சாங்கிய தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 302-உடலையும், ஆன்மாவையும் சாங்கியர்கள் புரிந்து கொள்ளும் வகை; அவர்கள் முக்தி அடையும் முறை; உடலின் களங்கங்கள்; அவற்றைச் சாங்கியர்கள் அகற்றும் வழிமுறை; சாங்கிய தத்துவத்தின் மேன்மை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, அன்புள்ள ஒரு குரு தன் சீடனிடம் சொல்வதுபோல, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட யோக பாதையை முறையாக எனக்கு விளக்கியிருக்கிறீர்.(1) நான் இப்போது சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளைக் குறித்துக் கேட்கிறேன். அந்தக் கோட்பாடுகளை முழுமையாக எனக்கு உரைப்பீராக. மூவுலகங்களில் உள்ள ஞானம் உம்மால் அறியப்பட்டிருக்கிறது” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தெளிவான ஆன்ம அறிவைக் கொண்டவர்களும், சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களுமான அனைவரின் நுண்கோட்பாடுகள் என்னென்ன என்பதை இப்போது கேட்பாயாக. அந்தக் கோட்பாடுகள், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களும், பலமிக்கவர்களுமான பெரும் யதிகள் {சாங்கியர்கள்} அனைவராலும் நிறுவப்பட்டவையாகும். ஓ! மனிதர்களின் தலைவா, அந்தக் கோட்பாட்டில் பிழைகள் {தோஷங்கள்} ஏதும் தென்படுவதில்லை.(4) அதன் தகுதிகள் {புண்ணியங்கள்} பலவாகும்.
அனைத்துப் பொருட்களும் பிழைகள் உள்ளவையே என்பதை அறிவின் துணையுடன் புரிந்து கொண்டும், மனிதர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், பாம்புகள், கந்தர்வர்கள், பித்ருக்கள், (பறவைகளாகவும், விலங்குகளாகவும்) இடைநிலை வகைகளில் உலவிக் கொண்டிருப்பவை, (கருடன் முதலிய) பெரும்பறவைகள், மருத்துகள், அரசமுனிகள், மறுபிறப்பாள தவசிகள், அசுரர்கள், விஸ்வேதேவர்கள், தெய்வீக முனிவர்கள், பரம் கண்ட யோகியர், பிரஜாபதிகள், பிரம்மன் ஆகியோரும் கைவிடுவதற்கு அரிதான பொருட்களைப் புரிந்து கொண்டும், இவ்வுலகில் ஒருவன் இருக்கப்போகும் காலத்தின் உயர்ந்த எல்லையை உண்மையில் புரிந்து கொண்டும், இம்மையில் இன்பநிலை என்று அழைக்கப்படும் பெரும் உண்மையையும் புரிந்து கொண்டும், ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே,(5-10) (நிலையற்ற) பொருட்களின் தொடர்புடைய கவலைகள் அனைத்தையும் குறித்த தெளிவான அறிவுடனும், இடைநிலை வகையில் வீழ்ந்தோர், நரகத்தில் மூழ்கியோர் ஆகியோரின் கவலைகளை முழுமையாக நன்றாக அறிந்து கொண்டும்,(11) சொர்க்கத்தின் தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் களங்கங்கள் {பாவங்கள்} அனைத்தையும் கண்டும், ஓ பாரதா, வேத தீர்மானங்களோடு தொடர்புடைய தகுதியின்மைகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய சிறப்புகள் அனைத்தையும் கண்டும்,(12) யோக மற்றும் சாங்கிய அமைப்பு தத்துவங்களின் நிறைகுறைகளை உணர்ந்தும்,(13) சத்வ குணம் பத்து தன்மைகளைக் கொண்டதென்றும்[1], ரஜஸ் குணத்திற்கு ஒன்பதென்றும்[2], தமஸ் குணத்திற்கு எட்டு என்றும்[3], புத்திக்கு ஏழு தன்மைகள் என்றும்[4],(14) மனத்திற்கு ஆறு என்றும்[5], வெளிக்கும் {ஆகாயத்திற்கு} ஐந்தென்றும் உணர்ந்து[6], அதற்கு மேலும் புத்திக்கு நான்கு தன்மைகளும்[7], தமஸ் குணத்திற்கு மூன்றும்[8],(15) ரஜஸ் குணத்திற்கு இரண்டும்[9], சத்வ குணத்திற்கு ஒரு தன்மையும் உண்டென்று உணர்ந்து கொண்டும்[10], அழிவடையும்போது பொருட்கள் அனைத்தும் பின்பற்றும் பாதையையும், தன்னறிவின் {சுயஞானத்தின்} போக்கையும் உண்மையில் புரிந்து கொண்டும்,(16) அறிவும், அனுபவமும் கொண்டவர்களும், காரணங்களில் தாங்கள் கொண்ட கருத்துகளால் மேன்மையடைந்தவர்களுமான சாங்கியர்கள், முற்றான மங்கல நிலையை அடைந்து, சூரியக் கதிர்களைப் போலவோ, காற்றைப் போலவோ வெளியில் {ஆகாயத்தில்} புகலிடத்தை அமைத்துக் கொண்டு, விடுதலையின் {முக்தியின்} இன்ப நிலையை அடைகிறார்கள்[11].(17)
வடிவத்தைச் சார்ந்தது பார்வை {கண்}; மணத்தைச் சார்ந்தது மணப்புலன் {மூக்கு}; ஒலிக்கு காது; சாறுகளுக்கு நாவு;(18) தீண்டலுக்குத் தோல் (அல்லது உடல்). காற்றானது வெளியையே {ஆகாயத்தையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. மயக்கமானது {அறியாமை} தமஸையே (இருளையே) தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. பேராசையானது புலன்நுகர் பொருட்களையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது.(19) அசைவை {நகர்வை} (அசைவுப்புலன்களைச்) சார்ந்தவன் விஷ்ணு. பலம் (பலத்தின் புலன்களைச்} சார்ந்தவன் இந்திரன். வயிற்றைச் சார்ந்தவன் நெருப்பு தேவன் {அக்னி}. நீர்நிலைகளைச் சார்ந்தவள் பூமாதேவி. நீர்நிலைகள் வெப்பத்தையே (அல்லது நெருப்பையே) தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன.(20) காற்றைச் சார்ந்தது வெப்பம்; காற்றானது வெளியையே {ஆகாயத்தையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; வெளியானது மஹத்-ஐயே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. மஹத்-க்கு புத்தியே அடித்தளமாக இருக்கிறது.(21) புத்தியானது தமஸ் குணத்தையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; தமஸ் குணமானது ரஜஸ் குணத்தையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; ரஜஸ் குணமானது சத்வ குணத்தையே அடைப்படையாகக் கொண்டுள்ளது; சத்வ குணமானது ஆன்மாவைச் சார்ந்திருக்கிறது.(22) ஆன்மாவானது மகிமையும் பலமும் மிக்க நாராயணனைத் தன் புகலிடமாகக் கொண்டிருக்கிறது. அந்த மகிமைமிக்கத் தேவன் விடுதலையை {முக்தியைத்} தன் புகலிடமாகக் கொண்டிருக்கிறான். விடுதலையானது அனைத்துப் புகலிடங்களின் சார்பும் அற்றதாக இருக்கிறது.(23)
இவ்வுடலானது, பதினாறு உடைமைகளைக் கொண்டது[12], சத்வ குணத்தின் விளைவாகவும் இருப்பது என்பதை அறிந்து கொண்டும், உயிரின உடலின் இயல்பையும், அதற்குள் வசிக்கும் சேதனையின் {பூர்வ வாசனையின்} தன்மையையும் முழுமையாகப் புரிந்து கொண்டும்,(24) உடலுக்குள் வாழும் ஓர் இருப்பும், உடலின் ஒவ்வொரு காரியத்தில் இருந்தும் தனித்திருப்பதும், எந்தப் பாவமும் பற்றமுடியாததுமான ஆத்மாவை உணர்ந்து கொண்டும், புலன் நுகர் பொருட்களில் பற்று கொண்டோரின் செயல்கள் எனும் இரண்டாம் பொருளின் இயல்பை உணர்ந்து கொண்டும்,(25) புலன்கள் மற்றும் ஆன்மாவைத் தங்கள் புகலிடமாகக் கொண்ட புலனின்பப் பொருட்களின் தன்மைகளைப் புரிந்து கொண்டும், அடைவதற்கரிதான {அடையக் கடினமான} விடுதலை {முக்தி} மற்றும் அதைச் சொல்லும் {வேதம் முதலிய} சாத்திரங்களை மெச்சிக் கொண்டும்,(26) முக்கிய உயிர் மூச்சுகளான பிராணன், அபானன், ஸமானன், வியானன், உதானன் ஆகியவற்றின் இயல்பையும், கீழ்நோக்கிச் செல்வதும், மேல்நோக்கிச் செல்வதுமான இரண்டு உயிர்மூச்சுகள் பிறவற்றின் {ஆவஹன், பிரவஹன் ஆகியவற்றின்} இயல்பையும் முழுமையாக அறிந்து கொண்டும்,(27) உண்மையில் ஏழு வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்ய விதிக்கப்பட்டிருக்கும், அவ்வேழு உயிர் மூச்சுகளை அறிந்து கொண்டும், பிரஜாபதிகள், முனிவர்கள், அறம் மற்றும் நீதியின்கண் எண்ணிக்கையில் பலவாக உள்ள உயர்ந்த பாதைகள் ஆகியவற்றின் இயல்பை உறுதிசெய்து கொண்டும்,(28) ஓ எதிரிகளை எரிப்பவனே, ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்}, எண்ணிலடங்கா அரசமுனிகள், தெய்வீகமான பெருமுனிவர்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய மறுபிறப்பாள முனிவர்கள் பலர் ஆகியோர்(29) அனைவரும் நெடுங்காலத்தின் போக்கில் தங்கள் பலங்களை இழந்ததைக் கண்டும், ஓ! ஏகாதிபதி, அண்டத்தின் வலிமைமிக்கவர்கள் அனைவரும் அழிவடைந்ததைக் கேள்விப்பட்டும்,(30) ஓ! மன்னா, பாவச் செயல்களைச் செய்த உயிரினங்கள் அடைந்த மங்கலமற்ற கதிகளையும், யமனின் ஆளுகைக்குள் உள்ள வைதரணி ஆற்றில் விழுந்தோரின் துயரங்களையும் புரிந்து கொண்டும்,(31) பல்வேறு கருவறைகளின் மூலம் உயிரினங்களுக்குள் மங்கலமற்ற வகையில் திரிவதையும், குருதி, நீர்,(32) சளி, சிறுநீர், மலம் மற்றும் அனைத்துத் துர்நாற்றங்களுக்கிடையில் அவை வசிக்கும் தன்மையையும், பிறகு குருதி மற்றும் உயிர் வித்து ஆகியவற்றின் கலவையின் விளைவால் மஜ்ஜை தசைக்கட்டுகளுடன்,(33) நூற்றுக்கணக்கான நரம்புகள் மற்றும் தமனிகள் நிறைந்ததும், ஒன்பது வாயில்களைக் கொண்டதுமான தூய்மையற்ற மாளிகையாக அமைந்த உடலைப் பெறுவதைத் புரிந்து கொண்டும், தனக்கான நன்மை எது, நன்மையை உண்டாக்கக்கூடிய பல்வேறு கலவைகள் என்னென்ன என்பதைப் புரிந்து கொண்டும்,(34) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இருள் {தமஸ்}, அல்லது ஆசை {ரஜஸ்}, அல்லது நல்லியல்பின் {சத்வ} குணங்களாலான இயல்பைக் கொண்ட உயிரினங்களின் அருவருக்கத்தக்க ஒழுக்கத்தைக் கண்டும்,(35) ஆன்மாவை முழுமையாக அறிந்தவர்களான சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களால் விடுதலையை {முக்தியை} அடைய இயலாததற்குக் காரணமெனக் கடிந்துரைக்கப்படும் {மேற்கண்ட வகையில் அருவருக்கத்தக்க} அந்த ஒழுக்கத்தைக் கண்டும், ராகுவால் விழுக்கப்படும் சந்திரனையும், சூரியனையும்,(36) தாங்கள் நிறுவப்பட்ட நிலையில் இருந்து விழும் நட்சத்திரங்களையும், தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பும் நட்சத்திரக்கூட்டங்களையும் கண்டும், ஒருங்கிணைந்த அனைத்துப் பொருட்களும் {ஸ்திரீ புருஷர்கள்} பிரியும் சோகத்தையும்,(37) ஒன்றையொன்று விழுங்கும் உயிரினங்களின் மிகக் கொடிய நடத்தையை அறிந்து கொண்டும், மனிதர்களின் குழந்தைப் பருவத்தில் இல்லாத புத்தியையும், உடல் அடையும் சிதைவையும், அழிவையும் கண்டும்,(38) கோபம் மற்றும் மயக்கத்தில் {அறியாமையில்} மூழ்கியதன் விளைவால் உயிரினங்கள் இழக்கும் சத்வ குணத்தைக் குறித்துக் கொண்டும், ஆயிரக்கணக்கான மனிதர்களில் ஒருவர் மட்டுமே விடுதலை {முக்தி} அடைவதற்குப் போராடும் தீர்மானத்தை எட்டுவதைக் கண்டும்,(39) சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி விடுதலையை {முக்தியை} அடைவதில் உள்ள கடினத்தைப் புரிந்து கொண்டும், அடையப்படாத பொருட்களில் உயிரினங்கள் கொள்ளும் அதிக அக்கறையையும், அடைந்த பொருட்களில் கொண்ட அக்கறையின்மையையும் கண்டும்,(40) ஓ! மன்னா, உயிரிழந்தவர்களுடைய வெறுத்தொதுக்கும் உடல்களையும், புலன்நுகர் பொருட்கள் அனைத்தாலும் விளையும் தீமையையும் குறித்துக் கொண்டும்,(41) ஓ! பாரதா, இல்லங்களில் (மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில்) எப்போதும் துன்பம் நிறைந்த வாசத்தைக் கண்டும், பிராமணர்களைக் கொன்ற குற்றத்தால் வீழ்ந்த மனிதர்களின் கொடுங்கதியை அறிந்து கொண்டும்,(42) ஓ! யுதிஷ்டிரா, கிளர்வூட்டும் சாராயத்தைப் பருகுவதில் அடிமையாக இருக்கும் தீய பிராமணர்கள், ஆசான்களின் மனைவியருடன் குற்றத்தொடர்புடன் இருப்பவர்கள்,(43) தாயை முறையாக மதிக்காதவர்கள், தேவர்களை முறையாக மதிக்காதவர்கள், அவர்களை வழிபடாதவர்கள் ஆகியோரின் கதியை அறிந்து கொண்டும்,(44) தீச்செயல்களைச் செய்வோரின் கதி மற்றும் இடைநிலை வகைகளில் {பறவை மற்றும் விலங்குகளாகப்} பிறப்பெடுத்தோரின் பல்வேறு முடிவுகளையும் (தங்கள் தத்துவம் கொடுக்கும்) அறிவின் உதவியால் புரிந்து கொண்டும்,(45) வேதங்களின் பல்வேறு தீர்மானங்கள், பருவகாலங்கள், மறையும் வருடங்கள், மாதங்கள்,(46) பிறை நாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றின் போக்குகளை உறுதி செய்து கொண்டும், சந்திரன் வளர்வதையும், தேய்வதையும் நேரடியாகக் கண்டும்,(47) பொங்கி அடங்கும் கடல்களையும், செல்வம் குறைந்து போவதையும், மீண்டும் அது பெருகுவதையும்,(48) ஒருங்கிணைந்த பொருட்களின் பிரிவையும், யுகங்களின் கழிவையும், மலைகளின் அழிவையும், ஆறுகள் காய்ந்து போவதையும்,(49) பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} (தூய்மை அடையும்) கேட்டையும், அந்தக் கேட்டுக்கும் மீண்டும் மீண்டும் நேரும் அழிவையும் கண்டும், பிறவி, முதுமை, மரணம், உயிரினங்களின் கவலைகள் ஆகியவற்றைக் கண்டும்,(50) உடல் தொடர்பான குறைகள், மனிதர்கள் அடையும் கவலைகள், உயிரினங்களின் உடல்கள் அடையும் மாற்றங்களையும் உண்மையாக அறிந்து கொண்டும்,(51) ஆன்மா தொடர்புடைய களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும், உடல்களைப் பற்றும் மங்கலமற்ற களங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டும் (சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறார்கள்) விடுதலை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(52)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அளவற்ற சக்தி கொண்டவரே, ஒருவனுடைய உடல் தொடர்பாக நீர் காணும் களங்கங்கள் யாவை? இந்த ஐயத்தை எனக்கு முழுமையாகவும், உண்மையாகவும் விளக்குவதே உமக்குத் தகும்” என்றான்.(53)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! எதிரிகளைக் கொல்பவனே, கேட்பாயாக. ஓ! பலமிக்கவனே, அனைத்துப் பாதைகளையும் அறிந்தவர்களும், ஞானத்துடன் கூடியவர்களுமான சாங்கியர்கள், அல்லது கபிலரைப் பின்பற்றுபவர்கள், மனித உடலில் ஐந்து களங்கங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.(54) அவை ஆசை, கோபம், அச்சம், உறக்கம் மற்றும் மூச்சு ஆகியவையே ஆகும்.(55) இந்த ஐந்து களங்கங்களும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் காணப்படுகின்றன. ஞானத்துடன் கூடியவர்கள், மன்னிக்கும் தன்மையின் துணையுடன் கோபத்தின் வேரை அறுக்கிறார்கள். அனைத்துக் காரியங்களையும் கைவிடுவதால் ஆசை அறுக்கப்படுகிறது.(56) நல்லியல்பின் (சத்வ) குணத்தை வளர்த்தெடுப்பதால் உறக்கம் வெல்லப்படுகிறது, விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதால் அச்சம் வெல்லப்படுகிறது. ஓ! மன்னா, எளிய உணவால் உயிர்மூச்சும் வெல்லப்படுகிறது.(57)
நூற்றுக்கணக்கான குணங்களின் துணையால் குணங்களையும், நூற்றுக்கணக்கான களங்கங்களால் களங்கங்களையும், நூற்றுக்கணக்கான காரணங்களால் பல்வேறு காரணங்களையும் உண்மையில் புரிந்து கொண்டு,(58) விஷ்ணுவின் நுற்றுக்கணக்கான மாயைகளால் மறைக்கப்பட்டதும், சித்திரங்கள் கொண்ட சுவற்றையும், நிலையற்ற நாணற்புல்லையும், நீரில் உள்ள நுரையையும் போன்றதே உலகம் என்பதை உறுதி செய்து கொண்டு,(59) இருள் நிறைந்த குழியாக (குழியினைப் போலப் பயங்கரமானதாக}, அல்லது (நித்திய தன்மையுடன் ஒப்பிடுகையில்) குறுகிய காலமே இருப்பதால் நீர்க்குமிழி போல உண்மையற்றதுமாக, உடனே அழியக்கூடியதாக, மகிழ்ச்சியற்றதாக, நிர்மூலத்தையே கதியாகக் கொண்டதாக, தப்பிக்கும் வழியே இல்லாததாக,(60) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் சகதியில் மூழ்கிய யானையைப் போல ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கியிருப்பதாக அதை {உலகத்தைக்} கண்டும், இவையாவற்றையும் குறித்துக் கொண்டும், ஓ! மன்னா, பெரும் ஞானம் கொண்ட சாங்கியர்கள், பிள்ளைகளிடம் கொண்ட உறவில் எழும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டு,(61) தங்கள் {சாங்கிய} அமைப்பு சொல்லும் அனைத்தையும் தழுவும் பரந்த அறிவின் துணையுடன், அந்த அறிவாயுதத்துடனும், தவங்களெனும் தண்டத்துடனும், ரஜஸ் குணத்தில் இருந்து பிறக்கும் மங்கலமற்ற அனைத்து மணங்களையும், தமஸ் குணத்தில் இருந்து எழும் இயல்பைக் கொண்ட மணங்கள் அனைத்தையும், சத்வ குணத்தில் இருந்து எழும் மங்கலமற்ற மணங்கள் அனைத்தையும், உடலில் பிரிக்க முடியாத வகையில் இருக்கும் அதே மூன்று குணங்களில் இருந்து பிறக்கும் தீண்டல் (மற்றும் பிற புலன்கள்) இன்பங்கள் அனைத்தையும் அறுத்து,(62,63) ஓ! பாரதா, வெற்றியால் மகுடம் சூடப்படும் இந்த யதிகள், உண்மையில் அறிவெனும் யோகத்தின் உதவியால் பிறவிப் பெருங்கடலைக் கடக்கிறார்கள்.
பயங்கரமான அந்தப் பெருங்கடல், துன்பத்தையே தன் நீராகக் கொண்டிருக்கிறது. கவலையும், துயரும் அதன் ஆழமான தடாகங்களாக இருக்கின்றன. நோயும் மரணமும் அதிலிருக்கும் பெரும் முதலைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு அடியிலும் இதயத்தைத் தாக்கும் பேரச்சங்கள் அதனில் இருக்கும் பெரும்பாம்புகளாகும்.(64) தமஸ் குணம் கொண்ட செயல்களே அதிலிருக்கும் ஆமைகளாகும். ரஜஸ் குணம் கொண்டவை அதன் மீன்களாகும். விவேகமே அதைக் கடக்கப் பயன்படும் தோணியாகும். புலன் நுகர்பொருட்களில் உள்ள பற்று அதிலுள்ள சகதியாகும். முதுமை துன்பம் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அறிவே அதனில் இருக்கும் தீவாகும். செயல்களே அதன் பேராழமாக அமைகிறது. உண்மையே அதன் கரைகளாக இருக்கின்றன. பக்தி நோன்புகள் அதன் பரப்பில் மிதக்கும் பச்சை பாசிகளாக இருக்கின்றன. பொறாமை அதிலுள்ள வலிமைமிக்கப் பெரும் நீரோட்டமாக இருக்கிறது. இதயத்தில் உள்ள பல்வேறு மிகையுணர்ச்சிகள் அதன் சுரங்கங்களாக இருக்கின்றன. பல்வேறு வகையான மனநிறைவுகள் அதன் மதிப்புமிக்க ரத்தினங்களாக இருக்கின்றன. துயரும், நோயும் அதிலுள்ள காற்றாக இருக்கிறது. அவலங்களும், தாகமும் வலிமைமிக்க அலைகளாக இருக்கின்றன. துன்பமிக்கவையும், மரணத்தை ஏற்படுத்தக்கூடியவையுமான நோய்கள் அதில் பெரும் யானைகளாக இருக்கின்றன. எலும்புக்கூட்டங்கள் அதன் படிக்கற்களாகவும், சளி அதன் நுரையாகவும் இருக்கின்றன. கொடைகள் அதன் முத்து வங்கியாக இருக்கின்றன. குருதித்தடாகங்கள் அதன் வைடூரியங்களாக இருக்கின்றன. உரத்த சிரிப்பு அதன் முழக்கமாக இருக்கிறது. பல்வேறு வகை அறிவியல்கள் {சாத்திரங்கள்} அதில் உள்ள கடக்கமுடியாத இடங்களாகும். கண்ணீர் அதன் உப்புநீராகும். தோழமை துறத்தல் (அதைக் கடப்பதற்க்காக முனைபவர்களுக்கு) பெரும் புகலிடமாக இருக்கிறது. பிள்ளைகளும், மனைவியரும் அதிலுள் உள்ள எண்ணிலடங்கா அட்டைப்பூச்சிகளாகும் {ஒட்டுண்ணிகளாகும்}. நண்பர்களும், உற்றாரும் அதன் கரைகளில் உள்ள பெருநகரங்களும், நகரங்களும் ஆகும். தீங்கிழையாமையும், வாய்மையும் அதன் எல்லைக் கோடுகளாகும். மரணம் அதன் புயலலை ஆகும். வேதாந்த அறிவு (நீரில் தூக்கி வீசப்படுபவர்களுக்குப் புகலிடம் அளிக்கவல்ல) அதிலுள்ள தீவாகும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையால் செய்யப்படும் செயல்கள் உயிர் காக்கும் மிதவைகளாக இருக்கின்றன. வணிகப் பொருட்களைத் தேடி நீரில் பயணிப்போருக்கு அழிக்கப்படும் விலைமதிப்பட்ட பொருளாக விடுதலை {முக்தி} இருக்கிறது. நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரைத் தலை கொண்ட அதன் தற்சார்பு முன்னோடியைப் போல இந்தப் பெருங்கடலும் பயங்கரமான நெருப்புகளைக் கொண்டிருக்கிறது. பருவுடலில் வசிக்கும் சாங்கியர்கள், கடப்பதற்கு அரியவையான அந்தக் கடப்பாடுகளைக் கடந்து, தூய வெளிக்குள் நுழைகிறார்கள்.(65-72)
அப்போது சூரியன், சாங்கிய கோட்பாடுகளைப் பயிலும் அந்த அறவோரைத் தன் கதிர்களால் சுமக்கிறான். தாமரைத் தண்டில் உள்ள இழைகள், தாங்கள் உறிஞ்சும் நீர் அனைத்தையும் மலருக்குக் கொடுப்பதைப்போல, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பருகும் சூரியன், அவற்றை ஞானிகளான அந்த நல்லோருக்குக் கொடுக்கிறான்.(73) ஓ! பாரதா, சக்தியும், தவங்களெனும் செல்வத்தையும் கொண்ட இந்த யதிகள், தங்கள் பற்றுகள் அனைத்தையும் அழித்து, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, நுட்பமானதும், குளுமையானதும், நறுமணமிக்கதும், தீண்டுதற்கினியதுமான தென்றலால் சுமக்கப்படுகிறார்கள்.(74) உண்மையில், ஓ! குந்தியின் மகனே, பேரின்ப உலகங்களில் வீசிக்கொண்டிருக்கும் ஏழு காற்றுகளில் சிறந்த காற்றானது வெளியில் {ஆகாயத்தில்} உள்ள உயர்ந்த கதியை அவர்களுக்கு அளிக்கிறது.(75) பிறகு அவர்கள் கொண்டு சேர்க்கப்படும் வெளியானது, அவர்களுக்கு ரஜஸ் குணத்தின் உயர்ந்த கதியை அளிக்கிறது.(76) பிறகு ரஜஸ் குணமானது அவர்களைச் சத்வத்தின் உயர்ந்த கதிக்குச் சுமந்து செல்கிறது. பிறகு, ஓ! தூய ஆன்மாவே, அந்தச் சத்வ குணமானது, அவர்களைப் பலமிக்கப் பரமன் நாராயணனிடம் கொண்டு செல்கிறது.(77) பலமிக்கவனும், தூய ஆன்மாகக் கொண்டவனுமான நாராயணன் இறுதியாக அவனைப் பரமாத்மாவிடம் சுமந்து செல்கிறான். ஓ! மன்னா, பரமாத்மாவை அடையும் அந்தக் களங்கமற்ற மனிதர்கள், அஃது (என்றழைக்கப்படும் அதன் {பிரம்மத்தின்}) உடலாகி, அழிவின்மையை அடைந்து, மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறார்கள். ஓ! பிருதையின் மகனே, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்தையும் கடந்த உயர் ஆன்மா மனிதர்களால் அடையப்படும் உயர்ந்த கதி அதுவே” என்றார் {பீஷ்மர்}.(79)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாவமற்றவரே, உறுதியான நோன்புகளைக் கொண்ட அந்த மனிதர்கள் பலமும், இன்பமும் நிறைந்த அந்தச் சிறந்த நிலையை அடைந்த பிறகு, அவர்களுடைய முற்பிறவிகளில் நேர்ந்த பிறப்பு மற்றும் மரணம் உள்ளிட்டவற்றை நினைவுகூர்வார்களா?(80) இந்தக் கேள்விக்கான உண்மையை முறையாக எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! குரு குலத்தவரே, உம்மைத் தவிர வேறு எவரிடமும் இதைக் கேட்பது முறை என்று நான் நினைக்கவில்லை.(81) விடுதலையை {முக்தியைச்} சொல்லும் சாத்திரங்களைக் கண்டதில், (விடுதலை {முக்தி} நிலையை அடைந்ததும் நனவு நிலை மறைந்து விடும் எனச் சில சாத்திரங்கள் சொல்கின்றன, அதே வேளையில் இதற்கு நேரெதினாதை சில சாத்திரங்கள் அறிவிக்கின்றன என்பதால்) இந்தப் பெரும் குறையை நான் காண்கிறேன். உயர்ந்த கதியை அடைந்த பிறகு, அந்த யதிகள் நனவுநிலையோடு தொடர்ந்து வாழ்ந்தால்,(82) ஓ மன்னா, பிருவிருத்தியின் அறமே உயர்ந்ததாகக் காணப்படும். மேலும், விடுதலை {முக்தி} நிலையில் நனவுநிலை மறைந்துபோகும் என்றால், அந்த முக்தியை அடைந்த மனிதன், கனவற்ற உறக்கத்தில் மூழ்கியவரே ஆவார். (கனவற்ற உறக்க நிலையில் ஒருவனுடைய நனவுநிலையானது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதேயன்றி ஒருபோதும் தொலைந்துபோவதில்லை. அந்த உறக்கத்தில் இருந்து அவன் விழிப்படைந்தால் மீண்டும் அது திரும்பிவிடும் என்றால்) முக்தி நிலையில் நனவுநிலை இல்லையென்று சொல்வதைவிட முறையற்ற வேறு எதுவும் இருக்க முடியாது” என்றான் {யுதிஷ்டிரன்}.(83)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே,பதிலளிக்க எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீ கேட்ட கேள்வி முறையானதே. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பெரும் கல்விமான்களே மலைப்படையும் வகையில் இந்தக் கேள்வி இருக்கிறது.(84) நான் விளக்கிச் சொல்லப்போகும் உண்மையைக் கேட்பாயாக. கபிலரைப் பின்பற்றும் உயர் ஆன்மாக்கள் {சாங்கியர்கள்}, இந்தக் காரியத்தில் தங்கள் உயர்ந்த புத்தியை நிறுவியிருக்கிறார்கள்.(85) ஓ! மன்னா, உடல் படைத்த உயிரினங்களில் நடப்பட்டிருக்கும் {நிறுவப்பட்டிருக்கும்} அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்}, தங்கள் தங்களுக்குரிய உணர்வுச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றின் மூலமே நுட்பமானவன் {ஆன்மா} உண்டாகிறதென்பதால் அவை ஆன்மாவின் கருவிகளாக இருக்கின்றன.(86) ஆன்மாவோடு கலக்காத புலன்கள், மரக்குவியல்களைப் போன்றனவாகும். மேலும் அவை பெருங்கடலின் பரப்பில் காணப்படும் நுரையைப் போல (தாங்கள் தொண்டாற்றும் செயல்பாடுகளில்) அழிவையே அடையும்.(87) ஓ!எதிரிகளை எரிப்பவனே, உடல் கொண்ட உயிரினமானது, தன் புலன்களுடன் உறக்கத்தில் மூழ்கும்போது, நுட்பமான ஆத்மாவானது, வெளியில் உலவும் காற்றைப் போல அனைத்துப் பொருட்களின் மத்தியிலும் திரிகிறது.(88) ஓ! மன்னா, உறக்கத்தில், நுட்பமான ஆத்மாவானது, விழிப்பில் இருப்பது போலவே, (அனைத்து வடிவங்களைக்) காணவும், தீண்டலுக்குரிய பொருட்கள் அனைத்தையும் தொடவும், பிற உணர்வுகளைப் பெறவும் செய்கிறது.(89) செயல்படுபவர் இல்லாமல் செயல்பட முடியாத விளைவால், உறக்கத்தின் போது புலன்கள் அனைத்தும் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் இல்லாமல் (தங்கள் சக்திகளை இழந்து) நஞ்சற்ற பாம்புகளைப் போல இருக்கின்றன.(90)
அத்தகைய வேளைகளில், நுட்பமான ஆத்மா, அனைத்துப் புலன்களுக்குமுரிய இடங்களுக்குச் சென்று, அவற்றின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.(91) ஓ! பாரதா, ஓ! யுதிஷ்டிரா, ஓ! பார்த்தா, சத்வத்தின் அனைத்து குணங்களும், புத்தியின், மனம், வெளி, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் குணங்களும், ஜீவ ஆத்மாக்கள் கொண்ட இந்தக் குணங்கள் அனைத்துடன் கூடிய புலன்களும், அதனுடன் கூடிய ஜீவ ஆத்மாவும் பரமாத்மா அல்லது பிரம்மத்தால் மூழ்கடிக்கப்படுகிறது {வெற்றி கொள்ளப்படுகிறது}. நல்ல மற்றும் தீய செயல்களும் அந்த ஜீவ ஆத்மாவை மூழ்கடிக்கிறது. தங்கள் ஆசானுக்காக மதிப்புடன் காத்திருக்கும் சீடர்களைப் போலப் புலன்களும் ஜீவாத்மாவிடம் காத்திருக்கின்றன.(94,95)
ஜீவாத்மா பிரக்ருதியைக் கடக்கும்போது, மாற்றமில்லாத பிரம்மமும், இரட்டைகள் அனைத்தையும் கடந்த உயர்ந்தவனும், பிரகிருதியைக் கடந்தவனுமான நாராயணனை அடைகிறது.(96) ஓ! பாரதா, ஜீவாத்மாவானது, தகுதி மற்றும் தகுதியின்மை ஆகிய இரண்டையும் கடந்து, குணங்கள் எதுவும் இல்லாததும், மங்கலங்கள் அனைத்தின் இல்லமுமான பரமாத்மாவுக்குள் நுழைந்து மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறது.(97) இவை பேராசானின் கட்டளைகளைச் செய்யக் குறிப்பிட்ட காலங்களில் மீண்டும் வர வேண்டியிருக்கிறது.(98) ஓ! குந்தியின் மகனே, (இந்த உடல் கைவிடப்பட்ட) உடனே விடுதலைக்கு முனைந்தவனும், ஞானத்துடன் கூடியவனும், குணமுடன் இருப்பதால் ஆசையுள்ளவனுமான யதி, உடலற்றவன் அடையும் விடுதலை {முக்தி} எனும் அமைதியை அடைவதில் வெல்கிறான்.(99) ஓ! மன்னா, சாங்கியர்கள் பெரும் ஞானத்தைக் கொண்டவர்கள் ஆவர். இவ்வகை ஞானத்தின் மூலமே அவர்கள் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள். இதற்கிணையான ஞானம் வேறில்லை.(100)
எவ்வகை ஐயத்திற்கும் வசப்படாதே. சாங்கிய அமைப்பில் விளக்கப்பட்டிருக்கு ஞானமானது உயர்ந்ததெனக் கருதப்படுகிறது. அந்த அறிவு அனைத்தையும் அறிந்த நிலையும், நித்தியமாக நிலைத்திருக்கும் நிலையுமாகும். அதுவே முழுமையான நித்திய பிரம்ம நிலையாகும்.(101) அதற்குத் தொடக்கமோ, நடுநிலையோ, முடிவோ கிடையாது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்த நிலையாகும். அண்டத்தின் படைப்புக்கு அதுவே காரணமாகும். அது முழுமையாக இருக்கிறது. எவ்வகைச் சிதைவுமில்லாததாக இருக்கிறது. சீரானதாகவும், எப்போதும் இருப்பதாகவும் அஃது இருக்கிறது. இவ்வாறு அதன் புகழ் ஞானிகளால் பாடப்படுகிறது.(102) அதனிலிருந்தே, படைப்பும், அழிவும், அனைத்து சீர்திருத்தங்களும் வருகின்றன. பெரும் முனிவர்கள் அதைக் குறித்துப் பேசுகின்றனர், சாத்திரங்களில் மெச்சுகின்றனர்.(103) கல்விமான்களான பிராமணர்கள் அனைவரும், அறவோர் அனைவரும் அதை {அந்நிலையை} பிரம்மம், பரநிலை, தெய்வீக நிலை, முடிவற்ற நிலை, அனைத்தையும் அறிந்த நிலை, சிதைவற்ற நிலை என்று கருதுகிறார்கள்.(104) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட பிராமணர்கள் அனைவரும், மாயைக்குரிய குணங்களோடு அதைத் தொடர்புப்படுத்தித் துதித்துப் புகழ்கின்றனர். தவங்களையும், தியானங்களையும் நன்றாக நோற்கும் யோகிகள் மற்றும் அளவற்ற உள்பார்வை கொண்ட சாங்கியர்கள் ஆகியோரின் பார்வைகள் ஒன்றே.(105) ஓ! குந்தியின் மகனே, சாங்கிய தத்துவத்தின் வடிவமே, வடிவமற்றவனின் வடிவம் என ஸ்ருதிகள் அறிவிக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, (அந்தத் தத்துவத்தின்படியான) அறிதல் நிலைகள் பிரம்ம அறிவே என்றே சொல்லப்பட்டுள்ளது.(106)
ஓ! பூமியின் தலைவா, அசைவன, அசைவற்றன எனப் பூமியில் இருவகை உயிரினங்கள் இருக்கின்றன. இவற்றில் அசைவனவே மேன்மையானவை.(107) ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி பிரம்மத்தை அறிந்தவர்களில் இருப்பதும், வேதங்களில் நேர்வதும், பிற சாத்திரங்களில் காணப்படுவதும், யோகத்தில் உள்ளதும் பல்வேறு புராணங்களில் காணப்படுவதுமான அந்த உயர்ந்த ஞானங்கள் அனைத்தும், சாங்கிய தத்துவத்தில் காணப்படுகின்றன.(108) உயர்ந்த வரலாறுகளில் காணப்படும் ஞானம் எதுவும், ஓ! மன்னா, ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட செல்வமீட்டல் தொடர்புடைய அறிவியல்களில் வரும் ஞானம் எதுவும், இவ்வுலகில் இருக்கும் ஞானம் எதுவும், சாங்கியர்களின் உயர்ந்த ஞானத்தில் இருந்து வந்தவையே ஆகும்.(109) ஓ! மன்னா, ஆன்ம அமைதி, உயர்ந்த பலம், சாத்திரங்கள் சொல்லும் நுட்பமான அறிவுகள் அனைத்தும், நுட்பமான சக்தியைக் கொண்ட தவங்களும், அனைத்து வகை இன்பநிலைகளும் என அனைத்தும், சாங்கிய அமைப்பில் முறையாக விதிக்கப்பட்டிருக்கின்றன.(110)
ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரனே}, தங்கள் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் அந்த முழுமையான அறிவை அடையத் தவறும் சாங்கியர்கள், தேவர்களின் நிலையை அடைந்து பல காலங்களை இன்ப நிலைகளில் கடத்துகின்றனர். தேவர்களாகத் தங்கள் விருப்பப்படித் தலைமை செலுத்திய பிறகு ஒதுக்கப்பட்ட காலம் தீர்ந்ததும் அவர்கள் கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் யதிகளின் மத்தியில் விழுகிறார்கள்.(111) ஆகாயத்தில் நுழையும் தேவர்களைக் போலவே சாங்கிய அமைப்பைப் பின்பற்றும் மறுபிறப்பாளர்களும், துதிக்கத்தக்க தங்கள் அமைப்பில் மொத்தமாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, இந்த உடலைக் கைவிட்டு, ஞானிகள் அனைவராலும் வழிபடப்படும் உயர்ந்த நிலையான பிரம்ம நிலைக்குள் நுழைகிறார்கள்.(112) சாங்கிய அமைப்பால் பரிந்துரைக்கப்படும் அறிவை அடைய தங்களை அர்ப்பணிக்கும் மறுபிறப்பாளர்கள், தங்கள் உயர்நிலையை அடையத் தவறினாலும், இடைநிலை உயிரினங்களின் மத்தியிலோ, பாவிகளின் மத்தியில் வீழும் நிலைக்குத் தள்ளப்படுவது காணப்படுவதில்லை.(113) ஓ! மன்னா, பரந்ததும், உயர்ந்ததும், புராதனமானதும், பெருங்கடலைப் போன்றதும், அளவிடமுடியாததும், தூய்மையானதும், முற்போக்கானதும், ஏற்புடையதுமான சாங்கிய அமைப்பை முழுமையாக அறிந்த உயர் ஆன்மா கொண்டவன் நாராயணனுக்கு இணையானவன் ஆவான்.(114) ஓ! மனிதர்களில் தேவனே, சாங்கிய அமைப்பைக் குறித்த உண்மையை உனக்குச் சொல்லிவிட்டேன். அது பழங்காலத்தில் இருந்து அண்டத்தில் நீடித்திருக்கும் நாராயணனின் உடல்வடிவமாகும். படைப்புக்கான வேளைவரும்போது, அவனே படைப்பை உண்டாக்குகிறான், அழிவுக்கான வேளை வருகையில் அவனை அனைத்தையும் விழுங்குகிறான். அனைத்தையும் தன் உடலுக்குள் ஈர்த்துக் கொள்ளும்போது, அண்டத்தின் உள்ளான்மாவான அவன் உறங்கச் செல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(115)
வசிஷ்டர் கராளன்! – சாந்திபர்வம் பகுதி – 303-அழிவற்றது மற்றும் அழியக்கூடியவை குறித்து ஜனக குலத்தின் மன்னன் கராளனுக்கும், பெருமுனிவர் வசிஷ்டருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எது சிதைவற்றது என்று அழைக்கப்படுகிறதோ, எதை அடைவதன் மூலம் எவரும் திரும்பி வர வேண்டிய அவசியமில்லையோ, அஃது என்ன? மேலும் எது சிதைவுள்ளது என்று அழைக்கப்படுகிறதோ, எதை அடைவதன் மூலம் ஒருவன் மீண்டும் திரும்ப வேண்டி வருமோ, அஃது என்ன?(1) ஓ! எதிரிகளைக் கொல்பவரே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, சிதைவுள்ளது, சிதைவற்றது ஆகிய இரண்டையும் உண்மையில் புரிந்து கொள்வதற்காக அவற்றுக்கிடையில் உள்ள வேற்றுமையை நான் உம்மிடம் கேட்கிறேன்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் உம்மை ஞானப் பெருங்கடல் எனச் சொல்கிறார்கள். உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட யதிகளும் அதையே சொல்கிறார்கள்.(3) நீர் வாழ இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சூரியன் தனது தென்பாதையில் இருந்து வடபாதைக்குத் திரும்பும்போது நீர் உயர்ந்த கதியை அடைவீர்.(4) நீங்கள் எங்களை விட்டுச் சென்றுவிட்டால், நாங்கள் எங்களுக்கான நன்மைகள் அனைத்தையும் யாரிடம் இருந்து கேட்போம்? நீரே குரு குலத்தின் விளக்காவீர். உண்மையில், நீர் ஞான ஒளியால் சுடர்விடுகிறீர்.(5) எனவே, ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நான் இவை யாவற்றையும் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். அமுதம் போல எப்போதும் இனிமையாக இருக்கும் உமது உரைகளைக் கேட்கும் ஆவல் தணிவடையாமல் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் வசிஷ்டருக்கும், ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னன் கராளனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஒரு காலத்தில் முனிவர்களில் முதன்மையானவரும், சூரியப்பிரகாசம் கொண்டவருமான வசிஷ்டர் சுகமாக அமர்ந்திருந்தபோது, மன்னன் ஜனகன் {கராளன்} அவரிடம் நமது பரமநன்மைக்கான {மோட்சத்துக்கான} உயர்ந்த ஞானத்தைக் குறித்துக் கேட்டான்.(8) ஆன்மா குறித்த அறிவுத்துறையில் உயர்ந்த திறனைக் கொண்டவரும், அந்த அறிவியலின் அனைத்துக் கிளைகளிலும் குறிப்பிட்ட தீர்மானங்களைக் கொண்டவரும்,(9) முனிவர்களில் முதன்மையானவருமான மைத்ராவருணி {வசிஷ்டர்} அமர்ந்திருந்தபோது, கூப்பிய கரங்களுடன் அவரை அணுகிய மன்னன் {கராளன்} அவரிடம் நன்கு உச்சரிக்கப்பட்ட, இனிமையான, சர்ச்சைக்குரிய நோக்கமேதும் இல்லாத, பணிவான வார்த்தைகள் மூலம் இந்தக் கேள்வியைக் கேட்டான்,(10) “ஓ! புனிதமானவரே, எதை அடைந்தால் ஞானிகள் மீண்டும் திரும்பி வர வேண்டியதில்லையோ, அந்தப் பரமநித்திய {உயர்ந்த அழிவற்ற} பிரம்மத்தைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்.(11) எது அழியத்தக்கது என்றழைக்கப்படுகிறது என்பதையும், இந்த அண்டம் அழிவடையும்போது, அஃது எதனுள் நுழைகிறது என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், அழிவற்றது, மங்கலமானது, நன்மையானது, அனைத்து வகைத் தீமையில் இருந்து விடுபட்டது என எது சொல்லப்படுகிறது?” என்று கேட்டான் {ஜனக குல மன்னன் கராளன்}.(12)
வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, இந்த அண்டம் எவ்வாறு அழிவடைகிறது என்பதையும், இதற்கு முன் எப்போதும் அழியாததும், இனி எந்தக் காலத்திலும் ஒருபோதும் அழிய முடியாததும் எது என்பதையும் கேட்பாயாக.(13) (தேவர்களுடைய அளவீடுகளின்படி) ஒரு யுகம் பனிரெண்டயிரம் {12,000} வருடங்களைக் கொண்டதாகும். அத்தகைய நான்கு யுகங்கள் ஆயிரம் முறை {12000 X 4 X 1000} நேர்வது ஒரு கல்பமாகும். அதுவே பிரம்மனுடைய ஒரு பகலின் அளவாகும்.(14) ஓ! மன்னா, பிரம்மனின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும். {அத்தகைய} பிரம்மனே அழிவடையும்போது, வடிவமற்ற ஆன்மாவைக் கொண்டவனும், அனிமா, லகிமா {ப்ராப்தி} முதலிய யோக குணங்களை இயற்கையிலேயே கொண்டவனுமான சம்பு விழிப்படைந்து, பெரும் அளவுகளைக் கொண்டவனும், முடிவிலா செயல்களைச் செய்பவனும், வடிவத்தோடு கூடியவனும், அண்டத்தைப் போன்றவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனை, அல்லது மூத்தவனை {ஹிரண்யகர்ப்பனை} மீண்டும் ஒருமுறை படைக்கிறான் {சம்பு ஹிரண்யகர்ப்பனைப் படைக்கிறான்}. அந்தச் சம்புவே வேறு வகையில் ஈசானன் (அனைத்தின் தலைவன்) என்று அழைக்கப்படுகிறான். அவன் தூய்மையானவனாகவும், பிரகாசமிக்கவனாகவும், சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனாகவும்,(15,16) அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிந்த கரங்களும் கால்களும் கொண்டவனாகவும், எங்கும் கண்களையும், தலையையும், வாயையும், காதுகளையும் கொண்டவனாகவும் இருக்கிறான்.(17)
{அப்படி படைக்கப்படும்} மூத்த பிறவி ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படுகிறான். (வேதாந்தத்தில்) இந்தப் புனிதமானவன் புத்தி என்றழைக்கப்படுகிறான். யோக சாத்திரங்களில் அவன் பெரியவன் {மஹத்}, விரிஞ்சி, பிறப்பில்லாதவன் என்று அழைக்கப்படுகிறான்.(18) சாங்கிய சாத்திரங்களில் முடிவின்மையையே தன் ஆன்மாவாகக் கொண்டவனாகக் கருதப்படும் அவன், பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறான். பல்வேறு வடிவங்களிலும், அண்டத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் அவன், ஒருவனாகவும் {ஓரக்ஷரமாகவும்}, அழிவற்றவனாகவும் கருதப்படுகிறான்.(19) முடிவிலா உட்பொருள்களைக் கொண்ட மூவுலகங்களும், எந்த மூலத்தின் துணையும் இல்லாமல் அவனால் படைக்கப்பட்டு, அவனாலேயே மூழ்கடிக்கப்படுகின்றன. அவனுடைய பலவகை வடிவங்களின் விளைவால் அவன் அண்ட வடிவத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(20) பல மாற்றங்களை ஏற்படுத்தித் தன்னைத் தானே அவன் படைத்துக் கொள்கிறான். வலிமையும், சக்தியும் கொண்ட அவன், முதலில் நனவுநிலையையும் {அஹங்காரத்தையும்}, நனவுநிலையுடன் கூடிய பிரஜாபதி என்றழைக்கப்படும் பெரும்பூதத்தையும் {அஹங்கார்ரத்தைச் செய்கின்ற விராட்டையும்} படைக்கிறான்.(21) புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்தே புலப்படுபவன் (அல்லது ஹிரண்யகர்ப்பன்) படைக்கப்பட்டான். இதுவே கல்விமான்களால் ஞானப்படைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஹிரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட மஹான் (அல்லது விராட்) மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} அறியாமையின் படைப்பாகும்[1].(22)
ஸ்ருதிகளை விளக்கும் கல்விமான்களால் அறியாமை மற்றும் ஞானம் {அறிவு} என்ற பெயர்களால் அழைக்கப்படும் (வழிபடத்தகுந்த) குணங்களின் துதி {வித்தை}, அதன்மூலம் நிகழும் அழிவு {அவித்தை}ஆகியவை இஃது, அஃது, அல்லது மூன்றில் உள்ள வேறொன்றை (அக்ஷரம்{1}, ஹிரண்யகர்ப்பன்{2}, அல்லது விராட் என்பனவற்றைக்) குறிப்பிடும் வகையில் எழுகின்றன[2].(23) ஓ! மன்னா, நனவுநிலையில் {அகங்காரத்தில்} இருந்து மூன்றாவதாக (நுட்பமான) பூதங்கள்{3} {ஸூக்ஷ்ம பூதங்கள்} படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக[3]. மூன்றாவதின் {பூதங்களின்} மாறுபாடுகளில் இருந்து நான்காவது படைப்பாக நனவுநிலையின் அனைத்து வகைகளும் {திரள் பூதங்களும் / ஸ்தூலபூதங்களும்} உண்டாகின[4].(24) இந்த நான்காவது படைப்பில் காற்று {வாயு}, ஒளி, வெளி {ஆகாயம்}, நீர், பூமி {நிலம்} ஆகியவையும், அவற்றின் குணங்களான ஒலி, ஊறு, வடிவம், சுவை மற்றும் மணமும்{13} அடங்கியிருக்கின்றன.(25) இந்தப் பத்தும் ஒரே வேளையில் உண்டாகின என்பதில் ஐயமில்லை. ஓ! ஏகாதிபதி, (மேலே குறிப்பிடப்பட்ட) மூல பூதங்களின் கலவையில் இருந்து எழுந்தவையே ஐந்தாவது படைப்பாகின.(26) இதில் {இந்த ஐந்தாம் படைப்பில்}, காது {சுரோத்திரம்}, தோல் {தவக்கு}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, ஐந்தாவதாக மூக்கு {கிராணம்}, வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் பிறப்புறுப்பு ஆகியன உள்ளடங்கும்.(27) இவற்றில் முதல் ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், இறுதி ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அமைகின்றன{23}. ஓ! மன்னா, மனத்துடன்{24} கூடிய இவையாவும் அடுத்தடுத்து எழுந்தன.(28) இவையே உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களிலும் உள்ள இருபத்துநான்கு காரியங்களாகின்றன {தத்துவங்களாகின்றன}. இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் வாய்மையின் உட்பார்வை கொண்ட பிராமணர்கள் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை.(29)உடல் என்றழைக்கப்படும் இவற்றின் கலவையையே மூவுலகங்களிலும் உள்ள உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தும் கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! மன்னா, அவற்றின் கலவைகளே தேவர்கள், மனிதர்கள், தானவர்கள்,(30) யக்ஷர்கள், பூதங்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், பெரும்நாகர்கள், சாரணர்கள், பிசாசங்கள்,(31) தெய்வீக முனிவர்கள், ராட்சசர்கள், கடிக்கும் வண்டுகள், புழுக்கள், கொசுக்கள், கழிவில் பிறக்கும் புழுக்கள், எலிகள், நாய்கள், சுவாபாகர்கள் {நாயை உண்ணும் புலையர்கள்}, சைநேயங்கள் {மான்களை உண்ணும் நீசர்கள்}, சண்டாளர்கள், புல்கசர்கள்,(32) யானைகள், குதிரைகள், கழுதைகள், புலிகள், மரங்கள், பசுக்கள் ஆகியவையாக அறியப்படுகின்றன. நீர், ஆகாயம், பூமி ஆகியவற்றைத் தவிர வேறு எதனிலும் உயிரினங்கள் இருப்பதாக நாம் கேள்விப்படாததால் இவற்றில் உள்ள எந்த உயிரினமும் இந்தக் கலவையையே கொண்டிருக்கின்றன.(33,34) ஓ! ஐயா, புலப்படுவது {வடிவமாக இருப்பவை} என்றழைக்கப்படும் வர்க்கத்தில் சேர்க்கப்படும் இவை அனைத்தும் நாளுக்கு நாள் அழிவடைவது காணப்படுகிறது. எனவே, இந்த இருபத்துநான்கின் கலவையால் உண்டான அனைத்து உயிரினங்களும் அழியத்தக்கன {சிதைவுள்ளவை} என்று சொல்லப்படுகின்றன.(35)
இதுதான் அழிவில்லாதது. புலப்படுவவை, புலப்படாதவை ஆகியவற்றால் உண்டான இந்த அண்டம் அழிவடைவதால் அஃது அழியத்தக்கது என்று சொல்லப்படுகிறது.(36) மூத்த பிறப்பான மஹான் என்றழைக்கப்படும் பூதமே அழியக்கத்தக்கது என்று எப்போதும் சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, நீ என்னிடம் கேட்ட அனைத்தையும் உனக்குச் இப்போது சொல்லிவிட்டேன்.(37) ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருபத்துநாலையும் கடந்து இருப்பத்தைந்தாக இருப்பவன் விஷ்ணு என்றழைக்கப்படுகிறான். அனைத்துக் காரியங்களிலும் படர்ந்தூடுருவி இருந்தாலும் (ஞான) காரியமாக இல்லாத அந்த விஷ்ணு, அனைத்து குணங்களும் அற்றிருக்கும் விளைவால் ஞானிகளால் அவ்வாறு அழைக்கப்படுகிறான்.(38) அழியத்தக்கவை புலப்படுபவை அனைத்தையும் உண்டாக்குவதால் இவை அனைத்தும் வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. இருபத்துநாலாவதான பிரகிருதியே (தன் மாறுதல்களின் மூலம் எழுந்த) இவை அனைத்திற்கும் தலைமை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது. இருபத்தைந்தாவதான விஷ்ணு வடிவமற்றவனாக இருப்பதால் அண்டத்திற்குத் தலைமை தாங்குவதாகச் சொல்ல முடியாது[5].(39) புலப்படாதது {பிரகிருதி}, (சித்-உடன் கலப்பதன் விளைவால் உண்டாகும்) உடல் கொள்ளும்போது, உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிக்கிறது. நித்தியமான சேதனத்தை (அழிவற்றவனைப்) பொறுத்தவரையில் அவன் குணங்களும் வடிவமும் அற்றவனாக இருந்தபோதிலும் (பிரகிருதியுடன் கலப்பதன்ன் விளைவால்) அனைத்து வடிவங்களையும் ஏற்கிறான்.(40) பிறப்பு இறப்பு என்ற குணங்களைக் கொண்ட பிரகிருதியுடன் கலக்கும் அவனும், பிறப்பிறப்பின் குணங்களை ஏற்கிறான். உண்மையில் அவன் குணங்களேதும் அற்றவனாக இருப்பினும், அத்தகைய கலவையின் விளைவால் அவன் உணரப்படும் பொருளாகிறான்.(41) இவ்வழியிலேயே மகத்-ஆன்மா (ஹிரண்யகர்ப்பன்), பிரகிருதியுடன் கலந்து, அறியாமையைக் கொண்டு, மாற்றங்களை அடைந்து தன்னுணர்வைப் பெறுகிறான்[6].(42)சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களுடன் கலக்கும் அவன், மறதியாலும், அறியாமையின் விளைவாலும் பல்வேறு வகைகளைச் சார்ந்த பல்வேறு உயிரினங்களாக அடையாளம் காணப்படுகிறான்.(43) பிரகிருதியுடன் கலந்து வசிப்பதால் எழும் அவனது பிறப்பு மற்றும் அழிவின் விளைவால், உண்மையில் அவன் யாரோ, அவனாகவே தன்னை நினைக்கிறான். இஃது, அல்லது அதுவாகத் தன்னைக் கருதும் அவன், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைப் பின்பற்றுகிறான்.(44) தமஸின் ஆதிக்கத்தில் அவன் தமஸால் பீடிக்கப்படும் பல்வேறு வகை நிலைகளை அடைகிறான். ரஜஸ் மற்றும் சத்வத்தின் ஆதிக்கத்தால் அவன் அதே போன்று ரஜஸ் மற்றும் சத்வத்தால் பாதிக்கப்பட்ட நிலைகளை அடைகிறான்.(45) இவை வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களாகும். அந்த நிறங்கள் அனைத்தும் பிரகிருதியின் தொடர்புடையவையாக இருக்கின்றன (வெள்ளையாக, சிவப்பாக அல்லது கருப்பாக இருப்பவன் அவனோடு தொடர்புடைய பிரகிருதியின் இயல்பின்படி காலத்திற்கேற்ற நிறத்தை அடைகிறான்).(46) தமஸ் குணத்தால் ஒருவன் நரகத்திற்குச் செல்கிறான். ரஜஸால் மானிட நிலையை அடைகிறான் (அல்லது தக்க வைத்துக் கொள்கிறான்). சத்வத்தின் மூலம் மக்கள் தேவர்களின் உலகங்களுக்கு உயர்ந்து, பேரின்ப நிலையின் பங்குதாரர்கள் ஆகின்றனர்.(47) தொடர்ந்து பாவச்செயல்களைச் செய்வதால் ஒருவன் இடைநிலை வகைகளில் {பறவை மற்றும் விலங்கு பிறப்பை அடைந்து} மூழ்குகிறான். அறம் சார்ந்து செயல்படுவதால் மட்டுமே ஒருவன் தேவர்களின் நிலையை அடைகிறான்.(48) இவ்வழியில், இருபத்தைந்தாவது காரியமான அக்ஷரம் (அழிவற்றது) புலப்படாததுடன் (பிரகிருதியுடன்) கலப்பதன் மூலம், க்ஷரமாக (அழிவுள்ளதாக) மாறுகிறது என ஞானியர் சொல்கின்றனர். எனினும், ஞான வழிமுறைகளின் மூலம் அழிவற்றவனானவன், தன் உண்மை இயல்பை வெளிப்படுத்துகிறான்” என்றார் {வசிஷ்டர்}.(49)
ஆன்ம அறியாமை! – சாந்திபர்வம் பகுதி – 304-அறியாமையில் கட்டுண்டிருக்கும் ஆன்மாவைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…
வசிஷ்டர் {ஜனக மன்னன் கராளனிடம்}, “இவ்வாறு, ஆன்மாவானது தன் மறதியின் விளைவால் அறியாமையைப் பின்பற்றி, ஒன்றன்பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான உடல்களை {பிறவிகளை} அடைகிறது. ஆயிரக்கணக்கான பிறவிகளை இடைநிலை வகைகளின் மத்தியிலும், சில வேளைகளில் (குறிப்பிட்ட) குணங்களுடன் ஏற்படும் கலவையின் விளைவாலும், மற்றும் அந்தக் குணங்களின் பலத்தாலும் தேவர்களுக்கு மத்தியிலும் எடுக்கிறது. மனித நிலையில் இருந்து சொர்க்கத்திற்கும், சொர்க்கத்திலிருந்து மீண்டும் மனித நிலைக்கும், பிறகு மனித நிலையில் இருந்து பல நீண்ட வருடங்களுக்கு நரகிலும் மூழ்குகிறது.(3) கூடுகளைக் கட்டும் {பட்டுப்}புழுவானது, தன்னைச் சுற்றிலும் நூல்களைப் பரப்பி அனைத்துப் பக்கங்களிலும் முழுமையாகத் தன்னை மறைத்துக் கொள்வதைப் போலவே, ஆன்மாவும், உண்மையில் குணங்கள் அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், அனைத்துப் புறங்களிலும் குணங்களை நிறுவிக் கொள்கிறது (அவ்வாறு நிறுவி தன் சுதந்திரத்தை இழக்கிறது).(4)
(உண்மை இயல்பில்) இன்பதுன்பங்களைக் கடந்த நிலையில் இருந்தாலும், இவ்வாறே அது தன்னைத் தானே இன்பதுன்பங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறது. இவ்வாறே அது அனைத்து நோய்களையும் கடந்ததாக இருந்தாலும், தலைவலி, கண்வலி, பல்வலி, தொண்டைபாதிப்புகள், குடற்புண் {ஜலோதரம்}, அதிகத் தாகம், நொதி வீக்கம் {ஜ்வரகண்டம்}, வாந்திபேதி {விஷூசி}, தொழுநோய் {வெண்குஷ்டம்}, தீக்காயங்கள் {அக்னிதக்தம்}, இளைப்பு {காகம்}, காசநோய் {அபஸ்மாத்திரம்}, காக்காய்வலிப்பு {த்வந்துவம்} மற்றும் உடல்படைத்த உயிரினங்களின் உடல்களில் தோன்றும் பல்வேறு நோய்களாலும் தான் பீடிக்கப்படுவதாகக் கருதுகிறது.(5-7) ஆயிரக்கணக்கான இடைநிலை வகைகளிலும், சில வேளைகளில் தேவர்களுக்கு மத்தியிலும் பிறப்பதாகப் பிழையாகக் கருதும் அது துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, நற்செயல்களின் கனிகளை அனுபவிக்கிறது.(8)
அறியாமையைக் கொண்ட அது {ஆன்மா}, சிலவேளைகளில் தான் வெள்ளுடை அணிந்திருப்பதாகவும், சிலவேளைகளில் நான்கு துண்டுகளைக் கொண்ட முழு உடை அணிந்திருப்பதாகவும் கருதுகிறது, அல்லது (படுக்கையில் விரிப்புகளுக்கு மத்தியில் இல்லாமல்) தரையில் கிடப்பதாகவோ, தவளையைப் போன்ற குறுகிய கை கால்களைக் கொண்டிருப்பதாகவோ, தவசியின் தியான மனோநிலையில் நிமிர்ந்து அமர்ந்திருப்பதாகவோ, மரவுரி உடுத்தியிருப்பதாகவோ, வானத்தையே கூரையாகக் கொண்டு அமர்ந்திருப்பதாகவோ, கிடப்பதாகவோ, செங்கற்கள் மற்றும் கற்களால் கட்டப்பட்ட மாளிகைக்குள் இருப்பதாகவோ, கரடு முரடான கற்களில் இருப்பதாகவோ, சாம்பலில் இருப்பதாகவோ, வெறுங்கற்களில் இருப்பதாகவோ, வெறும் தரையில் இருப்பதாவோ, படுக்கையில் இருப்பதாகவோ, போர்க்களங்களில் இருப்பதாகவோ, நீரில் இருப்பதாகவோ, புழுதியில் இருப்பதாகவோ, பலகைகளில் இருப்பதாகவோ, கனியின் விருப்பத்தால் தூண்டப்பட்டுப் பல்வேறு வகைப் படுக்கைகளில் இருப்பதாகவோ, புல்லாலான சிறிய உடையை அணிந்திருப்பதாகவோ, மொத்தமாக நிர்வாணமாக இருப்பதாகவோ, பட்டு உடுத்தியிருப்பதாகவோ, கருப்பு மானின் தோலை அணிந்திருப்பதாகவோ, பட்டாடை உடுத்தியிருப்பதாகவோ, ஆட்டுத்தோல், அல்லது புலித்தோல், அல்லது சிங்கத் தோல் உடுத்தியிருப்பதாகவோ, சணலாலான ஆடை உடுத்தியிருப்பதாகவோ, பூச்சமரப்பட்டை அணிந்திருப்பதாகவோ, முட்செடிகளால் உண்டான ஆடைகளை அணிந்திருப்பதாகவோ, புழுக்கள் வெளியிடும் நூல்களில் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதாகவோ, கிழிந்த கந்தலுடை அணிந்திருப்பதாகவோ, குறிப்பிட முடியாத அளவுக்கு எண்ணற்ற பிறவகை ஆடைகளை உடுத்தியிருப்பதாகவோ {ஆத்மா} கருதிக் கொள்கிறது. ஆத்மாவானது, பல்வேறு வகை ஆபரணங்களையும், ரத்தினங்களையும் அணிந்திருப்பதாகவோ, பல்வேறு வகை உணவுகளை உண்பதாகவோ தன்னைக் கருதிக் கொள்கிறது.(9-15)
ஆத்மாவானது, ஓரிரவு இடைவெளிகளில் உண்பதாகவோ, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உண்பதாகவோ, ஒவ்வொரு நாளும் நான்கு, ஆறு மற்றும் எட்டாவது மணி நேரத்தில் உண்பதாகவோ,(16) அல்லது ஆறு, அல்லது ஏழு, எட்டு இரவுகளுக்கு ஒருமுறை உண்பதாகவோ, பத்து அல்லது பனிரெண்டு நாட்களுக்கு ஒருமுறை உண்பதாகவோ,(17) ஒரு மாதத்திற்கு ஒருமுறை உண்பதாகவோ, கிழங்குகளை மட்டும் உண்பதாகவோ, கனிகளை உண்பதாகவோ, காற்று அல்லது நீரை மட்டுமே உட்கொள்வதாகவோ, பிண்ணாக்கோ, தயிரோ, பசுஞ்சாணத்தையோ,(18) பசுவின் சிறுநீரையோ, கீரைகளையோ, மலர்களையோ, பாசிகளையோ, கஞ்சியோ,(19) மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள், அல்லது தரையில் சிதறிக் கிடக்கும் கனிகளையோ, பல்வேறு உணவுகளையோ (தவ வெற்றியை அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு உண்பதாகவோ கருதுகிறது.(20)
ஆத்மாவானது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் பதி சாந்திராயன நோன்பைப் பின்பற்றுவதாகவோ, நான்கு வாழ்வுமுறைகளில் பரிந்துரைக்கப்படும் பல்வேறு நோன்புகள், வழிமுறைகள் மற்றும் கடமைகளையும் பின்பற்றுவதாகவோ,(21) நான்கு முக்கிய வகையில் சேர்க்கப்பட்ட துணை வாழ்வுமுறைகளின் கடமைகளைப் பின்பற்றுவதாகவோ, தீயோரையும், பாவிகளையும் தனித்துக் காட்டும் பல்வேறு வகைப் பயிற்சிகளைப் பின்பற்றுவதாகவோ தன்னைக் கருதிக் கொள்கிறது. ஆன்மாவானது ஓய்விடங்களை அனுபவிப்பதாகவும், மலைகளின் இனிமைநிறைந்த நிழல்களையும், ஊற்றுகள் மற்றும் நீரோடைகளின் அருகில் குளுமையையும்,(22) தனிமையான ஆற்றங்கரைகள், தனிமையான காட்டுப்பகுதிகள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்களுக்கு மத்தியில இருந்து விலகி தேவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனிதத்தலங்கள், தடாகங்கள், நீர்நிலைகள்,(23) இல்லங்களும், மாளிகைகளும் உள்ள அளவுக்கான தனிமையான மலைக்குகைகள் ஆகியவற்றில் தங்கி அனுபவிப்பதாகவும் கருதிக் கொள்கிறது. ஆன்மாவானது, பல்வேறு வகை மறைமந்திரங்களை உரைப்பதாகவும், பல்வேறு வகை நோன்புகளை நோற்பதாகவும், விதிகள், பல்வேறு வகைத் தவங்கள், பல்வேறு வகை வேள்விகள் மற்றும் பல்வேறு வகைச் சடங்குகளைச் செய்வதில் ஈடுபடுவதாகவும் கருதிக் கொள்கிறது.(25)
ஆன்மாவானது, சிலவேளைகளில் வணிகர்கள், வியாபாரிகளின் வழிகளைப் பின்பற்றுவதாகவும், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், இல்லாதோர், குருடர் மற்றும் ஆதரவற்றோருக்கு பல்வேறு வகைக் கொடைகளை அளிப்பதாகவும் கருதிக் கொள்கிறது.(26) ஆன்மாவானது, அறியாமையுடன் இருப்பதன் விளைவால் சத்வம், ரஜஸ், தமஸ், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பல்வேறு குணகளைப் பின்பற்றுகிறது.(27) ஆன்மாவானது, பிரகிருதியின் ஆதிக்கத்தால் மாறுபாடுகளுக்கு உட்பட்டு, இவையாவற்றையும், நோற்று, பின்பற்றி, பயின்று தன்னை அவ்வாறே கருதிக் கொள்கிறது. உண்மையில் ஆன்மாவானது புனித மந்திரங்களான ஸ்வாஹா, ஸ்வதா, வஷத் ஆகியவற்றைச் சொல்வதில் ஈடுபடுவதாகவும், பெரியோராகத் தான் கருதுவோரை வணங்குவதாகவும்;(28) பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பதாகவும், சீடர்களுக்குப் போதிப்பதாகவும், கொடை அளிப்பதாகவும், அவற்றை ஏற்பதாகவும், வேள்விகளைச் செய்வதாகவும், சாத்திரங்களைக் கற்பதாகவும், இவ்வகையிலான செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்வதாகவும் கருதிக் கொள்கிறது.(29) ஆன்மாவானது, பிறப்பு, இறப்பு, சச்சரவுகள் மற்றும் கொலை ஆகியவற்றில் தொடர்புடையதாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. இவை யாவும் நல்லோர் மற்றும் தீயோரின் செயற்பாதைகளாக அமைகின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள்.(30)
பிரகிருதி தேவியே பிறப்பையும், மரணத்தையும் உண்டாக்குகிறாள். அண்டப் பேரழிவுக்கான காலம் நேரும்போது, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களும் குணங்களும், மாலை வேளையில் தன் கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சூரியனைப் போலத் தனியாக இருக்கும் பரமாத்மாவிற்குள் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன;(31) படைப்புக்கான காலம் நேரும்போது, காலை வேளையில் கதிரைப் பொழியும் சூரியனைப் போல அது {பரமாத்மா} மீண்டும் அவற்றைப் படைத்துப் பரவச் செய்கிறது. இவ்வாறே ஆன்மாவானது, எண்ணிக்கையில் முடிவிலாதவையும், தனக்கு ஏற்புடையவையுமான தன் வடிவங்களும், குணங்களுமான இந்த வரம்புகள் அனைத்தையும் கொண்டதாக விளையாட்டாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. இவ்வழியிலேயே ஆன்மாவானது, உண்மையில் முக்குணங்களைக் கடந்ததாக இருந்தாலும், செயற்பாதைகளில் தன்னை இணைத்துக் கொண்டு, மாறுதல்களின் மூலம் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களின் தன்மைகளைக் கொண்ட வரம்புகள் மற்றும் செயல்கள் அனைத்துடன் கூடிய பிறப்பு, இறப்பு என்ற குணங்களைக் கொள்கிறது. ஆன்மாவானது செயற்பாதைக்கு வந்ததும், குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட தன்மைகளையும், குறிப்பிட்ட கதிகளை உண்டாக்குபவையாகவும் கருதுகிறது.(32-34) ஓ! ஏகாதிபதி, இந்த மொத்த அண்டமும் பிருகிருதியால் குருடாக்கப்பட்டு, (பிரகிருதியின் மூலம்) அனைத்துப் பொருட்களும் பல்வேறு வகைகளில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கடிக்கப்படுகின்றன.(35)
ஆன்மாவானது பிரகிருதியுடன் இருப்பதன் விளைவாலேயே இன்ப துன்பங்களை உண்டாக்கும் இந்த முரண்பட்ட இரட்டைகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. இந்த அறியாமையின் விளைவினாலேயே ஜீவனானது இந்தச் சோகங்கள் அனைத்தையும் தனதாகவும், அவை தன்னைத் தேடி வருவதாகவும் கருதிக் கொள்கிறது.(36) உண்மையில், ஓ! ஏகாதிபதி {கராளனே}, அந்த அறியாமையின் மூலமே ஜீவனானது, எவ்வாறேனும் அந்தக் கவலைகளைக் கடக்க வேண்டும் என்றும், தன் நற்செயல்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கும் இன்பங்களை அனுபவிக்கத் தேவர்களின் உலகிற்குச் செல்ல வேண்டும் என்று கற்பனை செய்கிறது. அந்த அறியாமையின் மூலமே அஃது {ஜீவன்}, இவ்வுலகின் இன்பதுன்பங்களைச் சகிக்கவும், அனுபவிக்கவும் வேண்டுமென நினைகிகறது.(37,38) ஜீவனானது அந்த அறியாமையின் மூலமே, “நான் மகிழ்ச்சியை அடைய வேண்டும். தொடர்ச்சியாக நற்செயல்கள் செய்வதால் என் வாழ்வின் முடிவு வரை நான் மகிழ்ச்சியைப் பெறுவேன். என் எதிர்காலப் பிறவிகள் அனைத்தும் இன்பமாக அமையும்.(39) மேலும் இப்பிறவியில் நான் செய்யும் (தீய) செயல்களின் மூலம் முடிவிலா கவலையே எனதாகும். மனித வாழ்வில் இருந்து ஒருவன் நரகிற்குள் மூழ்குவதால், மனித நிலையே பெருந்துன்பம் நிறைந்தது.(40) நரகத்திலிருந்து மீண்டும் நான் மனித நிலைக்குத் திரும்பப் பல வருடங்கள் ஆகும். மனித நிலையில் இருந்து மீண்டும் நான் தேவர்களின் நிலையை அடைவேன். அந்த மேன்மையான நிலையில் இருந்து மீண்டும் மனித நிலையை அடைந்து,(41) அங்கிருந்து மீண்டும் நான் நரகில் மூழ்குவேன்” என்று நினைக்கிறது.
