறையாததும், (ஞானிகளால்) மரண நோய் எனக் கருதப்படுவதுமான (உலகம் சார்ந்த பொருட்களுக்கான) அந்தத் தாகத்தை ஒருவன் கைவிட்டால் அவன் நிச்சயம் இன்பத்தைக் காண்பான்.(12) அற ஆன்மா கொண்ட மனிதன், நிலவைப் போலப் பிரகாசமானதும், அனைத்து வகைத் தீமையில் இருந்து விடுபட்டதுமான தன் நடத்தையைக் கண்டு, இம்மையிலும், மறுமையில் பெரும்புகழை மகிழ்ச்சியுடன் அடைவதில் வெல்கிறான்” என்றான் {ஜனகன்}.(13)

மன்னனின் {ஜனகனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிராமணர் மாண்டவ்யர் மகிழ்ச்சியால் நிறைந்தவராகி, தாம் கேட்டவற்றை மெச்சி, விடுதலைக்கான {முக்திக்கான} பாதையில் தம்மைச் செலுத்தினார்” என்றார் {பீஷ்மர்}.(14)

காலத்தின் வேகம்! – சாந்திபர்வம் பகுதி – 277-காலம் வேகமாகக் கடந்து செல்வதால் நற்கதிக்குரிய காரியத்தை உடனே செய்ய வேண்டும் என்று ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் நிறையச் செய்யும் காலம் தன் போக்கில் ஓடுகிறது. ஒருவன் முயற்சிக்க வேண்டிய நன்மைக்கான ஊற்றுக்கண் எது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) ஓ! பிருதையின் மகேன {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் வேத கல்விக்கு மட்டுமே தம்மை அர்ப்பணித்திருந்த ஒரு மறுபிறப்பாளர் மேதாவி என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு புத்திசாலி மகனைக் கொண்டிருந்தார்.(3) விடுதலை அறத்தை அறிந்தவனான அந்த மகன், அறத்தை அறியாதவரும், வேத கட்டளைகளைச் செய்வதில் ஈடுபடுபவருமான தன் தந்தையிடம் ஒரு நாள் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)

மகன் {மேதாவி}, “ஓ! ஐயா, மனிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருப்பின் காலம் மிக வேகமக ஓடுவதை அறிந்த புத்தியுள்ள மனிதன் செய்ய வேண்டியது என்ன? ஓ! தந்தையே, உமது போதனைகளால் வழிநடத்தப்பட்டு, அறமீட்டுவதில் என்னை நான் நிறுவிக் கொள்ளும் வகையில் இஃதை உண்மையாகவும், முறையான வரிசையிலும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

தந்தை, “ஓ! மகனே {மேதாவியே}, எப்போதும் பிரம்மச்சரிய கடமைகளை நோற்று வேதங்களைக் கற்ற ஒருவன், தன் தந்தையைக் காக்கும் நிமித்தமாகச் சந்ததியில் விருப்பம் கொள்ள வேண்டும். தன் நெருப்பை நிறுவி, தனக்கு விதிக்கப்பட்ட வேள்விகளைச் செய்து, (வானப்பிரஸ்தனாக வாழ) காட்டுக்குள் ஓய்ந்து, (அனைத்தையும் கைவிட்டு, பிரளயத்திற்காக அமைதியாகக் காத்திருப்பதன் மூலம்) முனிவனாக வேண்டும்” என்றார்.(6)

மகன், “உலகம் இவ்வாறு தாக்கப்படும்போது, அனைத்துப் புறங்களிலும் முற்றுகையிடப்படும்போது, அனைத்துத் திசைகளிலும் தடுக்கப்படமுடியாத (வஜ்ரங்கள்) விழுந்து கொண்டிருக்கும்போது, எவ்வாறு உம்மால் இப்படி அமைதியாகப் பேச முடிகிறது?” என்று கேட்டான்.(7)

தந்தை, “உலகம் எவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிறது? எதனால் அது முற்றுகையிடப்படுகிறது? அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து கொண்டிருக்கும் தடுக்கப்படமுடியாத வஜ்ரங்கள் எவை? உன் வார்த்தைகளால் நீ என்னை அச்சுறுத்துகிறாயா?” என்று கேட்டார்.(8)

மகன், “உலகம் காலனால் தாக்கப்படுகிறது. அது முதுமையால் முற்றுகையிடப்படுகிறது. பகல்களும், இரவுகளும் (வஜ்ரங்களைப் போலத்) தொடர்ந்து விழுகின்றன. இவற்றை ஏன் நீர் கவனிக்கவில்லை?(9) காலன் எவருக்காகவும் இங்கே காத்திருப்பதில்லை (ஆனால், திடீரென எந்த அறிவிப்புமின்றிக் கவர்ந்து செல்கிறான்) என்பதை நான் அறியும்போது, (விழிப்புணர்வில்லாமல்) அறியாமையெனும் திரையில் மூழ்கி என் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் என்னால் (அவன் வருகிறான் என்பதை அறிந்தும்) எவ்வாறு காத்திருக்க இயலும்?(10) ஒவ்வொரு இரவும் கடக்கையில், ஒவ்வொருவரின் வாழ்வுக்காலமும் கடந்து போகும்போது, ஆழமற்ற நீரில் இருக்கும் ஒரு மீனைப் போன்ற நிலையில் எவன் மகிழ்ச்சியடையமுடியும்?(11) மலர்களைக் கொய்யும் கவனமற்ற மனிதனைப் போலத் தன் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவன் தனது நோக்கங்களை அடையும் முன்பே காலன் அவனை அடைகிறான்[1].(12) எது நாளை செய்யப்பட வேண்டுமோ, அஃது இன்றே செய்யப்பட வேண்டும்; ஒருவன் பிற்பகலில் செய்ய நினைப்பது முற்பகலிலேயே செய்யப்பட வேண்டும். ஒருவனுடைய பணி முடிந்து விட்டது அல்லது முடிவடையவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(13) உமக்கான நன்மையை (நாளை வரை விட்டு வைக்காமல்) இன்றே செய்வீராக. தடுக்கப்பட முடியாதவனான காலன், (உமது செயல்களை நிறைவேற்றும் முன்பே) உம்மை வெல்லாமல் பார்த்துக் கொள்வீராக. காலன் இன்று வரமாட்டான் என்று எவன் அறிவான்?(14) ஒருவனின் செயல்கள் நிறைவடையுமுன்பே, காலன் அவனை இழுத்துச் செல்வான். எனவே, இவ்வகையில் வாழ்வு உறுதியற்றது என்பதால், (தனது முதிர் வயது வரை காத்திராமல்) ஒருவன் இளமையிலேயே அறம் பயில வேண்டும்.(15)அறமீட்டுவதன் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நித்தியமான மகிழ்ச்சியை நிச்சயம் வெல்வான். மடமையின் ஆதிக்கத்தில் ஒருவன் தன் மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் செயல்படத் தன் இடைக்கச்சையை உயர்த்திக் கொள்கிறான் {உயர்த்திக் கொண்டு செயல்பட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறான்}.(16) குற்றச் செயல்கள் அல்லது நற்செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் இவர்களை (உறவினர்களை) நிறைவு செய்கிறான். மகன்களையும், விலங்குகளையும் கொண்டவனும், அவற்றிடம் பற்றும், அர்ப்பணிப்பும் கொண்ட மனத்துடன் கூடியவனுமான ஒருவனை,(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலக் காலன் பற்றுகிறான்[2]. ஆசைக்குரிய பல்வேறு பொருட்களை வெல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, அனுபவிப்பது தணிவடையாதபோதே,(18) செம்மறியாட்டைக் கைப்பற்றியோடும் பெண் ஓநாயைப் போலக் காலன் அவனைக் கைப்பற்றுகிறான். “இது செய்யப்பட்டது, இது செய்யப்படாமல் எஞ்சியிருக்கிறது, இது பாதிச் செய்யப்பட்டுள்ளது”(19) என்று ஒருவன் தனக்குள் சொல்லலாம்; ஆனால் காலன், நிறைவுறாத செயல்களை முடிக்கும் அவனது ஆசையைக் கவனத்தில் கொள்ளாமல், அவனைக் கைப்பற்றி இழுத்துச் செல்கிறான். செயலோடு தொடர்புடையவற்றில் ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றின் கனியை அடையாமல் இருக்கும் ஒருவன்,(20) களம், கடை அல்லது வீட்டில் மும்முரமாக இருக்கும் ஒருவன் ஆகியோரைக் கைப்பற்றிக் காலன் கொண்டு போகிறான்.பலவீனன், பலவான், ஞானி, துணிவுமிக்கவன், மூடன், கல்விமான்,(21) அல்லது தன் ஆசைகள் எதனிலும் நிறைவுறாத ஒருவன் ஆகியோரையும் கைப்பற்றிக் காலன் கொண்டு போகிறான். மரணம், முதுமை, நோய், கவலை, அதே வகையான பல காரியங்கள் ஆகியவற்றை(22) மனிதர்கள் தவிர்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். உடல் படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, முதுமையும், மரணமும் வந்து அழிவுக்காகவே அவனைப் பற்றுகின்றன.(23) அசைவன, அசையாதன என்ற இருப்பின் இந்த வடிவங்கள் அனைத்தும் இவை இரண்டாலும் (முதுமை மற்றும் மரணத்தால்) பற்றப்படுகின்றன. வாய்மையில் மட்டுமே அழிவின்மை வசிப்பதால், காலனின் படையினரான போர்வீரர்கள் அணிவகுக்கும்போது, வாய்மையின் சக்தி ஒன்றைத் தவிர அவர்களை வேறு எதனாலும் தடுக்க இயலாது. மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் இன்பமே காலனின் வசிப்பிடமாகும்.(24,25)

காடு என்று அழைக்கப்படுவதே தேவர்கள் உண்மையில் கூடுமிடமாகும், அதே வேளையில், மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் இன்பமானது, அப்படி வசிப்பவனை (ஆதரவற்றவனாக்கிக்) கட்டும் பாசம் {கயிறு} போன்றதாகும் என்று ஸ்ருதி அறிவிக்கிறது[3].(26) பாவம் நிறைவந்தவர்கள் அதை வெட்டுவதில் வெல்வதில்லை (அவற்றிலிருந்து விடுதலையும் பெறுவதில்லை). எண்ணம், சொல் மற்றும் செயலில் எவன் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கவில்லையோ,(27) பிறரின் வாழ்வாதாரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் எவன் ஒருபோதும் எவருக்கும் தீங்கிழைக்காமல் இருக்கிறானோ, அவன் எந்த உயிரினத்தினாலும் தீங்கிழைக்கப்படுவதில்லை. இந்தக் காரணங்களினால், ஒருவன் வாய்மை நோன்பைப் பயின்று, வாய்மை நோன்பிற்கு உறுதியான அர்ப்பணிப்புடன்,(28) வாய்மையைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்க வேண்டும். தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, அனைத்து உயிரினங்களையும் சமமான கண்ணுடன் கண்டு, அவன் வாய்மையின் துணையுடன் காலனை வெல்ல வேண்டும். மரணமின்மையும், மரணமும் உடலிலேயே நடப்பட்டிருக்கின்றன {நிறுவப்பட்டிருக்கின்றன}.(29)மடமையினால் மரணம் எதிர்கொள்ளப்படுகிறது, வாய்மையினால் மரணமின்மை வெல்லப்படுகிறது. ஆசை மற்றும் கோபத்தைக் கடந்து, தீங்கிழைப்பதைத் தவிர்த்து என் நன்மையை மகிழ்ச்சியுடன் அடைவதற்காகவும், ஒரு தேவனைப் போல மரணத்தைத் தவிர்ப்பதற்காகவும் நான் வாய்மையைப் பின்பற்றப் போகிறேன். அமைதியால் அமைக்கப்பட்ட வேள்வியில் ஈடுபட்டு, பிரம்ம வேள்வியிலும் ஈடுபட்டு, என் புலன்களை அடக்கி,(30,31) சூரியன் வடபாதையில் திரும்பும்போது, வாக்கு, மனம் மற்றும் செயல்கள் எனும் வேள்விகளை நான் செய்யப் போகிறேன்[4]. என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு கொடுமை நிறைந்த விலங்கு வேள்வியைச் செய்ய முடியும்?(32) ஞானம் கொண்ட என்னைப் போன்ற ஒருவனால், க்ஷத்தியர்களுக்காக விதிக்கப்பட்டதும், நிலையில்லாத வெகுமதிகளைக் கொண்டதும், கொலை வேள்வியும், கொடுமை நிறைந்ததுமான பிசாச வேள்வியைப் போன்ற ஒன்றைச் செய்ய முடியும்? என்னிடம் நானே என்னைப் பெற்றுக் கொண்டேன். ஓ! தந்தையே, சந்ததியை உண்டாக்க நாடாமல் என்னில் நானே ஓயப்போகிறேன். என்னைக் காக்க என் சந்ததி வேண்டாம், நான் தன் வேள்வியைச் செய்யப் போகிறேன்[5]. எவனுடைய வார்த்தைகளும், எண்ணங்களும் எப்போதும் நன்கு கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றனவோ,(34) தவங்களையும், துறவையும், யோகத்தையும் கொண்ட அவன் நிச்சயம் அவற்றின் மூலம் அனைத்தையும் அடைவான். ஞானத்திற்கு இணையான கண்ணேதும் கிடையாது. ஞானத்திற்கு இணையான வெகுமதியேதும் கிடையாது.(35)பற்றுக்கு இணையான கவலையேதும் கிடையாது. துறவுக்கு இணையான மகிழ்ச்சியேதும் கிடையாது.(36) ஒரு பிராமணனுக்குத் தனிமைவாசம், அனைத்துயிரனங்களையும் சமமான மதிப்பது, பேச்சில் வாய்மை, நல்லொழுக்கத்தின் உறுதி {சீலம்}, தண்டத்தை {தண்டனையை} முற்றாகக் கைவிடல், எளிமை, செயல்கள் அனைத்தில் இருந்தும் படிப்படியாக விலகல் ஆகியவற்றைப் போன்ற செல்வங்களேதும் கிடையாது.(37) செல்வத்தைக் கொண்டு உமக்கு என்ன தேவை இருக்கிறது? உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனைவியராலும் என்ன தேவை இருக்கிறது? நீர் ஒரு பிராமணராவீர், காலனை நீர் எதிர்கொள்ள வேண்டும். குகைக்குள் {உடலுக்குள்} மறைந்திருக்கும் சுயத்தைத் தேடுவீராக உமது பாட்டன்மாரும், தந்தையும் எங்கே சென்றார்கள்?” என்று கேட்டான் {மேதாவி}”.(38)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, தமது மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தந்தை, சுட்டிக்காட்டப்பட்ட வழியில் செயல்பட்டார். நீயும் வாய்மை அறத்திற்கு அர்ப்பணிப்புடன் அதே வழியில் செயல்படுவாயாக” என்றார்[6].(39)

சந்நியாச வாழ்வுமுறை! – சாந்திபர்வம் பகுதி – 278-பிரம்மத்தை அடையத்தக்க நடத்தை, செயல்கள் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டிரன்; சந்நியாச வழிமுறையை அவனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பிரகிருதியைக் கடந்ததும், மாற்றமில்லாததுமான பிரம்மத்தின் இடத்தை அடைய ஒரு மனிதன் என்ன நடத்தையை, என்ன செயல்களை, என்ன வகை ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும், அவன் எதனிடம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விடுதலை அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக, எளிய உணவை உண்பவனாகத் தன் புலன்களை ஆள்பவனாக உள்ள ஒருவன் பிரகிருதியைக் கடந்து, உயர்ந்த இடத்தை அடைந்து, மாற்றமடையாதவனாகிறான்[1].(2) ஒருவன் தன் இல்லத்தில் இருந்து ஓய்ந்து, ஈட்டலையும், இழத்தலையும் ஒரே ஒளியில் கண்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆசைக்குரிய பொருட்கள் (அனுபவிக்கத்தகுந்த வகையில் ஆயத்தமாக இருக்கும்போதும் அவை) அனைத்தையும் அலட்சியம் செய்து, துறவு வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.(3) கண்ணாலோ, சொல்லாலோ, எண்ணத்தாலோ அவன் மற்றொருவனை இழிவாகக் கருதக் கூடாது. எந்த மனிதனும் கேட்கும்படியோ, இல்லாமலோ அவனைக் குறித்துத் தீமையாகப் பேசக்கூடாது.(4) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து, ஒழுக்கத்தில் சூரியனின் பாதையைப் பின்பற்ற வேண்டும்[2]. இந்த வாழ்வில் உள்ள ஒருவன் எந்த உயிரினத்திடமும் நட்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது.(5)அவன் கடுமொழிகளை அலட்சியம் செய்து, அகங்காரத்துடன் தன்னை மற்றொருவனைவிட மேன்மையானவனாக மதித்துக் கருதிக்கொள்ளக்கூடாது. மற்றொருவனின் மூலம் கோபம் தூண்டப்படும்போதும், அவன் இனிமையான பேச்சுகளை மட்டுமே உதிர்க்க வேண்டும். தானே பழிக்கப்படும்போதும், அவன் பதிலுக்குப் பழித்துரைக்கக்கூடாது.(6) அவன் மனிதர்களுக்கு மத்தியில் நட்புடனோ, நட்பில்லாமலோ பழகக்கூடாது. அவன் பிச்சையெடுக்கச் செல்லும் ஒரு வலத்தில் பல வீடுகளுக்குச் செல்லக்கூடாது. அதே போல, முன்கூட்டியே (உணவுக்கு) அழைக்கப்பட்டு எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது.(7) (பிறரால்) புழுதி வாரி இறைக்கப்படும்போதும், அவன் தன் கடமைகளில் உறுதியாக இருந்து, அத்தகைய ஏற்பில்லாத பேச்சுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அவன் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் பதிலுக்குப் பழிதீர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அச்சமற்றவனாக இருக்க வேண்டும்; தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்.(8) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட மனிதன், ஓர் இல்லறத்தானின் வசிப்பிடத்தில் புகை எழுவது நின்று, உலக்கையொலி அடங்கி, அடுப்பில் நெருப்பு அணைந்து, அங்கே வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் உணவை முடித்த பிறகு, அல்லது உணவுக்கான நேரம் கடந்ததும் அங்கே ஈகை இரத்தலுக்கு {பிச்சை எடுக்கச்} செல்ல வேண்டும்.(9) அவன் தன் உடலையும், ஆன்மாவையும் ஒன்றாகப் பராமரித்துக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டும் {உணவில்} நிறைவடைய வேண்டும். நிறைவை உண்டாக்கும் அளவுக்கான உணவுக்குக்கூட அவன் ஆசைப்படக்கூடாது. அவன் தன் தேவையை அடையத் தவறும்போது, நிறைவின்மையை வளர்க்கக்கூடாது. மேலும் தன் தேவையை அடையும்போது அவன் மகிழக்கூடாது.(10)

சாதாரண மனிதர்களால் விரும்பப்படும் பொருட்களில் ஒருபோதும் அவன் விரும்பங்கொள்ளக்கூடாது. மரியாதையுடன் அழைக்கப்படும்போதும் அவன் எவனுடைய வீட்டிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவனைப் போன்ற ஒருவன், கௌரவத்துடன் அடையப்படும் அத்தகைய ஆதாயங்களைப் புறக்கணிக்க வேண்டும்[3].(11) அவன் தனக்கு முன்பு வைக்கப்பட்ட உணவில் ஒரு போதும் குறை காணக்கூடாது, மேலும் தகுதிகளையும் பாராட்டக்கூடாது. மனிதர்களின் தேவைகளில் இருந்து விலக்கப்பட்ட படுக்கையையும், ஆசையையும் அவன் விரும்ப வேண்டும்.(12) கைவிடப்பட்ட வீடு, மரத்தடி, காடு, குகை போன்ற இடங்களையே அவன் நாட வேண்டும். தன் நடைமுறைகளைப் பிறர் அறியாவண்ணம், அல்லது பிறரால் (வெறுக்கத்தக்க அல்லது ஒதுக்கத்தக்கவற்றைப்) பின்பற்றுவதன் மூலம் தன் உண்மை இயல்பை மறைத்துக் கொண்டு அவன் தன் சுயத்துக்குள் நுழைய வேண்டும்[4].(13) யோகத் தொடர்பு மற்றும் தோழமை தொடர்பற்றல் ஆகியவற்றின் மூலம் அவன் முற்றிலும் சமமான, உறுதியான, சீரான நிலையை அடைய வேண்டும். அவன் தன் செயல்களின் மூலம் தகுதி, அல்லது தகுதியின்மையை ஈட்டக்கூடாது[5].(14) அவன் மனநிறைவு, நல்ல உள்ளடக்கம், எப்போதும் உற்சாகம் நிறைந்த முகம் மற்றும் புலன்களுடன், அச்சமற்றவனாக, மனத்தில் எப்போதும் புனித மந்திரங்களை உரைப்பவனாக, அமைதிநிறைந்தவனாக, துறவு வாழ்வை மேற்கொள்பவனாக இருக்க வேண்டும்.(15)அடிப்படை சாரங்களின் {ஐம்பூதங்களின்} விளைவால் உண்டாகி அதனிலேயே கரைந்து போகும் புலன்களின் மூலம் தன் உடலின் தோற்றத்தையும் அழிவையும் கண்டும், (பிற) உயிரினங்களின் பிறப்பையும் இறப்பையும் கண்டும், அவன் ஆசையில் இருந்து விடுபட்டு, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத இருவகை உணவுகளையும் உண்டு அனைத்தின் மீதும் சம பார்வையைச் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மிகக் குறைந்த உணவை உண்டு, தன் புலன்களை அடக்கும் அவன் சுயத்தின் மூலம் ஆன்ம அமைதியை அடைகிறான்.(16) ஒருவன், {தனக்குள்} (எழுச்சியடையும்) சொற்கள், மனம், கோபம், பொறாமை, பசி மற்றும் காமம் ஆகிவற்றின் தூண்டல்களை அடக்க வேண்டும். இதயத் தூய்மைக்காகத் தவத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், (பிறரின்) நிந்தனைகள் தன் இதயத்தைப் பீடிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் {பாரபட்சமில்லாத} நடுவுநிலைமையை அடைந்து புகழையும், பழியையும் சமமாகக் கருத வேண்டும். உண்மையில் இதுவே புனிதமான, உயர்ந்த பாதையான சந்நியாச வாழ்வுமுறையாகும்.(18)

உயர்ந்த ஆன்மாவைக் கொண்ட ஒரு சந்நியாசி அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன் புலன்களை விலக்கி, பற்றுகள் அனைத்திலிருந்தும் தனித்திருக்க வேண்டும். அவன் முந்தைய வாழ்வுமுறைகளில் வாழ்ந்த போது அறிந்த மனிதர்களிடம் அல்லது சென்ற இடங்களுக்கு ஒருபோதும் மீண்டும் செல்லக் கூடாது. அவன், அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்புடைய வகையில், ஒரு நிலையான வீடு இல்லாமல் சுயத்தின் தியானத்தில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(19) அவன் இல்லறத்தாருடனோ {கிருஹஸ்தர்களுடனோ}, காட்டுவாசிகளுடனோ {வானப்ரஸ்டர்களுடனோ} ஒருபோதும் கலந்திருக்கக் கூடாது. (முன்பே சிந்திக்கப்படாமல்) முயற்சியில்லாமல் அடையப்படும் உணவையே அவன் உண்ண வேண்டும். மகிழ்ச்சி தன் இதயத்தைப் பீடிக்க அவன் ஒருபோதும் அனுமதிக்ககூடாது.(20) ஞானிகளுக்கு, இத்தகைய துறவு வாழ்க்கையே விடுதலையை அடையும் வழிமுறையாகும். எனினும், மூடர்களுக்கு இந்தக் கடமைகளின் நடைமுறைகள் மிகச் சுமை நிறைந்ததாகவே தெரியும். தவசி ஹாரீதர் இவை அனைத்தையுமே விடுதலையை அடையும் பாதையாக அறிவித்தார்.(21) எவன் தன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழையாமையை உறுதிகூறுவானோ, அவன் முடிவில்லாத, அல்லது நித்தியமான இன்பமயமான பிரகாச உலகங்கள் பலவற்றை அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(22)

அறிவு! – சாந்திபர்வம் பகுதி – 279- இன்ப துன்பங்களுக்குக் காரணமாக இருக்கும் அறிவைக் குறித்துச் சுக்ராச்சாரியருக்கும், விருத்திரனுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த நற்பேற்றை அடைந்தவர்களாக மனிதர்கள் அனைவரும் எங்களைக் குறித்துப் பேசுகின்றனர். எனினும் உண்மையில், எங்களைப் போல அதிகத் துக்கத்தை அடைந்தவர்கள் வேறெவரும் இல்லை.(1) ஓ! குருக்களில் சிறந்தவரே, ஓ! பாட்டா, உலகமனைத்திலும் மதிக்கப்பட்டாலும், தேவர்களால் பெறப்பட்டு மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் பிறந்திருந்தாலும், ஓ! மதிப்பிற்குரிய தலைவரே, எங்கள் பங்காக நாங்கள் பெரும் துன்பத்தையே அடைந்திருக்கும்போது, பிறப்பால் உடலைப் பெறுவது மட்டுமே துன்பம் அனைத்திற்கும் காரணமாகத் தெரிகிறது. ஐயோ, துன்பத்தை அழிக்கும் துறவு வாழ்வை நாங்கள் எப்போதும் பின்பற்றப் போகிறோம்?(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள், (ஐந்து மூச்சுகள், மனம், புத்தி, அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்து என்ற) பதினேழில் இருந்தும், (மனிதனை மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த வாழ்வில் கட்டும்) முக்கியக் காரணங்களாக அமைந்த (ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகிய) யோகக் களங்கங்கள் ஐந்தில் இருந்தும், {ஒலி, தீண்டல், வடிவம், சுவை மற்றும் மணம் ஆகிய} புலன் நுகர் பொருட்கள் ஐந்தும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) குணங்கள் மூன்றும் சேர்ந்த எட்டில் இருந்தும் விடுபட்டு, மீண்டும் ஒருபோதும் மறுபிறப்பை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவரே, நாங்கள் அரசுரிமையைக் கைவிட்டு எப்போது துறவு வாழ்வைப் பின்பற்றப் போகிறோம்?” என்று கேட்டான்.(4,5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஏகாதிபதியே, அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது. அனைத்திற்கும், அதனதனுக்குரிய எல்லைகள் இருக்கின்றன. மறுபிறப்புக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பது நன்கறியப்பட்டிருக்கிறது. இவ்வுலகில் எந்தப் பொருளும் நிலையானதல்ல.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது (உனக்கிருக்கும் செல்வாக்கு) ஒரு களங்கமென நீ நினைக்கிறாய். நமது ஆய்வுக்குரிய இக்காரியத்தில் அஃது அவ்வாறில்லை என்பது உண்மையல்ல {அஃது அவ்வாறென்பது உண்மையே}. எனினும், நீங்கள் அறம் அறிந்தவர்களாகவும், ஆயத்தமானவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, காலத்தில் நீங்கள் உங்கள் துன்பத்திற்கான முடிவை (விடுதலையை) அடையப்போகிறீர்கள்[1].(7) ஓ! மன்னா, உடலுடன் கூடிய ஜீவன், தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகியவற்றுக்கு (அல்லது அவற்றின் கனியாக வரும் இன்பதுன்பங்களுக்கு) உரிமையாளனல்ல. மறுபுறம், அவன் {ஜீவன்}, தகுதி மற்றும் தகுதியின்மையால் பிறக்கும் இருளில் (விருப்பு வெறுப்பைத் தன் சாரமாகக் கொண்ட அறியாமையில்) மூழ்குகிறான்[2].(8) அஞ்சனப்பொடியுடன் கூடிய காற்றானது, மனோசிலையின் தூள்களைப் பற்றி (தானே {காற்று} நிறமற்ற ஒன்றாக இருப்பினும்), தான் பற்றும் பொருட்களின் நிறங்களை ஏற்று, பல்வேறு திசைப்புள்ளிகளில் மாறுதலை ஏற்படுத்துவதைப் போலவே,(9) ஜீவனும், நிறமற்றதாக இருந்தாலும், அறியாமை மற்றும் செயல்களின் கனிகளால் பல நிறங்களை ஏற்று (களங்கமற்ற, நிலையான தன்மை கொண்ட தன் மூதாதையைக் {சித்-ஐ} களங்கமுடையதாக, மாறும் இயல்புள்ளதாகத் தோன்றச் செய்யும் வகையில்) உடலில் இருந்து மற்றொரு உடலுக்குப் பயணிக்கிறான்[3].(10)ஜீவன், அறியாமையின் விளைவால் தன்னைப் பீடித்த இருளை ஞானத்தின் மூலம் விலக்குவதில் வெல்லும்போது, நிலையான பிரம்மமானது (தன் முற்றான மகிமையுடன்) வெளிப்படுத்தப்படுகிறது.(11) நிலையான பிரம்மத்திற்கு முன்னிலை மீள்வது, செயல்களின் மூலம் இயலாது எனத் தவசிகள் சொல்கின்றனர். நீயும், இந்த உலகில் உள்ள பிறரும், தேவர்களும் கூட, விடுதலையை {முக்தியை} அடைந்தவர்களை மதிக்க வேண்டும். பெரும் முனிவர்கள் அனைவரும் பிரம்மப் பண்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகுவதில்லை[4].(12) இது தொடர்பாகப் பழங்காலத்தில் (தைத்தியர்களின் ஆசானால் {சுக்ராச்சாரியரால்}) பாடப்பட்டது குறிப்பிடப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, தைத்தியன் விருத்திரன், தன் செழிப்பனைத்தையும் இழந்தபோது பின்பற்றிய ஒழுக்க நடைமுறையைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(13) ஓ! பாரதா, தன் புத்தியை மட்டுமே சார்ந்திருந்த அவன், தான் வீழ்த்தப்பட்டிருந்தாலும், நண்பர்களற்றவனாக இருந்தாலும், அரசுரிமையை இழந்திருந்தாலும் எதிரிகளுக்கு மத்தியில் கவலையில் ஈடுபடாமல் இருந்தான்.(14) பழங்காலத்தில் விருத்திரன் அரசுரிமையை இழந்திருந்தபோது, (அவனது ஆசானான) உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “ஓ! தானவா, உன் தோல்வியின் விளைவால் நீ துயரமெதையும் வளர்க்கவில்லை என நான் நம்புகிறேன்” என்று கேட்டார்.(15)விருத்திரன் {சுக்கிராச்சாரியாரிடம்}, “வாய்மை மற்றும் தவங்களின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும் மறைவையும் ஐயமில்லாமல் புரிந்து கொண்டு, இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதை நான் நிறுத்திக் கொண்டேன்.(16) காலத்தால் தூண்டப்பட்ட உயிரினங்கள் ஆதரவற்ற நிலையில் நரகத்தில் மூழ்குகின்றன. மேலும் சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன என்று தவசிகள் சொல்கின்றனர். இவை யாவும் தங்கள் காலத்தை அடக்கத்துடன் கழிக்கின்றன.(17) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தைச் சொர்க்கத்திலும், நரகத்திலும் கழிக்கும் அவை, தங்கள் பங்கான தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} (இன்ப துன்பங்களின் மூலம்) தீர்ந்த பிறகு, காலத்தால் தூண்டப்பட்டு மீண்டும் மீண்டும் பிறப்பை எடுக்கின்றன.(18) ஆசை எனும் சங்கிலிகளால் கட்டப்பட்ட உயிரினங்கள், இடைநிலை வாழ்வுகளில் ஆயிரமாயிரம் பிறவிகளைக் கடந்து ஆதரவற்ற நிலையில் நரகத்தில் விழுகின்றன[5].(19) இவ்வாறு உயிரினங்கள் வருவதையும், போவதையும் நான் காண்கிறேன். ஒருவனுடைய செயல்களின் அடிப்படையிலேயே அவன் எதையும் அடைகிறான் என்பது சாத்திரங்களில் உள்ள பாடம்[6].(20)உயிரினங்கள் மனிதர்களாகவோ, இடைநிலை விலங்குகளாகவோ, தேவர்களாகவோ பிறப்பை எடுத்து நரகத்திற்குச் செல்கின்றன. தங்களுக்குத் தகுந்த வகையில் முற்பிறவிகளில் செயல்பட்ட உயிரினங்கள் அனைத்தும், காலனின் விதிகளுக்கு உட்பட்டு, இன்ப துன்பங்களையும், ஏற்புடையவற்றையும், ஏற்பில்லாதவற்றையும் அடைகின்றன. தங்கள் செயல்களின் அளவுக்குத்தக்க இன்ப துன்பங்களை அனுபவிக்கும் உயிரினங்கள், செயல்களின் அலகுகளால் அளக்கப்படும் பழைய பாதையின் மூலம் எப்போதும் மீண்டும் வருகின்றன” என்றான் {விருத்திரன்}.(21,22)

அப்போது சிறப்புமிக்கவரான உசனஸ் {சுக்ராச்சாரியர்}, படைப்பின் உயர்ந்த புகலிடத்தைக் குறித்து இவ்வாறு பேசிக்கொண்டிருந்த அசுரன் விருத்திரனிடம், “ஓ! தைத்திய புத்திமானே, ஓ! குழந்தாய், இத்தகைய மூடக் கற்பனைகளை நீ ஏன் சொல்கிறாய்?” என்று கேட்டார்.(23)

விருத்திரன், “வெற்றியின் மீது கொண்ட பேராசையின் காரணமாக நான் செய்த கடுந்தவங்களையும், நீரும் தவசிகள் பிறரும் அறிவீர்.(24) பிற உயிரினங்கள் இன்புறும் பல்வேறு சுவைகளையும், பல்வேறு மணங்களையும் என் சக்தியால் அபகரித்த நான், மூவுலகங்களையும் பீடித்துக் கொண்டிருந்தேன்.(25) பிரகாசமான பல்லாயிரம் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட நான் (என் தெய்வீகத் தேரில்), எந்த உயிரினத்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாக, எவனுக்கும் அஞ்சாதவனாக வானத்தில் திரிந்திருந்தேன்.(26) என் தவங்களின் மூலம் பெருஞ்செழிப்பை அடைந்தேன், என் செயல்களால் நான் அஃதை இழந்தேன். எனினும், என் மனோவுறுதியைச் சார்ந்திருந்த நான் இந்த மாற்றத்தினால் துயருறவில்லை.(27)

(பழங்காலத்தில்) சொர்க்கங்களின் உயர் ஆன்ம ஆட்சியாளனான பேரிந்திரனுடன் {மஹேந்திரனுடன்} போரிட விரும்பிய நான் அந்தப் போரில் சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், ஹரி {பாவங்கள் அனைத்தையும் அபகரிப்பவன்},(28) வைகுந்தன் {தடையில்லாத சமர்த்தன்}, புருஷன் {பரிபூர்ணன்}, அனந்தன் {முடிவற்றவன்}, சுக்லன் {சுத்தன்}, விஷ்ணு {வியாபகன்}, சநாதனன் {அனாதியானவன் / மிகப் பழமையானவன்}, முஞ்சகேசன் {பழுத்த தர்ப்பை போலப் பொன்னிறமான மயிரைக் கொண்டவன்}, ஹரிஸ்மஸ்ரு {மஞ்சள் நிற மீசையுடையவன் [தாடியுடையவன்]}, அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டன் {பிதாமஹன்} என்றும் எவன் அழைக்கப்பட்டானோ, அந்த நாராயணனைக் கண்டேன்.(29)

அந்தப் பெரும் ஹரியின் காட்சி கிட்டியதற்கான அந்தத் தவத்தோடு கூடிய வெகுமதிகள் (அனுபவிக்கத்தக்க வகையில்) என்னிடம் இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அது தீராமல் எஞ்சியிருப்பன் விளைவாலேயே நான் உம்மிடம் செயல்களின் கனிகளைக் குறித்துக் கேட்கும் விருப்பம் கொண்டேன்[7].(30) (மனிதர்களின்) எந்த வகையில் {வர்ணத்தில்} உயர்ந்த பிரம்ம செழிப்பு நிறுவப்பட்டிருக்கிறது? மேலும் அநத உயர்ந்த செழிப்பு எவ்வகையில் வீழ்ச்சியடையும்?(31) எவனிடம் இருந்து உயிரினங்கள் தோன்றி வாழ்கின்றன? எவன் மூலம் அவை செயல்படுகன்றன? எந்த உயர்ந்த கனியை அடைவதன் மூலம் ஓர் உயிரினம் நித்தியமாகப் பிரம்மத்துடன் வாழ்வதில் வெல்லும்?(32) எந்தச் செயலின் மூலம், அல்லது அந்த அறிவின் மூலம் அந்தக் கனியை அடைய முடியும்? ஓ! கல்விமானான பிராமணரே, இவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {விருத்திரன்}”.(33){பீஷ்மர் தொடர்ந்தார்}, “ஓ! மன்னர்களில் சிங்கமே, ஓ! மனிதர்களில் காளையே, தானவர்களின் இளவரசனால் {விருத்திரனால்} இவ்வாறு கேட்கப்பட்ட பிறகு தவசி உசனஸ் {சுக்கிராச்சாரியர்} என்ன சொன்னார் என்பது என்னால் தொகுத்துரைக்கப்படும்போது உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சிதறாத கவனத்துடன் கேட்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(34)

விஷ்ணுவின் மகிமை – ஸனத்குமாரர்! – சாந்திபர்வம் பகுதி – 280-விஷ்ணுவின் மகிமையையும், பிறப்பின் கணக்கையும், ஜீவன்களின் நிறம் முதலியவற்றையும், சுக்ரருக்கும், விருத்திரனுக்கும் எடுத்துச் சொன்ன ஸனத்குமாரரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “ஆகாயத்துடன் கூடிய இந்தப் பூமியைத் தன் கரங்களில் தாங்கும் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தெய்வீகமானவனை {விஷ்ணுவை} நான் வணங்குகிறேன்.(1) ஓ! தானவர்களில் சிறந்தவனே, (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும்) முடிவிலா இடத்தைத் தலையாகக் கொண்டவனும், அதியனுமான {அனைத்திலும் மேம்பட்டவனான} அந்த விஷ்ணுவின் மகிமையைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {சுக்கிராச்சாரியார்}.(2)

அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஐயங்களை விலக்கும் நோக்கம் கொண்டவரும், அற ஆன்மாவும், பெருந்தவசியுமான ஸனத்குமாரர் அங்கே அவர்களிடம் வந்தார்[1].(3) அசுரர்களின் இளவரசனாலும் {விருத்திரனாலும்}, தவசியான உசனஸாலும் {சுக்கிராச்சாரியராலும்} வழிபடப்பட்ட அந்தத் தவசிகளில் முதன்மையாவன் {ஸனத்குமாரர்}, ஒரு விலைமதிப்புமிக்க இருக்கையில் அமர்ந்தார்.(4)பெரும் ஞானம் கொண்ட குமாரர் {ஸனத்குமாரர்} (சுகமாக) அமர்ந்தபிறகு, அவரிடம் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “அதியனான விஷ்ணுவின் மகிமையை இந்தத் தானவர்களின் தலைவனுக்கு {விருத்திரனுக்கு} உரைப்பீராக” என்றார்.(5)

இவ்வார்த்தைகளைக் கேட்ட ஸனத்குமாரர், புத்திமானான அந்தத் தானவர்களின் தலைவனிடம் {விருத்திரனிடம்}, அதியனான விஷ்ணுவின் மகிமை குறித்தவையும், பெரும் முக்கியத்துவம் நிறைந்தவையுமான பின்வருவனவற்றைச் சொன்னார்.(6)

{ஸனத்குமாரர்}, “ஓ! தைத்தியா {திதியின் மகனே}, விஷ்ணுவின் மகிமை குறித்த அனைத்தையும் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மொத்த அண்டமே விஷ்ணுவைச் சார்ந்திருக்கிறது என்பதை அறிவாயாக.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் அவனே. காலத்தின் போக்கில் அனைத்துப் பொருட்களையும் உள்ளீர்த்துக் கொள்பவனும், காலத்தில் அவற்றை முன்னே விடுபவனும் {உண்டாக்குபவனும்} அவனே.(8) அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் அந்த ஹரியிலேயே கலக்கின்றன, பிறகு அந்தப் பொருட்கள் அனைத்தும் அவனிலிருந்தே உதிக்கின்றன. சாத்திரங்களை அறிந்த மனிதர்களால் அத்தகைய சாத்திரத்தின் மூலம் அவனை அடைய முடியாது. அதேபோல, தவங்கள் மற்றும் வேள்வியின் மூலமும் அவனை அடைய முடியாது. புலன்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் மூலமே அவன் அடையத்தக்கவனாக இருக்கிறான்.(9) அத்தகைய கதியை அடைவதில் சாத்திரங்கள் முற்றிலும் பயனற்றவை என்பதல்ல. புற மற்றும் அகச் செயல்கள் இரண்டையும், தன் மனத்தையும் சார்ந்திருப்பதாலும், தன் புத்தியின் மூலமும் ஒருவனால் (அவற்றை {புலன்களைத்}) தூய்மைப்படுத்த முடியும். அத்தகைய வழிமுறைகளால் அவன் இவ்வுலகில் முடிவின்மையை அனுபவிப்பதில் வெல்வான்[2].(10)பொற்கொல்லன் ஒருவன், பெரும் முயற்சியோடு கூடிய பெருஞ்செய்கையால் உலோகத்தை {தங்கத்தை} மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு அதன கசடுகளைத் தூய்மைப்படுத்துவதைப் போல,(11) ஜீவன் நூறு பிறவிகளை எடுக்கும் தன் போக்கின் மூலம், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறது. ஒரே ஒரு பிறவியில் பெரும் முயற்சிகளோடு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக்கூடிய சிலர் காணப்படுகின்றனர்.(12) ஒருவன் தன் மேனியில் உள்ள கறை அடர்த்தியாவதற்குள் கவனத்துடன் துடைப்பதைப் போலவே, ஒருவன் பெரும் முயற்சிகளைச் செய்து தன் களங்கங்களைக் கழுவிக்கொள்ள வேண்டும்.(13) எள் தானியங்களுடன் சில மலர்களைக் கலப்பதால் மட்டுமே அவை தங்கள் சொந்த மணத்தை விடாது (விட்டுவிட்டு உடனே மணமிக்கவையாக மாறிவிட முடியாது). அதே போலவே, ஒருவன் தன் இதயத்தைச் சிறிது தூய்மைப்படுத்திக் கொள்வதால் மட்டுமே ஆன்மாவைக் காண்பதில் வெல்ல முடியாது.(14) எனினும், அந்தத் தானியங்கள், பெரும் அளவிலான மலர்களுடன் மீண்டும் மீண்டும் மணமூட்டப்படும்போதுதான் அவை தங்கள் சொந்த மணத்தை விட்டு, தங்களுடன் கலந்த மலர்களின் மணத்தை ஏற்கும்.(15)

அதே வகையிலேயே, நமது சூழ்நிலைகளின் மேல் பற்று கொள்வதால் ஏற்படும் களங்கங்கள், பல பிறவிகளின் போக்கில் ஏற்படும் புத்தியின் மூலமும், பெரும் அளவிலான சத்வ குணத்தின் துணை மூலமும், பயிற்சியில் பிறக்கும் முயற்சியெனும் வழிமுறையின் மூலமும் களையப்படுகின்றன[3].(16) ஓ! தானவா, செயல்களில் பற்றுக் கொள்ளும் உயிரினங்களும், அவற்றில் பற்று கொள்ளாதவையும் தங்கள் தங்கள் மனோநிலைகளுக்கு வழிநடத்தப்படும் காரணங்களை {கர்மவிசேஷங்களை} எந்த வழிமுறைகளின் மூலம் அடைகின்றன என்பதைக் கேட்பாயாக[4].(17) ஓ! பலமிக்கத் தானவா, உயிரினங்கள் எவ்வாறு செயல்களைச் செய்கின்றன, எவ்வாறு அவை விடுகின்றன என்பதை முறையான வரிசையில் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(18) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் உயர்ந்த தலைவனே {பரமனே} படைக்கிறான். அவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவனாவான். எவ்வகைக் குணங்களும் அற்றவனான {நிர்க்குண பிரம்மமான} அவன், (படைப்பை உண்டாக்கும்போது) குணங்களை ஏற்கிறான். அவனே அண்டத்தை அழிப்பவனும், அனைத்துப் பொருட்களின் புகலிடமும், விதி சமைக்கும் உயர்ந்தவனும், தூய சித்-ம் ஆவான்[5].(19) அனைத்து உயிரினங்களிலும் மாறக்கூடியவனாகவும் {க்ஷதரதேகமாகவும்}, மாற்றமில்லாதவனுமாக {அக்ஷரஜீவனுமாக} அவனே {ஸ்ரீ ஹரியே} வசிக்கிறான். பதினோரு மாறுபாடுகளை {விகாரங்களைக்} கொண்டவனான அவனே, தன் கதிர்களால் இந்த அண்டத்தைப் பருகுகிறான்[6].(20)பூமி அவனது பாதம் என்பதை அறிவாயாக. அவனது தலையே சொர்க்கமாக இருக்கிறது. ஓ! தைத்தியனே, அவனது கரங்களே பல்வேறு திசைப்புள்ளிகளாக இருக்கின்றன. இடைவெளி {ஆகாயம்} அவனது காதுகளாகும்.(21) அவனது கண்களின் ஒளியே சூரியனாகும், அவனது மனத்தின் ஒளியே சந்திரனாகும். அவனது புத்தி எப்போதும் அறிவிலேயே வசிக்கிறது, அவனது நாவு நீரில் வசிக்கிறது.(22) ஓ! தானவர்களில் சிறந்தவனே, கோள்கள் அவனது புருவமத்தியில் இருக்கின்றன. விண்மீன்களும், நட்சத்திரக்கூட்டங்களும் அவனது கண்களின் ஒளியில் இருந்து வந்தன. ஓ! தானவா, இந்தப் பூமி அவனது பாதத்தில் இருக்கிறது.(23) ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ குணங்கள் அவனிடம் இருந்தே வந்தன என்பதை அறிவாயாக. அவனே அனைத்து வாழ்வுமுறைகளின் கனியாவான் (அல்லது கதியாவான்), (ஜபம் மற்றும் வேள்விகள் முதலிய) செயல்கள் அனைத்தின் கனியாக (வெகுமதியாக) அவனே அறியப்பட வேண்டும்.(24) உயர்ந்தவனும், மாற்றமிலாதவனுமான அவன், செயல்கள் அனைத்தில் இருந்து விலகுவதன் கனியாகவும் இருக்கிறான். சந்தங்கள் அவனது உடலின் முடியாக இருக்கின்றன, அக்ஷரம் (அல்லது பிரணவம்) அவனது சொல்லாக இருக்கிறது.(25)

(மனிதர்களில்) பல்வேறு வகையினரும், வாழ்வு முறைகளும் அவனது புகலிடமாக இருக்கின்றன. அவனது வாய்கள் {முகங்கள்} பலவாகும். கடமை (அல்லது) அறம் அவனது இதயத்தில் நடப்பட்டிருக்கிறது {நிறுவப்பட்டிருக்கிறது}. அவனே பிரம்மமும், உயர்ந்த அறமாகவும், சத்-ஆகவும், அசத்-ஆகவும் இருக்கிறான்.(26) ஸ்ருதி அவனே. சாத்திரங்கள் அவனே. வேள்விப் பாத்திரங்கள் அவனே, பதினாறு ரித்விஜர்கள் அவனே. வேள்விகள் அனைத்தும் அவனே, பெரும்பாட்டன் (பிரம்மன்) அவனே, விஷ்ணு அவனே, அஸ்வினி இரட்டையர்கள் அவனே, புரந்தரன் {இந்திரன்} அவனே.(27) மித்ரன் அவனே, வருணன் அவனே, யமன் அவனே, கருவூலத் தலைவனான குபேரன் அவனே. ரித்விஜர்களால் அவன் தனித் தனியாகக் காணப்பட்டாலும், அவர்களால் அவன் ஒருவனாகவே அறியப்படுகிறான். இந்த மொத்த அண்டமும் அந்த ஒரே தெய்வீமானவனின் கட்டுப்பட்டின் கீழ் இருப்பதை அறிவாயாக.(28) ஓ! தைத்தியர்களின் இளவரசனே, ஆன்மாவில் உள்ள வேதம், பல்வேறு உயிரினங்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்கிறது. ஓர் உயிரினம் இந்த ஒற்றுமையை உணரும்போது, அது பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஒரு படைப்பு நீடிக்க வேண்டிய காலம், அல்லது அழிய வேண்டிய காலமே கல்பம் என்றழைக்கப்படுகிறது. அத்தகைய கோடிக்கணக்கான கல்பங்களில் உயிரினங்கள் நீடித்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட படைப்பானது, (பின்வரும் வழியில்) பல ஆயிரம் தடாகங்களாகக் அளவிடப்படுகிறது.(30)

ஒரு யோஜனை அகலமும், ஒரு குரோசம் ஆழமும், ஐநூறு யோஜனைகள் நீளமும் கொண்ட ஒரு தடாகத்தைப் பார். அத்தகைய பல்லாயிரம் தடாகங்களைக் கற்பனை செய்து பார்.(31) அவற்றில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒற்றை முடியின் நுனியைக் கொண்டு ஒரே ஒருமுறை மட்டும் இறைத்து, அந்தத் தடாகங்களின் நீரை வற்றச் செய்ய முனைந்து பார். அந்தச் செயல்பாட்டில் அந்தத் தடாகங்களை வற்றச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படுமோ, அத்தனை நாட்கள் ஒரு படைப்பின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான காலமாகும்.(32) (அனைத்துப் பொருட்களின்) உயர்ந்த சாட்சியமானது {பிரமாணமானது}, கருப்பு, பழுப்பு {தூம்ரம்}, {நடுத்தரமான} நீலம், {மிகவும் ஸஹிக்கக்கூடிய} சிவப்பு, {சுகமான} மஞ்சள் மற்றும் {மிகச் சுகமான} வெள்ளை என ஆறு நிறங்களை {வர்ணங்களை} உயிரினங்கள் கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இந்த நிறங்கள் ரஜஸ், தமஸ் மற்றும் சத்வம் என்ற முக்குணங்களின் பல்வேறு அளவுகளிலான கலவையில் இருந்து கிடைக்கின்றன. எங்கே தமஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயும், ரஜஸ் அளவோடும் இருக்கிறதோ அங்கே கருப்பு என்றழைக்கப்படும் நிறமே விளைகிறது. முன்பு போலவே, தமஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொல்லப்பட்டதற்கு முரணாகவும் இருந்தால், பழுப்பு என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது, நீலம் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொன்னதற்கு முரண்பட்டுமிருந்தால், சிவப்பு என்றழைக்கப்படும் இடைநிலை நிறம் விளைகிறது. இந்த நிறம் (முன் சொன்ன நிறத்தை விட) ஏற்புடையதாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸ் அளவுக்குக் கீழேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது மஞ்சள் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது மகிழ்ச்சியை உண்டாக்கும் நிறமாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸும், தமஸும் மேற்சொன நிலைக்கு முரண்பட்டதாகவும் இருந்தால், வெள்ளை என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது பேரின்பத்தை உண்டாக்குகிறது[7].(33)வெண்மையே முதன்மையான நிறமாகும். விருப்பு, வெறுப்பில் இருந்து விடுபட்டிருக்கும் விளைவால் அது பாவமற்றதாக இருக்கிறது. அது துன்பமற்றதாகவும், பிரவிருத்தி தொடர்புடைய கடுமையான உழைப்பில் இருந்து விடுபட்டதாகவும் இருக்கிறது. எனவே, ஓ! தானவர்களின் இளவரசே, வெண்மையே வெற்றிக்கு (அல்லது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. ஓ! தைத்தியா, கருவறைமூலமாகப் பல்லாயிரம் பிறவிகளெடுத்த ஜீவன் வெற்றியை அடைகிறது.(34) மங்கல சாத்திரக் கோட்பாடுகள் பலவற்றைப் படித்த பிறகு தெய்வீக இந்திரனால் அறிவிக்கப்பட்டதும், ஆன்ம அறிவைத் தன் சாரமாகக் கொண்டதும், வெற்றியும் ஒரே முடிவுகளைக் கொண்டவையே. உயிரினங்கள் அடையும் கதியானது, அவற்றின் நிறத்தைச் சார்ந்திருக்கிறது, ஓ தைத்தியா, நிறமானது, நேரும் காலத்தின் தன்மையைச் சார்ந்திருக்கிறது.(35) ஓ தைத்தியா, ஜீவன் கடக்க வேண்டிய இருப்பின் நிலைகள் {கதிகள்} அளவற்றவையல்ல. அவை பதினான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் கொண்டவையாகும். அவற்றின் விளைவால் ஜீவனானது, வழக்குக்கேற்றபடி உயரவோ, நிலைக்கவோ, வீழவோ செய்கிறது[8].(36) கரிய நிறம் கொண்ட ஒரு ஜீவன், நரகத்திற்கு வழிவகுக்கவும், நரகத்திலேயே அழுகிப் போகவும் செய்யும் செயல்களுக்கு அடிமையாக இருப்பதால், அதனால் அடையப்படும் கதி மிக இழிந்ததாகும். அந்த ஜீவனுடைய தீமையின் விளைவால், அது பல்லாயிரம் கல்பங்களின் அளவுக்கு (அத்தகைய வடிவில்) தொடர வேண்டியிருக்கும்.(37) அந்நிலையிலே பல லட்சம் வருடங்கள் கடந்ததும் அந்த ஜீவன் (இடைநிலை நிலை பிறவியில்) பழுப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. அந்நிலையிலேயே அது (நீண்ட பல வருடங்கள்) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. இறுதியாக, அதன் பாவங்கள் தீர்ந்ததும், பற்றுகள் அனைத்தையும் கைவிடம் அதன் மனம் துறவை வளர்க்கிறது.(38)ஜீவன், சத்வ குணத்தைப் பெறும்போது, அது தன் புத்தியின் துணியின் மூலம் தமஸோடு தொடர்புடைய அனைத்தையும் விலக்கி (தனக்கான நன்மையை அடைய) முயற்சிக்கிறது. இதன் விளைவாக அந்த ஜீவன் சிவப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. எனினும் சத்வ குணத்தை அடைவது சாத்தியப்படவில்லையெனில், அந்த ஜீவன், நீலம் என்றழைக்கப்படும் நிறத்தை அடைந்து, மறுபிறவிகளில் சுழல வேண்டிய மனிதர்களின் உலகில் பிறக்கிறது.(39) (மனிதன் என்ற) அந்தக் கதியை அடைந்து, தன் செயல்களால் பிறந்த பற்றுகளின் மூலம் ஒரு படைப்பின் காலத்திற்குப் பீடிக்கப்பட்ட அந்த ஜீவன், மஞ்சள் என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது (அல்லது தேவத் தன்மையை அடைகிறது). நூறு படைப்புக் காலங்களுக்கு அந்நிலையில் நீடிக்கும் அந்த ஜீவன் (மீண்டும் மனிதத் தன்மையை அடைவதற்காக) அந்நிறத்தை விடுகிறது.(40) மஞ்சள் நிறத்தை அடைந்த ஜீவன், ஆயிரக்கணக்கான கல்பங்களுக்கு அந்நிலையிலேயே நீடித்து, ஒரு தேவனாக இருக்கிறது. எனினும் (அப்போதும் கூட), கடந்த கல்பங்களில் தான் செய்த செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்து, பத்தாயிரத்து ஒன்பது வழிகளில் திரிந்து விடுதலையை {முக்தி} அடையாமல், நரகத்தையே அடைகிறது. சொர்க்கம் அல்லது தேவத் தன்மையால் அது, (செயல்கள் எனும்) நரகத்தில் இருந்து விடுபடுகிறது என்பதை அறிவாயாக. அதே வகையில், அந்த ஜீவன் (பிற நிறங்களோடு தொடர்பு கொண்டு) பிற பிறவிகளில் இருந்து விடுபடுகிறது.(41,42) ஜீவன் பல நீண்ட கல்பங்கள் தேவர்களின் உலகில் திளைக்கிறது. அங்கிருந்து விழும் அந்த ஜீவன் மீண்டும் மனிதத் தன்மையை அடைகிறது. அதன் பிறகு, நூற்றியெட்டுக் கல்பங்களுக்கு அந்நிலையிலேயே அது நீடிக்கிறது. பிறகு அந்த ஜீவன் மீண்டும் தேவ நிலையை அடைகிறது. (இரண்டாம் முறையாக) மனித நிலையில் இருக்கும்போது, அந்த ஜீவன் (கலியின் வடிவிலான) காலனிடம் (தன் தீய செயல்களின் மூலம்) விழுந்தால், அது கரிய நிறத்திலேயே மூழ்கி, இருப்பின் அனைத்து நிலைகளிலும் மிகத் தாழ்ந்த இழிந்த நிலையை அடைகிறது. இனி, அந்த ஜீவன் எவ்வாறு விடுதலையை {முக்தியை} என்பதை உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)

விடுதலையை விரும்பும் ஜீவன், சத்வ குணத்தைப் பெருந்தொகையாகக் கொண்ட எழுநூறு வகைச் செயல்களைச் சார்ந்து, படிப்படியாகச் சிவப்பு, மஞ்சகள் நிறங்களை அடைந்து, இறுதியாக வெள்ளை நிறத்தை அடைகிறது. அந்நிறத்தை அடைந்ததும் அந்த ஜீவன், இன்ப உலகங்கள் எட்டைத் தங்களுக்குக் கீழே கொண்ட துதிக்கத்தக்க பல்வேறு பகுதிகளை அடைந்து, விடுதலையேயான களங்கங்களற்ற, ஒளிவடிவத்தில் அங்கேயே நீடித்திருக்கிறது[9].(45) (ஏற்கனவே சொல்லப்பட்ட) எட்டும், ஆறாயிரமும் (உட்பிரிவுகளைக் கொண்டதும்), அந்த உயர்ந்த பிரகாசத்திற்கு ஒப்பானதும், (உண்மை நிலை, அல்லது எதனையும் சாராதிருக்கும் எந்த நிலையும் இல்லாமல்) மனத்தின் படைப்புகளாக மட்டுமே இருக்கின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒருவன் அடையத்தக்க உயர்ந்த பொருளானது, விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்த (துரியம் என்றழைக்கப்படும்) நிலையாக இருக்கிறது[10].(46) யோக பலம் கொண்டு வரும் இன்பநிலையைக்கைவிட இயலாத யோகியைப் பொறுத்தவரையில், அந்த ஜீவன் (அதே ஒரே உடலில்) மங்கல நிலையில் {ஜீவன் முக்தனாக} நூறு கல்பங்கள் வசித்திருந்து, அதன் பிறகு (மஹா, ஜன, தப, சத்ய லோகங்கள் என்றழைக்கப்படும்) நான்கு உலகங்களுக்குச் செல்கிறது. பற்றுகள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் கடந்தவனும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாலும் வெற்றியடையாமல் இருப்பவனும், ஆறாவது நிறத்தை அடைந்தவனுமான ஒருவனுக்கு இதுவே உயர்ந்த கதியாகும்.(47) (ஏற்கனவே சொல்லப்பட்டது போல உரிய திறனை அடைந்த பிறகு) யோகப் பயிற்சியில் இருந்து வீழ்ந்த யோகியானவன், தன் முற்பிறவி செயல்களின் எச்சம் தீராமல் நூறு கல்பங்கள் சொர்க்கத்தில் வசித்து, சத்வ குணத்தில் உள்ள முந்தைய மனோநிலையின் விளைவால் (அறிவுப்புலன்கள் ஐந்து, மனம் மற்றும் புத்தி ஆகிய) ஏழைக் கொண்டு களங்கங்கள் அனைத்தையும் அழிக்கிறான். அந்தக் காலம் கடந்ததும், அத்தகைய மனிதன் மீண்டும் மனிதர்களின் உலகில் பிறந்து பெரும் மேன்மையை அடைகிறான்.(48)பிறகு மனிதர்களின் உலகில் இருந்து திரும்பும் அவன், மேல் நோக்கிய அளவில் உயர்ந்து உயர்ந்து செல்லும் இருப்பின் புதிய வடிவங்களை அடைவதற்காக மறைந்து போகிறான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவன் ஏழு முறை ஏழு உலகங்களையும் கடந்து சென்று, சமாதியின் விளைவால் எப்போதும் பலம் பெருகி, அதிலிருந்து விழித்தெழுகிறான்.(49) இறுதி விடுதலையில் {முக்தியில்} விருப்பமுள்ள யோகி, அந்த ஏழையும் யோக அறிவால் அடக்கி, பற்றுகளில் இருந்து விடுபட்டு உலக வாழ்வில் தொடர்ந்து வசித்து, அந்த ஏழையும் கைவிட்ட பிறகு, அழிவற்ற முடிவிலா நிலையை அடைகிறான். சிலர் அதை மஹாதேவனுக்கு உரிய உலகம் என்றும்; சிலர் விஷ்ணுவுக்குரியது என்றும்; சிலர் பிரம்மனுக்குரியது என்றும்; சிலர் சேஷனுக்குரியதென்றும்; சிலர் நரனுக்கு உரியதென்றும்; சிலர் பிரகாசமான சித்-க்கு உரியதென்றும்; சிலர் முழுவதும் பரவியிருப்பவனுக்குரிய உலகமென்றும் சொல்கிறார்கள்[11].(50) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, திரள் உடல், நுட்பவுடல் மற்றும் காரண உடல்களை ஞானத்தின் மூலம் முற்றாக எரிப்பதில் வென்ற மனிதர்கள் பிரம்மத்திற்குள் நுழைகின்றனர். பிரம்மத்தோடு ஒவ்வாதவையும், செயல்களைத் தங்கள் சாரமாகக் கொண்டவையுமான அவர்களது புலன்கள் அனைத்தும் கூட அதனுள்ளேயே கலக்கின்றன.(51) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, தேவ நிலையை அடைந்தவையும், அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீராதவையுமான ஜீவன்கள், அடுத்து வரும் கல்பத்தில் தங்கள் முற்பிறவியில் இருந்த நிலையை அடைகின்றன. அடுத்தடுத்த நேரும் கல்பம் தனக்கு முந்தைய கல்பத்தைப் போன்றே இருப்பதன் மூலம் இது நேர்கிறது.(52)அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீர்ந்த ஜீவன்கள், சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்து, நூறு கல்பங்களானாலும் ஒருவன் செய்த செயல்களை ஞானமில்லாமல் அழிக்க முடியாது என்பதால், அடுத்தக் கல்பத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்கிறது. ஒரே தன்மையிலான சக்திகளையும், ஒரே வடிவங்களையும் கொண்ட மேன்மையான உயிரினங்கள் அனைத்தும், அண்ட அழிவுக்குப் பிறகு நேரும் புதிய படைப்பில் தங்கள் தங்களுக்குரிய விதிகளின்படியே மீண்டு, அழிந்தது போன்றே படைப்பின் போது இருந்த அதே வகையிலேயே உயரவும், தாழவும் செய்கின்றன.(53) மேலும், பிரம்மத்தை அறிந்த மனிதனைப் பொறுத்தவரையில், முந்தைய கல்பங்களில் செய்த செயல்களின் எச்சங்கள் தீராமல், அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்யும்வரை, அனைத்து உயிரினங்களும், களங்கமற்ற அறிவியல்கள் இரண்டும் அவனது உடலிலேயே வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அவனது சித்தம் யோகத்தால் தூய்மையடையும்போதும், சம்யாமத்தை அவன் பயிலும்போதும், புலப்படத்தக்க இந்த அண்டமானது அவனுக்கு ஐவகைப் புலன்களாக மட்டுமே தெரிகிறது[12].(54) தூய்மையான மனத்துடன் விசாரிக்கும் ஜீவன் உயர்ந்த களங்கமற்ற கதியை அடைகிறது. அதன் பிறகு அஃது அழிவற்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து அடைவதற்கரிதான நித்திய பிரம்மத்தை அடைகிறது.(55) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, இவ்வாறே நான் நாராயணனின் மேன்மையைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {ஸனத்குமாரர்}.(56)

விருத்திரன், “உமது இந்த வார்த்தைகளை முற்றிலும் உண்மையாகக் காண்கிறேன். உண்மையில், இஃது இவ்வாறு இருக்கும்போது, நான் கவலைப்பட (காரணம்) ஏதும் இல்லை. ஓ! பெரும் மனோ சக்திகளைக் கொண்டவரே, உமது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, கவலை மற்றும் அனைத்து வகைப் பாவத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்.(57) ஓ! சிறப்புமிக்க முனிவரே, ஓ! புனிதமானவரே, மிகப்பிரகாசமானவனும், முடிவிலியுமான விஷ்ணுவின் பெரும் சக்தி வாய்ந்த இந்தக் காலச்சக்கரம் இயங்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அந்த நித்தியமான இடத்தில் இருந்து அனைத்து வகைப் படைப்பும் எழுகிறது. அந்த விஷ்ணுவே பரமாத்மா ஆவான். அவனே அனைத்திலும் முதன்மையானவன் ஆவான். அவனிலேயே இந்த மொத்த அண்டமும் ஓய்ந்திருக்கிறது {நிலைத்திருக்கிறது}” என்றான் {விருத்திரன்}”.(58)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! குந்தியின் மகனே, இந்த வார்த்தைகளைச் சொன்னதும், விருத்திரன் தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டு, தன் ஆன்மாவை (யோகத்தில் பரமாத்மாவுடன்) ஒன்றிணைத்து, அந்த உயர்ந்த இடத்தை அடைந்தான்” என்றார்.(59)

யுதிஷ்டிரன், “ஓ! பாட்டா, பழங்காலத்தில் விருத்திரனிடம் ஸனத்குமாரர் சொன்ன அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கத் தலைவன் இந்த ஜனார்த்தனனா (கிருஷ்ணனா) என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(60)

பீஷ்மர், “(பலம் முதலிய) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த தெய்வம் வேரில் இருக்கிறது {அனைத்திற்கும் வேராக இருக்கிறது}. அங்கிருந்தே பரமாத்மா இருப்பில் உள்ள பல்வேறு பொருட்களைத் தன் சக்தியின் மூலம் படைக்கிறான்.(61) அழிவில்லாதவனான இந்தக் கேசவன், அவனது எட்டாம் பகுதி ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட இந்தக் கேசவனே (அவனது சக்தியில்) எட்டில் ஒரு பகுதியைக் கொண்டு மூவுலகங்களையும் படைப்பவனாவான்.(62) வேரில் கிடப்பவனுக்கு அடுத்து இருப்பவனும், (இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒப்பிடுகையில்) நித்தியமானவனுமான இந்தக் கேசவன், ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் மாற்றமடைகிறான். எனினும், உயர்ந்த வலிமை மற்றும் பலத்துடன் வேரில் கிடப்பவனோ, அண்டம் அழியும்போது (அனைத்துப் பொருட்களுடைய ஆற்றல்வித்தின் வடிவில்) நீரில் கிடக்கிறான். நித்தியமான உலகங்கள் அனைத்தின் ஊடாகச் செல்லும் தூய ஆன்மாவைப் படைப்பவன் இந்தக் கேசவனே ஆவான்.(63) முடிவற்றவனும், நித்தியமானவனுமான அவன், (தன்னில் உள்ள வெளிப்பாட்டுடன்) வெளியனைத்தையும் {ஆகாயமனைத்தையும்} நிறைத்து, (அண்டத்தில் உள்ள ஒவ்வொரு வடிவத்திலும்) அண்டத்தில் திரிகிறான். குணங்களை உடைமையாக்குவதைக் குறிப்பது போன்ற அனைத்து வகை வரம்புகளில் இருந்தும் விடுபட்ட அவன், அவித்யையால் பீடிக்கப்படுபவனாகவும், நனவுநிலையால் விழிப்பவனாகவும் தன்னை அமைத்துக் கொள்கிறான். பரமாத்மாவான கேசவனே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான். இந்த அற்பத அண்டம் முழுமையும் அவனிலேயே நிறுவப்பட்டிருக்கிறது” என்றார் {பீஷ்மர்}.(64)

யுதிஷ்டிரன், “ஓ! ஞானத்தின் உயர்ந்த பொருளை அறிந்தவரே, விருத்திரன் தனக்காகக் காத்திருந்த சிறந்த கதியை முன்பே கண்டுவிட்டான் என்று நான் நினைக்கிறேன். ஓ! பாட்டா, அதன் காரணமாகவே அவன் (வரப் போகும் மரணத்தை எண்ணி) துயரப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தான்.(65) ஓ! பாவமற்றவரே, {ஆன்மாவில்} வெள்ளை நிறம் கொண்டவனும், தூய்மையான, அல்லது களங்கமற்ற குலத்தில் பிறந்தவனும், சாத்யன் என்கிற நிலையை அடைந்தவனுமான ஒருவன், (மறுபிறவியின் மூலம் இந்த உலகத்திற்குத்) திரும்பி வருவதில்லை. ஓ! பாட்டா, அத்தகைய மனிதன், நரகம் மற்றும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்கும் நிலை ஆகிய இரண்டில் இருந்தும் விடுபடுகிறான்.(66) எனினும், ஓ! மன்னா, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை அடைந்தவர்களும் கூட, சில வேளைகளில் தமஸ் குணத்தில் மூழ்கி இடைநிலை உயிரினங்களின் வகையில் {விலங்குகளாகவும், பறவைகளாகவும்} வீழ்வதும் காணப்படுகிறது.(67) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் பெரிதும் பீடிக்கப்பட்டுள்ளோம். துன்பம், அல்லது அலட்சியம், அல்லது இன்பம் ஆகியவற்றை உண்டாக்கும் பொருட்களில் பற்றுக் கொண்டிருக்கிறோம். ஐயோ, நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன? அது நீலமா? அல்லது நிறங்கள் அனைத்திலும் இழிந்த கருப்பு நிறமா?” என்று கேட்டான்.(68)

பீஷ்மர் தொடர்ந்தார், “பாண்டவர்களே, நீங்கள் களங்கமற்ற குலத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் கடும் நோன்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். தேவர்களின் உலகில் இன்பத்தில் திளைத்திருந்து பிறகு நீங்கள் மீண்டும் மனிதர்களின் உலகத்திற்குத் திரும்பி வருவீர்கள்.(69) இந்தப் படைப்பு நீடிக்கும்வரை மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்து, அடுத்தப் புதிய படைப்பில் நீங்கள் தேவர்களுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து வகை இன்பநிலைகளையும் அனுபவித்து, இறுதியாகச் சித்தர்களாகக் கணக்கிடப்படுவீர்கள். ஒருபோதும் அச்சம் உனதாக வேண்டாம். உற்சாகமாக இருப்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(70)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-பகுதி 1-ஸ்ரீ ஆபத்தர்மாநுசாஸன உப பர்வம் —

October 16, 2025

பிரிவினை! – சாந்திபர்வம் பகுதி – 131- மன்னன் பலவீனமாக இருக்கும்போது ஏற்படும் எதிரிகளின் படையெடுப்பு, பிரிவினை ஆகியவற்றின் போது அவன் என்ன செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பலவீனமானவனும், அடிபணிந்தவனும், நண்பர்களின் உயிர் குறித்த கவலையால் போரில் ஈடுபடாதவனும், எப்போதும் அச்சத்தின் வசப்பட்டிருப்பவனும், தன் ஆலோசனைகளை இரகசியமாக வைத்துக் கொள்ள முடியாதவனுமான மன்னனால் இதைத் தவிர வேறு என்ன செய்யப்பட வேண்டும்?(1) நகரங்களும், நாடுகளும் எதிரிகளால் பிரிக்கப்படும், கைப்பற்றப்படும் நிலைக்கு உள்ளானவனும், செல்வத்தை இழந்தவனும், தன் நண்பர்களையும், தன்னோடுள்ளவர்களையும் (வறுமை நிலை காரணமாக) கௌரவிக்க முடியாதவனும், ஒற்றுமையின்மை கொண்ட, அல்லது எதிரிகளால் வாங்கப்பட்ட அமைச்சர்களைக் கொண்டவனும், எதிரியின் முகத்துக்கு முன்பு அடிபணிந்து நிற்க வேண்டியவனும், படை சிறுத்தவனும், பலமிக்க எதிரியால் இதயம் கலங்கடிக்கப்பட்டவனுமான மன்னன் உண்மையில் என்ன செய்ய வேண்டும்??” என்று கேட்டான்.(2,3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “படையெடுத்து வரும் எதிரி, தூய இதயம் கொண்டவனாகவும், அறநெறி மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் அறிந்தவனாகவும் இருந்தால், நீ குறிப்பிடும் வகையில் உள்ள ஒரு மன்னன், தாமதம் செய்யாமல் படையெடுத்துவருபவனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, ஏற்கனவே வெல்லப்பட்ட தன் நாட்டின் பகுதிகளை மீட்க வேண்டும்.(4) படையெடுப்பாளன் பலமிக்கவனாகவும், பாவியாகவும், நியாயமற்ற வழிமுறைகளில் வெற்றியை அடைய முயல்பவனாகவும் இருந்தால், தன் ஆட்சிப்பகுதிகளில் ஒரு பகுதியைக் கைவிட்டு அவனிடமும் அமைதியையே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(5) படையெடுப்பாளன் அமைதியை ஏற்படுத்த விரும்பவில்லை என்றால், மன்னன் ஆபத்தில் இருந்து தப்பிக்க, தன் தலைநகரையும், தன் உடைமைகளையும் கைவிட வேண்டும். அவன் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடிந்தால், எதிர்காலத்தில் அதே போன்ற உடைமைகளை அடையும் நம்பிக்கையுடன் இருக்கலாம்.(6) கருவூலம் மற்றும் படையைக் கைவிடுவதால் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றால், அறநெறி அறிந்த எந்த மனிதன்தான் மிக மதிப்புமிக்க உடைமையான தன் சுயத்தைத் தியாகம் செய்வான்?(7) ஒரு மன்னன் தன் வீட்டின் பெண்மணிகளைப் பாதுகாக்க வேண்டும். இவர்கள் எதிரியின் கரங்களில் வீழ்ந்தால் (அவர்களை விடுவிப்பதற்காகத் தானே பிடிபடும் ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில்) அவர்களிடம் எந்தக் கருணையும் காட்டக்கூடாது” என்றார்.(8)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தன்னுடையவர்களே நிறைவில்லாதவர்களாக இருக்கும்போதும், படையெடுப்பாளர்களால் ஒடுக்கப்படும்போதும், தன் கருவூலம் தீர்ந்த போதும், தன் ஆலோசனைகள் வெளிப்படும்போதும் ஒரு மன்னன் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு சூழ்நிலைகளில் உள்ள ஒரு மன்னன் (தன் எதிரி நேர்மையானவனாக இருந்தால்) அவனுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். (எதிரி நியாயமற்றவனாக இருந்தால்) அவன் தன் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். இத்தகு வழிமுறைகளால் அன் எதிரியைத் தன் நாட்டில் இருந்து பின்வாங்கச் செய்ய வேண்டும்; அல்லது துணிச்சலுடன் போரிட்டு, தன் உயிரை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர வேண்டும்.(10) பற்றுறுதிமிக்கவர்களும், உற்சாகம் நிறைந்தவர்களும், தன் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும் நிறைந்த ஒரு சிறு படையின் உதவியைக் கொண்டே கூட ஒரு மன்னனால் மொத்த பூமியையும் வெல்ல முடியும்.(11) போரில் கொல்லப்பட்டால் அவன் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வான். (எதிரிகளைக்) கொல்வதில் வென்றாலோ, அவன் நிச்சயம் பூமியை அனுபவிப்பான். போரில் தன் உயிரை விடுவதால், ஒருவன் இந்திரனின் தோழமையையே அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(12)

அறநெறிக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 132-துன்ப காலங்களில் மன்னனின் நடைமுறை; ஏன் ஒருவன் அவதூறு பேசக்கூடாது? மன்னன் பின்பற்ற வேண்டிய அறநெறிக் கோட்பாடு ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த நெறி நிறைந்தவையும், (அற ஆட்சிக்குரியவையும்) உலகத்திற்கு நன்மையானவையுமான நடைமுறைகள் மறையும் போது, வாழ்வைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் வளங்கள் அனைத்தும் கள்வர்களின் கைகளால் வீழும்போது,(1) உண்மையில், அத்தகு பேரிடர்மிக்கக் காலம் வரும்போது, ஓ! பாட்டா, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பாசத்தால் கைவிட முடியாத நிலையில் இருக்கும் ஒரு பிராமணன், எந்த வழிமுறையில் தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு நேரம் வரும்போது, அந்தப் பிராமணன் தன் அறிவின் உதவியைக் கொண்டு வாழ வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்தும் நல்லோருக்கானதே. தீயோருக்கோ இங்கேதும் இல்லை.(3) எவன் தீயவர்களிடம் இருந்து செல்வத்தை எடுத்து, நல்லோருக்கு அதைக் கொடுக்கிறானோ, அவன் ஆபத்து கால அறநெறியை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(4) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் மன்னன், தன் மக்களைக் கடுஞ்சீற்றமடையவும், கடும் எதிர்ப்பில் ஈடுபடவும் தள்ளாமல், உடைமையாளனால், “இஃது எனது” என்று சொல்லி கொடுக்கப்படாமல் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.(5) வேறு காலங்களில் அறிவால் தூய்மையடைந்தவனும், வலிமை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒரு ஞானமிக்க மனிதன், இத்தகு காலங்களில் நிந்தனைக்குள்ளாகும் வகையில் நடந்து கொண்டால், உண்மையில் அவன் நிந்தனைக்குத் தகுந்தவனல்ல.(6) எப்போதும் தங்கள் வலிமையை வெளிப்படுத்தித் தங்களைத் தாங்கிக் கொள்பவர்கள், ஒருபோதும் வேறு எந்த வழிமுறையைக் கொண்டும் வாழ விரும்பமாட்டார்கள். ஓ! யுதிஷ்டிரா, வலிமை கொண்டவர்கள், தங்கள் ஆற்றலின் உதவியைக் கொண்டே எப்போதும் வாழ்வார்கள்.(7)

(துன்ப காலங்களில்) எந்த வகை விலக்கும் இல்லாத பொதுவான சாத்திரங்களை (அத்தகு காலங்களில்) மன்னன் நடைமுறைப்படுத்த வேண்டும். நுண்ணறிவுமிக்க ஒரு மன்னனோ, அந்தச் சாத்திரங்களைப் பின்பற்றுகையில், மேலும் அதிகமாகச் செய்யலாம்[1].(8) எனினும் மன்னன், கௌரவிக்கப்பட வேண்டியவர்களும், மதிப்புமிக்கவர்களுமான ரித்விஜர்கள், புரோகிதர்கள், ஆசான்கள், பிராமணர்கள் ஆகியோரை அத்தகு நேரங்களிலும் ஒடுக்காமல் இருக்க வேண்டும். அத்தகு காலங்களிலும் அவர்களை ஒடுக்கினால் அவன் பழியையும், பாவத்தையும் இழைத்தவனாவான்.(9) உன்னிடம் நான் சொல்லும் இவை இவ்வுலகில் சட்டத்தோடு ஒட்டிய உரிமையாகக் கருதப்படுகிறது. உண்மையில் இதுவே (துன்ப கால நடைமுறைகளைக் காணக்கூடிய) நித்திய கண்ணாகும். ஒருவன் இந்த உரிமையின்படியே வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மன்னனை நல்லவன் என்றோ, தீயவன் என்றோ அழைக்க இதைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.(10)

கிராமங்களிலும், நகரங்களிலும் வசிக்கும்பல மனிதர்கள், பொறாமையாலும், கோபத்தாலும் ஊக்கமடைந்து, ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதைக் காண முடிகிறது. மன்னன் அவர்களின் வார்த்தைகளைக் கொண்டு ஒருபோதும் எவரையும் கௌரவிக்கவோ, தண்டிக்கவோ கூடாது.(11) ஒருபோதும் அவதூறு பேசப்படக்கூடாது. பேசப்பட்டாலும், அஃது ஒருபோதும் கேட்கப்படக்கூடாது. அவதூறுகள் தொடர்ந்தால், ஒருவன் தன் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும், அல்லது அந்த இடத்தை விட்டு அகல வேண்டும்.(12) அவதூறு பேசுவது தீய மனிதர்களின் பண்பாகும். அஃது ஒழுக்கச் சீர்கேட்டின் குறியீடாகும். மறுபுறம், ஓ! மன்னா, நல்லோரின் சபைகளில் பிற மனிதர்களின் நற்குணங்களைக் குறித்துப் பேசுபவர்களே நல்ல மனிதர்கள்.(13) அடக்கத்தக்கவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும்,, நன்றாக இழுக்கத்தக்கவையுமான இரு காளைகள், நுகத்தில் தங்கள் கழுத்துகளை நுழைத்து விருப்பத்துடன் வண்டியை இழுப்பதைப் போலவே மன்னனும் (துன்ப காலங்களில்) தன் சுமைகளைச் சுமக்க வேண்டும்.(14)

சிலர், ஒரு மன்னன் (அத்தகு காலங்களில்) பெரும் எண்ணிக்கையிலான கூட்டாளிகளை ஈட்டும் வகையில் தன்னை நடத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். சிலர் பழைய நடைமுறையே, அறத்தின் உயர்ந்த குறியீடு எனக் கருதுகின்றனர்.(15) சங்கர் மற்றும் லிகிதர் சொல்லும் நடத்தைக்கு ஆதரவாக இருக்கும் வேறு சிலர், இக்கருத்தை ஏற்பதில்லை. அவர்கள் வன்மத்தாலோ, பேராசையாலோ அக்கருத்தை ஏற்கவில்லை[2].(16) தீய நடைமுறைகளுக்கு அடிமையாக இருந்தால் ஆசான்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பெரும் முனிவர்கள் விதித்திருக்கும் எடுத்துக்காட்டுகளும் காணப்படுகின்றன. ஆனால் அத்தகு கருத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட உரிமை ஏதும் இல்லை.(17) அத்தகு மனிதர்கள், வெறுக்கத்தக்க தீய நடைமுறைகள் குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது, தேவர்களின் தண்டனைக்கு அவர்களை விட வேண்டும்[3]கபடப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தன் கருவூலத்தை நிறைக்கும் மன்னன் நிச்சயம் அறத்திலிருந்து விழுந்தவனாவான்.(18)நல்லோரால் அனைத்து வகையிலும் கௌரவிக்கப்படுவதும், வளமையான சூழ்நிலைக்குரியதும், நேர்மையான இதயம் ஒவ்வொன்றாலும் அங்கீகரிக்கப்படுவதுமான அறநெறிக் கோட்பாடே பின்பற்ற வேண்டும்.(19) நான்கு அடித்தளங்களைச் சார்ந்த கடமையை அறிந்தவனே கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். பாம்பின் கால்களைக் கண்டுபிடிப்பது எப்படிக் கடினமானதோ, அப்படியே, கடமைகளைத் தாங்கும் காரணங்களைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாகும்[4].(20) விலங்குகளை வேட்டையாடும் ஒருவன், கணையால் தாக்கப்பட்ட மானின் பாதையைத் தரையில் உள்ள குருதிக் கறைகளைக் கொண்டு கண்டடைவதைப் போலவே, ஒருவன் கடமையின் காரணங்களைக் கண்டுபிடிக்க முயல வேண்டும்.(21) இவ்வாறே ஒரு மனிதன் நல்லோர் நடந்த பாதையில் அடக்கத்துடன் நடக்க வேண்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தைச் சேர்ந்த பெரும் அரச முனிகளின் நடத்தை அவ்வாறானதேயாகும்” என்றார் {பீஷ்மர்}.(22)

கருவூலமும், களவும்! – சாந்திபர்வம் பகுதி – 133-கருவூலத்தின் அவசியம்; அதைப் பாதுகாப்பதன் அவசியம்; களவு; கள்வர்கள்; கள்வர்களைத் தண்டிக்கும் முறை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன், தன் நாட்டில் இருந்தும், பகைவரின் நாடுகளில் இருந்தும் செல்வத்தைக் கவர்ந்து, தன் கருவூலத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். அந்தக் கருவூலத்தில் இருந்தே அவனது அறத்தகுதி எழுகிறது. ஓ! குந்தியின் மகனே, கருவூலத்தின் விளைவாலேயே அவனுடைய நாட்டின் வேர்கள் விரிவடைகின்றன.(1) இந்தக் காரணங்களால் கருவூலம் நிரப்பப்பட வேண்டும்; நிரப்பப்பட்டதும், (பயனில்லா செலவினங்களை நிறுதி) அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெருக்க வேண்டும். இதுவே நித்திய கடமையாகும்.(2) தூய்மை மற்றும் நியாயமான செயல்பாட்டாலோ, இதயமற்ற கொடூர செயல்பாட்டாலோ கருவூலத்தை நிரப்ப முடியாது. {இவற்றுக்கிடையில் உள்ள} நடுப்பாதையைப் பின்பற்றி அது நிரப்பப்பட வேண்டும்.(3) பலவீனமான மன்னன் எவ்வாறு கருவூலத்தை வைத்துக் கொள்ள முடியும்? பலவீனமான மனிதன் எவ்வாறு ஒரு நாட்டை வைத்துக் கொள்ள முடியும்? நாடில்லாமல் ஒருவன் எங்கிருந்து செழிப்பை அடைவான்?(4) உயர்ந்த அணிவரிசையில் உள்ள ஒரு மனிதனுக்கு ஆபத்து மரணத்தைப் போன்றதாகும். இதன் காரணமாக மன்னன், தன் கருவூலம், படை, கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை எப்போதும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.(5)

வெற்றுக் கருவூலத்தைக் கொண்ட மன்னனை மனிதர்கள் அனைவரும் அலட்சியம் செய்வார்கள். அத்தகு மன்னன் கொடுக்கும் சொற்பமானவற்றால் நிறைவடையாத அவனுடைய பணியாட்கள், ஒருபோதும் அவனுடைய தொழிலில் எந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.(6) மன்னன் தன் செழிப்பின் விளைவாலேயே பெரும் கௌரவங்களை அடைகிறான். உண்மையில், பார்வைக்கு வெளிப்படுத்தக்கூடாத பெண்வடிவ மறைவங்கங்களை மறைக்கும் ஆடைகளைப் போலச் செல்வமானது அவனுடைய பாவங்களை மறைக்கிறது.(7) மன்னன் முன்பு யாரோடெல்லாம் சச்சரவில் ஈடுபட்டிருந்தானோ, அவர்கள் அவனது புதிய செழிப்பைக் கண்டு துயரால் நிறைவார்கள். அவர்கள் அவனைக் கொல்லும் வாய்ப்புக்காக மட்டுமே காத்திருப்பவர்களாக இருப்பினும், நாய்களைப் போல மீண்டும் அவனுக்குப் பணி செய்வார்கள், அவனும் ஏதும் நடக்காததைப் போல அவர்களை ஏற்றுக் கொள்வான்.(8) ஓ! மன்னா, அத்தகு மன்னனால் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? மன்னன் எப்போதும் பெருமையை அடையவே முயற்சிக்க வேண்டும்.(9) அவன் ஒருபோதும் பணிவாக வணங்கியிருக்கக்கூடாது. உழைப்பே {முயற்சியே} ஆண்மையாகும். சாதகமற்ற தருணத்தில் அவன் எவருக்கும் முன் வளைவதைவிட உடைந்தே போகலாம். அதற்குப் பதில் அவன் காட்டுக்குச் சென்று காட்டு விலங்குகளுடன் வாழலாம்.(10)

ஆனால் அவன், கள்வர்களைப் போல அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மத்தியில் வாழவே கூடாது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, காட்டைச் சார்ந்த கள்வர்களே கூடக் கடுஞ்செயல்களை நிறைவேற்ற பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களைக் கொடுக்கலாம்.(11) நலன்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மன்னனே மீறினால், மக்கள் அனைவரும் அச்சத்தால் நிறைவார்கள். கருணையே அறியாத கள்வர்களே கூட இத்தகு மன்னனைக் கண்டு அஞ்சுவார்கள்[1].(12) இதன் காரணமாக, மன்னன் தன் மக்களின் இதயங்களை மகிழ்வுறச் செய்வதற்காக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் நிறுவவேண்டும். சின்னஞ்சிறு காரியங்களுக்கு விதிக்கப்படும் விதிகளைக்கூட மக்கள் மகிழ்ச்சியுடன் போற்றுவார்கள்.(13) இந்த உலகம் ஒன்றுமில்லாதது, எதிர்காலமும் தொன்மமே {இம்மையும், மறுமையும் கட்டுக்கதை} என்று நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். அத்தகையவன் ரகசிய அச்சங்களால் இதயம் கலங்கடிக்கப்பட்டவனாக இருப்பினும், இவ்வகை நாத்திகனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது[2].(14) காட்டில் உள்ள கள்வர்கள், பிற அறங்களைப் பின்பற்றி, உடைமகளை மட்டும் களவு செய்பவர்களாக இருந்தால், அந்தக் கொள்ளைகளைத் தீங்கற்றவையாகக் கருதலாம். கள்வர்கள் அத்தகு கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் விளைவால் பல்லாயிரம் உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.(15)போரில் இருந்து தப்பி ஓடும் எதிரியைக் கொல்வது, {பிறன்} மனைவியரைக் கற்பழிப்பது, நன்றியின்மை, ஒரு பிராமணனின் உடைமையைச் சூறையாடுவது, ஒரு மனிதனின் மொத்த உடைமைகளையும் பறிப்பது,(16) கன்னியரைக் கெடுத்தல், கிராமங்கள் மற்றும் நகரங்களின் சட்டப்பூர்வமான தலைவர்களாகத் தொடர்ந்து நீடித்தல், பிறன் மனைவியருடன் ஒழுங்கங்கெட்ட கலவி ஆகியவற்றைக் கள்வர்களே கூடத் தீச்செயல்களாகக் கருதுகிறார்கள். கள்வர்கள் அவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.(17) மேலும் மன்னர்கள், ({கள்வர்களுடன்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்) கள்வர்களுடைய இதயங்களில் நம்பிக்கை ஏற்படுத்த முயன்று, அவர்களுடைய போக்குவரத்துகள் அனைத்தையும் கண்காணித்த பிறகு, அவர்களை அழிப்பதில் வெல்வார்கள் என்பது நிச்சயம்.(18) இந்தக் காரணத்தால், கள்வர்களைக் கையாளும் காரியத்தில் அவர்களை உடனே {ஒரேயடியாக} அழிக்கும் தேவையில்லை[3]. அவர்களை மன்னனின் ஆளுகைக்குள் கொண்டு வர முயல வேண்டும். மன்னன், தானே அவர்களைவிடப் பலமிக்கவன் என்று கருதிக் கொண்டு, அவர்களிடம் ஒருபோதும் கொடுமையாக நடந்து கொள்ளக் கூடாது.(19) அவர்களை ஒரேயடியாக அழிக்காத மன்னர்களுக்குத் தாங்கள் அழிந்து விடுவோம் என்ற அச்சமில்லை. எனினும், அவர்களை {கள்வர்களை} அழித்தவர்கள், அந்தச் செயலின் விளைவால் எப்போதும் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்” என்றார் {பீஷ்மர்}[4].(20)(ஆகையால் திருடன் இவைகளை விலக்க வேண்டும். ஓ பாரதா, மிச்சமின்றித் திருடினால், இந்தத் திருடனை அடுத்துக் கொல்ல வேண்டி (இவனுக்கு ஸ்நேஹமுண்டாகும்படி செய்துகொள்ள)க் கருதுகிறார்கள். பிறகு, இவனுடைய இடமுதலியவற்றைத் தெரிந்து கொண்டு இவனுடைய பொருளையும் மிச்சமில்லாமல் செய்துவிடுவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் திருடர்கள் தம்மிஷ்டப்படி செய்யத்தக்க பொருளையும் மிச்சமுள்ளதாகச் செய்ய வேண்டும். “நான் பலமுள்ளவனாயிருக்கிறேன்” என்று தீங்குகளைச் செய்யக்கூடாது. மிச்சமுள்ளதாகச் செய்யுந்திருடர்கள் எல்லாவிதத்தாலும் (தமக்கும்) மிச்சமிருப்பதைக் காண்பார்கள். மிச்சமின்றிச் செய்பவனுக்கு எப்பொழுதும் மிச்சமின்றிச் செய்வதால் பயமுண்டு” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ பாரதக் குலத்தோனே, அவர்கள் இவற்றை {சில தீமைகளைத்} தவிர்ப்பதால், ஒருவன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டால், அவர்களை அவன் முற்றாக அழிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்டதாகும். அவர்களை முற்றாக அழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அவன் பலவானாக இருந்தால், அவன் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஓ மகனே, அவர்களை அழிப்பவர்கள், தங்கள் அழிவையே அனைத்துத் திசையிலும் காண்பார்கள். அழிப்பவர்கள் எப்போதும், அழித்த அச்செயலின் விளைவால் அச்சத்துடன் வாழ வேண்டும்)

பலமும், பாவத்தணிப்பும்! – சாந்திபர்வம் பகுதி – 134-அறத்திற்கும், செல்வத்திற்கும் பலமே வேர் என்றும், அந்தப் பலத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும், தீச்செயல்கள் பலவற்றைச் செய்த பாவிகள் தங்கள் பாவத்தைத் தணிக்க வேண்டிய முறைகள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நுண்ணறிவும், ஞானமும் மிக்க ஒரு க்ஷத்திரியனுக்கு, அறத்தகுதி (ஈட்டல்), செல்வம் (அடைதல்) ஆகியவை முக்கியக் கடமைகளாகும் எனக் கடமை குறித்து அறிவிக்கும் இந்த உரையைச் சாத்திரங்களை அறிந்தோர் சொல்கின்றனர். கடமை {தர்மம்} குறித்த நுண்ணிய விவாதங்கள், எதிர்கால உலகம் {மறுமை} குறித்த காணாத விளைவுகள் ஆகியவற்றின் நிமித்தமாக இந்த இரு கடமைகளையும் நிறைவேற்றுவதை அவன் தவிர்க்கக்கூடாது.(1) தரையில் உள்ள காற்தடங்களைக் கண்டு, அவை ஓநாயுடையவையா? இல்லையா? என்று விவாதிப்பது வீண் என்பதைப் போல அறம் மற்றும் மறத்தின் இயல்பு குறித்த விவாதங்கள் அனைத்தும் வீணே. அறம் மற்றும் மறத்தின் கனிகளை இவ்வுலகில் எவரும் ஒருபோதும் காண்பதில்லை[1].(2) எனவே, ஒரு க்ஷத்திரியன் அதிகாரத்தை {பலத்தை} அடையவே முயற்சிக்க வேண்டும். எவன் பலவானோ அவனே அனைத்தின் தலைவனாவான். ஒரு படையை அடைய செல்வம் வழிவகுக்கும். பலவோன் நுண்ணறிவுமிக்க ஆலோசகர்களை அடைவான்[2].(3) செல்வம் இல்லாதவன் உண்மையில் வீழ்ந்தவனே. குறைவாக இருக்கும் எதுவும், ஒரு விருந்தில் எஞ்சிய கழிவுக்கு{எச்சிலுக்கு} ஒப்பானதாகக் கருதப்படுகிறது[3]ஒரு பலமிக்க மனிதன் தீச்செயல்கள் பலவற்றைப் புரிந்தாலும், அச்சத்தின் காரணமாக எவரும் (அவனை நிந்திக்கவோ, தடுக்கவோ செய்யும்) எதையும் சொல்லவோ, செய்யவோ மாட்டார்கள். அறமும், பலமும் உண்மையுடன் தொடர்புடையதாக இருந்தால், அவர்களால் பேராபத்துகளில் இருந்து மக்களைக் காக்க முடியும்.(4) எனினும், இவ்விரண்டையும் ஒப்பிட்டால், பலமே அறத்தைவிட மேன்மையானதாகத் தோன்றும். பலத்திலிருந்தே அறம் எழுகிறது. அசையாத பொருட்கள் அனைத்தும் பூமியில் நிலைத்திருப்பதைப் போலறம் பலத்திலேயே நிலைத்திருக்கிறது.(5)புகையானது, (தன் அசைவுக்காக) காற்றைச் சார்ந்திருப்பதைப் போல, அறமும் பலத்தைச் சார்ந்திருக்கிறது. இவ்விரண்டில் பலவீனமான அறம், கொடியானது மரத்தைச் சார்ந்திருப்பதைப் போலப் பலத்தையே சார்ந்திருக்கிறது.(6) மகிழ்ச்சியானவர்களைச் சார்ந்திருக்கும் இன்பத்தைப் போல அறமானது பலமிக்கவர்களைச் சார்ந்திருக்கிறது. பலமிக்க மனிதர்களால் செய்யமுடியாதது ஏதுமில்லை. பலமிக்கவர்களிடம் உள்ள அனைத்தும் தூய்மையானதே.(7) ஒரு பலமற்ற மனிதன் தீச்செயல்களைச் செய்தால் ஒருபோதும் தப்ப முடியாது. அவனது நடதையைக் காணும் மனிதர்கள், ஓநாயைக் கண்டதைப் போல அதிர்ச்சியடைவார்கள்.(8) செல்வநிலையில் இருந்து வீழும் ஒருவன், அவமானமும், கவலையும் நிறைந்த வாழ்வை வாழ்கிறான். அவமானமும் நிந்தனையும் நிறைந்த வாழ்வானது மரணத்தைப் போன்றதாகும்.(9) ஒருவனுடைய பாவ நடத்தையின் விளைவால், அவன் நண்பர்கள் மற்றும் தோழர்களால் கைவிடப்படுகிறான், பிறரின் வார்த்தைக் கணைகளால் அவன் மீண்டும் மீண்டும் துளைக்கப்படுகிறான். அதன் நிமித்தமாக அவன் துயரில் எரிய வேண்டியிருக்கும்.(10)

(பாவத்தால் கறைபடிந்தவனாக இருந்தால் அந்தப்) பாவத்தைத் தணிப்பதற்கு ஒருவன் மூன்று வேதங்களைப் பயின்று, பிராமணர்களை வழிபட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்து,(11) பார்வை, சொல், செயல் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்து, கபடங்கள் அனைத்தையும் கைவிட்டு, உயர்ந்த குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டு,(12) தன் சிறுமைக்கு வருந்தி, பிறர் பெருமைகளை அறிக்கையிட்டு, மந்திரங்களை ஓதி, வழக்கமான நீர்ச்சடங்குகளைச் செய்து, மென்மையான நடத்தையை ஏற்று, அதிகமாகப் பேசுவதைத் தவிர்த்து,(13) கடுந்தவங்களைச் செய்து, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் புகலிடத்தை நாட வேண்டும். உண்மையில், தீச்செயல்கள் பலவற்றைச் செய்த ஒருவன், மனிதர்களால் சொல்லப்படும் நிந்தனைகளுக்குக் கோபப்படாமல் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(14) தன்னை இவ்வழியில் நடத்திக் கொள்வதால், ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உலக மதிப்பை மீண்டும் அடைவான். உண்மையில், அவன் இவ்வுலகில் {இம்மையில்} பெரும் மதிப்பையும், அடுத்த உலகில் {மறுமையில்} பெரும் கௌரவத்தையும் வென்று, இத்தகு நடத்தையைப் பின்பற்றுவதன் மூலமும், தன் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும் அவன் இங்கே {இம்மையில்} பல்வேறு வகையான் இன்பங்களை அனுபவிப்பான்” என்றார் {பீஷ்மர்}.(15)

கள்வன் காயவ்யன்! – சாந்திபர்வம் பகுதி – 135-சாத்திர விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன் கள்வனாகயிருப்பினும், முக்தியை அடைவான் என்பதை விளக்க காயவ்யனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, இவ்வுலகில் {இம்மையில்} கட்டுப்பாடுகளை நோற்று, அடுத்த உலகில் {மறுமையில்} அழிவை அடையாத ஒரு கள்வனின் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) காயவ்யன் {காபச்யன் / காபவ்யன்} என்ற பெயரில், ஒரு க்ஷத்திரிய தந்தைக்கும், ஒரு நிஷாதத் தாய்க்கும் பிறந்த ஒரு கள்வனிருந்தான். காயவ்யன் க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுபவனாகவே இருந்தான். தாக்கவல்லவனும், நுண்ணறிவையும், துணிவையும் கொண்டவனும், பெரியோர் மற்றும் ஆசான்களை வழிபடுபவனாகவும் இருந்த அவன் {காயவ்யன்}, தவசிகளின் நடைமுறைகளைப் பின்பற்றுவோரைக் காத்து வந்தான். அவன் கள்வனாகவே இருப்பினும், சொர்க்கத்தில் புகழை வென்றான்.(2,3) காலையிலும், மாலையிலும் மான்களை விரட்டி அவற்றின் கோபத்தைத் தூண்டுபவனாக இருந்தான். நிஷாதர்கள் மற்றும் காட்டில் வாழும் விலங்குகளின் நடைமுறைகள் அனைத்தையும் நன்கறிந்தவனாக அவன் இருந்தான்.(4) காலம் மற்றும் இடத்துக்குத் தக்க தேவைகளை நன்கறிந்த அவன், மலைகளின் மீது உலாவி வந்தான். விலங்குகள் அனைத்தின் பழக்கவழக்கங்களை அறிந்திருந்தவனான அவனுடைய கணைகள் இலக்கை ஒருபோதும் தவறாதவையாகவும், அவனுடைய ஆயுதங்கள் பலமானவையாகவும் இருந்தன.(5)

தனியொருவனாகவே பல நூற்றக்கணக்கான துருப்புகளை வெல்லவல்லவனாகவும் அவன் இருந்தான். வயது முதிர்ந்தவர்களும், கண்பார்வையற்றவர்களும், செவிகேள்வியற்றவர்களுமாக இருந்த அவனது பெற்றோரைத் தினமும் காட்டில் வழிபட்டுவந்தான்.(6) கௌரவிக்கத் தகுந்த மனிதர்கள் அனைவரையும், தேன், இறைச்சி, கனிகள், கிழங்குகள், பிற வகைச் சிறந்த உணவுகள் ஆகியவற்றைக் கொண்டு விருந்தோம்பலுடன் மகிழ்வித்து, அவர்களுக்குப் பல நல்ல அலுவல்களையும் {பணிகளையும்} செய்து கொடுத்தான்.(7) உலகில் இருந்து ஓய்ந்து காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்ட பிராமணர்களிடம் அவன் பெரும் மரியாதையை வெளிப்படுத்தினான்.(8) அவன் செய்த தொழிலின் நிமித்தமாகவும், பிறர் மேல் கொண்ட அச்சத்தின் காரணமாகவும், அவனிடம் இருந்து கொடைகளைப் பெற விருப்பமில்லாமல் இருந்தவர்களைப் பொறுத்தவரையில், பொழுது விடிவதற்கு முன்பே அவர்களுடைய வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களின் வாசல்களில் இறைச்சியை விட்டு வருவான்[1].(9) ஒரு நாள், பண்பில் கருணையற்றவர்களும், கட்டுப்பாடுகளை அனைத்தையும் அலட்சியம் செய்பவர்களுமான பல்லாயிரம் கள்வர்கள், அவனைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுக்க விரும்பினர்.(10)

அந்தக் கள்வர்கள், “காலம் மற்றும் இடத்துக்குத் தக்க தேவைகளை நீ அறிந்திருக்கிறாய். விவேகத்தையும், துணிவையும் கொண்டவனாகவும் இருக்கிறாய். நீ மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களிலும் நீ கொண்ட உறுதி பெரியதாக இருக்கிறது. எங்கள் அனைவராலும் மதிக்கப்படும் நீ, எங்கள் தலைவர்களில் முதன்மையானவனாக இருப்பாயாக. நீ வழிநடத்துவதைப் போலவே நாங்கள் செயல்படுவோம். ஒரு தந்தை, அல்லது தாயைப் போல நீ எங்களை முறையாகக் காப்பாயாக” என்றனர்.(12)

காயவ்யன், “பெண்களையோ, அச்சத்தால் சச்சரவில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களையோ, குழந்தையையோ, தவசியையோ ஒருபோதும் கொல்லாதீர்கள். போரிடுவதைத் தவிர்க்கும் எந்த ஒருவனும் {உங்களால்} ஒருபோதும் கொல்லப்படக்கூடாது, அதே போல எந்தப் பெண்ணும் கைப்பற்றப்படவோ, பலவந்தமாகக் கடத்தப்படவோ கூடாது.(13) பிராமணர்கள் அருளப்பட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் எப்போதும் போரிட வேண்டும்.(14) உண்மை ஒருபோதும் தியாகம் செய்யப்படக்கூடாது. மனிதர்களின் திருமணங்கள் ஒருபோதும் தடுக்கப்படக்கூடாது. தேவர்களும், பித்ருக்களும், விருந்தினர்களும் வழிபடப்படும் வீடுகளுக்கு {உங்களால்} எந்தத் தீங்கும் இழைக்கப்படக்கூடாது.(15) உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்கள், உங்கள் கொள்ளைப்பவனியில் உங்களால் தவிர்க்கப்படத் தகுந்தவர்களாவர். உங்களுடையவை அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் அவர்களை வழிபட வேண்டும்.(16) எவன் பிராமணர்களின் கோபத்தைத் தூண்டுவானோ, எவனுடைய தோல்வியை அவர்கள் {பிராமணர்கள்} விரும்புவார்களோ, அவன் மூவுலகங்களிலும் ஒரு மீட்பனைக் காணத் தவறுவான்.(17) எவன் பிராமணர்களை இழிவாகப் பேசி, அவர்களுடைய அழிவை விரும்புவானோ, அவன், சூரியன் எழும்போதான இருளைப் போலவே அழிவை அடைவான்.(18) இங்கே வசித்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வீரத்தின் கடிகளை அடையலாம். உங்களுக்கு உரியதைக் கொடுக்க மறுப்பவர்களுக்கு எதிராகத் துருப்புகள் அனுப்பப்படும்.(19) தண்டக்கோலானது தீயவர்களுக்காகவே திட்டமிடப்பட்டதாகும். தன்வளர்ச்சிக்காக அது திட்டமிடப்பட்டதில்லை. நல்லோரை ஒடுக்குபவர்கள் கொல்லப்படத் தகுந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.(20) தீவினைக்கஞ்சாத வழிகளால் நாடுகளைப் பீடிப்பதன் மூலம் தங்கள் நற்பேற்றை வளர்த்துக் கொள்ள முனைவோர், வெகுவிரைவில் சடலத்தில் முளைத்த புழுக்களாகக் கருதப்படுவார்கள்.(21) சாத்திரங்களில் உள்ள கட்டுப்பாடுகளான இவற்றுக்கு உடன்பட்டுத் தங்களை நடத்திக் கொள்ளும் கள்வர்கள், கொள்ளையிடும் வாழ்வை வாழ்ந்தாலும்கூட வெகுவிரைவில் விடுதலையை {முக்தியை} அடைவார்கள்” என்றான் {காயவ்யன்}”.(22)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கள்வர்கள், காயவ்யனின் கட்டளைகள் அனைத்துக்குக் கீழ்ப்படிந்த நடந்தார்கள். பாவத்தைத் தவிர்த்த அவர்கள் பெருஞ்செழிப்பையும் அடைந்தார்கள்.(23) இத்தகு வழியில் நடந்து கொண்டு, நேர்மையானவர்களுக்கு இவ்வாறு நன்மை செய்து, அதன் மூலம் கள்வர்களிடம் உள்ள தீய நடைமுறைகளை இவ்வாறு கட்டுப்படுத்திய காயவ்யன், (மறுமையில்) பெரும் வெற்றியை அடைந்தான்.(24) காயவ்யனின் இந்தக் கதையை எப்போதும் நினைக்கும் ஒருவன், எந்தக் காட்டுவாசிகளிடமிருந்தும் {காட்டு விலங்குகளிடம் இருந்தும்}, பூமி சார்ந்த எந்த உயிரினிடமிருந்தும் எந்த அச்சத்தையும் அடையமாட்டான்.(25) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இத்தகு மனிதனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சம் இருக்காது. தீய மனிதர்களிடமும் அவன் எந்த அச்சத்தையும் அடைய மாட்டான். {காயவ்யனின் கதை கேட்ட} இத்தகு மனிதன் காட்டுக்குச் சென்றால், ஒரு மன்னனுக்கான பாதுகாப்போடு அவனால் அங்கே வாழ முடியும்[2]” என்றார் {பீஷ்மர்}.(26)

அறத்தின் நுட்பம்! – சாந்திபர்வம் பகுதி – 136-கருவூலத்தைப் பெருகச் செய்யக் கைப்பற்றத்தகுந்த மற்றும் கைப்பற்றத்தகாத பொருட்களைப் பகுத்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிறைத்துக் கொள்வது தொடர்பாக, பழங்காலத்துச் சாத்திரங்களை அறிந்தோர், பிரம்மன் பாடிய பின்வரும் வரிகளை {சுலோகங்களைப்} குறிப்பிடுகின்றனர்.(1) – வேள்விகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களின் செல்வம், தேவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்ட செல்வம் ஆகியவை ஒருபோதும் கைப்பற்றப்படக்கூடாது. அறச்சடங்குகள் மற்றும் வேள்விகளை ஒருபோதும் செய்யாதோர் கள்வர்களுக்கு இணையாகக் கருதப்படுவதால், ஒரு க்ஷத்திரியன் அவர்களின் செல்வத்தைக் கைப்பற்றலாம்.(2) –

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், அரசுரிமை தொடர்புடைய இன்பங்கள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்குச் சொந்தமானவையே. பூமியின் செல்வங்கள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்குச் சொந்தமானவையேயன்றி வேறு எவருக்கும் அல்ல.(3) அந்தச் செல்வத்தை க்ஷத்திரியன், தன் படைகளைப் பராமரிக்கவும், வேள்விகளைச் செய்யவும் பயன்படுத்த வேண்டும். எந்தப் பயனும் இல்லாத செடிகொடிகளைப் பறித்து, உணவாகப் பயன்படக்கூடிய காய்கறிகளைச் சமைப்பதற்காக அவற்றை மனிதர்கள் எரிக்கின்றனர்[1].(4)தெளிந்த நெய் ஆகுதிகளின் மூலம் தேவர்கள், பித்ருக்கள் மற்றும் மனிதர்களுக்கு உணவளிக்காதவனின் செல்வம் பயனற்றது என்று கடமைகளை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(5) ஓ! மன்னா, ஓர் அறம்சார்ந்த மன்னன் இத்தகையோரின் செல்வத்தைக் கைப்பற்ற வேண்டும். அந்தச் செல்வத்தைக் கொண்டு பெரும் எண்ணிக்கையிலான நன்மக்களை நிறைவுசெய்ய முடியும். எனினும், அவன் செல்வத்தைத் தன் கருவூலத்தில் பதுக்கி வைக்கக் கூடாது.(6)

தீயோரிடம் இருந்து செல்வத்தை அடைந்தும், பறித்தும் நல்லோருக்குக் கொடுப்பதில் தன்னைக் கருவியாக்கிக் கொள்ளும் ஒருவன், மொத்த அறநெறிகளையும் அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(7) காய்கறிப் பொருட்கள் படிப்படியாக வளர்வது காணப்படுவதைப் போலவே மன்னன் தன் சக்தியின் அளவுக்கேற்ப, தன் படையெடுப்புகளை அடுத்த உலகிற்கும் நீட்டிக்க வேண்டும். போதுமான எந்தக் காரணமுமின்றி எறும்புகள் வளர்வது காணப்படுவதைப் போலவே, வேள்வியும் எந்தப் போதுமான காரணமும் இன்றியே எழுகிறது[2].(8)பால் கறக்கப்படும்போது) பசுக்கள் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உடல்களில் இருந்து ஈக்கள், பூச்சிகள், எறும்புகள் ஆகியன விரட்டப்படுவதைப் போலவே வேள்வி செய்வதில் வெறுப்புள்ள மனிதர்கள் அனைவரும் நாட்டில் இருந்து விரட்டப்பட வேண்டும். இஃது அறநெறிக்கு இசைவானதே.(9) பூமியில் கிடக்கும் புழுதியானது, இரு கற்களுக்கிடையே அரைக்கப்படும்போது, மேலும் மேலும் நுண்ணியதாவதைப் போலவே, அறநெறி குறித்து மேலும் மேலும் சிந்தித்து விவாதிக்கப்படும்போதும் அது மேலும் மேலும் நுட்பமடைகிறது” என்றார் {பீஷ்மர்}.(10)

சகுல மீன்கள்! – சாந்திபர்வம் பகுதி – 137-வரப்போகும் ஆபத்திலிருந்து விடுபடத்தக்க வழிமுறைகளை முன்பே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குச் சகுல மீன்களின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “எதிர்காலத்துக்குத் தேவையானதைக் கொடுப்பவன், விழித்த மனம் {நேரத்திற்கேற்ற நுண்ணறிவை / சமயோசித புத்தியைக்} கொண்டவன் ஆகிய இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனினும், காரிய தாமதம் செய்யும் மனிதன், தொலைந்து போகிறான்.(1) இது தொடர்பானதும், செயல்படும் வழியைத் தீர்மானிக்கும் காரியத்தில் காலதாமதம் செய்யும் ஒரு மனிதனைக் குறித்ததுமான பின்வரும் சிறந்த கதையைக் கவனமாகக் கேட்பாயாக.(2)

வெகு ஆழமில்லாததும், மீன்கள் நிறைந்ததுமான ஒரு தடாகத்தில் {குட்டையில்}, நண்பர்களும், நிலைத்த தோழர்களுமான மூன்று சகுல[1] மீன்கள் வசித்து வந்தன.(3) அந்த மூன்றில் ஒன்று, முன்னறிவு கொண்டதாகவும், வரப்போவதற்கு {எதிர்காலத்திற்குத்} தேவையானதை எப்போதும் தர {செய்ய} விரும்புவதகாவும் இருந்தது. மற்றொன்று பெரும் விழிப்புடைய மனத்தைக் கொண்டிருந்தது. மூன்றாவது {எதிலும்} காலதாமதம் செய்வதாக இருந்தது.(4)

ஒரு நாள் அத்தடாகத்திற்கு வந்த குறிப்பிட்ட மீனவர்கள், பல்வேறு வடிகால்களின் மூலம் அதில் இருந்த நீரை ஒரு தாழ்வான பகுதிக்கு வடியச் செய்தார்கள்.(5) முன்னறிவு கொண்ட மீனானது, தடாகத்தின் நீர் படிப்படியாகக் குறைவதைக் கண்டு, ஆபத்தான அச்சந்தர்ப்பத்தில் தன் தோழர்கள் இருவரிடமும்,(6) “இந்தத் தடாகத்தில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பேராபத்து நேரப்போகிறது. நம் பாதை தடைபடும் முன்னர் வேகமாக நாம் வேறு ஏதாவது இடத்திற்குச் சென்று விடுவோம்.(7) நல்ல கொள்கையின் {நீதியின்} துணையுடன் எதிர்காலத் தீமையைத் தடுப்பவன், பயங்கர ஆபத்துகளுக்கு ஒருபோதும் ஆட்படமாட்டான். என் ஆலோசனைகள் உங்களிடம் மேலோங்கட்டும். நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டுச் செல்வோமாக” என்றது.(8)

அப்போது அந்த மூன்றில் காலத் தாமதம் செய்வது, “நன்றாகச் சொன்னாய். எனினும், இத்தகு அவசரத்திற்கு எந்தத் தேவையுமில்லை. இஃதுவே என் திட்டமான கருத்தாகும்” என்றது[2].(9)விழித்த மனம் கொண்டதாகக் குறிப்பிடப்பட்ட மற்றொரு மீனானது, காலதாமதம் செய்யும் தன் தோழனிடம், “எதற்கான நேரமும் வாய்க்கும்போது, கொள்கையின்படி அதற்குரியதைத் தர {நேரத்திற்குத் தகுந்ததைச் செய்ய} நான் ஒருபோதும் தவறியதில்லை” என்றது[3].(10)முன்னறிவையும், குறிப்பிடத்தக்க நுண்ணறிவையும் கொண்டது {மீனானது}, தன் தோழர்கள் இருவரின் பதில்களையும் கேட்டு, ஓர் ஓடையின் {வாய்க்காலின்} வழியாக உடனடியாகப் புறப்பட்டு மற்றொரு ஆழமான தடாகத்தை அடைந்தது.(11)

நீர் வற்றியதைக் கண்ட மீனவர்கள், பல்வேறு வழிமுறைகளின் மூலம் எஞ்சியிருந்த மீன்களை அடைத்தனர்.(12) எஞ்சியிருக்கும் குறைந்த அளவு தண்ணீரை அவர்கள் கலக்கியபோது, காலதாமதம் செய்யும் சகுலம் {மீன்} மற்ற மீன்களுடன் சேர்ந்து {அவர்களிடம்} பிடிபட்டது.(13)

நீண்ட கயிறுகளைக் கொண்டு, தாங்கள் பிடித்த மீன்களை மீனவர்கள் கட்டியபோது, விழித்த மனம் {சமயோசித புத்தி} படைத்த சகுலம், அவ்வாறு கட்டப்பட்டவற்றோடு {மீன்களோடு} தன்னைத் திணித்துக் கொண்டு தான் பிடிபட்டதாகக் காட்டிக் கொள்வதற்காகக் கயிற்றைக் கடித்துக் கொண்டு, அவற்றுக்கு மத்தியில் அமைதியாகக் கிடந்தது. மீனவர்கள், கயிற்றோடு கட்டப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் பிடிபட்டிருப்பதாகக் கருதினர்.(14,15) பிறகு அவர்கள், அவற்றைக் கழுவுவதற்காக ஆழமான நீர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். சரியாக அந்த நேரத்தில், விழித்த மனம் படைத்த சகுலம், கயிற்றை விட்டு விரைவாகத் தப்பிச் சென்றது.(16)

எனினும், காலதாமதம் செய்த மீனானது, மடமை கொண்டதாகவும், அறிவற்றதாகவும், புத்தியற்றதாகவும் இருந்ததால், தப்பிக்க இயலாமல் மரணத்தைச் சந்தித்தது.(17)

இவ்வாறு, அந்தக் காலதாமதம் செய்யும் மீனைப் போலவே புத்தியில்லாத ஒவ்வொருவரும், ஆபத்துக் காலத்தில் தப்பிக்க இயலாமல் அழிவைச் சந்திக்கிறார்கள்.(18) மேலும், எந்த மனிதன் தன்னைப் புத்திசாலியாகக் கருதிக் கொண்டு, சரியான நேரத்தில் தனக்கான நன்மையை நாடவில்லையோ, அவன் {மேலே குறிப்பிடப்பட்ட} விழித்த மனம் கொண்ட சகுலத்தைப் போலவே பேராபத்துக்கு உள்ளாவான் {அப்போது அவன் விழித்த மனத்துடன் இருந்தால் தப்புவான்}.(19) எனவே, முன்னறிவு கொண்டவன், விழித்த மனம் கொண்டவன் ஆகிய இருவர் மட்டுமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்வார்கள்.(20)

காஷ்டை, கலை, மாதம், முகூர்த்தம், பகல், இரவு, லவம், மாதம், அரைமாதம் {பிறைநாட்கள்}, ஆறு பருவகாலங்கள் {ருது}, கல்பம், வருடம் என்று காலம் பல்வேறு பிரிவுகளாக இருக்கிறது.(21) பூமியின் பிரிவுகளே இடம் என்றழைக்கப்படுகிறது. காலம் கண்ணுக்குத் தெரியாதது. எந்தப் பொருள் அல்லது எந்த நோக்கத்தின் வெற்றியைப் பொறுத்தவரையிலும், மனம் அதைக் குறித்து எவ்வகையில் நினைக்க நிறுவப்பட்டுள்ளதோ, அந்த வகையிலேயே அஃது {வெற்றி} அடையப்படுகிறது, அல்லது அடையப்படாமல் போகிறது.(22) 

முன்னறிவு கொண்டவன், விழித்த மனம் கொண்டவன் ஆகிய இந்த இருவரே, அறம் பொருள் விடுதலை {முக்தி / மோட்சம்} குறித்த அனைத்து உடன்பாடுகளிலும் முதன்மையான மனிதர்கள் என்று முனிவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.(23) எனினும், சிந்தித்து, ஆய்வு செய்த பிறகே அனைத்தையும் செய்யும் ஒருவன், அவனுடைய நோக்கங்களை {இன்பங்களை} நிறைவேற்றும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு, எப்போதும் அவற்றை அதிகமாக அடைவதில் வெல்கிறான். மேலும், காலம் மற்றும் இடத்திற்குரிய மதிப்புடன் செயல்படுபவர்களோ, வெறுமனே முன்னறிவும், விழித்த மனமுன் கொண்ட மனிதர்களைவிடச் சிறந்த விளைவுகளை அடைவதில் வெல்வார்கள்” என்றார் {பீஷ்மர்}.(24)

பூனையும், எலியும் – நட்பும், பகையும்! – சாந்திபர்வம் பகுதி – 138-ஆபத்துக் காலத்தில் எவ்வாறு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்குப் பூனை மற்றும் எலியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக்குலத்தின் காளையே, எதிர்காலத்திற்குத் தேவையானதைத் தருவதும் {அடைவதும்}, அவசர காலங்களை எதிர்கொள்வதுமான நுண்ணறிவே எங்கும் மேலானது, அதே வேளையில், காலதாமதம் அழிவையே கொண்டு வரும் என்று நீர் சொல்கிறீர்.(1) ஓ! பாட்டா, சாத்திரங்களை நன்கறிந்தவனும், அறம் மற்றும் பொருளை நன்கு அறிந்தவனுமான மன்னன், எந்த மேன்மையான நுண்ணறிவின் துணையுடன் இருந்தால், பல எதிரிகளால் சூழப்படும்போதும் கலங்காமல் இருப்பான் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, இதையே நான் கேட்கிறேன். இது குறித்து உரையாடுவதே உமக்குத் தகும்.(3) ஒரு மன்னன் பல எதிரிகளால் தாக்கப்படும்போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு இசைவாக அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(4) ஒரு மன்னன் துயரில் வீழும்போது, கடந்த காலத்தில் அவனது செயல்களால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான எதிரிகள், அவனுக்கு எதிராகப் படையெடுத்து அவனை வெல்ல முனைவார்கள்.(5)

பலவீனனும், தனியொருவனுமான மன்னன், அணிதிரண்டிருக்கும் பலமிக்க மன்னர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்து அறைகூவியழைக்கப்படும்போது எவ்வாறு தன் தலையை உயர்த்த முடியும்?(6) அத்தகைய நேரங்களில் ஒரு மன்னன் நண்பர்களையும், பகைவர்களையும் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?((7) நண்பர்களுக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டவர்கள் அவனுடைய எதிரிகளாகும்போது, ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைய என்ன செய்ய வேண்டும்?(8) அவன் எவனிடம் போரிட வேண்டும்? எவனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அவன் பலவானாகவே இருப்பினும், எதிரிகளுக்கு மத்தியில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?(9) ஓ! எதிரிகளை எரிப்பவரே, அரச கடமைகளைச் செயல்படுத்துவது தொடர்பான அனைத்துக் கேள்விகளிலும் இதையே நான் உயர்ந்ததாகக் கருதுகிறேன். இந்தக் கேள்விக்கான பதிலைக் கேட்கக்கூடியவர்கள் சிலரே, பதிலளிக்கவோ, உண்மையில் உறுதியான பற்று கொண்டவரும், அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்தியவருமான சந்தனுவின் மகன் பீஷ்மரைத் தவிர வேறு யாருமில்லை. ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, இதைக் குறித்துச் சிந்தித்து, என்னுடன் உரையாடுவீராக” என்று கேட்டான்.(11)

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, உனக்குத் தகுந்த கேள்வியே இஃது. இதற்கான பதில் பேரின்பம் நிறைந்ததாகும். ஓ! மகனே, ஓ! பாரதா, துன்ப காலங்களில் {ஆபத்துக் காலங்களில்} நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவையும், பொதுவாக அறியப்படாதவையுமான கடமைகள் அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(12) ஓர் எதிரி நண்பனாகக் கூடும், ஒரு நண்பனும் எதிரியாகக் கூடும். சூழ்நிலைகளின் தொகையால் உண்டாகும் மனிதச் செயற்பாடுகளின் போக்கு, மிக மிக நிச்சயமற்றதாகும்.(13) எனவே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதைப் பொறுத்தவரையில், காலம் மற்றும் இடத்துக்குத் தகுந்த தேவைகளில் அவசிய கவனத்தைச் செலுத்தி, ஒருவன் தன் எதிரிகளை நம்ப வேண்டும், அல்லது போரிட வேண்டும்.(14) ஒருவன் தன்னால் செய்ய முடிந்ததில் சிறந்ததை வெளிப்படுத்தி, நலம் நாடும் விருப்பம் கொண்ட நுண்ணறிவு மிக்கவர்கள் மற்றும் அறிவுமிக்கவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். ஓ! பாரதா, ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடியாத போது, எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(15) எதிரிகளுடன் ஒருபோதும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளாத மூட மனிதன், ஒருபோதும் எதையும் வெல்லவோ, பிற முயற்சிகளின் எந்தக் கனிகளையும் அடையவோ மாட்டான்.(16) மேலும், சூழ்நிலைகளை முழுமையாகக் கருத்தில் கொண்டு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, நண்பர்களிடம் சச்சரவில் ஈடுபடுபவன் பெரும் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(17) இது தொடர்பாக ஓர் ஆலமரத்தினடியில் ஒரு பூனைக்கும், எலிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது”.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஒரு பெரிய காட்டுக்கு மத்தியில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. பல வகைக் கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த அது, பல்வேறு வகைப் பறவைகளுக்கான ஓய்விடமாக இருந்தது.(19) அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளுடன் கூடிய பெரும் தண்டை {நடுமரத்தை} அது கொண்டிருந்தது. காண்பதற்கு இனிமையான அதன் நிழல் பெரும் புத்தணர்வை அளிப்பதாக இருந்தது. அது காட்டின் மத்தியில் நின்று கொண்டிருந்தது, மேலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த விலங்குகளும் அதில் வாழ்ந்து வந்தன.(20) பலிதன் என்ற பெயருடையதும், பெரும் ஞானம் கொண்டதுமான ஓர் எலி, அந்த மரத்தினடியில் நூற்றுக்கணக்கான வாயில்களைக் கொண்ட ஒரு பொந்தை அமைத்து வாழ்ந்து வந்தது.(21) லோமசன் என்ற பெயரைக் கொண்ட ஒரு பூனை, அந்த மரத்தின் கிளைகளில் தினமும் பெரும் எண்ணிக்கையிலான பறவைகளை விழுங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.(22) சில காலம் கழித்து, அந்தக் காட்டு வந்த சண்டாளன் ஒருவன், தனக்கென அங்கே ஒரு குடிலைக் கட்டிக் கொண்டான். அவன், ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் சூரியன் மறைந்த பிறகு தனது கண்ணிகளை {உயிரினங்களைச் சிக்க வைக்கும் பொறிகளை} பரப்பினான். உண்மையில் தோல் இழைகளால் அமைக்கப்பட்ட தன் வலைகளைப் விரித்துவிட்டு, இரவை மகிழ்ச்சியாக உறங்கிக் கழித்து, நாளின் விடியலில் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தான்.(24) ஒவ்வோர் இரவிலும் பல்வேறு வகை விலங்குகள் அவனது கண்ணிகளில் சிக்கன. ஒரு நாள், ஒரு கணக் கவனக்குறைவால் பூனை அந்தக் கண்ணியில் சிக்க நேர்ந்தது.(25)

ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, எலியான பலிதன், எக்காலத்திலும் எலிகளினத்தின் எதிரியும், தனது பகைவனுமாக இருந்த பூனை அந்த வலையில் அகப்பட்டதும், பொந்தைவிட்டு வெளியே வந்து, அச்சமில்லாமல் திரியத் தொடங்கியது.(26) உணவைத் தேடி நம்பிக்கையுடன் காட்டில் திரிந்து வந்த அந்த எலி, சிறிது நேரம் கழித்து (அந்தச் சண்டாளன் கண்ணியாகப் பரப்பி வைத்திருந்த) இறைச்சியைக் கண்டது.(27) அந்தக் கண்ணியிடம் சென்ற அந்தச் சிறு விலங்கு {எலி} அந்த இறைச்சியை உண்ணத் தொடங்கியது. மனத்திற்குள் சிரித்துக் கொண்டே, ஆதரவற்ற நிலையில் வலையில் சிக்கியிருக்கும் தன் எதிரியைத் தாண்டிச் சென்றது.(28) இறைச்சி உண்ணும் நோக்கத்தில், தனக்கு வரவிருக்கும் ஆபத்தை அது கவனிக்கவில்லை. அந்த இடத்திற்கு வந்திருந்த ஒரு பயங்கரமான எதிரியின் மேல் திடீரென அது தன் கண்களைச் செலுத்தியது(29) அந்த எதிரியானது, அமைதியற்றதும், தாமிரக் கண்களைக் கொண்டதும், ஹரிதன் என்ற பெயரைக் கொண்டதுமான கீரிப்பிள்ளையேயன்றி வேறேதும் அல்ல. பாதாளப் பொந்துகளில் வாழும் அதன் உடல், நாணல் மலருக்கு ஒப்பானதாக இருந்தது.(30)எலியின் மணத்தால் அந்த இடத்திற்கு இழுத்துவரப்பட்ட அந்த விலங்கு {கீரி}, தன் இரையை விழுங்குவதற்காகப் பெரும் வேகத்தில் அங்கே வந்தது. அது தன் தலையை உயர்த்தி இடுப்பை நிமிர்த்தி நின்று, தன் கடைவாயை நாவால் நனைத்துக் கொண்டிருந்தது.(31) அதே நேரத்தில் அந்த எலி, அந்த மரப்பொந்துகளில் வாழ்ந்து வரும் மற்றொரு எதிரியானது அந்த ஆலமரத்தின் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டது. இரவு உலாவியும், கூரிய அலகைக் கொண்டதும், சந்திரகன் என்ற பெயரைக் கொண்டதுமான அஃது ஓர் ஆந்தையாகும்.(32) கீரி மற்றும் ஆந்தை ஆகிய இரண்டின் பார்வைக்குத் தான் இலக்காகியிருப்பதைக் கண்ட எலியானது, பேரச்சத்துடன் இந்த வகையில் சிந்திக்கத் தொடங்கியது:(33) ”அனைத்துப் பக்கங்களிலும் அச்சம் இருக்கும்போதும், காலனே முகத்துக்கு நேராக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுமான இத்தகைய பேராபாத்துக் காலத்தில், தன் நன்மையை விரும்பும் ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும்?” என்று நினைத்தது.(34)

அனைத்துப் பக்கங்களிலும் ஆபத்தால் சூழப்பட்டு, அனைத்துத் திசைகளிலும் அச்சத்தைக் கண்ட அந்த எலியானது, தன் பாதுகாப்புக்கான அச்சத்தால் நிறைந்து, ஒரு பெரும் தீர்மானத்தைச் செய்தது:(35) “ஒருவன் நூற்றுக்கணக்கான வழிமுறைகளைக் கொண்டு, எண்ணற்ற ஆபத்துகளை விரட்டி, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்போது அனைத்துப் பக்கங்களிலும் ஆபத்து என்னைச் சூழ்ந்துள்ளது.(36) போதுமான முன்னெச்சரிக்கையின்றி இந்தக் கண்ணியில் இருந்து நான் தரைக்குச் சென்றால், கீரியானவன் நிச்சயம் என்னைப் பிடித்து விழுங்கிவிடுவான். இந்தக் கண்ணியிலேயே நான் இருந்தாலோ, இந்த ஆந்தையானவன் என்னை நிச்சயம் பிடித்துவிடுவான். பூனையானவன் வலையில் இருந்து விடுபடுவதில் வென்றால், அவனும் நிச்சயம் என்னை விழுங்கிவிடுவான்.(37) எனினும், நம்மைப் போன்ற நுண்ணறிவு மிக்க ஒருவன், தன் அறிவை இழப்பது முறையாகாது. எனவே, உரிய வழிமுறைகள் மற்றும் நுண்ணறிவின் துணை கொண்டு, என் உயிரைப் பாதுகாப்பதற்கான சிறந்த முயற்சியை நான் செய்வேன்.(38) நுண்ணறிவு மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், கொள்கையறிவியலை அறிந்தவனுமான ஒருவன், தன்னை அச்சுறுத்தும் ஆபத்து எவ்வளவு பெரியதாக, பயங்கரமானதாக இருந்தாலும், ஒருபோதும் அதில் மூழ்கிப்போக மாட்டான்.(39) எனினும் தற்போது, இந்தப் பூனையானவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை. அவன் என் எதிரிதான். ஆனால் அவனும் துயரில் இருக்கிறான். நான் அவனுக்குச் செய்ய இருக்கும் தொண்டு மிகப் பெரியதாகும்.(40)

மூன்று எதிரிகளால் இரையாக்கப்பட முயலப்படும் நான் இப்போது என் உயிரைக் காத்துக் கொள்ள எவ்வாறு செயல்பட வேண்டும்? அந்த எதிரிகளில் ஒருவனான பூனையின் பாதுகாப்பையே இப்போது நான் நாட வேண்டும்.(41) இந்த மூவரிடம் இருந்தும் நான் தப்பும் வகையில், கொள்கை அறிவியலின் துணைகொண்டும், என் நுண்ணறிவைப் பயன்படுத்தியும், பூனையின் நன்மைக்கான ஆலோசனையை அவனிடம் கூறப் போகிறேன்.(42) பூனையே என் மிகப் பெரும் எதிரியாக இருந்தாலும், இப்போது அவன் வீழ்ந்திருக்கும் துயரானது மிகப் பெரியதாகும். இந்த மூட விலங்கைத் தனது நன்மைக்கான காரியங்களைப் புரிந்து கொள்ள வைக்க முடியுமா என்று நான் முயற்சிக்கப்போகிறேன். இத்தகைய துயரில் வீழ்ந்திருக்கும் அவன், என்னுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.(43) பலவானால் பீடிக்கப்படும் ஒருவன், எதிரியுடன் கூட அமைதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். துயரில் வீழ்ந்து தன் உயிருக்கான பாதுகாப்பை நாடும் ஒருவனுடைய நடத்தை இவ்வாறே இருக்க வேண்டும் என்று கொள்கை அறிவியலின் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.(44) மூடனை நண்பனாகக் கொண்டிருப்பதைவிட, கல்விமானை எதிரியாகக் கொண்டிருப்பதே சிறந்தது. என்னைப் பொறுத்தவரையில், என் உயிரானது என் எதிரியான அந்தப் பூனையிடமே மொத்தமாக இருக்கிறது.(45) நான் இப்போது அந்தப் பூனையானவனிடம், அவனுடைய விடுதலையைக் குறித்துப் பேச வேண்டும். ஒருவேளை இந்தக் கணத்தில், பூனையை நுண்ணறிவுமிக்க, கல்விமானான எதிரியாகக் கொள்வதில் எந்தப் பிழையுமில்லை” என்று தீர்மானித்தது. இவ்வாறே எதிரிகளால் சூழப்பட்ட அந்த எலி சிந்தித்துக் கொண்டிருந்தது.(46)

பொருள் அறிவியலையும், எப்போதும் போரிடத் தீர்மானிக்க வேண்டும், எப்போது அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை நன்கறிந்ததுமான எலி, இவ்வாறு சிந்தித்து, அந்தப் பூனையிடம் மென்மையாக,(47) “ஓ! பூனையே, நான் நட்பால் உன்னிடம் பேசுகிறேன். நீ உயிருடன் இருக்கிறாயா? நீ வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நம் இருவரின் நன்மையையும் விரும்புகிறேன்.(48) ஓ இனிமையானவனே, நீ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நீ மகிழ்ச்சியுடன் வாழ்வாய். உண்மையில், நீ என்னைக் கொல்லாமல் இருந்தால், நான் உன்னை மீட்பேன்.(49) நீ தப்பிக்கவும், நான் பெரும் நன்மையை அடையவும், ஒரு சிறந்த தகுமுறை இருப்பதாக எனக்குத் தெரிகிறது.(50)

உனக்காகவும், எனக்காகவும் மெய்யுறுதியுடன் சிந்தித்து, நம்மிருவருக்கும் நன்மையைச் செய்யும் தகுமுறை ஒன்றை நான் கண்டடைந்திருக்கிறேன்.(51) கீரி மற்றும் ஆந்தை ஆகிய இருவரும், தீய நோக்கத்துடன் காத்திருக்கின்றனர். ஓ! பூனையே, அவ்விருவரும் என்னைத் தாக்காத மட்டுமே என் உயிர் பாதுகாப்புடன் இருக்கும்.(52) அந்த மரத்தின் கிளையில் இருக்கும் இழிந்த ஆந்தையானவன், அமைதியற்ற பார்வையுடனும், பயங்கர அலறல்களுடனும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் நான் பேரச்சத்துடன் இருக்கிறேன்.(53) நல்லோரைப் பொறுத்தவரையில் எட்டு அடி {நடையடி} கொண்டதே நட்பு[1]. ஞானம் கொண்டவனாக நீ என் நண்பனாவாய். நான் உன்னிடம் நண்பனாக நடந்து கொள்வேன். உனக்கு இப்போது எந்த அச்சமும் தேவையில்லை.(54) ஓ! பூனையே என் உதவி இல்லாமல் உன்னால் இந்த வலையைக் கிழிக்க முடியாது. எனினும், நீ என்னைக் கொல்லாதிருந்தால், உனக்குத் தொண்டாற்ற நானே வலையை அறுப்பேன்.(55)நீ இந்த மரத்தில் வாழ்ந்து வந்தாய், நானும் அதனடியில் வாழ்ந்து வந்தேன். நாமிருவரும் இங்கே நீண்ட வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். இவை யாவற்றையும் நீ அறிவாய்.(56) ஒருவராலும் நம்பப்படாதவன், ஒருவரையும் நம்பாதவன் ஆகியோரை ஞானிகள் ஒருபோதும் மெச்சுவதில்லை. இருவரும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருப்பார்கள்.(57) இந்தக் காரணத்திற்காக, நம் இருவருக்குள்ளும் அன்பு பெருகட்டும், நம் இருவருக்குள் ஒற்றுமை ஏற்படட்டும். வாய்ப்பு கடந்த பிறகு செய்யப்படும் முயற்சியை ஞானிகள் மெச்சுவதில்லை.(58) இது போன்ற ஒரு புரிதல் நமக்குள் ஏற்படுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதை அறிந்து கொள்வாயாக. நீ வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் வாழ வேண்டும் என்று நீயும் விரும்ப வேண்டும்.(59) மனிதன் மரத்தை அக்கரைக்கு எடுத்துச் செல்வதையும், மரம் மனிதனை அக்கரைக்கு இட்டுச் செல்வதையும் காண்கிறோம்.(60) அதைப் போலவே, நமது உடன்படிக்கை நம்மிருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நான் உன்னைக் காப்பேன், நீயும் என்னைக் காக்க வேண்டும்” என்றது.(61) இரண்டிற்கும் நன்மையை ஏற்படுத்துபவையும், அறிவு நிறைந்தவையும், முற்றிலும் ஏற்புடையவையுமான இவ்வார்த்தைகளைச் சொன்ன பலிதன் என்ற அந்த எலி, ஒரு பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தது.(62)

எலி சொன்னவையும், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டவையும், அறிவு நிறைந்தவையும், மிகவும் ஏற்புடையவையுமான இந்த வார்த்தைகளைக் கேட்டதும், நல்ல கருத்து முடிவையும், முன்னறிவையும் கொண்டதுமான பூனையானது, பதிலுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னது.(63) பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், நாவன்மை கொண்டதுமான பூனை, தன் நிலையை நினைத்துப் பார்த்து, அவ்வார்த்தைகளைச் சொன்ன எலியைப் புகழ்ந்து, மென்மையான வார்த்தைகளைக் கொண்டு அதனிடம் பதிலுரைத்தது.(64) கூரிய பற்களைக் கொண்டதும், வைடூரியக் கற்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டதும், லோமசன் என்றழைக்கப்பட்டதுமான அந்தப் பூனை, எலியை மெதுவாகப் பார்த்துப் பின்வருமாறு பதிலளித்தது:(65) “ஓ! இனியவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன். நான் வாழ வேண்டும் என்று விரும்பும் நீ அருளப்பட்டிருப்பாயாக. நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்று நீ கருதுபவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்வாயாக.(66) நான் நிச்சயம் பெருந்துயரில் இருக்கிறேன். நீயும் பெருந்துயரத்திலேயே இருக்கிறாய். தாமதமில்லாமல் நமக்குள் ஓர் உடன்பாடு உண்டாகட்டும்.(67) ஓ! பலமிக்கவனே, நம் காரிய நிறைவேற்றத்திற்குத் தேவையானதை வாய்ப்பு வரும்போது நான் செய்வேன். நீ என்னைக் காத்தால், உன் தொண்டு ஒன்றுமில்லாமல் போகாது.(68) நான் என்னை உன் கரங்களில் ஒப்படைக்கிறேன். நான் உன்னிடம் அர்ப்பணிப்புக் கொள்கிறேன். நான் உன்னிடம் ஒரு சீடனைப் போலக் காத்திருந்து உனக்குத் தொண்டு புரிவேன். உன் பாதுகாப்பை நாடும் நான் எப்போதும் உன் கட்டகளைகளுக்குக் கீழ்ப்படிவேன்” என்றது.(69)

இவ்வாறு சொல்லப்பட்ட பலிதன் என்ற எலி, முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் இருந்த பூனையிடம், முக்கியத்துவம் வாய்ந்தவையும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவையுமான இவ்வார்த்தைகளைப் பதிலுக்குச் சொன்னது:(70) “நீ மிகவும் பெருந்தன்மையுடன் பேசினாய். உன்னைப் போன்ற ஒருவனிடம் இதை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது. எனக்குத் தெரிந்து நம் இருவருக்கும் நன்மையை உண்டாக்கப்போகும் தகுமுறையை உனக்கு வெளிப்படுத்துகிறேன், கேட்பாயாக.(71) நான் உன் உடலின் அடியில் பதுங்கிக் கொள்கிறேன். நான் அந்தக் கீரியிடம் பெரும் அச்சமடைந்திருக்கிறேன். நீ என்னைக் காப்பாயாக. என்னைக் கொல்லாதிருப்பாயாக. நான் உன்னைக் காப்பதற்கு இயன்றவனாவேன்.(72) அந்த ஆந்தையும் என்னை இரையாகக் கொள்ள விரும்புவதால், அந்த அற்பனிடம் இருந்தும் என்னைக் காப்பாயாக. நீ சிக்கியிருக்கும் கயிற்றை நான் அறுப்பேன். ஓ! நண்பா, உண்மையின் பேரில் நான் உறுதிகூறுகிறேன்” என்றது.(73)

அறிவுநிறைந்த, நீதிமிக்க இவ்வார்த்தைகளைக் கேட்ட லோமசன், மகிழ்ச்சியால் நிறைந்து, தன் கண்களைப் பலிதன் மேல் செலுத்தி, நல்வரவு கூறி அதனை மெச்சியது.(74) பலிதனை மெச்சிய பூனை, தன் நட்பை வெளிப்படுத்தி, ஒரு கணம் சிந்தித்து, நேரமெதையும் இழக்காமல் மகிழ்ச்சியாக,(75) “என்னிடம் விரைந்து வா. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ என் உயிரைப் போன்ற அன்புக்குரிய நண்பனாவாய். ஓ! பெரும் ஞானியே, உன் அருளால் நான் என் உயிரைக் கிட்டத்தட்ட மீண்டும் அடைந்துவிட்டேன்.(76) என் சக்திக்குத் தக்க நான் இப்போது உனக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சொல்வாயாக, நான் அதைச் செய்வேன். ஓ! நண்பா, நமக்குள் அமைதி நிலைக்கட்டும்.(77) ஆபத்திலிருந்து விடுபட்டதும், என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நான் உனக்கு ஏற்புடைய, நன்மையான அனைத்தையும் செய்வேன்.(78) ஓ! இனியவனே, இத்துயரில் இருந்து விடுபட்டதும், நான் நிச்சயம் உன்னை மகிழ்ச்சிப்படுத்த முனைந்து, வழிபட்டு, உன் தொண்டுக்கான பதிலுதவியை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் செய்வேன்.(79) ஒருவன், அபரிமிதமான தொண்டுகளைப் பதிலுக்குச் செய்தாலும், முதல் முறையாகச் செய்யப்படும் நன்மைக்கு அஃது இணையாகாது. முன்னவன் தான் பெற்ற தொண்டுகளுக்காகவே அந்தத் தொண்டுகளைச் செய்கிறான். எனினும், அத்தகு நோக்கமேதும் இல்லாமல் செயல்பட்ட பின்னவனே கௌரவிக்கப்பட வேண்டும்” என்றது”.(80)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தப் பூனைக்குத் தன்னலன்களை இவ்வாறு புரிய வைத்த அந்த எலி, தன் எதிரியின் உடலுக்கடியில் நம்பிக்கையுடன் பதுங்கியது.(81) அறிவு கொண்டதும், பூனையால் இவ்வாறு உறுதிகூறப்பட்டதுமான எலியானது, தன் தந்தை, அல்லது தாயின் மடியில் இருப்பதைப் போல அந்தப் பூனையின் மார்புக்கடியில் நம்பிக்கையுடன் தன்னைக் கிடத்திக் கொண்டது.(82) இவ்வாறு அந்தப் பூனையின் உடலுக்கடியில் பதுங்கிய எலியைக் கண்ட கீரியும், ஆந்தையும், தங்கள் இரையைப் பிடிப்பதில் நம்பிக்கையிழந்தன.(83) உண்மையில், அந்த எலிக்கும், பூனைக்குமிடையிலான நெருக்கத்தைக் கண்ட ஹரிதனும், சந்திரகனும், அச்சமடைந்து, ஆச்சரியத்தால் நிறைந்தன.(84) அவை இரண்டும் பலத்தையும், நுண்ணறிவையும் கொண்டிருந்தன. தங்கள் இரையைப் பிடிப்பதில் நுண்ணறிவுமிக்கக் கீரியும், ஆந்தையும் இரை அருகில் இருந்தாலும், எலி மற்றும் பூனைக்கிடையிலான உடன்பாட்டில் இருந்து அவற்றைப் பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தன.(85) உண்மையில், அந்தப் பூனையும் எலியும் தங்கள் தகுமரபின் முடிவுகளை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக, கீரியும், ஆந்தையும் அந்த இடத்தைவிட்டு அகன்று தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பின.(86)

அதன்பிறகு, காலம் மற்றும் இடத்தின் தேவைகளை அறிந்த பலிதன் என்ற எலி, பூனையின் உடலுக்கடியில் கிடந்து கொண்டே, அந்தக் கயிற்றின் இழைகளை மெதுவாக அறுக்கத் தொடங்கி, தன் வேலையை முடிக்கச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.(87) தன்னைச் சுற்றியிருக்கும் இழைகளால் துயரடைந்த பூனை, கயிற்றை மெதுவாக அறுத்துக் கொண்டிருக்கும் எலியிடம் பொறுமையை இழந்து கொண்டிருந்தது.(88) எலி மெதுவாக வேலை செய்வதைக் கண்ட பூனை, அப்பணியை முடிப்பதில் அதை விரைவுப்படுத்த விரும்பி,(89) “ஓ! இனியவனே, நீ உன் பணியை எவ்வாறு விரைவாகச் செய்யாமல் இருக்கிறாய்? உன் நோக்கம் நிறைவேறியதும் இப்போது நீ என்னை அலட்சியம் செய்கிறாயா? ஓ! எதிரிகளைக் கொல்பவனே, இந்த இழைகளை வேகமாக அறுப்பாயாக. விரைவில் வேடன் இங்கே வந்துவிடுவான்” என்றது.(90)

பொறுமையிழந்த பூனையால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நுண்ணறிவைக் கொண்டதுமான எலி, அதிக ஞானம் இல்லாததாகத் தெரிந்த அந்தப் பூனையிடம், தன்னலம் நிறைந்த இந்த நன்மையான வார்த்தைகளைச் சொன்னது:(81) “ஓ! இனியவனே, அமைதியாகக் காத்திருப்பாயாக. வேகம் தேவையில்லை. அச்சங்கள் அனைத்தையும் விரட்டுவாயாக. காலத்தின் தேவைகளை நாம் அறிவோம். காலமெதையும் நாம் வீணாக்கவில்லை.(92) முறையற்ற காலத்தில் தொடங்கப்பட்ட செயல் நிறைவடையும்போது ஒருபோதும் பொருளை ஈட்டித்தராது. மறுபுறம், முறையான காலத்தில் தொடங்கப்பட்ட செயலோ, எப்போதும் அற்புதக் கனிகளை உண்டாக்கும்.(93) முறையற்ற காலத்தில் நீ விடுபட்டால், நான் உன்னிடம் பேரச்சத்துடன் நிற்க வேண்டியிருக்கும். எனவே, முறையான காலத்திற்காகக் காத்திருப்பாயாக. ஓ! நண்பா, பொறுமையிழக்காதே.(94) ஆயுதங்களுடன் கூடிய வேடன் இந்த இடத்திற்கு வருவதை நான் கண்டதும், நம் இருவருக்கும் அச்சத்தைக் கொடுக்கும் அந்தக் கணத்தில் நான் இந்த இழைகளை அறுத்துவிடுவேன்.(95) அப்போது விடுபடும் நீ மரத்தின் மீது ஏறுவாய். அந்நேரத்தில், உன் உயிரின் பாதுகாப்பைத் தவிர நீ வேறு எதைக் குறித்தும் சிந்திக்கமாட்டாய்.(96) ஓ! லோமசா, நீ அச்சத்துடன் அவ்வாறு தப்பி ஓடும்போது, நான் என் பொந்துக்குள் நுழைவேன், நீயும் மரத்தின் மீது ஏறிவிடுவாய்” என்றது.(97)

எலியால் சொல்லப்பட்டவையும், தனக்கு நன்மையானவையுமான வார்த்தைகளைக் கேட்டதும், நுண்ணறிவு மற்றும் நாவன்மையைக் கொண்டதும், தன் உயிரைக் காத்துக் கொள்வதில் பொறுமையிழந்ததுமான பூனை, பின் வரும் வார்த்தைகளால் அந்த எலிக்குப் பதிலுரைத்தது. உண்மையில், உடன்பாட்டில் தனக்குரிய பங்கை வேகமாகவும், முறையாகவும் செய்த பூனை, தன் பங்கை விரைவாகச் செய்யாத எலியிடம்,(99) “நான் உன்னைப் பேராபத்தில் இருந்து கணிசமான அளவில் உடனடியாகக் காத்தேன். ஐயோ, நேர்மையானவர்கள் தங்கள் நண்பர்களின் காரியத்தை இவ்வழியில் ஒருபோதும் செய்யமாட்டார்கள். அதைச் செய்யும்போது மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், {தாங்கள் செய்யும்போது} அதை வேறுவகையிலேயே செய்கிறார்கள்.(100) நீ எனக்கு நன்மையானதை மிக வேகமாகச் செய்ய வேண்டும். ஓ! பெரும் ஞானியே, நம்மிருவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் இன்னும் சற்று {விரைவாக} முயற்சிப்பாயாக.(101) மறுபுறம், நம் பழைய பகைமையை நினைத்துக் கொண்டு காலத்தைப் போக்குவாயெனில், ஓ! தீய அற்பனே, அந்த உன் செயலின் விளைவால், உன் வாழ்வு காலத்தையே நீ குறுக்கிக் கொள்வாய்[2].(102) நான் இதற்கு முன்பு அறியாமல் உனக்குத் தீங்கேதும் செய்திருந்தால், அதை நீ உன் நினைவில் கொள்ளாதே. நான் உன்னிடம் மன்னிப்பைக் கோருகிறேன். என்னிடம் நிறைவு கொள்வாயாக” என்றது.(103)பூனை இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நுண்ணறிவும், ஞானமும், சாத்திர அறிவும் கொண்ட எலியானது, அதனிடம் இந்தச் சிறந்த வார்த்தைகளைச் சொன்னது:(104) “ஓ! பூனையே, நீ உன் நோக்கத்தின் முன்னேற்றத்தைக் குறித்துக் கேட்கிறாய். எனினும் நான், என் நோக்கங்களுக்கு இசைவானதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(105) எந்த நட்பில் அச்சம் உண்டோ, எதில் அச்சத்தை விலக்கமுடியாதோ, பாம்பின் நச்சுப் பற்களிடம் இருந்து (பாம்பாட்டியின்) கையைக் காத்துக் கொள்வதைப் போலப் பெரும் எச்சரிக்கையுடன் {அந்த நட்பு} கையாளப்பட வேண்டும்.(106) பலமிக்க ஒருவனிடம் உடன்பாடு கொண்ட ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவில்லையெனில், அந்த உடன்பாடு நன்மைக்குப் பதிலாகத் தீங்கை உண்டாக்கக்கூடும்.(107) ஒருவரும் ஒருவருக்கும் நண்பனுமில்லை; ஒருவரும் ஒருவருக்கும் நலம்விரும்பியுமில்லை; காரிய நோக்கங்களுக்காக மட்டுமே நண்பர்களோ, எதிரிகளோ உண்டாகிறார்கள்.(108) பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் தங்கள் வகையைச் சேர்ந்த காட்டு யானைகளைப் பிடிப்பதைப் போலவே காரியங்களே காரியங்களைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், ஒரு செயலை நிறைவேற்றிய பிறகு, அந்தச் செயலைச் செய்தவன் அரிதாகவே மதிக்கப்படுகிறான். இதன் காரணமாக, ஏதாவதொன்றை மிச்சம் வைத்தே அனைத்துச் செயல்களும் செய்யப்பட வேண்டும்.(109) நான் உன்னை விடுவிக்கும்போது, வேடனிடம் கொண்ட அச்சத்தால் பீடிக்கப்படும் நீ, என்னைப் பிடிக்க நினைக்காமல் உன் உயிரைக் காத்துக் கொள்ளவே தப்பி ஓடுவாய். இன்னும் ஒன்றுதான் {ஓர் இழைதான்} அறுக்கப்படாமல் மிச்சம் இருக்கிறது. அதை நான் வேகமாக அறுத்துவிடுவேன். ஓ! லோமசா, ஆறுதலடைவாயாக” என்றது.(111)

பயங்கர ஆபத்தில் இருந்த அந்த எலியும், பூனையும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, படிப்படியாக இரவு தேய்ந்தது. எனினும், பூனையின் இதயத்தில் பேரச்சம் ஊடுருவியது.(112) இறுதியாகக் காலை விடிந்ததும், பரிகன் என்ற பெயரைக் கொண்ட அந்தச் சண்டாளன் காட்சியில் தோன்றினான். அவனுடைய முகத்தோற்றம் பயங்கரமானதாக இருந்தது. அவனுடைய தலைமுடி கருப்பும், பழுப்புமாக இருந்து. அவனது இடை மிக அகண்டதாகவும், அவனுடைய குணங்கள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. காதிலிருந்து காதுவரை நீண்டிருந்த வாயையும், நீண்ட காதுகளையும் கொண்டிருந்த அவன் அருவருப்பான வடிவத்தைக் கொண்டிருந்தான். ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, நாய்க்கூட்டத்தின் துணையுடன் இருந்தவனும், இரக்கமற்றவனாகத் தெரிந்தவனுமான அந்த மனிதன் காட்சியில் தோன்றினான்.(113,114)

யம தூதனுக்கு ஒப்பான அவனைக் கண்ட பூனை அச்சத்தால் நிறைந்தது. அச்சமடைந்த அது {பூனை எலியிடம்} பலிதனிடம், “நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டது. எலியானது பூனையைப் பற்றி எஞ்சியிருந்த அந்த ஓர் இழையை மிக வேகமாக அறுத்தது. அந்தச் சுருக்கிலிருந்து {கயிற்றிலிருந்து} விடுபட்ட பூனை வேகமாக ஓடிச்சென்று ஆலமரத்தில் ஏறிக் கொண்டது.(116) ஆபத்தான சூழ்நிலையில் இருந்தும், ஒரு பயங்கரமான எதிரியின் முன்னிலையில் இருந்தும் விடுபட்ட பலிதனும், வேகமாகத் தப்பி ஓடி தன் பொந்துக்குள் புகுந்து கொண்டது. அதே வேளையில் லோமசனும் அந்த உயர்ந்த மரத்தில் ஏறியிருந்தது.(117) அனைத்தையும் கண்ட வேடன், தன் வலையை எடுத்தான். நம்பிக்கையிழந்த அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.(118) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அந்தச் சண்டாளன் தன் வசிப்பிடத்திற்கே திரும்பிவிட்டான். பேராபத்தில் இருந்து விடுபட்டு, மிகுந்த மதிப்புமிக்கத் தன் இன்னுயிரைத் திரும்பவும் அடைந்த பூனை, அந்த மரக்கிளைகளில் இருந்து கொண்டு, பொந்துக்குள் இருந்த எலியான பலிதனிடம்,(119) “என்னிடம் ஏதும் உரையாடாமல் நீ திடீரென ஓடிவிட்டாய். நான் எந்தத் தீய நோக்கமும் கொண்டிருப்பதாக நீ ஐயுறவில்லை என நான் நம்புகிறேன். நான் நிச்சயம் நன்றியுடையவனாக இருப்பேன், நீ எனக்குப் பெருந்தொண்டைச் செய்திருக்கிறாய்.(120) என்னில் நம்பிக்கையை ஊட்டி, எனக்கு உயிரையும் கொடுத்த நீ, நண்பர்களாக நட்பின் இனிமையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் என்னை ஏன் அணுகாமல் இருக்கிறாய்?(121)

நண்பர்களிடம் நட்பு பூண்ட பிறகு, அவர்களை மறப்பவன் தீயவனாகக் கருதப்படுகிறான். ஆபத்து மற்றும் தேவைக்கான அவசியம் உள்ள நேரங்களில் அவன் நண்பர்களை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(122) ஓ! நண்பா, நான் உன்னால் கௌரவிக்கப்பட்டு, உன் சக்தியில் சிறந்ததைக் கொண்டு உன்னால் அளிக்கப்பட்ட தொண்டையும் அடைந்தேன். உன் நண்பனாகியிருக்கும் இந்த எளியோனின் தோழமையில் நீ இன்புற்றிருப்பதே உனக்குத் தகும்.(123) ஆசான்களை வழிபடும் சீடர்களைப் போலவே, எனக்கிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் உன்னைக் கௌரவித்து வழிபடுவார்கள்.(124) நானும் கூட என் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் சேர்ந்து உன்னை வழிப்பட்டிருப்பேன். நன்றியறிதலையுடைய எவன்தான், தனக்கு உயிரைக் கொடுத்தவனை வழிபடாமல் இருப்பான்?(125)

நீ என் உடல் மற்றும் இல்லத்தின் தலைவனாக இருப்பாயாக. என் செல்வத்தையும், உடைமைகள் அனைத்தையும் பயன்படுத்துபவனாக நீ இருப்பாயாக.(126) என் மதிப்பிற்குரிய ஆலோசகனாய் இருந்து, ஒரு தந்தையைப் போல நீ என்னை ஆட்சி செய்வாயாக. என் உயிரின் மீது ஆணையாகச் சொல்கிறேன் எங்களிடம் இருந்து உனக்கு அச்சமேதும் ஏற்படாது.(127) நுண்ணறிவில் நீ உசனஸே {சுக்கிராச்சரியரே} ஆவாய். உன் அறிவின் ஆற்றலால் நீ எங்களை வென்றுவிட்டாய். கொள்கை பலம் கொண்ட நீ எங்களுக்கு உயிரை அளித்திருக்கிறாய்” என்றது.(128)

பூனையால் இந்த ஆறுதல் வார்த்தைகள் சொல்லப்பட்டதும், உயர்ந்த நன்மையை உண்டாக்கும் அனைத்தையும் அறிந்த எலியானது, தனக்கு நன்மை விளைவிக்கும் இனிய சொற்களை மறுமொழியாகக் கூறியது:(129) “ஓ! லோசமசா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். எனக்குத் தோன்றுவதை நான் சொல்கிறேன், இப்போது கேட்பாயாக.(130) நண்பர்கள் நன்கு சோதிக்கப்பட வேண்டும். எதிரிகளும் நன்கு ஆய்வு செய்யப்பட வேண்டும். இவ்வுலகில், கூரிய நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் இதுபோன்றதொரு பணி கடினமானது என்று கல்விமான்களாலேயே கூடக் கருதப்படுகிறது.(131) நண்பர்கள் எதிரிகளின் தோற்றத்திலும், எதிரிகள் நண்பர்களின் தோற்றத்திலும் இருப்பார்கள். நட்பின் உடன்பாடுகள் ஏற்படுத்தப்படும்போது, ஒரு தரப்பு உண்மையில் காமமும் {ஆசையும்}, கோபமும் கொண்டிருக்கிறதா என்பதை மற்றொரு தரப்பு புரிந்து கொள்வது மிகக் கடினமானதாகும்.(132)

எதிரியென்ற எவரும் இல்லை. நண்பர்களென்ற எவரும் இருப்பில் இல்லை. சூழ்நிலைகளின் சக்தியே நண்பர்களையும், எதிரிகளையும் உண்டாக்குகிறது.(133) ஒருவன், மற்றொருவன் உயிரோடிருக்கும் வரை தன் காரியங்கள் உறுதியாக நடக்கும், அவன் இல்லாமல் போனால் அவை ஆபத்துக்குள்ளாகும் என்று நினைத்தால், அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு, தனது காரியங்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாத வரை அவனை அவ்வாறே கருதிக் கொண்டிருப்பான்.(134) எந்த நிலையும், நட்பு, அல்லது பகை என்ற பெயரை நிரந்தரமாகக் கொள்ளத் தக்கது கிடையாது {நட்பும், பகையும் நிரந்தரமானதல்ல}. காரியம் மற்றும் ஆதாயம் கருதியே நண்பர்களும், பகைவர்களும் எழுகிறார்கள்.(135) காலத்தின் போக்கில் நட்பும் பகையாக மாறுகிறது. ஒரு பகைவனும் நண்பனாகிறான். தன்னலம் பெரும் சக்திவாய்ந்ததாகும்.(136) எவன், கொள்கைக் கருத்துகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல், குருட்டுத்தனமாக நண்பர்களிடம் நம்பிக்கை வைத்து, எப்போதும் எதிரிகளை நம்பாமல் இருக்கிறானோ, அவன் தன் உயிரைப் பாதுகாப்பற்றதாகக் காண்பான் {அவனுடைய உயிர் நிலையானதல்ல}.(137) எவன் கொள்கைக் கருத்துகள் அனைத்தையும் அலட்சியம் செய்து நண்பர்களிடமோ, பகைவர்களிடமோ அன்புப்பிணைப்பைத் தன் இதயத்தில் நிலைக்கச் செய்கிறானோ, அவன் நிலையில்லாத புத்தியுள்ளவனாகக் கருதப்படுவான்.(138) நம்பத்தகாதவனிடம் ஒருவன் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல, நம்பத்தகுந்தவனையும் மிக அதிகமாக நம்பிவிடக்கூடாது. குருட்டு நம்பிக்கையால் எழும் ஆபத்தானது (அத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கும்) ஒருவனுடைய வேரையே அறுத்துவிடும்.(139)

தந்தை, தாய், மகன், தாய்மாமன், சகோதரியின் மகன், பிற உறவினர்கள், சொந்தக்காரர்கள் ஆகியோர் அனைவரும் காரியம் மற்றும் ஆதாயத்தாலேயே வழிநடத்தப்படுகிறார்கள்.(140) அன்புக்குரிய மகன் வீழ்ந்துவிட்டால் அவனைத் தந்தையும், தாயும் கைவிடுவதைக் காண்கிறோம்[3]. மக்கள் தன்னலத்தையே {தன் காரியங்களையே} கவனிக்கிறார்கள் {தங்களையே பாதுகாத்துக் கொள்கிறார்கள்}. தன்னலத்தில் {சுயகாரியங்களின்} உச்சவினையை {பலாபலனைப்} பார்.(141) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஆபத்திலிருந்து விடுபட்டவுடன் எவன் தன் எதிரியின் மகிழ்ச்சிக்கான வழிமுறைகளை நாடுகிறானோ அவன் தப்புவது மிகக் கடினமானதாகும்(142) நீ மரத்தின் உச்சியில் இருந்து இந்த இடத்திற்கு வந்தாய். இங்கே விரிக்கப்பட்டிருந்த வலையை இயல்பான {பொதுவான} உன் புத்தியைக் கொண்டு உன்னால் உறுதி செய்து கொள்ள முடியவிலை. (143) இயல்பான புத்தியைக் கொண்ட ஒருவன், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறுகிறான். அவனால் எவ்வாறு பிறரைப் பாதுகாக்க முடியும்? அத்தகைய ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் கெடுத்துக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.(144) நான் உனக்கு மிக அன்பானவன் என்ற இனிய வார்த்தைகளை நீ எனக்குக் கூறுகிறாய். எனினும், ஓ! நண்பா, என் தரப்பில் இருக்கும் காரணங்களையும் கேட்பாயாக.(145)

போதுமான காரணத்தாலேயே ஒருவன் அன்புக்குரியவனாகிறான். உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகமும், (ஒரு வடிவத்திலாவது, அல்லது வேறு வடிவத்திலாவது) ஆதாய விருப்பத்தாலேயே நகர்கிறது {செயல்படுகிறது}. ஒருவன் (காரணமில்லாமல்) மற்றொருவரின் அன்புக்குரியவனாக {நண்பனாக} ஆக மாட்டான்.(146) உடன்பிறந்தோர் இருவருக்கிடையில் உள்ள நட்பு, கணவன் மனைவிக்கிடையில் உள்ள அன்பு ஆகியவையும் காரியம் சார்ந்ததே. ஏதாவதொரு தன்னல நோக்கமில்லாமல், எவருக்கும் இடையில் உள்ள எந்த வகை அன்பையும் நான் அறிந்ததில்லை {காரணமில்லாத / ஆதாயமில்லாத அன்பை நான் அறிந்ததில்லை}.(147) உடன் பிறந்தோர், அல்லது கணவன் மனைவி ஆகியோர் சச்சரவு செய்த பிறகு, இயற்கையான அன்பின் மூலம், மீண்டும் ஒன்றுசேர்வதைப் போலக் காணப்படும் நிலையானது, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்களிடம் காணப்படுவதில்லை.(148) ஒருவனுடைய வள்ளன்மையாலேயே {கொடைப் பண்பாலேயே} மற்றொருவனுக்கு அன்புக்குரியவனாகிறான். மற்றொருவன் அவனுடைய இனிய சொற்களுக்காக அன்புக்குரியவனாகிறான். மூன்றாமவன் அறச்செயல்களின் விளைவாக அவ்வாறு ஆகிறான். பொதுவாகவே ஒருவன் தான் தொண்டாற்றும் காரியத்திற்காகவே அன்புக்குரியவனாகிறான்.(149) நமக்கிடையிலான அன்பு போதுமான காரணத்தினாலேயே எழுந்தது. அந்தக் காரணம் இப்போதும் நீடிக்கவில்லை. மறுபுறம், போதுமான காரணத்தினாலேயே நமக்கிடையிலான அந்த அன்பும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.(150)

நான் கேட்கிறேன், நீ என்னை உன் இரையாக்கிக் கொள்ள விரும்புவதைத் தவிர, உனக்கு நான் அன்புக்குரியவனாக இருக்க வேறு என்ன காரணமிருக்கிறது? நான் இதை மறந்துவிடமாட்டேன் என்பதை நீ அறிய வேண்டும்.(151) காலமானது காரணங்களைக் கெடுக்கும் {மாறச் செய்யும்}. நீ உன் தன்னலத்தையே {காரியத்தையே} நாடுகிறாய். எனினும், ஞானம் கொண்ட பிறரும் தங்கள் காரியங்களையே புரிந்து கொள்வார்கள். இந்த உலகம் ஞானிகளின் எடுத்துக்காட்டையே சார்ந்திருக்கிறது. கல்விமானும், தன்னலங்களை {தன் காரியங்களைப்} புரிந்து கொள்ளத் தகுந்தவனான ஒருவனிடம் நீ இத்தகைய வார்த்தைகளைப் பேசக்கூடாது.(152) நீ பலமிக்கவன். நீ என்னிடம் அன்பு காட்டும் இந்தக் காலம் சரியானது அல்ல. எனினும், என் காரியங்களால் வழிநடத்தப்படும் நான், நிலையற்றவையான அமைதி {நட்பு} மற்றும் போர் {பகை} ஆகியவற்றில் உறுதியுடன் இருக்கிறேன்.(153) எந்தச் சூழ்நிலையில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும், அல்லது போர் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பன மேகங்கள் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வதைப் போலவே விரைவில் மாற்றமடைகின்றன. இந்த நாளில் நீ என் எதிரியாக இருந்தாய். அதுபோலவே இந்த நாளிலேயே நீ எனக்கு நண்பனாகவும் இருந்தாய். மீண்டும் இந்த நாளிலேயே என் எதிரியாகிவிட்டாய். உயிரினங்கள் இயங்கும் கருத்துகளின் இயல்பை {பொதுத்தன்மையைப்} பார்.(154) நட்புக்கு ஒரு காரணம் இருந்தவரை நம்மிடையே அஃது இருந்தது. காலத்தைச் சார்ந்திருக்கும் அந்தக் காரணம் இப்போது கடந்து சென்று விட்டது. அஃது இல்லாததால், அந்த நட்பும் கடந்து சென்றுவிட்டது.(155)

இயற்கையாகவே நீ என் எதிரியாவாய். சூழ்நிலையின் காரணமாக நீ என் நண்பனானாய். அந்த நிலை இப்போது கடந்து சென்றுவிட்டது. இயற்கையான பழைய பகைமை நிலையே இப்போது திரும்பியிருக்கிறது.(156) இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள கொள்கைவிதிகளை முற்றாக நான் அறிந்திருக்கிறேன்; எனக்குச் சொல்: எனக்காக விரிக்கப்பட்டிருக்கும் வலையில், உனக்காக நான் ஏன் நுழைய வேண்டும்?(157) உன் பலத்தின் மூலம் பேராபத்தில் இருந்து நான் விடுபட்டேன். என் பலத்தால் அதேபோன்ற ஆபத்தில் இருந்து நீயும் விடுபட்டாய். இருவரும் ஒருவருக்கொருவர் தொண்டாற்றிக் கொண்டோம். நாம் மீண்டும் நட்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய எந்தத் தேவையும் {அவசியமும்} இல்லை.(158) ஓ! இனியவனே, உன் நோக்கம் நிறைவடைந்தது. நான் கொண்ட நோக்கமும் நிறைவடைந்தது. நீ என்னை உன் உணவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு எந்தத் தேவையும் இப்போது உனக்கில்லை.(159) நான் உன் உணவாக இருக்கிறேன். நீ உண்பவனாக இருக்கிறாய். நான் பலவீனன், நீயோ பலவான். இணையில்லாத நிலையில் நாம் இருக்கையில், நமக்குள் ஒற்றுமையான நட்பு இருக்க முடியாது.(160)

நான் உன் ஞானத்தைப் புரிந்து கொள்கிறேன். வலையில் இருந்து மீட்கப்பட்டதும், நீ என்னை எளிதாக உணவாக்கிக் கொள்ளலாம் என்பதாலேயே நீ என்னைப் புகழ்கிறாய்.(161) நீ உணவைத் தேடியே வலையில் சிக்கினாய். அதிலிருந்து விடுபட்டுவிட்டாய். நீ இப்போது பசியின் கொடுமையை உணர்வாய். சாத்திரக் கல்வியில் இருந்து எழும் அந்த ஞானத்தைக் கொண்டு, நீ என்னை இன்று உண்ணவே முயல்வாய்.(162) நீ பசித்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இப்போது நீ உணவு உண்ண வேண்டிய நேரம் என்பதையும் நான் அறிவேன். என் மீது உன் கண்களைச் செலுத்தும் நீ, உன் இரையையே தேடிக் கொண்டிருக்கிறாய்.(163) உனக்கு மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். இருப்பினும், என்னுடன் நட்பு கொள்ளவும், என்னை அன்புடன் நடத்தவும், எனக்குத் தொண்டுகள் செய்யவும் நீ விரும்புகிறாய். ஓ! நண்பா, இந்தக் கோரிக்கைக்கு இணங்க இயலாதவனாக நான் இருக்கிறேன்.(164) உன்னுடன் என்னைக் காணும் உன் அன்பு மனைவியும், அன்புக்குரிய பிள்ளைகளும் உற்சாகத்துடன் என்னை உண்ண மாட்டார்களா?(165) எனவே, நான் உன்னுடன் நட்பாக இருக்க முடியாது. இந்த ஒற்றுமைக்கான எந்தக் காரணமும் இப்போது இல்லை. உண்மையில், நீ என் நல்ல அலுவல்களை மறக்கவில்லையென்றால், எனக்கு நன்மையானதை நினைத்து ஆறுதலடைவாயாக.(166)

ஞானம் கொண்ட எவன்தான், அறப்புகழ் இல்லாதவனும் {நீதிக்காகத் தனித்துத் தெரியாதவனும்}, பசிக்கொடுமையில் இருப்பவனும், இரைதேடிக் கொண்டிருப்பவனுமான ஒரு பலமிக்க எதிரியின் கீழ் தன்னை நிறுத்திக் கொள்வான்?(167) மகிழ்ச்சியாக இருப்பாயாக, நான் உன்னைவிட்டுத் தற்போது செல்கிறேன். தொலைவில் இருந்து உன்னைக் கண்டாலே நான் அச்சத்தால் நிறைகிறேன். ஓ! லோமசா, என்னால் உன்னோடு சேர முடியாது, உன் முயற்சிகளைக் கைவிடுவாயாக.(168) நான் உனக்குத் தொண்டு செய்திருக்கிறேன் என்று நீ நினைப்பாயானால், நம்பிக்கையுடனோ, கவனமில்லாமலோ நான் உலவ நேர்கையில் நட்பின் விதிகளைப் பின்பற்றுவாயாக. அதுவே உனது செய்நன்றியாக இருக்கும்.(169) பலமும், சக்தியும் கொண்ட ஒருவனின் அருகில் வசிப்பது ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. ஏற்கனவே இருந்த ஆபத்து கடந்து விட்டாலும், என்னைவிடப் பலமிக்கவனைக் குறித்த அச்சத்துடனேயே நான் இருக்க வேண்டும்.(170)

(குறிப்பிடப்பட்ட) உன் காரியங்களைச் செய்ய நீ முயலவில்லையெனில், நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் என் உயிரைத் தவிர நிச்சயம் உனக்கு அனைத்தையும் கொடுப்பேன்.(171) ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன் பிள்ளைகள், நாடு, ஆபரணங்கள் மற்றும் செல்வம் ஆகியவற்றையும் கைவிடலாம். ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யலாம்.(172) ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக எதிரிக்குக் கொடுக்கும் அனைத்து செல்வத்தையும் அவன் உயிரோடு இருந்தால் மீட்டுக் கொள்ளலாம்.(173) செல்வத்தைக் கொடுப்பது போல ஒருவன் உயிரைக் கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. உண்மையில், நான் ஏற்கனவே சொன்னதுபோல், ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன் மனைவியரையும், செல்வத்தையும் கைவிடலாம்.(174) தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பவர்கள், சீரிய ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பிறகு தங்கள் செயல்கள் அனைத்தையும் செய்பவர்கள் ஆகியோர் தங்கள் செயல்களின் விளைவால் ஒருபோதும் ஆபத்தை அடைய மாட்டார்கள்.(175) பலவீனர்கள், பெரும் பலம் கொண்டவனை எப்போதும் ஓர் எதிரியாகவே அறிவார்கள். சாத்திரங்களின் உண்மைகளில் உறுதியாக இருக்கும் அவர்களது அறிவு ஒருபோதும் தன் உறுதியை இழப்பதில்லை” என்றது {எலியான பலிதன்}.(176)

இவ்வாறு எலியான பலிதனின் வன்மையான கடிந்துரைக்கு ஆளான அந்தப் பூனை, நாணத்தால் வெட்கமடைந்து, பின்வரும் வார்த்தைகளை அந்த எலியிடம் சொன்னது.(177) லோமசன் {என்ற அந்தப் பூனை எலியிடம்}, “உண்மையில், உன் மேல் ஆணையாகச் சொல்கிறேன், நண்பனுக்குத் தீங்கிழைத்தல் மிகவும் நிந்திக்கத்தக்கது என்பது என் கணிப்பு. நான் உன் ஞானத்தை அறிவேன். நீ என் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருப்பதையும் நான் அறிவேன்.(178) பொருளறிவியலால் வழிநடத்தப்படும் நீ, உனக்கும் எனக்கும் இடையில் அத்துமீறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ! நல்ல நண்பனே, நான் எவ்வாறு இல்லையோ அவ்வாறு இருப்பதாக எடுத்துக் கொள்வது உனக்குத் தகாது.(179) எனக்கு நீ உயிரை அளித்ததன் விளைவால் நான் உன்னிடம் பெரும் நட்புணர்வை வளர்க்கிறேன். மேலும் நான் கடமைகளையும் அறிந்திருக்கிறேன். நான் பிறரின் தகுதிகளை மெச்சுபவனுமாவேன். நான் அடைந்த தொண்டுகளுக்குப் பெரிதும் நன்றியுடன் இருக்கிறேன்.(180) நண்பர்களின் தொண்டில் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். மேலும், குறிப்பாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருக்கிறேன். இந்தக் காரணங்களுக்காக, ஓ! நல்ல நண்பனே, நீ என்னுடன் மீண்டும் சேர்வதே உனக்குத் தகும்.(181) நீ ஆணையிட்டால், என் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய நான் என் உயிரையே உனக்காகத் தருவேன். கல்வியும், ஞானமும் கொண்டவர்கள், இத்தகைய மனோநிலை கொண்ட எங்களிடம் நம்பிக்கை வைக்கப் போதிய அளவுக்குக் காரணங்களைக் காண்கிறார்கள். ஓ! அறநெறியின் உண்மைகளை அறிந்தவனே, என்னைப் பொறுத்தவரையில் நீ எந்த ஐயத்தையும் வளர்த்துக் கொள்வது உனக்குத் தகாது” என்றது.(182)

பூனையால் இவ்வாறு சொல்லப்பட்ட எலி, சற்றே சிந்தித்து, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வார்த்தைகளை அதனிடம் {பூனையிடம்} சொன்னது.(183) “நீ மிகவும் நல்லவனாக இருக்கிறாய். நீ சொன்னதனைத்தையும் கேட்ட நான், உன்னிடம் கேட்டதிலிருந்து மகிழ்ச்சியை அடைகிறேன். எனினும், அவை யாவற்றிற்காகவும் கூட நான் உன்னை நம்ப முடியாது. இத்தகைய துதிகளாலோ, பெரும் செல்வத்தைக் கொடைகளாகக் கொடுப்பதாலோ, என்னை மீண்டும் உன்னுடன் சேர வைப்பது உனக்குச் சாத்தியப்படாது.(184) ஓ! நண்பா, ஞானம் கொண்டவர்கள், போதிய காரணம் ஏதும் இல்லாதபோது, ஓர் எதிரியின் சக்தியின் கீழ் தங்களை ஒருபோதும் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள் என்று உனக்கு நான் சொல்கிறேன்.(185) இருவரும் எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது, ஒரு பலவீனன், ஒரு பலவானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, (அந்தப் பொது ஆபத்துக் கடந்ததும்) கொள்கைகளைக் கருத்தில் கொண்டு கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தன் நோக்கம் நிறைவேறியதும், இருவரில் பலவீனன், மீண்டும் அந்தப் பலவானிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.(186)

நம்பத்தகாதவனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது. அதே போல, நம்பத்தகுதவனிடமும் ஒருவன் குருட்டு நம்பிக்கையை வைத்துவிடக்கூடாது. ஒருவன் பிறரை தன்னிடம் நம்பிக்கைகொள்ளச் செய்வதற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும். எனினும், அவன் எதிரிகளிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.(187) இந்தக் காரணங்களாலேயே ஒருவன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடைமைகள், பிள்ளைகள் மற்றும் மதிப்புமிக்க அனைத்தும் அவன் உயிரோடு உள்ளவரையே இருக்கும்.(188) சுருங்கச் சொல்லின், நம்பிக்கையின்மையே கொள்கை ஆய்வுகள் அனைத்தின் உயர்ந்த உண்மையாகும். இந்தக் காரணத்தால், அனைவரின் நம்பிக்கையின்மையும், பெரும் நன்மையை உண்டாக்க வல்லவையே.(189) எவ்வளவுதான் பலவீனமானவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் எதிரிகளிடம் நம்பிக்கை வைக்கவில்லையெனில், எதிரி பலவானாக இருந்தாலும், அவர்களைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(190) ஓ! பூனையே, என்னைப் போன்ற ஒருவன், எப்போதும் உன்னைப் போன்றவர்களிடம் இருந்து தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். நீயும் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் அந்தச் சண்டாளனிடம் இருந்து உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வாயாக” என்றது.(191)

எலி இவ்வாறு பேசிய போது, வேடனைக் குறித்து அச்சமடைந்த அந்தப் பூனை, மரத்தின் கிளையை விட்டு அகன்று, பெரும் வேகத்துடன் தப்பி ஓடியது.(192) இவ்வாறு தன் அறிவின் சக்தியை வெளிப்படுத்தியதும், சாத்திரங்களின் உண்மைகளை அறிந்ததும், ஞானத்தைக் கொண்டதும், எலியுமான அந்தப் பலிதன், மற்றொரு பொந்துக்குள் நுழைந்தது”.(193)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே ஞானம் கொண்ட பலிதன் என்ற எலி, பலவீனமாகவும், தனியனாகவும் இருந்தாலும், பலமிக்கப் பல எதிரிகளைக் கலங்கடிப்பதில் வென்றது.(194) நுண்ணறிவும், கல்வியும் கொண்ட ஒருவன், ஒரு பலமிக்க எதிரியிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்வான். அந்த எலியும் பூனையும், தங்கள் ஒவ்வொருவரின் தொண்டைச் சார்ந்து தாங்கள் தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொண்டன.(195) க்ஷத்திரியக் கடமைகளின் போக்கை இவ்வாறே பெரும் நீளத்தில் நான் உனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(196) ஒருவருக்கொருவர் பகை கொண்ட இருவர் தங்களுக்குள் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், ஒவ்வொருவரும் பிறரின் மிகைப் பாய்ச்சலை {வஞ்சனையைத்} தங்கள் இதயத்தில் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.(197) அத்தகைய வழக்கில் ஞானம் கொண்டவன், தன் அறிவின் சக்தியால் அடுத்தவனை மீறி {வஞ்சித்து} வெற்றியடைவான். மறுபுறம், ஞானமற்றவனோ, தன் கவனக்குறைவின் விளைவால் ஞானியால் மீறப்படுவான் {வஞ்சிக்கப்படுவான்}.(198) எனவே, அச்சத்தில் உள்ள ஒருவன், அச்சமில்லாதவனைப் போலத் தெரிவது அவசியம், அதே வேளையில் பிறரை நம்பாத ஒருவன், நம்பிக்கை நிறைந்தவனாகவும் தெரிய வேண்டும். இத்தகைய கவனத்துடன் செயல்படுபவன், ஒருபோதும் பிறழமாட்டான், அல்லது பிறண்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான்.(199) அதற்கான நேரம் வரும்போதும், ஒருவன் பகைவனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதே போல நேரம் வரும்போது, நண்பனுடனும் ஒருவன் போர் தொடுக்க வேண்டும். ஓ மன்னா, ஒருவன் இவ்வாறு தன்னை நடத்திக் கொள்ள வேண்டும் என்று அமைதி (மற்றும் போரின்) கருத்துகளை அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(200)

ஓ! ஏகாதிபதி, இஃதை அறிந்து கொண்டும், சாத்திர உண்மைகளை மனத்தில் கொண்டும் ஒருவன், தன் புலன்கள் அனைத்தாலும், எந்தக் கவனக் குறைவும் இல்லாமல், அச்சத்திற்கான காரணம் வருவதற்கு முன்பே அச்சத்திலிருக்கும் ஒருவனைப் போலச் செயல்பட வேண்டும்.(201) அச்சத்திற்கான காரணம் உண்மையில் வருவதற்கு முன்பே ஒருவன் அச்சத்திலிருப்பவனைப் போலச் செயல்பட்டு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய அச்சமும், கவனமும், அறிவுக்கூர்மைக்கு வழிவகுக்கும்.(202) அச்சத்திற்கான காரணம் வருமுன்பே அச்சத்திலிருக்கும் மனிதனைப் போலச் செயல்படும் ஒருவன், அந்தக் காரணம் உண்மையில் வரும்போது ஒருபோதும் அச்சத்தால் நிறைய மாட்டான். எனினும், அச்சமில்லாமல் எப்போதும் செயல்படும் ஒருவனுடைய அச்சத்தின் மூலம் பேரச்சம் எழுவதும் காணப்படுகிறது.(203) “ஒருபோதும் அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே” என்ற ஆலோசனை எவருக்கும் வழங்கப்படக்கூடாது. தன் பலவீனத்தை உணர்ந்து அச்சமடையும் ஒருவன் எப்போதும் ஞானிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளை நாட வேண்டும்.(204) இந்தக் காரணங்களுக்காக ஒருவன் அச்சத்திலிருக்கும்போது, அச்சமில்லாதவனாகவும், (பிறரை) நம்பாதபோது, நம்பிக்கை நிறைந்தவனாகவும் தெரிய வேண்டும். ஒருவன், முக்கியமான செயல்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பிறரிடம் பொய்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது.(205)

அந்தக் கதையில் இருந்து உயர்ந்த அறிவை அடைந்தும், நண்பனுக்கும், எதிரிக்குமிடையிலான வேறுபாட்டை அறிந்து கொண்டும், உரிய நேரத்தில் போரையும், அமைதியையும் ஏற்படுத்திக் கொண்டால், நீ ஆபத்திலிருக்கும்போது, தப்புவதற்கான வழிமுறைகளைக் கண்டடைவாய்.(207) பொதுவான ஆபத்தில் பலவானுடன் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும் நீ, (அந்தப் பொது ஆபத்து கடந்து சென்றதும்), எதிரியுடன் சேரும் காரியத்தில் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகே செயல்பட வேண்டும். உண்மையில் உன் நோக்கத்தை அடைந்த பிறகு, நீ உன் எதிரியை மீண்டும் நம்பக்கூடாது.(208) ஓ! மன்னா, இந்தக் கொள்கையின் பாதை, மூன்று தொகுப்புகளுக்கும் (அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கும்) இசைவானதாகும். இந்தச் சுருதியால் வழிநடத்தப்படும் நீ, மீண்டும் உன் குடிமக்களைப் பாதுகாத்துச் செழிப்பை அடைவாயாக.(209) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, உன் செயல்கள் அனைத்திலும் பிராமணர்களின் தோழமையை எப்போதும் நாடுவாயாக. பிராமணர்கள், இம்மையிலும், மறுமையிலும் நன்மையின் பேரூற்றாக இருப்பார்கள்.(210) அவர்களே கடமை மற்றும் அறநெறிகளின் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ஓ! பலமிக்கவனே, அவர்கள் எப்போதும் நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிபடப்பட்டால், நிச்சயம் அவர்கள் நன்மையையே செய்வார்கள். எனவே, ஓ! மன்னா, நீ எப்போதும் அவர்களை வழிபட வேண்டும்.(211) ஓ! மன்னா, அப்போது நீ, உன் நாடு, பெரும் நன்மை, புகழ், சாதனைகள், உரிய வரிசையிலான வாரிசுகள் ஆகியவற்றை முறையாக அடைவாய்.(212) ஒரு மன்னன், எலி மற்றும் பூனைக்கிடையில் நடந்ததும், சிறந்த வார்த்தைகளில் சொல்லப்பட்டதும், நுண்ணுறிவைக் கூர்மைப்படுத்துவதுமான இந்த வரலாற்றில் தன் கண்களைச் செலுத்தியே தன் எதிரிகளின் மத்தியில் தன் நடத்தையை எப்போதும் அமைத்துக் கொள்ள வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(213)

பிரம்மதத்தனும் பூஜனியும்! – சாந்திபர்வம் பகுதி – 139-ஏன் அதிக நம்பிக்கை கொள்ளக் கூடாது என்பதற்கு, மன்னன் பிரம்மதத்தனுக்கும், பூஜனி என்ற பறவைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கவரே, எதிரிகள் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது என்று நீர் விதித்திருக்கிறீர். ஆனால், ஒரு மன்னன் யாரையும் நம்பவில்லையென்றால் எவ்வாறு அவன் தன்னைப் பராமரித்துக் கொள்ள முடியும்?(1) ஓ! மன்னா {பீஷ்மரே}, நம்பிக்கையிலிருந்தே மன்னர்களுக்குப் பேராபத்து எழுகிறது என்று சொல்கிறீர். ஆனால், ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன் பிறரை நம்பாமல் எவ்வாறு தன் எதிரிகளை வெல்ல முடியும்?(2) அன்புகூர்ந்து என் இந்த ஐயத்தை நீர் விலக்குவீராக. ஓ! பாட்டா, நம்பிக்கையின்மை குறித்து நீர் சொன்னதைக் கேட்டு என் மனம் குழம்பியிருக்கிறது” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பிரம்மதத்தனின் வசிப்பிடத்தில் மன்னன் பிரம்மதத்தனுக்கும் பூஜனிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்பாயாக.(4) காம்பில்யத்தில் உள்ள மன்னன் பிரம்மதத்தனின் அரண்மனை அந்தப்புரத்தில் பூஜனி என்ற பறவையும் அவனுடன் வெகுகாலம் வாழ்ந்து வந்தது.(5) ஜீவ ஜீவகப் பறவையைப் போலப் பூஜனியும் பலவிலங்குகளின் குரல்களில் பேசக்கூடியவளாக இருந்தாள். பிறப்பால் ஒரு பறவையாக இருப்பினும், அவள் பேரறிவு படைத்தவளாகவும், அனைத்து உண்மைகளையும் அறிந்தவளாகவும் இருந்தாள்.(6) அங்கே வாழ்ந்து வந்தபோது, அவள் பெரும் காந்தி கொண்ட ஒரு வாரிசை ஈன்றாள். அதே வேளையில் மன்னனும் தன் ராணியிடம் ஒரு மகனைப் பெற்றான்.(7) மன்னனின் மேற்கூரையில் புகலிடம் பெற்றதால் நன்றி நிறைந்திருந்த பூஜனி, தினமும் கடற்கரைக்குச் சென்று, தன் குஞ்சுக்கும், குழந்தையான இளவரசனுக்கும் என இரண்டு கனிகளைக் கொண்டு வந்ததாள்.(8) அதில் ஒன்றை தன் பிள்ளைக்கும், மற்றொன்றை இளவரசனுக்கும் கொடுத்தாள்.(9) அவள் கொண்டுவந்த கனிகள் அமுதம் போன்ற இனிமையுடனும், பலம் மற்றும் சக்தியைப் பெருக்கும் வல்லமையுடனும் இருந்தன. இப்படியே தினமும் அவள் அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தாள். பூஜனி கொடுத்த கனியை உண்டு அந்தக் குழந்தை இளவரசன் பெரும் பலத்தை அடைந்தான்.(10)

ஒரு நாள், செவிலியின் கரங்களில் இருந்த அந்தக் குழந்தை இளவரசன், பூஜனியின் சிறு பறவைக் குஞ்சைக் கண்டான். செவிலியின் கரங்களில் இருந்து கீழே இறங்கிய அந்தப் பிள்ளை, சிறுபிள்ளைத்தனமான உந்துதலால் உந்தப்பட்டு, அதனுடன் விளையாடிக் களித்தான்.(11) இறுதியாகத் தன் வயதே ஆன அந்தப் பறவையைக் கையில் உயர்த்திய அந்த இளவரசன், அந்தப் பிஞ்சின் உயிரை நசுக்கி வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் தன் செவிலியிடம் வந்தான்.(12) ஓ! மன்னா, வழக்கமாகக் கொண்டுவரும் கனிகளைத் தேடி வெளியே சென்றிருந்த அந்தப் பெண்பறவையானவள், {திரும்பி வந்ததும்} தன் குஞ்சு இளவரசனால் கொல்லப்பட்டுத் தரையில் கிடப்பதைக் கண்டாள்.(13)

தன் மகன் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட பூஜனி, கன்னங்களில் நீர் வடிய, துயரத்தால் எரிந்த இதயத்துடன், அதிகமாக அழுது,(14) “ஐயோ, ஒருவனும் ஒரு க்ஷத்திரியனுடன் வாழவோ, அவனுடன் நட்பு கொள்ளவோ, அவனுடனான எந்தத் தொடர்பிலும் இன்பம் கொள்ளவோ கூடாது. அவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய நோக்கம் ஏதும் இருந்தால், அவர்கள் மதிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களது நோக்கம் நிறைவேறியதும், அவர்கள் அந்தக் கருவியைக் கைவிடுவார்கள்.(15) க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தீமை செய்வார்கள். அவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது. ஒரு தீங்கைச் செய்த பிறகும், அவர்கள் எப்போதும் தேற்ற முனைந்து, தீங்குக்கு உள்ளானவனுக்கு ஏதுமில்லாமலே உறுதிமொழி கூறுவார்கள். நன்றி கொன்ற, நம்பிக்கைதுரோகம் செய்த இந்தக் கொடூரனை நான் நிச்சயம் பழிவாங்குவேன்.(17) தான் பிறந்த அதே நாளில் பிறந்து, அதே இடத்தில் வளர்ந்தவனும், தன்னுடன் சேர்ந்து உண்பவனும், தனது பாதுகாப்பைச் சார்ந்திருந்தவனுமான ஒருவனின் உயிரை எடுத்து மூன்று பாவங்களை இவன் செய்திருக்கிறான்” என்றது.(18)

இவ்வார்த்தைகளைத் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட பூஜனி, தன் உகிர்களைக் கொண்டு அந்த இளவரசனின் கண்களைத் துளைத்து, அந்தப் பழிச்செயலால் ஆறுதலை அடைந்து, மீண்டும்,(19) “வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு பாவச்செயலானது, கால இழப்பேதுமில்லாமல் அதைச் செய்தவனைத் தண்டிக்கும். மறுபுறம், ஒரு தீங்குக்காகப் பழிதீர்த்தவர்கள், அத்தகைய நடத்தையால் ஒருபோதும் தங்கள் தகுதியை இழக்கமாட்டார்கள்.(20) ஓ! மன்னா, ஒருவன் செய்த பாவச்செயலின் விளைவு அதை இழைத்தவனிடம் தென்படவில்லையெனினும், அஃது அவனுடைய மகன்கள், மகனுடைய மகன்கள், அல்லது மகளுடைய மகன்களிடம் நிச்சயம் தென்படும்.(21)

பிரம்மதத்தன், பூஜனியால் தனது மகன் குருடாக்கப்பட்டதைக் கண்டும், தன் மகன் செய்ததற்கான சரியான பழிதீர்ப்பாகவே அச்செயலைக் கருதியும் பூஜனியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(22) பிரம்மதத்தன், “எங்களால் உனக்கு ஒரு தீங்கு செய்யப்பட்டது. பதிலுக்கு ஒரு தீங்கைச் செய்து நீ அதற்குப் பழிவாங்கிவிட்டாய். கணக்குத் தீர்ந்துவிட்டது. உன் வசிப்பிடத்தை விட்டுச் செல்லாதே. மறுபுறம், ஓ! பூஜனி, இங்கேயே தொடர்ந்து வசிப்பாயாக” என்றான்.(23)

பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, “ஒருவனுக்கு ஒருமுறை தீங்கிழைத்துவிட்டு, அங்கேயே ஒருவன் தொடர்ந்து வசித்தால், அவனது அந்த நடத்தையைக் கல்விமான்கள் ஒருபோதும் மெச்சுவதில்லை. அத்தகைய சூழ்நிலைகளில், தீங்கிழைத்தவன் தன் பழைய இடத்தை விட்டுச் செல்வதே எப்போதும் சிறந்ததாகும்.(24) தீங்குக்கு உள்ளான தரப்பிடம் இருந்து பெறப்படும் தேறுதல் உறுதிமொழிகளில் ஒருவன் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. அத்தகைய உறுதிமொழிகளை நம்பும் மூடன், விரைவில் அழிவையே அடைவான். கடும்பகையை ஒருபோது உடனே தணிக்கமுடியாது.(25) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்டோரின் மகன்களும், பேரப்பிள்ளைகளும் (பரம்பரைச் சண்டையின் விளைவால்) அழிவை அடைவார்கள். தங்கள் வாரிசின் அத்தகைய அழிவின் விளைவால், அவர்கள் மறுமையையும் இழப்பார்கள்.(26) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்ட மனிதர்களுக்கு இடையில், நம்பிக்கையின்மையே மகிழ்ச்சியை உண்டாக்கும். நம்பிக்கை துரோகம் செய்தவனை ஒருபோதும் கொஞ்சமேனும் நம்பக்கூடாது.(27) நம்பிக்கைக்குத் தகாத ஒருவன் ஒருபோதும் நம்பப்படக்கூடாது; அதே போல, நம்பத்தகுந்த மனிதனும் மிக அதிகமாக நம்பப்படக்கூடாது. ஒருவன் தன் மீது கொண்ட நம்பிக்கையால் அடுத்தவர்களை ஈர்க்க முயல வேண்டும். எனினும், அவன் அடுத்தவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது.(28) தந்தையும் தாயும் மட்டுமே முதன்மையான நண்பர்கள். மனைவியானவள் வித்துகளை விளையச் செய்யும் வெறும் பாத்திரம் {வயல்} மட்டுமே. மகன் என்பவன் வெறுமனே ஒருவனின் வித்து மட்டுமே. உடன் பிறந்தவனோ {பொருளைப் பங்கிட்டுக் கொண்டு போவதால்} ஒரு பகைவனாவான். நண்பனோ, தோழனோ, அவ்வாறே இருக்க வேண்டுமெனில் தன் உள்ளங்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும் {பசையுடன் இருக்க வேண்டும்}[1]. மகிழ்ச்சியையோ, துன்பத்தையோ அனுபவிப்பது ஒருவனின் சுயமே {ஆத்மாவே}.(29)

ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்ட மனிதர்களுக்கு மத்தியில், (உண்மையில்) அமைதியேற்படுவது பரிந்துரைக்கத் தகாததாகும். நான் இங்கே வாழ்வதற்கான காரணம் ஏதும் இப்போது இல்லை.(30) மற்றவனுக்குத் தீங்குக்கு உள்ளானவன் கொடைகளின் மூலமோ, கௌரவங்களின் மூலமோ தன்னை வழிபட்டால், தீங்கிழைத்த மனிதனின் மனமானது, இயற்கையாகவே நம்பிக்கையின்மையால் நிறைகிறது. அதிலும் குறிப்பாக, அத்தகைய நடத்தை பலமானவர்களால் வெளிப்படுத்தப்பட்டால், அது பலவீனர்களை நிச்சயம் அச்சத்தாலேயே நிறைக்கும்.(31) முதலில் கௌரவமடைந்து, பிறகு அங்கே அவமதிப்பையும், தீங்கையும் அடைந்தால், நுண்ணறிவுமிக்க ஒருவன் அந்த இடத்தைவிட்ட அகல வேண்டும். தன் எதிரியிடம் இருந்து அடுத்தடுத்துக் கௌரவத்தை அடைந்தாலும் அவன் இவ்வழியிலேயே நடந்து கொள்ள வேண்டும்.(32) உன் வசிப்பிடத்தில் உன்னால் கௌரவிக்கப்பட்டு நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். எனினும், இறுதியில் பகைக்கான ஒரு காரணம் எழுந்துவிட்டது. எனவே, எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் இந்த இடத்தைவிட்டு அகலவே வேண்டும்” என்றது.(33)

பிரம்மதத்தன் {பறவையான பூஜனியிடம்}, “ஒருவன் தான் அடைந்த தீங்குக்குப் பதிலாக ஒரு தீங்கைச் செய்தால், அஃது ஒருபோதும் குற்றமாகக் கருதப்படுவதில்லை. உண்மையில், பழிதீர்த்தவன், அத்தகைய நடத்தையால் {பாவக்} கணக்கையே தீர்க்கிறான். எனவே, ஓ! பூஜனி, இந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் தொடர்ந்து இங்கேயே வசிப்பாயாக” என்றான்.(34)

பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, “தீங்கிழைத்தவனுக்கும், பதிலுக்குத் தீங்கிழைத்தவனுக்கும் இடையில் மீண்டும் எந்த நட்பும் உறுதியடைய முடியாது. இருவரின் இதயமும் நடந்ததை ஒருபோதும் மறக்காது” என்றது.(35)

பிரம்மதத்தன், “தீங்கிழைத்தவன் மற்றும் அந்தத் தீங்குக்குப் பழிதீர்த்தவன் ஆகியோருக்கிடையில் ஒற்றுமை ஏற்படுவது அவசியமாகும். அத்தகைய சேர்க்கையால், பரஸ்பர பகையும் தணிவது காணப்படுகிறது. அத்தகைய வழக்குகளில் புதிய தீங்குகளும் பின்தொடர்வதில்லை” என்றான்.(36)

பூஜனி, “(பரஸ்பரத் தீங்குகளால் எழும்) பகைமையை ஒரு போதும் சாகாது. தீங்குக்கு உள்ளானவன், “ஓ!, நல்லெண்ணத்துடன் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளால் நான் தேற்றப்பட்டேன்” என்றெண்ணி ஒருபோதும் தன் எதிரிகளை நம்பக்கூடாது. (தவறாக வைக்கப்படும்) நம்பிக்கையின் விளைவாலேயே இவ்வுலகில் மனிதர்கள் அடிக்கடி அழிவடைகிறார்கள். இந்தக் காரணத்தால், நாம் இனிமேல் ஒருபோதும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருப்பதே அவசியமானதாகும்.(37) பலம் மற்றும் கூரிய ஆயுதங்களால் அடக்கப்பட முடியாதவன் கூட, (பழக்கப்படுத்தப்பட்ட) மலாகையின் {பெண் யானையின்} மூலம் (காட்டு) யானைகள் வெல்லப்படுவதைப் போல, (உண்மையற்ற) சமரசத்தின் பேரில் வெல்லப்படலாம்” என்றது.(38)

பிரம்மதத்தன், “ஒன்றாக வசிக்கும் இருவரில் ஒருவர் மற்றவருக்குப் பயங்கரத் தீங்கை இழைத்துவிட்டாலும் கூட, சண்டாளனுக்கும், நாய்க்கும் இடையிலான வழக்கைப் போல[2], அவர்களுக்கிடையில் அன்பும், பரஸ்பர நம்பிக்கையும் இயற்கையாகவே எழுகிறது.(39) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஒன்றாக வசிக்கும்போது, பகையின் கூர்மை மழுங்குகிறது. உண்மையில் அந்தப் பகைமை, தாமரை இதழின் மீது ஊற்றப்பட்ட நீரைப் போல வெகு காலம் நீடிக்காமல் உடனே மறைந்துவிடுகிறது” என்றான்.(40)பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, “பகைமை ஐந்து காரணங்களால் எழுகிறது. கல்விமான்கள் அஃதை அறிவார்கள். பெண், நிலம், கடுஞ்சொல், இயல்பான ஒவ்வாமை, தீங்கு ஆகியவையே அந்த ஐந்து காரணங்களாகும்[3].(41) பகைமை நேரக்கூடிய மனிதன் தயாளனாக இருந்தால், வெளிப்படையாகவோ, மறைமுக வழிமுறைகளாலோ அவன் ஒருபோதும் கொல்லப்படக்கூடாது, அதிலும் குறிப்பாக க்ஷத்திரியனால் கொல்லப்படக்கூடாது. அத்தகைய ஒரு வழக்கில், மனிதனின் குற்றத்தை {துலாக்கோலில் எடைபார்ப்பது போல்} முறையாக நிறுத்திப் பார்க்க வேண்டும்[4].(42) கடலின் நீரில் இருக்கும் ஔர்விய நெருப்பைப் போல, பகையெனும் நெருப்பை, செல்வத்தின் கொடைகளாலோ, ஆற்றலை வெளிப்படுத்துவதாலோ, சமரசத்தாலோ, சாத்திரக் கல்வியினாலோ ஒருபோதும் தணிக்க முடியாது.(44) ஒருமுறை செய்யப்பட்ட தீங்கின் விளைவால் பகையெனும் நெருப்பானது ஒருமுறை பற்றிக் கொண்டால், ஓ! மன்னா, ஒருதரப்பை எரிக்காமல் அஃது ஒருபோதும் தணியாது.(45) ஒருவனுக்குத் தீங்கிழைத்தவன், (தீங்கிழைக்கப்பட்ட பிறகும்) அவன் செல்வத்தாலும், கௌரவங்களாலும் தன்னை வழிபட்டாலும், அவனை ஒருபோதும் தன்னுடைய நண்பனாகக் கருதக்கூடாது. தீங்கின் உண்மை, அத்தீங்குக்கு உள்ளானவனை அச்சத்தால் நிறைக்கிறது.(46) நான் உனக்கு ஒருபோதும் தீங்கிழைக்கவில்லை. நீயும் எனக்கு ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை. அதன் காரணமாகவே நான் உன் வசிப்பிடத்தில் வசித்தேன். அவை அனைத்தும் மாறிவிட்டது, தற்போது என்னால் உன்னை நம்ப முடியாது” என்றது.(47)பிரம்மதத்தன் {பறவை பூஜனியிடம்}, “காலமே ஒவ்வொரு செயலையும் செய்கிறது. பல்வேறு வகைச் செயல்களும், காலத்தில் இருந்தே எழுகின்றன. எனவே யார், யாருக்குத் தீங்கிழைப்பது[5]?(48) பிறப்பும், இறப்பும் இவ்வழியிலேயே நேர்கின்றன. காலத்தின் விளைவாலேயே உயிரினங்கள் செயல்படுகின்றன, காலத்தின் விளைவாலேயே அவை வாழ்வை நிறுத்தவும் செய்கின்றன (அதாவது பிறப்பையும், இறப்பையும் அடைகின்றன).(49) சிலர் உடனே {ஒன்றாகவே} இறப்பது காணப்படுகிறது. சிலர் ஒவ்வொரு காலத்தில் தனித்தனியாகவும் இறக்கின்றனர். சிலர், நீண்ட காலம் வாழ்வதும் காணப்படுகிறது. விறகை எரிக்கும் நெருப்பைப் போலவே, காலமானது அனைத்து உயிரினங்களையும் பற்றுகிறது.(50) ஓ! அருளப்பட்ட மங்கையே, எனவே, உன் கவலையின் காரணம் நானல்ல, அதே போல நீயும் என் துயருக்கான காரணமல்ல. உடல் படைத்த உயினிங்களின் இன்பத்தையும், துன்பத்தையும் காலமே எப்போதும் விதிக்கிறது.(51) என்னிடம் அன்புடனும், நான் உனக்குத் தீங்கு செய்வேன் என்ற அச்சம் ஏதும் இல்லாமலும் நீ இங்கே தொடர்ந்து சுகமாக வசிப்பாயாக. நீ செய்தது என்னால் மன்னிக்கப்பட்டது. ஓ! பூஜனி நீயும் என்னை மன்னிப்பாயாக” என்றான்.(52)பூஜனி, “உன்னைப் பொறுத்தவரையில், காலமே அனைத்திற்கும் காரணமென்றால், உண்மையில் பூமியில் எவரும் பகைமை உணர்வுகளை வளர்க்க முடியாது. எனினும், நண்பர்களும், சொந்தங்களும் கொல்லப்படும்போது, ஏன் நண்பர்களும், சொந்தங்களும் பழிவாங்குகின்றனர்?(53) மேலும், பழங்காலத்தில் ஏன் தேவர்களும், அசுரர்களும் ஒரைவரையொருவர் தாக்கிக் கொண்டு போரிட்டனர்? இன்பம் மற்றும் துன்பம், பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்குக் காலமே காரணம் என்றால்,(54) ஏன் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்தளிக்கின்றனர்? காலம் தான் அனைத்தையும் சமைக்கிறது என்றால், மருந்துகளுக்கான அவசியம்தான் என்ன?(55) மக்கள், துயரால் புலனுணர்வுகளை இழந்து, அறிவுபிறழ்ந்த அத்தகைய கொந்தளிப்பான பேச்சுகளில் ஏன் ஈடுபடுகின்றனர்? உன்னைப் பொறுத்தவரையில் காலமே செயல்களின் காரணமென்றால், அறச்செயல்களைச் செய்யும் நபர்கள் எவ்வாறு தங்கள் அறத்தகுதியை ஈட்ட முடியும்?(56) உன் மகன் என் பிள்ளையைக் கொன்றான். அதற்காக நான் அவனுக்குத் தீங்கிழைத்தேன். ஓ! மன்னா, அந்தச் செயலால் நான் உன்னால் கொல்லப்படத்தக்கவளானேன்.(57) என் மகனுக்கான துயரத்தால் உந்தப்பட்டு நான் உன் மகனுக்கு இந்தத் தீங்கைச் செய்துவிட்டேன். நான் ஏன் உன்னால் கொல்லப்படத்தக்கவளானேன் என்பதை இப்போது கேட்பாயாக.(58)

மனிதர்கள் தங்கள் உணவுக்காகக் கொல்லவோ, விளையாட்டுக்காகக் கூண்டில் அடைத்துவைக்கவோதான் பறவைகளை விரும்புகின்றனர். இத்தகைய கொலை, அல்லது அடைத்துவைத்தல் ஆகியவற்றுக்காகவே மனிதர்கள் என் இனத்தில் ஒவ்வொருவரையும் தேடுகிறார்களேயன்றி வேறு மூன்றாவது காரணம் ஏதும் கிடையாது.(59) மேலும் பறவைகளும், மனிதர்களால் கொல்லப்படுவோம், அல்லது அடைத்துவைக்கப்படுவோம் என்ற அச்சத்தால் பாதுகாப்பை நாடி தப்பி ஓடுகின்றனர். இறப்பு மற்றும் சிறை ஆகிய இரண்டும் வலிமிக்கவை என்று வேதங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(60) உயிர் என்பது அனைவருக்கும் அன்புக்குரியது {விருப்பத்திற்குரியது}. துயரத்தாலும், வலியாலும் அனைத்து உயிரினங்களும் துன்புறுகின்றன. அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியையே விரும்புகின்றன.(61) பல்வேறு மூலங்களில் இருந்து துன்பம் எழுகிறது. ஓ! பிரம்மதத்தா, முதுமை துன்பமே. செல்வமிழப்பு துன்பமே. ஏற்பில்லாத, அல்லது தீயவற்றுக்கு நெருக்கமான எதுவும் துன்பமே. நண்பர்கள் மற்றும் ஏற்புடைய பொருட்களில் இருந்து பிரிவோ, தொடர்பின்மையோ ஏற்படுவது துன்பமே.(62) இறப்பு மற்றும் சிறையில் துன்பமே எழுகிறது. பெண்கள் தொடர்புடைய காரணங்களாலும், பிற இயற்கையான காரணங்களாலும் துன்பம் எழுகிறது. பிள்ளைகளின் இறப்பால் எழும் துன்பமானது அனைத்துயிரினங்களையும் வெகுவாகப் பீடித்து அவற்றை {தங்கள் இயல்புகளில் இருந்து} மாறச் செய்கின்றன. (63)

சில மூட மனிதர்கள், பிறரின் துன்பங்கள் துன்பங்களே இல்லை என்று சொல்கின்றனர்[6]. மனிதர்களுக்கு மத்தியில் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்காதவன் மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும்.(64) எனினும் கவலையையும், துன்பத்தையும் அனுபவித்தவன் ஒருபோதும் அவ்வாறு சொல்லத் துணிய மாட்டான். அனைத்து வகைத் துன்பங்களின் வலியையும் உணர்ந்தவன், அடுத்தவரின் துன்பங்களைத் தன் துன்பத்தைப் போலவே உணர்வான்.(65) ஓ! மன்னா, நான் உனக்குச் செய்ததும், நீ எனக்குச் செய்ததும் நூறு வருடங்கள் ஆனாலும் {பாவங்கள்} கழுவப்பட முடியாதனவாகும்.(66) நாம் ஒருவருக்கொருவர் என்ன செய்து கொண்டோமோ, அதற்குப் பிறகு நமக்குள் எந்த இணக்கமும் ஏற்பட முடியாது. உன் மகனுக்கு ஏற்பட்டதை நீ அடிக்கடி சிந்திக்கும்போதெல்லாம், என் மீது நீ கொண்ட பகை புத்துயிர் பெறும்.(67) ஒருவன் ஒரு தீங்குக்காகப் பழிதீர்த்தபிறகு, தீங்குக்குள்ளானவனுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், உடைந்து போன மண் பாத்திரத்தைப் போலவே அத்தரப்புகளால் சரியாகச் சேர முடியாது.(68)நம்பிக்கையானது ஒருபோதும் மகிழ்ச்சியை உண்டாக்காது என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் விதித்திருக்கிறார்கள். பழங்காலத்தில் உசனஸே {சுக்கிராச்சாரியரே} பிரகலாதனிடம் இரண்டு ஸ்லோகங்களைப் பாடியுள்ளார்.(69) எதிரியின் உண்மையான, அல்லது பொய்யான வார்த்தைகளை எவன் நம்புவானோ, அவன் தேனைத் தேடும் ஒருவன் காய்ந்த புற்களால் மறைக்கப்பட்ட குழியில் விழுவதைப்போல அழிவையே அடைவான்[7].(70) உயிரோடு இருக்கும் பிள்ளைகளிடம் இறந்து போன அவர்களுடைய தந்தை செய்த சச்சரவுகளைக் குறித்து மனிதர்கள் பேசவே செய்வார்கள், எனவே பகைவர்கள் இறந்த பின்னரும் பகைகள் நீடிக்கின்றன[8].(71) மன்னர்கள் இணக்கம் செய்து கொண்டு பகைகளைத் தணித்தாலும், வாய்ப்பு ஏற்படும்போது நீர் நிறைந்த மண்குடங்களைக் கல்லில் மோதி உடைப்பதைப் போல அவர்கள் தங்கள் எதிரிகளை அழிப்பார்கள்.(72) ஒரு மன்னன் எவனுக்காவது தீங்கிழைத்துவிட்டால், அவன் மீண்டும் அவனை ஒருபோதும் நம்பக்கூடாது. தீங்கிழைக்கப்பட்டவனை ஒருவன் நம்புவதன் மூலம் அவன் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்” என்றான்.(73)பிரம்மதத்தன், “எந்த மனதனும், (பிறரிடம்) நம்பிக்கை வைக்காமல் எந்த நோக்கத்தின் கனியையும் அடையமுடியாது. அச்சத்தை வளர்த்துக் கொள்வதால் ஒருவன் சவத்தைப் போலவே வாழ நேரிடும்” என்றான்.(74)

பூஜனி, “எவனுடைய பாதமாவது புண்ணானால், அவன் எவ்வளவுதான் எச்சரிக்கையுடன் நடந்தாலும் {ஓடினாலும்}, அவன் நிச்சயம் விழுவான்.(75) கண்கள் எரிச்சல் கொண்ட ஒரு மனிதன் காற்றை எதிர்த்து தன் கண்களைத் திறந்தால், அந்தக் காற்றின் மூலம் அதிக வலியை உணர்வான்.(76) தன் பலத்தை அறியாமல், தீய பாதையில் கால் வைக்கும் ஒருவன், பிடிவாதமாக நடந்து சென்றால், அதன் விளைவாக அவன் விரைவில் தன் உயிரையே இழப்பான்.(77) முயற்சியற்ற ஒரு மனிதன், மழைக்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தன் நிலத்தை உழுதால் , அவர் ஒருபோதும் அறுவடையை அடையான்.(78) கசப்போ, துவர்ப்போ, ஏற்றுக்கொள்ளக்கூடியதோ, இனிமையானதோவான ஊட்டச்சத்துள்ள உணவை தினமும் உண்பவன் நீண்ட வாழ்வை வாழ்வான்.(79) மறுபுறம், நலந்தரும் உணவை அலட்சியம் செய்து, விளைவுகளைப் பார்க்காமல் தீங்கானவற்றை உண்ணும் ஒருவன் விரைவில் மரணத்தை அடைவான்.(80)

விதியும், முயற்சியும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டோர் நல்ல மற்றும் பெரும் சாதனைகளைச் செய்கின்றனர், அதே வேளையில் ஆண்மையற்றவர்கள் விதியைக் கொண்டாடுகின்றனர்[9].(81) நன்மையான ஒரு செயல் கடுமையானதோ, மென்மையானதோ, அது செய்யப்படவே வேண்டும். எனினும், செயலின்மையுடன் இருக்கும் நல்லூழற்ற மனிதன் எப்போதும் அனைத்துவகை இடர்களிலும் மூழ்கியிருப்பான்.(82) எனவே, ஒருவன் அனைத்தையும் கைவிட்டு தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டும். உண்மையில் மனிதர்கள் அனைத்தையும் அலட்சியம் செய்து, தங்களுக்கு நன்மையை உண்டாக்குபவற்றையே செய்ய வேண்டும்.(83)அறிவு, துணிவு, புத்தி, பலம், பொறுமை ஆகியன ஒருவனின் இயற்கையான நண்பர்களாக இருக்கின்றன. ஞானம் கொண்டோர் தங்களது இவ்வுலக வாழ்வை இவ்வைந்தின் துணையுடன் கடக்கிறார்கள்.(84) வீடுகள், மதிப்புமிக்க உலோகங்கள், நிலம் {வயல்}, மனைவி, நண்பர்கள் ஆகியன நன்மையின் இரண்டாம் மூலங்களாகக் கல்விமான்களால் சொல்லப்படுகின்றன. ஒரு மனிதன் இவற்றை எங்கும் அடையலாம்.(85) ஞானம் கொண்ட மனிதன், எங்கும் மகிழ்ச்சியாக இருப்பான். அத்தகைய மனிதன் எங்கும் ஒளிர்ந்து கொண்டே இருப்பான். அவன் ஒருபோதும் பிறரை அச்சமடையச் செய்யமாட்டான். அவனை அச்சப்படுத்த முயன்றால், ஒருபோதும் அவன் அச்சத்திற்கு வசப்படமாட்டான்.(86) ஒரு புத்திசாலியால் எந்தக் காலத்தில் உடைமையாகக் கொள்ளப்படும் செல்வமானது, சிறியதாக இருப்பினும் அது நிச்சயம் பெருகும். அத்தகைய மனிதன் அனைத்துச் செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்வான். தற்கட்டுப்பாட்டின் விளைவால் அவன் பெரும் புகழை அடைவதிலும் வெல்வான்.(87)

வீட்டைப்பார்த்துக் கொள்ளும் சிறுமதியாளர்கள், தன் அன்னைகளையே உண்ணும் ஒரு நண்டின் குஞ்சுகளைப்போலத் தங்கள் சதைகளையே உண்ணும் அடங்காப்பிடாரி மனைவிகளைக் கொள்வார்கள்[10].(88) அறிவை இழந்ததன் மூலம் தங்கள் விட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பில் உற்சாகமிழக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளேயே, “இவர்கள் எங்கள் நண்பர்கள், இஃது எங்கள் நாடு. ஐயோ, இவற்றை நாங்கள் எவ்வாறு விட்டுச் செல்வோம்?” என்று சொல்கிறார்கள். ஒருவனுடைய நாடானது தொற்றுநோய், அல்லது பஞ்சத்தால் பீடிக்கப்பட்டால் அவன் அதை விட்டுச் செல்லவே வேண்டும். ஒருவன் தன் நாட்டில் அனைவராலும் மதிக்கப்பட்டு வாழவேண்டும், அல்லது அந்நிய நாட்டிற்குச் சென்று வாழ வேண்டும்.(90) இதன் காரணமாக நான் வேறு பகுதிக்குச் செல்லப்போகிறேன். ஓ! மன்னா, நான் உன் பிள்ளைக்குப் பெரும் தீங்கைச் செய்திருப்பதால் இந்த இடத்தில் இன்னும் இருக்க நான் துணியேன்.(91) கெட்ட மனைவி, கெட்ட மகன், கெட்ட மன்னன், கெட்ட நண்பன், கெட்ட கூட்டணி, கெட்ட நாடு ஆகியவற்றை ஒருவன் தொலைவிலேயே கைவிட வேண்டும்.(92) ஒரு கெட்ட மகனிடம் ஒருவன் நம்பிக்கை வைக்கக்கூடாது. கெட்ட மனைவியிடம் அவனுக்கு என்ன இன்பம் இருக்க முடியும்? கெட்ட நாட்டால் எந்த மகிழ்ச்சியும் இருக்க முடியாது. ஒரு கெட்ட நாட்டில் வாழ்வாதாரத்தை அடைவோம் என ஒருவனும் நம்ப முடியாது.(93) நிச்சயமற்ற பற்றுடன் கூடிய ஒரு கெட்ட நண்பனிடம் தோழமை இருக்க முடியாது. அவசியம் இல்லாதபோது ஏற்படும் ஒரு கெட்ட கூட்டணியால் அவமானமே ஏற்படும்.(94)(“வீட்டிலுள்ள ஸ்நேஹத்தால் கட்டுப்பட்டவர்களும் அல்பபுத்தியுள்ளவர்களுமான மனிதர்களின் மாம்ஸங்களைக் கெட்டஸ்திரீயானவள், பெண் நண்டை அதன் குஞ்சுகள் மாய்ப்பது போல நாசமடையச் செய்வாள்”அவர்கள், பெண் நண்டுகளையும், இளம் நண்டுகளையும்போலத் தங்கள் சதைகளையே உண்ணும் கெட்ட மனைவியரை அடைவார்கள்” என்றிருக்கிறது. அடிக்குறிப்பில் இந்த ஸ்லோகத்தை விளக்கும் திப்ராய், “இந்த இளம் நண்டுகள் குஞ்சுகள்தான் என்று இந்த உரை குறிப்பதாகச் சொல்வதற்கு ஏதும் இல்லை. எனவே, இது சில நண்டுகள், சிறு நண்டுகளை உண்பதைச் சொல்கிறதே தவிர வேறில்லை”)உண்மையில் எவை ஏற்புடையவையோ, அவற்றை மட்டுமே பேசுபவளே மனைவியாவாள். எவன் தந்தையை மகிழ்ச்சியுறச் செய்வானோ, அவனே மகனாவான். எவனிடம் நம்பிக்கை வைக்கமுடியுமோ அவனே நண்பனாவான். உண்மையில் எங்கே ஒருவனால் வாழ்வை ஈட்டமுடியுமோ, அதுவே அவனுடைய நாடாகாகும்.(95) {தன் மக்களை} ஒடுக்காமல், ஏழைகளைப் பேணி, தன் ஆட்சிப் பகுதிகளில் அச்சமேதும் இல்லாமல் பார்த்துக் கொள்பவனே மன்னன் ஆவான்.(96) தன் மன்னன் சாதனைகளைக் கொண்டவனாகவும், அறக்கண்களைக் கொண்டவனாகவும் இருந்தால், மனைவி, நாடு, நண்பர்கள், மகன், மன்னன் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைத்தையும் ஒருவன் பெறலாம்.(97) மன்னன் பாவம் நிறைந்தவனாக இருந்தால், அவனது ஒடுக்குமுறையின் விளைவால் அவனுடைய குடிமக்கள் அழிவை அடைவார்கள். ஒருவனுடைய முத்தொகுப்புக்கு (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றுக்கு) மன்னனே வேராவான். அவன் தன் குடிமக்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(98) அவன் {மன்னன்}, தன் குடிமக்களின் செல்வத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். எந்த மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாக்கவில்லையோ, அவன் உண்மையில் கள்வனாவான்.(99) எந்த மன்னன், பாதுகாப்பதாக உறுதியளித்துவிட்டு, ஆதாய வேட்டையினால் அதை நிறைவேற்றவில்லையென்றால், பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட அந்த ஆட்சியாளன், தன் குடிமக்கள் அனைவரின் பாவங்களையும் தனதாக ஏற்று, முற்றாக நரகத்தில் மூழ்குவான்.(100) மறுபுறம், எந்த மன்னன், பாதுகாப்பதாக உறுதி அளித்துவிட்டு, அதை நிறைவேற்றுகிறானோ அவன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதன் விளைவால் அண்டத்திற்கே நன்மை செய்தவனாகக் கருதப்படுவான்.(101)

அனைத்து உயிரினங்களின் தலைவரான மனு, மன்னனுக்கு ஏழு பண்புநிலைகள் உண்டெனச் சொல்லியிருக்கிறார், தாய், தந்தை, ஆசான், பாதுகாவலன், நெருப்பு, வைஸ்வரவணன் {குபேரன்} மற்றும் யமன் ஆகிய நிலைகளே அவை.(102) ஒரு மன்னன் தன் மக்களிடம் கருணையுடன் நடந்து கொள்வதால் அவர்களுடைய தந்தையாக அழைக்கப்படுகிறான். அவனிடம் பொய்மையுடன் நடந்து கொள்ளும் குடிமகன், தன் அடுத்தப் பிறவியில் ஒரு விலங்காகவோ, ஒரு பறவையாகவோ பிறப்பை அடைகிறான்.(103) மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமும், ஏழைகளைப் பேணிக் காப்பதன் மூலமும் அவர்களுக்குத் தாயாகிறான். தீயோரைச் சுடுவதன் மூலம் அவன் நெருப்பாகக் கருதப்படுகிறான், பாவம் நிறைந்தோரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவன் யமன் என அழைக்கப்படுகிறான்.(104) தன் அன்புக்குரியவர்களுக்குச் செல்வக் கொடை அளிப்பதன் மூலம், அந்த மன்னன் விருப்பங்களை அளிப்பவனான குபேரனாகக் கருதப்படுகிறான். நெறி மற்றும் அறம் குறித்துப் போதிப்பதனால் அவன் ஆசானாகிறான். பாதுகாக்கும் கடமையை நடைமுறைப்படுத்துவதால் அவன் காவலனாகிறான்.(105)

தன் நகரங்கள் மற்றும் மாகாணங்களின் மக்களை மகிழ்ச்சியுறச் செய்யும் மன்னன், அத்தகையைக் கடமையை நோற்பதன் விளைவால் ஒருபோதும் தன் நாட்டை இழக்கமாட்டான்.(106) தன் குடிமக்களை எவ்வாறு கௌரவிக்க வேண்டும் என்பதை அறிந்த மன்னன், இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் துயருற மாட்டான்.(107) எந்த மன்னனின் குடிமக்கள் எப்போதும் கவலையில் நிறைவார்களோ, அதிக வரிச்சுமைக்கு உள்ளாகிறார்களோ, அனைத்து வகைத் தீமைகளிலும் மூழ்குகிறார்களோ, அவன் தன் எதிரிகளின் கரங்களில் தோல்வியை அடைவான்.(108) மறுபுறம், எந்த மன்னனின் குடிமக்கள் ஒரு தடாகத்தில் வளரும் பெரிய தாமரையைப் போல வளர்கிறார்களோ, அவன் {அந்த மன்னன்} இம்மையில் அனைத்து வெகுமதிகளையும் அடைந்து, இறுதியில் சொர்க்கத்திலும் கௌரவத்தை அடைவான்.(109) ஓ! மன்னா, பலவானோடு பகைமை ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. எந்த மன்னன், தன்னைவிடப் பலவானோடு பகைமை கொள்வானோ, அவன் தன் நாடு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இழப்பான்” என்றது {பூஜனி என்ற பறவை}”.(110)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் பிரம்மதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பறவை, மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு, தான் தேர்ந்தெடுத்த பகுதிக்குச் சென்றுவிட்டாள்.(111) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இவ்வாறே பிரம்மதத்தனுக்கும் பூஜனிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் சொல்லிவிட்டேன். நீ வேறு என்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(112)

பாரத்வாஜரும் சத்ருஞ்சயனும்! – சாந்திபர்வம் பகுதி – 140-பாரத்வாஜர் மற்றும் சத்ருஞ்சயன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலின் மூலம் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய செங்கோல், மன்னர்களின் பல்வேறு கடமைகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, படிப்படியாக யுகம் குறைவதன் விளைவால், அறம் மற்றும் மனிதர்கள் ஆகிய இரண்டும் அழியும்போதும், உலகம் கள்வர்களால் பீடிக்கப்படும்போதும், ஓ! பாட்டா, ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, அத்தகைய துன்பத்தில் மன்னன் பின்பற்ற வேண்டிய கொள்கை குறித்து நான் உனக்குச் சொல்கிறேன்.(2) அத்தகைய நேரத்தில், கருணையைக் கைவிட்டு அவன் எவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை உனக்குச் சொல்கிறேன். இது தொடர்பாகப் பாரத்வாஜருக்கும், மன்னன் சத்ருஞ்சயனுக்கும் இடையில் நடந்த உரையாடலைப் பழங்கதை குறிப்பிடுகிறது.(3)

சௌவீரர்களுக்கு மத்தியில் சத்ருஞ்சயன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பெருந்தேர்வீரனாகவும் இருந்தான். பாரத்வாஜரிடம் சென்ற அவன், பொருளறிவியலின் உண்மைகளைக் குறித்து அந்த முனிவரிடம் கேட்கும் வகையில்,(4) “அடையப்படாத பொருளை எவ்வாறு அடைய வேண்டும்? மேலும் அடைந்த பிறகு, அஃதை எவ்வாறு பெருக்க வேண்டும்? பெருக்கப்பட்ட பிறகு, அஃதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? மேலும் பாதுகாக்கப்பட்ட பிறகு, அஃதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?” என்று கேட்டான். பொருளறிவியலின் உண்மைகளைக் குறித்து இவ்வாறு கேட்கப்பட்டதும் அந்த மறுபிறப்பாள முனிவர் {பாரத்வாஜர்}, அவ்வுண்மைகளை அந்த ஆட்சியாளனுக்கு விளக்கும் வகையில் சிறந்த அறிவு நிரம்பிய பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்.(6)

முனிவர் {பாரத்வாஜர்}, “ஒரு மன்னன் எப்போதும் தன் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடனே {செங்கோலுடனே} இருக்க வேண்டும். அவன் எப்போதும் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். எந்தத் தவறும் இல்லாதவனாகத் தான் இருந்து கொண்டு, தன் எதிரியின் தவறுகளைக் கவனிக்க வேண்டும். உண்மையில், அவனது கண்ணானது இந்தக் காரியத்திற்கே எப்போதும் பயன்படுத்தப்பட வேண்டும்.(7) கரத்தில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் மன்னனைக் காணும்போது, அனைவரும் அச்சத்தால் தாக்கப்படுவார்கள். இந்தக் காரணத்தால் மன்னன் தண்டக் கோலைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் ஆள வேண்டும்.(8) கல்வி மற்றும் உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் தண்டனையை மெச்சுகிறார்கள். எனவே, விதியின் நான்கு தேவைகளான இணக்கம் {சாமம்}, கொடை {தானம்}, வேற்றுமை உண்டாக்கல் {பேதம்}, தண்டனை {தண்டம்} ஆகியவற்றில் தண்டனையே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது.(9) புகலிடத்தின் அடித்தளங்கள் வெட்டப்படும்போது, ஏதிலிகள் அனைவரும் அழிவை அடைவார்கள். ஒரு மரத்தின் வேர்கள் வெட்டப்படும்போது, கிளைகளால் எவ்வாறு வாழ முடியும்?(10) ஞானம் கொண்ட ஒரு மன்னன், தன் எதிரியின் வேர்களையே அறுக்க வேண்டும். பிறகு அவனை வெற்றிக் கொண்டு, அந்த எதிரியின் கூட்டாளிகளையும், சார்பாளர்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வர வேண்டும்.(11)

மன்னனுக்குப் பேரிடர் ஏற்படும்போது, அவன் காலமேதும் இழக்காமல், ஞானத்துடன் ஆலோசித்து, முறையாகத் தன் ஆற்றலை வெளிப்படுத்தி, திறனுடன் போரிட்டு, ஞானத்துடன் பின்வாங்கவும் வேண்டும்.(12) பேச்சில் மட்டுமே மன்னன் தன் பணிவை வெளிப்படுத்த வேண்டுமேயன்றி, இதயத்தில் கத்தியின் கூர்மையுடன் இருக்க வேண்டும். அவன் காமம், கோபம் ஆகியவற்றைக் கைவிட்டு, இனிமையாகவும் மென்மையாகவும் பேச வேண்டும்.(13) ஒரு பகைவனுடன் சேர்க்கை உண்டாகும்போது, முன்னறிவு கொண்ட ஒரு மன்னன், அவனிடம் குருட்டு நம்பிக்கை ஏதும் வைக்காமல் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காரியம் முடிந்ததும், தன் புதுக் கூட்டாளியிடம் இருந்து வேகமாக விலக வேண்டும்.(14) ஒருவன் தன் பகைவனிடம் ஒரு நண்பனைப் போல இனிய உறுதிமொழிகளைக் கொடுத்து இணக்கம் கொள்ள வேண்டும். எனினும், அறையில் உள்ள ஒரு பாம்பைப் போலவே அந்த எதிரியிடம் எப்போதும் அச்சத்துடன் இருக்க வேண்டும்.(15)

எவனுடைய புத்தி (உன்னுடைய புத்தியால்) ஆதிக்கம் செய்யப்படுமோ, அவனிடம், கடந்த காலங்களைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும். தீய புத்தியைக் கொண்டவனிடம் எதிர்கால நன்மைகளைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும்.(16) எனினும், ஞானம் கொண்ட மனிதனிடம், தற்காலத் தொண்டுகளைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும். செழிப்பை அடைய விரும்பும் மனிதன், தன் கரங்களைக் கூப்ப வேண்டும், உறுதிமொழி கூற வேண்டும், இனிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும், தலைவணங்கி வழிபட வேண்டும், மேலும் கண்ணீரும் சிந்த வேண்டும்[1].(17) காலம் சாதகமாக இல்லாதவரை ஒருவன் தன் எதிரியைத் தன் தோள்களிலும் தாங்கலாம். எனினும், வாய்ப்பு ஏற்படும்போது, ஒரு மண்குடத்தைக் கல்லில் மோதுவதைப் போல அவனைத் துண்டுகளாக உடைத்துவிட வேண்டும்.(18) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன் உமியிலுள்ள நெருப்பைப் போலப் பிரகாசமில்லாமல் நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதைவிட ஒரு கணமே என்றாலும் திந்துக மரத்திலெடுத்த கரியைப் போலச் சுடர்விட்டெரியவதே சிறந்தது.(19) பல காரியங்களைச் செய்ய வேண்டிய மனிதன், ஒரே ஒரு நன்றியற்ற மனிதனிடம் எந்தக் காரியத்தையும் செய்யாமல் இருப்பதில் ஐயங்கொள்ளக்கூடாது. வெற்றியடைந்தால் ஒருவன் மகிழ்ச்சியாக இருப்பான். வெற்றியடையாவிட்டால் அவன் மதிப்பை இழப்பான்.(20) எனவே, அத்தகைய மனிதர்களின் செயல்களை நிறைவேற்றுவதைப் பொறுத்தவரையில், ஒருவன், அவற்றை முழுமையாக நிறைவேற்றாமல் ஏதாவதொன்றை முடிக்காமல் மிச்சம் வைக்க வேண்டும். கோகிலம் {குயில்}, பன்றி, மேரு மலை, வெற்று அறை ஆகியவற்றையும், நடிகன் மற்றும் அர்ப்பணிப்புள்ள நண்பன் ஆகியோரையும் போல, ஒரு மன்னன், தனக்கான நன்மையைச் செய்து கொள்ள வேண்டும்[2].(21)மிகக் கவனமாக நடந்து கொள்ளும் மன்னன், தனக்கு இடரே ஏற்பட்டாலும், அடிக்கடி தன் எதிரிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களது நன்மையைக் குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும்.(22) செயல்படாமல் இருப்பவர்களால் ஒருபோதும் செழிப்பை வெல்ல முடியாது; ஆண்மையும் முயற்சியும் அற்றவர்களாலும்; பகட்டு எனும் களங்கம் கொண்டவர்களாலும், செல்வாக்கின்மையில் அச்சம் கொண்டவர்களாலும்; எப்போதும் காலந்தாழ்த்துபவர்களாலும் ஒருபோதும் செழிப்பை வெல்ல முடியாது.(23) தன் தவறுகளை எதிரி கணிக்காதவகையில் ஒரு மன்னன் செயல்பட வேண்டும். எனினும், அவன் தன் எதிரிகளின் தவறுகளைக் கண்டு கொண்டே இருக்க வேண்டும். அவன் தன் அங்கங்களை மறைத்துக் கொள்ளும் ஆமையைப் போலச் செயல்பட வேண்டும். உண்மையில் அவன் தன் ஓட்டைகள் அனைத்தையும் எப்போதும் மறைத்துக் கொள்ள வேண்டும்.(24) அவன் ஒரு நாரையைப் போலப் பொருளாதாரம் தொடர்புடைய அனைத்துக் காரியங்களைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்[3]. அவன் தன் ஆற்றலை ஒரு சிங்கத்தைப் போல வெளிப்படுத்த வேண்டும்.அவன் ஓர் ஓநாயைப் போலக் காத்துக் கிடந்து, பாய வேண்டும். ஒரு கணையைப் போல அவன் தன் எதிரிகளைத் துளைக்க வேண்டும்.(25)குடி {மது}, பகடை {சூது}, பெண்கள், வேட்டை, இசை ஆகியவற்றை முறையாக அனுபவிக்க வேண்டும். இவற்றுக்கு அடிமையாவது தீமையையே உண்டாக்கும்.(26) அவன் விற்களை மூங்கில்களால் செய்து கொள்ள வேண்டும். அவன் மானைப் போல உறங்க வேண்டும்; தேவைப்படும் நேரத்தில் அவன் குருடனாகவும், செவிடனாகவும் இருக்க வேண்டும்.(27) ஞானம் கொண்ட ஒரு மன்னன் காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொண்டு தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். இவை சாதகமாக இல்லையெனில், ஆற்றல் வீணாகும்.(28) மன்னன், {நல்ல} காலத்தையும், சாதகமில்லாத காலத்தையும் குறித்துக் கொண்டு, தன் பலம் மற்றும் பலவீனங்களைச் சிந்தித்து, எதிரியுடன் ஒப்பிடுகையில் தன் பலத்தைப் பெருகச் செய்து செயல்பட வேண்டும்.(29) படைபலத்தின் மூலம் அடக்கப்பட்ட ஓர் எதிரியை நொறுக்காமல் இருக்கும் மன்னன், கருவுறும் நண்டைப் போலத் தன் மரணத்தையே தேடிக் கொள்வான்.(30)

மன்னன் மலர்களையன்றி கனிகளைக் காட்டக் கூடாது. கனிகளைக் காட்டினால் அடைய முடியாத உயரத்தில் இருக்கவேண்டும்; கனியாமல் {முதிராமல்} இருப்பினும், கனிந்ததாக {முதிர்ந்ததாகக்} காட்ட வேண்டும். இத்தகைய வழியில் அவன் தன்னை நடத்திக் கொண்டால், தன் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து உயர்வான்.(31) மன்னன் முதலில் (உறவை நாடித் தன்னை அணுகுவோரிடம்) நம்பிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும். பிறகு, அந்த நம்பிக்கைகளின் நிறைவேற்றத்திற்கான வழியில் அவன் தடைகளை ஏற்படுத்த வேண்டும். அவன் அந்தத் தடைகள் வெறும் சந்தர்ப்பவசத்தாலேயே ஆனவை என்று சொல்ல வேண்டும். அடுத்ததாக அவன் அந்தச் சந்தர்ப்பங்களும் உண்மையில் முக்கியமான காரணங்களாலேயே விளைந்தவை என்பதைச் சொல்ல வேண்டும்.(32) அச்சத்திற்கான காரணமேதும் உண்மையில் வராமல் இருக்கும் வரை, மன்னன் அச்சத்திலிருப்பவனைப் போலத் தன் ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். எனினும், அச்சத்திற்கான காரணம் தோன்றியதும், அவன் அச்சமில்லாமல் தாக்க வேண்டும்.(33) எந்த மனிதனும் ஆபத்துக்கு உள்ளாகாமல் நன்மைய அறுவடை செய்ய முடியாது. மேலும், ஆபத்துக்கு மத்தியில் அவன் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் வென்றால், அவன் பெரும் நன்மைகளை ஈட்டுவது நிச்சயம்[4].(34) ஒரு மன்னன் எதிர்கால அச்சங்கள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை இருக்கும்போது அவற்றை வெல்ல வேண்டும்; அவை மீண்டும் வளர்ந்நால், அவற்றை வென்ற பிறகும், வெல்லப்படாதவையாக அவற்றைக் கருத வேண்டும்.(35)எதிர்கால மகிழ்ச்சியைத் தேடி நிகழ்கால மகிழ்ச்சியைக் கைவிடுவது ஒருபோதும் நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதனின் கொள்கையாக இருக்க முடியாது.(36) எந்த மன்னன் ஓர் எதிரியுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் உறங்குவானோ, அவன் மரத்தின் உச்சியில் தூங்கி, விழுந்த பிறகு விழிக்கும் மனிதனைப் போன்றவனாவான்(37) ஒருவன் துயரில் வீழும்போது, அவன் மென்மையான, அல்லது கடுமையான சக்தியின் எந்த வழிமுறைகளிலாவது தானாக எழு வேண்டும்; அவ்வாறு எழுந்ததும் தகுதி வாய்ந்தவனாக ஆன பிறகு, அவன் அறத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.(38) மன்னன் எப்போதும் தன் எதிரிகளின் எதிரிகளைக் கௌரவிக்க வேண்டும். அவன் தன் ஒற்றர்களையே எதிரிகளால் நியமிக்கப்பட்ட முகவர்களாகவே கருத வேண்டும்.(39) மன்னன் தன் ஒற்றர்களை எதிரி அடையாளம் காணாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் நாத்திகர்களையும், தவசிகளையும் ஒற்றர்களாக்கி தன் எதிரியின் ஆட்சிப்பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும்.(40)

நந்தவனங்கள், கேளிக்கையிடங்கள், பயணிகளின் தாகத்திற்காகக் குடிநீர் கொடுக்கும் இல்லங்கள், தீர்த்தங்கள், பொதுச் சபைகள் ஆகிய இடங்களில், அறவிதிகளுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களும், அனைவரின் தரப்பினருக்கும் முள்ளாக இருப்பவர்களுமான பாவம் நிறைந்த கள்வர்கள் நுழைவார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.(41,42) மன்னன் நம்பத்தகாதவர்களை நம்பக்கூடாது; அதேபோல நம்பத்தகுந்தவர்களிடமும் அதிக நம்பிக்கை வைக்கக்கூடாது. நம்பிக்கையிலிருந்தே ஆபத்து எழுகிறது. முன்பே எதையும் சோதிக்காமல் {எதன்மேலும்} நம்பிக்கை வைக்கப்படக்கூடாது.(43) மன்னன், சரியாகத் தோன்றும் காரணங்களால் எதிரிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அவன் தவறான அடியெடுத்து வைக்கும்போது அவனைத் தாக்க வேண்டும்.(44) எவனிடம் எந்த அச்சமுமில்லையோ, அவனிடம் மன்னன் அஞ்ச வேண்டும்; அச்சத்தக்கவர்களுக்கு அவன் எப்போதும் அஞ்சவே வேண்டும். அஞ்சத்தகாதவர்களிடம் எழும் அச்சமானது மொத்த அழிவுக்கு வழிவகுத்துவிடும்.(45)

(அறத்தகுதி அடைவதில்) கவனம், எண்ணங்களை வெளியிடாமை, தவசிகளின் சிவப்பு {காவி} உடை {காஷாய வஸ்திரம்}, சடாமுடி மற்றும் தோல்களைத் தரித்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவன் தன் எதிரியை நம்ப வைக்க வேண்டும். பிறகு (வாய்ப்பு ஏற்படும்போது) ஓர் ஓநாயைப் போல அவன் மீது பாய வேண்டும்.(46) செழிப்பை விரும்பும் மன்னன், தன் நோக்கங்களைத் தடைசெய்ய முனையும் மகனையோ, உடன்பிறந்தவனையோ, தந்தையையோ, நண்பனையோ கொல்லத் தயங்கக் கூடாது.(47) ஆசானே கூட ஆணவம் கொண்டவராகவும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதை அறியாதவராக, அறமற்ற பாதைகளில் நடப்பவராக இருந்தால், அவரும் தண்டனையின் மூலம் கட்டுப்படுத்தப்படத் தகுந்தவரே ஆவார்.(48) கூரிய கொடுக்குகளைக் கொண்ட பூச்சிகள், தாங்கள் அமரும் மரத்தின் பூக்கள் மற்றும் கனிகள் அனைத்தையும் வெட்டுவதைப் போலவே மன்னனும், கௌரவங்கள், வணக்கம், கொடைகள் ஆகியவற்றின் மூலம் எதிரியை நம்பிக்கை கொள்ளச் செய்து, அவனுக்கு எதிராகத் திரும்பி அவனிடம் உள்ள அனைத்தையும் கைப்பற்ற வேண்டும்.(49) பிறரின் முக்கிய அங்கங்களைத் துளைக்காமல், பல கடுஞ்செயல்களைச் செய்யாமல், மீனவனைப் போல உயிரினங்களைக் கொல்லாமல் ஒருவனாலும் பெருஞ்செழிப்பை அடைய முடியாது.(50)

உயிரினங்களில் பகைவர்கள், அல்லது எதிரிகள் என்றழைக்கப்படும் தனிவகை இனங்கள் ஏதும் கிடையாது. சூழ்நிலையின் சக்திக்கு ஏற்றபடியே மனிதர்களுக்கு நண்பர்களோ, பகைவர்களோ ஏற்படுகிறார்கள்.(51) மன்னன், தன் எதிரி எவ்வளவுதான் பரிதாபகரமான புலம்பல்களில் {அழுவதில்} ஈடுபட்டாலும், அவனை ஒருபோதும் தப்பிக்க அனுமதிக்கக்கூடாது. மறுபுறம், அவற்றால் அசைக்கப்படாமல், தனக்குத் தீங்கிழைத்த மனிதனை அழிப்பதே அவனது கடமையாகும்.(52) செழிப்பை விரும்பும் மன்னன் தன்னால் எவ்வளவு மனிதர்களை இணைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பேரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு , அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தன் குடிமக்களிடம் நடந்து கொள்ளும் முறையில் அவன் எப்போதும் வன்மத்தில் இருந்து விடுபட்டவனாக இருக்கவேண்டும். அவன் செல்வத்தை எடுக்க எண்ணும்போது, எது ஏற்புடையதோ அதையே அவன் பேச வேண்டும். செல்வத்தை எடுத்த பிறகு, அவன் அதே போன்றவற்றையே பேச வேண்டும். ஒருவனுடைய தலையை வீழ்த்திய பிறகு, அவன் அதற்காக வருந்தி, கண்ணீர் சிந்த வேண்டும்.(54)

செழிப்பை விரும்பும் மன்னன், இனிய சொற்கள், கௌரவங்கள், கொடைகள் ஆகியவற்றின் மூலம் பிறரைத் தன்னை நோக்கி இழுக்க வேண்டும். இவ்வாறே அவன் மனிதர்களைத் தன் தொண்டில் கட்ட வேண்டும்.(55)

மன்னன் ஒருபோதும் கனியற்ற சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. தன் இரு கரங்களின் துணையை மட்டுமே கொண்டு அவன் ஒருபோதும் ஓர் ஆற்றைக் கடக்கக்கூடாது. மாட்டுக் கொம்புகளை உண்பது கனியற்றதும், ஒருபோதும் வலுவூட்டாததுமாகும். அவற்றை உண்டால், ஒருவனின் பற்கள் உடைவதோடு, சுவையாலும் அவன் நிறைவடைய மாட்டான்.(56) முத்தொகையானது {அறம், பொருள், இன்பம்}, பிரிக்கப்படமுடியாத மூன்று துணைப் பண்புகளுடன்கூடிய மூன்று தீமைகளைக் கொண்டிருக்கிறது. கவனமான அந்தத் துணைப் பண்புகளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தீமைகள் தவிர்க்கப்பட வேண்டும்[5].(57) திரும்பச் செலுத்தப்படாத கடன், தணிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் நெருப்பு ஆகியவையும் எதிரிகளில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்போரும் மீண்டும் மீண்டும் வளர்ந்து பெருகுபவையாகும். எனவே, இவை அனைத்தும் முற்றாகத் தணிக்கப்பட்டு, அழிக்கப்பட வேண்டும்.(58) எப்போதும் வளர்வதான கடனானது, மொத்தமாகத் தணிக்கப்படாதவரை நிச்சயம் நீடிக்கும். தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின், புறக்கணிக்கப்பட்ட நோய்களின் வழக்கும் அதே போன்றவையே. இவை எப்போதும் பேரச்சத்தையே உண்டாக்கும். (எனவே, ஒருவன் இவற்றை எப்போதும் வேரோடு அழிக்கப்பட வேண்டும்).(59) அனைத்துச் செயல்களும் முழுமையாகச் செய்யப்பட வேண்டும். ஒருவன் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முள்ளைப் போன்ற ஒரு சிறிய பொருளே கூட, சரியாகப் பிடுங்கப்படவில்லையென்றால், விடாப்பிடியான செத்தையாக {அழுகலுக்கு} வழிவகுக்கும்.(60)மக்கள் தொகையைக் கொல்வது, அதன் சாலைகளைச் சிதைப்பது, அல்லது அவற்றுக்குத் தீங்கிழைப்பது, அவற்றின் வீடுகளை இடிப்பது, எரிப்பது ஆகியவற்றின் மூலம் ஒரு மன்னன் ஒரு பகை நாட்டை அழிக்க வேண்டும்.(61) ஒரு மன்னன் ஒரு கழுகைப் போலத் தொலைநோக்குப் பார்வை கொண்டவனாக இருக்க வேண்டும், நாரையைப் போல அசைவற்றவனாக, நாயைப் போல எச்சரிக்கையுள்ளவனாக, சிங்கத்தைப் போலத் துணிவுள்ளவனாக, காக்கையைப் போல அச்சமுள்ளவனாக, கவலையில்லாமல் பகைவர்களின் ஆட்சிப்பகுதிகளுக்குள் எளிதாக நுழையும் ஒரு பாம்பைப் போலவும் இருக்க வேண்டும்.(2) ஒரு மன்னன், ஒரு வீரனிடம் கரங்கூப்பியும், ஒரு கோழையிடம் அச்சத்தை ஏற்படுத்தியும், பேராசைக்காரனிடம் செல்வக்கொடை கொடுத்தும் சமமானவனிடம் போர் தொடுத்தும் அவர்களை வெல்ல வேண்டும்.(63) குழுக்களின் தலைவர்களுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்குவதிலும், தனக்கு அன்பானவர்களிடம் இணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவன் கவனமாக இருக்க வேண்டும். அவன் தன் அமைச்சர்களை ஒற்றுமையின்மையிலும், அழிவிலும் இருந்து காக்க வேண்டும்.(64) மன்னன் மென்மையாக இருந்தால் மக்கள் அவனை அவமதிப்பார்கள். அவன் கடுமையாக இருந்தாலோ, மக்கள் தங்களைப் பீடிப்பதாகக் கருதுவார்கள். அவன் கடுமை தேவைப்படும் நேரங்களில் கடுமையாகவும், மென்மை தேவைப்படும் நேரங்களில் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே விதி.(65) மென்மையால் மென்மை வெட்டப்பட வேண்டும். மென்மையைக் கொண்டு ஒருவனால் கடுமையானதையும் அழிக்க முடியும். மென்மையால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. இதன்காரணமாகக் கடுமையைவிட மென்மையே கூர்மையானதாகச் சொல்லப்படுகிறது.(66)

எந்த மன்னன், மென்மை தேவைப்படும் நேரத்தில் மென்மையாகவும், கடுமை தேவைப்படும் நேரத்தில் கடுமையாகவும் நடந்து கொள்கிறானோ, அவன் தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டு, தன் எதிரிகளைத் தண்டிக்க வேண்டும்.(67) அறிவும், ஞானமும் கொண்ட மனிதனிடம் பகையை உண்டாக்கிக் கொள்ளும் ஒருவன், (தன் எதிரியிடம் இருந்து) தொலைவாக இருக்கிறோம் என்று நம்பிக்கையில் ஆறுதலடையக் கூடாது. நுண்ணறிவுமிக்க மனிதனின் கரங்கள், தனக்குத் தீங்கிழைத்தவனுக்குத் தொலைவிலிருந்தே தீங்கிழைக்கவல்லவையாகும் {அவை நீண்டவையாகும்}.(68) உண்மையில் கடக்க முடியாததைக் கடக்க முயற்சிக்கக்கூடாது. எதிரியால் மீட்க இயன்றவற்றை அவனிடம் இருந்து பறிக்கக்கூடாது. தோண்டுவதால் ஒன்றின் வேரை அடைய முடியாது என்றால், அவன் தோண்டுவதற்கு முயற்சிக்கவே கூடாது. எவனுடைய தலையை வெட்ட முடியாதோ, அவனை ஒருவன் ஒருபோதும் தாக்கக்கூடாது.(69) ஒரு மன்னன் எப்போதுமே இவ்வழியில் நடந்து கொள்ளக்கூடாது. நான் சொல்லும் இந்த நடத்தைகளைத் துன்ப காலங்களில் மட்டுமே பின்பற்ற வேண்டும். எதிரிகளால் தாக்கப்படும்போதும், எவ்வாறு நீ உன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை உனது நன்மையின் பொருட்டே நான் சொல்கிறேன்” என்றார் {பாரத்வாஜர்}.(70)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சௌவீரர்களின் ஆட்சியாளன் {சத்ருஞ்சயன்} தனக்கான நன்மையை வேண்டி அந்தப் பிராமணரால் {பாரத்வாஜரால்} சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவரது அறிவுரைகளை உற்சாகமாக ஏற்று, தன் சொந்தங்கள், நண்பர்களுடன் சேர்ந்து சுடர்மிக்கச் செழிப்பை அடைந்தான்” {என்றார் பீஷ்மர்}.(71)

விஷ்வாமித்திரரும், நாய் இறைச்சியும்! – சாந்திபர்வம் பகுதி – 141-உண்ணத்தகாததை உண்டாவது உயிரைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் விஷ்வாமித்திரருக்கும், நாயின் இறைச்சியை உண்ணும் சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த அறம் சிதைந்து, அனைவராலும் அது மீறப்படும்போதும், மறமே {அதர்மமே} அறமாகும் {தர்மம்} போதும், அறமானது நேர் எதிரான வடிவத்தை ஏற்கும்போதும்,(1) நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மறைந்து, அறம் தொடர்புடைய உண்மைகள் அனைத்தும் கலங்கி குழப்பமடையும்போதும், மன்னர்களாலும், கள்வர்களாலும் மக்கள் ஒடுக்கப்படும்போதும்,(2) நால்வகை வாழ்வுமுறைகளை {ஆசாரங்களைச்} சார்ந்த மனிதர்களின் கடமைகளில் கலக்கமடைந்து, செயல்கள் அனைத்தும் தங்கள் தகுதியை இழக்கும்போதும், காமம், பேராசை, மடமை ஆகியவற்றின் விளைவால் அனைத்துத் திசைகளிலும் மனிதர்கள் அச்சமடையும்போதும்,(3) அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று நம்பாதபோதும், பரஸ்பர காரியங்களில் அவை ஒன்றையொன்று வஞ்சித்து, வஞ்சனை நிறைந்த வழிமுறைகளால் ஒன்றையொன்று கொல்லும்போதும்,(4)

நாடு முழுவதும் வீடுகள் கொளுத்தப்படும்போதும், பிராமணர்கள் பெரிதும் பீடிக்கப்படும்போதும், மேகங்கள் ஒரு துளி மழையையும் பொழியாத போதும், ஒவ்வொருவரின் கரங்களும் அயலகத்தவனுக்கு எதிராகத் திரும்பும்போதும்,(5) வாழ்வின் தேவைகள் அனைத்தும் கள்வர்களின் ஆதிக்கத்திற்குள் வீழும்போதும், உண்மையில், அத்தகைய துன்ப காலம் நேரும்போதும், கருணையையும், தன் பிள்ளைகளையும் கைவிட விரும்பாத ஒரு பிராமணன் வாழ வேண்டிய வழிமுறைகள் என்ன? உண்மையில் ஒரு பிராமணன் அத்தகைய ஒரு காலத்தில் தன்னை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(6,7) உலகத்தைப் பாவம் பீடிக்கும் அத்தகைய காலத்தில் ஒரு மன்னன் எவ்வாறு வாழ வேண்டும்? ஓ! எதிரிகளை எரிப்பவரே, அறம் பொருள் ஆகிய இரண்டையும் இழக்காமல் மன்னன் எவ்வாறு வாழ வேண்டும்?” என்று கேட்டான்.(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, குடிமக்களின் அமைதி, செழிப்பு[1], நிறைவு, காலத்திற்கேற்ற மழை, நோய், மரணம், வேறு அச்சங்கள் ஆகியன அனைத்தும் மன்னையே சார்ந்திருக்கின்றன[2].(9) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கிருதம், திரேதை, துவாபரம், கலி ஆகிய யுகங்கள் அனைத்தும் மன்னனின் நடத்தையைச் சார்ந்தே நேர்கின்றன என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை.(10) உன்னால் விளக்கப்பட்டது போன்ற அவல காலம் நேரும்போது, அறவோர் மதிப்பீடுகளின் {ஞானப் பலத்தின்} துணை கொண்டு தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.(11) இது தொடர்பாகப் பழங்கதையில் வரும் விஷ்வாமித்திரருக்கும், சண்டாளர்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சண்டாளனுக்கும் இடையில் உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(12)திரேதையின் {திரேதா யுகத்தின்} முடிவில், துவாபரத்தின் தொடக்கத்தில் தேவர்களுடைய அணையின் விளைவால் பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீண்ட ஒரு பயங்கரப் பஞ்சம் நேர்ந்தது.(13) திரேதையின் முடிவும், துவாபரத்தின் தொடக்கமுமாக இருந்த அந்தக் காலத்தில், பல உயிரினங்களுக்குத் தங்கள் உயிரை விட வேண்டிய முதிர்ந்த காலம் தோன்றிய போது,(14) சொர்க்கத்தின் ஆயிரங்கண் தேவன் மழையேதும் பொழியவில்லை. கோளான பிருஹஸ்பதி {குரு கிரகம்} பின்னோக்கி {வக்கிரகதியில்} நகரத் தொடங்கினான், சோமன் தன் சுற்றவட்டப் பாதையைக் கைவிட்டு, தெற்கு நோக்கி பின்வாங்கினான்.(15) ஒரு பனித்துளி கூடக் காணப்படவில்லையெனும் போது, மேகங்கள் திரள்வதைக் குறித்து என்ன சொல்ல முடியும்? ஆறுகள் அனைத்தும் சிறுத்து குறுகிய சிற்றோடைகளாகின.(16) குளங்கள், ஆறுகள், கிணறுகள், மலை அருவிகள் ஆகியன மறைந்து, தேவர்கள் செய்த காரிய வரிசையின் {குற்றத்தின்} விளைவால் தங்கள் அழகை இழந்தன.(17) நீர் வற்றியதால், நீர் விநியோகத்திற்காக ஈகையின் மூலம் நிறுவப்பட்ட இடங்கள் {தண்ணீர்ச்சாலைகள்} தனித்துவிடப்பட்டன[3].பிராமணர்கள், வேள்விகள் செய்வதையும், வேதங்கள் ஓதுவதையும் தவிர்த்தனர். அவர்கள் வசட்களையும் {வஷட்காரத்தையும்}, மற்ற தணிவுச் சடங்குகளையும் அதற்கும் மேலும் செய்யவில்லை.(18) உழவும், ஆநிரை வளர்த்தலும் கைவிடப்பட்டன. சந்தைகளும், கடைகளும் கைவிடப்பட்டன. வேள்வி விலங்குகளைக் கட்டும் கம்பங்களும் மறைந்தன. மக்கள் அதற்கு மேலும் வேள்விக்கான பல்வேறு வகைப் பொருட்களைத் திரட்டவில்லை. விழாக்கள் மற்றும் கேளிக்கைகள் அனைத்தும் அழிந்தன.(19) எங்கும் எலும்புக் குவியல்கள் தென்பட்டன, அனைத்து இடங்களிலும் உயிரினங்களின் கதறல்களும், அலறல்களும் எதிரொலித்தன. பூமியின் நகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் வசிப்பவர்கள் இல்லாமல் வெறுமையடைந்தன. கிராமங்களும், குக்கிராமங்களும் எரிக்கப்பட்டன.(20) கள்வர்களால் பீடிக்கப்பட்டுச் சிலரும், ஆயுதங்கள் மூலம் சிலரும், தீய மன்னர்களால் சிலரும், ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சிலரும் தப்பி ஓடத் தொடங்கினர்.(21) கோவில்களும், வழிபாட்டுத்தலங்களும் தனித்துவிடப்பட்டன.

முதிர்ந்தவர்கள் பலவந்தமாகத் தங்கள் வீட்டைவிட்டு விரட்டப்பட்டனர். பசுக்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், எருமைகள் ஆகியன (உணவுக்காகப்) போரிட்டு, பெரும் எண்ணிக்கையில் அழிவையடைந்தன. அனைத்துப் பக்கங்களிலும் பிராமணர்கள் இறக்கத் தொடங்கினர்.(22) பாதுகாப்பே இல்லாமல் போனது. செடிகொடிகள் காய்ந்தன. பூமாதேவி தன் பொலிவனைத்தையும் இழந்து, சுடலையில் நிற்கும் மரங்களைப் போல மிகப் பரிதாபமாக இருந்தாள்.(23) இங்கும் அறமில்லாத அந்தப் பயங்கரக் காலத்தில், ஓ! யுதிஷ்டிரா, பசியால் தங்கள் உணர்வுகளை இழந்த மனிதர்கள், ஒருவரையொருவர் உண்ணத் தொடங்கினர்.(24) முனிவர்களே கூடத் தங்கள் நோன்புகளைக் கைவிட்டு, தங்கள் நெருப்புகளையும், தேவர்களையும் கைவிட்டு, காடுகளில் உள்ள தங்கள் ஆசிரமங்களையும் கைவிட்டு, (உணவைத் தேடி) அங்குமிங்கும் திரியத் தொடங்கினர்.(25)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், புனிதமானவருமான பெரும் முனிவர் விஷ்வாமித்திரர், பசியால் பீடிக்கப்பட்டு, வீடற்றவராகத் திரிந்து கொண்டிருந்தார்.(26) அந்த முனிவர் {விஷ்வாமித்திரர்}, தமது மனைவி மற்றும் மகனை வேறொரு உறைவிடத்தில் விட்டுவிட்டு, நெருப்பற்றவராக,[4] வீடற்றவராக, தூய மற்றும் தூய்மையற்ற உணவில் அலட்சியம் கொண்டவராக இருந்தார்.(27) அவர் ஒருநாள், உயிரினங்களைக் கொல்வதற்கு அடிமையான கொடூர வேட்டைக்காரர்கள் வசிப்பதும், காட்டுக்கு மத்தியில் இருப்பதுமான ஒரு குக்கிராமத்தை அடைந்தார்.(28) அந்தச் சிறு குக்கிராமத்தில் உடைந்த கலன்கள் மற்றும் குடங்கள் நிறைந்திருந்தன. நாய்த்தோல்கள் அங்குமிங்கும் பரவிக் கிடந்தன. பன்றிகள், கழுதைகளை ஆகியவற்றின் எலும்புகளும், மண்டையோடுகளும் குவியல்களாகத் திரட்டப்பட்டுப் பல்வேறு இடங்களில் கிடந்தன.(29) சடலங்களில் இருந்து உருவப்பட்ட துணிகள் அங்கேயும், இங்கேயும் கிடந்தன, பயன்படுத்தப்பட்ட மலர்களாலான மாலைகளால் குடிசைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன[5]. பாம்புகள் உரித்த சட்டைகளைக் கொண்டு ஒப்பனைகள் செய்யப்பட்ட வீடுகளும் அங்கே இருந்தன.(30)பேரொலியுடன் சேவல்கள் மற்றும் கோழிகள் கரைதலும், கழுதைகள் கரடுமுரடாகக் கத்துவதும் அந்த இடத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஊர்வாசிகள் இங்கேயும், அங்கேயும் சச்சரவு செய்யும் கடும் குரல்களும் அங்கே கேட்கப்பட்டன.(31) ஆந்தைகள் மற்றும் பிற பறவைகளைக் கொண்ட தேவர்களின் கோவில்களும் இங்கேயும் அங்கேயும் இருந்தன. இரும்பு மணிகளால் எதிரொலித்துக் கொண்டிருந்த அந்தக் குக்கிராமத்தில், அனைத்துப் பக்கங்களிலும் நாய்க்கூட்டங்கள் நின்றுகொண்டிருந்தன, அல்லது படுத்துக் கிடந்தன.(32) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர், பசிக்கொடுமையால் உந்தப்பட்டும், உணவைத் தேடுவதில் ஈடுபட்டு, அந்தக் குக்கிராமத்தில் நுழைந்து, உண்பதற்கு எதையாவது கண்டுபிடிக்கச் சிறந்த முயற்சியைச் செய்தார்.(33) குசிகரின் மகன் {விஸ்வாமித்திரர்} தொடர்ந்து பிச்சையெடுத்தாலும், இறைச்சி, அல்லது சோறு, அல்லது கனி, அல்லது கிழங்கு, அல்லது எந்தப் பிற வகை உணவையும் அவர் அடையத் தவறினார்.(34)

அப்போது அவர் {விஷ்மாமித்திரர்}, “ஐயோ, எனக்குப் பெரும் துன்பம் வந்ததே” என்று வருந்தி, பலவீனத்தால் அந்தச் சண்டாளக் குக்கிராமத்திலேயே கீழே விழுந்தார்.(35) மேலும் அந்தத் தவசி, “நான் இப்போது எதைச் செய்வது சிறந்தது?” என்று சொல்லி தமனக்குள்ளேயே நினைக்கத் தொடங்கினார்.(35) உண்மையில், ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உடனடி மரணத்தைத் தவிக்கும் வழிமுறைகளே அவரது எண்ணத்தை ஆட்கொண்டன.(36) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு சண்டாளனின் குடிசையில், ஆயுதத்தால் அண்மையில் கொல்லப்பட்ட ஒரு நாயின் பெரிய இறைச்சித் துண்டு தரையில் கிடப்பதைக் கண்டார்[6].(37) அந்தத் தவசி, சிந்தித்து, அந்த இறைச்சியைத் திருடுவது என்ற தீர்மானத்தை அடைந்தார். அவர் தமக்குள்ளேயே, “இப்போது உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக எந்த வழிமுறையும் எனக்கில்லை.(38) மேன்மையானவர்களுக்குக் கூடத் துன்பகாலத்தில் திருட்டு அனுமதிக்கப்பட்டதே. அஃது அவனது மகிமையைக் குறைக்காது. ஒரு பிராமணன்கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ள அதைச் செய்யலாம். இஃது உறுதியானதாகும்.(39) ஒருவன் முதலிடத்தில் ஓர் இழிந்தவனிடம் திருட வேண்டும். அதில் தவறினால் தனக்குச் சமமானவனிடம் திருட வேண்டும். இணையானவனிடமும் தவறினால், மேன்மையான அறவோனிடம் இருந்தும் ஒருவன் திருடலாம்.(40) என் உயிர் போகப்போகும் இத்தருணத்தில் நான் அந்த இறைச்சியைத் திருடப் போகிறேன். இத்தகைய திருட்டில் நான் எந்தத் தகுதியிழப்பையும் காணவில்லை. எனவே, நாயின் அடிமுதுகுப்பகுதியான[7] இந்த இறைச்சியை நான் திருடப் போகிறேன்” என்று நினைத்தார்.(41)

பெரும் தவசியான விஷ்வாமித்திரர், இந்தத் தீர்மானத்தை அடைந்து, சண்டாளன் இருந்த இடத்தில் உறங்குவதற்காகத் தன்னைக் கிடத்திக் கொண்டார்.(42) சிறிது நேரம் கழித்து, மொத்த சண்டாளக் குக்கிராமமும் உறங்கிய பிறகு, நள்ளிரவாவதைக் கண்டு, புனிதரான விஷ்வாமித்திரர், அமைதியாக எழுந்து அந்தக் குடிசைக்குள் நுழைந்தார்.(43) அதற்கு {அந்தக் குடிசைக்கு} உரிமையாளனான அந்தச் சண்டாளன், பீளை நிறைந்த கண்களுடன் உறங்குபவனைப் போல அங்கே கிடந்தான். விரும்பத்தகாத முகத்தோற்றம் கொண்ட அவன், உடைந்த மற்றும் ஒவ்வாத குரலில் இந்தக் கடும் வார்த்தைகளைச் சொன்னான்.(44)

அந்தச் சண்டாளன், “தாழ் திறப்பவன் எவன்? மொத்தச் சண்டாளக் குக்கிராமமும் உறங்கிக் கொண்டிருக்கிறது. எனினும் நான் விழிப்புடன் உறங்காதிருக்கிறேன். நீ யாராக இருப்பினும் கொல்லப்படுவாய்” என்றான். இந்த வார்த்தைகளே அந்தத் தவசியின் காதுகளை வரவேற்றன.(45)

அச்சத்தால் நிரம்பியவரும், வெட்கத்தால் முகம் சிவந்தவரும், திருட முயற்சித்த செயலின் விளைவால் கவலையில் இதயம் கலங்கியவருமான அவர்,(46) “ஓ! நீண்ட வாழ்வை அருளாகக் கொண்டவனே, நான் விஷ்வாமித்திரன். நான் பசிக் கொடுமையால் இங்கே வந்தேன். ஓ! நல்ல புத்தி கொண்டவனே, உன் பார்வை தெளிவாக இருந்தால் என்னைக் கொல்லாதிருப்பாயாக” என்று பதிலுரைத்தார்.(47)

தூய ஆன்மா கொண்ட அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சண்டாளன், அச்சத்தால் தன் படுக்கையில் இருந்து எழுந்து அந்தத் தவசியை அணுகினான். மரியாதையால் தன் கரங்களைக் குவித்து, கண்ணீரால் குளித்த கண்களுடன் அவன் குசிகரின் மகனிடம் {விஷ்வாமித்திரரிடம்}, “ஓ! பிராமணரே, இந்த இரவில் நீர் இங்கே என்ன தேடுகிறீர்?” என்று கேட்டான்.(49)

அந்தச் சண்டாளனை[8] இணங்கச் செய்யும் வகையில் விஷ்வாமித்திரர், “நான் மிகவும் பசித்திருக்கிறேன், பசிக்கொடுமையால் இறக்கப் போகிறேன். நாயின் அடிமுதுகுப்பகுதியான[9] அந்த இறைச்சியை அபகரிக்க விரும்பினேன்.(50) பசித்தவனான நான் பாவியானேன். உணவை வேண்டுபவனுக்கு வெட்கம் ஏதும் கிடையாது. பசியே என்னை இந்தத் தீச்செயலைச் செய்யத் தூண்டியது. அதன் காரணமாகவே, நாயின் அடிமுதுகுப்பகுதியான அந்த இறைச்சியை {நாய்வால் இறைச்சியை} அபகரிக்க விரும்பினேன்.(51) எனது உயிர்மூச்சு அடங்குகிறது. பசியானது என் வேத கல்வியை அழித்தது. பலவீனனான நான், என் உணர்வுகளை இழந்துவிட்டேன். உணவின் தூய்மை, அல்லது தூய்மையின்மை குறித்து நான் கவலைப்படவில்லை.(52) உங்கள் குக்கிராமத்தில் வீடுவீடாகத் தெரிந்தும் எந்தப் பிச்சையும் அடையத்தவறிய நான், நாயின் அடிமுதுகுப்பகுதியான இந்த இறைச்சியை அபகரிக்கும் இந்தப் பாவச் செயலில் என் இதயத்தை நிலைநிறுத்தினேன்.(53) அக்னி, தேவர்களின் வாயாவான். அவன் அவர்களுடைய புரோஹிதனுமாவான். எனவே, தூய்மையான, சுத்தமான பொருட்களைத் தவிர வேறு எதையும் அவன் எடுத்துக் கொள்ளக்கூடாது. இருப்பினும் சில வேளைகளில் அந்தப் பெருந்தேவன் அனைத்தையும் உட்கொள்பவன் ஆகிறான். அந்த வகையில் நான் இப்போது அவனைப் போலவே இருக்கிறேன் என்பதை அறிவாயாக” என்றார்.(54)

அந்தப் பெரும் முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சண்டாளன் {மதங்கன்}, “நான் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லப்போகும் உண்மையின் வார்த்தைகளைக் கேட்டு, உமது அறத்தகுதி அழியாத வகையில் செயல்படுவீராக.(55) ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமது கடமை குறித்து நாம் உமக்குச் சொல்வதைக் கேட்பீராக. ஒரு நாயானது, ஒரு நரியைவிடத் தூய்மையற்றதாகும் என ஞானியர் சொல்கின்றனர்[10]. மேலும் ஒரு நாயின் அடிமுதுகு {வால்} பகுதியானது, அதனுடைய உடலின் பிற பகுதிகளைவிட மிகவும் இழிந்தது.(56) ஓ! பெரும் முனிவரே, ஒரு சண்டாளனுக்குச் சொந்தமானதைத் திருடுவது, அதையும் தவிர, தூய்மையற்ற உணவைத் திருடுவது போன்ற அறத்திற்கு ஒவ்வாத இந்தச் செயல், ஞானத்துடன் உம்மால் தீர்மானிக்கப்படவில்லை.(57) நீர் அருளப்பட்டிருப்பீராக, உமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழிமுறைகளைக் காண்பீராக. ஓ! பெரும்தவசியே, நாய் இறைச்சியில் கொண்ட கடும் விருப்பத்தின் விளைவால் உமது தவங்கள் {தவத்தகுதிகளான புண்ணியங்கள்} அழிவடைய வேண்டாம்.(58) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை அறிந்தவரான நீர், கடமை குழப்பத்தால் விளைந்த செயலைச் செய்யக்கூடாது.[11] அறம் நோற்போர் அனைவரிலும் முதன்மையான நீர் அறத்தைக் கைவிடாதீர்” என்றான் {மதங்கன் என்ற சண்டாளன்}.(59)

ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்டவரும், பெரும் முனிவருமான விஷ்வாமித்திரர் ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசியால் பீடிக்கப்பட்டவராக மீண்டும்,(60) “நீண்டகாலமாக நான் உணவேதும் உண்ணவில்லை. என் உயிரைத் தக்கவைத்துக்கொள்ளும் வேறு எந்த வழிமுறைகளையும் நான் காணவில்லை.(61) ஒருவன் இறந்து கொண்டிருக்கும்போது, அவனது சக்தியின் எந்த வழிமுறைகளையும், அவற்றின் பண்புகளைக் குறித்து மதிப்பிடாமல் பயன்படுத்தித் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். தகுந்த நிலையை அடைந்த பிறகு அவன் தகுதி {புண்ணியம்} அடைய முயற்சிக்க வேண்டும்.(62) க்ஷத்திரியர்கள் இந்திரனின் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிராமணர்களின் கடமையானது, அக்னியைப் போல நடந்து கொள்வதாகும். வேதங்களே நெருப்பாகும். அவையே பலம் கொண்டவையாகும். எனவே, என் பசியைத் தணித்துக் கொள்ள இந்தத் தூய்மையற்ற {நாய் கறி} உணவை நான் உண்ணப் போகிறேன்.(63) எதைக் கொண்டு உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமோ, அதைத் தயக்கமில்லாமல் செய்ய வேண்டும். வாழ்வது இறப்பை விடச் சிறப்பானது. வாழ்ந்தால் ஒருவன் அறம் ஈட்டலாம்.(64) என் உயிரைப் பாதுகாக்க வேண்டும் நான், என் புத்தி முழுவதையும் பயன்படுத்திய பிறகே, இந்தத் தூய்மையற்ற உணவை உண்ண விரும்புகிறேன். எனக்கு உன் அனுமதியைக் கொடுப்பாயாக.(65) உயிர்வாழ்வைத் தொடர்ந்தால், அறமீட்ட முயலும் நான், ஆகாயத்து ஒளிக்கோள்கள் அடர்த்தியான இருளையும் அழிப்பதைப் போல, பேரிடரின் விளைவாக நேரும் என் தற்போதை நடத்தையைத் தவங்களாலும், அறிவாலும் அழிப்பேன்” என்றார்.(66)

சண்டாளன் {விஷ்வாமித்திரரிடம்}, “(உம்மைப் போன்ற ஒருவர்) இந்த உணவை உண்பதனால் நீண்ட வாழ்வை அடைய முடியாது. அதே போல (உம்மைப் போன்ற ஒருவர், இத்தகு உணவிலிருந்து) பலத்தையும் அடையமுடியாது, அமுதம் கொடுக்கும் நிறைவையும் அடைய முடியாது. நீர் வேறு வகை உணவைப் பிச்சையெடுக்க முனைவீராக. நாயின் இறைச்சியை உண்பதில் உமது இதயம் செல்லாதிருக்கட்டும். மறுபிறப்பாள வகையினருக்கு நாய் தூய்மையற்ற உணவாகும்” என்றான்.(67)

விஷ்வாமித்திரர், “இது போன்ற பஞ்சகாலத்தில் எந்த வகை இறைச்சியும் எளிதாகக் கிடைப்பதில்லை. ஓ! சண்டாளா, மேலும் (உணவை விலை கொடுத்து வாங்க) என்னிடம் செல்வம் ஏதும் இல்லை. நானோ மிகவும் பசித்திருக்கிறேன். என்னால் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது. நான் முற்றிலும் நம்பிக்கையிழந்திருக்கிறேன். ஆறு வகைச் சுவைகள் அனைத்தும் இந்த நாயின் இறைச்சித்துண்டில் இருப்பதாக நான் நினைக்கிறேன்[12]” என்றார்.(68)சண்டாளன், “ஐந்து நகம் கொண்ட விலங்குகளில் ஐந்து வகை மட்டுமே[13] பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்குத் தூய்மையான உணவாகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. (உமக்கு) தூய்மையற்றதில் உமது இதயத்தை நிலைக்கச் செய்யாதீர்” என்றான்.(69)விஷ்வாமித்திரர், “பெரும் முனிவரான அகஸ்தியர், பசித்திருந்தபோது, வாதாபி என்ற பெயர் கொண்ட அசுரனை உண்டார். நான் துன்பத்தில் வீழ்ந்திருக்கிறேன். நான் பசித்திருக்கிறேன். எனவே, நாயின் அடிமுதுகான இந்த இறைச்சியை உண்ணப்போகிறேன்” என்றார்.(70)

சண்டாளன், “வேறு பிச்சைகளை நாடுவீராக. இத்தகைய காரியம் உமக்குத் தகாது. மேலும் இது போன்ற செயல் உம்மால் ஒருபோதும் செய்யப்படக்கூடாது. எனினும், {இதற்குப் பிறகும்} உமக்கு விருப்பமென்றால் இந்த நாய் இறைச்சியை நீர் எடுத்துக் கொள்ளலாம்” என்றான்.(71)

விஷ்வாமித்திரர், “நல்லோர் என்று அழைக்கப்படுபவரே, கடமை குறித்த காரியங்களில் உரிமை கொண்டவர்களாவர். அவர்களின் எடுத்துக்காட்டையே நான் பின்பற்றுகிறேன். நான் இப்போது இந்த நாய் அடிமுதுகை {நாய் வாலை} வேறு எந்த உயர்ந்த தூய்மையான உணவைவிடச் சிறந்ததாகக் கருதுகிறேன்” என்றார்.(72)

சண்டாளன், “நீதியற்றவனின் செயல்பாடு நித்திய நடைமுறையாக ஒருபோதும் கருதப்படாது. முறையற்ற செயலானது ஒருபோதும் முறையாகாது. மாயையால் பாவம் நிறைந்த ஒரு செயலைச் செய்யாதீர்” என்றான்.(73)

விஷ்வாமித்திரர், “முனிவனாக இருக்கும் மனிதன் பாவம் நிறைந்த செயலைச் செய்ய முடியாது. தற்போதைய வழக்கில், மானும், நாயும் (இரண்டும் விலங்குகள் என்பதால்) ஒன்றெனக் கருதுகிறேன். எனவே, நான் இந்த நாயின் அடிமுதுகை உண்ணப் போகிறேன்” என்றார்.(74)

சண்டாளன், “பிராமணர்கள் கேட்டுக் கொண்டதாலேயே, முனிவர் (அகஸ்தியர்) அந்தச் செயலைச் செய்தார். அந்தச் சூழ்நிலையில் அது பாவமாகாது. எதில் பாவமில்லையோ அதுவே அறம். தவிரவும், மூவகையினரின் ஆசான்களான பிராமணர்கள் அனைத்து வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றான்.(75)

விஷ்வாமித்திரர், “நானொரு பிராமணன். இந்த என் உடல் எனக்கு நண்பனே. இஃது எனக்கு மிகவும் அன்புக்குரியதும், உயர்ந்த மதிப்புக்குரியதுமாகும். உடலைத் தாங்கிக் கொள்ளும் விருப்பத்தாலேயே நான் இந்த நாயின் அடிமுதுகை எடுத்துக் கொள்ளப் போகிறேன். இனியும் உன்னிலும், உன் கடும் தோழர்களிடமும் எந்த அச்சமும் கொள்ளாத வகையில் என் ஆவல் அதிகரித்துவிட்டது” என்றார்[14].(76)

சண்டாளன் {விஷ்வாமித்திரரிடம்}, “மனிதர்கள் தங்கள் உயிரையும் கொடுப்பார்கள், ஆனால் தூய்மையற்ற உணவில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்ய மாட்டார்கள். அவர்கள் பசியை வென்றே இவ்வுலகில் தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் அடைகிறார்கள். நீரும் பசியை வென்று அந்த வெகுமதிகளை அடைவீராக” என்றான்.(77)

விஷ்வாமித்திரர், “என்னைப் பொறுத்தவரையில், நான் கடும் நோன்புகளை நோற்பவன். என் இதயம் அமைதியிலேயே நிலைத்திருக்கிறது. அறத்தகுதிகள் அனைத்தின் வேரையும் பாதுகாப்பதற்காக, நான் தூய்மையற்ற உணவை உண்ணப் போகிறேன்.(78) தூய்மையான ஆன்மா கொண்ட மனிதன், இந்தச் செயலை நீதியென்றே கருதுவான். எனினும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுக்கு, நாயின் இறைச்சியை உண்பது பாவமாகத் தோன்றும். நான் அடைந்திருக்கும் இந்தத் தீர்மானம் தவறாகவே இருப்பினும், (நான் இந்த நாயிறைச்சியை உண்டாலும்) அந்தச் செயலால் நான் உன்னைப் போன்ற ஒருவனாக {சண்டாளனாக} ஆக மாட்டேன்” என்றார்.(79)

சண்டாளன், “என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக முயற்சி செய்து, உம்மை இந்தப் பாவத்தில் இருந்து தடுப்பதே என் முடிவான தீர்மானமாகும். ஒரு பிராமணன் தீச்செயலைச் செய்வதால் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்கிறான். இதற்காகவே நாம் உம்மை நிந்திக்கிறேன்” என்றான்.(80)

விஷ்வாமித்திரர், “தவளைகள் கத்துவதைக் கருத்தில் கொள்ளாமல் பசுக்கள் {நீரைக்} குடிப்பதைத் தொடரும். எது நீதி (எது {நீதி} இல்லை) என்று உன்னால் உரிமை கேட்க முடியாது. தற்புகழ்ச்சி கொண்டவனாக இராதே” என்றார்.(81)

சண்டாளன், “நான் உமது நண்பனாகிவிட்டேணேன். இதன் காரணமாகவே நான் உமக்கு அறவுரை கூறுகிறேன். எது நன்மையோ, அதைச் செய்வீராக. {ஆசை} மயக்கத்தினால் பாவம் நிறைந்த செயலைச் செய்யாதீர்” என்றான்.(82)

விஷ்வாமித்திரர், “நீ என் மகிழ்ச்சியை விரும்பும் நண்பனாக இருந்தால், என்னை இந்தத் துன்பத்தில் இருந்து எழுப்புவாயாக. இந்த நாயின் அடிமுதுகை உண்டு, (பாவத்தால் அல்லாமல்) அறத்தின் உதவியால் காக்கப்பட்டதாகவே நான் கருதுவேன்” என்றார்(83).

சண்டாளன், “இந்த இறைச்சித் துண்டை உமக்குக் கொடுக்க நான் துணியேன், அதேபோல, நீர் என் உணவை திருடிக் கொள்ள அனுமதித்துத் துன்புறவும் மாட்டேன். நான் இந்த இறைச்சியை உம்மிடம் கொடுத்தாலும், ஒரு பிராமணராக இருந்து நீர் என்னிடம் இருந்து இதைப் பறித்தாலும், மறுமையில் நாம் இருவரும் துன்பலோகங்களிலேயே மூழ்குவோம்” என்றான்.(84)

விஷ்வாமித்திரர், “இன்று இந்தப் பாவச் செயலைச் செய்வதால், நான் மிகப் புனிதமான என் உயிரை நிச்சயம் காத்துக் கொள்வேன். என் உயிரைக் காத்துக் கொண்ட பிறகு, அறம்பயின்று என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்வேன். எனக்குச் சொல், (உணவில்லாமல் இறப்பது, அல்லது தூய்மையற்ற இந்த உணவை உண்டு என் உயிரைக் காத்துக் கொள்வது ஆகிய) இந்த இரண்டில் எது உகந்தது?” என்று கேட்டார்.(85)

சண்டாளன், “ஒருவன் தன் வகை, அல்லது தன் குலத்திற்கான கடமைகளை வெளிப்படுத்துவதில், (தனக்கு உரிய, அல்லது உரிமையில்லாத {கடமைகளைத் தீர்மானிப்பதில்}) அவனது சுயமே {ஆன்மாவே} சிறந்த நீதிபதியாகும். இந்த இரு செயல்களில் எது பாவம் நிறைந்தது என்பதை நீரே அறிவீர். எவன் நாயிறைச்சியைத் தூய்மையான உணவாகக் கருதுவானோ, அவன் உணவுக் காரியங்களில் எதையும் தவிர்க்க மாட்டான் என்று நான் நினைக்கிறேன்” என்றான்.(86)

விஷ்வாமித்திரர், “(தற்போது தூய்மையற்றதாக இருப்பதை) ஏற்பதிலும், (தூய்மையற்ற உணவை) உண்பதிலும் பாவம் இருக்கிறது. எனினும், ஒருவனுடைய உயிர் ஆபத்தில் இருக்கும்போது, இத்தகைய ஒன்றை ஏற்பதிலோ, இத்தகைய உணவை உண்பதிலோ எந்தப் பாவமும் இல்லை. தவிரவும், தூய்மையற்ற உணவை உண்பதானது, கொலை மற்றும் வஞ்சனையின் துணையில்லாமல் செய்யப்படும்போதும், மென்மையான கண்டனத்தையே அந்தச் செயல் தூண்டும் எனும்போதும், அது பெரிய விளைவெதையும் ஏற்படுத்தாது” என்றார்.(87)

சண்டாளன், “தூய்மையற்ற உணவை உண்பதற்கு இதுவே உமது காரணமாக இருக்குமானால், நீர் வேதங்களையும், ஆரிய[15] அறநெறியையும் மதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் செய்யப்போகும் செயலில் இருந்து பாடங்கற்கப் போகும் நான், தூய்மையான மற்றும் தூய்மையற்ற உணவில் உள்ள வேறுபாடுகளை அலட்சியம் செய்வதில் எந்தப் பாவமும் இல்லை என்றே கருதுவேன்” என்றான்.(88)

விஷ்வாமித்திரர், “(தவிர்க்கப்பட்ட உணவை) உண்பதால் ஒரு மனிதன் பெரும்பாவத்தை அடைந்தான் என்று எங்கும் காணப்படுவதில்லை. மதுவைக் குடிப்பதால் ஒருவன் வீழ்வான் என்பது (மனிதர்களைக் குடிக்காமல் தடுப்பதற்கான) ஒரு வார்த்தை ஆணை மட்டுமே. (அதே வகைச் சார்ந்த) தவிர்க்கப்பட வேண்டிய பிற செய்பாடுகள், அவை எவையாக இருப்பினும், உண்மையில் ஒவ்வொரு பாவத்தாலும், ஒருவனுடைய தகுதியை {புண்ணியத்தை} அழிக்க முடியாது” என்றார்.(89)

சண்டாளன், “(இதுபோன்ற) தகாத இடத்தில் இருந்து, (என்னைப் போன்ற) தூய்மையற்ற அற்பனிடமிருந்து, (என்னைப் போன்ற) தீய வாழ்வு வாழும் ஒருவனிடமிருந்து நாயிறைச்சியை அபகரிக்கும் கல்விமான், நல்லோர் என்றழைக்கப்படுவோரின் நடத்தைக்கு எதிரான செயலையே செய்கிறான். மேலும், இதன் விளைவாகவும், இத்தகை ஒரு செயலின் தொடர்பாலும், அவன் நிச்சயம் வருந்த வேண்டிய நிலை உண்டாகும்” என்றான்”.(90)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தச் சண்டாளன், குசிகரின் மகனிடம் {விஷ்வாமித்திரரிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு அமைதியடைந்தான். அப்போது, பண்படுத்தப்பட்ட புத்தியைக் கொண்ட விஷ்வாமித்திரர், நாயின் முதுகான அந்த இறைச்சியை எடுத்துக் கொண்டார்.(91) அந்தப் பெரும் தவசி {விஷ்வாமித்திரர்}, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாயிறைச்சியை எடுத்துக் கொண்டு, காட்டுக்குச் சென்று தன் மனைவியுடன் உண்ண விரும்பினார்.(92) உரிய சடங்குகளுடன் தேவர்களை முதலில் நிறைவு செய்த பிறகு, தன் விருப்பப்படி நாயின் அடிமுதுகிலான அந்த இறைச்சியைத் தான் உண்ண வேண்டும் என்று தீர்மானித்தார்.(93) பிரம்ம சடங்குகளின்படி நெருப்பை மூட்டி, ஐந்திராக்நேயம் என்ற பெயரிலான ஏற்புடைய சடங்குளைச் செய்து, சரு வேள்வியில் அந்த இறைச்சியைத் தானே சமைக்கத் தொடங்கினார்[16].(94) ஓ! பாரதா, பிறகு அவர், தேவர்கள், பித்ருக்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில் சாத்திரங்களில் சொல்லப்பட்ட படி அந்தச் சருவை தேவையான அளவில் பல பாகங்களாகச் செய்து, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை (தங்கள் பங்குகளை ஏற்பதற்காக) அழைக்கும் வகையில் சடங்குகளைச் செய்யத் தொடங்கினார்.(95)அதேவேளையில், தேவர்களின் தலைவன் மழையைப் பொழியத் தொடங்கினான். அந்த மழையால், அனைத்து உயிரினங்களையும் மீட்ட அவன், மீண்டும் செடிகொடிகளைத் தழைத்து வளரும்படி செய்தான்.(96) எனினும், தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவித்துச் சடங்குகளைச் செய்த விஷ்வாமித்திரர், அவர்களை உரிய முறையில் நிறைவு செய்த பிறகு, அந்த இறைச்சியைத் தானே உண்டார்.(97) பிறகு தன் பாவங்கள் அனைத்தையும் தன் தவங்களால் எரித்த அந்தத் தவசி, நீண்ட காலத்திற்குப் பிறகு, மிக ஆச்சரியமான (தவ) வெற்றியை அடைந்தார்.(98) உயிரைத் தாங்கிக் கொள்வதைக் கருத்தில் கொள்ளும்போது, உயர் ஆன்மா கொண்டவனும், கல்விமானும், துன்பத்தில் வீழும்போது உற்சாகமிழந்த தன்னை மீட்டுக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்தவனுமான ஒருவன், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளைக் கொண்டும் இவ்வாறான முடிவையே எட்ட வேண்டும்.(99) இந்தப் புத்தியை அடைந்த ஒருவன் எப்போதும் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உயிரோடு இருக்கும் ஒருவனால் அறத்தகுதியை வென்று, மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடை முடியும்.(100) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்தக் காரணத்தினால், தூய்மையான ஆன்மா கொண்டவனும் கல்விமானுமான ஒருவன், அறம் மற்றும் அதன் எதிர் நிலை {மறம்} ஆகியவற்றைப் பகுத்தறியும் தன் நுண்ணறிவைச் சார்ந்த இவ்வுலகில் வாழவும் செயல்படவும் வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(101)

ஞானத்திரட்டு! – சாந்திபர்வம் பகுதி – 142-யுதிஷ்டிரனின் மறுப்பு; பல்வேறு மூலங்களில் இருந்து அடையப்பட வேண்டிய அறிவுத்திரட்டு; சாத்திரங்களைக் குறை சொல்லும் கல்வி வணிகர்களின் போக்கு; க்ஷத்திரியனின் கடமை; அமைச்சர்கள் நியமனம்; கடுமையும், மென்மையும் கையாளப்பட வேண்டிய தருணங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எது பயங்கரமானதோ, எது பொய்மை போல் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படக்கூடாதோ, அதுவே (கடமையாக) குறிப்பிடப்பட்டால், நான் தவிர்க்க வேண்டிய செயல்தான் என்ன? பிறகு, கள்வர்களும் ஏன் மதிக்கப்படக்கூடாது?(1) நான் மயக்கமடைகிறேன். என் இதயம் வலிக்கிறது[1] அறநெறியில் என்னைக் கட்டும் முடிச்சுகள் அனைத்தும் தளர்கின்றன. என் மனத்தை அமைதிப்படுத்தவும், உம்மால் பரிந்துரைக்கப்படும் வழியில் செயல்படத் துணியவும் என்னால் இயலவில்லை” என்றான்.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கடமை குறித்து வேதங்களில் கேட்டு கற்றவற்றில் இருந்து மட்டுமே நான் உனக்குப் போதிக்கவில்லை. நான் எதைச் சொன்னேனோ, அதை ஞானம் மற்றும் அனுபவத்தின் விளைவால் சொல்லியிருக்கிறேன். இது கல்விமான்களால் திரட்டப்பட்ட தேனாகும் {ஞானத்திரட்டாகும்}.(3) மன்னர்கள் பல்வேறு மூலங்களில் இருந்து ஞானத்தைத் திரட்ட வேண்டும். ஒரு தரப்பிலான அறநெறியின் துணை கொண்டு ஒருவனால் உலகத்தில் நடைபோட முடியாது.(4) புத்தியில் இருந்தே கடமை எழ வேண்டும்; ஓ! குருக்களின் மகனே, நல்லோரின் நடைமுறைகளே எப்போதும் உறுதி செய்யப்பட வேண்டும். என் வார்த்தைகளைக் கவனிப்பாயாக.(5) மேன்மையான புத்தி கொண்ட மன்னர்களால் மட்டுமே, வெற்றியை எதிர்பார்த்து ஆட்சி செய்ய முடியும். புத்தியின் துணையுடனும், பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட அறிவால் வழிநடத்தப்பட்டும் ஒரு மன்னன் அறநெறியை நோற்க வேண்டும்.(6)

ஒரு தரப்பைச் சார்ந்த அறநெறிகளில் பெறப்பட்ட விதிகளைக் கொண்டு ஒருவன் மன்னனுக்குரிய கடமைகளை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. பலவீனமனம் கொண்ட மன்னன், தன் முன்னுள்ள எடுத்துக்காட்டுகளில் இருந்து எந்த ஞானத்தையும் பெறாததன் விளைவால், (தன் கடமைகளை வெளிப்படுத்துவதில்) ஒருபோதும் அவனால் ஞானத்தை வெளிப்படுத்த முடியாது.(7) அறம் {தர்மம்} சில வேளைகளில் மறத்தின் {அதர்மத்தின்} வடிவை ஏற்கிறது. மறமும் சில வேளைகளில் அறத்தின் வடிவை ஏற்கிறது. இஃதை அறியாதவன், அவ்வகையில் எழும் உண்மையான நிகழ்வைச் சந்திக்கும்போது குழப்பமடைவான்.(8) இந்த அறிவை அடைந்த ஒரு ஞானமுள்ள மன்னன், சந்தர்ப்பம் நேரும்போது, தன் மதிப்பீட்டின் துணை கொண்டு அதன்படியே செயல்பட வேண்டும். அத்தகைய நேரத்தில் அவன் செய்யும் செயலானது, சாதாரண மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.(9) சிலர் உண்மை அறிவைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் போலி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வகை அறிவின் இயல்பையும் உண்மையில் உறுதி செய்து கொள்ளும் ஒரு ஞானமிக்க மன்னன், நல்லோராகக் கருதப்படுவோரிடமிருந்து அறிவை அடைகிறான்.(10)

அறநெறிகளை உண்மையில் உடைப்பவர்களே, சாத்திரங்களில் குறை காண்கிறார்கள். செல்வமில்லாதவர்கள், செல்வத்தை அடையும் உடன்படிக்கைகளில் உள்ள முரண்களை அறிவிக்கின்றனர்.(11) தங்களைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே அறிவை அடைய முயல்வோர், ஒருபுறம் அறநெறிக்கு எதிரிகளாக இருந்தாலும், அவர்கள் பாவம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(12) சாத்திரங்களை அறியாதோரால், அறிவின் வழிகாட்டுதலுடன் தங்கள் செயல்கள் அனைத்திலும் இயங்க இயலாததைப் போலவே, முதிரா {பண்படாத} புத்தி கொண்ட தீய மனிதர்களால், ஒருபோதும் உண்மைப் பொருட்களை அறிய முடியாது.(13) அவர்கள், சாத்திரங்களின் குறைகளில் மட்டுமே செலுத்தப்படும் கண்களைக் கொண்டு சாத்திரங்களைக் குறை கூறுகிறார்கள். அவர்கள் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொண்டாலும் கூட, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள தடையாணைகள் நல்லவை அல்ல என்று அறிவிக்கும் தங்கள் வாடிக்கையான பழக்கத்தையே தொடர்வார்கள்.(14) அத்தகைய மனிதர்கள், பிறரின் அறிவை குறைகூறுவதன் மூலம், தங்கள் அறிவின் மேன்மையையே அறிவித்துக் கொள்கிறார்கள். வார்த்தைகளையே தங்கள் கணைகளாகக் கொள்ளும் அவர்கள், தாங்களே அறிவியலின் உண்மையான தலைவர்களைப் போலப் பேசுவார்கள்.(15)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவர்களைக் கல்வி வணிகர்களாகவும்[2], மனிதர்களில் ராட்சசர்களாகவும் அறிவாயாக. வெறும் போலிக்காரணங்களின் துணையின் மூலம், நல்லோராலும், ஞானியராலும் நிறுவப்பட்ட அறநெறியை அவர்கள் கைவிடுகிறார்கள் {ஏளனம் செய்வார்கள்}.(16) விவாதம், அல்லது ஒருவனுடைய சொந்த புத்தி ஆகிய இரண்டாலும் அறநெறிகளின் உரைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்று நாம் கேள்விப்படுகிறோம். இதுவே பிருஹஸ்பதியின் கருத்தாகும் என இந்திரனே {நேரடியாக என்னிடம்} சொல்லியிருக்கிறான்.(17) எந்தச் சாத்திர உரையும், காரணமில்லாமல் விதிக்கப்படவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். மேலும் சிலர், சாத்திரங்களை முறையாகப் புரிந்து கொண்டாலும், ஒருபோதும் அதன்படி செயல்படாமல் இருக்கிறார்கள்.(18) ஞானியரில் ஒரு வகையினர், அறநெறியானது, உலக நடைமுறைக்காக அங்கீகரிக்கப்படதேயன்றி வேறெதற்காகவும் இல்லை என்று அறிவிக்கிறார்கள். உண்மை ஞானியானவன், நன்மைக்காக விதிக்கப்பட்ட அறநெறியைத் தானே அறிந்து கொள்ள வேண்டும்.(19) கோபம், அறிவுக் குழப்பம், அறியாமை ஆகியவற்றின் ஆதிக்கத்தில் ஒரு ஞானியே அறநெறி குறித்துப் பேசினாலும், அந்த உரையும் ஒன்றுக்கும் உதவாமலே போகும்[3].(20)சாத்திரங்களின் உண்மையான எழுத்திலும், உண்மையான தன்மையிலும் இருந்து பெறப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் அறநெறி குறித்துச் செய்யப்படும் உரையாடல்கள் போற்றத்தகுந்தவையே அன்றி வேறெதன் உதவியுடனும் செய்யப்படுபவை அல்ல. அறியாமையில் இருப்பவனின் வார்த்தைகளைக் கேட்டாலும், அறிவு நிறைந்தவனாக இருந்தாலும், அவன் நல்லவனாகவும், ஞானியாகவும் கருதப்படுவான்.(21) பழங்காலத்தில் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “அறிவுச் சோதனையில் நிற்க முடியாத சாத்திரங்கள் சாத்திரங்களே அல்ல” என்று ஐயங்கள் அனைத்தையும் விலக்கவல்ல இந்த உண்மையைத் தைத்தியர்களுக்குச் சொன்னார்[4].(22) ஐயங்களுடன் கலந்த அறிவுடைமையோ, இல்லாமையோ அதே பொருளைக் கொண்டவையே. வேர்களைக் கிழித்து அத்தகைய {ஐயம் கொண்ட} அறிவை விரட்டுவதே உனக்குத் தகும்.(23) இந்த என வார்த்தைகளைக் கேளாதவன் தவறாக வழியில் செல்ல முனைபவனாகக் கருதப்பட வேண்டும். கடுஞ்செயல்களைச் செய்வதற்காகவே அவை உண்டாக்கப்பட்டன என்பதை நீ காணவில்லையா?(24)ஓ! அன்புக்குழந்தாய், என் பிறப்பின் வகைக்கான கடமைகளைச் செய்து, எண்ணற்ற க்ஷத்திரியர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிய என்னைப் பார். இதற்காக என்னிடம் மகிழ்ச்சி கொள்ளாத சிலர் இருக்கின்றனர்.(25) ஆடு, குதிரை ஆகியவையும் க்ஷத்திரியனும் அதே போன்ற காரியத்திற்காகவே (அனைவருக்கும் பயன்படுவதற்காக) பிரம்மனால் படைக்கப்பட்டனர். எனவே, ஒரு க்ஷத்திரியன் இடையறாமல் அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியையே நாட வேண்டும்.(26) கொல்லத்தகாதவனைக் கொல்லும் பாவமும், கொல்லத்தகுந்தவனைக் கொல்லாமல் விடும் பாவமும் ஒன்றே. நிறுவப்பட்ட காரியங்களின் வரிசை இவ்வாறே இருக்கையில், பலவீன மனம் கொண்ட ஒரு மன்னன் அதை ஒருபோதும் கவனிக்காமல் இருக்கவே நினைக்கிறான்.(27) எனவே ஒரு மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்யக் கடுமையை வெளிப்படுத்த வேண்டும்[5]. இது செய்யப்படவில்லையெனில், அவர்கள் ஒருவரையொருவர் விழுங்க ஓநாய்களைப் போல எந்நோக்கமுமின்றித் திரிவார்கள்.(28) எவனுடைய ஆட்சிப்பகுதிகளில், நீரில் உள்ள சிறு மீன்களை அபகரிக்கும் காகங்களைப் போலக் கள்வர்கள் பிறர் பொருளைக் கொள்ளையிடுவார்களோ, அவன் க்ஷத்திரியர்களில் இழிந்தவனாவான்.(29)நீ, உயர்ந்த பிறப்பையும், வேத அறிவையும் கொண்ட மனிதர்களை உன் அமைச்சர்களாக நியமித்துக் கொண்டு, உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பூமியை ஆட்சி செய்வாயாக.(30) நிறுவப்பட்ட பழக்கவழக்கங்களையும், திட்டங்களையும் அறியாதவனான ஒரு க்ஷத்திரியன், தன் மக்களுக்கு முறையற்ற வரிகளை விதித்தால், அவன் தன் வகையில் ஆண்மையற்றவனாக {நபும்ஸகனாக / அலியாகக்} கருதப்படுகிறான்.(31) ஒரு மன்னன் கடுமையாகவும் இருக்கக்கூடாது, மென்மையானவனாகவும் இருக்கக்கூடாது. அவன் நீதியுடன் ஆண்டால் புகழத்தகுந்தவனாகிறான். இந்த இரு பண்புகளையும் மன்னன் கைவிடக் கூடாது; மறுபுறம் அவன் (கடுமை தேவைப்படும் சந்தர்ப்பங்களில்) கடுமையாகவும், தேவையான நேரங்களில் மென்மையாகவும் இருக்க வேண்டும்.(32) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பது வலிநிறைந்ததாகும். நான் உன்னிடம் பெரும் அன்பு கொண்டிருக்கிறேன். நீ கடும் செயல்களைச் செய்ய உண்டாக்கப்பட்டவனாவாய். எனவே, நீ உன் நாட்டை ஆள்வாயாக.(33) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, துன்ப காலங்களில் தீயோரைத் தண்டிப்பதும், நல்லோரைப் பாதுகாப்பதுமே ஒரு மன்னனுடைய பெருங்கடமை என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(34)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(அரசகடமைகளைப் பொறுத்தவரையில்) எந்தச் சூழ்நிலையிலும் மீறப்படக்கூடாத விதி ஏதும் இருக்கிறதா? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(35)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன், கல்விக்காகவும், அர்ப்பணிப்புள்ள தவங்களுக்காகவும், வேத விதிகளுக்கு இசைவான நடத்தையில் கொண்ட வளத்துக்காகவும் மதிப்புக்குரிய பிராமணர்களை எப்போதும் வழிபட வேண்டும். உண்மையில் இஃது உயர்ந்த மற்றும் புனிதமான கடமையாகும்.(36) தேவர்களிடம் நீ நடந்து கொள்வதைப் போலவே பிராமணர்களுடனான உன் நடத்தையும் இருக்கட்டும். ஓ! மன்னா, பிராமணர்கள் கோபமடைந்தால் பல்வேறு தீமைகளை இழைக்க முடியும்.(37) அவர்கள் நிறைவு செய்யப்பட்டால், உயர்ந்த புகழ் உனது பங்காகும். மாறாக இருந்தால், உன் அச்சம் பெரிதாக இருக்கும். நிறைவுடன் இருந்தால், பிராமணர்கள் அமுதமாவார்கள். கோபமடைந்தால் அவர்களே நஞ்சுமாவார்கள்”[6] என்றார் {பீஷ்மர்}.(38)

வேடனும் புறாவும்! – சாந்திபர்வம் பகுதி – 143-வேடன் புறா கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! சாத்திரங்கள் அனைத்திலும் பெரும் ஞானம் கொண்டவரே, பாதுகாப்புக்காக ஏங்கும் சரணடைந்தவனைப் பேணிக் காப்பவனுக்குக் கிடைக்கும் தகுதி {புண்ணியம்} என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, சரணடைந்தவனைப் பேணிக் காப்பதில் உள்ள தகுதி பெரியதாகும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இத்தகு கேள்விக் கேட்பதற்கு நீ தகுந்தவனே.(2) பழங்காலத்தைச் சேர்ந்த சிபி மற்றும் பிறரைப் போன்ற உயர் ஆன்ம மன்னர்கள், சரணடைந்தவர்களைப் பாதுகாத்துச் சொர்க்கத்தில் பெரும் அருளை அடைந்தார்கள்.(3) சரணடைந்த ஓர் எதிரியைப் பொறுத்தவரையில், அவனை முறையான சடங்குகளுடன் ஏற்று, தன் சொந்த சதையையே அவனுக்கு உணவாகக் கொடுத்த புறாவைக் குறித்து நாம் கேள்விப் படுகிறோம்” என்றார்.(4)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உண்மையில், பழங்காலத்தில் சரணடைந்த ஓர் எதிரிக்கு எவ்வாறு அந்தப் புறா தன் சதையைக் கொடுத்தது? ஓ! பாரதரே, அத்தகைய நடத்தையால் அடைந்த கதிதான் என்ன?” என்று கேட்டான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிருகுவின் மைந்தர் (ராமரால் {பரசுராமரால்})[1] மன்னன் முசுகுந்தனுக்குச் சொல்லப்பட்டதும், கேட்பவரின் பாவங்கள் அனைத்தையும் கழுவவல்லதுமான இந்த அற்புதக் கதையைக் கேட்பாயாக. உரிய பணிவுடன் கூடிய முசுகுந்தனால், பிருகுவின் மைந்தரிடம் {பரசுராமரிடம்} இதே கேள்வி முன்வைக்கப்பட்டது.(7) ஓ! ஏகாதிபதி, பிருகுவின் மைந்தர் {பரசுராமர்}, பணிவாகக் கேட்க விரும்பிய அவனிடம் {முசுகுந்தனிடம்}, ஒரு புறா (சொர்கத்தின் உயர்ந்த அருளை அடைவதில்) எவ்வாறு வெற்றியை அடைந்தது என்ற இந்தக் கதையைச் சொன்னார்.(8)அந்தத் தவசி {பரசுராமர் முசுகுந்தனிடம்}}, “ஓ! வலிய கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {முசுகுந்தா}, அறம், பொருள், இன்பம் தொடர்பான உண்மைகள் நிறைந்த இந்தக் கதையை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9) தீயவனும், பயங்கரமானவனும், அந்தகனுக்கு ஒப்பானவனுமான ஒரு வேடன், பழங்காலத்தில் ஒரு பெருங்காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(10) அவன் கருங்காக்கையைப் போலக் கருப்பாக இருந்தான், இரத்த நிறத்திலான கண்களைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் யமனைப் போலவே தெரிந்தான். அவனது கால்கள் நீண்டிருந்தன, பாதங்கள் குறுகியவையாக இருந்தன, அவனது வாய்ப் பெரியதாக இருந்தது, தாடை துருத்திக் கொண்டிருந்தது.(11) அவனுக்கு நண்பனோ, உறவினனோ, சொந்தக்காரனோ எவனுமில்லை. அவன் வாழ்ந்த மிகக் கொடூரமான வாழ்க்கையால் அவர்கள் அனைவரும் அவனைக் கைவிட்டார்கள்.(12) உண்மையில், தன்னைத் தானே அழித்துக் கொள்பவனால் பிறருக்கு எந்த நன்மையும் செய்ய முடியாதாகையால், தீய நடத்தை கொண்ட மனிதனை ஞானிகள் மிகத் தொலைவிலேயே கைவிடுவார்கள்.(13) பிற உயிரினங்களை எடுத்து வாழும் கொடூரமானவர்களும், தீய ஆன்மா கொண்டவர்களுமான மனிதர்கள், அனைத்து உயிரினங்களின் துன்பங்களுக்கும் மூலமாக இருப்பதால், அவர்கள் எப்போதும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களே.(14)

ஓ! மன்னா {முசுகுந்தா}, அவன், தன் வலைகளை எடுத்துக் கொண்டு, காடுகளில் உள்ள பறவைகளைக் கொன்று, (தன் வாழ்வாதாரத்திற்காக) சிறகு படைத்த அந்த உயிரினங்களின் இறைச்சியை விற்று வந்தான்.(15) தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன், அத்தகைய நடத்தையைப் பின்பற்றி, தன் பாவ வாழ்வைப் புரிந்து கொள்ளாமலேயே நெடுங்காலம் வாழ்ந்து வந்தான்.(16) இத்தொழிலைப் பின்பற்றி நீண்ட காலம் தன் மனைவியுடன் இன்புற்று வந்த அவன், விதியால் மயக்கமடைந்து வேறு தொழில் எதையும் விரும்பாதிருந்தான்.(17) ஒரு நாள், தொழிலினிமித்தமாக அவன் காட்டில் திரிந்து கொண்டிருந்தபோது, மரங்களைக் குலுக்கி, அவற்றை வேரோடு சாய்த்துவிடுவதைப் போல ஒரு சூறாவளி தோன்றிற்று.(18) ஒரு கணத்தில், வணிகர்களின் படகுகள் மற்றும் கப்பல்களால் மறைக்கப்படும் கடலின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அடர்த்தியான மேகத்திரள்கள் தங்களுக்கு மத்தியில் விளையாடும் மின்னலின் கீற்றுகளுடன் வானத்தில் தோன்றின.(19) மேகங்களுக்குள் நுழைந்திருந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, பெரும் மழையைப் பொழிந்ததால், ஒரு கணத்தில் பூமியானது வெள்ளக்காடாக ஆனது.(20)

அவ்வாறு மழையானது தாரைத் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தபோது, வேடன் அச்சத்தால் தன் புலன் உணர்வுகளை இழந்தான். குளிரால் நடுங்கி, அச்சத்தால் கலங்கி அவன் காட்டின் ஊடாக உலவிக் கொண்டிருந்தான்.(21) பறவைகளைக் கொல்பவனான அவன், (நீரில்லாத) உயர்ந்த பகுதி எதையும் காணத் தவறினான்.(22) கடும் மழையின் விளைவால், பல பறவைகள் உயிரை இழந்து தரையில் விழுந்தன. சிங்கங்கள், கரடிகள் மற்றும் பிற விலங்குகள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று அங்கே ஓய்ந்து கிடந்தன.(23) பயங்கரப் புனல் மற்றும் மழையின் விளைவால் காட்டுவாசிகள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்திருந்தன. அச்சத்திலும், பசியிலும் இருந்த அவை, சிறு கூட்டங்களாகவும், பெருங்கூட்டங்களாகவும் காடுகளில் திரிந்து கொண்டிருந்தன.(24) எனினும், குளிரால் விறைத்துப் போன அங்கங்களைக் கொண்ட வேடனால், அவன் எங்கிருந்தானோ அங்கு நிற்கவும் முடியவில்லை, நகரவும் முடியவில்லை. அதே வேளையில், குளிரால் விறைத்து, தரையில் கிடக்கும் ஒரு பெண் புறாவை அவன் கண்டான்.(25)

அற்பனான அந்தப் பாவி, தானே அதே இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், அந்தப் பறவையைக் கண்டதும், அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்தான். அவன், தானே துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் சக உயிரினம் ஒன்றைத் துன்பத்தால் பீடிக்கத் தயங்கவில்லை.(26) உண்மையில், அந்த அற்பன், அத்தகைய நேரத்திலும் கூடத் தான் அடிமையாகியிருந்த பழக்கவழக்கத்தின் சக்தியால் மட்டுமே அந்தப் பாவத்தை இழைத்தான். அப்போது அவன் அந்தக் காட்டுக்கு மத்தியில் மேகங்களைப் போன்ற நீல நிறத்தில் ஒரு பெரிய மரத்தைக் கண்டான்.(27) நிழலையும், உறைவிடத்தையும் விரும்பிய பறவைக் கூட்டங்களின் வசிப்பிடமாக அஃது இருந்தது. அஃது உலகத்தில் உள்ள ஒரு நல்ல மனிதனைப் போல அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் படைப்பாளனால் {பிரம்மனால்} அங்கே நிறுத்தப்பட்டிருந்தது.(28) விரைவில் வானம் தெளிந்து, நட்சத்திரக்கூட்டங்கள் மினுமினுங்க, மலர்ந்திருக்கும் அல்லி மலர்களுடன் சிரித்திருக்கும் ஒரு பெரிய தடாகத்தின் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.(29)

நட்சத்திரங்கள் நிறைந்த தெளிந்த வானை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய வேடன், குளிரில் நடுங்கிக் கொண்டே முன்னேறத் தொடங்கினான். மேகங்கள் அற்ற வானத்தைக் கண்ட அவன், அனைத்துப் புறங்களிலும் தன் கண்களைச் செலுத்தி, ஏற்கனவே இரவாகிவிட்டதையும் கண்டு,(30) “நான் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து என் வீடு மிகத் தொலைவில் இருக்கிறது” என்று நினைக்கத் தொடங்கினான். பிறகு அவன் அந்த இரவை அந்த மரத்தினடியிலேயே கழிப்பது எனத் தீர்மானித்தான்.(31) அதை {அந்த மரத்தைக்} கரங்கள் கூப்பி வணங்கிய அவன், அந்தக் காட்டின் ஏகாதிபதியிடம் {மரத்திடம்}, “இந்த மரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தேவர்கள் அனைவரிடமும் உறைவிடம் வேண்டி நான் சரணடைகிறேன்” என்றான்.(32) இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், படுக்கைக்காகச் சில இலைகளைப் பரப்பி, ஒரு கல்லில் தன் தலையை வைத்துக் கொண்டு, தன்னைக் கிடத்திக் கொண்டான். துன்பத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், அந்த மனிதன் விரைவில் உறக்கத்தில் வீழ்ந்தான்” என்றார் {பீஷ்மர்}.(33)

ஆண்புறாவின் புலம்பல்! – சாந்திபர்வம் பகுதி – 144-வேடன் புறா கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பரசுராமர், இரைதேடிச் சென்ற பெண்புறா வீடுதிரும்பாததால், அழுது கொண்டிருந்த ஆண்புறாவின் புலம்பலை முசுகுந்தனுக்கு எடுத்துச் சொன்னது..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, அந்த மரத்தில் இருந்த கிளைகளில் ஒன்றில், அழகிய இறகுகளைக் கொண்ட புறா ஒன்று, தன் குடும்பத்தோடு பல வருடங்களாக வாழ்ந்து வந்தது.(1) காலையில் இரைதேடிச் சென்ற அதன் மனைவி இன்னும் திரும்பாமல் இருந்தது. இரவாகியும் தன் மனைவி திரும்பாததைக் கண்ட அந்தப் பறவை, புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கியது,(2) “ஓ!, இன்று நேர்ந்த புயல் பெரியது, மழை துன்பம் மிகுந்தது. ஐயோ, ஓ! அன்பு மனைவியே, நீ இன்னும் திரும்பவில்லையே.(3) இந்தக் காட்டில் என் அன்பு மனைவி நலமாக இருக்கிறாளா? அவளிடம் இருந்து பிரிந்த என் வீடு வெறுமையாகத் தோன்றுகிறதே.(4) இல்லறத்தானின் வீடானது, மகன்கள், பேரப்பிள்ளைகள், மருமகள்கள், பணியாட்கள் ஆகியோரால் நிரம்பியிருந்தாலும், இல்லத்தரசி இல்லாதிருந்தால் அது வெறுமையானதாகவே கருதப்படுகிறது.(5) 

ஒருவனுடைய வீடு அவனுடைய இல்லமாகாது; ஒருவனுடையே மனைவி மட்டுமே அவனுடைய இல்லமாகிறாள். மனைவியில்லாத ஒரு வீடு காட்டைப் போல வெறுமையானது.(6) கண்கள் சிவந்தவளும், பல்வேறு வண்ண இறகுகளைக் கொண்டவளும், இனிய குரலை உடையவளுமான என் அன்பு மனைவி திரும்பவில்லையெனில், என் வாழ்வே எந்த மதிப்புமில்லாததாகப் போகும்.(7) சிறந்த நோன்புகளைக் கொண்ட அவள், ஒரு போதும் நான் உண்பதற்கு முன் உண்டதுமில்லை, நான் நீராடுவதற்கு முன் நீராடியதுமில்லை. நான் அமர்வதற்கு முன் அவள் ஒருபோதும் அமர்ந்ததில்லை, நான் படுப்பதற்கு முன் ஒருபோதும் படுத்ததுமில்லை.(8) நான் மகிழ்ந்தாள் அவளும் மகிழ்வாள், நான் வருந்தினால் அவளும் வருந்துவாள். நான் இல்லாத போது அவள் உற்சாகம் இழப்பாள், நான் கோபமாக இருந்தாலும், அவள் இனிமையாகப் பேசுவதை நிறுத்தியதில்லை.(9) தன் தலைவனுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடனும், தன் தலைவனையே எப்போதும் சார்ந்தும் இருந்த அவள், தன் தலைவனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் மட்டுமே எப்போதும் செய்து வந்தாள். பூமியில் இத்தகைய மனைவி கிடைத்த எந்த மனிதனும் புகழத்தக்கவனே.(10)

அந்த இனிமையான உயிரினம் நாள் களைத்தும், பசித்தும் இருப்பதை அறிவாள். என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவளும், அன்பில் நிலையானவளும், மிக இனிய இயல்பைக் கொண்டவளும், போற்றுதலுக்குரியவளுமான என் மனைவி, பக்தியுடன் என்னை வழிபட்டு வந்தாள்.(11) ஒருவன் தன் மனைவியின் தோழமையுடன் ஒரு மரத்தக்கடியில் வாழ்ந்தாலும், அதுவே அவனுடைய வீடாகும். மனைவியில்லாமல் மாளிகையில் வாழ்ந்தாலும், அஃது உண்மையில் வெறும் காடே ஆகும்.(12) ஒருவனுடைய மனைவியானவள், அறம், பொருள் மற்றும் இன்பம் சார்ந்த அவனுடைய செயல்கள் அனைத்திலும் துணைவியாக இருக்கிறாள். ஒருவன் அந்நிய நிலத்திற்குப் புறப்படும்போது அவனுடைய மனைவியே அவனது நம்பிக்கைக்குரிய தோழியாக இருப்பாள்.(13) ஒரு மனைவியே தன் தலைவனின் விலைமதிப்புமிக்க உடைமை என்று சொல்லப்படுகிறாள். இவ்வுலக வாழ்வின் அனைத்துக் காரியங்களிலும் மனைவி மட்டுமே தன் தலைவனின் துணையாவாள்[1].(14)நோயிலும், துயரிலும் ஒருவனுக்கு அவனுடைய மனைவியே சிறந்த மருந்தாக இருக்கிறாள்.(15) மனைவியைப் போல வேறு எந்த நட்பும் கிடையாது. மனைவியை விடச் சிறந்த புகலிடம் வேறேதும் கிடையாது. அறத்தகுதி ஈட்டும் செயல்களில் இவ்வுலகில் மனைவியை விடச் சிறந்த கூட்டாளி வேறு யாரும் கிடையாது.(16) எவனுடைய வீட்டில் கற்புக்கரசியும், ஏற்புடைய பேச்சைக் கொண்டவளுமான ஒரு மனைவி இல்லையோ, அவன் காடுகளுக்குச் செல்வதே சிறந்தது. அத்தகைய மனிதனுக்கு, வீட்டுக்கும், காட்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது” {என்று சொல்லி ஆண் புறா புலம்பியது என்றார் பரசுராமர்}.(17)

பெண்புறா வழங்கிய ஆலோசனை! – சாந்திபர்வம் பகுதி – 145-புலம்பிக் கொண்டிருந்த ஆண்புறாவைக் கண்ட பெண்புறா, சரணடைந்தவனைக் காப்பதே உயர்ந்த கடமை என்று அதற்குச் சொல்லி வேடனை விருந்தோம்பலுடன் உபசரிக்கும்படி அந்த ஆண்புறாவை அறிவுறுத்தியது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, வேடனால் {வேடன் லூப்தகனால்} பிடிக்கப்பட்டிருந்த பெண்புறாவானது, மரத்திலுள்ள {ஆண்} புறாவின் பரிதாபகரமான புலம்பல்களைக்கேட்டு, தனக்குள்ளேயே பின்வருமாறு சொல்லத் தொடங்கியது[1].(1)அந்தப் பெண்புறா, “எனக்குத் தகுதியேதும் இருக்கிறதோ, இல்லையோ, அன்புக்குரிய என் தலைவர் {கணவர்}, என்னைக் குறித்து இவ்வாறு பேசுகிறார் என்றால், என் நற்பேற்றுக்கு அளவே இல்லை என்பது உண்மையே.(2) எவளிடம் அவளது தலைவன் நிறைவடையவில்லையோ அவள் மனைவியே அல்ல. பெண்களின் வழக்கில், அவர்களது தலைவர்கள் அவர்களிடம் மனநிறைவுடன் இருந்தால், அவளிடம் தேவர்கள் அனைவரும் அவ்வாறே இருப்பார்கள்.(3) நெருப்பின் முன்னிலையில் திருமணச் சேர்க்கை நடைபெறுவதால், கணவனே, மனைவியின் உயர்ந்த தேவனாவான்.(4) எந்த மனைவியிடம் அவளது கணவன் நிறைவில்லாமல் இருக்கிறானோ, அவள் மலர்களுடன் பூத்துக் குலுங்கும் கொடியானது காட்டுத்தீயில் கருகுவதைப் போலச் சாம்பலாகவே ஆவாள்” {என்று நினைத்தது}.(5)

வேடனால் கூட்டுக்கள் அடைக்கப்பட்ட பெண்புறா, இவ்வாறு சிந்தித்து, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் தன் தலைவனிடம்,(6) “உமக்கு நன்மையானதை இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்டு என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. ஓ! அன்புத் தலைவரே, சரணடைந்த ஒருவனைக் காப்பராவீராக.(7) இந்த வேடன், குளிராலும், பசியாலும் பீடிக்கப்பட்டு, இங்கே உமது வசிப்பிடத்தில் கிடக்கிறான். இவனுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்வீராக.(8) (உதவி நாடி) சரணடைந்தவனை அழிய விடும் ஒருவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்துக்கோ, உலகின் தாயான பசுவைக் கொன்ற பாவத்துக்கோ இணையான பாவத்தை இழைக்கிறான்.(9) நீர் தன்னறிவு கொண்டவராவீர். எனவே, பிறப்பின் வகையில் புறாக்களான நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதே உம்மைப் போன்ற ஒருவருக்குத் தகும்[2].(10)எந்த இல்லறத்தான், தன்னால் இயன்ற அளவுக்கு அறம் பயில்கிறானோ, அவன் மறுமையில் வற்றாத அருள் உலகங்களை வெல்வான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) உமக்கு மகன்கள் இருக்கிறார்கள். உமக்குப் பரம்பரையும் இருக்கிறது. எனவே, ஓ! பறவையானவரே, அறம் மற்றும் பொருள் ஈட்டுவதற்காக உமது உடலுக்கான விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, இந்த வேடனின் இதயம் நிறைவுறுமாறு இவனை வழிபடுவீராக.(12) ஓ! பறவையானவரே, என்னைக் குறித்து வருந்தாதீர். (நான் முக்கியமில்லாதவள் என்பதைக் காண்பீராக), வேறு மனைவியரை ஏற்று நீர் தொடர்ந்து வாழ வேண்டும்”[3] {என்றது அந்தப் பெண்புறா}.(13)அந்த இனிய பெண்புறா, தான் அடைபட்டிருந்த வேடனின் கூட்டிலிருந்து தன் தலைவனின் மீது  கண்களைச் செலுத்தி, கவலையால் உந்தப்பட்டு, அதனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னது” {என்றார் பரசுராமர்}.(14)

நெருப்பில் விழுந்த ஆண் புறா! – சாந்திபர்வம் பகுதி – 146-தன் மனைவியின் அறிவுரைப்படி விருந்தோம்பலில் ஈடுபட்ட ஆண்புறா, வேடன் குளிர்காய நெருப்பை மூட்டிக் கொடுத்தது; உணவு கேட்ட வேடனுக்கு ஒன்றும் கொடுக்க முடியாததால் தானே நெருப்புக்குள் புகுந்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, தன் மனைவி பேசியவையும், நெறிகளும், அறிவும் நிறைந்தவையுமான இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்த அந்தப் புறாவின் {ஆண்புறாவின்} கண்கள் கண்ணீரால் குளித்தன.(1) பறவைகளைக் கொல்வதையே தொழிலாகக் கொண்ட வேடனைக் கண்ட அந்தப் புறா, விதிப்படியான சடங்குகளின் அடிப்படையில் தயக்கமில்லாமல் அவனைக் கௌரவித்தது.(2)

அவனிடம் பேசிய அஃது {அந்த ஆண்புறா}, “உனக்கு நல்வரவு. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ மனநிறைவற்றவனாக இருக்கக்கூடாது. இஃது உன் இல்லமாகும்.[1](3) நான் என்ன செய்ய வேண்டும்? உன் விருப்பம் யாது என்பதை விரைவாகச் சொல்வாயாக. எங்கள் கரங்களில் புகலிடத்தை நீ வேண்டியதால் கொண்ட அன்பின் காரணமாகவே நான் உன்னைக் கேட்கிறேன்.(4) ஒருவனுடைய வீட்டுக்கு அவனுடையே எதிரியே வந்தாலும், அவன் விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட வேண்டும். இந்த மரம், இதை வெட்டுபவன் மேல் விழும் தன் நிழலை விலக்கிக் கொள்வதில்லை.(5) உறைவிடத்திற்காக ஏங்குபவனுக்கு, ஒருவன் விருந்தோம்பலின் கடமைகளைத் தவறில்லாமல் கவனத்தோடு செய்ய வேண்டும். உண்மையில், ஐந்து வேள்விகளைக்[2] கொண்ட இல்லற {கிருஹஸ்த} வாழ்வை நோற்கும் ஒருவன் இவ்வாறே செயல்பட வேண்டும்.(6) இல்லற வாழ்வை நோற்றும் விவேகமில்லாமல் சாத்திரங்களின்படியான ஐந்து வேள்விகளைச் செய்யாதிருந்தால், இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டையும் அவன் இழப்பான்.(7) உன் விருப்பங்கள் என்ன என்று நம்பிக்கைநிறைந்த, புத்தியுடனும் கூடிய வார்த்தைகளால் சொல்வாயாக. உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாதே” என்றது {ஆண்புறா}.(8)அந்தப் பறவையின் வார்த்தைகளைக் கேட்ட அந்த வேடன், அதனிடம், “நான் குளிரால் விறைத்துப் போயிருக்கிறேன். நான் குளிர்காய்வதற்கு வெப்பம் வேண்டும்” என்றான்.(9)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பறவை தரையில் இருந்து எண்ணற்ற காய்ந்த இலைகளைத் திரட்டி, நெருப்பைக் கொண்டு வர ஒரேயோர் இலையை மட்டும் தன் அலகில் எடுத்துச் சென்றது.(10) நெருப்பு இருக்கும் இடத்திற்குச் சென்ற அது,[3] சிறிது நெருப்பை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தது. பிறகு அந்தக் காய்ந்த இலைகளைக் கொண்டு நெருப்பை மூட்டியது,(11) அது பெரும் நெருப்பாகச் சுடர்விட்டெரிந்த போது, தன் விருந்தாளியிடம் அது, “நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் உன் அங்கங்களுக்கு வெப்பமூட்டுவாயாக {குளிர்காய்வாயாக}” என்றது.(12)இவ்வாறு சொல்லப்பட்ட அந்த வேடன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி விறைத்துப் போன தன் அங்கங்களுக்கு வெப்பமூட்டினான். (ஏற்கனவே இருந்ததுபோல்) தன் உயிர் மூச்சை மீண்டும் அடைந்த அந்த வேடன், தனக்கு விருந்துபசரிப்பதும், இறகு படைத்ததுமான அதனிடம் {அந்தப் பறவையிடம்},(13) “பசி என்னை வாட்டுகிறது. நீ எனக்கு உணவு ஏதாவது கொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்றான்.

அவனது வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பறவை,(14) “உன் பசியைப் போக்குவதற்குரிய கிடங்குகள் ஏதும் என்னிடம் இல்லை. காட்டுவாசிகளாகிய நாங்கள், எப்போதும் தினமும் கிடைப்பதைக் கொண்டே வாழ்கிறோம்.(15) காட்டின் தவசிகளைப் போலவே நாங்களும் நாளைக்கென ஒருபோதும் சேகரித்து வைப்பதில்லை” என்றது. இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பறவைக்கு (வெட்கத்தால்) முகம் வெளிறிப்போனது. பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்று அமைதியாக ஆலோசித்த அது, விருப்பத்திற்குரியதாக இல்லாத தன் வாழ்வு முறையை மனத்தில் நினைத்துப் பார்க்கத் தொடங்கியது.(17) எனினும் விரைவில் அதன் மனம் தெளிவடைந்தது. பிறகு அந்தப் பறவை, தன் இனத்தைக் கொல்பவனான அவனிடம் {வேடனிடம்}, “நான் உன்னை நிறைவு செய்கிறேன். ஒரு கணம் பொறுப்பாயாக” என்றது.(18)

இதைச் சொன்ன அது, சில காய்ந்த இலைகளைக் கொண்டு நெருப்பை மூட்டி, மகிழ்ச்சியால் நிறைந்து,(19) “பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களிடம் இருந்து ஒரு விருந்தினரை உபசரிப்பதில் பெரும் தகுதி {புண்ணியம்} உண்டு என்பதை அறிந்து கொண்டேன்.(20) ஓ! இனியவனே, என்னிடம் கருணை கொள்வாயாக. என் விருந்தினராக இருக்கும் உன்னை உபசரிப்பதிலேயே என் இதயம் நிலைத்திருக்கிறது என்ற உண்மையை உனக்குச் சொல்கிறேன்” என்றது.(21) இந்தத் தீர்மானத்தை அடைந்த அந்த உயர் ஆன்மப் பறவை, சிரித்த முகத்துடன் அந்நெருப்பை மூன்று முறை வலம் வந்து, அதன் தழல்களுக்குள் நுழைந்தது.(22)

அந்தப் பறவை நெருப்புக்குள் நுழைவதைக் கண்ட அந்த வேடன் தனக்குள்ளேயே, “நான் என்ன செய்துவிட்டேன்.(23) ஐயோ, என் செயல்களின் விளைவால் வந்த இந்தப் பாவம் இருள் நிறைந்ததும், பயங்கரமானதுமாகும் என்பதில் ஐயமில்லை. நான் மிகக் கொடூரனும், புறக்கணிக்கப்படத் தகுந்தவனுமாவேன்” என்று நினைக்கத் தொடங்கினான்.(24) உண்மையில், அந்தப் பறவை தன் உயிரையே விட்டதைக் கண்ட அந்த வேடன், தன் செயல்களில் விருப்பமில்லாதவனாக இது போல {பின்வருமாறு} பெரும் புலம்பலில் ஈடுபடத் தொடங்கினான்” {என்றார் பரசுராமர்}.(25)

வேடன் அடைந்த உறுதி! – சாந்திபர்வம் பகுதி – 147-நெருப்பில் விழுந்த ஆண் புறாவைக் கண்டு ஞானம் அடைந்த வேடன்; தன் கொடூரத் தன்மையையும், பாவம் நிறைந்த தொழிலையும் நினைத்து அனைத்தையும் கைவிட்டு, பெண்புறாவை விடுவித்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, அந்தப் புறா நெருப்புக்குள் விழுவதைக் கண்ட வேடன், கருணையால் நிறைந்தவனாக மீண்டும்,(1) “ஐயோ, கொடூரனும், அறிவற்றவனுமான நான் என்ன காரியம் செய்து விட்டேன்? நிச்சயம் நான் ஓர் இழிந்த அற்பனே. நெடுங்காலம் நீடிக்கும் அளவுக்கு என் பாவம் மிகப் பெரியதாகும்” என்றான்.(2)

இத்தகைய சுய நிந்தனையில் ஈடுபட்ட அவன், மீண்டும் மீண்டும், “எந்த நன்மைக்கும் நான் தகுந்தவனல்ல. என் புத்தி தீயது. என் ஆதாரங்களில் நான் எப்போதும் பாவம் நிறைந்தவனாகவே இருக்கிறேன்.(3) ஐயோ, மதிக்கத்தக்க அனைத்து வகைத் தொழில்களையும் கைவிட்டு, நான் ஒரு வேடனானேன். கொடூரனும், இழிந்தவனுமான எனக்கு, இந்த உயர் ஆன்மப் பறவை தன் உயிரை விட்டு ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.(4) நான் என் மனைவியரையும், மகன்களையும் கைவிட்டுவிட்டு, அன்புக்குரிய என் உயிர் மூச்சையே நான் நிச்சயம் விடப் போகிறேன். இந்த உயர் ஆன்ம புறா எனக்கு அந்தக் கடமையைப் போதித்திருக்கிறது.(5)

இந்த நாளில் இருந்து, என் உடலுக்கான வசதிகள் அனைத்தையும் மறுத்து, கோடை காலத்து வறண்ட குளத்தைப் போலவே அதை {உடலை} மெலியச்செய்யப் போகிறேன்.(6) பசி, தாகம், தவங்கள் ஆகியவற்றைத் தாங்கவல்லவனாகி, உடலெங்கும் நரம்புகள் தெரிய மெலிந்தவனாகி, மறுமையைக் குறிக்கும் நோன்புகளை நோற்கப் போகிறேன்.(7) ஐயோ, இந்தப் புறா தன் உடலைக் கைவிட்டு, ஒரு விருந்தினனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய வழிபாட்டை எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த எடுத்துக் காட்டிலிருந்து போதனை பெற்ற நான், இதுமுதல் அறம் பயலப் போகிறேன். அறமே, (அனைத்து உயிரினங்களுக்கும்) உயர்ந்த புகலிடமாக இருக்கிறது. இறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான இந்த நல்ல புறாவிடம் காணப்பட்ட இத்தகைய அறத்தையே நான் பயிலப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டான்.(8)

இத்தகைய தீர்மானத்தை அமைத்துக் கொண்டவனும், இந்த வார்த்தைகளைச் சொன்னவனும், முன்பு கடும் காரியங்களைச் செய்தவனுமான அந்த வேடன், மிகக் கடுமையான நோன்புகளை நோற்றுக் கொண்டே இவ்வுலகத்தில் திரும்பா பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினான்[1].(9) அவன் தன் தடித்த தடியையும், கூர்முனை கொண்ட இரும்புத் தடியையும் {சலாகத்தையும்}, வலைகள் மற்றும் சுருள்களையும், தன் இரும்புக்கூட்டையும் கைவிட்டு, தான் பிடித்து {அந்தக் கூண்டில்} அடைத்து வைத்திருந்த பெண்புறாவை விடுவித்தான்” {என்றார் பரசுராமர்}.(10)

சொர்க்கத்தை அடைந்த புறாக்கள்! – சாந்திபர்வம் பகுதி – 148-வேடன் விடுவித்துவிட்டுச் சென்ற பெண்புறா, கணவனின் பிரிவைத் தாளாமல் தானும் நெருப்பில் விழுந்து இறந்தது; ஆண்புறாவை சொர்க்கத்தில் கண்ட பெண்புறா; சொர்க்கத்தில் இன்புற்றிருந்த புறாக்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, அவ்விடத்தை விட்டு அந்த வேடன் அகன்றதும், பெண்புறாவானது, தன் கணவனை நினைத்துத் துயரில் அழுது, இந்தப் புலம்பல்களில் ஈடுபட்டது:(1) “ஓ! அன்புத் தலைவா, நீர் எனக்கு எந்தத் தீங்கையும் செய்ததாக ஒரேயொரு நிகழ்வையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. விதவைகள், பல குழந்தைகளுக்குத் தாய்மாராக இருந்தாலும், அவர்கள் நிலை பரிதாபகரமானதே. கணவனை இழந்த ஒரு பெண், ஆதரவற்றவளாகவும், தன் நணபர்களின் பரிதாபத்திற்குரிய ஒரு பொருளாகவும் இருக்கிறாள்.(2) நான் எப்போதும் உம்மால் பேணிக் காக்கப்பட்டேன், என் மீது நீர் கொண்ட பெருமதிப்பின் விளைவாக, இனிய, ஏற்புடைய, அழகிய, மகிழ்ச்சிகரமான வார்த்தைகளால் உம்மால் நான் கௌரவிக்கப்பட்டேன்.(3) பள்ளத்தாக்குகளிலும், ஆறுகளின் நீரோடைகளிலும், இனிமையான மர உச்சிகளிலும் நான் உம்மோடு விளையாடிக் களித்திருந்தேன்.(4)

வானத்தில் உலவும்போதும் நான் உம்மால் மகிழ்ச்சியாக வைக்கப்பட்டிருந்தேன். ஓ! அன்புத் தலைவா, ஆனால், உம்மோடு நான் முன்பு விளையாடியிருந்த அந்த இன்பங்கள் இப்போது எங்கே போயின?(5) தந்தை, உடன்பிறந்தவன், மகன் ஆகியோரிடம் இருந்து ஒரு பெண் பெறும் கொடைகள் ஒரு வரம்புக்குட்பட்டதே. அவளது கணவன் தரும் கொடைகள் மட்டுமே அவளுக்கு அளவற்றவையாகத் தெரியும். எனவே, தன் கணவனைப் புகழாத எந்தப் பெண்தான் இந்த உலகத்தில் இருப்பாள்?(6) ஒரு பெண்ணுக்குத் தன் தலைவனைப் போன்ற ஒரு பாதுகாவலும் கிடையாது, தன் தலைவனைப் போன்ற ஒரு மகிழ்ச்சியும் கிடையாது. தன் செல்வம், உடைமைகள் ஆகிய அனைத்தையும் கைவிடும் ஒரு பெண், தன் தலைவனை மட்டுமே ஒரே புகலிடமாகக் கொள்கிறாள்.(7) ஓ! தலைவா, இப்போது நான் உம்மிடம் இருந்து பிரிந்துவிட்டதால் இங்கே உயிரோடிருப்பது எனக்கு எந்தப் பயனையும் தராது. தன் தலைவனை இழந்த எந்தக் கற்புடைய பெண்தான், உயிரெனும் சுமையைத் தாங்கிக் கொள்ளத் துணிவாள்?” என்று புலம்பியது {அந்தப் பெண்புறா}.(8)

தன் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருந்த அந்தப் பெண்புறா, கவலையால் நிறைந்து, இத்தகைய பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டு, இறுதியில் சுடர்மிக்க நெருப்புக்குள்ளேயே விழுந்தது.(9) அப்போது அவள், (இறந்து போன) தன் கணவன், கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டு, உயர் ஆன்மா கொண்டோரால் புகழப்பட்டு, தகுதிமிக்கோர் சூழ ஒரு (தெய்வீகத்) தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.(10) உண்மையில் அவன், சிறந்த மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படவனாக, சிறந்த ஆடைகளை உடுத்தியவனாக, அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனாக ஆகாயத்தில் இருந்தான். இவ்வுலகத்தில் தகுதியுடன் செயல்பட்டவர்களால் செலுத்தப்பட்ட எண்ணற்ற தெய்வீகத் தேர்கள் அவனைச் சுற்றிலும் இருந்தன.(11) தெய்வீகத் தேரொன்றில் அமர்ந்திருந்த அந்தப் பறவையானவன், இவ்வுலகில் தான் செய்த செயல்களுக்கு உரிய கௌரவங்களை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்ந்து, தன் மனைவியின் துணையுடன் தொடர்ந்து இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தான்” {என்றார் பரசுராமர்}.(12)

வேடனின் கதி! – சாந்திபர்வம் பகுதி – 149-புறாக்கள் அடைந்த நற்பேற்றைக் கண்ட வேடன், தானும் அதே கதியை அடைய வேண்டும் என்றெண்ணி நெடும்பயணம் மேற்கொண்டான்; இறுதியில் ஒரு பெருங்காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நுழைந்து சொர்க்கத்தை அடைந்தான்; இந்தக் கதையைச் சொல்லி, இதனைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, ஓ! மன்னா, அந்த இணை {புறாக்கள்} தெய்வீகத் தேரில் அமர்ந்திருப்பதை வேடன் கண்டான். அந்த இணையைக் கண்ட அவன் {வேடன்}, (தன் பேறின்மையை நினைத்துக்) கவலையில் நிறைந்தவனாக, அதே கதியை அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(1) அவன் தனக்குள்ளேயே, “அந்தப் புறாவைப் போன்ற துறவுகளின் மூலம் நான் அத்தகைய உயர்ந்த கதியை அடைய வேண்டும்” என்று நினைத்தான். பறவைகளைக் கொன்று வாழ்ந்த அந்த வேடன் இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, திரும்பி வராத பயணத்திற்குப் புறப்பட்டான்.(2) (உணவை அடைவதற்கு) எந்த முயற்சியும் செய்யாமல், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த அவன், சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால் தன் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டான்.(3)

சிறிது தொலைவுக்குச் சென்றதும், பரந்ததும், குளுமையான தூய நீர் நிறைந்ததும், தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு வகை நீர்க்கோழிகளால் நிறைந்ததுமான ஓர் இனிமையான தடாகத்தைக் கண்டான்.(4) அத்தகைய தடாகத்தைப் பார்ப்பதாலேயே ஒருவனுடைய தாகம் தணிந்து விடும் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா {முசுகுந்தா}, எனினும் நோன்புகளால் மெலிந்திருந்த அந்த வேடன்,(5) அதில் தன் கண்களைச் செலுத்தாமல், இரைதேடும் விலங்குகள் வசித்த ஒரு காட்டின் பெரும்பரப்பை முன்கூட்டிய உறுதி செய்துகொண்டு, அதற்குள் மகிழ்ச்சியாக நுழைந்தான். அந்தக் காட்டுக்குள் நுழைந்தபிறகு, அவன் கூர் முனைகளைக் கொண்ட முட்களால் பெரிதும் பீடிக்கப்பட்டான்.(6)

அந்த முட்களால் கிழிபட்டு, புண்ணடைந்து, மேனியெங்கும் குருதியால் மறைக்கப்பட்ட அவன், பல்வேறு வகை விலங்குகள் நிறைந்ததும், மனிதர்களற்றதுமான அந்தக் காட்டில் திரியத் தொடங்கினான்.(7) பலமிக்கக் காற்றால் பெருமரங்களுக்கிடையில் நடந்த உராய்வின் விளைவாக ஒரு பெரிய காட்டுத்தீ எழுந்தது.(8) சீற்றமிக்க அந்தப் பூதம் {அக்னி}, யுக முடிவில் ஏற்படுவதைப் போலத் தன் காந்தியை வெளிப்படுத்திக் கொண்டு, நெடுமரங்கள், அடர்த்தியான புதர்கள் மற்றும் கொடிகளால் நிறைந்த அந்தப் பெருங்காட்டை எரிக்கத் தொடங்கியது.(9)

உண்மையில், காற்றின் மூலம் வீசப்பட்ட தழல்களுடனும், அனைத்துத் திசைகளிலும் பறக்கும் கீற்றுக் கூட்டங்களுடனும் கூடியவனும், அனைத்தையும் எரிப்பவனுமான அந்தத் தேவன் {அக்னி}, பறவைகளும், விலங்குகளும் நிறைந்த அந்த அடர்த்தியான காட்டை எரிக்கத் தொடங்கினான்.(10) தன் உடலைக் கைவிட விரும்பிய அந்த வேடன், பரவும் தீயை நோக்கி மகிழ்ச்சியான இதயத்துடன் ஓடினான்” {என்றார் பரசுராமர்}.(11) ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்நெருப்பால் எரிக்கப்பட்ட அந்த வேடன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்தவனாக, உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12)

அவனது இதய நோய் விலகியது; இறுதியில் அவன், யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம்சூட்டப்பட்டவர்களுக்கு மத்தியில் இந்திரனைப் போன்ற காந்தியுடன் சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பவனாகத் தன்னைத் தானே கண்டான்.(13) இவ்வாறு அந்தப் புறாவும், அர்ப்பணிப்புமிக்க அதன் மனைவியும், அந்த வேடனுடன் சேர்ந்து தங்கள் தகுதிமிக்கச் செயல்களால் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(14) இவ்வாறு தன் தலைவனைப் பின்தொடரும் {தன் தலைவனிடம் அர்ப்பணிப்பு கொண்ட} ஒரு பெண், விரைவாகச் சொர்க்கத்தை அடைந்து, நான் சொன்ன பெண்புறாவைப் போலக் காந்தியுடன் ஒளிர்வாள்[1].(15)இதுவே அந்த உயர் ஆன்ம வேடன் மற்றும் புறாவின் பழைய வரலாறாகும். இவ்வாறே அவர்கள் தங்கள் அறச் செயல்களால் உயர்ந்த தகுதியுள்ள கதியை அடைந்தனர்.(16) இந்தக் கதையைத் தினமும் கேட்கவோ, தினமும் உரைக்கவோ செய்பவனின் மனத்தில் தவறுகள் ஊடுருவினாலும் அவனுக்கு எந்தத் தீங்கும் நேராது.(17) ஓ! யுதிஷ்டிரா, ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, சரணடைந்த ஒருவனைக் காப்பது உண்மையில் தகுதியுடையவோரின் உயர்ந்த செயலாகும். பசுவைக் கொன்றவனும், இந்தக் கடமையைச் செய்தால், அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(18) எனினும், சரணடைந்தவனைக் கொல்லும் மனிதனோ, ஒருபோதும் {அந்தப் பாவத்திலிருந்து} தூய்மையடையமாட்டான். புனிதமானதும், பாவத்தைத் தூய்மைப்படுத்துவதுமான இந்தக் கதையைக் கேட்பதன் மூலம் ஒருவன் துன்பத்தில் இருந்து விடுபட்டு, இறுதியில் சொர்க்கத்தை அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(19)

இந்திரோதரின் வன்கண்டனம்! – சாந்திபர்வம் பகுதி – 150-அறியாமல் செய்யப்பட்ட பாவத்தைத் தணிக்கும் காரியத்தை விளக்க ஜனமேஜயனின் வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதர்களில் சிறந்தவரே, அறியாமையால் ஒருவன் பாவமிழைத்துவிட்டால், அவனால் எவ்வாறு அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடைய முடியும்? இது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, சுனகரின் மகனான மறுபிறப்பாளர் இந்திரோதரால் ஜனமேஜயனுக்குச் சொல்லப்பட்டதும், முனிவர்களால் புகழப்படுவதுமான பழைய உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் பரிக்ஷித்தின் மகனும், ஜனமேஜயன்[1] என்றழைக்கப்பட்டவனும், பெரும் சக்தியுடையவனுமான ஒரு மன்னன் இருந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பூமியின் தலைவன், அறியாமல் ஒரு பிராமணனைக் கொன்ற குற்றவாளியானான்.(3) இதனால், அவனது புரோகிதரோடு சேர்ந்து பிராமணர்கள் அனைவரும் அவனைக் கைவிட்டனர். பகலும் இரவும் வருத்தத்தால் எரிந்த அந்த மன்னன் காடுகளுக்குள் ஓயச் சென்றான்.(4) குடிமக்களாலும் கைவிடப்பட்ட அவன், உயர்ந்த தகுதியை அடைவதற்காக இந்த நடவடிக்கையை எடுத்தான். வருத்ததால் எரிந்த அந்த ஏகாதிபதி, கடுந்தவங்களைச் செய்தான்.(5)

[1] இந்தப் பரிக்ஷித்தும், ஜனமேஜயனும், அர்ஜுனனின் பேரனும், கொள்ளுப் பேரனும் கிடையாது. பழங்காலத்தைச் சேர்ந்த இவர்கள் வேறு.

பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} செய்த பாவத்தைக் கழுவுவதற்காகப் பல பிராமணர்களை விசாரித்தபடி நாடுவிட்டு நாடு சென்று மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருந்தான்.(6) அவன் பாவக்கழிப்படைந்த கதையை இப்போது நான் உனக்குச் சொல்கிறேன். தன் பாவச் செயலை நினைத்து எரிந்து கொண்டிருந்த ஜனமேஜயன், அவ்வாறு திரிந்து கொண்டே இருந்தான்.(7) ஒருநாள் அவ்வாறு அவன் திரிந்து கொண்டிருந்தபோது, கடும் நோன்புகளைக் கொண்டவரும், சுனகரின் மகனுமான இந்திரோதரைச் சந்தித்து, அவரை அணுகி அவரது பாதங்களைத் தீண்டினான்.(8)

தன் முன்னே இருக்கும் மன்னனைக் கண்ட அந்தத் தவசி அவனை வன்மையாகக் கண்டிக்கும் வகையில், “நீ பெரும் பாவத்தை இழைத்தவனாவாய். நீ கருவைக் கொன்ற குற்றவாளியாவாய். நீ ஏன் இங்கு வந்தாய்?(9) எந்தக் காரியம் உன்னை இங்கே கொண்டு வந்தது? எந்த வழிமுறைகளிலும் நீ என்னைத் தீண்டாதே. போ, சென்றுவிடு. நீ இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.(10) உன் மேனி குருதியைப் போல நாறுகிறது. உன் தோற்றம் சவத்தைப் போல இருக்கிறது. தூய்மையற்றவனாக இருப்பினும் தூயவன் போலத் தெரியும் நீ, இறந்தும் உயிருள்ளவன் போல நகர்ந்து கொண்டிருக்கிறாய்.(11) எப்போதும் பாவத்தையே நோக்கமாகக் கொண்டதால் உள்ளூர இறந்தவனான நீ தூய்மையற்ற ஆன்மா கொண்டவனாவாய். உறங்கி விழிப்பவனாக இருப்பினும், உன் வாழ்வு பெருந்துயரிலேயே கடக்கிறது.(12) ஓ! மன்னா, உன் வாழ்வு பயனற்றதாகும். மிக அவலமான வாழ்வை நீ வாழ்கிறாய். உன்னதமற்ற பாவ காரியங்களுக்காகவே நீ படைக்கப்பட்டிருக்கிறாய். தந்தைமார், பல்வேறு வகை அருள்களை அடைவதற்காக மகன்களை விரும்புகிறார்கள். அவர்கள் வேள்விகளையும், தவங்களையும் செய்வார்கள் என்று நம்பி, தேவர்களை வழிபட்டு, துறவைப் பயில்கிறார்கள்.(14)

உன் மொத்த குலத்தின் மூதாதையரும் உன் செயல்களின் விளைவால் நரகத்தில் வீழ்ந்துவிட்டதைப் பார். உன் தந்தைமார் {மூதாதையர்} வைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் கனியற்றவையாகின.(15) பிற மனிதர்கள் யாரை வழிபட்டு நீண்ட வாழ்வையும், புகழையும், சொர்க்கத்தையும் அடைகிறார்களோ, அந்தப் பிராமணர்களிடம் நீ எப்போதும் வெறுப்பும், வன்மமும் கொண்டவனாக இருப்பதால் நீ வீணாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.(16) (நேரம் வரும்போது) இவ்வுலகத்தை விட்டுச் செல்லும் நீ, உன் பாவச் செயல்களின் விளைவால், தலைகுப்புற (நரகத்தில்) விழுந்து, அந்நிலையிலேயே எண்ணற்ற ஆண்டுகள் நீடித்திருப்பாய்.(17) அங்கே இரும்பு அலகுகளைக் கொண்ட கழுகுகள் மற்றும் மயில்களால் நீ துன்புறுத்தப்படுவாய். அதன் பிறகு அங்கிருந்து இந்த உலகத்திற்கு வரும் நீ, இழிந்த வகை உயிரினங்களில் உன் பிறப்பை எடுப்பாய்.(18) ஓ! மன்னா, இந்த உலகம் {இம்மை} ஒன்றுமில்லாதது, அடுத்த உலகம் {மறுமை} நிழலின் நிழலாகும் என நீ நினைத்தால், நரக உலகங்களின் யம தூதர்கள், உன் நம்பிக்கையின்மையைக் களைந்து, உன்னை நம்ப வைப்பார்கள்” என்றார் {இந்திரோதர்}.(19)

ஜனமேஜயன் ஏற்ற உறுதிமொழி! – சாந்திபர்வம் பகுதி – 151-தான் செய்த பாவங்களுக்காக வருந்துவதாகவும், தன்னைக் கண்டிப்பது தகுந்ததே என்றும் இந்திரோதரிடம் ஜனமேஜயன் சொல்வது; பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதிமொழியேற்றுக் கொண்டால் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன இந்திரோதர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட ஜனமேஜயன், அந்தத் தவசியிடம் {இந்திரோதரிடம்}, “கண்டிக்கத் தகுந்தவனையே நீர் கண்டிக்கிறீர். பழிக்கத்தக்கவனையே நீர் பழிக்கிறீர்.(1) என்னையும், என் செயல்களையும் நீர் கடிந்துரைக்கிறீர். என்னிடம் கருணை கொள்ளுமாறு நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். என் செயல்கள் அனைத்தும் பாவம் நிறைந்தவையே. எனினும், நெருப்புக்கு மத்தியில் இருப்பவனைப் போல நான் வருந்துகிறேன்.(2) என் செயல்களை நினைத்து என் மனம் மிகவும் உற்சாகமிழக்கிறது. உண்மையில் நான் யமனைக் குறித்து அதிகம் அஞ்சுகிறேன்.(3) என் இதயத்தில் இருந்து அந்தக் கணையைப் பிடுங்காமல் என்னால் எவ்வாறு உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும்? ஓ! சௌனகரே {சுனகரின் மகனே [இந்திரோதரே]}, உமது கோபத்தை அடக்கி, இப்போது எனக்குப் போதிப்பீராக.(4) முந்தைய காலத்தில் பிராமணர்களிடம் நான் பெரும் மதிப்பைக் காட்டினேன். அவர்களிடம் அதே மதிப்பையே மீண்டும் காட்டுவேன் என நான் உளமாற அறிவிக்கிறேன். என் குலம் அழிய வேண்டாம். நான் பிறந்த குலம் புழுதியில் மூழ்க வேண்டாம்.(5)

பிராமணர்களுக்குத் தீங்கிழைத்தவர்கள், அதன் காரணமாக, வேத ஆணைகளின் விளைவால் உலகம் குறித்த அனைத்து உரிமைகளையும், சக மனிதர்களுடனான சமூகச் சேர்க்கையையும் இழந்தவர்கள், தங்கள் குலங்கள் தொடரத் தங்கள் பெயர்களைத் தாங்கும் எவனையும் கொண்டிருப்பது முறையாகாது.(6) நான் துயரில் மூழ்கியிருக்கிறேன். எனவே, (என் நடத்தையைச் சரி செய்து கொள்வதைக் குறித்த) என் தீர்மானங்களை நான் மீண்டும் சொல்கிறேன். ஏழைகளைப் பாதுகாப்பதற்காகக் கொடைகளை ஏற்காத தவசிகளைப் போல என்னைப் பாதுகாக்குமாறு நான் உம்மை வேண்டுகிறேன்.(7) பாவிகளான அற்பர்கள், வேள்விகளைத் தவிர்ப்பதால் ஒருபோதும் சொர்க்கத்தை அடைவதில்லை.[1] (இந்த உலகத்தை விட்டுச்) சென்றதும், புளிந்தர்களையும், காசர்களையும் போல அவர்கள் நரகக் குழிகளிலேயே தங்கள் காலத்தைக் கழிப்பார்கள்[2].(8) கல்விமானான ஓர் ஆசான் தன் சீடனுக்கோ, ஒரு தந்தையானவர் தனது மகனுக்கோ ஞானத்தைக் கொடுப்பதைப் போல அறியாமை கொண்ட எனக்கு நீர் அதை {ஞானத்தைக்} கொடுப்பீராக. ஓ! சௌனகரே, என்னிடம் நிறைவு கொள்வீராக” என்றான் {ஜனமேஜயன்}.(9)சௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்}, “ஞானமில்லாத ஒருவன், பல முறையற்ற செயல்களைச் செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? இஃதை அறிந்த ஒரு ஞானமுள்ள மனிதன், உயிரினங்கள் (மடமையால் செய்யும் குற்றங்களில்) ஒருபோதும் கோபமடைவதில்லை[3].(10) ஞான மாளிகையின் உச்சியில் ஏறிய ஒருவன், பிற மக்களின் துயருக்கான பொருளாகி, அவர்களுககாக வருந்தினால், அவனது சுயம் {ஆன்மா} மிகத் தூய்மையானதாக இருக்க வேண்டும். ஒருவனுடைய ஞானத்தின் விளைவால் அவன் மலையுச்சியில் இருந்து கொண்டு கீழிருக்கும் மக்களை ஆய்வு செய்பவனைப் போல, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் ஆய்வு செய்கிறான்.(11) எவன் நல்லோரின் கடிந்துரைக்குப் பொருளாகிறானோ, எவன் நல்லோரை வெறுப்பானோ, எவன் அவர்களின் பார்வையில் இருந்து தன்னை மறைத்துக் கொள்வானோ அவனால் ஒருபோதும் எந்த அருளையும் அடைவதில் வெல்ல முடியாது, அவன் ஒருபோதும் செயல்களின் முறைமைகளை {ஒழுங்குமுறைகளைப்} புரிந்து கொள்ளவே மாட்டான்[4].(12) வேதம் மற்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி பிராமணனின் சக்தியையும், உன்னதத்தன்மையையும் நீ அறிவாய். எந்த வழியில் உன் இதயம் அமைதியை அடையமோ அஃதை இப்போதே செய்து, பிராமணர்களையே உன் புகலிடமாக்கிக் கொள்வாயாக.(13) உன் மேலுள்ள கோபத்தைப் பிராமணர்கள் நிறுத்திக் கொண்டால், அதுவே சொர்க்கத்தில் உன் இன்பநிலையை உறுதிசெய்யும். மேலும், பாவத்துக்கு நீ வருந்துவாயானால், உன் பார்வை தெளிவடையும், அறங்காண்பதில் நீ வெல்வாய்” என்றார் {இந்திரோதர்}.(14)ஜனமேஜயன், “நான் என் பாவங்களுக்காக வருந்துகிறேன். அறத்தை அழிக்க நான் ஒருபோதும் முயல மாட்டேன். நான் அருளை அடையவே விரும்புகிறேன். என்னிடம் நீர் நிறைவு கொள்வீராக” என்றான்.(15)

சௌனகர் {இந்திரோதர்}, “ஓ! மன்னா, ஆணவத்தையும், செருக்கையும் அகற்றி, நீ என்னிடம் மரியாதை காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்[5]. அறக்கட்டளைகளை எப்போதும் நினைவுகூர்பவனாக, அனைத்து உயிரினங்களின் நன்மையில் நீ ஈடுபடுவாயாக.(16) அச்சத்தாலோ, குறுகிய மனத்தாலோ, பேராசையாலோ நான் உன்னைக் கண்டிக்கவில்லை. நான் சொல்லப்போகும் உண்மையின் வார்த்தைகளை இங்கிருக்கும் பிராமணர்களோடு சேர்ந்து கேட்பாயாக.(17) நான் எதையும் கேட்கவில்லை. எனினும், அறவழிகளை நான் உனக்குப் போதிப்பேன். (நான் இப்போது செய்யப் போகும் செயலுக்காக) அனைவரும் என்னை நிந்தித்து {தவளைகள் போல், கழுதைகள் போல்) கத்தவும், கதறவும் செய்வார்கள்.(18) அவர்கள் என்னைப் பாவி என்றும் அழைக்கக்கூடும். என் சொந்தங்களும், நண்பர்களும் என்னை விலக்கக்கூடும்[6]. எனினும், என் சொந்தங்களும், நண்பர்களும், நான் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, வாழ்வின் கடினங்களை நிச்சயம் விரைவாகக் கடப்பார்கள்.(19) பெரும் ஞானம் கொண்ட சிலர் (என் நோக்கங்களைச்) சரியாகப் புரிந்து கொள்வார்கள். ஓ! குழந்தாய், ஓ! பாரதா, பிராமணர்களைக் குறித்த என் பார்வைகள் என்ன என்பதை அறிந்து கொள்வாயாக.(20) என் முயற்சிகளின் மூலம் (நான் சொல்வதைக் கேட்ட பிறகு) அவர்கள் அனைத்து அருளையும் அடையும் வகையில் செயல்படுவாயாக. ஓ! மன்னா, பிராமணர்களுக்கு மீண்டும் தீங்கிழைக்கமாட்டேன் என்ற உறுதிமொழியையும் நீ அளிப்பாயாக” என்றார் {இந்திரோதர்}.(21)ஜனமேஜயன், “எண்ணத்தாலோ, வார்த்தையாலோ, செயலாலோ, நான் இனி ஒருபோதும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்று உமது பாதங்களைத் தீண்டி உறுதிமொழியேற்கிறேன்” என்றான்.(22)

இந்திரோதரின் நீதி! – சாந்திபர்வம் பகுதி – 152-இந்திரோதர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அறிவுரைகள்; ஜனமேஜயனைப் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவனுக்குக் குதிரை வேள்வி செய்து கொடுத்த இந்திரோதர்…

சௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்தக் காரணங்களுக்காக, மிகக் கலங்கிய இதயம் கொண்ட உன்னிடம் நான் அறம் குறித்து உரையாடப்போகிறேன். அறிவையும், பெரும்பலத்தையும், நிறைவான இதயத்தையும் கொண்ட நீ, அறத்தைத் தானாக விரும்பி நாடுகிறாய்.(1) ஒரு மன்னன், முதலில் மிகக் கடுமையானவனாகி, பிறகு கருணையைக் காட்டி, தன் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையைச் செய்கிறான். இது நிச்சயம் மிக ஆச்சரியமானதே ஆகும்.(2) நீ முதலில் கடுமையானவனாக இருந்தாய். ஆனால் இப்போதோ, அறம் நோக்கி உன் கண்களைத் திருப்பியிருக்கிறாய்.(3) ஆடம்பர உணவு மற்றும் இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, நீண்ட காலமாகவே நீ கடுந்தவங்களைச் செய்து வருகிறாய். ஓ! ஜனமேஜயா, பாவத்தில் மூழ்கியிருக்கும் மன்னர்களிடம் இவையனைத்தும் {காணப்படுவது} நிச்சயம் ஆச்சரியமானதே.(4)

செல்வமிக்கவன் பரந்த மனம் கொண்டவனாவதோ, தவத்தைச் செல்வமாகக் கொண்ட ஒருவன், அதை {தவசக்தியைச்} செலவு செய்யத் தயங்குவதோ ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. ஒருவர் மற்றொருவரிடமிருந்து தொலைவில் வாழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது[1].(5) எது தவறாகத் தீர்மானிக்கப்படுகிறதோ, அஃது அதிகமான துன்பத்தையே உண்டாக்கும். மறுபுறம், எது நல்ல உறுதியான தீர்மானத்தின் துணையுடன் நிறைவேற்றப்படுகிறதோ, அது சிறப்பான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது[2].(6) ஓ! பூமியின் தலைவா, வேள்வி, கொடை, கருணை, வேதங்கள், உண்மை ஆகிய இவ்வைந்தும் தூய்மைப்படுத்துவனவாகும். ஆறாவதானது, நன்றாகச் செய்யப்படும் தவமாகும். ஓ! ஜனமேஜயா, இறுதியானது {தவமானது} மன்னர்களுக்கு உயர்வான தூய்மையைத் தரும்.(7) அதை நீ முறையாகக் கைக்கொண்டால், நீ நிச்சயம் பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்}, அருளையும் ஈட்டுவாய். புனிதத் தலங்களுக்குப் பயணம் செய்வதும் உயர்ந்த தூய்மையைத் தரும் என்று சொல்லப்படுகிறது.(8)இது தொடர்பாக யயாதி பாடிய பின்வரும் சுலோகம் குறிப்பிடப்படுகிறது: “எந்த மனிதன் உயிரையும், நீண்ட வாழ்வையும் ஈட்டுவானோ, அவன் அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த பிறகு, அவற்றை (முதிர்ந்த வயதில்) கைவிட்டு {துறந்து}, தவங்களைச் செய்ய வேண்டும்” {என்பது அந்த ஸ்லோகம்}.(9) குருவின் களம் {குருக்ஷேத்திரம்} புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதி ஆறு அதைவிடப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதியைவிட, சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் இன்னும் அதிகமான புனிதம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது; சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தையும்விடப் பிருதூதகம்[3] என்றழைக்கப்படும் தீர்த்தம் மிகப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. பிருதூதகத்தில் நீராடி, அதன் நீரைப் பருகிய ஒருவன், அகால மரணமடையமாட்டான்.(10) மஹாஸரஸுக்கும், புஷ்கரை என்ற பெயரில் இருக்கும் தீர்த்தங்கள் அனைத்திற்கும், பிரபாஸத்துக்கும், மானஸத்தின் {மானசரோவரின்} வடக்குத் தடாகத்துக்கும் {உத்தர மானஸத்துக்கும்}, காலோதகத்துக்கும் நீ செல்ல வேண்டும். அதன் பிறகு, நீ உயிரையும், நீண்ட வாழ்நாளையும் அடைவாய்.(11) சரஸ்வதியும், திருஷத்வதியும் ஒன்றுகலக்கும் இடத்திலேயே மானஸத் தடாகம் இருக்கிறது[4]. வேத அறிவைக் கொண்ட மனிதர்கள் இந்த இடங்கள் அனைத்திலும் நீராட வேண்டும். கடமைகள் அனைத்திலும் ஈகையே சிறந்தது என்றும், ஈகையைவிடத் துறவு சிறந்ததென்றும் மனு சொல்லியிருக்கிறார்.(12)இது தொடர்பாகச் சத்தியவான் செய்த பின்வரும் ஸ்லோகம் குறிப்பிடப்படுகிறது. “ஒரு குழந்தையைப் போல எளிமைமிக்கவனாகவும், தகுதியோ {புண்ணியமோ}, பாவமோ அற்றவனாகவும் (ஒருவன்) செயல்பட வேண்டும்.(13) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில், இவ்வுலகில் துன்பமோ இன்பமோ கிடையாது. (துன்பம் என்று அழைக்கப்படுவதும், இன்பம் என்று அழைக்கப்படுவதும், தவறாக உண்டான கற்பனையின் விளைவுகளே ஆகும்). இதுவே அனைத்து உயிரினங்களின் உண்மையான இயல்பாகும்.(14) அனைத்து உயிரினங்களிலும், துறவை மேற்கொண்டு, தகுதிமிக்க {புண்ணியமான}, பாவம் நிறைந்த செயல்கள் இரண்டையும் தவிர்ப்பவர்களின் வாழ்வே மேன்மையானதாக இருக்கிறது” {இதுவரை உள்ளதே சத்தியவானின் ஸ்லோகமாக இருக்க வேண்டும்}. ஒரு மன்னனுக்குச் சிறப்புடைய செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்.(15) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வலிமையையும், ஈகையையும் வெளிப்படுத்தி நீ சொர்க்கத்தை வெல்வாயாக. வலிமை மற்றும் சக்தியின் பண்புகளைக் கொண்ட மனிதனே அறமீட்டுவதில் வெல்கிறான்[5].(16)ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களுக்காகவும், இன்பத்துக்காகவும் இந்தப் பூமியை நீ ஆள்வாயாக. நீ முன்பு பிராமணர்களைப் பழித்தாய். இப்போது அவர்களை நிறைவு செய்வாயாக.(17) {முன்பு} உனக்கு ஐயோ என்று அவர்கள் கதறி இருந்தாலும், அவர்களை நீ கைவிட்டிருந்தாலும், தன்னறிவால் வழிநடத்தப்படும் நீ, ஒருபோதும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்று முழுப் பற்றுடன் உறுதியேற்பாயாக. உனக்குத் தகுந்த செயல்களில் ஈடுபட்டு, உனக்கான உயர்ந்த நன்மையை நாடுவாயாக.(18) ஆட்சியாளர்களில் சிலர் பனிபோல் குளுமையாக இருக்கிறார்கள்; சிலர் நெருப்பைப் போலச் சீற்றத்துடன் இருக்கிறார்கள்; சிலர் ஏரை {கலப்பையைப்} போல (தங்கள் எதிரிகளை வேரோடு பிடுங்குபவர்களாக) இருக்கிறார்கள்; மேலும் சிலரோ இடியைப் போல (திடீரெனத் தங்கள் எதிரிகளை எரிப்பவர்களாக) இருக்கிறார்கள்.(19) தன்னழிவைத் தவிர்க்க விரும்புபவன், பொதுவாகவோ, சிறப்பான காரணங்களுக்காகவோ தீய அற்பர்களுடன் ஒருபோதும் கலவாமல் இருக்க வேண்டும்.(20)

ஒரு முறை மட்டுமே செய்யப்பட்ட பாவச் செயலுக்காக ஒருவன் வருந்துவதன் மூலம் அவன் தூய்மையடையலாம். இருமுறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி ஒருபோதும் அதைச் செய்வதில்லை என்று உறுதியேற்பதன் மூலம் அவன் தூய்மையடையலாம்.(21) மும்முறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி எப்போதும் அறம் மட்டுமே பயில்வேன் என்ற தீர்மானத்தின் மூலம் அவன் தூய்மையடையலாம். அத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்திருந்தால், அவன் புனிதத் தலங்களுக்குப் பயணிப்பதன் மூலம் தூய்மையடையலாம். செழிப்பில் விருப்பம் உள்ள ஒருவன், அருள்நிலையையே விளைவாகக் கொண்ட அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) நறுமணங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள் அதன் விளைவாக நறுமணமாகவே இருப்பார்கள். மறுபறம் கடும் நாற்றத்திற்கு மத்தியில் வாழ்பவர்கள் இழிவாகவே இருப்பார்கள்.(23) தவத்துறவுகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். (ஹோம) நெருப்பை ஒரு வருடம் வழிபடுவதன் மூலம் ஒருவன் பல்வேறு வகைப் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(24)

கருவைக் கொன்ற குற்றத்தைச் செய்த ஒருவன், நெருப்பை மூன்று வருடங்கள் வழிபடுவதன் மூலம் தூய்மையடைகிறான். கருவைக் கொன்ற குற்றவாளியானவன், மஹாசரஸ், புஷ்கரை, பிரபாசம், வட மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தங்களுக்குப் புறப்பட மட்டுமே செய்தாலும், அவற்றில் இருந்து ஒரு நூறு யோஜனைகள் தொலைவிலேயே தூய்மையடைகிறான்[6].(25) உயிரினங்களைக் கொன்றவன், எத்தனை உயிரினங்களைக் கொன்றானோ, அதே அளவுக்கு அந்த வகை உயிரினங்களைக் கடும் துன்பத்தில் இருந்து காப்பதன் மூலம் தன் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(26) அகமர்ஷன மந்திரங்களை மூன்று முறை உரைத்த பிறகு, நீரில் மூழ்குவதன் மூலம் ஒருவன், ஒரு குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} இறுதி நீராடிய கனிகளை அறுவடை செய்யலாம் என்று மனு சொல்லியிருக்கிறார்[7].(27) அத்தகைய செயலானது ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்குவதன் விளைவாக, அவன் உலகில் மதிப்பையும் அடைகிறான். (தங்களைச் சுற்றியிருப்போருக்குக் கீழ்ப்படியும்) ஆதரவற்ற மூடர்களைப் போல அனைத்து உயிரினங்களும் அத்தகைய மனிதனுக்குக் கீழ்ப்படியும்.(28)ஓ! மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், தேவர்களும், அசுரர்களும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியை அணுகி அவரிடம் பணிவாக, “ஓ! பெரும் முனிவரே, அறத்தின் கனிகளை நீர் அறிவீர், அதேபோல, மறுமையில் நரகத்திற்கு வழிவகுக்கும் பிற செயல்களின் கனிகளையும் நீர் அறிவீர்.(29) எவனிடம் (துன்பம் மற்றும் இன்பம் ஆகிய) இரண்டும் இணையாக இருக்கிறதோ, அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டானா? ஓ! பெரும் முனிவரே, அறவோரின் கனிகள் என்ன என்பதையும், ஓர் அறவோன் தன் பாவங்களை எவ்வாறு அகற்றுகிறான் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டனர்.(30)

பிருஹஸ்பதி, “மடமையினால் ஒருவன் பாவம் செய்திருந்தால், அவன் தகுதிவாய்ந்த {புண்ணியமான} செயல்களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவற்றைச் செய்வான் என்றால், காரங்களின் மூலம் அழுக்குத் துணியை வெளுப்பதைப் போல அவன் அத்தகைய அறத்தின் மூலம், தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம்.(31) பாவத்தை இழைத்துவிட்டு ஒருவன் தற்புகழ்ச்சி செய்யக்கூடாது. நம்பிக்கையின் மூலமும், வன்மத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமும் அவன் அருள்நிலையை அடைவதில் வெல்வான்.(32) நல்லோரின் குற்றங்கள் வெளிப்படும்போது, அதை மறைப்பவன், குற்றங்களை இழைத்தவனாக இருந்தாலும் அருள்நிலையை அடைவான்.(33) காலையில் எழும் சூரியன், இருளனைத்தையும் விலக்குவதைப் போலவே, அறச்செயல்களின் மூலம் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்கிறான்” என்று பதிலுரைத்தார் {என்றார் இந்திரோதர்}”.(34)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சுனகரின் மகனான இந்திரோதர், மன்னன் ஜனமேஜயனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குதிரை வேள்வியைச் செய்து கொடுப்பதில் அவனுக்குத் துணையாக இருந்தார்.(35) தன் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவனும், அருள் நிலையை மீண்டும் அடைந்தவனும், சுடர்மிக்க நெருப்பைப் போலக் காந்தியுடன் ஒளிர்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த மன்னன் {ஜனமேஜயன்}, முழுவடிவைக் கொண்ட சோமன் சொர்க்கத்தில் நுழைவதைப் போலத் தன் நாட்டுக்குள் நுழைந்தான்” {என்றார் பீஷ்மர்}.(36)

மாண்டோர் மீள்வரோ? – சாந்திபர்வம் பகுதி – 153-இறந்து போன ஒரு பிராமணப் பிள்ளைக்கு இறுதி காரியங்களைச் செய்யச் சுடுகாட்டுச் சென்ற உற்றார் உறவினர்; துயர் தாளாமல் அழுது கொண்டிருக்கும் அவர்களை விரைவில் அங்கிருந்து போகச் சொன்ன கழுகு; பிள்ளை மீது கொண்ட பாசத்தை நினைவுகூரச் செய்து அவர்களை அங்கேயே தங்கச் செய்த நரி; சாத்திரங்களை அறிந்த ஞானமிக்கக் கழுகும், நரியும் மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் போதித்த அறிவுரைகள்; செய்வதறியாமல் திகைத்து நின்ற உற்றார் உறவினர்; கழுகு மற்றும் நரியின் தந்திரங்கள்; மகாதேவன் சங்கரனின் பெருமை.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மரணமடைந்த பிறகு உயிர் மீண்ட எந்த மனிதனையாவது நீர் பார்த்ததோ, கேட்டதோ உண்டா?”(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, பழங்காலத்தில் ஒரு கழுகுக்கும், நரிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட இந்தக் கதையைக் கேட்பாயாக. உண்மையில், இந்தக் கதை நைமிசக்காட்டில் {வைதிச நகரத்தில்}[1] நடைபெற்றது.(2) ஒரு காலத்தில் ஒரு பிராமணன், பெரும் சிரமங்களுக்குப் பிறகு, அகன்ற விழிகளைக் கொண்ட ஒரு மகனை அடைந்தான். அந்தப் பிள்ளை, குழந்தை பருவத்திற்குரிய உடல் வலிப்பால் மரணமடைந்தான்.(3) (அவனுடைய சொந்தக்காரர்கள்) சிலர், துயரால் மிகவும் கலக்கமடைந்து, உரத்த புலம்பல்களில் ஈடுபட்டு, அந்தக் குடும்பத்தின் ஒரே செல்வமான அந்த இளம்பிள்ளையை எடுத்துச் சென்றனர்.(4) இறந்து போன அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு, சுடலையின் {சுடுகாட்டின்} திசையை நோக்கி அவர்கள் சென்றனர். அங்கே வந்து அந்தப் பிள்ளையை ஒருவர் மார்பில் ஒருவர் கிடத்திக் கொண்டு துயரால் கசந்து பெரிதும் அழுதார்கள்.(5) தங்கள் அன்புக்குரிய அந்தப் பிள்ளையின் முந்தைய பேச்சுகளைக் கனத்த இதயத்துடன் நினைவுகூர்ந்த அவர்களால், அவனது உடலை வெறுந்தரையில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்ப முடியவில்லை.(6)அவர்களது கதறல்களால் அழைக்கப்பட்ட ஒரு கழுகு அங்கே வந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னது: “இங்கிருந்து சென்றுவிடுங்கள், தாமதிக்காதீர்கள், ஒரே பிள்ளையாக இருந்தாலும் நீங்கள் இவனைக் கைவிடவே வேண்டும்.(7) காலப்போக்கில் இங்கே கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான ஆண்களையும், ஆயிரக்கணக்கான பெண்களையும் எப்போதும் இந்த இடத்திலே விட்டுவிட்டுச் சொந்தக்கார்கள் {உற்றார் உறவினர்} சென்றுவிடுவார்கள்.(8) இந்த மொத்த அண்டமும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் கட்டுப்பட்டது என்பதைக் காண்பீராக. சேர்க்கையும், பிரிவும் மீண்டும் மீண்டும் நேர்வதே காணப்படுகிறது.(9) சொந்தங்களின் சடலங்களைச் சுடலைக்குக் கொண்டுவருபவர்களும், (பற்றால்) அந்த உடல்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் முடிந்ததும், தங்கள் செயல்களின் விளைவால் இந்தப் பூமியில் இருந்து {அவர்களும்} மறையவே செய்கிறார்கள்.(10) கழுகுகளும், நரிகளும், எலும்புகளும் நிறைந்ததும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்துவதும், பயங்கரமான இடமுமான இந்தச் சுடலையில் நீங்கள் காலந்தாழ்த்துவதற்கு எந்த அவசியமும் இல்லை.(11) நண்பனோ, பகைவனோ, காலத்தின் ஆதிக்கத்திற்கு ஒருமுறை அடிபணிந்துவிட்டால், மீண்டும் அவனால் ஒருபோதும் உயிரோடு வர முடியாது. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் விதியும் அத்தகையதே.(12) இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் இறப்பான். இறந்து, காலனால் விதிக்கப்பட்ட வழியில் சென்றவனை உயிருடன் மீட்பவன் எவன் இருக்கிறான்?(13) மனிதர்கள் தங்கள் தினசரி உழைப்பை முடிக்கும் இந்தக் காலத்தில், சூரியன் அஸ்த மலைகளுக்கு ஓயச் செல்கிறான். இந்தப் பிள்ளையிடம் கொண்ட பற்றைக் கைவிட்டு உங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வீராக” என்றது {கழுகு}.(14)

கழுகின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சொந்தக்காரர்களின் துன்பம் விலகுவதாகத் தெரிந்தது, அந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கிடத்திவிட்டு அவர்கள் செல்லத் தயாரானார்கள்.(15) பிள்ளை இறந்துவிட்ட உண்மையைத் தங்களுக்குத் தாங்களே உறுதி செய்து கொண்டு, அவனை மீண்டும் காண்பதில் நம்பிக்கையிழந்து, உரத்த புலம்பல்களில் ஈடுபட்டபடி, அவர்கள் தாங்கள் வந்த பாதையிலேயே செல்லத் தொடங்கினர்.(16) ஐயங்கடந்த உறுதியுடன், இறந்தவனை மீட்பதில் நம்பிக்கையிழந்து, தங்கள் குலத்தின் வாரிசைக் கைவிட்ட அவர்கள், அந்த இடத்தைவிட்டுத் திரும்ப ஆயத்தமாகினர்.(17)

அந்த நேரத்தில் அண்டங்காக்கையைப் போன்று கரிய நிறத்தைக் கொண்ட ஒரு நரியானது, தன் வளைக்குள் இருந்து வெளியே வந்து, அவ்வாறு சென்று கொண்டிருந்த அந்தச் சொந்தக்காரர்களிடம், “இறந்து போன அந்தப் பிள்ளையின் சொந்தக்காரர்களான உங்களுக்கு அவனிடம் நிச்சயம் எந்தப் பற்றும் இல்லை.(18) மூடர்களே, அங்கே வானத்தில் சூரியன் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். அச்சமில்லாமல் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். காலத்தின் பண்புகள் பல்வேறு வகைப்பட்டனவாக இருக்கின்றன. இவன் மீண்டும் உயிர்பெறக்கூடும்.(19) தலையில் சில குசப் புற்களைக் கிடத்தி, இந்த அன்புக்குரிய பிள்ளையைச் சுடலையில் கைவிட்டுவிட்டு, இந்த அன்புக்குரியவனிடம் உள்ள பற்றனைத்தையும் கைவிட்டு, இரும்பாலான இதயங்களுடன் நீங்கள் ஏன் செல்கிறீர்கள்?(20) எவனுடைய உதடுகளில் இருந்து சொற்கள் பிறந்தவுடன், அவை உங்களைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினவோ, அந்த இனிய பேச்சைக் கொண்ட இளம்பிள்ளையிடம் நிச்சயம் உங்களுக்கு அன்பேதும் இல்லை.(21)

பறவைகளும், விலங்குகளும் கூடத் தங்களின் வாரிசுகளிடம் கொள்ளும் அன்பைப் பாருங்கள். அவை தங்கள் குட்டிகளை வளர்ப்பதால் அவற்றுக்கு எந்தப் பயனும் கிடையாது.(22) (கனி {பலன்}, அல்லது வெகுமதி மீது கொண்ட விருப்பத்தால் ஒருபோதும் செய்யப்படாத) முனிவர்களின் வேள்விகளைப் போல, நான்கு கால் உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றின் பற்றுக்குச் சொர்க்கத்தில் எந்த வெகுமதியும் கிடையாது.(23) அவை தங்கள் பிள்ளைகளின் மூலம் மகிழ்ந்தாலும், அவற்றிடமிருந்து இம்மையிலோ, மறுமையிலோ எந்தப் பலனையும் அடைவது காணப்படவில்லை. இருப்பினும் அவை தங்கள் பிள்ளைகளைப் பற்றுடன் பேணி வளர்க்கின்றன.(24) அவற்றின் பிள்ளைகளோ வளர்ந்த பிறகு, அவற்றினுடைய {பெற்றோரின்} முதிர்ந்தவயதில் ஒருபோதும் அவற்றைப் பேணிக் காப்பதில்லை. இருப்பினும் அவை தங்கள் பிள்ளைகளைக் காணாமல் வருத்தமடைவதில்லையா?(25) துன்பத்தின் ஆதிக்கத்தை அடையும் மனிதர்களிடம் உண்மையில் எங்கே பற்றுக் காணப்படுகிறது? உங்கள் குலத்தைத் தழைக்கச்செய்பவனான இந்தப் பிள்ளையை இங்கே விட்டுவிட்டு நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்?(26)

சிறிது காலம் இவனுக்காகக் கண்ணீர் சிந்துங்கள், இன்னும் சற்று நேரம் இவனைப் பற்றுடன் பார்த்துக் கொள்ளுங்கள். உண்மையில், அன்புக்குரிய பொருட்களைக் கைவிடுவது மிகக் கடினமான காரியமாகும்.(27) பலவீனன், சட்டப்படி தண்டிக்கப்பட்டவன், சுடலைக்குச் சுமந்து செல்லப்படுபவன் ஆகியோரின் அருகில் நண்பர்கள் காத்திருப்பார்களேயன்றி வேறு யாரும் காத்திருப்பதில்லை.(28) உயிர் மூச்சு அனைவருக்கும் அன்புக்குரியதே, அனைவரும் பற்றின் ஆளுகையை உணரவே செய்கிறார்கள். இடைநிலை உயிரினங்களைச் சார்ந்த இவற்றால்கூட[2] பேணப்படும் பற்றைக் காண்பீராக.(29) தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களைக் கொண்டவனும், நீராடி, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புதிதாகத் திருமணம் செய்த இளைஞனைப் போல அழகாக இருக்கும் இந்தச் சிறுவனைக் கைவிட்டுவிட்டு, உண்மையில் உங்களால் எவ்வாறு செல்ல முடிகிறது?” என்று கேட்டது {நரி}.(30) துயரைத் தூண்டும் இத்தகைய உணர்வெழுச்சியில் ஈடுபட்ட நரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மனிதர்கள், சடலத்தை நோக்கித் திரும்பினார்கள்.(31)அப்போது கழுகு, “ஐயோ, மனோபலமற்ற மனிதர்களே, கொடூரமானதும், இழிந்ததும், சிறுமதி படைத்ததுமான நரியின் பேச்சைக் கேட்டு நீங்கள் ஏன் திரும்புகிறீர்கள்?(32) , (ஆன்மா) ஏதும் இல்லாததும், அசைவற்றதும், மரக்கட்டை போல விறைத்துப் போனதும், ஐம்பூதங்களின் தலைமையான தேவர்களால் {ஐம்பூதங்களால்} கைவிட்ட ஒரு பூதத்தொகுப்புக்காக {உடலுக்காக} நீங்கள் ஏன் துக்கத்தில் ஈடுபடுகிறார்கள்? நீங்கள் ஏன் உங்களுக்காக வருந்தவில்லை?(33) பாவத்திலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீங்கள் கடுந்தவங்களைச் செய்வீர்களாக? தவமுறைகளின் மூலம் அனைத்தையும் அடையலாம். புலம்பல்களால் என்ன செய்ய முடியும்?(34) உடலோடு தீயூழும் பிறக்கிறது. அந்தத் தீயூழின் விளைவாலேயே, இந்தச் சிறுவன் உங்களை முடிவிலா துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறந்துவிட்டான்.(35)

செல்வம், பசுக்கள், தங்கம், விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், பிள்ளைகள் ஆகிய அனைத்தும் தவங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் தவங்களோ (பரமாத்மாவையும் ஆன்மாவையும் ஒன்றிணைக்கும்) யோகத்தின் விளைவால் நேர்பவையாகும்.(36) உயிரினங்களுக்கு மத்தியில் இன்பம் மற்றும் துன்பத்தின் அளவானது, முற்பிறவியின் செயல்களைச் சார்ந்தே அமைகிறது.(37) தந்தையின் செயல்களால் மகனோ, மகனின் செயல்களால் தந்தையோ {எந்தப் பாவத்திலும்} கட்டுப்படுவதில்லை. நன்மையும், தீமையுமான தங்கள் சொந்தச் செயல்களுக்குக் கட்டுப்பட்டே அனைவரும் இந்தப் பொது வழியைக் கடக்க வேண்டும்.(38) கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து நீதியற்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். சாத்திர வழிகாட்டுதலின்படி தேவர்களிடமும், பிராமணர்களிடமும் மரியாதையாகக் காத்திருக்க வேண்டும்.(39) கவலையையும், உற்சாகமின்மையையும் கைவிட்டு, பெற்ற பாசத்தைத் தவிர்ப்பீராக. பிள்ளையை இந்தத் திறந்தவெளியில் விட்டுவிட்டு, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வீராக.(40)

செயலைச் செய்தவனே, தான் செய்த நன்மையான, அல்லது தீமையான செயலின் கனிகளை {பலன்களை} அனுபவிப்பான். அவற்றோடு சொந்தங்களின் தொடர்பு என என்ன இருக்கிறது?(41) (இறந்து போன) சொந்தக்காரன் எவ்வளவுதான் அன்புக்குரியவனாக இருப்பினும், அவனை இந்த இடத்தில் சொந்தக்காரர்கள் கைவிட்டு செல்ல வேண்டும். கண்ணீரால் குளித்த கண்களுடன் அவர்கள், இறந்தவனிடம் கொண்ட பற்றை வெளிப்படுத்துவதை நிறுத்தி சென்றுவிடுவார்கள்.(42) ஞானியோ மூடனோ, செல்வந்தனோ ஏழையோ, நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்யும் அனைவரும் காலத்திற்கு அடிபணியவே வேண்டும்.(43) துக்கம் அனுசரிப்பதன் மூலம் நீங்கள் என்ன செய்வீர்கள்? இறந்து போன ஒருவனுக்காக ஏன் நீங்கள் வருந்துகிறீர்கள்? அனைத்திற்கும் காலனே தலைவனாவான், அவனது இயல்புக்குத்தக்கவே அவன் அனைத்தின் மீதும் தன் கண்களைச் சமமாகச் செலுத்துகிறான்.(44) இளமைச் செருக்குக் கொண்ட, அல்லது ஆதரவற்ற குழந்தைப்பருவத்தில் உள்ள, பல வருடங்கள் சுமையைத் தாங்குபவர், அல்லது தாயின் கருவறையில் கிடப்பவர் என அனைவரும், காலத்தின் தண்டனைக்கு உட்பட்டவர்களே. உண்மையில், உலகத்தின் போக்கு அத்தகையதாகவே இருக்கிறது” என்றது {கழுகு}.(45)

நரி, “ஐயோ, பிள்ளையிடம் கொண்ட பாசத்தின் காரணமாகந் துன்பத்தால் அழுது மிகவும் வருந்தும் உங்கள் பற்றானது, சிறுமதி கொண்ட கழுகால் குறைக்கப்படுகிறதே.(46) அமைதி நிரம்பியவையும், ஆறுதலுண்டாக்க வல்லவையும், நன்கு பயன்படுத்தப்படுபவையுமான அதன் {கழுகுடைய} வார்த்தைகளின் விளைவால்தான், கைவிடுவதற்குக் கடிமானப் பற்றைக் கைவிட்டு, அதோ ஒருவன் நகரத்திற்குச் செல்கிறான்.(47) ஐயோ, சுடலையில் கிடக்கும் பிணமான இறந்து போன பிள்ளைக்காக, உரக்க அழுத மனிதர்களின் துயரமானது, கன்றை இழந்த பசுவைப் போன்றது என நான் நினைத்தேன்.(48) எனினும், பூமியில் உள்ள மனிதர்களுடைய துயரத்தின் அளவு என்ன என்பதை நான் இன்று புரிந்து கொண்டேன்.(49) (எனினும், அவர்களுடைய பற்று பலமானதில்லை என்றே தெரிகிறது). ஒருவன் எப்போதும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் விதியை அவனால் வெல்ல முடியும். முயற்சியும், விதியும் ஒன்று சேர்ந்த கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(50) ஒருவன் எப்போதும் நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். மனத்தளர்ச்சியுடன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய முடியும்? மன உறுதியின் மூலமே விருப்பத்திற்குரிய பொருட்களை {நோக்கங்களை} வெல்ல முடியும். பிறகு ஏன் நீங்கள் இதயம் இல்லாதவர்களாக இவ்வாறு செல்கிறீர்கள்?(51) உங்கள் மடியில் பிறந்தவனும், தன் தந்தைமாரின் {மூதாதையரின்} குலங்களைத் தழைக்கச் செய்பவனுமான இந்த மகனைக் காட்டில் கைவிட்டு நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?(52) சூரியன் மறைந்து, மாலை சந்தி வரும் வரையில் இங்கே இருப்பீராக. அதன்பிறகு, நீங்கள் இந்தச் சிறுவனை எடுத்துச் செல்லுங்கள், அல்லது இங்கேயே இவனுடன் இருங்கள்” என்றது {நரி}.(53)

கழுகு, “மனிதர்களே, எனக்கு இன்று முழுமையாக ஆயிரம் ஆண்டு வயதாகிறது, ஆனால், உயிரினங்களில் இறந்த போன ஆணோ, பெண்ணோ, உறிதியற்ற பாலினமோ, அவை இறந்து போன பிறகு உயிரோடு மீண்டதை நான் ஒருபோதும் கண்டதில்லை.(54) சில கருவறையில் இறக்கின்றன; சில பிறந்ததும் இறக்கின்றன; சில (குழந்தை பருவத்திலேயே) தவழும்போது இறக்கின்றன; சில இளமையில் இறக்கின்றன; மேலும் சில முதுமையில் இறக்கின்றன.(55) விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தின் நல்லூழும் நிலையற்றவையாகும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்களின் வாழ்வுக் காலங்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.(56) மனைவியர், அன்புக்குரியவர்கள் ஆகியவர்களை இழந்து, பிள்ளைகள் (இறந்த) கவலையால் நிறையும் மனிதர்கள், தினமும் இந்த இடத்தை விட்டு கவலை நிறைந்த இதயத்துடன் வீட்டுக்குச் செல்கின்றனர்.(57) துயரால் பீடிக்கப்பட்ட சொந்தங்கள், எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோரான நண்பர்கள் மற்றும் பகைவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு, தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.(58) விலங்கின் வெப்பமில்லாததும், உயிரற்றதும், மரக்கட்டை போல விறைத்திருப்பதுமான இந்த உடலைக் கைவிடுவீராக. மரக்கட்டை போல ஆகிவிட்டதும், வேறு புதிய உடலில் உயிர் நுழைந்துவிட்டதுமான இந்தப் பிள்ளையின் உடலைவிட்டுவிட்டு நீங்கள் ஏன் செல்லாமல் இருக்கிறீர்கள்?(59) (நீங்கள் காட்டிவரும்) இந்தப் பற்றுப் பொருளற்றதாகும், பிள்ளையை ஆரத்தழுவிக் கொள்வதும் கனியற்றதே ஆகும். அவன் தன் கண்களால் காணவோ, தன் காதுகளால் கேட்கவோ இல்லை.(60) நீங்கள் இவனை இங்கேயே விட்டுவிட்டு, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வீராக.(61) வெளிப்படையாகக் கொடூரமாகத் தெரிவதும், ஆனால் உண்மையில் அறிவு நிறைந்திருப்பதுமான என் வார்த்தைகளைக் கேட்டு, உயர்ந்த அறமான முக்தி {மோட்சம்} குறித்து நேரடியாகப் புரிந்து கொண்டு, உங்களுக்குரிய இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வீராக” என்றது {கழுகு}.(62)

ஞானம் மற்றும் அறிவைக் கொண்டதும், நுண்ணறிவைக் கொடுக்க வல்லதும், அறிவை விழிப்படையச் செய்வதுமான கழுகால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மனிதர்கள், அந்தச் சுடலையை விட்டு அகலத் தயாரானார்கள். உண்மையில், துன்பத்திற்குரிய பொருளை {உடலைப்} பார்ப்பதாலும், அந்தப் பொருளின் முந்தைய செயல்களை நினைப்பதாலும், துன்பமானது இரட்டிப்பாகவே செய்கிறது.(63) கழுகின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மனிதர்கள், அந்த இடத்தைவிட்டுச் செல்லத் தீர்மானித்தனர். சரியாக அதே நேரத்தில் விரைந்த நடையுடன் அங்கே வந்த நரியானது, மரண உறக்கத்தில் கிடந்த அந்தப் பிள்ளையின் மீது தன் கண்களைச் செலுத்தியது.(64)

அந்த நரி, “கழுகு சொல்வதைக் கேட்டு, தங்க நிறம் கொண்டவனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தன் மூதாதையர்களுக்கு ஈமப்பிண்டம் கொடுக்க வல்லவனுமான இந்தப் பிள்ளையைக் கைவிட்டுச் செல்வதேன்?(65) நீங்கள் இவனைக் கைவிட்டுவிடுவதால், உங்கள் பற்றோ, உங்களது பரிதாபகரமான புலம்பல்களோ முடிவை எட்டப்போவதில்லை. மறுபுறம், உங்கள் துயரம் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும்.(66) சம்புகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன், உண்மை ஆற்றலைக் கொண்டவனான ராமனால் கொல்லப்பட்டு அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டபோது, (இறந்து போன) ஒரு பிராமணப் பிள்ளை உயிரோடு மீட்கப்பட்டான்[3].(67) அதே போலவே, அரசமுனியான ஸ்வேதனின் மகன் (அகாலத்தில்) மரணமடைந்தான். ஆனால் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த ஏகாதிபதி, இறந்து போன தன் பிள்ளையை மீட்பதில் வெற்றியடைந்தான்.(68) அதேபோலவே, உங்கள் வழக்கிலும், ஏதோ ஒரு தவசியோ, தேவனோ, உங்களுக்கு உங்கள் விருப்பத்தை அளிக்க விரும்பி, பரிதாபமாக அழும் உங்களிடம் கருணை காட்டலாம்” என்றது {நரி}.(69) இவ்வாறு நரியால் சொல்லப்பட்ட மனிதர்கள் பிள்ளையின் மீது கொண்ட பற்றினாலும், பீடித்த துயரத்தினாலும் மீண்டும் வந்து அந்தப் பிள்ளையின் தலையைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, அதிகமாக அழுது புலம்பத் தொடங்கினர். அவர்களின் கதறல்களால் அழைக்கப்பட்ட கழுகானது, அந்த இடத்திற்கு வந்து, மீண்டும் அவர்களிடம் பின்வரும் வார்த்தைகளைப் பேசியது.(70)கழுகு, “இந்தப் பிள்ளையை ஏன் நீங்கள் உங்கள் கண்ணீரால் நீராட்டுகிறீர்கள்? உங்கள் உள்ளங்கைகளால் ஏன் இவனை இவ்வாறு நசுக்குகிறீர்கள்? கடுமைமிக்க நீதிமன்னனுடைய {தர்மராஜாவான யமனின்} கட்டளையின் பேரில் இந்தப் பிள்ளை, விழிப்பறியா உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறான்.(71) தவத்தகுதியைக் கொண்டோரும், செல்வத்தைக் கொண்டோரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டோரும் என அனைவரும் மரணத்திற்கு அடிபணிகிறார்கள். இந்த இடமே கூட இறந்தவர்களுக்கானதுதான்.(72) இளமையான, முதுமையான ஆயிரக்கணக்கான சொந்தங்களைக் கைவிட்டு, வெறுந்தரையில் உருளும் மற்ற சொந்தங்கள், தங்கள் இரவுகளையும், பகல்களையும் துயரத்தில் கழிப்பது காணப்படுகிறது.(73) துன்பப் பொறிகளில் சிக்கவைக்கும் இந்தப் பற்றுணர்வை நிறுத்துவீராக. இந்தப் பிள்ளை உயிருடன் மீண்டு வருவான் என்பது நம்பிக்கையையும் கடந்த ஒரு நிலையாகும்.(74) நரி சொல்வதால் இவன் உயிரை மீண்டும் அடைந்துவிட மாட்டான். ஒருவன் ஒரு முறை இறந்து, தன் உடலை விட்டுச் சென்றுவிட்டால், அவனது உடல் மீண்டும் ஒருபோதும் அசைவை அடைவதில்லை.(75) நூற்றுக்கணக்கான நரிகள் தங்கள் உயிரையே விட்டாலும், நூறு வருடங்களேயானாலும் இந்தப் பிள்ளையை அவற்றால் உயிர்மீட்க முடியாது.(76) எனினும், ருத்திரன், குமாரன், பிரம்மன், அல்லது விஷ்ணு ஆகியோரில் எவரும் இந்தப் பிள்ளைக்கு வரமளித்தால் மட்டுமே, இவன் மீண்டும் உயிர் பெற முடியும்.(77)

கண்ணீர் சிந்துவதோ, நீண்ட பெருமூச்சுகளை விடுவதோ, அதிகமாக அழுது புலம்புவதோ ஒருவனுடைய உயிரை மீட்டுத் தராது.(78) நான், நரி, நீங்கள், இவனுடைய சொந்தங்கள் என நாம் அனைவரும் நம் தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்கள் அனைத்துடன் (இவன் சென்ற) அதே வழியிலேயே செல்லப்போகிறோம்.(79) ஞானம் கொண்ட ஒருவன், இந்தக் காரணத்திற்காகவே, பிறர் விரும்பாத நடத்தை, கடுஞ்சொற்கள், பிறருக்குத் தீங்கிழைப்பது, அடுத்தவரின் மனைவியரிடம் இன்புற்றிருப்பது, பாவம் மற்றும் பொய்மை ஆகியவற்றைத் தொலைவிலேயே தவிர்க்க வேண்டும்.(80) அறம், உண்மை, பிறருக்கான நன்மை, நீதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, மனத்தூய்மை, நேர்மை ஆகியவற்றைக் கவனமாக நாடுவீராக.(81) தாய்மாரும், தந்தைமாரும், சொந்தங்களும், நண்பர்களும் உயிரோடு இருக்கும்போது, அவர்கள் மீது கண்களைச் செலுத்தாதவர்கள் பாவத்தையே இழைக்கிறார்கள்.(82) இறந்த பிறகு, கண்களால் காணாமலும், சிறிதும் கலங்காமலும் உள்ள நிலையை அடைந்திருக்கும் அவர்களுக்காக அழுவதால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டது {கழுகு}.(83) இவ்வாறு சொல்லப்பட்ட மனிதர்கள், தங்கள் பிள்ளை மீது கொண்ட பற்றின் காரணமாகத் துயரத்தில் எரிந்து, கவலையில் நிறைந்து (சுடலையில்) அந்த உடலை விட்டுவிட்டுத் தங்கள் இல்லங்களுக்குச் செல்ல நினைத்தனர்.(84)

நரி, “ஐயோ, மனிதர்களின் உலகம் பயங்கரமானது. இங்கே எந்த உயிரினத்தாலும் தப்ப முடியாது. மேலும் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்நாள் காலமும் குறைவானது. அன்புக்குரிய நண்பர்கள் {மரணத்தால்} எப்போதும் பிரிகிறார்கள்.(85) இது வன்மங்களும், பொய்மைகளும், அவதூறுகளும், தீய செய்திகளும் நிறைந்த உலகமாக இருக்கிறது. துயரையும், வலியையும் அதிகரிக்கும் இந்தச் சம்பவத்தைக் கண்ட பிறகு, ஒருக்கணமும் நான் இந்த மனிதர்களின் உலகத்தை விரும்பமாட்டேன்.(86) ஐயோ, இந்தப் பிள்ளையின் மரணத்தால் வருந்தி எரிந்து கொண்டிருந்தாலும், கழுகின் சொல்கேட்டு இவ்வாறு திரும்பிச் செல்லும் மூட மனிதர்களே உங்களுக்கு ஐயோ.(87) தீய அற்பர்களே, தூய்மையற்ற ஆன்மா கொண்டதும் பாவம் நிறைந்ததுமான கழுகின் வார்த்தைகளைக் கேட்டு, பெற்ற பாசத்தைக் கைவிட்டு நீங்கள் எவ்வாறு செல்லலாம்?(88) இன்பமானது, துன்பத்தாலும், துன்பமானது இன்பத்தாலும் பின்தொடரப்படுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில், இந்த இரண்டும் ஒருபோதும் இடையறாமல் நேர்வதில்லை.(89) அற்ப புத்தி கொண்ட மனிதர்களே, இவ்வளவு அழகுடையவனும், உங்கள் குலத்தின் ரத்தினமும், உங்கள் மகனுமான இந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கைவிட்டுவிட்டு எங்கே செல்வீர்கள்?(90) அதியழகும், இளமையும், சுடர்மிக்கத் தோற்றமும் கொண்ட இந்தப் பிள்ளை இன்னும் உயிரோடிருக்கிறான் என்ற கருத்தை உண்மையில் என் மனத்தில் இருந்து அகற்றவே முடியவில்லை.(91) இவன் இறந்திருக்கக்கூடாது[4]. நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியை அடையப் போகிறீர்கள் என்பது தெரிகிறது. இந்தப் பிள்ளையின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் நீங்கள் நிச்சயம் இன்று நல்லூழை அடைவீர்கள்.(92) (இரவில் நீங்கள் இங்கே இருந்தால்) வசதியின்மை மற்றும் வலிக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதால், சொந்த வசதியில் உங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, அற்ப புத்தி கொண்டவர்களைப் போல இந்த அன்புக்குரியவனை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டது {நரி}”.(93)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இறந்து போன அந்தப் பிள்ளையின் சொந்தங்கள், ஏற்புடைய பொய்மைகளைச் சொல்லும் பாவியும், ஒவ்வொரு இரவும் உணவு தேடித் திரியும் இந்தச் சுடலைவாசியுமான நரியால், அந்த இடத்திலேயே இருக்குமாறு தூண்டப்பட்டு, என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இருந்தனர்.(94,95)

அந்தக் கழுகு, “ஆந்தைகளின் அலறல்களை எதிரொலிப்பதும், பூதங்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரால் நிரம்பியதுமான இந்தக் காட்டில் உள்ள இந்த இடம் பயங்கரமானதாகும்.(96) நீல மேகத் திரள்களைப் போல இதன் தன்மை அச்சந்தருவதும், பயங்கரமானதுமாகும். சடலத்தைக் கைவிட்டு, இறுதிச் சடங்குகளை நிறைவு செய்வீராக.(97) உண்மையில், உடலைக் கைவிட்டு, சூரியன் மறைந்து அடிவானம் இருளடைவதற்கு முன்பே அந்தச் சடங்குகளை நிறைவு செய்வீராக.(98) பருந்துகள் கடுமையாகக் கத்துகின்றன. நரிகள் சீற்றத்துடன் ஊளையிடுகின்றன. சிங்கங்கள் முழங்குகின்றன. சூரியன் மறைகிறான்.(99) ஈமச்சிதைகளின் நீலப் புகையின் விளைவால் சுடலையின் மரங்கள் கரிய வண்ணத்தை ஏற்று வருகின்றன. இந்த இடத்தில் உள்ள ஊனுண்ணும் விலங்குகள், பசியால் பீடிக்கப்பட்டு, சீற்றத்துடன் கதறுகின்றன.(100) இந்த அச்சந்தரும் இடத்தில் வாழ்கின்ற பயங்கர வடிவங்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் அனைத்தும், கடுமையான பண்புகளைக் கொண்ட ஊனுண்ணும் விலங்குகள் அனைத்தும் உங்களை விரைவில் தாக்கும்.(101) இந்தப் பயங்கரக் காடு உண்மையில் அச்சம் நிறைந்ததாகும். உங்களை ஆபத்து அணுகும்.(102) உண்மையில், உங்கள் நல்லுணர்வுக்கு எதிரானவையும், போலியானவையும், கனியற்றவையுமான இந்த நரியின் வார்த்தைகளை நீங்கள் கேட்டால், நிச்சயம் நீங்கள் அனைவரும் அழிவையே அடைவீர்கள்” என்றது {கழுகு}.(103)

அப்போது நரி, “எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே நில்லுங்கள். சூரியன் ஒளிரும் வரை இந்தப் பாலைவனத்தில் எந்த அச்சமும் கிடையாது. பகலின் தேவன் மறையும்வரை, பெற்ற பாசத்தால் தூண்டப்பட்டு இங்கே நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.(104) நீங்கள் விரும்பியவாறு அழுது புலம்பி, எந்த அச்சமும் இல்லாமல் இந்தப் பிள்ளையைக் கருணைக் கண்ணுடன் நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். இந்தக் காடு அச்சந்தருவதாக இருப்பினும், உங்களை எந்த ஆபத்தும் அணுகாது.(105) உண்மையில் இந்தக் காடானது, அழகு மற்றும் அமைதியின் பண்புகளை எடுத்து இயம்புகிறது. இங்கேதான் ஆயிரக்கணக்கான பித்ருக்கள் இந்த உலகத்தை விட்டுச் சென்றனர். சூரியன் ஒளிரும் வரை இங்கே காத்திருங்கள். இந்தக் கழுகின் வார்த்தைகள் என்ன செய்துவிடும்?(106) கலங்கிய புத்தியுடன் நீங்கள் இந்தக் கழுகின் கொடூரமான கடுஞ்சொற்களைக் கேட்டால், உங்கள் பிள்ளை ஒருபோதும் உயிருடன் மீண்டு வர மாட்டான்” என்றது {நரி}”.(107)

பீஷ்மர் தொடர்ந்தார், “அப்போது கழுகு, அந்த மனிதர்களிடம் சூரியன் மறைந்துவிட்டதாகச் சொன்னது. நரியோ அவ்வாறு இல்லை என்றது. கழுகு, நரி ஆகிய இரண்டும் பசியின் கொடுமையை உணர்ந்து, இறந்த பிள்ளையின் சொந்தங்களிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தன[5].(108) அவை இரண்டும் தங்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தங்கள் மடிக்கச்சையை உயர்த்திக் கொண்டன. பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அவை, சாத்திரங்களைச் சொல்லி இவ்வாறு தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டன.(109) ஞானம் கொண்டவையும், பறவை மற்றும் விலங்கு ஆகிய இந்த இரண்டு உயிரினங்களின் அமுதம் போன்ற இந்த இனிய வார்த்தைகளால் (மாறி மாறி) தூண்டப்பட்ட {இறந்த போன பிள்ளையின்} சொந்தங்கள் ஒரு முறை செல்லவும், மறுமுறை காத்திருக்கவும் விரும்பினர்.(110) இறுதியாகத் துயராலும், உற்சாகமின்மையாலும் அசைக்கப்பட்ட அவர்கள் அங்கேயே காத்திருந்து, அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில் திறம் மிக்க அந்த விலங்கும், பறவையும் (தங்களிடம் பேசி) தங்களை மயக்க மட்டுமே செய்திருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை.(111) ஞானம் கொண்டவையான அந்த விலங்கும், பறவையும் இவ்வாறு சச்சரவு செய்து கொண்டிருந்த போது, இறந்து போன பிள்ளையின் சொந்தங்கள் அவை பேசியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பெருந்தேவனான சங்கரன், தன் தெய்வீகத் துணையால் (உமையால்) தூண்டப்பட்டு, கருணைக் கண்ணீரால் குளித்த கண்களுடன் அங்கே வந்தான்.(112)இறந்து போன பிள்ளையின் சொந்தங்களிடம் பேசிய அந்தத் தேவன் {சிவன்}, “நான் வரங்களை அளிக்கும் சங்கரன்” என்றான். துயரால் கனத்த இதயத்துடன் இருந்த அந்த மனிதர்கள், அந்தப் பெருந்தேவனின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவனிடம் மறுமொழியாக,(113) “ஒரே பிள்ளையான இவனை இழந்த நிலையில் நாங்கள் அனைவரும் மரணத்தருவாயில் இருக்கிறோம். எங்கள் மகனான இவனுக்கு உயிரை அளித்து, எங்கள் அனைவருக்கும் உயிரை அளிப்பதே உனக்குத் தகும்” என்றனர்.(114) இவ்வாறு வேண்டப்பட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன், தன் கரங்களில் சிறிது நீரை எடுத்து, இறந்து போன அந்தப் பிள்ளைக்கு நூறு வருட வாழ்வை அருளினான்.(115) எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபடுபவனான அந்தச் சிறப்புமிக்கப் பிநாகைதாரி {சிவன்}, நரி, கழுகு ஆகிய இரண்டுக்கும் அவற்றின் பசி தணியுமாறு ஒரு வரத்தை அருளினான்.(116) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அவர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.(117) விடாப்பிடியான நம்பிக்கையாலும், உறுதியான தீர்மானத்தாலும், பெருந்தேவனின் அருளாலும், ஒருவனுடைய செயல்களின் கனிகள் {பலன்கள்} தாமதமில்லாமல் அடையப்படும்.(118)

சூழ்நிலைகளின் சேர்க்கையையும், அந்தச் சொந்தங்களின் {அந்தப் பிள்ளையின் உற்றார் உறவினருடைய} உறுதியையும் பார். கவலைநிறைந்த இதயங்களுடன் அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களுடைய கண்ணீர் துடைக்கப்பட்டு, வற்றச் செய்யப்பட்டது.(119) குறுகிய காலத்திற்குள், அவர்களின் உறுதியான தீர்மானத்தின் மூலம் அவர்கள் எவ்வாறு சங்கரனின் அருளை அடைந்தார்கள், அவர்களது துன்பங்கள் எவ்வாறு அகன்றன, அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியடைந்தனர் என்பதைப் பார்.(120) ஓ! பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உண்மையில், கவலையில் இருந்த அந்தச் சொந்தங்கள், சங்கரனின் அருளின் மூலம், பிள்ளையின் உயிர் மீட்கப்பட்டத்தில் ஆச்சரியத்தால் நிறைந்து, மகிழ்ச்சியடைந்தனர்.(121) ஓ! மன்னா, பிள்ளையின் காரணமாகத் தாங்கள் அடைந்திருந்த துயரைக் கைவிட்ட அந்தப் பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, உயிர் மீட்கப்பட்ட அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு தங்கள் நகரத்திற்குத் திரும்பச் சென்றனர். நான்கு வகையினர் அனைவருக்கும் இதைப் போன்ற நடத்தையே விதிக்கப்பட்டிருக்கிறது.(122) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு {முக்தி} ஆகியவை நிறைந்த இந்த மங்கலமான கதையை மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் மகிழ்ச்சியை அடைவான்” {என்றார் பீஷ்மர்}[6].(123)

ஓர் இலவம்! – சாந்திபர்வம் பகுதி – 154-ஒரு பலவீனமான மன்னன், பலமிக்க ஒருவனின் கோபத்துக்கு ஆளானால், அந்த ஆபத்தான வேளையில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; இந்தக் கேள்விக்கான விடையை விளக்க, ஓர் இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பலவீனமானவனும், பயனற்றவனும், மென்மையான இதயம் கொண்டவனுமான ஒருவன், விவேகமில்லாமலும், தற்புகழ்ச்சிமிக்கப் பேச்சுகளின் மூலமும், மடமையினாலும், (விரும்பினால்) நன்மை செய்ய வல்லவனும், (விரும்பவில்லையெனில்) தண்டிக்கவல்லவனும், எப்போதும் செயல்படத் தயாராக இருப்பவனும், எப்போதும் தன் அருகிலேயே வசிப்பவனுமான பலமிக்க ஓர் எதிரியின் கோபத்தைத் தூண்டிவிட்டால், அந்தப் பலமிக்கவன் கோபத்தோடும், அவனை அழிக்கும் நோக்கோடும் எதிர்த்துப் படையெடுத்து வரும்போது, அந்தப் பலவீனமானவன், தன் பலத்தைச் சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும்?[1](1-3)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, சால்மலிக்கும் {இலவ மரத்திற்கும்}, பவனத்துக்கும் {காற்றுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4) இமய மலையின் உச்சிகளில் ஒன்றில், ஒரு பெரிய (சால்மலி {இலவ}) மரம் இருந்தது. பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த அது, தன் கிளைகளைச் சுற்றிலும் பரப்பி விரிந்திருந்தது. மேலும் அதன் தண்டு பெரியதாகவும், அதன் கிளைகளும், இலைகளும் எண்ணற்றவையாகவும் இருந்தன.(5) உழைப்பால் களைத்தவையும், வியர்வையில் நீராடியவையுமான யானைகளும், பிற வகை விலங்குகள் பலவும் அதன் நிழலின் கீழ் வழக்கமாக இளைப்பாறின.(6) அதன் தண்டின் சுற்றளவு நானூறு முழங்களைக் கொண்டதாக இருந்தது, அதனைக் கிளைகளும், இலைகளும் பரப்பிய நிழல் அடர்த்தியாக இருந்தது. மலர்களும், கனிகளும் நிறைந்ததாக இருந்த அஃது, எண்ணற்ற ஆண், பெண் கிளிகளுக்கு வசிப்பிடமாக இருந்தது.(7) நீண்ட வழியில் பயணம் செய்யும் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களின் சிவிகைளும், காடுகளில் வசிக்கும் தவசிகளும், காட்டின் இனிய ஏகாதிபதியாக இருந்த அதன் நிழலின் கீழ் இளைப்பாறினர்.(8)ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒருநாள், தவசி நாரதர், அந்த மரத்தின் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளையும், அதன் தண்டின் சுற்றளவையும் கண்டு, அஃதை அணுகி, அதனிடம், “ஓ!, நீ இனிமை நிறைந்திருக்கிறாய். ஓ!, நீ வனப்புடன் இருக்கிறாய். ஓ! மரங்களில் முதன்மையானவனே, ஓ! சால்மலி {இலவ மரமே}, உன்னைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(10) ஓ! அழகான மரமே, பல்வேறு வகைகளைச் சார்ந்த இனிமைநிறைந்த பறவைகளும், யானைகளும், பிற விலங்குகளும் உன் கிளைகளிலும், அவற்றுடைய நிழலின் கீழும் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.(11) ஓ! பரந்த கிளைகளைக் கொண்ட காட்டின் ஏகாதிபதியே, உன் கிளைகளும், உன் தண்டும் பெரியவையாக இருக்கின்றன. காற்றுத் தேவனால் {வாயுவால்} அவற்றில் ஏதும் முறிந்ததை நான் ஒருபோதும் கண்டதில்லை.(12)

ஓ! குழந்தாய் {இலவ மரமே}, பவனன் {வாயு} உன்னிடம் நிறைவடைந்து, உன் நண்பனாக இருப்பதால், இந்தக் காட்டில் உன்னை எப்போதும் பாதுகாக்கிறானா? பெரும் வேகமும், பலமும் கொண்ட சிறப்புமிக்கப் பவனன், நெடிய, பலமான மரங்களையும், ஏன் மலைச்சிகரங்களையே கூட அவற்றின் இடங்களில் இருந்து அசைத்துவிடுகிறான்.(14) நறுமணங்களைச் சுமக்கும் அந்தப் புனிதமானவன், (தான் விரும்பும்போது) வீசி, ஆறுகள், தடாகங்கள், கடல்கள் உள்ளிட்ட பாதாள உலகத்தையும் வற்றச் செய்துவிடுகிறான்.(15) நிச்சயம் நட்பாலேயே பவனன் உன்னைப் பாதுகாக்கிறான். இதன் காரணமாகத் தான் நீ எண்ணற்றக் கிளைகளைக் கொண்டவனாக இருப்பினும், இன்னும் இலைகளுடனும், மலர்களுடனும் அருளப்பட்டிருக்கிறாய்.(16)

ஓ! காட்டின் ஏகாதிபதியே {இலவ மரமே}, ஓ! குழந்தாய், இந்த இறகு படைத்த உயிரினங்கள், மகிழ்ச்சியால் நிறைந்து உன் கொப்புகளிலும், கிளைகளிலும் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த உன் பசுமை இனிமையானதாக இருக்கிறது.(17) நீ பூத்துக் குலுங்கும் பருவத்தில், உன் கிளைகளில் வசிக்கும் இவை மென்மையாகப் பாடும்போது தோன்றும் இனிய இசை தனியாகக் கேட்கிறது.(18) ஓ! சால்மலி {இலவ மரமே}, தங்கள் இனங்களின் ரத்தினங்களான இந்த யானைகள், வியர்வையில் குளித்து, (மகிழ்ச்சிப்) பிளிறல்களில் ஈடுபட்டு, உன்னை அணுகி, இங்கே மகிழ்ச்சியைக் கண்டடைகின்றன.(19) அதேபோலக் காடுகளில் வசிக்கும் பிற இனத்தைச் சேர்ந்த பல்வறு விலங்குகளும், உன்னை அலங்கரிப்பதில் பங்காற்றுகின்றன. ஓ மரமே, உண்மையில் அனைத்து வகை உயிரினங்களும் உள்ள மேரு மலைகளைப் போலவே நீயும் மிக அழகாகத் தெரிகிறாய்.(20) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களாலும், தவங்களில் ஈடுபடும் பிறராலும், தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யதிகளாலும் நீ நாடப்படுவதால், இந்த உன் பகுதி சொர்க்கத்திற்கு ஒப்பாக இருக்கிறதென நான் நினைக்கிறேன்” என்றார் {நாரதர்}.(21)

இலவத்தின் விபரீத எண்ணம்! – சாந்திபர்வம் பகுதி – 155-இலவ மரத்தின் கிளைகள் ஏதும் ஒடியாமல் இருப்பதைக் கண்ட நாரதர், அதற்கும், வாயு தேவனுக்கும் இடையில் உள்ள நட்பைக் குறித்து வினவுதல்; அதற்கு அந்த இலவ மரம் தானே வாயுவை விட பலவான் என்றது; இலவம் வாயுவை இகழ்ந்ததை வாயுவிடம் சொல்லப்போகவதாகச் சொன்ன நாரதர்…

நாரதர், “ஓ! சால்மலி {இலவ மரமே}, பயங்கரமானவனும், தடுக்கப்பட முடியாதவனுமான காற்று தேவன் {வாயு}, நட்பினாலோ, நல்லுறவினாலோ எப்போதும் உன்னைப் பாதுகாக்கிறான் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! சால்மலி, காற்றுக்கும், உனக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதாகவே தெரிகிறது. “நான் உன்னவன்” என்ற இந்த வார்த்தைகளை நீ அவனிடம் சொன்னதாகவும், அதன்காரணமாகவே காற்று தேவன் உன்னைப் பாதுகாக்கிறான் எனவும் தெரிகிறது.(2) இவ்வுலகத்தில் காற்றினால் முறிக்கப்படாத மரத்தையோ, மலையையோ, மாளிகையையோ நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன்.(3) ஓ! சால்மலி, (எங்களுக்குத்தெரியாத) ஏதோ காரணத்தால், அல்லது காரணங்களால் காற்று உன்னைப் பாதுகாப்பதாலேயே நீ உன் கிளைகள், கொப்புகள் மற்றும் இலைகள் அனைத்துடன் இங்கே நிற்கிறாய் என்பதில் ஐயமில்லை” என்றார் {நாரதர்{.(4)

சால்மலி {அந்த இலவ மரம் நாரதரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, காற்றானவன் {வாயே தேவன்} என் நண்பனோ, தோழனோ, நலன் விரும்பியோ கிடையாது. உண்மையில் அவன், என்னைப் பாதுகாத்து ஆணையிடும் அளவுக்குப் பெரியவனும் அல்ல.(5) ஓ! நாரதரே, என் கடும் சக்தியும், வலிமையும் காற்றைவிடப் பெரியவையாகும். உண்மையில், காற்றின் பலமானது, என் பலத்தில் பதினெட்டில் ஒரு பாகத்துக்கு மட்டுமே ஒப்பாகும்.(6) காற்றானவன் சீற்றத்துடன் மரங்கள், மலைகள் மற்றுப் பிற பொருட்களைக் கிழித்துக் கொண்டு வரும்போதும், நான் என் பலத்தை வெளிப்படுத்தி அஃதை அடக்குகிறேன்.(7) உண்மையில், பல பொருட்களை உடைக்கும் காற்றானவன் மீண்டும் மீண்டும் என்னால் முறிக்கப்பட்டிருக்கிறான். ஓ! தெய்வீக முனிவரே, இந்தக் காரணத்தினால் நான் அவன் கோபத்துடன் வரும்போதும் அஞ்சுவதில்லை” என்றது {இலவ மரம்}.(8)

நாரதர், “ஓ! சால்மலி, உன்னுடைய உள்ளுணர்வு முற்றாகப் பிறழ்ந்திருப்பதாக {விபரீதமானதாகத்} தெரிகிறது. இதில் எந்த ஐயமுமில்லை. காற்றின் பலத்துக்கு இணையானதாகப் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் கிடையாது.(9) இந்திரனோ, யமனோ, வைஸ்ரவணனோ {குபேரனோ}, நீர்நிலைகளின் தலைவனான வருணனோ கூடக் காற்று தேவனின் {வாயுவின்} வலிமைக்கு இணையானவர்கள் இல்லை. எனவே, வெறும் மரமான உன்னைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(10) ஓ! சால்மலி, இவ்வுலகின் எந்த உயிரினமும், எந்தச் செயலைச் செய்தாலும், உயிரை அளிப்பவனான காற்று தேவனே அனைத்து வேளைகளிலும் அந்தச் செயலின் காரணமாக இருக்கிறான்.(11) அந்தத் தேவன் முறைமையுடன் முயலும்போது, அவன் அனைத்து உயிரினங்களையும் எளிதாக வாழ வகைச் செய்கிறான். எனினும், அவன் முறையில்லாமல் முயன்றால், உலக உயிரினங்களுக்குப் பேரிடரே விளையும்.(12) வழிபாட்டுக்குத் தகுந்தவனும், அண்டத்தின் உயிரினங்களில் முதன்மையானவனுமான காற்று தேவனை வழிபடாமல் இருக்க உன்னைத் தூண்டுவது, உன் அறிவின் பலவீனமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?(13) உண்மையில் நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஓ! சால்மலி, உன் நுண்ணறிவானது, கோபத்தாலும், பிற தீய ஆசைகளாலும் குழப்பப்பட்டிருப்பதால் நீ பொய்மைகளை மட்டுமே பேசுகிறாய்.(14)

இத்தகைய பேச்சுகளில் நீ ஈடுபடுவதில் நான் நிச்சயம் உன்னிடம் கோபமே அடைகிறேன்.(15) நீ சொன்ன இந்த இழிவான வார்த்தைகள் அனைத்தையும் நானே காற்றுத் தேவனிடம் தெரிவிக்கப் போகிறேன்.(16) ஓ! சால்மலி {இலவ மரமே}, ஓ! தீய புத்தியைக் கொண்டவனே, உன்னைவிடப் பலமிக்கவையான சந்தனங்கள் {சந்தன மரங்கள்}, சியந்தனங்கள், சாலங்கள், சரளங்கள், தேவதாரங்கள், வேதாசங்கள் {நீர்நொச்சி மரங்கள்}, தன்வனங்கள் மற்றும் நல்லான்மாக்களைக் கொண்ட பல மரங்கள் ஒருபோதும் காற்றுக்கு எதிராக இத்தகைய வசைமாரிகளைச் சொன்னதில்லை.(17) அவை அனைத்தும், காற்றின் வலிமையையும், தாங்கள் ஒவ்வொருவரும் கொண்ட பலத்தையும் அறியும். இந்தக் காரணங்களுக்காக அந்த முதன்மையான மரங்கள், அந்தத் தேவனைப் பொறுத்தவரையில் தங்கள் தலைகளை வணங்குகின்றன.(18) எனினும், மடமையால் நீ காற்றின் எல்லையற்ற வலிமையை அறியவில்லை. எனவே, (நீ அவனைக்குறித்து இகழ்ந்ததைச்சொல்வதற்காகச்} நான் அந்தத் தேவனின் முன்னிலைக்குச் செல்லப்போகிறேன்” என்றார் {நாரதர்}.(19)

இலவமும் வாயுவும்! – சாந்திபர்வம் பகுதி – 156-இலவ மரத்தின் வார்த்தைகளை வாயுத் தேவனிடம் தெரிவித்த நாரதர்; கோபமடைந்த வாயு, அந்த இலவமரத்தைத் தான் இதுவரை ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தைச் சொல்லி, இனி அதற்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கப்போவதாகச் சொன்னது; வாயுவை எவ்வாறு சமாளிப்பது என்று மனத்திற்குள் திட்டம்போட்ட இலவமரம்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சால்மலியிடம் {அந்த இலவ மரத்திடம்} இவ்வாறு சொன்னவரும், பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவருமான நாரதர், காற்று தேவனைக் குறித்துச் சால்மலி சொன்னதனைத்தையும் அவனிடம் {வாயுவிடம்} சொன்னார்.(1)

நாரதர் {வாயுதேவனிடம்}, “இமயத்தின் சாரலில், கிளைகளாலும், இலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சால்மலி {இலவ மரம்} இருக்கிறது. அதன் வேர்கள் பூமிக்குள் ஆழமாக நீண்டு விரிந்து செல்கின்றன, அதன் கிளைகள் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கின்றன. ஓ! காற்று தேவா {வாயு தேவா}, அந்த மரம் உன்னை அவமதிக்கிறது.(2) உன்னைக் குறித்து நிந்தனை நிறைந்த வார்த்தைகள் பலவற்றை அது பேசுகிறது. ஓ! காற்றே, நீ கேட்குமாறு, நான் அதைத் திரும்பச் சொல்வது முறையாகாது.(3) ஓ! காற்றே, படைக்கப்பட்ட பொருட்கள் யாவிலும் நீ முதன்மையானவன் என்பதை நான் அறிவேன். நீ மிக மேன்மையானவன் என்பதையும், மிகப் பெரும் வலிமைமிக்கவன் என்பதையும், கோபத்தில் நீ அந்தகனுக்கு நிகரானவன் என்பதையும் நான் அறிவேன்” என்றார் {நாரதர்}”.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட காற்று தேவன், அந்தச் சால்மலியிடம் சென்று, அதனிடம் சினத்துடன் பின்வருமாறு பேசினான்.(5)

காற்று தேவன் {இலவமரத்திடம்}, “ஓ! சால்மலி, நாரதரின் முன்பு நீ என்னை இழிவாகப் பேசியிருக்கிறாய். நான் காற்று தேவன் என்பதை அறிவாயாக. நான் என் பலத்தையும், வலிமையையும் உனக்கு நிச்சயம் காட்டுவேன்.(6) நான் உன்னை நன்கறிவேன். நீ எனக்கு அந்நியன் இல்லை. பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்} இந்த உலகைப் படைப்பதில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிலகாலம் உனக்குக் கீழே ஓய்ந்திருந்தார்.(7) இந்நிகழ்வின் விளைவாலேயே நான் இதுவரை உனக்குக் கருணை காட்டி வந்தேன். ஓ! மரங்களில் இழிந்தவனே, இதன் காரணமாகவே நீ தீங்குக்கு உள்ளாகாமல் இருக்கிறாயேயன்றி, உன் சொந்த வலிமையின் விளைவாலல்ல.(8) அவமரியாதைக்குரிய பொருளாக என்னை நீ அற்பமாகக் கருதுகிறாய். நீ மீண்டும் என்னை அவமதிக்காத வகையில் நான் உனக்கு என்னை வெளிப்படுத்துகிறேன்” என்றான் {வாயு}”.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டதும், ஏளனமாகச் சிரித்த அந்தச் சால்மலி, “ஓ! காற்று தேவா, நீ என்னிடம் கோபமாக இருக்கிறாய். என்னைப் பொறுத்துக்கொள்ளாதே, உன் வலிமையின் எல்லையைக் காட்டுவாயாக.(10) உன் கோபமனைத்தையும் என் மீது கக்குவாயாக. நீ கோபவசப்படுவதால் எனக்கு நீ என்ன செய்துவிடுவாய்? உன் வலிமையானது (தருவிக்கப்படுவதற்குப் பதிலாக) உனக்குச் சொந்தமானதாக இருந்தாலும் கூட, நான் உன்னிடம் அச்சம் கொள்ள மாட்டேன். நான் விலையில் உன்னை விட மேன்மையானவன் ஆவேன். உன்னைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.(11) நுண்ணறிவில் பலமிக்கவர்களே உண்மையில் பலவான்களாவர். மறுபுறம், உடல் பலத்தை மட்டுமே கொண்டவர்கள் பலவான்களாகக் கருதப்படுவதில்லை” என்றது.(12)

இவ்வாறு சொல்லப்பட்ட காற்று தேவன் {இலவ மரத்திடம்}, “நாளை நான் உன் பலத்தைச் சோதிக்கிறேன்” என்று சொன்னான். அதன் பிறகு இரவு வந்தது.(13) காற்றின் பலத்தையும், தன் பலத்தின் எல்லையையும் மனத்தால் தீர்மானித்த அந்தச் சால்மலி, தன் பலம் அந்தத் தேவனைவிடக் குறைவானதே என்பதைக் கண்டு, தனக்குள்ளேயே,(14) “நாரதரிடம் நான் சொன்னதனைத்தும் பொய்யே. நான் நிச்சயமாகக் காற்றைவிடப் பலம் குறைந்தவனே. உண்மையில், அவன் தன் பலத்தில் வலிமையாகவே இருக்கிறான்.(15) நாரதர் சொன்னதைப் போல, காற்றானவன் {வாயு தேவன்} எப்போதும் வலிமைமிக்கவனே. வேறு மரங்களை விட நான் பலவீனமானவன் என்பதில் ஐயமில்லை.(16) ஆனால் நுண்ணறிவில் எனக்கு எந்த மரமும் நிகரானதில்லை. எனவே, காற்றிடம் இருந்து எழும் இந்த அச்சத்தை என் நுண்ணறிவைச் சார்ந்து கவனித்துக் கொள்வேன்.(17) காட்டில் உள்ள பிற மரங்கள் அனைத்தும், இதே வகை நுண்ணறிவைச் சார்ந்திருந்தால், காற்று தேவன் கோபமடைந்தாலும் கூட அதிலிருந்து எந்தத் தீங்கும் நிச்சயம் நேராது.(18) எனினும், அவை அனைத்தும் அறிவற்றவையாக இருக்கின்றன, எனவே, காற்றுத் தங்களை அசைப்பதிலும், கிழிப்பதிலும் ஏன்? எவ்வாறு? வெல்கிறது என்பதை நான் அறிவதை போல அவற்றால் அறிய முடியவில்லை” என்று நினைக்கத் தொடங்கியது” {என்றார் பீஷ்மர்}.(19)

அர்ஜுனனின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 157-இலவ மரம் வாயு வருவதற்கு முன்பே தன் கிளைகளைத் தானே உதிர்த்துக் கொண்டது; சினத்துடன் வந்த வாயு தேவன் இலவமரத்தை எள்ளி நகையாடியது; பலவீனமான மன்னன், தன்னை நோக்கி பலவான் படையெடுத்து வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க இந்த இலவ மரத்தின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர், இறுதியில் அர்ஜுனனின் மேன்மையை எடுத்துரைத்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “இதை மனத்திற்குள் தீர்மானித்துக்கொண்ட அந்தச் சால்மலி {இலவமரம்}, கவலையுடன் தன் முக்கிய மற்றும் துணைக் கிளைகள் அனைத்தையும் கீழே உதிர்த்தது.(1) தன் கிளைகள், இலைகள் மற்றும் மலர்களை உதிர்த்த அந்த மரம், தன்னை நோக்கி வரும் காற்றை உறுதியுடன் பார்த்தது.(2) சினத்தால் நிறைந்து, பெரும் மூச்சுவிட்டுக்கொண்டு, பெரும் மரங்களை வீழ்த்தியபடி அந்தச் சால்மலியை நின்ற இடத்தை நோக்கி விரைந்து வந்தது. காற்று.(3) உச்சி, கிளைகள், இலைகள் மற்றும் மலர்களை இழந்து நிற்கும் அதைக் கண்ட காற்றானவன் {வாயு தேவன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, முன்பு பெரும் வடிவத்தில் இருந்த அந்தக் காட்டின் தலைவனிடம் சிரித்துக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(4)

காற்றானவன் {இலவமரத்திடம்}, “ஓ! சால்மலி, சினத்தால் நிறைந்து வந்த நான், சரியாக நீ செய்தது போலவே உன் கிளைகள் அனைத்தையும் வெட்டியிருப்பேன்.(5) நீ இப்போது உன் செருக்குமிக்க உச்சியையும், மலர்களையும் இழந்திருகிறாய். உன் குருத்துகளும், இலைகளும் அற்றிருக்கிறாய். உன் தீய ஆலோசனைகளின் விளைவால் நீ என் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டாய்” என்றான் {வாயு தேவன்}”.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “காற்றின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சால்மலி பெரும் நாணத்தை உணர்ந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்த அது {இலவமரம்}, தன் மடமைக்காகப் பெரிதும் வருந்தத் தொடங்கியது.(7) ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இவ்வழியிலேயே பலவீனமான ஒரு மூடன், பலமிக்க எதிரியின் கோபத்தைத் தூண்டி, இறுதியில் கதையில் வந்த சால்மலியை {இலவ மரத்தைப்} போல வருந்த வேண்டியிருக்கும்.(8) மனிதர்கள் இணையான வலிமையைக் கொண்டிருந்தாலும், தங்களுக்குத் தீங்கிழைத்தவர்கள் மீது திடீரெனப் பகைமை பாராட்டக் கூடாது. மறுபுறம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் தங்கள் வலிமையைப் படிப்படியாக வெளிக்காட்ட வேண்டும்.(9) மூட மதி கொண்டவன், நுண்ணறிவு மிக்க ஒருவனிடம் ஒருபோதும் பகைமையைத் தூண்டக்கூடாது. அத்தகைய வழக்குகளில், நுண்ணறிவுமிக்க மனிதன், காய்ந்த புற்குவியலை ஊடுருவும் நெருப்பைப் போல (தன் எதிரியை) ஊடுருவுவான்.(10)

ஒருவன் கொண்டதில் நுண்ணறிவே விலைமதிப்புமிக்க உடைமையாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அதே போல, வலிமையை விட மதிப்புமிக்க வேறெதையும் ஒரு மனிதன் இங்கே {இம்மையில்} அடைய மாட்டான்.(11) எனவே, குழந்தை, மூடன், குருடன், அல்லது செவிடனின் செயல்களை ஒருவன் (கருணையுடன்) பொறுப்பதைப் போலவே, அவன் பலத்தின் மேன்மையானவனால் இழைக்கப்படும் தவறுகளையும் பொறுக்க வேண்டும். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, இந்தக் கூற்றின் நீதி உன் வழக்கிலும் காணப்படுகிறது.(12) ஓ! பெரும் காந்தி கொண்டவனே, (துரியோதனனின்) பதினோரு அக்ஷௌஹிணிகளும், (உன்னால் திரட்டப்பட்ட) ஏழு அக்ஷௌஹிணிகளும் {ஆக மொத்தம் பதினெட்டு அக்ஷௌஹிணி படைகளும்}, தனியொருவனான உயர் ஆன்ம அர்ஜுனனின் வலிமைக்கு இணையானவையல்ல.(13) எனவே, தன் பலத்தைச் சார்ந்து போர்க்களத்தில் திரிபவனும், பகனைத் தண்டித்தவனின் {இந்திரனின்} மகனுமான அந்தச் சிறப்புமிக்கப் பாண்டவனாலேயே {அர்ஜுனனாலேயே} (துரியோதனனின்) துருப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.(14) ஓ! பாரதா, மன்னர்களின் கடமைகள் மற்றும் கடமைகளின் அறநெறிகள் ஆகியவற்றை உன்னிடம் விரிவாக உரையாடிவிட்டேன். ஓ! மன்னா, நீ கேட்க விரும்புவது வேறென்ன இருக்கிறது” {என்றார் பீஷ்மர்}.(15)

பாவத்தின் வேர் – பேராசை! – சாந்திபர்வம் பகுதி – 158-பாவத்தின் மூலம் மற்றும் அதன் அடித்தளத்துக் குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பேராசையே பாவத்தின் மூலமும், அடித்தளமுமாக இருக்கிறது என்பதையும், நல்லோரின் இயல்புகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, எந்த மூலத்திலிருந்து பாவம் உண்டாகிறது, அதன் {பாவத்தின்} அடித்தளம் எதில் இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பாவத்தின் அடித்தளம் எது என்பதைக் கேட்பாயாக. பேராசை மட்டுமே (தகுதிக்கும் {புண்ணியத்துக்கும்}, நன்மைக்கும்) பேரழிவை ஏற்படுத்துகிறது. பேராசையிலிருந்தே பாவம் உண்டாகிறது.(2) {பேராசை எனும்} இந்த மூலத்தில் இருந்தே பெரும் துன்பத்துடன் சேர்ந்து பாவமும், மறமும் {அதர்மமும்} பாய்கின்றன. இந்தப் பேராசையே, உலகில் காணப்படும் தந்திரங்கள் மற்றும் பாசாங்குகள் {போலித்தனம்} ஆகியவற்றின் ஊற்றாக இருக்கிறது. பேராசையே மனிதர்களைப் பாவமிழைக்கச் செய்கிறது.(3) பேராசையில் இருந்து கோபம் உண்டாகிறது; பேராசையில் இருந்து காமம் பாய்கிறது; பேராசையில் இருந்தே விவேகமின்மை, வஞ்சனை, செருக்கு, ஆணவம், வன்மம்,(4) பழி உணர்ச்சி, வெட்கமின்மை, செழிப்பிழப்பு, அறமிழப்பு {நற்பண்பிழப்பு}, கவலை, புகழ்க்கேடு ஆகியன எழுகின்றன.(5)

கஞ்சத்தனம், குதர்க்கம், முறையற்ற அனைத்து வகை ஆசைகள், பிறவிச் செருக்கு, கல்விச் செருக்கு, அழகுச் செருக்கு, செல்வச்செருக்கு,(6) அனைத்து உயிரினங்களிடமும் பரிதாபமின்மை, அனைத்திலும் தீமை, அனைத்திலும் நம்பிக்கையின்மை, அனைத்திலும் நேர்மையின்மை,(7) பிறரின் செல்வத்தைக் கவர்தல், பிறரின் மனைவியரை அபகரித்தல், கடுஞ்சொல், கவலை, பிறரைக் குறித்துத் தீங்காகப் பேசுதல்,(8) காம வேட்கை, பெருந்தீனி, அகால மரணம், வன்ம வேட்கை, பொய்மையில் தடுக்கப்பட முடியாத விருப்பம், ஆசைப்பசியை வெல்ல முடியாமை, தணியாத ஆசைகளில் காதுகளை ஈடுபடுத்தல்,(9) தீப்பேச்சு, தற்பெருமை, ஆணவம், கடமைகளைச் செய்யாதிருத்தல், மூர்க்கம், அனைத்துவகைத் தீச்செயல்களையும் செய்தல் ஆகிய இவை அனைத்தும் பேராசையில் இருந்தே எழுகின்றன.(10)

குழந்தைகள், அல்லது இளைஞர்கள், அல்லது முதியவர்களாக இருந்தாலும் மனிதர்களால் பேராசையைக் கைவிடமுடிவதில்லை. வாழ்வே சிதைந்தாலும் சிதையாமல் இருப்பதே பேராசையின் இயல்பாகும்.(11) அளவிடமுடியாத ஆழம் கொண்ட எண்ணற்ற ஆறுகள் தொடர்ந்து வெளியிடும் நீராலும் ஒருபோதும் நிறைவடையாத பெருங்கடலைப் போலவே, எந்த அளவுக்கு உடைமைகளை அடைந்தாலும் பேராசையானது நிறைவுபெற முடியாததாக இருக்கிறது.(12) எனினும், உடைமைகளால் ஒருபோதும் எது நிறைவடையாதோ, ஆசைகளை அடைவதால் எது தணிவடையாதோ, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், பெரும்பாம்புகள், உண்மையில் அனைத்து வகை உயிரினங்களாலும் எதன் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ள முடியாதோ, எது தடுக்கப்பட முடியாதோ, எது உலகின் பொய்மைகளை இதயத்தில் உண்டாக்கும் மடமையுடன் கூடியதோ அந்தப் பேராசையானது, தூய்மையடைந்த ஆன்மா கொண்டவனால் எப்போதும் வெல்லப்பட வேண்டும்.(13,14) செருக்கு, வன்மம், அவதூறு, கோணல்புத்தி, அடுத்தவரின் நன்மையைக் கேட்க இயலாமை ஆகியன, பேராசையின் ஆதிக்கத்தின் கீழ் தூய்மையற்ற ஆன்மாக்களாக இருப்போரிடம் காணப்படும் தீமைகளாகும்.(15)

மிகப் பெரிய அளவுகளிலான சாத்திரங்களைத் தங்கள் மனங்களில் கொண்டிருப்பவர்களும், பிறரின் ஐயங்களை விலக்கவல்லவர்களுமான பெரும் கல்விமான்களே கூட, இந்த ஆசையின் {அற்ப பொருளில் ஆசையுள்ளவர்களாக} விளைவால் பெரும் துன்பத்தை உணரும் பலவீனமான புத்தி கொண்டவர்களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.(16) பேராசைக்கார மனிதர்கள் பொறாமையுள்ளவர்களாகவும், கோபக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நன்னடத்தையற்றவர்களாக இருக்கிறார்கள். குறுகிய இதயங்களைக் கொண்ட அவர்களது பேச்சுகள் இனிமையானவையாக இருக்கும். எனவே அவர்கள், புற்களால் மறைக்கப்பட்ட இருள்நிறைந்த குழிகளுக்கு ஒப்பானவர்களாக இருக்கிறார்கள்.(17) அவர்கள் அறப்போர்வையைப் போலியாக உடுத்திக் கொள்கிறார்கள். இழிந்த மனம் கொண்ட அவர்கள், (தேவைப்படும்போது) அறம் மற்றும் நற்குணத்தின் கொடியைத் தாங்கி இந்த உலகைக் களவாடுகிறார்கள். வெளிப்படையான காரணங்களின் பலத்தைச் சார்ந்திருக்கும் அவர்கள், அறத்தில் பல்வேறு வகையான தீய வழிகளை உண்டாக்குகிறார்கள். பொருளாசையின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதில் எண்ணம் கொண்ட அவர்கள், அறவழிகளை அழிக்கவே செய்கிறார்கள்.(18) பேராசையின் ஆதிக்கத்தின்கீழ் உள்ள தீய ஆன்மா கொண்டவர்கள் வெளிப்படையாக அறக்கடமைகளைச் செய்யும்போது, அதன் விளைவாக அவர்களால் இழைக்கப்பட்ட கேடுகள் மனிதர்களுக்கு மத்தியில் விரைவில் புழக்கத்திற்கு வருகின்றன.(19) ஓ! குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரனே}, செருக்கு, கோபம், ஆணவம், உணர்வின்மை, இன்பம் மற்றும் துன்பத்தின் அடுக்குகள் {தாங்கிக் கொள்ள முடியாத இன்பங்கள் மற்றும் தாங்கிக் கொள்ள முடியாத துன்பங்கள்}, இறுமாப்பு {சுயமுக்கியத்துவம்} ஆகிய அனைத்தும் பேராசையின் ஆளுகையில் உள்ளோரிடம் காணப்படுகின்றன.(20)

பேராசையின் ஆதிக்கத்தில் எப்போதும் இருப்போரைத் தீயவர்கள் என்று அறிவாயாக. தூய நடைமுறைகளைக் கொண்ட நல்லோர் என்று அழைக்கப்படுபவர்களைக் குறித்து நீ கேட்டவற்றை உனக்கு இப்போது சொல்கிறேன்.(21) (மரணத்திற்குப் பிறகு) இவ்வுலகத்திற்குத் திரும்பும் கடமையில் அச்சமேதும் இல்லாதவர்களாக, அடுத்த உலகத்தில் {மறுமையில்} அச்சமேதும் இல்லாதவர்களாக, விலங்குணவுக்கு அடிமையாகாதவர்களாக, ஏற்புடையவற்றில் எந்த விருப்பம், மாறானவற்றில் விருப்பமின்மை ஆகியன இல்லாதவர்களாக,(22) நன்னடத்தையை விருப்பத்திற்குரியதாகக் கருதுபவர்களாக, தற்கட்டுப்பாடு உடையவர்களாக, இன்பத்தையும், துன்பத்தையும் இணையாகக் கருதுபவர்களாக, உண்மையைத் தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களாக,(23) பெற்றுக் கொள்ளாமல் {கொடை} கொடுப்பவர்களாக, கருணையுள்ளவர்களாக, பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்களை வழிபடுபவர்களாக, (பிறரின் நன்மைக்காக) எப்போதும் முயற்சி செய்யத் தயாராக இருப்பவர்களாக,(24) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அண்டத்திற்கு எப்போதும் நன்மை செய்பவர்களாக, (மனத்தில்) பெருந்துணிவு கொண்டவர்களாக, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் நோற்பவர்களாக, அனைவரின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, தங்களிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கவல்லவர்களாக, பிறருக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கவல்லவர்களாக இருப்போர், நல்லோர் என்றும், அறவோர் என்றும் கருதப்படுகிறார்கள்.(25)

அறத்தை மேம்படுத்தும் அவர்கள், அறவழியில் இருந்து விலக இயலாதவர்களாவர். அவர்களது நடத்தையானது, பழங்காலத்தின் அறம்சார்ந்த மனிதர்களால் நிறுவப்பட்ட மாதிரிக்கு இசைவாக இருக்குமேயன்றி ஒருபோதும் வேறாக இருக்காது.(26) அவர்கள் முற்றிலும் அச்சமற்றவர்கள்; அவர்கள் அமைதி நிறைந்தவர்கள்; அவர்கள் மென்மையானவர்கள்; அவர்கள் சரியான பாதையையே எப்போதும் பின்பற்றுவார்கள். கருணை நிறைந்த அவர்கள், நல்லோரால் எப்போதும் வழிபடப்படுவார்கள்.(27) அவர்கள் காமம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டிருப்பார்கள். அவர்கள் உலகம் சார்ந்த எந்தப் பொருளோடும் பிணைப்பில்லாதவர்கள். அவர்களிடம் செருக்கிருக்காது. அவர்கள் சிறந்த நோன்புகளை நோற்பார்கள். அவர்கள் எப்போதும் மதிப்பிற்குரியவர்களாக இருப்பார்கள். எனவே, நீ எப்போதும் அவர்களுக்காகக் காத்திருந்து {அவர்களுக்குப் பணிவிடை செய்து}, அவர்களிடம் இருந்து அறிவுரைகளை நாடுவாயாக.(28) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் செல்வத்திற்காகவோ, புகழுக்காகவோ ஒருபோதும் அறம் ஈட்டுவதில்லை. மறுபுறம் அவர்கள், உடலைப் பேணிக் கொள்வதைப் போன்ற ஒரு கடமையாகவே அதைச் செய்வார்கள்.(29) அச்சம், கோபம், அமைதியின்மை, கவலை ஆகியவை அவர்களிடம் எப்போதும் இருக்காது. அவர்கள் தங்கள் சக மனிதர்களைத் தவறாக வழிநடத்துவதற்காகப் புறத்தோற்றத்தில் அறப்போர்வை போர்த்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் எந்தப் புதிரும் {மர்மங்களும்} இருக்காது.(30)

அவர்கள் எப்போதும் முற்றான நிறைவுடன் இருப்பார்கள். பேராசையால் எழும் தீர்மானப்பிழை அவர்களிடம் இருக்காது. அவர்கள் எப்போதும் உண்மைக்கும், நேர்மைக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களது இதயம் ஒருபோதும் அறத்தில் இருந்து வீழாது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ எப்போதும் அவர்களை மதிக்க வேண்டும்.(31) {எதையும்} அடையும்போதோ, {எதையும்} இழக்கும்போதோ அவர்கள் ஒருபோதும் திளைக்கமாட்டார்கள். எதிலும் பற்றில்லாமல், செருக்கிலிருந்து விடுபட்ட அவர்கள், நற்பண்பின் {சத்வ} குணத்துடன் அனைத்திடமும் சம பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள்.(32) உறுதியான நடை கொண்டவர்களும், (தெய்வீக) அறிவைத் தேடுவதில் ஈடுபடுபவர்களும், அமைதி மற்றும் அறப்பாதையில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான அவர்களின் பார்வையில், ஈட்டலும் இழப்பும், இன்பமும் துன்பமும், ஏற்புடைமையும், ஏற்பில்லாமையும், வாழ்வும் மரணமும் இணையானவையாகவே இருக்கின்றன.(33) அறத்தின் கண் அத்தகை அன்பைக் கொண்ட அந்த உயர் ஆன்ம மனிதர்களை நீ உன் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கவனமின்மைக்குப் பலியாகாமல் எப்போதும் வழிபட வேண்டும். ஓ! அருளப்பட்டவனே, ஒருவனுடைய சொற்கள், தேவர்களுடைய உதவியின் மூலம் மட்டுமே நன்மையை உண்டாக்குகின்றன. பிற சூழ்நிலைகளின் கீழ் சொற்கள் தீய விளைவுகளையே உண்டாக்குகின்றன[1]” என்றார் {பீஷ்மர்}.(34)

அறியாமை! – சாந்திபர்வம் பகுதி – 159-அறியாமை குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அறியாமையின் பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பேராசையே அனைத்துத் தீமைகளுக்கும் அடித்தளம் என்று நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! ஐயா, அறியாமையைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முடிவு அருகிலேயே இருக்கிறது என்பதை அறியாதவனும், நன்னடத்தைக் கொண்டோரை எப்போதும் வெறுப்பவனுமான ஒருவன் அறியாமையின் மூலம் பாவமிழைத்தால், அவன் விரைவில் இவ்வுலகில் புகழ்க்கேட்டை ஈட்டுகிறான்.(2) அறியாமையின் விளைவால் ஒருவன் நரகில் மூழ்குகிறான். அறியாமையில் இருந்தே துன்பம் எழுகிறது. அறியாமையின் மூலமே ஒருவன் துன்பங்களை அனுபவித்துப் பேராபத்தை அடைகிறான்” என்றார்.(3)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா {பீஷ்மரே}, அறியாமையின் தோற்றம், இடம், வளர்ச்சி, சிதைவு, எழுச்சி, வேர், பிரிக்கமுடியாத பண்பு, போக்கு, காலம், காரணம், விளைவு ஆகியவற்றை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். இங்கே {இம்மையில்} உணரப்படும் துன்பமனைத்தும் அறியாமையிலேயே பிறக்கிறது” என்று கேட்டான்[1]. (4,5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பற்று, வெறுப்பு, கருத்தில் முடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}, இன்பம், துன்பம், வீண் தற்பெருமை, காமம், கோபம், செருக்கு, எதிலும் தாமதம், செயலின்மை {சோம்பல்}, ஆசை, பகைமை, பொறாமை, எரிச்சல், மற்றும் பிற வகையைச் சார்ந்த அனைத்துப் பாவச் செயல்களும் அறியாமை என்ற பொதுப் பெயராலேயே அறியப்படுகினறன[2].(7) ஓ! மன்னா, நீ கேட்ட அதன் {அறியாமையின்} போக்கு, வளர்ச்சி மற்றும் பிற பண்புகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(8) ஓ! மன்னா, அறியாமை மற்றும் பேராசை ஆகிய இரண்டும் (பொருளில்) ஒன்றேயென அறிவாயாக. ஓ! பாரதா, இரண்டும் அதே கனிகளையும், அதே குற்றங்களையும்தான் உண்டாக்கும்.(9) அறியாமையானது, பேராசையையே தன் மூலமாகக் கொண்டிருக்கிறது. பேராசை வளர வளர, அறியாமையும் வளர்கிறது. பேராசை இருக்கும் இடங்களில் எல்லாம் அறியாமையும் இருக்கிறது. பேராசை குறையும்போது, அறியாமையும் குறைகிறது. பேராசையின் எழுச்சியில் அதுவும் எழுகிறது. அதன் போக்குப் பலவிதமாக இருக்கிறது.(10)பேராசையின் வேராக கருத்தில் முடிவின்மை {குழப்பம் [அ] விவேகமில்லாமை} இருக்கிறது. மேலும் கருததில் முடிவின்மையே அதன் {பேராசையின்} பிரிக்கப்பட முடியாத பண்பாக இருக்கிறது. அறியாமையின் போக்கு அழிவில்லாததாகும் {நித்தியமானதாகும்}. எந்தக் காலத்தில் அறியாமை தோன்றுமோ, அப்போது பேராசைக்குரிய நோக்கங்கள் வெல்லப்படுவதில்லை.(11) ஒருவனுடைய அறியாமையிலிருந்து பேராசை எழுகிறது, பேராசையில் இருந்து அறியாமை எழுகிறது. (எனவே, பேராசையானது, அறியாமையின் காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டாகவும் இருக்கிறது). பேராசையே அனைத்துக் குற்றங்களையும் உண்டாக்குகிறது. இந்தக் காரணங்களுக்காகவே அனைவரும் பேராசையைத் தவிர்க்க வேண்டும்.(12) ஜனகன், யுவனாஸ்வன், பிருஷதஸ்வன், பிரஸேனஜித் ஆகியோரும், பிற மன்னர்களும், பேராசையை அடக்கியதன் விளைவாலேயே சொர்க்கத்தை அடைந்தனர்.(13) ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நீ அனைவரின் பார்வையிலும் உறுதியான தீர்மானத்துடன் பேராசையைத் தவிர்ப்பாயாக. பேராசையைத் தவிர்த்தால், நீ இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.(14)

தமம் – புலனடக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 160-கடமைகளில் முக்கியமானது எதுவெனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; தற்கட்டுப்பாடு எனும் புலனடக்கமே அறங்களில் பேரறம் என்றும், தற்கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு குறையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! அற ஆன்மாவே, வேத கல்வியிலும், அறமீட்டும் விருப்பத்திலும் கவனமாக ஈடுபடும் ஒருவனுக்கு, எது பெரும் தகுதியை[1] {புண்ணியத்தை} உண்டாக்குவதாகச் சொல்லப்படுகிறது?(1) இவ்வுலகில் உயர்ந்த தகுதியை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுவது, சாத்திரங்களின் பல்வேறு வகைகளில் நிறுவப்பட்டிருக்கிறது. ஓ! பாட்டா, இம்மை, மறுமை ஆகிய இரண்டியலும் எது அதிகம் மதிக்கப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ! பாரதரே, கடமையெனும் பாதையானது நீண்டதாகவும், எண்ணற்ற பல கிளைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. உம்மைப் பொறுத்தவரையில், அக்கடமைகளில், பிற அனைத்தையும்விட எந்தச் சில கடமைகள் விரும்பத்தக்கன?(3) ஓ! மன்னா, விரிவானதும், பல கிளைகளைக் கொண்டதுமான அதைக் குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “எதைக் கொண்டு நீ உயர்ந்த தகுதியை அடையலாம் என்பது குறித்து நான் உன்னிடம் பேசப் போகிறேன். ஞானம் கொண்ட நீ, நான் சொல்லப் போகும் அறிவால் அமுதம் பருகியவனைப் போல நிறைவடையப் போகிறாய்.(5) பெரும் முனிவர்களால் சொல்லப்பட்ட கடமைகளின் விதிகள் பலவற்றில் ஒவ்வொன்றும் அவரவர்களின் சொந்த ஞானத்தைச் சார்ந்தே இருக்கிறது. அவை {கடமைகள்} அனைத்திலும் உயர்ந்தது தற்கட்டுப்பாடு {தமம் – புலனடக்கம்}[2] ஆகும்.(6) உண்மையை அறிந்தவர்களான பழங்காலத்தினருக்கு மத்தியில் தற்கட்டுப்பாடே உயர்ந்த தகுதிக்கு {மோட்சத்திற்கு} வழிவகுக்கிறது என்று சொல்லப்பட்டது. ஒரு பிராமணனைப் பொறுத்தவரையில், தற்கட்டுப்பாடானது அவனது நித்திய கடமையாகும்.(7) தற்கட்டுப்பாட்டில் இருந்தே அவன் தன் செயல்களின் முறையான கனிகளை அடைகிறான். அவனது வழக்கில், தற்கட்டுப்பாடானது, (தகுதியில்) ஈகை, வேள்வி மற்றும் வேத கல்வி ஆகியவற்றையும் விஞ்சி நிற்கிறது.(8) தற்கட்டுப்பாடே (அவனது) சக்தியை அதிகரிக்கிறது. தற்கட்டுப்பாடு உயர்ந்ததும், புனிதமானதுமாகும். தற்கட்டுப்பாட்டின் மூலம் ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையும் சக்தியும் அடைந்து, அதன் விளைவாக உயர்ந்த அருள்நிலையை அடைகிறான்.(9) இந்த உலகத்தில் தற்கட்டுப்பாட்டுக்கு இணையாக வேறு எந்தக் கடமையும் இருப்பதாக நாம் கேள்விப்படவில்லை. அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரின்படியும், தற்கட்டுப்பாடே இவ்வுலக அறங்களில் உயர்ந்ததாகும்.(10)ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தற்கட்டுப்பாட்டின் மூலமே ஒருவன் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் உயர்ந்த மகிழ்ச்சியை {பேரின்பத்தை} அடைகிறான். தற்கட்டுப்பாடு கொண்டவன் பேரறத்தை ஈட்டுகிறான்.(11) தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன் இன்பநிலையில் உறங்குகிறான், இன்பநிலையில் விழிக்கிறான், இன்ப நிலையிலேயே இவ்வுலகில் திரிகிறான். அவனது மனம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கிறது.(12) தற்கட்டுப்பாடு இல்லாத மனிதன் எப்போதும் துன்பத்தை அனுபவிக்கிறான். அத்தகைய மனிதன், தன் குற்றங்களால் பிறக்கும் பேரிடர்கள் பலவற்றை உண்டாக்குகிறான்.(13) நம் வாழ்வுமுறைகளிலும் {ஆசிரமங்களிலும்}, தற்கட்டுப்பாடே சிறந்த நோன்பாகச் சொல்லப்படுகிறது. தற்கட்டுப்பாடு என்று அழைக்கப்படும் குறியீடுகளின் மொத்த தொகையை நான் இப்போது சொல்லப் போகிறேன்.(14) மன்னிக்கும் தன்மை, பொறுமை, தீங்கிழையாமை, பாகுபாடின்மை, உண்மை, நேர்மை, புலன்களை வெற்றிக் கொள்வது, புத்திசாலித்தனம், மென்மை, பணிவு, உறுதி,(15) ஈகை, கோபத்திலிருந்து விடுபடுவது, நிறைவு, இனிய பேச்சு, நல்லுணர்வு, வன்மத்திலிருந்து விடுதலை ஆகிய இவை அனைத்தின் சேர்க்கையே தற்கட்டுப்பாடாகும் {தமமாகும்}.(16)

ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரனே}, ஆசானை மதித்தலும், உலகளாவிய கருணையும் அதில் அடங்கும். தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன், முகத்துதி, அவதூறு ஆகிய இரண்டையும் தவிர்ப்பான். மனமாசு, புகழ்க்கேடு, பொய் பேச்சு,(17) காமம், பேராசை, செருக்கு, ஆணவம், தற்புகழ்ச்சி, அச்சம், பொறாமை, அவமதிப்பு ஆகிய இவை அனைத்தும் தற்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதனால் தவிர்க்கப்பட வேண்டும்.(18) அவன் {தற்கட்டுப்பாடு கொண்டவன்} ஒருபோதும் அவதூறில் ஈடுபடமாட்டான். அவன் பொறாமையில் இருந்து விடுபட்டவனாக இருப்பான். அவன் அற்ப பொருள்களால் (உலகளாவிய இன்பங்களில் எந்த வடிவத்தைச் சேர்ந்த பொருளாக இருந்தாலும்) ஒருபோதும் நிறைவடையமாட்டான். அவன் ஒருபோதும் நிறைவடையாத பெருங்கடலைப் போன்றவனாவான்[3].(19) “நான் உன்னவன், நீ என்னவன், அவர்கள் என்னிடம் இருக்கிறார்கள், நான் அவர்களிடம் இருக்கிறேன்” என்பது போன்ற பூமிசார்ந்த தொடர்புகளில் இருந்து எழும் பற்றுகளில் அவன் ஒருபோதும் கட்டுப்பட மாட்டான்.(20)நகரங்கள், அல்லது காடுகளின் நடைமுறைகளைப் பின்பற்றுபவனும், அவதூறிலோ, முகத்துதியிலோ ஒருபோதும் ஈடுபடாதவனுமான மனிதன், முக்தியை அடைவான்.(21) உலகளாவிய நட்பைப் பயின்று, அறம்சார்ந்த நடத்தையும், உற்சாகமிக்க ஆன்மாவையும், ஆன்மாவின் அறிவையும் கொண்டு, பூமியின் பற்றுகள் அனைத்திலிருந்தும் விடுபட்ட மனிதன் மறுமையில் பெரும் வெகுமதியை அடைகிறான்.(22) சிறப்பான நடத்தையுடனும், கடமைகளை நோற்றும், உற்சாகமிக்க ஆன்மாவுடனும், கல்வி மற்றும் தன்னறிவுடனும் கூடிய மனிதன், இம்மையில் உயர்ந்த மதிப்பையும், மறுமையில் உயர்ந்த கதியையும் அடைகிறான்.(23) பூமியில் நல்லவை என்று கருதப்படும் செயல்கள் அனைத்தும், நல்லோரால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், ஞானம் கொண்ட தவசியின் பாதையை அமைக்கின்றன. நல்லோன் ஒருவன் ஒருபோதும் அந்தப் பாதையில் இருந்து விலக மாட்டான்.(24) உலகில் இருந்து ஓய்ந்து, காட்டு வாழ்வைப் பின்பற்றி, புலன்களில் முழுக் கட்டுப்பாட்டுடன், தன் மரணத்தை எதிர்பார்த்து அமைதியாக அந்தப் பாதையில் நடக்கும் கல்விமான், நிச்சயம் பிரம்ம நிலையை அடைவான்.(25)

எந்த உயிரினத்திடமும் அச்சமில்லாதவனும், எந்த உயிரினத்தையும் அச்சுறுத்தாதவனுமான ஒருவனுக்கு, தன் உடலைவிட்ட பிறகு எந்த அச்சத்தையும் சந்திக்க வேண்டியதில்லை[4].(26) தன் தகுதிகளைத் தேக்க முனையாமல் (உண்மையான இன்பத்தில்) அதைத் தீர்ப்பவனும், அனைத்து உயிரினங்களிடமும் சம பார்வை கொண்டவனும், உலகளாவிய நட்பெனும் போக்கைப் பயில்பவனுமான ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்.(27) வானில் உள்ள பறவைகளின் பாதையையோ, நீரின் பரப்பில் நீர்க்கோழியின் பாதையையோ பகுத்தறிய முடியாததைப் போலவே, (பூமியில்) அத்தகைய மனிதனின் பாதையும் கவனத்தை ஈர்க்காது.(28) ஓ! மன்னா, இல்லத்தைக் கைவிட்டு, துறவறத்தைப் பின்பற்றுபவன் இன்புற அழிவில்லாத பிரகாச உலகங்கள் பல காத்திருக்கின்றன.(29) செயல்களை அனைத்தையும் கைவிட்டு, முறையான போக்கில் தவங்களையும் கைவிட்டு, கல்வியின் பல்வேறு கிளைகளைக் கைவிட்டு, உண்மையில் (பூமியைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்யும்) அனைத்துப் பொருட்களையும் கைவிடும் ஒருவன்,(30) தன் ஆசைகளில் தூய்மையானவனாக, அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுபட்டவனாக[5], உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடனும், தன்னறிவுடனும், தூய்மையான இதயத்துடனும் கூடியவனாகி, இவ்வுலகில் பெரும் மதிப்பை வென்று, இறுதியாகச் சொர்க்கத்தை அடைகிறான்.(31)வேத தவங்களில் இருந்து எழுந்ததும், குகைக்குள் மறைக்கப்பட்டதுமான பெரும்பாட்டனின் அழிவில்லா உலகத்தை, தற்கட்டுப்பாடு கொண்ட ஒருவனால் மட்டுமே வெல்ல முடியும்[6].(32) உண்மை அறிவில் இன்பம் கொள்பவனும், தெளிவடைந்தவனும், எவ்வுயிருக்கும் தீங்கிழையாதவனுமான ஒருவன், இவ்வுலகிற்குத் திரும்புவதில் எந்த அச்சமும், வேறு எந்த அச்சமும் கொள்ளமாட்டான்[7] {அவனுக்கு மறுபிறவி குறித்த அச்சமேதும் இல்லை}.(33) தற்கட்டுப்பாட்டில் ஒரே ஒரு குறை {தோஷம்} உள்ளது. இரண்டாவது குறை என்று அதில் ஏதும் காணப்படவில்லை. தற்கட்டுப்பாடுடைய மனிதன் பலவீனனாகவும், மூடனாகவும் கருதப்படுகிறான்.(34) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இந்தப் பண்பு ஒரே ஒரு குறையை மட்டுமே கொண்டுள்ளது. அதன் தகுதிகளோ {புண்ணியங்களோ} பலவாகும்.(35) தற்கட்டுப்பாடுடைய மனிதனுக்குக் காட்டின் தேவைதான் என்ன இருக்கிறது? ஓ! பாரதா, அதேபோல, தற்கட்டுப்பாடு இல்லாதவனுக்கும், காட்டினால் என்ன பயன் இருக்க முடியும்? தற்கட்டுப்பாடுடையவன் வசிக்கும் இடமே காடாகும், அதுவே புனிதமான ஆசிரமமுமாகும்” என்றார் {பீஷ்மர்}”.(36)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், அமுதத்தைப் பருகியவனைப் போல மிகுந்த நிறைவடைந்தான்.(37) மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த அறவோர்களில் முதன்மையானவரிடம் {பீஷ்மரிடம்} கேள்விகளைக் கேட்டான். (தன் பேரனால் கேட்கப்பட்ட) அந்தக் குருகுல வழித்தோன்றல் {பீஷ்மர்}, (கேட்கப்பட்ட கேள்விகளின் பேரில்) மீண்டும் உற்சாகமாக உரையாடத் தொடங்கினார்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

தவத்தின் மகிமை! – சாந்திபர்வம் பகுதி – 161-தவத்தின் பெருமையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் தொடர்ந்தார்}, பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்தும் தவத்தையே வேராகக் கொண்டிருக்கின்றன என்று அறிவுபடைத்தோர் கூறுகின்றனர். தவங்களைச் செய்யாத மூடன், தன் செயல்களுக்கான வெகுமதிகளை அடைவதில்லை.(1) பலமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, தவங்களின் உதவியாலேயே இந்த அண்டமனைத்தையும் படைத்தான். அதே வகையிலேயே முனிவர்களும், தவங்களின் சக்தியால் வேதங்களை அடைந்தனர்.(2) தவங்களின் உதவியாலேயே பெரும்பாட்டன் {பிரம்மன்} உணவு, கனிகள் மற்றும் கிழங்குகளைப் படைத்தான். ஆழ்ந்த சிந்தனையுள்ள ஆன்மாக்களுடன் {மன அடக்கத்துடன் கூடிய} தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தவங்களின் மூலமே மூவுலகங்களையும் காண்கின்றனர்.(3)

{அகதம் முதலிய} மருந்துகளும், தீங்கிழைக்கும் சாரப்பொருட்களுக்கான முறிமருந்துகளும், (இங்கே காணப்படும்) பல்வேறு செயல்களும் தவ உதவியின் மூலமே எதிர்பார்க்கும் விளைவுகளை உண்டாக்குகின்றன. அனைத்துக் காரியங்களின் நிறைவும் தவத்தைச் சார்ந்தே இருக்கிறது.(4) வெளிப்படையாக அடைதற்கரிதாகத் தெரியும் எந்தப் பொருளும், தவத்தின் உதவியால் நிச்சயம் வெல்லப்படும். முனிவர்கள் தங்கள் ஆறுவகைத் தெய்வீகப் பண்புகளையும் தவத்தின் மூலமே அடைந்தார்கள் என்பதில் ஐயமில்லை.(5)

எழுச்சியைத் தூண்டும் மதுவைப் பருகும் ஒருவன், பிறரின் ஏற்பில்லாமல் அவர்களது உடைமைகளைப் பறிப்பவன், கருவைக் கொன்ற குற்றவாளி, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் செய்தவன் ஆகியோர் அனைவரும் முறையாகச் செய்யப்படும் தவத்தின் மூலம் {தங்கள் பாவங்களில் இருந்து} தூய்மையடைகின்றனர்.(6) தவங்கள் பல வகைப்படும். அவை பல்வேறு வெளிப்பாடுகளின் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. எனினும் தவங்கள் அனைத்தைக் காட்டிலும், இன்பம், மகிழ்வு, உணவு ஆகியவற்றைத் தவிர்த்துச் செய்யப்படும் தவமே உயர்வானதும், சிறந்ததுமாகும்.(7)

ஓ! மன்னா, கருணை, உண்மைநிறைந்த பேச்சு, கொடை மற்றும் புலனடக்கம் ஆகியவற்றை விடவும், உணவைத் தவிர்த்துச் செய்யப்படும் தவமே {உபவாஸவிரதமே} மேன்மையானதாகும்.(8) கொடையைவிட {தானத்தைவிட} செய்வதற்கரிய வேறு செயலேதும் இல்லை. தாய்க்குத் தொண்டாற்றுவதைவிட மேன்மையான வாழ்வுமுறை {ஆசிரமம்} ஏதும் இல்லை. மூன்று வேதங்களை அறிந்தோரைவிட மேன்மையான வேறு உயிரினம் ஏதும் இல்லை. அதே போலவே, துறவே உயர்ந்த தவமாக அமைகிறது.(9)

தன்னறத்தையும், சொர்க்கத்தையும் கவனத்தில் கொள்ளவே மக்கள் தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துகின்றனர். அத்தகைய கட்டுப்பாட்டையும், அறமீட்டலையும் பொறுத்தவரையில், உணவைத் தவிர்ப்பதைக் காட்டிலும் வேறு உயர்ந்த தவமேதுமில்லை.(10) முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோரும், விலங்குகள், பறவைகள் மற்றும் அசையும், அல்லது அசையாத எந்த உயிரினமாக இருப்பினும்,(11) அனைத்தும் தவங்களில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றன, அவர்கள் அடையும் எந்த வெற்றியும் தவத்தின் மூலமே வெல்லப்படுகிறது.(12) இன்பநிலையில் தங்கள் பங்குகளைப் பெற்ற இவை (ஆகாயத்து ஒளிக்கோள்கள்), எப்போதும் தவத்தின் விளைவுகளாகவே இருக்கின்றன. தவத்தின் மூலம் இறைநிலையே {தேவத்தன்மையைக்} கூட அடையலாம் என்பதில் ஐயமில்லை” என்றார் {பீஷ்மர்}.(13)

வாய்மை! – சாந்திபர்வம் பகுதி – 162-வாய்மையின் பெருமைகளையும், பதிமூன்று வகை உண்மைகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பிராமணர்கள், முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் வாய்மையின் கடமையை {சத்தியத்தைத் தர்மமென்று} மெச்சுகிறார்கள். நான் வாய்மையை {சத்தியத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, அது குறித்து என்னிடம் உரையாடுவீராக. ஓ! மன்னா, வாய்மையின் குறியீடுகள் என்ன? அஃது எவ்வாறு அடையப்பட முடியும்? வாய்மையைப் பயில்வதால் ஈட்டப்படுவதென்ன? அஃதை எவ்வாறு ஈட்ட முடியும்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நால்வகையினரின் கடமைகளில் குழப்பம் ஏற்படுவது ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. வாய்மை என்று அழைக்கப்படுவது, இந்த நான்கு வகைகளிலும் கலப்படமில்லாத தூய நிலையில் எப்போதும் இருக்கிறது.(3) நல்லோரிடம் வாய்மையானது எப்போதும் ஒரு கடமையாகவே இருக்கிறது. உண்மையில், வாய்மை ஒரு நித்திய கடமையாகும். ஒருவன் வாய்மையை மதிப்புடன் வணங்க வேண்டும். வாய்மையே (அனைத்திற்கும்) உயர்ந்த புகலிடமாக இருக்கிறது.(4) வாய்மையே கடமை {தர்மம்}; வாய்மையே தவம்; வாய்மையே யோகம்; வாய்மையே அழிவில்லா பிரம்மம். வாய்மையானது உயர்ந்த வகையைச் சேர்ந்த ஒரு வேள்வியாகச் சொல்லப்படுகிறது. அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(5) நான் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வாய்மையின் வடிவங்களையும், அதன் முறைப்படியான வரிசையிலான குறியீடுகளையும் சொல்லப் போகிறேன்.(6)

வாய்மையை எவ்வாறு அடையலாம் என்பது குறித்தும் கேட்பது உனக்குத் தகும். ஓ! பாரதா, இவ்வுலகில் வாய்மையானது பதிமூன்று {13} வகைகளில் இருக்கிறது.(7) பாகுபாடின்மை, தற்கட்டுப்பாடு, {வன்மமின்மை [நல்லெண்ணம்]}, மன்னிக்கும்தன்மை, பணிவு, பொறை {தாங்கும் ஆற்றல்}, நற்பண்பு,(8) துறவு, தியானம், கண்ணியம், உறுதி, கருணை, தீங்கிழையாமை ஆகியன வாய்மையின் வடிவங்களாகும்[1]. ஓ! பெரும் ஏகாதிபதி, இவையே வாய்மையின் பதிமூன்று வடிவங்களாகும்.(9) வாய்மையானது, நிலையானதாகவும், அழிவில்லாததாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்கிறது. பிற அறங்களை எதிர்க்காத நடைமுறைகளின் மூலம் அஃது அடையப்படலாம் {எந்த தர்மத்திற்கும் விரோதமில்லாதது வாய்மை}. யோகத்தின் மூலமும் அஃது அடையப்படலம்.(10)விருப்பும் வெறுப்பும், காமமும் கோபமும் அழிவடையும்போது, எந்தப் பண்பின் விளைவால் ஒருவன் தனக்கும், தன் எதிரிக்கும் இடையிலும், தனக்கான நன்மைக்கும், தனக்கான தீமைக்கும் இடையில் மாற்றமில்லாத கண்ணுடன் காண இயன்றவனாகிறோனோ அதுவே பாகுபாடின்மை {ஸமதை} என்று அழைக்கப்படுகிறது.(11) அடுத்தவரின் பொருட்களை ஒருபோதும் விரும்பாமை, ஈர்ப்பு, பொறுமை, தன்னிடம் பிறர் கொள்ளும் அச்சங்களைத் தணிக்கும் வல்லமை, நோயிடம் எதிர்ப்புணர்வு[2] ஆகியவை அடங்கியதே தற்கட்டுப்பாடாகும் {தமமாகும்}. அறிவின் முலம் இஃதை {தற்கட்டுப்பாட்டை} அடையலாம்.(12) ஈகை பயில்வதில் அர்ப்பணிப்பு, அன்னைத்துக் கடமைகளையும் நோற்றல் ஆகியவை நல்லெண்ணம் {வன்மமின்மை / அமார்ஸர்யம்} என்று ஞானமுள்ளோரால் கருதப்படுகிறது. வாய்மையில் இடையறாத அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் ஒருவன் உலகளாவிய நல்லெண்ணத்தை {வன்மமின்மையை} அடைகிறான்.(13) மன்னிக்கும் மற்றும் மன்னிக்காத தன்மைகளைப் பொறுத்த வரையில், எந்தப் பண்பின் மூலம் மதிக்கத்தக்க நல்லவன் ஒருவன், ஏற்புடையதையும், ஏற்பில்லாததையும் தாங்கிக் கொள்வானோ, அதுவே மன்னிக்கும் தன்மை {க்ஷமை} என்று சொல்லப்படுகிறது. இந்த அறம் {மன்னிக்கும் தன்மை}, மெய் நடைமுறையின் மூலம் நன்கு அடையப்படுகிறது.(14) எந்த அறத்தின் விளைவால், ஒரு நுண்ணறிவு மிக்க மனதன், மனத்திலும், பேச்சிலும் அடக்கமுள்ளவனாக, பல நற்செயல்களைச் செய்து, பிறரின் நிந்தனையை ஒருபோதும் ஈட்டுவதில்லையோ அதுவே பணிவு {லஜ்ஜை} என்றழைக்கப்படுகிறது. அற உதவியின் மூலம் இஃது அடையப்படும்.(15)அறத்திற்காகவும், பொருளுக்காவும் எந்த அறம் மன்னிக்கச் செய்யுமோ அதுவே பொறை {தாங்கும் ஆற்றல் / திதிக்ஷை} என்று அழைக்கப்படுகிறது. இது மன்னிக்கும் தன்மையின் ஒரு வடிவமே ஆகும். இது பொறுமையினால் அடையப்படுகிறது, இது மக்களைத் தன்னோடு இணைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.(16) பற்றுகளையும், உலகம் சார்ந்த போருட்கள் அனைத்தையும் கைவிடுவது துறவு {த்யாகம்} என்றழைக்கப்படுகிறது. ஒருவன் கோபம் மற்றும் வன்மத்தை விலக்காமல் ஒருபோதும் துறவை அடைய முடியாது.(17) எந்த அறத்தின் விளைவால் ஒருவன் விழிப்புடனும், கவனத்துடனும் அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்வானோ, அது நற்பண்பு {ஆர்யத்தன்மை} என்றழைக்கப்படுகிறது. இதற்குக் குறிப்பிட்ட வடிவமேதும் கிடையாது, தன்னலப் பற்றுகள் அனைத்தையும் கைவிடுவதில் இஃது அடங்கியிருக்கிறது.(18) எந்த அறத்தின் மூலம் ஒருவன் மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் மாற்றமில்லாதவனாக இருக்கிறானோ, அது மனோவுறுதி {த்ருதி} என்று அழைக்கப்படுகிறது. எந்த ஞானி தன் நன்மையை விரும்புவானோ, அவன் எப்போதும் இந்த அறத்தைப் பயில்வான் {மனோவுறுதியுடனிருப்பான்}.(19) ஒருவன் எப்போதும், மன்னிக்கும் தன்மையைப் பயில்பவனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்க வேண்டும். எந்த ஞானி, இன்பம், அச்சம், கோபம் ஆகியவைற்றைக் கைவிடுவதில் வெல்கிறானோ அவன் மனோவுறுதியை அடைவதில் வெல்கிறான்.(20) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில் எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் தீங்கிழையாமை {அஹிம்ஸை} மற்றும் அன்பு {கருணை / தயை}, கொடை ஆகியவையே நல்லோரின் அழிவில்லாக் கடமைகளாக இருக்கின்றன[3].(21)வெளிப்படையாக இந்தப் பதிமூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதாகத் தெரிந்தாலும், அவை வாய்மை {சத்தியம்} என்ற ஒன்றாகவே இருக்கின்றன. ஓ! பாரதா, இவை அனைத்தும் வாய்மையை ஆதரித்து, அதற்கு வலுவூட்டுகின்றன.(22) ஓ! ஏகாதிபதி, வாய்மையின் தகுதிகளை {சத்தியத்தின் புண்ணியங்களைத்} தீர்ப்பது இயலாததாகும். இந்தக் காரணங்களுக்காகவே பிராமணர்களும், பித்ருக்களும், தேவர்களும் வாய்மையைப் போற்றுகின்றனர்.(23) வாய்மையை {சத்தியத்தை} விட உயர்ந்த கடமையேதும் கிடையாது, பொய்மையைவிடப் பயங்கரப் பாவம் வேறேதும் கிடையாது. உண்மையில், அறத்தின் அடித்தளமாகவே வாய்மை இருக்கிறது. இதன் காரணமாக ஒருபோதும் எவனும் வாய்மையை அழிக்கக்கூடாது.(24) வாய்மையில் இருந்தே, தானங்களும், வேள்விக் கொடைகளும், மூன்று வகை அக்னிஹோத்திரங்களும், வேதங்களும், அறத்திற்கு வழிவகுக்கும் அனைத்தும் எழுகின்றன.(25) ஒரு காலத்தில் ஆயிரம் குதிரை வேள்விகளைத் தராசின் ஒரு தட்டிலும், வாய்மையை மறுதட்டிலும் வைத்த போது, ஆயிரம் குதிரை வேள்விகளை விட வாய்மையே கனமிக்கத்தாக இருந்தது” என்றார் {பீஷ்மர்}.(26)

தீமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 163-தீமையின் பலத்தையும், பதிமூன்று வகைத் தீமைகளையும், இத்தீமைகளுக்குக் காரணமான அறியாமையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, கோபம், காமம், கவலை, கருத்துமுடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}, (பிறருக்குத் தீமை செய்யும்) முயற்சி {தீய இயல்பு ப்ரவிருத்தி}, பொறாமை, வன்மம் {மதம்}, செருக்கு, எரிச்சல், அவதூறு, பிறரின் நன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாமை {அஸூயை}, அன்பின்மை, அச்சம் ஆகியவை {இந்தப் பதிமூன்று தீமைகளும்} எவற்றிலிருந்து எழுமோ, அவை அனைத்தையும் {அந்த அஞ்ஞானங்களை} எனக்குச் சொல்வீராக. இவை அனைத்தின் உண்மையை விரிவாக எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1,2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தப் பதிமூன்று தீமைகளும் உயிரினங்கள் அனைத்தின் வலிமைமிக்கப் பகைவர்களாகக் கருதப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி, இவை மனிதர்களை அனைத்துப் புறங்களில் இருந்தும் அணுகி மயக்குகின்றன.(3) உணர்வற்றவனாகவோ, கவனமற்றவனாக இருக்கும் ஒரு மனிதனை இவை தூண்டி துன்புறுத்துகின்றன. உண்மையில், இவை ஒருவனைக் கண்டதும், தங்கள் இரையின் மீது பாயும் ஓநாய்களைப் போலப் பாய்ந்து வலுவாகத் தாக்குகின்றன.(4) இவற்றில் இருந்தே அனைத்து வகைத் துன்பங்களும் உண்டாகின்றன. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அனைத்து மனிதர்களும் இஃதை எப்போதும் அறிந்திருக்க வேண்டும்.(5) ஓ! பூமியின் தலைவா, நான் இப்போது அவற்றின் மூலத்தையும், அவை சார்ந்திருக்கும் பொருட்களையும், அவற்றை அழிக்கும் வழிமுறைகளைக் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா, முதலில் கோபத்தின் மூலத்தைப் பற்றி உண்மையாகவும் விரிவாகவும் சொல்கிறேன், பிளவுபடாத கவனத்துடன் கேட்பாயாக.(6)

கோபம்<1> பேராசையில் இருந்து எழுகிறது. அது பிறரின் குற்றங்களில் இருந்து பலமடைகிறது. மன்னிக்கும் தன்மையினால் {பொறுமையினால்} அது செயலிழந்து மறைகிறது.(7)

காமத்தைப்<2> பொறுத்தவரையில் அது தீர்மானத்தில் இருந்து எழுகிறது. ஞானமுள்ள மனிதன் அதிலிருந்து தீர்மானத்துடன் திரும்பினால் அது மறைந்து, மரணமடைகிறது.(8)

பொறாமை<3> என்பது கோபம் மற்றும் பேராசையில் இருந்து உண்டாகிறது. கருணை மற்றும் தன்னறிவின் விளைவால் அது மறைகிறது. அனைத்து உயிரினங்களிடம் உண்டாகும் கருணையின் விளைவாலும், (அதன் தொடர்ச்சியாக வரும் ஞானத்தால்) உலகப் பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்வதாலும் அது மறைகிறது. பிற மக்களின் குறைகளைக் காணும்போதும் அஃது எழுகிறது. ஆனால், நுண்ணறிவு கொண்ட மனிதர்களின் உண்மை ஞானத்தின் விளைவால் அது விரைவாக மறைகிறது.(9)

கருத்தில் முடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}<4> அறியாமையில் தன் மூலத்தைக் கொண்டு, பாவம் நிறைந்த நடத்தையின் மூலம் உண்டாகிறது. இதனால் தாக்குண்ட மனிதன் அறிவிற் சிறந்தவர்களிடம் (அவர்களின் தோழமையிலும், ஆலோசனையிலும்) மகிழ்ச்சியடையும்போது, அந்தத் தீமை உடனே தன் தலையை மறைத்துக் கொள்கிறது.(10)

ஓ குரு குலத்தவனே, மனிதர்கள் முரண்பட்ட சாத்திரங்களைக் காண்கிறார்கள். அந்தச் சூழ்நிலையில் இருந்து பல்வேறு வகையான செயல்பாடுகளில் விருப்பம் {தீய இயல்பு / ப்ரவ்ருத்தி}<5> எழுகிறது. உண்மை ஞானம் ஈட்டப்படும்போது, அந்த விருப்பம் தணிக்கப்படுகிறது.(11) உடல் படைத்த ஓர் உயிரினத்தின் கவலை {சோகம்}<6>, பிரிவால் விழிப்படையும் பற்றிலிருந்து உண்டாகிறது. எனினும், மாண்டோர் மீள்வதில்லை என்பதை ஒருவன் அறியும்போது (அவன் உணரும் எந்தக் கவலையும்) தணிவடைகிறது.(12) பிற மக்களின் நன்மையைத் தாங்கிக் கொள்ள இயலாமை {பொறையின்மை / பரசவசத்தன்மை}<7>, கோபம் மற்றும் பேராசையில் இருந்து உண்டாகிறது. அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையின் மூலமும், பூமி சார்ந்த அனைத்து பொருட்களையும் அலட்சியம் செய்வதாலும் அது தணிவடைகிறது.(13)

வன்மமானது {மாத்ஸர்யமானது}<8>, வாய்மையைக் கைவிட்டு, தீமையில் ஈடுபடுவதால் உண்டாகிறது. ஓ! குழந்தாய், இந்தத் தீமை, ஞானிகளுக்காகவும், நல்லோருக்காகவும் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} விளைவால் மறைகிறது.(14)

மனிதர்களில் உள்ள செருக்கானது {மதமானது}<9>, பிறப்பு, கல்வி, செழிப்பு ஆகியவற்றில் இருந்து உண்டாகிறது. எனினும், இந்த மூன்றும் உண்மையில் அறியப்படும்போது, இந்தத் தீமையானது உடனே மறைகிறது.(15)

எரிச்சலானது {ஈர்ஷையானது}<10>, காமம், இழிந்த மற்றும் அற்ப மனிதர்களின் தோழமையில் மகிழ்ச்சியடைவது ஆகியவற்றால் எழுகிறது. ஞானத்தின் விளைவால் அஃது அழிவடைகிறது.(16)

அவதூறானது {நிந்தை}<11>, மனிதர்களின் இயல்பான நடையிலிருந்து {போக்கிலிருந்து} முரண்பட்ட (நடத்தைப்) பிழைகளில் இருந்தும், வெறுப்பை வெளிப்படுத்தும் ஏற்பில்லா {இனிமையற்ற} பேச்சுகளின் மூலமும் எழுகிறது. ஓ! மன்னா, மொத்த உலகத்தையும் ஆய்வு செய்வதால் {உலகத்தை நன்றாகப் பார்த்த பின்} அது மறைகிறது.(17)

தீங்கிழைப்பவன் பலமிக்கவனாக இருக்கும்போதும், தீங்கிழைக்கப்பட்டவன் அத்தீங்குக்குப் பழிதீர்க்க இயலாதபோதும் வெறுப்பு {அஸூயை}<12> வெளிப்படுகிறது. எனினும் அன்புடைமையின் மூலம் அஃது அடக்கப்படுகிறது.(18)

யாவரால் இவ்வுலகம் நிறைந்திருக்கிறதோ, அந்த ஆதரவற்ற, பரிதாபத்திற்குரிய மக்களைக் காணும்போது இரக்கம் {தயை}<13> உண்டாகிறது. ஒருவன் அறத்தின் வலிமையைப் புரிந்து கொள்ளும்போது உணர்ச்சிவயம் மறைகிறது[1].(19)பேராசையானது {அச்சம்}<14>, அறியாமையில் இருந்தே அனைத்து உயிரினங்களிலும் எழுகிறது. இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் நிலையாமையைக் கண்டு அதுவும் அழிவடைகிறது[2].(20) ஆன்ம அமைதியால் மட்டுமே இந்தப் பதிமூன்று குற்றங்களையும் அடக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பதிமூன்று குற்றங்களும்தான் திருதராஷ்டிரன் மகன்களைக் களங்கப்படுத்தின. வாய்மையை எப்போதும் விரும்பிய நீ, பெரியோரிடம் நீ கொண்ட மதிப்பின் விளைவால் இந்தத் தீமைகள் அனைத்தையும் வென்றிருக்கிறாய்” என்றார் {பீஷ்மர்}.(21)

கொடூரன்! – சாந்திபர்வம் பகுதி – 164-கொடூரர்களின் இயல்புகளையும், குறியீடுகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நல்லோரை நான் கண்டதன் விளைவால் நல்லுறவு என்ன என்பதை நான் அறிவேன். இருப்பினும், ஓ! பாரதரே, தீங்கு செய்பவரையோ {கொடூரர்களையோ}, அவர்களது செயல்களின் இயல்பையோ நான் அறிந்ததில்லை.(1) உண்மையில் கொடூரச் செயல்களைச் செய்யும் தீய மனிதர்களை, முட்கள், குழிகள் மற்றும் நெருப்பைத் தவிர்ப்பது போல மக்கள் தவிர்க்கிறார்கள்.(2) ஓ! பாரதரே, தீங்கு செய்பவன் {கொடூரன்}, இம்மை மற்றம் மறுமை ஆகிய இரண்டிலும் (துன்பத்தில்) எரிவான் என்பது நிச்சயம் தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஓ! குருகுலத்தவரே, உண்மையில் அத்தகையவர்களின் செயல்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(3)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீமை விளைவிப்போர் {குரூரர்கள்} எப்போதும் தீய செயல்களைச் செய்பவர்களாகவும், அவற்றைச் செய்வதற்குத் தடுக்கப்பட முடியாத உணர்வைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பிறரைப் பழித்து, அவதூறு செய்வதில் ஈடுபடுவார்கள். தங்களுக்கு உரியவை கிடைக்காமல் வஞ்சிக்கப்படுவதாகத் தங்களை எப்போதும் கருதிக் கொள்வார்கள்.(4)

கொடூரன், தன் ஈகைச் செயல்களைத் தானே தற்பெருமை பேசுவான். அவன் மிக இழிந்தவனாவான். அவன் வஞ்சனை நிறைந்தவனாகவும், தந்திரம் நிரம்பியவனாகவும் இருப்பான். பிறருக்கு உரியவற்றை அவன் ஒருபோதும் கொடுக்கமாட்டான். அவன் ஆணவம் கொண்டவனாக இருப்பான். அவன் தீய தோழமையுடன் சேர்ந்து எப்போதும் தற்பெருமை நிறைந்தவனாக இருப்பான்[2].(5)தான் சந்திக்கும் அனைவரையும் ஐயுற்று, அவர்களிடம் அச்சமடைபவனாக இருப்பான். அவன் மூட புத்தி கொண்டவனாக இருப்பான். அவன் கஞ்சத்தனத்துடன் இருப்பான். அவன் தன் உதவியாளர்களைப் புகழ்வான். காடுகளில் ஓய்ந்திருக்கும் துறவிகள் அனைவரிடமும் இயல்புக்கு மாறான பகைமையையும், வெறுப்பையும் வளர்ப்பான்.(6)

அவன் பிறருக்குத் தீங்கிழைத்து மகிழ்வான். அவன், பிறரின் தகுதிகளையும், குற்றங்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் முற்றான அலட்சியத்துடன் இருப்பான். அவன் பொய்மை நிறைந்தவனாக இருப்பான். அவன் நிறைவில்லாதவனாக இருப்பான். அவன் ஆதீத பேராசையுடையவனாக எப்போதும் கொடூரச் செயல்களையே செய்வான்.(7)

அத்தகைய மனிதன், பிறர் அனைவரையும் தன்னைப் போலவே {கொடூரர்களாக} நினைத்துக் கொண்டு, ஒருவரையும் ஒருபோதும் நம்பாமல், அறம் சார்ந்தவர்களையும், சாதனையாளர்களையும் ஒரு பூச்சியைப் போல மதிப்பான்.(8)

அத்தகைய மனிதன் {கொடூரன்}, பிற மக்கள் மீது சாட்டப்படும் குற்றங்கள் ஐயுறத்தக்க அளவில் இல்லையெனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அறிவித்துக் கொண்டே இருப்பான். எனினும், அத்தகைய குற்றங்களில் தானே களங்கமுடையவனாக இருப்பினும், அவற்றில் இருந்து தான் அறுவடை செய்யும் பயன்களின் காரணமாக, அவற்றைக் குறித்துச் சிறிதும் குறிப்பிடாமல் இருப்பான்.(9)

தனக்கு நன்மை செய்தவனை, புத்திசாலித்தனத்துடன் வஞ்சித்து அவனை ஏமாளியாகக் கருதுவான். நன்மை செய்தவனுக்கு எந்தக் காலத்திலாவது எந்தக் கொடையாவது கொடுத்திருந்தால் அவன் வருத்தத்தால் நிறைவான்.(10)

விருப்பம் நிறைந்த கண்களுடன் மனிதர்கள் நின்று கொண்டிருந்தாலும் கூடத் தனிமையில் அமைதியாக உண்ணத்தக்கவற்றையும், பானங்களையும், பிறவகை உணவுகளையும் உண்பவனைக் கொடூரனெனவும், தீயோனெனவும் அறிவாயாக.(11)

மறுபுறம், எவன் {உணவின்} முதல் பகுதியைப் பிராமணர்களுக்குக் காணிக்கையளித்து, எஞ்சியவற்றை நண்பர்கள், சொந்தங்கள் ஆகியவர்களுடன் பகிர்ந்து உண்கிறானோ, அவன் மறுமையில் பேரின்ப நிலையையும், இம்மையில் முடிவிலா மகிழ்ச்சியையும் அடைவான்.(12)

ஓ! பாரதர்களின் தலைவா, நான் இப்போது தீய மற்றும் கொடூர மனிதனின் குறியீடுகளைக் குறித்துச் சொல்லியிருக்கிறேன். அத்தகையவன் எப்போதும் ஞானியால் தவிர்க்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(13)

பிராமண விதிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 165-பிராமணர்கள் தொடர்புடைய நித்திய விதிமுறைகளை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, (கள்வர்களால்) பொருள் கொள்ளையடிக்கப்பட்டவர்களும், வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்களும், வேதங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர்களும், அறத்தகுதியை ஈட்ட விரும்புபவர்களும், ஆசான்களுக்கும், பித்ருக்களுக்கும் உரிய தங்கள் கடமைகளை வெளிப்படுத்துபவர்களும், சாத்திரங்களையும் ஓதுவதிலும், கற்பதிலும் தங்கள் நாட்களைக் கடத்துபவர்களுமான பக்திமிக்க ஏழை பிராமணர்களுக்கு, செல்வமும், அறிவும் கொடுக்கப்பட வேண்டும்[1].(1,2) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஏழ்மையில் இல்லாத பிராமணர்களுக்குத் தக்ஷிணை[2] மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (தங்கள் பாவச் செயல்களின் விளைவால்) பிராமண நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு வேள்விப் பீடத்தின் எல்லைகளுக்கு வெளியே சமைக்கப்படாத உணவு கொடுக்கப்பட வேண்டும்[3].(3) வேதங்களும், பெருங்கொடைகளுடன் கூடிய வேள்விகள் அனைத்தும் பிராமணர்களே ஆகும்[4]. அற உந்துதல்களால் தூண்டப்படும் அவர்கள் வேள்விகளைச் செய்வதில் ஒருவரையொருவர் விஞ்சவே விரும்புகின்றனர். எனவே, மன்னன் பல்வேறு வகைகளிலான மதிப்புமிக்கச் செல்வத்தை அவர்களுக்குக் கொடைகளாகக் கொடுக்க வேண்டும்.(4) மூன்று வருடங்கள், அல்லது அதற்கு மேலும் தன் குடும்பத்திற்கு உணவூட்டும் வகையில் போதுமான கிடங்குகளைக் கொண்ட பிராமணன், சோமத்தைப் பருகத் தகுந்தவனாவான்[5].(5)

அரியணையில் ஓர் அறம்சார்ந்த மன்னனே இருந்த போதிலும், எவராலும், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் தொடங்கப்பட்ட வேள்வி, மதிப்பீடு செய்யப்பட்ட செலவில் நான்கில் ஒரு பாகம் இல்லாததால் நிறைவடையாமல் இருந்தால்,(6) அப்போது மன்னன், அந்த வேள்வியை நிறைவு செய்வதற்காக, பெருமளவில் கால்நடைகளை வைத்திருப்பவனும், வேள்வி செய்யாமல் இருப்பவனும், சோமம் பருகுவதைத் தவிர்ப்பவனுமான ஒரு வைசியனின் சொந்தங்களிடமிருந்து {குடும்பத்திலிருந்து} செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(7) ஒரு சூத்திரனுக்கு ஒரு வேள்வியைச் செய்யும் ஆற்றல் கிடையாது. எனவே, ஒரு மன்னன், நமது சூத்திர வீடு ஒன்றில் இருந்து (அத்தகைய காரியத்திற்காகச் செல்வத்தை) எடுத்துக் கொள்ளலாம்[6].(8) நூறு பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாதவன், ஆயிரம் பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாமல் தவிர்ப்பவன் ஆகியோரின் சொந்தங்களிடம் இருந்து மன்னன் எந்தத் ஐயுணர்வுமின்றிச் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(9) ஈகை பயிலாத அத்தகையவனின் செல்வத்தை மன்னன் எப்போதும் வெளிப்படையாகவே எடுக்க வேண்டும். இவ்வழியில் செயல்படுவதால் அந்த மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(10)நான் சொல்வதை இன்னும் கேட்பாயாக. எந்தப் பிராமணன் இல்லாமையால் ஆறு வேளை உணவைத் தவிர்த்திருப்பானோ[7], அவன் நாளைக்கான சிந்தனை ஏதுமில்லாமல் இன்றைய காரியத்தில் மட்டுமே கவனம் கொள்ளும் மனிதனின் விதிப்படி {அஸ்வஸ்த விதிப்படி}[8], உமித் தொட்டியில், அல்லது களத்தில், அல்லது தோட்டத்தில், அல்லது ஒரு தாழ்ந்த மனிதனின் வேறு எந்த இடத்தில் இருந்தும் கூட ஒரே ஒரு வேளைக்குத் தேவையான உணவை மட்டும் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்ளலாம். எனினும், கேட்கப்பட்டாலும், கேட்கப்படாவிட்டாலும் இந்தத் தன் செயலைக் குறித்து மன்னனுக்குத் தெரிவிக்க வேண்டும்.(11,12) மன்னன் கடமையை அறிந்தவனாக இருந்தால், அத்தகைய பிராமணனுக்கு எந்தத் தண்டனையும் வழங்கக்கூடாது. அவன் ஒரு பிராமணன், ஒரு க்ஷத்திரியனின் குற்றத்தினால் மட்டுமே பசியால் பீடிக்கப்படுகிறான் என்பதை நினைவுகூர வேண்டும்[9].(13) மன்னன் ஒரு பிராமணனின் கல்வி மற்றும் நடத்தையை உறுதி செய்து கொண்டு, அவனுக்கு வாழ்வாதாரத்தை அளித்து, தன் மடியில் பிறந்த பிள்ளையைப் பாதுகாக்கும் ஒரு தந்தையைப் போலவே அவனைப் பாதுகாக்க வேண்டும்.(14) ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒருவன் (விலங்கு அல்லது சோம வேள்வியைச் செய்ய முடியாதவனாக இருந்தால்} வைசியாநர {வைஸ்வாநரி} வேள்வியைச் செய்ய வேண்டும். அறமறிந்தோர், மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையானது, அறத்தை அழிக்காது என்று சொல்கின்றனர்.(15)விஸ்வதேவர்கள், சத்யஸ்கள், பிராமணர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர், துயர்மிக்கக் காலங்களில் மரணத்திற்கு அஞ்சி, சாத்திரங்களில் மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதில் எந்த ஐயுணர்வு கொள்வதில்லை.(16) எனினும், எந்த மனிதன் தொடக்க நிலையில் வாழ இயன்றவனாக இருப்பினும், மாற்றைக் கைக்கொள்கிறானோ அவன் தீய மனிதனாகக் கருதப்படுகிறான், மேலும் அவன் ஒருபோதும் சொர்க்கத்தில் எந்த இன்பத்தையும் அடைய மாட்டான்.(17) வேதங்களை அறிந்தவனான ஒரு பிராமணன், ஒரு மன்னனிடம் தன் சக்தியையும், அறிவையும் குறித்து ஒருபோதும் பேசக்கூடாது. (இஃதை ஒரு மன்னன் தானே உறுதி செய்ய வேண்டும்).(18) மேலும் ஒரு பிராமணனின் சக்தியையும், மன்னனின் சக்தியையும் ஒப்பிட்டால், முன்னவனே {பிராமணனே} பின்னவனை {மன்னனை} விட மேன்மையானவனாக எப்போதும் காணப்படுவான்.(19) இந்தக் காரணத்தினாலேயே பிராமணர்களின் சக்தியை மன்னன் தாங்கிக் கொள்வதோ, தடுப்பதோ அரிதானதாக இருக்கும். பிராமணன் படைப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், விதிசமைப்பவனாகவும், தேவனாகவும் கருதப்படுகிறான்.(20)

ஒரு பிராமணனிடம் இழிமொழியோ, வெற்றுப் பேச்சுக்களோ பேசப்படக்கூடாது. க்ஷத்திரியன் தன் கடினங்கள் அனைத்தையும் தன் கரங்களின் வலிமையாலேயே கடக்க வேண்டும்.(21) வைசியனும், சூத்திரனும் தங்கள் கடினங்களைச் செல்வத்தின் மூலம் வெல்ல வேண்டும்; பிராமணன் மந்திரங்களாலும், ஹோமங்களாலும் வெல்ல வேண்டும். கன்னிகை, இளம்பெண், மந்திரங்களை அறியாதவன், அறியாமை கொண்ட அற்பன்,(22) அல்லது தூய்மையற்றவன் ஆகிய இவர்கள் வேள்வி நெருப்பில் காணிக்கைகளை ஊற்றத்தகுந்தவர்களல்ல {ஆகுதி அளிக்கத்தக்கவர்களல்ல}. இவர்களில் எவராவது அவ்வாறு செய்தால், யாருக்காக அதைச் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்து அவனோ, அவளோ, நிச்சயம் நரகத்தில் வீழ்வார்கள். இதன் காரணமாகவே, வேதங்களை அறிந்தவனும், வேள்விகள் அனைத்திலும் திறம்பெற்றவனுமான ஒரு பிரமாணனைத் தவிர வேறு எவனும், வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவனாகக் கூடாது.(23) வேள்வி நெருப்பைத் தூண்டியவனுக்கு, {வேள்வியில்} அர்ப்பணிக்கப்பட்ட உணவைத் தக்ஷிணையாகக் கொடுக்கவில்லையெனில் அவன் வேள்வி நெருப்பைத் தூண்டுபவனாக மாட்டான் என்று சாத்திரம் அறிந்தோர் சொல்கின்றனர்.(24) ஒருவன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உரியஅர்ப்பணிப்புடன் (சாத்திரங்களில் சுட்டிக்காட்டப்படும்) தகுந்த செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். எந்த வேள்விகளில் தக்ஷிணை கொடுக்கப்படவில்லையே, அந்த வேள்வியின் தேவர்களை ஒருவன் ஒருபோதும் வணங்கக்கூடாது[10].(25)தக்ஷிணையுடன் நிறைவு செய்யப்படாத ஒரு வேள்வியானது, (புண்ணியத்தை உண்டாவக்குவதற்குப் பதில்) ஒருவனுடைய பிள்ளைகள், விலங்குகள் மற்றும் சொர்க்கத்திற்கு அழிவையே உண்டாக்கும். அத்தகைய ஒரு வேள்வி ஒருவனுடைய புலன்கள், புகழ், சாதனைகள், ஆயுள் ஆகியவற்றை அழிக்கும்.(26) பருவகாலத்தில் {மாதவிடாய் காலத்தில்} உள்ள பெண்களுடன் கிடக்கும் பிராமணர்கள், அல்லது வேள்விகளை ஒருபோதும் செய்யாதவர்கள், அல்லது வேதங்களை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செயல்பாட்டில் சூத்திரர்களாகவே கருதப்படுகிறார்கள்[11].(27) ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்ட பிராமணன், நீருக்காக ஒரே ஒரு கிணறு மட்டுமே கொண்ட ஒரு கிராமத்தில் பனிரெண்டு வருடங்கள் வசித்தால், அவன் செயல்பாட்டில் சூத்திரனாகிறான்.(28) திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு கன்னிப்பெண்ணைத் தன் படுக்கைக்கு அழைக்கும் பிராமணன், மதிக்கத்தக்கவன் என்றெண்ணி ஒரு சூத்திரனுடன் ஒரே பாயில் அமர்ந்த பிராமணன், காய்ந்த புற்களாலான படுக்கையில் ஏதாவதொரு க்ஷத்திரியன் அல்லது வைசியனின் அருகிலும் அமர்ந்து, அவனையும் அதே வகையில் மதிக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தூய்மையடைகிறான். ஓ! மன்னா, இது குறித்து என் வார்த்தைகளைக் கேட்பாயாக.(29) தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொண்டாற்றியோ, அல்லது ஒரே விளையாட்டு விளையாடியோ, அல்லது ஒரே படுக்கையில் கிடந்தோ ஓர் இரவைக் கழிப்பதால் ஒரு பிராமணனுக்கு உண்டாகும் பாவமானது, காய்ந்த புற்களாலான படுக்கையில் ஒரு க்ஷத்திரியன், அல்லது ஒரு வைசியனின் பின்னால் மூன்று வருடங்கள் தொடர்ந்து அமர்வதன் மூலம் தூய்மையடைகிறது.(30)கேலிக்காகப் பேசப்படும் பொய் பாவமாகாது; ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு பெண்ணிடமோ, திருமணத்தின்போதோ, தன் ஆசானின் நன்மைக்காகவோ, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காகவோ சொல்லப்படும் பொய்களும் பாவமாகாது. இந்த ஐவகைப் பொய்களும் பாவமாகாது என்று சொல்லப்படுகின்றன.(31) இழிதொழில் செய்வோனிடம் இருந்தும் கூட, அர்ப்பணிப்பு மற்றும் மதிப்புடன் கூடிய ஒருவனால் பயன்நிறைந்த அறிவை அடையமுடியும். ஒருவன் தங்கத்தைத் தூய்மையற்ற ஓர் இடத்தில் இருந்தும் எந்த ஐயுணர்வு இன்றி எடுக்கலாம். தன் பாலினத்தில் {பெண்களில்} ரத்தினமான ஒரு பெண்ணை ஒரு தீய இனத்தில் இருந்தும்கூட (மனைவியாக) எடுத்துக் கொள்ளலாம். நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அமுதம் பருகப்படலாம் எனும்போது; சாத்திரங்களின் படி பெண்கள், ரத்தினங்கள் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்கள், தண்ணீர் ஆகியனவும் தூய்மையற்றவையல்ல.(33) பிராமணர்கள் மற்றும் பசுக்களின் நன்மைக்காகவும், வர்ணக்கலப்பேற்படும் சந்தர்ப்பங்களிலும், ஒரு வைசியன் கூடத் தன் பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுக்கலாம்.(34) மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது ஆகிய பாவங்கள் தெரிந்து செய்யப்பட்டால் அதற்கான பாவக்கழிப்பு {பரிகாரம்} ஏதும் இல்லை. அவர்களுக்கான ஒரே பாவக்கழிப்பு மரணமேயாகும்.(35)

தங்கத்தைக் களவாடுவது, ஒரு பிராமணனின் உடைமையைக் களவாடுவது ஆகியவற்றுக்கும் அதேயே {மரணத்தையே பரிகாரமாகச்} சொல்லலாம். மதுபானம் பருகுவது, கலவியிலிருந்து விலக்கப்பட்டோருடன் கலவி கொள்வது,(36) வீழ்ந்தோருடன் கலப்பது, (பிற மூன்று வகையினரில் ஒருவன்) ஒரு பிராமணிப் பெண்ணுடன் கலவி கொள்வது ஆகியவற்றின் மூலம் அவன் தவிர்க்கவேமுடியாத அளவுக்கு வீழ்கிறான்.(37) வீழ்ந்தோருடன் வேள்வி காரியங்கள், கல்வி மற்றும் கலவியில் ஒரு முழு வருடம் கலந்திருந்தால், அவன் வீழ்ந்தவனாகிறான் {பதிதனாகிறான்}. எனினும், வீழ்ந்தோருடன் ஒருவன் ஒரே வாகனத்தில் செல்வது, ஒரே இருக்கையில் அமர்வது, ஒரே வரிசையில் உண்பது ஆகிய கலப்பினால் அவன் வீழ்ந்தவனாகமாட்டான்.(38) மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து முக்கியப் பாவங்களைத் தவிர்த்து, மற்ற பாவங்கள் அனைத்திற்கும் பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} கொடுக்கப்பட்டிருக்கின்றன. விதிப்படி அந்தப் பாவங்களுக்கான பாவக்கழிப்புகளைச் செய்த பிறகு, ஒருவன் மீண்டும் அவற்றில் ஈடுபடக்கூடாது.(39) இந்த ஐந்து பாவங்களில் முதல் மூன்று பாவங்களில் (மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தல்) குற்றவாளிகளாக இருப்போரின் வழக்கில், அவர்கள் இறந்து அவர்களது ஈமச்சடங்குகள் செய்யப்படாமல் இருந்தாலும்கூட (உயிரோடு இருக்கும்) அவர்களது சொந்தங்கள் உணவை எடுத்துக் கொள்வதிலோ, ஆபரணங்களை அணிந்து கொள்வதிலோ எந்தத் தடையும் இல்லை. உயிரோடு இருக்கும் சொந்தங்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் இதுபோன்ற காரியங்களில் எந்த ஐயுணர்வு கொள்ளக்கூடாது.(40)

உண்மையில், அந்தப் பாவிகள் பாவத்தணிப்புச் செய்வது வரை, அறவோர் அவர்களுடன் பேசவும் கூடாது[12]. பாவம் நிறைந்து செயல்பட்ட ஒரு மனிதன், அதற்பிறகு அறம்சார்ந்து நடந்தும், தவங்களின் மூலமும் தன் பாவத்தை அழிக்க வேண்டும்.(41) ஒரு திருடனைத் திருடன் என்று அழைப்பதால் ஒருவன் திருட்டின் பாவத்தை இழைக்கிறான். எனினும், திருடனல்லாத ஒருவனைத் திருடன் என்று அழைப்பதன் மூலம் ஒருவன் திருட்டின் இரண்டு மடங்கு பாவத்தை இழைக்கிறான்.(42) கற்பை இழக்கும் கன்னி பிரம்மஹத்தியின் {பிராமணனைக் கொன்ற பாவத்தில்} நான்கில் மூன்று பாகப் பாவத்தை செய்தவளாகிறாள், அதேவேளையில் அவளது கற்பழித்தவன் பிரம்மஹத்தியில் நான்கில் ஒரு பாகப் பாவத்தை செய்தவனாகிறான்.(43) பிராமணர்களை அவதூறு செய்வதன் மூலம், அல்லது அவர்களைத் தாக்குவதன் மூலம் ஒருவன் நூறு வருடங்கள் புகழ்க்கேட்டில் மூழ்குகிறான்.(44) ஒரு பிராமணனைக் கொல்வதால் ஒருவன் ஆயிரம் வருடங்களுக்கு நரகில் மூழ்குகிறான். எனவே, ஒருவரும் பிராமணனை இழித்துப் பேசவோ, கொல்லவோ கூடாது.(45)ஒருவன் ஒரு பிராமணனை ஆயுதத்தால் தாக்கினால், அவனது காயத்தில் இருந்து பாய்ந்த குருதியில் நனைந்த மண்ணின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் நரகத்தில் வாழ வேண்டும்.(46) கருவைக் கொன்ற குற்றவாளி ஒருவன், பசுகளுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போரிட்டு அடையும் காயங்களால் மரணமடைந்தால் தூய்மையடைகிறான். அவன் சுடர்மிக்க நெருப்புக்குள் தன்னை வீழ்த்திக் கொள்வதன் மூலமும் தூய்மையடையலாம்[13].(47) மதுபானம் பருகுபவன், கொதிக்கும் மதுபானத்தைப் பருகுவதால் தூய்மையடைகிறான். அந்தச் சூடான பானத்தால் எரிக்கப்பட்டு அடையும் மரணத்தினால் அவன் மறுமையில் தூய்மையடைகிறான்[14]. இத்தகைய பாவத்தால் களங்கமடைந்த ஒரு பிராமணன், இத்தகைய போக்கின் மூலம் இன்ப உலகங்களை அடைவானேயன்றி வேறு வகையில் இல்லை.(48)ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய தீய ஆன்மா கொண்ட இழிந்த அற்பன், கொதிக்கும் இரும்பு பெண் சிலையை அணைத்துக் கொள்வதன் விளைவால் ஏற்படும் மரணத்தின் மூலம் தூய்மையடைகிறான்.(49) அல்லது தன் அங்கத்தையும் {ஆண்குறியையும்}, விதைப்பையையும் வெட்டிக் கொண்டு அவற்றைத் தன் கரங்களில் ஏந்தியபடியே தென்மேற்காகச் சென்று அவன் தன் உயிரை விட வேண்டும்.(50) அல்லது, ஒரு பிராமணனுக்கு நன்மை செய்வதின் மூலம் மரணத்தைச் சந்தித்தும் அவன் தன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம். அல்லது ஒரு குதிரை வேள்வி, அல்லது கோஸவ வேள்வி, அல்லது அக்நிஷ்டோம {மருத்ஸோம} வேள்வி ஆகியவற்றைச் செய்து அவன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த மதிப்பை மீட்கலாம்.(51)

பிராமணனைக் கொன்றவன், பனிரெண்டு வருடங்களுக்குப் பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, கொல்லப்பட்டவனின் மண்டையோட்டை எப்போதும் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அனைவருக்கும் தன் பாவத்தை அறிவிக்க வேண்டும்.(52) இவ்வழியைப் பின்பற்றித் தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் அவன் ஒரு தவசியின் வாழ்வை வாழ வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்ணை, அவள் நிலையை அறிந்தே கொன்றவனுக்கு இந்தப் பாவக்கழிப்பே கொடுக்கப்பட்டிருக்கிறது.(53) அத்தகைய பெண்ணை அறிந்தே கொல்பவன் பிரம்மஹத்தியைப் போன்று இருமடங்கு பாவம் செய்தவனாவான். மதுபானம் பருகியவன், அற்ப அளவே உணவை உண்டு, பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று, வெறுந்தரையில் உறங்கி,(54) அக்நிஷ்டோமத்துக்கு அடுத்த வேள்வியை மூன்று வருடங்களுக்கு மேல் செய்ய வேண்டும். பிறகு அவன் (ஒரு நல்ல பிராமணனுக்கு) ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். இவை யாவற்றையும் செய்வதால் அவன் தன் தூய்மையை மீண்டும் அடைவான்.(55)

ஒரு வைசியனைக் கொன்றால், அவன் இரண்டு வருடங்களுக்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்கள் மற்றும் ஒரு காளையைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு சூத்திரனைக் கொன்றால், அவன் ஒரு வருடத்திற்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்களையும், ஒரு காளையையும் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு நாய், அல்லது கரடி, அல்லது ஒட்டகம் ஆகியவற்றைக் கொன்ற ஒருவன், ஒரு சூத்திரனைக் கொன்றதற்கு விதிக்கப்பட்ட அதே தவத்தைச் செய்ய வேண்டும்.(56) ஓ! மன்னா, பூனை, காடை, தவளை, காக்கை, பாம்பு, எலி ஆகியவற்றைக் கொன்றால், ஒருவன் விலங்கைக் கொன்ற பாவத்தை அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.(57) நான் இப்போது பிறவகைப் பாவக்கழிப்புகளை வரிசையாகச் சொல்லப் போகிறேன். சிறு பாவங்கள் அனைத்திற்கும், ஒருவன் வருந்த வேண்டும், அல்லது ஒருவருடம் ஏதாவது நோன்பை நோற்க வேண்டும்.(58) வேதங்களை அறிந்த ஒரு பிராமணனின் மனைவியோடு கலவி கொண்ட ஒருவன், நாளின் நான்காம் பகுதியில் சிறு உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு மூன்று வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பிருக்க வேண்டும். (தன் மனைவியல்லாத) வேறு பெண்ணுடன் கலவி கொண்ட ஒருவன் அதே போன்ற நோன்பை இரு வருடங்கள் இருக்க வேண்டும்.(59) ஒரு பெண்ணின் தோழமையில், அவள் அமர்ந்த அதே இடத்தில் அவளோடு அமர்ந்து, அல்லது அதே இருக்கையில் அமர்ந்து இருந்தால், ஒருவன் மூன்று நாட்கள் நீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும். இதைச் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம். சுடர்மிக்க நெருப்பை (தூய்மையற்ற பொருட்களை வீசுவதன் மூலம்) களங்கப்படுத்துபவனுக்கும் அதே பாவக்கழிப்பே சொல்லப்பட்டிருக்கிறது.(60)

ஓ! குரு குலத்தோனே, போதுமான காரணமின்றித் தன் தந்தை, அல்லது தாய், அல்லது ஆசான் ஆகியோரைக் கைவிடுபவன், நிச்சயம் வீழ்ந்தவனாவான் என்பதே சாத்திரங்களின் முடிவு. பிறமனையுறவு கொண்ட {விபச்சாரம் செய்த} குற்றவாளியான ஒரு மனைவி, அல்லது சிறையில் அடைக்கப்பட்ட ஒருவன் ஆகியோருக்கு விதிப்படி உணவு மற்றும் உடைகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிறமனையுறவு குற்றத்தில் ஓர் ஆணுக்கு விதிக்கப்பட்ட நோன்புகள், அதே குற்றத்தைச் செய்த ஒரு பெண்ணாலும் நோற்கப்பட வேண்டும்.(61,62) மேன்மையான வர்ணத்தைச் சேர்ந்த கணவனைக் கைவிட்டு, (தாழ்ந்த வகையைச் சேர்ந்த) ஒரு தீயவனுடன் கலவி புரிந்த ஒரு பெண், ஒரு பெரிய பார்வையாளர் கூட்டத்தைக் கொண்ட ஒரு பொதுவான இடத்தில் வைத்து நாய்களால் கடிக்கச் செய்யப்பட வேண்டும்.(63) ஒரு ஞானமிக்க மன்னன், பிறமனையுறவு கொண்ட ஆணை, பழுக்கக் காய்ச்சிய இரும்புப் படுக்கையில் கிடத்தி, அதன் கீழே விறகுகளை வைத்து அந்தப் பாவியை எரிக்க வேண்டும்.(64) ஓ! மன்னா, பிறமனையுறவு கொண்ட பெண் குற்றவாளிக்கும் இதே தண்டையே விதிக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தீய பாவி, தனக்குச் சொல்லப்பட்ட பாவக்கழிப்பை ஒரு வருடத்திற்குள் செய்யவில்லையோ, அவனை அந்தப் பாவத்தைப் போன்ற இரு மடங்கு பாவம் பீடிக்கும்.(65)

அத்தகைய மனிதனோடு தொடர்புடைய ஒருவன் இரண்டு வருடங்கள் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துப் பிச்சையெடுத்து வாழ்ந்து இந்தப் பூமியில் உலவ வேண்டும். நான்கு வருடங்களாக ஒரு பாவியோடு தொடர்புடைய ஒருவன், ஐந்து வருடங்களுக்கு அத்தகைய வாழ்வு முறையைப் பின்பற்றி வாழ வேண்டும்.(66) அண்ணனுக்கு முன்பு தம்பி திருமணம் செய்து கொண்டால், அந்தத் தம்பி, அண்ணன், அந்தப் பெண் ஆகிய மூவரும், அத்தகைய திருமணத்தின் விளைவால் வீழ்ந்தவர்களாவார்கள்.(67) இவர்கள் அனைவரும், வேள்வி நெருப்பைப் புறக்கணித்தவனுக்குப் பரிந்துரைக்கப்படும் நோன்புகளை நோற்க வேண்டும், அல்லது, ஒரு மாதத்திற்குச் சாந்திராயண[15] நோன்பைப் பயில வேண்டும், அல்லது, வேறு எந்த வலிமிக்க நோன்பையாவது பயின்று தன் பாவத்திலிருந்து தூய்மையடைய வேண்டும்.(68) திருமணம் செய்து கொண்ட தம்பி, திருமணமாகாத தன் அண்ணனுக்குத் தன் மனைவியை {மருமகளாகக்} கொடுக்க வேண்டும். அதன் பிறகு தன் அண்ணனின் அனுமதியோடு, அவன் தன் மனைவியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்[16]. இத்தகைய வழிமுறைகளின் மூலம் அந்த மூவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடையலாம்.(69) ஒரு பசுவைத் தவிர வேறு விலங்குகளைக் கொல்வதன் மூலம் அந்தக் கொலையாளி களங்கப்பட்டவனாக மாட்டான். தாழ்ந்த விலங்குகள் அனைத்தின் மீதும் மனிதனுக்கு ஆளுமை உண்டு என்பதைக் கற்றோர் அறிவர்.(70)ஒரு பாவி, தன் கரத்தில் சாமரத்தையும்[17], மண்குடத்தையும் ஏந்திக் கொண்டு தன் பாவத்தை அறிவித்துக் கொண்டே அலைய வேண்டும். அவன் ஒரு நாளைக்கு, ஏழு குடும்பங்களில் மட்டுமே பிச்சையெடுத்து,(71) அவ்வாறு ஈட்டப்பட்டதைக் கொண்டு மட்டுமே வாழ வேண்டும். இவ்வாறு பனிரெண்டு நாட்கள் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைவான். தன் கரத்தில் சாமரத்தை ஏந்த முடியாதவன், இந்த நோன்பைப் பயிலும்போது, (மேற்குறிப்பிட்டவாறு) பிச்சையெடுக்கும் நோன்பை ஒரு முழு வருடத்திற்கு நோற்க வேண்டும்.(72) மனிதர்களுக்கு மத்தியில் இத்தகைய பாவக்கழிப்புகளே சிறந்தவை. ஈகை பயில இயன்றவர்கள், இத்தகைய வழக்குகள் அனைத்திலும் விதிக்கப்பட்ட ஈகையைப் பயில வேண்டும்.(73) நம்பிக்கையும், நன்னடத்தையும் கொண்டவர்கள், ஒரு பசுவை மட்டுமே கொடுப்பதால் தூய்மையடைவார்கள்.(74) நாய், பன்றி, மனிதன், சேவல், ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியையோ, உடல் கழிவுகளையோ உண்டாலும் சிறுநீரைக் குடித்தாலும் ஒருவன் புனித நூல் {பூணூல்} அணியும் நிகழ்வை {உபநயனத்தை} மீண்டும் செய்து கொள்ள வேண்டும்.(75) சோமம் பருகும் பிராமணன், மது அருந்தியவனின் வாயில் இருந்து மதுவின் மணத்தை நுகர்ந்தால், அவன் மூன்று நாளைக்கு வெண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும்.(76) அல்லது, மூன்று நாட்களுக்கு வெண்ணீரைக் குடித்தும், காற்றை உண்டும் வாழ வேண்டும். அறியாமையிலோ, மடமையினாலோ ஒருவனால், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் செய்யப்படும் பாவங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நித்திய விதிமுறைகளே இவை” என்றார் {பீஷ்மர்}”[18].(77)

வாளின் வரலாறு! – சாந்திபர்வம் பகுதி – 166-வாள் எவ்வாறு உண்டானது, அதன் ஆசான் யார் எனப் பீஷ்மரிடம் கேட்ட நகுலன்; வாளின் மூலம் உள்ளிட்ட வரலாற்றை நகுலனுக்குச் சொன்ன பீஷ்மர்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் செய்த} இந்த உரையாடல் முடிந்ததும், சாதனை செய்த வாள்வீரனான நகுலன், கணைப்படுக்கையில் கிடக்கும் குரு குலத்துப் பாட்டனிடம் இவ்வாறு கேள்வி கேட்டான்.(1)

நகுலன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, இவ்வுலகில் முதன்மையான ஆயுதமாக வில் கருதப்படுகிறது. எனினும், ஓ! மன்னா, வில் வெட்டப்படவோ, முறிக்கப்படவோ நேரும்போதும், குதிரைகள் கொல்லப்படவோ, பலவீனப்படவோ நேரும்போதும், வாளில் நல்ல பயிற்சி கொண்ட ஒரு நல்ல போர்வீரனால் தன் வாளின் மூலமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால், என்மனம் வாளையே விரும்புகிறது.(2,3) வாள் தரித்த வீரனால், பல வில்லாளிகளையும், கதாயுதங்கள் மற்றும் ஈட்டிகளைத் தரித்த பல எதிரிகளையும் தனியொருவனாகவே தாக்குப்பிடிக்க முடியும்.(4) எனக்கு இந்த ஐயம் இருக்கிறது. உண்மையை அறிந்து கொள்வதில் நான் ஆவல் கொள்கிறேன். ஓ! மன்னா, உண்மையில் போர்கள் அனைத்திலும் முதன்மையான ஆயுதம் எது?(5) வாளானது முதன்முதலாக எப்போது படைக்கப்பட்டது, என்ன நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டது? அந்த ஆயுதத்தின் முதல் ஆசான் யார்? ஓ3! பாட்டா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {நகுலன்}”.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நுண்ணறிவு கொண்ட மாத்ரி மகனின் {நகுலனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், வில் அறிவியலில் முற்றான திறம்படைத்தவரும், கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவருமான அறம்சார்ந்த பீஷ்மர், திறம் மிக்கப் பயிற்சி கொண்டவனும், துரோணரின் சீடனுமான உயரான்ம நகுலனிடம் குறிப்பிடத்தக்க திறனை வெளிப்படுத்தும் வகையில், காதுக்கினிய உயிரெழுத்துகள் முறையாக அமைக்கப்பட்டதும், மகிழ்ச்சிமிக்கச் சொற்கள் நிறைந்ததுமான இந்தப் பதிலை அளித்தார்.(7-9)

பீஷ்மர் {நகுலனிடம்}, “ஓ! மாத்ரியின் மகனே, நீ என்னிடம் கேட்டதற்கான உண்மையைக் கேட்பாயாக. ஒரு செஞ்சுண்ண மலை போல உன் கேள்வியால் நான் உற்சாகம் அடைகிறேன்[1].(10) பழங்காலத்தில் இந்த அண்டம் முழுவதும் ஒரே நீர்ப்பரப்பாக, அசைவற்றதாக, வானமற்றதாக, இந்தப் பூமிக்கான இடம் ஏதுமில்லாததாக இருந்தது.(11) இருளில் மூழ்கி, உணர்ந்தறியமுடியாத வகையில் இருந்த அதன் தன்மை மிகப் பயங்கரமானதாக இருந்தது. முற்றான அமைதியின் ஆளுகையில் இருந்த அதன் பரப்பு அளவிடமுடியாததாக இருந்தது. சரியான நேரத்தில் (அண்டத்தின்) பெரும்பாட்டன் {பிரம்மன்} தன் பிறப்பை அடைந்தான்.(12) பிறகு அவன், காற்றையும், நெருப்பையும், பெரும் சக்தி கொண்ட சூரியனையும் உண்டாக்கினான். மேலும் அவன் வானத்தையும், சொர்க்கங்களையும், பாதாளங்களையும், பூமி, திசைகள்,(13) நிலவு, விண்மீன்கள், விண்மீன்கூட்டங்கள், கோள்கள் ஆகியவற்றுடன் கூடிய ஆகாயத்தையும், வருடம், பருவ காலங்கள், மாதங்கள், இரண்டு அரைத்திங்கள்கள்{பக்ஷங்கள்}, காலத்தின் சிறிய பிரிவுகள் ஆகியவற்றையும் உண்டாக்கினான்.(14)தெய்வீகப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, பிறகு, காணத்தக்க வடிவத்தை அடைந்து, (தன் விருப்ப சக்தியின் விளைவால்) பெரும் சக்தி கொண்ட சில மகன்களைப் பெற்றான்.(15) அவர்கள், மரீசி, {பிருகு}, அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர், அங்கிரஸ், வலிமையும் பலமுமிக்க ருத்திரன்[2],(16) பிரசேதஸ் ஆகியோர் ஆவர். இறுதியானவன் {பிரசேதஸ்} தக்ஷனைப் பெற்றான், அவன் {தக்ஷன்} அறுபது மகள்களைப் பெற்றான். பிள்ளைகளைப் பெறும் நோக்கம் கொண்ட மறுபிறப்பாள முனிவர்கள் அந்த மகள்கள் அனைவரையும் {மனைவியாக} எடுத்துக் கொண்டனர்.(17) அவர்களில் இருந்தே அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் பல்வேறு வகைகளிலான ராட்சசர்கள்,(18) பறவைகள், விலங்குகள், மீன்கள், குரங்குகள், பெரும்பாம்புகள், காற்றிலும், நீரிலும் விளையாடும் பல்வேறு வகை இனங்களிலான கோழிகள்,(19) காய்கறிகள், முட்டையிடும் இனங்களும், பாலூட்டிகளும், கழிவுகளில் {வியர்வை, மலம், அழுகல் உள்ளிட்டவற்றில்} பிறக்கும் அனைத்தும் உயிரினங்களும் பிறந்தன. இவ்வழியிலேயே அசையும், மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் இருப்புக்கு வந்தது.(20)அண்டத்தின் பெரும்பாட்டன் {பிரம்மன்} இவ்வாறு அசையும், மற்றும் அசையாத உயிரினங்களை இருப்புக்கு இழைத்து, வேதங்களில் விதிக்கப்பட்ட அழிவில்லா அறத்தை {சாஸ்வத தர்மத்தை} அறிவித்தான்.(21) அந்த அறமானது, தேவர்கள், அவர்களுடைய ஆசான்கள், புரோகிதர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மருத்துகள், அசுவினிகள்,(22) பிருகு, அத்ரி, அங்கிரஸ், சித்தர்கள், தவ வளம் கொண்ட கசியபர், வசிஷ்டர், கௌதர், அகஸ்தியர், நாரதர், பர்வதர்,(23) வாலகில்ய முனிவர்கள், பிரபாசர்கள் என்ற பெயர்களில் அறியப்பட்ட முனிவர்கள், சிகதர்கள், கிருதபர்கள், சோமவாயவ்யர்கள், வைஸ்வானர்கள், மரீசிபர்கள்,(24) ஆகிருஷதர்கள், ஹம்சர்கள், நெருப்பில் பிறந்தோர் {அக்னியோனிகள்}, வானப்ரஸ்தர்கள், பிருஸ்னிகள் ஆகியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் பிரம்மனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தனர்.(25)

எனினும், தானவர்களில் முதன்மையானோர், பெரும்பாட்டனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல், கோபத்துக்கும், பேராசைக்கும் வசப்பட்டவர்களாக, அறத்திற்கு அழிவுண்டாக்கத் தொடங்கினர்.(26) அவர்கள் {அந்தத் தானவர்கள்} ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன், விரோசனன், சம்பரன், விப்ரசித்தி, பிரகலாதன், நமுசி, பலி ஆகியோராவர்.(27) இவர்களும், இன்னும் பல தைத்திய தானவர்களும், கடமை மற்றும் அறத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி, அனைத்து வகைத் தீச்செயல்களிலும் இன்புற்று விளையாடிக் கொண்டிருந்தனர்.(28) பிறப்பால் தேவர்களுக்கு இணையானவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்ட அவர்கள், தேவர்களையும், தூய நடத்தை கொண்ட தவசிகளையும் அறைகூவி அழைக்கத் தொடங்கினர்.(29) அவர்கள் அண்டத்தின் எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் நன்மையையோ, அவர்களில் எவருக்கும் கருணையையோ காட்டவில்லை. நன்கு அறியப்பட்ட மூன்று வழிமுறைகளை அலட்சியம் செய்த அவர்கள், தண்டக்கோலை மட்டுமே தரித்துக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் பீடித்து அழிக்கத் தொடங்கினர்.(30)

உண்மையில், செருக்கால் நிறைந்திருந்த அந்த அசுரர்களில் முதன்மையானோர், பிற உயிரினங்களுடனான நட்புரீதியான அனைத்து தொடர்புகளையும் கைவிட்டனர். அப்போது, மறுபிறப்பாள தவசிகளுடன் கூடிய தெய்வீகப் பிரம்மன்,(31) நூறு யோஜனைகள் பரப்பளவுக்கு, பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தடாகத்தில் உள்ள தாமரை மலர்களைப் போலத் தன் பரப்பில் நட்சத்திரங்களைக் கொண்டதாகத் தெரிந்ததுமான இமயத்தின் இனிமைநிறைந்த சிகரத்திற்குச் சென்றான்.(32) ஓ! ஐயா, மலர்ந்திருக்கும் மரங்கள் அடர்ந்த காடுகளைக் கொண்ட அந்த மலைகளின் இளவரசனின் மீதிருந்த முதன்மையான தேவனான பிரம்மன், உலகின் காரியத்தை நிறைவு செய்வதற்காகச் சில காலம் தங்கியிருந்தான்.(33) ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், அந்தப் பலமிக்கத் தலைவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி ஒரு மகத்தான வேள்வியைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.(34) வேள்வி செய்வதில் திறம்பெற்றவர்களும், விறகுகளையும், சுடர்மிக்க நெருப்பையும் கொண்டு, அது {வேள்வி} தொடர்பான செயல்கள் அனைத்தையும் செய்ய வல்லவர்களுமான முனிவர்கள் வேள்விப்பீடத்தை அலங்கரித்தனர்.(35)

வேள்விப் பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததன் விளைவால் அது {வேள்விப்பீடம்} மிக அழகாகத் தெரிந்தது. தேவர்களில் முதன்மையானோர் அனைவரும் அதில் {வேள்விப்பீடத்தில்} அமர்ந்தனர்.(36) மேலும் உயர்ந்த மறுபிறப்பாள முனிவர்களைக் கொண்ட சத்யஸ்கள் அனைவராலும் அந்த மேடை அலங்கரிக்கப்பட்டது. விரைவில் அந்த வேள்வியில் மிகப் பயங்கரமான ஒன்று நடந்ததாக முனிவர்களின் மூலம் நான் கேள்விப்பட்டேன்.(37) (வேள்வி நெருப்பில் இருந்து) ஆகாயத்தில் சிதறியிருக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் எழும் சந்திரனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஓர் உயிரினம் தன்னைச் சுற்றிலும் உள்ள தழல்களைச் சிதறடித்தபடி எழுந்தது.(38) அதன் நிறம் நீலத் தாமரை {கருங்குவளை} இதழ்களைப் போலக் கரியதாக இருந்தது. அதன் பற்கள் கூர்மையானவையாக இருந்தன. அதன் வயிறு மெலிந்ததாக இருந்தது. அதன் வடிவம் உயர்ந்ததாக இருந்தது. அது தடுக்கப்பட முடியாத மிதமிஞ்சிய சக்தியைக் கொண்டதாக இருந்தது.(39) அந்த உயிரினம் தோன்றியதும் பூமாதேவி நடுங்கினாள். மலைபோன்ற அலைகளையும், பயங்கர நுரைகளையும் கொண்ட பெருங்கடல் கலக்கமடைந்தது.(40)

பேராபத்துகளை முன்னறிவித்துக் கொண்டு வானத்தின் எரிநட்சத்திரங்கள் விழுந்து கொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் கீழேவிழத் தொடங்கின. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் அமைதியற்றவையாகின. மங்கலமற்ற காற்றுகள் வீசத் தொடங்கின. ஒவ்வொரு கணமும் அனைத்து உயிரினங்களும் அச்சத்தால் நடுங்கத் தொடங்கின.(41) அண்டத்தின் பயங்கரக் கலக்கத்தையும், வேள்வி நெருப்பில் இருந்து எழுந்த அந்த உயிரினத்தையும் கண்ட பெரும்பாட்டன், அங்கே இருந்த பெருமுனிவர்கள், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “இந்த உயிரினம் என்னால் எண்ணப்பட்டது. பெரும் சக்தி கொண்ட இதன் பெயர் அஸி (வாளாகும்) ஆகும். உலகத்தைப் பாதுகாப்பதற்காகவும், தேவர்களின் எதிரிகளை அழிப்பதற்காகவும் நான் இதை உண்டாக்கினேன்” என்றான்.(43) பிறகு அந்த உயிரினம் தான் முதலில் ஏற்றிருந்த வடிவத்தைக் கைவிட்டு, பெரும் காந்தியுடையதும், மிகப் பளபளப்பானதும், கூர்முனைகளைக் கொண்டதும், யுக முடிவில் அனைத்தையும் அழிக்க எழுந்ததைப் போலவும் ஒரு வாளின் வடிவத்தை ஏற்றது.(44) அப்போது பிரம்மன், மறம் {அதர்மம்}, பாவம் ஆகியவற்றை அழிக்கத்தகுந்தவனாக்குவதற்காக, முதன்மையான காளையைத் தன் கொடியில் கொண்டவனும், நீலமிடறு கொண்டவனுமான ருத்திரனிடம் அந்தக் கூரிய ஆயுதத்தைக் கொடுத்தான்.(45)

இதன்பேரில், அளவிலா ஆன்மா கொண்டவனும், பெரும் முனிவர்களால் புகழப்பட்டவனுமான தெய்வீக ருத்திரன், அந்த வாளை எடுத்துக் கொண்டு, வேறொரு வடிவத்தை ஏற்றான்.(46) நான்கு கரங்களை வெளிப்படுத்திக் கொண்ட அவன், பூமியில் நின்று கொண்டிருந்தாலும், தலை சூரியனையே தொடும் அளவுக்கு நெடியவனானான். மேல்நோக்கிய விழிகளுடனும், பரந்து விரிந்த அங்கங்களுடனும் அவன் தன் வாயில் இருந்து நெருப்பின் தழல்களைக் கக்கத் தொடங்கினான்.(47) நீலம், வெள்ளை, சிவப்பு எனப் பல்வேறு நிறங்களை ஏற்று, தங்க நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட கருப்பு மான் தோலை உடுத்தியிருந்த அவன்,(48) சூரியனின் காந்திக்கு ஒப்பான மூன்றாவது கண்ணைத் தன் நெற்றியில் கொண்டிருந்தான். ஒன்று கருப்பாகவும், ஒன்று பழுப்பாகவும் இருந்த அவனது மற்ற இரு விழிகள் மிகப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.(49) சூலபாணியும், பகனின் கண்ணைக் கிழித்தவனுமான தெய்வீக மகாதேவன், அனைத்தையும் அழிக்கும் யுக நெருப்புக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட அந்த வாளை எடுத்துக் கொண்டு,(50) மின்னலின் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்ட கரிய மேகத் திரள்களைப் போன்றிருந்த மூன்று உயர்ந்த குமிழ்களைக் கொண்ட கேடயத்தையும் எடுத்துக் கொண்டு பல்வேறு வகையான பரிமாணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினான்.