அடிப்படை பூதங்கள், புலன்கள் ஆகியவற்றின் இந்தக் கலவையானது, அதனில் உள்ள சித்-ன் சிந்தனையுடன் இவ்வாறு ஆன்மாவின் தன்மைகளுடன் கூடியதாக இருக்கிறது என்று கருதும் ஒருவன்,(42) மீண்டும் மீண்டும் தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் திரிந்து நரகில் மூழ்க வேண்டியிருக்கும். எப்போதும் மமதையுடன் கூடிய ஜீவனானது இத்தகைய பிறவிகளில் சுழல வேண்டியிருக்கிறது.(43) ஜீவன் அடுத்தடுத்து கோடிக்கணக்கான பிறவிகளை அடைவதன் மூலம் அதனுக்குக் கிட்டும் வடிவங்கள் அனைத்தும் மரணத்திற்கு ஆட்படக்கூடியவையே. நல்ல மற்றும் தீய கனிகள் நிறைந்த இவ்வழியில் செயல்படும் ஒருவன்,(44) மூவுலகங்களிலும் அடுத்தடுத்த வடிவங்களை ஏற்று அதனோடு தொடர்புடைய இன்பதுன்பங்களையும் பொறுத்துக் கொள்ளவும் அனுபவிக்கவும் வேண்டும். நல்ல மற்றும் தீ செயல்கள் நிறைந்த செயல்களைப் பிரகிருதியே உண்டாக்குகிறது;(45) மூவுலங்களில் கிட்டும் கனிகளையும் பிரகிருதியே தாங்கிக் கொள்ளவும், அனுபவிக்கவும் செய்கிறது. உண்மையில் பிரகிருதியானது செயல்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. இடைநிலை வகைகள், மனித நிலை, தேவர்கள் ஆகிய இந்த மூன்று களங்களும்(46) பிரகிருதியில் இருந்து தோன்றுபவை என்பது அறியப்பட வேண்டும். பிரகிருதியானவள் குணங்கள் அனைத்தும் இல்லாதது என்று சொல்லப்படுகிறாள். (மஹத்-உடன் கூடிய தொடக்கத்தில்) அவளது செயல்களின் விளைவால் மட்டுமே அவளது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.(47) இதே வகையிலேயே புருஷன் (அல்லது ஆத்மா) குணங்கள் அற்றவனாக இருந்தாலும், சிந்தனையைப் பெறும்போது உடல் செய்யும் செயல்களின் விளைவால் தன் இருப்பை உறுதி செய்கிறது[1].ஆன்மாவானது எவ்வகை மாறுதலுக்கு உட்படாதது என்றாலும், செயற்கோட்பாடே பிரகிருதியை நகரச் செய்கிறது என்றாலும்,(48) அறிவு மற்றும் செயல்புலன்களோடு {ஞானகர்மேந்திரியங்களோடு} கலக்கும் அஃது, அந்தப் புலன்களின் செயல்கள் அனைத்தையும் தனதாகவே கருதுகிறது. காது முதலிய ஐந்து அறிவுப்புலன்களும்,(4) வாக்கு முதலிய செயற்புலன்களும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்களுடன் கலந்து எண்ணற்ற பொருட்களில் ஈடுபடுகின்றன. உண்மையில் ஜீவனுக்குப் புலன்கள் இல்லையென்றாலும், தன் வாழ்வின் செயல்களைத் தானே செய்வதாகவும், அறிவு மற்றும் செயற்புலன்கள் அனைத்தும் தனதே என்றும் அவன் {ஜீவன்} கருதுகிறான்.(50) உண்மையில் உடலில்லாமல் இருந்தாலும், அவன் தனக்கு உடலிருப்பதாகக் கருதுகிறான். குணங்களற்றவனாக இருப்பினும் அவற்றைக் கொண்டுள்ளதாகவும், காலத்தைக் கடந்தவனாக இருப்பினும், காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவனாகவும் தன்னைக் கருதிக் கொள்கிறான்.(51) புத்தியற்றவனாகயிருந்தாலும், அது தனக்கிருப்பதாகவும், (இருபத்து நான்கு) காரியங்களையும் கடந்திருந்தாலும், அவற்றுடன் ஒன்றாகவும் அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். மரணமற்றவனாக இருந்தாலும், தன்னை மரணத்திற்கு உட்பட்டவனாகவும், அசைவற்றவனாக இருந்தாலும், தன்னை அசைபவனாகவும் அவன் கருதிக் கொள்கிறான்.(52) உடல் கூடற்றவனாகாக இருந்தாலும், தனக்கு ஒன்று இருப்பதாகவும், பிறப்பற்றவனாக இருந்தாலும், தனக்குப் பிறந்து உண்டு என்றும் அவன் கருதுகிறான். தவங்களைக் கடந்தவனாக இருந்தாலும், தவங்களில் ஈடுபடுபவனாகவும், தனக்கு எந்தக் கதியும் கிடையாது என்றாலும், கதியடையத் தகுந்தவன் என்றும் தன்னை அவன் கருதிக் கொள்கிறான்.(53) அசைவும், பிறப்பும் அற்றவனாக இருந்தாலும், அவை இரண்டும் தனக்கு இருப்பதாகவும், அச்சத்தைக் கடந்தவனாக இருந்தாலும், அச்சம் கொண்டவனாகவும் அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். அழிவற்றவனாக இருந்தாலும் அவன் தன்னை அழியத்தக்கவனாகக் கருதுகிறான். அறியாமையுடன் கூடிய ஆன்மாவானது இவ்வாறே தன்னைக் குறித்து நினைத்துக் கொள்கிறது” என்றார் {வசிஷ்டர்}.(54)
ஆத்ம களங்கம்! – சாந்திபர்வம் பகுதி – 305-ஜீவனின் பதினாறு கலைகள்; பதினாறாவது கலையான சித்; ஜீவன் களங்கமடையும் தருணம் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…
வசிஷ்டர் {ஜனக மன்னன் கராளனிடம்}, “இவ்வாறே அறியாமையின் விளைவாலும், அறியாமையுடன் கூடிய பிறவற்றின் தொடர்பாலும் ஜீவனானவன், அழிவையே கதியாகக் கொண்ட ஆயிரம் கோடி பிறவிகளை அடைகிறான்.(1) ஜீவனானவன், அறியாமையுடன் கூடிய சித்-ஆக மாறுவதன் விளைவால், இடைநிலை வகைகள், மனிதர்கள், தேவர்களுக்கு மத்தியில் ஆயிரம் வசிப்பிடங்களை அடைகிறான்.(2) அறியாமையின் விளைவால் அந்த ஜீவன், ஆயிரமாயிரம் முறை சந்திரமாஸைப் போல வளரவும் தேயவும் செய்கிறான். இதுவே அறியாமையுடன் கூடிய ஜீவனின் உண்மையான இயல்பாகும். உண்மையில் சந்திரமாஸுக்கு பதினாறு பகுதிகள் {கலைகள்} முழுமையாக உண்டு என்பதை அறிவாயாக. அவற்றில் பதினைந்து மட்டுமே வளரவும், தேயவும் செய்கின்றன.(3) (புலப்படாதிருப்பதும், புதுநிலவின் {அமாவாசையின்} இரவில் தோன்றுவதுமான எஞ்சியிருக்கும் பாகமான) அந்தப் பதினாறாவது பாகம் நிலையானதாக இருக்கிறது. சந்திரமாஸைப் போலவே, ஜீவனுக்கும் முழுமையாகப் பதினாறு கலைகள் இருக்கின்றன. அவற்றில் (சித்-ன் பிம்பத்தோடு {சிந்தனையோடு} கூடிய பிரகிருதி, ஞானம் மற்றும் செயற்புலன்கள் பத்து, உட்பொருட்கள் நான்கு ஆகியவை) பதினைந்தும் தோன்றவும், மறையவும் செய்கின்றன. பதினாறாவது (தூய சித்-ஆனது) எந்த மாறுதலுக்கும் உட்படுவதில்லை.(4)
அறியாமையுடன் கூடிய ஜீவன், மேற்குறிப்பிட்ட பதினைந்து பாகங்களுடன் {கலைகளுடன்} மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறக்கிறான். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான ஜீவனின் பாகம் அடிப்படை பூதங்களுடன் கலக்கிறது, இந்தக் கலவை மீண்டும் மீண்டும் நேர்கிறது.(5) பதினாறாவது பாகம் {கலை} நுட்பமானதாகும் {சூக்ஷ்மமானதாகும்}. அது {தூய சித்} (நிலையானவனும், மாற்றமில்லாதவனுமான) சோமனாக அறியப்பட வேண்டும். அஃது ஒருபோதும் புலன்களால் தாங்கப்படுவதில்லை. மறுபுறம் புலன்களே அதனால் தாங்கப்படுகின்றன.(6) அந்தப் பதினாறும் உயிரினங்களின் பிறப்புக்குக் காரணமாக இருப்பதால், ஓ! ஏகாதிபதி {கராளனே}, அவற்றின் துணை இல்லாமல் ஒருபோதும் உயிரினங்களால் பிறவியை அடைய முடியாது. அவையே பிரகிருதி என்றழைக்கப்படுகின்றன. ஜீவன் பிரகிருதியுடன் கலக்க வேண்டிய காரியத்தின் அழிவே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுகிறது.(7)
இருபத்தைந்தாவதாக இருக்கும் மஹத்-ஆன்மாவானது, புலப்படாதது என்றழைக்கப்படும். பதினாறு பாகங்களை {கலைகளைக்} கொண்ட உடலைத் தனதெனக் கருதினால், அது மீண்டும் மீண்டும் வடிவத்தை ஏற்க வேண்டும். ஓ! மன்னா, களங்கமற்றதும், தூயதும் எது என்பதை அறியாததன் விளைவால், தூய்மை மற்றும் தூய்மையின்மை ஆகிய இரண்டின் கலவையில் விளையும் அர்ப்பணிப்புக்காக, உண்மையில் தூய்மையான ஆன்மாவானது தூய்மையற்றதாகிறது {களங்கமடைகிறது}.(8,9) அறியாமையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஜீவனானது, ஞானத்தின் தன்மையைக் கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அறியாமையுடன் தொடர்பு கொள்கிறது.(10) ஓ! ஏகாதிபதி, அனைத்து வகைக் குற்றங்களில் இருந்து விடுபட்டிருந்தாலும், பிரகிருதியின் முக்குணங்களில் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் அஃது அந்தக் குணங்களைக் கொண்டதாகிறது” என்றார் {வசிஷ்டர்}.(11)
உடல் மற்றும் வடிவம்! – சாந்திபர்வம் பகுதி – 306- உயிரினங்கள் உடல் மற்றும் வடிவம் ஆகியவை உண்டாகும் வழிமுறை; ஆத்மா, பரமாத்மா, விடுதலை ஆகியவை குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…
ஜனகன் {கராளன் முனிவர் வசிஷ்டரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவானது, அழிவற்றதற்கும் {அக்ஷரத்திற்கும்}, அழிவுள்ளதற்கும் {க்ஷரத்திற்கும்} (அல்லது புருஷனுக்கும் {ஆன்மாவுக்கும்} பிரகிருதிக்கும்) இடையில் உள்ளதை {உள்ள உறவைப்} போன்றது எனச் சொல்லப்படுகிறது.(1) ஓர் ஆணில்லாமல் ஒரு பெண்ணால் ஒருபோதும் கருவுறமுடியாது. ஒரு பெண்ணில்லாமல் ஓர் ஆணாலும் ஒருபோதும் எந்தவொரு வடிவத்தையும் படைக்க முடியாது.(2) ஒருவரோடொருவர் கொள்ளும் கலவியின் விளைவாலும், ஒருவர் அடுத்தவரின் குணங்களைச் சார்ந்திருப்பதாலும் (உயிரினங்களின்) வடிவங்கள் உண்டாவது காணப்படுகிறது. அனைத்து வகைப் பிறவிகளிலும் இதுவே வழக்கமாக இருக்கிறது.(3) (பாலினப்) புணர்வு நோக்கங்களுக்காக ஒருவரோடொருவர் கொள்ளும் கலவியின் மூலமும், ஒருவர் மற்றவரின் குணங்களைச் சார்ந்திருப்பதன் மூலமும், மாதவிடாய் {ருது} காலங்களில் (உயிரினங்களின்) வடிவங்கள் உண்டாகின்றன. அதன் குறியீடுகளை நான் உமக்குச் சொல்கிறேன்.(4) தந்தைக்குரிய குணங்களையும், தாய்க்குரிய குணங்களையும் கேட்பீராக. ஓ! மறுபிறப்பாளரே {வசீஷ்டரே}, எலும்புகள், நரம்புகள், ஊன் ஆகியன தந்தையிடம் இருந்து பெறப்படுகின்றன என்று நாம் அறிகிறோம்.(5) தோல், சதை, குருதி ஆகியன தாயிடம் இருந்து பெறப்படுகின்றன எனக் கேள்விப்படுகிறோம். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, வேதங்களிலும், பிற சாத்திரங்களிலும் இதையே படிக்க முடிகிறது.(6)
வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டதாகப் படிக்கப்படும் எதுவும் அதிகாரமிக்கதாகக் கருதப்படுகிறது. மேலும், வேதங்கள் மற்றும் (வேதங்களுக்கு இணங்கிய) பிற சாத்திரங்களின் அதிகாரம் நித்தியத்தன்மை கொண்டதாகும்.(7) பிரகிருதி மற்றும் புருஷனால், ஒன்றையொன்று எதிர்த்தும், ஒன்றின் குணங்களை மற்றது சார்ந்துமென எப்போதும் கலந்திருக்க முடியுமென்றால்,(8) ஓ! புனிதமானவரே {வசீஷ்டரே}, விடுதலை {முக்தி} என்ற ஒன்று இருக்க முடியாது என்றே நான் காண்கிறேன். ஓ! புனிதமானவரே, அனைத்துப் பொருட்களும் உமது கண்ணெதிரே இருப்பது போன்ற ஆன்ம பார்வையைக் கொண்டவர் நீர். எனவே, விடுதலையின் {முக்தியின்} இருப்புக்கான நேரடி சான்று ஏதேனும் இருந்தால், அது குறித்து எனக்குச் சொல்வீராக.(9) நாம் விடுதலையை அடைய விரும்புகிறோம். உண்மையில், மங்கலமானதும், உடலற்றதும், முதுமையற்றதும், நித்தியமானதும், புலன்களின் திறனுக்கு எட்டாததும், தனக்கு மேன்மையான ஏதும் அற்றதுமான அஃதை அடையவே நாம் விரும்புகிறோம்” என்றான் {கராளன்}.(10)
வசிஷ்டர் {கராளனிடம்}, “(இக்காரியத்தைப் பொறுத்தவரையில்), வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் குறியீடுகள் நீ சொல்வது போலத்தான் இருக்கின்றன. அக்குறியீடுகளை நீ எடுத்துக் கொள்ள {புரிந்து கொள்ள} வேண்டிய வகையிலேயே எடுத்திருக்கிறாய் {புரிந்து வைத்திருக்கிறாய்}.(11) எனினும், வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் உரைகளை மட்டுமே நீ உன் புத்தியில் கொண்டிருக்கிறாய். ஓ! ஏகாதிபதி, அவ்வுரைகளின் உண்மையான பொருளை நீ உண்மையில் அறிந்து கொள்ளவில்லை.(12) எந்த மனிதன், வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் உரைகளுடைய உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாமல் வெறுமனே உரைகளை மட்டும் தன் புத்தியில் சுமக்கிறானோ, அவன் அவற்றைக் கனியில்லாமலேயே சுமக்கிறான்.(13) உண்மையில், ஒரு படைப்பின் பொருளைப் புரிந்துகொள்ளாமல், அதன் உள்ளடக்கத்தை நினைவில் கொள்பவன், பயனற்ற சுமையைச் சுமப்பதாகவே சொல்லப்படுகிறது. எனினும், ஓர் ஆய்வின் {கிரந்தத்தின்} உண்மைப் பொருளை அறிந்தவன், அவ்வாய்வின் நோக்கத்தைக் கற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(14) ஓர் உரையின் பொருளைக் குறித்துக் கேட்கப்படும்போது, கவனமாகக் கற்றதன் மூலம் தான் புரிந்து கொண்ட பொருளைச் சொல்வதே ஒருவனுக்குத் தகும்.(15)
எந்த மந்த புத்தியுள்ளவன், கல்விமான்களின் கூட்டத்திற்கு மத்தியில் உரைகளின் பொருளை விளக்க மறுப்பானோ அந்த மூடப் புத்தியுள்ளவனால், சரியான பொருளை ஒருபோதும் விளக்க முடியாது[1].(16) அறியாமை கொண்டவன், ஆய்வுகளின் உண்மைப் பொருளை விளக்கப் புகும்போது கேலிக்குள்ளாகிறான். ஆன்மாவைக் குறித்த அறிவைக் கொண்டவர்களும் கூட, (அவர்கள் விளக்குவது கல்வியால் {கவனத்துடன் படித்துப் புரிந்து கொண்ட கல்வியால்} அடைந்ததாக இல்லையென்றால்) அத்தக்கைய சந்தப்பங்களில் கேலிக்கே உள்ளவார்கள்.(17) ஓ! ஏகாதிபதி {கராளனே}, சாங்கிய மற்றும் யோக தத்துவ அமைப்புகளை அறிந்த உயர் ஆன்மாக்களுக்கு மத்தியில் (பழங்காலத்தில் இருந்து ஆசான்களால் சீடர்களுக்கு) விடுதலை குறித்து எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதை இப்போது கேட்பாயாக.(18) யோகிகள் காண்பதையே சரியாகச் சாங்கியர்களும் அடைய முனைகிறார்கள். எவன் சாங்கிய மற்றும் யோக அமைப்புகளை ஒன்றெனக் காண்கிறானோ அவன் புத்திமானெனச் சொல்லப்படுகிறான்.(19) நீ என்னிடம் சொன்ன தோல், சதை, குருதி, கொழுப்பு, பித்தம், ஊன், நரம்புகள், (ஞானம் மற்றும் செயல் என்ற இரு வகை) புலன்கள் ஆகியன {உண்மையில்} இருக்கின்றன.(20)பொருட்கள் பொருட்களிலிருந்தும், புலன்கள் புலன்களிலிருந்தும் உண்டாகின்றன. வித்தானது வித்திலிருந்து பெறப்படுவதைப் போலவே, ஓர் உடலிலிருந்தே ஒருவன் உடலை அடைகிறான்.(21) பரம்பொருளானவன், புலன்களற்றவனாக, வித்தற்றவனாக {வித்து அற்றவனாக}, பருப்பொருளற்றவனாக, உடலற்றவனாக இருக்கும்போது, அவன் குணங்கள் அனைத்தும் அற்றவனாகவே இருக்க வேண்டும்; அவன் அவ்வாறு இருப்பதன் விளைவால் அவன் எவ்வகைக் குணங்களையும் எவ்வாறு பெற்றிருக்க முடியும்?(22) வெளி {ஆகாயம்} மற்றும் பிற குணங்கள், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களில் இருந்து தோன்றி, இறுதியாக அவற்றிலேயே மறைகின்றன. இவ்வாறே குணங்கள் பிரகிருதியில் இருந்து எழுந்து பிரகிருதியிலேய மறைகின்றன.(23) பிரகிருதியிலான தோல், சதை, குருதி, கொளுப்பு, பித்தம், ஊன், எலும்புகள் மற்றும் நரம்புகள் ஆகிய இந்த எட்டும் (ஆணின்) உயிர் வித்தின் மூலம் உண்டாக்கப்படுகின்றன.(24) ஜீவாத்மா, அண்டம் ஆகிய இரண்டும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் மூலம் பிரகிருதியின் தன்மையைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. பரமாத்மாவானவான், ஜீவாத்மா மற்றும் அண்டம் ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டவனாவான்[2].(25)பருவகாலங்கள் வடிவமற்றவையாக இருந்தாலும், குறிப்பிட்ட கனிகள் மற்றும் மலர்களின் தோற்றங்களின் மூலம் {தோன்றும் காலத்தைக் கொண்டு அவை} ஊகிக்கப்படுவதைப் போலவே, பிரகிருதியும் வடிவமற்றதாக இருந்தாலும், மஹத்-ன் குணங்கள் மற்றும் அதனில் இருந்து எழும் எஞ்சிய குணங்களால் ஊகிக்கப்படுகிறது.(26) இவ்வழியிலேயே, உடலில் சைத்யன்யத்தின் இருப்பும், எந்தக் குணமும் இல்லாத, முற்றிலும் களங்கமற்ற பரமாத்மா ஆகியவை அறியப்படுகின்றன.(27) தொடக்கமும், அழிவும் இல்லாததும், முடிவு இல்லாததும், அனைத்துப் பொருட்களையும் மேற்பார்வையிடுவதும், மங்கலமானதுமான ஆன்மாவானது, தன்னை உடலோடும், பிற குணங்களோடும் அடையாளம் காண்பதன் விளைவால் மட்டுமே குணங்களுள்ளதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது {புரிந்து கொள்ளப்படுகிறது}.(28) குணங்களை உண்மையில் அறிந்தவர்கள், குணங்களுடன் கூடிய பொருட்களால் மட்டுமே குணங்களைக் கொண்டிருக்க முடியும் என்பதையும், ஆனால் எது குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கிறதோ, அதனால் எந்தக் குணத்தையும் கொண்டிருக்க முடியாது என்பதையும் அறிகிறார்கள்.(29) பிழையால் ஏற்கப்பட்டதையும், பிரகிருதியில் பிறந்த குணங்கள் அனைத்தையும், ஜீவாத்மா வெல்லும்போது மட்டுமே அது பரமாத்மாவைப் பார்க்கிறது.(30)
அறிவதாகக் கருதப்படுவதும், அறியாமை அல்லது பிழையின் குணத்தைக் கடந்ததும், புலப்படாததும், குணங்கள் அனைத்தையும் கடந்ததும், பரம் {உயர்ந்தது} என அழைக்கப்படுவதும், குணங்கள் அனைத்தின் தொடர்பறுத்ததும், அனைத்துப் பொருட்களையும் விதிப்பதும், நித்தியமானதும், மாற்றமில்லாததும், பிரகிருதியைப் புறக்கணிப்பதும், இருபத்துநான்கு தத்துவங்களைக் கடந்து இருப்பதைந்தாவதாக இருப்பதும், சாங்கியர்கள், யோகியர்கள் மற்றும் பிற அமைப்புகளை நம்புபவர்கள் அனைவராலும் புத்தியைக் கடந்தது எனச் சொல்லப்படுவதுமான பரமாத்மாவை சாங்கிய மற்றும் யோக அமைப்புகளை அறிந்த உயர்ந்த முனிவர்கள் மட்டுமே அறிகிறார்கள்.(31-33) பிறவியை அஞ்சுபவர்களும், வாழும் நனவின் {அகங்காரத்தின்} பல்வேறு நிலைகள் மற்றும் மரணத்தைக் கொண்டவர்களுமான ஞானிகள், புலப்படாததை அறிவதில் வெல்லும்போது, பரமாத்மாவைப் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(34) ஜீவாத்மாவானது, பரமாத்மாவுடன் கலப்பது சாத்திரங்களுக்கு இணக்கமானதும், முற்றிலும் சரியானதுமென ஒரு புத்திமான் கருதுகிறான்; அதே வேளையில் புத்தியற்றவனோ அவற்றை {ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும்} ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகப் பார்க்கிறான்.(35)
க்ஷரம் மற்றும் அக்ஷரம் (அழியத்தக்கது மற்றும் அழிவற்றது) ஆகிய இரண்டின் குறியீடுகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். அக்ஷரம் என்பது ஒருமை அல்லது ஒற்றுமை, அதே வேளையில் பலவகையானது க்ஷரமாகும்.(36) ஒருவன் இந்த இருபத்தைந்து தத்துவங்களை முறையாகப் புரிந்து கற்கத் தொடங்கும்போது, ஆன்மாவின் ஒருமை சாத்திரங்களுக்கு இணக்கமானது என்பதையும், அதன் பன்மை அவற்றுக்கு எதிரானது என்பதையும் புரிந்து கொள்கிறான்.(37) படைக்கப்பட்ட தத்துவங்கள் அல்லது கோட்பாடுகளில் சேர்க்கப்பட்டதும், அப்பட்டியலைக் கடந்து நிற்பதுமான இதன் பல்வேறு குறியீடுகள் இவையே. தத்துவங்களின் பட்டியல் எண்ணிக்கையில் இருபத்தைந்தை மட்டுமே கொண்டது என்று ஞானிகள் சொல்கிறார்கள்.(38) தத்துவங்களைக் கடந்து நிற்பதானது, எண்ணிக்கையைக் கடந்து இருபத்தாறாவதாக அமைகிறது. (எண்ணிக்கையில் இருப்பத்தைந்தாக இருக்கும்) படைக்கப்பட்ட பொருட்களை அவற்றின் (ஐந்து) பூதங்களோடு புரிந்து கொள்வது அல்லது கற்பதே, தத்துவங்களைப் புரிந்து கொள்ளும் கல்வி, அல்லது தத்துவப் புரிதலாகும். இவற்றைக் கடந்து நிற்கும் அதுவே நித்தியமானதாகும்” என்றார் {வசிஷ்டர்}[3].(39)
யோகம், சாங்கியம்! – சாந்திபர்வம் பகுதி – 307-யோக முறை மற்றும் சாங்கிய முறை; ஆன்மா, புருஷன், க்ஷேத்ரம், க்ஷேதரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…
ஜனகன் {ஜனக மன்னன் கராளன் முனிவர் வசிஷ்டரிடம் }, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அக்ஷரம் (அழிவற்றது) என்பதன் குணம் ஒருமை என்றும், க்ஷரம் (அழியத்தக்கது) என்றழைக்கப்படுவதன் குணம் பன்மை என்று நீர் சொன்னீர். எனினும், இவ்விரண்டின் இயல்பைக் குறித்து நான் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் என் மனத்தில் ஐயங்கள் பதுங்கியிருக்கின்றன.(1) அறியாமையிலுள்ள மனிதர்கள் ஆன்மாவைப் பல நிகழ்வுகள் கொண்டதாகப் பார்க்கின்றனர். எனினும், அறிவும், விவேகமும் கொண்டோர் ஆன்மாவை ஒன்றே ஒன்றாகக் கருதுகின்றனர். எனினும், நான் மிக மந்த புத்தியுள்ளவனாக இருக்கிறேன். எனவே, இவை யாவும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறேன்.(2) அக்ஷரம் மற்றும் க்ஷரத்தின் ஒருமை மற்றும் பன்மைக்காக நீர் சொன்ன காரணங்களையும், என் நிலையற்ற புத்தியின் விளைவால் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன்.(3) எனவே, ஒருமை {அபேதம்} மற்றும் பன்மை {பேதம்}, ஞானி, அஜ்ஞானி, ஜீவாத்மா, ஞானம், அறியாமை, அக்ஷரம், க்ஷரம், சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஆகியவை குறித்து நீர் எனக்கு மீண்டும் சொல்லவும், நான் கேட்கவும் விரும்புகிறேன்” என்றான் {கராளன்}.(4,5)
வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “நீ கேட்பதை உனக்குச் சொல்கிறேன். எனினும், ஓ! ஏகாதிபதி, யோக நடைமுறைகளைத் தனியாக விளக்குகிறேன் கேட்பாயாக.(6) யோகிகளின் கட்டுப்பாடான தியானமே அவர்களுடைய உயர்ந்த பலமாகும்[1]. தியானம் இருவகைப்பட்டது என யோகத்தை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(7) ஒன்று மனக்குவிப்பு மற்றொன்று (சுவாசத்தை முறைப்படுத்தும்) பிராணாயாமம் என்றழைக்கப்படுகிறது. பிராணாயாமம் பொருள் கொண்டதாகவும், மனக்குவிப்பு அதைக் கொள்ளாததாகவும் சொல்லப்படுகிறது[2].(8) சிறுநீர் கழிப்பு, மலக்கழிப்பு, உணவு உண்ணுதல் ஆகிய மூன்று வேளைகளைத் தவிர ஒருவன் தனது மொத்த காலத்தையும் தியானத்தில் அர்ப்பணிக்க வேண்டும்.(9) மனத்தின் துணையுடன் புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் இருந்து விலக்கும் புத்திமான், தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, பிராண மூச்சை வெளிப்படுத்தும் இருபத்திரண்டு {22} முறைகளுக்கு {ஏவல்களுக்கு} ஏற்புடைய வகையில், எது (அறியாமை அல்லது பிரகிருதி என்றழைக்கப்படும்) இருபத்துநான்கு தத்துவங்களைக் கடந்ததோ, எது உடலின் ஒவ்வொரு பகுதியில் இருப்பதாகவும், சிதைவு மற்றும் அழிவுக்கு அப்பாற்பட்டதாகவும் ஞானிகளால் கருதப்படுகிறதோ அதனுடன் {பரமாத்மாவுடன்} ஜீவாத்மாவைக் கலக்க வேண்டும்.(10,11)
அந்த இருபத்திரண்டு {22} முறைகளின் மூலம்தான் ஆன்மா எப்போதும் அறியப்படுகிறது என நாம் கேள்விப்படுகிறோம். தீய ஆசைகளால் ஒருபோதும் பாதிக்கப்படாத மனம் கொண்டவனுடையதே இந்த யோகப்பயிற்சி என்பது உறுதியாகும். அது வேறு யாருடையதுமல்ல.(12) ஓ! மிதிலையின் மன்னா {கராளா}, ஒருவன், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, எளிமையான உணவு உண்டு, புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, புலன்கள் அனைத்தின் செயல்பாடுகளையும் நிறுத்திய பிறகு, ஒரு பாறையைப் போன்ற அசைவற்ற நிலையை ஏற்று, புத்தியால் மனத்தை அமைதிப்படுத்தி, இரவின் முதல் மற்றும் இறுதிப் பகுதியில் தன் மனத்தை ஆன்மாவில் நிலைநிறுத்த வேண்டும்.(13,14) யோக விதிகளை அறிந்த ஞானிகள் ஒரு மரத்துண்டைப் போல நிலையாகவும், ஒரு மலையைப் போல அசைவில்லாமலும் இருக்கும்போதே அவர்கள் யோகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(15) ஒருவன் கேட்கவும், நுகரவும், சுவைக்கவும், காணவும் செய்யாதபோது; தீண்டலின் எந்த உணர்வும் பெறாதபோது; அனைத்துக் காரியங்களில் இருந்தும் மனம் முற்றிலும் விடுபட்டிருக்கும்போது;(16) அவன் எந்தப் பொருளையும் உணராதபோது, எந்தச் சிந்தனையையும் வளர்க்காதபோது; அவன் மரத்துண்டைப் போல ஆகும்போது, அவன் கச்சிதமான யோகத்தில் இருப்பதாக ஞானியரால் அழைக்கப்படுகிறான்.(17)
அத்தகைய நேரத்தில் அவன், காற்றில்லாத ஓர் இடத்தில் எரியும் விளக்கைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்; அத்தகைய நேரத்தில் அவன் தன் நுட்பமான வடிவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கச்சிதமாகக் கலக்கிறான். ஒருவன் அத்தகைய முன்னேற்றத்தை அடையும்போது, அவன் உயரவோ {உயர்ந்த நிலையை அடையவோ}, இடைநிலை வகைகளுக்கு மத்தியில் வீழவோ வேண்டிய தேவையேதும் இல்லை.(18) அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகியவற்றை முழுமையாக அடையாளங் கண்டதாக நம்மைப் போன்ற மனிதர்கள் சொல்லும்போது, யோகியானவன் பரமாத்மாவைக் காண்பதாகச் சொல்லப்படுகிறது.(19) யோகத்தில் இருக்கும்போது, அந்த யோகியின் இதயத்தில் சுடர்மிக்க நெருப்பைப் போலவோ, பிரகாசமான சூரியனைப் போலவோ, வானத்தில் தோன்றும் தீப்பிழம்பைப் போலவோ பரமாத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது[3].(20)பிறப்பற்றதும், அமுதச் சாரமும், புத்தி மற்றும் ஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான உயர் ஆன்ம பிராமணர்களால் காணப்படுவதுமான பரமாத்மாவானது,(21) நுட்பத்திலும் நுட்பமானதாகவும், பெரிதிலும் பெரிதானதாகவும் இருக்கிறது. ஆத்மாவானது, அனைத்து உயிரினங்களிலும் வசித்தாலும், அஃது அவற்றால் காணப்படுவதில்லை.(22) உலகங்களைப் படைத்தவன், மனமெனும் விளக்கின் துணையுடன் புத்தியெனும் செல்வம் கொண்ட மனிதனால் மட்டுமே காணப்படுகிறான். அவன் அடர் இருளின் அடுத்தக் கரையில் வசித்து, அதைக் கடந்திருப்பவன் ஈஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(23) வேதங்களை அறிந்தவர்களும், அனைத்தையும் அறிந்தவர்களுமான மனிதர்கள், அவனை இருளை விலக்குபவன், களங்கமற்றவன், இருளைக் கடந்திருப்பவன், குணங்கள் அற்றவன், அவற்றை {குணங்களைக்} கொண்டவன் என்று அழைக்கிறார்கள்.(24)
இதுவே யோகிகளின் யோகம் என்றழைக்கப்படுகிறது. யோகத்தின் குறியீடாக இருப்பது வேறெது? யோகிகள் இத்தகைய பயிற்சிகளின் மூலம் அழிவையும், சிதைவையும் கடந்த பரமாத்மாவைக் காண்பதில் வெல்கிறார்கள்.(25) யோக அறிவியல் காரியங்களைக் குறித்து இந்த அளவுக்கு விளக்கமாக நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.
இனி, பிழைகளைப் படிப்படியாக அழிப்பதன் மூலம் பரமாத்மாவைக் காணும் சாங்கிய மெய்யியல் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(26) பிரகிருதியில் கட்டப்பட்ட அமைப்பைக் கொண்ட சாங்கியர்கள், புலப்படாததான பிரகிருதியே முதன்மையானது எனச் சொல்கிறார்கள். ஓ!ஏகாதிபதி, பிரகிருதியில் இருந்து மஹத் என்றழைக்கப்படும் இரண்டாம் கோட்பாடு உண்டாவதாக அவர்கள் சொல்கிறார்கள்.(27) மஹத்திலிருந்து நனவுநிலை {அகங்காரம்} என்றழைக்கப்படும் மூன்றாம் கோட்பாடு தோன்றுவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஆன்ம பார்வையால் அருளப்பட்ட சாங்கியர்கள், அந்த நனவுநிலையில் இருந்து ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் ஐந்து {5} நுட்பமான சாரங்கள் தோன்றுவதாகச் சொல்கிறார்கள்.(28) இந்த எட்டையும் {8} அவர்கள் பிரகிருதி என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த எட்டின் மாறுபாடுகள் {விகாரங்கள்} எண்ணிக்கையில் பதினாறாக {16} இருக்கின்றன. அவை {அந்தப் பதினாறு விகாரங்கள்} வெளி {ஆகாயம்}, ஒளி, பூமி {நிலம்}, நீர் மற்றும் காற்று ஆகிய திரள் பூதங்கள் ஐந்தும், அறிவு மற்றும் செயற்புலன்கள் {ஞானக் கர்மேந்திரியங்கள்} பத்தும் {10}, மனமும் ஆகும்.(29) சாங்கிய பாதையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அதன் விதிகள் மற்றும் வகைமைகளை அறிந்தவர்களுமான ஞானிகள், இந்த இருபத்துநான்கு {24} காரியங்களையும் {தத்துவங்களையும்} மொத்த சாங்கிய விசாரணையின் எல்லையைத் தழுவியவையாகக் கருதுகிறார்கள்.(30)
எது உண்டாக்கப்பட்டதோ, அது படைக்கப்பட்ட காரணத்திலேயே கலக்கிறது. பரமாத்மாவால் ஒன்றன்பின் ஒன்றாகப்படைக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள், நேர்மாறான வரிசையில் அழிக்கப்படுகின்றன.(31) ஒவ்வொரு புதிய படைப்பின்போதும் குணங்கள் (மேற்சொன்ன வகையில்) மையம் விலகி வெளிநோக்கி இருப்புக்கு வருகின்றன. கடலில் பிறக்கும் அலைகள் அந்தக் கடலில் மறைவதைப் போலவே (அவை ஒவ்வொன்றும் அழிவடையும்போது அதன் மூலத்திற்குள்) நேர்மாறான வரிசையில் கலக்கின்றன.(32) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிரகிருதியின் படைப்பும் அழிவும் இவ்வாறே நடைபெறுகிறது. அண்டப் பேரழிவின் போது பரம்பொருள் மட்டுமே எஞ்சுகிறான்; மீண்டும் உயிர்கள் படைக்கப்படும்போது அவனே பல்வேறு வடிவங்களை ஏற்கிறான்.(33) ஓ! மன்னா, ஞானிகளும் இவ்வாறே இஃதை உறுதி செய்கிறார்கள். மேலோங்கும் புருஷனைப் பிரகிருதியே இவ்வாறு பன்மையை ஏற்கவும், மீண்டும் ஒருமைக்குத் திரும்பவும் வைக்கிறாள். பிரகிருதியே கூட இதே குறியீடுகளையே கொண்டிருக்கிறாள்.(34) விசாரணை தத்துவங்களின் இயல்பை முழுமையாக அறிந்தவன், பிரகிருதியும் அதே வகைப் பன்மையையும், ஒருமையையும் ஏற்கிறாள் என்று அறிவான். ஏனெனில், அழிவின் போது அவள் ஒருமைக்குத் திரும்புகிறாள், படைப்பின் போது மீண்டும் அவள் பன்மையை ஏற்கிறாள்.(35)
உற்பத்தி அல்லது வளர்ச்சிக் கோட்பாடுகளைக் கொண்ட பிரகிருதியை ஆன்மாவே பல்வேறு வடிவங்களை ஏற்கச் செய்கிறது. பிரகிருதி க்ஷேத்திரம் (அல்லது மண் {நிலம்}) என்றழைக்கப்படுகிறது. பெரியதான ஆன்மா, இருபத்துநான்கு காரியங்கள் அல்லது கோட்பாடுகளைக் கடந்திருக்கிறது. அஃது அந்தப் பிரகிருதி அல்லது க்ஷேத்திரத்திற்குத் தலைமை தாங்குகிறது.(36) எனவே, ஓ பெரும் மன்னா, யதிகளில் முதன்மையானோர், ஆன்மாவே தலைமை தாங்குபவன் {அதிஷ்டாதா} என்று சொல்கின்றனர். உண்மையில், க்ஷேத்திரங்கள் அனைத்தையும் ஆன்மா தலைமை தாங்குவதன் விளைவாகவே அவன் {ஆத்மா} தலைமை தாங்குபவன் {அதிஷ்டாதா} என்றழைக்கப்படுகிறான்.(37) அவன் {ஆத்மா} புலப்படாத க்ஷேத்திரத்தை அறிந்திருக்கிறான். எனவே, அவன் க்ஷேத்திரஜ்ஞன் {க்ஷேத்திரத்தை அறிந்தவன்} என்றும் அழைக்கப்படுகிறான். புலப்படாத க்ஷேத்திரத்திற்குள் (உடலுக்குள்) ஆன்மா நுழைவதன் காரணமாக அவன் புருஷன் என்றழைக்கப்படுகிறான்.(38) க்ஷேத்திரம் என்பது க்ஷேத்திரஜ்ஞனிலிருந்து வேறுபட்டதாகும். க்ஷேத்திரம் புலப்படாததாகும். இருபத்து நான்கு கோட்பாடுகளைக் கடந்த ஆன்மாவே அறிபவன் {ஞாதா} என்று அழைக்கப்படுகிறான்.(39) அறிவும், அறியப்படும் பொருளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும். மேலும் அறிவானது, புலப்படாததெனச் சொல்லப்படுகிறது, அதே வேளையில் அறியப்படும் பொருளானது இருபத்து நான்கு கோட்பாடுகளைக் கடந்த ஆன்மாவாகும்.(40)
புலப்படாதது க்ஷத்திரம் என்றும் சத்வம் (புத்தி) என்றும், ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன்) என்றும் அழைக்கப்படுகிறது; அதே வேளையில் இருபத்தைந்தாவது {25} கோட்பாடான புருஷன் தனக்கு மேம்பட்ட எதையும் கொண்டிராததால் (அனைத்துக் கோட்பாடுகளைம் கடந்து வழக்கத்திற்காக மட்டுமே கோட்பாடாக அழைக்கப்படுவதால்) கோட்பாடாக இருப்பதில்லை.(41) ஓ! மன்னா சாங்கிய தத்துவம் இவ்வளவே. சாங்கியர்கள், அண்டத்தின் காரணத்தைப் பிரகிருதி என்றழைத்து, திரள் கோட்பாடுகள் அனைத்தையும் சித்-க்குள் கலந்து பரமாத்மாவைக் காண்கிறார்கள்.(42) பிரகிருதியோடு சேர்ந்து இருபத்து நான்கு காரியங்களையும் {கோட்பாடுகளையும்} சரியாகக் கற்கும் சாங்கியர்கள், அவற்றின் உண்மையான இயல்பை உறுதி செய்து கொண்டு, அந்த இருபத்துநான்கு கோட்பாடுகளையும் கடந்திருப்பதை {கடந்திருக்கும் அதை [ஆன்மாவைக்]} காண்கிறார்கள்.(43) பிரகிருதியைக் கடந்திருப்பதும், இருபத்துநான்கு காரியங்களுக்கும் அப்பாலிருப்பதுமான ஆன்மாவே உண்மையில் ஜீவனாகும். அவன் {ஜீவன்}, பிரகிருதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பரமாத்மாவை அறிவதில் வெல்லும்போது, பரமாத்மாவாகவே அடையாளம் காணப்படுகிறான்.(44) சாங்கிய அமைப்பைக் குறித்து உண்மையில் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இந்தத் தத்துவத்தை அறிந்தவர்கள் அமைதியை அடைவதில் வெல்கிறார்கள்.(45)
அந்நிலையை அடைவதில் வென்றவர்கள், தங்கள் உடல்கள் அழிந்த பிறகு இவ்வுலகத்திற்கு ஒருபோதும் திரும்ப வேண்டியதில்லை; அதே வேளையில் அவர்கள், அழிவற்ற இயல்பை அடைந்ததன் விளைவால், இப்பிறவியில் இருந்து விடுபட்டவர்களாக, பலமடைந்ததாக, சமாதியின் இன்பநிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறார்கள்.(48) இந்த அண்டத்தை (ஒன்றாகச் சீராகக் காண்பதற்குப் பதிலாக) பலவாகக் காண்பவர்கள் தவறாகக் காண்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மனிதர்கள் பிரம்மத்தைக் காணாத குருடர்களாக இருக்கிறார்கள். ஓ பகைவர்களைத் தண்டிப்பவனே, அத்தகைய மனிதர்கள் மீண்டும் மீண்டும் இவ்வுலகத்திற்கு வந்து (பல்வேறு வகை உயிரினங்களின் மத்தியில்) உடல்களை ஏற்கின்றனர்.(48) மேலாகச் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிந்தவர்கள், இவ்வுடலைக் கடந்து, அதற்கு மேலும் எந்த உடற்கட்டுகளையும் ஏற்கும் கட்டாயதிற்கு உள்ளாகாத போதே அனைத்தையும் அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(49) அனைத்துப் பொருட்களும் (அல்லது மொத்த அண்டமும்) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} விளைவென்று சொல்லப்படுகிறது. இருபத்தைந்தாவதான ஆன்மா அனைத்துப் பொருட்களையும் கடந்திருக்கிறது. ஆன்மாவை அறிந்தவர்களுக்கு இவ்வுலகத்திற்குத் திரும்ப வேண்டிய அச்சம் கிடையாது” என்றார் {வசிஷ்டர்}.(50)
அறிவு, அறியாமை! – சாந்திபர்வம் பகுதி – 308-வித்தை மற்றும் அவித்தை குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…
வசிஷ்டர் {கராளனிடம்}, “நான் இவ்வளவு நேரம் சாங்கிய தத்துவம் குறித்து உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி வித்யை (அறிவு) எது, அவித்யை (அறியாமை) எது என்று ஒன்றன்பின் ஒன்றாக உனக்குச் சொல்லப்போகிறேன், கேட்பாயாக.(1) படைப்பு மற்றும் அழிவு எனும் குணங்கள் நிறைந்த பிரகிருதி அவித்யை (அறியாமை) என்றழைக்கப்படுவதாகவும்; அதே வேளையில் படைப்பு மற்றும் அழிவு ஆகிய குணங்களில் இருந்து விடுபட்டவனும், இருபத்துநான்கு {24} காரியங்கள் அல்லது கோட்பாடுகளைக் கடந்தவனுமான புருஷன் வித்யை (அறிவு) என்றழைக்கப்படுவதாகவும் கல்விமான்கள் சொல்கின்றனர்.(2) சாங்கிய தத்துவத்தில் அடுத்தடுத்து விளக்கப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் வித்யை எது என்று உனக்கு முதலில் சொல்கிறேன் கேட்பாயாக.(3) அறிவு மற்றும் செயற் புலன்களில் {ஞானகர்மேந்திரியங்களில்}, அறிவுப் புலன்களே {ஞானேந்திரியங்களே} வித்யையாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அறிவுப்புலன்கள் மற்றும் அவற்றின் பொருட்களுக்கிடையில் முன்னதே {ஞானேந்திரியங்களே} வித்யையைக் கொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம்.(4) புலன் நுகர் பொருட்கள் மற்றும் மனத்திற்கிடையில் மனமே வித்யையாக இருக்கிறதென ஞானிகள் சொல்கின்றனர். மனம் மற்றும் நுண்பூதங்கள் {சூக்ஷ்ம பூதங்கள்} ஐந்துக்கிடையில், ஐந்து நுட்பமான பூதங்களே வித்யையாக அமைகின்றன.(5)
ஐந்து நுண்பூதங்கள் மற்றும் நனவுநிலைக்கிடையில் {அகங்காரத்திற்கு இடையில்}, நனவுநிலையே {அகங்காரமே} வித்யையாக அமைகிறது. நனவுநிலை மற்றும் மஹத்-க்கு இடையில், ஓ! மன்னா {கராளா}, மஹத்தே வித்தையாகும்.(6) மஹத் முதலிய அனைத்துக் காரியங்கள் அல்லது கோட்பாடுகள் மற்றும் பிரகிருதிக்கிடையில், புலப்படாததும், உயர்ந்ததுமான பிரகிருதியே வித்யை என்றழைக்கப்படுகிறது. பிரகிருதி மற்றும் விதி என்றைழக்கப்படும் உயர்ந்ததற்கிடையில், பின்னதே {விதியே} வித்யை என்றறியப்பட வேண்டும்.(7) பிரகிருதியைக் கடந்திருக்கும் (புருஷன் என்றழைக்கப்படும்) இருபத்தைந்தாவதானது வித்யை என்றறியப்பட வேண்டும். ஓ! மன்னா, ஞானங்கள் அனைத்திலும், எது ஞானத்தின் பொருளாக இருக்கிறதோ, அது புலப்படாதது {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகிறது[1].(8) மேலும், ஞானம் புலப்படாதது என்றும், ஞானத்தின் பொருள், இருபத்துநான்கை {24 கோட்பாடுகளைக்} கடந்தது என்றும் சொல்லப்படுகிறது. மீண்டும் ஞானம் புலப்படாததென்றும், அறிபவன் {ஞேயன்} இருபத்துநான்கையும் கடக்கிறான் என்றும் சொல்லப்படுகிறது. நான் இப்போது வித்யை மற்றும் அவித்யை குறித்த செய்தியை உனக்குச் சொன்னேன்.(9) அழிவற்றவை மற்றும் அழியத்தக்கவை ஆகியவற்றைக் குறித்த அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் அழிவற்றவை என்றும், அவை இரண்டும் அழியத்தக்கவை என்றும் சொல்லப்பட்டுள்ளன.(10)இதன் காரணத்தை நான் புரிந்து கொண்டவாறு சரியாக உனக்குச் சொல்கிறேன். ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும், அல்லது அழிவும் அற்றவையாகும். (படைப்பின் காரியத்தில்) அவை இரண்டும் உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.(11) அவை இரண்டும் காரியங்கள் அல்லது கோட்பாடுகள் என்றழைக்கப்படவேண்டும் என்று ஞானம் கொண்டவர்கள் சொல்கிறார்கள். படைப்பு மற்றும் அழிவு (எனத் தொடரும்) குணங்களின் விளைவால் புலப்படாதது (அல்லது பிரகிருதி) அழிவற்றது என்று அழைக்கப்படுகிறது.(12) கோட்பாடுகளை உண்டாக்கும் நோக்கத்திற்காகப் புலப்படாதது மீண்டும் மீண்டும் மாறுதலுக்கு உட்படுகிறது.(13) மஹத் முதலிய கோட்பாடுகள் புருஷனாலும் உண்டாக்கப்படுவதாலும், புருஷனும், புலப்படாததும் {பிரகிருதியும்} ஒன்றையொன்று சார்ந்திருப்பதன் விளைவாலும், இருபத்தைந்தாவது {தத்துவமான} புருஷன் க்ஷேத்திரம் (அக்ஷரம் அல்லது அழிவற்றவன்) என்றும் அழைக்கப்படுகிறான்[2].(14) யோகியானவன் விடுபட்டு, புலப்படாத ஆன்மாவில் (அல்லது பிரம்மத்தில்) கோட்பாடுகள் அனைத்தையும் கலக்கும்போது, இருபத்தைந்தாவதும் (ஜீவன் அல்லது புருஷனும்) அந்தக் கோட்பாடுகள் அனைத்துடன் அதற்குள் மறைகிறான்.(15)கோட்பாடுகள் அதனதன் மூலங்களுக்குள் கலக்கும்போது, பிரகிருதி மட்டுமே எஞ்சுகிறது. ஓ மகனே, க்ஷேத்ரஜ்ஞனும் (ஜீவன் அல்லது ஆத்மாவும்) தன்னை உண்டாக்கிய காரணத்திற்குள் கலக்கும்போது,(16) (பிரம்மம் மட்டுமே எஞ்சியிருப்பதால்) பிரகிருதியானவள் கோட்பாடுகள் அனைத்துடன் சேர்ந்து க்ஷரமாகி (அல்லது அழிவடைந்து), கோட்பாடுகள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்ததன் விளைவால் குணங்களற்ற நிலையையும் அடைகிறாள்.(17) இவ்வாறே க்ஷேத்ரஜ்ஞன், க்ஷேத்திரத்தைக் குறித்த ஞானம் மறையும்போது, தன் இயல்பால் குணங்களற்றவனாகிறான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(18) அவன் க்ஷரமாகும்போது குணங்களை ஏற்கிறான். எனினும், அவன் தன் சொந்த இயல்பை அடையும்போது, தன்னுடைய குணங்களற்ற உண்மை நிலையைப் புரிந்து கொள்வதில் வெல்கிறான்.(19) பிரகிருதியைக் கைவிட்டு, அவளிடம் இருந்து தான் வேறுபட்டவன் என்று உணரத் தொடங்கும் புத்திமானான க்ஷேத்ரஜ்ஞன் அப்போது தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாகக் கருதப்படுகிறான்.(20) ஜீவன் பிரகிருதியுடன் ஒன்றாகக் கலந்திராத போது, அவன் பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுகிறான். எனினும், அவன் பிரகிருதியுடன் கலந்திருக்கும்போது, பிரம்மத்தில் இருந்து வேறுபட்டவனாகத் தெரிகிறான்.(21) உண்மையில், ஜீவன் பிரகிருதியிடமும், அவளது கோட்பாடுகளிடமும் எந்தப் பற்றும் காட்டாதபோது, அவன் பரமனைக் காண்பதில் வெல்கிறான், ஒருமுறை அவனை {பரமனைக்} கண்டதும் அந்த இன்பநிலையில் இருந்து வீழ்ந்துவிட அவன் விரும்புவதில்லை.(22)
உண்மையின் அறிவு தோன்றும்போது, ஜீவன் இவ்வகையில் அழுகிறான்: ஐயோ, வலையில் அகப்பட்ட மீனைப் போல, பிரகிருதியால் அமைந்த இந்த உடலில் அறியாமையால் வீழ்ந்ததன் மூலம் மடமையைச் செய்துவிட்டேன்.(23) ஐயோ, அறியாமையின் மூலம் மீனானது தன்னால் நீரில் மட்டுமே வாழ முடியும் என்று நினைத்து நீருக்கு நீர் மாறுவதைப் போலவே நான் உடலைவிட்டு உடல் மாறி வருகிறேன்.(24) உண்மையில், நீரைத் தவிர வேறு எதையும் தன் பூதமாக அறியாத மீனைப் போலவே, நானும் பிள்ளைகள் மற்றும் மனைவிகளைத் தவிர வேறு எதையும் என்னுடையதாக ஒருபோதும் அறியவில்லை.(25) (பரமாத்மாவைக் குறித்த) மறதியுடனும், அறியாமையின் மூலமும் மீண்டும் மீண்டும் உடல்விட்டு உடல் மாறிக் கொண்டிருக்கும் எனக்கு ஐயோ.(26) பரமாத்மா மட்டுமே என் நண்பனாவான். அவனுடன் நட்பு கொள்ளும் இயல்திறம் எனக்குண்டு. என் இயல்பு என்னவாக இருந்தாலும், நான் யாராக இருந்தாலும், நான் அவனைப் போல ஆகத் தகுந்தவனே, அவனைப் போன்ற நிலையை அடையவும் தகுந்தவனே.(27) நான் அவனுடனான ஒப்புமையைக் காண்கிறேன். உண்மையில், நான் அவனைப் போன்றவனே. அவன் களங்கமற்றவன். நானும் அதே இயல்பைக் கொண்டவன் என்பது தெளிவாகத் தெரிகிறது.(28)
அறியாமையாலும், திகைப்பினாலும் {மயக்கத்தினாலும்} நான் அசைவற்ற {உயிரற்ற ஜட} பிரகிருதியோடு தொடர்பையடைந்தேன். உண்மையில் பற்றில்லாதவனாக இருந்தாலும், பிரகிருதியுடனான பற்றுநிலையிலேயே நான் நீண்ட காலத்தைக் கடத்தியிருக்கிறேன்.(29) ஐயோ, இஃதை அறிய இயன்றவனாக இருந்தாலும், இவ்வளவு காலம் நான் அவளாலேயே {பிரகிருதியாலேயே} அடக்கப்பட்டேன். பிரகிருதியானவள் உயர்ந்த, நடுத்தரமான, இழிந்தவையான {வகைகளில்} பல்வேறு வடிவங்களை ஏற்கிறாள். ஓ!, நான் எவ்வாறு இந்த வடிவங்களில் வசித்தேன்?(30) நான் எவ்வாறு அவளோடு சேர்ந்து வாழ்ந்தேன்? என் அறியாமையின் விளைவால் மட்டுமே நான் அவளது {பிரகிருதியின்} துணை கொண்டேன். நான் இப்போது (சாங்கியத்திலோ, யோகத்திலோ} நிலைத்திருப்பேன்.(31) நான் இனியும் அவளது துணையைத் தக்கவைத்துக் கொள்ள மாட்டேன். அவளோடு சேர்ந்து {இவ்வளவையும்} கடந்து வந்த நான், இவ்வளவு காலம் அவளால் வஞ்சிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். ஏனெனில், உண்மையில் மாற்றமற்றவனான என்னால், மாறுதலுக்கு உட்படும் துணையை எவ்வாறு வைத்துக் கொள்ள முடியும்?(32) இதற்கு அவளைப் பொறுப்பாக்க முடியாது. பரமாத்மாவிடம் இருந்து திரும்பி, நானே அவளோடு பற்றுக் கொண்டேன் என்பதால் பொறுப்பு என்னுடையதே.(33) அந்தப் பற்றின் விளைவால் உண்மையில் வடிவமற்ற நான் பல்வேறு வடிவங்களை ஏற்க வேண்டியிருந்தது. உண்மையில் இயல்பாக வடிவமற்றவனாக இருப்பினும், மமதையின் விளைவால் பல்வேறு வடிவங்களை ஏற்று அவமதிப்பையும், துயரையும் அடைந்தேன்.(34)
பிரகிருதியுடைய விளைவுகளின் தொடர்பில் ஏற்பட்ட என் மமதையால் நான் பல்வேறு வகை உயிரினங்களாகப் பிறப்படைந்தேன். ஐயோ, உண்மையில் மமதையற்றவனாக இருப்பினும், நான் பிறவி எடுத்த வகைகளில், ஞானமனைத்தும் தொலைந்த ஆன்மாவைக் கொண்டனாகத் தீய இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்ததன் விளைவால் {மமதையெனும்} பாதிப்பை அடைந்தேன். நனவுநிலையின் {அகங்காரத்தின்} சாரமாக இருப்பவனிடமும் {சித்தத்திடமும்}, பல்வேறு துண்டுகளாய் தன்னைப் பிரித்துக் கொண்டு, அவற்றோடு என்னைச் சேர்க்க முனைபவளிடமும் {பிரகிருதியிடமும்} இனி எனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை. இப்போதுதான் நான் இயல்பாகவே மமதையற்றவன் என்றும், அனைத்திலும் என்னை ஈடுபடுத்தும் பிரகிருதியின் வடிவங்களை உண்டாக்கும் நனவுநிலை {அகங்காரம்} அற்றவன் என்றும் புரிந்து கொண்டு விழிப்படைந்திருக்கிறேன்[3].(35-37) எப்போதும் நனவுநிலையின் {அகங்காரத்தின்} சாரத்தால் செய்யப்பட்ட இந்த மமதையைக் கைவிட்டு, இந்தப் பிரகிருதியையே கைவிட்டு மங்கலமானவனை {அழிவற்ற பரமாத்மாவை} நான் புகலிடமாகக் கொள்வேன்.(38) நான் அவனிடமே கலந்திருப்பேன்; அசைவற்ற {ஜட} பிரகிருதியோடு கலந்திருக்க மாட்டேன். நான் அவனோடு கலந்திருந்தால் அஃது எனக்கு நன்மையை உண்டாக்கும். இயல்பிலேயே நான் பிரகிருதியில் இருந்து வேறுபட்டவன்” {என்று ஜீவன் அழுகிறான்}.(39) இருபத்தைந்தாவதாக இருப்பவன் (ஜீவன்), இவ்வாறு பரத்தைப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, அழியத்தக்கவற்றைக் கைவிட்டு, மங்கலமான அனைத்தின் சாரமாக இருக்கும் அழிவற்றதோடு {பரமாத்மாவோடு} சேர்த்துத் தன்னை அடையாளம் காண்கிறான் {அந்த ஜீவாத்மாவானவன் பரமாத்மாவோடு ஒன்றுகலக்கிறான்}.(40) உண்மை இயல்பில் குணங்களற்றவனும், உண்மையில் புலப்படாதவனுமான ஜீவன், புலப்படுபவையுடன் கூடி குணங்களை ஏற்கிறான். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {கராளா}, குணங்களற்றதும், புலப்படாததன் தோற்றுவாயுமான அதை {பரம்பொருளைக்} காண்பதில் அவன் வெல்லும்போது, அதனிலேயே அவன் தன்னை அடையாளம் காண்கிறான் {அதனுடன் நீக்கமறக் கலக்கிறான்}.(41)நான், என் அறிவுக்குத் தக்க வகையிலும், சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளபடியும் அழிவற்றது, அழியத்தக்கது ஆகியவற்றின் குறியீடுகளை இப்போது உனக்குச் சொன்னேன்.(42) நுட்பமானதும், களங்கமற்றதும், நிச்சயமானதுமான ஞானம் எவ்வாறு எழுகிறது என்பதை நான் கேள்விப்பட்டவாறே இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(43) சாங்கிய மற்றும் யோக அமைப்புகளுக்குரிய சாத்திரங்களின் படி அவற்றின் குறியீடுகளை நான் ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன். உண்மையில், சாங்கிய ஆய்வுகளில் விளக்கப்பட்டிருக்கும் அறிவியலும், யோக சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருப்பதும் ஒன்றாகவே இருக்கின்றன.(44) ஓ! ஏகாதிபதி {கராளா}, சாங்கியர்கள் சொல்லும் ஞானமானது அனைவரையும் விழிப்படையச் செய்யும் வல்லமை கொண்டதாகும். சாங்கிய சாத்திரங்களின் ஞானமானது, சீடர்களின் நன்மைக்காகவே மிகத்தெளிவாக மனத்தில் ஆழப்பதிய வைக்கப்படுகிறது.(45) இந்தச் சாங்கிய அமைப்பு மிகப் பரந்து விரிந்தது என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். யோகிகள், அந்த அமைப்பிலும், வேதங்களிலும் பெரும் மதிப்பை வைத்திருக்கிறார்கள்.(46) சாங்கிய அமைப்பில், இருபத்து நான்கைக் கடந்த எந்தக் காரியத்தையோ கோட்பாட்டையோ ஏற்பதில்லை. உயர்ந்த காரியம் அல்லது உயர்ந்த கோட்பாடு எனச் சாங்கியர்கள் கருதுவது முறையாக (என்னால்) விளக்கப்பட்டிருக்கிறது.(47) யோக தத்துவத்தில், இருமையற்ற {இரண்டற்ற} அறிவின் சாரமான பிரம்மமானது, அறியாமை கொள்வதாலேயே ஜீவனாகிறது என்று சொல்லப்படுகிறது. எனவே, யோக சாத்திரங்களில் பிரம்மம், ஜீவன் ஆகிய இரண்டும் பேசப்படுகின்றன {சாங்கியத்தில் பிரம்மம் பேசப்படுவதில்லை}” என்றார் {வசிஷ்டர்}.(48)
தக்கார் தகவிலார்! – சாந்திபர்வம் பகுதி – 309-பிரம்மம், சாங்கியம், யோகம் குறித்த அறிவுரையைப் பெறத்தக்கவர், தகாதவர் ஆகியோரைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…
வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “புத்தம் (பரமாத்மா) மற்றும் (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களின் வகைமுறையான அபுத்தம் (ஜீவன்) ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொல்லப்போவதைக் கேட்பாயாக. (மாயையின் ஆதிக்கத்தில்) பல வடிவங்களை ஏற்கும் பரமாத்மா, ஜீவனாகி அந்த வடிவங்கள் அனைத்தையும் உண்மையாகக் கருதுகிறான்[1].(1) அத்தகைய மாறுபாடுகளின் (அவற்றைத் தானாகவே கருதும்) விளைவால், (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களைக் கொள்ளும் ஜீவனானவன், படைப்பவனும், தான் படைத்தவற்றைத் தனக்குள்ளேயே ஈர்த்துக் கொள்பவனுமான பரமாத்மாவைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) ஓ! ஏகாதிபதி {கராளா}, இடைவிடாமல் விளையாட்டாக மாறுதலடையும் ஜீவன், புலப்படாததன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளவல்லவனாக இருக்கும் காரணத்தால், புத்யமானன் (புரிந்து கொள்பவன்) என்றழைக்கப்படுகிறான்[2].(3) குணங்களுடன் வெளிப்படும் பிரம்மமானது உண்மையில் குணங்களற்றது என்பதைப் புலப்படாததால் அல்லது பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. எனவே பிரகிருதியானது புத்தியற்றதாகச் சொல்லப்படுகிறது[3].(4) எப்போதாவது பிரகிருதியால் இருபத்தைந்தாவதை (ஜீவனை) அறியமுடியுமென்றால், அப்போது அந்தப் பிரகிருதியானது (ஜீவனிலிருந்து வேறுபட்ட ஒன்றாக அறியப்படாமல்) அதனோடு கலந்திருக்கும் ஜீவனாகவே அடையாளம் காணப்படும் என்று ஸ்ருதிகளில் ஒரு தீர்மானம் இருக்கிறது. (எனினும், கலப்படமில்லாததும், தொடர்பற்றதும், இருபத்தைந்தாவதைக் கடந்திருப்பதுமான பரமாத்மாவைப் பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது). இதன் விளைவால் புலப்படாதவனும், உண்மையான இயல்பின்படி மாற்றமில்லாதவனுமான ஜீவன், அல்லது புருஷனானவன், விழிப்பற்றவன் அல்லது அறியாமை கொண்டவன் என்று அழைக்கப்படுகிறான்.(5)உண்மையில், இருபத்தைந்தாவதால் {ஜீவனால்} புலப்படாததை {அவ்யக்தத்தைப்} புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவன் புத்யமானன் என்றழைக்கப்படுகிறான். எனினும், களங்கமானதும், இருமையற்ற அறிவானதும், அளக்க முடியாததும், நித்தியமானதுமான இருபத்தாறாவதை {பிரம்மத்தை} அவனால் உடனே புரிந்து கொள்ள முடியாது. இருபத்தாறாவதால் {பிரம்மத்தால்} இருபத்தைந்து மற்றும் இருபத்து நான்காவதாக இருக்கும் ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டையும் அறிந்து கொள்ள முடியும்.(6,7) ஓ! பேரொளி கொண்டவனே, புலப்படாததும், காணப்படுவது, காணப்படாதது ஆகிய அனைத்தின் உண்மை இயல்பையும் உட்பொதிந்திருப்பதும், அண்டத்தில் எச்சார்பும் அற்ற ஒன்றேயொன்றுமான பிரம்மத்தை அறிந்து கொள்வதில் ஞானம் கொண்ட மனிதர்கள் மட்டுமே வெல்கிறார்கள்.(8) ஜீவன் தன் உண்மை இயல்பில் இருந்து வேறுபட்டவனாகத் தன்னைத் தானே கருதிக் கொள்ளும்போது (அதாவது, தன்னைப் பருத்தவன், மெலிந்தவன், வெளுத்தவன், கருத்தவன், பிராமணன் அல்லது சூத்திரன் என்று கருதிக் கொள்ளும்போது), அவன் பரமாத்மாவையும், தன்னையும், தான் கலந்திருக்கும் பிரகிருதியையும் (அவள் தன்னில் இருந்து வேறுபட்டவள் என்பதையும்) அறிந்து கொள்ளத் தவறுகிறான்.(9) ஜீவன் பிரகிருதியைப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, அவன் தன் இயல்புக்கு மீண்டவனாகச் சொல்லப்படுகிறான். மேலும் அவன் (பிரம்மம் தொடர்பான) களங்கமற்றதும், தூய்மையானதும், உயர்ந்ததுமான புத்தியை அடைகிறான்.(10)
ஓ! மன்னர்களில் புலியே {கராளனே}, அந்தச் சிறந்த புத்தியை ஜீவன் அடையும்போது, இருபத்தாறாவதாக (அல்லது பிரம்மமாக) அழைக்கப்படும் (இருமையற்ற) தூய அறிவை அடைகிறான். பிறகு அவன் படைப்பு மற்றும் அழிவுக்குரிய குணங்கள் நிறைந்த புலப்படாதது அல்லது பிரகிருதியைக் கைவிடுகிறான்.(11) புத்தியற்றதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் ஆதிக்கத்தில் செயல்படுவதுமான பிரகிருதியை அறிந்து கொள்வதில் ஜீவன் வெல்லும்போது, அவன் குணங்களற்றவனாகிறான். இவ்வாறு புலப்படாததை {பிரகிருதியை} (தன்னில் இருந்து வேறுபட்டதாக) புரிந்து கொள்வதன் விளைவால் அவன் பரமாத்மாவின் இயல்பை அடைவதில் வெல்கிறான்.(12) (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) குணங்களில் இருந்து அவன் விடுபட்டு, பரமாத்ம இயல்பில் கலக்கும்போது, ஜீவன் அந்தப் பரமாத்மாவுடன் அடையாளம் காணப்படுகிறான் {பரமாத்மாவாகவே காணப்படுகிறான்}. பரமாத்மா, சிதைவு மற்றும் அழிவைக் கடந்த தத்துவமற்ற தத்துவம் என்றழைக்கப்படுகிறான்.(13) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, ஆன்மாவானது, (உடலின்) புலப்படும் கோட்பாடுகளைத் தன் ஓய்விடமாகக் கொண்டிருந்தாலும், அந்தக் கோட்பாடுகளின் இயல்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. (ஜீவாத்மாவையும் சேர்த்து) மொத்தம் இருபத்தைந்து கோட்பாடுகள் (தத்துவங்கள்) உள்ளதாக ஞானிகள் சொல்கிறார்கள்.(14) உண்மையில், ஓ! மகனே, ஆன்மாவானது (மஹத் உள்ளிட்ட) கோட்பாடுகள் எதையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதில்லை. புத்தியுடன் கூடிய அது {ஆன்மா}, கோட்பாடுகளைக் கடந்து நிற்கிறது. அறியும் (அல்லது விழிப்படையும்) ஒருவனுடைய குறியீடாக இருக்கும் கோட்பாட்டையும் அது விரைவில் கைவிடுகிறது[4].(15)
ஜீவன், சிதைவும் அழிவும் அற்ற இருபத்தாறாவதாகத் தன்னைக் கருதும்போது, அவன் தன் சக்தியால் இருபத்தாறாவதோடான ஒப்புமையை அடைகிறான்.(16) தூய புத்தியான இருபத்தாறவதால் விழிப்படையச் செய்யப்பட்டாலும், ஜீவன் அறியாமையை அடைகிறான். ஸ்ருதிகள் மற்றும் சாங்கிய சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளபடி இந்தக் காரணத்தினாலேயே ஜீவன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான்.(17) சேதனம் (மற்றும் புத்தியற்ற பிரகிருதி ஆகியவற்றுடன்) கூடிய ஜீவன், தன் நனவு அனைத்தையும் இழக்கும்போது, அவன் பல்வேறு வடிவங்களை இழந்து மீண்டும் ஒருமையை அடைகிறான்.(18) ஓ! மிதிலையின் ஆட்சியாளா {கராளா}, இன்ப துன்பங்களுடன் கலந்தவனாகக் காணப்படுபவனும், தன் நனவில் இருந்து அரிதாகவே விடுபடுபவனுமான ஜீவன், புத்தியைக் கடந்திருக்கும் பரமாத்மாவுடன் ஒப்புமையை அடைவதில் வெல்லும்போது, அவன் அறம் மற்றும் மறத்தில் {தர்ம அதர்மங்களில்} இருந்து விடுபடுகிறான்.(19) உண்மையில் ஜீவன், பிறப்பற்றதும், பலமிக்கதும், பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டதுமான இருபத்தாறாவதை {பிரம்மத்தை} அடைந்து, அதை முழுமையாகப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, தானே பலமிக்கவனாகி, புலப்படாதது, அல்லது பிரகிருதியை முற்றாகக் கைவிடுகிறான்.(20)
ஜீவனானவன், இருபத்தாறாவதைப் புரிந்து கொண்டதன் விளைவால், இருபத்து நான்கு கோட்பாடுகளும் அவனுக்கு உண்மையற்றவையாகவோ, மதிப்பற்றவையாகவோ ஆகிறது. ஓ! பாவமற்றவனே, புத்தியற்றது (அல்லது பிரகிருதி), ஜீவன், தூய அறிவு (பரமாத்மா) ஆகியவற்றை ஸ்ருதிகளில் குறிப்பிட்டுள்ளபடியும், உண்மைக்கு ஏற்புடைய வகையிலும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். பன்மையும், ஒருமையும் சாத்திரங்களின் வழிகாட்டலின்படி இவ்வாறே புரிந்துகொள்ளப்படுகின்றன.(21,22) கொசுவுக்கும், உடும்பரத்திற்கும் {அத்திக்கும்} இடையில் உள்ள, அல்லது மீனுக்கும் நீருக்கும் இடையிலான வேறுபாடுகள், ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்றன[5].(23) இவ்விரண்டின் {ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகியவற்றின்} பன்மை மற்றும் ஒருமை இவ்வழியிலேயே புரிந்து கொள்ளப்படுகிறது. புத்தியற்ற, அல்லது புலப்படாத பிரகிருதியில் இருந்து வேறுபட்ட ஒன்றைக் குறித்த இந்தப் புரிதலே, அல்லது தன்னறிவே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுகிறது.(24) உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் இருபத்தைந்தாவதானது {ஜீவாத்மாவானது}, புத்தியைக் கடந்திருக்கும் புலப்படாததை அல்லது பரமாத்மாவை அறிந்து விடுதலை {முக்தியை} அடைய வேண்டும்.(25)உண்மையில், இருபத்தைந்தாவதானது {ஜீவாத்மாவானது} இவ்வழியில் மட்டுமே விடுதலையை அடையவல்லதாக உள்ளதேயன்றி, வேறு எவ்வழிமுறைகளினாலும் அல்ல என்பது உறுதியானதாகும். தற்சமயம் தான் வசிக்கும் க்ஷேத்திரத்தில் இருந்து உண்மையில் வேறுபட்டவனாக இருப்பினும், அதனுடன் கலந்திருப்பதன் விளைவால் அவன் {ஜீவன் / க்ஷேத்திரஜ்ஞன் அந்த} க்ஷேத்திரத்தின் இயல்பையே அடைகிறான்.(26) தூய்மையானதுடன் சேர்ந்து அவன் தூய்மையடைகிறான். புத்தியுடன் சேர்ந்து அவன் புத்திமானாகிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, விடுதலையடைந்தவனுடன் {முக்தனுடன்} சேர்வதன் மூலம், அவன் விடுதலையடைகிறான்.(27) அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனுடன் சேர்வதன் மூலம் அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். விடுதலையை அடைய முனைபவனுடன் சேர்வதன் மூலம், அவனது தோழமையின் இயல்பால் ஈர்க்கப்பட்டு, தானும் விடுதலை அடைய முனைகிறான்.(28) தூய செயல்களைச் செய்பவனுடன் சேர்வதன் மூலம் அவன் தூய்மையான செயல்களைச் செய்பவனாகவும், சுடர்மிக்க ஒளியைக் கொண்டவனாகவும் தூயனாகிறான். களங்கமற்ற ஆன்மா கொண்டவனுடன் சேர்வதன் மூலம் அவனும் களங்கமற்ற ஆன்மா கொண்டவனாகிறான்.(29) சார்பற்ற ஒரே ஆன்மாவுடன் சேர்வதன் மூலம் அவன் ஒருவனாகவும், சார்பற்றவனாகவும் {சுதந்திரனாகவும்} ஆகிறான். தன்னான்மாவின் சார்பு கொண்ட ஒருவன், அதே இயல்பினனாகி சார்பற்ற {சுதந்திர} நிலையை அடைகிறான்.(30)
ஓ! ஏகாதிபதி {கராளா}, முற்றான உண்மையாக இருக்கும் அனைத்தையும் உனக்கு முறையாகச் சொல்லியிருக்கிறேன். நித்தியமான, களங்கமற்ற, தொடக்ககாலப் பிரம்மத்தைக் குறித்து நான் ஒருசார்பின்றி நேர்மையாக உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(31) ஓ! மன்னா, வேதங்களை அறியாதவனாக இருந்தாலும், பணிவானவனும், பிரம்ம அறிவை அடைவதில் விருப்பமும், ஆவலும் கொண்ட ஒரு மனிதனுக்கே ஆன்ம விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த உயர்ந்த அறிவைப் புகட்டலாம்.(32) பொய்மையையே புத்தியாகக் கொண்டவனுக்கோ, வஞ்சகனுக்கோ, ஒழுக்கமற்றவனுக்கோ, மனோபலம் அற்றவனுக்கோ, கோணல் புத்தி கொண்டவனுக்கோ, ஞானிகளிடம் பொறாமை கொண்டவனுக்கோ, பிறருக்குத் துன்பம் அளிப்பவனுக்கோ இஃது ஒருபோதும் புகட்டப்படக்கூடாது. இந்த ஞானத்தைப் பாதுகாப்பாக யாருக்கெல்லாம் புகட்டலாம் என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(33) நம்பிக்கையுடன் கூடியவனுக்கோ, தகுதி {புண்ணியம்} உடையவனுக்கோ, பிறரைக் குறித்துத் தீயன பேசுவதை எப்போதும் தவிர்ப்பவனுக்கோ, தூய நோக்கங்களில் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவனுக்கோ, அறிவும், விவேகமும் கொண்டவனுக்கோ, வேள்விகள் மற்றும் வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்குகளைச் செய்பவனுக்கோ, மன்னிக்கும் மனோநிலை கொண்டவனுக்கோ, அனைத்து உயிரினுக்கும் நன்மை செய்பவனுக்கோ, கருணை கொண்டவனுக்கோ,(34) தனியொருவனாகத் தனிமையில் வசிக்க விரும்புபவனுக்கோ, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களை அனைத்தையும் செய்ய விரும்புபவனுக்கோ, சண்டை சச்சரவுகளை வெறுப்பவனுக்கோ, பெரும் கல்விமானுக்கோ, ஞானம் கொண்டவனுக்கோ, மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, ஆன்ம அமைதி ஆகியவற்றைக் கொண்டவனுக்கோ இது கொடுக்கப்படலாம்.(35)
இத்தகைய குணங்கள் இல்லாதவனுக்குப் பிரம்மத்தைக் குறித்த இந்த உயர்ந்த அறிவு உபதேசிக்கப்படக்கூடாது. இதைத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த கொள்ளிடம் கொண்டவரெனக் கருதப்பட முடியாத எவருக்கும் இந்த அறிவைப் புகட்டுவன் மூலம் எந்தப் பயனோ, நற்கனியோ எழுவதில்லை எனச் சொல்லப்படுகிறது.(36) எந்த நோன்புகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாத ஒருவன், அனைத்து வகைச் செல்வங்கள் மற்றும் ரத்தினங்கள் நிறைந்த மொத்த பூமியையும் {இந்த உயர்ந்த ஞானத்தை அடைவதற்காக} பரிமாறிக் கொள்ள முன்வந்தாலும், அவனுக்கு இந்த உயர்ந்த அறிவானது ஒருபோதும் புகட்டப்படக்கூடாது. எனினும், ஓ! மன்னா, புலன்களை வென்ற ஒருவனுக்கு இது நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும்.(37) ஓ கராளா, நீ இன்று என்னிடமிருந்து உயர்ந்த பிரம்மத்தைக் குறித்த அனைத்தையும் கேட்டிருப்பதால் இனியும் நீ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தொடக்கமும், நடுநிலையும் (முடிவும்) இல்லாததும், அனைத்து வகைத் துன்பங்களையும் போக்கவல்லதும், உயர்ந்ததும், புனிதமானதுமான பிரம்மத்தைக் குறித்து நான் உனக்கு முறையாகச் சொல்லிவிட்டேன்.(38) ஓ!மன்னா, மங்கலம் நிறைந்ததும், அனைத்து அச்சங்களையும் போக்கவல்லதும், உயர்ந்த நன்மையை உண்டாக்கவல்லதும், பிறப்பு இறப்பை அகற்றவல்லதுமான பிரம்மத்தைக் கண்டும், அறிவனைத்தின் சாரத்தை அடைந்தும் பிழை மற்றும் திகைப்பனைத்தையும் {மோஹத்தை} இன்றே கைவிடுவாயாக.(39) ஓ! மன்னா, மிக மேன்மையான ஆன்மா கொண்ட பெரும்பூதமும், நித்தியமானவனுமான ஹிரண்யகர்ப்பனைக் கவனமாக நிறைவு செய்ததால், அவனிடம் இருந்தே இந்த அறிவை நான் அடைந்தேன். ஓ! ஏகாதிபதி, இன்று உன்னால் கேட்கப்பட்டதும், என் ஆசானிடம் இருந்து நான் பெற்றதைப் போலவே அந்தப் பிரம்ம அறிவை உனக்குப் புகட்டியிருக்கிறேன். உண்மையில், விடுதலையை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக உள்ள இந்த உயர்ந்த அறிவை, நான் பிரம்மனிடம் இருந்து பெற்றதைப் போன்றே சரியாக உனக்குப் புகட்டியிருக்கிறேன்” என்றார் {வசிஷ்டர்}”.(40,41)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “எதை அடைவதன் மூலம் இருபத்தைந்தாவது (அல்லது ஜீவன்) ஒருபோதும் திரும்ப வேண்டியதில்லையோ அந்த உயர்ந்த பிரம்மத்தைக் குறித்து (ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னன் கராளனிடம்) பெருமுனிவர் (வசிஷ்டர்) சொன்னதற்கு ஏற்புடைய வகையிலேயே நானும் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(42) சிதைவிற்கும், மரணத்திற்கும் உட்படாத பரமாத்மாவை உண்மையில் அறியாததன் விளைவால், ஜீவன் மீண்டும் மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பும் கடப்பாடு உண்டாகிறது. எனினும், அந்த உயர்ந்த அறிவை அடைவதில் ஜீவன் வெல்லும்போது, அவன் மீண்டும் திரும்ப வேண்டியதில்லை.(43) ஓ! மன்னா, ஓ! மகனே, அந்தத் தெய்வீக முனிவரிடம் {நாரதரிடம் இருந்து} நான் கேட்டதும், உயர்ந்த நன்மையை உண்டாக்க வல்லதுமான உயர்ந்த அறிவை நான் உனக்குப் புகட்டியிருக்கிறேன்.(44) இந்த அறிவானது உயர் ஆன்மா கொண்ட முனிவர் வசிஷ்டரால் ஹிரண்யகர்ப்பனிடம் இருந்து பெறப்பட்டதாகும்.முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரிடம் இருந்து அது நாரதரால் பெறப்பட்டது.(45) நித்தியமான பிரம்மத்துடன் உண்மையில் அடையாளங்காணப்படும் அந்த அறிவை நாரதரிடம் இருந்தே நான் அடைந்தேன். ஓ! குருக்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும், சிறந்த வார்த்தைகள் நிறைந்ததுமான இந்த உரையைக் கேட்ட நீ, இதற்கு மேலும் துன்ப வசப்படக்கூடாது.(46)
க்ஷரம் மற்றும் அக்ஷரம் ஆகியவற்றை அறிந்த மனிதன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான். உண்மையில், ஓ! மன்னா, இந்த ஞானத்தை அடையாதவனே அச்சத்தை வளர்ப்பான்.(47) மூட ஆன்மா கொண்ட மனிதன், (பிரம்மத்தைக் குறித்த) அறியாமையின் விளைவால், இந்த உலகத்திற்கு மீண்டும் மீண்டும் திரும்புகிறான். உண்மையில், இந்த வாழ்வில் இருந்து அகன்றதும் {இறந்ததும்}, மரணத்தையே கதியாகக் கொண்ட ஆயிரமாயிரம் பிறவி வகைகளில் அவன் பிறக்க வேண்டியிருக்கும்.(48) தேவர்களின் உலகிலும், மனிதர்களின் உலகிலும், இடைநிலை வகை {உயிரினங்களின்} உலகிலும் அவன் மீண்டும் மீண்டும் தோன்றவேண்டியிருக்கும். காலப்போக்கில் அவன் தான் மூழ்கிய அறியாமை எனும் பெருங்கடலைக் கடப்பதில் வென்று, மொத்தமாக மறுபிறவியைத் தவிர்ப்பதிலும் வென்று, பரமாத்மாவுடன் அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான்.(49) அறியாமையெனும் பெருங்கடல் பயங்கரமானதாகும். அடியற்ற அது புலப்படாதது என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, நாளுக்கு நாள் உயிரினங்கள் அந்தப் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்குவது காணப்படுகிறது.(50) ஓ! மன்னா, நித்திமானதும், அளவற்றதுமான அறியாமையெனும் பெருங்கடலில் இருந்து நீ விடுபட்டதால், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் இருந்தும் விடுபடுவாய்” என்றார் {பீஷ்மர்}.(51)
அறமீட்டல்! – சாந்திபர்வம் பகுதி – 310-ஆறமீட்டல் மற்றும் அறிவு ஈட்டல் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் வசுமானுக்கு விளக்கிச் சொன்ன பிராமண முனிவர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு காலத்தில், ஜனக குல மன்னன் ஒருவன் {மன்னன் வசுமான்}, வசிப்பாரற்ற காடுகளில் மானைத் தேடித் திரிந்து கொண்டிருந்தபோது, பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு மேன்மையான பிராமணரை அல்லது முனிவரைக் கண்டான்.(1) சுகமாக அமர்ந்திருந்த அந்த முனிவருக்குத் தலைவணங்கிய அந்த மன்னன் வசுமான், அவர் அருகில் அமர்ந்து, அவர் அனுமதியுடன் இந்தக் கேள்வியைக் கேட்டான்:(2) “ஓ! புனிதமானவரே, நிலையற்ற உடலைக் கொண்டவனும், ஆசைகளுக்கு அடிமையாக இருப்பவனுமான ஒரு மனிதனுக்கு இம்மையிலும், மறுமையிலும் எது உயர்ந்த நன்மையை உண்டாக்கும்?” என்று கேட்டான்(3) மன்னனால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு இவ்வாறு கேட்கப்பட்டவரும், தவத் தகுதி கொண்டவருமான அந்த முனிவர் நன்மைமிக்க வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(4)
முனிவர் {மன்னன் வசுமானிடம்}, “உன் மனத்திற்கு ஏற்புடைய வகையில் இம்மையையும், மறுமையையும் நீ விரும்பினால், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்பில்லாதவற்றைச் செய்வதை நீ தவிர்க்க வேண்டும்.(5) நல்லோருக்கு அறமே நன்மையானது. நல்லோருக்கு அறமே புகலிடமாக இருக்கிறது. அறத்திலிருந்தே அசையும் மற்றும் அசையாத உயிரனங்களுடன் கூடிய மூவுலகங்களும் உண்டாகின.(6) ஓ! ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் ஆவலும், விருப்பமும் கொண்டவனே, ஆசைக்குரிய பொருட்களில் நீ இன்னும் தெவிட்டாமல் இருப்பது எவ்வாறு? ஓ! சிறு மதிகொண்டோனே, நீ தேனைக் காண்கிறாயேயன்றி, பள்ளத்தைக் காணாத குருடனாக இருக்கிறாய்.(7) அறக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவன் அறமீட்டுவதில் தன்னை நிறுவிக் கொள்வதைப் போலவே அறிவுக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவனும் தன்னை அறிவை ஈட்டுவதில் நிறுவி கொள்ள வேண்டும்.(8) தீய மனிதன் ஒருவன், அற விருப்பத்தின் காரணமாக, களங்கமற்ற தூய செயலொன்றைச் செய்ய முனைந்தால், அவனது ஆசை நிறைவடைவது சாத்தியமில்லாமல் போகிறது. மறுபுறம், நல்லோனொருவன் அறமீட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டுக் கடினமான ஒரு செயலைச் செய்ய முனைந்தாலும், அஃது அவனுக்கு எளிதாக இருக்கிறது.(9) காட்டில் வசிக்கும் ஒருவன், நகரத்தில் வாழும் இல்லறத்தாரின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் காட்டுத் துறவியாக அல்லாமல் நகரவாசியாகவே பார்க்கப்படுவான். அதே போல நகரத்தில் வசிக்கும் ஒருவன், வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய இன்பநிலையை அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் நகரவாசியாக அல்லாமல் காட்டுவாசியாகவே பார்க்கப்படுவான்.(10)
செயல்களின் அறத்தகுதிகளை உறுதி செய்து கொண்டு, செயல்களைத் தவிர்த்து, குவிந்த புலன்களுடன், எண்ணம், சொல் மற்றும் செயலில் அறப்பயிற்சிக்கு உன்னை நீ அர்ப்பணிக்க வேண்டும்.(11) காலம், இடம் ஆகியவற்றின் ஆதிக்கத்தைத் தீர்மானித்து, நோன்புகளையும், தூய்மையாக்கும் பிற சடங்குகளையும் செய்து தூய்மையடைந்து, வன்மம் இல்லாமல் நல்லோருக்குப் பெருங்கொடைகளை அளிக்க வேண்டும்.(12) நேர்மையான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டும் ஒருவன், அதைத் தகுந்தோருக்குக் கொடையளிக்க வேண்டும். ஒருவன் கோபத்தைக் கைவிட்டு கொடையளிக்க வேண்டும்; கொடையளித்த பிறகு, அதுகுறித்து வருந்தவோ, அதைப் பற்றிப் பேசவோ கூடாது.(13) கருணை நிறைந்தவனும், தூய்மையானவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், பேச்சில் வாய்மை கொண்டவனும், வெளிப்படைத்தன்மை கொண்டவனும், பிறப்பால் தூய்மையானவனுமான பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(14) ஒரே கணவனைக் கொண்டவளும், தன் கணவன் சார்ந்த வகையைச் சார்ந்தவளுமான தாய்க்குப் பிறந்த ஒருவன் தூய பிறப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், ரிக், யஜுஸ் மற்றும் சாமம் எனும் மூன்று வேதங்களை அறிந்தவனும், (வேள்விகள் செய்வது, பிறரின் வேள்விகளைச் செய்து கொடுப்பது, கல்வி, கற்பித்தல், கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) ஆறு கடமைகளை முறையாகச் செய்பவனுமான அத்தகைய பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(15)
செயல்படுபவன், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தன்மைக்கேற்றபடி, அறம் மறமாகவும், மறம் அறமாகவும் மாறுகிறது.(16) பாவமானது, ஒருவனுடைய உடலில் உள்ள புழுதியைப் போல அகற்றப்பட வேண்டும். சிறியதை சிறு முயற்சியாலும், பெரியதை பெரிய முயற்சியாலும் அகற்ற வேண்டும்.(17) ஒரு மனிதன் தன் குடலின் மாசகற்றிய பிறகு, தன் உடலமைப்பில் (நலம் தரும் சத்து மருந்தாக) மிக நன்மையான செயலைச் செய்யும் நெய்யை உட்கொள்ள வேண்டும். அதே போலவே, ஒருவன் களங்கமனைத்திலும் இருந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அறமீட்டுவதில் தன்னை நிறுவி கொண்டால் அந்த அறமானது மறுமையில் உயர்ந்த மகிழ்ச்சியை நிச்சயம் உண்டாக்கும்.(18) உயிரினங்கள் அனைத்தின் மனத்திலும் நல்ல மற்றும் தீய எண்ணங்கள் இருக்கின்றன. தீய எண்ணங்களில் இருந்து மனத்தை விலக்கி, அதை நற்சிந்தனைகளை நோக்கிச் செலுத்த வேண்டும்.(19) ஒருவன் தன்னுடைய வகைக்குண்டான நடைமுறைகளை எப்போதும் மதிக்க வேண்டும். எனவே, நீ உன் வகைக்கான நடைமுறைகளில் நம்பிக்கை கொள்ளும் வகையில் செயல்படுவாயாக.(20)
ஓ! பொறுமையற்ற ஆன்மா கொண்டவனே, பொறுமையைப் பயில்வாயாக. ஓ! மூட புத்தி கொண்டவனே, புத்தியடைய முனைவாயாக. அமைதியற்றவனே அமைதியை நாடுவாயாக, ஞானமற்றவனே, ஞானத்துடன் செயல்பட முனைவாயாக.(21) அறவோரின் தோழமையுடன் திரியும் ஒருவன் இம்மைக்கும், மறுமைக்குமான நன்மையான வழிமுறைகளைத் தன் சொந்த சக்தியின் மூலமே அடைவான்.(22) அரசமுனியான மஹாபிஷன் உறுதியற்றவனாக இருந்ததால் சொர்க்கத்தில் இருந்து விழுந்தான். யயாதியும் கூட, (தற்பெருமை பேசியதன் விளைவால்) தன் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் (சொர்க்கத்தில் இருந்து வீசியெறியப்பட்டாலும்) அவன் தன் உறுதியினால் இன்பவுலகங்களை மீண்டும் அடைவதில் வென்றான்.(23) அறவோர் மற்றும் தவத்தகுதி கொண்ட கல்விமான்களுடன் சேர்வதால் நீ பெரும் புத்தியையும், உனக்கான உயர்ந்த நன்மையையும் நீ அடைவாய்” என்றார் {அந்த முனிவர்}”.(24)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தவசியின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், நல்ல மனோநிலை கொண்டவனுமான மன்னன் வசுமான், ஆசைத் தேடல்களைத் தன் மனத்தில் இருந்து விலக்கி, அதை {மனத்தை} அறமீட்டுவதில் நிறுவினான்”.(25)
யாஜ்ஞவல்கியர்! – சாந்திபர்வம் பகுதி – 311-பிரகிருதி மற்றும் படைப்புமுறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடமையில் இருந்து விடுபட்டதும், அதற்கு மாறானதும் {தர்ம அதர்மங்களில் இருந்து விடுபட்டதும்}, அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டதும், பிறப்பு, இறப்பு, அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகியவற்றைக் கடந்திருப்பதும், மங்கலமானதும், நித்திய அஞ்சாமையும், நித்தியமானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததும், எப்போதும் தூய்மையானதும், கடும் உழைப்பில் இருந்து எப்போதும் விடுபட்டதும் எதுவோ, அதைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1,2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் யாஜ்ஞவல்கியர் மற்றும் ஜனகன் {ஜனககுல மன்னன் தேவராதன்} ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில், கேள்விகள் அனைத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்தவனும், புகழ்பெற்றவனுமான ஜனக குல மன்னன் தேவராதன், முனிவர்களில் முதன்மையான யாஜ்ஞவல்கியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)
ஜனகன் {தேவராதன், யாஜ்ஞவல்கியரிடம்}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, புலன்கள் எத்தனை வகைப்படும்? பிரகிருதி எத்தனை வகைப்படும்? புலப்படாதது {அவ்யக்தம்} எது? உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} எது? பிரம்மத்தைவிட உயர்ந்தது எது?(5) பிறப்பும், இறப்பும் எது? கால அளவுகள் என்னென்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது அருளைப் பெற்று உம்மிடம் நான் வேண்டும் இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(6) நானோ அறியாதவன், நீரோ ஞானப் பெருங்கடல். எனவே, உண்மையில் கேட்க விரும்பியே இக் காரியங்கள் குறித்து உம்மைக் கேட்கிறேன்” என்றான்.(7)
யாஜ்ஞவல்கியர் {தேவராதனிடம்}, “ஓ! ஏகாதிபதி, உன் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கிறேன் கேட்பாயாக. யோகிகள் மதிப்பதும், சாங்கியர்களிடம் உள்ளதுமான உயர்ந்த ஞானத்தை நான் உனக்குச் சொல்கிறேன்.(8) நீ அறியாதது ஏதுமில்லை. இருந்தும் என்னைக் கேட்கிறாய். எனினும், கேள்வி கேட்கப்படுபவன் பதிலளிக்க வேண்டும். இதுவே நித்திய நடைமுறையாம்.(9) பிரகிருதி என்ற பெயரில் எட்டுக் {8} கோட்பாடுகள் அழைக்கப்படுகின்றன, அதே வேளையில் மாறுபாடுகள் என்று பதினாறு {16 விகாரங்கள்}அழைக்கப்படுகின்றன. புலப்படாதவை {அவ்யக்தம்} ஏழாகும் {7}. இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தோரின் கருத்துகளாக இருக்கின்றன.(10) புலப்படாதது (அல்லது மூலப் பிரகிருதி {அவ்யக்தம்}), மஹத், நனவுநிலை {அகங்காரம்}, பூமி, காற்று, வெளி, நீர், ஒளி(11) ஆகிய நுட்பமான ஐந்து பூதங்கள் உள்ளிட்ட இந்த எட்டும் பிரகிருதி என்ற பெயரில் அறியப்படுகின்றன. மாறுபாடுகள் {விகாரங்கள்} என்றழைக்கப்படுபவற்றின் பட்டியலை இப்போது கேட்பாயாக. காது, தோல், கண், நாக்கு, மூக்கு;(12) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம், வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் இன்பஉறுப்புகள் {மற்றும் மனம்} ஆகியவையே அவை[1].(13)இவற்றில் ஒலி முதலிய பத்தும், ஐம்பெரும் கோட்பாடுகளில்[2] பிறப்பவையும் விசேஷங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஓ! மிதிலையின் ஆட்சியாளா, அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும் சவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றன.(14) அத்யாத்ம அறிவியலை அறிந்த மனிதர்கள் மனத்தைப் பதினாறாவதாகக் கருதுகிறார்கள். இஃது உன் கருத்துகளுக்கும், கோட்பாடுகள் குறித்த உண்மைகள் அறிந்த பிற கல்விமான்களுக்கும் இணக்கமானதே ஆகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து மஹத்-ஆன்மா {ஹிரண்ய கர்ப்பனின் நான்கில் ஒரு பங்கு} உண்டாகிறது. பிரதானம் (அல்லது பிரகிருதி) தொடர்பான முதல் படைப்பு இஃது எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(16) ஓ! மனிதர்களின் மன்னா, மஹத்திலிருந்து நனவுநிலை {அஹங்காரம்} உண்டாகிறது. புத்தியைத் தன் சாரமாகக் கொண்ட இஃது இரண்டாம் படைப்பு என்றழைக்கப்படுகிறது[3].(17) நனவுநிலையில் {அஹங்காரத்தில்} இருந்து ஒலியைத் தன் சாரமாகக் கொண்ட மனமும், வெளியின் {ஆகாயத்தின்} குணங்களைக் கொண்ட பிறவும், எஞ்சியவையும எழுந்தன. இது நனவுநிலை தொடர்பானது மூன்றாம் படைப்பு என்று சொல்லப்படுகிறது.(18) ஓ! மன்னா, மனத்தில் இருந்து (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்கள் உண்டாகின. மனோநிலை {மானஸம்} என்று நான் சொல்வது போல அழைக்கப்படும் இதை, நான்காம் படைப்பாக அறிவாயாக.(19) (அடிப்படை) பெரும் பூதங்களின் தொடர்புடைய ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகியவை ஐந்தாம் படைப்பு எனப் பூதங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(20)காது, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகியவற்றின் {அறிவுப்புலன்களின் / ஞானேந்திரியங்களின்} படைப்பு ஆறாவதாகவும், எண்ணப் பன்மையின் சாரத்தைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது.(21) பிறகு, ஓ! ஏகாதிபதி, காது முதலியவற்றுக்கு அடுத்து வரும் புலன்கள் (செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} எழுகின்றன. ஏழாம் படைப்பு என்றழைக்கப்படும் இவை {இந்தச் செயற்புலன்கள் / இந்தக் கர்மேந்திரியங்கள்} அறிவுப்புலன்களுடன் {ஞானேந்திரியங்களுடன்} தொடர்பு கொள்கின்றன.(22) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகே மேல் நோக்கிய மூச்சுக் காற்றும் (பிராணனும்) குறுக்காக ஏழும் (சமானன், உதானன், வியானன் உள்ளிட்ட) மூச்சுக்காற்றுகளும் உண்டாகின்றன. எட்டாம் படைப்பான இஃது ஆர்ஜவம் என்றழைக்கப்படுகிறது[4].(23) அடுத்து உடலின் கீழ்ப்பகுதிகளில் குறுக்காகச் செல்லும் (சமானன், உதானன் மற்றும் வியானனும்) மூச்சுக்காற்றுகளும், கீழ்நோக்கிச் செல்லும் அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றும் வருகிறது. ஓ! மன்னா, ஒன்பதாம் படைப்பான இதுவும் ஆர்ஜவம் என்றே அழைக்கப்படுகிறது.(24) ஓ! ஏகாதிபதி, இந்த ஒன்பது வகைப் படைப்புகளும், இந்த இருபத்துநான்கு கோட்பாடுகளும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி அறிவிக்கப்படுகின்றன.(25) ஓ! மன்னா, இதன் பிறகு, இந்தக் கோட்பாடுகள் அல்லது குணங்களைப் பொறுத்தவரையில் கல்விமான்களால் குறிப்பிடப்படும் கால அளவை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(26)
இருபது பூதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 312-அவ்யக்த முதலியவற்றின் காலக்கணக்கையும், படைப்பையும் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..
யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, புலப்படாததை (அல்லது பரம புருஷனைப்) பொறுத்தவரையிலான காலக்கணக்கை உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக. பத்தாயிரம் {10000} கல்பங்கள் அவனுடைய ஒரு பகல் என்று சொல்லப்படுகிறது.(1) அவனது இரவின் காலமும் அதே அளவு {10000 கல்பங்கள்} கொண்டதாகும். ஓ! ஏகாதிபதி, அந்த இரவு முடிந்ததும் அவன் முதலில் உடல் கொண்ட உயிரினங்கள் வாழ்வதற்கான செடி கொடிகளைப் படைக்கிறான்.(2) பிறகு அவன் தங்க முட்டையில் இருந்து எழும் பிரம்மனைப் படைக்கிறான். அந்தப் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் வடிவமாவான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு முழு வருடம் அந்த முட்டைக்குள் இருந்தவனும், பெரும் தவசியும், பிரஜாபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றும் அழைக்கப்படுபவனுமான பிரம்மன் அதைவிட்டு {அந்த முட்டையை விட்டு} வெளியே வந்து, மொத்த பூமியையும், மேலுள்ள சொர்க்கத்தையும் படைத்தான்.(4)
பிறகு அந்தத் தலைவன் {பிரம்மன்}, வானத்தை இடையில் வைத்து சொர்க்கத்தையும், பூமியையும் பிரித்தான்.(5) பிரம்மனின் ஒரு பகல் ஏழாயிரத்து ஐநூறு {7500} கல்பங்களாகும்.(6) அத்யாத்ம அறிவியல் அறிந்த மனிதர்கள், அவனது இரவும் அதே அளவைக் கொண்டது என்று சொல்கிறார்கள். மஹான் என்றழைக்கப்படும் அந்தப் பிரம்மன், பிறகு பூதம் என்றழைக்கப்படுவதும், சிறந்த சாரத்தைக் கொண்டதுமான நனவுநிலையை {அகங்காரத்தைப்} படைக்கிறான்[1].(7) பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் உட்பொருள்களில் இருந்து எந்த உடலையும் படைப்பதற்கு முன்னால், தவங்களுடன் கூடிய மஹான் அல்லது பிரம்மன், அவனது மகன்கள் என்றழைக்கப்படும் நால்வரை படைத்தான்[2].(8)ஓ! ஏகாதிபதி, நான்கு உள் இயக்கங்களோடு கூடிய (அறிவுப்) புலன்கள் {ஞானேந்திரியங்கள்} பித்ருக்களில் (பித்ருக்கள் என்றழைக்கப்படும் பெரும்பூதங்களில்) இருந்து உண்டாகின. அசைவன மற்றும் அசையாதவற்றைக் கொண்ட இந்த மொத்த அண்டமும் அந்தப் பெரும்பூதங்களாலேயே நிறைந்திருக்கிறது[3].(9) பலமிக்க நனவுநிலையே {அகங்காரமே} ஐம்பூதங்களையும் படைத்தது. அவை பூமி, காற்று, வெளி {ஆகாயம்}, நீர் மற்றும் ஒளியென்று எண்ணிக்கையில் ஐந்தாக இருக்கிறது.(10) மூன்றாம் படைப்பான (பெரும் பூதமான) இந்த நனவுநிலை {அகங்காரம்}, தன் இரவுக்கு ஐயாயிரம் {5000} கல்பங்களையும், பகலுக்கு அதே கால அளவையும் கொண்டிருக்கிறது.(11) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகிய இந்த ஐந்தும் விசேஷங்கள் {தன்மாத்திரைகள்} என்றழைக்கப்படுகின்றன. அவை ஐம்பெரும் பூதங்களுக்குள் பொதிந்திருக்கின்றன.(12)ஓ! மன்னா, இந்த ஐந்தாலும் உடனே படர்ந்தூடுருவப்படும் {நீக்கமற நிறைக்கப்படும்} பூதங்கள் அனைத்தும், ஒன்றோடொன்று தோழமையை விரும்பி, ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன;(13) ஒன்றையொன்று சவாலுக்கழைத்து, ஒன்றையொன்று கடந்திருக்கின்றன; மாற்ற முடியாத மயக்கக் கோட்பாடுகளால் வழிகாட்டப்படும் உயிரினங்கள் ஒன்றையொன்று கொன்று, எண்ணற்ற இடைநிலை வகை உயிரினங்களில் புகுந்து இவ்வுலகில் திரிகின்றன.(14) அவற்றின் ஒருபகல் மூவாயிரம் {3000} கல்பங்களாகும். அவற்றின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, மனமானது {மூளையானது} புலன்களால் வழிகாட்டப்பட்டு அனைத்துப் பொருட்களிலும் திரிகிறது. புலன்கள் எதையும் உணர்வதில்லை. மனமே அவற்றின் மூலம் எதையும் உணர்கிறது.(16)
கண்ணானது, மனத்தின் {மூளையின்} துணையால் வடிவங்களைப் பார்க்கிறதேயன்றி தன்னாலல்ல. மனத்தின் கவனம் திரும்புகையில், கண்ணின் முன்பு ஒரு பொருள் இருந்தாலும் அதைக் காணத் தவறுகிறது.(17) புலன்கள் உணர்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. புலன்களின் மூலம் மனமே உணர்வதால் இதில் உண்மையில்லை.(18) மனத்தின் செயல்பாடு நிறுத்தப்படும்போது, அதைப் பின்தொடர்ந்து புலன்களின் செயல்பாடும் நின்று போகிறது. மனச்செயல்பாட்டின் நிறுத்தமே புலன்களின் செயல்பாட்டை நிறுத்தும். எனவே ஒருவன் புலன்கள் மனத்தின் ஆளுகையில் இருப்பதாகக் கருத வேண்டும்.(19) உண்மையில் மனமே, புலன்கள் அனைத்தின் தலைவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பெரும்புகழ் கொண்டவனே, அண்டத்தில் இருக்கும் இருபது பூதங்கள் இவையே” என்றார் {யாஜ்ஞவல்கியர்}[4].(20)
பிரளயம்! – சாந்திபர்வம் பகுதி – 313-அண்டம் அழிக்கப்படும் முறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்.
யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “நான் ஒன்றன்பின் ஒன்றாகப் படைப்பின் முறையை, அவற்றின் மொத்த எண்ணிக்கை, பல்வேறு கோட்பாடுகள் மற்றும் அவை ஒவ்வொன்றின் காலக்கணக்கீட்டுடன் உனக்குச் சொல்லிவிட்டேன். அவற்றின் அழிவைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) நித்தியமானவனும், சிதைவற்றவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமாக இருப்பவன், மீண்டும் மீண்டும் பொருட்கள் அனைத்தையும் எவ்வாறு படைத்து அழிக்கிறான் என்பதைக் கேட்பாயாக.(2) அவனது பகல் முடிந்து, இரவு வந்ததும் அவன் உறங்க விரும்புகிறான். அத்தகைய வேளையில் புலப்படாதவனான {அவ்யக்தனான} அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}, (உலகை அழிப்பதற்கான) தன் பெரும் சக்திகளை அறிந்தவனான {அஹங்காரபிமானியான} மஹாருத்திரன் என்று அழைக்கப்படுபவனைத் தூண்டுகிறான்.(3)
புலப்படாதவனால் தூண்டப்பட்ட அவன் {மஹாருத்திரன்}, நூறாயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனின் வடிவை ஏற்று, சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பனிரெண்டு பகுதிகளாகத் தன்னைப் பிரித்துக் கொள்கிறான்.(4) ஓ! ஏகாதிபதி, பிறகு அவன் பாலூட்டிகள், முட்டையிட்டு குஞ்சுபொறிப்பவை, {வியர்வை உள்ளிட்ட} கழிவில் பிறப்பவை, தாவரங்கள் எனப் படைக்கப்பட்ட நால்வகை உயிரினங்களையும் எந்தத் தாமதமும் செய்யாமல், தன் சக்தியின் மூலம் எரிக்கிறான்.(5) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் இவ்வாறு அழிக்கப்படுவதால், பூமியானது ஆமை ஓட்டைப் போல வெறுமையாகிறது.(6)
பூமியின் முகப்பில் உள்ள அனைத்தையும் எரித்தபிறகு, அளவிலா வலிமை கொண்ட ருத்திரன், விரைவாக அந்த வெற்று பூமியை பெரும் சக்தி கொண்ட நீரால் நிரப்புகிறான்.(7) பிறகு அவன் (பூமி மூழ்கியிருக்கும் அந்த) நீரை வற்றச் செய்வதற்காக யுக நெருப்பைப் படைக்கிறான். நீர் மறைந்ததும், நெருப்பெனும் பெரும்பூதம் சுடர்மிக்கதாய் சீற்றத்துடன் தொடர்ந்து எரிகிறது.(8) பிறகு, ஆழ்ந்த சக்தியைக் கொண்டதும், ஏழு தழல்களைக் கொண்டதும், அனைத்து உயிரினங்களிலும் வெப்பமாக இருப்பதுமான அந்தச் சுடர்மிக்க நெருப்பை, அளவிலா சக்தியும், வலிமையும் கொண்ட காற்று {வாயு} விரைவாக விழுங்குகிறது. அந்நெருப்பை விழுங்கிய காற்றானது, மேல்நோக்கி, கீழ்நோக்கி, குறுக்குவெட்டாக என அனைத்துத் திசைகளிலும் திரிகிறது.(9,10)
பிறகு ஆழ்சக்தி கொண்ட அக்காற்றை, அளவிலா இருப்பைக் கொண்ட வெளியானது விழுங்குகிறது. மனமானது, அந்த அளவற்ற வெளியையும் உற்சாகமாக விழுங்குகிறது.(11) பிறகு அனைத்தின் ஆன்மாவாக இருப்பதும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான நனவுநிலை {அகங்காரம்}, அந்த மனத்தை விழுங்குகிறது. பிறகு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த மஹத் ஆன்மாவானது அந்த நனவுநிலையை {அகங்காரத்தை} விழுங்குகிறது.(12)
ஒப்பற்ற மஹத் ஆன்மா அல்லது அண்டமானது, அனைத்துப் பொருட்களின் தலைவனும், அனிமா, லகிமா, பிராப்தி முதலிய யோக குணங்களைக் கொண்டவனும், இயல்பாகவே உள்ளீர்ப்பவனும், மாற்றமில்லாத தூய ஒளியைக் கொண்டவனும், பரமனாகக் கருதப்படுபவனுமான சம்புவால் {சிவனால்} விழுங்கப்படுகிறது.(13)
அவனது கைகளும், கால்களும் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிகின்றன; அவன் கண்களும், தலையும், முகமும் எங்குமிருக்கின்றன; அவனது காதுகள் ஒவ்வொரு இடத்தையும் அடைகின்றன, அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(14) அனைத்து உயிரினங்களின் இதயம் அவனே; அவன் கட்டைவிரல் அளவுள்ள அணுவாக இருக்கிறான். அனைத்தின் தலைவனும், எல்லையற்றவனும், பரமாத்மாவுமான அவன் இவ்வாறே அண்டத்தை விழுங்குகிறான்.(15) இதன்பிறகு, சிதைவற்றவனும், எவ்வகைக் களங்கமும் அற்றவனும், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை உண்டாக்குபவனும், முற்றிலும் களங்கமற்றவனுமான அந்த மாற்றமற்றவன் {சிவன்} மட்டுமே எஞ்சியிருக்கிறான்.(16)
ஓ! ஏகாதிபதி, இவ்வாறே அழிவை {பிரளயத்தைக்} குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டேன். இனி அத்யாத்மா, அதிபூதம், அதிதெய்வம் ஆகியவற்றைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(17)
முக்குணக் குறியீடுகள்! – சாந்திபர்வம் பகுதி – 314-அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், முக்குணங்கள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் இரு பாதங்களையும் அத்யாத்மா என்றும், {கால்களால்} நடக்கும் செயல்பாட்டை {மார்க்கத்தை} அதிபூதம் என்றும், விஷ்ணுவையே (அந்தப் பாதங்களின்) அதிதெய்வமாகவும் சொல்கின்றனர்.(1) குதம் {பாயு} அதியாத்மம்; அதன் செயல்பாடான மலம் வெளியேற்றுதல் அதிபூதம், மித்திரன் (சூரியன், அந்த உறுப்பின்) அதிதெய்வம்.(2) பிறப்புறுப்பு {குறி} அத்யாத்மம் என்றழைக்கப்படுகிறது. அதன் ஏற்புடைய செயல்பாடு {ஆனந்தம்} அதிபூதம் என்றழைக்கப்படுகிறது, பிரஜாபதி {பிரம்மன்} அதன் அதிதெய்வமாவான்.(3) கைகள் அத்யாத்மம்; அவற்றின் செயல்களைக் குறிக்கும் செயல்பாடு அதிபூதம்; இந்திரன் அந்த உறுப்பின் அதிதெய்வம்.(4) வாக்கு அத்யாத்மம்; அவற்றின் மூலம் சொல்லப்படும் சொற்கள் {சொல்லக்கூடிய விஷயம்} அதிபூதம்; அக்னி அதன் அதிதெய்வம்.(5) கண்கள் {நேத்திரம்} அதியாத்மம்; பார்வை அல்லது வடிவம் {ரூபம்} அவற்றின் அதிபூதம்; சூரியன் அவற்றின் அதிதெய்வம்..(6) காதுகள் {ஸ்ரோத்ரம்} அத்யாத்மம்; ஒலி {சப்தம்} அதன் அதிபூதம்; திசைப்புள்ளிகள் {திக்குகள்} அதன் அதிதெய்வம்.(7)
நாக்கு {ரசனை} அத்யாத்மம்; சுவை {ரஸம்} அதன் அதிபூதம்; நீர் {அப்பு} அதன் அதிதெய்வம்.(8) நுகர்வுணர்வு {கிராணம்} அத்யாத்மம்; மணம் {கந்தம்} அதன் அதிபூதம்; பூமி {பிருதிவி} அதன் அதிதெய்வம்.(9) தோல் {துவக்கு} அத்யாத்மம்; ஊறு {தீண்டல் /ஸ்பரிசம்} அதன் அதிபூதம்; காற்று {வாயு} அதன் அதிதெய்வம்.(10) மனம் அத்யாத்மம்; எதனுடன் மனம் ஈடுபடுகிறதோ அது {நினைக்கக்கூடிய விஷயம்} அதிபூதம்; சந்திரன் அதன் அதிதெய்வம்.(11) நனவுநிலை {அகங்காரம்} அத்யாத்மம்; பிரகிருதியாகத் தன்னைக் காணும் உறுதிப்பாடு {செருக்கு / கர்வம்} அதிபூதம்; மஹத் அல்லது புத்தி அதன் அதிதெய்வம்.(12) புத்தி அத்யாத்மம்; புரிந்து கொள்வது {அறியக்கூடிய விஷயம்} அதிபூதம்; க்ஷேத்ரஜ்ஞன் அதிதெய்வம் {என்றும் தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் சொல்கிறார்கள்}.(13) ஓ! மன்னா {தேவராதனா}}, மூல தத்துவங்கள் அல்லது கோட்பாடுகளின் இயல்பை முழுமையாக அறிந்தவனே, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் (பல்வேறு வடிவங்களில் வெளிப்படும்) பரமனின் பலத்தை {விபூதியை} உண்மையில் தனித்தனியாக, விவரமாக {ஸ்பஷ்டமாக} உனக்கு விளக்கியிருக்கிறேன்.(14)
ஓ! ஏகாதிபதி, பிரகிருதியானவள் தான் விரும்பியபடி விளையாடுவதைப் போல, தானே மாறுபாடுகளுக்கு {விகாரங்களுக்கு} உட்பட்டு, குணங்கள் என்றழைக்கப்படும் மூல மாறுபாடுகளின் கலவையை ஆயிரமாயிரமாகப் படைக்கிறாள்.(15) மனிதர்கள் ஒரே விளக்கில் இருந்து ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றுவதைப் போலவே, பிரகிருதியும், மாறுபாட்டின் மூலம், புருஷனின் (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும்) முக்குணங்களைச் சார்ந்த இருப்பிலுள்ள ஆயிரக்கணக்கான பொருட்களைப் பெருக்குகிறாள்.(16)
{சத்வ குணம்:}
பொறுமை {தைரியம்}, இன்பம் {ஆனந்தம்}, செழிப்பு {அபிவிருத்தி}, நிறைவு {பிரீதி}, மேலான காரியங்களில் விருப்பம், மகிழ்ச்சி {சுகம்}, {மனத்}தூய்மை, உடல்நலம் {ஆரோக்கியம்}, உள்ளடக்கம் {ஸந்தோஷம்}, நம்பிக்கை {ஸ்ரத்தை},(17) கொடை, கருணை, மன்னிக்கும் தன்மை, உறுதி, நன்மை, சமமாய் இருத்தல், வாய்மை, கடமைகளை அறிதல் {கடனில்லாமை}, மென்மை {நேராயிருத்தல்}, பணிவு {லஜ்ஜை}, அமைதி {சபலமில்லாமை},(18) புறத்தூய்மை {சரீரசுத்தி}, எளிமை {மேன்மை}, கடமை நடைமுறைகளைச் செய்தல் {ஆசாரம்}, ஆசையின்மை, இதயத்தில் அஞ்சாமை {மனத்தில் பரபரப்பில்லாமை}, தோற்றம் அல்லது முற்பிறவி செயல்களின் நன்மை தீமைகளில் அலட்சியம்,(19) கொடைகளைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே பொருட்களைப் பெறுவது, பேராசையின்மை {வைராக்கியம்}, பிறரின் நலத்தைக் கருத்தில் கொள்வது {பரோபகாரம்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை {தயை} ஆகிய இவை சத்வ குணத்தோடு தொடர்புடையன என்று சொல்லப்படுகிறது.(20)
{ரஜஸ் குணம்:}
ரஜஸ் குணம் தொடர்புடைய பண்புகளின் பட்டியல் மேனியழகில் செருக்கு, தலைமை நிலையை உறுதி செய்தல், போர் {கலகம்}, ஈயாமை, கருணையின்மை {தயையில்லாமை}, இன்பதுன்பங்களை அனுபவித்தல்,(21) பிறரை நிந்திப்பதில் விருப்பம், அனைத்து வகைச் சச்சரவுகளிலும் ஈடுபடல், ஆணவம், மதிப்பின்மை, கவலை, பகைமை பாராட்டல்,{22) பரிதாபம், பிறர் உடைமைகளை அபகரித்தல், வெட்கமின்மை, குறுக்கு புத்தி, ஒழுங்கின்மை, முரட்டுத்தனம், காமம், கோபம், செருக்கு,(23) மேன்மையை உறுதி செய்தல், வன்மம், அபிமானம் ஆகியற்றைக் கொண்டதாகும்.
{தமஸ் குணம்:}
தமஸில் இருந்த உண்டாகும் குணக்கூட்டங்களை இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(24) தீர்மான மயக்கம் {மோகம்}, ஒளியின்மை, இருள் {தாமிஸ்ரம்}, குருடாக்கும் இருள் {அந்ததாமிஸ்ரம்} ஆகியவையே அவை. இருளின் மூலம் மரணம் குறிப்பிடப்படுகிறது, குருட்டு இருள் என்பது கோபமாகும்.(25). இவற்றைத் தவிர்த்த தமஸின் பிற குறியீடுகள் அனைத்து வகை உணவிலும் பேராசை, உணவிலும் பானத்திலும் தீராப்பசி,(26) மணம், உடை, கேளிக்கை, படுக்கை, இருக்கை, பகலுறக்கம், விவாதம், அலட்சியவுணர்வில் பற்று, விழிப்பின்மையால் உண்டாகும் அனைத்து வகைச் செயல்கள்,(27) அறியாமையால் நடனம், கருவி மற்றும் குரலிசையில் பற்று, சிறப்புமிக்க அறங்கள் அனைத்திலும் வெறுப்பு ஆகியவையாகும். உண்மையில் இவையே தமஸின் குறியீடுகளாகும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.{28}
குணமும் கதியும்! – சாந்திபர்வம் பகுதி – 315-குணங்களும், வினைகளும் அடையும் கதிகளைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) இந்த மூன்றும் பிரகிருதியின் குணங்களாகும். இவை அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுடனும் தொடர்புடையவையாகவும், அவற்றை எப்போதும் உள்ளீர்ப்பவையாகவும் இருக்கின்றன.(1) யோக குணங்கள் ஆறைக் கொண்ட புலப்படாத {அவ்யக்தமான} புருஷன் (இந்த முக்குணங்களைத் தழுவுவதன் மூலம்) நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான வடிவங்களாகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறான்.(2) அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்கள் சத்வ குணம் அண்டத்தில் உயர்ந்த இடத்திற்கும், ரஜஸ் நடுநிலைக்கும், தமஸ் இழிந்த இடத்திற்கும் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.(3) கலப்பில்லாத அறத்தின் துணையின் மூலம் ஒருவன் (தேவர்களுக்குரிய) உயர்ந்த கதியை அடைகிறான். பாவத்துடன் கலந்த அறத்தின் மூலம் ஒருவன் மனித நிலையை அடைகிறான். அதே வேளையில் கலப்பில்லாத பாவத்தின் மூலம் (விலங்காகவோ, தாவரம் முதலியவையாகியோ) ஒருவன் இழிந்த கதியை அடைகிறான்.(4)
ஓ! மன்னா {தேவராதனா}, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கலவைகளைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக.(5) சிலவேளைகளில் ரஜஸானது சத்வத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. தமஸ் ரஜஸுடன் இருக்கிறது. தமஸுடன் சத்வமும் காணப்படுகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் சம அளவில் கலந்திருப்பதும் காணப்படுகிறது. அவை புலப்படாதவளாக, அல்லது பிரகிருதியாக அமைகின்றன.(6) புலப்படாதவன் (அவ்யக்தமான புருஷன்) சத்வத்துடன் சேரும்போது அவன் தேவர்களின் உலகங்களை அடைகிறான். சத்வம் மற்றும் ரஜஸ் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்போது, அவன் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பெடுக்கிறான்.(7) ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, அவன் இடைநிலை உயிரினங்களில் பிறப்பெடுக்கிறான். மூன்று குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என அனைத்தையும் கொண்டிருப்பவன், மனிதன் என்ற நிலையை அடைவான்.(8)
அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டையும் கடந்த உயர் ஆன்ம மனிதர்கள், நித்தியமானதும், மாற்றமில்லாததும், சிதைவற்றதும், அழிவற்றதுமான இடத்தை {கதியாக} அடைகிறார்கள்.(9) ஞானிகள், மிக மேன்மையான பிறவிகளை அடைந்து, களங்கமற்றதும், சிதைவற்றதும், புலன்களின் அறிவுக்கு எட்டியதைக் கடந்ததும், அறியாமையில் இருந்து விடுபட்டதும், பிறப்பு இறப்புக்கு மேலானதும், அனைத்து வகை இருளையும் விலக்கும் முழு ஒளி உள்ளதுமான இடத்தை {கதியாக} அடைகின்றனர்.(10) புலப்படாதவளில் {பிரகிருதியில்} வசிக்கும் பரமனின் (புருஷனின்) இயல்பைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, கேட்பாயாக. பிரகிருதியில் வசிக்கும்போது, பிரகிருதியின் இயல்பை ஏற்காமல் தன்னியல்பிலேயே அவன் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.(11) ஓ! மன்னா, பிரகிருதியானவள் அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருக்கிறாள். புருஷனால் தலைமை தாங்கப்படும்போது மட்டுமே, அவளால் படைக்கவும், அழிக்கவும் முடியும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(12)
ஜனகன் {தேவராதன்}, “ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இருவரும் தொடக்கமும், முடிவும் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வடிவமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டும் சிதைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(13) அவர்கள் இருவரும் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அவர்களில் ஒருவர் அசைவற்றவள் {உயிரற்றவள்}, புத்தியற்றவள் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் மற்றொருவர் அசைவுள்ளவன் {உயிருள்ளவன்}, புத்தியுள்ளவன் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் பின்னவன் ஏன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான்?(14) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விடுதலையறம் {மோக்ஷதர்மம்} குறித்து முற்றும் அறிந்தவர் நீர். அந்த விடுதலை அறத்தை உம்மிடமிருந்து நான் முற்றாக அறிய விரும்புகிறேன்.(15)
புருஷனின் இருப்பு, அவனது ஒருமை, பிரகிருதியில் இருந்து தனிப்பட்டிருக்கும் அவனது தன்மை, உடலுடன் தொடர்புடைய தேவர்கள்,(16) உடல்படைத்த உயிரினங்கள் இறந்ததும் செல்லும் இடம், காலப்போக்கில் அவை இறுதியாகச் சென்றடையக்கூடிய இடம் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக.(17) சாங்கிய அமைப்பிலும், யோக அமைப்பிலும் விளக்கப்படும் ஞானத்தைத் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, மரணம் குறித்த முன்னெச்சரிக்கை குறியீடுகளைக் குறித்தும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியங்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல நீர் நன்குஅறிந்திருக்கிறீர்” என்று கேட்டான் {ஜனக குல மன்னன் தேவராதன்}.(18)
சாங்கிய தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 316-சாங்கிய அமைப்பைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்
யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “ஓ! மகனே, குணங்கள் அற்ற ஒன்றை, அதன் குணங்களைச் சுட்டி ஒருபோதும் விளக்கமுடியாது. எனினும், எது குணங்களைக் கொண்டதென்றும், எது அவை அற்றதென்றும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) செம்மலரைப் பிரதிபலிக்கும் படிகத்தைப் போலவே, புருஷனானவன் குணங்களை ஏற்கும்போது, அவன் குணங்களைக் கொண்டவனாக அழைக்கப்படுகிறான்; ஆனாலும் பிரதிபலிப்பில் இருந்து விடுபட்ட படிகத்தைப் போல அவன் குணங்களில் இருந்து விடுபடும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்த தன் உண்மையான இயல்பில் அவன் காணப்படுகிறான் என்று தத்துவங்கள், அல்லது கோட்பாடுகள் அனைத்தின் உண்மையை அறிந்த உயர் ஆன்ம முனிவர்கள் சொல்கிறார்கள்[1].(2) புலப்படாத பிரகிருதியானவள், தன் இயல்பிலேயே குணங்களைக் கொண்டவளாக இருக்கிறாள். அவளால் அவற்றைக் கடக்க முடியாது. இயல்பிலேயே புத்தியற்றவளான அவள், குணங்களுடன் பிணைக்கப்பட்டவளாகவே இருக்கிறாள்.(3) புலப்படாத பிரகிருதியால் எதையும் அறிந்து கொள்ள முடியாத அதே வேளையில், புருஷனோ, “என்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை” என்று எப்போதும் தன் நினைவில் கொண்டிருக்கும் ஞானத்தைத் தன் இயல்பாகவே கொண்டிருக்கிறான்.(4)இந்தக் காரணத்தால், புலப்படாதவளாக இருப்பவள் (அல்லது பிரகிருதி), இயல்பிலேயே அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருந்தாலும், நித்தியமானவனும், அழிவற்றவனுமான புருஷனுடன் சேரும் விளைவால், தன் இயல்பில் அழியத்தக்கவளாகவே இருந்தாலும், அசைவுள்ளவளாகவும் {உயிருள்ளவளாகவும்}, புத்தியுள்ளவளாகவும் ஆகிறாள்[2].(5) {இந்த} அறியாமையின் மூலம் புருஷன் மீண்டும் மீண்டும் குணங்களுடன் தொடர்பு கொண்டு, தன் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ளத் தவறி, விடுதலையை {முக்தியை} அடைவதிலும் தவறுகிறான்.(6) புருஷன், பிரகிருதியில் இருந்து தோன்றும் கோட்பாடுகளுக்குத் தலைமை தாங்குவதன் விளைவால், அவன் அந்தக் கோட்பாடுகளின் இயல்பைக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. படைப்புக் காரியத்தில் அவனது இயக்கத்தின் விளைவால் அவன் படைக்கும் குணத்தைக் கொண்டவனாகவும் சொல்லப்படுகிறான்.(7) யோக காரியத்தில் அவனது இயக்கத்தின் விளைவால் அவன் யோக குணத்தைக் கொண்டவனாகவும் சொல்லப்படுகிறான். பிரகிருதிய என்றறியப்படும் குறிப்பிட்ட கோட்பாடுகளுக்கு {தத்துவங்களுக்குத்} தலைமை தாங்குவதால் அவன் பிரகிருதியின் இயல்பைக் கொண்டவன் எனவும் சொல்லப்படுகிறான்.(8)(அசைவற்ற பொருட்கள் அனைத்தின்) வித்துகளைப் படைக்கும் காரியத்தில் உள்ள அவனது இயக்கத்தின் விளைவால், அவன் அந்த வித்துகளின் இயல்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். பல்வேறு கோட்பாடுகள் அல்லது குணங்களை வாழ்வில் உண்டாக்கும் காரணத்தால் (அந்தக் கோட்பாடுகளே அழியத்தக்கன என்பதால்} அவன் சிதைவுக்கும், அழிவுக்கும் ஆட்படுவதாகச் சொல்லப்படுகிறான்.(9) மேலும், அனைத்திற்கும் சாட்சியாக இருப்பதன் விளைவாலும், தன்னைத் தவிர வேறு எதுவும் இல்லாததன் விளைவாலும், பிரகிருதியுடன் தன்னை அடையாளம் காணும் தன் நினைவின் விளைவாலும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், அத்யாத்மாவை அறிந்தவர்களும், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டவர்களுமான யதிகள், தன்னைத் தவிர இரண்டாமவன் இல்லாதவனும், மாற்றமில்லாதவனும், (காரணத்தின் வடிவில்) புலப்படாதவனும், நிலையற்றவனும், (விளைவுகளின் வடிவில்) புலப்படுபவனுமாக அவனை {புருஷனைக்} கருதுகிறார்கள்.(10) இதையே நாம் கேள்விப்படுகிறோம். எனினும் ஞானத்தை மட்டுமே (தங்கள் விடுதலைக்கு {முக்திக்கு}) சார்ந்திருப்பவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களுமான சாங்கியர்கள், பிரகிருதி ஒன்றே, புருஷர்கள் பலர் என்று சொல்கிறார்கள்[3].(11) உண்மையில், நிலையற்றதாக இருந்தாலும், நிலையாகத் தோன்றும் பிரகிருதியில் இருந்து புருஷன் வேறுபட்டவனாக இருக்கிறான். நாணற்குச்சியானது, வெளிப்புற உறையில் {தர்ப்பையில்} இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே புருஷனும் பிரகிருதியில் இருந்து வேறுபட்டிருக்கிறான்.(12)உண்மையில், அத்திக்குள் பதுங்கியிருக்கும் புழுவானது, அத்தியில் இருந்து வேறுபட்டதாகவே அறியப்பட வேண்டும். அந்தப் புழுவானது அத்திக்குள் இருந்தாலும், அஃது ஒரு போதும் அந்த அத்தியின் ஒருபகுதியாகக் கருதப்படுவதில்லை.(13) மீனானது, தான் வாழும் நீரில் இருந்து வேறுபட்டது, அதே போல நீரும், தன்னில் வாழும் மீனில் இருந்து வேறுபட்டதாகும். மீனும், நீரும் ஒன்றாகவே இருந்தாலும் அஃது ஒருபோதும் நீரால் நனைக்கப்படுவதில்லை.(14) மண்கடாயில் {உகையில்} உள்ள நெருப்பானது அந்தக் கடாயில் இருந்து வேறுபட்டது, அந்தக் கடாயும் தான் கொண்டிருக்கும் நெருப்பிலிருந்து வேறுபட்டதாகும். நெருப்பு அந்தக் கடாயில் இருந்தாலும், அஃது ஒருபோதும் அதன் பகுதியாகக் கருதப்பட முடியாது.(15) நீரில் மிதக்கும் தாமரை இலையானது, தான் மிதக்கும் நீரில் இருந்து வேறுபட்டதாகும். நீருடன் அஃது உடனுறைந்திருந்தாலும், அஃது ஒருபோதும் நீரின் ஒருபகுதியாகாது.(16)
இவ்வாறு குறிப்பிடப்படுபவை அந்தந்தப் பொருட்களில் நிலையாக உடனிருப்பது, சாதாரண மக்களால் ஒருபோதும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை[4].(17) பிரகிருதியையும், புருஷனையும் வேறு எவ்வொளியிலும் காண்போர், பார்வைப்பிழை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பயங்கர நரகில் நிச்சயம் மூழ்குகிறார்கள்.(18) அனைத்துப் பொருட்களையும் சரியாக உறுதி செய்யும் சிறந்த அறிவியலான சாங்கியர்களின் தத்துவத்தையே நான் உனக்குச் சொன்னேன். சாங்கியர்கள், புருஷன் மற்றும் பிரகிருதியின் இயல்பை இவ்வழியில் உறுதி செய்து கொண்டே விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(19) அண்டத்தின் பெருங்கோட்பாடுகளை அறிந்த பிற அமைப்புகளைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இனி நான் யோகிகளின் அறிவியலைக் குறித்து உனக்குச் சொல்கிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(20)
யோகம்! – சாந்திபர்வம் பகுதி – 317-யோக நிலைகளான சகுண பிராணாயாமம், நிர்க்குண பிராணாயாமம், சமாதி ஆகியவை குறித்தும் யோகிகளின் தத்துவம் குறித்தும் ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனுக்கு}, “நான் சாங்கியர்களின் அறிவியலை உனக்குச் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இப்போது, யோகிகளின் அறிவியலை நான் கேள்விப்பட்டவகையிலும், பார்த்த வகையிலும் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(1) சாங்கிய ஞானத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு ஞானம் ஏதும் இல்லை. யோக பலத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு பலம் ஏதும் கிடையாது. ஒரே நடைமுறைகளை விதிக்கும் இவ்விரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கவல்லவையாகக் கருதப்படுகின்றன.(2) புத்தியால் அருளப்படாத மனிதர்களே சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருப்பதாகக் கருதுகிறார்கள். எனினும், ஓ! மன்னா, அவற்றை (கற்று, சிந்தித்த பிறகு) நாம் அடையும் தீர்மானத்தின்படி அவற்றை ஒன்றாகவே நாம் காண்கிறோம்.(3) சாங்கியர்கள் பார்ப்பதையே யோகிகளும் பார்க்கிறார்கள். சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளை ஒன்றாகக் காண்பவன், அண்டத்தை விதிக்கும் தத்துவங்கள், அல்லது கோட்பாடுகளை உண்மையில் அறிந்தவனாகக் கருதப்படுகிறான்.(4)
ஓ! மன்னா {தேவராதனா}, உயிர் மூச்சுகளும், புலன்களுமே யோகம் பயில்வதற்கான முக்கிய வழிமுறைகள் என்பதை அறிவாயாக. அந்த உயிர் மூச்சுகளையும், புலன்களையும் ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே யோகிகள் தங்கள் விருப்பப்படி எங்கும் திரிகிறார்கள்[1].(5) பருவுடல் அழிவடையும்போது, (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலிய அட்டமா சித்திகளான) எட்டு யோக குணங்களைக் கொண்ட நுண்ணுடல்களுடன் அனைத்து வகை இன்பநிலைகளையும் (அவ்வுடலால்) அனுபவித்தபடியே அண்டத்தில் திரிகிறார்கள்.(6)
யோக பலம் எட்டு வகையெனச் சாத்திரங்களில் ஞானிகள் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் யோகத்தை எட்டு அங்கங்களைக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்[2].(7) உண்மையில், ஓ! மன்னா, அவர்கள் வேறு எவ்வகை யோகத்தைக் குறித்தும் பேசவில்லை. யோகிகளின் சிறந்த நடைமுறைகளில் (அவற்றின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு) இரண்டுவகை உண்டு எனச் சொல்லப்படுகிறது. சாத்திரங்களில் தோன்றும் குறியீடுகளின்படி அவை, குணங்களுடன் கூடிய நடைமுறை {சகுணயோகம்} மற்றும் குணங்களில் இருந்து விடுபட்ட நடைமுறை {நிர்க்குணயோகம்} என்று இருவகைப்படும்.(8)ஓ! மன்னா {தேவராதனா}, மூச்சை அடுத்தடுத்து ஒழுங்குசெய்து, (குறிப்பிட்ட பதினாறு பொருட்களில்) மனத்தைக் குவிப்பது (ஒரு வகை {யோகம்} ஆகும்). காலம் நெடுகிலும் புலன்களை அடக்கி (தியானிப்பவர், தியானிக்கப்படும் பொருள் ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் அழிக்கும் வழியில்) மனத்தைக் குவிப்பது (மற்றொரு வகை {யோகம்} ஆகும்). முதல் வகை யோகம் குணங்களைக் கொண்டதாக {சகுண யோகமாகச்} சொல்லப்படுகிறது; இரண்டாம் வகைக் குணங்களில் இருந்து விடுபட்டதாக {நிர்க்குண யோகமாகச்} சொல்லப்படுகிறது[3].(9) மேலும் மூச்சை ஒழுங்குமுறை செய்தல் குணங்களுடன் கூடிய யோகமாகும். குணங்களற்ற யோகத்தில் மனமானது, அதன் செயல்பாடுகளில் இருந்து விடுபட்டு நிலைத்திருக்க {குவிந்திருக்க} வேண்டும். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {தேவராதனா}, (உள்ளிழுத்து நிறுத்தப்படும்) மூச்சானது, (வரையறுக்கப்பட்ட மந்திரத்தின் மூலம்) ஒரு திட்டவட்டமான தோற்றத்தின் மீது மனத்தைச் செலுத்தாமல் வெளியேற்றப்பட்டால், அந்தப் புதிய பயிற்சியாளனின் {உடல்} அமைப்பில் காற்று {வாயு} பெருகி, அவனுக்குப் பெரும் தீங்கை இழைக்கும் என்பதால், குணங்களுடன் கூடிய மூச்சுப் பயிற்சி {சகுண பிராணாயாமம்} மட்டுமே அவனால் முதலில் செய்யப்பட வேண்டும்[4].(10) இரவின் முதல் யாமத்தில் {ஜாமத்தில்}, மூச்சைப் பிடிக்கும் பனிரெண்டு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உறங்கிய பிறகு, இரவின் இறுதி யாமத்தில், அதையே செய்வதற்கு வேறு பனிரெண்டு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(11) அமைதியாக இருப்பவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், ஓய்வில் வாழ்பவனும், தன்னில் மகிழ்பவனும், சாத்திரங்களின் கருத்துகளை முழுமையாக அறிந்தவனுமான ஒருவன், (இந்த இருபத்துநான்கு வழிமுறைகளின் மூலம் மூச்சை ஒழுங்குபடுத்தி) தனது ஆன்மாவை (பரமாத்மாவில்) நிலைநிறுத்த வேண்டும்[5].(12)ஐம்புலன்களின் ஐந்து களங்கங்களான ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணத்தை (அவற்றை அவை நுகரும் பொருட்களில் இருந்து விலகச் செய்து) களைந்து,(13) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, பிரதீபம், அபபங்கம் என்றழைக்கப்படும் நிலைகளைக் களைந்து, புலன்கள் அனைத்தும் மனத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(14) ஓ! மன்னா, மனமானது நனவுநிலையில் {அகங்காரத்தில்} நிலைநிறுத்தப்பட வேண்டும்; நனவுநிலையானது புத்தியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்; புத்தியானது பிரகிருதியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(15) இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைக் கலக்கும் யோகிகள், ஒன்றேயானவனும், ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவனும், களங்கமற்றவனும், நிலையானவனும், எல்லையற்றவனும், தூய்மையானவனும், குறையற்றவனும்,(16) நித்தியபுருஷன் என்றழைக்கப்படுபவனும், மாற்றமில்லாதவனும், பிரிக்கப்பட முடியாதவனும், சிதைவும், அழிவும் அற்றவனும், எப்போதும் இருப்பவனும், குறைவைக் கடந்தவனும், நிலையான பிரம்மமுமான பரமாத்மாவைத் தியானிக்கிறார்கள்.(17)
ஓ! ஏகாதிபதி, யோகத்தில் இருப்பவனின் குறியீடுகளைக் குறித்து இப்போது கேட்பாயாக. சமாதியில் இருப்பவனிடம் நிறைவாக உறங்குபவனிடம் காணப்படும் நிறைவும் மற்றும் உற்சாகக் குறியீடுகள் அனைத்தும் இருக்கும்.(18) சமாதியில் இருப்பவன், எண்ணெய் நிறைந்ததும், காற்று இல்லாத பகுதியில் எரிவதுமான விளக்கின் நிலைத்த மேல்நோக்கிய தழலைப் போலத் தெரிவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(19) மேகங்களில் இருந்து கனமழை பொழிந்தாலும், சற்றும் அசைக்கப்பட முடியாத ஒரு பாறையைப் போலவே அவன் இருப்பான்.(20) சங்கங்கள், பேரிகைகள், அல்லது பாடல்கள் அல்லது நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளின் ஒலி ஒன்றாக முழங்கும்போதும் அந்த ஆரவாரத்தால் அசைக்கப்பட முடியாதவனாக அவன் இருப்பான். இதுவே சமாதியில் இருப்பவனின் குறியீடாகும்.(21)
பதற்றமற்ற துணிவும், உறுதிப்பாடும் கொண்ட மனிதன், தன் கரங்களில் எண்ணெய் நிறைந்த பாத்திரத்துடன் படிகளில் ஏறும்போது, ஆயுதம் தரித்த மனிதர்களால் அச்சுறுத்தப்பட்டாலும், ஒரு துளி எண்ணெயையும் சிந்த விடாததைப் போலவே ஒரு யோகியும், தன் மனம் குவிந்த சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும்போது, தன் புலன்களின் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தியிருப்பதன் விளைவால் சற்றும் அசையாதவனாக இருப்பான். இதுவும் சமாதியில் இருக்கும் யோகியின் குறியீடாக அறியப்பட வேண்டும்.(22-24)
சமாதியில் இருக்கும்போது அந்த யோகி, நிலையானதும், அடர்ந்த இருளுக்கு மத்தியில் சுடர்மிக்க ஒளியாக இருப்பதுமான பரப்பிரம்மத்தைக் காண்கிறான்.(25) இவ்வழிமுறைகளின் மூலமே அவன் பல வருடங்கள் சென்றதும், தன் உயிரற்ற உடலைக் கைவிட்டு விடுதலையை {முக்தியை} அடைகிறான். இதையே நித்யமான ஸ்ருதி அறிவிக்கிறது.(26) இதுவே யோகிகளின் யோகம் என்று அழைக்கப்படுகிறது. அது வேறென்ன? ஞானம் கொண்டவர்கள் இஃதை அறிந்தே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுகிறார்கள்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(27)
மரணக்குறியீடுகள்! – சாந்திபர்வம் பகுதி – 318-உயிர் வெளியேறும் உறுப்புகள் குறிப்பிடும் கதி; மரணக் குறியீடுகள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! மன்னா, மரணமடைபவர்கள் செல்லும் இடங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன், கவனத்துடன் கேட்பாயாக. ஜீவாத்மா கால்களின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் விஷ்ணுலோகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.(1) ஆடுதசைகளின் வழியே வெளியேறினால் அவன் வசுக்களின் உலகத்திற்குச் செல்கிறான் என நாம் கேள்விப்படுகிறோம். முழங்கால் முட்டிகளின் வழியே வெளியேறினால் அவன் சத்யஸ்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(2) குதத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் மித்ரனின் உலகத்தை அடைகிறான். பின்தட்டுகளின் வழியே வெளியேறினால் அம்மனிதன் பூமிக்குத் திரும்புகிறான். தொடைகளின் வழியே வெளியேறினால் அவன் பிரஜாபதியின் உலகத்திற்குச் செல்கிறான்.(3)
விலாக்களின் வழியே வெளியேறினால், அம்மனிதன் மருத்துகளின் உலகத்திற்கும்,
மூக்குத்துளைகளின் வழியே வெளியேறினால் சந்திரனின் உலகத்திற்கும் செல்கிறான்.
கரங்களின் வழியே வெளியேறினால் அம்மனிதன் இந்திரலோகத்திற்கும்,
மார்பு வழியே வெளியேறினால் ருத்ரலோகத்திற்கும் செல்கிறான்.(4) கழுத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் நரன் என்ற பெயரில் அறியப்படும் முதன்மையான தவசியின் சிறந்த உலகத்திற்குச் செல்கிறான்.
வாயின் வழியே வெளியேறினால் அம்மனிதன் விஸ்வேதேவர்களின் உலகிற்கும்,
காதுகளின் வழியே வெளியேறினால் பல்வேறு திசைப்புக்களின் தேவர்களுடைய உலகத்திற்கும் செல்கிறான்.(5)
மூக்கின் வழியே என்றால் வாயுதேவனின் உலகத்திற்கும்;
கண்களின் வழியேயென்றால் அக்னிலோகத்திற்கும் அம்மனிதன் செல்கிறான்.
புருவங்களின் வழியேயென்றால் அஸ்வினிலோகத்திற்கும்,
நெற்றியின் வழியேயென்றால் பித்ருலோகத்திற்கும் அம்மனிதன் செல்கிறான்.(6)ஓ! மிதிலையின் ஆட்சியாளா,
உச்சந்தலையின் வழியே வெளியேறினால், அம்மனிதன் தேவர்களில் முதன்மையானவனும், பலமிக்கவனுமான பிரம்மனின் உலகத்திற்குச் செல்கிறான். ஜீவாத்மாக்கள் தங்கள் உடல்களில் இருந்து வெளியேறும் வழிகளின்படியே மனிதர்கள் செல்லும் பல்வேறு இடங்களைக்குறித்து நான் உனக்குச் சொன்னேன்.(7)
வாழ்வதற்கு ஒருவருடம் மட்டுமே கொண்டவர்களைக் குறித்து ஞானிகளால் விதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை குறியீடுகளை {மரணக் குறியீடுகளை / அரிஷ்டங்களை} இப்போது நான் சொல்லப் போகிறேன்.(8) அருந்ததி என்றழைக்கப்படும் நிலையான விண்மீனை முன்பே கண்டும், துருவம் என்றழைக்கப்படும் மற்றொரு விண்மீனைக் காணத் தவறும் ஒருவனுக்கு, அல்லது முழு நிலவையோ, எரியும் விளக்கின் தழலையோ தென்புறம் நோக்கி உடைந்திருப்பதைப் போலக் காணும் ஒருவனுக்கு வாழ்வதற்கு ஒரு வருடம் மட்டுமே உண்டு {அவர்கள் ஒரு வருடத்திற்கு மேல் இறந்து விடுவார்கள் என்பது பொருள்}.(9) ஓ! மன்னா, பிறரின் கண்களில் பிரதிபலிக்கப்படும் தங்கள் தோற்றங்களைக் காண முடியாத மனிதர்கள் வாழ்வதற்கு ஒரு வருடம் மட்டுமே உண்டு.(10)
காந்தியுடன் கூடிய ஒருவன் அஃதை இழப்பது, அல்லது ஞானத்துடன் கூடியவன் அஃதை இழப்பது என இவ்வாறு தங்கள் அக மற்றும் புற இயல்பில் மாற்றம் கொண்ட ஒருவன் வாழ்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே உண்டு.(11) தேவர்களை அவமதிப்பவன், அல்லது பிராமணர்களிடம் சச்சரவு செய்பவன், அல்லது, இயல்பாகக் கரிய நிறம் கொண்டிருந்தும் வெண்ணிறம் அடையும் ஒருவன் வாழ்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே உண்டு.(12)
சிலந்தி வலையைப் போலச் சந்திரனில் பல துளைகளைக் காணும் ஒருவன், அல்லது அதே போன்ற துளைகளைச் சூரியனில் காணும் ஒருவன் வாழ்வதற்கு ஒரு வாரம் மட்டுமே உண்டு.(13) வழிபாட்டுக்குரிய இடங்களில் நுகரும் நறுமணத்தைச் சவங்களின் நாற்றத்தைப் போல உணர்பவன் வாழ்வதற்கு ஒரு வாரம் மட்டுமே உண்டு.(14)
மூக்கு, அல்லது காதுகள் தளர்வது {வளைவது}, பற்கள் மற்றும் கண்கள் நிறமிழப்பது {அவற்றில் பசையற்றுப் போதல்}, நினைவுகள் அனைத்தையும் இழப்பது, உடல் வெப்பமனைத்தையும் இழப்பது ஆகியன அந்த நாளே ஏற்படப்போகும் மரணத்தைக் குறிப்பிடும் அறிகுறிகளாகும்.(15)
உணரத் தக்க எந்தக் காரணமுமின்றி இடது கண்ணில் இருந்து திடீரெனக் கண்ணீர் சிந்துவது, ஒருவனுடைய தலையில் இருந்து ஆவி வெளியேறுவது போலக் காணப்படுவது ஆகியன அந்த நாள் முடிவடைவதற்குள் அந்த மனிதன் இறக்கப் போகிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகளாகும்.(16)
இந்த முன்னெச்சரிக்கை அறிகுறிகள் அனைத்தையும் அறிந்து கொள்பவனும், தூய்மையான ஆன்மாகக் கொண்டவனுமான மனிதன், பகலும், இரவும் தன் ஆன்மாவை பரமாத்மாவோடு (சமாதியில்) கலக்க வேண்டும்.(17) இவ்வாறே அவன் அழிய வேண்டிய நாள்வரை செயல்பட வேண்டும். எனினும் அவன் இறக்க விரும்புவதற்குப் பதில் இவ்வுலகில் வாழ விரும்பினால், ஓ! மன்னா, மணம் மற்றும் சுவைகள் அனைத்திலும் உள்ள இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, துறவியாக வாழ வேண்டும்.(18,19)
உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஆன்ம ஞானத்தால் அருளப்பட்ட மனிதன், சாங்கியர்களால் பரிந்துரைக்கப்படும் வாழ்வுமுறையை நடைமுறையாக்கி, தன் ஆத்மாவைப் பரமாத்மாவுடன் கலப்பதன் மூலம் மரணத்தை வெல்கிறான்.(20) இறுதியாக அவன், முற்றிலும் அழிவற்றதும், பிறப்பற்றதும், மங்கலமானதும், மாற்றமில்லாததும், நித்தியமானதும், நிலையானதும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அடைய முடியாததுமான நிலையை அடைகிறான்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(21)
பரமஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 319-சூரியனிடமிருந்து யஜுர் வேதத்தை அடைந்தது; கந்தர்வ மன்னன் விஸ்வாவசுவின் இருபத்தைந்து கேள்விகள்; அவற்றுக்குத் தாம் அளித்த விடைகள்; பிரகிருதி, ஜீவாத்மா, பரமாத்மா தொடர்புடைய மோக்ஷ அறிவியல்; ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! ஏகாதிபதி, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} வசிக்கும் பரப்பிரம்மத்தைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்வி ஆழ்ந்த புதிருடன் தொடர்புடையதாகும். ஓ! மன்னா, குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, முனிவர்களால் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பணிவுள்ளவனாக என்னை ஒழுங்கு செய்து கொண்டு சூரியனிடமிருந்து நான் யஜுஸ்களை {யஜுர் வேதத்தைப்} பெற்றேன்.(2) முன்பு நான், வெப்பம் தரும் தேவனை {சூரியனைத்} துதித்தபடியே கடுந்தவத்தில் ஈடுபட்டேன். ஓ! பாவமற்றவனே, என்னிடம் நிறைவடைந்த பலமிக்கச் சூரியன், என்னிடம்,(3) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, எவ்வளவுதான் அடைவதற்கரிதாக இருந்தாலும் எதில் உமது இதயத்தை நிலைபெறச் செய்திருக்கிறீரோ, அந்த வரத்தைக் கேட்பீராக. உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் நான் அஃதை உமக்கு அருள்வேன். எனது அருளை அடைவது மிக அரிதானதாகும்” என்றான்.(4)
வெப்பம் தரும் ஒளிக்கோள்களின் முதன்மையானவனுக்கு {சூரியனுக்குத்} தலைவணங்கிய நான் இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னேன், “எனக்கு யஜுஸ்களைக் குறித்து எந்த அறிவும் கிடையாது. தாமதமேதுமின்றி நான் அவற்றை அறிய விரும்புகிறேன்” என்றேன்.(5)
இவ்வாறு கேட்கப்பட்ட அந்தப் புனிதனமானவன் என்னிடம், “நான் உமக்கு யஜுஸ்களைக் கொடுப்பேன். வாக்கையே சாரமாகக் கொண்ட தேவி சரஸ்வதி உமது உடலுக்குள் நுழைவாள்” என்று சொன்னான்.(6)
பிறகு அந்தத் தேவன், எனது வாயைத் திறக்குமாறு ஆணையிட்டான். ஆணையிடப்பட்டவாறே நானும் செய்தேன். ஓ! பாவமற்றவனே, தேவி சரஸ்வதி என்னுடலுக்குள் நுழைந்தாள்.(7) இதனால் நான் எரியத் தொடங்கினேன். தாங்கவொண்ணா வலியால் நான் ஓர் ஓடையில் விழுந்தேன். உயர் ஆன்ம சூரியன் எனக்குச் செய்த நன்மையைப் புரிந்து கொள்ளாத நான் அவனிடம் கோபமடைந்தேன்.(8)
தேவியின் சக்தியால் நான் எரிந்து கொண்டிருந்தபோது, புனிதமான சூரியன் என்னிடம், “இந்த எரிச்சல் உணர்வை சற்றே பொறுத்திருப்பீராக. இது விரைவில் தணிவடையும், நீரும் குளிர்வடைவீர்” என்றான்.(9) உண்மையில் நான் குளிர்வடைந்தேன். ஒளியைச்செய்பவன் {சூரியன்}, சுகம் மீண்ட என்னைக் கண்டு, என்னிடம், “ஓ! மறுபிறப்பாளரே, மொத்த வேதங்களும், பிற்சேர்க்கையாகக் கருதப்படும் பிற பகுதிகளும் {கில மந்திரங்களும்}, உபநிஷத்துக்களும் உள்ளொளியால் உமக்குத் தோன்றும்.(10) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மொத்த சதபதங்களையும் {சதபத பிராம்மணங்களையும்} நீர் தொகுக்கப் போகிறீர். அதன் பிறகு உமது புத்தி, விடுதலையின் {முக்தியின்} பாதையில் திரும்பும்.(11) சாங்கியர்கள் மற்றும் யோகியர்கள் இருவராலும் ஆசைப்படப்படுவதும், விரும்பப்படுவதுமான கதியையும் நீர் அடைவீர்” என்றான். இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தத் தெய்வீகமான சூரியன் அஸ்த மலைகளுக்குச் சென்றான்.(12)
அவனது இறுதி வார்த்தைகளைக் கேட்டு, நான் இருந்த இடத்தில் இருந்து அவன் சென்ற பிறகு, மகிழ்ச்சியாக இல்லம் திரும்பி தேவி சரஸ்வதியை நான் நினைவுகூர்ந்தேன்.(13) என்னால் நினைக்கப்பட்டதும், உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துகளால் அலங்கரிக்கப்பட்டவளும், ஓம் என்ற ஓரசையை {ஓங்காரத்தைத்} தன் முன்னிலையில் கொண்டவளுமான மங்கலகரமான சஸ்வதி என் கண்களுக்கு முன்பாக உடனே தோன்றினாள்.(14) பிறகு நான் விதிப்படி அந்தத் தேவிக்கு வழக்கமான அர்க்கியத்தையும், வெப்பம் தரும் தேவர்களில் முதன்மையான சூரியனுக்கு மற்றொன்றையும் அர்ப்பணித்தேன். இந்தக் கடமையைச் செய்துவிட்டு, அவ்விரு தேவர்களிடமும் அர்ப்பணிப்புடன் என் இருக்கையில் அமர்ந்தேன். அதன்பேரில் மொத்த சதபத பிராம்மணங்களும், அவற்றின் புதிர்கள், அவற்றின் சுருக்கங்கள், அவற்றின் பிற்சேர்க்கைகள் ஆகியனவும் என் மனக்காட்சியில் தானே தோன்றியதால், நான் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தேன்.(16)
நற்சீடர்களான நூறு பேருக்கு நான் அவற்றைக் கற்பித்தேன், அதன்காரணமாக, தன் சீடர்களால் சூழப்பட்டவரும், உயர் ஆன்மா கொண்டவருமான என் தாய்மாமனுக்கு (வைசம்பாயனருக்கு) ஏற்பில்லாததைச் செய்தேன்[1].(17) பிறகு, ஓ! மன்னா {தேவராதா}, கதிர்களுக்கு மத்தியில் உள்ள சூரியனைப் போலவே, என் சீடர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்த நான், உனது உயர் ஆன்ம தந்தையுடைய {ஜனகனுடைய} வேள்வியின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டேன்.(18) அந்த வேள்வியில், வேதங்களை ஓதியதற்காகக் கொடுக்கப்படும் தக்ஷிணையை யார் பெறுவது என்பதில் எனக்கும், என் தாய்மாமனுக்கும் {வைசம்பாயனருக்கும்} இடையில் ஒரு சச்சரவு ஏற்பட்டது.(19) தேவலரின் முன்னிலையிலேயே நான் தக்ஷிணையில் பாதியை எடுத்துக் கொண்டேன் (மற்றொரு பாதி என் தாய்மாமனுக்குச் சென்றது).(19) உன் தந்தை {ஜனகன்}, சுமந்தர், பைலர், ஜைமினி மற்றும் பிற தவசிகள் அனைவரும் அந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்டனர்[2].(20)ஓ! ஏகாதிபதி, நான் இவ்வாறே சூரியனிடம் இருந்து பத்து யஜுஸ்களை ஐந்து முறை {அதாவது ஐம்பது சாகைகளைப்} பெற்றேன். பிறகு நான் ரோமஹர்ஷனுடன் சேர்ந்து புராணங்களைக் கற்றேன்.(21) ஓ! மன்னா, அந்த (மூல) மந்திரங்கள் மற்றும் தேவி சரஸ்வதியுடன், சூரியனிடம் கிடைத்த உத்வேகத் துணையால், சிறந்த சதபத பிராம்மணங்களைத் தொகுப்பதில் என்னை நிறுவிக் கொண்டு, அதற்கு முன்பு வேறு எவராலும் செய்யப்படாத பணியைச் செய்வதில் வெற்றியை அடைந்தேன். நான் விரும்பிய பாதையைப் பின்பற்றினேன், அதையே என் சீடர்களுக்கும் கற்பித்தேன்.(22,23) உண்மையில், மொத்த வேதங்களும், அவற்றின் சுருக்கங்களும் என்னால் என் சீடர்களுக்குச் சொல்லப்பட்டன. என் போதனைகளின் விளைவால், மனம் மற்றும் உடல் தூய்மையடைந்த என் சீடர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(24) நான் சூரியனிடம் இருந்து பெற்ற ஐம்பது அங்கங்களைக் கொண்ட இந்த ஞானத்தை நிலைநிறுத்திய பிறகு, அந்த ஞானத்தின் பெரும்பொருளை {பிரம்மத்தை} இப்போது தியானித்துக் கொண்டிருக்கிறேன்.(25)
ஓ! மன்னா {தேவராதா}, வேதாந்த சாத்திரங்களை நன்கறிந்தவனான கந்தர்வன் விஸ்வாவசு, இந்த ஞானத்தால் பிராமணர்களுக்குக் கிட்டும் நன்மை, அதிலிருக்கும் உண்மை, இந்த ஞானத்தின் சிறந்த நோக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக என்னிடம் ஒரு காலத்தில் கேள்விகளைக் கேட்டான். ஓ! மன்னா வேதங்கள் தொடர்பாக மொத்தம் இருபத்து நான்கு கேள்விகளை அவன் என்னிடம் கேட்டான். இறுதியில் உள்ளுணரும் ஆய்வுமுறை குறித்த ஞானக் கிளை {மனனமெனும் யுக்தி} தொடர்பாக அவன் இருபத்தைந்தாவது கேள்வியையும் கேட்டான். அக்கேள்விகள் பின்வருமாறு: “அண்டம்{1} மற்றும் அண்டமற்றது{2} {விஷ்வாவிஷ்வம்} என்றால் என்ன? அஸ்வாம் {புருஷன்}{3} மற்றும் அஸ்வம் {பிரகிருதி}{4} என்றால் என்ன? மித்திரன்{5} என்றால் என்ன? வருணன்{6} என்றால் என்ன?(26-28) ஞானம்{7} என்றால் என்ன? ஞானத்தின் பொருள் {ஞேயம்}{8} என்றால் என்ன? புத்தியற்றது {அஜஞன் / அறியாதவன்}{9} என்றால் என்ன? புத்தியுடன் கூடியது {ஞன் / அறிகின்றவன்}{10} என்றால் என்ன? கம் {ஆனந்தம்}{11} என்றால் என்ன? மாற்றக் கொள்கை {தபஸ் / ஆலோசனை}{12} என்றால் என்ன? அஃது இல்லாதது {அதபஸ் / ஆலோசியாமை}{13} என்றால் என்ன? சூரியனை விழுங்குபவன்{14} மற்றும் சூரியன்{15} {ஸூர்யாதிஸூர்யர்கள்} என்றால் என்ன? வித்தை{16} மற்றும் அவித்யை{17} {வித்யாவித்யைகள்} என்றால் என்ன?(29) வேத்யம் {அறியக்கூடியது}{18} மற்றும் அவேத்யம் {அறியக்கூடாதது}{19} {வேத்யாவேத்யம்} என்றால் என்ன? அசைவற்றது {அசலம்}{20} மற்றும் அசைவுள்ளது {சலம்}{21} என்றால் என்ன? தொடக்கமற்றது {அக்ஷரம் / குறைவற்றது}{22}, அழிவற்றது {அவ்யயம்}{23}, அழியக்கூடியது {க்ஷேம்யம்}{24} ஆகியவை என்னென்ன?” {என்று கேட்டான்}. இந்தச் சிறந்த கேள்விகளே அந்த முதன்மையான கந்தர்வனால் {விஸ்வாவசுவால்} என்னிடம் கேட்கப்பட்டன.(30)
கந்தர்வர்களில் முதன்மையான மன்னன் விஸ்வாவசு, இந்தக் கேள்விகளை என்னிடம் ஒன்றன்பின் ஒன்றாகக் கேட்ட பிறகு, அவற்றுக்கு நான் முறையாகப் பதிலளித்தேன்.(31) எனினும் முதலில் நான் அவனிடம், “உன் கேள்விகளைக் குறித்து நான் சிந்திக்கும் வரை ஒரு குறுகிய {ஒரு முகூர்த்த} காலத்திற்குக் காத்திருப்பாயாக” என்று அவனிடம் சொன்னேன். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்தக் கந்தர்வன் அமைதியாக அமர்ந்தான்.(32) அப்போது நான், தேவி சரஸ்வதியை மீண்டும் மனத்தால் நினைத்தேன். அந்தக் கேள்விகளுக்கான மறுமொழிகள், தயிரில் இருந்து வரும் நெய்யைப் போல இயல்பாகவே என் மனத்தில் எழுந்தன.(33) உள்ளுணரும் ஆய்வுமுறையெனும் உயர்ந்த அறிவியலை நோக்கில் கொண்ட நான், ஓ! ஏகாதிபதி, உபநிஷத்துகளையும், வேதங்கள் தொடர்பான துணை சாத்திரங்களையும் என் மனத்தால் கடைந்தேன்.(34) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஏற்கனவே நான் உனக்குச் சொன்னதும், இருபத்தைந்தாவதான ஜீவனை அடிப்படையாகக் கொண்டதுமான விடுதலை {முக்தி} குறித்துச் சொல்லும் நான்காவது அறிவியலை அப்போது நான் அவனுக்கு விளக்கிச் சொன்னேன்[3].(35)ஓ! ஏகாதிபதி {தேவராதா}, மன்னன் விஸ்வாவசுவிடம் இவை அனைத்தையும் சொன்ன பிறகு நான் அவனிடம், “நீ என்னிடம் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்கிறேன் கேட்பாயாக.(36) ஓ! கந்தர்வா, அண்டம் மற்றும் அண்டமற்றது {விஷ்வாவிஷ்வம்} என்றால் என்ன? என்று நீ கேட்ட கேள்விக்கு இப்போது பதிலளிக்கிறேன். அண்டமானது புலப்படாததாகவும் {அவ்யக்தமாகவும்}, (விடுதலையை {முக்தியை} விரும்புவோருக்குப்} பயங்கரமான பிறப்பிறப்புக் கோட்பாடுகளுடன் கூடிய மூலப் பிரகிருதியாகவும் இருக்கிறது.(37) மேலும் அது (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களால் நிறைந்த படைப்புக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதன் விளைவால் அஃது {அண்டம் / விஷ்வம்} குணங்களுடையதாகவும் இருக்கிறது[4]. அண்டமற்றது {அவிஷ்வம்} என்பது குணங்களேதும் அற்ற புருஷனாகும். அஸ்வாம் மற்றும் அஸ்வம் ஆகியன, பெண் மற்றும் ஆணாகவும்,{38) முன்னது பிரகிருதியாகவும், பின்னது புருஷனாகவும் சொல்லப்படுகின்றன. அதேபோல, மித்ரன் என்பது புருஷனும், வருணன் என்பது பிரகிருதியுமாகின்றன[5].(39) மேலும் ஞானமானது பிரகிருதியாகவும், ஞானத்தின் பொருளாக அறியப்படுவது புருஷனாகவும் அழைக்கப்படுகின்றன. அறியாதது (ஜீவன்), அறிவது அல்லது புத்தி ஆகிய இரண்டும் குணங்களற்ற புருஷனாக இருக்கின்றன (ஏனெனில், புருஷன் அறியாமை கொள்ளும்போதே ஜீவனாகிறான்).(40)மாற்றக் கொள்கை கொண்டதாகவும் {தபஸ் / ஆலோசனை}, மாற்றக்கொள்கை இல்லாததாகவும் {அதபஸ் / ஆலோசனையற்றது} உள்ள கம் {ஆனந்தம்} குறித்து நீ கேட்டாய். நான் பதிலளிக்கிறேன், கம் என்பது புருஷனாகும்[6]. மாற்றக்கொள்கையுடன் கூடியது {தபஸ்} பிரகிருதியாகும். மாற்றக் கொள்கை இல்லாதது {அதபஸ்} புருஷனாகும்.(41) அதே போலவே, அவேத்யம் (அறியமுடியாதது) என்றழைக்கப்படுவது பிரகிருதியாகும்; வேத்யம் என்றழைக்கப்படுவது புருஷனாகும்.(42) அசைவற்றது {அசலம்} மற்றும் அசைவுள்ளது {சலம்} குறித்தும் நீ என்னிடம் கேட்டாய். என் பதில் என்ன என்பதைக் கேட்பாயாக. மாற்றங்களுக்கு உட்பட்டுப் படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருக்கும் அசைவுள்ளது {சலமானது} பிரகிருதியாகும். மாற்றங்களுக்கு உட்படாமல் படைப்பு மற்றும் அழிவுக்குத் துணை புரிவதால் அசைவற்றது {அசலமானது} புருஷனாகும்.(43) (வேறொரு தத்துவ அமைப்பின்படி) வேத்யம் பிரகிருதியாகும்; அதே வேளையில் அவேத்யம் புருஷனாகும். பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டும் புத்தியற்றவையாகவும், நிலையானவையாகவும், அழிவற்றவையாகவும்,(44) பிறப்பற்றவையாகவும், நித்தியமானவையாகவும் அத்யாத்மம் என்ற பெயரில் உள்ள தத்துவங்களை அறிந்த தத்துவ ஞானிகள் கொண்ட தீர்மானங்களின் படியே அறியப்படுகின்றன.(45)படைப்பின் காரியத்தில், பிரகிருதி அழிவற்றதாக இருப்பதன் விளைவால், பிறப்பற்ற அந்தப் பிரகிருதி, சிதைவுக்கோ, அழிவுக்கோ உட்படாததாகக் கருதப்படுகிறது. மேலும் புருஷன், மாறாததாக இருப்பதால், அழிவற்றதாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்கிறது.(46) பிரகிருதியில் வசிக்கும் குணங்களே அழியத்தக்கன, பிரகிருதியானவள் அழியத்தக்கவளல்ல. மேலும் பிரகிருதியானது, மாற்றங்களுக்கு உட்பட்டு, படைப்புக்கான காரணமாகச் செயல்படுகிறது. படைக்கப்பட்ட விளைவுகளாவன தோன்றவும், மறையவும் செய்கின்றன, மூலப்பிரகிருதியோ தோன்றுவதுமில்லை, மறைவதுமில்லை. எனவே பிரகிருதி அழிவற்றது என அழைக்கப்படுகிறது. இவ்வாறே, உள்ளுணர்வு ஆய்வுமுறையின் அடிப்படையிலானதும், விடுதலையையே {முக்தியையே} கதியாகக் கொண்டதுமான நான்காம் அறிவியலை நான் சொல்லிவிட்டேன்.(47) ஓ! விஸ்வாவசு, உள்ளுணர்வு ஆய்வுமுறை அறிவியலின் மூலமும், ஆசான்களிடம் காத்திருந்தும், ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்கள், நோற்கப்பட வேண்டிய கடமைகளின் அனைத்து நடைமுறைகள் மற்றும் வேதங்கள் அனைத்தும் மதிப்புடன் கற்கப்பட வேண்டும்.(48) ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே, வேதங்களையும், அதன் கிளைகள் அனைத்தையும் கற்றாலும், அனைத்துப் பொருட்களும் தங்கள் பிறப்பைக் கொள்வதும், அழிவடையும்போது அனைத்துப் பொருட்களும் சென்று கலப்பதும், வேதம் போதிக்க முனையும் ஞானப் பொருளுமான பரமாத்மாவை அறியாதவர்களின், உண்மையில், வேதங்கள் நிறுவ முனைவதைக் குறித்து எந்த அறிவும் இல்லாதவர்களின் வேத கல்வியானது எந்நோக்கமும் இல்லாததாக, வீணான சுமையாகவே அவர்களுக்கு இருக்கும்.(49,50)
நெய்யை விரும்பும் மனிதன், தான் முனைவது என்ன என்பதைக் காணாமல், கழுதைப்பாலைக் கடைந்தால், உடல்கழிவின் இழிமணத்திற்கு ஒப்பான ஒரு பொருளையே அடைவான்.(51) அதைப் போலவே, வேதங்கற்ற ஒருவன், எது பிரகிருதி, எது புருஷன் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறினால், அவன் தன் மூடப் புத்தியை மட்டுமே உறுதிசெய்து, (வேதக் கதை எனும் வடிவிலான) பயனற்ற சுமையையே சுமக்கிறான்[7].(52) ஒருவன், மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதைத் தவிர்ப்பதற்காகக் கவனமான அர்ப்பணிப்புடன், பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் சிந்திக்க வேண்டும்.(53) ஒருவனுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பிறப்புகள் நேர்வைக் குறித்துச் சிந்தித்து, அழியத்தக்க விளைவுகளை உண்டாக்கும் செயலறத்தைத் தவிர்த்து, அழிவற்ற யோக அறத்தை அவன் பின்பற்ற வேண்டும்.(54)ஓ! காசியபா[8], ஒருவன் ஜீவாத்மாவின் இயல்பையும், பரமாத்மாவுடன் அது கொண்டுள்ள தொடர்பையும் தொடர்ந்து சிந்திப்பதால், குணங்கள் அனைத்தையும் நீக்குவதிலும், பரமாத்மாவைக் காண்பதிலும் வெல்கிறான்.(55) மூடப் புத்தி கொண்ட மனிதர்களால் மட்டுமே, நித்தியமானதும், புலப்படாததுமான பரமாத்மாவானது, இருபத்தைந்தாவதிலிருந்து அல்லது ஜீவாத்மாவிலிருந்து வேறுபட்டதாகக் கருப்படுகிறது. ஞானத்துடன் கூடியவர்கள இவை இரண்டையும் உண்மையில் ஒன்றாகவே காண்கிறார்கள்.(56) மீண்டும் மீண்டும் நேரும் பிறப்பிறப்புகளை அஞ்சும் சாங்கியர்களும், யோகிகளும், ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்” என்றேன் {யாஜ்ஞவல்கியர் கந்தர்வன் விஸ்வாவசுவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்}.(57)அப்போது விஸ்வாவசு, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஜீவாத்மாவானது அழிவற்றது என்றும், உண்மையில் பரமாத்மாவில் இருந்து வேறாக இல்லாதது என்றும் நீர் சொல்கிறீர். எனினும், இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. இக்காரியம் குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(58) இது குறித்து, ஜைகீஷவ்யர், அசிதர், தேவலர், மறுபிறப்பாள தவசியான பராசரர், நுண்ணறிவைக் கொண்டவரான {புத்திமானான} வார்ஷகண்யர், பிருகு, பஞ்சசிகர், கபிலர், சுகர், கௌதமர், ஆர்ஷ்டிஷேணர், உயர் ஆன்மாவான கர்க்கர், நாரதர், ஆஸுரி, நுண்ணறிவைக் கொண்டவரான புலஸ்தியர், ஸனத்குமாரர், உயர் ஆன்மாக் கொண்ட சுக்கிரர் மற்றும் என் தந்தையான கசியபர் ஆகியோரின் உரையாடல்களை நான் கேட்டிருக்கிறேன். அதற்கடுத்து, ருத்திரன் மற்றும் நுண்ணறிவுமிக்க விஸ்வரூபர், பல்வேறு தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தைத்தியர்கள் இது குறித்த செய்த உரையாடல்களையும் நான் கேட்டிருக்கிறேன். ஞானங்கள் அனைத்தின் நித்திய பொருளையே அவர்கள் பொதுவாக உரையாடுவதால், நான் அவர்கள் சொல்லும் அனைத்தையும் அடைந்திருக்கிறேன்.(59-63)
எனினும், உமது நுண்ணறிவின் துணை கொண்டு அவற்றைக் குறித்து நீர் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். நீர் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவராகவும், சாத்திரங்களைக் கற்பிக்கும் கல்விமானாகவும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவராகவும் இருக்கிறீர்.(64) நீர் அறியாதது ஏதுமில்லை. ஓ! பிராமணரே, தேவர்கள் மற்றும் பித்ருக்களின் உலகங்களின் விளக்கப்படும் ஸ்ருதிகளின் பெருங்கடலாக நீர் இருக்கிறீர்.(65) ஒளிக்கோள்கள் அனைத்தின் நித்திய தலைவனான ஆதித்தியனே (இந்த ஞானக்கிளையின் காரியத்தில்) உமது ஆசான் என்று பிரம்மலோகத்தில் வசிக்கும் பெரும் முனிவர்கள் சொல்கின்றனர்.(66) ஓ! யாஜ்ஞவல்கியரே, ஓ! பிராமணரே, சாங்கியர்களின் மொத்த அறிவியலையும், அதிலும் குறிப்பாக யோகிகளின் சாத்திரங்களையும் நீர் அடைந்திருக்கிறீர்.(67) அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் குறித்து முழுமையாக அறிந்த நீர், விழிப்படைந்த ஞானத்தைக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை. தயிரிலிருந்து வெண்ணையைத் திரட்டி எடுப்பதைப் போல அந்த ஞானத்தைக் (குறித்து நீர் உரையாடுவதை நான்) கேட்க விரும்புகிறேன்” என்றான் {கந்தர்வன் விஸ்வாவசு}.(68)
யாஜ்ஞவல்கியர் {ஆகிய நான்}, “ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே, நீ ஞானங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளவல்லவனாவாய். எனினும், நீ கேட்பதால், என் ஆசானிடமிருந்து {சூரியனிடமிருந்து} பெற்ற வகையிலேயே நான் உனக்குச் சொல்கிறேன்.(69) புத்தியற்ற பிரகிருதியானது, ஜீவனால் உணரப்படுகிறது. எனினும், ஓ! கந்தர்வா, ஜீவனைப் பிரகிருதியால் உணர முடியாது.(70) ஜீவனானது பிரகிருதியில் பிரதிபலிக்கப்படுவதன் விளைவால், பின்னது {பிரகிருதியானது} சாங்கியர்களாலும், ஸ்ருதிகளில் குறிப்பிடப்படும் மூலக் கோட்பாடுகளை அறிந்த யோகிகளாலும் பிரதானம் என்றழைக்கப்படுகிறது.(71) ஓ! பாவமற்றவனே, மற்றது {ஆத்மாவானது}, இருபத்துநான்காவதும் (பிரகிருதியும்}, இருபத்தைந்தாவதும் {ஆன்மாவும்) காணப்படுவதைக் காண்கிறது; இருபத்தாறாவது காணப்படுவதைக் காணாதிருக்கிறது[9].(72) இருபத்தைந்தாவதானது {ஆன்மாவானது}, தன்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை எனக் கருதுகிறது. எனினும், உண்மையில், தன்னைக் காணும் அஃதை (இருபத்தாறாவதை {பரமாத்மாவை} ) அது {இருபத்தைந்தாவது} காண்பதில்லை[10].(73)ஞானம் கொண்ட மனிதர்கள், உண்மையில் சார்பற்ற இருப்பைக் கொண்ட இருபத்தைந்தாவதோடு அல்லது ஆன்மாவோடு, (புத்தியற்ற அல்லது செயலற்ற பிரகிருதியான) இருபத்துநான்காவது அடையாளங்காணப் படுவதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. மீனானது நீரில் வாழ்கிறது. அது தன் இயல்பால் தூண்டப்பட்டே அங்கே இருக்கிறது.(74) நீரில் வாழும் மீனானது, அதனிலிருந்து தனியாகக் கருதப்படுவதைப் போலவே, இருபத்தைந்தாவதும், அது தொடர்ந்து இருபத்துநான்காவது அல்லது பிரகிருதியுடன் தொடர்புநிலையில் இருந்தாலும், பிரகிருதியில் இருந்து தனிப்பட்ட சார்பற்ற உண்மையான நிலையிலேயே உணரப்பட வேண்டும். நான் என்ற மமதையில் மூழ்கும்போது, இருபத்தாறாவதோடு {பரமாத்மாவோடு} கூடிய தன் அடையாளத்தைப் புரிந்து கொள்ள முடியாத போது, பிரகிருதியுடன் தானே இருப்பதால் உண்டாகும் மாயையில் பீடிக்கப்படும் விளைவாலும், தான் சிந்திக்கும் முறையினாலும், ஜீவாத்மாவனது, எப்போதும் {மமதையில்} மூழ்கவே செய்தாலும், அத்தகைய மமதையில் இருந்து விடுபடும்போது மேல்நோக்கி எழுகிறது.(75,76) தான் ஒன்று என்றும், தான் வசிக்கும் பிரகிருதியானது மற்றொன்று என்றும் உணர்வதில் ஜீவாத்மா வெல்லும்போது, ஓ மறுபிறப்பாளனே {கந்தர்வன் விஸ்வாவசுவே}, அது பரமாத்மாவைக் காண்பதில் வென்று, அண்டத்தோடு ஒன்றும் நிலையை அடைகிறது.(77) ஓ! மன்னா, பரம் ஒன்றும், இருபத்தைந்தாவது (அல்லது ஜீவாத்மா) மற்றொன்றுமாகும். எனினும், பரமானது ஜீவாத்மாவுக்கு மேலிருப்பதன் விளைவால், ஞானிகள் அவை இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்.(78)
பிறப்பிறப்பை அஞ்சுபவர்களும், இருபத்தாறாவதன் {பரமாத்மாவின்} காட்சியால் அருளப்பட்டவர்களும், உடல் மற்றும் மனத்தூய்மை கொண்டவர்களும், பரமாத்மாவில் பக்தி கொண்டவர்களுமான யோகிகளும், சாங்கிய தத்துவ அமைப்பைப் பின்பற்றுபவர்களும், இந்தக் காரணங்களினாலேயே ஜீவாத்மாவை அழிவற்றதாக {ஜீவாத்மா அழிவற்றது என்ற கருத்தை} வரவேற்பதில்லை[11]. ஒருவன் பரமாத்மாவைக் கண்டு, தன் தனித்துவ நனவுநிலையை {அகங்காரத்தை} இழந்து, தன்னைப் பரத்துடன் அடையாளம் காணும்போது, அவன் அனைத்தையும் அறிந்தவனாகி, அனைத்தையும் அறிந்த அத்தகைய நிலையால், மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து விடுபடுகிறான். ஓ! பாவமற்றவனே, புத்தியற்ற பிரகிருதி, புத்தியுடன் கூடிய ஜீவாத்மா மற்றும் அனைத்தையும் அறிந்த பரமாத்மா ஆகியவற்றைக் குறித்து ஸ்ருதிகளில் உள்ள குறியீடுகளின்படியே நான் உனக்கு உண்மையாகச் சொல்லியிருக்கிறேன். அறிவது மற்றும் அறியப்படுவது ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனும், ஞானம் மற்றும் அறியப்பட்டது ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனுமான மனிதன், அண்டத்தின் மூலக் காரணமான கேவலம் {முழுமையாகவும்} மற்றும் கேவலமற்ற {முழுமையற்றதாகவும்} என இரண்டாகவும், ஜீவாத்மா {இருபத்தைந்தாவது} மற்றும் பரமாத்மாவாகிய {இருபத்தாறாவதுமாகிய} இரண்டாகவும் இருக்கிறான்” என்றேன் {யாஜ்ஞவல்கியன் என்கிற நான்}.(79-82)விஸ்வாவசு, “ஓ! பலமிக்கவரே, தேவர்களின் மூலப்பொருளாக இருக்கும் விடுதலையை {முக்தியைக்} குறித்துப் போதுமான அளவுக்கு முறையாக நீர் சொல்லிவிட்டீர். சிறந்த உண்மையை நீர் சொன்னீர். தீராத அருள் எப்போதும் உம்மிடம் இருக்கட்டும், உமது மனம் எப்போதும் புத்தியுடன் கலந்திருக்கட்டும்” என்றான்”.(83)
யாஜ்ஞவல்கியர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கந்தர்வ இளவரசன் {விஸ்வாவசு}, ஒளிமிக்க அழகில் ஒளிர்ந்தபடியே சொர்க்கத்தை நோக்கிச் சென்றான். என்னைவிட்டுச் செல்லும் முன் அந்த உயர் ஆன்மா {விஸ்வாவசு}, என்னை வலம் வந்து முறையாகக் கௌரவித்தான், நானும் உயர்வான நிறைவுடன் அவனைப் பார்த்தேன்.(84) ஓ! மன்னா {தேவராதா}, என்னிடம் இருந்து பெற்ற அறிவியலை, பிரம்மலோகத்தில் வசிக்கும் தேவர்கள், பிற தேவர்கள், பூமியில் வசிப்போர், பாதாளலோகவாசிகள் மற்றும் விடுதலை {முக்தி} பாதையைப் பின்பற்றுவோருக்கு அவனே {விஸ்வாவசுவே} கற்பித்தான்.(85) சாங்கியர்கள், தங்கள் அமைப்பின் நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். யோகிகள், தங்கள் அமைப்பில் கற்பிக்கப்படும் நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தங்கள் விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் வேறு பிறரும் இருக்கின்றனர். அவர்களிடம் இந்த அறிவியல் புலப்படத்தக்க கனிகளை உண்டாக்கும்.(86) ஓ! மன்னா, விடுதலையானது {முக்தியானது / மோக்ஷமானது}, ஞானத்தில் இருந்தே உண்டாகிறது. ஞானமில்லாமல் அஃதை ஒருபோதும் அடைய முடியாது. ஓ! ஏகாதிபதி, ஞானிகள் இதையே சொல்கின்றனர். எனவே, பிறப்பிறப்பில் இருந்து தன்னை விடுதலை அடையச் செய்யும் உண்மை ஞானத்தை அனைத்து விவரங்களுடன் அறிவதில் ஒருவன் முனைப்பைக் காட்ட வேண்டும்.(87) நம்பிக்கையுள்ள ஒருவன், பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியனிடமிருந்தோ, வைசியனிடமிருந்தோ, தாழ்ந்த பிறவியைச்சார்ந்த ஒரு சூத்திரனிடமிருந்தோ கூட அந்த ஞானத்தை அடைய வேண்டும். அத்தகைய ஞானத்தில் எப்போதும் அவன் மதிப்பைக் காட்ட வேண்டும். நம்பிக்கையுள்ள ஒருவனைப் பிறப்பிறப்பால் பீடிக்க முடியாது[12].(88)அனைத்துவகை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களும் பிராமணர்களே. அனைவரும் பிரம்மத்திலிருந்தே எழுந்தனர். அனைத்து மனிதர்களும் பிரம்மத்தையே சொல்கிறார்கள்[13]. பிரம்மத்தில் இருந்து பெறப்பட்டு, அதை {பிரம்மத்தை} நோக்கியே செலுத்தப்படும் புத்தியின் துணையுடன், பிரகிருதி மற்றும் புருஷன் ஆகியவற்றைக் குறித்த இந்த அறிவியலை நான் கற்பிக்கிறேன். உண்மையில் இந்த மொத்த அண்டமும் பிரம்மமே.(89) பிராமணர்கள் பிரம்மாவின் வாயிலிருந்தும், க்ஷத்திரியர்கள் கரங்களில் இருந்தும், வைசியர்கள் தொப்புளிலிருந்தும், சூத்திரர்கள் அவனது பாதங்களில் இருந்து உண்டானார்கள். (இவ்வழியிலேயே உண்டான) அனைத்து வகையினரும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாகக் கருதப்படக்கூடாது.(90) ஓ! மன்னா {தேவராதா}, அறியாமையால் தூண்டப்படும் மனிதர்கள் அனைவரையும், இறப்பையும், பிறப்பையும் அடையச் செய்யும் காரணமாக இருப்பது செயல்களே[14]. ஞானமற்றவர்களான அனைத்து வகை {வர்ண} மனிதர்களும், பயங்கர அறியாமையால் இழுத்துச் செல்லப்பட்டு, பிரகிருதியில் இருந்து உண்டாகும் கோட்பாடுகளின் மூலம் பல்வேறு வகைகளில் {வர்ணங்களில்} வீழ்கிறார்கள்.(91) இக்காரணத்தினாலேயே அனைவரும் ஞானத்தை அடைய முனைய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அஃதை {அந்த ஞானத்தை} அடைய முனைய வேண்டும் என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஞானம் கொண்ட ஒருவனே பிராமணனாவான். (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களாகிய) பிறரும் ஞானத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, இந்த விடுதலை {முக்தி} அறிவியல் அனைவருக்குமானதாகும். ஓ! மன்னா, ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது[15].(92) உன்னால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் வாய்மைக்கு ஏற்புடைய வகையில் என்னால் பதிலளிக்கப்பட்டது. எனவே, துன்பங்கள் அனைத்தையும் நீ களைவாயாக. இவ்விசாரணையின் {பொருளின்} மறு எல்லைக்குச் செல்வாயாக {ஞானத்தின் மறுகரையை அடைவாயாக}. உன் கேள்விகள் நன்றாக இருந்தன. எப்போதும் உன் சிரத்தில் அருளிருக்கட்டும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}”.(93)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “நுண்ணறிவைக் கொண்ட யாஜ்ஞவல்கியரால் இவ்வாறு கற்பிக்கபட்ட மிதிலையின் மன்னன் {தேவராதன்} மகிழ்ச்சியால் நிறைந்தான்.(94) அம்மன்னன், அந்த முதன்மையான தவசியை வலம் வந்து அவரைக் கௌரவித்தான். மன்னன் விடைகொடுத்ததும், அவர் {யாஜ்ஞவல்கியர்} அவனது சபையில் இருந்து புறப்பட்டார். விடுதலை {முக்தி} அறம் குறித்த ஞானத்தை அடைந்த மன்னன் தேவராதன் தன் ஆசனத்தில் அமர்ந்து,(95) பத்து லட்சம் பசுக்களையும், பெரும் அளவிலான தங்கத்தையும், பெரும் அளவிலான ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களையும் தீண்டி, அவற்றைப் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(96) அந்த முதிர்ந்த மன்னன் {தேவராதன்}, விதேஹர்களின் ஆட்சியுரிமையில் தன் மகனை நிறுவிவிட்டு, யதிகளின் நடைமுறைகளைப் பின்பற்றி வாழத் தொடங்கினான்.(97) அம்மன்னன், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) பொதுவான கடமைகள் மற்றும் கடமை தவறுதல்கள் {தர்மாதர்மங்கள்} அனைத்தையும் சிறுமையாக நினைத்து, சாங்கியர்கள் மற்றும் யோகிகளின் அறிவியலை முழுமையாகக் கற்கத் தொடங்கினான்.(98) முடிவற்றவனாகத் தன்னைக் கருதிய அவன், சார்பற்ற, நித்தியமான ஒருவனை {பரமனை} மட்டுமே சிந்திக்கத் தொடங்கினான். பொதுவான கடமைகள் மற்றும் கடமை தவறல்கள், அறம் மற்றும் மறம், வாய்மை மற்றும் பொய்மை,(99) பிறப்பு மற்றும் இறப்பு, பிரகிருதியால் உண்டாகும் கோட்பாடுகள் தொடர்புடைய பிற பொருட்கள் அனைத்தையும் அவன் கைவிட்டான்.(100)
சாங்கியர்களும், யோகிகளும், தங்கள் அறிவியல்களின் போதனைப்படியே, இந்த அண்டத்தைப் புலப்படுவது மற்றும் புலப்படாதது ஆகியவற்றின் செயல்பாட்டு விளைவு எனவே கருதுகிறார்கள்.(101) தற்சார்புடையதும், உயர்ந்ததில் உயர்ந்ததும், நித்தியமானதும், தூய்மையானதுமான பிரம்மமானது நன்மை மற்றும் தீமையில் இருந்து விடுபட்ட ஒன்றாக இருப்பதாகக் கல்விமான்கள் சொல்கிறார்கள். எனவே, ஓ! ஏகாதிபதி, நீ தூய்மையடைவாயாக.(102) கொடையாளி, கொடைபெறுபவன், கொடை, கொடையளிக்கப்பட விதிக்கப்பட்டவை ஆகியன அனைத்தும் புலப்படாத ஆன்மாவாகவே கருதப்படுகின்றன. ஆன்மாவே அந்த ஆன்மாவின் ஒரே உடைமையாகும். எனவே, ஒருவனுக்கு அந்நியனாக எவன் இருக்க முடியும்? நீ எப்போதும் இவ்வழியிலேயே சிந்திப்பாயாக. ஒருபோதும் வேறு வகையில் சிந்திக்காதே.(103,104) குணங்களுடன் கூடிய பிரகிருதி எது, குணங்களைக் கடந்த புருஷன் எது என்பதை அறியாதவனே, அந்த ஞானமற்றவனே, புனித நீர்நிலைகளுக்குச் சென்று வேள்விகளைச் செய்கிறான்[16].(105) ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரா}, ஒருவன் வேத கல்வியாலோ, தவங்களாலோ, வேள்விகளாலோ ஒருபோதும் பிரம்ம நிலையை அடைய முடியாது. புலப்படாதவன், அல்லது பரமனை உணர்வதில் வென்றால் மட்டுமே அவன் மதிப்புமிக்கவனாகக் கருதப்படுகிறான்.(106) மஹத்திடம் காத்திருப்பவர்கள் {மஹத்தை பூஜிக்கிறவர்கள்} மஹத்தின் உலகங்களை அடைகிறார்கள். நனவுநிலையிடம் {அகங்காரத்திடம்} காத்திருப்பவர்கள், நனவுநிலைக்குரிய இடத்தை அடைகிறார்கள். உயர்ந்ததிடம் காத்திருப்பவர்கள், இவற்றைவிட உயர்ந்த இடங்களை அடைகிறார்கள்[17].(107)சாத்திரங்களைக் கற்ற கல்விமான்களும், புலப்படாத பிரகிருதியைவிட உயர்ந்ததாக இருக்கும் நித்திய பிரம்மத்தை உணர்வதில் வென்றவர்களுமான மனிதர்கள், பிறப்பிறப்பைக் கடந்ததும், இருப்பில் உள்ளதும், இல்லாதிருப்பதும், குணங்களில் இருந்து விடுபட்டதுமான நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(108) நான் இந்த ஞானம் அனைத்தையும் ஜனகனிடம் இருந்து பெற்றேன். ஜனகன் அதை யாஜ்ஞவல்கியரிடம் இருந்து அடைந்தான். ஞானமே மிக மேன்மையானது. வேள்விகளை அதனோடு ஒப்பிட முடியாது. ஞானத்தின் துணையாலேயே ஒருவன், இக்கட்டுகளும், ஆபத்துகளும் நிறைந்த உலகமெனும் பெருங்கடலைக் கடப்பதில் வெல்கிறான். வேள்விகளின் மூலம் ஒருவனால் அந்தப் பெருங்கடலை ஒருபோதும் கடக்க முடியாது.(109) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறப்பிறப்பு மற்றும் பிற தடைகளை ஒருவன் சாதாரண முயற்சியின் மூலம் கடக்க முடியாது. வேள்விகள், தவங்கள், நோன்புகள் மற்றும் நியமங்களால் மனிதர்கள் {மோக்ஷத்தையடைவதில்லை;} சொர்க்கத்தையே அடைகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கிருந்து மீண்டும் பூமியிலேயே விழுகிறார்கள்.(110) எனவே, மிகத் தூய்மையானதும், அருளப்பட்ட நிலையும், களங்கமற்றதும், புனிதமானதும், (விடுதலையாக இருப்பதால்) அனைத்து நிலைகளையும் கடந்திருப்பதுமான பர நிலையை நீ மதிப்புடன் துதிப்பாயாக. ஓ மன்னா, க்ஷேத்திரத்தை உணர்வதன் மூலம், ஞானமீட்டும் வேள்வியைச் செய்வதன் மூலம் நீ உண்மையில் ஞானியாவாய்.(111) பழங்காலத்தில் யாஜ்ஞவல்கியர், உபநிஷதக் கல்வியின் மூலம் அடையப்படும் நன்மையை மன்னன் ஜனகனுக்குச் செய்தார். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான பரத்தைக் குறித்தே அந்தப் பெரும் முனிவர் {யாஜ்ஞவல்கியர்}, மிதிலையின் மன்னனிடம் {ஜனக குல தேவராதனிடம்} உரையாடினார். அஃது அவனை, மங்கலமானதும், அழிவற்றதும், அனைத்து வகைத் துன்பங்களையும் கடந்திருப்பதுமான பிரம்ம நிலையை அடையத்தக்கவனாக்கியது” {என்றார் பீஷ்மர்}.112.