பேராற்றல் கொண்ட அவன் {ருத்திரன்}, ஒரு மோதலை விரும்பி வானத்தில் அந்த வாளைச் சுழற்றத் தொடங்கினான்.(51) அவன் வெளியிட்ட முழக்கங்கள் உரத்தவையாகவும், அவனது சிரிப்பின் ஒலி பயங்கரமானதாகவும் இருந்தது. உண்மையில், ஓ! பாரதா {நகுலா}, ருத்திரன் அப்போது ஏற்றிருந்த வடிவம் மிகப் பயங்கரமானதாக இருந்தது.(52) ருத்திரன் கடுஞ்செயல்களை நிறைவேற்றும் வடிவத்தை ஏற்றிருப்பதைக் கேட்ட தானவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, பெரும் பாறைகளையும், சுடர்மிக்கக் கொள்ளிகளையும், பல்வேறு வகையிலான இரும்பாலான பயங்கர ஆயுதங்களையும், கூர்முனை கொண்ட கத்திகளுடன் கூடிய ஆயுதங்களையும் பொழிந்து கொண்டே அவனை நோக்கிப் பெரும் வேகத்தில் வரத் தொடங்கினர்.(53,54) எனினும், அந்தத் தானவப் படையானது, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அழிக்கப்பட முடியாதவனுமான ருத்திரன் வலிமையில் பெருகுவதைக் கண்டு, மலைப்படைந்து, நடுங்கத் தொடங்கினர்.(55)

ருத்திரன் தனியொருவனாக இருந்தாலும், கையில் வாளுடன் போர்க்களத்தில் அவன் நகர்ந்த போது, தங்களுடன் ஆயிரம் ருத்திரர்கள் போரிடுவதாக அசுரர்களுக்குத் தெரிந்தது.(56) அந்தப் பெருந்தேவன், கிழித்துக் கொண்டும், துளைத்துக் கொண்டும், பீடித்தும், வெட்டியும், துண்டித்தும், கலங்கடித்தபடியும், சுற்றிலும் பரவியிருக்கும் காய்ந்த புற்குவியலுக்கு மத்தியில் உள்ள காட்டுத்தீயைப் போல அடர்த்தியாக இருந்த தன் பகைவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருந்தான்.(57) வலிமைமிக்க அசுரர்கள், அந்தத் தேவனின் வாள்வீச்சால் கரங்கள், தொடைகள், மார்புகள் வெட்டப்பட்டு, துளைக்கப்பட்டு, தங்கள் உடல்களில் இருந்து தலைகள் கொய்யப்பட்டு, பூமியில் விழத் தொடங்கினர்.(58) தானவர்களில் வேறு சிலர், அந்த வாள்வீச்சுகளால் பீடிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் உற்சாகமளித்தபடியே அனைத்துத் திசைகளிலும் பிளந்து தப்பி ஓடினர்.(59) சிலர் பூமியின் குடல்களுக்குள் ஊடுருவினர்; வேறு சிலர் மலைகளின் அடியில் சென்றனர். இன்னும் சிலர் மேல்நோக்கிச் சென்றனர்; வேறு சிலர், கடலின் ஆழத்திற்குள் நுழைந்தனர்.(60)

கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, சதையாலும், குருதியாலும் பூமி சகதியானது, அனைத்துப் பக்கங்களிலும் பயங்கரக் காட்சிகள் தென்பட்டன.(61) குருதியால் மறைக்கப்பட்ட வீழ்ந்த தானவர்களின் உடல்கள் விரவிக்கிடந்த பூமியானது, கின்சுகங்கள் {பலாச மரங்கள்} நிறைந்த மலைச்சிகரத்தைப் போலத் தெரிந்தது.(62) ஊனீரால் நிறைந்த பூமியானது, மது போதையில் உள்ளவளும், அடர் சிவப்பு ஆடைகளை உடுத்தியிருந்தவளும், அழகிய நிறம் கொண்டவளுமான ஒரு மங்கையைப் போலத் தெரிந்தது.(63) தானவர்களைக் கொன்று, பூமியில் மீண்டும் அறத்தை நிறுவிய மங்கலமான ருத்திரன், தன் பயங்கர வடிவைக் கைவிட்டு, மீண்டும் தன் நல்வடிவை அடைந்தான்.(64) அப்போது, முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் அந்தத் தேவாதி தேவனுக்கு வெற்றியை விரும்பி பாராட்டுப் பேரொலியுடன் துதித்தனர்.(65)

இதன்பிறகு, அந்தத் தெய்வீக ருத்திரன், அறத்தைப் பாதுகாத்ததும், தானவர்களின் குருதியால் வண்ணம் தீட்டப்பட்டதுமான அந்த வாளை, உரிய துதிகளுடன் விஷ்ணுவுக்கு அளித்தான்.(66) விஷ்ணு அதை மரீசிக்குக் கொடுத்தான். தெய்வீக மரீசி அதைப் பெரும் முனிவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். அவர்கள் அதை வாசவனுக்கு {இந்திரனுக்குக்} கொடுத்தனர்.(67) வாசவன் அதை லோகபாலர்களுக்குக் கொடுத்தான். ஓ! மகனே {நகுலா}, லோகபாலர்கள் அந்தப் பெரும் வாளை சூரியனின் மகனான மனுவுக்குக் கொடுத்தனர்.(68) அதை மனுவுக்குக் கொடுத்தபோது அவர்கள், “நீயே மனிதர்கள் அனைவருக்கும் தலைவனாவாய். அறத்தைத் தன் கருவறையில் கொண்டிருக்கும் இந்த வாளைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பாயாக.(69) உடலின் நிமித்தமாகவோ, மனத்தாலோ அறத்தடைகளை மீறுவோரை முறையாகத் தண்டித்து, உறுதியின்மையால் ஒருபோதும் அல்லாமல், விதிகளுக்கு இசைவானபடியே அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(70) சிலர் சொல்லாலான நிந்தனைகளாலும், அபராதங்களாலும், பறிமுதல்களாலும் தண்டிக்கப்படவேண்டும். சிறிய காரணங்களுக்காக {தண்டனையாக} ஒருபோதும் அங்க இழப்போ, மரணமோ கொடுக்கப்படக்கூடாது” என்றனர்.(71)

சொல்லாலான நிந்தனைகளை முதலாகக் கொண்ட இந்தத் தண்டனைகளே, அந்த வாளின் பல்வேறு வடிவங்களாகக் கருதப்படுகின்றன. (மன்னனின்) பாதுகாப்பின் கீழுள்ள மனிதர்கள் அத்துமீறுவதன் விளைவால், அந்த வாள் இந்த வடிவங்களையே ஏற்கிறது.(72) மனு, தன் மகனான க்ஷுபனை அனைத்துயிரினங்களின் அரசுரிமையில் நிறுவிய நேரத்தில், அவர்களின் பாதுகாப்புக்காக இந்த வாளை அவனிடம் கொடுத்தார்.(73) க்ஷுபனிடமிருந்து இக்ஷ்வாகுவும், இக்ஷ்வாகுவிடமிருந்து புரூரவசும் எடுத்துக் கொண்டனர். பிறகு புரூரவசிடம் இருந்து ஆயுசும், ஆயுசிடமிருந்து நகுஷனும் எடுத்துக் கொண்டனர்.(74) பிறகு நகுஷனிடமிருந்து யயாதியும், யயாதியிடமிருந்து பூருவும் எடுத்துக் கொண்டனர். பூருவிடமிருந்து ஆமூர்த்தனும் {ஆதூர்த்தனும்}, ஆமூர்த்தனிடமிருந்து பூமிசயனும் பெற்றுக் கொண்டனர்.(75)

பூமியசயனிடமிருந்து துஷ்யந்தன் மகனான பரதன் அதைப் பெற்றுக் கொண்டான். ஓ! ஏகாதிபதி, பரதனிடமிருந்து அறம்சார்ந்த ஐலபிலன் பெற்றுக் கொண்டான்.(76) ஐலபிலனிடமிருந்து மன்னன் துந்துமாரன் பெற்றுக் கொண்டான். துந்துமாரனிடமிருந்து காம்போஜனும், காம்போஜனிடமிருந்து முசுகுந்தனும் பெற்றுக் கொண்டனர்.(77) முசுகுந்தனிடமிருந்து மருத்தனும், மருத்தனிடமிருந்து ரைவதனும் பெற்றுக் கொண்டனர். ரைவதனிடம் இருந்து யுவனாஸ்வனும், யுவனாஸ்வனிடமிருந்து ரகுவும் பெற்றுக் கொண்டனர்.(78) ரகுவிடமிருந்து வீரனான ஹரிணாஸ்வன் பெற்றுக் கொண்டான். ஹரிணாஸ்வனிடமிருந்து அந்த வாள் சுனகனால் எடுத்துக் கொள்ளப்பட்டது, சுனகனிடமிருந்து அற ஆன்மாவான உசீநரன் எடுத்துக் கொண்டான். அவனிடமிருந்து அது போஜர்களாலும், யாதவர்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.(79) யதுக்களிடமிருந்து அதைச் சிபி எடுத்துக் கொண்டான். சிபியிடமிருநு அது பிரதர்த்தனனிடம் சென்றது. பிரதர்த்தனனிடமிருந்து அதை அஷ்டகன் பெற்றுக் கொண்டான். அஷ்டகனிடமிருந்து பிருஷதாஸ்வன் பெற்றுக் கொண்டான்.(80)

பிருஷதாஸ்வனிடமிருந்து பரத்வாஜர் அதைப் பெற்றுக் கொண்டார், அவரிடமிருந்து துரோணர் அதைப் பெற்றுக் கொண்டார். துரோணரிடமிருந்து அது கிருபரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. கிருபரிடமிருந்த அந்தச் சிறந்த வாளை, உன் சகோதரர்களுடன் கூடிய நீ {நகுலன்} அடைந்தாய்.(81) அந்த வாள் பிறந்த நட்சத்திரக்கூட்டமானது கிருத்திகையாகும். அக்னியே அதன் தேவனாவான், ரோஹிணியே அதன் கோத்ரமாகும் {குடும்பமாகும்}. ருத்ரனே அதன் உயர்ந்த ஆசானாவான்.(82) அந்த வாளானது பொதுவாக அறியப்படாத எட்டுப் பெயர்களைக் கொண்டதாகும். அதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, இந்தப் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் வெற்றியை அடைவான்.(83) அஸி, வைசஸனம் {விசஸனம்}, கட்கம், கூர்முனை கொண்டது {தீக்ஷ்ணஸர்மம்}, அடைவதற்கரிதானது {துராஸதம்}, ஸ்ரீகர்ப்பம், வெற்றி {விஜயம்}, அறப்பாதுகாவலன் {தர்ம்பாலம்} ஆகியவையே அந்தப் பெயர்களாகும்.(84) ஓ! மத்ராவதியின் {மாத்ரியின்} மகனே, ஆயுதங்கள் அனைத்திலும் வாளே முதன்மையானது. அது முதலில் மஹாதேவனாலேயே தரிக்கப்பட்டதும் என்று புராணங்களே உண்மையில் அறிவிக்கின்றன.(85)

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, வில்லைப் பொறுத்தவரையில், அது முதலில் பிருதுவால் உண்டாக்கப்பட்டது. இந்த ஆயுதத்தின் உதவியுடனே அந்த வேனன் மகன் {பிருது}, பல வருடங்களுக்குப் பூமியை அறம்சார்ந்து ஆண்ட போது, அவளது {பூமியின்} பயிர்களையும், தானியங்களையும் அபரிமிதமாகக் கறந்தான்.(86) ஓ! மாத்ரியின் மகனே, முனிவர்கள் சொல்வதை முடிவான ஆதாரமாகக் கருதுவதே உனக்குத் தகும். போரில் திறம்பெற்ற அனைவரும் வாளை வழிபட வேண்டும்.(87) ஓ! பாரதக் குலத்தின் காளையே, வாளின் மூலம் மற்றும் படைப்பைக் குறித்த உன் கேள்வியின் முதல் பகுதியை உண்மையில் விரிவாக நான் சொல்லிவிட்டேன்.(88) வாளின் மூலம் தொடர்பான இந்தச் சிறந்த கதையைக் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் இம்மையில் புகழை வென்று, மறுமையில் அழிவில்லா இன்பத்தை அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}”.(89)

அறம், பொருள், இன்பம், வீடு! – சாந்திபர்வம் பகுதி – 167-அறம், பொருள், இன்பம் ஆகியவை குறித்து விதுரர், அர்ஜுனன், நகுல சகாதேவர்கள், பீமசேனன் ஆகியோர் பேசியது; வீடு குறித்து யுதிஷ்டிரன் பேசியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதை {வாளின் வரலாற்றைச்} சொல்லிவிட்டு பீஷ்மர் அமைதியானபோது, யுதிஷ்டிரன் (அவனும் பிறரும்) தன் இல்லத்துக்குத் திரும்பினான். மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளிடமும், அவர்களோடு ஐந்தாவதாக இருந்த விதுரனிடமும்,(1) “உலகின் போக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இம்மூன்றின் முக்கியத்துவத்தில், எது முதன்மையானது, எது இரண்டாவது, எது மூன்றாவது?(2) மூன்று திரட்டுகளை (காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றை) அடக்குவதற்கு, மூன்றில் (அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்) எதில் முதலில் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்?[1] நீங்கள் அனைவரும் இந்தக் கேள்விக்கு உண்மையான வார்த்தைகளில் பதிலளிப்பதே தகும்” என்று கேட்டான்.(3) குரு தலைவனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், உலகின் போக்கு, (பொருட்களின் உண்மையான இயல்பைக் குறித்த) உண்மை ஆகியவற்றுடன் கூடிய பொருள் அறிவியலையும் அறிந்தவனும், அறிவில் பெரும்பொலிவு கொண்டவனுமான விதுரன், சாத்திரங்களில் உள்ள பொருட்களை நினைவுகூர்ந்து, இந்த வார்த்தைகளை முதலில் சொன்னான்.(4)விதுரன், “பல்வேறு சாத்திரங்களைக் கற்றல், தவம், கொடை, நம்பிக்கை, வேள்விகளைச் செய்தல், மன்னிக்கும் தன்மை, நேர்மையான மனநிலை, கருணை, வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகிய இவை அறத்தின் உடைமைகளாகும்.(5) நீ அறத்தைக் கைகொள்வாயாக. உன் இதயம் அதைவிட்டு விலகாதிருக்கட்டும். அறம், பொருள் ஆகிய இரண்டும் இவற்றிலேயே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே காலத்தில் {தவணையில்} சேர்க்கப்படக்கூடியவை என்று நான் நினைக்கிறேன்.(6) அறத்தின் மூலமே முனிவர்கள் (உலகத் துன்பங்கள் அனைத்தையும்) கடந்து சென்றனர். அனைத்து உலகங்களும் (நிலையாக இருப்பதற்கு) அறத்தையே சார்ந்திருக்கின்றன. அறத்தின் மூலமே தேவர்கள் தன் மேலான நிலையை அடைந்தனர். அறத்தின் மீதே பொருள் அல்லது செல்வம் நிலைத்திருக்கிறது(7) ஓ! மன்னா, அறமே தகுதியில் {புண்ணியத்தில்} முதன்மையானதாகும். பொருள் நடுநிலைமை கொண்டது என்று சொல்லப்படுகிறது. இன்பமே மூன்றிலும் கீழானது என ஞானிகளால் சொல்லப்படுகிறது.(8) இதன்காரணமாக ஒருவன், அறத்தில் முக்கியக் கவனம் செலுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் வாழ வேண்டும். அவன் தன்னைப் போலவே பிற உயிரினங்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்” என்றான் {விதுரன்}”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விதுரர் தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்ததும், பொருள் அறிவியலில் நன்கு திறம்பெற்றவனும், அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டின் உண்மைகளையும் அறிந்தவனுமான பிருதையின் மகன் அர்ஜுனன், (யுதிஷ்டிரனுடைய கேள்வியின் ஓட்டத்தால்) தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இந்த உலகமே செயல்களின் களமாகும். எனவே இங்கே செயலே மெச்சப்பட வேண்டும். உழவு, வணிகம், ஆநிரை வளர்த்தல், பல்வேறு வகையான கலைகள் {கைத்தொழில்கள்},(11) ஆகியன உள்ளடங்கியதே பொருள் {அர்த்தம்} என்றழைக்கப்படுகிறது. மேலும் பொருளே அத்தகைய செயல்கள் அனைத்திற்கும் எல்லையாக இருக்கிறது. பொருள், அல்லது செல்வமின்றி, அறம் மற்றும் இன்பம் (இன்பத்திற்குரி பொருட்கள்) ஆகியவற்றை வெல்லமுடியாது. இதுவே ஸ்ருதியின் அறிவிப்பாகும்.(12) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரும் கூட, பல்வேறு வகையான செல்வங்களைக் கொண்டிருந்தால், அறத்தின் உயர்ந்த செயல்களைச் செய்ய வல்லவர்களாகவும், நிறைவுசெய்வதற்குக் கடினமான ஆசைகளையும் நிறைவு செய்பவர்களாகவும் ஆவார்கள்.(13) ஸ்ருதி அறிவிக்கும் வகையில், அறமும், இன்பமும் செல்வத்தின் அங்கங்களாகவே இருக்கின்றன. செல்வத்தை அடைந்தால், அறத்தையும், ஆசைக்குரிய பொருட்களையும் வெல்லலாம்.(14) அனைத்து உயிரினங்களும் பிரம்மனை வழிபடுவதைப் போலவே, மேன்மையான பிறவிகளாகப் பிறந்தோரும், செல்வம்படைத்த மனிதனை வழிபடுவார்கள்.(15)

மான்தோல் உடுத்தியவர்களும், தலையில் சடாமுடி தரித்தவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், உடல் முழுவதும் புழுதி பூசப்பட்டவர்களும், புலன்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், வழுக்கைத் தலை கொண்டவர்களும், அர்ப்பணிப்புள்ள பிரம்மச்சாரிகளும், ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து வாழ்பவர்களும் கூடச் செல்வத்தை அடைய விரும்புகிறார்கள்.(16) மஞ்சள் ஆடை {காஷாயம்} உடுத்தியவர்களும், நீண்ட தாடிகளைக் கொண்டவர்களும், பணிவுடையவர்களும், கல்விமான்களும், உள்ளடக்கம் கொண்டவர்களும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களும்கூடச் செல்வத்தை அடைய விரும்புகிறார்கள். முன்னோரின் நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களும், தங்களுக்குரிய கடமைகளை நோற்பவர்களும், சொர்க்கத்தில் விருப்பமுள்ளவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.(18) நம்பிக்கையுள்ளவர்களும், நம்பிக்கையற்றவர்களும், உயர்ந்த வகை யோகத்தைக் கடுமையாகப் பயில்பவர்களும் என அனைவரும், செல்வத்தின் சிறப்புக்குச் சான்றளிக்கிறார்கள்.(19) எவன் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் இன்பத்திற்குரிய பொருட்களைக் கொடுத்துப் பேணி வளர்த்து, தண்டனைகளால் தன் எதிரிகளைப் பீடிக்கிறானோ, அவனே உண்மையில் செல்வம்படைத்தவன் என்று சொல்லப்படுகிறான். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, இதுவே என் உண்மையான கருத்தாகும்.(20) எனினும், இந்த இருவரும் (நகுலனும், சகாதேவனும்) சொல்லப் போவதையும் கேட்பீராக” என்றான் {அர்ஜுனன்}”.(21)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனன் நிறுத்தியதும், மாத்ரியின் மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(22)

நகுலனும் சகாதேவனும், “அமர்ந்தோ, கிடந்தோ, நின்றோ, நடந்தோ ஒருவன் மிகக் கடுமையான வழிமுறைகளில் முயற்சி செய்தாவது செல்வத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.(23) அடைவதற்கு அரிதானதும், மிகவும் ஏற்புடையதுமான செல்வம் ஈட்டப்பட்டால், அஃதை ஈட்டிய மனிதன் நிச்சயம் ஆசைக்குரிய {இன்பத்திற்குரிய} பொருட்கள் அனைத்தையும் அடைவது காணப்படுகிறது.(24) எந்தச் செல்வம் அறத்துடன் தொடர்புடையதோ, எந்த அறம் செல்வத்தோடு தொடர்புடையதோ, அவை நிச்சயம் அமுதத்தைப் போன்றவையே. இதன் காரணமாக என்கள் கருத்துகள் பின்வருமாறு இருக்கின்றன.(25)

செல்வமில்லாத மனிதனால் எந்த ஆசையையும் நிறைவு செய்து கொள்ள முடியாது; அதே போல அறமற்ற ஒருவனிடமும் செல்வமேதும் இருக்க முடியாது. எனவே, அறம் மற்றும் பொருள் ஆகியவற்றில் இருந்து விலகியிருப்பவன் உலகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துபவனாக இருப்பான்.(26) இந்தக் காரணத்திற்காக ஒருவன், அறத்தேவைகளை அலட்சியம் செய்யாமல், அர்ப்பணிப்பு நிறைந்த மனத்துடன் செல்வத்தை அடைய முனைய வேண்டும். (ஞான) மொழியை நம்புபவர்கள், தாங்கள் விரும்பிய எதையும் அடைவதில் வெல்கிறார்கள்.(27) ஒருவன் முதலில் அறம்பயில வேண்டும்; அடுத்ததாக அறத்தைத் தியாகம் செய்யாமல் செல்வத்தை அடைய வேண்டும்; பிறகு தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முனைய வேண்டும்; செல்வத்தை அடைவதில் வெற்றி அடையும் ஒருவனிடம் இதுவே தன் {ஆசையை நிறைவேற்றிக் கொள்வதே மூன்றிலும்} இறுதிச் செயலாக இருக்க வேண்டும்” என்றனர் {நகுலனும், சகாதேவனும்}”.(28)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “அசுவினிகளின் இரட்டை மகன்கள் {நகுல சகாதேவன்} இவ்வார்த்தைகளைப் பேசியதும் அமைதியடைந்தனர். பிறகு, பீமசேனன் பின்வருவதைச் சொல்லத் தொடங்கினான்.(29)

பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஆசையில்லாதவன் செல்வத்தை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆசையில்லாத ஒருவன் ஒருபோதும் அறத்தை விரும்புவதில்லை. அசையற்றவனால் எந்த விருப்பத்தையும் உணரமுடியாது. இதன்காரணமாக, ஆசையே {இன்பமே} மூன்றிலும் முதன்மையானதாகும்.(30) ஆசையின் ஆதிக்கத்தின் கீழேயே முனிவர்களும், கனிகளையோ, கிழங்குகளையோ, காற்றை மட்டுமே உண்டு, தங்களைத் தவங்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.(31) வேதத்தை நன்கறிந்தவர்கள், வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும், அல்லது நம்பிக்கையின் சடங்குகள் மற்றும் வேள்விச் செயல்களிலும், அல்லது கொடைகளைக் கொடுப்பதிலும், பெறுவதிலும் ஈடுபடுகிறார்கள்.(32) வணிகர்கள், உழவர்கள், ஆநிரை வளர்ப்போர், கலைஞர்கள், கைவினைஞர்கள், தணிவுச் சடங்குகளில் ஈடுபடுவோர் ஆகிய அனைவரும் ஆசையினாலேயே {காமத்தினாலேயே} செயல்படுகிறார்கள்.(33) சிலர் ஆசையால் தூண்டப்பட்டு, பெருங்கடலின் ஆழத்தில் குதிக்கிறார்கள். உண்மையில், ஆசையானது {காமமானது} பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. ஆசையின் கொள்கையானது அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறது.(34) ஆசையிலிருந்து விலகியிருப்பவன் என்று எவனும், இவ்வுலகில் இருப்பதாகவோ, இருந்ததாகவோ, இருக்கப்போவதாகவோ காணப்படவில்லை. ஓ! மன்னா, இதுவே உண்மையாகும். அறம், செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் இன்பத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.(35)

வெண்ணையானது, தயிரின் சாரத்தை வெளிப்படுத்துவதைப் போலவே ஆசையும், பொருள் மற்றும் அறத்தின் சாரத்தை வெளிப்படுத்தும். எண்ணெய் விதைகளைவிட {பிண்ணாக்கைவிட} எண்ணெய் சிறந்ததாகும். நீர்மோரைவிட நெய் சிறந்ததாகும்.(36) மலர்களும், கனிகளும், மரத்தைவிடச் சிறந்தவையாகும். அதே போல, ஆசையே {காமமே} அறம் மற்றும் பொருளைவிடச் சிறந்ததாகும். மலர்களின் இருந்து தேன் சாறு பிரித்தெடுக்கப்படுவதைப் போலவே, ஆசையானது இவ்விரண்டில் இருந்தே பிரித்தெடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆசையே அறம், பொருள் ஆகிய இரண்டின் மூலமாகும். ஆசையே இவ்விரண்டின் ஆன்மாவாகும்.(37) பிராமணர்களுக்கு ஆசையில்லாதிருந்தால், அவர்கள் பிரம்மவாதிகளுக்கு இனிப்புகளையோ, செல்வத்தையோ ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள்[2]. ஆசையில்லாமல் இருந்தால், உலகத்தில் காணப்படும் பல்வேறு வகைச் செயல்பாடுகளும் காணப்படாமல் போகும். இந்தக் காரங்களினால், ஆசையே முத்தொகையிலும் முதன்மையானதாகத் தெரிகிறது.(38) சிறந்த ஆடைகளை உடுத்தியிருப்பவர்களும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களும், இனிய மதுவினால் போதையுண்டிருப்பவர்களுமான அழகி காரிகைகளை அணுகி, அவர்களோடு நீர் விளையாடிக் கொண்டிருப்பீராக. ஓ! மன்னா, நமக்கு ஆசையே மூன்றில் முதன்மையானதாகும்.(39) இந்தக் கேள்வியை வேர்வரை சிந்தித்ததனால், நான் இந்த முடிவை அடைந்திருக்கிறேன். ஓ! தர்மனின் மகனே, இந்த முடிவை ஏற்கத் தயங்காதீர். இந்த என் வார்த்தைகள் வெற்று வார்த்தைகளல்ல. அறம் நிறைந்த அவற்றை, நல்லோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.(40) அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் சமமாகவே கவனிக்கப்பட வேண்டும். எந்த மனிதன் இவ்வற்றில் ஏதாவது ஒன்றில் மட்டும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவன் மேன்மையான மனிதனல்ல. இவற்றில் இரண்டில் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டவன் நடுத்தரமானவனாகச் சொல்லப்படுகிறான். மறுபுறம் மூன்றையும் கவனிப்பவனே, தன் இனத்தில் சிறந்தவனாவான்” என்றான் {பீமசேனன்}.(41)ஞானம் கொண்டவனும், நண்பர்களால் சூழப்பட்டவனும், சந்தனம் பூசியிருந்தவனும், சிறந்த மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தவனுமான பீமன், இவ்வார்த்தைகளை அந்த வீரர்களிடம் சுருக்கமாகவும், விரிவாகவும் சொன்னதும் அமைதியடைந்தான்.(42) அப்போது, அறவோரில் முதன்மையானவனும், பெரும் கல்விமானும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அவர்கள் அனைவராலும் பேசப்பட்ட வார்த்தைகளை முறையாக நினைவுகூர்ந்து, அந்தப் பேச்சுகள் அனைத்தும் போலி தத்துவங்களே என எண்ணி, பின்வருமாறு பேசினான்.(43)

யுதிஷ்டிரன், “சாத்திரங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் முடிவான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் அவற்றின் அதிகாரங்களை அறிந்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை. நீங்கள் பேசிய நிச்சயத்தன்மை நிறைந்த வார்த்தைகள் என்னால் கேட்கப்பட்டன.(44) இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக. எவன் தகுதியிலோ {புண்ணியத்திலோ}, பாவத்திலோ ஈடுபடவில்லையோ, எவன் பொருளையோ, அறத்தையோ, ஆசையையோ {இன்பத்தையோ} கவனிக்கவில்லையோ, எவன் அனைத்துக் களங்களுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறானோ, எவன் தங்கத்தையும், செங்கற்களையும் ஒன்றாகக் கருதுகிறானோ, அவன், இன்பம், துன்பம் மற்றும் காரிய நிறைவுக்கான தேவை ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனாகிறான்.(45) அனைத்து உயிரினங்களும் பிறப்புக்கும், இறப்புக்கும் ஆட்படுகின்றன. அனைத்தும் வீணாதல் {கிழத்தன்மை} மற்றும் மாற்றத்திற்கு {விகாரங்களுக்கு} உட்பட்டவையாக இருக்கின்றன. வாழ்வின் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகளால் மீண்டும் மீண்டும் விழிப்படையும் அனைவரும் முக்தியை {விடுதலையை / மோட்சத்தை} மெச்சுகிறார்கள். எனினும், நாம் முக்தியை அறியவில்லை.(46)

தான்தோன்றியும், தெய்வீகமானவனுமான பிரம்மன், எவன் பற்று மற்றும் பாசத்தின் கட்டுகளில் கட்டப்பட்டிருக்கிறானோ அவன் ஒருபோதும் முக்தியை அடைவதில்லை என்று சொல்லியிருக்கிறான். எனினும், கல்விமான்கள் முக்தியையே நாடுகிறார்கள். இந்தக் காரணத்திற்காக, ஒருவன் எதையும் ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஒருபோதும் கருதக்கூடாது.(47) இந்தப் பார்வையே சிறந்ததாகத் தெரிகிறது. இவ்வுலகில் உள்ள எவனாலும் தான் விரும்பியவாறு செயல்பட முடியாது. (மேன்மையான ஒரு சக்தியால்) எவ்வாறு செயல்படுவதற்காக நான் உண்டாக்கப்பட்டேனோ, அவ்வாறே துல்லியமாகச் செயல்படுகிறேன். விதி சமைக்கும் பெரியவன் தான் விரும்பியவாறே அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்கிறான். விதி சமைப்பவனே {பரமனே} உயர்ந்தவன். நீங்கள் அனைவரும் இஃதை அறிவீராக.(48) எவனாலும் தன் செயல்களால் அடையப்பட முடியாததை அடைய முடியாது. எது நடக்க வேண்டுமோ அதுவே நடைபெறும். இஃதை அறிவீராக. முத்தொகையிலிருந்தும் விடுபட்ட ஒருவனால் முக்தியை வெல்ல முடியும் என்பதால், முக்தியே உயர்ந்த நன்மையை உண்டாக்கவல்லதாகத் தெரிகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}”.(49)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “காரணம் நிறைந்ததும், இதயத்துக்கு ஏற்புடையதுமான இந்த முதன்மையான வார்த்தைகளைக் கேட்ட பீமனும், பிறரும், மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் கரங்களைக் கூப்பி, அந்தக் குருகுல இளவரசனை {யுதிஷ்டிரனை} வணங்கினார்கள்.(50) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், இனிய எழுத்துகளாலும், அசைகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்டும், இதயத்துக்கு ஏற்புடையதும், ஒவ்வாத ஒலிகளும் வார்த்தைகளும் இல்லாததுமான ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} இந்தப் பேச்சைக் கேட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்}, யுதிஷ்டிரனை உயர்வாக மெச்சத் தொடங்கினான்.(51) உயர் ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, பதிலுக்கு இணங்கிய தணிக்கையாளர்களைப் புகழ்ந்தான். பிறகு மன்னன், மீண்டும் உயர் ஆன்மாகக் கொண்ட நதிகளில் முதன்மையானவளுடைய மகனிடம் {பீஷ்மரிடம்} கடமைகளைக் குறித்து விசாரிப்பதற்காகப் பேசினான்” {என்றார் வைசம்பாயனர்}.(52)

வேடனான பிராமணன்! – சாந்திபர்வம் பகுதி – 168-நட்புக்குத் தக்கவர்கள் மற்றும் தகாதவர்களின் குறியீடுகைளக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மர் சொன்னதை விளக்கிக் கூறுமாறு கேட்ட யுதிஷ்டிரன்; கௌதமன் என்ற ஒரு பிராமணனின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன். ஓ! குருக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவரே, அது குறித்து நீர் என்னிடம் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்.(1) எந்த வகை மனிதர்கள் மென்மையான மனநிலை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்? எவரிடம் மிக இனிமையான நட்பு இருக்கும்? எவர் நிகழ்காலத்திலும், எதிர் காலத்திலும் நன்மை செய்ய வல்லவர்கள் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக.(2) பெருகும் செல்வமோ, உற்றார் உறவினர்களோ, நலன் விரும்பிகளான நண்பர்களின் இடத்தைப் பெற மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.(3) நல்லாலோசனைகளைக் கேட்க வல்லனும், நன்மையைச் செய்பவனுமான ஒரு நண்பன் மிக அரிதானவனாவான். ஓ! அறவோரில் முதன்மையானவரே, இவை குறித்து நீர் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்” என்றான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, எந்த மனிதர்களுடன் நட்பு கொள்ள முடியும், எந்த மனிதர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது என்பது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(5) பேராசைமிக்கவன், இரக்கமற்றவன், தன் வகைக்கான கடமைகளைத் துறந்தவன், நேர்மையற்றவன், கபடன், அற்பன், பாவம்நிறைந்த செயல்பாடுகளைக் கொண்டவன் {பாவி}, அனைத்தையும் ஐயுறுபவன், செயல்படாதவன் {சோம்பேறி},(6) எதிலும் தாமதம் செய்பவன், கோணல்புத்தி கொண்டவன், உலகளாவிய அளவில் அவதூறு செய்வதை நோக்கமாகக் கொண்டவன், ஆசானை மதிக்காதவன், நன்கறியப்பட்ட ஏழு தீமைகளுக்கு[1] அடிமையாயிருப்பவன், துயரிலுள்ள நண்பர்களைக் கைவிடுபவன், தீய ஆன்மா கொண்டவன், வெட்கமற்றவன்,(7) எப்போதும் பாவத்தை நோக்கியே பார்வையைச் செலுத்துபவன், நாத்திகன், வேதங்களை அவதூறு செய்பவன், கட்டுப்படுத்தப்படாத புலன்களைக் கொண்டவன், கட்டுபாடற்ற காமத்தில் ஈடுபடுபவன்,(8) பொய்மைநிறைந்தவன், அனைவராலும் கைவிடப்பட்டவன், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறுபவன், பொறாமை கொண்டவன், பாவத்தையே செய்பவன்,(9) தீய நடத்தை கொண்டவன், தூய்மையடையாத ஆன்மா கொண்டவன், கொடூரன், சூதாடி, நண்பர்களுக்கு எப்போதும் தீங்கிழைப்பவன், பிறர் செல்வத்தின் மேல் பேராசை கொள்பவன்,(10) தன்னால் முடிந்த அளவுக்குப் பிறனால் கொடுக்கப்படும் எதிலும் ஒருபோதும் நிறைவை வெளிப்படுத்தாத தீய ஆன்மா கொண்ட அற்பன், நண்பர்களிடம் ஒருபோதும் நிறைவு கொள்ளாதவன், ஓ! மனிதர்களில் காளையே,(11) கோபப்படத் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் கோபப்படுபவன், அமைதியற்ற மனம் கொண்டவன், காரணமேதுமில்லாமல் சச்சரவில் ஈடுபடுபவன், நல்ல நண்பர்களைக் கைவிட எந்தத் தயக்கமும் கொள்ளாதவன்,(12) தன் நலன்களை மட்டுமே எப்போதும் மனத்தில் கொள்ளும் இழிந்தவன், ஓ! மன்னா, தெரிந்தோ, தெரியாமலோ நண்பர்கள் இழைக்கும் சிறு தீங்குக்காகச் சச்சரவில் ஈடுபடுபவன்,(13) எதிரியைப் போலச் செயல்பட்டு, நண்பனைப் போலப் பேசுபவன், பிறழ்நடை {வக்கிரமான} உள்ளுணர்வு கொண்டவன், (தன் நன்மையில்) குருடாக இருப்பவன், தனக்கும், பிறருக்கும் நன்மையானவற்றில் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்ளாதவன் ஆகியோர் தவிர்க்கப்பட வேண்டும்.(14) மதுபானம் பருகுபவன், பிறரை வெறுப்பவன், கோபம்நிறைந்தவன், கருணையற்றவன், பிறரின் இன்பத்தைக் கண்டு துன்புறுபவன், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், வாழும் உயிரினங்களின் உயிரை எடுப்பதிலேயே எப்போதும் ஈடுபடுபவன்,(15) நன்றியற்றவன், தீயவன் ஆகியோர் தவிர்க்கப்பட வேண்டும். இவர்களில் எவரிடமும் ஒருபோதும் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளக்கூடாது. அதே போலவே, பிறரின் குற்றங்களைக் குறிப்பதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டவனிடமும் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளக்கூடாது.

இப்போது, (நட்புடன்) கூட்டணி அமைத்துக்கொள்ளக்கூடிய மனிதர்களைக் குறிப்பிடுகிறேன் கேட்பாயாக.(16) நற்பிறவி கொண்டவர்கள், நாநலம் மற்றும் பேச்சில் பணிவு கொண்டவர்கள், அறிவியலையும் ஞானத்தையும் கொண்டவர்கள், அழகிய ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புகளைக் கொண்டவர்கள், தகுதியையும், பிற சாதனைகளையும் கொண்டவர்கள், பேராசையில் இருந்து விடுபட்டவர்கள், உழைப்பால் களைக்காதவர்கள்,(17) நண்பர்களுடன் நலமாக இருப்பவர்கள், நன்றி நிறைந்தவர்கள், பல்வேறு தகவல்களையும், ஞானத்தையும் கொண்டவர்கள், பொருளாசையற்றவர்கள், ஏற்புடைய பண்புகளைக் கொண்டவர்கள், வாய்மையில் உறுதியாக இருப்பவர்கள், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்கள்,(18) உடற்பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் குலங்களைத் தழைக்கச் செய்பவர்கள்[2], களங்கமற்றவர்கள், புகழுடையவர்கள் ஆகியோருடன் மன்னர்கள் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.(19)மேலும், ஓ! ஏகாதிபதி, தன் சக்திக்குத் தக்கபடி செயல்படுபவனிடம் நிறைவடைந்து மகிழ்பவர்கள், கோபத்திற்கு அவசியமில்லாத சந்தர்ப்பங்களில் ஒருபோதும் கோபமடையாதவர்கள், போதுமான காரணமேதுமில்லாமல் ஒருபோதும் சலிப்படையாதவர்கள்,(20) பொருளறிவியலை நன்கறிந்தவர்கள், எரிச்சலில் இருக்கும்போதும் தங்கள் மனங்களை அமைதியாக வைத்துக் கொள்ளக்கூடியவர்கள், தனிப்பட்ட தியாகம் செய்து நண்பர்களின் தொண்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள்,(21)  மனவேற்றுமை கொண்டு நண்பர்களிடம் இருந்து ஒருபோதும் பிரியாதவர்கள், (எளிதில் நிறம் மாறாத) கம்பளியால் ஆன சிவப்புத் தரைவிரிப்பைப் போலத் (தங்கள் பற்றில்) மாற்றமில்லாமல் தொடர்பவர்கள், கோபத்தால் ஒருபோதும் ஏழைகளை அவமதிக்காதவர்கள், காமம் மற்றும் குழப்ப வசப்பட்டு ஒருபோதும் இளம்பெண்களை அவமதிக்காதவர்கள், தவறான பாதைகளை ஒருபோதும் நண்பர்களுக்குக் காட்டாதவர்கள், நம்பிக்கைக்குத் தகுந்தவர்கள், அறநடத்தையில் பற்றுடையவர்கள், தங்கத்தையும் செங்கற்கட்டிகளையும் ஒரே கண்ணால் {ஒன்றாகப்} பார்ப்பவர்கள், நண்பர்களிடமும், நலம்விரும்பிகளிடமும் உறுதியான பிணைப்பு கொண்டவர்கள்,(23) தங்கள் மதிப்புக்குறிகள் அனைத்தையும் கைவிட்டு மக்களைத் திரட்டி, நண்பர்களின் காரியத்தை நிறைவுசெய்ய முயல்பவர்கள் ஆகியோர் (நட்புடன்) கூட்டணி அமைத்துக்கொள்ளத்தக்க மனிதர்களாகக் கருதப்பட வேண்டும்.(24) உண்மையில், எந்த மன்னன், இத்தகைய மேன்மையான மனிதர்களுடன் நட்புக்கூட்டணி அமைத்துக் கொள்கிறானோ, அவனுடைய ஆட்சிப்பகுதிகள், விண்மீன்களின் தலைவனையுடைய {நிலவுடைய} ஒளிபோல அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிவடையும்.(25)

ஆயுதங்களில் நல்ல பயிற்சி பெற்றவர்கள், கோபத்தை முற்றிலும் கட்டுப்படுத்தியவர்கள், போரில் எப்போதும் வலுத்தவர்கள், உயர்ந்த குடிபிறப்பு, நல்ல நடத்தை மற்றும் பல்வேறு சாதனைகளைச் செய்தவர்கள் ஆகிய மனிதர்களுடனே கூட்டணிகள் அமைக்கப்பட வேண்டும்.(26) ஓ! பாவமற்றவனே, நான் குறிப்பிட்ட குற்றமுள்ள மனிதர்களில், ஓ! மன்னா, நன்றியற்றவர்களும், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவர்களுமே பெரும் குற்றமுள்ளவ்வர்கள். தீய நடத்தை கொண்ட அந்த மனிதர்கள் அனைவராலும் தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில், இதுவே தீர்மானிக்கப்பட்ட முடிவாகும்” என்றார் {பீஷ்மர்}.(27)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இந்த விளக்கத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவர்கள் என்றும், நன்றியற்ற மனிதர்கள் என்றும் அழைக்கப்படுவோர் யார் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(28)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, வடக்கில் இருக்கும் மிலேச்சர்களின் நாட்டில் நடந்த சம்பவங்கள் அடங்கிய ஒரு பழங்கதையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(29) நடுநாட்டை {மத்தியதேசத்தைச்} சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிராமணன் இருந்தான். அவன் {அந்த பிராமணன்} வேத கல்வியற்றவனாக இருந்தான். (ஒருநாள்) அந்த மனிதன், ஒரு செழிப்பான கிராமத்தைக் கண்டு, ஈகை பெறும் விருப்பத்தில் அதற்குள் நுழைந்தான்.(30) பெரும் செல்வத்தைக் கொண்டவனும், (மனிதர்களின்) வகைகள் அனைத்தின் தனிப்பட்ட பண்புகளை அறிந்தவனும், பிராமணர்களிடம் பற்று மிக்கவனும், வாய்மையில் உறுதியானவனும், எப்போதும் கொடைகளை அளிப்பவனுமான ஒரு கள்வன் அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தான்.(31) அந்தப் பிராமணன், அந்தக் கள்வனின் வசிப்பிடத்திற்குச் சென்று பிச்சை கேட்டான். உண்மையில் அவன், ஒரு வருடத்திற்கு வாழ வேண்டியதற்குத் தேவையான பொருட்களையும், ஒரு வீட்டையும் கேட்டான்.(32) இவ்வாறு அந்தப் பிராமணனால் கேட்கப்பட்ட கள்வன், {அதற்கு மேலும்} நுனி முழுமையான புதிய துணியையும்[3]இளமை கொண்ட ஒரு கைம்பெண்ணையும் {விதவைப் பெண்ணையும்} கொடுத்தான்.(33) அவை அனைத்தையும் கள்வனிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிராமணன் மகிழ்ச்சியால் நிறைந்தான். உண்மையில் அந்தக் கௌதமன்[4], கள்வன் அவனுக்குக் கொடுத்த வசதியான வீட்டில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.(34) அவன், கள்ளர் தலைவனிடம்[5] இருந்து பெற்ற பெண் அடிமையின் {பணியாளின்} உற்றார் உறவினருக்கு உதவிபுரியத் தொடங்கினான். இவ்வழியில் அவன் அந்தச் செழிப்புமிக்க வேடர்களின் கிராமத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தான்.(35)அவன் {கௌதமன்}, பெரும்பற்றுடன் வில் ஏவும் கலையைப் பயிலத் தொடங்கினான். கௌதமன், அங்கே வசித்த பிற கள்வர்களைப் போல, ஒவ்வொருநாளும் காட்டுக்குச் சென்று, காட்டு நாரைகளை {அன்னபக்ஷிகளை} அபரிமிதமாகக் கொன்றான். உயிரினங்களைக் கொல்வதில் எப்போதும் ஈடுபட்ட அவன், விரைவில் அச்செயலில் நல்ல திறம்பெற்றவனாகி, கருணைக்கு விடைகொடுத்தனுப்பினான். கள்வர்களுடன் அவன் கொண்ட நெருக்கத்தின் விளைவால், அவன் அவர்களில் ஒருவனாகவே ஆனான்.(36,37) அந்தக் கள்வர் கிராமத்தில் பல மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவனால் கொல்லப்பட்ட காட்டு நாரைகளின் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தது.(38) ஒருநாள் அந்தக் கிராமத்திற்கு மற்றொரு பிராமணன் வந்தான். அவன் மரவுரியும் மான்தோலும் உடுத்தி, தன் தலையில் சடாமுடி தரித்தவனாக இருந்தான். மிக உயர்ந்த தூய நடத்தை கொண்ட அவன் வேத கல்வியில் பற்றுடன் இருந்தான்.(39) அவன் அடக்கமான மனோநிலை மற்றும் உணவில் சிக்கனம் கொண்டவனாக, பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக, வேதங்களை முற்றாக அறிந்தவனாக, பிரம்மச்சரிய நோன்புகளைப் பயில்பவனாக, கௌதமன் எங்கிருந்து வந்தானோ அந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தான்.(40)

ஏற்கனவே சொன்னதுபோலத் தான் திரிந்து கொண்டிருந்த போக்கில் அந்தப் பிராமணன், கௌதமன் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட அந்தக் கள்ளர் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். ஒரு சூத்திரனால் கொடுக்கப்பட்ட உணவை ஏற்காத அவன், (விருந்தோம்பலின் கடமைகளை ஏற்றுக் கொள்வதற்காக) அங்கே இருக்கக்கூடிய ஒரு பிராமணனின் வீட்டைத் தேடத் தொடங்கினான்[6].(41) அதன்படி அவன் கள்வர் குடும்பங்கள் நிறைந்த அந்தக் கிராமத்தின் அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தான். இறுதியாக அந்தப் பிராமணர்களில் முதன்மையானவன், கௌதமனுக்குச் சொந்தமான வீட்டுக்கு வந்தான்.(42) சரியாக அதே நேரத்தில், கௌதமனும் காட்டிலிருந்து தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இரு நண்பர்களும் சந்தித்துக் கொண்டனர்.(43) வில்லும், வாளும் தரித்திருந்த அவன், கொல்லப்பட்ட நாரைகளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு இருந்தான். அவனது தோள்களில் இருந்த பையில் இருந்து சொட்டி குருதியால் அவனது உடல் பூசப்பட்டிருந்தது.(44) புதிதாக வந்த அந்த விருந்தினன், தன்னினத்தைத் தின்னும் விலங்குக்கு ஒப்பாக, தன் பிறப்பின் வகைக்கான தூய நடைமுறைகளில் இருந்து வீழ்ந்துவிட்டவனாக இருந்த அந்த மனிதன், தன் வீட்டுக்குள் நுழைவதைக் கண்டு, ஓ! மன்னா, அவனை அடையாளங்கண்டு கொண்டு இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(45){அவன்}, “மடமையினால் நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ ஒரு பிராமணனும், பிராமணக் குடும்பத்தைத் தழைக்கச் செய்பவனுமாவாய். நடுநாட்டை {மத்திய தேசத்தைச்} சேர்ந்த மதிப்புமிக்கக் {பிராமணக்} குடும்பத்தில் பிறந்த உன்னால் எவ்வாறு நடைமுறைகளில் ஒரு கள்வனாக முடிந்தது?(46) ஓ! மறுபிறப்பாளனே, வேதங்களில் கரைகண்டவர்களும், புகழ்மிக்கவர்களும், பழங்காலத்தைச் சேர்ந்தவர்களுமான உற்றார் உறவினரை நினைவுகூர்வாயாக. அவர்களின் குலத்தில் பிறந்த நீ, ஐயோ, அதற்கொரு கறையாக வந்து சேர்ந்திருக்கிறாய்.(47) உன் முயற்சியால் விழிப்படைவாயாக. ஓ! மறுபிறப்பாளனே, (நீ பிறந்த வகைக்கான) சக்தி, நடத்தை, கல்வி, தற்கட்டுப்பாடு மற்றும் கருணையை நினைவுகூர்ந்து தற்போதைய உன் வசிப்பிடத்தை விட்டு அகல்வாயாக” என்றான்.(48)

ஓ! மன்னா, இவ்வாறு நல்ல மனம் கொண்ட தன் நண்பனால் சொல்லப்பட்ட கௌதமன், இதயத்தில் பெரும் துன்பத்துடன் அவனுக்குப் பதிலளித்தான்,(49) “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, நான் ஓர் ஏழை. நான் வேத அறிவற்றவன். ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, செல்வத்துக்காக மட்டுமே நான் இங்கே வசிப்பிடத்தை அடைந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(50) எனினும், உன்னைக் கண்டதால் நான் இன்று அருளப்பட்டவனானேன். நாளை நாம் இருவரும் இந்த இடத்தைவிட்டு ஒன்றாகப் புறப்படுவோம். நீ இந்த இரவை என்னோடு கழிப்பாயாக” என்றான்.(51)

புதிதாக வந்த பிராமணன் இவ்வாறு சொல்லப்பட்டதும், கருணை நிறைந்தவனாகி, அங்கே எதையும் தொடுவதைத் தவிர்த்து, அந்த இரவை அங்கே கழித்தான். உண்மையில் பசித்தாலும், மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்ளப்பட்டாலும், அந்த விருந்தினன் அந்த வீட்டில் இருந்த எந்த உணவையும் தீண்ட மறுத்துவிட்டான்” என்றார் {பீஷ்மர்}.(52)

ராஜதர்மன் என்ற நாடீஜங்கன்! – சாந்திபர்வம் பகுதி – 169-வேடனான இருந்த கௌதமன் என்ற பிராமணன், பெருங்கடலை நோக்கிச் சென்றது; வழியில் அவன் கண்ட அற்புதங்கள்; காட்டுக்கு மத்தியில் ஓரிடத்தில் ஓர் அழகிய ஆலமரத்தைக் கண்டது; அதன் அடியில் உறங்கியது; ராஜதர்மன் என்ற பெயரைக் கொண்ட நாரை அங்கே வந்தது; தன் வசிப்பிடத்தில் விருந்தினராக அன்றிரவு தங்குமாறு கௌதமனைக் கேட்டுக் கொண்ட தெய்வீக நாரை..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாராதா, அந்த இரவு கடந்து, அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் அந்த வீட்டை விட்டைச் சென்றதும், தன் வசிப்பிடத்தை விட்டு வெளியே வந்த கௌதமன், கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.(1) வழியில் அவன் கடற்பயணங்களை மேற்கொள்ளும் சில வணிகர்களைக் கண்டான். அவன் {பிராமணன்} அந்த வணிகர் கூட்டத்துடன் சேர்ந்து பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(2) ஓ! மன்னா, அந்தப் பெரிய கூட்டம் ஒரு மலை பள்ளத்தாக்கைக் கடக்கும்போது ஒரு மதங்கொண்ட யானையால் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) எவ்வாறோ பேராபத்தில் இருந்து தப்பிய அந்தப் பிராமணன் {கௌதமன்}, எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடக்கு நோக்கி ஓடினான்.(4) {வணிகக்) கூட்டத்திடம் இருந்து பிரிந்து அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கு வந்த அவன், ஒரு கிம்புருஷனைப் போலக் காட்டில் தனியொருவனாகத் திரியத் தொடங்கினான்[1].(5)இறுதியாகப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் சாலையை அடைந்த அவன், இனிமை நிறைந்ததும், பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்ததுமான ஒரு தெய்வீகக் காட்டை அடையும் வரை பயணித்தான்.(6) வருடம் முழுவதும் மலர்களாலும், கனிகளாலும் பூத்துக் குலுங்கும் மாமரங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. (சொர்க்கத்தின்) நந்தனத் தோப்புகளுக்கு ஒப்பான அதில், யக்ஷர்களும், கின்னரர்களும் வசித்து வந்தனர்.(7) சாலங்கள், பனைமரங்கள், தமாலங்கள் {வெள்வேல் மரங்கள்}, {அரசு, ஆல், அகில்}, கரும் கற்றாழைகள், பெரும் சந்தன மரங்கள் ஆகியவற்றால் அஃது {அந்தக் காடு} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(8) இனிமைநிறைந்த அந்த மேட்டுச் சமவெளியில் பல்வேறு வகைகளிலான மணங்களுடன் கூடிய நறுமணப் பொருட்களைக் கண்டான், முதன்மையான இனங்களைச் சேர்ந்த பறவைகளின் இனிய மெல்லிசைகளையும் கேட்டான்.(9) பாருண்டங்கள்[2] என்றழைக்கப்படுபவையும், மனித முகங்களுக்கு ஒப்பான முகங்களைக் கொண்டவையும், புலிங்கங்கள்[3] என்று அழைக்கப்படுபவையும், மலைப்பகுதிகள் மற்றும் கடற்பகுதிகளைச் சேர்ந்த சிறகு படைத்த பிற காற்றுவாசிகள் {பறவைகள்} அங்கே இனிமையான அதிர்குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தன.(10)

இயற்கை இசைக்கலைஞர்களான இந்த இனிமை நிறைந்த அழகான இசையைக் கேட்டுக் கொண்டே கௌதமன் அந்தக் காட்டின் வழியே சென்றான்.(11) ஓ! மன்னா, அப்படிச் செல்லும் வழியில் அவன், தங்க மணல்களால் மறைக்கப்பட்டதும், அழகில் சொர்க்கத்திற்கே இணையானதுமான சமதளம் கொண்டதுமான ஓர் இனிமையான இடத்தைக் கண்டான்.(12) அந்த நிலத்தில், கோளவடிவமான உச்சியைக் கொண்டதும், பெரியதுமான ஓர் அழகிய ஆல மரத்தைக் கண்டான். தாய்மரத்தோடு தொடர்ந்து சென்ற பல கிளைகளைக் கொண்ட ஆலமரமானது, அழகிலும், வடிவத்திலும் சமவெளியில் அமைக்கப்பட்ட ஒரு குடையைப் போலத் தெரிந்தது.(13) அந்த மகத்தான மரத்தின் கீழிருந்த இடமானது, பெரும் நறுமணமிக்கச் சந்தன நீரால் நனைக்கப்பட்டிருந்தது. பேரழகைக் கொண்டதும், சுற்றிலும் இனிமையான மலர்களால் சூழப்பட்டதுமான அந்த இடம், பெரும்பாட்டனின் சபையைப் போலவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.(14) மலர்ந்திருக்கும் மரங்கள் நிறைந்ததும், புனிதமானதும், தேவர்களின் வசிப்படத்தைப் போலத் தெரிந்ததுமான அந்த அழகான, ஒப்பற்ற இடத்தைக் கண்ட கௌதமன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(15)

அங்கே வந்த அவன், மிகவும் நிறைவான இதயத்துடன் கீழே அமர்ந்தான். ஓ! குந்தியின் மகனே, அங்கே அவன் அமர்ந்திருந்தபோது, வனப்பும், மங்கலமும் மிக்க ஓர் இனிய தென்றலானது, ஓ! ஏகாதிபதி, பல்வேறு வகை மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடியும், கௌதமனின் அங்கங்களுக்குக் குளிர்வூட்டியபடியும், தெய்வீக இன்பத்தில் அவனை நிறைத்தபடியும் அங்கே வீசத் தொடங்கியது.(16,17) நறுமணமிக்கத் தென்றலால் தாலாட்டப்பட்ட அந்தப் பிராமணன், புத்துணர்வை அடைந்தான், மேலும், அவன் உணர்ந்த இன்பத்தின் விளைவால் அவன் விரைவில் உறக்கத்திலும் வீழ்ந்தான். அதே வேளையில் சூரியன் அஸ்த மலைகளுக்குப் பின்னால் மறைந்தான்.(18) அந்த ஒளிக்கோளானவன், மேற்கிலிருக்கும் தன் அறைகளுக்குள் நுழைந்து, மாலை சந்தி ஏற்பட்ட போது, தன் இனத்தில் முதன்மையான ஒரு பறவையானவன், பிரம்மனின் உலகங்களில் இருந்து தன் இல்லமான அந்த இடத்திற்குத் திரும்பினான்.(19) நாடீஜங்கன் என்ற பெயரைக் கொண்ட அவன், அது படைப்பாளனின் {பிரம்மனின்} அன்புக்குரிய நண்பனாக இருந்தான். பெரும் ஞானம் கொண்டவனும், (தவசி) கசியபரின் மகனுமான அவன், நாரைகளின் இளவரசனாக இருந்தான்.(20) மேலும் அவன், பூமியில் ராஜதர்மன் என்ற பெயரில் பரந்து அறியப்பட்டிருந்தான். உண்மையில், அவன் பூமியில் புகழிலும், ஞானத்திலும் அனைவரையும் விஞ்சியவனாக இருந்தான். தெய்வீக கன்னிகையின் மகனும், பேரழகும், கல்வியும் கொண்டவனான அவன், காந்தியில் ஒரு தேவனுக்கு ஒப்பானவனாக இருந்தான்.(21) சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அவன் அணிந்திருந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தெய்வீகப் பெண்ணின் பிள்ளை அழகில் சுடர்விடுபவனாகத் தெரிந்தான்.(22) அந்த இடத்திற்கு வந்த பறவையைக் கண்ட கௌதமன் ஆச்சரியத்தால் நிறைந்தான். பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அந்தப் பிராமணன், அவனைக் கொல்ல விரும்பி அந்தப் பறவையானவன் மீது தன் கண்களைச் செலுத்தத் தொடங்கினான்.(23)

ராஜதர்மன் {என்ற அந்த நாரையானவன்}, “ஓ! பிராமணரே, உமக்கு நல்வரவு. நான் கொண்ட நற்பேற்றினாலேயே இன்று நீர் என் வசிப்பிடத்திற்கு வரப் பெற்றேன். சூரியன் மறைந்துவிட்டான். மாலை சந்தியும் வந்துவிட்டது.(24) என் வசிப்பிடத்திற்கு வந்திருக்கும் நீர், இன்று என் அன்புக்குரிய சிறந்த விருந்தினராக இருக்கப் போகிறீர். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படியான என் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு, நாளை காலையில் நீர் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்” என்றான்.(25)

ராட்சச மன்னன் விருபாக்ஷன்! – சாந்திபர்வம் பகுதி – 170-கௌதமனுக்கு உண்ண மீன்களும், படுக்க மென்மையான படுக்கையும் கொடுத்த ராஜதர்மன் என்ற நாரை; செல்வமீட்டும் வழியைச் சொன்ன ராஜதர்மன்; ராட்சச மன்னன் விருபாக்ஷனைக் காணச் சென்ற கௌதமன்; செல்வச்செழிப்பில் இருந்த மேருவ்ரஜ நகரத்தைக் கண்ட கௌதமன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட கௌதமன், ஆச்சரியத்தால் நிறைந்தான். அதேநேரத்தில் பெரும் ஆவலை உணர்ந்த அவன், ராஜதர்மனிடம் {நாரையிடம்} இருந்து பார்வை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.(1)

ராஜதர்மன் {என்ற நாரையானவன்}, “ஓ! பிராமணரே, நான் கசியபருக்கும், (தவசி) தக்ஷனின் மகள்களில் ஒருத்திக்குப் பிறந்த மகனாவேன். பெரும் தகுதிகளையுடைய நீர் இன்று என் விருந்தினராகியிருக்கிறீர். ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமக்கு நல்வரவு” என்றான்”.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி விருந்தோம்பலை அளித்த அந்த நாரையானவன், சுற்றிலும் கிடந்த சால மலர்களால் ஒரு சிறந்த படுக்கையை அமைத்துக் கொடுத்தான். மேலும் அவன், பாகீரதியின் ஆழமான நீரில் இருந்து பிடிக்கப்பட்ட பல பெரிய மீன்களையும் அவனுக்குக் கொடுத்தான்.(4) உண்மையில், அந்தக் கசியபரின் மகன் {நாரையான ராஜதர்மன்}, தன் விருந்தினனான கௌதமன் ஏற்றுக் கொள்வதற்காகச் சுடர்மிக்க நெருப்பையும், குறிப்பிட்ட பெரிய மீன்களையும் கொடுத்தான்.(5) அந்தப் பிராமணன் உண்டு, நிறைவடைந்த பிறகு, தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்தப் பறவையானவன், களைப்பு நீங்க தன் சிறகுகளால் அவனுக்கு விசிறத் தொடங்கினான்.(6)

தன் விருந்தினன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட அவன் {ராஜதர்மன்}, அவனது குடிவழி குறித்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் {கௌதமன்}, “நான் கௌதமன் என்ற பெயரால் அறியப்படும் ஒரு பிராமணனாவேன்” என்றான் சொல்லி அமைதியடைந்தான்.(7)

அந்தப் பறவையானவன், இலைகளாலும், நறுமணமிக்க மலர்கள் பலவற்றாலுமான மென்மையான படுக்கையைத் தன் விருந்தினனுக்குக் கொடுத்தான். கௌதமன் அதில் தன்னைக் கிடத்திக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(8) கௌதமன் அவ்வாறு தன்னைக் கிடத்திக் கொண்ட போது, கடமைகளின் அறிவில் யமனுக்கு ஒப்பானவனான கசியபரின் நானலமிக்க மகன் {ராஜதர்மன்}, அவன் அங்கே வந்ததற்கான காரணத்தைக் குறித்துக் கேட்டான்.(9)

கௌதமன் {நாரையிடம்}, “ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, நான் ஏழ்மைமிக்கவன். செல்வம் ஈட்டுவதற்காக நான் கடலுக்குச் செல்ல விரும்புகிறேன்” என்று பதிலுரைத்தான்.(10)

கசியபரின் மகன் உற்சாகமாக, “நீர் கவலையேதும் கொள்வது உமக்குத் தகாது. ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் வெற்றியடைந்து, உடைமைகளுடன் இல்லம் திரும்புவீர்.(11) மரபுரிமை, நற்பேறு அல்லது தேவர்களின் உதவி மூலமான திடீர் உடைமையீட்டல், உழைப்பு, நண்பர்களின் உதவி, அல்லது அன்பு ஆகிய நான்கு வழிமுறைகளின் மூலம் ஒருவன் செல்வத்தை ஈட்டலாம் என்று தவசி பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார்.(12) நான் உமது நண்பனாகியிருக்கிறேன். நான் உம்மிடம் நல்லெண்ணங்களை வளர்க்கிறேன். எனவே, நீர் செல்வமடைவதில் வெல்லும் வழியில் நான் முயற்சி செய்வேன்” என்றான் {நாரையான ராஜதர்மன்}.(13)

தன் விருந்தினன் படுக்கையிலிருநு உற்சாகமாக எழுவதைக் கண்ட அந்தப் பறவையானவன், அவனிடம் {கௌதமனிடம்}, “ஓ! இனிமையானவரே, இந்த வழியாகச் சென்றால் நிச்சயம் நீர் வெற்றியடைவீர்.(14) இந்த இடத்தில் இருந்து மூன்று யோஜனைகள் தொலைவில் ராட்சசர்களின் வலிமைமிக்க மன்னன் ஒருவன் இருக்கிறான். பெரும்பலம் கொண்ட அவனது பெயர் விருபாக்ஷனாகும். மேலும் அவன் எனது நண்பனுமாவான்.(15) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, அவனிடம் செல்வீராக. என் வேண்டுகோளால் துண்டப்படும் அந்தத் தலைவன், நீர் விரும்பும் அளவுக்குச் செல்வத்தை உமக்குக் கொடுப்பான்” என்றான்.(16)

ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமன், வழியில் அமுதம் போன்ற இனிமையான கனிகளை நிறைவாக உண்டு கொண்டே அந்த இடத்திற்கு உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.(17) சாலை நெடுகிலும் வளர்ந்திருந்த சந்தனம், அகில், இலவங்க மரங்களைக் கண்டு, அவற்றின் புத்துணர்வு மிக்க நிழல்களை அனுபவித்தபடியே அந்தப் பிராமணன் விரைவாகச் சென்றான்.(18) பிறகு அவன் {கௌதமன்} மேருவ்ரஜம் என்ற பெயரில் அறியப்பட்ட நகரத்தை அடைந்தான். அது கற்களால் செய்யப்பட்ட பெரிய கட்டட முகப்புகளையும், அதே பொருளாலான {கற்களாலான} உயர்ந்த சுவர்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் அஃது அகழியால் சூழப்பட்டிருந்தது, மேலும் மதில்களில் பெரிய பாறைத் துண்டுகள் மற்றும் பல்வேறு வகைகளிலான இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன.(19) ஓ! மன்னா, தன் நண்பனால் (நாரையால்) தன்னிடம் விருந்தினனாக அனுப்பப்பட்டவன் அவன் என்பதைப் பெரும் நுண்ணறிவு கொண்ட ராட்சசத் தலைவன் {விருபாக்ஷன்} விரைவில் அறிந்து கொண்டான். அந்தத் தலைவன் கௌதமனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.(20)

அப்போது, ஓ! யுதிஷ்டிரா, அந்த ராட்சசர்களின் மன்னன், தன் பணியாட்களிடம், “வாயிலில் இருந்து கௌதமர் இங்கே விரைவில் கொண்டுவரப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டான். மன்னனின் ஆணையின் பேரில், பருந்துகளைப் போல வேகமிக்கக் குறிப்பிட்ட மனிதர்கள், தங்கள் ஆட்சியாளனின் அற்புத அரண்மனையில் இருந்து வெளியே வந்து, கௌதமன் இருந்த வாயிலுக்குச் சென்றனர்.(22)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த அரசத் தூதுவர்கள், அந்தப் பிராமணனிடம், “விரைவாக வாரும், மன்னன் உம்மைக் காண விரும்புகிறார்.(23) விருபாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட பெரும் துணிவுமிக்க ராட்சசர்களின் மன்னனைக் குறித்து நீர் கேள்விப்பட்டிருப்பீர். அவரே உன்னை உடனடியாகக் காண விரும்புகிறார். தாமதிக்காதீர், விரைவாக வாரும்” என்று சொன்னார்கள்.(24)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், ஆச்சரியத்தால் தன் களைப்பை மறந்து அந்தத் தூதுவர்களுடன் ஓடினான். அந்த நகரின் பெருஞ்செழிப்பைக் கண்ட அவன் {கௌதமன்} ஆச்சரியத்தால் நிறைந்தான்.(25) ராட்சசர்களின் மன்னனைப் பார்க்க வேண்டி, தூதுவர்களின் துணையுடன் அம்மன்னனின் அரண்மனைக்குள் விரைவாக நுழைந்தான்” {என்றார் பீஷ்மர்}.(26)

கொடூரத் திட்டம்! – சாந்திபர்வம் பகுதி – 171-கௌதமனை வரவேற்றுக் கௌரவித்த விருபாக்ஷன்; பெரும் செல்வத்தை எடுத்துச் சென்ற கௌதமன்; அதே ஆலமரத்தடியை அடைந்து களைத்துச் சாய்ந்தது; ராஜதர்மன் வந்து தன் சிறகுகளால் விசிறி அவனது களைப்பகற்றி உணவு ஊட்டியது; நெடும் வழி செல்ல வேண்டியுள்ளதால் உணவுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணிய கௌதமனின் மனத்தில் உதித்த கொடூரத் திட்டம்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பெரிய அறைக்குள் வழிநடத்தப்பட்ட கௌதமன், ராட்சசர்களின் மன்னனிடம் அறிமுகப்படுத்தப்பட்டான். (வழக்கமான காணிக்கைகளுடன்) பின்னவனால் {ராட்சச மன்னன் விருபாக்ஷனால்} வழிபடப்பட்ட அவன், ஓரு சிறந்த இருக்கையில் அமர்ந்தான்.(1) மன்னன், அவன் பிறந்த குலம், நடைமுறைகள், வேத கல்வி, பிரம்மச்சரிய நோன்பு ஆகியவற்றைக் குறித்து விசாரித்தான். எனினும், அந்தப் பிராமணன் பிற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தன் பெயரையும், குலத்தையும் மட்டுமே சொன்னான்.(2) தன் விருந்தினனுடைய பெயர் மற்றும் குலத்தை மட்டுமே உறுதி செய்து கொண்ட மன்னன், அவனிடம் பிராமணக் காந்தியும், வேத கல்வியும் இல்லாதிருப்பதைக் கண்டு, அடுத்ததாக அவன் சார்ந்த நாட்டைக் குறித்துக் கேட்டான்.(3)

அந்த ராட்சசன் {விருபாக்ஷன் கௌதமனிடம்}, “ஓ! அருளப்பட்டவரே, உமது வசிப்பிடம் எங்கே இருக்கிறது, உமது மனைவி எந்தக் குலத்தைச் சார்ந்தவர்? எங்களுக்கு உண்மையைச் சொல்வீராக. அஞ்சாதீர். கவலையில்லாமல் எங்களை நம்புவீராக” என்று கேட்டான்.(4)

கௌதமன் {விருபாக்ஷனிடம்}, “பிறப்பால் நான் நடுநாட்டை {மத்திய தேசத்தைச்} சேர்ந்தவன். நான் வேடர்களின் கிராமத்தில் வசிக்கிறேன். நான் விதவையாக இருந்த ஒரு சூத்திர மனைவியைத் திருமணம் செய்து கொண்டேன். நான் உன்னிடம் சொல்லும் இவை அனைத்தும் உண்மையே” என்றான்”.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மன்னன், என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான். உண்மையில், தகுதியை அடைவதில் எவ்வாறு வெல்வது என்பதைக் குறித்து எண்ணத் தொடங்கினான்.(6) அவன் தனக்குள்ளேயே, “இந்த மனிதர் பிறப்பால் ஒரு பிராமணராவார். மேலும் இவர் உயர் ஆன்ம ராஜதர்மனின் நண்பராக இருக்கிறார். அந்தக் கசியபரின் மகனால் இவர் என்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறார்.(7) என் நண்பனுக்கு ஏற்புடையதையே நான் செய்ய வேண்டும். அவன் எனக்கு மிக நெருக்கமானவன். உண்மையில் அவன் என் சகோதரனும், என் அன்புக்குரிய உறவினனுமாவான். உண்மையில் என் இதயத்தின் நண்பனாவான்.(8) கார்த்திகை மாதத்தின் இந்த நாளில் {பூர்ணிமா திதியில் / முழு நிலவில் / பௌர்ணமியில்}, முதன்மையான வகையைச் சேர்ந்த ஆயிரம் பிராமணர்கள் என் வீட்டில் ஆதரிக்கப்படுகின்றனர். இந்தக் கௌதமரும் அவர்களோடு என் ஆதரவைப் பெறட்டும். நான் இவருக்குச் செல்வத்தையும் அளிப்பேன்.(9) இஃது ஒரு புனிதமான நாள். கௌதமர் இங்கே விருந்தினராக வந்திருக்கிறார். (பிராமணர்களுக்குக்) கொடுக்கப்பட வேண்டிய செல்வம் தயாராக இருக்கிறது. இனி இது குறித்துச் சிந்திக்க என்ன இருக்கிறது” என்று நினைத்தான்.(10)

சரியாக அதே நேரத்தில் பெரும் கல்விமான்களும், நீராடி தூய்மையடைந்து (சந்தனக்குழம்பு மற்றும் மலர்களால்) அலங்கரிக்கப்பட்டவர்களும், நீண்ட பட்டாடைகள் உடுத்தியவர்களுமான ஆயிரம் பிராமணர்கள் அந்த அரண்மனைக்கு வந்தனர்.(11) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சச மன்னன் விருபாக்ஷன், அங்கே வந்த விருந்தினர்களைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி முறையாக வரவேற்றான்.(12) மன்னனின் உத்தரவின் பேரில் அங்கே அவர்களுக்காகத் தோல்விரிப்புகள் பரப்பப்பட்டன. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அப்போது அரச பணியாட்கள் தரையில் குசப் புற்களால் ஆன பாயை {கோரைப்பாயை} விரித்தனர்[1].(13) மன்னனால் முறையாக வழிபடப்பட்ட அந்தப் பிராமணர்களில் முதன்மையானோர், அந்த ஆசனங்களில் அமர்ந்தார்கள். மீண்டும் ஒருமுறை அந்த ராட்சசத் தலைவன், எள், தர்ப்பை மற்றும் நீர் கொடுத்து தன் விருந்தினர்களைவிதிப்படி வழிபட்டான்.(14) அவர்களில் சிலர் விஸ்வதேவர்கள், பித்ருக்கள் மற்றும் அக்னி தேவர்களைப் பிரதிபலிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள், சந்தனக்குழம்பால் பூசப்பட்டு, அவர்களுக்கு மலர்களும் கொடுக்கப்பட்டன. மேலும் அவர்கள் விலைமதிப்புமிக்கப் பிற வகைக் காணிக்கைகளாலும் துதிக்கப்பட்டனர்.(15)இத்தகைய வழிபாட்டுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் ஆகாயத்தில் உள்ள நிலவைப் போல ஒளிமிக்கவர்களாகத் தெரிந்தனர். பிறகு, பிரகாசமானவையும், சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பளபளப்பானவையுமான தங்கத் தட்டுகளில், நெய்யுடனும், தேனுடனும் தயாரிக்கப்பட்ட சிறந்த உணவு நிரப்பப்பட்டு அந்தப் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வருடமும் (முழு நிலவு {பௌர்ணமி} நாட்களில்) ஆஷாட {ஆடி}, மாக {மாசி} மாதங்களில், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு ராட்சசத் தலைவன் உரிய கௌரவங்களை அளித்த பிறகு, அவர்கள் விரும்பிய சிறந்த வகை உணவுகளைப் பெறுவது வழக்கமாக இருந்தது. அதிலும் குறிப்பாகக் கார்த்திகை மாதத்தின் முழு நிலவு நாளில், கூதிர் காலம் முடிந்ததும், அந்த மன்னன், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், முத்துகள்,(17-19) பெரும் மதிப்பிலான வைரங்கள், பல்வேறு வகையிலான வைடூரியக் கற்கள், மான் தோல்கள், ரங்கு மான் தோல்கள் உள்ளிட்ட பல்வேறு செல்வங்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடுப்பான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உண்மையில், பல்வேறு வகைச் செல்வக் குவியல்களை (தன் மறுபிறப்பாள விருந்தினர்களுக்குத்) தக்ஷிணையாகக் கொடுத்த(20) வலிமைமிக்க விருபாக்ஷன், அந்தப் பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசும்போது, “இந்த நகைகள் மற்றும் ரத்தினங்களில், நீங்கள் விரும்பிய அளவுக்கு, உங்களால் எவ்வளவு சுமந்து செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வான்.(21) ஓ! பாரதா, மேலும் அவன், “ஓ! பிராமணர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் உணவுண்ண பயன்படுத்திய தங்கத்தட்டுகளையும், பாத்திரங்களையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்” என்ற வார்த்தைகளையும் சொல்வான்.

(அந்தக் குறிப்பிட்ட விருந்து நிகழ்வில்) உயர் ஆன்ம ராட்சச மன்னனால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டபோது, அந்தப் பிராமணர்களில் காளையர் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்டனர்.(23) விலைமதிப்புமிக்க நகைகள் மற்றும் ரத்தினங்களால் வழிபடப்பட்டவர்களும், சிறந்த ஆடைகளை உடுத்தியிருந்தவர்களுமான அந்தப் பிராமணர்களில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(24)

பல்வேறு நிலங்களில் இருந்து தன் அரண்மனைக்கு வந்திருந்த ராட்சசர்களைத் தடுத்த அந்த ராட்சச மன்னன் மீண்டும் ஒருமுறை அந்தப் பிராமணர்களிடம்,(25) “மறுபிறப்பாளர்களே, இந்த ஒரு நாளைக்கு இங்கே இருக்கும் ராட்சசர்களிடம் நீங்கள் அச்சங்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் விரும்பியவாறு விளையாடிய பிறகு, இங்கிருந்து வேகமாகச் செல்லலாம்” என்றான்.(26)

பிறகு அந்தப் பிராமணர்கள் அந்த இடத்தை விட்டகன்று பெரும் வேகத்துடன் அனைத்துத் திசைகளிலும் சென்றனர். கௌதமனும், நேரம் எதையும் வீணாக்காமல் கனம் மிக்க பெரும் அளவுக்கு தங்கத்தை எடுத்துச் சென்றான்.(27) அநதக் கடினச் சுமையைச் சுமந்து சென்ற அவன், (ஏற்கனவே நாரையைச் சந்தித்த) அதே ஆல மரத்தை அடைந்தான். களைப்புடனும், களைப்பின் வாட்டத்துடனும், பசியுடனும் அவன் கீழே அமர்ந்தான்.(28) கௌதமன் அங்கே ஓய்ந்திருந்தபோது, ஓ! மன்னா, பறவைகளில் சிறந்தவனான ராஜதர்மன் அங்கே வந்தான். நண்பர்களிடம் பற்றுக் கொண்ட அவன், கௌதமனை வரவேற்று மகிழ்ச்சி அடைந்தான்.(29) அவன் {ராஜதர்மன்}, தன் சிறகுகளை அசைத்து, தன் விருந்தினனுக்கு விசிறி, அவனது களைப்பைப் போக்கத் தொடங்கினான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் கௌதமனை வழிபட்டு, அவனது உணவுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான்.(30)

உண்ட பிறகு, புத்துணர்வை அடைந்த கௌதமன், “பேராசையாலும், மடமையினாலும் உந்தப்பட்டு இந்த அளவுக்குப் பசும்பொன்னை எடுத்து வந்துவிட்டேன். நான் நீண்ட வழியில் பயணிக்க வேண்டியுள்ளது. என் வழியில் என் உயிரைத் தாங்கிக் கொள்ள உணவேதும் கொள்ளவில்லை.(31,32) என் உயிரைத் தாங்கிக் கொள்ள என்ன செய்யப் போகிறேன்?” என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்போது அவனுடைய எண்ணங்கள் இவ்வாறே இருந்தன. பெரும் சிந்தனைக்குப் பிறகும், வழியில் உண்பதற்கான உணவு எதையும் அவன் காணத் தவறினான்(33). ஓ! மனிதர்களில் புலியே, நன்றியற்றவனான அவன், அப்போது இவ்வாறே எண்ணினான், “என் அருகில் இருக்கும் இந்த நாரைகளின் இளவரசன், இவ்வளவு பெரியதாகவும், இறைச்சிக் குவியலைக் கொண்டதாகவும் இருக்கிறான்.(34) இவனைக் {நாரையான ராஜதர்மனைக்} கொன்று, பையில் போட்டுக் கொண்டு,பெரும் வேகத்தோடு நான் இந்த இடத்தைவிட்டுச் செல்லப் போகிறேன்” {என்று நினைத்தான் கௌதமன்}.(35)

கௌதமகதி! – சாந்திபர்வம் பகுதி – 172-திட்டம்போட்டபடியே ராஜதர்மனைக் கொன்று, இறைச்சியை வறுத்து பயண வழிக்கான உணவாக எடுத்துச் சென்ற கௌதமன்; ராஜதர்மனைக் காணாது வருந்திய விருபாக்ஷன்; ராஜதர்மனின் கதியை உணர்ந்து கௌதமனைத் துரத்திப் பிடித்த ராட்சசர்கள்; கௌதமனை உண்ண மறுத்த ராட்சசர்கள்; அவனைத் துண்டுகளாக வெட்டி கள்வர்களுக்குக் கொடுத்தது; நன்றியற்றவனின் இறைச்சியை உண்ண மறுத்த தன்னின உன்னிகள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தப் பறவைகளின் இளவரசன் {நாரையான ராஜதர்மன்}, அங்கே அந்த ஆலமரத்தடியில் தன் விருந்தினனின் பாதுகாப்புக்காகச் சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட பெரும் நெருப்பை மூட்டி வைத்திருந்தான்[1].(1) மறுபுறத்தில் அந்தப் பறவையானவன் நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தான். நன்றியற்றவனும் தீய ஆன்மா கொண்டவனுமான அந்த இழிந்தவன் {கௌதமன்}, விருந்தோம்பி உறங்கிக் கொண்டிருக்கும் அவனைக் கொல்லத் தயாரானான்.(2) நம்பிக்கைநிறைந்த அந்தப் பறவையைச் சுடர்மிக்க நெருப்பின் துணையுடன் கொன்று, தான் செய்தது ஒரு பாவம் என்பதை ஒருபோதும் நினைக்காமல் அவனைக் கொன்றதும் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(3) இறகுகளை உரித்தெடுத்து அவன், அந்த நெருப்பிலேயே இறைச்சியை வறுத்தான். பிறகு தான் கொண்டு வந்த தங்கத்தோடு சேர்த்து அதையும் எடுத்துக் கொண்ட அந்தப் பிராமணன் அந்த இடத்தில் இருந்து வேகமாக ஓடினான்.(4)அடுத்த நாள், ராட்சச மன்னன் விருபாக்ஷன் தன் மகனிடம், “ஐயோ, ஓ! மகனே, நான் இன்று பறவைகளில் சிறந்த ராஜதர்மனைக் காணவில்லை.(5) ஒவ்வொரு நாள் காலையும் அவன் பெரும்பாட்டனை {பிரம்மனைத்} துதிப்பதற்காகப் பிரம்மலோகம் செல்வான். திரும்பும்போது, என்னைச் சந்திக்காமல் ஒருபோதும் அவன் சென்றதில்லை.(6) அவன் என் வசிப்பிடத்திற்கு வராமலேயே இரண்டு காலைகளும், இரண்டு இரவுகளும் கடந்துவிட்டன. எனவே, என் மனம் அமைதியடையவில்லை. என் நண்பனைக் குறித்து விசாரிக்க வேண்டும். இங்கே வந்த கௌதமன், வேத கல்வியற்றவனும், பிராமணக் காந்தியில்லாதவனுமாவான். அவன் என் நண்பனின் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றான். அந்த இழிந்த பிராமணன் ராஜதர்மனைக் கொன்றுவிட்டான் என நான் பெரிதும் அஞ்சுகிறேன்.(8) தீய நடைமுறைகளையும், தீ அறிவும் கொண்ட அவனை, அவன் வெளிப்படுத்திய குறிப்புகளின் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். கருணையற்றவனும், கொடூரனும், கடுமுகம் கொண்டவனும், தீயவனுமான அந்த மனிதர்களில் இழிந்தவன் ஒரு கள்வனைப் போன்றவனாவான். அந்தக் கௌதமன் என் நண்பனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். இந்தக் காரணத்தால் என் இதயம் மிகவும் கவலை கொள்கொள்கிறது.(9) எனவே ஓ! மகனே, பெரும் வேகத்துடன் ராஜதர்மனின் வசிப்பிடத்திற்குச் சென்று, தூய ஆன்மா கொண்ட அந்தப் பறவையானவன் இன்னும் உயிருடன் இருக்கிறானா என்பதை உறுதி செய்வாயாக. தாமதிக்காதே” என்றான்{விருபாக்ஷன்}.(10)

இவ்வாறு தன் தந்தையால் சொல்லப்பட்ட அந்த இளவரசன், பிற ராட்சசர்களின் துணையுடன் அங்கிருந்து பெரும் வேகத்தில் சென்றான். அந்த ஆலமரத்தடியை அடைந்த அவன், ராஜதர்மனின் எஞ்சிய பாகங்களைக் கண்டான்.(11) நுண்ணறிவுமிக்க ராட்சசர்களின் மன்னனுடைய மகன் துயரத்தால் வெகுவாக அழுது, கௌதமனைப் பிடிப்பதற்காகத் தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி வெகு வேகமாக ஓடினான்.(12) வெகு தொலைவிற்குச் செல்லும் முன்பே ராட்சசர்கள் அந்தப் பிராமணனைப் பிடித்து, இறகுகள், எலும்புகள் மற்றும் கால்களற்ற ராஜதர்மனின் உடலைக் கண்டார்கள்.(13) சிறைபிடிக்கப்பட்டவனைக் கூட்டிக் கொண்டு பெரும் வேகத்தோடு மேருவ்ரஜத்திற்குத் திரும்பி அந்த ராட்சசர்கள், ராஜதர்மனின் சிதைந்த உடலையும், நன்றியற்றவனும், இழிந்த பாவியுமான கௌதமனையும் மன்னனுக்குக் காட்டினார்கள்.(14) தன் நண்பனின் எஞ்சிய {உடல்} பாகங்களைக் கண்ட மன்னன், தன் அமைச்சர்கள் மற்றும் புரோஹிதருடன் சேர்ந்து உரக்க அழத் தொடங்கினான். உண்மையில், அவனுடைய வசிப்பிடத்தில் கேட்கப்பட்ட ஓலம் பேரொலிமிக்கதாக இருந்தது.(15,16)

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ராட்சச மன்னனின் மொத்த நகரமும் துயரத்தில் ஆழ்ந்தது. அப்போது மன்னன் தன் மகனிடம், “இந்த இழிந்த பாவி கொல்லப்பட வேண்டும். இங்கே இருக்கும் ராட்சசர்கள் இவனது இறைச்சியை மகிழ்ச்சியாக உண்ணட்டும்.(17) பாவச் செயல்கள், பாவம் நிறைந்த பழக்கவழக்கங்கள், பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், பாவத்திற்குப் பழக்கப்பட்டவனுமான இந்த இழிந்தவன் உங்களால் கொல்லப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்றான்.(18)

ராட்சச மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பயங்கர ஆற்றலைக் கொண்டவர்களான ராட்சசர்கள் பலர், அந்தப் பாவியின் இறைச்சியை உண்பதில் தங்களுக்குள்ள விருப்பமின்மையைத் தெரிவித்தனர்.(19) உண்மையில் அந்த இரவு உலாவிகள் தங்கள் மன்னனிடம், “இந்த இழிந்த மனிதனை கள்வர்களுக்குக் கொடுத்துவிடுவீராக” என்றனர்.(20) மேலும் அவர்கள் தங்கள் மன்னனுக்குத் தலைவனங்கி, “பாவம் நிறைந்த இந்த இழிந்தவனை எங்களுக்கு உணவாகக் கொடுப்பது உமக்குத் தகாது” என்றனர்.(21)

மன்னன் அவர்களிடம், “அப்படியே ஆகட்டும். இந்த நன்றியற்ற அற்பனை, தாமதமில்லாமல் கள்வர்களுக்குக் கொடுப்பீராக” என்றான்.(22)

இவ்வாறு சொல்லப்பட்டவர்களும், வேல்களையும், போர்க்கோடரிகளையும் தரித்தவர்களுமான அந்த ராட்சசர்கள் அந்த இழிந்த அற்பனை துண்டுகளாக வெட்டி அவற்றைக் கள்வர்களுக்குக் கொடுத்தனர்.(23) எனினும், அந்தக் கள்வர்களும், அந்த இழிந்த மனிதனின் இறைச்சியை உண்ண மறுத்துவிட்டனர். தன்னின உன்னிகளாக {மனித இறைச்சி உண்பவர்களாக} இருந்தாலும் அவர்கள் {அந்தக் கள்வர்கள்}, அந்த நன்றியற்ற மனிதனை உண்ணவில்லை.(24) ஓ! மன்னா, பிராமணனைக் கொன்றவன், மதுபானம் பருகியவன், களவாடியவன், நோன்பில் இருந்து விழுந்தவன் ஆகியோருக்கும் பாவக்கழிப்பு உண்டு, ஆனால் ஒரு நன்றியற்றவனுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(25) எந்தக் கொடூரமான மனிதன், ஒரு நண்பனுக்குத் தீங்கிழைத்து, நன்றியற்றவனாகிறானோ, அந்தத் தீயவனைத் தன்னின உன்னிகளோ, பிணந்தின்னிப் புழுக்களோ கூட உண்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(26)

நல்லோர் இயல்பு! – சாந்திபர்வம் பகுதி – 173-ஈமச்சிதை வளர்த்து தன் நண்பனுக்குரிய இறுதி சடங்குகளைச் செய்த விருபாக்ஷன்; வானத்தில் தோன்றிய சுரபி; அமுதப் பொழிவால் உயிர்பெற்ற ராஜதர்மன்; கௌதமனை உயிர்மீட்க வேண்டியது; நரகத்தில் மூழ்கிய கௌதமன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிறகு அந்த ராட்சச மன்னன் {விருபாக்ஷன்}, அந்த நாரைகளின் இளவரசனுக்காக {ராஜதர்மனுக்காக} ஓர் ஈமச்சிதையை ஏற்படுத்தி, தங்கம், ரத்தினங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றால் அஃதை அலங்கரித்தான்.(1) அந்தப் பறவைகளின் இளவரசனுடன் {ராஜதர்மனுடன்} கூடிய அதற்கு {அந்தச் சிதைக்கு} நெருப்பிட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்களின் தலைவன் {விருபாக்ஷன்}, விதிப்படி தன் நண்பனுக்குச் {ராஜதர்மனுக்குச்} செய்ய வேண்டிய ஈமக்கடனக்குரிய சடங்குகளைச் செய்தான்.(2) அந்த நேரத்தில், தக்ஷனின் மகளான மங்கலமான {பசுவான} சுரபி தேவி அந்தச் சிதை அமைக்கப்பட்ட இடத்திற்கு மேலே வானத்தில் தோன்றினாள். அவளுடைய மார்புகள் பால் நிறைந்தவையாக இருந்தன {அவளுடைய மடி பால் நிறைந்ததாக இருந்தது}[1].(3) ஓ! பாவமற்ற ஏகாதிபதி, அவளுடைய வாயிலிருந்து பாலுடன் கலந்த நுரையானது ராஜதர்மனின் ஈமச்சிதையில் விழுந்தது.(4) அதன் மூலம் அந்த நாரைகளின் இளவரசன் {ராஜதர்மன்} மீண்டும் உயிர்பெற்றான். அவன் எழுந்து, ராட்சசர்களின் மன்னனான தன் நண்பன் விருபாக்ஷனிடம் சென்றான்[2].(5)அந்த நேரத்தில் தேவர்களின் தலைவனே {இந்திரனே} விருபாக்ஷனின் நகரத்திற்கு வந்தான். ராட்சச மன்னனிடம் பேசிய இந்திரன், “நற்பேற்றாலேயே நீ இந்த நாரைகளின் இளவரசனுடைய உயிரை மீட்டாய்” என்றான்.(6) பிறகு தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பறவைகளில் சிறந்தவனான ராஜதர்மனுக்குப் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} சாபம் கிடைத்த பழங்கதையை விருபாக்ஷனுக்குச் சொன்னான்.(7) மன்னனிடம் {விருபாக்ஷனிடம்} பேசிய அவன் {இந்திரன்}, “ஓ! ஏகாதிபதி {விருபாக்ஷனே}, ஒரு காலத்தில் இந்த நாரைகளின் இளவரசன், பிரம்மலோகத்தில் (இவனது வரவு எதிர்பார்க்கப்பட்டபோது) வரவில்லை. கோபமடைந்த பெரும்பாட்டன் {பிரம்மன்} இந்த நாரைகளின் இளவரசனிடம்,(8) “இன்று இந்த அற்ப நாரை என் சபைக்கு வராததால், அந்தத் தீய ஆன்மா கொண்டவன் (பூமியை விட்டு அகலும் வகையில்) விரைவில் இறப்பான்”[3] என்றார்.(9) பெரும்பாட்டனின் இந்த வார்த்தைகளின் விளைவாலேயே, நாரைகளின் இளவரசன், கௌதமனால் கொல்லப்பட்டாலும், அமுதத்தில் உடல் நனைந்ததன் மூலம் மீண்டும் உயிரை அடைந்தான்” என்றான் {இந்திரன்}.(10)

இந்திரன் அமைதியானதும், தேவர்களின் தலைவனை வணங்கிய ராஜதர்மன், “ஓ! தேவர்களில் முதல்வனே, உன் இதயம் எனக்கு அருள்தர விரும்பினால், என் அன்புக்குரிய நண்பன் கௌதமன் உயிர் பெற்று எழட்டும்” என்று கேட்டான்.(11)

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசவன் {இந்திரன்}, அந்தப் பிராமணனான கௌதமன் மீது அமுதத்தைத் தெளித்து, அவனை உயிரோடு மீட்டெடுத்தான்.(12) அந்த நாரைகளின் இளவரசன், (ராட்சச மன்னன் கொடுத்த) தங்கச் சுமையை இன்னும் தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்த கௌதமனை ஆரத்தழுவிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(13) பிறகு, நாரைகளின் இளவரசனான அந்த ராஜதர்மன், பாவச்செயல்களைச் செய்த கௌதமனை, அவன் வைத்திருந்த செல்வத்தோடு அனுப்பிவைத்து தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(14) (அடுத்த நாள்) உரிய நேரத்தில் அந்தப் பறவையானவன் பெரும்பாட்டனின் {பிரம்ம} உலகத்திற்குச் சென்றான். பின்னவன் {பிரம்மன்} ஒரு விருந்தினருக்குக் காட்டப்பட வேண்டிய கவனத்தோடு அந்த உயர் ஆன்மப் பறவையைக் கௌரவித்தான்.(15) கௌதமனும், வேடர்களின் கிராமத்தில் இருந்த தன் இல்லத்துக்குத் திரும்பி, தன் சூத்திர மனைவியிடம் பாவம்நிறைந்த பல பிள்ளைகளைப் பெற்றான்.(16) சில வருடங்களுக்குள், தான் மறுமணம் செய்து கொண்ட தன் மனைவியிடம் பல பிள்ளைகளைப் பெற்ற அந்த நன்றியற்ற பாவி, பல வருடங்களுக்குப் பயங்கர நரகத்தில் மூழ்குவான் எனத் தேவர்களால் பெரும் சாபமிடப்பட்டது.(17)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவை யாவும் முன்பு ஒரு சமயம் நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே இந்த முக்கியமான கதையின் சம்பவங்களை நினைவுகூர்ந்து அனைத்து விபரங்களையும் நான் உனக்கு முறையாகச் சொல்லியிருக்கிறேன்.(18) நன்றியற்றவனால் எவ்வாறு புகழடையமுடியும்? நன்றியற்றவன் நம்பத்தகாதவனாவான். நன்றியற்ற ஒருவனால் ஒருபோதும் தப்ப முடியாது.(19) எந்த மனிதனும் ஒரு நண்பனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது. எவன் ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பானோ, அவன் நீடித்த, நிலைத்த பயங்கர நரகத்தில் மூழ்குவான்.(20) அனைவரும் நன்றிநிறைந்தவர்களாக இருக்க வேண்டும், அனைவரும் தன் நண்பர்களுக்கு நன்மையை நாட வேண்டும். ஒரு நண்பனிடம் இருந்து அனைத்தையும் அடையலாம். நண்பர்களின் மூலம் கௌரவங்களை அடையலாம்.(21) நண்பர்களின் விளைவால் ஒருவன் பல்வேறு இன்பநுகர் பொருட்களை அனுபவிக்கலாம். நண்பர்களுடைய முயற்சியின் மூலம் ஒருவன் பல்வேறு வகை ஆபத்துகள் மற்றும் துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஞானமுள்ள ஒருவன் தன் நண்பர்களைச் சிறந்த கவனத்துடன் கௌரவிப்பான்.(22)

நன்றியற்ற, வெட்கங்கெட்ட, பாவம் நிறைந்த அற்பன், ஞானியரால் புறக்கணிக்கப்படுவான். நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், தன் குலத்தில் இழிந்தவனாவான். அத்தகைய பாவம் நிறைந்த அற்பன் மனிதர்களிலேயே தீயவன் ஆவான்.(23) ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நன்றியின்மையால் களங்கப்பட்டவனும், தன் நண்பனுக்குத் தீங்கிழைப்பவனுமான பாவம் நிறைந்த ஓர் இழிந்தவனின் பண்புகளை இவ்வாறே நான் உனக்குச் சொல்லிவிட்டேன். நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்றார் {பீஷ்மர்}”.(24)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, உயர் ஆன்ம பீஷ்மரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு யுதிஷ்டிரன் பெரும் நிறைவடைந்தான்”.(25)

ஆபத்தர்மாநுசாஸன உப பர்வம் முற்றிற்று

சாந்தி பர்வம் – பாகம் 1 முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்–ஸ்ரீ ராஜதர்மாநுசாஸன பர்வம் —

October 16, 2025

கர்ணரைக் காணும்போதெல்லாம் அமைதியடைந்தேன்! – சாந்திபர்வம் பகுதி – 01-யுதிஷ்டிரனைத் தேடி வந்த முனிவர்கள்; யுதிஷ்டிரனின் நலம் விசாரித்த நாரதர்; நாரதரிடம் தன் மனக்குறைகள் அனைத்தையும் சொன்ன யுதிஷ்டிரன்; கர்ணன் தங்கள் அண்ணன் என்பதைத் தான் அறிய வந்த சூழ்நிலையை நாரதருக்கு எடுத்துச் சொன்னது; கர்ணனின் பாதங்களும், குந்தியின் பாதங்களும் ஒன்றுபோல் இருப்பது தனக்கு ஏற்கனவே ஐயத்தை ஏற்படுத்தியதைச் சொன்னது; இந்தக் காரியத்தில் நாரதர் அறிந்த அனைத்தையும் தனக்குச் சொல்லுமாறு வேண்டிக் கேட்ட யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் நீர்க்காணிக்கைகளை அளித்த பாண்டுவின் மகன்கள், விதுரன், திருதராஷ்டிரன் மற்றும் பாரதக் குலப் பெண்கள் ஆகியோரனைவரும்,(1) (அந்தப் புனிதமான ஓடையின் கரையிலேயே) வசித்தனர். பாண்டுவின் உயரான்ம மகன்கள் {தீட்டிலிருந்து} தூய்மையடைவதற்காக ஒரு மாத காலத்தை, குரு நகருக்கு {குருஜாங்கலத் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு} வெளியே கடத்த விரும்பினர்.(2) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் நீர்ச்சடங்குகளைச் செய்த பிறகு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயரான்ம தவசியர் பலரும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் பலரும் அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(3) அவர்களில் தீவில் பிறந்தவர் {துவைபாயனரான} (வியாசர்), நாரதர், பெரும் முனிவரான தேவலர், தேவஸ்தானர் மற்றும் கண்வர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் சிறந்த சீடர்களையும் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர்.(4)

ஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், இல்லறவாழ்வை நோற்பவர்களுமான மறுபிறப்பாளர்கள் {பிராணர்கள்}, அல்லது ஸ்நாதக வகையைச்[1] சேர்ந்தோர் பலரும் குரு மன்னனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(5) அந்த உயரான்மாக்கள் வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் (யுதிஷ்டிரனால்) முறையாக வழிபடப்பட்டார்கள். பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் விலைமதிப்புமிக்கத் தரைவிரிப்புகளில் அமர்ந்தனர்.(6) அவர்கள், (தூய்மையற்ற அந்தத் துக்கக் காலத்திற்கு) தகுந்த வகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை ஏற்றுக் கொண்டு, முறையான வரிசையில் மன்னனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(7) துயரில் கலங்கிய இதயத்துடன் பாகீரதியின் புனிதமான கரையில் வசித்து வந்த மன்னர்களின் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவனுக்கு ஆறுதலளித்தனர்.(8)அப்போது, நாரதர், முதலில் அங்கு வந்திருந்தவர்களும், தீவில் பிறந்தவரை {துவைபாயனரான வியாரசரைத்} தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களுமான முனிவர்களைக் கரங்கூப்பி வணங்கிய பிறகு, சரியான நேரத்தில், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசினார்.(9) அவர் {நாரதர்}, “ஓ! யுதிஷ்டிரா, உன் கரங்களின் வலிமையாலும், மாதவனின் {கிருஷ்ணனின்} அருளாலும், உன்னால் மொத்த பூமியும் நேர்மையாக {அறவழியில்} வெல்லப்பட்டிருக்கிறது.(10) இந்தப் பயங்கரப் போரில் இருந்து நீ உயிருடன் தப்பியது நற்பேற்றாலேயே. ஓ! பாண்டுவின் மகனே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் உனக்கு, இதனால் மகிழ்ச்சியில்லையா?(11) ஓ!மன்னா, உன் எதிரிகள் அனைவரையும் கொன்ற பிறகு, உன் நண்பர்களை நிறைவு செய்ய வேண்டாமா? இந்தச் செழிப்பை அடைந்த பிறகும், உன்னைத் துயரம் பீடிக்காதிருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.(12)

யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “உண்மையில், கிருஷ்ணனுடைய கரவலிமையின் மீது கொண்ட என் நம்பிக்கை, பிராமணர்களின் அருள், பீமன் மற்றும் அர்ஜுனனின் வலிமை ஆகியவற்றாலேயே இந்த மொத்த பூமியும் என்னால் வெல்லப்பட்டது.(13) எனினும், பேராசையின் காரணமாக உறவினர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திவிட்டேன் என்ற கனமான துயரம் என் இதயத்தில் எப்போதும் இருக்கிறது. சுபத்திரையின் அன்புக்குரிய மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த இந்த வெற்றியானது, எனக்குத் தோல்வியின் ஒளியிலேயே புலப்படுகிறது.(14,15) விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவளும், என் கொழுந்தியாளுமான சுபத்திரை என்னிடம் என்ன கேட்பாள்? மதுசூதனன் {கிருஷ்ணன்} இங்கிருந்து துவாரகைக்குச் செல்லும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவனிடம் என்ன கேட்பார்கள்?(16) எங்களுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்து வருபவளான இந்தத் திரௌபதி, மகன்கள் மற்றும் உறவினர்களை இழந்தவளாக நிற்பது எனக்குப் பெரும் வலியைத் தருகிறது.(17) ஓ! புனித நாரதரே, மேலும் வேறொன்றையும் நான் உமக்குச் சொல்கிறேன். குந்தி, மிக முக்கியமான காரியத்தின் ஆலோசனைகளைத் தனக்குள்ளேயே கமுக்கமாக வைத்துக் கொண்டதில் என் துயரம் மிகப் பெரிதானதாக இருக்கிறது.(18)

பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவரும், இவ்வுலகின் தேர்வீரர்களில் ஒப்பற்றவரும், சிங்கத்தின் நடையையும், செருக்கையும் கொண்டவரும், பெரும் நுண்ணறிவையும், கருணையையும் கொண்டவரும், பெரிதான தயாள குணத்தைக் கொண்டவரும், உயர்ந்த நோன்புகளை நோற்றவரும்,(19) தார்தராஷ்டிரர்களின் புகலிடமாக இருந்தவரும், தமது கௌரவத்தில் உணர்வுமிக்கவராக இருந்தவரும், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவரும், தம் காயங்கள் அனைத்திற்கும் பழிதீர்க்கத் தயாராக இருந்தவரும், (போரில்) எப்போதும் கோபம் நிறைந்தவராக இருந்தவரும், மீண்டும் மீண்டும் மோதல்களில் எங்களை வீழ்த்தியவரும்,(20) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவரும், அற்புதமான வீரத்தைக் கொண்டவருமான அந்த வீரர் (கர்ணர்), குந்திக்கு இரகசியத்தில் பிறந்த மகனும், அதன் காரணமாக எங்கள் உடன்பிறந்த சகோதரனுமாவார்.(21) இறந்தோருக்கான நீர்த்தர்ப்பணங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தபோது, குந்தி அவரைச் சூரியனின் மகன் என்றாள். அனைத்து அறத்தையும் கொண்ட அவர் குழந்தைப் பருவத்திலேயே நீரில் விடப்பட்டிருக்கிறார்.(22) குந்தி, எடை குறைந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட கூடையில் இட்டு, அவரைக் கங்கையின் ஓடையில் விட்டிருக்கிறாள். ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று இவ்வுலகத்தில் எவர் கருதப்பட்டாரோ,(23) அவர் உண்மையில் குந்தியின் மூத்த மகனும், அதனால் எங்கள் உடன் பிறந்த அண்ணனுமாவார். ஐயோ, நாட்டின் மீது கொண்ட பேராசையால், அறியாமையில் நான் என் அண்ணனைக் {கர்ணரைக்} கொன்றுவிட்டேன். பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல இதுவே {இந்த நினைப்பே} என் அங்கங்களை எரிக்கிறது.(24)

வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனனும், அவரைத் தன் அண்ணனாக அறிய மாட்டான், நானோ, பீமனோ, இரட்டையர்களோ கூட அவ்வாறு அவரை {கர்ணரை} அறியவில்லை. எனினும், சிறந்த வில்லைக் கொண்டவரான அவர் எங்களை (அவரது தம்பிகளாக) அறிந்திருந்தார்.(25) ஒரு சந்தர்ப்பத்தில் பிருதை {குந்தி} அவரிடம் {கர்ணரிடம்} சென்று, எங்கள் நலனை வேண்டி, “நீ என் மகன்” என்று சொன்னதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.(26) எனினும், அந்தச் சிறப்புமிக்க வீரர், பிருதையின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அதற்கடுத்து அவர், தமது தாயாரிடம் {குந்தியிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார் என நாங்கள் கேள்விப்படுகிறோம்.(27) அவர் {கர்ணர் குந்தியிடம்}, “போரில் என்னால் துரியோதனனைக் கைவிடமுடியாது. அப்படி நான் செய்தால், அது மதிப்பற்ற, கொடூரமான, நன்றியற்ற செயலாகும்.(28) உன் விருப்பங்களுக்கு நான் சம்மதித்து யுதிஷ்டிரனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனுக்கு நான் அஞ்சிவிட்டதாக மக்கள் பேசுவார்கள்.(29) கேசவனோடு {கிருஷ்ணனோடு} கூடிய அர்ஜுனனைப் போரில் வென்ற பிறகு, நான் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வேன்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(30)

இப்படிச் சொல்லப்பட்ட பிருதை {குந்தி}, அகன்ற மார்பைக் கொண்ட தன் மகனிடம் {கர்ணரிடம்} மீண்டும், “பல்குனனுடன் {அர்ஜுனனோடு} போரிடு, ஆனால் என் மற்ற நான்கு மகன்களையும் விட்டுவிடுவாயாக” என்று கேட்டிருக்கிறாள்[2]. அதற்கு நுண்ணறிவைக் கொண்ட அந்தக் கர்ணர், தன் கரங்களைக் கூப்பித் தன் தாயாரிடம் நடுங்கியவாறே, “உன் மற்ற நான்கு மகன்களையும் நான் என் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தாலும், நிச்சயம் அவர்களைக் கொல்லமாட்டேன். ஓ! தேவி, நீ எப்போதும் ஐந்து மகன்களைக் கொண்டிருப்பாய் என்பதில் ஐயமில்லை. கர்ணன் கொல்லப்பட்டால் அர்ஜுனனோடு ஐவரையும், அர்ஜுனன் கொல்லப்பட்டால் என்னோடு சேர்த்து ஐவரையும் நீ கொண்டிருப்பாய்” என்றிருக்கிறான்.(33) தன் பிள்ளைகளுக்கு நன்மையை வேண்டிய அவனது தாய் {குந்தி}, மீண்டும் அவனிடம், “செல், ஓ! கர்ணா, நீ எப்போதும் யாருக்கு நன்மையை விரும்புவாயோ அந்த உன் சகோதரர்களுக்கு நன்மையைச் செய்வாயாக” என்றிருக்கிறாள்.(34) இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்திற்குத் திரும்பியிருக்கிறாள் {குந்தி}.அந்த வீரர் {கர்ணர்}, உடன் பிறந்த தம்பியால் கொல்லப்படும் அண்ணனாக அர்ஜுனனால் கொல்லப்பட்டிருக்கிறார்.(35) ஓ! தலைவரே {நாரதரே}, பிருதையோ {குந்தியோ}, அவரோ {கர்ணரோ} இந்த இரகசியத்தை ஒருபோதும் வெளியிட்டதில்லை. எனவே, பெரும் வில்லாளியான அவர், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(36) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அதன் பின்பே அவர் என் உடன் பிறந்த அண்ணன் என்பதை நான் அறிய வந்தேன். உண்மையில் பிருதையின் வார்த்தைகளுக்குப் பின்பே, கர்ணர் எங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரர் என்பதை நான் அறிய வந்தேன்.(37) என் அண்ணனைக் கொல்ல நானே காரணமாக இருந்ததால், என் இதயம் அதிகமாக எரிகிறது. எனக்கு உதவி செய்யக் கர்ணர், அர்ஜுனன் ஆகிய இருவரையும் நான் கொண்டிருந்தால், என்னால் வாசுதேவனையே {கிருஷ்ணனையே} வெல்ல முடியும்.(38) தீய ஆன்மா கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால் சபைக்கு மத்தியில் நான் கொடுமையை அனுபவித்தபோது, திடீரென என் கோபம் தூண்டப்பட்டாலும், கர்ணரைக் கண்டதும் நான் அமைதியடைந்துவிட்டேன்.(39) எங்களுக்கிடையில் பகடையாட்டம் நடந்தபோது, துரியோதனனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் கர்ணரே கொடுமை நிறைந்த கடும் வார்த்தைகளைப் பேசியபோதும், அவரை {கர்ணரைக்} கண்டதும் என் கோபம் தணிவடைந்தது. {அப்போது} கர்ணரின் பாதங்கள் எங்கள் தாயாரான குந்தியின் பாதங்களுக்கு ஒப்பாக இருப்பதாக எனக்குத் தெரிந்தது.(40,41) அவருக்கும், எங்கள் தாயாருக்கும் இடையில் உள்ள அந்த ஒற்றுமைக்கான காரணத்தைக் காணும் விருப்பத்தில் நான் நீண்ட நேரம் சிந்தித்திருக்கிறேன்.(42) இவ்வாறு நன்கு முயற்சி செய்தும் என்னால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.(42)

உண்மையில், போர்க்காலத்தில் ஏன் அவரது தேர்ச்சக்கரங்களைப் பூமி விழுங்கியது? என் அண்ணன் ஏன் சபிக்கப்பட்டார்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(42) ஓ! புனிதமானவரே {நாரதரே}, உம்மிடம் இருந்து அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும், இவ்வுலகில் உள்ள அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(43)

கர்ணன் அடைந்த பிராமணச் சாபம்! – சாந்திபர்வம் பகுதி – 02-துரோணரிடம் சீடனாக இருந்த கர்ணன்; துரோணரிடம் பிரம்மாஸ்திரம் வேண்டியது; துரோணர் மறுத்தது; பிரம்மாஸ்திரம் வேண்டி பரசுராமரிடம் தன் பிறப்பில் பொய்யுரைத்த கர்ணன்; கர்ணனுக்கு நேர்ந்த பிராமணச் சாபம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பேசுபவர்களில் முதன்மையானவரான தவசி நாரதர், இவ்வாறு கேட்கப்பட்டதும், சூதன் மகன் என்று நம்பப்பட்டவன் {கர்ணன்} (முன் நாட்களில்) எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பது குறித்த அனைத்தையும் சொல்லத் தொடங்கினார்.(1)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. போரில் கர்ணனையும், அர்ஜுனனையும் எதனாலும் தடுக்க முடியாது.(2) ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு என்ன சொல்லப்போகிறேனோ, அதைத் தேவர்களும் அறியார்கள். ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, முன் நாட்களில் என்ன நடந்தது என்பதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(3) ஆயுதங்களின் மூலம் க்ஷத்திரியர்கள் அனைவரும் துடைத்தழிக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு அருள் உலகங்களை அடைய வேண்டும் என்பதே {அப்போது} கேள்வியாக இருந்தது. இதற்காகவே குந்தியின் கன்னிப்பருவத்தில், போரைத் தூண்ட வல்ல ஒரு பிள்ளை அவளிடம் கருத்தரிக்கப்பட்டான்.(4) பெரும் சக்தி கொண்ட அந்தப் பிள்ளை, சூத நிலையை அடைய வேண்டியிருந்தது {சாரதியின் பிள்ளை என்ற நிலையை அடைய வேண்டியிருந்தது}. அதற்கடுத்து அவன் {கர்ணன்}, அங்கீரச குலக்கொழுந்துகளில் முதன்மையான உன் ஆசானிடமே (துரோணரிடம்) ஆயுத அறிவியலை அடைந்தான்.(5)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பீமசேனனின் வலிமையையும், ஆயுதப்பயன்பாட்டில் அர்ஜுனனின் வேகத்தையும், உன் நுண்ணறிவையும், இரட்டையர்களின் {நகுல சகாதேவர்களின்} பணிவையும், இளமைக் காலம் முதலே வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகியோருக்குள் ஏற்பட்ட நட்பையும், மக்கள் உங்கள் அனைவரிடமும் கொண்டுள்ள அன்பையும் கண்டு அந்த இளைஞன் {கர்ணன்} பொறாமையில் எரிந்தான்.(6,7) இளமைப் பருவத்திலேயே தற்செயலாகவும், அவனது சொந்த இயல்பின் காரணமாகவும், உங்கள் அனைவரிடமும் அவன் கொண்ட வெறுப்பின் காரணமாகவும் அவன் மன்னன் துரியோதனனுடன் நட்பு பூண்டான்.(8)

தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆயுத அறிவியலில் அனைவருக்கும் மேம்பட்டவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், ஒரு நாள் துரோணரைத் தனிமையில் அணுகி, அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(9) “நான் அர்ஜுனனுடன் போரிட விரும்புவதால், பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்கள் அனைத்துடனும், அதைத் திரும்பப் பெறும் சக்தியுடனும் நான் அறிய விரும்புகிறேன்.(10) உமது சீடர்கள் ஒவ்வொருவரிடம் நீர் கொண்டிருக்கும் அன்பும், உமது சொந்த மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} நீர் கொண்டிருக்கும் அன்பும் இணையானதே என்பதில் ஐயமில்லை. ஆயுத அறிவியலை அறிந்த திறன்மிக்கவர்கள் அனைவரும், உமது அருளின் மூலம் என்னை ஆயுதங்களில் சாதித்தவனாகக் கருத வேண்டும் என நான் வேண்டுகிறேன்” என்று கேட்டான்.(11)

இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர், பல்குனன் {அர்ஜுனன்} மீது கொண்ட அன்பினாலும், கர்ணனின் தீய குணம் குறித்து தாம் அறிந்திருந்ததாலும், அவனிடம்,(12) “முறையாக நோன்புகள் அனைத்தையும் நோற்ற ஒரு பிராமணனையோ, கடுந்தவங்களை இயற்றிய ஒரு க்ஷத்திரியனையோ தவிரப் பிரம்மாயுதத்தை வேறு எவராலும் அறிய முடியாது” என்றார்.(13)

துரோணர் இவ்வாறு பதிலளித்ததும், கர்ணன் அவரை வழிபட்டு விடைபெற்றுக் கொண்டு, அப்போது மஹேந்திர மலைகளில் வசித்து வந்த ராமரிடம் {பரசுராமரிடம்} தாமதமில்லாமல் சென்றான்.(14) அந்த ராமரை அணுகி, தலைவணங்கி, அவரிடம் {பரசுராமரிடம்}, “நான் பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு பிராமணனாவேன்” என்றான். இஃது அவனுக்குக் கௌரவத்தைப் பெற்றுத் தந்தது.(15) அவனது பிறப்பையும் {குலத்தையும்}, குடும்பத்தையும் இவ்வாறு அறிந்த ராமர், அவனை அன்புடன் வரவேற்கும் வகையில், “நீ வரவேற்கப்படுகிறாய் {உனக்கு நல்வரவு}” என்று சொன்னார். இதன் காரணமாகக் கர்ணன் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(16) சொர்க்கத்திற்கு ஒப்பான அந்த மகேந்திர மலையில் வசித்துவந்தபோது, கர்ணன், பல கந்தர்வர்களையும், யக்ஷர்களையும், தேவர்களையும் சந்தித்து அவர்களோடு {நட்புடன்} ஒன்றுகலந்தான்.(17) அங்கே {மஹேந்திர மலையில்} வசித்த அவன் {கர்ணன்}, அனைத்து ஆயுதங்களையும் முறையாக அடைந்து, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களுக்கு மிகவும் பிடித்தமானவனாக ஆனான்.(18)

ஒருநாள், அவன் அந்த ஆசிரமத்திற்கு அருகே இருந்த கடற்கரையில் திரிந்து கொண்டிருந்தான். உண்மையில் அந்தச் சூரியனின் மகன் {கர்ணன்}, கையில் வில்லுடனும், வாளுடனும் தனியொருவனாகவே உலவித் திரிந்தான்.(19) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இவ்வாறு அவன் உலவிக் கொண்டிருந்த போது, அக்னிஹோத்திரச் சடங்கை தினமும் செய்பவரும், பிரம்மத்தை ஓதுபவருமான ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஹோமத்திற்குரிய மாட்டைத் தனது கவனக்குறைவினாலும், விருப்பமில்லாமலும் {அறியாமையால்} கொன்றுவிட்டான்.(20) கவனக்குறைவினால் செய்துவிட்ட அந்தச் செயலை அவன் அந்தப் பிராமணரிடம் தெரிவித்தான். உண்மையில், {அதன்} உரிமையாளரை மனநிறைவு கொள்ளச்செய்யும் நோக்கில் மீண்டும் மீண்டும் கர்ணன்,(21) “ஓ! புனிதமானவரே, விருப்பமில்லாமலே {அறியாமையால்} இந்த உமது மாட்டை நான் கொன்றுவிட்டேன். இந்தச் செயலை மன்னிப்பீராக” என்று சொன்னான்.(22)

கோபத்தில் நிறைந்த அந்தப் பிராமணர், அவனை நிந்திக்கும் வகையில் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! தீய நடத்தை கொண்டவனே, நீ கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஓ! தீய ஆன்மா {தீய புத்தி} கொண்டவனே, இந்தச் செயலின் கனி உனதாகட்டும்.(23) ஓ! பாவி, எவனை நீ எப்போதும் அறைகூவியழைப்பாயோ எவனுக்காக இந்தநாள் வரை நீ முயற்சி செய்து கொண்டிருக்கிறாயோ, அவனோடு போரிடுகையில் உனது தேர்ச்சக்கரத்தை பூமி விழுங்கட்டும்.(24) அந்தச்சக்கரம் இவ்வாறு பூமியால் விழுங்கப்பட்டதும், திகைப்படைந்திருக்கும் உனது தலையை அந்தப் பகைவன் வெட்டுவான். ஓ! மனிதர்களில் இழிவானவனே, என்னைவிட்டுச் செல்வாயாக.(25) கவனக்குறைவால் என்னுடைய இந்த மாடு உன்னால் எவ்வாறு கொல்லப்பட்டதோ, அவ்வாறே நீ கவனக்குறைவுடன் இருக்கும்போது உன்னுடைய தலையை அவன் கொய்வான்” என்று சபித்தார்.(26)

கர்ணன் இவ்வாறு சபிக்கப்பட்டாலும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவருக்குப் பசுக்களையும், செல்வத்தையும், ரத்தினங்களையும் காணிக்கையாக்கி அவரை நிறைவு கொள்ளச் செய்ய முயன்றான். எனினும் அவர், மீண்டும் அவனிடம்,(27) “உலகங்கள் அனைத்தாலும் என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைப் பொய்யாக்க முடியாது. எனவே, நீ செல்வாயாக, அல்லது இருப்பாயாக, அல்லது நீ விரும்பிய எதையும் செய்வாயாக” என்று பதிலளித்தார்.(28) அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், உற்சாகம் குறைந்தவனாகத் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு, மருட்சியுடன் {அச்சத்துடன்} ராமரிடம் {பரசுராமரிடம்} திரும்பி, அக்காரியம் குறித்துச் சிந்திக்கலானான்” என்றார் {நாரதர்}.(29)

தொடையைத் துளைத்த புழு! – சாந்திபர்வம் பகுதி – 03-கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிய பரசுராமர்; கர்ணனின் தொடையைத் துளைத்த புழு; குருதியில் நனைந்து விழித்தெழுந்த பரசுராமர்; பரசுராமரின் கோபத்தால் அப்புழு உயிரை விட்டது; புழுவிலிருந்து வெளிப்பட்ட ராட்சசன்; கர்ணனைச் சபித்த பரசுராமர்; தன் நகரத்திற்குத் திரும்பிய கர்ணன்…

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “கர்ணனின் கரவலிமை, (பரசுராமரிடம்) அவன் கொண்டிருந்த அன்பு, தற்கட்டுப்பாடு, தன ஆசானுக்கு அவன் செய்த தொண்டுகள் ஆகியவற்றில் அந்தப் பிருகு குலத்தின் புலி {பரசுராமர்} நிறைவு கொண்டார்.(1) தவநேன்புகளை நோற்றவரான ராமர் {பரசுராமர்}, தவம் நோற்ற தன் சீடனுக்கு உரிய வடிவிலான பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்களுடனும், அதைத் திரும்ப அழைக்கும் மந்திரங்களுடனும் உற்சாகமாகப் போதித்தார்.(2) அவ்வாயுதத்தைக் குறித்த அறிவை அடைந்த கர்ணன், பிருகுவின் {பிருகு முனிவரின் வாரிசான பரசுராமரின்} ஓய்வில்லத்தில் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான். அற்புத ஆற்றலைக் கொண்ட அவன் {கர்ணன்}, பெரும் ஆவலுடன் தன்னை அந்த ஆயுத அறிவியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டான்.(3)

ஒரு நாள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ராமர், தம் ஓய்வில்லத்தின் அருகிலேயே கர்ணனுடன் உலவிக் கொண்டிருந்தபோது, தாம் நோற்று வந்த நோன்புகளின் விளைவால் மிகவும் பலவீனமாகத் தம்மை உணர்ந்தார்.(4) களைப்படைந்திருந்த அந்த ஜமதக்னியின் மகன் {ராமர்}, நம்பிக்கையின் விளைவால் அடையப்பட்ட அன்பின் காரணமாகக் கர்ணனின் மடியில் தலை வைத்து நன்றாக உறங்கினார்.(5) அவனது ஆசான் இவ்வாறு அவனுடைய மடியில் (தலைவைத்து) உறங்கிக் கொண்டிருந்தபோது, கடித்தால் பெரும் வலியைத் தரக்கூடியதும், சளி, கொழுப்பு, சதை மற்றும் குருதியை உண்டு வாழக்கூடியதுமான ஒரு பயங்கரமான புழுவானது கர்ணனின் அருகில் வந்தது.(6) குருதி குடிக்கும் அந்தப் புழுவானது, கர்ணனின் தொடையை அணுகி, அதைத் துளைக்கத் தொடங்கியது. (விழித்தெழப் போகும்) தன் ஆசானிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகக் கர்ணன் அந்த விலங்கைத் தூக்கி வீசவோ, கொல்லவோ இல்லை.(7) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புழுவால் தன் அங்கம் துளைக்கப்பட்டாலும், தன் ஆசான் விழித்துவிடப் போகிறார் என்பதால் அது தன் விருப்பப்படிச் செய்யுமாறு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.(8) வலியானது தாங்கிக் கொள்ள முடியாததாக இருப்பினும், வீரக் கர்ணன் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, கொஞ்சமும் நடுங்கிவிடாதவாறும், வலியின் எந்த அடையாளத்தையும வெளிக்காட்டாமலும், பிருகுவின் மகனை {பரசுராமரைத்} தன் மடியில் தொடர்ந்து தாங்கினான்.(9)

இறுதியில், குருதியானது பெரும் சக்தி கொண்ட ராமரின் உடலைத் தீண்டிய போது, விழித்தெழுந்த அவர், அச்சத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(9) “ஐயோ, நான் தூய்மையற்றவனாக்கப்பட்டேன். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அச்சமனைத்தையும் விட்டு, இக்காரியத்தில் உண்மை என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(11) அப்போது கர்ணன் புழு கடித்துக் கொண்டிருப்பதை அவருக்குத் தெரிவித்தான். பன்றியின் வடிவத்திற்கு ஒப்பான அந்தப் புழுவை ராமர் கண்டார்.(12) அஃது எட்டு கால்களையும், மிகக்கூரிய பற்களையும் கொண்டிருந்தது. மேலும் அஃது ஊசிகளைப் போன்ற முனை கொண்ட தடித்த மயிரால் மறைக்கப்பட்டிருந்தது. அளர்க்கம் என்ற பெயரால் அழைக்கப்படும் அதன் அங்கங்கள் (அச்சத்தால்) சுருங்கிப் போயிருந்தன.(13) ராமர் {பரசுராமர்} தமது கண்களை அதன் மேல் செலுத்தியதும், அந்தப் புழுவானது தான் உறிஞ்சிய குருதியிலேயே உருகி உயிரைவிட்டது. இவையாவும் ஆச்சரியமானவையாகத் தெரிந்தன.(14) அப்போது, கரிய நிறம் கொண்டவனும், சிவந்த கழுத்தைக் கொண்டவனும், விருப்பப்படி எவ்வடிவையும் ஏற்கவல்லவனும், பயங்கர வடிவத்தைக் கொண்டவனுமான ஒரு ராட்சசன் ஆகாய மேகங்களில் நின்று கொண்டிருந்தான்.(15)

தன் நோக்கம் நிறைவேறிய அந்த ராட்சசன், கூப்பிய கரங்களுடன் ராமரிடம் {பரசுராமரிடம்}, “ஓ! தவசிகளில் சிறந்தவரே, இந்நரகில் இருந்து என்னை நீர் மீட்டீர். எனக்கு நன்மையைச் செய்திருக்கும் உம்மை நான் துதிக்கிறேன், நீர் அருளப்பட்டிருப்பீராக” என்றான்.(17)

பெரும் சக்தியையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்டவரான அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அவனிடம் {ராட்சசனிடம்}, “யார் நீ? ஏன் நீ நரகில் வீழ்ந்தாய்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(18)

அதற்கு அவன் {ராட்சசன் பரசுராமரிடம்}, “முற்காலத்தில் நான், தம்சன் என்ற பெயரைக் கொண்ட பெரும் அசுரனாக இருந்தேன். ஓ! ஐயா, கிருத யுகத்தில்*, நான் பிருகுவின் வயதைக் கொண்டவனாக இருந்தேன்.(19) அந்தத் தவசியின் {பிருகுவின்} அன்புக்குரிய மனைவியை நான் அபகரித்துச் சென்றேன். அவரது {பிருகுவின்} சாபத்தின் மூலமாக நான் புழுவின் வடிவில் கீழே விழுந்தேன்.(20)

கோபங்கொண்ட உமது அந்த மூதாதை {பிருகு}, “ஓ! இழிந்தவனே, சிறு நீர் மற்றும் சளியை உண்டு, நீ நரக வாழ்வை நோற்பாயாக” என்று சொன்னார். நான் அவரிடம் {பிருகுவிடம்}, “ஓ! பிராமணரே, எப்போது எனது சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்?” என்று கேட்டான். அதற்கு அவர் {பிருகு} என்னிடம், “என் குலத்தின் ராமன் {பரசுராமன்} மூலமாக இந்தச் சாபத்திற்கு முடிவேற்படும்” என்றார்.(22) இதன் காரணமாகவே நான், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனைப் போல இத்தகு வாழ்வின் போக்கை அடைந்தேன். ஓ! அறவோரே, எனினும் அந்தப் பாவகரமான வாழ்வில் இருந்து நான் உம்மால் மீட்கப்பட்டு விட்டேன்” என்றான்.(23) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பேரசுரன், ராமருக்குத் தலைவணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.

பிறகு கோபம் நிறைந்தவரான ராமர், அந்தக் கர்ணனிடம்,(24) “ஓ! மூடா, இத்தகு வலியை ஒரு பிராமணனால் தாங்கிக் கொள்ள முடியாது. உன் பொறுமையானது ஒரு க்ஷத்திரியனைப் போல இருக்கிறது. அச்சமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக” என்று கேட்டார்.(25) இவ்வாறு கேட்கப்பட்ட கர்ணன், சாபத்திற்கு அஞ்சியும், அவரை நிறைவு செய்ய வேண்டியும், இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பிருகு குலத்தவரே, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் கலப்பில் உண்டான குலத்தில் பிறந்த ஒரு சூதனாக என்னை அறிந்து கொள்வீராக.(26) மக்கள் என்னை ராதையின் மகனான கர்ணன் என்றழைக்கிறார்கள். ஓ! பிருகு குலத்தவரே, ஆயுதங்களை அடையும் விருப்பத்துடன் இவ்வாறு செயல்பட்ட அடியேனிடம் நிறைவு கொள்வீராக.(27) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களை அறிந்த ஒரு மதிப்புக்குரிய ஆசான் ஒருவனுக்குத் தந்தையுமாவார் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகவே நான் என்னை உமது குலத்தைச் சேர்ந்தவனாக அறிமுகம் செய்து கொண்டேன்” என்றான்.(28)

அந்த முதன்மையான பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்திருந்தாலும், உற்சாகமற்றவனாக, நடுங்கிக் கொண்டிருப்பவனாகக் கரங்களைக் கூப்பி, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த கர்ணனிடம் புன்னகையுடன் {எரிச்சலுடன்}, “ஓ! இழிந்தவனே, ஆயுதங்கள் மீது கொண்ட பேராசையின் காரணமாக நீ பொய்யுரைத்ததால், இந்தப் பிரம்மாயுதம் உன் நினைவில் தங்காது[1].(30) நீ பிராமணனாக இல்லாததால், உனக்குச் சமமான ஒரு போர்வீரனுடன் நீ போரிட்டுக் கொண்டிருக்கும்போது, மரணம் உன்னை நெருங்கும்வரை இஃது உன்னிடம் தங்காது[2].(31) செல்வாயாக, பொய் நடத்தை கொண்டோருக்கான இடம் இஃதல்ல. இந்தப் பூமியில், உனக்கு இணையான எந்த க்ஷத்திரியனும் இருக்க மாட்டான்” என்றார்.(32)ராமரால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், முறையாக அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான். பிறகு துரியோதனனின் முன்னிலைக்கு வந்த அவன் {கர்ணன்}, “நான் ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிவிட்டேன்” என்று சொன்னான்”.(33)

பானுமதியின் சுயம்வரம்! – சாந்திபர்வம் பகுதி – 04-சுயம்வரத்திற்காகக் கலிங்கத் தலைநகர் ராஜபுரத்திற்குச் சென்ற துரியோதனன்; துரியோதனனைக் கடந்து சென்ற இளவரசி பானுமதி; பலவந்தமாக அந்த இளவரசியைத் தூக்கிச் சென்ற துரியோதனன்; எதிர்த்த மன்னர்கள்; துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணன்; வெற்றியுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனனும், கர்ணனும்..

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பிருகு குலத்தைச் சேர்ந்த அவரிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த கர்ணன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ! பாரதரா, பெருஞ்செல்வச் செழிப்பில் திளைத்த அந்நகரம் ராஜபுரம் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது. அந்தக் கன்னிகையின்[2] கரத்தை அடைவதற்காக நூற்றுக்கணக்கான ஆட்சியாளர்கள் அங்கே சென்றனர்.(3) பல்வேறு மன்னர்கள் அங்குக் கூடுவதைக் கேட்ட துரியோதனனும், கர்ணனின் துணையுடன் தனது தங்கத்தேரில் அங்கே சென்றான்.(4)ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, சுயம்வரவிழா தொடங்கியபோது, அந்தக் கன்னிகையின் {பானுமதியின்} கரத்திற்காகப் பல்வேறு ஆட்சியாளர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்களில் சிசுபாலன், ஜராசந்தன்[3], பீஷ்மகன், வக்ரன், கபோதரோமன், நீலன், உறுதியும் ஆற்றலும் கொண்டவனான ருக்மி,(6) பெண்களின் நாட்டை ஆட்சி செய்த ஸ்ருகாலன்[4], அசோகன் {விசோகன்}, சததந்வன், போஜர்களின் வீர ஆட்சியாளன்[5] ஆகியோரும் இருந்தனர்.(7) இவர்களைத் தவிர்த்து, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தெற்கு நாடுகளில் வசித்த பலர், மிலேச்ச இனக்குழுக்களைச் சேர்ந்த (ஆயுத) ஆசான்கள் பலர், கிழக்கு மற்றும் வடக்கைச் சேர்ந்த பல ஆட்சியாளர்கள் ஆகியோரும் அங்கே வந்திருந்தனர்.(8) அவர்கள் அனைவரும் பசும்பொன்னின் காந்தியைக் கொண்ட தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். பிரகாசமான உடல்களைக் கொண்ட அவர்கள் கடும் வலிமையைக் கொண்ட புலிகளைப் போல இருந்தனர்.(9)அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்ததும் அந்தக் கன்னிகை {பானுமதி}, தனது செவிலியின் துணையுடனும், அலிகளின் பாதுகாவலுடனும் அரங்கினுள் நுழைந்தாள்.(10) (அவ்வாறு, அவள் {அரங்கை} வலம் வருகையில்) அவளுக்கு மன்னர்களின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, அழகிய நிறம் கொண்டவளான அந்தக் கன்னிகை, பிறரைக் கடந்து வந்ததைப் போலவே திருதராஷ்டிரன் மகனையும் {துரியோதனனையும்} கடந்து சென்றாள்.(11) எனினும், குருகுலத்தின் துரியோதனனால் இந்தப் புறக்கணிப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மன்னர்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் அவன் {துரியோதனன்}, அந்தக் கன்னிகையை நிற்குமாறு ஆணையிட்டான்.(12) மன்னன் துரியோதனன், சக்தி எனும் செருக்கில் போதை கொண்டும், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரை நம்பியும், அந்தக் கன்னிகையைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு {அங்கிருந்து} அவளைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றான்.(13) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், வாளைத் தரித்துக் கொண்டும், கவசத்தைப் பூண்டு கொண்டும், தன் விரல்களில் தோலுரைகளைப் பூட்டிக் கொண்டும், துரியோதனனின் பின்புறத்தில் தன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்.(14)

போரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்ட மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பேராரவாரம் எழுந்தது. “கவசத்தைப் பூட்டிக் கொள்வீராக”, “தேர்களை ஆயத்தம் செய்வீராக” (இவையே அங்கே கேட்கப்பட்ட ஒலிகளாகும்).(15) கோபத்தால் நிறைந்த அவர்கள், இரண்டு மலைகளின் மீது மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலக் கர்ணன் மற்றும் துரியோதனன் மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(16) இவ்வாறு அவர்கள் பின்தொடர்ந்து சென்றபோது, கர்ணன் அவர்களது விற்களையும், கணைகளையும் ஒரே கணையால் தரையில் வீழ்த்தினான்.(17) அவர்களில் சிலர் விற்களற்றவர்களாகவும், சிலர் கையில் வில்லுடனும் விரைந்தனர். சிலர் தங்கள் கணைகளை ஏவும் தருவாயிலும், சிலர் ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(18)

பெருங்கரநளினத்தைக் கொண்டவனும், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், அவர்கள் அனைவரையும் பீடித்தான். அவன், மன்னர்கள் பலரையும், தங்கள் சாரதிகளை இழக்கச் செய்தான். இவ்வாறே அந்தப் பூமியின் தலைவர்களை அவன் வென்றான்.(19) பிறகு அவர்கள், தங்கள் குதிரைகளின் கடிவாளங்களைத் தாங்களே எடுத்துக் கொண்டு, “ஓடு, ஓடு” என்று சொல்லி, உற்சாகமற்ற இதயங்களுடன் போரில் இருந்து திரும்பினார்கள்.(20) கர்ணனால் பாதுகாக்கப்பட்ட துரியோதனனும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அந்தக் கன்னிகையை {பானுமதியைக்} கொண்டு வந்தான்” என்றார் {நாரதர்}.(21)

ஜராசந்தனின் நட்பு! – சாந்திபர்வம் பகுதி – 05-கர்ணனை எதிர்த்த ஜராசந்தன்; ஜராசந்தனைப் பிளக்க ஆயத்தமான கர்ணன்; கர்ணனின் தோழமையை வேண்டி அவனுக்கு மாலினி என்ற நகரத்தைக் கொடுத்த ஜராசந்தன்; கர்ணனின் மரணத்துக்கான காரணங்கள்…

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “மகதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஜராசந்தன், கர்ணனின் வலிமை குறித்த புகழைக் கேட்டு அவனோடு தனிப்போரில் ஈடுபட அவனை அறைகூவி அழைத்தான்.(1) தெய்வீக ஆயுதங்களை அறிந்தவர்களான அவர்கள் இருவருக்கிடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதில் அவர்கள் பல்வேறு வகை ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினர்.(2) இறுதியாக அவர்களது கணைகள் தீர்ந்து, விற்களும், வாள்களும் உடைந்து, அவர்கள் இருவரும் தேரற்றவர்கள் ஆன பிறகு, வலிமைமிக்கவர்களான அவர்கள் வெறுங்கரங்களால் போரிடத் தொடங்கினர். தன் எதிராளியுடன் வெறுங்கரங்களால் தனிப்போரில் {மற்போரில்} ஈடுபட்ட கர்ணன், ஜரையால் ஒருங்கிணைக்கப்பட்ட அவனது {ஜராசந்தனின்} உடலை இரண்டாகப் பிளக்கஆயத்தமானான்[1].(4)அப்போது அந்த (மகத) மன்னன் {ஜராசந்தன்}, பெரும் வலியை உணர்ந்து, பகைமைக்கான விருப்பம் அனைத்தையும் கைவிட்டு, கர்ணனிடம், “நான் நிறைவடைந்தேன்” என்று சொன்னான்.(5) பிறகு நட்பின் நிமித்தம் அவன் {ஜராசந்தன்} மாலினி என்ற நகரத்தை கர்ணனுக்கு அளித்தான். அதற்கு முன்புவரை, எதிரிகள் அனைவரையும் அடக்குபவனான அந்த மனிதர்களில் புலி (கர்ணன்) அங்கத்திற்கு (அங்க நாட்டிற்கு) மட்டுமே மன்னனாக இருந்தான். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பகைவரின் படையைக் கலங்கடிப்பவனா அவன் {கர்ணன்}, நீ அறிந்திருப்பதைப் போலவே, துரியோதனனின் விருப்பத்திற்கு ஏற்றபடி, சம்பையிலிருந்தும்[2] ஆளத் தொடங்கினான்.(7)இவ்வாறு கர்ணன் தன் கரங்களின் ஆற்றலால் பூமியில் புகழ்பெற்றவனாகத் திகழ்ந்தான். தேவர்களின் தலைவன் {இந்திரன்}, உன் நன்மைக்காக அவனது (இயற்கை) கவசத்தையும், காது குண்டலங்களையும் கேட்ட போது,(8) தெய்வீக மாயையால் திகைப்படைந்த அவன், தன் மதிப்புமிக்க உடைமைகளான அவற்றை {இந்திரனிடம்} கொடுத்துவிட்டான்.(9) காதுகுண்டலங்களை இழந்தவனும், இயற்கைக் கவசத்தை இழந்தவனுமான  அவன் {கர்ணன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(10)

பிராமணனின் சாபம், சிறப்புமிக்க ராமரின் சாபம், குந்திக்கு அளித்திருந்த வரம், இந்திரனால் அவனிடம் எற்படுத்தப்பட்ட மாயை,(11) ரதர்கள் மற்றும் அதிரதர்களைக் கணக்கெடுக்கும்போது, பீஷ்மரால் அரைத் தேர்வீரன் என்று சொல்லப்பட்டதால் உண்டான மனத்தளர்ச்சி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} கொள்கை மூலமாகச் சல்லியனால் (சல்லியனின் கூரிய பேச்சுகளால்) தன் சக்திக்கு உண்டான அழிவு,(12) இறுதியாக, ருத்திரன், இந்திரன், யமன், வருணன், குபேரன், துரோணர், சிறப்புமிக்கக் கிருபர் ஆகியோரிடம் அர்ஜுனன் அடைந்திருந்த தெய்வீக ஆயுதங்கள் ஆகியவற்றாலேயே(13) சூரியப்பிரகாசம் கொண்ட அந்த விகர்த்தனன் மகனை {கர்ணனை} அந்தக் காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்ல முடிந்தது.(14) இவ்வாறு உன் அண்ணன் {கர்ணன்}, பலரால் சபிக்கவும் வஞ்சிக்கவும் பட்டான். எனினும், அந்த மனிதர்களில் புலி {கர்ணன்} போரில் வீழ்ந்துவிட்டதால், இனியும் நீ அவனுக்காக வருந்தலாகாது” என்றார் {நாரதர்}”.(15)

பெண்களைச் சபித்த யுதிஷ்டிரன்! – சாந்திபர்வம் பகுதி – 06-யுதிஷ்டிரின் சோகத்தைக் கண்டு அவனைத் தேற்றிய குந்தி; குந்தியின் பிழையால் உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்த யுதிஷ்டிரன்; உறவினர்களின் மரணத்தை எண்ணி மனத்தளர்ச்சியடைந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தெய்வீக முனிவரான நாரதர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார். அரசமுனியான யுதிஷ்டிரன், துயரால் நிறைந்து, தியானத்தில் மூழ்கினான்.(1) உற்சாகமற்று, கவலையில் மூழ்கி, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்த(2) அவ்வீரனை {யுதிஷ்டிரனைக்} கண்ட குந்தி, தானே துயரில் மூழ்கியவளாக, கவலையில் கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்தவளாக, அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவையும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையுமான இந்த இனிய வார்த்தைகளைக் கொண்டு அவனிடம் பேசினாள்:(3) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, நீ இத்தகு கவலையில் மூழ்குவது உனக்குத் தகாது. ஓ! பெரும் ஞானியே, இந்த உன் கவலையைக் கொன்று, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(4) கர்ணனை, உன்னுடனான சகோதரத்துவத்தை ஏற்கும்படி செய்யக் கடந்த காலங்களில் நான் முயற்சி செய்தேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, தேவன் சூரியனும் அதையே செய்தார்.(5)

அந்தத் தேவன் {சூரியன்}, நலன் விரும்பும் ஒரு நண்பன், ஒருவனுக்கான நன்மையை விரும்பி சொல்லக்கூடியவை அனைத்தையும் கர்ணனிடம் கனவிலும், மீண்டும் ஒரு முறை என் முன்னிலையிலும் சொன்னார்.(6) சூரியனாலோ, என்னாலோ, துன்புறுத்தியோ {பாசத்தாலோ}, காரணங்களாலோ {உண்மைகளாலோ}, அவனைத் தணிப்பதிலோ, உன்னோடு அவனை ஒன்றிணைக்கச் செய்வதிலோ வெற்றி பெற முடியவில்லை[1].(7) அவன், காலத்தின் ஆளுகைக்கு உட்பட்டு, உன்னுடனான பகைமையை வெளிக்காட்டுவதில் உறுதியடைந்தான். உங்கள் அனைவருக்கும் தீங்கிழைப்பதிலேயே அவன் முனைந்து கொண்டிருந்ததால், நான் என் முயற்சியைக் கைவிட்டேன்” என்றாள்.(8)இவ்வாறு தன் தாயால் சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரால் கலக்கமடைந்த இதயத்துடனும், இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(9) “உன் ஆலோசனைகளை நீ மறைத்ததன் விளைவால், இந்தப் பெருந்துன்பம் என்னை அடைந்தது” {என்று சொன்னான்}. பெருஞ்சக்தியைக் கொண்டவனும் நீதிமானுமான அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, “இதுமுதல் எந்தப் பெண்ணும் இரகசியம் காப்பதில் வெல்லமாட்டாள்” என்று சொல்லி உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்தான்.(10) பிறகு அந்த மன்னன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைவுகூர்ந்து துயராலும், கவலையாலும் நிறைந்தான்.(11) கவலையால் பீடிக்கப்பட்டவனும், புகையால் மறைக்கப்பட்ட நெருப்புக்கு ஒப்பானவனுமான அந்த நுண்ணறிவு கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு மனத்தளர்ச்சியை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(12)

காட்டுக்குச் செல்லப்போகிறேன்! – சாந்திபர்வம் பகுதி – 07-உறவினர்களின் அழிவை எண்ணி மனம்வருந்திய யுதிஷ்டிரன்; தந்தையும், தாயும் என்ன நினைப்பில் துன்பப்பட்டுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்பதைச் சொல்வது; அப்படிப்பட்ட பிள்ளைகளைக் கொன்றதால் அவர்களின் பெற்றோர் கைவிடப்பட்டு அவல நிலையை அடைந்ததைச் சொல்வது; இந்தப் பாங்களுக்குத் தானே காரணமென்பதால் காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அற ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன் கலங்கிய இதயத்துடன், சோகத்தில் எரிந்து, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்காகத் துயருறத் தொடங்கினான்.(1) மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அவன், அர்ஜுனனிடம், “ஓ! அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திருந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1]?(4) இந்தப் பேரிடரில் நாம் மூழ்கியிருப்பதால், க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ, வலிமை மற்றும் வீரத்திற்கு ஐயோ.(5)மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, தூய்மை, காட்டில் வாழும் துறவியரால் நோற்கப்படும் துறவு, பணிவு, தீங்கிழையாமை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மைநிறைந்த பேச்சு ஆகியனவே அருளப்பட்டவையாகும் {அறங்களாகும்}.(6) எனினும் நாம், செருக்காலும், ஆணவத்தாலும் நிறைந்து, பேராசை மற்றும் மடமையின் மூலமும், அரசுரிமையின் இனிமைகளை அனுபவிக்கும் விருப்பத்தினாலும் இந்த அவலநிலையில் விழுந்துவிட்டும்.(7) உலகின் அரசுரிமையை அடைய விரும்பிய நம் உறவினர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதை நாம் கண்டது, மூவுலகங்களின் அரசுரிமையைக் கொடுத்தாலும் எவனாலும் நம்மை மகிழ்விக்க முடியாது என்ற அளவுக்குத் துயரமானதாகும்.(8) ஐயோ, பூமியின் நிமித்தமாக, நம்மால் கொல்லத்தகாத பூமியின் தலைவர்களைக் கொன்று, நண்பர்களை இழந்து, வாழ்வின் நோக்கத்தை இழந்து இருப்பின் சுமையை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.(9) இறைச்சித்துண்டிற்காகச் சண்டையிடும் நாய்க்கூட்டத்துக்கு நேர்வது போன்று நம்மை இந்தப் பேரழிவு மூழ்கடித்தது. அந்த இறைச்சித் துண்டு இனியும் நமது விருப்பத்திற்குரியதல்ல. மறுபுறம், அதை வீசியெறிந்துவிடலாம்.(10)

மொத்த உலகத்திற்காகவோ, தங்கமலைகளுக்காகவோ, இந்த உலகத்தில் உள்ள குதிரைகள் மற்றும் பசுக்கள் அனைத்தின் நிமித்தமாகவோ கூட இப்போது கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடாது.(11) பொறாமையில் நிறைந்தவர்களும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பேராவல் கொண்டவர்களும், கோபம் மற்றும் இன்பத்திற்கு வசப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும், மரணமெனும் நெடுஞ்சாலையில் நடந்து, யமலோகத்தை அடைந்துவிட்டனர்.(12) தவம், பிரம்மச்சரியம், உண்மை, துறவு ஆகியவற்றைப் பயிலும் தந்தைமார், அனைத்து வகையான செழிப்புடன் கூடிய மகன்களை அடைய விரும்புகின்றனர்.(13) அதேபோலவே, உண்ணாநோன்புகள், வேள்விகள், விரதங்கள், புனிதச் சடங்குகள், மங்கல காரியங்கள் ஆகியவற்றின் மூலம் தாய்மாரும் கருத்தரிக்கின்றனர். பிறகு அவர்கள் அந்தக் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்.(14) கனியின் எதிர்பார்பார்ப்பில் பேரிடரில் தங்கள் காலத்தைக் கடத்தும் அவர்கள், தங்களுக்குள், “இந்தக் கருவை பாதுகாப்பாக ஈன்றெடுப்போமா? பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா? வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா? இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா?” என்று கேட்டுக் கொள்கின்றனர்.(15)

{அப்படிப்பட்ட அந்தப் பெற்றோர்}, ஐயோ, வயதால் இளைமை நிரம்பியவர்களும், காது குண்டலங்களுடன் பிரகாசமாக இருந்தவர்களுமான தங்கள் மகன்கள் கொல்லப்பட்டு, தங்கள் எதிர்பார்ப்புகள் கனியற்றுப் போன அவர்கள் {இப்போது} கைவிடப்பட்ட நிலையை அடைந்திருக்கின்றனர்.(16) இவ்வுலகத்தில் இன்பத்தை அனுபவிக்காமல், தங்கள் தந்தைமாருக்கும், தேவர்களுக்கும் தாங்கள் பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் {அந்தப் பிள்ளைகள்} யமலோகம் சென்றுவிட்டனர்.(17) ஐயோ, ஓ! தாயே, அந்த மன்னர்களின் வலிமை மற்றும் செல்வத்தின் கனிகளை அறுவடை செய்ய அவர்களின் பெற்றோர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்[2].(18) அவர்கள் எப்போதும் பொறாமை நிறைந்தவர்களாகவும், உலகப் பொருட்களில் பேராவல் கொண்டவர்களாகவும், கோபம் மற்றும் இன்பத்தின் வசப்பட்டவர்களாகவும் இருந்தனர். இதன் காரணமாக அவர்களால் வெற்றியின் கனிகளை எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் அனுபவிக்க முடியாமல் போனது.(19) (இந்தப் போரில்) பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களில் வீழ்ந்து தொலைந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவரும், அவர்களது அந்தச் செயலால் அருள் உலகங்களை அடைந்திருக்கூடும் என்று நான் நினைக்கிறேன்[3].(20)உலகத்தின் அழிவுக்குக் காரணமாக நாம் கருதப்படுகிறோம். எனினும், உண்மையில் இந்தக் குற்றம் திருதராஷ்டிரரின் மகன்களின் மீதே சுமத்தப்பட வேண்டும்.(21) துரியோதனன் எப்போதும் தன் இதயத்தை வஞ்சனையிலேயே நிலைக்கச் செய்திருந்தான். எப்போதும் கெடுநோக்கை வளர்த்த அவன் {துரியோதனன்}, வஞ்சனைக்கே அடிமையாக இருந்தான். நாம் அவனுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காமல் இருந்த போதும், அவன் நம்மிடம் பொய் நடத்தையுடனே நடந்து கொண்டான்.(22) நாமும் நமது நோக்கை அடையவில்லை, அவர்களும் அவர்களுடைய நோக்கை அடையவில்லை. நாமும் அவர்களை வெல்லவில்லை, அவர்களும் நம்மை வெல்லவில்லை. தார்தராஷ்டிரர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கவில்லை, பெண்களையும், இசையையும் அனுபவிக்கவில்லை.(23) அவர்கள், தங்கள் மந்திரிகள், நண்பர்கள் மற்றும் சாத்திரங்களைக் கற்றோரின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை. உண்மையில், அவர்களால், தங்கள் விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், நன்கு நிறைக்கப்பட்ட கருவூலத்தையும், பரந்த ஆட்சிப் பகுதிகளையும் அனுபவிக்க முடியவில்லை.(24) தங்கள் வெறுப்பால் நம்மை எரித்த அவர்களால் இன்பத்தையோ, அமைதியையோ அடையமுடியவில்லை. நம் செல்வாக்குப் பெருகுவதைக் கண்ட துரியோதனன் நிறமற்றவனாக, வாடிப்போனவனாக, மெலிவடைந்தான்.(25)

பாசம் நிறைந்த ஒரு தந்தையாக, திருதராஷ்டிரர் தம் மகனின் தீய கொள்கைகளைப் பொறுத்து வந்தார்.(26) விதுரர் மற்றும் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஆகியோரை அலட்சியம் செய்து, ஆசைகளாலேயே ஆளப்பட்டவனும், பேராசை கொண்டவனுமான தமது தீய மகனைத் {துரியோதனனைத்} தடுக்காமல் புறக்கணித்ததன் விளைவாக மன்னரும் என்னைப் போலவே அழிவைச் சந்தித்தார் என்பதில் ஐயமில்லை.(27) சுயோதனன், தன் உடன்பிறந்த தம்பிகள் கொல்லப்படக் காரணமாக அமைந்தும், எப்போதும் பாவம் நிறைந்த இதயத்துடனேயே இருந்து, நம் மீது கொண்ட வெறுப்பால் எரிந்து, இந்த முதிர்ந்த தம்பதியரைத் துயரில் எரியவிட்டுவிட்டான். உயர் பிறப்புக் கொண்ட வேறு எந்த உறவினன், போரின் மீது கொண்ட விருப்பத்தால், கிருஷ்ணனின் முன்னிலையில், அத்தகு வார்த்தைகளை உறவினர்களிடம் பேச முடியும்?(29) சுற்றிலும் இருக்கும் அனைத்தையும் தம் சொந்த சக்தியால் எரிக்கும் சூரியர்களைப் போல, நாமும், துரியோதனனின் குற்றத்தின் மூலம் அழிவின்மையை இழந்துவிட்டோம்[4].(30)தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனும், பகைமையின் வடிவமுமான அவனே நமது தீய நட்சத்திரமானான். ஐயோ, அந்தத் துரியோதனனின் செயல்களால் மட்டுமே நமது குலம் நிர்மூலமாக்கப்பட்டது.(31) கொல்லத்தகாதவர்களைக் கொன்று நாம் உலகத்தின் நிந்தனையை அடைந்தோம்.(32) மன்னர் திருதராஷ்டிரர், தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனும், குலத்தை அழிப்பவனுமான அந்த இளவரசனை {துரியோதனனை} அரசுரிமையில் நிறுவியதால், இன்று இந்தத் துயரத்தை அடைந்திருக்கிறார்.(33) வீரர்களான நம் எதிரிகள் கொல்லப்பட்டனர். நாம் பாவம் இழைத்துவிட்டோம். அவனது உடைமைகளும், நாடும் தொலைந்து போயின. அவர்களைக் கொன்று நமது கோபம் தணிவடைந்திருக்கிறது. ஆனால் துயரமான என்னைத் திகைப்படையச் செய்கிறது.(34) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இழைக்கப்பட்ட பாவமானது, அனைத்தையும் துறந்து தீர்த்தங்களுக்குப் பயணிப்பது, சாத்திரங்களைத் தொடர்ந்து தியானிப்பது போன்ற மங்கலச் செயல்களால் நிவர்த்திச் செய்யப்படுகிறது. இவை யாவற்றிலும், துறவை பயில்பவன், புதிய பாவங்களை இழைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.(35)

நிலைத்த ஆன்மாவுடன் துறவை பயில்பவன், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து தப்பித்து, சரியான சாலையை அடைந்து, பிரம்மத்தை அடைகிறான் என்று சுருதிகள் அறிவிக்கின்றன.(36) எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஓ! எதிரிகளை எரிப்பவனே, நான் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, எண்ணங்களை வெளியிடாப் பேசா நோன்பைப் பின்பற்றி, அறிவு சுட்டிக் காட்டும் பாதையில் நடக்கப் போகிறேன்[5].(37) ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான் பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ! குருகுலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, எனக்கு நாட்டிற்கான, அல்லது இன்பத்திற்கான எந்தத் தேவையும் இல்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்திக் கொண்டான். பிறகு அவனது தம்பியான அர்ஜுனன் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் பேசினான்” {என்றார் வைசம்பாயனர்}.(42)

பெருஞ்சீற்றமடைந்த அர்ஜுனன்! – சாந்திபர்வம் பகுதி – 08-துறவறத்தை ஏற்கப்போவதாகச் சொன்ன யுதிஷ்டிரனை நிந்தித்த அர்ஜுனன்; செல்வத்தின் பெருமை, தேவர்களின் நடைமுறை, மன்னர்களின் கடமை ஆகியவற்றைச் சொன்னது; குதிரைவேள்வி செய்யுமாறு யுதிஷ்டிரனை வற்புறுத்தியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கூரிய பேச்சு, ஆற்றல் மற்றும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், அவமதிப்பை மன்னிக்க விரும்பாத ஒரு மனிதனைப் போல, தன் கடைவாயை நாவால் நனைத்துக் கொண்டு, பெருஞ்சீற்றத்தை வெளிக்காட்டியபடியே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைப் புன்னகையுடன் சொன்னான்:(1,2)

{அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இஃது எவ்வளவு வலிநிறைந்ததாக இருக்கிறது? எவ்வளவு துயரைத் தருவதாக இருக்கிறது? மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனையைச் செய்துவிட்டு, இந்தப் பெருஞ்செழிப்பைக் கைவிட நினைப்பதால், உமது இதயத்தில் உள்ள இந்தப் பெருங்கலக்கத்தைக் கண்டு நான் வருந்துகிறேன்.(3) உமது எதிரிகளைக் கொன்று, உமது {க்ஷத்திரிய} வகைக்கான கடமையை நோற்றதன் மூலம், பூமியின் அரசுரிமையை அடைந்த பிறகு, உமது இதயத்தின் நிலையின்மையால், நீர் அடைந்த அனைத்தையும் ஏன் நீர் கைவிட வேண்டும்?(4) ஓர் அலியோ, எதிலும் தாமதம் செய்பவனோ இந்தப் பூமியில் அரசுரிமையை எங்கேயாவது, எப்போதாவது அடைந்திருக்கிறானா? பிறகு, சினத்தால் உணர்வை இழந்த நீர், ஏன் பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொன்றீர்?(5)

பிச்சையெடுத்து வாழும் ஒருவனால் எப்போதும் தன் எந்தச் செயலாலும், பூமியில் நல்ல பொருட்களை அனுபவிக்க முடியாது. செழிப்பை இழந்து, எந்த வளமும் அற்றவனான அவனால் ஒருபோதும் பூமியில் புகழை வெல்லவோ, மகன்கள் மற்றும் விலங்குகளை அடையவோ முடியாது.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெருகும் இந்த நாட்டைக் கைவிட்டு, நீர் துறவியின் அற்ப வாழ்வை வாழ்ந்தால், இந்த உலகம் உம்மைப் பற்றி என்ன சொல்லும்?(7) பூமியின் நல்ல பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, செழிப்பை இழந்து, வளமற்ற இழிந்த மனிதனைப் போலப் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை நோற்கப் போவதாக நீர் ஏன் சொல்கிறீர்?(8) நீர் மன்னர்களின் இந்தக் குலத்தில் பிறந்திருக்கிறீர். படையெடுத்து மொத்த பூமியையும் வென்ற பிறகு, அறம், பொருள் சம்பந்தமான அனைத்தையும் கைவிட்டுக் காட்டில் வாழ விரும்புவது உமது மடமையே.(9) (நீர் காட்டுக்கு ஓய்ந்து சென்றால்), நீர் இல்லாத போது, வஞ்சகர்கள் வேள்விகளை அழிப்பார்கள். அந்தப் பாவம் நிச்சயம் உம்மைக் களங்கப்படுத்தும்.(20)

மன்னன் நகுஷன் {நஹுஷன்} ஏழ்மை நிலையில் தீய செயல்கள் பலவற்றைச் செய்துவிட்டு, அந்நிலை நிந்திக்கத்தக்கது என்று கதறி, ஏழ்மையானது தனித்து ஒதுங்கி துறவியாக வாழ்பவர்களுக்கானதே என்று சொன்னான்[1].(11) நாளைக்கென்று எந்த ஏற்பாட்டையும் செய்து கொள்ளாதது, முனிவர்களுக்குத் தகுந்த நடைமுறையாகும். இதை நீர் நன்கறிவீர். எனினும், அரச அறம் என்று சொல்லப்படுவது முற்றிலும் செல்வத்தை நம்பியே இருக்கிறது.(12) மற்றொருவனிடம் இருந்து செல்வத்தைத் திருடும் ஒருவன், அவனிடம் இருந்து அறத்தையும் சேர்த்தே திருடுகிறான்[2]. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நம்மைக் கொள்ளையிட்ட ஒரு செயலை நம்மில் எவரால் மன்னிக்க முடியும்?(13) ஏழையானவன் அருகில் இருந்தாலும், பொய்யாகக் குற்றஞ்சாட்டப்படுகிறான்[3]ஏழ்மை என்பது பாவம் நிறைந்த ஒரு நிலையாகும். எனவே, ஏழ்மையைப் புகழ்வது உமக்குத் தகாது.(14) ஓ! மன்னா, {அறம் வழுவி} வீழ்ந்து விட்ட ஒரு மனிதன், ஏழையைப் போலவே வருந்துகிறான். வீழ்ந்துவிட்ட ஒரு மனிதனுக்கும், ஓர் ஏழைக்கும் இடையில் என்னால் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(15)தகுதிவாய்ந்த அனைத்து வகைச் செயல்களும், மலையில் இருந்து பாய்வது போல, பெருஞ்செல்வத்தில் இருந்தே உண்டாகின்றன.(16) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, செல்வத்திலிருந்தே அனைத்து அறச்செயல்களும், அனைத்து இன்பங்களும், சொர்க்கமும் எழுகின்றன. செல்வம் இல்லாமல் ஒரு மனிதனால், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகளையே கூடக் கண்டறிய முடியாது.(17) கோடை காலத்தில் நீர் வற்றிய ஆழமற்ற ஓடைகளைப் போல, சிறுமதி கொண்டோன் ஒருவன், தன் செயல்களால், தனது செல்வத்தை இழக்கும் நிலையை அடைகிறான்.(18)

செல்வம் கொண்டவனே நண்பர்களைக் கொண்டவனாவான். செல்வம் கொண்டவன் உறவினர்களையும் கொண்டவனாவான். செல்வம் கொண்டவனே உண்மையான மனிதனாக இவ்வுலகில் கருதப்படுகிறான். செல்வம் கொண்டவன் எவனோ, அவனே கல்விமானாகவும் கருதப்படுகிறான்.(19) செல்வமற்ற ஒருவன் எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையாவது அடைய விரும்பினால், அவன் தோல்வியையே சந்திக்கிறான். யானைகள், காட்டு யானைகளைக் கைப்பற்றுவதைப் போல, செல்வமே, செல்வத்தைப் பெருக வைக்கவும் செய்கிறது.(20)

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} அறச்செயல்கள், இன்பங்கள், மகிழ்ச்சி, துணிவு, கோபம், கல்வி, கௌரவம் ஆகிய அனைத்தும் செல்வத்தில் இருந்தே உண்டாகின்றன.(21) செல்வத்தாலேயே ஒருவன் குடும்பக் கௌரவத்தையும் அடைகிறான். செல்வத்தாலேயே ஒருவனின் அறத்தகுதிகள் பெருகுகின்றன. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, செல்வமில்லாதவனுக்கு இவ்வுலகமோ, மறு உலகமோ கிடையாது.(22) மலையிலிருந்து ஊற்றெடுக்கும் ஆறுகளைப் போல, செல்வத்தில் இருந்தே அறச்செயல்கள் ஊற்றெடுப்பதால், செல்வமில்லாத மனிதன் அறச்செயல்களைச் செய்வதில் வெல்வதில்லை.(23) குதிரைகள், பசுக்கள், பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியவற்றில் (ஆகியவற்றைக் கொள்வதில்) மெலிந்தவனே உண்மையில் மெலிந்தவனாவான், அங்கங்களால் மட்டுமே மெலிந்தவன் அவ்வாறாகமாட்டான்.(24)

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் தானவர்களின் நடைமுறைகளைக் கண்டு உண்மையைத் தீர்மானித்துக் கொள்வீராக. ஓ! மன்னா, தேவர்கள், தங்கள் உறவினர்களை (அசுரர்களைக்) கொல்வதைத் தவிர வேறு எதையாவது எப்போதும் விரும்புகிறார்களா?(25) அடுத்தவரின் செல்வத்தை அடைவது அறமாகக் கருதப்படவில்லையெனில், ஓ! ஏகாதிபதி, மன்னர்களால் எவ்வாறு இந்தப் பூமியில் அறம்பயில முடியும்? கல்விமான்கள், வேதங்களில் இருந்து {பின்வரும்} இந்தத் தீர்மானங்களையே விதித்திருக்கின்றனர்.(26) மன்னர்கள், தினமும் மூன்று வேதங்களையும் உரைத்து, செல்வத்தை அடைய முனைந்து, அவ்வாறு அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு கவனமாக வேள்விகளைச் செய்து வாழ வேண்டும் என்று அக்கல்விமான்கள் விதித்திருக்கின்றனர்.(27) தேவர்கள், உறவினர்களுடன் {அசுரர்களுடன்} கொண்ட பகையின் மூலமே சொர்க்கத்தில் தங்கள் பாதங்களைப் பதித்தனர். தேவர்களே தங்கள் செழிப்பை உறவினர்களுடன் {தானவர்களுடன்} கொண்ட பகையால் அடைந்தார்கள் என்றால், அத்தகு பகையில் என்ன தவறு இருக்க முடியும்?(28) தேவர்கள் இவ்வாறு செயல்படுவதையே நீர் காணலாம். வேதங்களின் அழிவில்லா விதிகளும் அஃதை அங்கீகரிக்கின்றன. கற்பது, போதிப்பது, வேள்வி செய்வது, பிறரின் வேள்விகளில் உதவி செய்வது ஆகிய இவையே நமது முக்கியக் கடமைகளாகும். பிறரிடம் இருந்து மன்னர்கள் அடையும் செல்வம்தான், அவர்களது செழிப்பின் ஆதாரங்களாகின்றன. பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் ஈட்டப்பட்ட செல்வத்தை நாம் ஒருபோதும் கண்டதில்லை.(29,30)

இவ்வாறே மன்னர்கள் இந்தப் பூமியைக் கைப்பற்றுகின்றனர். கைப்பற்றிய பிறகு, மகன்கள் தங்கள் தந்தைமாரின் செல்வத்தை {தங்கள் செல்வமாகவே} சொல்வதைப் போல, அவர்கள் அதைத் தங்களுக்குச் சொந்தமானது என்று சொல்கின்றனர். சொர்க்கத்திற்குச் சென்றிருக்கும் அரச முனிகள், இதையே மன்னர்களின் கடமையாக அறிவித்திருக்கின்றனர்.(31) பெருகும் கடலின் அனைத்துத் திசைகளிலும் நீர் பாய்வதைப் போல, செல்வமானது, மன்னர்களின் கருவூலங்களில் இருந்து அனைத்துத் திசைகளிலும் பாய்கிறது.(32) இந்தப் பூமியானவள், முன்பு மன்னன் திலீபனுக்கும், நகுஷனுக்கும், அம்பரீஷனுக்கும், மாந்தாதாவுக்கும் சொந்தமானவளாக இருந்தாள். இப்போது அவள் உம்முடையவளாகியிருக்கிறாள்.(33)

எனவே, அனைத்து வகைக் கொடைகளை அபரிமிதமாகக் கொண்டதும், பூமியின் உற்பத்தியில் ஒரு பெருங்குவியலைத் தேவையாகக் கொண்டதுமான ஒரு பெரும் வேள்வி உமக்காகக் காத்திருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் அந்த வேள்வியைச் செய்யவில்லையெனில், இந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் உமதேயாகும்.(34) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய ஒரு குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தைச்} செய்த ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும், அவ்வேள்வியின் முடிவில் தூய்மையடைந்தவர்களாக, புனிதமடைந்தவர்களாக ஆகிறார்கள்.(35) அண்ட வடிவிலான மகாதேவனே, அனைத்து வகை இறைச்சிகளும் ஆகுதிகளாகத் தேவைப்படும் {ஸர்வமேதம் என்றழைக்கப்படும்} ஒரு பெரும் வேள்வியில், அனைத்து உயிரினங்களையும், அதன் பிறகு தன்னையும் வேள்விக் காணிக்கையாக அஃதில் ஊற்றினான்.(36) இந்த மங்கலகரமான பாதையே அழிவில்லாததாகும். இதன் கனிகள் ஒருபோதும் அழிவடைவதில்லை. இந்தப் பெரும்பாதையே தாசரதம் {அழிவில்லாத பாதை} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, இதைக் கைவிட்டுவிட்டு, நீர் எந்தப் பாதையை அடையப் போகிறீர்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(37)

துறவின் நடைமுறை! – சாந்திபர்வம் பகுதி – 09-துறவில் தனக்கிருக்கும் உறுதியை வெளிக்காட்டிய யுதிஷ்டிரன்; துறவின் தன்மைகளையும், உலக இயல்புகளையும் எடுத்துரைத்தது…

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, சிறிது நேரம் உன் கவனத்தைக் குவித்து, உன் மனத்தையும், கேட்கும் திறனையும் உனக்குள் இருக்கும் ஆன்மாவில் நிலைக்கச் செய்வாயாக. நீ என் வார்த்தைகளை அத்தகு மனநிலையில் கேட்டால், அவை உன் ஏற்பைப் பெறும்.(1) உலக இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, நல்லோர் செல்லும் பாதையில் நான் செல்லப் போகிறேன். உனக்காக நான், நீ பரிந்துரைக்கும் பாதையில் செல்ல மாட்டேன்.(2) எந்த மங்கலப்பாதையில் ஒருவன் தனியாக நடக்க வேண்டும் என்று நீ கேட்டால், நான் உனக்கு அதைச் சொல்வேன். நீ என்னிடம் கேட்க விரும்பவில்லை எனினும், உன்னால் கேட்கப்படாதபோதும் நான் அஃதை உனக்குச் சொல்வேன்.(3) இன்பங்களையும், உலக மனிதர்களின் நடைமுறைகளையும் கைவிட்டு, கடுந்தவங்களைச் செய்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, காட்டில் வசிக்கும் விலங்குகளுடன் நான் திரியப் போகிறேன்.(4) முறையான நேரங்களில் நெருப்பில் காணிக்கைகளை {ஆகுதிகளை} ஊற்றி, காலையிலும், மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்து, தோல்களால் என்னை மறைத்துக் கொண்டு, என் தலையில் சடாமுடி தரித்துக் கொண்டு, குறைவாக உட்கொள்ளும் உணவுமுறையால் என்னை நானே மெலியச் செய்து கொள்ளப் போகிறேன்.(5)

குளிர், காற்று, வெப்பம், பசி, தாகம், களைப்பு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளால் நான் என் உடலை மெலியச் செய்யப் போகிறேன்.(6) காட்டில் வசித்து, இதயத்துக்கும், காதுக்கும் இனிமையாக இருக்கும் மகிழ்ச்சிகரமான பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளை நான் தினமும் கேட்கப்போகிறேன்.(7) காட்டில் மலர்களால் கனக்கும் மரங்கள், செடிகொடிகள் மற்றும் அங்கே வளரும் பல்வேறு வகை அழகிய பொருட்களின் நறுமணத்தை நான் நுகரப் போகிறேன.(8) காட்டில் நான் சிறந்த பல ஆசிரமங்களையும் காணப் போகிறேன். எந்த ஓர் உயிரினத்திற்கும் சிறு தீங்கையும் இழைக்காமல் இருக்கப் போகிறேன் என்று சொல்லும்போது, கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்போரைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன?[1](9) ஓய்ந்த வாழ்வை நோற்று, சிந்தனைக்கு {தியானத்திற்கு} என்னை அர்ப்பணித்துக் கொண்டு, கனிந்த மற்றும் கனியாத கனிகளை உண்டு, காட்டுக் கனிகளையும், ஊற்றின் தண்ணீரையும் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கையளித்தும், நன்றியுடன் கூடிய பாடல்கள் பாடியும் அவர்களை நான் நிறைவு செய்வேன்.(10)காட்டு வாழ்வின் தவ விதிமுறைகளை இவ்வழிகளில் நோற்று, என் உடல் அழிவதற்காகப் பொறுமையாகக் காத்திருந்து என் நாட்களை நான் கடத்தப் போகிறேன்.(11) அல்லது, தனியாக வாழ்ந்து, எண்ணங்களை வெளியிடாமல் பேசா நோன்பிருந்து, என் தலையை முற்றாக மழித்துக் கொண்டு, ஒரே ஒரு மரத்திடம் மட்டுமே ஒவ்வொரு நாளும் இரந்து என் உணவை நான் அடையப் போகிறேன்[2].(12) என் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு, கைவிடப்பட்ட வீடுகளை உறைவிடமாகக் கொண்டோ, மரத்தடிகளில் கிடந்தோ, அன்புக்குரிய அல்லது வெறுப்புக்குரிய அனைத்துப் பொருட்களைக் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(13) துன்பத்திலோ, இன்பத்திலோ ஈடுபடாமல், நிந்தனையையும், பாராட்டையும், நம்பிக்கையையும், பாசத்தையும் சமமாகக் கருதி, முரண்பட்ட இரட்டைகளைக் கடந்து, உலகப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(14) எவரிடமும் உரையாடாமல், வெளிப்படையாக ஒரு குருட்டு, செவிட்டு மூடனின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு, என் ஆன்மாவிலேயே இன்புற்று, உள்ள நிறைவுடன் நான் வாழப் போகிறேன்.(15)அசையும் மற்றும் அசையாத நால்வகை உயிரினங்களுக்கும் சிறு தீங்கையும் செய்யாமல், தங்கள் கடமைகளில் மனநிறைவுடன் இருக்கும் அல்லது உணர்வுகளின் ஆணைகளைப் பின்பற்றும் உயிரினங்கள் அனைத்திடமும் சமமாக நடந்து கொள்ளப் போகிறேன்.(16) நான் எவரிடமும் ஏளனமோ, முகச் சுளிப்போ செய்ய மாட்டேன். என் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, எப்போதும் மகிழ்வான முகத்துடன் நான் இருக்கப் போகிறேன்.(17) எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நான் சந்திக்கும் யாரிடமும் கேட்காமல், நாட்டையோ, திசையையோ கருத்தில் கொள்ளாமல் நான் பயணித்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.(18) நான் எங்கே செல்லப்போகிறேன் என்பதைக் கருத்தில் கொள்ளாமலும், திரும்பிப் பாராமலும் நான் செல்லப் போகிறேன். ஆசை, கோபம் ஆகியவற்றைக் கைவிட்டு, என் பார்வையை உள்நோக்கிச் செலுத்தி, ஆன்மா மற்றும் உடலின் செருக்கைக் கைவிட்டுவிட்டு நான் செல்லப் போகிறேன்.(19) இயற்கை எப்போதும் முன்பே நடக்கிறது. எனவே, உணவும், நீரும் ஏதோ ஒரு வகையில் கிடைக்கும். அத்தகு வாழ்வுமுறையின் வழியில் நிற்கும் முரண்பட்ட இரட்டைகளைக் குறித்து நான் சிந்திக்கப் போவதில்லை.(20)

(நான் செல்லும்) முதல் வீட்டில் சிறு அளவு தூய உணவும் கிட்டவில்லையெனில், நான் வேறு வீடுகளுக்குச் சென்று அஃதை அடைவேன். அப்படி வலம் வந்தும் அது கிட்டவில்லையெனில், என் ஆவலை நிறைவு செய்ய அடுத்தடுத்து ஏழு வீடுகளுக்குச் செல்வேன்.(21) பரபரப்பான சாலைகளைத் தவிர்த்து, வீடுகளில் புகை அடங்கியதும், அடுப்பங்கரையில் நெருப்புத் தணிந்ததும், வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் உண்டு முடிந்ததும், பிச்சைக்காரர்களும், உறவினர்களும் திரிவது நின்றதும்,(22) பிச்சையெடுக்கும் கணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, இரண்டு, மூன்று, அல்லது அதிகபட்சம் ஐந்து வீடுகளில் நான் பிச்சை கேட்பேன். ஆசையின் பற்றுகளை அறுத்து நான் இவ்வுலகில் திரியப் போகிறேன்.(23) வெற்றி மற்றும் தோல்வியில் சமமான நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பெரும் தவத் தகுதியை நான் ஈட்டப் போகிறேன். உயிரில் ஆசை கொண்டவனைப் போலவோ, சாகப்போகிறவனைப் போலவோ நான் நடந்து கொள்ள மாட்டேன்.(24) உயிர் வாழும் விருப்பம், அல்லது மரணத்தில் வெறுப்பு ஆகிய எதையும் நான் வெளிக்காட்ட மாட்டேன். ஒருவன் என் ஒரு கரத்தை வெட்டினாலும், மற்றொருவன் என் மற்றொரு கரத்தை சந்தனக் குளம்பினால் பூசினாலும், அவர்களில் எவருக்கும் நான் நன்மையையோ, தீமையையோ விரும்பமாட்டேன்.(25)

ஒருவனது வாழ்வில் செய்யக்கூடிய செழிப்புக்கு உகந்த செயல்கள் அனைத்தையும் தள்ளி, கண்களைத் திறக்கவும், மூடவும் செய்யும் வேலைகளை மட்டுமே செய்து, உயிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கும் மட்டுமே உணவையும், நீரையும் நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்.(26) செயலில் ஒருபோதும் பற்றுக் கொள்ளாமல், எப்போதும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அசுத்தங்கள் அனைத்தில் இருந்தும் என் ஆன்மாவை நான் தூய்மையடையச் செய்யப் போகிறேன்.(27) பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, கட்டுகள் அனைத்தையும் அறுத்து, காற்றைப் போல நான் சுதந்திரமாக வாழப் போகிறேன்.(28) பற்றில் இருந்து விடுபடும் எனக்கு, என்றும் நிலைத்திருக்கும் துறவே வாழ்வாக இருக்கப் போகிறது. ஆசையாலும், அறியாமையாலும் நான் பெரும்பாவங்களை இழைத்துவிட்டேன்.(29)

மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட வகையினர், மங்கல மற்றும் மங்கலமற்ற செயல்கள் ஆகிய இரண்டையும் இங்கே செய்து, காரணம் மற்றும் விளைவுகளின் அடிப்படையிலான உறவுகளாகத் தங்கள் மனைவியர், பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோர் அனைவரையும் கட்டிக் காத்து வருகின்றனர்[3].(30) அவர்களது வாழ்வின் காலம் முடிந்ததும், தங்கள் பலவீனமான உடல்களைக் கைவிட்டு, தங்கள் பாவம் நிறைந்த செயல்களின் விளைவுகளை அவர்கள் ஏற்கின்றனர். தன் செயல்களின் விளைவால் வந்த சுமையை அந்தச் செயலைச் செய்தவனே சுமக்கிறான்.(31) இவ்வாறே, செயல்களுடன் கூடிய உயிரினங்கள், தேர்ச்சக்கரத்தைப் போல, இந்த வாழ்வெனும் சக்கரத்தைத் தொடர்ச்சியாகச் சுழற்றி, இங்கே வந்து தங்கள் சக உயிரினங்களைச் சந்திக்கின்றன.(32)அழிவற்றதாகத் தெரிவதும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிவற்றால் பீடிக்கப்படுவதுமான மாயை நிறைந்த இவ்வுலகம் சார்ந்த வாழ்வு முறையைக் கைவிடுபவன், நிச்சயம் மகிழ்ச்சியையே அடைகிறான்.(33) மேலும், தேவர்கள் சொர்க்கத்தில் இருந்தும், பெரும் முனிவர்கள் தங்கள் மதிப்பிற்குரிய நிலைகளிலிருந்தும் விழுவார்கள் எனில், காரணங்களின் (மற்றும் காரியங்களின்) உண்மைகளை அறிந்த எவன் சொர்க்கத்தின் செழிப்பை அடைய விரும்புவான்?(34) முக்கியத்துவமற்ற மன்னர்கள், ஆட்சித்திறனின் பல்வேறு வழிகள் சம்பந்தமான (ஒப்பந்தம், கொடை என்ற பெயர்களில் அறியப்படும்) பல்வேறு செயல்களைச் செய்து, ஏதாவது சதியின் மூலம் பெரும் மன்னர்களைக் கொல்கின்றனர்.(35) இச்சூழ்நிலைகளைச் சிந்தித்ததினாலேயே இந்த ஞான அமுதம் என்னிடம் வந்திருக்கிறது. இஃதை அடைந்த நான், நிலையானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததுமான ஓர் இடத்தை (எனக்காக) விரும்புகிறேன்.(36) இத்தகு ஞானத்திலேயே எப்போதும் (என்னை ஈடுபடுத்திக் கொண்டு), இவ்வழியிலேயே எப்போதும் செயல்பட்டு, வாழ்வெனும் இந்த அச்சமற்ற பாதையில் சென்று, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் மற்றும் வலிக்கு ஆட்படும் இந்த உடலில் இருந்து விடுபடப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(37)

ஓர் அலிக்குக் கீழ்ப்படிந்து ஆதரவற்றவர்களானோம்! – சாந்திபர்வம் பகுதி – 10-க்ஷத்திரியனுக்குத் துறவு தகாது என யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்துக் கண்டித்த பீமசேனன்; தன் வகைக்கான கடமைகளே ஒருவன் செய்யத்தக்கது என்று சொன்னது; துறவே வெற்றியைத் தரும் என்றால் மரங்களும், மலைகளும் சொர்க்கத்தை அடைந்திருக்க வேண்டும் என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமசேனன்…

பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மூடனும், அறிவற்றவனுமான ஒருவன் மீண்டும் மீண்டும் குருட்டுப் பாடமாக வேதம் ஓதுவதால் உண்மையைக் காணாததைப் போலவே, உமது புரிதலும் இருக்கிறது.(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மன்னர்களின் கடமைகளை நிந்தித்துக் கொண்டு, சோம்பேறியின் வாழ்வை நீர் நோற்றால், இந்தத் தார்தராஷ்டிரர்களின் அழிவானது தேவையே இல்லாததாகும்.(2) மன்னிக்கும் இயல்பு, கருணை, இரக்கம், தீங்கிழையாமை ஆகியவை க்ஷத்திரியக் கடமைகளின் பாதையில் நடப்போர் எவரிடமும் காணப்படவில்லையா?(3) இதுவே உமது நோக்கம் என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் ஒருபோதும் ஆயுதமெடுத்திருக்க மாட்டோம்; ஓருயிரையும் கொன்றிருக்க மாட்டோம்.(4) இந்த உடல் அழியும்வரை நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்திருப்போம். பூமியின் ஆட்சியாளர்களுக்கிடையிலான இந்தப் பயங்கரப் போரும் ஒருபோதும் நடந்திருக்காது.(5)

நாம் காணும் அனைத்தும் பலவான்களின் உணவே என்று கல்விமான்கள் சொல்கின்றனர். உண்மையில், அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இவ்வுலகமானது, பலவானின் இன்பநுகர் பொருளாகும்.(6) க்ஷத்திரியக்கடமைகளை அறிந்த ஞானியர், பூமியின் அரசுரிமையை எடுக்க முனையும் ஒரு மனிதனின் வழியில் தடையாக இருக்கக்கூடியவன் கொல்லத்தக்கவன் என்று சொல்கிறார்கள்.(7) அந்தக் குற்றத்தைச் செய்து, நமது நாட்டின் எதிரிகளாக நின்றோர் அனைவரும் நம்மால் கொல்லப்பட்டனர். ஓ! யுதிஷ்டிரரே, அவர்களைக் கொன்ற பிறகு, இந்தப் பூமியை நேர்மையாக ஆட்சி செய்வீராக.(8)

(நாட்டை மறுக்கும்) இந்த நமது செயலானது, ஒரு மனிதன் கிணற்றைத் தோண்டி விட்டு, நீரை அடையும் முன்னர், தன் பணியை நிறுத்திவிட்டு, சேறு பூசப்பட்டு வெளியே வருவதைப் போன்றதாகும்.(9) அல்லது, இந்தச் செயல்பாடானது, ஒரு மனிதன், நெடுமரத்தில் ஏறி தேனையும் எடுத்துவிட்டு, அதைச் சுவைப்பதற்கு முன் இறப்பதைப் போன்றதாகும்.(10) அல்லது, அது நீண்ட பயணத்திற்குப் புறப்பட்ட ஒரு மனிதன், சேருமிடத்தை அடையாமல் துயருடன் திரும்பி வருவதைப் போன்றதாகும்.(11) அல்லது, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, அது தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற ஒரு மனிதன், இறுதியில் தன் கையாலேயே இறப்பதை {தற்கொலை செய்து கொள்வதைப்} போன்றதாகும்.(12) அல்லது, அது பசியால் துன்பப்படும் ஒரு மனிதன், உணவை அடைந்துவிட்டு, உண்ண மறுப்பதைப் போன்றதோ, ஆசையின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், தன் ஆசைக்குகந்த பெண்ணை அடைந்தும், அவளைச் சந்திக்க மறுப்பதைப் போன்றதோ ஆகும்.(13)

ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஓ! மன்னா, நீர் எங்கள் மூத்த அண்ணன் ஆனதன் விளைவால், மந்தமான புரிதல் {மந்தபுத்தி} கொண்ட உம்மைப் பின்தொடர்ந்து நாங்கள் நிந்திக்கத்தக்கவர்கள் ஆகிவிட்டோம்.(14) நாங்கள் வலிய கரங்களைக் கொண்டிருக்கிறோம்; நாங்கள் அறிவுடனும், பெருஞ்சக்தியுடனும் இருக்கிறோம். இருப்பினும், ஓர் அலியின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏதோ முற்றிலும் ஆதரவற்றவர்களைப் போன்று இருக்கிறோம்.(15) ஆதரவற்ற மனிதர்கள் அனைவருக்கும் நாங்கள் புகலிடமாக இருக்கிறோம். இருப்பினும், மக்கள் எங்களை இவ்வாறு பார்க்கும்போது, எங்கள் நோக்கங்களை அடைவதில் நாங்கள் முற்றிலும் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் ஏன் சொல்லமாட்டார்கள்? நான் சொல்லும் இவற்றை நினைத்துப் பாரும்.(16)

முதுமையை அடைந்த, அல்லது எதிரிகளிடம் தோல்வியுற்ற மன்னர்கள் துயர்நிறைந்த காலங்களில் மட்டுமே துறவை (துறவு வாழ்வைப்) பின்பற்ற வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(17) எனவேதான், ஞானியர், துறவை க்ஷத்திரியனின் கடமையாக மெச்சுவதில்லை. மறுபுறம், தெளிவான பார்வையைக் கொண்ட அவர்கள், (ஒரு க்ஷத்திரியன்) அந்த வாழ்வு முறையை {துறவு வாழ்வைப்} பின்பற்றுவது அறத்தை இழப்பது என்றே கருதுகின்றனர்.(18) அந்த வகையில் {க்ஷத்திரிய வகையில்} பிறந்தவர்களும், அந்த வகையின் நடைமுறைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவற்றையே தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களால் எவ்வாறு அந்தக் கடமைகளை நிந்திக்க முடியும்?(19) செழிப்பு, செல்வம் ஆகியவற்றை இழந்தவர்களும், நம்பிக்கையற்றவர்களுமான மனிதர்கள் மட்டுமே, (துறவு வாழ்வைப் பின்பற்றும் ஒரு க்ஷத்திரியனின் ஒழுங்குமுறை குறித்து) வேதங்களில் சொல்லப்பட்டுள்ள இந்த ஆணைகளை உண்மையென அறிவிக்கிறார்கள். எனினும் உண்மையில் அஃது ஒரு போதும் க்ஷத்திரியன் செய்வதற்கு உகந்ததல்ல.(20)

ஆற்றலினால் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளத் தகுந்தவனும், தன் சொந்த முயற்சிகளால் தன்னைத் தாங்கிக் கொள்ளக்கூடியவனுமான ஒருவன், துறவு வாழ்வின் போலி வெளிப்பாடுகளால், வாழமுடியாமல் உண்மையில் வீழ்ந்தே போகிறான்.(21) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், தேவர்கள், முனிவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் ஆகியோரை ஆதரிக்க இயலாத மனிதனே காட்டில் வாழும் தனிமையான வாழ்வில் மகிழ்ச்சியடைய முடியும்.(22) (காட்டு வாழ்வை வாழும்) மான், பன்றிகள், பறவைகள் ஆகியன சொர்க்கத்தை அடைய முடியாததைப் போலவே, காட்டு வாழ்வை வாழ்பவர்களும், ஆற்றலற்றவர்களுமான க்ஷத்திரியர்களும் சொர்க்கத்தை அடைய முடியாது.(23) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துறவின் மூலம் யாராவது வெற்றியடைய முடியுமென்றால், இந்த மலைகளும், மரங்களும் நிச்சயம் அஃதை அடைந்திருக்கும்.(24) அவை யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. மேலும் அவை அனைத்தும் உலகக் காரியங்களில் இருந்து விலகி, பிரம்மச்சாரிகளைப் போல இருக்கின்றன.(25)

ஒருவனின் வெற்றியானது, மற்றவர்களின் வாழ்வைச் சாராமல், அவனது சொந்த வாழ்வைச் சார்ந்தே அமையும் என்றால், (க்ஷத்திரிய வகையில் பிறந்த ஒருவராக) நீர் செயல்பாட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும். செயலற்றவனால் ஒருபோதும் வெல்ல முடியாது.(26) தன் வயிற்றை மட்டும் நிறைத்துக் கொள்பவர்கள் வெற்றியை அடைய முடியும் என்றால், நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லாததால் அவை வெற்றியை அடைந்து விடும்.(27) இந்த உலகமானது, தன் இயல்புக்கு ஏற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் உயிரினங்களுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதைப் பாரும். எனவே, ஒருவன் செயலிலேயே ஈடுபட வேண்டும். செயல்பாடு அற்றவனால் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது” என்றான் {பீமசேனன்}.(28)-

இல்லறமே நல்லறம்! – சாந்திபர்வம் பகுதி – 11-செயல்ளைச் செய்வதே க்ஷத்திரிய அறம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; ஒரு பறவைக்கும், முனிவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்னது; இல்லறமே நல்லறம் என்றது…

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இது சம்பந்தமாகக் குறிப்பிட்ட சில தவசிகளுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழைய வரலாறுகளில் தென்படுகிறது.(1) நற்குடியில் பிறந்தோரும், சிறுமதி கொண்டோரும், ஆண்மைக்கான அடையாளமான மீசை இல்லாதவர்களுமான குறிப்பிட்ட சில பிராமண இளைஞர்கள், தங்கள் வீடுகளைக் கைவிட்டு, காட்டு வாழ்வை வாழ்வதற்காகக் காடுகளுக்கு வந்தனர்.(2) அபரிமிதமான வளங்களைக் கொண்ட அந்த இளைஞர்கள், அதையே {காட்டு வாழ்வையே} அறமெனக் கருதி, பிரம்மச்சாரிகளாக வாழ விரும்பி தங்கள் சகோதரர்களையும், தந்தைமாரையும் கைவிட்டனர். ஒரு சமயம், இந்திரன் அவர்களிடம் கருணை கொண்டான்.(3) தங்கப் பறவையின் வடிவத்தை ஏற்ற அந்தப் புனிதமான சக்ரன், அவர்களிடம், “வேள்வியில் எஞ்சியவற்றை உண்போர் செய்யும் செயலே, மனிதர்கள் செய்யக்கூடிய செயல்களிலேயே மிகக் கடினமான செயல்களாகவும்[1].(4) அத்தகு செயலே உயர்ந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டதாகும். அத்தகு மனிதர்களின் வாழ்வே அனைத்து புகழுக்கும் தகுந்ததாகும். வாழ்வின் நோக்கத்தை அடையும் அம்மனிதர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புடன் உயர்ந்த கதியை அடைகின்றனர்” என்றான் { பறவை வடிவில் இருந்த இந்திரன்}.(5)அவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர்கள், “இதோ, இந்தப் பறவையானவன் வேள்விகளில் எஞ்சியவற்றை உண்டு வாழ்வோரைப் புகழ்கிறது. நாம் அப்படி எஞ்சியவற்றில் வாழ்வதால் இதை நம்மிடம் சொல்கிறான்” என்றனர்[2].(6)அப்போது அந்தப் பறவை, “நான் உங்களைப் புகழவில்லை. நீங்கள் புழுதியால் கறைபடிந்தவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் {இறைச்சிக்} கழிவை[3] உண்டு வாழும் தீயவர்கள். நீங்கள் வேள்வியில் எஞ்சியதை உண்டு வாழும் மனிதர்களல்லர்” என்றது.(7)முனிவர்கள், “நாங்கள் எங்கள் வாழ்வுமுறையை உயர்வாக அருளப்பட்ட வாழ்வுமுறையாகக் கருதுகிறோம். ஓ! பறவையே, எங்களுக்கான நன்மை எது என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம்” என்றனர்.(8)

அந்தப் பறவை, “{உள்ளொன்றும் புறமொன்றும் சொல்லி} நீங்கள் உங்களுக்கு எதிரான நிலையை எடுத்து உங்களுக்குள் கொண்டுள்ள நம்பிக்கையை எனக்கு மறுக்காதிருந்தால், நான் உங்களுக்கு உண்மையான, நன்மையான வார்த்தைகளைச் சொல்வேன்” என்றது.(9)

முனிவர்கள், “ஓ! ஐயா, வேறுபட்ட பாதைகள் அனைத்தையும் நீ அறிந்திருப்பதால், நாங்கள் உன் வார்த்தைகளைக் கேட்போம். ஓ! அற ஆன்மா கொண்டோனே, நாங்கள் உன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம். இப்போது எங்களுக்குக் கற்பிப்பாயாக” என்றனர்.(10)

அதற்கு அந்தப் பறவை, “நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களில் பசுவே முதன்மையானது. உலோகங்களில் தங்கம் முதன்மையானது. வார்த்தைகளில் மந்திரங்கள் முதன்மையானவை. இரு கால் கொண்ட உயிரினங்களில் பிராமணர்கள் முதன்மையானவர்கள்.(11) ஒரு பிராமணனின் வாழ்வில், பிறப்பு தொடங்கி, அதற்கடுத்து வரும் காலம் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்குத் தொடர்புடையன மற்றும் சுடலையில் செய்ய வேண்டியது வரை உள்ள சடங்குகள் அனைத்தையும் இந்த மந்திரங்கள் முறைப்படுத்துகின்றன.(12) இந்த வேதச் சடங்குகளே அவனது சொர்க்கமும், பாதையும், முதன்மையான வேள்வியுமாகும்[4]. இது வேறுவகையானால், (சொர்க்கத்தைத் தேடும் மனிதர்களின்) செயல்கள் மந்திரங்கள் மூலம் வெற்றிபெறுவதை என்னால் எவ்வாறு காண இயலும்?(13) எவன் இவ்வுலகில் தன் ஆன்மாவை ஒரு குறிப்பிட்ட வகைத் தேவனாக உறுதியாகக் கருதுகிறானோ, அவன், அந்தக் குறிப்பிட்ட தேவனின் இயல்பின்படியே முரணற்ற வெற்றியை அடைகிறான்[5]. அரைமாதங்களால் அளக்கப்படும் பருவகாலங்கள் சூரியன், சந்திரன், அல்லது நட்சத்திரங்களுக்கு வழிகாட்டுகின்றன[6].(14) வெற்றியடையும் நிலையைச் சார்ந்திருக்கும் இந்த மூவகை வெற்றிகளை அனைத்துயிரினங்களும் விரும்புகின்றன. மிக மேன்மையானதும், புனிதமானதுமான இல்லறம், வெற்றியின் (வெற்றியை அறுவடை செய்யும்) களம் என்றழைக்கப்படுகிறது.(15)நிந்திக்கத்தக்க செயல்பாட்டைக் கொண்ட மனிதர்கள் எப்பாதையில் செல்கின்றனர்? சிறுமதியைக் கொண்ட அவர்கள், செல்வத்தை இழந்து பாவத்தையே ஈட்டுகிறார்கள்.(16) அந்தச் சிறு மதி கொண்டோர் தேவர்களின் அழிவில்லா பாதைகளையும், முனிவர்களின் பாதைகளையும், பிரம்ம பாதைகளையும் கைவிட்டு வாழ்வதால், அவர்கள் சுருதிகள் அங்கீகரிக்காத பாதைகளையே அடைகின்றனர்[7].(17) “வேள்விசெய்பவனே, நீ மதிப்புமிக்கப் பொருட்களைக் கொடையாக அளித்து வேள்வியைச் செய்வாயாக. மகன்கள், விலங்குகள் மற்றும் விலங்குகளால் கிடைக்கப்பெறும் மகிழ்ச்சியை நான் உனக்குத் தருவேன்” என்றொரு விதி மந்திரங்களில் சொல்லப்படுகிறது. விதித்த விதியின்படி வாழ்வதே தவசிகளின் உயர்ந்த தவம் என்று சொல்லப்படுகிறது. எனவே, நீங்கள் கொடைகளின் வடிவில் அதுபோன்ற வேள்விகளையும், அதுபோன்ற நோன்புகளையும் செய்ய வேண்டும்.(18) தேவர்களை வழிபடுவது, வேதங்களைக் கற்பது, பித்ருக்களை நிறைவு கொள்ளச்செய்வது, ஆசானிடம் மரியாதையுடன் தொண்டாற்றுவது என்ற இந்த அழிவில்லா கடமைகளை முறையாகச் செய்வதே தவங்களில் கடுமையானதாக அழைக்கப்படுகிறது.(19) இவ்வளவு கடினமான தவங்களைச் செய்தே தேவர்கள் உயர்ந்த மகிமையையும், சக்தியையும் அடைந்தார்கள். எனவே, இல்லறத்தின் கடமைகளுடைய கனத்த சுமையைச் சுமக்கும்படியே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.(20)தவங்களே அனைத்திலும் முதன்மையானவை, அவையே அனைத்துயிர்களுக்கும் வேர் போன்றவை என்பதில் ஐயமில்லை. எனினும், எதைச் சார்ந்து அனைத்தும் இருக்கிறதோ, அந்த இல்லற வாழ்வை நோற்று அந்தத் தவம் அடையப்பட {சாதிக்கப்பட} வேண்டும்.(21) காலையும், மாலையும் உறவினர்களுக்கு முறையாக உணவளித்து, அந்த விருந்தில் எஞ்சியதை உண்போர், அடைவதற்கு மிகக் கடினமான உயர்ந்த கதியை அடைகின்றனர்.(22,23) விருந்தினர்கள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் உறவினர்களின் பசியாற்றிய பிறகு உண்பவர்களே, {நான் முன்னர்ச் சொன்னதைப் போல} விருந்தில் {வேள்வியில்} எஞ்சியவற்றை உண்பவர்கள் {விகஸாசிகள்} என்று அழைக்கப்படுகிறார்கள்.(24) எனவே, தங்கள் கடமைகளை முறையாக நோற்பவர்களும், அற்புத நோன்புகளைப் பயின்று உண்மை நிறைந்த பேச்சுடன் இருப்பவர்களும், தங்கள் நம்பிக்கையில் அதிகப் பலமடைந்தவர்களாக இவ்வுலகில் பெரும் மரியாதைக்கு உரியவர்கள் என்ற நிலையை அடைகிறார்கள்.(25) அடைவதற்கரிதான சாதனைகளைச் செய்யும் அவர்கள், செருக்கில் இருந்து விடுபட்டுச் சொர்க்கத்தை அடைந்து, இந்திரலோகத்தில் முடிவிலா காலம் வாழ்கிறார்கள்” என்றது {என்றான் பறவை வடிவில் இருந்த இந்திரன்}”.(26)

அர்ஜுனன் தொடர்ந்தான், “நன்மையானவையும், நீதி நிறைந்தவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், “அஃதில் {துறவில்} ஏதும் இல்லை” என்று சொல்லித் தங்கள் துறவறத்தைக் கைவிட்டு, இல்லற வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.(27) எனவே, ஓ! அறமறிந்தவரே, ஓ! ஏகாதிபதி, அழிவில்லா ஞானத்தை உமது துணைக்கழைத்துக் கொண்டு, இப்போது எதிரிகளற்றதாயிருக்கும் இந்தப் பரந்த உலகை ஆட்சி செய்வீராக” {என்றான் அர்ஜுனன்}”.(28}

நகுலனின் ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 12-துறவைக் காட்டிலும் செயலே மேன்மையானது என யுதிஷ்டிரனிடம் சொன்ன நகுலன்; நான்கு வாழ்வுமுறைகளிலும் இல்லறமே மேன்மையானது எனச் சொன்னது; இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் திரிவதாலேயே ஒருவன் துறவியாகிவிட மாட்டன் என்று சொன்னது; மன்னர்களின் கடமை இல்லறம் நோற்று வேள்விகளை ஆதரிப்பதே என்பதை அழுத்தமாகச் சொன்ன நகுலன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்கள், அகன்ற மார்பு ஆகியவற்றைக் கொண்டவனும், அளவாகப் பேசுபவனும், பெரும் ஞானம் கொண்டவனும், தாமிரத்திற்கு ஒப்பான நிறத்தில் முகத்தைக் கொண்டவனுமான நகுலன், அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்டு, நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையான மன்னனைப் {யுதிஷ்டிரனைப்} பார்த்து, தன் அண்ணனின் இதயத்தை (அறிவால்) முற்றுகையிட்டபடியே இவ்வார்த்தைகளைப் பேசினான்.(1,2)

நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, “விசாகயூபம் என்ற இடத்தில் தேவர்கள் தங்கள் நெருப்புகளை {யாக அக்னிகளை} நிறுவியுள்ளனர். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களே தங்கள் செயல்பாடுகளின் கனிகளைச் சார்ந்தே இருக்கின்றனர் என்பதை அறிவீராக.(3) ஓ! மன்னா, நம்பிக்கையற்றோர் அனைவரின் வாழ்வையும் (மழையால்) ஆதரிக்கும் பித்ருக்கள், (படைப்பாளனால் வேதங்களில் அறிவிக்கப்பட்ட) விதிகளை நோற்றபடியே செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(4) (செயல்களை மனத்தில் ஆழப் பதியச் செய்யும்) வேதங்களின் தீர்மானங்களை மறுப்போரை ஒளிவுமறைவற்ற நாத்திகர்களாக அறிவீராக. ஓ! பாரதரே, வேதங்களைக் கற்ற மனிதன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் அதன் தீர்மானங்களைப் பின்பற்றி,(5) தேவர்களின் வழியில் உயர்ந்த சொர்க்கலோகத்தை அடைகின்றனர். மேலும் இது (இந்த இல்லற வாழ்வானது), வேத உண்மைகளை அறிந்தவர்கள் அனைவராலும் (பிற) வாழ்க்கை முறைகள் அனைத்திலும் மேன்மையானதாகச் சொல்லப்பட்டுள்ளது.(6)

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீதியுடன் தன்னால் அடையப்பட்ட செல்வத்தை, வேதங்களை நன்கறிந்த பிராமணர்களுக்குத் தானமளிப்பவனே,(7) ஓ! ஏகாதிபதி, தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்திய உண்மையான துறவியாகக் கருதப்படுகிறான்.(8) எனினும், பெரும் இன்பத்தின் ஊற்றை (இல்லற வாழ்வுமுறையை) அலட்சியம் செய்பவன், தன்னையே துறக்கும்[1] அடுத்த வாழ்வுமுறைக்குக் குதித்து, இருளின் தன்மையிலான {தமோகுணத்திலான} துறவையே கைக்கொள்கிறான்.(9) எவன் வீடற்றவனாக இருக்கிறானோ, எவன் இவ்வுலகத்தில் (பிச்சையெடுப்பவனாகத்) திரிகிறானோ, எவன் தன் உறைவிடத்தை மரத்தடியில் கொண்டுள்ளானோ, எவன் எண்ணங்களை வெளியிடாமல் அமைதி காக்கும் பேசா நோன்பை (மௌன விரதத்தை) நோற்கிறானோ, எவன் தன் புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறானோ, அவனே பிச்சாடன {பிச்சையெடுத்து வாழும் துறவு} வாழ்வை நோற்கும் ஒரு துறவியாவான்[2].(10)எந்தப் பிராமணர், கோபம் மற்றும் இன்பம் ஆகியவற்றையும், குறிப்பாக வஞ்சனையையும் அலட்சியம் செய்து, எப்போதும் தன் நேரத்தை வேத கல்வியில் ஈடுபடுத்திக் கொள்கிறானோ, அவனே பிச்சாடன நோன்பை நோற்கும் ஒரு துறவியாவான்[3].(11) ஒரு காலத்தில் நான்கு வாழ்வு முறைகளும் தராசில் எடைகாண நிறுத்திப் பார்க்கப்பட்டன. ஓ! மன்னா, தராசின் ஒரு பக்கத்தில் இல்லறத்தை வைத்தபோது, அதைச் சரியாக நிறுத்த, மறுபக்கத்தில் மற்ற மூன்று வாழ்வுமுறைகளையும் வைக்க வேண்டியிருந்தது என்று ஞானியர் சொல்கின்றனர்.(12) ஓ! பார்த்தரே, ஓ பாரதரே, மேலும், சொர்க்கமும், இன்பமும் இல்லறத்தில் மட்டுமே இருக்கிறது என்பதைக் கண்டதால், அதுவே {இல்லறமே} பெரும் முனிவர்களும், உலக வழிகளை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக இருப்பவர்களும் நோற்கும் வழியானது.(13) எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த வாழ்வுமுறையில் வாழ்ந்து, அதையே தன் கடமையாக எண்ணி, கனியின் மீது கொண்ட விருப்பம் அனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, அவனே உண்மையான துறவியாவான். இல்லறத்தையும், சுற்றத்தையும் கைவிட்டு மூட புத்தியுடன் காட்டுக்குச் செல்லும் மனிதன் துறவியாகமாட்டான்.(14) மேலும், போலியாக அறப்போர்வைக்குள் இருக்கும் ஒருவன் (காட்டில் வாழ்ந்தாலும்) தன் ஆசைகளை மறக்க முடியாமல், தன் கழுத்தைச் சுற்றி இரக்கமற்றவனான யமனின் பயங்கரத் தளையால் கட்டப்படுகிறான்.(15)பகட்டால் செய்யப்படும் செயல்கள் கனியை விளைவிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, மறுபுறம் துறவெண்ணத்துடன் செய்யப்படும் அந்தச் செயல்கள், அபரிமிதமான கனிகளைக் கொண்டு வருகிறது.(16) அமைதி, தற்கட்டுப்பாடு, மனோவுறுதி, உண்மை, தூய்மை, எளிமை, வேள்விகள், விடாமுயற்சி, நீதி ஆகியவையே எப்போதும் முனிவர்களால் நல்லறங்களாகக் கருதப்படுகின்றன.(17) இல்லறத்தில் பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்காகவே செயல்கள் செய்யப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி, இந்த வாழ்வு முறையில் மட்டுமே மூவகைக் குறிக்கோள்களும் அடையப்படுகின்றன[4].(18) அனைத்துச் செயல்களையும் கட்டுப்பாடில்லாமல் செய்யும் வாழ்வுமுறையைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு துறவி, இம்மையிலோ மறுமையிலோ அழிவைச் சந்திப்பதில்லை.(19) அனைத்துயிரினங்களின் பாவமற்ற தலைவனான அற ஆன்மா {பரமாத்மா}, உயிரினங்கள், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளால் தன்னைத் துதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றை உண்டாக்கினான்.(20)தூய்மையாக இருக்கும் மரங்கள், செடி, கொடிகள், விலங்குகள் ஆகியனவும், தெளிந்த நெய்யும், வேள்வியின் உட்பொருளாகவே உண்டாக்கப்பட்டன.(21) இல்லறம் நோற்பவன், தடைகள் நிறைந்த வேள்வியைச் செய்ய வேண்டும். இதன் காரணமாகவே, அவ்வாழ்வு முறை மிகக் கடினமானதும், அடைதற்கரியதுமாகும்.(22) ஓ! ஏகாதிபதி, எனவே, செல்வம், தானியம் மற்றும் விலங்குகளைக் கொண்டவர்களும் இல்லறம் நோற்பவர்களுமான மனிதர்கள், வேள்விகளைச் செய்யவில்லையெனில் அழிவில்லா பாவத்தையே ஈட்டுவார்கள்.(23) முனிவர்களில் சிலர் வேத கல்வியையே வேள்வியாகக் கருதுகின்றனர்; சிலர் தங்கள் மனங்களில் செய்யும் தியானத்தையே பெரும் வேள்வியாகக் கருதுகின்றனர்.(24) ஓ! ஏகாதிபதி, குவிந்த மனநிலையைக் கொண்ட இந்தப் பாதையில் நடப்பதன் விளைவால் பிரம்மனுக்கு இணையான நிலையை அடையும் இது போன்ற மறுபிறப்பாள மனிதனின் தோழமையைத் தேவர்களே நாடுகின்றனர்.(25)

உமது எதிரிகளிடம் இருந்து நீர் அடைந்த பல்வேறு வகையான செல்வங்களை வேள்வியில் செலவிட மறுத்தால், நீர் நம்பிக்கையில்லாதவர் என்பதை மட்டுமே வெளிக்காட்டுகிறீர்.(26) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இல்லறம் நோற்கும் ஒரு மன்னன், தன் செல்வத்தை ராஜசூயம், அஸ்வமேதம் மற்றும் பிற வகை வேள்விகளைத் தவிர்த்து வேறு வழியில் தனது செல்வத்தைத் துறப்பதை ஒரு போதும் நான் கண்டதில்லை.(27) ஓ! ஐயா, தேவர்களின் தலைவனான சக்ரனைப் போல, பிராமணர்களால் புகழப்படும் பிற வேள்விகளைச் செய்வீராக.(28) எவனுடைய அலட்சியத்தின் விளைவாகக் கள்வர்களால் குடிமக்கள் கொள்ளையடிக்கப் படுகின்றனரோ, தன்னை ஆட்சி செய்ய அழைப்போருக்கு எவன் பாதுகாப்பை வழங்கவில்லையோ, அந்த மன்னன், கலியின் வடிவமானவன் என்று சொல்லப்படுகிறான்.(29) குதிரைகள், பசுக்கள், பெண் பணியாட்கள், இழைகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், கிராமங்கள், ஊர்கள், களங்கள் வீடுகள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடாமலும், உறவினர்களிடம் நட்புணர்வில்லாமலும் நாம் காட்டுச் சென்றோமானால், நாமும் அரச வகையைச் சேர்ந்த கலிகளே ஆவோம்.(30,31)

(பிறருக்குப்) பாதுகாப்பை வழங்காத, ஈகைபயிலாத அரச வகையினர் பாவத்தையே இழைக்கின்றனர். மறுமையில் அவர்களுக்குத் துயரே அல்லாமல் அருளில்லை.(32) ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, பெரும் வேள்விகளையும், இறந்து போன உமது மூதாதையருக்கான சடங்குகளைச் செய்யாமல், புனித நீர்நிலைகளில் நீராடாமல், காட்டில் திரியும் வாழ்வை நீர் கைக்கொண்டால்,(33) திரளில் இருந்து பிரியும் சிறு மேகமானது காற்றால் அலைக்கழிக்கப்படுவதைப் போல நீரும் அழிவையே அடைவீர். இம்மையிலும், மறுமையிலும் {அறம் வழுவி} வீழ்ந்து, பிசாசங்களின் வகையில் நீர் பிறப்பை எடுக்க வேண்டியிருக்கும்.(34) வெறுமனே இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் வசிப்பதால் மட்டும் அல்ல; அக மற்றும் புறப்பற்றுகள் அனைத்தையும் கைவிடும் மனிதனே உண்மையான துறவியாகிறான்.(35)

எந்தத் தடங்கலும் இல்லாத இந்த விதிமுறைகளை நோற்று வாழும் ஒரு பிராமணன், இம்மையிலோ, மறுமையிலோ வீழ்வதில்லை.(36) பழங்காலத்தவரால் மதிக்கப்படும், மனிதர்களில் சிறந்தோரால் பயிலப்படும் கடமைகளான ஒருவனுடைய சொந்த கடமைகளை நோற்றால், ஓ! பார்த்தரே, தைத்தியப்படையைக் கொன்ற சக்ரனைப் போலச் செழிப்பில் பெருகியவர்களான தன் எதிரிகளைப் போரில் கொன்றபிறகும் எவனாவது வருந்துவானா?(37) க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, உமது ஆற்றலின் துணை கொண்டு உலகத்தை அடக்கிய நீர், ஓ! ஏகாதிபதி, வேதங்களை அறிந்தோருக்கு கொடைகளை அளித்த பிறகு, சொர்க்கத்தை விட உயர்ந்த உலகங்களுக்குச் செல்லலாம். ஓ! பார்த்தரே, வருந்துவது உமக்குத் தகாது” {என்றான் நகுலன்}.(38)

எனது என்ற மரணமும், எனதற்ற பிரம்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 13-மிருத்யு மற்றும் பிரம்மம் குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்த சகாதேவன்; இவ்விரண்டும் கலந்த ஆத்மாவானது அழிவற்றதானாலும், அழிவையுடையதானாலும் செயலே ஒருவனுக்குச் சிறந்தது என்று சொன்னது; தன் வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் வேண்டிய சகாதேவன்…

சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே, புறப்பொருட்கள் அனைத்தையும் கைவிடுவதால் மட்டுமே ஒருவன் வெற்றியை அடைந்துவிடுவதில்லை. அகப்பற்றுகளைக் {மனப்பற்றுகளைக்} கைவிட்டாலும் கூட வெற்றியை அடைவது ஐயத்திற்கிடமானதே.(1) மனத்தின் அகத்தில் ஆசைகளைக் கொண்டு, புறப்பொருட்களைக் கைவிடுபவனின் அறத்தகுதியும், மகிழ்ச்சியும் நமது எதிரிகளுடைய பங்காக இருக்கட்டும்.(2) மறுபுறம், அகப்பற்றையும் கைவிட்டு, பூமியை ஆள்பவனுடைய அறத்தகுதியும், மகிழ்ச்சியும், நமது நண்பர்களின் பங்காக இருக்கட்டும்.(3) மம (எனது) என்ற ஈரெழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது மிருத்யுவாகும்; அதே வேளையில் அதன் எதிர்ச்சொல்லான நமம (எனதில்லை) என்று மூன்று எழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது அழிவில்லா பிரம்மமாகும்[1].(4) ஓ! மன்னா, பிரம்மமும், மிருத்யுவும் கண்ணுக்குப் புலனாகாதவகையில் அனைத்து ஆன்மாவுக்குள்ளும் நுழைந்து, அனைத்துயிரினங்களையும் செயல்பட வைக்கின்றன என்பதில் ஐயமில்லை.(5)ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, {பிரம்மமும் மிருத்யுவும் கலந்த} இதுவே ஆன்மா என்றழைக்கப்படுமானால், இஃது அழிவடையக்கூடியதில்லை. இவ்வாறெனில் உடல்களை அழிப்பதால் ஒருவன் கொலைக்குற்றத்திற்கு ஆளாகமாட்டான்.(6) மறுபுறம், ஒருவனின் ஆன்மாவும், உடலும் ஒன்றாகப் பிறந்தோ, இறந்தோ போகின்றன என்றால், உடல் அழியும்போது, ஆன்மாவும் அழிவை அடைகிறது. அவ்வாறெனில், (சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும்) சடங்குகள் மற்றும் செயல்களும் பயனற்றனவாகிவிடும்.(7) எனவே, நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்த ஐயங்கள் அனைத்தையும் விலக்கிவிட்டு, பழங்காலத்தில் பெரியோர்களால் நடக்கப்பட்ட பாதையையே பின்பற்ற வேண்டும்.(8) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த பூமியையும் அடைந்த ஒரு மனிதன், அவளை {பூமியை} அனுபவிக்காமல் போவானெனில் அவனது வாழ்வு நிச்சயம் பயனற்றதே.(9) காட்டுக் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு காட்டில் வாழ்ந்தாலும், உலகப்பொருட்களின் மீது கொண்ட பற்றை விடாத ஒரு மனிதனைப் பொறுத்தவரை, ஓ! மன்னா, அவன் மிருத்யுவின் கோரப்பற்களுக்கிடையில் வாழ்பவனே ஆவான்.(10)

ஓ! பாரதரே, உயிரினங்கள் அனைத்தின் இதயங்களும், அவற்றின் வெளித்தோற்றங்களும், உமது சொந்த வெளிப்பாடுகளேயன்றி வேறில்லை என்பதைக் காண்பீராக. அனைத்துயிரையும் தங்களைப் போலவே காண்பவர்கள் (அழிவின்) பேரச்சத்திலிருந்து விடுபடுகிறார்கள்[2].(11) நீர் எனது தந்தையும், {தாயும்}, பாதுகாவலரும், தமையனும், மூத்தவரும், ஆசானுமாவீர். எனவே, துன்பத்தில் பீடிக்கப்பட்டுச் சோகத்தில் நான் சொல்லும் தொடர்பற்ற வார்த்தைகளை மன்னிப்பதே உமக்குத் தகும் {பொறுத்தருள்வீராக}.(12) ஓ! பூமியின் தலைவரே, ஓ! பாரதர்களில் சிறந்தவரே, நான் சொல்வது உண்மையோ, பொய்யோ, இவற்றை உம்மிடம் கொண்ட பெருமதிப்பாலேயே நான் உம்மிடம் சொல்கிறேன்” என்றான் {சகாதேவன்}”.(13)

பித்தனாகாதீர், ஆட்சிசெய்வீராக! – சாந்திபர்வம் பகுதி – 14-யுதிஷ்டிரனைச் சமாதானப்படுத்திய திரௌபதி; தண்ட நீதி மற்றும் மன்னரின் சிறப்பைச் சொன்னது; தார்தராஷ்டிரர்கள் நியாயமாகவே கொல்லப்பட்டதாகச் சொன்னது; ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேதங்களில் உள்ள இந்த உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் தம்பிகள் சொல்வதைப் பேச்சற்றவனாகக் கேட்டுக் கொண்டிருந்தபோது,(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெண்களில் முதன்மையானவளும், அகன்ற கண்களைக் கொண்டவளும், பேரழகியும், உன்னதப் பிறப்பைக் கொண்டவளுமான திரௌபதி, பல சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் ஒப்பானவர்களான தன் தம்பியருக்கு மத்தியில் யானை மந்தையின் தலைமையானையைப் போல அமர்ந்திருந்த அந்த மன்னர்களில் காளையிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(2,3)

தன் கணவர்கள் அனைவரிடமும், குறிப்பாக யுதிஷ்டிரனிடம் எப்போதும் அன்பை எதிர்பார்த்தவளான அவள் {திரௌபதி}, அம்மன்னனால் எப்போதும் அக்கறையுடனும், பாசத்துடனும் நடத்தப்பட்டாள். கடமைகளை அறிந்தவளும், அவற்றை நடைமுறையில் நோற்பவளும், பெரிய இடைகளை {பின்புறத்தைக்} கொண்டவளுமான அந்த மங்கை, தன் தலைவனின் {யுதிஷ்டிரனின்} மீது கண்களைச் செலுத்தி, ஆறுதலளிக்கும் இனிய வார்த்தைகளில் அவனது கவனத்தை {திருப்ப} விரும்பி, பின்வருமாறு சொன்னாள்.(5)

திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, சாதகப் பறவைகளைப் போல விழிகள் வற்ற உமது தம்பியர் அழுதாலும், நீர் அவர்களை மகிழ்விக்கவில்லை.(6) ஓ! ஏகாதிபதி, (ஆற்றலில்) மதங்கொண்ட யானைகளுக்கு ஒப்பானவர்களும், எப்போதும் துன்பக் கோப்பையையே அருந்திய வீரர்களுமான இந்த உமது தம்பிகளை முறையான வார்த்தைகளால் மகிழ்ச்சியடைச் செய்வீராக.(7)

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துவைதத் தடாகத்தில் குளிர், காற்று மற்றும் சூரியனால் துன்புற்ற உமது தம்பிகள், உம்முடனிருந்தபோது, “வெற்றியடையும் விருப்பத்துடன் போரிட விரைந்து, துரியோதனனைக் கொன்று, அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல இந்தப் பூமியை நாம் அனுபவிப்போம். எதிரிகளைத் தண்டிப்பவர்களே, பெரும் தேர்வீரர்களை அவர்களது தேரை இழக்கச் செய்து, பெரும் யானைகளைக் கொன்று, தேர்வீரர்கள், குதிரை வீரர்கள் மற்றும் குதிரைகளின் உடல்களால் போர்க்களத்தை விரவிக் கிடக்கச் செய்து, பல்வேறு வகைகளிலான அபரிமிதமான கொடைகளால் பெரும் வேள்விகளை நீங்கள் செய்யப் போகிறீர்கள். நாடுகடத்தப்பட்டு காட்டில் வாழ்வதால் ஏற்படும் இந்தத் துன்பங்கள், இறுதியில் மகிழ்ச்சியிலேயே முடிவடையும்” என்று அவர்களிடம் நீர் சொல்லவில்லையா?(8-11)

ஓ! அறம்பயில்வோர் அனைவரிலும் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! வீரரே, அப்போது உமது தம்பிகளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன நீர், இப்போது எங்கள் இதயங்களைத் துயரில் ஆழ்த்துவதேன்?(12) ஓர் அலியால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. (நீரற்ற) சேற்றில் மீன்கள் இல்லாததைப் போலவே, ஓர் அலியால் பிள்ளைகளைப் பெற முடியாது[1].(13) தண்டிக்கும் கோலில்லா {தண்டம் இல்லாத} க்ஷத்திரியன் ஒருவனால் ஒருபோதும் ஒளிர முடியாது. தண்டிக்கும் கோலில்லா க்ஷத்திரியன் ஒருவனால் ஒருபோதும் பூமியை அனுபவிக்க முடியாது. தண்டிக்கும் கோலில்லா மன்னன் ஒருவனின் குடிமக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது.(14) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அனைத்துயிரினங்களிடமும் நட்பு, ஈகை, வேத கல்வி, தவங்கள் ஆகிய இவை ஒரு பிராமணனின் கடமைகளேயன்றி ஒரு மன்னனுக்குரியவையல்ல.(15) தீயோரைத் தடுப்பது, நேர்மையானவர்களைப் பாதுகாப்பது, போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதிருப்பது ஆகிய இவையே மன்னர்களுக்குரிய உயரிய கடமைகளாகும்[2].(16)மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்} கோபமும், கொடுப்பதும் எடுப்பதும், பயங்கரமும் அச்சமற்றதன்மையும், தண்டனையும் வெகுமதியும் எவனிடம் இருக்கிறதோ, அவனே கடமைகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறது.(17) கல்வியாலோ, கொடையாலோ, துறவாலோ நீர் இந்தப் பூமியை அடையவில்லை.(18) ஓ! வீரரே, வலிமை அனைத்தையும் கொண்டு உம்மீது வெடித்துச் சிதற இருந்ததும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை நிறைந்திருந்ததும், மூவகைப் பலங்களைக் கொண்டிருந்ததும்,[3] துரோணர், கர்ணன், அஸ்வத்தாமர், கிருபர் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டதுமான எதிரியின் படையானது, உம்மால் வீழ்த்தப்பட்டு, கொல்லப்பட்டது. இதன் காரணமாகவே நான் உம்மை இந்தப் பூமியை அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.(19,20)ஓ! பலமிக்கவரே {யுதிஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் புலியே, மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டங்கள் {ஊர்கள்} நிறைந்ததும், ஜம்பு என்றழைக்கப்பபடுவதுமான பகுதியை (முன்னர்) நீர் வலிமையுடன் அடக்கி ஆண்டீர்.(21) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, மகாமேருவுக்கு மேற்கில் அமைந்திருப்பதும், ஜம்புத்வீபத்திற்கு இணையானதுமான கிரௌஞ்சத்வீபம் என்ற பகுதியையும் நீர் வலிமையுடன் அடக்கி ஆண்டீர்.(22) ஓ! மன்னா, மகாமேருவின் கிழக்கில் இருப்பதும், கிரௌஞ்சத்வீபத்திற்கு இணையானதுமான சாகத்வீபமும் உம்மால் வலிமையுடன் அடக்கி ஆளப்பட்டது.(23) ஓ! மனிதர்களில் புலியே, மகாமேருவுக்கு வடக்கில் இருப்பதும், சாகத்வீபத்துக்கு இணையானதுமான பத்ராஸ்வம் என்ற பகுதியையும் நீர் அடக்கி ஆண்டீர்.(24) ஓ! வீரரே, பல ஊர்கள் அமைந்த தீவுகளும், பெருங்கடலில் உள்ள தீவுகளும் உம்மால் அடக்கி ஆளப்பட்டன.(25)

ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இத்தகு அளவிலா சாதனைகளை அடைந்து, (அவற்றின் மூலம்) பிராமணர்களால் புகழப்பட்டும், உமது ஆன்மா நிறைவடையாததேன்?(26) ஓ! பாரதரே, வலிமையில் பெருகியவர்களும், (ஆற்றலில்) காளைகளுக்கோ, மதங்கொண்ட யானைகளுக்கோ ஒப்பானவர்களுமான இந்த உமது தம்பிகளைக் கண்டும், அவர்களிடம் இனிமை நிறைந்த சொற்களை ஏன் நீர் பேச மறுக்கிறீர்?(27) நீங்கள் அனைவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். நீங்கள் அனைவரும் எதிர்களைத் தடுக்கவல்லவர்களாவீர். நீங்கள் அனைவரும் உங்கள் எதிரிகளை எரிக்கவல்லவர்களாவீர். உங்களில் ஒருவர் மட்டுமே எனது கணவராகியிருந்தாலும், என் மகிழ்ச்சி மிகப் பெரியதாகவே இருந்திருக்கும்.(28) ஓ! மனிதர்களில் புலியே, உடற்கட்டை ஈர்க்கும் ஐந்து புலன்களைப் போல நீங்கள் அனைவரும் என் கணவர்களாயிருக்கும்போது நான் என்ன சொல்வேன்?(29) பேரறிவும், பெரும் முன்னறிதிறனும் கொண்ட என் மாமியாரின் {குந்தியின்} வார்த்தைகளைப் பொய்க்க முடியாது. என்னிடம் பேசும்போது, அவள் {குந்தி}, “ஓ! பாஞ்சால இளவரசி {திரௌபதி}, ஓ! சிறந்த பெண்ணே, யுதிஷ்டிரன் உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்” என்றாள்.(30)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சுறுசுறுப்பையும், ஆற்றலையும் கொண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கொன்ற பிறகு, அந்தச் சாதனையை வீணாகச் செய்யும் உமது மடமையை நான் காண்கிறேன்.(31) யாவருடைய அண்ணன் பித்தராகிறாரோ, அவர்களும் அவரைத் தொடர்ந்து பித்தராகிறார்கள். ஓ! மன்னா, உமது பித்தால், பாண்டவர்கள் அனைவரும் பித்தர்களாகப்போகிறார்கள்.(32) ஓ! ஏகாதிபதி, இந்த உமது தம்பியர் புலனுணர்வு கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் உம்மை நாத்திகர்கள் அனைவரோடும் சேர்த்து (ஒரு சிறையில்) அடைத்து வைத்து, பூமியின் அரசாட்சியை அவர்களே எடுத்துக் கொண்டிருப்பார்கள். அறிவு மங்கிய நிலையில் இவ்வழியில் செயல்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை.(33) பித்துப் பாதையில் நடக்கும் மனிதன், சாம்பிராணி மற்றும் அஞ்சனம் ஆகியவற்றின் துணை கொண்டும், மூக்கின் மூலம் செலுத்தப்படும் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளின் துணைகொண்டும் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.(34) ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பிள்ளைகளை இழந்தவளான நான் இன்னும் வாழ விரும்புவதால், நான் பெண்கள் அனைவரிலும் இழிந்தவளாவேன்.(35)

என்னாலும், (உமது நோக்கத்தில் இருந்து உம்மை விலகச் செய்ய) இவ்வாறு முயன்றுவரும் உமது சகோதரர்களாலும் சொல்லப்படும் வார்த்தைகளை நீர் அலட்சியம் செய்யாதீர். உண்மையில், மொத்த உலகத்தையும் கைவிடுவதால், நீர் கேட்டையும், உமக்கு ஆபத்தையும் வரவேற்கிறீர்.(36) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியின் தலைவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் சிறந்த மன்னர்களான மாந்தாதா மற்றும் அம்பரீஷன் ஆகிய இருவரைப் போல நீர் இப்போது பிரகாசிக்கிறீர்.(37) உமது குடிகளை நீதியுடன் பாதுகாத்து, மலைகள், காடுகள் மற்றும் தீவுகளுடன் கூடிய பூமாதேவியை நீர் ஆட்சி செய்வீராக. ஓ! மன்னா, உற்சாகமிழக்காதீர்.(38) பல்வேறு வேள்விகளில் தேவர்களைத் துதிப்பீராக. உமது எதிரிகளுடன் போரிடுவீராக. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, செல்வம், துணிகள் மற்றும் பிற இன்பநுகர் பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பீராக” என்றாள் {திரௌபதி}”.(39)

செங்கோல் சிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 15-செங்கோலின் சிறப்பை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; தண்ட முறைகளின் அவசியம்; ஆன்மாவின் கொல்லப்பட முடியாத நிலை ஆகியவற்றை எடுத்துரைத்து யுதிஷ்டிரனை அரசாளும்படி சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், மங்கா புகழையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட தன் அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} முறையான மதிப்பளித்து மீண்டும் பேசினான்.(1)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “தண்டக்கோலே (தண்டக்கோலைத் தரித்தவனே), தன் குடிகள் அனைத்தையும் ஆட்சி செய்து, அவர்களைப் பாதுகாக்கிறது {றான்}. அனைத்தும் உறங்கும்போது தண்டக்கோல் விழித்திருக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக் கோலை {செங்கோலை} ஞானியர் நீதிமிக்கது என்கின்றன.(2) தண்டக்கோலே நீதியையும், பொருளையும் பாதுகாக்கிறது. ஓ! மன்னா, அதுவே இன்பத்தையும் பாதுகாக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக்கோல் வாழ்வின் மூன்று நோக்கங்களோடு அடையாளங்காணப்படுகிறது.(3) தானியம், செல்வம் ஆகிய இரண்டும் தண்டக்கோலால் பாதுகாக்கப்படுகின்றன. ஓ! கல்வியறிவு கொண்டவரே, இஃதை அறிந்து, தண்டக்கோலை எடுத்துக் கொண்டு, உலகின் போக்கைக் கண்காணிப்பீராக.(4) ஒருவகைப் பாவிகள், மன்னனின் கரங்களில் இருக்கும் தண்டக்கோலிடம் கொண்ட அச்சத்தால் பாவத்தில் இருந்து விலகுகிறார்கள். மற்றொரு வகையினர் யமனின் தண்டத்தில் கொண்ட அச்சத்தாலும், மற்றொரு வகையினர் மறுமையில் கொண்ட அச்சத்தாலும் அதே போன்ற பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர்.(5) மேலும் வேறு வகையினர் சமூகத்திடம் கொண்ட அச்சத்தால் பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர். ஓ! மன்னா, இவ்வாறே இவ்வுலகின் போக்கில் உள்ள அனைத்தும் தண்டக்கோலைச் சார்ந்தே இருக்கின்றன.(6)

தண்டக்கோலால் மட்டுமே ஒருவரையொருவர் விழுங்கி விடுவதில் இருந்து தடுக்கப்படும் ஒருவகையினரும் இருக்கின்றனர். தண்டக்கோல் மக்களைப் பாதுகாக்கவில்லையெனில், அவர்கள் நரக இருளில் மூழ்குவார்கள்.(7) தண்டக்கோலானது, அடங்காதவர்களைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பயன்படுவதாலேயே ஞானியரால் அவ்வாறு பெயரிடப்பட்டது.(8) பிராமணர்களுக்கு வாய்ச்சொல்லாலும்; க்ஷத்திரியர்களுக்கு, அவர்களின் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உணவைக் கொடுத்தும்; வைசியர்களுக்கு அபராதமளித்தும், உடைமைகளைப் பறிமுதல் செய்தும் தண்டனை அளிக்க வேண்டும். சூத்திரர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது[1].(9) மனிதர்களை (தங்கள் கடமைகளில்) விழிப்புணர்வுடன் வைத்திருப்பதற்காகவும், உடைமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தண்டம் என்ற பெயரில் இவ்வுலகில் விதிகள் (தண்டனை சட்டங்கள்) நிறுவப்பட்டுள்ளன.(10)எங்கே தண்டமானது, கரிய நிறத்துடனும், சிவந்த கண்களுடனும் (ஒவ்வொரு குற்றவாளியையும்) பற்றத் தயாராக நற்கிறதோ, எங்கே மன்னன் நீதிப் பார்வையுடன் இருக்கிறானோ, அங்கே குடிமக்கள் ஒருபோதும் தங்களை மறக்காமல் இருக்கிறார்கள் {தன்னிலை இழக்காது விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்}.(11) பிரம்மச்சாரி, இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} மற்றும் அறத்தவசி {ஸந்யாசி} ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்கள் வாழ்வுமுறைகளைத் தண்டத்தில் கொண்ட அச்சத்தின் மூலமே நோற்கின்றனர்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அச்சமில்லாதவன் ஒருபோதும் வேள்வியைச் செய்வதில்லை. அச்சமில்லாதவன் ஒருபோதும் கொடை கொடுப்பதில்லை. அச்சமில்லாத மனிதன் ஒருபோதும், எந்தச் செயலையோ, ஒப்பந்தத்தையோ பின்பற்ற விரும்புவதில்லை.(13) மற்றவர்களின் முக்கிய அங்கங்களைப் பிளக்காமல், அரிய சாதனைகளை அடையாமல், (மீனைக் கொல்லும்) மீனவனைப் போல உயிரினங்களைக் கொல்லாமல், எந்த மனிதனாலும் பெருஞ்செழிப்பை அடைய முடியாது[2].(14) கொலை செய்யாமல் ஒரு மனிதனால், இவ்வுலகில் புகழையோ, செல்வத்தையோ, குடிமக்களையோ அடைய முடியாது. இந்திரனே கூட, விருத்திரனைக் கொன்றதால்தான் மஹேந்திரனானான்.(15)தேவர்களில் பிறரைக் கொன்றவர்களே, மனிதர்களால் அதிகமாகத் துதிக்கப்படுகிறார். ருத்திரன், ஸ்கந்தன், சக்ரன், அக்னி, வருணன் ஆகியோர் அனைவரும் கொலைகாரர்களாவர்.(16) ஓ! பாரதரே, காலன், மிருத்யு, வாயு, குபேரன், சூரியன், வசுக்கள், மருத்துக்கள், சத்தியஸ்கள், விஸ்வதேவர்கள் ஆகியோர் அனைவரும் கூடக் கொலைகாரர்களே[3].(17) இந்தத் தேவர்களின் ஆற்றலால் பணிவடைந்து மக்கள் அனைவரும் அவர்களைத் வணங்குகிறார்களேயன்றி பிரம்மனையோ, தாத்ரியையோ, பூஷனையோ ஒருபோதும் வழங்குவதில்லை.(18) தேவர்களில் அனைத்துயிர்களையும் சமமாக மதித்து, சுயக்கட்டுப்பாடு மற்றும் அமைதியுடன் இருக்கும் தேவர்களை ஒரு சிலரே தங்கள் செயல்களாலும் உன்னத மன நிலைப்பாட்டாலும் வணங்குகின்றனர்.(19) பிறருக்குத் தீங்கிழைக்கும் செயலெதையும் செய்யாத ஓருயிரினத்தையும் நான் இவ்வுலகில் காணவில்லை. விலங்குகள், விலங்குகளைச் சார்ந்தும், பலசாலிகள் பலவீனர்களைச் சார்ந்தும் வாழ்கிறார்கள்.(20)கீரிப்பிள்ளை பூனையை விழுங்குகிறது; பூமையானது கீரிப்பிள்ளையை விழுங்குகிறது; நாய் பூனையை விழுங்குகிறது; மேலும் அந்த நாயும் சிறுத்தையால் விழுங்கப்படுகிறது.(21) மேலும் காலன் வரும்போது அனைத்துப் பொருட்களும் அவனால் விழுங்கப்படுகின்றன என்பதையும் காண்பீராக. அசைவதும், அசையாததுமான இவ்வண்டமே வாழும் உயிரினங்களின் உணவாகிறது.(22) இதுவே தேவர்களால் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒரு ஞானி இதில் திகைப்படைவதில்லை. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வாறு பிறந்தீரோ அவ்வாறாவதே உமக்குத் தகுந்தது.(23) (க்ஷத்திரிய) மடையர்கள் மட்டுமே, கோபத்தையும், இன்பத்தையும் விலக்கி, காடுகளைப் புகலிடமாக அடைகின்றனர். தவசிகளே கூட உயிரினங்களைக் கொல்லாமல் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது.(24) நீரிலும், பூமியிலும், கனிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருவன் கொல்லவில்லை என்பது உண்மையில்லை. ஒருவனுடைய வாழ்வைத் தாங்கிக் கொள்வதை விட உயர்ந்த கடமை வேறென்ன இருக்க முடியும்?[4](25)அடையாளம் காண முடியாத அளவும் பல உயிரினங்கள் மிக நுண்ணியவையாக இருக்கின்றன. கண்ணிமைப்பதால் மட்டுமே கூட அவை அழிக்கப்படுகின்றன.(26) கோபம் மற்றும் செருக்கைக் கைவிட்டு, தவசியின் வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள், கிராமங்களையும், நகரங்களையும் விட்டு வனத்திற்குச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அம்மனிதர்கள் திகைப்படைந்து மீண்டும் இல்லற வாழ்வையே நோற்கின்றனர்.(27) (இல்லறத்தை நோற்கும்) பலர் மண்ணை உழுது, மூலிகைகளைப் பறித்து, மரங்களை வெட்டி, பறவைகள் மற்றும் விலங்குகளையும் கொன்று வாழும் பலர் வேள்விகளைச் செய்து இறுதியில் சொர்க்கத்தை அடைகிறார்கள்.(28) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களும், தண்டமுறை கொள்கை முறையாகப் பயன்படுத்தப்படும் போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன என்பதில் நான் எந்த ஐயமும் கொள்ளவில்லை.(29) இவ்வுலகில் இருந்து தண்டமுறை {தண்டிக்கும் சட்டம்} நீக்கப்பட்டால் விரைவில் உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். நீரில் உள்ள மீன்களைப் போல, வலிமையான விலங்குகள், பலவீனமானவற்றை உணவாகக் கொள்கின்றன.(30)

அணைந்துவிட்ட நெருப்புகளே கூட ஊதப்படும்போது அச்சத்தால் மீண்டும் சூடர்விடுகின்றன. இது பலம் அல்லது தண்டனையின் மீது கொண்ட அச்சத்தாலேயே விளைகிறது.(31) தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்திப் பார்க்க இவ்வுலகில் தண்டமில்லையென்றால், மொத்த உலகும் இருளில் மூழ்கி, அனைத்துப் பொருட்களும் குழப்பத்தை அடைந்திருக்கும்.(32) விதிகளை மீறுபவர்களும், நாத்திகர்களும், வேதங்களை ஏளனம் செய்பவர்களும் தண்டத்தால் பீடிக்கப்பட்டால், விரைவில் அவர்கள் விதிகளையும், வரைமுறைகளையும் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.(33)இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தண்டமுறையால் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். தண்டத்தில் கொண்ட அச்சத்தால் ஒரு மனிதன் விதிகளையும், வரைமுறைகளையும் பின்பற்றுகிறான்.(34) தண்டமானது, நால்வகையினரின் அறம், பொருள் மற்றும் இன்பத்தைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களை நல்லோராக, பணிவுள்ளோராக மாற்றவும் படைப்பாளனால் விதிக்கப்பட்டிருக்கிறது.(35)

தண்டத்தால் அச்சத்தைத் தூண்டமுடியவில்லையெனில், அண்டங்காக்கைகளும், இரைதேடும் விலங்குகளும், பிற உயிரினங்கள் அனைத்தையும், மனிதர்களையும், வேள்விக்குத் தேவையான தெளிந்த நெய்யையும் உண்டிருக்கும்.(36) தண்டமுறை எவரையும், ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், ஒருவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள், ஒருவரும், காரம்பசுவில் பால் கறக்க மாட்டார்கள், ஒரு கன்னிகையும் திருமணம் செய்துகொள்ள மாட்டாள்[5].(37) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அனைத்துப் பக்கங்களிலும் குழப்பமும் அழிவும் நேர்ந்து, அனைத்து வேலிகளும் அகற்றப்பட்டு, உடைமை என்ற கருத்தே காணாமல் போயிருக்கும்.(38) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வருடாந்தர வேள்விகளை ஒருபோதும் மக்களால் முறையாகச் செய்ய முடியாது.(39) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், எந்த வாழ்வுமுறையைச் சேர்ந்தவரும், (சாத்திரங்களில்) அறிவிக்கப்பட்டிருக்கும் அவனது வாழ்வுமுறைக்கான கடமைகளை நோற்க முடியாது, அவன் ஒருபோதும் அறிவை அடையவும் முடியாது.(40)ஒட்டகங்களோ, காளைகளோ, குதிரைகளோ, கோவேறு கழுதைகளோ, கழுதைகளோ தேரில் பூட்டப்பட்டாலும் தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அவை அந்தத் தேர்களையும், வண்டிகளையும் இழுக்காது.(41) தண்டனையைச் சார்ந்த அனைத்துயிரினங்களும் இருக்கின்றன. எனவே, கல்விமான்கள் தண்டனையே அனைத்திற்கும் வேராக இருக்கிறது என்று சொல்கின்றனர். மனிதர்கள் விரும்பும் சொர்க்கமும், இந்த உலகமும் கூட அந்தத் தண்டத்திலேயே இருக்கிறது.(42) எங்கே எதிரிகளை அழிக்கும் தண்டமுறை நன்றாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கே பாவமோ, வஞ்சனையோ, எந்தத் தீமையோ காணப்படாது.(43) தண்டக் கோல் உயர்த்தப்படவில்லையெனில், நாயும் வேள்வி நெய்யை நக்கும். முதல் (வேள்விக்) கொடையைக் காகங்கள் எடுத்துச் சென்றுவிடும்.(44) நியாயமான முறையிலேயோ, நியாயமற்ற முறையிலேயோ, இப்போது இந்த நாடு நமதாகியிருக்கிறது. எனவே, நீர் அதை அனுபவித்து வேள்விகளைச் செய்வீராக.(45)

தங்கள் அன்பு மனைவியருடன் (மற்றும் பிள்ளைகளுடன்) வாழும் நற்பேறு பெற்ற மனிதர்கள், நல்ல உணவை உண்டு, சிறந்த ஆடைகளை உடுத்தி, மகிழ்ச்சிகரமாக அறத்தை அடைகின்றனர்.(46) நமது செயல்கள் அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே இருக்கின்றன என்பதிலும், அந்தச் செல்வமானது தண்டமுறையைச் சார்ந்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை எனவே, தண்டமுறையின் முக்கியத்துவத்தைக் காண்பீராக.(47) உலகத்தின் உறவுகளைப் பராமரிக்க மட்டுமே கடமைகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. தீங்கிழையாமை மற்றும் நல்ல நோக்கங்களால் தூண்டப்பட்ட தீங்கிழைப்பு ஆகிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன. இவை இரண்டில் எதனால் அறத்தை அடையமுடியுமோ அதுவே மேன்மையானதாகும்.(48) எந்தச் செயலும் முற்றாகத் தகுதி நிறைவுற்றதுமல்ல; அதே போல எதுவும் முற்றான தீமையும் அல்ல. செயல்கள் அனைத்திலும் நல்லது, அல்லது ஆகிய இரண்டும் காணப்படுகின்றன.(49) விதை நீக்கலுக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் கொம்புகளும் வெட்டப்படுகின்றன. பிறகு அவை பளு சுமப்பதற்காகக் {மூக்கணாங்கயிற்றால்} கட்டப்படவும் தண்டிக்கப்படவும் {அடிக்கப்படவும்} செய்யப்படுகின்றன.(50)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உறுதிப்பாடில்லாத போலியான, நிந்தனைகளால் அழுகுகின்ற, வலிநிறைந்த இவ்வுலகில், மேலே குறிப்பிட்ட விதிகள் மற்றும் உறவுகளைப் பின்பற்றிப் பழங்காலத்து மனிதர்களின் பழக்க வழங்கங்களைப் பயில்வீராக.(51) வேள்விகளைச் செய்வீராக, கொடையளிப்பீராக, உமது குடிகளைக் காப்பீராக, அறம்பயில்வீராக. ஓ! குந்தியின் மகனே, உமது எதிரிகளைக் கொன்று உமது நண்பர்களைக் காப்பீராக.(52) ஓ! மன்னா, எதிரிகளைக் கொல்லும்போது உற்சாகத்தை இழக்காதீர். ஓ! பாரதரே, அதைச் செய்பவன் ஒரு போதும் சிறு பாவத்தையும் ஈட்டமாட்டான்.(53) தன்னை எதிர்த்து வருவதும், ஆயுதந்தரித்ததுமான படையை ஆயுதத்தை எடுத்து, கொல்லும் ஒருவனுக்கு கருவைக் கொன்ற பாவம் நேராது. ஏனெனில், முன்னேறி வரும் எதிரியே, கொல்பவனின் கோபத்தைத் தூண்டுகிறான்.(54) ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் இருக்கும் ஆன்மாவானது கொல்லப்பட முடியாததாகும். ஆன்மாவைக் கொல்ல முடியாது எனும்போது, ஒருவன் மற்றொருவனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(55) புதிய வீட்டிற்குள் நுழையும் ஒரு மனிதனைப் போலவே உயிரினங்கள் அடுத்தடுத்த உடல்களில் நுழைகின்றன.(56) சிதைந்த வடிவங்களைக் கைவிடும் ஓர் உயிரினம் புதிய வடிங்களை அடைகிறது. உண்மையைக் காண இயலும் மக்கள் இந்த மாற்றத்தையே மரணமாகக் கருதுகிறார்கள்” என்றான் {அர்ஜுனன்}”.(57)

திரௌபதியுடைய குழலின் நிலை! – சாந்திபர்வம் பகுதி – 16-கடந்த கால அவமதிப்புகளை யுதிஷ்டிரனுக்கு நினைவூட்டிய பீமன்; உடல், மனம் ஆகியவற்றின் தன்மைகளையும், நோய்களையும் விவரிப்பது; உடலுக்கு மனமும், மனத்திற்கு உடலும் தீர்வாக இருப்பதைச் சொல்லி பழைய அவமதிப்புகளை நினைத்துப்பார்த்தால் செய்யப்பட்ட படுகொலைகள் அனைத்தும் நியாயமானவையே எனச் சொன்னது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அர்ஜுனன் பேசி முடித்ததும், பெரும் கோபமும் சக்தியும் கொண்டவனான பீமசேனன், தன் பொறுமை அனைத்தையும் திரட்டிக் கொண்டு, தன் அண்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நீர் கடமைகள் அனைத்தையும் அறிந்தவராவீர். நீர் அறியாதது ஏதுமில்லை. நாங்கள் எப்போதும் உமது நடத்தையையே பின்பற்றி நடக்கவே விரும்புகிறோம், ஆனால், ஐயோ, எங்களால் இதைச் செய்ய முடியாது.(2) “நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்பதே எனது மனத்தின் விருப்பம். எனினும், பெருந்துயரால் உந்தப்பட்டு எதையாவது சொல்லும் கட்டாய நிலையை நான் அடைந்திருக்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்பீராக. உமது அறிவு மயக்கத்தால், அனைத்தும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது, நாங்களும் உற்சாகமற்றவர்களாவும், பலவீனர்களாகவும் ஆக்கப்படுகிறோம்.(4) உலகின் ஆட்சியாளராக, ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவராக இருக்கும் நீர் உற்சாகமற்றதன் விளைவால் எவ்வாறு ஒரு கோழையைப் போல அறிவு மயக்கத்தை அடைந்தீர்?(5)

உலகத்தின் நேர்மையான வழியையும், நேர்மையற்ற வழிகளையும் நீர் அறிந்திருக்கிறீர். ஓ! பலமிக்கவரே, தற்காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ சொந்தமானது ஏதுமில்லை என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர்.(6) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அரசுரிமையை நீர் ஏற்க வேண்டிய காரணங்களை உமக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்தோடு கேட்பீராக.(7) உடல் சார்ந்த, மனம் சார்ந்த இரண்டு வகை நோய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றதிலிருந்தே உதிக்கிறது. அவற்றில் ஏதும் தனித்திருப்பதைக் காண முடியாது. மனநோய்கள் உடல் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதேபோல உடல் நோய்களும் மனம் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன. இதுவே உண்மை.(9) கடந்த கால உடல் துயரம் அல்லதும் மனத்துயரின் காரணமாக வருந்துபவன், அந்தத் துயரத்தால் துயரத்தையே அறுவடை செய்து, இரு மடங்கு துயரை அடைகிறான்.(10)

குளிர், வெப்பம், காற்று, ஆகிய மூன்றும் உடலின் தன்மைகளாகும்[1]. அவை இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பது உடல் நலத்தின் அடையாளமாகும்.(11) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குளிர் வெப்பத்தால் தடுக்கப்படுகிறது, வெப்பமும் குளிரால் தடுக்கப்படுகிறது.(12) நற்குணம், ஆசை, இருள் ஆகிய இம்மூன்றும் மனத்தின் தன்மைகளாகும். இம்மூன்றும் இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பதே (மன) நலத்திற்கான அடையாளமாகும்.(13) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. துன்பம் இன்பத்தால் தடுக்கப்படுகிறது, இன்பமும் துன்பத்தால் தடுக்கப்படுகிறது.(14) தற்காலத்தில் இன்பமாக வாழும் ஒருவன், கடந்த காலத் துன்பங்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறான். தற்போது துன்பத்தில் வாழும் மற்றொருவன், தனது கடந்த கால அருளை நினைத்துப் பார்க்க விரும்புகிறான்.(15)எனினும், துயரத்தின் போது கவலையாகவோ, அருளின் போது மகிழ்ச்சியாகவோ நீர் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, அருட்காலத்தில் கவலையடையவோ, துன்பகாலத்தில் மகிழ்ச்சியடையவோ நீர் உமது நினைவுத்திறனைப் பயன்படுத்தக் கூடாது. விதியே அனைத்திலும் வலிமைமிக்கதாகத் தெரிகிறது. அல்லது, இவ்வாறு பாதிப்படைந்திருப்பதன் விளைவால் உண்டான உமது இயல்பாக இஃது இருக்குமானால்,(16-17) சொற்ப ஆடையுடுத்தியிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, தனது மாதவிடாய் காலத்தில் சபைக்கு இழுத்து வரப்பட்டதைக் கண்டதை நினைக்க இயலாதவராக நீர் எவ்வாறு இருக்கிறீர்[2].(18) நாம் (குரு) நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதையும், நாம் நாடு கடந்து, மான்தோலுடுத்தி (காட்டுக்குள்) இருந்ததையும், அந்த நமது காட்டு வாழ்வையும் நீர் ஏன் நினைக்கவில்லை.(19) ஜடாசுரன் ஏற்படுத்திய துன்பங்களையும், சித்திரசேனனுடனான போரையும், சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} கரங்களில் அடைந்த துயரத்தையும் நீர் ஏன் மறந்துவிட்டீர்?(20) தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் இளவரசி திரௌபதி கீசகனால் உதைக்கப்பட்டதை நீர் ஏன் மறந்தீர்?(21)-ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, பீஷ்மருடனும், துரோணருடனும் நீர் போரிட்டதைப் போன்ற கடுமையான போரே இப்போது உம் முன்னிலையில் இருக்கிறது. இதனுடன் நீர் உமது மனத்தைக் கொண்டே போரிட வேண்டும்.(22) உண்மையில், இப்போது உம்முன்னிலையில் இருக்கும் போரில், கணைகள், நண்பர்கள், உறவினர்கள் சொந்தங்கள் ஆகியவற்றுக்கான தேவையில்லை, ஆனால் அதில் நீர் உமது மனத்தால் மட்டுமே போரிட வேண்டும்.(23) இந்தப் போரில் நீர் வெல்வதற்கு முன்பே உமது உயிர்மூச்சைவிட்டுவிட்டால், பிறகு மற்றொரு உடலை அடைந்து நீர் இதே எதிரிகளுடன் நீர் போரிட வேண்டியிருக்கும்[3].(24) எனவே, ஓ! பாரதரே, அந்தப் போரை இன்றே போரிட்டு, உடல் குறித்த அக்கறையில்லாமல் உமது செயல்பாடுகளின் மூலம் உமது மனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு அவற்றை வெல்வீராக. அந்தப் போரை உம்மால் வெல்ல முடியவில்லையெனில், உமது நிலை என்னவாகும்? மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அதை நீர் வென்றால், வாழ்வில் உயர்ந்த கதியை அடைவீர்.(26)இதில் உமது அறிவைச் செலுத்தி, உயிரினங்களின் சரியான மற்றும் தவறான பாதைகளை உறுதி செய்து கொண்டு, உமக்கு முன்னால் உமது தந்தையர் ஏற்று நடந்த பாதையைப் பின்பற்றி, உமது நாட்டை முறையாக ஆள்வீராக.(27) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பாவி துரியோதனனும், அவனது தொண்டர்கள் அனைவரும் கொல்லப்பட்டது நற்பேற்றாலேயே. திரௌபதியின் குழல்களின் நிலையை நீர் அடைந்ததும் நற்பேற்றினாலேயே[4].(28) முறையான சடங்குகளுடனும், அபரிமிதமான கொடைகளுடன் ஒரு குதிரை வேள்வியைச் செய்வீராக. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நாங்களும், பெரும் சக்தி கொண்டவனான வாசுதேவனும் {கிருஷ்ணனும்} உமது பணியாட்களாவோம்” என்றான் {பீமன்}.(29)

அனைத்தும் அறிவில் நிலைத்திருக்கின்றன! – சாந்திபர்வம் பகுதி – 17-துறவே சிறந்ததெனப் பீமனுக்குச் சொன்ன யுதிஷ்டிரன்; பசியை வெல்ல வேண்டும்; ஆசை மற்றும் இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று சொன்னது; பண்பட்ட அறிவிலேயே அனைத்தும் நிலைத்திருக்கின்றன என்று சொன்ன யுதிஷ்டிரன்…

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “ஓ! பீமா, நிறைவின்மை, அலட்சியம், பூமிசார்ந்த பொருட்களில் பற்று, அமைதியின்மை, வலிமை, மடமை, போலிச் செருக்கு {வறட்டு பெருமை}, கவலை ஆகிய இந்தப் பாவங்களால் பீடிக்கப்பட்டு, நீ அரசுரிமையில் நாட்டங்கொள்கிறாய். ஆசையில் இருந்து விடுபட்டு, இன்பம் மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கடந்து, அமைதியை அடைந்து, மகிழ்ச்சியடைய {சுகமாக இருக்க} முயல்வாயாக.(1,2)  கட்டற்ற இந்தப் பூமியை எந்த ஒப்பற்ற ஏகாதிபதி ஆட்சி செய்வானோ, அவனும் ஒரே வயிற்றைத் தான் கொண்டிருப்பான். பிறகு ஏன் நீ இந்த வாழ்வுமுறையைப் புகழ்கிறாய்?(3) ஓ! பாரதர்களில் காளையே {பீமா}, ஒருவனுடைய ஆசைகள் ஒரு நாளிலோ, பல மாதங்களிலோ நிறைவடையாது. உண்மையில், நிறைவடைய இயலா ஆசையானது, ஒருவனுடைய மொத்த வாழ்நாளிலும் கூட நிறைவையடையாது.(4) நெருப்பில் விறகு ஊட்டப்படும்போது அது சுடர்விட்டு எரிகிறது; ஊட்டப்படாதபோதோ அணைந்துவிடுகிறது. எனவே, உன் வயிற்றில் நெருப்பு எரியும்போது {பசிக்கும்போது}, சொற்ப உணவே  அளித்து {உணவைக் குறைத்து} அஃதை அணைப்பாயாக.(5) ஞானமற்றவனே தன் வயிற்றுக்கு அதிக உணவைத் தேடுகிறான். முதலில் உனது வயிற்றை வெல்வாயாக. (பிறகு உன்னால் இந்தப் பூமியையே வெல்ல இயலும்). உனது நிரந்தர நன்மைக்கான பூமியை, அப்போது உன்னால் வெல்ல முடியும்[1].(6)உலகம் சார்ந்த ஆசைகள், இன்பங்கள் மற்றும் செழிப்பை நீ புகழ்கிறாய். எனினும், அனைத்து இன்பங்களையும் துறந்தவர்கள், தவங்களால் தங்கள் உடல்களைக் குறைத்துக் கொண்டு பேரின்பம் நிறந்த உலகங்களை அடைகின்றனர்.(7) நாட்டை அடைந்து அதைப் பராமரிப்பதில் நியாயமான மற்றும் நியாயமில்லா இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றிற்கான ஆசை உன்னுள் இருக்கிறது[2]. எனினும், உன் பெருஞ்சுமைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொண்டு நீ துறவை பின்பற்றுவாயாக.(8) ஒரு புலியானது, தன் வயிற்றை நிரப்புவதற்காகப் பல விலங்குகளைக் கொல்கிறது. பலமற்ற பிற விலங்குகள், உயிர்வாழும் ஆசையால் உந்தப்பட்டு, புலியின் இரையாக வாழ்கின்றன.(9) உலகம் சார்ந்த பொருட்களை ஏற்கும் மன்னர்கள் துறவை பயின்றால், அவர்களால் ஒருபோதும் மனநிறைவை அடைய முடியாது. அவர்களின் புத்தியின்மையைப் பார்.(10) எனினும், மரத்தின் இலைகளை உண்டு வாழ்பவர்களோ, தானியங்களில் உமி நீக்க இரு கற்களை மட்டுமே, அல்லது தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துபவர்களோ, நீரை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, நரகத்தை வெல்கிறார்கள் {நரகை அடையாமல் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்} என்பது உண்மைச் செய்தியாகும்.(11) கட்டற்ற இந்தப் பரந்த உலகை ஆள்பவனான மன்னனும், தங்கத்தையும், கூழாங்கற்களையும் சமமாகக் கருதும் ஒரு மனிதனு ஆகிய இவர்கள் இருவருக்குள், பின்னவனே {துறவியே} தன் வாழ்வின் நோக்கத்தையடைந்ததாகச் சொல்லப்படுகிறானேயன்றி முன்னவன் {மன்னன்} அல்ல.(12)எனவே, நீ இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தைத் தரும் நிரந்தர புகலிடத்தைச் சார்ந்தவனாகி, செயலை நிறுத்தி, ஆசைகளில் கொண்டுள்ள பற்றைத் துறப்பாயாக.(13) ஆசையையும், இன்பத்தையும் கைவிட்டவர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை[3]. எனினும், நீ இன்பங்களுக்காக வருந்துகிறாய். ஆசையையும், இன்பத்தையும் விலக்கினால், பொய் பேச்சில் இருந்து விடுபடுவதில் நீ வெல்லலாம்[4].(14) பித்ருக்களின் பாதை மற்றும் தேவர்களின் பாதை என நன்கறியப்பட்ட இருபாதைகள் (நமக்காக) இருக்கின்றன. வேள்விகளைச் செய்வோர் பித்ரு பாதையில் செல்கின்றனர், அதே வேளையில், விடுதலை {முக்தியை} வேண்டுவோர், தேவ பாதையில் செல்கின்றனர்[5].(15) தவங்கள், பிரம்மச்சரியம், (வேத) கல்வி, ஆகியவற்றின் மூலம் தங்கள் உடல்களைத் துறக்கும் பெரும் முனிவர்கள், காலனின் சக்திக்கும் மேலான உலகங்களுக்குச் செல்கின்றனர்.(16)உலகம் சார்ந்த இன்பங்கள் கட்டுகளின் {பற்றின்} தன்மையைக் கொண்டனவாகும். அவை செயல்பாடு என்றும் அழைக்கப்படுகின்றன. (பற்று மற்றும் செயல்பாடு ஆகிய) அவ்விரு பாவங்களில் இருந்து விடுபடும் ஒருவனே உயர்ந்த கதியை அடைகிறான்[6].(17) முரண்பட்ட இரட்டைகளிலிருந்து {த்வந்துவங்களில் இருந்து} விடுபட்டவனும், ஆசை மற்றும் இன்பங்களில் இருந்து விடுபட்டவனும், மோக்ஷதர்மத்தை நோற்பவனுமான ஜனகனால் (பழங்காலத்தில்) பாடப்பட்ட ஒரு வரியில் இக்குறிப்பிருக்கிறது.(18) (அவ்வாறு இவ்வாறு அமைந்திருக்கிறது:) “என் செல்வங்கள் ஏராளம், இருப்பினும் என்னிடம் ஒன்றுமில்லை. மேலும், மொத்த மிதிலையும் எரித்துச் சாம்பாலக்கப்பட்டாலும், என்னுடையது ஏதும் எரிக்கப்படவில்லை” {என்றிருக்கிறது}.(19)மலையின் உச்சியில் இருக்கும் ஒரு மனிதன், சமவெளியில் இருக்கும் மனிதர்களைக் கீழ் நோக்கிப் பார்ப்பதைப் போல, அறிவு மாளிகையின் உச்சத்தை அடைந்த ஒருவன், துன்பப்பட்ட சொல்லாத {துன்பப்படத்தகாத} பொருட்களுக்காக மக்கள் துன்புற்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.(20) {கண்களுக்குப்} புலப்படும் பொருட்களில் தன் கண்களைச் செலுத்தி, அவற்றை உண்மையில் காணும் ஒருவனே கண்களையும், அறிவையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்[7]. அறிவு என்றழைக்கப்படும் புலமானது, அறியப்படாத, புரிந்து கொள்ளமுடியாத பொருட்களைக் குறித்து அது கொடுக்கும் அறிவாலும், புரிதலாலுமே அவ்வாறு அழைக்கப்படுகிறது.(21) தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பிரம்ம நிலையை அடைந்தவர்களுமான கல்விமான்களின் வார்த்தைகளை அறிந்த ஒருவன், உயர்ந்த பெருமைகளை அடைவதில் வெல்கிறான்.(22) ஒருவன், முடிவிலா வேற்றுமைகளைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் ஒன்றெனவும், ஒரே சாற்றின் பல்வேறு வெளிப்பாடுகளே அவை {அவ்வுயிரினங்கள்} எனவும் காணும்போது, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்[8].(23) இந்த உயர்ந்த பண்பட்ட நிலைய அடைபவர்களே, மிக உயர்ந்த, அருள்நிறைந்த கதியை அடைகிறார்களேயன்றி, அறிவற்றவர்களோ, குறுகிய ஆன்மா கொண்டவர்களோ, சிற்றறிவு கொண்டவர்களோ, தவங்களற்றவர்களோ அல்ல {அந்நிலையை அடைவதில்லை}. உண்மையில், அனைத்தும் (பண்பட்ட) அறிவிலேயே {புத்தியிலேயே} நிலைத்திருக்கின்றன” என்றான் {யுதிஷ்டிரன்}”.(24)

ஜனகனின் மனைவி! – சாந்திபர்வம் பகுதி – 18-ஜனகனின் மனைவியான சுநைனா, சந்நியாசம் செல்ல விரும்பிய ஜனகனிடம் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தபோது, மன்னனின் அப்பேச்சால் பீடிக்கப்பட்ட அர்ஜுனன், சோகத்தாலும், துயராலும் எரிந்து மீண்டும் தன் அண்ணனிடம்,(1) “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, விதேஹர்களின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்}, அவனது ராணிக்குமிடையில் {சுநைனாவுக்கும் இடையில்} நடைபெற்ற உரையாடல் அடங்கிய இந்தப் பழைய வரலாற்றை மக்கள் உரைக்கின்றனர்.(2) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} தன் நாட்டைத் துறந்து, பிச்சாடன வாழ்வை நோற்கத் தீர்மானித்த போது, அவனுடைய மனைவி துயரால் பீடிக்கப்பட்டுச் சொன்ன வார்த்தைகளின் குறிப்பு அவ்வரலாற்றில் இருக்கிறது.(3) மன்னன் ஜனகன், தனது செல்வம், பிள்ளைகள், மனைவியர், பல்வேறு வகை உடைமைகள், அறத்தகுதியையும், நெருப்பையும் அடைய நிறுவப்பட்ட வழி ஆகியவற்றைத் துறந்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (பிச்சைக்காரத் தோற்றத்தை {துறவியின் வடிவை} ஏற்றுக் கொண்டான்). அவனது துணைவியானவள் {சுநைனா}, செல்வத்தை இழந்தவனாக, பிச்சைக்கார நோன்பை நோற்பதில் நிறுவப்பட்டவனாக, எந்த வகைத் தீங்கையும் பிறருக்கு இழைப்பதில் இருந்து விலகும் தீர்மானத்துடன் கூடியவனாக, அனைத்து வகைப் போலித்தனங்களையும் கைவிட்டவனாக, தண்டில் இருந்து விழுந்தவையும், (வயலின் பிளவுகளில் இருக்கும் தானியங்களைப் பொறுக்கிப் பெறப்பட்ட) கைநிறைந்தவையுமான தானியங்களை உண்டு வாழத் தயாராக இருப்பவனாகவும் அவனைக் கண்டாள்.(5)

தன் தலைவனுடன் யாருமற்ற வேளையில் அவனை {ஜனகனை} அணுகிய ராணி {சுநைனா}, பெரும் மனோ பலத்துடனும், அச்சமற்ற வகையிலும், கோபத்துடனும், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னாள்:(6) “செல்வமும், தானியமும் நிறைந்த உமது நட்டைக் கைவிட்டு, பிச்சைக்கார வாழ்வை ஏன் நோற்கிறீர்? கைநிறைந்தவையும், வீழ்ந்தவையுமான {உதிர்ந்தவையுமான} தானியங்கள் உமக்குப் போதுமானவையல்ல.(7) ஓ! மன்னா, உமது பெரும் நாட்டைக் கைவிட்டு, கைப்பிடி தானியதை விரும்புகிறீராதலால், உமது தீர்மானமும், உமது செயல்களும் பொருந்தவில்லை.(8) ஓ! மன்னா, இந்தக் கைப்பிடி தானியத்தைக் கொண்டு, உம்மால் உமது விருந்தினர்களையும், தேவர்களையும், முனிவர்களையும், பித்ருக்களையும் நிறைவு செய்ய முடியுமா? எனவே, இந்த உமது முயற்சி புதைமிதியற்றதாகும் {வீணானதாகும்}.(9) ஐயோ, தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவராலும் கைவிடப்பட்டு, செயல்பாடு அனைத்தையும் கைவிட்டுத் திரியும் பிச்சாடன வாழ்வை நோற்கப் போகிறீர்.(10)

முன்பு நீர் மூன்று வேதங்களை அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களையும், இன்னும் பலரையும் ஆதரித்து வந்தீர். இன்று உமது உணவுக்காக அவர்களிடம் நீர் எவ்வாறு பிச்சை எடுப்பீர்?(11) இந்தச் சுடர்மிகு செழிப்பைக் கைவிட்டு, ஒரு நாயைப் போல (உணவுக்காகச்) சுற்றிலும் கண்களைச் சுழல விடப்போகிறீர். இப்போது இந்த உமது தாய் உம்மால் மகனற்றவளானால், உமது மனைவியான கோசல இளவரசியோ ஒரு விதவையானாள் {சுநைனா ஆகிய நானோ இப்போது கணவனற்ற விதவையானேன்}.(12) இந்த ஆதரவற்ற க்ஷத்திரியர்கள், கனியையும், அறத்தகுதியையும் எதிர்பார்த்து, தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் உம் மேல் கொண்டு உமக்காகக் காத்திருக்கின்றனர்.(13) ஓ! மன்னா, அவர்களது அந்த நம்பிக்கைகளைக் கொன்றுவிட்டு, நீர் எந்த உலகத்திற்குச் செல்லப் போகிறீர்? அதிலும் குறிப்பாக விடுதலை {முக்தியானது} ஐயம் நிறைந்தது, உயிரினங்கள் அனைத்தும் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன எனும்போது நீர் எங்குச் செல்லப் போகிறீர்?[1](14) நீர் மணந்து கொண்ட மனைவியைக் கைவிட்டு வாழ விரும்புவதால், பாவம் நிறைந்த உமக்கு இம்மையோ மறுமையோ கிடையாது[2].(15)உண்மையில், பல்வேறு வகையான மாலைகள், நறுமணப்பொருட்கள், ஆபரணங்கள், ஆடைகள் ஆகியவற்றைத் தவிர்த்து, நீர் ஏன் பிச்சாடனராகத் திரியப் போகிறீர்?(16) அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பரந்த புனிதமான தடாகத்தைப் போல இருந்துவிட்டு, (அனைவருக்கும் உறைவிடத்தைத் தரும்) புகழத்தக்க ஒரு பெரும் மரமாக இருந்துவிட்டு, எவ்வாறு உம்மால் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவும், அவர்களை வழிபடவும் முடியும்?(17) ஒரு யானையானது தனது வேலைகள் அனைத்தையும் தவிர்த்தால், கூட்டமாக வரும் ஊனுண்ணும் விலங்குகளும், எண்ணற்ற புழுக்களும் அஃதை உண்டுவிடும். அவ்வாறிருக்கையில், சக்தியற்றவரான உம்மைக் குறித்து என்ன சொல்வது?[3](18) மண்குடத்தையும், மூன்றுதலை கொண்ட தண்டத்தையும் பரிந்துரைப்பதும், தன் ஆடைகளையே கைவிடச் சொல்வதும்,(19) அனைத்தையும் துறந்த பிறகு கைப்பிடி தானியத்தை மட்டுமே ஏற்க அனுமதிப்பதுமான இந்த வாழ்வுமுறையில் உமது இதயம் எவ்வாறு நிலைக்கலாம்? மேலும், நாடும், கைப்பிடி தானியமும் ஒன்றேயென நீர் சொல்வீரானால், முன்னதை {நாட்டை} நீர் ஏன் கைவிடவேண்டும்?[4](20)மேலும், கைப்பிடி தானியமானது பற்றுக்கான பொருள் ஆகுமென்றால், (அனைத்தையும் கைவிட்ட) உமது உண்மை தீர்மானம் தரையில் விழுந்துவிடும். அனைத்தையும் கைவிடும் உமது தீர்மானத்தின்படி நீர் செயல்பட்டால், உமக்கு நான் யார்? எனக்கு நீர் யார்? நீர் என்னிடம் கொண்டுள்ள அருள் என்னவாக இருக்க முடியும்?(21) நீர் அருளைக் கொள்ள விரும்பினால், இந்தப் பூமியை ஆள்வீராக. வறுமை நிறைந்த ஏழையாக, நண்பர்களால் கைவிடப்பட்டவர்களாக இருப்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் துறவை பின்பற்றலாம்.(22) அரண்மனை போன்ற மாளிகைகளையும், படுக்கைகளையும், வாகனங்களையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் கைவிடுவதாக நடிக்கும் மனிதர்கள் உண்மையில் முறையற்றே செயல்படுகிறார்கள்.(23) ஒருவன் எப்போதும் பிறரால் கொடுக்கப்படும் கொடைகளை ஏற்கிறான்; மற்றொருவன் எப்போதும் கொடைகளை அளிக்கிறான். இந்த இருவருக்குள்ளும் உள்ள வேறுபாடுகளை நீர் அறிவீர். உண்மையில் இவர்கள் இருவரில் எவர் மேன்மையாக மதிக்கப்பட வேண்டும்?(24) எப்போதும் கொடைகளை ஏற்பவர்களுக்கோ, செருக்குடையவனுக்கோ ஒரு கொடை கொடுக்கப்படுமாயின், அந்தக் கொடையானது காட்டு நெருப்பில் ஊற்றப்பட்ட தெளிந்த நெய்யைப் போல வீணாகவே ஆகும்.(25)

ஓ! மன்னா {ஜனகரே}, தனக்குள் வீசப்படும் அனைத்தையும் எரிக்காமல் அடங்காத நெருப்பைப் போல, நன்கொடையைப் பெறாமல் ஒருபோதும் ஒரு பிச்சைக்காரன் {யாசகன்} அமைதியடையமாட்டான்.(26) இவ்வுலகில், ஈகையாளன் ஒருவனால் கொடுக்கப்படும் உணவே, நிச்சயம் பக்திமான்களை ஆதரிக்கும். எனவே, ஒரு மன்னன் (உணவைக்) கொடுக்கவில்லையெனில், முக்தியை விரும்பும் பக்திமான்கள் எங்கே செல்வார்கள்?(27) (தங்கள் இல்லங்களில்) உணவைக் கொண்டிருப்போர் இல்லறவாசிகளாவர். அவர்களே பிச்சைக்காரர்களை {சந்நியாசிகளை} ஆதரிக்கிறார்கள். உணவிலிருந்தே உயிர் பாய்கிறது. எனவே, உணவைக் கொடுப்பவன், உயிரைக் கொடுப்பவனாவான்.(28) இல்லற வாழ்வை நோற்போரிடம் இருந்து வெளியேறும் துறவிகள் {பிச்சைக்காரர்கள்}, அவர்கள் எங்கிருந்து {எவர்களிடமிருந்து} வந்தனரோ அவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தன்னடக்கம் கொண்ட மனிதர்கள் இதைச் செய்வதால் புகழையும், பலத்தையும் அடைந்து இன்புறுகிறார்கள்.(29) தன் உடைமைகளை மட்டுமே துறப்பதாலோ, பிச்சையேற்கும் வாழ்வை நோற்க ஆயத்தமடைவதாலோ ஒருவன் துறவி என்றழைக்கப்பட மாட்டான். உண்மையான மனநிலையுடன் தன் உடைமைளையும், இவ்வுலக இன்பங்களையும் துறப்பவனே உண்மையான துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(30) வெளிப்பார்வையில் பற்றுடன் இருப்பதாகத் தெரிந்தாலும், இதயத்தில் பற்றற்றவனாகவும், உலகத்தில் இருந்து தனித்து நிற்பவனாகவும், பற்றுகள் அனைத்தையும் உடைத்தெறிந்தவனாகவும், நண்பனையும், எதிரியையும் சமமாகக் கருதுபவனாகவும் இருக்கும் மனிதனே உண்மையில் துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(31)

பல்வேறு பற்றுகளில் கட்டப்பட்டவர்களாக, வீணாகப் போகும் செல்வத்தைத் தேடுபவர்களாக இருந்தாலும், தங்கள் தலைகளைச் சிரைத்துக் கொண்டு, காவியுடை உடுத்திக் கொண்டு துறவியாகத் திரியும் மனிதர்களை நாம் காணலாம்.(32) மூன்று வேதங்களையும், தங்கள் வழக்கமான தொழில்களையும், பிள்ளைகளையும் கைவிட்டு மூன்று தலை தண்டத்தை எடுத்துக் கொண்டு, காவி உடை உடுத்திக் கொண்டு, துறவு வாழ்வைப் பின்பற்றுபவர்களான அவர்கள் உண்மையில் சிறுமதி கொண்ட மனிதர்களே.(33) ஓ! மன்னா {ஜனகரே}, கோபத்தையும், பிற குற்றங்களையும் கைவிடாத அவர்கள், வாழ்வாதாரத்தை ஈட்டும் விருப்பத்தால் மட்டுமே காவி உடை உடுத்தியவர்கள் என்பதை அறிவீராக. முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடன் அறக்கொடியை நிறுவும் அவர்கள், இதை (வாழ்வாதாரத்தை அடைவதை) மட்டுமே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர்களாவர்.(34) எனவே, ஓ !மன்னா {ஜனகரே}, சடாமுடி தரித்தோ, முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடனோ, மரவுரி தரித்தோ, தோலாடை தரித்தோ, காவி உடை தரித்தோ இருக்கும் உண்மையான பக்திமான்களை ஆதரித்து, உமது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மறுமையில் அருள் உலகங்களை வெல்வீராக.(35) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், விலங்குகளையும், தக்ஷிணைகளையும் கொடுத்து வேள்விகள் செய்பவனும், பகலும் இரவும் ஈகையில் ஈடுபடுபவனுமான ஒருவனை {ஒரு நல்ல மன்னனை} விட மேம்பட்ட அறவோன் வேறு எவன் இருக்க முடியும்?” என்று கேட்டாள் {ஜனகனின் மனைவி சுநைனா}”.(36)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மன்னன் ஜனகன் இவ்வுலகில் உண்மையறிந்த மனிதனாகக் கருதப்படுகிறான். அவனே கூட (கடமையை உறுதி செய்யும்) இக்காரியத்தில் திகைப்படைந்தான். {அவனைப் போலவே} நீர் திகைப்படையாதீர்.(37) இவ்வாறே இல்லறத்தின் கடமைகளை ஈகையாளர்கள் நோற்கின்றனர். அனைத்து வகைகளிலான தீங்குகளையும் தவிர்த்து, ஆசை மற்றும் கோபத்தைக் கைவிட்டு,(38) அனைத்து உயிரினங்களையும் காப்பதில் ஈடுபட்டு, பெரியோரையும், வயதால் முதிர்ந்தோரையும் பேணியபிறகு, இறுதியாக நாம் அடைய விரும்பும் அருள் உலகங்களை அடைவதில் வெல்வோம்.(39) தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் முறையாக நிறைவு கொள்ளச் செய்து, பிராமணர்களை வழிபட்டு, பேச்சில் உண்மையுடன் நாம் நிச்சயம் விரும்பத்தக்க அருள் உலகங்களை அடைவோம்” {என்றான் அர்ஜுனன்}.(40)

விவாத அறிவில் சாதிக்கும் மூடர்கள்! – சாந்திபர்வம் பகுதி – 19-அர்ஜுனன் ஆயுதங்களையும் போரையும் மட்டுமே அறிந்தவன் என்றும், அவனால் தவத்துறவுகளின் உண்மையை உணர முடியாது என்றும் அவனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; முக்தியை அடைய யோகமே சிறந்த வழிமுறை; சாத்திரங்கள் அறிந்தவர்களும் முற்பிறவி வினையால் உண்மையை அறிந்து கொள்வதில்லை; பற்றைத் துறந்து, ஆன்மாவைத் தன்னை நோக்கித் திருப்பினால் முக்தி அடையலாம் என்றது…

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “பிரம்மத்தை அடைய வழிகோலும் வேதங்களையும், சாத்திரங்களையும் நான் அறிவேன். செயல்பாடு, துறவு ஆகிய இரண்டு வகை விளக்கங்களும் வேதங்களில் இருக்கின்றன.(1) அறிவை அடிப்படையாகக் கொண்ட சாத்திரங்களின் தீர்மானங்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. எனினும், உண்மையில் நான் மந்திரங்களை முறையாக அறிந்திருக்கிறேன்.(2) நீ ஆயுதங்களை மட்டுமே அறிந்தவனாக, வீரர்களின் நடைமுறைகளை நோற்கிறாய். சாத்திரங்களின் உண்மைப்பொருளை நீ புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறாய்.(3) நீ உண்மையில் கடமையை அறிந்தவனாக இருந்தால், சாத்திரங்களின் உண்மைப் பொருளையும், அறத்தின் உண்மைகளையும் தெளிவாக அறிந்த ஒருவனைப் போல என்னிடம் பேசியிருப்பாய்.(4) எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சகோதரப்பாசத்தால் தூண்டப்பட்டு, முறையான தகுந்த வார்த்தைகளை நீ பேசியிருக்கிறாய். ஓ! அர்ஜுனா, நான் உன்னிடம் நிறைவடைந்தேன்.(5)

போரோடு தொடர்புடைய கடமைகள் அனைத்திலும், பல்வேறு செயல்களின் திறனைப் பொறுத்தவரையிலும் மூவுலகங்களிலும் உனக்கு இணையானவன் எவனும் இல்லை.(6) எனவே, பிறரால் ஊடுருவிப் பார்க்கமுடியாத நுணக்கங்களைக் கொண்ட அக்காரியங்களுடன் தொடர்புடைய நுணுக்கங்களைக் {போர் நுணுக்கங்களைக்} குறித்து நீ பேசலாம். எனினும், என் நுண்ணறிவில் ஐயங்கொள்வது உனக்குத் தகாது.(7) நீ போரறிவியலை அறிந்தவனே, ஆனால் ஒருபோதும் பெரியோருக்காகக் காத்திருந்தவனில்லை. அக்காரியத்தைக் குறித்து விரிவாகக் கற்ற பெரியோரின் தீர்மானங்களை நீ அறியமாட்டாய். தவம், துறவு, பிரம்ம அறிவு ஆகியவற்றில் முதலை விட இரண்டாவது மேன்மையானது, இரண்டாவதை விட மூன்றாவது மேன்மையானது.(8,9) எனினும், செல்வத்தை விட மேன்மையானது ஏதுமில்லை என நீ நினைப்பது பிழையே. செல்வமானது, அவ்வொளியில் {அவ்வாறு மேன்மையானதாக} உனக்குத் தோன்றாதவாறு உன்னை என்னால் நம்ப வைக்க முடியும்.(10)

அறவோர் அனைவரும் தவத்துறவுகளிலும், வேதகல்வியிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதைக் காணலாம். அழியாத உலகங்கள் பலவற்றைக் கொண்ட முனிவர்களும் கூட, தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டிருக்கின்றனர்.(11) ஆன்ம அமைதி கொண்டவர்களும், எதிரிகளற்றோரும், வனங்களில் வசிப்போருமான வேறு சிலர் {சில ஆரியர்கள்}, தவங்கள் மற்றும் வேத கல்வியின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர்.(12) உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள ஆசையைத் தவிர்த்து, மடமையில் பிறக்கும் இருளை {அறியாமையை} விலக்கி, வடக்கு நோக்கி (ஒளிப்பாதைகளில் சென்று) துறவிகளுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைகின்றனர்.(13) தெற்கில் கிடப்பதும், ஒளி உலகங்களுக்கு வழிகோலுவதுமான பாதையானது, செயலில் அர்ப்பணிப்பு கொண்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிறப்புக்கும், இறப்புக்கும் உடன்படும் மனிதர்கள் அதையே {தென்திசையில் இருக்கும் யமலோகத்தையே} அடைகின்றனர்.(14) எனினும், முக்தியில் விருப்பம் கொண்டோர் தங்கள் கண்களுக்கு முன்பு வைத்திருக்கும் {சொல்லையும், மனத்தையும் கடந்த} எல்லையானது விவரிக்க முடியாததாகும். அதை அடைவதற்கு யோகமே சிறந்த வழிமுறையாகும். அதை (உனக்கு) விளக்கிச் சொல்வது எளிதானதல்ல.(15)

கல்விமான்கள், எது உண்மையல்ல என்பதைக் கண்டுபிடிக்கும் விருப்பத்தில் சாத்திரங்களை நினைவுகூர்ந்து வாழ்கின்றனர். எனினும், பெரும்பாலும் அவர்கள் இதில் வழி தவறி, தாங்கள் தேடும் பொருளானது, இதிலிருக்கிறது, அதிலிருக்கிறது என்று நம்புகின்றனர்.(16) வேதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் இருந்து பலவற்றைத் திரட்டினாலும், வேரறுந்த வாழை மரத்தில் கடினமான மரப்பகுதியை {அதன் சாரத்தைக்} காண முடியாத மனிதர்களைப் போல, அவர்கள் உண்மையைக் காணத் தவறுகின்றனர்.(17) ஆன்மாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையில்லாத சிலர், அதை {அந்த ஆன்மாவை}, ஆசை மற்றும் வெறுப்பு (மற்றும் பிற) தன்மைகளை {குணங்களைக்} கொண்டதாகவும், ஐம்பூதங்களாலான இந்த உடற்கட்டுக்குள் இருப்பதாகவும் கருதுகின்றனர்[1].(18) கண்ணால் காணப்பட இயலாத, வார்த்தைகளால் சொல்லப்பட இயலாத, மிக நுணுக்கமான அது {ஆன்மா}, செயலின் வேரைத் தன் முன்னிலையில் கொண்டு, உயிரினங்களுக்கு மத்தியில் (மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும்) வட்டத்தில் சுழன்று வருகிறது[2].(19) ஒருவன், தனது மனத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்து வகை அருளையும் ஊற்றெடுக்கச் செய்யும் ஆன்மாவைத் தன்னை நோக்கித் திரும்பச் செய்தால், அவன் முற்றிலும் விடுதலையடைந்தவனாகப் பேரின்பத்தை அடைவான்.(20)நல்லோரால் பின்பற்றப்படுவதும், ஞானிகளால் அடையப்படுவதுமான அத்தகு பாதை இருக்கும்போது, ஓ! அர்ஜுனா, அனைத்து வகைப் பேரிடரும் நிறைந்த செல்வத்தை நீ ஏன் மெச்சுகிறாய்?(21) ஓ! பாரதா, சாத்திரங்களை அறிந்தவர்களும், கொடைகள், வேள்விகள், செயல்பாடு ஆகியவற்றில் எப்போதும் ஈடுபடுபவர்களுமான பழங்காலத்து மனிதர்களும், {உன்னைப் போன்றே} இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.(22) ஓ! பாரதா, முறைப்படி விவாதிக்கும் அறிவியலில் {தர்க்க சாஸ்திரத்தில்} சாதிக்கும் சில மூடர்கள், தங்கள் முற்பிறவி குற்றங்களுடைய வலிமையின் விளைவால், ஆன்மாவின் இருப்பை மறுக்கின்றனர். இறுதி விடுதலையை {முக்தியைக்} குறித்த இந்த உண்மையை அவர்களை ஏற்கச் செய்தல் மிகக் கடினமானதாகும்[3].(23) அந்தத் தீய மனிதர்கள், பெரும் கல்வியறிவைக் கொண்டவர்களாயிருப்பினும், பூமி முழுவதும் பயணித்து, சபைகளில் உரையாற்றி, விடுதலை {முக்தி} குறித்த உண்மைக் கோட்பாட்டை மறுக்கின்றனர்.(24) ஓ! பார்த்தா, நாம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்? உண்மையில், அதைப் போலவே (அந்த மனிதர்களால் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள முடியாததைப் போலவே), சாத்திரங்களை ஆழமாகப் புரிந்து கொண்ட ஞானியரையும், பக்திமான்களையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியாது.(25) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உண்மையை அறிந்த மனிதர்கள், தவத்தினாலும், நுண்ணறிவினாலும் பிரம்மத்தை அடைந்து, துறவினால் பேரின்பத்தை அடைகின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(26)

வேள்வியும், செல்வமும்! – சாந்திபர்வம் பகுதி – 20-செல்வம் ஏன் உயர்வானது என யுதிஷ்டிரனுக்கு விளக்கிய முனிவர் தேவஸ்தானர்; வேள்விகளின் அவசியத்தைச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன் நிறுத்திய பிறகு, நாநயமிக்கப் பெருந்துறவி தேவஸ்தானர், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை மன்னனிடம் சொன்னார்.(1)தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, “செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்று பல்குனன் {அர்ஜுனன்} உன்னிடம் சொன்னான். அக்காரியம் குறித்தே நானும் உன்னிடம் உரையாடப் போகிறேன். சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(2) ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ நியாயமாக இந்தப் பூமியை வென்றிருக்கிறாய். ஓ! மன்னா, அவளை {பூமியை} வென்ற பிறகு, காரணமேதுமில்லாமல் அவளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(3) வேதங்களில் நான்கு வகை வாழ்வுமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. ஓ! மன்னா, நீ ஒன்றன்பின் ஒன்றாக முறையாக அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.(4) எனவே, அபரிமிதமான கொடைகளுடன் பெரும் வேள்விகளையே நீ தற்போது செய்ய வேண்டும். முனிவர்களிலேயே கூட, சிலர் வேத கல்வி சொல்லும் வேள்வியில் ஈடுபடுகின்றனர், சிலர் அது சொல்லும் அறிவில் ஈடுபடுகின்றனர்.(5)

ஓ! பாரதா, எனவே, தவசிகளே கூடச் செயல்பாட்டுக்கு {கர்மத்திற்கு} அடிமையாக இருக்கிறார்கள் என்பதை நீ அறிய வேண்டும். எனினும், வைகானசர்கள் {வானப்ரஸ்தர்கள்} ’செல்வத்தைத் தேடாதவனே, தேடுபவனைக் காட்டிலும் மேன்மையானவன்’ என்று அறமுரைப்பதாகச் சொல்லப்படுகிறது[1]. அந்தக் கட்டளையைப் பின்பற்றுபவன் குற்றங்கள் இழைக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.(6,7) வேத விதிகளின் பொருட்டு, (வேள்விகளைச் செய்வதற்காக) மனிதர்கள் பல்வேறு பொருட்களை ஒன்றாகத் திரட்டுகின்றனர். தன் அறிவால் களங்கப்பட்டவன், செல்வத்தைத் தகுந்தோருக்கு அளிக்காமல், தகாதவர்களுக்கு அளிப்பதால், அவன் கருவைக் கொன்ற குற்றத்தை இழைக்கிறான் என்பதை அறியாதிருக்கிறான்[2].(8) தகுந்தவர்களுக்கும், தகாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் கண்டு, முறையாக ஈகைக் கடமையாற்றுவது எளிதானதல்ல. விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, வேள்விக்காகவே செல்வத்தைப் படைத்தான். செல்வத்தைக் கவனிக்கவும், வேள்வியைச் செய்யவும் அவன் மனிதர்களையும் படைத்தான். இதன் காரணமாக ஒருவனுடைய மொத்த செல்வத்தையும் வேள்விக்குப் பயன்படுத்தலாம். இயற்கையின் விளைவாக இன்பமே அதைப் பின்தொடரும்.(10)பெரும் சக்தி படைத்த இந்திரன், மதிப்புமிக்க அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளைச் செய்தே தேவர்கள் அனைவரையும் விஞ்சினான். அவன், அந்த வழிமுறையிலேயே அவர்களின் தலைமைப் பதவியை அடைந்து சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். எனவே, அனைத்தும் வேள்விகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.(11) மான் தோல் உடுத்தியவனான உயர் ஆன்ம மஹாதேவன், சர்வம் என்றழைக்கப்படும் வேள்வியில் {சர்வமேத யாகத்தில்} தன்னையே காணிக்கையாக {ஆகுதியாக} ஊற்றி, தேவர்களில் முதல்வனாகி, அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் விஞ்சி, அச்சாதனையால் அவர்களைவிட மேன்மையடைந்து, பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(12) அவிக்ஷித்தின் மகனான மன்னன் மருத்தன், {வேள்விகளில் கொடுக்கப்படும்} அபரிமிதமான செல்வத்தால் தேவர்கள் தலைவனான சக்ரனையே {இந்திரனையே} வென்றான். அவன் செய்த பெரும் வேள்வியில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன, ஸ்ரீயும் {லட்சுமியும் உடல் கொண்டவளாக} நேரடியாக அங்கே வந்தாள்.(13) மாமன்னன் ஹரிச்சந்திரன், வேள்விகளைச் செய்து, பெரும் தகுதியையும், பெரும் மகிழ்ச்சியையும் ஈட்டினான் என்பதை நீ கேட்டிருக்கிறாய். மனிதனாக இருப்பினும் அவன் தனது செல்வத்தால் சக்ரனையே {இந்திரனையே} வென்றான். வேள்வியில் அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இவையே காரணங்கள்” {என்றார் தேவஸ்தானர்}.(14)

தேவஸ்தானர் அறிவுரை! – சாந்திபர்வம் பகுதி – 21-ஆட்சியேற்று அறம்பயில வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி யுதிஷ்டிரனை அறிவுறுத்திய முனிவர் தேவஸ்தானர்…

தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக இந்திரனால் கேட்கப்பட்டு, பிருஹஸ்பதியால் அவனுக்கு அளிக்கப்பட்ட உரை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(1) பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனநிறைவே உயர்ந்த சொர்க்கம், மனநிறைவே உயர் அருள். மனநிறைவை விட உயர்ந்தது ஏதுமில்லை. மனநிறைவே உயர்ந்த நிலையில் நிற்கிறது.(2) ஆமையானது தனது அங்கங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வதைப் போல ஒருவன் தனது ஆசைகள் அனைத்தையும் அடக்கிக் கொள்ளும்போது, அவனது ஆன்மாவின் இயற்கையான பிரகாசம் வெளிப்படுகிறது.(3)  ஒருவன் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாத போது, எந்த உயிரினமும் அவனிடம் அச்சங்கொள்ளாத போது, அவன் ஆசையையும், வெறுப்பையும் வெல்லும்போது, தனது ஆன்மாவைக் காண்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(4)  செயல், சொல், மனம் ஆகியவற்றால் ஒருவன் எவருக்கும் தீங்கிழைக்க நினைக்காத போது, அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது” என்றார்.(5)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு உயிரினங்கள் எந்த அறத்தைப் பின்பற்றினாலும், அவை அதற்குரிய கனிகளை {பலன்களை} அடைகின்றன. ஓ! பாரதா, இதைக் கருத்தில் கொண்டு விழிப்படைவாயாக[1].(6) சிலர் அமைதியைப் புகழ்கின்றனர், சிலர் விடாமுயற்சியையும், சிலர் அமைதி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டையும் புகழ்கின்றனர். சிலர் வேள்வியைப் புகழ்கின்றனர்[2]; வேறு சிலர் துறவைப் புகழ்கின்றனர். சிலர் கொடைகளையும், வேறு சிலர் அதை ஏற்பதையும் புகழ்கின்றனர்.(7,8) சிலர், (எதிரிகளைக்) கொன்று, வெட்டி, துளைத்து அடையப்படும் அரசுரிமையையும், குடிமக்களைப் பேணுவதையும் புகழ்கிறார்கள்.(9) சிலர் தங்கள் நாட்களை ஓய்வில் கழிப்பதைப் புகழ்கிறார்கள். இவையனைத்தையும் கண்காணித்த கல்விமான்கள்,(10) எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும் அறமே நல்லோரால் மெச்சத்தகுந்தது என்று தீர்மானிக்கின்றனர்[3].தான்தோன்றியான {சுயம்புவான} மனுவால் சொல்லப்படுவது போல, தீங்கிழையாமை, உண்மை நிறைந்த பேச்சு, நீதி, கருணை, தன்னடக்கம்,(11) தன் மனைவியரிடம் (வாரிசுகளை) உண்டாக்கல், இனிமை, பணிவு, பொறுமை ஆகியவற்றைப் பயில்வதே அனைத்து அறங்களிலும் சிறந்ததாகும். எனவே, ஓ! குந்தியின் மகனே, இந்த அறத்தையே நீ கவனமாக நோற்பாயாக.(12) அரசக் கடமைகளின் உண்மைகளை அறிந்த க்ஷத்திரியன் எவனோ, அரசுரிமையே ஏற்று, அனைத்து நேரங்களிலும் தன் ஆன்மாவைக் கட்டுபடுத்தி,  அன்புக்குரியவை, அல்லாதவை ஆகியவற்றைச் சமமாகக் கருதி, வேள்வி விருந்துகளில் எஞ்சியவற்றை உண்டு,(13) தீயோரை அடக்கி, நல்லோரை பேணிக் காத்து, அறத்தின் பாதையில் தன் குடிமக்களை நடைபோடச் செய்து, தானும் அவ்வழியிலேயே நடந்து,(14) தன் மகுடத்தைத் தன் மகனிடம் ஒப்படைத்த பிறகு, காட்டுக்குச் சென்று, காட்டின் பொருட்களை உண்டு, அங்கேயே வாழ்ந்து, வேத விதிகளின்படி சோம்பலனைத்தையும் களைந்த க்ஷத்திரியன் எவனோ,(15) நன்கறியப்பட்ட மன்னர்களின் கடமைகள் அனைத்துக்கும் கீழ்ப்படியும் க்ஷத்திரியன் எவனோ, அவன் இம்மையிலும், மறுமையிலும் அற்புதக் கனிகளை அடைவான் என்பது உறுதியாகும்.

நீ எதைக் குறித்துப் பேசுகிறாயோ அந்த இறுதி விடுதலை {முக்தி} அடைவதற்கரியதாகும். அதைத் தொடர்வதில் பல தடைகள் ஏற்படும்.(16) அத்தகு கடமைகளைப் பின்பற்றி, ஈகையும், தவமும் பயின்று, இரக்க குணத்துடன் கூடி, ஆசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு,(17) நேர்மையாகத் தங்கள் குடிமக்களை ஆட்சி செய்து, பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்காகப் போரிடுபவர்கள் மறுமையில் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(18) ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, இதற்காகவே ருத்திரர்களும், வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யசுகளும், மன்னர்க்கூட்டமும் இவ்வறத்தைப் பின்பற்றுகின்றனர். அறத்தால் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் கடமைகளை எந்த அலட்சியமும் இல்லாமல் பயில்வோர், தங்களுடைய அந்தச் செயல்களின் மூலமே சொர்க்கத்தை அடைகிறார்கள்” என்றார் {தேவஸ்தானர்}.(19)

நோயிலிருந்து விடுபடுவீராக! – சாந்திபர்வம் பகுதி – 22-யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறி, க்ஷத்திரியக்கடமைகளையும், பிராமணக் கடமைகளையும் அவனுக்கு நினைவுறுத்தி, வேள்விகளைச் செய்யுமாறு சொன்ன அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதன் பிறகு அர்ஜுனன், மங்கா புகழ் கொண்டவனும், உற்சாகமற்ற இதயம் கொண்டவனும், தன் அண்ணனுமான மன்னன் யுதிஷ்டிரனிடம், இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! அனைத்து வகைக் கடமைகளையும் அறிந்தவரே, க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று, அடைவதற்கரிதான ஆட்சியுரிமையை அடைந்து, உமது எதிரிகள் அனைவரையும் வென்ற பிறகும், நேர் என் துன்பத்தில் எரிகிறீர்?(2) ஓ! மன்னா, க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை, போரில் மரணமானது, பல்வேறு வேள்விகளைச் செய்வதை விடத் தகுதி வாய்ந்ததாக {புண்ணியம் நிறைந்ததாகக்} கருதப்படுகிறது. க்ஷத்திரியக்கடமைகள் சொல்லப்பட்டிருக்கும் விதிகளில் இஃது அறிவிக்கப்பட்டிருக்கிறது.(3) தவங்கள், துறவு ஆகியவை பிராமணர்களின் கடமைகளாகும். இவையே ({க்ஷத்திரிய மற்றும் பிராமண} இரு வகைகளையும் பீடித்திருக்கும்) மறுமை குறித்த விதியாகும். உண்மையில், ஓ! பலமிக்கவரே, க்ஷத்திரியர்களுக்குப் போர்க்கள மரணமே விதிக்கப்பட்டிருக்கிறது.(4) க்ஷத்திரியர்களின் கடமைகள் மிகவும் கடுமையானவையும், ஆயுதங்களோடு எப்போதும் தொடர்புடையவையும் ஆகும். ஓ! பாரதர்களின் தலைவரே, நேரம் வரும்போது அவர்கள் போர்க்களத்தில் ஆயுதங்கள் மூலம் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(5)

ஓ! மன்னா, க்ஷத்திரியர்கள் பிராமணர்களில் இருந்தே உதித்தவர்கள் என்பதால், ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளை நோற்று வாழ்ந்தாலும், அது நிந்திக்கத்தக்கதல்ல.(6) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, துறவோ, வேள்வியோ, தவங்களோ, பிறரின் செல்வத்தைச் சார்ந்திருப்பதோ க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்படவில்லை.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் கடைமைகள் அனைத்தையும் அறிந்த அற ஆன்மாவாவீர். அனைத்துச் செயல்களிலும் திறன்மிக்கவரும், ஞானியுமான மன்னன்னுமாவீர். இவ்வுலகில் சரியானது மற்றும் தவறானதுக்கிடையில் உம்மால் வேறுபாட்டைக் காணமுடியவில்லை.(8) துக்கத்தால் உண்டான மனத்தளர்வைக் கைவிட்டு, செயல்பாட்டில் பலமான விருப்பம் கொள்வீராக. குறிப்பாக க்ஷத்திரியனின் இதயமானது வஜ்ரத்தைப் போன்று கடுமையானதாகும்.(9) க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று உமது எதிரிகளை வென்ற பிறகு, முட்களற்ற பேரரசை அடைந்த நீர், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, உமது ஆன்மாவை வென்று வேள்விகளைச் செய்வதிலும், ஈகை பயில்வதிலும் ஈடுபடுவீராக.(10)

இந்திரன், பிராமணனாக இருப்பினும், தன் செயல்பாடுகளாக ஒரு க்ஷத்திரியனாகி, எண்ணிக்கையில் எண்ணுற்று பத்து {810} மடங்கு இருந்த பாவிகளான தன் சொந்தங்களுடன் போரிட்டான்.(11) ஓ! ஏகாதிபதி, அவனது அந்தச் செயல்கள் புகழத்தக்கனவும், பாராட்டுக்குத் தகுந்தனவும் ஆகும். நாம் கேள்விப்படுவதன்படியே அவன் தேவர்களின் தலைமைப் பதவியையும் அதன் மூலமே அடைந்தான்.(12) எனவே, ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அந்த இந்திரன் செய்ததைப் போலவே அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, உமது நோயிலிருந்து விடுபடுவீராக.(13) ஓ! க்ஷத்திரியர்களில் காளையே கடந்த காலத்திற்காக இவ்வாறு வருந்தாதீர். கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களால் தூய்மையடைந்து, க்ஷத்திரிய அறத்தின் விதிகளுக்கு ஏற்புடைய உயர்ந்த கதியை அடைந்திருக்கிறார்கள்.(14) எது நடந்ததோ அதுவே நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, விதியானது தடுக்கப்பட இயலாததாகும்” என்றான் {அர்ஜுனன்}”.(15)

சங்கர், லிகிதர் மற்றும் சுத்யும்னன்! – சாந்திபர்வம் பகுதி – 23-திஷ்டிரனிடம் அர்ஜுனனின் வார்த்தைகளை ஆதரித்துப் பேசிய வியாசர்; மன்னர்களின் செங்கோலின் சிறப்பைச் சொல்வதற்காகச் சங்கர், லிகிதர் என்ற இரு தவசிகள் மற்றும் மன்னன் சுத்யும்னன் ஆகியோரின் கதையைச் சொன்னது; குற்றத்திற்கான தண்டனை வழங்கும் மன்னன் நன்னிலை அடைவான் என்றது

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சுருட்டை முடி கொண்ட அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குந்திக்குப் பிறந்த அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} பேச்சற்றவனாக அமைதியாக இருந்தான். பிறகு தீவில் பிறந்தவர் (வியாசர்) இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இனிய யுதிஷ்டிரா, அர்ஜுனனின் வார்த்தைகள் உண்மையானவை. சாத்திரங்கள் தீர்மானிக்கும் உயர்ந்த அறமானது இல்லறக் கடமைகளைச் சார்ந்தே இருக்கிறது. நீ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனாவாய். உனக்காகப் பரிந்துரைக்கப்படும் (இல்லறக்) கடமைகளை முறையாக நோற்பாயாக. இல்லறக் கடமைகளைத் துறந்து காட்டுக்குள் ஓயும் வாழ்வானது உனக்காக விதிக்கப்படவில்லை.(3) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோர் அனைவரும் (தங்கள் வாழ்வாதாரத்தை அடைய) இல்லற வாழ்வை வாழ்வும் மனிதனைச் சார்ந்தே இருக்கின்றனர்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பறவைகள், விலங்குகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஆகியனவும் இல்லற வாழ்வு வாழும் மனிதர்களாலேயே தாங்கப்படுகின்றன. எனவே, அவ்வாழ்வு முறைக்குச் சொந்தமானவனே (பிறர் அனைவரிலும்) மேன்மையானவன் ஆவான்.(5)

நால்வகை வாழ்வு முறைகளிலும், இல்லற வாழ்வே மிகக் கடினமானதாகும். ஓ! பாரத்தா, புலனடக்கம் இல்லா மனிதர்கள் பயில்வதற்குக் கடினமான அந்த வாழ்வு முறையையே நீ நோற்பாயாக.(6) நீ வேதங்கள் அனைத்திலும் நல்ல அறிவைக் கொண்டிருக்கிறாய். பெரும் தவத் தகுதியையும் ஈட்டியிருக்கிறாய். எனவே, உன் மூதாதையரின் நாட்டுச் சுமையை ஓர் எருதைப் போலச் சுமப்பதே உனக்குத் தகுந்ததாகும்.(7) வெற்றியடைவதற்காகத் தவங்கள், வேள்விகள், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கல்வி, துறவு, புலனடக்கம், மனநிறைவு, தனிமையில் வாழ்தல், ஆழ்ந்த தியானம், (பிரம்ம) அறிவு ஆகியற்றை, தங்கள் சிறப்பான முயற்சியால் பிராமணர்களே நோற்க வேண்டும்.(8)

நான் இப்போது உனக்கு க்ஷத்திரியர்களின் கடமைகளைச் சொல்லப் போகிறேன். அவை நீ அறியாதனவல்ல. வேள்வி, கல்வி, முயற்சி {உழைப்பு}, குறிக்கோள்[1],(9) “தண்டக்கோல் {செங்கோல்} தரித்தல், கடுமை, குடிகளைக் காத்தல், வேதங்களில் அறிவு, அனைத்து வகை நோன்புகளையும் பயிலல், நன்னடத்தை, செல்வமீட்டல், தகுந்த மனிதர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை,(10) அரச வகையைச் சேர்ந்தவர்களால் அடையப்பட்டு, நன்றாகச் செய்யப்பட்டால், அவை அவர்களை இம்மையிலும், மறுமையிலும் பாதுகாக்கும் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) ஓ! குந்தியின் மகனே, இவற்றில் தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்தலே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. ஒரு க்ஷத்திரியனுக்குள் பலமும், அந்தப் பலத்திற்குள் தண்டமும் எப்போதும் வசித்திருக்க வேண்டும்.(12) ஓ! மன்னா, நான் சொல்லும் இந்தக் கடமைகள் க்ஷத்திரியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையும், அவர்களது வெற்றியில் பெரும் பங்காற்றுபவையுமாகும். இது தொடர்பாகப் பிருஹஸ்பதி ஒரு வரியைப் பாடியிருக்கிறார்.(13) “எலியை விழுங்கும் பாம்பைப் போல, அமைதியை விரும்பும் ஒரு மன்னனையும், இல்லறத்தில் மிகுந்த பற்றைக் கொண்ட ஒரு பிராமணனையும் பூமி விழுங்கிவிடும்” என்று பாடியிருக்கிறார்.(14) அரசமுனியான சுத்யும்னன், தண்டக்கோலை {செங்கோலை} மட்டுமே தரித்து, பிரசேதசின் மகனான தக்ஷனைப் போல உயர்ந்த வெற்றியை அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்” என்றார் {வியாசர்}.(15)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, பூமியின் தலைவனான சுத்யும்னன் எந்தச் செயல்களால் அந்த உயர்ந்த வெற்றியை அடைந்தான்? அம்மன்னனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(16)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது. கடும் நோன்புகளை நோற்பவர்களாகச் சங்கன் மற்றும் லிகிதன் என இரு சகோதரர்கள் இருந்தனர்.(17) அந்த இரு சகோதரர்களும், அழகிய இரு வசிப்பிடங்களைத் தனித்தனியே கொண்டிருந்தனர். பாஹுதை என்றழைக்கப்படும் ஓடையின் கரையில் அமைந்திருந்த அந்த வசிப்பிடங்கள், மலர்கள் மற்றும் கனிகளை எப்போதும் சுமந்திருக்கும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) ஒரு சமயம், லிகிதர் என்பவர், தமது சகோதரரான சங்கரின் வசிப்பிடத்திற்கு வந்தார். அந்நேரத்தில் ஏதோ காரியத்திற்காகச் சங்கர் தமது ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்.(19) தமது சகோதரரின் ஆசிரமத்திற்கு வந்த லிகிதர் கனிந்த பல கனிகளைப் பறித்தார்.(20) அவற்றை அடைந்த அந்த மறுபிறப்பாள {பிராமண} லிகிதர், மனசாட்சியின் எந்த ஐயவுணர்வும் இன்றி அவற்றை உண்டார். அப்படி அவர் உண்டு கொண்டிருந்தபோது, சங்கர் தமது ஓய்வில்லத்திற்கு வந்தார்.(21)

அவ்வாறு உண்டுகொண்டிருக்கும் தமது சகோதரனைக் கண்ட சங்கர், அவனிடம், “இக்கனிகளை எங்கே நீ அடைந்தாய்? எக்காரணத்திற்காக இவற்றை உண்கிறாய்?” என்று கேட்டார்.(22) தமது அண்ணனை அணுகி, அவரை வணங்கிய லிகிதர், சிரித்துக் கொண்டே அவரிடம், “நான் இவற்றை இந்த ஓய்வில்லத்திலேயே அடைந்தேன்” என்றார்.(23) பெரும் சினத்தில் நிறைந்த சங்கர் அவரிடம், “இக்கனிகளை எடுத்ததால் நீ திருட்டுக் குற்றத்தை இழைத்திருக்கிறாய்.(24) செல்வாயாக, மன்னனிடம் சென்று, நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வாயாக. அவனிடம் {மன்னனிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, எனக்குக் கொடுக்கப்படாததை அடைந்து குற்றத்தை இழைத்துவிட்டேன்.(25) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என்னைக் கள்வனாக அறிந்து கொண்டு, உன் வகைக்கான கடமையை நோற்று, கள்வனுக்கான தண்டனையை எனக்கு வழங்குவாயாக” எனச் சொல்” என்றார் {சங்கர்}.(26)

இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான லிகிதர், தமது அண்ணனின் ஆணையின் பேரில் மன்னன் சுத்யும்னனிடம் சென்றார்.(27) மன்னன் சுத்யும்னன், லிகிதர் வந்திருக்கிறார் என்பதை வாயில்காப்போரிடம் இருந்த கேட்டு, (அந்தத் தவசியை) வரவேற்பதற்காகத் தன் அமைச்சர்களுடன் சென்றான்.(28) அவரைச் சந்தித்த அம்மன்னன், கடைமைகளை அறிந்த மனிர்கள் அனைவரிலும் முதன்மையான அவரிடம், “ஓ! மரியாதைக்குரியவரே, உமது வருகையின் காரணத்தைச் சொல்வீராக. அஃது ஏற்கனவே நிறைவடைந்ததாகக் கருதுவீராக” என்றான்.(29) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள தவசி {லிகிதர்}, அந்தச் சுத்யும்னனிடம், “நீ அதை நிறைவேற்றுவாய் என்று முயலில் உறுதியளிப்பாயாக. நான் சொன்ன பிறகு, அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(30) ஓ! மனிதர்களில் காளையே, என் அண்ணனால் எனக்குக் கொடுக்கப்படாத சில கனிகளை நான் உண்டேன். ஓ! ஏகாதிபதி, அதற்காக எந்தத் தாமதமும் இல்லாமல் என்னைத் தண்டிப்பாயாக” என்றார்.(31)

சுத்யும்னன் {தவசி லிகிதரிடம்}, “மன்னன் தண்டக்கோலைத் தரிக்கத் தகுந்தவன் என்று கருதப்பட்டால், ஓ! பிராமணர்களில் காளையே, மன்னிப்பு வழங்குவதற்கும் அவன் தகுந்தவனே.(32) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது செயலால் தூய்மையடைந்த நீர், மன்னிக்கப்பட்டதாகக் கருதுவீராக. {எனவே}, உமது வேறு விருப்பங்களை இப்போது எனக்குச் சொல்வீராக. அந்த உமது ஆணைகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று பதிலுரைத்தான்”.(33)

வியாசர் தொடர்ந்தார், “மறுபிறப்பாள தவசியான லிகிதர், அந்த உயர் ஆன்ம மன்னனால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டாலும், வேறு எந்த உதவியையும் அவனிடம் கேட்கவில்லை {தமது கோரிக்கையிலேயே உறுதியாக இருந்தார்}.(34) பிறகு அந்தப் பூமியின் ஆட்சியாளன் {சுத்யும்னன்}, அந்த உயர் ஆன்ம லிகிதரின் இரு கரங்களையும் அறுத்தான். பின்னவர் {லிகிதர்} அந்தத் தண்டனையை ஏற்று, அங்கிருந்து சென்றார்.(35) தமது அண்ணன் சங்கரிடம் திரும்பிய லிகிதர், பெரும் துன்பத்துடன், “(செய்த குற்றத்திற்காக) முறையாகத் தண்டிக்கப்பட்ட இந்த இழிந்தவனை இப்போது மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றார்.(36)

சங்கர் {லிகிதரிடம்}, “ஓ! கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னிடம் கோபங்கொள்ளவுமில்லை, நீ எனக்குத் தீங்கிழைக்கவும் இல்லை. எனினும், உன் அறம் தவறியது. அந்த அவலநிலையில் இருந்து நான் உன்னை மீட்டேன்.(37) பாஹுதை ஆற்றுக்குத் தாமதமின்றிச் சென்று, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையாக நீர்க்காணிக்கை செலுத்தி {தர்ப்பணஞ்செய்து} அவர்களை நிறைவு கொள்ளச் செய்து, இனி ஒருபோதும் உன் இதயத்தைப் பாவத்தில் நிலைக்கச் செய்யாதிருப்பாயாக[2]” என்றார்.(38)

சங்கரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட லிகிதர், அந்தப் புனித ஓடையில் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, நீர்க்கடனைச் செலுத்த தொடங்கினார்.(39) அப்போது, அவரது {லிகிதரின்} தோள்களின் நுனிப்பகுதியில் இரு தாமரைகளுக்கு ஒப்பான இரு கரங்கள் தோன்றின. ஆச்சரியத்தில் நிறைந்த அவர் {லிகிதர்}, தமது தமையனிடம் {சங்கரிடம்} வந்து, தன்னிரு கரங்களையும் அவருக்குக் காட்டினார்.(40) சங்கர் அவரிடம் {லிகிதரிடம்}, “இவையாவும் என் தவங்களின் மூலம் அடையப்பட்டன. இதில் ஆச்சரியங்கொள்ளாதே. முன்னறிவே இங்கே கருவியாக இருக்கிறது” என்றார்.(41)

லிகிதர் {சங்கரிடம்}, “ஓ! பெரும் காந்தி கொண்டவரே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது தவங்களின் சக்தி இத்தகையதாக இருக்கையில், முதலிலேயே என்னை ஏன் நீர் தூய்மையாக்கவில்லை?” என்று கேட்டார்.(42)

சங்கர் {லிகிதரிடம்}, “நான் வேறு வகையில் செயல்படக்கூடாது. நான் தண்டிப்பவனல்ல. (உன்னைத் தண்டித்த) ஆட்சியாளனும், நீயும், பித்ருக்களுடன் சேர்ந்து தூய்மையடைந்தீர்கள்” என்றார்”.(43)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரா}, அம்மன்னன் {சுத்யும்னன்}, தன் செயலால் மேன்மையடைந்து, தலைவன் தக்ஷனைப் போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(44) குடிகளை ஆள்வதே க்ஷத்திரியர்களின் கடமையாகும். ஓ! ஏகாதிபதி, வேறு எதுவும் அவர்களுக்குத் தவறான பாதையாகவே கருதப்படும். உன் இதயத்தைத் துயரில் நிலைகொள்ளச் செய்யாதே.(45) கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, உன் சகோதரனின் இந்த நல்ல வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! மன்னா, தண்டக்கோல் {செங்கோல்} தரிப்பதே மன்னர்களின் கடமையாகும்; தலையை மழித்துக் கொள்வது அவர்களுக்கான கடமையல்ல” {என்றார் வியாசர்}”.(46)

மன்னன் ஹயக்ரீவன்! – சாந்திபர்வம் பகுதி – 24-மன்னனின் கடமைகளை யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன வியாசர்; ஹயக்ரீவனின் கதையைச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் தவசியான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, மீண்டும் குந்தியின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்},(1) “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரா, அபரிமிதமான சக்தி கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான உனது தம்பியர் காடுகளில் வசித்திருந்தபோது பேணி வளர்த்த விருப்பங்களை அடையட்டும். ஓ! பிருதையின் மகனே, நகுஷனின் மகனான (மற்றொரு) யயாதியைப் போல இந்தப் பூமியை நீ ஆட்சி செய்வாயாக.(2,3) முன்பு காட்டில் வசித்துத் தவம் செய்து கொண்டிருந்தபோது பேரிடர் உங்களுடையதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பேரிடர் முடிந்துவிட்டது. எனவே, சிலகாலம் இன்புற்றிருப்பாயாக.(4) ஓ! பாரதா, சிலகாலத்திற்கு, அறத்தகுதி, செல்வம் மற்றும் இன்பத்தை உன் தம்பிகளோடு சேர்ந்து ஈட்டிபிறகு நீ காட்டுக்கு ஓயச் செல்லலாம்.(5)

ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, உன்னிடம் இரந்து கேட்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்கு நீ பட்டிருக்கும் கடனிலிருந்து முதலில் விடுபடுவாயாக. ஓ! குந்தியின் மகனே, பிறகு நீ பிற வாழ்வுமறைகள் அனைத்தையும் பயிலலாம்.(6) ஓ! குருகுலத்தின் மகனே, சர்வமேதம் மற்றும் அஸ்வமேதம் ஆகிய வேள்விகளை நீ செய்வாயாக. ஓ! ஏகாதிபதி, நீ மறுமையில் உயர்ந்த கதியை அடைவாய்.(7) ஓ! பாண்டுவின் மகனே, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடை அளிக்கும் பெரும் வேள்விகளில் உன் தம்பிகளையும் நிறுவச் செய்து பெரும் புகழை அடைவாயாக.(8) ஓ! மனிதர்களில் புலியே, குருக்களில் சிறந்தவனே, ஒரு பழமொழி இருக்கிறது. ஓ! மன்னா, அதன்படி நடந்தால் நீ அறத்தின்கண் பிறழமாட்டாய் என்பதால் அதைக் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, ஓ! மனிதர்களின் மன்னா, போரிட்டு வெற்றியடைந்து நாட்டைப் பெற்றவனுடைய அறத்தை அறமறிந்தோர் தீர்மானித்திருக்கின்றனர்[1].(10)ஒரு மன்னன், இடம் மற்றும் நேரம் ஆகிய கருதுகோள்களால் வழிநடத்தப்பட்டு, சாத்திரங்களைச் சார்ந்து ஒரு புரிதலை அடைந்து, பெரும் எண்ணிக்கையிலான கொள்ளையர்களைத் தண்டித்தாலும்கூட அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்[2].(11) எந்த மன்னன், ஆறில் ஒரு பங்கை {16%} வரியாகப் பெற்றும், தன் நாட்டைக் காக்காமல் இருக்கிறானோ, அவன் தன் நாட்டின் {நாட்டு மக்களின்} பாவங்களில் நான்கில் ஒரு பங்கை {25%} அடைகிறான்.(12) எதன் மூலம் ஒரு மன்னன் அறத்தின் கண் பிறழமாட்டேன் என்பதையும் கேட்பாயாக. சாத்திரங்களை மீறுவதால் ஒருவன் பாவமிழைக்கிறான். அதே வேளையில் அதற்குக்கீழ்ப்படிபவன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(13) எந்த மன்னன், சாத்திரங்களின் அடிப்படையிலான அறிவால் வழிநடத்தப்பட்டு, காமம் மற்றும் கோபத்தை அலட்சியம் செய்து, தன் குடிமக்கள் அனைவரிடமும் ஒரு தந்தையைப் போல வேறுபாடில்லாமல் நடந்து கொள்வானோ, அவன் ஒருபோதும் பாவமிழைக்கமாட்டான்.(14) ஓ! பெருங்காந்தி கொண்டவனே, ஒரு மன்னன் விதியால் பீடிக்கப்பட்டு, ஒரு செயலை நிறைவேற்றுவதில் தவறுவானென்றால், அத்தகு தோல்வியானது மீறல் என்று அழைக்கப்படாது.(15)பலம், கொள்கை ஆகியவற்றால் அந்த மன்னன் தன் எதிரிகளை அடக்க வேண்டும். அவன் தன் நாட்டில் பாவம் இழைக்க அனுமதிக்காமல், அறம் பயில வழிவகைச் செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, துணிச்சல்மிக்க மனிதர்கள், தங்கள் நடைமுறைகளில் மரியாதைக்குரியவர்களாக இருப்போர், தங்கள் செயல்களில் நல்லோனாக இருப்போர், கல்வியறிவு படைத்தோர், வேத உரைகள் மற்றும் சடங்குகளை அறிந்த பிராமணர்கள், ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும்.(17) பொருத்தமானவற்றைத் தீர்மானிப்பதிலும், அறச்செயல்களை நிறைவேற்றுவதிலும், பெருக் கல்வியறிவு படைத்தோர் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும். மதிநுட்பம் நிறைந்த ஒரு மன்னன், எவ்வளவுதான் சாதித்தவனாக இருப்பினும் ஒரே ஒரு தனிமனிதன் மீது ஒரு போதும் நம்பிக்கை வைக்க மாட்டான்.(18) தன் குடிகளைப் பாதுகாக்காதவனும், அடங்காத ஆசைகளைக் கொண்டவனும், போலித் தன்மை நிறைந்தவனும், அகந்தை மற்றும் கெட்ட நோக்கம் கொண்டவனுமான ஒரு மன்னன், பாவம் இழைத்தவனாகக் கொடுங்கோன்மைக்கான நிந்தனையை ஈட்டுகிறான்.(19) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னனின் குடிமக்கள், பாதுகாப்பை அடையாமல், தேவர்களால் பீடிக்கப்பட்டு, கள்வர்களால் வீழ்த்தப்பட்டால், அந்தப் பாவம் அனைத்தும் மன்னனையே களங்கப்படுத்தும்.(20)

ஓ! யுதிஷ்டிரா, ஆழ்ந்து ஆய்வு செய்து, நல்லறிவுரை வழங்கவல்ல மனிதர்களோடு ஆலோசித்த பிறகு, முழு இதயத்தோடு செய்யப்படும் ஒரு செயலில் எந்தப் பாவமும் சேராது.(21) விதியின் மூலமாக நமது பணிகள் தோல்வியோ, வெற்றியோ அடையலாம். எனினும், முயற்சி செய்யும் மன்னனை பாவம் தீண்டாது.(22) ஓ! மன்னர்களில் புலியே, ஹயக்ரீவன் என்ற பெயரில் இருந்த ஒரு பழங்கால மன்னனுக்கு என்ன நடந்தது என்ற கதையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! பாண்டுவின் மகனே, களங்கமில்லா செயல்பாடுகளைக் கொண்ட வீர ஹயக்ரீவன், போரில் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்ற பிறகு, தன் தரப்பில் ஒரு தொண்டனும் இல்லாத நிலையில் கொல்லப்பட்டு வீழ்ந்த கதையை உனக்குச் சொல்கிறேன்.(24) தன் எதிரிகளைத் தடுக்க என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்து, மனிதர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மையான வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய ஹயக்ரீவன், அவன் செய்த போர்களால் பெரும் புகழை அடைந்து இப்போது சொர்க்கத்தில் பேரருளை அடைந்து இன்புற்று இருக்கிறான்.(25)

(மன்னர்களுக்கான) கடமைகளை எப்போதும் கவனமாகச் செய்து வந்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், கள்வர்களின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், அவர்களோடு துணிச்சலாகப் போரிட்டு, போர்க்களத்தில் தன் உயிரை விட்டு, தன் வாழ்வின் நோக்கத்தை அடைந்து இப்போது சொர்க்கத்தின் பேரருளில் இன்புற்றிருக்கிறான்.(26) வில்லே அவனது (வேள்வி) கம்பாகவும் {ஸ்தம்பமாகவும்}, வில்லின் நாண்கயிறே, தனது பலிகளைக் கட்டும் கயிறாகவும் இருந்தன. கணைகள் சிறு கரண்டியாகவும், வாளானது பெரிய கரண்டியாகவும், குருதியே அவன் ஊற்றிய தெளிந்த நெய்யாகவும் இருந்தன. தேரானது வேள்விப்பீடமாகவும், போரில் அவன் உணர்ந்த கோபமே நெருப்பாகவும், அவனது வாகனத்தில் பூட்டப்பட்ட நான்கு முதன்மையான குதிரைகளே, நான்கு ஹோத்ரிகளாகவும் இருந்தன.(27) அந்த வேள்வி நெருப்பில் தன் எதிரிகளைக் காணிக்கையாக ஊற்றிய பிறகு, வேள்வியின் முடிவில் தன் உயிரையே அதில் ஊற்றியவனும், மன்னர்களில் சீற்றமிக்கச் சிங்கமுமான அந்த ஹயக்ரீவன், பாவங்களில் இருந்து விடுபட்டு, இப்போது, தேவர்களின் உலகங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(28) கொள்கையாலும், நுண்ணறிவாலும் தன் நாட்டைப் பாதுகாத்தவனும், செருக்கற்றவனும், பெரும் மனோபலம் கொண்டவனும், வேள்விகளைச் செய்வதைப் பழக்கமாகக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், தன் புகழை உலகமனைத்திலும் நிறைத்து இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(29)

வேள்விகள் செய்வதைச் சார்ந்த தகுதியையும், மனித காரியங்களில் தொடர்புடைய அனைத்து வகைத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைந்த அவன், தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, செருக்கில்லா வீரத்துடன் இந்தப் பூமியை ஆட்சி செய்தான். அதன் காரணமாக, உயர்ந்த நல்லான்மாவான ஹயக்ரீவன் தேவர்களின் உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(30) கல்வியறிவைக் கொண்டவனும், துறவை பயின்றவனும், நம்பிக்கையால் தூண்டப்பட்டவனும், நன்றியுணர்வு நிறைந்தவனும், பல்வேறு வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {ஹயக்ரீவன்}, மனிதர்களின் இவ்வுலகை விட்டு, நல்லோருக்கும் ஞானியருக்கும், ஏற்புடைய பழக்க வழக்கங்களைக் கொண்டோருக்கும், போரில் தங்கள் உயிரைவிடத் தயாராக இருப்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதிகளை வென்றான்.(31) வேதங்களையும், பிற சாத்திரங்களையும் நன்கு அறிந்து, தன் நாட்டை முறையாக ஆண்டு, நால்வகையினரையும் முறையாகத் தங்கள் கடமைகளை நோற்கச் செய்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன் இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அம்மன்னன், பல போர்களை வென்று, தன் குடிமக்களைப் பேணிக் காத்து, வேள்விகளின் சோமச்சாற்றைப் பருகி, முதன்மையான பிராமணர்களைக் கொடைகளால் நிறைவு செய்து, தன் ஆளுகையின் கீழ் இருந்தோரிடம் தண்டக்கோலை {செங்கோலை} நீதியுடன் செலுத்தி, இறுதியாகப் போரில் தன் உயிரை விட்டு இப்போது சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.(32) அவனது வாழ்வு அனைத்துப் பாராட்டுக்கும் தகுந்ததாகும். அனைத்து பாராட்டுக்கும் தகுந்த அதைக் கல்விமான்களும் நீதிமான்களும் பாராட்டுகின்றனர். சொர்க்கத்தை வென்று, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் பகுதிகளை அடைந்த அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி, இவ்வாறே தனது நற்செயல்களால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டான்” என்றார் {வியாசர்}.(33)

காலத்தின் வலிமை! – சாந்திபர்வம் பகுதி – 25-பெண்களின் நிலை கண்டு தன் மனம் அமைதியடையவில்லை என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; காலமே அனைத்திற்கும் காரணம், காலமே வலிமைமிக்கது, காலம் ஒன்றே சாதிக்கும் வழிமுறை என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; இன்பதுன்பங்கள் ஏற்படும் வகையை உணர்த்தி, எவன் மகிழ்ச்சியடைவான் என்பதைச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்டும், கோபமாக இருக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி, பின்வரும் பதிலை அளித்தான்.(1)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “பூமி சார்ந்த இந்த அரசுரிமை, (அதைத் தொடர்ந்த) பல்வேறு இன்பங்கள் ஆகியன என் இதயத்திற்கு எந்த மகிழ்சியையும் அளிக்கத் தவறுகின்றன. மறுபுறம், (என் சொந்தங்களை இழந்ததன் விளைவால் உண்டான) இந்தக் கடும் துயரம் இதயத்தையின் மையத்தையே உண்கிறது.(2) ஓ! தவசியே, வீரக் கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்த இந்தப் பெண்களின் ஒப்பாரியைக் கேட்டு, நான் அமைதியை அடைவதில் தவறுகிறேன்” என்றான்”.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் ஞானம் கொண்டவரும், வேதங்களை உள்ளார்ந்த பொருளுடன் அறிந்தவரும், அறவோருமான வியாசர், (பின்வரும் வார்த்தைகளை) யுதிஷ்டிரனிடம் சொன்னார்.(4)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “தன் செயல்களாலோ, வேள்விகள் மற்றும் வழிபாட்டாலோ எந்த மனிதனும் எதையும் அடைந்துவிட முடியாது. எந்த மனிதனும் தனது சக மனிதனுக்கு எதையும் தந்துவிட முடியாது. மனிதன் அனைத்தையும் காலத்தின் மூலமே அடைகிறான். விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, கால ஓட்டத்தையே அதை அடையும் வழிமுறையாக அமைத்திருக்கிறான்.(5) காலம் சாதகமாக இல்லாவிட்டால், வெறும் புத்தி, அல்லது சாத்திரங்களால் மட்டுமே மனிதன் பூமி சார்ந்த எந்த உடைமையையும் அடைந்துவிட முடியாது. சில வேளைகளில் அறியாமை கொண்ட மூடனே கூடச் செல்வமடைவதில் வெல்கிறான். அனைத்து செயல்களின் நிறைவுக்கும் காலமே பயனைத் தரும் வழிமுறையாக இருக்கிறது.(6) ஆபத்துக் காலங்களில், அறிவியலோ, மந்திரங்களோ, மருந்துகளோ எந்தக் கனியையும் விளைவிக்காது. எனினும் வளம் நிறைந்த காலங்களில் அதே பொருட்களே, சரியாகச் செயல்படுத்தப்பட்டு, எதிர்பார்க்கும் பலனையும், வெற்றியையும் தருகிறது.(7)

காலத்தாலேயே காற்றுப் பலமாக வீசுகிறது; காலத்தாலேயே மேகங்கள் மழைநிறைந்தவையாகின்றன; காலத்தாலேயே பல்வேறு வகைத் தாமரைகளால் குளங்கள் அலங்கரிக்கப்படுகின்றன; காலத்தாலேயே காட்டிலுள்ள மரங்கள் மலர்களால் நிறைகின்றன.(8) காலத்தாலேயே இரவுகள் இருளாகவோ {தேய்பிறையாகவோ}, ஒளியாகவோ {வளர்பிறையாகவோ} ஆகின்றன. காலத்தாலேயே நிலவும் முழுமையடைகிறது. அதற்கான காலம் வரவில்லையெனில், மரங்கள் மலர்களையோ, கனிகளையோ தாங்குவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில், ஆற்றின் ஓடைகள் கடுமையடைவதில்லை.(9) பறவைகள், பாம்புகள், மான்கள், யானைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும் அவற்றுக்கான காலம் வரவில்லையெனில் ஒருபோதும் தூண்டப்படுவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில் பெண்கள் கருத்தரிப்பதில்லை. காலத்தாலேயே குளிர், கோடை மற்றும் மழைக்காலங்கள் நேர்கின்றன.(10) அதற்கான காலம் வரவில்லையெனில் ஒருவரும் பிறப்பதுமில்லை, எவரும் இறப்பதுமில்லை. காலம் வரவில்லையெனில், குழந்தை, பேசும் சக்தியை அடைவதில்லை. காலம் வரவில்லையெனில் எவனும் இளமையடைவதில்லை. காலத்தாலேயே, தூவப்படும் விதைகள் முளைக்கின்றன.(11) காலம் வரவில்லையெனில், அடிவானுக்கு மேலே சூரியன் தோன்றாது, அல்லது அதற்கான காலம் வரவில்லையெனில், அஸ்த மலைகளையும் அவன் அடையமாட்டான். அதற்கான காலம் வரவில்லையெனில், நிலவானது தேயவோ வளரவோ செய்யாது, பெருங்கடலிலும் உயரமான அலைகள் உயர்ந்த அடங்காது.(12)

ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில், மன்னன் சேனஜித்தனின் துயரம் சொல்லப்படுகிறது.(13) காலத்தில் தடுக்கப்பட முடியாத போக்கு, இறந்து பிறக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களும் காலத்தாலேயே கனிகின்றன, அல்லது அழிகின்றன.(14) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிலர், சில மனிதர்களைக் கொல்கிறார்கள், மேலும் அந்தக் கொலையாளிகளும், பிறரால் கொல்லப்படுகிறார்கள். இதுவே உலகின் மொழியாகும். எனினும், உண்மையில், எவரும் எவரையும் கொல்வதில்லை.(15) சிலர், மனிதர்கள் (தங்கள் சக மனிதர்களைக்) கொல்வதாக நினைக்கின்றனர். உண்மையோ, அனைத்து உயிரினங்களின் பிறப்பும், அழிவும், விதிக்கப்பட்ட படியே அவற்றின் இயல்பின் விளைவாலேயே ஏற்படுகின்றன.(16) ஒருவனுடைய செல்வம் இழக்கப்படும்போதோ, ஒருவனுடைய மனைவி, அல்லது மகன், அல்லது தந்தை இறக்கும்போதோ, “ஐயோ, இஃது என்ன துயரம்” என்று சொல்லி, ஒருவன் அழுது கொண்டே இருந்தால், அந்தத் துயரம் அதிகரிக்கவே செய்யும்.(17)

மூடனைப் போல நீ ஏன் துயரில் ஈடுபடுகிறாய்? துயரப்படுபவர்களுக்காக நீ ஏன் வருந்துகிறாய்[1]? அச்சமானது அச்சத்தையே கொடுப்பதைப் போல, துயரத்தில் ஈடுபடுவதால் அஃது அதிகரிப்பதைப் பார்.(18) இந்த உடலானது எனதில்லை. இவ்வுலகில் உள்ள எதுவும் எனதில்லை. அல்லது, இவ்வுலகில் உள்ள பொருட்கள் எந்த அளவுக்குப் பிறருக்குச் சொந்தமோ அதே அளவுக்கே எனக்கும் சொந்தமாகும். இதைக் காணும் ஞானியர், இதில் மயக்கமடைவதில்லை.(19) கவலை அடைவதற்கு ஆயிரங்காரணங்களும், மகிழ்ச்சி அடைவத்றகு நூறு காரணங்களும் உண்டு. அறியாமை கொண்டோரையே இவை தினமும் பாதிக்கச் செய்கின்றனவேயொழிய ஞானியரையல்ல.(20) இவையே, காலத்தின் ஓட்டத்தில், பற்று, அல்லது வெறுப்பின் பொருட்களாகி, (சக்கரத்தைப் போலச்) சுழலும் அருளாகவோ, துயரமாகவோ பாதிக்கப்படும் உயிரினங்களுக்குத் தோன்றுகின்றன.(21)இவ்வுலகில் கவலை மட்டுமே உண்டு, மகிழ்ச்சியில்லை. இதன்காரணமாகவே கவலை மட்டுமே உணரப்படுகிறது. உண்மையில், ஆசை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே இந்தக் கவலை உதிக்கிறது, கவலை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே மகிழ்ச்சி உதிக்கிறது.(22) இன்பத்திற்குப் பிறகு கவலையும், அதன் பிறகு இன்பமும் நேர்கின்றன. ஒருவன் எப்போதுமே கவலையையோ, எப்போதுமே மகிழ்ச்சியையோ அடைவதில்லை.(23) மகிழ்ச்சி எப்போதுமே கவலையிலேயே முடிவடைகிறது, சில வேளைகளில் அது கவலையில் இருந்தும் உண்டாகிறது. எனவே, அழிவில்லா {நிலையான} மகிழ்ச்சியை விரும்புபவன், {மகிழ்ச்சி, கவலை ஆகிய} அந்த இரண்டையுமே கைவிட வேண்டும்.(24) இன்பம் தீர்ந்ததும் கவலை எழுகிறது, கவலை தீர்ந்ததும் மகிழ்ச்சி எழுகிறது எனும்போது ஒருவன், (பாம்பால் கடிபட்ட) ஒருவனுடைய உடலின் அங்கத்தைக் கைவிடுவதைப் போல, அவன் எதனில் இருந்து கவலையையோ, கவலையால் வளர்க்கப்படும் இதய எரிச்சலையோ, தன் கவலையின் வேரையோ அடைகிறானோ அதைக் கைவிட வேண்டும்.(25)

இன்பமோ, துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ எது வந்தாலும், அது பாதிக்கப்படாத இதயத்துடன் தாங்கிக் கொள்ளப்பட வேண்டும்.(26) ஓ! இனியவனே, உன் மனைவியர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்புடையதைச் செய்வதில் இருந்து நீ சிறிதளவேகூட விலகினாலும், யார் எவருடையவர்? ஏன் அப்படி? எதற்காக? என்பதை நீ அப்போது அறிந்து கொள்வாய்.(27) பெரும் மூடர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும் இங்கேயே மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனினும், இடைப்பட்ட நிலையை அடைபவர்களே இங்கே துன்பத்தை அடைகிறார்கள்.(28) ஓ! யுதிஷ்டிரா, பெரும் ஞானியும், இவ்வுலகில் எது நல்லது, அல்லது தீயது என்பதையும், கடமைகளையும், இன்பதுன்பங்களையும் அறிந்தவனுமான சேனஜித் இதையே சொன்னான்.(29) அடுத்தவரின் துயருக்காக வருந்துபவன் ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. துயருக்கு ஓர் எல்லையே கிடையாது, துயரம் மகிழ்ச்சியிலிருந்தே எழுகிறது.(30) இன்பம், துன்பம், செழிப்பு, ஆபத்து, ஈட்டல், இழப்பு, மரணம், வாழ்வு ஆகியன அதற்குரிய காலங்களில் உயிரினங்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றன. அமைதியான ஆன்மா கொண்ட ஞானியர் இதன் காரணமாகவே மகிழ்ச்சியில் திளைக்கவோ, கவலையில் தளரவோ மாட்டார்கள்.(31)

போரில் ஈடுபடுவதே வேள்வி என ஒரு மன்னனுக்குச் சொல்லப்படுகிறது; தண்ட அறிவியலை {தண்டநீதியை} உரிய முறையில் நோற்பதே அவனது யோகமாகும்; தக்ஷிணையின் வடிவில் வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வக் கொடையே அவனது துறைவாகும். இவை அனைத்தும் ஒருவனைப் புனிதப்படுத்தும் செயல்பாடுகளாகக் கருதப்பட வேண்டும்.(32) நுண்ணறிவுடனும், கொள்கையுடனும் நாட்டை ஆட்சி செய்து, செருக்கைக் கைவிட்டு, வேள்விகளைச் செய்து, அனைத்தையும், அனைத்து மனிதர்களையும் அன்புடனும் பாரபட்சமின்றியும் காணும் ஓர் உயர் ஆன்ம மன்னன், தன் இறப்புக்குப் பிறகு, தேவர்களின் உலகில் விளையாடுவான்.(33) போர்களை வென்று, தன் நாட்டைக் காத்து, சோமச்சாற்றைப் பருகி, தன் குடிமக்களை முன்னேறச் செய்து, தண்டக்கோலை நீதியுடன் தரித்து, இறுதியாகப் போரில் தன்னுடலைக் கைவிடும் ஒரு மன்னன் சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவிக்கிறான்.(334) வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் அனைத்தையும் முறையாககப் பயின்று, முறையாக நாட்டைக் காத்து, நான்வகை மனிதர்களையும் தங்கள் வகைக்குரிய கடமைகளைச் செய்யச் செய்யும் ஒரு மன்னன், புனிதமடைந்தவனாக இறுதியில் சொர்க்கத்தில் விளையாடுகிறான்.(35) எவனுடைய நடத்தையானது, அவனது இறப்பிற்குப் பிறகு, நகர மற்றும் நாட்டுவாசிகளாலும், அவனது அமைச்சர்கள் மற்றும் நண்பர்களாலும் கொண்டாடப்படுகிறதோ அவனே மன்னர்களில் சிறந்தவனாவான்” என்றார் {வியாசர்}”.(36)

செல்வத்தின் களங்கங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 26-தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுபவர்கள் யார்? அறவோர் யார்? சூரியனின் தென் பாதை மற்றும் வட பாதை; வடபாதையின் சிறப்பு; மனநிறைவின் உயர்வு; பிரம்மம் மற்றும் பிரம்ம நிலை; செல்வத்தின் தூண்டல்; செல்வத்தின் பயனற்ற நிலை; ஈகையறம் ஏன் கடினமானது? செல்வத்தின் களங்கங்கள் ஆகியவற்றை அர்ஜுனனுக்குச் சொல்லும் யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இது தொடர்பாக உயர் ஆன்ம யுதிஷ்டிரன், அறிவு நிறைந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்:(1) {அவன்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ! தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ! தனஞ்சயா, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் முனிவர்களையும், உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் இருப்போரையும் உண்மையில் அறவோராக எப்போதும் நீ கருதவேண்டும்.(5)

ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்பு கொண்டோரைச் சார்ந்தே நமது செயல்கள் அனைத்தும் இருக்கின்றன[1]. ஓ! பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ! பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ! தனஞ்சயா, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போர், வேத கல்வி, வேள்விகள், புலனடக்கம் போன்ற கடுமையான செயல்களைச் செய்வதால்,(8) ஒருவன் சூரியனின் தென் பாதையின் மூலமாகச் சொர்க்கத்துக்குச் செல்கிறான். (வேதத்தின் படியான) செயல்களைச் செய்வோர் அந்தப் பகுதிகளுக்கே செல்வார்கள் என்று நான் முன்பு சொல்லியிருக்கிறேன்.(9) எனினும், வடபாதையில், யோக தவங்களில் அர்ப்பணிப்புடையோர் பயணிப்பதை நீ காண்பாய். அழிவில்லாத பிரகாசமான அந்த உலகங்களுக்குச் செல்லும் அந்தப் பாதையே யோகம் செய்யும் மனிதர்களுக்குச் சொந்தமானதாகும்.(10)

இவை இரண்டிலும், வட பாதையே புராணங்களை அறிந்தோரால் மெச்சப்படுகிறது. மனநிறைவின் மூலமே ஒருவர் சொர்க்கத்தை அடைகிறான் என்பதை நீ அறிய வேண்டும். மனநிறைவிலிருந்தே பேரின்பம் உதிக்கிறது.(11) மனநிறைவைவிட உயர்ந்தது ஏதுமில்லை. கோபம் மற்றும் இன்பத்தைக் கட்டுப்படுத்திய ஒரு யோகிக்கு, மனநிறைவே உயர்ந்த புகழும், வெற்றியுமாகும்.(12) இது தொடர்பாக யயாதியின் பழைய உரையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. இந்த உரையைக் கேட்கும் ஒருவன், தன் அவையங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் விருப்பங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வான்.(13) ஒருவன் எதனிடமும், எதனாலும் அச்சமடையாதபோதும், ஒருவன் எந்த ஆசையும், வெறுப்பும் கொள்ளாதபோதும், அவன் பிரம்ம நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(14) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் செயலாலோ, சிந்தையாலோ, சொல்லாலோ தீங்கிழையாதிருக்கும்போது, அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(15)

ஒருவன் செருக்கையும், மடமையையும் கட்டுப்படுத்தி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டால், ஒளிபொருந்திய ஆன்மா கொண்ட அந்தப் பக்திமான், தனி இருப்பை அழித்த நிலையான முக்தியை அடையத் தகுந்தவனாகிறான்.(16) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இப்போது நான் உனக்குச் சொல்லப் போவதை, குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சிலர் அறத்தையும், சிலர் நன்னடத்தையையும், சிலர் செல்வத்தையும் விரும்புகின்றனர்.(17) ஒருவன் (அறத்தை அடையும் வழிமுறையாக) செல்வத்தை விரும்பலாம். எனினும், அத்தகு விருப்பத்தையும் கைவிடுவதே அவனுக்குச் சிறந்ததாகும்[2]. செல்வத்துடன் பல களங்கங்கள் இணைந்திருக்கின்றன, அதன் விளைவாக அந்தச் செல்வத்தால் செய்யப்படும் அறச்செயல்களிலும் அவை இணைந்தேயிருக்கின்றன.(18) இதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை நீயும் காண்பதே உனக்குத் தகும். செல்வத்தை விரும்பும் ஒருவன், எந்த வழிமுறையிலேனும் கைவிட வேண்டியவற்றைக் கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாகக் காண்கிறான்.(19) வளங்களுக்கு மத்தியில் இருப்போர் நற்செயல் செய்வது அரிதே. பிறருக்குத் தீங்கிழைக்காமல் செல்வத்தை ஒருபோதும் அடைய முடியாது என்றும், அஃதை ஈட்டுபோது, அஃது எண்ணற்ற தொல்லைகளையே கொண்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.(20)பாவங்களுக்கு வருந்தும் அச்சத்தைச் சிறிதளவும் கொள்ளாத குறுகிய இதயம் படைத்தவன், சிறு செல்வத்திலும் மயக்கமுற்று, தன் செயல்களின் மூலம் பிராமணனைக் கொன்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} இழைக்கிறோம் என்பதையும் முற்றிலும் அறியாமல் பிறருக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்கிறான்.(21) அடைவதற்கரிதான செல்வத்தை அடைந்த ஒருவன், அதில் ஒரு பகுதியைத் தனது பணியாட்களுக்குக் கொடுக்கும்போது, கொள்ளையர்களால் களவாடப்படுபவன் உணர்வதற்கு இணையான துன்பத்தை அடைகிறான். மறுபுறம், ஒருவன் தன் செல்வத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பானானால், அவன் மக்களின் கண்டனத்தையே தன் பங்காகக் கொள்கிறான்.(22) எனினும், செல்வமில்லாத ஒருவனோ, ஒரு போதும் நிந்தனைக்கான பொருளாவதில்லை. பற்றுகள் அனைத்திலிருந்தும் விலகிய ஒருவன், பிச்சையெடுத்து அடையும் சிறிதளவைக் கொண்டு தன் உயிரைத் தாங்கிக் கொண்டு அனைத்து வகையிலும் அவன் மகிழ்ச்சியை அடைகிறான். செல்வத்தை அடைவதாலோ எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(23) பழங்காலச் சாத்திரங்களை அறிந்தோரால் இது தொடர்பாக வேள்விகளுக்குச் சம்பந்தமான குறிப்பிட்ட வரிகள் சொல்லப்படுகின்றன.(24) செல்வமானது படைப்பாளனால் வேள்விகளின் நிமித்தமாகப் படைக்கப்பட்டது, அந்தச் செல்வத்தைக் காக்கவும், வேள்விகளைச் செய்வதற்காகவும் தான் மனிதன் படைக்கப்பட்டான். இதன் காரணமாகச் செல்வமனைத்தும் வேள்விகளுக்கே செலவிடப்பட வேண்டும். ஒருவனுடைய இன்ப நிறைவுக்கான ஆசைக்காக அது செலவிடப்படுவது முறையாகாது.(25)

அவ்வாறெனில், படைப்பாளன் வேள்வியின் நிமித்தமாகவே மனிதர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறான். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது?(28) தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து தவறிய மனிதர்களுக்கு, (செல்வத்தைக்) கொடையளிக்கும் சிறுமதியாளர்கள், அதன் பிறகு நூறாண்டுகள், கழிவுகளிலும் புழுதியிலும் உழல வேண்டியிருக்கும்.(29) மனிதர்கள், தகுந்தவர்களையும், தகாதவர்களையும் பகுத்தறியும் இயலாமையினாலேயே, தகாதவர்களுக்குக் கொடுத்துத் தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஈகை எனும் அறமே கூடப் பயில்வதற்கு மிகக் கடினமானதாகிறது.(30) செல்வம் அடையப்பட்டாலும், தகாதவனுக்குக் கொடையளிப்பது, தகுந்தவருக்குக் கொடாமலிருப்பது ஆகிய இந்த இரு களங்கங்களைக் கொண்டதாகவே அஃது இருக்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}[3].(31)

சாகப் போகிறேன்! – சாந்திபர்வம் பகுதி – 27-அபிமன்யு, பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரின் படுகொலைகளுக்காக வருந்திய யுதிஷ்டிரன்; திரௌபதியின் துயருக்காக வருந்தியது; அனைத்துக்கும் காரணமான தான் இருந்த இடத்திலேயே அமர்ந்து, உணவில்லாமல் சாகப் போவதாகச் சொன்னது; அது நடக்காது என்று சொல்லி, சோம்பலை அகற்றிச் செயல்படுமாறு யுதிஷ்டிரனைத் தூண்டிய வியாசர்..

யுதிஷ்டிரன், “இளம் வயதிலேயே அபிமன்யுவும், திரௌபதி, திருஷ்டத்யும்னன், விராடர், மன்னர் துருபதர்,(1) அனைத்துக் கடமைகளையும் அறிந்த திருஷ்டத்யும்னன், அரசன் திருஷ்டகேது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பிற மன்னர்கள் ஆகியோருடைய மகன்களும் போரில் வீழ்ந்த துயரமானது,(2) உறவினர்களைக் கொன்றவனும், இழிந்தவனுமான என்னைவிட்டு அகலவில்லை. உண்மையில், நான் நாட்டின் மீது இயல்பற்ற பேராசை கொண்டவனும், என் சொந்த குலத்தையே அழித்தவனுமாவேன்.(3)

எவருடைய மார்பிலும், அங்கங்களிலும் உருண்டு விளையாடினேனோ, ஐயோ, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அரசுரிமையின் மீது நான் கொண்ட ஆசையினால் போரில் என்னால் கொல்லப்பட்டார்.(4) மனிதர்களில் சிங்கமான எங்கள் பாட்டன் {பீஷ்மர்}, சிகண்டியால் தாக்கப்பட்டு, சக்தியில் வஜ்ரத்துக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளின் விளைவால் நடுங்கிச் சுழன்று கொண்டிருப்பதையும், நெடும் வடிவம் கொண்ட அவரது அங்கங்கள் முழுவதும் சுடர்மிக்கக் கணைகளால் துளைக்கப்பட்டிருப்பதையும், அந்த முதிர்ந்த சிங்கம் பலவீனமடைவதையும் நான் கண்டபோது, ஆழமான வலியை என் இதயம் உணர்ந்தது.(5,6) பகைவரின் தேர்களைப் பீடிப்பவரான அவர் {பீஷ்மர்}, கிழக்கு நோக்கித் திரும்பி தன் வாகனத்தின் தட்டில் பலமற்று ஒரு மலைச்சிகரத்தைப் போல வீழ்ந்தபோது, என் புலன்கள் திகைப்படைந்தன.(7)

{மன்னன்} குருவால் புனிதமடைந்த களத்தில் {குருக்ஷேத்திரத்தில்}, பிருகு குலத்தின் ராமரை {பரசுராமரை} எதிர்த்து, கையில் வில் மற்றும் கணையுடன், பல நாட்கள் கடும்போரிட்டவர் எவரோ அந்தக் குரு குலக் கொழுந்து {பீஷ்மர்},(8) மணப்பெண்களின் நிமித்தமாகத் தனித்தேரில் வாரணாசிக்குச் சென்று, அங்கே திரண்டிருந்த உலகின் க்ஷத்திரியர்களைப் போருக்கு அறைகூவி அழைத்தவர் எவரோ அந்தக் கங்கையின் மைந்தர், (9) தடுக்கப்பட முடியாதவரும், மன்னர்களில் முதன்மையானவருமான உக்ராயுதரை தன் ஆயுதங்களில் சக்தியால் எரித்தவர் எவரோ, ஐயோ, அந்த வீரரைப் போரில் நான் கொல்லச் செய்தேன்.(10) பாஞ்சால இளவரசன் சிகண்டியே தன்னை அழிக்கப் போகிறவன் என்பதை நன்றாக அறிந்தும், அந்த வீரர் தன் கணைகளால் அவ்விளவரசனைக் கொல்லவில்லை. ஐயோ, அத்தகு மகத்தான போர்வீரர் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(11) ஓ! தவசிகளில் சிறந்தவரே {வியாசரே}, குருதியில் மறைக்கப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் பாட்டனை நான் கண்ட போது, கடும் நோயானது எனது இதயத்தைப் பீடித்தது.(12) நாங்கள் பிள்ளைகளாய் இருந்தபோது எங்களைப் பாதுகாத்து வளர்த்தவர் எவரோ, ஐயோ அவர், நாட்டின் மீது பேராசை கொண்டவனும், மதிப்பு மிக்கப் பெரியோரைக் கொன்றவனும், முற்றான மூடனும், பாவியுமான என்னால், சில நாட்களே நீடிக்கபோகும் அரசுரிமைக்காகக் கொல்லப்பட்டார்.(13)

எங்கள் ஆசானும், பெரும் வில்லாளியும், மன்னர்கள் அனைவராலும் புகழப்படுபவருமான துரோணரை நான் அணுகி, அவரது மகனைக் {அஸ்வத்தாமனைக்} குறித்துப் போலியாகப் பேசினேன் {பொய்யுரைத்தேன்}.(14) நான் செய்த அச்செயலின் நினைவு என் அங்கமனைத்தையும் எரிக்கிறது. ஆசான் {துரோணர்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என் மகன் உயிருடன் இருக்கிறானா என்று உண்மையைச் சொல்வாயாக” என்று என்னிடம் கேட்டார்.(15) அந்தப் பிராமணர் {துரோணர்}, உண்மையை எதிர்பார்த்தே, பிறர் அனைவரையும் விட்டுவட்டு என்னிடம் கேட்டார். யானை என்ற சொல்லை அமைதியாக {ஒலி குறைவாகச்} சொல்லி நான் அவரிடம் போலியாக {பொய் நடத்தை} நடந்து கொண்டேன்.(16) நாட்டின் மீது அதிகப் பேராசை கொண்டவனும், மதிப்புமிக்க என் பெரியோர்களைக் கொன்றவனும், பாவம் நிறைந்தவனுமான நான், உண்மையில் அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானை கொல்லப்பட்டிருக்கையில், (நான் அணிந்திருந்ததாக நம்பப்பட்ட) உண்மையெனும் ஆடையைத் தூக்கி வீசிவிட்டு, அஸ்வத்தாமனே கொல்லப்பட்டான் என்று என் ஆசானிடம் சொன்னேன். போரில் இவ்வாறே நான் என் ஆசானிடம் நடந்து கொண்டேன்.(17)

இத்தகு இகழச்சியானச் செயல்களைச் செய்த நான், (மறுமையில்) எந்த உலகங்களை அடைவேன்? போரில் பின்வாங்காதவரும், பயங்கரமான போர்வீரருமான என் அண்ணன் கர்ணரையும் நான் போரில் கொல்லச் செய்தேன். என்னை விட இங்கே வேறு எந்தப் பாவி இருக்கிறான்?(18) மலைகளில் பிறந்த சிங்கத்திற்கு ஒப்பானவனும், இளம் வயதினனுமான அபிமன்யுவை துரோணரால் பாதுகாக்கப்பட்ட {பத்ம} வியூகத்திற்குள் ஊடுருவும்படி பேராசையின் காரணமாகவே சொன்னேன்.(19) நான் கருவைக் கொன்ற குற்றவாளியைப் போன்றவனாவேன். நான் பாவம் நிறைந்தவனாக இருப்பதாலேயே, அர்ஜுனன், அல்லது தாமரை கண்களைக் கொண்ட கிருஷ்ணன் ஆகியோரின் முகங்களை அப்போதிலிருந்தே என்னால் {நேராகப்} பார்க்க முடியவில்லை.(20)

ஐந்து மலைகளை இழந்த பூமியைப் போல, தன் ஐந்து மகன்களை இழந்த திரௌபதிக்காகவும் நான் துயரமடைகிறேன். நான் ஒரு பெரும் குற்றவாளி, பெரும் பாவி மற்றும் இந்தப் பூமியை அழித்தவனுமாவேன். இப்போது நான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் இருந்து எழாமல், (பட்டினி கிடந்து) என் உடலை பலவீனமடையச் செய்து நான் சாகப் போகிறேன்.(22) என் ஆசானைக் கொன்றவனான என்னைப் பிராய நோன்பு நோற்று அமர்ந்திருக்கும் ஒருவனாக அறிவீராக. குலத்தை அழித்தவனான நான், எந்த வகை உயிரினமாகவும் மீண்டும் பிறக்காதிருக்க இதைச் செய்தே ஆக வேண்டும்[1].(23) ஓ! பெரும் தவசியே {வியாசரே}, உணவு மற்றும் நீர் அனைத்தையும் கைவிட்டு, இவ்விடத்தில் இருந்து நகராமல் பெரும் அன்புக்குரிய என் உயிர்மூச்சை நான் வற்றச் செய்யப் போகிறேன்.(24) இதற்கு எனக்கு அனுமதியளித்து, நீங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென நான் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறேன். அனைவரும் எனக்கு அனுமதியளிப்பீராக. நான் இந்த என் உடலை விடப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(25)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தவசிகளில் சிறந்தவரான வியாசர், தன் உறவுகளின் நிமித்தமான கவலையில் திகைத்து இத்தகு வார்த்தைகளைச் சொல்லும் அந்தப் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} தடுக்கும் வகையில், “இது நடக்காது” என்று முதலில் சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசினார்.(26)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, இத்தகு கடுந்துயரில் ஈடுபடுவது உனக்குத் தகாது. நான் ஏற்கனவே சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். ஓ! பலமிக்கவனே, இவையனைத்தும் விதியே.(27) பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும், (பல்வேறு பொருட்கள் மற்றும் சக்திகளின்) ஒருங்கிணைப்பையே முதலில் வெளிக்காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. எனினும், இறுதியில் அழிவே அவற்றுக்கு நேர்கிறது. நீரில் உள்ள குமிழிகளைப் போல அவை எழுந்து மறைகின்றன.(28) ஒன்றாகத் திரளும் பொருட்கள் அனைத்தும் நொறுங்கி விழும் என்பதும், எழும் அனைத்துப் பொருட்களும் விழ வேண்டும் என்பது நிச்சயமானதாகும். கூட்டம் இறுதியில் அழிவடையும், பிறப்பும் இறப்பிலேயே முடிவடையும்.(29) தற்காலிகமாக ஏற்கத்தக்கதாக இருப்பினும் சோம்பல், பேரிடரில் முடிகிறது, தற்காலிக வலியைக் கொண்டதாகினும் திறனுடன் கூடிய முயற்சியானது மகிழ்ச்சியிலேயே முடிகிறது. வளம், செழிப்பு, பணிவு, மனநிறைவு மற்றும் புகழ் ஆகியன முயற்சி மற்றும் திறனிலேயே வசிக்கின்றவே ஒழிய சோம்பலில் அல்ல.(30)

நண்பர்கள் மகிழ்ச்சி அளிக்கவும், எதிரிகள் பேரிடரால் பீடிக்கவும் தகுந்தோரல்ல. அதேபோல், ஞானம் செல்வத்தைக் கொண்டு வராது, செல்வமும் மகிழ்ச்சியைக் கொண்டுவராது.(31) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, செயலில் ஈடுபடுவதற்காகவே நீ படைப்பாளனால் உண்டாக்கப்பட்டிருக்கிறாய். செயலில் இருந்தே வெற்றி எழுகிறது. ஓ! மன்னா, செயலைத் தவிர்க்க நீ தகுந்தவனல்ல” என்றார் {வியாசர்}”.(32)

காலமெனும் பெருங்கடல்! – சாந்திபர்வம் பகுதி – 28-ஞானியான அஸ்மருக்கும், மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; மனத்தின் வீண் செருக்கு, வளமை, வறுமை, மனக்கவலைக்கான காரணம், முதுமை, மரணம், காலத்தின் போக்கு ஆகியவற்றைக் குறித்து ஜனகனிடம் உரையாடிய அஸ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு வியாசர், தன் உறவினர்களின் படுகொலையின் நிமித்தமாகக் கவலையில் எரிந்து, தன் உயிர் மூச்சை விடத் தீர்மானித்திருந்த பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரை அகற்ற முயன்றார்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே, இது தொடர்பாகப் பழங்கதையில் அஸ்மரின் உரையாடல் என்ற பெயரில் ஓர் உரையாடல் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகன், கவலையாலும், துயராலும் நிறைந்து, தன் ஐயங்களைத் தீர்க்க அஸ்மர் என்ற பெயருடைய ஒரு பிராமண ஞானியிடம் கேள்விகள் கேட்டான்.(3)

ஜனகன் {அஸ்மரிடம்}, “உறவினர்களையும், செல்வத்தையும் அடையும்போதும், அவை அழிவடையும்போதும், தன் நலத்தை விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(4)

அஸ்மர் {ஜனகனிடம்}, “ஒரு மனிதனின் உடல் உண்டான பிறகு, இன்பங்களும், துன்பங்களும் அதைப் பற்றுகின்றன.(5) இவற்றில் ஏதாவதொன்று அம்மனிதனைப் பற்றும் வாய்ப்பு இருந்தாலும், அவனை எது பற்றுகிறதோ, ஒன்று திரண்டிருக்கும் மேகங்களை விரட்டும் காற்றைப் போல அதுவே விரைவாக அம்மனிதனிடம் உள்ள அறிவைக் களவாடிவிடும்.(6) (வளமையான காலங்களில்) ஒரு மனிதன், “நான் உயர்பிறப்பாளன் {நற்பிறவி கொண்டவன்}”, “நான் விரும்புவதை என்னால் செய்ய முடியும்”, “நான் சாதாரண மனிதன் கிடையாது” என்பது போலச் சிந்திக்கிறான். அவனது மனமானது வீண் செருக்கான இம்மூன்றில் ஊறுகிறது. {இவ்வாறு மூன்று வகைகளில் வீண்செருக்கு கொள்கிறது}.(7) பூமி சார்ந்த இன்பங்கள் அனைத்திற்கும் அடிமையாகும் அவன், தன் முன்னோர்களால் சேமிக்கப்பட்ட செல்வத்தை வீணாக்கத் தொடங்குகிறான். காலப்போக்கில் வறிய நிலையை அடையும் அவன், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பதை மெச்சத்தகுந்ததாகவே கருதுகிறான்.(8) ஒரு மன்னன், சட்டங்களையும், விதிகளையும் மீறி அடுத்தவர் பொருளைக் களவாடும் அந்தத் தீயவனை, மானைத் தன் கணைகளால் துளைக்கும் வேடனைப் போலத் தண்டிக்கிறான்.(9) அத்தகு மனிதர்கள், (வழக்கமாக மனிதர்கள் வாழும்) நூறு வருடங்களை அடையாமலே, இருபது, அல்லது முப்பது வயதிற்கு மேல் வாழாமல் போகிறார்கள் {அதற்குள் இறந்து விடுகிறார்கள்}.(10) அனைத்து உயிரினங்களின் நடத்தையையும் கவனமாகக் காணும் ஒரு மன்னன், தன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, தன் குடிமக்களின் பெருந்துயரங்களைத் தணிக்கத் தகுந்த தீர்வுகளைச் செய்ய வேண்டும்.(11)

மனக் கவலை அனைத்திற்கும், மனத்தின் மயக்கம் மற்றும் துயரடைதல் ஆகிய இரண்டும் காரணங்களாகின்றன. மூன்றாவதாக வேறேதும் காரணமில்லை.(12) பல்வேறு வகைத் துயரங்களும், பூமி சார்ந்த இன்பங்களில் மனிதன் கொள்ளும் பற்றிலிருந்தே எழுகின்றன.(13) முதுமை, மரணம் ஆகியன இரண்டு ஓநாய்களைப் போல, பலமான, அல்லது பலமற்ற, குட்டையான, அல்லது நெடிய உயிரினங்கள் அனைத்தையும் விழுங்குகின்றன.(14) எந்த மனிதனாலும், ஏன் கடலை கச்சையாக அணிந்த மொத்த பூமியையும் அடக்கியாண்டவனாலும் கூட முதுமை மற்றும் மரணத்தில் இருந்து தப்ப முடியாது.(15) உயிரினங்களுக்கு ஏற்படும் இன்பமோ, துன்பமோ எந்தவித எழுச்சியும், தளர்ச்சியும் கொள்ளாமல் அனுபவிக்கப்படவோ, தாங்கிக் கொள்ளவோ படவேண்டும். அவற்றில் இருந்து தப்பும் வழிமுறை ஏதும் இல்லை.(16) ஓ! மன்னா {ஜனகனே}, வாழ்வின் தீமைகள் இளமையிலோ, நடு வயதிலோ, முதுமையிலோ ஒருவனை வந்தடைகின்றன. ஆசைப்பட்டவற்றை (அருள்களை) அடையமுடியவில்லையெனினும், இவற்றை ஒருபோதும் தவிர்க்க முடியாது[1].(17)ஏற்புடையவற்றின் இல்லாமையும், ஏற்பில்லாதவற்றின் இருப்பும், நன்மையும், தீமையும், அருளும், துயரும் விதியையே பின்பற்றி வருகின்றன.(18) அதேபோல, உயிரினங்களின் பிறப்பும், அவற்றின் இறப்பும், ஈட்டலும், இழப்பும் ஆகிய அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டவையாகும்.(19) மணம், நிறம், சுவை, தீண்டல் ஆகியன இயல்பாக எழுவதைப் போலவே, இன்பமும், துன்பமும், ஏற்கனவே விதிக்கப்பட்டவற்றில் இருந்து எழுகின்றன.(20) இருக்கைகள், படுக்கைகள், வாகனங்கள், செழிப்பு, பானம், உணவு ஆகியன காலப்போக்கில் உயிரினங்களை அணுகுகின்றன[2].(21) மருத்துவர்களும் நோய்வாய்ப்படுகிறார்கள். பலமானவர்களும் பலமிழக்கிறார்கள். செழிப்பை அனுபவிப்போர், அவை அனைத்தையும் இழந்து, வறுமையை அடைகிறார்கள்.(22) உயர்ந்த பிறப்பு {நற்குடி பிறப்பு}, உடல் நலம், அழகு, செழிப்பு, இன்ப நுகர் பொருட்கள் ஆகியன அனைத்தும் விதியின் மூலமே பெறப்படுகின்றன.(23) வறியோர் விரும்பவில்லையெனினும் பல பிள்ளைகளைப் பெறுகிறார்கள். செல்வந்தர்கள் பிள்ளை இல்லாமலும் இருக்கிறார்கள். விதியின் போக்கு ஆச்சரியம் நிறைந்ததாகும்.(24)நோய், நெருப்பு, ஆயுதங்கள், பசி, நஞ்சு, காய்ச்சல், மரணம், உயர்ந்த இடங்களில் இருந்து வீழ்தல் போன்றவற்றால் உண்டாகும் தீமைகள், பிறப்பை அடையும் விதியின்படியே ஒரு மனிதனை அடைகின்றன. பாவம் செய்யாத சிலர் பல்வேறு தீமைகளில் துன்புறும்போது, பாவிகளோ துயரின் சுமையைத் தாங்காமல் இருக்கும் நிலை இவ்வுலகில் காணப்படுகிறது.(25,26) செல்வத்தில் இன்புறும் சிலர் இளமையில் அழிகின்றனர்; சில வறிவர்கள், முதுமையின் சுமையைத் தாங்கிக் கொண்டு நூறு வருடங்களுக்குத் தங்கள் இருப்பை நீட்டிக்கின்றனர்.(27) இழிந்த குலத்தில் பிறந்த ஒருவன் நீண்ட வாழ்நாளோடு இருக்கிறான், அதே வேளையில் உன்னதக் குலத்தில் பிறந்தவன் ஒரு பூச்சியைப் போல விரைவில் அழிந்து போகிறான்.(28) இவ்வுலகில், செல்வச்சூழலில் இருக்கும் மனிதர்களுக்குப் பசிப்பதில்லை, அதே வேளையில் வறியவர்களோ மரத்துண்டுகளையும் செரிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.(29)

தீய ஆன்மா கொண்ட மனிதன், விதியால் உந்தப்பட்டுத் தன் நிலையில் நிறைவில்லாமல், “நான் இதைச் செய்கிறேன்” என்று சொல்லி, எந்தப் பாவத்தை இழைத்தாலும், அது தனது நன்மைக்கானதே என்று கருதுகிறான்.(30) வேட்டை, பகடை, பெண்கள், மது, பூசல்கள் ஆகியன ஞானியரால் நிந்திக்கப்படுகின்றன. எனினும், சாத்திரங்களில் பரந்த அறிவைக் கொண்ட பல மனிதர்கள் கூட, அவற்றுக்கு அடிமையாக இருப்பது காணப்படுகிறது.(31) உயிரினங்கள் பொருட்களை ஆசைப்பட்டாலும், படாவிட்டாலும் காலத்தின் போக்கில் அவை அவற்றை அடைகின்றன. வேறு எந்தத் தடத்தையும் {காரணத்தையும்} காணமுடியாது.(32) காற்று, வெளி {வானம்}, நெருப்பு, நிலவு, சூரியன், பகல், இரவு (ஆகாயத்தின்) ஒளிக்கோள்கள், ஆறுகள், மலைகள் ஆகியவற்றை எவன் படைக்கிறான்? எவன் அவற்றைத் தாங்கி வருகிறான்?(33)

குளிர், வெப்பம், மழை ஆகியன காலப்போக்கின் விளைவால் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வருகின்றன. ஓ! மனிதர்களில் காளையே {ஜனக மன்னா}, அதுபோலவே, மனித குலத்திலும் இன்பமும், துன்பமும் {மாறி மாறி} வருகின்றன.(34) முதுமையால் துன்புறும், அல்லது மரணத்தால் பற்றப்படும் மனிதனை மருந்துகளாலோ, மந்திரங்களாலோ காப்பாற்ற முடியாது.(35) பெருங்கடலில் மிதக்கும் இரு மரத்துண்டுகள் ஒன்றோடொன்று சேர்ந்து மீண்டும் (காலப்போக்கில்) பிரிவதைப் போலவே உயிரினங்களும் ஒன்றாகச் சேர்ந்து, மீண்டும் (காலம் வரும்போது) பிரிவை அடைகின்றன.(36) (செல்வச் சூழலில்) பாடல் மற்றும் ஆடல்களிலும், பெண்களின் துணையிலும் இன்புற்று இருப்பவனிடமும், பிறர் கொடுக்கும் உணவை உண்டு வாழும் ஆதரவற்ற மனிதனிடமும் {வேறுபாடின்றி} காலம் சமமாகவே {ஒரே விதத்திலேயே} செயல்படுகிறது.(37)

தாய் என்றும், தந்தை, மகன் மற்றும் மனைவி என்றும் இவ்வுலகில் ஆயிரம் உறவுகள் சொல்லப்படுகின்றன. எனினும் உண்மையில், அவர்கள் யாருடையவர்கள்? நாமும் யாருடையவர்கள்?(38) எவரும் எவருக்கும் சொந்தமாகவோ, எவரும் வேறு எவருக்கும் சொந்தமாகவோ முடியாது. மனைவியர், சொந்தங்கள், மற்றும் நலன்விரும்பிகளோடு நாம் இணைவது, சாலையோர விடுதியில் பயணிகளைச் சந்திப்பதைப் போன்றதாகும்.(39) “நான் எங்கிருக்கிறேன்?”, “நான் எங்குச் செல்லப்போகிறேன்?”, “நான் யார்?”, “நான் எவ்வாறு இங்கே வந்தேன்?”, “எதற்காக, யாருக்காக நான் வருந்த வேண்டும்?” என்பது போன்ற கேள்விகளைச் சிந்திக்கும் ஒருவன் அமைதியை அடைகிறான்.(40) வாழ்வும், அதன் சுற்றுச்சூழலும் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழல்கின்றன, அன்புக்குரியோரின் தோழமை தோன்றி மறையக்கூடியது {சிறிது காலம் நீடிக்கக்கூடியதே}. சகோதரன், தாயார், தந்தையார், நண்பன் ஆகியோர் விடுதியில் உள்ள பயணிகளைப் போன்றோராவர்.(41) {எனவே, அவர்களின் இழப்புக்காக வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை}.

ஞானம் கொண்ட மனிதர்கள், காணப்படாத அடுத்த உலகத்தைத் தங்கள் ஊன்கண்களாலேயே காண்கிறார்கள். அறிவை விரும்பும் ஒருவன், சாத்திரங்களை அலட்சியம் செய்யாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.(42) அறிவைக் கொண்ட ஒருவன், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் சம்பந்தமாக விதிக்கப்பட்டிருக்கும் சடங்குகளைச் செய்து, அறக்கடமைகள் அனைத்தையும் பயின்று, வேள்விகளைச் செய்து, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை நீதியுடன் பின்தொடர வேண்டும்.(43) ஐயோ, பெரும் ஆழம் கொண்டதும், முதுமை மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெரும் முதலைகள் நிறைந்ததுமான காலமெனும் பெருங்கடலில் இவ்வுலகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை.(44)

மருத்துவ அறிவியலைக் கவனமாகக் கற்றிருந்தாலும் பல மருத்துவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நோயினால் பீடிக்கப்படுவது காணப்படுகிறது.(45) பெருங்கடலானது கரைகளைக் கடக்க முடியாததைப் போலவே, கசப்பானவையும், பிசுபிசுப்பவையுமான பல்வேறு வகை மருந்துகளை உட்கொண்டாலும் இவர்கள் மரணத்தை விஞ்சுவதில் வெல்வதில்லை.(46) வேதியியலை நன்கறிந்த மனிதர்கள், நியாயமாக {விதிதவறாமல்} வழங்கப்படும் வேதியியல் சேர்மங்களைத்[3] தாக்குப் பிடிக்கமுடியாமல் யானைகளால் முறிக்கப்படும் மரங்களைப் போல முதுமையால் நொறுங்கி வீழ்வதும் காணப்படுகிறது.(47) அதேபோலவே, வேத கல்வியில் அர்ப்பணிப்பு மிக்கோரும், தவத்தகுதி கொண்டவர்களுமான மனிதர்களும் கூட, ஈகை பயின்று, அடிக்கடி வேள்விகளைச் செய்தாலும் முதுமை மற்றும் மரணத்தில் இருந்து தப்புவதில் வெல்வதில்லை.(48) பிறப்பை அடைந்திருக்கும் அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், ஒரு முறை கடந்து போகும் வருடங்களோ, மாதங்களோ, அரைத்திங்களோ {பக்ஷங்களோ}, பகல்களோ, இரவுகளோ மறுபடி திரும்புவதில்லை.(49) நிலையில்லாத இருப்பைக் கொண்ட மனிதன், விரும்பினாலும், விருப்பாவிட்டாலும், அனைத்து உயிரினங்களாலும் நடக்கப்படும் தவரிக்கப்பட முடியாத, அகன்ற பாதையை அடைய காலப்போக்கால் பலவந்தமாக இழுக்கப்படுகிறான்[4].(50)உடலானது உயிரினங்களில் இருந்து உதிக்கிறதோ, உயிரினங்கள் உடலில் இருந்து உதிக்கின்றனவோ, மனைவியர் மற்றும் பிற நண்பர்களுடனான ஒருவனின் உறவு விடுதியில் உள்ள பயணிகளைப் போன்றதே ஆகும்[5].(51) எவனாலும் எவனுடனும் நீடித்த தோழமையைப் பெற முடியாது. எவனாலும் தன் சொந்த உடலுடனேயே அத்தகு தோழமையைக் கொள்ள முடியாது. அவ்வாறிருக்கையில் வேறு எவரிடும் எவ்வாறு அவன் தோழமையை {உறவை} அடைவான்?(52) ஓ! மன்னா {ஜனகா}, இன்று உன் தந்தை எங்கே? உன் பாட்டன்கள் எங்கே? ஓ! பாவமற்றவனே, நீ இன்று அவர்களைக் காணவில்லை, அவர்களும் உன்னைக் காணவில்லை.(53) எந்த மனிதனாலும் சொர்க்கத்தையோ, நரகத்தையோ பார்க்க முடியாது. எனினும், சாத்திரங்களே அறவோரின் கண்களாகும். ஓ! மன்னா, சாத்திரங்களின் படி உன் நடத்தையை அமைத்துக் கொள்வாயாக.(54)ஒருவன் தூய்மையான இதயத்துடன் முதலில் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, பிறகு பிள்ளைகளைப் பெற்று, பிறகு பித்ருக்கள், தேவர்கள் மற்றும் மனிதர்களுக்குத் தான் பட்ட கடனைச் செலுத்துவதற்காக வேள்விகளைச் செய்ய வேண்டும்.(55) முதலில் ஒருவன், பிரம்மச்சரிய நோன்பை நோற்று, வேள்விகளைச் செய்து, பிள்ளைகளைப் பெறுவதில் ஈடுபட்டு, அறிவையே கண்களாகக் கொண்டு, இதயத் துயரம் அனைத்தையும் கைவிட்டு, சொர்க்கத்திலும், இவ்வுலகத்திலும், தன் சொந்த ஆன்மாவிலும் கவனம் செலுத்த வேண்டும்[6].(56) சொர்க்கம், பூமி ஆகியவற்றை நியாயமாக அடைய அறம்பயில முனைந்து, சாத்திரங்களில் (மன்னனின் பங்காக) விதிக்கப்பட்ட உலகப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் மன்னன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் மற்றும் உலகங்கள் அனைத்தின் மத்தியிலும் பரவும் புகழை வெல்கிறான்” என்றார் {அஸ்மர்}.(57)தெளிந்த அறிவைக் கொண்ட விதேஹர்களின் ஆட்சியாளன் {மன்னன் ஜனகன்}, அறிவு நிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, துயரில் இருந்து விடுபட்டு, அஸ்மரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்.(58) ஓ! மங்கா புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, உன் துயரங்களைக் கைவிட்டு எழுவாயாக. நீ சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனாவாய். உன் ஆன்மாவில் இன்புற்றிருப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையின்படியே இந்தப் பூமி உன்னால் வெல்லப்பட்டது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, அதை அனுபவிப்பாயாக. என் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே” என்றார் {வியாசர்}”.(59)

நாரதர் சிருஞ்சயன் உரையாடல்! – சாந்திபர்வம் பகுதி – 29-யுதிஷ்டிரன் அமைதியடையாததைக் கண்ட அர்ஜுனன், கிருஷ்ணனிடம் அவனைத் தேற்றச் சொன்னது; சிருஞ்சயனிடம் நாரதர் உரைத்ததை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; மருத்தன், சஹோத்ரன், அங்க மன்னன் பிருஹத்ரதன், சிபி, துஷ்யந்தன், தசரதராமன், பகீரதன், திலீபன், மாந்தாதா, யயாதி, அம்பரீஷன், சசபிந்து, கயன், ரந்திதேவன், சகரன், பிருது ஆகிய பதினாறு மன்னர்களின் கதைகளைச் சுருக்கமாகச் சொன்ன நாரதர்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், பேச்சற்றவனாக அமைதியாக இருந்த போது, பாண்டுவின் மகனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(1)

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “எதிரிகளை எரிப்பவரான இந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்}, உறவினர்களின் (அவர்கள் கொல்லப்பட்டதன்) நிமித்தமாகத் துயரில் எரிகிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரைத் தேற்றுவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் அனைவரும் பேராபத்தில் விழுகிறோம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவரது துயரை அகற்றுவதே உனக்குத் தகும்” என்றான்”.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தாமரைக் கண்ணையும், மங்கா மகிமை கொண்டவனுமான கோவிந்தன் அம்மன்னனை நோக்கி தன் முகத்தைத் திருப்பினான்.(4) கேசவன் எவ்வழியிலும் யுதிஷ்டிரனால் அலட்சியம் செய்யத்தக்கவனல்ல. தொடக்கக் காலத்திலிருந்தே அர்ஜுனனை விடக் கோவிந்தனே யுதிஷ்டிரனுக்கு அன்புக்குரியவனாக இருந்தான்.(5) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான சௌரி {கிருஷ்ணன்}, சந்தனக்குழம்பால் அலங்கரிக்கப்பட்டவையும், சலவைக்கல்லாலான தூணைப் போலத் தெரிந்தவையுமான மன்னனின் கரங்களைப் பற்றிக் கொண்டு (கேட்பவர் அனைவரின் இதயங்களையும்) மகிழ்விக்கும் வகையில் பேசத் தொடங்கினான்.(6) அழகான பற்களாலும், கண்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது முகமானது, சூரிய உதயத்தின் போது முற்றாக மலர்ந்த தாமரையைப் போல மிகப் பிரகாசமாக ஒளிர்ந்தது.(7)

வாசுதேவன், “ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, உமது உடலை மெலியச் செய்யும் இத்தகு துயரில் ஈடுபடாதீர். இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களை எக்காரியத்தாலும் திரும்ப அடைய முடியாது.(8) ஓ! மன்னா, இந்தப் பெரும்போரில் வீழ்ந்த க்ஷத்திரியர்கள், ஒருவன் விழித்தெழும்போது மறைந்து போகும் கனவில் அடையப்படும் பொருட்களைப் போன்றவர்களாவர்[1].(9) அவர்கள் அனைவரும், வீரர்களும், போர்க்கள ரத்தினங்களுமாவர். அவர்கள் தங்கள் எதிரிகளை முகமுகமாக நோக்கி விரைந்த போதே வீழ்த்தப்பட்டார்கள். அவர்களில் எவரும், முதுகில் காயங்களுடனோ, தப்பி ஓடும்போதோ கொல்லப்படவில்லை.(10) அவர்கள் அனைவரும் இந்தப் போரில் வீரர்களுடன் மோதி, ஆயுதங்களால் புனிதமடைந்து தங்கள் உயிர்மூச்சுகளை விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர். அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(11) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடனும், துணிவுடனும், வேதங்களையும் அதன் அங்கங்களையும் சரியாக அறிந்தும் அவர்கள் அனைவரும் வீரர்களால் அடையப்படும் அருள்நிலையை அடைந்துவிட்டனர். உயர் ஆன்மா கொண்டவர்களும், இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டவர்களுமான பழங்காலத்தின் பூமியின் தலைவர்களைக் குறித்துக் கேட்ட பிறகு அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(12) சிருஞ்சயன் தன் மகனின் {சுவர்ணஷ்டீவினின்} மரணத்தின் நிமித்தமாக ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனுக்கு முன்னிலையில் நடந்த நாரதரின் பழைய உரையாடல் இது தொடர்பானதே.(13)(நாரதர் சொன்னார்), “ஓ! சிருஞ்சயா, இன்பத்திற்கும் துன்பத்திற்கு ஆட்படுபவர்களான, நானும், நீயும், அனைத்து உயிரினங்களும் இறக்கவே போகிறோம். பிறகு கவலைக்கான காரணம் என்ன?(14) (சில) பழங்காலத்து மன்னர்களின் பேரருள் நிலையைச் சொல்கிறேன் கேட்பாயாக. குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, பிறகு நீ உன் துயரைக் கைவிடலாம்.(15) உயர் ஆன்மா கொண்ட அந்தப் பூமியின் தலைவர்களுடைய கதையைக் கேட்டு உன் சோகத்தைத் தணிப்பாயாக. ஓ!, அவர்களின் கதையை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பழங்காலத்தைச் சேர்ந்த அந்த மன்னர்களின் இனிமைநிறைந்த அழகிய வரலாற்றைக் கேட்பதால், தீய நட்சத்திரங்கள் {தீக்கோள்களின் வினைகள்} தணிவடையச் செய்து அமைதிப்படுத்தப்பட்டு, ஒருவனின் வாழ்நாள் {ஆயுள்} அதிகரிக்கப்படும்.(17)

ஓ! சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகனான மருத்தன்[2] என்ற பெயருடைய மன்னன் ஒருவன் இருந்தான். அவனும் மரணத்திற்கு இரையாக வேண்டியிருந்தது. இந்திரன், வருணன், பிருஹஸ்பதி ஆகியோரின் தலைமையிலான தேவர்கள், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியால் செய்யப்பட்ட விஸ்வஸ்ரீஜ்[3] என்றழைக்கப்படும் வேள்விக்கு வந்தனர். அம்மன்னன் {மருத்தன்}, தேவர்களின் தலைவனான சக்ரனை {இந்திரனை} போருக்கு அறைகூவியழைத்து அவனை வென்றான்.(18,19) கல்விமானான பிருஹஸ்பதி, இந்திரனுக்கு நன்மை செய்ய விரும்பி, மருத்தனின் வேள்வியை நடத்திக் கொடுக்க மறுத்தார். அதன் பேரில், பிருஹஸ்பதியின் தம்பியான சம்வர்த்தர் மன்னனின் வேண்டுகோளை ஏற்றார்[4].(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {சிருஞ்சயா}, அம்மன்னனின் {மருத்தனின்} ஆட்சியின் போது, உழாமலேயே பூமியானது பயிர்களை விளைவித்தது; பல்வேறு ஆபரணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(21) அம்மன்னனின் வேள்வியில், விஸ்வேதேவர்கள் அவை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தனர், மருத்தர்கள் (உணவு மற்றும் கொடைகளை) விநியோகிப்பவர்களாகச் செயல்பட்டனர், உயர் ஆன்ம சத்யஸ்களும் அங்கே இருந்தனர்.(22) மருத்தனின் அந்த வேள்வியில் மருத்தர்கள் சோமத்தைக் குடித்தனர். மன்னன் {மருத்தன்} அளித்த வேள்விக் கொடைகள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரால் கொடுக்கப்பட்டதைவிட (மதிப்பில்) விஞ்சியதாக இருந்தன.(23) ஓ! சிருஞ்சயா, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகியவற்றால் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {மருத்தனே} மரணத்துக்கு இரையானான்; எனவே, உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} வருந்தாதே.(24)அதிதியின் மகனாகச் சுஹோத்ரன்[5] என்ற பெயரில் மற்றுமொரு மன்னன் இருந்தான். ஓ! சிருஞ்சயா, அவனும் மரணத்திற்கு இரையானதாகவே நாம் கேட்கிறோம். அவனது ஆட்சி காலத்தில், மகவத் {இந்திரன்}, அவனது நாட்டில் ஒரு முழு வருடத்திற்குத் தங்க மழை பொழிந்தான்.(25) அந்த மன்னனைத் தன் தலைவனாக அடைந்த பூமியானவள், (ஏற்கனவே இருந்தது போலப் பெயரில் மட்டுமே அல்லாமல்) உண்மையிலேயே வசுமதியானாள்[6]. அம்மன்னனின் ஆட்சியின் போது இந்திரன் தங்க மழை பொழிந்ததால் ஆறுகளின் ஆமைகள், நண்டுகள், முதலைகள், சுறாக்கள், கடற்பன்றிகள் ஆகினவனவும் தங்கமயமாகின.(26,27) அதிதியின் மகன் {சுஹோத்ரன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அந்தத் தங்க மீன்கள், சுறாக்கள் மற்றும் ஆமைகளைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(28) சுஹோத்ரன், பூமியை மறைத்த அந்தப் பரந்த செல்வமான தங்கத்தைத் திரட்டி குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து, பிராமணர்களுக்கு அதைக் கொடையாக அளித்தான்.(29) ஓ! சிருஞ்சய, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகிய நான்கு பண்புகளிலும் உன்னை விட விஞ்சியிருந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {சுஹோத்ரனே} மரணத்திற்கு இரையானான்; (எனவே இறந்து போன) உன் மகனுக்காக வருந்தாதே.(30) உன் மகன், வேள்வி எதையும் செய்யவில்லை, ஒருபோதும் கொடையளித்ததில்லை. இதை அறிந்து கொண்டு, துயரத்தில் வீழாமல் உன் மனத்தை அமைதியடையச் செய்வாயாக.ஓ! சிருஞ்சயா, அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதனும்[7] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம்.(31) அவன் நூறாயிரம் குதிரைகளைக் கொடையாக அளித்தான். அவன் செய்த வேள்வியில் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறாயிரம் கன்னிகையரையும் கொடையாக அளித்தான்.(32) அவனால் செய்யப்பட்ட மற்றொரு வேள்வியில், நற்குலத்தில் பிறந்த நூறாயிரம் யானைகளையும் கொடையாகக் கொடுத்தான்.(33) தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் லட்சம் காளைகளுடன் அவற்றுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான பசுக்களையும் அவன் வேள்விக் கொடைகளாகக் கொடுத்தான்.(34) அந்த அங்க மன்னன் {பிருஹத்ரதன்}, விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் மலையில் வைத்து தன் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது,(35) இந்திரன் தான் குடித்த சோமத்தாலும், பிராமணர்கள் தாங்கள் பெற்ற கொடைகளாலும் போதையுண்டார்கள். ஓ! ஏகாதிபதி, இந்த மன்னனால் பழங்காலத்தில் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வேள்விகளில்,(36) அவன் அளித்த கொடைகள் தேவர்கள், கந்தர்கள் மற்றும் மனிதர்களை விஞ்சியதாக இருந்தன. அங்கர்களின் அந்த மன்னன், சோமச்சாற்றுடன் தான் செய்த ஏழு வேள்விகளில் அவனால் கொடுக்கப்பட்ட செல்வத்தைப் போலக் கொடுத்த, அல்லது கொடுக்கக்கூடிய எந்த மனிதனும் பிறக்கவோ, பிறக்கப்போவதோ இல்லை[8].(37) ஓ! சிருஞ்சயா, நான்கு பண்புகளினும் உன்னிலும் உயர்ந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தப் பிருஹத்ரதனே மரணத்திற்கு இரையானான்; {எனவே} இறந்து போன உன் மகனுக்காக வருத்தமடையாதே.(38)ஓ! சிருஞ்சயா, உசீநரனின் மகனான சிபியும்[8] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். தன் கையிலுள்ள தோல் கவசத்தை ஆள்வதைப் போல அந்த மன்னன் மொத்த பூமியையும் ஆண்டான்.(39) அந்த மன்னன் சிபி, ஒவ்வொரு போரிலும் வெற்றியையளித்த ஒரே தேரைச் செலுத்திக் கொண்டு, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்து, ஏகாதிபதிகள் அனைவரையும் அடக்கினான்.(40) உசீநரனின் மகனான அந்தச் சிபி, ஒரு வேள்வியில் தன்னிடம் இருந்த காட்டு மற்றும் வீட்டுப் பசுக்கள் மற்றும் குதிரைகள் அனைத்தையும் கொடையாக அளித்தான்(41) ஓ! சிருஞ்சயா, இந்திரனுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட வீரனும், மன்னர்களில் முதன்மையானவனும், உசீநரனின் மகனுமான அந்தச் சிபி சுமந்ததைப் போல, கடந்த கால, எதிர்கால மன்னர்கள் எவராலும் சுமையைச் சுமக்க முடியாது என்று படைப்பாளனே அவனை {சிபியைக்} குறித்து நினைத்தான். எனவே, எந்த வேள்வியும் செய்யாதவனும், எந்தக் கொடையையும் அளிக்காதவனுமான உன் மகனுக்காக வருந்தாதே.(42,43) உண்மையில், நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேன்மையானவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தச் சிபியே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(44)ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் மகனும், நன்கு நிரப்பப்பட்ட பரந்த கருவூலத்தையும், உயர் ஆன்மாவைக் கொண்டவனுமான பரதனும்[9] மரணத்திற்கு இரையானான் என்று நான் கேள்விப்படுகிறோம்.(45) யமுனையின் கரையில் தேவர்களுக்காக முன்னூறு குதிரைகளையும், சரஸ்வதியின் கரைகளில் இருபதையும், கங்கையின் கரைகளில் பதினான்கையும் அர்ப்பணித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அம்மன்னன் {பரதன்},(46) பழங்காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவனாவான்.(47) எந்த மனிதனாலும் தனது கரங்களின் வலிமையைப் பயன்படுத்தி ஆகாயத்தில் பறக்க முடியாததைப் போலவே, பூமியின் எந்த மன்னனாலும் பரதனின் பெருஞ்செயல்களைப் போலச் செய்யவே முடியாது.(48) எண்ணற்ற வேள்விப்பீடங்களை நிறுவிய அவன், முனிவர் கண்வருக்கு எண்ணற்ற குதிரைகளையும், விவரிக்க முடியாத அளவுக்குச் செல்வத்தையும் கொடையாக அளித்தான்.(49) ஓ! சிருஞ்சயா, நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேம்பட்டவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(50)ஓ! சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும்[10] கூட மரணத்திற்கு இரையானதாவே நாம் கேள்விப்படுகிறோம். அவன், தனது குடிமக்களைத் தன் மடியில் பிறந்த மகன்களைப் போலவே எப்போதும் பேணிப் பாதுகாத்தான்.(51) அவனது ஆட்சிப் பகுதிகளில் விதவைகளோ, ஆதரவற்றவர்களோ எவரும் இல்லை. உண்மையில், அந்த ராமன், தன் நாட்டை ஆள்வதில், தன் தந்தையான தசரதனைப் போலவே எப்போதும் செயல்பட்டான்.(52) பருவகாலந்தவறாமல் பொழிந்த மேகங்கள், பயிர்களை அபரிமிதமாக வளரச் செய்தன. அவனது ஆட்சி காலத்தில், அவனது நாட்டில் உணவு எப்போதும் அபரிமிதமாகவே இருந்தது.(53) நீரில் மூழ்கியோ, நெருப்பில் வெந்தோ மரணமேதும் நேரவில்லை. ராமன் ஆண்டவரை, அவனது நாட்டில் எந்த நோயைக் குறித்தும் அச்சமேதும் இருக்கவில்லை.(54) ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டவனாக இருந்தான். ராமனின் ஆட்சி காலத்தில், மனிதர்கள் அனைவரும் கூட்டமாக இருந்தனர், மனிதர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களின் கனியை அடைந்தனர்.(55) பெண்கள் ஒருவரோடொருவர் சச்சரவு கொள்ள மாட்டார்கள் எனும்போது ஆண்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது? அவனது ஆட்சிக்காலத்தில் அவனது குடிமக்கள் எப்போதும் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டோராக இருந்தனர்.(56) ராமன் ஆண்ட நாட்டின் மக்கள் அனைவரும், தங்கள் விருப்பப் பொருட்கள் அனைத்தையும் அடைந்தவர்களாக, மனம் நிறைந்தவர்களாக, அச்சமற்றவர்களாக, விடுதலை கொண்டவர்களாக, உண்மையெனும் நோன்பை நோற்றவர்களாக இருந்தனர்.(57) மரங்கள் எப்போதும் மலர்கள் மற்றும் கனிகளைச் சுமந்தவையாக, எந்த விபத்துகளுக்கும் உட்படாதவையாக இருந்தன. ஒவ்வொரு பசுவும் ஒரு துரோணத்தின் {குடத்தின்} விளிம்பு வரை பாலைக் கொடுத்தன.(58) கடுந்தவங்களை நோற்று பதினான்கு வருடங்கள் காட்டில் வசித்தவனான ராமன், யாவருங் கலந்து கொள்ளக்கூடிய பெரும் ஒளிபொருந்திய பத்து குதிரைவேள்விகளைச் செய்தான்.(59) கரிய நிறத்தவனும், கண்கள் சிவந்தவனும், இளமை கொண்டவனுமான அவன், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போலத் தெரிந்தான். கால் முட்டிகள் வரை கரங்கள் நீண்டவனும், அழகிய முகம் கொண்டவனுமான அவனது தோள்கள் சிங்கத்தைப் போன்றனவாகவும், அவனது கரங்களின் வலிமை பெரியதாகவும் இருந்தன.(60) அயோத்யையின் அரியணையில் ஏறிய அவன் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.(61) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {ராமனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(62)ஓ! சிருஞ்சயா, மன்னன் பகீரதனும்[11] இறந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அம்மன்னனின் வேள்விகளில் ஒன்றில், தான் குடித்த சோமத்தால் போதையுண்டவனும்,(63) தேவர்களின் தலைவனும், பகனைத் தண்டித்த புகழத்தக்கவனுமான இந்திரன், தன் கரங்களின் வலிமையை வெளிப்படுத்திப் பல்லாயிரக்கணக்கான அசுரர்களை வென்றான்.(64) மன்னன் பகீரதன், தான் செய்த வேள்விகளில் ஒன்றில், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பத்து லட்சம் கன்னிகையரைக் கொடையளித்தான்.(65) அந்தக் கன்னியர் ஒவ்வொருவரும் ஒரு தேரில் அமர்ந்திருந்தனர், அந்த ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருடனும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தனவும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு யானைகளும் இருந்தன.(66) ஒவ்வொரு யானையின் பின்பும் ஆயிரம் குதிரைகளும், ஒவ்வொரு குதிரைகளுக்குப் பின்னும் ஆயிரம் பசுக்களும், ஒவ்வொரு பசுவின் பின்னும் ஆயிரம் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.(67) (முன்பிருந்தே) பாகீரதி என்று பெயரிடப்பட்ட (நதிதேவியான) கங்கை, (தன் ஓடையின்) அருகே வசித்து வந்த இந்த மன்னனின் மடியில் அமர்ந்ததன் விளைவால் ஊர்வசி என்றும் அழைக்கப்பட்டாள்[12].(68) மூவழிப்பாதை கொண்ட கங்கை[13], இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் ஏகாதிபதியுமான பகீரதனுக்கு மகளாவதை ஏற்றுக் கொண்டாள்.(69) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளைப் பொறுத்தவரை உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, உன் மகனுக்காக நீ வருந்தாதே.(70)ஓ! சிருஞ்சயா, உயர் ஆன்ம திலீபனும்[14] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவனது எண்ணற்ற செயல்களை உரைப்பதற்குப் பிராமணர்கள் விரும்புவார்கள்.(71) அந்த மன்னன் {திலீனன்} தன்னுடைய பெரும் வேள்விகள் ஒன்றில், செல்வம் நிறைந்த மொத்த உலகத்தையும் முழு இதயத்துடன் பிராமணர்களுக்குக் கொடையாள அளித்தான்.(72) அவன் செய்த ஒவ்வொரு வேள்வியிலும், தலைமைப் புரோகிதர் தன் வேள்விக்கூலியாகத் தங்கத்தாலான ஆயிரம் யானைகளைப் பெற்றார்.(73) அவனுடைய வேள்விகளில் ஒன்றில், (பலிகளுக்காக நிறுவப்பட்ட) கம்பம் தங்கத்தால் செய்யப்பட்டு மிகவும் அழகாக இருந்தது. தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை ஆற்றியவர்களும், சக்ரனைத் தங்கள் தலைவனாகக் கொண்டவர்களுமான தேவர்கள், அந்த மன்னனின் {திலீபனின்} பாதுகாப்பையே எப்போதும் நாடினார்கள்.(74) பெரும் பிரகாசம் கொண்டதும், வளையத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தங்கக் கம்பத்தில், ஆறாயிரம் தேவர்களும் கந்தர்வர்களும் மகிழ்ச்சியில் ஆடினர், அவர்களுக்கு மத்தியில் விஸ்வாவசு ஏழு சுவரங்களின் விதிகளின் படி வீணையை இசைத்துக் கொண்டிருந்தான். விஸ்வாசுவுடைய இசையின் தன்மையானது, ஒவ்வொரு உயிரினமும் (அஃது எங்கிருந்தாலும்) அந்தப் பெரும் கந்தர்வன் {விஸ்வாவசு} தனக்காக மட்டுமே இசைக்கிறான் என்று எண்ணும் அளவுக்கு இருந்தது.(75,76) மன்னன் திலீபனின் சாதனையே வேறு எந்த ஏகாதிபதியாலும் செய்ய முடியாது. தங்க அம்பாரிகளால் ஆலங்கரிக்கப்பட்டு மதங்கொண்டிருந்த அந்த மன்னனின் யானைகள், சாலையில் படுத்துக் கிடந்தன[15].(77) பேச்சில் எப்போதும் உண்மை நிறைந்தவனும், நூறு அனந்தங்களின் சக்திக்கு இணையான நூறு பகைவர்களைத் தாங்கக் கூடிய வில்லைக் கொண்டனும், உயர் ஆன்மாவுமான மன்னன் திலீபனைக் கண்டவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர்.(78) வேதமோதும் குரல், விற்களின் நாணொலி, கொடுக்கப்படட்டும் என்ற ஆணை ஆகிய மூன்று ஒலிகளும் திலீபனின் வசிப்பிடத்தில் எப்போதும் ஓய்ந்ததில்லை.(79) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {திலீபனே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(80)ஓ! சிருஞ்சயா, யுவனாஸ்வனின் மகனான மாந்தாதாவும்[16] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். மருத்தர்கள் என்ற பெயரைக் கொண்ட தேவர்கள், அந்தப் பிள்ளையை அவனது தந்தையின் விலாவில் இருந்து பிரித்தெடுத்தனர்.(81) மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட தெளிந்த நெய்யில் (தாயார் குடிக்கவேண்டியதைத் தவறுதலாகத் தந்தை குடித்ததால்) உதித்த மாந்தாதா, உயர் ஆன்மா யுவனாஸ்வனின் வயிற்றில் பிறந்தான். பெரும் செழிப்பைக் கொண்டவனான மன்னன் மாந்தாதா மூவுலகங்களையும் கைப்பற்றினான்.(82) தந்தையின் மடியில் கிடக்கும் தெய்வீக அழகுடைய பிள்ளையைக் கண்ட தேவர்கள், ஒருவருக்கொருவர், “இந்தப் பிள்ளை யாரிடம் பால் குடிக்கும்?” என்று கேட்டனர்.(83) அவனை {மாந்தாதாவை} அணுகிய இந்திரன், “என்னிடமே குடிப்பான்” என்றான். இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து அந்தத் தேவர்களின் தலைவன் அந்தப் பிள்ளையை மாந்தாதா[17] என்ற பெயரில் அழைக்கத் தொடங்கினான்.(84) யுவனாஸ்வனின் உயர் ஆன்மப் பிள்ளைக்கான ஊட்டச்சத்திற்காக, இந்திரன் தன் விரலை அவனது {மந்தாதாவின்} வாயில் வைத்ததும், அது பாலூற்றைப் பொழிந்தது.(85) இந்திரனின் விரலைப் பருகிய அவன் நூறு நாட்களில் (இளமை பருவமடைந்து) வளர்ந்துவிட்டான். பனிரெண்டு நாட்களில் அவன் பனிரெண்டு வயதுடையவனைப் போல வளர்ந்தான்.(86) உயர் ஆன்மா கொண்டவனும், ஆறவோனும், துணிச்சல்மிக்கவனும், போராற்றலில் இந்திரனுக்கே ஒப்பானவனுமான அந்த மன்னனின் ஆளுகைக்குள் ஒரே நாளில் மொத்த பூமியும் வந்தது.(87) மன்னன் அங்காரன், மருத்தன், அசிதன், கயன் அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதன் ஆகியோரை அவன் வென்றான்[18].(88) யுவனாஸ்வனின் மகன் {மாந்தாதா} அங்காரனோடு போரிட்ட போது, அவனது வில்லின் நாணொலியால் வானமே உடையப் போகிறது எனத் தேவர்கள் நினைத்தனர்.(89) சூரியன் உதிக்கும் இடத்தில் இருந்து அவன் மறையும் இடம் வரை உள்ள மொத்த பூமியும் மாந்தாதாவின் நிலம் என்று சொல்லப்படுகிறது.(90) நூற்றுக்கணக்கான குதிரை வேள்விகளையும், ராஜசூய வேள்விகளையும் செய்த அவன், பிரமணர்களுக்கு பல ரோகித மீன்களைக் கொடையாகக் கொடுத்தான்.(91) அந்த மீன்கள் ஒவ்வொன்றும் பத்து யோஜனை நீளத்தையும், ஒரு யோஜனை அகலத்தையும் கொண்டிருந்தன. பிராமணர்களை நிறைவு செய்த பிறகு எஞ்சியவை பிற வகையினரால் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளப்பட்டன[19].(92) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {மாந்தாதாவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(93)ஓ! சிருஞ்சயா, நகுஷனின் மகனான யயாதியும்[20] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடல்களுடன் கூடிய மொத்த உலகையும் அடக்கிய அவன்,(94) உலகம் முழுவதும் பயணித்து, மரத்துண்டை வீசியெறிந்தால் செல்லுத் தூரத்தை இடைவெளியாகக் கொண்டு, அடுத்தடுத்த வேள்விப்பீடங்களால் அதை {பூமியை} அலங்கரித்தான். உண்மையில், அவன் இப்படி (தன் வழியில் பீடங்களை நிறுவி) பெரும் வேள்விகளைச் செய்தே கடலின் கரையை அடைந்துவிட்டான்[21].(95) ஆயிரம் வேள்விகளையும், நூறு வாஜபேயங்களையும் செய்த அவன் {யயாதி}, முதன்மையான பிராமணர்களை மூன்று தங்க மலைகளால் நிறைவு செய்தான்.(96) நகுஷனின் மகனான யயாதி, போரில் முறையாக அணிவகுத்து வந்த பல தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்று, மொத்த பூமியையும் (தன் பிள்ளைகளுக்குப்) பிரித்துக் கொடுத்தான்.(97) இறுதியாக யது மற்றும் திரஹ்யு ஆகியோரின் தலைமையிலான தன் மற்ற மகன்களை அலட்சியம் செய்து, (தன் இளைய மகனான) பூருவைத் தன் அரியணையில் அமர்த்திவிட்டு, தன் மனைவியின் துணையுடன் கானகம் புகுந்தான்.(98) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {யயாதியே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(99)ஓ! சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும்[22] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். மன்னர்களில் முதன்மையான அந்த (பூமியின்) பாதுகாவலனை {அம்பரீஷனை}, அவனது குடிமக்கள் அறத்தின் வடிவமாகக் கருதினர்.(100) அந்த ஏகாதிபதி, தனது வேள்விகளில் ஒன்றில், ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்தவர்களான பத்து லட்சம் மன்னர்களைப் பிராமணர்களுக்காகக் காத்திருக்கச் செய்தான் {அம்மன்னர்களைப் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்ய வைத்தான்}.(101) பக்திமான்கள், “அத்தகு சாதனைகள் கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது” என்று சொல்லி நாபாகனின் மகனான அம்பரீஷனைப் புகழ்ந்தார்கள்.(102) (அம்பரீஷனின் ஆணைக்கிணங்க அவனது வேள்விகளில் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்த) நூற்றுக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரத்திற்கும் ஆயிரக்கணக்கான மன்னர்கள், குதிரை வேள்வியின் கனிகளை (அந்த அம்பரீஷனின் தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம்) அடைந்து, தென்பாதையில் (ஒளியும் அருளும் நிறைந்த உலகங்களுக்கு) தங்கள் தலைவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(103) ஓ! சிருஞ்சயா, நான் முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {அம்பரீஷனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(104)ஓ! சிருஞ்சயா, சித்திரரதனின் மகனான சசபிந்துவும்[23] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு {சசபிந்துவுக்கு}, நூறாயிரம் {ஒரு லட்சம்} மனைவியரும்,(105) பத்து லட்சம் மகன்களும் இருந்தனர். தங்கக் கவசம் பூண்டவர்களான அவர்கள் அனைவரும் சிறந்த வில்லாளிகளாக இருந்தனர்.(106) அந்த இளவரசர்களில் ஒவ்வொருவரும் நூறு இளவரசிகளை மணந்தனர், அவர்களில் ஒவ்வொரு இளவரசியும், நூறு யானைகளைக் கொண்டு வந்தனர். அந்த யானைகள் ஒவ்வொன்றுடனும் நூறு தேர்கள் இருந்தன.(107) தேர்கள் ஒவ்வொன்றுடனும் நல்ல இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு குதிரைகள் இருந்தன. குதிரைகள் ஒவ்வொன்றுடனும் நூறு பசுக்கள் இருந்தன, பசுக்கள் ஒவ்வொன்றுடனும் நூறு வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் இருந்தன.(108) ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, இந்தக் கணக்கிலடங்கா செல்வங்களையும் அந்தச் சசபிந்து, ஒரு குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டான்.(109) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {சசபிந்துவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(110)ஓ! சிருஞ்சயா, அமூர்த்தரயசின் {அமார்த்தரயஸ், அதூர்த்தரஜஸின்} மகனான கயனும்[24] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். வேள்வியில் எஞ்சியவற்றை உண்டே அம்மன்னன் நூறு வருடங்கள் வாழ்ந்தான்.(111) (அத்தகு அர்ப்பணிப்பில் நிறைவு கொண்ட) அக்னி, அவனுக்கு வரங்களை அளிக்க விரும்பினான். கயன், “தடையில்லாமல் நான் கொடுத்து வந்தாலும் என் செல்வம் வற்றாததாக இருக்கட்டும். அறத்தின் மீது நான் கொண்ட மதிப்பு எப்போதும் நீடித்திருக்கட்டும்[24].(112) ஓ! வேள்விக் காணிக்கைகளை உண்பவனே, உன் அருளால் என் இதயம் எப்போதும் உண்மையில் திளைக்கட்டும்” என்ற வரங்களைக் கேட்டான். அந்த விருப்பங்கள் அனைத்தையும் மன்னன் கயன் அக்னியிடம் இருந்து அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(113) கயன், புதுநிலவு {அமாவாசை} நாட்களிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாட்களிலும், ஒவ்வொரு நான்காம் மாதத்திலும், குதிரை வேள்விகளை ஆயிரம் வருடங்களுக்கு மீண்டும் மீண்டும் செய்தான்.(114) இந்தக் காலத்தில் அவன், (ஒவ்வொரு வேள்வி நிறைவிலும்) எழுந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களையும், நூற்றுக்கணக்கான கோவேறு கழுதைகளையும் (பிராமணர்களுக்குக்) கொடுத்தான்.(115) அந்த மனிதர்களில் காளை {கயன்}, தேவர்களைச் சோமத்தாலும், பிராமணர்களைச் செல்வத்தாலும், பித்ருக்களைச் சுவாதாக்களாலும், பெண்களை அவர்களுடைய விருப்பங்களை அனைத்தையும் நிறைவேற்றுவதாலும் நிறைவு கொள்ளச் செய்தான்.(116) மன்னன் கயன், தனது பெரும் குதிரை வேள்வியில், நூறு முழம் நீளமும், ஐம்பது முழம் அகலமும் கொண்ட தங்கக் களம் {பொற்பூமி} ஒன்றை அமைத்து, அதை வேள்விக்கூலியாகக் கொடையளித்தான்.(117) ஓ மன்னா {சிருஞ்சயா}, மனிதர்களில் முதன்மையானவனும், அமூர்த்தரயசிஸ் மகனுமான கயன், கங்கையாற்றின் மணற்பருக்கைகளின் அளவுக்குப் பல பசுக்களைக் கொடையாக அளித்தான்.(118) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {கயனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன்மகனைக் குறித்து நீ வருந்துவது தகாது.(119)ஓ! சிருஞ்சயா, சங்கிருதியின் மகனான ரந்திதேவனும்[25] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடந்தவத்தில் ஈடுபட்டு, சக்ரனைப் பெருமதிப்புடன் வழிபட்ட அவன், அவனிடம் இருந்து வரங்களைப் பெற வேண்டி,(120) “நாங்கள் அபரிமிதமான உணவையும், அபரிமிதமான விருந்தினர்களையம் பெற வேண்டும். என் நம்பிக்கை சிதைவடையாமல் இருக்க வேண்டும். எந்த மனிதனிடம் இருந்தும் நாங்கள் எந்தப் பொருளையும் கேட்காமல் இருக்க வேண்டும்” என்று சொன்னான்.(121) உயர் ஆன்மா கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான ரந்திதேவனின் வேள்வியில் கொல்லப்படும் நாட்டு மற்றும் காட்டு விலங்குகள் தாமாகவே அவனிடம் வந்தன.(122) (அவனது வேள்விகளில் கொல்லப்படும்) வலிங்குகளின் தோல்களில் இருந்து பாயும் சுரப்பி நீரில் உண்டானதே சர்மண்வதி என்ற பெயரில் அறியப்பட்டு இந்த நாள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஆறாகும்.(123) மன்னன் ரந்திதேவன் தனிப்பட்ட அறைகளில் வைத்து பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மன்னன், “நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன். நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன்” என்று சொன்ன போது, (கொடுக்கப்பட்டதை ஏற்காமல் மறுக்கும் வகையில்) ஒலியெழுப்பினர்.(124) எனினும், மன்னன், “நான் உமக்கு ஆயிரம் நிஷ்கங்கள்” கொடுக்கிறேன் என்று சொன்ன போது அந்தக் கொடைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன[26]. ரந்திதேவனின் அரண்மனையில் உணவையும், பிற பொருட்களையும் கொள்ள இருந்த பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் அனைத்தும்,(125) நீர்க்கலன்கள், குடங்கள், சட்டிகள், தட்டுகள், கோப்பைகள் ஆகியன அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன.(126) ரந்திதேவனின் வசிப்பிடத்தில் ஓரிரவில் தங்கும் விருந்தினர்களுக்காக இருபதாயிரத்து நூறு பசுக்கள் கொல்லப்பட்டன[27].(127) இருப்பினும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சமையற்கலைஞர்கள், சில சமயங்களில், “குழம்பு நிறைய இருக்கிறது. விரும்பிய அளவு உண்ணுங்கள். ஆனால் முன்பு போல் இன்று அதிக இறைச்சி இல்லை” என்று (இரவு உணவு உண்பதற்காக அமர்பவர்களிடம்) அறிவிப்பார்கள்[28].(128) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {ரந்திதேவனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(129)ஓ! சிருஞ்சயா, உயர் ஆன்ம சகரனும்[29] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனான அவன் மனிதர்களில் புலியாகவும், மனித சக்திக்கு மீறிய ஆற்றலைக் கொண்டவனாகவும் இருந்தான்.(130) கூதிர்கால மேகமற்ற வானில் சந்திரனுக்காகக் காத்திருக்கும் கூட்டங்கூட்டமான நட்சத்திரங்களைப் போல அவனுக்குப் பின்னால் அறுபதாயிரம் {60000} மகன்கள் நடப்பார்கள்.(131) அவனது ஆட்சி பூமி முழுவதிலும் பரந்திருந்தது. ஆயிரம் குதிரைவேள்விகளைச் செய்து அவனும் தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(132) தங்கத்தாலான தூண்களைக் கொண்டவையும், (பிற பகுதிகள் அனைத்தும்) முழுக்க முழுக்க மதிப்புமிக்க உலோகங்களால் ஆனவையும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்ட அழகிய மங்கையரின் பெருங்கூட்டம் மற்றும் இன்னும் பிற வகை விலைமதிப்புமிக்கப் பல்வேறு பொருட்கள் ஆகியவை நிறைந்தவையும், அரண்மனை போன்றவையுமான மாளிகைகளைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான். அவனது ஆணையின் பேரில் அந்தப் பிராமணர்கள் தங்களுக்கு அந்தக் கொடைகளைப் பகிர்ந்து கொண்டனர்.(133,134) கோபத்தால் அந்த மன்னன் பூமியைத் தோண்டிய போது, அவள் தன் மார்பில் பெருங்கடலை அடைந்தாள். அதன் காரணமாகவே பெருங்கடலானது சாகரம் என்று அவனது பெயரில் அழைக்கப்படுகிறது.(135) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {சகரனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(136)ஓ! சிருஞ்சயா, வேனனின் மகனான பிருதுவும்[30] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பெருங்காட்டில் ஒன்றாகக் கூடிய பெரும் முனிவர்கள், அவனைப் பூமியின் அரசுரிமையில் நிறுவினார்கள்.(137) மனித குலம் அனைத்தையும் முன்னேறச் செய்வான் என்ற எண்ணத்தினாலாயே (முன்னேறுபவன் என்ற பொருளில்) பிருது என்று அவன் அழைக்கப்பட்டான். மேலும் காயங்களில் (க்ஷதத்தில் {ஆபத்துகளில்}) இருந்து மக்களை அவன் பாதுகாத்த காரணத்தால் (காயங்களில் இருந்து பாதுகாப்பவன் என்ற பொருளில்) க்ஷத்திரியன் என்றும் அழைக்கப்பட்டான்.(138) வேனனின் மகனான பிருதுவைக் கண்டு, பூமியின் உயிரினங்கள் அனைத்தும், “நாங்கள் அன்பால் இவனுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம்” என்றன. (உயிரினங்கள் அனைத்திடமும்) பாசப் பிணைப்புக் கொண்ட இந்தச் சூழ்நிலையிலிருந்து, அவன் “ராஜா” என்று அழைக்கபட்டான்[31].(139) அவன் ஆண்ட போது, பூமியானது உழப்படாமலேயே பயிர்களை விளைவித்தது, மரங்கள் கொண்ட இலைகள் அனைத்தும் தேனைச் சுமந்திருந்தன; ஒவ்வொரு பசுவும் கலன் நிறைந்த பாலைக் கொடுத்தன.(140) மனிதர்கள் அனைவரும் குறையற்ற நலம் கொண்டவர்களாகவும், விருப்பங்கள் அனைத்தம் நிறைவேறியவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு எதனிடமிருந்தும் எந்த அச்சமும் ஏற்படவில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல அவர்கள் வெளிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்தனர்.(141) பிருது கடலில் செல்ல விரும்பிய போது, அதன் நீர் திடமான நிலையை அடைந்தது. அவன் ஆறுகளைக் கடக்கும்போது, அவை ஒருபோதும் பெருகாமல் அமைதியாக இருந்தன. அவனுடைய தேரின் கொடிக்கம்பம் (எந்தத் தடையாலும் தடுக்கப்படாமல்) எங்கும் சுதந்திரமாக நகர்ந்தது.(142) மன்னன் பிருது, தனது மகத்தான குதிரை வேள்விகள் ஒன்றில், மூன்று நல்வங்கள்[32] அளவுள்ள இருபத்தோரு தங்க மலைகளைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(143) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்துபோன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது[33].(144)ஓ! சிருஞ்சயா, நீ எதைக் குறித்து அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்? ஓ! மன்னா, என் வார்த்தைகளை நீ கேட்பதாக எனக்குத் தெரியவில்லை. இதை நீ கேட்கவில்லையென்றால், இந்த எனது உரையானது, மரணத்தருவாயில் ஒருவனுக்குக் கொடுக்கப்படும் மருந்து, அல்லது உணவைப் போன்று கனியற்ற வீரகாவியமாகவே ஆகும்” {என்றார் நாரதர்}.(145)

சிருஞ்சயன் {நாரதரிடம்}, “ஓ! நாரதரே, சிறந்த செய்திகளைக் கொண்டதும், மலர்களின் மாலையைப் போன்று நறுமணமிக்கதும், தகுதி வாய்ந்த செயல்களைச் செய்தவர்களும், பெரும்புகழையுடையவர்களுமான உயர் ஆன்ம அரச முனிகளின் நடத்தை சம்பந்தமானதும், நிச்சயம் துயரை அகற்றவல்லதுமான இந்த உமது உரையைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.(146) ஓ! பெரும் தவசியே, உமது உரை கனியற்ற வீர காவியம் கிடையாது. நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் துயரில் இருந்து விடுபட்டேன். அமுதைப் பருகுவதால் தாகம் தணியாதவனைப் போல உமது வார்த்தைகளில் நான் தாகம் தணியவில்லை.(147) ஓ! மெய்ப்பார்வை கொண்டவரே, ஓ! தலைவா, மகனின் மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருக்கும் என்னிடம் நீர் கருணை காட்ட விரும்பினால், உமது அருளின் மூலம் அந்த மகன் நிச்சயம் மீண்டு, மீண்டும் என்னுடன் (என் வாழ்வில்) கலப்பான்” என்றான்.(148)

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “பர்வதரால் உனக்கு அளிக்கப்பட்டவனும், உயிரை இழந்தவனும், சுவர்ணஷ்டீவின் என்ற பெயரைக் கொண்டவனுமான உன் மகனை நான் உனக்குக் கொடுப்பேன். தங்கத்தின் காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை ஆயிரம் வருடங்கள் வாழ்வான்” என்றார்”.(149)

நாரதரின் திருமணமும்! சாபங்களும்!! – சாந்திபர்வம் பகுதி – 30-சுவர்ணஷ்டீவினின் கதையைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; சிருஞ்சயனை அடைந்த நாரதரும், பர்வதரும்; தன் மகள் சுகுமாரியை அவர்களின் பணிவிடைக்கு நியமித்த சிருஞ்சயன்; சுகுமாரியிடம் மையல் கொண்ட நாரதர்; உடன்படிக்கையை மீறியதாக நாரதரைச் சபித்த பர்வதர்; பதிலுக்குச் சபித்த நாரதர்; இருவரும் சாபங்களை விலக்கிக் கொண்டது…

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “சிருஞ்சயனின் மகன் எவ்வாறு சுவர்ணஷ்டீவின் ஆனான்? பர்வதர் அந்தப் பிள்ளையைச் சிருஞ்சயனுக்கு ஏன் கொடுத்தார்? அவன் ஏன் இறந்தான்?(1) அந்தக் காலத்தில் மனிதர்களின் வாழ்நாள் ஆயிரம் {1,000} வருடங்கள் என நீண்டிருந்த போது, சிருஞ்சயனின் மகன் ஏன் குழந்தை பருவத்திலேயே இறந்தான்?(2) அல்லது அவன் பெயரளவில் மட்டுமே சுவர்ணஷ்டீவினாக இருந்தானா? அவன் எவ்வாறு அப்படி அழைக்கப்படலானான்? இவை யாவையும் அறிய நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)

கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, “நடந்தவற்றை நடந்தவாறே நான் உமக்குச் சொல்கிறேன். நாரதர் மற்றும் பர்வதர் என்று உலகில் முதன்மையான இரு முனிவர்கள் இருந்தனர்.(4) நாரதர் தாய்மாமனாவார், பர்வதர் அவரது சகோதரியின் மகனாவார். ஓ! மன்னா, பழங்காலத்தில் மாமன் நாரதரும், மருமகன் பர்வதரும் தெளிந்த நெய்யையும், அரிசியையும் உண்பதற்காகவும், உலகில் இன்பச் சுற்றுலா செல்லவும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்தில் இருந்து புறப்பட்டனர்.(5,6) தவத்தகுதி கொண்ட அவர்கள் இருவரும் மனிதர்களின் உணவை உண்டு பூமியில் திரிந்து வந்தனர்.(7) மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகவும், ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும் இருந்த அவர்கள், நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்றும், அவர்களில் யாராவது ஒருவர் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டால், அவர் மற்றவரின் சாபத்திற்கு ஆளாவார் என்றும் அவர்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.(8)

உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவர்களும், இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் இருவரும், சுவித்யன் மகனான மன்னன் சிருஞ்சயனிடம் சென்று, அவனிடம்,(9) “உன் நன்மைக்காக நாங்கள் இருவரும் உன்னுடன் சில நாட்கள் வசிக்கப் போகிறோம். ஓ! பூமியின் தலைவா, எங்கள் தேவைகள் அனைத்தையும் முறையாகக் கவனிப்பாயாக” என்றனர். “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்ன மன்னன் {சிருஞ்சயன்} நல்ல விருந்தோம்பலுடன் அவர்களைக் கவனித்துக் கொண்டான்.(10) சில காலம் கழித்து ஒரு நாள், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த மன்னன் {சிருஞ்சயன்}, அழகிய நிறம் கொண்ட தன் மகளை {சுகுமாரியை} அந்தச் சிறப்புமிக்கத் தவசிகளிடம் அறிமுகப்படுத்தி, “என் மகளான இவள் உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்வாள்.(11) தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசம் கொண்டவளும், அழகியும், களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளும், இனிய பண்புகளைக் கொண்டவளுமான இவள் சுகுமாரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்” என்றான். அம்முனிவர்கள் “மிக்க நன்று” என்று மறுமொழி கூறினார்கள். மன்னன் தன் மகளிடம் {சுகுமாரியிடம்}, “ஓ! குழந்தாய், நீ தேவர்களையோ, உனது தந்தையையோ எவ்வாறு கவனிப்பாயோ அவ்வாறே இந்தப் பிராமணர்கள் இருவரையும் கவனிப்பாயாக” என்றான்.(12,13)

அறம்சார்ந்த அந்த இளவரசி {சுகுமாரி}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி தன் தந்தையின் கட்டளைக்கு இணங்கி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களைக் கவனித்துவரத் தொடங்கினாள்.(14) கடமையுணர்வு நிறைந்த அவளது தொண்டுகளும், அவளது {சுகுமாரியின்} ஒப்பற்ற அழகும், {காமமெனும்} இளம் நெருப்பால், நாரதரை வெகு விரைவில் அவளிடம் ஈர்த்தன.(15) அந்தச் சிறப்புமிக்கத் தவசியின் இதயத்தில் அந்த இளம் உணர்ச்சி {காமம்}, வளர்பிறை நிலவைப் போல வளரத் தொடங்கியது.(16) எனினும், அறம்சார்ந்த நாரதர், அந்த எரியும் பற்றைத் தன் சகோதரியின் மகனான உயர் ஆன்ம பர்வதரிடம் வெட்கத்தால் சொல்லவில்லை.(17) பர்வதரும் தன் தவச் சக்தியாலும், சில அறிகுறிகளாலும் அனைத்தையும் அறிந்தார். சினத்தால் தூண்டப்பட்ட அவர் {பர்வதர்}, காதலால் பீடிக்கப்பட்டிருக்கும் நாரதரைச் சபிக்கத் தீர்மானித்தார்.(18)

அவர் {பர்வதர், நாரதரிடம்}, “நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்ற உமது உடன்படிக்கையே நீர் மீறியிருக்கிறீர். ஓ! பிராமணரே {நாரதரே}, இதன் காரணமாக நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(19,20) கன்னிகையான சுகுமாரியின் அழகால் உமது இதயம் துளைக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்பே எனக்கு நீர் சொல்லவில்லை. இதன் காரணமாகவே நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(21) நீர் ஒரு பிரம்மச்சாரி. எனது ஆசானாகவும் இருக்கிறது. நீர் ஒரு பிராமணரும், தவசியும் கூட. இருப்பினும் என்னுடன் கொண்ட உடன்படிக்கையை நீர் மீறியிருக்கிறீர்.(22) இதன்காரணமாகச் சினத்தில் நிறையும் நான் உம்மைச் சபிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக. இந்தச் சுகுமாரி உமது மனைவியாவாள் என்பதில் ஐயமில்லை.(23) எனினும், ஓ! பலமிக்கவரே {நாரதரே}, உமது திருமணத்திற்குப் பிறகு உம்மை ஒரு குரங்காக மக்கள் அனைவரும் காண்பார்கள். உமது உண்மை பண்புகள் மறைந்ததால் அனைவருக்கும் குரங்கே தெரியும்” என்றார் {பர்வதர்}.(24)

அவரது {பர்வதரது} இந்த வார்த்தைகளைக் கேட்ட அவரது மாமன் நாரதர், கோபத்தால் நிறைந்து, தமது மருமகனான பர்வதரைப் பதிலுக்குச் சபித்தார். {நாரதர்}, “தவத்தகுதி, பிரம்மச்சரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, ஆகியவற்றைக் கொண்டவனாக இருந்தும், அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருந்தும், உன்னால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது” என்றார்.(26)

மதங்கொண்ட இரு யானைகளைப் போலச் சினத்தால் நிறைந்தும், பழிதீர்க்க விரும்பியும் அவர்கள் இவ்வாறு ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர்.(27). ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில் இருந்து உயர் ஆன்ம பர்வதர், தமது சக்திக்குத் தகுந்த மதிப்புடன் பூமியில் திரியத் தொடங்கினார்.(28) பிராமணர்களில் முதன்மையான நாரதர், சிருஞ்சயனின் மகளான களங்கமற்ற சுகுமாரியின் கரங்களை முறையான சடங்குகளின்படி அடைந்தார்.(29) எனினும், அந்த இளவரசி {சுகுமாரி}, நாரதர் அடைந்த சாபத்தின்படியே அவரைக் {குரங்காகக்} கண்டாள். உண்மையில் திருமணத்தின் இறுதி மந்திரத்தைச் சொன்னதற்குச் சற்று பிறகு, சுகுமாரி, அந்தத் தெய்வீக முனிவரை {நாரதரைக்} குரங்கின் முகத்தைக் கொண்டவராகக் கண்டாள். எனினும், இதன் காரணமாக அவள் தன் தலைவனை அலட்சியம் செய்யவில்லை. மறுபுறம், அவள் தன் அன்பையே அவருக்கு அர்ப்பணித்தாள்.(30,31) உண்மையில் அந்த இளவரசி, தன் இதயத்தில் தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் ஆகியோரில் எவரையும் கணவனாக அடையவிரும்பாமல் மொத்தமாகத் தன்னைத் தன் தலைவனுக்கே {நாரதருக்கே} அர்ப்பணித்தாள்.(32)

சிறப்புமிக்கவரான பர்வதர் தமது பயணத்தின்போது ஒரு நாள் ஒரு தனிமையான காட்டில் நுழைந்து அங்கே நாரதரைக் கண்டார்.(33) அவரை வணங்கிய பர்வதர், “ஓ! பலமிக்கவரே, சொர்க்கத்திற்குச் செல்வதற்கு என்னை அனுமதித்து என்னிடம் உமது கருணையைக் காட்டுவீராக” என்றார்.(34)

பர்வதர் உற்சாகமற்றவராகத் தம் முன் கூப்பிய கரங்களுடன் மண்டியிடுவதைக் கண்ட நாரதர், தாமும் உற்சாகமிழந்தவராக, “நீயே முதலில் என்னை “குரங்காவீராக” என்று சபித்தாய். நீ அவ்வாறு என்னிடம் சொன்ன பிறகே நான் கோபத்தில், “இந்நாளில் இருந்து நீ சொர்க்கத்தில் வசிக்கமாட்டாய்” என்று உன்னைச் சபித்தேன். நீ என் மகனைப் போன்றவனாதலால் அஃது உனக்குத் தகாது” என்றார். பிறகு அந்தத் தவசிகள் இருவரும் தங்களைத் தங்களின் சாபங்களில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.(37)

தெய்வீக வடிவையும், சுடர்மிக்க அழகையும் கொண்டவராகத் தன் கணவரைக் {நாரதரைக்} கண்ட சுகுமாரி, அவர் தன் தலைவரில்லை வேறு எவரோ என்று நினைத்து அவரிடம் இருந்து விலகி ஓடினாள்.(38) அந்த அழகான இளவரசி தன் தலைவனிடம் இருந்து விலகுவதைக் கண்ட பர்வதர், அவளிடம் {சுகுமாரியிடம்}, “இவர் உன் கணவரே. உனக்கு எந்த ஐயுணர்வும் வேண்டாம். அறவோரில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவரும், பலமிக்க முனிவருமான நாரதர் இவரே. உன் ஆன்மாவில் ஒன்றாகக் கலந்த உன் தலைவர் இவரே. இதில் நீ எந்த ஐயமும் கொள்ள வேண்டாம்” என்றார்.(40)

உயர் ஆன்ம பர்வதரால் பல்வேறு வழிகளில் உறுதி சொல்லப்பட்டு, அவளது தலைவரின் சாபத்தைக் குறித்தும் சொல்லப்பட்ட பிறகே அந்த இளவரசி தன் மனத்தில் அமைதியை அடைந்தாள். பிறகு பர்வதர் சொர்க்கத்திற்கும், நாரதர் தமது இல்லத்திற்கும் சென்றனர்” {என்றான் கிருஷ்ணன்}”.(41)

வாசுதேவன் தொடர்ந்தான், “இக்காரியத்தில் பங்குபெற்றவரும், சிறப்புமிக்க முனிவருமான நாரதரும் இங்கே இருக்கிறார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கேட்கப்பட்டால், நடந்தது அனைத்தையும் அவரே உமக்குச் சொல்வார்” {என்றான் கிருஷ்ணன்}(42).

சுவர்ணஷ்டீவின்! – சாந்திபர்வம் பகுதி – 31-சிருஞ்சயனுக்கு வரமளித்த பர்வதர்; அவனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற புலி; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன்: சுவர்ணஷ்டீவினை உயிர்மீட்டளித்த நாரதர்; யுதிஷ்டிரனை அரசகனம் ஏற்கும்படி வற்புறுத்தியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், “ஓ! புனிதமானவரே, உடற்கழிவுகளைப் பொன்னாகக் கொண்ட அந்தப் பிள்ளையின் {சுவர்ணஷ்டீவின்} பிறப்பைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கேட்கப்பட்ட தவசி நாரதர், உடற்கழிவைத் தங்கமாகக் கொண்ட அந்தப் பிள்ளை தொடர்பாக நடந்தவை அனைத்தையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(2)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கேசவன் {கிருஷ்ணன்} சொன்னது போலவேதான் நடந்தது. இந்தக் கதையில் எஞ்சியிருக்கும் பகுதியைக் கேட்கின்ற உனக்கு இப்போது நான் சொல்லப் போகிறேன்.(3) நானும், என் சகோதரியின் மகனான பெருந்தவசி பர்வதனும், வெற்றியடைந்த மன்னர்கள் அனைவரிலும் முதன்மையான சிருஞ்சயனுடன் வசிப்பதற்காக (ஒரு சந்தர்ப்பத்தில்) அவனிடம் வந்தோம்.(4) முறையான சடங்குகளுடன் அவனால் கௌரவிக்கப்பட்டும், எங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியும் இருந்த நாங்கள், அவனது வசிப்பிடத்தில் தங்கினோம்.(5) மழைக்காலம் சென்ற பிறகு, நாங்கள் செல்வதற்கான நேரம் வந்தபோது, அந்த நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லும் வகையில் பர்வதன் என்னிடம்,(6) “ஓ! பிராமணரே, மன்னனால் உயர்வாகக் கௌரவிக்கப்பட்ட நிலையில் நாம் சிறுது காலம் அவனது வசிப்பிடத்தில் தங்கினோம். நாம் அதற்கு என்ன கைம்மாறு செய்யபோகிறோம் என்பதை நினைப்பீராக” என்றான்.(7)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போது நான் அருள் தன்மை கொண்ட பர்வதனிடம், “ஓ! மருமகனே, அதற்குத் தகுந்தவன் நீயே, ஓ! பெருஞ்சக்திகொண்டவரே, இவை அனைத்தும் உன்னை நம்பியே இருக்கின்றன.(8) உன் வரங்களின் மூலம் மன்னன் மகிழ்ச்சி அடையட்டும், அவன் தன் விருப்பங்களை அடையட்டும். அல்லது, நீ விரும்பினால் நம் இருவரின் தவத் தகுதிகளின் மூலம் அவன் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்” என்று சொன்னேன்.(9)

அதன் பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, வெற்றியாளர்களில் முதன்மையானவனான மன்னன் சிருஞ்சயனை அழைத்த பர்வதன், அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, உண்மையுடனும், விருந்தோம்பலுடனும் கூடிய உனது கவனிப்புகளில் நாங்கள் பெரும் நிறைவடைந்திருக்கிறோம். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, என்ன வரம் வேண்டுவது என எங்கள் அனுமதியுடன் சிந்திப்பாயாக.(11) எனினும், அந்த வரமானது தேவர்களுடன் பகையையோ, மனிதர்களுக்கு அழிவையோ ஏற்படுத்தாதவாறு இருக்கட்டும். ஓ! மன்னா, வரம்பெறத் தகுந்தவன் என உன்னை நாங்கள் கருதுவதால் அஃதை ஏற்பாயாக” என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன்,(12) “நீங்கள் என்னிடம் மனநிறைவு கொண்டால், அதுவே என் நோக்கம் நிறைவேறிய நிலையாகும். அதுவே எனக்குப் பெரிய பேறாகும். என் விருப்பங்கள் அனைத்தின் கனியாக அதையே நான் கருதுகிறேன்” என்றான்.(13)

இவ்வாறு சொன்ன சிருஞ்சயனிடம் மீண்டும் பர்வதன், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, நீண்ட காலமாக நீ உன் இதயத்தில் பேணிப் பாதுகாக்கும் விருப்பத்தின் கனியை வேண்டுவாயாக” என்றான்.(14)

சிருஞ்சயன் {பர்வதரிடம்}, “வீரனாகவும், பெருஞ்சக்தி கொண்டவனாகவும், தன் நோன்புகளில் உறுதி மிக்கவனாகவும், நீண்ட வாழ்வு கொண்டவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும், தேவர்களின் தலைவனுக்கு நிகரான காந்தியைக் கொண்டவனாகவும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(15)

அதற்குப் பர்வதன் {சிருஞ்சயனிடம்}, “உனது இவ்விருப்பம் நிறைவேறும். எனினும், உன் மகன் தேவர்களின் தலைவனை விஞ்சும் அளவில் இருக்க வேண்டும் என்று நீ விரும்புவதால் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்க மாட்டான்.(16) உன் மகன் சுவர்ணஷ்டீவின் என்ற பெயரால் அறியப்படுவான். தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்ற காந்தி கொண்டவனாக அவன் இருந்தாலும், நீ அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இருந்து அவனை எப்போதும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.(17)

உயர் ஆன்ம பர்வதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன், வேறு வகையில் விதிக்குமாறு அந்தத் தவசியை வேண்டத் தொடங்கினான், {அவன்}, “ஓ! முனிவரே, உமது தவத் தகுதியின் மூலம் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்கட்டும்” என்று கேட்டான். எனினும், பர்வதன், இந்திரனிடம் தான் கொண்ட சார்பு நிலையினால் ஏதும் பேசாதிருந்தான்.(18)

மன்னன் {சிருஞ்சயன்} மிகவும் உற்சாகமற்றிருப்பதைக் கண்ட {நாரதனாகிய} நான், அவனிடம், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, (உனது துயர் காலத்தில்) நீ என்னை நினைப்பாயாக. உன்னால் அழைக்கப்படும்போது நான் உன்னிடம் வருவேன் என உறுதியளிக்கிறேன். உன் அன்புக்குரிய மகன் {சுவர்ணஷ்டீவின்} இறந்தாலும் கூட, நான் அவனை உயிருடன் கூடியவனாக உனக்குத் தருவேன்” என்றேன். அந்த ஏகாதிபதியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு நாங்கள் இருவரும் விரும்பிய இடத்திற்குச் செல்வதற்காக அவனது முன்னிலையில் இருந்து அகன்றோம், சிருஞ்சயனும் அவன் விரும்பியவாறு அவனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(22)

சில காலம் கழிந்ததும், பேராற்றல் கொண்டவனும், சக்தியால் சுடர்விடுபவனுமான ஒரு மகன் அரச முனியான சிருஞ்சயனுக்குப் பிறந்தான்.(23) அந்தப் பிள்ளை தடாகத்தில் வளரும் பெரிய தாமரையைப் போல வளர்ந்து, தன் பெயரைப் போலவே உண்மையிலேயே சுவர்ணஷ்டீவின் ஆனான்.(24) ஓ! குருக்களில் சிறந்தவனே, இயல்புக்கு மிக்க இந்தச் செய்தி வெகுவிரைவில் உலகம் முழுவதும் பரவியது. தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, இது பர்வதனுடைய வரத்தின் விளைவு என்பதை அறிய வந்தான்.(25) (அந்தப் பிள்ளை வளர்ந்ததும், அவனால் ஏற்படப்போகும்) அவமதிப்புக்கு அஞ்சியவனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனுமான இந்திரன், அந்த இளவரசனின் சிறு குறைகளையும் கவனமாகக் காணத் தொடங்கினான்.(26) அவன் {இந்திரன்}, தன் முன்னே உடல் கொண்டு வந்து நின்ற தன் தெய்வீக ஆயுதமான வஜ்ரத்திடம், “ஓ! பலமிக்கவனே {வஜ்ரனே}, புலியின் வடிவை ஏற்றுச் சென்று இந்த இளவரசனைக் {சுவர்ணஷ்டீவினை} கொல்வாயாக.(27) ஓ! வஜ்ரனே, பர்வதர் சொன்னதைப் போல இந்தப் பிள்ளை வளர்ந்ததும், தனது சாதனைகளால் என்னை அவமதிக்கக்கூடும்” என்றான்.(28) தெய்வீக ஆயுதமும், பகை நகரங்களை அடக்குவதுமான வஜ்ரம், சக்ரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த நாளிலிருந்து அந்த இளவரசனின் குறைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தது.(29)

அதேவேளையில், சிருஞ்சயன், இந்திரனின் காந்திக்கு ஒப்பான பிள்ளையைப் பெற்றதால் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தான். தன் மனைவியரின் துணையோடும், தன் இல்லத்தைச் சேர்ந்த வேறு பெண்களின் துணையோடும், காட்டுக்கு மத்தியில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(30)

ஒருநாள் செவிலியின் துணையுடன் கூடிய அந்தப் பிள்ளை, பாகீரதியின் கரைகளில் அங்கேயும், இங்கேயும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.(31) ஐந்து வயதே ஆனவனாக இருப்பினும் அவனது ஆற்றல் ஒரு வலிமைமிக்க யானைக்கு ஒப்பானதாக இருந்தது. அவ்வாறு அவன் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்தப் பிள்ளை ஒரு பலமிக்கப் புலியைச் சந்தித்தான்.(32) அந்தப் புலியால் சிதைக்கப்பட்டபோது, குழந்தையாக இருந்த அந்த இளவரசன் {சுவர்ணஷ்டீவின்} பயங்கரமாக நடுங்கி, விரைவில் உயிரை இழந்து பூமியில் விழுந்தான். இந்தக் காட்சியைக் கண்ட செவிலி, உரத்த குரலில் துன்பத்துடன் அழுதாள்.(33) புலியானது, அந்த இளவரசனைக் கொன்றபிறகு, இந்திரனின் மாயையின் மூலம் அங்கேயே அப்போதே மறைந்து போனது.(34)

அழுது கொண்டிரக்கும் செலவிலியின் குரலைக் கேட்ட மன்னன் {சிருஞ்சயன்} பெருஞ்சோகத்தோடு அந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்றான்.(35) அங்கே இரத்தம் குடிக்கப்பட்டு, ஒளியிழந்தவனாக ஆகாயத்திலிருந்து விழுந்த நிலவைப் போலத் தன் மகன் கிடப்பதைக் கண்டான்.(36) குருதியில் மறைந்த சிறுவனைத் தன் மடியில் ஏந்திய மன்னன், துயரால் பீடிக்கப்பட்ட இதயத்துடன் பரிதாபகரமாகப் புலம்பத் தொடங்கினான்.(37) அரச மகளிர் துயரால் பீடிக்கப்பட்டு அழுதுகொண்டே மன்னன் சிருஞ்சயன் இருக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றனர்.(38) அந்தச் சூழ்நிலையில் மன்னன் {சிருஞ்சயன்} குவிந்த கவனத்துடன் {நாரதனாகிய} என்னைச் சிந்தித்தான். மன்னன் என்னைக் குறித்துச் சிந்திப்பதை அறிந்து நான் அங்கே சென்றேன்.(39) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, துயரால் பீடிக்கப்பட்டிருந்த அந்த மன்னன்னுக்கு {சிருஞ்சயனுக்கு}, இந்த யதுகுல வீரன் {கிருஷ்ணன்} இப்போது சொன்ன கதைகள் அனைத்தையும் நான் சொன்னேன்.(40) பிறகு இந்திரனின் அனுமதியுடன் நான் சிருஞ்சயனின் பிள்ளையை உயிரோடு மீட்டெடுத்தேன். விதிக்கப்பட்டது நடந்தே தீரும். வேறு வகையில் நடக்க இயலாது.(41)

இதன்பிறகு பெரும் புகழும் சக்தியும் கொண்ட அந்த இளவரசன் சுவர்ணஷ்டீவின் தன் பெற்றோரின் இதயங்களை மகிழ்ச்சியில் திளைக்கச்செய்தான்.(42) பேராற்றலைக் கொண்ட அவன், தன் தந்தை சொர்க்கத்திற்குச் சென்றதும் அரியணை ஏறி, ஆயிரத்து நூறு {1,100} வருடங்கள் ஆட்சி செய்தான்.(43) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகள் பலவற்றில் அவன் தேவர்களை வழிபட்டான். பெருங்காந்தி கொண்ட அவன், தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவுகொள்ளச் செய்தான்.(44) பல மகன்களைப் பெற்று, அவர்கள் மூலம் குலத்தைப் பெருக்கிய அவன் {சுவர்ணஷ்டீவின்} பல வருடங்களுக்குப் பிறகு இயற்கையின் வழியில் சென்றான்[1].(45)ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கேசவனும் {கிருஷ்ணனும்}, கடுந்தவங்களைச் செய்த வியாசரும் ஆலோசனை கூறியதைப் போல உன் இதயத்தில் இருக்கும் இந்தத் துயரை அகற்றுவாயாக.(46) ஓ! மன்னா, எழுவாயாக. உன் மூதாதையருடைய நாட்டின் சுமையை ஏற்று, (மறுமையில்) உன்னால் விரும்பப்படும் எந்த உலகத்தையும் அடைய உயர்ந்த பெரும் வேள்விகளைச் செய்வாயாக” என்றார் {நாரதர்}”.(47)

பாவங்கழி! – சாந்திபர்வம் பகுதி – 32-கடமைகள், அறநெறி ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; தன்னை எரிக்கும் காரணங்களைச் சொன்ன யுதிஷ்டிரன்; செயல்களில் பரம்பொருள் மற்றும் மனிதனின் பொறுப்பு, பாவங்கழிக்கும் பிராயச்சித்தங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்.

வைசம்பாயனர் சொன்னார், “தீவில் பிறந்தவரும், அறவுண்மைகள் அறிந்த பெரும் தவசியுமான வியாசர், பேச்சற்றவனாகவும், துயரில் மூழ்கியவனாகவும் நீடித்திருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினார்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, குடிமக்களைப் பாதுகாப்பதும் மன்னர்களின் கடமையாகும். எப்போதும் கடமையை நோற்கும் மனிதர்கள், கடமையே அனைத்திலும் சக்திமிக்கது எனக் கருதுகின்றனர்.(2) எனவே, ஓ! மன்னா, உன் முன்னோர்களின் பாதச்சுவடுகளில் நீ நடப்பாயாக. பிராமணர்களுக்குத் தவங்களே கடமையாகும். இதுவே வேதங்களில் உள்ள நித்திய விதியாகும்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தவங்களே பிராமணர்களின் நித்திய கடமையாகிறது. மக்கள் அனைவரையும் காப்பதே ஒரு க்ஷத்திரியனின் கடமையாகும்[1].(4) பூமிசார்ந்த உடைமைகளுக்கு அடிமையாகி, கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவனும், சமூக இணக்கத்திற்கு எதிரான குற்றவாளியுமான ஒரு மனிதன் வலிய கரம் கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.(5)அதிகாரத்தை மீறும் உணர்வற்ற மனிதன், தன் பணியாளாகவோ, மகனாகவோ, தவசியாகவோ இருந்தாலும் கூட, பாவம் நிறைந்த அத்தகு இயல்புடைய மனிதர்கள் அனைவரும் அனைத்து வழிகளிலும் தண்டிக்கப்படவோ, கொல்லப்படவோ வேண்டும். வேறுவகையில் நடந்து கொள்ளும் மன்னன் பாவமிழைத்தவனாவான்.(6,7) அறநெறி அலட்சியம் செய்யப்படும்போது, அதைப் பாதுகாக்காதவனும் அறநெறியை மீறியவனே ஆவான். கௌரவர்கள் அறநெறியை மீறியவர்களாவர். அவர்களும், அவர்களுடைய தொண்டர்களும் உன்னால் கொல்லப்பட்டனர்.(8) நீ உன் வகைக்கான கடமையை நோற்றிருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே, பிறகு ஏன் நீ இத்தகு துயரத்தில் ஈடுபடுகிறாய்? ஒரு மன்னன், சாகத் தகுந்தவர்களைக் கொல்லவும், ஈகைக்குத் தகுந்தோருக்குக் கொடைகள் அளிக்கவும்ம், தன் குடிமக்களை விதிப்படி பாதுகாக்கவும் வேண்டும்” என்றார் {வியாசர்}.(9)

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பெரும் தவத்தகுதி கொண்டவரே, உமது உதடுகளில் இருந்து உதிரும் வார்த்தைகளில் நான் ஐயங்கொள்ளமாட்டேன். ஓ! அறநெறி மற்றும் கடமை குறித்து அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, அறநெறி மற்றும் கடமை தொடர்பான அனைத்தும் உம்மால் அறியப்பட்டிருக்கிறது.(10) எனினும், நாட்டின் நிமித்தமாக நான் பல மனிதர்களைக் கொல்லச் செய்துவிட்டேன். ஓ! பிராமணரே {வியாசரே}, அந்தச் செயல்களே என்னை எரித்து உட்கொள்கின்றன” என்றான்.(11)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, செயல்படுவது பரம்பொருளா? {பரமாத்மாவா?} மனிதனா? இவ்வுலகில் அனைத்தும் வாய்ப்பின் விளைவுகளா? அல்லது (முந்தைய) செயல்பாடுகளின் விளைவுகளால் உண்டான இன்ப துன்பங்களின் கனிகளா?(12) ஓ! பாரதா, ஒரு மனிதன், பரம்பொருளால் உந்தப்பட்டு நன்மையோ, தீமையோவான அனைத்து செயல்களையும் செய்தால், அந்தச் செயல்களின் கனிகள் அந்தப் பரம்பொருளையே பற்ற வேண்டும்.(13) ஒரு மனிதன் காட்டில் உள்ள ஒரு மரத்தைக் கோடரியால் வெட்டினால், அந்த மனிதன் பாவமிழைக்கிறானேயன்றி, எவ்வழியிலும் அந்தக் கோடரி பாவமிழைக்கவில்லை.(14) அல்லது அந்தக் கோடரி பொருட்காரணமாக மட்டுமே இருக்கிறது, (வெட்டிய) அந்தச் செயலின் விளைவு, (அசையாத {தானாகச் செயல்படாத} கருவியை அல்லாமல்) அசையும் {தானாகச் செயல்படும்} செயலியையே பற்ற வேண்டும் என்று சொன்னால், அந்தப் பாவம் அந்தக் கோடரியைச் செய்த மனிதனையே சாரும். எனினும் இஃது ஒருக்காலும் உண்மையாக முடியாது.(15) மற்றவனால் செய்யப்பட்ட செயலின் விளைவு வேறொரு மனிதனைப் பற்றுவது அறிவார்ந்ததாக இல்லையெனில், ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதனால் வழிகாட்டப்படும் நீ பொறுப்புகள் அனைத்தையும் பரம்பொருளிடமே விட்டுவிட வேண்டும்[2].(16) மேலும், நல்ல மற்றும் பாவச் செயல்கள் அனைத்தையும் செய்பவன் மனிதனேயென்றால் பரம்பொருளேதும் இல்லை என்றாகிறது, எனவே, நீ செய்த அனைத்தும், உனக்குத் தீய விளைவுகளை உண்டாக்க முடியாது.(17)ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, விதிக்கப்பட்டதில் இருந்து எவனாலும் ஒருபோதும் விலக முடியாது. மேலும், முந்தைய வாழ்வு {முற்பிறவிச்} செயல்களின் விளைவுகளே விதி என்றால், மரத்தை வெட்டுவதால் உண்டாகும் பாவம், கோடரியைச் செய்தவனைத் தீண்டாததைப் போலவே, இவ்வாழ்வில் ஒருவனை எந்தப் பாவமும் பற்றாது.(18) வாய்ப்பு மட்டுமே உலகில் செயல்படுகிறது என்று நீ நினைத்தால், அப்போது அத்தகு அழிவுச் செயல் ஒரு போதும் நடைபெற முடியாது, அல்லது ஒரு போதும் நடக்காது.(19) உலகில் எது நன்மை, எது தீமை என்று உறுதி செய்யும் அவசியம் இருந்தால், சாத்திரங்களைக் கவனிப்பாயாக. அந்தச் சாத்திரங்களில், மன்னர்கள், தங்கள் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் நிற்க வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(20)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்ல மற்றும் தீய செயல்கள் சக்கரம் போல் தொடர்ந்து சுழல்கின்றன என்றும், தாங்கள் செய்யும் அந்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனிகளையே மனிதர்கள் அடைகிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.(21) பாவம் நிறைந்த ஒரு செயல் மற்றொன்றில் {மற்றொரு பாவத்தில்} இருந்தே விளைகிறது. எனவே, ஓ! மன்னர்களில் புலியே, தீச்செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பாயாக. மேலும் உன் இதயத்தை இவ்வாறான துயரில் நிலைக்கச் செய்யாதே.(22) ஓ! பாரதா, உன் வகைக்குரிய கடமைகள் நிந்திக்கத்தக்கவையே ஆனாலும் அவற்றைப் பின்பற்றுவாயாக. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தத் தன்னழிவு {உடலைத் துறக்கும் தற்கொலை} உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை.(23) ஓ! மன்னா, (தீய) செயல்களுக்கான பாவக்கழிவுகளும் {பிராயச்சித்தங்களும்} விதிக்கப்பட்டிருக்கின்றன. உயிரோடிருப்பவனால் அவற்றைச் செய்ய முடியும், இறந்தவன் அதைச் செய்யத் தவறுகிறான்.(24) எனவே, ஓ! மன்னா, உன் உயிரை விடாமல், அந்தப் பாவம் கழிக்கும் செயல்களை {பிராயச்சித்தங்களைச்} செய்வாயாக. நீ அவற்றைச் செய்யவில்லையெனில், அடுத்த உலகில் {மறுமையில்} நீ வருந்த வேண்டியிருக்கும்” என்றார் {வியாசர்}”.(25)

கடமையைச் செய்! – சாந்திபர்வம் பகுதி – 33-தன் துயரையும், தாங்கள் அடையப் போகும் நிந்தனையையும் நினைத்து துறவே கதி என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; பலரைக் கொன்றது காலமேயன்றி அவனில்லை என்றும், இறந்தவர்கள் தங்கள் செயல்களின் பலனாகவே இறந்தார்கள், கொல்லத்தக்கவர்களே கொல்லப்பட்டார்கள் என்றும், நண்பர்களின் நாடுகளில் அவர்களது வாரிசுகளை அரியணையில் நிறுவச் செய்வதும், தான் அடைந்த நாட்டை ஆள்வதுமே யுதிஷ்டிரனின் கடமை, துறவல்ல என்றும் அவனிடம் சொன்ன வியாசர்…

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பாட்டா {வியாசரே}, மகன்கள், பேரப்பிள்ளைகள, சகோதரர்கள், தந்தைமார்கள், மாமன்மார்கள், ஆசான்கள், தாய்மாமன்கள், பாட்டன்கள்,(1) உயர் ஆன்ம க்ஷத்திரியர்கள் பலர், (திருமண உறவால் உண்டான) உறவினர்கள் பலர், நண்பர்கள், தோழர்கள், சகோதரியின் மகன்கள்,(2) பல்வேறு நாடுகளில் இருந்து வந்த முதன்மையானோர் பலரும் வீழ்ந்துவிட்டனர். ஓ! பாட்டா, நாடு அடையும் ஆசை கொண்ட என்னால் மட்டுமே இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) ஓ! பெரும் தவசியே, அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், வேள்விகளில் சோமம் பருகியவர்களுமான வீர மன்னர்கள் பலரைக் கொல்லச் செய்த நான் இறுதியில் என்ன கதியை அடையப் போகிறேன்?(4) ஓ! பாட்டா, பெருஞ்செழிப்பில் திளைத்த மன்னர்களில் சிங்கங்களான பலரை இந்தப் பூமி இழந்துவிட்டதே என்ற நினைப்பில் இந்த நாள் வரை நான் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறேன்.(5) உறவினர்களும், லட்சக்கணக்கான பல மனிதர்களும் கொல்லப்பட்டதைக் கண்டு துயரத்தில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன்.(6)

ஓ!, மகன்கள், கணவர்கள், சகோதரர்கள் ஆகியோரை இழந்த முதன்மையான பெண்கள் அடையப்போகும் அவலநிலை என்ன?(7) உடல் மெலிந்த அந்தப் பெண்கள், பாண்டவர்களையும், விருஷ்ணிகளையும் கொடூரக் கொலைகாரர்களாக நிந்தித்துத் துயரில் மூழ்கி பூமியில் விழப்போகிறார்கள்.(8) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {வியாசரே}, தங்கள் தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள் மற்றும் மகன்களைக் காணாத அந்த மகளிர், துயரத்தை அடைந்து, தங்கள் உயிர் மூச்சுகளை விட்டு, யமலோகம் செல்லப் போகிறார்கள். இதில் எனக்கு ஐயமேதுமில்லை. அறநெறியின் பாதையானது மிகவும் நுட்பமானது. இதன் காரணமாகப் பெண்களைக் கொன்ற குற்றத்தால் நாங்கள் களங்கப்படுவோம் என்பது வெளிப்படையானது.(9,10) உறவினர்களையும், நண்பர்களையும் கொன்று, அதன்மூலம் கழிக்கப்படவே முடியாத {பரிகாரமில்லாத} பாவத்தைச் செய்த நாங்கள் நரகிற்குள் தலைக்குப்புற விழப் போகிறோம்.(11) எனவே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, கடுந்தவங்களின் மூலம் நாங்கள் எங்கள் அங்கங்களை வீணாக்கப் போகிறோம். ஓ! பாட்டா, இப்போது நான் எந்த வாழ்வு முறையை நோற்க வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தீவில் பிறந்த முனிவர் {வியாசர்}, யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, சிறிது நேரம் கூர்மையாகச் சிந்தித்து, பின்வருமாறு பாண்டுவின் மகனிடம் பேசினார்.(13)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நினைவுகூர்வாயாக. துயரில் மூழ்காதே. ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் தங்களுக்கு முறையான கடமைகளை நோற்றே வீழ்ந்தனர்.(14) பூமியில் பெருஞ்செழிப்பையும், பெரும்புகழையும் தொடர்ந்து சென்றவர்களும், மரணக்கடப்பாடு கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், காலத்தின் ஆதிக்கத்தின் மூலமே அழிந்தனர்[1].(15) நீயோ, இந்தப் பீமனோ, அர்ஜுனனோ, இரட்டையர்களோ {நகுல சகாதேவர்களோ} அவர்களைக் கொன்றவர்களில்லை. மாற்றம் என்ற பெரும் விதியின்படி காலமே அவர்களது உயிர் மூச்சுகளை எடுத்தது.(16) காலனுக்குத் தாயோ, தந்தையோ, எந்தக் கருணையும் காட்ட வேறு எவருமோ கிடையாது. அவனே {காலனே} அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான சாட்சியாக இருக்கிறான். அவர்கள் அவனாலேயே எடுத்துக் கொள்ளப்பட்டனர்.(17) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்தப் போரானது அவனால் விதிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் மட்டுமே. உயிரினங்களெனும் கருவிகளின் மூலம் அவனே உயிரினங்களைக் கொல்லச் செய்கிறான். இந்த வகையிலேயே காலமானது தடுக்கப்பட முடியாத தன் பலத்தை வெளிப்படுத்துகிறது.(18)காலமானது (உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்பில்) செயல்பாடுகளில் உள்ள பற்றைச் சார்ந்திருக்கிறது, மேலும் நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சியாக இருக்கிறது என்பதை அறிவாயாக. அருள், அல்லது துயர் நிறைந்த நமது செயல்பாடுகளின் கனியைக் கொண்டு வருவது காலமே.(19) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, வீழ்ந்துவிட்ட அந்த க்ஷத்திரியர்களின் செயல்பாடுகளை நினைவுகூர்வாயாக. அந்தச் செயல்பாடுகளே அவர்களுடைய அழிவுக்கான காரணங்களாகும். அவற்றின் விளைவாகவே அவர்கள் அழிவை அடைந்தனர்.(20) தற்கட்டுபாட்டுடன் கூடிய நோன்புகளை நோற்றுச் செய்யப்பட்ட உன் செயல்களையும் நினைத்துபார். (மனிதர்கள் பலரைக் கொல்லும் வகையில்) இத்தகு செயலைச் செய்யுமாறு விதிசமைத்த உயர்ந்தவனால் எவ்வாறு நீ பலவந்தப்படுத்தப்பட்டாய் என்பதையும் நினைத்துப் பார்.(21) கொல்லனாலோ, தச்சனாலோ செய்யப்பட்ட ஆயுதமானது, அதைப் பயன்படுத்தும் மனிதனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து, அவன் பயன்படுத்துவற்குத்தக்க வகையில்  பயன்படுவதைப் போலவே இந்த அண்டமும் காலத்தின் செயல்களால் கட்டுப்படுத்தப்பட்டு, அந்தச் செயல்பாடுகள் தன்னைப் பயன்படுத்துவதற்குத்தக்கவே பயன்படுகிறது[2].(22) தூண்டலற்றவகையில், எந்த (குறிப்பிட்ட) காரணமும் இல்லாமல் உயிரனங்களின் பிறப்பும், இறப்பும் நேர்வதைக் காணும்போது, துன்பமும் இன்பமும் முற்றிலும் தேவையற்றனவாகத் தெரிகின்றன.(23) உன் இதயத்தின் சிக்கல் வெறும் மாயையே என்றாலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (ஒரு வகையில் பாவம் என்றழைக்கப்படுவதில் இருந்து விடுபட்டு உன்னைக் கழுவிக் கொள்வதற்கு வேண்டிய) பாவக்கழிவு சடங்குகளைச் செய்வாயாக.(24)ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, தேவர்களும், அசுரர்களும் ஒருவரோடொருவர் போரிட்டனர் என்று கேள்விப்படுகிறோம். அசுரர்கள் மூத்த சகோதரர்களாகவும், தேவர்கள் இளைய சகோதரர்களாகவும் இருந்தனர்.(25) செழிப்பில் பேராசை கொண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட போரானது மிகக் கடுமையானதாக இருந்தது. அந்தப் போர் முப்பத்திரண்டாயிரம் {32,000} வருடங்கள் நீடித்தது.(26) தேவர்கள், பூமியை ஒரே இரத்தக்கடலாகச் செய்து, தைத்தியர்களைக் கொன்று சொர்க்கத்தை உடைமையாக அடைந்தனர்.(27) பூமியை உடைமையாகக் கொண்டிருந்தவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான பிராமணர்கள், செருக்கில் மயங்கி, ஆயுதங்கள் தரித்துக் கொண்டு தானவர்களுக்கு உதவும் வகையில் அவர்களோடு சேர்ந்து போரிட்டனர்.(28) எண்ணிக்கையில் எண்பத்தெட்டாயிரம் {86,000} பேரான அவர்கள் {பிராமணர்கள்} சாலாவிருகர்கள் என்ற பெயரில் அறியப்பட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் தேவர்களால் கொல்லப்பட்டனர்.(29) அறத்திற்கு அழிவை உண்டாக்க விரும்புபவர்களும், பாவம் செய்பவர்களுமான அந்தத் தீய ஆன்மாக்கள் {பிராமணர்கள்}, தேவர்களால் கொல்லப்பட்ட கடுந்தைத்தியர்களைப் போலவே கொல்லப்படத்தகுந்தவர்களே ஆவர்.(30)

தனிப்பட்ட ஒருவனைக் கொல்வதால் ஒரு குடும்பத்தைக் காக்கமுடியும் என்றால், அல்லது ஒரு தனிப்பட்ட குடும்பத்தைக் கொல்வதன் மூலம் மொத்த நாட்டையும் காக்க முடியும் என்றால், அந்தப் படுகொலைகள் அறமீறலாகாது.(31) ஓ! மன்னா, சில வேளைகளில் பாவமானது அறத்தின் வடிவை ஏற்கிறது, சில வேளைகளில் அறமும் பாவ வடிவை ஏற்கிறது. எனினும் கல்விமான்கள் அவை எவை என்பதைப் பகுத்தறிவார்கள்[3].(32) எனவே, ஓ! பாண்டுவின் மகனே, சாத்திரங்களை நன்கறிந்தவனான நீ ஆறுதலடைவாயாக. ஓ! பாரதா, தேவர்கள் சென்ற பாதையையே நீயும் பின்பற்றியிருக்கிறாய்.(33) ஓ! பாண்டு குலத்தின் காளையே உன்னைப் போன்றோர் ஒருபோதும் நரகை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன் சகோதரர்களையும், உன் நண்பர்கள் அனைவரையும் தேற்றுவாயாக.(34) தெரிந்தே பாவகரச் செயல்களில் ஈடுபட்டும், பாவகரச் செயல்களைச் செய்து வெட்கமேதும் அடையாமல் முன்பைப் போலவே இருப்பவன் (சாத்திரங்களின்படி) பெரும்பாவி என்றழைக்கப்படுகிறான். பாவம் கழிக்கும் எந்த வழியும் {பரிகாரமேதும்} அவனுக்கு இல்லை. {பாவக் கழிப்புச் சடங்குகள் செய்தாலும்} அவனது பாவங்களும் குறைவடைவதில்லை.(36)நீ உன்னதக் குலத்தில் பிறந்திருக்கிறாய். பிறரின் குற்றங்களால் வலுகட்டாய நிலையை அடைந்தும், விருப்பமில்லாமலுமே நீ இதைச் செய்தாய், இதைச் செய்த பிறகு நீ வருந்தலாகாது.(37) பெருஞ்சடங்கான குதிரைவேள்வியே உனக்கான பாவக்கழிப்பாகச் சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக, நீ உன் பாவங்களில் இருந்து விடுபடுவாய்.(38) பகனைத் தண்டித்த தெய்வீகமானவன் {இந்திரன்}, மருத்துக்களின் துணையுடன் தன் எதிரிகளை வென்று, படிப்படியாக நூறு வேள்விகளைச் செய்து சதக்ரதுவானான்[4].(39) பாவத்திலிருந்து விடுபட்டுச் சொர்க்கத்தை அடைந்து, பல அருள் உலகங்களையும், பெரும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடைந்த சக்ரன் {இந்திரன்}, மருத்துகளால் சூழப்பட்டவனாக, அழகில் ஒளிர்ந்து கொண்டே, தன் காந்தியால் நான்கு பகுதிகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறான்.(40) சச்சியின் தலைவனான அவன் {இந்திரன்} சொர்க்கத்தில் அப்சரஸ்களால் துதிக்கப்படுகிறான். முனிவர்களும், பிற தேவர்கள் அனைவரும் அவனை மதிப்புடன் வணங்குகின்றனர்.(41)நீ இந்தப் பூமியை உன் ஆற்றலால் அடைந்திருக்கிறாய். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, உன் ஆற்றலின் மூலம் நீ மன்னர்கள் அனைவரையும் வென்றாய்.(42) ஓ! மன்னா, உன் நண்பர்களுடன் அவர்களின் நாட்டுக்குச் சென்று, அவர்களது சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளை அவர்களது அரியணையில் நிறுவுவாயாக.(43) கருவில் இருக்கும் குழந்தையிடமும் கருணையோடு நடந்து கொண்டு, உன் குடிமக்களை மகிழ்ச்சியடையச் செய்து பூமியை ஆள்வாயாக.(44) மகனில்லாதவர்களின் அரியணைகளில் அவர்களது மகள்களை நிறுவுவாயாக. பெண்கள் இன்பத்தையும், அதிகாரத்தையும் விரும்புபவர்களாவர். இந்த வழிமுறையின் மூலம் அவர்கள் தங்கள் கவலைகளை விட்டு, மகிழ்ச்சி அடைவார்கள்.(45) ஓ! பாரதா, இவ்வழியில் பேரரசு முழமைக்கும் ஆறுதலளித்து, வெற்றியாளனான பழங்காலத்து இந்திரனைப் போல ஒரு குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிப்பாயாக. ஓ! க்ஷத்திரியக் காளையே, (போரில் வீழ்ந்துவிட்ட) உயர் ஆன்ம க்ஷத்திரியர்களுக்காக நீ வருந்துவது முறையாகாது.(46) யமனின் சக்தியால் திகைப்படைந்த அவர்கள், தங்கள் சொந்த கடமைகளை நோற்றதிலேயே அழிவை அடைந்தார்கள்.(47) நீ ஒரு க்ஷத்திரியனுக்குரிய கடமைகளைச் செய்து, முள்ளில்லா {எதிரிகளில்லா} பூமியை அடைந்திருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, உன் சொந்த கடமைகளை நீ நோற்றால்தான் மறுமையில் இன்பத்தை அடைய முடியும்” என்றார் {வியாசர்}.(48)

பாவக்கழிப்புக்குத் தகுந்த செயல்கள்! – சாந்திபர்வம் பகுதி – 34-பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவர்கள் எவர்? மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்கள் யாவை? தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்தாலும் பாவத்தின் கறைபடாத சந்தர்ப்பங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “எந்தச் செயல்களைச் செய்த பிறகு ஒரு மனிதன் பாவக்கழிப்பு {பரிகாரம்} செய்யத்தக்கவனாகிறான்? பாவத்தில் இருந்து விடுபட அவன் எந்தச் செயல்களைச் செய்ய வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர்த்து, தடை செய்யப்பட்ட செயல்களைச் செய்து, வஞ்சகம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு மனிதன் பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவனாகிறான்.(2) சூரியன் உதித்த பிறகு தன் படுக்கையில் இருந்து எழுபவன், அல்லது சூரியன் மறையும்போது படுக்கைக்குச் செல்பவன், சொத்தை நகமோ, கருப்பு பல்லோ கொண்டவன்,(3) தனக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருப்பவன், மூத்தவன் திருமணம் செய்து கொள்ளும் முன்பே தான் திருமணம் செய்து கொள்பவன், பிராமணனைக் கொன்ற குற்றவுணர்வு கொண்டவன், பிறரை இழிவாகப் பேசுபவன், {பெண்ணெடுக்கும் இல்லத்தில் உள்ள} மூத்தவள் {தமக்கை} திருமணம் முடிப்பதற்கு முன்பே அவளது தங்கையைத் திருமணம் செய்பவன், தங்கையைத் திருமணம் செய்த பிறகு, அவளது மூத்தவளை {தமக்கையைத்} திருமணம் செய்பவன்,(4) உறுதிமொழி தவறியவன், மறுபிறப்பாள வகைகளில் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த ஒருவனைக் கொல்பவன்[1]தகாதவர்களுக்கு வேத அறிவைப் போதிப்பவன், (5) பல உயிர்களை எடுப்பவன், இறைச்சி விற்பவன், தன் (புனித) நெருப்பைக் கைவிட்டவன், வேத அறிவை விற்பவன்[2],(6) தன் ஆசானையோ, ஒரு பெண்ணையோ கொல்பவன், பாவம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன், விருப்பத்துடன் ஒரு விலங்கைக் கொல்பவன்[3], குடியிருக்கும் வீட்டுக்கு நெருப்பு வைப்பவன்,(7) வஞ்சகத்தையே வாழ்வாகக் கொண்டவன், தன் ஆசானுக்கு எதிராகச் செயல்படுபவன், ஒப்பந்தத்தை மீறுபவன் ஆகியோர் அனைவரும் பாவக்கழிப்பு {பரிகாரம்} தேவைப்படும் குற்றவாளிகளாவர்.(8)உலகம் மற்றும் வேதங்கள் ஆகிய இரண்டால் மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(9) தன் சமய நம்பிக்கையை மறுப்பது, பிற மக்களின் சமய நம்பிக்கையைப் பயில்வது[4], உதவத் தகாத ஒருவனின் வேள்வி அல்லது அறச்சடங்குகளில் உதவி செய்வது, விலக்கப்பட்ட உணவை உண்பது,(10) பாதுகாப்பை நாடும் ஒருவனைக் கைவிடுபவன், பணியாட்களையும், தன்னை நம்பியிருப்பவர்களையும் பராமரிக்காமல் புறக்கணிப்பது, உப்பு, புளி (மற்றும் அது போன்ற பொருட்களை) விற்பது, பறவைகளையும், விலங்குகளையும் கொல்வது,(11) இயன்றவனானாலும், தன்னிடம் வேண்டும் பெண்ணிடம் பிள்ளையைப் பெற மறுப்பது, (பசுவுக்குக் கைநிறைய புல்லைக் கொடுப்பது போன்ற) தினக்கொடைகள் கொடுப்பதைத் தவிர்ப்பது,(12) தக்ஷிணை கொடுப்பதைத் தவிர்ப்பது, ஒரு பிராமணனை அவமதிப்பது ஆகிய இவை அனைத்தும் யாராலும் செய்யக்கூடாத செயல்கள் எனக் கடமைகளை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(13) ஓ! மனிதர்களில் புலியே, தந்தையுடன் சச்சரவு செய்யும் மகன், தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துபவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் வாரிசை உண்டாக்காமல் புறக்கணிப்பவன் ஆகியோர் பாவம் நிறைந்தவர்களாவர்.(14) பாவக்கழிப்புச் செய்யத் தகுந்த மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படாமை ஆகியவற்றைக் குறித்துச் சுருக்கமாகவும் விரிவாகவும் சொல்லிவிட்டேன்.(15)இப்போது, இந்தச் செயல்களைச் செய்தாலும் கூட மனிதர்கள் பாவத்தின் கறைபடாமல் இருக்கும் சந்தர்ப்பங்களைச் சொல்லப்போகிறேன்.(16) வேதங்களை நன்கறிந்த ஒரு பிராமணன் உன்னைக் கொல்வதற்காக எதிர்த்துப் போரிட வந்தால், நீயும் அவனது உயிரை எடுக்க அவனை எதிர்க்க வேண்டும். அத்தகு செயலைச் செய்வதால் அவனைக் கொல்பவன், பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வுக்கு ஆளாகமாட்டான்.(17) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} வேதங்களில் உள்ள ஒரு மந்திரத்தில் இது விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களால் அதிகாரத்துடன் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை மட்டுமே நான் உனக்கு அறிவிக்கிறேன்.(18) தன் கடமைகளில் இருந்து வழுவிய பிராமணன், கொலை செய்யும் நோக்குடனும், கையில் ஆயுதத்துடனும் முன்னேறி வருபவன் ஆகியோரைக் கொன்றால், உண்மையில் அது பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} ஆகாது. அப்படிப்பட்ட வழக்கில் கொல்பவனின் கோபமே, கொல்லப்படுபவனின் கோபத்தை எதிர்த்துச் செல்கிறது.(19) அறியாமையாலோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு நல்ல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒருவன் ஊக்கம்தரும் மதுபானம் அருந்தினால், அவனது வழக்கில் மீண்டும் மீள்பிறப்புச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்[5].(20)ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தடுக்கப்பட்ட உணவை உண்பது குறித்து நான் உன்னிடம் சொன்னது அனைத்திலிருந்தும் இத்தகு பாவக்கழிப்பு சடங்குகளின் மூலம் தூய்மையடையலாம்.(21) ஆசானின் ஆணைப்படி ஆசானின் மனைவியுடன் கலப்பது அம்மாணவனைக் களங்கப்படுத்தாது. தவசியான உத்தாலகர், ஒரு சீடனின் மூலமே தன் மகன் ஸ்வேதகேதுவைப் பெற்றார்.(22) துயர் நிறைந்த காலத்தில் தன் ஆசானுக்காகத் திருடுபவன் பாவக்கறை அடைய மாட்டான். எனினும், தன் இன்பங்களுக்காகத் திருடுபவன் பாவத்தால் கறைபட்டவனே ஆவான்.(23) (துயர் நிறைந்த காலத்தில், தன் ஆசானுக்காக) பிராமணர்களைத் தவிர வேறு எவரிடம் திருடுபவனும் கறைபடிந்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் தனக்கென எந்தப் பங்கையும் எடுத்துக் கொள்ளாத ஒருவன் மட்டுமே பாவத்தால் தீண்டப்படாமல் இருப்பான்.(24) ஒருவன், தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பொய் சொல்லலாம், அல்லது ஒருவனுடைய ஆசானுக்காக, அல்லது ஒரு பெண்ணை நிறைவு செய்வதற்காக, அல்லது திருமணம் செய்வதற்காகப் பொய் சொல்லலாம்.(25) ஈரக்கனவுகளால் ஒருவன் தன் பிரம்மச்சரிய நோன்பை உடைத்தவனாக மாட்டான். அத்தகு வழக்குகளில், சுடர்மிக்க நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக ஊற்றுவதே பாவக்கழிப்பாக விதிக்கப்படுகிறது[6].(26)மூத்தவன் {அண்ணன்} வீழ்ந்துவிட்டாலோ, உலகைத் துறந்துவிட்டாலோ, இளையவன் {தம்பி} திருமணம் செய்து கொள்வதால், அவன் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான். ஒரு பெண்ணால் வேண்டப்பட்டு, அவளுடன் கலப்பது அறத்திற்கு அழிவைத் தராது.(27) வேள்வியைத் தவிர வேறு எதற்காகவும் ஒருவன் விலங்குகளைக் கொல்லவோ, கொல்லப்படச் செய்யவோ கூடாது. படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியின் படி அவனால் வெளிப்படுத்தப்படும் கருணையால் விலங்குகள் புனிதமடைகின்றன (வேள்விக்குத் தகுந்தவையாகின்றன).(28) தகாத பிராமணருக்கு அறியாமையால் கொடையளிப்பவன் பாவத்துக்கு உள்ளாக மாட்டான். தகுந்தோரிடம் (அறியாமையினால்) தயாளமில்லாமல் நடந்து கொள்ளும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான்.(29) ஒழுக்கங்கெட்ட மனைவியிடம் இருந்து விலகும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான். அப்படி நடத்துவதால் அந்தப் பெண் மாசகற்றப்பட்டவளாவாள், அதேவேளையில் கணவனும் பாவத்தைத் தவிர்ப்பான்[7].(30) சோமச்சாற்றின் உண்மை பயனை அறிந்த ஒருவன், அதை விற்பதால் பாவத்தை அடைய மாட்டான்[8]. தொண்டு செய்ய இயலாத பணியாளை நீக்குவதால் ஒருவன் பாவத்தால் தீண்டப்படமாட்டான்.(31) எவற்றைச் செய்தால் ஒருவன் பாவத்திற்கு உள்ளாக மாட்டானோ அந்தச் செயல்களையே இப்போது நான் உனக்குச் சொன்னேன். இனி பாவக்கழிப்பை {பரிகாரங்களைக்} குறித்து உனக்கு விரிவாகச் சொல்லப்போகிறேன்” என்றார் {வியாசர்}[9].(32)

பாவங்களும், பாவக்கழிப்புகளும்! – சாந்திபர்வம் பகுதி – 35-பாவங்கழிக்கும் முறைகள்; பிராமணக் கொலை, மதுவுண்ணல், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது; ஆசானுக்கு எதிராகச் செயல்படுவது; பிறன்மனையுறவு, களவு, பெண்களின் பாவங்கள் ஆகியவற்றுக்கான பாவக்கழிப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; அவன் செய்தது குற்றமாகாது, அஃது அவனது கடமை என விளக்கி, அப்படியே அவன் குற்றவுணர்வைக் கொண்டிருந்தாலும் அதற்கான பாவக்கழிப்பைச் செய்துவிட்டு நாடாளுமாறு யுதிஷ்டிரனை வலியுறுத்திய வியாசர்…

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவங்கள், அறச்சடங்குகள் {வேள்விகள்} மற்றும் கொடைகளின் மூலம் ஒரு மனிதன் தான் இழைத்த பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.(1) ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே உணவு உண்டு, பிச்சையெடுத்து உணவுண்டு, (பணியாளின் உதவியை எதிர்பாராமல்) தன் செயல்களனைத்தையும் தானே செய்து, ஒரு கரத்தில் மனித மண்டையோட்டையும், மறு கரத்தில் கட்வாங்கத்தையும்[1] எடுத்துக் கொண்டு பிச்சைக்காரனாய் வலம் வந்து, பிரம்மச்சரிய நிலையடைந்து, எப்போதும் உழைப்புக்கு ஆயத்தமாக இருந்து,(2) தீமைகள் அனைத்தையும் கைவிட்டு, வெறுந்தரையில் உறங்கி, தன் குற்றங்களை {பாவங்களை} உலகத்திற்கு வெளியிட்டு, என இவை யாவற்றையும் முழுமையாகப் பனிரெண்டு {12} ஆண்டுகள் செய்யும் மனிதன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(3) ஆயுதப்பயன்பாட்டில் வாழும் மனிதனின் ஆயுதத்தாலோ, ஒருவனுடைய சுய விருப்பத்தாலோ, சாத்திரங்களைப் பயின்ற மனிதர்களின் ஆலோசனையின் பேரிலோ அழிவை அடைபவன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் மூன்று முறை தலைகுப்புற விழுபவன்,(4) அல்லது வேதங்களை ஓதிக்கொண்டே நூறு யோஜனைகள் நடப்பவன், அல்லது வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குத் தன் மொத்த உடைமைகளையும் கொடையாகக் கொடுப்பவன், (5) அல்லது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்காவது அவனுக்குக் கொடுப்பவன், அல்லது முறையாக அமைக்கப்பட்ட ஒரு வீட்டைக் கொடுத்து பிராமணர்களையும், பசுக்களையும் பாதுகாப்பவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(6)

[1] “கட்வாங்கம் என்பது மண்டையோடு பொருத்தப்பட்ட ஒரு தடி” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

ஆறு வருட காலத்திற்கு மிகக் குறைந்த உணவையே தினமும் உண்டு வாழ்வதாலும் ஒரு மனிதன் அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையமுடியும்[2]. உணவைப் பொறுத்தவரையில், இதைவிடக் கடுமையான நோன்பை நோற்பதால் அவன் மூன்று வருடங்களிலேயே தூய்மையடையலாம்[3].(7) ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை உண்டு வாழ்ந்தால் ஒருவன் ஒரே வருடத்தில் தூய்மையடையலாம். முற்றாகப் பட்டினி கிடந்தால், ஒருவன் மிகக் குறுகிய காலத்திலேயே தூய்மையடையலாம்.(8) மேலும், ஒரு குதிரை வேள்வியைச் செய்வதால் ஒருவன் தூய்மையடைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வு கொண்ட மனிதர்கள், குதிரை வேள்வியை நிறைவு செய்து, இறுதி நீராடலை முடித்தால்,(9) அவர்களுடைய பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையலாம். இது ஸ்ருதிகளின் பேரதிகாரத்தில் உள்ள ஒரு தடையாணையாகும். மேலும், போரில் ஒரு பிராமணனுக்காகத் தன் உயிரை விடுபவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(10)

[2] “முதல் மூன்று நாள் காலையில் உண்ண வேண்டும், இரண்டாவது மூன்று நாட்கள் மாலையில் உண்ண வேண்டும், அடுத்த மூன்று நாட்கள் வேண்டாமல் கிட்டும் எதையும் உண்ணலாம் வேறேதும் உண்ணக்கூடாது, அடுத்து வரும் மூன்று நாட்கள் எதையுமே உண்ணாதிருக்க வேண்டும் என்பதே அவ்விதி. இவ்விதி கிருச்சிரபோஜனம் Kricchra-bhojana என்று அழைக்கப்படுகிறது. இவ்விதியை ஆறு வருடங்களுக்கு நோற்கும் ஒருவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “மூன்று நாள் காலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் மாலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் தன் முயற்சியின்றிக் கிடைத்ததை மாத்திரமும் புஜித்துக் கொண்டு பின்மூன்று நாள் உண்ணாவிரதமுள்ளவனாக இருக்க வேண்டுமென்பது கிருச்சிரவிதி” என்று அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

[3] “ஏழு நாட்கள் காலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் மாலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் (வேண்டாமல்) கிட்டுவதை உண்ணலாம்; அடுத்த ஏழு நாட்கள் மொத்தமாக எதையும் உண்ணாதிருக்க வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தகுந்தோருக்கு நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையாக அளிப்பவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்தும், உண்மையில் அவன் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(11) கன்றீன்ற இருபத்தைந்தாயிரம் கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களைக்} கொடையாக அளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைவான்.(12) ஒருவன் உயிரைவிடும் தருவாயில், கன்றுகளுடன் கூடிய ஓராயிரம் பசுக்களைத் தகுந்தோருக்குக் கொடையாகக் கொடுத்தால் பாவத்தில் இருந்து விடுபடுவான்.(13) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒழுக்கத்துடன் கூடிய பிராமணர்களுக்கு நூறு காம்போஜக் குதிரைகளைக் கொடையளிக்கும் மனிதன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(14) ஒரே ஒருவனுக்காவது, அவன் கேட்கும் அனைத்தையும் கொடுத்து, அதைக் குறித்து வேறு யாரிடமும் பேசாத {சொல்லாத} ஒரு மனிதன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(15)

ஒரு முறை மதுவுண்ட ஒருவன், (பாவக்கழிப்பாக) காய்ச்சிய மதுவைக் குடித்தால், அவன் இம்மையிலும், மறுமையிலும் தன்னைத் தூய்மையாக்கிக் கொள்கிறான்[4].(16) மலைச்சிகரத்தில் இருந்து குதித்தோ, சுடர்மிக்க நெருப்பில் நுழைந்தோ, உலகைத் துறந்து எப்போதும் நீடிக்கும் பயணத்தை மேற்கொண்டோ ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடலாம்.(17) பிருஹஸ்பதியால் விதிக்கப்பட்டுள்ள வேள்வியைச் செய்வதன் மூலம் மதுபானம் உண்ணும் ஒரு பிராமணனால் பிரம்மலோகத்தை அடைவதில் வெல்ல முடியும்[5]. இதைப் பிரம்மனே சொல்லியிருக்கிறான்.(18) மதுவுண்ட பிறகு ஒரு மனிதன், அடக்கமாக நிலக்கொடையளித்து, பிறகு எப்போதும் அதிலிருந்து விலகியிருந்தால், அவன் தூய்மையும், புனிதமும் அடைகிறான்.(19)

[4] கும்பகோணம் பதிப்பில், “ஒருமுறை ஸுரையைப் பானஞ்செய்தவன் அந்த ஸுரையை நெருப்பு போலக் காய்ச்சிப் பானஞ்செய்தோ, அல்லது மலையிலிருந்து பாலைநிலத்தில் விழுந்தோ அல்லது அக்னியில் விழுந்தோ அல்லது மஹாபத யாத்திரை செய்தோ தன் சரீரத்தைத் தியாகஞ்செய்தால் பாவங்களிலிருந்து விடுபட்ட இரண்டு உலகிலும் சக்தி பெறுவான்” என்றிருக்கிறது.தனது ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய மனிதன், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகட்டில் கிடந்து, தன் பாலினச் சின்னத்தை அறுத்து, எப்போதும் மேல்நோக்கிய கண்களுடன் காடுகளில் வாழ்ந்து இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும்[6].(20] ஒருவன் தன் உடலைக் கைவிடுவதால் அவன் தன் தீச்செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பெண்கள், ஒரு வருடகாலம் ஒழுங்குபடுத்திய வாழ்வை வாழ்ந்தால் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவார்கள்.(21) ஒரு மனிதன் மிகக் கடுமையான நோன்பை நோற்பதாலோ, தன் செல்வம் முழுவதையும் கொடையாகக் கொடுப்பதாலோ, தன் ஆசானுக்காகப் போரிட்டுப் போரில் அழிவடைவதாலோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) தன் ஆசானின் முன்பு பொய் பேசுபவன், அல்லது அவருக்கு எதிராகச் செயல்படும் ஒருவன், தனது ஆசானுக்கு ஏற்புடைய ஏதாவதொன்றைச் செய்து அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையலாம்.(23) (பிரம்மச்சரிய) நோன்பிலிருந்து விழுந்தவன், மாட்டுத் தோலை ஆறு மாதங்களுக்கு உடுத்தி, பிராமணக்கொலைக்கு விதிக்கப்பட்ட தவங்களைப் பயின்றால் அந்தப் பாவத்திலிருந்து அவன் தூய்மையடைவான்[7].(24)பிறன்மனையுறவு, அல்லது களவு குற்றம் செய்தவன், ஒரு வருட காலம் கடும் நோன்புகளை நோற்று தூய்மையடையலாம்.(25) மற்றொருவனின் உடைமையைத் திருடியவன், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் களவு செய்ததற்கு இணையான மதிப்புடைய உடைமையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். அப்போது அவன் (களவின்) பாவத்திலிருந்து தூய்மையடைவான்.(26) மூத்தவன் {அண்ணன்} திருமணம் செய்வதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் இளையவனும் {தம்பியும்}, தனக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட தம்பியை உடைய மூத்தவனும் {அண்ணனும்}, பனிரெண்டு இரவுகளுக்கு ஆன்மத் திரட்சியுடன் கடும் நோன்பை நோற்று தூய்மையடையலாம்.(27) எனினும், தம்பியானவன், தன் பித்ருக்களைக் காப்பதற்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் முதல் மனைவி தூய்மையடைகிறாள், அவளது கணவன் அவளை அடைவதனால் பாவமிழைத்தவனாக மாட்டான்[8].(28) பெண்கள், மிகக்குறைந்த அளவிலான, தூய்மையான உணவை உண்டு சாதுர்மாஸ்ய நோன்பை நோற்பதால், அவர்கள் பெரும்பாவங்களில் இருந்தும் தூய்மையடைவார்கள் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அறிவிக்கின்றனர்.(29) பெண்கள், தங்கள் இதயத்தால் இழைக்கும் பாவங்களைச் சாத்திரங்களை அறிந்தோர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. (இந்த விபரத்துக்குட்பட்ட) அவர்களுடைய எந்தப் பாவமும், சாம்பலால் தேய்க்கப்பட்ட உலோகத் தட்டைப் போல அவர்களது சூதகச் சுழலால் {மாதவிடாயால்} தூய்மையடைகிறார்கள்.(30)சூத்திரன் உண்டதால் கறைபடிந்த (பித்தளை மற்றும் தாமிரம் சேர்ந்த கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட) தட்டுகள், அல்லது மாட்டால் நுகரப்பட்ட, அல்லது பிராமணனின் கண்டூஷத்தால் {எச்சிலால்} கறைபடிந்த அதே உலோகப் பாத்திரங்கள் {வெண்கலப் பாத்திரங்கள்}, தூய்மையாக்கும் பத்து பொருட்களின் மூலம் தூய்மையடையும்[9].(31) ஒரு பிராமணன் முழு அளவிலான அறத்தைப் பயின்று அடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. மன்னர் வகையைச் சேர்ந்த ஒரு மனிதன், நாலில் ஒரு பாகம் குறைந்த அளவுக்கு {அறத்தைப்} பயின்று அடைய வேண்டும்.(32) ஒரு வைசியன் இன்னும் நாலில் ஒரு பாகம் (க்ஷத்திரியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கும், ஒரு சூத்திரன் அதனிலும் நாலில் ஒரு பாகம் (வைசியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கு அடையலாம். (பாவக்கழிப்பை உறுதி செய்யும்போது) நால்வகையினரில் ஒவ்வொரு வகையினரும் செய்யும் பாவங்களின் கனம் மற்றும் கனமின்மையை இந்தக் {மேற்கண்ட} கொள்கையின்படியே தீர்மானிக்க வேண்டும்.(33) ஒரு மனிதன், பறவை, அல்லது விலங்கைக் கொன்றுவிட்டாலோ, உயிருடன் கூடிய மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டாலோ, அவன் தான் செய்த பாவத்தை வெளியிட்டு மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(34) புணரக்கூடாதாரோடு புணர்ந்த ஒருவன், ஈர ஆடைகளுடன் திரிந்து, சாம்பல் படுக்கையில்[10] உறங்குவதே அவனுக்குப் பாவக்கழிப்பாகும் {பரிகாரமாகும்}.(35) ஓ! மன்னா, முன்னுதாரணங்கள், அறிவு, சாத்திரங்கள், பிரம்மனின் விதிகள் ஆகியவற்றின் படி பாவம் நிறைந்த செயல்களுக்கான பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} இவையே.(36)ஒரு பிராமணன், தீமைகள் அனைத்தையும் விலக்கி, கோபத்தையும், வெறுப்பையும் கைவிட்டு, புகழ், பழி ஆகியவற்றை அலட்சியம் செய்து, எப்போதும் சொற்ப உணவையே உண்டு வாழ்ந்து, பேசுவதைத் தவிர்த்து {மௌனவிரதம் இருந்து}, ஒரு புனிதமான இடத்தில் காயத்திரி மந்திரத்தை ஓதினால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்.(37) பகல்வேளையில் அவன் வானத்தையே உறைவிடமாகக் கொள்ளவேண்டும், இரவிலும் அத்தகு இடத்திலேயே அவன் படுக்க வேண்டும். அவன் பகலில் மூன்று முறையும், இரவில் மூன்று முறையும் ஓடையிலோ, தடாகத்திலோ ஆடைகளுடன் மூழ்கி தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(38) கடும் நோன்புகளை நோற்கும் அவன் {பிராமணன்}, பெண்கள், சூத்திரர்கள் மற்றும் வீழ்ந்துவிட்ட மனிதர்கள் ஆகியோரோடு பேசாமல் விலக வேண்டும். அத்தகு ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணன், அவனால் அறியாமல் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைவான்.(39) ஒரு மனிதன், ஐம்பூதங்களின் சாட்சியாகச் செய்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனியை மறுமையில் {அடுத்த உலகில்} அடைகிறான். அறமோ, மறமோ அவ்விரண்டை ஒருவன் எவ்வளவு அடைகிறானோ, அவற்றின் விளைவுளான இன்பத்தையோ, துன்பத்தையோ அதே அளவுக்கு அவன் (இங்கேயே) அடைகிறான்.(40) எனவே, ஒருவன் ஞானம், தவங்கள், அறச்செயல்களின் மூலம் (இங்கேயே) அவன் இன்பத்தை அதிகரித்துக் கொள்கிறான். அதேபோல அவன், தீச்செயல்களுக்கான துன்பங்களையும் அடைகிறான்.(41) எனவே ஒருவன் எப்போதும் அறச்செயல்களைச் செய்து, அறமற்ற செயல்களை மொத்தமாகத் தவிர்க்க வேண்டும்.(42)

குறிப்பிட்ட பாவங்களுக்கான பாவக்கழிப்புகள் என்னென்ன என்பதை இப்போது சொல்லிவிட்டேன். மஹாபாதகங்கள் (கடுமையும் கொடுமையும் நிறைந்த பாவங்கள்) என்றழைக்கப்பம் பாவங்களைத் தவிர அனைத்து பாவத்திற்கும் பாவக்கழிப்புகள் உண்டு.(43) தூய்மையற்ற உணவு மற்றும் முறையற்ற பேச்சுகள் போன்ற பாவங்களைப் பொறுத்தவரையில், அவை அறிந்து செய்யப்பட்டவை, அறியாமல் செய்யப்பட்டவை என்று இரு வகைப்படும்.(44) அறிந்து செய்யப்பட்ட பாவங்கள் கொடியவையாகும், அதே வேளையில், அறியாமல் இழைக்கப்பட்ட பாவங்கள் அற்பமானவையே. அவ்விரண்டிற்கும் பாவக்கழிப்புகள் இருக்கின்றன.(45) உண்மையில் பாவமானது, சொல்லப்பட்டிருக்கும் விதிகளால் (அவற்றை நோற்பதால்) கழுவிக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், அந்த விதிகள் (தெய்வத்தை) நம்புபவர்களுக்காகவும், {பாவக்கழிப்பில்} நம்பிக்கையுள்ளவர்களுக்காகவும் விதிக்கப்பட்டிருக்கின்றன.(46) அவை நாத்திகர்களுக்கோ, நம்பிக்கையற்றவர்களுக்கோ, செருக்கும், தற்பெருமையும் கொண்டவர்களுக்கோ விதிக்கப்படவில்லை.(47)

ஓ! மனிதர்களில் புலியே, ஓ! அறவோரில் முதன்மையானவனே, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை விரும்பும் ஒரு மனிதன், அறத்தின்படியும், அறவோரின் (ஆலோசனையின்) படியும், தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளின்படியும் நடப்பவனாக இருக்க வேண்டும்.(48) எனவே, ஓ! மன்னா, ஏற்கனவே (என்னால்) சொல்லப்பட்ட காரணங்களின் படி, நீ மன்னனின் கடமைகளைச் செய்யும்போதும், உங்கள் உயிர் மூச்சுகளையும், வாரிசுரிமையையும் பாதுகாக்கும்பொருட்டும் உன் எதிரிகளைக் கொன்றிருப்பதால் உன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைவாய்.(49) அல்லது, இவையாவற்றுக்கும் பிறகும் நீ பாவம் நிறைந்தவன் என்று உன்னைக் கருதுவாயானால், பாவக்கழிப்பைச் செய்வாயாக. ஞானிக்குத் தகாத முறையில் துயரின் விளைவால் உன் உயிரை விடாதே” என்றார் {வியாசர்}”.(50)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், புனிதமான அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அந்தத் தவசியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.”(51)

உணவும், கொடையும்! – சாந்திபர்வம் பகுதி – 36-உண்ணத்தக்கவை, உண்ணத்தகாதவை, அதற்குரிய பாவக்கழிப்புகள், கொடைக்குத் தகுந்தவர், கொடைக்குத்தகாதவர் ஆகியவற்றைக் குறித்துத் தவசிகளிடம் மனு ஆற்றிய உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர் …

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பாட்டா, எந்த உணவு தூய்மையானது? எது தூய்மையற்றது? எந்தக் கொடை புகழத்தக்கது? (கொடைகளுக்குத்) தகுந்தவராக எவரைக் கருதலாம்? எவரைக் கருதலாகாது?” என்று கேட்டான்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகத் தவசிகளுக்கும், படைப்பின் தலைவனான மனுவுக்கும் இடையில் நடந்த ஒரு பழைய உரையாடல் இருக்கிறது.(2) கிருத காலத்தில் {யுகத்தில்} கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு முனிவர் கூட்டமானது, சுகமாக அமர்ந்திருப்பவரும், படைப்பின் பெரிய பலமிக்கத் தலைவருமான மனுவை அணுகி, கடமைகளைக் குறித்து உரையாற்றும்படி கேட்டுக் கொண்டனர்.(3) {அவர்கள்}, “எந்த உணவை உண்ண வேண்டும்? (கொடைகளுக்குத்) தகுந்த மனிதராக எவர் கருதப்பட வேண்டும்? என்ன கொடைகள் கொடுக்கலாம்? ஒரு மனிதன் எவ்வாறு படிக்க {பயில} வேண்டும்? ஒருவன் என்ன தவங்கள் செய்ய வேண்டும்? என்ன செயல்கள், எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எந்தச் செயல்கள் செய்யப்படக்கூடாது?” என்று கேட்டனர்.(4)

இவ்வாறு அவர்களால் கேட்கப்பட்டவரும், தெய்வீகமானவரும், தான்தோன்றியுமான மனு, அவர்களிடம், “கடமைகளைக் குறித்துச் சுருக்கமாகவும், விரிவாகவும் விளக்கப் போகிறேன், கேட்பீராக.(5) {அறத்தொடர்பிலிருந்து} விலக்கப்பட்ட பகுதிகளில் (புனித மந்திரங்களை) அமைதியாக ஓதுதல், ஹோமங்கள், நோன்புகள், தன்னைக் குறித்த அறிவு, புனித ஆறுகள், பக்திச் செயல்பாடுகளுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியன(6) தூய்மையாக்கும் செயல்பாடுகளாகவும், பொருட்களாகவும் சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட சில மலைகளும் தூய்மையாக்குபவையே, தங்கம் உண்ணுதல், ரத்தினங்களும், மதிப்புமிக்கக் கற்களும் மூழ்கிய நீரில் நீராடுதல் ஆகியனவும் தூய்மையாக்குபவையே[1].(7) புனிதத்தலங்களுக்குப் பயணிப்பது மற்றும் புனித நெய்யை உண்பது ஆகியனவும், விரைவாக மனிதனைத் தூய்மையாக்கவல்லவையே என்பதில் ஐயமில்லை.(8) செருக்குடைய {அகங்காரம் கொண்ட} எந்த மனிதனும் எப்போதும் ஞானியெனச் சொல்லப்பட மாட்டான். அவன் நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், (தன் செருக்குக்கான பாவக்கழிப்பாக) மூன்று இரவுகள் வெண்ணீரைக் குடிக்க வேண்டும்[2].(9)கொடுக்கப்படாதவற்றை ஏற்க மறுப்பது, கொடை, (சாத்திரக்) கல்வி, தவம், தீங்கிழையாமை {அஹிம்சை}, உண்மை, கோபத்திலிருந்து விடுதலை, வேள்விகளில் தேவர்களை வழிபடுதல் ஆகியவையே அறத்தின் பண்புகளாகும்.(10) இருப்பினும், காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப அந்த அறமே கூடப் பாவமாகக்கூடும். இவ்வாறே (அடுத்தவருக்குச் சொந்தமானவற்றை) ஏற்பது, பொய்மை, தீங்கிழைத்தல், கொலை செய்தல் ஆகியவையும் கூடச் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அறமாகக் கூடும்[3].(11) நீதியைத் தீர்மானிக்க இயன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, செயல்கள் என்பன அறம் சார்ந்தவை {நல்லவை}, மறம் சார்ந்தவை {பாவம் நிறைந்த தீயவை} என இரு வகைப்படும். மேலும் உலகம் சார்ந்த மற்றும் வேதம் சார்ந்த கண்ணோட்டத்தில், அறமும், பாவமும் (விளைவுகளின் அடிப்படையில் நல்லவையாகவோ, தீயவையாகவோ அமைகின்றன. வேதத்தின் கண்ணோட்டத்தில் அறமும், பாவமும், (ஒரு மனிதன் செய்யும், அல்லது செய்யாத அனைத்தும்) செயல் மற்றும் செயலின்மை என்ற இருவகையில் வகுக்கப்படுகின்றன. (வேதச்சடங்குகளைச் செய்யாமல், தியான வாழ்வைப் பின்பற்றி) செயல்பாடின்றி இருப்பது (மறுபிறப்பில் இருந்து) விடுதலையளிக்கிறது; அதே வேளையில் (வேதச் சடங்குகளைப் பயில்வதால் உண்டாகும்) செயல்பாட்டின் விளைவுகள் மீண்டும் மீண்டும் இறப்பையும், மறுபிறப்பையும் தருகின்றன. உலகப் பார்வையில் கண்டால், தீச்செயல்கள் தீமைக்கும், நற்செயல்கள் நன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. எனவே உலகக் கண்ணோட்டத்தில் அறத்தையம், பாவத்தையும், அவற்றின் விளைவுகளால் உண்டான நல்ல மற்றும் தீய தன்மைகளைக் கொண்டு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்[4].(12,13)(வெளிப்படையாகவே) தீமையாகத் தெரியும் செயல்களை, தேவர்கள், சாத்திரங்கள், உயிர், உயிர்வாழ்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கருதி செய்யும்போது, அவை நன்மையான விளைவுகளையே உண்டாக்கும்.(14) எதிர்பார்ப்புடன் செய்யப்படும் செயல்களுக்கும், ஐயம் நிறைந்ததாக இருப்பினும், எதிர்காலத்தில் (யாரோ ஒருவருக்கு) காயத்தை ஏற்படுத்தும், அல்லது காயமேற்படுத்தும் விளைவுகளைத் தரும் என்று தெரிந்தே செய்யப்படும் செயல்களுக்கும் பாவக்கழிப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(15) கோபத்தாலோ, தீர்மானிக்க முடியாத குழப்பத்தாலோ ஒரு செயல் செய்யப்படும்போது, பாவக்கழிப்பானது, உள்ளுணர்வு, சாத்திரங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், உடலுக்கு வலியைத் தரும்படியும் செய்யப்பட வேண்டும். மேலும் மனத்திற்கு ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஏதாவது செய்யப்பட்டால், அதனால் உண்டாகும் பாவம் புனிதமாக்கப்பட்ட உணவு மற்றும் மந்திரங்களை ஓதுதல் ஆகியவற்றின் மூலம் தூய்மையடையும்.(16,17)

(ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்கில்) தன் தண்டக் கோலை புறந்தள்ளும் மன்னன், ஓரிரவு உண்ணா நோன்பிருக்க வேண்டும். (ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்குக்கான) தண்டனை வழங்குவதில் மன்னனுக்கு அறிவுரைகூறாமல் தவிர்க்கும் புரோகிதர், பாவக்கழிப்பாக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(18) துயரத்தின் காரணமாக ஆயுதம் மூலமாகத் தற்கொலை செய்ய முயன்ற மனிதன், {பாவக்கழிப்பாக} மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(19) தங்கள் கடமைகளையும், தங்கள் வகை {வர்ணம்}, குலம், நாடு, குடும்பம் சம்பந்தப்பட்ட நடைமுறைகளையும் கைவிடுபவர்களுக்கும், தங்கள் சொந்த அறத்தையே {தர்மத்தையே}[5] கைவிடுபவர்களுக்கும் எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(20)ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற ஐயம் எழும்போது, வேத சாத்திரங்களை அறிந்த பத்து பேரோ, அவற்றை {வேத சாத்திரங்களை} அடிக்கடி உரைக்கும் மூன்று பேரோ தீர்மானிக்க {ஐயத்தைத் தெளிவிக்க} வேண்டும் என்ற சாத்திரங்களின் ஆணை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(21) காளை, பூமி, சிற்றெறும்புகள், புழுதியில் உதிக்கும் புழுக்கள், நஞ்சு ஆகியவை பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது.(22) செதில்களற்ற மீன்களையும், தவளைகளையும், நான்கு கால் கொண்ட நீர்விலங்குகளில் ஆமைகளைத்தவிர வேறு எந்த விலங்கையும் அவர்கள் {பிராமணர்கள்} உண்ணக்கூடாது[6].(23) பாசங்கள் என்றழைக்கப்படும் நீர்க்கோழிகள், வாத்துகள், சுபர்ணங்கள், சக்கரவாகங்கள், மீன்கொத்திப்பறவைகள், நாரைகள், காக்கைகள், நீர்க்காகங்கள், கழுகுகள், பருந்துகள், ஆந்தைகள்,(24) மற்றும் ஊன் உண்பவையும், கூரிய நீண்ட பற்களைக் கொண்டவையுமான நான்கு கால் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றையும் உண்ணக்கூடாது,(25) செம்மறி ஆடு, பெண்கழுதை, பெண் ஒட்டகம், புதிதாகக் கன்றீன்ற பசு, {மனிதப்} பெண்கள், மான்கள் ஆகியவற்றின் பாலையும் ஒரு பிராமணன் பருகக் கூடாது.(26) இதைத்தவிரவும், பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்கப்பபட்ட உணவு, அண்மையில் பிள்ளை ஈன்ற பெண்ணால் சமைக்கப்பட்ட உணவு, அறியாத மனிதரால் சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. அண்மையில் கன்றீன்ற பசுவின் பாலும் பருகப்படக்கூடாது.(27)ஒரு க்ஷத்திரியனால் சமைக்கப்பட்ட உணவை ஒரு பிராமணன் உண்டால், அஃது அவனது சக்தியைக் குறைக்கும்; ஒரு சூத்திரனால் அளிக்கப்பட்ட உணவை உண்டால், அவனிடம் பிரம்ம ஒளி குன்றும், கொல்லன், அல்லது கணவனோ, பிள்ளையோ இல்லாத பெண் கொடுக்கும் உணவை அவன் உண்டால், அஃது அவனது வாழும் காலத்தைக் குறைக்கும்.(28) வட்டிக்குப் பணம் தருபவனால் அளிக்கப்படும் உணவு புழுதிக்குச் சமமானது, அதே வேளையில், பரத்தமையினால் வாழும் ஒரு பெண்ணால் கொடுக்கப்படும் உணவு விந்துக்குச் சமமானது. தங்கள் மனைவியரின் கற்பில்லாமையைச் சகித்துக் கொள்ளும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும், தங்கள் துணைவிகளால் ஆளப்படும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும் தவிர்க்கப்பட வேண்டியன.(29)

வேள்வியின் குறிப்பிட்ட பகுதியில் (கொடைகள் பெற) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதன் {யாகத்தில் தீக்ஷை பெற்றவன்}, தன் செல்வத்தை அனுபவிக்காதவன், அல்லது கொடைகள் அளிக்காதவனால் கொடுக்கப்படும் உணவு, சோமத்தை விற்பவன், காலணி செய்பவன், கற்பற்ற பெண், வண்ணான்,(30) மருத்துவன், காவலாளி, மனிதக் கூட்டம், மொத்த கிராமத்தால் சுட்டப்படும் ஒருவன், ஆடல் மகளிரின் ஆதரவில் வாழ்பவன்,(31) அண்ணனுக்கு முன்பு மணமுடித்த தம்பி, பாணர்கள், வந்திகள், சூதாடிகள் ஆகியோரால் கொடுக்கப்படும் உணவு, இடது கையால் பெறப்பட்ட உணவு, நாள்பட்ட உணவு,(32) மதுவில் கலந்த உணவு, ஏற்கனவே உண்ணப்பட்ட உணவின் பகுதி, விருந்தில் எஞ்சிய உணவு ஆகியவற்றை (ஒரு பிராமணன்) உண்ணக்கூடாது. பணியாரங்கள், கரும்பு, அறைக்கீரை, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்கவைக்கப்பட்ட அரிசி {பால்சோறு/பாயாசம்} ஆகியவை தங்கள் இன்சுவையை இழந்தால் உண்ணப்படக்கூடாது.(33) தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படாத வறுத்த வாற்கோதுமை மாவு {சத்துமாவு}, வறுக்கப்பட்ட பிறவகைத் தானியங்கள், தயிரில் கலந்தவை ஆகியவை நாட்பட்டதனால் உண்ணப்படக்கூடாது, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயாசம்}, எள் கலந்த உணவு, இறைச்சி, அப்பங்கள் ஆகியவை இல்லற நோன்பு நோற்கும் பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது. தன் இல்லத்தில் இவ்வாறு வாழும் ஓர் இல்லறத்தான், உலகைத் துறந்த பிக்ஷுவைப் போல ஆகிறான்.(34-36) வீட்டில் தன் மனைவியரோடு வாழும் இத்தகு நடத்தை கொண்ட மனிதன், பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.

புகழ் அடைவதற்காகவோ (நிந்தனை போன்ற) அச்சத்தின் காரணமாகவோ, ஒரு நலம் விரும்பிக்காகவோ ஒருவன் கொடையளிக்கக்கூடாது.(37) பாடல், ஆடல் செய்து வாழ்பவருக்கோ, தொழில்முறை கோமாளிகளுக்கோ, போதையுண்டவனுக்கோ, அறிவு குலைந்தவனுக்கோ, கள்வனுக்கோ, பழுதூற்றுபவனுக்கோ,(38) முட்டாளுக்கோ, நிறம் மங்கியவனுக்கோ, அங்கப்பழுதுள்ளவனுக்கோ, உயரம் குறைந்தவனுக்கோ {குள்ளனுக்கோ}, தீயவனுக்கோ, இழிந்த தீய குடும்பத்தில் பிறந்தவனுக்கோ, நோன்புகள் நோற்று புனிதமடையாதவனுக்கோ நல்லோன் எவனும் கொடையளிக்க மாட்டான்.(39) வேத அறிவில்லாத பிராமணனுக்கு எந்தக் கொடையும் அளிக்கப்படக்கூடாது. ஸ்ரோத்ரியனாக[7] இருந்தால் மட்டுமே அவனுக்குக் கொடைகள் அளிக்கப்படலாம். முறையற்ற கொடையும், முறையற்ற கொடையேற்பும், கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் தீய விளைவுகளையே உண்டாக்கும்.(40) பாறை, அல்லது கருங்காலி மரத்தின் துணை கொண்டு பெருங்கடலைக் கடக்க முயல்பவன் மூழ்குவதைப் போலவே, (இத்தகு வழக்கில்) கொடுப்பவனும், அதைப் பெறுபவனும் என இருவரும் சேர்ந்தே மூழ்குவார்கள்.(41)ஈர விறகால் மறைக்கப்படும் நெருப்பு சுடர்விடாததைப் போலவே தவம், கல்வி, பக்தி ஆகியவை அற்ற கொடையேற்பாளன், (கொடையாளனின்) கொடையால் எந்த நன்மையையும் அடைய முடியாது.(42) (மனித மண்டை) ஓட்டில் உள்ள நீரும், நாயின் தோலில் செய்யப்பட்ட துருத்தியில் உள்ள பாலும், அவை ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் விளைவால் தூய்மையற்றதாவதைப் போலவே, நன்னடத்தை இல்லாதவரிடம் வேதங்களும் கனியற்றதாகப் போகும்.(43) மந்திரங்கள் அறியாதவனும், சாத்திரங்களை அறியாதவனும், பொறாமை குணம் கொண்டவனுமான ஓர் இழிந்த பிராமணனுக்குக் கருணையின் அடிப்படையில் ஒருவன் கொடையளிக்கலாம்.(44) ஏழை, அல்லது துன்பப்படுபவன், அல்லது நோயாளி மனிதனுக்கு ஒருவன் கருணையின் மூலம் கொடையளிக்கலாம். ஆனால், அத்தகு மனிதனுக்குக் கொடுப்பதால் (ஆன்ம) நன்மை பெற முடியும் என்ற நம்பிக்கையிலோ, அதன் மூலம் அறத்தகுதி ஈட்ட முடியும்என்ற நம்பிக்கையிலோ கொடையளிக்கக்கூடாது.(45)

வேதங்களை அறியாத பிராமணனுக்குக் கொடையளிப்பது பெறுபவனுடைய குறையின் விளைவால் முற்றிலும் கனியற்றதாகிறது என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(46) மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ போன்றவனே வேத கல்வியற்ற பிராமணன். மேற்கண்ட மூன்றிடமும் பெயரையன்றி வேறேதும் இருப்பதில்லை.(47) மகளிரிடம் உற்பத்தி செய்ய முடியாத அலியைப் போலவோ, பசுவிடம் உற்பத்தி செய்ய முடியாத பசுவைப் போலவோ, இறகுகளற்று வாழும் ஒரு பறைவையைப் போலவோ மந்திரங்கள் இல்லாத பிராமணனும் வாழ்வான்.(43) பருப்பற்ற தானியம், நீரற்ற கிணறு, சாம்பலில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகளைப் போன்றதே கல்வியில்லாத பிராமணனுக்கு அளிக்கப்படும் கொடையாகும்.(49) கல்லாத பிராமணன், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கப்படும் உணவை அழிப்பவனும், (அனைவரின்) எதிரியுமாவான். அத்தகு மனிதனுக்குக் கொடுக்கப்படும் கொடை ஏதிலியாகப் போகும். எனவே, அவன் (அடுத்தவர் செல்வத்தைக் கொள்ளையடிக்கும்) கள்வனாவான். மறுமையில் அருள் உலகங்களை அடைவதில் அவன் வெல்லவே முடியாது” {என்றார் மனு}.(50)

ஓ! யுதிஷ்டிரா, (அந்தச் சந்தர்ப்பத்தில்) மனுவால் சொல்லப்பட்ட அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த உயர்ந்த உரையாடல் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்” {என்றார் வியாசர்}.(51)

தலைநகர் நுழைந்த நீதிமகன்! – சாந்திபர்வம் பகுதி – 37-மன்னனின் கடமைகள் மற்றும் அறநெறி குறித்துப் பீஷ்மர் விளக்குவார் எனச் சொன்ன வியாசர்; நாடாளச் சொல்லி மீண்டும் யுதிஷ்டிரனிடம் வற்புறுத்திய கிருஷ்ணன்; வியாசர் மற்றும் கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு மனத்தில் அமைதியை அடைந்த யுதிஷ்டிரன், தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கள் தன் பரிவாரங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நுழைந்தது .

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமான பெருந்தவசியே, மன்னர்களின் கடமைகள் மற்றும் நால்வகையினரின் கடமைகள் அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, துயர் நிறைந்த காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறையையும், அறநெறியின் பாதையில் பயணித்து நான் எவ்வாறு உலகை அடக்க முடியும் என்பதையும் நான் கேட்க விரும்புகிறேன்.(2) பாவக்கழிப்பு {பரிகாரங்கள்}, உண்ணாநோன்புகள் நோற்பது, ஆகியவற்றைக் குறித்ததும், பெரும் ஆவலைத் தூண்டவல்லதுமான இந்த உரை என்னை மகிழ்ச்சியில் நிறைக்கிறது.(3) அறப்பயிற்சியும், மன்னர்களுக்கான கடமைகளையாற்றுவதும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. இவ்விரண்டையும் இணங்கச் செய்யும் நினைப்பே என் மனத்தை அடிக்கடி திகைக்கச் செய்கிறது” என்றான்.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்போது வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவரான வியாசர், பழமையானவரும், அனைத்தையும் அறிந்தவருமான நாரதரின் மீது தன் கண்களைச் செலுத்தியவாறே {யுதிஷ்டிரனிடம்},(5) “ஓ! மன்னா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, கடமைகளையும், அறநெறியையும் குறித்து முழுமையாக நீ கேட்கவிரும்பினால் குருக்களின் பாட்டனான கிழவர் பீஷ்மரிடம் கேட்பாயாக.(6) கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், உலகளாவிய அறிவைக் கொண்டவருமான பாகீரதியின் {கங்கையின்} மைந்தர், கடமைகள் குறித்து நீ இதயத்தில் கொண்டிருக்கும் கடினமான ஐயங்கள் அனைத்தையும் போக்குவார்.(7) மூவழிகளில் செல்லும் தெய்வீக ஆறானவளும், நுண்ணறிவு கொண்டவளுமான அந்தத் தேவியே {கங்கையே} அவரை ஈன்றெடுத்தாள். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரையும் அவர் {பீஷ்மர்} தன் கண்களால் கண்டவராவார்.(8) அவர், பிருஹஸ்பதியைத் தலைமையாகக் கொண்ட தெய்வீக முனிவர்களைத் தன் கடமையுணர்வு மிக்கத் தொண்டுகளால் நிறைவு செய்து, மன்னர்களின் கடமைகள் குறித்த அறிவை அடைந்தார்.(9) குருக்களில் முதன்மையான அவர் {பீஷ்மர்}, உசனஸும் {அசுரகுரு சுக்கிரரும்}, மறுபிறப்பாளரான தேவர்களின் ஆசானும் {பிருஹஸ்பதியும்} அறிந்த அறிவியல் மற்றும் அதன் பொருள் விளக்கங்களின் அறிவை அடைந்தவராவார்.(10) அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், கடும் நோன்புகள் நோற்று, வசிஷ்டர் மற்றும் பிருகு குலத்தின் சியவனர் ஆகியோரிடம் இருந்து வேதங்கள் அனைத்தையும், அவற்றின் அங்கங்களையும் குறித்த அறிவை அடைந்தார்.(11)

பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மூத்த மகனும், சுடர்மிக்கக் காந்தி கொண்டவரும், ஆன்ம மற்றும் மனோ அறிவியல் குறித்த உண்மைகளை அறிந்தவருமான சனத்குமாரரிடம் அவர் {பீஷ்மர்} பழங்காலத்தில் கல்வி பயின்றார்.(12) யதிகளின் {துறவிகளின்} கடமைகளைக் குறித்து மார்க்கண்டேயரின் உதடுகள் மூலமாகவே முற்றிலுமாக அறிந்தார். அந்த மனிதர்களில் காளை, ராமர் {பரசுராமர்} மற்றும் சக்ரன் {இந்திரன்} ஆகியோரிடம் இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் அடைந்தார்.(13) மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தவராக இருப்பினும், மரணம் இன்னும் அவரது கட்டுக்குள்ளேயே இருக்கிறது. பிள்ளையற்றவராக இருப்பினும், மறுமையில் அவருக்குப் பல அருளுலகங்கள் காத்திருக்கின்றன என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(14) பெரும் தகுதி படைத்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களே அவரது ஆலோசகர்களாக எப்போதும் இருந்துள்ளனர். அவர் அறியாதது என்று {இனி} அறியப்பட வேண்டும் என்றும் இங்குப் பொருளேதும் இல்லை.(15) கடமைகள் அனைத்தையும் உணர்ந்தவரும், அறநெறியின் நுண்ணிய உண்மைகள் அனைத்தையும் அறிந்தவருமான அவரே {பீஷ்மரே} உன்னிடம் கடமை மற்றும் அறநெறி குறித்து உரையாற்றுவார். அவர் {பீஷ்மர்} தனது உயிர்மூச்சைக் கைவிடுமுன் அவரிடம் செல்வாயாக” என்றார் {வியாசர்}.(16) அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பேரறிஞனுமான உயர் ஆன்ம குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்தியவதியின் மகனுமான வியாசரிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(17)

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “அருவருப்பை ஏற்படுத்தக் கூடியதும், பெரியதுமான உறவினர்கள் படுகொலையைச் செய்து, அனைத்திற்கு எதிரான குற்றவாளியாகவும், பூமியை அழித்தவனாகவும் நான் இருக்கிறேன்.(18) நேர்மையாகப் போரிட்ட போர்வீரரான பீஷ்மரை, வஞ்சகத்தின் உதவியால் கொன்ற பிறகு, (கடமைகள் மற்றும் அறநெறி குறித்த) கேள்விகளைக் கேட்பதற்காக என்னால் அவரை எவ்வாறு அணுக முடியும்?” என்று கேட்டான்.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வலிய கரங்களைக் கொண்ட யது குலத்தின் உயர் ஆன்மத் தலைவன் {கிருஷ்ணன்}, நால்வகையினர் அனைவரும் {நான்கு வர்ணங்களும்} நன்மை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மீண்டும் அந்த மன்னர்களில் முதன்மையானவனிடம் {யுதிஷ்டிரனிடம்} (பின் வரும் வார்த்தைகளைப்) பேசினான்.(20)

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “துயரத்தில் இத்தகு பிடிவாதம் செய்வது உமக்குத் தகாது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, புனிதமான வியாசர் சொன்னதைச் செய்வீராக.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பிராமணர்களும், பெரும் சக்தி கொண்ட உமது இந்தச் சகோதரர்களும், கோடையின் முடிவில் மேகங்களின் தேவனை வேண்டும் மனிதர்களைப் போல உம்மை வேண்டி உம்முன்னால் நிற்கின்றனர்.(22) ஓ! மன்னா, {போருக்குத்} திரண்ட மன்னர்களில் கொல்லப்படாமல் எஞ்சியோர் மற்றும் குருஜாங்கல நாட்டின் நால்வகை மக்கள் அனைவரும் இங்கே இருக்கின்றனர்.(23) ஓ! எதிரிகளை எரிப்பவரே, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, இந்த உயர் ஆன்ம பிராமணர்களுக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், அளவிலா சக்தி கொண்ட மதிப்பிற்குரிய பெரியவர் வியாசரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்தும்,(24) உமது நலன்விரும்பிகளான எங்களின், மற்றும் திரௌபதியின் வேண்டுகோளின்படியும், எங்களுக்கு ஏற்புடையவற்றையும், உலகத்திற்கு நன்மையளிப்பனவற்றையும் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(25)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த உயர் ஆன்ம மன்னன் (யுதிஷ்டிரன்), கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மொத்த உலகத்தின் நன்மைக்காகத் தன் இருக்கையில் இருந்து எழுந்தான்.(26) பெரும்புகழைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான அந்த யுதிஷ்டிரன், கிருஷ்ணனாலும், தீவில் பிறந்தவராலும் (வியாசராலும்), தேவஸ்தானர், ஜிஷ்ணு {அர்ஜுனன்} ஆகியோராலும், இன்னும் பலராலும் வேண்டிக் கொள்ளப்பட்டதால், தன் துயரையும், கவலையையும் கைவிட்டான்.(27,28) வழக்கமாக மனிதர்கள் அனைவராலும் கேட்கப்படுவதும், அனைவரும் கேட்கத்தகுந்ததுமான சுருதிகளின் தீர்மானங்களையும், அந்தத் தீர்மானங்களின் விளக்கங்கள் குறித்த அறிவியலையும் முழுமையாக அறிந்தவனான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மனோ அமைதியை அடைந்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தான்.(29) நட்சத்திரங்களால் சூழப்பட்ட நிலவைப் போல, அவர்களால் சூழப்பட்டிருந்த மன்னன், வரிசையின் தலைமையில் திருதராஷ்டிரனை முன்னிட்டு, நகருக்குள் நுழைவதற்காகப் புறப்பட்டான்.(30)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன், நகருக்குள் நுழைய விரும்பி, தேவர்களுக்கும், ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கும் தன் வழிபாட்டைக் காணிக்கையாக்கினான்.(31) பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, மங்கலக் குறிகளைக் கொண்டவையும், வெள்ளை நிறத்திலானவையுமான பதினாறு இளங்காளைகள் பூட்டப்பட்டதும், வெள்ளை விரிப்புகளாலும், மான் தோல்களாலும் மறைக்கப்பட்டதும், வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டதுமான ஒரு புதிய தேரில் ஏறினான். பாணர்களாலும், வந்திகளாலும் துதிக்கப்பட்ட அந்த மன்னன், அமுத வாகனத்தைச் செலுத்தும் சோமனைப் {இந்திரனைப்} போல அந்தத் தேரில் ஏறினான்.(32,33) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், அவனது தம்பியுமான பீமன், கடிவாளங்களை ஏந்தினான். அர்ஜுனன், பெரும் பிரகாசம் கொண்ட வெண்குடையை அவனது தலைக்கு மேல் ஏந்தினான்.(34) தேரில் இருந்த அந்த வெண்குடையானது, ஆகாயத்தில் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்மேகத்தைப் போல அழகானதாக இருந்தது.(35) மாத்ரியின் வீர மகன்களான நகுலன், சகாதேவன் ஆகியோர் இருவரும், நிலவின் கதிர்களைப் போல வெண்மையானவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான வெண்சாமரங்கள் இரண்டால் மன்னனுக்கு விசிறி விட்டனர்.(36) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஐந்து சகோதரர்களும் (ஒவ்வொருவரின் உடல் தொகுப்பிலும் நுழைந்திருக்கும்) ஐம்பூதங்களைப் போலத் தெரிந்தனர்.(37)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, மனோவேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்ட மற்றொரு வெண்தேரைச் செலுத்தி வந்த யுயுத்சு, பாண்டுவின் மூத்த மகனுக்குப் {யுதிஷ்டிரனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றான்.(38) சாத்யகியுடன் கூடிய கிருஷ்ணன், சைவியம், சுக்ரீவம் ஆகியவை பூட்டப்பட்ட தன்னுடைய பிரகாசமான தேரில் குருக்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(39) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிருதையுடைய {குந்தியுடைய} மகனின் பெரியப்பன் {திருதராஷ்டிரன்}, மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் பல்லக்கில் வரிசையின் தலைமையிலும், காந்தாரியின் துணையுடனும் சென்று கொண்டிருந்தான்.(40) குரு அரச குடும்பத்தின் பிற பெண்கள், குந்தி, கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோர் அனைவரும், விதுரனின் தலைமையிலான சிறந்த வாகனங்களில் சென்றனர்.(41) பெரும் எண்ணிக்கையிலான தேர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், காலாட்படை வீரர்களும், குதிரைகளும் பின்னால் தொடர்ந்து சென்றன.(42) பாணர்களும், வந்திகளும் இனிய குரலில் மன்னனின் புகழைப் பாடிக் கொண்டிருக்க, அவன் {மன்னன்}, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கிச் சென்றான்.(43)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, பூமியில் இதுவரை எப்போதும் காணப்படாததைப் போல மன்னன் யுதிஷ்டிரனின் பயணம் மிக அழகானதாக இருந்தது. உடல்நலமிக்க, உற்சாகமான மனிதர்கள் கூட்டம், எண்ணற்ற குரல்களில் பாடிக் கொண்டிருப்பது அங்கே கேட்கப்பட்டது.(44) பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} முன்னேறிச் செல்கையில், நகரமும், அதன் தெருக்களும், (மன்னனைக் கௌரவிப்பதற்காக வெளியே வந்திருந்த) மகிழ்ச்சியான குடிமக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(45) மன்னன் கடந்து சென்ற இடங்கள் வெண்ணிறத்திலான அழகிய மலர்த்தோரணங்களாலும், எண்ணற்ற கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நகரத்தின் வீதிகள் நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டிருந்தன.(46) அரண்மனையைச் சுற்றிலும் நறுமணப்பொடிகளும், மலர்களும், நறுமணம் வீசும் செடிகளும் நிறைந்திருந்தன; மலர்மாலைகளும், தோரணங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.(47) ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், விளிம்பு வரை நீர் நிறைந்த புதிய உலோகக் கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட இடங்களில் நல்ல நிறம் கொண்ட அழகிய கன்னிகையர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.(48) நண்பர்களுடன் கூடியவனும், இனிய சொற்களால் புகழப்படுபவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்த நகரவாயிலுக்குள் நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(49)

சார்வாகன்! – சாந்திபர்வம் பகுதி – 38-திரௌபதியைப் புகழ்ந்த மகளிர்; அரண்மனையை அடைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த குடிமக்கள்; ஆசி வழங்கிய பிராமணர்கள்; பிராமணனாக வேடம் பூண்டு வந்த ராட்சசன்; யுதிஷ்டிரனை நிந்தித்த சார்வாகன்; அவனைப் பணிந்து வணங்கிய யுதிஷ்டிரன்; சார்வாகனின் பேச்சை மறுத்து, தங்கள் குரலொலியாலேயே சார்வாகனைக் கொன்ற பிராமணர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பார்த்தர்கள் நகருக்குள் நுழைந்த நேரத்தில், அக்காட்சியைக் காண ஆயிரக்கணக்கான குடிமக்கள் வெளியே வந்தனர்.(1) ஒவ்வொரு கனமும் பெருகும் கூட்டத்தைக் கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையான சதுக்கங்களும், வீதிகளும், நிலவின் எழுச்சியில் பெருகும் பெருங்கடலைப் போல அழகாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, வீதியோரங்களில் நின்றவையும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், மகளிர் நிறைந்தவையுமான பெரும் மாளிகைகள், இந்தப் பெரும் கூட்டத்தால் நடுங்குவதாகத் தெரிந்தன.(3) அவர்கள் {அந்தப் பெண்கள்} பணிவான அடக்கமான வார்த்தைகளில் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோரைப் புகழ்ந்தனர்.(4)

அவர்கள், “ஓ! அருளப்பட்ட பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, (ஏழு) முனிவர்களின் அருகில் இருக்கும் கௌதமியைப் போலவே இந்த மனிதர்களில் முதன்மையானோருக்குப் பணிவிடை செய்யும் நீ அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாவாய்.(5) ஓ! மங்கையே {திரௌபதியே}, உன் செயல்களும், நோன்புகளும் உனக்கு அவற்றின் கனிகளைப் பெற்றுத் தந்தன” என்றனர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வகையிலேயே இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியை} அந்தப் பெண்கள் புகழ்ந்தனர்.(6)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் புகழ்ச்சிகள், ஒருவருடனொருவர் பேசும் அவர்களது பேச்சுகள், (மனிதர்களால் உண்டான) மகிழ்ச்சிக் கூச்சல் ஆகியவற்றின் விளைவால் அந்நகரமே பேராரவாரத்தால் நிறைந்தது.(7) தனக்குத் தகுந்த நடத்தையுடன் வீதிகளின் ஊடாகக் கடந்து சென்ற யுதிஷ்டிரன், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட (குருக்களின்) அழகிய அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) நகரத்தையும், மாகாணங்களையும் சார்ந்த மக்கள் அந்த அரண்மனையை அணுகி, காதுகளுக்கு ஏற்புடுயை பேச்சுகளைப் பேசினர்.(9)

அவர்கள், “ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நற்பேற்றாலேயே நீ உன் எதிரிகளை வென்றாய். நற்பேற்றாலே அறம் மற்றும் ஆற்றலின் மூலம் உன் நாட்டை நீ மீட்டாய்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, (சொர்க்கவாசிகளைக்) காக்கும் இந்திரனைப் போல உன் குடிமக்களை அறம்சார்ந்து பாதுகாத்து, நூறு ஆண்டுகளுக்கு எங்கள் ஏகாதிபதியாக இருப்பாயாக” என்றனர்.(11)

அரண்மனை வாயிலில் இவ்வாறு அருள்நிறைந்த பேச்சுகளால் புகழப்பட்டும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பிராமணர்களின் ஆசிகளை ஏற்றுக் கொண்டும்,(12) வெற்றியாலும், தன் மக்களின் ஆசிகளாலும் அருளப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்திரனின் மாளிகைக்கு ஒப்பான அந்த அரண்மனைக்குள் நுழைந்து, தன் தேரில் இருந்து இறங்கினான்.(13) அருளப்பட்டவனான யுதிஷ்டிரன், அறைகளுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தேவர்களை அணுகி, ரத்தினங்களாலும், நறுமணப்பொருட்களாலும், மலர் மாலைகளாலும் அவர்களை வழிபட்டான்.(14) பெரும் புகழையும், செழிப்பையும் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் வெளியே வந்து, (அவனுக்கு ஆசி கூறுவதற்காகத்) தங்கள் கரங்களில் மங்கலப் பொருட்களுடன் காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களைக் கண்டான்.(15) ஆசி கூற விரும்பி அவ்வாறு சூழ்ந்திருந்த பிராமணர்களுடன் பார்ப்பதற்கு அந்த மன்னவன், நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள களங்கமில்லா நிலவைப் போல அழகாகத் தெரிந்தன்.(16)

தனது புரோகிதர் தௌமியர், தன் பெரியப்பன் {திருதராஷ்டிரன்} ஆகியோரின் துணையுடன் இருந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களுக்கு இனிப்பு, ரத்தினங்கள், அபரிமிதமான தங்கம், பசுக்கள், ஆடைகள் மற்றும் அவர்களில் ஒவ்வொருவரும் விரும்பிய பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் (கொடையாகக்) கொடுத்தான்.(17,18) அப்போது, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி, “இஃது அருளப்பட்ட தினம்” என்ற உரத்த கூச்சல் எழுந்தது. காதுக்கு இனிமையான அந்தப் புனிதமான ஒலி (பாண்டவர்களின்) நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்தது.(19) அன்னங்களின் கூட்டம் வெளியிடும் ஒலியைப் போலக் கல்விமான்களான அந்தப் பிராமணர்கள் வெளியிட்ட ஒலியானது உரக்கவும், தெளிவாகவும் இருந்ததை மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். வேதங்களை நன்கறிந்த மனிதர்களின் முக்கியத்துவம் வாய்ந்தவையும் இனிமையானவையுமான அந்த வார்த்தைகளை மன்னன் கேட்டான்.(20) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெற்றியின் குறியீடாகப் பேரிகை முழக்கங்களும், சங்குகளின் இனிய ஒலியும் எழுந்தன.(21)

சிறிது நேரம் கழித்துப் பிராமணர்கள் அமைதியடைந்தபோது, சார்வாகன்[1] என்ற பெயருடைய ராட்சசன், பிராமண வேடத்தில் வந்து மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான்.(22) துரியோதனனின் நண்பனான அவன், துறவியின் ஆடையில் அங்கே நின்று கொண்டிருந்தான். ஜபமாலைகளுடனும்[2], தலையில் குடுமியுடனும், கையில் திரி தண்டத்துடனும் கூடிய அவன், தவங்களுக்கும், நோன்புகளுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களும், (மன்னனுக்கு) ஆசி கூற வந்தவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு மத்தியில் அச்சமில்லாமல் செருக்குடன் நின்று கொண்டிருந்தான்.(23,24) உயர் ஆன்ம பாண்டவர்களுக்குத் தீமையை விரும்பிய அந்தப் பொல்லாத்தீயவன், அந்தப் பிராமணர்களுடன் ஆலோசிக்காமலேயே மன்னனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(25)சார்வாகன் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தப் பிராமணர்கள் அனைவரும் என்னைத் தங்கள் பேச்சாளனாக நியமித்து, ʻதீய மன்னனான உனக்கு ஐயோ. நீ உறவினர்களைக் கொன்றவனாவாய்.(26) ஓ! குந்தியின் மகனே, உன் குலத்தையே இவ்வாறு அழித்துவிட்டு நீ என்ன ஈட்டிவிடப் போகிறாய்? பெரியோரையும், ஆசானையும் கொன்ற நீ உன் உயிரை விடுவதே முறையாகும்’ என்று சொல்கின்றனர்” என்றான்.(27) அந்தத் தீய ராட்சசனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அந்தப் பேச்சால் குட்டுபட்ட அவர்கள் உரத்த ஆரவாரம் செய்தனர்.(28) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனுடன் கூடிய அவர்கள், கவலையாலும், வெட்கத்தாலும் பேச்சற்றவர்களானார்கள்.(29)

யுதிஷ்டிரன் {ராட்சசன் சார்வாகனிடம்}, “நான் உம்மை வணங்கி, பணிந்து, வேண்டி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் நிறைவு கொள்வீராக. என்னை நிந்தனை செய்வது உமக்குத் தகாது. நான் விரைவில் என் உயிரை விடுவேன்” என்றான்”[3].(30)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்தப் பிராமணர்கள் அனைவரும், “இவை எங்களுடைய வார்த்தைகளல்ல. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, செழிப்பு உனதாகட்டும்” என்றனர்.(31) வேதங்களை அறிந்தோரும், தவங்களால் அறிவு தெளிவடைந்தோருமான அந்த உயர் ஆன்ம மனிதர்கள், இவ்வாறு பேசியவனின் {ராட்சசன் சார்வாகனனின்} வேடத்தைத் தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் ஊடுருவினர்.(32) பிறகு அவர்கள், “இவன் துரியோதனனின் நண்பனான ராட்சசன் சார்வாகனாவான்[4]. அறத்துறவியின் ஆடையை அணிந்து கொண்டு, தன் நண்பன் துரியோதனனின் நன்மைக்காக இவ்வாறு முயற்சிக்கிறான். ஓ! அற ஆன்மாவே, நாங்கள் இவ்வகையில் ஏதும் பேசவில்லை. இந்த உன் கவலை அகலட்டும். உன் தம்பிமாருடன் கூடிய நீ செழிப்பை அடைவாயாக” என்றனர்”[5].(34)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது சினத்தால் உணர்விழந்தவர்களான அந்தப் பிராமணர்கள் “ஹும்” என்ற ஒலியை வெளியிட்டனர். பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்தவர்களான அவர்கள், பாவம் நிறைந்த அந்த ராட்சசனை நிந்தித்து, (அந்தத் தங்கள் ஒலியாலேயே) அவனை அங்கேயே கொன்றனர்[6].(35) பிரம்மத்தை ஓதுபவர்களான அவர்களின் சக்தியால் எரிக்கப்பட்ட சார்வாகன், குருத்துகளுடன் {தளிர்களுடன்} கூடிய மரமானது இந்திரனின் வஜ்ரத்தால் {இடியால்} வெடிப்பதைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தான்.(36) அந்தப் பிராமணர்கள், முறையாக வழிபடப்பட்டு, தங்கள் ஆசிகளால் மன்னனை மகிழ்வித்த பிறகு அங்கிருந்து சென்றனர். தன் நண்பர்களுடன் கூடிய பாண்டுவின் அரசமகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(37

சார்வாகன் வரலாறு! – சாந்திபர்வம் பகுதி – 39- சார்வாகனுடைய வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது உலகளாவிய அறிவு படைத்தவனான தேவகியின் மகன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தம்பிகளுடன் அங்கே நின்று கொண்டிருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம்,(1) “ஓ! ஐயா, இவ்வுலகில் பிராமணர்கள் எப்போதும் என் வழிபாட்டுக்குரியவராவர். பேச்சில் நஞ்சு கொண்டவர்களும், நிறைவு செய்ய எளிதானவர்களுமான அவர்களே {பிராமணர்களே} இந்தப் பூமியில் தேவர்களாவர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு கிருத காலத்தில், சார்வாகன் என்ற பெயருடைய ராட்சசன் ஒருவன், பதரியில் பல வருடங்கள் கடுந்தவமிருந்தான்.(3) தம்மிடம் வரங்களை வேண்டுமாறு பிரம்மன் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக அந்த ராட்சசன், அண்டத்தின் அனைத்துயிரிடம் கொண்ட அச்சத்திலிருந்தும் எதிர்ப்புணர்வு கொள்ளும் {எவ்வுயிரிடமும் அச்சமடையாமல் இருக்கும்} வரத்தை வேண்டினான்.(4) அண்டத்தின் தலைவன் {பிரம்மன்}, பிராமணர்களுக்குக் குற்றமிழைக்காமல் கவனத்துடன் இருக்கும்வரை, அனைத்துயிரிடமும் அச்சமடையாத எதிர்ப்புணர்வைக் கொள்வான் என்ற உயர்ந்த வரத்தை அவனுக்கு அளித்தான்.(5)

பாவம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனும், கொடுஞ்செயல்களைப் புரிபவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த ராட்சசன் {சார்வாகன்}, வரத்தை அடைந்ததும் தேவர்களுக்குத் துன்பத்தை அளிக்கத் தொடங்கினான்.(6) அந்த ராட்சசனின் வலிமையால் துன்புற்ற தேவர்கள் ஒன்றாகக் கூடி தங்கள் எதிரியின் அழிவைத் தீர்மானிக்கப் பிரம்மனை அணுகினர்.(7) ஓ! பாரதரே, அழிவில்லாதவனும், மாற்றமற்றவனுமான அந்தத்தேவன் {பிரம்மன்} அவர்களிடம், “இந்த ராட்சசன் விரைவில் இறப்பதற்கான வழிமுறைகளை நான் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டேன்.(8) துரியோதனன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருப்பான். மனிதர்களுக்கு மத்தியில் அவன் {துரியோதனன்} இந்தப் பொல்லாதவனின் {சார்வாகனனின்} நண்பனாக இருப்பான். அவன் {துரியோதனன்} மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த ராட்சசன் பிராமணர்களை அவமதிப்பான்.(9) அவர்களுக்கு இவன் இழைக்கும் தீமையால் குட்டப்படுபவர்களும், பேச்சையே தங்கள் வலிமையாகக் கொண்டவர்களுமான அந்தப் பிராமணர்கள், கோபத்தால் இவனை {சார்வாகனை} நிந்திப்பார்கள், அதன் பேரில் அவன் அழிவைச் சந்திப்பான்” என்றான்.(10)

ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {ஜனமேஜயா}, அந்த ராட்சசன் சார்வாகனே இப்போது பிராமணர்களின் சாபத்தால் உயிரை இழந்து கீழே கிடக்கிறான். ஓ! பாரதக் குலத்தின் காளையே துயருக்கு ஆளாகாதீர்.(11) ஓ! மன்னா, உமது உறவினர்கள் அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும்போதே அழிவடைந்தனர். க்ஷத்திரியர்களில் காளைகளும், உயர் ஆன்ம வீரர்களுமான அவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். இப்போது நீர் உமது கடமைகளை ஆற்றுவீராக. ஓ! மங்காப் புகழ் கொண்டவரே, துயரம் உமதாகாதிருக்கட்டும். உமது எதிரிகளைக் கொன்று, உமது குடிமக்களைக் காத்து, பிராமணர்களை வழிபடுவீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(13)

யுதிஷ்டிரனின் முடிசூட்டுவிழா! – சாந்திபர்வம் பகுதி – 40-கிருஷ்ணனின் ஆணைப்படி வேள்விப்பீடத்தை அமைத்த தௌமியர்; சங்கிலிருந்த மங்கல நீரை யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றிய கிருஷ்ணன்; குடிமக்கள் கொடுத்த பரிசை ஏற்றுக் கொண்டு, பதிலுக்கு அவர்களைக் கௌரவித்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை வாழ்த்திய குடிமக்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துயரத்திலிருந்தும், இதயத்தின் நோயிலிருந்தும் {துன்பத்திலிருந்தும்} விடுபட்ட குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தங்கத்தாலான ஒரு சிறப்பான இருக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்தான்.(1) எதிரிகளைக் கொல்பவர்களான சாத்யகி மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், அழகானதும், சுடர்மிக்கதும், தங்கத்தாலானதுமான மற்றொரு இருக்கையில், அவனது {யுதிஷ்டிரனின்} முகம் நோக்கி அமர்ந்தனர்.(2) பீமனும், அர்ஜுனனும், மன்னனைத் தங்களுக்கு மத்தியில் அமர்த்திக் கொண்டு, அவனுக்கு இருபுறத்திலும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய இருக்கைகள் இரண்டில் அமர்ந்தனர்.(3) தந்தத்தாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெண்ணிறத்திலானதுமான அரசக் கட்டிலில் சகாதேவன் மற்றும் நகுலனுடன் பிருதையும் {குந்தியும்} சேர்ந்து அமர்ந்திருந்தாள்.(4) சுதர்மர்[1], விதுரன், தௌமியர், குருமன்னன் திருதராஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தனித்தனி இருக்கைகளில் தனியாக அமர்ந்தனர்.(5) யுயுத்சு, சஞ்சயன், பெரும்புகழ் கொண்ட காந்தாரி ஆகியோர் அனைவரும் மன்னன் திருதராஷ்டிரன் எங்கு அமர்ந்திருந்தானோ அங்கேயே அமர்ந்திருந்தனர்.(6)அங்கே அமர்ந்திருந்த அற ஆன்மா கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அழகிய வெண்மலர்கள், ஸ்வஸ்தீகங்கள் {ஸ்வஸ்திக் சின்னங்கள்}, பல்வேறு பொருட்களால் நிறைந்திருந்த பாத்திரங்கள், பூமி, (தன் முன்னே வைக்கப்பட்டிருந்த) தங்கம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றைத் தீண்டினான்.(7) பிறகு புரோகிதரின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும், பல்வேறு வகையான மங்கலப் பொருட்களுடன் மன்னனைக் காண அங்கே வந்தனர்.(8) அப்போது பூமி {மண்}, தங்கம், பல வகைகளிலான ரத்தினங்கள் ஆகியவையும், மூடிசூட்டும் சடங்குக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அங்கே அபரிமிதமான அளவில் கொண்டு வரப்பட்டன.(9) அங்கே விளிம்பு வரை (நீரால்) நிறைந்திருந்த தங்கக் கலசங்கள், தாமிரம், வெள்ளி மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கலசங்கள், மலர்கள், பொரி, குசப் புல் {தர்ப்பை}, பசும்பால்,(10) (வேள்விக்கான) விறகுகளான சமி {வன்னி}, பிப்பலம் {அரசு}, பலாசு மரங்கள், தேன், தெளிந்த நெய், உடும்பரத்தால் {அத்தி மரத்தால்} செய்யப்பட்ட வேள்விக் கரண்டிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சங்குகள் ஆகியன இருந்தன.(11)அப்போது புரோகிதர் தௌமியர், கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மற்றும் வடக்கை நோக்கி படிப்படியாக உயரும் பீடத்தை விதிப்படி கட்டமைத்தார்[2].(12) புலித்தோலால் மறைக்கப்பட்டதும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டதும் சர்வதோபத்திரம் என்றழைக்கப்படுவதுமான ஓர் அழகிய இருக்கையில் உயர் ஆன்ம யுதிஷ்டிரனையும், துருபதன் மகளான கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} உறுதியான பாதங்களுடன் அமரச் செய்து, உரிய மந்திரங்களுடன் தெளிந்த நெய்யை (வேள்வித்தீயில்) ஆகுதியாக ஊற்றத் தொடங்கினார்.(13,14) அப்போது தன் இருக்கையில் இருந்து எழுந்த தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புனிதமாக்கப்பட்ட சங்கை எடுத்து, அதில் இருந்த நீரை, பூமியின் தலைவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றினான். கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் அரச முனியான திருதராஷ்டிரனும், குடிமக்கள் அனைவரும் அதையே செய்தனர்.(15) சங்கிலிருந்த புனிதமாக்கப்பட்ட நீரில் இவ்வாறு தன் தம்பிகளுடன் குளித்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மிகவும் அழகு நிறைந்தவனாகத் தெரிந்தான்.(16)அப்போது, பணவங்களும், ஆனகங்களும், பேரிகைகளும் முழக்கப்பட்டன. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகளை முறையாக ஏற்றுக் கொண்டான். தன் வேள்விகள் அனைத்திலும் எப்போதும் அபரிமிதமாகக் கொடையளிக்கும் மன்னன், தன் குடிமக்களைப் பதிலுக்குக் கௌரவித்தான்.(17) தனக்கு (சிறப்பான) ஆசிகளைக் கூறிய பிராமணர்களுக்கு ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான். அவர்கள் அனைவரும் வேதங்களைக் கற்றறிந்தவர்களாகவும், ஞானமும், நன்னடத்தையும் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(18) ஓ! மன்னா, (கொடைகளால்) நிறைவடைந்த பிராமணர்கள், செழிப்பையும், வெற்றியையும் அடையுமாறு அவனை வாழ்த்தி, அன்னங்களைப் போன்ற இனிமையான குரலில் அவனைப் புகழ்ந்தனர்.(19)

{அவர்கள்}, “ஓ! வலிமையான கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பாண்டுவின் மகனே, நற்பேற்றாலே வெற்றி உனதானது, ஓ! பெரும் காந்தி கொண்டவனே, நற்பேற்றாலேயே, ஆற்றலின் மூலம் உன் நிலையை மீண்டும் அடைந்தாய்.(20) நற்பேற்றாலேயே, காண்டீவதாரியும் {அர்ஜுனனும்}, பீமசேனனும், நீயும், மாத்ரியின் மகன்கள் இருவரும் உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்று, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து உயிருடன் தப்பி, நலமாக இருக்கிறீர்கள். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அடுத்து செய்யப்பட வேண்டிய செயல்களைத் தாமதமில்லாமல் கவனிப்பாயாக” என்றனர்.(21,22) ஓ! பாரதா {ஜனமேஜயா}, தன் நண்பர்களுடன் கூடியவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் பக்திமான்களால் இவ்வாறு துதிக்கப்பட்டு, அந்தப் பெரிய நாட்டின் அரியணையில் நிறுவப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(23)

அமைச்சரவை அமைப்பு! – சாந்திபர்வம் பகுதி – 41-குடிமக்களுக்கு விடைகொடுத்தனுப்பிய யுதிஷ்டிரன்; பீமன், விதுரன், சஞ்சயன், நகுலன், அர்ஜுனன், தௌமியர், சகாதேவன், யுயுத்சு ஆகியோரை நாட்டின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமானதும், தன் குடிமக்களால் சொல்லப்பட்டதுமான இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், பின்வரும் வார்த்தைகளால் அவர்களுக்குப் பதிலளித்தான்.