ஜராமரணம்! – சாந்திபர்வம் பகுதி – 320-முதுமை மற்றும் மரணத்தைக் கடக்கும் வழிமுறை குறித்து ஜனகனுக்குச் சொன்ன பஞ்சசிகர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பெரும் சக்தியையும், பெரும் செல்வத்தையும் பெற்ற பிறகு, நெடுங்காலத்தை வாழ்நாளாகப் பெற்ற பிறகு, ஒருவன் எவ்வாறு மரணத்தைத் தவிர்ப்பதில் வெல்வான்?(1) தவங்கள், (வேதங்களில் விதிக்கப்பட்ட) பல்வேறு செயல்களைச் செய்வது, ஸ்ருதிகளில் ஞானம், மருந்துகள் உண்பது ஆகிய இந்த வழிமுறைகளில் எதன் மூலம் ஒருவன் முதுமையையும், மரணத்தையும் தவிர்ப்பதில் வெல்லலாம்?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம், “இது தொடர்பாகப் பழங்கதையில், நடைமுறையில் பிக்ஷுவாக {சந்நியாசியாக} இருந்த பஞ்சசிகருக்கும், ஜனகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகன், வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், கடமைகள் {தர்மங்கள்} அனைத்தின் நோக்கம் மற்றும் பொருள் குறித்துத் தான் {ஜனகன்} கொண்டிருந்த ஐயங்கள் அனைத்தும் நீங்கியவருமான பெரும் முனிவர் பஞ்சசிகரிடம் கேள்வி கேட்டான்.(4) மன்னன் {ஜனகன்}, “ஓ! புனிதமானவரே, எவ்வொழுக்கத்தின் மூலம் ஒருவன் முதுமையையும், மரணத்தையும் கடக்கலாம்? தவங்களாலா? புத்தியாலா, (வேள்விகள் மற்றும் நோன்புகள் போன்ற) அறச்செயல்களாலா? சாத்திரக் கல்வி மற்றும் ஞானத்தாலா?” என்று கேட்டான்.(5)
விதேஹர்களின் ஆட்சியாளனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், புலப்படாத அனைத்தின் பொருட்களை அறிந்தவரும், கல்விமானுமான பஞ்சசிகர், “(முதுமை மற்றும் மரணம் ஆகிய) இவை இரண்டையும் தவிர்க்க முடியாது; எந்தச் சூழ்நிலையிலும் இதைத் தவிர்க்க முடியாது என்பதும் உண்மையுமல்ல.(6) பகல்களோ, இரவுகளோ, மாதங்களோ நிற்பதில்லை. நிலையற்றவனாக இருந்தாலும், (நிவிருத்தி அறம் அல்லது செயல்கள் அனைத்தையும் தவிர்த்தல் எனும்) நித்திய {நிலையான} பாதையைப் பின்பற்றும் மனிதனால் மட்டுமே பிறப்பிறப்பைத் தவிர்ப்பதில் வெல்ல முடியும்[1].(7) அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. முடிவிலா கால வெள்ளத்தில் உயிரினங்கள் அனைத்தும் நிற்காமல் பிறந்து கொண்டிருப்பது காணப்படுகிறது. (மீட்பதற்கு) ஓர் ஓடமும் இல்லாததும், முதுமை மற்றும் மரணம் என்ற இருபெரும் முதலைகளால் தொற்றப்பட்டதுமான முடிவிலா கால வெள்ளத்தில் பிறப்பவை, தம் துணைக்கு யாருமில்லாமல் மூழ்கிப்போகின்றன.(8)அந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் ஒருவன், உதவி பெற நண்பன் எவனையும் காண்பதிலும், வேறு எவனது நலத்தில் ஈர்க்கப்படுவதிலும் தவறுகிறான்.(9) அவன், தன் பாதையில் மட்டுமே மனைவிகளையும், பிற நண்பர்களையும் சந்திக்கிறான். எந்தக் காலத்திலும் எவருடனும் இத்தகைய தோழமையை அவன் அதற்கு முன்பு அனுபவிப்பதில்லை.(10) கால வெள்ளத்தில் பிறக்கும் உயிரினங்கள், காற்றால் அசைக்கப்பட்டுப் பேரொலியுடன் ஒன்றையொன்று சந்திக்கும் மேகத்திரள்களைப் போல ஒருவருக்கொருவர் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றனர்.(11) முதுமையும், மரணமும் ஓநாய்களைப் போல உயிரினங்கள் அனைத்தையும் விழுங்குபவையாகும். உண்மையில் அவை, பலமிக்கவை மற்றும் பலமற்றவை, குட்டை மற்றும் நெட்டையான அனைத்தையும் விழுங்குகின்றன.(12)
எனவே, நிலையற்றவையாக இருக்கும் உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் ஆன்மா மட்டுமே என்றென்றும் {நித்தியமாக} நிலைத்திருக்கிறது. உயிரினங்கள் பிறக்கும்போது அவன் ஏன் மகிழ வேண்டும்? அவை இறக்கும் போது அவன் ஏன் வருந்த வேண்டும்?(13) ‘எங்கிருந்து நான் வந்தேன்? நான் யார்? நான் எங்கே செல்லப் போகிறேன்? நான் யாருடையவன்? எதன் முன்னால் நான் ஓயப்போகிறேன்? {இனி எங்கே இருக்கப் போகிறேன்?} நான் என்னவாகப் போகிறேன்?’ என்று எந்தக் காரணத்திற்காகவும், எதற்காகவும் நீ ஏன் வருந்த வேண்டும்?(14) (உன் செயல்களுக்கு) உன்னைத் தவிர வேறு யார் சொர்க்கத்தையோ, நரகத்தையோ காணப் போவது? எனவே சாத்திரங்களை வீசியெறியாமல் ஒருவன் கொடைகளை அளிக்கவும், வேள்விகளைச் செய்யவும் வேண்டும்” என்றார் {பஞ்சசிகர்}.(15)
முக்தலக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 321-முக்தி அறிகுறிகள் முதலியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தர்மத்வஜனுக்கும், பிக்ஷுகினி ஸுலபைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தின் அரச முனியே, இல்லற வாழ்வுமுறையைக் கைவிடாமல், புத்தியையும் (பிற புலன்களையும்) அழிப்பதன் மூலம் கிட்டும் விடுதலையை {முக்தியை} எவரும் அடைந்திருக்கிறார்களா? இஃதை எனக்குச் சொல்வீராக.(1) திரள் மற்றும் நுட்பமான வடிவத்தை {லிங்க சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும்} எவ்வாறு கைவிடமுடியும்? ஓ! பாட்டா, விடுதலையின் உயர்ந்த மகிமை என்ன என்பதைச் சொல்வீராக?” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜனகனுக்கும் {தர்மத்வஜனுக்கும்}, சுலபைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) பழங்காலத்தில் ஜனககுலத்தைச் சார்ந்தவனும், தர்மத்யஜன் {தர்மத்வஜன்} என்ற பெயரைக் கொண்டவனுமான ஒருவன் மிதிலையின் மன்னனாக இருந்தான். அவன் துறவற நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தான்.(4) அவன் வேதம், மோக்ஷசாத்திரங்கள், மன்னர்களுக்குரிய கடமை சார்ந்த சாத்திரங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருந்தான். அவன் தன் புலன்களை அடக்கி இந்தப் பூமியை ஆண்டுக் கொண்டிருந்தான்.(5) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உலகில் அவனது நல்லொழுக்கத்தைக் கேள்விப்பட்டவர்களும், ஞானத்தை அறிந்தவர்களுமான ஞானிகள் பலர், அவனைப் போல இருக்க விரும்பினர்.(6) அதே சத்திய யுகத்தில், துறவியும் {பிக்ஷுகியும்}, சுலபை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு பெண்மணி யோக கடமைகளைப் பயின்று பூமி முழுவதும் திரிந்து கொண்டிருந்தாள்.(7) அவ்வாறு பூமியில் திரிந்து கொண்டிருந்த சுலபை, பல்வேறு இடங்களைச் சார்ந்த தண்டிகள் பலரிடமிருந்து விடுதலை அறத்தில் {மோக்ஷதர்மத்தில்} அர்ப்பணிப்புடன் இருந்த மிதிலையின் ஆட்சியாளனை {தர்மத்யஜனைக்} குறித்துக் கேள்விப்பட்டாள்.(8) மன்னன் ஜனகனை {தர்மத்யஜனைக்} குறித்த இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, இஃது உண்மையா, இல்லையா என்பதை உறுதி செய்ய விரும்பிய சுலபை, ஜனகனிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினாள்.(9)தன் யோக சக்தியால், தனது பழைய வடிவத்தையும், குணங்களையும் கைவிட்ட சுலபை, களங்கமற்ற குணங்களும், ஒப்பற்ற அழகும் கொண்ட வடிவத்தை ஏற்றாள்.(10) தாமரை இதழ்களைப் போன்ற விழிகளையும், அழகிய புருவங்களையும் கொண்ட அந்தப் பெண்மணி, கண்ணிமைக்கும் நேரத்தில் மிகவிரைவான கணையின் வேகத்தில் விதேஹர்களின் தலைநகரை அடைந்தாள்.(11) பெரும் மக்கள் தொகையால் நிறைந்த மிதிலையெனும் தலைநகரை அடைந்த அவள், துறவியின் தோற்றம் பூண்டு அம்மன்னன் முன்னிலையில் சென்றாள்.(12) அவளது அழகிய வடிவைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்த அந்த ஏகாதிபதி {தர்மத்யஜன்}, யார் அவள்? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாள் என்பதை விசாரித்தான்.(13) அவளை {சுலபையை} வரவேற்ற அவன் {தர்மத்வஜன்}, அவளுக்கான சிறந்த இருக்கையை அளித்து, அவளது கால்களைக் கழுவி கொள்ள நீரைக் கொடுத்து கௌரவித்து, புத்துணர்வைத் தரும் சிறந்த பொருட்களால் அவளை நிறைவு செய்தான்.(14) முறையாகப் புத்துணர்வை அடைந்து, தனக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பல் சடங்குகளால் நிறைவையடைந்த பெண் துறவியான சுலபை, அமைச்சர்கள் சூழ, கல்விமான்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த மன்னனை (விடுதலையறத்தில் {மோக்ஷதர்மத்தில்} அவனது பற்றை அறிவிக்கும்படி அவனைத்) தூண்டினாள்.(15)
நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுவதன் மூலம் விடுதலை அடைவதில் ஜனகன்{தர்மத்வஜன்} வென்றுவிட்டானா என்பதில் ஐயம் கொண்டவளும், யோக சக்தியுடையவளுமான சுலபை, தன் புத்தியைக் கொண்டு மன்னனின் புத்திக்குள் நுழைந்தாள்.(16) மன்னனின் கண்களில் இருந்து வெளிப்படும் கதிர்களைத் தன் கண்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்களால் தடுத்த அந்தப் பெண்மணி, உண்மையை உறுதி செய்ய விரும்பி, யோகக் கட்டுகளைக் கொண்டு மன்னன் ஜனகனை {தர்மத்வஜனைக்} கட்டினாள்[1].(17) தனது வெல்லப்பட முடியாத தன்மையில் செருக்குடைய அந்தச் சிறந்த ஏகாதிபதி {தர்மத்வஜன்}, சுலபையின் நோக்கங்களை வீழ்த்தி, தன் பிரிதிறனால் அவளது தீர்மானத்தை அறிந்தான்[2].(18) மன்னன் தன் நுட்பமான வடிவில் அரசக் குடையும், செங்கோலும் இல்லாதிருந்தான். அந்தப் பெண்மணியான சுலபை அவளது நுட்பமான வடிவில் திரிதண்டம் இல்லாதிருந்தாள். ஒரே (திரள்) வடிவில் {மன்னன் தர்மத்யஜனின் உடலுக்குள்} இருந்த அவர்கள் இருவரும் {தர்மத்யஜனும், சுலபையும்} ஒருவருடனொருவர் உரையாடினர். அந்த ஏகாதிபதிக்கும், சுலபைக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்பாயாக.(19)ஜனகன் {தர்மத்யஜன் சுலபையிடம்}, “ஓ! புனிதமான பெண்மணியே, நீ அர்ப்பணிப்புடன் உள்ள ஒழுக்கமுறை யாது? நீ யாருடையவள்? எங்கிருந்து நீ வந்திருக்கிறாய்? இங்கே உன் காரியம் முடிந்த பிறகு, நீ எங்கே செல்லப் போகிறாய்?(20) மற்றவரின் சாத்திர அறிவை, வயதை, பிறவி வகையைக் கேள்வி கேட்காமல் எவராலும் உறுதி செய்ய முடியாது. எனவே, என்னிடம் வந்திருக்கும் நீ என்னுடைய இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.(21) அரசக்குடை, செங்கோல் முதலிய செருக்கனைத்திலிருந்து உண்மையில் விடுபட்டவனாக என்னை அறிவாயாக. நான் உன்னை முழுமையாக அறிய விரும்புகிறேன். நீ என்னால் மதிக்கத்தகுந்தவளாவாய்.(22) (இவ்வுலகில்) வேறு எவராலும் சொல்ல முடியாத விடுதலை {முக்தி} குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. பழங்காலத்தில் இந்தப் புகழ்பெற்ற ஞானத்தை யாரிடம் இருந்து அடைந்தேன் என்பதையும் சொல்கிறேன் கேட்பாயாக[3].(23) பராசர குலத்தைச் சார்ந்தவரும், சந்நியாச ஆசிரமத்தை ஏற்றவரும், மதிப்புமிக்கவரும் உயர் ஆன்மா கொண்டவருமான பஞ்சசிகரின் அன்புக்குரிய சீடன் நான்.(24) நான் ஐயங்கள் விலகியவனாக, சாங்கிய, யோக அமைப்புகளையும், நன்கறியப்பட்ட விடுதலை {முக்தி} பாதைகள் மூன்றுக்குமுரிய வேள்விகள் மற்றும் பிற சடங்குகளையும் முழுமையாக அறிந்தவனாகவும் இருக்கிறேன்[4].(25)பூமியில் திரிந்து, சாத்திரங்களால் குறிப்பிடப்படும் பாதையைப் பின்பற்றிய கல்விமானான பஞ்சசிகர், முன்பொரு மழைக்காலத்தில் நான்கு மாதங்கள் என் வசிப்பிடத்தில் மகிழ்ச்சியாக வசித்தார்.(26) சாங்கியர்களில் முதன்மையான அவர், வாய்மைக்கு ஏற்புடைய வகையிலும், புத்தியால் உணரக்கூடிய வகையிலும், விடுதலை {முக்தி} அடைவது குறித்துப் பல்வேறு வழிமுறைகள் குறித்து என்னிடம் பேசினார். எனினும், அவர் என் நாட்டைக் கைவிடச் சொல்லி எனக்கு ஆணையிடவில்லை.(27) பற்றில் இருந்து விடுபட்டு, பரப்பிரம்மத்தில் என் ஆத்மாவை நிலைநிறுத்தி, தோழமையால் அசையாமல், விடுதலை {முக்தி} குறித்துச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள மூன்று ஒழுக்கங்களை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்து வருகிறேன்.(28) (அனைத்து வகைப் பற்றிலும்) துறவு கொள்வதே விடுதலைக்கான உயர்ந்த வழிமுறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவனை விடுதலையடையச் செய்யும் துறவு ஞானத்தில் இருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஞானத்தில் இருந்து யோக முயற்சி எழுகிறது, அம்முயற்சியின் மூலம் ஒருவன் தன்னறிவை, அல்லது ஆத்ம ஞானத்தை அடைகிறான். ஞானத்தின் மூலம் ஒருவன் இன்பதுன்பங்களைக் கடக்கிறான். அதுவே அவனை மரணத்தைக் கடக்கச் செய்து உயர்ந்த வெற்றியை அடையவல்லவனாக்குகிறது.(30)
அந்த உயர்ந்த புத்தி (தன்னறிவு {ஆத்மஞானம்}) என்னால் அடையப்பட்டிருக்கிறது, அதன் படியே நான் முரண்பட்ட இரட்டைகளைக் கடந்திருக்கிறேன். இம்மையிலும் நான் திகைப்பில் {மயக்கத்தில்} இருந்து விடுபட்டவனாகவும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனாகவும் இருக்கிறேன்.(31) நீரால் நிறைந்து மென்மையான மண், (விதைக்கப்படும்) வித்தைத் துளிர்க்கச் செய்வதைப் போலவே, மனிதர்களின் செயல்களே மறுபிறப்பை உண்டாக்குகின்றன.(32) வித்திற்குத் துளிர்க்கும் திறனிருந்தாலும், கடாயில் வறுக்கப்பட்டால் துளிர்க்க இயலாததைப் போலவே,(33) என் புத்தியானது, துறவறம் பயின்ற புனிதமான பஞ்சசிகரின் போதனைகளால், புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொள்ளும் பலனை உண்டாக்காமல், ஆசையால் விளையும் உற்பத்திக் கோட்பாட்டில் இருந்து {என் புத்தி} விடுபட்டிருக்கிறது.(34) என் மனைவியிடம் அன்பையோ, பகைவர்களிடம் வெறுப்பையோ நான் அனுபவிப்பதில்லை. உண்மையில், பற்று மற்றும் கோபம் ஆகியவற்றின் {விருப்பு வெறுப்பின்} கனியற்ற தன்மையைக் கண்டு நான் அவை இரண்டில் இருந்தும் விலகியிருக்கிறேன்.(35)
என் வலக்கரத்தில் சந்தனம் பூசுபவன், என் இடக்கத்தைக் காயப்படுத்துபவன் ஆகிய இருவரையும் நான் ஒன்றாகவே கருதுகிறேன்.(36) என் (உண்மை) நோக்கத்தை அடைந்துவனாகவும், மகிழ்ச்சியானவனாகவும், மண்ணாங்கட்டியையும், கல்லையும், தங்கக்குவியலையும் ஒன்றாகப் பார்ப்பவனாகவும் இருகிறேன். அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனாக நான் இந்நாட்டை ஆள்வதில் ஈடுபடுகிறேன். இதன் விளைவால் திரிதண்டதாரிகள் அனைவராலும் நான் எங்கும் புகழப்படுகிறேன்.(37) விடுதலையை {முக்தியை} அறிந்த சில முதன்மையான மனிதர்கள், விடுதலைக்கு மூன்று பாதைகள் உண்டு என்று சொல்கிறார்கள். (ஞானம், யோகம் மற்றும் வேள்விச்சடங்குகளே இவை). சிலர், உலகின் பொருள்கள் அனைத்தையும் நோக்கமாகக் கொண்ட ஞானத்தையே விடுதலைக்கான வழிமுறையாகக் கருதுகிறார்கள். சிலர், (அகம் மற்றும் புறம் என்ற) இரண்டு செயற்பாடுகளையும் துறப்பதே வழிமுறை என்கின்றனர்.(38) விடுதலை குறித்த சாத்திரங்களை அறிந்த மற்றொரு வகை மனிதர்கள், ஞானமே ஒரே வழிமுறை என்று சொல்கிறார்கள். நுண்பார்வையுடன் கூடிய யதிகள் செயல்களே வழிமுறை என்று சொல்கின்றனர்.(39) உயர் ஆன்ம பஞ்சசிகர், ஞானம் மற்றும் செயல்கள் குறித்த கருத்துகள் இரண்டையும் புறந்தள்ளி மூன்றாவதையே ஒரே வழிமுறையாக அல்லது விடுதலைக்கான பாதையாகக் கருதினார்.(40)
இல்லற வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள் {கிருஹஸ்தர்கள்}, யமம் மற்றும் நியமத்துடன் இருந்தால் அவர்கள் சந்நியாசிகளுக்கு இணையானவர்களாவர். மறுபுறம், விருப்புவெறுப்பு, மனைவிகள், கௌரவம், செருக்கு, பற்று ஆகியவற்றுடன் கூடிய சந்நியாசிகள் இல்லறவாழ்வுமுறையை நோற்கும் மனிதர்களுக்கு இணையானவர்களாவர்[5].(41) ஞானத்தால் ஒருவன் விடுதலையை அடையமுடியுமெனில் திரிதண்டத்தில் விடுதலை இருக்கும் (ஏனெனில் அத்தகைய தண்டங்களைத் தரிப்பவர்கள் அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வேறு எதுவும் தடுக்காது). அவ்வாறெனில், குடையிலும், செங்கோலிலும் ஏன் விடுதலை கிட்டாது?, குறிப்பாகத் திரிதண்டம் தரிக்கவும், செங்கோல் தரிக்கவும் ஒரே காரணம் இருக்கும்போது ஏன் விடுதலை கிட்டாது?(42) ஒருவனுக்குக் குறிப்பிட்ட காரணங்களால் தேவைப்படும் பொருட்கள் மற்றும் செயல்களில் அவன் பற்று கொள்கிறான்.(43) ஒரு மனிதன், இல்லற வாழ்வுமுறையின் களங்கங்களைக் கண்டு (பெரும் தகுதி நிறைந்ததாகத் தான் கருதும்) மற்றொரு வாழ்வுமுறைக்காக அதைக் கைவிடும்போது, அத்தகைய புறக்கணிப்புக்கும், பின்பற்றுதலுக்கும் அவன் பற்றுகளில் இருந்து உடனே விடுபட்டுவிட்டதாகக் கருத முடியாது (அவன் செய்திருப்பதெல்லாம் முந்தைய வாழ்வு முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புதிய வாழ்வுமுறையில் பற்று கொண்டதை மட்டுமே).(44) அரசுரிமையானது, பிறரை கௌரவிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய முறைகள் நிறைந்தது. ஒரு துறவியின் வாழ்வும் அதே போன்றவை நிறைந்தவையே (ஏனெனில் அவர்களும் பிறரை கௌரவிக்கவும், தண்டிக்கவும் செய்கிறார்கள்). எனவே, இவ்வகையில் துறவிகளும் மன்னர்களும் ஒரே நிலையில் இருக்கிறார்கள் எனும்போது ஏன் துறவிகள் மட்டும் விடுதலையை அடைய வேண்டும்? மன்னர்கள் ஏன் அடையக்கூடாது?(45)எனவே, அரசுரிமை இருந்தபோதிலும், ஞானத்தால் மட்டுமே அனைத்துப் பாவங்களையும் கழுவிக்கொண்டு, பரப்பிரம்மத்தில் அவன் வாழ்ந்திருக்கிறான்.(46) காவி உடை அணிந்து, தலையை மழித்துக் கொண்டு, திரிதண்டமும், கமண்டலமும் ஏந்துவது ஒருவனுடைய வாழ்வுமுறையின் புற அடையாளங்கள் மட்டுமே ஆகும். ஒருவன் விடுதலை அடைவதற்குத் துணை புரிவதில் இவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது.(47) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையின் புற அடையாளங்களைப் பின்பற்றியபோதிலும், ஞானம் மட்டுமே ஒருவனைத் துன்பத்தில் இருந்து விடுதலையடையச் செய்யும் காரணமாக இருக்கும் எனும்போது, வெறும் அடையாளங்களைப் பின்பற்றுவது முற்றிலும் பயனற்றதாகும்.(48) அல்லது, அவற்றால் துன்பங்களைத் தணிக்க முடியும் என்பதைக் கண்டு நீ சந்நியாச அடையாளங்களைத் தரித்தால், நான் தரிக்கும் குடை மற்றும் செங்கோலில் ஏன் அந்தத் துன்பத்தைக் காணக்கூடாது?(49) விடுதலை {முக்தி} வறுமையில் இல்லை; அதே போலப் பற்றும் செழிப்பில் காணப்படுவதில்லை. ஒருவன் வறுமையில் இருந்தாலோ, செழிப்பாக இருந்தாலோ அவன் ஞானத்தால் மட்டுமே விடுதலையை அடைய முடியும்.(50)
(பொதுவாக மனிதர்களிடம்) பற்றை உண்டாக்கும் நாடு, மனைவிகள் என்ற வடிவில் அறம், பொருள் மற்றும் இன்பத்தை அனுபவிப்பதாக மேம்போக்காகத் தெரிந்தாலும் இக்காரணங்களால் நான் சுதந்திரமான நிலையில் வாழ்வதாக அறிவாயாக.(51) நாடு மற்றும் செல்வத்தால் உண்டாகும் கட்டு {பந்தம்}, பற்றுகளாலான கட்டு {பந்தம்} ஆகியவற்றை, விடுதலையைச் சொல்லும் சாத்திரங்கள் எனும் கல்லில் கூராக்கப்பட்ட துறவு எனும் வாளால் வெட்டிவிட்டேன்.(52) என்னைப் பொறுத்தவரையில் நான் இவ்வழியிலேயே என்னை விடுவித்துக் கொண்டேன். ஓ! பெண் துறவியே, நான் உன்னிடம் அன்பை வளர்க்கிறேன். ஆனால், நீ பின்பற்றும் வாழ்வுமுறைக்கேற்ற நடைமுறைகள் தொடர்பானதாக உன் நடத்தை இல்லை என்பதை நான் உன்னிடம் சொல்வதை அது {உன்னிடம் நான் கொண்டுள்ள அன்பு} தடை செய்யாது.(53) உன் வடிவில் பெரும் மென்மையை {மார்த்தவத்தைக்} கொண்டிருக்கிறாய். நீ அழகாக இருக்கிறாய். சிறந்த வடிவமைப்பை நீ கொண்டிருக்கிறாய். வயதின் இளமையுடனும் இருக்கிறாய். இவை அனைத்தும் இருந்து நீ நியமத்துடன் (புலனடக்கத்துடன்) இருக்கிறார். உண்மையில் நான் இஃதை ஐயுறுகிறேன்.(54) உண்மையில் நான் விடுதலையடைந்திருக்கிறேனா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக (யோக சக்தியின் துணையுடன் என்னுள் புகுந்து) என் உடலை நிறுத்தியிருக்கிறாய். இந்தச் செயல்பாடு, நீ தரிக்கும் அடையாளங்களுக்குரிய வாழ்வுமுறைக்குக் களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது.(55)
ஒரு யோகி ஆசையுடன் இருந்தால் அவன் தண்டந்தரிக்கத் தகுந்தவனல்ல. உன்னைப் பொறுத்தவரையில் நீ உன் தண்டத்தில் பற்று கொள்ளவில்லை. விடுதலை பெற்றவர்களைப் பொறுத்தவரையில் அவர்களும் வீழ்ச்சியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(56) உன் புத்தியின் துணையுடன் என் திரள் உடலில் நுழைந்து என்னுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொண்ட விளைவால் ஏற்படும் வரம்புமீறுதலைச் சொல்கிறேன் கேட்பாயாக.(57) நீ என் நாட்டுக்கு, அல்லது என் அரண்மனைக்கும் வந்த காரணம் என்ன? யாருடைய குறிப்பின் மூலம் நீ என் இதயத்திற்குள் {மனத்திற்குள்} நுழைந்தாய்?(58) நீ பிராமணப் பெண்ணாக இருப்பதால், முதன்மையான வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவளாக இருக்கிறாய். எனினும் என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு க்ஷத்திரியனாவேன். நம் இருவருக்கும் ஒரு சேர்க்கையும் இல்லை. வர்ணக்கலப்பைச் செய்யாதே.(59) விடுதலைக்கு வழிவகுக்கும் கடமைகளின் நடைமுறையில் நீ வாழ்கிறாய். நானோ இல்லற வாழ்வுமுறையை வாழ்கிறேன். எனவே, எதிரெதிரான இரு வாழ்வு முறைகளின் இயல்பற்ற கலவையால் உன் செயல் மற்றொரு தீமையையும் செய்திருக்கிறது.(60)
நீ என் கோத்திரத்தைச் சேர்ந்தவளா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. உன்னைப் பொறுத்தவரையிலும், நீயும் என்னை (நான் சார்ந்த கோத்திரத்தை) அறிய மாட்டாய். நீ என் கோத்திரமாகவே இருந்தால், இயல்பற்ற சேர்க்கையாக என் உடலில் நுழைந்ததன் மூலம் நீ மற்றொரு தீமையைச் செய்திருக்கிறாய்.(61) உன் கணவர் உயிரோடிருந்து, தொலைவான இடத்தில் வசித்துக் கொண்டிருந்தால், நீ விதிப்படி சேர்ந்திருக்க வேண்டியவனுடன் இல்லாததால் என்னுடனான இந்தச் சேர்க்கையின் மூலம் நான்காவது தீமையையும் செய்திருக்கிறாய்.(62) எந்தக் குறிப்பிட்ட காரியத்தை நிறைவேற்றும் நோக்கத்தால் தூண்டப்பட்டு இந்தப் பாவச் செயல்கள் அனைத்தையும் நீ செய்தாய்? நீ இவற்றை அறியாமையில் செய்கிறாயா? அல்லது பிறழ்புத்தியால் செய்கிறாயா?(63) உன் தீய இயல்பின் விளைவால் நீ முற்றிலும் சுதந்திரமானவளாக இருந்தாலோ, தடையற்ற நடத்தை கொண்டவளாக இருந்தாலோ, உனக்குச் சாத்திர அறிவு என ஏதும் இருந்தால், நீ செய்திருக்கும் அனைத்தும் தீமையை உண்டாக்கவல்லவை என்பதை நீ புரிந்து கொள்வாய்.(64) நீ செய்த இந்தச் செயல்களின் விளைவால் மன அமைதியை அழித்ததும் மூன்றாம் களங்கமாகும். உன் மேன்மையை வெளிக்காட்ட முயற்சி செய்ததன் மூலம் தீய பெண்ணின் அடையாளம் உன்னில் காணப்படுகிறது.(65)
உன் வெற்றியை உறுதி செய்ய விரும்பி நீ என்னை மட்டும் வீழ்த்த விரும்பவில்லை, (கல்விமான்களும், மிக மேன்மையான பிராமணர்களும் அடங்கிய) என் முழு சபையையும் நீ வெல்ல விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.(66) தகுதிமிக்க இந்தப் பிராமணர்கள் அனைவர் மீதும் இவ்வழியில் உன் கண்களைச் செலுத்துவதன் மூலம், இவர்கள் அனைவரையும் அவமதிக்கவும், (அவர்களை அவமதித்து) உன்னை மகிமைப்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறாய் என்பதும் வெளிப்படையாகத் தெரிக்கிறது.(67) யோக பலத்தில் நீ கொண்டிருக்கும் செருக்கால் திகைப்படைந்தும், (என் பலத்தைக் கண்டதில்) பிறந்த பொறாமையினாலும், உன் புத்தியை என் புத்தியோடு கலந்ததன் மூலம் உண்மையில் அமுதத்துடன் நஞ்சைக் கலந்துவிட்டாய்.(68) ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பும்போது ஏற்படும் சேர்க்கை அமுதம் போன்ற இனிமையாகும். எனினும், ஒரு பெண் விரும்பி நேரும் ஆணுக்கும், பெண்ணுக்குமான சேர்க்கையில், அவள் தன்னை விரும்பாத எதிர் பாலினத்தானை அடைந்தால், தகுதிக்கு {புண்ணியத்திற்குப்} பதிலாக, நஞ்சு போன்ற களங்கம் மட்டுமே விளையும்[6].(69) என்னைத் தீண்டுவதைத் தொடராதே. நான் அறவோன் என்பதை அறிவாயாக. உன் சாத்திரங்களின்படியே நீ செயல்படுவாயாக. நான் விடுதைலயடைந்தவனா? இல்லையா? என்று நீ செய்ய விரும்பிய விசாரணை நிறைவடைந்தது.(70)உன் ரகசிய நோக்கங்கள் அனைத்தையும் என்னிம் இருந்து மறைப்பது உனக்குத் தகாது. இவ்வாறு வேடம் போடுவதும், உன் நோக்கத்தை மறைத்துக் கொள்வதும், உன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைச் செய்தாயா? அல்லது (எனக்கு எதிரியான) வேறு மன்னனின் நோக்கத்தை நிறைவேற்ற வந்தாயா? என்பதை மறைப்பதும் உனக்குத் தகாது.(71) ஒரு மன்னனின் முன்போ; ஒரு பிராமணனின் முன்போ; பெண்களுக்குரிய குணங்களைக் கொண்ட மனைவியின் முன்போ ஒருவன் தன்னை வஞ்சகமாக மறைத்துக் கொள்ளக்கூடாது. இந்த மூவரிடமும் வஞ்சகமான வேடத்தில் தோன்றுவோர் விரைவில் அழிவையே சந்திப்பார்கள்.(72) மன்னர்களின் பலம் அவர்களுடைய அரசுரிமையில் இருக்கிறது. வேதங்களை அறிந்த பிராமணர்களின் பலம் வேதங்களில் இருக்கிறது. பெண்கள் அழகு, இளமை மற்றும் அருள்நிலையின் விளைவால் உயர்ந்த பலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.(73) இந்தப் பலங்களைப் பெற்றவர்கள் பலமிக்கவர்களாவர். எனவே, நன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும ஒருவன், இந்த மூவரிடமும், நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் அணுக வேண்டும். (இந்த மூவரிடமும்) நேர்மையின்மையும், வஞ்சகமும் வெற்றியை உண்டாக்கத் தவறும்.(74) எனவே, பிறப்பால் நீ சேர்ந்த வகை, உன் கல்வி, ஒழுக்கம், மனோ நிலை, இயல்பு மற்றும் நீ இந்த இடத்திற்கு வந்த நோக்கம் ஆகியவற்றை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றான் {ஜனக மன்னன் தர்மத்யஜன்}”.(75)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மன்னனால் இவ்வாறு இனிமையற்ற, முறையற்ற வகையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிந்திக்கப்பட்டாலும் சுலபை வெட்கமடையாதிருந்தாள்.(76) மன்னன் இந்த வார்த்தைகளைச்சொன்ன பிறகு, அந்த அழகிய சுலபை, தன்னை விட அழகான மறுமொழியைப் பின்வரும் சொற்களில் சொன்னாள்.(77)சுலபை {ஜனகமன்னன் தர்மத்வஜனிடம்}, “ஓ! மன்னா, ஒன்பது சொற்குற்றங்களில் இருந்தும், ஒன்பது தீர்மானப் பிழைகளில் {சொற்குற்றம் மற்றும் புத்தியின் குற்றங்களில்} இருந்தும் வாக்கானது எப்போதும் விடுபட்டிருக்க வேண்டும். தெளிவான பொருளைத் தரும் அதே வேளையில் அது நன்கறியப்பட்ட பதினெட்டு தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.(78) பொருள் மயக்கம் {ஸூக்ஷ்மம்}, தொடக்கவுரை மற்றும் முடிவுரையின் குறை நிறைகளை உறுதி செய்தல் {ஸாங்கியம்}, ஒப்பீட்டளவில் அந்தக் குறை நிறைகளின் பலம் மற்றும் பலவீனத்தை எடை போடுதல் {கிரமம்}, முடிவை நிறுவுதல் {நிர்ணயம்}, நம்பத்தகுந்த ஏற்புடைய தன்மை, அல்லது முடிவுரையோடு தொடர்புடையது {பிரயோஜனம்}, ஆகிய பொருளுடன் தொடர்புடைய இந்த ஐந்து தன்மைகளும் {காரியங்களும்}, வாக்கின் தகுதிகளாக {வாக்கியமாக} அமைகின்றன.(79) பொருள் மயக்கம் {கருத்தில் தெளிவின்மை} முதலிய இந்தத் தேவைகளின் தன்மைகளை அவற்றின் கலவையின்படி விளக்குகிறேன் கேட்பாயாக.(80)
ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக அறியப்படும் பொருட்களின் விளைவால், ஞானமானது அந்த வேறுபாட்டைச் சார்ந்திருக்கும்போதும், (காரியத்தைப் புரிந்து கொள்வதைப் பொறுத்தவரையில்) புத்தியானது அடுத்தடுத்த சொற்கலவைகளின் பல்வேறு கருத்துகளைச் சார்ந்திருக்கும்போதும், அது {புத்தி} தெளிவில்லாமல் {பொருள் மயக்கத்துடன்} இருப்பதாகச் சொல்லப்படுகிறது[7].(81) சாங்கியம் என்றழைக்கப்படும் (குறை நிறைகளை) உறுதிசெய்தலின் மூலம், (தொடக்கவுரை, முடிவுரைகளில் உள்ள) குறை நிறைகளை நீக்கி தற்காலிகமானப் பொருள்கள் பின்பற்றப்படுகின்றன[8].(82) (மேற்கண்ட நடைமுறையின் மூலம் உறுதிசெய்யப்பட்ட) குறை நிறைகளின் ஒப்பீட்டளவிலான பலம் மற்றும் பலவீனங்களைக் கருத்தில் கொள்வது, அல்லது கிரமம் எனப்படுவது, முன்னுரிமைகளில் உரிமையைத் தீர்மானிப்பது, அல்லது ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்களின் துணைத்தொடர்புகளை உள்ளடக்கியதாகும். இதுவே கிரமம் என்ற சொல்லுக்குத் தொடர்புடைய பொருளாகும், என வாக்கியங்கள், அல்லது உரைகளின் விளக்கங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(83) முடிவுரை என்பது இறுதித் தீர்மானமாகும். அறம் {தர்மம்}, பொருள் {அர்த்தம்}, இன்பம் {காமம்}, வீடு {மோக்ஷம்} என்று சொல்லப்படுவதில் குறிப்பாக அவை ஒவ்வொன்றும் என்னென்ன என்று சொல்லும் உரையே முடிவுரையாகும்[9].(84) விருப்பு வெறுப்பில் இருந்து உண்டாகும் துன்பம் பெரும் அளவில் அதிகரிக்கும். ஓ! மன்னா, இக்காரியத்தில் ஒருவன் பின்பற்றும் ஒழுக்கமே (அனுபவிக்கப்படும் துன்பத்தை விலக்கவல்ல) பிரயோஜனம் என்றழைக்கப்படுகிறது[10].(85)ஓ! மன்னா {தர்மத்வஜா}, பொருள் மயக்கம் முதலிய (எண்ணிக்கையில் ஐந்து) தன்மைகள் ஒன்றாகத் தோன்றும்போதே, புரிந்து கொள்ளக்கூடிய ஒரு முழுமையான வாக்கியமாக அஃது அமையும்[11].(86) நான் சொல்லும் வார்த்தைகள் பொருள் நிறைந்தவையும்{1}, (சொல் ஒவ்வொன்றும் பல பொருட்களின் அடையாளங்களாக இல்லாததன் விளைவால்) பொருள் மயக்கத்தில் இருந்து விடுபட்டவையும்{2}, காரணக் காரியத் தொடர்புடையதும் {தர்க்கப்பூர்வமானதும்}{3}, கூறியது கூறல், அல்லது ஒருபொருட்பன்மொழி ஆகியவற்றில் இருந்து விடுபட்டதும்{4}, மென்மையானதும்{5}, நிச்சயமானதும்{6},(87) மிகைப்பேச்சில் இருந்து விடுபட்டதும்{7}, ஏற்புடையதும், அல்லது இனிமையானதும்{8}, உண்மை நிறைந்ததும்{8}, (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) முத்தொகுப்புக்கு ஏற்புடையதும்{9}, (பிராகிருதத்தில் இருந்து விடுபட்டதும்) பண்பட்டதும்{10},(88) கோளமற்றதும், அல்லது குற்றமில்லாததும்{11}, கடுமையற்றதும், அல்லது புரிந்து கொள்ளக் கடினமற்றதும்{12}, முறையாக வகைப்படுத்தப்பட்டதும்{13}, பொருளைப் பொறுத்தவரையில் வலிந்து பெறப்படாததும்{14}, காரணம் மற்றும் விளைவில் {காரணக் காரியங்களில்} ஒன்றுக்கொன்று சரியானதும்{15}, தனித்தனியான ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பொருளைக் கொண்டதுமாக{16} இருக்கும்[12].(89) ஆசை, கோபம், அச்சம், பேராசை, நம்பிக்கையற்ற தன்மை, வஞ்சனை, வெட்கம், கருணை, செருக்கு ஆகியவற்றால் தூண்டப்பட்ட நான் உன்னிடம் ஒன்றையும் சொல்லமாட்டேன். (நீ சொன்னதற்குப் பதிலளிப்பதே முறை என்பதால் பதிலளிக்கிறேன்).(90)பேசுபவன், கேட்பவன், சொல்லப்படும் வார்த்தைகள் ஆகியன, பேச்சின் போக்கில் ஒன்றோடொன்று முற்றிலும் ஏற்புடைய வகையில் இருக்கும்போது, பெருள் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.(91) என்ன சொல்லப்பட வேண்டும் என்ற காரியத்தில், தான் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் பேசுபவன் கேட்பவனின் புத்தியை அலட்சியம் செய்யும்போது {அவமதிக்கும் போது}, அந்த வார்த்தைகளை எவ்வளவுதான் நல்லவையாக இருந்தாலும், அவை கேட்பவனால் எடுத்துக்கொள்ளக்கூடியவையாக இருப்பதில்லை.(92) பேசுபவன் தான் பேசும் பொருளுக்கான மதிப்பைக் கைவிட்டு, சிறந்த ஒலியும் பொருளும் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், கேட்பவரின் மனத்தில் தவறான தாக்கத்தையே ஏற்படுத்துகிறான். அத்தகைய சொற்களின் அத்தகைய தொடர்பு நிச்சயம் களங்கத்தையே ஏற்படுத்தும்.(93) எனினும், பொருளை வெளிப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லிக் கேட்பவனுக்கு நன்றாகப் புரியும் வகையில் பேசுபவன், உண்மையில் பேச்சாளன் என்று அழைக்கப்படத் தகுந்தவனாவான். வேறு எந்த மனிதனுக்கும் அப்பெயர் தகுந்ததில்லை.(94) எனவே, ஓ! மன்னா, பொருள் நிறைந்தவையும், சொற்செல்வத்துடன் கூடியவையுமான என் வார்த்தைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(95)
நான் யார்? யாருடையவள்? எங்கிருந்து வந்தேன்? முதலிய கேள்விகளை நீ என்னிடம் கேட்டாய். ஓ! மன்னா, உன் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில் சிதறாத மனத்துடன் கேட்பாயாக.(96) அரக்கு மற்றும் மரமும், புழுதித் தூசி மற்றும் நீர்த்துளியும் ஒன்றாகக் கலந்திருப்பதைப் போலவே அனைத்து உயிரினங்களின் இருப்பும் இருக்கிறது.(97) ஒலி, ஊறு {தீண்டல்}, சுவை, வடிவம் மற்றும் மணம், புலன்கள், ஆகியவை தங்கள் சாரங்களில் வெவ்வேறானவையாக இருந்தாலும், அரக்கும், மரமும் போலக் கலந்த நிலையிலேயே நீடிக்கின்றன.(98) இவற்றில் எதனிடமும் எவனும் நீ யார் எனக் கேட்பதில்லை என்பது நன்கறியப்பட்டது. அவை ஒவ்வொன்றுக்கும் தன்னைக் குறித்தோ, பிறவற்றைக் குறித்தோ எந்த அறிவும் கிடையாது.(99) கண்ணால் தன்னைக் காணமுடியாது. காதால் தன்னைக் கேட்க முடியாது. மேலும் கண்ணால் பிற புலன்களின் செயல்பாடுகள் எதையும் செய்ய முடியாது., அதே போலப் புலன்களில் எதனாலும் தன்னுடையதைத் தவிர வேறொரு புலனின் செயல்பாட்டைச் செய்ய முடியாது.(100)
இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தாலும் கூட, எவ்வாறு புழுதியும், நீர்த்துளியும் ஒன்றாகக் கலந்திருந்தாலும் ஒன்றையொன்று அறிந்து கொள்ள முடியாதோ, அதே போலவே அவை அனைத்தும் தங்களை அறியத் தவறுகின்றன. தங்கள் தங்களுக்குரிய செயல்பாட்டைச் செய்வதற்காக அவை புறத்தில் இருக்கும் தங்கள் நுகர் பொருட்களின் தொடர்புக்காகக் காத்திருக்கின்றன.(101) கண், வடிவம் மற்றும் ஒளி ஆகியன பார்த்தல் என்ற செயல்பாட்டின் மூன்று தேவைகளாக இருக்கின்றன. பிற புலன்களின் செயல்பாடுகளிலும், அவற்றின் விளைவான கருத்துகளிலும் இதுவே நேர்கிறது.(102) மேலும், (பார்வை, கேட்டல் முதலிய) புலன்களின் செயல்பாடுகளுக்கும், அவற்றின் விளைவுகளான (வடிவம், ஒலி முதலிய) கருத்துகளுக்கும் இடையில் புலன்களைத் தவிர மற்றொரு உட்பொருளாக இருக்கும் மனமும் தனக்கென உரிய செயல்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அதன் உதவியாலேயே ஒருவன், இருப்பையும், இல்லாமையையும் வேறுபடுத்திப் பார்த்து (புலன்களில் இருந்து பெறப்படும் கருத்துகள் அனைத்தின் காரியத்திலும்) நிச்சயத் தன்மையை அடைகிறான்.(103) ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்}, ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} மற்றும் மனம் ஆகியவை சேர்த்து இவை மொத்தம் பதினொன்றாக இருக்கின்றன. பனிரெண்டாவது புத்தியாகும். எது அறியப்பட வேண்டும் என்பதில் ஐயம் எழும்போது புத்தியே முன்வந்து (சரியான புரிந்து கொள்ளத் துணை புரிந்து) ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கிறது.(104) இந்தப் பனிரெண்டாவதற்கு {புத்திக்குப்} பிறகு, எண்ணிக்கையில் பதிமூன்றாவதாக வருவது சத்வம் எனும் மற்றொரு தத்துவமாகும். அதன் உதவியால் உடல் அமைப்புகளில் அஃது எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு குறைபடுகிறது என்பதைக் கொண்டு உயிரினங்கள் அடையாளங்காணப் படுகின்றன.(105)
இதன் பிறகு, (எண்ணிக்கையில் பதினான்காவதாகத் தான் {சுயம்} என்ற) மற்றொரு கோட்பாடு நனவுநிலையாகும். அஃது ஒருவன் சுயத்துக்கும், சுயமல்லாததற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.(106) ஆசை என்பது பதினைந்தாவது தத்துவமாகும். அதற்குள்ளேயே மொத்த அண்டமும் இருக்கிறது.(107) அவித்யை பதினாறாம் தத்துவமாகும். பிரகிருதி மற்றும் வியக்தி (மாயை மற்றும் பிரகாசம்) என்றழைக்கப்படும் பதினேழாம் மற்றும் பதினெட்டாம் கோட்பாடுகள் அதனுள்ளேயே {அவித்யைக்குள்ளேயே} இருக்கின்றன.(108) இன்பம் மற்றும் துன்பம், முதுமை மற்றும் மரணம், ஈட்டல் மற்றும் இழத்தல், ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை ஆகிய முரண்பட்ட இரட்டைகள் பத்தொன்பதாம் தத்துவமாக அமைகின்றன. பத்தொன்பதாம் தத்துவத்தையும் கடந்து, இருபதாவது என்றழைக்கப்படும் மற்றொரு தத்துவமான காலம் இருக்கிறது. இந்த இருபதாம் தத்துவச் செயல்பாட்டின் மூலமே உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பிறப்புகள் நேர்கின்றன என்பதை அறிவாயாக.(110)
இந்த இருபதும் ஒன்றாகவே நீடித்திருக்கின்றன. இவற்றைத் தவிர ஐம்பெரும் பூதங்களும், இருப்பும், இல்லாமையும் சேர்ந்து பட்டியலை இருபத்தேழாக்குகின்றன. இதையும் கடந்து விதி {புண்ணியப் பாவங்கள்}, சுக்ரன் {வீரியம்}, பலம் ஆகிய மூன்றும் சேர்வதால் பட்டியல் முப்பதை அடைகிறது.(111) எதனில் இந்த முப்பது தத்துவங்களும் இருக்கின்றனவோ அஃது உடல் என்று சொல்லப்படுகிறது.(112) சில மனிதர்கள், புலப்படாத பிரகிருதியே இந்த முப்பது தத்துவங்களுக்கும் மூலம் அல்லது காரணம் என்று கருதுகிறார்கள். (இது நாத்திக சாங்கிய பள்ளியின் கருத்தாகும்). மொத்த பார்வை கொண்ட காணாதர்கள் புலப்படுவதை (அல்லது அணுக்களை) அவற்றின் காரணம் எனக் கருதுகிறார்கள்.(113) புலப்படாததோ, புலப்படுவதோ எது அவற்றின் காரணமாக இருந்தாலும், அல்லது (பரமன், அல்லது புருஷன் மற்றும் புலப்படுவதுஅல்லது அணுக்கள் ஆகிய) இரண்டுமே காரணமாகக் கருதப்பட்டாலும், அல்லது நான்காவதாக (பரமன், அல்லது புருஷன், அவனது மாயை, ஜீவன், அவித்யை அல்லது அறியாமை என்ற) நான்கும் காரணமாக இருந்தாலும், அத்யாத்மாவை அறிந்தவர்கள் பிரகிருதியையே அனைத்து உயிரினங்களின் காரணமாகப் பார்க்கிறார்கள்.(115)
புலப்படாததாக இருக்கும் பிரகிருதியானது, இந்தத் தத்துவங்களின் வடிவில் புலப்படுவதாகிறது. ஓ! ஏகாதிபதி, நான், நீ, உடலுடன் கூடிய பிறர் அனைவரும், (நம் உடல்களைப் பொறுத்தவரையில்) பிரகிருதியின் விளைவுகளாவே இருக்கிறோம்.(116) கருவூட்டல் மற்றும் (கரு தொடர்புடைய) பிற நிலைகள், உயிர்வித்து மற்றும் குருதியின் கலவையின் மூலமே நேர்கின்றன. கருவூட்டலின் பின்விளைவாக, முதலில் தோன்றும் விளைவானது கலலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(117) கலலத்தில் இருந்து புத்புதம் (குமுழி) என்றழைக்கப்படுவது எழுகிறது. புத்புதமென்றழைக்கப்படும் நிலையில் இருந்து பேசி என்றழைக்கப்படும் நிலை எழுகிறது. பேசி என்றழைக்கப்படும் நிலையிலிருந்து, பல்வேறு அங்கங்கள் வழிப்படும் நிலை எழுகிறது. இந்த இறுதி நிலையில் இருந்து நகங்களும், முடியும் தோன்றுகின்றன.(118) ஓ! மிதிலையின் மன்னா {தர்மத்யஜா}, ஒன்பதாம் மாதத்தில் பிறக்கும் உயிரினத்தின் பாலினம் அறியப்பட்டு, ஆண்பிள்ளை என்றும் பெண்பிள்ளை என்றும் அழைக்கப்படுகின்றன.(119) உயிரினம் கருவறையில் இருந்து வெளிவந்ததும், அதன் நகங்களும், விரல்களும் மெருகூட்டப்பட்ட தாமிரத்தின் வண்ணத்தில் தெரிகின்றன. பிறக்கும்போது காணப்பட்ட வடிவம் மாறும்போது நேரும் அடுத்த நிலை குழந்தைப்பருவம் என்றழைக்கப்படுகிறது.(120)
குழந்தைப் பருவத்தில் இருந்து இளமைப் பருவம் அடையப்படுகிறது, இளமையில் இருந்து முதுமையும் அடையப்படுகிறது. உயிரினங்கள் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, முந்தைய நிலையில் இருந்த வடிவம் மாற்றமடைகிறது.(121) பொதுப் பயன்பாட்டில் பல்வேறு செயல்களைச் செய்யும் உடலின் பூதங்கள் ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு கணமும் மாற்றமடைகின்றன. எனினும், அம்மாற்றங்கள் கவனிக்கப்பட முடியாத அளவுக்கு நுணுக்கமாக நடைபெறுகின்றன.(122) உயிரினங்கள் அனைத்தின் உடல்நிலைகளும் நல்ல இனத்தைச் சார்ந்த வேகமான குதிரையைப் போல இவ்வாறு தொடர்ந்து மாறுதலுக்கு உட்படுபவையாக இருக்கும்போது, யார் எங்கிருந்து வந்தவன்? எங்கிருந்து வரவில்லை?(124) யார் யாருடையவன்? யாருடையவனல்ல? அவன் எங்கே எழுவதில்லை? உயிரினங்களுக்கும், அவற்றின் உடல்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது?(125)
தீக்கல் இரும்புடன் தொடர்பு கொள்ளும்போதும், இரு கட்டைகள் ஒன்றோடொன்று உரசும்போதும் உண்டாகும் நெருப்பைப் போல ஏற்கனவே சொல்லப்பட்ட ஏற்கனவே பெயர் சொல்லப்பட்ட (முப்பது) தத்துவங்களின் கலவையால் உயிரினங்கள் உண்டாகின்றனர்.(126) உண்மையில், உன் உடலில் நீ உன் உடலையே காண்பது போலும், உன் ஆன்மாவில் உன் ஆன்மாவையே காண்பது போலும், நீ ஏன் உன் உடலையும், உன் ஆன்மாவையும் பிறரின் உடல்களிலும், ஆன்மாக்களிலும் காணவில்லை?(128) ஓ! மன்னா, “இஃது என்னுடையது, இஃது என்னுடையதல்ல” என்ற (பிழையான) இருமை {முரண்பட்ட இரட்டைகளின்} ஞானத்தில் இருந்து நீ விடுபட்டது உண்மையென்றால், யார் நீ? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாய்? போன்ற கேள்விகளினால் என்ன பயன் ஏற்படப்போகிறது?(129) பகைவர்கள், கூட்டாளிகள், நடுநிலையாளர்கள், வெற்றிக்காலம், அமைதிக்காலம் போர்க்காலங்களில் பிறர் செயல்படுவதைப் போலவே செயல்படும் ஒரு மன்னனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்?(130)
அனைத்துச் செயல்களிலும் ஏழுவகைகளில் வெளிப்படும் முத்தொகையின் {அறம், பொருள் மற்றும் இன்பத்தின்) உண்மை இயல்பை அறியாதவனும், அந்த முத்தொகையில் பற்று கொண்டவனுமான ஒருவனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்?[13](131) ஏற்பில்லாதவர், ஏற்புடையவர், பலவீனர் மற்றும் பலவான்களிடம் சம பார்வைச் செலுத்த தவறுபவனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்? அதற்குத் தகாத நீ செய்யும் விடுதலைக்கான {முக்திக்கான} பாசாங்கு உனது ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} தடுக்கப்பட வேண்டும்.(132) (உன்னிடம் இவ்வளவு களங்கங்கள் இருக்கும்போது) விடுதலையை {முக்தியை} அடைய நீ செய்யும் இந்த முயற்சியானது, தடுக்கப்பட்ட உணவுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் ஏற்கும் நோயாளி மருந்தைப் பயன்படுத்தவதைப் போன்றதே ஆகும்.(133) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, மனைவிகள் மற்றும் பற்றுக்கான பிற தோற்றுவாய்களைக் குறித்துச் சிந்திக்கும் ஒருவன் தன் ஆன்மாவில் உள்ள இவற்றைக் காண வேண்டும். விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடாக வேறு எதைத் தான் பார்க்க முடியும்?(134) இவற்றைக் குறித்தும், விடுதலை அறத்தைப் பின்பற்றுவதாகச் சொன்னாலும் நீ இன்னும் பற்றுக் கொண்டிருக்கும் நன்கறியப்பட்ட நான்கு செயல்கள் (உறக்கத்தில் கிடப்பது, அனுபவிப்பது, உண்பது, உடுத்துவது) தொடர்பான குறிப்பிட்ட சில தோற்றுவாய்களைக் குறித்தும் இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(135)மொத்த உலகையும் ஆள வேண்டிய மனிதன் உண்மையில் இரண்டாமவன் அற்ற ஒரே மன்னனாக இருக்க வேண்டும். மேலும் அவன் ஒரே ஓர் அரண்மனையில் மட்டுமே வாழும் கடப்பாடு கொண்டவனாவான்.(136) அந்த அரண்மனையில் அவனுக்கு ஒரே ஓர் உறங்கும் அறை மட்டுமே இருக்க வேண்டும். அந்த அறையிலும், இரவில் படுத்துக் கொள்ள அவனுக்கு ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருக்க வேண்டும்.(137) அந்தப் படுக்கையிலும் அவன் தன் மனைவியான ராணிக்குப் பாதியைக் கொடுக்கும் கடப்பாடு கொண்டவனாவான். மன்னனுக்குரிய பங்கு எவ்வளவு சிறியது என்பதை விளக்கும் எடுத்துக்காட்டாக இஃது அமையும்.(138) அவனது இன்பப் பொருட்கள், அவன் உண்ணும் உணவு, அவன் உடுக்கும் உடைகள் ஆகியவற்றிலும் இதுவே வழக்காகும். இவ்வாறு அவன் அனைத்துப் பொருட்களிலும் மிகச் சொற்பமான பங்கிலேயே பற்றுக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவன் வெகுமதி அளிக்கும், தண்டிக்கும் கடமைகளிலும் பற்றற்றவனாக இருக்கிறான்.(139) மன்னன் எப்போதும் பிறரைச் சார்ந்தவனாகவே இருக்க வேண்டும். அவனுக்கு உரிய அனைத்திலும் சிறு பகுதியை மட்டுமே அவன் அனுபவிக்கிறான், மேலும் அந்தச் சிறு பகுதியிலும் அவன் (பிறர் தங்கள் தங்களுக்குரிய உடைமைகளில் பற்று கொண்டிருப்பதைப் போலவே) கட்டாயமாகப் பற்றப்படுகிறான். அமைதி மற்றும் போர்க்காரியத்திலும் மன்னனைச் சார்பற்றவனாகச் சொல்ல முடியாது.(140)
பெண்கள், விளையாட்டு மற்றும் பிற வகை இன்பங்கள் குறித்த காரியத்தில் மன்னனின் விருப்பம் மிகவும் சுருக்கப்பட்டதாகும். ஆலோசனை பெறும் காரியத்திலும், தன் அமைச்சர்களின் சபையிலும் மன்னனுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?(141) எனினும், அவன் தன் ஆணைகளைப் பிற மனிதர்களின் மேல் நிறுவினால் அவன் முற்றிலும் சுதந்திரமானவனாகச் சொல்லப்படுகிறான். ஆனால், அடுத்தக் கணமே தன் வகைக்கான பல்வேறு காரியங்களில் தன்னால் ஆணையிடப்பட்ட மனிதர்களாலேயே அவனது சுதந்திரம் தடை செய்யப்படுகிறது.(142) மன்னன் உறங்க விரும்பினால், தொழில் தொடர்பாகத் தொடர்பு கொள்ளும் மனிதர்களால் தடுக்கப்பட்டு அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அனுமதிக்கப்படும்போதே அவன் உறங்க வேண்டும், உறங்கும் போதும், தொழில் நிமித்தமான அவசரம் கொண்டோரைக் கவனிப்பதற்கு அவன் விழிப்புடன் இருக்க வேண்டிய கடப்பாடும் அவனுக்கு உண்டு.(143) நீராடல், தீண்டல், பானம், உணவு, நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல், வேள்விகளைச் செய்தல், பேசுதல், கேட்டல் ஆகிய இந்த வார்த்தைகளை மன்னர்கள் பிறரிடம் கேட்டு, அவற்றைச் சொல்வோருக்கு அடிமையாக இருக்க வேண்டும்.(144) மனிதர்கள் கூட்டங்கூட்டமாக வந்து மன்னனிடம் கொடைகளை வேண்டுவார்கள். எனினும் பொதுக் கருவூலத்தின் பாதுகாவலனாக இருப்பதால் அவன் மிகுந்த தகுதியைக் கொண்டவருக்குக் கூடக் கொடைகளை அளிக்க முடியாது.(145)
அவன் கொடைகளை அளித்தால், கருவூலம் தீர்ந்துவிடும். அவன் கொடையளிக்கவில்லையெனில், வேண்டுபவர்கள் ஏமாற்றமடைந்து பகைக்கண்களுடன் பார்ப்பார்கள். இதன் காரணமாக எரிச்சலையும் அவன் {மன்னன்}, தன் மனத்தில் மானிட வெறுப்பைப் படரவிடுகிறான்.(146) ஞானிகளும், வீரர்களும், செல்வந்தர்களுமான பலர் சேர்ந்து ஒன்றாக வசித்தால், அதன் விளைவாக மன்னனின் மனம் நம்பிக்கையின்மையால் நிறைகிறது. அஞ்சுவதற்குக் காரணமேதும் இல்லாதிருந்தாலும், மன்னன் தன்னிடம் காத்திருப்போரையும் மற்றும் தன்னை வழிபடுவோரையும் அஞ்சுகிறான்.(147) ஓ! மன்னா, நான் குறிப்பிட்டவர்களும் அவனிடம் குற்றத்தைக் காண்கிறார்கள். எவ்வழியில் மன்னனுக்கு அவர்களிடம் அச்சமேற்படுகிறது என்பதைக் காண்பாயாக.(148) மேலும் தன் சொந்த வீடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் மன்னர்களே. மேலும் தன் சொந்த வீடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் இல்லற வாழ்வு முறையை வாழ்பவர்களே. ஓ! ஜனகா {தர்மத்வஜா}, மன்னர்களைப் போலவே சொந்த வீடுகளில் உள்ள மனிதர்களும் தண்டிக்கவும், வெகுமதியளிக்கவும் செய்கிறார்கள்.(149) மன்னர்களைப் போலவே பிறருக்கும், மகன்களும், மனைவியரும், தங்கள் சுயங்களும், கருவூலங்களும், நண்பர்களும், கிடங்குகளும் உள்ளன. இக்காரியங்களின் பிற மனிதர்களிடம் இருந்து மன்னன் வேறுபட்டவனல்ல.(150)
“நாடு அழிகிறது, நகரம் எரிகிறது, முதன்மையான யானை {பட்டத்து யானை} இறந்தது” ஆகிய இவை அனைத்தும் அறியாமை மற்றும் பிழையால் உண்டாகும் மனப்பதிவுகள் என்பதைக் கருத்தில் கொள்ளமால் மன்னனும் பிறரைப் போலவே {எனது என்ற அகங்காரத்தால் அவன்} துன்பவசப்படுகிறான்.(151) மன்னனானவன், ஆசை வெறுப்பு, மற்றும் அச்சம் ஆகியவற்றால் உண்டாகும் மனத்துன்பங்களில் இருந்து அரிதாகவே விடுபடுகிறான். தலைவலி மற்றும் பல்வேறு வகை நோய்களாலும் பொதுவாகவே பீடிக்கப்படுகிறான்.(152) (இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் மன்னன் (பிறரைப் போலவே) பீடிக்கப்படுகிறான். அவன் அனைத்திலும் அச்சங்கொள்கிறான். உண்மையில், எதிரிகளும், ஆளும் தடைகளும் நிறைந்த நாட்டை அனுபவித்துக் கொண்டே மன்னன் தன் இரவுகளை உறங்காமல் கழிக்கிறான்.(153) எனவே, அரசுரிமை இன்பத்தின் மிகச் சிறிய பகுதியால் மட்டுமே அருளப்பட்டிருக்கிறது. அது கொடுக்கும் துன்பமோ மிகப் பெரியதாகும். வைக்கோலை எரிக்கும் நெருப்பின் தழல்கள், அல்லது நீர்ப்பரப்பின் நுரையில் உள்ள குமிழி போல அது திடமற்றதாகும் {உறுதியற்றதாகும்}.(154) அரசுரிமையை அடைய விரும்பியோ, அஃதை அடைந்தோ அமைதியை வெல்வோம் என்ற நம்பிக்கை எவனுக்கு இருக்கும்? நீ இந்த நாட்டையும், இந்த அரண்மனையையும் உனதாகக் கருதுகிறாய்.(155)
இந்தப் படையும், இந்தக் கருவூலமும், இந்த அமைச்சர்களும் உனக்குச் சொந்தம் என நீ நினைக்கிறாய். எனினும், உண்மையில் அவை அவை யாருடையவை? யாருடையதில்லை? கூட்டாளிகள், அமைச்சர்கள், தலைநகரம், மாகாணங்கள், தண்டனை, கருவூலம், மன்னன் ஆகிய(156) நாட்டின் அங்கங்களான ஏழும், ஒன்றையொன்று தாங்கியிருக்கும் மூன்று குச்சுகளைப் போல ஒன்றையொன்று சார்ந்தவையாகும். இவை ஒவ்வொன்றின் தகுதியும், பிறவற்றின் தகுதியாலேயே நிறுவப்படுகின்றன. இவற்றில் எஞ்சியவற்றைவிட மேன்மையானது என்று எதைச் சொல்ல முடியும்(157) அந்தக் குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் தங்கள் இயக்கத்தின் மூலம் ஏதோ ஒரு முக்கிய முடிவைத் தருகின்றபோது அவை ஒவ்வொன்றும் தனித்துவமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு காணப்படும் திறனின் மூலமே அந்த நேரத்தில் மேன்மையானதாகச் சொல்லப்படுகிறது.(158) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஏழு அங்கங்களும், {விருத்தி, க்ஷயம் மற்றும் ஸ்தானம்} ஆகிய மூன்றும் சேர்ந்தவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையுமான இந்தப் பத்து தொகையும் {தசவர்க்கமும்} மன்னனைப் போலவே நாட்டை அனுபவிப்பதாகச் சொல்லப்படுகிறது.(159) பெருஞ்சக்தி கொண்டவனும், க்ஷத்திரிய நடைமுறைகளில் உறுதியான பற்றைக் கொண்டவனுமான மன்னன், குடிமக்களின் வயலில் விளைவதில் பத்தில் ஒரு பாகத்தில் மட்டுமே நிறைவு கொள்ள வேண்டும். சில மன்னர்கள் பத்தில் ஒரு பாகத்தைவிடக் குறைந்த அளவிலேயே நிறைவடைவதும் காணப்படுகிறது.(160)
இவ்வுலகில் உரிமையுள்ள எவரும் இல்லாமல் அரச அலுவலுக்கு உரிய ஒருவனுமில்லை, ஒரு மன்னன் இல்லாத எந்த நாடும் கிடையாது. நாடு என்ற ஏதும் இல்லையென்றால், அறம் என்ற ஏதும் இருக்காது, அறம் என்ற ஏதும் இல்லை என்றால் விடுதலை எங்கிருந்து எழும்?(161) மிகப் புனிதமானதும், உயர்ந்ததுமான தகுதிகள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் நாடுகளுக்கு உரியவையாகும். ஒரு நாட்டை நன்கு ஆள்வதன் மூலம் ஒரு மன்னன் மொத்த உலகையும் தக்ஷிணையாகக் கொடுத்த ஒரு குதிரை வேள்வியைச் செய்வதற்குரிய தகுதியை ஈட்டுகிறான். (ஆனால் எத்தனை மன்னர்கள் தங்கள் நாடுகளை நன்றாக ஆள்கிறார்கள்?(162) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, மன்னர்கள் மற்றும் நாடுகள் தொடர்புடைய இத்தகைய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான களங்கங்களை என்னால் சுட்டிக் காட்டமுடியும்.(163) மேலும், என் உடலிடம் கூட எனக்கு உண்மையான தொடர்பேதும் இல்லாத போது, பிறரின் உடல்களில் நான் எத்தொடர்பையும் கொண்டதாக எவ்வாறு கொள்ள முடியும்? வர்ணக்கலப்பை ஏற்படுத்தியதாக நீ என்னைக் குற்றஞ்சாட்ட முடியாது.(164) விடுதலை {முக்த} அறத்தையும், அதன் வழிகள், முறைகள், நடைமுறைகள், முடிவு ஆகியவற்றையும் சேர்த்து மொத்தமாகப் பஞ்சசிகரின் உதடுகளில் இருந்து நீ கேட்டாயா?(165)
ஓ! மன்னா, நீ உன் கட்டுகள் அனைத்தையும் கடந்து விட்டதாகவும், பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டதாகவும் இருந்தால் நீ ஏன் இன்னும் இந்தக் குடையையும், அரச சின்னங்களையும் தரிக்கிறாய்?(166) நீ சாத்திரங்களைக் கேட்டதே இல்லையென்றோ, எந்தப் பயனும் இல்லாமல் அவற்றைக் கேட்டிருக்கிறாய் என்றோ, ஒருவேளை, சாத்திரங்களைப் போலத் தெரியும் வேறு ஏதோ உடன்படிக்கைகளைக் கேட்டிருக்கிறாய் என்றோ நான் நினைக்கிறேன்.(167) உலகம் சார்ந்த அறிவை மட்டுமே கொண்டிருக்கிறாய் என்றும், சாதாரண மனிதர்களும் கட்டப்படும் தீண்டல், மனைவியர், மாளிகைகள் முதலியவற்றில் நீயும் கட்டப்பட்டிருக்கிறாய் என்றும் தெரிகிறது.(168) நீ அனைத்துக் கட்டுகளில் இருந்து விடுபட்டிருக்கிறாய் என்பது உண்மையானால், என் புத்தியால் மட்டுமே உன் மேனியில் நுழைந்த நான் உனக்கு என்ன தீங்கைச் செய்துவிட்டேன்?(169) அனைத்து வகை மனிதர்களுக்கு மத்தியில் யதிகள், வசிக்கப்படாத அல்லது கைவிடப்பட்ட வசிப்பிடங்களில் வசிப்பதே வழக்கமாகும். உண்மையான ஞானத்தில் வெறுமையான புத்தியால் நுழைந்ததன்மூலம் நான் உனக்கு என்ன தீங்கைச் செய்துவிட்டேன்?(170)
ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே, நான் என் உள்ளங்கைகளாலோ, கரங்களாலோ, பாதங்களாலோ, தொடைகளாலோ, என் உடலின் எந்தப் பாகத்தாலோ நான் உன்னைத் தீண்டவில்லை.(171) நீ உயர்ந்த குலத்தில் பிறந்தவனாவாய். நீ பணிவுள்ளவன். முன்னறிதிறனும் கொண்டிருக்கிறாய். நான் உன் உடலுக்குள் நுழைந்த செயலானது நன்மையோ, தீமையோ அது நம் இருவர் மட்டுமே தொடர்புடைய தனிப்பட்ட செயலாகும். அந்தத் தனிப்பட்ட செயலை உன் சபையினர் அனைவரின் முன்பும் வெளிப்படுத்தியது முறையற்றதாகாதா?(172) இந்தப் பிராமணர்கள் மதிக்கத்தகுந்தவர்களாவர். இவர்கள் ஆசான்களில் முதன்மையானவர்களுமாவர். அவர்களுடைய மன்னனாகிய நீயும் மதிக்கத்தகுந்தவனே. அவர்களை மதிக்கும் நீ, அவர்களால் மதிகப்படவும் தகுந்தவனாவாய்.(173) இவையனைத்தையும் குறித்துச் சிந்திக்கும் நீ பேச்சுரிமை விதிகளை உண்மையாக அறிந்தவனாக இருந்தால். எதிர்பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கிடையில் நடந்த சேர்க்கையை இந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்கு அறிவித்தது முறையாகாது.(174) ஓ! மதிலையின் மன்னா, தாமரை இலையைத் தொடாமல் அதைச் சற்றும் நனைக்காமல் இருக்கும் நீர்த்துளியைப் போலவே நான் உன்னை முற்றிலும் தீண்டாதிருக்கிறேன்.(175)
இவ்வாறு இருக்கும்போதிலும் நீ என் தீண்டலை உணர்வாயெனில், துறவி வகையைச் சார்ந்த பஞ்சசிகரின் போதனைகள் மூலம் உன் புத்தியானது புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகியிருக்கிறது என்பதை எவ்வாறு நம்ப முடியும்?(176) இல்லற வாழ்வு முறையில் இருந்து விழுந்திருந்தாலும், அடைவதற்கரிய விடுதலையை {முக்தியை} நீ இன்னும் அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. விடுதலை என்ற இலக்கை அடைந்துவிட்டதாகப் பாசாங்கு செய்யும் நீ அவ்விரண்டு நிலைகளுக்கு இடையிலேயே இருக்கிறாய்.(177) விடுதலையடைந்த ஒருவன் மற்றொருவனுடன் கொள்ளக்கூடிய தொடர்பானது, நீ அஞ்சும் வகையிலான கலப்புக்கு வழிவகுக்காது. அது புருஷனுக்கும், பிரகிருதிக்கும் இடையிலான கலப்பைப் போன்றதாகும்.(178) உடலையும் ஆன்மாவையும் ஒன்றெனக் கருதுபவர்கள் மட்டுமே, பல்வேறு வகைகளையும் {வர்ணங்களையும்}, வாழ்வுமுறைகளையும் {ஆசாரங்களையும்} வெவ்வேறென நினைத்தும், கலப்பின் சாத்தியத்தை அனுமானித்தும் பிழை செய்வார்கள். என் உடல் உன்னிலிருந்து வேறுபட்டதாகும். ஆனால் என் ஆன்மா உன் ஆன்மாவிலிருந்து வேறுபட்டதல்ல. என்னால் இஃதை உணர முடியும்போது, யோகத்தின் மூலம் நான் உனக்குள் நுழைந்திருந்தாலும், என் புத்தி உன்னில் உண்மையில் இல்லை என்பதில் சிறு ஐயமும் ஏற்படவில்லை.(179)
கையில் பானை தாங்கப்படுகிறது. அந்தப் பானையில் பால் இருக்கிறது. அந்தப் பாலில் ஓர் ஈ இருக்கிறது. கை மற்றும் பானை, பானை மற்றும் பால், பால் மற்றும் ஈ ஆகியன ஒன்றாக நீடித்திருந்தாலும், அவை ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும்.(180) அந்தப் பானை பாலின் இயல்பைக் கொள்வதில்லை. பாலும் ஈயின் இயல்பை அடைவதில்லை. அவற்றின் நிலை ஒன்றையொன்று சார்ந்திருந்தாலும், அவை கொண்ட தற்காலிக நிலையால் என்ற மாற்றமும் ஏற்படாது.(181) இதே வகையிலேயே நிறமும், நடைமுறைகளும் விடுதலையடைந்த மனிதனில் ஒன்றாக நீடித்திருந்தாலும், உண்மையில் அவனைப் பற்றவில்லை. நான் உன்னுடன் கொண்ட சேர்க்கையின் விளைவால் எவ்வகையான கலப்பு {வர்ணக்கலப்பு} ஏற்பட முடியும்?(182) நிறத்தால் நான் உனைனவிட மேம்பட்டவளல்ல. நான் வைசியருமல்ல, சூத்திரருமல்ல. ஓ! மன்னா, நான் உன் வகையைச் சார்ந்த ஒரு தூய {க்ஷத்திரிய} குலத்திலேயே பிறந்தேன்.(183) பிரதானர் என்ற பெயரில் ஓர் அரசமுனி இருந்தார். நீ அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய் என்பது வெளிப்படை. நான் அவரது குலத்தில் பிறந்தவள், என் பெயர் சுலபையாகும்.(184) (பெரும் மலைகளில் வசிக்கும் தலைமை மேதைகளான) துரோணர், சதசிருங்கர் மற்றும் சக்ரத்வாரர் ஆகியோரின் துணையுடன் தேவர்களில் முதன்மையான இந்திரன், என் மூதாதையர்கள் செய்த வேள்விகளுக்கு வழக்கமாக வருவான்.(185) அத்தகைய குலத்தில் பிறந்த எனக்குத் தகுந்த கணவனைக் காண முடியாது என்பது தெரிந்தது. விடுதலை அறம் கற்பிக்கப்பட்டவளான நான் தவப் பயிற்சிகளை நோற்றுக் கொண்டு பூமியில் மட்டுமே திரிந்து வருகிறேன்.(186) நான் பின்பற்றும் துறவு வாழ்வில் எந்தப் போலித்தனமும் எனக்குக் கிடையாது. நான் பல்வேறு வகையினரின் நடைமுறைகளைக் குழப்புவதில்லை. எனக்குச் சொந்தமான முறையான வாழ்வுமுறையையே நான் உறுதியாகப் பின்பற்றுகிறேன்.(187)
நான் என் நோன்புகளில் உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறேன். சொல்லின் உரிமையைச் சிந்திக்காமல் நான் எவ்வார்த்தையையும் சொல்வதில்லை. ஓ! ஏகாதிபதி, முறையாகச் சிந்திக்கமால் நான் உன்னிடம் வரவில்லை.(188) விடுதலை அறத்தின் மூலம் உன் புத்தி தூய்மையடைந்திருக்கிறது என்று நான் கேள்விப்பட்டதால், சில நன்மைகளை விரும்பி நான் இங்கே வந்தேன். உண்மையில், நீ முயலும் விடுதலை குறித்து விசாரிக்கவே நான் இங்கே வந்தேன்.(189) என்னை மகிமைப்படுத்திக் கொள்வதற்காகவோ, என் எதிராளிகளை அவமதிக்கவோ நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் நேர்மையால் மட்டுமே தூண்டப்பட்டு நான் இதைச் சொல்கிறேன். விடுதலையை {முக்தியை} அடைந்தவன், வெற்றிக்காக வாக்குப்போரின் மூலம் ஒருபோதும் அறிவுப் போராளியாவதில்லை. மறுபுறம், உண்மையில் விடுதலையை அடைந்தவன், முற்றிலும் அமைதியான இடமாக இருக்கும் பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொள்கிறான்.(190) ஒரு துறவி வெறும் வீட்டில் ஓரிரவு மட்டும் வசிப்பதை (வசித்து மறுநாள் காலையில் செல்வதைப்) போலவே நானும் (ஏற்கனவே சொன்னது போல உண்மை ஞானமற்ற வெற்று அறையைப் போன்ற) உன்னில் வசிக்கப் போகிறேன்.(191) வாக்கு மற்றும் பிற காணிக்கைகளால் நீ ஒரு விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய விருந்தோம்பலைக் கொண்டு என்னை முறையாகக் கௌரவித்தாய். ஓ! மிதிலையின் ஆட்சியாளா, இந்த ஓரிரவு என் அறை போன்றதேயான உன்னில் உறங்கிவிட்டு, நாளை நான் செல்வேன்” என்றாள் {சுலபை}”.(192)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறந்த பொருளும், காரணமும் நிறைந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனகன் {தர்மத்யஜன்} அவளுக்கு {சுலபைக்கு} பதிலேதும் சொல்லத்தவறினான்”.(193)
பாவகாத்யயனம்! – சாந்திபர்வம் பகுதி – 322-உலகம் நிலையற்றது; பிரம்மஞானத்தைக் கொண்டு பிறப்பிறப்பில் இருந்து விடுதலையடைய வேண்டிய அவசியம்; இதயத்தைத் தூய்மையாக்கும் பாடத்தைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பழங்காலத்தில், வியாசரின் மகனான சுகர் எவ்வாறு விடுதலை நிலையை வென்றெடுத்தார்? நீர் சொல்லி அக்கதையைக் கேட்க நான் விரும்புகிறேன். இதில் நான் தணியாத ஆவல் கொண்டிருக்கிறேன்.(1) ஓ! குரு குலத்தவரே, புலப்படாதது ({வெளிப்படாத} காரணம்), புலப்படுவது ({வெளிப்படும்} விளைவுகள்), அவற்றில் இருந்தாலும், அவற்றில் பற்றில்லாத உண்மை (அல்லது பிரம்மம்), சுயம்புவான நாரயாணனின் செயல்கள் ஆகியவற்றைக் குறித்த தீர்மானங்களை உமது புத்திக்கு அறிந்தவரை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாதாரண மனிதர்களால் தீங்கற்றவை என்று கருப்படும் செயல்களைச் செய்து கொண்டு, அச்சமில்லாமல் வாழ்ந்து வரும் தம் மகன் சுகரைக் கண்ட வியாசர், அவருக்கு வேதம் முழுமையும் கற்பித்து, ஒருநாள் அவரிடம் இவ்வார்த்தைகளில் பேசினார்.(3)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! மகனே, உன் புலன்களை வென்று, அதீத குளிர், அதீத வெப்பம், பசி, தாகம், காற்று ஆகியவற்றையும் வென்று, (யோகிகள் செய்வதைப் போல) அவற்றை வென்ற பிறகு, அறம் பயில்வாயாக.(4) வாய்மை {ஸத்யம்}, நேர்மை {ருஜுவாயிருத்தல்}, கோபம் மற்றும் வன்மத்தில் இருந்து விடுதலை {குரோதமின்மை மற்றும் அஸூயையில்லாமை}, தற்கட்டுப்பாடு {தமம்}, தவங்கள், நற்கடமைகள் {துன்பம் செய்யாமை}, கருணை {குரூரத் தன்மையில்லாமை} ஆகியவற்றை நீ முறையாகப் பயில்வாயாக.(5) வாய்மையைச் சார்ந்திருக்கும் நீ, அனைத்துவகை நேர்மையின்மைகளையும், வஞ்சனைகளையும் கைவிட்டு, அறத்தில் உறுதியான அர்ப்பணிப்புக் கொள்வாயாக. தேவர்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு எஞ்சும் உணவில் உன் வாழ்வைத் தாங்கிக் கொள்வாயாக.(6) நீர்ப்பரப்பில் இருக்கும் நுரையைப் போலவே உன் உடலும் நிலையற்றதாகும். ஜீவாத்மாவானது, ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையைப் போலப் பற்றில்லாமல் அதில் {உடலில்} அமர்ந்திருக்கிறது. ஏற்புடைய பொருட்கள் அனைத்தின் துணையும் மிகக் குறுகிய காலம் வருபவையே. ஓ! மகனே பிறகேன் நீ இத்தகைய மறதியில் உறங்குகிறாய்?(7) உன் எதிரிகள் {ஆசைகள்} கவனத்துடனும், விழிப்புடனும், (உன்மீத பாய) எப்போதும் தயாராகவும், தங்கள் வாய்ப்புக்காக எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இஃதை அறியாமல் நீ ஏன் மூடனாயிருக்கிறாய்?(8)
நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடக்கும்போது, உன் வாழ்நாள் காலமும் குறைகிறது. உண்மையில், உன் வாழ்நாள் காலம் இடையறாமல் குறைந்து கொண்டிருக்கும்போது, (மீட்பின் வழிமுறைகளைக் கற்க) நீ ஏன் ஆசான்களை நோக்கி ஓடாமல் இருக்கிறாய்?(9) (மறுமை இருப்பில்) நம்பிக்கையற்றவர்களே, குருதியின் சதையும் பெருகச் செய்யும் விளைவை மட்டுமே கொண்ட இவ்வுலகம் சார்ந்த பொருட்களில் தங்கள் இதயத்தை நிலைநிறுத்துகிறார்கள். மறுமையைப் பொறுத்தவரையில் அவர்கள் முற்றிலும் கவலையற்றவர்களாகவே இருக்கிறார்கள்.(10) பிழையான புரிதல்களின் மூலம் மலைப்படைந்த மனிதர்கள், அறத்தில் வெறுப்பை வெளிக்காட்டுகிறார்கள். சுற்றி வளைந்து செல்லும் தவறான பாதையில் தவறாக வழிநடத்தப்படும் மனிதர்களுக்குப் பின்னால் செல்லும் மனிதனும் அவர்களைப் போலவே இணையாகப் பீடிக்கப்படுகிறான்.(11) எனினும், நிறைவடைந்தவர்கள், சாத்திரங்களில் அர்ப்பணிப்புள்ளவர்கள், உயர் ஆன்மா கொண்டவர்கள், பெரும் வலிமையைக் கொண்டவர்கள் ஆகியோர் அறப்பாதையிலேயே நடக்கின்றனர். நீ அவர்களிடம் காத்திருந்து, அவர்களின் போதனைகளை நாடுவாயாக.(12) அறத்தில் கண்கள் நிறுவப்பட்ட ஞானிகளிடம் இருந்து பெறப்படும் போதனைகளின் படி நீ செயல்படுவாயாக. மேன்மையாகச் சொல்லப்படும் அந்தப் பாடங்களின் மூலம் தூய்மையடைந்து புத்தியைக் கொண்டு, சரியான பாதையில் இருந்து பிறழ எப்போதும் தயாராக இருக்கும் உன் இதயத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(13) தற்காலம் தொடர்புடையவற்றிலேயே எப்போதும் புத்தியைக் கொண்டோர், நாளையென்பது வெகுதொலைவில் உள்ளது என்று கருதி அச்சமில்லாமல் இருப்போர், உணவுக் காரியங்களில் எத்தகைய கட்டுப்பாடுகளையும் கொள்ளாதோர் ஆகிய உணர்வற்ற மனிதர்கள் இவ்வுலகமானது தகுதி காணும் களம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(14)
அறத்தால் அமைந்த படிக்கட்டுகளுக்குச் சென்று, ஒன்றன்பின் ஒன்றாக அதில் ஏறுவாயாக. தற்போது நீ, தன்னைச் சுற்றி வலையைப் பின்னி, தப்பும் வழிமுறைகள் அனைத்தையும் இழக்கும் ஒரு புழுவைப் போன்றவனாகவே நீ இருக்கிறாய்.(15) கட்டுப்பாடுக்ள அனைத்தையும் மீறுபவனும், காட்டாற்றின் அருகில் இருக்கும் வீட்டைப் போன்றவனும், செருக்கால் தலையை உயர்த்தி நிற்கும் மூங்கிலைப் போலப் (பிறருக்குத்) தெரிபவனுமான நாத்திகவாதியை எந்தத் தயக்கமும் இல்லாமல் உன் இடப்பக்கத்தில் நிறுத்துவாயாக {அவனை உன்னிடமிருந்து இருந்து விலக்குவாயாக}[1].(16) ஆசை, கோபம், மரணமெனும் கடும்பூதங்களை {முதலைகளைக்} கொண்டதும், பிறப்பெனும் சுழலைக் கொண்டதும், ஐம்புலன்களெனும் நீரைக் கொண்டதுமான வாழ்வெனும் பெருங்கடலை யோகமெனும் ஓடத்தைக் கொண்டு கடப்பாயாக.(17) மரணத்தால் பாதிக்கப்படுவதும், முதுமையால் பீடிக்கப்படுவதும், பகல்கள் மற்றும் இரவுகள் என்ற இடிகள் இடையறாமல் விழுவதுமான இவ்வுலகத்தை அறம் எனும் ஓடத்தைக் கொண்டு கடப்பாயாக.(18) நீ அமர்ந்திருக்கும்போதோ, கிடக்கும்போதோ எக்கணத்திலும் மரணம் உன்னைத் தேடிக் கொண்டிருக்கும்போது, எந்நேரத்தில் மரணம் உன்னைத் தன் பலியாகக் கொள்ளும் என்பது நிச்சயமாகும். மீட்பை நீ எங்கிருந்து அடையப்போகிறாய்.(19) செம்மறியாட்டை அபகரித்துச் செல்லும் காலனைப் போலவே, ஒருவன் செல்வம்மீட்டுவதிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபட்டு அவற்றில் நிறைவடையாதிருக்கும்போதே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(20)
இருளில் நுழைய விதிக்கப்படும்போது, நன்கு வளர்க்கப்பட்ட தழலைக் கொண்ட அற புத்தியாலான விளக்கை நீ ஏந்துவாயாக.(21) மனிதர்களின் உலகில் ஒன்றுக்குப் பின் ஒன்றெனப் பல்வேறு வடிவங்களில் வீழும் ஓர் உயிரினம், பெரும் கடின காலத்திற்குப் பிறகே பிராமண நிலையை அடைகிறது. நீ அந்நிலையை அடைந்திருக்கிறாய். ஓ! மகனே, நீ அதை (முறையாகப்) பராமரிக்க முயற்சி செய்வாயாக.(22) ஒரு பிராமணன், ஆசைகளில் நிறைவு கொள்வதற்காகப் பிறப்பை அடைவதில்லை. மறுபுறம், மறுமையில் ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைவதற்காக இவ்வுலகில் தன்னை வருத்திக் கொள்ளவும், தவங்கள் செய்யவுமே அவன் {பிராமணன்} உடலைக் கொள்கிறான்.(23) நீண்ட நெடிய கடுந்தவங்களின் துணையுடனே பிராமணத் தன்மை என்ற நிலை அடையப்படுகிறது. அந்நிலையை அடைந்த ஒருவன், புலன்களில் ஈடுபடுவதால் தன் காலத்தை வீணடிக்கக்கூடாது. தவங்கள் மற்றும் தற்கட்டுப்பாட்டில் எப்போதும் ஈடுபட்டு, உனக்கான நன்மையை விரும்பி, அமைதியில் அர்ப்பணிப்புடன் நீ வாழவும், செயல்படவும் செய்வாயாக.(24) ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் காலமும் ஒரு குதிரையைப் போன்றதாகும். அந்தக் குதிரையின் இயல்பு புலப்படாததாகும். (ஏற்கனவே சொல்லப்பட்ட பதினாறு) தத்துவங்களே {கலைகளே} உடலாகின்றன. அதன் இயல்பு மிக மிக நுட்பமனாதாகும். க்ஷணங்கள், திருதிகள், நிமிஷங்கள் ஆகியன அதன் உடலில் உள்ள ரோமங்களாகும். சந்தி வேளைகள் அதன் தோள்பூட்டுகளாக இருக்கின்றன. தேய்பிறையும், வளர்பிறையும் சம சக்தியைக் கொண்டு அதன் இரு கண்களாக இருக்கின்றன. மாதங்கள் அதன் உறுப்புகளாகும். அந்தக் குதிரை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.(25)