{யுதிஷ்டிரன்}, “பாண்டு மகன்களின் தகுதிகள் உண்மையோ, பொய்யோ, இவ்வாறு திரண்டிருக்கும் முதன்மையான பிராமணர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்படுவதற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.(2) இத்தகு பண்புகளைக் கொண்டோராக எங்களை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வதால் உங்கள் கருணைக்கு நாங்கள் பாத்திரமாக இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.(3) எனினும், மன்னர் திருதராஷ்டிரர் எங்களுக்குத் தந்தையும், தேவரும் ஆவார். எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் எப்போதும் அவருக்கு ஏற்புடையதைச் செய்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(4) என் உறவினர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நான் அவருக்காக மட்டுமே உயிருடன் வாழ்கிறேன். அனைத்து வகையிலும் விழிப்புணர்வுடன் எப்போதும் அவருக்குத் தொண்டாற்றுவதே என் பெருங்கடமை.(5)

நீங்களும் என் நண்பர்களும் நான் உங்கள் கருணைக்குப் பாத்திரமானவன் என்று கருதினால், திருதராஷ்டிரரிடம் நீங்கள் முன்பு நடந்து கொண்ட அதே நடத்தையுடன் நடந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வேன்.(6) அவர் இந்த உலகத்திற்கும், உங்களுக்கும் எனக்கும் தலைவராவார். பாண்டவர்களுடன் கூடிய மொத்த உலகமும் அவருக்குச் சொந்தமானதாகும்.(7) இந்த என் வார்த்தைகளை நீங்கள் எப்போதும் மனத்தில் தாங்க வேண்டும்” என்று சொன்னான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களை விரும்பிய இடத்திற்குச் செல்லுமாறு விடைகொடுத்தனுப்பினான்.(8)

குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் {யுதிஷ்டிரன்}, குடிமக்கள் மற்றும் மாகாணங்களின் மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் தம்பியான பீமசேனனை யுவராஜாவாக {இளவரசனாக} நியமித்தான்.(9) தன் கலந்துரையாடலில் துணை புரியவும், மாநிலத்தின் ஆறு வகைத் தேவைகளைப் பார்த்துக் கொள்ளவும் கூடிய பொறுப்பில்[1] பெரும் நுண்ணறிவு கொண்ட விதுரனை நியமித்தான்.(10) மேலும் அவன், வயதில் முதிர்ந்தவனும், அனைத்து சாதனைகளையும் கொண்டவனுமான சஞ்சயனை, நிதித்துறையின் கண்காணிப்பாளராகவும், பொது இயக்குனராகவும் நியமித்தான்.(11) மேலும் மன்னன், படைகளின் பதிவேடுகளைப் பராமரிக்கவும், அவர்களுக்கு உணவு மற்றும் கூலி வழங்கவும், படையின் பிற காரியங்களைக் கண்காணிக்கவும் நியமித்தான்.(12) மன்னன் யுதிஷ்டிரன், பகைவரின் படையைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(13) மேலும் அவன், பிராமணர்களைத் தினமும் கவனித்துக் கொள்ளவும், தேவர்களுக்கான சடங்குகள் அனைத்தையும் செய்யவும், அறச் செயல்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளவும் புரோகிதர்களில் முதன்மையான தௌமியரை நியமித்தான்.(14) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மேலும் அம்மன்னன், தான் எப்போதும் சகாதேவனால் காக்கப்பட வேண்டும் என்று எண்ணியதால், அவனை எப்போதும் தன்னருகிலேயே இருக்குமாறு நியமித்தான்.(15) மேலும் அம்மன்னன், வேறு பிற காரியங்களில் அவரவர்க்குத் தகுந்தது எனத் தான் கருதியவற்றில் அவரவரை நியமித்தான்.(16)பகைவீரர்களைக் கொல்பவனும், எப்போதும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனும், அற ஆன்மா கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரன், உயர் ஆன்ம யுயுத்சு ஆகியோரை அழைத்து,(17) “என் அரச தந்தையான திருதராஷ்டிரரின் விருப்பங்கள் அனைத்தையும், எப்போதும் கவனமாகவும், விரைவாகவும் நீங்கள் செய்யுங்கள்.(18) குடிமக்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்பரைப் பொறுத்தவரை என்ன செய்யப்பட வேண்டுமோ அவை அனைத்தும், மன்னரின் {திருதராஷ்டிரரின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு உங்களின் துறைகளின் மூலம் உங்களால் நிறைவேற்றப்பட வேண்டும்[2]” என்றான் {யுதிஷ்டிரன்}”.(19)

சிரார்த்தச் சடங்குகள்! – சாந்திபர்வம் பகுதி – 42-போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களது ஈமக்கடன்களைச் செய்யச் செய்த யுதிஷ்டிரன்; போரின் காரணமாக விதவைகளான பெண்டிருக்குக் கருணை காட்டியது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு, மகத்தான ஆன்மா கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், போரில் கொல்லப்பட்ட உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் சிரார்த்தச் சடங்குகளைச் செய்ய {ஈமக்கடன்களைச் செலுத்தச்} செய்தான்.(1) பெரும்புகழைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், அடுத்த உலகில் இருக்கும் தன் மகன்களின் நன்மைக்காகச் சிறந்த உணவு, பசுக்கள், அதிகச் செல்வம், விலைமதிப்புமிக்க அழகிய ரத்தினங்கள் பல ஆகியவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையாக அளித்தான்.(2) திரௌபதியின் துணையுடன் கூடிய யுதிஷ்டிரன், துரோணர், உயர் ஆன்ம கர்ணன், திருஷ்டத்யும்னன், அபிமன்யு, ஹிடிம்பையின் மகனான ராட்சசன் கடோத்கசன், விராடன், தனக்கு மாறாப்பற்றுடன் தொண்டு புரிந்த நலன் விரும்பிகள் பிறர், துருபதன், திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோருக்காக அதிகச் செல்வத்தைக் கொடையளித்தான்.(3,4) இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் மன்னன், செல்வத்தையும், ரத்தினங்களையும், பசுக்களையும், துணிமணிகளையும் ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்குக் கொடையளித்தான்.(5) எந்த உறவினரையும், நண்பரையும் விட்டுவிடாமல் போரில் வீழ்ந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் அடுத்த உலகில் நன்மை பெறுவதற்காகச் சிரார்த்தச் சடங்கைச் செய்தான்.(6)

மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் நண்பர்கள் அனைவருடைய ஆன்மாக்களின் நன்மைக்காக, அவர்களுடைய பெயரிலேயே உணவு விநியோகத்திற்கான வீடுகளையும், நீர் விநியோகத்திற்கான இடங்களையும் நிர்மாணித்து, {அவர்களது பெயரிலேயே} குளங்களையும் வெட்டினான்.(7) இவ்வாறு அவர்களுக்குத் தான் பட்ட கடனை செலுத்தி, உலகத்தின் நிந்தனையைத் தவிர்த்த மன்னன்[1], மகிழ்ச்சியடைந்தவனாகி, தன் குடிமக்களை அறம்சார்ந்து காப்பதைத் தொடர்ந்தான்.(8) அவன் முன்பு போலவே, திருதராஷ்டிரன், காந்தாரி, விதுரன், கௌரவப் பெரியோர்கள், மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் உரிய மதிப்பை வழங்கினான்.(9) அன்பு நிறைந்தவனான அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்}, போரின் விளைவால் தங்கள் வீரக் கணவர்களையும், மகன்களையும் இழந்த பெண்கள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளித்தான்.(10) பெருங்கருணை கொண்ட அந்தப் பலமிக்க மன்னன், யாருமற்றவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடத்தைக் கொடுத்து உதவி செய்தான்.(11) எதிரிகளிடம் இருந்து விடுபட்டு, மொத்த பூமியையும் வென்ற மன்னன் யுதிஷ்டிரன், பெரும் மகிழ்ச்சியில் இன்புறத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(12)

சதநாமாவளி! – சாந்திபர்வம் பகுதி – 43-நூறு பெயர்களால் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்; மனம் நிறைந்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானியும், தூய்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நாட்டை மீண்டும் அடைந்து, முடிசூட்டுவிழாவும் முடிந்த பிறகு, தாமரைக் கண்ணனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனிடம் கரங்களைக் கூப்பி,(1) “ஓ! கிருஷ்ணா, ஓ! யதுக்களில் புலியே, உன் அருளாலும், உன் கொள்கை, வலிமை, நுண்ணறிவு, ஆற்றல் ஆகியவற்றாலுமே நான் என் மூதாதையரின் நாட்டை மீண்டும் அடைந்தேன். ஓ! தாமரைக் கண்ணனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(2,3) நீயே ஒரே தலைவன்[1] என்று அழைக்கப்படுகிறாய். மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} உன்னை எண்ணற்ற பெயர்களால் அழைக்கின்றனர்.(4)அண்டத்தின் படைப்பாளனே, உனக்கு வணக்கம். நீயே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறாய், அண்டமானது உன்னிலிருந்தே எழுந்திருக்கிறது. விஷ்ணு நீயே, ஜிஷ்ணு நீயே, ஹரி நீயே, கிருஷ்ணன் நீயே, வைகுண்டன் நீயே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே {புருஷோத்தமன் நீயே}.(5) புராணங்களில் சொல்லப்படுவதைப் போல அதிதியின் கருவறையில் ஏழு முறை பிறப்பை எடுத்தவன் நீயே. பிருஸ்னியின் கருவறையில் பிறப்பெடுத்தவன் நீயே[2]. கல்விமான்களால் மூன்று யுகங்கள் {திரியுகன்} என்று சொல்லப்படுபவன் நீயே[3].(6) சாதனைகள் அனைத்தாலும் புனிதமானவன் {சுசிஸ்ரவஸ்} நீயே. எங்கள் புலன்களின் தலைவன் {ஹ்ருஷீகேசன்} நீயே. வேள்விகளில் வழிபடப்படும் பெருந்தலைவன் {க்ருதார்ச்சிஸ்} நீயே. பெரும் அன்னம் {ஹம்சன்} என்றழைக்கப்படுபவன் நீயே, முக்கண் சம்பு நீயே. விபு மற்றும் தாமோதரன் என்று அழைக்கப்பட்டாலும் ஒருவனாகவே இருப்பவன் நீயே.(7) பெரும்பன்றி {வராகன்} நீயே, நெருப்பு {அக்னி} நீயே, சூரியன் {பிருஹத்பானு} நீயே, கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்டவன் {ரிஷபன்} நீயே, கருடனையும் சின்னமாகக் கொண்டவன் {தார்க்ஷ்யலக்ஷணன்} நீயே. பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவன் {அநீகஸாஹன்} நீயே, அண்டத்தின் அனைத்து வடிவங்களிலும் படர்ந்தூடுருவியிருப்பவன் {புருஷன்} நீயே, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் {சிபிவிஷ்டன்} நீயே.(8) அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானவன் {உருக்ரமன்} நீயே, கடுமையானவன் {வரிஷ்டன்} நீயே, போரின் படைத்தலைவன் {உக்ரஸேநாநீ} நீயே, உண்மை {ஸத்யன்} நீயே, உணவை அளிப்பவன் {வாஜஸநி} நீயே, (தேவர்களின் படைத்தலைவனான) குஹன் நீயே, எதிரிகளின் ஒளியை மங்கச் செய்து அவர்களை வீணாகச் செய்யும் மங்காதவன் {அச்சுதன்} நீயே, தூய இரத்தம் கொண்ட பிராமணன் {ஸம்ஸ்கிருதன்} நீயே, கலப்பில் பிறந்தவன் {விக்ருதி} நீயே, பெரியவன் {வ்ருஷன்} நீயே.(9) உயர்வாக நடப்பவன் {கிருஷ்ணதர்மன்} நீயே, மலைகள் {ஆதி} நீயே, விருஷதர்ப்பன் என்றும், வ்ருஷாகபி என்றும் அழைக்கப்படுபவன் நீயே, பெருங்கடல் {ஸிந்து} நீயே, பண்புகளற்றவன் {விதூர்மி} நீயே, மூன்று கூன்களைக் கொண்டவன் {த்ரிககுப்} நீயே, மூன்று வசிப்பிடங்களைக் கொண்டவன் {த்ரிதாமா} நீயே, சொர்க்கத்தில் இருந்து இறங்கி பூமியில் மனித வடிவங்களை எடுப்பவன் {த்ரிவ்ருத்} நீயே.(10) பேரரசன் {ஸம்ராட்} நீயே, விராட் நீயே, ஸ்வராட் நீயே[4]. ஸ்வாராட் நீயே, தேவர்களின் தலைவன் நீயே, அண்டம் உதித்த காரணம் {பூதமயன்} நீயே, எல்லாம் வல்லவன் {பவன்} நீயே, எல்லாம் வல்லவன் {விபு} நீயே, அனைத்து வடிவிலும் இருப்பவன் {பூ} நீயே, வடிவமற்றவனும் {அதிபூவும்} நீயே, கிருஷ்ணன் நீயே, நெருப்பு {கிருஷ்ணவர்த்மா} நீயே.(11)படைப்பாளன் {ஸ்விஷ்டகிருத்} நீயே, தெய்வீக மருத்துவர்களின் தந்தை {பிஷஜாவர்த்தன்} நீயே, (தவசி) கபிலன் நீயே. உயரம் குறைந்தவன் {வாமனன்} நீயே[5].(12) வேள்வியின் வடிவம் {யக்ஞன்} நீயே, துருவன்[6] நீயே, கருடன் {பதங்கன்} நீயே, யக்ஜசேனன் {ஜயத்ஸேனன்} என்றழைக்கப்படுபவன் நீயே. சிகண்டி நீயே, நகுஷன் நீயே, பப்ரு நீயே, ஆகாயத்தில் விரிந்திருக்கும் புநர்வஸு நீயே,(13) பழுப்புநிறம் கொண்டவன் {ஸுபப்ரு} நீயே, உக்தம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி {ருக்மயஜ்ஞன்} நீயே, ஸுஷேணன் நீயே, அனைத்துப் பக்கங்களிலும் ஒலியை எழுப்பும் பேரிகை {துந்துபி} நீயே. எடை குறைந்த தேர்ச்சக்கரத்தைக் கொண்டவன் {கபஸ்திநேமி} நீயே, செழிப்பின் தாமரை {ஸ்ரீ பத்மன் நீயே}, புஷ்கரன் என்றழைக்கப்படுபவன் நீயே, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவன் {சுஷ்மதாரணன்} நீயே.(14) செழிப்புமிக்கவன் {ருபு} நீயே, பலமிக்கவன் {விபு} நீயே, மிக நுட்பமானவன் {ஸர்வஸூக்ஷ்மன்} நீயே, வேதங்களை விளக்குபன் {தரித்ரீ} நீயே. பெரிய நீர் கொள்ளிடம் {அம்போநிதி} நீயே, பிரம்மன் நீயே, புனிதமான புகலிடம் {பவித்ரதாமன்} நீயே, அனைத்து வசிப்பிடங்களையும் அறிந்தவன் {தாமவித்து} நீயே, ஹிர்ணயகர்ப்பன் நீயே, ஸ்வதா நீயே, ஸ்வாஹா நீயே, கேசவனும் நீயே.(15) இவ்வுலகத்துடைய இருப்பின் {உற்பத்திக்குக்} காரணமும், இல்லாமையின் {அழிவின்} காரணமும் நீயே. முதலில் இந்த உலத்தைப் படைத்தவன் நீயே. ஓ! அண்டத்தைப் படைத்தவனே, இவ்வண்டம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஓ! சாரங்கம், சக்கரம் மற்றும் வாளைத் தரிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}[7].(16)சபைக்கு மத்தியில் வைத்து நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு துதிக்கப்பட்ட தாமரைக்கண்ணனான கிருஷ்ணன் நிறைவடைந்தான். பிறகு அந்த யாதவர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஏற்புடைய பேச்சுகள் பலவற்றால் பாண்டுவின் மூத்த மகனைத் திளைக்க வைக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

அரண்மனைகள் ஒதுக்கீடு! – சாந்திபர்வம் பகுதி – 44-போரில் கொல்லப்பட்ட குரு இளவரசர்களின் அரண்மனைகளைத் தன் தம்பிகளின் முறையான வசிப்பிடங்களாக ஒதுக்கிக் கொடுத்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் அரண்மனையில் தங்கிய கிருஷ்ணனும், சாத்யகியும்; தங்கள் தங்கள் வசிப்பிடங்களில் இரவைக் கழித்த இளவரசர்கள்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் {யுதிஷ்டிரன்} தன் குடிமக்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பினான். அவர்களும் அந்த ஏகாதிபதியின் ஆணைக்கிணங்க தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.(1) சுடர்மிகும் அழகு கொண்ட யுதிஷ்டிரன், பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகிய தன் தம்பியரிடம், அவர்களுக்கு ஆறுதலிக்கும் வகையில் (2) “இந்தப் பெரும்போரில் எதிரியின் பல்வேறு வகை ஆயுதங்களால் உங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் களைப்பை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் இதயங்கள் துயரத்தாலும், கோபத்தாலும் எரிகின்றன.(3) பாரதக் குலத்தின் காளைகளே, நான் செய்த குற்றத்தால், நீங்கள் இழிந்த மனிதர்களைப் போல நாடுகடத்தப்பட்டுக் காடுகளில் பேரிடரை அனுபவித்தீர்கள்.(4) (வெற்றியடைந்தவர்களான நீங்கள்) இப்போது இந்த வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடித் திளைப்பீராக. ஓய்வையும், உங்களுக்குத் தேவையானவற்றின் முழுப் பயனையும் அடைந்த பிறகு, காலையில் மீண்டும் என்னைச் சந்தியுங்கள்” என்றான்.(5)

அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான விருகோதரன் {பீமன்}, திருதராஷ்டிரனின் சம்மதத்தின் பேரில் யுதிஷ்டிரனால் தனக்கு ஒதுக்கப்பட்டதும், சிறந்த கட்டடங்கள் மற்றும் அறைகளால் {உப்பரிகைகளால்} அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு வகையான ரத்தினங்களால் நிறைந்ததும், ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் நிறைந்ததுமான துரியோதனனின் அரண்மனைக்குள், மகவத் {இந்திரன்} தன் கோவிலுக்குள் நுழைவதைப்போல நுழைந்தான்.(6,7) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அர்ஜுனனும், மன்னனின் ஆணைப்படி, சிறந்த கட்டுமானங்கள் பலவற்றைக் கொண்டதும், தங்க வாயிலால் அலங்கரிக்கப்பட்டதும், செல்வத்தால் நிறைந்ததும், இரு பாலினங்களையும் சேர்ந்த பணியாட்கள் நிறைந்ததும், துரியோதனனின் அரண்மனைக்குச் சற்றும் குறையாததுமான துச்சாசனனின் அரண்மனையை அடைந்தான்.(8,9) துர்மர்ஷணனின் அரண்மனை துச்சாசனின் அரண்மனையைவிட மேன்மையானதாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை ரத்தினங்களுடன் கூடிய அது குபேரனின் மாளிகையைப் போலத் தெரிந்தது.(10) மன்னன் யுதிஷ்டிரன், அதைக் கொள்ளச் சிறந்த தகுதி கொண்டவனும், பெருங்காட்டினால் (அதன் இடர்பாடுகளால்) மெலிந்தவனுமான நகுலனுக்கு மகிழ்ச்சியுடன் கொடுத்தான்.(11) துர்முகனின் முதன்மையான அரண்மனை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகானதாக இருந்தது. அதில் படுக்கைகளும் இருந்தன, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களான அழகிய பெண்களும் இருந்தனர்.(12) மன்னன், தனக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவனான சகாதேவனுக்கு அதைக் கொடுத்தான். அஃதை அடைந்த சகாதேவன், கைலாசத்தை அடைந்த பொக்கிஷத் தலைவனை {குபேரனைப்} போலத் திளைப்படைந்தான்.(13)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுயுத்சு, விதுரன், சஞ்சயன், சுதர்மர், தௌமியர் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குச் சொந்தமான வசிப்பிடங்களுக்குச் சென்றனர்[1].(14) மனிதர்களில் புலியான சௌரின் {கிருஷ்ணன்}, மலையில் உள்ள தன் குகைக்குள் நுழையும் புலியைப் போலச் சாத்யகியின் துணையுடன் அர்ஜுனனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(16) (அவர்களுக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த) உணவு மற்றும் பானங்களை விருந்துண்ட அந்த இளவரசர்கள், தங்கள் இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். நிறைவான இதயத்துடன் காலையில் விழித்து, மன்னன் யுதிஷ்டிரனின் முன்னிலையை அடைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(16)

ஆழ்தியானத்தில் கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 45- பிராமணர்களுக்கும், குடிமக்களுக்கும் பெரும் தானங்களைச் செய்த யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் இருந்த இடத்திற்குச் சென்று அவனைத் துதித்தது; ஆழ்ந்த தியானத்தில் இருந்த கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! கற்ற பிராமணரே, தர்மனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் நாட்டை மீட்ட பிறகு என்ன செய்தான் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, மூவுலகங்களின் உயர்ந்த தலைவனான வீர ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இதன் பிறகு என்ன செய்தான் என்பதையும் எனக்கு நீர் சொல்ல வேண்டும்” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாவமற்றவனே, வாசுதேவனின் தலைமையிலான பாண்டவர்கள், இதன்பிறகு என்ன செய்தனர் என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் தன் நாட்டை அடைந்ததும், நால்வகை மனிதர்களுள் ஒவ்வொருவரையும் அவரவர்களுக்குரிய கடமைகளில் நியமித்தான்.(4) அந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரன்}, ஸ்நாதக வகையைச் சேர்ந்த ஆயிரம் உயர் ஆன்ம பிராமணர்களில் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான்.(5) பிறகு அவன் தன்னை நம்பியிருந்த பணியாட்களுக்கும், தன்னிடம் வந்த தகாதோர் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கைகளை உடையோர் உள்ளிட்ட விருந்தினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை மனம் நிறையச் செய்தான்.(6)

அவன், தனது புரோகிதரான தௌமியருக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களையும், அதிகமான செல்வம், தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு வகையான ஆடைகளையும் கொடுத்தான்.(7) ஓ! ஏகாதிபதி, கிருபரிடம் அவன் ஓர் ஆசானிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டிய வழியில் நடந்து கொண்டான். நோன்புகளை நோற்பவனான அம்மன்னன், விதுரனைப் பெரிதும் கௌரவிப்பதைத் தொடர்ந்தான்.(8) ஈகையாளர்களில் முதன்மையானவனான அவன் {யுதிஷ்டிரன்}, உணவு, பானம், பல்வேறு வகையான ஆடைகள், படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்தான்.(9) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தன் நாட்டில் அமைதியை நிலைநாட்டியவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான அம்மன்னன், யுயுத்சு மற்றும் திருதராஷ்டிரனுக்கு உரிய கௌரவங்களை அளித்தான்.(10) திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் விதுரனின் உத்தரவிற்குக் கீழ் தன் நாட்டை வைத்த மன்னன் யுதிஷ்டிரன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(11)

ஓ! பாரதக் குலத்தின் காளையே, குடிமக்கள் உள்ளிட்ட அனைவரையும் இவ்வழியில் நிறைவு செய்த யுதிஷ்டிரன், கூப்பிய கரங்களுடன் உயர் ஆன்ம வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலைக்குச் சென்றான்.(12) நீலமேக வண்ணனான கிருஷ்ணன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய இருக்கையில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான்.(13) மஞ்சள் பட்டாடையுடுத்தி, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது மேனி, தங்கத்தின் காந்தியுடன் பிரகாசித்தது.(14) கௌஸ்துப ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்புடைய அவன், உதயச் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(15) மூவுலகங்களிலும் தனக்கு நிகரில்லாதவன் போல அவன் மிக அழகாக இருந்தான். விஷ்ணுவின் அவதார வடிவமான அந்த உயர் ஆன்மாவை அணுகிய மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே இனிமையாக, “ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, இரவை மகிழ்ச்சியாகக் கடத்தினாயா?(16,17) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் புலன்கள் அனைத்தும் முழு வீரியத்துடன் இருக்கின்றனவா? ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, உன் புத்தி சரியாக {தெளிவாக} இருக்கிறதா?(18) ஓ! தெய்வீகத் தலைவா ஓ! மூவுலகங்களின் புகலிடமே, ஓ! மூன்று {நடை} அடிகளைக் கொண்டவனே, உன் அருளின் காரணமாகவே நாங்கள் எங்கள் நாட்டை மீண்டும் அடைந்து, இந்த மொத்த பூமியும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். உன் அருளால் நாங்கள் வெற்றியையும், பெரும் புகழையும் அடைந்து, எங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்கிறோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(19)

எதிரிகளைத் தண்டிப்பவனான தெய்வீகக் கிருஷ்ணனிடம், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவன் {கிருஷ்ணன்} ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

பீஷ்மரை நினைத்துக் கொண்டிருந்தேன்! – சாந்திபர்வம் பகுதி – 46-கிருஷ்ணன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு வியந்து, அவனைத் துதித்த யுதிஷ்டிரன்; பீஷ்மர் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்ன கிருஷ்ணன்; பீஷ்மர் மறைவதற்குள் அவரிடமிருக்கும் அறிவுக்களஞ்சியத்தை அவரிடம் கற்றுப் பெறுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று சொன்ன யுதிஷ்டிரன்..

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! அளவிலா ஆற்றல் கொண்டோனே, நீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பது அற்புதம். ஓ! அண்டத்தின் பெரும்புகலிடமே, மூவுலகங்களும் நலமா?(1) ஓ! தேவா, ஓ! மனிதர்களில் காளையே, (இவ்வுலகில் இருந்து) நான்காம் நிலையைப் பின்பற்றி நீ உன்னை விலக்கிக் கொள்ளும்போது, என் மனம் ஆச்சரியத்தால் நிறைகிறது[1].(2) உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர் மூச்சுகள் அசைவில்லாத உன்னால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இன்பத்தில் திளைத்திருக்கும் உன் புலன்கள் உன் மனத்திற்குள் உன்னால் குவிக்கப்படுகின்றன.(3) ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பேச்சும், மனமும் உன் புத்திக்குள் குவிக்கப்படுகின்றன. உண்மையில் உன் புலன்கள் அனைத்தும் உன் மனத்திற்குள் இழுக்கப்படுகின்றன[2].(4) உன் உடலில் உள்ள மயிர் சிலிர்த்திருக்கிறது. உன் மனமும், புத்தியும் அசைவற்றிருக்கின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு மரத்தைப் போலவோ, பாறையைப் போலவோ நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(5)ஓ! சிறப்புமிக்கத் தேவா {கிருஷ்ணா}, காற்றில்லாத இடத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தழலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய். ஒரு பாறைக்குவியலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(6) ஓ! தேவா, இதன் காரணத்தைக் கேட்க நான் தகுந்தவனென்றால், இதில் உன் இரகசியமேதும் இல்லையென்றால், என் ஐயத்தை விலக்க வேண்டும் என்ற உதவியை நான் உன்னிடம் இரந்து கேட்கிறேன்.(7) படைப்பவனும், அழிப்பவனும் நீயே. அழியக்கூடியனவும், அழிவற்றனவும் நீயே. தோற்றமும் {ஆதியும்}, மறைவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயிரினங்களில் முதல்வனும், முதன்மையானவனும் நீயே.(8) ஓ! நீதியாளர்களில் முதன்மையானவனே, இந்த நுண்மமயத்தின் (யோகத்தின்) காரணத்தை நீ எனக்குச் சொல்வாயாக. நான் உன் உதவியை நாடுபவனும், உனக்கு அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினனும், சிரம் தாழ்த்தி உன்னை வணங்குபவனும் ஆவேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(9) இவ்வாறு சொல்லப்பட்ட வாசவனின் {இந்திரனின்} சிறப்புமிக்கத் தம்பி {கிருஷ்ணன்}, தன் மனத்தையும், புத்தியையும், புலன்களையும் மீண்டும் தங்கள் வழக்கமான செயற்களத்திற்கு அழைத்து, மெல்லிய புன்னகையுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “இப்போது கணைப்படுக்கையில் கிடப்பவரும், அணையப்போகும் நெருப்பைப் போல இருப்பவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, என் மனமும் அவரிடம் குவிந்திருந்தது.(11) எவருடைய நாண்கயிற்றின் நாணொலியையும், உள்ளங்கைகளின் ஒலிகளையும் இந்திரனாலேயே தாங்கிக் கொள்ள முடியாதோ அவரிடமே நான் என் மனத்தைக் குவித்திருந்தேன்.(12) (ஒரு சுயம்வரத்தின்போது, காசி மன்னனின் மகள்களான) மூன்று இளவரசிகளைத் தன் தம்பி விசித்திரவீரியனின் திருமணத்திற்காகக் கடத்தி, அங்கே கூடியிருந்த மன்னர்கள் அனைவரையும் வென்றவர் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(13) பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} இருபத்து மூன்று {23} நாட்கள் தொடர்ந்து போரிட்டவர் எவரோ, எவரை ராமராலேயே வெல்ல இயலவில்லையோ, அவரைக் {பீஷ்மரைக்} குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(14) தம் புலன்கள் அனைத்தையும் திரட்டி, புத்தியின் உதவியுடன் தம் மனத்தைக் குவித்து (என்னைக் குறித்துச் சிந்திப்பதால்) அவர் {பீஷ்மர்} என்னிடம் புகலிடத்தை நாடுகிறார். அதன் காரணமாகவே நான் என் மனத்தை அவரிடம் மையம் கொள்ளச் செய்தேன்.(15)

எவரைக் கங்கையீன்று, சாதாரண மனித விதிகளின்படி வளர்த்தாளோ, எவரை வசிஷ்டர் தமது சீடராகக் கொண்டாரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(16) எவர் தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவரோ, வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்ட அந்த வீரரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(17) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான ராமருக்குப் {பரசுராமருக்கு} பிடித்தமான சீடர் எவரோ, அறிவியல்கள் அனைத்தின் கொள்ளிடம் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவற்றையும், அறநெறி மற்றும் கடமைகளையும் நன்கறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(19)

ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, அந்த மன்னர்களில் புலி சொர்க்கத்திற்குச் சென்றதும், பூமியானது, நிலவற்ற இரவைப் போலத் தெரியும்.(20) எனவே, ஓ! யுதிஷ்டிரரே, பயங்கர ஆற்றலைக் கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மரைப் பணிவுடன் அணுகி, நீர் கற்க விரும்பும் எதையும் கேட்பீராக.(21) ஓ! பூமியின் தலைவரே, (அறநெறி, பொருள் ஆதாயம், இன்பம் மற்றும் முக்தி ஆகியவற்றைப் பொருத்தவரையிலான) அறிவின் நான்கு கிளைகளையும, நான்கு வகையினருக்காக விதிக்கப்பட்ட வேள்விகள் மற்றும் சடங்குகள் குறித்தும், வாழ்வின் நான்கு வாழ்வுமுறைகள், மன்னர்களின் கடமைகள் ஆகியவற்றைக் குறித்து முழுமையாக அவரிடம் கேட்பீராக.(22) குரு குலத்தில் முதன்மையானவரான பீஷ்மர் இவ்வுலகில் இருந்து மறைந்துவிட்டால், அவருடன் சேர்ந்து அனைத்து வகை அறிவும் {ஞானமும்} மறைந்துவிடும். இதன் காரணமாகவே நான் (இப்போதே அவரிடம் செல்லுமாறு) உம்மைத் தூண்டுகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.(23)

உயர்ந்தவையும், முக்கியமானவையுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த நல்ல வார்த்தைளைக் கேட்டவனும், நீதிமானுமான யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைப்பட்ட குரலுடன் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} பதிலுரைத்தான்.(24) {அவன்}, “ஓ! மாதவா பீஷ்மரின் சிறப்பைக் குறித்து நீ சொன்னதனைத்தும் முற்றிலும் உண்மையே. அதில் நான் சிறு ஐயமும் கொள்ளவில்லை.(25) உண்மையில், உயர் ஆன்ம பிராமணர்கள், சிறப்புமிக்கப் பீஷ்மரின் உயர்ந்த அருளையும், பெருமையையும் குறித்துப் பேசும்போது அவற்றை நான் கேட்டிருக்கிறேன்.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே. எனவே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, நீ சொல்வதில் சிறு ஐயத்தையும் கொள்ள மடியாது.(27) ஓ! மாதவா, உன் இதயம் அருளுமென்றால், உன் தலைமையில் நாம் பீஷ்மரிடம் செல்வோம்.(28) தெய்வீகமான சூரியன் வடக்குத் திரும்பினால், பீஷ்மர் (இவ்வுலகை விட்டு) தான் வென்றிருக்கும் அருள் உலகங்களுக்குச் சென்றுவிடுவார். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, அந்தக் குருகுலத்தின் கொழுந்து உன் காட்சியைப் பெறத் தகுந்தவராவார்.(29) (நீ என் வேண்டுதலை அருளினால்), அழியக்கூடியவையாகவும், அழிவற்றவையாகவும் இருப்பவனும், தேவர்களில் முதல்வனுமான உன்னுடைய காட்சியைப் பீஷ்மர் பெறுவார். ஓ! தலைவா, உண்மையில் பிரம்மத்தின் பரந்த கொள்ளிடம் நீயே” என்றான் {யுதிஷ்டிரன்}”.(30)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, தன்னருகே அமர்ந்திருந்த சாத்யகியிடம், “என் தேர் ஆயத்தமாகட்டும் {தேரில் குதிரைகள் பூட்டப்படட்டும்}” என்றான்.(31) இதைக் கேட்ட சாத்யகி, விரைவாகக் கேசவனின் முன்னிலையை விட்டகன்று வெளியே சென்று தாருகனிடம், “கிருஷ்ணனின் தேர் ஆயத்தமாகட்டும்” என்று உத்தரவிட்டான்.(32) சாத்யகியின் வார்த்தைகளைக் கேட்ட தாருகன், விரைவாகக் கிருஷ்ணனின் தேரை ஆயத்தம் செய்தான். தங்கத்தாலானதும், வைடூரியங்கள், சந்திரகாந்தங்கள் மற்றும் சூரிய காந்தங்களால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தால் மறைக்கப்பட்ட சக்கரங்களைக் கொண்டதும், பிரகாசமுடையதும், மனோவேகமுடையதும், சாரதிக்கு மத்தியில் வேறு பிற ரத்தினங்கள் நிறுவப்பட்டதும், காலைச் சூரியனைப் போல அழகானதும், உச்சியில் கருடனைக் கொண்ட அழகிய கொடிமரத்தைக் கொண்டதும், எண்ணற்ற கொடிகளைக் கொண்டதுமான தேரில், தங்க இழைகளைக் கொண்டவையும், மனோ வேகம் கொண்டவையும், குதிரைகளில் முதன்மையானவையுமான சுக்ரீவம், சைவியம் மற்றும் இன்னும் இரண்டு குதிரைகளும் பூட்டப்பட்டன. ஓ! மன்னர்களில் புலியே, அவற்றை ஆயத்தம் செய்த தாருகன், கூப்பிய கரங்களுடன் சென்று, இந்தச் செய்தியை கிருஷ்ணனிடம் தெரிவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(33-36)

பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்! – சாந்திபர்வம் பகுதி – 47-பீஷ்மர் எவ்வாறு உயிர்துறந்தார் என வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பாவங்களை அழிக்கும் ஸ்ரீவிஷ்ணுஸ்வராஜம் என்ற பீஷ்மரின் துதியை ஜனமேஜயனுக்கு உரைத்த வைசம்பாயனர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “கணைப்படுக்கையில் கிடந்தவரான பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்} எவ்வாறு தன் உடலை விட்டார்? அவர் என்ன வகை யோகத்தைப் பின்பற்றினார்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! குருக்களில் புலியே, உயர் ஆன்ம பீஷ்மர் எவ்வாறு தன் உடலை விட்டார் என்பதைத் தூய்மையான இதயத்துடனும், குவிந்த கவனத்துடனும் கேட்பாயாக.(2) சூரியன் துருவத்தைக் கடந்து வட பாதையில் {உத்தராயணத்தில்} நுழைந்தபோது, பீஷ்மர் குவிந்த கவனத்துடன், (உடலில் இருந்து விடுபட்டாலும் தொடர்புடன் கூடிய) தமது ஆன்மாவை (முழுமையாக விடுபட்ட நிலையுடன் கூடிய) தமது ஆன்மாவுக்குள் நுழையச்செய்தார்[1].(3) முதன்மையான பிராமணர்கள் பலரால் சூழப்பட்டிருந்த அந்த வீரர், எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த உடலுடன், எண்ணற்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பேரழகுடன் பிரகாசித்தார்.(4)வேதங்களை அறிந்த வியாசர், தெய்வீக முனிவரான நாரதர், தேவஸ்தானர், அஸ்மகர், சுமந்து,(5) ஜைமினி, உயர் ஆன்ம பைலர், சாண்டில்யர், தேவராதர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட மைத்திரேயர்,(6) அசிதர், வசிஷ்டர், உயர் ஆன்ம கௌசிகர், ஹரிதர், லோமசர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அத்ரியின் மகன்,(7) பிருஹஸ்பதி, சுக்கிரர், பெரும் தவசியான சியவனர், சனத்குமாரர், கபிலர், வால்மீகி, தும்புரு, குரு,(8) மௌத்கல்யர், பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, பெருந்தவசியான திருணபிந்து, பிப்பலாதர், வாயு, ஸம்வர்த்தர், புலஹர், கதர் {கசர்},(9) காசியபர், புலஸ்தியர், கிரது, தக்ஷன், பராசரர், மரீசி, அங்கிரஸ், காஸ்மியர், கௌதமர், தவசி காலவர்,(10) தௌம்யர், விபாண்டர், மாண்டவ்யர், தௌம்ரர், கிருஷ்ணாநுபௌதிகர், பிராமணர்களில் முதன்மையான உலூகர், பெருந்தவசி மார்க்கண்டேயர், பாஸ்கரி, புராணர் {பூர்ணர்}, கிருஷ்ணன், சூதர் ஆகிய அறவோர்களில் முதன்மையானோரான இவர்களாலும்,(11) நம்பிக்கையும், தற்கட்டுப்பாடும், மனோ அமைதியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இன்னும் பலராலும் சூழப்பட்டிருந்த அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலத் தெரிந்தார்.(12)

கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர், தூய்மையான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் கிருஷ்ணனை நினைத்தார்.(13) அவர், யோகத்தின் தலைவனும், நாபியில் தாமரையைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், விஷ்ணு என்றும், ஜிஷ்ணு என்றும் அழைக்கப்படுபவனுமான மதுசூதனனின் புகழை உற்சாகமான பலத்த குரலில் பாடினார்.(14) நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், பலமிக்கவரும், உயர்ந்த அற ஆன்மாவுமான பீஷ்மர், குவிந்த கரங்களுடன் இவ்வாறே வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தார்.(15)

பீஷ்மர், “ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னைப் புகழும் விருப்பத்தால் சுருக்கமாகவும், விரிவாகவும் என்னால் சொல்லப்படும் இவ்வார்த்தைகளில் மகிழ்வாயாக.(16) தூய்மையானவனும், தூய்மையேயானவனும் நீயே. அனைத்தையும் கடந்தவன் நீயே. அஃது என மக்களால் சொல்லப்படுபவன் நீயே. உயர்ந்த தலைவன் நீயே. ஓ! அண்டத்தின் ஆன்மாவும், அனைத்துயிரினங்களின் தலைவனும் ஆனவனே, முழு இதயத்துடன் நான் உனது புகலிடத்தை நாடுகிறேன் {உன்னைச் சரணடைகிறேன்}[2].(17) தொடக்கமும் {ஆதியும்}, முடிவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயர்ந்தனவற்றிலும் உயர்ந்தவனும், பிரம்மமும் {பரப்பிரம்மமும்} நீயே. தேவர்களும், முனிவர்களும் கூட உன்னை அறியமாட்டார்கள். நாராயணன் என்றும், ஹரி என்றும் அழைக்கப்படும் தெய்வீகப் படைப்பாளன் மட்டுமே உன்னை அறிவான்.(18) முனிவர்கள், சித்தர்கள், பெரும் நாகர்கள், தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் நாராயணன் மூலமே உன்னைக் குறித்துச் சிறிது அறிவார்கள். உயர்ந்தனவற்றில் உயர்ந்தவனும், சிதைவை அறியாதவனும் நீயே.(19) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும் நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியமாட்டார்கள்.(20)அனைத்து உலகங்களும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் உன்னுள் வாழ்ந்து, (அழிவுக்காலம் வரும்போது) உன்னிலேயே நுழைகின்றன. நூலில் கோர்க்கப்பட்ட ரத்தினங்களைப் போல, பண்புகள் கொண்ட அனைத்துப் பொருட்களும் உயர்ந்த தலைவனான உன்னிலேயே வசிக்கின்றன[3].(21) உனது செயல்பாடும், உனது உறுப்புகளானதும், மனம் மற்றும் பொருள்களாலானதுமான இவ்வண்டம், வலுவான நூலில் கோர்க்கப்பட்ட மலர்ச்சரத்தைப்போல, படர்ந்தூடுருவி அழியாமல் நிலைத்திருக்கும் ஆன்மாவான உன்னில் வசிக்கிறது.(22) ஆயிரக்கணக்கான தலைகளையும், கால்களையும், கண்களையும், கரங்களையும், மகுடங்களையும், பிரகாசமிக்க முகங்களையும் கொண்ட ஹரி என்று அழைக்கப்படுபவன் நீயே. தெய்வீகமானவனும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன் என்று அழைக்கப்படுபவன் நீயே.(23) நுண்ணியவற்றில் நுண்ணியமானவனும், திரள்களில் {பெரியவற்றில்} திரளானவனும் {பெரியவனும்}, கனமானவற்றில் கனமானவனும், உயர்ந்தவற்றில் உயர்வானவனும் நீயே.(24) வாக்குகள் {மந்திரங்கள்}, அனுவாக்குகள் {பிராம்மணங்கள்}, நிஷதங்கள் {உபாஸனாவிதிகள்}, உபநிஷதங்கள் ஆகியவற்றில் கருதப்படும் தடுக்கப்படமுடியாத பரம்பொருள் நீயே. எப்போதும் உண்மையையே அறிவிக்கும் சாமங்களிலும் {சாம வேதத்திலும்} கருதப்படும் உண்மையின் வடிவம் நீயே[4].(25)நான்கு பகுதிகளாலான ஆன்மாவைக் கொண்டவன் நீயே. (அனைத்து உயிரினங்களின்) புத்தியில் மட்டுமே வெளிப்படுபவன் நீயே. நம்பிக்கையில் கட்டுப்பட்டிருப்போரின் தலைவன் நீயே. ஓ! தேவா, (நம்பிக்கை நிறைந்தோரால்) சிறந்த, உயர்ந்த, இரகசியமான நான்கு பெயர்களால் புகழப்படுபவன் நீயே[5].(26) தவங்கள் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கின்றன. (உன்னை நிறைவு செய்வதற்காக உயிரினங்களால்) செய்யப்படும் தவங்கள், உன் வடிவிலேயே வாழ்கின்றன. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்ட அறிவு நீயே. அண்டமே ஆனவனும் நீயே. அனைத்துமறிந்தவன் நீயே. அண்டத்தில் அனைத்தையும் படைத்தவன் நீயே[6].(27) சுடர்மிக்க நெருப்பை உண்டாக்கும் இரு கட்டைகளை {அரணிக்கட்டைகளைப்} போல, பூமியில் பிரம்மத்தைக் காக்க தெய்வீகமானவர்களான தேவகி மற்றும் வசுதேவரிடத்தில் பிறந்தவன் நீயே[7].(28) ஓ! கோவிந்தா, அர்ப்பணிப்புள்ள ஒரு வழிபாட்டினன் {பக்தன்} தன் நித்திய முக்திக்காக மனத்தில் இருந்து அனைத்தையும் விலக்கி, விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, தூய ஆன்மாவான உன்னையே தன் ஆன்மாவில் காண்கிறான்.(29) மகிமையில் சூரியனுக்கும் மேம்பட்டவன் நீயே. புலன்கள் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டவன் நீயே. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உன் கரங்களில் என்னை நிறுத்துகிறேன் {கொடுக்கிறேன்}.(30)(அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவான) புருஷன் என்று புராணங்களில் சொல்லப்படுபவன் நீயே. யுகங்களின் தொடக்கத்தில் பிரம்மன் என்றும், அண்ட அழிவின் போது சங்கர்ஷணன் என்றும் சொல்லப்படுபவன் நீயே. புகழத்தக்கவனான உன்னை நான் துதிக்கிறேன்.(31) ஒருவனேயானாலும், எண்ணற்ற வடிவங்களில் இன்னும் பிறந்து கொண்டிருப்பவன் நீயே. விருப்பங்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவன் நீயே. ஓ! அனைத்து விருப்பங்களையும் அளிப்பவனே, உன்னிடம் அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினர் {பக்தர்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை நம்பிக்கையுடன் செய்து தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(32) அண்டம் கிடக்கும் உறையென அழைக்கப்படுபவன் நீயே. நீரில் நீந்தும் அன்னங்களையும், வாத்துகளையும் போல உலகங்கள் அனைத்தும் உன்னிலேயே மிதக்கின்றன.(33) உண்மை நீயே. ஒருவனும், அழிவற்றவனும் நீயே. பிரம்மம் நீயே. மனத்திற்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட “அது” நீயே. தொடக்கமும், நடுநிலையும், முடிவும் இல்லாதவன் நீயே. தேவர்களும், முனிவர்களும் உன்னை அறியமாட்டார்கள்.(34) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், பெரும் உரகர்கள் ஆகியோர் குவிந்த ஆன்மாக்களோடு எப்போதும் உன்னைத் துதிக்கின்றனர். கவலைகள் அனைத்திற்கும் பெரும் மருந்து நீயே.(35) பிறப்பும், இறப்பும் அற்றவன் நீயே. தெய்வீகமானவன் நீயே. தான்தோன்றி நீயே. அழிவற்றவன் நீயே. புலப்படாதவனும், அறிவுக்கு எட்டாதவனும் நீயே. ஓ! பலமிக்கவனே, ஹரி என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே[8].(36)அண்டத்தின் படைப்பாளனாகவும், அண்டத்தில் இருக்கும் அனைத்துக்கும் தலைவனாகவும் வேதங்களால் அறிவிக்கப்படுபவன் நீயே. அண்டத்தின் உயர்ந்த பாதுகாவலன் நீயே. சிதைவற்றவன் நீயே. உயர்ந்தவன் {பரம்} என்று அழைக்கப்படுபவன் நீயே.(37) தங்க நிறம் கொண்டவன் நீயே, அசுரர்களைக் கொல்பவன் நீயே. ஒருவனேயாயினும், அதிதியால் பனிரெண்டு வடிவங்களில் பெறப்பட்டவன் நீயே.(38) வளர்பிறையில் தேவர்களை அமுதத்தால் நிறைவு செய்பவனும், தேய்பிறையில் பித்ருக்களை நிறைவு செய்பவனும், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவரின் தலைவனுமான சோமனாக இருக்கும் உனது அந்த வடிவத்தை நான் வணங்குகிறேன்.(39) அடர்ந்த இருளுக்கு மறுபுறத்தில் வசிக்கும் பெரும் பிரகாசத்துடன் கூடிய ஒரே ஒருவன் நீயே. உன்னை அறிந்து கொள்ளும் ஒருவன், மரணம் குறித்த எந்த அச்சத்தையும் விடுகிறான். அறிவை அடையச் செய்யும் பொருளாக இருக்கும் அந்த உன் வடிவத்தை நான் வணங்குகிறேன்[9].(40)மகத்தான உக்தவேள்வியில், பிராமணர்கள் பெரும் ரிக்காக உன்னைத் துதிக்கின்றனர். பெரும் நெருப்பு வேள்வியில் {அக்நிசயன யாகத்தில்} அவர்கள் உன்னைத் தலைமை அத்யர்யுவாக (புரோகிதராகப்) பாடுகிறார்கள். வேதங்களின் ஆன்மா நீயே. உன்னை நான் வணங்குகிறேன். ரிக்கும், யஜுரும், சாமங்களும் உன் வசிப்பிடங்களாகும்[10]. (வேள்விகளில் பயன்படுத்தப்படும்) ஐந்து வகைப் புனித காணிக்கைகள் {ஆகுதிகள்} நீயே. வேதங்களில் பயன்படுத்தப்படும் ஏழு ஊடுகள் {சந்தங்கள்} நீயே. வேள்வியாலான உனது அந்த வடிவை நான் வணங்குகிறேன்[11].(42) பதினேழு ஓரசை ஒலிகளுடன் ஹோம நெருப்பில் காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்படுகின்றன. ஹோமத்தின் ஆன்மாவானவன் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(43) வேதங்கள் பாடும் புருஷன் நீயே. யஜுஸ் என்பது உனது பெயராகும். வேத சந்தங்கள் உன் அங்கங்களாகும். மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் வேள்விகள் உனது மூன்று தலைகளாகும். ரதந்தரம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வி நிறைவை வெளிப்படுத்தும் உன் குரலாகும். புனிதப் பாடல்களாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்.(44) அண்டப் படைப்பாளர்களால் செய்யப்பட்டு, ஆயிரம் வருடங்கள் நீடித்த பெரும் வேள்வியில் தோன்றிய முனிவன் நீயே. தங்கச் சிறகுகள் கொண்ட பெரும் அன்னம் நீயே. அன்னத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[12].(45)வேர்களுடன் கூடிய அனைத்து வகை இணை மற்றும் பின்னொட்டு சொற்களும் உனது அங்கங்களாகும். சந்திகள் உன் மூட்டுகளாகும். மெய்யெழுத்துகளும், உயிரெழுத்துகளும் உன் ஆபரணங்களாகும். வேதங்கள் உன்னைத் தெய்வீகச் சொல்லென அறிவிக்கின்றன. சொல்லாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[13].(46) மூவுலகங்களின் நன்மைக்காக வேள்வியாலான அங்கங்களுடன் கூடிய ஒரு பன்றியின் வடிவையேற்று, {நீரில்} மூழ்கியிருந்த பூமியை உயர்த்தியவன் நீயே. முடிவிலா ஆற்றலாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(47) பாம்பால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஆயிரந்தலைகளுடன் யோகத்தில் உறங்குபவன் நீயே. உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(48) எவ்வழிகளால் முக்தி அடையப்படுமோ, எவ்வழிகளால் புலன்கள் கட்டுப்படுத்தப்படுமோ அந்த வழிகளுடனும், உண்மையுடனும் (வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்கும்) நல்லோருக்கான பாலத்தை {அணையைக்} கட்டுபவன் நீயே. உண்மையாலான அந்த உனது வடிவை நான் வணங்குகிறேன்.(49) பல்வேறு அறங்களை {சமயங்களைப்} பயிலும் மனிதர்கள், பல்வேறு கனிகளின் விருப்பத்தால் செயலூக்கம் பெற்று, பல்வேறு சடங்குகளுடன் உன்னை வழிபடுகின்றனர். அறத்தாலான அந்த உன் வடிவை {தர்மஸ்வரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்[14].(50)உன்னிலிருந்தே அனைத்துப் பொருள்களும் உண்டாகின. ஆசையெனும் கொள்கையை உடைய உடற்கட்டுகளுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் தூண்டுபவன் நீயே. தூண்டலாலான அந்த உன் வடிவை {காமரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(51) பெருமுனிவர்கள், வடிவமில்லாத உன்னை வடிவங்களுக்குள் தேடுகின்றனர். க்ஷேத்ரஜனன் என்றழைக்கப்படும் நீ க்ஷேத்திரத்தில் அமர்ந்திருக்கிறாய். க்ஷேத்திரத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[15].(52) விழிப்புடன் தன்னில் நிலைத்திருப்பவனானாலும், விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் இருப்பவனாகச் சாங்கியர்கள் உன்னை விவரிக்கின்றனர். மேலும் அவர்கள் உன்னைப் பதினாறு பண்புகளைக் கொண்டவனாகவும், பதினேழாம் {17} எண்ணைக் குறிப்பனவாகவும் சொல்கின்றனர்[16].(53) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட யோகியர்கள், தங்கள் உறக்கத்தைக் கைவிட்டு, மூச்சைத் தவிர்த்து, தமக்குள் ஒடுங்கி அழிவில்லா ஒளியாகவே உன்னைக் காண்கின்றனர்.(54) அமைதி நிறைந்த சந்நியாசிகள், தங்கள் பாவபுண்ணியங்கள் அனைத்தையும் அழித்ததன் விளைவால் மறுபிறவி எனும் அச்சத்திலிருந்து விடுபட்டு உன்னை அடைகின்றனர். முக்தியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[17].(55)ஆயிரம் யுகங்களின் முடிவில், சுடர்மிகும் தழல்களுடன் உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. கடுமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(56) அனைத்து உயிரினங்களையும் எரித்து, அண்டத்தைப் பரந்த நீர்க்கொள்ளிடமாக்கி, அந்நீரில் குழந்தையின் வடிவில் உறங்குபவன் நீயே. மாயையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(57) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தான்தோன்றியின் நாபியில் ஒரு தாமரை உதித்தது. அந்தத் தாமரையிலேயே இவ்வண்டம் நிறுவப்பட்டது. தாமரையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(58) ஆயிரம் தலைகள் கொண்டவன் நீயே. அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. அளவிலா ஆன்மா கொண்டவன் நீயே. நான்கு பெருங்கடல்களைப் போலப் பரந்தவையான நான்கு வகை ஆசைகளையும் அடக்கியவன் நீயே. யோக உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(59) மேகங்கள் உன் தலையின் மயிரில் இருக்கின்றன. ஆறுகள் உன் அங்கங்களின் பல்வேறு மூட்டுகளில் இருக்கின்றன. நான்கு பெருங்கடல்களும் உனது வயிறாகும். நீராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(60)

பிறப்பு மற்றும் இறப்பால் உண்டாகும் மாற்றம் உன்னிலிருந்தே எழுகிறது. மேலும், அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் மீண்டும் மீண்டும் உன்னில் கலக்கின்றன. காரணத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(61) இரவில் உறங்காதவன் நீயே. பகலிலும் செயல்படுபவன் நீயே. (அனைத்தின்) நல்ல மற்றும் தீய செயல்களை நோக்குபவன் நீயே. (அண்டத்தை) நோக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(62) உன்னால் செய்ய முடியாத செயலேதும் இல்லை. மேலும் நல்ல செயல்களைச் சாதிக்க எப்போதும் தயாராக இருப்பவன் நீயே. செயலின் வடிவமான, வைகுண்டன் என்றழைக்கப்படும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(63) அறத்தையும், அதிகாரத்தையும் தங்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்த க்ஷத்ரியர்களைப் போரில் கோபத்துடன் இருபத்தோரு முறை அழித்தவன் நீயே. கொடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(64) ஐந்து பாகங்களாக உன்னையே வகுத்துக் கொண்டு, அனைவரின் உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர்மூச்சுகளாக {பிராண வாயுக்களாக} இயங்கி, அனைத்து உயிரினங்களும் அசைவதற்குக் காரணமானவன் நீயே. காற்றாலான {வாயுவாலான} அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(65)

மாதங்கள் என்றழைக்கப்படும் வடிவங்களிலும், பருவங்கள், அயணங்கள், வருடங்கள் ஆகிய வடிவங்களிலும் யுகந்தோறும் தோன்றி, படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவன் நீயே. காலத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(66) பிராமணர்கள் உனது வாயாகவும், க்ஷத்திரியர்கள் உன் இரு கைகளாகவும், வைசியர்கள் உன் வயிறு மற்றும் தொடைகளாகவும், சூத்திரர்கள் உன் பாதங்களாகவும் வாழ்கின்றனர். வர்ணத்தாலான அந்த உன் வடிவை {வர்ணரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(67) நெருப்பே உன் வாயாகும். சொர்க்கங்கள் உன் தலையின் மகுடமாகும். வானம் உனது நாபியாகும். பூமி உனது பாதங்களாகும். சூரியன் உனது கண்ணாகும். திசைப்புள்ளிகள் உனது காதுகளாகும். (மூன்று) உலகங்களாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(68) காலத்திலும் மேன்மையானவன் நீயே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் நீயே. அண்டத்தின் தொடக்கமாக இருக்கும் தொடக்கமில்லாதவன் நீயே. அண்டத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(69) வைசேஷிக தத்துவத்தின் படி உன் பண்புகளைத் தீர்மானிக்கும் இவ்வுலகின் மனிதர்கள், உன்னையே உலகின் பாதுகாவலனாகக் கருதுகிறார்கள். பாதுகாவலனாக இருக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[18].(70)உணவு, பானம், எரிபொருள் {விறகு} ஆகிய வடிவங்களை ஏற்கும் நீ, இன்பங்களையும், உயிரினங்களின் உயிர் மூச்சுகளையும் {பிராண வாயுக்களையும்} அதிகரித்து, அவர்களின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கிறாய். உயிராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(71) உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக நான்கு வகை உணவுகளை[19] நீ உண்கிறாய். வயிற்றில் அக்னியின் வடிவை ஏற்று அந்த உணவை நீயே செரிக்கிறாய். செரிமான வெப்பத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(72) பாதி மனிதன், பாதிச் சிங்கம் என்ற வடிவை ஏற்று, பழுப்புக் கண்கள் மற்றும் பழுப்பு பிடரி மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பற்களையும், நகங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசுரர்களின் தலைவனுடைய உயிரை எடுத்தவன் நீயே. பெருகும் வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(73) தேவர்களோ, கந்தர்வர்களோ, தைத்தியர்களோ, தானவர்களோ உண்மையில் உன்னை அறியமாட்டார்கள். நுட்பமேயான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(74) பாதாளலோகத்தில், சிறப்புமிக்க, பலமிக்க, அழகிய அனந்தனின் வடிவை ஏற்று, உலகைத் தாங்குபவன் நீயே. வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(75)படைப்பின் தொடர்ச்சிக்காக, அன்பு, பாசமெனும் பற்றுகளால் உயிரினங்கள் அனைத்தையும் திகைக்கச் செய்பவன் நீயே. (யோகிகள் எதற்காக முயல்கின்றனரோ அந்த) உண்மையான தன்னறிவு ஐம்பூதங்களே என்பதை அறியும் அந்த அறிவைக் கருதியே, அறிவுக்காக மக்கள் உன்னை அணுகுகின்றனர். அறிவாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(77) உன் உடல் அளவில்லாததாகும். உன் அறிவும் கண்களும் அனைத்திற்கும் அர்ப்பணிப்புள்ளவையாகும். எல்லைகள் அனைத்திற்கும் அப்பால் உள்ள எல்லையற்றவன் நீயே. பரந்த தன்மையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(78) சடாமுடிதரித்து, கையில் தண்டத்துடனும், நீண்ட வயிற்றுடனும் {தொங்கும் தொந்தியுடனும்}, அம்பறாத்தூணியையே இரக்கும் ஓடாகவும் கொண்ட துறவியின் வடிவை ஏற்றவன் நீயே. பிரம்மத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[20].(79) திரிசூலதாரியும், தேவர்களின் தலைவனும், முக்கண்ணனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும் நீயே. உன் உடல் எப்போதும் சாம்பலால் {திருநீற்றால்} பூசப்பட்டிருக்கிறது. உனது லிங்கச் சின்னம் எப்போதும் மேல்நோக்கியே இருக்கிறது. ருத்திரன் என்ற அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(80)அரைபிறை வடிவங்கள் உன் நெற்றியின் ஆபரணங்களாகும். கழுத்தைச் சுற்றும் புனித நூலாகப் பாம்புகளைக் கொண்டவன் நீயே. பிநாகை மற்றும் திரிசூலதாரி நீயே. கடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா நீயே. அனைத்துயிரினங்களைப் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. கோபம், பகை, பாசம் ஆகியவை அற்றவன் நீயே. அமைதியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(82) அனைத்தும் உன்னில் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் நீயே. எங்கும் இருப்பவன் நீயே. எங்கும், எப்போதும் அனைத்துமாக இருப்பவன் நீயே. ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் உன் வடிவை நான் வணங்குகிறேன்.(83) அண்டத்தையே செயலாகக் கொண்டவனும், அண்டத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அண்டம் எழுந்த பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருள்களுக்கும் அழிவாக இருப்பவனும், (அனைத்துப் பொருட்களில் இருக்கும் பூதங்களான) ஐந்தைக் கடந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(84) மூவுலகங்களாய் இருப்பவனும், மூவுலகங்களிலும் மேன்மையானவனுமான உன்னை நான் வணங்குகிறேன். திசைகள் அனைத்துமான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தும் நீயே, அனைத்தின் ஒரே கொள்ளிடம் நீயே.(85)

ஓ! தெய்வீகத் தலைவா, ஓ! விஷ்ணு, ஓ! அனைத்து உலகங்களின் நித்திய மூலமே உன்னை நான் வணங்குகிறேன். ஓ! ரிஷிகேசா, படைப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே, வெல்லப்படமுடியாதவன் நீயே.(86) கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் வெளிப்படும் உன் தெய்வீக வடிவை என்னால் காண முடியவில்லை. எனினும், (உனது செயல்களில் நம்பிக்கையுடன்) உன் நித்திய வடிவை என்னால் உண்மையில் காண முடியும்.(87) உன் தலையால் சொர்க்கத்தையும், பாதத்தால் பூமியையும், ஆற்றலால் மூவுலகங்களையும் நிறைத்திருப்பவன் நீயே. அழிவற்றவனும், அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும் நீயே.(88) திசைகளே உனது கரங்களாகும், சூரியனே உனது கண்ணாகும், ஆற்றலே உனது உயிர்நீராகும். அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே.(89) ஓ! மங்கா மகிமை கொண்ட கோவிந்தா, காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட மஞ்சள் ஆடை உடுத்தியவனான உன்னை, அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களே வழிபடுகின்றனர்.(90)

ஓ! கிருஷ்ணா, ஒரே முறை உன்னிடம் தலைவணங்கினாலும், அது பத்து குதிரை வேள்விகளின் நிறைவுக்கு இணையானதாகும். பத்து குதிரைவேள்விகளைச் செய்தவனும், மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபட மாட்டான். எனினும், கிருஷ்ணனை வழிபடும் மனிதன் மறுபிறவியில் இருந்து தப்புகிறான்.(91) தங்கள் நோன்பாகக் கிருஷ்ணனையே கொண்டோரையும், இரவின்போதும், உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும் கிருஷ்ணனையே நினைப்போரையும் கிருஷ்ணனையே தங்கள் மேனியாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம்., மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட தெளிந்த நெய்யாகுதிகள் சுடர்மிக்க நெருப்பில் நுழைவதைப் போல, அம்மனிதர்கள் (மரணத்திற்குப் பிறகு) கிருஷ்ணனுக்குள்ளேயே நுழைகின்றனர்.(92) ஓ! விஷ்ணுவே, நரகத்தின் அச்சத்தை விலக்குபவனும், உலகவாழ்வெனும் பெருங்கடலின் சுழியில் மூழ்கியவனை, ஒரு படகைப் போல நரகின் அச்சத்தில் இருந்து விடுவிப்பவனான உன்னை நான் வணங்குகிறேன்.(93) ஓ! தேவா, பிராமணனின் நிலையைக் கொண்டவனும், பிராமணர்கள் மற்றும் பசுக்களுக்கு நன்மை செய்பவனும், அண்டத்திற்கு நன்மை செய்பவனும், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தனாக இருப்பவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(94) ஹரி என்ற ஈரெழுத்தானவை, காட்டுவழியில் பயணிக்கும் வணிகர்களையும், சோகம் மற்றும் துயரங்களைக் கொண்ட உலகின் நோய்கள் அனைத்தையும் நன்கு குணமடையச் செய்யும் மருந்தையும் தனக்குள் கொண்டவையாகு[21].(95)உண்மையானது விஷ்ணுவால் நிறைந்திருப்பைத் போலவும், அண்டமானது விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், அனைத்தும் விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், என் ஆன்மாவும் விஷ்ணுவால் நிறைந்து, என் பாவங்கள் அழிவையடையட்டும்.(96) உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட நான், மகிழ்ச்சியான முடிவை அடைய விரும்பி, உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களில் சிறந்தவனே, எது எனக்கு நன்மையோ, அதையே எனக்கு {செய்ய} நினைப்பாயாக.(97) ஓ! விஷ்ணுவே, அறிவுக்கும், தவங்களுக்கும் பிறப்பிடமான பிறப்பற்றவன் நீயே. இவ்வாறே நீ புகழப்படுகிறாய். ஓ! ஜனார்த்தனா, ஓ! தேவா, பேச்சை (மட்டுமே) கொண்ட வேள்வியால் இவ்வாறு என்னால் வழிபடப்படும் நீ என்னிடம் நிறைவு கொள்வாயாக.(98) வேதங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தவங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவர்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். எங்கும், எப்போதும் அனைத்தும் நாராயணனே” என்று துதித்தார் {பீஷ்மர்}”.(99)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன பீஷ்மர், குவிந்த மனத்துடன் கிருஷ்ணனிடம், “கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்கினார்.(100) பீஷ்மரின் வழிபாட்டைத் தன் யோக ஆற்றலால் அறிந்தவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான மாதவன், (அவரது {பீஷ்மரது} உடலுக்குள் நுழைந்து), கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் ஆகியவற்றின் தெய்வீக அறிவை அவருக்கு அளித்து அங்கிருந்து சென்றான்.(101) பீஷ்மர் அமைதியடைந்தபோது, (அவரைச் சுற்றிலும் அமர்ந்து) பிரம்மத்தை ஓதிக்கொண்டிருந்தவர்கள், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன், அந்தக் குருக்களின் உயர் ஆன்மத் தலைவரை {பீஷ்மரைச்} சிறந்த வார்த்தைகளால் துதித்தனர்.(102) பிராமணர்களில் முதன்மையானோரான அவர்கள், உயிரினங்களில் முதன்மையான கிருஷ்ணனையும் புகழ்ந்தபடியே, மெல்லிய குரல்களால் பீஷ்மரை மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(103) உயிரினிங்களில் முதன்மையான மாதவன் {கிருஷ்ணன்}, தன்னிடம் பீஷ்மர் கொண்ட அர்ப்பணிப்பை (தனது யோக சக்தியால்) அறிந்து, தன் ஆசனத்தில் இருந்து திடீரென எழுந்து தன் தேரில் ஏறினான்.(104) {அப்போது} கேசவனும், சாத்யகியும் ஒரே தேரில் சென்றனர். சிறப்பு மிக்க இளவரசர்களான யுதிஷ்டிரனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மற்றொரு தேரில் சென்றனர்.(105) பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவனும்} மூன்றாவதிலும், மனிதர்களில் காளையரான கிருபர், எதிரிகளை எரிப்பவனான யுயுத்சு, சூதனான சஞ்சயன் ஆகியோர், ஒரு நகரத்தைப் போலத் தெரிந்த தங்கள் தங்கள் தேர்களிலும் சென்றனர். அவர்கள் அனைவரும், தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சென்றனர்.(106,107) அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, பிராமணர்களால் சொல்லப்பட்ட தனக்கான புகழுரைகளைக் கேட்டபடியே மகிழ்ச்சியாகச் சென்றான். அந்தக் கேசியைக் கொன்றவன் {கிருஷ்ணன்}, (வீதியெங்கும்) கூப்பிய கரங்களுடனும், வணங்கிய தலைகளுடனும் காத்திருந்த மக்களை மகிழ்ச்சியான இதயத்துடன் வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}[22].(108)“இவ்விதம் பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்துதியைப் பக்தியுடன் படிப்பவனும், கேட்பவனும், ஸ்ரீகிருஷ்ணனுடைய அனுக்ரஹத்தால் பாபங்களெல்லாம் அற்று, முடிவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானை அடைகிறான். யோகிகள் உயிர்நீங்குங்காலத்தில் மிக்கப் பிரயத்தனத்துடன் மனத்தில் எந்தப் பகவானை நிலைக்கப் பாவனைச் செய்கிறார்களோ அந்த ஹரியைப் பீஷ்மர் எதிரிற்கண்டு கிருதார்த்தராயத் தம்முயிரைவிட்டார். முன்காலத்தில் பீஷ்மராற் சொல்லப்பட்டதும் மஹாபாபங்களை நாசஞ்செய்வதும், ஆச்சர்யமான செய்கையுள்ள ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றியதுமான இந்த ஸ்தவராஜம் முடிவுபெற்றது. பரிசுத்தனாகி மோக்ஷவிருப்பமுள்ள மனிதன் நிந்திக்கப்பட்ட பாவங்களை விலக்கும் இந்த ஸ்தவராஜத்தைப் படித்துத் தாமாகக் கிடைத்த அழிவுள்ள உலகங்களைக் கடந்து மஹாத்மாவினுடைய அழிவற்ற பதத்தைப் பெறுகிறான்”

க்ஷத்திரியர்கள் மீண்டதெவ்வாறு? – சாந்திபர்வம் பகுதி – 48-பீஷ்மரைக் காணச் சென்ற கிருஷ்ணனும், யுதிஷ்டிரனும் வழியில் பேசிக் கொண்டது; பரசுராமரால் உண்டாக்கப்பட்ட தடாகங்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; பரசு ராமர் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை அழித்ததும், க்ஷத்திரியர்கள் மீண்டும் வளர்ந்ததும் எவ்வாறு என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, மன்னன் யுதிஷ்டிரனும், கிருபரின் தலைமையிலானவர்கள் அனைவரும், நான்கு பாண்டவர்களும், கொடிகள், கொடிமரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அரணமைக்கப்பட்ட நகரங்களைப் போலத் தெரிந்தவையுமான தங்கள் தங்கள் தேர்களில், வேகமான குதிரைகளின் உதவியுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(1,2) மயிர், ஊனீர், எலும்புகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டதும், உயர் ஆன்மாக்களைக் கொண்டோரான லட்சோபலட்சம் க்ஷத்திரியர்கள் தங்கள் உடல்களை விட்ட இடமுமான அந்தக் களத்தில் இறங்கினர்.(3) மேலும் அது {அந்தக் களம்}, யானைகள், குதிரைகளின் எலும்புகளாலும் அமைந்த பல மலைகளாலும், சங்குகளைப் போலச் சிதறிக் கிடக்கும் மனிதத் தலைகளாலும், மண்டை ஓடுகளாலும் நிறைந்திருந்தது.(4) ஆயிரக்கணக்கான ஈமச்சிதைகளாலும், கவசங்கள் மற்றும் ஆயுதங்களின் குவியல்களாலும் நிறைந்திருந்த அந்தப் பரந்த களம், குடிப்பதற்காக அந்தகனால் பயன்படுத்தப்பட்டதும், அண்மையில் கைவிடப்பட்டதுமான அவனுடைய பானசாலையைப் போலத் தெரிந்தது.(5)

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பூதக்கூட்டங்களாலும், ராட்சசர்களாலும் மொய்க்கப்பட்ட அந்தப் போர்க்களத்தைப் பார்த்தபடியே வேகமாகச் சென்றனர்.(6) அப்படிச் சென்று கொண்டிருந்தபோது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், யாதவர்களைத் திளைக்கச் செய்பவனுமான கேசவன், ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} ஆற்றலைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்னான்.(7) {கிருஷ்ணன்}, “ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, அதோ தொலைவில் காணப்படுவதே ராமரின் {பரசுராமரின்} ஐந்து தடாகங்களாகும். அங்கேதான் ராமர், க்ஷத்திரியர்களின் குருதியைக் கொண்டு தமது மூதாதையரான பித்ருக்களுக்குக் காணிக்கையளித்தார். பலமிக்கவரான அந்த ராமர் {பரசுராமர்}, இருபத்தோரு {21} முறை க்ஷத்திரியர்களிடம் இருந்து இந்தப் பூமியை விடுவித்த பிறகு, அங்கேதான் தனது பணியைக் கைவிட்டார்” என்றான் (9)

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “பழங்காலத்தில் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை ராமர் அழித்தார் என்று நீ சொல்வதில் எனக்குப் பேரையங்கள் {பெரும் சந்தேகங்கள்} இருக்கின்றன.(10) ஓ! யதுக்களில் காளையே, ஓ! அளவிலா ஆற்றலைக் கொண்டோனே க்ஷத்திரிய வித்தே ராமரால் அழிக்கப்பட்டது எனில், க்ஷத்திரிய வகையினர் மீண்டதெவ்வாறு?(11) ஓ! யதுக்களில் காளையே, சிறப்புமிக்க, உயர் ஆன்ம ராமரால் க்ஷத்திரிய வகை எவ்வாறு முற்றாக அழிக்கப்பட்டது? மேலும் அது மீண்டும் எவ்வாறு வளர்ந்தது?(12) பயங்கரமான தேர் மோதல்களில் கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களின் சடலங்களால் பூமி விரவிக் கிடந்தது.(13) ஓ! யதுக்களில் புலியே, பழங்காலத்தில் உயர் ஆன்ம பிருகு குல வழித்தோன்றலான ராமரால் க்ஷத்திரிய வகையானது என்ன காரணத்தால் இவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது? ஓ! விருஷ்ணி குலத்தோனே, ஓ! பறவைக் கொடி கொண்டோனே, இந்த என் ஐயத்தை நீக்குவாயாக. ஓ! கிருஷ்ணா, ஓ! வாசவனின் {இந்திரனின்} தம்பியே[1], உயர் அறிவு உன்னில் இருந்தே கிடைக்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.(தக்ஷனின் முதல் மகளான} அதிதியிலிருந்து இந்த அண்டத்தின் தலைவர்களான {லோக ஈஸ்வரர்களான} பனிரெண்டு ஆதித்யர்கள் தோன்றினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெயர் வரிசையில் உனக்கு அவர்களை விவரித்துச் சொல்கிறேன்.(14) தாத்ரி {தாதா}, மித்ரன், அர்யமா, சக்ரன் {இந்திரன்}, வருணன், அம்சன், பகன், விவஸ்வத் {விவஸ்வான்}, உஷா {பூஷா}, சாவித்ரி {சவிதா},(15) த்வஷ்த்ரி {த்வஷ்டா} மற்றும் விஷ்ணு ஆகியோரே அவர்கள். எனினும், இளையவன் {விஷ்ணு} தகுதியால் அவர்கள் அனைவரையும் விட மேன்மையானவனாக இருந்தான்.)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு கதனின் பலமிக்க அண்ணன், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட யுதிஷ்டிரனிடம், பூமியில் க்ஷத்திரியர்கள் மீண்டும் எவ்வாறு நிறைந்தனர் என்பது குறித்த அனைத்தையும் உள்ளபடியே சொன்னான்”.(14-16)

பரசுராமர்! – சாந்திபர்வம் பகுதி – 49-பரசுராமரின் கதையைச் சொன்ன கிருஷ்ணன்; காதிக்குப் பிறந்த விஷ்வாமித்திரர்; காதியின் மகள் சத்தியவதிக்குப் பிறந்த ஜமதக்னி; ஜமதக்னிக்குப் பிறந்த பரசுராமர்; ஹைஹய குல க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட ஜமதக்னி; கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பரசுராமர்; கசியபருக்குப் பூமியைத் தானமளித்த பரசுராமர்; கசியபரிடம் இரந்து கேட்ட பூமாதேவி; பூமாதேவி குறிப்பிட்ட மன்னர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை மன்னர்களாக்கிய கசியபர்…

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, ராமரின் {பரசுராமரின்} சக்தி, ஆற்றல் மற்றும் பிறப்பைக் குறித்துப் பெருமுனிவர்களுடன் உரையாடும்போது நான் கேட்டவாறே சொல்கிறேன்; கேட்பீராக.(1) ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு? மேலும், பல்வேறு அரச குலங்களில் மீண்டும் பிறந்தவர்கள் எவ்வாறு மீண்டும் கொல்லப்பட்டனர்? என்பதைக் கேட்பீராக.(2) ஜாஹ்னுவுக்கு, ரஜன் {அஜன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். ரஜனுக்குப் பலாகாஸ்வன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். மன்னன் பலாகாஸ்வனுக்கு, நன்னடத்தைக் கொண்டவனாகக் குசிகன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(3) பூமியில் ஆயிரங்கண் இந்திரனுக்கு ஒப்பானவனாக இருந்த குசிகன், மூவுலகங்களுக்குத் தலைவனாகும் மகனை விரும்பி கடுந்தவங்களைச் செய்து வந்தான்.(4)கடுந்தவங்களைச் செய்பவனும், ஒரு மகனைப் பெறுவதற்குத் தகுந்தவனுமான அவனைக் {குசிகனைக்} கண்ட ஆயிரங்கண் புரந்தரன் {இந்திரன்}, (தன் சக்தியால்) அம்மன்னனை ஈர்த்தான்.(5) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பகனைக் கொன்றவனான அந்த மூவுலகங்களின் பெருந்தலைவனே, காதி என்ற பெயரில் அறியப்பட்டவனாகவும் குசிகரின் மகனாகவும் ஆனான்.(6) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, காதிக்கு, சத்தியவதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். பலமிக்கக் காதி, பிருகுவின் வழித்தோன்றலான ரிசிகருக்கு அவளை (மனைவியாகக்) கொடுத்தான்.(7) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, பிருகு குலத்தவரான அவளது தலைவர் {ரிசிகர்}, அவளது நடத்தையின் தூய்மையில் நிறைவு கொண்டவராக இருந்தார். அவர், (அவளது தந்தையான) காதிக்கு ஒரு மகனைக் கொடுப்பதற்காகப் பால் மற்றும் அரிசி கலந்த வேள்வி உணவைச் சமைத்தார்.(8)

பிருகு குலத்தின் ரிசிகர், தமது மனைவியை {சத்தியவதியை} அழைத்து, “புனிதமாக்கப்பட்ட உணவின் இப்பகுதி உன்னால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், (மறுபாதியான) இந்தப் பகுதி உன் தாயால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவளுக்குச் {மன்னன் காதியின் மனைவிக்குச்} சுடர்மிக்கப் பிரகாசத்துடன் ஒரு மகன் பிறந்து, க்ஷத்திரியர்களில் காளையாக இருப்பான். பூமியில் க்ஷத்திரியர்களால் வெல்லப்பட முடியாத அவன், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரைக் கொல்பவனாக இருப்பான்.(10)

உன்னைப் பொறுத்தவரையில், ஓ! அருளப்பட்ட மங்கையே, உணவின் இப்பகுதியானது, பெரும் ஞானம் கொண்டவனும், அமைதியின் வடிவமும், தவத்துறவுகளுடன் கூடியவனும், பிராமணர்களில் முதன்மையானவனுமான ஒரு மகனை உனக்குக் கொடுக்கும்” என்றார்.(11) பிருகு குலத்தைச் சேர்ந்தவரான அந்த அருளப்பட்ட ரிசிகர், தமது மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தவங்களில் தன் இதயத்தை நிலைநிறுத்தி காட்டுக்குச் சென்றுவிட்டார்.(12)

அதேநேரத்தில், மன்னன் காதி, புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்து, ரிசிகரின் ஆசிரமத்திற்குத் தன் ராணியுடன் வந்தான்.(13) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அப்போது சத்தியவதி, புனிதமாக்கப்பட்ட உணவின் இரு பகுதிகளையும் எடுத்துக் கொண்டு, பெரும் அவசரத்துடன் தன் தலைவர் சொன்ன வார்த்தைகளைத் தன் தாயிடம் சொன்னாள்.(14) ஓ! குந்தியின் மகனே, அப்போது அந்த அரசத்தாய் {ராஜமாதா}, அறியாமையால் தனக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தன் மகளுக்குக் கொடுத்து, தன் மகளுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தனக்கு எடுத்துக் கொண்டாள்.(15) இதன்பேரில், க்ஷத்திரியர்களை நிர்மூலம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த பயங்கர வடிவிலான பிள்ளையைத் தன் கருவில் கொண்ட சத்தியவதியின் உடல் பிரகாசத்தால் ஒளிவீசியது.(16)

அவளது கருவறைக்குள் கிடக்கும் பிராமணப் பிள்ளையைக் கண்ட அந்தப் பிருகுக்களில் புலி {ரிசிகர்}, தெய்வீக அழகுடையவளான தன் மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(17) “ஓ! அருளப்பட்ட பெண்ணே, புனிதமாக்கப்பட்ட உணவுக் கவளங்களை மாற்றியதன் விளைவால் உன் தாய் உன்னை வஞ்சித்துவிட்டாள். உன் மகன் கொடுஞ்செயல்களைச் செய்பவனாகவும், இதயத்தில் பழியுணர்ச்சி கொண்டவனாகவும் இருப்பான். அதே போல (உன் தாய்க்குப் பிறக்கப்போகும்) உன் சகோதரனோ, தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிராமணனாக இருப்பான்.(18) உனக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த புனிதமாக்கப்பட்ட உணவில் உயர்ந்ததும், உலகளாவியதுமான பிரம்மத்தின் வித்து வைக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், உன் தாய்க்காக நிர்ணயிக்கப்பட்டதில் க்ஷத்திரிய சக்தியின் மொத்த தொகையும் வைக்கப்பட்டிருந்தது.(19) எனினும், ஓ! அருளப்பட்ட மங்கையே {சத்தியவதியே}, அந்த இரண்டு பகுதிகளும் மாற்றப்பட்டதன் விளைவால், என்ன நினைத்து இது செய்யப்பட்டதோ அது நடக்காது. ஒரு தாய் பிராமணப் பிள்ளையை அடைவாள், நீயோ ஒரு க்ஷத்திரியனை மகனாக அடைவாய்” என்றார்.(20)

தன் தலைவரால் இவ்வாறு சொல்லப்பட்ட உயர்ந்த அருளைக் கொண்ட சத்தியவதி, நெடுஞ்சாண்கிடையாக அவரது பாதத்தில் தன் தலையை வைத்து நடுங்கிக் கொண்டே,(21) “ஓ! புனிதமானவரே, பிராமணர்களில் இழிந்தவனை (உமது மகனாக) அடைவேன் என்ற இத்தகு வார்த்தைகளை என்னிடம் சொல்வது உமக்குத் தகாது” என்றாள்.(22)

ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அருளப்பட்ட மங்கையே, உன்னைப் பொறுத்தவரை இஃது என்னால் நினைக்கப்பட்டதன்று. புனிதமாக்கப்பட்ட உணவுக்கவளங்களை மாற்றியதன் விளைவாலேயே கடுஞ்செயல்களைச் செய்யக்கூடிய மகனை நீ கருவில் கொண்டிருக்கிறாய்” என்றார்.(23)

சத்தியவதி {ரிசிகரிடம்}, “ஓ! தவசியே, நீர் விரும்பினால் உம்மால் அவளுக்கு உலகங்களையே படைத்துத் தர முடியும் எனும்போது ஒரு பிள்ளையைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! சக்திமிக்கவரே, அறவோனும், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான ஒரு மகனை எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்” என்றாள்.(24)

ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அருளப்பட்ட மங்கையே, இதற்கு முன் கேலிக்காகக் கூட என்னால் பொய்மை பேசப்பட்டது கிடையாது. நெருப்பை மூட்டி, வேத சூத்திரங்களின் உதவியுடன் புனிதமாக்கப்பட்ட உணவைச் சமைத்ததில் (அந்த உள்ளார்ந்த நிகழ்வில்) என்ன சொல்ல முடியும்?(25) ஓ !இனியவளே, இது பழங்காலத்திலேயே விதிக்கப்பட்ட விதியாகும். நான் என் தவங்களின் மூலம் இவை அனைத்தையும் உறுதி செய்திருக்கிறேன். உன் தந்தையின் வழித்தோன்றல்கள் அனைவரும் பிராமணத் தன்மைகளையே கொண்டிருப்பார்கள்” என்றார்.(26)

சத்தியவதி {ரிசிகரிடம்}, “ஓ! சக்திமிக்கவரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, நமது பேரப்பிள்ளை அவ்வாறு இருக்கட்டும், ஆனால் எனக்கு, அமைதியில் நாட்டம் கொண்ட ஒரு மகன் பிறக்க வேண்டும்” என்றாள்.(27)

ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அழகிய நிறம் கொண்டவளே, ஒரு மகனுக்கும், பேரப்பிள்ளைக்கும் இடையில் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லை. ஓ! இனிமையானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும்” என்றார்”.(28)

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு சத்தியவதி, தவங்களில் அர்ப்பணிப்பு கொண்டவரும், அமைதியில் நாட்டம் கொண்டவரும், நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளை நோற்பவருமான ஜமதக்னியை பிருகு குலத்தின் மகனாக ஈன்றெடுழுத்தாள்.(29) குசிகனின் மகன் காதி, விஷ்வாமித்திரர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ஒரு பிராமணனின் ஒவ்வொரு பண்பையும் கொண்ட அந்த மகன் (க்ஷத்திரிய வகையில் பிறந்தவராக இருப்பினும்) ஒரு பிராமணனுக்கு இணையானவராகவே இருந்தான்.(30) (இவ்வாறே) ரிசிகர், ஜமதக்னி என்ற தவக்கடலை மகனாகப் பெற்றார். ஜமதக்னி கடுஞ்செயல்களைச் செய்யவல்ல ஒரு மகனைப் பெற்றார்.(31) மனிதர்களில் முதன்மையானவனான அந்த மகன் {பரசுராமர்}, ஆயுத அறிவியல் உள்ளிட்ட அறிவியல்களில் திறம்பெற்று இருந்தார். சுடர்மிக்க நெருப்பைப் போன்றவரான அந்த மகனே, க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய ராமராவார் {பரசுராமராவார்}.(32)

கந்தமாதன மலைகளில் மஹாதேவனை நிறைவு செய்த அவர் {பரசுராமர்}, அந்தப் பெருந்தேவனிடம் ஆயுதங்களை, அதிலும் குறிப்பாகக் கடுஞ்சக்தி கொண்ட கோடரியை இரந்து கேட்டார்.(33) நெருப்பின் சக்தியையும், தாங்கிக் கொள்ளப்பட முடியாத கூர்மையையும் கொண்ட அந்த ஒப்பற்ற கோடரியின் விளைவால் அவர் உண்மையில் ஒப்பற்றவரானார்.(34) அதே வேளையில், கிருதவீர்யனின் வலிமைமிக்க மகனும், க்ஷத்திய வகையைச் சேர்ந்தவனும், ஹைஹயர்களின் ஆட்சியாளனும், (பெரும் முனிவரான) தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கரங்களை அடைந்தவனும், உயர்ந்த அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தன் கரங்களின் வலிமையால் மலைகளுடனும், ஏழு தீவுகளுடனும் கூடிய மொத்த பூமியையும் போரில் அடக்கி, பலமிக்கப் பேரரசனாகி, (இறுதியில்) ஒரு குதிரை வேள்வியில் பூமியை பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான்.(35-37)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஒரு குறிப்பட்ட சந்தர்ப்பத்தில், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரங்கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, தாகமடைந்தவனான நெருப்புத் தேவனால் வேண்டப்பட்டு அந்தத் தேவனுக்குப் பிச்சையளித்தான்.(38) அவனது கணைகளின் முனைகளில் இருந்து உதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த நெருப்பு தேவன் {அக்னி}, (தனக்குக் கொடுக்கப்பட்டதை) எரிக்க விரும்பி, கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், மாட்டிடையர்களின் சிற்றூர்களையும் எரித்தான்.(39) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தக் கார்த்தவீரியனின் ஆற்றலின் மூலம் அந்த நெருப்பு தேவன் மலைகளையும், பெருங்காடுகளையும் எரித்தான்.(40)

ஹைஹயர்களுடைய மன்னனின் துணையோடும், காற்றால் உண்டான சக்தியுடனும் சுடர்விட்டெரிந்த நெருப்பு தேவன், உயர் ஆன்ம ஆபவரின் இனிய ஆசிரமத்தை எரித்தான்.(41) ஓ! வலிய கரங்களைக் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவரான ஆபவர், பலமிக்க அந்த க்ஷத்திரியனால் {கார்த்தவீரியனால்} தன் ஆசிரமம் எரிக்கப்பட்டதைக் கண்டு, கோபத்தால் அந்த ஏகாதிபதியிடம்,(42) “ஓ! அர்ஜுனா, கண்ணுக்கினியதான என் வனத்தையும் தவிர்க்காமல் நீ அவற்றை எரித்ததால், (பிருகு குல) ராமன், உன் (ஆயிரம்) கரங்களைத் துணிப்பான்” என்று சபித்தார்.(43) எனினும், ஓ! பாரதரே, பேராற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனும், அமைதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு உள்ளவனும், பிராமணர்களை எப்போதும் மரியாதையுடன் நடத்துபவனும், (அனைத்து வகையினருக்கும்) பாதுகாப்பை அளித்தவனும், ஈகையாளனும், துணிச்சல்மிக்கவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம முனிவரால் இடப்பட்ட சாபத்தை எண்ணியும் பார்க்கவில்லை. எப்போதும் செருக்குடையவர்களும், கொடூரர்களுமான அவனது பலமிக்க மகன்கள், அந்தச் சாபத்தின் விளைவாக அவனது மரணத்திற்கு மறைமுகக் காரணமானார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, அந்த இளவரசர்கள், ஹைஹயர்களின் ஆட்சியாளனான கார்த்தவீரியன் அறியாமலேயே, ஜமதக்னியுடைய ஹோமப் பசுவின் கன்றைக் கவர்ந்து சென்றனர். இதன் காரணமாக உயர் ஆன்ம ஜமதக்னிக்கும் ஹைஹயர்களுக்குமிடையில் சச்சரவு தோன்றியது.(44-47)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான சக்திமிக்க ராமர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனின் {கார்த்தவீரியார்ஜுனனின்} கரங்களைத் துண்டித்து, அம்மன்னனின் அரண்மனையில் திரிந்து கொண்டிருந்த தமது தந்தையின் கன்றை மீட்டுக் கொண்டு வந்தார்.(48) ஓ! மன்னா, கொண்டாடப்பட்ட ராமர் {பரசுராமர்} புனித விறகும், புல்லும் சேகரிக்கச் சென்றிருந்தபோது, அர்ஜுனனின் மூட மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, உயர் ஆன்ம ஜமதக்னியின் ஆசிரமத்திற்குச் சென்று, தங்கள் வேல்களின் முனைகளால் அந்த முனிவரின் {ஜமதக்னியின்} தலையை அவரது உடலில் இருந்து வீழ்த்தினர்.(49,50) தமது தந்தையின் மரணத்தால் கோபமடைந்து, பழி தீர்க்க நினைத்த ராமர், க்ஷத்திரியர்களிடம் இருந்து பூமியை விடுவிக்கச் சபதமேற்று ஆயுதங்களை எடுத்தார்.(51) பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்தப் பிருகுக்களில் புலி {பரசுராமர்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கார்த்தவீரியனின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரையும் விரைவில் கொன்றார்.(52)

ஓ! மன்னா, சினத்தால் ஆயிரக்கணக்கான ஹைஹயர்களைக் கொன்ற அந்தப் பிருகுவின் வழித்தோன்றல், பூமியைக் குருதியால் சகதியாக்கினார்.(53) பெரும் சக்தி கொண்ட அவர், விரைவில் பூமியை க்ஷத்திரியர்கள் எவரும் அற்றதாகச் செய்தார். பிறகு கருணையால் நிரம்பிய அவர் காட்டுக்கு ஓய்ந்து சென்றார்.(54) பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர், இயல்பிலேயே கோபம் நிறைந்தவரான ராமர் {பரசுராமர்}, (கோழைத்தனம் கொண்டவர்) எனக் குற்றம் சுமத்தப்பட்டார்.(55) ஓ! ஏகாதிபதி, விஷ்வாமித்திரரின் பேரனும், ரைப்பியரின் மகனும், பராவசு என்ற பெயரைக் கொண்டவருமான பெருந்துறவி ஒருவர்,(56) “ஓ! ராமரே {பரசுராமரே}, யயாதியின் வீழ்ச்சியின்போது, வேள்வியில் கூடியிருந்த அறவோரான பிரதர்த்தனன் மற்றும் பிறர், பிறப்பால் க்ஷத்திரியர்களில்லையோ?(57) ஓ! ராமரே, நீர் உண்மை நோன்புகளைக் கொண்டவரல்ல. மக்களுக்கு மத்தியில் நீர் வெறும் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறீர். க்ஷத்திரிய வீரர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகவே நீர் மலைகளில் இருக்கிறீர்” என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.(58)

பராவசுவின் வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, மீண்டும் ஆயுதமெடுத்து, மீண்டும் பூமியை நூற்றுக்கணக்கான க்ஷத்திரியர்களின் உடல்களால் விரவிக் கிடக்கச் செய்தார்.(59) எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ராமரால் தப்ப விடப்பட்டவர்களும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களுமான க்ஷத்திரியர்கள் (காலத்தின் போக்கில்) பல்கிப் பெருகி, பூமியில் வலிமைமிக்க ஏகாதிபதிகளாகினர்.(60) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மீண்டும் ராமர் {பரசுராமர்}, பிள்ளைகளைக் கூடத் தப்ப விடாமல் அவர்களைக் கொன்றார். உண்மையில், பூமியானது முற்றாபிறவி கொண்ட க்ஷத்திரிய பிள்ளைகளின் உடல்களால் மீண்டும் விரவிக் கிடந்தது.(61) ராமர் {பரசுராமர்}, க்ஷத்திரியப் பிள்ளைகள் பிறந்த உடனேயே அவர்களைக் கொன்றார். எனினும், சில க்ஷத்திரியப் பெண்டிர், (ராமரின் கோபத்திலிருந்து) தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் வென்றனர்.(62)

இருபத்தோரு {21} முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பலமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்}, ஒரு குதிரை வேள்வி நிறைவின்போது, கசியபரின் வேள்விக் கொடையாகப் பூமியை அளித்தார்.(63) ஓ! மன்னா, எஞ்சியிருக்கும் க்ஷத்திரியர்களைக் காக்க நினைத்த கசியபர், வேள்விக்கரண்டியுடன் கூடிய தன் கரங்களால் சுட்டிக்காட்டியபடி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(64) “ஓ! பெரும் தவசியே, தென்கடலின் கரைகளுக்குச் செல்வாயாக. ஓ! ராமா, (எது) என் ஆட்சிப்பகுதியாக இருக்கிறதோ, அதில் வசிப்பது உனக்குத் தகாது” என்றார்.(65) இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டதும், பெருங்கடலானது, தனது மறுகரையில் சூர்ப்பாரகம் என்றழைக்கப்படும் பகுதியை {நாட்டைத்} திடீரென உண்டாக்கியது.(66) கசியபரும், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியைக் கொடையாக ஏற்று, அதைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டுப் பெருங்காட்டுக்குள் நுழைந்தார்.(67)

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே, சூத்திரர்கள், வைசியர்கள் ஆகியோர், வேண்டுமென்றே பிராமணர்களின் மனைவியரோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கினர்.(68) பூமியில் அரசற்ற நிலை தோன்றும்போது, வலியோரால் வலிமையற்றவர்கள் ஒடுக்கப்பட்டு, எந்த மனிதனும் தன் உடைமைக்குத் தலைவனாக இல்லாத நிலையை அடைந்தான்.(69) அந்தக் குழப்பமான சூழ்நிலையின் விளைவால், பூமியானது அறம் நோற்கும் க்ஷத்திரியர்களால் முறையாகப் பாதுகாக்கப்படாமல், தீயோரால் ஒடுக்கப்பட்டு, விரைவில் மிகக் கீழான நிலையில் {பாதாளத்திற்குள்} மூழ்கியது.(70) அச்சத்தால் மூழ்கும் பூமியைக் கண்ட உயர் ஆன்மக் கசியபர், அவளைத் {பூமாதேவியைத்} தன் மடியில் தாங்கினார்; அந்தப் பெரும் முனிவர் பூமியைத் தன் மடியில் தாங்கியதிலிருந்தே அவள் உர்வி என்ற பெயரில் அறியப்படுகிறாள்.(71) அந்தப் பூமாதேவி, தன் பாதுகாப்புக்காகக் கசியபரிடம் ஒரு மன்னனை இரந்து கேட்டாள்[1].(72)(பிறகு, இவ்வுலகம் அராஜகமானதும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் தம்மிஷ்டப்படி மேற்குலத்தார் தாரங்களிடம் செல்லத் தொடங்கினார்கள். ஓ! பரதரேறே! பலமுள்ளவர்கள் பலம் குறைந்தவர்களை அடிக்கத் தொடங்கினார்கள். அக்காலம் பொருள்களால் பிரபுத்தன்மை எவனிடமும் நிலைத்திருக்கவில்லை. மூர்க்கர்களான சில பிராம்மணர்கள் தாம் பண்டிதரென்னும் அகங்காரமுள்ளவராய்க் கள்ளைக் குடிக்கத் தலைப்பட்டார்கள். பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைசையர்கள், சூத்திரர்கள் யாவரும் கெட்ட வழியிற் சென்று ஒருவரையொருவர் அடுத்துக் கொலைசெய்ய முயன்றார்கள். கெட்டவழியிற் சென்ற பிராம்மணர்கள் தம்தர்மத்தைவிட்டுப் பாஷண்டர்களானார்கள். எல்லோரும் திருட்டு, பொய் மாயைகளைச் செய்தார்கள். தமது ஜாதிதர்மங்களையும் ஆஸ்ரமதர்மங்களையும் ஸரிவரநடத்தி நல்வழிச் செல்லும் பிராம்மணர்களையும், வைசியர்களையும் தர்மஞ்செய்யும் சூத்திரர்களையும், கெட்ட நடையுள்ள சிலர் யாதொரு பயமுமின்றிக் கொலை செய்தார்கள். வேறு சிலர் யாகத்தையும் அத்தியயனத்தையும் செய்பவர்களையும், ஆஸ்ரமத்திலிருக்கும் தவஞ்செய்பவர்களையும், பசுக்கள், பாலர்கள், கிழவர்கள், ஸ்திரீகள் ஆகிய இவர்களையும் நாசஞ்செய்தார்கள். வேதமும், தர்மசாஸ்திரமும், ராஜநீதியும் அக்காலம் ஒளித்துப் போயின. கீழ்மேலான கெட்ட செய்கையால் பல துவிஜர்கள் பெரும்பாலும் விராத்தியர்களும், மிலேச்சர்களுமானார்கள். தர்மத்தைப் பாதுகாக்கும் க்ஷத்திரியர்களால் நீதிப்படி காக்கப்படாத பூமிதேவியும் அக்காலத்தில் துஷ்டமனிதர்களின் தீச்செயல்களால் பீடிக்கப்பட்டுப் பாதாளஞ் செல்லத் தொடங்கினாள். அப்படிப் பயந்து ஓடிப் பாதாளத்தில் முழுகக்கூடிய பூமியைக் கண்டு பெரிய மனுமுள்ள கஸ்யபர் தமது தொடையில் தாங்கித் தூக்கினார்)பூமாதேவி {கசியபரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் சிலர் என்னால் பெண்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஹைஹயர்களின் குலத்தில் பிறந்தவர்கள். ஓ! தவசியே, அவர்கள் என்னைப் பாதுகாக்கட்டும்.(73) ஓ! சக்திமிக்கவரே, புருவின் குலத்தில் விதுரதனின் மகன் என்றொருவன், ரிக்ஷவான் மலைகளில் கரடிகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான்.(74) சௌதாசனின் மகனான மற்றொருவன், அளவிலா சக்தி கொண்டவரும், எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவருமான பராசரரின் கருணையால் பாதுகாக்கப்பட்டு வருகிறான்.(75) அவன் மறுபிறப்பாள வகைகளிலொன்றில் பிறந்திருந்தாலும், ஒரு சூத்திரனைப் போல அந்த முனிவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருவதால் அவன் சர்வகர்மன் (அனைத்துப் பணிகளையும் செய்யும் பணியாள்) என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறான்.(76) பெரும் சக்தி கொண்ட சிபியின் மகன் கோபதி என்ற பெயரில் காட்டில் பசுக்களுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். ஓ! தவசியே, அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(77)

பெரும் வலிமை கொண்ட பிரதர்த்தனன் மகன், வத்சன் என்ற பெயரில் மாட்டுக்கொட்டிலில் கன்றுகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். அரச வகையைச் சேர்ந்த அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(78) திவிரதனின் பேரனும், ததிவாஹனனின் மகனுமான ஒருவன், தவசியான கௌதமரால் கங்கைக்கரையில் பாதுகாக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறான்.(79) அவனுடைய பெயர் பிருஹத்ரதன் என்பதாகும். பெரும் சக்தியாலும், எண்ணற்ற அருள் குணங்களாலும் அருளப்பட்டிருக்கும் அந்த அருள் நிறைந்த இளவரசன் கிருத்ரக்கூடம் என்ற மலையில் ஓநாய்களால்[2] பாதுகாக்கப்படுகிறான்.(80) மருத்த குலத்தைச் சேர்ந்த பல க்ஷத்திரியர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். சக்தியில் மருத்த தேவனுக்கே இணையான அவர்கள், பெருங்கடலால் வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.(81) இந்த க்ஷத்திரிய வகைப் பிள்ளைகள் பல்வேறு இடங்களில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள், கைவினைஞர்கள் மற்றும் பொற்கொல்லர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்னைப் பாதுகாத்தால், நான் அசைவில்லாமல் நிலைபெற்றிருப்பேன்.(82) அவர்களுடைய தந்தைமாரும், பாட்டன்மாரும் பேரன்மாரும் பேராற்றல் கொண்ட ராமரால் {பரசுராமரால்} என் பொருட்டுக் கொல்லப்பட்டனர். ஓ! பெரும் தவசியே {கசியபரே}, அவர்களது ஈமச் சடங்குகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது என் கடமையாகும்.(83) தற்போதைய ஆட்சியாளர்களால் நான் பாதுகாக்கப்பட விரும்பவில்லை. ஓ! தவசியே, நான் (முன்பு போலவே) நீடிக்க வேண்டிய ஏற்பாடுகளை விரைவாகச் செய்வீராக” என்றாள்.(84)வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, தவசியான கசியபர், அந்தத் தேவி {பூமாதேவி} குறிப்பிட்ட பெருஞ்சக்தி கொண்ட க்ஷத்திரியர்களைத் தேடி (அவளைப் பாதுகாப்பதற்கான) மன்னர்களாக முறையாக அவர்களை நிறுவினார்.(85) இப்போது வரை நீடித்திருக்கும் அந்த க்ஷத்திரிய குலங்களைச் சேர்ந்தோர், அந்த இளவரசர்களின் வாரிசுகளே ஆவர். ஓ! பாண்டுவின் மகனே, எவற்றை நீர் கேட்டீரோ, அவை பழங்காலத்தில் இவ்வாறே நடந்தன” என்றான் {கிருஷ்ணன்}.(86)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அறவோரில் முதன்மையான அந்த உயர் ஆன்ம யாதவ வீரன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடன் இவ்வாறு பேசிக் கொண்டே, திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டும் தெய்வீகச் சூரியனைப் போல அந்தத் தேரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான்”.(87)

பீஷ்மரின் மகிமை! – சாந்திபர்வம் பகுதி – 50-பீஷ்மரின் அருகாமையை அடைந்து அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட கிருஷ்ணன், யுதிஷ்டிரன் மற்றும் பிறர்; பீஷ்மரைப் புகழ்ந்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராமரின் {பரசுராமரின்} சாதனைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஆச்சரியத்தால் நிறைந்து, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “ஓ! விருஷ்ணி குலத்தோனே, கோபத்தில் க்ஷத்திரயர்களிடம் இருந்து பூமியை விடுவித்த உயர் ஆன்ம ராமரின் {பரசுராமரின்} ஆற்றல் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானது.(2) க்ஷத்திரிய குலக்கொழுந்துகள், ராமர் {பரசுராமர்} மீது கொண்ட அச்சத்தால், பசுக்கள், பெருங்கடல், சிறுத்தை புலிகள் கரடிகள், குரங்குகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டனர் (மறைக்கப்பட்டு வளர்த்து வரப்பட்டனர்).(3) ஒரு பிராமணரால் அறச்சாதனை நிறைவேறும்போது, இவ்வுலகில் வசித்த மனிதர்கள் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவர்களாவர்” என்றான்.(4) இந்த உரையாடல் முடிந்த போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அந்தச் சிறப்புமிக்க மனிதர்கள், பலமிக்கக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(5)

பிறகு அவர்கள், கதிர்களால் மறைக்கப்பட்ட மாலை சூரியனின் காந்திக்கு ஒப்பாகக் கணைப்படுக்கையில் நீண்டு கிடக்கும் பீஷ்மரைக் கண்டனர்.(6) நூறு வேள்விகளைச் செய்த சொர்க்கத்தின் தேவனை {இந்திரனைப்} போல அந்தக் குருவீரர் தவசிகள் பலரால் சூழப்பட்டிருந்தார். ஓகவதி ஆற்றின் கரையில் அமைந்திருந்ததான அவர் {பீஷ்மர்} கிடந்த இடம் மிகப் புனிதமானதாக இருந்தது.(7) தொலைவிலேயே அவரைக் கண்ட கிருஷ்ணன், தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நான்கு பாண்டவர்கள் மற்றும் சரத்வான் {கிருபர்} தலைமையிலான பிறர் ஆகியோர் தங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி, குழப்பமான தங்கள் மனங்களை ஒன்றுதிரட்டி, தங்கள் புலன்களை அனைத்தையும் குவித்துக் கொண்டு அந்தப் பெரும் முனிவர்களை அணுகினர்.(8,9) கோவிந்தன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் பிறர், வியாசரின் தலைமையிலான அந்த முனிவர்களில் முதன்மையானோரை வணங்கிவிட்டு, கங்கையின் மைந்தரை அணுகினர்.(10)

மனிதர்களில் முதன்மையானோரான அந்த யது மற்றும் குரு இளவரசர்கள், பெரும் தவத்தகுதி கொண்ட கங்கையின் மைந்தரைக் கண்டு, அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(11) அணைந்து போகும் நெருப்பாகத் தெரிந்த பீஷ்மரைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, உற்சாகமற்ற இதயத்துடன் பின்வருமாறு அவரிடம் பேசினான்.(12) கேசவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “உமது உள்ளுணர்வுகள் முன்பு போல இப்போது தெளிவாக இருக்கின்றனவா? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, உமது புத்தி மயங்காதிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.(13) கணைகளால் பீடிக்கப்பட்ட காயங்களில் இருந்து எழும் வலி உம்மைத் துன்புறுத்தவில்லை என நான் நம்புகிறேன். மனத்துயரால் உடல் பலவீனமடைகிறது.(14) ஓ! பலமிக்க வீரரே, அறவோரான உமது தந்தை சந்தனு உமக்களித்த வரத்தின் விளைவால், மரணமானது உமது விருப்பதைச் சார்ந்தே இருக்கிறது. நீர் அடைந்திருக்கும் இந்த வரத்தின் விளைவால் உண்டாகும் தகுதியை நான் அடையவில்லை.(15)

(உள்செலுத்தப்படும்) மிக நுண்ணிய ஊசி உடலுக்கு வலியை உண்டாக்கும். ஓ! மன்னா {பீஷ்மரே}, அவ்வாறிருக்கையில், நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டிருக்கும் உம்மிடம்என்ன கேட்க முடியும்?(16) வலி உம்மைப் பீடித்திருக்கிறது எனச் சொல்லமுடியாது என்பது நிச்சயம். ஓ! பாரதரே {பீஷ்மரே}, உயிரினங்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றைக் குறித்துத் தேவர்களுக்கே போதிக்க நீர் தகுந்தவர்.(17) பெரும் ஞானம் கொண்ட உமக்கு, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவை குறித்த அனைத்தும் உமக்கு நன்றாகத் தெரியும்.(18) ஓ! பெரும் ஞானியே, அறம் மற்றும் கடை ஆகியவற்றின் பெருங்கடலான நீ, படைக்கப்பட்ட உயிரினங்களின் அழிவு, அறவோருக்கான வெகுமதி ஆகியவற்றையும் நன்கறிவீர்.(19) நலமிக்க அங்கங்கள் மற்றும் முற்றான உடல் நலத்துடனும், பெருகும் அரசின் இன்பத்தில் நீர் வாழ்ந்த போது, பெண் தோழிகளால் சூழப்பட்டிருந்தாலும், பெண் உறவை நீர் மறுத்ததை நான் கண்டேன்.(20)

பெரும் சக்தியும், அறத்தில் உறுதியான அர்ப்பணிப்பும், வீரமும், அறத்தையே தமது தொடர்செயலாகக் கொண்டவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மரைத் தவிர, கணைகளின் படுக்கையில் கிடக்கும் மரணத் தருவாயிலும், தனது தவசக்தியின் மூலமாக மரணத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்கொண்ட வேறு எந்த மனிதனையும் மூவுலகிலும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(21,22) உண்மை, தவம், கொடை, வேள்விகள், ஆயுத அறிவியல், வேதங்கள், பாதுகாப்பு வேண்டுவோரைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இவ்வளவு அர்ப்பணிப்புடனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமலும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் ஈடுபாட்டுடனும் கூடிய உம்மைப்போன்ற பெரிய தேர்வீரர் எவரையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(23,24) தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களை ஒரே தேரில் சென்று அடக்கக்கூடியவர் நீர் என்பதில் ஐயமில்லை.(25)

ஓ! வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே, உம்மை ஒன்பதாவது வசு என்றே பிராமணர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எனினும், உமது நற்பண்புகளால் அவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்கும் நீர், வாசவனுக்கே இணையானவராவீர்.(26) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! உயிரினங்களில் முதன்மையானவரே, உமது ஆற்றலுக்காகத் தேவர்களாலும் கூடக் கொண்டாடப்படுபவர் நீர் என்பதை நான் அறிவேன்.(27) ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் உள்ள மனிதர்களுக்கு மத்தியில், உம்மைப் போன்ற இத்தகு பண்புகளைக் கொண்ட வேறு எவரையும் நாங்கள் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(28) ஓ! அரசவகையைச் சேர்ந்தவரே ஒவ்வொரு பண்பையும் பொறுத்தவரையில் நீர் தேவர்களையும் விஞ்சி நிற்கிறீர். உமது தவச் சக்தியின் மூலம் உம்மால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை உண்டாக்க முடியும். அவ்வாறிருக்கையில், உமது முதன்மையான நற்பண்புகளால் அருள் உலகங்கள் பலவற்றை நீர் அடைந்திருப்பதைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(29) தமது உறவினர்களைக் கொன்றதால் உண்டான கவலையில் எரிந்து கொண்டிருக்கும் பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரத்தை இப்போது அகற்றுவீராக.(30)

நால்வகையினரைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் கடமைகள் அனைத்தையும், நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்தும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(31) ஓ! பாரதரே நால்வகை அறிவுக்கிளைகளில், நான்கு ஹோத்திரங்களில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும், யோகம் மற்றும் சாங்கிய தத்துவங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகள்,(32) ஓ! பாரதரே {பீஷ்மரே}, ஓ! கங்கையின் மைந்தரே, நான்கு வகையினரின் கடமைகளையும், அறிவிக்கப்பட்டிருக்கும் அவர்களது நடைமுறைகளுக்குப் பொருந்தாத கடமைகளையும், அதனதன் விளக்கங்களோடு அறிந்தவர் நீர்.(33) நால் வகையினரின் கலப்பில் உதித்தவர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளையும், குறிப்பிட்ட நாடுகள், குலங்கள், குடும்பங்கள் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட, வேதங்களாலும், ஞானிகளாலும் அறிவிக்கப்பட்ட கடமைகள் யாவற்றையும் நன்கறிந்தவர் நீர்.(34) வரலாறுகளையும், புராணங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர் நீர். கடமை மற்றும் நடைமுறைகள் குறித்த சாத்திரங்கள் அனைத்தும் உமது மனத்திலேயே வசிக்கின்றன.(35) ஓ! மனிதர்களில் காளையே, உலகில் கற்கப்படும் அறிவைப் பொறுத்தவரையில் எழும் ஐயங்களை அகற்றக் கூடியவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை.(36) ஓ! மனிதர்களின் இளவரசரே {பீஷ்மரே}, பாண்டு மகன் {யுதிஷ்டிரன்} உணரும் துயரை, உமது நுண்ணறிவின் உதவியைக் கொண்டு விரட்டுவீர். பெரியவையும், பலதரப்பட்டவையுமான இத்தகு அறிவைக் கொண்டோர், திகைப்படைந்த மனங்களைக் கொண்ட மனிதர்களைத் தேற்றுவதற்காகவே வாழ்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”[1].(37)

மன்னரின் மயக்கத்தை விலக்குவீராக! – சாந்திபர்வம் பகுதி – 51-கிருஷ்ணனைத் துதித்த பீஷ்மர்; பீஷ்மரின் துதிகளை ஏற்று, அவரைப் புகழ்ந்து, மன்னன் யுதிஷ்டிரனின் அறிவு மயக்கத்தை விலக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், தன் சிரத்தை சற்றே உயர்த்தி, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தெய்வீகக் கிருஷ்ணா, உனக்கு வணக்கம். உலகங்கள் அனைத்தின் தொடக்கமும், முடிவும் நீயே. படைப்பாளன் நீயே, அழிப்பவனும் நீயே. ஓ! ரிஷிகேசா, எவராலும் வெல்லப்பட இயலாதவன் நீயே.(2) இந்த அண்டம் உன் கைத்திறனே. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்டம் எழுந்த பொருளும் நீயே. உன்னை வணங்குகிறேன். படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் முடிவு நீயே. ஐம்பூதங்களையும் விஞ்சியவன் நீயே.(3) மூவுலகங்களே ஆனவனும், மூவுலகங்களுக்கும் மேம்பட்டவனுமான உன்னை நான் வணங்குகிறேன். ஓ! யோகினிகளின் தலைவனே, அனைத்திற்கும் புகலிடமாக இருக்கும் உனக்கு என் வணக்கம்.(4) ஓ! உயிரினங்களில் முதன்மையானவனே, என்னைக் குறித்து நீ சொன்ன வார்த்தைகள், மூவுலகங்களில் வெளிப்படும் உன் தெய்வீகப் பண்புகளைக் காண இயன்றவனாக என்னை ஆக்கியிருக்கின்றன. ஓ! கோவிந்தா, (அந்தக்கருணையின் விளைவால்), நான் உன் அழிவற்ற வடிவத்தைக் காண்கிறேன்.(5,6)

அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே. உன் தலை ஆகாயத்தில் இருக்கிறது, உன் பாதங்கள் பூமியில் இருக்கின்றன.(7) திசைப்புள்ளிகள் உன்னிரு கரங்களாக இருக்கின்றன, சூரியன் உன் கண்களாகவும், சக்ரன் {சுக்ரன்} உன் ஆற்றலாகவும் இருக்கிறான். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, காயாம்பூவின் வண்ணத்திற்கு ஒப்பான மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்திய உன் மேனி, மின்னலின் கீற்றுகளால் சக்தியூட்டப்பட்ட ஒரு மேகத்தைப் போல எங்களுக்குத் தெரிகிறது. ஓ! தேவர்களில் சிறந்தவனே, ஓ! தாமரைக் கண்ணனே, உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், உனது பாதுகாப்பை நாடுபவனும், அருள்நிறைந்த முடிவை அடைய விரும்புபவனும், எளியவனுமான எனக்கு நன்மையை நினைப்பாயாக” என்றார் {பீஷ்மர்}.(8,9)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மர்}, “ஓ! மனிதர்களில் காளையே, ஓ!இளவரசரே {பீஷ்மரே}, நீர் என்னிடம் கொண்ட அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாக இருப்பதால், நான் என் தெய்வீக வடிவை உமக்கு வெளிப்படுத்தினேன்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, ஓ! பாரதரே, என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொள்ளாதவனிடமோ, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா இல்லாதவனிடமோ நான் என்னை வெளிப்படுத்துவதில்லை.(11) நீர் என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவராகவும், எப்போதும் அறம் நோற்பவராகவும் இருக்கிறீர். தூய இதயம் கொண்ட நீர் எப்போதும் தற்கட்டுப்பாடு கொண்டவராகவும், தவங்களையும், தானங்களையும் நோற்பவராகவும் இருக்கிறீர்.(12) ஓ! பீஷ்மரே, உமது சொந்த தவங்களின் மூலமே நீர் என்னைக் காணத் தகுந்தவரானீர். ஓ! மன்னா, திரும்பி வராத {மறுபிறவியை ஏற்படுத்தாத} உலகங்கள் உமக்காகக் காத்திருக்கின்றன.(13) ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, நீர் உயிர் வாழ இன்னும் ஐம்பத்தாறு {56} நாட்கள்[1] இருக்கின்றன.(14) நெருப்பின் வடிவிலான தேவர்கள் மற்றும் வசுக்கள் அனைவரும், சூரியன் வட பாதையில் நுழையும் காலம் வரை {கண்களுக்குப்} புலனாகாத நிலையில் உமக்காகக் காத்திருக்கின்றனர்.(15)ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, அண்டத்தின் காலத்திற்குக்கட்டுப்பட்டு, சூரியன் வடபாதைக்குத் திரும்பும்போது, இந்தப் பூமிக்கு எப்போதும் திரும்பிவராத அறிவுடையோரின் பகுதிகளுக்கு {ஞானிகளின் உலகங்களுக்கு} நீர் செல்வீர்.(16) ஓ! பீஷ்மரே, நீர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, இங்குள்ள ஞானங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இதன்காரணமாகவே, இந்த மனிதர்கள் யாவரும் கடமை மற்றும் அறநெறிகள் குறித்த உமது உரையைக் கேட்க உம்மை அணுகியிருக்கின்றனர்.(17) உண்மையில் உறுதியுடன் இருப்பவரும், தன் உறவினர்களைக் கொன்றதன் காரணமாக அறிவு மறைக்கப்பட்டவருமான யுதிஷ்டிரரிடம், அறம், பொருள் மற்றும் யோகம் குறித்த உண்மையான வார்த்தைகளைப் பேசி, அதன் காரணமாக அவரது துயரை விலக்குவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(18)

பீஷ்மருக்கு வரமளித்த கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 52-கிருஷ்ணனை மீண்டும் துதித்து, அவன் கேட்டதைச் செய்ய இயலாத தமது பலவீனத்தைச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரின் களைப்பகற்ற அவருக்கு வரமளித்த கிருஷ்ணன்; சூரியன் மறைந்ததும் பீஷ்மரை விட்டகன்று தங்கள் மாளிகைகளுக்கு வந்த பாண்டவர்களும் கிருஷ்ணனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அறம் மற்றும் பொருள் நிறைந்த கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மைந்தர் பீஷ்மர் பின்வரும் வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(1)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவா, ஓ! வலிய கரத்தோனே, ஓ! சிவா, ஓ! நாராயணா, ஓ! மங்கா மகிமை கொண்டோனே, நீ பேசும் வார்த்தைகளைக் கேட்டு நான் இன்பத்தில் நிறைந்திருக்கிறேன்.(2) ஓ! பேச்சின் தலைவனே, உன் முன்னிலையில், அதிலும் குறிப்பாகச் சொல்லத்தக்க அனைத்தும் உன் பேச்சிலேயே அடங்கியிருக்கும்போது, நான் என்ன {போதனைகளை} வார்த்தைகளைச் சொல்ல முடியும்?[1](3) ஓ! தேவா, இம்மையிலும், மறுமையிலும் என்ன செய்ய வேண்டுமோ, என்ன செய்யப்படுகிறதோ அஃது உன் நுண்ணறிவின் வடிவில் இருந்தே எழுகிறது.(4) தேவர்களின் தலைவனுக்கு முன்னிலையில் சொர்க்கம் குறித்து எந்த மனிதன் பேசத்தகுந்தவனோ, அவனே உன் எதிரில் அறநெறி, இன்பம், பொருள் மற்றும் முக்தி குறித்துப் பேசத் தகுந்தவனாவான்.(5) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என் மனம் கணை தைத்த காயங்களால் உண்டான வலியால் மிகவும் கலக்கமடைந்திருக்கிறது. என் உறுப்புகள் பலவீனமாக இருக்கின்றன. என் புத்தி தெளிவாக இல்லை.(6)நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான இந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் எனக்கு எதையும் சொல்லும் சக்தியில்லை.(7) என் பலம் என்னைக் கைவிடுகிறது. உன் உயிர்மூச்சு என்னைவிட்டகல விரைகிறது. என் உடலின் முக்கிய அங்கங்கள் எரிகின்றன. என் புத்தி மயக்கமடைகிறது.(8) பலவீனத்தால் என் பேச்சுத் தெளிவற்றதாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு பேசத் துணிவேன்?(9) ஓ! வலிய கரத்தோனே, நான் எதையும் சொல்ல மாட்டேன். (என் விருப்பமின்மைக்காக) என்னை மன்னிப்பாயாக. பேச்சின் தலைவனே (பிருஹஸ்பதியே) உன் எதிரில் பேசத் தயங்குவான்.(10) என்னால் இப்போது பூமியிலிருந்து திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! மதுசூதனா, உன் சக்தியால் மட்டுமே நான் உயிரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.(11) எனவே, விதிகள் அனைத்தையும் விதித்தவன் நீயே என்பதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் நன்மைக்காக நீயே பேசுவாயாக.(12) ஓ! கிருஷ்ணா, அண்டத்தின் அழிவில்லா படைப்பாளனான நீ இருக்கும்போது, ஆசானின் முன்பு பேசும் சீடனைப் போல எவனால் பேச முடியும்” என்று கேட்டார் {பீஷ்மர்}”.(13)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “குரு குலத்தில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், பெரும் ஆன்மா கொண்டவரும், பெரும் பொறுமையும், அனைத்தைக் குறித்த அறிவும் கொண்டவருமான உம்மால் உமக்குத் தகுந்த வார்த்தைகளே பேசப்பட்டன.(14) ஓ! பீஷ்மரே, கணைக் காயங்களால் உண்டான வலி குறித்து நீர் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, கருணையால் நான் உமக்கு அளிக்கும் இந்த வரத்தைப் பெற்றுக் கொள்வீராக.(15) ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! மங்கா மகிமை கொண்டவரே, சோர்வு, மயக்கம், எரிச்சல், வலி, பசி, தாகம் ஆகியன உமக்கு உண்டாகாதிருக்கட்டும்.(16) ஓ! பாவமற்றவரே, உள்ளுணர்வுகளும், நினைவும் தெளிவு அடையட்டும்[2]. உமது புத்தி உம்மைக் கைவிடாதிருக்கட்டும்.(17) ஓ! பீஷ்மரே, மேகங்களில் இருந்து வெளிப்படும் நிலவைப் போல, உமது மனம் ஆசை {ரஜோகுணம்}, இருள் {தமோகுணம்} ஆகிய பண்புகளில் இருந்து விடுபட்டு, எப்போதும் நற்பண்புடன் {சத்வகுணத்துடன்} இருக்கட்டும்.(18) கடமை, அறநெறி, பொருள் என நீர் நினைப்பனவற்றுக்குத் தொடர்புடைய அனைத்திலும் உமது புத்தி ஊடுருவட்டும்.(19) ஓ! மன்னர்களில் புலியே, ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவரே, தெய்வீகப் பார்வையை அடைந்து, படைப்பின் நால்வகைப் பொருட்களைக் காண்பதில் வெல்வீராக.(20) ஓ! பீஷ்மரே அறிவுக் கண் கொண்ட நீர், தெளிந்த நீரில் உள்ள மீன்களைப் போல, நீர் நினைக்க முயலும் படைப்பின் பொருட்கள் அனைத்தையும் காண்பீராக” என்றான்{கிருஷ்ணன்}”.(21)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது வியாசருடன் கூடிய பெரும் முனிவர்கள், ரிக், யஜுர், சாமங்களின் பாடல்களைக் கொண்டு கிருஷ்ணனைத் துதித்தனர்.(22) கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} ஆகியோரோடு அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இருந்த இடத்தில் அனைத்து பருவகாலத்தையும் சேர்ந்த மலர்களின் தெய்வீகமாரி பொழிந்தது.(23) ஆகாயத்தில் அனைத்துவகைத் தெய்வீக இசைக்கருவிகளும் முழங்கின, அப்சரஸ் இனங்கள் பாடத்தொடங்கின. எந்தத் தீமையோ, தீய வகைச் சகுனமோ அங்கே காணப்படவில்லை.(24) அனைத்து வகை நறுமணத்தையும் தாங்கியபடி மங்கலமான, இனிமையான தூய தென்றல் அங்கே வீசத்தொடங்கியது. திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவையும், அமைதியையும் அடைந்தன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அமைதியாகத் திரியத் தொடங்கின.(25)

விரைவில், பெருங்காட்டின் விளிம்பில் உள்ள நெருப்பைப் போல ஆயிரங்கதிர்களைக் கொண்ட தெய்வீக சூரியன் மேற்கில் இறங்குவது காணப்பட்டது.(26) அப்போது பெரும் முனிவர்கள் எழுந்து நின்று, ஜனார்த்தனன், பீஷ்மர் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனை வணங்கினர்.(27) அதன் பேரில், பாண்டுவின் மகன்கள், சாத்யகி, சஞ்சயன், சரத்வானின் மகன் கிருபர் ஆகியோருடன் கூடிய கேசவன், பதிலுக்கு மரியாதையுடன் அத்துறவிகளை வணங்கினான்.(28) அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க அந்தத் தவசியர், கேசவனாலும், பிறராலும் இவ்வாறு வணங்கப்பட்டு, “நாளை திரும்புகிறோம்” என்று சொல்லிவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.(29) அதன்பிறகு, பீஷ்மரை வணங்கி, அவரை வலம் வந்த கேசவனும், பாண்டவர்களும், தங்கள் அழகிய தேர்களில் ஏறினர்.(30)

தங்கக் கூபரங்களால் அலங்கரிக்கப்பட்ட வேறு பல தேர்கள், மலைகளைப் போலத் தெரிந்த மதங்கொண்ட யானைகள், கருடர்களைப் போன்ற வேகமான குதிரைகள், விற்கள் மற்றும் ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் அந்த வீரர்கள் சென்றனர்.(31) பெரும் வேகத்தில் நகர்ந்த அந்தப் படை, இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, ஒன்று அந்த இளவரசர்களின் முன்பும், மற்றொன்று அவர்களுக்குப் பின்பும் சென்றன. ஓரிடத்தில் குறுக்கே நிற்கும் ரிக்ஷவான் மலைகளால் பிரிக்கப்பட்ட பெரும் ஆறான நர்மதையின் இரண்டு ஓடைகளைக்கு ஒப்பாக அக்காட்சி இருந்தது.(32) அந்தப் பெரும்படையைத் திளைக்கச் செய்யும் வகையில், சூரியனின் வெப்பத்தால் சாறு உறிஞ்சிப்பட்ட மூலிகைகளைத் தன் சக்தியால் ஈரப்பதமடையச் செய்தபடியே அவர்களுக்கு முன்பு சந்திரமாஸ் {சந்திரன்} எழுந்தான்.(33) அப்போது, அந்த யதுகுலக் காளையும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகன்களும், இந்திரனின் நகரத்திற்கு {அமராவதிக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய (குரு) நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்து, தங்கள் குகைகளை நாடும் களைத்த சிங்கங்களைப் போலத் தங்கள் தங்கள் மாளிகைகளுக்குச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

துயிலெழுந்த கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 53-கிருஷ்ணனின் திருப்பள்ளியெழுச்சி; அதிகாலையில் விழித்தெழுந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் சாத்யகியை அனுப்பிய கிருஷ்ணன்; கிருஷ்ணன் பீஷ்மரிடம் செல்லக் காத்திருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; பாதுகாவலர்கள் வேண்டாம் என அர்ஜுனனிடம் மறுத்த யுதிஷ்டிரன்; பீஷ்மரை அடைந்து முனிவர்களை வணங்கிய கிருஷ்ணன், சாத்யகி மற்றும் பாண்டவர்கள் ஆகியோர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் படுக்கைக்குச் சென்று மகிழ்ச்சியாக உறங்கினான்.(1) பொழுது விடிய அரை யாமம் {ஜாமம்} இருக்கும்போது, அவன் ஆழ்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அவன் {கிருஷ்ணன்}, தன் புலன்கள் அனைத்தையும் நிலைநிறுத்தி, அழிவற்ற பிரம்மத்தைத் தியானித்தான்.(2) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், பாடல்கள் மற்றும் புராணங்களை அறிந்தவர்களுமான ஒரு குழுவினர், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், அண்டத்தின் படைப்பாளனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} புகழைச் சொல்லத் தொடங்கினர்.(3) வேறு சிலர் கைகளைத் தட்டிக் கொண்டு இனிய பாடல்களைப் பாடத் தொடங்கினர். வாய்ப்பாட்டுக்காரர்களும் பாடத் தொடங்கினர். சங்குகளும், பேரிகைகளும் ஆயிரக்கணக்கில் முழக்கி இசைக்கப்பட்டன.(4) வீணைகள், பணவங்கள், மூங்கில் புல்லாங்குழல்கள் ஆகியவற்றின் இனிய ஒலியும் கேட்கப்பட்டது. இவற்றின் விளைவால் கிருஷ்ணனின் அகன்ற அறையானது, இசையால் சிரிப்பது போலத் தெரிந்தது.(5)

மன்னன் யுதிஷ்டிரனின் அரண்மனையிலும், மங்கல வாழ்த்துகளைச் சொல்லும் இனிய குரல்களும், பாடல்கள், மற்றும் இசைக்கருவிகளின் ஒலிகளும் கேட்கப்பட்டன.(6) பிறகு தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தான். மங்கா மகிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் தன் கரங்களைக் கூப்பி அமைதியாகத் தன் இரகசிய மந்திரங்களைச் சொல்லி, ஒரு நெருப்பை மூட்டி, அதில் தெளிந்த நெய்க்காணிக்கைகளை ஊற்றினான்.(7) நான்கு வேதங்களையும் முழுமையாக அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு ஓராயிரம் பசுக்களைக் கொடையளித்து, அவர்களைத் தன்னை வாழ்த்தச் செய்தான்.(8) அடுத்தாகக் கிருஷ்ணன், பல்வேறு வகை மங்கலப் பொருட்களைத் தீண்டி, ஒரு தெளிவான கண்ணாடியில் தன்னையே கண்ட பிறகு, சாத்யகியிடம்,(9) “ஓ! சிநியின் வழித்தோன்றலே, யுதிஷ்டிரரின் வசிப்பிடத்திற்குச் சென்று, பெருஞ்சக்தி கொண்ட அம்மன்னர் பீஷ்மரைச் சந்திப்பதற்கு உடுத்திவிட்டாரா என்பதை உறுதி செய்வாயாக” என்றான்.(10)

கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளின் பேரில் பாண்டுவின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்ற சாத்யகி, அவனிடம்,(11) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஜனார்த்தனர் {கிருஷ்ணர்}, கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காணச் செல்கிறார் என்பதால், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த வாசுதேவருடைய முதன்மையான தேர் ஆயத்தமாக இருக்கிறது. (12) ஓ !பெரும் காந்தி கொண்ட அறமன்னா {தர்மராஜா}, அவர் உமக்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பின்வருமாறு பதிலளித்தான்.(13)

யுதிஷ்டிரன், “ஓ! ஒப்பற்ற காந்தி கொண்ட பல்குனா {அர்ஜுனா}, என் முதன்மையான தேர்கள் ஆயத்தமாகட்டும். நாம் (இன்று) படைவீரர்களின் துணையில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(14) அறவோரில் முதன்மையான பீஷ்மர் எரிச்சலடையக்கூடாது. எனவே, ஓ! தனஞ்சயா, இன்று பாதுகாவலர்கள் வர வேண்டாம்.(15) இந்த நாள் முதல் பெரும் புதிர்களாலான பொருள்களைக் குறித்துக் கங்கையின் மைந்தர் பேசப்போகிறார். எனவே, ஓ! குந்தியின் மகனே, வேறு கூட்டம் (பீஷ்மரின் முன்னிலையில்) அங்கிருப்பதை நான் விரும்பவில்லை” என்றான்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மனிதர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, (வெளியே சென்று, திரும்பி வந்து) சிறந்த தேர்களில் சேணம் பூட்டப்பட்டத்தைத் தெரிவித்தான்.(17) ஐம்பூதங்களுக்கு ஒப்பான மன்னன் யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகிய ஐவரும், கிருஷ்ணனின் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றனர்.(18) உயர் ஆன்ம பாண்டவர்கள் வந்து கொண்டிருந்தபோது, சிநியின் பேரனுடனும் {சாத்யகியுடனும்}, பெரும் நுண்ணறிவுடனும் கூடிய கிருஷ்ணன் தன் தேரில் ஏறினான்.(19) தங்கள் தேர்களில் இருந்து ஒருவரையொருவர் வணங்கி, இரவு மகிழ்ச்சியாகக் கடந்ததா என்பதை விசாரித்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்ட முதன்மையான தேர்களில் நிற்காமல் சென்றனர்.(20)

கிருஷ்ணனின் குதிரைகளான வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம் மற்றும் சுக்ரீவம் ஆகியன தாருகனால் தூண்டப்பட்டன.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவனால் தூண்டப்பட்ட விலங்குகள், தங்கள் குளம்புகளால் பூமியைப் பறித்துக் கொண்டு சென்றன.(22) பெரும் பலமும், பெரும் வேகமும் கொண்டு, வானத்தையே விழுங்கிவிடுவன போல அவை வேகமாகச் சென்றன. குருவின் புனிதக் களத்தின் ஊடாகச் சென்ற அந்த இளவரசர்கள்,(23) தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிரம்மனைப் போலப் பலமிக்கப் பீஷ்மர், பெருமுனிவர்கள் சூழ தமது கணைப்படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(24)

பிறகு, தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிய கோவிந்தன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரன், பீமன், காண்டீவதாரி {அர்ஜுனன்}, இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, சாத்யகி ஆகியோர், தங்கள் வலக் கரங்களை உயர்த்தி முனிவர்களை வணங்கினர்[1].(25) அவர்களால் சூழப்பட்டு, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலவைப் போல இருந்த மன்னன் யுதிஷ்டிரன், பிரம்மனை நோக்கிச் செல்லும் வாசவனைப் {இந்திரனைப்} போலக் கங்கையின் மைந்தரை நோக்கிச் சென்றான்.(26) அச்சத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கும் சூரியனைப் போலக் கணைப் படுக்கையில் கிடக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரரின் மேல் மருட்சியுடன் தன் கண்களைச் செலுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

அறம் போதிப்பீராக! – சாந்திபர்வம் பகுதி – 54- பீஷ்மரிடம் அறம் வினவும்படி யுதிஷ்டிரன் மற்றும் பிறரிடம் கேட்டுக் கொண்ட நாரதர்; கிருஷ்ணனே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மன்னர்களுக்கு அறம்போதிக்கப் பீஷ்மரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்..

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பெரும் தவசியே {வைசம்பாயனரே}, அற ஆன்மாவும், பெரும் சக்திகொண்டவரும், உண்மையை உறுதியுடன் பின்பற்றுபவரும், ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரும், மங்காமகிமை கொண்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் மைந்தரும், தேவவிரதன், அல்லது பீஷ்மர் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த மனிதர்களில் புலி, தம்மைச் சுற்றி பாண்டு மகன்கள் அமர்ந்திருக்க, வீரர்களின் படுக்கையில் கிடந்தபோது, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு நேர்ந்த அந்த வீரர்களின் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1-3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்களின் தலைவரான பீஷ்மர், தமது கணைப்படுக்கையில் கிடந்தபோது, நாரதர் தலைமையிலான முனிவர்கள் மற்றும் சித்தர்கள் பலரும் அந்த இடத்திற்கு வந்தனர்.(4) (போரில் திரண்டு) கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான மன்னர்கள், திருதராஷ்டிரன், கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோரும் அங்கே வந்தனர்.(5) ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலத் தெரிந்த பாரதர்களின் பாட்டனை {பீஷ்மரை} அணுகிய அந்த உயர் ஆன்ம மனிதர்கள், அவருக்காகப் புலம்பல்களின் ஈடுபட்டனர்.(6) அப்போது தேவ பண்புகளைக் கொண்ட நாரதர், சிறிது நேரம் சிந்தித்து, பாண்டவர்கள் அனைவரிடமும், கொல்லப்படாமல் எஞ்சியிருந்த மன்னர்களிடமும்,(7) “மறையும் நேரத்திலான சூரியனைப் போலக் கங்கையின் மைந்தர் மறையப் போவதால், நீங்கள் பீஷ்மரிடம் (அறம் மற்றும் அறநெறி தொடர்பான காரியங்களில்) கேள்வி கேட்பதற்கான நேரம் வந்துவிட்டதென நான் நினைக்கிறேன்.(8) அவர் {பீஷ்மர்} தன் உயிர் மூச்சை விடப்போகிறார். எனவே, நீங்கள் அனைவரும், உங்களிடம் உரையாடும்படி அவரிடம் வேண்டுங்கள். நால்வகைகளின் பல்வேறு கடமைகள் அனைத்தையும் அவர் அறிந்தவராவார்.(9) வயதால் முதிர்ந்த அவர், தமது உடலைக் கைவிட்டு உயர்ந்த அருள் உலகங்களை அடையப் போகிறார். எனவே, உங்கள் மனங்களில் இருக்கும் ஐயங்கள் தெளிவடையத் தாமதமில்லாமல் அவரை வேண்டுவீராக” என்றார்.(10)

நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த இளவரசர்கள், பீஷ்மரை அணுகியும், அவரிடம் எதையும் கேட்க முடியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(11) அப்போது பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்}, “பாட்டனிடம் {பீஷ்மரிடம்} கேள்வி கேட்க தேவகியின் மகனை {கிருஷ்ணனைத்} தவிர வேறு எவனும் கிடையாது.(12) எனவே, ஓ! யது குலத்தில் முதன்மையானவனே, ஓ! மதுசூதனா, நீயே முதலில் கேட்பாயாக. ஓ! ஐயா, எங்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவனும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனும் ஆவாய்” என்றான்.(13) மங்கா மகிமை கொண்டவனும், சிறப்புமிக்கவனுமான கேசவன், பாண்டு மகனால் இவ்வாறு சொல்லப்பட்டு, வெல்லப்பட முடியாத பீஷ்மரை அணுகி, அவரிடம் பின்வருமாறு பேசினான்.(14)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, இரவை மகிழ்ச்சியாகக் கழித்தீரா? உமது புத்தி மயங்காதிருக்கிறதா? ஓ! பாவமற்றவரே, உள்ளொளியால் உமது அறிவு உம்மில் ஒளிவிடுகிறதா? உமது இதயம் இனியும் வலியை உணராது என்றும், உமது மனம் கலங்காது என்றும் நான் நம்புகிறேன்” என்றான்.(17)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே, எரிச்சல், திகைப்பு, களைப்பு, தளர்ச்சி, நோய் மற்றும் வலி ஆகிய அனைத்தும் ஒரே நாளில் உன் அருளால் என்னை விட்டு அகன்றுவிட்டன.(18) ஓ! ஒப்பற்ற காந்தியைக் கொண்டவனே, கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகிய அனைத்தையும் உள்ளங்கை {நெல்லிக்} கனியைப் போலத் தெளிவாகக் காண்கிறேன்.(19) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, வேதங்களில் அறிவிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும், வேதாந்தங்களில் விதிக்கப்பட்டிருப்பவை அனைத்தையும், நீ எனக்கு அருளிய வரத்தின் விளைவால் நான் தெளிவாகக் காண்கிறேன்.(20) கல்விமான்கள் மற்றும் அறவோர் அறிவித்திருக்கும் கடமைகள் என் நினைவில் வசிக்கின்றன. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட நாடுகள், குறிப்பிட்ட இனங்கள் மற்றும் குடும்பங்களில் நிலவும் கடமைகள் மற்றும் நடைமுறைகளையும் நான் அறிவேன்.(21) நால்வகை வாழ்வுமுறைகள் தொடர்பான அனைத்தும் என் நினைவுக்குத் திரும்பிவிட்டன. ஓ! கேசவா, ஆட்சித்திறம் தொடர்பான கடமைகளையும் நான் அறிவேன்.(22) ஓ! ஜனார்த்தனா, எந்தெந்த நேரங்களில் என்னென்ன சொல்லப்பட வேண்டும் என்பதை நான் சொல்வேன். உன் அருளால், மங்கலமான புத்தியை நான் அடைந்திருக்கிறேன்.(23) உன்னைத் தியானித்துப் பலமடைந்த நான், மீண்டும் இளைஞனாகிவிட்டதைப் போல உணர்கிறேன். ஓ! ஜனார்த்தனா, உன் ஆதரவினால், (உலகிற்கு) எது நன்மையானது என்பதைக் குறித்து உரையாடும் தகுதியை நான் அடைந்திருக்கிறேன்.(24) எனினும், ஓ! புனிதமானவனே, நன்மையான அனைத்தையும் பாண்டுவின் மகனுக்கு நீயே ஏன் உரைக்கவில்லை? இது குறித்து நீ என்ன விளக்கமளிக்கப் போகிறாய்? ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனக்கு விரைவாகச் சொல்வாயாக” என்றார்.(25)

வாசுதேவன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தவரே, புகழுக்கும், நன்மைக்கும் வழிகோலும் அனைத்துக்கும் நானே வேராவேன் என்பதை அறிவீராக. நல்லது, அல்லது யாவும் என்னிலிருந்தே உண்டாகின்றன.(26) நிலவு குளிர்ந்த கதிர்களைக் கொண்டது என்று சொன்னால் பூமியில் எவன் ஆச்சரியப்படுவான்? அதே போல, நானே புகழ் மொத்தமும் கொண்டவனெனச் சொல்லப்பட்டால் எவன் ஆச்சரியப்படப் போகிறான்?[1](27) எனினும், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, நான் உமது புகழை அதிகரிக்கத் தீர்மானித்திருக்கிறேன். ஓ! பீஷ்மரே, அதன் காரணமாகவே நான் உமக்குப் பெரும் நுண்ணறிவை வாய்க்கச் செய்திருக்கிறேன். ஓ! பூமியின் தலைவரே, இந்தப் பூமி நீடித்திருக்கும் வரையில், உமது புகழ் மங்கா ஒளியுடன் உலகங்கள் அனைத்திலும் பயணிக்கும்.(29) ஓ! பீஷ்மரே, உம்மை விசாரிக்கும் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரரிடம்} நீர் சொல்லப் போகும் அனைத்தும், வேதங்களின் அறிவிப்புகளைப் போலத் தகுதி படைத்தவையாகப் பூமியில் கருதப்படப் போகின்றன.(30)உமது அறிவிப்புகளின்படி தன் நடத்தையை அமைத்துக் கொள்பவன், ஒவ்வொரு தகுதி வாய்ந்த செயலுக்குமான வெகுமதியை மறுமையில் பெறுவான்.(31) ஓ! பீஷ்மரே, பூமியில் உமது புகழ் மேன்மையடையும்பொருட்டே நான் உமக்குத் தெய்வீக அறிவைக் கொடுத்திருக்கிறேன்.(32) ஒரு மனிதனின் புகழ் இவ்வுலகில் நீடிக்கும்வரை, அவனது சாதனைகளும் வாழும் எனச் சொல்லப்படுகிறது.(33) (திரண்டு வந்த) மன்னர்களில் கொல்லப்படாமல் எஞ்சியோர், அறநெறி மற்றும் கடமை குறித்த உமது உரையாடலைக் கேட்கும் விருப்பத்தில் உம்மைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். ஓ! பாரதரே {பீஷ்மரே}, அவர்களிடம் பேசுவீராக.(34) நீர் வயதால் முதிர்ந்தவராக இருக்கிறீர். உமது நடத்தையும் சுருதிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இருக்கிறது. மன்னர்களுக்கான கடமைகளையும், கடமை குறித்த வேறு பிற அறிவியல்களையும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(35)

உமது பிறப்பிலிருந்தே, உம்மில் எந்த ஒரு சிறு மீறலையும் எவரும் கண்டதில்லை. அறநெறி மற்றும் கடமை குறித்த அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவர் நீர் என்பதை மன்னர்கள் யாவரும் அறிவார்கள்.(36) எனவே, ஓ! மன்னா, ஒரு தந்தை தன் மகன்களுக்குச் செய்வதைப் போல, உயர்ந்த அறநெறி குறித்து அவர்களிடம் உரையாடுவீராக. நீர் எப்போதும் முனிவர்களையும், தேவர்களையும் வழிபடுபவராவீர்.(37) அறநெறி மற்றும் கடமைகள் குறித்த உரையாடலைக் கேட்க விரும்பும் மனிதர்களுக்கு அக்காரியங்களை விரிவாக உரைப்பது உமது கடப்பாடாகும். ஒரு கல்விமான், குறிப்பாக நல்லோரால் வேண்டப்படும்போது அவை குறித்து அவர்களுக்கு உரைக்க வேண்டும். தவசிகள் இதை ஒரு கடமையாகவே அறிவித்திருக்கிறார்கள்.(38) ஓ! பலமிக்கவரே, நீர் இக்காரியங்களைக் குறித்துப் பேசவில்லையெனில் நீர் பாவமிழைத்தவராவீர். எனவே, ஓ! கல்விமானே, ஓ! பாரதர்களில் காளையே, (மனிதர்களின்) நித்திய கடமைகள் குறித்து உமது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளால் கேட்கப்பட்டு, அவை குறித்து அவர்களுக்கு நீர் உரைப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(39)

போரில் கொலையே அறம்! – சாந்திபர்வம் பகுதி – 55-யுதிஷ்டிரனைக் கொண்டாடிய பீஷ்மர்; உறவினர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்ததால் யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் பேச நாணுவதாகத் தெரிவித்த கிருஷ்ணன்; போரில் கொலையே அறமெனச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரை வணங்கிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் சக்தியுடன் கூடியவரும், குருக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் (பீஷ்மர்), “கடமைகள் {தர்மங்கள்} குறித்து நான் உரையாடப் போகிறேன். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அனைத்துப் பொருளின் நித்திய ஆன்மாவாக நீயே இருப்பதால், உன் அருளின் மூலம் என் பேச்சும், மனமும் உறுதியடைந்திருக்கின்றன.(1) அற ஆன்மாவான யுதிஷ்டிரன், அறநெறி மற்றும் கடமை குறித்து என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும். அதனால் நிறைவடைந்து கடமைகள் அனைத்தையும் குறித்து நான் பேசுவேன்.(2)

எவன் பிறப்பால் விருஷ்ணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனரோ அந்த நல்ல பேரான்மா கொண்ட அரச முனியான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(3) குருக்கள் அனைவரின் மத்தியிலும், நன்னடத்தைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும், பெரும் புகழைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும் எவனுக்கு இணையில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(4) நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, பிரம்மச்சரியம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நீதி, மனோபலம் மற்றும் சக்தி ஆகியன எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(5)

உறவினர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், தன்னை நம்பியிருக்கும் பிறர் ஆகியோரிடம் எப்போதும் நல்ல செல்வாக்கு எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(6) உண்மை, ஈகை, தவம், வீரம், அமைதி, புத்தி, அச்சமின்மை ஆகியவை எவனிடம் உண்டோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(7) இன்பத்திலுள்ள விருப்பம், ஆதாயம், அச்சம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் ஒரு போதும் எவன் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(8) உண்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அறிவு ஆகியவற்றிற்கும், விருந்தினர்களுக்கும் எப்போதும் எவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, நல்லோருக்கு எப்போதும் எவன் கொடையளிக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(9) வேள்விகள், வேத கல்வி, அறநெறி நடைமுறை, கடமை ஆகியவற்றில் எப்போதும் எவன் ஈடுபடுகிறானோ, எவன் எப்போதும் அமைதி நிறைந்தனவோ, எவன் புதிர்கள் {சாத்திரங்கள்} அனைத்தையும் கேட்டிருக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்” என்றார் {பீஷ்மர்}.(10)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், பெரும் வெட்கமடைந்தும், (உமது) சாபத்திற்கு அஞ்சியும், உம்மை அணுகத் துணியவில்லை.(11) ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, அந்தப் பூமியின் தலைவர் {யுதிஷ்டிரர்}, பெரும் படுகொலைகளை ஏற்படுத்திவிட்டதால், (உமது) சாபத்திற்கு அஞ்சி உம்மை அணுகத் துணியவில்லை.(12) தமது வழிபாட்டிற்கு உரியோரையும், தம்மிடம் அர்ப்பணிப்புமிக்கோரையும், தமது ஆசான்களையும், தமது உறவினர்கள், சொந்தங்களையும், உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தோரையும் தமது கணைகளால் துளைத்திருப்பதால், அவர் உம்மை அணுகத் துணியவில்லை” என்றான்.(13)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, பிராமணர்களுக்கு ஈகை, கல்வி, தவம் ஆகியவை கடமையானதைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் போரில் தங்கள் உடல்களைக் கைவிடுவது கடமையாகும்.(14) நீதியற்ற முறையில் போரில் ஈடுபடும் தந்தைமார், பாட்டன்மார், சகோதரர்கள், ஆசான்கள், உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரை ஒரு க்ஷத்திரியன் கொல்லவே வேண்டும். இஃது அவர்களுக்கான அறிவிக்கப்பட்ட கடமையாகும்.(15) ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாவம் நிறைந்தவர்களும், பேராசை கொண்டவர்களும், கட்டுப்பாடுகள் மற்றும் நோன்புகளில் அலட்சியம் நிறைந்தவர்களும் போர் தொடுத்து வந்தால், அவர்கள் தன் ஆசான்களேயானாலும், அவர்களைப் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(16)

பேராசையினால் நித்திய அறவரம்புகளை அலட்சியம் செய்யும் எந்த மனிதனையும் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(17) கொல்லப்பட்ட போர்வீரர்களின் தலை முடிகளையே புற்களாகவும், யானைகளைப் பாறைகளாகவும், கொடிமரங்களையே கரைகளின் மரங்களாகவும் கொண்ட குருதித் தடாகத்தைப் போரில் பூமியில் உண்டாக்கும் க்ஷத்திரியன் தன் கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) நியாயமான போர் சொர்க்கத்துக்கும், பூமியில் புகழுக்கும் வழிவகுக்கும் என மனு சொல்வதால், போருக்கு அறைகூவி அழைக்கப்படும் ஒரு க்ஷத்திரியன், எப்போதும் போரில் ஈடுபடவே வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பீஷ்மர் இவ்வாறு பேசியதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும்பணிவுடன் அந்தக் குரு வீரரை அணுகி, அவரது பார்வைக்கெதிரில் நின்றான்.(20) அவன் பீஷ்மரின் பாதத்தைப் பற்றினான். அவர் பாசமிகு வார்த்தைகளால் அவனைப் பதிலுக்குத் திளைக்கச் செய்தார். பீஷ்மர் யுதிஷ்டிரனை உச்சிமுகர்ந்து அவனை அமரச் சொன்னார். பிறகு வில்லாளிகளில் முதன்மையான அந்தக் கங்கையின் மைந்தர், யுதிஷ்டிரனிடம், “ஓ! குருக்களில் சிறந்தவனே, அஞ்சாதே. ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, எந்தக் கவலையுமின்றி என்னிடம் கேள்வி கேட்பாயாக” என்றார்”.(22)

ராஜநீதியுரைக்கத் தொடங்கிய பீஷ்மர்! – சாந்திபர்வம் பகுதி – 56-ராஜநீதியை உரைக்குமாறு பீஷ்மரிடம் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; முயற்சி, விதி, உண்மைக்கு அர்ப்பணிப்பு, மென்மை மற்றும் கடும் நடத்தை ஆகியவற்றைச் சொல்லி, மனு, சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோர் பழங்காலத்தில் பாடிய சுலோகங்களைச் சொன்னது; ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வாறு நடத்த வேண்டும்; பணியாட்களிடம் நடந்து கொள்ளக்கூடாத முறை ஆகியவற்றைச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ரிஷிகேசனைப் {கிருஷ்ணனைப்} பணிந்து, பீஷ்மரை வணங்கி, அங்கே கூடியிருந்த பெரியோர் அனைவரிடமும் அனுமதியைப் பெற்றுக்கொண்டு பீஷ்மரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான் யுதிஷ்டிரன்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கடமை மற்றம் அறநெறி அறிந்த மனிதர்கள், அரச கடமைகளே கடமைகளின் உயர்ந்த அறிவியல் என்று சொல்கிறார்கள். அந்தக் கடமைகளின் சுமை மிகவும் கடிமானது என்று நானும் நினைக்கிறேன். எனவே, ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கடமைகளைக் குறித்து நீர் உரையாடுவீராக.(2) ஓ! பாட்டா, அரச கடமைகளைக் குறித்து விரிவாகப் பேசுவீராக. அரச கடமைகளைக் குறித்த அறிவியலே மொத்த உலக வாழ்வின் புகலிடமாகும்.(3) ஓ! குரு குலத்தவரே, அறம், பொருள், இன்பம் ஆகியவை அரச கடமைகளைச் சார்ந்தே இருக்கின்றன. முக்திக்கு வழிவகுக்கும் நடைமுறைகளும் அவற்றைச் சார்ந்தே இருக்கின்றன.(4)

குதிரைகளுக்குக் கடிவாளம் போலவும், யானைக்கு அங்குசத்தைப் போலவும், அரச கடமைகளின் அறிவியலானது {ராஜநீதி – அரசியல்} உலகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடிவாளமாகும்.(5) அரசமுனிகளால் நோற்கப்படும் கடமைகளில் ஒருவன் திகைப்படைந்தால், பூமியில் நிலையின்மை தோன்றி அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகும்.(6) சூரியன் உதித்து மங்கலமற்ற இருளை விலக்குவதைப் போல இந்த அறிவியல் {அரசியல்} உலகின் அனைத்து வகைத் தீய விளைவுகளையும் அழிக்கும்.(7) ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஓ! பாட்டா, கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் நீரே முதன்மையானவர் என்பதால் என் பொருட்டு முதலில் அரச கடமைகளை உரைப்பீராக.(8) ஓ! எதிரிகளை எரிப்பவரே, நுண்ணறிவு கொண்டோர் அனைவரிலும் முதல்வராக உம்மையே வாசுதேவன் {கிருஷ்ணன்} கருதுகிறான். எனவே, நாங்கள் அனைவரும் உம்மிடம் இருந்து உயர்ந்த ஞானத்தை எதிர்பார்க்கிறோம்” என்றான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உயர்ந்தவனான தர்மனையும் {தர்மத்தையும்}, பிரம்மத்தின் முழு வடிவமான கிருஷ்ணனையும், பிராமணர்களையும் வணங்கி (மனிதர்களின்) நித்திய கடமைகளை {அழிவில்ல நீதிகளைக்} குறித்து நான் உரையாடப் போகிறேன்.(10) ஓ! யுதிஷ்டிரா, துல்லியமான விபரங்களுடன் விளக்கப்படும் மொத்த அளவிலான அரச கடமைகளையும், மற்றும் நீ அறிய விரும்பும் பிற கடமைகளையும், குவிந்த கவனத்துடன் என்னிடமிருந்து கேட்பாயாக.(11) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, முதலிடத்தில், மன்னன் (தன் குடிமக்களை) நிறைவு செய்யும் விருப்பத்திலும், விதிக்கு எப்போதும் ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டு, தேவர்கள், பிராமணர்கள் ஆகியோரிடம் பணிவுடன் காத்திருக்க வேண்டும்.(12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனே, தெய்வங்களையும், பிராமணர்களையும் மன்னன் வணங்குவதால், கடமை மற்றும் அறத்திற்குத் தான் பட்ட கடனைச் செலுத்தி, தன் குடிமக்களிடம் மதிப்பைப் பெறுகிறான்.(13) ஓ! மகனே, ஓ! யுதிஷ்டிரா, முயற்சி செய்ய {உழைப்பதற்கு} ஆயத்தமாகாமல் வெறும் விதி மட்டுமே மன்னர்களின் நோக்கங்களை நிறைவேற்றாது என்பதால், நீ எப்போதும் உழைப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்.(14) முயற்சி, விதி ஆகிய இரண்டும் (தங்கள் செயலளவில்) இணையானவையே. முயற்சியோடு எது தொடங்கப்பட்டதோ, அதன் விளைவுகளின் மூலமே விதியானது உறுதி செய்யப்படுகிறது என்பதால், அவையிரண்டில் {முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டில்} முயற்சியையே நான் மேன்மையானதாகக் கருதுகிறேன்.(15)

தொடங்கப்பட்டது {ஏதோ ஒரு காரியம் தொடங்கப்பட்டு, அது} பேரழிவில் முடியுமென்றாலும் துயரில் ஈடுபடாதே. ஏனெனில், {அப்போதுதான்} நீ அதே காரியத்தை இரட்டிப்பு கவனத்துடன் முயற்சி செய்ய வேண்டும். இதுவே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும். (16) மன்னர்களின் வெற்றிக்கு உண்மையை {சத்தியத்தைப்} போல வேறெதுவும் பெருமளவில் பங்காற்றுவதில்லை. உண்மைக்கு அர்ப்பணிப்புள்ள மன்னன், இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தையே கண்டடைகிறான்.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, உண்மையே அவர்களது பெருஞ்செல்வமாகும். அதே போலவே, மன்னர்களைப் பொறுத்த வரையிலும், உண்மையைப் போல வேறெதுவும் அவர்களுக்குப் பெருமளவு நம்பிக்கையை ஊட்டாது.(18) அனைத்து சாதனைகளைக் கொண்டவனும், நன்னடத்தையுடன் கூடியவனும், தற்கட்டுப்பாடு, பணிவு, நேர்மை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், நற்பண்புகளைக் கொண்டவனும், தயாளனுமான ஒரு மன்னன் ஒருபோதும் தன் செழிப்பை இழப்பதில்லை.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீதியை நிர்வகித்து, தன் பலவீனத்தை மறைப்பது, எதிரிகளின் பலவீனங்களை உறுதி செய்வது, தன் ஆலோசனைகளைக் கமுக்கமாக வைப்பது ஆகிய மூன்றையும் செய்து, நேரடியான வெளிப்படை நடத்தையோடு கூடிய மன்னன் செழிப்பை அடைகிறான்.(20)

மன்னன் மென்மையாக நடந்து கொண்டால் அனைவரும் அவனை அவமதிப்பார்கள். மறுபுறம் அவன் கடுமையாக இருந்தாலோ, அவனது குடிமக்கள் தொல்லைக்குள்ளாவார்கள். எனவே, நீ இரு வகை நடத்தைகளையும் கைக்கொள்வாயாக.(21) ஓ! முற்போக்காளர்களின் முதன்மையானவனே, ஓ! பாண்டுவின் மகனே, பூமியில் பிராமணனே முதன்மையானவன் என்பதால் பிராமணர்கள் ஒருபோதும் உன்னால் தண்டிக்கப்படக்கூடாது.(22) ஓ! மன்னர்களின் மன்னா, உயர் ஆன்ம மனு இரண்டு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ! குருகுலத்தோனே, உன் கடமைகளைப் பொறுத்தவரையில் நீ அவற்றை உன் மனத்தில் எப்போதும் கொள்ள வேண்டும்.(23) {அவ்விரண்டு சுலோகங்கள் [24 மற்றும் 25] பின்வருமாறு} “நெருப்பு நீரிலிருந்து உண்டானது, க்ஷத்திரியன் பிராமணனிலிருந்து உண்டானான், இரும்பு கல்லிலிருந்து உண்டானது. அம்மூன்றும் (நெருப்பு, க்ஷத்திரியன், இரும்பு என்ற மூன்றும்) தங்கள் பலத்தை அனைத்திலும் வெளிப்படுத்த முடியும். ஆனால் தங்கள் தங்கள் முன்னோரின் தொடர்பு அவற்றுக்கு ஏற்படும்போது, அவற்றின் சக்தி தணிவடைகிறது.(24) இரும்பானது கல்லைத் தாக்கும்போதோ, நெருப்பானது நீருடன் மோதும்போதோ, க்ஷத்திரியனொருவன் பிராமணனிடம் பகைமை பாராட்டும்போதோ அந்த மூன்றும் பலமிழக்கின்றன”[1].(25)(“ஜலத்திலிருந்து அக்னியும், பிராம்மணனிடமிருந்து க்ஷத்திரியனும், கல்லிலிருந்து இரும்பும் உண்டானார்கள். அக்னி முதலிய இம்மூன்றுகளின் சக்தி எங்கும் செல்லத்தக்கதாயினும் தம் காரணங்களில் நாசமடையும். கல்லை அடிக்கச் சென்ற இரும்பும், ஜலத்தைக் கொளுத்தச் சென்ற அக்கினியும், பிராம்மணர்களை த்வேஷிக்க முயன்ற க்ஷத்திரியனும் அப்பொழுதே நாசமடைவார்கள்”.மனு வார்த்தை)ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, பெரும் முனிவரான உசனஸ் {சுக்கிரன்}, பழங்காலத்தில் இரு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அவற்றைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக.(28) {அவ்விரண்டு சுலோகங்கள் [29 மற்றும் 30] பின்வருமாறு} “ஒரு பிராமணன், வேதங்களில் திறன்மிக்கவனாகவே இருப்பினும், உயர்த்திய ஆயுதத்துடன் அவன் போரிட வந்தால், தன் கடமைகளில் கவனமாக இருக்கும் நீதிமிக்க க்ஷத்திரியன் ஒருவன், அவனைத் தண்டிக்கவே வேண்டும்.(29) தண்டிப்பவனின் {மன்னனின்} கோபத்தை, தாக்குபவனின் {பிராமணனின்} கோபமே தீர்மானிக்கிறது என்பதால், கடமைகளை அறிந்தவனான க்ஷத்திரியன், மீறப்படும் நீதியை நிலைநிறுத்தும் அச்செயலால் பாவியாக மாட்டான்”[2].(30)(“யுத்தத்தில் ஆயுதமெடுத்துத் தன்னை எதிர்த்து வரும் பிராம்மணன் வேதாந்தமறிந்தவனானாலும் தர்மத்தை விரும்பும் அரசன் அவனை ஆயுதத்தால் அடக்க வேண்டும். தர்மத்திற்குக்குக் குறைவுவராமல் பாதுகாக்கும் தர்மம் அறிந்த அரசன் அக்காரியத்தால் தர்மத்தைக் கெடுத்தவனாகமாட்டான். ஏனெனில், அந்தப் பிராம்மணன் கோபமே அரசனுடைய கோபத்தை உண்டுபண்ணுகிறது”.சுக்கிரன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தை)

ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டே பிராமணர்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றமிழைப்பவர்களானால், உன் ஆட்சிப்பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.(21) ஓ! மன்னா, தண்டனைக்குத் தகுந்தவர்களாகவே இருப்பினும், நீ அவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும். ஒரு பிராமணன், பிராமணக்கொலை செய்த குற்றவாளியானாலோ, தன் ஆசான் அல்லது மதிப்புக்குரிய பெரியோரின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனானாலோ, கருச்சிதைவுக்குக் காரணமானாலோ,(32) மன்னனுக்குத் துரோகமிழைத்தாலோ, அவனது தண்டனையானது உன் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக இருக்க வேண்டும். உடல்சார்ந்த தண்டனைகளேதும் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை.(33) பிராமணர்களிடம் மதிப்பு காட்டும் மனிதர்கள் (அரசு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு) உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும். பணியாட்களைத் தேர்ந்தெடுத்துத் திரட்டுவதைக் காட்டிலும் மன்னர்களுக்குப் பெரும் மதிப்புமிக்கச் செல்வமேதும் இல்லை.(34)

சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வகை அரண்களில்[3], (இந்த ஆறு அரண்களும், “பூமி, நீர், பாலைவனம், காடு, மலை, மனிதர்கள்)உண்மையில் குடிகளைக் கொண்ட அரணே (தொண்டாற்ற ஆயத்தமாக இருக்கும் அன்பு கொண்ட குடிமக்களைக் கொண்ட அரணே) கைப்பற்ற முடியாத அரணாகும்.(35) எனவே, அறிவுடைய மன்னன், நால்வகைக் குடிமக்களிடமும் எப்போதும் கருணை காட்ட வேண்டும். அற ஆன்மா கொண்டவனாகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவனாகவும் இருக்கும் மன்னன் தன் குடிமக்களை நிறைவு செய்வதில் வெல்கிறான்.(36) எனினும், ஓ! மகனே, சீற்றமில்லா யானை இழிந்ததாகக் கருதப் படுவதைப் போலவே மென்மையான மன்னனும் கருதப்படுகிறான் என்பதால், நீ எப்போதும் அனைவரிடமும் மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையோடு} நடந்து கொள்ளக்கூடாது.(37)பிருஹஸ்பதி தொகுத்த சாத்திரங்களில், பழங்காலத்தில் இந்தக் காரியம் குறித்து ஒரு சுலோகம் பாடப்பட்டுள்ளது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(38) “ஒரு மன்னன் எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருப்பானானால், யானையோட்டும் பாகன் அதன் தலைமீது அமர்ந்து அந்த யானையை ஓட்டுவதைப் போலவே, மனிதர்களில் இழிந்தோரும் அவனை இணங்கச் செய்து மேலோங்குவார்கள்”[4].(39) எனவே ஒரு மன்னன் எப்போதும் மென்மையாக இருக்கக்கூடாது. அதேபோல அவன் எப்போதும் கடுமையாகவும் இருக்கக்கூடாது. அவன் அதிகக் குளிர்ச்சியும், வியர்வையை உண்டாக்கும் அதிக வெப்பமும் இல்லாத இளவேனில் சூரியனைப் போல இருக்க வேண்டும்.(40)(“யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமையுள்ள அரசனை அவமதித்துத் தலையிலேற விரும்புவான்”.பிருஹஸ்பதி சொன்னதாகச் சொல்லப்படும் இவ்வார்த்தை)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, புலனுணர்வுகளின் நேரடி சாட்சிகள், கணிப்பு, ஒப்பீடுகள், சாத்திரங்களின் நெறிமுறைகள் ஆகியவற்றின் மூலம் ஒரு மன்னன் நண்பர்களையும், எதிரிகளையும் பகுத்தறிய வேண்டும்.(41) ஓ! பெரும் முற்போக்காளனே, வியசனங்கள்[5] என்றழைக்கப்படும் தீய நடைமுறைகள் அனைத்தையும் நீ தவிர்க்க வேண்டும். அவற்றில் நீ ஒரு போதும் ஈடுபடலாகாது என்ற, தேவையேதும் இல்லை. இருப்பினும், நீ அவற்றில் பற்று கொள்ளாதிருப்பதே தேவையாகும்.(42) அந்த நடைமுறைகளில் பற்று கொண்டாரை அனைவரும் அடக்கி ஆள்வர். தன் மக்களிடம் அன்பேதும் பேணாத மன்னன் அவர்களைக் கவலையில் ஆழ்த்துவான்.(43)(வ்யஸனங்கள் என்பன பதினெட்டு வகைப்படும்வேட்டை, சொக்கட்டான் {பகடை}, பகலிலுறக்கம், பிறரை நிந்தித்தல், பெண்மயக்கம், மதம், வீணான பாட்டு, கூத்து, வாத்தியங்கள், குடி இப்பத்தும் காமத்தாலுண்டாவன. தெரியாத குற்றத்தை வெளியிடுவது, குற்றமில்லாதவனைத் தண்டிப்பது, கபடமாகக் கொலை செய்வது, பிறர் பெருமையில் பொறாமை, பிறர் குணங்களைத் தோஷமாகக் கூறுதல், பிறர் பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கொடுமையான தண்டம் இவ்வெட்டும் கோபத்தாலுண்டவன. இவைகளில் முதல் வகுப்பிலுள்ள குடி, சொக்கட்டான், பெண்மயக்கம், வேட்டை இந்நான்கும், இரண்டாவது வகுப்பில் பிறர்பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கடுமையான தண்டம் இம்மூன்றும் மிகக் கஷ்டமானவை. இவை மனுதர்மசாஸ்திரம் ஏழாவது அத்தியாயத்தில் நாற்பத்தைந்தாவது சுலோகமுதல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன)

ஒரு தாயானவள் தன் பிள்ளையைக் கருவில் தாங்குவதைப் போலவே, மன்னன் எப்போதும் தன் குடிமக்களைத் தாங்க வேண்டும். ஓ! ஏகாதிபதி, இஃது ஏன் விரும்பத்தக்கது என்பதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(44) ஒரு தாயானவள், தான் மிகவும் விரும்பும் பொருட்களை அலட்சியம் செய்து தன் பிள்ளையின் நன்மையை மட்டுமே நாடுவதைப் போல, மன்னர்களும் (தங்கள் குடிமக்களிடம்) நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை.(45) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீதிமிக்க மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத் தனக்குப் பிடித்தமானவற்றைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.(46) ஓ! பாண்டுவின் மகனே, நீ ஒருபோதும் மனோவுறுதியைக் கைவிடக்கூடாது. மனோவுறுதி கொண்டவனும், தீங்கிழைப்பவர்களைத் தண்டனைகளால் பீடிப்பவனாக அறியப்படுபவனுமான ஒரு மன்னனுக்கு அச்சப்பட எந்தக் காரணமும் இருக்காது.(47)

ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, நீ உன் பணியாட்களிடம் கேலிப் பேச்சுகளில் ஈடுபடக்கூடாது. ஓ! மன்னர்களில் புலியே, அத்தகு நடத்தையின் பிழைகளைக் கேட்பாயாக.(48) தலைவன் பணியாட்களுடன் சாதாரணமாகக் கலந்திருந்தால், அவனை அவர்கள் அவமதிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் தங்கள் நிலையை மறந்து, உண்மையில் அந்தத் தலைவனை மீறிச் செயல்படுவார்கள்.(49) ஒன்றைச் செய்யப் பணிக்கப்பட்டால், அதைச் செய்யத் தயங்கி, தங்கள் தலைவனின் இரகசியங்களைப் பலரறியக் கூறுவார்கள்[6].(50) அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, தங்கள் தலைவனைவிடத் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்ள முயல்வார்கள். கையூட்டுகள் பெற்று, வஞ்சகம் பயின்று, அரசின் பணிக்குத் தடைசெய்யும் விதத்தில் அவர்கள் மன்னனை விட உயர்விடங்கொள்ளக்கூட முனைவார்கள்.(51(“கட்டளையிட்டு அனுப்பினாலும் அக்காரியத்தில் ஸந்தேகப்படுவார்கள்; கேட்கத்தாகாத ரஹஸ்யத்தையும் கேட்பார்கள்; யாசிக்கத்தகாத வஸ்துவையும் யாசிப்பார்கள்; எஜமானன் புஜிக்கத்தக்க வஸ்துக்களைத் தின்பார்கள்”)

பொய்கள் மற்றும் பொய்யாவணங்கள் மூலம் நிந்தித்து, அரசை அழிவடையச் செய்வார்கள்[7]அரண்மனையின் பெண் பாதுகாவலர்களுடன் காதல் பழகி, தங்கள் தலைவனைப் போலவே உடைகளை உடுத்துவார்கள்.(52) ஓ மன்னர்களில் புலியே, ஏப்பம் மற்றும் அது போன்ற காரியங்களில் {கொட்டாவி போன்ற காரியங்களில்} வெட்கமில்லாமல் ஈடுபட்டு, தங்கள் தலைவன் முன்னிலையிலேயே காரி உமிழ்வார்கள். மேலும் அவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் வைத்து அவனை அலட்சியமாகப் பேசவும் அஞ்சமாட்டார்கள்.(53) மன்னன் மென்மையானவனாக நடந்து கொண்டு நையாண்டிப் பேச்சில் ஈடுபட்டால், அவனது பணியாட்கள் அவனை அலட்சியம் செய்து, மன்னர்களைப் போன்றே சிறந்த குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களைச் செலுத்துவார்கள்[8].(54) சபைகளில் திரளும் அவனது அமைச்சர்கள், “இஃது உமது சக்திக்கு மீறியது”, “இது தீய முயற்சி” என்பது போன்ற பேச்சுகளில் வெளிப்படையாக ஈடுபடுவார்கள்.(55) மன்னன் கோபமடைந்தால் அவர்கள் சிரிப்பார்கள்; மேலும், வேறு பிற காரணங்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், அவர்களுக்கு {மன்னனால்} அளிக்கப்படும் ஆதரவில் மகிழமாட்டார்கள்.(56)அவர்கள் தங்கள் தலைவனின் இரகசிய ஆலோசனைகளை வெளியிட்டு, மாறுபட்ட ஒலியுடன் {வேடிக்கையாக} அவனது தீய செயல்களைச் சொல்வார்கள். சிறு கவலையுமின்றி அவர்கள் மன்னனின் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பார்கள்.(57) மன்னனின் நகைகளோ, உணவோ, அவனது குளியலுக்குத் தேவையானவையோ, நறுமணப் பொருட்களோ வரவில்லையென்றாலும், அவனது பணியாட்கள் அவனது முன்னிலையிலேயே சிறு கவலையும் அடையமாட்டார்கள்.(58) அவர்கள் தங்களுக்குச் சேரவேண்டியதை நியாயமாக எடுக்கமாட்டார்கள். மாறாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் நிறைவில்லாத அவர்கள் மன்னனின் உடைமைகளை எடுத்துக் கொள்வார்கள்.(59) அவர்கள் கயிற்றில் கட்டப்பட்ட பறவையோடு விளையாடுவதைப்போல மன்னனுடன் விளையாட விரும்பி, மன்னன் தங்களுடன் நெருக்கமாக இருக்கிறான், அவர்களிடம் மிகவும் அன்பு கொண்டிருக்கிறான் என்று எப்போதும் மக்கள் புரிந்து கொள்ளுமாறு தங்களை வெளிப்படுத்துவார்கள்.(60) ஓ! யுதிஷ்டிரா, மன்னன் மென்மையானவனாக இருந்து, கேலி பேசிக் கொண்டிருந்தால், இவையும் இன்னும் பிற தீமைகளும் அஃதிலிருந்து எழும்” என்றார் {பீஷ்மர்}”.(61)

எவன் சிறந்த மன்னன்? – சாந்திபர்வம் பகுதி – 57-மன்னன் என்பவன் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும்; குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; அரச காரியங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டியவர்களின் பண்புகள்; சிறந்த மன்னனுக்குரிய அடிப்படை தேவைகள்; எவன் ஆளத்தகுந்த மன்னன்; தவிர்க்கப்பட வேண்டிய ஆறு மனிதர்கள் ஆகியன குறித்து யுதிஷ்டிரனிடம் உரையாடிய பீஷ்மர்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் எப்போதும் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணைப் போல முயற்சியற்றிருக்கும் மன்னன் புகழத்தகாதவனாவான்.(1) ஓ! ஏகாதிபதி, இது தொடர்பாக, புனிதமான உசனஸ் {சுக்கிரன்} ஒரு சுலோகத்தைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அதை நான் உரைக்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.(2) “போரில் வெறுப்புள்ள மன்னன், மனைவியர் மற்றும் பிள்ளைகளிடம் பெரும்பற்றுக் கொண்ட பிராமணன் ஆகிய இருவரையும், எலியை விழுங்கும் பாம்பைப் போலப் பூமியானவள் விழுங்குகிறாள்”.(3) ஓ! மன்னர்களில் புலியே இதை நீ எப்போதும் உன் இதயத்தில் தாங்குவதே உனக்குத் தகும். (விதிப்படி) யாருடன் அமைதி பேணப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, யாருடன் போர்தொடுக்கப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் போர் தொடுப்பாயாக.(4) ஏழு அங்கங்களுடன்[1] கூடிய உன் நாட்டிடம் பகைமை பாராட்டுபவன் உன் ஆசானோகவோ, உன் நண்பனாகவோ இருந்தாலும் கூட, அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(5)(மன்னன், அமைச்சர்கள், நண்பர்கள், கருவூலம், நாட்டுக்கு உரிமைப்பட்ட நிலப்பகுதி, கோட்டைகள் படைகள் ஆகியனவே நாட்டின் ஏழு அங்கங்கள்)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மன்னர்களின் கடமை குறித்து, பிருஹஸ்பதியின் கருத்துக்கு ஏற்புடைய வகையில் மன்னன் மருத்தனால் பாடப்பட்ட பழைய சுலோகம் ஒன்று இருக்கிறது.(6) “ஓர் ஆசான், அகந்தையுடனும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் அலட்சியத்துடனும் இருந்து வரைமுறைகள் அனைத்தையும் மீறினால் அழிவில்லா வரைமுறைகளின்படி அவருக்கும் தண்டனையுண்டு”.(7) பாஹுவின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் சகரன், தன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் மூத்த மகனான அசமஞ்சனை நாடு கடத்தினான்.(8) ஓ! மன்னா, அந்த அசமஞ்சன், குடிமக்களின் பிள்ளைகளைச் சரயுவில் {சரயு ஆற்றில்} மூழ்கடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். எனவே அவனது தந்தை {மன்னன் சகரன்} அவனை {அசமஞ்சனை} நிந்தித்து, நாடு கடத்தினான்.(9) முனிவர் உத்தாலகர், தனக்குப் பிடித்தமான மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுவேதகேது, பிராமணர்களை மகிழ்விப்பதாக வஞ்சகமாக உறுதி கூறி, அவர்களை அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் அவரைக் கைவிட்டார்.(10)

குடிமக்களின் மகிழ்ச்சி, உண்மையை நோற்கும் நோன்பு, நடத்தையில் உண்மை மற்றும் நேர்மை ஆகியவையே மன்னர்களின் நித்திய கடமைகளாகும்.(11) ஒரு மன்னன் பிறரின் செல்வத்தில் ஆசை கொள்ளக்கூடாது. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். ஒரு மன்னன் ஆற்றல் கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், உணர்வால் மன்னிக்கும் இயல்பு கொண்டவனாகவும் இருந்தால் அவன் ஒருபோதும் செழிப்பிலிருந்து வீழமாட்டான்.(12) தீமைகளிலிருந்து தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட மன்னன், தன் கோபத்தைக் கட்டுப்படுத்த இயன்றவனாகவும், சாத்திரங்களுக்கு ஏற்புடைய தீர்மானங்களை எடுப்பவனாகவும் இருப்பான். அவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவற்றை {தர்மார்த்தகாமமோக்ஷத்தை} (நீதியுடன்) பின்பற்ற வேண்டும்.(13) இவை மூன்றை (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைப்) பொறுத்தவரையில் ஒரு மன்னன் தன் ஆலோசனைகளை எப்போதும் மறைக்க வேண்டும். தன் ஆலோசனைகள் வெளிப்படுவதைக் காட்டிலும் ஒரு மன்னனுக்குப் பெரும் தீமை ஏதும் ஏற்பட முடியாது.(14) மன்னர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுகையில் நால் வகையினரையும் பாதுகாக்க வேண்டும். வேறுபட்ட வகையினரை {நால் வர்ணத்தாரைப்} பொறுத்தவரை கடமைகளில் குழப்பமேற்படாமல் தவிர்ப்பது மன்னர்களின் நித்திய கடமையாகும்.(15)

ஒரு மன்னன் (தன் பணியாட்களைத் தவிர வேறு யாரிடமும்) நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல (தன் பணியாட்களிடம் கூட) நம்பிக்கை இல்லாமலும் இருக்கக்கூடாது. அவன் தன் புத்தியால், அரசுரிமைக்குத் தேவைப்படும் முக்கியமான ஆறு ஆதாரங்களின்[2] தகுதிகளையும், குறைகளையும் கவனிக்க வேண்டும்.(16) (இந்த ஆறும்: 1. (பலமிக்க எதிரியிடம்) அமைதியைப் பேணல், 2. (சமபலம் கொண்ட எதிரியிடம்) போருக்குத் தயாராக இருத்தல், 3. (பலவீனமானவர்களின் ஆட்சிப்பகுதிகளுக்கு அணிவகுத்து) படையெடுத்தல், 4. இடைத்தங்கல், 5.(பலவீனமாக இருந்தால், தன் கோட்டைக்குள்) பாதுகாப்பை நாடல், 6.(எதிரியின் தலைமை அதிகாரிகளுக்கு மத்தியில்) பிரிவினையைத் தூண்டல்”)தன் எதிரிகளின் கவனக்குறைவுகளைக் கவனிப்பவனும், அறம், பொருள், இன்பத்தில் நீதியைப் பின்பற்றுபவனும், இரகசியங்களை உறுதி செய்யப் புத்திக்கூர்மையுள்ள ஒற்றர்களை நியமிப்பவனும், தன் எதிரிகளுடைய அதிகாரிகளுக்குச் செல்வம் கொடுத்துக் கெடுக்க முயல்பவனுமான மன்னன் பாராட்டுக்குத் தகுந்தவனாவான்.(17) ஒரு மன்னன் யமனைப் போல நீதியை நிர்வகித்து, குபேரனைப் போலச் செல்வத்தைத் திரட்ட வேண்டும். தான் அடைந்தவை, இழந்தவை மற்றும் தன் ஆட்சிப்பகுதிகள் ஆகியவற்றின் நிறை குறைகளை அவன் கண்காணிக்க வேண்டும்.(18) உணவில்லாதவர்களுக்கு அவன் உணவளிக்க வேண்டும். உணவளித்த பிறகு அஃதை அவர்களிடம் விசாரிக்க வேண்டும். அவன் (கடுப்பில்லாத) புன்னகையுடன் கூடிய முகத்துடன் இனிமையாகப்பேச வேண்டும்.(19) அவன், வயதில் பெரியோருக்காக எப்போதும் காத்திருந்து, தன் தாமதத்திற்கு வருந்த வேண்டும். பிறரின் உடைமைகளில் அவன் ஒருபோதும் ஆசை வைக்கலாகாது.(20)அவன் நீதிமான்களின் நடத்தையை உறுதியாகப் பின்பற்றி, அந்நடத்தையைக் கவனமாக நோற்க வேண்டும். நல்லோரின் செல்வத்தை அவன் ஒருபோதும் கைப்பற்றக்கூடாது. நியாயமற்றவர்களிடம் உள்ள செல்வத்தைக் கைப்பற்றி நல்லோரிடம் அவன் கொடுக்க வேண்டும்.(21) ஒரு மன்னன் தானே தாக்குவதில் திறன்கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் ஈகை பயில வேண்டும். அவன் தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவன் பிரகாசமாக உடை உடுத்த வேண்டும். அவன் சரியான காலங்களில் கொடையளித்து, தன் உணவை முறையான நேரங்களில் உட்கொள்ள வேண்டும். அவன் நன்னடத்தைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(22) செழிப்பை அடைய விரும்பும் மன்னன், துணிவுமிக்கோர், அர்ப்பணிப்புமிக்கோர், எதிரிகளால் வஞ்சிக்கப்பட முடியாதோர், நற்குடியில் பிறந்தோர், உடல்நலம் கொண்டோர், நன்னடத்தைக் கொண்டோர், நன்னடத்தைக் கொண்ட குடும்பங்களுடன் தொடர்பிலிருப்போர், மரியாதைக்குரியோர், பிறரை அவமதிக்காதோர், அனைத்து அறிவியல்களையும் அறிந்தோர், உலகம் மற்றும் அதன் காரியங்களைக் குறித்த அறிவைக் கொண்டோர், நாட்டின் எதிர்காலம் குறித்து எப்போதும் கவனமாக இருப்போர், தங்கள் கடமைகளை எப்போதும் நோற்போர், நேர்மையானோர், மலைகளைப் போன்ற உறுதியைக் கொண்டோர் ஆகியோரை எப்போதும் தன் பணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். இன்ப நோக்கங்களைப் பொறுத்தவரையில் அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. தன் குடை மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவை மட்டுமே அவர்களுக்குள் ஒரே வேறுபாடாக இருக்க வேண்டும்.(23-25) அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவனுடைய நடத்தையானது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொள்ளும் மன்னன் ஒருபோதும் துயரடையமாட்டான்.(26)

அனைவரையும் சந்தேகப்பட்டு, தன் குடிமக்களுக்குக் கனமான வரிகளை விதித்து நேர்மையற்றவனாகவும், பேராசைக்காரனாகவும் இருக்கும் மன்னன், விரைவில் தன் பணியாட்கள் அல்லது உறவினர்களாலேயே தன் உயிரை இழப்பான்.(27) நன்னடத்தைக் கொண்டவனும், தன் மக்களின் இதயங்களைக் கவர்வதில் ஈடுபடுபவனுமான மன்னன், எதிரிகளால் தாக்கப்பட்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான். ஒருவேளை வெல்லப்பட்டாலும், அவன் வெகுவிரைவில் தன் நிலையை மீண்டும் அடைவான்.(28) ஒரு மன்னன் கோபம் நிறைந்தவனாக இல்லையென்றால், தீய நடைமுறைகளுக்கு அடிமையாகாமல் இருந்தால், கடும் தண்டனைகளை அளிக்காமல் இருந்தால், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியவனாக இருந்தால், அவன் (அனைத்துயிர்களுக்கும் நம்பிக்கையளிக்கும்) இமய மலைகளைப் போல அனைவரின் நம்பிக்கைக்குரியவனாவான்.(29)

ஞானம், ஈகை, எதிரிகளின் கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆயத்த நிலை, இனிய பண்புகள், நால்வகைசேர்ந்த தன் குடிமக்களுக்கான நன்மையையும், தீமையையும் அறிந்த நிலை, செயலூக்கம், கோபத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், பழியுணர்ச்சி இல்லாமை, உயர்ந்த மனம், கோபம் நிறைந்த மனோநிலை இல்லாமை, வேள்விகளிலும், பிற அறச் செயல்களிலும் ஈடுபாடு, தற்பெருமை பேசாமை, தன்னால் தொடங்கப்பட்ட அனைத்து வேலைகளை நிறைவு செய்யத் தீவிரச் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(30-32) தன் தந்தையின் வீட்டில் இருக்கும் மகனைப் போலத் தன் நாட்டில் உள்ள மக்கள் அச்சமில்லாமல் வாழும் வகைச் செய்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(33) தங்கள் செல்வத்தை மறைத்து வைக்கும் தேவையில்லாதவர்களும், தங்களுக்கான நன்மை தீமைகளை அறிந்தவர்களுமான குடிமக்களைக் கொண்டிருப்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(34)

எவனுடைய குடிமக்கள் தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டிருக்கின்றனரோ, கடமைக்காகத் தங்கள் உடல்களைக் கைவிடவும் அஞ்சுவதில்லையோ; எவனுடைய மக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, அமைதி நிறைந்த நடத்தையுடன், கீழ்ப்படிந்தவர்களாக, அடக்கமானவர்களாக, கட்டுப்படுபவர்களாக, சச்சரவுகளில் ஈடுபட விரும்பாதவர்களாக, முற்போக்கானவர்களாக இருக்கின்றனரோ அவனே உண்மையில் மன்னனாவான். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதிகளில் தீமைகள், கள்ளநடத்தை, வஞ்சகம், பொறாமை ஆகியவை ஏதும் இல்லையோ அந்த மன்னன் அழிவில்லா தகுதியை ஈட்டுகிறான்.(35,36)

எவன் அறிவை மதிக்கிறானோ, எவன் சாத்திரங்களுக்கும், தன் மக்களுக்கான நன்மைக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் நீதியின் பாதையில் நடக்கிறானோ, எவன் முற்போக்காளனோ அந்த மன்னனே உண்மையில் ஆளத்தகுந்தவனாவான்.(37) எவனுடைய ஒற்றர்கள், ஆலோசனைகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத செயல்கள் ஆகியன எதிரிகள் அறியாதனவாகவே இருக்கின்றனவோ அந்த மன்னனே ஆளத்தகுந்தவனாவான்.(38)

பின்வரும் வரியானது ராமசரிதம்[3] என்றழைக்கப்படும் உரையில் பிருகு குலத்தின் உசனஸால் {சுக்கிரனால்} மன்னர்களின் கடமைகள் என்ற கருத்தில் பாடப்பட்டுள்ளது.(39) “ஒருவன் முதலில் (எவனுடைய ஆட்சிப்பகுதியில் வாழ்வதெனத்) தன் மன்னனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அவன் ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, பிறகு செல்வம் ஈட்ட வேண்டும். ஒரு மன்னன் இல்லையென்றால் மனைவியும், உடைமைகளும் எவ்வாறு இருக்க முடியும்?”(40) நாட்டின் மீது ஆசை கொண்டோரைப் பொறுத்தவரையில், (குடிமக்களின்) பாதுகாப்பைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாடான நித்திய கடமையும் அவர்களுக்குக் கிடையாது. தன் குடிமக்களுக்கு மன்னன் அளிக்கும் பாதுகாப்பே உலகத்தைத் தாங்கிப் பிடிக்கிறது[4].(41)பிசேதசின் மகனான மனு, மன்னர்களின் கடமைகளைக் குறித்து இரு வரிகளைப் பாடியிருக்கிறார். அவற்றைக் கவனமாகக் கேட்பாயாக.(42) கடலில் உள்ள ஓட்டைப் படகைத் தவிர்ப்பதைப் போல இந்த ஆறு மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்கள். பேசாத ஆசான், சாத்திரங்கள் பயிலா புரோகிதன்,(43) பாதுகாப்பை வழங்கா மன்னன், ஏற்பில்லாததைப் பேசும் மனைவி, கிராமத்திற்குள் திரிய விரும்பும் இடையன் மற்றும், காடுகளுக்குச் செல்ல விரும்பும் நாவிதன் ஆகியோராவர்[5]” {என்றார் பீஷ்மர்}.(44)

பாதுகாப்பின் வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 58-நாட்டைப் பாதுகாக்கும் வழிமுறைகள்; முயற்சியின் முக்கியத்துவமும், அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியமும்; மன்னனால் சமயத்திற்கேற்றவாறு கபடமும், கபடமற்ற நிலையும் ஏன் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பனவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சூரியன் மறையப்போவதால் தன் ஐயங்களை அடுத்த நாள் கேட்பதாகச் சொன்ன யுதிஷ்டிரன்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, குடிமக்களைப் பாதுகாப்பதே அரச கடமைகளில் முக்கியமானது. தெய்வீகமான பிருஹஸ்பதி வேறு எந்தக் கடமையையும் (இந்த ஒன்றைப் போல்) மெச்சவில்லை.(1) அகன்ற கண்களைக் கொண்டவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான கவி (உசனஸ் {சுக்கிரன்}), ஆயிரங்கண் இந்திரன், பிரசேதஸின் மகன் மனு,(2) தெய்வீக பரத்வாஜர், தவசி கௌரசிரஸ் மற்றும் பிரம்மத்தை ஓதி, பிரமத்துக்கு அர்ப்பணிப்புடன் கூடிய அனைவரும் மன்னர்களின் கடமைகளைக் குறித்து உடன்படிக்கைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.(3) ஓ! அறவோரில் முதன்மையானவனே, அவர்கள் அனைவரும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பாதுகாப்பை வழங்கும் கடமையையே புகழ்ந்திருக்கின்றனர். ஓ! தாமரை இதழ்களைப் போன்றதும், தாமிர வண்ணம் கொண்டதுமான கண்களைக் கொண்டவனே, பாதுகாப்பை முயன்றடையும் வழிமுறைகளைக் குறித்துக் கேட்பாயாக.(4)

ஓ! யுதிஷ்டிரா, ஒற்றர்களையும், பணியாட்களையும் பணியமர்த்தல், அலட்சியமில்லாமல் அவர்களுக்குரியதைக் {கூலிகளைக்} கொடுப்பது, பிறர் நலத்தை எண்ணிப்பார்த்து வரிகளைத் தெளிவாக்குவது {அடைவது}, கணிக்க முடியாத அளவுக்கு (குடிமக்களிடம் இருந்து) காரணமில்லாமல் ஒருபோதும் எதையும் கைப்பற்றாமல் இருத்தல்,(5) (நிர்வாகக் காரியங்களைச் செயல்படுத்த) நேர்மையான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தல், வீரம், திறம், (தொழில் பரிவர்த்தனையில்) புத்திக்கூர்மை, உண்மை, மக்களின் நன்மையை நாடுவது, நியாயமான மற்றும் நியாயமற்ற வழிமுறைகளில் எதிரிக்கு மத்தியில் வேறுபாட்டையும், ஒற்றுமையின்மையையும் உண்டாக்குவது,(6) பழைய, அல்லது விழும் நிலையில் உள்ள கட்டடங்களைச் செப்பனிடுவது, சமயத்திற்குத் தகுந்தவாறு ஒழுங்கமைக்கப்பட்ட அபராதங்களையும், உடல்சார்ந்த தண்டனைகளை அளிப்பது,(7) நேர்மையாளர்களைக் கைவிடாதிருப்பது, நற்குடியில் பிறந்தோருக்குப் பணியையும், பாதுகாப்பதையும் அளிப்பது, சேமிக்க வேண்டியதைச் சேமிப்பது, புத்திக்கூர்மை கொண்டோரிடம் தோழமை கொள்வது,(8) படைவீரர்களை நிறைவு செய்வது, குடிமக்களைக் கண்காணிப்பது வணிகப் பரிமாற்றங்களில் நிலைமாறா உறுதியோடு இருப்பது, கருவூலத்தை நிறைப்பது,(9) நகரக் காவலர்களிடம் குருட்டு நம்பிக்கை வைக்காமலிருப்பது, பகை நகரக் குடிமக்களிடம் பற்றுறுதியை {விசுவாசத்தைக்} குலையச் செய்வது, எதிரி நாடுகளுக்கு மத்தியில் வாழும் நண்பர்களையும் கூட்டாளிகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வது,(10) பணியாட்களையும், அரசு அதிகாரிகளையும் கடுமையாகக் கண்காணிப்பது, நகரத்தைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வது, பணியாட்களை நம்பாமல் இருப்பது, உறுதிமொழிகளின் மூலம் எதிரிக்கு ஆறுதலளிப்பது,(11) கொள்கைவிதிகளில் உறுதியோடிருப்பது, செயல்பட ஆயத்தமாக இருப்பது, எந்த எதிரியையும் அலட்சியம் செய்யாதிருப்பது, தீயோரைக் கைவிடுவது ஆகியவையே {பாதுகாப்பை முயன்றடையும்} அந்த வழிமுறைகளாகும்.(12)

முயற்சியில் மன்னர்களின் ஆயத்தமானது அரச கடமைகளின் வேராகும். இது குறித்துப் பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். அவரால் பாடப்பட்ட வரிகளைக் கேட்பாயாக.(13) “முயற்சியாலேயே அமுதம் அடையப்பட்டது; முயற்சியாலேயே அசுரர்கள் கொல்லப்பட்டனர்; முயற்சியாலே இந்திரன் சொர்க்கம் மற்றும் பூமியின் அரசுரிமையை அடைந்தான்.(14) பேச்சில் வீரர்களை விட முயற்சியில் வீரன் மேன்மையானவனாவான். பேச்சில் வீரர்கள், முயற்சியில் வீரர்களை நிறைவு செய்து அவர்களை வழிபடுவார்கள்[1].(15) முயற்சியற்ற மன்னன், நுண்ணறிவைக் கொண்டவனாகவே இருந்தாலும், நஞ்சிழந்த பாம்பைப் போல எதிரிகளால் எப்போதும் வெல்லப்படுவான்.(16) பலங்கொண்ட ஒரு மன்னன், எதிரி எவ்வளவு பலவீனமாக இருப்பினும், அவனை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரே ஒரு தீப்பொறியால் காட்டுத்தீயை உண்டாக்க முடியும், ஒரே ஒரு துளி நஞ்சும் கொல்லக்கூடும்.(17) பகைவன் ஒரே ஒரு வகைப் படையுடன் கோட்டைக்குள் இருந்தால், பலமிக்கச் செழிப்பான மன்னனின் மொத்த நாட்டையும் அவனால் பீடிக்க முடியும்.(18)மன்னனின் இரகசியப் பேச்சுகள், வெற்றியை அடைய திரட்டப்படும் துருப்புகள், அவனது இதயத்தில் இருக்கும் கபட நோக்கங்கள், குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உண்டான அதே போன்ற நோக்கங்கள், (19) அவன் செய்யும், அல்லது செய்ய நினைக்கும் தீச்செயல்கள் ஆகியவை கள்ளங்கபடமற்ற தோற்றத்துடனே அவனால் {மன்னனால்} மறைக்கப்பட வேண்டும். தன் மக்களைத் தன் ஆளுகைக்குள் வைப்பதற்கு அவன் நியாயமாகச் செயல்பட வேண்டும்.(20) குறுகிய புத்தி கொண்டோரால் பரந்த பேரரசின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. மென்மையான மன்னனால், உழைப்பைக் கோரும் மேன்மையான தகுதியை அடைய முடியாது.(21) இறைச்சித் துண்டைப் போல அனைவராலும் பேராசை கொள்ளப்படும் நாட்டைக் கள்ளங்கபடமில்லாத, எளிமையான நடத்தையுடன் ஒருபோதும் காக்க முடியாது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ கள்ளங்கபடமில்லாமலும், கபடத்தோடும் என இரு வகைகளிலும் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.(22) குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒரு மன்னன் ஆபத்தில் விழ நேர்ந்தால் அவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். அதுவே மன்னர்களின் நடத்தையாக இருக்க வேண்டும்.(23) மன்னர்களின் கடமைகளைக் குறித்த ஒரு பகுதியை மட்டும் நான் இப்போது உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ஓ! குருக்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, நீ அறிய விரும்புவனவற்றை என்னிடம் சொல்வாயாக” என்றார் {பீஷ்மர்}”.(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், “சிறப்புமிக்க வியாசர், தேவஸ்தானர், அஸ்வர், வாசுதேவன் {கிருஷ்ணன்}, கிருபர், சாத்யகி, சஞ்சயன் ஆகியோர்(25) முற்றாக மலர்ந்த மலர்களுக்கு ஒப்பான முகங்களுடன் மகிழ்ச்சியால் நிறைந்து, “சிறப்பு! சிறப்பு!”” என்று சொல்லி மனிதர்களில் புலியும், அறவோரில் முதன்மையானவருமான பீஷ்மரைத் துதித்தனர்.(26) அப்போது குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன் உற்சாகமற்ற இதயத்துடனும், கண்ணீரால் குளித்த கண்களுடனும், மென்மையாகப் பீஷ்மரின் பாதங்களைத் தீண்டி,(27) “ஓ! பாட்டா, சூரியன் பூமியிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டு இன்று (இப்போது) மறையப் போகிறான் என்பதால் என் ஐயங்களை நான் நாளை கேட்கிறேன்” என்று சொன்னான்.(28) பிறகு, கேசவன், கிருபர், யுதிஷ்டிரன் மற்றும் பிறர், (அங்கே கூடியிருந்த) பிராமணர்களை வணங்கி, அந்தப் பெரும் ஆற்றின் மைந்தரை வலம் வந்து, உற்சாகமாகத் தங்கள் தேர்களில் ஏறினர்.(29) சிறந்த நோன்புகளை நோற்கும் அவர்கள் அனைவரும் திருஷத்வதியின் ஓடையில் {ஆற்றில்} நீராடினர். தங்கள் முன்னோருக்கு நீர்க்காணிக்கைகள் அளித்த அந்த எதிரிகளை எரிப்பவர்கள், அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதி, வேறு பிற மங்கலச் செயல்களையும் செய்து, மாலை சந்தியை உரிய சடங்குகளுடன் துதித்து, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(30)

பிரம்மனின் தண்டநீதி! – சாந்திபர்வம் பகுதி – 59அ-இரண்டாவது நாளாக பீஷ்மரிடம் போதனை கேட்கச் சென்ற பாண்டவர்களும், யாதவர்களும்; அரசன் என்ற சொல் உண்டானது எவ்வாறு, அரசனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அரசோ மன்னனோ அற்றிருந்த உலகில் மெல்ல அறம் வீழத் தொடங்கியது; அதை நிலைநிறுத்த தண்ட நீதியைத் தொகுத்த பிரம்மதேவன்; பிரம்மதேவன் தொகுத்த தண்டநீதியின் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் விவரித்த பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அடுத்த நாள் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி காலைச் சடங்குகளைச் செய்த பாண்டவர்களும், யாதவர்களும், கோட்டைகளுடன் கூடிய நகரங்களுக்கு ஒப்பான தங்கள் தேர்களில் ஏறி (பீஷ்மர் கிடந்த இடத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(1) குருவின் களத்திற்கு {குருக்ஷேத்திரத்திற்குச்} சென்று, பாவமற்ற பீஷ்மரை அணுகிய அவர்கள், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} இரவை மகிழ்ச்சியாகக் கழித்தாரா என்பதை விசாரித்தனர்.(2) முனிவர்கள் அனைவரையும் வணங்கி, பதிலுக்கு அவர்களால் ஆசி கூறப்பட்ட இளவரசர்கள், பீஷ்மரைச் சுற்றி அமர்ந்தனர்.(3) அப்போது பெரும் சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், முறையாகப் பீஷ்மரை வணங்கிய பிறகு, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(4)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா {பீஷ்மரே}, ஓ! பாரதரே, பூமியில் {தற்போது} பயன்படுத்துவதைப் போல ராஜன் என்ற சொல் எப்போதிருந்து உண்டானது? ஓ! எதிரிகளை எரிப்பவரே, இதை எனக்குச் சொல்வீராக.(5) பிறரைப் போலவே, கரங்கள், தோள்கள், கழுத்து, புத்தி, புலன்களைக் கொண்டவனும், பிறரைப் போலவே ஒரே வகை இன்ப துன்பங்களை அனுபவிப்பவனும், உலகில் உள்ள பிறரைப் போலவே முதுகு, வாய் மற்றும் வயிற்றைக் கொண்டவனும்,(6) பிறரைப் போலவே உயிர் நீர், எலும்புகள், மஜ்ஜை, சதை, குருதி ஆகியவற்றைக் கொண்டவனும், பிறரைப் போலவே மூச்சை உள்ளிழுத்து, வெளிவிடுபவனும், உயிர் மூச்சைக் கொண்டவனும், பிற மனிதர்களைப் போலவே உடல்களைக் கொண்டவனும்,(7) பிறப்பு, இறப்பு ஆகியவை ஒத்திருப்பவனும், உண்மையில் மனிதப் பண்புகள் அனைத்திலும் பிறருக்கு ஒப்பாகவும் இருக்கும் ஒரு {சாதாரண} மனிதனான மன்னன், என்ன காரணத்தினால், உலகில் பெரும் நுண்ணறிவும், துணிச்சலும் மிக்கப் பல மனிதர்களை ஆள்கிறான்?(8) துணிச்சல் மிக்கவர்களும், சக்தி மிக்கவர்களும், நன்னடத்தைக் கொண்ட உயர்குடி பிறப்பாளர்களும் நிறைந்த இந்தப் பரந்த உலகை ஒரு மனிதன் ஆள்வது எவ்வாறு? மனிதர்கள் அனைவரும் அவனது ஆதரவை அடைய முயல்வது ஏன்?(9) ஒரு மனிதன் மகிழ்ச்சியடைந்ததும், மொத்த உலகும் மகிழ்ச்சியடைவதும், ஒரு மனிதன் தொல்லைக்குட்பட்டால் மொத்த உலகும் தொல்லைக்குள்ளாவதும் ஏன்?(10) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் இதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இது குறித்து என்னுடன் முழுமையாக உரையாடுவீராக.(11) ஓ! மன்னா, தேவனைப் போல மொத்த உலகமும் ஒருவனை வணங்குவது காணப்படுவதால் இவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் இல்லாமல் இருக்காது” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களில் புலியே, கிருத யுகத்தில் முதலில் அரசுரிமை தோன்றியது எவ்வாறு என்பதைக் குவிந்த கவனத்துடன் விரிவாகக் கேட்பாயாக.(13) முதலில் அரசுரிமையோ, மன்னனோ, தண்டனையோ, தண்டனை வழங்குபவனோ ஏதும், எவரும் கிடையாது. மனிதர்கள் அனைவரும் நீதியுடன் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டனர்.(14) ஓ! பாரதா, இவ்வாறு ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு அவர்கள் வாழ்ந்து வரும் போது, (சில காலத்திற்குப் பிறகு) அந்தப் பணி வலிநிறைந்ததாக இருப்பதைக் கண்டனர். பிறகு அவர்களது இதயங்களைப் பிழைகள் பீடிக்கத் தொடங்கின.(15) ஓ! இளவரசே, பிழையால் பீடிக்கப்பட்ட மனிதர்களின் அறிவும் குழப்பமடைந்த பிறகு அறம் வீழத் தொடங்கியது.(16) ஓ! பாரதர்களின் தலைவா, அறிவு மங்கி, மனிதர்கள் பிழைக்கு ஆட்பட்ட போது, அவர்கள் அனைவரும் பேராசை கொண்டோராக மாறினர்.(17) தங்களிடம் இல்லாத பொருட்களை மனிதர்கள் அடைய விரும்பியதால், மற்றொரு ஆசையான காமம் அவர்களைப் பற்றியது.(18) அவர்கள் காம வசப்பட்டபோது கோபம் என்ற பெயர் கொண்ட மற்றொரு ஆசை விரைவில் அவர்களை வீழ்த்தியது. கோபவசப்பட்டதும், அவர்கள் அனைவரும் எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதை மறந்தனர்.(19) கட்டுப்பாடில்லாத காம ஈடுபாடு பெருகியது. மனிதர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்ததைப் பேசத் தொடங்கினர். தூய மற்றும் தூய்மையற்ற உணவு, அறம் மற்றும் மறம் ஆகியவற்றுக்கிடையான வேறுபாடுகள் காணாமல் போயின[1].(20)(ஆதியில் கிருதயுகத்தில் அரசனும், ராஜ்யமும், தண்டமும், தண்டிப்பவனுமில்லாமல் பிரஜைகளனைவரும் தர்மத்தாலேயே ஒருவரையொருவர் ரக்ஷித்துவந்தார்கள். ஏ! பாரத! அவ்விதம் தர்மத்தால் ஒருவருக்கொருவர் ரக்ஷிக்கப்பட்டு வரும் மனிதர்கள் மிக்கத் தைன்யத்தை அடைந்தார்கள். சிரமமடைந்த அந்த மனிதர்களை அவிவேகம் பிடித்துக் கொண்டது. அந்த மனிதர்கள் மோகத்துக்கு வசப்பட்டார்கள். மனிதஸ்ரேஷ்டனே! அவிவேகத்தால் அறிவு குறைந்தவுடன் அவர்களுடைய தர்மம் நாசமடைந்தது. பரதஸ்ரேஷ்டனே! தர்மக்குறைவாலும், அறிவின் குறைவாலும் மோகத்திற்கு வசப்பட்ட மனிதர்கள் யாவரும் அப்பொழுது தம்மிடமில்லாத பொருளை அடைய வேண்டுமென்னும் லோபமுள்ளவர்களானார்கள். பிரபுவே! விருப்பமுள்ள வஸ்துக்களை அடைய முயற்சி செய்ய வேண்டுமென்னுங்காமம் லோபத்திற்குள்ளான மனிதர்களைத் தன் வசமாக்கிக் கொண்டது. காமத்திற்குள்ளான அந்த ஜனங்களை ராகமென்னும் போகவிடாயும் கைப்பற்றிக் கொண்டது. இவ்விதம் மேன்மேலும் ஆசைபிடித்து மனிதர்கள் யாவரும் இன்னது செய்யத்தக்கது, இன்னது செய்யத்தகாததென்னும் பகுத்தறிவற்றவர்களானார்கள். ஓ! அங்ஙனமே சேரத்தகாத மடந்தையர்களைச் சேர்ந்தார்கள்; பேசத்தக்கது பேசத்தகாதது புஜிக்கத்தக்கது, புஜிக்கத்தகாதது, குற்றமுள்ளது, குற்றமில்லாதது ஆகிய இவையனைத்தையும் கைப்பற்றினார்கள். இம்மானிடவுலகம் இப்படித் தர்மவரம்பு அற்றுத் தடுமாறுதலும், வேதம் அக்காலத்தில் ஒழிவடைந்தது”)

மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் குழப்பம் ஏற்பட்டபோது, வேதங்கள் மறைந்தன. வேதங்கள் மறைந்ததும், அறம் காணாமல் போனது.(21) வேதங்களும், அறமும் தொலைந்ததும், தேவர்கள் அச்சமடைந்தனர். ஓ! மனிதர்களில் புலியே, அச்சமடைந்த தேவர்கள் பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள்.(22) அண்டத்தின் தெய்வீகப் பெரும்பாட்டனை நிறைவு செய்த தேவர்கள், துயரால் பீடிக்கப்பட்டு, கூப்பிய கரங்களுடன் அவரிடம்,(23) “ஓ! தேவா, பேராசை மற்றும் குற்றங்களில் ஈடுபடும் உலகின் மனிதர்களால் நித்தியமான வேதங்கள் பீடிக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.(24) ஓ! உயர்ந்த தலைவா, வேதங்கள் தொலைந்ததன் மூலம் அறமும் தொலைந்திருக்கிறது. ஓ! மூவுலகங்களின் தலைவா, இதன் காரணமாக நாங்கள் மனிதர்களின் அளவுக்குக் கீழிறங்கப் போகிறோம்.(25) மனிதர்கள் மேல்நோக்கிப் பொழிவதும், நாங்கள் கீழ்நோக்கிப் பொழிவதும் இதுவரை வழக்கமாக இருந்தது. எனினும், மனிதர்களுக்கு மத்தியில் பக்திச் சடங்குகள் அனைத்தும் நின்று போனதன் விளைவால், பெரும் துயரம் எங்களுடையதானது[2].(26) ஓ! பெரும்பாட்டனே, உமது சக்தியால் படைக்கப்பட்ட இந்த அண்டம் அழிவடையாமல் இருக்க, எங்களுக்கு நன்மையானதை நினைப்பீராக” என்று கேட்டனர்.(27)(மனிதர்கள், வேள்வி நெருப்புகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கைகளாக ஊற்றி தேவர்களுக்கு உணவூட்டினர். தேவர்கள் அந்தக் காணிக்கைகளை உண்டு, மனிதர்களின் வாழ்வுக்கு ஆதாரமாகப் பூமியில் மழையைப் பொழிந்தனர். எனவே, மனிதர்கள் மேல்நோக்கிப் பொழிந்தனர், தேவர்கள் கீழ்நோக்கிப் பொழிகின்றனர் என்று சொல்லப் படுகிறது”)

தான்தோன்றியான அந்தத் தெய்வீகத் தலைவன் {பிரம்மன்} இவ்வாறு சொல்லப்பட்டதும், அவன் அவர்களிடம், “அனைவருக்கும் எது நன்மையைப் பயக்குமென நான் சிந்திக்கிறேன். தேவர்களில் முதன்மையானோரே, உங்கள் அச்சம் விலகட்டும்” என்றான்.(28) பிறகு அந்தப் பெரும்பாட்டன், தன் நுண்ணறிவைக் கொண்டு, நூறாயிரம் பாடங்களை {ஒரு லட்சம் அத்தியாயங்களைக்} கொண்ட ஓர் ஆய்வை {சாஸ்திரத்தைத்} தொகுத்தான். அஃதில் அறம், பொருள், மற்றும் இன்பம் ஆகியன விரிவாக உரைக்கப்பட்டிருந்தன.(29) அந்தத் தான்தோன்றி அவற்றை {திரிவர்க்கம் என்றழைக்கப்படும்} மூன்று திரட்டுகளாக அமைத்திருந்தான். மேலும் அவன், இவற்றிலிருந்து பொருளும், பண்புகளும் வேறுபட்ட வீடு {மோட்சம்} என்றழைக்கப்படும் நான்காவது திரட்டையும் அமைத்தான்.(30) நல்ல குணம் {சத்வ குணம்}, ஆசை குணம் {ரஜோ குணம்}, இருள் குணம் {தாமச குணம்} என்ற பண்புகளின் படி வீடும் {மோட்சமும்} மூன்று திரட்டுகளாகவும், மற்றொன்றும் (நான்காவதாகப் பேரின்பத்தில், அல்லது இவ்வுலகிலோ, மறுவுலகிலோ வெகுமதி கிடைக்குமென்ற நம்பிக்கையில்லாமல் கடமை பயில்வது) அதில் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாத்தல், வளர்ச்சி மற்றும் அழிவு ஆகியவற்றைக் கொண்ட தண்டனையோடு தொடர்புடைய மேலும் மூன்று திரட்டுகளும் அதில் அமைக்கப்பட்டிருந்தன.[3](31)(“லக்ஷம் அத்தியாயமுள்ள சாஸ்திரத்தைத் தமது புத்தியால் இயற்றினர். அதில் த்ரிவர்க்கமென்று பிரஸித்தி பெற்ற அறம்பொருளின்பங்கள் அவரால் விரிவாகவுரைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றைத் தவிர நான்காவதாக மோக்ஷமென்பது வேறென்றும் அதன் காரணமும் பயனும் வேறென்றும் ஸத்வம், ரஜஸ், தமஸென்னும் அதைச் சேர்ந்த திரிவர்க்கம் வேறென்றும் அதில் சொல்லப்படும். ஸமநிலை, வளர்ச்சி, குறையென்னும் த்ரிவர்க்கம், தண்டநீதிக்குரியதாகும்)

மனிதர்களின் இதயங்கள் {மனங்கள்}, இடம், காலம், வழிமுறைகள், கருத்தினைக் காட்டும் செயல்கள், கூட்டணிகள், காரணங்கள் ஆகிய மேலும் ஆறு திரட்டுகளும் அதில் அமைக்கப்பட்டிருந்தன.(32) மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் அறச்சடங்குகள், அறிவு, வாழ்வைத் தாங்குவதற்கு அவசியமான செயல்கள் (உழவு மற்றும் வணிகம் போன்றவை) ஆகியவையும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, தண்டனை விதிக்கும் சட்டங்களும் {தண்டநீதியும்} அதில் விதிக்கப்பட்டிருந்தன.(33) ஓ! மன்னா, அமைச்சர்களுடன் நடந்து கொள்ளும் முறை, ஒற்றர்கள், இளவரசர்களின் அறிகுறிகள், பல்வேறு வழிமுறைகளுக்கான இரகசிய முகவர்கள், தூதர்கள், பிறவகை முகவர்கள் ஆகியவையும்,(34) மனவேற்றுமை நீக்கல் {சமரசம்}, முரண்களில் ஒத்திசைவு, கொடைகள், தண்டனை, ஐந்தாவதாகப் பொறுமை ஆகியவை அதில் விரிவாக முழுமையாகச் சொல்லப்பட்டிருந்தன.(35) அனைத்து வகையான ஆழமான ஆய்வுகள், வேற்றுமையை உண்டாக்கும் ஆலோசனைகள், ஆய்வின் பிழைகள், வெற்றியின் விளைவுகள் அல்லது ஆலோசனைகளின் தோல்விகள், அச்சமூட்டவது, பதவிச் செல்வாக்குக் கொடுப்பது, செல்வத்தைக் கொடையளிப்பது ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட்ட மூவகையிலான நல்ல, மத்திம மற்றும் தீய ஆய்வுகள் ஆகியன அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(36,37)

பயணங்கள் செய்வதற்கான நால்வகைக் காலங்கள், நேர்மையாக அடையப்பட்டவை, செல்வத்தால் வெல்லப்பட்டவை, வஞ்சகமாக அடையப்பட்டவை என்ற மூன்று வகை வெற்றிகள் ஆகியன அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(38) (அமைச்சர்கள், நாடு, கோட்டை, படை மற்றும் கருவூலம் ஆகிய) ஐந்து திரட்டுகளின் மூன்று வகைகளிலான தீய, மத்திம, மற்றும் நல்ல பண்புகளும் அதில் சொல்லப்பட்டிருந்தன.(39) வெளிப்படையான மற்றும் மறைமுகமான இருவகைத் தண்டனைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. எட்டு வகையான வெளிப்படை தண்டனைகளும், எட்டு வகையான மறைமுகத் தண்டனைகளும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(40) ஓ! பாண்டுவின் மகனே, ஓ! கௌரவ்யா {யுதிஷ்டிரா}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பணிக்குழு, (படைகளில்) ஊதியம் வாங்கும் ஊழியர்கள், போர்ப்பகுதிகள் இருக்கும் நாட்டில் இருந்து கொள்ளப்படும் வழிகாட்டிகள் ஆகியோர் வெளிப்படையான தண்டனையின் கருவிகள் அல்லது வெளிப்படையாகச் செயல்படும் சக்திகள் ஆவர்.(41) {மறைமுகத் தண்டனை என்பது} உடை உடுத்துதல், உணவு மற்றும் மந்திரங்கள் ஆகிய மூவகைப் பொருட்களைப் பொறுத்தவரையும் அசையும் மற்றும் அசையாத நஞ்சை பயன்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதும் குறிப்பிடப்படுகிறது[4]. எதிரிகள், கூட்டாளிகள், நடுநிலையாளர்கள் குறித்தும் இதில் விளக்கப்படுகிறது.(42,43)(ரஹஸ்யமான தண்டனை ஸர்ப்ப முதலிய ஜங்கவிஷம், வற்சநாப முதலிய ஸ்தாவர விஷம் மற்றும் பல விஷப் பொடிகள், ஆடையாபரண முதலி வஸ்துக்களிலும், அன்ன முதலிய புஜிக்கத்தக்கவைகளிலும், பிரயோகிக்கத்தக்க முறைகள் மற்றும் ஆபிசாரங்கள் எனப் பலவிதமென்றும் விரிவாகக் கூறப்படுகின்றன”விளையாட்டுச் சண்டையிலும், சூதாட்டத்திலும், நம்பிக்கையுடன் கூடியதும் ஒன்பதாவது உபாயமென்று வித்வான்களால் சொல்லப்பட்டதுமான கள்ளத்தனமும், அறம்பொருளின்பங்களைக் கெடுப்பதும் இஷ்டம் அனிஷ்டமென்னும் இவ்விரு விஷயங்களிலுமுள்ளதுமான உபேக்ஷையும், இந்திரஜால முதலிய மாயையும், சுபாசுபங்களைக் குறிப்பிடும் பல சகுனங்களும், வேஷத்தை அடைந்து பகையாளிகளிடம் உபயோக்கத் தக்க டம்பமும், வஞ்சகமும், ஸித்த தோஷத்தால் கெடுப்பதும், சேஷ்டையில்லாமல் செய்வதும் அதில் சொல்லப்படுகின்றன.)

(நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் பிறவற்றைச் சார்ந்து பயணப்படும்) சாலைகளின் பல்வேறு பண்புகள், (முற்றுகை இடப்படும்) மண்ணின் தன்மைகள், தற்பாதுகாப்பு, தேர்கள், போருக்கான பிற உபகரணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் கண்காணிப்பு, அவற்றை {தேர்கள் மற்றும் போர் உபகரணங்களைப்} பயன்படுத்துதல்,(44) மனிதர்கள், யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, மேம்படுத்தும் பல்வேறு வழிமுறைகள், பல்வேறு வகையான போர் அணிவகுப்புகள் {வியூகங்கள்}, திட்டங்கள், போர் நகர்வுகள் {அசைவுகள்},(45) தீமையை முன்னறிவிக்கும் கோள்களின் சந்திப்புகள், (நிலநடுக்கங்கள் போன்ற) கடும்துயரை விளைவிக்கும் மேற்பார்வைத் தேர்வாய்வுகள், போர்முறைகளில் மற்றும் பின்வாங்குவதில் திறன் நிறைந்த வழிமுறைகள், ஆயுதங்களின் அறிவு, அவற்றை உரிய முறையில் பாதுகாத்தல்,(46) துருப்புகளின் ஒழுங்கின்மை, அவற்றை {துருப்புகளின் ஒழுங்கின்மையைக்} களைவது, படைக்கு மகிழ்ச்சியையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கவல்ல வழிமுறைகள், நோய்கள், துயர்மிகுந்த ஆபத்தான காலங்கள், போரில் காலாட்படையினரை வழிநடத்தும் அறிவு,(47) ஆபத்தை அறிவிக்கும் ஒலிமுறைகள், குறிப்பாணைகள், கொடிமரங்களை வெளிப்படுத்தி எதிரியை அச்சமூட்டுவது, கள்வர்கள் மற்றும் கடும் காட்டு இனக்குழுக்கள், நெருப்பை வீசுபவர்கள், நஞ்சூட்டுபவர்கள், மோசடி செய்பவர்கள் ஆகியவர்களின் மூலம் எதிரியின் நாட்டைப் பீடிக்கும் பல்வேறு வழிமுறைகள், பகைவர் படையின் முக்கிய அதிகாரிகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை உண்டாக்குவது, பயிர்களையும், செடிகளையும் வெட்டி வீழ்த்துவது,(48,49) எதிரி யானைகளின் திறனை அழிப்பது, பீதியை உண்டாக்குவது, படையெடுத்துச் செல்பவனிடம் நல்ல எண்ணம் கொண்ட எதிரியின் குடிமக்களைக் கௌரவிப்பது, எதிரிக்கு நம்பிக்கையளிப்பது,(50) அரசின் ஏழு அடிப்படைத் தேவைகளின்[5] அழிவு, வளர்ச்சி மற்றும் ஒற்றுமை, (எதிர்பார்க்கப்படும்) வேலைத்திறன், அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகள், நாட்டை விரிவுபடுத்தும் வழிமுறைகள்,(51) பகைவரின் ஆட்சிப்பகுதிகளில் வாழும் மக்களுடைய நம்பிக்கையை வெல்லும் வழிமுறைகள், தண்டனை, பலமிக்கவர்களை அழிக்கும் முறை,(52) நீதியைச் சரியாக நிர்வகிக்கும் முறை, தீயவர்களை அழிப்பது, மற்போர், கணையேவுதல், ஆயுதங்களை வீசுதலும், ஏவுதலும், கொடைகளை அளிக்கும் வழிமுறைகள், தேவையான பொருட்களைச் சேமிக்கும் வழிமுறை,(53) உணவில்லாதவர்களுக்கு உணவூட்டுவது, உணவளிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பது, சரியான காலத்தில் செல்வத்தைக் கொடையளிப்பது, வியசனங்கள் என்றழைக்கப்படும் தீமைகளில் இருந்து விடுபட்டு இருப்பது,(54) மன்னர்களின் பண்புகள், படை அதிகாரிகளின் தகுதிகள், மூன்று தேவைகளின் மூலங்கள், அவற்றின் தகுதிகள் மற்றும் குறைகள்,(55) பல்வேறு வகையான தீய நோக்கங்கள், ஆதரவில் வாழ்வோரின் நடத்தை, அனைவரிடமும் ஐயங்கொள்வது, அலட்சியத்தைத் தவிர்த்தல்,(56) அடையாத பொருட்களை அடைவது, ஏற்கனவே அடையப்பட்ட பொருட்களை மேம்படுத்துவது, அவ்வாறு மேம்படுத்தப்பட்டவற்றைத் தகுந்த நபர்களுக்குக் கொடையளிப்பது,(57) பக்தி நோக்கங்கள், இன்ப நுகர் பொருட்களை அடைவது, ஆபத்து மற்றும் துயரை அகற்றுவது ஆகியவற்றுக்காகச் செல்வத்தைச் செலவு செய்வது, ஆகியவை குறித்தும் அந்த ஆய்வில் {பிரம்மனின் சாத்திரத்தில்} குறிப்பிடப்பட்டிருந்தது.(58)

ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, கோபத்தில் இருந்து உண்டாகுபவையும், காமத்திலிருந்து உண்டாகுபவையுமான பத்து வகைக் கடும் தீமைகளும் அந்த ஆய்வில் குறிப்பிட்டப்பட்டிருந்தன.(59) காமத்திலிருந்து பிறப்பதாகக் கல்விமான்களால் சொல்லப்படும் நான்கு வகைத் தீமைகள், வேட்டை, சூது, குடி, பாலியல் ஈடுபாடு ஆகியன எனத் தான்தோன்றியின் {பிரம்மனின்} அந்தப் படைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.(60) கடுஞ்சொல், கொடூரத்தனம், கடும் தண்டனை, உடலுக்கு வலியை அளிப்பது, தற்கொலை, தன் நோக்கங்களையே தடுப்பது ஆகிய இந்த ஆறு வகைக் குற்றங்களும் கோபத்தில் இருந்து பிறக்கின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[6].(61) பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் அதில் விளக்கப்பட்டிருந்தன. பகைவரின் ஆட்சிப்பகுதிகளைப் பாழாக்குதல், எதிரிகளைத் தாக்குவது, எளிதில் அடையாளங்காணக்கூடிய நிலக்குறியீடுகளை {நிலத்தின் சின்னங்களை} அழித்தல் மற்றும் நீக்கல், பிற குறிப்புகள்,(62) (எதிரிகளும், எதிரிகளின் குடிமக்களும் நிழலில் புத்துணர்ச்சி பெறாமல் இருக்க) பெரிய மரங்களை வெட்டி வீழ்த்துவது, கோட்டைகளை முற்றுகையிடுவது, உழவைக் கண்காணிப்பது, பிற பயனுள்ள செயல்பாடுகள், (துருப்புகளுக்குத்) தேவையான பொருட்கள், ஆடைகள் மற்றும் துணிகளை) சேகரிப்பது, அவற்றை உற்பத்தி செய்யும் சிறந்த வழிமுறைகள் ஆகியன அனைத்தும் அதில் விளக்கப்பட்டிருந்தன.(63)

ஓ! யுதிஷ்டிரா, பனவங்கள், ஆனகங்கள், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது, (ரத்தினங்கள், விலங்குகள், நிலங்கள், ஆடைகள், பெண் பணியாட்கள், தங்கம் ஆகிய) ஆறுவகைப் பொருட்கள், (ஒருவன் தனக்காக) அவற்றை அடையக்கூடிய வழிமுறைகள், (எதிரிக்குத் தீங்கிழைப்பதற்காக) அவற்றை அழிப்பது,(64) புதிதாக அடையப்பட்ட ஆட்சிப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவது, நல்லோரைக் கௌரவிப்பது, கல்விமான்களுடன் நட்பை வளர்ப்பது, கொடைகள் மற்றும் ஹோமம் போன்ற அறச்சடங்குகளின் விதிகளில் ஞானம் கொள்வது,(65) மங்கலப் பொருட்களைத் தீண்டல், உடலைக் கவனித்தல் மற்றும் அலங்காரம், உணவைச் சமைப்பது மற்றும் பயன்படுத்தும் பாங்கு, கடவுள்பற்றுடன் கூடிய நடத்தை,(66) ஒரு வழியைப் பின்பற்றிச் செழிப்பை அடைவது, பேச்சில் உண்மை, பேச்சில் இனிமை, விழாக்காலங்கள் மற்றும் சமூக அவைகளில் செய்யப்பட வேண்டிய செயல்கள், வீட்டில் செய்யப்பட வேண்டிய செயல்கள்,(67) சந்திக்கும் இடங்கள் அனைத்திலும் நபர்கள் செய்யக்கூடிய வெளிப்படையான, மறைமுகமான செயல்கள், மனிதர்களின் நடத்தையை நிலையாகக் கண்காணிப்பது, பிராமணத் தண்டனைக்கு எதிர்ப்பு, நியாயமான தண்டனைகளைக் கொடுப்பது, உறவுமுறை மற்றும் தகுதியின் அடிப்படையில் சார்ந்திருப்போருக்குக் கௌரவங்களை அளிப்பது,(68,69) குடிமக்களைப் பாதுகாப்பது, நாட்டை விரிவாக்கும் வழிமுறைகள், பனிரெண்டு மன்னர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு மன்னன், நால்வகை எதிரிகள், நால்வகைக் கூட்டாளிகள் மற்றும் நால்வகை நடுநிலைவாதிகள் ஆகியவர்களைப் பொறுத்தவரை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகள்,(70) பாதுகாப்பு, பயிற்சி, உடல் தேர்ச்சி, குறிப்பிட்ட நாடுகளின் நடைமுறைகள், இனங்கள் மற்றும் குடும்பங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆகியவற்றைக் குறித்த எழுபத்திரண்டு {72} அறச் செயல்கள்[7] ஆகியனவும் அந்தப் படைப்பில் முறையாக விளக்கப்பட்டிருந்தன.(71)ஓ! அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே {யுதிஷ்டிரனே}, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவையும் அதில் விளக்கப்பட்டிருந்தது. பல்வேறு ஈட்டல் முறைகள், பல்வேறு வகைச் செல்வங்களின் மீது விருப்பம்,(72) உழவின் முறைகள், வருவாய்க்கான முக்கிய ஊற்றாக அமையும் பிற செயல்முறைகள், மாயைகளை உண்டாக்கவும், பயன்படுத்தவும் கூடிய பல்வேறு வழிமுறைகள், {ஏரி, குளம் போன்று} தேங்கும் நீரைக் கெடுக்கும் வழிமுறைகள் ஆகியனவும் அதில் விதிக்கப்பட்டிருந்தன.(73) ஓ! மனிதர்களில் புலியே, அறம், நேர்மை ஆகிய பாதைகளிலிருந்து மனிதர்கள் வழுவாமல் இருக்கும் வழிமுறைகள் அனைத்தும் அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(74)

மிக உயர்ந்த அந்த ஆய்வைத் தொகுத்த பிறகு, அந்தத் தெய்வீகத் தலைவன் {பிரம்மன்}, இந்திரனின் தலைமையிலான தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(75) “உலகின் நன்மைக்காகவும் (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்று திரட்டுகளை நிறுவுவதற்காகவும், இந்த அறிவியலை {சாத்திரத்தை} அழகிய உரைநடையில் தொகுத்திருக்கிறேன்.(76) தண்டனையின் துணையால் இந்த அறிவியல் உலகத்தைப் பாதுகாக்கும். இந்த அறிவியலானது, வெகுமதிகள் மற்றும் தண்டனைகளைச் சொல்லி மனிதர்களுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும்.(77) மனிதர்கள் தண்டனையின் மூலமே (தங்கள் இருப்புக்கான பொருட்களை அடைய) வழிநடத்தப்படுகிறார்கள், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், தண்டனையே அனைத்துக்கும் வழிவகுக்கிறது, அல்லது அனைத்தையும் ஆட்சி செய்கிறது, எனவே, இந்த அறிவியலானது தண்டநீதி (தண்டனையின் அறிவியல்) என மூவுலகங்களிலும் அறியப்படும்.(78) ஆறு திரட்டுகளின்[8] பண்புகள் அனைத்தையும் விவரிக்கும் இந்த அறிவியல், உயர் ஆன்ம மனிதர்களால் எப்போதும் பெரிதாக மதிக்கப்படும். அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவை அனைத்தும் இதில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன” {என்றான் பிரம்மன்}.(79)

வேனனின் மகன் பிருது! – சாந்திபர்வம் பகுதி – 59ஆ-சிவன், இந்திரன், பிருஹஸ்பதி மற்றும் சுக்கிராச்சாரியரால் சுருக்கப்பட்ட பிரம்மனின் தண்டநீதி; உலகில் உள்ள மனிதர்களை ஆள ஒரு மன்னனைக் கொடுக்கும்படி விஷ்ணுவிடம் வேண்டிய தேவர்கள்; விரஜஸை உண்டாக்கிய விஷ்ணு; அதிபலனுக்கும், மிருத்யுவின் மகளான சுநீதைக்கும் பிறந்த வேனன்; வேனனைக் கொன்ற முனிவர்கள்; வேனனின் தொடையில் இருந்து உண்டான நிஷாதர்களும், மிலேச்சர்களும்; வேனனின் வலக்கரத்தில் இருந்து உண்டான பிருது; பூமியைச் சமமாக்கிய மன்னன் பிருது; ராஜன், க்ஷத்திரியன் ஆகிய சொற்கள் உண்டானதன் வரலாறு; பிருதுவின் பெருமை; தேவர்களுக்கு நிகராக மன்னன் மதிக்கப்படுவதற்கான புதிராதிக்கம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “அதன் {பிரம்மன் தண்ட நீதியைத் தொகுத்த} பிறகு, தெய்வீகமானவனும், அகன்ற கண்களைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அருள் அனைத்தின் இருப்பிடமும், உமையின் தலைவனுமான சிவன், அதை முதலில் கற்று, தேர்ச்சி பெற்றான்.(80) இருப்பினும், அந்தத் தெய்வீக சிவன், படிப்படியாகக் குறைந்து வந்த மனிதனின் வாழ்நாளைக் கருத்தில் கொண்டு, பிரம்மனால் தொகுக்கப்பட்டதும், முக்கியமான கருத்துகளைக் கொண்டதுமான அந்த அறிவியலைச் சுருக்கினான்[1].(81) பத்தாயிரம் {10,000} பாடங்களைக் கொண்ட வைசாலாக்ஷம் என்றழைக்கப்பட்ட அந்தச் சுருக்கம், பிரம்மனுக்கு அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் தவத்தகுதி கொண்டவனுமான இந்திரனால் பெறப்பட்டது.(82) அந்தத் தெய்வீக இந்திரனும் அந்த ஆய்வை ஐயாயிரம் {5,000} பாடங்களைக் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பாஹுதந்தகம் என்று அழைத்தான்.(83) அதன்பிறகு பலமிக்கவரும், நுண்ணறிவு கொண்டவருமான {தேவகுரு} பிருஹஸ்பதி, அந்த ஆய்வைக் கொண்ட படைப்பை மூவாயிரம் {3,000} பாடங்கள் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பார்ஹஸ்பத்தியம் என்றழைத்தார்.(84) அடுத்ததாக, யோகத்தின் ஆசானும், பெரும் புகழைக் கொண்டவரும், அளவிலா ஞானம் கொண்டவருமான {அசுர குரு} கவி {சுக்கிரன்}, அந்தப் படைப்பை ஆயிரம் {1000} பாடங்களைக் கொண்டதாக மேலும் சுருக்கினார்.(85) மனிதனின் வாழ்நாள் காலத்தின் குறைவையும், (அனைத்திடமும் காணப்படும்) பொதுவான குறைவையும் கருத்தில் கொண்டே அந்தப் பெரும் முனிவர்கள் அந்த அறிவியலை இவ்வாறு சுருக்கினர்.(86)

பிறகு தேவர்கள், உயிரினங்களின் தலைவனான விஷ்ணுவை அணுகி, அவனிடம், “ஓ! தேவா, உலகின் மனிதர்களுக்கு மத்தியில் உள்ளோர் அனைவரிலும் எவன் மேன்மையடையத்தக்கவனோ {எவன் எஞ்சியிருப்போரனைவரையும் ஆள்வானோ} அவனைக் குறிப்பிடுவீராக” என்றனர்.(87) பலமிக்கவனும், தெய்வீகமானவனுமான நாராயணன், சிறிது நேரம் சிந்தித்து, அதிகக் காந்தியுள்ள விரஜஸ் என்ற பெயருடைய ஒரு மகனைத் தன் சக்தியின் மூலம் உண்டாக்கினான்.(88) எனினும், உயர்ந்த அருளைக் கொண்ட அந்த விரஜஸ் பூமியின் அரசுரிமையை விரும்பவில்லை. ஓ! பாண்டுவின் மகனே, அவனது மனம் துறவு வாழ்வையே நாடியது.(89) விரஜசுக்கு கீர்த்திமான என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அவனும் {கீர்த்திமானனும்} கூட மகிழ்ச்சியையும், இன்பத்தையும் துறந்தான். கீர்த்திமானுக்குக் கர்த்தமன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அந்தக் கர்த்தமனும் கடும் தவங்களைப் பயின்றான்.(90) உயிரினங்களின் தலைவனான கர்த்தமன், அனங்கன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். பக்தியோடு கூடிய நடத்தை கொண்டவனும், தண்ட அறிவியலை முற்றாக அறிந்தவனுமான அந்த அனங்கனே உயிரினங்களின் பாதுகாவலனானான்.(91)

அனங்கன், அரச கொள்கைகளை நன்கறிந்த அதிபலன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். அவன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஒரு பரந்த பேரரசை அடைந்து, தன் ஆசைகளுக்கு அடிமையானவன் ஆனான்.(92) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மிருத்யுவுக்கு {மிருத்யு தேவிக்கு}, தன் மனத்தில் பிறந்த ஒரு மகள் இருந்தாள். சுநீதை என்ற பெயரிடப்பட்டு, மூவுலகங்களில் கொண்டாடப்பட்ட அவள், (அதிபலனை மணந்து கொண்டு) வேனன் என்ற பெயருடைய ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(93) கோபத்திற்கும், தீய செயல்களுக்கும் அடிமையாக இருந்த வேனன், அனைத்து உயிரினங்களிடமும் அநீதியாக நடந்து கொண்டான். பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள், மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட குசப்புற்களால் {அவற்றையே ஆயுதமாகக் கொண்டு} அவனைக் {வேனனைக்} கொன்றனர்.(94) மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்த அம்முனிவர்கள் வேனனின் வலது தொடையைத் துளைத்தனர். அப்போது அந்தத் தொடையில் இருந்து, இரத்தச் சிவப்பான கண்களுக்கும், கருப்பு முடியும் கொண்டவனும், தீயால் கருகிய பந்தத்திற்கு ஒப்பானவனுமான ஒரு குள்ளமான மனிதன் பூமியில் தோன்றினான். அந்தப் பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், “இங்கே நிஷீத {அமர்வாயாக}” என்றனர்.(95,96) மலைகளையும், காடுகளையும் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தீய இனமான நிஷாதர்களும், விந்திய மலைகளில் வசிக்கும் மிலேச்சர்கள் என்றழைக்கப்படும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிறரும் அவனில் இருந்தே உண்டாகினர்.(97)

பிறகு அந்தப் பெரும் முனிவர்கள், வேனனின் வலக்கரத்தைத் துளைத்தனர். அதிலிருந்து இரண்டாவது இந்திரனின் வடிவிலான ஒரு மனிதன் தோன்றினான்.(98) கவசம், வாள்கள், விற்கள், கணைகள் ஆகியவற்றைத் தரித்தவனும், ஆயுத அறிவியலை நன்கறிந்தவனுமான அவன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் முற்றாக அறிந்தவனாக இருந்தான்.(99) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தண்டனை அறிவியலுக்கான விதிகள் அனைத்தும் (தங்கள் உடல் கொண்ட வடிவங்களில்) அந்தச் சிறந்த மனிதனிடம் வந்தன. பிறகு, அந்த வேனனின் மகன், அந்தப் பெரும் முனிவர்களிடம் கூப்பிய கரங்களுடன்,(100) “மிகக் கூரியதும், அறம் நோற்க உதவுவதுமான அறிவை நான் அடைந்திருக்கிறேன். அதைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. எந்தப் பயனுள்ள பணியை நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ, அஃதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் நிறைவேற்றுவேன்” என்றான்.(102)

இவ்வாறு அவனால் சொல்லப்பட்டதும், அங்கிருந்த தேவர்களும், முனிவர்களும் அவனிடம், “எவற்றில் அறம் வசிக்கிறதோ அந்தப்பணிகள் அனைத்தையும் அச்சமில்லாமல் நிறைவேற்றுவாயாக.(103) உனக்கு அன்பானதையும், அல்லாததையும் அலட்சியம் செய்து, வேறுபாடில்லாத கண்களுடன் அனைத்து உயிரனங்களையும் காண்பாயாக. காமம், கோபம், பேராசை, கௌரவம் ஆகியவற்றைத் தொலைவாக வீசி,(104) அறவிதிகளையே எப்போதும் நோற்று, கடமையின் பாதையிலிருந்து வழுவும் எந்த மனிதனையும் உன் கரங்களாலேயே தண்டிப்பாயாக.(105) வேதங்களால் பூமியில் ஆழப் பதிக்கப்பட்ட அறத்தை, உன் மனம், சொல், செயல் ஆகியவற்றில் எப்போதும் கட்டிக்காப்பதாக உறுதியேற்பாயாக.(106) மேலும், வேதங்களால் விதிக்கப்பட்ட கடமைகளை, தண்டனை அறிவியலின் துணையோடு அச்சமில்லமால் கட்டிக்காப்பதாகவும், உறுதியற்ற செயலை ஒருபோதும் செய்வதில்லை எனவும் உறுதியேற்பாயாக.(107) ஓ! பலமிக்கவனே, பிராமணர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என்பதை அறிவாயாக, வர்ணக்கலப்பு ஏற்படாமல் உலகைப் பாதுகாப்பதாகவும் உறுதியேற்பாயாக” என்றனர்.(108)

இவ்வாறு சொல்லப்பட்ட வேனன் மகன், முனிவர்களின் தலைமையிலான தேவர்களிடம், “மனிதர்களில் காளையரான அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்கள் என்னால் எப்போதும் வழிபடப்படுவார்கள்” என்று மறுமொழி கூறினான்.(109) அப்போது பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்றனர். பிறகு, பிரம்மத்தின் பரந்த கொள்ளிடமான சுக்கிரன் அவனது புரோகிதரானார்.(110) வாலகில்யர்கள் அவனது அமைச்சர்களானார்கள், சாரஸ்வதர்கள் அவனது தோழர்களானார்கள். பெரிய சிறப்புமிக்க முனிவர் கர்க்கர், அவனது சோதிடரானார்.(111) தற்போது மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் சுருதிகளின் உயர்ந்த அறிவிப்பில் {வேனனின் மகனான} அந்தப் பிருதுவே, விஷ்ணுவின் எட்டாம் வடிவமாக இருக்கிறான்.

அதற்குச் சற்று முன், சூதன், மாகதன் என்ற பெயர் கொண்ட இரு மனிதர்கள் தோன்றினர். அவர்கள், அவனது பாணர்களாகவும், வந்திகளாகவும அமைந்தனர்.(112) பேராற்றலைக் கொண்டவனும், வேனனின் அரசமகனுமான பிருது மனம் நிறைந்தவனாக, கடற்கரையருகே இருக்கும் {அநூபம் என்ற நாட்டை} நிலத்தைச் சூதனுக்கும், அப்போதிலிருந்து மகதம் என்றறியப்படும் நாட்டை மாகதனுக்கும் அளித்தான்.(113) முன்பு பூமியின் பரப்பானது சமமற்றதாக இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம். இந்தப் பிருதுவே பூமியின் பரப்பை சமமாக்கியவனாவான்.(114) ஒவ்வொரு மன்வந்தரத்தின் போதும் பூமி சமமற்றதாக ஆனது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேனன் மகன் {பிருது}, சுற்றிலும் கிடந்த பாறைத்திரள்களையும், பாறைகளையும்,(115) தன் வில்லின் நுனியால் அகற்றினான். இந்த வழிமுறையால் மலைகள் பெரிதாகின.

பிறகு, விஷ்ணு, இந்திரனுடன் கூடிய தேவர்கள்,(116) முனிவர்கள், லோகபாலர்கள், பிராமணர்கள் ஆகியோர் பிருதுவுக்கு (உலகின் மன்னனாக) முடிசூட்ட ஒன்றுதிரண்டனர். ஓ! பாண்டுவின் மகனே, தன் உடல்வடிவத்துடன் கூடிய பூமாதேவி, ரத்தினங்கள் மற்றும் தங்கக் கொடைகளுடன் அவனிடம் வந்தாள்.(117) ஓ! யுதிஷ்டிரா, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், மலைகளின் மன்னனான இமயம், சக்ரன் ஆகியோர் வற்றாத செல்வத்தை அவனுக்கு அளித்தனர்.(118) மனிதர்களின் தோள்களில் சுமக்கப்பட்டவனும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவனுமான தெய்வீகக் குபேரன்,(119) அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கான தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்குச் செல்வத்தை அவனுக்கு அளித்தான். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, வேனனின் மகன் {பிருது} நினைத்தவுடன், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவையும் மனிதர்களும் கோடிக்கணக்கில் உயிர்பெற்று வந்தனர். அந்தக் காலத்தில் (பூமியில்) முதுமையோ, பஞ்சமோ, பேரிடரோ, நோயோ ஏதுமில்லாதிருந்தது.(120, 121) அந்த மன்னன் வழங்கிய பாதுகாப்பின் விளைவாக, ஊர்வன, கள்வர்கள் மற்றும் வேறு எந்த ஆதாரத்திடம் இருந்தும் எவரும் எந்த அச்சத்தையும் அடையவில்லை.(122)

அவன் {பிருது} கடலுக்குள் சென்றால், அதன் நீர் உறுதியடைந்து கல்லானது. மலைகள் அவனுக்கு வழிவிட்டன, அவனது கொடிமரமானது எங்கும் ஒருபோதும் தடுக்கப்படவில்லை.(123) பசுவில் இருந்து பாலைக் கறப்பவன் போல அவன், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் மற்றும் பிற உயிரினங்களின் உணவுக்காகப் பூமியில் இருந்து பதினேழு வகைப் பயிர்களையும்[2] கறந்தெடுத்தான்.(124) அந்த உயர் ஆன்ம மன்னன் {பிருது}, அனைத்து உயிரினங்களையும், அறமே அனைத்திலும் உயர்ந்ததென உணரவைத்தான். மேலும் அவன் {பிருது} மக்கள் அனைவரையும் மனம் நிறையச் செய்தான் என்பதால் அவன் ராஜன் என்று அழைக்கப்பட்டான்[3].(125) மேலும் அவன் {பிருது} பிராமணர்களின் காயங்களை ஆற்றியதால் அவன் க்ஷத்திரியன்[4] என்ற பெயரையும் ஈட்டினான். (அவனது ஆட்சிக்காலத்தில்) பூமியானவள் அறப்பயிற்சிக்காகக் கொண்டாடப்பட்டதால், அவள் பிருத்வி என்று பலரால் அழைக்கப்பட்டாள்[5].(126) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அழிவில்லா விஷ்ணு, “ஓ! மன்னா {பிருதுவே}, எவனால் உன்னை விஞ்ச முடியாது” என்று அவனிடம் சொல்லி அவனது சக்தியை உறுதி செய்தான்.(127) பிறகு அந்தத் தெய்வீக விஷ்ணு அந்த ஏகாதிபதியின் தவத்தின் விளைவாக அவனது உடலுக்குள் நுழைந்தான். இந்தக் காரணத்தினால், இந்த மொத்த அண்டத்திலும், மனித தேவர்களின் எண்ணிக்கையில் ஒருவனாக[6] பிருதுவுக்கு தெய்வீக வழிபாடு செய்யப்பட்டது.(128)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன் நாடு, தண்டனை அறிவியலின் {தண்ட நீதியின்} துணை கொண்டே எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். உன் ஒற்றர்களின் நடமாட்டம் மூலம் கவனமாகக் கண்காணிப்புச் செய்து, எவனாலும் உன் நாட்டிற்குத் தீங்கு செய்ய முடியாத வகையில் நீ அதைப் பாதுகாக்க வேண்டும்.(129) ஓ! மன்னா, அனைத்து நற்செயல்களும், (அந்த ஏகாதிபதியின்) நன்மைக்கே வழிவகுக்கும். ஒரு மன்னனின் நடத்தையானது, அவனது சொந்த நுண்ணறிவின் மூலமும், வாய்ப்புகள் மற்றும் எதிர்வரும் வழிமுறைகளின் மூலமும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.(130) ஓர் ஏகாதிபதியின் தெய்வீகத்தன்மையையன்றி வேறு எந்தக் காரணத்தின் விளைவால் ஒரு பெருங்கூட்டம் அவனுக்கு அடிபணிந்து நடக்கக்கூடும். அந்நேரத்தில் விஷ்ணுவின் புருவத்தில் இருந்து ஒரு தங்கத் தாமரை தோன்றியது.(131) அந்தத் தங்கத் தாமரையில் ஸ்ரீதேவி பிறந்தாள். அவள், பெரும் நுண்ணறிவு கொண்ட தர்மத்தின் துணைவியானாள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தர்மம் அந்த ஸ்ரீயிடம் அர்த்தத்தை {பொருளை} ஈன்றது.(132) தர்மம், அர்த்தம் மற்றும் ஸ்ரீ ஆகிய மூன்றும் அரசில் நிறுவப்பட்டன[7]. தன் தகுதி {புண்ணியம்} தீர்ந்த ஒருவன், சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு விழுந்து,(133) தண்டனை அறிவியல் அறிந்த ஒரு மன்னனாகப் பிறக்கிறான். அத்தகு மனிதன் பெருமையை அடைந்தவனாக உண்மையில் பூமியில் விஷ்ணுவின் பாகமாகவே {அவதாரமாகவே} ஆகிறான். பெரும் நுண்ணறிவைக் கொள்ளும் அவன், பிறரின் மேல் ஆதிக்கத்தை அடைகிறான்.(134) தேவர்களால் நியமிக்கப்பட்டவனை எவனாலும் விஞ்சமுடியாது. இதன் காரணமாகவே அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுகின்றனர், இதன் காரணமாகவே உலகத்தால் அவனுக்குக் கட்டளையிடமுடியாது.(135)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் நன்மைக்கே வழிகோலுகின்றன. இதன் காரணமாகவே, இந்த உலகைச் சார்ந்தவனாக இருப்பினும், தங்களைப் போன்ற அங்கங்களைக் கொண்டவனாகவே இருப்பினும், அவனது வார்த்தைகளுக்கு மக்கள்கூட்டம் கீழ்ப்படிந்து நடக்கிறது.(136) பிருதுவின் இனிய முகத்தைக் கண்ட எவனும் உடனே அவனுக்குக் கீழ்ப்படிந்தவனானான். அதுமுதல் அவன் {பிருது} தன்னை அழகானவனாகவும், செல்வம் படைத்தவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும் கருதத் தொடங்கினான்[8].(137) அவனது செங்கோலின் வலிமையின் விளைவால், அறம் மற்றும் நீதியைப் பயிலும் நடைமுறை பூமியில் தெளிவாகக் காணப்பட்டது. அதன் காரணத்தாலேயே பூமி அறத்தால் கவிந்து பரவியிருந்தது.(138) ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறே, கடந்த கால நிகழ்வுகளின் வரலாறுகள், பெரும் முனிவர்களின் தோற்றம், புனித நீர்நிலைகள், கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள், நால்வகை வாழ்வினரின் கடமைகள், நால்வகை ஹோமங்கள், நால்வகை மனிதர்களின் பண்புகள், கல்வியின் நால்வகைக் கிளைகள் ஆகியவற்றைக் குறித்த அனைத்தும் (பெரும்பாட்டனின் {பிரம்மனின்}) அந்தப் படைப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(139,140)

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் உள்ள பொருட்கள் யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அந்த ஆய்வில் சொல்லப்பட்டிருந்தன. வரலாறுகள், வேதங்கள், நியாய அறிவியல், தவங்கள், அறிவு, அனைத்துயிர்களுக்கும் தீங்கிழையாமை, உண்மை, பொய்மை, உயர்ந்த அறநெறி ஆகியவை அனைத்தும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(141,142) வயதில் முதிர்ந்தோரை வணங்குதல், கொடைகள், தூய நடத்தை, உழைப்புக்கு ஆயத்தமாக இருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் கருணை ஆகியவையும் முழுமையாக அதில் விளக்கப்பட்டிருந்தன.(143) இஃதில் எந்த ஐயமுமில்லை. ஓ! ஏகாதிபதி, அந்தக் காலத்திலிருந்தே, கல்விமான்கள், மன்னனுக்கும், தேவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்லத் தொடங்கினர்.(144) நான் இப்போது மன்னர்களின் பெருமை குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதர்களின் தலைவா, நான் அடுத்ததாக என்ன உரைக்க வேண்டும்?” என்று கேட்டார் {பீஷ்மர்}”.(145)

சதுர்வர்ணதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 60-பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்களின் தனிப்பட்ட கடமைகளைப் பட்டியலிட்ட பீஷ்மர்; பிராமணர்களின் பெருமையையும், வேள்விகளின் பயனையும் சொல்லி, வேள்விகள் அனைவரும் செய்யத்தக்கதே என்று சொன்னது…

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு யுதிஷ்டிரன் தன் கரங்களைக் கூப்பித் தன் பாட்டனான கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} வணங்கி, குவிந்த கவனத்துடன் மீண்டும்,(1) “நால்வகை மனிதர்களின் பொதுவான கடமைகள் எவை? ஒவ்வொரு வகையின் குறிப்பிட்ட கடமைகள் எனென்ன? எவ்வகை மனிதரால் எவ்வகை வாழ்வு முறை நோற்கப்பட வேண்டும்? மன்னர்களின் கடமைகள் எனக் குறிப்பாகச் சொல்லப்படுபவை எவை?(2) எந்த வழிமுறைகளால் ஒரு நாடு வளர்ச்சியை அடையும்? மன்னன் வளர்ச்சியடைவதற்கான வழிமுறைகள் என்ன? ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மரே}, மன்னனின் குடிமக்களும், அவனது பணியாட்களும் வளர்ச்சியடைவது எவ்வாறு?(3) என்ன வகைக் கருவூலங்கள், தண்டனைகள், கோட்டைகள், கூட்டாளிகள், அமைச்சர்கள், புரோகிதர்களை ஒரு மன்னன் தவிர்க்க வேண்டும்?[1](4) எந்தெந்த வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் மன்னன் யாரை நம்ப வேண்டும்? எந்தத் தீமைகளில் இருந்து மன்னன் தன்னை உறுதியாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)(ரித்விஜர் குறிப்பிட்ட நிகழ்வுகளில் மட்டும் ஈடுபடுவார், புரோகிதரோ, நிலையான, நிரந்தரமான தொண்டுகளில் ஈடுபடுவார்)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெருமையுள்ள தர்மத்தையும், பிரம்மமான கிருஷ்ணனையும் வணங்குகிறேன். (இங்கே கூடியிருக்கும்) பிராமணர்களையும் வணங்கி, அழிவில்லா நித்திய கடமைகளை நான் உரைக்கப் போகிறேன்.(6) கோபத்தை அடக்குதல், பேச்சில் உண்மை, நீதி பேணல், மன்னிக்கும் தன்மை, மணந்து கொண்ட மனைவியிடம் பிள்ளைகளைப் பெறுதல், நடத்தையில் தூய்மை, சச்சரவு தவிர்த்தல், எளிமை, சார்ந்தோரைக் கட்டிக்காத்தல் ஆகிய இந்த ஒன்பது கடமைகளும் நால்வகையினர் அனைவருக்கும் (சமமாகவே) பொருந்தும்.(7)

எனினும், பிராமணர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா, தற்கட்டுப்பாடே பிராமணர்களின் முதற்கடமையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வேதம் கற்பது, பொறுமையுடன் தவம் செய்வது ஆகியவையும் அவர்களது கடமைகளே. இவை இரண்டையும் செய்தால் அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் நிறைவடையும்.(8) எந்த முறையற்ற செயலையும் செய்யாமல் தன் கடமைகளை நோற்கும்போது, அந்த அறிவு கொண்ட அமைதியான பிராமணனைத் தேடி செல்வம் வந்தால்,(9) அவன் மணம்புரிந்து கொண்டு, பிள்ளைகளைப் பெற முயன்று, ஈகையும் பயின்று, வேள்விகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அடையப்படும் செல்வமானது, (தகுந்த மனிதர்களுக்கும், உறவினர்களுக்கும்) பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.(10) அவனது வேத கல்வியின் மூலம், (அந்தப் பிராமணனுக்கு விதிக்கப்பட்ட) அறச் செயல்கள் அனைத்தும் நிறைவடைகிறது. வேறெதையும் அவன் அடைகிறானோ, இல்லையோ, அவன் வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தால், அவன் பிராமணன் என்றோ, அனைத்துயிர்களுக்கும் நண்பன் என்றோ அறியப்படுவான்.(11)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகள் என்னென்ன என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கவே வேண்டும், இரக்கக் கூடாது. தன் வேள்விகளையே அவன் செய்ய வேண்டும், அடுத்தவரின் வேள்விகளில் ஒரு புரோகிதராகப் பொறுப்பேற்று அவனே அவ்வேள்விகளைச் செய்யக் கூடாது.(12) அவன் {க்ஷத்திரியன்} (வேதங்களைப்) பயிற்றுவிக்கக் கூடாது, (ஒரு பிராமண ஆசானின் மூலம்) அவற்றைப் பயிலவே வேண்டும். அவன் மக்களைப் பாதுகாக்க வேண்டும். கள்வர்களையும், தீய மக்களையும் அழிப்பதில் எப்போதும் முயன்று, போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.(13) வேதங்களில் அறிவைக் கொண்டவர்களும், போரில் வெற்றியை ஈட்டுபவர்களும், பெரும் வேள்விகளைச் செய்பவர்களுமான க்ஷத்திரிய ஆட்சியாளர்கள், தங்கள் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் மறுமையில் அருள் உலகங்கள் பலவற்றைப் பெறுவதில் முதன்மையானோராகத் திகழ்வார்கள்.(14) பழைய சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், போரில் காயமேற்படாமல் திரும்பும் க்ஷத்திரியனை மெச்சுவதில்லை.(15) அஃது இழிந்த க்ஷத்திரியனின் நடத்தையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கள்வர்களை ஒடுக்குதலைவிட உயர்ந்த கடமையேதும் அவனுக்கு இல்லை.(16) கொடைகள், கல்வி மற்றும் வேள்விகள் ஆகியன மன்னர்களுக்குச் செழிப்பைக் கொண்டு வருகின்றன. எனவே, அறத்தகுதியை அடையவிரும்பும் ஒரு மன்னன் போரில் ஈடுபட வேண்டும்[2].(17) தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கும்படி நிறுவும் ஒரு மன்னன், அவர்கள் அனைவரையும், அறவிதிகளுக்கு உட்பட்டே அனைத்தையும் செய்ய வைக்க வேண்டும்.(18) அவன் {மன்னன்} வேறேதும் செயலைச் செய்கிறானோ இல்லையோ, தன் குடிமக்களை மட்டும் பாதுகாத்தாலே அவன் தன் அறச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றியதாகக் கருதப்பட்டு, க்ஷத்திரியன் என்றும், மனிதர்களில் முதன்மையானவன் என்றும் அழைக்கப்படுவான்.(10)ஓ! யுதிஷ்டிரா, வைசியர்களுக்கான நித்திய கடமைகளை இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு வைசியன், கொடைகள் அளிப்பது, வேதகல்வி கற்பது, வேள்விகள் செய்வது, நியாயமான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டுவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.(20) ஒரு தந்தை தம் மகன்களைப் பாதுகாப்பதைப் போல, அவன், (தான் வளர்க்கும்) விலங்குகள் அனைத்தையும் உரிய கவனத்துடன் வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். வேறெதையும் அவன் செய்வது, அவனுக்கு முறையற்றதாகக் கருதப்படும்.(21) (வீட்டில் வளர்க்கும்) விலங்குகளைப் பாதுகாப்பதால் அவன் பெரும் மகிழ்ச்சியை அடைவான். (வீட்டில் வளர்க்கக்கூடிய) விலங்குகளைப் படைத்த படைப்பாளன், அவற்றைப் பராமரிப்பதை வைசியனுக்கே அளித்திருக்கிறான்.(22) பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் அனைத்து உயிரினங்களையும் (பரமாரிப்பதை) அளித்திருக்கிறான். ஒரு வைசியனின் தொழில்கள், மற்றும் அவன் தன் வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை ஈட்டும் வழிமுறைகள் ஆகியவை என்னென்ன என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) அவன் (பிறருக்காக) ஆறு பசுக்களைப் பாதுகாத்தால் {மேய்த்தால்}, தன் உழைப்பூதியமாக ஒரு பசுவின் பாலை அவன் எடுத்துக் கொள்ளலாம்; அவன் (பிறருக்காக) நூறு பசுக்களைப் பாதுகாத்தால் {மேய்த்தால்}, {வருடத்திற்கு} ஒரு ஜோடியை {ஒரு பசு மற்றும் ஒரு காளையை} அத்தகு கட்டணமாக அவன் எடுத்துக் கொள்ளலாம். அவன் {வைசியன்} பிறரின் செல்வத்தைக் கொண்டு வணிகம் செய்தால், பெறுவதில் {லாபத்தில்} ஏழில் ஒரு பங்கை {அவனுடைய பங்காக} எடுத்துக் கொள்ளலாம். கொம்புகளின் வணிகத்தில் எழும் லாபத்திலும் அவன் தன் பங்காக ஏழில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம், ஆனால், குளம்புகளின் வணிகத்தில் அவன் பதினாறில் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்[3]. அவன் பிறரால் கொடுக்கப்பட்ட விதைகளைக் கொண்டு உழவில் ஈடுபட்டால், கிடைக்கும் விளைச்சலில் அவன் ஏழில் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளலாம். இதுவே அவனுடையே ஆண்டு உழைப்பூதியமாக இருக்க வேண்டும்.(24) கால்நடை வளர்க்கக்கூடாது என்று ஒரு வைசியன் ஒருபோதும் விரும்பக்கூடது. ஒரு வைசியன் கால்நடை வளர்க்க விரும்பினால், வேறு எவனும் அப்பணியில் ஈடுபடுத்தப்படக்கூடாது.(25)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சூத்திரர்களின் கடமைகள் என்ன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். ஒரு சூத்திரன் மூன்று பிற வகையினருக்கும் பணியாளாக இருக்க வேண்டும் எனப் படைப்பாளன் கருதினான்.(26) இதனால், மூன்று பிற வகையினருக்கான தொண்டே ஒரு சூத்திரனின் கடமையாயிற்று. மூவகையினருக்கும் இத்தகு தொண்டில் ஈடுபடுவதால், ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(27) அவன் மூன்று பிற வகையினரிடமும், அவர்களுடைய மூப்பின் அடிப்படையில் பணிசெய்ய வேண்டும். ஒரு சூத்திரன் ஒருபோதும் செல்வம் திரட்டக்கூடாது,(28) அவனுடைய செல்வத்தால் மற்று மூன்று மூத்த வகையினரையும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆக்குகிறான். இதனால் அவன் பாவத்தையே ஈட்டுவான். எனினும், மன்னனின் அனுமதியின் பேரில், அறச்செயல்கள் செய்வதற்காக ஒரு சூத்திரன் செல்வம் ஈட்டலாம்.(29) அவன் செய்ய வேண்டிய தொழிலையும், அவனது வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை ஈட்டவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(30) சூத்திரர்கள் பிற (மூன்று) வகையினரால் நிச்சயம் பராமரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(31)

பழைய குடை, தலைப்பாகைகள், படுக்கைகள், இருக்கைகள், காலணிகள், விசிறிகள் ஆகியன சூத்திரப் பணியாட்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(32) அணிவதற்குப் பொருந்தாத கிழிந்த ஆடைகள் யாவும் மறுபிறப்பாள வகையினரால் {மூன்று பிற வர்ணத்தாரால்} சூத்திரனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவை சூத்திரர்களின் சட்டப்படியான உடைமைகளாகும்.(33) ஒரு சூத்திரன், மூவகை மறுபிறப்பாளர்களில் எவரிடம் பணி செய்ய அணுகினாலும், அவர்கள் அவனுக்கு முறையான வேலையை அளிக்க வேண்டும் என்று அறநெறி அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(34) மகனில்லாத சூத்திரனுக்கு அவனுடைய தலைவனே ஈமப் பிண்டம் அளிக்க வேண்டும். அவர்களில் பலவீனமானவர்களும், முதியவர்கள் {அவர்களுடைய தலைவனால்} பராமரிக்கப்பட வேண்டும்.

ஒரு சூத்திரன், தன் தலைவனுக்கு நேர்ந்த துயரம் என்ன இயல்பில், அல்லது என்ன தன்மையில் இருந்தாலும் அவனை ஒரு போதும் கைவிடக்கூடாது.(35) தலைவன் தன் செல்வத்தை இழந்தாலும், அவன் மிகுந்த பற்றார்வத்துடன் சூத்திரப் பணியாளால் ஆதரிக்கப்பட வேண்டும்[4]. ஒரு சூத்திரன் தனக்கெனச் செல்வம் கொள்ள முடியாது. அவன் கொண்ட எதுவும் சட்டப்படி அவனுடைய தலைவனுடையதே ஆகும்.(36) வேள்வி செய்வது மூன்று பிற வகையினரின் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அது சூத்திரனுக்கும் விதிக்கப்படுகிறது. எனினும், ஒரு சூத்திரன், சுவாஹா, சதா, அல்லது வேதத்தின் வேறு எந்த மந்திரத்தையும் ஓதத்தகுந்தவனல்ல.(37) இதன்காரணமாக, ஒரு சூத்திரன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளை நோற்காமல் பாகயக்ஞங்கள் என்றழைக்கப்படும் சிறு வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பூர்ண பாத்திரம் என்றழைக்கப்படும் கொடையே அத்தகு வேள்விகளில் தக்ஷிணையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது[5].(38) பழங்காலத்தில் பைஜவனன் என்ற பெயர் கொண்ட ஒரு சூத்திரன் (தன் வேள்விகளில் ஒன்றில்) ஐந்திராக்னி[6] {ஐந்திராக்னம்} என்றழைக்கப்படும் விதியின்படி ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம்} பூர்ண பாத்திரங்கள் அடங்கிய தக்ஷிணையை அளித்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(39) (ஏற்கனவே சொல்லப்பட்டபடி) ஓ! பாரதா, வேள்வி என்பது மற்ற மூன்று வகையினரைப் போலவே சூத்திரனுக்கும் விதிக்கப்படுகிறது. அனைத்து வேள்விகளிலும், அர்ப்பணிப்பே முதன்மையானதாக விதிக்கப்படுகிறது[7].(40)

அர்ப்பணிப்பே உயர்ந்த தெய்வமாகும். அது வேள்வி செய்வோர் அனைவரையும் தூய்மைப்படுத்துகிறது. மேலும் பிராமணர்களே அந்தந்த சூத்திரப் பணியாட்களுக்குத் தேவர்களில் முதன்மையானோராவர்.(41) வேள்விகளில் பல்வேறு விருப்பங்கள் கனிவதற்காக அவர்கள் {பிராமணர்கள்} தேவர்களை வழிபடுகின்றனர். மற்ற மூன்று வகையினரும் பிராமணர்களிலிருந்து உதித்தனர்[8].(42) பிராமணர்கள் தேவர்களுக்கே தேவர்களாவர். அவர்கள் எது சொன்னாலும் உனது பெரும் நன்மைக்கே சொல்வார்கள். எனவே, அனைத்து வகை வேள்விகளும், நால்வகையினர் அனைவருக்கும் இயற்கையாகவே உரித்தாகுகின்றன. விருப்பப்பட்டால் செய்யலாம் என்பது ஒருவனுக்குக் கடமையாகாது.(43) ரிக்குகள், யஜுஸ்கள், சாமன்கள் ஆகியவற்றை அறிந்த பிராமணன், ஒரு தேவனாக வழிபடப்பட வேண்டும். ரிக்குகள், யஜஸ்கள், சாமன்கள் {சாம வேதம்} ஆகியவையற்ற சூத்திரன், பிரஜாபதியைத் தன் தேவனாகக் கொள்கிறான்[9].(44) ஓ! ஐயா, ஓ! பாரதா, மனோவேள்வியானது அனைத்து வகையினருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. தேவர்களும், பிற (மேன்மையான) மனிதர்களும், சூத்திரனின் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்கு பெற விரும்புவதில்லை என்பது உண்மையில்லை[10]. இதன் காரணமாகவே அர்ப்பணிப்பையே வேள்வியாகக் கொள்வது {சூத்திரர்களும் உட்பட} அனைத்து வகையினருக்கும் விதிக்கப்பட்டுள்ளது.(45)பிராமணனே தேவர்களில் முதன்மையானவன். அந்த வகையைச் சார்ந்தவர்கள் மற்ற வகையினரின் வேள்விகளைச் செய்யக்கூடாது என்பது உண்மையில்லை. விதானம் என்றழைக்கப்படும் நெருப்பு, வைசியர்களிடம் இருந்து அடையப்பட்டு, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டாலும் அதுவும் தாழ்ந்ததே[11]. மற்ற மூன்று வகையினரின் வேள்விகளையும் ஒரு பிராமணனே செய்கிறான்.(46) இதன் காரணமாக நால்வகையைச் சேர்ந்தோர் அனைவரும் புனிதமானவர்களே. இடைப்பட்ட வகையினரின் மூலம் அனைத்து வகையினரும் ஒருவருக்கொருவர் இரத்த உறவு கொண்டவர்களே. அஃதை (பிறப்பின் அடிப்படையில்) உறுதி செய்தால், அனைத்து வகையினரிலும் பிராமணனே முதலில் பிறந்தவன் என்பது வெளிப்படும். முன்பு சாமன் {சாம வேதம்} ஒன்றுதான், யஜுஸ் {யஜுர் வேதம்} ஒன்றுதான், ரிக்கும் {ரிக் வேதம்} ஒன்றுதான்[12].(47) பழைய வரலாறுகளை அறிந்தவர்கள், வைகானச முனிவர்களின் வேள்விகளில் இது தொடர்பாக அவர்களால் புகழ்ந்து பாடப்படும் ஒரு வரியை {சுலோகத்தைக்} காண்கின்றனர்.(48) “புலனடக்கம் கொண்ட ஒரு மனிதன், சூரிய உதயத்திற்கு முன்போ, பின்போ, இதயம் நிறைந்த அர்ப்பணிப்புடன் விதிப்படி (வேள்வி) நெருப்பில் காணைக்கைகளை ஆகுதி செய்கிறன். அர்ப்பணிப்பே வலிமைமிக்கக் காரணியாகும்”.(49) மேலும் ஹோமங்களைப் பொறுத்தவரையில், ஸ்கன்னம் என்றழைக்கப்படும் வகையானதே தொடக்கம், அதே வேளையில் அஸ்கன்னம் என்றழைக்கப்படுவது இறுதியாகும் (ஆனால் தகுதியைப் பொறுத்தவரை முதன்மையானதாகும்). வேள்விகள் பலவகைப்பட்டவை. மேலும் அவற்றின் சடங்குகளும், பலன்களும் பலவகைப்பட்டவை.(50)-அர்ப்பணிப்பும், ஆன்ம கல்வியும் கொண்ட ஒரு பிராமணன் அவை அனைத்தையும் அறிந்தால், அவன் வேள்விகளைச் செய்யத்தகுந்தவனாவான்.(51) ஒருவன் கள்வனாகவோ, பாவியாகவோ, பாவிகளில் இழிந்தவனாகவோ இருந்தாலும் அவன் வேள்வி செய்ய விரும்புவானானால், அவன் நீதிமானாகக் கருதப்படுகிறான்.(52) முனிவர்கள் அத்தகு மனிதனை மெச்சுகிறார்கள். அவர்கள் செய்வது சரி என்பதில் ஐயமில்லை. அவ்வாறெனில், அனைத்து வகையினரும், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், வேள்விகளைச் செய்ய வேண்டும் என்பதே முடிவான தீர்மானமாக இருக்க முடியும்.(53) மூவுலகிலும் வேள்விக்கு இணையானது ஏதுமில்லை. எனவே, தீமையிலிருந்து விடுபட்ட இதயம் கொண்ட ஒவ்வொருவரும், புனிதமான அர்ப்பணிப்பின் துணையுடன், தன் சக்திக்குட்பட்ட வகையிலும், தனது விருப்பத்தின்படியும் வேள்விகளைச் செய்யவே வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(54)

ஆசிரமதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 61-நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, நான்கு வாழ்வு முறைகளின் பெயர்களையும், அவை ஒவ்வொன்றின் கடமைகளையும் இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) பிராமணர்களால் பின்பற்றப்படுவது, வானப்ரஸ்தம், பைக்ஷ்யம் {சந்நியாசம்}, பெரும் தகுதியைத் தரும் கார்ஹஸ்த்யம் {இல்லறம்} மற்றும் பிரம்மச்சரியம் ஆகிய நான்கு வாழ்வு முறைகளாகும்.(2) சடாமுடி தரிப்பதைப் பொறுத்தவரையில், தூய்மைச் சடங்கைச் {சௌளம்} செய்து, {உபநயனவிதியைக் கொண்டு} மறுபிறப்புக்கான சடங்கையும் செய்த பிறகு, சில காலம், புனித நெருப்புக்குச் சில சடங்குகளைச் செய்த பிறகு, வேதங்களைக் கற்று,(3) தூய ஆன்மாவுடனும், புலனடக்கத்துடனும், கார்ஹஸ்த்யம் {இல்லறம்} என்றழைக்கப்படும் வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் முதலில் கவனமாகச் செய்த பிறகு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ, வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்ற கானகம் செல்ல வேண்டும்.(4) ஆரண்யகங்கள் என்றழைக்கப்படும் {வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய} சாத்திரங்களைக் கற்றுத் தன் உயிர் நீரை மேலிழுத்து, உலகக் காரியங்கள் அனைத்தில் இருந்தும் ஓய்ந்த அறம் சார்ந்த துறவி ஒருவன், அழிவில்லா நித்திய ஆன்மாவில் ஒன்றிய நிலையை {பிரம்மஸ்வரூபத்தை} அடையலாம்.(5) இவையே தங்கள் உயிர் நீரை மேலிழுத்த முனிவர்களின் குறியீடுகளாகும். ஓ! மன்னா, கல்விமானான ஒரு பிராமணன் முதலில் அவற்றைப் பயன்று, அவற்றில் ஈடுபட வேண்டும்.(6)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வீடடைய {முக்தியடைய} விரும்பும் ஒரு பிராமணன், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைக் கடந்தபிறகே பைக்ஷ்ய {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றத்தகுந்தவனாவான் என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(7) கல்விமானான பிராமணன் ஒருவன், (தினமும் தான் திரிகையில்) மாலைவேளை எங்கே ஏற்படுகிறதோ, அந்தச் சூழ்நிலையைச் சிறந்ததாக்க விரும்பாமல் அங்கேயே உறங்கி, {வசிப்பதற்கு} வீடில்லாமல், (ஈகையில்) கிடைக்கும் உணவை உண்டு, தற்கட்டுப்பாட்டுடன் தியானம் பயின்று, ஆசையேதும் இல்லாமல் புலன்களை அடக்கி,(8) அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, எதிலும் மகிழ்ச்சியோ வெறுப்போ அடையாமல் இந்த {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றி அழிவில்லா நித்திய ஆன்மாவுடன் தோய்ந்த ஒன்றிய நிலையை அடைகிறான்.(9)

கார்ஹஸ்த்திய {இல்லற} வாழ்வுமுறையில் வாழும் மனிதன், வேதங்களைக் கற்று, தனக்காக விதிக்கப்பட்ட அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெற்று, இன்பங்களையும், வசதிகளையும் அனுபவிக்க வேண்டும். (மீறல்கள் ஏதுமில்லாமல்) வாழ மிகக் கடினமானதும், தவசிகளால் மெச்சப்படுவதுமான அந்த வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் அவன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்.(10) அவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே நிறைவுடன் இருந்து, அவளது பருவ காலமன்றி வேறு காலங்களில் அவளை அணுகாதிருக்க வேண்டும். அவன், தந்திரமாகவோ, வஞ்சகமாகவோ செயல்படாமல் சாத்திரங்களின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவன் உணவில் சிக்கனமாக இருந்து, தேவர்களுக்கு அர்ப்பணிப்புடன், நன்றி நிறைந்தவனாக, மென்மையானவனாக, கொடூரமற்றவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(11) அவன், இதய அமைதி கொண்டவனாக, கட்டுப்படக்கூடியவனாக, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கைகள் அளிப்பவனாக இருக்க வேண்டும். அவன் பிராமணர்களிடம் எப்போதும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்ள வேண்டும். அவன் செருக்கற்றவனாக இருக்க வேண்டும். அவனுடைய ஈகை ஒரு குழுவினருக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது. வேத சடங்குகளைச் செய்வதில் அவன் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.(12)

இது தொடர்பாக, பெரும் தவத்தகுதியைக் கொண்டதும், பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், நாராயணனால் பாடப்பட்டதுமான ஒரு வரியை சிறப்புமிக்கப் பெரும் முனிவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைத் திரும்பச் சொல்கிறேன் கேட்பாயாக.(13) “உண்மை, எளிமை, விருந்தினரை வழிபடுவது, அறம் பொருள் அடைதல், தான் மணந்து கொண்ட மனைவியோடு இன்புற்றிருத்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு வகை இன்பங்களை அனுபவிக்க வேண்டும்” {என்று நாராயணன் பாடியிருக்கிறான்}.(14) மகன்களையும், மனைவியரையும் ஆதரித்தல், வேதங்களைக் கற்றல் ஆகியவை இந்த உயர்ந்த {இல்லற} வாழ்வுமுறையை நோற்போரின் கடமைகளாக அமைகின்றன என்று பெருமுனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(15) வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் பிராமணன், இந்த வாழ்வுமுறையை முறையாக வாழ்ந்து, தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து, சொர்க்கத்தில் அருள்வெகுமதிகளை அடைகிறான்.(16) அவனது இறப்புக்குப் பிறகு, அவனால் விரும்பப்பட்ட வெகுமதிகள் இறவாத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. உண்மையில், அவை தலைவனின் உத்தரவைச் செயல்படுத்த எப்போதும் விழிப்புடன் இருக்கும் பணியாட்களைப் போல நித்தியமாக {அழிவில்லாமல்} எப்போதும் அவனுக்காகக் காத்திருக்கின்றன {பணிவிடை செய்கின்றன}.(17)

பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன், எப்போதும் வேதங்களில் ஈடுபாட்டுடன், தன் ஆசானிடம் இருந்து அடைந்த மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டு, தேவர்கள் அனைவரையும் வழிபட்டு, உடலில் புழுதி மற்றும் தூசியுடனும்,(18) கடமையுணர்வுடனும் தன் ஆசானுக்குத் தொண்டாற்றி, புலனடக்கத்துடன், தனக்குக் கிடைக்கும் கல்வியில் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவன், வேதங்களைக் குறித்துச் சிந்தித்து, (தியானம் மற்றும் வெளிப்படையான செயல்கள் ஆகிய) தன் கடமைகள் அனைத்தையும் செய்து, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்காகக் காத்திருந்து, அவரை எப்போதும் வணங்கி வாழ வேண்டும். (பிறரின் வேள்விகளைச் செய்து கொடுத்தல் போன்ற) ஆறு வகை வேலைகளில்[1] ஈடுபடாமை, எந்தச் செயல்பாடுகளிலும் ஒருபோதும் பற்று கொள்ளாமை,(19,20) எவருக்கும் ஆதரவோ, ஆதரவில்லா நிலையையோ ஏற்காமை, தன் எதிரிகளுக்கும் நன்மையைச் செய்தல் ஆகிய இவையே ஒரு பிரம்மச்சாரியின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(21)(இவை, “பிராணாயாமம், பிரத்யாஹாராம், த்யாநம், தாரணை, தர்க்கம், ஸமாதி”)

நற்செயல்களும், மனச்சார்புகளும்! – சாந்திபர்வம் பகுதி – 62-வர்ணாசிரம தர்மங்களில் யுதிஷ்டிரனுக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு விடையளித்த பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எங்களைப் போன்றோருக்கு, எந்தக் கடமைகள் மங்கலமானவை, எதிர்காலத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குபவை, நன்மை செய்பவை, அனைவராலும் அங்கீகரிக்கப்படுபவை, ஏற்கப்படுபவை, இனிமையானவை என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பலமிக்கவனே, நான்கு வாழ்வுமுறைகளும் {ஆசிரமங்களும்} பிராமணர்களுக்கே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பிற வகையினர் மூவரும் அவற்றைப் பின்பற்றுவதில்லை.(2) ஓ! மன்னா, குறிப்பாக அரசவகையினருக்கு {க்ஷத்திரியர்களுக்குப்} பொருந்தக்கூடியவையும், சொர்க்கத்திற்கு வழிவகுக்கூடியவையுமான பல செயல்கள் {பிரவிருத்தி சாஸ்திரத்தில்} ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் இரக்கமின்மையை ஏற்காத க்ஷத்திரியர்களுக்கான முறையாக விதிக்கப்பட்டவை என்பதால் அவற்றைத் தற்போதைய உன் கேள்விக்குப் பதிலாகச் சொல்லமுடியாது.(3)

க்ஷத்திரிய, வைசிய, சூத்திர நடைமுறைகளுக்கு அடிமையாக இருக்கும் பிராமணன், நிச்சயமாகப் பூமியில் தீய ஆன்மா என நிந்திக்கப்பட்டு, அடுத்த உலகில் {மறுமையில்} நரகிற்குச் செல்வான்.(4) மனிதர்களுக்கு மத்தியில் பணியாட்கள், நாய்கள், ஓநாய்கள் மற்றும் (பிற) விலங்குகளுக்குச் சூட்டப்படும் பெயர்களே, தனக்குத் தகாத செயல்களில் ஈடுபடும் பிராமணனுக்குச் சூட்டப்படும்.(5)

நான்கு வகை வாழ்வுமுறைகளிலும் (மூச்சை ஒழுங்கமைத்தல் மற்றும் தியானம் போன்ற) ஆறு வகைச் செயல்களில்[1] முறையாக ஈடுபடுபவனும், தன் கடமைகள் அனைத்தையும் செய்பவனும், அமைதியானவனும், தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தவனும்,(6) எதிர்பார்ப்புகளைச் சிறக்கச் செய்யும் விருப்பம் இல்லாதவனும், ஈகையாளனுமான ஒரு பிராமணன், மறுமையில் அழிவில்லா அருள் உலகங்களை அடைவான்.((7) ஒவ்வொருவனும் தங்களுக்கு அமையும் சூழ்நிலை, இடம், வழிமுறை மற்றும் நோக்கங்களுக்குத்தக்க செய்யும் செயல்களின் இயல்பிலிருந்தே தன் சொந்த இயல்பை {குணத்தை} அடைகிறான்.(8) எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த தகுதிகள் {புண்ணியங்கள்} நிறைந்த வேத கல்வியானது, அரச அதிகாரத்துடன் கூடிய உழைப்புக்கோ, உழவு, வணிகம் மற்றும் வேட்டைத் தொழில்களுக்கோ இணையானதாக உன்னால் கருதப்பட வேண்டும்[2].(9)உலகம் காலத்தால் இயக்கப்படுகிறது. அதன் இயக்கங்கள் காலத்தின் போக்கிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. மனிதன் செய்யும் நல்ல, தீய மற்றும் அலட்சிய செயல்கள் {நல்லது, தீயது என வேறுபாடற்ற} அனைத்தும் முற்றிலும் காலத்தின் ஆதிக்கத்தால் செய்யப்படுபவையே[3].(10) ஒரு மனிதனின் கடந்த கால {முற்பிறவியின்} நற்செயல்களில் எவை அடுத்தப் பிறவியில் பேராதிக்கம் செலுத்துகின்றனவோ, அவை {அவற்றின் புண்ணியங்கள்} தீர்ந்து விடக்கூடும். எனினும், மனிதர்கள் தங்கள் மனச்சார்புகள் வழிகாட்டும் செயல்களை எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றனர். மேலும் அந்த மனச்சார்புகளே, ஓர் உயிரினத்தை ஒவ்வொரு திசையிலும் செலுத்திக் கொண்டிருக்கின்றன[4]” என்றார் {பீஷ்மர்}.(11)

ஆசிரம மாற்றங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 63-பிராமணன் செய்யத்தகாத செயல்கள் மற்றும் தொழில்கள்; எந்தப் பிராமணன் சூத்திரனாகிறான்? ஆசிரம மாற்றங்கள்; சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் பின்பற்றத்தக்க வாழ்வு முறைகள்; க்ஷத்திரிய தர்மத்தின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{வில்லின்} நாண்கயிற்றை இழுத்தல், எதிரிகளை அழித்தல், உழவு, வணிகம், கால்நடை வளர்த்தல், செல்வத்துக்காகப் பிறருக்குப் பணிவிடை செய்தல் ஆகிய இவை ஒரு பிராமணனுக்கு முறையற்றவையாகும்.(1) நுண்ணறிவு கொண்ட ஒரு பிராமணன், இல்லற வாழ்வுமுறையை நோற்று, வேதங்கள் சுட்டும் ஆறு செயல்களை[1] முறையாகச் செய்ய வேண்டும். ஒரு பிராமணன், இல்லற வாழ்வுமுறையில் தன் கடமைகள் யாவையும் முறையாகச் செய்த பிறகு, காடுகளுக்குள் ஓயச் செல்லலாம் {வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றலாம்}.(2)

ஒரு பிராமணன், மன்னனுக்குப் பணிசெய்தல், உழவால் அடையப்படும் செல்வம், வணிகத்தால் கிடைக்கும் வாழ்வாதாரம், அனைத்து வகைக் கோணல் நடத்தைகள், தான் மணந்து கொண்ட மனைவியரைத் தவிர வேறு துணை, நியாயமற்ற வட்டி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.(3)

ஓ! மன்னா, கடமைகளில் இருந்து வீழ்ந்தவனும், தீய நடத்தை கொண்டவனுமான இழிந்த பிராமணன் ஒருவன் சூத்திரனாகிறான். சூத்திரப் பெண்ணை மணந்து கொள்தல், தீய நடத்தை கொள்தல், ஆடல்கலைஞனாதல், கிராமப் பணியாளாதல், முறையற்ற செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஏதொன்றையும் செய்யும் ஒரு பிராமணன் சூத்திரனாகிறான்.(4) ஓ! மன்னா, அவன் {பிராமணன்} வேதங்களை உரைத்தாலும், இல்லாவிட்டாலும், முறையற்ற செயல்களைச் செய்பவனானால், அவன் சூத்திரனுக்கு இணையானவனாகிறான், உணவு உண்ணும் சந்தர்ப்பங்களில் அவனுக்குச் சூத்திரர்களுக்கு மத்தியிலேயே இடம் ஒதுக்கப்பட வேண்டும்.(5)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூத்திரர்களுக்கு இணையான பிராமணர்கள், தேவர்களின் வழிபாடுகள் நடக்கும் நிகழ்வுகளில் விலக்கப்பட வேண்டும்[2].(6)

கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறியவர்களோ, தூய்மையற்ற நடத்தை கொண்டவர்களோ, தீய தொழில்கள், கொடுஞ்செயல்கள் ஆகியவற்றுக்கு அடிமையானவர்களோ, ஒழுங்குமுறையான கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களோவான பிராமணர்களுக்கு, தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவுகள் கொடுக்கப்பட்டால் அவை (அவற்றைக் கொடுப்பவனுக்கு) எந்தத் தகுதியையும் ஈட்டிக் கொடுக்காது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதன்காரணமாகவே, தற்கட்டுப்பாடு, தூய்மை, எளிமை ஆகியன ஒரு பிராமணனின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இவற்றைத் தவிர்த்து, நான்கு வாழ்வுமுறைகளும் அவனுக்காகவே பிரம்மனால் விதிக்கப்பட்டன.(7) எவன் தற்கட்டுப்பாட்டுடன், வேள்விகளில் சோமம் குடித்து, நல்ல நடத்தையுடனும், அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடனும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையுடனும், செல்வத்தை அடைவதன் மூலம் தன் நிலையைச் சிறப்பாக்கிக் கொள்ளும் விருப்பம் இல்லாமல், வெளிப்படையானவனாக, எளியவனாக, மென்மையானவனாக, கொடூரங்களில் இருந்து விடுபட்டவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்கிறானோ, அவனே பிராமணனாவான்; பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன் பிராமணனாக மாட்டான்.(8) ஓ! மன்னா, அறம் ஈட்ட விரும்பும் மனிதர்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் உதவியை நாடுவார்கள். எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்த (மூன்று) வகையினரும், அமைதி நிறைந்த கடமைகளைப் பின்பற்றவில்லையெனில், அவர்களுக்கு விஷ்ணு தன் அருளை நீட்டிக்க மாட்டான். விஷ்ணு நிறைவுபெறவில்லையெனில், சொர்க்கத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரின் மகிழ்ச்சி, வேதங்களின் தீர்மானங்கள், அனைத்து வகை வேள்விகள், மனிதர்களின் பிற அறச்செயல்கள் அனைத்தும், பல்வேறு வாழ்வுமுறைகளின் கடமைகள் அனைத்தும் தொலைந்துபோகும்[3].(10)ஓ! பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளில் நோற்கப்பட வேண்டிய கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக[4]. ஒரு க்ஷத்திரியன், (தன் நாட்டிலுள்ள மற்ற) மூன்று வகையினரும் {வர்ணத்தாரும்}, அந்த வாழ்வுமுறைகளின் அந்தந்தக் கடமைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்பினால், இவை {பின்வருவன} அவனால் அறியப்பட வேண்டும்.(11)

(சாத்திரங்களைக்) கேட்க விரும்புபவனும், தன் கடமைகளை நிறைவேற்றியவனும், ஒரு மகனைப் பெற்றவனும், உயர்ந்த வகையினருக்கும் தனக்கும் இடையில் நடத்தையின் தூய்மையில் பெரிய வேறுபாடுகள் இல்லாதவனுமான ஒரு சூத்திரனுக்கு, உலகளாவிய அமைதி, (அவனுக்குத் தேவையில்லாத) தற்கட்டுப்பாடு ஆகியவற்றைத் தவிர்த்து, அனைத்து வாழ்வுமுறைகளும் விதிக்கப்படுகின்றன[5].(12,13) ஓ! மன்னா, இந்தக் கடமைகள் யாவையும் பயிலும் ஒரு சூத்திரனுக்கும், ஒரு வைசியனுக்கும், ஒரு க்ஷத்திரியனுக்கும், {இறுதியாக} பிக்ஷு வாழ்வுமுறை விதிக்கப்பட்டிருக்கிறது.(14)வயதில் முதிர்ந்த ஒரு வைசியன், தன் வகைக்கான கடமைகளைச் செய்த பிறகு, மன்னனுக்கும் தொண்டாற்றிய பிறகு, மன்னனின் அனுமதியுடன், {தான் பின்பற்றி வரும் வாழ்வுமுறையை விட்டு விலகி} மற்றொரு வாழ்வுமுறையை ஏற்கலாம்.(15)

ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே, ஒரு வயது முதிர்ந்த க்ஷத்திரியன், வேதங்களையும், மன்னர்களின் கடமைகள் குறித்த ஆய்வுகளையும் முறையாகக் கற்று, பிள்ளைகளைப் பெற்று, அதே இயல்புடைய பிற செயல்களையும் செய்து, சோமத்தைக் குடித்து,(16) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே, நீதியுடன் தன் குடிமக்கள் அனைவரையும் பாதுகாத்து, அவர்களை ஆட்சி செய்து, ராஜசூயம், குதிரை வேள்வி மற்றும் பிற பெரும் வேள்விகளைச் செய்து,(17) சாத்திரங்களை ஓதுவதற்குக் கல்விமான்களான பிராமணர்களை அழைத்து, அவர்களது தகுதிக்குத்தக்க அவர்களுக்குக் கொடைகளை அளித்து, சிறிய அல்லது பெரிய போரில் வெற்றிகளை அடைந்து,(18) தன் மடியில் பிறந்த மகனையோ, நற்குடியில் பிறந்த வேறு க்ஷத்திரியனையோ தன் குடிமக்களைக் காக்க அரியணையில் அமர்த்தி,(19) பித்ருக்களைக் கௌரவிக்கச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை முறையாகச் செய்து, அவர்களை வணங்கி, வேள்விகளைச் செய்து தேவர்களைக் கவனமாக வணங்கி, வேதங்களைக் கற்று முனிவர்களை வணங்கிய பிறகு,(20) ஓ! மன்னா, அவன் மற்றொரு வாழ்வுமுறையை ஏற்க விரும்பினால், அவன் தற்போது பின்பற்றும் வாழ்வுமுறையைக் கைவிட்டு, உடனே அதற்கடுத்த வாழ்வுமுறையாக இருப்பதைப் பின்பற்றுவதன் மூலம் அவன் (தவ) வெற்றியை அடைகிறான்.(21)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முனிவரின் வாழ்வை வாழ விரும்பும் ஒரு க்ஷத்திரியன், பிக்ஷு வாழ்வு முறையைப் பின்பற்றலாம்; ஆனால், அவன் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக ஒருபோதும் அதைச் செய்யக் கூடாது. இல்லறவாழ்வைக் கைவிட்டு, தன் உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இரக்கும் துறவியின் வாழ்வை அவன் பின்பற்றலாம்.(22) துறவு வாழ்வானது, (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய) மற்ற மூன்று வகையினருக்கான கடப்பாடாகாது. எனினும், அவர்கள் {க்ஷத்திரியர்கள்} இந்த {துறவு} வாழ்வுமுறையைப் பின்பற்றத் தேர்ந்தெடுப்பதைப் போலவே, இவை நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} திறந்தேயிருக்கின்றன.(23)

மனிதர்களுக்கு மத்தியில், க்ஷத்திரியர்களால் பயிலப்படும் கடமைகளே உயர்ந்தவையாகும். மொத்த உலகமும் அவர்களுடைய கரங்களின் வலிமைக்கு அடங்கியதாகும். வேறு மூன்று வகையினரின் முக்கிய மற்றும் துணைக் கடமைகள் அனைத்தும், க்ஷத்திரியக் கடமைகளைச் {அவை நோற்கப்படுவதைச்} சார்ந்தே இருக்கின்றன. இதை வேதங்களே அறிவித்திருக்கின்றன.(24) பிற விலங்குகள் அனைத்தின் காலடித்தடங்களும், யானையின் காலடித்தடத்தால் விழுங்கப்படுவதைப் போலவே, அனைத்துச் சூழ்நிலைகளிலும், பிற வகையினரின் கடமைகள் அனைத்தும், க்ஷத்திரியக் கடமைகளால் விழுங்கப்படுகின்றன.(25) வேறு மூன்று வகையினரின் கடமைகள் சிறு ஆறுதலையோ, பாதுகாப்பையோ அளித்து, சிறு வெகுமதிகளை அளிக்குமெனச் சாத்திரமறிந்த மனிதர்கள் சொல்கின்றனர். க்ஷத்திரியக் கடமைகள், பெரும் ஆறுதலை அளித்துப் பெரும் வெகுமதிகளைக் கொடுக்கும் எனக் கற்றோர் சொல்கின்றனர்.(26)

அனைத்துக் கடமைகளும், தங்களைவிட  அரசகடமைகளையே முதன்மையாகக் கொண்டுள்ளன. அனைத்து வகையினரும் அவற்றால் பாதுகாக்கப்படுகின்றனர். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அரசகடமைகளின் போது துறவு நேர்கிறது, துறவே அழிவில்லா அறமெனவும், அனைத்திலும் முதன்மையானது எனவும் செல்லப்படுகிறது[6].(27) தண்டநீதி மறைந்தால், வேதங்களும் மறையும். மனிதர்களின் கடமைகளைச் சொல்லும் சாத்திரங்கள் அனைத்தும் தொலைந்து போகும். உண்மையில், க்ஷத்திரியர்களுக்குரிய இந்தப் பழங்கடமைகள் கைவிடப்பட்டால், அனைத்து வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகளும் மறைந்து போகும்.(28) அரச கடமைகளில் அனைத்து வகைத் துறவும் தென்படுகின்றன; அனைத்து வகைத் தொடக்கங்களும் அவற்றில் தோன்றுகின்றன; அனைத்து வகைக் கல்வியும் அவற்றோடு தொடர்புடையனவாக இருக்கின்றன; அனைத்து வகை உலக நடத்தையும் அவற்றில் நுழையும்.(29)இழிந்தோரால் கொல்லப்படும் விலங்குகள், அறத்தையும், அவர்களின் அறச்செயல்களையும் அழிப்பதைப் போலவே, அரச கடமைகளால் கொடுக்கப்படும் பாதுகாப்பை மனிதர்கள் இழந்தால், அவர்களது பிற கடமைகள் அனைத்தும் தாக்குதலுக்கும், அழிவுக்கும் உள்ளாகி, கவலையில் நிறைந்து, அவர்களுக்காக விதிக்கப்பட்ட நடைமுறைகளை {அறச்செயல்களை} அலட்சியம் செய்வார்கள்” என்றார் {பீஷ்மர்}.(30)

அரசகடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 64-அரசகடமைகளின் முக்கியத்துவம்; தேவர்களும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்றனர்; இந்திரனின் வடிவை ஏற்ற விஷ்ணு; அரச கடமைகள் குறித்து மாந்தாதாவிடம் உரையாடியது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள், யதிகளின் கடமைகள், மனிதர்களின் பொதுவான நடைமுறை வழக்கங்கள் ஆகிய அனைத்தும் அரச கடமைகளிலும் இருக்கின்றன.(1) ஓ! பாரதர்களின் தலைவா, இந்தச் செயல்கள் அனைத்தும் க்ஷத்திரியக் கடமைகளிலும் நேர்கின்றன. அரச செயல்பாடுகளில் தடங்கலேற்பட்டால், அனைத்து உயிரினங்களுக்கும் தீமை விளைகிறது.(2) மனிதர்களின் கடமைகள் {தர்மங்கள்} வெளிப்படையானவை அல்ல. மேலும் அவை பல கிளைகளைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. சில வேளைகளில், (தவறான) பல முறைமைகளால் வழிநடத்தப்பட்டு, அவற்றின் நித்திய இயல்பு பாதிக்கப்படுகிறது.(3) உண்மையில், (சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள) கடமைகளைக் குறித்த உண்மைகள் எதையும் அறியாமலேயே, {வெறுமனே} அடுத்தவர்களின் தீர்மானங்களைக் கண்டு நம்பும் மனிதர்கள், இறுதியில், முடிவான தீர்மானங்களை அறியாத நம்பிக்கை குழம்பிய நிலையையே அடைகிறார்கள்[2].(4) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் வெளிப்படையானவையும், பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குபவையும், தாங்கள் விளைவிக்கும் விளைவுகளைப் பொறுத்தவரையில் தெளிவானவையும், வஞ்சகம் இல்லாதவையும், மொத்த உலகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியவையுமாக இருக்கின்றன.(5)ஓ! யுதிஷ்டிரா, மூன்று வகையினர், பிராமணர்கள் மற்றும் உலக வாழ்வில் ஓய்ந்து சென்றவர்கள் {துறவிகள்} ஆகியோரின் கடமைகள் அனைத்தும் (கார்ஹஸ்த்யம் என்றழைக்கப்படும்) புனித வாழ்வுமுறைக்குள் அடங்கியிருந்தது என்று சொல்லப்படுவதைப் போலவே, நற்செயல்கள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அரசகடமைகளுக்கு அடங்கியதாகும்.(6) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் எவ்வாறு துணிச்சல்மிக்கப் பல மன்னர்கள், தெய்வீகமானவனும், பலமிக்கவனும், பேராற்றல் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான விஷ்ணுவிடம் சென்று, தண்ட நீதி {அரச நீதி} குறித்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர் என்பதை நான் உனக்குச் சொன்னேன்[3].(7) உதாரணங்களுடன் சொல்லப்பட்டிருக்கும் சாத்திரங்களின் தீர்மானங்களில் கவனமாக இருந்த அம்மன்னர்கள், பழங்காலத்தில், தங்கள் ஒவ்வொரு செயல்பாட்டையும், ஒவ்வொரு வாழ்வுமுறையின் கடமைகளோடு நிகர்த்துப் பார்த்த பிறகு நாராயணனுக்காகக் காத்திருந்தனர்[4].(8) பழங்காலத்தில் தேவர்களில் முதல்வனால் படைக்கப்பட்ட சத்தியஸ்கள், வசுக்கள், அசுவினிகள், ருத்திரர்கள், விஸ்வர்கள், மருத்துகள், சித்தர்கள் ஆகியோருடன் கூடிய தேவர்கள் அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்று வந்தனர்.(9)பழங்காலத்தில் தானவர்கள் பெருகி, அனைத்துக் கட்டுப்பாடுகளையும், வேறுபாடுகளையும் மீறியபோது[5],(10) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலமிக்கவனான மாந்தாத்ரி {மாந்தாதா} மன்னனாக ஆனான். பூமியின் ஆட்சியாளனான மன்னன் மாந்தாத்ரி, பலமிக்கவனும், தேவர்களுக்குத் தேவனும், தொடக்கம், நடுநிலை, முடிவு இல்லாதவனுமான நாராயணனைக் காணும் விருப்பத்தில் ஒரு பெரும் வேள்வியைச் செய்தான்.(11,12) அந்த வேள்வியில் அவன் பெருமைமிக்க விஷ்ணுவைப் பணிவுடன் வணங்கினான். அந்த உயர்ந்த தலைவன் {விஷ்ணு}, இந்திரனின் வடிவில் அவன் முன் தோன்றினான்.(13) நல்ல மன்னர்கள் பலரின் துணையுடன் கூடிய அவன் அந்தப் பலமிக்கத் தேவனுக்குத் தன் துதியைக் காணிக்கையாக்கினான்.(14) அந்த மன்னர்களில் சிங்கத்திற்கும் {மாந்தாத்ரிக்கும்}, பெரும் இந்திரனின் வடிவில் இருந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவனுக்கும் இடையில் பிரகாசமிக்க விஷ்ணுவைத் தீண்டும் இந்த உயர்ந்த உரையாடல் நடந்தது.(15)இந்திரன் {இந்திரன் உருவில் வந்த விஷ்ணு மந்தாதாவிடம்}, “ஓ! அறவோரில் முதன்மையானவனே, புராதானமானவனும், தேவர்களில் முதல்வனும், நினைத்தற்கரிய சக்தி படைத்தவனும், முடிவிலா மாயைகளைக் கொண்டவனுமான நாராயணனைக் காண நீ இவ்வாறு முயல்வதன் நோக்கம் யாது?(16) நானோ, பிரம்மனோ கூட அந்தத் தேவனின் உலகளாவிய வடிவைக் காண முடியாது. நீ மனிதர்களில் முதன்மையானவனாக இருப்பதால், உன் இதயத்தில் இருக்கும் வேறு நோக்கங்களுக்கு நான் உனக்கு அருள் செய்வேன்.(17) உன் ஆன்மா அமைதியில் கட்டுப்பட்டிருக்கிறது; நீ நீதிக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய்; உன் புலன்களைக் கட்டுக்குள் கொண்டிருக்கிறாய்; வீரம் கொண்டவனாகவும் இருக்கிறாய். தேவர்களுக்கு ஏற்புடையதைச் செய்யப் பின்வாங்காமல் நீ முயல்கிறாய். உன் நுண்ணறிவு, அர்ப்பணிப்பு, உயர்ந்த நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக உன்னால் விரும்பப்படும் எந்த வரத்தையும் நான் உனக்கு அளிப்பேன்” என்றான்.(18)

மாந்தாத்ரி {மாந்தாதா விஷ்ணுவிடம்}, “உன்னை நிறைவு செய்ய நான் தலைவணங்குகிறேன். எனினும், ஓ! தெய்வீகத் தலைவா, நான் தேவர்களில் முதல்வனைக் {விஷ்ணுவைக்} காணவே விரும்புகிறேன் என்பதில் ஐயமில்லை. (பூமி சார்ந்த) அனைத்து ஆசைகளைக் கைவிட்டு, அறத்தகுதி ஈட்டி, நல்லோரின் பாதைக்கு இட்டுச் செல்லும் முதன்மையான வாழ்வுமுறையைப் பின்பற்றி, அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவனாக இருக்க நான் விரும்புகிறேன்.(19) ஒரு க்ஷத்திரியனின் உயர்ந்த கடமைகளைச் செய்து, அடுத்த உலகில் வற்றாத தகுதிகளுடன் கூடிய பல பகுதிகளை ஈட்டியிருக்கிறேன். மேலும், அந்தக் கடமைகளின் மூலம் என் புகழும் பரவியிருக்கிறது. எனினும், தேவர்களில் முதல்வனிடமிருந்து {விஷ்ணுவிடம்} வந்தவையும், உலகில் முதன்மையானவையுமான கடமைகளைச் செய்வது எவ்வாறு என்பதை நான் அறியவில்லை” என்று கேட்டான்.(20)

இந்திரன் {விஷ்ணு மந்தாதாவிடம்}, “மன்னர்களாக இல்லாதோர், தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தாலும், கடமையின் உயர்ந்த வெகுமதிகளை எளிதில் அடைய முடியாது. மூல தேவனிடமிருந்தே அரச கடமைகள் வாய்த்தன. பிற கடமைகள் அவனது உடலில் இருந்து பிற்பாடு தோன்றின.(21) வானப்ரஸ்த வாழ்வுமுறையுடன் கூடியவையும், பிற்பாடு படைக்கப்பட்டவையுமான பிற கடமைகள் முடிவற்றவையாக இருக்கின்றன. அவை அனைத்தின் கனிகளும் {பலன்களும்} வற்றாதவையாக இருக்கின்றன. அவற்றிலேயே பிற கடமைகள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாகவே அனைத்திலும் முதன்மையானவையாக க்ஷத்திரியக் கடமைகள் சொல்லப்படுகின்றன.(22) பழங்காலத்தில், க்ஷத்திரியக் கடமைகளின்படி செயல்பட்ட விஷ்ணு, தன் எதிரிகளைப் பலவந்தமாக ஒடுக்கி, அழித்து, அளவில்லா சக்தி கொண்ட முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கும் நிவாரணத்தை அளித்தான்.(23) நினைத்தற்கரிய சக்தி கொண்ட அந்தத் தெய்வீக விஷ்ணு, அசுரர்களுக்கு மத்தியில் இருந்து தன் எதிரிகளைக் கொல்லாமல் இருந்திருந்தால், பிராமணர்கள், உலகங்களின் படைப்பாளன் (பிரம்மன்) ஆகியோருக்கும், க்ஷத்திரியக் கடமைகளும், உயர்ந்த தேவனிடம் இருந்து முதலில் வந்த கடமைகள் அனைத்துக்கும் அழிவு ஏற்பட்டிருக்கும்.(24) தேவர்களில் முதன்மையான அந்த முதல்வன் {விஷ்ணு}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி அசுரர்களுடன் கூடிய பூமியை அடக்காமல் இருந்திருந்தால், பிராமணர்களுக்கு ஏற்படும் அழிவின் விளைவால், நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள் அனைத்தும் அழிவை அடைந்திருக்கும்.(25)

(மனிதர்களின்) நித்திய கடமைகள் அனைத்துக்கும் அழிவு ஏற்பட்டது. க்ஷத்திரியக் கடமைகளைச் செய்தே அவை மீட்கப்பட்டன. பிரம்மத்தை அடையும் பிராமணர்களின் கடமைகளே, ஒவ்வொரு யுகத்திலும் முதலில் தோன்றுகின்றன. எனினும் இவை அனைத்தும் அரசகடமைகளாலேயே காக்கப்படுகின்றன. எனவே, அரசகடமைகளே முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.(26) போரில் உயிரைக் கைவிடுவது, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது, உலகக் காரியங்களில் அறிவு, மனிதர்களைப் பாதுகாப்பது, ஆபத்திலிருந்து அவர்களை மீட்பது, துயரில் இருப்போரையும், ஒடுக்கபட்டோரையும் விடுவிப்பது ஆகிய இவை அனைத்தும் மன்னர்களால் செய்யப்படும் க்ஷத்திரியக்கடமைகளில் நேர்கின்றன.(27) நலந்தரும் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாதோர், காமம் மற்றும் கோபத்தின் வசப்பட்டோர் ஆகியோர் மன்னர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக வெளிப்படையான பாவச் செயலைச் செய்யாதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, க்ஷத்திரியக்கடமைகள் நீதிமிக்கவையாகக் கருதப்படுகின்றன.(28) பெற்றோரால் பாதுகாக்கப்படும் பிள்ளைகளைப் போல க்ஷத்திரியக் கடமைகளைச் செய்யும் மன்னர்களால் பாதுகாக்கப்படுவதாலேயே அனைத்து உயிரினங்களும் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்கின்றன என்பதில் ஐயமில்லை.(29) கடமைகள் அனைத்திலும் க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவை. உலகில் முதன்மையானவை என்று கருதப்படும் அந்த நித்திய கடமைகளே ஒவ்வொரு உயிரினத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றன. நித்தியமான அவையே, அழிவில்லா பேற்றுக்கு வழிவகுப்பனவாகும்.” என்றான் {இந்திரன்}.(30)

கள்வர்களின் கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 65-க்ஷத்திரியக் கடமைகளின் மேன்மை; கள்வர்களும் பின்பற்ற வேண்டிய கடமைகள்; அரசகடமைகள் மற்றும் தண்டநீதியின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன இந்திரன்; பழங்காலத்தில் நடந்த இந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

இந்திரன் {மந்தாதாவிடம்}, “ஓ! மன்னா {மந்தாதா}, இத்தகு சக்தியைக் கொண்டவையும், பிற கடமைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையும், கடமைகள் அனைத்திலும் முதன்மையானவையுமான க்ஷத்திரியக் கடமைகள், உலகின் நன்மையை நாடுபவர்களும், உயர் ஆன்மா கொண்டோர்களுமான உன்னைப் போன்ற மனிதர்களால் நோற்கப்பட வேண்டும். அந்தக் கடமைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையென்றால், அனைத்து உயிரினங்களும் அழிவையடையும்.(1) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட மன்னன், உழவுக்கான நிலத்தை மீட்பது, அதற்கு உரமிடுவது, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பெரும் வேள்விகளைச் செய்வது, கையேந்துவதைப் புறக்கணிப்பது {துறவைப் புறக்கணிப்பது}, குடிமக்களைப் பாதுகாப்பது போன்றவற்றையே தன் முதன்மையான கடமைகளாகக் கருத வேண்டும்.(2) (கொடைபெறுதலைக்) துறப்பதே அறங்களில் முதன்மையானது எனத் தவசிகள் சொல்கின்றனர். அனைத்து வகைத் துறவுகளிலும், போரில் உடலைக் கைவிடுவதே முதன்மையானது. எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்றவர்களும்,(3) தங்கள் ஆசான்களிடம் முறையாகக் காத்திருந்தவர்களும், பெரும் கல்வி பெற்றவர்களுமான பூமியின் ஆட்சியாளர்கள், ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டு, இறுதியில் எவ்வாறு தங்கள் உடல்களைத் துறந்தனர் என்பதை உன் கண்களாலேயே கண்டாய். அறத்தகுதி ஈட்ட விரும்பும் க்ஷத்திரியன், பிரம்மச்சரிய வாழ்வுமுறையை வாழ்ந்து, பிறகு எப்போதும் தகுதியைத் தரக்கூடியதான இல்லற வாழ்வையே நோற்க வேண்டும்.(4) (குடிமக்களுக்கிடையே) நீதி தொடர்புடைய சராசரி கேள்விகளின் வழக்கில் தீர்ப்பளிப்பதில் அவன் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையினரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதற்கும், அனைவரையும் பாதுகாப்பதற்கும், பல்வேறு திட்டங்கள், வழிமுறைகள், ஆற்றல்,(5) (நோக்கங்கள் நிறைவடைய நாடும்) உழைப்பு ஆகியவற்றுக்கும், அனைத்துக் கடமைகளையும் தங்கள் இலக்கினுள் கொண்ட க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. அரச கடமைகளின் விளைவாகவே பிற வகையினர் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்ற இயலும். இதன்காரணமாகவே தகுதியை உண்டாக்குவதில் அரச கடமைகளைச் சார்ந்தே பிற கடமைகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(6)

நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அலட்சியம் செய்வோரும், இவ்வுலகம் சார்ந்த பொருட்களைப் பின்தொடர்ந்து அவற்றில் பெரும்பற்றோடிருப்போரும் அறிவிலிகளின் {விலங்குகளின்} இயல்பைக் கொண்டோராகச் சொல்லப்படுகிறார்கள். அரச கடமைகளின் செயல்பாட்டாலேயே அவர்கள் நீதியுடன் நடந்து கொள்ளும் வற்புறுத்தலுக்கு உட்படுகிறார்கள். எனவே அக்கடமைகளே {அரசகடமைகளே} அனைத்திலும் முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன.(7) மூன்று வேதங்களைப் பின்பற்றும் பிராமணர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் நடத்தைமுறைகளும், பிராமணர்களுக்காக விதிக்கப்படும் வாழ்வுமுறைகளும் அனைத்திற்கும் முன்பாக ஒவ்வொரு பிராமணனாலும் நோற்க வேண்டும். ஒரு பிராமணன் வேறு வகையில் நடந்து கொண்டால், ஒரு சூத்திரனைப் போலவே அவன் தண்டிக்கப்பட வேண்டும்[1].(8) ஓ! மன்னா {மந்தாதா}, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகளும், வேதங்களால் பரிந்துரைக்கப்படும் சடங்குகளும் எப்போதும் ஒரு பிராமணனால் பின்பற்றப்பட வேண்டும். அவனுக்கு வேறேதும் கடமைகள் கிடையாது என்பதை அறிவாயாக.(9) வேறு வகையில் செயல்படும் பிராமணனுக்கு எந்த வாழ்வாதாரத்தையும் ஒரு க்ஷத்திரியன் அமைத்துக் கொடுக்கக்கூடாது. அவனது அறத்தகுதிகள் அவனது செயல்பாடுகளின் விளைவாகவே வளரும். உண்மையில் ஒரு பிராமணன் தர்மத்தின் தன்வடிவமாவான்.(10) தனக்காக விதிக்கப்படாத செயல்பாடுகளில் ஈடுபடும் பிராமணன் எந்த மதிப்புக்கும் தகுந்தவனாகான். அவன் {பிராமணன்} முறையான செயல்பாடுகளில் ஈடுபடவில்லையெனில், அவனை ஒருபோதும் நம்பக்கூடாது.(11)பல்வேறு வகையினருக்கும் உரிய கடமைகள் இவையே. (மக்களை) அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்வதில் முன்னேற்றமடையும் வகையில் க்ஷத்திரியர்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இவையே க்ஷத்திரியர்களின் கடமைகளுமாகும். இதன்காரணமாகவே, வேறு எவற்றையும்விட அரசகடமைகளே அனைத்திலும் முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. இவையே வீரர்களின் கடமைகள் என்றும், வீரர்களே இவற்றை நடைமுறைப்படுத்துவதில் முதன்மையானவர்கள் என்றும் நான் நம்புகிறேன்” என்றான் {இந்திரன்}.(12)

மாந்தாத்ரி {மாந்தாதா இந்திரனிடம்}, “யவனர்கள், கிராதர்கள், காந்தாரர்கள், சீனர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள், சகர்கள், துஷாரர்கள், கங்கர்கள், பஹ்லவர்கள் {பல்லவர்கள்}[2], ஆந்திரர்கள், மத்ரகர்கள், பௌண்டரர்கள், புளிந்தர்கள் {உஷ்ட்ரர்கள்}, ராமதர்கள், காம்போஜர்கள், {ஆரட்டர்கள், காசர்கள், மிலேச்சர்கள்} ஆகியோராலும், (ஆரிய) மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களில் இருந்து எழுந்த பலர், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோராலும் செய்யப்பட வேண்டிய கடமைகள் என்ன? மேலும் களவையே வாழ்வாதாரமாகக் கொண்ட இனங்களை அடக்குவோரான எங்களைப் போன்ற மன்னர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் என்ன?(13-15) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கத் தேவா {இந்திரா}, எனக்கு அறிவுறுத்துவாயாக. ஓ! தேவர்கள் அனைவரின் தலைவனே {இந்திரனே}, க்ஷத்திரியர்களான எங்களின் நண்பன் நீயே” என்றான் {மாந்தாதா}.(16)

இந்திரன் {மந்தாதாவிடம்}, “களவைச் செய்யும் இனக்குழுக்கள் அனைத்தும் தங்கள் தாய்மாருக்கும், தந்தைமாருக்கும், தங்கள் ஆசான்களுக்கும், பெரியோர்களும், காடுகளில் உள்ள ஆசிரமங்களில் வாழும் துறவிகளுக்கும் தொண்டாற்ற வேண்டும்.(17) கள்வர் இனக்குழுக்கள் அனைத்தும் தங்கள் மன்னர்களுக்கும் தொண்டாற்ற வேண்டும். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் மற்றும் சடங்குகள் அவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும்.(18) அவர்கள் பித்ருக்களைக் கௌரவிக்க வேள்விகளைச் செய்ய வேண்டும், கிணறுகள் வெட்ட வேண்டும், (உலகத் தொண்டில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்), தாகத்துடன் இருக்கும் பயணிகளுக்கு நீர் கொடுக்க வேண்டும், படுக்கைகள் மற்றும் பருவகாலத்திற்கேற்ற பிற கொடைகளைப் பிராமணர்களுக்கு அளிக்க வேண்டும்.(19) தீங்கிழையாமை, உண்மை, கோபத்தை அடக்குதல், பிராமணர்களுக்கும், சொந்தங்களுக்கும் அவர்களுக்குரியதைக் கொடுத்து ஆதரித்தல், மனைவியர் மற்றும் பிள்ளைகளைப் பராமரித்தல், தூய்மை, அமைதி,(20) அனைத்து வகை வேள்விகளில் பிராமணர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை தன் செழிப்பை விரும்பும் இந்த வகையின் ஒவ்வொரு மனிதனாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்தகு மனிதன் உணவு மற்றும் செல்வத்துடன் கூடிய அனைத்து வகைப் பாகயக்ஞங்களைச் செய்ய வேண்டும்.(21) ஓ! பாவமற்றவனே, இவையும், இன்னும் இதைப் போன்ற கடமைகளும் பழங்காலத்தில் இவ்வகையினருக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மன்னா, பிறர் அனைவருக்கும் விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் அனைத்தும் கள்வர் வகையினராலும் செய்யப்பட வேண்டும்” என்றான் {இந்திரன்}.(22)

மாந்தாத்ரி {இந்திரனிடம்}, “மனிதர்களின் உலகில், நால்வகையினர் மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் அனைத்திலும் இத்தகு தீய மனிதர்கள் மறைந்து வாழ்வது காணப்படுகிறது” என்றான்.(23)

இந்திரன், “ஓ! பாவமற்றவனே, அரசகடமைகளும், தண்டனை அறிவியலும் {தண்டநீதியும்} மறைந்தால், மன்னர்களின் கொடுங்கோன்மையின் விளைவால் அனைத்து உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்படும்.(24) கிருத யுகத்திற்குப் பிறகு, பல்வேறு வாழ்வுமுறைகளைப் பொறுத்தவரையில் பெருங்குழப்பம் ஏற்படும், பல்வேறு வகைச் சமுதாயக்குழுக்கள் சார்ந்த அடையாளங்களுடன் எண்ணற்ற பிக்ஷுகள் {துறவிகள்} தோன்றுவார்கள்.(25) புராணங்களையும், அறத்தின் உயர்ந்த உண்மைகளையும் அலட்சியம் செய்து, காமம் மற்றும் கோபத்தால் தூண்டப்பட்டுத் தவறான பாதைகளுக்கு மனிதர்கள் பிறழ்வார்கள்.(26) பாவம் நிறைந்த மனிதர்கள், தண்டனை அறிவியலின் துணையுடன் கூடிய உயர் ஆன்ம மனிதர்களால் (தீச்செயல்களிலிருந்து) தடுக்கப்படும்போதுதான், அனைத்திலும் மேன்மையானதும், அழிவற்றதும், அனைத்து நன்மைக்கும் ஊற்றுக்கண்ணாயிருப்பதுமான அறம் உறுதியுடன் நிறுவப்படும்.(27) அனைவருக்கும் மேன்மையான மன்னனை அவமதிக்கும் மனிதன் செய்யும் கொடைகள், ஆகுதிகள், பித்ருக்களுக்கான காணிக்கைகள் ஆகியவை கனியற்றதாகும்.(28) உண்மையில் நித்திய தேவனேயான ஓர் அறம்சார்ந்த மன்னனை தேவர்களேகூட அவமதிக்கமாட்டார்கள்.(29) அனைத்து உயிரினங்களின் தெய்வீகத்தலைவன், அண்டத்தைப் படைத்த பிறகு, மக்களின் கடமைகள் சார்ந்து ஒரு க்ஷத்திரியன் அவர்களை ஆள வேண்டும் என்று விரும்பினான்.(30) மனிதர்கள் செய்யும் கடமைகளின் போக்கைத் தன் அறிவின் துணை கொண்டு கண்காணிக்கும் மனிதனை {மன்னனை} நான் மதிக்கிறேன், வழிபடுகிறேன். அத்தகு கண்காணிப்பிலேயே க்ஷத்திரியக் கடமைகள் இருக்கின்றன” என்றான் {இந்திரன்}”.(31)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் வடிவிலிருந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் தெய்வீக நாராயணன் இந்த வார்த்தைகளைச் சொன்னபிறகு, மருத்துகளின் துணையுடன், வற்றாத அருளுள்ள தன் நித்திய வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(32) ஓ! பாவமற்றவனே, நல்லோரால் பின்பற்றப்படும் கடமைகள் பழங்காலத்தில் இவ்வழியில் இருந்தபோது, தூய ஆன்மாவும், கல்வியும் கொண்ட எந்த மனிதன்தான் ஒரு க்ஷத்திரியனை அலட்சியம் செய்ய முடியும்?(33) பார்வையற்ற மனிதர்கள் தங்கள் வழியில் செல்ல முடியாததைப் போல, நீதியற்ற செயல்பாடும், நீதியற்ற தவிர்த்தலும் அழிவையே அடைகின்றன.(34) ஓ! மனிதர்களில் புலியே, ஆதிகாலத்தில் இருந்து செயல்படத் தொடங்கியதும், முன்னோர்களுக்கு மிக முக்கியமுமான இந்த (கடமைகள் எனும்) சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} நீ பின்பற்ற வேண்டும். ஓ! பாவமற்றவனே, இதைச் செய்ய நீ தகுந்தவனாவாய் என்பதை நான் அறிவேன்” என்றார் {பீஷ்மர்}.(35)

வர்ணாசிரமங்களில் ராஜதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 66- வாழ்வுமுறைகள் அனைத்தின் கடமைகளையும் மீண்டும் விரிவாகச் சொல்லும்படி பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிற கடமைகள் அனைத்தும் அரச கடமைகளிலேயே அடங்கியிருக்கின்றன என்ற பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனித வாழ்க்கையின் வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} குறித்து நீர் என்னிடம் சொன்னீர். நான் அவற்றைக் குறித்து அதிகம் அறிய விரும்புகிறேன். அவற்றை விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, இவ்வுலகில் நல்லோரால் பயிலப்படும் கடமைகள் அனைத்தையும் நான் அறிந்த அளவுக்கு நீயும் அறிவாய்.(2) ஓ! அறவோரில் முதன்மையானவனே, வேறு வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் வேறு சிலரால் பயிலப்படும் கடமைகளின் விளைவாக (ஒரு மன்னன்) அடையும் தகுதி குறித்துக் கேட்பாயாக.(3) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகளைப் பயிலும் மனிதர்களுக்குரிய தகுதிகள் அனைத்தும் அறம்சார்ந்த மன்னர்களைப் பற்றுகின்றன.(4)

ஓ! யுதிஷ்டிரா, காமம் மற்றும் வெறுப்பின் ஆளுகைக்குட்படாமல், தண்டனை அறிவியலின் துணை கொண்டு ஆட்சி செய்து, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதும் ஒரு மன்னன், பைக்ஷிய வாழ்வுமுறையின் இலக்கை (பிரம்மத்தை) அடைகிறான்.(5) அறிவுடையவனும், சரியான சந்தர்ப்பங்களில் தகுந்தோருக்குக் கொடை அளிப்பவனும், எவ்வாறு உதவுவது, எவ்வாறு தண்டிப்பது என்பதை அறிந்தவனும், சாத்திர விதிகளின் படி அனைத்திலும் நடந்து கொள்பவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(6) ஓ! குந்தியின் மகனே, வழிபாட்டுக்குத் தகுந்தோருக்கு உரியதைக் கொடுத்து எப்போதும் வழிபடுபவன் பைக்ஷிய வாழ்வு முறையின் இலக்கை முழுமையாக அடைகிறான்.(7) ஓ! யுதிஷ்டிரா, தன்னாலான சக்தியுடன் தன் சொந்தங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் துயரில் இருந்து மீட்கும் மன்னன், வானப்ரஸ்த வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(8) ஓ! குந்தியின் மகனே, மனிதர்களில் முதன்மையானோரையும், யதிகளில் முதன்மையானோரையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கௌரவிக்கும் மன்னன், வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(9) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, தினமும் பித்ருக்களுக்குக் காணிக்கையளிப்பவனும், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் காணிக்கைகளை அளிப்பவனுமான மன்னன், அதே {வானப்ரஸ்த} வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(10,11)

ஓ! மனிதர்களில் புலியே, நல்லோரைக் காக்க வேறு நாடுகளைக் கலங்கடிக்கும் மன்னன், அதே {வானப்ரஸ்த} வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(12) அனைத்துயிரினங்களின் பாதுகாப்பின் விளைவாகவும், தன் நாட்டை முறையாகப் பாதுகாப்பதன் விளவாகவும், ஒரு மன்னன், காக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையின் அளவுக்குப் பல வேள்விகளின் தகுதிகளை அடைந்து, அதன்படியே சந்நியாச வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(13) தினமும் வேதங்களைக் கற்பது, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, ஆசான்களை வழிபடுவது, தன் குருவுக்குத் தொண்டாற்றுவது ஆகியன பிரம்மச்சரியத்தின் இலக்கை அடைய வழிவகுக்கும்.(14) ஓ! மனிதர்களில் புலியே, தினமும் தன் மந்திரங்களை அமைதியாக ஓதுபவனும், விதிப்படி தேவர்களை எப்போதும் வழிபடுபவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(15)

தன் நாட்டைப் பாதுகாக்கத் தீர்மானித்துப் போரில் ஈடுபடவோ, மரணமடையவோ நேரும் மன்னன் வானப்ரஸ்த வாழ்வு முறையின் இலக்கை அடைகிறான்.(16) ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை மற்றும் உண்மையுடன் எப்போதும் நடந்து கொள்பவனான மன்னன் வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(17) வானப்ரஸ்த வாழ்வுமுறை வாழ்பவர்களுக்கும், மூன்று வேதங்களை அறிந்த பிராமணர்களுக்கும் கொடையளிக்கும் மன்னன் வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(18) ஓ! பாரதா, அனைத்துயிரினங்களிடமும் கருணையைக் காட்டி, கொடூரத்தை முற்றிலும் தவிர்க்கும் மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் இலக்குகளையும் அடைகிறான்.(19) ஓ! யுதிஷ்டிரா, ஓ! குந்தியின் மகனே, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளையவர்களுக்கும், முதியவர்களுக்கும் கருணை காட்டும் மன்னன் அனைத்து வாழ்வுமுறைகளின் இலக்குகளையும் அடைகிறான்.(20)

ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தன் பாதுகாப்பை நாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத்தை வழங்கும் மன்னன் கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(21) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனும், தகுந்தோரைக் கௌரவிப்பவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(22) மூத்த மற்றும் இளைய சகோதரர்களின் மனைவிமார், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு உதவிகளை அளிப்பதும், தண்டனைகளால் பீடிப்பதும், ஒரு மன்னனின் இல்லறக் கடமைகளாகும், இவையே அவனது சிறந்த தவமுமாகும்[1].(23) ஓ! மனிதர்களில் புலியே, நல்லோரையும், வழிபாட்டுக்குத் தகுந்தோரையும் கௌரவிப்பவனும், (தவத்தின் மூலம்) தன்னறிவு அடைந்தோரைப் பாதுகாப்பவனுமான மன்னன் கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைவான்.(24) ஓ! பாரதா, வானப்ரஸ்த வாழ்வுமுறையில் வாழும் மனிதர்களையும், பிற வாழ்வு முறைகளில் வாழ்வோரையும் தன் இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு உணவளிப்பது ஒரு மன்னனின் இல்லறக் கடமையாகும்.(25)படைப்பாளனால் விதிக்கப்பட்ட கடமைகளை முறையாகப் பின்பற்றும் மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் அருள் தகுதிகளை அடைகிறான்.(26) ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, எந்த நற்குணமும் அழியாமல் இருக்கும் மன்னன் வானப்ரஸ்தம் மற்றும் வேறு வாழ்வுமுறைகள் அனைத்தையும் நோற்பவனாகக் கல்விமான்களால் சொல்லப்படுகிறான்.(27) குலம், வயது, பதவி, நிலை ஆகியவற்றில் தகுந்தவர்களுக்குக் கௌரவமளிக்கும் மன்னன் அனைத்து வாழ்வு முறைகளிலும் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்[2].(28) ஓ! குந்தியின் மகனே, ஓ! மனிதர்களில் புலியே, தன் நாட்டின் கடமைகளையும், தன் குடும்பத்தின் கடமைகளையும் செய்யும் ஒரு மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் தகுதியையும் அடைகிறான்.(29) ஓ! மன்னா, முறையான காலங்களில் நல்லோருக்கு வெகுமதிகளையோ, மதிப்புமிக்கப் பரிசுகளையோ அளிக்கும் மன்னன், அனைத்து வகை வாழ்வுமுறைகளின் தகுதிகளையும் அடைகிறான்.(30)ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஆபத்தையும், அச்சத்தையும் அடைந்த போதிலும், மனிதர்கள் அனைவரின் கடமைகளில் {தர்மத்திலும்} கண் கொண்ட மன்னன், அனைத்து வகை வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} தகுதியையும் ஈட்டுகிறான்.(31) ஒரு மன்னன், தன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள நல்லோரைப் பாதுகாப்பதால் ஈட்டப்படும் தகுதிகளின் பங்கை அடைகிறான்.(32) மறுபுறம், ஓ! மனிதர்களில் புலியே, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் உள்ள நல்லோரை மன்னர்கள் காக்கவில்லையெனில், அவர்கள் (அந்தச் செயல் அல்லது புறக்கணிப்புக்கான) பாவத்தையே ஈட்டுகிறார்கள்.(33) ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, (தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதில்) மன்னர்களுக்கு உதவி புரியும் மனிதர்களும், (அந்தப் பாதுகாப்பின் விளைவாக) பிறரால் ஈட்டப்படும் தகுதிகளின் பங்கை அடைவதற்கு {மன்னர்களைப் போலவே} சமமான தகுதியைப் பெறுகிறார்கள்.(34) நாம் பின்பற்றும் கார்ஹஸ்த்தியமே வாழ்வுமுறைகள் அனைத்திலும் மேன்மையானது எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். அதுகுறித்த தீர்மானங்கள் மிகத் தெளிவானவையாகும். ஓ! மனிதர்களில் புலியே அது நிச்சயம் புனிதமானதே.(35)

தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் கருதுபவனும், எத்தீங்கையும் செய்யாதவனும், கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனுமான மனிதன் இம்மையிலும், மறுமையிலும் பேரின்பத்தை அடைகிறான்[3].(36) ஒரு மன்னன், தன் அரச கடமைகளையே பெரும் வேகம் மிக்கக் கப்பலாகக் கொண்டு, கொடைகள் எனும் காற்றால் தூண்டப்பட்டு, சாத்திரங்களைத் துடுப்பாகக் கொண்டு, நுண்ணறிவையே கப்பல் அதிகாரியின் பலமாகக் கொண்டு, அறத்தின் சக்தியால் உலகமெனும் பெருங்கடலை எளிதாகக் கடப்பான்[4].(37) ஒருவனுடைய இதயத்தில் உலகப்பொருள் ஒவ்வொன்றின் மீதும் இருக்கும் ஆசை விலகினால் அவன் தன்னறிவை {தன் நற்குணத்தை} மட்டுமே சார்ந்திருப்பவனாகக் கருதப்படுகிறான். இந்நிலையில் அவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்[5].(38) ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, ஒரு மன்னன், இதயத்தில் உள்ள விருப்பங்களையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தி, தியானத்தின் மூலம் உற்சாகமடைந்து, {குடிமக்களைப்} பாதுகாக்கும் கடமையை வெளிப்படுத்தினால், அவன் பெரும் தகுதியை அடைவதில் வெல்கிறான்.(39) எனவே, ஓ! யுதிஷ்டிரா, பக்தி செயல்பாடுகளைக் கொண்டோரும், வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோருமான பிராமணர்களையும், பிற மனிதர்கள் அனைவரையும் கவனமாகப் பாதுகாக்க முயல்வாயாக.(40) ஓ! பாரதா, ஒரு மன்னன், பாதுகாப்பு எனும் கடமையைச் செய்வதன் மூலம், காட்டில், ஆசிரமங்களில் உள்ள துறவிகள் ஈட்டும் தகுதியைவிட நூறு மடங்கு தகுதியை ஈட்டுகிறான்.(41)ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரனே}, மனிதர்களின் பல்வேறு கடமைகளை நான் உனக்கு விளக்கிவிட்டேன். நித்தியமானவையும், பழங்காலத்தில் இருந்து பெரும் மனிதர்களால் பயிலப்படுபவையுமான அரசகடமைகளை நீ பின்பற்றுவாயாக.(42) ஓ! மனிதர்களில் புலியே, (உன் குடிமக்களைப்) பாதுகாக்கும் கடமையில் குவிந்த கவனத்துடன் நீ ஈடுபட்டால், நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} மற்றும் நான்கு வகைகள் {வர்ணங்கள்} சார்ந்த மனிதர்கள் அனைவரின் தகுதியையும் நீ அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.(43)

அரசற்ற நிலையும், மனுவும்! – சாந்திபர்வம் பகுதி – 67-அரசற்ற நாட்டின் நிலையை வர்ணித்த பீஷ்மர்; மன்னனால் உண்டாகும் நன்மையையும், அரசற்ற நிலையால் உண்டாகும் தீமையையும் சொன்னது; பழங்காலத்தில் அரசற்ற நிலையில் எவ்வாறு மனு மன்னனானான் என்பதைச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “{இதுவரை} நான்கு வாழ்வு முறைகள் மற்றும் நான்கு வகையினரின் கடமைகள் குறித்து நீர் சொன்னீர். ஓ! பாட்டா, ஒரு நாட்டின் முக்கியக் கடமைகள் என்னென்ன என்பதை எனக்கு இப்போது சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு மன்னனை (தேர்ந்தெடுத்து) பட்டமேற்கச் செய்வதே, ஒரு நாட்டின் முதற்கடமையாகும். அரசற்ற நிலையிலேயே தொடரும் நாடு பலவீனமடைந்து விரைவில் கள்வர்களால் பீடிக்கப்படும்.(2) அரசற்ற நிலையால் பீடிக்கப்படும் நாடுகளில் அறம் நிலைபெறாது. குடிமக்கள் ஒருவரையொருவர் விழுங்குவார்கள். சாத்தியமான நிலைகளில் மிகவும் கீழ்நிலை அரசற்ற நிலையே ஆகும்.(3) ஒரு மன்னனுக்கு முடிசூட்டுவதால், (அந்த மன்னனின் உள்ளிருக்கும்) இந்திரனே முடிசூட்டப்படுகிறான் என்று சுருதிகள் {வேதங்கள்} அறிவிக்கின்றன. செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒரு மனிதன், இந்திரனை வழிபடுவதைப் போலவே மன்னனை வழிபட வேண்டும்.(4) அரசற்ற நிலையால் பீடிக்கப்படும் நாட்டில் ஒருவரும் வசிக்கக்கூடாது. அரசற்ற நிலை நீடிக்கும் நாடுகளில் ஊற்றப்படும் காணிக்கைகளை {ஆகுதிகளை} அக்னி (தேவர்களுக்குக்) கொடுப்பதில்லை.(5)

அரசற்ற நிலையால் பலவீனமடைந்த நாடுகளைத் தன் ஆட்சிப்பகுதிகளோடு இணைத்துக் கொள்ளும் விருப்பத்தோடு ஒரு பலமிக்க மன்னன் அவற்றை அணுகினால், மக்களே முன்வந்து அந்தப் படையெடுப்பாளனை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். இத்தகு நடத்தையே நல்லறிவுக்குப் பொருந்துவதாக இருக்கும். அரசற்ற நிலையைவிட வேறு பெரிய தீமை எதுவுமில்லை[1].(7) அந்தப் பலமிக்கப் படையெடுப்பாளன் தகைமையாளனாக {நேர்மைநெறியுடன் கூடியவனாக} இருந்தால், அனைத்தும் சரியாக இருக்கும். மறுபுறம் கடும்கோபம் கொண்டவனாக இருந்தால் {கோபம் மூட்டப்பட்டால்} அவன் அவனைவரையும் கொல்லக்கூடும்.(8) எளிதாகப் பால்கறக்க முடியாத பசு அதிகத் துன்பத்துக்கு ஆளாகும். மறுபுறம், எளிதாகப் பாலைக் கறக்கவிடும் பசு, எந்தத் துன்பத்துக்கும் ஆளாக நேராது.(9) எளிதாக வளையும் பொருளைச் சுட வேண்டிய தேவையில்லை. எளிதாக வளையும் மரம், (தோட்டக்காரனின் கைகளில்) எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டியதில்லை.(10)ஓ! வீரா {யுதிஷ்டிரா}, இந்த எடுத்துக்காட்டுகளால் வழிநடத்தப்படும் மனிதன், பலமிக்கவர்கள் முன்பு பணிய வேண்டும். பலமிக்க மனிதனின் முன்பு தன் தலையை வணங்கும் மனிதன் உண்மையில் இந்திரனிடமே தலைவணங்குகிறான்.(11) செழிப்பை விரும்பும் மனிதர்கள், இந்தக் காரணங்களுக்காகவே, ஒரு மனிதனை (தேர்ந்தெடுத்து) தங்கள் மன்னனாக முடிசூட்ட வேண்டும். அரசற்ற நாடுகளில் வாழ்வோரால் தங்கள் செல்வத்தையோ, மனைவியரையோ அனுபவிக்க முடியாது.(12) பாவம் நிறைந்த மனிதன், அரசற்ற காலங்களில் பிற மக்களின் செல்வத்தைக் கவர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். எனினும் (தவறான வழியில் அடையப்பட்ட) தன் செல்வம் பிறரால் பறிக்கப்படும்போது அவன் ஒரு மன்னனை விரும்புகிறான்.(13) எனவே, அரசற்ற காலங்களில் மிகத் தீமையானவர்கள்கூட மகிழ்ச்சியாக {பாதுகாப்பாக} இருக்கமுடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது[2]. ஒருவனுடைய செல்வமானது இருவரால் பறிக்கப்படும். அந்த இருவருடையது, ஒன்றாகச் செயல்படும் பலரால் பறிக்கப்படும்.(14) அடிமையாக இல்லாதவன் அடிமையாக்கப்படுவான். மேலும் பெண்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படுவார்கள். இந்தக் காரணங்களுக்காகவே, தேவர்கள், மக்களைப் பாதுகாப்பதற்காக மன்னர்களைப் படைத்தார்கள்.(15)பூமியில் தண்டனை வழங்கும் கோலை {செங்கோலைத்} தரித்த மன்னன் எவனும் இல்லையென்றால், நீரில் உள்ள மீன்களைப் போலப் பலமானவர்கள் பலமற்றவர்களை இரையாக்குவார்கள்.(16) நீரில் இருக்கும் பலமிக்க மீன்கள், பலமற்றவையை விழுங்குவதைப் போல, பழங்காலத்தில் அரசற்ற நிலையின் விளைவால் மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்கி அழிவைச் சந்தித்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அப்போது அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து, சில குறிப்பிட்ட உடன்படிக்கைகளைச் செய்தனர் என்றும் நாம் கேள்விப்படுகிறோம். {அந்த உடன்படிக்கை பின்வருமாறு} அவர்கள் “எவன் கடுஞ்சொல் பேசுகிறானோ, வன்முறை உணர்வு கொள்கிறானோ, எவன் அடுத்தவரின் மனைவியரை நெறிதவறவோ, அபகரிக்கவோ செய்கிறானோ, எவன் பிறருக்குச் சொந்தமான செல்வத்தைக் களவாடுகிறானோ, அவன் நம்மால் கைவிடப்பட வேண்டும்” என்று சொன்னார்கள். அனைத்து வகை மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதற்காக அவர்கள் இத்தகு உடன்படிக்கையைச் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்தனர்.(19) அவர்கள் சிலகாலம் கழித்துத் துன்பத்துடன் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, “ஓ! தெய்வீகத் தலைவா, ஒரு மன்னனில்லாமல் நாங்கள் அழிவடையப் போகிறோம். எவனாவது ஒருவனை எங்கள் மன்னனாக நியமிப்பீராக.(20) நாங்கள் அனைவரும் அவனை வழிபடுவோம். அவன் எங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றனர். இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} மனுவிடம் கேட்டார். எனினும், மனு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.(20)

மனு {பிரம்மனிடம்}, “பாவம்நிறைந்த செயல்கள் அனைத்துக்கும் நான் அஞ்சுகிறேன். ஒரு நாட்டை ஆள்வது மிகக் கடினமானதாகும். அதிலும் குறிப்பாக, தங்கள் நடத்தையில் எப்போதும் பொய்யர்களாக, வஞ்சகர்களாக இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நாட்டை ஆள்வது மிகக் கடினமானதாகும்” என்றான்.(22)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது பூமியில் வசித்தோர் அவனிடம், “அஞ்சாதே. மனிதர்கள் இழைக்கும் பாவங்கள், (உன்னைக் கிஞ்சிற்றும் களங்கப்படுத்தாமல்) அவற்றை இழைப்போரை மட்டுமே தீண்டும். உன் கருவூலத்தைப் பெருக்குவதற்காக நாங்கள் எங்கள் விலங்குகளிலும் மதிப்புமிக்க உலோகங்களிலும் ஐம்பதில் ஒரு {1/50} பங்கைத் தருகிறோம். எங்கள் தானியங்களில் பத்தில் ஒரு {1/10} பங்கைத் தருகிறோம். எங்கள் கன்னிகையர் மணம் செய்து கொள்ள விரும்பும்போது, அவர்களில் மிக அழகானவர்களை உனக்கு அளிக்கிறோம்.(23,24) ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், விலங்குகள் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதிலும் முதன்மையானோராக இருக்கும் மனிதர்கள், இந்திரனுக்குப் பின்னால் வரும் தேவர்களைப் போல உனக்குப் பின் நடப்பார்கள்.(25) இவ்வழியில் பெருகும் உன் பலத்துடன், வெல்லப்பட முடியாதவனாகி, பேராற்றலுடன் எங்கள் மன்னனாக இருந்து, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் காக்கும் குபேரனைப் போல மகிழ்ச்சியாக எங்களைப் பாதுகாப்பாயாக.(26) உன் பாதுகாப்பின் கீழ் மனிதர்கள் ஈட்டும் தகுதியில் {புண்ணியத்தில்}, நான்கில் ஒரு பங்கு உனதாகட்டும்.(27) ஓ! மன்னா {மனு}, உன்னால் எளிதாக அடையப்படும் அத்தகுதியால் பலமடைந்து, ஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} தேவர்களைக் காப்பதைப் போல எங்களை நீ பாதுகாப்பாயாக.(28) தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கப்புறப்படும் சூரியனைப் போல வெற்றிகளை அடையப் புறப்படுவாயாக. எதிரிகளின் செருக்கை நொறுக்குவாயாக. (இவ்வுலகில்) நல்லோர் என்றும் வெல்லட்டும் {வெல்ல வேண்டும்}” என்றனர்.(29)

பூமியில் வசிப்போரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெருஞ்சக்தி படைத்தவனுமான அந்த மனு, பெரும் படையின் துணையுடன் புறப்பட்டான். உயர் பிறப்பைக் கொண்ட அவன் {மனு}, அப்போது ஆற்றலால் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(30) இந்திரனின் வலிமையைக் காணும் தேவர்களைப் போல மனுவின் வலிமையைக் கண்ட பூமிவாசிகள், அச்சமடைந்தவர்களாக, தங்கள் தங்களுக்குரிய கடமைகளில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர்.(31) பிறகு மனு, அனைத்து இடங்களில் நேரும் தீச்செயல்களைத் தடுத்து, அனைத்து மனிதர்களையும் தங்கள் தங்கள் கடமைகளில் நிறுவி, (நல்ல காரியத்திற்காகத் திரியும்) மழைநிறைந்த மேகத்தைப் போல உலகையே வலம் வந்தான்.(32)

ஓ! யுதிஷ்டிரா, செழிப்பை விரும்புவோரான பூமியில் உள்ள மனிதர்கள் முதலில் ஒரு மன்னனைத் தேர்ந்தெடுத்து, அனைவரின் பாதுகாப்புக்காக அவனுக்கு முடிசூட்ட வேண்டும்.(33) ஆசான்களின் முன்னிலையில் பணியும் சீடர்களைப் போலவோ, இந்திரனின் முன்னிலையில் தேவர்களைப் போலவோ மனிதர்கள் அனைவரும் மன்னனின் முன்பு பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.(34) தன் மக்களால் கௌரவிக்கப்பட்ட ஒருவன், தன் எதிரிகளிடமும் மதிப்புமிக்கவனாவான். தன் மக்களால் அவமதிக்கப்படுபவனோ, எதிரிகளாலும் அவமதிக்கப்படுவான்.(35) மன்னன் தன் எதிரிகளால் அவமதிக்கப்பட்டால், அவனது குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாவார்கள். எனவே, குடைகள், வாகனங்கள், வெளிப்புற ஆபரணங்கள்,(26) உணவு, பானங்கள், மாளிகைகள், இருக்கைகள், படுக்கைகள் மற்றும் பயன்பாட்டுக்கும், காட்சிக்கும் உரிய அனைத்துப் பொருட்களும் மன்னனுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.(37) அத்தகு வழிமுறைகளிலாலேயே ஒரு மன்னன் (சிறந்த) பாதுகாப்பைத் தரும் தன் கடமைகளை ஆற்ற முடிந்தவனாகவும், தடுக்கப்பட முடியாதவனாகவும் ஆக முடியும். அவன் புன்னகையுடனே பேச வேண்டும்(38) பிறரால் இனிமையாகப் பேசப்படும் அவன், பிறரிடம் இனிமையாகவே பேச வேண்டும்.(38) அவன், (தனக்குத் தொண்டாற்றுபவர்களிடம்) நன்றியுணர்வுமிக்கவனாகவும், (தன் மரியாதைக்குரியவர்களிடம்) உறுதியான அர்ப்பணிப்புமிக்கவனாகவும், ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டவனாகவும் இருந்து, அவர்களுக்கு உரியதைக் கொடுக்க வேண்டும். பிறரால் பார்க்கப்படும் அவன், அவர்களை மென்மையாகவும், இனிமையாகவும், அழகாகவும் பார்க்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(39)

அரசனின் இன்றியமையாத்தன்மை! – சாந்திபர்வம் பகுதி – 68-மன்னர்கள் தேவர்களுக்கு இணையாகப் போற்றப்படுவது ஏன் என்று கேட்ட யுதிஷ்டிரன்; ஒரு நாட்டுக்கு மன்னன் ஏன் அவசியம் என்று வசுமனஸுக்குப் பிருஹஸ்பதி சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஒரு தேவன் என்று ஏன் பிராமணர்கள் சொன்னார்கள்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் பிருஹஸ்பதிக்கும், வசுமனசுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் தென்படுகிறது.(2) வசுமனஸ் என்ற பெயரில், பெரும் நுண்ணறிவு கொண்ட ஒருவன் கோசலத்தின் மன்னனாக இருந்தான். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவன் பேரறிவைக் கொண்ட பெரும் தவசி பிருஹஸ்பதியிடம் கேள்வி கேட்டான்.(3) பணிவின் தேவைகளை அறிந்தவனும், அனைவரின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவனுமான மன்னன் வசுமனஸ் உரிய பணிவுடன் அந்தப் பெரும் தவசியை வலம் வந்து, முறையாக அவரை வணங்கி, மனிதர்கள் மகிழ்ச்சி அடைவதற்கான விருப்பத்தால் உந்தப்பட்டு ஒரு நாட்டிற்கு உண்டான விதிகளைக் குறித்து அந்த அறம்சார்ந்த பிருஹஸ்பதியிடம் விசாரித்தான்.(4,5)வசுமனஸ் {பிருஹஸ்பதியிடம்}, “உயிரினங்கள் என்ன வழிமுறைகளில் வளர்கின்றன? அவை எதனால் அழிவை அடைகின்றன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, யாரைத் துதித்து அவை நித்திய மகிழ்ச்சியை அடைகின்றன?” என்று கேட்டான்.(6) அளவிலா சக்தி கொண்ட கோசல மன்னனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவருமான பிருஹஸ்பதி, மன்னர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் குறித்துப் பொறுமையாக அவனிடம் உரையாடினார்.(7)

பிருஹஸ்பதி {வசுமனஸிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, மனிதர்கள் அனைவரின் கடமைகளும் மன்னனிடமே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மன்னன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்காதிருக்கிறார்கள்.(8) நலந்தரும் கட்டுப்பாடுகளில் உள்ள அலட்சியத்தையும், அனைத்து வகைக் காமங்களையும் தடுத்துத் தன் கடமைகளை நோற்பதின் மூலம் ஒரு மன்னனே பூமியில் அமைதியைக் கொண்டுவருகிறான். இஃதை அடையும் அவன் மகிமையில் ஒளிர்கிறான்.(9) ஓ! மன்னா {வசுமனஸ்}, சூரியனும், சந்திரனும் எழவில்லையெனில் ஒற்றையொன்று காண முடியாமல் முற்றான இருளில் மூழ்கும் உயிரினங்கள் அனைத்தும்,(10) ஆழமில்லாத நீரில் மீன்களும், ஆபத்தில்லாத இடத்தில் பறவைகளும் (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத்) தங்கள் விருப்பம் போலத் விளையாடித் திரிந்து, மோதி மீண்டும் மீண்டும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டு உறுதியான அழிவை அடைவதைப் போலவே,(12) தங்களைப் பாதுகாக்க எந்த மன்னனும் இல்லாத மனிதர்கள், இடையனின் கண்காணிப்பில்லாத கால்நடை மந்தையைப் போல இருளில் மூழ்கி அழிவையே அடைவார்கள்.(13)

மன்னன் {குடிமக்களைப்} பாதுகாக்கும் தன் கடமையைச் செய்யவில்லையெனில், பலமிக்கவர்கள் பலவீனமானவர்களின் உடைமைகளைப் பலவந்தமாக அபகரிப்பார்கள், பலவீனர்கள் எளிதாக எதையும் கொடுக்கவில்லையெனில் அவர்களின் உயிரையே கூட எடுப்பார்கள்.(14) எவராலும், தன் உடைமைகளில் எதையும், “இஃது எனது” என்று சொல்ல முடியாது. அப்போது மனைவியர், மகன்கள், உணவு, பிற வகை உடைமைகள் ஆகியன {எவனுக்கும்} நிலைக்காது.(15) மன்னன் பாதுகாப்பை அளிக்கவில்லையெனில் அனைத்தும் அழிவுக்குள்ளாகும். மன்னன் பாதுகாக்கவில்லையெனில் பிறருக்குச் சொந்தமான வாகனங்கள், ஆடைகள், ஆபரணங்கள், மதிப்புமிக்கக் கற்கள், பிறவகை உடைமைகள் ஆகியவற்றைத் தீய மனிதர்கள் பலவந்தமாக அபகரிப்பார்கள்.(16) மன்னனின் பாதுகாப்பில்லாத போது, தங்கள் செயல்பாடுகளில் நியாயமாக நடந்து கொள்வோர் மீது பல்வேறு ஆயுதங்கள் பாயும், அநீதியே அனைவராலும் பின்பற்றப்படும்.(17) அரசபாதுகாப்பில்லாத போது, மனிதர்கள் தங்கள் தாய்மாரையும், வயதுமுதிர்ந்த தங்கள் தந்தைமாரையும் கூட அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள். ஆசான்கள் விருந்தினர்கள் மற்றும் முதியோரையும் அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள்.(18) மன்னன் பாதுகாப்பை வழங்கவில்லையெனில், செல்வமுடைய அனைவரும், மரணம், அடைக்கப்படுதல் {சிறை}, சமய தண்டனை ஆகியவற்றுக்கு உள்ளாக நேரிடும். உடைமை என்ற கருத்தேகூட மறைந்து போகும்.(19) மன்னன் பாதுகாக்கவில்லையெனில், உரிய காலத்திற்கு முன்பே அனைத்தும் அழிவடையும், நாட்டின் ஒவ்வொரு பகுதியும் கள்வர்களால் மேலாதிக்கம் செய்யப்படும் {ஆளப்படும்}, அனைவரும் பயங்கர நரகில் வீழ்வார்கள்.(20)

மன்னன் பாதுகாக்கவில்லையெனில், திருமணம், கலவி குறித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் (இரத்த உறவு மற்றும் பிற வகை உறவுகள் ஆகியவற்றின் மூலம்) இல்லாமல் போகும்[2]. உழவு, வணிகம் ஆகியன அனைத்தும் குழப்பத்தில் வீழும்; அறநெறி தாழ்ந்து தொலைந்து போகும்; மூன்று வேதங்களும் மறைந்துவிடும்.(21) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், அதற்கு மேலும் விதிப்படி காணிக்கைகள் அளித்து முறையாக நிறைவு செய்யப்படும் வேள்விகள் ஏதும் நடைபெறாது; திருமணங்கள் நடைபெறாது; சமூகம் என்பதே இல்லாமல் போகும்.(22) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், காளைகள் பசுக்களை அணையாது, பால்சட்டிகளும் கடையப்படாது. பசு வளர்ப்பில் வாழும் மனிதர்கள் அழிவை அடைவார்கள்.(23) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அச்சமும் கவலையும் அடையும் அனைவரும், உணர்வையிழந்தவர்களாகத் துன்ப ஓலமிட்டுக் குறைந்த காலத்திலேயே அழிவை அடைவார்கள்.(24) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், விதிப்படி கொடைகள் அளித்து, ஒரு வருடம் நீளும் வேள்விகள் ஏதும் நிறைவுபெறாது.(25)அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணர்கள் ஒருபோதும் நான்கு வேதங்களையும் படிக்கவோ, தவங்கள் செய்யவோ, அறிவால் தூய்மையடையவோ, கடும் நோன்புகளை நோற்கவோ மாட்டார்கள்.(26) அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணனைக் கொன்ற குற்றம் செய்த கொலையாளியைக் கொன்றவன் எந்த வெகுமதியையும் அடைய மாட்டான்; மறுபுறம், பிராமணக்கொலை செய்த குற்றவாளி, முற்றான சட்ட விலக்களிப்பை அனுபவிப்பான்.(27) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அடுத்தவர் செல்வத்தை அவர்களது கரங்களிலிருந்தே மனிதர்கள் பிடுங்குவார்கள், மேலும் நலம்சார்ந்த கட்டுபாட்டுகள் துடைத்தெறியப்படும், அச்சமடையும் அனைவரும் தப்பி ஓடுவதிலேயே பாதுகாப்பைத் தேடுவார்கள்.(28) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அனைத்து வகை அநீதிகளும் நடக்கும்; வர்ணக்கலப்பு ஏற்படும்; பஞ்சம் நாட்டைச் சூறையாடும்.(9) அரச பாதுகாப்பின் விளைவால், மனிதர்கள் தங்கள் வீடுகளில் வாயிற்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டே அச்சமில்லாமல் எங்கும் உறங்கலாம்.(30)

மன்னன் நீதியுடன் பூமியைப் பாதுகாக்கவில்லையெனில், உண்மையாக வலிந்து தாக்குவதைவிடச் சற்றே குறைந்ததான பிறரின் தீய பேச்சை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது[3].(31) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்தால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்டிர், தங்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஆண் உறவினர்களும் இன்றி அச்சமில்லாமல் எங்கும் திரிய முடியும்.(32) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்வதால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைக்காமல் ஒருவருக்கொருவர் தொண்டுகளைச் செய்யும் நல்லோராக ஆவார்கள்.(33) அரச பாதுகாப்பின் விளைவால், மூன்று வகையைச் சேர்ந்தோரும், உயர்வான வேள்விகளைச் செய்து, கவனமாகக் கல்வி கற்க தங்களை அர்ப்பணிப்பார்கள்.(34) உழவையும், வணிகத்தையும் சார்ந்திருக்கும் உலகம், வேதங்களால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் தன் முக்கியக் கடமையை முறையாகச் செய்யும் மன்னனாலேயே பாதுகாக்கப்படுகின்றன.(35)மன்னன் கடுங்கனத்தைத் தானே ஏற்றுக் கொண்டு, தன் வலிமைமிக்கப் படையின் உதவியைக் கொண்டு தன் குடிமக்களைப் பாதுகாப்பதாலேயே, மக்களால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.(36) எவனுடைய இருப்பில் மக்கள் இருப்பார்களோ, எவனுடைய அழிவில் மக்கள் அழிவார்களோ, அவனை எவன்தான் வழிபடமாட்டான்?(37) மன்னனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எவன் செய்கிறானோ, அனைத்து வர்க்கத்தினருக்கும் அச்சத்தைக்கொடுக்கும் அரசகடமைகளை எவன் சுமக்கிறானோ {அவற்றில் பங்கு கொள்கிறானோ} அவன் இம்மையையும், மறுமையையும் வெல்கிறான்[4].(38) மன்னனுக்குத் தீங்கிழைக்க எந்த மனிதன் நினைக்கிறானோ, அவன் ஐயமில்லாமல் இம்மையில் துன்பத்தை அடைந்து, மறுமையில் நரகத்தை அடைகிறான்.(39) மன்னன் உண்மையில் மனித வடிவில் உள்ள உயர்ந்த தெய்வீகத்தன்மை கொண்டவன் என்பதால், அவனை {மன்னனை} ஒரு மனிதன்தானே என்று நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது.(40)மன்னன், ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐந்து வெவ்வேறு வடிவங்களை ஏற்கிறான். அவன் {மன்னன்} அக்னி, ஆதித்யன், மிருத்யு, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன் ஆகிய வடிவங்களை ஏற்கிறான்.(41) மன்னன் பொய்மையால் வஞ்சிக்கப்பட்டு, தன் முன்னால் இருக்கும் பாவம் நிறைந்த குற்றவாளிகளைத் தன் கடும் சக்தியால் எரிக்கும்போது, அவன் அக்னியின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(42) அவனே தன் ஒற்றர்களின் மூலம் மனிதர்கள் அனைவரின் செயல்பாடுகளைக் கண்காணித்து, பொது நன்மைக்காக எதையும் செய்யும் போது, ஆதித்யனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(43) அவன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோருடன் நூற்றுகணக்கான தீய மனிதர்களைக் கோபத்துடன் அழிக்கும்போது, மிருத்யுவின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(44) அவன், கடுந்தண்டனைகளால் தீயோரைத் தண்டித்து, வெகுமதிகள் கொடுப்பதன் மூலம் நல்லோரை ஆதரிக்கும்போது, யமனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(45) அவன், தனக்கு மதிப்புமிக்கத் தொண்டாற்றியவர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளித்து, தனக்குக் குற்றமிழைத்தோரிடம் இருந்து செல்வத்தையும், மதிப்புமிக்கக் கற்களையும் பறிக்கும்போது,(46) ஓ! மன்னா {வசுமனஸ்}, உண்மையில் அவன், சிலருக்குச் செழிப்பை அளித்து, வேறு சிலரிடம் இருந்து அவற்றைப் பறிக்கும்போது, பூமியில் குபேரனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(47)

புத்திசாலித்தனம் உள்ள எவனும், செயல்படவல்ல எவனும், அறமீட்ட விரும்பும் எவனும், தீயவற்றிலிருந்து விடுபட்ட எவனும் மன்னனைக் குறித்த தீய செய்திகளைப் பரப்பக்கூடாது. மன்னனுக்கு எதிராகச் செயல்படும் எந்த மனிதனும் மகிழ்ச்சியை அடைய முடியாது,(48) அவன் மன்னனின் மகனாகவோ, சகோதரனாகவோ, தோழனாகவோ, தன்னைப்போலவே மன்னன் என்று எண்ணும் எவனுமாகவோ இருப்பினும் {மன்னனுக்கு எதிராகச் செயல்பட்டு} மகிழ்ச்சியை அடைய முடியாது. நெருப்பு கூட, தன்னைத் தூண்டப் பயன்படும் காற்றால் (எரியத்தக்க பொருட்களுக்கு மத்தியில்) சுடர்விட்டு எரிந்து எதையாவது எச்சமாக விடும்[5].(49) மன்னனின் கோபம், அதைத் தூண்டும் மனிதனிடம் எதையும் எஞ்ச விடாது. மன்னனுக்குச் சொந்தமான யாவும் தொலைவிலேயே தவிர்க்கப்பட வேண்டும்[6].(50)ஒருவன் மரணத்திலிருந்து விலகுவதைப் போலவே மன்னனுக்கு உரியவற்றில் இருந்து விலக வேண்டும். மன்னனுக்கு உரியதை அடைய விரும்பும் மனிதன், நஞ்சைத் தீண்டும் {விஷச்செடியை உண்ட} மானைப் போல விரைவாக அழிவை அடைகிறான்.(51) நுண்ணறிவு கொண்ட மனிதன், மன்னனுக்கு உரியவற்றைத் தனக்குரியவை போலவே பாதுகாக்க வேண்டும்.(52) மன்னனுக்கு உரிய செல்வத்தை அடைய விரும்புவோர், நித்திய இருள் மற்றும் புகழ்க்கேடு எனும் ஆழ்ந்த நரகில் உணர்வற்றவர்களாக மூழ்குவார்கள்.(53) மக்களைத் திளைக்கச் செய்பவன், மகிழ்ச்சியை அளிப்பவன், வளவன் {செழிப்பைக் கொண்டவன்}, அனைவரிலும் முதன்மையானவன், காயங்களை ஆற்றுபவன், பூமியின் தலைவன், மனிதர்களின் பாதுகாவலன் என்ற சொற்களால் துதிக்கப்படும் மன்னனை வழிபடாதவன் எவன் இருக்கிறான்?(54) எனவே, தன் செழிப்பை விரும்புபவனும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றுபவனும், தன் ஆன்மாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தி அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனும், நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், (வணிகப் பரிவர்த்தனையில்) புத்திசாலித்தனமிக்கவனுமான ஒரு மனிதன், எப்போதும் மன்னனிடம் பற்றோடு இருக்க வேண்டும்.(55)

நன்றியுணர்வுமிக்கவனும், ஞானம் கொண்டவனும், தாராள மனம் கொண்டவனும், பற்றுறுதிமிக்கவனும், தன்புலன்களைக் கட்டுப்படுத்தி அவற்றை ஆள்பவனும், அறம்சார்ந்தவனும், கொள்கைத் தீர்மானங்களை நோற்பனுமான ஓர் அமைச்சனை மன்னன் முறையாகக் கௌரவிக்க வேண்டும்.(56) தன் செயல்களில் பற்றுறுதிமிக்கவனும், நன்றியுணர்வுமிக்கவனும், அறம்சார்ந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனும், பெருந்தன்மை கொண்டவனும், பிறரின் உதவியேதுமின்றிப் பணிகளை நிறைவேற்றவல்லவனுமான ஒரு மனிதனை மன்னன் எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும்.(57) அறிவு மனிதர்களைச் செருக்கடையச் செய்கிறது. மன்னன், மனிதர்களைப் பணிவடையச் செய்கிறான். மன்னனால் பீடிக்கப்படும் மனிதனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மறுபுறம், மன்னனால் ஆதரிக்கப்படும் மனிதன் மகிழ்ச்சியாகவே இருப்பான்.(58) மன்னனே தன் மக்களின் இதயமாக இருக்கிறான்; அவனே அவர்களது பெரும்புகலிடமாக இருக்கிறான்; அவனே அவர்களது மகிமையாக இருக்கிறான்; அவனே அவர்களது உயர்ந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறான். ஓ! ஏகாதிபதி {வசுமனஸ்}, மன்னிடம் பற்றுடன் இருப்போர் இம்மையையும், மறுமையையும் வெல்கிறார்கள்.(59) தற்கட்டுப்பாடு, உண்மை, நட்பு, பெரும் வேள்விகளில் தேவர்களைத் துதிப்பது ஆகிய பண்புகளின் உதவியுடன் பூமியை ஆளும் மன்னன், பெரும் மகிமையை ஈட்டி, சொர்க்கத்தில் ஓர் அழிவில்லா வசிப்பிடத்தையும் அடைகிறான்” என்றார் {பிருஹஸ்பதி}.(60)

ஏகாதிபதிகளில் சிறந்தவனும், கோசலத்தின் ஆட்சியாளனுமான வீர வசுமனஸ், அங்கிரசின் மகனான பிருஹஸ்பதியால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு, அதுமுதல் தன் குடிமக்களை {கவனத்துடன்} பாதுகாக்கத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(61)

அரசாட்சி முறை! – சாந்திபர்வம் பகுதி – 69-மன்னர்களுக்கான குறிப்பிட்ட கடமைகள்; பலமிக்க ஏகாதிபதி ஒருவன் தன் நாட்டின் மீது படையெடுத்து வரும்போது அதைத் தடுப்பதற்கு ஒரு மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகள்; கோட்டை பாதுகாப்பு; ஆறு குண்யங்களும், மூன்று வர்க்கங்களும்; நான்கு யுகங்களை உண்டாக்கும் மன்னனின் செயல்கள்; தண்ட நீதியின் அருள்நிலை…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன் வெளிப்படுத்த வேண்டிய வேறு சிறப்புக் கடமைகள் என்னென்ன? அவன் தன் நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? எவ்வாறு தன் எதிரிகளை அடக்க வேண்டும்?(1) அவன் எவ்வாறு தன் ஒற்றர்களை நியமிக்க வேண்டும்? ஓ! பாரதரே {பீஷ்மரே}, தன் நால்வகைக் குடிமக்கள், தன் பணியாட்கள், மனைவியர் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு அவன் எவ்வாறு நம்பிக்கையளிக்க வேண்டும்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னர்களின் பல்வேறு கடமைகளையும், மன்னன், அல்லது மன்னனின் நிலையில் உள்ள ஒருவன் முதலில் செய்ய வேண்டிய செயல்களையும் கவனமாகக் கேட்பாயாக.(3) மன்னன் முதலில் தன்னையே அடக்க வேண்டும், அதன் பிறகே அவன் தன் எதிரிகளை அடக்க முயல வேண்டும். தன்னையே வெல்ல முடியாத ஒரு மன்னனால் தன் எதிரிகளை எவ்வாறு வெல்ல முடியும்?(4) ஐந்து திரட்டுகளை {புலன்களை} வெல்வதே தன்னை வெல்வதாகக் கருதப்படுகிறது. தன் புலன்களை அடக்குவதில் வெல்லும் மன்னனே தன் எதிரிகளை ஒடுக்கத் தகுந்தவனாகிறான்.(5)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அவன், தனது கோட்டைகள், எல்லைப்புறங்கள், பூங்காக்கள் {உபவனங்கள்}, இன்ப நந்தவனங்கள் {உத்யானவனங்கள்} மற்றும் தான் செல்லும் இடங்கள் அனைத்திலும், தன் சொந்த அரண்மனைக்குள்ளும் காலாட்படையினரை நிறுத்த வேண்டும்.(6,7) அவன், முட்டாள்களைப் போலத் தெரிபவர்களையோ, குருடர்கள், செவிடர்களைப் போலத் தெரிபவர்களையோ தன் ஒற்றர்களாக நியமிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் (அவர்களது திறன்களைப் பொறுத்தவரையில்) நன்கு சோதிக்கப்பட்டவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும், பசி தாகம் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.(8) மன்னன், தன் நகரத்திலும், மாகாணங்களிலும், தனக்குக் கீழுள்ள தலைவர்களின் ஆட்சிப்பகுதிகளிலும் தன் அமைச்சர்கள், நண்பர்கள் மற்றும் மகன்கள் ஆகியோர் அனைவரிடமும் உரிய கவனத்துடன் ஒற்றர்களை நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுவப்படும் ஒற்றர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அறியக்கூடாது.(9,10)

ஓ! பாரதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, மேலும் அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களை அறிந்து கொள்வதற்காக, கடைகளிலும், கேளிக்கை இடங்களிலும், மக்கள் கூடி பேசும் இடங்களிலும், பிச்சைக்காரர்கள் மத்தியிலும்,(11) தனது இன்ப நந்தவனங்கள், பூங்காக்கள், கூட்டங்கள், கல்விமான்களின் சபைகள், நாடு, பொது இடங்கள், தன் சபைகள் இருக்கும் இடங்கள், குடிமக்கள் இல்லங்கள் ஆகியவற்றிலும் தன் ஒற்றர்களை நிறுவ வேண்டும்.(12) நுண்ணறிவு கொண்ட மன்னன், இவ்வாறே தன் எதிரிகளால் அனுப்பப்படும் ஒற்றர்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, இவற்றை அறிவதன் மூலம் ஒரு மன்னன் பெரும் நன்மையை அடைவான்.(13) ஒரு மன்னன், தன் ஆய்வின் மூலம் தான் பலவீனமாக இருப்பதை அறிந்தால், அவன் தன் அமைச்சர்களுடன் ஆலோசித்துப் பலமிக்க எதிரியுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(14) ஞானமுள்ள மன்னன், தான் பலவீனமாக இல்லை என்பதை அறிந்தாலும், எந்த நன்மையாவது விளையுமென்றால் ஓர் எதிரியுடன் விரைவாக அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(15)

தன் நாட்டை நீதியுடன் பாதுகாப்பதில் ஈடுபடும் மன்னன், அனைத்து சாதனைகளையும் கொண்டோர், பெரும் முயற்சி கொண்டோர், அறம்சார்ந்தோர் மற்றும் நேர்மையானோருடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(16) ஒரு மன்னனுக்கு, ஆபத்து மற்றும் நேரப்போகும் அழிவு ஆகியவற்றால் அச்சமுண்டானால், அவன் முன்பு புறக்கணித்து வந்த குற்றவாளிகள் மற்றும் மக்களால் சுட்டிக்காட்டப்படும் அத்தகு மனிதர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும்.(17) எவனால் தனக்கு நன்மையோ, தீங்கையோ செய்ய முடியாதோ, துயரில் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாதா அந்த மனிதனிடம் மன்னன் செய்வதற்கு ஒன்றுமில்லை.(18) படை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், தன் சொந்த பலத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு மன்னன், முதலில் தன் சொந்த தலைநகரத்தின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பெரும்படைக்குத் தலைமையேற்று, தன் இலக்கை அறிவிக்காமல் {எதிரிகளுக்கு முன்னறிவிக்காமல்}, கூட்டாளிகளும் நண்பர்களும் அற்ற ஒருவனையோ, ஏற்கனவே வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் அல்லது (வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆபத்தைக் குறித்து) கவனமில்லாமல் இருக்கும் ஒருவனையோ, தன்னைவிடப் பலவீனமான ஒருவனையோ எதிர்த்து அணிவகுத்துச் செல்வதற்கு உற்சாகத்துடனும், துணிவுடனும் {தன் படைக்கு} ஆணையிட வேண்டும்.(19,20)

ஒரு மன்னன், ஒருபோதும் பேராற்றல் கொண்ட வேறொருவனுக்கு அடங்கி வாழக்கூடாது. அவன், பலவீனமானவனாக இருப்பினும், பலவானைப் பீடிக்க முனையும் தீர்மானத்துடன் தன் ஆட்சியைத் தொடர வேண்டும்.(21) அவன் பலமிக்க ஒருவனின் நாட்டை ஆயுதங்கள், நெருப்பு, நஞ்சூட்டல் ஆகிய வழிமுறைகளின் மூலம் பீடிக்க வேண்டும். மேலும் அவன், அவனுடைய {எதிரியுடைய} அமைச்சர்கள் மற்றும் பணியாட்களிடம் கருத்து வேறுபாடுகளை உண்டாக்க வேண்டும்.(22) நுண்ணறிவைக் கொண்ட ஒரு மன்னன் ஆட்சிப் பகுதிகளை அடைவதற்கான போரை எப்போதும் தவிர்க்க வேண்டும் என்று பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். (சமரசப் பேச்சு {சாமம்}, கொடை {தானம்}, ஒற்றுமையின்மை {பேதம்} ஆகிய) நன்கறியப்பட்ட மூன்று வழிமுறைகளின் மூலமே ஆட்சிப்பகுதி அடையப்பட வேண்டும்.(23) ஞானம் கொண்ட மன்னன், சமரசப் பேச்சு {சாமம்}, கொடை {தானம்}, ஒற்றுமையின்மை {பேதம்} ஆகிய வழிமுறைகளின் மூலம் அடையப்பட்டவற்றிலேயே நிறைவடைய வேண்டும்.(24)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, மன்னன் தன் குடிமக்களின் பாதுகாப்பிற்கான செலவுகளைச் சந்திக்க, அவர்களது வருவாயில் இருந்து ஆறில் ஒரு பங்கைக் கப்பமாக {வரியாகப்} பெற வேண்டும்.(25) அவன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பத்து வகைக் குற்றவாளிகளிடமிருந்து, (அவ்வழக்கின் தேவைக்கேற்ப) அதிகமாகவோ, சிறிதாகவோ செல்வத்தைப் பலவந்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.(26) ஒரு மன்னன் நிச்சயம் தன் குடிமக்களைத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே பார்க்க வேண்டும். எனினும், அவர்களுக்குள் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்மானிப்பதில் அவன் கருணைகாட்டக்கூடாது.(27) நீதியை முறையாக நிர்வகிப்பதைச் சார்ந்துதான் உண்மையில் ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதால், புகார்களையும், நீதிவழக்குகளில் வழக்கைத் தொடுப்பவர்களின் பதில்களையும் கேட்பதற்காக உலகக் காரியங்களின் ஞானம் கொண்டோரையே ஒரு மன்னன் நியமிக்க வேண்டும்.(28) ஒரு மன்னன், தன் சுரங்கங்கள், உப்பளம், தானியம், படகுத்துறை, யானைக் கூடங்கள் ஆகியவற்றில் நம்பிக்கைக்குரிய நேர்மையான மனிதர்களை நிறுவ வேண்டும்.(29) தகுதியுடன் செங்கோலை {தண்டனை வழங்கும் கோல்} எப்போதும் ஏந்தும் மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். தண்டனையை முறையாக ஒழுங்கு செய்வதே மன்னர்களின் உயரிய கடமையும், பெரும் பாராட்டுக்குரிய செயலும் ஆகும்.(30)

ஒரு மன்னன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் அறிந்தவனாகவும், ஞானம் கொண்டவனாகவும், தவங்களில் ஈடுபடுபவனாகவும், ஈகையாளனாகவும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(31) இந்தப் பண்புகள் யாவும் எப்போதும் மன்னனிடம் குடியிருக்க வேண்டும். மன்னன் நீதியை நிர்வகிப்பதில் தவறினால் அவன் சொர்க்கத்தையோ, புகழையோ அடைய முடியாது.(32) ஒரு மன்னன், நுண்ணறிவுமிக்க மற்றொரு பலவானால் பீடிக்கப்பட்டால், அவன் கோட்டையையே புகலிடமாக நாட வேண்டும்.(33) அவன், தன் நண்பர்களை ஆலோசனைக்காகத் திரட்டி உரிய வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும். அமைதிக்கொள்கையைப் {சாமத்தைப்} பின்பற்றியும், மன வேறுபாடுகளை {பேதத்தை} உண்டாக்கியும் அவன் தன் எதிராளியை எதிர்த்துப் போர் தொடுக்கும் வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும்.(34) அவன் காட்டுவாசிகளை நெடுஞ்சாலைகளில் நியமிக்க வேண்டும். தேவையேற்பட்டால், மொத்த கிராமங்களையே அகற்றி, கிராமவாசிகள் அனைவரையும் சிறு நகரங்களுக்கோ, பெருநகரங்களின் புறநகர்களுக்கோ மாற்ற வேண்டும்.(35)

அவன் {மன்னன்}, செழிப்புமிக்கத் தன் குடிமக்களுக்கும், படையின் முக்கிய அதிகாரிகளுக்கும் மீண்டும் மீண்டும் உறுதிகூறி, வெளிப்படையாக நாட்டில் வசித்துக் கொண்டிருந்த அவர்களை நன்கு பாதுகாக்கப்பட்ட கோட்டைகளுக்குள் புகலிடம் கொள்ளச் செய்ய வேண்டும்.(36) (திறந்த நாட்டில் இருந்து தன் கோட்டைகளுக்குள்) தானியங்கள் அனைத்தையும் அவன் கொண்டுவரச் செய்ய வேண்டும். அஃது இயலாமல் போனால் அவன் அவற்றை நெருப்பின் மூலம் முழுமையாக அழிக்க வேண்டும்.(37) மேலும் அவன், (எதிரியின் குடிமக்களிடையே ஒற்றுமையின்மையை உண்டாக்கி) எதிரியின் வயல்களில் உள்ள பயிர்களை அழிக்க மனிதர்களை நிறுவ வேண்டும். இதைச் செய்யத் தவறினால், அவன் தன் துருப்புகளின் மூலமே அந்தப் பயிர்களை அழிக்க வேண்டும்.(38) அவன் தன் நாட்டில் உள்ள ஆறுகளில் மேலுள்ள பாலங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும். தன் ஆட்சிப்பகுதிகளுக்குள் உள்ள குளங்கள் அனைத்திலும் உள்ள நீரை அவன் வெளியேற்ற வேண்டும். அல்லது, வெளியேற்ற முடியாவிட்டால் அவற்றில் நஞ்சைக் கலக்கச் செய்ய வேண்டும்.(39) அவன், தன் நண்பர்களைக் காக்கும் கடமையைக் கருதிப் பாராமல், நிகழ்கால மற்றும் எதிர்காலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு எதிரியின் எதிரியாகவோ, போர்க்களத்தில் தன் எதிரியை எதிர்கொள்ளத் தகுந்தவனாகவோ இருக்கும் மற்றொரு நாட்டின் ஆட்சியாளனுடைய பாதுகாப்பை நாட வேண்டும்[1].(40)அவன் தன் நாட்டிலுள்ள சிறு கோட்டைகள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும். சைத்யம்[2] என்றழைக்கப்படும் மரங்களைத் தவிர்த்து சிறு மரங்கள் அனைத்தையும் அவன் வெட்டிவிட வேண்டும்.(41) பெரும் மரங்களின் கிளைகள் அனைத்தையும் அவன் வெட்டிவிட வேண்டும். ஆனால் சைத்தியம் என்றழைக்கப்படும் மரங்களின் இலைகளைக் கூடத் தொடக்கூடாது.(42) தன் கோட்டைகளில் பதுங்கு துளைகளைச்[3] {பிரகண்டிகள், ஆகாசஜநநி} செய்து வெளிப்புற மதில்களை எழுப்ப வேண்டும். அகழிகளின் அடியில் கூரிய சூலங்கள் நிறுவி அவற்றை நீரால் நிறைத்து, அதில் முதலைகளையும், சுறாக்களையும் விட வேண்டும்.(43) அவன் தன் கோட்டையிலிருந்து {பதுங்கி} பாய்வதற்கு ஏதுவாகச் சுவர்களில் சிறு திறப்புகளை {புடைவாயில், கள்ளவழி} வைத்து[4], பெரிய வாயில்களைப் பாதுகாப்பதைப் போல அவற்றையும் பாதுகாக்க தக்க ஏற்பாடுகளைக் கவனமாகச் செய்ய வேண்டும்.(44) அனைத்து வாயில்களிலும் {சிறு திறப்புகளிலும்} அவன் அழிவைத்தரவல்ல இயந்திரங்களை நிறுவ வேண்டும். (தன் கோட்டைகளின்) மதில்களில் அவன் சதக்னிகளையும், பிற ஆயுதங்களையும் நிறுவ வேண்டும்[5].(45)அவன் எரிபொருள் தேவைக்காக விறகைச் சேர்த்து வைக்க வேண்டும் மேலும் கோட்டைக் காவற்படைக்குத் தேவையான நீருக்காகக் கிணறுகளைத் தோண்டவும், சீராக்கவும் வேண்டும்.(46) புல் மற்றும் வைக்கோலால் வேயப்பட்ட வீடுகள் அனைத்தையும் அவன் சேற்றினால் பூச வேண்டும். மேலும், கோடை மாதமாக {சித்திரை, வைகாசி மாதங்களாக} இருந்தால், நெருப்பின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் புற்கள் மற்றும் வைக்கோற்கிடங்குகளை (வேறு பாதுகாப்பான இடங்களுக்கு) மாற்ற வேண்டும்.(47) உணவு அனைத்தையும் இரவில் சமைக்குமாறு அவன் ஆணையிட வேண்டும். தினமும் செய்யப்படும் ஹோமத்தையன்றி பகலில் வேறு எதற்காகவும் நெருப்பு மூட்டப்படக்கூடாது.(48) உலோகப் பட்டறைகள் {கொல்லர் பட்டறைகள்}, பிள்ளைப்பேற்றுக்கான அறைகள் ஆகியவற்றில் நெருப்பு தொடர்பாகக் குறிப்பிட்ட கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குள் வைக்கப்படும் நெருப்புகள் மிகக் கவனமாக மறைக்கப்பட வேண்டும்.(49) நகரத்தைத் திறனுடன் பாதுகாப்பதற்காக, பகலில் நெருப்பு மூட்டும் மனிதர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளை அறிவிக்க வேண்டும்.(50)

அத்தகு {போர்க்} காலங்களில், பிச்சைக்காரர்கள், வண்டிக்காரர்கள், அலிகள், பைத்தியக்காரர்கள், ஊமைகள் ஆகியோர் நகரத்தைவிட்டே விரட்டப்பட வேண்டும். அவர்கள் அனுமதிக்கப்பட்டால் தீமையே பின்தொடர்ந்து வரும்.(51) பொது இடங்கள், தீர்த்தங்கள்[6], சபைகள், {குறிப்பிட்ட சில} குடிமக்களின் வீடுகள் ஆகியவற்றில் மன்னன் தகுந்த ஒற்றர்களை நிறுவ வேண்டும்.(52) மன்னன் அகன்ற சாலைகளை உண்டாக்கி, கடைகளையும், உகந்த இடங்களில் நீர் விநியோகத்திற்கான நிலைகளையும் திறக்க வேண்டும்.(53) ஓ! யுதிஷ்டிரா, (தேவையான பல்வேறு பொருட்களுக்கான) கிடங்குகள், ஆயுதக்கிடங்குகள், முகாம்கள், படைவீரர்கள் இருக்கும் இடங்கள், குதிரை மற்றும் யானை கொட்டில்கள், படைவீரர்களின் முகாம்கள்,(54) அகழிகள், வீதிகள், கிளைவீதிகள், வீடுகள், ஓய்வு மற்றும் இன்பத்திற்கான நந்தவனங்கள் ஆகியவற்றைப் பிறர் {எதிரிகள்} அறியாவண்ணம் இருக்குமாறு செய்ய வேண்டும்.(55)பகைவரின் படையால் பீடிக்கப்படும் மன்னன், செல்வத்தைத் திரட்ட வேண்டும். மேலும் அவன் எண்ணெய், தேன், தெளிந்த நெய், அனைத்து வகை மருந்துகள்,(56) கரி, முஞ்சா புல், இலைகள், கணைகள், எழுத்தர்கள், வரைகலைஞர்கள், புற்கள், விறகுகள், நஞ்சூட்டப்பட்ட கணைகள்,(57) ஈட்டிகள் போன்ற அனைத்து வகை ஆயுதங்கள், வாள்கள், வேல்கள், மற்றும் பிறவற்றையும் திரட்ட வேண்டும். ஒரு மன்னன் எப்போதும் அவ்வகைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்.(58) அதிலும் குறிப்பாக அவன் அனைத்து வகை மருந்துகள், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றையும், நால்வகை மருத்துவர்கள்,(59) நடிகர்கள், ஆடற்கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள், பல்வேறு வேடங்களை ஏற்கவல்ல மனிதர்கள் ஆகியோரையும் வைத்துக் கொள்ள வேண்டும். அவன் தன் தலைநகரை அலங்கரித்துத் தன் குடிமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியா வைத்திருக்க வேண்டும்.(60)

மன்னனுக்கு எவரிடம் அச்சமுள்ளதோ, அவர்கள் தன் பணியாட்களாகவோ, அமைச்சர்களாகவோ, குடிமக்களாகவோ, அக்கம்பக்கத்து ஏகாதிபதிகளாகவோ இருப்பினும் அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அவன் காலந்தாழ்த்தக்கூடாது.(61) மன்னனின் எந்தப் பணி நிறைவடைந்தாலும், அவன் அதன் நிறைவுக்கு உதவியவர்களுக்குச் செல்வம், விகிதப்படியான பிற கொடைகள் மற்றும் நன்றிநிறைந்த பேச்சுகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.(62) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, ஒரு மன்னன் தன் எதிரியைத் தவிடுபொடியாக்கும்போதோ, அவனை ஒரேயடியாகக் கொல்லும்போதோ அவன் தனது கடனையே அடைக்கிறான்[7] என்று சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளன.(63) ஒரு மன்னன் ஏழு காரியங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் அதைச் சொல்கிறேன் கேட்பாயாக. அவை தனது சுயம், தனது அமைச்சர்கள், கருவூலம், தண்டனை அளிக்கும் அமைப்பு, நண்பர்கள், மாகாணங்கள் மற்றும் தலைநகரம் ஆகியவையாகும். இந்த ஏழு அங்கங்களைக் கொண்ட தன் நாட்டை அவன் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(64,65)

ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, ஆறு குண்யங்களையும் {ஷாட்குண்யத்தையும்}, மூன்று வர்க்கங்களையும் {த்ரிவர்க்கத்தையும்}, மூன்று வர்க்கங்களிலும் உயர்ந்ததையும் அறிந்த மன்னன் மொத்த பூமியின் அரசாட்சியை வெல்வான்.(66) ஓ! யுதிஷ்டிரா, ஆறு குண்யங்கள் என்றழைக்கப்படுவதைக் குறித்துக் கேட்பாயாக. அவை, (எதிரியுடன் ஏற்படுத்திக் கொண்ட) ஒப்பந்தத் தீர்மானத்தின்படி அமைதியாக ஆட்சி செய்வது, போரிட அணிவகுத்துச் செல்வது, எதிரிக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை விளைவிப்பது, (67) எதிரியை அச்சமடையச் செய்வதற்குப் படைகளைக் குவிப்பது, அமைதிக்குத் தயாராகப் போருக்கு ஆயத்தமாதல், பிறருடனான கூட்டணிகள் ஆகியனவே ஆகும்.(68) இப்போது மூன்று வர்க்கங்கள் என்றழைக்கப்படுவனவற்றைக் கவனமாகக் கேட்பாயாக. அவை குறை, இருப்பதைப் பாதுகாப்பது, வளர்ச்சி ஆகியவையாகும். இம்மூன்றின் உயர்ந்த திரள்கள், அறம், பொருள் மற்றும் இன்பமாகும். இவை நீதியுடன் பின்பற்றப்பட வேண்டும். அறத்தின் துணையால் ஒரு மன்னன் பூமியை எப்போதும் ஆள்வதில் வெல்வான்.(70)

இது தொடர்பாக அங்கிரசின் மகனான பிருஹஸ்பதி இரண்டு வரிகளைப் பாடியிருக்கிறார். ஓ! தேவகியின் மகனே {கிருஷ்ணா}, அவற்றைக் கேட்பதே உனக்குத் தகும்.(71) ’ஒரு மன்னன், தன் கடமைகள் அனைத்தையும் செய்து, பூமியைப் பாதுகாத்து, தன் நகரங்களையும் பாதுகாப்பதால் சொர்க்கத்தில் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(72) அவனுக்குத் தவங்களால் ஆவதென்ன? தன் மக்களை முறையாகப் பாதுகாப்பவனுக்கு வேள்விகளால் ஆகப்போவதென்ன? அத்தகு மன்னன் அறங்கள் அனைத்தையும் அறிந்தவனாகக் கருதப்பட வேண்டும்’ {என்பதே பிருஹஸ்பதியின் அவ்விரண்டு வரிகள்}” என்றார் {பீஷ்மர்}.(73)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தண்டனை அறிவியலும் {தண்டநீதியும்}, மன்னன் மற்றும் குடிமக்களும் இருக்கின்றனர். ஓ! பாட்டா {பீஷ்மரே}, இவற்றில் ஒன்றால் பிறரிடம் இருந்து அடையப்படும் பயன் யாது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(74)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதா, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த புனித வார்த்தைகளில் பேரருள் கொண்ட தண்டனை அறிவியலை {தண்ட நீதியை} உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(75) தண்டனை அறிவியலானது, அனைத்து மக்களையும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது.(76) நான்கு வகையினரும் {வர்க்கத்தினரும்} தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போதும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பேணப்படும்போதும், தண்டனை அறிவியலில் இருந்து அமைதியும், மகிழ்ச்சியும் பாயும்போதும், உயர்ந்த மூவகையினர் தங்கள் தங்கள் கடமைகளின்படி நடந்து கொண்டு ஒற்றுமையைப் பேணி அச்சமனைத்திலிருந்தும் மக்கள் விடுபடும்போதும்தான் அவர்கள் {மக்கள்} உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை அறிவாயாக.(77,78) மன்னன் காலத்தை உண்டாக்குகிறானா? அல்லது, காலம் மன்னனை உண்டாக்குகிறதா என்ற கேள்வியில் நீ எந்த ஐயத்தையும் ஊக்கப்படுத்தக்கூடாது. மன்னனே காலத்தை உண்டாக்கிறான் என்பதே உண்மை.(79)

கண்டிப்புடன் தண்டனை அறிவியலைச் சார்ந்து ஒரு மன்னன் முழுமையாக ஆளும்போது, கிருதம் என்றழைக்கப்படும் முதன்மையான காலம் {யுகம்} அப்போது ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது[8].(80) கிருதகாலத்தில் {கிருதயுகத்தில்} அறமே விளைகிறது. நீதியற்றவையேதும் அப்போது இருப்பதில்லை. நால்வகையைச் சேர்ந்த மனிதர்கள் அனைவரின் இதயங்களும், அநீதியில் எந்த இன்பத்தையும் அடையாது.(81) மனிதர்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து, தாங்கள் அடைந்ததைப் பாதுகாத்துக் கொள்வார்கள். வேதச் சடங்குகள் அனைத்தும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கவல்லவையாக இருக்கும்.(82) பருவகாலங்கள் அனைத்தும் இனிமை நிறைந்தவையாக, தீமைகளில் இருந்து விடுபட்டவையாக மாறும். மனிதர்கள் அனைவரின் குரல், உச்சரிப்பு மற்றும் மனங்கள் தெளிவானவையாகவும், உற்சாகம் நிறைந்தவையாகவும் மாறும்.(83) நோய்கள் மறைந்துபோகும், மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், மனைவியர் விதவைகளாகமாட்டார்கள், எந்த மனிதனும் கஞ்சனாக இருக்க மாட்டான்.(84) உழாமலேயே பூமி பயிர்களை விளைவிக்கும், செடிகொடிகளும் வளமாக வளரும். மரப்பட்டைகள், இலைகள், கனிகள், கிழங்குகள் ஆகியன வேகமாக அபரிமிதமாக விளையும்.(85) எந்த அநீதியும் தென்படாது. அறத்தைத் தவிர மற்றேதும் நிலைக்காது. ஓ! யுதிஷ்டிரா, இவற்றையே கிருத காலத்தின் பண்புகளாக அறிவாயாக.(86)மன்னன், தண்டனை அறிவியலின் {தண்டநீதியின்} நான்கு பாகங்களில், நான்காவதை விட்டுவிட்டு மூன்றை மட்டுமே சார்ந்திருந்தால் திரேதம் என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(87) அவ்வாறு (தண்டனை அறிவியலின்) மூன்றுபாகங்களை நோற்கும்போது நான்காம் பாகத்தின் அநீதியானது தொடர்ந்துகொண்டிருக்கும். பூமி விளைவிக்கும், ஆனால் உழவுக்காகக் காத்திருக்கும். செடிகொடிகளும் (உழவைச் சார்ந்தே) வளரும்.(88) மன்னன் அந்தப் பெரும் அறிவியலை {தண்டநீதியை} பாதி அளவே நோற்கும்போது, துவாபரம் என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(89) அந்தப் பெரும் அறிவியலை இவ்வாறு பாதி அளவே நோற்கும்போது பாதி அளவுக்கு அநீதியே தொடர்ந்து கொண்டிருக்கும். பூமிக்கு உழவு அவசியம் தேவைப்படும், பயிர்கள் பாதி அளவுக்கே விளையும்.(90)

மன்னன் அந்தப் பெரும் அறிவியலை {தண்டநீதியை} முற்றாகக் கைவிட்டு, பல்வேறு வகைத் தீய வழிமுறைகளால் தன் குடிமக்களை ஒடுக்கும்போது, கலி என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(91) கலி என்றழைக்கப்படும் காலத்தில், அநீதியே முழுமையக இருக்கும், அறமென எதுவும் தென்படாது. அனைத்து வகை மனிதர்களின் இதயங்களும், தங்கள் தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடும்.(92) சூத்திரர்கள் துறவிகளாகவும், பிராமணர்கள் பிறருக்குத் தொண்டுபுரிந்தும் வாழ்வார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய பொருட்களை அடையத் தவறுவார்கள், தாங்கள் ஏற்கனவே அடைந்ததையும் பாதுகாக்கத் தவறுவார்கள். நால்வகையினரின் கலப்பும் ஏற்படும்.(93) வேத சடங்குகள் கனிகளை விளைவிக்கத் தவறும். அனைத்து பருவகாலங்களும் இனிமையை இழந்து, தீமை நிறைந்தவையாக இருக்கும்.(94) மனிதர்களின் குரல், உச்சரிப்பு மற்றும் மனங்கள் ஆகியன சுறுசுறுப்பை இழக்கும். நோய்கள் தோன்றும், மனிதர்கள் முதிரா காலத்திலேயே மாள்வார்கள்.(95)

விதவைகளாகும் மனைவியரும், பல தீய மனிதர்களும் தென்படுவார்கள். மேகங்கள் பருவ காலத்தில் பொழியாது, பயிர்கள் விளையாமல் தவறும்.(96) பெரும் அறிவியலில் {தண்டநீதியில்} உரிய கவனத்துடன் மன்னன் குடிமக்களைப் பாதுகாக்காதபோது, ஈரப்பதங்கள் யாவும் தவறும்.(97) கிருத, திரேத மற்றும் துவாபர காலங்களை மன்னனே உண்டாக்குகிறான். (கலி என்றழைக்கப்படும்) நான்காவது காலத்தையும் மன்னனே உண்டாக்குகிறான்.(98) அவன் கிருத காலத்தை உண்டாக்கினால் நீடித்த சொர்க்கத்தை அடைகிறான். அவன் திரேத காலத்தை உண்டாக்கினால், குறிப்பிட்ட காலத்திற்கான சொர்க்கத்தை அடைகிறான்.(99) துவாபரத்தை உண்டாக்கினால், அவன் தன் தகுதிகளுக்கேற்ப {புண்ணியங்களுக்கேற்ப} சொர்க்கத்தில் அருள்நிலையை அடைகிறான். கலிகாலத்தை உண்டாக்குவதால் அந்த மன்னன் பெரும் சுமைமிக்கப் பாவத்தையே இழைக்கிறான்.(100)

அவன் தன் குடிமக்களைப் பாவங்களில் மூழ்கடிப்பதால், பெரும் பாவத்தை இழைத்து, புகழ்க்கேட்டை அடைந்து, தீமையின் கறைபடிந்து, எண்ணற்ற வருடங்கள் நரகில் அழிவடைவான்.(101) பெரும் அறிவியலை {தண்டநீதியில்} கருத்தில் கொண்டவனும், கல்வியறிவு கொண்டவனுமான க்ஷத்திரியன், தான் விரும்பும் பொருட்களை {நோக்கங்களை} அடைய முனைந்து, ஏற்கனவே அடைந்தவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(102) மக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதும், நலந்தரும் மேன்மைகள் அனைத்திற்கும் களப்பணியாகச் செயல்படுவதும், உண்மையில் உலகைத் தாங்கி, அதைச் செயல்பட வைப்பதுமான தண்டனை அறிவியலானது {தண்டநீதியானது}, முறையாகச் செயல்படுத்தப்பட்டால், அது, தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளைக் காப்பதைப் போல மக்கள் அனைவரையும் பாதுகாக்கும்.(103) ஓ! மனிதர்களில் காளையே, உயிரினங்களின் வாழவே அதைச் {தண்டநீதியைச்} சார்ந்துதான் இருக்கிறது என்பதை அறிவாயாக. தண்டனை அறிவியலை அறிவதும், அதை முறையாகச் செயல்படுத்துவதும்தான் ஒரு மன்னனை உயர்ந்த தகுதியை அடையச் செய்யும்.(104) எனவே, ஓ! குருகுலத்தோனே {யுதிஷ்டிரனே}, அந்தப் பெரும் அறிவியலின் துணையுடனும், நீதியுடனும் உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக. உன் குடிமக்களைப் பாதுகாத்து, இத்தகு நடத்தையைப் பின்பற்றினால் அடைவதற்கு மிக அரிதான சொர்க்கத்தின் அருள்நிலையை நீ நிச்சயம் அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.(105)

அரச பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 70- மன்னர்களுக்குரிய முப்பத்தாறு {36} பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அனைத்துவகை நடத்தைகளையும் அறிந்தவரே, அந்நடத்தையைப் பின்பற்றுவதால் ஒரு மன்னனால் இம்மையையும், மறுமையையும், முடிவில் மகிழ்ச்சியை அளிக்கும் பொருட்களையும் அடைவதில் வெல்ல முடியுமா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(ஒரு மன்னன் நோற்கவேண்டிய) முப்பத்தாறு {36} பண்புகள் இருக்கின்றன. அவை மேலும் முப்பத்தாறுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஓர் அறவோன் அப்பண்புகளைக் கைக்கொள்வதால் நிச்சயம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட முடியும்.(2)

[1] மன்னன் தன் கடமைகளைக் கோபமோ, தீய நோக்கமோ இன்றி ஆற்றவேண்டும்.

[2] அவன் கருணையைக் கைவிடக்கூடாது.

[3] அவன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

[4]துன்புறுத்தலோ, கொடூரமோ இன்றி அவன் தன் செல்வத்தை அடைய வேண்டும்.

[5]அவன் பற்றுதல் இல்லாமல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும்.(3)

[6] அவன் ஏற்புடையவற்றை உற்சாக நிறைவுடன் சொல்ல வேண்டும், அவன் தற்புகழ்ச்சி செய்து கொள்ளாமல் துணிவுடன் இருக்க வேண்டும்.

[7] அவன் தாராளவாதியாக இருந்தாலும் கவனமில்லாதோருக்குக் கொடைகளை அளிக்கக்கூடாது.

[8] அவன் கொடூரமில்லா ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.(4)

[9] அவன் தீயோரைப் புறக்கணித்துக் கூட்டணிகளை அமைக்க வேண்டும்.

[10] அவன் நண்பர்களிடம் பகைமையுடன் நடந்து கொள்ளக்கூடாது.

[11] தன்னிடம் அர்ப்பணிப்பில்லாதவர்களை ஒருபோதும் அவன் தன் ஒற்றர்களாகவும், இரகசிய முகவர்களாகவும் நியமிக்கக்கூடாது.

[12] துன்புறுத்தலின் மூலம் அவன் தன் நோக்கங்களை ஒருபோதும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடாது.(5)

[13] அவன் ஒருபோதும் தன் நோக்கங்களைத் தீயோர் முன்பு வெளிப்படுத்தக்கூடாது.

[14] அவன் பிறரின் தகுதிகளையன்றி ஒருபோதும் தன்னுடையவற்றைப் பேசக்கூடாது.

[15] அவன், தன் குடிமக்களிடம் இருந்து செல்வத்தைப் பெறலாமேயன்றி ஒருபோதும் நல்லோரிடம் பெறக்கூடாது.

[16] அவன் ஒருபோதும் தீயோரை வேலையில் அமர்த்தவோ, அவர்களின் உதவியை நாடவோ கூடாது.(6)

[17] கவனமான விசாரணையின்றி அவன் ஒருபோதும் தண்டனையை வழங்கக்கூடாது.

[18]  அவன் ஒருபோதும் தன் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடாது.

[19] அவன் கொடையளிக்கலாமேயன்றி, பேராசைக்காரர்களுக்கு அளிக்கக்கூடாது.

[20] அவன் பிறரை நம்பலாமேயன்றி தனக்குத் தீங்கிழைத்தோரை ஒருபோதும் நம்பக்கூடாது.(7)

[21] அவன் கெட்ட நோக்கத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது.

[22] அவன், தான் மணந்து கொண்ட மனைவியரைப் பாதுகாக்க வேண்டும்.

[23] அவன் தூய்மையாயிருக்கவேண்டுமேயன்றி ஒருபோதும் கருணையால் உருகக்கூடாது.

[24] அவன் பெண்களிடம் அதிகமாகத் தோழமை பூணக்கூடாது {பெண்களின் துணையை அதிகமாக நாடக்கூடாது}.

[25] அவன், நலம்சார்ந்த உணவையன்றி ஒருபோதும் வேறுவகையானவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது.(8)

[26] அவன் செருக்கில்லாமல் தகுந்தோருக்கு வெகுமதிகளை அளித்து, தன் ஆசான்கள் மற்றும் பெரியோர்களுக்கு உண்மையுடன் தொண்டாற்ற வேண்டும்.

[27] அவன் செருக்கில்லாதவனாகத் தேவர்களை வழிபட வேண்டும்.

[28] அவன் செழிப்பையன்றி ஒருபோதும் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் எதையும் நாடக்கூடாது.(9)

[29] அவன், (தன்னைவிடப் பெரியோரிடம்) பணிவுடன் காத்திருக்க வேண்டும்.

[30] அவன் தொழிலில் புத்திசாலியாக இருக்க வேண்டும், ஆனாலும் அவன் தகுந்த காலத்திற்காக எப்போதும் காத்திருக்க வேண்டும்.

[31] அவன் மனிதர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும், ஒருபோதும் வெற்று வார்த்தைகளுடன் அவர்களை அனுப்பக்கூடாது.

[32] அவன், ஒரு மனிதனுக்கு ஆதரவளித்துவிட்டு, பிறகு அவனைக் கைவிடக்கூடாது.(10)

[33] அவன் ஒருபோதும் அறியாமையுடன் இருக்கக்கூடாது.

[34] அவன், தன் எதிரியைக் கொன்றுவிட்டு, ஒருபோதும் துயரில் ஈடுபடக்கூடாது.

[35] அவன் கோபத்தை வெளிப்படுத்தலாம், ஆனால் எந்த நிகழ்வும் இல்லாதபோது அதை வெளிப்படுத்தக்கூடாது.

[36] அவன் மென்மையாக இருக்கவேண்டும், ஆனால் ஒருபோதும் குற்றவாளிகளிடம் மென்மையாக இருக்கக்கூடாது.(11)

உன் நாட்டை ஆளும்போது நீ செழிப்பை விரும்பினால் இத்தகு நடத்தையையே நீ பின்பற்றுவாயாக. வேறுமாதிரியாக நடந்து கொள்ளும் மன்னன் பேராபத்தையே அடைவான்.(12) நான் குறிப்பிட்ட இந்தப் பண்புகள் அனைத்தையும் பின்பற்றும் மன்னன் பூமியில் பல அருள்களையும், சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளையும் அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அறிவுரைகளைப் பெறுவதில் அடக்கமுள்ளவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பீமன் மற்றும் பிறரால் பாதுகாக்கப்படுபவனுமான மன்னன் யுதிஷ்டிரன், சந்தனு மகனின் {பீஷ்மரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன் பாட்டனை {பீஷ்மரை} வணங்கி, அந்தக் காலம் முதல் அந்தக் கற்பிதங்களின்படியே ஆளத்தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(14)

கடமையைப் புறக்கணிக்காதே! – சாந்திபர்வம் பகுதி – 71-அறப்பிழையேற்படாமல் குடிமக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வழிமுறைகளைச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, துயரத்தைத் தவிர்க்கும் வகையிலும், அறத்திற்கு எதிராகக் குற்றமிழைக்காத வகையிலும் ஒரு மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய வழியை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த நித்திய கடமைகளை விரிவாகச் சொன்னால் என்னால் அதன் முடிவை எட்ட முடியாது என்பதால் அவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) தங்கள் கடமைகளில் அர்ப்பணிப்புமிக்கோரும், கல்வியறிவைக் கொண்டவர்களும், தேவர்களைத் தொடர்ந்து வழிபடுபவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், பிற சாதனைகளையும் கொண்டவர்களுமான பிராமணர்கள் உன் வசிப்பிடத்திற்கு வரும்போது நீ அவர்களை வழிபட்டு, உன் வேள்விகளைச் செய்வதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.(3) அவர்கள் உன்னை அணுகும்போது உன் புரோகிதருடன் கூடிய நீ, எழுந்திருந்து அவர்களது பாதங்களை வழிபட்டு, தேவையான பிற செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்.(4) இந்தப் பக்திச் செயல்களையும், உன் நன்மைக்கான பிற செயல்களையும் செய்து (அவர்களுக்குக் கொடைகளையும் அளித்து) உன் காரியங்களின் வெற்றிக்காக அந்தப் பிராமணர்களை ஆசிகூறச் செய்ய வேண்டும்.(5)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நேர்மை, ஞானம், நுண்ணறிவு ஆகியவற்றுடன் கூடிய நீ உண்மையைப் பின்பற்றி, காமத்தையும், கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.(6) காமம் மற்றும் கோபத்தைத் தவிர்க்காத மூட மன்னன், அறமீட்டத் தவறி, இறுதியாகப் பொருளையும் இழக்கிறான்.(7) பேராசை கொண்டோரையும், மூடர்களையும் இன்பம் மற்றும் பொருள் சார்ந்த காரியங்களில் ஒருபோதும் ஈடுபடுத்தாதே. பேராசையில் இருந்து விடுபட்டவர்கள் மற்றும் நுண்ணறிவைக் கொண்டோர் ஆகியோரையே நீ எப்போதும் உன் பணிகள் அனைத்திலும் ஈடுபடுத்த வேண்டும்.(8) காமம் மற்றும் கோபத்தின் கறை படிந்தவர்களும், வணிகப் பரிவர்த்தனையில் திறமற்றவர்களுமான மூட மனிதர்களைப் பொருள் சார்ந்த பொறுப்புகளில் ஈடுபடுத்தினால், அவர்கள் எப்போதும் தீமைகளை உண்டாக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை ஒடுக்குவார்கள்[2].(9) முறையான கணக்கீட்டின்படி, மண்ணில் விளைவதில் ஆறில் ஒரு பகுதியாகப் பெறப்படும் கப்பத்தையும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களையும், அவர்களிடம் செய்யப்படும் பறிமுதல்களையும், வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்குப் பதிலாகச் சாத்திரங்களின் படி அவர்களிடம் பெறப்படும் தீர்வைகளையும் கொண்டே ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிரப்ப வேண்டும்[3].(10)இந்த நியாயமான கப்பத்தை அடைந்து, நாட்டை முறையாகவும், கவனத்துடனும் ஆளும் மன்னன், தன் குடிமக்கள் தேவைக்கான எந்த அழுத்தத்தையும் உணராத {அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாத} வகையில் செயல்பட வேண்டும்.(11) பாதுகாப்பு வழங்கும் கடமையை முறையாகச் செய்பவனும், தாரளவாதியாக இருப்பவனும், அறம் நோற்பதில் உறுதியுள்ளவனும், எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருப்பவனும், காமம் மற்றும் வெறுப்பில் {ஆசை மற்றும் துறவில்} இருந்து விடுபட்டவனுமான மன்னனிடம் மனிதர்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொள்வார்கள்.(12) அநீதியாகவோ, பேராசையாலோ செயல்பட்டு உன் கருவூலத்தை நிரப்ப ஒருபோதும் விரும்பாதே. சாத்திரங்களின்படி செயல்படாத மன்னன் செல்வத்தையும் அறத்தகுதியையும் ஈட்டுவதில் தவறுகிறான்.(13) செல்வம் ஈட்டுவதில் மட்டுமே மனம் கொண்ட மன்னன் அறத்தகுதி மற்றும், செல்வம் ஆகிய இரண்டையும் அடையத் தவறுகிறான். மேலும் (இத்தகு வழிமுறைகளால்) அவன் அடையும் செல்வமானது, தகாத பொருட்களில் வீணாகச் செலவிடப்படுவதே காணப்படுகிறது[4].(14) சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை விதித்து மடமையின் மூலம் தன் குடிமக்களை ஒடுக்கும் பேராசைக்கார மன்னன், தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான் என்று சொல்லப்படுகிறது.(15)பாலை விரும்பும் ஒருவன், பசுவின் மடியை வெட்டி எதையும் அடையாததைப் போலவே ஒரு நாடும் முறையற்ற வழிமுறைகளால் பீடிக்கப்பட்டால், அது மன்னனுக்கு ஒருபோதும் எதையும் ஈட்டித் தருவதில்லை.(16) ஒரு காராம்பசுவை மென்மையாக நடத்துபவன் எப்போதும் அதனிடமிருந்து பாலை அடைகிறான். அதே போலவே, முறையான வழிமுறைகளின் உதவி மூலம் தன் நாட்டை ஆளும் மன்னனும், அதிலிருந்து அதிகக் கலன்களை அறுவடை செய்கிறான்.(17) ஒரு நாட்டை முறையாகப் பாதுகாத்து, நீதிமிக்க வழிமுறைகளின் உதவியுடன் அஃதை ஆண்டால், ஒரு மன்னன் எப்போதும் அதிகச் செல்வத்தையே அடைகிறான்.(18) மன்னனால் நன்கு பாதுகாக்கப்படும் பூமியானது, மனம் நிறைந்த தாயானவள் தன் பிள்ளைக்குப் பாலைத் தருவதைப் போலவே, (அஃதை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும்) பயிர்களையும், தங்கத்தையும் விளைவிக்கிறது.(19) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பூக்காரனின் உதாரணத்தைப் பின்பற்றுவாயாக, கரி உற்பத்தி செய்பவனைப் பின்பற்றாதே. அவ்வாறு பின்பற்றி, பாதுகாப்பு வழங்கும் கடமையைச் செய்யும் உன்னால் எப்போதும் பூமியில் இன்புற்றிருக்க முடியும்[5].(20)ஓர் எதிரியின் நாட்டைத் தாக்கும்போது உன் கருவூலம் வற்றினால், பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரின் செல்வங்களையும் எடுத்து நீ அதை நிரப்பலாம்.(21) நீ பெரும் துன்பத்தில் இருக்கும்போது, செல்வம்படைத்த பிராமணர்களைக் கண்டாலும் உன் இதயம் அசையாமல் இருக்கட்டும். நீ செழிப்புடன் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை.(22) அவர்களுக்குத் {பிராமணர்களுக்குத்} தகுந்தவாறும், உனது சக்திக்குத்தக்கவாறும் அவர்களுக்குச் {பிராமணர்களுக்குச்} செல்வத்தை அளித்து, பாதுகாத்து, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஆறுதலளிக்க வேண்டும். இவ்வாறு நீ நடந்து கொண்டால், மறுமையில் அடைதற்கரியவற்றை நீ அடைவாய்.(23) அத்தகு நன்னடத்தையைப் பின்பற்றியே நீ உன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது நீ உயர்ந்த, தூய்மையான, நீடித்த புகழை அடைவாய்.(24) ஓ பாண்டுவின் மகனே, உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்தால் எந்த வருத்தமோ, வலியோ உனதாகாது.(25)

அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டி, அவற்றைத் தீங்கிலிருந்து காப்பதே உயர்ந்த தகுதி என்று சொல்லப்படுவதால் குடிமக்களைப் பாதுகாப்பதே ஒரு மன்னனின் உயர்ந்த கடமையாகும்.(26) கடமைகளை அறிந்த மனிதர்கள், மன்னன் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் ஈடுபடும்போது அவற்றின் மீது தன் கருணையை வெளிப்படுத்துவதால் அதுவே அவனுடைய உயர்ந்த தகுதியாகும் {புண்ணியமாகும்} என்று கருதுகின்றனர்.(27) ஒரு மன்னன் அச்சத்திலிருக்கும் தன் குடிமக்களைப் பாதுகாக்காமல், {அக்கடமையை} ஒரு நாள் புறக்கணித்தாலும், அவன் (அதற்காக) ஆயிரம் வருடங்களுக்கு நரகில் துன்புற்றாலும் அதன் {அந்தப் பாவத்திற்கான} முடிவை அடைய மாட்டான். (28) ஒரு மன்னன் தன் குடிமக்களை நீதியுடன் ஒரு நாள் பாதுகாப்பதால் ஈட்டும் தகுதியால், அவன் சொர்க்கத்தில் பத்தாயிரம் வருடங்களை அதற்கான வெகுமதியாக அனுபவிப்பான்.(29) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாப்பதால் மட்டுமே ஒரு மன்னன், கார்ஹஸ்த்யம், பிரம்மச்சரியம், வானப்பிரஸ்த வாழ்வுமுறைகளை முறையாகப் பின்பற்றும் மனிதர்கள் அடையும் உலகங்கள் விரைவாக அடைந்துவிடுகிறான்.(30)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எனவே, நீ பெருங்கவனத்துடன் (பாதுகாப்பு எனும்) இந்தக் கடமையை ஆற்றுவாயாக. அப்போதுதான் நீ நீதிக்கான வெகுமதியை அடைவாய், எந்தத் துயரும், எந்த வலியும் உனதாகாது. ஓ! பாண்டுவின் மகனே, சொர்க்கத்தில் நீ பெருஞ்செழிப்பை அடைவாய்.(31) இது போன்ற தகுதியை மன்னர்களாக இல்லாத மனிதர்கள் அடைவது சாத்தியமில்லை. எனவே, வேறெதுவுமாக இல்லாமல் மன்னனாக இருக்கும் ஒருவன், இத்தகு அற வெகுமதியை ஈட்டுகிறான்.(32) நுண்ணறிவைக் கொண்ட நீ ஒரு நாட்டை அடைந்திருக்கிறாய். உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாப்பாயாக. சோமத்தால் இந்திரனையும், விருப்பத்திற்குரிய பொருட்களால் உன் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் நிறைவடையச் செய்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(33)

வாயு சொன்ன நால்வர்ண தாரதம்மியம்! – சாந்திபர்வம் பகுதி – 72-புரூரவஸுக்கும், வாயு தேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; நான்கு வர்ணங்களின் ஓப்பீட்டு மதிப்பையும், புரோகிதராக இருக்கத் தகுந்த பிராமணனின் பண்புகளையும் புரூரவஸுக்கு விளக்கிய வாயு தேவன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “ஓ! மன்னா, எந்த மனிதன் நல்லோரைப் பாதுகாத்துத் தீயோரைத் தண்டிப்பானோ, அவன் மன்னனால் அவனது புரோகிதராக நியமிக்கப்பட வேண்டும்.(1) இது தொடர்பாக, இளையின் மகனான புரூரவஸுக்கும், மாதரிஸ்வானுக்கும் {வாயுவுக்கும்}[2] இடையில் நடந்த உரையாடல் பழங்காலக் கதையில் தென்படுகிறது.(2)புரூரவஸ் {வாயுதேவனிடம்}, “பிராமணன் எங்கிருந்து உண்டானான்? மூவகையினரும் எங்கிருந்து உண்டானார்கள்? எதன் காரணமாகப் பிராமணன் முதன்மையானவனானான்? இவை யாவற்றையும் சொல்வதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

மாதரிஸ்வான் {வாயுதேவன் புரூரவஸிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே {புரூரவஸ்ஸே}, பிராமணன், பிரம்மனின் வாயிலிருந்து உண்டானான். க்ஷத்திரியன், அவரது இரு கரங்களிலிருந்து உண்டானான், வைசியன் அவரது இரு தொடைகளில் இருந்து உண்டானான்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, இந்த மூவகையினருக்காகக் காத்திருப்பதற்காக {பணிவிடை செய்வதற்காக} உயிர்த்தெழுந்தவனும், நான்காவது வகையைச் சேர்ந்தவனுமான சூத்திரன் (பிரம்மனின்) பாதத்தில் இருந்து உண்டானான்.(5) உண்மையில் இவ்வாறு உண்டான பிராமணன், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் பராமரிப்பதற்காக, அனைத்து உயிரினங்களின் தலைவனாகப் பூமியில் பிறப்பை எடுத்தான்[3].(6) பிறகு, பூமியை ஆள்வதற்காகவும், தண்டக்கோலை {செங்கோலைத்} தரிக்கவும், அனைத்து உயிரினங்களையும் காக்கவும், இரண்டாவது வகையைச் சேர்ந்த க்ஷத்திரியன் படைக்கப்பட்டான்.(7) வைசியன், உழவு, வணிகம் மூலம் தன்னையும் தாங்கிக் கொண்டு, இந்த இரு வகையினரையும் ஆதரிப்பதற்காகப் படைக்கப்பட்டான். இறுதியாக, சூத்திரன் இந்த மூன்று வகையினருக்கும் கீழ்ப்படிந்து பணிசெய்ய வேண்டும் என்ற பிரம்மனால் விதிக்கப்பட்டான்” என்றான் {வாயு தேவன்}.(8)புரூரவஸ் {வாயுதேவனிடம்}, “ஓ! வாயு தேவா, இந்தப் பூமி நியாயமாக யாருக்குச் சொந்தமானதாகும். {இது சொந்தமானது} பிரமணனுக்கா? க்ஷத்திரியனுக்கா?” என்று கேட்டான்.(9)

வாயு தேவன் {புரூரவஸ்ஸிடம்}, “பிறப்பு மற்றும் முன்னிலையின் விளைவால் இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்தும் பிராமணனுக்கே சொந்தமானதாகும். அறநெறியறிந்தோர் இதையே சொல்கின்றனர்.(10) பிராமணன் எதை உண்கிறானோ, அஃது அவனுடையதே. அவன் வசிக்கும் இடம் அவனுடையதே. அவன் கொடுப்பதும் அவனுடையதே. அவன், அனைத்து {பிற மூன்று} வகையினரின் மதிப்புக்கும் தகுந்தவனாவான். அவனே முதலில் பிறந்தவனும், முதன்மையானவனும் ஆவான்.(11) கணவன் இல்லாத போது, ஒரு பெண், அவனுக்குப் பதில் அவனது தம்பியை ஏற்பதைப் போலவே, பூமியானவள், பிராமணனுடைய மறுப்பின் காரணமாக, அவனுக்கு அடுத்துப் பிறந்த க்ஷத்திரியனைத் தன் தலைவனாக ஏற்றாள். இதுவே முதல் விதியாகும். எனினும், இடர் காலங்களில் இதற்கு விதிவிலக்கும் உண்டு.(12) நீ, உன் வகைக்குண்டான கடமைகளை வெளிப்படுத்த முனைந்து, சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைய விரும்பினால், நீ வெல்லும் நிலங்கள் அனைத்தையும்,(13) கல்வியறிவு கொண்டவனும், அறநடத்தை கொண்டவனும், கடமைகளை அறிந்தவனும், தவங்களை நோற்பவனும், தன் வகைக்கான கடமைகளில் நிறைவடைந்தவனும், செல்வத்தில் பேராசையில்லாதவனுமான பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும்.(14) நற்பிறப்பைக் கொண்டவனும், ஞானம் மற்றும் பணிவைக் கொண்டவனுமான

பிராமணன், தன் பெரும் நுண்ணறிவைக் கொண்டு ஒவ்வொரு காரியத்திலும் மன்னனுக்கு வழிகாட்டுகிறான்.(15) நல்லாலோசனைகளின் மூலமாக அவன் அந்த மன்னனைச் செழிப்பீட்டச் செய்கிறான். மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகளை அந்தப் பிராமணன் சுட்டிக் காட்டுகிறான்.(16) தன் வகைக்குரிய கடமைகளைச் செய்பவனும், செருக்கற்றவனும், ஞானம் கொண்டவனுமான ஒரு மன்னன், பிராமணனின் அறிவுரைகளை எவ்வளவு காலம் கேட்பானோ, அவ்வளவு காலம் அவன் மதிக்கப்படுகிறான், அவ்வளவு காலம் அவன் புகழை அனுபவிக்கிறான். எனவே, மன்னன் அடையும் தகுதியில் {புண்ணியத்தில்} அவனது புரோகிதனுக்கும் ஒரு பங்குண்டு.(17) மன்னன் இவ்வாறு நடக்கும்போது, அவனைச் சார்ந்திருக்கும் அவனது குடிமக்கள் அனைவரும், தங்கள் நடத்தையில் அறவோராகவும், தங்கள் கடமைகளில் கவனமுள்ளோராகவும், அனைத்து வகை அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருப்பார்கள்.(18) மன்னன், தன்னால் முறையாகப் பாதுகாக்கப்படும் தன் குடிமக்களால் தன் நாட்டில் செய்யப்படும் அறச் செயல்களின் நான்கில் ஒரு பாகத்தை அடைகிறான்.(19)

தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் தங்களைத் தாங்கிக் கொள்ள வேள்விகளையே சார்ந்திருக்கின்றனர். மன்னன் இல்லாத ஒரு நாட்டில், எந்த வேள்வியும் நடைபெறாது.(20) தேவர்களும், பித்ருக்களும் வேள்விகளும் அளிக்கப்படும் காணிக்கைகளாலேயே வாழ்கின்றனர். எனினும் வேள்வியானது மன்னனைச் சார்ந்திருக்கிறது.(21) கோடை காலத்தில், மனிதர்கள், மரத்தின் நிழல், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த தென்றல் ஆகியவற்றின் ஆறுதலை விரும்புவார்கள். குளிர் காலத்தில் அவர்கள் நெருப்பு, கதகதப்பான துணிகள் மற்றும் சூரியன் ஆகியவற்றில் இருந்து ஆறுதலை அடைகிறார்கள்.(22)

மனிதனின் இதயமானது, ஒலி, தீண்டல், சுவை, காட்சி மற்றும் மணம் ஆகியவற்றில் இன்பத்தைக் கண்டடைகிறது. எனினும், அச்சமடைந்த மனிதன் இவையாவற்றிலும் எந்த இன்பத்தையும் காண்பதில்லை.(23) மனிதர்களின் அச்சத்தை விலக்கும் மனிதன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உயிர்க்கொடையைப் போன்ற வேறொரு கொடை மூன்று உலகங்களிலும் கிடையாது.(24) மன்னனே இந்திரனாவான். மன்னனே யமனாவான். மன்னனே தர்மனும் ஆவான். மன்னன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான். மன்னனே அனைத்தையும் தாக்குப்பிடித்து, அவற்றை ஆதரிக்கிறான்” என்றான் {வாயு தேவன்}”.(25)

பிராமண க்ஷத்திரிய ஒற்றுமை! – சாந்திபர்வம் பகுதி – 73-புரூரவஸுக்கும், கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைச் சொன்ன கசியபர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “ஓ! மன்னா, அறத்தகுதி மற்றும் செல்வம் ஆகிய இரண்டிலும் கண் கொண்டவனும், மிகச் சிக்கலான கருத்துகளைக் கொண்டவனுமான மன்னன், கல்வியறிவு பெற்றவரும், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் மிக நெருக்கமாக அறிந்தவருமான ஒரு புரோகிதரைத் தாமதமில்லாமல் நியமித்துக் கொள்ள வேண்டும்.(1) நல்லான்மா கொண்டோரும், கொள்கை அறிந்தவர்களுமான புரோகிதர்களையுடைய மன்னர்கள், தாங்களே அத்தகைய பண்புகளைக் கொண்டோராகி, திசைகள் அனைத்திலும் செழிப்பை அனுபவிப்பார்கள்.(2) மதிக்கத்தக்க பண்புகளைக் கொண்ட புரோகிதர், மற்றும் மன்னன் ஆகிய இருவரும், நோன்புகள் மற்றும் தவங்களை நோற்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் குடிமக்களையும், தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிள்ளைகளையும் பெருக்கிக் கொள்ள முடியும் {அல்லது அவர்களின் தரத்தை உயர்த்த முடியும்}.(3) அவர்கள் ஒரே இதயங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் இடையில் உண்டாகும் அத்தகு நட்பின் விளைவாகக் குடிமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(4) அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கவில்லையெனில் மக்களுக்கு அழிவே ஏற்படும். பிராமணனும், க்ஷத்திரியனும் தான் அனைத்து மனிதர்களுக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது.(5) இது தொடர்பாக இளையின் மகனுக்கும் {புரூரவஸுக்கும்}, கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலொன்று பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(6)

இளையின் மகன் {புரூரவஸ் காசியபரிடம்}, “பிராமணன் க்ஷத்திரியனைக் கைவிடும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனைக் கைவிடும்போது, அவர்களில் எவன் மேன்மையானவனாகக் கருதப்பட வேண்டும்? அவர்களில் எவருடைய ஆணைகளைச் சார்ந்து பிற வகையினர்கள் தங்களைப் பராமரித்துக் கொள்ள முடியும்?” என்று கேட்டான்.(7)

கசியபர் {புரூரவஸ்ஸ்டம்}“பிராமணனும், க்ஷத்திரியனும் ஒருவரோடொருவர் போரிடும்போது, அந்த க்ஷத்திரியனின் நாடு அழிவடைகிறது. குழப்பமே நீடிக்கும் அந்த நாட்டில் கள்வர்கள் பெருகுவார்கள், நல்லோர் அனைவரும் ஆட்சியாளனை மிலேச்சன் என்று கருதுவார்கள்.(8) அவர்களுடைய {நல்லோரின்} எருதுகள் தழைக்காது, அவர்களின் பிள்ளைகளும் தழைக்கமாட்டார்கள். எந்த நாடுகளில் பிராமணர்கள் க்ஷத்திரியர்களைக் கைவிடுகிறார்களோ, அங்கே {பிராமணப்} பிள்ளைகள் வேதங்களைக் கற்க மாட்டார்கள்.(9) அவர்களது வீடுகளில் செல்வம் பெருகாது. அவர்களது பிள்ளைகள் நல்லோராகமாட்டார்கள், சாத்திரங்களைக் கற்கமாட்டார்கள், வேள்விகளையும் செய்யமாட்டார்கள். பிராமணர்களைக் கைவிடும் க்ஷத்திரியர்கள், தங்கள் குருதியில் மாசடைந்து, கள்வர்களின் இயல்பை அடைவார்கள்.(10) பிராமணனும், க்ஷத்திரியனும் இயல்பிலேயே ஒருவரோடொருவர் தொடர்புடையவர்களும், ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்பவர்களுமாவர். பிராமணனின் வளர்ச்சிக்கான காரணம் க்ஷத்திரியனே, க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கான காரணம் பிராமணனே.(11) ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளும் போது, அவர்கள் இருவருமே பெருஞ்செழிப்பை அடைவார்கள். பழங்காலத்தில் இருந்து நீடிக்கும் அவர்களது நட்பு உடையுமேயானால், அனைத்திலும் பெருங்குழப்பமே ஏற்படும்.(12)

வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்க விரும்பும் எந்த மனிதனும், கடலின் பரப்பில் மிதக்கும் சின்னஞ்சிறு படகைப் போலத் தன் பணியில் வெற்றியடைவதில்லை. மனிதர்களில் நால்வகையினரும் குழப்பமடைந்து, அனைவருக்கும் அழிவு ஏற்படுகிறது.(13) ஒரு மரத்தைப் போன்றவனான பிராமணன் பாதுகாக்கப்பட்டால், அது பொன்னையும், தேனையும் பொழியச் செய்கிறது. மறுபுறம் அது பாதுகாக்கப்பட வில்லையெனில், அது கண்ணீரையும், பாவத்தையும் பொழியும்.(14) வேதங்களில் இருந்து வீழ்ந்த பிராமணன், (க்ஷத்திரிய ஆட்சியாளன் இல்லாமல்) சாத்திரங்களின் பாதுகாப்பை நாடும்போது, இந்திரன் பருவ காலத்தில் மழை பொழிய மாட்டான், பல்வேறு வகையான இடர்கள் இடையறாமல் நாட்டைப் பீடித்துக் கொண்டிருக்கும்.(15) இழிந்தவனும், பாவியுமான ஒருவன், ஒரு பெண்ணையோ, பிராமணனையும் கொன்றுவிட்டு, சக மனிதர்களின் சபைகளில் மன்னன் மீதான எந்த அச்சமும் இல்லாமல் நிற்க நேர்ந்தால், அந்த க்ஷத்திரிய ஆட்சியாளனை ஆபத்து அச்சுறுத்தும்.(16) பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவாக, அந்நாட்டில் தேவன் ருத்ரன் தோன்றுகிறான். உண்மையில், பாவிகள், பழிதீர்க்கும் தேவனையே தங்கள் பாவங்களின் மூலம் கொண்டுவருகிறார்கள். பிறகு அவன் {ருத்ரன்}, நல்லோர் அல்லோர் ஆகியோர் அனைவரையும் ஒன்றாகவே {எந்தப் பாகுபாடுமின்றி} அழிக்கிறான்” என்றார் {கசியபர்}[2].(17)

ஐலன் {இளையின் மகனான புரூரவஸ்}, “ருத்ரன் எங்கிருந்து தோன்றுவான்? அவனுடைய வடிவம் என்ன? உயிரினங்கள் உயிரினங்களாலேயே அழிக்கப்படுவதே காணப்படுகிறது. ஓ! கசியபரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக. ருத்ர தேவன் எங்கிருந்து உண்டாகிறான்?” எனக் கேட்டான்.(18)

கசியபர், “ருத்ரன் மனிதர்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறான். அவன் தானிருக்கும் உடல்களையும், பிறரின் உடல்களையும் அழிக்கிறான். {வாயு போன்ற} வழிமண்டலம் சார்ந்த தேர்வாகச் சொல்லப்படுகிறான், அவனது வடிவம் காற்றுத் தேவர்களைப் போன்றதாகும்” என்றார்.(19)

ஐலன், “காற்று வீசுவதால், அஃது அனைத்து சமயங்களிலும் மனிதர்களை அழிப்பதாகக் காண முடியவில்லை. மேகங்களின் தேவனும் மழைப்பொழிவால் அவ்வாறு அழிப்பதில்லை. மறுபுறம், தங்கள் புலனுணர்வுகளை இழக்கும் மனிதர்களே காமத்தினாலும், வன்மத்தினாலும் கொல்லப்படுகிறார்கள்” என்றான்.(20)

கசியபர், “ஒரு வீட்டில் சுடர்விடும் நெருப்பானது, மொத்த பகுதியையோ, மொத்த கிராமத்தையோ எரிக்கிறது. அதே போல, இந்தத் தேவனும், எவனாவது ஒருவனின் புலன்களைத் திகைக்கச் செய்கிறான், அந்தக் குழப்பம் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தீண்டுகிறது” என்றார்.(21)

ஐலன், “பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவால் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தண்டனை தீண்டுமேயானால், மனிதர்கள் ஏன் நற்செயல்புரிய வேண்டும்? உண்மையில் அவர்கள் ஏன் தீச்செயல்களில் இருந்து விலக வேண்டும்?” என்று கேட்டான்.(22)

கசியபர், “பாவிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாக ஆகிறான். எனினும், அவர்கள் பாவிகளுடன் கலந்திருப்பதால், பாவமற்றவர்களும் தண்டனையால் தீண்டப்படுகிறார்கள். ஈர விறகு, காய்ந்த விறகோடு கலந்திருந்தால், அத்தகு உடனுறைவின் விளைவால் அது நெருப்பால் எரிக்கப்படுகிறது. எனவே, பாவமற்றவர்கள் ஒருபோதும் பாவிகளுடன் கலந்து இருக்கக்கூடாது” என்றார்.(23)

ஐலன், “பூமியானது நேர்மையானவர்களையும், தீயோரையும் தாங்குகிறது. சூரியன், நேர்மையானவர்களையும், தீயோரையும் வெப்பமடையச் செய்கிறது. காற்றும் சமமாகவே அவர்களுக்கு வீசுகிறது. நீரும் சமமாகவே அவர்களைக் கழுவுகிறது” என்றான்.(24)

கசியபர், “ஓ! இளவரசே, உண்மையில் இதுவே உலகின் நடைமுறை. எனினும், மறுமையில் இஃது அவ்வாறில்லை. மறு உலகத்தில், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்களுக்கும் இடையில் சூழ்நிலையிலேயே பெரும் வேறுபாடு இருக்கிறது.(25) தகுதிபடைத்த {புண்ணியம் செய்த} மனிதர்கள், தேர் நிறைந்தவையும், தங்கம், அல்லது தெளிந்த நெய் ஊற்றப்படும் நெருப்பின் காந்தியைக் கொண்டவையுமான உலகங்களை அடைகின்றனர். அந்த உலகங்கள் அமுதத்தின் இருப்பிடங்களைப் போன்றனவாகும். தகுதி படைத்த மனிதன் அங்கே பெரும் இன்ப நிலையை அனுபவிக்கிறான். மரணம், முதுமை, கவலை ஆகியன அங்கே கிடையாது.(26) பாவிகளுக்கான உலகம் நரகமாகும். இருளும், இடையறாத வலியும் {துன்பமும்} அங்கே இருக்கின்றன, அது துயரம் நிறைந்ததாகும். பாவம் நிறைந்த செயல்களைச் செய்த மனிதன், புகழ்க்கேட்டில் மூழ்கி, அங்கே பல வருடங்கள் வருத்தத்தில் ஈடுபடுகிறான்.(27)

பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையின் விளைவால் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்களால் பீடிக்கப்படுகிறார்கள். ஒரு மன்னன் இஃதை அறிந்து கொண்டு, அனுபவமும், பரந்த அறிவும் கொண்ட ஒரு (பிராமணப்) புரோகிதனை நியமித்துக் கொள்ள வேண்டும்.(28) ஒரு மன்னன் முதலில் புரோகிதனைத் தன் அலுவலில் நியமித்த பிறகு, அவன் மணிமுடிசூட்டிக்கொள்ள வேண்டும். இதுவே விதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள், பிராமணனே அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவன் என்று அறிவிக்கின்றன. வேதங்களை அறிந்த மனிதர்கள், பிராமணனே முதலில் உண்டாக்கப்பட்டான் என்று சொல்கின்றனர்.(29) முந்திப் பிறந்ததன் விளைவால் அவனிடம் இவ்வுலகின் நல்ல பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. படைப்பாளன் உண்டாக்கிய சிறந்த பொருட்கள் அனைத்தின் உரிமையாளனான பிராமணன், முந்திப் பிறந்தவனாதலால், அவன் மரியாதைக்குத் தகுந்தவனும், அனைத்து உயிரினங்களின் வழிபாட்டுக்குத் தகுந்தவனுமாவான்.(30) ஒரு மன்னன் பலமிக்கவனாகவே இருந்தாலும், சாத்திரங்களின் ஆணைப்படி, பிற பொருட்களைக் காட்டிலும் தனித்துவமான, புகழ்பெற்ற, சிறந்த பொருட்களைப் பிராமணனுக்கு அளிக்க வேண்டும்.(31) க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கும் பிராமணன் பங்காற்றுகிறான், பிராமணனின் வளர்ச்சிக்கு க்ஷத்திரியன் பங்காற்றுகிறான். எனவே எப்போதும் பிராமணர்கள் மன்னர்களால் சிறப்பாக வழிபடப்பட வேண்டும்”என்றார் {கசியபர்}”.(32)

முசுகுந்தனும், குபேரனும்! – சாந்திபர்வம் பகுதி – 74-மன்னன் முசுகுந்தனுக்கும், குபேரனுக்கும் இடையில் நடந்த மோதலையும் உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; புரோகிதரால் மன்னனுக்கு நேரும் நன்மைகளை எடுத்துச் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “நாட்டைப் பேணிக் காத்து, வளர்ச்சியடையச் செய்வது மன்னனைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. மன்னனைப் பேணிக் காத்து, அவனை வளர்ச்சியடையச் செய்வது அம்மன்னனின் புரோகிதரைச் சார்ந்தது.(1) எங்குக் குடிமக்களின் கண்ணுக்குப் புலப்படாத அச்சங்கள் களையப்பட்டு, கண்ணுக்குப் புலப்படும் அச்சங்கள் அனைத்தும் மன்னனின் கர வலிமையால் களையப்படுகின்றனவோ அந்த நாடே உண்மையான இன்பத்தை அனுபவிக்கும்.(2) இது தொடர்பாக மன்னன் முசுகுந்தனுக்கும், வைஸ்ரவணனுக்கும் {குபேரனுக்கும்} இடையில் நடைபெற்ற ஒரு பழைய உரையாடல் தென்படுகிறது.(3)மன்னன் முசுகுந்தன், மொத்த உலகத்தையும் அடக்கிய பிறகு, தன் பலத்தைச் சோதிப்பதற்காக அளகையின் தலைவனிடம் {குபேரனிடம்} சென்றான்.(4) மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} (தன் ஆன்ம பலத்தால்) ஒரு பெரிய ராட்சசப் படையை உண்டாக்கினான். அவை முசுகுந்தனால் வழிநடத்தப்பட்ட படையைக் கலங்கடித்தது.(5) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, தன் படையினர் கொல்லப்படுவதைக் கண்ட மன்னன் முசுகுந்தன், கல்விமானான தனது புரோகிதர் (வசிஷ்டரைக்) கண்டிக்கத் தொடங்கினான்.(6) அதன்பேரில், நேர்மையான மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் கடுந்தவங்களைச் செய்து, ராட்சசர்களைக் கொல்லச் செய்து, முசுகுந்தனின் விருப்பத்திற்கான உண்மையான வழிமுறையை உறுதி செய்தார்.(7) மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} துருப்பினர் கொல்லப்பட்டபோது, அவன் {குபேரன்} முசுகுந்தனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8)

அந்தப் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்}, “உன்னைவிடப் பலவான்களான பழங்காலத்து மன்னர்கள், தங்கள் புரோகிதர்களின் துணையுடன் இவ்வாறு ஒருபோதும் என்னை அணுகியதில்லை.(9) அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் திறன் கொண்டவர்களாகவும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். இன்ப துன்பங்களை அருள்பவனாக என்னைக் கருதிய அவர்கள், வழிபடுவதற்காகவே என்னை அணுகியிருக்கின்றனர்.(10) உண்மையில், உனக்குக் கரவலிமை உண்டானால், அதை வெளிப்படுத்துவதே உனக்குத் தகும். பிராமண வலிமையின் துணையுடன் கூடிய நீ ஏன் இவ்வாறு செருக்குடன் நடந்து கொள்கிறாய்?” என்று கேட்டான்.(11)

இந்த வார்த்தைகளில் கோபமடைந்த முசுகுந்தன், செருக்கேதும், அச்சமேதும் இல்லாமல் பொக்கிஷத்தலைவனிடம் {குபேரனிடம்} நீதியுள்ள, அறிவார்ந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) “தான்தோன்றியான பிரம்மன் பிராமணனையும், க்ஷத்திரியனையும் உண்டாக்கினான். அவர்கள் பொது மூதாதையையே கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் பலங்களைத் தனித்தனியாகப் பயன்படுத்தினால், அவர்களால் உலகத்தைத் தாங்க முடியாது. தவங்கள் மற்றும் மந்திரங்களின் சக்தி பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது; கர மற்றும் ஆயுத வலிமை க்ஷத்திரியர்களுக்கு வழங்கப்பட்டது.(14) மன்னர்கள் இந்த இரு வகைச் சக்திகளையும் பெருக்கிக் கொண்டே தங்கள் குடிமக்களைக் காக்க வேண்டும். நான் அவ்வழியிலேயே செயல்படுகிறேன். எனவே, ஓ! அளகையின் தலைவா {குபேரா}, என்னை இவ்வாறு நிந்திக்காதே” என்றான்.(15)

இவ்வாறு சொல்லப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்}, முசுகுந்தனிடமும், அவனது புரோகிதரிடமும் {வசிஷ்டரிடமும்}, “(தான்தோன்றியின்) உத்தரவில்லாமல் நான் எவருக்கும் ஒருபோதும் அரசுரிமையை வழங்குவது கிடையாது. அதே போல, உத்தரவில்லாமல் நான் எவரிடம் இருந்தும் அதைப் பறித்தது கிடையாது. ஓ! மன்னா, இதை அறிவாயாக.(16) கட்டுகள் இல்லாத மொத்த உலகத்தையும் நீ ஆள்வாயாக” என்றான்.

இவ்வாறு சொல்லப்பட்ட முசுகுந்தன் {குபேரனிடம்}, பதிலுரையாக,(17) “ஓ! மன்னா, உன்னிடமிருந்து கொடையாக அளிக்கப்படும் அரசுரிமையை அனுபவிக்க நான் விரும்பவில்லை. நான் என் சொந்த கரவலிமையால் கிடைக்கும் அரசுரிமையையே அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான்”.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “முசுகுந்தனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், அம்மன்னன் {முசுகுந்தன்} அச்சமில்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பதைக் கண்டும் வைஸ்ரவணன் {குபேரன்} மிகுந்த ஆச்சரியத்தால் நிறைந்தான்.(19) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த மன்னன் முசுகுந்தன், தன் கரவலிமையால் மொத்த உலகத்தையும் அடைந்து அதை ஆளத் தொடங்கினான்.(20) அறம்சார்ந்த எந்த மன்னன், பிராமணனை முன்னிலையில் கொண்டு, அவனது துணையுடன் தன் நாட்டை ஆள்கிறானோ, அவன் மொத்த உலகத்தை அடக்குவதிலும், பெரும் புகழை அடைவதிலும் வெல்கிறான்.(21) ஒரு பிராமணன் தினமும் தன் அறச்சடங்குகளைச் செய்ய வேண்டும். க்ஷத்திரியன் எப்போதும் ஆயுதங்களைத் தரித்தவனாக இருக்க வேண்டும். அவ்விருவரே இந்த அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் உண்மையான உரிமையாளர்கள்” {என்றார் பீஷ்மர்}.(22)

அரசவொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 75-அரசன் எவ்வாறான நடத்தைகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தன் குடிமக்களை மேன்மையடையச் செய்வதிலும், மறுமையில் புகழுலகங்களை ஈட்டுவதிலும் எந்த மன்னன் வெல்கிறான் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, மன்னன், பரந்த மனம் கொண்டவனாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். அவன் நோன்புகளையும், தவங்களையும் நோற்க வேண்டும், மேலும் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும்.(2) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாக்கும் அவன், அறவோர் வரும்போது எழுந்திருந்து, அவர்களுக்குக் கொடையளித்து அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.(3) மன்னன் நேர்மையை {அறத்தை} மதித்தால், எங்கும் அது {நேர்மை} மதிக்கப்படும். மன்னனால் விரும்பப்படும் செயல்கள் மற்றும் பொருட்களை, அவனது குடிமக்களும் விரும்புவார்கள்.(4)

மன்னன், எப்போதும் தன் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் இருக்கும் காலனைப் போலத் தன் எதிரிகளிடம் நடந்த கொள்ள வேண்டும். அவன் தன் நாட்டில் கள்வர்கள் எங்கிருப்பினும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டும், உறுதியின்மையால் அவன் ஒருபோதும் அவர்களில் எவரையும் மன்னிக்கக்கூடாது. (5) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மன்னன் தன் பாதுகாப்பில் இருக்கும் குடிமக்கள் ஈட்டும் தகுதியின் {புண்ணியத்தின்} நான்கில் ஒரு பகுதியை ஈட்டுகிறான்.(6) கல்வி, கொடைகள், ஆகுதிகள், தேவர்களை வழிபடுதல் ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்கள் அடையும் தகுதியில் நான்கில் ஒரு பகுதியை, அந்தக் குடிமக்களைப் பாதுகாப்பதின் மூலம் மட்டுமே மன்னன் அடைந்துவிடுகிறான்.(7) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் புறக்கணிப்பதால் நாட்டில் எழும் எந்தத் துயரின் விளைவாலும் அவனுடைய குடிமக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியையும் அவன் அடைகிறான்.(8) மன்னன், கொடூரனாகவும், பேச்சில் உண்மை இல்லாதவனாகவும் மாறுவதால் உண்டாகும் எந்தப் பாவத்திலும், அவன் ஒரு பகுதியை ஈட்டுகிறான் என்று ஒரு சிலரும், மொத்த பாவத்தையும் அடைகிறான் என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.(9)

அத்தகு பாவங்களிலிருந்து மன்னன் எவ்வாறு தூய்மையடையலாம் என்ற வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. கள்வர்களால் ஒரு குடிமகனிடம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மீட்பதில் மன்னன் தவறினால், அவன் தன் கருவூலத்திலிருந்தாவது, அல்லது, அஃது இயலாவிட்டாலும், தன்னைச் சார்ந்திருப்பவர்களிடம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டாவது அந்தப் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இழப்பீடு தர வேண்டும்.(10) அனைத்து வகையினரும், பிராமணர்களின் உடலையோ, உயிரையோ காக்க வேண்டியதைப் போலவே பிராமணர்களின் செல்வத்தையும் காக்க வேண்டும். பிராமணர்களுக்கு எதிராகக் குற்றமிழைக்கும் மனிதன் நாடுகடத்தப்பட வேண்டும்.(11) பிராமணனின் செல்வத்தைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு அடையப்படும் பிராமணனின் அருளால் மன்னன் வெற்றிமகுடம் சூட்டுவான்.(12) மேகங்களிடம் இருந்து நிவாரணத்தை நாடும் உயிரினங்களைப் போலவோ, ஒரு பெரிய மரத்திடம் புகலிடத்தை நாடும் பறவைகளைப் போலவோ மனிதர்கள், தகுந்த மன்னனின் பாதுகாப்பை நாடுகிறார்கள்.(13) காமம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், தன் இச்சைகளை நிறைவுசெய்யவே எப்போதும் முனைபவனும், பேராசைக்காரனும், கொடூரனுமான ஒரு மன்னன், தன் குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை” என்றார் {பீஷ்மர்}.(14)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அரசுரிமை அளிக்கும் மகிழ்ச்சி, அல்லது தன்னலம் பேணும் அந்த அரசுரிமையையே கூட நான் ஒருக்கணமும் விரும்பவில்லை. எனினும், அதன் மூலம் ஒருவன் அடையும் தகுதிக்காகவே {புண்ணியத்துக்காகவே} அதை நான் விரும்பினேன். எந்தத் தகுதிக்கும் {புண்ணியத்துக்கும்} அதனுடன் தொடர்பில்லை என்றே {இப்போது} எனக்குத் தெரிகிறது.(15) எனில், எந்தத் தகுதியும் ஈட்டமுடியாத அரசுரிமைக்கான எந்தத் தேவையும் இல்லை. எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் விருப்பத்தால் நான் காட்டிற்குள் ஓயப் போகிறேன். செங்கோலைப் புறந்தள்ளி, என் புலன்களை அடக்கி, புனிதமான காடுகளுக்குச் சென்று, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழும் துறவியாகி அறத்தகுதிகளை ஈட்டுவதில் முனையப் போகிறேன்” என்றான்[1].(16,17)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா,, உன் இதயத்தின் இயல்பு என்ன என்பதையும், குற்றமில்லாத உன் மனநிலையையும் நான் அறிவேன். எனினும், குற்றமில்லா தன்மையினால் மட்டுமே உன்னால் உன் நாட்டை ஆள முடியாது.(18) உன் இதயம் மென்மையானதாக இருக்கிறது. நீ கருணையுள்ளவனாகவும், அதீத நீதிமானாகவும் இருக்கிறாய். சக்தி இல்லாதவனாகவும், அறவோனாகவும், கருணை நிரம்பியவனாகவும் நீ இருக்கிறாய். எனவே, மக்கள் உன்னை அதிகமாக விரும்புகின்றனர்.(19) நீ உன் தந்தை மற்றும் பாட்டனின் நடத்தையைப் பின்பற்றுவாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தையை மன்னர்கள் ஒருபோதும் பின்பற்றக்கூடாது.(20) (உன் கடமையைச் செய்த பிறகு) இதுபோன்ற கவலையால் தீண்டப்பட்டவனாக ஒருபோதும் இராதே. குற்றமற்ற {புண்படுத்தா} நடத்தையை நீ ஒருபோதும் பின்பற்றாதே.(21) உன் புத்தியாலும், ஞானத்தாலும் தூண்டப்பட்டு, நீ பின்பற்ற விரும்பும் நடத்தையானது உன் தந்தை பாண்டுவின் ஆசிகளுக்கோ, உன் தாய் குந்தி உனக்காக வேண்டி வருவதற்கோ தகுந்ததில்லை.(22) துணிவு, வலிமை, உண்மை ஆகியவற்றையே உன் தந்தை எப்போதும் உனக்காக வேண்டினான். உயர்ந்த மனத்தையும், பெரும் தகைமையையுமே குந்தி எப்போதும் உனக்காக வேண்டினாள். சிராத்தங்கள் மற்றும் வேள்விகளில் ஸ்வாஹா மற்றும் ஸ்வாதாக்களுடன் அளிக்கப்படும் காணிக்கைகளை, பித்ருக்களும், தேவர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து எப்போதும் வேண்டுகின்றனர்.(24)

கொடைகள், கல்வி, வேள்விகள், குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவை தகுதியை {புண்ணியத்தைத்} தருபவையாகவோ, பாவம் நிறைந்தவையாகவோ இருப்பினும், அவற்றைப் பயிலவும், நடைமுறைப்படுத்தவுமே நீ பிறந்திருக்கிறாய்.(25) ஓ! குந்தியின் மகனே, மனிதர்கள் தங்கள் மேல் வைக்கப்பட்ட சுமைகளையும், அவர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டவற்றையும் சுமப்பதில் தோல்வியுற்றாலும், அவர்களது புகழ் ஒருபோதும் மங்குவதில்லை.(26) ஒரு குதிரை கூட நன்கு பயிற்சியளிக்கப்பட்டால், விழுந்துவிடாமல் சுமையைச் சுமப்பதில் வெல்லும். (அப்படியிருக்கையில் மனிதனாக இருக்கும் உன்னைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?) வெற்றியானது (செயல்களையும், சொற்களையும்} செயல்களைச் சார்ந்ததாகச் சொல்லப்படுவதால், ஒருவனுடைய செயல்களும், வார்த்தைகளும் முறையானவையாக இருந்தால் அவன் ஒருபோதும் நிந்தனைக்குள்ளாக மாட்டான்.(27) இல்லறம் நோற்கும் அறவோனாகவோ, மன்னனாகவோ, பிரம்மச்சாரியாகவோ எவ்வாறானவனாக இருப்பினும் எந்த மனிதனும் இடறாமல் செயல்படுவதில் வென்றதில்லை.(28) செயல்படாமல் இருப்பதே பாவம் நிறைந்தது என்பதால், அனைத்துச் செயல்களில் இருந்தும் விலகாமல், சிறு தகுதியாவது {புண்ணியமாவது} இருக்கும் நன்மையான செயலைச் செய்வதே சிறந்ததாகும்.(29)

நற்பிறவி கொண்டவனும், நீதிமானுமான ஒருவன் செழிப்படைவதில் வெல்கிறான் எனும்போது, மன்னனானவன், தன் காரியங்கள் அனைத்திலும் செழிப்பை அடைவதில் வெல்வான்.(30) ஒரு நாட்டை அடையும் அறம்சார்ந்த மன்னன் ஒருவன், கொடைகளால் {தானத்தால்} சிலரையும், பலத்தால் (தண்டத்தால்) சிலரையும், இனிமையான வார்த்தைகளால் {சாமத்தால்} சிலரையும் அடிபணியச் செய்ய முயல வேண்டும்.(31) நற்பிறவி கொண்டவர்களும், தங்கள் வாழ்வாதார இழப்பை அஞ்சும் கல்விமான்களும் எவனைச் சார்ந்திருக்கிறார்களோ, எவனை நம்பி நிறைவுடன் வாழ்கிறார்களோ, அவனைவிட {அந்த மன்னனைக் காட்டிலும்} அறவோன் வேறு எவனும் இல்லை”[2] என்றார் {பீஷ்மர்}.(32)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ ஐயா, சொர்க்கத்திற்கு உகந்த நடத்தைகள் என்ன? அவற்றில் இருந்து பெறப்படும் பெரும் புகழின் இயல்பு என்ன? அதிலிருந்து அடையப்படும் உயர்ந்த செழிப்பு யாது? நீர் அறிந்தால் இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(33)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அச்சத்திலிருக்கும் ஒருவன் எந்த மனிதனிடம் ஒரு கணமேனும் நிவாரணம் அடைகிறானோ, அவனே நம்மில் சொர்க்கத்திற்கு மிகவும் தகுந்தவனாவான். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(34) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, உற்சாகமாகக் குருக்களின் மன்னன் ஆவாயாக, சொர்க்கத்தை அடைவாயாக, நல்லோரைக் காத்து, தீயோரைக் கொல்வாயாக.(35) மேகங்களின் தலைவனிடம் இருந்து  {வருணபகதேவனிடமிருந்து காக்கப்படும்} அனைத்து உயிரினங்களைப் போலவும், இனிய கனிகளுடன் கூடிய பெருமரத்திடம் இருந்து பறவைகளைப் போலவும், நியாயவான்கள் அனைவருடன் சேர்ந்த உன் நண்பர்கள் யாவரும்  உன்னிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொள்ளட்டும்.(36) கண்ணியமானவனும், துணிவுமிக்கவனும், தாக்கவல்லவனும், கருணை கொண்டவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்பவனும், தகைமையாளனும், நீதிமானுமான ஒருவனின் பாதுகாப்பையே மனிதர்கள் நாடுகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(37)

பிராமணப் பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 76-பிராமணனின் பண்புகளையும், அவன் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பிராமணர்களில் சிலர் தங்கள் வகைக்குரிய கடமைகளில் ஈடுபடுகின்றனர், அதே வேளையில் வேறு சிலரோ வேறு கடமைகளில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு வகையினருக்கிடையிலான வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, கல்விமான்களும், நற்பண்புகளைக் கொண்டோரும், சமபார்வை கொண்டோருமான பிராமணர்கள் பிரம்மனுக்கு இணையானவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(2)
{வேதங்களான} ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்களை அறிந்தவர்களும், தங்கள் வகைக்கான நடைமுறைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அவர்கள் தேவர்களுக்கு இணையானவர்களாவர்.(3)

எனினும், அவர்களில் {பிராமணர்களில்} நற்பிறவியற்றோர், தங்கள் வகைக்குரிய கடமைகளில் அர்ப்பணிப்பில்லாதோர், அதையும் தவிரத் தீய நடைமுறைகளைச் செய்வோர் ஆகியோர் சூத்திரர்களைப் போன்றோராவர்.(4)

ஓர் அறம் சார்ந்த மன்னன், வேதமறியாதவர்களும், வழிபடுவதற்குத் தங்கள் சொந்த நெருப்புகள் இல்லாதவர்களுமான பிராமணர்களைக் கப்பம் கட்டும்படியும், கட்டணமில்லாமல் பொதுச் சேவையில் ஈடுபடும்படியும் பணிக்க வேண்டும்.(5)

நீதிமன்றங்களில் மக்களை அழைக்க நியப்பட்டவர்கள் கட்டணத்தின் நிமித்தம் மற்றவர்களுக்காக வழிபாடுகளைச் செய்பவர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திர்களின் வேள்விகளைச் செய்பவர்கள், மொத்த கிராமத்தின் சார்பாக வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்கள் ஆகிய இந்த ஐவரும் பிராமணர்களுக்கு மத்தியில் சண்டாளர்களாகக் கருதத்தக்கவர்களாவர்[1].(6)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ரித்விக்குகள், புரோகிதர்கள், அமைச்சர்கள், தூதர்கள் ஆகியோர் க்ஷத்திரியர்களுக்கு இணையானவர்களாவார்கள்.(7) 

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் குதிரைகள், அல்லது யானைகள், அல்லது தேர்களைச் செலுத்துபவர்களும், காலாட்படை வீரர்களும் வைசியர்களுக்கு இணையானவர்களாவார்கள்.(8)

மன்னனின் கருவூலம் நிரம்பவில்லையெனில், அவன் இவர்களிடம் இருந்து கப்பம் {வரி} வசூலிக்கலாம். எனினும், கப்பம் திரட்டும்போது, அம்மன்னன், தேவர்களுக்கோ, (தங்கள் நடத்தையால்) பிரம்மனுக்கோ இணையான பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும்.(9) பிராமணர்களைத் தவிர்த்த மற்ற வகையினர் அனைவருடைய செல்வங்களுக்கும் மன்னனே தலைவன் என்று வேதங்கள் சொல்கின்றன. சட்டப்படியான தங்கள் கடமைகளில் இருந்து தவறிய பிராமணர்களின் செல்வத்தையும் அவன் எடுத்துக் கொள்ளலாம். (10)

தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களிடம் ஒரு மன்னன் எந்த அலட்சியமும் கொள்ளக்கூடாது. தன் மக்களை அறம்சார்ந்தவர்களாக்கும் நிமித்தமாக அவன், சிறந்தவர்களிடம் இருந்து அவர்களைப் பிரித்துத் தண்டிக்க வேண்டும்.(11) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, எவனுடைய ஆட்சிப்பகுதியில் ஒரு பிராமணன் கள்வனாகிறானோ, அந்தக் கெட்ட காரியத்திற்குக் காரணம் அந்த மன்னனே என்று கல்விமான்கள் கருதுகின்றனர்.(12) வேதங்களை அறிந்தவனும், நோன்புகளை நோற்பவனுமான ஒரு பிராமணன், தன் வாழ்வாதாரத்தைத் தாங்கிக் கொள்ளும் தேவைகளுக்காக ஒரு கள்வனாக மாறினால், அத்தேவைகளைக் கொடுத்து அவனை ஆதரிக்க வேண்டியது மன்னனின் கடமையாகும்.(13) ஓ! எதிரிகளை எரிப்பவனே, அவனைத் தாங்கிக் கொள்வதற்கான பொருட்களைக் கொடுத்த பிறகும் அவன் களவைத் தவிர்க்கவில்லையெனில், அவன் அவனுடைய சொந்தங்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(14)

கைகேய மன்னனும், ராட்சசனும்! – சாந்திபர்வம் பகுதி – 77-எவருடைய செல்வத்துக்கெல்லாம் அரசன் தலைவனாகக் கருதப்படுகிறான் என்பதையும், மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்துக் கேகய மன்னனுக்கும் ராட்சசனுக்கும் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்துக் காளையே, எவருடைய செல்வத்திற்கு மன்னன் தலைவனாகக் கருதப்படுகிறான்? மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன? ஓ! பாட்டா, இது குறித்து என்னிடம் உரைப்பீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர்களைத் தவிர்த்து, அனைவருக்குச் சொந்தமான செல்வத்துக்கும், தங்கள் முறையான கடமைகளை நோற்காத பிராமணர்களுக்குச் சொந்தமான செல்வத்துக்கும் மன்னனே தலைவன் என்று வேதங்கள் அறிவிக்கின்றன.(2) தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களை மன்னன் {தண்டனை இல்லாமல் தப்ப} விட்டுவிடக்கூடாது. இதுவே பண்டைய மன்னர்களின் பாரம்பரிய வழக்கமாகும் என்று நீதிமான்கள் சொல்கின்றனர்.(3) ஓ! ஏகாதிபதி, எவனுடைய ஆட்சிப்பகுதியில் உள்ள ஒரு பிராமணன் கள்வனாகிறானோ, அந்த மன்னனே அக்குற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறான். அவ்வழக்கில் அவனே பாவம் நிறைந்தவனாகிறான்.(4) அத்தகு சூழ்நிலையின் விளைவால் மன்னர்கள் தங்களையே நிந்தனைக்குத் தகுந்தவர்களாகக் கருதுகிறார்கள். எனவே நீதிமான்களான மன்னர்கள் அனைவரும், பிராமணர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகின்றனர்.(5)

ஒரு ராட்சசன், கைகேயர்களின் மன்னனைக் கடத்தும்போது அவனிடம் அம்மன்னன் பேசியதாக உள்ள ஒரு பழைய உரையாடல் இது தொடர்பாகத் தென்படுகிறது.(6) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, கடும் நோன்புகளைக் கொண்டவனும், வேதங்களை அறிந்தவனுமான கைகேயர்களின் மன்னன், காட்டில் வசித்துவந்தபோது, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு ராட்சசனால் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டான்.(7) {அப்போது} அம்மன்னன், “என் ஆட்சிப்பகுதிகளில் திருடன் எவனும், தீய நடத்தை கொண்டவன் எவனும், மதுவுண்பவன் எவனும் கிடையாது. புனித நெருப்பு இல்லாதவனோ, வேள்விகளைச் செய்யாதவனோ எவனும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தை அடைய முடிந்தது?[1](8) கல்வியில்லா, நோன்பு நோற்கா, சோமம் பருகா பிராமணர் எவரும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது. புனித நெருப்பு இல்லாதவனோ, வேள்விகளைச் செய்யாதவனோ எவனும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது[2]. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(9) என் ஆட்சிப்பகுதிகளில் தக்ஷிணையுடன் நிறைவுபெறாத வேள்வி ஏதும் செய்யப்படுவதில்லை. என் ஆட்சிப்பகுதிகளில் நோன்புகளை நோற்காதோர் எவரும் வேதங்களைக் கற்பதில்லை. இவ்வாறிருக்கையில், உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(10)

என் நாட்டில் உள்ள பிராமணர்கள் கற்பிக்கவும், கற்கவும், வேள்விகள் செய்யவும், மற்றவர்களின் வேள்விகளைச் செய்து கொடுக்கவும், கொடையளிக்கவும், கொடைபெறவும் செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் அந்த ஆறு செயல்பாடுகளையும் செய்கிறார்கள்.(11) என் நாட்டில் உள்ள பிராமணர்கள் அனைவரும் தங்கள் வகைக்கான கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள். அவர்கள் மென்மையானவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருப்பதால் அனைத்தும் வழங்கப்பட்டவர்களாகவும், வழிபடப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறிருக்கையில், உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(12)

என் நாட்டில் உள்ள க்ஷத்திரியர்கள் அனைவரும், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் இரந்து கேட்காமல் கொடுக்கவே செய்கிறார்கள். மேலும் அவர்கள் உண்மையையும், அறத்தையும் அறிந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கற்பிக்காமல் எப்போதும் கற்கவே செய்கிறார்கள். வேள்விகளைச் செய்கிறார்களேயன்று ஒருபோதும் மற்றவர்களின் வேள்வியை நடத்துவதில்லை. அவர்கள் பிராமணர்களைப் பாதுகாக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் போரில் புறமுதுகிடுவதில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(13,14)

என் ஆட்சிப்பகுதிகளில் உள்ள வைசியர்கள் அனைவரும் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கின்றனர். அவர்கள் எளிமையாகவும், வஞ்சகமில்லாமலும் உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவற்றின் மூலம் தங்கள் வாழ்வாதாரங்களை அடைகின்றனர். அவர்கள் அனைவரும் கவனம் நிறைந்தவர்களாகவும், அறச்சடங்குகளையும், அற்புத நோன்புகளை நோற்பவர்களாகவும், உண்மைநிறைந்த பேச்சு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.(15) அவர்கள், விருந்தினர்களுக்கு உரியதைக் கொடுப்பவர்களாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், தங்கள் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் பிணைப்புள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(16)

என் நாட்டில் உள்ள சூத்திரர்கள், தங்கள் வகைக்குரிய கடமையை நோற்பவர்களாகவும், பணிவுடையவர்களாகவும் இருந்து, முறையான தொண்டாற்றி, மூன்று வகையினரிடமும் எந்தத் தீய எண்ணமும் இன்றி அவர்களுக்காகக் காத்திருக்கின்றனர் {அவர்களுக்குப் பணிவிடை செய்கின்றனர்}. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(17)

ஆதரவற்றோர், முதியோர், பலவீனர், நோய்வாய்ப்பட்டார், (பாதுகாப்பவரில்லா) பெண்கள் ஆகியோர் அனைவருக்கும் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து நான் ஆதரிக்கிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(18) பழங்காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்து வரும் நாடுகள் சார்ந்த, குடும்பங்கள் சார்ந்த, சிறப்புக்குரிய பழக்கவழக்கங்கள் எதையும் ஒருபோதும் நான் ஒழித்ததில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(19)

என் நாட்டில் உள்ள தவசிகள் பாதுகாக்கப்பட்டும், வழிபடப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கௌரவிக்கப்படுபவர்களாக, உணவு கொடுத்து பராமரிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(20) பிறருக்குக் கொடுக்காமல் நான் உண்பதில்லை. அடுத்தவரின் மனைவியரிடம் நான் செல்வதில்லை. நான் தனியாக விளையாடுவதோ, மகிழ்வதோ இல்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(21) பிரம்மச்சாரியல்லாத எவரும் என் நாட்டில் உணவுக்கு இரப்பதில்லை. பிக்ஷு வாழ்வு முறையை நோற்பவர்கள் எவரும் பிரம்மச்சாரியாக விரும்புவதில்லை. ரித்விக்காக இல்லாத எவரும் வேள்வி நெருப்பில் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளை ஊற்றுவதில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(22) கற்றறிந்தோர், முதியோர், தவங்களில் ஈடுபடுவோர் ஆகியோர் நான் ஒருபோதும் அவமதித்ததில்லை. மொத்த மக்களும் உறங்கும்போது, (அவர்களுக்குக் காவலாக) நான் விழித்திருக்கிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(23)

என் புரோகிதர் தன்னை அறிந்த ஞானியாக இருக்கிறார். அவர் தவங்களைச் செய்பவராகவும், அனைத்து கடமைகளை அறிந்தவராகவும் இருக்கிறார். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் என் நாட்டில் முழு அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.(24) கொடைகளின் மூலம் அறிவையும், உண்மை மற்றும் பிராமணர்களைப் பாதுகாப்பதன் மூலம் சொர்க்கத்தில் உள்ள அருள் உலகங்களையும் அடைய நான் விரும்புகிறேன். தொண்டால் நான் என் ஆசான்களுடன் பிணைப்புடன் இருக்கிறேன். எனக்கு ராட்சசர்களிடம் எந்த அச்சமும் கிடையாது.(25)

என் நாட்டில் விதவைகளோ, தீய பிராமணர்களோ, தங்கள் கடமைகளில் இருந்து தவறிய பிராமணர்களோ, வஞ்சகர்களோ, கள்வர்களோ, தகாதோரின் வேள்விகளைச் செய்து கொடுக்கும் பிராமணர்களோ, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் பாவிகளோ எவரும் கிடையாது. எனக்கு ராட்சசர்களிடம் எந்த அச்சமும் கிடையாது.(26)
என் உடலில் ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தால் உண்டான வடு இல்லாத இரண்டு விரல் அகல இடம் கூடக் கிடையாது. நான் எப்போதும் அறத்திற்காகப் போரிடுகிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(27) என் நாட்டின் மக்கள், நான் அவர்களின் பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பேன் என்பதாலும், வேள்விகளைச் செய்வேன் என்பதாலும் எப்போதும் எனக்கு ஆசி கூறுகின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என்னை அடைய முடிந்தது?” என்று கேட்டான் {கைகேய மன்னன்}.(28)

ராட்சசன், “ஓ! கைகேயர்களின் மன்னா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் நீ உன் கடமைகளை நோற்றவனாக இருப்பதால், நீ உன் வசிப்பிடத்திற்குச் செல்லலாம். நான் உன்னை விடுகிறேன், நீ அருளப்பட்டிருப்பாயாக.(29) ஓ! கைகேயர்களின் மன்னா, பசுக்கள் மற்றும் பிராமணர்களைப் பாதுகாப்போரும், தங்கள் குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்போரும் ராட்சசர்களிடமும், பாவம் நிறைந்த மனிதர்களிடமும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.(30) எந்த மன்னர்கள் பிராமணர்களை வழிகாட்ட விடுகிறார்களோ, எவர்களின் வலிமை பிராமணர்களைச் சார்ந்து இருக்கிறதோ, எவர்களது குடிமக்கள் விருந்தோம்பும் கடமைகளைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் எப்போதும் வெல்கிறார்கள்” என்றான்.”(31)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “எனவே, நீ பிராமணர்களைப் பாதுகாக்க வேண்டும். உன்னால் பாதுகாக்கப்படும் அவர்கள், பதிலுக்கு உன்னைப் பாதுகாப்பார்கள். ஓ! மன்னா, அவர்களுடைய ஆசிகள் அறம்சார்ந்த நடத்தை கொண்ட மன்னர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.(32) தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களை அறத்தின் நிமித்தமாகத் தண்டித்து, சிறந்தவர்களிடம் இருந்து அவர்களைத் (தனிப்பட்ட வகுப்பாக) தனிமைப்படுத்த வேண்டும்.(33) நகர மற்றும் மாகாண மக்களிடம் இவ்வழியில் நடந்து கொள்ளும் மன்னன் ஒருவன் இம்மையில் செழிப்பையும், இந்திரனுடன் கூடிய சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகிறான்” {என்றார் பீஷ்மர்}.(34)

சூத்திரனும் மன்னனாகத் தகுந்தவனே! – சாந்திபர்வம் பகுதி – 78-ஆபத்துக் காலங்களில் பிராமணர்கள் செய்யக்கூடிய, செய்யகூடாத தொழில்கள்; மன்னன் பலவீனமடையும்போது, அவனுக்குப் பலத்தை அளிக்க வேண்டிய பிராமணனின் கடமை; மக்களைப் பாதுகாப்பதே முதல் கடமை, அதைச் சூத்திரன் செய்தாலும், அவன் மன்னனாகலாம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஆபத்துக் காலங்களில் ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று தன்னை ஆதரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், எந்தக் காலத்திலாவது அவன் வைசியர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பயில முடியுமா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பிராமணன் தன் வாழ்வாதாரத்தை இழந்து ஆபத்தில் வீழும்போது, க்ஷத்திரியக் கடமைகளுக்கு அவன் தகுந்தவனாக இல்லையென்றால், நிச்சயம் அவன் வைசியர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, உழவு, கால்நடை வளர்த்தல் ஆகியவற்றின் மூலம் தன்னைத் தாங்கிக் கொள்ளலாம்” என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பிராமணன் வைசியக் கடமைகளைப் பின்பற்றி, சொர்க்கம் செல்லும் எதிர்பார்ப்பைத் தொலைக்காமல் அவன் என்னென்ன பொருட்களை விற்கலாம்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒரு பிராமணன், மதுவகைகள், உப்பு, எள், பிடரி கொண்ட விலங்குகள், காளைகள், தேன், இறைச்சி மற்றும் சமைத்த உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை விற்பதால் ஒரு பிராமணன் நரகத்தில் மூழ்குவான்.(4,5) ஒரு பிராமணன் ஓர் ஆட்டை விற்பதனால், அவன் அக்னி தேவனை விற்ற பாவத்தை இழைத்தவனாகிறான்; குதிரையை விற்பதனால் சூரிய தேவனை விற்ற பாவத்தையும், சமைத்த உணவை விற்பதனால் நிலத்தை விற்ற பாவத்தையும், ஒரு பசுவை விற்பதனால் வேள்வி மற்றும் சோமச்சாற்றை விற்ற பாவத்தையும் இழைத்தவனாகிறான்.(6) சமைத்த உணவை மற்றாகக் கொடுத்து, சமைக்கப்படாத உணவை வாங்குவதை நல்லோர் மெச்சுவதில்லை. எனினும், ஓ! பாரதா, சமைத்த உணவை அடைவதற்காகச் சமைக்கப்படாத உணவை மாற்றாகக் கொடுக்கலாம்.(7) “சமைக்கப்பட்ட உன் உணவை நாங்கள் உண்கிறோம். (நாங்கள் மாற்றாகக் கொடுக்கும்) இந்தக் கச்சாப் பொருட்களை நீ சமைப்பாயாக” என்ற ஒப்பந்தத்தில் எந்தப் பாவமுமில்லை[1].(8) ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பழக்கவழக்கங்களின்படி நடந்து கொள்ளும் மனிதர்களின் நித்திய நடைமுறைகளைக் குறித்துச் சொல்கிறேன், கேட்பாயாக.(9) “இதை நான் உனக்குக் கொடுக்கிறேன். பதிலுக்கு இந்தப் பொருளை எனக்குக் கொடுப்பாயாக” என்ற இத்தகு ஒப்பந்தத்தின் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வது நீதியே. எனினும் பலவந்தமாகப் பொருட்களை எடுத்துக் கொள்வது பாவம் நிறைந்ததாகும்.(10) இதுவே முனிவர்கள் மற்றும் பிறரின் பழங்காலப் பழக்கவழக்கமாகும். இது நீதியே என்பதில் ஐயமில்லை” என்றார் {பீஷ்மர்}.(11)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைக் கைவிட்டு, மன்னனுக்கு எதிராக ஆயுதம் எடுப்பார்களேயானால், மன்னனின் சக்தி குறைவை அடையும்.(12) அப்போது அம்மன்னனால் எந்த வழிமுறைகளின் மூலம் மக்களின் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் ஆக முடியும்? ஓ! மன்னா, என்னிடம் விரிவாகப் பேசி இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக” என்று கேட்டான்.(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு சந்தர்ப்பங்களில், பிராமணர்களின் தலைமையிலான அனைத்து வகையினரும் கொடைகள், தவங்கள், வேள்விகள், அமைதி, தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் தங்கள் நன்மையை நாட வேண்டும்.(14) அவர்களில் வேத பலம் கொண்டோர் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எழுந்து, இந்திரனுக்குப் பலமூட்டும் தேவர்களைப் போல, மன்னனின் பலத்தை (வேத சடங்குகளின் மூலம்) மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புக் கொள்ள வேண்டும்.(15) மன்னனின் சக்தி சிதைவுறும்போது பிராமணர்களே அவனது புகலிடமாகச் சொல்லப்படுகிறார்கள். ஞானம் கொண்ட மன்னன், பிராமண சக்தியின் மூலமே தன் சக்தியை மேம்படுத்த முனைய வேண்டும்.(16) வெற்றிமகுடம் சூடிய மன்னன், அமைதியை நிலைநிறுத்த முனையும்போது, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.(17) கள்வர்கள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைத்து, எங்கும் அழிவைப் பரப்பும்போது, அனைத்து வகையினரும் ஆயுதம் எடுக்க வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, அவ்வாறு செய்வதால் அவர்கள் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை” என்றார்.(18)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணர்களுக்குப் பகைவர்களானால், அப்போது பிராமணர்களையும், வேதங்களையும் எவன் பாதுகாக்க வேண்டும்? அப்போது பிராமணர்களின் கடமையென்ன? எவன் அவர்களுடைய புகலிடமாக இருப்பான்?” என்று கேட்டான்.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தவங்கள், பிரம்மச்சரியம், ஆயுதங்கள், (உடல்) வலிமை ஆகியவற்றின் மூலம், வஞ்சகத்தின் உதவியுடனோ, இல்லாமலோ க்ஷத்திரியர்கள் அடக்கப்பட வேண்டும். க்ஷத்திரியன் தவறாக நடந்து கொண்டால், அதிலும் குறிப்பாகப் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொண்டால், வேதங்களே அவர்களை அடக்கும். க்ஷத்திரியர்கள் பிராமணர்களிடம் இருந்து உதித்தவர்களே ஆவர்.(21) நெருப்பு நீரிலிருந்து உதிக்கிறது; க்ஷத்திரியன் பிராமணனிலிருந்தும்; இரும்பு கல்லில் இருந்தும் உண்டாகின்றன. ஆனால் இவை தங்கள் பிறப்பின் மூலத்தோடு தொடர்படுகையில் தணிவையடைகின்றன.(22) இரும்பு கல்லைத் தாக்கும்போது, அல்லது நெருப்பு நீருடன் மோதும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனிடம் பகைமைபாராட்டும்போது, இந்த மூன்றின் பலமும் அழிவடைகிறது.(23) ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறு சக்தியும், வலிமையும் என்னதான் பெரியனவாகவும், தடுக்கப்பட முடியாதனவாகவும் இருப்பினும், க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு எதிராகத் திருப்பப்படும்போது தணிவடைகின்றனர்.(24)

பிராமணர்களின் சக்தி மென்மையடையும்போதும், க்ஷத்திரிய சக்தி பலவீனமடையும்போதும், மனிதர்கள் அனைவரும் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொள்ளும்போதும்,(25) பிராமணர்களையும், அறநெறியையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ளப் பெரும் மனோ பலத்துடன், நீதியின் பாதையில் செல்ல விரும்பும் எவர்கள், மரணம் குறித்த அச்சமனைத்தையும் விடுகிறார்களோ, அவர்கள் மறுமையில் உயர்ந்த அருள் உலகங்களை வெல்வார்கள். பிராமணர்களின் நிமித்தமான அனைத்து மனிதர்களும் ஆயுதமெடுக்க வேண்டும்.(26,27) துணிவுமிக்க எவர்கள் பிராமணர்களுக்காகப் போராடுகிறார்களோ, அவர்கள், வேதங்களை எப்போதும் கவனமாகக் கற்றவர்கள், கடுந்தவங்களைச் செய்தவர்கள், நோன்பிருந்து தங்கள் உடல்களைச் சுடர்மிக்க நெருப்பில் விட்டவர்கள் ஆகியோருக்காகச் சொர்க்கத்தில் ஒதுக்கப்பட்ட புகழுலகங்களை அடைவார்கள்.(28) மற்ற மூன்று வகையினருக்காக ஆயுதம் ஏந்தும் பிராமணன் பாவமிழைத்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் உயிரை விடுவதை விட உயர்ந்த கடமையேதும் இல்லை என்று மக்கள் சொல்கின்றனர்.(29)

பிராமணர்களின் எதிரிகளைத் தண்டிக்க முயன்று, இவ்வாறு தங்கள் உயிரை விடுபவர்கள் அருளப்பட்டிருப்பாராக. நான் அவர்களை வணங்குகிறேன். அவர்களுக்கான உலகத்தை நாம் அடைவோமாக. அந்த வீரர்கள் பிரம்ம லோகத்தை அடைவார்கள் என்று மனுவே சொல்கிறார்.(30) குதிரை வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து தங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையும் மனிதர்களைப் போலவே, தீய மனிதரோடு போராடுகையில் ஆயுத முனைகளில் இறப்பவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(31) இடத்திற்கும், காலத்திற்கும் தக்கபடி, நீதி அநீதியாகவும், அநீதி நீதியாகவும் மாறுகின்றன. (மனித செயல்பாட்டின் தன்மைகளைத் தீர்மானிப்பதில்) இடத்திற்கும், காலத்திற்கும் இத்தகு சக்தி இருக்கிறது.(32) மனிதநேயத்திற்கு நட்பாக இருப்பவர்கள், கொடூரச் செயல்களைச் செய்திருந்தாலும் உயர்ந்த சொர்க்கத்தை அடைந்திருக்கிறார்கள். நீதிமிக்க க்ஷத்திரியர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்தாலும் அருளப்பட்ட முடிவுகளை அடைந்திருக்கிறார்கள்[2].(33) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பிற வகையினரை அவர்களது கடமைகளைச் செய்ய வைக்க, கள்வர்களைத் தண்டிக்க என்ற இந்த மூன்று சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை எடுப்பதால் ஒரு பிராமணன் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(34)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கள்வர்கள் தலைதூக்கி, குழப்பத்தின் விளைவால் வகை {வர்ணக்} கலப்பு தொடங்கி, க்ஷத்திரியர்களும் பலவீனமடைந்திருந்தால், ஒரு க்ஷத்திரியனைத் தவிர வேறு ஒரு பலமிக்க மனிதன், மக்களைக் காப்பதற்காக அந்தக் கள்வர்களை அடக்க முனைந்தால்[3],(35) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, உண்மையில் அந்தப் பலமிக்க மனிதன், பிராமணனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ இருந்தால், மேலும் அவன் நீதியுடன் செங்கோல் தரித்து மக்களைப் பாதுகாப்பதில் வென்றால், அவனது செயல் நியாயமானதாகக் கொள்ளப்படுமா? அல்லது, அந்தக் கடமையை நிறைவேற்றியதற்காக விதிமுறைகளால் அவன் அடக்கப்படுவானா? க்ஷத்திரியர்கள் இழிவடையும்போது, பிற வகையினர் ஆயுதமெடுக்க வேண்டும் என்றே {எனக்குத்} தோன்றுகிறது” என்று சொன்னான்[4].(37)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அவன் சூத்திரனாகவோ, வேறு வகையைச் சார்ந்தவனாகவோ இருப்பினும், தெப்பமில்லா ஓடையில் தெப்பமாகவும், கடப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லாத இடத்தில் கடக்கும் வழிமுறையாகவும் உள்ள அவன், நிச்சயம் அனைத்து வழியிலும் மதிக்கப்படத் தகுந்தவனே.(38) ஓ! மன்னா, ஆதரவற்ற மனிதனும், ஒடுக்கப்பட்டவனும், கள்வர்களால் பீடிக்கப்பட்டவனும் எவனை நம்பி மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ, அந்த மனிதன், ஒரு சொந்தக்காரனைப் போலவே அனைவராலும் அன்புடன் வழிபடத்தகுந்தவனாவான். ஓ! குருகுலத்தவனே, பிறரின் அச்சத்தை விலக்குபவன் எவனோ, அவன் எப்போதும் மதிப்புக்குத் தகுந்தவனே ஆவான்.(39,40) சுமைகளைத் தாங்காத காளைகள், அல்லது, பால் கறக்காத பசுக்கள், அல்லது வெறுமையாய் {மலடாய்} இருக்கும் மனைவி ஆகியவற்றால் யாது பயன்? அதே போலவே, பாதுகாப்பை வழங்க முடியாத ஒரு மன்னனால் யாது பயன்?(41) வேத அறிவில்லா பிராமணனும், பாதுகாப்பை வழங்க முடியாத மன்னனும், மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ, செல்வமற்ற மனிதனையோ, அலியையோ, களர் நிலத்தையோ போன்றவர்களே. அவர்கள் இருவரும் மழைபொழியா மேகத்தைப் போன்றவர்களே.(42,43) எப்போதும் நல்லோரைப் பாதுகாத்து, தீயோரை அடக்கும் எந்த மனிதனும், மன்னனாகவும், உலகை ஆளவும் தகுந்தவனே” என்றார் {பீஷ்மர்}.(44)

வேள்விகளும், தவங்களும்! – சாந்திபர்வம் பகுதி – 79-ரித்விக்குகளின் நடத்தை மற்றும் பண்புககளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வேள்விகளைக் குறித்தும், தவங்களைக் குறித்தும் சொன்னது; தவத்தின் மேன்மை…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நம் வேள்விகளில் புரோகிதர்களாக {ரித்விக்குகளாக} நியமிக்கப்படும் மனிதர்களின் நடத்தையும், செயல்பாடுகளும் எவ்வாறு இருக்க வேண்டும்? ஓ! மன்னா {பீஷ்மரே}, அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{சாமவேதமான} சாமங்கள் உள்ளிட்ட சந்தங்களையும், சுருதிகளில் சொல்லப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தையும் அறிந்தோரும், மன்னனின் செழிப்புக்கு வழிவகுக்கும் அறச்செயல்கள் அனைத்தையும் செய்யத்தக்கவர்களுமான பிராமணர்களே புரோகிதர்களாக {ரித்விக்குகளாகத்} தகுந்தவர்கள் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(2) அவர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய மாறா பற்றுறுதியுடன் கூடியவர்களாகவும், மன்னர்களிடம் ஏற்படைய வகையில் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடனும், அனைவரிடமும் சம பார்வையுடனும் இருக்க வேண்டும்.(3) அவர்கள் கொடூரமற்றவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அநியாய வட்டிக்கு விடுபவர்களாக அவர்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவர்கள் எப்போதும் எளிமையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும்.(4) அமைதி நிறைந்த தன்மை, போலித்தன்மையின்மை, அடக்கம், ஈகைத்தன்மை, தற்கட்டுப்பாடு, நிறைவுடைமை, புத்திக்கூர்மை, உண்மை, நோன்பு நோற்றல், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, காமம் மற்றும் தீய நோக்கம் இல்லாமை, மூன்று சிறந்த குணங்களுடைமை,(5) பொறாமையின்மை, அறிவுடைமை ஆகியவற்றைக் கொண்ட ஒருவன் பிரம்மனின் ஆசனத்திற்கே {பிரம்மனின் பதவிக்கே, அதாவது வேள்விகளின் ரித்விக்காகத்} தகுந்தவனாவான்” என்றார்.(6)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேள்விகளில் தக்ஷிணைக்கொடையைக் குறித்து வேத உரைகள் இருக்கின்றன. எனினும், எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எந்த விதியும் இல்லை.(7) செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தல் தொடர்புடைய நோக்கங்களில் இருந்து (தக்ஷிணைக் கொடை) இவ்விதி பிறக்கவில்லை. கொடுக்க வேண்டிய விளைவால் எழுந்த இவ்விதியின் ஆணை திறனில்லாதவர்களின் வழக்குகளில் பயங்கரமானதாக இருக்கிறது. அந்த ஆணை வேள்வி செய்பவனின் தகுதியைக் காண்பதில்லை[1].(8) ஒரு மனிதன் அர்ப்பணிப்புடன் ஒரு வேள்வியைச் செய்ய வேண்டும் என்ற இந்தத் திறன்தேர்வானது {விதியானது} வேதங்களில் இருக்கிறது. ஆனால், வேள்வியானது பொய்மையினால் கறைபடியும்போது, அர்ப்பணிப்பினால் என்ன செய்ய முடியும்?”[2] என்று கேட்டான்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களை அவமதிப்பதாலோ, வஞ்சகத்தாலோ, பொய்மையினாலோ எந்த மனிதனும் அருளையோ, தகுதியையோ {புண்ணியத்தையோ} அடைய முடியாது. இது மாறானது என்று ஒருபோதும் நினைக்காதே.(10) தக்ஷிணை என்பது வேள்வியின் ஓர் அங்கமாகும்; அது வேதங்களின் ஊட்டத்திற்கு வழிவகுக்கிறது. தக்ஷிணையில்லாத வேள்வியானது ஒருபோதும் முக்திக்கு வழிவகுக்காது.(11) எனினும், ஒரு பூர்ணபாத்திரத்தின்[3] உச்சவினையானது, எவ்வளவு செழிப்பான எந்தத் தக்ஷிணைக்கும் இணையானது[4]. எனவே, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, மூன்று வகையைச் சேர்ந்தோரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்[5].(12) சோமமானது பிராமணர்களுக்கு மன்னனைப் போன்றது என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன. இருப்பினும் அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக இல்லையென்றாலும், வேள்விகளைச் செய்வதற்காக அதை விற்கிறார்கள்.(13) நீதிமிக்க நடத்தை கொண்ட முனிவர்கள் அறநெறிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில், சோமவிற்பனையின் மூலம் செய்யப்படும் வேள்வியானது, வேள்விகளை நீட்டிக்கவே உதவுகிறது என்று அறிவிக்கிறார்கள்[6].(14) மனிதன், வேள்வி, சோமம் ஆகிய இம்மூன்றும் நற்பண்புடன் இருக்க வேண்டும். தீய பண்பு கொண்ட மனிதன் இம்மைக்கானவனுமில்லை; மறுமைக்கானவனுமில்லை.(15) அதீத உடலுழைப்பால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு உயர் ஆன்ம பிராமணர்களால் செய்யப்படும் வேள்வியானது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை என்ற திறன்தேர்வையும் நாம் கேள்விப்படுகிறோம்[7].(16)வேள்விகளை விடத் தவங்கள் உயர்வானவை என்று வேதங்களில் ஒரு தீர்மானம் இருக்கிறது. நான் இப்போது உனக்குத் தவங்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! கல்விமானான இளவரசனே {யுதிஷ்டிரனே}, நான் சொல்வதைக் கேட்பாயாக.(17) தீங்கிழையாமை, பேச்சில் உண்மை, நல்லுணர்வு, கருணை ஆகியவையே தவங்கள் எனவும், உடல் மெலிவது தவமல்ல எனவும் ஞானிகள் கருதுகின்றனர்.(18) வேதத்தை அவமதிப்பது, சாத்திரவிதிகளுக்குக் கீழ்ப்படியாமை, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை மீறல், ஆகியவை  தன்னழிவை உண்டாக்குபவை.(19) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, நாளின் பத்து வேளைகளில் நெருப்பில் பத்து ஆகுதிகளை ஊற்றுவோர் விதித்தவற்றைக் கேட்பாயாக. தவமெனும் வேள்வியைச் செய்வோருக்கு, அவர்கள் பிரம்மத் திறனுடன் முயலும் யோகமே கரண்டியாகும்; அவர்களது இதயமே தெளிந்த நெய்யாகும்; உயர்ந்த அறிவே பவித்ரமாகும்[8].(20) அனைத்துவகைக் கபடங்களும் மிருத்தியுவாகும், அனைத்து வகை உண்மையும் பிரம்மம் என்றழைக்கப்படுகிறது. இதுவே ஞானத்தை உள்ளடக்கியிருக்கிறது. அமைப்பைக் கட்டுபவர்களின் வீரகாவியங்கள் இதற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றார் {பீஷ்மர்}[9].(21)

நட்பு, பகை மற்றும் உறவு! – சாந்திபர்வம் பகுதி – 80-நண்பன், எதிரி, உறவினன் ஆகியோரின் பண்புகளையும், அமைச்சர்களாகத் தகுந்தவர்களையும், அவர்களிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மிக அற்பமான காரியத்தைக் கூடத் துணையில்லாமல் எந்த மனிதனாலும் நிறைவேற்ற முடியாது. அப்படியிருக்கையில் (நாட்டை ஆளும் காரியத்தில்) மன்னனைக் குறித்து என்ன சொல்வது?(1) மன்னர்களுடைய அமைச்சரின் நடத்தையும், செயல்களும் எவ்வாறு இருக்க வேண்டும்? எவன் மீது மன்னன் நம்பிக்கை வைக்கலாம்? எவன் மீது வைக்கக் கூடாது?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னர்களுக்கு நான்கு வகை நண்பர்கள் உண்டு. 
{1}ஒரே நோக்கம் கொண்டவன் {ஸஹார்த்தன்},
{2}அர்ப்பணிப்புள்ளவன் {பஜமானன்},
{3}பிறப்பால் உறவினன் {ஸஹஜன்} மற்றும்
{4}(கொடைகளாலும், அன்பாலும்) வெல்லப்பட்டவன் {கிருத்திரிமன்} 
ஆகியோரே அவர்கள்[1].(3)
{5}இரு தரப்புக்கும் அல்லாமல், ஒரு தரப்புக்கு சேவை செய்யும் அற ஆன்மா கொண்டவன் மன்னர்களின் நண்பர்களுடைய பட்டியலில் ஐந்தாவதாகச் சேர்த்துக்கொள்ளத் தக்கவனாவான். அத்தகு மனிதன், அறத்தின் தரப்பைப் பின்பற்றி, நீதியுடன் நடந்து கொள்பவனாவான்.(4) அத்தகு மனிதனைப் பொறுத்தவரையில், அவனது பரிவைப் பெறாத எந்தக் காரியத்தையும் மன்னன் அவனிடம் வெளிப்படுத்தக்கூடாது[2]. வெற்றியை விரும்பும் மன்னன் நீதி மற்றும் அநீதி ஆகிய இருபாதைகளையும் பின்பற்றக்கூடிய கடப்பாடுடையவனாவான்.(5) நான்கு வகை நண்பர்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் உயர்வானவர்கள் ஆவர். அதேவேளையில் முதல் மற்றும் நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஐயத்துடனே கருதப்படத்தக்கவர்கள் ஆவர்.(6)

தன் நண்பர்களைக் கண்காணிக்கும் காரியத்தில் மன்னன் ஒருபோதும் கவனமில்லாமல் செயல்படக்கூடாது. கவனமில்லாமல் இருக்கும் மன்னன் எப்போதும் பிறரால் அவமதிக்கப்படுவான்.(7) தீய மனிதன் நேர்மையெனும் ஆடையை உடுத்தி வருவான், அதே வேளையில் நேர்மையானவர்களும் மாறானவர்களாவார்கள். ஓர் எதிரி நண்பனாவான், ஒரு நண்பனும் எதிரியாவான்.(8) ஒரு மனிதன் எப்போதும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டான். எவன்தான் அவனை முழுமையாக நம்புவான்? எனவே, முக்கியச் செயல்கள் அனைத்தையும் மன்னன் நேரடியாகத் தன் மேற்பார்வையிலேயே நிறைவேற்ற வேண்டும்.(9) (அமைச்சர்களை) முழுமையாக நம்புவது, அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் அழிவைத் தரும். அனைவரிடமும் நம்பிக்கையில்லாமல் இருப்பது காலனைவிடக் கொடியதாகும்.(10)

நம்பிக்கை நிறைந்திருப்பது அகால மிருத்யுவாகும். நம்பிக்கையால் ஒருவன் ஆபத்துக்கு உள்ளாவான். ஒருவன் மற்றொருவனை முழுமையாக நம்பினால் அவன் நம்பும் மனிதனால் பாதிப்பை அடைந்து வாழ்வான் எனச் சொல்லப்படுகிறது.(11) இதன் காரணமாகவே அனைவரையும் நம்ப வேண்டும், அதே வேளையில் நம்பாமலும் இருக்க வேண்டும். ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, கவனத்தில் கொள்ள வேண்டிய கொள்கையில் நித்திய விதியாகும் இது.(12) ஒருவனுடைய இறப்பில், அவனுடைய செல்வத்தை அடையும் மனிதனை ஒருபோதும் நம்பக்கூடாது. அத்தகு மனிதன் அவனுடைய எதிரியாவான் என்று ஞானிகள் அறிவிக்கின்றனர்.(13) மன்னனின் வளர்ச்சியில் கட்டற்ற இன்பத்தையும், மன்னனின் அழிவில் துன்பத்தையும் அடையும் மனிதன் மன்னனுடைய சிறந்த நண்பர்களுக்குரிய குறிப்புகளை வெளிப்படுத்துகிறான்.(14) எவன் உனது வீழ்ச்சியில் வீழ்வானோ, அவனை உனது தந்தையைப் போல முழுமையாக நம்பலாம். நீ வளர்ச்சியடையும் போது, உனது சக்திக்குத் தக்க அளவில் அவனையும் நீ வளரச் செய்ய வேண்டும்.(15,16)

உன் அறச்சடங்குகளில் கூட உன்னைத் தீங்கிலிருந்து காக்க முனையும் ஒருவன், பிற பணிகள் அனைத்திலும் தீங்கான வழியில் இருந்து உன்னைக் காப்பான். மறுபுறம், ஒருவனுடைய தீங்கை விரும்புபவர்கள் அவனுடைய எதிரிகளாவர்.(17) உனக்கு இடரேற்படும்போது அச்சமடைபவனும், நீ செழிப்பாய் இருக்கும் போது மகிழ்பவனுமான ஒரு நண்பன் உன்னைப் போன்றவனே ஆவான் என்று சொல்லப்படுகிறது.(18) அழகு, நல்ல நிறம், சிறந்த குரல், ஈகை, நற்குணம், நற்பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மனிதன் அத்தகு நண்பனாக இருக்க முடியாது[3].(19) நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், தொழில் பரிவர்த்தனையில் கெட்டிக்காரனும், இயல்பாகவே கொடுமையில் நாட்டமில்லாதவனும், ஒருபோதும் கோபப்படாதவனும், மதிக்கப்பட்டாலும், அல்லாவிட்டாலும் எப்போதும் நிறைவுடன் இருப்பவனுமான மனிதன்,(20) உன் புரோகிதராகவோ {ரித்விக்காகவோ}, ஆசானாகவோ, மதிப்பிற்குரிய நண்பனாகவோ இருந்தாலும், அவன் உன் அமைச்சராக இருப்பதை ஏற்றாலோ, உன் வசிப்பிடத்தில் இருந்தாலோ அவர்கள் எப்போதும் உனது வழிபாட்டைப் பெற வேண்டும்.(21,22)

அத்தகு மனிதனிடம் மிகக் கமுக்கமான ஆலோசனைகளையும் சொல்லலாம், அறம் மற்றும் பொருள் சார்ந்த உன் காரியங்கள் அனைத்தின் உண்மை நிலையையும் சொல்லலாம். நீ அவனை உன் தந்தையைப் போல நம்பவேண்டும்[4].(23) ஒரு பணியில் ஒருவனே நியமிக்கப்பட வேண்டும், இருவரோ, மூவரோ அல்ல. இவர்கள் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். ஒரு பணியில் பலரை ஈடுபடுத்தினால், அவர்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே எப்போதும் காணப்படுகிறது.(24) புகழை அடைபவனும், கட்டுப்பாடுகள் அனைத்தையும் பயில்பவனும், திறன்மிக்கோரிடம் ஒருபோதும் பொறாமை கொள்ளாதவனும், எந்தத் தீய செயலையும் செய்யாதவனும்,(25) காமத்தினாலோ, அச்சத்தினாலோ, பேராசையினாலோ, கோபத்தினாலோ அறத்தை {நீதியைக்} கைவிடாதவனும், தொழில் பரிவர்த்தனையில் கெட்டிக் காரனும், ஞானம் நிறைந்த பேச்சைக் கொண்டவனுமான ஒரு மனிதன் உன் அமைச்சர்களில் முதன்மையானவனாக இருக்க வேண்டும்.(26)

நற்பிறவி, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டோரும், ஈகையாளர்களும், தற்புகழ்ச்சியில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், மதிப்பிற்குரியவர்களும், கல்விமான்களும், வளம் நிறைந்தவர்களும்,(27) உன் காரியங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும். உன்னால் கௌரவிக்கப்பட்டு, செல்வத்தால் நிறைவடைந்த அவர்கள் உன் நன்மைக்காகச் செயல்பட்டு உனக்குப் பேருதவியாக இருப்பார்கள்.(28) பொருள் மற்றும் பிற முக்கியக் காரியங்களின் தொடர்புடைய அலுவல்களில் நியமிக்கப்படும் அவர்கள் எப்போதும் பெருஞ்செழிப்பையே கொண்டு வருவார்கள்.(29) நலமிக்கப் போட்டியுணர்வால் தூண்டப்படும் அவர்கள், தேவையானபோதெல்லாம் ஒருவரோடொருவர் ஆலோசித்துப் பொருள் சார்ந்த கடமைகள் அனைத்தையும் செய்வார்கள்.(30)

காலனையே கண்டதுபோல நீ உன் இரத்த உறவினர்களைக் கண்டு அஞ்ச வேண்டும். தன்மீது மேலாதிக்கம் செலுத்துபவனின் {பேரரசனின்} செழிப்பைப் பொறுக்கமுடியாத சிற்றரசனைப் போல, ஓர் உறவினன் மற்றொரு உறவினனின் செழிப்பைப் பொறுக்க மாட்டான்.(31) நேர்மை, மென்மை, ஈகை, பணிவு, உண்மை நிறைந்த பேச்சு ஆகியவற்றைக் கொண்ட ஓர் உறவினனின் அழிவில் மற்றொரு உறவினனையன்றி வேறு எவனும் மகிழ்ச்சியடையமாட்டான்.(32) அதே போல உறவினர்களே இல்லாதவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உறவினனற்றவர்களை விட வேறு எந்த மனிதனும் அருவருக்கத்தக்கவன் அல்ல. எந்த உறவினனும் இல்லாத ஒரு மனிதன் எளிதில் எதிரிகளால் வெல்லப்படுகிறான்.(33) ஓர் உறவினன் பிற மக்களால் பீடிக்கப்படுவதை மற்றொரு உறவினனால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால், பிறரால் பீடிக்கப்படும் ஒருவனுடைய புகலிடமாக ஓர் உறவினனே இருப்பான்.(34) ஓர் உறவினன் அவனுடைய நண்பர்களாலேயே தண்டிக்கப்படும்போது, தண்டிக்கப்படுபவனின் ஒவ்வொரு உறவினனும், தானே அந்தத் தீங்கால் துன்புறுவதாகக் கருதுவான். எனவே, உறவினர்களால் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகிய இரண்டும் உண்டு.(35)

உறவினர்களற்ற ஒரு மனிதன், வேறு எவனுக்கும் ஒருபோதும் நன்மை செய்வதுமில்லை, எவனிடமும் பணிவு கொள்வதுமில்லை. எனவே, உறவினர்களில் உள்ள நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் குறித்துக் கொள்ளப்பட வேண்டும்.(36) இதன் காரணமாகவே ஒருவன் தன் உறவினர்களைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் மதிக்கவும் வழிபடவும் செய்து, அவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைத்து விடாமல் இனிமையான காரியங்களையே செய்ய வேண்டும்.(37) ஒருவன் இதயத்தால் அவர்களை நம்பாமல், அவர்களை முழுமையாக நம்புவதைப் போலவே அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களது {உறவினர்களது} இயல்பைச் சிந்தித்துப் பார்த்தால், அவர்களால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்றே தோன்றுகிறது.(38) இவ்வழியில் கவனமாக நடக்கும் ஒரு மனிதன், தங்கள் பகைவர்கள் பகைமையை விட்டு, நண்பர்களாக மாறுவதைக் காண்கிறான்.(39) உறவினர்கள் மற்றும் சொந்தங்களுக்கு மத்தியில் எப்போதும் இவ்வழியிலேயே நடக்கும் ஒருவன், இவ்வாறே நண்பர்களிடமும், பகைவர்களிடமும் நடந்து கொண்டு நிலைத்து நீடிக்கும் புகழை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(40)

போஜர்கள், விருஷ்ணிகள்: உட்பகை! – சாந்திபர்வம் பகுதி – 81-உறவினர்களை நிறைவுகொள்ளச் செய்ய முடியாதபோது செய்ய வேண்டியது குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; போஜர்களுக்கு, விருஷ்ணிகளுக்குமிடையில் உண்டான உட்பகையால் கிருஷ்ணன் துன்புற்றிருந்தபோது, நாரதர் அவனுக்குச் சொன்ன வழிமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(இவ்வழியில்) ஒருவனால் தன் இரத்த சொந்தங்களையும், உறவினர்களையும் வெல்லமுடியவில்லையெனில், எவர்கள் நண்பர்களாக வேண்டுமோ அவர்கள் பகைவர்களாகிவிடுகிறார்கள். அப்போது, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பின் இதயங்களையும் வெல்லும் வகையில் ஒருவன் தனது நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது சம்பந்தமாகப் பழங்கால வரலாற்றில் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நாரதருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் தென்படுகிறது.(2)

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வாசுதேவன் {கிருஷ்ணன் நாரதரிடம்}, “ஓ! நாரதரே, கல்லாத மூட நண்பனும், கல்விமானாகவே ஆனாலும் நல்லறிவில்லாத நண்பனும் ஒருவனுடைய கமுக்கமான {இரகசிய} ஆலோசனைகளை அறியத் தகுந்தவர்களல்ல[1].(3) ஓ! தவசியே {நாரதரே}, நீர் என்னிடம் கொண்டுள்ள நட்பை நம்பி, நான் உம்மிடம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். ஓ! விருப்பம் போல் சொர்க்கத்திற்குச் செல்ல முடிந்தவரே, அடுத்தவன் நுண்ணறிவைக் கொண்டவன் என்ற உறுதியடைந்தால் மட்டுமே ஒருவன் அவனிடம் பேசலாம்.(4) நான் என் உறவினர்களிடம் அவர்களது செல்வத்தைக் குறித்து முகத்துதி செய்து ஒருபோதும் அடிமைத் தொழில் செய்வதில்லை. நான் என்னிடமுள்ளவற்றில் பாதியை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தீய பேச்சுகளை மன்னிக்கிறேன்[2].(5) நெருப்பை அடைய விரும்பும் ஒரு மனிதனால் அரணிக்கட்டை அரைக்கப்படுவதைப் போலவே, என் இதயமும் என் உறவினர்களின் தீச்சொற்களால் கலங்கடிக்கப்படுகிறது. உண்மையில், ஓ! தெய்வீக முனிவரே, அந்தக் கொடூரப் பேச்சுகள் என் இதயத்தைத் தினமும் எரிக்கின்றன.(6)

சங்கர்ஷணரில் {பலராமன்} வலிமையும், கதனில் மென்மையும் வசிக்கின்றன, பிரத்யும்னனைப் பொறுத்தவரையில், அவன் மேனியழகில் என்னையும் விஞ்சியிருக்கிறான். ஓ! நாரதரே, (இவர்கள் அனைவரும் என் தரப்பில் இருந்தாலும்) நான் ஆதரவற்றவனாகவே இருக்கிறேன்.(7) அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில், பெருஞ்செழிப்புடையவர்கள், வலிமை நிறைந்தவர்கள், துணிவுமிக்கவர்கள் மற்றும் தொடர்ந்த விடா முயற்சியுடையவர்கள் எனப் பலர் இருக்கின்றனர்.(8) யாருடைய தரப்பில் அவர்கள் இல்லையோ அவர்கள் அழிவை அடைவார்கள், மறுபுறம், யார் தரப்பில் அவர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைத்தையும் அடைகிறார்கள். (ஆஹுகர் மற்றும் அக்ரூரர் ஆகியோர்) இருவராலும் மீண்டும் மீண்டும் விலக்கப்படும் நான், யாருடைய தரப்பையும் அடைந்ததில்லை.(9) ஒருவன் தன் தரப்பில் ஆஹுகர், மற்றும் அக்ரூரர் ஆகிய இருவரையும் கொண்டிருப்பதைவிட வேறு எந்தத் துன்பம் பெரியது? இருவரையும் என் தரப்பில் கொள்ளாமல், அவர்களில் ஒருவரை மட்டுமே கொள்வதை விட வேறு எந்தத் துன்பம் பெரியது?[3](10) ஒருவரோடொருவர் சூதாடிக்கொண்டிருக்கும் இரு சகோதரர்களும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் அவர்களுடைய தாயைப் போலத்தான் நான் இருக்கிறேன்.(11) ஓ! நாரதரே, இவ்வாறே நான் அவர்கள் இருவராலும் துன்பத்துக்குள்ளாகிறேன். எனக்கும் என் உறவினர்களுக்கும் எது நன்மையோ, அதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்{கிருஷ்ணன்}.(12)

நாரதர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, வெளியில் இருந்து வருவது, உள்ளிருந்து வருவது எனத் துன்பங்கள் இருவகைப்படும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, அவை ஒருவனின் சொந்த செயல்பாடுகளாலோ, பிறரின் செயல்பாடுகளாலோ உண்டாகின்றன.(13) இப்போது உனக்கு நேரும் துன்பமானது, உன் சொந்த செயல்களாலேயே உள்ளிருந்து உண்டானது. அக்ரூரரைச் சார்ந்தவர்களான பலதேவனும் {பலராமனும்}, போஜகுலத்தைச் சேர்ந்த பிறரும்,(14) செல்வம், அல்லது பேராசை, அல்லது {குற்றமுள்ள} சொற்கள், அல்லது வெறுப்பின் நிமித்தமாக அவரது {அக்ரூரரின்} தரப்பைச் சேர்ந்திருக்கிறார்கள். உன்னைப் பொறுத்தவரையில், நீ அடைந்த செல்வத்தை மற்றவருக்கு {ஆஹுகருக்குக்} கொடுத்தாய்.(15) நண்பர்களாக இருக்க வேண்டிய மனிதர்களை நீ கொண்டிருந்தாலும், உன் செயலாலேயே நீ உன் தலைக்கு மேல் துன்பத்தை ஏற்றுக் கொண்டாய். ஒருவன் கக்கிய உணவை மீண்டும் உட்கொள்ள முடியாததைப் போலவே, உன்னால் அந்தச் செல்வத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது.(16)

பப்ருவிடம் இருந்தோ, உக்ரசேனரிடம் இருந்தோ (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) நாட்டையும் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. ஓ! கிருஷ்ணா, (அவர்களிடம் இருந்து) அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்வது உட்பகையை உண்டாக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தால் உன்னாலேயே கூட அவ்வாறு செய்யமுடியாது.(17) ஒருவேளை அம்முயற்சி வெற்றிபெற்றாலும், பெரும் பிரச்சனைக்குப் பிறகே, அடைவதற்கரிதான அந்த மிகக் கடும் சாதனையை அடைய முடியும். பெரும் படுகொலைகளும், செல்வத்திற்குப் பேரிழப்பும் நேரிடும், ஒருவேளை மொத்த அழிவும்கூட ஏற்படலாம்.(18) எனவே, இரும்பாலாகாததும், மென்மையானதாக இருப்பினும், இதயங்கள் அனைத்தையும் துளைக்கவல்லதுமான ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்துவாயாக. அவ்வாயுதத்தை மீண்டும் மீண்டும் கூர்த்தீட்டி உன் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்துவாயாக” என்றார்.(19)

வாசுதேவன் {கிருஷ்ணன் வாசுதேவரிடம்}, “ஓ! தவசியே, இரும்பாலாகாததும், மென்மையானதும், இருப்பினும் அனைவரின் இதயங்களையும் துளைக்கவல்லதும், என் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்த நான் பயன்படுத்த வேண்டியதுமான அந்த ஆயுதம் எது?” என்று கேட்டான்.(20)

நாரதர் {கிருஷ்ணரிடம்}, “உன் சக்திக்குத் தக்கபடி உணவளிப்பது, மன்னிப்பது {பொறுமை}, நேர்மை, மென்மை, உரிய மரியாதை கொடுத்து கௌரவித்தல் ஆகியவற்றையே இரும்பாலாகாத அவ்வாயுதம் கொண்டுள்ளது.(21) கொடுஞ்சொற்கள் பேசும் உறவனிரின் கோபத்தையும், அவர்களது இதயங்கள், மனங்கள் மற்றும் இகழும் நாவுகளையும் மென்மையான வார்த்தைகளால் மட்டுமே அடக்குவாயாக.(22) தூய்மையான ஆன்மாவையும், பெருஞ்சாதனைகளையும், நண்பர்களையும் கொண்ட பெரிய மனிதனாக இல்லாத எவராலும், கனமான சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. நீ (விருஷ்ணிகளை ஆளும்) இந்தப் பெருங்கனத்தை உன் தோள்களில் சுமப்பாயாக.(23) மேடுபள்ளமில்லாத சமமான சாலையில் அனைத்து எருதுகளாலும் கனமான சுமைகளைச் சுமக்க முடியும். அவற்றில் பலமிக்கவையே கடினமான சாலைகளிலும் அத்தகு கனங்களைச் சுமக்கவல்லனவாகும்.(24) ஒற்றுமையின்மையால் போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவருக்கும் அழிவே ஏற்படும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ அவர்களில் முதன்மையானவனாவாய். போஜர்களும், விருஷ்ணிகளும் அழியாமல் இருக்கத்தக்கவகையில் நீ செயல்படுவாயாக.(25)

ஞானியான ஒரு மனிதனிடம், நுண்ணறிவு, மன்னிப்பு {பொறுமை}, புலனடக்கம், ஈகை ஆகியவற்றைத் தவிர வேறேதும் இருக்காது.(26) தன் குலத்தை மேன்மையுறச் செய்வதே எப்போதும் புகழத்தக்கதும், மகிமையானதும், நீண்ட வாழ்வை அளிக்கக்கூடியதுமாகும். ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களுக்கு அழிவு நேராத வகையில் நீ செயல்படுவாயாக.(27) ஓ! தலைவா, கொள்கை மற்றும் போர்க்கலை ஆகியவற்றைப் பொறுத்தவரையில், நீ அறியாதது ஒன்றுமில்லை[4].(28) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, லோகபாலர்கள் அனைவரையும் நம்பியிருக்கும் அனைத்து உலகங்களையும் போல, யாதவர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் அனைவரும் உன்னையே நம்பியிருக்கின்றனர். ஓ! மாதவா {கிருஷ்ணா}, முனிவர்கள் எப்போதும் உன் முன்னேற்றத்தையே வேண்டுகின்றனர்.(29) அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலத்தை அறிந்தவன் நீயே. உன்னை நம்பி மகிழ்ச்சியான வாழ்வை எதிர்பார்க்கும் யாதவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் நீயே” என்றார் {நாரதர்}”.(30)

க்ஷேமதர்சினும் காலகவிருக்ஷீயரும்! – சாந்திபர்வம் பகுதி – 82-குற்றம் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கான பாதுகாப்பின் அவசியத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; இதை விளக்குவதற்காகக் கோசல மன்னன் க்ஷேமதர்சின் மற்றும் காலகவிருக்ஷீயர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற உரையாடலைச் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இப்போது நான் உனக்குச் சொன்னது முதன்மையான வழிமுறைகளாகும். ஓ! பாரதா, இரண்டாம் வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. மன்னனின் நிலை மேன்மையடைய முயற்சிக்கும் ஒரு மனிதன், எப்போதும் அம்மன்னனால் பாதுகாக்கப்பட வேண்டும்.(1) ஓ! யுதிஷ்டிரா, கூலி கொடுக்கப்பட்ட, அல்லது கொடுக்கப்படாத {உன்னிடம் பணியாளாகவோ, இல்லாமலோ உள்ள} ஒரு மனிதன், உன் கருவூலத்தில் உள்ள செல்வங்கள் உன் அமைச்சரால் கையாடல் செய்யப்படுவதைச் சொல்ல வந்தால்,(2) நீ அவனைத் தனிமையில் சந்தித்து {அவன் சொல்வதைக் கேட்டு}, (களங்கம் கற்பிக்கப்பட்ட) அந்த அமைச்சரிடம் இருந்தும் அவனைப் பாதுகாக்க வேண்டும். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நிதியைக் கையாடல் செய்யும் அமைச்சர்கள், அத்தகு தகவல் தருவோரைக் கொல்ல முனைவார்கள்.(3) அரச கருவூலத்தைக் கொள்ளையடிப்போர், அதைக் காக்க முயலும் மனிதனை எதிர்ப்பதற்காக ஒன்றாகச் சேர்வார்கள். பின்னவன் {காக்க முயல்பவன்} பாதுகாப்பில்லாமல் இருந்தால் அவனை நிச்சயம் அழித்துவிடுவார்கள்.(4)

இது தொடர்பாகத் தவசி காலகவிருக்ஷீயர் Kalakavrikshiya, கோசலத்தின் மன்னனிடம் {க்ஷேமதர்சினிடம் Kshemadarsin}  சொன்னது, பழங்கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.(5) ஒரு காலத்தில் கோசல நாட்டின் அரியணை ஏறிய க்ஷேமதர்சினிடம் காலகவிருக்ஷீயர் எனும் தவசி வந்ததாக நாம் கேளவிப்படகிறோம்.(6) க்ஷேமதர்சினின் அதிகாரிகள் அனைவருடைய நடத்தையையும் ஆய்வு செய்ய விரும்பிய அந்தத் தவசி, தன் கையில் கூண்டுக்குள் அடைபட்ட ஒரு காக்கையுடன், அந்த மன்னனின் {க்ஷேமதர்சினின்} ஆட்சிப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பயணித்தார்.(7) மனிதர்கள் அனைவரிடமும் அவர், “காக அறிவியலைப் படிப்பீராக. காகங்கள் எனக்கு நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் சொல்கின்றன” என்றார்.(8) அந்த நாட்டில் இவ்வாறு அறிவித்துக் கொண்டு, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களின் துணையுடன் கூடிய அவர், அந்த மன்னனுடைய அதிகாரிகள் அனைவரும் செய்யும் தீச்செயல்களை நோக்கத் தொடங்கினார்.(9) அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்} அந்த நாட்டில் நடைபெறும் அனைத்து காரியங்களையும் உறுதி செய்து கொண்டு, மன்னனால் நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் மோசடியில் ஈடுபடுவதையும் அறிந்து கொண்டு,(10) அம்மன்னனைக் காண வந்தார்.

கடும் நோன்புகளைக் கொண்ட அவர் அம்மன்னனிடம், “(உன் நாட்டைக் குறித்த) அனைத்தையும் நான் அறிவேன்” என்றார்.(11) மன்னனிடம் வந்த அவர் {காலகவிருக்ஷீயர்}, அலுவல் முத்திரைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனுடைய அமைச்சனிடம், அவன் இந்த இடத்தில், இந்தத் தீங்கைச் செய்தான் என்பதையும், அரச கருவூலத்தை அவன் கொள்ளையடித்ததை இந்த இந்த மனிதர்கள் அறிவார்கள் என்பதையும் தனது காக்கை தன்னிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னார். “என் காக்கை இதைச் சொல்கிறது. இந்தக் குற்றத்தை ஏற்பாயாக. அல்லது அது பொய் என்பதை விரைந்து மெய்ப்பிப்பாயாக” என்றார்.(13) பிறகும் அந்தத் தவசி, அதேபோன்ற கையாடல்களைச் செய்த பிற அதிகாரிகளின் பெயர்களையும் அறிவித்து, “என் காகம் ஒருபோதும் எந்தப் பொய்யையும் சொன்னதில்லை” என்றும் சொன்னார்.(14) ஓ! குருகுலத்தோனே {யுதிஷ்டிரா}, இவ்வாறு அந்தத் தவசியால் குற்றஞ்சாட்டப்பட்டு, தீங்கடைந்த அரசு அதிகாரிகள் அனைவரும் (ஒன்றுசேர்ந்து), இரவில் அந்தத் தவசி உறங்கும்போது அந்தக் காகத்தைத் துளைத்தனர் {கொன்றனர்}.(15)

கூண்டுக்குள் துளைக்கப்பட்டுக் கிடக்கும் தன் காகத்தைக் கண்ட அந்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர் {காலகவிருக்ஷீயர்}, காலையில் க்ஷேமதர்சினிடம் சென்று, அவனிடம்,(16) “ஓ! மன்னா, நான் உன் பாதுகாப்பை நாடுகிறேன். நீ பலமிக்கவன், அனைவரின் வாழ்வு மற்றும் செல்வங்களுக்கும் நீயே தலைவன். எனக்கு உன் உத்தரவு கிடைத்தால், உனக்கான நன்மையை என்னால் சொல்ல முடியும். நான் என் நண்பனாகக் கருதும் உனக்காக வருந்தியும், என் அர்ப்பணிப்பால் தூண்டப்பட்டும், என் முழு இதயத்துடன் உனக்குத் தொண்டாற்றும் ஆயத்தத்துடனும் உன்னிடம் வந்திருக்கிறேன்.(17) உன் செல்வம் களவாடப்படுகிறது. கள்வர்களிடம் எந்தக் கருணையும் காட்டாமல், அஃதை உன்னிடம் வெளியிடவே நான் வந்தேன். என் நண்பனாக நான் கருதும் உன்னை விழிப்படையச் செய்யவே நல்ல குதிரையைத் தூண்டும் ஒரு சாரதியைப் போல நான் இங்கு வந்திருக்கிறேன்.(18) தன் நலனையும், செழிப்பையும், வளர்ச்சியையும் விரும்பும் ஒரு நண்பனானவன், தனக்கு நன்மை செய்வதற்காகவும், அர்ப்பணிப்பு மற்றும் கோபத்தால் உந்தப்பட்டும் அத்துமீறும் மற்றொரு நண்பனை மன்னிக்க வேண்டும் {அவனிடம் பொறுமை காக்க வேண்டும்}” என்றார்.(19)

மன்னன் அவரிடம் {கோசல மன்னன் க்ஷேமதர்சின் தவசிகாலகவிருக்ஷீயரிடம்}, “என் நன்மைக்கானவற்றின் நான் குருடனல்ல என்பதால், நீர் சொல்வதனை நான் ஏன் பொறுத்துக் கொள்ள மாட்டேன்?(20) ஓ! மறுபிறப்பாளரே நான் உமக்கு அனுமதி அளிக்கிறேன். நீர் விரும்பியதை என்னிடம் சொல்லலாம். ஓ! பிராமணரே, நீ சொல்லும் அறிவுரைகளுக்கு நிச்சயம் நான் கீழ்ப்படிவேன்” என்று மறுமொழி கூறினான்.(21)

அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “உன் பணியாட்களின் நன்மைகளையும், குற்றங்களையும் உறுதி செய்து கொண்டு, அவர்களின் கரங்களில் உனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் உறுதி செய்து கொண்டு, என் அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டு, உன்னிடம் அனைத்தையும் சொல்வதற்காகவே நான் இங்கு வந்தேன்.(22) ஓ! மன்னா, (மனிதகுலத்திற்கான) பழங்காலத்து ஆசான்கள், பிறருக்குத் தொண்டாற்றுவோருக்கான சாபங்கள் என்னென்ன என்பதை அறிவித்திருக்கின்றனர். மன்னனுக்குத் தொண்டாற்றுவோரின் நிலையானது வலிநிறைந்ததும், இழிவானதுமாகும்.(23) எவன் மன்னர்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கிறானோ, அவன் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுடன் தொடர்புடையவன் என்று சொல்லப்படுகிறான். மன்னர்களுக்குப் பல நண்பர்கள் இருப்பதைப் போலவே பல எதிரிகளும் இருக்கிறார்கள்.(24) மன்னர்களுக்குத் தொண்டாற்றுபவர்கள், அவர்கள் அனைவருக்கும் அஞ்ச வேண்டும். மேலும், ஓ! ஏகாதிபதி, அவர்கள் ஒவ்வொரு கணமும் மன்னனுக்கும் அஞ்ச வேண்டும்.(25)

மன்னனுக்குத் தொண்டாற்றும் ஒரு மனிதன், மன்னனின் வேலையைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க முடியாது. உண்மையில், செழிப்பை வெல்ல விரும்பும் ஒரு பணியாள், தன் கடமைகளை ஆற்றுவதில் ஒருபோதும் கவனக்குறைவுடன் இருக்கக்கூடாது.(26) அவனது கவனக்குறைவு {அஜாக்ரதை} மன்னனைக் கோபமடையச் செய்யும், அந்தக் கோபம் (அந்தப் பணியாளுக்கு) அழிவைக் கொண்டுவரும். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கவனமாகக் கற்கும் ஒருவன், சுடர்மிக்க நெருப்பின் முன் இருப்பதைப் போலவே மன்னனின் முன்பு அமர்ந்திருக்க வேண்டும்.(27) எந்தக் கணத்திலும் உயிரைவிட ஆயத்தமாக இருக்கும் ஒருவன், மன்னனே அனைத்திலும் பலமிக்கவன், அனைவரின் வாழ்வு மற்றும் செல்வத்திற்குத் தலைவன் என்பதாலும், கடும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்றவன் என்பதாலும், அவன் மன்னனிடம் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.(28) அவன், மன்னனின் முன்னிலையில் தீய பேச்சைப் பேசவோ, உற்சாகமில்லாமல், அல்லது அலட்சியமான நிலையில் அமரவோ, அவமதிக்கும் தன்மையுடன் காத்திருக்கவோ, புறக்கணிக்கும் வகையில் நடக்கவோ, இழிவான நிலைகள் மற்றும் அவமதிக்கும் வகையிலான அங்க அசைவுகளை வெளிக்காட்டவோ எப்போதும் அஞ்ச வேண்டும்.(29) மன்னன் மனம்நிறைந்தால், அவன் ஒரு தேவனைப் போலச் செழிப்பைப் பொழிவான். சீற்றமடைந்தாலோ, சுடர்மிக்க நெருப்பைப் போல அவன் வேர்களையே எரித்துவிடுவான்.(30)

ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, இதை யமன் சொல்லியிருக்கிறான். இதன் உண்மை உலகக் காரியங்களின் தென்படுகின்றன. (இந்தக் கருதுகோள்களின் படி செயல்பட்டு) நான் இப்போது எது உனக்குச் செழிப்பை அளிக்குமோ அதைச் செய்வேன்.(31) என்னைப் போன்ற நண்பர்கள், உன்னைப் போன்ற நண்பர்களின் கேடு காலங்களில் தங்களது நுண்ணறிவால் உதவி செய்வார்கள். ஓ! மன்னா, என் காகமானது உன் காரியத்தைச் செய்ததற்காகக் கொல்லப்பட்டிருக்கிறது.(32) எனினும், இதற்காக உன்னை நான் குற்றஞ்சாட்ட முடியாது. (இந்தப் பறவையைக் கொன்றவர்கள் எவர்களோ) அவர்களால் நீ விரும்பப்படவில்லை. உன் நண்பர்கள் யார், உன் எதிரிகள் யார் என்பதை உறுதி செய்து கொள்வாயாக. நுண்ணறிவுக்காக யாரிடமும் பணியாமல் அனைத்தையும் நீயே செய்வாயாக.(33) உன் நிறுவனத்தில் {அரசு அலுவலகங்களில்) உள்ள அனைவரும் கையாடல் செய்பவர்களே. அவர்கள் உன் குடிமக்களுக்கான நன்மையை விரும்பவில்லை. நான் அவர்களது பகைமைக்கு ஆளாகிவிட்டேன்.(34) உன்னுடன் தொடர்பிலிருக்கும் பணியாட்களுடன் சேர்ந்து சதி செய்யும் அவர்கள், உன்னை அழித்துவிட்டு, உனக்குப் பிறகு இந்த நாட்டை அடைய பேராசைப்படுகிறார்கள். எனினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் அவர்களது திட்டங்கள் வெற்றியடையவில்லை.(35)

ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, அந்த மனிதர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக நான் உன் நாட்டை விட்டு வேறேதேனும் ஆசிரமத்திற்குச் செல்லப் போகிறேன். எனக்கு உலகம் சார்ந்த விருப்பமேதுமில்லை, இருப்பினும், ஓ! தலைவா, வஞ்சக எண்ணம் கொண்ட அந்த மனிதர்கள் என் காக்கையின் மீது இந்தக் கணையை ஏவி, அப்பறவையை யமலோகம் அனுப்பிவிட்டனர். ஓ! மன்னா, தவங்களால் மேன்மையடைந்த பார்வையைக் கொண்ட கண்களுடன் இதை நான் கண்டேன்.(36,37) முதலைகளும், சுறாக்களும், திமிங்கலங்களும் நிறைந்த ஆற்றைப் போலிருக்கும் உன் நாட்டை இந்தக் காக்கை ஒன்றின் துணையுடன் கடந்திருக்கிறேன்.(38) உண்மையில், (விழுந்த) மரங்கள், சிதறிக்கிடக்கும் பாறைகள், முட்புதர்கள், சிங்கங்கள், புலிகள், மற்றும் பிற இரைதேடும் விலங்குகளின் விளைவால் புகமுடியாததும், அணுகமுடியாததுமான இமாலய பள்ளத்தாக்கைப் போன்ற உன் ஆட்சிப்பகுதிகளை அந்தப் பறவையின் துணையின் மூலமே நான் கடந்து வந்தேன்.(39) இருளின் விளைவால் அணுகமுடியாததாக இருக்கும் ஒரு பகுதியை ஒளியின் உதவியுடனும், கடக்க முடியாத ஆற்றை ஒரு படகின் உதவியுடனும் கடக்க முடியும் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். எனினும், அரச காரியங்களின் வழியைக் கடக்கவோ, ஊடுருவவோ எந்த வழிமுறைகளும் கிடையாது.(40)

உன் நாடானது, இருளில் மூழ்கியிருக்கும் அணுக முடியாத காட்டைப் போன்றதாகும். (அதன் தலைவனாக இருக்கும்) நீயே அதை நம்ப முடியாது. எனில், என்னால் எவ்வாறு முடியும்?(41) நன்மையும், தீமையும் இங்கே ஒன்றாகவே கருதப்படுகின்றன. எனவே, இங்கே தங்குவது பாதுகாப்பானதில்லை. அறச்செயல்கள் செய்வோர் இங்கே இறக்கின்றனர், அதே வேளையில் நீதியற்ற செயல்களைச் செய்வோருக்கு எந்த ஆபத்தும் இல்லை.(42) நீதியின் தேவைக்கேற்றபடி நீதியற்ற செயல்களைச் செய்வோர் கொல்லப்பட வேண்டுமேயன்றி ஒருபோதும் நல்லோர் தங்கள் செயல்களுக்காகக் கொல்லப்படக்கூடாது. எனவே, இந்த நாட்டில் நீண்ட காலம் தங்குவது எவனுக்கும் நல்லதல்ல. மான உணர்வு கொண்ட எந்த மனிதனும் இந்த நாட்டைவிட்டு விரைவில் அக வேண்டும்.(43) ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, சீதை என்ற பெயரில் ஓர் ஆறு இருக்கிறது. படகும் அதில் மூழ்கிவிடும். இந்த உனது நாடும் அந்த ஆற்றைப் போலவே இருக்கிறது. அதைச் சுற்றிலும் அனைத்தையும் அழிக்கும் வலை இருப்பதாகத் தெரிகிறது.(44) தேன் சேகரிப்பவனுக்காகக் காத்திருக்கும் வீழ்ச்சியைப் போலவோ, நஞ்சைக் கொண்ட கவர்ச்சிகரமான உணவைப் போலவோ நீ இருக்கிறாய். உன் இயல்பானது இப்போது நேர்மையற்ற மனிதர்களுக்கானதைப் போல அன்றி நல்லோருக்கானதாக இல்லை. ஓ! மன்னா, நீ கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த ஒரு குழியைப் போன்றவன்.(45)

ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, இனிய நீரால் நிறைந்திருப்பினும், அணுகுவதற்கு மிகக் கடினமானதும், அடர்ந்து வளர்ந்த காரிரங்கள் {மூங்கில்} மற்றும் முள் பிரம்பு ஆகியவற்றுடன் கூடியதும், ஆழமான கரைகளைக் கொண்டதுமான ஓர் ஆற்றுக்கு ஒப்பாக இருக்கிறாய். நாய்கள், கழுகுகள் மற்றும் நரிகளுக்கு மத்தியில் நீ ஓர் அன்னத்தைப் போல இருக்கிறாய்.(46,47) பெரும் மரத்தில் இருந்து வாழ்வாதாரத்தைப் பெறும் புல்லுருவிகள், அபரிமிதமாக வளர்ந்து பெருகி, இறுதியாக மரத்தையே முழுமையாக மறைத்துவிடும்.(48) காட்டுத்தீ ஏற்படும்போது, அந்தப் புல்லுருவிகளை முதலில் பிடித்தாலும், அவற்றோடு சேர்த்து அந்தத் தலைமை மரத்தையும் எரித்துவிடும். ஓ மன்னா, உன் அமைச்சர்களே நான் சொல்லும் புல்லுருவிகளுக்கு ஒப்பாக இருக்கின்றனர். நீ சோதித்து அவர்களைச் சரி செய்வாயாக.(49) அவர்கள் உன்னால் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் உனக்கு எதிராகச் சதி செய்யும் அவர்கள் உனது செழிப்பை அழிக்கின்றனர்.(50)

ஒருபாம்புடன் ஓர் அறையில் வாழ்வதைப் போலவோ, ஒரு வீரனுடைய மனைவியின் காதலனை {ஜாரப்புருஷனைப்} போலவோ உன் பணியாட்களின் தவறுகளை (உன்னிடமிருந்து) மறைத்து, தொடர்ச்சியான பயங்கர ஆபத்துடன் உன் வசிப்பிடத்தில் வாழ்கிறேன். என் சகாவாக வசிக்கும் மன்னனின் நடத்தையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம்.(51) மன்னன் தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறானா, அவனுடைய பணியாட்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்களா, அவர்கள் அவனை விரும்புகிறார்களா, அவன் தன் குடிமக்களை விரும்புகிறானா என்பனவற்றை நான் அறிய விரும்பினேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவற்றை உறுதிசெய்துகொள்ளும் நோக்குடனே நான் உன்னிடம் வந்தேன்.(52) பசித்தவனுக்கு உணவைப் போல நீ எனக்கு அன்பானவனாக இருக்கிறாய். எனினும், தாகமடங்கிய மனிதன் பானத்தை விரும்பாததைப் போல எனக்கு உன் அமைச்சர்களைப் பிடிக்கவில்லை.(53) நான் உன் நன்மைக்கு முனைவதால் அவர்கள் என்னிடம் களங்கம் காண்கின்றனர். என்னுடனான அவர்களது பகைக்கும் வேறேதும் காரணமில்லை என்பதில் ஐயமில்லை.(54) நான் அவர்களுடைய களங்கங்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்கிறேன். காயமடைந்த பாம்புக்கு அஞ்சுவதைப் போலத் தீய இதயத்தைக் கொண்ட எதிரியிடம் அச்சம் கொள்ள வேண்டும்” என்றார் {{காலகவிருக்ஷீயர்}.(55)

அதற்கு மன்னன் {மன்னன் க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, என் அரண்மனையில் தங்குவீராக. நான் எப்போதும் உம்மை மதித்து, கௌரவித்து, வழிபட்டு வருகிறேன்.(56) உம்மை விரும்பாதோர் என்னுடன் வசிக்க மாட்டார்கள். (நீர் சொன்ன) அந்த மனிதர்களை என்ன செய்யலாம் என்பதை நீரே சொல்வீராக.(57) ஓ! புனிதமானவரே, தண்டக்கோல் {செங்கோல்} முறையாகத் தரிக்கப்படுகிறதா, என் நாட்டில் அனைத்தும் நன்றாகச் செய்யப்படுகிறதா எனக் காண்பீராக. அனைத்தையும் சிந்தித்து நான் செழிப்பையடையும் வழியில் என்னை வழிநடத்துவீராக” என்றான் {க்ஷேமதர்சின்}.(58)

அதற்குத் தவசி {காலகவிருக்ஷீயர் மன்னன் க்ஷேமதர்சினிடம்}, “அவர்களது குற்றமான இந்த முதல் நிகழ்வுக்குக் கண்ணை மூடிக்கொண்டு {அதை வெளிப்படுத்தாமல்} அவர்களை ஒருவர் பின் ஒருவராகப் பலவீனப்படுத்துவாயாக. அவர்களது குற்றங்களை மெய்ப்பிட்டு ஒருவர் பின் ஒருவராகத் தாக்குவாயாக.(59) பலர் ஒரே குற்றத்தைச் செய்யும்போது, ஒன்றாகச் செயல்படுவதால் அவர்களால் முள்ளின் கூர்மையை மழுங்கடிக்க முடியும். (சந்தேகத்திற்காளாகி உனக்கு எதிராகச் செயல்படும்) உன் அமைச்சர்கள் உன் கமுக்கமான ஆலோசனைகளை வெளியிடும் வரை, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க உன்னை நான் அறிவுறுத்துவேன்.(60) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இயல்பிலேயே கருணை கொண்டவர்களும், எவருக்கும் துன்பம் தர விரும்பாதவர்களுமான பிராமணர்கள் ஆவோம். நாங்கள் எங்கள் நன்மையை விரும்புவதைப் போலவே, உன் நன்மையையும், பிறரின் நன்மையையும் விரும்புகிறோம்.(61)

ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, நான் என்னைக் குறித்துச் சொல்கிறேன். நான் உன் நண்பன். தவசி காலகவிருக்ஷீயன் என்ற பெயரில் நான் அறியப்படுகிறேன்.(62) நான் எப்போதும் உண்மையைப் பின்பற்றுகிறேன். உன் தந்தை என்னைத் தமது விருப்பத்திற்குரிய நண்பனாகக் கருதினார். ஓ! மன்னா, உன் தந்தை ஆட்சி செய்கையில் நாட்டுக்குத் துன்பம் நேர்ந்தபோது, (அதை விரட்ட) அனைத்துத் தொழில்களையும் கைவிட்டுத் தவங்கள் பலவற்றைச் செய்தேன். உன் மீது கொண்ட அன்பின் காரணமாக, நீ (தகாத மனிதர்களிடம் நம்பிக்கை வைக்கும்) தவற்றை மீண்டும் இழைக்காமல் இருப்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.(64) நீ எந்தத் தொல்லையும் இல்லாமல் நாட்டை அடைந்தாய். அதன் இன்பதுன்பங்களோடு தொடர்புடைய அனைத்தையும் சிந்தித்துப்பார். நீ உன் நாட்டில் அமைச்சர்களைக் கொண்டிருக்கிறாய். ஆனால், ஓ! மன்னா, ஏன் உனக்குக் கவனக்குறைவெனும் குற்றவுணர்வு ஏற்பட வேண்டும்?” என்றார்.(65)

இதன்பிறகு, அந்தக் கோசல மன்னன் க்ஷத்திரிய வகையில் இருந்து ஓர் அமைச்சரையும், அந்தப் பிராமணக் காளையை {காலகவிருக்ஷீயரைத்} தன் புரோகிதராகவும் நியமித்துக் கொண்டான்.(66) இம்மாற்றங்களைச் செய்த பிறகு, அந்தக் கோசலத்தின் மன்னன் {க்ஷேமதர்சின்} மொத்த உலகத்தையும் அடக்கி, பெரும்புகழை அடைந்தான். தவசி காலகவிருக்ஷீயர், மன்னனுக்காகப் பெரும் வேள்விகளைச் செய்து தேவர்களை வழிபட்டார்.(67) அந்தக் கோசல மன்னன், அவரது நல்ல ஆலோசனைகளைக் கேட்டு, மொத்த உலகையும் கைப்பற்றி, அந்தத் தவசி சொன்ன வழியிலே அனைத்து வகையிலும் நடந்து கொண்டான்” என்றார் {பீஷ்மர்}.(68)

ஆலோசிக்கத் தக்கார், தகவிலார்! – சாந்திபர்வம் பகுதி – 83-அரசவையினர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் ஆகியோரின் பண்புகளையும், ஒரு மன்னனுக்கு ஆலோசிக்கத்தகுந்தவர் யாவர், தகாதவர் யாவர் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மன்னனின் சட்டமன்றத்தினர், போர்த்துறை அமைச்சர்கள், அரசவையினர், படைத்தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் எவ்விதப் பண்புகளைக் கொண்டோராக இருக்க வேண்டும்?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பணிவு, தன்னடக்கம், உண்மை, நேர்மை, சரியானதைச் சொல்லும் துணிவு ஆகிய பண்புகளைக் கொண்டோரே உன் சட்டமன்றத்தினராக {அரசவையோரோக} இருக்க வேண்டும்.(2) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, எப்போதும் உன் தரப்பில் இருப்போரும், பெரும் துணிவு கொண்டோரும், மறுபிறப்பாள வகையைச் சார்ந்தோரும், பெரும் கல்விமான்களும், எப்போதும் உன்னிடம் நிறைவு கொண்டோரும், அனைத்துச் செயல்பாடுகளிலும் விடாமுயற்சியுடன் கூடியவர்களும் துன்பகாலங்கள் அனைத்திலும் உடனிருப்பவனையே போர்த்துறை அமைச்சர்களாக நீ விரும்ப வேண்டும்.(3) உயர்ந்த மரபுவழியில் வந்தவனும், உன்னால் கௌரவிக்கப்படுபவனும், உன்சார்பாக முடிந்த அளவுக்கு எப்போதும் தன் சக்தியை வெளிப்படுத்துபவனும், இன்பத்திலோ துன்பத்திலோ, நோயிலோ, மரணத்திலோ ஒருபோதும் உன்னைக் கைவிடாதவனும் உன் அரசவை உறுப்பினராக ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.(4) உன்நாட்டில் பிறந்த உயர் பிறப்பாளர்களும், ஞானம், அழகிய வடிவம், நற்பண்புகள், பெரும் கல்வி, நடத்தையில் கண்ணியம் ஆகியவற்றைத் தவிர உன்னிடம் அர்ப்பணிப்பும் கொண்டோர் உன் படை அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும்.(5)

தாழ்ந்த மரபுவழி, பேராசையுடன் கூடிய மனோநிலை ஆகியவற்றைக் கொண்டவர்கள், கொடூரர்கள், வெட்கமில்லாதவர்கள் ஆகியோர், அவர்களது கரங்களில் ஈரம் உள்ள வரையில் உன் அவையில் இருப்பார்கள்[2].(6) நற்பிறவி, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டோர், குறியீடுகள் மற்றும் சைகைகள் அனைத்தையும் படிப்போர், கொடுமையற்றோர், இடத்திற்கும், காலத்திற்கும் தக்க தேவைகளை அறிந்தோர், அனைத்துச் செயல்பாடுகளிலும் தங்கள் தலைவனின் நன்மையையே எப்போதும் நாடுவோர் ஆகியோரை மன்னன் தன் காரியங்கள் அனைத்திலும் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(7) செல்வக்கொடை, கௌரவங்கள், மரியாதைமிக்க வரவேற்பு, புகழை அடையும் வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் வெல்லப்பட்டவர்கள், உன் காரியங்கள் அனைத்திலும் உனக்கு நன்மை செய்வார்கள் என்று கருதப்படத்தக்கவர்கள் ஆகியோர் எப்போதும் உன் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.(8) மாறாநடத்தை கொண்டவர்கள், கல்வியும் நல்லொழுக்கமும் படைத்தவர்கள், சிறந்த நோன்புகளை நோற்பவர்கள், பெரிய இதயம் கொண்டவர்கள், பேச்சில் உண்மை நிறைந்தவர்கள் ஆகியோர் எப்போதும் உன் காரியங்களில் கவனம் உள்ளவர்களாகவும், உன்னை ஒருபோதும் கைவிடாதவர்களாகவும் இருப்பார்கள்.(9) மறுபுறம், கௌரவமற்றவர்கள், கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவர்கள், தீய ஆன்மா படைத்தவர்கள், நற்செயல்களில் இருந்து வீழ்ந்துவிட்டவர்கள், ஆகியோர் நலம்சார்ந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நோற்கும்படி எப்போதும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.(10)எத்தரப்பைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழும்போது, ஒரு தரப்பைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பலரை நீ கைவிடக் கூடாது. எனினும், ஒரே ஒரு மனிதன் சாதனைகள் பலவற்றின் விளைவாகப் பலரை விஞ்சியிருக்கும்போது, அந்த ஒருவனுக்காக நீ பலரைக் கைவிட வேண்டும்[3].(11) ஆற்றல், புகழைத் தரும் செயல்களில் அர்ப்பணிப்பு, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை நோற்றல் ஆகியவையே மேன்மையின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன.(12) மேலும், திறன் கொண்ட மனிதர்கள் அனைவரையும் கௌரவிப்பவன், எந்தத் தகுதியும் இல்லாதவனிடம் ஒருபோதும் போட்டியிடாதவன், காமம், அல்லது அச்சம், அல்லது கோபம், அல்லது பேராசை ஆகியவற்றின் காரணமாக ஒருபோதும் அறத்தைக் கைவிடாதவன்,(13) பணிவால் அலங்கரிக்கப்பட்டவன், பேச்சில் உண்மை நிறைந்தவன், மன்னிக்கும் இயல்பு கொண்டவன், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவன், கண்ணிய உணர்வு கொண்டவன், அனைத்துச் சூழ்நிலைகளையும் பயன்படுத்துபவன் ஆகியோர் உன் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்.(14) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா} உயர்ந்த மரபுவழி, குருதித்தூய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, புத்திசாலித்தனம், ஆன்மத்தூய்மை, துணிச்சல், நன்றியுணர்ச்சி, உண்மை ஆகியன மேன்மை மற்றும் நல்லியல்பு ஆகியவற்றின் குறியீடுகளாகும்.(15) இவ்வழியில் தன்னை நடத்திக் கொள்ளும் ஞானி ஒருவன், தன் எதிரிகளிடம் உள்ள பகைமையை அகற்றி, அவர்களைத் தன் நண்பனாக்கிக் கொள்வான்.(16)தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவன், ஞானம் கொண்டவன், செழிப்பை விரும்புவனான ஒரு மன்னன், தன் அமைச்சர்களின் தகுதிகள் மற்றும் தவறுகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.(17) செழிப்பையும், போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒளிர்வதையும் விரும்பும் மன்னன் ஒருவன், தன் நாட்டில் பிறந்தவர்களும், உயர் குடிபிறப்பு கொண்டவர்களும், பிழை செய்ய இயலாதவர்களும், ஒழுக்கக்கேடு மற்றும் அதுபோன்ற பிற தீமைகளின் களங்கம் படியாதவர்களும், நன்கு பரிசோதிக்கப்பட்டவர்களும், நல்ல குடும்பங்களைச் சார்ந்தவர்களும், கல்வி படைத்தவர்களும், அதே போன்ற அலுவல்களைச் செய்திருந்த தந்தைமார் மற்றும் பாட்டன்மாரிடம் இருந்து உதித்தவர்களும், பணிவால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தன் நம்பிக்கைகுரிய நண்பர்களுடன் தொடர்புடைய மனிதர்களையே தன் அமைச்சர்களாகக் கொண்டிருக்க வேண்டும்[4].(18,19) செருக்கால் களங்கப்படாத நுண்ணறிவு, நல்ல மனோநிலை, சக்தி, பொறுமை, மன்னிக்கும் தன்மை, தூய்மை, பற்று, உறுதி, துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும், தகுதி மற்றும் பிழைகளுக்காக நன்கு பரிசோதிக்கப்பட்டவர்களும், வயதால் முதிர்ந்தவர்களாக இருப்பவர்களும் {அனுபவமிக்கோர்}, {பணிச்} சுமைகளைச் சுமக்கவல்லவர்களும், வஞ்சனையற்றவர்களுமாக இருப்போரில் ஐந்து பேரை, மன்னன் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்வதில் நியமிக்க வேண்டும்.(20,21) பேச்சில் ஞானம் கொண்டோர், வீரம் கொண்டோர், கடினமான காலங்களிலும் வளம் நிறைந்தோர், நற்பிறவி கொண்டோர், உண்மை நிறைந்தோர், குறியீடுகளை உணர்ந்து கொள்வோர், கொடூரமற்றோர்,(22) இடம் மற்றும் நேரத்திற்குத் தக்க தேவையானவற்றை அறிந்தோர், தங்கள் தலைவர்களுக்கு நன்மையை விரும்புவோர் ஆகியோர் நாட்டின் அனைத்து காரியங்களையும் கவனிக்கும் அமைச்சர்களாக மன்னனால் நியமிக்கப்பட வேண்டும்.(23)

சக்தியற்றவனாலும், நண்பர்களால் கைவிடப்பட்டவனாலும் விடாமுயற்சியுடன் ஒருபோதும் செயல்பட முடியாது. அத்தகு மனிதனை {அமைச்சனாக} நியமித்தால் அவன் கிட்டத்தட்ட அனைத்து தொழிலிலும் தோல்வியுறவே செய்வான்.(24) குறைந்த கல்வி கொண்ட ஓர் அமைச்சர், நற்பிறவி கண்டவராகவும், அறம், பொருள் மற்றும் இன்ப காரியங்களில் கவனத்துடனும் இருந்தாலும், அவர் சரியான செயல்களைச் செய்யத் தவறுவார்.(25) அதேபோலவே, தாழ்ந்த மரபுவழியில் வந்த ஒரு மனிதன், பெரும் கல்வியைக் கொண்டவனாக இருந்தாலும், அவன் வழிகாட்டியில்லாத ஒரு குருடரைப் போல, திறன்மிக்க இயக்கம் மற்றும் முன்னறிதிறனுக்கான தேவை இருக்கும் செயல்கள் அனைத்திலும் எப்போதும் தவறு செய்வான்.(26) மேலும், உறுதியற்ற நோக்கங்களை {நிலையற்ற எண்ணங்களைக்} கொண்ட ஒரு மனிதன், நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், வழிமுறைகளை அறிந்தவனாக இருந்தாலும் நீண்ட காலம் {தேவைப்படும் காரியங்களில்} வெற்றியடையமுடியாது.(27) தீய இதயம் கொண்டவனும், கல்வி இல்லாதவனுமான ஒரு மனிதன், ஒரு வேலையைச் செய்யத் தொடங்கலாம், ஆனால், அவன் தனது பணியின் விளைவுகளை உறுதிசெய்வதில் தவறுவான்.(28)

ஒரு மன்னன், தன்னிடம் அர்ப்பணிப்பில்லாத அமைச்சனிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. எனவே, அவன் தன்னிடம் அர்ப்பணிப்பில்லாத அமைச்சனிடம் ஒருபோதும் தன் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடாது.(29) அத்தகு தீய அமைச்சன், மன்னனின் பிற அமைச்சர்களுடன் சேர்ந்து, காற்றின் உதவியுடன் ஏற்பட்ட வழிகளில் மரத்தினுள் சென்று அஃதை எரித்துவிடும் நெருப்பைப் போலவே தன் தலைவனை அழித்துவிடுவான்.(30) ஒரு தலைவன், ஒரு நாள் கோபத்திற்கு ஆட்பட்டு ஒரு பணியாளனை அவனது அலுவலில் இருந்து இறக்கலாம் {பதவி நீக்கலாம்}, அல்லது சீற்றத்துடன் கடும் வார்த்தைகளில் நிந்திக்கவும் செய்யலாம், அவனே மீண்டும் {ஒருநாள்} அதிகாரத்தில் அமர்த்தவும் செய்யலாம்.(31) தலைவனுக்கு அர்ப்பணிப்புள்ள ஒரு பணியாளனால் மட்டுமே இவ்வாறு நடத்தப்படுவதைத் தாங்கிக் கொள்ளவும், மன்னிக்கவும் முடியுமேயன்றி வேறு யாராலும் முடியாது. சில வேளைகளில் அமைச்சர்களும் தங்கள் அரசத் தலைவர்களால் அதிகம் புண்படுத்தப்படுகிறார்கள்.(32) அவர்களில், தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் கோபத்தை அடக்கிக் கொள்பவனும், மன்னனின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்பவனுமான ஒருவனிடம் மன்னன் தன் காரியங்கள் அனைத்திலும் ஆலோசனை பெற வேண்டும்.(33) தன் தலைவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், ஞானியாகவும், எண்ணற்ற நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும் இருந்தாலும்கூட, குறுகிய இதயம் கொண்ட ஒரு மனிதனிடம் மன்னன் ஒருபோதும் எதையும் ஆலோசிக்கக்கூடாது.(34)

எதிரியுடன் கூட்டு சேர்பவனும், மன்னனின் குடிமக்களுக்கான நன்மையைக் கருத்தில் கொள்ளாதவனுமான ஒருவன் எதிரியாகவே அறியப்பட வேண்டும். மன்னன் அவனோடு ஒருபோதும் ஆலோசிக்கூடாது.(35) கல்வியற்றவனும், தூய்மையற்றவனும், செருக்கால் களங்கமடைந்தவனும், மன்னனின் எதிரிகளுடன் கூட்டு சேர்பவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனும், நட்புணர்வற்றவனும், கோபம் நிறைந்தவனும், பேராசை கொண்டவனுமான ஒருவனிடம் மன்னன் ஆலோசிக்கக் கூடாது.(36) அயலானான ஒருவன், மன்னனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், கல்வி மானாகவும் இருந்தாலும் கூட, அவன் மன்னனால் கௌரவிக்கப்படலாம், வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணிகளை ஒப்படைக்கப்பட்டு நிறைவு செய்யப்படலாம், ஆனால் மன்னன் ஒருபோதும் தன் காரியங்களைக் குறித்து அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(37) எந்த மனிதனின் தந்தை அரசாணையின்படி அநீதியாகத் தண்டிக்கப்பட்டானோ, அவனுக்கு மன்னன் கௌரவத்தை அளித்து, வாழ்வாதாரத்திற்கான பணிகளை அவனிடம் ஒப்படைத்தாலும்கூட, அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(38) சிறிய மீறலுக்காகச் செல்வம் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு நலன் விரும்பி, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாகவே இருந்தாலும் கூட, மன்னன் அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(39)

ஞானம், நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றைக் கொண்டவனும், தன் நாட்டிலேயே பிறந்தவனும், தூய்மையானவனும், தன் செயல்கள் அனைத்திலும் நீதியுடன் இருப்பவனுமான ஒரு மனிதனே, மன்னன் ஆலோசிக்கத்தகுந்தவன் ஆவான்.(40) அறிவும், விவேகமும் கொண்டவனும், நண்பர்கள் மற்றும் எதிரிகளின் மனோநிலைகளை அறிந்தவனும், மன்னன் தன்னைப் போலவே கருதிக்கொள்ளும் நண்பனுமான ஒருவன், ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(41) பேச்சில் உண்மையும், பணி மற்றும் மென்மை கொண்டவனும், தலைமுறை தலைமுறையாக மன்னனின் பணியாளுமான ஒருவன், ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(42) நிறைவுடையவனும், கௌரவமிக்கவனும், உண்மை நிறைந்தவனும், கண்ணியமானவனும், தீமையையும், தீய மனிதர்களையும் வெறுப்பவனும், கொள்கை மற்றும் காலத்தின் தேவைகள் ஆகியவற்றை அறிந்தவனும், துணிவுமிக்கவனுமான ஒருவன் ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(43) 

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இணங்கச் செய்வதன் மூலம் மனிதர்கள் அனைவரையும் வெல்லத்தகுந்த ஒருவனிடம், தண்டனை அறிவியலின் ஆணைப்படி ஆள விரும்பும் ஒரு மன்னன் ஆலோசிக்க வேண்டும்.(44) எவனுடைய நியாயமான நடவடிக்கையின் காரணமாக அவன் மீது தலைநகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, எவன் போரிடத் தகுந்தவனோ, எவன் கொள்கைவிதிகளை அறிந்தவனோ, அவன் மன்னனால் ஆலோசனை கேட்கப்படத் தகுந்தவனாவான்.(45) எனவே, அத்தகு பண்புகளைக் கொண்ட மனிதர்கள், அனைவரின் மனோநிலைகளையும் அறிந்தவர்களும், உயர்ந்த செயல்களைச் செய்ய விரும்புபவர்களுமான மனிதர்கள் மன்னனால் கௌரவிக்கப்பட்டு, அவனது அமைச்சர்களாக்கப்பட வேண்டும். அவர்களுடைய எண்ணிக்கை மூன்றுக்கும் குறைவாக இருக்கக் கூடாது[5].(46)

அமைச்சர்கள், தங்கள் தலைவர்களின் குறைகள், தங்கள் மற்றும் குடிமக்களின் குறைகள் மற்றும் தங்கள் தலைவனுடைய எதிரியின் குறைகளைக் காண நியமிக்கப்பட வேண்டும். அமைச்சர்களிடம் இருந்து பாயும் கொள்கை ஆலோசனைகளே நாட்டின் வேராகும், மேலும் அது நாடு எனும் அந்த மூலத்தில் இருந்தே வளர்கிறது.(47) அமைச்சர்கள், தங்கள் தலைவனுடைய எதிரிகள் தங்கள் குறைகளைக் காண இயலாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். மறுபுறம், அவர்களது குறைகள் வெளிப்படையாகத் தெரிந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் ஆமை தனது அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போலவே, அமைச்சர்கள் தங்கள் ஆலோசனைகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் குறைகளையும் மறைக்க வேண்டும்.(48) தங்கள் ஆலோசனைகளை மறைப்பதில் வெல்லும் ஒரு நாட்டின் அமைச்சர்கள் விவேகிகள் என்று சொல்லப்படுகிறார்கள். ஆலோசனைகள் மன்னனின் கவசமாகவும், குடிமக்கள் மற்றும் அதிகாரிகளின் அங்கங்களாகவும் இருக்கின்றன.(49) ஒரு நாடு, தன் ஒற்றர்கள் மற்றும் இரகசிய உளவாளிகளிடமே தன் வேரைக் கொண்டுள்ளது, அதன் பலம் கொள்கைகளின் ஆலோசனையிலேயே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. தலைவர்களும், அமைச்சர்கள், செருக்கையும் கோபத்தையும், பகத்தையும், பொறாமையையும் அடக்கி, ஒருவரிடம் இருந்து ஒருவர் ஆதரவைப் பெற்று, ஒருவரையொருவர் பின்பற்றினால் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்.(50)

ஒரு மன்னன், ஐந்து வகை வஞ்சகங்களில் இருந்து விடுபட்ட அமைச்சர்களிடமே ஆலோசிக்க வேண்டும்[6].(51) முதல் தருணத்தில், மன்னனுடன் ஆலோசித்தவர்களுள் மூவரின் வெவ்வெறு கருத்துகளை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பிறகு உறுதியான தீர்மானத்தை அடையும் மன்னன், தன் ஆசானிடம் சென்று அந்தக் கருத்துகளையும், தன் சொந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும். அவனது ஆசான், அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த அனைத்து காரியங்களையும் நன்கு அறிந்த ஒரு பிராமணராக இருக்க வேண்டும். உறுதியான தீர்மானத்துடன் அவரிடம் செல்லும் மன்னன், குவிந்த மனத்தோடு அவரது கருத்தையும் கேட்க வேண்டும். மன்னன் அவரோடு சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தபிறகு, எந்தப் பற்றும் இல்லாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.(52,53) ஆலோசனை எனும் அறிவியலின் தீர்மானங்களை நன்கறிந்தோர், மன்னர் எப்போதும் இவ்வழியிலேயே தங்கள் ஆலோசனைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். ஆலோசனைகளை இவ்வழியில் தீர்மானிக்கும் அவர்கள், குடிமக்கள் அனைவரையும் வெல்வதற்காக அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.(54)

மன்னன் தன் ஆலோசனைகளைச் செய்யும் இடத்தில், உயரம் குறைந்தோர் {குள்ளர்கள்}, முதுகு வளைந்தோர் {கூனர்கள்}, மெலிந்த உடல் வாகைக் கொண்டவர்கள், முடமானோர், பார்வையற்றோர் {குருடர்கள்}, மூடர்கள், பெண்கள், அலி ஆகியோரில் எவரும் இருக்கக்கூடாது. அங்கே எதுவும் முன்போ, பின்போ, மேலோ, கீழோ, குறுக்காகவோ நகர்ந்து கொண்டிருக்கக்கூடாது.(55) மன்னன், படகில் ஏறியோ, புல், புதர் அற்ற, சுற்றிலும் தெளிவாகத் தெரியக்கூடிய நிலங்களைக் கொண்ட திறந்தவெளிக்குச் சென்றோ, பேச்சு மற்றும் தோற்றத்தில் குறைகளைத் தவிர்த்து உரிய நேரத்தில் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(56)

இன்சொல்லும் இனிய நடத்தையும்! – சாந்திபர்வம் பகுதி – 84-இனிமையான பேச்சும், இனிமையான நடத்தையும் சாதிக்கக் கூடியவற்றைப் பிருஹஸ்பதிக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பிருஹஸ்பதிக்கும், சக்ரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1)

சக்ரன் {இந்திரன் பிரஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, ஒரு மனிதன், எந்தக் காரியத்தைக் கவனமாகச் சாதிப்பதன் மூலம், அனைத்து உயிரினங்களின் மதிப்புக்குரியவனாகி பெரும்புகழை அடைய முடியும்?” என்று கேட்டான்.(2)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, ஒரு மனிதன் பேச்சில் இனிமையுடையவனாக இருந்தால், அவன் அனைத்து உயிரினங்களின் மதிப்புக்குரியவனாகி, பெரும் புகழை அடைவான்.(3) ஓ! சக்ரா, இதுவே அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாகும். இதைப் பயில்வதால் ஒருவனால் எப்போதும் அனைத்து உயிரினங்களின் அன்பைப் பெற முடியும்.(4) {இனிய} ஒரு சொல்லும் பேசாதவனும், புருவம் சுருங்கி, முகம் சுழிப்பவனுமான ஒரு மனிதன் அனைத்து உயிரினங்களின் வெறுப்புக்கு ஆளாகிறான். இனிய சொல் பேசாமை அவனை அவ்வாறு ஆக்குகிறது.(5) பிறரைக் கண்டதும், புன்னகையுடன் முதலில் பேசும் மனிதன், அவர்கள் அனைவரையும் தன்னிடம் நிறைவுகொள்ளச் செய்கிறான்.(6)

இனிமையான சொல் இல்லாமல் கொடைகளையே {தானங்களையே} அளித்தாலும்கூட, அது குழம்பில்லாத சோற்றைப் போலப் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.(7) ஓ! சக்ரா, இனிய சொற்களுடன் மனிதர்களின் உடைமைகளே பறிக்கப்பட்டாலும்கூட, அத்தகு இனிமையான நடத்தையானது கொள்ளை கொடுத்தவனைச் சமரசம் செய்வதில் வெல்லும்.(8) எனவே, ஒரு மன்னன், தண்டனையையே அளிக்க விரும்பினாலும் இனிமையான வார்த்தைகளிலேயே பேச வேண்டும். பேச்சில் இனிமை ஒருபோதும் காரியங்களில் தவறுவதில்லை. அதே வேளையில், எந்த இதயத்தையும் காயப்படுத்துவதும் இல்லை.(9) நற்செயல்கள் செய்து நல்லவனாக இருக்கும் ஒரு மனிதன், இனிமையானவனாகவும், இனிமையான பேச்சைக் கொண்டவனாகவும் இருந்தால் அவனுக்கு இணையானவன் வேறு எவனும் கிடையாது” என்றார் {பிருஹஸ்பதி}”.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு தன் புரோகிதரால் {பிருஹஸ்பதியால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அந்த அறிவுரைகளின்படியே செயல்படத் தொடங்கினான். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீயும் இவ்வறத்தைப் பயில்வாயாக” {என்றார்}.(11)

அமைச்சர்கள் நியமனம்! – சாந்திபர்வம் பகுதி – 85-எந்தெந்த வர்ணங்களில் எத்தனை அமைச்சர்களை நியமிக்க வேண்டும்; அவர்கள் எத்தகைய பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனை வழங்க வேண்டும்; தூதர், மெய்க்காப்பாளன், அமைச்சர், படைத்தலைவன் ஆகியோர் என்ன திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பன குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, பேரருளையும், நித்திய புகழையும் அடைய ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வழிமுறையின் ஆள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தூய ஆன்மாவையும், தன் குடிகளை ஆளும் கடமையில் கவனத்தையும் கொண்ட ஒரு மன்னன், நீதியுடன் தன்னை நடத்திக் கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் அவன் தகுதியையும், புகழையும் ஈட்டுவான்” என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன், எவருடன் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, கேட்கும் எனக்கு முறையாக அனைத்தையும் சொல்வதே உமக்குத் தகும்.(3) நீர் ஏற்கனவே சொன்னவற்றில் ஒரு மனிதனுக்கான அறங்களில் {பண்புகளில்} எதுவும் எந்த ஒரு தனி மனிதனிடமும் காணப்படவில்லை என்பதே என் நம்பிக்கை” என்றான்[1].(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, நீ பெரும் நுண்ணறிவு கொண்டவனாக இருக்கிறாய். இது நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. அந்த நற்குணங்கள் அனைத்தையும் கொண்ட மனிதன் மிக அரிதானவனே.(5) சுருக்கமாகச் சொன்னால், கவனமான தேடலுக்குப் பிறகும் கூட {எவனிடமும்} இத்தகு நடந்தை (சொல்லப்படும் அறங்கள் அனைத்தின் இருப்பும்) காணப்படுவது மிக அரிதே. எனினும், உன்னால் எந்த வகையான அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(6)

வேதகல்வி, கண்ணிய உணர்வு ஆகியவற்றைக் கொண்டவர்களும், சனாதக வகையைச் சேர்ந்தவர்களும், தூய நடத்தை கொண்டவர்களுமான நான்கு {4} பிராமணர்களும்; உடல் பலம் கொண்டவர்களும், ஆயுதந்தரிக்க வல்லவர்களுமான எட்டு {8} க்ஷத்திரியர்களும்,(7) செல்வம் படைத்தவர்களான இருபத்தோரு {21} வைசியர்களும், பணிவானவர்களும், தூய நடத்தை கொண்டவர்களும், தினசரி கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மூன்று {3} சூத்திரர்களும்,(8) புராணங்கள் மற்றும் எட்டு முக்கிய அறங்களை[2] {பண்புகளைக்} குறித்த அறிவு கொண்டவனான ஒரு சூதனும் உன் அமைச்சர்களாக இருக்க வேண்டும். {ஆக மொத்தம் 37 அமைச்சர்கள்}. அவர்கள் அனைவரும் ஐம்பது வயதைக் கடந்தவர்களாகவும், கண்ணிய உணர்வு கொண்டவர்களாகவும், பொறாமையில் இருந்து விடுபட்டவர்களாகவும்,(9) சுருதிகள் மற்றும் ஸ்மிருதிகளை அறிந்தவர்களாகவும், பணிவுடையவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும், வழக்காடுபவர்களின் மத்தியில் செயலின் பல்வேறு வகைகளைக் குறித்துச் சொல்லி தீர்வை எட்ட ஆயத்தமாக இருப்பவர்களாகவும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களாகவும்,(10) வியசனங்கள் என்று அழைக்கப்படும் ஏழு அதிபயங்கரத் தீமைகளில்[3] இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மன்னன், {வழக்கு விசாரணையின்போது} அந்த எட்டு அமைச்சர்களுக்கு மத்தியில் ஆலோசிக்க வேண்டும்[4].(11) மேலும் அவன் {மன்னன்}, அந்த ஆலோசனையின் விளைவுகளைத் தன் குடிமக்களுக்கான செய்தியாகத் தன் நாட்டில் வெளியிட வேண்டும். நீ எப்போதும் இத்தகு நடத்தையையே பின்பற்றி உன் மக்களைக் கண்காணிக்க வேண்டும்.(12)பொருளின் உரிமை குறித்து இரு மனிதர்களிடையிலான சச்சரவின் பேரில் உன்னிடம் கொடுக்கப்பட்டவற்றை, நீ ஒருபோதும் பறிமுதல் செய்யவோ, உனதாகக் கொள்ளவோ கூடாது. அத்தகு நடத்தை நீதி நிர்வாகத்தைக் கெடுத்துவிடும். உன் நீதி நிர்வாகம் இவ்வாறு பழுதுபட்டால், பாவமே உன்னைப் பீடிக்கும்.(13) அஃது உன் நாட்டையும் பீடித்து, பருந்தைக் கண்ட சிறு பறவைகளைப் போல உன் மக்களை அஞ்சவைக்கும். பிறகு உனது நாடானது, கடலில் உடைந்த படகைப் போல உருகி {அழிந்து} விடும்.(14) மன்னன் தன் குடிகளை அநீதியுடன் ஆண்டால், அவனது இதயம் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, சொர்க்கத்தின் கதவானது அவனுக்கு எதிராகச் சாத்தப்படும்.(15) ஓ! மனிதர்களில் காளையே, ஒரு நாடானது நீதியிலேயே தன் வேரைக் கொண்டுள்ளது. நீதி வழங்கும் ஆசனத்தில் அமர்ந்து, தன்னலத்துடன், அநீதியாகச் செயல்படும் அமைச்சரும், அல்லது மன்னனின் மகனும் {இளவரசனும்}, காரியங்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தன்னலத்தால் உந்தப்பட்டு நியாயமில்லாமல் நடந்து கொள்ளும் அதிகாரிகள் அனைவரும் அந்த மன்னனுடன் சேர்ந்து நரகில் மூழ்குவார்கள்.(16,17)

வலியோரால் ஒடுக்கப்பட்டு, பரிதாபகரமான ஒப்பாரிகளில் ஈடுபடும் ஆதரவற்ற மனிதர்கள் தங்கள் பாதுகாவலனை மன்னனிடமே கொண்டுள்ளனர்.(18) இரு தரப்புகளுக்கிடையிலான சச்சரவு வழக்குகளில், சாட்சிகளின் ஆதார அடிப்படையிலேயே தீர்மானம் எட்டப்பட வேண்டும். வழக்காளிகளில் ஒருவர் சாட்சி ஏதும் இல்லாமல், ஆதரவற்றவராக இருந்தால், மன்னன் அந்த வழக்கில் சிறப்பான கவனத்தைச் செலுத்த வேண்டும்.(19) குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தண்டனை பெற மன்னன் ஆவன செய்ய வேண்டும். செல்வந்தர்கள் {குற்றமிழைக்கும்போது}, அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள் செய்வதன் மூலமும், ஏழைகள் {குற்றமிழைக்கும்போது}, சுதந்திரம் இழக்கச் செய்வதன் மூலமும் தண்டிக்கப்பட வேண்டும்.(20) மிகத்தீய நடத்தை கொண்டோரை, உடற்சார் துன்பங்களின் மூலம் மன்னன் தண்டிக்க வேண்டும். நல்லோர் அனைவரையும் மன்னன் இனிய சொற்கள் மற்றும் செல்வக்கொடைகளின் மூலம் பேணிக் காக்க வேண்டும்.(21) மன்னனைக் கொல்ல முனைபவன், பல்வேறு வழிமுறைகளின் மூலமான மரணத் தண்டனையால் தண்டிக்கப்பட வேண்டும். தீவைத்தல், களவு, வர்ணக்கலப்புக்கு வழிவகுக்கும் வகையில் பெண்களின் துணையை நாடுதல் ஆகிய குற்றங்களைச் செய்பவனும் அதே வகையில் தண்டிக்கப்பட வேண்டும்.