உன் கண்கள் குருடாகவில்லையெனில், அக்குதிரை பார்வைக்குப் புலப்படாத பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, மறுமை குறித்த கேள்விக்கு உன் ஆசான்கள் என்ன சொல்கின்றனர் என்பதைக் கேட்டு உன் இதயத்தை அறத்தில் நிலைநிறுத்துவாயாக.(26) அறத்தில் இருந்து வீழ்பவர்களும், பொறுப்பற்ற ஒழுங்கில் தங்களை நடத்திக் கொள்பவர்களும், பிறரிடம் எப்போதும் வன்மத்தைக் காட்டுபவர்களும், தீய வழிகளில் நடப்பவர்களும், யமலோகத்தில் (இருப்புசார்ந்த) உடலை அடைந்து, பல்வேறு வகையான தங்கள் நீதியற்ற செயல்களின் விளைவால் பல்வேறு துன்பங்களை அடைகின்றனர்.(27) அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், நல்லோரிடமும், தீயோரிடமும் வேறுபாடு பார்க்காமல் பாதுகாத்து, தண்டிப்பவனுமான மன்னன், அறச்செயல்கள் செய்த மனிதர்களின் உலகை அடைகிறான். பல்வேறுவகை நற்செயல்களைச் செய்வதன் விளைவால் களங்கமற்றதும், ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்தாலும் அடைய முடியாததுமான இன்பநிலையை அவன் அடைகிறான்.(28) பெற்றோர் மற்றும் ஆசான்களின் ஆணைகளை மீறும் மனிதன், இறந்த பிறகு நரகத்தை அடைந்து பயங்கர முகத்தோற்றம் கொண்ட சீற்றமிகு நாய்களும், இரும்பு அலகுகளைக் கொண்ட காகங்களும், கருங்காக்கை, கழுகுகள் மற்றும் பிற பறவை கூட்டங்களும், குருதி உறிஞ்சும் புழுக்களும் அவனைத் தாக்குகின்றன.(29) சுயம்புவால் விதிக்கப்பட்ட பத்து கட்டளைகளை, பொறுப்பற்ற தன்மையின் விளைவால் மீறும் இழிந்த பாவி, பித்ருக்களின் மன்னனுடைய ஆட்சிப்பகுதிகளில் உள்ள காட்டுக் கழிவுகளில் பெரும் துன்பத்துடன் தன் காலத்தைக் கழிக்கும் கடப்பாட்டை அடைகிறான்[2].(30)பேராசையால் களங்கமடைந்தவனும், பொய்மையில் அன்பு பாராட்டுபவனும், ஏமாற்று மற்றும் வஞ்சனையில் எப்போதும் திளைப்பவனும், போலித்தனம் மற்றும் வஞ்சகம் பயில்வதன் மூலம் பிறருக்குத் தீங்கிழைப்பவனுமான மனிதன், ஆழ்நரகிற்குச் சென்று, தன் தீச்செயல்களுக்காகப் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறான்.(31) அத்தகைய மனிதன், கொதிக்கும் நீரைக் கொண்ட வைதரணி என்றழைக்கப்படும் பேராற்றில் நீராட வற்புறுத்தப்பட்டு, வாட்களைப் போன்ற கூரிய இலைகளைக் கொண்ட மரங்கள் நிறைந்த வனத்திற்குள் அனுப்பப்பட்டு, போர்க்கோடரிகளாலான படுக்கையில் கிடத்தப்படுகிறான். அவன் தன் நாட்களைப் பெருந்துன்பத்துடன் பயங்கர நரகில் இவ்வாறே கழிக்கிறான்.(32) நீ பிரம்மலோகத்தையும், தேவர்களின் உலகங்களையும் மட்டுமே காண்கிறாய், ஆனால் உயர்ந்ததை (மோக்ஷத்தைக்) காணாத குருடனாக இருக்கிறாய். ஐயோ, (தளர்ச்சி, முதுமை என்ற) வரிசையில் மரணத்தைக் கொண்டு வருவதை எப்போதும் காணாத குருடனாக இருக்கிறாய்.(33) (விடுதலையின் {முக்தியின்} பாதையில்) செல்வாயாக. ஏன் தாமதிக்கிறாய்? உன் மகிழ்ச்சியை அழிக்கும் பேரச்சம் உன் எதிரில் இருக்கிறது. விடுதலை அடைவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பாயாக.(34) மரணம் அடைந்தவுடன் யமனின் ஆணைக்காக அவன் முன்னிலைக்கு நிச்சயம் எடுத்துச் செல்லப்படுவாய். மறுமையில் இன்பநிலையை அடைவதற்காகப் பயிலக் கடினமான கடும் நோன்புகள் மூலம் அறத்தை ஈட்ட முனைவாயாக.(35)
பிறரின் துன்பங்களைக் கருத்தில் கொள்ளாத யமன், உன்னையும், உன் நண்பர்களையும் போன்ற மனிதர்கள் அனைவரின் உயிரையும் விரைவில் எடுத்துக் கொள்வான். அவனைத் தடுக்கவல்லவன் எவனுமில்லை.(36) வெகு விரைவில் உன் முன்னிலையில் யமனின் காற்று வீசும் (உன்னை அவனது முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்). வெகுவிரையில் நீ பயங்கரத் தனிமையை அடைவாய். அங்கே உன் நன்மைக்கானதை அடைவாயாக.(37) மிக விரைவில் உன் முன்னிலைக்கு வரப்போகும் அந்த மரணக்காற்று இப்போது எங்கிருக்கிறது? (அந்தக் கவனத்துடன் நீ இருக்கிறாயா?) அந்தக் கணம் நேரும்போது, திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கண் முன்பு சுழலத் தொடங்கும். (அந்தக் கவனத்துடன் நீ இருக்கிறாயா?)(38) ஓ! மகனே, (அந்தக் கணம் நேரும்போது) அந்தப் பயங்கர இருப்பில் ஆதரவற்றவனாக இருக்கும்போது உன் வேதங்கள் உன் பார்வையில் இருந்து விரைவில் மறையும். எனவே, சிறப்புவாய்ந்த தியான யோகத்தில் நீ உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக.(39) (மரணத்திற்குப் பிறகு) பிழையின் இயல்பிலான உன் கடந்த கால நல்ல மற்றும் தீய செயல்களை நினைத்து வருந்தாமல் இருக்கச் செய்யும் ஒரே புதையலை அடைய முனைவாயாக[3].(40)முதுமை வெகுவிரைவில் உன் உடலைப் பலவீனப்படுத்தி, உன் பலத்தையும், அங்கங்களையும், அழகையும் களவாடிவிடும். எனவே அந்த ஒரே புதையலை நீ நாடுவாயாக.(41) நோயைச் சாரதியாகக் கொண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தகன், உன் உடலைத் துளைத்து நொறுக்கவும், உன் உயிரை எடுக்கவும் வெகுவிரைவில் வருவான். எனவே, கடுந்தவங்களைச் செய்வாயாக.(42) உன் உடலுக்குள் வசிக்கும் அந்தப் பயங்கர ஓநாய்கள் {ஆசைகள்} வெகுவிரைவில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உன்னைத் தாக்கும். எனவே, அறச் செயல்கள் செய்ய முயற்சி செய்வாயாக.(43) வெகுவிரையில் அடர்த்தியான இருளில் நீ தனியாக இருப்பதைக் காண்பாய், வெகுவிரைவில் மலையின் உச்சியில் தங்க மரணங்கள் இருப்பதையும் காண்பாய். எனவே, அறச்செயல்களைச் செய்ய விரைவாயாக[4].(44) நட்பின் போர்வையில் உள்ள உன் தீய தோழர்களான உன் எதிரிகள் (புலன்கள்) வெகுவிரைவில் உன்னைச் சரியான பார்வையில் இருந்து திரும்பச் செய்வார்கள். எனவே, ஓ! மகனே, உயர்ந்த நன்மையை அடைய முனைவாயாக.(45)மன்னர்களிடமோ, கள்வர்களிடமோ அச்சத்தை ஏற்படுத்தாததும், மரணத்தின்போதும் கைவிடத்தகாததுமான அந்தச் செல்வத்தை நீ ஈட்டுவாயாக.(46) ஒருவனுடைய செயல்களால் ஈட்டப்படும் அந்தச் செல்வத்தை யாருடனும் நீ பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தான் ஈடிய அந்தச் செல்வத்தையே (மறுமையில்) அனுபவிக்கிறான்.(47) ஓ! மகனே {சுகரே}, மறுமையில் வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பிறருக்குக் கொடுப்பாயாக. அழிவற்றதும், நீடித்திருப்பதுமான அந்தச் செல்வத்தை ஈட்டுவதில் நீ உன்னை நிறுவிக் கொள்வாயாக.(48) இன்பங்களில் தணிவு ஏற்படும் முன்பே மரணம் நேரலாம் என்பதால் முதலில் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்க நினைக்காமல், உன் இதயத்தை விடுதலையை {முக்தியை} நோக்கித் திருப்புவாயாக. இதை நோக்கில் கொண்டு நற்செயல்களைச் செய்வதில் விரைவாயாக.(49) தாயோ, மகனோ, உறவினர்களோ, உற்ற நண்பர்களோ வெகுமதிகளை அளித்து வேண்டிக் கேட்டாலும் இறக்கும் மனிதனுடன் துணைக்கு வர மாட்டார்கள். யம லோகத்திற்கு ஒருவன் துணைக்கு யாருமில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(50)
மரணத்திற்கு முன்பு அவன் செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே அடுத்த உலகத்திற்குச் செல்லும் அவனோடு உடன் செல்லும்.(51) நல்ல மற்றும் தீய வழிமுறைகள் மூலம் ஒருவனால் ஈட்டப்பட்ட தங்கமும், ரத்தினங்களும், அவனது உடல் அழிவை அடையும்போது எந்த நன்மையையும் உண்டாக்குவதில்லை.(52) அடுத்த உலகிற்குச் சென்ற மனிதர்களால், இவ்வாழ்வில் செய்யப்பட்ட, செய்யப்படாத செயல்களின் சாட்சியாக ஆன்மாவைத் தவிர வேறு சிறந்த சாட்சி ஏதும் கிடையாது.(53) செயல்படும் சைதன்யம் (ஜீவாத்மா) சாட்சியான சைதன்யத்திற்குள் நுழையும்போது உடல் அழிவை அடைகிறது என்பது, யோகிகள் தங்கள் யோக புத்தியின் மூலம் தங்கள் இதயங்களால் ஆகாயத்தில் நுழையும்போது காணப்படுகிறது[5].(54) இங்கேயும் நெருப்பின் தேவன் {அக்னி}, சூரியன் மற்றும் காற்று {வாயு} ஆகிய மூவரும் உடலில் வசிக்கிறார்கள். ஒருவன் தன் வாழ்நாளில் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் இவர்கள் சாட்சியாக இருக்கின்றனர்.(55)அனைத்துப் பொருட்களையும் வெளிக்காட்டும் குணத்தைக் கொண்ட பகல்களும், அனைத்துப் பொருட்களையும் மறைக்கும் குணத்தைக் கொண்ட இரவுகளும், அனைத்துப் பொருட்களையும் தீண்டியபடியே இடையறாமல் கடந்து போகின்றன (அதன்படி அந்தப் பொருட்களுக்காக ஒதுக்கப்பட்ட இருப்பின் காலத்தைக் குறைத்து வருகின்றன). எனவே, நீ உன் வகைக்கான கடமைகளை நோற்பாயாக.(56) (யமலோகத்திற்கு வழிவகுக்கும்) மறுமையின் சாலையானது, (இரும்பு அலகைக் கொண்ட பறவைகள் மற்றும் ஓநாய்களின் வடிவிலான) பல எதிரிகளாலும், வெறுத்தொதுக்கும் பயங்கரப் பூச்சிகள் மற்றும் புழுக்களாலும் தொற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் உனக்குத் துணையாக வரப்போவது செயல்கள் மட்டுமே என்பதால் நீ உன் செயல்களைக் கவனமாகச் செய்வாயாக.(57) அங்கே ஒருவன் தன் செயல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை, ஆனால் தன்னால் செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்களுக்கான கனிகளை அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்.(58) அப்சரஸ்களும், பெரும் முனிவர்களும் பேரின்பநிலைகளின் கனிகளை அடைவதைப் போலவே, அறச்செயல்கள் செய்யும் மனிதர்களும் தங்கள் தங்கள் அறச்செயல்களின் கனிகளாகச் செலுத்துபவர்களின் விருப்பத்திற்கேற்ப எங்கேயும் செல்லக்கூடிய ஒளி பொருந்திய தேர்களை மறுமையில் அடைகிறார்கள்.(59) களங்கமற்ற செயல்களையும், தூய்மையான ஆன்மாக்களையும், தூய பிறவியையும் கொண்ட மனிதர்கள், இம்மையில் {இவ்வுலகில்} செய்யப்பட்ட தங்கள் சொந்த அறச் செயல்கள் தொடர்பான மறுமையின் {அவர்கள் செல்லக்கூடிய வேறு உலகங்களின்} கனிகளை அடைகிறார்கள்.(60)
மனிதர்கள், இல்லறக் கடமைகளாலமைந்த நெடுஞ்சாலையில் நடந்து செல்வதன் மூலம் பிரஜாபதி, அல்லது பிருஹஸ்பதி அல்லது நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} ஆகியோரின் உலகங்களை அடைந்து மகிழ்ச்சியான கதிகளை அடைகிறார்கள்.(61) என்னால் ஆயிரமாயிரம் போதனைகளை உனக்குத் தர முடியும். எனினும், பலமிக்கத் தூய்மையாளியே (அறம்) {பரிசுத்தமாகச் செய்கிற தர்மமே}, மூட மனிதர்கள் அனைவரையும் இருளில் வைத்திருக்கிறது என்பதை அறிவாயாக[6].(62) நீ இருபத்துநான்கு {24} வயதைக் கடந்துவிட்டாய். இப்போது முழுமையாக நீ இருபத்தைந்து வயதை அடைந்தவனாக இருக்கிறாய். உன் வயது கடந்து செல்கிறது. அறக்கொள்முதல் செய்யும் கிடங்கை விரிக்கத் தொடங்குவாயாக {அறமீட்டுவாயாக}.(63) பிழையிலும், விழிப்பற்ற தன்மையிலும் வசிக்கும் யமன் மிக விரைவாக உன் புலன்களை அவற்றுக்குரிய சக்திகளைக் கொண்டே இழக்கச் செய்வான். அந்த அழிவு ஏற்படும் முன்னர் நீ இன் உடலை மட்டுமே சார்ந்துஉன் கடமைகளை விரைவாகச் செய்வாயாக.(64) நீ மட்டுமே முன்னும் பின்னும் இருக்கக்கூடிய சாலையில் செல்லும் உன் கடமையின் போது, உன் உடலாலோ, உன் மனைவியாலோ, உன் பிள்ளையாலோ உனக்கு என்ன தேவை இருக்கிறது?[7](65)மனிதர்கள் யமலோகத்திற்கு எந்தத் துணையும் இல்லாமல் தனியாகச் செல்ல வேண்டிய இந்தப் பயங்கரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், முற்றான ஒரே செல்வக்குவியலை {புதையலை} (அறம் அல்லது யோக சமாதியை) அடைவதற்கு நீ முனைய வேண்டும் என்பதே தெளிவாகத் தெரிகிறது.(66) பிறரைப் பீடிப்பதைக் கருத்தில் கொள்ளாத பலமிக்க யமன், ஒருவனுடைய நண்பர்களையும், உறவினர்களையும், அவனது குலத்தையும் வேரோடு அபகரித்துச் செல்கிறான். அவனைத் தடுக்க வேறு எவனுமில்லை. எனவே, அறத்தைத் திரட்ட நீ முனைவாயாக.(67) ஓ! மகனே, நான் பின்பற்றும் சாத்திரங்களுக்கு ஏற்புடைய இந்தப் பாடங்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(68) தன் வகைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் தன் உடலை ஆதரித்துக் கொள்பவனும், அத்தகைய செயல்களுடன் பிணைக்கப்பட்ட எந்தக் கனியையும் ஈட்ட கொடையளிப்பவனுமான மனிதன், அறியாமை மற்றும் பிழையால் பிறக்கும் விளைவுகள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான்.(69) அறச் செயல்களைச் செய்யும் மனிதன் வேத அறிவிப்புகளில் இருந்து அடையும் ஞானம் எல்லாமறிந்த நிலைக்கு {கடவுளுக்கு} வழிவகுக்கிறது. அந்த எல்லாமறிந்த நிலையானது {கடவுள்} மனிதன் அடையக்கூடிய உயர்ந்த பொருளின் அறிவியலை (விடுதலையை {முக்தியை}) போன்றதாகும். நன்றியுள்ளவர்களுக்குச் சொல்லப்படும் போதனையானது, (மனிதர் அடையக்கூடிய உயர்ந்த பொருளை அடைவதற்கு வழிவகுப்பதன் விளைவால்) நன்மையாகிறது.(70)
மனித வாழிடங்களுக்கு மத்தியில் ஒருவன் கொள்ளும் இன்பமானது உண்மையில் அவனை இறுகப் பற்றும் கயிறாகும். அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அந்தக் கயிற்றை அறுத்து, பேரின்ப உலகங்களுக்குச் செல்கிறார்கள். எனினும், தீய மனிதர்கள் அந்தக் கயிற்றை அறுக்கத் தவறுகிறார்கள்.(71) ஓ! மகனே, நீ இறக்கப் போவதால் செல்வத்தாலோ, உறவினர்களாலோ, பிள்ளைகளாலோ உனக்கென்ன பயனேற்படப் போகிறது? குகைக்குள் மறைந்திருக்கும் உன் ஆன்மாவைத் தேடுவதில் ஈடுபடுவாயாக. உன் பாட்டான்கள் அனைவரும் எங்கே சென்றனர்? நாளை செய்ய வேண்டியதை நீ இன்று செய்வாயாக. பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலில் செய்வாயாக. ஒருவன் தன் பணியைச் செய்துவிட்டானா இல்லையா என்று பார்த்து மரணம் காத்திருப்பதில்லை.(73) ஒருவன் இறந்ததும் (சுடலைக்கு) உடலைப் பின்தொடர்ந்து செல்லும் அவனது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அஃதை {உடலை} ஈமச் சிதைக்குள் வீசிவிட்டு திரும்பிவிடுகின்றனர்.(74) ஐயுறுவாதிகள், கருணையற்றவர்கள், தீய வழிகளில் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆகியோரைப் புறக்கணிக்கத் தயங்காமல், அக்கறையற்றதன்மையோ, உணர்வின்மையோ இல்லாமல் உனக்கான உயர்ந்த நன்மையைத் தேட முயற்சிப்பாயாக.(75) எனவே, உலகம் காலனால் இவ்வாறு பீடிக்கப்படும்போது, அசைக்கமுடியாத பொறுமையின் துணையுடனும், உன் முழு இதயத்துடனும் அறத்தை ஈட்டுவாயாக[8].(76)விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை நன்கறிந்தவனும், தன் வகைக்குரிய கடமைகளை முறையாகச் செய்பவனுமான மனிதன் மறுமையில் நிச்சயம் பேரின்ப நிலையை அடைவான்.(77) வேறொரு உடலை அடைவதே மரணம் என்று உணர்ந்தவனும், அறவோர் நடக்கும் பாதையில் இருந்து விலகாதவனுமான உனக்கு அழிவே கிடையாது. அறப்பங்குகளைப் பெருக்குபவனே உண்மையில் ஞானியாவான். மறுபுறம், அறத்திலிருநுத வீழ்பவனோ மூடனாவான் என்று சொல்லப்படுகிறது.(78) நற்செயல்களைச் செய்வதில் ஈடுபடும் ஒருவன் சொர்க்கத்தையும், பிற வெகுமதிகளையும் அச்செயல்களின் கனிகளாக அடைகிறான்; ஆனால் தீயச் செயல்களில் பற்று கொண்டவனோ நரகத்தில் மூழ்குகிறான்.(79) அடைவதற்கரிதானதும், சொர்க்கத்திற்கான முதற்படியுமான மானிட நிலையை அடைந்து ஒருவன், மீண்டும் வீழ்ந்துவிடாதவாறு தன் ஆன்மாவை பிரம்மத்தில் நிலைநிறுத்த வேண்டும்.(80)
சொர்க்கத்தின் பாதையில் செலுத்தப்படும் புத்தியைக் கொண்டவனும், அங்கிருந்து விலகாதவனும், ஞானிகளால் உண்மையில் அறவோனாக {தர்மவானாகக்} கருதப்படுபவனுமான மனிதன் இறக்கும்போது அவனது நண்பர்கள் துயரில் ஈடுபடக்கூடாது.(81) பிரம்மத்தை நோக்கிச் செலுத்தப்படாத அமைதியான புத்தியைக் கொண்டவனும், சொர்க்கத்தை அடைந்தவனுமான மனிதன் (நரகம் எனும்) பேரச்சத்தில் இருந்து விடுபடுகிறான்.(82) தவசிகளின் ஆசிரமங்களில் பிறந்து, அங்கேயே இறப்பவர்கள், தங்கள் வாழ்வு முழுவதும் இன்பங்கள் மற்றும் ஆசையில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருப்பதன் மூலம் அதிகத் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில்லை.(83) எனினும், இன்பத்திற்குரிய பொருட்களைக் கொண்டிருந்தாலும், அவற்றைக் கைவிட்டு, தவப் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவன் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்[9].(84) நூற்றுகணக்கான, ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தைமார்கள், மகன்கள், மனைவிகள் இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் உண்டு, இனியும் உண்டாவார்கள். எனினும், அவர்கள் யார்? நாம் யாருடையவர்கள்?(85)நான் தனியாகவே இருக்கிறேன். என்னுடையவர் என்று சொல்ல எனக்கு யாரும் கிடையாது. நான் யாருக்கும் உரியவனுமல்ல. நான் யாருடையவன் என்று சொல்ல ஒருவரையும், என்னுடையவர் என்று சொல்ல ஒருவரையும் நான் காணவில்லை.(86) உன்னைக் கொண்டு அவர்களுக்குச் செய்ய ஒன்றுமில்லை. அவர்களைக் கொண்டு நீ செய்ய வேண்டியதும் ஒன்றுமில்லை. உயிரினங்கள் அனைத்தும் தங்கள் முற்பிறவி செயல்களுக்கு ஏற்புடைய வகையிலேயே தங்கள் பிறப்பை அடைகின்றன. நீயும் உன் செயல்களின் மூலம் தீர்மானிக்கப்படும் (ஒரு புதிய வகையிலான பிறப்பை அடைவதற்குரிய) இடத்திற்குச் செல்ல வேண்டும்.(87) செல்வந்தர்களின் நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே அவர்களிடம் பற்றுடன் நடந்து கொள்வது காணப்படுகிறது. எனினும், வறியவனின் நண்பர்களும், தொண்டர்களும் அவன் வாழும்போதே வீழ்ந்துவிடுகின்றனர்.(88) மனிதன் தன் மனைவி (மற்றும் பிள்ளைகளின்) நிமித்தம் எண்ணற்ற தீச்செயல்களைச் செய்கிறான். அந்தத் தீச்செயல்களில் இருந்தே அவன் இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தை அடைகிறான்.(89) வாழும் ஒவ்வொரு உயிரினத்தாலும் செய்யப்படும் செயல்களின் மூலம் இவ்வுலக வாழ்வு கெட்டுப்போவதை ஞானமுள்ள மனிதன் காண்கிறான். எனவே, ஓ! மகனே, நான் உனக்குச் சொன்ன அறிவுரைகளின்படியே நீ செயல்படுவாயாக.(90)
உண்மைப் பார்வை கொண்ட மனிதன், இவ்வுலகைச் செயற்களமாக மட்டுமே கண்டு, மறுமையில் பேரின்பநிலையை அடைய விரும்பி நற்செயல்களைச் செய்ய வேண்டும்.(91) மாதங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} எனும் கரண்டிகளின் துணையைக் கொண்டதும், சூரியனையே நெருப்பாகக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தாலும் செய்யப்படும் ஒவ்வொரு செயலின் கனிகளையும் சாட்சியாகக் காணும் இரவு பகலெனும் விறகுகளைக் கொண்டதுமான காலம், தடுக்கப்படமுடியா தன் பலத்துடன் முயன்று (தன் கொப்பரையில்_ உயிரினங்கள் அனைத்தையும் சமைக்கிறது.(92) கொடையளிக்கப்படாததும், அனுபவிக்கப்படாதமான செல்வத்திற்கான நோக்கம்தான் என்ன? {அந்த செல்வத்தினால் என்ன பயன்?} ஒருவனுடைய எதிரிகளைத் தடுப்பதிலோ, அடக்குவதிலோ ஈடுபடதா பலத்திற்கான நோக்கம்தான் என்ன? {அந்த பலத்தினால் என்ன பயன்?} ஒருவனை அறச்செயல்கள் செய்யத்தூண்டாத சாத்திர அறிவின் நோக்கம்தான் என்ன? {அந்த சாத்திர அறிவினால் என்ன பயன்?} புலன்களை அடக்காததும், தீச்செயல்களில் இருந்து விலகாததுமான அன்மாவின் நோக்கம்தான் என்ன? {அந்த ஆன்மாவினால் என்ன பயன்?}” என்றார் {வியாசர்}”.(93)
பீஷமர் தொடர்ந்தார், “தீவில் பிறந்தவரால் {துவைபாயனரான} வியாசரால் சொல்லப்பட்ட இந்த நன்மையான வார்த்தைகளைக் கேட்ட சுகர், தன் தந்தையை விட்டகன்று, தனக்கு விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} கற்பிக்கக்கூடிய ஓர் ஆசானைத் தேடிச் சென்றார்”[10].(94)
விதைத்த வினையே முளைக்கும்! – சாந்திபர்வம் பகுதி – 323- செய்த வினை செய்தவனையே சரியாக வந்தடையும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், நன்கு செய்யப்படும் தவங்கள், ஆசான்களுக்கும், மதிப்புமிக்கப் பெரியோருக்கும் செய்யப்படும் கடமையுணர்வுமிக்கத் தொண்டுகள் ஆகியவற்றுக்குச் செயற்திறன் {பலாபலன்} உண்டென்றால் அதைக்குறித்து எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீமையுடன் தொடர்புடைய புத்தியானது மனத்தைப் பாவத்தில் வீழச் செய்கிறது. இந்நிலையில் தன் செயல்களைத் தானே களங்கம் செய்யும் ஒருவன் பெரும் துன்பத்தில் வீழ்கிறான்.(2) பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்கள் மிகவறிய நிலையில் உள்ள மனிதர்களாகப் பிறக்க வேண்டிவரும். பஞ்சத்துக்குப் பஞ்சம், துன்பத்துக்குத் துன்பம், அச்சத்திற்கு அச்சம் என்பதே அவர்களது மாற்றமாக இருக்கும். இறந்தவர்களைக் காட்டிலும் இவர்களே இறந்தவர்களாக இருக்கிறார்கள்.(3) நம்பிக்கை கொண்டவர்கள், தற்கட்டுப்பாடு கொண்டவர்கள், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்கள் ஆகியோர் செழிப்பை அடைந்தவர்களாக, இன்பத்துக்கு இன்பம், சொர்க்கத்திற்குச் சொர்க்கம், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி என்ற மாற்றமடைகின்றனர்.(4) நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள், இரைதேடும் விலங்குகளாலும், யானைகளாலும் தொற்றப்பட்டதும், பாம்புகள், கள்வர்கள் மற்றும் அச்சத்திற்குரிய பிற காரணங்கள் நிறைந்ததுமான பாதையற்ற தடத்தில் கையைப் பிசைந்தபடியே கடக்க நேரிடும். இவற்றைத் தவிர வேறு என்ன சொல்லப்பட வேண்டும்?(5)
மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்பவர்கள், பரந்த மனம் கொண்டவர்கள், நல்லோரை முறையாக மதிப்பவர்கள் ஆகியோர் தூய்மையடைந்த, வெல்லப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களுக்குச் சொந்தமான (இன்பம்நிறைந்த) பாதையைத் தங்களுடையதாகக் கொள்கிறார்கள்.(6) தானியங்களுடன் பதர்களும், பறவைகளுடன் கரப்பான்பூச்சிகளும் கணக்கிடப்படாததைப் போலவே மனிதர்களுடன் அறவோர் கணக்கிடப்படுவதில்லை.(7) ஒருவன் செய்யும் செயல்கள், அவன் வீழும்போது அவனோடு கிடக்கிறது.(8) உண்மையில், ஒருவன் செய்யும் பாவங்கள் அவன் அமரும் போது அமர்கின்றன, அவன் ஓடும்போது ஓடுகின்றன. செய்தவன் செயல்படும்போது பாவங்களும் செயல்படுகின்றன. உண்மையில் அவை செய்தவனின் நிழல் போல அவனைப் பின்தொடர்கின்றன.(9) எந்த வழிமுறையிலும், எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயலும், (அவற்றின் கனிகளைப் பொறுத்தவரையில்) அதைச் செய்தவனால் மறுமையில் நிச்சயம் அனுபவிக்கப்படவும், தாங்கிக் கொள்ளப்படவும் வேண்டும்.(10)
உயிரினங்கள் வீசப்படும் தொலைவு மற்றும் அவற்றின் செயல்களோடு தொடர்புடைய விதியை முறையாகக் காணும் காலம் அவற்றை {அந்த உயிரினங்களை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எப்போதும் இழுத்துக் கொண்டிருக்கிறது.(11) மலர்களும், கனிகளும் தூண்டப்படாமலே தாமதிக்காமல் உரிய காலத்தில் தோன்றுவதைப் போலவே, முற்பிறவியில் செய்த செயல்களும் {வினைகளும்} உரிய காலத்தில் தோன்றுகின்றன.(12) கௌரவம் மற்றும் கௌரவமின்மை, ஈட்டல் மற்றும் இழத்தல், அழிவு மற்றும் வளர்ச்சி ஆகியவை தோன்றுவது காணப்படுகிறது. (அவை வரும்போது) அவற்றை யாராலும் தடுக்க முடியாது. தோன்றியதும் மறைவதால் அவற்றில் எதுவும் நீடித்திருக்காது.(13) ஒருவன் அனுபவிக்கும் துன்பம் அவனது செயல்களின் விளைவேயாகும். ஒருவனுடைய மகிழ்ச்சி அவனது செயல்களில் இருந்தே உண்டாகிறது. ஒருவன் தாயின் கருவறைக்குள் கிடக்கும் காலத்திலிருந்து தன் முற்பிறவி செயல்களை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் தொடங்குகிறான்.(14) குழந்தைப் பருவம், இளமை, அல்லது முதுமையில் ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் எதன் விளைவையும் அவனது மறுமையில் அதே வயதுகளில் அவன் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறான்.(15)
ஆயிரம் பசுக்களுக்கு மத்தியில் கன்று தன் தாயை அடையாளம் காண்பதைப் போலவே முற்பிறவியில் ஒருவன் செய்த செயல்கள், அடுத்தபிறவியில் அவன் தன் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் நின்றாலும் (தவறேதும் இல்லாமல்) அவனையே வந்து அடையும்.(16) அழுக்கடைந்த துணியானது நீரால் வெளுக்கப்படுவதைப் போலவே, அறவோரும் நோன்புகள் தவங்களெனும் நெருப்பில் தொடர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் தூய்மையடைந்து, இறுதியாக எல்லையில்லா மகிழ்ச்சியை அடைகின்றனர்.(17) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, நன்கு செய்யப்படும் நீடித்த தவங்களால் பாவங்கழுவப்பட்டவர்களின் ஆசைகளும், நோக்கங்களும், கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றன.(18) வானத்தில் பறவைகளின் பாதையைய் போன்றோ, நீரில் மீன்களின் பாதையைப் போன்றோ அறவோரின் பாதையையும் பிரித்தறிய முடியாது.(19) பிறரை நிந்திப்பதற்கு எந்தத் தேவையுமில்லை; அதே போலப் பிறர் தவறிய தருணங்களைச் சொல்ல வேண்டியதுமில்லை. மறுபுறம் ஒருவன், தனக்கு இனிமையானதையும், ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்துகொள்ள வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(20)
வியாசரின் தவம்! – சாந்திபர்வம் பகுதி – 324-: மகனைப் பெற வியாசர் தவமிருந்தது; சிவன் வரமருளியது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடுதவங்களைக் கொண்ட உயர் ஆன்மா சுகர் வியாசரின் மகனாக எவ்வாறு பிறந்தார்? உயர்ந்த வெற்றியை அடைவதில் அவர் எவ்வாறு வென்றார்?(1) தவத்தையே செல்வமாகக் கொண்ட வியாசர் எந்தப் பெண்மணியிடம் தன் மகனைப் பெற்றார்? சுகரின் தாயார் யார் என்பதை நாம் அறியவில்லை, மேலும் அந்த உயர் ஆன்ம தவசியின் பிறப்பைக் குறித்த எதையும் நாம் அறியவில்லை.(2) சிறுவனாக இருந்தபோதே இவரது மனம் எவ்வாறு நுட்பமான ஞானத்தில் (பிரம்மத்தில்) செலுத்தப்பட்டது? உண்மையில், இவ்வளவு இளம் வயதில் இத்தகைய மனநிலை வாய்த்த வேறு இரண்டாவது மனிதனை இவ்வுலகில் காண முடியாது.(3) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, இவை யாவையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அமுதம் போன்ற உமது சிறந்த வார்த்தைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை.(4) ஓ! பாட்டா, சுகரின் மகிமை, ஞானம் மற்றும் அவரது ஆத்மயோகத்தையும் (பரமாத்மாவுடன் அவர் கலந்த வகையையும்) முறையான வரிசையில் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வயது, முதுமை, செல்வம் அல்லது நண்பர்களைச் சார்ந்து முனிவர்கள் தகுதியை அடைவதில்லை. வேத கல்வியில் ஈடுபடுபவனே பெரியவன் என அவர்கள் சொல்கிறார்கள்.(6) நீ கேட்கும் இவை அனைத்தும் தவங்களையே தங்கள் வேராகக் கொண்டவையாகும். மேலும், ஓ! பாண்டுவின் மகனே, அந்தத் தவமானது புலனடக்கத்தில் இருந்தே எழுகிறது.(7) தன் புலன்களிடம் கடிவாளத்தை ஒப்படைக்கும் ஒருவன் நிச்சயம் களங்கத்தை ஈட்டுகிறான். அவற்றைக் கட்டுப்படுத்துவதாலேயே அவன் வெற்றியை ஈட்டுகிறான்.(8) ஆயிரம் குதிரை வேள்விகள், அல்லது நூறு வாஜபேயங்களோடு தொடர்புடைய தகுதியானது, யோகத்தில் இருந்து எழும் தகுதியின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது.(9) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் புரிந்து கொள்ள முடியாதவையான சுகரின் பிறந்த சூழ்நிலைகள், தன் தவங்களால் அவர் வென்ற கனிகள், (தன் செயல்களால்) அவர் அடைந்த முதன்மையான கதி ஆகியவற்றைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(10)
ஒரு காலத்தில், கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} அலங்கரிக்கப்பட்ட மேருவின் சிகரத்தில், தன் தோழர்களான பயங்கரமான பூதகணங்களின் துணையுடன் மஹாதேவன் விளையாடிக் கொண்டிருந்தான்.(11) மலைகளின் மன்னனுடைய மகளான தேவி பார்வதியும் அங்கிருந்தாள். தீவில் பிறந்தவர் ({துவைபாயனரான} வியாசர்}, இயல்புக்குமீறிய கடுந்தவங்களை அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே செய்து கொண்டிருந்தார்.(12) ஓ! குருக்களில் சிறந்தவரே, யோகப் பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்தப் பெரும் தவசி, யோகத்தின் மூலம் தன் ஆன்மாவுக்குள் தன்னையே ஈர்த்துக் கொண்டும், தாரணையில் ஈடுபட்டும், ஒரு மகனுக்காக (மகனைப் பெறுவதற்காக) கடுந்தவங்கள் பலவற்றைச் செய்து வந்தார்.(13) அவர் அந்தப் பெருந்தேவனிடம், “ஓ! பலமிக்கவனே {விபுவே}, நெருப்பு {அக்னி}, பூமி {நிலம்}, நீர் {அப்பு}, காற்று {வாயு} மற்றும் வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் பலத்துடன் கூடிய ஒரு மகன் எனக்குக் கிடைக்கட்டும்” என்று வேண்டிக் கொண்டிருந்தார்.(14) தீவில் பிறந்த முனிவரான அவர் {வியாசர்} மிகக் கடுமையான தவங்களில் ஈடுபட்டு, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அணுக முடியாத பெருந்தேவனிடம் (வார்த்தைகளாலல்லாமல்) தன் யோகத் தீர்மானத்தின் மூலம் வேண்டினார்.(15)
பலமிக்கவரான வியாசர், காற்றை மட்டுமே உண்டு பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனுமான மஹாதேவனைத் துதித்தபடியே நூறு வருடங்கள் அங்கேயே இருந்தார்.(16) அங்கே மறுபிறப்பாள முனிவர்கள், அரசமுனிகள், லோகபாலகர்கள், சாத்யர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், ருத்திரர்கள், சூரியன், சந்திரமாஸ், மருத்துகள், பெருங்கடல்கள், ஆறுகள்,(17) அசுவினிகள், தேவர்கள், கந்தர்வர்கள், நாரதர் மற்றும் பர்வதர், கந்தர்வன் விஸ்வாவசு, சித்தர்கள் மற்றும் அப்ரசஸ்கள் அனைவரும் இருந்தனர்.(18) அங்கே ருத்திரன் என்ற பெயராலும் அழைக்கப்படும் மஹாதேவன் {சிவன்}, கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} ஆன சிறந்த மாலையை அணிந்து கொண்டு, கதிர்களால் ஒளிரும் நிலைவைப் போலச் சுடர்விட்டுபடியே அமர்ந்திருந்தான்.(19) தேவர்களும், தெய்வீக முனிவர்களும் நிறைந்த இனிமையான தெய்வீக வனத்தில் அந்தப் பெரும் முனிவர் ஒரு மகனைப் பெறும் விருப்பத்தால் உயர்ந்த தியான யோகத்திலேயே நீடித்திருந்தார்.(20)
அவரது பலம் குன்றவில்லை, எந்தத் துன்பத்தையும் அவர் உணரவில்லை. இதனால் மூன்று உலகங்களும் மிகவும் ஆச்சரியமடைந்தன.(21) அளவிலா சக்தியைக் கொண்ட அந்த முனிவர் {வியாசர்}, யோகத்தில் அமர்ந்திருந்தபோது, அவரது சக்தியின் விளைவால் அவரது சடாமுடி நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(22) சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் இருந்தே நான் இவற்றைக் கேட்டறிந்தேன். அவரே எப்போதும் தேவர்களின் செயல்களைக் குறித்து எனக்குச் சொல்வார்.(23) உயர் ஆன்மா கொண்டவரும் (தீவில் பிறந்தவருமான) கிருஷ்ணரின் {வியாசரின்} சடாமுடி இவ்வாறு அவரது சக்தியால் எரிந்து கொண்டிருந்த காரணத்தாலேயே இந்த நாள்வரை அது நெருப்பின் நிறத்துடன் கூடியதாக இருக்கிறது.(24) ஓ! பாரதா, முனிவரின் இத்தகைய தவங்கள் மற்றும் அர்ப்பணிப்பில் நிறைவடைந்த பெருந்தேவன் (அவர் விரும்பியதைக் கொடுக்கத்) தீர்மானித்தான்.(25)
முக்கண் தேவன் {சிவன்}, மகிழ்ச்சியாகப் புன்னகைத்தபடியே அவரிடம், “ஓ! தீவில் பிறந்தவரே {துவைபாயனரே}, நீர் விரும்பியதைப் போன்றே ஒரு மகனைப் பெறுவீர்.(26) மகிமை நிறைந்த அவன், நெருப்பைப் போல, காற்றைப் போல, பூமியைப் போல, நீரைப் போல, வெளியைப் போலத் தூய்மையானவனாக இருப்பான்.(27) அவன் தன்னுணர்வில் பிரம்ம விழிப்பு நிலையில் இருப்பான்; அவனது புத்தியும், ஆன்மாவும் பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும்; அவன் பிரம்மத்தைப் போன்றவனாகவே அதையே முழுமையாகச் சார்ந்திருப்பான்” என்றான் {சிவன்}[1].(28)
சுகப்ரம்மத்தின் தோற்றம்! – சாந்திபர்வம் பகுதி – 325- சுகப்பிரம்மத்தின் பிறப்பு மற்றும் உபநயனம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெருந்தேவனிடம் {சிவனிடம்} இருந்து உயர்ந்த வரத்தை அடைந்த சத்தியவதியின் மகன் {வியாசர்}, நெருப்பை உண்டாக்குவதற்காக ஒரு நாள் அரணிக் கட்டைகளை எடுத்துக் கடைவதில் ஈடுபட்டார்.(1) ஓ! மன்னா, அந்தச் சிறப்புமிக்க முனிவர் அவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தன் சக்தியின் விளைவால் பேரழகைக் கொண்டிருந்த அப்சரஸ் கிருதாசியைக் கண்டார்.(2) ஓ! யுதிஷ்டிரா, அந்தக் காட்டில் அப்சரஸைக் கண்ட சிறப்புமிக்க முனிவர் வியாசர் திடீரென ஆசையால் பீடிக்கப்பட்டார்.(3) ஆசையால் இதயம் பீடிக்கப்பட்ட முனிவரைக் கண்ட அந்த அப்சரஸ், தன்னை ஒரு பெண்கிளியாக மாற்றிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.(4) அந்த அப்சரஸ் மற்றொரு வடிவத்தால் தன்னை மறைத்திருப்பதை முனிவர் கண்டாலும், அவரது இதயத்தில் எழுந்த ஆசை (மறையாமல்) அவரது உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் பரவியது.(5)
பொறுமையை வேண்டிய அந்தத் தவசி அந்த அசையை அடக்கப் பெரும் முயற்சி செய்தார். எனினும், வியாசர் எவ்வளவுதான் முயன்றாலும், கலக்கமடைந்த தன் மனத்தை அடக்குவதில் அவர் வெல்லவில்லை. நடக்கப் போவதைத் தவிர்க்க முடியாததால், முனிவரின் இதயம் கிருதாசியின் அழகிய வடிவில் ஈர்க்கப்பட்டது.(6) அவர் தன் உணர்வை அடக்கி நெருப்பை உண்டாக்கும் பணியில் தன்னை நிறுவிக் கொள்ள உண்மையில் மெய்யுறுதிப்பாட்டுடன் முயன்றாலும், அவரது உயிர்வித்து {அந்த அரணிக்கட்டைகளிலேயே} வெளியேறியது.(7) ஓ! மன்னா, இருந்தாலும் அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் {வியாசர்}, நடந்ததற்காக எந்த ஐயுணர்வும் அடையாமல் தன் அரணிக் கட்டைகளைக் கடைவதைத் தொடர்ந்தார். விழுந்த அந்த வித்தில் இருந்து, சுகர் என்றழைக்கப்படும் ஒரு மகன் அவருக்குப் பிறந்தார்.(8) அவரது பிறப்பு தொடர்பான இந்தச் சூழ்நிலையின் விளைவாலேயே அவர் சுகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். உண்மையில் இவ்வாறே முனிவர்களில் முதன்மையானவரும், யோகிகளில் உயர்ந்தவருமான அந்தப் பெருந்தவசி (தன் தந்தை நெருப்பை உண்டாக்க வைத்திருந்த) ஈர் அரணிக் கட்டைகளில் இருந்து தன் பிறப்பை அடைந்தார்[1].(9) வேள்வியில் தெளிந்த நெய் ஆகுதியாக ஊற்றப்படும்போது சுடர்மிக்க நெருப்பானது சுற்றிலும் ஒளியைப் பொழிவதைப் போலவே, சுகரும் தன் சக்தியின் விளைவால் ஒளியால் சுடர்விட்டபடி தன் பிறப்பை அடைந்தார்.(10)ஓ! குருவின் மகனே, தூய ஆன்மாவைக் கொண்ட சுகர், தன் தந்தையின் சிறந்த வடிவத்தையும், நிறத்தையும் ஏற்று, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) ஓ! மன்னா, ஆறுகளில் முதன்மையான கங்கை, தன் உடல் கொண்ட வடிவுடன் மேருவின் சாரலுக்கு வந்து, தன் நீரால் சுகரை (அவரது பிறப்புக்குப் பிறகு) நீராட்டினாள்.(12) ஓ! குருவின் மகனே, ஓ! ஏகாதிபதி, அப்போது அந்த உயர் ஆன்ம சுகர் பயன்படுத்த ஒரு தண்டமும் ஒரு கரிய மான்தோலும் {கிருஷ்ணாஜினமும்} ஆகாயத்தில் இருந்து விழுந்தது.(13) கந்தர்வர்கள் மீண்டும் மீண்டும் பாடினார்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் ஆடினார்கள்; தெய்வீகப் பேரிகைகள் உரக்க முழங்கத் தொடங்கின.(14) கந்தர்வன் விஸ்வாவசு, தும்புரு, நாரதர் மற்றும் ஹாஹா மற்றும் ஹுஹு என்ற பெயர்களில் அழைக்கப்படும் கந்தர்வர்கள் சுகரின் பிறப்பைத் துதித்தனர்.(15)
சக்ரனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட லோகபாலகர்களும், தேவர்களும், தெய்வீக மறுபிறப்பாள முனிவர்களும் அங்கே வந்தனர்.(16) காற்றின் தேவன் {வாயு}, அந்த இடத்தில் தெய்வீகப் பூமாரியைப் பொழிந்தான்.(17) அசைபவற்றையும், அசையாதவற்றையும் கொண்ட அண்டம் முழுமையும் இன்பத்தால் நிறைந்தது.(18) பேரொளி கொண்ட உயர் ஆன்ம மஹாதேவன் {சிவன்}, {உமா} தேவியின் துணையுடன், அன்பால் உந்தப்பட்டு அங்கே வந்து, முனிவரின் மகன் பிறந்ததும் அவருக்குப் புனித நூலை தரித்துவிட்டான்.(19) தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்} சிறந்த வடிவிலான ஒரு கமண்டலத்தையும், சில தெய்வீக ஆடைகளையும், அன்புடன் அவருக்குக் கொடுத்தான்.(20)
ஓ! பாரதா, அன்னங்கள், சதபத்ரங்கள் {நூறு சிறகுகளைக் கொண்ட அன்னங்கள்}, ஆயிரக்கணக்கான நாரைகள் மற்றும் பல கிளிகளும், சாஸங்களும் அவரது தலையை வட்டமிட்டன {வலம் வந்தன}.(21) பெரும் காந்தியையும் நுண்ணறிவையும் கொண்ட சுகர், அந்த அரணிக் கட்டைகள் இரண்டில் பிறப்பை அடைந்து, பல நோன்புகள் மற்றும் நியமங்களைக் கவனமாக நோற்றபடி அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.(22) சுகர் பிறந்த உடனேயே, ஓ மன்னா, புதிர்கள் அனைத்துடன் கூடிய வேதங்களும், அவற்றின் பொழிப்புரைகளும் அவரது தந்தையுடன் வசிப்பதைப் போலவே அவரிடமும் வசிக்க வந்தன.(23) அதன் பிறகும் சுகர், உலக நடைமுறையின்படியே, அங்கங்கள் மற்றும் உரைகளுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும் அறிந்தவரான பிருஹஸ்பதியைத் தன் ஆசானாகத் தேர்ந்தெடுத்தார்[2].(24)ஓ! பலமிக்க ஏகாதிபதி, புதிர்கள் மற்றும் பொழிப்புரைகள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், வரலாறுகள் அனைத்தையும், அரசு அறிவியலையும் படித்த அந்தப் பெருந்தவசி,(25) தன் ஆசானுக்குரிய கட்டணத்தை அளித்துவிட்டு {குருவுக்குத் தக்ஷிணை கொடுத்துவிட்டு} வீடு திரும்பினார். பிரம்மச்சாரியின் நோன்பைப் பின்பற்றிய அவர், அது முதல் தன் கவனம் அனைத்தையும் குவித்துக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(26) குழந்தைப்பருவத்திலும் கூட அவர், தனது ஞானத்திற்காகவும், தவங்களுக்காகவும் தேவர்களாலும், முனிவர்களாலும் மதிக்கப்பட்டார்.(27) ஓ! மன்னா, அந்தப் பெருந்தவசியின் மனமானது, இல்லறத்தைத் தங்களில் ஒன்றாகக் கொண்ட மூன்று வகை வாழ்வு முறைகளிலும் {மூவகை ஆசிரமங்களிலும்} இன்பங்கொள்ளாமல் விடுதலை {முக்தி} அறத்தையே தன் மனத்தில் நோக்கமாகக் கொண்டு, அதையே செய்தார்” என்றார் {பீஷ்மர்}.(28)
வியாசரின் ஆணை! – சாந்திபர்வம் பகுதி – 326-வியாசரின் ஆணையை ஏற்று, விதேஹர்களின் தலைநகரான மிதிலைக்குச் சென்று, மன்னன் ஜனகனின் அரண்மனையை அடைந்த சுகர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விடுதலையைக் குறித்து எண்ணிய சுகர் தன் தந்தையை {வியாசரை} அணுகி, பணிவுடன் கூடியவராக, தனக்கான உயர்ந்த நன்மையை அடைய விரும்புபவராக அந்தப் பேராசானை {வியாசரை} வணங்கி, அவரிடம்,(1) “விடுதலை {முக்தி} அறத்தை {மோக்ஷதர்மத்தை} நீர் நன்கறிந்தவராவீர். ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! பலமிக்கவரே, உயர்ந்த மனோ அமைதி எனதாகும் வகையில் அதைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(2)
தன் மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும் முனிவர், அவரிடம், “ஓ! மகனே, விடுதலையறத்தையும் {மோக்ஷதர்மத்தையும்}, வாழ்வின் பல்வேறு கடமைகள் அனைத்தையும் நீ கற்பாயாக” என்றார்.(3)
அறவோர் அனைவரிலும் முதன்மையான சுகர், ஓ! பாரதா, தன் தந்தையின் கட்டளையின் பேரில் யோக சாத்திரங்கள் அனைத்திலும், கபிலரிடம் இருந்து உண்டான அறிவியலிலும் {சாங்கிய அறிவியலிலும்} தேர்ச்சியடைந்தார்.(4)வியாசர், தன் மகன் வேதங்களின் ஒளியைக் கொண்டிருப்பதையும், பிரம்மசக்தியைக் கொண்டிருப்பதையும், விடுதலையறத்தை {மோக்ஷதர்மத்தை} அறிந்திருப்பதையும் கண்டு அவரிடம்,(5) “மிதிலையின் ஆட்சியாளனான ஜனகனிடம் செல்வாயாக. உன் விடுதலைக்கான அனைத்தையும் அந்த மிதிலையின் மன்னன் உனக்குச் சொல்வான்” என்றார்.(6)
ஓ! மன்னா, சுகர் தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, கடமைகளின் உண்மையையும், விடுதலை தரும் புகலிடத்தையும் குறித்து மன்னனிடம் தெரிந்து கொள்வதற்காக மிதிலைக்குச் சென்றார்.(7)
அவர் புறப்படுவதற்கு முன்னர் அவரது தந்தை அவரிடம், “சாதாரண மனிதர்கள் செல்லும் பாதையிலேயே நீ அங்கே செல்வாயாக. வானத்தினூடாகச் செல்வதற்காக நீ உன் யோகபலத்தைப் பயன்படுத்த வேண்டாம்” என்றார்.(8)சுகர் (எளிய இயல்பினரென்பதால்) இதில் எந்த ஆச்சரியத்தையும் அடையவில்லை. மேலும் அவர் அந்த இடத்திற்கு எளிமையுடன் செல்ல வேண்டும் என்றும், இன்பத்திற்கான ஆசையில் செல்லக்கூடாது என்றும் சொல்லப்பட்டார், {வியாசர்}, “நண்பர்களும், மனைவிகளும் உலகப் பற்றுக்கான காரணங்கள் என்பதால், நீ செல்லும் வழியில் நண்பர்களையோ, மனைவிகளையோ தேடாதே.(9) வேள்வி செய்வதில் நம் உதவியைப் பெறுபவர்களில் ஒருவனான மிதிலையின் ஆட்சியாளன் {ஜனகன்} இருந்தாலும், அவனோடு வாழும்போது நீ உயர்வு மனப்பான்மையுடன் எதிலும் ஈடுபடக்கூடாது. நீ அவனது இயக்கத்தின் கீழ், அவனுக்குக் கீழ்ப்படிந்தே வாழ வேண்டும். அவனே உன் ஐயங்கள் அனைத்தையும் அகற்றுவான்.(10) அம்மன்னன், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவன், விடுதலை {முக்தி} குறித்த சாத்திரங்களையும் நன்கறிந்தவனாவான். நான் வேள்வி நடத்திக் கொடுப்பவர்களில் அவனும் ஒருவன். அவன் சொல்வதை நீ எந்த ஐயுணர்வுமின்றிச் செய்ய வேண்டும்” {என்றார்}.(11)
இவ்வாறு கற்பிக்கப்பட்ட அற ஆன்ம சுகர், கடல்களுடன் கூடிய பூமி முழுமையிலும் வானத்தின் ஊடாகச் செல்லவல்லவரென்றாலும் அவர் கால்நடையாகவே மிதிலைக்குச் சென்றார்.(12) பல குன்றுகள், மலைகள், ஆறுகள், நீர்நிலைகள், தடாகங்கள், தோப்புகள், இரைதேடும் விலங்குகளும், பிற விலங்குகளும் நிறைந்த காடுகள் ஆகியவற்றைக் கடந்து,(13) மேரு மற்றும் ஹரி என்ற இரு வர்ஷங்களை அடுத்தடுத்து கடந்து, அடுத்ததாக இமய வர்ஷத்தையும் கடந்து இறுதியாகப் பாரதம் என்ற பெயரில் அறியப்பட்ட வர்ஷத்தை வந்தடைந்தார்.(14) வழியில் சீனர்களும், ஹூணர்களும் வசித்த பல நாடுகளைக் கண்ட அந்தத் தவசி இறுதியாக ஆர்யவர்த்தத்தை அடைந்தார்.(15)
அவர் தன் தந்தையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தும், அவற்றைத் தொடர்ந்து தன் மனத்தில் கொண்டும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போலப் பூமியில் படிப்படியாகத் தன் வழியில் கடந்து சென்றார்.(16) பல இனிய ஊர்களையும், மக்கள் கூட்டம் நிறைந்த நகரங்களையும் கடந்து சென்ற அவர், அவதானிக்கக் காத்திராமல் பல்வேறு வகைச் செல்வங்களையும் காணாமல் சென்றார்.(17) அவர் தன் வழியில் பல இனிய தோட்டங்களையும், தளங்களையும், புனித நீர்நிலைகளையும் கடந்து சென்றார்.(18)அதிகக் காலம் கடக்கும் முன் அறம் சார்ந்த உயர் ஆன்ம ஜனகனால் பாதுகாக்கப்பட்ட விதேஹர்களின் நாட்டை அவர் அடைந்தார்.(19) அங்கே அவர் மக்கள் தொகை நிறைந்த கிராமங்களையும், பல வகை உணவு மற்றும் பானங்களையும், மனிதர்களாலும், கால்நடைக் கூட்டங்கள் பலவற்றாலும் நிறைந்திருந்த மாட்டிடையர்களின் வசிப்பிடங்களையும் கண்டார்.(20)
நெல், கோதுமை மற்றும் பிற தானியங்கள் நிறைந்த வயல்கள் பலவற்றையும், அன்னங்கள், நாரைகள் வசித்தவையும், அழகிய தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தடாகங்கள் மற்றும் நீர்நிலைகள் பலவற்றையும் கண்டார்.(21) வசதிவாய்ப்புள்ள மக்கள் நிறைந்த விதேஹ நாட்டின் ஊடே கடந்து சென்று, பல்வேறு வகை மரங்கள் நிறைந்த, இனிமைநிறைந்த மிதிலையின் தோட்டங்களை {உபவனத்தை} அடைந்தார்.(22) யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்து, ஆண் பெண் மக்களால் நிரம்பிய அதனில் தன் கண்ணுக்கு விருந்தளிக்கப்பட்ட எந்தப் பொருளையும் காணக் காத்திராமல் கடந்து சென்றார்.(23) (விடுதலை அறத்தில் {மோக்ஷதர்மத்தில்} திறம்பெற விரும்பிய) தன் மனச்சுமையைத் தாங்கிக் கொண்டும், இடையறாமல் அந்நிலையிலேயே வசித்துக் கொண்டும் சென்றவரும், உற்சாக ஆன்மா கொண்டவருமான சுகர், அக ஆய்வில் மட்டுமே திளைப்பை அடைந்து இறுதியில் மிதிலையை அடைந்தார்.(24) வாயிலை வந்தடைந்த அவர், வாயில்காப்போர் மூலம் {தன் வருகையைச்} சொல்லியனுப்பினார். மன அமைதி கொண்டவரும், தியானத்திலும், யோகத்திலும் அர்ப்பணிப்புள்ளவருமான அவர், அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்நகருக்குள் {மிதிலைக்குள்} நுழைந்தார்.(25)
வசதிவாய்ப்புள்ள மனிதர்களால் நிறைந்த முக்கியச் சாலையின் {ராஜமார்க்கத்தின்} வழியே சென்ற அவர், மன்னனின் அரண்மனையை அடைந்து, எந்த ஐயுணர்வுமின்றி அதனுள் நுழைந்தார்.(26) சுமைதூக்குபவர்கள் கடுமொழிகளால் அவரைத் தடுத்தார்கள். அதன்பேரில் சுகர் கோபமேதும் அடையாமல் நின்று அங்கேயே காத்திருந்தார்.(27) சூரியனோ, அவர் நடந்து வந்த நெடுந்தொலைவோ அவரைக் களைப்படையச் செய்யவில்லை. பசியோ, தாகமோ, களைப்பாலோ அவர் பலவீனமடையவில்லை. சூரியனின் வெப்பத்தால் அவரை எரிக்கவோ, துன்புறுத்தவோ, தளர்வடையச் செய்யவோ முடியவில்லை.(28) அந்தச் சுமைதூக்கிகளில், பிரகாசத்துடன் கூடிய நடுப்பகல் சூரியனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த அவரிடம் கருணை கொண்ட ஒருவன் இருந்தான்.(29) முறையான வடிவில் அவரை வழிபட்டு, அவரை முறையாக வணங்கி, கூப்பிய கரங்களுடன் அந்த அரண்மனையின் முதல் அறைக்கு அவரை அழைத்துச் சென்றான்.(30)
ஓ! மகனே {யுதிஷ்டிரா}, அங்கே அமர்ந்த அவர் விடுதலையை {முக்தியை} மட்டுமே சிந்திக்கத் தொடங்கினார். ஒரே தன்மையிலான காந்தியைக் கொண்ட அவர், நிழல்விழுந்த இடத்தையும், சூரியனின் கதிர்களுக்கு வெளிப்பட்ட இடங்களையும் சமகண்ணுடனே பார்த்தார்.(31)வெகு விரைவில் மன்னனின் அமைச்சர், கரங்களைக் கூப்பியபடியே அந்த இடத்திற்கு வந்து அரண்மனையின் இரண்டாம் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார்.(32) அந்த அறையானது, அரண்மனையின் அந்தப்புரத்தில் ஒரு பகுதியாக அமைந்திருந்த ஓர் அகன்ற நந்தவனத்திற்கு வழிவகுத்தது. அஃது இரண்டாம் சைத்ரரதம் போல இருந்தது. முறையான இடைவெளிகளில் அழகிய நீர்த்தடாகங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. அந்த வனத்தில் இருந்த இனிமைநிறைந்த மரங்கள் அனைத்தும் மலரும் பருவத்தில் இருந்தன.(33)
ஒப்பற்ற அழகுடைய காரிகையர் கூட்டம் அங்கே இருந்தது. அந்த அமைச்சர் சுகரை இரண்டாம் அறையில் இருந்து அந்த இனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தத் தவசிக்கு இருக்கை அளிக்கும்படி அந்தக் காரிகைகளுக்கு ஆணையிட்ட அமைச்சர், அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.(34) நன்கு உடுத்தியிருந்த அந்தக் காரிகையர், அழகிய அம்சங்களையும், சிறந்த இடைகளையும், இளங்காதுகளையும் கொண்டவர்களாகவும், மெலிதான சிவப்பாடைகளை அணிந்தவர்களாகவும், புடம்போட்ட தங்கத்தாலான ஆபரணங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.(35) ஏற்புடைய உரையாடல்களைச் செய்வதிலும், பித்துகொள்ளச் செய்யும் களியாட்டங்களில் நன்கு திறம்பெற்றவர்களாகவும், ஆடல் மற்றும் பாடல் கலைகளில் முற்றான தலைவிகளாகவும் திகழ்ந்தனர். எப்போதும் புன்னகையுடன் உதடுகளைத் திறக்கும் அவர்கள், அழகில் அப்ஸரஸ்களைப் போலவே இருந்தனர்.(36) பாலுறவுச் செயல்கள் அனைத்திலும் திறம்பெற்றவர்களாகவும், தாங்கள் காத்திருக்கக்கூடிய {பணிவிடை செய்யக்கூடிய} மனிதர்களின் எண்ணங்களைப் படிக்கும் திறன் கொண்டவர்களாகவும், சிறப்புத் திறன்கள் அனைத்தையும் கொண்டவர்களாகவும், மிக மேன்மையான வகையைச் சேர்ந்தவர்களாகவும், எளிய ஒழுக்கத்தையே கொண்டவர்களாகவும் இருந்த ஐம்பது காரிகையர் அந்தத் தவசியை {சுகரைச்} சூழ்ந்து கொண்டனர்[1].(37) அவரது காலைக் கழுவிக் கொள்ள நீரையும், வழக்கமான பொருட்களையுங்கொடுத்து மதிப்புடன் அவரை வழிபட்ட அவர்கள், அந்தப் பருவகாலத்திற்குரிய சிறந்த, ஏற்புடைய உணவுவகைகளையுங்கொடுத்து அவரை நிறைவு செய்தார்கள்.(38)
அவர் உண்ட பிறகு, அந்தக் காரிகையர் ஒருவர் பின் ஒருவராக அவரைத் திடலுக்கு அழைத்துச் சென்று, விருப்பத்திற்குரிய ஒவ்வொரு பொருளையும் அவருக்குக் காட்டினார்கள்.(39) மனிதர்கள் அனைவரின் எண்ணங்களையும் அறியவல்லவர்களான அந்தக் காரிகையர், விளையாடிக் கொண்டும், நகைத்துக் கொண்டும், பாடிக் கொண்டும், உன்னத ஆன்மாவைக் கொண்ட அந்த மங்கலமான தவசியை உபசரித்தனர்.(40) தூய ஆன்மாவைக் கொண்டவரும், அரணிக்கட்டைகளில் பிறந்தவரும், தன் கடமைகளில் எவ்வகையையும் ஐயமில்லாமல் செய்பவரும், தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டவரும், கோபத்தை முற்றாக ஆள்பவருமான அந்தத் தவசி {சுகர்}, இவை யாவற்றிலும் விருப்பமோ, கோபமோ கொள்ளவில்லை.(41) அப்போது, அழகிய பெண்களில் முதன்மையானவர்களான அவர்கள் அவருக்கு ஒரு சிறந்த இருக்கையை அளித்தனர்.(42)தன் பாதங்களையும், பிற அங்கங்களையும் கழுவிக் கொண்ட சுகர், தன் மாலை வேளை வேண்டுதல்களைச் சொல்லி, அந்தச் சிறந்த இருக்கையில் அமர்ந்து, தான் அங்கே வந்த நோக்கத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(43) இரவின் முதல் பகுதியில் அவர் தன்னை யோகத்தில் அர்ப்பணித்தார். அந்தப் பலமிக்கத் தவசி, இரவின் நடுப்பகுதியை உறக்கத்தில் கழித்தார்.(44) வெகுவிரைவில் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அவர், தன் உடலின் தூய்மைக்குத் தேவையான சடங்குகளைச் செய்த பிறகு அழகிய பெண்களால் சூழப்பட்டிருந்தாலும் மீண்டும் யோகத்தில் தன்னை அர்ப்பணித்தார்.(45) ஓ! பாரதா, தீவில்பிறந்தவரான கிருஷ்ணரின் {வியாசரின்} மகன், இவ்வாறே அந்த நாளின் இறுதிப் பகுதியையும், அந்த இரவு முழுமையையும் மன்னன் ஜனகனின் அரண்மனையில் கடத்தினார்”{என்றார் பீஷ்மர்}.(46)
பிரம்ம ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 327-சுகரை வரவேற்று, வழிபட்டு அவருக்கு பிரம்மஞானத்தை உபதேசித்த மன்னன் ஜனகன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, அடுத்த நாள் காலையில், மன்னன் ஜனகன் தன் அமைச்சர்கள் மற்றும் மொத்த குடும்பத்தின் துணையுடனும், தன் புரோகிதரை முன்னணியில் நிறுத்திக் கொண்டும் சுகரிடம் வந்தான்.(1) அந்த ஏகாதிபதி, விலைமதிப்புமிக்க இருக்கைகள் பல்வேறு வகையான ரத்தினங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்தும், தன் தலையில் அர்க்கிய உட்பொருட்களைச் சுமந்து கொண்டும் தன் மதிப்புமிக்க ஆசானின் {வியாசரின்} மகனை {சுகரை} அணுகினான்.(2) மன்னன், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த விரிப்பு விரிக்கப்பட்டதும், அனைத்துப் பகுதியிலும் அழகாக இருந்ததும், மிக்க விலைமதிப்புமிக்கதுமான இருக்கையைத் தன் புரோகிதரின் கைகளில் இருந்து, தன் கைகளாலேயே பெற்று, தன் ஆசானின் மகனான சுகரிடம் பெரும் மதிப்புடன் கொடுத்தான்.(3,4) (தீவில் பிறந்த) கிருஷ்ணரின் மகன் {கிருஷ்ண துவைபாயணரான வியாசரின் மகன் சுகர்} அதில் அமர்ந்தபிறகு, பரிந்துரைக்கப்படும் சடங்குகளின்படி மன்னன் அவரை முறையாக வழிபட்டான். முதலில் அவரது பாதங்களைக் கழுவிக் கொள்ள நீரைக் கொடுத்த அவன், பிறகு அர்க்கியத்தையும், பசுவையும் அவருக்குக் கொடுத்தான்.(5)
அந்தத் தவசியும் {சுகரும்} தனக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை முறையான சடங்குகளுடனும், மந்திரங்களுடனும் ஏற்றுக் கொண்டார். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரான அவர், மன்னனால் {ஜனகனால்} அளிக்கப்பட்ட காணிக்கையை இவ்வாறு ஏற்றுக் கொண்டு,(6) அவருக்கு அளிக்கப்பட்ட பசுவையும் பெற்றுக் கொண்டு அந்த ஏகாதிபதியை வணங்கினார். பெரும் சக்தியைக் கொண்ட அவர், மன்னனின் நலனையும், செழிப்பையும் விசாரித்தறிந்தார்.(7) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உண்மையில் சுகர் அந்த ஏகாதிபதியின் {ஜனகனின்} தொண்டர்கள் மற்றும் அலுவலர்களின் நலத்தையும் விசாரித்தார்.(8) உயர் ஆன்மாவையும், உயர்ந்த பிறப்பைக் கொண்ட அந்த ஏகாதிபதி {ஜனகன்}, கூப்பிய கரங்களுடன் வெறுந்தரையில் அமர்ந்து அந்த வியாசர் மகனின் {சுகரின்} நலத்தையும், அவரது குறைவற்ற செல்வத்தையும் குறித்து விசாரித்தான்.(9) பிறகு அந்த ஏகாதிபதி தன் விருந்தினர் வந்த நோக்கத்தைக் கேட்டான்.(10)
சுகர் {ஜனகனிடம்}, “நீர் அருளப்பட்டு இருப்பீராக. விதேஹர்களின் ஆட்சியாளரும், ஜனகன் என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான தமது எஜமானர் விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து நன்கறிந்தவர் என்று என் தந்தை {வியாசர்} சொன்னார்.(11) பிரவிருத்தி, அல்லது நிவிருத்தி ஆகிய அறக்காரியங்களில் தீர்மானத்தை எட்டுவதில் ஐயமேதும் எழுந்தால் தாமதமில்லாமல் அவரிடம் செல்லும்படியும் {ஜனகரான உம்மிடம் செல்லும்படியும்} அவர் ஆணையிட்டார். மிதிலையின் மன்னர் என் ஐயங்கள் அனைத்தையும் அகற்றுவார் என்றும் அவர் சொன்னார்.(12) எனவே, என் தந்தையுடைய {வியாசருடைய} ஆணையின் பேரில் உம்மிடம் பாடங்கள் கேட்கும் நோக்கத்தில் நான் இங்கு வந்துள்ளேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, எனக்குக் கற்பிப்பதே உமக்குத் தகும்.(13) பிராமணர்களின் கடமைகள் என்னென்ன? விடுதலையை {முக்தியை} நோக்கமாகக் கொண்ட அந்தக் கடமைகளின் சாரமென்ன? {மோக்ஷரூபமான புருஷார்த்தமானது என்ன ஸ்வரூபமுடையது?} மேலும், விடுதலை {முக்தி} எவ்வாறு அடையப்படுகிறது? அது ஞானத்தின் துணையால் அடையத்தக்கதா? தவங்களின் உதவியால் அடையத்தக்கதா?” என்று கேட்டார்.
ஜனகன் {சுகரிடம்}, “ஒரு பிராமணன் பிறந்தது முதல் அவனுடைய கடமைகள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மகனே, புனித நூலை ஏற்ற {உபநயனம் செய்யப்பட்ட} பிறகு அவன் தன் கவனத்தை வேத கல்வியில் அர்ப்பணிக்க வேண்டும்.(15) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் தான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவதற்காகத் தவங்கள் பயின்று, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்குத் தொண்டு செய்து, பிரம்மச்சாரியின் கடமைகளை நோற்பதன் மூலம் அவன், தீய நோக்கங்கள் அனைத்தையும் கைவிடவேண்டும்.(16) மிகக் கவனமாக வேதங்களைப் பயின்று, தன் புலன்களை அடக்கி, தன் ஆசானுக்குரிய தக்ஷிணையைக் கொடுத்த பிறகு அவன் தன் ஆசானின் அனுமதியுடன் இல்லம் திரும்ப வேண்டும்.(17) இல்லம் திரும்பிய அவன், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொண்டு ஒரு துணைவியை மணந்து அவளிடம் மட்டுமே கட்டுப்பட்டு, அனைத்துவகைத் தீய நோக்கங்களில் இருந்தும் தன்னை விடுவிக்கும் வகையில் வாழ்ந்து தன் இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ள வேண்டும்.(18) இல்லறத்தில் வாழும் அவன் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற வேண்டும். அதன் பிறகு, காட்டுக்குள் ஓய்ந்து சென்று அதே நெருப்புகளை வழிபடுவதைத் தொடர்ந்து, இதயப்பூர்வமான விருந்தோம்பலுடன் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் {வானப்ரஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்}.(19) அதன்பிறகு அவன், காட்டில் அறவோனாக வாழ்ந்து, தன் நெருப்பைத் தன் ஆன்மாவில் நிறுவி, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆன்மாவின் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டுச் சந்நியாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில், அல்லது பிரம்மம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் தன் நாட்களைக் கடத்த வேண்டும்” என்றான் {ஜனகன்}.(20)
சுகர் {ஜனகனிடம்}, “ஒருவன், சாத்திரக் கல்வி மற்றும் அனைத்துப் பொருட்களின் உண்மைப் பொருளை உணர்தல் ஆகியவற்றின் மூலம் தெளிந்த புத்தியை அடைந்தால், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும் அவனது இதயம் நிரந்தரமாக விடுபட்டால், அத்தகைய மனிதனும் பிரம்மச்சர்யம், கார்ஹஸ்தியம், வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் மூன்று வாழ்வு முறையையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்பற்ற வேண்டுமா?(21) இதையே நான் உம்மிடம் கேட்கிறேன். எனக்கு இதைச்சொல்வதே உமக்குத் தகும். உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வேதங்களின் உண்மை பொருளின்படி இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(22)
ஜனகன் {சுகரிடம்}, “சாத்திரக் கல்வியின் மூலமும், விஞ்ஞானம் என்ற பெயரில் அறியப்படும் அனைத்துப் பொருட்களின் உண்மைப் பொருளை உணர்தலின் மூலமும் தூய்மையடைந்த புத்தியின் துணையில்லாமல் விடுதலையை {முக்தியை} அடைவது சாத்தியமற்றதாகும். மேலும் அந்தத் தூய்மையடைந்த புத்தியும், ஓர் ஆசானின் தொடர்பில்லாமல் அடையப்பட முடியாது என்றும் சொல்லப்படுகிறது.(23) (உலகமெனும் பெருங்கடலைக் கடப்பதில் ஒருவன் வெல்வதிலும், அதில் துணை செய்வதிலும்) ஞானம் படகாகிறது, ஆசானே படகோட்டியாகிறார். அப்படகை அடைந்த பிறகே ஒருவன் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான். உண்மையில், பெருங்கடலைக் கடந்ததும் அவன் அவை இரண்டையும் {படகான ஞானத்தையும், படகோட்டியான ஆசானையும்} கைவிடலாம்.(24) உலகங்கள் அனைத்தையும் அழிவில் இருந்து காப்பதற்கும், (உலகங்கள் எவற்றைச் சார்ந்திருக்க்கிறதோ அந்தச்) செயல்களை அழிவில் இருந்து காப்பதற்கும் பழங்கால ஞானிகளால் இந்த நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} தொடர்புடைய கடமைகள் பயிலப்பட்டன.(25) ஒருவன் பல பிறவிகளின் போக்கில் இவ்வகைமுறை சார்ந்த செயல்களுக்கு ஏற்புடைய வகையில் நல்ல மற்றும் தீய செயல்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலையை அடைகிறான்[1].(26) எந்த மனிதன் பல பிறவிகளில் செய்யும் தவங்களின் மூலம் மனம், புத்தி மற்றும் ஆன்மத் தூய்மையை அடைவதில் வெல்கிறானோ அவனால் (தன் புதிய பிறவியில்) முதல் வாழ்வுமுறையிலேயே {பிரம்மச்சரிய வாழ்வுமுறையிலேயே} கூட நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைய முடியும்.(27)
தூய்மையடைந்த புத்தியை அடைகையில் விடுதலை அவனுடையதாவதன் மூலம் அவன் புலப்படும் அனைத்துப் பொருட்களின் ஞானத்தையும் அடைவான் எனும்போது, {கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என்ற} மூன்று பிற வாழ்வுமுறைகளை நோற்பதன்மூலம் அடையத்தக்க விருப்பமான பொருள் வேறென்ன இருக்க முடியும்?[2](28) ரஜஸ் மற்றும் தமஸில் {குணங்களில்} பிறக்கும் களங்கங்கள் அனைத்தையும் ஒருவன் கைவிட வேண்டும். அவன், சத்வத்தின் {சத்வ குணத்தின்} பாதையைப் பின்பற்றித் தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} அறிய வேண்டும்[3].(29) தன்னை {தன் சுயத்தை} அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களில் தன்னையும் {தன் ஆன்மாவென்ற சுயத்தையும்} காணும் ஒருவன், (எதனிலும் பற்றுக் கொள்ளாமல்) நீரில் வாழ்ந்தும், நீரில் நனையாமல் இருக்கும் நீர்வாழ் உயிரினங்களைப் போல வாழ வேண்டும்.(30) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடப்பதிலும், அவற்றின் ஆதிக்கத்தைத் தடுப்பதிலும் வெல்லும் ஒருவன், பற்றுகள் அனைத்தையும் கைவிடுவதில் வென்று, கீழே இருந்து வானத்திற்குப் பறந்து செல்லும் பறவையைப் போல, மறுமையில் முடிவிலா இன்ப நிலையை அடைகிறான்.(31) இது தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் யயாதியால் பாடப்பட்டதும், விடுதலை {முக்தி} குறித்த சாத்திரங்களை {மோக்ஷசாத்திரங்களை} அறிந்த மனிதர்கள் அனைவராலும் நினைவில் கொள்ளப்படுவதுமான ஒரு சொலவடை இருக்கிறது.(32) (பரமாத்மா எனும்) பிரகாசமிக்கக் கதிர், ஒருவனின் ஆன்மாவுக்குள்ளேயே இருக்கிறது, வேறு எங்கும் இல்லை. அஃது அனைத்து உயிரினங்களிலும் சமமாக இருக்கிறது. யோகத்தில் அர்ப்பணிப்புள்ள இதயத்துடன் கூடிய ஒருவனால் அதைத் தனக்குள்ளேயே காண முடியும்.(33)தன்னைப் பார்த்தவுடனே மற்றவன் அஞ்சாத வகையில் வாழ்பவனும், பிறரைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதவனும், விருப்பு வெறுப்பு வளர்ப்பதை நிறுத்துபவனுமான ஒருவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(34) எண்ணம், சொல் மற்றும் செயலில் அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் பாவம் நிறைந்த மனோநிலையை நிறுத்துபவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(35) மனம் மற்றும் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மனத்தைக் கலங்கடிக்கும் தீய நோக்கத்தைக் கைவிடுவதன் மூலமும், ஆசை மற்றும் மயக்கத்தை விடுவதன் மூலமும் ஒருவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(36) ஒரு மனிதன், கேட்கும் பொருட்கள் மற்றும் பார்க்கும் பொருட்கள் அனைத்திலும், (பிற புலன்களின் செயல்பாடுகளிலும்), வாழும் உயிரினங்கள் அனைத்திலும் சம மனநிலையைக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடக்கும்போது அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(37) ஒரு மனிதன், புகழ் மற்றும் இகழ், தங்கம் மற்றும் இரும்பு, இன்பம் மற்றும் துன்பம், வெப்பம் மற்றும் குளிர், நன்மை மற்றும் தீமை, ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றில் சமமாகக் கண்களைச் செலுத்தும் போது அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(38, 39)
துறவி வகையினரின் கடமைகளை நோற்கும் ஒருவன், நீட்டப்பட்ட தன் அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் புலன்களையும், மனத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.(40) இருளில் மூழ்கிய ஒரு வீட்டை தூண்டப்பட்ட விளக்கின் துணையுடன் பார்ப்பதைப் போலவே, புத்தி எனும் விளக்கின் துணையால் ஆன்மாவையும் காண முடியும்.(41) ஓ!புத்திசாலிகளில் முதன்மையானவனே, நான் உனக்குச் சொல்லும் இந்த ஞானம் அனைத்தும் உன்னிடம் வசிப்பதை நான் பார்க்கிறேன். விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} கற்க விரும்பும் ஒருவனால் அறியப்பட வேண்டிய எதையும் நீ ஏற்கனவே அறிந்திருக்கிறாய்.(42) ஓ! மறுபிறப்பாள முனிவனே, உனது ஆசானின் அருள் மூலமாகவும், நீ பெற்ற கல்வியின் மூலமும், நீ ஏற்கனவே புலன்நுகர் பொருட்கள் அனைத்தையும் கடந்துவிட்டாய் என நான் நம்புகிறேன்.(43) ஓ! பெரும் தவசியே, உனது தந்தையின் அருள் மூலம் அனைத்தையும் அறிந்தவன் நான், எனவே உன்னை அறிந்து கொள்வதில் வென்றிருக்கிறேன்.(44)
நீ உனக்கு இருப்பதாக நினைப்பதைவிட உன் ஞானம் மிகப் பெரியதாகும். உள்ளுணர்வின் மூலம் விளையும் உன் கருத்துகளும் நீ கொண்டிருப்பதாக நினைப்பதைவிட மிகப் பெரியவையாகும். நீ அறிந்ததைவிட உன் பலம் மிகப் பெரியது.(45) உன் இளம் வயதினாலோ, ஐயங்களை அகற்ற இயலாததாலோ, விடுதலை {முக்தி} அடையாததால் உண்டாகும் அச்சத்தாலோ, உள்ளுணர்வின் மூலம் உன் மனத்தில் ஏற்கனவே எழுந்த ஞானத்தை நீ அறியாமல் இருக்கிறாய்.(46) எங்களைப் போன்றோரின் மூலம் ஐயங்கள் விலக்கப்பட்ட பிறகே ஒருவன் தன் இதய முடிச்சுகளைத் திறப்பதில் வெல்கிறான். அதன்பிறகு செய்யும் அறம் சார்ந்த முயற்சியின் மூலம் அவன் அந்த ஞானத்தை அடைந்து அறிந்து கொள்கிறான்.(47)
உன்னைப் பொறுத்தவரையில் நீ ஏற்கனவே ஞானத்தை அடைந்தவனாவாய். உன் புத்தி நிலையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. நீ பேராசையில் இருந்து விடுபட்டவனாக இருக்கிறாய். ஓ! பிராமணா, இவையாவும் இருந்தாலும், முயற்சி இல்லாத ஒருவனால், அடைவதற்கரிய உயர்ந்த பொருளான பிரம்மத்தை அடைவதில் ஒருபோதும் வெல்லமுடியாது.(48) இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையில் நீ எந்த வேறுபாட்டையும் காணவில்லை. நீ பேராசையுடன் இல்லை. ஆடுவதிலும், பாடுவதிலும் உனக்கு விருப்பமில்லை. உனக்குப் பற்றுகள் ஏதும் இல்லை.(49) நண்பர்களிடம் உனக்குப் பிணைப்பேதும் கிடையாது. அச்சத்தைத் தூண்டும் பொருட்களில் உனக்கு அச்சமேதுமில்லை. ஓ! அருளப்பட்டவனே, தங்கக் குவியலிலும், மண்ணாங்கட்டியிலும் நீ சமகண்களைக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.(50) நானும், ஞானம் கொண்ட பிறரும், உயர்ந்த, அழிவற்ற அமைதி வழியில் நீ நிறுவப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.(51) ஓ! பிராமணா, ஒரு பிராமணன் அடையத்தக்க கனிகளைப் பெற்றுத் தருபவையும், விடுதலை {முக்தி} என்று சொல்லப்படும் பொருள் சாரங்களைப் போன்றவையுமான கடமைகளிலேயே நீ இருக்கிறாய். இன்னும் என்னிடம் நீ கேட்பதற்கு வேறென்ன இருக்கிறது?” என்று கேட்டான் {ஜனகன்}”.(52)
வேதக்கல்விக்கான வழிமுறை! – சாந்திபர்வம் பகுதி – 328-உலகையும், தேவர்களையும் அவமதித்த முருகன்; வேலை அசைத்த விஷ்ணு; வேலை அசைக்க முடியாமல் வீழ்ந்த பிரகலாதன்; கடுந்தவம் செய்த சிவன்; சிவனின் தவத்தைப் பாதுகாத்த அக்னி; சீடர்களுக்கு வேதங்களைப் போதித்த வியாசர்; சீடர்கள் வியாசரிடம் வேண்டிய வரம்; வேத கல்வியை வழங்க வேண்டிய வழிமுறைகளை வகுத்த வியாசர் …
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் ஜனகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், தூய்மையான ஆன்மாவையும், நிறுவப்பட்ட தீர்மானங்களையும் கொண்டவருமான சுகர், தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} கண்டு, தன்ஆன்மாவை தன் ஆன்மாவிலேயே நிலைக்கச் செய்யத் தொடங்கினார்.(1) தன் நோக்கம் நிறைவடைந்த அவர், அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைந்தவராக, மேலும் ஜனகனிடம் கேள்விகளைக் கேட்காமல், காற்றின் வேகத்தில் காற்றைப் போலவே வடக்கு நோக்கி இமய மலைகளுக்குச் சென்றார்[1].(2)அந்த மலைகள் பல்வேறு அப்சரஸ் இனங்களால் நிறைந்ததாகவும், மென்மையான பல ஒலிகளை எதிரொலிப்பதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான கின்னரர்கள் மற்றும் பிருங்கராஜங்களால் {வண்டுகளாலும்} நிறைந்திருந்த அது, மதகங்கள் {நீர்க்காக்கைகள்}, கஞ்சரிதங்கள் {கருங்குருவிகள்}, பல்வேறு வண்ணங்களிலான ஜீவஜீவகங்கள் {சகோரப்பறவைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(3,4) கண்கவர் வண்ணங்களிலான பல மயில்கள் அங்கே தங்கள் கீச்சுக்குரலால் காதுக்கினியவகையில் அகவிக் கொண்டிருந்தன.(5) அன்னங்களின் கூட்டங்கள் பலவும், கோகிலங்களின் {குயில்களின்} கூட்டங்கள் பலவும், அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. பறவைகளின் இளவரசனான கருடன் அந்தச் சிகரத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தான்.(6) லோகபாலர்கள் நால்வர், தேவர்களும், முனிவர்களில் பல்வேறு வகையினரும் உலகிற்கு நன்மை செய்ய விரும்பி எப்போதும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.(7) உயர் ஆன்ம விஷ்ணு ஒரு மகனைப் பெறும் நோக்கத்துடன் அங்கே கடுந்தவம் செய்திருந்தான்.(8)
இங்கேதான் குமாரன் என்ற பெயரிலான தேவ தளபதி, தன் இளம் வயதில், மூவுலகங்களையும், தேவலோகவாசிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, தன் ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால் / வேலால்} பூமியைப் பிளந்தான். தன் ஈட்டியை வீசிய ஸ்கந்தன், அண்டத்திடம்,(9) “வலிமையிலோ, பிராமணர்களிடம் அதிக அன்பு கொள்வதிலோ என்னிலும் மேன்மையானவனாகவோ, பிராமணர்கள் மற்றும் வேதங்களிடம் கொள்ளும் அர்ப்பணிப்பில் என்னுடன் ஒப்பிடத்தக்கவனாகவோ, சக்தியில் என்னைப் போன்றவனாகவோ எவனாவது இருந்தால்,(10) அவன் இந்த ஈட்டி {சக்தியை / வேலைத்} தூக்கட்டும், அல்லது அசைக்கவாவது செய்யட்டும்” என்றான்.