ஓ! ஏகாதிபதி, தண்ட அறிவியலின் விதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் முறையாகத் தண்டனை அளிக்கும் மன்னன் அச்செயலால் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. மறுபுறம், அவன் அழியா தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(23) காரணமின்றித் தண்டனைகளை விதிக்கும் மூட மன்னன், இம்மையில் புகழ்க்கேட்டை ஈட்டி, மறுமையில் நரகில் மூழ்குகிறான்.(24) ஒருவன் வேறொருவரின் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படக்கூடாது. (குற்றவியல்) சட்டத்தை நன்கு சிந்தித்துப் பார்த்த பிறகே, ஒரு மனிதன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவோ, விடுவிக்கப்படவோ வேண்டும்.(25)

ஒரு மன்னன் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு தூதரைக் கொல்லக்கூடாது. தூதரைக் கொல்லும் மன்னன், தன் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து நரகில் மூழ்குவான்.(26) தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை பற்றுறுதியுடன் சொன்ன ஒரு தூதனைக் கொல்லும் மன்னன், தன் மூதாதையர்களுக்குக் கருவைக் கொன்ற பாவத்தைத் தேடித் தருகிறான்.(27) ஒரு தூதன், உயர்ந்த குடிபிறப்பு, நாநயம், புத்திக்கூர்மை, இனிய பேச்சு, தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியைப் பற்றுறுதியுடன் கூறல், நல்ல நினைவுத்திறன் ஆகிய ஏழு திறமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.(28) மன்னனைப் பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்களும் அதே வகைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தலைநகரையோ, நகரரணையோ காக்கும் அதிகாரியும் அதே திறன்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.(29)

மன்னனின் அமைச்சர், சாத்திரங்களின் தீர்மானங்களை அறிந்தவராக, போர்களை வழிநடத்துபவராக, உடன்படிக்கைகளை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். மேலும் அவர், நுண்ணறிவு, துணிவு, பணிவு, ஆகியவற்றைக் கொண்டவராகவும், இரகசியங்களைக் காப்பவராகவும் இருக்க வேண்டும்.(30) அவர் உயர் குடி பிறப்பையும், மனோ பலத்தையும், தூய நடத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும். இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர் தகுந்தவராகக் கருதப்பட வேண்டும்.

மன்னனுடைய படைகளின் தலைவனும் அதேபோன்ற திறன்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.(31) அவன் பல்வேறு வகைப் படை அணிவகுப்புகளை {வியூகங்களை} அறிந்தவனாகவும், இயந்திரங்கள் மற்றும் ஆயுதங்களின் பயன்பாடுகளை அறிந்தவனாகவும் இருக்க வேண்டும். அவன், மழை, குளிர், வெப்பம், காற்று ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ளக் கூடியவனாகவும், பகைவரின் தவறுகளைக் கவனமாகப் பார்ப்பவனாகவும் இருக்க வேண்டும்.(32)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு மன்னன், தன் எதிரிகளைப் பாதுகாப்பு உணர்வுடன் அமைதியடையச் செய்ய இயன்றவனாக இருக்க வேண்டும். எனினும், அவன் {மன்னன்} எவனையும் நம்பாமல் இருக்க வேண்டும். தன் சொந்த மகனிடம் நம்பிக்கை கொள்வதே கூட அவனுக்கு அங்கீகரிக்கப்படவில்லை.(33) ஓ! பாவமற்றவனே, சாத்திரங்களின் தீர்மானங்கள் என்ன என்பதை இப்போது நான் உனக்குச் சொன்னேன். எவனையும் நம்ப மறுத்தலே ஆட்சித்திறத்தின் உயர்ந்த புதிர்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(34)

அரசநகரத்தின் லக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 86-மன்னனும், அரச அங்கத்தினரும் வசிக்க வேண்டிய நகரத்திற்குரிய அடையாளங்கள், ஒரு நாடு வலுவூட்டப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டிய வழிமுறைகள்; தவசிகளிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன் எவ்வித நகரத்திற்குள் வசிக்க வேண்டும்? அவன், ஏற்கனவே உண்டாக்கப்பட்ட ஒரு நகரத்தில் வசிக்க வேண்டுமா? அல்லது அவன் தனியாக ஒன்றைக் கட்ட வேண்டுமா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, ஓ! குந்தியின் மகனே, ஒரு மன்னன் வசிக்க வேண்டிய நகரத்தைப் பொறுத்தவரையில் கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்புகளையும், பிற்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் விசாரிப்பதே {விசாரித்தறிவது} முறையாகும்.(2) எனவே, நகரரண்களின் {கோட்டைகளின்} தற்பாதுகாப்பைக் குறித்து நான் உரையாடப்போகிறேன். நான் சொல்வதைக் கேட்ட பிறகு, தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, வழிநடத்தப்படும்படியே கவனமாக உன்னை நடத்திக் கொள்வாயாக.(3) ஆறு வகை அரண்களில் {துருக்கங்களில்} தன் கண்களைச் செலுத்தியபடியே {கவனத்தைக் கொண்டு} மன்னன், அனைத்து வகைச் செழிப்புகளையும், பயன்படுத்துவதற்கான அனைத்து வகைப் பொருட்களையும் அபரிமிதமாகக் கொண்ட தன் நகரங்களைக் கட்ட வேண்டும்.(4) நீர்அரண்கள் {ஜலதுர்க்கம்}, பூமிஅரண்கள் {பூமிதுர்க்கம்}, மலைஅரணங்கள் {கிரிதுர்க்கம்}, மனிதஅரண்கள் {மனுஷ்யதுர்க்கம்}, மண்அரண்கள் {மருதுர்க்கம்}, காட்டுஅரண்கள் {வனதுர்க்கம்} ஆகியனவே அந்த ஆறு வகை அரண்களாகவும் {துருக்கங்களாகும்}[1].(5)

அரணால் பாதுகாக்கப்பட்டதும், அரிசி மற்றும் ஆயுதக் கிடங்குகளை அபரிமிதமாகக் கொண்டதும், ஊடுருவமுடியா சுவர்கள் மற்றும் அகழியால் பாதுகாக்கப்பட்டதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், கல்வி மற்றும் இயந்திரவியல் கலையில் திறன் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்கள் வசிப்பதும், அனைத்து வகைப் பொருட்கள் நன்கு சேமிக்கப்பட்டதும், அறநடத்தையும், தொழிலில் நுண்ணறிவும், பலமும், சக்தியும் கொண்ட மனிதர்கள் நிறைந்ததும், விலங்குகள் நிறைந்ததும், நேர்மையான நடத்தை கொண்ட மனிதர்கள் இருப்பதும், அமைதி நிலைத்திருப்பதும், ஆபத்தில்லாததும், அழகால் சுடர்விடுவதும், இசை மற்றும் பாடல்களால் எதிரொலிப்பதும், துணிச்சல்மிக்க, செல்வம் நிறைந்த மனிதர்களைக் கொண்டதும், வேத மந்திரங்களின் ஒலியால் எதிரொலிக்கப்படுவதும், விழாக்களும், பண்டிகைகளும் அடிக்கடி நடைபெறுவதும், எப்போதும் தேவர்களின் வழிபாடுகள் நடைபெறுவதுமான ஒரு நகரத்திலேயே மன்னன், அவனது அமைச்சர்கள், பற்றுறுதி கொண்ட அவனது படையினர் ஆகியோர் வசிக்க வேண்டும்[2].(6-10)

அங்கே வசிக்கும் மன்னன், தன் படைகளை அதிகரித்து, தன் நண்பர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி, நீதிமன்றங்களை நிறுவி தன் கருவூலத்தை நிறைப்பதில் ஈடுபட வேண்டும். தன் நகரங்கள் மற்றும் மாகாணங்களில் நிந்தனைகள் மற்றும் தீமைகள் அனைத்தையும் அவன் தடுக்க வேண்டும்.(11) அவன் அனைத்துவகைப் பொருட்களையும் முன்னேற்பாட்டுடன் சேகரிப்பதிலும், தன் ஆயுதக்கிடங்குகளைக் கவனத்துடன் நிறைப்பதிலும் ஈடுபட வேண்டும். அரிசி மற்றும் பிற தானியங்களையும் அவனது கிடங்குகளில் அதிகரிக்கச் செய்து, (விவேகத்துடன்) தனது ஆலோசனைகளை உறுதியடையச் செய்ய வேண்டும்.(12) அவன் மேலும் தன் கிடங்குகளில், விறகு, இரும்பு, உமிகள், கரிகள், மரங்கள், கொம்புகள், எலும்புகள், மூங்கில்கள், மஜ்ஜை, எண்ணெய் மற்றும் வெண்ணெய், கொழுப்பு, தேன், மருந்து வகைகள்,(13) பட்டுச்சணல், {ஸர்ஜரம் எனும்} நறுமணத் திரவியம், அரிசி, ஆயுதங்கள், அம்புகள், தோல், (நாண்கயிறுகளுக்கான) நரம்பு, பிரம்பு, முஞ்சப் புல் {ஒரு வகைத் தர்ப்பம்}, பிறவகைச் செடிகொடிகள் {மூலிகைகள்} ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும்.(14) மேலும், பெரும் அளவிலான நீரைக் கொண்ட குளங்கள் {அல்லது தொட்டிகள்} மற்றும் கிணறுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து, பாலுள்ள மரங்கள் அனைத்தையும் அவன் பாதுகாக்க வேண்டும்[3].(15)

(பல்வேறு அறிவியல் துறைகளில்) ஆசான்களாக இருப்போரையும், ரித்விக்குகள், புரோகிதர்கள், வலிமைமிக்க வில்லாளிகள், கட்டடக் கலைஞர்கள், வானியல் வல்லுனர்கள், சோதிடக் கலைஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரையும்,(16) ஞானம், நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, புத்திக்கூர்மை, துணிவு, கல்வி, உயர்குடி பிறப்பு, மனோசக்தி ஆகியவற்றைக் கொண்டவர்களையும், அனைத்தவகை பணிகளையும் செய்யவல்ல மனிதர்கள் அனைவரையும் கௌரவித்து, கவனத்துடன் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.(17) மன்னன் நல்லோரைக் கௌரவித்து, நியாயமற்றவர்களைத் தண்டிக்க வேண்டும். தீர்மானத்துடன் செயல்படும் அவன், பல்வேறு வகையினரையும் அவரவருக்குரிய கடமைகளில் நிறுவ வேண்டும்.(18) அவன் {மன்னன்}, தன் நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் வெளிப்புற நடத்தையையும், மனோநிலையையும் ஒற்றர்கள் மூலம் சரியாக உறுதிச் செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .(19) மன்னன் தானே தன் ஒற்றர்கள், ஆலோசகர்கள், தன் கருவூலம், தண்டனை அளிக்கும் துறைகளைச் சார்ந்தோர் ஆகியோரை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்தும் இவர்களையே சார்ந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(20)

ஒற்றர்களையே தன் பார்வையாகக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகள், நண்பர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் செயல்களை அனைத்தையும், அவர்களது நோக்கங்கள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.(21) பிறகு அவன் கவனத்துடன் தன் திட்டங்களை வகுத்து, தன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவர்களைக் கௌரவிக்கவும், பகைமையுடன் இருப்பவர்களைத் தண்டிக்கவும் செய்ய வேண்டும்.(22) மன்னன் எப்போதும் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, எவருக்கும் துன்பமளிக்காமல் கொடைகளைக் கொடுக்க வேண்டும். நீதிக்குத் தடங்கலாகவோ, குறுக்கீடாகவோ ஒருபோதும் எதையும் செய்யாமல் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும்.(23) ஆதரவற்றோர், தலைவனற்றோர், முதியோர், விதவைகளாக இருக்கும் பெண்டிர் ஆகியோரை அவன் எப்போதும் பாதுகாத்து, அவர்களைப் பராமரிக்க வேண்டும்.(24)

மன்னன் எப்போதும் தவசிகளைக் கௌரவித்து, உரிய காலங்களில் துணிகள், பாத்திரங்கள் மற்றும் உணவை அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் (25) அவன் (நாட்டில்) தன்னிலை குறித்தும், தன் திட்டங்கள் அனைத்தையும் குறித்தும், தன் நாட்டைக் குறித்தும் மிகுந்த கவனத்துடன் அந்தத் தவசிகளுக்குத் தெரிவித்து, அவர்கள் முன்னிலையில் எப்போதும் அவன் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.(26) உயர்ந்த பிறப்பையும், பெரும் கல்வியையும் கொண்டவர்களும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களையும் கைவிட்டவர்களுமான தவசிகளை அவன் காணும்போது, படுக்கைகள், ஆசனங்கள் மற்றும் உணவுக் கொடைகளுடன் அவர்களை அவன் கௌரவிக்க வேண்டும்.(27) எந்த இயல்பிலான துன்பத்தில் அவன் விழுந்தாலும், அஃதை அவன் ஒரு தவசியிடம் நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும். கள்வர்களே கூட அத்தகைய பண்பு கொண்ட மனிதர்களிடம் நம்பிக்கை கொள்வார்கள்.(28) மன்னன் தன் செல்வத்தை ஒரு தவசியின் பொறுப்பில் கொடுத்து, அவருடைய ஞானத்தை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் அவன் அனைத்துச் சந்தர்ப்பங்களில் அவர்களுக்காகக் காத்திருக்கவோ, வழிபடவோ கூடாது[4].(29)தன் நாட்டில் வசிப்போரில் ஒருவரை அவன் தன் நட்புக்கெனத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோலவே, எதிரியின் நாட்டில் வசிப்போரில் மற்றொருவரையும் அவன் தேர்ந்தெடுக்க வேண்டும். காடுகளில் வசிப்போரில் இருந்து மூன்றாமவரையும், தனக்குக் கப்பம் கட்டும் நாடுகளில் வசிப்போரில் ஒருவரை நான்காமவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(30) அவன், அவர்களிடம் நல்ல விருந்தோம்பலை வெளிப்படுத்தி, அவர்களுக்குக் கௌரவங்களை அளித்து, அவர்களுக்கான வாழ்வாதார வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவன் {மன்னன்} எதிரிகளின் நாடுகளில் வசிக்கும் தவசிகளிடமும், தன் நாட்டில் வசிக்கும் தவசிகளிடமும் ஒரே வழியிலேயே நடந்து கொள்ள வேண்டும்.(31) தவங்கள் மற்றும் கடும் நோன்புகளில் ஈடுபடும் அவர்கள், மன்னனுக்குப் பேரிடர் நேர்ந்து அவன் பாதுகாப்பை நாடும்போது, அவனுக்கு வேண்டியதைக் கொடுப்பார்கள்.(32) மன்னன் வசிக்கத் தகுந்த நகரத்துக்குண்டான குறியீடுகள் நான் இப்போது உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.(33)

நிர்வாகம் மற்றும் வரிவிதிப்பு! – சாந்திபர்வம் பகுதி – 87-நாட்டைப் பாதுகாத்து வலுப்படுத்த ஏற்படுத்தப்பட வேண்டிய நிர்வாக முறையையும், வரி, தீர்வைகள் மூலம் நாட்டிலிருந்து பொருளைச் சேர்க்கும் முறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா {பீஷ்மரே}, ஒரு நாட்டை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும்? அஃதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? நான் இவற்றை அறிய விரும்புகிறேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சொல்வதைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக. ஒரு நாடு எவ்வாறு வலுப்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(2) ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனை நியமிக்க வேண்டும். பத்துக் {10} கிராமங்களுக்கு (அல்லது பத்து தலைவர்களுக்கு) ஒரு கண்காணிப்பாளன் {அதிபதி} இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இரண்டு கண்காணிப்பாளர்களுக்கு (இருபது {20} கிராமங்களைக் கட்டுப்படுத்த) ஓர் அதிகாரி இருக்க வேண்டும். அந்த அதிகாரிக்கும் மேல் நூறு {100} கிராமங்களைக் கொண்ட ஒருவன் இருக்க வேண்டும்; அவனுக்கும் மேல் ஆயிரம் {1000} கிராமங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்ட ஒருவன் இருக்க வேண்டும்.(3) ஒரு கிராமத் தலைவனானவன், அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் பண்புகளையும், திருத்த வேண்டிய குறைகள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு அவன், அதை (தனக்கு மேல்நிலையில் உள்ளவனான) இருபது {20} கிராமங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் சொல்ல வேண்டும்.(4) அந்த அதிகாரி பதிலுக்கு, (தனக்கு மேல்நிலையில் உள்ளவனான) நூறு {100} கிராமங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் தன் ஆட்சிப்பகுதிக்குள் இருக்கும் மனிதர்கள் அனைவரின் நடத்தையையும் தெரிவிக்க வேண்டும்.(5)

கிராமத் தலைவனே அந்தக் கிராமத்தில் உள்ள விளைச்சல் மற்றும் உடைமைகள் ஆகிய அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு தலைவனும், பத்துக் {10} கிராமங்களுக்குத் தலைவனாக இருப்பவனைப் பராமரிப்பதற்கான தன் பங்கைக் கொடுக்க வேண்டும். பின்னவன் {பத்துக் {10} கிராமங்களுக்குத் தலைவன்}, இருபது {20} கிராமங்களின் தலைவனை ஆதரிக்க அதையே செய்ய வேண்டும்.(6)

ஓ! பாரதர்களின் தலைவா, நூறு {100} கிராமங்களுக்குத் தலைவன், மன்னனிடம் இருந்து அனைத்து கௌரவத்தையும் பெற வேண்டும், மேலும் அவன், தன்னை ஆதரித்துக் கொள்ள மக்கள் மற்றும் செல்வம் நிறைந்த ஒரு பெரிய கிராமத்தைக் கொண்டிருக்க வேண்டும்.(7)

எனினும், நூறு {100} கிராமங்களின் தலைவனுக்கு அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஒரு கிராமமானது, ஆயிரம் {1000} கிராமங்களுக்குத் தலைவனாக இருப்பவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.

மேலும், ஆயிரம் {1000} கிராமங்களுக்குத் தலைவனான அந்த மேலதிகாரி, தன்னை ஆதரித்துக் கொள்ள ஒரு சிறு நகரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.(8) அவன் அதிலிருந்து கிடைக்கும் தானியங்கள், தங்கம் மற்றும் பிற உடைமைகளை அனுபவிக்க வேண்டும். அவனே அது தொடர்பான போர்க்கடமைகள் மற்றும் உள் விவகார காரியங்கள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.(9) அந்த அதிகாரிகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகள் மற்றும் நிர்வாகக் காரியங்களை ஏதோ ஓர் அறம்சார்ந்த அமைச்சர் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு நகரத்திலும், அதன் அதிகார எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் கவனிக்க ஓர் அதிகாரி இருக்க வேண்டும்.(10)

விண்மீன் கூட்டத்திற்கிடையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஏதோவொரு பயங்கரக் கோளைப் போல, இறுதியாகச் சொல்லப்பட்ட (மட்டுமடங்கற்ற அதிகாரங்களைக் கொண்ட) அந்த அதிகாரியானவன், அவனுக்குக் கீழுள்ள அதிகரிகள் அனைவருக்கும் மேலானவனாகச் செயல்பட்டு, நடந்து கொள்ள வேண்டும். அத்தகு அதிகாரியானவன், தன் ஒற்றர்களின் மூலம் தனக்குக் கீழுள்ளவர்களின் நடத்தையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.(11)

அப்படிப்பட்ட உயரதிகாரிகளானவர்கள், கொலைகார மனோநிலையில் இருக்கும் மனிதர்கள் அனைவரிடம் இருந்தும், தீச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவரிடம் இருந்தும், பிறரின் செல்வத்தைக் களவாடுவோர் அனைவரிடம் இருந்தும், வஞ்சகம் நிறைந்தோர் அனைவரிடம் இருந்தும், பிசாசின் ஆதிக்கத்திலிருப்போர் எனக் கருதப்படும் அனைவரிடம் இருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.(12)

மன்னனானவன், வணிகத்தில் ஈடுபடுவோரின் விற்பனைகள், கொள்முதல்கள், சாலைகளின் நிலை, உணவு, ஆடை, கையிருப்புகள், ஆதாயங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு அவர்களுக்கு வரி விதிக்க வேண்டும்.(13) மன்னன், உற்பத்தியாளர்களின் பரிணாமத்தையும், உற்பத்தியில் ஈடுபடுவோரின் வரவு செலவுகளையும், கலைகளின் நிலையையும் அனைத்துத் தருணங்களிலும் உறுதி செய்து கொண்டு, கைவினைஞர்கள் {தொழிலாளிகள்} பின்பற்றும் கலைகளுக்கு {தொழிலுக்கு} ஏற்ப அவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும்.(14) ஓ! யுதிஷ்டிரா, மன்னன் அதிக வரிகளை விதிக்கலாம், ஆனால் தன் மக்களைக் காயடிக்கும் வகையில் அவன் ஒருபோதும் வரிகளை விதிக்கக்கூடாது. (15)

உற்பத்தியின் அளவு, உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பின் அளவு ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளாமல் எந்த வரியும் விதிக்கப்படக்கூடாது. போதிய காரணமில்லாமல் உற்பத்தியைப் பெருக்குவதற்காக எவரும் பணி செய்யவோ, உழைப்பில் ஈடுபடவோ மாட்டார்கள்[1].(16) மன்னன், தானும், பொருளை உற்பத்தி செய்ய உழைத்து வரிவிதிக்கப்படுபவனும் அதன் மதிப்பைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வரிகளை விதிக்க வேண்டும்.(17) மன்னன் தனக்கிருக்கும் தாகத்தால், தன் {நாடு எனும்} அடித்தளத்தையும், பிறரின் {காரியங்கள் எனும்} அடித்தளங்களையும் அழித்துவிடக்கூடாது. தன் மக்களிடம் வெறுப்புக்குள்ளாகும் எந்தச் செயலையும் எப்போதும் அவன் தவிர்க்க வேண்டும். உண்மையில் இவ்வழியில் நடந்து கொண்டால் அவன் மக்களிடம் செல்வாக்கடைவதில் வெல்வான்.(18) (வரிகள் மற்றும் தீர்வைகளின் காரியத்தில்) தீராப் பெரும்பசி கொண்டவன் என்று கெட்ட பெயர் ஈட்டும் மன்னனை குடிமக்கள் வெறுப்பார்கள். வெறுப்பின் பொருளாக மாறும் ஒரு மன்னனால் எங்கிருந்து செழிப்பை அடைய முடியும்? அப்படிப்பட்ட மன்னனால் ஒருபோதும் தனக்கான நன்மையை அடைய முடியாது.(19)நல்ல நுண்ணறிவு கொண்ட ஒரு மன்னன், கன்றுகளின் (காரியத்தில் மனிதர்கள் நடந்து கொள்ளும்} ஒப்புமையைப் போலத் தன் நாட்டில் இருந்து {வரிகளைக்} கறக்க வேண்டும்.(20) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பால் குடிக்கக் கன்றை அனுமதித்தால், அது பலமுள்ளதாக வளர்ந்து பெருங்கனங்களைச் சுமக்கும்.(20) மறுபுறம், பசுவிடமிருந்து அதிகமாகப் பால் கறக்கப்பட்டால் கன்று மெலிந்து, தன் தலைவனுக்குத் தொண்டாற்றத் தவறும். அதே போலவே நாட்டில் இருந்து அதிகமாக {வரிகளை} எடுத்தால், குடிமக்கள் எந்தப் பெரிய செயலையும் அடைவதில் தவறுவர்.(21) தன் நாட்டைத் தானே பாதுகாத்து, (வரிகள் மற்றும் தீர்வைகளின் காரியத்தில்) தன் குடிமக்களுக்கு ஆதரவைக் காட்டி, எளிதாக அடைந்தவற்றில் இருந்து தன்னைத் தாங்கிக் கொள்ளும் மன்னன் மகத்தான விளைவுகளை அடைவதில் வெல்கிறான்.(22) அப்போது அந்த மன்னன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளப் போதுமான அளவுக்குச் செல்வத்தை அடைய மாட்டானா?[2] இவ்வழக்கில் மொத்த நாடும் அவனது கருவூலமாகிறது, அதே வேளையில் கருவூலமானது அவனது படுக்கையறையாகிறது.(23) நகரங்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் மன்னனைச் சார்ந்திருக்கும் ஏழைகளாக இருந்தால், அவன் தனது சக்திக்குத் தகுந்தபடி அவர்களிடம் கருணை காட்ட வேண்டும்.(24) மன்னன், புறநகர்களில் நிறைந்திருக்கும் கள்வர்கள் அனைவரையும் தண்டித்து, தன் கிராமங்களில் இருக்கும் மக்களைப் பாதுகாத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும். அவ்வழக்கில், குடிமக்கள் தங்கள் மன்னனின் இன்ப துன்பங்களில் பங்குதாரர்களாகி அவனிடம் மிகுந்த மனநிறைவடைவார்கள்.(25)செல்வம் சேகரிக்க நினைக்கையில், மன்னன் தன் நாட்டின் தலைமையான மையப் பகுதிகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று தன் மக்கள் அஞ்சிடுமாறு முயற்சி செய்ய வேண்டும்.(26) அவன் அவர்களிடம், “இதோ பேரிடர் நம்மை அச்சுறுத்துகிறது. எதிரியின் செயல்பாடுகளின் விளைவாகப் பேரச்சம் உண்டாகிறது. எனினும், பூத்திருக்கும் மூங்கில்லைப் போல, எதிரி மிக விரைவில் அழிவை அடைப்போகிறான் என்பதால், இந்த ஆபத்து நம்மைக் கடந்து போவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.(27) எழுச்சி அடைந்திருக்கும் என் எதிரிகள், பெரும் எண்ணிக்கையிலான கள்வர்களுடன் சேர்ந்து, தங்கள் அழிவுக்காகவே நம் நாட்டை இடரில் ஆழ்த்த விரும்புகிறார்கள்.(28) பயங்கர ஆபத்துகள் நிறைந்த இந்தப் பேரிடரைக் கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்புக்காகவும் நான் உங்கள் செல்வத்தை வேண்டுகிறேன்.(29)

இந்த ஆபத்து கடந்து சென்றதும், நான் இப்போது உங்களிடம் எடுத்துக் கொள்வனவற்றைத் திரும்பக் கொடுத்து விடுவேன். எனினும், எதிரிகள் (எதிர்க்கப்படவில்லையென்றால்), அவர்கள் உங்களிடம் இருந்து பலவந்தமாகப் பிடுங்கும் எதையும் அவர்கள் திரும்பக் கொடுக்க மாட்டார்கள்.(30) மறுபுறம், அவர்கள் (எதிர்க்கப்படவில்லையென்றால்) உங்கள் மனைவியர் உட்பட உங்கள் உறவினர்கள் அனைவரையும் கொல்லக் கூடும். நீங்கள் உங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவியருக்காகவே செல்வத்தை விரும்புகிறீர்கள் என்பது நிச்சயம்.(31) நான் உங்கள் செழிப்பில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நான் உங்களை என் சொந்தப் பிள்ளைகளைப் போலவே பார்க்கிறேன். உங்களால் எனக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ, அதை நான் பெற்றுக் கொள்ளப் போகிறேன். நான் யாருக்கும் துன்பமளிக்க விரும்பவில்லை.(32) பேரிடர் காலங்களில் பலமிக்கக் காளைகளைப் போல நீங்கள் இத்தகு சுமைகளைச் சுமக்க வேண்டும். துயர்மிக்கக் காலங்களில் செல்வம் உங்களுக்கு விருப்பத்திற்குரியதாக இருக்கக்கூடாது” என்று சொல்ல வேண்டும்.(33)

காலம் தொடர்பான கருத்துகளை அறிந்த மன்னன், இத்தகு ஏற்கத்தக்க, இனிமையான, புகழ்ச்சியான வார்த்தைகளுடன் தன் முகவர்களை அனுப்பித் தன் மக்களிடம் இருந்து தீர்வைகளைத் திரட்ட வேண்டும்.(34) தன் கோட்டைகளைச் செப்பனிடும் தேவை குறித்து அவர்களுக்குச் சுட்டிக்காட்டி, தன் நிறுவனங்கள் மற்றும் பிற தலைமைகளின் செலவுகளைக் கொடுத்துத் தீர்த்து, அந்நிய படையெடுப்பைக் குறித்த அவர்களின் அச்சத்தைத் தூண்டி, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி, அவர்கள் அமைதியாக வாழ வேண்டிய வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்லி மன்னன் தன் ஆட்சிப்பகுதியில் உள்ள வைசியர்களுக்குத் தீர்வைகளை விதிக்க வேண்டும்.(35)

மன்னன் வைசியர்களை அலட்சியம் செய்தால் அவர்கள் அவனது ஆட்சிப்பகுதிகளைக் கைவிட்டு அங்கிருந்து தொலைந்து காடுகளுக்குச் சென்று விடுவார்கள். எனவே, மன்னன் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.(36) ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மன்னன் எப்போதும் வைசியர்களை இணங்கச் செய்து, அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தூண்டி, அவர்களது உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, எப்போதும் அவர்களுக்கு ஏற்புடையதைச் செய்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(37)

ஓ! பாரதா, மன்னன் எப்போதும் வைசியர்களின் உற்பத்தி சக்திகளைப் பெருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் பலத்தை அதிகரிப்பதும், வேளாண்மையை முன்னேற்றுவதும், வணிகத்தை வளர்ச்சியடையச் செய்வதும் வைசியர்களே.(38) எனவே, ஞானமுள்ள மன்னன் எப்போதும் அவர்களை மனம் நிறையச் செய்ய வேண்டும். கவனத்துடனும், கனிவுடனும் செயல்படும் அவன், அவர்களுக்கு மென்மையான தீர்வைகளையே விதிக்க வேண்டும்.(39) வைசியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது எளிதானதே. ஓ! யுதிஷ்டிரா, நாட்டில் உள்ள வைசியர்களிடம் இவ்வாறு நடந்து கொள்வது நாட்டுக்குப் பெரும் நன்மையை உண்டாக்குமேயன்றி வேற்றில்லை” என்றார் {பீஷ்மர்}.(40)

வரியும், பாதுகாப்பும்! – சாந்திபர்வம் பகுதி – 88-குடிமக்களிடம் வரிவாங்கும் முறை குறித்தும், நாட்டை வலுப்படுத்தும் வழிமுறை குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மன்னன் தன்னிடம் பெருஞ்செல்வம் இருந்தபோதிலும், இன்னும் அதிகமாக விரும்பினால், அவன் எவ்வாறு நடந்து கொள்ள {வரி விதிக்க} வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்தகுதியை ஈட்ட விரும்பும் ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் அறிவையும், சக்தியையும் சிறந்த வகையில் பயன்படுத்தி, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(2) எந்த நடவடிக்கைகள் தனக்கு ஏற்பட்ட நன்மைகளைப் போன்று அவர்களுக்கும் {குடிமக்களுக்கும் நன்மையை} ஏற்படுத்துமோ, அவை அனைத்தையும் அவன் தன் ஆட்சிப்பகுதிகளில் பின்பற்ற வேண்டும்.(3) வண்டானது, செடிகளில் தேனைச் சேகரிப்பதைப் போல, ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து {வரியைக்} கறக்க வேண்டும். பசுவின் மடிக்கும் காயமேற்படுத்தாமல், கன்றையும் பட்டினி போடாமல் பால் கறக்கும் ஓர் இடையனைப் போலவே அவன் செயல்பட வேண்டும்.(4) (வரி விதிக்கும் காரியங்களில்) மன்னன், கடுமையில்லாமல் குருதியை உறிஞ்சும் அட்டைப்பூச்சியைப் போலச் செயல்பட வேண்டும். பெண்புலியானது, தன் குட்டிகளைத் தூக்கிச் செல்லும்போது, தன் பற்களால் அவற்றைத் தீண்டினாலும், அவற்றைக் கொண்டு ஒருபோதும் துளைத்திடாததைப் போலவே, அவன் தன் குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.(5) எலியானது கூரிய பற்களைக் கொண்டிருந்தாலும், உறங்கிக்கொண்டிருக்கும் விலங்குகள் அறியாத வண்ணம் அவற்றின் கால்களைக் கடிப்பதைப் போலவே அவன் நடந்து கொள்ள வேண்டும்.(6)

{செழிப்பில்} வளரும் குடிமகனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே எடுக்கவேண்டும், இவ்வழிமுறைகளின் மூலம் அவன் {செல்வத்தை} வெட்டுப்படச் {பகிர்ந்து கொள்ளச்} செய்ய வேண்டும். ஒரு நல்ல விழுக்காட்டை எட்டும் அளவுக்குப் படிப்படியாகத் தேவை {வரி} அதிகரிக்கப்பட்டுப் பெறப்பட வேண்டும்.(7) ஓர் இளங்காளையின் மீது ஒரு மனிதன் படிப்படியாகச் சுமைகளை அதிகரிப்பதைப் போலவே, மன்னனும் தன் குடிமக்களின் மீது படிப்படியாகவே சுமைகளை அதிகரிக்க வேண்டும். அவன், கவனத்துடனும், கடுமையில்லாமலும் செயல்பட்டு, இறுதியாக அவர்களின் மீது கடிவாளங்களைப் பூட்ட வேண்டும்.(8) இவ்வாறு கடிவாளம் பூட்டப்பட்டால், அவர்கள் வசப்படுத்தப்பட முடியாதவர்களாக இருக்க மாட்டார்கள். உண்மையில், அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களைக் கீழ்ப்படிய வைக்க வெறும் கெஞ்சல்கள் மட்டும் போதாது.(9) மனிதர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, சமமாக நடந்து கொள்வது சாத்தியமில்லாதது. முதன்மையானவர்களை இணங்கச் செய்தால் பொதுமக்களும் கீழ்ப்படிவார்கள்.(10)

மன்னன், சுமைகளைச் சுமக்கப் போகும் பொதுமக்களுக்கு மத்தியில் (அவர்களது தலைவர்களுடைய அமைப்புகளின் மூலம்) ஒற்றுமையின்மையை உண்டாக்கி, தானே முன்வந்து அவர்களோடு இணக்கம் செய்த பிறகு, அவர்களிடம் கிடைப்பவற்றைக் கொண்டு அவன் மகிழ்ச்சியடைய வேண்டும்.(11) மன்னன், உரியதல்லாத காலத்திலும், சுமக்க முடியாத மனிதர்களுக்கும் ஒருபோதும் வரிவிதிக்கக் கூடாது. அவன் படிப்படியாக இணங்கச் செய்வதன் மூலமும், உரிய காலத்திலும், முறையான வடிவங்களிலும் அவற்றை விதிக்க வேண்டும்.(12) நான் அறிவிக்கும் இந்தச் சூழ்ச்சிகள் {திட்டங்கள்} சட்டப்படியான ஆட்சித்திறன் வழிமுறைகளாகும். இவை வஞ்சகம் நிறைந்த வழிமுறைகளாக அறியப்படுவதில்லை. முறையற்ற வழிகளில் குதிரைகளை வசப்படுத்தும் வழிமுறைகள் அவற்றைச் சீற்றமடையவே செய்யும்.(13) மதுவிடுதிகளும், பொது மகளிர், காமத்தரகர்கள், நடிகர்கள், சூதாடிகள், சூதாட்ட விடுதி நடத்துவோர் மற்றும் இதே வகையைச் சேர்ந்த பிறர் அனைவரும் {மன்னனால்} தடுக்கப்பட {தடைசெய்யப்பட} வேண்டும். நாட்டுக்குள்ளேயே வசித்து, குடிமக்களில் சிறந்த வர்க்கத்தினரைப் பீடித்துத் துன்புறுத்துபவர்கள் இவர்களே.(15)

எந்தத் துயரமும் இல்லாதபோது, யாரும் எதையும் யாரிமும் கேட்கக் கூடாது. மனிதர்கள் யாவரையும் குறித்த இந்தத் தடையாணையைப் பழங்காலத்தில் மனுவே விதித்திருக்காறர்[1].(16) மனிதர்கள் யாவரும் பணிசெய்யாமல் யாசித்து, அல்லது பிச்சையெடுத்து வாழ நேர்ந்தால், உலகமே அழிவடையும் என்பதில் ஐயமில்லை.(17) மன்னன் மட்டுமே அடக்கவும், தடுக்கவும் தகுந்தவனாவான். தன் குடிமக்களை (பாவத்திலிருந்து) தடுக்காத மன்னன், (அரச பாதுகாப்பின்மையின் விளைவாக) தன் மக்களால் இழைக்கப்படும் பாவத்தின் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான். இதுவே சுருதிகளின் தீர்மானமாகும்.(18) குடிமக்களின் தகுதிகளை {புண்ணியங்களைப்} போலவே மன்னன் அவர்களது பாவங்களையும் பகிர்ந்து கொள்வதால், ஓ! ஏகாதிபதி, அவன் தன் குடிமக்களில் பாவிகளை அடக்க வேண்டும்.(19) அவர்களை அடுக்குவதைப் புறக்கணிக்கும் மன்னன் தானே பாவியாகிறான். (ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல) அவன் அவர்களது தகுதிகளில் நான்கில் ஒரு பாகத்தை ஏற்பதைப் போலவே, அவர்களது பாவங்களிலும் நான்கில் ஒரு பாகத்தை ஏற்கிறான்.(20)

நான் சொல்லும் பின்வரும் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இவை அனைவரையும் வறுமையை அடையச் செய்யும். ஆசையின் {காமத்தின்} ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மனிதன் எந்தத் தீய செயலைத்தான் செய்ய மாட்டான்?(21) ஆசையால் {காமத்தால்} ஆளப்படும் மனிதன், வினையூக்கிகள் {போதை மருந்துகள்}, இறைச்சி ஆகியவற்றை உட்கொண்டு, பிறரின் மனைவியரையும், செல்வத்தையும் தனதுரிமையாக்கி, (பிறரும் அதுபோலச் செய்யும்படி) ஒரு தீய முன்மாதிரியை நிறுவுகிறான்.(22) பிச்சையெடுத்து வாழாதவர்களும் துயர்மிக்கக் காலங்களில் பிச்சையெடுக்கலாம். அறம் நோற்கும் மன்னன், அச்சத்தாலன்றிக் கருணையால் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(23) உன் நாட்டில் பிச்சைக்காரர்களோ, கள்வர்களோ இருக்க வேண்டாம். கள்வர்களே பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள் (நல்லோர் அல்ல). அப்படிக் கொடுப்பவர்கள் உண்மையில் மனிதர்களுக்கு நன்மை செய்பவர்களல்ல.(24) உன் ஆட்சிப்பகுதிகளில் பிறர் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுபவர்களும், பிறருக்கு நன்மை செய்பவர்களும் வசிக்கட்டும், பிறரை அழிப்பவர்கள் அல்ல.(25)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உரியதற்கு மேல் குடிமக்களிடம் இருந்து பெறும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் உரியதை மட்டுமே எடுத்துக் கொள்ளும் வகையில் நீ பிறரை {அவர்களுக்கு மேல்} நியமிக்க வேண்டும்.(26) உழவு, ஆநிரைவளர்த்தல், வணிகம், அதே போன்ற இயல்புடைய பிற செயல்கள் ஆகியன உழைப்புப் பகுப்பு கொள்கையின்படி பலரால் செய்யப்பட வேண்டும்[2].(27) உழவு, கால்நடை வளர்த்தல், அல்லது வணிகத்தில் ஈடுபடும் மனிதன், (கள்வர்கள் மற்றும் கொடுங்கோல் அதிகாரிகளின் விளைவாக) பாதுகாப்பில்லாத உணர்வை அடைந்தால், அதன் விளைவாக மன்னன் புகழ்க்கேட்டையே ஈட்டுவான்.(28) மன்னன் தன் குடிமக்களில் செல்வந்தர்களை எப்போதும் கௌரவித்து, அவர்களிடம், “என்னோடு சேர்ந்து நீங்களும் மக்கள் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுங்கள்” என்று சொல்ல வேண்டும்.(29) அனைத்து நாடுகளிலும் செல்வந்தர்களே அந்த நாட்டின் தோட்டமாக {அங்கமாக} இருக்கிறார்கள். ஒரு செல்வந்தனே மனிதர்களில் முதன்மையானவன் என்பதில் ஐயமில்லை[3].(30)ஞானியாகவோ, துணிவுமிக்கவனாகவோ, செல்வந்தனாகவோ, செல்வாக்குடையவனாகவோ, நீதிமானாகவோ, தவங்களில் ஈடுபடுபவனாகவோ, பேச்சில் உண்மையுள்ளவனாகவோ, நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவோ, இருக்கும் ஒருவனே (சக குடிமக்களைப்) பாதுகாப்பதில் துணைபுரிகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, இக்காரணங்களுக்காகவே நீ உயிரினங்கள் அனைத்தையும் விரும்புபவனாக, உண்மை, நேர்மை, கோபமின்மை, தீங்கிழையாமை ஆகிய பண்புகளை வெளிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.(32) இவ்வாறே தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, உன் கருவூலத்தைப் பெருகச் செய்து, உன் நண்பர்களை ஆதரித்து, உன் நாட்டுக்கு வலுவூட்டும் நீ, உன் நண்பர்கள், கருவூலம் மற்றும் படைகளால் ஆதரிக்கப்பட்டு, உண்மை மற்றும் நேர்மையின் பண்புகளைப் பயில வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)

நாட்டின் இயல்பும், பாதுகாப்பு முறைகளும்! – சாந்திபர்வம் பகுதி – 89-நாட்டின் இயல்பையும், பாதுகாப்பு முறைகளையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “உன் ஆட்சிப்பகுதிகளில், உண்ணத்தக்க கனிகளைத் தரும் மரங்கள் வெட்டப்பட வேண்டாம். கனிகளும், கிழங்குகளும் பிராமணர்களின் உடைமைகளாகும். தவசிகள் இதை அறவிதியாகவே அறிவித்திருக்கிறார்கள்.(1) பிராமணர்களை ஆதரித்த பின்பு மிகையாக இருப்பவை பிற மக்களை ஆதரிக்கப பயன்பட வேண்டும். எவரும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது[1].(2) ஒரு பிராமணன், பிழைத்திருக்க வேண்டிய தேவையால் பீடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை அடைவதற்காக ஒரு நாட்டைக் கைவிட (கைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்ல) விரும்பினால், மன்னன் அவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.(3) மேலும் அவன் அதிலிருந்து (நாட்டைவிட்டுச் செல்வதில் இருந்து) விலகவில்லையெனில், மன்னன் பிராமணர்களின் சபையைக் கூட்டி, “இப்படிப்பட்ட ஒரு பிராமணர் நாட்டை விட்டுச் செல்கிறார். என் மக்கள் தங்கள் வழிகாட்டியாக யாரைக் கண்டடைய வேண்டும்?” என்று கேட்க வேண்டும்[2].(4) இதன் பிறகும் அவன் அங்கிருந்து செல்லும் நோக்கத்தைக் கைவிடாமல் வேறேதும் பேசினால், மன்னன் அவனிடம், “கடந்த காலத்தை மறப்பீராக” என்று சொல்ல வேண்டும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே அரசகடமையின் அழிவில்லா வழியாகும்[3].(5)

மன்னன் மேலும் அவனிடம், “ஓ! பிராமணரே, உண்மையில் ஒரு பிராமணன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான அளவு மட்டுமே அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சொல்கின்றனர். எனினும், நான் அக்கருத்தை ஏற்கவில்லை. மறுபுறம், தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறைகளை வழங்காதிருந்த மன்னனின் புறக்கணிப்பிற்காக ஒரு பிராமணன் ஒரு நாட்டை விட்டுச் செல்ல முனைந்தால், அத்தகு வழிமுறைகள் அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவன் ஆடம்பர வழிமுறைகளை அடையும் நோக்கோடு அதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், அவன் தங்குமாறு வேண்டப்பட்டு, அவ்வழிமுறைகள் அவனுக்கு வழங்கப்பட வேண்டும்[4].(6) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவையே மனிதர்கள் அனைவருக்கும் வாழும் வழிமுறைகளை வழங்குகின்றன. எனினும் வேத அறிவானது, சொர்க்கத்தை அடையும் வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகிறது.(7) எனவே, வேத கல்வியைத் தடுப்பவர்களும், வேத நடைமுறைகளின் காரணத்துக்குத் தடை விதிப்பவர்களும் சமூகத்தின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டும்[5]. இவர்களை அழிக்கவே பிரம்மன் க்ஷத்திரியர்களை உண்டாக்கினான்.(8) உன் எதிரிகளை அடக்கி, உன் குடிகளைக் காத்து, வேள்வியில் தேவர்களை வழிபட்டு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, துணிவுடன் போர்க்களங்களில் போரிடுவாயாக.(9) ஒரு மன்னன் பாதுகாக்கத் தகுந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதைச் செய்யும் மன்னனே ஆட்சியாளர்களில் சிறந்தவனாவான். பாதுகாக்கும் கடமையைப் பயிலாத மன்னர்கள் வீணே வாழ்கிறார்கள்.(10)

ஓ! யுதிஷ்டிரா, மன்னன் தன் குடிமக்கள் அனைவரின் நன்மைக்காக அனைவரின் செயல்பாடுகளையும், எண்ணங்களையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்; அக்காரணத்திற்காகவே அவன் {மன்னன்} ஒற்றர்களையும், இரகசிய முகவர்களையும் நியமிக்க வேண்டும்[6].(11) உன்னவர்களிடம் இருந்து பிறரையும், பிறரிடம் இருந்து உன்னவர்களையும், பிறரிடம் இருந்து பிறரையும், உன்னவரிடம் இருந்து உன்னவரையும் பாதுகாத்து, எப்போதும் உன் மக்களை நீ பேணி வளர்க்க வேண்டும்.(12) மன்னன், முதலில் தன்னை அனைவரிடம் இருந்தும் பாதுகாத்துக் கொண்ட பிறகு பூமியைப் பாதுகாக்க வேண்டும். அனைத்தும் தனக்குள்ளேயே வேரைக் கொண்டுள்ளன என்று ஞானிகள் சொல்கின்றனர்.(13) மன்னன், தன் தவறுகள் என்ன? தான் அடிமைப்பட்டிருக்கும் தீய பழக்கவழக்கங்கள் என்னென்ன? தன் பலவீனத்தின் ஆதாரங்கள் என்னென்ன? தன் தவறுகளின் ஆதாரங்கள் என்னென்ன என்பனவற்றைக் குறித்து எப்போதும் சிந்திக்க வேண்டும்.(14)மன்னன், தான் முந்தைய நாளில் வெளிப்படுத்திய நடத்தையை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நம்பிக்கைக்குரிய இரகசிய முகவர்களை நாடு முழுவதும் திரிய விட வேண்டும்.(15) உண்மையில் அவன் {மன்னன்}, தன் நடத்தை பொதுவாகப் புகழப்படுகிறதா, இல்லையா, அல்லது மாகாணத்து மக்கள் அதை ஏற்கிறார்களா, இல்லையா, அல்லது நாட்டில் நல்ல பெயரை ஈட்டுவதில் அவன் வென்றிருக்கிறானா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, நல்லோர், விவேகிகள், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதோர், உன் நாட்டில் வசிக்காதோர் உன்னைச் சார்ந்திருப்போர், உன் அமைச்சர்கள், எத்தரப்பையும் சாராதவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உன்னைப் புகழவோ, பழிக்கவோ செய்பவர்களை ஒருபோதும் நீ அவமதிக்கக்கூடாது.(17,18) ஓ! ஐயா, உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் நல்ல கருத்தையும் எவனாலும் ஒருபோதும் ஈட்ட முடியாது. ஓ! பாரதா, அனைத்து மனிதர்களும், நண்பர்கள், எதிரிகள் மற்றும் நடுநிலையாளர்களைக் கொண்டுள்ளனர்” என்றார் {பீஷ்மர்}.(19)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கரவலிமை, சாதனை ஆகியவற்றில் இணையாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மத்தியில், ஒருவன் எவ்வாறு எஞ்சிய அனைவரைவிடவும் மேன்மையை அடைகிறான், அவர்களை ஆள்வதில் அவன் வெல்வது எவ்வாறு?” என்று கேட்டான்.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அசையும் உயிரினங்கள், அசையாதனவற்றை விழுங்குகின்றன {உண்கின்றன}; பற்களையுடைய விலங்குகள், பற்களற்றவையை விழுங்குகின்றன; கடும்நஞ்சுமிக்கக் கோபக்கார பாம்புகள் தங்கள் வகையைச் சேர்ந்த சிறு பாம்புகளையே விழுங்குகின்றன. (இந்தக்கொள்கையின்படி மனிதர்களுக்கு மத்தியில் பலவானான மன்னன், பலமற்றவர்களை இரையாகக் கொள்கிறான்).(21) ஓ! யுதிஷ்டிரா, மன்னன், தன் குடிமக்களிடமும், தன் எதரிகளிடமும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவன் கவனமற்றவனாக இருந்தால், அவர்கள் அவன் மீது (அழுகும் பிணங்களின் மீது பாயும்) கழுகுகளாகப் பாய்வார்கள்.(22) ஓ! மன்னா, (விற்பனைக்காக) உயர்வான மற்றும் மலிவான விலைகளில் பொருட்களைக் கொள்முதல் செய்வோரும், தங்கள் பயணங்களின்போது காடுகளிலும், அடைவதற்கரிதான இடங்களிலும் உறங்கவோ, ஓய்வெடுக்கவோ செய்யும் வணிகர்கள், கடும் வரிவிதிப்பால் பீடிக்கப்படாமல் இருக்க வேண்டும்[7].(23) மன்னனின் சுமைகளைச் சுமப்பவர்களும், நாட்டின் பிற குடிமக்களை ஆதரிப்பவர்களுமான உழவர்கள், ஒடுக்குமுறையின் மூலம் உன் நாட்டை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்[8].(24) உன்னால் இவ்வுலகில் கொடுக்கப்படும் கொடைகள், தேவர்களையும், பித்ருக்கள், மனிதர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளையும் ஆதரிக்கின்றன.(25) ஓ! பாரதா, இவையே ஒரு நாட்டை ஆள்தற்கும், அதன் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குமான வழிமுறைகளாகும். ஓ! பாண்டுவின் மகனே, நான் மேலும் இது குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {பீஷ்மர்}.(26)

உதத்தியரும், மாந்தாதாவும்! – சாந்திபர்வம் பகுதி – 90-பிரம்ம முனிவரான உதத்யர், மன்னன் மாந்தாதாவுக்குப் போதித்த அரசநீதியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(முன்னொரு காலத்தில்) வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும் அங்கீரச குலத்தவருமான உதத்தியர் {உசத்தியர்}, யுவனாஸ்வனின் மகனான மாந்தாத்ரியிடம் {மன்னன் மாந்தாதாவிடம்} உற்சாகமாக உரையாடினார்.(1) ஓ! யுதிஷ்டிரா, வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான உதத்தியர், அந்த மன்னனிடம் {மாந்தாதாவிடம்} சொன்ன யாவற்றையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)

உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, “நீதியின் படி செயல்படவே ஒருவன் மன்னனாகிறானேயன்றி கணிக்கமுடியாதபடி நடந்து கொள்வதற்காக அல்ல. ஓ! மாந்தாத்ரி, உண்மையில் மன்னனே இவ்வுலகின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னன் நீதியுடன் செயல்பட்டால், அவன் தேவ நிலையை அடைகிறான். மறுபுறம், அவன் நீதியில்லாமல் செயல்பட்டாலோ அவன் நரகில் மூழ்குகிறான்.(4) அனைத்துயிர்களும் அறத்திலேயே ஓய்ந்திருக்கின்றன. அறமோ மன்னனில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அறத்தை உயர்த்திப் பிடிக்கும் மன்னனே, உண்மையில் மன்னனாவான்.(5) நீதிமிக்க ஆன்மாவையும், அருள்கள் அனைத்தையும் கொண்ட மன்னன் அறத்தின் வடிவம் என்றே சொல்லப்படுகிறான். மன்னன், அநீதியை தண்டிக்கத் தவறினால், தேவர்கள் அவனது மாளிகையைக் கைவிடுவார்கள், மேலும் அவன் மனிதர்களுக்கு மத்தியில் கடுங்கண்டனத்தையீட்டுவான்.(6) தங்கள் கடமைகளை நோற்கும் மனிதர்களின் முயற்சிகள் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும். இதன் காரணமாகவே மனிதர்கள் அனைவரும் செழிப்பை உண்டாக்கும் அறவிதிகளுக்குக் கீழ்ப்படிந்த நடக்க முனைகிறார்கள்.(7)

பாவத்தைக் கட்டுப்படுத்தாதபோது, நீதிமிக்க நடத்தை முடிவுக்கு வந்து, அநீதி பெருமளவில் அதிகரிக்கிறது.(8) பாவம் கட்டுப்படுத்தப்படாதபோது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உடைமை உரிமைகளின்படி, “இஃது எனது, இஃது எனதில்லை” என்று எவனாலும் சொல்லமுடியாது.(9) உலகில் பாவமே மேலோங்கியிருக்கும்போது மனிதர்களால் தங்கள் மனைவியர், விலங்குகள், நிலங்கள் மற்றும் வீடுகளை அனுபவிக்க முடியாது.(10) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, தேவர்கள் எந்த வழிபாட்டையும் பெற மாட்டார்கள், பித்ருக்கள் சிராத்தங்களில் எந்தக் காணிக்கைகளையும் பெற மாட்டார்கள், விருந்தினர்கள் விருந்தோம்பலைப் பெற மாட்டார்கள்.(11) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மறுபிறப்பாள வர்க்கத்தினர் வேதங்களைக் கற்க மாட்டார்கள், அல்லது உயர்ந்த நோன்புகளை நோற்கமாட்டார்கள், அல்லது வேள்விகளைப் பரவ விடமாட்டார்கள்.(12) ஓ! மன்னா {மாந்தாதா}, பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மனிதர்களின் மனமானது, ஆயுதங்களால் காயமடைந்தோரைப் போன்ற, பலவீனத்தையும் குழப்பத்தையும் அடையும் .(13) இம்மையிலும், மறுமையிலும் தங்கள் கண்களைச் செலுத்தும் முனிவர்கள், பூமியில் நீதியின் வடிவமாக இருக்கும் வகையில் மன்னனை மேன்மையானவனாக அமைத்தார்கள்[1].(14) எவனிடம் நீதி ஒளிர்கிறதோ அவனே ராஜன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் எந்த மன்னனிடம் அறமில்லையோ அவன் விருஷலன் என்று அழைக்கப்படுகிறான்[2].(15)எவன் விருஷத்தை {அறத்தை} பலவீனமடையச் செய்கிறானோ அவன் விருஷலன் என்ற பெயரில் அறியப்படுகிறான். எனவே, ஒரு மன்னன் அறத்திற்கான காரணத்தை முன்னேற்ற வேண்டும்.(16) அனைத்துயிரினங்களும் அறத்தின் வளர்ச்சியில் வளர்கின்றன, அதன் சிதைவில் அழிகின்றன. எனவே, அறம் அழிய ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) செல்வத்தை (தனத்தை) அடைந்து, பாதுகாக்கத் துணைபுரியும் காரணத்தால் நீதியே தர்மம் {அறம்} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, தவசிகள், தர்மமே மனிதர்களின் அனைத்துத் தீய செயல்களையும் கட்டுப்படுத்தி, எல்லைகளை நிர்ணயிக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.(18)தான்தோன்றி (பிரம்மன்), உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகவே தர்மத்தை {அறத்தை} உண்டாக்கினான். இதன் காரணமாகவே, ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்காக அறவிதிகளின்படி செயல்பட வேண்டும்.(19) மேலும், இதே காரணத்திற்காகவே, ஓ! மனிதர்களில் புலியே {மந்தாதா}, அனைத்திலும் முதன்மையானதாகத் தர்மம் {அறம்} சொல்லப்படுகிறது. மனிதர்களில் முதன்மையான எவன், தன் குடிமக்களை நீதியுடன் ஆள்கிறானோ, அவனே மன்னன் என்று அழைக்கப்படுகிறான்.(20)

காமத்தையும், கோபத்தையும் அலட்சியம் செய்து, அறவிதிகளை நீ நோற்பாயாக. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் செழிப்புக்கு உகந்ததாக இருக்கும் அறமே அனைத்திலும் முதன்மையானது.(21) மேலும், தர்மமானது பிராமணனிடம் இருந்து உண்டானது. இதன்காரணமாகவே, எப்போதும் பிராமணன் வழிபடப்பட வேண்டும். ஓ! மாந்தாத்ரி, நீ பிராமணர்களின் விருப்பங்களைப் பணிவுடன் நிறைவு செய்வாயாக.(22) பிராமணர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதைப் புறக்கணித்தால், மன்னன் தனக்கு ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறான். அத்தகு புறக்கணிப்பின் விளைவால் அவன், நண்பர்கள் எவரையும் அடைவதில் தவறி, தன் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறான்.(23)

விரோசனன் மகனான அசுரன் பலியின் {மகாபலியின்}மூடத்தனத்தால் எழுந்த பிராமணர்களுக்கு எதிரான வன்மத்தின் விளைவாக, முன்பு அவனிடமே {மகாபலியிடமே} வசித்திருந்த செழிப்பின் தேவி {திருமகள்} அவனைக் கைவிட்டாள்.(24) அவள் {திருமகள்}, அந்த அசுரனைக் கைவிட்டுத் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்றாள். புரந்தரனுடன் {இந்திரனுடன்} வாழும் அந்தத் தேவியைக் கண்ட பலி, பலவாறாக வீண் வருத்தமடைந்தான்.(25)

ஓ! பலமிக்கவனே {மந்தாதா}, இதுவே வன்மம் மற்றும் செருக்கின் விளைவாகும். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, செழிப்பின் தேவி {திருமகள்} கோபத்தில் உன்னைக் கைவிடாதவாறு நீ விழிப்புடன் இருப்பாயாக.(26) அநீதியானது {அதர்மமானது}, செழிப்பின் தேவியிடம் {திருமகளிடம்} செருக்கு {அகங்காரம்} என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றது என்று சுருதிகள் அறிவிக்கின்றன. ஓ! மன்னா {மந்தாதா}, இந்தச் செருக்கே தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு மத்தியில் பலரை அழிவடையச் செய்தது.(27) அவனால் {செருக்கால்} அரசமுனிகள் பலரும் அழிவை அடைந்திருக்கின்றனர். எனவே, ஓ! மன்னா, நீ விழிப்படைவாயாக. அவனை {செருக்கை} வெற்றிகொள்வதில் வெல்பவனே மன்னனாகிறான். மறுபுறம், அவனால் {செருக்கால்} வெற்றி கொள்ளப்படுபவன் எவனோ, அவன் ஓர் அடிமையே ஆகிறான்.(28) ஓ! மாந்தாத்ரி, நீ அழிவில்லா (புகழ்) வாழ்வை விரும்பினால், செருக்கு மற்றும் அநீதி {அதர்மம்} ஆகிய இரண்டிலும் ஈடுபடாத ஒரு மன்னனாக வாழ்வாயாக.(29) (செருக்கால்) போதையுண்டிருப்பவன், (நேர்மையின் விதிகளில்) அலட்சியமாக இருப்பவன், அறத்தை ஏளனம் செய்பவன், உணர்வற்றவன், ஒன்றுசேர்ந்திருக்கும் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து கொள்பவன் ஆகியோரின் தோழமையைத் தவிர்ப்பாயாக.(30)

முன்பு உன்னால் தண்டிக்கப்பட்டவன், அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிமித்தமாகத் தண்டிக்கப்பட்ட அமைச்சர்களின் தோழமை, மலைகள், சமமற்ற நிலங்கள், அடைவதற்கரிதான காடுகள், யானைகள், குதிரைகள் மற்றும் நச்சுப்பாம்புகள் ஆகிவற்றிடம் இருந்து விலகிச் செல்வாயாக. நீ இரவில் திரிவதைக் கைவிட வேண்டும். மேலும், கஞ்சத்தனம், பகட்டு, தற்புகழ்ச்சி, கோபம் ஆகிய பிழைகளையும் நீ தவிர்க்க வேண்டும்.(32) அறியாத பெண்களிடமோ, இருபாலினத்தோரிடமோ {பேடிகளிடமோ}, காமவெறிபிடித்தவர்களிடமோ, பிறரின் மனைவியரிடமோ, திருமணமாகாத கன்னியரிடமோ நீ ஒருபோதும் உடலுறவில் ஈடுபடக்கூடாது.(33) தீயொழுக்கத்தை மன்னன் கட்டுப்படுத்தாத போது, வர்ணக் குழப்பம் பின்தொடரும், மதிப்பிற்குரிய குடும்பங்களில் கூட, பாவம் நிறைந்த ராட்சசர்களும், அலிகளும், உறுப்பிழந்த பிள்ளைகளும், தடித்த நா படைத்தவர்களும், மூடர்களும் பிறப்பெடுக்கத் தொடங்குவார்கள்.(34) எனவே, மன்னன் தன் குடிமக்களுக்கு நன்மை செய்வதன் பொருட்டு, நீதியுடன் செயல்படக் குறிப்பான கவனத்தைக் கொள்ள வேண்டும்.(35)

ஒரு மன்னன் கவனமில்லாமல் செயல்பட்டால், அதன் விளைவாகப் பெருந்தீமையே விளையும். அநீதியானது {அதர்மமானது} அதிகரித்தால், அது வர்ணக்குழப்பத்தையே உண்டாக்கும்.(36) கோடைகால மாதங்களில் குளிர் ஏற்பட்டு, அதற்குரிய காலம் வரும்போது மறைந்துபோகும். வறட்சி, வெள்ளம், தொற்றுநோய்கள் ஆகியன மக்களைப் பீடிக்கும்.(37)

அத்தகு தருணங்களில், தீமை விளைவிக்கும் நட்சத்திரங்கள் எழுந்து, பயங்கரமான எரிநட்சத்திரங்கள் தோன்றும். நாட்டின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் பிறவும் தோன்றும்(38) மன்னன் தன் பாதுகாப்புக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், தன் குடிமக்களையும் பாதுகாக்காமல் இருந்தால், முதலில் பின்னவர்களுக்கு {குடிமக்களுக்கு} அழிவு ஏற்பட்டு, பிறகு அந்த அழிவானது மன்னனையே பற்றும்.(39) இரு மனிதர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவனின் செல்வத்தைப் பறிப்பார்கள், குழுவாகச் செயல்படும் பலர் அந்த இருவரிடமும் கொள்ளையடிப்பார்கள். கன்னியரின் கற்பு அழிக்கப்படும். அத்தகு நிலைகள் மன்னனின் பிழைகளில் இருந்தே உண்டாகின்றன என்று சொல்லப்படுகிறது.(40) மன்னன் அறத்தைக் கைவிட்டு, கவனமில்லாமல் செயல்பட்டால், மனிதர்களுக்கு மத்தியில், உடைமைக்கான உரிமைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்” என்றார் {உதத்தியர்}.(41)

உதத்தியர் சொன்ன அரசகடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 91-மன்னன் நீதியுடன் செயல்படாவிட்டால் நடப்பதென்ன? பலவீனமே பெரியது என்பதேன்? துன்புறுபவனின் கண்ணீர் செய்வதென்ன? மன்னனின் கடமைகள் என்னென்ன? மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு என்பது குறித்து, உதத்ய முனிவர் மன்னன் மாந்தாதாவுக்குச் சொன்னதைப் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, “மேகங்களின் தேவன் {இந்திரன்}, {உரிய} காலத்தில் மழையைப் பொழிந்து, அதே போல, மன்னனும் அறம்சார்ந்த செயல்பட்டால் விளையும் செழிப்பு, குடிமக்களைப் புகழில் நிலைக்கச் செய்யும்.(1) துணியின் சாயத்தை வெளுக்க விடாமல் அழுக்கை அகற்றத் தெரியாத வண்ணான், தன் தொழில் மிகவும் திறனற்றவன் ஆவான்.(2) பிராமணர்களிலோ, க்ஷத்திரியர்களிலோ, வைசியர்களிலோ எந்த மனிதனும், தன் வகைக்கு உரிய கடமைகளில் இருந்து வீழ்ந்து சூத்திரனானால் அவன், உண்மையில் அத்தகு வண்ணானுடன் ஒப்பிடத்தகுந்தவனே. உடல்சார்ந்த தொண்டு சூத்திரனையும்; உழவு வைசியனையும், தண்டனை அறிவியல் க்ஷத்திரியனையும், பிரம்மச்சரியம், தவங்கள், மந்திரங்கள், உண்மை ஆகிய பிராமணனையும் பிணைக்கின்றன.(4) பிறரின் நடத்தையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், வண்ணானைப்போல அவற்றைத் தூய்மையாக்கவும் அறிந்த க்ஷத்திரியனே உண்மையில் அவர்களின் தந்தையாகவும், அவர்களது மன்னனாகவும் இருக்கத் தகுந்தவனாவான்.(5)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {மாந்தாதா}, முறையே கிருதம், திரேதம், துவாபரம், கலி என்றழைக்கப்படும் காலங்கள் அனைத்தும் மன்னனின் நடத்தையைச் சார்ந்தே இருக்கின்றன. மன்னனே காலமாக இருக்கிறான்[1].(6) மன்னன் கவனமற்றவனாக {அலட்சியம் உள்ளவனாக} இருந்தால், நான்கு வகையினர், வேதங்கள், நான்கு வாழ்வு முறைகளின் கடமைகள் ஆகிய அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகி பலவீனமடையும்.(7) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மூன்று வகை நெருப்புகள், மூன்று வேதங்கள், தக்ஷிணையுடன் கூடிய வேள்விகள் ஆகிய அனைத்தும் தொலைந்து போகும்.(8) மன்னனே அனைத்து உயிரினங்களை உண்டாக்குபவனும், அழிப்பவனும் ஆவான். நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் படைப்பவனாகக் கருதப்படுகிறான், அதே வேளையில், பாவம் நிறைந்தவனோ அழிப்பவனாகக் கருதப்படுகிறான்.(9) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மன்னனின் மனைவியர், மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாகி துயரில் ஈடுபடுவார்கள்.(10)மன்னன் நீதியற்றவனாக மாறும்போது, யானைகள், குதிரைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், கழுதைகள் மற்றும் பிற விலங்குகள் அனைத்தும் தங்கள் உடலுறுதியை இழக்கும்.(11) ஓ! மாந்தாத்ரி, பலவீனரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே {பிரம்மன்} படைப்பாளன் (மன்னனின் வடிவில்) பலத்தை உண்டாக்கினான். பலவீனத்தைச் சார்ந்தே அனைத்தும் இருப்பதால், உண்மையில், அதுவே பெரியது[2].(12) அனைத்து உயிரினங்களும் மன்னனை வழிபடுகின்றன. அனைத்து உயிரினங்களும் மன்னனுக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. எனவே, ஓ! ஏகாதிபதி {மந்தாதா}, நீதியில்லாதவனானால், அனைத்து உயிரினங்களும் துயரடையும்.(13) பலவீனர், முனிவர் ஆகியோரின் கண்கள் மற்றும் கடும்நஞ்சுமிக்கப் பாம்பின் கண்கள் ஆகியவை பொறுத்துக்கொள்ள முடியாதவையாகக் கருதப்பட வேண்டும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(14) பலவீனர்கள் எப்போதும் அவமதிக்கப்படத் தகாதவர்களாக உன்னால் கருதப்பட வேண்டும். பலவீனரின் கண்கள் உன்னையும், உன் உறவினர்களையும் எரித்துவிடாமல் இருக்கக் கவனம் கொள்வாயாக.(15)பலவீனரின் கண்களால் எரிக்கப்பட்ட ஒரு குலத்தில் பிள்ளைகள் பிறப்பதில்லை. அத்தகு கண்கள் குலத்தின் வேரையே அழித்துவிடும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(16) பலவீனரால் எரிக்கப்படும் பலம் முற்றிலும் அழிவை அடைகிறது என்பதால் எந்தப் பெரும்பலத்தையும்விடப் பலவீனமே பலமிக்கது.(17) அவமதிக்கபடும், அல்லது தாக்கப்படும் மனிதன் ஒருவன், துணைக்காகக் கதறியும் பாதுகாவலனை அடையத் தவறினால், தெய்வீகத் தண்டனை மன்னனை அடையும், அஃதுவே அவனுக்கு அழிவையும் கொண்டுவரும்.(18) ஓ! ஐயா, அதிகாரத்தை அனுபவிக்கும்போது, பலவீனரின் செல்வத்தை ஒருபோதும் அபகரியாதே. சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பலவீனரின் கண்கள் உன்னை எரித்துவிடாதிருப்பதில் கவனம் கொள்வாயாக.(19) பொய்மையால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் மனிதனின் கண்ணீரானது, அந்தப் பொய்களைச் சொன்னோரின் பிள்ளைகளையும், விலங்குகளையும் கொன்றுவிடும்.(20)

இழைக்கப்பட்ட பாவச்செயல் ஒரு பசுவைப் போல உடனடி பலன்களை உண்டாக்காது[3]. பாவமிழைத்தவனிடம் அப்பலன் தென்படவில்லையென்றால், அஃது அவனது மகன், அல்லது மகனின் மகன், அல்லது மகளின் மகனிடம் தென்படும்.(21) ஒரு பலவீனன் பாதுகாவலனை அடையத் தவறும்போது, தெய்வீகத் தண்டனை என்ற பெரும் தண்டம் (மன்னனின் மீது) {நாட்டின் மீது} பாயும்.(22) ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும் (துன்பத்திற்கு ஆட்பட்டு) பிராமணர்களைப் போலப் பிச்சையெடுக்க நேர்ந்தால், அந்தப் பிச்சையெடுக்கும் நிலையானது மன்னனுக்கு அழிவைக் கொண்டுவரும்.(23) மாகாணங்களில் உள்ள மன்னனின் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியில்லாமல் செயல்பட்டால், அம்மன்னன் தன் நாட்டில் கலப்படமில்லாத தீமையைக் கொண்டு வருகிறான் என்று சொல்லப்படுகிறது.(24) மன்னனின் அதிகாரிகள், நியாயமில்லாத வழிமுறைகளின் மூலமோ, காமம் மற்றுப் பேராசையால் செயல்பட்டோ, கருணையை வேண்டும் பரிதாபகரமான மனிதர்களிடம் இருந்து செல்வத்தைப் பறிக்கும்போது, அந்த மன்னனுக்கும் நிச்சயம் பேரழிவு ஏற்படும்.(25)ஒரு பெரிய மரம், முதலில் தன் வாழ்வைத் தொடங்கிப் பெரும் அளவுகளில் வளர்கிறது. அதன்பின், எண்ணற்ற உயிரினங்கள் வந்து அதனிடம் உறைவிடத்தை நாடுகிறார்கள். எனினும், அது வெட்டப்படும்போதோ, காட்டுத்தீயால் எரிக்கப்படும்போதோ, அதனிடம் உறைவிடம் கொண்டவை அனைத்தும் வீடுகளற்றதாகின்றன[4].(26) நாட்டில் வசிப்போர், அறச்செயல்களையும், அறச்சடங்குகள் அனைத்தையும் செய்து, மன்னனின் நற்குணங்களை மெச்சும்போது, அவன் செல்வாக்கை அறுவடைசெய்கிறான். மறுபுறம், குடிமக்கள் அறியாமை கொண்டோராக அறத்தைக் கைவிட்டு, நீதியில்லாமல் நடந்து கொண்டால், அம்மன்னன் துன்பத்துக்கு ஆளாவான்.(27) என்ன செயல் செய்வார்கள் என்று அறியப்பட்ட பாவிகள், (அவர்களது குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படாமல்) நல்லோர் மத்தியில் உலவ அனுமதிக்கப்பட்டால், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கலி அடையும். தீயவர்கள் அனைவரையும் மன்னன் தண்டிக்கும்போது, அவனது நாட்டில் செழிப்பு தழைத்தோங்கும்.(28) எந்த மன்னன், தன் அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளித்து, கொள்கை நடைமுறைகளிலும், போர்களிலும் அவர்களை நியமிக்கிறானோ, அவனது நாடு நிச்சயம் தழைத்தோங்கும்.(29) எந்த மன்னன், நற்செயல்கள் மற்றும் நற்சொற்கள் அனைத்தையும் முறையாகக் கௌரவிக்கிறானோ, அவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான்.(30)பிறருடன் பகிர்ந்து கொண்ட பிறகு நல்ல பொருட்களை அனுபவிப்பது, அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளிப்பது, பலம் எனும் போதையில் இருப்போரைஅடக்கி வைத்தல் ஆகியவையே மன்னனின் பெருங்கடமை என்று சொல்லப்படுகிறது.(31) சொற்கள், உடல், செயல்களால் மனிதர்கள் அனைவரையும் பாதுகாத்து, (குற்றமிழைத்தால்) தன் மகனேயானாலும் ஒருபோதும் மன்னிக்காமல் இருப்பதும் மன்னனின் பெரும் கடமையாகும்.(32) பொருட்களைப் பலவீனருடன் பகிர்ந்து கொண்டு பராமரித்து, அதன்மூலம் அவர்களது பலத்தை அதிகரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(33) நாட்டைப் பாதுகாப்பது, கள்வர்களை அழிப்பது, போரில் வெல்வது ஆகியன மன்னனின் கடமையாகும்.(34) செயலாலோ, சொல்லாலோ அன்புக்குரியவனே கூடக் குற்றமிழைத்தாலும், அவனை ஒரு போதும் மன்னிக்காததும் மன்னனின் கடமையாகும்.(35)

உறைவிடம் வேண்டுவோருக்குப் பாதுகாப்பளித்துத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே தன் மக்களைப் பாதுகாக்கும் அவன், ஒருவனுக்கு உரிய கௌரவங்களை ஒருபோதும் பறிக்காமல் இருப்பதும் மன்னனின் கடமையாகும்[5].(36) கொடைகளால் நிறைவுபெறும் வேள்விகளில், காமத்தையும், பொறாமையையும் அடக்கி, அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் தேவர்களைத் துதிப்பதும் மன்னனின் கடமையாகும்.(37) துன்புறுவோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும் மன்னனின் கடமையாகும்.(38) நண்பர்களை வளர்ப்பதும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவதும், நல்லோரைக் கௌரவிப்பதும் மன்னனின் கடமையாகும்.(39) உண்மையின் கடப்பாடுகளை உற்சாகமாக நோற்பதும், எப்போதும் நிலக்கொடைகள் அளிப்பதும், விருந்தினர்களை உபசரிப்பதும், சார்ந்தோரை ஆதரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(40)உதவிகளுக்குத் தகுந்தோருக்கு உதவுபவனும், தண்டைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனுமான மன்னன், இம்மையிலும், மறுமையிலும் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(41) மன்னனே யமனாவான். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, நீதிமிக்கவர் அனைவருக்கும் அவனே (அவதாரம் செய்திருக்கும்) தேவனாவான். அவன், தனது புலன்களைக் கட்டுப்படுத்துவதால் பெரும் செல்வாக்கை அடைவதில் வெல்கிறான். அவற்றைக் கட்டுப்படுத்தாததால் பாவத்தையே ஈட்டுகிறான்[6].(42) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் மற்றும் அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்போர் ஆகியோருக்கு உரிய கௌரவங்களை அளிப்பதும் மன்னனின் கடமையாகும்.(43) யமன் உயிரினங்கள் அனைத்திடமும் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் முறையாகக் கட்டுப்படுத்தும் நடத்தையில் அவனையே {யமனையே} பின்பற்ற வேண்டும்.(44) மன்னனானவன், அனைத்து வகையிலும் ஆயிரங்கண்ணோனுக்கு (இந்திரனுக்கு) ஒப்பானவனாகச் சொல்லப்படுகிறான். நீதியும் அவனால் அதே போலவே கருதப்படுகிறது.(45)நீ கவனமில்லாதவனாக இருக்காமல், மன்னிக்கும் குணம், நுண்ணறிவு, பொறுமை, அனைத்து உயிரினங்களிடமும் அன்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். மேலும் நீ மனிதர்கள் அனைவரின் பலம் மற்றும் பலவீனங்களையும் உறுதி செய்து கொண்டு, நல்லோர் மற்றும் தீயோரை வேறுபடுத்திப் பார்க்க கற்க வேண்டும்.(46) நீ அனைத்து உயிரினங்களிடமும் நியாயமாக நடந்து கொண்டு, கொடைகள் அளித்து, ஏற்புடைய இனிய சொற்களையே பேச வேண்டும். நீ உன் நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள குடிமக்களை மகிழ்ச்சியுடன் பராமரிக்க வேண்டும்.(47) புத்திக்கூர்மை இல்லாத மன்னன் தன் குடிமக்களைக் காப்பதில் ஒருபோதும் வெல்ல மாட்டான். ஓ! ஐயா, அரசுரிமை என்பது தாங்கிக் கொள்ளப் மிகக்கனமானதாகும்.(48) ஞானமும், துணிவும் கொண்டவனும், தண்டனை அறிவியலை அறிந்தவனுமான மன்னனால் மட்டும் ஒரு நாட்டைக் காக்க முடியும். மறுபுறம், சக்தியும், நுண்ணறிவு இல்லாதவனும், பெரும் அறிவியலை அறியாதவனுமாக இருந்தால், அவன் அரசுரிமையின் கனத்தைச் சுமக்க இயன்றவனல்ல.(49) நற்பண்புகள் மற்றும் நற்குடி பிறப்பு, தொழில் புத்திக்கூர்மை, தலைவனிடம் அர்ப்பணிப்பு, பெரும் கல்வியுடைமை ஆகியவற்றுடன் கூடிய அமைச்சர்களின் துணை கொண்டு நீ, காடுகளில் உள்ள தவசிகளையும் சேர்த்து மனிதர்கள் அனைவரின் இதயங்களையும், செயல்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.(50)

இவ்வாறு உன்னை நடத்திக் கொண்டால் உன்னால் அனைத்து வகை மனிதர்களின் கடமைகளையும் கற்க முடியும். நீ உன் நாட்டில் இருக்கும் போதோ, அல்லது பிற நாடுகளுக்குச் செல்லும்போதோ உன் கடமைகளை நோற்பதற்கு அஃது {அந்நடத்தை} உதவி செய்யும். (51) அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூன்றில் அறமே முதன்மையானதாகும். அற ஆன்மா கொண்ட ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பெருமகிழ்ச்சியை அடைகிறான்.(52) மனிதர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், (நீ அவர்களுக்கு அளிக்கும் கௌரவத்தின் நிமித்தமாக அவர்கள்) தங்கள் மனைவியரையும், மகன்களையும் கூடக் கைவிடுவார்கள். கொடைகள், இனிய சொற்கள், அக்கறை, தூய நடத்தை ஆகியவற்றின் மூலம், (அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்பதன் மூலமும்) நல்ல மனிதர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன் பெருஞ்செழிப்பை வெல்கிறான். எனவே, ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, இந்தப் பண்புகளிலும், செயல்களிலும் அக்கறையில்லாமல் இருக்காதே.(53,54) மன்னன், தன் குறைகளைக் கட்டுப்படுத்துவதிலும், தன் எதிரிகளின் குறைகளைக் கண்காணிப்பதிலும் ஒருபோதும் அக்கறையில்லாம்ல இருக்கக்கூடாது. அவன் தன் எதிரிகள் தன் குறைகளைக் காண முடியாதவாறு செயல்பட்டு, அவர்களுடைய குறைகள் தென்படும்போதெல்லாம் தாக்கவும் வேண்டும்.(55)

வாசவன் {இந்திரன்}, யமன், வருணன் மற்றும் பெரும் அரசமுனிகள் அனைவரும் இவ்வழியிலேயே செயல்பட்டிருக்கின்றனர். நீயும் அதே நடத்தையை நோற்பாயாக.(56) ஓ! பெரும் மன்னா (மாந்தாதா), அந்த அரசமுனிகள் பின்பற்றிய நடத்தையையே நீயும் பின்பற்றுவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {மந்தாதா}, நீ விரைவில் இந்தத் தெய்வீகப் பாதையைப் பின்பற்றுவாயாக.(57) பெருஞ்சக்தி கொண்ட தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள் ஆகியோர் நீதிமிக்க நடத்தை கொண்ட மன்னின் புகழை இம்மையிலும், மறுமையிலும் பாடுவார்கள்” என்றார் {உதத்தியர்}”.(58)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உதத்யரால் இவ்வாறு சொல்லப்பட்ட மாந்தாத்ரி {மாந்தாதா}, தயங்காமல் அவர் சொன்னது போலச் செய்து, இந்தப் பரந்த பூமியின் ஒரே தலைவனானான்.(59) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் மாந்தாத்ரியை {மாந்தாதாவைப்} போல நீதியுடன் நடந்து கொள்வாயாக. அப்போதுதான், நீ பூமியை ஆண்ட பிறகு, சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(60)

வாமதேவரும், வசுமனஸும்! – சாந்திபர்வம் பகுதி – 92-செங்கோலின் சிறப்பு மற்றும் கொடுங்கோலின் இழிவு ஆகியவை குறித்து வாமதேவர் வசுமனசுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறத்தின் பாதையைப் பின்பற்ற விரும்பும் ஒரு நீதிமிக்க மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, ஓ! பாட்டா {பீஷ்மரே}, கேட்கும் எனக்குப் பதில் அளிப்பீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவரும், பழங்காலத்தில் பாடப்பட்ட அனைத்தின் உண்மையை அறிந்தவருமான வாமதேவர் என்ன சொன்னார் என்பது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில், அறிவு, மனோவுறுதி, தூய நடத்தை ஆகியவற்றைக் கொண்ட {கோசல நாட்டு} மன்னன் வாசுமனஸ், உயர்ந்த தவத்தகுதியை உடைய பெரும் முனிவர் வாமதேவரிடம்,(3) “ஓ! புனிதமானவரே, எந்த நடத்தையைப் பின்பற்றுவதால் நான் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாமல் இருப்பேன் என்பதை, முக்கியத்துவமும் அறமும் நிறைந்த வார்த்தைகளில் எனக்குக் கற்பிப்பீராக” என்று கேட்டான்.(4) தவசிகளில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவருமான வாமதேவர், நகுஷனின் மைந்தனான யயாதியைப் போலச் சுகமாக வீற்றிருந்த அந்தத் தங்க நிறத்தோனிடம் {வசுமனஸிடம்} பின்வருமாறு சொன்னார்.(5)

வாமதேவர் {வாசுமனஸ்}, “நீ நீதியுடன் நடந்து கொள்வாயாக. நீதிக்கும் {அறத்துக்கும்} மேன்மையானது ஏதும் இல்லை. அறம் நோற்கும் மன்னர்கள் மொத்த உலகையும் வெற்றி கொள்வதில் வெல்கிறார்கள்.(6) தன் நோக்கங்களைச் சாதிப்பதில் எதிர்பார்க்கும் விளைவைத் தரவல்ல வழிமுறைகளையே நீதியாகக் கருதி, நல்லோரின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், நீதியுடன் சுடர்விடுகிறான்.(7) அறத்தை அலட்சியம் செய்து, முரட்டு பலத்துடன் செயல்பட விரும்பும் மன்னன் விரைவில் அறத்திலிருந்து விழுந்து, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் இழக்கிறான்.(8) குற்றமுள்ளவனும், பாவியுமான ஓர் அமைச்சனின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், அறத்தை அழிப்பவனாகி, தன் குடும்பம் அனைத்துடன் சேர்த்து, தன் குடிமக்களால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். உண்மையில், அவன் மிக விரைவில் அழிவை அடைவான்.(9) அரசகலையின் கடமைகளை வெளிப்படுத்த இயலாதவனும், தன் செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியின்மையால் {சபலத்தால்} ஆளப்படுபவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனுமான மன்னன் மொத்த பூமியின் ஆட்சியாளனாகவே இருந்தாலும், விரைவில் அழிவை அடைவான்.(10)

மறுபுறம், செழிப்பை விரும்புபவனும், வன்மமற்றவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனுமான மன்னன், நூற்றுக்கணக்கான ஆறுகளால் நிரப்பப்பட்டுப் பெருகும் பெருங்கடலைப் போல வளமையில் தழைத்தோங்குவான்.(11) அவன் அறம், இன்பம், செல்வம், நுண்ணறிவு மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் நிறைவு {போதுமான அளவுக்குக்} கொண்டவனாகத் தன்னை ஒருபோதும் கருதக்கூடாது[1].(12) உலகின் ஒழுக்கம் இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இந்த ஆலோசனைகளைக் கேட்பதால் ஒரு மன்னன், புகழ், சாதனைகள், செழிப்பு மற்றும் குடிமக்களை அடைகிறான்.(13) அறத்திற்குத் தன்னை அற்பணித்துக் கொண்டு, இத்தகு வழிமுறைகளின் மூலம் அறம் மற்றும் செல்வத்தை அடைய முனைபவனும், தன் திட்டங்கள் அனைத்திலும் அவற்றின் நோக்கங்கள் குறித்துச் சிந்தித்தபிறகு தொடங்குபவனுமான மன்னன், பெருஞ்செழிப்பை அடைவதில் வெல்கிறான்.(14)கஞ்சனும், பற்றில்லாதவனும், முறையற்ற தண்டனைகளால் தன் குடிமக்களைப் பீடிப்பவனும், தன் செயல்பாடுகளில் முரடனுமாம மன்னன் விரைவில் அழிவை அடைகிறான்.(15) நுண்ணறிவைக் கொடையாகக் கொள்ளாத மன்னன், தன் குற்றங்களைக் காணத் தவறுகிறான். அவன் இம்மையில் புகழ்க்கேட்டிலும், மறுமையில் நரகிலும் மூழ்குகிறான்.(16) மன்னன், கௌரவிக்கத் தகுந்தவர்களுக்கு அஃதை அளித்து, இனிமையான பேச்சின் மதிப்பை உணர்ந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் அப்படியே பேசினால், அவனுக்கு ஏற்படும் பேரிடரைத் குடிமக்கள் தங்களுக்கே ஏற்பட்டதாகக் கருதி, அதிலிருந்து அவனை விடுவிப்பார்கள்.(17) அறவழிகள் போதிப்பவர் எவரும் இல்லாதவனும், பிறரின் ஆலோசனைகளை ஒருபோதும் கேளாதவனும், உறுதியற்ற வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைபவனுமான மன்னன், நீடித்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை.(18) மறுபுறம், அறம் தொடர்புடைய காரியங்களில் தன் ஆசானின் அறிவுரைகளைக் கேட்பவனும், தன் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தானே கண்காணிப்பவனும், அனைத்தையும் அடைவதில் அறக்கருத்துகளால் வழிநடத்தப்படுபவனுமான மன்னன், நீண்டகால மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்” என்றார் {வாமதேவர்}.

அரசதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 93-மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு? மன்னன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்வதெப்போது? மன்னனின் கண்காணிப்பு இருக்க வேண்டியதெப்படு என்பதை வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்…

வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} தொடர்ந்தார், “பலமிக்கவனான மன்னன், பலவீனரிடம் நீதியில்லாமல் நடந்து கொள்ளும்போது, அவனது குலத்தில் பிறந்தோரும் அதே நடத்தையே பின்பற்றுவார்கள்.(1) மேலும், பாவம் செய்யும் அந்த இழிந்தவனைப் பிறரும் பின்பற்றுவார்கள். அவ்வாறு பின்பற்றும் மனிதன் {மன்னன்}, கட்டுப்பாடுகளால் அடக்கப்படவில்லையென்றால், அவனது அத்தகு செயலே விரைவில் நாட்டுக்கு அழிவைக் கொண்டுவரும்.(2) தனக்குரிய கடமைகளை நோக்கும் மன்னனின் நடத்தையானது, பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாக மனிதர்களால் பொதுவாக ஏற்கப்படுகிறது. எனினும், தன் கடமைகளில் இருந்து வீழும் ஒரு மன்னன், தன் உறவினர்களால் கூடப் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டான்[1].(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள ஆணைகளை அலட்சியம் செய்யும் முரட்டு மன்னன், தன் நாட்டில் வரம்பைமீறிச் செயல்பட்டு, மிகவிரைவில் அழிவை அடைகிறான்.(4)

பழங்காலத்தில் இருந்து வெற்றிகொள்ளப்பட்ட அல்லது வெல்லப்படாத வேறு க்ஷத்திரியர்களின் நடத்தையை எந்த க்ஷத்திரியன் பின்பற்றவில்லையோ, அவன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[2].(5) ஒரு போரில் வெற்றிக் கொண்ட எந்த மன்னன், முன்னொரு சமயம் தனக்கு ஏதோ நன்மையைச் செய்த அரச எதிரியைக் கைப்பற்றி, வன்மத்துடன் செயல்பட்டு, அவனுக்கு உரிய கௌரவத்தை அளிக்கவில்லையோ, அவன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(6) மன்னன், தன் பலத்தை வெளிக்காட்டி, உற்சாகமாக வாழ வேண்டும், ஆபத்துக் காலங்களில் என்ன தேவையோ, அதையும் செய்ய வேண்டும். அத்தகு ஆட்சியாளன் அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்பட்டு, செழிப்பில் இருந்து ஒரு போதும் வீழாதிருப்பான்.(7) நீ எவனோ ஒருவனுக்குப் பொல்லாங்கு செய்தால், காலம் வரும்போதும் நீ அவனுக்குத் தொண்டு {நல்லது} செய்ய வேண்டும். விரும்பப்படாத ஒருவனும், ஏற்புடையதைச் செய்யும்போது அன்புக்குரியவனாகிறான்[3].(8)பொய்மை தவிர்க்கப்பட வேண்டும். வேண்டப்படாமலேயே {கேட்காமலேயே} நீ பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். காமத்தாலோ {ஆசையாலோ}, கோபத்தாலோ, வன்மத்தாலோ நீ ஒருபோதும் நீதியைக் கைவிடக்கூடாது.(9) எவராலும் கேள்வி கேட்கப்படும்போது, கடுமையான பதில்களைக் கொடுக்காதே. கண்ணியமற்ற சொற்களைப் பேசாதே. எதையும் செய்ய ஒருபோதும் அவசரப்படாதே. வன்மத்தில் ஒருபோதும் ஈடுபடாதே. இத்தகு வழிமுறைகளால் ஓர் எதிரியும் வெல்லப்படுவான்.(10) ஏற்புடைய ஏதும் நடந்தால் மிகைப்பட்ட வகையில் மகிழ்ச்சியடையாதே, அல்லது ஏற்பில்லாத ஏதும் நடந்தால் துயரில் மூழ்கிவிடாதே. செல்வம்சார்ந்த வளங்கள் தீர்ந்துபோகும்போது ஒருபோதும் துயரில் ஈடுபடாதே. உன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் கடமையை எப்போதும் நினைவில் கொள்வாயாக.(11) தன் மனோ நிலையின்படி அறத்திற்கேற்புடையதையே எப்போதும் செய்யும் மன்னன், தன் திட்டங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்து, ஒரு போதும் செழிப்பை இழப்பதில்லை.(12)

தன் தலைவனுக்குத் தீமை தருபவற்றைத் தவிர்ப்பவனும், அவனது நன்மைக்காகவே எப்போதும் செயல்படுபவனும், அர்ப்பணிப்புள்ளவனுமான பணியாளனை மன்னன் கவனத்துடன் எப்போதும் பேணி வளர்க்க வேண்டும்.(13) தங்கள் புலன்கள அடக்கியவர்களும், அர்ப்பணிப்பும், பற்றுறுதியும் கொண்டவர்களும், தூய நடத்தைக் கொண்டவர்களும், திறன்மிக்கவர்களுமான மனிதர்களையே அவன் அனைத்துக் காரியங்களிலும் நியமிக்க வேண்டும்.(14) இத்தகு தகுதிகளைக் கொண்டு மன்னனை நிறைவு செய்பவனும், தன் தலைவனின் நன்மைகளில் கவனத்துடன் எப்போதும் அக்கறைகொள்பவனுமான மனிதன் எவனோ, அவனை மன்னன் தன் நாட்டின் காரியங்களில் நியமிக்க வேண்டும்.(15) மறுபுறம், மூடர்கள், புலனடிமைகள், பேராசைக்காரர்கள், மதிப்பில்லா நடத்தை கொண்டோர், வஞ்சகர்கள், போலி நடத்தையுள்ள பொய்யர்கள், தீய நோக்குடையோர், தீய ஆன்மா கொண்டோர், அறியாமையில் இருப்போர், இழிந்த மனம் கொண்டோர், மது, சூது, பெண்கள், வேட்டை ஆகியவற்றுக்கு அடிமையாக இருப்போர் ஆகியோரை முக்கிய அலுவல்களில் நியமித்தால் அந்த மன்னன் தன் செழிப்பை இழப்பான்.(16,17)

முதலில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, பாதுகாக்கத் தகுந்த பிறரையும் பாதுகாக்கும் மன்னன், தன் குடிமக்கள் செழிப்பில் வளர்வதைக் காணும் நிறைவை உணர்வான். அத்தகு மன்னன் மகத்துவத்தை அடைவதிலும் வெல்கிறான்.(18) ஒரு மன்னன், தன்னிடம் அர்ப்பணிப்புள்ள இரகசிய முகவர்கள் {ஒற்றர்கள்} மூலம் பிற மன்னர்களின் நடத்தைகளையும், செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். அத்தகு வழிமுறைகளின் மூலம் அவன் மேன்மையை அடையலாம்.(19) பலமிக்க ஒரு மன்னனுக்குத் தீங்கிழைத்த ஒருவன் {குறுநில மன்னன்}, தீங்கடைந்தவன் {பலமிக்க மன்னன்} தான் வாழும் இடத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறான் என்று தன்னைத் தேற்றிக் கொள்ளக்கூடாது. அத்தகு மன்னர்கள் {பலமிக்கவர்கள்} தீங்கடையும்போது, இரையின் மீது பாயும் பருந்தைப்போலவே கவனமற்ற கணப்பொழுதில் தீங்கிழைத்தவன் {குறுநில மன்னன்} மீது பாய்வான்.(20)

வலுவூட்டப்பட்ட பலம் கொண்டவனும், தன் பலத்தில் நம்பிக்கை கொண்டவனுமான ஒரு மன்னன், தன்னைவிடப் பலவீனமான அண்டை நாட்டானை {அண்டை நாட்டு மன்னனைத்} தாக்கவேண்டுமேயன்றி ஒருபோதும் பலமிக்கவனையல்ல.(21) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட மன்னன் ஒருவன், ஆற்றலால் பூமியின் அரசுரிமையை அடைந்து, தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, எதிரிகளைப் போரில் கொல்ல வேண்டும்.(22) இவ்வுலகத்திற்குச் சொந்தமான அனைத்தும் அழிவடையவே விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கும் எதுவும் நீடித்து நிற்கக்கூடியவையல்ல. இதன் காரணமாகவே, அறத்தைப் பின்பற்றும் மன்னன், தன் மக்களை நீதியுடன் பாதுகாக்க வேண்டும்.(23) கோட்டைகளில் தற்பாதுகாப்பு, போர், நீதி நிர்வாகம், கொள்கை சம்பந்தமான கேள்விகளில் கலந்தோலோசனை செய்தல், குடிமக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் ஆகிய இந்த ஐந்து செயல்களும், ஒரு மன்னனின் ஆட்சிப்பகுதிகளை விரிவடையச் செய்வதில் பங்காற்றுகின்றன.(24)

இவற்றில் உரிய கவனம் செலுத்தும் மன்னனே, மன்னர்களில் சிறந்தவனாகக் கருதப்படுகிறான். இவற்றை எப்போதும் கவனிப்பதால் ஒரு மன்னன் தன் நாட்டைப் பாதுகாப்பதில் வெல்கிறான்.(25) எனினும், அனைத்துக் காலங்களில் இக்காரியங்கள் அனைத்தையும் ஒரே மனிதன் கண்காணிப்பது இயலாதது. ஒரு மன்னன், கண்காணிப்பு செய்யும் அத்தகு பணியைத் தன் அமைச்சர்களிடம் ஒப்படைத்து, பூமியை என்றென்றைக்கும் ஆளலாம்.(26) பரந்த மனமுடையவனும், இன்பம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவனும், மென்மையான மனோநிலை கொண்டவனும், தூய நடத்தை கொண்டவனும், தன் குடிமக்களை எப்போதும் கைவிடாதவனுமான ஒருவனையே மக்கள் மன்னனாகச் செய்கிறார்கள்.(27) ஞான அறிவுரைகளைக் கேட்டு, அவற்றை ஏற்று, தன் சொந்தக் கருத்துகளைக் கைவிடுபவனுக்கு உலகமே கீழ்ப்படிகிறது.(28)

தன் பார்வைக்கு எதிர் பார்வை கொண்டதன் விளைவாக ஒரு நலன் விரும்பியின் ஆலோசனையைப் பொறுத்துக் கொள்ளாதவனும், தன் பார்வைகளுக்கு எதிராகச் சொல்லப்படுபவற்றைக் கேட்பதில் அக்கறையில்லாதவனும், வெல்லப்பட்ட, அல்லது வெல்லப்படாத உயர்ந்த உன்னதமான மனிதர்களின் நடத்தையைப் பின்பற்றாதவனுமான மன்னன் தன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[4].(29,30) முன்பொருமுறை தண்டிக்கப்பட்ட அமைச்சர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆகியோரிடமும், மலைகள், அடைதற்கரிய இடங்கள், யானைகள், குதிரைகள், பாம்புகள் ஆகியவற்றிடமும் இருந்து(31) மன்னன் முழுகவனத்துடன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்[5]. தனது முதன்மையான அமைச்சர்களைக் கைவிட்டு, இழிந்தோரைத் தனக்குப் பிடித்தமானவர்களாக ஆக்கிக்கொள்ளும் மன்னன் விரைவில் துயரில் வீழ்ந்து, (தான் எண்ணியிருந்த) தன் திட்டங்களின் எல்லையை {முடிவை} அடைவதில் ஒருபோதும் வெல்வதில்லை.(32)

உறுதியற்ற ஆன்மா கொண்டவனும், கோபம் மற்றும் வன்மத்தின் வசத்தை அடைபவனும், நற்பண்புகள் கொண்ட தன் உறவினர்களில் எவரையும் விரும்பவும், மதிக்கவும் செய்யாதவனுமான மன்னன், அழிவடையும் தருணத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(33) சாதனையாளர்கள் எவரையும் தன் இதயதால் விரும்பாவிடினும், அவர்களுக்கு நன்மை செய்து தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன், நீடித்த புகழை அனுபவிப்பதில் வெல்கிறான்.(34) நீ ஒருபோதும் அகாலத்தில் வரிகளை விதிக்கக்கூடாது. நீ, ஏற்பில்லாதது ஏதும் நேரும்போது துன்பப்படுவதிலும், ஏற்புடைய ஏதும் நேரும்போது மிகைப்பட்ட மகிழ்ச்சியடைவதிலும் ஒருபோதும் ஈடுபடாதே. நற்செயல்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் உன்னை நீ நிறுவிக் கொள்ள வேண்டும்.(35) உன்னைச் சார்ந்திருக்கும் {குறுநில} மன்னர்களில் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பவன் எவன், அச்சத்தால் உன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவன், அவர்களில் குற்றங்களையுடையவன் எவன் என்பதை எப்போது நீ உறுதிசெய்து கொள்ள வேண்டும்.(36)

கவனமில்லாத தருணங்களில், கழுகுக்கூட்டம் தங்கள் இரையைப் பற்றுவதைப் போலப் பலவீனர்கள் பலமிக்கவர்களைத் தாக்கக்கூடும் என்பதால், மன்னன் பலவீனர்களை நம்ப வேண்டும்.(37) பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் தலைவன் இனிய சொல் பேசுபவனாகவும், அனைத்து சாதனைகளைக் கொண்டவனாகவும் இருப்பினும் அவனைத் தாக்க முயல்வான். எனவே, நீ அத்தகு மனிதர்களிடம் நம்பிக்கை வைக்காதே.(38) நகுஷனின் மகனான யயாதி, அரசகலையின் {ராஜதந்திரத்தின்} புதிர்களை அறிவிக்கும்போது, “மனிதர்களை ஆள்வதில் ஈடுபடும் ஒரு மனிதன், அருவருக்கத்தக்க எதிரிகளையும் கொல்ல வேண்டும்” எனச் சொன்னான்” {என்றார் வாமதேவர்}.(39)

அதிகார உறுதி! – சாந்திபர்வம் பகுதி – 94-உறுதியான அதிகாரம் படைத்த மன்னன் எவன்? வெற்றின் கனிகளைச் சுவைக்கக்கூடிய மன்னன் எவன்? என்பவை குறித்து வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்; அந்த உரையாடலில் வாமதேவர் சொன்னவற்றைக் கடைப்பிடிக்கும்படி யுதிஷ்டிரனைக் கேட்டுக் கொண்ட பீஷ்மர்…

வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} சொன்னார், “மன்னன் போர்கள் இல்லாமலேயே வெற்றிகளை வென்றெடுக்க வேண்டும். ஓ! ஏகாதிபதி {வசுமனஸே}, போர்களின் மூலம் அடையப்படும் வெற்றிகள் ஞானியரால் புகழப்படுவதில்லை.(1) அரசின் சொந்த பலம் உறுதியாகாதபோது, அவன் புதிய பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனையக் கூடாது. அதிகாரம் வலுப்பெறாத மன்னன் அவ்வாறு பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனைவது முறையாகாது.(2) எவனுடைய ஆட்சிப்பகுதிகள் பரந்ததாகவும், செல்வம் நிறைந்ததாகவும் இருக்கிறதோ, எவன் பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளைக் கொண்டிருக்கிறானோ, அந்த மன்னனின் அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(3) எந்த மன்னனின் படைவீரர்கள் (ஊதியம் மற்றும் பரிசுகளால்) மனம் நிறைந்தவர்களாக, பகைவர்களை வஞ்சிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறார்களோ அவன் சிறு படையையே கொண்டிருந்தாலும் மொத்த உலகத்தையும் அடக்குவான்.(4) எந்த மன்னனின் குடிமக்கள், நகரங்களைச் சார்ந்தவர்களாகவோ, மாகாணங்களைச் சார்ந்தவர்களாகவோ இருப்பினும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களாகவும், செல்வம் மற்றும் தானியங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ அவனது அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(5) ஒரு மன்னன், தன் பலம் எதிரியின் பலத்தைவிடப் பெரியது என்று நினைக்கும்போது, தன் நுண்ணறிவின் துணையுடன், பின்னவனின் ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும் அடைய அவன் முயல வேண்டும்.(6)

வளங்கள் பெருகுபவனும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டவனும், காலதாமதத்தால் ஒருபோதும் நேரத்தை இழக்காமல் இருப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனத்துடன் இருப்பவனுமான மன்னன் முன்னேற்றத்தை ஈட்டுவதில் வெல்கிறான்.(7) எந்த மன்னன், எக்குற்றமும் இல்லாத தன் மக்களிடம் வஞ்சகமாக நடந்து கொள்கிறானோ, அவன் கோடரியால் காட்டை அழிக்கும் ஒருவனைப் போலத் தன்னையே வெட்டிக் கொள்கிறான்.(8) மன்னன் தன் எதிரிகளைக் கொல்லும் பணியை எப்போதும் கவனிக்கவில்லையெனில், பின்னவர்கள் {எதிரிகள்} குறையமாட்டார்கள். எந்த மன்னன், தன் கோபத்தைக் கொல்லத் தெரிந்தவனோ, அவனுக்கு எந்த எதிரியும் இருக்க மாட்டான்.(9) மன்னன் ஞானம் கொண்டவனாக இருப்பின், அவன் நல்லோர் அங்கீகரிக்காத எச்செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான். மறுபுறம், அவன் தனது சொந்த நன்மைக்கும், பிறரின் நன்மைக்கு வழிவகுக்கும் செயல்களையே எப்போதும் செய்பவனாக இருப்பான்.(10) எந்த மன்னன் தன் கடமைகள் யாவையும் நிறைவு செய்து, தன் மனசாட்சியின் ஒப்புதலில் மகிழ்ச்சியடைகிறானோ, அவன் ஒருபோதும் மற்றவரின் நிந்தனைக்கு ஆளாகமாட்டான், எப்போதும் வருத்தமடையவும் மாட்டான்.(11) எந்த மன்னன் மனிதர்களிடம் இத்தகு நடத்தையைக் கடைப்பிடிக்கிறானோ, அவன் இரண்டு உலகங்களையும் அடக்குவதில் வென்று, வெற்றியின் கனிகளைச் சுவைப்பான்” {என்றார் வாமதேவர்}”.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வாமதேவரால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் வசுமனஸ், அவர் வழிநடத்தியதைப் போலவே செய்தான். நீயும் இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால், இரண்டு உலகங்களையும் வெற்றி கொள்வதில் நீ வெல்வாய் என்பதில் ஐயமில்லை”.(13)

வெற்றிக்கான வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 95-வெற்றியடைய விரும்பும் மன்னன் செயல்பட வேண்டிய முறை; போரிடச் செல்லும் க்ஷத்திரியனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்தும், வெற்றி அடையவும், தன் வளங்களை அதிகரிக்கவும் நியாயமான வழிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்றும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு க்ஷத்திரியன் மற்றொரு க்ஷத்திரியனைப் போரில் அடக்க விரும்பினால், முன்னவன் வெற்றி குறித்த காரியத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்னால் கேட்கப்படும் நீர் இதற்குப் பதிலளிப்பீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தன் பின்னே படையுடனோ, இல்லாமலோ செல்லும் மன்னன், தான் அடக்கப்போகும் மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்து, அந்த மக்கள் அனைவரிடமும், “நானே உங்கள் மன்னன், நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்.(2) எனக்கு உரிய கப்பத்தைக் கொடுங்கள், அல்லது போரில் என்னோடு மோதுங்கள்” என்று சொல்ல வேண்டும். மக்கள் அவனைத் தங்கள் மன்னனாக ஏற்றால், எந்தப் போருக்குமான அவசியமில்லை.(3) பிறப்பால் க்ஷத்திரியர்களாக இல்லாத அவர்கள், பகைமையின் குறியீடுகளை வெளிப்படுத்தும்போது, அவர்கள் தங்களுக்கு விதிக்கப்படாத நடைமுறைகளை நோற்பதால், அனைத்து வழிமுறைகளிலும் அவர்கள் அடக்கப்பட வேண்டும்.(4) எதிரியிடம் அதிகம் எதிர்பார்ப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாதவனும், போரிட ஆயுதமின்றி வருபவனுமான க்ஷத்திரியனைக் கண்டால், பிற வகையைச் சேர்ந்த மக்களும் (படையெடுத்து வருபவனைத் தடுப்பதற்காக) ஆயுதங்களை எடுப்பார்கள்[1]” என்றார் {பீஷ்மர்}.(5)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மற்றொரு க்ஷத்திரிய மன்னனை எதிர்த்து போரிடச் செல்லும் க்ஷத்திரிய மன்னன் ஒருவனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கவசம் பூணாத க்ஷத்திரியனுடன் போரிட அந்த க்ஷத்திரியன் தானும் கவசம் பூணக்கூடாது. ஒருவன் மற்றொருவனோடு போரிட்டு, எதிராளி இயலாமையை அடையும்போது பின்னவனை {எதிராளியைக்} கைவிட வேண்டும்[2].(7) எதிரி கவசம் பூண்டு வந்தால், அவனது எதிராளியும் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். எதிரி ஒரு படையின் பாதுகாப்புடன் முன்னேறி வந்தால், படையின் பாதுகாப்புடன் கூடிய ஒருவன் அவனைப் போருக்கு அறைகூவி அழைக்க வேண்டும்.(8) எதிரி வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால், அவனை வஞ்சகத்தின் உதவியுடனேயே சந்திக்க வேண்டும். மறுபுறம் அவன் நியாயமாகப் போரிட்டால், நியாயமான வழிமுறைகளின்படியே அவன் தடுக்கப்பட வேண்டும்.(9) ஒருவன், ஒரு தேர்வீரனை எதிர்த்து குதிரையின் முதுகில் செல்லக்கூடாது. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனை எதிர்த்தே செல்ல வேண்டும். எதிராளி துயரில் வீழ்ந்தால், அவன் தாக்கப்படக்கூடாது; அச்சத்தில் இருப்பவனும், வெல்லப்பட்டவனும் தாக்கப்படக்கூடாது[3].(10)நஞ்சு தோய்த்த கணைகளோ, முள்பதித்த கணைகளோ {கர்ணிகளோ} பயன்படுத்தப்படக்கூடாது. இவை தீயவர்களின் ஆயுதங்களாகும். ஒருவன் கோபத்திற்கோ, கொல்லும் விருப்பத்திற்கோ வசப்படாமல் நியாயமான முறையில் போரிட வேண்டும்.(11) பலவீனமானவனோ, காயம்பட்டவனோ கொல்லப்படக்கூடாது. அதேபோலவே மகனற்றவனோ, ஆயுதம் முறிந்தவனோ, துயரில் வீழ்ந்தவனோ, நாண்கயிறு அறுந்தவனோ, தன் வாகனத்தை இழந்தவனோ கொல்லப்படக்கூடாது. காயம்பட்ட எதிரியை, அவனது வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும், அல்லது அவன் வெற்றியாளனின் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டால், திறன்மிக்க மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அவனது காயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.(12) நல்ல மன்னர்களுக்கிடையில் சச்சரவு விளையும்போது, ஒரு நல்ல போர்வீரன் துயரில் விழுந்தால் (அவனது காயங்கள் கவனிக்கப்பட்டு) குணமடைந்தபிறகு அவனைச் சுதந்திரமாக விட வேண்டும். இதுவே நித்திய கடமையாகும் {இதுவே ஸனாதன தர்மமாகும்}.(13) தான்தோன்றியின் (பிரம்மனின்) மகனான மனுவே, போர்கள் நியாயமான முறையில் போரிடப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் {க்ஷத்திரியர்கள்} அறத்தை அழிக்காமல் அதைப் பின்பற்ற வேண்டும்.(14)

நியாயமாகப் போரிடுவதைக் கடமையாகக் கொண்ட ஒரு க்ஷத்திரியன், நியாயமற்ற வழிமுறைகளின்படி வெற்றியடைந்தால் அவன் பாவியாகிறான். வஞ்சக நடத்தை கொண்ட அத்தகு மனிதன் தன்னையே கொல்கிறான் எனச் சொல்லப்படுகிறான்.(15) தீயோரின் நடைமுறை இதுவே. தீயோனும் கூட நியாயமான வழிமுறைகளின்படியே அடக்கப்பட வேண்டும். பாவகரமான வழிமுறைகளில் வெற்றியை அடைவதை விட அறம் நோற்று உயிரைவிடுவதே சிறந்தது.(16) ஓ! மன்னா, இழைக்கப்படும் பாவமானது, ஒரு பசுவைப் போலவே உடனடி பலனை உண்டாக்குவதில்லை. அந்தப் பாவம், அஃதை இழைத்தவனின் வேர்களையும், கிளைகளையும் எரித்த பிறகே அவனை மூழ்கச் செய்கிறது.(17) பாவம் நிறைந்த ஒரு மனிதன், பாவம்நிறைந்த வழிமுறைகளில் செல்வத்தை அடைந்து மிகவும் இன்புற்றிருக்கிறான். ஆனால், பாவம் நிறைந்த வழிமுறைகளில் முன்னேற்றத்தை அடைந்த அந்தப் பாவி அந்தப் பாவத்தையே தொடர்வான்.(18) அறம் எந்த உச்சவினையுமாற்றுவதில்லை என்று நினைக்கும் அவன் நன்னடத்தைக் கொண்ட மனிதரை ஏளனம் செய்கிறான். அறத்தை நம்பாத அவன், இறுதியில் அழிவையடைகிறான்.(19)

அவன், வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றில் சிக்கியிருந்தாலும், தன்னை இறவாதவனாகவே கருதுகிறான். காற்றடைக்கப்பட்ட பெரிய தோற்பையைப் போல, அந்தப் பாவி தன்னை அறத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்கிறான். எனினும், விரைவில் அவன் ஆற்றங்கரை மரமானது, வேருடன் சேர்த்து அடித்துச் செல்லப்படுவதைப் போலவே காணாமல் போகிறான்.(20) அப்போது, கல் தரையில் விழுந்து உடைந்த மண்குடத்துக்கு ஒப்பானவனாக அவனைக் காணும் மக்கள், அவனுக்குத் தகுந்தபடியே அவனைக் குறித்துப் பேசுவார்கள். எனவே, மன்னனானவன், வெற்றி மற்றும் தன் வளங்களை அதிகரித்தல் ஆகிய இரண்டிலும் நியாயமான வழிமுறைகளையே நாட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(21)

வெற்றியாளனின் நடந்தை! – சாந்திபர்வம் பகுதி – 96-வெல்லப்பட்ட எதிரியை நடத்த வேண்டியதெவ்வாறு? கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன? கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும்? எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும்? வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன்? பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன?  போன்றவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் ஒடுக்கும் செயல் மொத்த பூமியின் அரசுரிமையையும் ஒரு மன்னனுக்குக் கொடுக்கும் என்றாலும், அவன் ஒருபோதும் அவ்வாறு அடக்க விரும்பக்கூடாது. நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வெற்றியடையும் எந்த மன்னன்தான் அதன்பிறகு மகிழ்ச்சியடைவான்?(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அத்தகு வெற்றியானது, மன்னன் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும்.(2) கவசம் நழுவிய போர்வீரன், “நான் உன்னவன்” என்று சொல்லி சரணடைந்தவன், கரங்கூப்புபவன், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவன் ஆகியோரை வெறுமனே கைப்பற்ற வேண்டுமேயன்றி ஒருபோதும் கொல்லக்கூடாது.(3) ஓர் எதிரி மன்னன், படையெடுப்பாளனின் துருப்புகளால் வெல்லப்பட்டால், பின்னவன் வெல்லப்பட்ட தன் எதிரியுடன் போரிடக்கூடாது. மறுபுறம், அவன் அவனைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து, “நான் உன் அடிமை” என்று சொல்லும் வகையில் ஒரு வருடகாலம் அவனை இணங்கியிருக்கச் செய்ய வேண்டும். அவன் அதைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், வெற்றியாளனின் வீட்டில் ஒரு வருடம் வாழும் வெல்லப்பட்ட அந்த எதிரி, புதிய வாழ்வுக் காலத்தையே அடைகிறான்[1].(4)

ஒரு மன்னன், வெல்லப்பட்ட எதிரியின் வீட்டில் இருந்து ஒரு கன்னிகையைப் பலவந்தமாகக் கொண்டு வந்தால், அவளை ஒரு வருடம் {பாதுகாப்பாக} வைத்திருந்து, பிறகு அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாளா, அல்லது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்கிறாளா என்று கேட்க வேண்டும். அவள் ஏற்கவில்லை என்றால், அவள் {அவளது நாட்டுக்கே} திரும்ப அனுப்பப்பட வேண்டும். பலவந்தமாக அடையப்பட்ட பிற செல்வங்களைப் {அடிமைகள் [பணியாட்கள்]} பொறுத்தவரையிலும் கூட இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(5) கள்வர்கள் மற்றும் {மரண} தண்டனைக்குக் காத்திருப்போர் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்வத்தை மன்னன் ஒருபோதும் தனதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரியிடம் இருந்து பலவந்தமாகக் கைப்பற்றப்பட்ட பசுக்கள், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அவ்விலங்குகளின் பாலை அருந்துவார்கள். எதிரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காளைகள் உழவுப் பணியில் நிறுவப்பட வேண்டும், அல்லது எதிரியிடமே மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்[2].(6) ஒரு மன்னன், மற்றொரு மன்னனிடமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எவன் மன்னனாக இல்லையோ அவன் வேறொரு மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது.(7) ஒரு பிராமணன், அமைதியை விரும்பியவனாக, போரிட்டுக்கொள்ளும் இரு படைகளுக்கு மத்தியில் அச்சமில்லாமல் சென்றால், இரு தரப்பும் உடனடியாகப் போரைக் கைவிட வேண்டும்.(8) ஒரு பிராமணனைக் கொல்லவோ, காயப்படுத்தவோ செய்பவனும் ஒரு நித்திய விதியை உடைப்பான். எந்த க்ஷத்திரியனாவது அவ்விதியை உடைத்தால், அவன் தன் வகையில் இழிந்தவனாவான்.(9) இதனுடன் சேர்த்து, அறத்தை அழித்து, நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறும் அந்த க்ஷத்திரியன், ஒரு க்ஷத்திரியனாக இருக்கத் தகாதவனாகவே கருதப்பட்டுச் சமூகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும்.(10)

வெற்றியடைய விரும்பும் ஒரு மன்னன் அத்தகு நடத்தையை ஒருபோதும் பின்பற்றக்கூடாது. நியாயமாக வென்ற வெற்றியை விட ஈட்டுதவற்கு வேறென்ன பெரிதாக இருக்கிறது?(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எதிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் இடர்களைக் கவனித்து, ஆபத்தான காலங்களில் காலதாமதமின்றிப் பின்னவனுடைய {மன்னனுடைய} எதிரிகளின் தரப்பில் சேர்ந்து கொள்வார்கள்.(14) ஓர் எதிரி நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வஞ்சிக்கப்படக்கூடாது. அதே போல அவன் மரணம் அடையும் அளவுக்குக் காயப்படுத்தப்படக்கூடாது. அவ்வாறு தாக்கினால் அவனது உயிரே போய்விடக் கூடும்[3].(15)குறைந்த வளங்களே கொண்ட ஒரு மன்னன், அதை வைத்துக் கொண்டு நிறைவுடன் இருந்தால், அவன் வாழ்வதே பெரிதெனக் கருதுபவனாவான்[4].(16) எந்த மன்னன், பரந்து விரிந்த, செல்வம் நிறைந்த ஆட்சிப் பகுதிகளைக் கொண்டவனோ, பற்றுறுதியுடன் கூடிய குடிமக்களைக் கொண்டவனோ, மனநிறைவுடன் இருக்கும் பணியாட்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டவனோ, அவனே தன் வேர்களை உறுதியாகக் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.(17) எந்த மன்னனின் ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள், சாத்திரங்களை நன்கறிந்தவர்கள், கௌரவங்களுக்குத் தகுந்த பிறர் ஆகியோர் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களோ, அவனே இவ்வுலகின் வழிகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(18) இத்தகு நடத்தையின் மூலமே இந்திரன் உலகத்தின் அரசுரிமையைப் பெற்றான். இந்த நடத்தையின் மூலமே பூமி சார்ந்த மன்னர்கள், இந்திரனின் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(19)மன்னன் பிரதர்த்தனன், பெரும்போரில் தன் எதிரிகளை அடக்கி, தானியங்கள், மருத்துவ மூலிகைகள் உள்ளிட்ட அவர்களுடைய செல்வமனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய நிலத்தைத் தீண்டாமல் விட்டுவிட்டான்.(20) மன்னன் திவோதாசன், தன் எதிரிகளை அடக்கிய பிறகு, அவர்களுடைய வேள்வி நெருப்பில் எஞ்சியவற்றையும், (காணிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த) தெளிந்த நெய்யையும், அவர்களது உணவையும் எடுத்துக் கொண்டான். இதன் காரணமாக அவன் வெற்றி கொண்டதன் தகுதியை இழந்தான்[5].(21) மன்னன் நாபாகன் (தன் படையெடுப்புகள் முடிந்ததும்), கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் தவசிகளின் செல்வத்தைத் தவிர்த்து, மொத்த நாடுகளையும் அதன் ஆட்சியாளர்களோடு சேர்த்துப் பிராமணர்களுக்கான வேள்விக்கொடையாகக் கொடுத்தான்.(22) ஓ யுதிஷ்டிரா, பழங்காலத்தின் நீதிமிக்க மன்னர்கள் அனைவரின் நடத்தைகள் சிறப்பானவையாக இருக்கின்றன. அவற்றை நான் மொத்தமாக அங்கீகரிக்கிறேன்.(23) எந்த மன்னன் தன் செழிப்பை விரும்புவானோ, அவன் சிறப்பான அனைத்தின் துணை கொண்டு படையெடுக்க முனைய வேண்டுமேயன்றி, வஞ்சகத்துடனோ, செருக்குடனோ அல்ல” என்றார் {பீஷ்மர்}.(24)

வீரம்! – சாந்திபர்வம் பகுதி – 97-மன்னர்கள் குற்றமற்றவர்களாக ஆகும் வழிமுறைகள்; மன்னன் ஏன் ஒரு வேள்வியின் தன்வடிவமாகச் சொல்லப்படுகிறான்? அச்சத்திலிருப்போரைப் போராதுகாத்தல் மற்றும் அச்சமின்மை ஆகிய வீரர்களின் பண்புகள்; நோய்ப்படுக்கையில் மரணம் மற்றும் வீரமரணம் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, க்ஷத்திரியர்களின் நடைமுறைகளைவிடப் பாவம் நிறைந்தவை வேறெவையும் இல்லை. போருக்கு அணிவகுத்துச் செல்லும் போதோ, போரிலோ மன்னன் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொல்கிறான்[1].(1) எந்தச் செயல்பாடுகளின் மூலம் மன்னன் புகழ் உலகங்களை வெல்கிறான்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! கல்விமானே நான் அறிய விரும்பும் இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீயோரைத் தண்டித்தல், நல்லோரை இணைத்துக் கொண்டு அவர்களைப் பேணி வளர்த்தல், வேள்விகள் செய்தல் மற்றும் கொடைகள் அளிதல் ஆகியவற்றின் மூலம் மன்னர்கள் குற்றமற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகிறார்கள்.(3) வெற்றியடைய விரும்பும் மன்னர்கள் பல உயிரினங்களைப் பீடிக்கிறார்கள் என்பது உண்மையே. இருப்பினும் வெற்றி அடைந்த பிறகு அவர்கள் அவை அனைத்தையும் முன்னேற்றவும், வளர்ச்சியடையச் செய்யவும் உதவுகிறார்கள்.(4) கொடைகள், வேள்விகள், தவங்கள் ஆகியவற்றால் அவர்கள் தங்கள் பாவங்களை அழித்து, உயிரினங்கள் அனைத்திற்கும் செய்யும் நன்மையால் தங்கள் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அதிகரித்துக் கொள்கிறார்கள்.(5)

நிலத்தைச் சீரமைப்பவன், அதைச் சீரமைப்பதற்காக நெற்கதிர்களையும், களைகளையும் எடுக்கிறான். எனினும், அவனது செயல்பாடுகள் நெற்கதிர்களை அழிக்காமல் அவற்றை மேலும் வளமாக வளரச் செய்கின்றன.(6) ஆயுதங்களைத் தரிப்போர், அழிவுக்குத் தகுந்த பலரை அழிக்கிறார்கள். எனினும், அத்தகு பரந்த அழிவானது, எஞ்சியிருப்போரை வளரவும், முன்னேறவும் செய்கிறது.(7) கொள்ளை, கொலை, துன்பம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கும் ஒருவன், இவ்வாறு அவர்களின் வாழ்வைக் கள்வர்களிடம் இருந்து காப்பதன் விளைவால், செல்வம், உயிர் மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடுப்பவனாகக் கருதப்படுகிறான்.(8) எனவே, மன்னன், அனைவரின் அச்சங்களையும் விலக்கும் தக்ஷிணையுடன் கூடிய வேள்வியைச் செய்து தேவர்களைத் துதிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையில் இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்[2].(9)பிராமணர்களின் நிமித்தமாக எழுந்த போர்களில் எதிரிகளுடன் போரிட்டு உயிரை விடும் மன்னன், அளவிலா கொடைகளுடன் கூடிய ஒரு வேள்வியின் உடல் வடிவமாகவே கருதப்படுகிறான்.(10) ஒரு மன்னன், தன் அம்பறாத்தூணிகள் நிறந்த கணைகளைத் தன் எதிரிகளின் மீது அச்சமில்லாமல் ஏவினால், பூமியில் அவனுக்கும் மேன்மையான எவனையும் தேவர்களும் கூடக் காண்பதில்லை.(11) அவ்வாறிருக்கையில், அவன் தன் எதிரிகளின் உடல்களை எத்தனை கணைகளால் துளைக்கிறானோ, அழிவில்லாதவையும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லவையுமான அத்தனை உலகங்களையும் அவன் {மறுமையில்} அனுபவிக்கிறான்.(12) அத்தருணத்தில் அவனது உடலில் இருந்து வழியும் குருதியானது, அவனது உடல்வலியுடன் சேர்த்து அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறது.(13) ஒரு க்ஷத்திரியின் போரில் அனுபவிக்கும் வலியானது, அவனது தகுதியை {புண்ணியத்தை} மேம்படுத்தச் செயல்படும் தவங்களைப் போல ஆகிறது எனச் சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(14)

அச்சத்திலிருக்கும் நல்லோர், மேகங்களிடம் மழையை வேண்டும் மனிதர்களைப் போலப் போருக்கு விரைந்து சென்றிருக்கும் வீரர்களிடம் உயிரை வேண்டி பின்னால் நிலைக்கிறார்கள்.(15) வீரர்கள், அவ்வாறு வேண்டுவோரை போரின் ஆபத்துகளை அடைய விடாமல், தாங்களே ஆபத்துகளைச் சந்தித்து அவர்களைப் பின்புறம் இருக்கச் செய்தால், அவர்களுடைய தகுதி {புண்ணியம்} மகத்தானதாகிறது.(16) மேலும் அச்சத்திலிருக்கும் அந்த மனிதர்கள், அந்தத் துணிச்சல்மிக்கச் செயலைப் பாராட்டி, தங்களைப் பாதுகாப்போரை எப்போதும் மதித்தால், அவர்கள் முறையானதையும், நீதியானதையும் செய்கிறார்கள். அவர்கள் வேறு வகையில் செயல்பட்டால், அவர்களால் தங்களை அச்சத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது.(17) தோற்றத்தில் இணையான மனிதர்களுக்கிடையிலேயே பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. பயங்கரக் கலவரத்துக்கு மத்தியில் சிலர் பகைவரின் படையணிகளை எதிர்த்து விரைகின்றனர்.(18)

உண்மையில், வீரர்களானவர்கள், சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைப் பின்பற்றி, எதிரிக்கூட்டத்தை எதிர்த்து விரைகிறார்கள். எனினும், கோழைத்தனமான அச்சத்திலிருப்பவன், ஆபத்தில் இருக்கும் தன் தோழர்களைக் கைவிட்டுத் தப்பி ஓடுவதில் பாதுகாப்பை அடைய முனைகிறான்.(19) அதுபோன்ற இழிந்தவர்கள் உன் குலத்தில் பிறக்க வேண்டாம். தங்கள் தோழர்களைப் போரில் கைவிட்டு, காயமில்லா அங்கங்களுடன் வீடு திரும்புவோருக்கு இந்திரனின் தலைமையிலான தேவர்களே பேரிடரை உண்டாக்குவார்கள். எவன் தன் தோழர்களைக் கைவிட்டு தன் உயிர் மூச்சைக் காக்க விரும்புகிறானோ, அவன் தண்டங்களாலோ, கற்களாலோ அடித்துக் கொல்லப்பட வேண்டும், அல்லது காய்ந்த புற்படுக்கையில் உருட்டி தீயிட்டுக் கொல்லப்பட வேண்டும். அத்தகு குற்றமுள்ள நடத்தை கொண்ட க்ஷத்திரியர்கள், விலங்குகளைக் கொல்லும் முறையில் கொல்லப்பட வேண்டும்.(20-22)

இளைப்பாறும் படுக்கையில், மலம் மற்றும் சிறுநீரை வெளியிட்டு, பரிதாபமாகக் கதறி அழுது மரணத்தை அடையும் க்ஷத்திரியன் பாவம் நிறைந்தவனாவான்.(23) சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் உடலில் காயமின்றி ஒரு க்ஷத்திரியன் அடையும் மரணத்தை மெச்சுவதில்லை.(24) ஓ! ஐயா, வீட்டில் மரணத்தை அடையும் க்ஷத்திரியன் புகழுக்குத் தக்கவனன்று. அவர்கள் {க்ஷத்திரியர்கள்} வீரர்களாவர். அவர்களுடைய வீரமில்லா எந்தச் செயலும் பாவம் நிறைந்ததும், மகிமையற்றதுமாகும்.(25)

ஒரு நோயாளி, தன் உடல் மற்றும் துணிகளில் இருந்து நாற்றம் வெளிப்படும் நிலையில், வற்றிய முகத்துடன், “இஃது என்ன துயரம்? இது வலிநிறைந்தது! நான் பெரும் பாவியாவேன்” என்று சொல்லி தன் உறவினர்களைத் துயரில் ஆழ்த்துகிறான்.(26) உடல்நலமிக்கவர்களின் நிலையில் நாட்டங்கொள்ளும் அவன், (தான் அடையும் சித்திரவதைகளுக்கு மத்தியில்) மரணத்தையே திரும்பத் திரும்ப விரும்புகிறான். எவன் கண்ணியமும், செருக்கும் மிக்க வீரனோ, அவன் இத்தகு மகிமையற்ற மரணத்திற்குத் தகுந்தவனல்ல.(27) உறவினர்கள் சூழ போரில் தன் எதிரிகளைக் கொல்லும் க்ஷத்திரியன், கூரிய ஆயுதங்களின் முனையிலேயே இறக்க வேண்டும்.(28) இன்பமடையும் ஆசையில், கோபத்தால் நிறையும் ஒரு வீரன், சீற்றத்துடன் போரிட்டால், எதிரிகளால் தன் உடலில் ஏற்படும் காயங்களின் வலியை உணர மாட்டான்.(29) போரில் மரணத்தை அடையும் அவன், புகழ் நிறைந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்டி, தன் வகைக்கான உலகத்தை எட்டி, இறுதியாக இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்.(30)

போரில் புறமுதுகிடாத வீரன் ஒருவன், தன் உயிரைத் துச்சமாக மதித்து போரின் முன்னணியில் தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் போரிட்டு, இந்திரனின் தோழமையை அடைகிறான்.(31) பகைவர்களுக்கு மத்தியில், உன்னதமற்ற அச்சத்தையோ, உற்சாகமின்மையையோ வெளிப்படுத்தாமல் எந்த வீரன் மரணத்தை அடைகிறானோ, அவன் மறுமையில் அழிவில்லா அருளைக் கொண்ட உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(32)

அம்பரீஷனும், இந்திரனும்! – சாந்திபர்வம் பகுதி – 98-சுதேவனின் வரலாற்றையும், போர் எனும் வேள்வியில் ரித்விக்குகள், சத்யஸ்கள் முதலிய அங்கங்களையும், போரில் இறந்தவர்கள் அடையும் உலகங்களையும் இந்திரன் அம்பரீஷனுக்குச் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புறமுதுகிடாமல் போரில் மரணமெய்தும் வீரர்கள் ஈட்டும் உலகங்கள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக அம்பரீஷனுக்கும், இந்திரனுக்கும் நடந்த உரையாடல் பழங்கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.(2) நாபாகனின் மகனான அம்பரீஷன் அடைதற்கரிய சொர்க்கத்திற்குச் சென்று, அந்தத் தெய்வீக உலகங்களில் இந்திரனின் துணையுடன் தன் படைத்தலைவன் {சுவேதன்} இருப்பதைக் கண்டான்.(3) அந்த மன்னன் {அம்பரீஷன்}, பலமிக்கத் தன் படைத்தலைவன், தெய்வீக வடிவுடன் அனைத்து வகைச் சக்தியாலும் ஒளிர்ந்து கொண்டு, ஓர் அழகிய தேரில் அமர்ந்து கொண்டு (அந்த வாகனத்திலேயே) மேலும் மேலும் உயர்ந்த உலகங்களுக்குச் செல்வதைக் கண்டான்.(4) தன் படைத்தலைவனான சுதேவனின் செழிப்பைக் கண்டு, மேலும் மேலும் உயர்ந்த உலகங்களுக்கு அவன் செல்வதையும் கண்ட உயர் ஆன்ம அம்பரீஷன், ஆச்சரியத்தால் நிறைந்து, பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு வாசவனிடம் {இந்திரனிடம்} பேசினான்.(5)

அம்பரீஷன் {இந்திரனிடம்}, “கடல் சூழ்ந்த மொத்த உலகையும் முறையாக ஆண்டு, அறத்தகுதியை ஈட்ட சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நால்வகையினருக்கான பொதுவான கடமைகள் அனைத்தையும் பயின்று,(6) பிரம்மச்சரிய வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் கடுந்தவத்துடன் பயின்று, என் ஆசான்களிடமும், மதிப்பிற்குரிய பிற பெரியோரிடமும் கடமைநிறைந்த பணிவுடன் காத்திருந்து {பணிவிடை செய்து}, வேதங்களையும், அரச கடமைகள் சார்ந்த சாத்திரங்களையும் உரிய நடைமுறையுடன் கற்று,(7) உணவு மற்றும் பானங்களால் விருந்தினர்களையும், சிரார்த்தங்களில் காணிக்கையளித்துப் பித்ருக்களையும், கவனமாகச் சாத்திரங்களைக் கற்று முனிவர்களையும் நிறைவு செய்து, (அறப்புதிர்களில் உரிய வடிவங்களிலான) தொடக்கத்தை ஏற்படுத்தி, சிறந்தவையும், உயர்ந்தவையுமான பல வேள்விகளைச் செய்து தேவர்களையும் நிறைவு செய்து,(8) ஓ! வாசவா {இந்திரா}, சாத்திரங்களில் அறிவுறுத்தியுள்ளபடி க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று, பகைவரின் படைமீது அச்சமில்லாமல் என் கண்களைச் செலுத்தி போரில் பல வெற்றிகளை நான் அடைந்தேன்.(9) ஓ! தேவர்களின் தலைவா, இந்தச் சுதேவன் முன்பு என் படைகளின் தலைவனாக இருந்தான். அமைதியான ஆன்மா கொண்ட போர்வீரன் அவன் என்பது உண்மையே. எனினும், என்ன காரணத்தால் அவன் {சுவேதன்} என்னை விஞ்சி நிற்கிறான்?(10) உயர்ந்தவையும், பெரியவையுமான வேள்விகளில் அவன் ஒருபோதும் தேவர்களை வழிபட்டதில்லை. விதிப்படி அவன் (அடிக்கடி கொடுக்கப்படும் விலையுயர்ந்த கொடைகளால்) பிராமணர்களை ஒருபோதும் நிறைவு செய்ததில்லை. அவ்வாறிருக்கையில், {இங்கே சொர்க்கத்தில்} அவன் {சுவேதன்} எவ்வாறு என்னை விஞ்சி நிற்கிறான்?” என்று கேட்டான்[1].(11)இந்திரன் {அம்பரீஷனிடம்}, “ஓ! ஐயா, இந்தச் சுதேவனைப் பொறுத்தவரையில், பெரும் வேள்வியெனும் போரில் அவன் அடிக்கடி ஈடுபட்டான். போரில் ஈடுபடும் வேறு எந்த மனிதனும் அதே நிலையையே அடைவான்.(12) கவசம் போன்ற போர்வீரன் ஒவ்வொருவனும், போர் வியூகத்தில் எதிரிகளை எதிர்த்து விரைந்து, அந்த வேள்வியில் நிறுவப் பட்டவனாகிறான். உண்மையில், அத்தகு மனிதன், இவ்வழியில் செயல்படுவதால், போரெனும் வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஒன்றாகும்” என்றான்.(13)

அம்பரீஷன் {இந்திரனிடம்}, “அந்த வேள்வியில் எவை ஆகுதியாகின்றன? எவை அதன் நீர்க்காணிக்கைகளாகின்றன? தக்ஷிணை என்பது என்ன? மேலும் ரித்விக்குகளாகக் கருதப்படுபவர் யாவர்? ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(14)

இந்திரன் {அம்பரீஷனிடம்}, “யானைகளே அவ்வேள்வியில் ரித்விக்குகளாகின்ற, குதிரைகள் அதர்யுக்களாகின்றன. பகைவரின் சதை அதன் ஆகுதிகளாகின்றன, குருதியே அதன் நீர்க்காணிக்கையாகிறது.(15) நரிகள், கழுகுகள், கருங்காக்கைகள், சிறகு படைத்த கணைகள் ஆகியன சத்யஸ்களாகின்றன. இவை இந்த வேள்வியில் நீர்க்காணிக்கையாக்கப்படுவனவற்றில் எஞ்சியதைப் பானம் செய்து, அதன் ஆகுதிகளில் எஞ்சியவற்றை உண்கின்றன.(16) சுடர்மிக்கவையும், கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான வேல்கள், ஈட்டிகள், வாள்கள், கணைகள், கோடரிகள் ஆகியன வேள்வி செய்பவர்களின் கரண்டிகளாகின்றன.(17) நேரானவையும், கீரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையும், பகைவரின் உடல்களைத் துளைக்கவல்லவையும், நன்கு வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்படுபவையுமான கணைகள், இரு வாய்க் கொண்ட கரண்டிகளாகின்றன.(18) புலித் தோலாலான வாளுரையில் இருப்பவையும், தந்தக் கைப்பிடி அமைந்தவையும், யானையின் துதிக்கையை வெட்டவல்லவையுமான வாள்கள் இவ்வேள்வியின் ஸ்ப்யங்களாகின்றன[1]. சுடர்மிக்கவையும், கூரியவையும், கடின இரும்பாலானவையுமான வேல்கள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் கோடரிகளால் உண்டாக்கப்பட்ட கீறல்கள், தொகை மற்றும் காலத்திற்கு உடன்பட்டு மதிப்பு மிக்க மனிர்களிடம் இருந்து அடையப்படும் அபரிமிதமான செல்வங்களாகின்றன.(20)மூர்க்கமான தாக்குதலின் விளைவால் களத்தில் பாயும் குருதியானது, இந்த வேள்வியின் ஹோமத்தில், பெரும் தகுதி {புண்ணியம்} நிறைந்ததும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லதுமான இறுதி ஆகுதியாகிறது.(21) அணிவகுக்கும் படைகளின் முன்னணியில் கேட்கப்படும் வெட்டு, துளை போன்ற ஒலிகள், யமனின் வசிப்பிடத்தில் வேதம் ஓதுபவர்களால் பாடப்படும் சாமங்களாகின்றன.(22) பகைவருடைய அணிவகுப்பில் உள்ள முன்னணி படையணிகள், ஆகுதிகளை வைக்கும் பாத்திரங்களாகின்றன. கவசம் தரித்த மனிதர்கள் யானைகள் மற்றும் குதிரைகளின் கூட்டமானது, அந்த வேள்வியின் சியேனசிதமெனும் நெருப்பாகிறது[3].(23) ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும் எழுந்து நிற்கும் தலையற்ற முண்டங்கள், அந்த வேள்வியைச் செய்யும் வீரனுக்காகச் செய்யப்படுவதும், கருங்காலி மரத்திலானதுமான எண்கோண {எட்டு பக்கமுள்ள} யூபமாகிறது {வேள்வித்தண்டாகிறது}.(24) அங்குசங்களால் தூண்டப்படும் யானைகளின் பிளிறல்கள், இடாஹ்வானம் எனும் மந்திரங்களாகின்றன. ஓ! மன்னா, பேரிகைகளும், வசத்களாகும் உள்ளங்கையொலிகளும், அதன் திரிசாமன் உத்காத்ரியாகின்றன {மூன்று சாமங்களையுடைய உத்காதாவாகின்றன}.(25)

ஒரு பிராமணனின் உடைமை கைப்பற்றப்படும்போது, அந்த உடைமையைக் காக்க எவன் தன் இன்னுயிரையும் விடத் துணிவானோ, அவன் தன்னர்ப்பணிப்புக்கான அந்தச் செயலால், முடிவிலா கொடைகளைக் கொண்ட ஒரு வேள்விக்கான தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான்.(26) எந்த வீரன் தன் தலைவனுக்காக அணிவகுப்பின் முன்னணியில் அச்சத்துடன் புறமுதுகிடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவானோ, அவன் எனக்கு {இந்திரனுக்குச்} சொந்தமான புகழ் உலகங்களை ஈட்டுகிறான்.(27) எவனுடைய போர் வேள்வியானது புலித்தோல் உறைகளுள்ள வாள்களாலும், பரிகாயுதத்திற்கு ஒப்பான கரங்களாலும் பரப்பப்பட்டிருக்கிறதோ, அவன் எனக்குச் சொந்தமான புகழ் உலகங்களைப் போன்ற உலகங்களை வெல்கிறான்.(28) வெற்றியடையத் தீர்மானித்து, எந்தத் துணைக்காகவும் காத்திராமல் பகைவனின் பகையணிகளுக்குள் ஊடுருவும் போர்வீரன், எனக்குச் சொந்தமானவை போன்ற புகழ் உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(29) 

பயங்கரமானதும், கடப்பதற்குக் கடினமானதும், பேரிகைகளையே தவளைகளாகவும், ஆமைகளாகவும் கொண்டதும், வீரர்களின் எலும்புகளையே அதன் மணற்பரப்பாகக் கொண்டதும், குருதியும், சதையும் புழுதியாகக் கொண்டதும், வாள்கள் மற்றும் கேடயங்களைத் தெப்பங்களாகக் கொண்டதும், கொல்லப்பட்ட போர்வீரர்களின் மயிர்களையே பாசியாகவும், மிதக்கும் புற்களாகவும் கொண்டதும், குதிரை, யானை மற்றும் தேர்களின் கூட்டங்களைப் பாலங்களாக {அணைகளாகக்} கொண்டதும், கொடிமரங்கள், கொடிகள் ஆகியவற்றைப் பிரம்புப் புதராகக் கொண்டதும், கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைப் படகுகளாகவும், பெரும் முதலைகளாகவும் கொண்டதும், வாள்கள், கத்திகள் ஆகியவற்றைப் பெரும் கப்பல்களாகக் கொண்டதும், கழுகுகள், கங்கங்கள், கருங்காக்கைகளை அதில் மிதக்கும் தெப்பங்களாகக் கொண்டதும், துணிவும் சக்தியும் கொண்டோராலும் கடக்கக் கடினமானதும், மருண்டோரை அச்சங்கொள்ள வைப்பதுமான ஒரு குருதிப்புனலைப் போர்க்களத்தில் பாயச்செய்யும் போர்வீரனே, இறுதி நீராடலுடன் கூடிய அந்த வேள்வியை நிறைவு செய்தவனாகச் சொல்லப்படுகிறான்.(30-34) எந்த வீரனின் பீடமானது, பகைவரின் தலைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் தலைகளுடன் பரவச் செய்யப்பட்டிருக்கிறதோ, அவனே எனக்குச் சொந்தமானவற்றைப் போன்ற புகழ் உலகங்களை அடைகிறான்.(35)

எந்த வீரன், பகைவரின் படையில் உள்ள முன்னணி படையைத் தன் மனைவியரின் அறைகளாகக் கருதுவானோ, எவன் தன் படையில் உள்ள முன்னணி படையை வேள்வி காணிக்கைகளை வைப்பதற்கான பாத்திரமாகக் கருதுவானோ, எவன் தனக்குத் தெற்கே நிற்கும் போராளிகளைத் தன் சத்யஸ்களாகவும், வடக்கே நிற்பவர்களை அக்நிதரர்களாகவும் கருதுகிறானோ, எவன் பகைவரின் படைகளைத் தான் மணந்து கொண்ட மனைவியைப் போலப் பார்க்கிறானோ, அவன் புகழ் உலகங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36,37) இரு படைகளுக்கு இடையில் கிடக்கும் திறந்தவெளியானது, வேள்வி செய்பவனின் வேள்விப் பீடமாகவும், மூன்று வேதங்கள் அவனது மூன்று வேள்வி நெருப்புகளாகவும் ஆகின்றன. அந்தப் பீடத்தில், வேத நினைவின் துணையுடன், அவன் தன் வேள்வியைச் செய்கிறான்.(38) மகிமையற்ற எந்த வீரன், அச்சத்தால் போரில் இருந்து புறமுதுகிட்டு பகைவர்களால் கொல்லப்படுவானோ அவன் நரகில் மூழ்குகிறான். இதில் எந்த ஐயமும் கிடையாது.(39) மறுபுறம், எந்தப் போர்வீரன், ஏற்கனவே, மயிர், சதை, எலும்புகளால் பரப்பப்பட்டிருக்கும் அந்த வேள்விப்பீடத்தைத் தன் குருதியால் நனையச் செய்கிறானோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்.(40)

எந்தப் பலமிக்கப் போர்வீரன், பகைவர் படையின் தளபதியைக் கொன்று, வீழ்ந்துவிட்ட எதிராளியின் வாகனத்தில் ஏறுகிறானோ, அவன் விஷ்ணுவின் ஆற்றலைக் கொண்டவனாகவும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியின் நுண்ணறிவைக் கொண்டவனாகவும் கருதப்படுகிறான்.(41) எந்தப் போர்வீரன், எதிரி படையின் தளபதியையோ, அவனது மகனையோ, மதிப்பிற்குரிய வேறு பிற தலைவரையோ உயிருடன் கைப்பற்றுகிறானோ, அவன் எனக்குச் சொந்தமானவற்றைப் போன்ற புகழ் உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(42) ஒருவன், போரில் கொல்லப்பட்ட ஒரு வீரனுக்காக ஒருபோதும் வருந்தக்கூடாது. ஒரு கொல்லப்பட்ட வீரன், தனக்காக வருந்த எவருமில்லாமல் இருந்தால், அவன் சொர்க்கதிதற்குச் சென்று சொர்க்கவாசிகளின் பெரும் மதிப்பை ஈட்டுகிறான்.(43) மனிதர்கள் (அவனுடைய {போரில் கொல்லப்பட்டவனின்} முக்திக்காகத்) தங்கள் உணவையும் பானத்தையும் அர்ப்பணிக்க விரும்புவதில்லை. அல்லது (செய்தியை அறிந்ததும், அவர்கள் நீராடவோ, அவனுக்காக வருந்தவோ செய்வதில்லை. அத்தகு மனிதனுக்குக் கிடைக்கப்போகும் புகழை {புகழ் உலகங்களைச்} சொல்லப் போகிறேன் கேட்பாயாக[4].(44)

எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருக்கும் அப்சரஸ்களில் முதன்மையானவர்கள், (கொல்லப்பட்ட வீரனின் ஆத்மாவை வரவேற்பதற்காக) அவனைத் தங்கள் தலைவனாக அடைய ஆசை கொண்டு பெரும் வேகத்துடன் செல்வார்கள்.(45) போரில் தன் கடமையை முறையாக நோற்கும் க்ஷத்திரியன் அச்செயலின் மூலம், தவங்கள் மற்றும் புண்ணியச் செயல்களின் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உண்மையில், அத்தகு நடத்தையானது அவனுடைய அழிவில்லா கடமை வழியை இயைந்து செல்கிறது. அத்தகு மனிதன், நான்கு வகை வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைகிறான்.(46) முதியோரும், சிறுவர்களும் கொல்லப்படக்கூடாது; பெண்டிரும் கொல்லப்படக்கூடாது; தப்பி ஓடுபவனோ, தன் உதடுகளில் வைக்கோலைக் கொண்டவனோ கொல்லப்படக் கூடாது; “நான் உன்னவன்” என்று சொல்பவனும் கொல்லப்படக்கூடாது[5].(47) திதி மற்றும் தனு ஆகியோரின் மகன்களான ஜம்பன், விருத்திரன், பலன், பாகன், சதமாயன் {மஹாகாயன்}, விரோசனன், தடுக்கப்பட முடியாதவனான நமுசி, எண்ணிலடங்கா மாயைகளைக் கொண்டவனான சம்பரன், விப்ரசித்தி ஆகியோரையும், பிரஹ்லாதனையும் போரில் கொன்ற பிறகே நான் தேவர்களின் தலைவனாக ஆனேன்.” என்றான் {இந்திரன்}.(48,49)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சக்ரன் {இந்திரன்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை அங்கீகரித்த மன்னன் அம்பரீஷன், (போரைத் தங்கள் வழிமுறைகளாகக் கொண்டு) போர் வீரர்கள் எவ்வாறு (அழகிய சொர்க்கலோகங்களை அடைவதைப் பொறுத்தவரையில்) தங்களுக்கான வெற்றியை ஈட்டினார்கள் என்பதை அறிந்து கொண்டான்” {என்றார் பீஷ்மர்}.(50)

வீரனும், கோழையும்! – சாந்திபர்வம் பகுதி – 99-மிதிலையின் மன்னன் ஜனகன் தன் படைகளை உற்சாகப்படுத்திப் போருக்கு அனுப்பிய வரலாற்றையும், அணிவகுத்தல், பகைவரைத் துரத்துதல், வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பிரதர்த்தனனுக்கும், மிதிலையின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1) மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், போரெனும் வேள்வியில் தன்னை நிறுவிக் கொண்ட பிறகு, (அப்போரின் தொடக்கத்தில்) தன் துருப்புகள் அனைத்தையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தான். ஓ! யுதிஷ்டிரா, நான் அக்கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) அனைத்தின் உண்மையை அறிந்தவனும், மிதிலையின் உயர் ஆன்ம மன்னனுமான ஜனகன், தன் போர்வீரர்களுக்குச் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் காட்டினான்.(3) அவன் {ஜனகன்} அவர்களிடம் {தன் படைவீரர்களிடம்}, “அச்சமில்லாமல் போரிடுபவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், பெரும் காந்தியைக் கொண்டவையுமான இவ்வுலகங்களைப் பார்ப்பாயாக. கந்தர்வப் பெண்கள் நிறைந்த அந்த உலகங்கள், விருப்பம் அனைத்தையும் அருள வல்லவையும், அழிவற்றவையுமாகும்.(4) மறுபுறம், போரில் இருந்து தப்பி ஓட நினைப்போருக்கான நரக உலகங்கள் அதோ இருக்கின்றன. அவர்கள் அங்கே அழிவில்லாமல் நீடிக்கும் மகிமையின்மையில் அழுகுவார்கள்.(5) உங்கள் உயிரைக் கைவிடத் தீர்மானித்து, உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீராக. மகிமையற்ற நரகத்தில் வீழ்ந்துவிடாதீர்கள். வீரர்களைப் பொறுத்தவரையில், (போரில்) உயிரை விடுவதே சொர்க்கத்திற்கான அவர்களின் இன்பக் கதவாகும்” என்றான் {ஜனகன்}.(6)

ஓ! பகை நகரங்களை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, இவ்வாறு தங்கள் மன்னனால் சொல்லப்பட்ட மிதிலையின் போர்வீரர்கள், தங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் வகையில் போரில் தங்கள் எதிரிகளை வென்றார்கள். உறுதியான ஆன்மா கொண்டோர் போரில் முன்னணியில் நிற்கும் அவர்களது நிலையையே ஏற்க வேண்டும்.(7) தேர்வீரர்கள், யானைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட வேண்டும். தேர்வீரர்களுக்குப் பின்னால் குதிரைவீரர்கள் நிற்க வேண்டும். அதற்கும் பின்னால் கவசம் பூண்ட காலாட்படையினர் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும்.(8) எந்த மன்னன் தன் அணிவகுப்பை இவ்வகையில் அமைக்கிறானோ அவன் எப்போதும் தன் எதிரிகளை வெல்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, போர் வியூகமானது எப்போதும் இவ்வாறே அமைக்கப்பட வேண்டும்.(9) கோபத்தால் நிறையும் வீரர்கள், நியாயமாகப் போரிடுவதன் மூலம் சொர்க்கத்தின் அருள்நிலையை வெல்லவே விரும்புவார்கள். பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போல அவர்கள் பகைவரின் படையணிகளைக் கலங்கடிப்பார்கள்.(10)

ஒருவருக்கொருவர் உறுதிகூறிக் கொள்ளும் அவர்கள், (தங்களுக்கு மத்தியில்) உற்சாகமற்று இருப்பவர்களை மகிழச் செய்ய வேண்டும். வெற்றியாளன் (வலிய தீங்குகள் ஏதும் செய்யாமல்) புதிதாக வென்ற நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். அவன் {வெற்றியாளன்} முறியடிக்கப்பட்ட தன் எதிரியைத் தன் துருப்புகளைக் கொண்டு அதிகமாகத் தொடர்ந்து துரத்தக்கூடாது.(11) முறியடிக்கப்பட்டுச் செல்பவர்கள், தங்கள் பாதுகாப்பில் நம்பிக்கையிழந்து தங்களைப் பின்தொடர்பவர்களைத் தாக்கத் தொடங்கினால் அது பொறுத்துக் கொள்ளப்பட முடியாததாக இருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதன் காரணமாகவே நீ முறியடிக்கப்பட்ட எதிரியை அதிகமாகத் துரத்த உன் துருப்புகளைப் பணிக்ககூடாது.(12) துணிவுமிக்கப் போர்வீரர்கள், வேகமாக ஓடிக்கொண்டிருப்போரைத் தாக்க விரும்புவதில்லை. முறியடிக்கப்பட்ட எதிரி அதிகமாகப் பின்தொடரக்கூடாது என்பதற்கு இதுவும் மற்றொரு காரணமே.(13) அசையாதன அசைவனவற்றால் உட்கொள்ளப்படுகின்றன; பற்களற்ற உயிரினங்கள், பற்களுள்ளவற்றால் விழுங்கப்படுகின்றன; நீரானது தாகம் கொண்டோரால் குடிக்கப்படுகிறது; கோழைகள் வீரர்கள் விழுங்கப்படுகிறார்கள்.(14)

கோழைகள் தாங்களும் வெற்றியாளர்களைப் போல முதுகுகளும், வயிறுகளும், கரங்களும், கால்களும் கொண்டவர்களாக இருப்பினும் தோல்வியையே நீடிக்கச் செய்வார்கள். அச்சத்தால் பீடிக்கப்பட்டோர், துணிவுமிக்கோர் முன்னிலையில், கரங்களைக் கூப்பித் தலை வணங்கி நிற்பார்கள்.(15) தகப்பனின் தோள்களில் இருக்கும் மகனைப் போல இந்த உலகமானது வீரர்களின் தோள்களில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீரனானவன் மரியாதைக்குத் தகுந்தவனாவான்.(16) மூன்று உலகங்களிலும் வீரத்தைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வீரனே அனைத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்க்கிறான், அனைத்துப் பொருட்களும் வீரனைச் சார்ந்தே இருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(17)

போர்த்திட்டப் பயன்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 100-உண்மை, அறிவு, நன்னடத்தை மற்றும் திட்டத்துடன்கூடிய வழிமுறைகளால் அறம் உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்றும் அவற்றில் திட்டத்துடன் கூடிய வழிமுறைகளே உடனடி பலன்களை உண்டாக்கவல்லைவை என்றும் சொல்லும் பீஷ்மர், அவற்றைக் குறித்து மேலும் விரிவாகச் சொல்வது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, வெற்றியை விரும்பும் மன்னர்கள், அறவிதிகளுக்குச் சற்றே எதிராகச் செயல்பட்டாவது போரில் தங்கள் துருப்புகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்?”(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறமானது உண்மையால் {சத்தியத்தால்} உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்; அறிவால் எனச் சிலரும்; நன்னடத்தையால் எனச் சிலரும், வழிமுறைகள் மற்றும் திட்டங்களின் {சூழ்ச்சியின்} பயன்பாடு ஆகியவற்றால் {உறுதியாக நிலைக்கச்செய்யப்படுகிறது} என்று சிலரும் சொல்கிறார்கள்[1].(2) உடனடி பலனை உண்டாக்கவல்ல வழிமுறைகளும், திட்டங்களும் எவை என்பது குறித்து நான் இப்போது உனக்குச்சொல்லப் போகிறேன். நலம் சார்ந்த கட்டுபாடுகள் அனைத்தையும் மீறும் கள்வர்கள், உடைமைகளையும். அறத்தகுதியையும் நித்தம் நித்தம் அழிப்பவர்களாக இருக்கிறார்கள்.(3) அவர்களைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதற்குச் சாத்திரங்களில் குறிப்பிடப்படும் திட்டங்கள் என்னென்ன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். அனைத்துச் செயல்களின் வெற்றிக்குமான அந்த வழிமுறைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)நேர், குறுக்கு ஆகிய இரண்டு புத்திகளையும் மன்னன் பயன்படுத்தத் தயாராக {அவற்றை அறிந்து வைத்து} இருக்க வேண்டும். குறுக்கு புத்தியை அவன் அறிந்திருந்தாலும், (பிறருக்குத் தீங்கிழைக்க) அதைப் பயன்படுத்தக் கூடாது. தனக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க அதைப் பயன்படுத்தலாம்.(5) பகைவர்கள், மன்னனுக்குத் தீங்கிழைப்பதற்காக, (அமைச்சர்கள், அல்லது துருப்புகள், அல்லது கூட்டாளிகள், அல்லது குடிமக்கள் ஆகியோருக்கு மத்தியில்) அடிக்கடி ஒற்றுமையின்மையை உண்டாக்க முனைவார்கள். கபடம் அறிந்த மன்னன், பகைவரின் அச்செயல்களுக்கு வஞ்சகத்தின் துணையுடன் எதிர்வினையாற்றலாம்.(6) யானைகளின் உடல்களைக் காக்கும் தோற்கவசங்கள், அதே பொருளாலான காளைகளுக்கான கவசங்கள், எலும்புகள், முட்கள், இரும்பாலான கூர்முனை ஆயுதங்கள், இரும்புக்கவசங்கள், வெண்சாமரங்கள்,(7) கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான ஆயுதங்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான அனைத்து வகைக் கவசங்கள், பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் மற்றும் கொடிமரங்கள்,(8) பெருங்கூர்மையுடைய வாள்கள், வேல்கள், கத்திகள், போர்க்கோடரிகள், ஈட்டிகள், கேடயங்கள் ஆகியவை {போர்கருவிகள்} அபரிமிதமாக உற்பத்தி செய்யப்பட்டு, கிடப்பில் வைக்கப்பட்ட வேண்டும்.(9)

ஆயுதங்கள் அனைத்தும் முறையாகக் கூர்த்தீட்டப்பட வேண்டும். படைவீரர்களுக்கு உற்சாகமும், உறுதியும் ஊட்டப்பட வேண்டும். சைத்ரம் {சித்திரை}, அல்லது அக்ரஹாயண {மகரசீரிஷ – மார்கழி} மாதத்தில் துருப்புகள் {போருக்குப்} புறப்படுவதே முறையாகும் {சிறப்பாகும்}.(10) அக்காலத்தில்தான் பயிர்கள் முதிர்கின்றன, நீரும் அரிதாவதில்லை. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வருடத்தின் அந்தக் காலங்களில்தான் அதிகக் குளிரோ, வெப்பமோ இருப்பதில்லை.(11) எனவே, துருப்புகள் அக்காலத்தில் நகரத்தப்பட வேண்டும். எனினும், பகைவன் துன்புறும் காலம் நேரும்போது (இத்தகு உகந்த காலத்திற்காகக் காத்திராமல்) துருப்புகளை உடனடியாகப் புறப்படச் செய்ய வேண்டும். பகைவரை அடக்கும் காரியத்தில் படைகளை நகர்த்த இவையே (இந்த இரண்டு காலங்களும், பகைவனின் ஆபத்துக் காலங்களுமே) சிறந்த தருணங்களாகும்.(12) (படைகளை நகர்த்தும் போது), நீர் நிறைந்ததும், நெடுகிலும் புற்கள் இருப்பதும், சமமானதும், அணிவகுத்துச் செல்ல எளிமையானதுமான சாலை {பாதை} பின்பற்றப்பட வேண்டும். அந்தச் சாலைக்கு அருகே உள்ள பகுதிகள் (சாலைக்கு இரு மருங்கிலும் உள்ள பகுதிகள்), திறன்மிக்கவர்களும், வனங்கள் குறித்த நல்லறிவு கொண்டவர்களுமான ஒற்றர்களின் மூலம் முன்னதகாவே {சோதிக்கப்பட்டு} உறுதி செய்யப்பட வேண்டும்.(13) துருப்பினரை விலங்குகளைப் போல வனப்பகுதிகளின் ஊடாக அணிவகுக்கச் செய்யக்கூடாது. எனவே, வெற்றியை விரும்பும் மன்னர்கள் தங்கள் துருப்புகள் அணிவகுத்துச் செல்ல நல்ல சாலைகளைப் பின்பற்ற வேண்டும்[2].(14)பலமும், உயர்குடி பிறப்பும் கொண்ட துணிச்சமிக்க மனிதர்கள் படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். கோட்டைகளைப் பொறுத்தவரையில், அவை சுவர்களையும், சுற்றிலும் நீர் நிறைந்த ஓர் அகழியையும், ஒரே ஒரு நுழைவாயிலையும் கொண்டவையாக இருப்பதே புகழத்தக்கது.(15) படையெடுத்துவரும் பகைவர்களைப் பொறுத்தவரையில், அதனுள் {கோட்டையினுள்} இருந்தே அவர்களைத் தடுக்கலாம். முகாம் அமைப்பதைப் பொறுத்தவரையில், அது திறந்த வெளியில் இருப்பதைவிடக் காடுகளுக்கு அருகே இருப்பதே சிறப்பானது எனப் போரை அறிந்தவர்களாலும், படை சார்ந்த சாதனைகளைச் செய்தோராலும் கருதப்படுகிறது. முகாமானது வனத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும்.(16,17) அத்தகு இடத்தில் முகாமை அமைத்து, காலாட்படையினரை பாதுகாப்பான நிலையில் நிறுவி, பகைவன் வந்ததும் அவனுடன் மோதுவது, ஆபத்தையும், துயரத்தையும் விலக்கும் வழிமுறைகளாகும். (18)துருப்புகள், உர்ச மேஜர் {ஸப்தரிஷிநக்ஷத்திரங்கள்}[3] என்றழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டத்தைத் தங்கள் பின்னே கொண்டு, மலைகளைப் போன்ற நிலைத்து நின்று போரிட வேண்டும். இவ்வழிமுறையின் மூலம் ஒருவனால் தடுக்கப்பட முடியாத எதிரிகளையும்கூட வெல்ல முடியும்.(19)காற்று, சூரியன் மற்றும் சுக்கிரனெனும் கோள் ஆகியவை தங்கள் பின்னே இருந்து வீசவும், ஒளிரவும் செய்யும் வகையில் துருப்பினர் தங்கள் நிலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, வெற்றியடையும் வழிமுறைகளில் காற்று, சூரியனை விட மேன்மையானது, சூரியன் சுக்கிரனை விட மேன்மையானவன்[4].(20)போரை அறிந்த மனிதர்கள், புழுதியற்றதும், ஈரமற்றதும், சமமானதும், அதிகக் கற்கள் இல்லாததுமான பகுதியானது, குதிரைப்படையின் செயல்பாட்டுக்கு மிகத் தகுந்தது என அங்கீகரிக்கின்றனர்.(21) புழுதி மற்றும் குழிகளற்ற களமானது தேர்வீரர்களுக்குத் தகுந்ததாகும். புதர்கள் அடர்ந்ததும், பெரும் மரங்கள் நிறைந்ததும், நீருள்ளதுமான பகுதி யானை வீரர்களுக்குத் தகுந்ததாகும்.(22) பெரும் மரங்கள் நிறைந்ததும், மூங்கில் மற்றும் பிரம்புப்புதர்கள் அடர்ந்ததும், மலைசார்ந்த அல்லது வனம் சார்ந்த அடைதற்கரிய பல இடங்களைக் கொண்டதுமான ஒரு பகுதியானது, யானைப்படையின் செயல்பாட்டுக்கு மிகவும் தகுந்ததாகும்.(23) ஓ! பாரதா, பெரும் யானைப்படைப்பிரிவைக் கொண்ட ஒரு படையானது, மிகப் பலமானதாகக் கருதப்படுகிறது. தேர் மற்றும் குதிரைவீரர்கள் பெருகியிருக்கும் ஒரு படையானது, (மழையற்ற) தெளிவான நாளில் மிகச் சிறந்த பலனளிக்கும் எனக் கருதப்படுகிறது.(24) காலாட்படை வீரர்களும், யானைகளும் நிறைந்த ஒரு படையானது, மழைக்காலத்தில் மிகச் சிறந்த பலனை அளிக்கும். (பல்வேறு வகையான படைகளின் தன்மைகள், அவற்றை அணிவகுத்து, நிறுவி வழிநடத்தும் முறைகள் ஆகிய) இந்தக் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளும் மன்னன், காலம் மற்றும் இடத்தின் பண்புகளிலும் தன் கவனத்தைத் திருப்ப வேண்டும்.(25)

எந்த மன்னன், இந்தக் கருத்துகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சரியான நட்சத்திரக்கூட்டம் மற்றும் மங்கலமான சந்திர நாள் ஆகியவற்றின் கீழ் {போருக்குப்} புறப்படுவானோ, அவன் தன் துருப்புகளை முறையாக வழிநடத்தி எப்போதும் வெற்றியையே அடைவான்.(26) உறங்குபவர்களையோ, தாகத்திலிருப்பவர்களையோ, களைப்பாக இருப்பவர்களையோ, கவசம் நழுவியவர்களையோ, முக்தியில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தவனையோ, தப்பி ஓடுபவனையோ, (ஆயத்தமில்லாமல்) சாலையில் நடந்த செல்பவனையோ, உணவு உண்டு கொண்டிருப்பவனையோ, பானம் செய்து கொண்டிருப்பவனையோ,(27) பைத்தியக்காரனையோ, மனநிலை குலைந்தவனையோ, மரணக்காயமடைந்தவனையோ, காயங்களால் மிகவும் பலவீனமடைந்தவனையோ, நம்பிக்கைக்குரியவனாக இருப்பவனையோ, ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க இயலாமல் இருப்பவனையோ, குறிப்பிட்ட கலையில் திறம் பெற்றவனையோ, துயரத்தில் இருப்பவனையோ, கால்நடைத் தீவனம் கொள்முதல் செய்ய முகாமை விட்டு வெளியே செல்பவனையோ, முகாம்களை அமைப்பவனையோ {கட்டுபவனையோ}, முகாமின் தொண்டர்களையோ {பணியாட்களையோ},(28) மன்னன், அல்லது அவனது அமைச்சர்களின் வாயில்காப்போராகப் பணி செய்பவர்களையோ, (படைத்தலைவர்களுக்கு) பணிவிடை செய்பவர்களையோ, பணியாளர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களையோ எவனும் ஒருபோதும் கொல்லக்கூடாது.(29)

உன் போர்வீரர்களில், பகைவரின் படையணிகளை உடைப்பவர்களுக்கும், பின்வாங்கிச் செல்லும் உன் துருப்புகளை மீண்டும் திரட்டுபவர்களுக்கும், இரட்டிப்பான ஊதியம் வழங்கி, உணவு, பானம் மற்றும் உனக்கு இணையான ஆசனம் ஆகியவை கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டும்.(30) அவர்களில் பத்து படைவீரர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள், நூறு படைவீரர்களுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும். மேலும் (அவர்களில்) நூறு படைவீரர்களுக்குத் தலைவனாக இருக்கும் கருத்துள்ள வீரன், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட வேண்டும்.(31)

{போரின் போது} முக்கியமான போர்வீரர்களைத் திரட்டி, அவர்களிடம், “வெற்றியடைய உறுதியேற்போம், ஒருபோதும் ஒருவரையொருவர் கைவிடோம்.(32) அச்சமடைந்தோர் இங்கேயே இருக்கட்டும். போரின் நெருக்கத்தில் வீரத்தைப் புறக்கணித்து, தங்கள் தலைவர்கள் கொல்லப்பட விடுபவர்களும் இங்கேயே இருக்கட்டும்.(33) போரில் இருந்து தப்பி ஓடாதவர்களும், தங்கள் தோழர்கள் கொல்லப்பட அனுமதியாதவர்களும் வரட்டும். தங்களையும், தங்கள் தோழர்களையும் பாதுகாக்கும் அவர்கள் நிச்சயம் போரில் எதிரியைக் கொல்வார்கள்.(34) போரில் இருந்து தப்பி ஓடுவதென்பது, செல்வ இழப்பு, மரணம், புகழ்க்கேடு, நிந்தனை ஆகியவற்றை ஏற்படுத்தும். போரில் இருந்து தப்பி ஓடுபவனும், உதடுகளையும், பற்களையும் இழந்தவனும், ஆயுதங்கள் அனைத்தையும் கைவிடுபவனும், எதிரியால் கைப்பற்றப்படுபவனுமான மனிதன் ஏற்பில்லாது, கடுஞ்சொற்களைக் கேட்க வேண்டிருக்கும். அத்தகு தீய விளைவுகள் நம் பகைவீரர்களுக்கு உண்டாகட்டும்.(35,36)

போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் மனிதர்களில் இழிந்தோராவர். அவர்கள் வெறுமனே பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையைப் பெருக்குகிறார்கள். எனினும், ஆண்மையைப் பொறுத்தவரையில் அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் அவ்வாறிருக்க மாட்டார்கள்.(37) ஓ! ஐயா {யுதிஷ்டிரனே}, வெற்றிபெறும் பகைவர்கள் உற்சாகமாகச் செல்வார்கள், ஓடும் எதிராளிகளைத் தொடர்ந்து செல்பவர்கள் எனப் பாணர்களால் அவர்கள் துதிக்கப்படுவார்கள்.(38) போருக்கு வரும் எதிரிகள் ஒரு மனிதனின் புகழை அழித்தால், அவன் அடையும் துயரம் மரணத்தைவிடக் கொடியதாகும்.(39) வெற்றியே அறத்தகுதி மற்றும் அனைத்து வகை இன்பங்களுக்கும் வேர் என்பதை அறிவீர்களாக. எது பெரும் துயரம் என்று கோழைகளால் கருதப்படுமோ, அதை வீரர்கள் உற்சாகமாகச் சுமப்பார்கள்.(40) சொர்க்கத்தை அடையத் தீர்மானித்து, உயிரையே துச்சமாக மதித்து, வெற்றி அல்லது மரணம் என்ற தீர்மானத்துடன் போரிட்டு, இறுதி அருளை சொர்க்கத்தில் அடைவோம்.(41)” என்று சொல்ல வேண்டும்.

இத்தகு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டு, உயிரையே விட ஆயத்தமாக இருக்கும் வீரர்கள், பகைவரின் படையணிகளை எதிர்த்துத் துணிவுடன் விரைய வேண்டும்.(42) படையின் முன்னணியில் வாள்கள் மற்றும் கேடயங்களுடன் கூடிய மனிதர்கள் நிறுத்தப்பட வேண்டும். பின்புறம் தேர்ப்படை நிறுத்தப்பட வேண்டும். அவற்றின் இடைவெளியில் பிற வகைப் போராளிகள் நிறுத்தப்பட வேண்டும்.(43) பகைவரைத் தாக்கும் ஏற்பாடாக இஃது இருக்க வேண்டும். படையில் உள்ள தேர்ந்த போர்வீரர்கள் முன்னணியில் இருந்து போரிட வேண்டும். அவர்கள் பின்னால் இருக்கும் தங்கள் தோழர்களைக் காக்க வேண்டும்.(44) படையினருக்கு மத்தியில் பலத்திலும், துணிவிலும் முதன்மையானவர்களாகக் கருதப்படுபவர்கள், முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்குப் பின்னால் பிறர் நிற்க வேண்டும்.(45)

அச்சமடைந்தோருக்கு ஆறுதலையும்ம் உற்சாகத்தையும் கவனமாக அளிக்க வேண்டும். பலவீனமான போராளிகளும், (எதிரிக்குப்) படையின் எண்ணிக்கையைக் காட்டுவதற்காகவாவது களத்தில் (இருந்து விலக்கப்படாமல்) நிறுத்தப்பட வேண்டும்[5]. (46) துருப்புகள் {துருப்புகளின் எண்ணிக்கை} சொற்பமாக இருப்பின், அவர்கள் நெருங்கியிருந்து போரிடுமாறு செய்யப்பட வேண்டும். சில நேரங்களில், தலைவன் விரும்பினால், நெருக்கமாக இருக்கும் வியூகமானது, பரந்து விரிந்ததாக அமைக்கப்படலாம்.சிறு எண்ணிக்கையிலான துருப்புகள் பெரும் எண்ணிக்கையிலானோருடன் போரிடும்போது, சூசிமுகம் என்றழைக்கப்படும் வியூகம் அமைக்கப்பட வேண்டும்[6].(47) சிறுபடையானது, பெரும்படையுடன் மோதும்போது, அந்தச் சிறு படையின் தலைவன், தன் மக்களின் கரங்களைக் குலுக்கி, உரக்கக் கூச்சலிடும் வகையில், “பகைவர்கள் பிளக்கப்படுகிறார்கள்! பகைவர்கள் பிளக்கப்படுகிறார்கள்!” என்று கூவ வேண்டும்.(48)அவர்களில் பலமிக்கோர், தங்கள் தோழர்களிடம், “புதிய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அச்சமில்லாமல் உங்கள் எதிரிகளைத் தாக்குங்கள்” என்று உரக்கச் சொல்ல வேண்டும்.(49) எஞ்சியோர் அனைவருக்கும் முன்னால் நிற்பவர்கள், உரக்க கூச்சலிட்டபடி, பல்வேறு வகைகளிலான ஒலிகளை உண்டாக்கியபடி, கிரகசங்கள், கொம்புகள், பேரிகைகள், மிருதங்கங்கள் மற்றும் பணவங்களை முழங்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(50)(பூமியின் வடக்கு பக்கத்தில் மிகக் கடைகோடியில் உள்ள துருவ நட்சத்திரமே  (Pole Star) பூமியில் உள்ள அனைவருக்கும், எந்த நாட்டில் உள்ளவர்களுக்கும், கடல் பயணத்தில் உள்ளவர்களுக்கும், எந்த காலத்திலும் வடக்கு எது என்று வழிகாட்ட உதவும் மிக மிக முக்கியமான நட்சத்திரமாகும். இந்த துருவ நட்சத்திரத்திற்கு (Pole Star) சற்று தொலைவிலேயே நாம் வசிஷ்ட நட்சத்திரத்தை (Mizar Star) பார்க்கலாம். இந்த வசிஷ்ட நட்சத்திரத்திற்கு பின்னாலேயே அதை ஒட்டியே இருப்பதும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடியதுதான் இந்த அருந்ததி நட்சத்திரம் (Alcor Star) ஆகும்.  இந்த அருந்ததி நட்சத்திரத்தை திருமணச் சடங்குகளில் பெண்ணும் மாப்பிள்ளையையும் பார்க்கத்தூண்டுவதே நமது இந்திய மரபாகும்.)

போர்வீரர்களின் அங்கலக்கணம்! – சாந்திபர்வம் பகுதி – 101-எந்தெந்த நாடுகளைச் சார்ந்தோர், எந்தெந்தப் போர்முறைகளில் வல்லவர்கள் என்பதையும், போர்வீரர்களின் அங்க அடையாளங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “போருக்குத் தகுந்தவர்களாகத் தங்களை வகைப்படுத்திக் கொள்ளப் போராளிகள் என்ன மனநிலையை மற்றும் என்ன நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் எவ்வாறு கவசமணிந்திருக்க வேண்டும்? எவ்வாறு ஆயுதந்தரித்திருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(போராளிகளில் {அந்தந்த நாடுகளைச் சேர்ந்த} குறிப்பிட்ட குழுவினரின்) பயன்பாட்டில் மிகப் பரிச்சயமாக இருக்கும் ஆயுதங்களையும், வாகனங்களையும் {அவர்கள்} ஏற்றுக்கொள்வதே முறையாகும். துணிச்சல்மிக்கப் படைவீரர்கள், அந்த ஆயுதங்களையும், வாகனங்களையும் ஏற்றுக்கொண்டே போரில் ஈடுபடுகிறார்கள்.(2)

காந்தாரர்கள், சிந்துக்கள், சௌவீரர்கள் ஆகியோர் தங்கள் நகங்கள் மற்றும் வேல்களைக் கொண்டு சிறப்பாகப் போரிடுவார்கள். அவர்கள் துணிச்சல்மிக்கவர்களாகவும், பெரும்பலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது படைகள், அனைத்துப் படைகளையும் வெல்லவல்லவையாக இருக்கின்றன.(3)

உசீநரர்கள், பெரும் பலம் கொண்டவர்களாகவும், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

கிழக்கத்தியர்கள், யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடுவதில் திறன்பெற்றவர்களாகவும், நீதியற்ற போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(4)

யவனர்கள், காம்போஜர்கள், மதுராவைச் சுற்றிலும் வசிப்போர் ஆகியோர் வெறுங்கரங்களால் போரிடுவதில் திறன்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[1].தெற்கத்தியர்கள் தங்கள் கரங்களில் வாளுடன் போரிடுவதில் திறம்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[2].(5)பெரும் பலமும், பெரும் துணிவும் படைத்தோர் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பிறக்கிறார்கள் என்பது நன்கறியப்பட்டது. அவர்களின் அறிகுறிகளை விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)

சிங்கம், அல்லது புலி போன்ற குரலையும், கண்களையும் கொண்டோர், சிங்கம் மற்றும் புலியின் நடையைக் கொண்டோர், பாம்பு அல்லது புறா போன்ற கண்களைக் கொண்டோர் ஆகியோர் அனைவரும், பகைவரின் படையணிகளைக் கலங்கடிக்கவல்லவர்கள் ஆவர்[3].(7). மான் போன்ற குரலும், சிறுத்தை, அல்லது காளை போன்ற கண்களும் கொண்டவர்கள் பெரும் சுறுசுறுப்புக் கொண்டவர்கள் ஆவர். மணியோசைக்கு ஒப்பான குரலைக் கொண்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும், தீச்செயல் புரியக்கூடியவர்களாகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(8) மேகங்களைப் போன்ற ஆழ்ந்த ஒலியைக் குரலாகக் கொண்டவர்கள், கோபம் நிறைந்த முகங்களைக் கொண்டவர்கள், ஒட்டகங்களைப் போன்ற முகங்களைக் கொண்டவர்கள், கோணலான மூக்கும், நாக்கும் கொண்டவர்கள் ஆகியோர் பெரும் வேகத்தைக் கொண்டவர்களாகவும், பெருந்தொலைவுக்குத் தங்கள் ஆயுதங்களை ஏவவோ, வீசவோ கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.(9) பூனை போன்று வளையும் உடல்களும், மெலிந்த முடியும், மெலிந்த தோலும் கொண்டவர்கள், பெரும் வேகம் கொண்டவர்களாகவும், ஓய்வறியாதவர்களாகவும், கிட்டத்தட்ட போரில் வெட்டப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.(10)உடும்பு போன்ற மூடிய கண்களைக் கொண்ட சிலர், மென்மையான மனநிலை கொண்டவர்களாகவும், குதிரையின் வேகமும், குரலும் கொண்டவர்கள், எதிரிகள் அனைவருடனும் போரிடத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(11) கடினமான உடல் படைத்தவர்களாக, அழகானவர்களாக, கட்டுடல் கொண்டவர்களாக, அகன்ற மார்பைக் கொண்டவர்களாக இருப்போர், பகைவனின் பேரிகையையோ, எக்காளத்தையோ கேட்டதும் கோபமடைவோர், அனைத்து வகை அமளிகளிலும் மகிழ்ச்சியில் திளைப்போர்,(12) ஈர்ப்பைக் குறிக்கும் வகையிலான கண்களை, அல்லது வெளியில் பிதுங்கிய கண்களை, அல்லது பச்சை நிறக் கண்களைக்[4] கொண்டோர், நெரிந்த புருவங்களுடன் கருமையடைந்த முகங்களைக் கொண்டோர், கீரிப்பிள்ளையைப் போன்ற கண்களைக் கொண்டோர் ஆகிய அனைவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், போரில் தங்கள் உயிர்களைக் கைவிட வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) கோணலான கண்களும், அகன்ற நெற்றியும், சதைப்பற்றில்லாத கன்னங்களும், வஜ்ரங்களைப் போன்ற உறுதிமிக்கக் கரங்களும், வளையக் குறிகள் கொண்ட விரல்களும், மெலிந்த உடல்களும், புடைத்துத் தெரியும் நரம்புகளும் கொண்டோர்,(14) போர்க்களத்தில் விரைந்து செல்லக்கூடியவர்களாவர். மதங்கொண்ட யானைகளைப் போன்ற அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருகிறார்கள்.(15)பச்சைநிறத்தில்[5] பிளந்து சுருளாக இருக்கும் மயிர் கொண்டவர்கள், பருத்த விலாப்புறங்களுடன் கொளுத்த சதை கொண்டவர்கள், உயர்ந்த தோள்களையும், அகன்ற கழுத்துகளையும் கொண்டவர்கள், அச்சமேற்படுத்தும் முகங்களையும், பருத்த ஆடுதசைகளையும் கொண்டவர்கள்,(16) (வாசுதேவனின் குதிரையான) சுக்ரீவத்தைப் போன்றோ, வினதையின் மகனான கருடனின் வாரிசுகளைப் போன்றோ சீற்றமுடையவர்கள், உருண்ட தலைகள், அகன்ற வாய், பூனைகளைப் போன்ற முகங்கள் ஆகியவற்றைக் கொண்டோர்,(17) கீச்சுக்குரலும், கோபம் நிறைந்த இயல்பும் கொண்டோர், ஆரவாரத்துடன் போரில் விரைவோர், தீய நடத்தையும், நிறைந்த அகந்தையும் கொண்டோர், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டோர், வெளிப்புற மாவட்டங்களில் வாழ்வோர் ஆகிய அனைவரும்,(18) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, போரில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகு துருப்பினரே படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் எப்போதும் போரில் தங்கள் எதிரிகளைக் கொன்று, புறமுதுகிடாமல் கொல்லப்படுபவர்களுமாக இருக்கிறார்கள்.(19) தீய நடத்தையும் அந்நிய பழக்க வழக்கங்களும் கொண்டோர், மென்மையான பேச்சைத் தோல்வியின் அறிகுறியாகக் கருதுகிறர்கள். அவர்கள் மென்மையாக நடத்தப்பட்டால், எப்போதும் அரசுக்கு எதிரான கோபத்தையே அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்” என்றார் {பீஷ்மர்}.(20)

இணக்கக்கலை! – சாந்திபர்வம் பகுதி – 102-வெற்றிபெறத்தக்க அறிகுறிகள் மற்றும் சகுனங்களையும், போர் தொடுக்கும் முன்பும், போரிடும்போதும், வெற்றியடைந்த பிறகும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும், சமரசக் கலையைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படை அடையப் போகும் (எதிர்கால) வெற்றியின் நன்கறியப்பட்ட அறிகுறிகள் என்னென்ன? நான் அவற்றை அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படையின் (எதிர்கால) வெற்றிக்கான நன்கறியப்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்வேன்.(2) தேவர்கள் கோபமடைந்து, மனிதர்கள் விதியால் உந்தப்படும்போது, கல்விமான்கள் தெய்வீக அறிவின் கண்ணால் அனைத்தையும் கண்டு,(3) மங்கலச் செயல்கள், ஹோமம் உள்ளிட்ட கேடு நீக்க {பரிகாரச்} சடங்குகள் ஆகியவற்றைச் செய்து, திருவாய்மொழிகளை {மந்திரங்களை} அமைதியாக ஓதுவதன் மூலம் அனைத்துத் தீங்குகளையும் தணிக்கின்றனர்[1].(4) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, எந்தப் படையின் துருப்புகள் மற்றும் விலங்குகள் அனைத்தும் தளராத உற்சாகம் கொண்டிருக்குமோ, அதுவே உறுதியான வெற்றியை நிச்சயம் வெல்லும்.(5)காற்றானது அந்தத் துருப்புகளின் பின்னால் நலம்பயக்கும் வகையில் {சாதகமாக} வீசிக் கொண்டிருக்கும். வானவில் தோன்றும். மேகங்கள் தங்கள் நிழல்களை அவர்களின் மீது படியச் செய்யும், சில நேரங்களில் சூரியனும் அவர்களின் மேல் ஒளிர்வான்.(6) நரிகளும், கருங்காக்கைகளும், கழுகுகளும் கூட அவர்களுக்கு மங்கலமானவையாகின்றன. இவை அந்தப் படையிடம் இவ்வாறு நடந்து கொண்டால், அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைவது நிச்சயமாகும்.(7) அவர்களது (வேள்வி) நெருப்புகள் மேல்நோக்கி ஒளிர்ந்து, சற்றே தெற்கு நோக்கிய புகையற்ற தழல்களுடனும், தூய காந்தியுடனும் சுடர்விடும். அவற்றின் மேல் ஊற்றப்படும் ஆகுதிகள் இனிமையான நறுமணத்தை வீசும். இவையே எதிர்கால வெற்றியின் அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.(8) முழக்கப்படும் சங்குகளும், பேரிகைகளும், உரத்த ஆழமான ஒலிகளை வெளியிடும். போராளிகள் ஆர்வம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவையும் எதிர்கால வெற்றிக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.(9) மானும், நான்கு கால் விலங்குகளும், போருக்குப் புறப்பட்டவரின், அல்லது புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரின் பின்னாலோ, இடதுபுறமோ தென்பட்டால், அவை மங்கலமானவையாகக் கருதப்படுகின்றன. போர்வீரர்கள் படுகொலையில் {போரில்} ஈடுபடும்போது அவர்களின் வலப்புறம் அவை தென்பட்டால், அதுவும் வெற்றிக்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது. எனினும், அவை அத்தகு மனிதர்களின் முன்னால் தோன்றினால், அவை பேரழிவையும், தோல்வியையும் குறிக்கின்றன.(10)

அன்னங்கள், நாரைகள் {கிரௌஞ்சங்கள்}, சதபத்திரங்கள் {மரங்கொத்திகள்}, சாஷங்கள் {காடைகள்} ஆகிய பறவைகள் மங்கல ஒலிகளையெழுப்புவதும், திறன்மிக்கப் போராளிகள் அனைவரும் உற்சாகமடைதலும் எதிர்கால வெற்றியின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன.(11) எவருடைய வியூகமானது காந்தியால் சுடர்விடுகிறதோ, ஆயுதங்கள், இயந்திரங்கள், கவசங்கள், கொடிமரங்கள், சீற்றமிகு மனித முகங்களின் ஒளிரும் நிறங்கள் ஆகியவற்றின் விளைவால் பயங்கரமாகத் தெரிகிறதோ, அவர்கள் தங்களுடைய எதிரிகளை எப்போதும் வெல்வார்கள்.(12) படையின் போராளிகள் தூய நடத்தை கொண்டோராக, பணிவுள்ளவர்களாக, ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுபவராக இருந்தால், அதுவும் எதிர்கால வெற்றிக்கான குறியீடாகக் கருதப்படுகிறது.(13) இனிமையான ஒலிகள், மணங்கள், உணர்ச்சிமிக்கத் தீண்டல் ஆகியவை மேலோங்கினால், போராளிகள் செய்நன்றி, பொறுமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தால், அவையே வெற்றிக்கான வேர்களாகக் கருதப்படுகின்றன.(14) போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனுக்கு இடப்புறமும், ஈடுபட இருப்பவனுக்கு வலப்புறமும் இருக்கும் காகம், மங்கலமானதாகக் கருதப்படுகிறது. பின்புறம் தென்பட்டால் அது கருத்தில் உள்ள நோக்கங்கள் நிறைவடையாமையைக் குறிக்கும், முன்புறம் தென்பட்டாலோ அஃது ஆபத்தின் முன்னறிவிப்பாகும்[2].(15)ஓ! யுதிஷ்டிரா, நால்வகைப் படைகளைக் கொண்ட ஒரு பெரும்படையை {பட்டியல் சரிபார்க்கப்பட்டுக்} கணக்கிட்டபிறகும் கூட முதலில் அமைதியாக {சாமோபாயத்துடன்} நடந்து கொள்வாயாக. அமைதிக்கான உன் முயற்சிகள் தோல்வியடைந்தால், பிறகு நீ போரில் ஈடுபடலாம்.(16) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, போரில் ஒருவன் அடையும் வெற்றியானது தாழ்ந்ததே. போரில் அடையப்படும் வெற்றியானது, உறுதியின்மை, அல்லது விதியைச் சார்ந்திருப்பதாகவே தெரிகிறது.(17) ஒரு பெரும்படையானது பிளந்து, துருப்புகள் தப்பி ஓடும்போது, அவர்களின் ஓட்டத்தைத் தடுப்பது என்பது மிகக் கடினமானதாகும். தப்பி ஓடும் வேகமானது, ஒரு பெரும் நீரூற்றுக்கோ, அச்சமடைந்த மான்மந்தைக்கோ ஒப்பானதாகும்.(18) சிலர் பிளந்தால், துணிச்சல்மிக்கவர்களும், போரில் திறன்மிக்கவர்களுமான பிறரும்கூடப் போதுமான காரணமின்றிப் பிளந்து செல்வார்கள். துணிச்சல்மிக்கப் படைவீரர்களைக் கொண்ட ஒரு பெரும்படையேகூட, ருருமான் மந்தையைப் போன்றதே[3].(19) சில வேளைகளில், உறுதியானவர்களும், ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்களும், உற்சாகம் நிறைந்தவர்களும், தங்கள் உயிரையே விட ஆயத்தமாயிருப்பவர்களுமான வெறும் ஐம்பது {50} மனிதர்களே கூட, எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவர்களைக் கலங்கடிப்பதில் வெல்வதைக் காண முடிகிறது.(20) சில வேளைகளில், உறுதியானவர்களும், ஒற்றுமையுடன் நெருக்கமாக நிற்பவர்களும், உயர்ந்த குடிவழியில் வந்தவர்களும், அறிந்தவர்களால் மதிக்கப்படுபவர்களுமான ஐந்து, அல்லது ஆறு, அல்லது ஏழு மனிதர்கள் கூட, எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவர்களை வெல்கிறார்கள்.(21)தவிர்க்கக்கூடிய வரை போரானது விரும்பத்தக்கதன்று. கொடைகளைக் கொடுத்து ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்கும் இணக்க {சமரசக்} கொள்கையே முதலில் முயற்சிக்கப்பட வேண்டும். இவற்றின் பிறகே போரிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(22) சொர்க்கத்தின் சுடர்மிக்க வஜ்ரத்தைக் கண்டு, “ஓ!, எதன் மூலம் இது நிறைவை எட்டும்” என்று அச்சமடைந்தோர் சொல்வதைப் போல, (பகைவரின்) படையைக் கண்டதும் அச்சமானது மருண்டோரை முடமாக்குகிறது[4].(23) போரை உறுதிசெய்து கொண்டு, அதில் ஈடுபடப்போவோரின் அங்கங்களும், வெல்பவனின் அங்கங்களும் அபரிமிதமாக வியர்க்கின்றன[5].(24) ஓ! மன்னா, (போரின் இருக்கையாக விளங்கும்) மொத்த நாடும் கலக்கமடைந்து, அதிலிருக்கும் அசையும், மற்றும் அசையாத உயிரினங்களுடன் சேர்த்துப் பீடிக்கப்படுகிறது. உடல்கொண்ட உயிரினங்களின் மஜ்ஜைகள் ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்டு, வலியால் {துன்பத்தால்} வாடுகின்றன.(25)எனவே, ஒரு மன்னன் கடுமையான நடவடிக்கைகளுடன் கலந்த இணக்க {சமரசக்} கலைகளை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டும். மக்கள் பகைவர்களால் பீடிக்கப்படும்போது, {அப்பகைவரின்} வரையறைகளை ஏற்கும் மனநிலையையே அவர்கள் எப்போதும் வெளிப்படுத்துவார்கள்[6].(26) எதிரியின் கூட்டாளிகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்க மறைமுகவர்கள் {ஒற்றர்கள்} அனுப்பப்பட வேண்டும். ஒற்றுமையின்மையை உண்டாக்கிய பிறகு, (நசுக்கப்பட வேண்டிய) எதிரியை விட அதிகப் பலசாலியாக இருக்கும் மன்னனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்வது மிகச்சிறந்தது.(27) படையெடுப்பாளன் இவ்வழியில் செயல்படவில்லையெனில், அவன் தன் எதிரியை நசுக்குவதில் ஒருபோதும் முற்றான வெற்றியை அடைய மாட்டான். பகைவரைக் கையாளும்போது, அனைத்துப் புறங்களில் இருந்தும் அவனை வளைப்பதில் கவனமாக வேண்டும்.(28) மன்னிக்கும் தன்மை {பொறுமை} எப்போதும் நல்லோருக்கே ஏற்படும். தீயோருக்கு அஃது ஏற்படாது. ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் கடுமை ஆகியவற்றின் பயன்களை இப்போது கேட்பாயாக.(29)படையெடுப்புக்குப் பிறகு, மன்னிக்கும் தன்மையை {பொறுமையை} வெளிப்படுத்தும் மன்னனின் புகழ் மிக விரிவான அளவில் பரவுகிறது. மன்னிக்கும் மனநிலையுடன் இருக்கும் ஒரு மனிதனின் பகைவர்களே கூட, மிக முக்கிய மீறலுக்கான குற்றச்சாட்டுக்கு அவன் ஆளாகும் போது, அவனை நம்புவார்கள்.(30) ஒரு மரத்தண்டானது {மூங்கில், பிரம்பு போன்ற மரங்கள்} சுடப்படாமல் நேராக்கப்பட்டால் {நிமிர்க்கப்பட்டால்}, அது மீண்டும் தன் பழைய நிலையையே மிக விரைவில் ஏற்கும். எனவே, பகைவனை முதலில் பீடித்த பிறகே அவனுக்கு மன்னிப்பு {பொறுமை} காட்டப்பட வேண்டும் என்று சம்பரன் {சம்பராசுரன்} சொல்லியிருக்கிறான்.(31) எனினும் சாத்திரங்களில் திறன்வாய்ந்த மனிதர்கள் இதை மெச்சுவதில்லை. மேலும் அவர்கள் அஃதை ஒரு நல்ல மன்னனுக்குரிய அறிகுறியாகவும் கருதவில்லை. மறுபுறம் அவர்கள், ஒரு தந்தை தன் மகனைக் கோபமில்லாமலும், அவனை அழித்துவிடாமலும் அடக்கித் தடுப்பதைப் போலவே, ஒரு பகைவனும் அடக்கித் தடுக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றனர்.(32) ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் கடுமையாக இருந்தால், அவன் அனைத்துயிர்களின் வெறுப்புக்கான பொருளாகிறான். மறுபுறம் மென்மையானவனாக இருந்தாலோ, அனைவராலும் அவமதிக்கப்படுகிறான். எனவே, நீ கடுமை, மென்மை ஆகிய இரண்டையும் பயில வேண்டும்.(33) ஓ! பாரதா, தாக்குவதற்கு முன்பும், தாக்கும்போதும் இனிமையான சொற்களைப் பேசுவாயாக; தாக்கிய பிறகு அவர்களிடம் கருணை காட்டி, நீ அவர்களுக்காக வருந்துவதையும், அழுவதையும் அவர்களுக்குப் புரிய வைப்பாயாக.(34)

மன்னன், ஒரு படையை வென்ற பிறகு, {எதிரிப் படையினரில்} எஞ்சியிருப்போரிடம், “என் துருப்புகளால் இவ்வளவு அதிகமான பேர் கொல்லப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஐயோ, என்னால் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டும் அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லையே.(35) (கொல்லப்பட்டவர்கள்) அனைவரும் உயிரோடிருப்பதையே நான் விரும்பினேன். அவர்கள் இத்தகு மரணத்திற்குத் தகுந்தவர்களல்ல. அவர்கள் அனைவரும், நல்லோராகவும், உண்மையானவர்களாகவும், போரில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். உண்மையில் அத்தகு மனிதர்கள் அரிதானவர்கள்.(36) போரில் அத்தகு வீரனைக் கொன்ற ஒருவன், நிச்சயமாக எனக்கு ஏற்பில்லாததையே செய்திருக்கிறான்” என்று சொல்ல வேண்டும். வெல்லப்பட்ட எதிரிப் படையில் எஞ்சியிருப்போரிடம் இவ்வாறு பேசிவிட்டு, தன் துருப்பினரில் எதிரியைத் துணிவுடன் கொன்றவர்களுக்கு மறைமுகமாகக் கௌரவங்களை அளிக்க வேண்டும்.(37)

பகைவரின் கைகளால் காயமடைந்து துன்புற்றிருக்கும் கொலையாளிகளுக்கு ஆறுதலளிக்கவும், தன்னோடு அவர்களை இணைத்துக் கொள்ளவும் விரும்பும் மன்னன், அவர்கள் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டு அழவும் செய்யலாம்.(38) இவ்வாறு மன்னனானவன், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அச்சமற்றவனாக, அறவோனாக இருக்கும் மன்னன் ஒருவன், அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுகிறான்.(39) ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களும் அத்தகு ஆட்சியாளனையே நம்பும். அவர்களது நம்பிக்கையை வெல்லும் ஒருவன், தான் விரும்பும்வரை பூமியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(40) எனவே, மன்னனானவன் வஞ்சகத்தைக் கைவிட்டு, அனைத்துயிரினங்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிக்க வேண்டும். மேலும் அவன், பூமியை அனுபவிக்க முனைந்தால், தன் குடிமக்களை அச்சங்கள் அனைத்தில் இருந்து பாதுகாக்கவும் முனைய வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(41)

எவன் தீயவன்! – சாந்திபர்வம் பகுதி – 103-எதிரியை வெற்றி கொள்வது குறித்தும், தீயவர்களின் அறிகுறிகளைக் குறித்தும் இந்திரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீமரிடம்}, “ஓ! பாட்டா, மென்மையான எதிரியிடமும், கடுமையான எதிரியிடமும், பல கூட்டாளிகளையும், பெரிய படையையும் கொண்ட ஒருவனிடமும் ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பிருஹஸ்பதிக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை ஒரு பழங்கதை குறிப்பிடுகிறது.(2) ஒரு காலத்தில், பகைவீரர்களைக் கொல்பவனும், தேவர்களின் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, தன் கரங்களைக் கூப்பியபடியே பிருஹஸ்பதியை அணுகி, அவரை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(3)

இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, நான் என் எதிரிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? {சூழ்ச்சித்}திட்டங்களைக் கொண்ட வழிமுறைகளின் {ராஜதந்திரங்களின்} மூலம் நான் எவ்வாறு அவர்களை {எதிரிகளை} அடக்க வேண்டும்?(4) இரு படைகளுக்கிடையிலான மோதலில் ஒரு தரப்பே வெற்றியை அடையும். நான் வென்ற சுடர்மிக்கச் செழிப்பும், என் பகைவர்கள் அனைவரின் வாட்டமும் என்னைக் கைவிடாதிருக்க, நான் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(5) இவ்வாறு கேட்கப்பட்டவரும், அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த காரியங்களில் திறன்மிக்கவரும், அரச கடமைகளின் அறிவைக் கொண்டவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான பிருஹஸ்பதி, பின்வரும் வார்த்தைகளில் இந்திரனுக்குப் பதிலளித்தார்.(6)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஒருவன் தன் எதிரிகளைச் சச்சரவின் {கலகத்தின்} மூலம் அடக்க ஒருபோதும் விரும்பக்கூடாது. கோபத்தில் தூண்டப்பட்ட, மன்னிக்கும் தன்மையற்ற {பொறுமையற்ற} சிறுவர்கள் மட்டுமே சச்சரவு செய்ய முனைவார்கள்.(7) எதிரியை அழிக்க விரும்பும் ஒருவன், அந்த எதிரி பாதுகாப்பை அடையும்படி செயல்படக்கூடாது. மறுபுறம், ஒருவன் தன் கோபத்தையோ, அச்சத்தையோ, மகிழ்ச்சியையோ ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. அவன் அவற்றைத் தன் நெஞ்சுக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.(8) ஒருவன் உண்மையில் தன் எதிரியை நம்பக்கூடாது என்றாலும், அவனிடம் முழுமையான நம்பிக்கையுடனிருப்பது போல அவனிடம் நடந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் எதிரிகளிடம் எப்போதும் இனிமையான வார்த்தைகளையே பேச வேண்டும், அவனுக்கு ஏற்பில்லாத எதையும் ஒருபோதும் செய்யக்கூடாது.(9) ஒருவன் பலனற்ற பகைச்செயல்களையும், துடுக்குத்தனமான பேச்சையும் {கோள் சொல்வதைத்} தவிர்க்க வேண்டும். ஒரு வேடனானவன், அவன் பிடிக்க, அல்லது கொல்ல விரும்பும் பறவைகள் போன்றே கவனமாகக் குரலெழுப்பி,(10) அவற்றைக் கைப்பற்றி, தன் ஆளுகைக்குள் கொண்டுவருவதைப் போலவே, ஓ! புரந்தரா {இந்திரா}, ஒரு மன்னனும் தன் எதிரிகளைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்த பிறகு, தான் விரும்பினால் அவர்களைக் கொல்லலாம்[1].(11)ஒருவன் தன் எதிரிகளை வென்றபிறகு, கவலையில்லாமல் உறங்கக்கூடாது. தீயவனான பகைவன், கவனமில்லாமல் விடப்படும் நெருப்பு மீண்டும் தோன்றுவதைப் போலவே தன் தலையை மீண்டும் உயர்த்துவான்.(12) இரு தரப்பாலும் வெற்றியடையமுடியும் எனும்போது, பகைமைமிக்க ஆயுத மோதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவன் தன் எதிரியைப் பாதுகாப்பாக வளைத்து அமைதிப்படுத்திய பிறகு, அவனைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து, தன் நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள வேண்டும்.(13) ஒரு பகைவன் அவமதிக்கவும், புறக்கணிக்கவும் பட்டு, {வாழ்க்கை} நெடுகிலும் இதயத்தால் அடங்காதவனாக இருந்தால், அவன் தன் அமைச்சர்களுடனும், கொள்கை அறிந்த புத்திமான்களுடனும் கலந்தாலோசித்து,(14) உரிய காலம் நேரும்போது, அதிலும் குறிப்பாக அவமதித்தவன் தவறான அடியை எடுத்து வைக்கும்போது அவனைத் தாக்குவான். அத்தகு எதிரியானவன், தன் நம்பிக்கைக்குரிய முகவர்களை {ஒற்றர்களை} நியமித்து, அவனுடைய {அவமதித்தவனின்} திறனில்லா படைகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவான்.(15)

ஒரு மன்னன், தன் எதிரிகளின் தொடக்கக் காலம், மத்திய காலம் மற்றும் முடிவுக்காலம் ஆகியவற்றை உறுதி செய்து {தெரிந்து} கொண்டு[2]இரகசியமாக அவர்களிடம் பகைவளர்க்க வேண்டும். அவன் நேர்மறையான ஆதாரங்கள் அனைத்தையும் உறுதி செய்து {தெரிந்து} கொண்டு, தன் எதிரியின் படைகளை ஊழலில் மலியச் செய்து, {பேதவழியில்}வேற்றுமையை உண்டாக்கும் கலைகளைப் பயன்படுத்தி, {தான வழியில்} கொடைகளைக் கொடுத்து, {தண்ட வழியில்} விஷம் கொடுத்துச் சிதைக்க வேண்டும். ஒரு மன்னன் தன் எதிரிகளின் தோழமையில் ஒருபோதும் வாழக்கூடாது. ஒரு மன்னன் நீண்ட காலம் காத்திருந்தாவது தன் எதிரிகளைக் கொல்ல வேண்டும். உண்மையில் அவன், குறைந்தது தன் எதிரி எதிர்பார்க்காத வேளையில் அவன் மீது பாயும் வகையில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஒரு மன்னன் தன் வெற்றியை ஐயமற்றதாகச் செய்ய, தன் எதிரியின் துருப்பினரைக் கொல்ல வேண்டும் என்றாலும், பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஒருபோதும் கொல்லக்கூடாது.(18) மன்னன் தன் எதிரியின் இதயம் எரிச்சலடையும் வகையில் ஒருபோதும் அவனுக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடாது. மேலும் அவன் சொற்கணைகளாலும் அவனுக்குக் காயங்களை உண்டாக்கக்கூடாது. வாய்ப்பேற்படும்போது, அவன் நழுவிவிடாதவாறு அவனைத் தாக்க வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, எதிரிகளைக் கொல்ல விரும்பும் மன்னன், தன் எதிரிகளாக இருப்போரிடம் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(19) வாய்ப்புக்காகக் காத்திருக்கும் மனிதனைப் பொறுத்தவரையில், செயல் பட விரும்பும் அவனிடம் இருந்து வாய்ப்பு ஒரு முறை நழுவிச் சென்றால், மீண்டும் அஃது ஒருபோதும் வாய்க்காது.(20)ஞானியரின் கருத்துகளின் படி செயல்படும் மன்னன், தன் எதிரியின் பலத்தை மட்டுமே உடைக்க வேண்டும். வாய்ப்பில்லாதபோது தன் நோக்கங்களை நிறைவேற்ற அவன் ஒருபோதும் முனையக்கூடாது. அதே வேளையில் வாய்ப்பு இருக்கும்போது, தன் எதிரியை வாட்டவும் கூடாது[3].(21) காமம், கோபம் மற்றும் செருக்கு ஆகியவற்றைக் கைவிடும் மன்னன், தன் எதிரிகளின் தவறுகளை {காலதாமதத்தைத்} தொடர்ந்து கண்காணித்துக் கவனத்துடன் செயல்பட வேண்டும்.(22) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, இயல்பான மென்மை, தண்டனைகளில் கடுமை, செயல்படாமை, கவனக்குறைவு ஆகியவற்றின் மூலம் (எதிரிகளிடம்) செயல்படுத்தப்படும் வஞ்சகம் நிறைந்த சதித்திட்டங்கள் ஒரு மூட மன்னனை அழித்துவிடும்.(23) இந்த நான்கு தவறுகளை வெற்றிக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகளின் வஞ்சக சதித்திட்டங்களுக்கு எதிர்வினையாற்றி, அவர்கள் அனைவரையும் தாக்கி ஐயமில்லாமல் வெல்கிறான்.(24) (மன்னனின்) ஓர் இரகிசய நோக்கத்தை (வேறெந்த உதவியுமின்றி) நிறைவேற்றத் தகுந்தவன் ஒரேஒரு அமைச்சனே என்ற போது, அத்தகு இரகசிய நோக்கத்தைப் பொறுத்தவரை அந்தவொரு அமைச்சனிடம் மட்டுமே அவன் ஆலோசிக்க வேண்டும். பல அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தால், அவர்கள் அந்தப் பணியின் சுமையை அடுத்தவர்களின் தோள்களில் சுமத்த முயற்சித்து, இரகசியமாக வைக்கப்பட வேண்டிய அந்நோக்கத்தை விளம்பரப்படுத்திவிடக்கூடும்.(25) ஒரே ஒருவரிடம் ஆலோசிப்பது முறையாகாது எனும்போது மட்டுமே மன்னன் பலருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.எதிரி கண்ணுக்குப் புலப்படாதபோது, தெய்வீக தண்டனை அவர்களுக்கு ஏற்பட அஃதை {தெய்வீகத் தண்டனையை} இருப்புக்கு அழைக்கவேண்டும். அவர்கள் {எதிரிகள்} புலப்பட்டால், நால்வகைப் படைகள் நகர்த்தப்பட வேண்டும்[4].(26) மன்னன் முதலில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்கும் {பேத} முறையையும், இணக்க {சாம} முறைகளையும் பயன்படுத்த வேண்டும். அந்தந்தக் குறிப்பிட்ட வழிமுறைக்கான காலம் வாய்க்கும்போது, அந்தக் குறிப்பிட்ட வழிமுறைகளையே செயல்படுத்த வேண்டும்.(27) சில நேரங்களில் மன்னன், தன் பலமிக்க எதிரிகளின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழவும் வேண்டும். மேலும் கவனமாகச் செயல்படும் அவன், வெற்றியாளன் {எதிரி} கவனமற்றவனாக இருக்கும்போது அவனுக்கு அழிவை ஏற்படுத்த முயல வேண்டும்.(28) நெடுஞ்சாண்கிடையாக விழுவது, கப்பத்தைக் கொடையாகக் கொடுப்பது, இனிய சொற்கள் பேசுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் பலமிக்க மன்னனின் எதிரில் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். (இத்தகு செயல்களுக்கான வாய்ப்பு நேரும்போது) ஒருவன் தன் பலமிக்க எதிரி ஐயங்கொள்ளும் அளவுக்கு எச்செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது.(29) அத்தகு சூழ்நிலைகளில் பலவீனமான ஓர் ஆட்சியாளன், ஐயத்தை எழுப்பும் செயல்கள் அனைத்தையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வெற்றியாளனான ஒரு மன்னன், வெல்லப்பட்டவனான எதிரிகள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள் என்பதைக் கருத்திக் கொண்டு, அவர்களை நம்பாமல் இருக்க வேண்டும்.(30)ஓ! தேவர்களில் சிறந்தவனே {இந்திரனே}, ஓ! இறவாதவர்களின் ஆட்சியாளனே, செழிப்பை அடைவதைவிட, அமைதியற்ற மனநிலை கொண்ட மனிதர்களுக்கு மிகக் கடினமானது வேறேதும் இல்லை.(31) அமைதியற்ற மனோநிலை கொண்ட மனிதர்களின் இருப்பே ஆபத்து நிறைந்ததாகும். எனவே, மன்னர்கள் தங்கள் நண்பர்களையும், எதிரிகளையும் கவனமாக உறுதி செய்ய {தேர்ந்தெடுக்க} வேண்டும்.(32) ஒரு மன்னன் மென்மையடைந்தால், அவன் அவமதிக்கப்படுகிறான். அவன் மூர்க்கமடைந்தால், மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறான். எனவே, நீ மூர்க்கனாயிராதே, அதே வேளையில் மென்மையானவனாகவும் இராதே. கடுமை, மென்மை ஆகிய இரண்டையும் கொண்டவனாக இருப்பாயாக.(33) மூர்க்கமான நீரோடை உயர்ந்த கரையைக்கூட அரித்து, நிலச்சரிவை ஏற்படுத்துவதைப் போலவே, கவனமின்மையும், தவறும் ஒரு நாட்டையே அழித்துவிடும்.(34) ஒரே நேரத்தில் பல எதிரிகளை ஒருபோதும் எதிர்க்காதே. ஓ! புரந்தரா, இணக்க {சாம}, கொடை {தான}, வேற்றுமையை உண்டாக்குதல் {பேதம்} ஆகிய கலைகளைக் கொண்டு அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கலங்கடிக்கப்பட வேண்டும்.(35)

(சிறு எண்ணிக்கையில்) எஞ்சியிருப்போரைப் பொறுத்தவரையில், வெற்றியாளன் அவர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளலாம். நுண்ணறிவைக் கொண்ட ஒரு மன்னன், ஒரே நேரத்தில் (தன் எதிரிகள்) அனைவரையும் நொறுக்க இயன்றவனாக இருப்பினும், அவன் அவ்வாறு செயல்படக்கூடாது[5].(36) ஒரு மன்னனானவன், தன்னிடம் அர்ப்பணிப்புள்ள குதிரை, யானைகள், தேர்கள், காலாள், இயந்திரங்கள் ஆகியவை அடங்கிய ஆறு அங்கங்களைக் கொண்ட ஒரு பெரிய படையைக்[6] கொண்டிருப்பவனானால்,(37) ஒரு நியாயமான ஒப்பீட்டளவில் பல விதங்களில் தன் எதிரியைவிடத் தான் மேன்மையானவனாக இருப்பதாகக் கருதினால், அப்போது அவன் தயங்காமல் வெளிப்படையாக எதிரியைத் தாக்க வேண்டும்.(38) எதிரி பலவானாக இருந்தால், (அவனிடம்) இணக்கக் கொள்கையைப் பின்பற்றுவது பாராட்டுக்குரியதல்ல. மறுபறம், இரகசிய வழிமுறைகளில் தண்டிக்கும் கொள்கையே பின்பற்றப்படவேண்டும். நிர்வாகத்தின் ஏழு கிளைகளைப் பொறுத்தவரையில் பயிர் இழப்பு, கிணறுகள் மற்றும் குளங்களுக்கு நஞ்சூட்டுவது, ஐயுணர்வை ஏற்படுத்தல்ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதால், அத்தகு எதிரிகளிடம் மென்மையான நடத்தையோ, மீண்டும் மீண்டும் படையெடுப்பதோ பின்பற்றப்படக்கூடாது[7]. (39) அத்தகு சந்தர்ப்பங்களில் மன்னன் பல்வேறு வஞ்சனைகளையும், பல்வகைச் சதிச்செயல்களையும் செய்து, பல்வேறு வகைக் கபட நடத்தைகளையும் மேற்கொண்டு எதிரிகளை ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்ப வேண்டும்.(40)ஓ! பலனையும், விருத்திரனையும் கொன்றவனே {இந்திரனே}, எதிரிகளைத் துரத்தும் மன்னர்கள், அவர்களது கோபுரங்களில் {நகரத்திற்குள்} நுழைந்து, அங்கே கிடைக்கும் சிறந்த பொருட்களைக் கைப்பற்றித் தனதாக்கி, தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளில் உரிய கொள்கை நடவடிக்கைகளை வகுக்கின்றனர்.(41) மன்னர்கள், பகைவருக்குத் தனிமையில் {மறைமுகமாகச்} செல்வக்கொடையளித்து, வெளிப்படையாக அவர்களது உடைமைகளைப் பறிமுதல் செய்து, பொருள் சார்ந்த காயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல், அவர்கள் அனைவரும் தீய மனிதர்கள் என்றும், அவர்களது தவறான செயல்களுக்காகவே அவர்கள் துன்புறுகிறார்கள் என்பதையும் அறிவிக்கும் வகையில் தங்கள் பகைவரின் நகரங்கள் மற்றும் மாகாணங்களுக்குத் தங்கள் ஒற்றர்களை அனுப்ப வேண்டும்.(42) அதே வேளையில், தங்கள் சொந்த நகரங்களில் சாத்திரங்களை அறிந்தவர்களும், அனைத்துச் சாதனைகளையும் கொண்டவர்களும், புனித நூல்களின் விதிகளை அறிந்தவர்களும், கல்வியாளர்களுமான மனிதர்களைக் கொண்டு, எதிரிகளைக் கொல்வதற்கான சடங்குகளையும், மந்திரங்களை ஓதுவதையும் செய்ய வைக்க வேண்டும்” என்றார் {பிருஹஸ்பதி}.(43)

இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, ஒரு தீய மனிதனின் அறிகுறிகள் என்னென்ன? என்னால் கேட்கப்படும் நீர், நான் எவ்வாறு தீயவர்களை அறிவது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(44)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “எவன் அடுத்தவரின் குறைகளை அவர்களின் முதுகுக்குப் பின்னால் அறிவிக்கிறானோ; எவன் அடுத்தவரின் சாதனைகளில் பொறாமை கொள்கிறானோ; எவன் தன் முன்னிலையில் வேறு மக்களின் தகுதிகள் அறிவிக்கப்படும்போது, அந்தக் கூட்டுத்துதியில் சேரத் தயங்கி அமைதியாக இருக்கிறானோ அவனே தீய மனிதன்.(45) அத்தகு சந்தர்ப்பங்களில் அமைதியாக இருப்பது மட்டுமே தீமையின் குறியீடு அல்ல. எனினும், அத்தகு நேரங்களில் ஒரு தீய மனிதன், நெடும் மூச்சு விடுவான், தன் உதடுகளைக் கடித்துக் கொள்வான், மேலும் தன் தலையையும் அசைப்பான்.(46) அத்தகு மனிதன் எப்போதும் சமூகத்துடன் கலந்து, தொடர்பில்லாமல் பேசுவான்[8]. அத்தகு மனிதன் எந்த மனிதனுக்கு எந்த உறுதியை அளித்தானோ, அந்த மனிதனின் கண் தன் மேல் இல்லாதவரை, அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அந்த மனிதனின் கண் அவன் மீது இருக்கும்போதோ, அந்தத் தீய மனிதன் அதுகுறித்து மறைமுகமாகக் கூடக் குறிப்பிட மாட்டான்.(47) அந்தத் தீய மனிதன் (பிறரைச் சேர்த்துக் கொள்ளாமல் தான் மட்டும்) தனியாக உண்பான், “மற்ற நாட்களைப் போல இல்லாமல் இன்று எதுவும் சரியில்லை” என்று தன் முன் வைக்கப்படும் உணவிலும் குறை கண்டுபிடிப்பான். அமர்வது, படுப்பது, போவது தொடர்பான சூழ்நிலைகளில் கூட அவனுடைய மனோநிலை வெளிப்படும்[9].(48) கவலைநிறைந்த சந்தர்ப்பங்களில் கவலைப்படுவதும், மகிழ்ச்சிமிக்கத் தருணங்களில் மகிழ்ந்திருப்பதும் ஒரு நண்பனின் அறிகுறிகளாகும். இதற்கு மாறான நடத்தையே ஓர் எதிரிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.(49) ஓ! தேவர்களின் ஆட்சியாளா {இந்திரா}, இஃதை உன் இதயத்திலேயே வைத்துக் கொள்வாயாக. தீய மனிதர்களின் மனோநிலையை ஒருபோதும் மறைக்க முடியாது.(50) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, தீய மனிதர்களுக்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! தேவர்களின் ஆட்சியாளா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கேட்டு முறைப்படி அதைப் பின்பற்றுவாயாக” என்றார் {பிருஹஸ்பதி}”.(51)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன் {இந்திரன்}, அவற்றின் படியே உறுதியுடன் செயல்பட்டு தன் எதிரிகளை அடக்குவதில் ஈடுபட்டான். வெற்றியில் நோக்கம் கொண்ட அந்த எதிரிகளைக் கொல்பவன், வாய்ப்பு ஏற்பட்ட போது, இந்த அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் எதிரிகள் அனைவரையும் அடக்கினான்”.(52)

க்ஷேமதர்சினும், காலகவிருக்ஷீயரும்! – சாந்திபர்வம் பகுதி – 104-நாட்டை இழந்தவனும், அறவோனுமான மன்னனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தன் சொந்த அதிகாரிகளாலேயே எதிர்க்கப்படுபவனும், கருவூலமும், படையும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதவனும், செல்வமில்லாதவனும், அறவோனுமான ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவதற்காகத் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக எப்போதும் க்ஷேமதர்சினின் கதை சொல்லப்படுகிறது. நான் அக்கதையை உனக்குச் சொல்கிறேன். ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில் {கோசல நாட்டு} இளவரசன் க்ஷேமதர்சின் பலவீனமடைந்தவனாக, பெரும் துயரத்தில் வீழ்ந்தபோது, அவன் தவசி காலகவிருக்ஷீயரிடம் சென்று, பணிவுடன் வணங்கி அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்[1].(3)மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, செல்வம் வேண்டும் என்னைப் போன்ற ஒரு மனிதன், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும், தன் நாட்டை மீட்கத் தவறினால், தற்கொலை, களவு, கொள்ளை, அடுத்தவரின் புகலிடத்தை நாடுதல், மேலும் இது போன்ற அற்ப காரியங்களைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(4,5) அறநெறிகளை அறிந்தவரும், மகிமை நிறைந்தவருமான உம்மைப் போன்ற ஒருவரே, மன, அல்லது உடல் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனுக்குப் புகலிடமாவீர்.(6) மனிதன் தன் ஆசைகளைக் கைவிட வேண்டும். இவ்வழியில் இன்ப துன்பங்களைக் கைவிட்டு, அறிவெனும் செல்வத்தை ஈட்டிச் செயல்படும் ஒருவன் புகழை அடைவதில் வெல்கிறான். செல்வத்தைச் சார்ந்து உலக இன்பங்களில் பற்று கொள்வோருக்காக நான் வருந்துகிறேன். எனினும், அவை யாவும் ஒரு கனவைப் போல மறைந்து விடுகின்றன.(8) பரந்த செல்வத்தைக் கைவிட முடிந்தோர், மிகக் கடினமான சாதனையை அடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில், எங்களிடம் இல்லாத செல்வத்தைக் கைவிட முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம்[2].(9) செழிப்பை இழந்து, மகிழ்ச்சியற்ற துயரமான இழிநிலையில் நான் விழுந்துவிட்டேன். ஓ! பிராமணரே, எந்த மகிழ்ச்சிக்காக நான் இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை எனக்குப் போதிப்பீராக” எனக் கேட்டான்.(10) நுண்ணறிவு மிக்க அந்தக் கோசல இளவரசனால் {க்ஷேமதர்சினால்} இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவருமான தவசி காலகவிருக்ஷீயர் பின்வரும் பதிலை அளித்தார்.(11)தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “ஏற்கனவே நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்றே தெரிகிறது. அறிவைக் கொண்டவனான நீ, உன் எண்ணத்தைப் போலவே செயல்பட வேண்டும். “நான் மற்றும் நான் கொண்டவை உள்ளிட்ட இவை அனைத்தும் நிலையற்றவை என்றே நான் காண்கிறேன்” என்ற உன் நம்பிக்கை சரியானதே.(12) ஓ! இளவரசே, எப்பொருள் இருக்கிறது என நீ கருதுகிறாயோ, அஃது உண்மையில் இல்லை என்று அறிவாயாக. ஞானம் கொண்ட மனிதன் இஃதை அறிகிறான், அதன்படி, எத்துன்பம் அவனுக்கு ஏற்பட்டாலும் அவன் ஒருபோதும் துன்பப்படுவதில்லை.(13) எவை நடந்தனவோ, எவை நடக்க இருக்கின்றனவோ, அவை அனைத்தும் உண்மையற்றவை.அனைவரும் அறிய வேண்டிய இதை நீ அறியும்போது, அநீதியில் {அதர்மத்தில்} இருந்து விடுபடுவாய்.(14) முன்பு ஈட்டப்பட்ட, அடையப்பட்ட பொருட்கள், அதற்குப் பின் ஈட்டப்பட்ட அடையப்பட்ட பொருட்கள் யாவும் அழிந்துவிட்டன. இதைக் கருத்தில் கொண்டால், எவன் தான் துன்பப்பட மாட்டான்?(15)

எப்பொருட்கள் இருந்தனவோ, அவை ஒன்றும் இப்போது இல்லை. இப்போது இருப்பவையும் இல்லாமலே போகும். துயரத்திற்கு அவற்றை மீட்கும் சக்தி கிடையாது. எனவே, ஒருவன் துன்பத்தில் ஈடுபடக்கூடாது.(16) ஓ! மன்னா {க்ஷேமதர்சனா}, இன்று உன் தந்தையும் எங்கே? உன் பாட்டன் எங்கே? இன்று நீயும் அவர்களைக் காணவில்லை. அவர்களும் இப்போது உன்னைக் காணவில்லை.(17) உனது நிலையின்மையைக் கருத்தில் கொண்டால், அவற்றுக்காக நீ ஏன் வருந்தப் போகிறாய்? நுண்ணறிவின் துணையுடன் சிந்திப்பாயாக, நீயும் இருக்க மாட்டாய் என்பதை நீ புரிந்து கொள்வாய்.(18) ஓ! மன்னா, நான், நீ, உன் நண்பர்கள், எதிரிகள் ஆகியோர் அனைவரும் நிச்சயம் இல்லாமல் போவோம். உண்மையில், அனைத்தும் இல்லாமலே போகும்.(19) இன்று இருபது, அல்லது முப்பது வயது கொண்டோர் அனைவரும், அடுத்த நூறு ஆண்டுகளில் நிச்சயம் இறந்துவிடுவார்கள்.(20)

ஒரு மனிதன் தன் பரந்த உடைமைகளை விட்டுக் கொடுக்கும் இதயம் இல்லாதவனாக இருந்தால், அவன் தன் உடைமைகள் தனதல்ல என்று நினைக்க முயற்சித்து, அதன் மூலம் தன் நன்மையை நாட வேண்டும்[3].(21) எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் உடைமைகளும் தன்னுடையவையல்ல என அவன் கருத வேண்டும். ஏற்கனவே மறைந்த உடைமைகளும் தன்னுடையவையல்ல எனவும் ஒருவன் கருத வேண்டும். விதியே அனைத்திலும் வலியது எனக் கருதப்பட வேண்டும். இவ்வகையில் சிந்திப்போரே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவ்வகையில் பொருட்களைக் காணும் பழக்கம் நல்ல பண்பாகும்.(22) புத்தியிலும், முயற்சியிலும் உனக்கு இணையானவர்களாகவோ, மேன்மையானவர்களாகவோ உள்ள பல மனிதர்கள், செல்வதை இழந்தவர்களாக உயிரோடு இருந்தாலும், நாடுகளை ஒருபோதும் ஆள்வதில்லை.(23) அவர்கள் உன்னைப் போன்றோரல்ல. அவர்கள் உன்னைப் போலத் துயரத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, இவ்வழியில் துயருறுவதை நிறுத்துவாயாக. நீ புத்தியிலும், முயற்சியிலும் அம்மனிதர்களை விட உயர்ந்தவனோ, குறைந்தது அவர்களுக்கு இணையானவனோ இல்லையா?” என்று கேட்டார்{காலகவிருக்ஷீயர்}.(24)மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, “என் நாடானது, அது கொண்டிருந்த அனைத்துப் பொருட்களுடன் எந்த முயற்சியுமில்லாமல் என்னால் {முன்பு} வெல்லப்பட்டது என்று கருதுகிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அனைத்திலும் வலிமையான காலம் அஃதை அபகரித்து விட்டது.(25) ஓர் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போல என் நாடு காலத்தால் அடித்துச் செல்லப்பட்டதன் விளைவாகவே, (ஈகை பெறுவதன் மூலம்) அடையும் எதையும் கொண்டு என்னை ஆதரித்துக் கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன் என்பதைக் காண்கிறேன்” என்றான்.(26)

தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “(வாழ்வில்) உண்மை அறிவால் தூண்டப்பட்ட ஒருவன், கடந்த காலத்திற்காகவோ, எதிர்காலத்திற்காகவோ ஒருபோதும் வருந்தக்கூடாது. ஓ! கோசல இளவரசே {க்ஷேமதர்சின்}, நீ உன் கவனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு காரியத்திலும் நீ இத்தகு மனநிலையையே கொள்வாயாக.(27) கிடைக்கமுடியாததை அல்லாமல், கிடைக்கக்கூடியதை மட்டுமே அடைய விரும்பி, தற்போது நீ கொண்டிருக்கும் உடைமைகளில் இன்புற்று, இல்லாததை நினைத்து ஒருபோதும் வருந்தாமல் இருப்பாயாக.(28) ஓ! கோசல இளவரசே, எளிமையாக நீ அடைந்த எதையும் கொண்டு நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக. செழிப்பை இழந்தாலும், தூய மனநிலையைப் பாதுகாக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் அதற்காக வருந்தக்கூடாது.(29) மூடப்புத்தி கொண்ட பேரற்ற மனிதனே, முந்தைய செழிப்பை இழக்கும்போது, தன் தற்போதைய உடைமைகளில் நிறைவில்லாமல் படைப்பாளனை நிந்திக்கிறான்.(30)

அத்தகு மனிதன், பிறர் அதற்குத் தகாதவர்களாக இருப்பினும், செழிப்பால் அருளப்பட்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்களே எனக் கருதுகிறான். இதன் காரணமாகவே, ஆணவமும் அகந்தையும் கொண்டவர்களும், தங்கள் முக்கியத்துவம் குறித்த உணர்விலேயே நிறைந்திருப்பவர்களுமான அவர்கள் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {க்ஷேமதர்சினே}, நீ அத்தகு களங்கங்களினால் கறைபடியாதவனாக இருக்கிறாய்.(31,32) நீ செல்வத்தை இழந்தவனாக இருப்பினும், அடுத்தவரின் செழிப்பைப் பொறுத்துக் கொள்வாயாக. கைத்திறன் கொண்டவர்கள், பிறரிடம் உள்ள செழிப்பை அனுபவிக்கிறார்கள். செழிப்பானது, பிறரின் செழிப்பை வெறுப்பவனிடம் இருந்து விலகிச் செல்கிறது.(33) நன்னடத்தை மற்றும் ஞானம் கொண்டவர்களும், யோகத்தின் கடமைகளை அறிந்தவர்களுமான மனிதர்கள், செழிப்பு, மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைத் தாங்களாகவே துறக்கிறார்கள்.(34) உலகம் சார்ந்த செல்வமானது, இடையறாத செயல்பாடு மற்றும் முயற்சியைச் சார்ந்தது என்பதால் அது நிலையில்லாதது என்றும் அடையமுடியாதது என்றும் கருதும் வேறு சிலரும், அதைத் துறப்பதைக் காண முடிகிறது.(35)

நீ ஞானம் கொண்டவனாகத் தெரிகிறாய். பிறகு ஏன் நீ விரும்பக்கூடாதவையும், நிலையற்றவையும், பிறரைச் சார்ந்திருக்கக்கூடியவையுமான பொருட்களை விரும்பி பரிதாபத்துக்குரியவனாக வருந்துகிறாய்? நீ (உன் உடைமைகள் எப்படி இருந்தபோதிலும் புகழை அனுபவிக்கத்தக்கவனாக உன்னைச் செயல்பட வைப்பதற்கான) குறிப்பிட்ட மனோநிலையைக் குறித்துக் கேட்க விரும்புகிறாய். நான் உனக்குக் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், விருப்பத்திற்குரிய அந்தப் பொருட்கள் யாவையும் துறந்துவிடுவாயாக. தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களே, முயற்சி செய்து அடைய வேண்டிய வடிவில் தோன்றும், அதே வேளையில், எவை முயற்சி செய்து அடையப்பட வேண்டுமோ, அவை தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களாகத் தோன்றும்.(37) சிலர் செல்வத்தைத் தேடியே செல்வத்தை இழக்கிறார்கள். வேறு சிலர் செல்வத்தை முடிவிலா இன்பத்தின் வேராகக் கருதி, அதை ஆவலுடன் பின்தொடர்கிறார்கள்.(38) மேலும் சிலர், செல்வத்தில் மகிழ்ந்து, அதைவிட வேறெதுவும் மேன்மையானதல்ல என நினைக்கிறார்கள். அத்தகு மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தில் உள்ள தங்கள் ஆவலால், வாழ்வின் பிற நோக்கங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள்.(39) ஓ! கோசல இளவரசே, கடினமாக ஈட்டப்பட்டதும், தன் ஆசைகளின் அளவுக்கு இணையானதுமான செல்வத்தை ஒரு மனிதன் இழந்தால், {அதன் விளைவாக உண்டாகும்} துன்பத்தால் ஏற்படும் செயல்பாடின்மையில் மூழ்கி, செல்வம் குறித்த விருப்பம் அனைத்தையும் கைவிடுகிறான்.(40)

நல்லான்மாவையும், உயர்ந்த பிறப்பையும் கொண்ட சில மனிதர்கள், அறம் ஈட்டுவதில் ஈடுபடுகிறார்கள். மறுமையில் புகழை வெல்லும் விருப்பத்தால் அவர்கள் உலகம் சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் துறக்கிறார்கள்.(41) சில மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டுத் தங்கள் உயிரை இழக்கிறார்கள். செல்வத்தோடு தொடர்பில்லா வாழ்வில் எந்தப் பயனும் இல்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.(42) அவர்களது பரிதாப நிலையைப் பார். அவர்களது மூடத்தனத்தைப் பார். வாழ்வென்பது மிகக் குறுகியது, நிச்சயமற்றது எனும்போது இம்மனிதர்கள், அறியாமையால் உந்தப்பட்டுத் தங்கள் கண்களைச் செல்வத்தில் நிலைக்கச் செய்கிறார்கள்.(43) அழிவே முடிவு எனும்போது கட்டடச்சாரங்களிலும், மரணமே முடிவு எனும்போது வாழ்விலும், பிரிவே முடிவு எனும்போது சேர்க்கையிலும் எவன் இதயத்தை நிலைக்கச் செய்வான்?(44) சில நேரங்களில் மனிதன் செல்வத்தைத் துறக்கிறான், மேலும் சிலநேரங்களில் செல்வம் மனிதனைத் துறக்கிறது. செல்வ இழப்பால் ஞானம் கொண்ட எந்த மனிதன் வருந்துவான்? செல்வத்தையும் நண்பர்களையும் இழக்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர்.(45)

ஓ! மன்னா {க்ஷேமதர்சின்}, மனிதர்களுக்கு நேரும் இடர்கள் அனைத்தும் அவர்களுடைய சொந்த நடத்தையாலேயே நேர்கிறது என்பதைக் கண்டு புரிந்து கொள்வாயாக. எனவே நீ உன் புலன்கள், மனம் மற்றும் பேச்சைக் கட்டுப்படுத்துவாயாக.(46) ஏனெனில், இவை பலவீனமடைந்து, தீமையை உண்டாக்கினால் எந்த மனிதனும் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருக்கும் வெளிப்பொருட்களின் மேலுள்ள ஆசையில் {சபலத்தில்} இருந்து ஒருபோதும் விடுபட முடியாது. காலம் மற்றும் இடம் ஆகியவற்றில் பல இடைவெளிகள் இருப்பதால், கடந்த காலத்தைக் குறித்த போதுமான கருத்தையோ, எதிர்காலத்தைக் குறித்த முன்னுணர்தலையோ ஒருவனாலும் அமைத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இத்தகு ஞானமும், ஆற்றலும் கொண்ட உன்னைப் போன்ற ஒரு மனிதன், சேர்க்கை பிரிவு, நன்மை தீமை ஆகியவற்றுக்காக ஒருபோதும் துயரில் ஈடுபட மாட்டான்.(47) இத்தகு மென்மையான மனநிலை, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா, முடிவுசெய்யப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டவனும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனுமான ஒரு மனிதன் துயரில் ஈடுபடாதவனாகவும், {எதையும்} அடையும் ஆசையில் ஒருபோதும் அமைதியற்றவனாக மாறாதவனாகவும், அற்ப மதிப்பைக் கொண்ட எதையும் இழப்பதற்கு அஞ்சாதவனாகவும் இருப்பான்.(48) அத்தகு மனிதன், பாவம் நிறைந்ததும், தீமையானதும், கொடுமையானதும், இழிந்தோருக்கு மட்டுமே தகுந்ததுமான ஆண்டி {பிச்சைக்காரன்} எனும் வஞ்சக வாழ்வைப் பின்பற்ற ஒரு போதும் தகுந்தவனாகான்[4].(49) பெருங்காட்டுக்குச் சென்று, தனியாக இருந்து, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு, பேச்சையும், ஆன்மாவையும் கட்டுப்படுத்தி, அனைத்துயிரினங்களிடமும் கருணையால் நிறைந்து அங்கே இன்பமாக வாழ்வாயாக.(50)அருகே மனிதர்கள் இல்லாமல், பெரும் தந்தங்களுடைய யானைகளின் தோழமையில், காட்டின் விளைச்சலில் நிறைந்து உற்சாகமான இத்தகு வாழ்வைக் காட்டில் வாழ்வது ஞானியரின் நடத்தை எனச் சொல்லப்படுகிறது.(51) பெரும் தடாகம் ஒன்று கலங்கும்போது, தன் அமைதியைத் தானே மீட்கிறது. அதே போலவே, ஞானம் கொண்ட மனிதனும், இத்தகு காரியங்களில் குழப்பமடையும்போது, தானாகவே அமைதியடைகிறான். உன்னைப் போன்று இத்தகு பரிதாபகரமான நிலையில் வீழ்ந்த ஒரு மனிதன் இவ்வாறே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றே நான் காண்கிறேன்.(52) உன் செழிப்பை மீட்பது கிட்டத்தட்ட முடியாதநிலையில், அமைச்சர்களும், ஆசோலகர்களும் இல்லாதவனாக இருக்கும்போது, இத்தகு வழியே உனக்குத் திறந்திருக்கிறது. விதியை நம்பிக்கொண்டிருப்பதால் எந்தப் பலனையும் அடைய முடியும் என்பதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார் {காலகவிருக்ஷீயர்}.(53)

நன்கு தீட்டப்பட்ட வஞ்சகத் திட்டங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 105-பகைவர்களை வெல்வதற்குப் பின்பற்றக்கூடிய வஞ்சகத் திட்டங்களைக் குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

தவசி {காலகவிருக்ஷீயர் கோசல நாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்} சொன்னார், “ஓ! க்ஷத்திரியா, மறுபுறம், உன் நாட்டை மீட்பதற்கு உனக்கு இன்னும் ஆற்றல் இருப்பதாக நினைத்தால், நீ   பின்பற்ற வேண்டிய கொள்கை வழியைக் குறித்து உன்னோடு உரையாடுவேன்.(1) அந்தக் கொள்கை வழியை நீ பின்பற்றி, முயற்சி செய்ய முனைந்தால், உன்னால் உன் செழிப்பை மீட்க முடியும். விபரமாக நான் உனக்குச் சொல்லப்போகும் அனைத்தையும் கவனமாகக் கேட்பாயாக. அந்த ஆலோசனைகளின்படி உன்னால் செயல்பட முடிந்தால், அபரிமிதமான செல்வத்தையும், உண்மையில், உனது நாட்டையும், அரசு அதிகாரத்தையும், பெருஞ்செழிப்பையும் நீ அடைவாய்.(3) ஓ! மன்னா, நீ அதை விரும்பினால் எனக்குச் சொல்வாயாக, அப்போது நான் உனக்கு அந்தக் கொள்கையைக் குறித்துச் சொல்வேன்” {என்றார் காலகவிருக்ஷீயர்}.(4)

மன்னன் {க்ஷேமதர்சின் காலவிருக்ஷீயரிடம்}, “ஓ! புனிதமானவரே, நீர் சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வீராக. உமது ஆலோசனைகளைக் கேட்பதற்கும், அதன்படி செயல்படுவதற்கும் நான் விரும்புகிறேன். இன்னும் உம்முடனான இந்தச் சந்திப்பு (எனக்கான) விளைவுகளில் பலன்நிறைந்ததாக இருக்கட்டும்” என்றான்.(5)தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “செருக்கு, ஆசை, கோபம், இன்பம், அச்சம் ஆகியைவற்றைக் கைவிட்டு, பணிவுள்ளவனாகவும், கூப்பிய கரங்களுடனும் உன் எதிரிகளுக்காகக் காத்திருப்பாயாக {எதிரிகளுக்குப் பணிவிடை செய்வாயாக}? நல்லவையும், தூயவையுமான செயல்களை எப்போதும் செய்துவரும் மிதிலையின் ஆட்சியாளனான ஜனகனுக்கு நீ பணிவிடை செய்வாயாக. உண்மையில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்த விதேஹ மன்னன் {ஜனகன்}, நிச்சயம் உனக்குப் பெருஞ்செல்வத்தை அளிப்பான்.(7) நீ அந்த மன்னனுக்கு {ஜனகனுக்கு} வலக்கரமாகி, அனைத்து மனிதர்களின் நம்பிக்கையைப் பெறுவாயாக. அதன் விளைவாக, துணிவு, விடாமுயற்சி, தூய நடத்தை கொண்டவர்களும், முக்கியமான ஏழு குற்றங்களில் இருந்து விடுபட்டவர்களுமான பல கூட்டாளிகளை அடைவதில் நீ வெல்வாய்.(8) அடக்கப்பட்ட ஆன்மாவையும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களையும் கொண்ட ஒரு மனிதன், தன் கடமைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தன்னை உயர்த்திக் கொள்வதிலும், பிறரை இன்புறச் செய்வதிலும் வெல்வான்.(9) நுண்ணறிவையும், செழிப்பையும் கொண்ட ஜனகனால் கௌரவிக்கப்பட்டு, அந்த ஆட்சியாளனின் வலக்கரமாகி, நிச்சயம் நீ அனைவரின் நம்பிக்கையையும் அடைந்து மகிழ்வாய்.(10)

இவ்வாறு பெரும்படையைத் திரட்டி, நல்ல அமைச்சர்களுடன் ஆலோசித்து, உன் எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி, ஒரு மனிதன் வில்வக்காயைக் கொண்டு மற்றொரு வில்வக்காயைப் பிளப்பதைப் போலவே அவர்களுக்குள் ஒருவரையொருவர் எதிர்க்கச் செய்வாயாக. அல்லது, உன் எதிரியின் எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, அவனது சக்தியை அழிப்பாயாக.(11) பிறகு, எளிதிற்கிடைக்காத நல்ல பொருட்களிலும், அழகிய பெண்களிலும், விலைமதிப்புமிக்கத் துணிமணிகள், படுக்கைகள், இருக்கைகள், மற்றும் வாகனங்களிலும், வீடுகளிலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் மற்றும் விலங்குகளிலும், சாறுகள், நறுமணப்பொருட்கள் மற்றும் கனிகளிலும் உன் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்து, அவனை அழிவடையச் செய்வாயாக[1].(13) ஒருவனுடைய எதிரி இவ்வாறு நிர்வகிக்கப்பட்டால், அல்லது அவனைக் கவனிக்காமல் விட்டால், நல்ல கொள்கையின் படி செயல்பட விரும்பும் ஒருவன், அந்த எதிரி ஒருபோதும் எதையும் அறியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்[2].(14) ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரியின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்து வகை இன்பங்களிலும் இன்புற்று, நாய், மான், காகம் ஆகியவற்றின் நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரிகளிடம் வெளிப்படையான நட்புடன் நடந்து கொள்வாயாக.(15)பெரியவையும், நிறைவேற்றக் கடினமானவையுமான சாதனைகளை அவர்களை மேற்கொள்ளச் செய்வாயாக. மேலும் அவர்கள், பலமிக்க எதிரிகளுடன் பகைமையில் ஈடுபடும்படியும் பார்த்துக் கொள்வயாக.(16) இனிமையான நந்தவனங்கள், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகிவற்றில் அவர்களது கவனத்தைத் திருப்பி, அத்தகு இன்ப நுகர் பொருட்களை அளித்து, உன் எதிரிகளின் கருவூலத்தை வற்றச் செய்வாயாக.(17) உன் பகைவனை வேள்விகள் செய்ய வைத்து, கொடைகளை அளிக்க வைத்து, பிராமணர்களை நிறைவு செய்வாயாக. (உன் கரங்களால் அந்தப் பரிசுகளைப் பெற்ற) அவர்கள் {பிராமணர்கள்}, பதிலுக்கு (தவங்களையும், வேதச் சடங்குகளையும் செய்வதன் மூலம்) உனக்கு நன்மையைச் செய்து, ஓநாய்களைப் போல உன் எதிரிகளை விழுங்குவார்கள்.(18) நீதிமிக்கச் செயல்களைச் செய்யும் மனிதன் உயர்ந்த கதியையே அடைவான் என்பதில் ஐயமில்லை. அத்தகு செயல்களின் மூலம் மனிதர்கள், சொர்க்கத்தில் உயர்ந்த புகழ் உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறார்கள்.(19) (நல்ல, அல்லது நியாயமற்ற செயல்களின் மூலம்) உன் எதிரிகளின் கருவூலம் தீர்ந்து போனால், ஓ! கோசல இளவரசே, அவர்கள் ஒவ்வொருவரும் அடக்கப்பட வேண்டும்.(20)

கருவூலமே, சொர்க்கத்தில் புகழுக்கும், பூமியில் வெற்றிக்கும் வேராக இருக்கிறது. எதிரிகள் அவர்களுடைய கருவூலங்களின் விளைவாலேயே அத்தகு மகிழ்ச்சியில் இன்புற்றிருக்கிறார்கள். எனவே, அனைத்து வழிகளிலும் கருவூலமானது வற்றச் செய்யப்பட வேண்டும். உன் எதிரியின் முன்பு உழைப்பை மெச்சாதே, ஆனால் விதியை உயர்வாகப் பேசுவாயாக.(21) தேவர்களின் வழிபாடு சார்ந்த செயல்பாடுகளையே அதிகமாகச் சார்ந்திருக்கும் மனிதன் விரைவில் அழிவடைவான் என்பதில் ஐயமில்லை. நீ உன் எதிரியை விஸ்வஜித் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியைச் செய்ய வைத்து, அவனது உடைமைகளுக்கான வழிமுறைகள் அனைத்தையும் அவனை இழக்கச் செய்வாயாக.(22) இதன் மூலம் உனது நோக்கம் நிறைவேறும். (வற்றிய கருவூலத்தை மீண்டும் நிரப்புவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி {மக்களின் பொருட்களை} மன்னன் அபகரித்து வருவதால்) நாட்டின் சிறந்த மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை உன் எதிரிக்குச் சொல்லி, (உலகம் சார்ந்த உடைமைகளை அனைத்தையும் எதிரியிடம் இருந்து வற்றச் செய்வதற்காக) யோகக் கடமைகளை நன்கறிந்த  உயர்ந்த தவசி எவரையாவது அவனுக்குச் சுட்டிக்காட்டுவாயாக.(23) அப்போது உன் எதிரி துறவைப் பின்பற்றி, முக்தி வேண்டி வனத்திற்குள் ஓய்ந்து போவான். பிறகு, எதிர்பார்க்கும் விளைவைத் தரக்கூடிய உயர்ந்த மூலிகைகள், செடிகள், செயற்கை உப்புகள் ஆகியவற்றைக் கொதிக்கச் செய்வதன் மூலம் உண்டாக்கப்பட்ட மருந்துகளின் உதவியுடன், (உன் எதிரியின் ஆட்சிப் பகுதிகளில் உள்ள) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை அழிப்பாயாக.(24) இவையும், வஞ்சனையுடன் தொடர்புடையவையும், நன்கு தீட்டப்பட்டவையுமான திட்டங்கள் பலவும் இருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வாறே நஞ்சின் மூலம் ஓர் எதிரி நாட்டின் மக்கள் தொகையை அழிக்க முடியும்” என்றார் {காலகவிருக்ஷீயர்}.(25)

அமைதி நிறுவலே உயர்கடமை! – சாந்திபர்வம் பகுதி – 106-க்ஷேமதர்சினுக்கும், ஜனகனுக்கும் இடையில் நட்பை ஏற்படுத்திய காலகவிருக்ஷீயர்; க்ஷேமதர்சினை மரியாதையுடன் நண்பனாய் ஏற்று அவனுடன் உரையாடிய ஜனகன்; அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும் என்பதை விளக்க இந்தக் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

மன்னன் {க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, வஞ்சகம், அல்லது மோசடியின் மூலம் வாழ்வைத் தாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. செல்வமானது எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும், நியாயமற்ற வழிமுறைகளில் ஈட்டப்படும் செல்வத்தை நான் விரும்பவில்லை.(1) நமது உரையாடலின் தொடக்கத்திலேயே நான் இந்த வழிமுறைகளைத் தவிர்த்தேன். நிந்தனைக்கு வழிவகுக்காதவையும், அனைத்து வகையிலும் எனக்கு நன்மையே செய்பவையும், விளைவுகளில் தீங்கில்லாதவையுமான செயல்களை மட்டுமே செய்து இந்த உலகில் நான் வாழ விரும்புகிறேன். நீர் சுட்டிக்காட்டும் வழிகளைப் பின்பற்ற இயலாதவனாக நான் இருக்கிறேன். உண்மையில், இந்தப் போதனைகள் எனக்குத் தகாது” என்றான்.(2,3)

தவசி {காலகவிருக்ஷீயர் கோசலநாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்}, “ஓ! க்ஷத்திரியா, நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உன்னை அறவுணர்ச்சிகள் கொண்டவனாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஓ! பெரும் அனுபவம் கொண்டவனே, உண்மையில், மனோநிலையிலும், புத்தியிலும் நீ நீதிமானாக இருக்கிறாய்.(4) உனக்கும், அவனுக்கும் {விதேஹ ஆட்சியாளனான ஜனகனுக்கும்} நல்லது செய்ய நான் முயற்சிப்பேன். அழிவில்லாததும், வஞ்சனையில்லாததுமான ஒற்றுமையை உனக்கும் அந்த மன்னனுக்கும் இடையில் நான் ஏற்படுத்துவேன்.(5) உன்னதக் குலத்தில் பிறந்தவனும், நீதியற்றவையும், கொடூரமானவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், பெரும் கல்வி பயின்றவனும், அரசை நடத்துவது மற்றும் அனைத்து மனிதர்களுக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும் கலைகளை நன்கறிந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனை அமைச்சனாக அடைய விரும்பாதவன் எவன் இருக்கிறான்?(6) ஓ! க்ஷத்திரியா {க்ஷேமதர்சின்}, நாட்டை இழந்து பெருந்துன்பத்தில் மூழ்கியிருப்பவனாக இருப்பினும், நீ நீதிமிக்க நடத்தையைப் பின்பற்றி வாழ விரும்புவதன் காரணமாகவே நான் இதைச் சொல்கிறேன்.(7) உண்மையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, விரைவில் என் வசிப்பிடத்திற்கு வரப்போகிறான். நான் சொல்வதை அவன் நிச்சயமாகச் செய்வான்” என்றார் {காலகவிருக்ஷீயர்}”.(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதன்பிறகு, விதேஹர்களின் ஆட்சியாளனை {ஜனகனை} அழைத்த அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்}, அவனிடம் {ஜனகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார், “இந்த மனிதன் {கோசல இளவரசன் க்ஷேமதர்சின்} அரச குடி பிறந்தவன். இவனது இதயத்தையே நான் அறிவேன்.(9) இவனது ஆன்மாவானது கண்ணாடியின் பரப்பையோ, கூதிர்கால நிலவு வட்டிலையோ போன்று தூய்மையானது. அனைத்து வழியிலும் நான் இவனைச் சோதித்துவிட்டேன். நான் இவனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(10) இவனுக்கும் உனக்கும் இடையில் நட்பு இருக்கட்டும். என்னை நம்புவதைப் போலவே நீ இவனிடமும் நம்பிக்கை கொள்வாயாக. (தகுந்த) அமைச்சன் இல்லாத மன்னனால், தன் நாட்டை மூன்று நாட்களுக்குக் கூட ஆள முடியாது.(11) அமைச்சன், துணிவுமிக்கவனாகவும், பெரும் நுண்ணறிவு கொண்டவனாகவும் இருக்க வேண்டும். இந்த இரு பண்புகளைக் கொண்டே ஒருவனால் இருவுலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்ல முடியும். ஓ! மன்னா {ஜனகனே}, ஒரு நாட்டை ஆள்வதற்கும் இந்த இரு பண்புகளே அவசியம் என்பதைக் காண்பாயாக.(12) நீதிமிக்க மன்னர்களுக்கு, இத்தகு பண்புகளைக் கொண்ட ஓர் அமைச்சனைவிட வேறு எந்தப் புகலிடமும் கிடையாது. இந்த உயர் ஆன்ம மனிதன் அரசகுல வழித்தோன்றலாவான். நீதியின் பாதையிலேயே இவன் {க்ஷேமதர்சின்} நடக்கிறான்.(13) அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்ட இவன் அடைவதற்கு மதிப்புமிக்க ஒருவனாவான். உன்னால் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், இவன் உன் எதிரிகள் அனைவரையும் அடக்குவான்.(14) இவன் உன்னோடு போரிட்டால், ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வான். தன் தந்தைமார் மற்றும் பாட்டன்மாரின் நடத்தையைப் பின்பற்றி உன்னை வெல்ல அவன் போரிட்டால்,(15) எதிராளிகளை வெல்லும் க்ஷத்திரியக் கடமையை நோற்பவனாக நீ அவனோடு போர்புரிவதே உன் கடமையாக இருக்கும். எனினும், என் ஆணையின் பேரில் போரில் ஈடுபடாமல், உனக்கு நன்மை செய்யும் விருப்பத்தோடு இவனை உனக்குக் கீழ் நியமித்துக் கொள்வாயாக.(16) முறையற்ற பேராசையைக் கைவிட்டு அறத்தில் உன் கண்களைச் செலுத்துவாயாக. காமத்தாலோ, போரிடும் விருப்பத்தாலோ, உன் வகைக்கான கடமைகளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(17) ஓ! ஐயா, வெற்றி நிச்சயமானதில்லை. தோல்வியும் நிச்சயமானதில்லை. இதை நினைவில் கொண்டு, எதிரிக்கு உணவையும், பிற இன்ப நுகர் பொருட்களையும் கொடுத்து அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(18) வெற்றியையும், தோல்வியையும் ஒருவன் தன் வழக்கிலேயே காணலாம். ஓர் எதிரியை அழிக்க முனைபவர்கள், சில வேளைகளில் முயலும்போது தாங்களே அழிந்து விடுகிறார்கள்” என்றார் {காலகவிருக்ஷீயர்}.(19)

இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் ஜனகன், அனைத்துக் கௌரவங்களுக்கும் தகுந்தவரான அந்தப் பிராமணர்களில் காளையை {காலகவிருக்ஷீயரை} முறையாக வணங்கிக் கௌரவித்து, அவரிடம்,(20) “பெரும் கல்வியும், பெரும் ஞானமும் கொண்டவர் நீர். எங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் நீர் எதைச் சொன்னீரோ, அது நிச்சயம் எங்கள் இருவருக்கும் பயன் பயக்கக்கூடியதே.(21) அவ்வாறு நடந்து கொள்வதே (எங்களுக்கு) உயர்ந்த நன்மையை அளிக்கும். இதைச் சொல்வதில் எனக்கு எத்தயக்கமும் இல்லை” என்றான் {ஜனகன்}.(22)

பிறகு அந்த விதேஹர்களின் ஆட்சியாளனானவன் {ஜனகன்}, கோசல இளவரசனிடம் {க்ஷேமதர்சினிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “க்ஷத்திரியக் கடமைகளை நோற்றும், கொள்கையின் உதவியுடனும் நான் இவ்வுலகை வென்றேன்.(23) எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் நற்பண்புகளால் நான் வெல்லப்பட்டேன். அவமான உணர்வேதும் வளர்க்காமல் (என் அருகில் நீ இருந்தால்), ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாய்.(24) உன் நுண்ணறிவை நான் மதிக்கிறேன், உன் ஆற்றலை நான் மதிக்கிறேன். நான் உன்னை வென்றுவிட்டேன் என்று சொல்லி நான் உன்னை அவமதிக்கமாட்டேன். மறுபுறம், ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாயாக.(25) ஓ! மன்னா, என்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு என் வசிப்பிடத்திற்குச் செல்வாயாக” என்றான் {ஜனகன்}.பிறகு அந்தப் பிராமணரை {காலகவிருக்ஷீயரை} வணங்கிய மன்னர்கள் இருவரும், ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு, *மிதிலையின் தலைநகரத்திற்குச் சென்றனர்.(26) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, அந்தக் கோசல இளவரசனை {க்ஷேமதர்சினைத்} தன் வசிப்பிடத்திற்குள் நுழையச் செய்து, அனைத்து கௌரவங்களுக்கும் தகுந்த அவனுக்கு, கால்கழுவ நீரையும், தேன் மற்றும் தயிர்க்கடைசல்களையும் {மதுபர்க்கங்களையும்}, மற்றும் வழக்கமான பொருட்களையும் கொடுத்து கௌரவித்தான்.(27)

மேலும் மன்னன் ஜனகன், பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் நகைகளுடன் சேர்த்துத் தன் சொந்த மகளையே அவனுக்கு {க்ஷேமதர்சினுக்கு} அளித்தான் {திருமணம் செய்து கொடுத்தான்}. இதுவே (அமைதியை ஏற்படுத்துவதே) மன்னர்களின் உயர்ந்த கடமையாகும்; வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் நிச்சயமற்றதாகும்” {என்றார் பீஷ்மர்}.(28)

உயர்குடியினர்! – சாந்திபர்வம் பகுதி – 107-உயர்குடியினருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமை உண்டாகும் காரணங்கள்; உயர்குடியினர் ஒற்றுமையுடன் இருந்தால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள்; பெருந்திரள் மக்களைத் துயரம் மற்றும் ஆபத்தில் இருந்து காக்கக்கூடிய உயர் குடியினர் யாவர்; உயர்குடியினர் மன்னனிடம் இருந்து விலக வழிவகுக்கும் காரணங்கள்; உயர்குடியினரால் நாட்டுக்கு ஏற்படும் அச்சம்; உயர்குடியினருக்கு மத்தியில் உண்டாகக்கூடிய வேற்றுமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விரிவாகச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! எதிரிகளை எரிப்பவரே, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களுக்குரிய கடமைகளின் வழி, பொது நடத்தை {ஒழுக்கம்}, வாழ்வாதார வழிமுறைகள் ஆகியவற்றையும், அவற்றின் விளைவுகளையும் நீர் விளக்கிச் சொல்லியிருக்கிறீர்.(1) மன்னர்களின் கடமைகள், அவர்களின் கருவூலங்கள், அவற்றை நிரப்பும் வழிமுறைகள், படையெடுப்பு மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறித்தும் சொன்னீர். அமைச்சர்களின் சிறப்பியல்புகள், குடிமக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள்,(2) ஒரு நாட்டினுடைய ஆறு அங்கங்களின் சிறப்பியல்புகள், படைகளின் தரம், தீயோரை அடையாளங்காணும் வழிமுறைகள், நல்லோரின் அறிகுறிகள்,(3) நடுநிலையுடன் இருப்போர், தாழ்ந்தோர், மேன்மையானோர் ஆகியோரின் பண்புகள், முன்னேற்றத்தை விரும்பும் மன்னன் பெருந்திரள் மக்களிடம் பின்பற்ற வேண்டிய நடத்தை,(4) பலவீனர்கள் பாதுகாக்கப்பட்டுப் பேணி வளர்க்கப்பட வேண்டிய பாங்கு ஆகியவற்றைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! பாரதரே, இந்தக் காரியங்கள் அனைத்தையும் குறித்து, புனித உடன்படிக்கைகளில் ஆழப் பதியப்பட்டிருக்கும் அறிவுரைகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்.(5)

எதிரிகளை வெல்ல விரும்பும் மன்னர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தையைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒரு மன்னைச் சுற்றிக் கூடியிருக்கும் துணிச்சல் மிக்க மனிதக்கூட்டத்திடம் {உயர்குடிமக்களிடம்} நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து நான் இப்போது கேட்க விரும்புகிறேன்[1].(6) ஓ! பாரதரே, அவர்கள் {கூட்டங்கள்} எவ்வாறு வளர முடியும்? மன்னனிடம் அவர்கள் எவ்வாறு பற்றுடனிருக்க முடியும்? எதிரிகளை அடக்குவதிலும், நண்பர்களை அடைவதிலும் அவர்கள் எவ்வாறு வெல்வார்கள்?(7) வேற்றுமை மட்டுமே அவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும் என்று எனக்குத் தோன்றுகிறது. பலருக்குத் தொடர்பேற்படும்போது, ஆலோசனைகளை எப்போதும் இரகசியமாக வைத்துக் கொள்வது மிகக் கடினமானது என நான் நினைக்கிறேன். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, இது குறித்த அனைத்தையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! மன்னா, மன்னனிடம் இருந்து அவர்கள் விலகுவதைத் தடுக்கும் வழிமுறைகளையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஒருபுறமிருக்கும் உயர் குடியினருக்கும், மறுபுறமிருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமையை உண்டாக்கும் காரணங்களாகப் பேராசையும், கோபமும் இருக்கின்றன[2].(10) இவர்களில் ஒரு தரப்பினர் (மன்னர்கள், அல்லது உயர்குடியினர்) பேராசைக்கு இரையாகின்றனர். அதன் விளைவாக அடுத்தத் தரப்புக்கு (உயர் குடியினர் அல்லது மன்னர்களுக்கு) கோபமேற்படுகிறது. அடுத்தவரை பலவீனமடையச் செய்து, வீணாக்க முனையும் அந்த இரு தரப்பும் அழிவையே அடைகிறது.(11) ஒற்றர்களை நியமித்து, கொள்கையையும், உடல்சக்தியும் கொண்டு திட்டத்தை வகுத்து, இணக்கம் {சாம}, ஈகை {தான}, வேற்றுமை {பேதம்} ஆகிய கலைகளைப் பின்பற்றி, பலவீனம், வீணாக்குதல், அச்சம் ஆகியவற்றை உண்டாக்கக்கூடிய பிற வழிமுறைகளையும் பயன்படுத்தி அந்தத் தரப்புகள் {மன்னர் தரப்பினரும், உயர் குடி தரப்பினரும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வார்கள்.(12) கச்சிதமான அமைப்பின் சிறப்பியல்புகளுடன் கூடியவர்களான ஒரு நாட்டின் உயர் குடிமக்கள், அவர்களிடம் இருந்து மன்னன் அதிகம் பறிக்க முயன்றால், அவனிடம் இருந்து ஒதுங்கி விடுவார்கள். மன்னனிடம் இருந்து ஒதுங்கி, நிறைவில்லாமல் இருக்கும் அவர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாகத் தங்கள் ஆட்சியாளனுடைய எதிரிகளின் தரப்பை அடைவார்கள்.(13) மேலும் ஒரு நாட்டின் உயர்குடிமக்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்றி இருந்தால் அவர்கள் அழிவையே அடைவார்கள். ஒற்றுமையில்லாத அவர்கள் எளிதாக எதிரிக்கு இரையாக விழுவார்கள். எனவே, உன்னதமானவர்கள், எப்போதும் ஒரே கருத்துடன் செயல்பட வேண்டும்.(14) அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், தங்கள் பலம் மற்றும் ஆற்றலின்மூலம் அவர்கள் மதிப்புமிக்க உடைமைகளை ஈட்டுவார்கள். உண்மையில் அவர்கள் இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால், வெளித்தரப்பினர் பலர் அவர்களின் கூட்டணியை நாடுவார்கள்.(15)

அன்பெனும் கட்டுக்குள் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக இருக்கும் அந்த உன்னதமானவர்களை ஞானிகள் மெச்சுகின்றனர். காரியத்தோடு ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.(16) ({பிறருக்கு} எடுத்துக்காட்டாக இருப்பதன் மூலம்) ஒழுக்கத்திற்கான அறவழிகளை அவர்களால் நிறுவ முடியும். முறையாக நடந்து கொள்வதால் அவர்கள் செழிப்பில் முன்னேற முடியும்.(17) உயர்குடி மக்கள், தங்கள் மகன்கள், உடன்பிறந்தோர் ஆகியோரைக் கட்டுப்படுத்தி, அறிவால் செருக்கு தணிந்த மனிதர்கள் அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டு செழிப்பில் முன்னேறுவார்கள்.(18) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உயர்குடிமக்கள், ஒற்றர்களை நிறுவும் தங்கள் கடமைகளைக் கவனித்து, கொள்கை வழிமுறைகளையும், கருவூலங்களை நிரப்பும் வழிமுறைகளையும் தீட்டி, செழிப்பில் முன்னேறுவார்கள்.(19) உயர்குடிமக்களானவர்கள், ஞானம், துணிவு, விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டோருக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, அனைத்து வகைப் பணிகளிலும் உறுதியான ஆற்றலை வெளிப்படுத்தி, செழிப்பில் முன்னேறுவார்கள்.(20)

செல்வம், வளம், சாத்திர அறிவு, கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தின் அறிவு ஆகியவற்றைக் கொண்ட உயர்குடி மக்கள், அறியாமையில் உள்ள பெருந்திரள் மக்களை அனைத்து வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார்கள்.(21) ஓ! பாரதர்களின் தலைவா, (மன்னனின் பங்குக்கு) கோபம், முறிவு, அச்சம், தண்டனை, ஒறுப்பு, ஒடுக்குதல், கொலை ஆகியவை உன்னதக் குடிமக்களை மன்னனிடம் இருந்து விலகச் செய்து, மன்னனுடைய எதிரிகளின் தரப்பை அடையச் செய்கிறது.(22) எனவே, மன்னனால் அந்த உயர் குடிமக்களின் தலைவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நாட்டின் காரியங்கள் பெருமளவில் அவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(23) ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, உயர்குடி மக்களின் தலைவர்களிடம் மட்டுமே ஆசோலனைகள் செய்யப்பட வேண்டும், அவர்களிடம் மட்டுமே ஒற்றர்களும் இருக்க வேண்டும். ஓ! பாரதா, உயர்குடியின் ஒவ்வொரு நபரிடமும் மன்னன் ஆலோசிக்கக்கூடாது.(24) மன்னன், அந்தத் தலைவர்களுடன் இணக்கமாக நடந்து கொண்டு, மொத்த வகையினருக்கும் நன்மை செய்ய வேண்டும். எனினும், அந்த உயர்குடி கூட்டமானது, பிளவடைந்து, வேற்றுமையடைந்து, தலைவர்கள் அற்றுப் போனால், வேறு வகைச் செயல்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.(25)