இந்த அறைகூவலைக் கேட்ட மூவுலகங்களும் கவலையால் நிறைந்தன. அனைத்து உயிரினங்களும் தங்களுக்குள் “இவ்வீட்டியைத் தூக்கப் போவது யார்?” என்று ஒன்றையொன்று கேட்டுக் கொண்டன.(11) தேவர்கள், அசுரர்கள் மற்றும் ராட்சசர்கள் அனைவரும் புலன்களாலும், மனத்தாலும் கலங்கியிருப்பதை விஷ்ணு கண்டான்.(12) அந்தச் சூழ்நிலையில் எதைச் செய்வது சிறந்ததென அவன் சிந்தித்தான். ஈட்டிவீசுவதைக் குறித்த அந்த அறைகூவலைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {விஷ்ணு}, நெருப்பு தேவனின் {அக்னியின்} மகனான ஸ்கந்தனின் மீது தன் கண்களைச் செலுத்தினான்.(13) தூய ஆன்மாவைக் கொண்ட விஷ்ணு, சுடர்மிக்க அந்த ஈட்டியைத் தன் இடக்கையால் பற்றி அஃதை அசைக்கத் தொடங்கினான்.(14) பெரும் வலிமையைக் கொண்ட விஷ்ணுவால் இவ்வாறு அந்த ஈட்டி அசைக்கப்பட்டபோது, மலைகள், காடுகள், கடல்களுடன் கூடிய பூமியானவள் அந்த ஈட்டியுடன் சேர்ந்து மொத்தமாகக் குலுங்கினாள்.(15)
அந்த ஈட்டியை உயர்த்த விஷ்ணு முழுத் தகுதியுடையவன் என்றபோதிலும், அவன் {விஷ்ணு} அஃதை {ஈட்டியை} அசைத்ததோடு நின்றுவிட்டான். இதன் மூலம் அந்தப் பலமிக்கத் தலைவன் {விஷ்ணு}, ஸ்கந்தனின் கௌரவத்திற்குக் குறைவு நேராமல் பார்த்துக் கொண்டான்.(16) அஃதை அசைத்த பிறகு, அந்தத் தெய்வீக விஷ்ணு, பிரஹலாதனிடம், “குமாரனின் வலிமையைப் பார். இந்த அண்டத்தில் வேறு எவராலும் இந்த ஈட்டியைத் தூக்க முடியாது” என்றான்.(17) இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரஹலாதன் அந்த ஈட்டியைத் தூக்கத் தீர்மானித்தான். அதைப் பிடித்த அவனால் அதைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை.(18) அவன் உரக்க அலறியபடியே மயக்கமடைந்து மலையுச்சியில் இருந்து கீழே விழுந்தான். உண்மையில், அந்த ஹிரண்யகசிபுவின் மகன் {பிரஹலாதன்} பூமியில் விழுந்தான்.(19)
காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட மஹாதேவன் {ருத்ரன்}, வடக்குப்பக்கத்தில் இருந்த அந்தப் பிரம்மாண்ட மலைகளுக்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தான்.(20) மஹாதேவன் தவம் செய்த ஆசிரமமானது அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க நெருப்பால் சூழப்பட்டிருந்தது. தூய்மையடையாத ஆன்மா கொண்ட மனிதர்களால் அணுகப்பட முடியாத அம்மலை ஆத்தியம் என்ற பெயரில் அறியப்பட்டது.(21) அதைச் சுற்றிலும் பத்து யோஜனைகள் அகலத்தில், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், தானவர்களாலும் அணுகப்பட முடியாத அளவுக்கு ஒரு நெருப்பு வளையம் இருந்தது.(22) வலிமையும், சக்தியும் கொண்ட சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி}, ஒற்றைக் காலில் ஆயிரம் தேவ வருடங்கள் நின்றிருந்த பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனின் அருகில் இருந்து {அந்தத் தவத்திற்கான} தடைகள் அனைத்தையும் அகற்றுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(23) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட மஹாதேவன், அந்த முதன்மையான மலையின் அருகில் வசித்து, (தன் தவங்களின் மூலம்) தேவர்களைத் தகிக்கச் செய்தான்.(24)
அந்த மலைகளின் அடிவாரத்தில்தான், பெரும் தவத்தகுதியைக் கொண்ட பராசரரின் மகன் வியாசர், தமது சீடர்களுக்கு வேதங்களைக் கற்பித்தார்.(25) சுமந்து, வைசம்பாயனர், பெரும் ஞானியான ஜைமினி, பெரும் தவத்தகுதியைக் கொண்ட பைலர் ஆகியோரே உயர்வாக அருளப்பட்ட அந்தச் சீடர்களாவர்.(26)
சுகர், தம் தந்தையும், பெரும் தவசியுமான வியாசர், தமது சீடர்கள் சூழ வசித்து வந்த இனிமை நிறைந்த ஆசிரமத்திற்குச் சென்றார்.(27) ஆசிரமத்தில் அமர்ந்திருந்த வியாசர், சிதறிய தழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, பிரகாசமான சூரியனுக்கு ஒப்பாகவோ வந்து கொண்டிருக்கும் தம் மகனைக் கண்டார்.(28) சுகர் வந்து கொண்டிருந்தபோது, அவர் மரங்களையோ, மலையின் பாறைகளையோ தீண்டுவது போன்று தெரியவில்லை. புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் முழுமையாகத் தொடர்பறுந்து, யோகத்தில் ஈடுபட்டிருந்த அந்த உயர் ஆன்ம தவசி {சுகர்}, வில்லில் இருந்து ஏவப்பட்ட ஒரு கணையின் வேகத்திற்கு ஒப்பாக வந்து கொண்டிருந்தார்.(29) அரணிக் கட்டைகளில் பிறந்தவரான சுகர் தமது தந்தையை அணுகி அவரது பாதங்களைத் தீண்டினார். பிறகு வழக்கமான நடைமுறைகளின் படியே தன் தந்தையின் சீடர்களை வணங்கினார்.(30) பிறகு, மன்னன் ஜனகனுடனான தமது உரையாடலின் விபரங்கள் அனைத்தையும் தம் தந்தையிடம் பெரும் உற்சாகத்துடன் சொன்னார்.(31) பராசரரின் மகனான வியாசர், தமது பலமிக்க மகன் வந்த பிறகும், தமது சீடர்களுக்கும், தமது மகனுக்கும் கற்பிப்பதில் ஈடுபட்டவாறு அங்கே இமயத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.(32) ஒரு நாள் அவர் அமர்ந்திருந்தபோது, வேதங்களில் நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்கள், அமைதியான ஆன்மாவுடன் கூடியவர்களுமான அவரது சீடர்கள் அவரைச் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள்.(33) அவர்கள் அனைவரும் வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் முழுமையாகத் திறம்பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் தவங்களை நோற்பவர்களாகவும் இருந்தனர். கூப்பிய கரங்களோடு அவர்கள் தங்கள் ஆசானிடம் பின்வரும் வார்த்தைகளில் பேசினர்.(34)
அந்தச் சீடர்கள், “உமது அருளால், நாங்கள் பெரும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறோம். எங்கள் புகழும் பரவியிருக்கிறது. நீர் எங்களுக்கு அருள ஓர் ஆதரவை நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறோம்” என்றனர்.(35)
அவர்களுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {வியாசர்} அவர்களிடம், “பிள்ளைகளே, என்ன வரத்தை நான் அருள நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றார்.(36)
தங்கள் ஆசானின் இந்தப் பதிலைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மீண்டும் தங்கள் ஆசானுக்குத் {வியாசருக்குத்} தலைவணங்கிய அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் கரங்களைக் கூப்பியபடி இந்தச் சிறந்த வார்த்தைகளை ஒரே குரலில் சொன்னார்கள்: “ஓ! தவசிகளில் சிறந்தவரே, எங்கள் ஆசான் எங்களிடம் நிறைவுடன் இருந்தால், நிச்சயம் நாங்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களே.(37,38) ஓ! பெரும் முனிவரே, நீர் எங்களுக்கு ஒரு வரத்தை அருள வேண்டுமென நாங்கள் அனைவரும் உம்மிடம் வேண்டுகிறோம். நீர் எங்களிடம் அருள்கூர்வீராக. (எங்கள் ஐவரைத் தவிர) ஆறாவது சீடன் புகழை அடைவதில் வெல்ல வேண்டாம்.(39) நாங்கள் நால்வர். எங்கள் ஆசானின் மகன் ஐந்தாவதாக அமைகிறார். வேதங்கள் எங்கள் ஐவரில் மட்டுமே ஒளிரட்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரமாகும்” என்றனர்.(40)
பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், வேதங்களின் பொருளை நன்கறிந்தவரும், அற ஆன்மாவைக் கொண்டவரும், மறுமையில் மனிதர்களுக்கான நன்மைகளை அளிக்கும் பொருட்களை நினைப்பதிலேயே எப்போதும் ஈடுபடுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களின் வார்த்தைகளைக் கேட்டு, பெரும் நன்மை நிறைந்த இந்த நீதிமிக்க வார்த்தைகளைத் தன் சீடர்களுக்குச் சொன்னார்: “ஒரு பிராமணனுக்கோ, பிரம்மலோக வாசத்தை அடைய ஆவலுடன் விரும்புபவனின் மூலம் வேதக் கருத்துகளைக் கேட்க விரும்பும் ஒருவனுக்கோ வேதங்கள் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்[2].(41,42) நீங்கள் பெருகுவீராக. வேதங்கள் (உங்கள் முயற்சிகளின் மூலம்) பரவட்டும். முறையாகச் சீடனாகாத ஒருவனுக்கு வேதங்கள் ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது. நல்ல நோன்புகளை நோற்காதவனுக்கும் அவை கொடுக்கப்படக்கூடாது. தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்டவனுக்குள் வசிப்பதற்கும் அவை கொடுக்கப்படக்கூடாது.(43) (வேத அறிவைக் கற்பிக்க) சீடர்களாக ஏற்கக்கூடிய மனிதர்களின் முறையான தகுதிகளாக இவையே அறியப்பட வேண்டும். ஒருவனுடைய குணத்தை முறையாக ஆராயாமல் எந்த அறிவியலும் அவனுக்குக் கொடுக்கப்படக் கூடாது. தூய தங்கமானது, வெப்பம், வெட்டுதல், தேய்த்தல் ஆகியவற்றின் மூலம் சோதிக்கப்படுவதைப் போலவே சீடர்களும் அவர்களுடைய பிறப்பு {குலம்} மற்றும் சாதனைகளின் மூலம் சோதிக்கப்பட வேண்டும்.(45)நிறுவப்படக்கூடாத பணிகளிலோ, ஆபத்து நிறைந்த பணிகளிலோ உங்கள் சீடர்களை நீங்கள் ஒருபோதும் நிறுவக்கூடாது. ஒருவனுடைய ஞானமானது, எப்போதும் அவனுடைய புத்தி மற்றும் கல்வியில் அவனுடைய தளரா உழைப்பு ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கதாகும்.(46) சீடர்கள் அனைவரும் அனைத்துக் கடினங்களையும் {சிரமங்களையும்} வெல்லட்டும், அவர்கள் அனைவரும் மங்கலமான வெற்றியை அடையட்டும். அனைத்து வகைகளை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களுக்கும் நீங்கள் சாத்திரங்களைக் கற்பிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அவ்வாறு கற்பிக்கும்போது, ஒரு பிராமணனை முன்னே வைத்துக் கொண்டு அவனிடம் மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டும்[3].(47) இவையே வேத கல்வியின் விதிகளாகும். மேலும் இதுவே உயர்ந்த பணியாகவும் கருதப்படுகிறது. வேதங்களைக் கொண்டு தேவர்களைத் துதிக்கும் நோக்கத்திற்காகவே சுயம்புவால் அவை படைக்கப்பட்டன.(48) புத்தி மயக்கத்தின் மூலமாக எந்த மனிதன், வேதமறிந்த ஒரு பிராமணனை நிந்திக்கிறானோ, அத்தகைய தீய பேச்சின் விளைவால் அவன் நிச்சயம் அவமானத்தை அடைவான்.(49) அறவிதிகள் அனைத்தையும் அலட்சியம் செய்து ஞானத்தை வேண்டுபவன், அறவிதிகளை அலட்சியம் செய்து ஞானத்தைப் போதிப்பவன் ஆகிய இருவரும் வீழ்கிறார்கள். மேலும், இத்தகைய வேண்டலும், இத்தகைய போதனையும் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நீடிக்க வேண்டிய பற்றுக்குப் பதிலாக, நம்பிக்கையின்மையையும், ஐயுணர்வையுமே நிச்சயம் உண்டாக்கும்.(50) வேதங்களைக் கற்கவும், கற்பிக்கப்படவும் வேண்டிய வழி குறித்த அனைத்தையும் நான் இப்போது உங்களுக்குச் சொன்னேன். இந்த அறிவுரைகளை உங்கள் மனத்தில் கொண்டே நீங்கள் உங்கள் சீடர்களிடம் செயல்பட வேண்டும்” என்றார் {வியாசர்}”.(51)
ஏழு மருத்துகள்! – சாந்திபர்வம் பகுதி – 329-வியாசரிடம் விடைபெற்றுச் சென்ற அவரது சீடர்கள்; களங்கங்கள் என்னென்ன என்பதைச் சொன்ன நாரதர்; வியாசரை வேதமோதத் தூண்டிய நாரதர்; வேதமோதக்கூடாத வேளை; ஏழு வாயுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர் …
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தங்கள் ஆசானின் {வியாசரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான வியாசரின் சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து ஒருவொரையொருவர் தழுவிக் கொண்டனர்.(1) அவர்கள் தங்களுக்குள், “நமது எதிர்கால நன்மையைக் கருதி சிறப்புமிக்க நமது ஆசானால் சொல்லப்பட்டதை நாம் எப்போதும் நினைவில் கொண்டு, அதன்படியே நிச்சயம் செயல்படுவோம்” என்றனர்.(2)
மகிழ்ச்சி நிறைந்த இதயங்களோடு ஒருவருக்கொருவர் இவ்வாறு சொல்லிக் கொண்டவர்களும், வார்த்தைகளை முற்றாக ஆள்பவர்களுமான வியாசரின் சீடர்கள், மீண்டும் தங்கள் ஆசானிடம், “ஓ! பலமிக்கவரே, ஓ! பெருந்தவசியே, உமக்கு நிறைவுண்டானால், வேதங்களை வகுப்பதற்காக {பரவச் செய்வதற்கு} நாங்கள் இம்மலையில் இருந்து பூமிக்குச் செல்ல விரும்புகிறோம்” என்றனர்.(4)
தமது சீடர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்கப் பராசரர் மகன், அறம் மற்றும் லாபம் தாண்டி நன்மை நிறைந்த வார்த்தைகளால் அவர்களுக்கு மறுமொழிகூறினார்.(6) {வியாசர்}, “விரும்பியபடி நீங்கள் பூமிக்கும் செல்லலாம், தேவலோகத்திற்கும் செல்லலாம். வேதங்கள் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட நேரிடும், எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்[1].(6)வாய்மை நிறைந்த தங்கள் ஆசானால் {வியாசரால்} அனுமதிக்கப்பட்ட அந்தச் சீடர்கள், அவரை வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர்.(7) பூமிக்கு இறங்கி வந்த அவர்கள் அக்னிஷ்டோமத்தையும் பிற வேள்விகளையும் செய்தனர்; அவர்கள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்கான வேள்விகளைச் செய்து கொடுக்கத் தொடங்கினர்.(8) இல்லறவாழ்வுமுறையில் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தி வந்த அவர்கள், பிராமணர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். பெரும்புகழையும், செழிப்பையும் கொண்ட அவர்கள், {பிறருக்குப்} போதிப்பதிலும், {பிறரின்} வேள்விகளைச் செய்து கொடுப்பதிலும் ஈடுபட்டனர்.(9) வியாசர், தமது சீடர்கள் சென்ற பிறகு, தமது மகனின் {சுகரின்} துணையுடன், தமது ஆசிரமத்திலேயே இருந்தார். கவலைநிறைந்த நினைவுகளுடன் தன் நாட்களைக் கடத்திவந்த அந்த முனிவர், ஆசிரமத்தின் ஓர் ஓரத்தில் அமைதியாக ஓய்ந்து அமர்ந்திருந்தார்.(10) அந்நேரத்தில், பெரும் தவத்தகுதியைக் கொண்ட நாரதர், வியாசரைக் காண அந்த இடத்திற்கு வந்து, செவிக்கினிய ஒலியிலமைந்த வார்த்தைகளால் அவரிடம் பேசினார்.(11)
நாரதர், “ஓ! வசிஷ்ட குலத்தைச் சேர்ந்த மறுபிறப்பாள முனிவரே, ஏன் இப்போது வேதவொலிகள் அமைதியடைந்தன? ஆழ்ந்த எண்ணங்களின் சிந்தனையில் உள்ள ஒருவரைப் போலத் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டு ஏன் நீர் தனியாக அமைதியாக அமர்ந்திருக்கிறீர்?(12) ஐயோ, வேத எதிரொலிகள் இல்லாத இந்த மலையானது, ராகுவால் தாக்கப்படும்போதோ, புழுதியால் மறைக்கப்படும்போதோ காந்தியை இழக்கும் சந்திரனைப் போலத் தன் அழகனைத்தையும் இழந்திருக்கிறது.(13) தெய்வீக முனிவர்கள் வசித்திருந்தாலும், வேதவொலிகளை இழந்திருக்கும இந்த மலை அழகனைத்தையும் இழந்து நிஷாதர்களின் கிராமத்துக்கு ஒப்பாக இருக்கிறது.(14) வேதவொலியை இழந்ததன் விளைவால் முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் ஒளியில்லாமல் இருக்கிறார்கள்” என்றார்.(15)
நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, “ஓ! பெரும் முனிவரே, வேத வெளிப்பாடுகளை நன்கறிந்தவரே, நீர் சொல்பவை அனைத்தும் எனக்கு ஏற்புடையவையாகவும், உண்மையில் உம்மால் சொல்லத்தகுந்தவையாகவும் உள்ளன. நீர் அனைத்தையும் அறிந்தவர். நீர் அனைத்தையும் கண்டவர். உமது ஆர்வம் அனைத்துப் பொருட்களையும் தழுவியதாக இருக்கிறது.(16,17) மூவுலகங்களில் நேர்ந்தவை அனைத்தையும் நீர் நன்கறிந்திருக்கிறீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் எனக்கு ஆணையிடுவீராக. ஓ!, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(18) ஓ! மறுபிறப்பாள முனிவரே, இப்போது என்னால் செய்யத்தகுந்தவற்றை எனக்குச் சொல்வீராக. என் சீடர்களிடமிருந்து பிரிந்திருக்கும் என் மனம் இப்போது உற்சாகமற்றதாக இருக்கிறது” என்றார்.(19)
நாரதர் {வியாசரிடம்}, “வேதமோதுவதை நிறுத்துவதே அதன் {வேதத்தின்} களங்கமாகும் பிராமணர்கள் நோன்பு நோற்காததே அவர்களின் களங்கமாகும். பாஹ்லீக குலம் இந்தப் பூமியின் களங்கமாகும். ஆர்வம் பெண்களின் களங்கமாகும்.(20) நீர் நுண்ணறிவைக் கொண்ட உமது மகனுடன் வேதங்களை ஓதி, ராட்சசர்களிடம் இருந்து எழும் அச்சங்களை அந்த வேதவொலிகளின் எதிரொலியால் அகற்றுவீராக” என்றார்”.(21)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கடமைகளை {தர்மங்களை} அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், வேதமோதுவதில் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டவருமான வியாசர், நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, நாரதரிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று பதிலளித்தார்[2].(22)அவர், தமது மகனான சுகருடன் சேர்ந்து, உச்சரிப்பு ஆய்வின் விதிகள் அனைத்தையும் நோற்று, மூவுலகங்களையும் நிறைக்கும் வகையில் மிக உரத்த குரலில் வேதமோதுவதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(23) ஒரு நாள், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவர்களான அந்தத் தந்தையும் மகனும் வேதமோதுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெருங்கடலின் மத்தியில் வீசும் வலுவான காற்றால் உந்தப்பட்டது போல் தெரிந்த கடுங்காற்று எழுந்தது.(24) அந்த வேளை புனித பாராயணத்திற்குத் தகுந்ததல்ல என்பதை அந்தச் சூழ்நிலையில் புரிந்து கொண்ட வியாசர், உடனே பாராயணத்தை நிறுத்துமாறு தமது மகனுக்கு ஆணையிட்டார். தமது தந்தையால் இவ்வாறு தடுக்கப்பட்ட சுகர் ஆர்வத்தால் நிறைந்தார்.(25)
அவர் தமது தந்தையிடம், “ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் காற்று எங்கிருந்து வருகிறது? இந்தக் காற்றின் போக்கைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(26)
சுகரின் இந்தக் கேள்வியைக் கேட்ட வியாசர் ஆச்சரியத்தால் நிறைந்தார். அது வேத பாராயணம் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடும் ஒரு சகுனம் என்று சொல்லி சுகருக்கு அவர் பதிலளித்தார்,(27) “நீ ஆன்ம பார்வையைப் பெற்றிருக்கிறாய். உன் மனமும், ஒவ்வொரு மாசிலிருந்தும் தூய்மையடைந்திருக்கிறது. ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்களில் இருந்து நீ விடுபட்டிருக்கிறாய். நீ இப்போது நல்லியல்பின் {சத்வ} குணத்தில் நிலைபெற்றிருக்கிறாய்.(28) ஒருவன் தன் பிம்பத்தை ஒரு கண்ணாடியில் காண்பதைப் போலவே நீ இப்போது உன் ஆன்மாவால் ஆன்மாவைக் காண்கிறாய். உன் ஆன்மாவிலேயே நிலைபெற்றிருக்கும் நீ வேதங்களைக் குறித்தும் சிந்திக்கிறாய்.(29) பரமாத்மாவின் பாதை தேவயானம் (தேவர்களின் பாதை) என்றழைக்கப்படுகிறது. தமஸ் குணத்தாலான பாதை பித்ருயானம் (பித்ருக்களின் பாதை) என்றழைக்கப்படுகிறது. இவையே மறுமைக்கான இரு பாதைகளாகும். ஒன்றின் வழியே மக்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். மற்றொன்றின் மூலம் மக்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.(30)
காற்றானது {வாயுவானது} பூமியின் பரப்பிலும், ஆகாயத்திலும் வீசுகிறது. அவை ஏழு வழிகளில் {மார்க்கங்களில்} வீசுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக நான் சொல்கிறேன் கேட்பாயாக.(31) உடலானது புலன்களைக் கொண்டுள்ளது. புலன்களானவை, சத்யஸ்களாலும், வலிமையும், பலமும் கொண்ட பெரும்பூதங்கள் பலவற்றாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இவையே {புலன்களே} சமானன் என்ற பெயரில் வெல்லப்பட முடியாத ஒரு மகனை ஈன்றது.(32) சமானனிலிருந்து உதானன் என்றழைக்கப்படும் மகன் ஒருவன் எழுந்தான். உதனானிலிருந்து வியானன் எழுந்தது. வியானனிலிருந்து அபானன் எழுந்தது, இறுதியாக அபானனிலிருந்து பிராணன் என்றழைக்கப்படும் காற்று எழுந்தது.(33) எதிரிகள் அனைத்தையும் எரிப்பவனான அந்த வெல்லப்பட முடியாத பிராணன் பிள்ளையற்றவனானான். அந்தக் காற்றுகளின் {வாயுக்களின்} வெவ்வேறு செயல்பாடுகளைக் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(34) உயிரினங்கள் அனைத்தின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் காற்றே {வாயுவே} காரணமாக இருக்கிறது. உயிரினங்கள் அதன் மூலம் வாழத்தகுந்தவையாவதாலேயே அக்காற்று பிராணன் (அல்லது உயிர்) என்றழைக்கப்படுகிறது.(35)
மேற்கண்ட பட்டியலில் முதலாவதாக இருப்பதும், பிரவஹம் (சமானன்) என்ற பெயரில் அறியப்படுவதுமான காற்றானது {வாயுவானது}, முதல் வழியில் புகை மற்றும் வெப்பத்தில் பிறக்கும் மேகத்திரள்களைத் தூண்டுகிறது. ஆகாய வழியில் நீர்நிறைந்த மேகங்களின் தொடர்பை அடையும் அந்தக் காற்றானது, மின்னல் கீற்றுகளின் பிரகாசத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(36)
ஆவஹம் {நமது உடலுக்குள் உதானன்} என்றழைக்கப்படும் இரண்டாம் காற்று {வாயு} பேரொலியுடன் வீசுகிறது. இந்தக் காற்றே சோமனையும் {சந்திரனையும்}, பிற ஒளிக்கோள்களையும் எழவும், தோன்றவும் செய்கிறது. (அண்டத்தின் நுண்ணுயிரான இந்த) உடலுக்குள் உள்ள அந்தக் காற்று ஞானிகளால் உதானன் என்றழைக்கப்படுகிறது.(37)
நான்கு பெருங்கடல்களில் இருந்து நீரை உறிஞ்சி, ஆகாயத்திலுள்ள மேகங்களுக்கு அளித்து, அம்மேகங்களை மழை தேவனுக்கு {பர்ஜன்யனுக்கு} அளிக்கும் காற்றானது, பட்டியலில் மூன்றாவதாக உத்வஹம் {நமது உடலுக்குள் வியானன்} என்ற பெயரில் அறியப்படுகிறது.(38,39)
மேகங்களை ஆதரிப்பதும், அவற்றைப் பல்வேறு பகுதிகளாக வகுப்பதும், மழைபொழிவிற்காக அவற்றை உருக்குவதும், மீண்டும் அவற்றைத் திடமாக்குவதும், முழங்கும் மேகங்களின் ஒலியாக உணரப்படுவதும், உலகைப் பாதுகாப்பதற்காக மேகங்களின் வடிவைத் தானே ஏற்றுக் கொண்டிருப்பதும், தேவர்கள் அனைவரின் தேர்களையும் வானத்தில் சுமந்து செல்வதுமான காற்றானது {வாயுவானது} ஸம்வஹம் {நமது உடலுக்குள் அபானன்} என்ற பெயரில் அறியப்படுகிறது. பட்டியலில் நான்காவதான அது {ஸ்வஹம் / அபானன்} மலைகளையே பிளக்கும் வல்லமையும், பெரும் பலமும் கொண்டதாகும்.(40,41)
ஐந்தாவது காற்றானது {வாயுவானது}, பெரும் சக்தியையும், வேகத்தையும் கொண்டதாகும். உலர்ந்ததாக இருக்கும் அது, மரங்களை வேரோடு பிடுங்கி கீழே வீழ்த்தவல்லதாகும். அதனுடன் இருக்கும் மேகங்கள், வலாஹம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.(42) அந்தக் காற்றானது, பல வகைகளிலான பேரிடர் நிகழ்வுகளை உண்டாக்கியபடி, ஆகாயத்தில் முழங்கும் ஒலிகளையும் உண்டாக்குகிறது. அது விவஹம் {நமது உடலில் பிராணன்} என்ற பெயரில் அறியப்படுகிறது.(43,44)
ஆறாவது காற்றானது {வாயுவானது}, தெய்வீக நீர்நிலைகள் அனைத்தையும் சுமந்தபடி, அவை கீழே விழாமல் பாதுகாக்கிறது. தெய்வீக கங்கையின் புனித நீரை நீடிக்கச் செய்து வீசும் அந்தக் காற்றானது, அது {அந்தக் கங்கை நீர்} கீழ்நோக்கிப் பாயாமல் தடுக்கிறது.(45) உண்மையில் ஆயிரம் கதிர்களின் தோற்றுவாயும், உலகிற்கு ஒளியூட்டுவதுமான சூரியன், அந்தக் காற்றால் தொலைவிலேயே தடுக்கப்பட்டு ஒற்றைக் கதிரைக் கொண்ட ஒளிக்கோளாகத் தோன்றுகிறது.(46) அந்தக் காற்றின் செயல்பாட்டினாலேயே சந்திரன் தேயும் சந்திரன், முழு வட்டில் வெளிப்படும்வரை மீண்டும் வளர்கிறது. ஓ! தவசிகளில் முதன்மையானவனே, அந்தக் காற்று {வாயு}, பரிவஹம் என்ற பெயரில் அறியப்படுகிறது[3].(47)உரிய நேரத்தில் உயிரினங்கள் அனைத்தின் உயிரை அபகரித்துச் செல்வதும், மரணம் {மிருத்யு} மற்றும் சூரியனின் மகனான யமன் ஆகியோர் பின்பற்றும் பாதையைக் கொண்டதும்,(48) எப்போதும் தியான யோகத்தில் ஈடுபடும் நுட்பமான பார்வை கொண்ட யோகிகளால் அடையப்படும் இறவாமையின் ஊற்றுக் கண்ணாக இருப்பதும்(49), பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனான தக்ஷனின் பத்து பிள்ளைகளின் மூலம் பிறந்தவர்களான ஆயிரக்கணக்கான {தக்ஷனின்} பேரப்பிள்ளைகள் அண்டத்தின் எல்லையை அடைவதில் துணைபுரிந்ததும், உலகத்திற்குத் திரும்பிவரும் கடப்பாட்டில் இருந்து விடுவித்து ஒருவனைத் தன் தீண்டலினாலேயே விடுதலையை {முக்தியை} அடையச் செய்வதுமான காற்றானது {வாயுவானது} பராவஹம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. காற்றுகள் அனைத்திலும் முதன்மையான அஃது, எவராலும் தடுக்கப்பட முடியாததாக {ஏழாவது காற்றாக / வாயுவாக} இருக்கிறது.(50,51)
இந்தக் காற்றுகள் {வாயுக்கள் / மருத்துகள்} அனைவரும் அதிதியின் மகன்களாவர்[4]. எங்கும் செல்லவல்லவையும், அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவையுமான அவை {வாயுக்கள்}, எந்த நேரத்திலும் உன்னோடு இணையாமல் உன்னைச் சுற்றிலும் வீசிக் கொண்டே இருக்கின்றன.(52) எனினும், வீசத்தொடங்கியிருக்கும் இந்தக் காற்றால் இந்த முதன்மையான மலையே திடீரென நடுங்குவது ஆச்சரியம் நிறைந்ததாகும்.(53) இந்தக் காற்று விஷ்ணுவின் மூக்குத்துளைகளில் வரும் அவனது மூச்சுக்காற்றாகும். இது வேகத்தால் தூண்டப்பட்டுப் பெருஞ்சக்தியுடன் வீசத் தொடங்கும்போது மொத்த அண்டமும் கலக்கமடைகிறது {பீடையடைகிறது}.(54) எனவே, காற்று வலுவாக வீசத்தொடங்கும்போது, வேதமறிந்த மனிதர்கள் வேதபாராயணம் செய்வதில்லை. வேதங்களும் காற்றின் வடிவமேயாகும். எனவே {வேதமானது} சக்தியுடன் சொல்லப்படும்போது, புறக்காற்றுப் பீடிக்கப்படுகிறது” என்றார் {வியாசர்}.(55)பராசரரின் பலமிக்க மகன் {வியாசர்}, இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, (காற்றன் பலம் குறைந்ததும்) தமது மகனை {சுகரை} வேதபாராயணம் செய்யும்படி ஆணையிட்டார். பிறகு அவர், தெய்வீகக் கங்கையின் நீரில் மூழ்குவதற்காக அந்த இடத்தை விட்டுச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(56)
உலக இயல்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 330-வியாசர் சென்றதும் சுகரிடம் வந்த நாரதர்; நன்மையானவை எவை என சுகர் கேட்டது; நன்மையானவற்றையும், உலக இயல்பையும் சுகருக்குச் சொன்ன நாரதர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வியாசர் அந்த இடத்தைவிட்டுச் சென்றவுடன், நாரதர் வானத்தின் ஊடாகப் பயணித்து, சாத்திரக் கல்வியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுகரிடம் வந்தார். வேதங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குரிய பொருளைச் சுகரிடம் கேட்கும் நோக்கத்திலேயே அந்தத் தெய்வீக முனிவர் வந்தார்.(1) தெய்வீக முனிவரான நாரதர் தமது ஆசிரமத்திற்கு வந்ததைக் கண்ட சுகர், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி அர்க்கியம் கொடுத்து அவரை வழிபட்டார்.(2)
தமக்கு அளிக்கப்பட்ட கௌரவங்களில் நிறைவடைந்த நாரதர், சுகரிடம், “ஓ! அறவோரில் முதன்மையானவனே, ஓ! அன்புக்குரிய குழந்தாய், நான் உனக்கு என்ன நன்மையைச் செய்ய வேண்டும் எனச் சொல்வாயாக” என்று கேட்டார்.(3)
நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சுகர், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளை அவரிடம் {நாரதரிடம்} சொன்னார், “எது எனக்கு நன்மையானது என்பதை எனக்குக் கற்பிப்பதே உமக்குத் தகும்” {என்று சுகர் கேட்டார்}.(4)
நாரதர் {சுகரிடம்}, “பழங்காலத்தில் சிறப்புவாய்ந்த சனத்குமாரர், தம்மிடம் உண்மையை விசாரிக்க வந்தவர்களும், தூய ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான சில குறிப்பிட்ட முனிவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(5) ஞானத்தைப் போன்று வேறொரு கண்ணில்லை. வாய்மையைப் போன்று வேறொரு தவமில்லை. பற்றை {ஆசையைப்} போன்று வேறொரு கவலையில்லை. துறவைப் போன்று வேறொரு மகிழ்ச்சியில்லை.(6) பாவச் செயல்களைத் தவிர்த்தல், நிலையான அறப்பயிற்சி, நல்லொழுக்கம், அனைத்து அறக்கடமைகளையும் முறையாக நோற்பது ஆகியனவே உயர்ந்த நன்மையாகும்.(7) கவலைநிறைந்த மனித நிலையை அடைந்த பிறகு, எவன் அதில் பற்றுக் கொண்டு கலக்கமடைகிறானோ {மயக்கமடைகிறானோ}, அத்தகைய மனிதன், கவலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றுக் கொள்வது துன்பத்தின் குறியீடாகும்.(8) உலகம் சார்ந்த பொருட்களில் பற்றுக் கொண்ட மனிதனின் புத்தியானது மேலும் மேலும் மயக்கவலையில் சிக்கிக் கொள்கிறது. மயக்கவலையில் சிக்கிக் கொள்ளும் மனிதன் இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தையே அடைகிறான்.(9) ஒருவன் தன் நன்மையை நாடினால் அவன் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையினாலும் ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டிலிருந்தும் {காமகுரோதங்களில் இருந்தும்} விலக வேண்டும். அவை இரண்டும் ஒருவனுக்கான நன்மையை அழிப்பதற்காக மட்டுமே உண்டாகிறது.(10)
ஒருவன் எப்போதும் தன் தவங்களைக் கோபத்திலிருந்தும் {குரோதத்திலிருந்தும்}, செழிப்பைச் செருக்கிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். ஒருவன் எப்போதும் தன் ஞானத்தை மதிப்பு மற்றும் அவமதிப்பு {மான அவமானம்} ஆகியவற்றில் இருந்தும், அவனது ஆன்மாவைப் பிழையிலிருந்தும் {அஜாக்ரதையிலிருந்தும்} பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(11) கருணையே {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். மன்னிக்கும் தன்மையே {பொறுமையே} உயர்ந்த தகுதியாகும் {பலமாகும்}. தன்னறிவே {சுயஞானமே} உயர்ந்த ஞானமாகும். வாய்மையைவிட உயர்ந்ததேதும் கிடையாது.(12) உண்மையைப் பேசுவதே எப்போதும் முறையானதாகும். உண்மையைப் பேசுவதைவிட நன்மைக்கானதைப் பேசுவதே மிகச் சிறப்பானதாகும். உயிரினங்கள் அனைத்திற்குமான பெரும் நன்மை நிறைந்ததே வாய்மை என நான் கருதுகிறேன்.(13) ஒருபோதும் நம்பிக்கையில் ஈடுபடாமல் {எதிர்பார்ப்பில் ஈடுபடாமல்} ஒவ்வொரு செயலையும் கைவிடுபவனும், உலகச் சூழலில் இருந்து முற்றிலும் தொடர்பறுந்தவனும், உலகம் சார்ந்த அனைத்தையும் துறந்தவனுமான மனிதனே உண்மையில் கல்விமான் என்றும் ஞானம் கொண்டவன் என்றும் சொல்லப்படுகிறான்.(14) தன் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள புலன்களின் துணையுடன் புலன்நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டும் அவற்றில் பற்றில்லாமல் இருப்பவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், இன்பதுன்பங்களால் ஒருபோதும் அசைக்கப்படாதவனும், தியான யோகத்தில் எப்போதும் ஈடுபடுபவனும்,(15) புலன்களில் ஆதிக்கம் செலுத்தும்தேவர்களுடன் எப்போதும் தோழமையுடன் வாழ்பவனும், அவற்றில் இருந்து தொடர்பறுந்தவனும், உடலைக் கொண்டிருந்தாலும், அதனோடு ஒருபோதும் தன்னை ஒப்பிடாதவனுமான ஒருவன் விடுதலையடைந்து, மிக விரைவில் உயர்ந்த நன்மையை அடைகிறான்.(16)
ஓ! தவசியே, பிறரை ஒருபோதும் காணாதவனும், பிறரை ஒருபோதும் தீண்டாதவனும், பிறருடன் ஒருபோதும் பேசாதவனுமான ஒருவன் விரைவில் தனக்கான உயர்ந்த நன்மையை அடைகிறான்.(17) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் எந்தத் தீங்கையும் இழைக்கக்கூடாது. மறுபுறம் அவன் அனைத்திடமும் முற்றான நட்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனித நிலையை அடைந்த ஒருவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் பகைமையுடன் நடந்து கொள்ளக்கூடாது.(18) உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் முற்றான அலட்சியம், முற்றான நிறைவு, அனைத்து வகை எதிர்பார்ப்புகளையும் கைவிடல், பொறுமை ஆகியவை புலன்களைக் கட்டுப்படுத்தித் தன்னறிவை அடைந்த ஒருவனுக்கான உயர்ந்த நன்மையாக அமைகின்றன.(19) ஓ! குழந்தாய், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டு உன் புலன்கள் அனைத்தையும் அடக்கி, அதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் இன்பநிலையை அடைவாயாக.(20)
பேராசையில் {காமத்தில்} இருந்து விடுபட்டோர் ஒருபோதும் எந்தக் கவலையையும் அடைய வேண்டியதிராது. எனவே ஒருவன் தன் ஆன்மாவில் இருந்து பேராசைகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஓ! இனியவனே, அருளப்பட்டவனே, பேராசையைக் கைவிடுவதன் மூலம் கவலை மற்றும் துன்பத்தில் இருந்து நீ விடுபட இயன்றவனாவாய்.(21) வெல்லமுடியாததை {விடுதலையை / முக்தியை} வெல்ல விரும்பும் ஒருவன், தவங்கள், தற்கட்டுப்பாடு, பேசாமை {மௌனம்}, ஆன்ம அடக்கம் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ வேண்டும்.(22) பற்றுகளுக்கு மத்தியில் அவற்றில் பற்றில்லாமல் வாழ்பவனும், எப்போதும் தனிமையில் வாழ்பவனுமான பிராமணன், மிக விரைவில் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(23) பாலுறவுக் கலவி வாழ்வில் திளைப்பையடையும் உயிரினங்களுக்கு மத்தியில் தன்னிலேயே மகிழ்ச்சியுடன் வாழும் மனிதன், ஞானத்தால் தாகம் தணிக்கப்பட்ட மனிதனாக அறியப்பட வேண்டும். ஞானத்தால் தாகம் தணிக்கப்பட்ட மனிதன் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(24) நற்செயல்களின் மூலம் ஒருவன் தேவர்களின் நிலையை அடைகிறான்; அதே வேளையில் உண்மையில் தீமையான செயல்களைச் செய்யும் ஒருவன், இழிந்த விலங்குகளின் மத்தியில் ஆதரவற்ற நிலையில் வீழ்கிறான்.(25)
கவலை, துன்பம் மற்றும் மரணம் ஆகியவற்றால் எப்போதும் பீடிக்கப்படும் ஓர் உயிரினம் (காலத்தின் கொப்பரையில்) இவ்வுலகில் சமைக்கப்படுகிறது. அதை நீ அறிவாயா?(26) உண்மையில் தீங்கானதை நன்மையென்றும்; உண்மையில் உறுதியில்லாததை உறுதியானதென்றும்; விரும்பத்தகாததை விரும்பத்தக்கது என்றும், நன்மையற்றதை நன்மையானது என்றும் கருதுவதைத் தொடர்கிறாய். ஐயோ, இவற்றைச் சரியாக உணர்ந்து நீ ஏன் விழிக்காமல் இருக்கிறாய்?(27) தன் வலைக்குள் தானே அடைபடும் பட்டுப்புழுவைப் போல உன் எண்ணற்ற செயல்களால் பிறக்கும் மயக்கம் மற்றும் பிழையால் அமைந்த வலைக்குள் நீ தொடர்ந்து அடைபட்டுக் கொண்டிருக்கிறாய். ஐயோ, இந்தச் சூழ்நிலையைச் சரியாக உணர்ந்து நீ ஏன் விழிக்காமல் இருக்கிறாய்?(28) இவ்வுலகப் பொருட்களில் எந்தப் பற்றும் கொள்ளும் தேவை உனக்கில்லை. உலகம்சார்ந்த பொருட்களில் பற்றுக் கொள்வது தீமையையே உண்டாக்கும். தன்னைச் சுற்றிலும் வலையைப் பின்னும் பட்டுப்புழு இறுதியில் அதன் செயலாலேயே அழிவையடையும்.(29) மகன்கள், மனைவிகள், உறவினர்களிடம் பற்றுள்ள மனிதர்களோ, புதைகுழியில் மூழ்கும் காட்டு யானைகள் படிப்படியாகப் பலவீனமடைந்து மரணமடைவதைப் போல இறுதியில் அழிவையே சந்திக்கிறார்கள்.(30)
பாசவலையால் இழுக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், பெரும் வலைகளால் மண்ணுக்கு இழுக்கப்படும் மீன்களைப் போலப் பெருந்துன்பத்தையே அடைகிறார்கள்.(31) உறவினர்கள், மகன்கள், மனைவிகள், இந்த உடல், கவனமாகப் பாதுகாக்கப்படும் ஒருவனுடைய உடைமைகள் அனைத்தும் நிலையற்றவையாக, மறுமையில் எத்தொண்டுமாற்றாதவையாகவும் இருக்கின்றன. ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே ஒருவனை மறுமையில் பின்தொடர்கின்றன.(32) மறுமையில் இவை அனைத்தையும் விட்டுவிட்டு, நிச்சயம் நீ ஆதரவற்றவனாகவே செல்லப்போகிறாய் எனும்போது, ஐயோ, உண்மையான நிலையான செல்வத்தைக் கவனிக்காமல், எம்மதிப்புமில்லாத நிலையற்ற பொருட்களின் மீது நீ ஏன் பற்று கொள்கிறாய்?(33) நீ செல்ல வேண்டிய பாதையானது (ஓய்வெடுப்பதற்கான) எவ்வகை ஓய்விடங்களும் இல்லாததாக இருக்கிறது. அவ்வழியில் ஒருவன் ஆதரவாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய ஏதும் கிடையாது. அது {அந்தப் பாதை} கடக்கும் நாடு அறியப்படாததாகவும், கண்டுபிடிக்கப்படாததாகவும் இருக்கிறது. மேலும் அஃது அடர்த்தியான இருளில் மூழ்கியிருக்கிறது. ஐயோ, தேவையான செலவுக்கு ஆயத்தமாகாமல் நீ எவ்வாறு அவ்வழியில் செல்லப் போகிறாய்?(34) நீ அந்தச் சாலையில் செல்லும்போது, உன்னைப் பின்தொடர்ந்து எவரும் வரப் போவதில்லை. இம்மையிலிருந்து நீ மறுமைக்குச் செல்லும்போது, நீ செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே உன்னைப் பின்தொடரப்போகின்றன.(35)
கல்வி, செயல்கள், (அக மற்றும் புறத்) தூய்மை, பெரும் ஞானம் {பேரறிவு} ஆகிய வழிமுறைகளின் மூலமே ஒருவன் பொருட்களின் பொருளைத் தேடுகிறான். பொருட்களில் முதன்மையானது அடையப்படும்போது, அவன் (மறுபிறப்பிலிருந்து) விடுபடுகிறான்.(36) மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் ஒருவன் வாழ உணரும் விருப்பமானது கட்டும் கயிற்றைப் போன்றதாகும். நற்செயல்களைச் செய்வோர் அந்தக் கட்டை அறுப்பதில் வென்று, தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். தீச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் மட்டுமே அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(37) வாழ்வு (அல்லது உலகம்) எனும் ஆறு பயங்கரமானதாகும். மேனி அல்லது வடிவழகு அதன் கரைகளாக இருக்கிறது. மனம் அதன் ஓட்டத்தின் வேகமாக இருக்கிறது. தீண்டல் அதன் தீவாக இருக்கிறது. சுவை அதன் ஓட்டமாக இருக்கிறது. மணம் அதன் சகதியாக இருக்கிறது. ஒலி அதன் நீராக இருக்கிறது. அதில் சொர்க்கத்தை நோக்கி வழிவகுக்கும் குறிப்பிட்ட பகுதி பெரும் சிரமங்களைக் கொண்டதாகும். ஒருவன் அந்த ஆற்றைக் கடக்கும் படகாக உடல் இருக்கிறது. மன்னிக்கும் தன்மை {பொறுமை} அதைத் தூண்டும் படகுத்துடுப்பாக இருக்கிறது. வாய்மை அப்படகை நிலைபெறச் செய்யும் சரளையாக {அடிச்சுமையாக} இருக்கிறது. அறம்சார்ந்த நடைமுறையானது, கடினமான நீர்நிலைகளில் அந்தப் படகை இழுக்கப் பயன்படும் கொடிக்கம்பத்தை இணைக்கும் இழையாக இருக்கிறது. ஈகை அல்லது தானம், அந்தப் படகைத் தூண்டும் காற்றாக இருக்கிறது. நிலையான வேகத்துடன் கூடிய அந்தப் படகைக் கொண்டுதான் ஒருவன் வாழ்வெனும் ஆற்றைக் கடக்க வேண்டும்.(38,39) அறம் மற்றும் மறம், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவாயாக. வாய்மை மற்றும் பொய்மையைக் கைவிட்ட பிறகு, இவற்றைக் கைவிடச் செய்வதையும் கைவிடுவாயாக.(40)
நோக்கங்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் நீ அறத்தைக் கைவிடுவாயாக; ஆசைகள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் நீ பாவத்தையும் கைவிடுவாயாக. புத்தியின் துணையோடு நீ வாய்மையையும், பொய்மையையும் கைவிடுவாயாக; இறுதியாக, உயர்ந்த தத்துவத்தின் (பரமாத்மாவின்) ஞானத்தின் மூலம் அந்தப் புத்தியையும் கைவிடுவாயாக.(41) எலும்புகளைத் தூண்களாகக் கொண்டதும்; நரம்புகளைக் கட்டும் கயிறுகளாகவும், இழைகளாகவும் கொண்டதும்; சதை மற்றும் குருதியை புறப் பூச்சாகக் கொண்டதும்; தோலைப் புறக் கூடாகக் கொண்டதும்; மலமும் சிறுநீரும் நிறைந்தும், அதனால் கெட்ட மணம் கொண்டதும்; முதுமை மற்றும் துன்பம் என்ற தாக்குதல்களுக்கு உட்பட்டதும்; நோயின் இருக்கையாகவும், துன்பத்தில் பலவீனமடைவதாகவும் இருப்பதும்; ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தைப் பெற்றதும்; நிலையற்றதும், உள்வசிக்கும் உயிரினத்தின் (தற்காலிக) வசிப்பிடமாகத் தொண்டுபுரிவதுமான இவ்வுடலை நீ கைவிடுவாயாக.(42,43) பருப்பொருளாலான இந்த மொத்த அண்டமும், மஹத் அல்லது புத்தி என்றழைக்கப்படுவதும், (ஐந்து) பெரும்பூதங்களால் ஆனவையாகும். பர செயல்பாட்டின் மூலமே அது மஹத் என்றழைக்கப்படுகிறது.(44) ஐம்புலன்களும், தமஸ், சத்வம் மற்றும் ரஜஸ் என்ற முக்குணங்களும் (ஏற்கனவே சொல்லப்பட்டவற்றுடன் சேர்த்து) பதினேழாகிறது[1].(45)புலப்படாதவை {அவ்யக்தம்} என்ற பெயரில் அறியப்படும் இந்தப்பதினேழும், புலப்படுபவை {வியக்தம்} என்று அழைக்கப்படும், ஐந்து புலன் நுகர் பொருட்களும் (வடிவம், சுவை, ஒலி, தீண்டல் மற்றும் மணம்), நனவுநிலை மற்றும் புத்தி ஆகியவையும் சேர்ந்து நன்கறியப்பட்ட பட்டியலான இருபத்து நான்காக {24} அமைகிறது[2].(46) இந்த இருபத்து நான்கு உடைமைகளையும் கொள்ளும்போது ஒருவன் ஜீவன் (புமான்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்.(47) (அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற) முத்தொகை, மகிழ்ச்சி, கவலை, வாழ்வு, மரணம் ஆகியவற்றின் உண்மையையும், அவற்றின் விபரங்களையும் அறிந்தவன், வளர்ச்சியையும், சிதைவையும் அறிந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அறிவுக்கு எட்டும் பொருட்கள் எதுவும் ஒன்றன்பின் ஒன்றாகப் படிப்படியாக அறியப்பட வேண்டும்.(48) புலன்களால் உணரத்தக்க பொருட்கள் அனைத்தும் புலப்படுபவை {வ்யக்தம்} என்றழைக்கப்படுகின்றன. புலன்களைக் கடந்தவையும், குறியீடுகளின் மூலம் மட்டுமே உணரப்படுபவையுமான பொருட்கள் புலப்படாதவை {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகின்றன.(49) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், இனிய மழையில் தாகம் கொண்ட காய்ந்த பயணியைப் போலப் பெரும் நிறைவை வெல்கிறான். புலன்களை அடக்கிய ஒருவன், தன் ஆன்மா அனைத்துப் பொருட்களையும் தழுவப் பரவுவதையும், அனைத்துப் பொருட்களும் தன் ஆன்மாவுக்குள் அடங்குவதையும் காண்கிறான்.(50)(இவ்வாறு) பரமனைத் தன் ஆன்மாவிலேயே காண்பவன், அல்லது அனைத்து நிலைகளிலும் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் (தன்ஆன்மாவிலேயே) எப்போதும் காணும் மனிதனிடம் உள்ளதும், ஞானத்தையே தன் வேராகக் கொண்டதுமான பலம் ஒருபோதும் தொலைந்து போவதில்லை[3].(51) பிழை மற்றும் மயக்கத்தில் உண்டாகும் அனைத்து வகைத் துண்பங்களையும் ஞானத்தின் துணையுடன் கடக்கும் ஒருவன், அனைத்து உயிரினங்களுடனான தொடர்பை அடைவதால் எந்தத் தீமையையும் ஒருபோதும் பற்றுவதில்லை[4].(52) புத்தி முழுமையாக வெளிப்படும் அத்தகைய மனிதன், உலகில் நீடித்திருக்கும் ஒழுக்க நடைமுறையில் ஒருபோதும் களங்கம் காண்பதில்லை. விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், பரமாத்மா தொடக்கமும் முடிவுமற்றது; அனைத்து உயிரினங்களாகவும் பிறப்பெடுக்கிறது; ஜீவாத்மாவில் (சாட்சியாக) அது வசிக்கிறது; அது செயலற்றதாவும், வடிவற்றதாகவும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். தவறான தன் செயல்களின் விளைவால் துன்பத்தைச் சந்திக்கும் மனிதன் மட்டுமே,(53,54) அந்தத் துன்பத்தைக் களையும் நோக்கத்திற்காக எண்ணற்ற உயிரினங்களைக் கொல்கிறான்[5]. அத்தகைய வேள்விகளைச் செய்யும் விளைவால், நிகழ்த்துபவர்கள் {அந்த வேள்வியைச் செய்பவர்கள்} மறுபிறப்பையும், அனைத்துப் புறத்திலும் எண்ணற்ற செயல்களைச் செய்யும் தேவையையும் அடைகிறார்கள்.(55)பிழையால் குருடாகும் ஒரு மனிதன் {மோகமடைந்தவன்}, உண்மையில் துன்பத்தின் ஊற்றுக்கண்ணான அதையே இன்பநிலையென்று கருதி, முறையற்ற உணவை உண்ணும் ஒரு நோயாளியைப் போலவே, தொடர்ந்து துன்பத்தை அடைகிறான்.(56) அத்தகைய மனிதன் கடையப்படும் எந்தப் பொருளையும் போலவே, தன் செயல்களால் ஒடுக்கப்பட்டுக் கடையப்படுகிறான். தன் செயல்களால் கட்டப்பட்ட அவன் மறுபிறப்பை அடைகிறான். அவனது செயல்களின் இயல்பே அவனது வாழ்வின் வகையைத் தீர்மானிக்கிறது.(57) பல்வேறு வகைக் கொடுமைகளை அனுபவிக்கும் அவன், நிற்காமல் சுழலும் சக்கரத்தைப் போலவே மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் வளையத்தில் பயணிக்கிறான். எனினும், நீ உன் கட்டுகள் அனைத்தையும் அறுத்திருக்கிறாய். நீ செயல்கள் அனைத்தையும் தவிர்க்கிறாய்.(58) அனைத்தையும் அறிந்தவனும், அனைத்துப் பொருட்களிலும் திறம்பெற்றவனுமான நீ வெற்றியையடைந்து, இருப்பிலுள்ள பொருட்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவாயாக. புலனடக்கம், தவசக்தி ஆகியவற்றின் மூலம் (பழங்காலத்தில்) பல மனிதர்கள் செயற்கட்டுகளை அறுத்து, உயர்ந்த வெற்றியையும், தடையில்லாத இன்பநிலையையும் அடைந்திருக்கிறார்கள்” என்றார் {நாரதர்}.(59)
விடுதலை உத்தி! – சாந்திபர்வம் பகுதி – 331-உலக இயல்பையும் முக்திக்கான உத்திகளையும் சுகருக்குச் சொன்ன நாரதர்…
நாரதர் {சுகரிடம்}, “அருளப்பட்டவையும், அமைதி குறித்தவையும், துயரை விலக்குபவையும், மகிழ்ச்சியை உண்டாக்குபவையுமான சாத்திரங்களைக் கேட்பதன் மூலம், ஒருவன் தூய புத்தியை அடைந்து, அதன் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(1) கவலைக்கான ஆயிரம் காரணங்களும், அச்சத்திற்கான நூறு காரணங்களும் புத்தியற்றவனையே நாளுக்குநாள் பீடிக்கின்றனவேயன்றி ஞானியையோ, கல்விமானையோ அல்ல.(2) எனவே, உன் துன்பங்களை விலக்கும் நோக்கில் நான் சொல்லப்போகும் சில பழங்கதைகளைக் கேட்பாயாக. ஒருவனால் தன் புத்தியை அடக்க முடியுமென்றால் {புத்தியானது அவனது வசத்திலிருக்குமென்றால்}, அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்.(3) விரும்பத்தகாததை அடைவது மற்றும் ஏற்புடையதில் இருந்து விலகுவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சிறு மதி கொண்ட மனிதர்கள் அனைத்து வகை மனதுக்கங்களையும் அடைகிறார்கள்.(4) காரியங்கள் கடந்து சென்ற பிறகு ஒருவன் அவற்றின் தகுதிகளை நினைத்து வருந்தக்கூடாது. அத்தகைய கடந்த காரியங்களைப் பற்றுடன் நினைப்பவனால் ஒருபோதும் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது.(5)
தான் பற்றுக் கொள்ளத் தொடங்கும் பொருட்களில் ஒருவன் எப்போதும் களங்கங்களைக் காண வேண்டும். அவன் அத்தகைய பொருட்களை மிகத் தீமை நிறைந்தவையாக எப்போதும் கருத வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் விரைவில் அவற்றிலிருந்து விடுதலையடைவான்.(6) கடந்ததை நினைத்து வருந்தும் மனிதன் செல்வத்தையோ, அறத்தகுதியையோ, புகழையோ ஈட்டத் தவறுகிறான். இருப்பில் இல்லாததை ஒருபோதும் அடையமுடியாது. அத்தகைய பொருட்கள் கடந்து சென்றால், (ஒருவன் எவ்வளவுதான் அவற்றுக்காக வருத்தப்பட்டாலும்) மீண்டும் அவை திரும்பாது.(7) உயிரினங்கள் உலகம் சார்ந்த பொருட்களைச் சில வேளைகளில் அடைகின்றன, சில வேளைகளில் இழக்கின்றன. இவ்வுலகில் தனக்கு நேரும் அனைத்து நிகழ்வுகளிலும் எந்த மனிதனும் வருத்தமடைவதில்லை.(8) கடந்து சென்ற ஒன்றின் இறப்பிலோ, இழப்பிலோ ஒருவன் கொள்ளும் துக்கத்திற்காகத் துக்கத்தை மட்டுமே அடைகிறான். ஒரு துன்பத்திற்குப் பதிலாக அவன் இரு துன்பங்களை அடைகிறான்.(9) உலகில் வாழ்வு மற்றும் மரணம் என்ற நடைமுறையைத் தங்கள் புத்தியின் துணையுடன் கண்ணீர் சிந்தாமல் காணும் மனிதர்கள் சரியாகப் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய மனிதர்கள் (என்ன நடந்தாலும்) ஒருபோதும் கண்ணீர் சிந்துவதில்லை.(10)
ஒருவன் தன்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தவிர்க்க முடியாததும், உடல், அல்லது மனத் துன்பத்தை உண்டாக்கவல்லதுமான அத்தகைய பேரிடரேதும் நேரும்போது, ஒருவன் அதைக்குறித்துத் துன்பத்துடன் சிந்திப்பதை நிறுத்த வேண்டும்.(11) துன்பத்திற்கான மருந்து இதுவே, அதைக் குறித்துச் சிந்திப்பதல்ல. அதை நினைப்பதால் ஒருவனால் ஒருபோதும் அதை அகற்ற முடியாது; மறுபுறம், துன்பத்தை நினைப்பதால் அஃது அதிகரிக்கவே செய்கிறது.(12) மனத்துயரங்கள் ஞானத்தால் கொல்லப்பட வேண்டும்; அதே வேளையில் உடல் துயரங்கள் மருந்துகளால் விலக்கப்பட வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இத்தகைய காரியங்களில் ஒருவன் புத்தி குறைந்த மனிதர்களைப் போல நடந்து கொள்ளக்கூடாது.(13) இளமை, அழகு, உயிர், செல்வம், உடல்நலம், அன்புக்குரியோரின் தோழமை ஆகிய இவையாவும் நிலையற்றவையே. ஞானம் கொண்ட ஒருவன் இவற்றில் ஒருபோதும் ஆசை கொள்ளக்கூடாது. மொத்தமாக ஒரு சமூகத்துக்கே தொடர்புடைய துன்பம் நிறைந்த காரியங்களில் ஒருவன் தனியாக அழக்கூடாது. அவ்வாறு ஈடபடாமல், துயரம் வரும்போது அதைத் தவிர்க்கமுனையும் ஒருவன், தீர்வுக்கான வாய்ப்பைக் கண்டவுடன் அதைச் செய்ய வேண்டும்.(15)
இந்த வாழ்வில் மகிழ்ச்சியின் அளவைவிடத் துன்பம் மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை. மனிதர்கள் அனைவரும் புலன் நுகர் பொருட்களில் பற்றை வெளிப்படுத்தி, மரணத்தை ஏற்பில்லாததாகக் கருதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.(16) எந்த மனிதன் இன்பதுன்பங்கள் இரண்டையும் கைவிடுகிறானோ, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் இவ்வுலகில் இருந்து செல்லும்போது, அவனது காரியத்தில் ஞானிகள் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை.(17) செல்வத்தைச் செலவழிப்பதில் துன்பம் இருக்கிறது. அதைப் பாதுகாப்பதிலும் துன்பமிருக்கிறது. எனவே, ஒருவன் தனது செல்வம் அழிவடையும்போது எத்துன்பத்திலும் ஈடுபடக்கூடாது.(18) புத்தி குறைந்த மனிதர்கள் பல்வேறு தரத்திலான செல்வத்தை அடைந்து, நிறைவை வெல்லத் தவறி இறுதியில் துன்பத்தில் அழிவடைகிறார்கள். எனினும் ஞானிகளோ எப்போதும் நிறைவுடன் இருக்கிறார்கள்.(19) சேர்க்கைகள் அனைத்தும் இறுதியில் கலையவே {பிரியவே} போகின்றன. உயர்ந்த பொருட்கள் அனைத்தும் வீழவும், தாழ்வடையவும் விதிக்கப்பட்டிருக்கின்றன. சேர்க்கைகள் நிச்சயம் பிரிவிலேயே முடியப்போகின்றன, வாழ்வும் நிச்சயம் மரணத்திலேயே முடிவடையும்.(20)
தாகம் தணிவடையாது {ஆசைக்கு முடிவில்லை}. மனநிறைவே உயர்ந்த மகிழ்ச்சியாகும். எனவே, ஞானிகள் மனநிறைவையே மிக மதிப்புமிக்கச் செல்வமாகக் கருதுகிறார்கள்.(21) ஒருவனுக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது {கடந்து செல்கிறது}. அஃது ஒருக்கணம் கூடத் தன் பாதையில் நிற்பதில்லை. ஒருவனுடைய உடல் நீடிக்க முடியாதபோது, அவன் (இவ்வுலகத்தில்) வேறு எந்தப் பொருளை நீடிக்கப்போவதாகக் கருத முடியும்?(22) உயிரினங்கள் அனைத்தின் இயல்பையும் சிந்தித்து, அது மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதது எனத் தீர்மானிக்கும் மனிதர்கள், தங்கள் கவனத்தை உயர்ந்த பாதையை நோக்கித் திருப்பி, அதில் நல்ல முன்னேற்றத்தை அடைபவர்கள் துன்பத்தில் ஈடுபடவேண்டியதில்லை[1].(23) தன் இரையை அபகரித்து ஓடும் புலியைப் போலக் காலனானவன், மனிதன் ஆசை மற்றும் அனுபவிப்பதில் தணிவடையாமல் அத்தகைய (லாபமில்லா) தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவனை அபகரித்துச் செல்கிறான்.(24) ஒருவன் எப்போதும் தன்னைக் கவலையில் இருந்து விடுவித்துக் கொள்ள முனைய வேண்டும். உற்சாகச் செயல்பாடுகளைத் தொடங்குவதன் மூலம் ஒருவன் கவலையை விலக்க முனைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட கவலையில் இருந்து விடுபட்டதும், மேலும் கவலையில் ஈடுபடாமல், களங்கமான நடத்தைகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் கவலையைத் தொலைவில் வைக்கும் வழியில் ஒருவன் செயல்பட வேண்டும்[2].(25)ஒலி, தீண்டல், வடிவம், மணம், சுவை ஆகியவற்றை அனுபவிப்பதில் செல்வந்தனும், வறியவனும் ஒரே வகையிலேயே எதையும் காண்பதில்லை[3].(26) சேர்க்கைக்கு முன்பு உயிரினங்கள் ஒருபோதும் துன்பமடைவதில்லை. எனவே, தன் உண்மை இயல்பில் இருந்து வீழாத ஒருவன், அந்தச் சேர்க்கை முடிவடையும்போது ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை[4].(27) ஒருவன் தனது பாலுறவு பசியையும், வயிற்றின் பசியையும் பொறுமையின் துணை மூலம் அடக்க வேண்டும்[5]. அவன் தனது கைகளையும், கால்களையும் கண்ணின் துணையால் பாதுகாக்க வேண்டும். கண்களும், காதுகளும், பிற புலன்களும் அவனது மனத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். மனமும், வாக்கும் ஞானத்தின் துணையால் ஆளப்பட வேண்டும்.(28) அறிந்த மனிதர்களிடமும், அறியாதவர்களிடம் போலவே அன்பு மற்றும் பாசத்தை அவன் கைவிட்டு, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய மனிதனே ஞானி என்று சொல்லப்படுகிறான், அவனே நிச்சயம் மகிழ்ச்சியைக் காண்கிறான்.(29) எந்த மனிதன் தன் ஆன்மாவிலேயே நிறைவடைகிறானோ[6], எவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எதையும் சார்ந்திருக்கவில்லையோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எந்தத் துணையுமில்லாமல் நடந்து கொள்கிறானோ அவனே இன்பநிலையை அடைவதில் வெல்கிறான் {சுகம் அடைகிறான்}” என்றார் {நாரதர்}.(30)
கயிலாயம் சென்ற சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 332-சுகருக்கு உலக இயல்புகளையும், மோக்ஷதர்மத்தையும் தொடர்ந்து கற்பித்தது; மோக்ஷமடைய விரும்பிய சுகர்; வியாசரிடம் விடைபெற்றுக் கொண்டு கயிலாயம் சென்ற சுகர்…
நாரதர் {சுகரிடம்}, “இன்பதுன்பங்களின் மாற்றங்கள் தோன்றும்போது, அல்லது மறையும்போது, அந்த நிலைமாற்றங்கள் ஞானத்தின் மூலமோ, கொள்கைகள் அல்லது முயற்சியின் மூலமோ தவிர்க்கமுடியாதவையாக இருக்கின்றன.(1) ஒருவன் தன் உண்மை இயல்பில் இருந்து வீழ்ந்துவிட அனுமதியாமல், அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தன்னால் இயன்ற சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும். அத்தகைய கவனம் மற்றும் முயற்சியைக் கொள்ளும் ஒருவன் ஒருபோதும் சோர்வடைய வேண்டியதில்லை. தன்னை {சுயத்தை} அன்புக்குரிய ஏதோ ஒன்றைப் போலக் கருதும் அவன், முதுமை, மரணம் மற்றும் நோயில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(2) மன மற்றும் உடல் நோய்கள், பலமிக்க வில்லாளியின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூர்முனைக் கணைகளைப் போல உடலைப் பீடிக்கும்.(3) தாகத்தால் கொடுமைக்குள்ளாவதும், வேதனையால் கலக்கமடைவதும், முற்றிலும் ஆதரவற்றதும், நீண்ட வாழ்நாளை விரும்புவதுமான ஒரு மனிதனின் உடல் அழிவை நோக்கியே இழுக்கப்படுகிறது.(4)
பகல்களும், இரவுகளும், தங்கள் ஓட்டத்தில் மனிதர்கள் அனைவரின் வாழ்நாள் காலங்களைச் சுமந்தபடியே இடையறாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆறுகளின் ஓட்டத்தைப் போல அவை திரும்பிப் பாறாமல் இடையறாமல் பாய்ந்து கொண்டிருக்கின்றன.(5) வளர் பிறை நாட்களும், தேய்பிறை நாட்களும் இப்பணியில் ஒரு கணமும் நிற்காமல் மனித உயிரினங்களைத் தொடர்ந்து இடையறாமல் வீணடித்து வருகின்றன.(6) நாளுக்கு நாள் எழுவதும், மறைவதுமாக இருப்பவனும், சிதைவற்றவனுமான சூரியன், மனிதர்களின் இன்ப துன்பங்களைத் தொடர்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறான்.(7) விதியைச் சார்ந்திருப்பவையும், மனிதனால் எதிர்பார்க்கப்படாதவையுமான அவனது நல்ல மற்றும் தீய நிகழ்வுகளை இரவுகள் தங்களுடன் எடுத்துக் கொண்டு இடையறாமல் சென்று கொண்டிருக்கின்றன.(8)
மனிதச் செயல்களின் கனிகள், பிற சூழ்நிலைகளைச் சாராமல் இருந்தால், அவன் தான் விரும்பிய எந்தப் பொருளையும் அடைவான்.(9) புலன்களை அடக்கியவர்களும், புத்திசாலிகளும், நுண்ணறிவு கொண்டவர்களுமான மனிதர்களும் கூட, செயல்களற்றவர்களாக இருந்தால், எந்தக் கனிகளையும் ஈட்டுவதில் அவர்கள் ஒருபோதும் வெல்வதில்லை[1].(10) புத்தியற்றவர்களாகவும், எந்தவகைச் சாதனைகளும் இல்லாதவர்களும், மனிதர்களில் இழிந்தவர்களுமான மற்றவர்கள், வெற்றியை எதிர்பார்க்காதிருந்தாலும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றனர்.(11) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்ய எப்போதும் ஆயத்தமாக இருப்பவனும், உலகமனைத்தையும் வஞ்சிப்பதில் ஈடுபடுபவனுமான வேறொருவன் மகிழ்ச்சியில் புரள்வதும் காணப்படுகிறது.(12)சோம்பலாக அமர்ந்திருக்கும் வேறொருவன் பெருஞ்செழிப்பை அடைகிறான்; அதேவேளையில், மெய்யுறுதியுடன் முயற்சி செய்பவன் கிட்டத்தட்ட அடையும் தருவாயில் இருக்கும் விரும்பத்தகுந்த கனிகளைத் தவறவிடுவதும் காணப்படுகிறது.(13) நீ இதை மனிதனின் களங்கங்களில் ஒன்றாக ஏற்பாயாக. ஒருவரைப் பார்ப்பதன் மூலம் ஒருவனின் இயல்பில் உண்டாகும் உயிர் வித்தானது, மற்றொருவருக்குச் செல்கிறது.(14) அது கருவறைக்குச் செல்லும்போது, சில வேளைகளில் கருவை உண்டாக்கிறது, சில வேளைகளில் தவறுகிறது. பாலுறவு கலவி பொய்க்கும்போது, ஒரு கனியையும் உண்டாக்காமல் பெரும் மலர்கள் பலவற்றை மலரச் செய்யும் ஒரு மாமரத்திற்கு அஃது ஒப்பாகிறது[2].(15) வாரிசைப் பெற விரும்பும் சில மனிதர்களைப் பொறுத்தவரையில், தங்கள் நோக்கம் கனிவதற்காக (பல்வேறு தேவர்களை வழிபடுவதன் மூலம்) இதயப்பூர்வமாக முயன்றும் கருவறையில் கருவை உண்டாக்க அவர்கள் தவறுகிறார்கள்.(16)கடும் நஞ்சுமிக்கப் பாம்பைக் கண்டு அஞ்சும் ஒருவனைப் போலக் கரு உண்டாவதை அஞ்சும் வேறொருவன், நீண்ட வாழ்வைக் கொண்டவனும், தான் கடந்த வாழ்நிலைகளில் இருந்து தானே திரும்பி வந்ததைப் போலத் தெரிபவனுமான மகன் தனக்குப் பிறப்பதை அவன் காண்கிறான்.(17) வாரிசுக்கான ஆவலும், ஏக்கமும் கொண்டவர்களும், அக்காரியத்தினால் உற்சாகமற்றிருப்பவர்களுமான பல மனிதர்கள், பல தேவர்களுக்கு வேள்வி செய்து, கடும் தவங்களை மேற்கொண்டு இறுதியாகத் தங்கள் குலத்திலேயே இழிந்தவர்களாகத் தங்களை நிரூபித்துக் கொள்ளும் பிள்ளைகளைப் பத்து நீண்ட மாதங்கள் முறையாகச் சுமந்து பெறுகின்றனர்.(18) அத்தகைய சடங்குகள் மற்றும் நியமங்களுடைய அறத்தின் மூலம் பெறப்பட்ட வேறு சிலர், தங்கள் தந்தைமாரால் ஈட்டப்பட்டு, சேமிக்கப்பட்ட செல்வத்தையும், தானியங்களையும், அனுபவிக்கத்தகுந்த பல்வேறு ஆதாரங்களையும் உடனே அடைகின்றனர். பாலுறவு செயலில் எதிர் பாலினங்களைச் சேர்ந்த இருவர் ஒருவரோடொருவர் கலவி புரியும்போது, தாயைப் பீடிக்கும் பேரிடரைப் போலக் கருவறையில் கரு உண்டாகிறது.(20)
உயிர் மூச்சுகள் நின்ற உடனேயே, திரள் உடல் அழிவடைந்தாலும், சதை மற்றும் கபத்தால் உண்டான அந்தத் திரள் உடலால் செய்யப்பட்ட செயல்கள் அழிவடையாமல் உடல்படைத்த உயிரினம் கொண்டிருக்கும் பிற உடல் வடிவங்களைப் பீடிக்கிறது[3].(21) உடல் அழிந்த பிறகு, அழிவடைந்த அந்த உடலைப் போன்றே அழிவடையக்கூடிய மற்றொரு உடல், பயணிகளை ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாற்ற மற்றொன்றிற்குச் செல்லும் படகைப் போலவே, எரிக்கப்பட்டதும் அழிவையடைந்ததுமான அந்த உயிரினத்திற்காக (அதனிடம் செல்ல) ஆயத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.(22) கலவிச் செயலின் விளைவால், அசைவற்றதான ஒரு துளி உயிர்வித்தானது, கருவறையில் விடப்படுகிறது. யாருடைய, அல்லது எதன் கவனிப்பால் அந்தக் கரு உயிருடன் வைக்கப்படுகிது என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்.(23) உண்ணும் உணவு உடலின் எந்தப் பகுதிக்குள் செல்கிறதோ, எங்கே அது செரிக்கப்படுகிறதோ, அந்த இடத்திலேயே இந்தக் கரு வசித்தாலும் அங்கே அது செரிக்கப்படாமல் இருக்கிறது.(24)கருவறையில், சிறுநீருக்கும் மலத்திற்கும் மத்தியில் ஒருவனுடைய பயணம் இயற்கையால் ஒழுங்குமுறை செய்யப்பட்டுள்ளது. அங்கே வசிக்கும் காரியத்தில், அல்லது அங்கிருந்து தப்பிக்கும் காரியத்தில் பிறக்கப் போகும் உயிரினம் சுதந்திரம் கொண்டதல்ல. உண்மையில், அது முற்றிலும் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறது.(25) சில கருக்கள் (வளர்ச்சிநிலை அடையாமலேயே) கருவறையில் இருந்து விழுகின்றன. சில உயிரோடு வெளியே வருகின்றன (தொடர்ந்து வாழ்கின்றன). அதே வேளையில் சில, (தங்கள் செயல்களின் இயல்பின் மூலம்) தங்களுக்காக வேறு உடல்கள் ஆயத்தமாக இருப்பதன் விளைவால் வாழ்வை இழந்து அழிவைச் சந்திக்கின்றன.(26) எந்த மனிதன் பாலுறவுக் கலவிச் செயலில் உயிர்நீரை உட்செலுத்துகிறானோ, அவன் ஒரு மகனையோ, மகளையோ அடைகிறான். அவ்வாறு அடையப்படும் வாரிசு, காலம் நேரும்போது, அதே போன்ற கலவியில் ஈடுபடுகிறது.(27) ஒரு மனிதனின் வாழ்வுக்கு ஒதுக்கப்பட்ட காலம் நெருங்கும்போது, அவனது உடலில் உள்ள ஐம்பூதங்களும், ஏழாவது மற்றும் ஒன்பதாவது நிலைகளை அடைந்து, பிறகு இல்லாமல் போகிறது. எனினும், மனிதன் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை[4].(28)வேடர்களால் தாக்கப்படும் சிறு விலங்குகளைப் போல நோய்களால் மனிதர்கள் பீடிக்கப்படும்போது, அவர்கள் எழுவதற்கும், அசைவதற்குமான தங்கள் சக்த்தியை அப்போது இழக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(29) நோய்களின் மூலம் மனிதர்கள் பீடிக்கப்பட்டால், மருத்துவர்கள் சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தங்கள் துன்பத்தைத் தணிக்க முடியவில்லையெனினும் அவர்கள் தங்கள் திரண்ட செல்வத்தைச் செலவழிக்கவே விரும்புகிறார்கள்.(30) நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் சாத்திரங்களை நன்கு கற்றவர்களும், சிறந்த மருந்துகளால் நன்கு ஆயத்தமடைந்தவர்களுமான மருத்துவர்களேகூட, வேடர்களால் தாக்கப்படும் விலங்குகளைப் போல நோய்களால் பீடிக்கப்படுகின்றனர்.(31) வலுவூட்டும் பானங்களையும், பல்வேறு வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட நெய்யையும் பருகும் மனிதர்களும் கூடப் பலமான யானைகளால் ஒடிந்த மரங்களைப் போல முதுமையால் உடைந்து போவது காணப்படுகிறது.(32)
விலங்குகள், பறவைகள், இரைதேடும் விலங்குகள் ஆகியவையும், வறியவர்கள் ஆகியோரும் பிணியால் பீடிக்கப்படும்போது, மருந்துகளால் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பவன் எவன்? உண்மையில் அவர்கள் நோய்வாய்ப்படுவது காணப்படுவதில்லை.(33) சிறு விலங்குகளைத் தாக்கும் பெரும் விலங்குகளைப் போலவே பிணிகளும் கடுஞ்சக்தி கொண்டவர்களும், வெல்லப்பட முடியாத ஆற்றலைகள் கொண்டவர்களையும் பீடிப்பது காணப்படுகிறது.(34) சக்தியிழந்த மனிதர்கள் அனைவரும் துன்பத்தைக் குறிக்கும் ஓலமிட்டு, பிழையிலும், துன்பத்திலும் மூழ்கி, வீசப்பட்ட கடும் ஓடையிலேயே சுமந்து செல்லப்படுவதும் காணப்படுகிறது.(35) உடல் கொண்ட உயிரினங்கள், இயற்கையை வெல்ல முனையும்போது, செல்வம், அரசு சக்தி அல்லது கடுந்தவங்களின் துணையுடன் அதை வெல்ல இயலாமல் போகிறது.(36)
மனிதர்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டால், அப்போது மனிதர்கள் ஒருபோதும் சாக மாட்டாரகள், ஒருபோதும் முதுமைக்கு ஆட்பட மாட்டார்கள், ஒருபோதும் ஏற்புடைய எதையும் அடைய மாட்டார்கள், இறுதியாகத் தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிந்து மகுடம் சூட்டப்படுவார்கள்.(37) மனிதர்கள் அனைவரும் தங்கள் நிலையில் படிப்படியாக மேன்மையடையவே விரும்புகிறார்கள். இந்த விருப்பத்தை நிறைவு செய்யவே அவர்கள் தங்கள் சிறந்த சக்தியால் முயற்சிக்கிறார்கள். எனினும் விளைவானது அவர்களது விருப்பத்திற்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.(38) முற்றிலும் விழிப்புணர்வுடன் இருப்பவர்களும், நேர்மையானவர்களும், துணிவுமிக்கவர்களும், ஆற்றல்மிக்கவர்களுமான மனிதர்களும் கூட, செழிப்பின் செருக்கிலும், மதுவிலும் போதையுண்ட மனிதர்களைத் துதிப்பது காணப்படுகிறது.(39) இடர்களைக் கவனிக்குமுன்பே அவை காணாமல் போகும் சில மனிதர்களும் காணப்படுகிறார்கள். எந்தச் செல்வமும் இல்லாதிருந்தாலும் அனைத்து வகைத் துயரங்களில் இருந்து விடுபட்ட வேறு சிலரும் காணப்படுகிறார்கள்.(40)
செயல்களின் ஒன்றுதலில் உள்ள கனிகளைப் பொறுத்தவரையில் பேரமைதியே காணப்படுகிறது. சிலர் வாகனங்களைத் தங்கள் தோள்களில் சுமப்பதும், சிலர் அந்த வாகனங்களைச் செலுத்துவதும் காணப்படுகிறது.(41) மனிதர்கள் அனைவரும் செழிப்பையும், செல்வாக்கையும் விரும்புகிறார்கள். சிலர் மட்டுமே தேர்களை (யானைகளையும், குதிரைகளையும்) தங்கள் உடைமைகளாகக் கொண்டிருக்கிறார்கள். முதல் மனைவி இறந்து, வேறு மனைவியை அடையத் தவறுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்; அதே வேளையில் நூற்றுக்கணக்கான மனைவிகளைக் கொண்ட பிறரும் இருக்கிறார்கள்.(42) துன்பமும் இன்பமும் அருகருகே நீடிக்கும் இரு பொருட்களாகும். மனிதர்கள் இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள். இந்த ஆச்சரியத்தைப் பார். எனினும், அத்தகைய காட்சியின் பிழையால் நீ மயக்கமடையாதே.(43) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கைவிடுவாயாக. வாய்மையையும், பொய்மையையும் கைவிடுவாயாக. வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிட்ட பிறகு, எதனுடைய துணையின் மூலம் அவற்றைக் கைவிட்டாயோ, அதனையும் கைவிடுவாயாக.(44) ஓ! முனிவர்களில் சிறந்தவனே, எது பெருந்துன்பம் என்பதை நான் இப்போது உனக்குச் சொன்னேன். (மனிதர்களாக இருந்த) தேவர்கள் அனைவரும் சொர்க்கவாசிகளாவதற்காக, இத்தகைய அறிவுரைகளின் துணையுடன், இந்தப் பூமியை விட்டுச் செல்வதில் வெல்கிறார்கள்” என்றார் {நாரதர்}.(45)
பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், அமைதியான மனத்தைக் கொண்டவருமான சுகர், நாரதரின் வார்த்தைகளைக் கேட்டு, தாம் பெற்ற அறிவுரைகளின் வேறுபாட்டைக் குறித்துச் சிந்தித்தாலும், முடிவான எந்தத் தீர்மானத்தையும் அவரால் எட்ட முடியவில்லை.(46) பிள்ளைகள் மற்றும் மனைவிகளைப் பெறுவதால் பெருந்துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதையும்; அறிவியலையும், வேதங்களையும் அடைவதற்காக ஒருவன் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவர் தமக்குள்ளேயே, “நித்தியமானதும், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் விடுபட்டுமாக இருந்தாலும், பெருஞ்செழிப்பைக் கொண்டதுமான நிலை எது?” என்று கேட்டுக் கொண்டார்.(47) கடமைகள் அனைத்தின் தொடக்கத்தையும், முடிவையும் நன்கறிந்தவரான சுகர், தாம் செல்வதற்காக விதிக்கப்பட்ட நடைமுறையைக் குறித்து ஒருக்கணம் சிந்தித்து, பெரும் இன்பநிலை நிறைந்த உயர்ந்த கதியை அடையத் தீர்மானித்தார்.(48)
அவர் {சுகர்} தமக்குள்ளேயே, “பற்றுகள் அனைத்தையும் களைந்து, முற்றிலும் விடுப்பட்டவனாகி எவ்வாறு நான் சிறந்த கதியை அடையப் போகிறேன்? உண்மையில், பல்வேறு வகைப் பிறவிகளைக் கொண்ட இந்தப் பெருங்கடலுக்குத் திரும்பாமல் இருக்கக்கூடிய சிறந்த நிலையை நான் எவ்வாறு அடையப் போகிறேன்?(49) எங்கிருந்து திரும்பிவர வேண்டாமோ அந்த இருப்புநிலையை அடையவே நான் விரும்புகிறேன். அனைத்து வகைப் பற்றுகளையும் கைவிட்டு, மனத்தின் துணையால் சிந்தித்து ஒரு நிச்சயத் தன்மையை அடைந்து நான் அந்தக் கதியை அடையப் போகிறேன்.(50) ஆன்மா அமைதியாக இருக்கக்கூடியதும், முதுமைக்கோ, மாற்றத்திற்கோ ஆட்படாமல், நித்தியமாக வசிக்ககூடியதுமான அந்த நிலையை நான் அடையப் போகிறேன்.(51) எனினும், யோகத்தின் துணையில்லாமல் அந்த உயர்ந்த கதியை நிச்சயம் அடைய முடியாது. முற்றான ஞான நிலை மற்றும் தெளிவு நிலையை அடைந்த ஒருவன் ஒருபோதும் செயல்களின் மூலம் இழிந்த பற்றுகளை அடைய முயல மாட்டான்.(52)
எனவே, நான் யோகம் பயின்று, என் தற்போதைய இருப்பிடமான இவ்வுடலைக் கைவிட்டு, காற்றாக மாறி, சூரியனால் பிரதிபலிக்கப்படும் பிரகாசத் திரளுக்குள் நுழையப் போகிறேன்.(53) ஜீவன் அந்தப் பிரகாசத் திரளுக்குள் நுழையும்போது, தேவர்களுடன் கூடிய சோமனைப் போல அவன் தகுதி {புண்ணியம்} தீர்ந்தவனாக, பூமியில் வீழ்ந்து, மீண்டும் போதிய தகுதியை அடைந்து மீண்டும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.(54) சந்திரன் தேய்ந்து மீண்டும் வளர்வது காணப்படுகிறது. மீண்டும் மீண்டும் நேரும் இந்தத் தேய்தல் மற்றும் வளர்தலைக் காணும் நான் இத்தகைய மாறுபாடுகளைக் கொண்ட இருப்பின் வடிவத்தைக் கொள்ள விரும்பவில்லை.(55) சூரியன் தனது கடுங்கதிர்களால் உலகங்கள் அனைத்திற்கும் வெப்பமூட்டுகிறான். அவனது வட்டில் எந்தவொரு ஒளி குறைவையும் அடைவதில்லை. மாறாமல் நீடிக்கும் அவன், அனைத்துப் பொருட்களின் இருந்தும் சக்தியை உறிஞ்சுகிறான். எனவே நான் சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட சூரியனுக்குச் செல்ல விரும்புகிறேன்[5].(56)அனைவராலும் வெல்லப்படமுடியாதவனாக, என் உள் ஆன்மாவில் உள்ள அச்சமனைத்தில் இருந்தும் விடுபட்டவனாக, இந்த என் உடலைக் கைவிட்டவனாக நான் அங்கே சூரியலோகத்தில் வாழப் போகிறேன்.(57) பொறுத்துக் கொள்ளமுடியாத சக்தியைக் கொண்ட சூரியனுக்குள் நான் பெரும் முனிவர்களுடன் சேர்ந்து நுழையப் போகிறேன். அனைத்து உயிரினங்கள், இந்த மரங்கள், இந்த யானைகள், இந்த மலைகள், பூமி, திசைகளின் பல்வேறு புள்ளிகள், ஆகாயம்,(58) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரிடம் உண்மையில் நான் உலகின் உயிரினங்கள் அனைத்திற்குள்ளும் நுழையப் போகிறேன் என்பதை அறிவிக்கப் போகிறேன்[6].(59) முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் இன்று என் யோக ஆற்றலைக் காணட்டும்” என்று {தமக்குள்ளேயே} சொல்லிக் கொண்டார் {சுகர்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன சுகர், தன் நோக்கத்தை உலகப் புகழ்பெற்ற நாரதரிடம் தெரிவித்தார்.(60)சுகர், நாரதரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தமது தந்தை {வியாசர்} இருந்த இடத்திற்குச் சென்றார். பெருமுனிவரும், உயர் ஆன்மா கொண்டவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} கிருஷ்ணரின் {வியாசரின்} முன்னிலையை அடைந்த அவர், வழக்கமான விசாரிப்புகளைச் செய்தார்.(61) சுகரின் நோக்கத்தைக் கேட்ட அந்த உயர் ஆன்ம முனிவர் {வியாசர்} பெரிதும் நிறைவடைந்தார். அவரிடம் பேசிய அந்தப் பெரும் முனிவர், “ஓ! மகனே, ஓ! அன்புக்குரிய மகனே, என் கண்கள் நிறைவடையும் வண்ணம் நான் சிறிது காலம் உன்னைப் பார்க்கும் வகையில் இன்று இங்கேயே தங்குவாயாக” என்றார்”.(62) எனினும் பற்றில் இருந்தும், ஐயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட சுகர், விடுதலையை மட்டுமே சிந்திக்கத் தொடங்கிப் பயணத்தில் தம் இதயத்தை நிலை நிறுத்தினார்.(63) தமது தந்தையை விட்டுச் சென்ற அந்த முதன்மையான முனிவர் {சுகர்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசிகளின் கூட்டம் வசிக்கும் பரந்த கயிலாயச் சாரலுக்குச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(64)
முக்தியின் பாதையில் சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 333-யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட சுகர்; முக்தியின் வழியைக் அவர் கண்டடைந்தது; தாம் கண்ட பாதையை நாரதருக்குச் சொன்னது; மீண்டும் யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டது; தமது தந்தை அழைத்தால் மறுமொழி கூறுமாறு தேவதேவிகளுக்கு ஆணையிட்டது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, {கயிலாய} மலையின் சிகரத்தில் ஏறிய வியாசரின் மகன் {சுகர்}, பிற உயிரினங்களின் நடமாட்டம் இல்லாத புற்களற்ற சமதரையில் அமர்ந்தார்.(1) யோகத்தினுடைய அடுத்தடுத்த படிநிலைகளின் வரிசையை அறிந்தவரான அந்தத் தவசி {சுகர்}, சாத்திரங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்புடைய வகையிலும், விதிக்கப்பட்ட விதிகளின்படியும், முதலில் தம் ஆன்மாவை ஓர் இடத்திலும், பிறகு மற்றுமோர் இடத்திலுமென {படிப்படியாக} நிலை நிறுத்தி, பாதம் தொடங்கி அங்கங்கள் அனைத்தையும் கடந்து சென்றார்.(2) பிறகு சுகர், சூரியன் உதித்து வெகு நேரமாகாத போது, தமது முகத்தைக் கிழக்குப்புறம் நோக்கித் திருப்பி, கைகால்களை மடக்கிப் பணிவான மனோநிலையில் அமர்ந்தார்.(3)
நுண்ணறிவைக் கொண்டவரான அந்த வியாசரின் மகன், யோகத்தில் {தமக்குள்} தம்மையே காண ஆயத்தமாக இருந்த அந்த இடத்தில் எந்தப் பறவைக்கூட்டமுமில்லை, எந்த ஒலியும் இல்லை, வெறுத்தொதுக்கும், அல்லது அச்சத்தைத் தூண்டும் எந்தக் காட்சியும் தென்படவில்லை.(4) பிறகு அவர் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட தமது ஆன்மாவைக் கண்டார். அனைத்துப் பொருட்களிலும் உயர்ந்ததைக் கண்டு அவர் இன்பமாகச் சிரித்தார்.(5) பிறகு அவர் விடுதலையின் பாதையை {மோக்ஷ மார்க்கத்தை} அடைவதற்காக மீண்டும் தம்மை யோகத்தில் நிறுவிக் கொண்டார். யோகத்தின் பேராசானாக ஆன அவர், வெளியெனும் பூதத்தைக் கடந்தார்.(6) அதன்பிறகு, தெய்வீக முனிவரான நாரதரை வலம் வந்து, உயர்ந்த யோகத்தைத் தாமே அடைந்த உண்மையை முனிவர்களில் முதன்மையான அவரிடம் {நாரதரிடம்} சொன்னார்.(7)
சுகர் {நாரதரிடம்}, “நான் (விடுதலையின் {முக்தியின்}) பாதையைக் காண்பதில் வென்றேன். நானே அதைக் கண்டுகொண்டேன். ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, மிகவும் விரும்பத்தக்க கதியை உமது அருளால் நான் அடையப் போகிறேன்” என்றார்”.(8)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீவில் பிறந்த வியாசரின் மகனான சுகர், தெய்வீக முனிவரான நாரதரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வணங்கி, மீண்டும் தம்மை யோகத்தில் நிலைநிறுத்தி வெளியெனும் பூதத்திற்குள் நுழைந்தார்.(9) அவர், கயிலாய மலைச் சாரலில் இருந்து உயர்ந்து வானத்திற்குள் எழுந்தார். ஆகாயத்தினூடாகப் பயணிக்கவல்லவரும், நிலைத்த தீர்மானத்தால் அருளப்பட்டவருமான சுகர், அப்போது தம்மைக் காற்றெனும் பூதமாகக் கண்டார்.(10) கருடனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர் {சுகர்}, மனோ வேகத்தில், அல்லது எண்ணத்தின் வேகத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அனைத்து உயிரினங்களும் தங்கள் கண்களை அவர் மேல் செலுத்தின.(11) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட சுகர், மூவுலகங்கள் முழுமையையும் ஒரே தன்மையைக் கொண்ட பிரம்மமாகக் கருதி, நெடுநீளம் கொண்ட அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தார்.(12)
அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், குவிந்த கவனத்தோடும், அமைதியான, அச்சமற்ற ஆன்மாவோடும் சென்று கொண்டிருந்த அவர் மீது தங்கள் கண்களைச் செலுத்தின.(13) அனைத்து உயிரினங்களும், விதிக்கு ஏற்புடைய வகையிலும், தங்கள் சக்திக்குத் தகுந்த வகையிலும் அவரை மதிப்புடன் வழிபட்டன.(14) அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வ குலங்கள் அனைத்தும் அவரைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்களும் கூட அதற்கிணையான வியப்பையே அடைந்தனர்.(15)
அவர்கள் {முனிவர்கள்}, “தவங்களால் வெற்றியை அடைந்த இவன் யார்? தன் உடலில் இருந்து {பார்வை} விலகியவனும், மேல் நோக்கிய பார்வையுடன் கூடியவனுமான இவன், நம் அனைவரையும் தன் பார்வையின் மூலம் இன்பத்தால் நிறையச் செய்கிறான்” என்றனர்.(16)
உயர்ந்த அற ஆன்மாவைக் கொண்டவரும், மூவுலகங்களிலும் முழுமையாகக் கொண்டாடப்படுபவருமான சுகர், தம் முகத்தைக் கிழக்கு நோக்கித் திருப்பிக் கொண்டு, சூரியனை நோக்கிச்செலுத்தப்பட்ட பார்வையுடன் அமைதியாக {மௌனமாகச்} சென்று கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சென்ற போது, அவர் அனைத்திலும் பரவும் ஒலியால் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர் அவ்வழியில் வருவதைக் கண்டு பிரமிப்படைந்த அப்ஸரஸ் குலங்கள் அனைத்தும் வியப்பால் நிறைந்தன.(18) அவர்கள் ஒருவருக்கொருவர், “இவர் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவராகவும், ஆசைகள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்தவராகவும் இங்கே வருகிறார் என்பதில் ஐயமில்லை. இத்தகைய உயர்ந்த கதியை அடைந்திருக்கும் இந்தத் தேவன் யார்?” என்று கேட்டனர்.(19)
பிறகு அவர் {சுகர்} ஊர்வசியும், பூர்வசித்தியும் எப்போதும் வசிக்கும் மலய மலைகளுக்குச் சென்றார்.(20) அவர்கள் இருவரும், அந்தப் பெரும் மறுபிறப்பாள முனிவரின் சக்தியைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் {ஊர்வசி}, “வேதங்களை ஓதுவதையும், அவற்றைக் கற்பதையும் வழக்கமாகக் கொண்ட ஒரு மறுபிறப்பாள இளைஞனின் இந்தக் குவிந்த கவனம் ஆச்சரியம் நிறைந்ததாகும். விரைவில் இவன் நிலவைப் போல ஆகாயம் முழுவதும் செல்லப் போகிறான். இவன் தன் தந்தையிடம் கொண்ட கடமைநிறைந்த தொண்டுணர்வு மற்றும் பணிவிடையினால் இந்தச் சிறந்த புத்தியை அடைந்திருக்கிறான்.(21,22) இவன் கடுந்தவங்களைச் செய்த தன் தந்தையிடம் உறுதியான பற்றுடன் இருக்கிறான், மேலும் இவனது தந்தையால் மிகவும் விரும்பப்படுபவனாகவும் இருக்கிறான். ஐயோ, கவனமில்லாத இவனது தந்தையால், திரும்பிவராத பாதையில் ஏன் இவன் அனுப்பப்பட்டான்?” என்றனர் {என்றாள்}.(23)
ஊர்வசியின் இந்த வார்த்தைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் கவனித்து, தம் கண்களை அனைத்துப் பக்கங்களிலும் செலுத்தி,(24) மீண்டும் ஆகாயம் முழுமையையும், மலைகள், நீர்நிலைகள், காடுகள், தடாகங்கள் மற்றும் ஆறுகள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகத்தையும் கண்டார்.(25) தேவர்கள் மற்றும் தேவிகள் அனைவரும், தீவில் பிறந்த முனிவரின் மகனை {வியாசரின் மகனை} மதிக்கும் வகையில் தங்கள் கரங்களைக் குவித்து, ஆச்சரியத்துடனும், மதிப்புடனும் அவனைக் கண்டனர்.(26) அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான சுகர் அவர்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “என் தந்தை {வியாசர்} என்னைப் பின்தொடர்ந்து வந்து, மீண்டும் மீண்டும் என் பெயரைச் சொல்லி அழைத்தால்,(27) நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்காக அவருக்குப் பதிலளியுங்கள். என்னிடம் அன்பு கொண்ட நீங்கள் அனைவரும் இந்த என் வேண்டுகோளை நிறைவேற்றுவீராக” என்றார் {சுகர்}.(28)
சுகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திசைப்புள்ளிகள் அனைத்தும், காடுகள் அனைத்தும், கடல்கள் அனைத்தும், ஆறுகள் அனைத்தும், மலைகள் அனைத்தும், ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் அவருக்குப் பதிலளித்தன,(29) “ஓ! மறுபிறப்பாளரே, நாங்கள் உமது ஆணையை ஏற்கிறோம். நீர் சொன்னது போலவே ஆகட்டும். அந்த முனிவரால் {வியாசரால்} சொல்லப்படும் வார்த்தைகளுக்கு நாங்கள் இவ்வழியிலேயே பதிலளிக்கப் போகிறோம்” {என்றன}” என்றார் {பீஷ்மர்}.(30)
மோக்ஷமடைந்த சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 334-முக்திக்கான பாதையில் சுகர் கண்ட காட்சிகள்; சுகர் முக்தியடைந்தது; சுகரைப் பின்தொடர்ந்து சென்ற வியாசர், சுகருக்காக வருந்தி அழுதது; வியாசருக்கு வரமளித்த சிவன்; சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வைக் கேட்பதால் கிட்டும் பரமகதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கடும் தவங்களைக் கொண்ட மறுபிறப்பாள முனிவரான சுகர், இவ்வாறு தம் வழியில் (அனைத்துப் பொருட்களிடமும்) பேசி, நான்கு வகைக் களங்கங்களை {தோஷங்களைக்}[1] கைவிட்டு, வெற்றியில் {யோக ஸித்தியில்} நிலைத்திருந்தார்.(1) எட்டுவகைத் தமஸ்களைக் கைவிட்டு, ஐந்து வகை ரஜஸ்களையும் விட்டுவிட்டார்[2]. பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர், பிறகு சத்வ குணத்தையும் கைவிட்டார். இவை யாவும் மிக ஆச்சரியமானவைகளாகத் தோன்றின.(2) பிறகு அவர் குணங்களற்றதும், ஒவ்வொரு குறியீட்டிலிருந்தும் விடுபட்டதுமான பிரம்மம் என்ற அந்த நித்திய நிலையிலேயே வசித்து, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(3)விண்கற்கள் விழத் தொடங்கின[3]. திசைப்புள்ளிகள் அனைத்தும் எரிவதாகத் தெரிந்தன. பூமி நடுங்கினாள். இந்தத் தோற்றப்பாடுகள் அனைத்தும் மிக ஆச்சரியமானவைகளாகத் தெரிந்தன.(4) மரங்கள் தங்கள் கிளைகளையும், மலைகள் தங்கள் சிகரங்களையும் உதிர்க்கத் தொடங்கின. (இடியின்) உரத்த ஒலியானது இமய மலைகளையே பிளப்பது போலக் கேட்டது.(5) சூரியன் அந்தக் கணத்தில் ஒளியற்றவனாகக் காணப்பட்டான். நெருப்பு ஒளியை வெளியிட மறுத்தது. தடாகங்கள், ஆறுகள் மற்றும் கடல்கள் அனைத்தும் கலக்கமடைந்தன.(6) வாசவன் {இந்திரன்}, சிறந்த சுவையும், மணமும் கொண்ட மழையைப் பொழிந்தான். தூய தென்றல், சிறந்த நறுமணங்களைச் சுமந்தபடி வீசத் தொடங்கியது.(7)ஆகாயத்தினூடாகச் சுகர் சென்று கொண்டிருந்தபோது, இமயத்திற்குரிய ஒன்றும், மேருவுக்குரிய ஒன்றுமென அழகிய இரண்டு சிகரங்களைக் கண்டார். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடன் நெருங்கி இருந்தன. அதிலொன்று தங்கத்தாலானதால் மஞ்சள் நிறத்திலும், மற்றொன்று வெள்ளியாலானதால் வெள்ளை நிறத்திலும் இருந்தன.(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் உயரமும், அதே அளவு அகலமும் கொண்டவையாக இருந்தன. உண்மையில் சுகர் வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த அழகிய சிகரங்கள் இரண்டையும் கண்டார்.(9) அவர், அச்சமற்ற இதயத்துடன் ஒன்றோடொன்று கலந்திருந்த அந்த இரு சிகரங்களையும் மோதிச் சென்றார். அந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இரு சிகரங்களும் திடீரென இரண்டாகப் பிளந்தன.(10) ஓ! ஏகாதிபதி, அந்தக் காட்சியைக் காண மிக அற்புதமாக இருந்தது. அந்தச் சிகரங்கள், சுகர் செல்வதைத் தடுக்க இயலாதவையாக இருந்ததால் அவர் அவற்றைத் துளைத்துச் சென்றார். இதனால் சொர்க்கத்தில் வசித்தவர்களிடமிருந்து பேரொலி எழுந்தது.(11,12)
அந்த மலையில் வசித்து வந்த கந்தர்வர்கள் மற்றும் பிறர் அந்த மலை பிளக்கப்பட்டதையும், சுகர் அதைக் கடந்து சென்றதையும் ஆரவாரத்துடன் கண்டனர். உண்மையில், ஓ! பாரதா, அந்தக் கணத்தில் “நன்று, நன்று” என்ற வார்த்தைகள் எங்கும் கேட்டன.(13) கந்தர்வர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்கள் கூட்டத்தினாலும், வித்யாதரர் குலங்கள் அனைத்தினாலும் அவர் துதிக்கப்பட்டார்.(14) ஓ! ஏகாதிபதி, ஊடுருவமுடியாத அந்த அரணை சுகர் இவ்வாறு துளைத்துச் சென்ற அக்கணத்தில், சொர்க்கத்திலிருந்து பொழியப்பட்ட தெய்வீக மலர்களால் ஆகாயம் நிறைந்திருந்தது.(15) அற ஆன்மா கொண்ட சுகர் அப்போது, மலர்ந்திருக்கும் சோலைகள் மற்றும் காடுகள் பலவற்றினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பகுதியின் கீழே பேரழகுடன் ஓடிக் கொண்டிருக்கும் தெய்வீக ஓடையான மந்தாகினியை {தேவ கங்கையை} உயர்ந்த பகுதியில் {வானத்தில்} இருந்து கண்டார்.(16) அந்த நீரில் அழகிய அப்சரஸ்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடையற்றிருந்த அந்த விண்ணுலகவாசிகள், உடலற்றவராக இருந்த சுகரைக் கண்டு வெட்கமேதும் அடையவில்லை.(17)
சுகர் பெரும்பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்த அவரது தந்தை வியாசர், அன்பால் நிறைந்தவராக அதே விண்பாதையில் அவரை {சுகரைப்} பின்தொடர்ந்து சென்றார்.(18) அதேவேளையில் சுகர், காற்றுப் பகுதிக்கு {வளிமண்டலத்திற்கு}[4] மேலிருக்கும் ஆகாயப்பகுதியில் சென்று, தமது யோக ஆற்றலை வெளிப்படுத்தி, பிரம்மத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார் {பிரம்மத்தோடு கலந்தார்}.(19) கடுந்தவங்களைக் கொண்ட வியாசர், உயர்ந்த யோகத்தின் நுண்பாதையைப் பின்பற்றி, சுகர் முதலில் பயணம் தொடங்கிய இடத்தைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அடைந்தார்.(20) அதே வழியில் சென்ற வியாசர், எதன் ஊடாகச் சுகர் கடந்து சென்றாரோ, அந்த மலைச்சிகரம் பிளந்து கிடப்பதைக் கண்டார். தீவில் பிறந்த அந்தத் தவசியைச் சந்தித்த முனிவர்கள், அவரது மகனின் சாதனைகளை அவருக்குச் சொல்லத் தொடங்கினர்.(21) எனினும் வியாசர், தமது மகனின் பெயரைச் சொல்லி உரக்க அழைத்து, தாமுண்டாக்கிய ஒலியால் மூவுலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அழுது புலம்பத் தொடங்கினார்.(22)அதே வேளையில், அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அவற்றின் ஆன்மாவாக ஆனவரும், எங்கும் நிறைந்த நிலையை அடைந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான {தர்மாத்மாவுமான} சுகர், எதிரொலியின் வடிவில் “போ” {Bho} என்ற ஓரசையைச் சொல்லித் தமது தந்தைக்குப் பதிலளித்தார்.(23) இதனால், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் “போ” என்ற ஓரசையைச் சொல்லிச் சுகரின் பதிலை எதிரொலித்தது.(24) அந்நேரத்தில் இருந்து, மலைக்குகைகளிலோ, மலைச்சாரல்களிலோ ஒலிகள் ஒலிக்கப்படும்போது அவை சுகரின் பதிலைச் சொல்வது போல இன்னும் {இப்போது வரை} அதை (போ என்ற ஓரசையை} எதிரொலிக்கின்றன.(25) சுகர், இவ்வழியிலேயே ஒலி முதலிய குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, மறையும் வகையில் தமது யோக ஆற்றலைக் காட்டி உயர்ந்த நிலையை அடைந்தார்.(26)
அளவிலா சக்தி கொண்ட தமது மகனின் மகிமையையும், பலத்தையும் கண்ட வியாசர், அந்த மலைச்சாரலில் அமர்ந்து, துயரத்துடன் தமது மகனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(27) தெய்வீக ஓடையான மந்தாகினியில் {தேவ கங்கையின்} கரைகளில் விளையாடிக் கொண்டிருந்த அப்சரஸ்கள் அனைவரும், அந்த முனிவர் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டு, வெட்கத்தால் இதயம் இழந்தவர்களாகக் கலக்கமடைந்தனர்.(28) அம்முனிவரைக் கண்டதும், அவர்களில் சிலர் தங்கள் நிர்வாணத்தை மறைக்க ஓடைக்குள் குதித்தனர், சிலர் புதர்களில் நுழைந்தனர், சிலர் விரைவாகத் தங்கள் ஆடைகளை எடுத்தனர்.(29) (அவர்களில் எவரும் அவரது மகனைக் கண்டு கலக்கக் குறியீடுகளைக் காட்டவில்லை). இந்த அசைவுகளைக் கண்ட முனிவர் {வியாசர்}, தமது மகன் {சுகர்} பற்றுகள் அனைத்தில் இருந்து விடுதலை அடைந்ததையும், தாம் அவற்றில் இருந்து விடுபடாததையும் புரிந்து கொண்டார். இதனால் அவர் மகிழ்ச்சி மற்றும் வெட்கம் ஆகிய இரண்டாலும் நிறைந்தார்.(30)
வியாசர் அங்கே அமர்ந்திருந்தபோது, மங்கல தேவனும், பிநாகைபாணியும் {பிநாகை என்ற வில்லைத் தரித்தவனும்}, தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் பலரால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், பெரும் முனிவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனுமான சிவன் அங்கே வந்தான்.(31) தமது மகனைக் குறித்த கவலையில் எரிந்து கொண்டிருந்தவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} அம்முனிவருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மஹாதேவன் {சிவன்},(32) “நெருப்பு {அக்னி}, பூமி {பிருத்வி}, நீர் {அப்பு}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் சக்தியைக் கொண்ட மகனை முன்பு நீர் வேண்டினீர்.(33) உமது தவங்களால் அதே போன்றவொரு மகன் உண்டானான். என் அருளால் அவன் தூயனாகவும், பிரம்ம சக்தியால் நிறைந்தவனாகவும் இருந்தான்.(34) புலன்களை முழுமையாக அடக்காதவர்களாலோ, தேவர்களில் எவராலோ கூட வெல்ல முடியாத உயர்ந்த கதியை அவன் அடைந்திருக்கிறான். ஓ! மறுபிறப்பாள முனிவரே, அந்த மகனுக்கான ஏன் நீர் வருந்துகிறீர்? எவ்வளவு காலம் மலைகள் இருக்குமோ, எவ்வளவு காலம் பெருங்கடல் இருக்குமோ, அவ்வளவு காலம் உமது மகனின் புகழ் மங்காதிருக்கும்.(36) ஓ! பெரும் முனிவரே, என் அருளால், உமது மகனுக்கு ஒப்பான ஒரு நிழல்வடிவம், உம்மைவிட்டு ஒருக்கணமும் அகலாமல், உமதருகிலேயே இருப்பதை நீர் இவ்வுலகில் காண்பீர்” என்றான்.(37)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்க ருத்திரனாலேயே இவ்வாறு ஆதரிக்கப்பட்ட அம்முனிவர், தம் அருகிலேயே தமது மகனின் நிழலைக் கண்டார். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.(38) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வு குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(39) தெய்வீக முனிவரான நாரதரும், பெரும் யோகியான வியாசரும், பழங்காலத்தில் இக்காரியம் குறித்து உரையாடல்களில் கேட்கப்பட்ட போது, இவையனைத்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(40) எந்த மனிதன் அமைதிநிலைக்குத் தன்னை அர்ப்பணித்து, விடுதலை {முக்தி} குறித்த நேரடி தொடர்புடைய இந்தப் புனித வரலாற்றைக் கேட்பானோ, அவன் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(41)
நரநாராயணர்! – சாந்திபர்வம் பகுதி – 335-நாரத முனி, நாராயண முனி ஆகியோருக்கிடையிலான உரையாடல்; நரனும் நாராயணனும் செய்த தினசரி சடங்குகள்; நரநாராயணர்களால் துதிக்கப்பட்ட தேவன் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மனிதன், இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ}, பிரம்மச்சாரியாகவோ, காட்டுத்துறவியாகவோ {வானப்பிரஸ்தனாகவோ}, சந்நியாசியாகவோ இருந்து வெற்றியடைய விரும்பினால், அவன் எந்தத் தேவனைத் துதிக்க {ஆராதிக்க} வேண்டும்?(1) எங்கிருந்து அவன் சொர்க்கத்தையும், உயர்ந்த நன்மையையும் (விடுதலையையும் {முக்தியையும்}) நிச்சயமாக அடையலாம். எந்த விதிமுறைகளின்படி அவன் தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் ஹோமத்தைச் செய்ய வேண்டும்?(2) ஒருவன் விடுதலை {முக்தியை} அடையும்போது எந்தக் கதியை அடைகிறான்? விடுதலையின் சாரம் என்ன? சொர்க்கத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து வீழாதிருக்க ஒருவன் என்ன செய்ய வேண்டும்?(3) தேவர்களின் தேவன் யார்? பித்ருக்களின் பித்ரு யார்? தேவர்களின் தேவருக்கும், பித்ருக்களின் பித்ருவுக்கும் மேலானவர் யார்? ஓ! பாட்டா இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! கேள்வி கேட்கும் கலையை நன்கறிந்தவனே, ஓ! பாவமற்றவனே, நீ கேட்ட இந்தக் கேள்வி ஆழ்ந்த புதிரைக்கொண்டதாகும். ஒருவன் நூறு ஆண்டுகள் முயன்றாலும், பொருள்முறைப்படி விவாதிக்கும் அறிவியலின் {தர்க்க சாஸ்திரத்தின்} துணை கொண்டு இதற்குப் பதிலளிக்க முடியாது.(5) ஓ! மன்னா, நாராயணனின் அருளில்லாமலோ, உயர்ந்த ஞானத்தை அடையாமலோ, இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. இக்காரியம் ஆழ்ந்த புதிரோடு தொடர்புடையதென்றாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே, நான் அஃதை உனக்கு விளக்குகிறேன்[1].(6)இது தொடர்பாக, நாரதருக்கும் நாராயண முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது.(7) ஓ!ஏகாதிபதி, கிருத யுகத்தில் தான்தோன்றியான {சுயம்புவான} மனுவின் காலகட்டத்தில் {மன்வந்தரத்தில்}, அண்டத்தின் ஆன்மாவான நித்திமான நாராயணன், தர்மனுக்கு மகனாக நரன், நாராயணன், ஹரி மற்றும் சுயம்புவான கிருஷ்ணன் என்ற நால்வராகப் பிறந்தான்[2].(8,9) அவர்கள் அனைவரிலும், நாராயணனும், நரனும் பதரி என்ற பெயரில் அறியப்படும் இமய ஆசிரமத்திற்குத் தங்கத் தேர்களில் சென்று கடுந்தவங்களைச் செய்தனர்.(10) அந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் எட்டுச் சக்கரங்கள் இருந்தன. ஐம்பூதங்களால் செய்யப்பட்ட அந்தத் தேர்கள் மிகவும் அழகானவையாக இருந்தன.தர்மனின் மகன்களாகப் பிறந்த அந்த உண்மையான லோகபாலர்கள், கடுந்தவத்தின் விளைவால் மிகவும் மெலிந்தவர்களானார்கள். உண்மையில், அந்தத் தவங்களுக்காகவும், அவர்களின் சக்திக்காகவும், தேவர்களாலேயே அவர்களைப் பார்க்க இயலவில்லை.(11) அவர்கள் எந்தத் தேவனிடம் அன்பு கொள்கிறார்களோ, அந்தத் தேவனால் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.(12)
நாரதர், அவர்களிடம் அர்ப்பணிப்பாலும், அவர்களைக் காணும் நீண்ட ஆவலாலும் மேரு மலைகளின் உயர்ந்த சிகரத்தில் இருந்து கந்தமாதனத்திற்குக் கீழே இறங்கிவந்து உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தார்.(13) பெரும் வேகம் கொண்ட அவர் இறுதியாகப் பதரி ஆசிரமம் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்தார். ஆவலால் உந்தப்பட்ட அவர், நரனும் நாராயணனும் தங்கள் தினசரி சடங்குகளைச் செய்து கொண்டிருந்த வேளையில் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தார்.(14)
அவர் {நாரதர்} தமக்குள்ளேயே, “தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள மற்றும் பெரும்பாம்புகள் உள்ளிட்ட உலகங்கள் அனைத்தும் எவரில் நிறுவப்பட்டுள்ளனவோ, உண்மையில் இஃது அவரது ஆசிரமமே.(15) முன்பு இந்தப் பெரும் பொருளுக்கு ஒரே வடிவமே இருந்தது. அந்த வடிவமானது, அந்தத் தேவனால் வளர்க்கப்பட்ட தர்மனின் குலம் பெருகுவதற்காக நான்கு வடிவங்களில் பிறவியை அடைந்தது.(16) நரன், நாராயணன், கிருஷ்ணன், ஹரி என்ற நான்கு பெருந்தேவர்களால் தர்மன் இவ்வாறு கௌரவிக்கப்பட்டது அற்புதம் நிறைந்ததாகும்.(17) இந்த இடத்திலேயே முன்பு கிருஷ்ணனும், ஹரியும் வசித்தனர். எனினும் இப்போது நரன் மற்றும் நாராயணன் ஆகிய இந்த இருவர் தங்கள் தகுதியை {புண்ணியத்தைப்} பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தில் இங்கே வசித்துத் தவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.(18) இந்த இருவரும் அண்டத்தின் பெரும்புகலிடமாக இருக்கிறார்கள். இந்த இருவரும் செய்யும் தினசரி சடங்குகளின் இயல்புகள் என்ன? அவர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாரும், அனைத்துப் பொருட்களின் சிறப்புமிக்கத் தேவர்களும் ஆவர். பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்த இருவரும் வழிபடும் அந்தத் தேவன் யார்? அனைத்துப் பொருட்களின் பித்ருக்களான இவ்விருவரும் துதிக்கும் அந்தப் பித்ருக்கள் யார்?” என்று கேட்டுக் கொண்டார்.(19)
நாராயணனிடம்
பக்தியில் நிறைந்திருந்த நாரதர், தமது மனத்தில் இதை நினைத்துத் திடீரென அந்தத் தேவர்கள் இருவரின் முன்பும் தோன்றினார்.(20) அந்தத் தேவர்கள் இருவரும் தங்கள் தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கான துதிகளை நிறைவு செய்த பிறகு, தங்கள் ஆசிரமத்திற்கு வந்திருந்த அந்தத் தெய்வீக முனிவரைக் கண்டனர். பின்னவர் {நாரதர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகளின்படி கௌரவிக்கப்பட்டார்.(21) சிறப்புமிக்கவரான முனிவர் நாரதர், உண்மை தேவர்களான அவர்கள் இருவரும் வேறு தேவர்களையும், பித்ருக்களையும் வழிபடும் இயல்புக்குமீறிய நடத்தைக் கண்டு, தாம் பெற்ற கௌரவங்களால் நன்கு நிறைவடைந்து அங்கே அமர்ந்தார்.(22) உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் கூடிய அவர், மஹாதேவனை வணங்கி, தமது கண்களை நாராயணன் மீது செலுத்திக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23)
நாரதர், “வேதங்களிலும், புராணங்களிலும், அங்கங்களிலும், உப அங்கங்களிலும் நீயே மதிப்புடன் பாடப்படுகிறாய். நீ பிறப்பற்றவனாகவும், நித்தியமானவனாகவும் இருக்கிறாய். படைப்பாளன் நீயே. அண்டத்தின் அன்னை நீயே. அழிவின்மையின் உடல்வடிவம் நீயே, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. கடந்த காலமும், எதிர்காலமும், உண்மையில், மொத்த அண்டமும் உன்னிலேயே நிறுவப்பட்டுள்ளன.(24) ஓ!தலைவா, இல்லறத்தை முதலாகக் கொண்ட நான்கு வாழ்வுமுறைகளும் {ஆசிரமங்களும்}, பல்வேறு வடிவங்களிலான உன்னையே இடையறாமல் துதிக்கின்றன.(25) அண்டத்தின் தந்தையாகவும், தாயாகவும், ஆசானாகவும் நீயே இருக்கிறாய். இன்று நீ துதிக்கும் அந்தத் தேவன் அல்லது பித்ரு யார் என்பதை நாங்கள் அறியவில்லை” என்றார்.(26)
அதற்கு அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “இக் காரியம் குறித்து ஒருவனால் எதுவும் சொல்லப்படக்கூடாது. இஃது ஒரு புராதனப் புதிராகும். நீர் என்னிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாகும். எனவே, ஓ!மறுபிறப்பாளரே, வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்.(27) நுட்பமானதும், புலப்படாததும், வெளிப்படாததும், அசைவற்றதும், நீடித்து நிலைத்திருப்பதும், புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுடனான எந்தத் தொடர்பும் இல்லாததும்,(28) (ஐந்து) பூதங்களிடம் இருந்து தொடர்பறுந்ததும் எதுவோ, அதுவே இருப்பிலுள்ள உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் ஆத்மாவாக அழைக்கப்படுகிறது. அது க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரில் அறியப்படுகிறது. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய முக்குணங்களையும் கடந்திருக்கும் அதுவே புருஷன் என்று சாத்திரங்களில் கருதப்படுகிறது.(29) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவனிலிருந்தே சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்ட புலப்படாதவள் தோன்றினாள். உண்மையில் புலப்படாதவளாக இருப்பினும் அவள் அழிவில்லாத பிரகிருதி என்று அழைக்கப்பட்டு, புலப்படும் வடிவங்கள் அனைத்திலும் வசித்து வருகிறாள்.(30)
நாங்கள் இருவரும் எங்கிருந்து உதித்தோமோ அந்தத் தோற்றுவாய் அவளே {பிரகிருதியே} என்பதை அறிவீராக. இருப்பில் உள்ள மற்றும் இருப்பில் இல்லாத பொருட்கள் அனைத்தினாலும் உண்டானதும், நீக்கமற நிறைந்திருப்பதுமான ஆன்மாவானவன் எங்களால் துதிக்கப்படுகிறான். தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாங்கள் செய்யும் சடங்குகள் அனைத்திலும் அவனையே நாங்கள் வழிபடுகிறோம்.(31) ஓ! மறுபிறப்பாளரே, அவனைத் தவிர வேறு உயர்ந்த தேவர் எவரும், அல்லது பித்ரு எவரும் இல்லை. அவனே எங்கள் ஆன்மா என்பது அறியப்பட வேண்டும். அவனையே நாங்கள் வழிபடுகிறோம்.(32) ஓ! மறுபிறப்பாளரே, மனிதர்களால் பின்பற்றப்படும் இந்தக் கடமையின் நடைமுறைகள் அவனிடம் இருந்த வெளிவந்தன. தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான சடங்குகள் அனைத்தும் முறையாகச் செய்யப்பட வேண்டும் என்பதை அவனே விதித்திருக்கிறான்.(33) பிரஜாபதிகள் என்றழைக்கப்படும் பிரம்மன், ஸ்தாணு, மனு, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது,(34) வசிஷ்டர், பரமேஷ்டி, விவஸ்வத், சோமன் கர்த்தமர் என்றழைக்கப்படுபவர், குரோதர், அவாக், கிருதர்(35) ஆகிய இந்த இருபத்தோரு பேரும் முதலில் பிறந்தவர்களாவர். அவர்கள் அனைவரும் பரம்பொருளின் நித்திய விதிகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தனர்.(36)
தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிப்பதற்காக விதிக்கப்பட்ட சடங்குகள் அனைத்தையும் விரிவாக நோற்ற அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், தாங்கள் வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அடைந்தனர்.(37) உடலற்ற தேவலோகவாசிகளே அந்த உயர்ந்த தேவனை வணங்கி, அவனது அருளின் மூலம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கனிகளையும், கதிகளையும் அடைகின்றனர்.(38) (அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, உயிர் மூச்சுகள் ஐந்து, மனம் மற்றும் புத்தி அடங்கிய) பதினேழு குணங்களில் இருந்து விடுபட்டவர்களும், செயல்கள் அனைத்தையும் கைவிட்டவர்களும், திரள் உடலாக அமையும் பதினைந்து கலைகளுமற்றவர்களும் முக்தர்கள் என்று சொல்லப்படுவதே சாத்திரங்களின் இறுதித் தீர்மானமாகும்[3].(39) முக்தர்கள் தங்கள் இறுதி கதியாக எதை அடைகிறார்களோ அதுவே க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. (சாத்திரங்களின்படி) அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} குணங்கள் அனைத்தையும் கொண்டவனாகவும், அவை அனைத்தும் அற்றவனாகவும் கருதப்படுகிறான்.(40)அவனை {க்ஷேத்ரஜ்ஞனை} ஞானத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நாங்கள் இருவரும் அவனிலிருந்தே உதித்தோம். இவ்வழியில் அவனை அறிந்திருக்கும் நாங்கள் அனைத்துப் பொருட்களின் நித்திய ஆன்மாவான அவனைத் துதிக்கிறோம்.(41) வேதங்களும், வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தும் விரிந்த கருத்துகளின்படி அறியப்பட்டாலும் அவனை அனைவரும் பக்தியுடன் வழிபடுகின்றனர். அவனே விரைந்து அருள் வழங்கி அவர்களுக்கு இன்பம் நிறைந்த உயர்ந்த கதிகளை அளிக்கிறான்.(42) இவ்வுலகில் அவனால் நிறைந்தவர்கள், அவனிடம் முற்றான முழுமையான பக்தியைக் கொண்டு மிக உயர்ந்த கதிகளை அடைகின்றனர். எனெனில், அவர்கள் அவனில் நுழைந்து, அவனது சுயத்திலேயே கலக்கிறார்கள்.(43) ஓ! நாரதரே, நீர் என்னிடம் கொண்ட பக்தியாலும், நான் உம்மிடம் கொண்ட அன்பினாலும் அசைக்கப்பட்டு உயர்ந்த புதிரை உமக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், நீர் என்னிடம் கொள்ளும் பக்தியின் விளைவாலேயே எனது உரையை உம்மால் கேட்க முடிந்தது” என்றான் {நாராயணன்}.(44)
உலகின் முதல் சாத்திரம்! – சாந்திபர்வம் பகுதி – 336-ஸ்வேதத்வீபத்திற்குச் சென்ற நாரதர்; பாஞ்சராத்ர சாத்திரத்தின் வரலாறு; உலகின் முதல் நீதி சாத்திரத்தைத் தொகுத்த சப்தரிஷிகள்; நீதி சாத்திரத்தை அடைந்த மன்னன் உபரிசரன்; நாராயணன் சொன்ன வார்த்தைகள்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முதன்மையான நாராயணனால் இந்த வார்த்தைகளால் சொல்லப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான நாரதர், உலக நன்மைக்காக நாராயணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)
நாரதர், “ஓ! சுயம்புவே, தர்மனின் இல்லத்தில் நான்கு வடிவங்களில் நீர் பிறப்பெடுத்த நோக்கம் நிறைவேறட்டும். நான் இப்போது உன் உண்மை இயல்பைக் காண்பதற்காக (வெண் தீவுக்கு {ஸ்வதேத்வீபத்திற்குச்}) செல்லப் போகிறேன்.(2) நான் எப்போதும் பெரியோரை வழிபடுகிறேன். நான் ஒருபோதும் பிறரின் இரகசியங்களை வெளியிட்டதில்லை. ஓ! அண்டத்தின் தலைவா, நான் வேதங்களைக் கவனமாகக் கற்றிருக்கிறேன். நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். நான் ஒருபோதும் பொய்மை பேசியதில்லை.(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடியே நான் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய நான்கைப் பாதுகாத்திருக்கிறேன்[1]. நான் நண்பர்களிடமும் பகைவர்களிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன். தேவர்களின் முதல்வனான பரமாத்மாவிடம் முற்று முழுதான அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொண்ட நான் அவனை இடையறாமல் துதித்து வருகிறேன்.(4) சிறப்புத்தகுதிகளான இந்தச் செயல்களின் மூலம் என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பிறகு, எல்லையில்லாதவனான அண்டத்தின் தலைவனுடைய காட்சியைப் பெறுவதில் நான் ஏன் வெல்ல மாட்டேன்?” என்றார் {நாரதர்}.பரமேஷ்டியின் மகனான அவர் {நாரதர்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், சாத்திரங்களைப் பாதுகாப்பவனுமான நாராயணன், “ஓ! நாரதரே, செல்வீராக” என்று சொன்னான்.(5) உயர்ந்த யோக பலத்தைக் கொண்ட நாரதர் திடீரென ஆகாயத்தில் எழுந்து, மேரு மலைகளின் சிகரத்தை அடைந்தார். அந்தச் சிகரத்தில் ஒரு தனிமையான இடத்தை அடைந்த அந்தப் பெருந்தவசி சிறிது நேரம் ஓய்ந்திருந்தார்.(7) பிறகு அவர் தமது கண்களை வடமேற்குத் திசையில் செலுத்தி மிக அற்புதமான காட்சியை ஒன்றைக் கண்டார். வடக்கில் உள்ள பாற்கடலில் வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரைக் கொண்ட ஒரு பெரிய தீவு இருக்கிறது.(8) மேரு மலைகளில் இருந்து அதன் தொலைவு முப்பத்திரண்டாயிரம் யோஜனைக்கும் மேல் எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குப் புலன்கள் ஏதும் கிடையாது. அவர்கள் எந்த உணவும் உட்கொள்ளாமலேயே வாழ்கிறார்கள். அவர்களது கண்கள் இமைப்பதில்லை. அவர்கள் சிறந்த மணங்களை வெளியிடுகிறார்கள்.(9)
அவர்களது நிறம் வெண்மையானதாகும். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருந்தனர். அவர்களது எலும்புகளும், உடல்களும் வஜ்ரத்தைப் போன்று கடினமானதாக இருந்தன. அவர்கள் மான அவமானங்களை ஒரே ஒளியில் கருதினர். அவர்கள் அனைவரும் தேவர்களைப் போலத் தெரிந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் மங்கலக் குறிகளையும், பெரும் பலத்தையும் கொண்டிருந்தனர்.(10) அவர்களது தலைகள் குடைகளைப் போல இருந்தன. அவர்களது குரல்கள் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்டவர்களாவர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முஷ்கங்களைக் கொண்டிருந்தனர்[2]. அவர்களது பாதங்கள் நூறு கோடுகளால் குறிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரும் அறுபது பற்களையும், எட்டு சிறு பற்களையும் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பல நாவுகள் இருந்தன. அந்த நாவுகளைக் கொண்டு அனைத்துத் திசைகளையும் நோக்கும் சூரியனையே தீண்டுவதைப் போலத் தெரிந்தது.(11) உண்மையில் அவர்கள், மொத்த அண்டமும், வேதங்களும், கடமைகள், அமைதியான குணம் கொண்ட முனிவர்களும் எதனில் இருந்து எழுந்தார்களோ அந்தப் பெருந்தேவனையே விழுங்கிவிட வல்லவர்களைப் போலத் தெரிந்தனர்” என்றார் {பீஷ்மர்}.(12)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அவர்களுக்குப் புலன்கள் ஏதும் கிடையாது, அவர்கள் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள எதையும் உண்பதில்லை, அவர்களது கண்கள் இமைப்பதில்லை; அவர்கள் எப்போதும் சிறந்த மணத்தைப் பரப்புகிறார்கள் என்று சொன்னீர். நான் கேட்கிறேன், அவர்கள் எவ்வாறு பிறந்தார்கள்? அவர்கள் அடையும் பரகதி எது?(13) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விடுதலை {முக்தி} அடையும் மனிதர்களின் அடையாளங்களும், வெண்தீவுவாசிகளைப் போன்றதாகுமா? என் ஐயங்களை விலக்குவீராக. {கேட்பதற்கு} நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். வரலாறுகள் மற்றும் உரையாடல்களின் பெருங்கொள்ளிடமாக நீர் இருக்கிறீர். எங்களைப் பொறுத்தவரையில், ஞானம் மற்றும் அறிவுரைகளுக்கு உம்மையே நாங்கள் முற்றிலும் சார்ந்திருக்கிறோம்” என்றான்.(15)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, என் தந்தையிடம் இருந்து நான் கேட்ட இந்தக் கதை மிகப் பெரியதாகும். அதை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். உண்மையில், இது கதைகள் அனைத்தின் சாரமாகக் கருதப்படுகிறது.(16) ஒரு காலத்தில் உபரிசரன் என்ற பெயரில் பூமியில் ஒரு மன்னன் இருந்தான். அவன் தேவர்களின் தலைவனான இந்திரனுடைய நண்பனாக அறியப்பட்டார். அவன் ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் நாராயணனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தான் {பக்தி கொண்டிருந்தான்}.(17) அவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகள் {தர்மங்கள்} யாவையும் நோற்பவனாக இருந்தான். எப்போதும் தன் தந்தையிடம் அர்ப்பணிப்புடன் இருந்த அவன், எப்போதும் விழிப்புணர்வு நிறைந்தவனாகவும், செயலுக்கு ஆயத்தமானவனாகவும் இருந்தான். அவன் நாராயணனிடம் இருந்து பெற்ற வரத்தின் விளைவால் உலகின் அரசுரிமையை வென்றான்.(18) பழங்காலத்தில் சூரியனால் அறிவிக்கப்பட்ட சாத்வத சடங்கை {பாஞ்சராத்ரவிதியைப்}[3] பின்பற்றிய மன்னன் உபரிசரன் அந்தத் தேவர்களின் தேவனை (நாராயணனை) வழிபடுவதை வழக்கமாகக் கொண்டு, தன் வழிபாடு நிறைவடைந்ததும் அண்டத்தின் பெரும்பாட்டன்களைத் துதித்துக் கொண்டிருந்தான்.(19) பெரும்பாட்டன்களை (பித்ருக்களை) வழிபட்ட பிறகு அவன் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன் தன்னைச் சார்ந்திருந்தவர்களுக்குக் காணிக்கைகளைப் பகிர்ந்தளித்தான். அவர்களுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சியதிலேயே மன்னன் தன் பசியைத் தணித்துக் கொண்டான். வாய்மையில் அர்ப்பணிப்புள்ள அந்த ஏகாதிபதி, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து வந்தான்.(20)தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாத தேவர்களின் தேவனும், அண்டத்தின் படைப்பாளனும், எவ்வித சிதைவும் இல்லாதவனுமான ஜனார்த்தனனிடம் மொத்த ஆன்மாவுடன் கூடிய அர்ப்பணிப்புடன் அவன் இருந்தான்.(21) பகைவர்களைக் கொல்பவனான அவன் நாராயணனிடம் கொண்ட அர்ப்பணிப்பை {பக்தியைக்} கண்ட தேவர்களின் தலைவன், தன் இருக்கையையும், படுக்கையையும் அவனுடன் பகிர்ந்துகொண்டான்.(22) அவனது நாடு, செல்வம், மனைவிகள், விலங்குகள் அனைத்தும் நாராயணனிடம் இருந்து பெறப்பட்டதாகவே அவனால் கருதப்பட்டன. எனவே அவன் தன் உடைமைகள் அனைத்தையும் அந்தப் பெருந்தேவனுக்கே காணிக்கையாக்கினான்.(23) சாத்வதச் சடங்கைப் பின்பற்றிய மன்னன் உபரிசரன், குவிந்த ஆன்மாவுடன் கட்டாயமற்ற மற்றும் கட்டாயமான தன் வேள்விச் செயல்கள் மற்றும் நியமங்கள் அனைத்தையும் {காம்யகங்களையும், நைமித்திகங்களையும்} செய்து வந்தான்.(24) அந்தச் சிறப்புமிக்க மன்னனின் அரண்மனையில், பாஞ்சராத்ர சடங்கை நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலர், தேவன் நாராயணனுக்குப் படைக்கப்படும் உணவை அனைவருக்கும் முன்பு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(25)
பகைவர்களைக் கொல்பவனான அவன் தன் நாட்டைத் தொடர்ந்து அறம் சார்ந்து ஆண்டு வந்த வரை, அவனது உதடுகளில் இருந்து எந்தப் பொய்மையும் நழுவி வந்ததில்லை, எந்தத் தீமையும் அவனது மனத்துக்குள் நுழைந்ததில்லை.(26) அவன் தன் அங்கங்களைக் கொண்டு ஒருபோதும் சிறு பாவத்தையேனும் செய்ததில்லை. சித்திர சிகண்டிகள்[4] என்ற பெயரில் அறியப்பட்ட மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் பெருஞ்சக்தியைக் கொண்ட வசிஷ்டர் என்று கொண்டாடப்படும் ஏழு முனிவர்களும், மலைகளில் முதன்மையான மேருவின் சாரலில் ஒன்றுகூடி, நான்கு வேதங்களுக்கு இணக்கமான கடமைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த சிறந்த சாத்திரத்தை உண்டாக்கினார்கள். அந்தச் சாத்திரத்தின் உள்ளடக்கம் ஏழு வாய்களால் சொல்லப்படுவதாகவும், மனித கடமைகள் மற்றும் நடைமுறைகளின் சுருக்கமான சிறந்த தொகுப்பாகவும் இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல, சித்திர சிகண்டிகள் என்ற பெயரால் அறியப்பட்ட அந்த ஏழு முனிவர்களும், (மஹத், அகங்காரம் முதலிய) ஏழு (பிரகிருதி) பூதங்களாகவும், பட்டியலில் எட்டாவதாகச் சுயம்புவான மனுவும் மூலப் பிரகிருதியின் உள்ளடக்கமாக இருந்தனர். இந்த எண்மரே அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களும், கவனம் திரும்பியிருக்கும் அந்தச் சாத்திரத்தை உண்டாக்கியவர்களும் ஆவர்.(27-30)முழுக் கட்டுப்பாட்டுடன் கூடிய புலன்கள் மற்றும் மனத்துடன், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்த எட்டு தவசிகளும், குவிந்த ஆன்மாக்களுடன், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவர்களாக வாய்மை எனும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருந்தனர்.(31) “இது நன்மையானது, இது பிரம்மம், இஃது உயர்ந்த நன்மையானது” என்று இவ்வழியில் தங்கள் மனத்தில் சிந்தித்த அந்த முனிவர்களே, உலகங்களையும், அறநெறி அறிவியலையும், உலகங்களை ஆளும் கடமைகளையும் உண்டாக்கினர்.(32) அறம், செல்வம் மற்றும் இன்பம், அதைத் தொடர்ந்து விடுதலை {முக்தி} குறித்தும் அந்த ஆசிரியர்கள் அந்தச் சாத்திரத்தில் உரை செய்திருந்தார்கள். அவர்கள் பூமிக்கும், சொர்க்கத்திற்குமான பல்வேறு கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் அதில் விதித்திருந்தனர்.(33) பலமிக்கவனும், சிறப்புமிக்கவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை, பல முனிவர்களின் துணையுடன் ஆயிரம் தேவ வருடங்கள் தவங்களால் வழிபட்டு அந்தச் சாத்திரத்தை அவர்கள் உண்டாக்கினார்கள்.(34) அவர்களது தவங்கள் மற்றும் வழிபாட்டால் நிறைவடைந்த நாராயணன், வாக்கின் தேவியான சரஸ்வதியை அந்த முனிவர்களின் மேனியில் நுழையும்படி ஆணையிட்டான். அந்தத் தேவியும் உலகங்களுக்கு நன்மை செய்வதற்காக, தனக்கு ஆணையிடப்பட்ட வகையிலேயே செயல்பட்டாள்.(35)
வாக்கின் தேவி அவர்களது மேனியில் நுழைந்ததன் விளைவால் தவங்களை நன்கறிந்தவர்களான அம்முனிவர்கள், சொல், கருத்து {பொருள்}, காரணம் ஆகியவற்றாலான அந்த முதன்மையான சாத்திரத்தைத் தொகுப்பதில் வென்றார்கள்.(36) ஓம் என்ற ஓரசையால் புனிதமடைந்த அந்தச் சாத்திரத்தைத் தொகுத்தபிறகு அந்த முனிவர்கள், முதலில் அதை அன்புடன் கேட்டுக் கொண்டிருந்த நாராயணனிடம் படித்துக் காட்டினார்கள்.(37) சிறப்புமிக்கவனும், உடலற்றவனுமான நாராயணன் தான் கேட்டதில் மிக உயர்ந்த நிறைவை அடைந்தான்.
பிறகு பொருட்கள் அனைத்திலும் முதன்மையான அவன் {நாராயணன்} அம்முனிவர்களிடம் உடலற்ற குரலில் {அரூபக் குரலில் / அசரீரியாக}, “நூறாயிரம் சுலோகங்களில் நீங்கள் தொகுத்திருக்கும் இந்தச் சாத்திரம் சிறப்பானதாகும். இதனிலிருந்தே உலகங்கள் அனைத்தின் கடமைகளும், நடைமுறைகளும் உண்டாகும்.(39) யஜுஸ், ரிக், சாமம் மற்றும் அங்கிரசின் அதர்வணம் என்ற நான்கு வேதங்களுக்கும் முழு இணக்கத்துடன் இருக்கும் உங்கள் சாத்திரம், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி ஆகிய இரண்டிலும் அங்கீகரிக்கப்பட்டதாக உலகமெங்கும் கொண்டாடப்படும்.(40) சாத்திரங்களின் அதிகாரத்திற்கு ஏற்புடைய வகையிலேயே நான் அருள் எனும் குணத்தின் மூலம் பிரம்மனையும், எனது கோபத்திலிருந்து ருத்திரனையும், (மஹத், அகங்காரம் முதலிய) பிரகிருதிகளால் உங்களையும், பிராமணர்களையும் உண்டாக்கினேன்.(41) சூரியன், சந்திரமாஸ், காற்று, பூமி, நீர், நெருப்பு, விண்மீன்கள், கோள்கள், நட்சத்திரக்கூட்டங்கள், உயிரினங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் அனைத்தும், (வேதம் அல்லது) பிரம்மம் ஓதுபவர்கள் ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் செயல்பட்டு வாழ்கிறார்கள். நீங்கள் தொகுத்திருக்கும் இந்தச் சாஸ்திரமும், உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட படைப்பாக மனிதர்கள் அனைவராலும் அதே ஒளியில் கருதப்படும். இஃது என் ஆணையாகும். இந்தச் சாத்திரத்தின் வழிகாட்டுதலின்படி சுயம்புவான மனு, உலகின் கடமைகள் மற்றும் நடைமுறைகளை அறிவிப்பார்.(42-44) உசனஸும் {சுக்கிராச்சாரியரும்}, பிருஹஸ்பதியும் உண்டாகும்போது, அவர்கள் இந்தச் சாத்திரத்தால் வழிநடத்தப்பட்டும், மேற்கோளாகக் கொண்டும் அறம் மற்றும் அறநெறி குறித்த சாத்திரங்களை உண்டாக்குவார்கள்[5].(45)சுயம்புவான மனுவும், உசனஸும், பிருஹஸ்பதியும் தங்கள் சாத்திரங்களை வெளியிட்ட பிறகு,(46) உங்களால் தொகுக்கப்பட்ட இந்த அறிவியல், (உபரிசரன் என்ற பெயராலும் அறியப்படும்) மன்னன் வசுவால் அடையப்படும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, உண்மையில், அம்மன்னன் இந்தப் படைப்பின் ஞானத்தைப் பிருஹஸ்பதியிடம் இருந்து அடைவான்.(47) நல்ல சிந்தனைகள் அனைத்தாலும் நிறைந்திருக்கும் அம்மன்னன் என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவானாக இருப்பான். இந்தச் சாத்திரத்தால் வழிநடத்தப்பட்டு அவன் தன் அறச்செயல்களையும் நடைமுறைகளையும் அமைத்துக் கொள்வான்.(48) உண்மையில் உங்களால் தொகுக்கப்பட்ட இந்தச் சாத்திரம், அறம் மற்றும் நெறிகள் குறித்த சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாக இருக்கும். சிறப்பு நிறைந்த இந்தச் சாத்திரம், செல்வத்தையும், அறத்தகுதியையும் ஈட்டுவதற்கு உரிய அறிவுரைகள் நிறைந்ததாகவும், புதிர்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.(49) உங்களுடைய இந்தச் சாத்திரத்தை வெளியிடுவதன் விளைவால், நீங்கள் பெரும் குலம் ஒன்றின் மூதாதையர்களாவீர்கள். மன்னன் உபரிசரனும், மகிமையும் செழிப்பும் கொண்டவனாக இருப்பான்.(50) எனினும் அந்த மன்னனின் மரணத்திற்குப் பிறகு இந்த நித்திய சாத்திரம் உலகில் இருந்து மறைந்துவிடும். இவை யாவையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான் {நாராயணன்}.(51)
புலப்படாதவனான நாராயணன், அந்த முனிவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவர்களை விட்டுவிட்டு, அவர்களால் அறியப்படாத வேறொரு இடத்திற்குச் சென்றான்.(52) அப்போது உலகத்தின் தந்தைகளான அந்த முனிவர்கள், உலகம் அடையப்போகும் கதியை நினைத்துக் கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தின் நித்திய மூலமாகச் சாத்திரத்தை வெளியிட்டனர்.(53) அதற்கடுத்து முதல், அல்லது கிருத யுகத்தில் பிருஹஸ்பதி அங்கிரஸக் குலத்தில் பிறந்தபோது, அந்த ஏழு முனிவர்களும், உபநிஷத்துகள் மற்றும் வேதங்களின் பல்வேறு கிளைகளுக்கு இணைக்கமான தங்கள் சாத்திரத்தை வெளியிடும் பணியை அவருக்குக் கொடுத்தனர்.(54) உலகங்கள் அனைத்தையும் தாங்குபவர்களும், தர்மங்கள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் முதலில் வெளியிட்டவர்களுமான அவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்து இடத்திற்குச் சென்று தவங்களில் தங்களை அர்ப்பணிக்கத் தீர்மானித்தனர்” என்றார் {பீஷ்மர்}.(55)
நாராயணீயம்! – சாந்திபர்வம் பகுதி – 337-உபரிசர வசு செய்த யாகம்; பிருஹஸ்பதிக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன ஏகதர் மற்றும் பிறர்; ஸ்வேதத்வீபம் என்ற வெண்தீவு; அங்கே வசிக்கும் வெண் மனிதர்கள்; ஸ்வேதத்வீபத்தில் நாராயணனைக் காணாத முனிவர்கள்; உபரிசரவசு அடைந்த கதி..
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “பெரும் கல்பம் {மஹாகல்பம்} நிறைவடைந்ததும், அங்கிரஸ குலத்தில் தேவபுரோஹிதர் பிருஹஸ்பதி பிறந்தபோது, தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(1) பிருஹத், பிரம்ம, மஹத் என்ற சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைக் கொண்டனவாகும்[2]. ஓ! மன்னா, தேவ புரோஹிதர் இந்தக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்ததால் பிருஹஸ்பதி என்று அழைக்கப்படலானார்.(2) வசு என்றும் அழைக்கப்படும் மன்னன் உபரிசரன், பிருஹஸ்பதியின் சீடனாகி விரைவில் அவனது முதன்மையான சீடனானான். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அவன், தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, சித்திர சிகண்டிகள் என்ற பெயரில் அறியப்பட்ட ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அந்த அறிவியலை {சாத்திரத்தைக்} கற்கத் தொடங்கினான்.(3) வேள்விகள் மற்றும் பிற அறச்சடங்குகள் மூலம் தீமைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவன் {உபரிசரன்}, சொர்க்கத்தை ஆளும் இந்திரனைப் போல இந்தப் பூமியை ஆண்டு வந்தான்.(4)அந்தச் சிறப்புமிக்க மன்னன் தன் ஆசானான பிருஹஸ்பதி ஹோத்ரியாக அமைந்த ஒரு பெரும் குதிரை வேள்வியை {அஸ்வமேதயாகத்தைச்} செய்தான்.(5) பிரஜாபதியின் (பிரம்மனின்) மகன்களான ஏகதர், துவிதர், திரிதர் ஆகியோர் அந்த வேள்வியின் சத்யஸ்களானார்கள்.(6) இன்னும் தனுஷர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு, மேதாதி, பெரும் முனிவரான தாண்டியர்,(7) அருள் நிறைந்தவரான சாந்தி முனிவர், வேதசிரஸ் என்று அழைக்கப்பட்டவர், சாலிஹோத்திரரின் தந்தையும், முனிவர்களில் முதன்மையானவருமான கபிலர்,(8) முதன்மையானவரான கல்பர் {கடர்}, வைசம்பாயனருக்கு மூத்தவரான {அண்ணனான} தைத்திரி, கண்வர், தேவஹோத்தர் ஆகிய வேறு பதினாறு பேரும் சத்யஸ்களாக இருந்தனர்.(9)
ஓ! ஏகாதிபதி அந்தப் பெரும் வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் திரட்டப்பட்டன. அதில் எந்த விலங்கும் கொல்லப்படவில்லை. மன்னன் அவ்வாறே அதை விதித்திருந்தான்(10) அவன் கருணை நிறைந்தவனாக இருந்தான். தூய்மையான, தயாள மனம் கொண்ட அவன், ஆசைகள் அனைத்தையும் கைவிட்டவனாகவும், சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருந்தான். அவ்வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் காட்டில் விளைபவையாகவே இருந்தன.(11) புராதன தேவர்களுக்குத் தேவன் (ஹரி), அந்த வேள்வியினால் மன்னனிடம் உயர்ந்த நிறைவை அடைந்தான். வேறு எவராலும் காணப்பட முடியாதவனான அந்தப் பெருந்தேவன், தன் வழிபாட்டாளனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(12) அவன் {ஹரி}, அதன் மணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பங்கான புரோடாசத்தை[3] எடுத்துக் கொண்டான். அந்தப் பெருந்தேவன் யாரும் காணாதவண்ணம் அந்தக் காணிக்கைகளை எடுத்துக் கொண்டான்.(13) இதனால் பிருஹஸ்பதி கோபம் அடைந்தார். அவர், வேள்விக் கரண்டியை எடுத்து வானத்தில் வேகமாக வீசி எறிந்துவிட்டு, கோபத்தில் கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.(14)அவர் {பிருஹஸ்பதி} மன்னன் உபரிசரனிடம், “நாராயணனுக்குரிய வேள்விக் காணிக்கைகளை இங்கே வைக்கிறேன். என் கண்களுக்கு முன்பாகவே இதை அவன் எடுக்கப் போகிறான் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(15)
யுதிஷ்டிரன், “உபரிசரனின் பெரும் வேள்வியில் தேவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் வந்து அனைவரும் காணும்படி தங்கள் பங்குகளை எடுத்துக் கொண்டனர். பலமிக்க ஹரி மட்டுமே ஏன் வேறுவகையில் மறைமுகமாகத் தன் பங்கை எடுத்துக் கொண்டான்?” என்று கேட்டான்.(16)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதி கோபமடைந்த போது, மாமன்னன் வசுவும், அவனது சத்யஸ்கள் அனைவரும் அந்த மாமுனிவரைத் தணிவடையச் செய்ய முயன்றனர்.(17) அவர்கள் அனைவரும் மிக அமைதியாகப் பிருஹஸ்பதியிடம், “நீர் கோபவசப்படக்கூடாது. இந்தக் கிருத யுகத்தில், நீர் கொள்ளும் கோபத்தை யாரும் கொள்ளக்கூடாது.(18) உம்மால் வேள்வி காணிக்கையளிக்கப்பட்ட பெருந்தேவனே கோபத்தில் இருந்து விடுபட்டவனாவான். ஓ! பிருஹஸ்பதி, அவன் உம்மாலோ, எங்களாலோ காணப்பட முடியாதவனாவான்.(19) அவனது அருள் கொண்டவர்கள் மட்டுமே அவனைக் காண முடியும்” என்றனர்.
அப்போது, ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அறநெறிகள் மற்றும் கடமைகளை நன்கறிந்தவர்களான ஏகதர், திவிதர், திரிதர் முதலிய முனிவர்கள், அந்தச் சபையில் பின்வருமாறு உரையாடத் தொடங்கினர்,(20) “நாங்கள் பிரம்மன் நினைவில் பிறந்த அவரது மகன்களாவோம் {பிரம்மாவின் மானஸபுத்திரர்களாவோம்} (சாதாரண வழியில் பிறக்கவில்லை). ஒரு காலத்தில் நாங்கள் எங்கள் உயர்ந்த நன்மையை அடைவதற்காக வடக்கே சென்றோம்.(21) ஆயிரம் வருடங்கள் தவமிருந்து, பெரும் தவத் தகுதியை ஈட்டிய நாங்கள், மீண்டும் நிலையான மரக்கட்டைகளைப் போல ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தோம்.(22) நாங்கள் தவமிருந்த நாடானது, மேரு மலைகளுக்கு வடக்கே, பாற்கடலின் கரைகளில் இருக்கிறது.(23) நாங்கள் எங்கள் மனத்தில் கொண்டிருந்த நோக்கமானது, தெய்வீகமான நாரயாணனை அவனது வடிவிலேயே காண்பதாகும். எங்கள் தவங்கள் நிறைவடைந்ததும், இறுதியான தூய்மைப்படுத்தும் சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பலமிக்கப் பிருஹஸ்பதி, மேக முழக்கம் போல ஆழமானதும், மிக இனிமையானதும், எங்கள் இதயத்தை இன்பத்தால் நிறைப்பதுமான ஓர் அரூபக் குரலை நாங்கள் கேட்டோம்.(24)
அந்தக் குரல், “பிராமணர்களே, உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். நாராயணனிடம் பக்தி கொண்ட நீங்கள், பெரும்பலம் கொண்ட அந்தத் தேவனைக் காண்பதில் எவ்வாறு வெல்வது என அறியும் வகையை நாடுகிறீர்கள்.(25) பாற்கடலின் வடகரையில் வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரைக் கொண்டதும், பெரும் காந்தியைக் கொண்டதுமாக ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவில் வசிக்கும் மனிதர்கள், சந்திரனின் கதிர்களைப் போன்ற வெண்நிறத்தைக் கொண்டவர்களாகவும், நாராயணனிடம் பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.(26) அனைத்திலும் முதன்மையானவனான அவனை வழிபடும் அவர்கள், தங்கள் முழு ஆன்மாவுடன் அவனிடம் அர்பணிப்புக் கொண்டவர்கள் {பக்தி செலுத்துபவர்கள்} ஆவர். அவர்கள் அனைவரும், நித்தியமானவனும், சிறப்புமிக்கவனுமான ஆயிரம் கதிர்களைக் கொண்ட தேவனில் நுழைகிறார்கள்.(27) அவர்கள் புலன்களற்றவர்களாவர். அவர்கள் உயிர்வாழ்வதற்காக எவ்வகை உணவையும் உட்கொள்வதில்லை. அவர்களது கண்கள் இமைப்பதில்லை. அவர்களது உடல்கள் எப்போதும் நறுமணத்தை வெளியிடுகின்றன. உண்மையில் வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்பவர்கள் ஒரே தேவனை மட்டுமே நம்பவும், வழிபடவும் செய்கிறார்கள். தவசிகளே, நான் அங்கே வெளிப்பட்டிருக்கிறேன் என்பதால் அங்கே செல்வீராக” என்றான் {நாராயணன்}.(28)
அரூபக் குரலின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் அனைவரும், குறிப்பிட்டு விளக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில் சென்றோம்.(29) அவனைக் காணும் ஆவலிலும், அவனுக்காக நிறைந்த இதயத்துடனும் இறுதியாக நாங்கள் வெண்தீவு என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரிய தீவை அடைந்தோம். அங்கே எங்களால் எதையும் காண முடியவில்லை. உண்மையில், அந்தப் பெருந்தேவனின் சக்தியால் எங்கள் பார்வை குருடாக்கப்பட்டதால் எங்களால் அவனைக் காண முடியவில்லை.(30) இதன் காரணமாக அந்தப் பெருந்தேவனின் கருணையால், ’போதுமான அளவு தவங்களைச் செய்யாதவனால் நாராயணனை விரைவாகக் காண முடியாது’ என்ற கருத்து எங்களின் மனத்தில் எழுந்தது.(31) இந்தக் கருத்தின் ஆதிக்கத்தால், காலத்திற்கும், இடத்திற்கும் தக்க வகையில் மீண்டும் நாங்கள் நூறு வருடங்களுக்குக் கடுந்தவங்களைச் செய்தோம். எங்கள் நோன்புகள் நிறைந்தவடைந்ததும், நாங்கள் மங்கலமான குணங்களைக் கொண்ட எண்ணற்ற மனிதர்களைக் கண்டோம்.(32) அவர்கள் அனைவரும் (நிறத்தில்) சந்திரனைப் போலத் தெரிந்தனர், அவர்களிடம் அருள் குறியீடுகள் அனைத்தும் இருந்தன. அவர்களது கரங்கள் எப்போதும் வேண்டும் வகையில் கூப்பியே இருந்தன. சிலரின் முகங்கள் வடக்கு நோக்கியும், சிலரின் முகங்கள் கிழக்கு நோக்கியும் இருந்தன.(33) அந்த உயர் ஆன்ம மனிதர்களால் செய்யப்பட்ட ஜபம் மனோஜபமாகும் (அவை வார்த்தைகளாலான மந்திரச் சொற்களைச் சொல்வதாக இல்லை). அவர்களது இதயங்கள் முழுமையாக அவனில் நிறுவப்பட்டிருப்பதன் விளைவால், ஹரி அவர்களிடம் உயர்வான நிறைவை அடைந்திருந்தான்.(34)
ஓ! தவசிகளில் முதன்மையானவரே {பிருஹஸ்பதியே}, அம்மனிதர்கள் வெளிப்படுத்திய பிரகாசமானது, அண்ட அழிவின்போது சூரியன் வெளிப்படுத்தும் காந்திக்கு ஒப்பானதாக இருந்தது.(35) உண்மையில் நாங்கள் அத்தீவே சக்திகள் அனைத்தின் வீடு என நினைத்தோம். அங்கே வசித்த அனைவரும் முற்றிலும் சமமான சக்தியுடன் இருந்தனர்.(36) பிறகு, ஓ! பிருஹஸ்பதி, நாங்கள் ஆயிரம் சூரியர்களின் குவிந்த பிரகாசத்துக்கு ஒப்பான ஓர் ஒளி எழுவதைக் கண்டோம்.(37) அங்கே வசித்தவர்கள் ஒன்றுகூடி, மதிப்புமிக்க மனோநிலையுடன் கரங்களைக் கூப்பி, முழு மகிழ்ச்சியுடன் நமஸ் (வணங்குகிறோம்) என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லிக் கொண்டே அந்த ஒளியை நோக்கி ஓடினார்கள்.(38) அவர்கள் அனைவரும் சேர்ந்து பேரொலி எழுப்பியதை நாங்கள் கேட்டோம். அந்த மனிதர்கள் அனைவரும் அந்தப் பெருந்தேவனுக்கு ஒரு வேள்வியைக் காணிக்கையாக்குவதில் ஈடுபடுவதாகத் தெரிந்தது.(39) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் அவனது சக்தியால் திடீரென எங்கள் புலன்களை இழந்தவர்களானோம். பார்வை, பலம் மற்றும் புலன்கள் அனைத்தையும் இழந்த எங்களால் வேறு எதையும் காணவோ, உணரவோ முடியவில்லை.(40)
அங்கே வசித்திருந்தவர்களின் கூட்டம் எழுப்பிய பேரொலியை மட்டுமே நாங்கள் கேட்டோம். அது {அந்தப் பேரொலி}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, வெற்றி உனதாகட்டும். ஓ! அண்டத்தைப் படைத்தவனே, உன்னை வணங்குகிறோம்.(41) ஓ! ரிஷிகேசா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! முதல் பிறவியே உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்றது. தனித்தவகையிலும், சொல் உச்சரிப்பு விதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் உண்டான அந்த ஒலி இதுவாகவே இருந்தது.(42)
அதே வேளையில், தெய்வீக மலர்கள், குறிப்பிட்ட மூலிகைகள், அச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படும் செடிகள் ஆகியவற்றின் மணங்களைக் கொண்டதுமான நறுமணமிக்க, தூய்மையான தென்றல் அங்கே வீசியது.(43) பெரும் அர்ப்பணிப்புடன் கூடியவர்களும், இதயம் நிறைந்த மதிப்பைக் கொண்டவர்களும், பஞ்சராத்ரத்தில் விதிக்கப்பட்ட விதிகளை அறிந்தவர்களுமான அந்த மனிதர்கள், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் அந்தப் பெருந்தேவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்[4].(44) அவ்வொலி எழுந்தபோது அவ்விடத்தில் ஹரி தோன்றினான் என்பதில் ஐயமில்லை. எங்களைப் பொறுத்தவரையில், அவனது மாயையால் மயங்கியிருந்த எங்களால் அவனைக் காண முடியவில்லை.(45) ஓ! அங்கிரஸ குலத்தில் முதன்மையானவரே, தென்றல் வீசுவது நின்று, வேள்வி முடிந்த பிறகு எங்களது இதயங்கள் கவலையால் கலக்கமடைந்தன.(46) தூய பரம்பரையில் வந்த அந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் நின்று கொண்டிருந்தபோது, எவரும் எங்களைக் கண்ணாலாவது, மனத்தாலாவது மதிக்கவில்லை.(47) உற்சாகம் நிறைந்தவர்களும், அர்ப்பணிப்பால் நிறைந்தவர்களும், பிரம்மமனோநிலையில் பயிற்சிகளைச் செய்பவர்களுமான அந்தத் தவசிகள் எங்களுக்கு எவ்வகை உணர்வையும் வெளிப்படுத்தவில்லை[5].(48)நாங்கள் மிகக் களப்படைந்திருந்தோம். எங்கள் தவங்கள் எங்களை மெலிவடையச் செய்திருந்தன. அந்நேரத்தில், வானத்தில் இருந்து ஓர் அரூபக் குரல் இந்த வார்த்தைகளில் எங்களிடம் பேசியது,(49) {அந்தக் குரல்}, “புறப்புலன்கள் அனைத்தும் இல்லாதவர்களான இந்த வெண்மனிதர்களே (நாராயணனைக்) காணத்தகுந்தவர்கள். இந்த வெண்மனிதர்களின் பார்வையால் கௌரவிக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள் மட்டுமே அந்தப் பெருந்தேவனைக் காணத்தகுந்தவர்கள்.(50,51) முனிவர்களே, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள். அர்ப்பணிப்பில்லாத {பக்தியற்ற} ஒருவனால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைக்} காண இயலாது.(52) அவனது பளிச்சிடும் பிரகாசத்தின் விளைவால் காணப்பட இயலாதவனாக இருக்கும் அந்தப் பெருந்தேவனை, முற்றுமுழுதாக அவனிடம் மட்டுமே நீண்ட காலமாக அர்ப்பணிப்பு பக்தி} கொண்ட மனிதர்களால் மட்டுமே காண முடியும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் செய்ய வேண்டிய பெருங்கடமை இருக்கிறது.(53) கிருத யுகம் முடிந்து, திரேதா யுகம் நேரும்போது, விவஸ்வானின் காலத்தில் {மன்வந்திரத்தில்} உலகங்களுக்குப் பேரிடர் நேரிடும். முனிவர்களே, அப்போது நீங்கள் (அந்தப் பேரிடரை விலக்குவதற்காக) தேவர்களின் கூட்டாளிகளாக வேண்டும்” {என்றது}.(54)
அமுதம் போன்ற இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட நாங்கள், அந்தப் பெருந்தேவனின் கருணையின் மூலம் நாங்கள் விரும்பிய இடத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தோம்.(55) அத்தகைய கடுந்தவங்கள், மற்றும் அர்ப்பணிப்பு மிக்க வேள்வி காணிக்கைகளின் {ஹவ்யகவ்யங்களின்} துணையின் மூலம் கூட அந்தப் பெருந்தேவனை எங்களால் காண முடியவில்லை எனும்போது, அவ்வளவு எளிதாக அவனைக் காணலாம் என நீர் எவ்வாறு நினைக்கலாம்?(56) நாராயணனே பெரும்பொருளாவான். அவனே அண்டத்தைப் படைத்தவனாவான். வேத மந்திரங்களின் துணையுடன் தெளிந்த நெய் மற்றும் வேறு உணவு வகைக் காணிக்கைகளுடன் அவனே வேள்விகளில் துதிக்கப்படுகிறான். அவன் தொடக்கமும், முடிவுமில்லாதவனாவான். அவன் வெளிப்படாதவனாவான். தேவர்கள் மற்றும் தானவர்கள் ஆகிய இருவரும் அவனையே வழிபடுகிறார்கள்” என்றனர்.(57) ஏகதரால் பேசப்பட்டவையும், அவரது தோழர்களான திவிதர் மற்றும் திரிதரால் அங்கீகரிக்கப்பட்டவையுமான இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டவரும், சத்யஸ்களால் வேண்டப்பட்டவருமான உயர்ந்த மனத்தைக் கொண்ட பிருஹஸ்பதி தேவர்களுக்குரிய துதிகளை முறையான சடங்குகளுடன் செய்து அந்த வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.(58)
மன்னன் உபரிசரனும், தனது பெரும் வேள்வியை நிறைவு செய்த பிறகு, தன் குடிமக்களை அறம்சார்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினான். இறுதியில் அவன் தன் உடலைக் கைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு, பிராமணர்களின் சாபத்தால் அவன் இன்ப உலகங்களில் இருந்து வீழ்ந்து, பூமியின் குடல்களுக்குள் ஆழமாக மூழ்கிப் போனான்.(59) ஓ! ஏகாதிபதிகளில் புலியே {யுதிஷ்டிரா}, அந்த வசுவானவன் {உபரிசரன்}, வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்தான். அவன் பூமியின் குடல்களுக்குள் ஆழ மூழ்கினாலும் அவனது அற அர்ப்பணிப்பு தணியவில்லை.(60) நாராயணனிடம் எப்போதும் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனும், நாராயணனையே தங்கள் தேவனாகக் கொண்ட புனித மந்திரங்களை எப்போதும் உரைப்பவனுமான அவன், நாராயணனின் அருளின் மூலம் மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான்.(61) பூமியின் குடல்களுக்குள் இருந்து எழுந்த மன்னன் வசு {உபரிசரன்}, தான் அடைந்த உயர்ந்த கதியின் விளைவால் பிரம்மலோகத்திற்கும் மேலான ஓர் உயர்ந்த இடத்திற்குச் சென்றான்” என்றார் {பீஷ்மர்}.(62)
உபரிசரன் அடைந்த சாபம்! – சாந்திபர்வம் பகுதி – 338-வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? விலங்குகளைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? என்பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நேர்ந்த சச்சரவு; மன்னன் உபரிசரன் சொன்ன தீர்ப்பு; பிராமணர்களால் சபிக்கப்பட்ட உபரிசரன்; தேவர்களின் கருணையாலும், நாராயணனின் அருளாலும் உயர்ந்த கதியை அடைந்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மாமன்னன் வசு நாராயணனிடம் முழுமையான பக்தியுடன் இருந்தபோது, என்ன காரணத்தினால் அவன் சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தான்? மேலும் அவன் ஏன் பூமியின் பரப்புக்குக் கீழே மூழ்கிப் போனான்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஒரு காலத்தில், பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசிய தேவர்கள், அவர்களிடம் அஜஸ் என்ற பலிகளைக் காணிக்கையாக்குவதன் மூலம் வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அஜ என்ற சொல்லின் மூலம் வெள்ளாடு என்று புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி வேறு எந்த விலங்கையும் அல்ல.(3)
முனிவர்கள், “வேத ஸ்ருதியானது, வேள்விகளில் வித்துகள் {தானியங்கள்} காணிக்கைகளாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்துகளே {தானியங்களே} அஜஸ் என்று அழைக்கப்படுகின்றன. வெள்ளாடுகளைக் கொல்வது உங்களுக்குத் தகாது.(4) தேவர்களே, விலங்குகளைக் கொல்ல விதிக்கப்படுவது நல்லோருக்கும், அறவோருக்குமான அறமல்ல. மேலும் இது கிருத யுகமாகும். அறம்சார்ந்த இந்த யுகத்தில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படலாம்?” என்றனர்”.(5)
பீஷ்மர் தொட்ரந்தார், “முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் இந்த உரையாடல் நேர்ந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் முதன்மையானவனான வசு அவ்வழியில் வந்தான். பெருஞ்செழிப்பைக் கொண்ட அந்த மன்னன், தன் துருப்புகள், வாகனங்கள் மற்றும் விலங்குகளுடன் ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தான்.(6)
வானத்தின் மூலம் அந்த இடத்திற்கு வரும் மன்னன் வசுவைக் கண்ட அந்தப் பிராமணர்கள், தேவர்களிடம், “இவன் எங்கள் ஐயங்களை விலக்குவான்.(7) இவன் வேள்விகளைச் செய்பவன். இவன் கொடைகளை அளிக்கும் ஈகையாளன். இவன் எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுபவனாவான்” என்றனர்.(8)
இவ்வாறு தங்களுக்குள் பேசிக்கொண்ட முனிவர்களும் தேவர்களும் விரைவாக மன்னன் வசுவிடம் வந்து அவனைக் கேள்வி கேட்டனர். {அவர்கள்}, “ஓ! மன்னா, எதைக் கொண்டு ஒருவன் வேள்விகளைச் செய்ய வேண்டும்?(9) அவன் வெள்ளாட்டைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? மூலிகைகள் மற்றும் செடிகளைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? எங்களுடைய இந்த ஐயங்களை நீ விலக்குவாயாக. இக்காரியத்தில் நாங்கள் உன்னையே நீதிபதியாகக் கொள்கிறோம்” என்றனர்.(10)
இவ்வாறு அவர்களால் சொல்லப்பட்ட வசு {உபரிசரன்}, பணிவுடன் தன் கரங்களைக் கூப்பியபடி அவர்களிடம், “பிராமணர்களில் முதன்மையானவர்கள், இக்காரியத்தில் உங்கள் கருத்து என்ன என்பதை உண்மையில் எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான்.(11)
முனிவர்கள், “ஓ! மன்னா, வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். எனினும், தேவர்களோ விலங்குகளைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டும் எனச் சொல்கின்றனர். எங்களுக்கிடையில் நீதிபதியாக இருந்து இந்தக் கருத்துகளில் எது சரி என்பதைச் சொல்வாயாக” என்றனர்”.(12)
பீஷ்மர் தொடர்ந்தார், “தேவர்களால் சொல்லப்படும் கருத்து என்ன என்பதை அறிந்த வசு {உபரிசரன்}, அவர்களுக்குச் சாதகமாக விலங்குகளைக் கொண்டே வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னான்.(13)
சூரியனின் காந்தியுடன் கூடிய முனிவர்கள் அனைவரும் இந்தப் பதிலால் மிகவும் கோபமடைந்தனர். தேரில் அமர்ந்திருந்தவனும், (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்தவனுமான வசுவிடம் அவர்கள்,(14) “நீ (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்ததால், சொர்க்கத்தில் இருந்து வீழ்வாயாக. ஓ! ஏகாதிபதி, இந்த நாள் முதல் நீ வானத்தில் பயணிக்கும் உன் சக்தியை இழப்பாயாக. எங்கள் சாபத்தால் நீ பூமியின் பரப்புக்கு அடி ஆழத்தில் மூழ்குவாய்” என்றனர்.(15)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முனிவர்கள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், உடனே கீழே விழுந்த மன்னன் உபரிசரன், பூமியின் குழிக்குச் சென்றான். எனினும், நாராயணனின் ஆணையின் பேரால் அவனது நினைவு தவறவில்லை.(16) பிராமணர்களால் வசுவுக்கு இடப்பட்ட சாபத்தால் துன்புற்ற தேவர்கள், அவனுடைய நற்பேற்றின் காரணமாக, அந்தச் சாபத்தை எவ்வாறு சமன் செய்வது {தணிப்பது} என்பதைக் கவலையுடன் நினைக்கத் தொடங்கினர்.(17)
அவர்கள், “இந்த உயர் ஆன்ம மன்னன் நம் நிமித்தமாகவே சபிக்கப்பட்டிருக்கிறான். சொர்க்கவாசிகளான நாம் ஒன்று சேர்ந்து அவன் நமக்குச் செய்ததற்குப் பதிலாக அவனுக்கு நன்மையைச் செய்ய வேண்டும்.” என்றனர்.(18)
நினைவின் துணைகொண்டு இதைத் தங்கள் மனங்களில் தீர்மானித்த தேவர்கள் மன்னன் உபரிசரன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவனது முன்னிலைக்குச் சென்ற அவர்கள்,(19) பிராமணர்களின் பெருந்தேவனிடம் (நாராயணனிடம்) நீ அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருக்கிறாய். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெருந்தேவனாக இருக்கும் அவன், உன்னில் நிறைவடைந்திருப்பதால், உன் மீது விழுந்திருக்கும் சாபத்தில் இருந்து உன்னை மீட்பான்.(20) எனினும், உயர் ஆன்ம பிராமணர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே முறையானது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உண்மையில் அவர்களது தவங்கள் கனி தர வேண்டும்[1].(21) உண்மையில் நீ வானத்தில் இருந்து பூமிக்கு ஏற்கனவே விழுந்துவிட்டாய். எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்.(22) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ இந்தக் குழியில் இருக்கும்வரை (எங்கள் வரத்தின் மூலம் உனக்குரிய வாழ்வாதாரத்தைப்) பெறுவாயாக.(23) பிராமணர்களால் குவிந்த மனத்துடனும், புனித மந்திரங்களின் துணையுடனும் வேள்விகளில் ஊற்றப்படுவதும், வசுதாரம் {வஸோர்த்தாரை / ஆஜ்யதாரை} என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான தெளிந்த நெய்யின் இழையானது, எங்களது பொறுப்பில் உனதாகட்டும். உண்மையில், பலவீனமோ, மனத்தளர்வோ உன்னைப் பற்றாது[2].(24) ஓ! மன்னர்களின் மன்னா, பூமியின் குழிக்குள் வாழும்போது நீ வசுதாரம் என்றழைக்கப்படும் தெளிந்த நெய்க்கீற்றுகளைக் குடிக்கப் போவதால், பசியோ, தாகமோ உன்னைப் பீடிக்காது. உன் சக்தியும் குன்றாது. நாங்கள் உனக்குத் தரும் இந்த வரத்தின் விளைவால், தேவர்களின் தேவனான நாராயணன், எங்களிடம் நிறைவடைந்து, உன்னை இங்கிருந்து பிரம்மலோகத்திற்குக் கொண்டு செல்வான்” என்றார்கள்.(25)மன்னனுக்கு இந்த வரங்களை அளித்த பிறகு, மன்னனுக்கு இவ்வரங்களை அளித்த தேவலோகவாசிகளும், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்த முனிவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றனர்.(26) அப்போது அந்த வசுவானவன், ஓ! பாரதா, அண்டத்தைப் படைத்தவனைத் துதிக்கத் தொடங்கி, பழங்காலத்தில் நாராயணனின் வாயில் இருந்து வெளிவந்த புனித மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டிருந்தான்[3].(27) அம்மன்னன் பூமியின் குழிக்குள் வசித்துவந்தாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகளில் செய்யப்படும் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்கள் அனைவரின் தலைவனான அந்த ஹரியை வழிபட்டு வந்தான்.(28) ஹரி என்றும் அழைக்கப்படும் நாராயணன், அந்தத் துதிகளின் விளைவால், நிறைவடைந்து, தன்னையே ஒரே புகலிடமாக எண்ணி தன்னையே முழுமையாகச் சார்ந்திருந்தவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான அவனிடம் உயர்ந்த நிறைவையடைந்தான்.(29)அப்போது, வரங்களை அளிப்பவனான சிறப்புமிக்க விஷ்ணு, பணியாளனாகத் தன்னிடம் காத்திருந்தவனும், பறவைகளில் முதன்மையானவனும், பெரும் வேகம் கொண்டவனுமான கருடனிடம் இந்த இனிய இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(30) “ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. அற ஆன்மா கொண்டவனாகவும், கடும் நோன்புகளைக் கொண்டவனாகவும், வசு என்ற பெயரில் ஒரு பெரும் மன்னன் இருக்கிறான். பிராமணர்களின் கோபத்தால் அவன் பூமியின் குழிக்குள் வீழ்ந்திருக்கிறான்.(31) பிராமணர்கள் (தங்கள் சாபம் பலித்திருப்பதால்) போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டு இருக்கின்றனர். நீ இப்போது அந்த மன்னனிடம் செல்வாயாக.(32) ஓ! கருடா, பூமியின் குழிக்குள் இப்போது வசித்து வருபவனும், வானத்தில் பறக்க முடியாதவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான அந்த உபரிசரனிடம் என் ஆணையின் பேரில் சென்று, தாமதமில்லாமல் அவனை உயர்ந்த ஆகாயத்திற்குக் கொண்டு வருவாயாக” என்றான் {விஷ்ணு}.(33)
விஷ்ணுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தன் சிறகுகளை விரித்து, காற்றின் வேகத்தில் விரைந்து, மன்னன் வசு வாழ்ந்துவந்த பூமியின் குழிக்குள் நுழைந்தான்.(34) திடீரென அந்த வினதையின் மகன் {கருடன்}, அம்மன்னனைத் தூக்கிக் கொண்டு வானத்தில் உயரப் பறந்து, அங்கேயே தன் அலகுகளில் இருந்து மன்னனை விடுவித்தான்.(35) அந்தக் கணத்தில் மீண்டும் தன் தேவ வடிவத்தை அடைந்த மன்னன் உபரிசரன், பிரம்மலோகத்திற்குள் மீண்டும் நுழைந்தான்.(36) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியிலேயே அந்தப் பெரும் மன்னன் பேச்சின் களங்கத்திற்காகப் பிராமணர்களின் சாபத்தின் மூலம் முதலில் விழுந்து, பெருந்தேவனின் (விஷ்ணுவின்) ஆணையின் பேரில் மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(37) அனைத்திலும் முதன்மையானவனும், பலமிக்கவனுமான தலைவன் ஹரியை மட்டுமே அவன் {உபரிசரன்} அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} வழிபட்டு வந்தான். இந்த அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டின் காரணமாகத்தான் அம்மன்னன், பிராமணர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட சாபத்தில் இருந்து தப்புவதிலும், பிரம்மனின் பேரின்ப உலகத்தை மீண்டும் அடைவதிலும் மிக விரைவாக வென்றான்”.(38)
பீஷ்மர் தொடர்ந்தார், “பிரம்மனின் ஆன்ம மகன்களின் தோற்றம் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் எவ்வாறு வெண்தீவிற்கு {ஸ்வேதத்வீபத்திற்குச்} சென்றார் என்பதை நான் இப்போது சொல்லப் போகிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பாயாக”.(39)
நாராயணத் துதி! – சாந்திபர்வம் பகுதி – 339-நாராயணனைக் காணச் சென்ற நாரதர்; நாரதர் சொன்ன நாராயணத் துதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்றழைக்கப்படும் பரந்த ஆட்சிப்பகுதியை அடைந்த சிறப்புமிக்க முனிவர் {நாரதர்}, (நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னது போன்ற) சந்திர காந்தியைக் கொண்ட அதே வெண்மனிதர்களைக் கண்டனர்.(1) நாராயணனைக் காண விரும்பிய அவர், மிகக் கடினமான நோன்புகளை நோற்றபடியே, புனிதமான மந்திரங்களை அமைதியாக உரைப்பதில் அமைதியாகவும், கவனமாகவும் ஈடுபட்டு அங்கே வசிக்கத் தொடங்கினார்.(2) குவிந்த மனத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர், கரங்களை உயர்த்தி, யோகத்தில் நின்றபடி, குணங்கள் கொண்ட மற்றும் குணங்கள் அனைத்தும் அற்ற ஆன்மாவான {சகுண மற்றும் நிர்க்குண பரமாத்மாவான} அண்டத்தின் தலைவனிடம் பின்வரும் பாடலைப் பாடினார்.(3)
நாரதர், “ஓ! தேவர்களின் தேவா {தேவதேவேசனே}, ஓ! செயல்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனே {நிஷ்கிரியனே}, குணங்கள் அற்றவனே {நிர்க்குணனே}, உலகங்கள் அனைத்திற்கும் சாட்சியாக இருப்பவனே {லோகஸாக்ஷியே}, க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுபவனே {க்ஷேத்ரஜ்ஞனே}, அனைத்திலும் முதன்மையானவனே {புருஷோத்தமனே}, எல்லையற்றவனே {அநந்தனே}, புருஷன் என்றழைக்கப்படுபவனே {புருஷனே}, பெரும்புருஷனே {மஹாபுருஷனே}, புருஷர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {புருஷோத்தமனே}, முக்குணங்களின் ஆன்மாவானவனே {த்ரிகுணனே}, முதன்மையானவன் என்று அழைக்கப்படுபவனே {பிரதாநனே}, அமுதமாக இருப்பவனே {அம்ருதனே}, இறப்பற்றவன் என்று அழைக்கப்படுபவனே {அம்ருதாக்யனே}, அனந்தன் (சேஷன்) என்றழைக்கப்படுபவனே {அநந்தாக்யனே}, வெளியாக {ஆகாயமாக} இருப்பவனே {வியோமனே}, தொடக்கமற்றவனே {அம்ருதாத்மாவே}, வெளிப்பட்டும், வெளிப்படாமலும், இருந்தும், இல்லாமலும் இருப்பவனே {ஸதஸத்வ்யக்தாவ்யக்தனே}, வாய்மையின் இல்லமாக இருப்பவனே {ருத்தாமனே}, தேவர்களில் முதல்வனே {அதிதேவனே} (நாராயணனே),
செல்வங்களை (அல்லது செயல்களின் கனிகளை) அளிப்பவனே {வஸ்பிரதனே}, தக்ஷன் மற்றும் படைப்பின் தலைவர்கள் பிறரோடு அடையாளங்காணப் படுபவனே {பிரஜாபதியே}, அஸ்வதம் {அரசமரம்} மற்றும் பெரும் மரங்களாக இருப்பவனே {ஸுப்ரஜாபதியே}, நான்கு தலை பிரம்மனே {வநஸ்பதியே}, படைக்கப்பட்ட பொருட்கள் அடைதிலும் தலைவனே {மஹாபிரஜாபதியே}. வாக்கின் தலைவனே {ஊர்ஜஸ்பதியே}, அண்டத்தின் (அல்லது இந்திரனின்) தலைவனே {வாஸ்பதியே}, நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மாவே {ஜகத்பதியே}, சூரியனாக இருப்பவனே {மநஸ்பதியே}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சாக இருப்பவனே {திவஸ்பதியே}, நீர்நிலைகளின் தலைவனே (வருணனே) {மருத்பதியே}, பேரரசனே {ஸலிலபதியே}, அல்லது மன்னனோடு அடையாளங்காணப்படுபவனே {பிருதிவீபதியே}, திசைப்புள்ளிகளைச் சார்ந்த லோகபாலர்களோடு அடையாளம் காணப்படுபவனே {திக்பதியே}, இறுதி அழிவின் போது அண்டத்தின் புகலிடமாக இருப்பவனே {பூர்வநிவாஸனே}, வெளிப்படாதிருப்பவனே {குஹ்யனே},
பிரம்மனுக்கு வேதங்களைக் கொடுத்தவனே {பிரம்மபுரோஹிதனே}, வேள்விகளோடு அடையாளம் காணப்படுபவனே {பிரம்மகாயிகனே}, உடல்களின் துணையுடன் பிராமணர்களால் அடையப்படும் வேத கல்வியும், தேவர்களின் நால்வகைக் கோட்பாடுகளோடு அடையாளம் காணப்படுபவனே {ராஜகனே}, நான்கு வர்ணங்களாக இருப்பவனே {சாதுர்மஹராஜிகனே}, பிரகாசம் கொண்டவனே {ஆபாஸுரனே}, பெரும் பிரகாசம் கொண்டவனே {மஹாபாஸுரனே}, காயத்ரி மற்றும் பிற புனித மந்திரங்களுடன் ஏழு பெரும் வேத காணிக்கைகளை ஏற்பவனே {சப்தமஹாபாகனே}, யமனே {யாம்யனே}, சித்திரகுப்தனும், யமனின் தொண்டர்களாக ஆனவனே {மஹாயாம்யனே}, யமனின் மனைவியே {ஸம்ஜ்ஞாஸம்ஜ்ஞனே}, துஷிதன் என்றழைக்கப்படும் தேவ வகையைச் சேர்ந்தவனே {துஷிதனே}, மஹா துஷிதன் என்றழைக்கப்படும் வேறு தேவ வகையைச் சேர்ந்தவனே {மஹாதுஷிதனே}, காலனாக இருப்பவனே {பிரமர்த்தநனே}, ஆசையாகவும், காலனுக்குத் துணை புரிய படைக்கப்படும் நோய்கள் அனைத்தாகவும் {பரிநிர்மிதனே} இருப்பவனே, உடல்நலமாகவும், நோயில் இருந்துவிடுபட்ட நிலையாகவும் {அபரிநிர்மிதனே} இருப்பவனே, ஆசைகள் மற்றும் விருப்பங்களுக்கு உட்படுபவனே {வசவர்த்தினே}, ஆசைகள் மற்றும் விருப்பங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனே {அவசவர்த்தினே}, பல்வேறு இனங்களில், வடிவங்களில் எல்லையில்லாமல் வெளிப்படுபவனே {அபரிமிதனே}, தண்டிக்கப்படுபவனே {வசவர்த்தினே}, தண்டிப்பவனே {அவசவர்த்தினே},
(அக்னி ஹோத்ரம் முதலிய) சிறு வேள்விகளாக இருப்பவனே {யஜ்ஞனே}, (பிரம்ம வேள்வி முதலிய) பெரும் வேள்விகளாக இருப்பவனே {மஹாயஜ்ஞனே}, ரித்விஜர்களாக இருப்பவனே {அஸம்யஜ்ஞனே}, வேள்விகள் அனைத்தின் தோற்றமாக (வேதங்களாக) இருப்பவனே {யஜ்ஞஸம்பவனே}, நெருப்பாக இருப்பவனே {யஜ்ஞயோநியே}, {யஜ்ஞகர்ப்பனே} வேள்விகள் அனைத்தின் இதயமாக (மந்திரங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்படும் ஸ்லோகங்களாக) இருப்பவனே {யஜ்ஞஹ்ருதயனே}}, வேள்விகளில் பாடப்படும் பொருளாக இருப்பவனே {யஜ்ஞஸ்துதனே}, வேள்வி காணிக்கைகளின் பங்குகளை எடுத்துக் கொள்பவனே {யஜ்ஞபாகஹரனே}, ஐந்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவனே {பஞ்சயஜ்ஞனே}, (பகல், இரவு, மாதம், பருவகாலங்கள், வருடம் என்ற) ஐந்து காலப்பிரிவுகளை, அல்லது காலப்பகுதிகளை உண்டாக்குபவனே {பஞ்சகாலகர்த்ருபதியே}, பஞ்சராத்ரம் என்றழைக்கப்படும் சாத்திரங்களைத் தவிர வேறு எதனாலும் புரிந்துகொள்ளப்பட முடியாதவனே {பஞ்சராத்ரிகனே}, எதிலிருந்தும் சுருங்காதவனே {வைகுண்டனே}, வெல்லப்படமுடியாதவனே {அபராஜிதனே}, (உடற்கட்டு இல்லாமல்) மனமாக மட்டுமே இருப்பவனே {மானஸிகனே}, {நாவமிகனே} பெயரால் மட்டுமே அறியப்படுபவனே {நாமநாமிகனே},
தலைவன் பிரம்மனாகவே இருப்பவனே {பரஸ்வாமியே}, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நோன்புகள் மற்றும் நியமங்களை நிறைவு செய்தவனே {ஸுஸ்நாதனே}, (திரிதண்டம்தரித்த) அன்னப்பறவையாக இருப்பவனே {ஹம்சனே}, (ஒரே தண்டம் தரிக்கும்) பேரன்னப்பறவையாக இருப்பவனே {பரமஹம்சனே}, (தண்டமில்லாத) முதன்மையான அன்னப்பறவையாக இருப்பவனே {மஹாஹம்ஸனே}, {பரமஜ்ஞேயனே} வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவனாக இருப்பவனே {பரமயாஜ்ஞிகனே}, {சாங்கிய யோகமாக இருப்பவனே {ஸாங்க்யயோகனே}, சாங்கிய தத்துவத்தின் உடல்வடிவமாக இருப்பவனே {ஸாங்க்யமூர்த்தியே}, ஜீவன்கள் அனைத்திலும் வசிப்பவனே {அம்ருதேசயனே}, அனைவரின் இதயங்களிலும் வாழ்பவனே, ஒவ்வொரு புலனிலும் வசிப்பவனே {ஹிரண்யேசயனே}, பெருங்கடலின் நீரில் மிதப்பவனே, வேதங்களில் வாழ்பவனே {வேதேசயனே}, (அண்டம் உண்டாகும்போது முட்டையின் தோற்றத்தில்) தாமரையில் கிடப்பவனே {பத்மேசயனே}, அண்டத்தின் தலைவனே {தேவேசயனே}, வழிபாட்டாளர்களைக் காப்பதற்கு எங்கும் செல்லும் துருப்புகளைக் கொண்டவனே {விஷ்வக்ஸேநனே}, உன்னை வணங்குகிறேன்.