உயர்குடி மக்கள் தங்களுக்குள் ஒருவரோடொருவர் சச்சரவு செய்து கொண்டு, தங்கள் வளங்களுக்கேற்ற வகையில் ஒவ்வொருவரும் ஒற்றுமையில்லாமல் செயல்பாட்டால், அவர்களது செழிப்பானது தேய்ந்துபோகும், பல்வேறு வகைத் தீமைகளும் நேரும்.(26) அவர்களில் கல்வியும், ஞானமும் கொண்டோர், ஒரு சச்சரவு தோன்றிய உடனேயே அதைக் களைய வேண்டும். உண்மையில், ஒரு குலத்தின் பெரியோர், அலட்சியத்துடன் நடந்து கொண்டால், அந்தக் குலத்தினர் மத்தியில் கலகம் பிறக்கும். அத்தகு கலகங்களே ஒரு குலத்தின் அழிவாகி, உன்னதமானவர்களுக்கு மத்தியில் (உயர்குடியினர் அனைவருக்கும் மத்தியில்) வேற்றுமையை உண்டாக்கும்.(27) ஓ! மன்னா, உள்ளே இருந்து எழும் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. வெளியில் இருந்து எழும் அச்சங்கள் அற்ப விளைவுகளையே உண்டாக்கும். ஓ! மன்னா, முதல் வகை அச்சமானது {உட்பகையானது}, ஒரே நாளில் உன் வேரையே அறுத்துவிடும்.(28) குலத்தாலும், குருதியாலும் ஒருவருக்கொருவர் இணையான மனிதர்கள், தங்கள் இயல்பில் இருந்து எழும் கோபம், அல்லது மடமை, அல்லது பேராசை ஆகியவற்றால் ஒருவரோடொருவர் பேசுவதையும் நிறுத்திவிடுவார்கள். இது தோல்வியின் அறிகுறியாகும். துணிவாலோ, நுண்ணறிவாலோ, அழகாலோ, செல்வத்தாலோ எதிரிகள் உயர்குடியை அழிப்பதில்லை. வேற்றுமையாலும் {பேதமுறையினாலும்}, கொடைகளாலும் {தானமுறையாலும்} மட்டுமே அதை அடக்க முடியும். இதன் காரணமாகவே, ஒற்றுமை ஒன்றே உயர்குடியின் பெரும்புகலிடமாகச் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(29-31)

தாய், தந்தை, ஆசான்! – சாந்திபர்வம் பகுதி – 108-கடமைகள் அனைத்திலும் முக்கியமானவை எவை என யுதிஷ்டிரன் கேட்பது; தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே முக்கியக் கடமை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷமரிடம்}, “கடமையின் பாதை நீண்டதாகும். ஓ! பாரதரே, மேலும் அது பல கிளைகளைக் கொண்டதாக இருக்கிறது. எனினும், உம்மைப் பொறுத்தவரையில், நடைமுறையில் பின்பற்ற மிகத் தகுந்தவை எவை?(1) உம்மைப் பொறுத்தவரையில், இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த தகுதியை எனக்கு ஈட்டித் தருபவையும், கடமைகள் அனைத்திலும் மிக முக்கியமானவையுமான செயல்கள் எவை?” என்று கேட்டான்.(2)ஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “என்னைப் பொறுத்தவரையில் தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே மிக முக்கியமானது. இம்மையில் அக்கடமையைச் செய்யும் மனிதன், பெரும் புகழையும், புகழுலகங்கள் பலவற்றையும் ஈட்டுவதில் வெல்கிறான்.(3) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, அறத்திற்கு இசைவாகவோ, இல்லாமலோ அவர்களால் ஆணையிடப்படும் எதுவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.(4) அவர்கள் தடை செய்ததை ஒருவன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவர்கள் எதை ஆணையிடுவார்களோ, அஃது எப்போதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.(5) மூவுலகங்கள் அவர்களே. மூன்று வாழ்வுமுறைகளும் அவர்களே. மூன்று வேதங்களும் அவர்களே. மூன்று புனித நெருப்புகளும் அவர்களே.(6) கார்ஹபத்ய நெருப்பாகத் தந்தை சொல்லப்படுகிறார்; தக்ஷிண நெருப்பாகத் தாய் சொல்லப்படுகிறார்; ஆகுதி ஊற்றப்படும் {ஆஹவநீ} நெருப்பாக ஆசான் சொல்லப்படுகிறார். உண்மையில் இந்த மூன்று நெருப்புகளும் மிக உயர்ந்தவையாகும். இந்த மூன்று நெருப்புகளிலும் நீ கவனத்தோடு இருந்தால், மூவுலகங்களையும் நீ வெல்வாய்.(7)

முறைமையுடன் தந்தைக்குத் தொண்டாற்றினால் ஒருவன் இவ்வுலகைக் கடக்கலாம். அதே வழியில் தாய்க்குத் தொண்டாற்றினால், அவன் மறுமையில் புகழுலகங்களை அடையலாம். முறைமையுடன் ஆசானுக்குத் தொண்டாற்றினால், ஒருவன் பிரம்மலோகத்தையே அடையலாம்.(8) ஓ!பாரதா {யுதிஷ்டிரா}, இந்த மூவரிடமும் முறையாக நடந்து கொண்டால், நீ மூவுலகங்களிலும் புகழையடைவாய், அருளப்பட்டவனாவாய், உன் தகுதியும் {புண்ணியமும்}, வெகுமதியும் பெரியதாக இருக்கும்.(9) எச்செயலையும் ஒருபோதும் அவர்களை மீறிச் செய்யாதே. அவர்கள் உண்பதற்கு முன் நீ உண்ணாதே, அவர்கள் உண்பதைவிடச் சிறந்த எதையும் நீ உண்ணாதே. அவர்களின் மேல் எந்தக் குற்றத்தையும் ஒருபோதும் சுமத்தாதே. ஒருவன் எப்போதும் அவர்களிடம் பணிவுடன் தொண்டாற்ற வேண்டும். அதுவே உயர்ந்த தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும்.(10) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வழியில் செயல்பட்டால், புகழ், தகுதி, கௌரவம், மறுமையில் புகழ் உலகங்கள் ஆகியவற்றை அடைவாய். எவன் இவர்களைக் கௌரவிப்பானோ, அவன் மூவுலகங்களிலும் கௌரவிக்கப்படுவான்.(11)

மறுபுறம், எவன் இவர்களை அவமதிப்பானோ, அவன் செய்யும் எந்தச் செயல்களிலும் எந்தத் தகுதியும் {புண்ணியத்தையும்} அடையமாட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, அத்தகு மனிதன் இம்மையும், மறுமையும் அடைவதில்லை.(12) இந்த மூன்று பெரியோரையும் எவன் எப்போதும் அவமதிப்பானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் புகழை அடையமாட்டான். அவன் மறுமையில் எந்த நன்மையையும் ஒருபோதும் ஈட்டமாட்டான்.(13) இந்த மூவரைக் கௌரவிக்கும் வகையில் நான் கொடுத்த அனைத்தும் அதன் உண்மை அளவைவிட நூறு மடங்காகவோ, ஆயிரம் மடங்காகவோ ஆனது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தகுதியின் விளைவாகவே, நான் என் கண்களால் மூவுலகங்களையும் தெளிவாகக் காண்கிறேன்.(14) ஓர் ஆச்சாரியர் {ஆசிரியர்}, கல்வி கற்ற பத்து பிராமணர்களைவிட மேன்மையானவராவார். ஓர் உபாத்யாயர் {துணையாசிரியர்}, பத்து ஆச்சாரியர்களைவிட மேன்மையானவராவார். தந்தை, பத்து உபாத்யாயர்களைவிட மேன்மையானவராவார். தாயானவள், பத்து தந்தைகளைவிட, முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில் ஒருவேளை, மொத்த உலகையும்விட மேன்மையானவளாவாள்.(15,16)

எனினும், ஓர் ஆசான், தந்தையையும், தாயைவிடவும் கூட அதிக மதிப்புக்குத் தகுந்தவர் என்பது என் கருத்து. தந்தையும், தாயும் ஒருவனைப் படைக்கிறார்கள்.(17) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தந்தையும், தாயும் உடலை மட்டுமே உண்டாக்குகிறார்கள். மறுபுறம், தன் ஆசானிடம் இருந்து ஒருவன் பெறும் பிறவியானது தெய்வீகமானதாகும். அந்த வாழ்வானது சிதைவும் {முதுமையும்}, அழிவும் இல்லாததாகும்.(18) தந்தையும், தாயும் எக்குற்றமிழைத்தாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. (தண்டனைக்குத் தகுந்தவர்களாக இருப்பினும்) ஒரு தந்தையையும், ஒரு தாயையும் தண்டிக்காமல் இருப்பதால் ஒருவன் பாவமிழைத்தவன் ஆகமாட்டான். உண்மையில், தண்டனையிலிருந்து தப்பும் அத்தகு மதிப்புக்குரிய மனிதர்கள் மன்னனைக் களங்கப்படுத்துவதில்லை. பாவம் நிறைந்த தந்தையை மதிப்புடன் பேணி வளர்க்க முயலும் மனிதர்களுக்குத் தேவர்களும், முனிவர்களும் தங்கள் உதவிகளை நிறுத்துவதில்லை.(19) உண்மையான கல்வியைக் கொடுப்பது, வேதங்களைச் சொல்வது, அழிவில்லா ஞானத்தைக் கொடுப்பது ஆகிய காரியங்களால் ஒரு மனிதனுக்கு உதவுபவர், தந்தையாகவும், தாயாகவும் கருதப்பட வேண்டும். ஆசானின் செயலை நன்றியுடன் நினைவுகூரும் சீடன், எதற்காகவும் ஒருபோதும் அவருக்கு எத்தீங்கையும் செய்யக்கூடாது.(20)

ஆசான்களிடம் இருந்து கல்வியை அடைந்த பிறகு, எண்ணத்தாலும், செயலாலும் கடமையுணர்வுடன் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல், அவர்களை மதிக்காமல் இருப்போர் கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களைப் போன்ற பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை. ஆசான்கள் எப்போதும் தங்கள் சீடர்களிடம் பெரும் அன்பை வெளிப்படுத்துவார்கள். எனவே, சீடர்களும் ஒப்பிடத்தக்க தங்கள் மரியாதையை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.(21) எனவே, பழங்காலத்தில் இருந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் ஒருவன், தன் ஆசான்களைப் போற்றி வழிபட்டு, அனைத்து இன்பநுகர் பொருட்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(22) தன் தந்தையை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவனிடம் பிரஜாபதி நிறைவுடன் இருக்கிறார். தன் தாயை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவன் பூமாதேவியையே நிறைவுகொள்ளச் செய்கிறான்.(23) எவன் தன் ஆசானை நிறைவுகொள்ளச் செய்கிறானோ, அவன் அச்செயலால் பிரம்மனையே நிறைவுகொள்ளச் செய்கிறான். இதன் காரணமாகவே, ஓர் ஆசான், தந்தையையோ, தாயையோ விடப் பெரும் மதிப்புக்குத் தகுந்தவராக இருக்கிறார்.(24) ஆசான்கள் வழிபடப்பட்டால், முனிவர்களுடனும், தேவர்களுடனும் சேர்ந்த பித்ருக்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள். எனவே, ஆசான் என்பவர் உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தவராவார்.(25)

ஆசானானவர், ஒரு சீடனால் எவ்வகையிலும் ஒருபோதும் அலட்சியம் செய்யப் {அவமதிக்கப்} படக்கூடாது. தாயோ, தந்தையோ கூட ஆசானின் அளவுக்கு மதிப்புக்குத் தகுந்தவர்கள் இல்லை.(26) தந்தை, தாய், ஆசான் ஆகியோர் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது. அவர்களுடைய எச்செயலிலும் குற்றம் காணக்கூடாது. எவன் தன் ஆசான்களிடம் மதிப்புடன் நடந்து கொள்கிறானோ, அவனிடம் தேவர்களும், பெரும் முனிவர்களும் நிறைவு கொள்கிறார்கள்.(27) எண்ணத்தாலோ, செயலாலோ ஆசான்கள், அல்லது தந்தைமார், அல்லது தாய்மார் ஆகியோருக்குத் தீங்கிழைப்பவர்கள், ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களுக்கு இணையான பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.(28) தந்தையின் மடியிலும், தாயின் கருவறையிலும் பிறந்த ஒரு மகன், அவர்களால் வளர்க்கப்பட்டு, வயதடையும்போது தன் பங்குக்கு அவர்களை ஆதரிக்காமல் போனால், அவன் ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறான். அவனுக்கு இணையான பாவி இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(29) ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பவன், நன்றியில்லாதவன், ஒரு பெண்ணைக் கொல்பவன், ஓர் ஆசானைக் கொல்பவன் ஆகிய நால்வரும் {பாவங்களில் இருந்து} தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாக நாம் ஒருபோதும் கேள்விப்படுவதில்லை.(30) இவ்வுலகில் ஒரு மனிதன் பொதுவாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லிவிட்டேன். நான் சொன்ன கடமைகளைத் தவிர்த்து, பெரும் புகழை உண்டாக்கக்கூடியவை வேறு {செயல்கள்} எவையும் இல்லை. கடமைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அவற்றின் சாரத்தை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(31)

ஸநாதன தர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 109-உண்மை மற்றும் பொய்ம்மையின் பண்புகளையும், அவையிரண்டும் பயன்படுத்தப்பட வேண்டிய நேரங்களையும், அழிவில்லா அறமான நித்திய கடமையையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அறத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, கல்விமானான நீர் என்னால் கேட்கப்படும் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பீராக.(1) உண்மை மற்றும் பொய்ம்மை ஆகியன உலகங்கள் அனைத்தையும் சூழ்ந்தபடியே இருக்கின்றன. ஓ! மன்னா, அறத்தில் உறுதியாக இருக்கும் மனிதன் இவை இரண்டில் எதைப் பின்பற்ற வேண்டும்?(2) மேலும், உண்மை என்றால் என்ன? பொய்ம்மை என்றால் என்ன? மேலும் அழிவில்லா அறம் {ஸநாதன தர்மம்} என்பது என்ன? எச்சமயத்தில் ஒரு மனிதன் உண்மையைச் சொல்ல வேண்டும், மேலும் எச்சமயத்தில் பொய்யைச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உண்மையைச் சொல்வதே அறத்திற்கு இசைவானது. உண்மையைவிட வேறு உயர்ந்தது ஏதும் கிடையாது. ஓ! பாரதா, பொதுவாக மனிதர்கள் அறியாததை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) எங்கே பொய்ம்மை, உண்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே உண்மை சொல்லப்படக்கூடாது. மேலும், எங்கே உண்மையானது, பொய்ம்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே பொய்மையும்கூடச் சொல்லப்படலாம்[1].(5) அறத்தின் தொடர்பறுந்த உண்மையைச் சொல்லும் அறியாமை கொண்ட மனிதன் பாவத்தையே இழைக்கிறான். பொய்ம்மையில் இருந்து உண்மையை வேறுபடுத்திப் பார்க்க முடிந்த மனிதனே கடமைகளை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்[2].(6) மதிக்கத்தகாதவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனும், மிகக் கொடூரமானவனுமான ஒரு மனிதனும் கூட, (அனைத்து உயிரினங்களையும் அழிக்க அச்சுறுத்திய) குருட்டு விலங்கைக் கொன்றதன் மூலம் வேடன் பலாகன்[3] அடைந்த பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட முடியும்.(7) மூட அறிவு கொண்ட ஒரு மனிதன், (கடுந்தவங்களின் மூலம்) தகுதியை அடைய விரும்பினாலும், பாவம் நிறைந்த ஒரு செயலை அவனால் செய்ய முடியும்[4]. மேலும் கங்கைக் கரையில் உள்ள ஓர் ஆந்தையானது, (நியாயமற்ற ஒரு செயலைச் செய்ததன் மூலம்) பெரும் தகுதியை அடைந்தது[5].(8)அறம் எதுவெனச் சொல்வது கடினமானதாகையால், நீ என்னிடம் கேட்ட கேள்வி மிகக் கடினமானதே. அதைச் சுட்டிக்காட்டுவது எளிதன்று. அறம் குறித்து உரையாடும் எவராலும் அதைச் சரியாகச் சுட்டிக்காட்ட முடியாது.(9) அறமானது, உயிரினங்கள் அனைத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்காகவுமே (பிரம்மனால்) அறிவிக்கப்பட்டது. எனவே, எது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்குமோ, அதுவே அறமாகும்.(10) உயிரினங்கள் ஒன்றையொன்று காயப்படுத்துவதைத் தவிர்க்கவே அறம் அறிவிக்கப்பட்டது. எனவே, எது உயிரினங்களைத் தீங்கு செய்வதில் இருந்து தவிர்க்குமோ அதுவே அறமாகும்.(11) அறமானது {தர்மமானது}, உயிரினங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்துவதாலேயே அஃது அவ்வாறு அழைக்கப்படுகிறது. உண்மையில் அனைத்து உயிரினங்களும் அறத்தாலேயே தூக்கி நிறுத்தப்படுகின்றன. எனவே, உயிரினங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்தவல்லது எதுவோ அதுவே அறமாகும்.(12) ஸ்ருதிகளில் பதியப்பட்டிருப்பவற்றைக் கொண்டதே அறம் எனச் சிலரால் சொல்லப்படுகிறது. வேறு சிலர் இஃதை ஏற்பதில்லை. அவ்வாறு சொல்வோரை நான் கண்டிக்கமாட்டேன். மேலும், அனைத்தும் ஸ்ருதிகளில் சொல்லப்படவில்லை[6].(13)

சில வேளைகளில், பிறரின் செல்வத்தை அடைய விரும்பும் மனிதர்கள் (கள்வர்கள்), (கொள்ளைச் செயலுக்கு உதவிபுரிவதற்காக) இது குறித்து விசாரிக்கின்றனர். ஒருவன், அத்தகு கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்ட கடமையாகும்.(14) அமைதியாயிருப்பதன் மூலம், ஒருவன் தப்ப முடியுமென்றால், அவன் அமைதியாகவே இருக்க வேண்டும். மறுபுறம், ஒருவன் பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பதில் ஐயமெழுந்தால்,(15) அத்தகு தருணங்களில், உண்மையைச் சொல்வதைவிட உண்மையற்றதைச் சொல்வதே சிறப்பானதாகும். இந்த முடிவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். (பொய்யான) ஓர் உறுதிமொழியின் மூலம், ஒருவனால் பாவியிடம் இருந்து தப்ப முடியுமென்றால், அவன் அவ்வாறு செய்வதால் பாவத்தை இழைத்தவனாக மாட்டான்.(16) ஒருவனால் தன் செல்வத்தைக் கொடுக்க முடியும் என்றாலும், பாவம் நிறைந்த மனிதர்களுக்கு அஃதை அவன் கொடுக்கக்கூடாது. பாவிகளுக்குக் கொடுக்கப்படும் செல்வமானது அதைக் கொடுப்பவனையும் பீடிக்கும்.(17) கடன் கொடுத்தவன், தன்னிடம் கடன் பெற்றவன் உடல் சார்ந்த தொண்டைச் செய்து அக்கடனை அடைக்க வேண்டும் என்று விரும்பினால், {அந்தக் கடன்} ஒப்பந்தத்தின் உண்மையை நிறுவுவதற்காகக் கடன் கொடுத்தவனால் அழைக்கப்பட்ட சாட்சிகள் என்ன சொல்லப்பட வேண்டுமோ அதைச் சொல்லவில்லையென்றால், அவர்கள் {சாட்சி சொன்னவர்கள்} அனைவரும் பொய்யர்களாவர்[7]. உயிர் ஆபத்திலிருக்கும்போதோ, திருமணத் தருணங்களிலோ ஒருவன் பொய்ம்மை பேசலாம்.(18,19) அறம் நாடும் ஒருவன், பிறரின் செல்வத்தையும், செழிப்பையும் காப்பதற்கோ, அறக்காரியங்களுக்கோ பொய்ம்மை பேசினால், அந்தப் பொய்ம்மையால் அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்.(20)

ஒருவன் கொடுக்கிறேன் என உறுதிகூறிவிட்டால், தன் உறுதிமொழியை நிறைவற்ற அவன் கட்டுப்பட்டவனாகிறான். தவறினால், தன்னையே கொள்ளையிடும் அவன், பலவந்தமாக அடக்கப்பட வேண்டும். நியாயமான ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் ஒருவன் நியாயமில்லாமல் செயல்பட்டால், அத்தகு ஒழுக்கத்தைப் பின்பற்றியதற்காக அவன் தண்டக்கோலால் நிச்சயம் பீடிக்கப்பட வேண்டும்[8].(21) கடமைகள் அனைத்தில் இருந்து வழுவி, தன் வகையைச் சேர்ந்தோரைக் கைவிட்ட வஞ்சகன் ஒருவன், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்வதற்காக அசுரர்களின் நடைமுறையான ஒழுக்கமின்மையையே எப்போதும் விரும்புவான்.(22) வஞ்சகத்தால் வாழும் அத்தகு பாவம் நிறைந்த இழிந்தவன், அனைத்து வழிமுறைகளினாலும் கொல்லப்பட வேண்டும். அத்தகு பாவிகள் செல்வத்தை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறேதும் இல்லை என்று நினைக்கின்றனர்.(23) அத்தகு மனிதர்களை ஒருபோதும் பொறுத்து {சகித்துக்} கொள்ளக்கூடாது. அவர்களுடன் சேர்ந்து யாரும் உண்ணக்கூடாது. அவர்கள், தங்கள் பாவங்களின் விளைவால் வீழ்ந்துவிட்டவர்களாகவே கருதப்பட வேண்டும். மனித நிலையில் இருந்து வீழ்ந்து, தேவர்களின் அருளில் இருந்து ஒதுக்கப்பட்ட அவர்கள் பிணங்களைப் போன்றோரே ஆவர்.(24)

வேள்விகள் செய்யாமல், தவங்களில் ஈடுபடாமல் இருக்கும் அவர்கள், தங்கள் தோழமையை விட்டு {தோழர்களிடம் இருந்து} விலகுகிறார்கள். அவர்களது செல்வம் தொலைந்துபோனால், மிகப் பரிதாபகரமான தற்கொலையையும்கூடச் செய்து கொள்வார்கள்.(25) இந்தப் பாவிகளில் ஒருவனிடமும், “இஃது உன் கடமை. உன் இதயம் இதை நோக்கித் திரும்பட்டும்” என்று உன்னால் சொல்ல முடியாது. இவ்வுலகத்தில் செல்வத்துக்கு இணையானது வேறெதுவும் இல்லை என்பது அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கும் திட நம்பிக்கையாகும்.(26) அத்தகு பிறவியைக் கொல்பவன், எந்தப் பாவத்தையும் அடையமாட்டான். எவன் அவனைக் கொல்வானோ, ஏற்கனவே தன் சொந்த செயல்களால் கொல்லப்பட்ட ஒருவனையே கொல்கிறான். அவன் கொல்லப்பட்டால், அங்கே {ஏற்கனவே} இறந்தவனே கொல்லப்படுகிறான் {ஒரு பிணமே கொல்லப்படுகிறது}.(27) உணர்விழந்தவர்களான அம்மனிதர்களைக் கொல்ல சபதம் செய்தவன், தன் சபதத்தை நிறைவேற்ற வேண்டும்[9]. அத்தகு பாவிகள், தங்கள் வாழ்வுக்காக வஞ்சகத்தை நம்பி வாழும் காகத்தையும், கழுகையும் போன்றோராவர். அவர்களது (மனித) உடல் அழிவை அடைந்த பிறகு, அவர்கள் காகங்களாகவும், கழுகுகளாகவும் மறுபிறப்பை அடைகிறார்கள்.(28) எந்தக் காரியத்திலும், அடுத்தவன் அந்தக் காரியத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறானோ, அதே போலவே அவனிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். வஞ்சகம் பயில்பவன் வஞ்சகத்தாலேயே தடுக்கப்பட வேண்டும். நேர்மையானவன் நேர்மையாகவே எதிர்க்கொள்ளப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(29)

கிருஷ்ணனே நாராயணன்! – சாந்திபர்வம் பகுதி – 110-உயிரினங்களால் துன்பங்களை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும், நாராயணனே அனைத்தின் புகலிடம் என்பதையும், கிருஷ்ணனே அந்த நாராயணன் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கிட்டத்தட்ட தொடர்ச்சியாகவே பல்வேறு வழிகளில் உயிரினங்கள் பீடிக்கப்படுவது {துன்புறுவதும்} காணப்படுகிறது. ஓ பாட்டா, அந்தக் கடினமான துன்பங்கள் அனைத்தில் இருந்தும் ஒருவன் விடுபடக்கூடிய வழியென்ன?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மறுபிறப்பாள வகையைச் சேர்ந்தோர், அடக்கப்பட்ட ஆன்மாக்களுடனும், பல்வேறு வாழ்வுமுறைகளுக்காக {அசிரமங்களுக்காக} சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகப் பயின்றும் இந்தத் துன்பங்களைக் கடப்பதில் வெல்கின்றனர்.(2) வஞ்சகத்தை ஒருபோதும் பயிலாதவர்களும், வணங்கத்தக்க கட்டுப்பாடுகளால் அடக்கப்பட்ட ஒழுக்கத்தைக் கொண்டவர்களும், உலக ஆசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(3) தீய மொழி பேசப்படும்போது பேசாமல் இருப்பவர்களும், தாக்கப்படும்போதும் பிறரைத் தாக்காதவர்களும், எடுக்காமல் கொடுப்பவர்களும் அனைத்துத் துன்பங்களையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(4) விருந்தினர்களுக்கு விருந்தோம்பலுடன் உறைவிடத்தை எப்போதும் கொடுப்பவர்களும், வன்மத்தில் ஈடுபடாதவர்களும், தொடர்ந்து வேத கல்வியில் ஈடுபடுபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(5) கடமைகளை அறிந்தவர்களும், தங்களைப் பெற்றோரிடம் தகுந்த நடையில் நடந்து கொள்பவர்களும், பகலில் உறங்குவதைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(6) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் எவ்வகைப் பாவத்தையும் செய்யாதவர்களும், எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காதவர்களும் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(7)

ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தில் {மக்களை} ஒடுக்கும் வகையில் வரிகளை விதிக்காதவர்களும், தங்கள் ஆட்சிப்பகுதிகளைக் காப்பவர்களுமான மன்னர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(8) பிற பெண்களின் தோழமையை நாடாமல், தாங்கள் திருமணம் செய்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே தகுந்த காலத்தில் செல்பவர்களும், நேர்மையானவர்களும், தங்கள் அக்னி ஹோத்திரங்களில் கவனமாக இருப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(9) மரணம் குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு, நியாயமான வழிமுறைகளின் மூலம் வெற்றியை அடைய விரும்பி போரில் ஈடுபடும் துணிவுமிக்கோர், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(10) உயிரையே பணயம் வைத்து இவ்வுலகில் எப்போதும் உண்மையைப் பேசி வருபவர்களும், அனைத்து உயிரினங்களுக்கும் முன்மாதிரியான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(11) செயல்களில் ஒருபோதும் வஞ்சிக்காதவர்களும், எப்போதும் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசுபவர்களும், செல்வத்தை எப்போதும் சிறப்புடன் நன்றாகச் செலவழிப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(12)

தகாத வேளைகளில் வேதங்களை ஒருபோதும் கல்லாதவர்களும், அர்ப்பணிப்புடன் தவங்களைப் பயில்பவர்களுமான பிராமணர்கள், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(13) மணமாகா நிலையையும், பிரம்மச்சரியத்தையும் வாழ்வாகக் கொள்பவர்களும், தவங்களைச் செய்பவர்களும்,கல்வியால் தூய்மையடைந்தவர்களும், வேத ஞானமும், முறையான நோன்புகளும் கொண்டவர்களுமான பிராமணர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(14) ஆசை {ரஜோ} மற்றும் இருள் {தமோ} குணங்கள் அனைத்தையும் தடுப்பவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களும், நன்மை என்றழைக்கப்படும் பண்புகள் அனைத்தையும் பயில்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(15)

எவர்களைக் கண்டு எந்த உயிரினமும் அச்சப்படாதோ, எவர்கள் எந்த உயிரினத்தையும் கண்டு அஞ்சாதிருக்கிறார்களோ, எவர்கள் அனைத்து உயிரினங்களையும் தம்மைப் போலப் பார்க்கிறார்களோ, அவர்கள் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(16) நல்லோராக இருப்பவர்களும், செழிப்பாக இருக்கும் மக்களைக் கண்டு ஒருபோதும் துயரடையாதவர்களும், உன்னதமற்ற அனைத்து வகைச் செயல்களையும் தவிர்ப்பவர்களுமான மனிதர்களில் காளைகள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(17) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், நம்பிக்கைகளைக் கொண்ட சமயங்களின் கோட்பாடுகள் அனைத்தையும் கேட்பவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[1].(18) தங்களுக்குக் கௌரவங்களை விரும்பாமல், பிறருக்குக் கௌரவங்களைக் கொடுப்பவர்களும், வழிபாட்டுக்குத் தகுந்தோரை வணங்குபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(19) வாரிசுகளை விரும்பி, தூய மனத்துடன் முறையான சந்திர நாட்களில் சிராத்தங்களைச் செய்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[2].(20)தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, பிறரின் கோபத்தைத் தணிப்பவர்களும், எந்த உயிரினத்திடமும் ஒருபோதும் கோபமடையாதவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(21) தேன் {மது}, இறைச்சி, போதையூட்டும் பானங்கள் ஆகியவற்றைப் பிறப்பிலிருந்தே தவிர்ப்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(22) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே உண்பவர்களும், வாரிசுகளுக்காக மட்டுமே பெண்களின் தோழமையை நாடுபவர்களும், உண்மையைப் பேசுவதற்காக மட்டுமே தங்கள் உதடுகளைத் திறப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(23) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனும் {பரமனும்}, அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவனுமான தேவன் நாராயணனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(24) தாமரை போல் கண்கள் சிவந்தவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், நமது நலன் விரும்பியும், சகோதரனும் {உங்கள் மைத்துனனும், நண்பனும், உறவினனுமான இந்தக் கிருஷ்ணனே மங்கா மகிமை கொண்ட அந்த நாராயணனாவான்.(25)

தோலுறையைப் போல இந்த உலகங்கள் யாவையும் தன் விருப்பம்போல மறைப்பவன் இவனே. நினைத்தற்கரிய ஆன்மா கொண்ட பலமிக்கத் தலைவன் இவனே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கோவிந்தன் இவனே.(26) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஜிஷ்ணுவுக்கும் {அர்ஜுனனுக்கும்}, உனக்கும் ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவனான இந்தக் கிருஷ்ணனே, தடுக்கப்படமுடியாதவனும், அழிவில்லா புகழின் வசிப்பிடமாக இருப்பவனுமான அவனாவான் {நாராயணனாவான்}.(27) ஹரி என்றும் அழைக்கப்படும் இந்த நாராயணனின் புகலிடத்தை அர்ப்பணிப்புடன் நாடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(28) துன்பங்களைக் கடப்பது குறித்த இந்த வரிகளைப் படிப்பவர்களும், பிறருக்கு உரைப்பவர்களும், பிராமணர்களிடம் சொல்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(29) ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, எச்செயல்களின் மூலம் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் துன்பங்கள் அனைத்தையும் கடப்பார்களோ, அவை அனைத்தையும் இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(30)

நரியும், புலியும்! – சாந்திபர்வம் பகுதி – 111-நல்லோரையும், தீயோரையும் வேறுபடுத்திப் பார்ப்பது எவ்வாறு? புலிக்கு அமைச்சராகச் செயல்பட்ட நல்ல நரியின் கதை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இங்கே பல மனிதர்கள் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோராக இல்லையெனினும், வெளிப்புறத்தோற்றத்தில் அமைதி நிறைந்த ஆன்மா கொண்டோராகத் தெரிகின்றனர். மேலும் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோர் வேறு வகையில் தெரிகின்றனர். ஓ! ஐயா, இம்மனிதர்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக ஒரு புலிக்கும், ஒரு நரிக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில், புரிகை என்றழைக்கப்படும் செழிப்புமிக்க ஒரு நகரத்தில் பௌரிகன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். உயிரினங்களில் இழிந்தவனான அவன் மிகக் கொடூரனாகவும், பிறருக்குத் தீங்கிழைப்பதில் மகிழ்பவனாகவும் இருந்தான்.(3) அவனது வாழ்நாளின் காலம் முடிந்ததும், விரும்பத்தகாத முடிவை அவன் அடைந்தான். உண்மையில், மனிதவாழ்வில் அவன் செய்த தீச்செயலின் களங்கத்தோடு கூடிய அவன், ஒரு நரியாக மறுபிறவி அடைந்தான்.(4) அவன், தனது பழைய செழிப்பை நினைவுகூர்ந்து, துயரத்தால் நிறைந்து, பிறர் கொண்டு வந்து கொடுத்தாலும் இறைச்சியை உண்ணாதிருந்தான்.(5) அவன் அனைத்து உயிரினிங்களிடமும் கருணை கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், கடும் நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளவனாகவும் இருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் மரங்களில் இருந்து விழும் கனிகளை அவன் உணவாகக் கொண்டான்.(6) அந்த நரியானவன், ஒரு பரந்த சுடலையில் {சுடுகாட்டில்} வசித்து வந்தான், அங்கேயே தொடர்ந்து வசிக்கவும் விரும்பினான். அதுவே அவன் பிறந்த இடமாகையால், அவன் வேறு சிறப்பான இடத்திற்கு மாற ஒரு போதும் விரும்பாதிருந்தான்.(7)

அவனது நடத்தையின் தூய்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவனது வகையைச் சேர்ந்த உயிரினங்கள் {நரிகள்}, அவனது தீர்மானத்தை மாற்றும் முயற்சியில், பணிவுடன் கூடிய இவ்வார்த்தைகளை அவனிடம் சொல்லின,(8) “பயங்கரச் சுடலையில் வசித்தாலும், இத்தகு தூய ஒழுக்கத்துடன் வாழ நீ விரும்புகிறாய். அழுகும் பிணங்களை உண்பதை இயற்கை பண்பாகக் கொண்ட நீ, இப்போது உன் பங்குக்குப் பிறழ்புத்தி கொண்டவனாகத் தெரியவில்லையா?(9) எங்களைப் போல இருப்பாயாக. நாங்கள் அனைவரும் உனக்கு உணவளிக்கிறோம். இத்தகு தூய ஒழுக்கத்தைக் கைவிட்டு, எப்போதும் எது உன் உணவாக இருக்க முடியுமோ அஃதை உண்பாயாக” என்றன.(10)

அவற்றின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த நரியானவன், குவிந்த கவனத்துடனும், தீங்கிழையாமையை அனைவரின் மனத்தில் பதிய வைக்கும் வகையிலும், இந்த இனிமை நிறைந்த வார்த்தைகளைப் பேசினான்:(11) “என் பிறவி இழிந்ததாக இருக்கிறது. எனினும், ஒழுக்கமே குலத்தைத் தீர்மானிக்கிறது.[1] என் புகழ் பரவும் வகையில் நடந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.(12) என் வசிப்பிடம் சுடலையாக இருப்பினும், ஒழுக்கம் தொடர்பான என் நோன்புகளைக் கேட்பீராக. ஒருவனின் செயல்களே அவனது சுயத்தை விளைவிக்கின்றன. ஒருவன் செய்யும் அறச்செயல்களின் விளைவாக அவன் மேற்கொள்ளும் வாழ்வுமுறை {ஆசிரமம்} அமைவதில்லை.(13) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றால், பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} எனும் பாவம் அவனைப் பற்றாமல் இருக்குமா? மறுபுறம், ஒருவன் எந்த வாழ்வுமுறையையும் நோற்காமல் இருந்து, அவனே ஒரு பசுவைத் தானமளித்தால், அந்த நற்கொடை அவனுக்கு எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} உண்டாக்காதா?(14) ஏற்புடையதை அடைய விரும்பும் உந்துதலால் நீங்கள் உங்கள் வயிற்றை மட்டுமே நிரப்புவதில் ஈடுபடுகிறீர்கள். மூடத்தனத்தில் மயங்கியிருக்கும் நீங்கள், முடிவில் உண்டாகும் மூன்று குற்றங்களைக் காணாமல் இருக்கிறீர்கள்.(15) இம்மையிலும், மறுமையிலும் தீமையையே கொண்டதும், நிறைவில்லாமை, மயக்கம் {சபலம்} ஆகியவற்றுடன் அற இழப்பை ஏற்படுத்துவதுமான நீங்கள் வாழும் வாழ்வைப் பின்பற்ற நான் விரும்பவில்லை” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(16)ஆற்றலுக்காகக் கொண்டாடப்படும் ஒரு புலியானது, இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்து, அந்த நரியை தூய ஒழுக்கம் கொண்ட கல்விமானாகக் கருதி, தனக்கு இணையாக மரியாதையை அவனுக்குச் செலுத்தி, அவனைத் தன் அமைச்சராக நியமித்துக் கொள்ளும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது.(17)

அந்தப் புலியானது {நரியிடம்}, “ஓ! அறவோனே, நீ யார் என்பதை நான் அறிவேன். என்னோடு சேர்ந்து அரசின் கடமைகளைக் கவனிப்பாயாக. உன் சுவைக்குத் தகாத எதையும் கைவிட்டு, நீ விரும்பும் எந்தப் பொருளையும் அனுபவிப்பாயாக.(18) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் சீற்றமிகு கடும் மனோநிலை கொண்டவர்களாக அறியப்படுகிறோம். இதை நான் முன்கூட்டியே உனக்குச் சொல்லிவிடுகிறேன். நீ மென்மையாக நடந்து கொண்டால் நன்மைகளை அடைந்து, உனக்கான பயன்களையும் அறுவடை செய்வாய்” என்றது.(19) விலங்குகள் அனைத்தின் தலைவனான அந்த உயர் ஆன்மாவின் {புலியின்} இந்த வார்த்தைகளை மதித்த நரியானவன், தன் தலையைச் சற்றே தொங்கவிட்டபடியே, பணிவு நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(20)

அந்த நரியானவன் {மன்னன் பௌரிகன்}, “ஓ! விலங்குகளின் மன்னா, என்னைக் குறித்த உன் வார்த்தைகள் உனக்குத் தகுந்தவையே. தூய நடத்தை கொண்டவர்களும், கடமைகளையும், உலகக் காரியங்களை அறிந்தவர்களுமான அமைச்சர்களை நீ நாடுவதும் உனக்குத் தகுந்ததே.(21) ஓ! வீரா, ஒரு நல்ல அமைச்சரில்லாமல் உன் பெருமையை உன்னால் தக்கவைத்துக் கொள்ள முடியாது, அல்லது ஒரு தீய அமைச்சனின் மூலம் உன் வாழ்வுக்கே முடிவேற்படலாம்.(22) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் அமைச்சர்களில் உனக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள், கொள்கை அறிந்தவர்கள், ஒருவருக்கொருவர் சுதந்திரமாக இருப்பவர்கள், வெற்றியால் உனக்கு மகுடம் சூட்ட விரும்புபவர்கள், பேராசை எனும் களங்கம் இல்லாதவர்கள், வஞ்சகமில்லாதவர்கள், ஞானம் உள்ளவர்கள், உன் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்கள் பெரும் மனத் திண்மை கொண்டவர்கள் ஆகியோரையோ, ஆசான்களையோ, உன் பெற்றோர்களையோ போல மதிப்பாயாக.(23,24) ஓ! விலங்குகளின் மன்னா, என் தற்போதைய நிலையில் நான் நிறைவுடன் இருப்பதால், எதன் காரணமாகவும் நான் அந்நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஆடம்பர இன்பங்களினால் எழும் மகிழ்ச்சியிலும் நான் ஆசை கொள்ளவில்லை.(25)

மேலும் என் நடத்தையை உன் பழைய பணியாட்கள் ஏற்காமல் போகக்கூடும். அவர்கள் தீய நடத்தை கொண்டோராக இருந்தால், உனக்கும் எனக்கும் இடையில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவார்கள்.(26) அந்த வேறொருவர், காந்தியைக் கொண்டவராக இருப்பினும், அவரைச் சார்ந்திருப்பது விரும்பத்தக்கதோ, புகழத்தக்கதோ அல்ல.(27) நான் தூய்மைப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவன் ஆவேன். நான் உயர்ந்த அருளைப் பெற்றிருக்கிறேன். பாவிகளிடம் கூட நான் கடுமையைக் காட்டவல்லவனாக இல்லை. நான் பெரும் முன்னறிதிறனைப் பெற்றிருக்கிறேன். பேருழைப்புக்குத் தகுதியுடையவனாக இருக்கிறேன். சிறு காரியங்களை நான் பார்ப்பதில்லை. நான் பெரும் பலத்தைக் கொண்டவனாவேன். நான் என் செயல்களில் வெற்றிகரமாக இருக்கிறேன். கனியற்ற செயலை நான் ஒருபோதும் செய்வதில்லை. இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்.(28) சிறிதளவே கொண்டு நான் ஒரு போதும் நிறைவடைவதில்லை. நான் ஒருபோதும் பிறருக்குத் தொண்டாற்றியவனில்லை. மேலும் பணிவிடை செய்வதில் நான் திறனற்றவனாக இருக்கிறேன். நான் என் விருப்பப்படி காடுகளில் இன்பமாக வாழ்ந்து வருகிறேன்[2].(29)

மன்னர்களைச் சார்ந்து வாழும் அனைவரும், தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் தீய பேச்சுகளின் விளைவால் பெரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், காடுகளில் வசிப்போர், எந்தக் கவலையும், அச்சமுமில்லாமல் தங்கள் நோன்புகளை நோற்றபடி நாட்களைக் கடத்த முடியும்.(30) மன்னனால் அழைக்கப்பட்டவனின் இதயத்தில் எழும் அச்சத்தை, காட்டில் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, தங்கள் நாட்களைக் கடத்தியபடி நிறைவுடன் வாழ்ந்து வருபவர்கள் அறியமாட்டார்கள்.(31) முயற்சியேதும் இல்லாமல் அடையப்படும் எளிய உணவு மற்றும் பானத்திற்கும், அச்சத்துடன் தருவிக்கப்படும் ஆடம்பர உணவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. இவையிரண்டையும் சிந்திக்கும் நான், எங்கே கவலையில்லையோ அங்கேயே மகிழ்ச்சியிருக்க முடியும் என்ற கருத்தை அடைகிறேன்.(32) அரசத் தொண்டாற்றுவோருக்கு மத்தியில் மிகச் சிலர் மட்டுமே அவர்களது குற்றங்களுக்காக நீதியுடன் தண்டிக்கப்படுகின்றனர். எனினும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், பொய்க் குற்றச்சாட்டுகளின் மூலமே மரணத்தை அடைகின்றனர்.(33) ஓ! விலங்குகளின் மன்னா, இவையனைத்தும் இருந்தபோதிலும், நீ என்னை உன் அமைச்சராக நியமித்துக் கொண்டால், நீ என்னிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து உன்னுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.(34) உன் நன்மைக்காக நான் பேசும் சொற்கள் உன்னால் கேட்கப்பட்டு, உன்னால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உன்னால் எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் வழிவகைகளில் நீ ஒருபோதும் குறிக்கிடக்கூடாது.(35)

நான் ஒருபோதும் உன் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசிக்க மாட்டேன். நான் அவ்வாறு செய்தால், என்னிலும் மேன்மையடைய விரும்பும் அவர்கள், பல்வேறு வகைக் குற்றச்சாட்டுகளால் என்னைக் களங்கப்படுத்துவார்கள்.(36) உன்னை மட்டுமே தனிமையில் சந்தித்து, உனக்கு எது நன்மையோ அதை இரகசியமாகச் சொல்வேன். உன் உறவினர்கள் தொடர்புடைய காரியங்கள் அனைத்திலும், உனக்கு நன்மையானது எது, அல்லது நன்மையற்றது எது என்பதை என்னிடம் நீ கேட்காமலிருக்க வேண்டும்.(37) என்னிடம் ஆலோசித்த பிறகு, நீ உன் பிற அமைச்சர்களைத் தண்டிக்காமல் இருக்க வேண்டும். என்னைப் பின்தொடர்பவர்களையும், என்னைச் சார்ந்திருப்பவர்களையும் நீ சினத்தின் வசப்பட்டுத் தண்டிக்காமல் இருக்க வேண்டும்” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(38) நரியால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த விலங்குகளின் மன்னன் {புலியானவன்}, அவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவனுக்கு அனைத்து கௌரவங்களையும் அளித்தான். பிறகு, புலியின் அமைச்சராக நரியானவன் பொறுப்பேற்றான். நரியானவன், மரியாதையாக நடத்தப்படுவதையும், அவனது செயல்கள் அனைத்தும் கௌரவிக்கப்படுவதையும் கண்ட மன்னனின் {புலியின்} பழைய பணியாட்கள் ஒன்றாகச் சேர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டி, அவனுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இடையறாமல் வெளிப்படுத்தத் தொடங்கினர்.(40)

அந்தத் தீயவர்கள், நட்புடன் பழகி அவனை நிறைவு செய்யவும், அரசில் நிலவிய அதிகாரத்துக்குப் புறம்பான பல்வேறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளச் செய்யவும் முதலில் முயற்சித்தனர்.(41) அடுத்தவரின் சொத்தைக் கொள்ளையடிக்கும் அவர்கள், தங்கள் மேல்வருமானங்களில் இன்புற்றவர்களாக நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர். எனினும் இப்போதோ, நரியால் ஆளப்படும்போது, அவர்கள், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க இயலாதவர்களானார்கள்.(42) முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பிய அவர்கள், இனிய பேச்சுகளால் அவனை மயக்கத் {சபலப்படுத்தத்} தொடங்கினர். உண்மையில், அவனது இதயத்தைக் கவர்ந்திழுக்கும்படியான பெரிய அளவிலான கையூட்டுகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் பெரும் ஞானியான அந்த நரியானவன், அந்தச் சபலங்களுக்கு வசப்படுவதற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(43) பிறகு அவர்களில் சிலர், அவனை அழிப்பதற்காகத் தங்களுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டு, விலங்குகளின் மன்னனால் {புலியால்} மிகவும் விரும்பப்படுவதும், அவனுக்கெனவே வைக்கப்பட்டிருந்ததுமான நன்கு பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்து இரகசியமாக நரியின் வீட்டில் வைத்துவிட்டனர்.(44) இறைச்சியைத் திருடியது யார் என்பதையும், யார் இந்தச் சதியைச் செய்தது என்பதையும் நரியானவன் அறியவந்தான். அனைத்தையும் அறிந்தாலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் அதைப் பொறுத்துக் கொண்டான்.(45) அவன் அமைச்சர் பொறுப்பை ஏற்ற சமயத்தில், “ஓ ஏகாதபதி {புலியே}, நீ என் நட்பை விரும்புகிறாய். ஆனால் காரணமேதுமில்லாமல் நீ என்னில் நம்பிக்கையிழக்கலாகாது” என்ற ஒப்பந்தத்தை மன்னனிடம் {புலியிடம்} ஏற்படுத்தியிருந்தான்”.(46)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ விலங்குகளின் மன்னன் பசியை உணர்ந்து, உண்ண வந்த போது, எப்போதும் ஆயுத்தமாக வைக்கப்படும் இறைச்சி இல்லாதத்தைக் கண்டான். அப்போது மன்னன், “கள்வன் கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என்று ஆணையிட்டான்.(17) வஞ்சகம் நிறைந்த அவனது அமைச்சர்கள், அவனுக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சியை, கல்விமானும், ஞானச்செருக்கு கொண்டவனும், அவனது மற்றொரு அமைச்சனுமான நரியே திருடினான் என்று சொன்னார்கள்.(48) நரி நியாயமில்லாமல் நடந்து கொண்டதைக் கேட்ட அந்தப் புலி சீற்றத்தால் நிறைந்தவனானான். உண்மையில், மன்னன் {புலி} கோபவசப்பட்டு, தன் அமைச்சரைக் கொல்லும்படி ஆணையிட்டான்.(49) இந்த வாய்ப்பைக் கண்ட முன்னாள் அமைச்சர்கள், மன்னனிடம் வந்து, “அந்த நரியானவன், எங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறான்” என்று சொன்னார்கள்.(50)

இதைச் சொன்ன அவர்கள், மன்னனின் உணவைக் களவாடிய நரியின் செய்கையைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசினர். அவர்கள், “அவனது செயல்கள் இவ்வாறே இருக்கின்றன. அவன் என்னதான் செய்யத் துணியமாட்டான்?(51) அவன் நீர் கேள்விப்பட்டது போன்றவனல்ல. அவன் பேச்சில்தான் அறவோன், ஆனால் பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனாவான்.(53) உண்மையில் இழிந்தவன், ஆனால், அறப்போர்வை போர்த்திக் கொண்டு வேடம் போடுகிறான். அவனது நடத்தையும் உண்மையில் பாவம் நிறைந்ததாகும். தன் தேவைகளுக்குத் தொண்டாற்றிக் கொள்ளவே, அவன் உணவு காரியங்களில் துறவையும் நோன்புகளையும் பயில்கிறான்.(53) இதை நீ நம்பவில்லையெனில், ஆதாரத்தை உன் கண் முன்பே காட்டுகிறோம்” என்றனர். பிறகு அவர்கள் உடனடியாக நரியின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து இறைச்சியைக் கண்டுபிடித்தனர்.(54) நரியின் இல்லத்தில் இருந்து இறைச்சி கொண்டுவரப்பட்டதை உறுதிசெய்து கொண்டு, தன் பழைய பணியாட்கள் சொன்னதனைத்தையும் கேட்ட மன்னன் {புலி}, “நரி கொல்லப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.(55)

புலியின் வார்த்தைகளைக் கேட்ட அவனது {புலியின்} தாய், நல்லாலோசனைகளின் மூலம் தன் மகனின் நல்லறிவை விழிப்படையச் செய்வதற்காக அவ்விடத்திற்கு வந்தாள்.(56) அந்த மதிப்பிற்குரிய சீமாட்டி {புலியின் தாய்}, “ஓ! மகனே, வஞ்சகம் நிறைந்த இந்தக் குற்றச்சாட்டை நீ ஏற்கக்கூடாது. பகையாலும், பொறாமையாலும் உந்தப்பட்ட தீயோர், நேர்மையானவனின் மீது கூடக் குற்றஞ்சாட்டுவார்கள்.(57) சச்சரவை விரும்பும் பகைவர்களால், உயர்ந்த சாதனை படைக்கப்போகும் தன் எதிரியின் மேன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாது. தவங்களில் ஈடுபடும் தூய ஆன்மா கொண்டவர்கள் மேலும்கூடக் குற்றம் சுமத்தப்படும்.(58) காடுகளில் (தீங்கற்ற) செயல்களில் ஈடுபடும் தவசிக்குக் கூட, நண்பர்கள், நடுநிலையாளர்கள், எதிரிகள் என்ற மூன்று தரப்பினர் எழுகின்றனர்.(59) பிறரைத் துன்புறுத்துவோர், தூயவர்களை வெறுக்கிறார்கள். சோம்பேறிகள் சுறுசுறுப்புடையவனை வெறுக்கிறார்கள். கல்வியற்றவர்கள் கல்விமான்களை வெறுக்கிறார்கள். வறியவர்கள், வசதிபடைத்தவர்களை வெறுக்கிறார்கள். நீதியற்றவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள். அழகற்றவர்கள் அழகானவர்களை வெறுக்கிறார்கள்.(60)

கல்விமான்கள், கல்வியற்றவர்கள், பிறரைத் துன்புறுத்துவோர், வஞ்சகம் நிறைந்தோர் ஆகியோரில் பலர், பிருஹஸ்பதியின் நற்பண்புகளையும், நுண்ணறிவையும் கொண்ட அப்பாவிகளின் மேல் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்கள்.(61) நீ இல்லாதபோது, உன் வீட்டில் இருந்து உண்மையில் இறைச்சி களவாடப்பட்டதென்றால், நரியானவன் அவனுக்குக் கொடுக்கும் எந்த இறைச்சியையும் மறுப்பவன் என்பதை நினைவுகூர்வாயாக. (கள்வனைக் கண்டுபிடிப்பதில்) இந்த உண்மையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(62) தீயவர்கள் சில வேளைகளில் நல்லவர்களைப் போலவும், நல்லவர்கள் சிலவேளைகளில் தீயவர்களைப் போலவும் தோன்றுவார்கள். பல்வேறு வகையான தன்மைகள் உயிரினங்களில் காணப்படுகின்றன. எனவே, எது எதுவாக இருக்கிறது என்று ஆராயும் தேவை இருக்கிறது.(63) ஆகாயமானது, ஒரு பாத்திரத்தின் கடினமான அடிப்பாகத்தைப் போலத் தெரிகிறது. விட்டில்பூச்சியானது, உண்மையான நெருப்பின் கீற்று போலவே தெரிகிறது. எனினும், உண்மையில், ஆகாயத்திற்கு எந்த அடித்தளமும் கிடையாது, விட்டில் பூச்சியிலும் எந்த நெருப்பும் இல்லை.(64) எனவே, கண்ணுக்குப் புலப்படும் இத்தகு காரியங்களில் கூராய்வுக்கான தேவை இருக்கிறது. கூராய்வுக்குப் பிறகே எதையும் உறுதி செய்து கொள்பவனுக்கு, பின்னால் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமேற்படாது.(65)

ஓ! மகனே, ஒரு தலைவனுக்கு ஒரு பணியாளைக் கொல்வது ஒருபோதும் கடினமானதில்லை. எனினும், அதிகாரம் படைத்தவர்களிடம் உள்ள மன்னிக்கும் தன்மையானது {பொறுமையானது}, எப்போதும் புகழத்தக்கதும், புகழை உண்டாக்கத்தக்க ஒன்றாகவும் இருக்கிறது.(66) நீ அந்த நரியானவனை முதல் அமைச்சராக்கினாய். அதன் விளைவாக, அக்கம்பக்கத்துத் தலைவர்களுக்கு மத்தியில் அவன் பெரும்புகழை ஈட்டியிருக்கிறான். ஒரு நல்ல அமைச்சரை அடைவது எளிதன்று. அந்த நரி உனது நலன்விரும்பியாவான். எனவே, அவன் ஆதரிக்கப்படுபவனாக இருக்க வேண்டும்.(67) உண்மையில் அப்பாவியான ஒருவன் மீது எதிரிகள் பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும்போது மன்னன் அவனைக் குற்றவாளியாகக் கருதினால், அந்தத் தீர்மானத்திற்கு அவனை வழிநடத்திச் சென்ற அந்தத் தீய அமைச்சர்களின் விளைவால், அவன் விரைவில் அழிவையே அடைவான்” என்றாள் {புலியின் தாய்}.(68)

புலியின் தாயார் இவ்வாறு பேசிய பிறகு, நரியைச் சார்ந்த ஒரு நல்ல ஒற்றன், பகைவர்களின் ஒன்றுபட்டக்குழுவில் இருந்து முன்வந்து, பொய்க் குற்றச்சாட்டு அமைக்கப்பட்ட விதம் குறித்த அனைத்தையும் கண்டுபிடித்துச் சொன்னான்.(69) நரியின் குற்றமின்மை வெளிப்படையானது, அவன் {நரி} தன் தலைவனால் குற்றமற்றவனாக அறிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டான். விலங்குகளின் மன்னன் {புலி} மீண்டும் மீண்டும் அவனை {நரியை} அன்புடன் அணைத்துக் கொண்டான்.(70) எனினும் கொள்கையறிவியலை நன்கறிந்த நரியானவன், துயரால் எரிந்து, விலங்குகளின் மன்னனை வணங்கி, பிராய நோன்பை நோற்று தன் உயிரை விடுவதற்கு அவனது {புலியின்} அனுமதியை வேண்டினான்.(71) புலியானவன், அன்பால் விரிந்த தன் கண்களை அறவோனான அந்த நரியின் மீது செலுத்தி, மரியாதையுடன் கூடிய வழிபாட்டால் அவனைக் கௌரவித்து, அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் இருந்து அவனைத் தடுக்க முயன்றான்.(72)

தன் தலைவன் கலங்குவதைக் கண்ட நரியானவன், அவனை வணங்கி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன்,(73) “உன்னால் முதலில் கௌரவிக்கப்பட்டேன். பிறகு உன்னால் அவமதிக்கவும் பட்டேன். நீ என்னிடம் நடந்து கொண்ட விதம், என்னை உன் எதிரியாக்கியிருக்கிறது. எனவே, நான் இனியும் உன்னோடு வசிப்பது முறையாகாது.(74) பணியில் இருந்து விரட்டப்பட்டோ, தங்களுக்குரிய கௌரவங்களில் இருந்து படியிறக்கப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, (தங்கள் தலைவனின் கோபத்தின்மூலம்) தங்கள் எதிரிகளால் அழிவையடைந்தோ,(75) துன்பத்தையேற்படுத்தும் மனநிலையிலோ, சீற்றமடைந்தோ, அச்சமடைந்தோ, (தங்கள் தலைவர்களைப் பொறுத்தமட்டில்) வஞ்சிக்கப்பட்டோ, பறிமுதல் செய்யப்பட்டோ, பெரும் சாதனைகளைச் செய்யும் செருக்கும், விருப்பமும் இருந்தும், செல்வமீட்டும் வழிமுறைகள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டோ,(76) தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கின் விளைவால் சீற்றமடைந்தோ, துயரில் எரிந்தோ, நிறைவில்லாமல் இருக்கும் பணியாட்கள், தங்கள் தலைவர்களுக்குப் பேரிடர் ஏற்படும் காலத்திற்காக எப்போதும் காத்திருப்பார்கள். வஞ்சிக்கப்பட்ட அவர்கள் தங்கள் தலைவர்களை விட்டு, எதிரிகளின் கைகளில் உள்ள திறன்மிக்கக் கருவிகளாகிறார்கள்.(77)

நான் உன்னால் அவமதிக்கப்படு என் இடத்தில் இருந்து இறக்கப்பட்டேன். நீ மீண்டும் என்னை எவ்வாறு நம்புவாய்? (என் தரப்பில்) நான் எவ்வாறு உன்னுடன் தொடர்ந்து வசிக்க முடியும்?(78) தகுந்தவனாக நினைத்தே, ஆய்வு செய்து உன் அலுவலில் நீ என்னை நியமித்தாய். (நமக்கிடையில்) முன்பு செய்யப்பட்ட உடன்படிக்கையை மீறி நீ என்னை அவமதித்திருக்கிறாய்.(79) ஒருவன் தன் நிலைத்திறனைப் பராமரிக்க விரும்பினால், முன்பு பிறரின் முன்னிலையில் வைத்து குறிப்பிட்டவனை அறநடத்தை கொண்டவன் என்று பேசிவிட்டு, பிறகு அவனையே தீயோன் எனச் சொல்லக்கூடாது.(80) உன்னால் அவமதிக்கப்பட்ட நான், இனியும் உன்னில் நம்பிக்கை கொள்ள முடியாது. என் தரப்பில், என்னிடம் நீ நம்பிக்கை இழப்பதைக் கண்டால், நான் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்தவனாவேன்.(81) நீயும் ஐயங்கொண்டு, நானும் அஞ்சி இருக்கும் நிலையானது, நமக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நமது எதிரிகளுக்கு உதவியாக அமையும். அதன்விளைவாக உனது குடிமக்களும், கவலையடைந்து, நிறைவில்லாதவர்களாக ஆவார்கள். காரியங்களில் அத்தகு நிலையானது பல குற்றங்களைக் கொண்டதாகும்.(82)

முதலில் கௌரவமும், பிறகு அவமதிப்பும் எங்கே இருக்கிறதோ, அந்நிலையை ஞானிகள் மகிழ்ச்சியானதாகக் கருதுவதில்லை.(83) ஒற்றுமையாக இருக்கும் இருவரைப் பிரிக்க முடியாததைப் போலவே, பிரிந்த இருவரைச் சேர்ப்பதும் மிகக் கடினமானதாகும். பிரிவுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்தவர்கள், ஒருவரையொருவர் மீண்டும் அணுகும்போது, அவர்களது அணுகுமுறை அன்புடையதாக இருக்க முடியாது.(84) தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தை மட்டுமே எந்தப் பணியாளும் கொள்வதில்லை. தன் தலைவனுக்கும், தனக்கும் நன்மை செய்யும் நோக்கில் இருந்தே தொண்டு பிறக்கிறது. அனைத்துச் செயல்பாடுகளும் தன்னல நோக்கங்களிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. தன்னலமற்ற செயல்களோ, நோக்கங்களோ மிக அரிதானவையாகும்.(85) அமைதியற்ற இதயங்களைக் கொண்ட மன்னர்கள், மனிதர்களின் உண்மை அறிவை அடையமாட்டார்கள். திறன் கொண்டவனாகவும், அச்சமற்றவனாகவும் நூற்றிலொருவனே காணப்படுவான்.(86) மனிதர்களின் செழிப்பும், அவர்களது வீழ்ச்சியும் தானே நேர்கின்றன. செழிப்பு, வறுமை, பெருமை ஆகிய அனைத்தும் புத்திகுறைவில் இருந்தே உண்டாகின்றன” என்றான் {அந்த நரியானவன்}”.(87)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவை நிரம்பிய இந்த இணக்கமான சொற்களைப் பேசி, மன்னனை நிறைவு செய்த நரியானது காட்டுக்கு ஓயச் சென்றது.(88) விலங்குகளின் மன்னனுடைய {புலியினுடைய} கெஞ்சல்களைக் கேளாத அந்தப் புத்திசாலி நரியானது, பிராயத்தில் அமர்ந்து, தன் உடலைக் கைவிட்டு, (பூமியில் தான் செய்த நற்செயல்களுக்கான வெகுமதியாக) சொர்க்கத்திற்குச் சென்றது” {என்றார் பீஷ்மர்}.(89)

சோம்பேறி ஒட்டகம்! – சாந்திபர்வம் பகுதி – 112- சோம்பலால் உண்டாகும் தீங்கைக் குறித்து ஓர் ஒட்டகத்தின் கதை மூலம் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மன்னனால் எச்செயல்கள் செய்யப்பட வேண்டும்? எச்செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவான்? ஓ கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே, இஃதை எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடன்}, “நீ அறிய விரும்புவதை நான் உனக்குச் சொல்வேன். ஒரு மன்னனால் இவ்வுலகில் செய்யப்பட வேண்டியது மற்றும் மன்னன் மகிழ்ச்சியடையக்கூடிய செயல்கள் என்னென்ன என்பது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உண்மையைக் கேட்பாயாக.(2) ஒரு மன்னன், நாம் கேள்விப்பட்டிருக்கும் ஓர் ஒட்டகத்தின் உயர்ந்த வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா அந்த வரலாற்றைக் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா, இப்போது அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(3) கிருத யுகத்தில், தன் முந்தைய பிறவியின் செயல்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுள்ள ஒரு பெரிய ஒட்டகம் இருந்தது. கடும் நோன்புகளை நோற்றுவந்த அவ்வொட்டகம், காட்டில் கடுந்தவத்தைச் செய்து வந்தது.(4) அதனுடைய தவத்தின் முடிவில் பலமிக்கப் பிரம்மன் அதனிடம் நிறைவு கொண்டான். எனவே, பெரும்பாட்டன் அதற்கு {அந்த ஒட்டகத்திற்கு} வரங்களை அளிக்க விரும்பினான்.(5)

ஒட்டகம் {பிரம்மனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பலமிக்கத் தலைவா, நூறு யோஜனைகள் தொலைவில் உள்ள எந்த உணவையும் பற்றும் வகையில், உமது அருளால் என் கழுத்து நீண்டதாகட்டும்” என்று கேட்டது.(6)

வரங்களை அளிக்கும் அந்த உயர் ஆன்மா {பிரம்மன்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு அந்த ஒட்டகம் தன் காட்டிற்குச் சென்றது.(7)

வரம்பெற்ற நாள்தொடங்கி அந்த மூட விலங்கு சோம்பேறியானது. உண்மையில், விதியால் மயக்கமடைந்த அந்த இழிந்த விலங்கு, அந்த நாள் முதலே மேய்ச்சலுக்குச் செல்லவில்லை.(8) ஒரு நாள், அந்த விலங்கு நூறு யோஜனைகள் கொண்ட தன் கழுத்தை நீட்டி, எந்த முயற்சியுமின்றித் தன் உணவை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெரும்புயலொன்று எழுந்தது.(9) அந்த ஒட்டகம் தன் தலையையும், தன் கழுத்தின் ஒரு பகுதியையும் ஒரு மலைக்குகையில் மறைத்துக் கொண்டு, புயல் ஓயும்வரை காத்திருக்கத் தீர்மானித்தது.(10)

அப்போது ஒரு நரியானது, தன் மனைவியுடன் சேர்ந்து மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே, பெரும் சிரமங்களுக்குப் பிறகு அதே குகையை நோக்கிச் சென்று உறைவிடத்திற்காக அதற்குள் விரைவாக நுழைந்தது.(11) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இறைச்சியை உண்டு வாழ்ந்தது என்பதாலும், களைப்புடன் இருந்ததாலும், அந்த நரியானது ஒட்டகத்தின் கழுத்தைக் கண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்ணத் தொடங்கியது. தன் கழுத்து உண்ணப்படுவதைக் கண்ட ஒட்டகம், அதைக் குறுக்கி {சுருக்கிக்} கொள்ள முயற்சித்தது.(12) ஆனால், அது தன் கழுத்தை மேலும் கீழும் அசைத்த போது, நரியும், அதன் மனைவியும், அதைப் பிடித்திருக்கும் தங்கள் பிடியை விடாமல் தொடர்ந்து உண்டன.(14) குறுகிய காலத்திற்குள்ளாகவே அந்த ஒட்டகம் இறந்தது. இவ்வாறு அந்த ஒட்டக்கதைக்கொன்று தின்ற நரியானது, புயல் அடங்கி, மழை நின்றதும் அந்தக் குகையைவிட்டு வெளியே வந்தது.(15) இவ்வாறே அந்த மூட ஒட்டகம் மரணமடைந்தது.

செயலின்மையின் தொடர்ச்சியாக எவ்வளவு பெரிய தீமை விளைந்தது என்பதைப் பார்.(16) உன்னைப் பொறுத்தவரையில் நீ சோம்பலைத் தவிர்த்து, உன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இவ்வுலகில் அனைத்தையும் முறையான வழிமுறைகளில் செய்வாயாக. வெற்றியானது புத்தியைச் சார்ந்திருக்கிறது என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(17) நுண்ணறிவின் துணையால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் அனைத்தும் முதன்மையானவையாகவும், கரங்களின் உதவியால் அடையப்பட்டவை நடுநிலையாகவும், கால்களின் உதவியால் அடையப்பட்டவை தாழ்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.(18) தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டு, புலனடக்கத்துடன் உள்ள மன்னன், தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்கிறான். ஆர்வமிக்க மனிதர்கள், நுண்ணறிவின் உதவியுடன் வெற்றிகளை அடைவார்கள் என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(19)

ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, பொதுவாக அறியப்படாத விவேகமிக்க ஆலோசனைகளைக் கேட்பவர்களும், கூட்டாளிகளைக் கொண்டவர்களும், முறையான கூராய்வுக்குப் பிறகு செயல்படுபவர்களும், இவ்வுலகில் தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள்.(20) இத்தகு துணைகளைப் பெற்ற ஒருவன், மொத்த பூமியையும் ஆள்வதில் வெல்கிறான்.(21) ஓ! இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனே, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை அறிந்த பழங்காலத்து ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது. சாத்திரங்களை நோக்கும் பார்வை கொண்ட நானும், அதையே உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, உன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, இவ்வுலகில் செயல்படுவாயாக” என்றார் {பீஷ்மர்}.(22)

பணிவு! – சாந்திபர்வம் பகுதி – 113-பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் பலவீனமான மன்னன், பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதிப்புமிக்க உடைமையான ஒரு நாட்டை அடைந்தும், வழக்கமான துணைகள் ஏதுமில்லாத ஒரு மன்னனானவன், ஒரு பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், ஆறுகளின் தலைவனும், தேவர்களுடைய எதிரிகளின் புகலிடமுமான அழிவில்லாத பெருங்கடலானவன், தன் மனத்தில் எழுந்த இந்த ஐயத்தைத் தீர்க்குமாறு ஆறுகள் அனைத்திடமும் கேட்டான்.(3)

அந்தப் பெருங்கடல், “ஆறுகளே, வேருடனும், கிளைகளுடனும் பிடுங்கப்பட்ட பெரும் தண்டுகளைக் கொண்ட மரங்கள் நீரோட்டம் நிறைந்த உங்கள் அனைவராலும் அடித்துக் கொண்டு வரப்படுவதைக் காண்கிறேன். எனினும் நீங்கள் ஒருபோதும் பிரம்பை[1] கொண்டு வருவதில்லை.(4) உங்கள் கரைகளில் வளரும் பிரம்புகள் {நாணல்கள்} அற்பமான தண்டுகளைக் கொண்டவையாகவும், பலமற்றவையாகவும் இருக்கின்றன. இகழ்வால் நீங்கள் அவற்றைப் பிடுங்க மறுக்கிறீர்களா? அல்லது அவற்றால் உங்களுக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?(5) உங்கள் அனைவரையும் ஈர்க்கும் நோக்கம் என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், கரைகளில் வளரும் பிரம்புகள் {நாணல்கள்} உங்களில் ஒருவராலும் ஏன் வேரோடு பிடுங்கப்படுவதில்லை?” என்று கேட்டான்{பெருங்கடல்}}.(6)இவ்வாறு கேட்கப்பட்டதும், கங்கை ஆறானவள், ஆறுகள் அனைத்தின் தலைவனான அந்தப் பெருங்கடலிடம், முக்கியத்துவம் வாய்ந்தவையும், அறிவு நிறைந்தவையும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுபவையுமான வார்த்தைகளில் பதிலளித்தாள்.(7) கங்கை, “மரங்கள் தனியாக, ஒரே இடத்தில், தாங்கள் இருக்கும் இடத்தை விட்டுச் சற்றும் நகராமல் {விறைப்பாக} நிற்கின்றன. எங்கள் நீரோட்டத்தைத் தடுக்கும் அவற்றுடைய நிலைப்பாட்டின் விளைவாலேயே, அவை தாங்கள் வளரும் இடத்தைவிட்டு அகலும் கடன்பட்டவையாக இருக்கின்றன. எனினும், பிரம்புகள் {நாணல்கள்} வேறுவகையில் செயல்படுகின்றன.(8) முன்னேறிவரும் நீரோட்டத்தைக் காணும் பிரம்பானது {நாணலானது}, அதற்கேற்ப வளைந்து கொடுக்கிறது. மற்றவை இவ்வழியில் செயல்படுவதில்லை. நீரோட்டம் கடந்து சென்றதும், பிரம்பானது {நாணலானது} தன் பழையை நிலையையே ஏற்கிறது.(9) பிரம்பானது {நாணலானது}, காலம் மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் அறங்களை அறிந்திருக்கிறது. அது கட்டுப்படுவதாகவும், கீழ்ப்படிவதாகவும் இருக்கிறது. விறைப்பாக இல்லாமல் அது வளைந்து கொடுக்கிறது. இந்தக் காரணங்களாலேயே அஃது எங்களுடன் அடித்து வரப்படாமல், தான் வளரும் இடத்திலேயே நிற்கிறது.(10) காற்று மற்றும் நீரின் சக்திக்கு முன்பு வளைந்து, எழும் செடிகள், மரங்கள் மற்றும் கொடிகள் ஆகியன ஒருபோதும் (வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்படும்) ஏமாற்றத்தை அடைவதில்லை” என்றாள் {கங்கை}”.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வலிமையில் மிகுந்தவனும், சிறைபிடிக்கவோ, கொல்லவோ வல்லவனுமான ஒரு பலமிக்க எதிரிக்கு வளைந்து கொடுக்காத ஒருவன் விரைவில் அழிவை அடைவான்[2].(12) தன்னுடைய மற்றும் தன் எதிரியுடைய பலம் மற்றும் பலவீனம், வலிமை மற்றும் சக்தி ஆகியவற்றை முழுமையாக உறுதி செய்து கொண்ட பிறகு செயல்படும் ஞானம் கொண்ட மனிதன், ஒருபோதும் ஏமாற்றத்தை அடைவதில்லை.(13) எனவே, ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், தன் எதிரியைத் தன்னைவிடப் பலவானாகக் காணும்போது, இந்தப் பிரம்பின் {நாணலின்} நடத்தையையே பின்பற்ற வேண்டும். அதுவே ஞானத்தின் அறிகுறியாகும்” {என்றார் பீஷ்மர்}.(14)

வசையும், அவதூறும்! – சாந்திபர்வம் பகுதி – 114-சபைகளில் அற்பர்களால் வசைமாரி பொழியப்படும்போதும், அவதூறு செய்யப்படும் போதும், அதைப் பொறுத்துக் கொள்ளும் நல்லோன் அடையும் பயனைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இறுமாப்பில் பெருகியவனும், அறியாமை கொண்டவனுமான ஒரு மனிதனால், சபைகளுக்கு மத்தியில் வைத்து கடுஞ்சொற்களால் தாக்கப்படும்போது, அடக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கல்விமான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் சிறு மதி கொண்டோரின் வசைமொழிகளை, நல்லான்மா கொண்ட ஒருவன் எவ்வாறு பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து (சாத்திரங்களில்) எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கேட்பாயாக.(2) ஒரு மனிதன் மற்றொருவனால் நிந்திக்கப்படும்போது, கோபவசப்படாமல் இருந்தால், அவன் நிந்திப்பவனின் {வசைபாடுபவனின்} நற்செயல்கள் அனைத்தையும் (அவை அனைத்தின் தகுதியையும் {புண்ணியத்தையும்}) எடுத்துக் கொள்வான். அத்தகு வழக்கில் {அந்த வசையைப்} பொறுமையாகத் தாங்கிக் கொள்பவன், தன் தீச்செயல்களுடைய குற்றங்கள் அனைத்தையும் {அவற்றால் விளையும் பாவங்கள் அனைத்தையும்} கோபவசப்பட்டு நிந்தனையில் ஈடுபடும் {வசைமாரி பொழியும்} மனிதனுக்குக் கொடுக்கிறான்.(3) நுண்ணறிவுமிக்க ஒரு மனிதன், பொருந்தாக் கூச்சலிடும் அற்பமான ஒரு தித்திபத்துக்கு {நீர்க்கோழிக்கு} ஒப்பாக வசைமொழி பேசும் ஒருவனை அலட்சியம் செய்ய வேண்டும். வெறுப்பின் வசப்படுபவன் வீணாக வாழ்கிறான் எனச் சொல்லப்படுகிறது. “அத்தகு மரியாதைக்குரிய மனிதனை, அத்தகு மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வைத்து, இத்தகு வார்த்தைகளைச் சொல்லி நான் பேசினேன்” என்று ஒரு மூடன் சொல்வதையும், அந்தத் தீச்செயலைக் குறித்து அவன் தற்பெருமை பேசிக் கொள்வதையும் நாம் அடிக்கடி கேட்கிறோம்(4,5). மேலும் அவன், “என்னால் நிந்திக்கப்பட்ட அந்த மனிதன், செத்தவனைப் போல வெட்கத்துடன் அமைதியாக இருந்தான்” என்றும் சேர்த்துச் சொல்வான். இவ்வாறே, எவனும் பீற்றிக் கொள்ளக்கூடாத ஒரு செயலைக் குறித்துச் சொல்லி ஒரு வெட்கங்கெட்ட மனிதன் தற்புகழ்ச்சி செய்து கொள்வான்.(6) மனிதர்களில் இழிந்தவனான இத்தகையவன் கவனமாக அலட்சியம் செய்யப்பட வேண்டும். சிறு மதி கொண்ட இத்தகையவன் சொல்லக்கூடிய அனைத்தையும் ஞானம் கொண்ட ஒரு மனிதன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(7)

ஒரு மதிக்கத்தகாத {மதிப்பில்லாத} நபரால் செய்யப்படும், தற்புகழ்ச்சியாலோ, பழிச் சொல்லாலோ என்ன செய்து விட முடியும்? கானகங்களில் பயனில்லாமல் கரையும் ஒரு காகத்தைப் போன்றவனே அவன்.(8) தங்கள் வார்த்தைகளால் மட்டுமே பிறரை குற்றஞ்சாட்டுபவர்கள், தகுந்த வழிமுறைகளின் மூலம் அந்தக் குற்றச்சாட்டுகளை நிறுவினால், அவர்களுடைய வார்த்தைகள் சற்றே {சிறிது} மதிக்கப்படலாம். எனினும் உண்மையென்னவெனில், யாரிடம் சச்சரவு செய்கிறார்களோ அவர்களுக்கு மரணத்தை இருப்புக்கு அழைக்கும் மூடர்களுடைய வார்த்தைகளின் அளவுக்கே அவர்களுடைய வார்த்தைகள் திறன் கொண்டவை[1].(9) இத்தகு நடத்தை {செயல்} மற்றும் வார்த்தைகளில் ஈடுபடும் மனிதன், தன் தகாவழிப் பிறப்பையே அறிவித்துக் கொள்கிறான். உண்மையில் அவன், எப்போதும் மறைக்கப்பட வேண்டிய உடலின் பகுதியைக் காட்டிக் கொண்டு ஆடும் ஒரு மயிலைப் போன்றவனாவான்[2].(10) தூய நடத்தை கொண்ட ஒருவன், எதையும் சொல்லவோ, செய்யவோ ஐயுணர்வு கொள்ளாதவனும், பாவம் நிறைந்தவனுமான இழிந்தவனிடம் ஒருபோதும் பேசக்கூடாது.(11)ஒருவனுடைய பார்வை தன் மேல் இருக்கும்போது, அவனுடைய தகுதிகளைப் பேசுபவனும், அவனுடைய பார்வை தன்னிடம் இருந்து விலகும்போது அவனைக் குறித்து இழிவாகப் பேசுபவனுமான மனிதன், உண்மையில் ஒரு நாயைப் போன்றவனாவான். அத்தகு மனிதன் சொர்க்கத்தில் தனக்கான பகுதிகள் அனைத்தையும், தான் கொண்ட எந்த அறிவு மற்றும் பண்பின் பலன்கள் அனைத்தையும் மொத்தமாக இழக்கிறான்.(12) ஒருவனுடைய பார்வை தன் மேல் இல்லாத போது, அவனைக் குறித்து இழிவாகப் பேசும் மனிதன், நெருப்பிலிட்ட தன் ஆகுதிகள் {காணிக்கைகள்} அனைத்தின் கனிகளையும், நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு அவன் அளித்திருக்கும் கொடைகளின் பலன்களையும் தாமதமில்லாமல் இழக்கிறான்.(13) எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், நேர்மையான மனிதர்கள் அனைவராலும் தவிர்க்கப்படத் தகுந்த இத்தகு பாவம் நிறைந்த இதயம் கொண்டவனை, நாயின் இறைச்சியைத் தவிர்ப்பதுபோலத் தயங்காமல் தவிர்க்க வேண்டும்.(14) ஓர் உயர் ஆன்ம மனிதனின் குற்றங்களை அறிவிக்கும் தீய ஆன்மா கொண்ட இழிந்தவன், (அச்செயலின் மூலம்) பாம்பானது (மற்றவர்கள் தலையிடும்போது) தன் தலையை வெளிக்காட்டுவதைப் போலத் தன் தீய இயல்பையே வெளிப்படுத்துகிறான்.(15) தனக்கு இனிமையான தொழிலிலேயே எப்போதும் ஈடுபடும் இத்தகு புறங்கூறுவோரிடம் எதிரிவினையாற்ற முனையும் உணர்வுள்ள மனிதன், சாம்பற்குவியலில் மூழ்கிய மூடக் கழுதையைப் போலத் துன்பம் நிறைந்த நிலையையே அடைகிறான்.(16)

பிறரின் குற்றங்களைப் பேசுவதில் எப்போதும் ஈடுபடும் மனிதனானவன், வெஞ்சினமிக்கதோர் ஓநாய், அல்லது பித்துப் பிடித்துப் பிளிறும் மதங்கொண்ட ஒரு யானை, அல்லது மூர்க்கமான ஒரு நாயைப் போலத் தவிர்க்கப்பட வேண்டியவனாவான்.(17) மூடப் பாதையில் செல்பவனும், நலம்தரும் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்கம் ஆகியவற்றில் இருந்து வீழ்ந்துவிட்டவனும், பிறருக்குத் தீங்கு செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவனும், தன் செழிப்பைக் குறித்துக் கவலையில்லாதவனுமான அந்த இழிந்த பாவிக்கு ஐயோ {அந்த இழிந்த பாவியை வெறுக்க வேண்டும்}.(18) இத்தகு இழிந்தோரால் அவமதிக்கப்படும்போது, அவர்களிடம் வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு நேர்மையான மனிதன் விரும்பினால், “துன்பத்தை அனுபவிக்காதே” என்ற இவ்வார்த்தைகளால் அவனுக்கு அறிவுரை கூற வேண்டும். ஓர் உயர்ந்த மனிதனுக்கும், இழிந்த மனிதனுக்கும் இடையிலான வார்த்தை மோதலை அமைதியான மனம் கொண்டோர் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(19) அவதூறு செய்யும் இழிந்தவன், சினங்கொள்ளும்போது, தன் உள்ளங்கையால் அடுத்தவனை அடிக்கவோ, புழுதி, அல்லது உமி வாரி இறைக்கவோ, பற்களைக் காட்டி, அல்லது நறநறவெனக் கடித்து அச்சுறுத்தவோ செய்வான். இவையனைத்தும் நன்கறியப்பட்டதே.(20) தீய ஆன்மா கொண்ட இழிந்தோர் சபைகளில் கூறும் நிந்தனைகளையும், அவதூறுகளையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன், அல்லது இந்த அறிவுரைகளை அடிக்கடி படிக்கும் மனிதன், பேச்சால் நேரும் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(21)

பணியாட்கள்! – சாந்திபர்வம் பகுதி – 115-மன்னனால் பணியமற்றத்தப்படும் மனிதர்களின் தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானத்தைக் கொண்டவரே, என்னைக் குழப்பத்தில் பெரும் ஐயம் ஒன்று எனக்கிருக்கிறது. ஓ! மன்னா, நீர் அக்குறை தீர்க்க வேண்டும். நீர் நமது குடும்பத்தை முன்னேற்றமடையச் செய்பவராவீர்.(1) தீய நடத்தையும், தீய ஆன்மாவும் கொண்ட இழிந்தவர்கள் பேசும் அவதூறுகளைக் குறித்து எங்களிடம் உரையாடினீர். எனினும், நாம் உம்மை மேலும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.(2) நாட்டுக்கு எது நன்மையோ, அரச குலத்திற்கு எது மகிழ்ச்சியை உண்டாக்குமோ, எதிர்காலத்திலும், நிகழ்காலத்திலும் எது நன்மையையும் முன்னேற்றத்தையும் உண்டாக்குமோ,(3) உணவு, பானம் மற்றும் இந்த உடல் தொடர்புடையவற்றில் எது நன்மையோ, அதைக்குறித்து நீர் உரையாட வேண்டுமென நான் விரும்புகிறேன்.(4) அரியணையில் அமர்த்தப்பட்டு, நண்பர்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் சூழ அதில் தொடர்ந்திருக்கும் {தொடர்ந்து அமர்ந்திருக்கும்} மன்னன், தன் மக்களை எவ்வாறு நிறைவுகொள்ளச் செய்ய வேண்டும்?(5)

எந்த மன்னன், தன் பற்று மற்றும் சார்புநிலை ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டுத் தீய கூட்டாளிகளுடன் அர்ப்பணிப்புள்ளவனாக மாறுவானோ, எவன், தன் உணர்வுகளுக்கு அடிமையாவதன் விளைவால் தீய மனிதர்களிடம் செல்வானோ, அவன்,(6) நல்ல குடி மற்றும் குருதியில் பிறந்த பணியாட்கள் அனைவரும் தன்னிடம் வெறுப்படைந்திருப்பதைக் காண்கிறான். அத்தகைய மன்னன், நல்ல பணியாட்களின் எண்ணிக்கை பலத்தால் அடையத்தக்க எந்த நோக்கத்தின் நிறைவையும் அடைய மாட்டான்.(7) நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கு இணையாவரான உமக்கு, உறுதிசெய்து கொள்ளக் கடினமான மன்னர்களின் கடமைகளைக் குறித்து என்னிடம் உரையாடி, என் ஐயங்களைக் களைவதே தகும். (8) ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, நமது குலத்திற்கு நன்மை செய்வதில் நீர் எப்போதும் ஈடுபட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே, ஆட்சித்திறத்தின் கடமைகள் குறித்து நீர் எப்போதும் எங்களிடம் உரையாடுகிறீர். பெரும் ஞானம் கொண்ட க்ஷத்திரியும் (விதுரரும்), மதிப்புமிக்க அறிவுரைகளை எப்போதும் எங்களுக்கு வழங்கி வருகிறார்.(9) நமது குலத்திற்கும், நாட்டுக்கும் நன்மையை உண்டாக்கவல்ல அறிவுரைகளை உம்மிடமிருந்து கேட்டால், இறவாநிலை தரும் அமுதத்தைப் பருகி நிறைவடைந்திருக்கும் மனிதனைப் போல என்னால் என் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்த முடியும். (10) பணியாட்களில் எந்த வர்க்கத்தினர் இழிந்தவர்களாகவும், எவர்கள் அனைத்து சிறப்புகளைக் கொண்டவர்களாகவும் கருதப்பட வேண்டும்? எந்த வர்க்கத்துப் பணியாட்கள், அல்லது எவ்வகைப் பிறப்புக் கொண்ட பணியாட்களின் உதவியுடன், ஆட்சிக் கடமைகளை வெளிப்படுத்துவது பரிந்துரைக்கப்படலாம்?(11) மன்னன் பணியாட்கள் இல்லாமல் தனியாகச் செயல்படுவதைத் தேர்ந்தெடுத்தால், அவனால் ஒருபோதும் தனது மக்களைப் பாதுகாப்பதில் வெல்ல முடியாது. எனினும், உயர்குடி பிறப்பைக் கொண்ட மனிதர்கள் அனைவரும், அரசுரிமையை அடையும் ஆசையுடன் இருக்கின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, ஒரு மன்னனால் தனியாகத் தன் நாட்டை ஆள முடியாது. அவனுக்கு உதவி செய்யப் பணியாட்கள் இல்லாமல், அவனால் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றுவதில் வெல்ல முடியாது. எந்த நோக்கத்தையாவது அடைவதில் அவன் வென்றாலும், அவனால் (தனியாக) அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.(13) எந்த மன்னனின் பணியாட்கள் அனைவரும், அறிவும், ஞானமும் கொண்டவர்களாக இருப்பார்களோ, தங்கள் தலைவனின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்களோ, உயர்குடி பிறப்பையும், அமைதியான மனநிலையும் கொண்டவர்களாக இருப்பார்களோ, அவனே {அந்த மன்னனே} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(14) எந்த மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் நற்குடி பிறப்பு கொண்டவர்களாக, (கையூட்டுகள் மற்றும் பிற ஆதிக்கங்களின் மூலம்) அவனிடம் இருந்து விலகிச் செல்ல முடியாதவர்களாக, எப்போதும் அவனுடனே வாழ்பவர்களாக, தங்கள் தலைவனுக்கு அறிவுரை வழங்குவதில் ஈடுபடுபவர்களாக, ஞானம், நற்பண்பு ஆகியவற்றையும், பொருள்களின் உறவுகள் குறித்த அறிவையும் கொண்டவர்களாக,(15) எதிர்கால மற்றும் எதிர்பாரா நிகழ்வுகளைக் குறித்துச் சொல்பவர்களாக, காலத்தின் தன்மைகளைக் குறித்த நல்லறிவு கொண்டவர்களாக, கடந்து போனவற்றின் நிமித்தம் ஒருபோதும் வருந்தாதவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(16) எந்த மன்னனின் பணியாட்கள், அவனுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்பவர்களாக, அவனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவர்களாக, தங்கள் தலைவனின் நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் கவனம் கொண்டவர்களாக, பற்றுறுதிமிக்கவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(17)

எந்த மன்னனின் குடிமக்கள் எப்போதும் உற்சாகம் நிறைந்தவர்களாக, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, எப்போதும் அறவழியில் நடப்பவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(18) எவனுடைய வருமானத்தின் {வரவின்} மூலங்கள் அனைத்தும், நிறைவு கொண்டவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், நிதியைப் பெருகச் செய்யும் வழிமுறைகளை நன்கறிந்தவர்களுமான மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறதோ, அவனே {அந்த மன்னனே} மன்னர்களில் சிறந்தவனாவான்.(19) எந்த மன்னனுடைய பண்டகசாலைகளும், தானியக்களஞ்சியங்களும், கையூட்டு பெறாதவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், அர்ப்பணிப்புள்ளவர்களும், ஆசையற்றவர்களும், திரள {பெருகச்} செய்வதில் முனைப்புள்ளவர்களுமான பணியாட்களின் மேற்பார்வையில் நடத்தப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} செழிப்பையும், பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்} அடைவதில் வெல்கிறான்.(20) எந்த மன்னனின் நகரத்தில் நீதியானது, நன்கறியப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் உண்மையற்ற வழக்கைக் கொண்ட வாதி அல்லது பிரதிவாதிக்கு அபராதம் விதிக்கும் வகையிலும், குற்றவியல் வழக்குகளில் சங்கர் மற்றும் லிகிதரின்[1] ஒழங்கிலும் முறையாக நிர்வகிக்கப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(21) எந்த மன்னன் தன் குடிமக்களிடம் அன்பால் தன்னைப் பிணைத்துக் கொள்கிறானோ, மன்னர்களின் கடமைகளைஅறிந்தவனாக இருக்கிறானோ, ஆறு தொகுப்புகளை {ஆறு முக்கிய நோக்கங்களைக்} கவனிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(22)

வேங்கையான ஞமலி! – சாந்திபர்வம் பகுதி – 116-அச்சத்தில் நடுங்கிய ஒரு நாயானது, ஒரு முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கால வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லோருக்கும் ஞானிகளுக்கும் மத்தியில் அந்த வரலாறானது நல்ல முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.(1) அவ்வரலாறு தற்போதைய தலைப்புக்கு {உரையாடலுக்குத்} தொடர்புடையதாகும். ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} ஆசிரமத்தில், முனிவர்களில் முதன்மையானோர் பலரால் அஃது உரைக்கப்படும்போது நான் கேட்டிருக்கிறேன்.(2) மனிதர்கள் வசிக்காத ஒரு பெருங்காட்டில், கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, புலனடக்கத்துடன், கடுந்தவங்களை நோற்கும் ஒரு தவசி வாழ்ந்து வந்தார்.(3) அவர், கடும் விதிமுறைகள் மற்றும் தன்னடக்கத்தை நோற்பவராக, அமைதியான மற்றும் தூய்மையான ஆன்மா கொண்டவராக, வேதம் ஓதுவதில் எப்போதும் கவனம் உள்ளவராக, நோன்புகளால் இதயம் தூய்மை அடைந்தவராக, அனைத்து உயிரினங்களிடமும் நற்பண்புகளுடன் நடந்து கொள்ளும் ஒரு வாழ்வைப் பின்பற்றி வந்தார்.(4) பெரும் நுண்ணறிவுடன் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவரது நல்லியல்பானது, காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களாலும் அறியப்பட்டதே என்பதால், அவை அவரை அன்புடன் அணுகி வந்தன.(5)

சீற்றமிகு சிங்கங்களும், புலிகளும், பெரும் அளவைக் கொண்ட மதங்கொண்ட யானைகளும், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், கரடிகள் மற்றும் குருதியுண்டு வாழும் கடுந்தன்மை கொண்ட பிற விலங்குகளும் அம்முனிவரை அணுகி, அவரிடம் வழக்கமான கேள்விகளைக் கேட்டு வந்தன. உண்மையில் அவை அனைத்தும் அவரிடம் சீடர்களைப் போலவும், பணியாட்களைப் போலவும் நடந்து கொண்டு, எப்போதும் அவருக்கு ஏற்புடையவற்றையே செய்து வந்தன.(6,7) அவரிடம் வந்து வழக்கமான விசாரிப்புகளை விசாரித்துவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்வதை அவை வழக்கமாகக் கொண்டிருந்தன. எனினும், ஒரு வளர்ப்பு விலங்கானது {நாயானது}, எந்த நேரமும் அந்த முனிவரை விட்டு விலகாமல், அங்கேயே வாழ்ந்து வந்தது.(8) அஃது {அந்த நாய்} அந்தத் தவசியிடம் அர்ப்பணிப்பும், ஆதிதப் பற்றுக் கொண்டதாக இருந்தது. நோன்புகளால் பலவீனமடைந்து மெலிந்திருந்த அது, கனிகளையும், கிழங்குகளையும், நீரையும் உண்டு வாழ்ந்து, அமைதியுடனும், குற்றமிழைக்கா தன்மையுடனும் இருந்தது.(9) அந்த உயர் ஆன்ம முனிவரின் பாதத்தில் கிடந்த அது {அந்த நாயானது}, தான் நடத்தப்படும் விதத்ததில் விளைந்த அன்பின் விளைவால் அவரிடம் {முனிவரிடம்} மிகவும் பற்றுடன் இருந்தது.(10)

ஒரு நாள் பெரும்பலம் படைத்ததும், குருதியையுண்டு வாழ்வதுமான ஒரு சிறுத்தை அங்கே வந்தது. தீய மனோநிலை கொண்டதும், எப்போதும் இரை தேடும் திளைப்பில் நிறைந்ததுமான அந்தக் கடும் விலங்கானது இரண்டாம் யமனைப் போலத் தெரிந்தது.(11) அந்தச் சிறுத்தையானது, நாவால் தன் கடைவாயை நக்கியபடியும், தன் வாலை மூர்க்கமாக ஆட்டியபடியும், பசியுடனும், தாகத்துடனும், தன் வாயை அகல விரித்துக் கொண்டு, அந்த நாயைத் தன் இரையாகப் பிடிக்க விரும்பி அங்கே வந்தது.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தக் கடும் விலங்கு வருவதைக் கண்ட அந்த நாய், உயிருக்கு அஞ்சி முனிவரிடம் இவ்வார்த்தைகளில் பேசியது. ஓ! ஏகாதிபதி, அதைக் கேட்பாயாக.(13) {அந்த நாய் முனிவரிடம்}, “ஓ! புனிதமானவரே, இந்தச் சிறுத்தையானது நாய்களுக்கு எதிரியாகும். அஃது என்னைக் கொல்ல விரும்புகிறது. ஓ! பெரும் தவசியே, இந்த விலங்கிடம் நான் கொண்ட அச்சங்கள் அனைத்தும் உமது அருளால் என்னிடமிருந்து விலகும் வழியில் செயல்படுவீராக. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பதில் ஐயமில்லை” என்றது.(14) அனைத்து உயிரினங்களின் எண்ணங்களையும் அறிந்தவரான அந்தத் தவசி, அந்த நாய் பெரும் அச்சத்தில் இருப்பதை உணர்ந்தார். ஆறு பண்புகளைக் கொண்டவரும், விலங்குகள் அனைத்தின் குரல்களைப் படிக்கவல்லவருமான அந்தத் தவசி பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்.(15)

அந்தத் தவசி {நாயிடம்}, “இனியும் உனக்குச் சிறுத்தைகளிடம் மரண அச்சமேதும் வேண்டாம். ஓ! மகனே, உன் இயல்பான வடிவம் மறைந்து, நீயும் ஒரு சிறுத்தையாவாயாக” என்றார்.(16) அந்த வார்த்தைகளைச் சொல்லப்பட்டதும், அந்த நாயானது, தங்கம் போன்ற பிரகாசத்துடன் கூடிய தோலைக் கொண்ட ஒரு சிறுத்தையாக மாறியது. உடலில் கோடுகளுடனும், {வாயில்} பெரும்பற்களுடனும் கூடிய அஃது, அந்தக் காட்டில் அச்சமில்லாமல் வாழத் தொடங்கியது.(17) அதே வேளையில், தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு விலங்கைத் தன் முன் கண்ட சிறுத்தையானது, அதனிடம் கொண்ட பகையுணர்வனைத்தையும் அப்போதே கைவிட்டது.(18) சில காலம் கழித்து, சீற்றமும் பசியும் நிறைந்த ஒரு புலியானது திறந்த வாயுடன் அந்த ஆசிரமத்திற்கு வந்தது. நாவால் தன் கடைவாயை நக்கியபடியும், குருதி குடிக்கும் ஆவல் மற்றும் விருப்பத்துடனும் அந்தப் புலியானது, சிறுத்தையாக மாறியிருந்த அந்த விலங்கை நோக்கிச் செல்லத் தொடங்கியது.(19) பயங்கரப் பற்களைக் கொண்டதும், பசியுடன் கூடியதுமான புலி, அந்தக் காட்டை அணுகுவதைக் கண்ட (வடிவம் மாறிய) சிறுத்தையானது, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த முனிவரின் பாதுகாப்பை நாடியது.(20)

அந்தச் சிறுத்தை அதே இடத்திலேயே தன்னுடன் வாழ்ந்து வந்ததால், அதனிடம் பெரும் பற்றுக் கொண்ட அந்தத் தவசி, அந்தச் சிறுத்தையை, அனைத்து எதிரிகளைவிடவும் பலமிக்க ஒரு புலியாக மாற்றினார்.(21) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தன் இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கைக் கண்ட புலியானது, அதற்கு எந்தத் தீங்கையும் செய்யாதிருந்தது. காலத்தின் ஓட்டத்தில், குருதியும், இறைச்சியும் உண்டு வாழும் பலமிக்க ஒரு புலியாக உருமாறிய அந்த நாயானது, தன் முந்தைய உணவான கனிகளையும், கிழங்குகளையும் தவிர்த்தது.(22) ஓ! ஏகாதிபதி, உண்மையில் அது {அந்த நாயானது}, புலியாக மாறிய நேரத்தில் இருந்து, உண்மையான விலங்குகளின் மன்னனைப் போலவே காட்டின் பிற விலங்குகளை உண்டு வாழ்ந்தது” என்றார் {பீஷ்மர்}.(23)

சரபமான ஞமலி தன் வடிவை அடைந்தது! – சாந்திபர்வம் பகுதி – 117-முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய நாய், பின்பு, யானையாகவும், சிங்கமாகவும், சரபமாகவும் மாற்றப்பட்டது; சரபமாகி இன்புற்றிருந்த நாய் அந்த முனிவரையே கொல்ல நினைத்தது; அதை அறிந்த முனிவர் சரபமாகியிருந்த அந்த நாயை மீண்டும் தன் வடிவையே ஏற்கச் செய்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புலியாக உருமாறிய நாய், கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அஃது ஆசிரமத்தின் முற்றத்தில் கிடந்தபோது, எழுச்சியடைந்த மேகம் போலத் தெரிந்த ஒரு மதங்கொண்ட யானை அங்கே வந்தது.(1) பெரிய உடற்கட்டுடனும், மதநீர் பெருகிய கன்னத்துடனும், உடலில் தாமரையின் குறியீடுகளுடனும், அகன்ற மத்தகங்களுடனும் இருந்த அந்த விலங்குக்கு, நீண்ட தந்தங்களும், மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலும் இருந்தன.(2) பலத்தில் செருக்கடைந்திருக்கும் அந்த மதங்கொண்ட யானை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் புலி, அச்சத்தால் கலங்கி, அந்த முனிவரின் பாதுகாப்பை நாடியது.(3) அதன் பேரில் அந்த முனிவர்களில் சிறந்தவர் அந்தப் புலியை ஒரு யானையாக மாற்றினார். உண்மையான யானையானது, தன் இனத்தைச் சார்ந்ததும், மேகத் திரளைப் போன்று பெரிதாக இருப்பதுமான அதைக் கண்டு அச்சமடைந்தது.(4) முனிவரின் யானையானது, தாமரை இதழ்களை உடற்புள்ளிகளாக {மச்சங்களாகப் போலக்} கொண்டு, தாமரைகள் அடர்த்தியாக மலர்ந்திருக்கும் தடாகங்களுக்குள் மகிழ்ச்சியாகக் குதித்து, முயல் பொந்துகள் நிறைந்த அதன் கரைகளில் திரிந்தது.(5)

இவ்வழியில் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து சென்றது. ஒரு நாள் அந்த யானை ஆசிரமத்தின் பக்கம் உலவிக் கொண்டிருந்தபோது, மலைக்குகையில் பிறந்ததும், யானைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டதுமான பிடரி படைத்த சிங்கம் ஒன்று அங்கே வந்தது.(6,7) சிங்கம் வருவதைக் கண்ட முனிவரின் யானை, உயிருக்கு அஞ்சி நடுங்கத் தொடங்கி, அந்தத் தவசியின் பாதுகாப்பை நாடியது.(8) அதன் பேரில் அந்தத் தவசி அந்த யானைகளின் இளவரசனை ஒரு சிங்கமாக மாற்றினார். அந்தக் காட்டுச்சிங்கம் தன் இனத்தைச் சேர்ந்த விலங்காக இருந்ததால், முனிவரின் சிங்கம் அதற்குமேலும் அஞ்சவில்லை. மறுபுறம், அந்தக் காட்டுச் சிங்கமானது, தன் இனத்தைச் சேர்ந்த வலிமைமிக்க விலங்கைத் தன் முன்னே கண்டு அச்சமடைந்தது.(9) முனிவரின் சிங்கம் காட்டில் உள்ள அந்த ஆசிரமத்திலேயே வசிக்கத் தொடங்கியது. அந்த விலங்கிடம் கொண்ட அச்சத்தால், அதற்கு மேலும் வேறெந்த விலங்கும் அந்த ஆசிரமத்தை அணுகத் துணியவில்லை. உண்மையில் அந்த விலங்குகள் அனைத்தும் தங்கள் உயிரின் பாதுகாப்பைக் கருதி அச்சமடைந்தன.(10)

சில காலம் கடந்ததும், ஒரு நாள், பெரும் பலம் கொண்டதும், அனைத்து விலங்குகளையும் கொல்லக்கூடியதும், அனைத்து விலங்குகளுக்கும் அச்சமூட்டக்கூடியதும், எட்டுக் கால்களைக் கொண்டதும், நெற்றியில் கண்களைக் கொண்டதுமான ஒரு சரபம் அங்கே வந்தது. உண்மையில், அது முனிவரின் சிங்கத்தைக் கொல்லும் நோக்குடன் அந்த ஆசிரமத்திற்கே வந்தது.(11,12) இதைக் கண்ட தவசி, தன் சிங்கத்தைப் பெரும்பலமிக்க ஒரு சரபமாக மாற்றினார். அந்தக் காட்டுச் சரபமானது, சீற்றமிக்கதும், தன்னைவிடப் பலமிக்கதுமான முனிவரின் சரபம் தன் முன்னே நிற்பதைக் கண்டு வேகமாக அந்தக் காட்டைவிட்டுத் தப்பி ஓடியது.(14) இவ்வாறு அந்தத் தவசியால் சரபமாக மாற்றப்பட்ட அந்த விலங்கானது, தன்னை அவ்வாறு மாற்றியவரின் அருகிலேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தது.(15)

அருகில் வசித்து வந்த விலங்குகள் அனைத்தும் அந்தச் சரபத்தால் அச்சமடைந்தன. அச்சமும், தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ளும் விருப்பமும் அவை அனைத்தும் அந்தக் காட்டில் இருந்து தப்பி ஓடுவதற்கு வழிவகுத்தன.(16) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அந்தச் சரபம், தினமும் தன் உணவுக்காக விலங்குகளைக் கொல்வதைத் தொடர்ந்தது. ஊனுண்ணும் விலங்காக மாற்றப்பட்ட அஃது, அதற்கு மேலும் முந்தைய வாழ்வில் தான் உண்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்ணவில்லை.(17) முன்பு நாயாக இருந்து இப்போது சரபமாக மாறியிருக்கும் அந்த நன்றியற்ற விலங்கு, ஒரு நாள், ஆவலுடன் கூடிய குருதி தாகத்துடன் அந்தத் தவசியைக் கொல்ல விரும்பியது.(18) அவர் {தவசி}, தன் தவச் சக்தியாலும், தன் ஆன்ம அறிவாலும் அனைத்தையும் கண்டார். பெரும் ஞானத்தைக் கொண்ட அந்தத் தவசி, அந்த விலங்கின் நோக்கங்களை உறுதிசெய்து கொண்டு, அதனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினார்.(19)

அந்தத் தவசி {சரபமாக மாறியிருக்கும் நாயிடம்}, “ஓ! நாயே, நீ முதலில் ஒரு சிறுத்தையாக உருமாற்றப்பட்டாய். பிறகு சிறுத்தையிலிருந்து ஒரு புலியாக மாற்றப்பட்டாய். புலியாக இருந்த நீ, கன்னங்களில் மதநீர் ஒழுகும் ஒரு யானையாக மாற்றப்பட்டாய். அடுத்ததாகச் சிங்கமாகவும் மாற்றப்பட்டாய்.(20) பிறகு வலிமைமிக்கச் சிங்கமாக இருந்த நீ ஒரு சரபமாகவும் மாற்றப்பட்டாய். உன்னிடம் அன்பால் நிறைந்ததால் நான் உன்னைப் பல்வேறு வடிவங்களில் உருமாற்றி வந்தேன். பிறப்பால் நீ அந்த இனங்களில் ஏதேனும் ஒன்றில் இருப்பதோ, இருக்ககூடிய பிறப்போ அல்ல.(21) எனினும், ஓ பாவம் நிறைந்த இழிந்த பிறவியே, உனக்கு எந்தத் தீங்கையும் செய்யாத என்னை நீ கொல்ல விரும்பியதால், மீண்டும் நீ உன் இனத்தைச் சேர்ந்த பிறவியாகவே மாறி, மீண்டும் ஒரு நாயாவாயாக” என்றார்.(22) இதன்பிறகு, சரபமாக மாற்றப்பட்டிருந்ததும், குறுகிய புத்தி கொண்டதுமான அந்த மூட விலங்கு, அந்த முனிவருடைய சாபத்தின் வீளைவால் மீண்டும் அதற்குரிய நாயின் வடிவத்தை ஏற்றது” என்றார் {பீஷ்மர்}.(23)

அரசு ஊழியர்களின் பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 118-மன்னன் தன் பணியாட்களை நியமிக்க வேண்டிய முறை; நியமிக்கப்பட வேண்டிய அமைச்சர்களின் பண்புகள்; ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய, அல்லது அவன் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள்; போர்வீரர்களுக்குத் தேவையான பண்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நாயானது, தனக்கு உரிய வடிவத்தை ஏற்றவுடன் உற்சாகமிழந்தது. அந்தப்பாவம் நிறைந்த விலங்கைக் கண்டித்த முனிவர், அதைத் {நாயை} தன் ஆசிரமத்திலிருந்து விரட்டிவிட்டார்.(1) நுண்ணறிவு கொண்ட மன்னன் ஒருவன், இந்த எடுத்துக்காட்டால் வழிகாட்டப்பட்டு, பணியாட்கள் ஒவ்வொருவரும் பணியமர்த்தப்படும் முன்பே, அவர்களின் உண்மைத்தன்மை, தூய்மை, நேர்மை, பொதுவான மனநிலை, சாத்திர அறிவு, நடத்தை, பிறப்பு, தன்னடக்கம், கருணை, பலம், சக்தி, கண்ணியம் மற்றும் மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றை உறுதி செய்து கொண்டு, அலுவலுக்குத் தகுந்த பணியாட்களை நியமிக்க வேண்டும்.(2,3) ஒரு மன்னன், முதலிலேயே தீர ஆராயமல் ஓர் அமைச்சரை ஒருபோதும் நியமிக்கக்கூடாது. ஒரு மன்னன் தன்னைச் சுற்றிலும் இழிபிறவிகளைத் திரட்டி வைத்திருந்தால், அவனால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(4) உயர் குடி பிறப்பைக் கொண்டவன், எக்குற்றமும் செய்யாமலே தன் தலைவனால் தண்டிக்கப்பட்டாலும், தன் குருதியுடைய மதிப்பின் விளைவால், தன் தலைவனுக்குத் தீங்கிழைப்பதில் ஒருபோதும் இதயத்தை நிலைக்கச் செய்ய மாட்டான்[1].(5)

எனினும், இழிபிறவியான ஒருவன், ஏதோவொரு நேர்மையான மனிதனின் தொடர்பால் பெருஞ்செழிப்பை அடைந்திருந்தாலும், வெறுமனே வார்த்தைகளில் கண்டிக்கப்பட்டாலும்கூட அம்மனிதனின் பகைவனாகிவிடுவான்[2].(6) ஓர் அமைச்சன் உயர்குடி பிறப்பைக் கொண்டவனாக, பலமிக்கவனாக இருக்க வேண்டும்; அவன் மன்னிக்கும் தன்மையும், தன்னடக்கமும் கொண்டவனாக, தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தியவனாக, கொள்ளை எனும் தீமையில் இருந்து விடுபட்டவனாக, நியாயமான முறையில் அடையப்பட்ட உடைமைகளில் மனம்நிறைந்தவனாக, தன் தலைவன் மற்றும் நண்பர்களின் செழிப்பில் மகிழ்ச்சி கொள்பவனாக,(7,8) இடம் மற்றும் நேரத்திற்குத் தக்க தேவைகளை அறிந்தவனாக, தன் தலைவனுக்கான நல்ல அலுவல்களைச் செய்பவனாக, அல்லது அதில் எப்போதும் ஈடுபடுபவனாக, எப்போதும் கவனமிக்கவனாக,(9) தன் கடமைகளை ஆற்றுவதில் நம்பிக்கைக்குரியவனாக, போர் மற்றும் அமைதியின் கலைகளில் முற்றான திறம் கொண்டவனாக, மூன்று பெரும் தொகுப்புகளின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்} மன்னனின் தேவைகளை அறிந்தவனாக, குடிமக்களாலும், மாகாணங்களில் வசிப்போராலும் அன்புடன் விரும்பப்படுபவனாக,(10) பகைவரின் படையணிகளைப் பிளக்கவும், துளைக்கவும் கூடிய அனைத்து வகைப் போர்வியூகங்களையும் அறிந்தவனாக, தன் தலைவனின் படைகளுக்கு உற்சாகத்தையும் இன்பத்தையும் அளிப்பவனாக, அறிகுறிகளையும், தோற்றநிலைகளையும் படிக்கவல்லவனாக, அணிவகுப்புக்குத் தேவையான அனைத்தையும் அறிந்தவனாக,(11) யானைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் திறம் கொண்டவனாக, செருக்கில் இருந்து விடுபட்டவனாக, தன் சக்திகளில் நம்பிக்கை உள்ளவனாக, தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலியாக, எப்போதும் சரியானதையே செய்பவனாக,(12) நல்லொழுக்கம் கொண்டவனாக, நல்ல நண்பர்களால் சூழப்பட்டவனாக, இனிய பேச்சைக் கொண்டவனாக, ஏற்புடைய பண்புகளைக் கொண்டவனாக, சிறப்புத் திறமை, செயல்பாட்டில் துடிப்பு,(13) சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை, இனிய மனம், பேச்சில் பணிவு, பொறுமை, துணிவு, வளமை ஆகியவற்றைக் கொண்டவனாக, இடம் மற்றும் காலத்திற்குத் தகுந்த தேவைகளின்படி தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவல்லவனாக இருக்க வேண்டும்.(14) இத்தகு அமைச்சனை அடையும் மன்னனை, வேறு எவனாலும் ஒருபோதும் அவமதிக்கவோ, வீழ்த்தவோ முடியாது. உண்மையில் அவனது நாடானது, நிலவின் வெளிச்சத்தைப் போல இந்தப் பூமியில் படிப்படியாகப் பரவும்.(15)

மேலும் சாத்திரங்களை அறிந்தவனும், அறமே அனைத்திற்கும் மேலானது எனக் கருதுபவனும், தன் குடிமக்களைக் காப்பதில் எப்போதும் ஈடுபடுபவனும், பின்வரும் பண்புகளைக் கொண்டவனுமான ஒரு மன்னனானவன் அனைவரின் அன்பையும் பெறுவான்.(16) அவன் {ஒரு மன்னன்}, பொறுமை, மன்னிக்கும் தன்மை, தூய ஒழுக்கம், தேவையான தருணங்களில் கடுமை, பெரியோர் அனைவரையும் மதிக்கும் நடத்தை, சாத்திர அறிவு, அறிவுரையும் ஆலோசனையும் வழங்கத்தக்கவர்களிடம் அவற்றைக் கேட்கக்கூடிய ஆயத்தம், தனக்குப் பரிந்துரைக்கப்படும் வேறுபட்ட, அல்லது எதிர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் சரியாகத் தீர்மானிக்கும் திறன்,(17) புத்திக்கூர்மை, நல்ல நினைவுத்திறன், நீதியைச் செய்ய ஆயத்தம், தற்கட்டுப்பாடு, எப்போதும் பேச்சில் இனிமை, எதிரிகளையும் மன்னிக்கும் தன்மை,(18) தனிப்பட்ட ஈகை பயில்வது, நம்பிக்கையுடன் இருப்பது, ஏற்புடைய பண்புகளைக் கொண்டிருப்பது, துயரில் மூழ்கியிருக்கும் மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆயத்தநிலையிலிருப்பது, தன் நன்மையை எப்போதும் நாடும் அமைச்சர்களைக் கொண்டிருப்பது,(19) தற்பெருமை எனும் குற்றத்தைத் தவிர்ப்பது, மனைவியில்லாமல் ஒருபோதும் இல்லாத நிலை, எதையும் அவசரமாகச் செய்யாத நிலை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் .(20)

அவன், சோம்பலைத் தவிர்த்து, தனக்கு நன்மை செய்யும் மனிதர்களுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். அவனது முகம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்க வேண்டும். தன் பணியாட்களின் தேவைகளில் எப்போதும் கவனமாக இருப்பவனாகவும், கோப வசப்படாதவனாகவும் அவன் இருக்க வேண்டும். இவற்றைத் தவிர்த்து அவன் பெருந்தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(21) தண்டக்கோலைக் கீழே வைக்காமல், அதை முறையுடன் தரிக்க வேண்டும். தன் மக்கள் அனைவரையும் நியாயமாக நடக்கச் செய்ய வேண்டும். அவன், ஒற்றர்களைத் தன் கண்களாகக் கொண்டு, தன் குடிமக்களின் காரியங்களைக் கண்காணித்து, அறம் மற்றும் செல்வம் தொடர்பான அனைத்துக் காரியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நூறு பண்புகளையும் கொண்ட மன்னன் அனைவரின் அன்பையும் ஈட்டுவான். ஒவ்வொரு ஆட்சியாளனும் இவ்வாறு இருக்க முயற்சிக்க வேண்டும்.(22) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன், தன் நாட்டைப் பாதுகாப்பதில் தனக்கு உதவி செய்வதற்குத் தேவையான தகுதிகளுடன் கூடிய நல்ல போர்வீரர்களைத் (தன் படையில் சேர்த்துக் கொள்வதற்குத்) தேட வேண்டும்.(23) தன் முன்னேற்றத்தை விரும்புபவனான ஒரு மன்னன் ஒருபோதும் தன் படையை அலட்சியம் செய்யக்கூடாது.

எந்த மன்னனின் படைவீரர்களில், போரில் துணிவுமிக்கவர்களாகவும், நன்றியுணர்வு மிக்கவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தவர்களாகவும் இருக்கிறார்களோ, எவனுடைய படையில், அறம் மற்றும் கடமை குறித்த உடன்படிக்கைகளை அறிந்த காலாட்படையினர் இருக்கிறார்களோ, எவனுடைய யானைவீரர்கள் அச்சமில்லாதவர்களாக இருக்கிறார்களோ, எவனுடைய தேர்வீரர்கள், தங்கள் வகைப் போரில் திறம்பெற்றவர்களாகவும், கணை ஏவுவதை நன்கறிந்தவர்களாகவும், பிற ஆயுதங்களைத் தரிக்கவும் தெரிந்தவர்களாக இருக்கிறார்களோ, அவன் {அந்த மன்னன்} மொத்த உலகையும் அடக்குவான்.(24,25) எந்த மன்னன், மனிதர்கள் அனைவரையும் தன்னோடு இணைப்பதில் எப்போதும் ஈடுபடுவானோ, எவன் முயற்சிக்கு {உழைப்புக்கு} எப்போதும் ஆயத்தமாக இருக்கிறானோ, எவன் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் காரியத்தில் வளத்துடன் இருக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.(26) ஓ! பாரதா, மனிதர்கள் அனைவரையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில் வெற்றி காணும் மன்னன், துணிவுடன் கூடிய ஓராயிரம் குதிரைவீரர்களை மட்டுமே கொண்டும் கூட மொத்த உலகையும் கைப்பற்றுவான்” என்றார் {பீஷ்மர்}.(27)

தக்க நியமனம்! – சாந்திபர்வம் பகுதி – 119-பணியாட்களில் ஒவ்வொருவரையும் அவரவர்க்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும்; தகாதவர்களைத் தகாத நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை மற்றும், தகுந்தவர்களைத் தகுந்த நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “எந்த மன்னன், இந்த நாயின் கதையில் இருந்து பெறப்பட்ட பாடத்தால் வழிகாட்டப்பட்டு, தன் பணியாட்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}. ஒரு நாயானது, அதற்குத் தகுந்த நிலைக்கு மேலே கௌரவத்துடன் அமர்த்தப்படக்கூடாது. ஒரு நாய், அதற்குத் தகுந்த நிலைக்கு மேல் அமர்த்தப்பட்டால், அது செருக்கால் போதையுறும்.(2) தகுந்த அலுவல்களில் நியமிக்கப்படும் அமைச்சர்கள், அந்தந்தத் தொழிலுக்குத் தகுந்த தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தகாத மனிதர்களின் நியமனங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாது.(3) எந்த மன்னன், தன் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த அலுவல்களைக் கொடுக்கிறானோ, அத்தகு தகுதியின் {புண்ணியத்தின்} விளைவால் அவன் {அந்த மன்னன்}, அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}.(4) ஒரு சரபம், சரபத்தின் நிலையை ஏற்க வேண்டும்; ஒரு சிங்கம், சிங்கத்தின் வலிமையால் பெருகியதாக இருக்க வேண்டும்; ஒரு புலியானது, புலியின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்; ஒரு சிறுத்தையானது, சிறுத்தையின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்.(5)

பணியாட்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் விதிப்படி நியமிக்கப்பட வேண்டும். நீ வெற்றியை அடைய விரும்பினால், பணியாட்களுக்குத் தகுந்ததைவிட உயரிய நிலையில் ஒருபோதும் அவர்களை நியமிக்கக்கூடாது.(6) எந்த மூட மன்னன், இந்த எடுத்துக்காட்டை மீறி, தகாத நிலைகளில் பணியாட்களை நியமிப்பானோ, அவன் தன் மக்களை நிறைவடையச் செய்வதில் தவறுவான்.(7) திறன்மிக்கப் பணியாட்களைக் கொள்ள விரும்பும் மன்னன் ஒருவன், நுண்ணறிவற்றவர்களும், இழிந்த மனம் கொண்டவர்களும், ஞானம் இல்லாதவர்களும், தங்கள் புலன்களுக்குத் தலைவர்களாக இல்லாதவர்களும், உயர் குடியில் பிறக்காதவர்களுமான மனிதர்களை ஒருபோதும் {எந்த அலுவலிலும்} நியமித்துக் கொள்ளக்கூடாது.(8) நேர்மையானவர்களும், உயர்குடி பிறப்பைக் கொண்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், கல்விமான்களும், தீயநோக்கமும், பொறாமையும் இல்லாதவர்களும், உயர்ந்த மனம் கொண்டவர்களும், நடத்தையில் தூய்மையானவர்களும், தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலிகளுமான மனிதர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படத் தகுந்தவர்களாவர்.(9) பணிவுடையவர்களும், தங்கள் கடமைகளை ஆற்றத் தயாராக இருப்பவர்களும், அமைதியான மனநிலை கொண்டவர்களும், மனத்தில் தூய்மையானவர்களும், இயல்பான பல்வேறு பிற கொடைகளைக் கொண்டவர்களும், தாங்கள் இருக்கும் அலுவல்களின் தொடர்பான அவதூறுகளுக்கு ஆளாகாதவர்களுமான மனிதர்கள், மன்னனின் அணுக்கமான துணைவர்களாக இருக்க வேண்டும்.(10)

ஒரு சிங்கமானவன், எப்போதும் மற்றொரு சிங்கத்தையே தன் தோழனாகக் கொள்ள வேண்டும். சிங்கமல்லாத ஒருவன், ஒரு சிங்கத்திற்குத் தோழனானால், அவன் அந்தச் சிங்கத்திற்கு உண்டான பயன்கள் அனைத்தையும் ஈட்டுவான்.(11) எனினும் ஒரு சிங்கமானவன், நாய்களின் கூட்டத்தை மட்டுமே தன் துணைவர்களாகக் கொண்டிருந்தால், அவன் சிங்கத்திற்குரிய கடமைகளை ஆற்றும்போது, தன் தோழமையின் விளைவால், அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறுவான்.(12) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஒரு மன்னன், துணிவு, ஞானம், பெரும் கல்வி, உயர்குடி பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களைத் தன் அமைச்சர்களாகக் கொண்டிருந்தால், அவன் மொத்த உலகையும் அடக்குவதில் வெல்வான்.(13) ஓ! அரசத் தலைவர்களில் முதன்மையானவனே, கல்வி, நேர்மை, ஞானம், பெருஞ்செல்வம் ஆகியவையற்ற ஒரு பணியாளனை மன்னர்கள் ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது.(14) தங்கள் தலைவனுக்கான தொண்டுகளில் அர்ப்பணிப்போடு இருக்கும் மனிதர்களை எந்தத் தடைகளாலும் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. மன்னர்கள், தங்கள் தலைவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் பணியாட்களிடம் எப்போதும் ஆறுதலாகவே பேச வேண்டும்.(15)

மன்னர்கள் எப்போதும் பெருங்கவனத்துடன் தங்கள் கருவூலங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் மன்னர்கள், தங்கள் கருவூலங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மன்னன் எப்போதும் தன் கருவூலத்தைப் பெருகச் செய்வதில் முனைய வேண்டும்.(16) ஓ! மன்னா, உன் பண்டகசாலைகள் {கிடங்குகள்} தானியங்களால் நிறைக்கப்படட்டும். அதை நேர்மையான பணியாட்கள் கவனித்துக் கொள்ளட்டும். நீ உன் செல்வத்தையும், தானியங்களையும் பெருகச் செய்ய முனைவாயாக.(17) போரில் திறன்பெற்ற உன் பணியாட்கள், அவர்களுடைய கடமைகளைக் கவனமாகச் செய்யட்டும். அவர்கள் குதிரைகளை நிர்வகிப்பதில் திறன்பெற்றவர்களாக இருப்பது விரும்பத்தக்கதாகும்.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தேவைகளைக் கவனிப்பாயாக. நீ நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சூழப்பட்டிருப்பாயாக. உனது நகரத்துக்கான நன்மையை நீ நாடுவாயாக.(19) நாயின் எடுத்துக்காட்டைச் சொன்னதன் மூலம், உன் குடிமக்களிடம் நீ பின்பற்ற வேண்டிய கடமைகளைக் குறித்து உனக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். மேலும் நீ என்ன கேட்க விரும்புகிறாய்” என்று கேட்டார் {பீஷ்மர்}.(20)

மயிலொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 120-மயிலுக்கு ஒப்பாக மன்னன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும், ஒரு மன்னன் குடிமக்களைப் பாதுகாக்கும் தன் கடமையில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அரச கடமைகளை அறிந்த பழங்காலத்து மனிதர்களால் விதிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்த அரசதிறத்தின் பல்வேறு கடமைகளைக் குறித்து நீர் உரையாடினீர்.(1) உண்மையில், ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட அந்தக் கடமைகளைக் குறித்து நீர் விரிவாகப் பேசியிருக்கிறீர். எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவற்றை ஒருவன் நினைவில் தக்க வைத்துக் கொள்வதில் வெல்லும் வகையில் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதே ஒரு க்ஷத்திரியனின் உயர்ந்த கடமை என்று சொல்லப்படுகிறது. ஓ! மன்னா, பாதுகாக்கும் கடமையை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை என்னிடம் இருந்து கேட்பாயாக.(3) தன் கடமைகளை அறிந்த ஒரு மன்னன், பல்வேறு நிறங்களைத் தோகையில் எற்கும் ஒரு மயிலைப் போலவே பல்வேறு வடிவங்களை ஏற்க வேண்டும்.(4) கூர்மை, கபடம், உண்மை, நேர்மை ஆகிய பண்புகள் அவனிடம் இருக்க வேண்டும். அவன், முழுமையாகப் பாரபட்சமில்லாமல், நற்பண்புகளை நடைமுறைப்படுத்தி, புகழை ஈட்ட வேண்டும்.(5) அவன் தான் நிறைவேற்ற முனையும் குறிப்பிட்ட நோக்கத்தில் நன்மையடைவதைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிறத்தையோ, வடிவையோ ஏற்க வேண்டும். பல்வேறு வடிவங்களை ஏற்கவல்ல மன்னனால் மிக நுண்ணிய நோக்கங்களையும் கூட நிறைவேற்றுவதில் வெல்வான்.(6)

கூதிர்காலத்து ஊமை மயிலைப் போல அவன் தன் ஆலோசனைகளை மறைக்க வேண்டும். அவன் குறைவாகவே பேச வேண்டும், அந்தக் குறைவான பேச்சும் இனிமையாக இருக்க வேண்டும். அவன் நற்பண்புகளைக் கொண்டவனாகவும், சாத்திரங்களை நன்கறிந்தவனாகவும் இருக்க வேண்டும்.(7) மனிதர்கள் தங்கள் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளத்தால் நிறைக்கக் கூடிய பெரிய ஏரிகளுடைய உடைப்புகளைக் கவனித்துக் கொள்வதைப் போலவே அவன் தன்னை வீழ்த்தக்கூடிய ஆபத்துகள் வரும் வாயில்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மலைத் தடாகங்களில் திரளும் மழைநீரில் இருந்து உண்டாகும் ஆறுகளை மனிதர்கள் நாடுவதைப் போலவே அவன் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் புகலிடத்தை நாட வேண்டும். செல்வத்தைத் திரட்ட விரும்பும் மன்னன், சடாமுடி தரிக்கும் போலி அறவோரைப் போலச் செயல்பட வேண்டும்.(8) மன்னன் தன் கரங்களில் எப்போதும் தண்டக்கோலை உயர்த்தியபடியே இருக்க வேண்டும். வருவாயையும், செலவினங்களையும் நன்கு ஆய்வு செய்த பிறகு, முழுதாக வளர்ந்த பனைமரத்திடம் அதன் சாறை உறிஞ்சச் செல்வதைப் போல அவன் (வரி விதிக்கும் காரியங்களில்) எப்போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்.(9) அவன் தன் குடிமக்களிடம் தகமையுடன் {நியாயமாக} நடந்து கொள்ள வேண்டும்; தன் சிறகுகள் பலம்பெற்றதும் எதிரியை எதிர்த்துப் படையெடுத்து, தன் குதிரைப் படையைக் கொண்டு எதிரிகளின் பயிர்களை நசுக்க வேண்டும்; மேலும் தன் பலவீனங்களின் தோற்றுவாய்களையும் நோக்க வேண்டும்.(10)

தன் எதிரிகளின் குற்றங்களை அவன் அறிக்கையிட வேண்டும்; தன்னைச் சார்ந்தோரின் குற்றங்களை நசுக்க வேண்டும்; காட்டிலிருக்கும் மலர்களைக் கொய்யும் மனிதனைப் போலவே வெளியில் இருந்து செல்வத்தைத் திரட்ட வேண்டும்.(11) வலிமையில் பெருகியவர்களும், மலைகளைப் போன்று உயர்ந்த தலைகளுடன் நிமிர்ந்து நிற்பவர்களுமான முதன்மையான ஏகாதிபதிகளை அவன் அறியப்படாத நிழல்களையும் நாடுதல், ஒளிந்து மறைந்திருத்தல், திடீர் தாக்குதல்களை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் அழிக்க வேண்டும்.(12) மழைக்காலத்து மயிலைப் போல அவன் தன் இரவு வசிப்பிடங்களில் தனியாகவும், யாராலும் காணப்படாமல் நுழைய வேண்டும். உண்மையில் அவன் மயிலின் நடையிலேயே தன் மனைவியரின் துணையுடன் தன் அந்தப்புரங்களுக்குள் இன்புற்றிருக்க வேண்டும்[2].(13) அவன் தன் கவசத்தைக் கழற்றக்கூடாது. அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களால் விரிக்கப்படும் வலையைத் தவிர்த்து, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(14) மேலும் அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களுடைய பற்றை வெல்ல வேண்டும், ஆனால், வாய்ப்பு நேரும்போது அவர்களை வேரோடு அழித்துவிட வேண்டும். மயில்களைப் போலவே மன்னனும் தன் பலமிக்கக் கோபக்கார எதிரிகளைக் கபடத் திட்டங்களின் மூலம் கொன்று,(15) அவர்களது படையையும் அழித்து, தன் நாட்டில் இருந்து அவர்களை விரட்ட வேண்டும். மேலும் மன்னனானவன், மயில்களைப் போலவே தனக்கு நன்மையானதைச் செய்து கொண்டு, காட்டில் இருந்து அவை {மயில்கள்} பூச்சிகளைச் சேகரிப்பது போல அனைத்து இடங்களில் இருந்தும் ஞானத்தைச் சேகரிக்க வேண்டும்.(16)ஞானியும், மயிலைப் போன்றவனுமான மன்னன், இவ்வாறே தன் நாட்டை ஆண்டு, தனக்கு நன்மையை அளிக்கும் கொள்கையை {திட்டத்தைப்} பின்பற்ற வேண்டும்.(17) தன் நுண்ணறிவைக் கொண்டே அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பிறருடன் ஆலோசிப்பதன் மூலம் அவன் அத்தகு தீர்மானத்தைக் கைவிடவோ, உறுதிசெய்யவோ வேண்டும். சாத்திரங்களால் கூர்த்தீட்டப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் ஒருவன் தன் செயற்பாட்டு வழிமுறைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும். சாத்திரங்களின் பயன் இதில்தான் {காரியங்களின் போக்கைத் தீர்மானிப்பதில்தான்} இருக்கிறது.(18) இணக்கக் கலைகளை {சாம முறையைப்} பயில்வதன் மூலம் அவன் தன் எதிரிகளுடைய இதயங்களின் நம்பிக்கையை ஈர்க்க வேண்டும். அவன் தன் சொந்த பலத்தை வெளிக்காட்ட வேண்டும். பல்வேறு செயல்பாட்டு வழிமுறைகளைத் தன் மனத்திற்குள் மதிப்பிடுவதன் மூலம், அவன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தித் தீர்மானங்களை அடைய வேண்டும்.(19) மன்னன், இணக்கக் கொள்கையின் {சாம முறையின்} கலைகளை நன்கறிந்திருக்க வேண்டும், அவன் ஞானம் கொண்டவனாக இருக்க வேண்டும்; எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வல்லவனாகவும், எது கூடாதாதோ அதைத் தவிர்க்க வல்லவனாகவும் இருக்க வேண்டும். ஞானமும், ஆழமான நுண்ணறிவும் கொண்ட மனிதனுக்கு ஆலோசனைகளோ, அறிவுரைகளோ தேவைப்படுவதில்லை.(20)

பிருஹஸ்பதியைப் போன்ற நுண்ணறிவைக் கொண்ட ஒரு ஞானி, அவதூறு செய்பவனானால், அவன் நீரில் முக்கப்படும் சுடப்பட்ட இரும்பைப் போல விரைவில் தன் மனநிலை சீரடைவான்.(21) மன்னன் தனது, அல்லது பிறரின் நோக்கங்கள் அனைத்தையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படியே நிறைவேற்ற வேண்டும்.(22) செல்வத்தை அடையும் வழிமுறைகளை அறிந்த மன்னன் ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் மென்மையான மனநிலை, ஞானம், துணிவு, பெரும் பலம் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களையே எப்போதும் நியமிக்க வேண்டும்.(23) {வீணை போன்ற} இசைக்கருவியின் நாண்களைச் சுவரங்களுக்குத் தக்கபடி சரியான அழுத்தத்தில் கட்டுவதைப் போல ஒருமன்னன், தன் பணியாட்கள், அவர்களுக்குத் தகுந்த செயல்களில் நியமிக்கப்படுவதைக் கண்டு அவர்களுடன் சேர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.(24) மன்னன், அற விதிகளை மீறாமல் அனைத்து மனிதர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும். “இவன் என்னவன்” என்று அனைவராலும் கருதப்படும் மன்னன் அசையாத மலையென நிலைத்து நிற்பான்.(25)

வழக்காடுபவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கும் பணியில் தன்னை நிறுவிக்கொள்ளும் மன்னன், தன்னால் விரும்பப்படும், மற்றும் விரும்பப்படாத நபர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாட்டையும் காணாமல், நீதியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.(26) குறிப்பிட்ட குடும்பங்கள், குறிப்பிட்ட மக்கள் திரள், பல்வேறு நாடுகள் ஆகியவற்றின் பண்புகளை அறிந்தவர்கள்; பேச்சில் மென்மையாக இருப்பவர்கள்; நடு வயதில் இருப்பவர்கள், குற்றங்கள் {குறைகள்} ஏதும் இல்லாதவர்கள்; நற்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள்; ஒருபோதும் அலட்சியமாக இல்லாதவர்கள்; கொள்ளையில் ஈடுபடாதவர்கள்; கல்வியும், தற்கட்டுப்பாடும் கொண்டவர்கள்; அறத்தில் உறுதியும், அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டும் சார்ந்த காரியங்களை உயர்த்திப்பிடிக்க எப்போதும் தயாராக இருப்பவர்கள் ஆகியோரையே மன்னன் தன் அலுவல்கள் அனைத்திலும் நியமிக்க வேண்டும்.(27,28) இவ்வழியில், செயல்களின் நடைமுறையையும், இறுதி நோக்கங்களையும் உறுதி செய்து கொள்ளும் மன்னன், அவற்றைக் கவனமாக நிறைவேற்ற வேண்டும்; தன் ஒற்றர்கள் மூலம் அனைத்து செய்திகளையும் அறிந்து கொண்டு அவன் உற்சாகத்துடன் வாழ வேண்டும்.(29) போதுமான காரணங்களில்லாமல் கோபத்துக்கும், இன்பத்துக்கும் ஒருபோதும் வசப்படாதவனும், வரவு மற்றும் செலவு ஆகியவற்றைத் தன் கண்களால் நேரடியாகக் கண்காணிப்பவனுமான மன்னன், உலகத்தில் இருந்து பெருஞ்செல்வத்தை அடைவதில் வெல்கிறான்.(30)

தன் அதிகாரிகள் மற்றும் குடிமக்களை (அவர்கள் செய்ய நற்காரியங்களுக்காக) பொதுவில் வைத்து கௌரவிப்பவனும், தண்டனைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனும், தன்னையும், தன் நாட்டையும் அனைத்துத் தீமைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்பவனுமான மன்னன், அரசகலையின் {ஆட்சித்திறத்தின்} கடமைகள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(31) கீழிருக்கும் அனைத்தின் மேலும் தன் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போல மன்னன், எப்போதும் தன் நாட்டைப் பார்த்துக் கொண்டு, தன் நுண்ணறிவின் உதவியால், தன் ஒற்றர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் கண்காணிக்க வேண்டும்.(32) மன்னன் உரிய காலத்தில் தன் குடிமக்களிடம் இருந்து செல்வத்தைப் பெற வேண்டும். அவன் செய்வதை அவன் ஒருபோதும் அறிக்கையிடக்கூடாது. பசுவிடம் இருந்து தினமும் பால்கறக்கும் ஒரு புத்திசாலியைப் போல, மன்னனும் தினமும் தன் நாட்டைக் கறக்க வேண்டும்.(33) ஒரு தேனியானது, மலர்களில் இருந்து படிப்படியாகத் தேனைத் திரட்டுவதைப் போலவே மன்னனும் தன் நாட்டில் இருந்து படிப்படியாகச் செல்வத்தைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டும்.(34) போதுமான அளவைத் தனியாக வைத்துக் கொண்டு, எஞ்சியவற்றைக் கொண்டு, அறத்தகுதியை அடைவது மற்றும், இன்பத்துக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது ஆகியவற்றில் செலவிட வேண்டும். கடமைகளை அறிந்தவனும், நுண்ணறிவு கொண்டவனுமான ஒரு மன்னன், பாதுகாக்கப்பட்டதை {அவ்வாறு திரட்டப்பட்டுப் பாதுகாக்கப்படும் செல்வத்தை} ஒருபோதும் வீணாக்கமாட்டான்.(35)

மன்னன், சிறியது என எந்தச் செல்வத்தையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது; அவன் எதிரிகளின் பலவீனத்தை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது; அவன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, தன்னை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்; அவன் ஒருபோதும் நுண்ணறிவற்ற மனிதர்களின் நம்பிக்கையைச் சார்ந்திருக்கக் கூடாது.(36) உறுதி {உற்சாகம்}, புத்திசாலித்தனம் {ஸாமர்த்தியம்}, தற்கட்டுப்பாடு {அடக்கம்}, நுண்ணறிவு {அறிவு}, உடல்நலம் {தேகம்}, பொறுமை {சௌரியம்}, துணிவு {தைரியம்}, இடம் மற்றும் நேரத்திற்குத் தேவையான கவனம் {ஜாக்ரதையுணர்வு} ஆகிய இந்த எட்டு பண்புகளும், சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும் செல்வத்தைப் பெருகவே வழிவகுக்கும்.(37) சிறு நெருப்பும், தெளிந்த நெய்யூட்டப்பட்டால் பெரும் நெருப்பாகச் சுடர்விட்டெரியும். ஒரே ஒரு விதை கூட ஆயிரம் மரங்களை உண்டாக்கிவிடும். எனவே, ஒரு மன்னன், தன் வருவாயும், செலவினங்களும் பெரிய அளவில் இருப்பதாகக் கேள்விப்பட்டாலும், சிறிய பொருட்களை அலட்சியம் செய்யக்கூடாது.(38) ஓர் எதிரியானவன், சிறுவனாகவோ, இளைஞனாகவோ, முதியவனாகவோ இருப்பினும், கவனமில்லாத மனிதனைக் கொல்வதில் வெல்வான். முக்கியமற்ற ஓர் எதிரியும் பலமடைந்தால், ஒரு மன்னனையே அழித்துவிடுவான். எனவே, காலத்தின் தேவைகளை அறிந்த மன்னனே ஆட்சியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(39) ஓர் எதிரி பலவானாகவோ, பலவீனனாகவோ இருப்பினும், கபடத்தால் வழிநடத்தப்படும் அவன், ஒரு மன்னனின் புகழை மிக விரைவில் அழித்து, அவனால் அடையப்படும் அறத்தகுதியைத் தடுத்து, அவனுடைய சக்தியையே இழக்கச் செய்துவிடுவான். எனவே ஒழுங்குபடுத்தப்பட்ட மனம் கொண்ட மன்னன் ஒருவன், தனக்கு ஓர் எதிரி இருக்கும்போதும் ஒருபோதும் கவனமில்லாமல் இருக்கக்கூடாது.(40)

நுண்ணறிவு கொண்ட ஒரு மன்னன், செழிப்பையும், வெற்றியையும் அடைய விரும்பினால், அவன் தன் செலவினம், வருவாய், சேமிப்பு, நிர்வாகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, அமைதியையோ, போரையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் காரணமாக மன்னனானவன், நுண்ணறிவுமிக்க ஓர் அமைச்சனின் உதவியை நாட வேண்டும்.(41) சுடர்மிக்க நுண்ணறிவானது ஒரு பலமிக்க மனிதனையும் {எதிரியையும்} பலவீனமடையச் செய்யும்; வளர்ந்து வரும் பலமானது நுண்ணறிவால் பாதுகாக்கப்படும்; வளர்ந்து வரும் ஒரு பகைவன் நுண்ணறிவால் பலவீனமடையச் செய்யப்படுவான். எனவே, நுண்ணறிவின் விதிகளுக்கு இணக்கத்துடன் செய்யப்படும் அனைத்துச் செயலும் போற்றத் தகுந்தவையே ஆகும்.(42) பொறுமையுள்ளவனும், குறையேதும் இல்லாதவனுமான மன்னன் விரும்பினால், சிறிய படையின் உதவியை மட்டுமே கொண்டு அவன் விருப்பங்கள் அனைத்தின் பயன்களையும் அடைவான். எனினும், தன்னலம் நாடும் துதிபாடிக்கூட்டத்தால் சூழப்பட்டிருப்பதை விரும்பும் மன்னன், சிறு நன்மை அடைவதில் கூட ஒருபோதும் வெல்லமாட்டான்.(43) இந்தக் காரணங்களால், மன்னன் தன் மக்களிடம் இருந்து செல்வத்தைப் பெறுவதில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு மன்னன் தொடர்ந்து தன் மக்களை ஒடுக்கினால், ஒரு நொடி மட்டுமே மின்னும் மின்னலின் கீற்றைப் போல அவன் அழிவை அடைவான்.(44) கல்வி, தவம், பரந்த செல்வம் ஆகியவற்றையும், உண்மையில் அனைத்தையும் உழைப்பால் {முயற்சியால்} ஈட்ட முடியும். உடல் படைத்த உயிரினங்களில் தோன்றும் உழைப்பானது {முயற்சியானது} நுண்ணறிவாலேயே ஆளப்படுகிறது. எனவே உழைப்பே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதப்பட வேண்டும்.(45)

சக்ரன் {இந்திரன்}, விஷ்ணு, சரஸ்வதி மற்றும் பெரும் சக்தி படைத்த, நுண்ணறிவுமிக்கப் பல உயிரினங்களின் {பூதங்களின்} வசிப்பிடமாக மனித உடலே இருக்கிறது. எனவே, அறிவு கொண்ட மனிதன் ஒருவன் ஒருபோதும் உடலை[3] அலட்சியம் செய்யக்கூடாது.(46) பேராசை கொண்ட மனிதன் ஒருவன், தொடர்ந்த கொடைகளின் மூலம் அடக்கப்பட வேண்டும். பேராசை கொண்டவன் மக்களின் செல்வத்தைப் பறிப்பதில் ஒருபோதும் தணிவடைய மாட்டான். எனினும், இன்புறும் காரியங்களில் அனைவரும் பேராசைக்காரர்களாகவே இருக்கிறார்கள். எனவே, ஒரு மனிதன் செல்வத்தை இழந்தால், அவன் (செல்வத்தால் அடையப்படும் பொருட்களான) அறம் மற்றும் இன்பத்தை இழந்தவனாகிறான்.(47) பேராசைக்கார மனிதன் ஒருவன், பிறரின் செல்வம், இன்பங்கள், மகன்கள், மகள்கள் மற்றும் செழிப்பை அபகரிக்கவே முனைகிறான். பேராசைக்கார மனிதர்களில் அனைத்து வகைக் குற்றங்களும் தென்படும். எனவே, மன்னன் ஒரு பேராசைக்கார மனிதனை தன் அமைச்சராகவோ, அதிகாரியாகவோ ஒருபோதும் நியமிக்கக்கூடாது.(48) ஒரு மன்னன், (உரிய முகவர்கள் இல்லாத போது) எதிரியின் நிலையையும், செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள ஓர் அற்பனையும் அனுப்பலாம். ஞானம் கொண்ட ஆட்சியாளன் ஒருவன், தன் எதிரிகளின் முயற்சிகள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் கலங்கடிக்க வேண்டும்.(49) நம்பிக்கை நிறைந்தவனும், உயர்குடி பிறந்தவனுமான எந்த மன்னன், கல்வியாளர்களும், அறவோருமான பிராமணர்களின் அறிவுரையை நாடுவானோ, எவன் தன் அமைச்சர்களால் பாதுகாக்கப்படுகிறானோ, அவன் {அந்த மன்னன்}, கப்பங்கட்டும் தன் தலைவர்கள் அனைவரையும் உரிய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறான்[4].(50)ஓ! மனிதர்களின் இளவரசே {யுதிஷ்டிரனே}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். உன் நுண்ணறிவின் துணையுடன் அவற்றைக் கவனிப்பாயாக. தன் ஆசானுக்குக் கீழ்ப்படிந்து, இவற்றைக் கவனிக்கும் மன்னன், மொத்த உலகையும் ஆள்வதில் வெல்கிறான்.(51) கொள்கையில் இருந்து அடையப்படும் இன்பத்தை அலட்சியம் செய்து, விதி கொண்டு வரும் வாய்ப்பை நாடும் மன்னன், அரசு தொடர்புடைய இன்பத்தை அடைவதிலும், மறுமையில் அருள் உலகங்களை அடைவதிலும் ஒருபோதும் வெல்வதில்லை.(52) போர் மற்றும் அமைதியின் தேவைகளுக்கு உரிய முறையில் பெரும் கவனத்துடன் இருக்கும் மன்னன், செல்வத்துக்காகப் புகழ்பெற்றவர்களும், நுண்ணறிவு மற்றும் நன்னடத்தைக்காக வழிபடப்படுபவர்களும், சாதனைகளைக் கொண்டவர்களும், போரில் துணிவுமிக்கவர்களும், உழைப்புக்கு {முயற்சிக்கு} ஆயத்தமாக இருப்பவர்களுமான எதிரிகளைக் கூடக் கொல்வதில் வெல்கிறான்.(53) பல்வேறு வகையான செயல்கள் மற்றும் நடவடிக்கைகளால் அமையும் வழிமுறைகளை மன்னன் கண்டுபிடிக்க வேண்டும். அவன் ஒருபோதும் விதியை நம்பியிருக்கக்கூடாது. குற்றமற்ற மனிதர்களிடம் குற்றங்களைக் காணும் ஒருவன், செழிப்பையும், புகழையும் அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(54) இரு நண்பர்கள், ஒரே செயலை நிறுவேற்றுவதில் ஈடுபடும்போது, அவர்கள் இருவரில் அந்தப் பணியில் பெரும் சுமையைத் தன் பங்காக ஏற்றுக் கொள்பவனையே எப்போதும் ஞானிகள் மெச்சுகிறார்கள்.(55) நான் உனக்குச் சொன்ன அரச கடமைகளைச் செய்வாயாக. மனிதர்களைப் பாதுகாக்கும் கடமையில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக. அப்போது நீ அறவெகுமதியை நீ எளிதில் அடைவாய். மறுமையில் உள்ள புகழுலகங்கள் அனைத்தும் தகுதியை {புண்ணியத்தைச்} சார்ந்தே இருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(56)

குற்றமும், தண்டனையும் – சட்டம்! – சாந்திபர்வம் பகுதி – 121-தண்டனை என்பது யாது? அதன் தோற்றம், பண்புகள், விழிப்புநிலை ஆகியவற்றையும், தண்டனை சார்ந்திருக்கும் வியவஹாரம் {சட்டம்} என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீ இப்போது மன்னர்களின் கடமைகளைக் குறித்த உமது உரையை நிறைவு செய்துவிட்டீர். அனைத்தும் தண்டனையைச் சார்ந்தே இருப்பதால், தண்டனையே உயர்ந்த நிலையில் இருப்பதாகவும், அனைத்துக்கும் தலைவனாக இருப்பதாகவும் நீர் சொன்னவற்றிலிருந்து தெரியவருகிறது.(1) ஓ! பலமிக்கவரே, பெரும் சக்தி கொண்டதும், எங்கும் இருப்பதுமான தண்டனையானது, தேவர்கள், முனிவர்கள், உயர் ஆன்ம பித்ருக்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், சத்யஸ்கள், அல்லது இவ்வுலகின் உயிரினங்கள் ஆகிய அனைத்துக்கும் மத்தியில் முதன்மையானதாக இருப்பதாகத் தெரிகிறது.(2,3) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அசைவன மற்றும் அசையாதன அடங்கிய மொத்த உலகமும் தண்டனையைச் சார்ந்தே இருப்பதாக நீர் சொன்னீர்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்தத் தண்டனையானவன் எவன் என்பதை அறிய இப்போது நான் விரும்புகிறேன்.

அவன் என்ன வகையைச் சார்ந்தவன்?
அவனுடைய வடிவம் என்ன?
அவனுடைய நிலை என்ன?(5)
அவன் எதனால் செய்யப்பட்டவன்?
அவன் தோன்றியது எப்போது?
அவனது பண்புகள் என்னென்ன?
அவனது காந்தி என்ன?

வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் அவன் கவனமானவனாகவும், விழிப்புடனும் எவ்வாறு இருக்கிறான்?(6) இந்த அண்டத்தைப் பாதுகாத்துக் கொண்டு நித்திய விழிப்புடன் இருக்கும் அவன் எவன்? அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானதாக அறியப்படுபவனான அவன் எவன்? உண்மையில், தண்டனை என்றழைக்கப்படும் உயர்ந்தவன் எவன்? தண்டனையாவன் எதைச் சார்ந்து இருக்கிறான்? அவனது வழி என்ன?” என்று கேட்டான்.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருகுல வழித்தோன்றலே, தண்டனை என்பது யார்? அவன் ஏன் வியவஹாரம் என்றழைக்கப்படுகிறான் என்பதைக் கேள். அனைத்துப் பொருட்களும் எவனைச் சார்ந்திருக்கின்றனவோ, அவனே தண்டனை என்றழைக்கப்படுகிறான்.(8) அறம் எவனைக் கொண்டு நிலைநாட்டப்படுமோ அவனே தண்டனையாவான். அவன் சில வேளைகளில் வியவஹாரம் என்றும் அழைக்கப்படுகிறான். கவனமாக விழிப்புடன் இருக்கும் மன்னனின் அறம் கெடாமல் இருக்கக் காரணமாக இருப்பதால் (தண்டனையானவன்) அப்பெயரில் அழைக்கப்படுகிறான்.(9) இதன் காரணமாகவே, அதற்கு வியவஹாரம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது[1].ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மனு, ’அன்புக்குரியனவாகவும், அதே வேளையில் வெறுக்கத்தக்கனவாகவும் உள்ள உயிரினங்கள் அனைத்தையும், தண்டக்கோல் தரித்துப் பாரபட்சமில்லாமல் பாதுகாப்பவன் எவனோ, அவனே அறவடிவானவன் {அறவோன் = தர்மன்} என்று சொல்லப்படுகிறான்’ என்ற அனைத்திலும் முதன்மையான இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்.(10,11) ஓ! மன்னா, நான் சொன்ன இந்த வார்த்தைகள் முதன்முதலில் பழங்காலத்தில் மனுவால் சொல்லப்பட்டன. அவை பிரம்மனின் உயர்ந்த வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன[2].(12) இந்த வார்த்தைகளே முதலில் பேசப்பட்டதால், அவை முதல் வார்த்தைகள் என்று அறியப்படுகின்றன. அடுத்தவரின் உடைமைகளை முறையில்லாமல் பறிப்பது தண்டனையால் தடுக்கப்படுவதால், தண்டனையானது, வியவஹாரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.(13) நன்கு செயற்படுத்தப்படும் தண்டனையைச் சார்ந்தே, {அறம், பொருள், இன்பம் ஆகிய} மூன்று தொகுப்புகளும் எப்போதும் இருக்கின்றன. தண்டனையானவன் பெருந்தேவனாவான். வடிவத்தில் அவன் ஒரு சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிகிறான்.(14) கருங்குவளை {நீலோத்பல} மலரின் இதழ்களைப் போல அவன் கரிய நிறம் கொண்டவனாவான். அவன், நான்கு பற்களையும், நான்கு கரங்களையும், எட்டு கால்களையும், கண்கள் பலவற்றையும் கொண்டவனாவான். அவனது காதுகள் கணைகளைப் போன்று கூர்மையானவை, அவனது மயிர் குத்திட்டு நிற்கிறது.(15) அவன் சடா முடியும், இரு நாவுகளையும் கொண்டவனாவான். அவனது முகம் தாமிரத்தின் வண்ணத்தைக் கொண்டதாகும், அவன் சிங்கத் தோலை உடுத்தியிருக்கிறான். {தண்டனையெனும்} அந்தத் தடுக்கப்பட முடியாத தேவன் இத்தகு கடும் வடிவையே ஏற்றிருக்கிறான்[3].(16)மேலும் தண்டனையானவன், வாள், வில், கதாயுதம், ஈட்டி {வேல்}, திரிசூலம், தடி, கணை, உலக்கை, போர்க்கோடரி, சக்கரம், சுருக்குக் கயிறு {பாசம்}, தடி, ரிஷ்டி, தோமரம் மற்றும் உலகில் உள்ள அனைத்து வகை ஆயுதங்களின் வடிவை ஏற்று இவ்வுலகில் உலவி வருகிறான்.(17,18) உண்மையில் தண்டனையானவன், துளைத்தல், வெட்டுதல், பீடித்தல், துண்டித்தல், பிரித்தல், தாக்குதல், கொல்லுதல், எதிர்த்து விரைதல் ஆகியவற்றின் மூலம் இவ்வுலகில் உலவி வருகிறான்.(19) ஓ! யுதிஷ்டிரா, இந்தத் தண்டனையானவன், வாள் {அஸி – ஆன்மா}, கத்தி {விசஸனம் – துன்பம்}, அறம் {தர்மம்}, சீற்றம் {தீக்ஷ்ணவர்மா}, தடுக்கப்படமுடியாதது {துராஸதம்}, செழிப்பின் தாய் {ஸ்ரீகர்ப்பம்}, வெற்றி {விஜயம்}, தண்டிப்பவன் {சாஸ்தா}, தடுப்பவன் {வ்யவகாரம்}, நித்தியமானவன் {ப்ரஜாகரம்}, சாத்திரங்கள், பிராமணன், மந்திரம் {பிராம்மணமந்த்ரம்}[4], பழிவாங்குபவன் {ப்ரவசனம்}, நீதி வழங்குபவர்களில் முதன்மையானவன் {பரம்}, நீதிபதி {தர்மபாலம்}, {அக்ஷரம்}, {கோபம்}, {ஸத்யகம்}, அழிவில்லாதவன் {நித்யகம்}, தேவன் {கிருஜம்}, தடுக்கப்படமுடியாத வழி கொண்ட ஒருவன், எப்போது முந்தியிருப்பவன், முதலில் தோன்றியவன், பற்றில்லா ஒருவன் {அஸங்கம்}, ருத்ரனின் ஆன்மா {ருத்ரதனயம்}, மூத்த மனு, {மனு, ஜ்யேஷ்டம்}, பெரும் நன்மை {சிவங்கரம்} என்ற பெயர்களிலும் அறியப்படுகிறான்.(20-22)

தண்டனையே புனிதமான விஷ்ணு ஆவான். அவனே பலமிக்க நாராயணன் ஆவான். அவன் எப்போதும் பயங்கர வடிவையே ஏற்றுக் கொண்டிருப்பதால், அவன் மஹாபுருஷன் என்று அழைக்கப்படுகிறான்.(23) அவனது மனைவியான அறநெறியானவள், பிரம்மனின் மகள், லட்சுமி, விரிதி {நீதி}, சரஸ்வதி, அண்டத்தின் தாய் என்ற பெயர்களில் அறியப்படுகிறாள். இவ்வாறு தண்டனையானவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான்.(24)

அருள் மற்றும் சாபம், இன்பம் மற்றும் துன்பம், அறம் {நீதி} மற்றும் மறம் {அநீதி}, பலம் மற்றும் பலவீனம், நல்லூழ் மற்றும் தீயூழ், தகுதி மற்றும் தகுதியின்மை, நற்பண்பு {குணம்} மற்றும் குறை {தோஷம்},(25) விருப்பம் மற்றும் வெறுப்பு, பருவம் {ருது} மற்றும் மாதம், இரவு, பகல் மற்றும் கணம், கவனம் மற்றும் கவனமின்மை, இன்பம் மற்றும் கோபம், அமைதி மற்றும் தற்கட்டுப்பாடு,(26) விதி மற்றும் உழைப்பு {முயற்சி}, முக்தி மற்றும் கண்டிப்பு, அச்சம் மற்றும் அச்சமின்மை, தீங்கிழைத்தல் {ஹிம்சை} மற்றும் தீங்கிழையாமை {அஹிம்சை}, தவம், வேள்வி மற்றும் கடும் துறவு, நஞ்சு மற்றும் நல்ல உணவு,(27) தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவு, கொலைபாதகச் செயல்கள் அனைத்தின் விளைவு, திமிர், கொடூரம், ஆணவம், செருக்கு, பொறுமை, கொள்கையுடைமை, கொள்கையின்மை,(28) சக்தியின்மை மற்றும் சக்தி, மரியாதை, அவமரியாதை, சிதைவு, உறுதியானநிலை, பணிவு, ஈகை, தகுந்த நேரம் மற்றும் தகாதநேரம்,(29) பொய்ம்மை, ஞானம், உண்மை, நம்பிக்கை, நம்பிக்கையின்மை, ஆண்மையின்மை, வணிகம், ஆதாயம், இழப்பு, வெற்றி, தோல்வி,(30) கடுமை மென்மை, மரணம், அடைதல் மற்றும் அடையாமை, ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை, செய்யப்படக்கூடியது மற்றும் செய்யப்படக்கூடாதது, பலம் மற்றும் பலவீனம்,(31) வன்மம் மற்றும் நல்லெண்ணம், அறம் மற்றும் மறம், வெட்கம் மற்றும் வெட்கமின்மை, அடக்கம், செழுமை மற்றும் வறுமை,(32) ஆற்றல், செயல்கள், கல்வி, நாவண்மை, கூரிய அறிவு ஆகிய இவையெனைத்தும், ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகில் தண்டனையின் வடிவங்களே. எனவே, தண்டனையென்பது அதிகமான பல்வேறு வடிவங்களைக் கொண்டதாகும்.(33)

தண்டனையில்லாவிட்டால் உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று கலங்கடிக்கும். வாழும் உயிரினங்கள், ஓ! யுதிஷ்டிரா, தண்டனை மீது கொண்ட அச்சத்தாலேயே ஒன்றையொன்று கொல்லாதிருக்கின்றன.(34) ஓ! மன்னா, தண்டனையால் பாதுகாக்கப்படும் குடிமக்கள், தங்கள் ஆட்சியாளனின் வலிமையை அதிகரிக்கின்றனர். இதன் காரணமாகவே தண்டனையானது அனைத்திற்கும் புகலிடமாகக் கருதப்படுகிறது.(35) ஓ! மன்னா, தண்டனையே உலகை அறத்தின் பாதையில் விரைவாக நிலைநிறுத்துகிறது. உண்மையைச் சார்ந்திருக்கும் அறமானது பிராமணர்களிடம் இருக்கிறது.(36) அறத்துடன் கூடிய முதன்மையான பிராமணர்கள் வேதங்களில் பற்று கொள்கிறார்கள். வேதங்களில் இருந்து வேள்விகள் வருகின்றன. வேள்விகள் தேவர்களை நிறைவு செய்கின்றன.(37) அவற்றால் நிறைவடையும் தேவர்கள், பூமிவாசிகளை இந்திரனிடம் ஒப்படைக்கிறார்கள். பூமிவாசிகளுக்கு நன்மை செய்வதற்காக இந்திரன் அவர்களுக்கு (எது இல்லாமல் பயிர்களும், விளைச்சலும் பொய்த்துப் போகுமோ அந்த மழையின் வடிவில்) உணவை அளிக்கிறான்.(38) உயிரினங்கள் அனைத்தின் வாழ்வு உணவைச் சார்ந்தே இருக்கிறது. உணவிலிருந்தே உயிரினங்கள் தங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்று வளர்ச்சியடைகின்றன. தண்டனையானவன் (க்ஷத்திரிய ஆட்சியாளனின் வடிவில்) அவர்களுக்கு {உயிரினங்களுக்கு} மத்தியில் விழிப்புடன் இருக்கிறான்.(39) இந்த நோக்கத்திற்காகவே தண்டனையானவன், மனிதர்களுக்கு மத்தியில் ஒரு க்ஷத்திரியனின் வடிவை ஏற்கிறான். மனிதர்களைப் பாதுகாக்கும் அவன், எப்போதும் கவனத்துடனும், ஒருபோதும் சிதையாமலும் விழிப்புடன் இருக்கிறான்.(40)

மேலும் தண்டனைக்கு, தேவன் {ஈஸ்வரன்}, மனிதன் {புருஷன்}, உயிர் {பிராணனன்}, சக்தி {ஸத்வம்}, இதயம் {வ்ருத்தம்}, அனைத்துயிர்களின் தலைவன் {ப்ரஜாபதி}, அனைத்துப் பொருட்களின் ஆன்மா {பூதாத்மா}, வாழும் உயிர் {ஜீவன்} என்று எட்டு பெயர்களும் இருக்கின்றன.(41) (படைகளின் வடிவில்) பலம் கொண்டவனும், ஐந்து பொருட்களின் சேர்க்கையாயிருப்பவனுமான மன்னனுக்குச் செழிப்பு மற்றும் தண்டக் கோல் ஆகியவற்றைத் தேவன் {ஈஸ்வரன்} கொடுத்தான்[5].(42) ஓ! யுதிஷ்டிரா, கீழே சொல்லப்பட்டுள்ள {இதற்கு அடுத்து சொல்லப்படும்} எட்டுப் பொருட்களுடன் சேர்த்து உன்னதக் குருதி, பெருஞ்செல்வமுள்ள அமைச்சர்கள், அறிவு, (உடற்பலம் மற்றும் மனோசக்தி போன்ற) பல்வேறு வகையான சக்திகள் ஆகியவற்றையும், (நன்கு நிரப்பப்பட்ட கருவூலத்தைச் சார்ந்திருக்கும்) வேறு சக்திகளையும் மன்னன் நாட வேண்டும்.(43) யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைவீரர்கள், படகுகள், பொருத்தமான கூலியாட்கள் (முகாமைப் பின்தொடர்ந்து பிற வேலைகளைச் செய்யக்கூடியவர்கள் {சுமை தூக்குபவர்கள்}), மக்கள் தொகை பெருக்கம், கால்நடை ஆகியவையே {முன் சொல்லப்பட்ட} அந்த எட்டு பொருட்களாகும்.(44) கவசங்கள் மற்றும் வேறு பாதுகாப்பு உறைகளைப் பூண்டிருக்கும் தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைவீரர்கள், குதிரைப்படை வீரர்கள், காலாட்படை வீரர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர் படையின் அங்கத்தினராவர்.(45)பிச்சைக்காரர்கள், முக்கிய நீதிபதிகள், கணியர்கள் {சோதிடர்கள்}, தணிவுச் சடங்குகள் மற்றும் அதர்வணச் சடங்குகளைச் செய்பவர்கள், கருவூலம், கூட்டாளிகள், தானியங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் ஆகியன,(46) ஏழு பண்புகளையும், எட்டு அங்கங்களையும் கொண்ட ஒரு நாட்டின் உடலாகின்றன. தண்டனையும், ஒரு நாட்டின் மற்றொரு பலமிக்க அங்கமே. (ஒரு படையின் வடிவில் உள்ள) தண்டனையே ஒரு நாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது.(47) க்ஷத்திரியப் பயன்பாட்டுக்காகத் தேவனே பெருங்கவனத்துடன் தண்டனையை அனுப்பினான். அழிவில்லா அண்டமானது, பாரபட்சமற்ற தண்டனையின் உடல்வடிவமே ஆகும்.(48) அறத்தின் வழிகளைச் சுட்டிக்காட்டும் தண்டனையைவிட மன்னர்களால் மதிக்கத்தக்கது வேறெதுவும் இல்லை. உலகின் பாதுகாப்புக்காகவும், பல்வேறு மனிதர்களின் கடமைகளை நிறுவுவதற்காகவும் பிரம்மனே தண்டனையை அனுப்பினான் (படைத்தான்).(49) வாதி, பிரதிவாதிகளின் சச்சரவுகளில் எழும் மற்றொரு வகை வியவஹாரமும், பிரம்மனில் இருந்தே எழுந்தது. இரு தரப்பினருக்கு மத்தியிலும் முக்கிய நம்பிக்கையையூட்டும் அந்த வியவஹாரம் நன்மைபயக்குவதாகவே தெரிகிறது.(50)

வேதத்தை ஆன்மாவாகக் கொண்ட {இரண்டாவது வகையைச் சார்ந்த} மற்றொரு வியவஹாரமும் இருக்கிறது. அது வேதத்தையே தன் காரணமாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, குடும்பப் பழக்கவழக்கங்களின் தொடர்புடையதாக இருப்பினும், சாத்திரங்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ள மற்றொரு (மூன்றாவது) வகையைச் சேர்ந்த வியவஹாரமும் இருக்கிறது[6].(51) இந்த வியவஹாரமானது, மேலே சொல்லப்பட்டபடி, வழக்காடுபவர் இருவரின் நம்பிக்கையின் மூலம் விவரிக்கப்படுவதாகவும், அது மன்னர்களிடம் {மட்டுமே} இருப்பதாகவும் நம்மால் அறியப்பட வேண்டும். அது தண்டனை என்ற பெயராலும், அத்தாட்சி {ஆதாரம்} என்ற பெயராலும் அறியப்பட வேண்டும்.(52) தண்டனையானது அத்தாட்சியால் ஒழுங்குபடுத்தப்படுவதாகத் தெரிந்தாலும், அது தன் ஆன்மாவை வியவஹாரத்திலேயே {சட்டத்திலேயே} கொண்டுள்ளது. எது வியவஹாரம் என்று அழைக்கப்படுகிறதோ, அஃது உண்மையில் வேதவிதிகளை அடிப்படையாகக் கொண்டதே.(53) வேதங்களை ஆன்மாவாகக் கொண்டதாகச் சொல்லப்படும் வியவஹாரமானது, அறநெறி, அல்லது கடமையே ஆகும். கடமை மற்றும் அறநெறிகளை நம்பும் மனிதர்களுக்கு அது நன்மையை உண்டாக்குகிறது. தூய ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் பொதுச் சட்டத்தில் செய்துள்ளபடியே வியவஹாரம் குறித்துப் பேசுகின்றனர்.(54) ஓ! யுதிஷ்டிரா, மூன்றாம் வகை வியவஹாரமும் மனிதர்களின் பாதுகாவலனாகவும், வேதத்தைத் தன் வேராகக் கொண்டதாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் நிலைநிறுத்துகிறது. உண்மையையே ஆன்மாவாகக் கொண்டிருக்கும் அது {மூன்றாவது வியவஹாரம்} செழிப்பை உண்டாக்குவதாகும்.(55)எது தண்டனையோ, அது நித்திய வியவஹாரமாகவே {அழிவில்லா சட்டமாகவே} நம்மால் காணப்படுகிறது. எது வியவஹாரம் என்று சொல்லப்படுகிறதோ, அஃது உண்மையில் வேதமே ஆகும்.(56) எது வேதமோ, அதுவே நெறியும், கடமையும் ஆகும். எது நெறியும், கடமையும் ஆகுமோ அதுவே அறவழியாகும். இந்த இறுதியானது எதுவோ, அஃது அனைத்து உயிரினங்களின் தலைவனான பெரும்பாட்டன் பிரம்மனிடம் தொடக்கத்திலேயே இருந்தது.(57) தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பாம்புகள், மேலும் பிற அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த அண்டத்திற்கும் படைப்பாளன் பிரம்மனே.(58) எனவே, வழக்காடும் இரு தரப்பினரிடம் கொண்ட நம்பிக்கையால் விவரிக்கப்படும் வியவஹாரமும் அவனிடம் {பிரம்மனிடம்} இருந்தே வந்தது. வியவஹாரத்தைப் பொறுத்தவரையில், இதன் காரணமாகவே பின்வருவதை அவன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்:(59) “தன் கடமைக்கு ஏற்ப ஆட்சி செய்யும் மன்னனால், தாயோ, தந்தையோ, உடன் பிறந்தவனோ {சகோதரனோ}, மனைவியோ, புரோஹிதனோ தண்டிக்கப்படக்கூடாதவர்கள் அல்ல”[7] {என்று விதித்திருக்கிறான் பிரம்மன்}” என்றார் {பீஷ்மர்}.(60)

வசுஹோமனின் தண்டபோதனை! – சாந்திபர்வம் பகுதி – 122-தண்டனையின் தோற்றம் குறித்து வசுஹோமன் மற்றும் மாந்தாதாவுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. அங்கர்களுக்கு மத்தியில் வசுஹோமன் என்றழைக்கப்படும் பெரும் மன்னன் ஒருவன் இருந்தான்.(1) அந்த மன்னன் எப்போதும் பக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுபவனாகத் தன் மனைவியின் துணையுடன், எப்போதும் கடும் தவங்களைச் செய்து வந்தான். அவன், பித்ருக்கள் மற்றும் தெய்வீக முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் முஞ்சப்பிருஷ்தம் என்றழைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றான். அங்கே மேருவின் தங்க மலைகளுக்கு அருகில், இமயத்தின் கொடுமுடியில் உள்ள நன்கறியப்பட்ட ஓர் ஆலமரத்தின் நிழலின் கீழ், (பெரும் பிராமணரான) ராமர் {பரசுராமர்} தன் சடாமுடியை ஒன்றாகச் சேர்த்து கட்டியிருந்தார்[1].(3) ஓ! ஏகாதிபதி, அக்காலத்தில் இருந்து, ருத்திரனால் பெரிதும் விரும்பப்பட்ட அந்த இடம், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களால் முஞ்சப்பிருஷ்தம் என்று அழைக்கப்பட்டது.(4) மன்னன் வசுஹோமன், அந்த இடத்தில் வசித்து, பல தெய்வீகப் பண்புகளை அடைந்து, பிராமணர்களின் மதிப்பை ஈட்டி, புனிதத்தால் ஒரு தேவ முனிவனாகக் கருதப்பட்டான்.(5)

எதிரிகளை நொறுக்குபவனும், சக்ரனின் நண்பனும், பெரும் ஆன்மா கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா} வசுஹோமனின் அந்த மலை ஆசிரமத்திற்கு வந்தான்.(6) அங்கே வந்த மாந்தாத்ரி {மாந்தாதா}, கடுந்தவங்களைக் கொண்ட மன்னன் வசுஹோமனைக் கண்டு, அவனுக்கு முன்னிலையில் பணிவுடன் நின்றான்.(7) வசுஹோமன் தன் விருந்தினனுக்குக் கால்களைக் கழுவிக்கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியமும் கொடுத்து, நலம் விசாரித்து, ஏழு அங்கங்களுடன் கூடிய அவனுடைய நாட்டைக் குறித்தும் விசாரித்தான்.(8) அதன் பிறகு, வசுஹோமன், பழங்காலத்து அறவோரின் நடைமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றும் தன் அரசவிருந்தாளியிடம் {மாந்தாதாவிடம்}, “ஓ! மன்னா {மந்தாதா}, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(9) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு கேட்கப்பட்டவனும், மன்னர்களில் சிறந்தவனுமான மாந்தாத்ரி {மாந்தாதா}, மிகவும் நிறைவடைந்து, சுகமாக அமர்ந்திருக்கும் பெரும் ஞானியன வசுஹோமனுக்குப் பின்வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(10)

மாந்தாத்ரி {வசுஹோமனிடம்}, “ஓ! மன்னா {வசுஹோமரே}, நீர் பிருஹஸ்பதியின் சித்தாந்தங்கள் அனைத்தையும் கற்றவராவீர். ஓ மனிதர்களில் சிறந்தவரே, உசனஸால் {சுக்கிராச்சாரியரால்} விதிக்கப்பட்ட சித்தாந்தங்களையும் நீர் அறிவீர்.(11) நான் தண்டனையின் பிறப்பைக் குறித்து அறிய விரும்புகிறேன். தண்டனைக்கு முன்பு விழிப்புடன் இருந்தது எது? மேலும் அதன் முடிவென்னவென்று சொல்லப்படுகிறது?(12) தண்டனை க்ஷத்திரியனைச் சார்ந்தது என்று எவ்வாறு உண்டானது? ஓ! பெரும் ஞானியே இவை யாவையும் எனக்குச் சொல்வீராக. உமக்குப் பயிற்சிக் கட்டணம் {குருதக்ஷிணை} கொடுக்க ஆயத்தமான ஒரு சீடனாக நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றான்[2].(13)

வசுஹோமன் {மந்தாத்ரியிடம்}, “ஓ! மன்னா, உலகைத் தாங்கிப் பிடிக்கும் தண்டனை எவ்வாறு எழுந்தது என்பதைக் கேட்பாயாக. அறத்தின் ஆன்மாவும், அழிவில்லாததுமான அஃது {தண்டனை}, அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு உரிய அரசைப் பராமரித்துக் கொள்வதற்காக உண்டாக்கப்பட்டது.(14) ஒரு காலத்தில், அனைத்துலகின் பெரும்பாட்டனும், தெய்வீகமானவனுமான பிரம்மன், ஒரு வேள்வி செய்ய விரும்பியபோது, தம்மைப் போன்ற தகுதிகளைக் கொண்ட ஒரு புரோகிதரைக் காணத் தவறினார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(15) இதன் காரணமாக அவர் {பிரம்மன்} தமது மூளையில் கருத்தரித்து, அங்கேயே {அந்த மூளையிலேயே} நீண்ட வருடகாலங்களாக அந்தக் கருவைத் தாங்கி வந்தார். ஆயிரம் வருடம் கடந்ததும் அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} தும்மினார். அச்செயல்பாட்டால், அந்தக் கரு அவரது தலையில் இருந்து கீழே விழுந்தது.(16) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {மந்தாத்ரி}, பிரம்மனில் இருந்து இவ்வாறு பிறப்பை அடைந்த அந்தத் தெய்வீகமானவர், க்ஷுபர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் சக்திகளைக் கொண்ட அவர், உயிரினங்களின் தலைவராக ஆனார். ஓ! மன்னா {மந்தாத்ரி}, அந்த க்ஷுபரே, உயர் ஆன்ம பெரும்பாட்டனின் {பிரம்மனின்} வேள்வியில் புரோகிதரானார்.(17)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {மந்தாத்ரி}, பிரம்மனின் அந்த வேள்வி தொடங்கியதும் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஏற்றுக் கொண்ட வடிவத்தின் விளைவால் தண்டனை மறைந்தது[3].(18) தண்டனை மறைந்ததும், அனைத்து உயிரினங்களுக்கு மத்தியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்கு மேலும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதற்குள் எந்த வேறுபாடும் இல்லாமல் போனது.(19) அனுமதிக்கப்பட்ட பானம் எது, அனுமதிக்கப்படாத பானமெது என்பதில் வேறுபாடு காண்பதை மனிதர்கள் நிறுத்தினர். அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தீங்கிழைக்கத் தொடங்கின. பாலினக்கலவியின் காரியத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போனது.(20) அனைத்து உயிரினங்களும் திருடத் தொடங்கின, ஒருவருக்கொருர் இறைச்சியைப் பறித்தனர். பலவான், பலவீனனைக் கொல்லத் தொடங்கினான். எவரும் தன் அருகில் இருப்பவனிடம் சிறு கருணையும் கொள்ளவில்லை.(21)அப்போது பெரும்பாட்டன் {பிரம்மன்}, அழிவில்லாத தெய்வீக விஷ்ணுவை வணங்கி, வரந்தரும் அந்தப் பெருந்தேவனிடம்,(22) “ஓ! கேசவா, தற்போதைய நிலையில் நீ உன் கருணையைக் காட்டுவதே தகும்[4]. இப்போது நேரும் குழப்பம் மறையும் வகையில் நீ விதிப்பாயாக” என்றார்.(23) இவ்வாறு சொல்லப்பட்டவனும், மகத்தான சூலத்தைத் தரித்தவனுமான[5], அந்தத் தேவர்களில் முதன்மையானவன், நீண்ட நேரம் சிந்தித்து, தன்னையே, தண்டனையின் வடிவாக்கிக் கொண்டான்.(24) சரஸ்வதி தேவி, அறத்தையே கால்களாகக் கொண்ட அந்த வடிவத்தில் {தண்டனை வடிவத்தில்} இருந்தே, மிக விரைவில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட தண்டநீதியை (தண்டனை அறிவியலை} உண்டாக்கினாள்[6].(25)

இதன் பிறகு, மகத்தான சூலத்தைத் தரித்திருந்த அந்தப் பெருந்தேவன் {விஷ்ணு/சிவன்}, சிறிது நேரம் சிந்தித்து, தேவர்களில் ஒரு சிலரை, அவரவர் வகையைச் சேர்ந்தோருக்குத் தலைவர்களாகவோ, ஆட்சியாளர்களாகவோ நியமித்தான்.(26) இதன் பிறகே அவன் ஆயிரம் கண்களைக் கொண்ட தெய்வீக இந்திரனை தேவர்களின் ஆட்சியாளனாக்கினான். விவஸ்வானின் மகனான யமன், பித்ருக்களின் தலைவனாக்கப்பட்டான்.(27) குபேரன், புதையல்களுக்கும் {பொக்கிஷங்களுக்கும்}, ராட்சசர்கள் அனைவருக்கும் தலைவனாக்கப்பட்டான். மேரு மலைகளின் மன்னனாகவும், பெருங்கடல் {சமுத்திர தேவன்} ஆறுகளின் தலைவனாகவும் ஆக்கப்பட்டனர்.(28) பலமிக்க வருணன், நீர்நிலைகள் மற்றும் அசுரர்களுக்கான அரசில் {அரசனாக} நிறுவப்பட்டான். மிருத்யுவானவன், உயிர் மற்றும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான். நெருப்பானவன் {அக்நி}, சக்தி படைத்த அனைத்துப் பொருட்களுக்குத் தலைவனாக்கப்பட்டான்.(29) பலமிக்க ஈசானனும், உயர் ஆன்மா கொண்டவனும், முக்கண்ணனும், அழிவில்லாதவனுமான மஹாதேவன் {சிவன்}, ருத்திரர்கள் அனைவருக்கும் தலைவனாக்கப்பட்டான்[7].(30)வசிஷ்டர் பிராமணர்களின் தலைவராக்கப்பட்டார்,

ஜாதவேதஸ் {அக்னியின் மற்றொரு வடிவம்} வசுக்களின் தலைவனாக்கப்பட்டான்.

சூரியன், ஒளிரும் கோள்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான்,

சந்திரமாஸ் {சந்திரன்}, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களின் தலைவனாக்கப்பட்டான்.(31)

அன்சுமான் அனைத்துச் செடிகொடிகளுக்கும், மூலிகைகளுக்கும் தலைவனாக்கப்பட்டான்.

பலமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனும், பனிரெண்டு கரங்களைக் கொண்டவனுமான குமாரன், அல்லது ஸ்கந்தன், (மஹாதேவனுக்குப் பணிவிடை செய்யும்) கணங்கள் மற்றும் பேய்கள் அனைத்திற்கும் தலைவனாக்கப்பட்டான்.(32)

அழிவு, வளர்ச்சி ஆகிய இரண்டின் வித்துகளையும் கொண்ட காலன், அனைத்து உயிர்கள், மரணத்தின் நான்கு பகுதிகள் (ஆயுதங்கள், நோய்கள், யமன் மற்றும் செயல்கள்) மற்றும் இறுதியாக இன்பம் மற்றும் துன்பத்தின் அரசனாக்கப்பட்டான்.(33)

தலைவர்களுக்குத் தலைவனும், சூலந்தரித்தவனும், உயர்ந்த தேவனுமான மகாதேவனே {சிவனே}, ருத்திரர்களின் தலைவன் என்று ஸ்ருதிகள் அறிவிக்கின்றன.(34)

பிரம்மனுக்கு, அதற்கடுத்து {க்ஷுபர் பிறந்த பிறகு} பிறந்தவரும், அனைத்து உயிரினங்களின் தலைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான க்ஷபரிடம் தண்டனைக்கோல் கொடுக்கப்பட்டது.(35)

உரிய சடங்குகளுடன் அந்த வேள்வி நிறைவடைந்ததும், உரிய மதிப்பை அளித்தபிறகு, மஹாதேவன் {சிவன்}, அறத்தைப் பாதுகாக்கும் தண்டனையை விஷ்ணுவிடம் கொடுத்தான்[8].(36)

விஷ்ணு அதை அங்கிரசுக்குக் கொடுத்தான், தவசிகளில் முதன்மையான அங்கிரஸ், இந்திரனுக்கும், மரீசிக்கும் அதைக் கொடுத்தார். மரிசி அதைப் பிருகுவுக்குக் கொடுத்தார்.(37) பிருகு, அறத்தைப் பாதுகாக்கும் நோக்குடைய அந்தத் தண்டத்தை முனிவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். முனிவர்கள் அதை லோகபாலர்களுக்கு அளித்தனர். லோகபாலர்கள் மீண்டும் அதை க்ஷுபரிடமே அளித்தனர். க்ஷுபர் அதைச் சூரியனின் மகனான மனுவுக்கு அளித்தார். சிராத்தங்களின் தேவனான அவர் (மனு), உண்மையான அறம் மற்றும் செல்வத்தின் பொருட்டு அதைத் தன் மகன்களிடம் கொடுத்தார்.(39)தண்டனையானது, உறுதியின்மையால் அல்லாமல் அறத்தால் வழிநடத்தப்பட்டு எந்தப் பாகுபாடுமின்றி விதிக்கப்பட வேண்டும். அது, தீயோரைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். அபராதங்களும், பறிமுதல்கள் ஆகியன அச்சமூட்டும் நோக்கம் கொண்டவையேயன்றி, மன்னனின் கருவூலத்தை நிரப்புவதற்காக அல்ல.(40) ஒருவனுடைய உடலின் அங்கத்தை இழக்கச்செய்வது, அல்லது மரணம் போன்ற தண்டனைகளை அற்பமான காரணங்களுக்காகக் கொடுக்கக்கூடாது. மலைகளில் இருந்து வீசப்படுவது, நாடு கடத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளால் விதிக்கப்படும் உடல் வலி சார்ந்த தண்டனைகளும் அதுபோன்ற {அற்ப} காரணங்களால் கொடுக்கப்படக்கூடாது.(41) சூரியனின் மகனான மனு உலகின் பாதுகாப்புக்காகத் தண்டக்கோலை (தன் மகன்களிடம்) கொடுத்தார். அடுத்தடுத்து தண்டனையை {தண்டக்கோலைக்} கைகளில் ஏந்தியோரின் மூலம், அஃது உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது.(42) தராசின் {துலாக்கோலின்} உச்சியில் (தண்டக்கோலுடன்) தெய்வீக இந்திரன் விழிப்புடன் இருக்கிறான்; அவனுக்குப் பிறகு, சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட அக்னியும்; அவனுக்குப் பிறகு, வருணனும்; வருணனுக்குப் பிறகு பிரஜாபதியும் {விழிப்புடன் இருக்கின்றனர்};(43) பிரஜாபதிக்குப் பிறகு, கட்டுப்பாட்டைச் சாரமாகக் கொண்ட அறமும் {ஒழுக்கமும்}; அறத்திற்குப் பிறகு, பிரம்மனின் மகனான அழிவில்லா சட்டமும் {வியவஹாரமும்};(44) சட்டத்திற்குப் பிறகு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆற்றலும் விழிப்புடன் இருக்கின்றன; ஆற்றலுக்குப் பிறகு, (தேவர்களை ஆதரிக்க வேள்விகளில் ஆகுதியாகக் கொடுக்கப்படுவதும், உணவாகவும், மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுவதுமான) மூலிகைகளும்; மூலிகைகளுக்குப் பிறகு மலைகளும்;(45) மலைகளுக்குப் பிறகு, அனைத்து வகைச் சாறுகளும் {ரசங்களும்}, அதன் பண்புகளும்; அவற்றுக்குப் பிறகு நிருதி {நிருருதி} தேவியும்; நிருதிக்குப் பிறகு கோள்களும், சொர்க்கத்தின் ஒளிக்கோள்களும்;(46) இவற்றுக்குப் பிறகு வேதங்களும்; வேதங்களுக்குப் பிறகு, குதிரைத் தலை கொண்ட விஷ்ணுவின் பலமிக்க வடிவமும் {ஹயக்கிரீவனும்}; அவனுக்குப் பிறகு, எல்லாம்வல்லவரும், அழிவில்லா பெரும்பாட்டனுமான பிரம்மனும்;(47) பெரும்பாட்டனுக்குப் பிறகு, தெய்வீகமானவனும், அருளப்பட்டவனுமான மஹாதேவனும்; மஹாதேவனுக்குப் பிறகு விஸ்வதேவர்களும்; அவர்களுக்குப் பிறகு பெரும் முனிவர்களும்;(48) முனிவர்களுக்குப் பிறகு தெய்வீக சோமனும்; சோமனுக்குப் பிறகு, அழிவற்றவர்களான அனைத்துத் தேவர்களும்; தேவர்களுக்குப் பிறகு பிராமணர்களும் விழிப்புடன் இருப்பதாக அறிவாயாக.(49) அசையும், மற்றும் அசையாத உயிரினங்களை உள்ளடக்கிய அழிவில்லா அண்டமானது, க்ஷத்திரியர்களால் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளது.(50)

இவ்வுலகில் உயிரினங்கள் விழிப்புடன் வைக்கப்பட்டு, அவர்களுக்கு மத்தியில் தண்டனையும் விழிப்புடன் இருக்கிறது. பெரும்பாட்டனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய தண்டனையே அனைத்தையும் தாங்கிப் பிடிக்கிறது[9].(51) ஓ பாரதா, காலமானது, தொடக்கத்திலும், மத்தியிலும், முடிவிலும் என எப்போதும் விழிப்புடனே இருக்கிறது. உலகங்கள் அனைத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், பலமிக்கவனும், அருளப்பட்டவனும், தேவர்களுக்குத் தேவனுமான மஹாதேவனும் எப்போதும் விழிப்புடன் இருக்கிறான். அவன், கபர்தின், சங்கரன், ருத்திரன், பவன், ஸ்தாணு, உமையின் தலைவன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறான்[10].(52,53) இவ்வாறே தண்டனையானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் விழிப்புடன் இருகிறது. ஓர் அறம்சார்ந்த மன்னன், தண்டனையால் வழிநடத்தப்பட்டு முறையாக ஆள {ஆட்சி செய்ய} வேண்டும்” என்றான் {வசுஹோமன்}”.(54)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வசுஹோமனின் இந்த அறிவுரையைக் கேட்டு, அதில் சொல்லப்பட்டுள்ளபடி நடக்கும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தையும் நிச்சயம் அடைவான்.(55) ஓ! மனிதர்களில் காளையே, அறத்தால் ஆளப்படுவதும், இந்த அண்டத்தைக் கட்டுப்படுத்துவதுமான தண்டனையைக் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(56)

தர்மார்த்தகாமம்! – சாந்திபர்வம் பகுதி – 123-அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பயன்களையும், அறத்தைக் கைவிட்டவன் செய்யத்தகு கேடுநீக்கும் செயல்முறைகளையும், இவை தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் ஆங்கரிஷ்டனுக்கும் முனிவர் காமந்தகருக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, அறம் பொருள், இன்பம் குறித்த முடிவான தீர்மானங்களை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றில் எதைச் சார்ந்து வாழ்வின் போக்கு செல்கிறது?(1) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய ஒவ்வொன்றின் வேராகவ இருப்பவை யாவை? மேலும் அம்மூன்றின் விளைவுகள் என்ன? அவை சில சமயங்களில் ஒன்றோடொன்று கலந்தும், சில வேளைகளில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தவையாகவும், சார்பற்றவையாகவும் {வேறுபட்டும்}இருக்கின்றன” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“இவ்வுலகின் மனிதர்கள் நல்லிதயங்களுடனும், அறத்தின் துணையுடனும் செல்வத்தை அடைய முயலும்போது, காலம், காரணம் மற்றும் செயற்பாடு ஆகியவற்றைப் பொறுத்து, அறம், பொருள், இன்பம் ஆகியன ஒன்று கலந்த நிலையிலும், ஒன்றோடொன்று உடன் உறைந்த நிலையிலும் காணப்படுகின்றன[1].(3) செல்வமானது அறத்தில் வேர் கொண்டுள்ளது, மேலும் இன்பமோ, அச்செல்வத்தின் கனி {பயன்} என்றே சொல்லப்படுகிறது. மேலும் இந்த மூன்றும் மனவுறுதியிலேயே {சங்கல்பத்திலேயே} தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மனவுறுதியானது, பொருள்கள் {நோக்கங்கள்} தொடர்புடையதாகும்.(4) மேலும் அனைத்துப் பொருட்களும் மொத்தமாக இன்ப விருப்பத்தை நிறைவு செய்யவே இருக்கின்றன. அப்போது, இந்த மூன்று திரட்டுகளும் இவற்றையே {மனவுறுதி மற்றும் நோக்கங்களையே} சார்ந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களில் இருந்து முற்றிலும் பிரிந்து இருப்பதே முக்தியாகும் {மோட்சமாகும்}.(5)

[1] “இந்தச் சுலோகத்தை, அறம் சார்ந்த கணவன் ஒருவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் உரிய காலத்தில் கலவியை நாடும் செயலின் மூலம் உரையாசிரியர் விளக்குகிறார். கர்ப்பதானம் Garbhadhan என்ற பெயரில் அறியப்பட்ட சடங்கைச் செய்வதன் மூலம் அறத்தகுதியை அடையலாம். மேலும் {இரண்டாவதாக} அச்செயலில் அவனுக்கு இன்பமும் இருக்கிறது, மேலும் இறுதியில் கிடைக்கும் மகன் என்ற வகையில் அவன் மூன்றவதாகப் பொருளையும் அடைகிறான். {எனவே இக்காரியத்தின் மூலம் அவன் அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகிய மூன்றையும் அடைகிறான்}” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “உலகத்தில் மனிதர்கள் பரிசுத்தமான மனமுள்ளவர்களாயிருக்கும்பொழுது, தர்மத்தை முன்னிட்டுப் புத்திரனென்னும் பொருளை அடைய வேண்டுமென்ற நிச்சயமுண்டாகி அதற்குரிய காலமும், அதற்கிடமான பத்நியும் நியாயமான காரியமும் நேர்ந்தால் (அறம்பொருள்இன்பங்களாகிற) மூன்றும் சேர்க்கையடைகின்றன” என்றிருக்கிறது.

உடலைப் பாதுகாக்க அறமும், அறம் ஈட்டுவதற்காகச் செல்வமும் நாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இன்பமானது புலன்களை நிறைவு செய்வதே ஆகும். எனவே, இம்மூன்றும் ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டிருக்கின்றன[2].(6) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன சொர்க்கத்திற்காகவும், அதுபோன்ற வெகுமதிகளுக்காகவும் நாடப்படும்போது, அவ்வெகுமதிகளே தொலைவில் இருப்பதால் அவை {சொர்க்கமும், அதுபோன்ற வெகுமதிகளும்} தொலைவில் இருப்பவையாகச் சொல்லப்படுகின்றன. எனினும், தன்னறிவின் நிமித்தமாக நாடப்படும்போது, அவை நெருக்கமாவதாகச் சொல்லப்படுகிறது. அவை அத்தகைய பண்பில் இருக்கும்போது, அவற்றை ஒருவன் நாட வேண்டும்[3]. ஒருவன் அவற்றை மனத்தாலும் கைவிடக்கூடாது. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன கைவிடப்பட்டால், தவத்த்துறவுகளின் மூலம் ஒருவன் தன்னை விடுவித்துக் கொண்ட பிறகே அவற்றைக் கைவிட வேண்டும்[4].(7) முக்தியை நோக்கியதே இந்த மூன்று திரட்டுகளின் குறிக்கோளாகும். தகுந்த மனிதன் அஃதை அடைவான். ஒருவன் செய்யும் செயல்கள், நுண்ணறிவின் துணையுடன் நிறைவடையவோ, எதிர்பாரா விளைவுகளுக்கு வழிவகுக்கவோ செய்யும். அறத்தை விட (தொண்டு, உழவு போன்ற) வேறு பொருட்களே செல்வத்திற்கு வழிவகுப்பதால், செல்வத்தின் {பொருளின்} வேர் எப்போதும் அறத்தில் {மட்டுமே} இருப்பதில்லை. மேலும் (சிலர் செல்வமானது, வாய்ப்பு, அல்லது பிறப்பு, அல்லது அதுபோன்ற காரணங்களைக் கொண்டு ஈட்டப்படுவதால்) அதில் ஒரு முரண்பட்ட கருத்தும் இருக்கிறது. சில சமயங்களில், அடையப்படும் செல்வம் தீமையையே விளைவிக்கும். மேலும் செல்வத்தைத் தவிர (விரதங்கள், நோன்புகள் போன்ற) பிற பொருட்கள் அறத்தை அடைய வழிவகுக்கின்றன. எனவே, இதைப் பொறுத்தவரையில், அறியாமை கலந்த அறிவைக் கொண்ட மூடன், அறம் மற்றும் செல்வத்தின் {பொருளின்} உயர்ந்த குறிக்கோளான முக்தியை {மோட்சத்தை} அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(9) அறத்தின் கழிவுகள், வெகுமதியடையும் விருப்பத்தில் இருக்கின்றன; செல்வத்தின் {பொருளின்} கழிவுகள், அதை விளம்பரப்படுத்துவதில் இருக்கிறது; இந்தக் கசடுகள் தூய்மையடையும்போது, அவை பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன.(10)

[2] “நன்மை, ஆசை மற்றும் இருள் {நற்பண்பு [சத்வகுணம்], ஆசைப்பண்பு [ரஜோகுணம்], இருள்பண்பு [தமோகுணம்]} என்ற மூன்று குணங்கள், அல்லது பண்புகள் மனிதனினுடைய செயல்களின் பண்புகளை விரித்துரைக்கின்றன. பகவத்கீதையின் இறுதிப் பகுதிகளைக் காண்க. எனவே, அத்தகு {ரஜோ குணம் கொண்ட} அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கங்களல்ல. நற்பண்பை {சத்வகுணத்தைக்} கொண்ட நோக்கங்களே பின்பற்றத்தகுந்தவை” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] “அஃதாவது, ஒருவன் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே அறத்தையும், கனியில் விருப்பமில்லாமல் {பயனில் ஆசையில்லாமல்} செய்யப்படும் செயல்களுக்குச் செலவழிப்பதற்காக மட்டுமே செல்வத்தையும், உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இன்பத்தையும் நாட வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] தர்மாதிங்காமானைஷ்திகானம் Dharmadinkamanaishthikan, அதாவது தர்மத்தை {அறத்தை} முதலாகவும், காமத்தை {இன்பத்தை} இறுதியாகவும் கொள்தல், எனவே இவை அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் குறிக்கின்றன” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இது தொடர்பாகப் பழங்காலத்தில் காமந்தகர் மற்றும் ஆங்கரிஷ்டன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிடப்படுகிறது.(11) ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மன்னன் ஆங்கரிஷ்டன், சுகமாக அமர்ந்திருந்தவரான முனிவர் காமந்தகரை {அணுகி} வணங்கி, அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டான்.(12)

{ஆங்கரிஷ்டன் காமாந்தகரிடம்}, “ஓ! முனிவரே, ஒரு மன்னன், காமத்தாலோ, மடமையினாலோ உந்தப்பட்டுப் பாவமிழைத்துவிட்டு, பின்பு அதற்காக வருந்தினால், எச்செயல்களைச் செய்வதன் மூலம் {அவனால்} அந்தப் பாவங்களை அழிக்க முடியும்?(13) மேலும் ஒரு மனிதன், அறியாமையால் உந்தப்பட்டும், நேர்மையாகச் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையிலும் பாவம் நிறைந்த செயலைச் செய்தான் என்றால், மனிதர்களுக்கு மத்தியில் {பொதுவாகவே} நடைமுறையில் இருக்கும் அந்தப் பாவத்தை மன்னனால் எவ்வாறு நிறுத்த முடியும்?” என்று கேட்டான்.(14)

காமந்தகர் {ஆங்கரிஷ்டனிடம்}, “அறம், செல்வம் {பொருள்} ஆகியவற்றைக் கைவிட்டு, இன்பத்தை மட்டுமே பின்தொடரும் மனிதன், அத்தகு நடத்தையின் மூலம் தன் நுண்ணறிவை இழப்பதையே அறுவடை செய்கிறான்.(15) நுண்ணறிவின் {புத்தியின்} அழிவைக் கவனமின்மை {மயக்கம்} பின்தொடர்கிறது. உடனே அறம் மற்றும் செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் அழிவை அடைகின்றன. அத்தகு கவனமின்மையால் {மயக்கத்தால்}, கடும் இறைமறுப்பும் {நாத்திகமும்}, திட்டப்படியான தீயொழுக்கமும் உண்டாகின்றன.(16) பாவம்நிறைந்த ஒழுக்கம் கொண்ட அந்தத் தீய மனிதர்களை மன்னன் அடக்கிவைக்கவில்லையெனில், பாம்பு மறைந்திருக்கும் வீட்டிற்குள் இருக்கும் ஒருனைப் போல நல்ல குடிமக்கள் அனைவரும் அவனிடம் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்.(17) குடிமக்கள் அத்தகைய மன்னனைப் பின்பற்ற மாட்டார்கள். பிராமணர்களும், பக்திமான்களும் {நல்லோரும்} அவ்வாறே செயல்படுவார்கள். விளைவாக, மன்னன் பேராபத்தையும், அழிவையுமே ஈட்டுவான்.(18) புகழ்க்கேட்டையும், அவமதிப்பையும் அடையும் அவன், துன்பகராமன இருப்பிலேயே தன் வாழ்வை நீட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.(19)

சாத்திரங்களைக் கற்ற மனிதர்கள், பாவத்தைத் தடுப்பதற்காகப் பின்வரும் வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கின்றனர். மன்னன், மூன்று வேதங்களையும் கற்பதற்கே தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அவன் பிராமணர்களை மதித்து, அவர்களுக்கு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.(20) அவன் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும். அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்பவனாக, புனித மந்திரங்களை ஓதுபவனாக இருந்து, தன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்த வேண்டும். அவன், தீய குடிமக்களைத் தன்னிடம் இருந்தும் தன் நாட்டில் இருந்தும் விரட்டி, நல்லோரின் தோழமையை நாட வேண்டும்.(22) அவன், இனிய சொல், அல்லது நற்செயல்களின் மூலம் மனிதர்கள் அனைவரையும் நிறைவு செய்ய வேண்டும். அவன் அனைவரிடமும், “நான் உங்களுடையவன்” என்று சொல்லி, தன் எதிரியின் நற்பண்புகளையும் அறிவிக்கையிட வேண்டும்.(23) இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், அவன் விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உயர்ந்த வெகுமதிகள் அனைத்தையும் வெல்வான். இத்தகையான ஒழுக்கத்தின் மூலம் அவனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் அழிவடையும்.(24) உன்னுடைய பெரியோர்கள் மற்றும் ஆசான்கள் குறிப்பிடும் உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நீ நிறைவேற்ற வேண்டும். உன்னைச் சார்ந்த பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அருளின் மூலமாக உன்னால் நிச்சயம் பெரும்பேற்றை அடைய முடியும்” என்றார் {காமந்தகர்}”.(25)

அறமொழுகு! – சாந்திபர்வம் பகுதி – 124-அறம், உண்மை, நற்செயல்கள், வலிமை, செழிப்பு ஆகியன அறப்பண்பிலேயே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன என்பதை நிறுவ துரியோதனனுக்குத் திருதராஷ்டிரன் சொன்ன பிரகலாதன், இந்திரன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் அறப்பண்பையே {தர்மசீலத்தையே} மனிதர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். எனினும், அவற்றின் பெருமையில் எனக்குப் பேரையங்கள் இருக்கின்றன. ஓ! அறவோரில் முதன்மையானவரே, அவை எங்களால் புரிந்து கொள்ளத்தக்கவையாக இருந்தால், அறப்பண்பை {நன்னடத்தையை} அடையும் வழி குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! பாரதரே, உண்மையில் அந்நடத்தை எவ்வாறு அடையப்படுகிறது. அதைக் கேட்க நான் விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அந்நடத்தையின் சிறப்பியல்புகளைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! கௌரவங்களை அளிப்பவனே, முன்பொரு சமயம் துரியோதனன், இந்திரப்பிரஸ்தத்தில் உனக்கும், உன் தம்பிகளுக்கும் சொந்தமான நன்கறியப்பட்ட செழிப்பைக் கண்டும், பெரும் மாளிகையில் தான் செய்த தவறுகளுக்காக உள்ளான ஏளனங்களாலும் துயரத்தில் எரிந்து கொண்டிருந்த போது, தன் தந்தையான திருதராஷ்டிரனிடம் இதே கேள்வியைக் கேட்டான். ஓ! பாரதா, அச்சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தவற்றைக் கேட்பாயாக[1].(4,5) உனது பெரும் மாளிகையையும், உன் தலைமையில் இருந்த பெருஞ்செழிப்பையும் கண்ட துரியோதனன், தன் தந்தையின் முன் அமர்வதற்கு முன்னர், அவனிடம் தான் கண்டவற்றைக் குறித்துச் சொன்னான்[2].(6) துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், தன் மகனிடமும் {துரியோதனிடமும்}, கர்ணனிடமும் பின்வருமாறு பதிலளித்தான்.(7)திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! மகனே, நீ ஏன் வருந்துகிறாய்? அதற்கான காரணத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அந்தக் காரணங்கள் போதுமானவையாகத் தோன்றுவதாக உறுதியடைந்த பிறகு, நான் உனக்கு அறிவுரை கூற முயற்சிக்கிறேன்.(8) ஓ! பகைநகரங்களை அடக்குபவனே, நீயும் பெருஞ்செழிப்பையே அடைந்திருக்கிறாய். உன்னுடன் பிறந்தவர்கள் அனைவரும், உன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றனர்.(9) சிறந்த ஆடைகளேயே நீ உன் அங்கங்களில் அணிகிறாய். ஆண்டம்பர உணவையே நீ உண்கிறாய்[3]. சிறந்த வகைக் குதிரைகளே உன்னைச் சுமக்கின்றன. பிறகு ஏன் நீ நிறம் மங்கியவனாக மெலிந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.(10)

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “உயர் ஆன்ம ஸ்நாதக வகைப் பிராமணர்கள் பத்தாயிரம் {10000} பேர் (தினமும்) யுதிஷ்டிரனின் அரண்மனையில் தக்கத்தட்டுகளில் உண்கின்றனர்.(11) சிறந்த மலர்கள், கனிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அவனது அற்புத மாளிகை, அவனது தித்திரி மற்றும் கல்மாஷ இனக் குதிரைகள், அவனுடைய பல்வேறு வகையான ஆடைகள் ஆகியவற்றைக் கண்டும், ஓ! பாரதரே, வைஸ்ரவணனின் {குபேரனின்} பெருஞ்செழிப்புக்கு ஒப்பான உயர்ந்த செழிப்பை என் எதிரிகளான பாண்டுவின் மகன்களிடம் கண்டும் நான் துயரத்தால் எரிந்து கொண்டிருக்கிறேன்” என்றான்.(13)

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! ஐயா, யுதிஷ்டிரனைப் போன்ற செழிப்பையோ, அதைவிட மேன்மையானதையோ நீ விரும்பினால், ஓ! மகனே, அறப்பண்பு {நன்னடத்தை} கொண்டவனாக நீ முயற்சி செய்வாயாக.(14) நடத்தையின் மூலம் மட்டுமே ஒருவனால் மூன்று உலகங்களையும் வெல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.(15) மாந்தாத்ரி {மாந்தாதா} ஒரே இரவில் மொத்த உலகத்தையும் கைப்பற்றினான், ஜனமேஜயன் மூன்றிலும், நாபாகன் ஏழு இரவுகளிலும் அதைச் செய்தனர் {உலகைக் கைப்பற்றினர்}.(16) இந்த மன்னர்கள் அனைவரும் கருணையும், அறப் பண்பையும் {நன்னடத்தையையும்} கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே, அவர்களது பண்புகளால் வெல்லப்பட்ட பூமாதேவி தானாகவே அவர்களிடம் வந்தாள்” என்றான்.(17)

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே, (உம்மால் பெயர் சொல்லப்பட்ட மன்னர்களின்) எந்த நடத்தையின் மூலம் இந்த உலகம் அவ்வளவு விரைவாக வெல்லப்பட்டதோ, அந்த நடத்தையை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(18)

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் இந்தப் பழைய விவரிப்பில் குறிப்பிடப்படுகிறது. அறப்பண்பு {நன்னடத்தை} குறித்து இது முன்பொரு சமயத்தில் நாரதரால் உரைக்கப்பட்டதாகும்.(19) பழங்காலத்தில் தைத்தியன் பிரஹலாதன், தனது நடத்தையின் தகுதியால் {புண்ணியத்தால்}, உயர் ஆன்ம இந்திரனின் அரசைப் பறித்து, மூவுலகங்களையும் வென்றான்.(20) அப்போது சக்ரன் {இந்திரன்}, கூப்பிய கரங்களுடன் பிருஹஸ்பதியை அணுகினான். பெரும் ஞானம் கொண்டவனான அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, அந்தப் பேராசானிடம் {பிருஹஸ்பதியிடம்}, “இன்பநிலையின் மூலத்தைக் குறித்து நீர் எனக்குச் சொல்ல வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(21) இவ்வாறு கேட்கப்பட்ட பிருஹஸ்பதி, உயர்ந்த இன்பநிலையின் மூலமான (முக்திக்கு {மோட்சத்துக்கு} வழிவகுக்கும்) அந்த அறிவைக் குறித்து அவனிடம் {இந்திரனிடம்} சொன்னார். உண்மையில், அறிவே பரம இன்பத்தின் மூலம் என்று பிருஹஸ்பதி குறிப்பிட்டார். எனினும் இந்திரன், அதை விட உயர்ந்தது ஏதேனும் உள்ளதா என்று மீண்டும் அவரிடம் கேட்டான்.(23)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! மகனே, அதைவிட மேலும் உயர்ந்ததும் இருக்கிறது. உயர் ஆன்ம பார்க்கவர் (உசனஸ் {சுக்கிராச்சாரியர்}) அஃதை உனக்குச் சிறப்பாகப் போதிப்பார். நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா, நீ அவரிடம் சென்று விசாரிப்பாயாக” என்று சொன்னார்.(24)

பெரும் தவத்தகுதியும், பெரும் காந்தியும் கொண்ட தேவர்களின் தலைவன், பார்க்கவரிடம் சென்று, நிறைவடைந்த இதயத்துடன், பெரும் நன்மையை விளைவிக்கும் ஓர் அறிவை அவரிடம்{சுக்கிராச்சாரியாரிடம்} இருந்து அடைந்தான்.(25) நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, உயர் ஆன்மப் பார்க்கவரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, (இன்பத்தை அடையும் வழிமுறைகளில்) அந்தத் தவசி ஏற்கனவே தனக்குச் சொன்னதை விட உயர்ந்ததேதும் இருக்கிறதா என்று அந்தத் தவசியிடமே {சுக்கிராச்சாரியாரிடமே} கேட்டான்.(26)

அனைத்துமறிந்தவரான பார்க்கவர் {சுக்கிராச்சாரியார்}, “உயர் ஆன்ம பிரஹலாதன் அது குறித்த சிறந்த அறிவைப் பெற்றிருக்கிறான்” என்று சொன்னார்.

இதை அறிந்த இந்திரன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான்.(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பகனைத் தண்டித்தவனுமான அவன் {இந்திரன்}, ஒரு பிராமணனின் வடிவத்தை ஏற்று, பிரஹலாதனிடம் சென்று, “எது இன்பத்தை அளிக்கிறது என்பது குறித்துக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(28)

பிரஹலாதன் அந்தப் பிராமணனிடம், “ஓ! மறுபிறப்பாளர்களின் தலைவரே, மூவுலகங்களையும் ஆட்சி செய்யும் பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பதால் எனக்கு நேரமேதும் இல்லை. எனவே, என்னால் உமக்குப் போதிக்க முடியாது” என்றான்.(29)

அதற்கு அந்தப் பிராமணன் {பிரஹலாதனிடம்}, “ஓ! மன்னா, உனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது, நன்மையை உண்டாக்கவல்ல நடத்தைவழி எது என்பதைக் குறித்த உன் போதனைகளை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(30)

பிரம்மத்தை உச்சரிப்பவரின் இந்தப் பதிலில் மகிழ்ச்சியடைந்தான் மன்னன் பிரஹலாதன். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அவன், அறிவைக் குறித்த உண்மைகளை அந்தப் பிராமணருக்குப் போதிக்கத் தக்க சமயத்தைக் கொடுப்பதாகச் சொன்னான்.(31) ஓர் ஆசானிடம் ஒரு சீடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ, அவ்வாறே பிரஹலாதனிடம் முறையாக நடந்து கொண்ட அந்தப் பிராமணன், பிரஹலாதன் விரும்பியதை முழு இதயத்துடன் செய்யத் தொடங்கினான்.(32) பல சந்தர்ப்பங்களில் அந்தப் பிராமணன், “எதிரிகளைத் தண்டிப்பவனே, எந்த வழிமுறைகளின் மூலம் உன்னால் மூவுலகங்களின் அட்சியை வெல்ல முடிந்தது? ஓ! அறமன்னா, அவ்வழிமுறைகள் யாவை என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான். ஓ! ஏகாதிபதி, அந்தப் பிராமணன் கேட்ட கேள்விக்குப் பிரஹலாதன் பதிலளித்தான்.(33)

பிரஹலாதன், “ஓ! மறுபிறப்பாளரே, நான் ஒரு மன்னனாக இருப்பதன் விளைவால் எந்தச் செருக்கையும் உணர்வதில்லை, அதே போல, பிராமணர்களிடம் பகையுணர்வேதும் வளர்ப்பதில்லை. மறுபுறம், சுக்ரனின் போதனைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கை ஆலோசனைகளை அவர்கள் எனக்கு அறிவிக்கும்போது, நான் அவற்றை ஏற்றுப் பின்பற்றுகிறேன்.(34) முழு நம்பிக்கையுடன் அவர்கள் விரும்புவதை என்னிடம் சொல்லி, அறமற்ற, முறையற்ற வழிமுறைகளில் இருந்து என்னை அவர்கள் தடுக்கிறார்கள். நான் எப்போதும் சுக்கிரனின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாவேன். நான் பிராமணர்களிடமும், பெரியோர்களிடமும் காத்திருந்து அவர்களுக்குத் தொண்டு செய்கிறேன். நான் எந்த வன்மமும் கொள்வதில்லை.(35) நான் அற ஆன்மா கொண்டவனாவேன். தற்கட்டுப்பாட்டுடன் கூடிய நான் எனது புலன்கள் அனைத்தையும் என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறேன். எனக்குப் போதகர்களாக இருக்கும் அந்த மறுபிறப்பாளர்கள், தேன்கூட்டில் தேனைச் சிந்தும் தேனீக்களைப் போல எனக்கு நன்மையான போதனைகளைப் பொழிகிறார்கள்.(36) நான், அந்தக் கல்விமான்களால் சிந்தப்படும் தேனைச் சுவைத்து, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போல என் குலத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறேன்[4].(37) சுக்கிரரின் போதனைகளைப் பிராமணர்களின் உதடுகளில் இருந்து கேட்டு அதன்படி செயல்படுவதே பூமியில் அமுதமும் தெளிவான கண்ணும் ஆகும்.(38) இவற்றிலேயே ஒரு மனிதனுக்கான நன்மை இருக்கிறது” என்றான். இவ்வாறே பிரம்மத்தை உச்சரிப்பவரிடம் பிரஹலாதன் பேசினான்.அவனால் கடமையுணர்வுடன் தொண்டாற்றப்பட்ட தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்} மீண்டும் அவனிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர்! என்னிடம் கடமையுணர்வுடன் நடந்து கொள்வதன் விளைவால் நான் உம்மிடம் மிகவும் மனம்நிறைந்திருக்கிறேன். நீ அருளப்பட்டிருப்பீராக. நீர் விரும்பும் வரத்தை என்னிடம் கேட்பீராக. நீர் கேட்கும் வரத்தை நான் நிச்சயம் உமக்கு அளிப்பேன்” என்றான்.(40)

அதற்கு அந்தப் பிராமணன் {பிரஹலாதனிடம்}, அந்தத் தைத்தியர்களின் தலைவனிடம், “மிக்க நன்று, நான் உனக்குக் கீழ்ப்படிவேன்” என்று சொன்னான். அவனிடம் மனம் நிறைந்த பிரஹலாதன், “நீர் விரும்புவதைப் பெற்றுக் கொள்ளும்” என்றான்.(41)

அந்தப் பிராமணன், “ஓ! மன்னா, நீ என்னிடம் நிறைவடைந்திருக்கிறாய், எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்புகிறாய் என்றால், நான் உன் நடத்தையை அடைய விரும்புகிறேன். இதுவே நான் உன்னிடம் வேண்டும் வரமாகும்” என்று கேட்டான்[5].(42)

இதனால் பிரஹலாதன் மகிழ்ச்சியடைந்தாலும், அவன் பேரச்சத்தாலும் நிறைந்தான். உண்மையில், இந்த வரத்தை அந்தப் பிராமணன் குறிப்பிட்ட போது, அந்தத் தைத்திய தலைவன், கேட்பவன் இயல்பான சக்தியைக் கொண்ட ஒரு மனிதனாக இருக்க முடியாது என்று நினைத்தான்.(43)

மிகவும் ஆச்சரியமடைந்த பிரஹலாதன், இறுதியாக, “அப்படியே ஆகட்டும்” என்றான். இருப்பினும் வரமளித்த பிறகு அந்தத் தைத்திய தலைவன் துயரத்தால் நிறைந்தான்.(44) ஓ! மன்னா, வரத்தை அடைந்த பிராமணன் சென்றுவிட்டாலும், பிரஹலாதன் ஆழமான கவலைக்கு உள்ளாகி என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(45) அந்தத் தைத்திய தலைவன் இக்காரியத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தபோது, ஒளியின் தழல் ஒன்று அவனது உடலில் இருந்து வெளியே வந்தது. பெரும் காந்தியைக் கொண்ட நிழல் வடிவமாகவும்,(46) பெரும் வடிவம் கொண்டதாகவும் அஃது இருந்தது.

பிரஹலாதன் அந்த வடிவத்திடம், “நீ யார்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த வடிவம், “நான் உன் நடத்தையின் உடல் வடிவமாவேன். உன்னால் கைவிடப்பட்ட நான் இப்போது செல்லப் போகிறேன்.(47) எனவே, ஓ! மன்னா, நான் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், குற்றமில்லாதவனுமான அந்தப் பிராமணர்களில் முதன்மையானவனிடம் இனி வசிக்கப் போகிறேன்” என்றது.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வடிவம் மறைந்து, அதன்பிறகு விரைவில் சக்ரனின் {இந்திரனின்} உடலில் நுழைந்தது.(48) அந்த வடிவம் மறைந்ததும், அதேபோன்ற மற்றொரு வடிவம் பிரஹலாதனின் உடலில் இருந்து வெளிப்பட்டது. அந்தத் தைத்திய தலைவன், அதனிடம், “நீ யார்?” என்று கேட்டான்.(49)

அதற்கு அந்த {மற்றொரு} வடிவம், “ஓ! பிரஹலாதா, என்னை அறத்தின் உடல்வடிவமாக அறிந்து கொள்வாயாக. ஓ! தைத்தியர்களின் தலைவா, எங்கே நடத்தை {பண்பு} இருக்கிறதோ அங்கேயே நான் வசிப்பேன், எனவே நான் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவனிடம் செல்லப் போகிறேன்” என்றது.(50)

அறம் மறைந்ததும், ஓ! ஏகாதிபதி, காந்தியுடன் சுடர்விட்ட மூன்றாவது வடிவம் ஒன்று உயர் ஆன்மப் பிரஹலாதனின் உடலில் இருந்து வெளிப்பட்டது.(51) அது யார் எனப் பிரஹலாதனால் கேட்கப்பட்டதும், பெரும்பிரகாசம் கொண்ட அந்த வடிவம், “ஓ! தைத்தியர்களின் தலைவா, நானே உண்மை என்பதை அறிவாயாக. அறத்தின் வழியைப் பின்பற்றி நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றது.(52)

அறத்தைப் பின்பற்றி உண்மையானது பிரஹலாதனை விட்டுச் சென்றதும், {நான்காவதாக} மற்றொரு பெரும் வடிவம் பிரஹலாதனின் உடலைவிட்டு வெளியே வந்தது. தைத்திய மன்னனால் கேட்கப்பட்டதும் அந்த வலிமைமிக்கது, “நானே நற்செயல்களின் உடல்வடிவமாவேன். ஓ! பிரஹலாதா, எங்கே உண்மை வாழுமோ, அங்கேயே நான் வாழ்வேன் என்பதை அறிவாயாக” என்றது.(53)

அது பிரகலாதனை விட்டுச் சென்றதும், {ஐந்தாவதாக} மற்றொரு வடிவம் அழுகையுடனும், ஓலத்துடனும் வெளிய வந்தது. பிரஹலாதனால் கேட்கப்பட்ட அஃது, “என்னை வலிமை என்று அறிவாயாக. நற்செயல்கள் எங்கிருக்குமோ அங்கேயே நான் வசிப்பேன்” என்றது.(54) இவ்வார்த்தைகளைச் சொன்னபிறகு, நற்செயல்கள் சென்ற இடத்திற்கே வலிமையும் சென்றது.

இதன்பிறகு, பிரஹலாதனின் உடலில் இருந்து பெரும் பிரகாசம் கொண்ட ஒரு தேவி வெளிப்பட்டாள். அந்தத் தைத்தியத் தலைவனால் கேட்கப்பட்டதும், அவள் தான் செழிப்பின் உடல் வடிவம் என்று பதிலளித்து, “ஓ! வீரா, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன்னில் வசித்து வந்த நான், உன்னால் கைவிடப்பட்டு, வலிமையைப் பின்தொடர்ந்து செல்கிறேன்” என்றாள்.(56)

பேரச்சமடைந்த உயர் ஆன்மப் பிரஹலாதன், மீண்டும் அந்தத் தேவியிடம், “ஓ! தேவி, ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, நீ எங்கே செல்கிறாய்?(57) ஓ தேவி, நீ எப்போதும் உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளும், தேவிகளில் முதல்வியும் ஆவாய். (என் சீடனாக இருந்த) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவன் யார்? நான் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான்.(58)

அதற்கு அந்தச் செழிப்பின் தேவி, “பிரம்மச்சரிய நோன்புக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனும், உன்னால் போதிக்கப்பட்டவனுமான அந்தப் பிராமணன் சக்ரனாவான் {இந்திரனாவான்}. ஓ! பலமிக்கவனே, மூவுலகங்களின் மீதும் நீ கொண்டிருந்த அரசுரிமையை அவன் களவாடிவிட்டான்.(59) ஓ! அறவோனே, நீ உன் நடத்தையாலேயே மூவுலகங்களையும் அடக்கி ஆண்டாய். இஃதை அறிந்து கொண்ட தேவர்களின் தலைவன், உன் நடத்தையை உன்னிடம் இருந்து களவாடிவிட்டான்.(60) ஓ! பெரும் ஞானியே, அறம், உண்மை, நற்செயல்கள், வலிமை ஆகியவையும் நானும் நடத்தையிலேயே எங்கள் வேரைக் கொண்டிருக்கிறோம்” என்றாள்”.(61)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தச் செழிப்பின் தேவி, எஞ்சியவை அனைத்தையும் போலவே சென்றுவிட்டாள். துரியோதனன் மீண்டும் தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளில்,(62) “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நடத்தையின் உண்மையை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அஃதை அடையும் வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(63)

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “உயர் ஆன்மப் பிரஹலாதன் இந்திரனிடம் உரையாடியபோது அந்த வழிமுறைகள் சொல்லப்பட்டன. எனினும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நடத்தையை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்துச் சுருக்கமாகக் கேட்பாயாக.(64) செயல், எண்ணம் மற்றும் சொல்லில் தீங்கிழையாமை, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, கொடை ஆகியவை புகழத்தக்க அந்நடத்தையில் அடங்கியவையாகும்.(65) எந்தச் செயலாலோ, முயற்சியாலோ பிறர் நன்மையடைய மாட்டார்களோ, அல்லது எந்தச் செயலின் விளைவால் ஒருவன் அவமானத்தை அடைவானோ, அச்செயல் ஒருபோதும் செய்யப்படக்கூடாது.(66) மறுபுறம், எந்தச் செயலின் மூலம் சமூகத்தில் ஒருவன் புகழடைவானோ அது செய்யப்பட வேண்டும். ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, நடத்தை என்றால் என்ன என்பதைக் குறித்து நான் உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன்.(67) ஓ! மன்னா, தீய நடத்தை கொண்ட மனிதர்கள் செழிப்பை எப்போதாவது வென்றால், ஓ! மகனே அஃதை அவர்கள் நீண்ட காலம் அனுபவிக்க மாட்டார்கள், வேரோடு அழிபவர்களாகவே காணப்படுகிறார்கள்” என்றான்”.(68)

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்} தொடர்ந்தான், “ஓ! மகனே, யுதிஷ்டிரனைவிட நீ பெருஞ்செழிப்பையடைய விரும்பினால், இவையாவற்றையும் உண்மையாக அறிந்து கொண்டு, நன்னடத்தையுடன் இருப்பாயாக” என்றான்”.(69)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதுவே மன்னன் திருதராஷ்டிரன் தன் மகனுக்குச் சொன்னதாகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ இந்த அறிவுரைகளின்படி செயற்பட்டால், நிச்சயம் நீ அவற்றின் கனியை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(70)

மான் வேட்டை! – சாந்திபர்வம் பகுதி – 125-நம்பிக்கையைக் குறித்து எழும் ஐயத்தைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வேட்டையாடச் சென்ற மன்னன் சுமித்திரனின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, (ஒரு மனிதனின் தேவைகளில்) நடத்தையே முதன்மையானது என்று சொல்கிறீர். எனினும், எப்போது அந்த நம்பிக்கை {எதிர்பார்பபு}[1] எழுகிறது? அஃது என்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) இந்தப் பெரும் ஐயம் என் மனத்தை ஆட்கொள்கிறது. ஓ! பகைநகரங்களை அடக்குபவரே, அஃதை அகற்றுவதற்கு உம்மைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(2) ஓ! பாட்டா, ஓ! தலைவா, சுயோதனன் (அவனது பிடிவாதத்தின் விளைவால் உண்டான) போர் தொடங்குவதற்கு முன், முறையானதையே செய்வான் என்ற பெரும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} எனக்கு இருந்தது.(3) ஒவ்வொரு மனிதனிலும் பெரும் நம்பிக்கையிருக்கிறது. அந்த நம்பிக்கை {எதிர்பார்ப்பு} அழியும்போது, அதைத் தொடரும் துயரம் பெரியது; கிட்டத்தட்ட மரணத்திற்கு இணையானது என்பதில் ஐயமில்லை.(4) நான் மூடனாக இருந்ததால், திருதராஷ்டிரரின் தீய மகன் துரியோதனன் நான் வளர்த்து வந்த நம்பிக்கையை அழித்தான். ஓ! மன்னா {பீஷ்மரே}, என் மனத்தின் மடமையைக் காண்பீராக.(5) மரங்கள் அனைத்துடன் கூடிய ஒரு மலையைவிட நம்பிக்கை பெரியது என்று நான் நினைக்கிறேன். அல்லது, ஒருவேளை அஃது ஆகாயத்தைவிடவும் பரந்து விரிந்ததாக இருக்கலாம். அல்லது, ஒருவேளை, ஓ! மன்னா, உண்மையில் அஃது அளவிடப்பட முடியாததாகவும் இருக்கலாம்.(6) ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, நம்பிக்கையைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதே, அதற்கு இணையாகவே அஃதை அடக்குவதும் கடினமானதாகவே இருக்கிறது. நம்பிக்கையின் இறுதித் தன்மையைக் கண்டு, இதைப் போலவே வெல்லப்பட முடியாதது வேறு என்ன இருக்கிறது என்று கேட்கிறேன்?” என்றான்.(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தில் சுமித்திரனுக்கும், ரிஷபருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் உனக்கு உரைக்கிறேன். அதைக் கேட்பாயாக.(8) ஹைஹய குலத்தைச் சேர்ந்தவனும், சுமித்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரசமுனி வேட்டையாடச் சென்றான். அவன் நேரான கணையொன்றால் ஒரு மானைத் துளைத்து, அதைப் பின்தொடர்ந்து சென்றான்.(9) பெரும் பலம் கொண்ட அந்த மான், உடலில் தைத்த கணையுடனே ஓடிச் சென்றது. பெரும் பலம் கொண்ட மன்னனும் {சுமித்திரனும்} தன் பெரிய இரையைப் பெரும் வேகத்துடன் விரட்டிச் சென்றான்.(10) பெரும் வேகம் கொண்ட அந்த விலங்கு, பள்ளத்திலும், சமவெளியிலும் என மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது. இளைஞனும், சுறுசுறுப்புடையவனும், பலவானும், வில் மற்றும் வாள் தரித்தவனும், கவசம் பூண்டவனுமான மன்னன் மேலும் மேலும் அதைப் பின்தொடர்ந்து சென்றான்.(11) எவரின் துணையுமின்றிக் காட்டில் ஊடாக அந்த விலங்கைத் துரத்திச் சென்ற மன்னன், பல ஆறுகளையும், ஓடைகளையும், ஏரிகளையும், சிறு காடுகளையும் கடந்து சென்றான்.(13)

பெரும் வேகங்கொண்ட அவ்விலங்கு, தன்விருப்பப்படியே அப்போதைக்கப்போது தன்னை மன்னனுக்கு வெளிப்படுத்திக்கொண்டு பெரும் வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.(14) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் {சுமித்திரனின்} பலகணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் காட்டுவாசி {மான்}, விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தனக்கும், தன்னைப் பின்தொடர்ந்து வருபவனுக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொண்டே வந்தது.(15) மீண்டும் மீண்டும் வேகத்தை வெளிப்படுத்தியும், ஒன்றன்பின் ஒன்றாகக் காடுகளைக் கடந்து கொண்டும், அப்போதைக்கப்போது மன்னனுக்கு அருகிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயும் சென்றது.(16)

இறுதியாக, அந்த எதிரிகளை நொறுக்குபவன் {மன்னன் சுமித்திரன்}, கூரியதும், பயங்கரமானதும், உயிர்நிலைகளையே துளைக்கவல்லதுமான மிக மேன்மையான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(17) பெரும் அளவு உடல்வடிவத்தைக் கொண்ட அந்த விலங்கு, தன்னைப் பின்தொடர்ந்து வருபவனின் முயற்சியைக் கண்டு சிரிப்பதைப் போல, கணை அடையும் தொலைவை விட நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள ஓர் இடத்தை அடைந்து, திடீரெனத் தொலைவாகச் சென்றுவிட்டது.(18) சுடர்மிக்கக் காந்தி கொண்ட அந்தக் கணையானது தரையில் விழுந்தது. மானோ ஒரு பெரும் காட்டுக்குள் நுழைந்தது, இருப்பினும் மன்னன் {சுமித்திரன்} அதைத் துரத்துவதைத் தொடர்ந்து கொண்டே இருந்தான்” என்றார் {பீஷ்மர்}.(19)

நம்பிக்கை, அல்லது எதிர்பார்ப்பு! – சாந்திபர்வம் பகுதி – 126-மானைத் துரத்தி வந்து பெரும் காட்டில் உள்ள தவசிகளின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் சுமித்திரன் நம்பிக்கையைக் குறித்து எழும் ஐயத்தை அங்கிருந்த தவசிகளிடம் கேட்டது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் {சுமித்திரன்}, அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைந்ததும் தவசிகளின் ஆசிரமம் ஒன்றை வந்தடைந்தான். கடும் அலைச்சலின் விளைவாகக் களைப்படைந்த அவன், ஓய்வெடுப்பதற்காகக் கீழே அமர்ந்தான்.(1) அவன் வில் தரித்திருப்பதையும், அலைச்சலில் களைத்திருப்பதையும், பசித்திருப்பதையும் கண்ட தவசிகள், அவனை அணுகி, அவனுக்கு உரிய மதிப்பை வழங்கினர்.(2) அந்த முனிவர்கள் செலுத்திய கௌரவத்தை ஏற்றுக் கொண்ட மன்னன், அவர்களுடைய தவ முன்னேற்றம் குறித்து விசாரித்தான்.(3) மன்னனின் விசாரிப்புகளுக்கு முறையான பதிலளித்தவர்களும், தவத்தையே தங்கள் செல்வமாகக் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள், அந்த மனிதர்களில் புலி {சுமித்திரன்} ஆசிரமத்திற்கு வந்த காரணத்தைக் கேட்டனர்.(4)

அவர்கள் {தவசிகள் சுமித்திரனிடம்}, “நீ அருளப்பட்டிருப்பாயாக. கைகளில் வாள், வில் மற்றும் கணைகளுடனும், நடந்தபடியும், எந்த இனிமையான பொருளைத் தேடி இந்த ஆசிரமத்திற்கு வந்தாய்? ஓ! கௌரவங்களை அளிப்பவனே, நீ எங்கிருந்து வருகிறாய் என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நீ பிறந்த குலத்தையும், உன் பெயரையும் எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர் {அந்த தவசிகள்}.(6)

ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, ஓ! பாரதா, இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், அந்தப் பிராமணர்கள் அனைவரிடமும் தன்னைக் குறித்து முறையாகச் சொல்லும் வகையில்,(7) “நான் ஹைஹய குலத்தில் பிறந்தவன். நான் சுமித்திரன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன், மேலும் நான் மித்திரனின் மகனாவேன். நான் மான்கூட்டத்தைத் துரத்தி, ஆயிரக்கணக்கான மான்களை என் கணைகளால் கொன்றிருக்கிறேன். ஒரு பெரும்படை, என் அமைச்சர்கள், என் வீட்டில் உள்ள பெண்கள் ஆகியோரின் துணையுடன் நான் வேட்டைக்காக இங்கே வந்தேன். ஒரு கணையால் நானொரு மானைத் துளைத்தேன். ஆனால் அந்த விலங்கு, தன் உடலில் தைக்கப்பட்ட கணையுடனும் பெரும் வேகத்துடன் ஓடிச் சென்றது.(8,9) குறிப்பிட்ட எந்த நோக்கமும் இல்லாமல் அதைத் துரத்தி வந்த நான், இந்தக் காட்டை அடைந்து, காந்தி இழந்தவனாகவும், அலைச்சலால் களைத்தவனும், நம்பிக்கை {எதிர்பார்ப்பை} இழந்தவனுமாக உங்கள் முன்னிலையில் இருக்கிறேன்.(10)

களைப்படைந்தவனாகவும், அரசக் குறியீடுகளை {ராஜலக்ஷணங்களை} இழந்தவனகாவும், நம்பிக்கை அனைத்தையும் இழந்தவனாகவும் இந்த ஆசிரமத்தை அடைந்திருக்கும் என் நிலையை விட வேறு பரிதாபகரமான நிலை என்ன இருக்க முடியும்?(11) தவசிகளே, அரசக் குறியீடுகளை இழந்ததற்காகவோ, என் தலைநகரில் இருந்து தொலைவாக வந்துவிட்டதற்காகவோ நான் ஒருபோதும் வருந்தவில்லை. எனினும், நம்பிக்கை இழந்திருப்பதன் விளைவாக நான் கடும் துயரை உணர்கிறேன்.(12) மலைகளின் இளவரசனான இமயமும், நீர்நிலைகளின் பரந்த கொள்ளிடமான கடலும்கூட, ஆகாயத்தின் பரந்த அளவை அடைய முடியாது.(13) அதே போலவே, தவசிகளே, நம்பிக்கையின் {எதிர்பார்ப்பின்} அளவை என்னால் தெளிந்தறிய முடியவில்லை. நீங்கள் அனைத்தையும் அறிந்த நிலையான தவம்மெனும் செல்வத்துடன் கூடியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அறியாதது ஏதும் இல்லை.(14) நீங்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, என் ஐயத்தை விலக்குமாறு நான் உங்களை வேண்டுகிறேன். மனிதனால் வளர்த்துக் கொள்ளப்படும் நம்பிக்கை, பரந்த ஆகாயம் ஆகிய இரண்டில் எது உங்களுக்கு மிகப் பரந்ததாகத் தோன்றுகிறது?(15)

நம்பிக்கையைப் போல வெல்லப்பட முடியாதது வேறு எது இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(16) இது நீங்கள் உரையாடத்தகாதது இல்லை என்றால், அது குறித்த அனைத்தையும் எனக்குத் தாமதமில்லாமல் சொல்வீராக. மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களே, உரையாடத் தகாத புதிர்கள் எதையும் நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை.(17) மேலும் இந்த உரையாடல் உங்கள் தவங்களுக்குத் தீங்கானதாக இருந்தால், நீங்கள் பேச வேண்டும் என நான் விரும்பமாட்டேன். என் கேள்வி உரையாடத் தகுந்தது என்றால்,(18) அந்தக் காரணத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் நீங்கள் இது குறித்த அனைத்தையும் எனக்குப் போதிப்பீராக” என்றான் {மன்னன் சுமித்திரன்}.(19)

ரிஷபர், தனு, வீரத்யும்னன்! – சாந்திபர்வம் பகுதி – 127-ரிஷபரென்ற முனிவர் ஒருவர் தான் தீர்த்தயாத்திரை சென்று வந்தது குறித்தும், பதரியில் தாம் கண்ட முனிவர் தனு மற்றும் மன்னன் வீரத்யும்னன் குறித்தும் மன்னன் சுமித்திரனிடம் விவரித்தது..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது அந்த முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவரும், முனிவர்களில் சிறந்த மறுபிறப்பாளருமான ரிஷபர்[1], சிறிதாகப் புன்னகைத்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(1) “ஓ! மன்னர்களில் புலியே {சுமித்திரனே}, ஓ! தலைவா, புனிதத்தலங்களுக்குப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருந்தபோது, நரன் மற்றும் நாராயணரின் அழகிய ஆசிரமத்திற்குச் சென்றேன்.(2) பதரி {பத்ரிநாத்} என்றழைக்கப்படும் ஓர் இனிமையான இடம் இருக்கிறது. அங்கே (புனிதமான கங்கை பிறந்த) ஆகாயத்தில் ஒரு தடாகமும் இருக்கிறது[2]. ஓ! மன்னா, அங்கே தவசி அஸ்வசிரஸ் {ஹயக்ரீவர்} அழிவில்லாத வேதங்களை (எப்போதும்) படித்துக் கொண்டிருக்கிறார்.(3) அந்தத் தடாகத்தில் தூய்மைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்காணிக்கைகளை உரிய சடங்குகளுடன் காணிக்கையளித்த பிறகு நான் ஆசிரமத்திற்குள் நுழைந்தேன்.(4) முனிவர்களான நரனும், நாராயணனும் அந்த ஆசிரமத்திற்குள் எப்போதும் தங்கள் நேரத்தை உண்மையான இன்பத்துடன் கடத்துகிறார்கள்[3]. அந்த இடத்தில் அருகிலேயே நான் வசிப்பதற்காக மற்றொரு ஆசிரமத்திற்குச் சென்றேன்.(5)

அங்கே அமர்ந்திருந்த போது, மிக நெடியவரும், தோலாடையும் மரவுரியும் அணிந்திருப்பவரும், மெலிந்திருப்பவருமான ஒரு முனிவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். தவமெனும் செல்வத்தைக் கொண்ட அவர் தனு என்ற பெயரைக் கொண்டவராவார்.(6) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வேறு மனிதர்களை ஒப்பிடுகையில் அவரது {தனுவின்} உயரம் எட்டு மடங்கு பெரியதாகத் தெரிந்தது. ஓ! அரசமுனியே {சுமித்திரனே}, அவரது மெலிந்த உடலைப் பொறுத்தவரையில், அதபோன்றதொரு உடலை நான் இதுவரை கண்டதில்லை.(7) ஓ! மன்னா, அவரது உடல் ஒருவனின் சுண்டுவிரல் அளவுக்கு மெலிதாக இருந்தது. அவரது கழுத்து, கரங்கள், கால்கள் மற்றும் முடி ஆகியன இயல்புக்குமீறிய தன்மைகளுடன் இருந்தன.(8) அவரது தலையானது அவரது உடலின் அளவுக்குத் தகுந்ததாகவும், அவரது காதுகளும், கண்களும் அதே போலவும் இருந்தன. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அவரது பேச்சும், அசைவுகளும் பலவீனமாகவே இருந்தன.(9) மிக மெலிந்தவரான அந்தப் பிராமணரைக் கண்ட நான், உற்சாகத்தை இழந்தவனாகவும், அச்சமடைந்தவனாகவும் ஆனேன். அவரது பாதத்தை வணங்கிய நான், அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்றேன்.(10)

ஓ! மனிதர்களுள் காளையே {சுமித்திரா}, அவரிடம் என் பெயரையும், என் குடும்பத்தையும், என் தந்தையின் பெயரையும் அவருக்குச் சொன்னபிறகு, அவரால் குறிப்பிடப்பட்ட ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.(11) ஓ! ஏகாதிபதி, அப்போது, அறவோரில் முதன்மையானவரான தனு, அங்கே வசித்து வந்த முனிவர்களுக்கு மத்தியில் அறம் மற்றும் பொருள் சம்பந்தப்பட்டவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(12) அந்த உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், படைகள் மற்றும் தன் வீட்டுப் பெண்மணிகள் ஆகியோரின் துணையுடன் கூடியவனுமான ஒரு மன்னன் வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் அந்த இடத்திற்கு வந்தான்.(13) அந்த மன்னனின் பெயர் வீரத்யும்னன் ஆகும். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், பெரும் குழைக் கொண்டவனாக இருந்தான். அவனுடைய மகனின் பெயர் பூரித்யும்னன் ஆகும். அந்தப் பிள்ளை தொலைந்து போகவும், உற்சாகமிழந்த அவனுடைய தந்தை, தொலைந்து போனவனைத் தேடிக் காடுகளில் அலைந்தபடியே,(14) “நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்! நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்” என்று நம்பிக்கொண்டே அந்தக்காலத்தில் அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(15)

அந்த மெலிந்த முனிவரிடம் பேசிய அவன், “உயர்ந்த அறவோனான என் மகனைக் கண்டுபிடிப்பது நிச்சயம் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஐயோ, அவன் என் ஒரே மகனாவான். தொலைந்து போன அவனை எங்கும் காண முடியவில்லை.(16) அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லையாயினும், கண்டுபிடித்துவிடுவோம் என்ற என்ற நம்பிக்கை {எதிர்பார்ப்பு} மிகப் பெரியதாக இருக்கிறது. உண்மையில் மரணத் தருவாயில் இருக்கும் நான், (தொடர்ந்து தவறினாலும்) அந்தத் நம்பிக்கையால் {எதிர்பார்ப்பால்} நிறைந்திருக்கிறேன்” என்றான்.(17)

மன்னின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், முனிவர்களில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, தலையைத் தொங்கவிட்டபடியே தியானத்தில் தம்மைப் புதைத்துக் கொண்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(18) தியானத்தில் புதைந்திருக்கும் அவரைக் கண்ட மன்னன், உற்சாகத்தைப் பெரிதும் இழந்தான். பெருந்துயரத்தில் மெதுவாகவும், மென்மையாகவும் பேசத் தொடங்கிய அவன்,(19) “ஓ! தெய்வீக முனிவரே, எது வெல்லப்பட முடியாதது? மேலும் எது நம்பிக்கையை விடப் பெரியது? ஓ! புனிதமானவரே, நான் கேட்பது முறையற்றதாக இல்லையென்றால் {முறையானதென்றால்}, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(20)

அதற்கு அந்த முனிவர் {தனு, மன்னன் வீரத்யும்னனிடம்}, “புனிதமான பெரும் முனிவர் ஒருவர் உன் மகனால் அவமதிக்கப்பட்டார். அவன் தன் தீயூழின் மூலமும், தன் மூட அறிவினால் உந்தப்பட்டும் அதைச் செய்துவிட்டான்.(21) அந்த முனிவர் உன் மகனிடம், ஒரு தங்கத்தாலான கொள்கலன் ஒன்றையும், மரவுரியையும் கேட்டார். உன் மகனோ அவமதிக்கும் வகையில், அந்தத் தவசியை நிறைவு செய்ய மறுத்தான்.(22) உன் மகனால் இவ்வாறு நடத்தப்பட்ட அந்தப் பெரும் தவசி ஏமாற்றமடைந்தார்” என்றார்.

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், உலகம் அனைத்தாலும் வழிபடப்படும் அந்தத் தவசியை வழிபட்டான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அற ஆன்மா கொண்ட அந்த வீரத்யும்னன், நீ இப்போது இருப்பதைப் போலவே களைப்புடன் அங்கே அமர்ந்திருந்தான்.(23) பதிலுக்கு அந்தப் பெரும் முனிவரும், கானகவாசிகள் நோற்கும் சடங்குகளின்படி, மன்னனின் காலைக் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.(24) அப்போது, ஓ! மனிதர்களில் புலியே, துருவ நட்சத்திரத்தைச் சூழ்ந்திருக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் போல அந்த மனிதர்களில் காளையைச் சுற்றிலும் முனிவர்கள் அனைவரும் அமர்ந்தனர்.(25) பிறகு அவர்கள், அந்த வெல்லப்பட முடியாத மன்னன் அந்த ஆசிரமத்திற்கு வந்ததற்கான காரணத்தை அவனிடம் கேட்டனர்” என்றார் {ரிஷபர்}.(26)

எதிர்பார்ப்பைத் துறப்பாயாக! – சாந்திபர்வம் பகுதி – 128-மன்னன் வீரத்யும்னனுக்கும் தனு என்ற முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை மன்னன் சுமித்திரனுக்குச் சொன்ன முனிவர் ரிஷபர்; ரிஷபரின் வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய பீஷ்மர்…

{ரிஷபர் மான் வேட்டையாட வந்த மன்னன் சுமித்திரனிடம் தொடர்ந்தார்}, “மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நான் வீரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு மன்னனாவேன். என் புகழ் திசைகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. என் மகன் பூரித்யும்னன் காணாமல் போனான். அவனைத் தேடியே நான் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறேன்.(1) பிராமணர்களில் முதன்மையானோரே, அந்தப் பிள்ளை என் ஒரே மகனாவான். பாவமற்றவர்களே, வயதில் அவன் மிகவும் இளையவனாவான். எனினும், அவனை இங்கும் காண முடியவில்லை. அவனைக் காணவே நான் எங்கும் திரிந்து வருகிறேன்” என்றான்”.(2)

ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “மன்னன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், தவசி தனு தமது தலையைத் தொங்கவிட்டார். அவர் பதிலாக எந்த ஒரு வார்த்தையையும் சொல்லாமல் முற்றிலும் அமைதியாக இருந்தார்.(3) முற்காலத்தில் அந்தப் பிராமணர், இந்த மன்னனால் கௌரவிக்கப்படாதவராவார். ஓ! ஏகாதிபதி, ஏமாற்றமடைந்திருந்த அவர், அந்தக் காரணத்திற்காகவே நெடுங்காலம் கடுந்தவம் இருந்தார்;(4) மன்னர்கள் எவரிடம் இருந்தோ, வேறு எந்த வகையினரிடம் இருந்த கொடையாக எதையும் ஒருபோது ஏற்பதில்லை என்று தமது மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டார்.(5)

அவர் தமக்குள்ளேயே, “மூட அறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனையும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} கலங்கடிக்கிறது. நான் என் மனத்திலிருக்கும் நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} அகற்றுவேன்” என்று தீர்மானித்தார். இதுவே அவரது தீர்மானமாக இருந்தது. வீரத்யும்மன் அந்தத் தவசிகளில் முதன்மையானவரிடம் மீண்டும் இந்த வார்த்தைகளில் கேள்வியைக் கேட்டான்.(6)

மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நம்பிக்கையுடைய மெலிவின் அளவென்ன? இந்த உலகில் அடைவதற்கு மிகக் கடினமானது எது? ஓ! புனிதமானவரே, அறநெறி மற்றும் பொருளை நன்கறிந்திருப்பதால், இவை யாவற்றையும் நீர் எனக்குச் சொல்வீராக?” என்று கேட்டான்”.(7)

ரிஷபர் {மன்னன் சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “புனிதமானவரும், மெலிந்த உடலைக் கொண்டவருமான அந்த முனிவர் {தனு}, (மன்னனிடம் தான் அடைந்த அவமானம் குறித்த) கடந்த கால நினைவுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து, மன்னனுக்கும் அவற்றைத் திரும்ப நினைவுப்படுத்திப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(8)

அந்தத் தவசி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “ஓ! மன்னா, மெலிந்ததில் நம்பிக்கைக்கு {எதிர்பார்ப்புக்கு} இணையானது வேறேதும் கிடையாது. நான் பல மன்னர்களிடம் வேண்டிக் கேட்டிருக்கிறேன். நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மனத்தின் முன் நிறுவும் {கொண்டுவரும்} காட்சியைப் போல அடைதற்கரிதான வேறெதுவும் இல்லை எனவும் நான் கண்டிருக்கிறேன்” என்றார்[1].(9மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! பிராமணரே, உமது வார்த்தைகளைக் கொண்டு மெலிவு என்றால் என்ன? அவ்வாறல்லாதவை எவை? என்பதைப் புரிந்து கொள்கிறேன்[2]. நம்பிக்கையால் {எதிர்பார்ப்பின் மூலம்} மனத்தின் முன் நிறுவப்படும் காட்சிகள் எவ்வாறு அடைதற்கரியனவாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்கிறேன். உமது வார்த்தைகள் ஸ்ருதியில் சொல்லப்பட்டவை என்று நான் கருதுகிறேன்.(10) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனினும் என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. ஓ! தவசியே, என்னால் கேட்கப்படும் உமக்கு, அதை விரிவாக விளக்குவதே தகும்.(11) உமது உடலைவிட மெலிதானது எது? ஓ! புனிதமானவரே, ஓ! தவசிகளில் சிறந்தவரே, இதைக் குறித்துப் பேசுவது முறையென்றால் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)அதற்கு அந்த மெலிந்த துறவி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “வேண்டுபவர்களில் {யாசகர்களில்} மனம் நிறைந்தவனைக் காண்பது மிக அரிதானதாகும். ஒருவேளை, இவ்வுலகில் அப்படிப்பட்ட எவரும் இல்லை என்றே கொள்ளலாம். ஓ! ஐயா, வேண்டும் ஒருவனை ஒருபோதும் அவமதியாதவன் இன்னும் அரிதானவனாவான்.(13) வேண்டுபவர்களுக்கு உறுதி அளித்துவிட்டு, தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, அவர்களுக்கு {வேண்டுபவர்களுக்குத்} தகுந்த நன்மையைச் செய்யாத மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்[3].(14) நன்றியற்ற மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு}, அல்லது கொடூரன், சோம்பேறி, பிறருக்குத் தீங்கிழைப்பவன் ஆகியோர் மீது வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்.(15) ஒரே மகனுடைய தந்தை, தொலைந்து போன, அல்லது தவறவிட்ட தன் மகனைக் காணத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} என் உடலைவிட மெலிதானதாகும்.(16) ஓ! மன்னா, ஒரு வயதுமுதிர்ந்த பெண் {கிழவி} மகன்களைப் பெறக் கொள்ளும் நம்பிக்கையும், செல்வந்தர்களால் வளர்க்கப்படும் நம்பிக்கையும் என் உடலைவிட மெலிதானதாகும்.(17) வளர்ந்த கன்னியரின் இதயங்களில், திருமணம் குறித்து எவரும் பேசும்போது மட்டும் எழும் நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது}, என் உடலைவிட மெலிந்ததாகும்[4]” என்றார் {முனிவர் தனு}.(18)ஓ! ஏகாதிபதி {சுமித்திரா}, இந்த வார்த்தைகளைக் கேட்டு, மன்னன் வீரத்யும்னனும், அவனது வீட்டைச் சேர்ந்த பெண்களும் அந்தப் பிராமணர்களில் காளையின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவரது பாதத்தைத் தீண்டி தலைவணங்கினர்.(19)

மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! புனிதமானவரே, நான் உமது அருளை வேண்டுகிறேன். நான் என் மகனைக் காண விரும்புகிறேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் சொன்னது உண்மையே. நீர் சொன்ன உண்மைகளில் எந்த ஐயமும் இல்லை” என்றான்”.(20)

ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “அறவோரில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, புன்னகைத்தபடியே, தமது கல்வி மற்றும் தவங்களின் மூலமாக மன்னனின் மகனை {பூரித்யும்னனை} அந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்.(21) அந்த இளவரசனை அங்கே கொண்டுவரச் செய்த அந்தத் தவசி மன்னனை (அவனது தந்தையைக்) கண்டித்தார்[5]. அப்போது அறவோரில் முதன்மையான அவர் {தவசி தனு}, தம்மையே அற தேவனாக {தர்மதேவனாக} வெளிப்படுத்திக் கொண்டார்.(22) உண்மையில் ஆச்சரியமிக்கத் தமது தெய்வீக வடிவை வெளிப்படுத்திய அவர், கோபம் மற்றும் பழிதீர்க்கும் விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட இதயத்துடன் அருகில் இருந்த காட்டுக்குள் நுழைந்தார்.(23) ஓ! மன்னா {சுமித்திரா}, இவை யாவற்றையும் நான் கண்டேன். நான் {இப்போது} சொன்ன வார்த்தைகளையும் கேட்டேன். (அந்தத் தவசி குறிப்பிட்டவற்றில் எதையும் விட) மிக மெலிந்ததான உன் நம்பிக்கையை விரட்டுவாயாக” என்றார் {ரிஷபர்}”.(24)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம ரிஷபரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் சுமித்திரன், தன் இதயத்தில் இருந்ததும், (மெலிந்த தவசியால் குறிப்பிடப்பட்ட எந்த வகை நம்பிக்கையையும் விட) மெலிந்ததுமான நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} விரைவாகக் கைவிட்டான்.(25) ஓ! குந்தியின் மகனே, நீயும் இந்த என் வார்த்தைகளைக் கேட்டு இமய மலையைப் போல அமைதியடைந்து, அசைவற்றவனாக {உறுதிமிக்கவனாக} இருப்பாயாக.(26) துயரில் மூழ்கியவனான நீ, என்னைக் கேள்வி கேட்டு, நான் சொன்ன பதிலையும் கேட்டாய். ஓ! ஏகாதிபதி, உன் வருத்தங்களை அகற்றிக் கொள்வதே உனக்குத் தகும்” {என்றார் பீஷ்மர்}.(27)

தாய் தந்தை! – சாந்திபர்வம் பகுதி – 129– பெற்றோருக்குப் பணிவிடை செய்வது ஒவ்வொருவரின் கடனை நேர் செய்வதற்குரிய இயல்பு என்று யமன் கௌதம முனிவருக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அமுதத்தைக் குடிப்பவன் போலவே, நீர் சொல்வதைக் கேட்கும் நானும் தாகம் தணியாதவனாக இருக்கிறேன். தன்னறிவைக் கொண்ட ஒருவன், தியானத்தால் ஒருபோதும் தணிவடையாததைப் போலவே, நீர் சொல்வதைக் கேட்பதால் நான் ஒருபோதும் தணிவடையவில்லை.(1) எனவே, ஓ! பாட்டா, அறநெறி குறித்து நீர் மீண்டும் உரைப்பீராக. அறநெறி குறித்த உமது உரையாடல்கள் எனும் அமுதத்தைப் பருகுவதால் என் தாகம் ஒருபோதும் தணிவடையவில்லை” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கௌதமருக்கும், சிறப்புமிக்க யமனுக்கு இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகின்றது.(3) கௌதமர் பாரிபாத்ர {பாரியாத்திர} மலையில் ஒரு பெரிய ஆசிரமத்தைக் கொண்டிருந்தார். அந்த வசிப்பிடத்தில் அவர் எத்தனை வருடங்கள் இருந்தார் என்பதை என்னிடம் கேட்பாயாக. அறுபதாயிரம் {60,000} வருடங்களுக்கு அந்தத் தவசி அந்த ஆசிரமத்திலேயே பல கடுந்தவங்களைச் செய்தார்.(4) ஒரு நாள், ஓ! மனிதர்களில் புலியே, லோகபாலகனான யமன், தூய ஆன்மா படைத்த அந்தத் தவசி கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே சென்றான். கடுத் தவங்களைச் செயதவரும், கடுந்தவங்களிலேயே எப்போதும் ஈடுபட்டு வருபவருமான அந்தத் தூய்மையான ஆன்மாவை {கௌதமரை} யமன் கண்டான்.(5)

வந்தவன் யமன் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மறுபிறப்பாள தவசி, கூப்பிய கரங்களுடனும், (அவனது ஆணைகளுக்குக் காத்திருக்கும் வகையில்) அவனை விரைவாக வணங்கி அமர்ந்தார்.(6) தர்மராஜனும் அந்தப் பிராமணக் காளையைக் கண்டு (பதிலுக்கு) முறையாக வணங்கி, தான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டான்.(7)

கௌதமர் {யமனிடம்}, “ஒருவன் எச்செயல்களைச் செய்வதால் தன் தாய்க்கும், தந்தைக்கும் பட்ட கடனில் இருந்து விடுபடலாம்? மேலும் அடைவதற்கரிதான தூய அருள் கொண்ட உலகங்களை ஒருவன் எவ்வாறு வெல்லலாம்?” என்று கேட்டார்.(8)

யமன் {கௌதமரிடம்}, “ஒருவன், உண்மை என்ற கடமைக்குத் தன்னை அர்ப்பணித்து, தூய்மையையும், தவங்களையும் பயின்று, இடையறாமல் தனது தாய் மற்றும் தந்தையை வழிபட வேண்டும்.(9) ஒருவன், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் குதிரை வேள்விகளையும் செய்ய வேண்டும். இத்தகு செயல்களால் ஒருவன் அற்புதமான (புகழ்) உலகங்களை வெல்லலாம்” என்றான்”.(10)

துன்பகால நடைமுறை! – சாந்திபர்வம் பகுதி – 130-பேராபத்திலும், துயரிலும், நண்பர்களை இழந்த நிலையிலும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, நண்பர்களை இழந்தவனும், பல எதிரிகளைக் கொண்டவனும், கருவூலம் தீர்ந்தவனும், துருப்புகளற்றவனுமான ஒரு மன்னனுடைய நடந்தை எவ்வாறு இருக்க வேண்டும்?(1) உண்மையில் அவன், தீய அமைச்சர்களால் சூழப்பட்டிருக்கும்போதும், ஆலோசனைகள் {இரகசியங்கள்} அனைத்தும் வெளிப்படும்போதும், தன் முன்னே உள்ள வழி தெளிவற்று இருக்கும்போதும்,(2) வேறு நாடுகளைத் தாக்கச் செல்லும்போதும், ஒரு பகை நாட்டைக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருக்கும்போதும், பலவீனனாக இருந்தும் ஒரு பலமிக்க ஆட்சியாளனுடன் போர் புரியும் போதும் அவனது {மன்னனின்} நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? நாட்டின் காரியங்களில் ஒழுங்கில்லாமல் இருப்பவனும், இடம் மற்றும் நேரத்தின் தேவைகளை அலட்சியம் செய்பவனும், ஒடுக்குமுறையின் விளைவாக அமைதியை ஏற்படுத்த முடியாதவனும், எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்க முடியாதவனுமான ஒரு மன்னனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அவன் தீய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைய வேண்டுமா? அல்லது, செல்வத்தை நாடாமல் தன் உயிரை விட வேண்டுமா?” என்று கேட்டான்.(3,4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடமைகளை அறிந்தவனான நீ, (கடமைகள் தொடர்பான) ஒரு புதிரைக் குறித்து என்னிடம் கேட்கிறாய்[1].(5) ஓ! யுதிஷ்டிரா, கேளாமல் இந்தக் கடமை குறித்து நான் சொல்லத் துணியேன். அறநெறி மிக நுட்பமானதாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே, சாத்திர உரைகளின் துணையுடன் அஃதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். கேள்விப்பட்டதை நினைவுகூர்வதன் மூலமும், நற்செயல்களைச் செய்வதன் மூலமும், எந்த இடத்திலும் உள்ள எவனும் அறவோனாகலாம் {நல்லோனாகலாம்}.(6) மன்னன், நுண்ணறிவுடன் செயல்படுவதன் மூலம் செல்வத்தை அடைவதில் வெல்லவோ, வெல்லாமலோ போகலாம்[2]. இக்காரியத்தில் உன் கேள்விக்கான பதில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உன் நுண்ணறிவின் உதவியுடன் நினைத்தப்பார்.(7) ஓ! பாரதா, (துயர்மிக்க {ஆபத்து} காலங்களில்) மன்னர்கள் பெரும் தகுதியையுடைய {புண்ணியத்தையுடைய} எந்த வழிமுறைகளின் மூலம் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பாயாக. எனினும், உண்மை அறநெறிகளின் நிமித்தமாக, அந்த வழிமுறைகளை அறம்சார்ந்தவை {நல்லவை} என்று நான் சொல்லமாட்டேன்.(8) ஒடுக்குமுறையின் மூலம் கருவூலம் நிரப்பப்பட்டால், அத்தகைய நடத்தையானது மன்னனை அழிவின் விளிம்புக்குக் கொண்டு விடும். இக்காரியம் குறித்துச் சிந்தித்த நுண்ணறிவுமிக்க மனிதர்களின் தீர்மானம் இதுவே ஆகும்.(9) ஒருவன் எந்த வகைச் சாத்திரங்கள், அல்லது அறிவியலை எப்போதும் படிக்கிறானோ, அவை தங்களால் இயன்ற வகையிலான அறிவையே அவனுக்குக் கொடுக்கும். அத்தகையே அறிவே உண்மையில் அவனுக்கு ஏற்புடையதாகிறது.(10)வழிமுறைகளைப் பொறுத்தவரையில், அறியாமையானது புதிய கண்டுபிடிப்புகளில் வெறுமையான நிலைக்கே ஒருவனை வழிவகுக்கும். மேலும், அறிவின் உதவியுடன் வழிமுறைகளைத் தீட்டும் நிலையானது, பெரும்புகழின் ஊற்றுக்கண்ணாக இருக்கும். எந்த ஐயுணர்வையும், எந்த வன்மத்தையும் ஊக்கப்படுத்திக் கொள்ளாமல் இந்த அறிவுரைளைக் கேட்பாயாக[3].(11) கருவூலம் குறைவடைவதன் மூலம், மன்னனின் படைகள் குறைவடைகின்றன. எனவே, நீரில்லா காட்டில் நீரை உண்டாக்கும் ஒருவனைப் போல, மன்னன் (எவ்வழிமுறைகளிலாவது) தன் கருவூலத்தை நிரப்ப வேண்டும்.(12) பழங்காலத்தவரால் பின்பற்றப்பட்ட இந்தப் போலி அறநெறிக்கு ஏற்புடைய வகையில் மன்னன் செயல்பட வேண்டும், நேரம் வரும்போது தன் மக்களிடம் கருணையைக் காட்ட வேண்டும்[4]. இதுவும் ஒரு நித்திய கடமையாகும்.(13) இயன்றவர்களும், தகுந்தவர்களுமான மனிதர்களுக்கு, கடமைகள் ஒரே வகையைச் சார்ந்தவையே. எனினும், துன்ப காலங்களில் ஒருவனுடைய கடமை வேறு வகையைச் சார்ந்ததாகும். செல்வமில்லாமல் ஒரு மன்னன் (தவங்கள் அல்லது அதுபோன்ற செயல்களால்) அறத்தகுதியை ஈட்ட முடியும். எனினும் வாழ்வென்பது, அறத்தகுதியை விட மிக முக்கியமானதாகும். (செல்வமில்லாமல் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், செல்வத்தை அடையும் வழியின் குறுக்கே நிற்கும் எந்தத்தகுதியும் நாடப்படக்கூடாது).(14)பலவீனமான மன்னன், எவ்வளவுதான் முயன்றாலும், தன் அறத்தகுதியை மட்டுமே துணையாகக் கொண்டு அதிகாரத்தை அடைய முடியாது. அவன் அறத்தகுதியை மட்டுமே அடைவதால் அவனுக்குரிய நியாயமான வாழ்வாதாரத்தை அவனால் ஒருபோதும் அடையமுடியாது.(15) எனவே, துன்ப கால நடைமுறைகள் சில வேளைகளில் அறநெறிக்கு இசைவற்றதாகவே கருதப்படுகின்றன. எனினும், கல்விமான்கள் அந்த நடைமுறைகள் பாவத்திற்கே வழிவகுக்கின்றன என்று கருதுகிறார்கள்.(16) துன்ப காலம் முடிந்ததும் ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டும்? (அத்தகைய நேரத்தில்) அவன் தன் தகுதிக்கு அழிவு ஏற்படாதவாறு தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவன் தன் எதிரிகளுக்குத் தான் அடிபணியாமல் இருக்கும் வழியில் செயல்பட வேண்டும்[5]. இவையும் அவனது கடமைகளாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவன் சோர்வில் மூழ்கக்கூடாது.(17) (துன்ப காலங்களில்) அவன், பிறருடைய தகுதியையோ, தனது தகுதியையோ (அழிவடையும் ஆபத்திலிருந்து) காக்க முயலக்கூடாது. மறுபுறம், அவன் தன்னையே காத்துக் கொள்ள வேண்டும். இதுவே தீர்மானமான முடிவாகும்[6]. கடமைகளை அறிந்தவர்களான பிராமணர்கள், தங்களுக்குரிய கடமைகளில் செயல்திறனுடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட இந்த ஸ்ருதி இருக்கிறது. அதே போல, க்ஷத்திரியனைப் பொறுத்தவரையில், கரங்களின் வலிமையே பெரும் உடைமை என்பதால், அவன் உழைப்பில் {முயற்சியில்} செயல்திறன் கொண்டவனாக இருக்க வேண்டும்.(18,19) ஒரு க்ஷத்திரியனுக்கு வாழ்வாதார வழிமுறைகள் இல்லையென்றால், தவசிகளுக்கும் உரியவற்றையும், பிராமணர்களுக்குச் சொந்தமானவற்றையும் தவிர வேறு எதைத்தான் அவன் எடுக்கக்கூடாது? {அதாவது வேறு எதையும் அவன் எடுத்துக் கொள்ளலாம்}.(20)ஒரு பிராமணன், (சாதாரண நேரங்களில்) எவனுக்கு ஒருபோதும் வேள்வி செய்யக்கூடாதோ அவனுக்கே துன்ப காலங்களில் வேள்வி செய்து கொடுக்கலாம், தடைசெய்யப்பட்ட உணவையும் உண்ணலாம் என்பது போல, (துயரில் இருக்கும்) ஒரு க்ஷத்திரியன், தவசிகள் மற்றும் பிராமணர்களைத் தவிர அனைவரிடமும் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.(21) (எதிரியால்) பீடிக்கப்பட்டு, (தப்பும் வழிமுறைகளை நாடும்) ஒருவனுக்கு எதுதான் முறையற்ற போக்காக இருக்கும்? (நிலவறைக்குள்) அடைபட்டு கிடந்து, (தப்ப முயலும்) ஒரு மனிதனுக்கு எதுதான் முறையற்ற பாதையாக இருக்க முடியும்? ஒரு மனிதன் துன்பத்துக்குள்ளானால், முறையற்ற போக்கின் மூலமும் தப்பலாம்.(22) கருவூலம் மற்றும் படை பலவீனத்தின் விளைவால் ஒரு க்ஷத்திரியன் மிகுந்த அவமானத்தை அடைந்தால், பிச்சைக்கார வாழ்வோ, வைசியத் தொழிலோ, சூத்திரத் தொழிலோ அவனுக்கு விதிக்கப்படவில்லை.(23) போர் மற்றும் வெற்றியின் மூலம் செல்வத்தை அடைவதே தொழிலாக ஒரு க்ஷத்திரியனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அவன் தன் வகையைச் சேர்ந்த ஒருவனிடம் பிச்சை எடுக்கக்கூடாது. சாதாரண நேரங்களில் முதன்மையாகத் தனக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றும் மனிதன், துன்ப காலங்களில், மாற்று நடைமுறைகளைப் பின்பற்றித் தன்னை ஆதரித்துக் கொள்ள வேண்டும்.(24) துன்ப காலங்களில் சாதாரண நடைமுறைகளைப் பின்பற்ற முடியாது. ஒரு க்ஷத்திரியன் நீதியற்ற, முறையற்ற வழிமுறைகளின் மூலமும் வாழலாம். பிராமணர்களே கூடத் தங்கள் வாழ்வாதாரங்கள் அழிவடையும் போது, அதையே செய்வதைக் காண முடிகிறது.(25)

(அத்தகைய நேரங்களில்) பிராமணர்களே இவ்வாறு நடந்து கொள்ளும்போது, க்ஷத்திரியர்கள் அவ்வாறு செய்வதில் என்ன ஐயமிருக்க முடியும்? உண்மையில் இது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். மனச்சோர்வில் மூழ்காமலும், அழிவடையாமலும் ஒரு க்ஷத்திரியன் செல்வந்தர்களிடம் இருந்து (பலவந்தமாக) தன்னால் முடிந்ததை எடுத்துக் கொள்ளலாம்.(26) க்ஷத்திரியனே மக்களைப் பாதுகாப்பவனும், அழிப்பவனும் ஆவான் என்பதை அறிவாயாக. எனவே, துயரில் இருக்கும் ஒரு க்ஷத்திரியன், (முற்றிலும்) மக்களைக் காக்கும் நோக்கோடு தன்னால் முடிந்ததை (பலவந்தமாக) எடுத்துக் கொள்ள வேண்டும்.(27) ஓ! மன்னா, உலகில் உள்ள எந்த மனிதனாலும், பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காமல் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆழ்ந்த கானகத்தில் தனியாக வாழும் தவசி கூட இதற்கு விதிவிலக்கானவரல்ல.(28) ஓ! குருக்களின் தலைவா, ஒரு க்ஷத்திரியன், அதிலும் குறிப்பாக ஆட்சி செய்வதில் விருப்பமுள்ள ஒருவன், விதியைச் சார்ந்து ஒருபோதும் வாழக்கூடாது.(29) மன்னனும் நாடும், எப்போதும் முறையாக ஒருவரையொருவர் காத்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு நித்திய கடமையாகும்.(30)

நாடு துன்பத்தில் மூழ்கும்போது, மன்னன் தன் உடைமைகள் அனைத்தையும் செலவழித்துப் பாதுகாப்பதால், நாடும் மன்னன் துன்பத்தில் மூழ்கும்போது அவனைப் பாதுகாக்க வேண்டும்.(31) அதிகத் துன்பத்திலும் கூட, கருவூலம், தீயோரைத் தண்டிக்கும் {அரசு} இயந்திரம், படை ஆகியவற்றையும், நண்பர்கள், கூட்டாளிகள், தேவையான பிற அமைப்பினரையும், தன் நாட்டில் உள்ள தலைவர்கள் ஆகியோரையும் மன்னன் கைவிடக்கூடாது.(32) ஒருவன் தன் வித்துகளைக் காப்பதற்காக, அவற்றைத் தன் உணவிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்ற கடமையை அறிந்தோர் சொல்கின்றனர்[7]. பெரும் மாயாசக்திகளுக்காக நன்கறியப்பட்டவனான சம்பரனின் உடன்படிக்கையில் இந்த உண்மை குறிப்பிடப்படுகிறது.(33) எந்த மன்னனின் நாடு நலிவுறுகிறதோ, அவனுடைய வாழ்வுக்கு ஐயோ. எந்த மனிதன் வாழ்வாதாரத் தேவைகளுக்காக அந்நிய நாட்டுக்குச் சென்று வாழ்கிறானோ, அவனுடைய வாழ்வுக்கு ஐயோ.(34) கருவூலமும், படையுமே மன்னனின் வேர்களாகும். மேலும் அவனுடைய படையானது, கருவூலத்திலேயே தன் வேரைக் கொண்டுள்ளது. அவனுடைய படையே அனைத்து அறத்தகுதிகளுக்கும் வேராகும். மேலும் அறத்தகுதிகளே அவனுடைய குடிமக்களின் வேராகும்.(35)பிறரை ஒடுக்காமல் ஒருபோதும் கருவூலத்தை நிரப்ப முடியாது. ஒடுக்குமுறையில்லாமல் படையை எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே, மன்னன், துன்ப காலங்களில், கருவூலத்தை நிரப்புவதற்காகத் தன் குடிமக்களை ஒடுக்கினால் எந்தக் குற்றத்தையும் இழைத்தவனாகமாட்டான்.(36) வேள்விகளைச் செய்வதற்காக முறையற்ற செயல்கள் பல செய்யப்படுகின்றன. இந்தக் காரணத்தினால், (துன்ப காலத்தில் தன் கருவூலத்தை நிரப்பும் நோக்குடன்) ஒரு மன்னன் முறையற்ற செயல்களைச் செய்வதால் எந்தக் குற்றத்தையும் இழைத்தவனாகமாட்டான்.(37) செல்வத்தை அடைவதற்காக, (துன்ப காலங்களில்) முறையான நடைமுறைகளையும் தவிர்த்து, வேறு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. (துன்ப காலங்களில்) அத்தகைய முறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றவில்லையெனில், தீமையே நிச்சயமான விளைவாக இருக்கும். அழிவுக்காகவும், துயருக்காகவும் இயங்கும் அமைப்புகள் அனைத்தும், செல்வத்தைத் திரட்டுவதற்காகவே அமைந்திருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மன்னன் (அத்தகைய காலங்களில்) இத்தகைய கருத்துகளால் வழிநடத்தப்பட்டு, தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.(38) வேள்விகளுக்கு விலங்குகளும், பிற பொருட்களும் தேவைப்படுவதைப் போலவே, வேள்விகள் இதயத்தைத் தூய்மைப்படுத்துவதைப் போலவே, விலங்குகள், வேள்விகள் மற்றும் இதயத்தூய்மை ஆகிய அனைத்தும் இறுதி விடுதலைக்கானது {முக்திக்கானது} என்பதைப் போலவே, கொள்கையும், தண்டனையும், கருவூலத்துக்காக இருக்கின்றன, கருவூலம் படைக்காக இருக்கிறது, கொள்கை, கருவூலம் மற்றும் படை ஆகிய மூன்று எதிரிகளை வெல்வதற்காகவும், நாட்டைப் பாதுகாத்து பெருக்குவதற்காகவும் இருக்கின்றன.(39)

நான் இங்கே அறநெறியின் உண்மை வழிகளை எடுத்துரைக்கும் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லப் போகிறேன். ஒரு வேள்விக் கம்பை {யூபத்தை} அமைப்பதற்காக ஒரு பெரு மரம் வெட்டப்படுகிறது. அதை வெட்டும் போது, அதன் வழியில் குறுக்கிடும் பிற மரங்களும் வெட்டப்படுகின்றன. வீழும் அவையும், அந்த இடத்தில் நிற்கும் பிறரைக் கொல்கின்றன {பிற உயிரினங்கள், அல்லது மரங்களையும் கொல்கின்றன}.(40,41) அதேபோலவே நன்கு நிரம்பிய கருவூலத்தை அமைக்கும் வழியில் குறுக்கே நிற்பவர்களும் கொல்லப்படவே வேண்டும். வேறு வகையில் எவ்வாறு வெற்றியை அடைய முடியும் என்பதை நான் காணவில்லை[8].(42) இம்மை, மறுமை ஆகிய ஈருலகங்களும், உண்மையும், அறத்தகுதியும் செல்வத்தால் அடையப்படுகிறது. செல்வமில்லாத மனிதன் பிணமே ஆவான்.(43) வேள்விகள் செய்வதற்கான செல்வம் எல்லா வழிமுறைகளிலும் அடையப்பட வேண்டும். ஓ! பாரதா, துன்பகாலத்தில் செய்யப்படும் எந்தச் செயலையும் பற்றியிருக்கும் தகுதியின்மையும், பிற நேரத்தில் அதே செயலில் பற்றியிருக்கும் தகுதியின்மையும் ஒன்றல்ல.(44) ஓ! மன்னா, செல்வத்தை அடைவதையும், கைவிடப்படுவதையும் ஒரே மனிதனிடம் காண முடியாது. காட்டில் எந்தச் செல்வந்தனையும் நான் காணவில்லை.(45)

உலகத்தில் உள்ள எந்தச் செல்வத்தை எடுத்துக் கொண்டாலும், “இஃது எனதாகும், இஃது எனதாகும்” என்று சொல்லி ஒவ்வொருவரும் வேறு அனைவருடனும் போட்டியிடுவதே காணப்படுகிறது.(46) ஓ! பகைவர்களை எரிப்பவனே, நாட்டை அடைவதைவிட ஒரு மன்னனுக்குத் தகுதி வாய்ந்தது {புண்ணியம் நிறைந்தது} வேறு எதுவும் இல்லை. சாதாரணக் காலங்களில் தன் குடிமக்களிடம் கடும் தீர்வைகளைச் சுமத்தி அவர்களை ஒடுக்குவது ஒரு மன்னனுக்குப் பாவம் நிறைந்த செயலாகும். எனினும், துன்ப காலங்களில் இது முற்றிலும் வேறுபடும்.(47) கொடைகள், வேள்விகள் மூலம் சிலர் செல்வத்தை அடைகிறார்கள்; தவத்தில் விருப்பமுடைய சிலர், தவங்களின் மூலம் செல்வத்தை அடைகிறார்கள்; சிலர் அதைத் தங்கள் நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் உதவியுடன் அடைகிறார்கள்.(48) செல்வமில்லாதவன் பலவீனன் என்று சொல்லப்படும் அதே வேளையில் செல்வந்தன் பலமிக்கவனாகிறான். ஒரு செல்வந்தனால் அனைத்தையும் அடைய முடியும். நன்கு நிரப்பப்பட்ட கருவூலத்தைக் கொண்ட மன்னன் அனைத்தையும் சாதிப்பதில் வெல்வான்.(49) கருவூலத்தைக் கொண்டு ஒரு மன்னனால் அறத்தகுதியை ஈட்ட முடியும், தன் இன்ப விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள முடியும், இம்மையையும், மறுமையையும் அடைய முடியும். எனினும், கருவூலம் அறத்தின் துணை கொண்டே நிரப்பப்பட வேண்டும், துன்ப காலங்களைத் தவிர்த்து அறமில்லா நடைமுறைகளால் ஒருபோதும் அது {கருவூலம்} நிரப்பப்படக்கூடாது” என்றார் {பீஷ்மர்}.(50)

ராஜதர்மாநுசாஸன உப பர்வம் முற்றும் 

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்