உயிரினங்கள் அனைத்துமாகப் பிறப்பவன் {ஜகதந்வயன்} நீயே. (அனைத்து உயிரினங்களையும் கொண்ட) அண்டத்தின் தோற்றுவாய் {ஜகத்ப்ரக்ருதி} நீயே. நெருப்பையே வாயாகக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் நீரில், குதிரைத் தலையுடன் வெளிப்பட்டுச் செல்லும் நெருப்பு {வடவாமுகாக்நி} நீயே. வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் புனிதமாக்கப்பட்ட நெய் {ஆகுதி} நீயே. (உடலின் நெருப்பு, அல்லது வெப்பத்தைத் தூண்டி, அதை வாழவும் வளரவும் செய்யும்) தேரோட்டி {ஸாரதி என்ற அக்நி} நீயே. வஷட் {வஷட்காரம்} நீயே. ஓம் ஏன்ற ஓரசை {ஓங்காரம்} நீயே. தவங்கள் நீயே. மனம் நீயே. சந்திரமாஸ் {சந்திரன்} நீயே. வேள்வி நெய்யைப் புனிதமாக்குபவன் ச்சக்ஷுராஜ்யம்} நீயே. சூரியன் நீயே. திசைகளின் நான்கு முக்கியப் புள்ளிகளில் நின்றிருக்கும் யானைகள் {திக்கஜம்} நீயே. திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுபவன் {திக்பாநு} நீயே. துணைத்திசைகள் அனைத்திற்கும் ஒளியூட்டுபவன் {விதிக்பாநு} நீயே.
குதிரை தலை கொண்டவன் {ஹயசிரஸ்} நீயே. ரிக் வேதத்தின் முதல் மூன்று மந்திரங்கள் {பிரதமத்ரிஸுபர்ணன்} நீயே. (பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற) பல்வேறு வகை மனிதர்களின் பாதுகாவலன் {வர்ணதரன்} நீயே. (கார்ஹபத்தியத்தின் தொடக்கத்தில் உள்ள) ஐந்து நெருப்புகள் பஞ்சாக்நி} நீயே. நாசி என்றழைக்கப்படும் வேள்வி நெருப்பை மூன்றுமுறை முடுக்கியவன் {திரிணாசிகேதன்} நீயே. (வேதங்களுடைய) ஆறு அங்கங்களின் புகலிடம் {ஷடங்கநிதாநன்} நீயே. வேள்விகள் மற்றும் பிற அறச் சடங்குகளில் சாமங்களைப் பாடுவதில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்கள் நீயே. பிராக்ஜோதிஷன் நீயே, முதல் சாமத்தைப் பாடுபவன் நீயே {ஜியேஷ்டஸாமகன்}. அதர்வசிரஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் உபநிஷத்தின் உடல்வடிவம் {அதர்வசிரஸ்} நீயே. (சூரிய, சக்தி, கணேச, சிவ மற்றும் விஷ்ணு வழிபாடு தொடர்புடைய) முதன்மையான ஐந்து சாத்திரங்களின் பொருள் {பஞ்சமஹாகல்பன்} நீயே.
நீரின் நுரையை மட்டுமே உண்டு வாழும் ஆசான் என்று அழைக்கப்படுபவன் {பேநபாசார்யன்} நீயே. வாலகில்யன் நீயே. யோகத்தில் இருந்து வீழாதவனின் உடல்வடிவம் {வைகாநஸன்} நீயே. சரியான தீர்மானம் அல்லது அறிவின் உடல்வடிவம் {அபக்நயோகனும், அபக்நபரிஸங்க்யாநனும்} நீயே. யுகங்களின் தொடக்கம் {யுகாதி} நீயே. யுகங்களின் நடுப்பகுதி {யுகமத்யன்} நீயே. அவற்றின் முடிவும் {யுகநித்நன்} நீயே. ஆகண்டலன் (இந்திரன்) நீயே. பிராசீனகர்ப்பனும், கௌசிகனும் நீயே. புருஷ்டுதன் நீயே. புருஹூதன் நீயே, அண்டத்தின் கைவினைஞன் நீயே. அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஷ்வகிருத்} நீயே. எல்லையற்ற அசைவுகளைக் கொண்டவன் {விஷ்வஜித்} நீயே. எல்லையில்லா உடல்களைக் கொண்டவன் {விஷ்வரூபன்} நீயே. முடிவில்லாதவன் {அநந்தகதி} நீயே, தொடக்கமில்லாதவன் {அநந்தபோகன்} நீயே, நடுவுநிலை இல்லாதவன் {அநாதி} நீயே. வெளிப்படாத நடுப்பகுதியைக் கொண்டவன் {அமத்யன்} நீயே.
வெளிப்படாத முடிவைக் கொண்டவன் {அவ்யக்தமத்யனும், அவ்யக்தநிதநனும்} நீயே. நோன்புகளை இல்லமாகக் கொண்டவன் {விரதாவாஸன்} நீயே. பெருங்கடலில் வசிப்பவன் {ஸமுத்ராதிவாஸன்} நீயே. புகழ், தவங்கள், தற்கட்டுப்பாடு, செழிப்பு, அறிவு, பெருஞ்சாதனைகள் மற்றும் அண்டத்திற்குரிய அனைத்தின் இல்லமாக இருப்பவன் {ய்யோவாஸனும், தபோவாஸனும், தமர்வாஸனும், லக்ஷ்ம்யாவாஸனும், வித்யாவாஸனும், கீர்த்யாவாஸனும், ஸ்ரீவாஸனும், ஸர்வவாஸனும்} நீயே. வாசுதேவன் நீயே. அனைத்து விருப்பங்களையும் அருள்பவன் {ஸர்வச்சந்தகன்} நீயே. ராமனைத் தன்தோள்களில் சுமந்த குரங்கு {ஹரிஹரயன்} நீயே. பெருங்குதிரை வேள்வி {ஹரிமேதன்} நீயே. பெரும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளைப் பங்காகப் பெறுபவன் {மஹாயஜ்ஞபாகஹரன்} நீயே. வரங்களையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அளிப்பவன் {வரப்ரதனும், ஸுகப்ரதனும், தனப்ரதனும்} நீயே. ஹரிக்கு அர்ப்பணிப்புள்ளவன் நீயே. புலனடக்கம் கொண்டவன் {ஹரிமேதன்} நீயே. நோன்புகளும், நியமங்களும் {யமனும், நியமனும்} நீயே. பேரழிவுகள் {கிருச்ரன்} நீயே, கடும் பேரழிவுகள் {அதிக்ருச்ரன்} நீயே, மிகக் கடும் பேரழிவுகளும் {மஹாக்ருச்ரன்} நீயே.
நோன்புகள் மற்றும் அற, பக்திச் சடங்குகளைச் செய்பவன் {நியமதரனும், நிவ்ருத்தப்ரதமனும்} நீயே. பிழைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் {நிவ்ருத்திதர்ம்பரவசகதன்} நீயே. பிரம்மச்சாரி {பிரவசநகதனே} நீயே. பிருசினியின் கருவறையில் பிறந்தவன் {பிருச்நிகர்ப்பப்ரவருததனே} நீயே. வேதசடங்குகள் மற்றும் செயல்கள் அனைத்தும் பிறப்பெடுத்த இடம் {பிரவ்ருத்தவேதவிக்ரியன்} நீயே. பிறப்பில்லாதவன் {அஜன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகதி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் கண்களைச் செலுத்துபவன் {நக்ராஹ்யன்} நீயே. புலன்களால் புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {அக்ஷயன்} நீயே. சிதைவுக்கு உள்ளாகாதவன் {அசலன்} நீயே. பெரும்பலம் கொண்டவன் {மஹாவிபூதி} நீயே. பார்க்கமுடியாத அளவுக்குப் பரந்த உடலைக் கொண்டவன் {மஹாத்ம்யசரீரன்} நீயே. புனிதமானவனும் {பவித்ரனும்}, மிகப் புனிதமானவனும் {மஹாபவித்ரனும்} நீயே. தங்கமயமானவன் {ஹிரண்யமயன்} நீயே.
பரந்தவன் {பிருஹத்} நீயே. தர்க்கம் அல்லது வாதத்தின் கருத்துக்கு அப்பாற்பட்டவன் {அப்தர்க்யன்} நீயே. அறிந்து கொள்ளப்பட முடியாதவன் {அவிஜ்ஞேயன்} நீயே. காரணங்களில் முதன்மையானவன் {பிரம்மாக்ரியன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் படைப்பவனும் {பிரஜஸர்க்ககரன்}, அவற்றை அழிப்பவனும் {பிரஜாநித்னகரன்} நீயே. பெரும் மாயசக்திகளைக் கொண்டவன் {மஹாமாயாதரன்} நீயே. சித்திரசிகண்டி என்றழைக்கப்படுபவன் நீயே. வரங்களை அளிப்பவன் {வரப்ரதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளின் பங்கை ஏற்பவன் {புரோடோசபாகஹரன்} நீயே. வேள்விகள் அனைத்தில் இருந்தும் தகுதியை அடைபவன் {கதாத்வரன்} நீயே.
ஐயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் {சிந்நத்ருஷ்ணன்} நீயே. எங்கும் நிறைந்தவன் {ஸர்வதோவ்ருத்தன்} நீயே. பிராமணனின் வடிவம் கொண்டவன் {பிராம்மணரூபன்} நீயே. பிராமணர்களிடம் அன்பு கொண்டவன் {பிராம்மணபிரியன்} நீயே. அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஷ்வமூர்த்தி} நீயே. மிகப் பரந்த வடிவைக் கொண்டவன் {மஹாமூர்த்தி} நீயே. நண்பர்களில் பெரியவன் {பாந்தவன்} நீயே. வழிபாட்டாளர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவன் {பக்தவத்ஸலன்} நீயே. பிராமணர்களின் பெருந்தேவன் {பிராம்மண்யதேவன்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட சீடன் நானே. நான் உன்னைக் காண விரும்புகிறேன். விடுதலையின் வடிவில் இருக்கும் {நிர்வகல்பகஜ்ஞானத்தின் பொருட்டு} உன்னை நான் வணங்குகிறேன்” {என்று வேண்டினார் நாரதர்}.(4)
நோய் நீக்கும் புராணம்! – சாந்திபர்வம் பகுதி – 340-நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாராயாணன்; நாரதருக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; தன் இயல்பையும், தனது அவதாரங்களையும் நாரதருக்கு எடுத்துச் சொன்ன நாராயணன்; பிரம்மன் காணாத நாராயணனின் வடிவத்தைக் கண்ட நாரதர்; நாராயணீயத்தின் மகிமையை உரைத்த பீஷ்மர்; படிப்பதாலும், கேட்பதாலும், நோய் நீங்கும் பலனைத் தரும் புராணம்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பிறர் அறியாத பெயர்களால் பாடப்பட்டவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான தெய்வீக நாராயணன், தவசி நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(1) அவனது வடிவம் சந்திரனை விடத் தூய்மையானதாகவும், சில தன்மைகளில் சந்திரனில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தது. அவன் சுடர்மிக்க நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். அந்தப் பலமிக்கத் தலைவன் விஷ்டி என்ற வடிவத்தில் இருந்தான்.(2) சில தன்மைகளில் கிளியின் இறகுகளுக்கு ஒப்பானவனாகவும், சில தன்மைகளில் தூய படிகத் திரளுக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் மை மலைக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் தூய்மையான தங்கத் திரளுக்கு ஒப்பாகவும் அவன் இருந்தான்.(3) அவனது நிறம் முதலில் அமையும் பவளத்திற்கு ஒப்பானதாகவும், வெண்மையாகவும் இருந்தது. சில தன்மைகளில் அந்த நிறம் தங்கவண்ணமாகவும், சில தன்மைகளில் வைடூரியத்திற்கு ஒப்பாகவும் இருந்தது.(4) சில தன்மைகளில் நீலவைடூரிய வண்ணத்திற்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் இந்திரநீலக்கல்லுக்கு ஒப்பாகவும் இருந்தது. சில தன்மைகளில் மயில்கழுத்தின் வண்ணத்திற்கும், சிலவற்றில் முத்து மாலைக்கும் ஒப்பானதாக இருந்தது.(5)
அந்த நித்திய தேவன், தன் மேனியில் பல்வேறு வகைகளிலான இந்த வண்ணங்களைச் சுமந்தபடி நாரதரின் முன்பு தோன்றினான். ஆயிரங்கண்களைக் கொண்டவனாகவும், பேரழகுவாய்ந்தவனாகவும் அவன் இருந்தான். நூறு தலைகளையும், நூறு கால்களையும் கொண்டிருந்தான்.(6) ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களைக் கொண்டிருந்தான். இருப்பினும் அவன் மனத்திற்கு முழுமையாகப் புலப்படாதவனாகவே தோன்றினான். அவனது ஒரு வாயால் ஓம் என்ற ஓரசையையும், ஓம்-மைத்தொடர்ந்து காயத்ரியையும் {காயத்ரி மந்திரத்தையும்} சொன்னான்.(7) மனத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைந்திருந்தவனும், ஹரி மற்றும் நாராயணன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவனுமான அந்தப் பெருந்தேவன், நான்கு வேதங்களில் அரண்யகம் என்ற பெயரில்அறியப்பட்ட பல மந்திரங்களைச் சொன்னான்.(8) தேவர்கள் அனைவரின் தலைவனும், வேள்விகளில் துதிக்கப்படுபவனுமான அந்தப் பெருந்தேவன், தன் கரங்களில் ஒரு வேள்வி பீடத்தையும், ஒரு கமண்டலுவையும், சில வெண் ரத்தினங்களையும், பாதணிகள் இரண்டையும், தர்ப்பைப் புற்கட்டு ஒன்றையும், ஒரு மான் தோலையும், பற்குச்சி ஒன்றையும், சுடர்மிக்கச் சிறு நெருப்பையும் கொண்டிருந்தான்[1].(9) உற்சாகம் மிக்க ஆன்மா கொண்டவரும், மறுபிறப்பாளரும், வாக்கைக் கட்டுப்படுத்தியவருமான நாரதர், அந்தப் பெருந்தேவனை வணங்கித் துதித்தார்.(10) அவ்வாறு மதிப்புடன் தலைவணங்கி நின்றவரிடம் {நாரதரிடம்}, சிதைவறியாதவனும், தேவர்கள் அனைவரிலும் முதல்வனுமான அவன் {நாராயணன்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(11)அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “பெரும் முனிவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர் என்னைக் காண்பதற்காக இந்த ஆட்சிப்பகுதிக்கு வந்தனர்.(12) எனினும், அவர்களால் தங்கள் விருப்பங்களைக் கனியச் செய்ய இயலவில்லை. தங்கள் மொத்த இதயங்களுடன் என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்களைத் தவிர வேறு எவராலும் என்னைக் காண முடியாது. உம்மைப் பொறுத்தவரையில், என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் நிச்சயம் முதன்மையானவர் நீர்.(13) இந்த உடல்கள் நான் ஏற்கும் சிறந்த உடல்களாகும். ஓ! மறுபிறப்பாளரே, இவை தர்மனின் இல்லத்தில் பிறந்தன. நீர் எப்போதும் அவர்களை வணங்கி, அந்த வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட விதிகளுடன் கூடிய சடங்குகளைச் செய்வீராக.(14) ஓ! பிராமணரே, நீர் விரும்பும் வரங்களை என்னிடம் கேட்பீராக. இன்று நான் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறேன், இப்போது சிதைவிலும், அழிவிலும் இருந்து விடுபட்ட என அண்ட வடிவில் உமக்கு முன்பு தோன்றியிருக்கிறேன்” என்றான் {நாராயணன்}.(15)
நாரதர், “ஓ! புனிதமானவனே, இன்று உன் காட்சி கிடைக்கப்பெற்றதால், ஓ! தேவா, நான் நோற்று வந்த என் தவங்கள், தற்கட்டுப்பாடு, நோன்புகள் மற்றும் நியமங்கள் அனைத்தும் தாமதமில்லாமல் கனிந்திருப்பதாகக் கருதுகிறன்.(16) உண்மையில், ஓ! நித்திய தலைவா, இன்று உன்னை நீ எனக்கு வெளிப்படுத்தியதே நான் வேண்டிய உயர்ந்த வரமாகும். ஓ! புனிதமானவனே, அண்டத்தையே உன் கண்ணாகக் கொண்டவன் நீயே. சிங்கம் நீயே. உன் வடிவம் அனைத்துடனும் அடையாளங்காணத்தக்கது. ஓ! தலைவா, பலம் கொண்டவனான நீ பரந்தவனாகவும், எல்லையற்றவனாகவும் இருக்கிறாய்” என்றார்”.(17)
பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு பரமேஷ்டியின் மகனான நாரதரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அந்தப் பெருந்தேவன் அந்தத் தவசியிடம் {நாரதரிடம்}, “ஓ! நாரதரே, செல்வீராக, தாமதிக்காதீர்.(18) சந்திர நிறத்தைக் கொண்ட இந்த வழிபாட்டாளர்கள் அனைவரும், அனைத்துப் புலன்களும் இல்லாதவர்கள், அவர்கள் எவ்வகை உணவை உண்டும் உயிர்வாழவில்லை. மேலும் அவர்கள் அனைவரும் விடுதலையடைந்தவர்களாவர் {முக்தியடைந்தவர்களாவர்}. என்னிடம் முழுமையாகக் குவிந்த மனங்களுடன் மக்கள் என்னைக் குறித்துச் சிந்திக்க {தியானிக்க} வேண்டும். அத்தகைய வழிபாட்டாளர்கள் எவ்வகைத் தடைகளையும் ஒருபோதும் எதிர்கொள்ளமாட்டார்கள்.(19) இந்த மனிதர்கள் அனைவரும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே இவர்கள் என்னிடம் முழு அர்ப்பணிப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் இருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னில் நுழையவும், என் சுயத்தில் கலக்கவும் தகுந்தவர்களாக இருக்கிறார்கள்.(20)
கண்களால் காணப்பட முடியாதவனும், தீண்டும் புலனால் தீண்டப்பட முடியாதவனும், மணப்புலனால் நுகரப்பட முடியாதவனும், சுவை புலனின் உணர்தலுக்கு அப்பாற்பட்டவனும்,(21) சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களால் தீண்டப்பட முடியாதவனும், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டத்தின் சாட்சியாக இருப்பவனும், மொத்த அண்டத்தின் ஆன்மாவாக விளக்கப்படுபவனும்,(22) படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் உடல் அழிவிலும் அழிக்கப்படாதவனும், பிறப்பற்றவனும், மாற்றமில்லாதவனும், நித்தியமானவனும், குணங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், பிரிக்கப்பட முடியாதவனும், முழுமையானவனும்,(23) இருபத்து நான்கு தத்துவங்களைக் கடந்து நிற்கும் இருபத்தைந்தாவதாகக் கருதப்படுபவனும், புருஷன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், செயலற்றவனும், ஞானத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக்கூடியவனும்,(24) மறுபிறப்பாளர்களில் முதன்மையானோர் நுழைந்து விடுதலை அடையும் இடமாக இருப்பவனும், நித்தியமான பரமாத்மாவுமான அவன் வாசுதேவன் என்ற பெயரால் அறியப்படுகிறான்.(25)
ஓ! நாரதரே, அந்தத் தேவனின் மகிமையையும், பலத்தையும் காண்பீராக. அவன் ஒருபோதும் நற்செயல்களாலோ, தீச்செயல்களாலோ தீண்டப்படுவதில்லை. சத்வ, ரஜஸ், தமஸ் என்பன (மூலமான) முக்குணங்களாகச் சொல்லப்படுகின்றன. இவை அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசித்துச் செயல்படுகின்றன.(27) க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் ஜீவாத்மாவானவன், இந்த முக்குணங்களின் செயல்பாட்டை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்கிறான். எனினும், அவன் அவற்றைக் கடந்தவனாகவும், அவற்றால் தீண்டப்பட முடியாதவனாகவும் இருக்கிறான். இந்தக் குணங்களில் இருந்து விடுபட்ட அவன் அவற்றை அனுபவிப்பவனாகவும், தாங்கிக் கொள்பவனாகவும் இருக்கிறான். அவற்றைத் தானே உண்டாக்கிய அவன் அவை அனைத்திற்கும் மேலானவனாவான்.(28)
ஓ! தெய்வீக முனிவரே, அண்டத்தின் புகலிடமான பூமியானது (அண்ட அழிவின் வேளையில்) நீரில் மறைந்து போகும். நீரானது ஒளியில் மறைந்து போகும், ஒளியானது காற்றில் மறைந்து போகும்.(29) காற்றானது வெளியில் மறைந்து போகும், வெளியானது மனத்தில் மறைந்து போகும். மனமான பெரும்பூதம், புலப்படாதவளான பிருகிருதியில் மறைந்து போகும். புலப்படாதவளான பிருகிருதி, ஓ! பிராமணரே, செயலற்ற புருஷனில் மறைந்து போவாள். புருஷனை விட உயர்ந்ததும், நித்தியமானதுமான வேறு எதுவும் கிடையாது.(31) அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதனவற்றிற்கு மத்தியில் நித்திய புருஷனான வாசுதேவனைத் தவிர வேறு எதுவும் மாற்றமில்லாதது இல்லை.(32) பெரும்பலம் கொண்ட வாசுதேவனே அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாவான். பூமி, காற்று, வெளி, நீர் , ஐந்தாவதாக ஒளி,(33) ஆகியனவே பெரும்பலம் கொண்ட அடிப்படை பூதங்களாகும். இவை ஒன்றுக்கொன்று கலந்து உடலென்று அழைக்கப்படும் வடிவை அடைகின்றன. ஓ! பிராமணரே, நுட்பமான ஆற்றலைக் கொண்டவனும், அனைவரின் கண்களுக்கும் புலப்படாதவனும், பலமிக்கவனுமான வாசுதேவன், உடல் என்றழைக்கப்படும் அந்த ஐந்து அடிப்படை பூதக் கலவையில் நுழைகிறான். அத்தகைய நுழைவே பிறப்பு என்றழைக்கப்படுகிறது, பிறவியடையும் அவன் அந்த உடலை அசையவும், செயல்படவும் வைக்கிறான்.(34) அடிப்படையான இந்த ஐந்து பூதங்களின் கலப்பு இல்லாமல் எந்த உடலும் அமையமுடியாது.(35)
மேலும், உடலுக்குள் ஜீவன் நுழையாமல், அதனுள் வசிக்கும் மனத்தால் இயங்கவோ, செயல்படவோ முடியாது. உடலுக்குள் நுழையும் பெரும்பலம் கொண்டவனே ஜீவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் சேஷன் மற்றும் சங்கர்ஷணன் என்ற வேறு பெயர்களாலும் அறியப்படுகிறான்.(36) எவன் தன் செயல்களின் மூலம் சங்கர்ஷணனிலிருந்து எழுகிறானோ அவன் சனத்குமாரன் என்றும், அண்ட அழிவு நேரும்போது எவனில் அனைத்து உயிரினங்களும் கலக்குமோ, எவன் அனைத்து உயிரினங்களின் மனமாக இருக்கிறானோ அவன் பிரத்யும்னன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.(37) அவனிடம் இருந்து காரணமாகவும், விளைவாகவும் இருக்கும் படைப்பாளன் எழுகிறான். இந்த இறுதியானவனிலிருது, அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டமனைத்தும் எழுகிறது. இவனே அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான். அவன் வேறு வகையில் ஈசானன் என்றும் அழைக்கப்படுகிறான், அவன் செயல்கள் அனைத்திலும் வெளிப்படுகிறான்.(38) க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுபவனும், குணங்களற்றவனும், சிறப்புமிக்கவனுமான வாசுதேவனே, ஜீவனாகப் பிறப்பெடுக்கும்போது பலமிக்கச் சங்கர்ஷணனாக அறியப்படுகிறான்.(39) சங்கரஷ்ணனிலிருந்து ‘மனமாகப் பிறப்பவன்’ என்றழைக்கப்படும் பிரத்யும்னன் எழுகிறான். பிரத்யும்னனிலிருந்து அநிருத்தன் எழுகிறான். அவன் அகங்காரமாகவும், ஈஸ்வரனாகவும் (உயர்ந்த தலைவனாகவும்) இருக்கிறான்.(40)
என்னிலிருந்தே அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட மொத்த அண்டமும் எழுகிறது. ஓ! நாரதரே, அழிவில்லாதவையும், அழிவடைபவையும், இருப்பவையும், இல்லாதவையும் என்னிலேயே எழுகின்றன.(41) என்னில் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோர் என்னில் நுழைந்து விடுதலையை {முக்தியை} அடைகின்றனர். நான் புருஷன் என்று அறியப்படுகிறேன். செயல்களற்ற நான் இருபத்தைந்தாவதாக {25வது தத்துவமாக} இருக்கிறேன்.(42) குணங்களைக் கடந்த நான் முழுமையானவனாகவும், பிரிக்கப்பட இயலாதவனாகவும் இருக்கிறேன். நான், முரண்பட்ட இரட்டைகளைக் கடந்தவனாகவும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனாகவும் இருக்கிறேன். ஓ! நாரதரே, இதைப் புரிந்து கொள்ள நீர் தவறுவீர். வடிவுடையவனாக என்னை நீர் காண்கிறீர். நான் விரும்பினால், ஒரு கணத்தில் என்னால் இந்த வடிவத்தை மறைக்க முடியும். நானே உயர்ந்த தலைவனாகவும் {ஈஸ்வரனாகவும்}, அண்டத்தின் ஆசானாகவும் இருக்கிறேன்.(43) ஓ! நாரதரே, எதை நானாக நீர் காண்கிறீரோ அது என் மாயை மட்டுமே ஆகும். நான் இப்போது படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் குணங்களைக் கொண்டவனாகக் காணப்படுகிறேன். நீர் என்னை அறிந்து கொள்ள இயலாதவராக இருக்கிறீர்.(44) நான் என் நான்கு வகை வடிவங்களை உமக்குச் சொல்லியிருக்கிறன். ஓ! நாரதரே, நானே செயல்படுபவன், நானே காரணன், நானே விளைவும் ஆவேன்.(45)
நான் உயிரினங்கள் அனைத்தின் மொத்த கூட்டுத் தொகையாக இருக்கிறேன். அனைத்து உயிரினங்களும் என்னையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன. ஜீவாத்மாவைக் கண்டதாக நீர் நினைக்க வேண்டாம்.(46) ஓ! பிராமணரே, அனைத்துப் பொருட்களிலும் நான் படரந்தூடுருவி இருக்கிறேன், அனைத்து உயிரினங்களின் உள்ளும் ஆன்மாவாக இருக்கிறேன். எனினும், உயிரினங்கள் அனைத்தின் உடல்களும் அழிக்கப்படும்போதும் நான் அழிவடைவதில்லை.(47) தவ வெற்றியை அடைந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட மனிதர்கள், ஓ! பெருந்தவசியே, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்கள் இரண்டிலிருந்தும் விடுபட்டவர்களாக என்னில் மொத்தமாக அர்ப்பணிப்புக் கொண்டு, எனக்குள் நுழைவதில் வெற்றியடைந்தார்கள்.(48) ஹிரண்யகர்ப்பன் என்றழைக்கப்படுபவனும், உலகின் தொடக்கமாக இருப்பவனும், நான்கு முகங்களைக் கொண்டவனும், நிருக்தத்தின் உதவியின்றிப் புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், பிரம்மன் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுபவனுமான நித்திய தேவன், என் காரியங்களைச் செய்வதிலேயே ஈடுபடுகிறான்.(49) என் கோபத்தில் பிறந்த தேவன் ருத்திரன், என் நெற்றியில் இருந்து உண்டானவனாவான். என் உடலின் வலப்பகுதியில் பதினோரு ருத்திரர்கள் (வலிமையுடன்) பெருகியிருப்பதைப் பார்பீராக.(50) என் உடலின் இடப்பக்கத்தில் பனிரெண்டு ஆதித்தியர்கள் இருக்கின்றனர். என் முன்னே இருக்கும் தேவர்களில் முதன்மையான எட்டு வசுக்களையும்,(51) என் பின்னே இருக்கும் தேவ மருத்துவர்களான நாஸத்யன் மற்றும் தஸ்ரன் ஆகிய இருவரையும் பார்ப்பீராக. பிரஜாபதிகள் அனைவரையும், ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்} என் உடலில் பார்ப்பீராக.(52)
வேதங்களையும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கான வேள்விகள் அனைத்தையும், அமுதத்தையும், மூலிகைகள், செடிகள், தவங்கள், நோன்புகள் மற்றும் பல்வேறு வகை நியமங்களையும் என்னில் காண்பீராக.(53) ஒன்று கலந்த உள்ளார்ந்த வடிவில் என்னில் மொத்தமாக வசிப்பவையும், வலிமையின் குறியீடுகளாக இருப்பவையும், தலைமையின் குணங்கள் என்று குறிப்பாக அழைக்கப்படுபவையுமான எட்டு குணங்களையும் என்னில் காண்பீராக. ஸ்ரீ, லட்சுமி, கீர்த்தி மற்றும் கூன்முதுகுடன் கூடிய பூமியையும் காண்பீராக.(54) வேதங்களின் தாயான தேவி சரஸ்வதி என்னில் வசிப்பதைக் காண்பீராக. ஓ! நாரதரே, ஆகாயத்தில் திரியும் ஒளிக்கோள்களில் முதன்மையானவனாகத் துருவனைக் காண்பீராக.(55) நீரின் கொள்ளிடங்களான பெருங்கடல்கள் அனைத்தையும், தடகாங்களையும், ஆறுகளையும் காண்பீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உள்ளார்ந்த வடிவங்களில் உள்ள பித்ருக்களில் முதன்மையான நால்வரையும் காண்பீராக. வடிவமற்றவையான (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்கள் என்னில் வசிப்பதையும் காண்பீராக.(56)
தேவர்களைக் கௌரவிக்கச் செய்யப்படும் செயல்களைவிடப் பித்ருக்களைக் கௌரவிக்கச் செய்யப்படும் செயல்கள் (தகுதியின் அடிப்படையில்) மேன்மையானவையாகும். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகிய இருவரின் பித்ருவான நான் (அவர்கள் இல்லாத காலத்திலிருந்தே) தொடக்கத்தில் இருந்தே இருக்கிறேன்.(57) குதிரைத் தலையாகி, மேற்கத்திய மற்றும் வடக்கத்திய பெருங்கடலில் திரிந்து, மந்திரங்களுடன் முறையாக ஊற்றப்படும் வேள்விக் காணிக்கைகளையும், மதிப்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் திடமான வேள்வி உணவுகளையும் உட்கொள்கிறேன்.(58) பழங்காலத்தில் வேள்விகளில் என்னைத் துதித்த பிரம்மனை நானே படைத்தேன். அதனால் அவனிடம் நிறைவடைந்த நான், அவனுக்குச் சிறந்த பல வரங்களை அளித்தேன்.(59) கல்பத்தின் தொடக்கத்தில் அவன் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும், அகங்காரம் இருப்புக்கு வரும் தொடக்கத்தின் விளைவால் பல்வேறு பெயர்கள் சூட்டப்படும் பல்வேறு பொருட்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தின் அரசுரிமையையும் அவனுக்குக் கிடைக்கும் என்று அவனிடம் சொன்னேன்.(60)
(உயிரினங்களின் பழக்க வழக்கத்திற்கு) அவனால் கொடுக்கப்படக்கூடியவையும், எவராலும் மீற முடியாதவையுமான எல்லைகளையும், வரைமுறைகளையும் அவனுக்குச் சொன்னேன். அவனிடம் (வேள்விகளில் முறையான செயல்களின் மூலம்) வேண்டுவோருக்கு வரங்கள் கொடுக்கக்கூடியவனாக அவன் இருப்பான் என்பதையும் அவனுக்குச் சொன்னேன்.(61) தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், பித்ருக்கள், படைப்பில் அமைந்திருக்கும் பல்வேறு உயிரினங்கள் அனைத்தினாலும் துதிக்கத்தக்கவனாக அவன் இருப்பான் என்பதையும் அவனுக்கு உறுதிகூறினேன்.(62) தேவர்களின் காரியத்தை நிறைவேற்ற நான் எப்போதும் வெளிப்படுவேன் என்பதையும், அக்காரியத்திற்காக அவன் ஒரு தந்தை தன் மகனை அழைப்பதைப் போல என்னை அழைப்பதையும் ஏற்பேன் என்பதையும் அவனுக்குப் புரிய வைத்தேன்.(63) நான் பிரம்மனிடம் நிறைவு கொண்டதன் விளைவால் அளவிலா சக்தி கொண்ட அவனுக்கு ஏற்புடைய பல உயர்ந்த வரங்களை அருளினேன். (மீண்டும்) நான் நிவிருத்தி சொல்லும் நடைமுறையைப் பின்பற்றினேன்.(64) உயர்ந்த நிவிருத்தியானது கடமைகள் மற்றும் செயல்கள் அனைத்தையும் அழிப்பதில் அடையாளம் காணப்படும். எனவே, நிவிருத்தியைப் பின்பற்றும் ஒருவன் மற்றான இன்பநிலையை அடைய வேண்டும்.(65) சாங்கிய தத்துவ உண்மைகளில் இருந்து பெறப்பட்ட தீர்மானமான முடிவுகளுடன் கூடிய கல்விமான்களான ஆசான்கள், ஞானப் பலத்தைக் கொண்ட கபிலரைப் போலவே, சூரியனின் பிரகாசத்திலும், யோகத்தின் குவிந்த நிலையிலும் வசிப்பவனாக என்னைக் குறித்துச் சொல்லியிருக்கின்றனர்.(66)
(வேத) சந்தங்களில் சிறப்புமிக்க ஹிரண்யகர்ப்பனால் மீண்டும் மீண்டும் பாடப்படுபவன் நானே. ஓ! பிராமணரே, யோக சாத்திரங்கள், யோகத்தில் திளைப்பவனாக என்னைக் குறித்துச் சொல்கின்றன.(67) நான் நித்தியமானவன். வெளிப்படும் ஒரு வடிவை ஏற்கும் நான், தற்போது சொர்க்கத்தில் வசித்து வருகிறேன். ஆயிரம் யுகங்களின் முடிவில் நான் மீண்டும் இந்த அண்டத்தை என்னுள் ஈர்த்துக் கொள்வேன்.(68) அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் என்னுள் ஈர்த்துக் கொண்ட பிறகு, ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு நான் நீடித்திருப்பேன்.(69) பல காலங்கள் கழிந்ததும், மீண்டும் என் ஞானத்தின் துணையுடன் நான் அண்டத்தைப் படைப்பேன். என்னுடைய நான்காவது வடிவமானது அழிவற்ற சேஷனை உண்டாக்குகிறது.(70) சேஷன் சங்கர்ஷணன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறன். சங்கர்ஷணன் பிரத்யும்னனை உண்டாக்குவான். பிரத்யும்னனிலிருந்து நான் அநிருத்தனாகப் பிறப்பெடுக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் (என்னை) படைத்துக் கொள்கிறேன்.(71) அநிருத்தனிலிருந்து பிரம்மன் உண்டாகிறான். பின்னவன் அநிருத்தனின் தொப்புலிலிருந்து பிறப்பை அடைகிறான். பிரம்மனிலிருந்து அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் எழுகின்றன.(72)
ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்திலும் படைப்பானது இவ்வழியிலேயே மீண்டும் மீண்டும் நேர்கிறது என்பதை அறிவாயாக. இவ்வுலகில் நேரும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனன் போலவே படைப்பும், அழிவும் அடுத்தடுத்து நேர்கின்றன.(73) மேலும் அளவிலா சக்தி கொண்ட காலமானது மறைந்த சூரியனை மீண்டும் கொண்டு வருவதைப் போலவே, பூமியானவள் நீருக்கடியில் மூழ்கும் போது, அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் பன்றியின் வடிவை ஏற்று, கடலெனும் கச்சையைக் கொண்ட பூமியை மீண்டும் தன் நிலையில் நிறுத்துவேன். அதன்பிறகு, பலத்தின் செருக்கால் நிறைந்த ஹிரண்யாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட திதியின் மகனைக் கொல்வேன்.(74,75) பிறகு தேவர்களுக்கு நன்மை செய்வதற்காகச் சிங்கமனிதன் {நரசிங்க} வடிவை ஏற்று, வேள்விகளை அழிப்பவனான திதியின் மகன் ஹிரண்யகசிபுவைக் கொல்வேன்.(76)
(பிரஹலாதனின் மகனான) விரோசனனுக்குப் பலி என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகன் பிறப்பான். அந்தப் பேரசுரன் தேவர்களாலும், அசுரர்களாலும், ராட்சசர்களாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பான். அவன் சக்ரனை அண்டத்தின் ஆட்சியுரிமையில் இருந்து தூக்கி வீசுவான்.(77) சசியின் தலைவனை முறியடித்த பிறகு, மூவுலகங்களின் அரசுரிமையையும் அவன் எடுத்துக் கொண்ட பிறகு, நான் கசியபரின் மூலமாக அதிதியின் கருவறையில் பனிரெண்டாவது ஆதித்தியனாகப் பிறப்பேன்.(78) ஓ! நாரதரே, அளவற்ற காந்தியைக் கொண்ட இந்திரனிடம் அதை (பலியிடம் இருந்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பறித்து) மீட்டளித்து, தேவர்களை அவர்களுக்குரிய இடங்களில் மீண்டும் நிறுவுவேன்.(79) தானவர்களில் முதன்மையான பலியைப் பொறுத்தவரையில், அவனைப் பாதாள உலகங்களில் வசிக்கச் செய்வேன்.(80)
திரேதா யுகத்தில் பிருகு குலத்தில் ராமனாக {பரசுராமராகப்} பிறந்து, பலத்திலும், உடமைகளிலும் செருக்கடைந்திருக்கும் க்ஷத்திரியர்களை அழிப்பேன்.(81) திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகத்தின் தொடக்கத்தில் நான் இக்ஷ்வாகு அரச குலத்தைச் சார்ந்த தரசரதனின் மகன் ராமனாக நான் பிறப்பெடுப்பேன்.(82) அந்நேரத்தில், ஏகதர், திவிதர் என்ற பெயர்களால் அழைக்கப்படும் பிரஜாபதியின் இரண்டு மகன்கள், தங்கள் தம்பியான திரிதருக்குச் செய்த தீங்கின் விளைவால், மனித வடிவின் அழகை இழந்து குரங்குகளாகப் பிறப்பை அடைவர்.(83) ஏகதர் மற்றும் திவிதரின் குலத்தில் பிறக்கும் குரங்குகள், பெரும்பலத்திலும், வலிமையிலும், சக்தியிலும் பெருகி, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைப் பெற்றிருப்பர். ஓ! மறுபிறப்பாளரே, அந்தக் குரங்குகள் அனைத்தும், தேவ காரியங்களை நிறைவேற்றுவதில் எனக்குக் கூட்டாளிகளாவர்.(84) பிறகு நான், ராட்சசர்களின் பயங்கரத் தலைவனும், புலஸ்திய குலத்தில் இழிந்தவனும், சீற்றமிக்கவனும், உலகங்கள் அனைத்துக்கும் முள்ளாக இருப்பவனுமான ராவணனை அவனது பிள்ளைகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்துக் கொல்வேன்.(85)
துவாபர மற்றும் கலியுகங்களின் சந்திக்கு நெருக்கமான காலத்தில், மதுரா நகரத்தில் பிறப்பை அடைந்து, கம்சனை அழிக்கும் நோக்கத்திற்காக நான் உலகில் மீண்டும் தோன்றுவேன்.(86) அங்கே தேவர்களுக்கு முட்களாக இருக்கும் தானவர்களில் எண்ணற்றவர்களைக் கொன்ற பிறகு, நான் துவாரகை நகரத்தின் குசஸ்தலியில் என் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வேன்.(87) அந்நகரத்தில் வசித்திருக்கும்போது, அதிதிக்குத் தீங்கை இழைத்தவனும், பூமியின் மகனுமான அசுரன் நரகனையும், முரன் மற்றும் பீடன் என்ற வேறு சில தானவர்களையும் கொல்வேன்.(88) மற்றொரு முதன்மையான தானவனான பிராக்ஜோதிஷத் தலைவனையும் கொன்று, அந்த இனிமை நிறைந்த நகரத்தில் இருந்து பல்வேறு வகைச் செல்வங்களைத் துவாரகைக்குக் கொண்டு வருவேன்.(89) {பேரனான அநிருத்தனுக்காகச் சோணிதபுரமென்கிற பாணாஸுரனுடைய நகரத்தை அடைந்து பெரும்போர் புரிவேன், [அப்பொழுது]} தானவன் பாணனுக்கு {பாணாசுரனுக்கு} நன்மை செய்வதில் பற்றுள்ளவர்களும், தங்கள் வழிபாட்டாளர்களுக்காக என்னுடன் போரிட முயல்பவர்களும், தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவர்களுமான மஹேஸ்வரனையும் {சிவனையும்}, மஹாசேனனையும் {முருகனையும்} நான் வெல்வேன்[2].(90) தானவன் பலியின் மகனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான பாணனை வென்று, அடுத்ததாகச் சௌபம் என்றழைக்கப்படும் தானவ நகரத்தில் வசிப்போர் அனைவரையும் அழிப்பேன்.(91) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, அடுத்ததாக நான், கர்க்கரின் சக்தியின் விளைவால் பெரும் வலிமை பெற்றிருக்கும் தானவனான கால யவனனைக் கொல்வேன்[3].(92)உலகின் பிற மன்னர்கள் அனைவருடனும் சச்சரவு செய்பவனும், ஜராசந்தன் என்ற பெயரைக் கொண்டவனுமாக ஒரு செருக்குமிக்க அசுரன் கிரிவ்ரஜத்தின் மன்னனாகத் தோன்றுவான். அவனது மரணம் என் புத்தியின் துணையால் வேறு ஒருவரால் ஏற்படுத்தப்படும்.(93) அடுத்ததாக நான், உலகின் மன்னர்கள் அனைவராலும் கப்பம் கட்டப்படுவதும், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனால் செய்யப்படுவதுமான வேள்வியில் சிசுபாலனைக் கொல்வேன். இந்தச் செயல்கள் சிலவற்றில் வாசவனின் மகனான அர்ஜுனன் மட்டுமே எனக்குத் துணைவனாக இருப்பான்.(94,95) யுதிஷ்டிரனையும், அவனது தம்பிகள் அனைவரையும் அவர்களது மூதாதையரின் நாட்டில் நிறுவுவேன். உலகிற்கு நன்மை செய்யும் பொருட்டு, நானும் அர்ஜுனனும் பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்களை எங்கள் பலத்தால் எரிக்கும்போதும், என்னையும் அவனையும் {அர்ஜுனனையும்} மக்கள் நாராயணன் என்றும், நரனென்றும் அழைப்பார்கள். எங்கள் விருப்பப்படி பூமியின் கனத்தைக் குறைத்தபிறகு, அனைத்தையும் தழுவும் என் சானத்தை நினைவுகூர்ந்து, முக்கியச் சாத்வதர்கள் அனைவரையும், எனக்கு மிகப் பிடித்த நகரமான துவாரகையையும் என்னுள் கலப்பேன்.(96-98)
நான்கு வடிவங்களைக் கொண்ட நான் இவ்வாறு பெரும் ஆற்றலைக் கொண்ட பல செயல்களைச் செய்து, என்னால் படைக்கப்பட்டதும், பிராமணர்கள் அனைவராலும் மதிக்கப்படுவதுமான பேரின்ப உலகங்களுக்குள் இறுதியாக நுழைவேன்.(99) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அன்னப்பறவை, ஆமை, மீன் எனத் தோன்றிய பிறகு நான் பன்றியாக வெளிப்பட்டு, பின்னர்ச் சிங்கமனிதனாகவும் {நரசிங்கமாகவும்}, குள்ளனாகவும் {வாமனனாகவும்}, பிருகு குலத்தின் ராமனாகவும், தசரதனின் மகன் ராமனாகவும், சாத்வதக் குலக்கொழுந்தான கிருஷ்ணனாகவும், இறுதியில் கல்கியாகவும் வெளிப்படுவேன்.(100) வேதங்களிலுள்ள திறன் தேர்வுகள் இவ்வுலகில் இருந்து மறையும்போது அவற்றை நான் மீண்டும் கொண்டுவருவேன். கிருத யுகத்தில், வேதங்களும், அவற்றின் திறன் தேர்வுகளும் என்னால் மீண்டும் படைக்கப்பட்டன.(101) அவை மீண்டும் மறைந்து போகின்றன, அல்லது புராணங்களில் இருந்து பகுதி அளவில் மட்டுமே கேட்கப்படுகின்றன. என் சிறப்புத் தோற்றங்கள் பலவும் உலகில் கடந்த காலச் செய்திகளாகிவிட்டன.(102) நான் தோன்றிய வடிவங்களில் உலகின் நன்மையை அடைந்து மீண்டும் நான் எனச் சொந்த இயல்புக்குத் திரும்பியிருக்கிறேன். ஓ! நாரதரே, உமது முழுமையான பக்தியின் விளைவால் நீர் இன்று காணும் இந்த எனது வடிவத்தைப் பிரம்மனே கூடக் கண்டதில்லை. ஓ! பிராமணரே, என்னில் முழுமையான பக்தி கொண்டிருக்கும் உமக்கு நான் இப்போது அனைத்தையும் சொல்லிவிட்டேன். ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் கடந்த காலத் தோற்றங்களையும், எதிர்காலத் தோற்றங்களையும், அவற்றின் புதிர்கள் அனைத்துடன் சேர்த்து உமக்குச் சொல்லிவிட்டேன்” என்றான் {நாராயணன்}.(104)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மாற்றமில்லாத அண்டந்தழுவிய வடிவைக் கொண்டவனும், புனிதமானவனுமான அந்தச் சிறப்புமிக்கத் தேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அப்போதே அங்கேயே மறைந்து போனான்.(105) பெருஞ்சக்தி கொண்ட நாரதர், வேண்டிய உயர்ந்த ஆதரவை அடைந்து, நரனையும், நாராயணனையும் காண பதரி என்றழைக்கப்படும் ஆசிரமத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றார்.(106) நான்கு வேதங்களுக்கு முற்றிலும் இணக்கமானதும், சாங்கிய யோகத்துடன் ஒத்திசைவதும், பஞ்சராத்ர சாத்திரங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுவதும், நாராயணனின் வாயாலேயே சொல்லப்பட்டதுமான இந்தப் பெரும் உபநிஷதத்தை, நாராயணனின் உதடுகளில் இருந்து தாம் கேட்டதுபோலவே, நாரதர் (தமது தந்தையான) பிரம்மனின் வசிப்பிடத்தில் கேட்கும் பலரின் முன்னிலையில் சரியாக அதே முறையில் மீண்டும் சொன்னார்” {என்றார் பீஷ்மர்}.(107,108)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நுண்ணறிவைக் கொண்ட நாராயணனின் மகிமையைச் சொல்லும் இந்த அற்புத உரையை, அனைத்துப் பொருட்களையும் படைத்தவரான பிரம்மன், நாரதரின் உதடுகளில் இருந்து கேட்டான் என்றால், இது குறித்து அவர் அறியாதவரா? (109) உலகங்கள் அனைத்தின் சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் எவ்வகையிலாவது பெரும் நாராயணனிடம் இருந்து வேறுபட்டவரா அல்லது தாழ்ந்தவரா? அளவற்ற சக்தியைக் கொண்ட நாராயணனின் பலத்தை அவர் எவ்வாறு அறியாமல் இருந்தார்?” என்று கேட்டான்.(110)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னர்களின் மன்னா, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெருங்கல்பங்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான படைப்புகளும் அழிவுகளும் ஏற்கனவே நேர்ந்து, கடந்த கால நிகழ்வுகள் ஆகிவிட்டன.(111) ஒவ்வொரு படைப்பின் தொடக்கத்திலும், பெரும் பலம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களைப் படைப்பவனுமான பிரம்மன் (நாராயணனால்) நினைக்கப்படுகிறார். ஓ! மன்னா, தேவர்கள் அனைவரிலும் முதன்மையான நாராயணன் தம்மைவிட மேம்பட்டவன் என்பதைப் பிரம்மா நன்கறிவார்.(112) நாராயணனே பரமாத்மா என்பதையும், அவனே உயர்ந்த தலைவன் {நியந்தா} என்பதையும், அவனே பிரம்மனையும் படைப்பவன் என்பதையும் அவன் அறிவான். பிரம்மனின் வசிப்பிடத்திற்கு வந்திருந்தவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவர் கூட்டத்திற்கே நாரதர், பழமையானதும், வேதங்களுக்கு இணக்கமானதுமான இந்தப் பழைய புராணத்தைச் சொன்னார். தேவன் சூரியன், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அந்த முனிவர்களிடம் இருந்து அந்தப் புராணத்தைக் கேட்டு, ஓ! மன்னா, தன் பரிவாரத்தில் தொடர்பவர்களும் தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோருமான அறுபத்தாறாயிரம் முனிவர்களுக்கு அதை மீண்டும் சொன்னான்.(113-11¬5)
உலகங்கள் அனைத்திற்கும் வெப்பத்தைக் கடத்தும் தேவனான சூரியன், தனக்கு முன்பு எப்போதும் பயணிப்பதற்காக (பிரம்மனால்) படைக்கப்பட்ட அவர்களுக்கு மீண்டும் அந்தப் புராணத்தைச் சொன்னான்.(116) ஓ! மகனே, சூரியனின் பரிவாரத்தைப் பின்தொடர்பவர்களான அந்த உயர் ஆன்ம முனிவர்களும், மேருவின் சாரலில் கூடும் தேவர்களுக்கு இந்தச் சிறந்த புராணத்தை மீண்டும் சொன்னார்கள்.(117) ஓ! மன்னர்களின் மன்னா, தவசிகளில் சிறந்தவரும், மறுபிறப்பாளருமான அசிதர், தேவர்களிடமிருந்து இந்தப் புராணத்தைக் கேட்டுப் பித்ருக்களுக்கு அதை மீண்டும் சொன்னார்.(118) ஓ! மகனே, முற்காலத்தில் இந்தப் புராணத்தை என் தந்தையான சந்தனு எனக்குச் சொன்னார். ஓ! பாரதா, என் தந்தையிடமிருந்து அதைக் கேட்ட நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(119) புராணம் என்றழைக்கப்படும் இந்தச் சிறந்த பழங்கதையைக் கேட்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் பரமாத்மாவைத் துதிக்கின்றனர்.(120)
ஓ! மன்னா, முனிவர்களுக்குச் சொந்தமானதும், இப்படி ஒருவருக்கொருவர் வழிவழியாகச் சொல்லப்படுவதுமான இந்தப் புராணத்தை, வாசுதேவனை வழிபடாத எவருக்கும் நீ சொல்லக்கூடாது.(121) ஓ! மன்னா, நீ என்னிடம் இருந்து கேட்டிருக்கும் இந்தப் புராணம் உண்மையில் வேறு நூறு புராணங்களின் சாரங்களைக் கொண்டதாகும்.(122) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலைக் கடைந்து அமுதத்தை உண்டாக்கினர். அதே போலவே, பழங்காலத்தில் ஒன்றுகூடிய பிராமணர்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கடைந்து, அமுதத்துக்கு ஒப்பான இந்தப் புராணத்தை உண்டாக்கினர்.(123) ஓர் ஓய்வான இடத்தில் குவிந்த கவனத்துடனும், நிறைந்த அர்ப்பணிப்புடனும் இந்தப் புராணத்தை அடிக்கடி படிப்பவனும், அடிக்கடி கேட்பவனும்,(124) வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு பெரிய தீவில், சந்திரனின் நிறத்தைக் கொண்ட சொர்க்கவாசியாவதில் வெல்கிறான். அத்தகைய ஒரு மனிதன் ஆயிரம் கதிர்களைக் கொண்ட நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறான் என்பதில் ஐயமில்லை.(125)
நோயாளி ஒருவன், இந்தப் புராணத்தைத் தொடக்கத்தில் இருந்து கேட்பதால் தன் நோயில் இருந்து விடுதலையடைகிறான். இந்தப் புராணத்தைப் படிக்கவோ, கேட்கவோ விரும்பும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான். அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளன், இதைப் படிப்பதினாலோ, கேட்பதினாலோ, அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டாளர்களுக்காக முன்பதிவு செய்யப்படும் உயர்ந்த கதியை அடைகிறான்.(126) ஓ! ஏகாதிபதி, அனைத்திலும் முதன்மையான அவனை நீயும் எப்போதும் துதித்து வழிபட வேண்டும். அவனே அனைத்து உயிரினங்களின் தந்தையும், தாயுமாக இருக்கிறான். மொத்த அண்டத்திலும் அவனே மதிப்புமிக்கப் பொருளாகிறான்.(127) ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, பிராமணர்களின் சிறப்புமிக்க நித்திய தேவனும், உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் உன்னிடம் நிறைவு கொள்ளட்டும்” {என்றார் பீஷ்மர்}”.(128)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, இந்தச் சிறந்த புராணத்தைக் கேட்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனும், அவனது தம்பிகள் அனைவரும் நாராயணனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோராகினர்.(129) ஓ! பாரதா, (அந்த நாளில் இருந்து) அவர்கள் அனைவரும் நாராயணனை அமைதியாகத் தியானிக்கும் பயிற்சியை மேற்கொண்டு, “சிறப்புமிக்கவனான அந்தப் புனிதமானவனுக்கே வெற்றி” என்ற வார்த்தைகளை அவனை மகிமைப்படுத்தும் வகையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.(130) மேலும், ஆசான்களில் சிறந்தவரும், தீவில் பிறந்தவரும் {துவைபாயனரும்}, தவங்களில் அர்ப்பணிப்புமிக்கவருமான கிருஷ்ணர் {வியாசர்}, அமைதியாக உரைக்கத்தகுந்த உயர்ந்த மந்திரமான “நாராயணா” என்ற சொல்லைச் சொல்லி பாடினார்.(131) அவர், எப்போதும் அமுதத்தின் வசிப்பிடமாக இருக்கும் பாற்கடலுக்கு ஆகாயத்தின் மூலம் பயணித்து, அங்கே அந்தப் பெருந்தேவனை வழிபட்டு, மீண்டும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(132)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “(பிரம்மனின் வசிப்பிடத்தில் கூடியிருந்த முனிவர் கூட்டத்திற்கு) நாரதரால் சொல்லப்பட்ட புராணத்தையே நான் இப்போது உனக்கு மீண்டும் சொன்னேன். இந்தப் புராணம், பழங்காலத்தில் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இறங்கி வந்திருக்கிறது. நான் முற்காலத்தில் இதை எனக்குத் திரும்பச் சொன்ன என் தந்தையிடம் இருந்து கேட்டேன்”.(133)
சூதர் {சௌதியானவர் சௌனகரிடம்} தொடர்ந்தார், “வைசம்பாயனர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அனைத்தையும் நான் இப்போது உமக்குச் சொன்னேன். வைசம்பாயனரின் விவரிப்பைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி தன் கடமைகள் அனைத்தையும் செய்தான்.(134) நீங்கள் அனைவரும் கடுந்தவங்களைச் செய்தவர்களாகவும், உயர்ந்தவையும், சிறந்தவையுமான பல நோன்புகளையும் நோற்பவர்களாகவும் இருக்கிறீர்கள். நைமிசம் என்ற பெயரில் அறியப்படும் இந்தப் புனிதமான காட்டில் வசிக்கும் நீங்கள் வேதங்கள் அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையாவர்கள் ஆவீர்கள்.(135) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் அனைவரும் சௌனகரின் இந்தப் பெரும் வேள்விக்கு வந்திருக்கிறீர்கள். சிறந்த வேள்விகளில் நீங்கள் அனைவரும், தெளிந்த நெய்யிலான ஆகுதிகளை மந்திரங்களின் துணையுடன் நெருப்புக்குள் முறையாக ஊற்றியும், அவற்றை நாராயணனுக்குக் காணிக்கையாக்கியும், நித்தியமானவனும், உயர்ந்த தலைவனுமான அவனையே வழிபட்டுத் துதிப்பீராக. என்னைப் பொறுத்தவரையில், நான் இந்தச் சிறந்த புராணத்தைப் பரம்பரைவழியாக முற்காலத்தில் என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்” {என்றார் சௌதி}.(136)
வியாசரின் நாராயணீயம்! – சாந்திபர்வம் பகுதி – 341-பிரம்மன் முதலிய தேவர்கள் தவமிருந்ததையும்; நாராயணன் அவர்களுக்கு வரமளித்ததையும், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி அறங்களை நாராயணன் பிரம்மனுக்குச் சொன்னதையும் தமது சீடர்களுக்குச் சொன்ன வியாசர்…
சௌனகர் {சௌதியிடம்}, “வேதங்களையும், அதன் அங்கங்களையும் முழுமையாக அறிந்தவனும், சிறப்புமிக்கத் தேவனும், பலமிக்கவனுமான நாராயணன், ஒரே நேரத்தில் வேள்விகளைச் செய்பவனாகவும், அவற்றை அனுபவிப்பவனாகவும் எவ்வாறு இருக்கிறான்?(1) மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன், (தவிர்க்கும் தன்மையான) நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுகிறான். உண்மையில், நிவிருத்தியின் கடமைகளை அந்தப் பலமிக்கப் புனிதமானவனே விதித்திருக்கிறான்.(2) அவ்வாறிருக்கையில், பிரவிருத்தி அறத்தின் மூலம் விளையும் வேள்விப் பங்குகளைத் தேவர்கள் பலர் ஏன் எடுத்துக் கொள்கின்றனர்? தவிர்க்கும் அறத்தின் விதிகளைச் சிலர் பின்பற்றுகின்றனர், அவன் ஏன் தன் மனோநிலைக்கு முரணாகச் சிலரை படைத்திருக்கிறான்?(3) ஓ! சூதா, இந்த எங்கள் ஐயங்களை விலக்குவாயாக. இந்த ஐயம் நித்தியமானதாகவும், பெரும்புதிர் தொடர்புடையதாகவும் தெரிகிறது. (பிற) சாத்திரங்களுக்கு இணக்கமானவையும், நாராயணன் குறித்தவையுமான கதைகள் அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய்” என்றார் {சௌனகர்}.(4)
சௌதி, “ஓ! சிறந்த சௌனகரே, வியாசரின் சீடரான வைசம்பாயனர், இக்காரியம் குறித்து ஜனமேஜயனால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னவற்றை உமக்குச் சொல்கிறேன்.(5) உயிரினங்கள் அனைத்தின் உள்ளார்ந்த ஆன்மாவாக இருப்பவனான நாராயணனின் மகிமையைக் கேட்டவனும், நுண்ணறிவும், ஞானமும் மிக்கவனுமான ஜனமேஜயன் சரியாக இக்காரியங்களைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்டான்.(6)
ஜனமேஜயன் {வைசம்பாயனர்}, “பிரம்மன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியோருடன் கூடிய மொத்த உலகங்களும், செழிப்பை உண்டாக்குபவையாகச் சொல்லப்படும் செயல்களுடன் ஆழமான தொடர்புடையவையாகத் தெரிகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, இருப்பை இல்லாமலாக்குவதும், உயர்ந்த நிலையுமான விடுதலை {முக்தி} நிலையானது உம்மால் சொல்லப்பட்டது. தகுதி, தகுதியின்மை ஆகிய இரண்டுமற்று விடுதலையடைபவர்கள் {முக்தியடைபவர்கள்}, ஆயிரம் கதிர்களைக் கொண்ட பெருந்தேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள் என நாம் கேட்கிறோம்.(8) ஓ! பிராமணரே, நித்தியமான விடுதலை அறத்தை {மோக்ஷ தர்மத்தைப்} பயில்வது மிகக் கடினமானதாகத் தெரிகிறது. இதிலிருந்து மாறுபடும் தேவர்கள் அனைவரும், வேள்வி நெருப்புகளிலும், இதே வழிமுறைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் பிற காணிக்கைகளிலும், மந்திரங்களுடன் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள்.(9) மேலும், பிரம்மன், ருத்திரன், வலனைக் கொன்றவனான பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, சூரியன், விண்மீன்களின் தலைவன் (சத்திரமாஸ்), காற்றின் தேவன் {வாயு}, நெருப்பின் தேவன் {அக்னி}, நீர்நிலைகளின் தேவன் {வருணன்}, (உயிரோட்டமான) அளவற்ற வெளி {ஆகாயம்}, (விழிப்புணர்வு கொண்ட) அண்டம், எஞ்சிய சொர்க்கவாசிகள் ஆகிய இவர்கள், தன் முயற்சியால் கொண்டுவரப்படும் விழிப்புடன் கூடிய இருப்பை அழிக்கும் வழிமுறையை அடைவது குறித்து அறியாதவர்களாக இருப்பதாகத் தெரிகிறது[1].(10,11) எனவே, அழிவற்ற, மாற்றமில்லாத பாதையை அவர்கள் அடையவில்லை என்பது உறுதியானதாகும். அந்தப் பாதையைவிட்டு விலகி, காலத்தால் அளக்கப்படும் விழிப்புடன் கூடிய இருப்புநிலைக்கு வழிவகுக்கும் பிரவிருத்தி அறத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.(12) உண்மையில், நிலையற்ற வெகுமதிகளைக் கொடுக்கும் செயல்களுடன் பற்றுடைய இது பெருங்களங்கமாகும். ஓ! மறுபிறப்பாளரே, இந்த ஐயம் என் இதயத்தில் குத்திய வாளாக {தைத்த முள்ளாக} இருக்கிறது. இதுகுறித்த பழைய கதைகளைச் சொல்லி அஃதை அகற்றுவீராக.(13) ஓ! மறுபிறப்பாளரே, பல்வேறு வகை வேள்விகளில் மந்திரங்களின் துணையுடன் தேவர்களுக்கு அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளில் அவர்கள் தங்களுக்குரிய பங்குகளை எடுத்துக் கொள்வதாக எக்காரணத்தினால் சொல்லப்படுகிறது? மேலும் தேவர்கள் வேள்விகளில் ஏன் துதிக்கப்படுகின்றனர்?(14) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பிறர் செய்யும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்கை எடுத்துக் கொள்ளும் அவர்கள் யாருக்காகப் பெரும் வேள்விகளைச் செய்கிறார்கள்?” என்று கேட்டான்.(15)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி ஓர் ஆழ்ந்த புதிர் தொடர்புடையதாகும். தவங்களைச் செய்யாதவனும், புராணங்களை அறியாதவனுமான எந்த மனிதனாலும் இதற்கு விரைவாகப் பதிலளிக்க முடியாது.(16) எனினும், வியாசர் என்று அழைக்கப்படுபவரும், தீவில் பிறந்தவரும், வேதங்களை வகுத்த பெரும் முனிவருமான எங்கள் ஆசான், முன்பொரு காலத்தில் எங்களால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னதை உனக்குச் சொல்கிறேன்.(17) சுமந்தர், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலர், நான்காவதாக {வைசம்பாயனனாகிய} நான், ஐந்தாவதாக உகர் ஆகியோர் சிறப்புமிக்க வியாசரின் சீடர்களாக இருந்தோம்.(18) எண்ணிக்கையில் ஐவராக இருந்த நாங்கள் தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளில் தூய்மை கொண்டவர்களாகவும், கோபத்தையும் எங்கள் புலன்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தோம். எங்கள் ஆசான் மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட வேதங்களை எங்களுக்குக் கற்பித்து வந்தார்.(19) ஒரு காலத்தில், மலைகளில் முதன்மையானதும், சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த இடமும், இனிமை நிறைந்ததுமான மேருவின் சாரலில் வேத கல்வியில் நாங்கள் ஈடுபட்டு வந்தபோது, நீ இன்று வெளிப்படுத்திய இதே ஐயம் எங்கள் மனங்களில் எழுந்தது.(20) எனவே, நாங்கள் இது குறித்து எங்கள் ஆசானிடம் கேட்டோம். எங்கள் ஆசான் சொன்ன பதிலை நான் கேட்டேன். ஓ! பாரதா, அந்தப் பதிலை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன்.(21)
அறியாமையால் ஏற்படும் அனைத்து வகை இருளையும் அகற்றுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(22) “உண்மையில் நான் மிகக் கடுமையான தவங்களைச் செய்திருக்கிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.(23) பாற்கடலின் கரைகளில் நான் வசித்திருந்தபோது, என் தவங்கள் மற்றும் புலன்களில் நான் கொண்டிருந்த கட்டுப்பாட்டின் விளைவால் நாராயணன் என்னிடம் நிறைவு கொண்டான். அந்தப் பெருந்தேவன் கொண்ட நிறைவின் விளைவால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் குறித்து முழுதுணரும் அறிவு என் மனத்தில் எழுந்தது.(24) உங்கள் மனங்களைக் கலக்கமடையச் செய்தும் இந்தப் பெரும் ஐயங்களைக் குறித்து முறையான வரிசையில் சொல்கிறேன் கேட்பீராக. ஞானக் கண் மூலம் நான் கல்பத்தின் தொடக்கத்தில் நேர்ந்தவை அனைத்தையும் கண்டேன்.(25) சாங்கியர்கள் மற்றும் யோகத்தை அறிந்தவர்கள் ஆகிய இருவரும் பரமாத்மா என்ற பெயரில் எவனை அழைக்கிறார்களோ, அவனே தன் செயல்களின் விளைவால் முதன்மையான புருஷனாகக் கருதப்படுகிறான். கல்விமான்களால் புலப்படாதது {அவ்யக்தம்} அல்லது பிரதானம் என்றழைக்கப்படும் பிரகிருதி அவனிலிருந்தே எழுகிறது.(26) பலமிக்கதான அந்தப் புலப்படாததிலிருந்தே உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்காக அநிருத்தன் என்றழைக்கப்படுபவன் எழுந்தான். அந்த அநிருத்தனே, உயிரினங்களுக்கு மத்தியில் பேரான்மா என்ற பெயரால் அறியப்படுகிறான்.(27) அந்த அநிருத்தனே புலப்படுபவனாகி {வியக்தனாகி}, பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தான். அனைத்து வகைச் சக்திகளையும் கொண்ட அநிருத்தனே, நனவுநிலை {அகங்காரம்} என்ற மற்றொரு பெயரால் அறியப்படுகிறான்.(28)
அந்த நனவுநிலையிலிருந்து {அகங்காரத்திலிருந்து} பூமி, காற்று, வெளி, நீர் மற்றும் ஐந்தாவதாக ஒளி என்ற ஐம்பெரும்பூதங்கள் எழுந்தன.(29) (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்களைப் படைத்த பிறகு அவன் அவற்றின் குணங்களைப் படைத்தான்[2]. பிறகு அவன் அந்தப் பெரும்பூதங்களைக் கலந்து உடல்கொண்ட பல்வேறு வடிவங்களைப் படைத்தான். அவர்களைச் சொல்கிறேன் கேட்பீராக.(31) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, உயர் ஆன்ம வசிஷ்டர், சுயம்புவான மனு ஆகிய எண்மர் பிருகிருதியின் தனிமங்களாக அறியப்பட வேண்டும். உலகங்கள் அனைத்தும் இவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(31) அப்போது, உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், உயிரினங்கள் அனைத்தின் வெற்றிக்காக அங்கங்கள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், அங்கங்களோடு கூடிய வேள்விகளையும் படைத்தான். பிருகிருதியின் இந்த எட்டுத் தனிமங்களில் இருந்தே இந்தப் பரந்த அண்டம் எழுந்தது.(32) பிறகு, கோபம் எனும் கோட்பாட்டில் இருந்து ருத்திரன் எழுந்தான். உயிர் கொண்ட அவன், தன்னைப் போன்ற இன்னும் பத்து பேரைப் படைத்தான். இந்தப் பதினோரு ருத்திரர்களும், விகார புருஷர்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.(33) ருத்திரர்கள், (எட்டு) பிரகிருதிகள், தெய்வீகமான பல்வேறு முனிவர்கள் ஆகியோர் உயிர் பெற்று, அண்டத்தைத் தாங்குவதற்காகவும், அதன் இயக்கத்தை நோக்கில் கொண்டும் பிரம்மனை அணுகினார்கள்.(34)பெரும்பாட்டனிடம் பேசிய அவர்கள், “ஓ! புனிதமானவரே, ஓ! பெரும்பலமிக்கவரே, நாங்கள் உம்மால் படைக்கப்பட்டோம். ஓ! பெரும்பாட்டனே, எங்களில் எவரெவர் எந்தெந்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக.(35) எந்தக் குறிப்பிட்ட காரியங்களைக் கண்காணிப்பதற்காக எந்த அதிகாரம் உம்மால் படைக்கப்பட்டிருக்கிறது? எங்களில் எவர், எந்த வகை நனவுநிலையை {அகங்காரத்தைக்} கொண்டு, இவற்றில் எந்த அதிகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்?(36) எங்கள் அதிகாரத்திற்குத் தக்கப்படி கடமைகளையாற்ற எங்கள் ஒவ்வொருவருக்கும் எந்தெந்த அளவுக்குப் பலம் விதிக்கப்பட்டிருக்கிறது?” {என்று கேட்டனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, பின்வரும் வழியில் அவர்களுக்கு மறுமொழி கூறினான்.(37)
பிரம்மன், “தேவர்களே, இக்காரியத்தைக் குறித்து என்னிடம் கேட்பதில் நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. உங்கள் கவனத்தில் உள்ள அதே காரியம் குறித்தே நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.(38) மூவுலகங்களும் எவ்வாறு தாங்கப்பட வேண்டும்? எவ்வாறு அதை முன்னெடுக்க வேண்டும்? உங்களுடைய பலமும், என்னுடைய பலமும் எவ்வாறு கதியை நோக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும்?(39) நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டு அகன்று, உலகத்தின் சாட்சியாகவும், இருப்பில் உள்ளவர்களில் முதன்மையானவனுமான அந்தப் புலப்படாதவனிடம் {அவ்யக்தனிடம்} செல்வோம். எது நமக்கான நன்மை என்பதை அவன் நமக்குச் சொல்வான்” என்றான்.(40)
இதன்பிறகு, அந்தத் தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி, பாற்கடலின் வடகரைக்குப் பிரம்மனுடன் சென்றனர்.(41) அங்கே வந்ததும் அவர்கள் வேதங்களில் பிரம்மன் அறிவித்தபடியே கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினர். அந்தக் கடுந்தவங்கள் மஹாநியமம் (நோன்புகள் மற்றும் நியமங்களில் முதன்மையானது) என்ற பெயரால் அறியப்பட்டன.(42) மேல் நோக்கிய கண்களுடனும், மேலுயர்த்திய கரங்களுடனும், நிலையான மனத்துடனும் அங்கே அவர்கள் மரக்கட்டைகளைப் போல அசையாதிருந்தனர்.(43) அவர்கள் ஆயிரம் தேவ வருடங்களுக்கு இந்தக் கடுந்தவங்களைச் செய்தனர். அந்தக் காலம் நிறைவடைந்ததும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களுடன் இணைக்கமான இந்த இனிய வார்த்தைகளை அவர்கள் கேட்டனர்.(44)
அருளப்பட்டவனும், புனிதமானவனுமான அவன் {அவ்யக்தன்}, “தேவர்களே, பிரம்மனின் துணையுடன் கூடியவர்களும், தவச் செல்வத்தைக் கொண்டவர்களுமான முனிவர்களே, உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி மதித்து, இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்.(45) உங்கள் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன். உண்மையில், உங்கள் சிந்தனைகள் மூவுலங்களின் நன்மைக்கானவையே. உங்கள் சக்தியையும், பலத்தையும் பெருக்கி, (செயல்களுக்கான ஒருதலைச்சார்பு கொண்ட) பிரவிருத்தியை உங்களுக்குக் கொடுப்பேன்.(46) தேவர்களே, என்னைத் துதிக்கும் விருப்பத்தில் நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, நீங்கள் மேற்கொண்ட அந்தத் தவங்களுக்கான சிறந்த கனிகளை இப்போது அனுபவிப்பீராக.(47) இந்தப் பிரம்மன் உலகங்கள் அனைத்தின் தலைவனாவான். பலம் கொண்ட அவன் உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனாவான். நீங்கள் தேவர்களில் முதன்மையானவர்களாகவும் இருக்கிறீர்கள். என் மகிமைக்காக நீங்கள் அனைவரும் குவிந்த மனங்களுடன் வேள்விகளைச் செய்வீராக.(48) நீங்கள் செய்யப்போகும் அந்த வேள்விகளின் காணிக்கைகளில் எப்போதும் எனக்கு ஒரு பங்கைக் கொடுப்பீராக. படைப்பின் தலைவர்களே, அதன் பிறகு உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய அதிகாரங்களையும், உங்கள் நன்மைக்காக விதிக்கப்பட்டவற்றையும் ஒப்படைப்பேன்” என்றான் {அவ்யக்தன்}.(49)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தேவர்களின் தேவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், பெரும் முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர் அனைவரும், தங்கள் உடலில் மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(50) அவர்கள், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி விஷ்ணுவைக் கௌரவிப்பதற்கான ஒரு வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த வேள்வியில் பிரம்மனே கூட விஷ்ணுவுக்கான காணிக்கைகளில் ஒரு பகுதியை அர்ப்பணித்தான்.(51) பிரம்மனைப் போலவே தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் ஒவ்வொருவரும் அதே போன்ற பகுதிகளை அந்தப் பெருந்தேவனுக்குக் காணிக்கையாக அளித்தனர். இவ்வாறு பெருமதிப்புடன் விஷ்ணுவுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டும் கிருத யுகத்திற்காக விதிக்கப்பட்ட விதிகளின்படியே இருந்தன.(52) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர், அந்த வேள்வியில், சூரியனின் நிறத்தைக் கொண்டவனாகவும், இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனாகவும், தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்திருப்பவனாகவும், பரந்தவனாகவும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், அனைத்தின் உயர்ந்த தலைவனாகவும், வரங்களை அளிப்பவனாகவும், பலங்கொண்டவனாகவும் அந்தப் பெருந்தேவனைத் துதித்தனர்.(53)
வரமளிப்பவனும், புலப்படாதவனும், உடலற்றவனுமான அந்தப் பெருந்தேவன் {நாராயணன்}, இவ்வாறு துதிக்கப்பட்டு, அங்கே கூடியிருந்த சொர்க்கத்தின் தேவர்களிடம்:(54) “இவ்வேள்வியில் உங்களால் அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் என்னை வந்தடைந்தன. நான் உங்கள் அனைவரிடமும் நிறைவுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு வெகுமதிகளை அளிக்கப் போகிறேன். இருப்பினும், அவை நீங்கள் திரும்பி வரவேண்டிய கதிகள் நிறைந்தவையாகவே இருக்கும்[3].(55) தேவர்களே, நான் உங்களிடம் கொண்ட அன்பு மற்றும் என் அருளின் விளைவால், இந்த நாள் முதல், இதுவே உங்கள் தனித்துவமான சிறப்பியல்பாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு யுகத்திலும் பெரும் அளவிலான காணிக்கைளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, பிரவிருத்தியில் பிறக்கும் கனிகளை அனுபவிப்பவர்களாக இருப்பீர்கள்.(56) தேவர்களே, வேதங்களில் விதிகளின்படி வேள்விகளைச் செய்யப் போகும் மனிதர்கள், தங்கள் வேள்விக் காணிக்கைகளில் உங்கள் அனைவருக்குமுரிய பங்குகளைக் கொடுப்பார்கள்.(57) இந்த வேள்வியில் எவன் எந்தக் காணிக்கையைக் கொடுத்தானோ, அவன் (இத்தகைய வேறு வேள்விகளில்) இதே போன்ற பங்கைப் பெறுபவனாக வேத சூத்திரங்களில் அமைப்பேன்.(58) உங்கள் அதிகாரத்திற்குரிய காரியங்களைக் கவனிக்கப் படைக்கப்பட்ட நீங்கள், அந்த வேள்விகளில் நீங்கள் புறம் {காணிக்கைகளின்} பங்குகளைச் சார்ந்த உங்கள் பலத்துடன் உலகங்களைத் தாங்குவீர்களாக.(59)உண்மையில், நீங்கள் பல்வேறு உலகங்களில் நடைபெறும் சடங்குகள் மற்றும் நோன்புகளின் மூலம் பிருவிருத்தியின் கனிகளில் எழும் உங்கள் பலத்தைப் பெற்று அந்த உலகக் காரியங்களைத் தொடர்ந்து தாங்குவீராக.(60) மனிதர்களால் செய்யப்படும் வேள்விகளில் இருந்து உங்கள் பலத்தைப் பெறும் நீங்கள் என்னைப் பலப்படுத்துவீர்கள். இவையே உங்கள் அனைவருக்காகவும் நான் சிந்திப்பதாகும்.(61) இந்நோக்கத்திற்காகவே நான் வேதங்களையும், வேள்விகளையும், செடிகள் மற்றும் மூலிகைகளையும் படைத்திருக்கிறேன். பூமியில் மனிதர்களின் மூலம் இவற்றால் முறையாகத் தொண்டாற்றப்படும் தேவர்கள் நிறைவை அடைவார்கள்.(62) தேவர்களில் முதன்மையானவர்களே, இந்தக் கல்பத்தின் முடிவு வரை, பிரவிருத்தி அறத்தின் விளைவைச் சார்ந்திருக்கும் வகையில் உங்கள் அமைப்புகளை உண்டாக்கி, உங்கள் படைப்பை விதித்திருக்கிறேன். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, அவரவருக்குரிய அதிகாரத்தின்படி நீங்கள் மூவுலகங்களின் நன்மையை நாடுவதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீராக.(63) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} என் மனோவிருப்பத்தாலேயே படைக்கப்பட்டார்கள் {இவர்கள் என் மானஸபுத்திரர்கள்}. இவர்கள் வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். உண்மையில் அவர்கள் வேத ஆசான்களாக ஆவார்கள். வாரிசுகளை உண்டாக்கும் செயலுக்குத் தங்களை அர்ப்பணிப்பதையே இவர்கள் {சப்தரிஷிகளும்} நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதால் பிரவிருத்தி அறத்தில் பற்றுள்ளவர்களாகவே இவர்கள் இருப்பார்கள்.(65)
செயல்கள் மற்றும் நோன்புகளில் ஈடுபடும் உயிரினங்களுக்கு இதுவே நான் சொல்லும் நித்திய பாதையாகும். உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கு அதிகாரம் படைத்த பலமிக்கத் தலைவன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான்.(66) ஸனர், ஸநத்ஸுஜாதர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர், கபிலர், ஏழாவதாக ஸநாதனர்(67) ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} பிரம்மனின் ஆன்ம மகன்களாவர் {பிரம்மனின் மானஸ புத்திரர்களாவர்}. (கல்வி அல்லது முயற்சியைச் சார்ந்திராமலேயே) ஞானம் தானாக இவர்களை அடையும். இவர்கள் எழுவரும் நிவிருத்தி அறத்தில் பற்றுடையவர்களாவர். இவர்களே யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். இவர்கள் சாங்கிய தத்துவத்தில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்களே கடமை குறித்த சாத்திரங்களின் ஆசான்களாக இருப்பார்கள், இவர்களே நிவிருத்தி அறத்தின் கடமைகளை அறிமுகம் செய்து, அவற்றை உலகங்களில் பாயச் செய்வார்கள்.(69)
புலப்படாததிலிருந்து (பிரகிருதியிலிருந்து) நனவுநிலையும் {அகங்காரமும்}, (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முப்பெரும் குணங்களும் உண்டாகின. பிரகிருதியைக் கடந்திருப்பவன் க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறான்.(70) நானே அந்த க்ஷேத்ரஜ்ஞன் ஆவேன். செயல்களில் பற்றுடையோருக்குரிய பாதையானது, மறுபிறவிகளைக் கொண்டதாகும். அந்தப் பாதையில் ஒருவனால் திரும்பாத இடத்தை அடையமுடியாது. பல்வேறு உயிரினங்கள் பல்வேறு கதிகளுக்காகப் படைக்கப்படுகின்றன. சில பிரவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும், சில நிவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும் படைக்கப்படுகின்றன. ஓர் உயிரினம் எந்தப் பாதையைப் பின்பற்றுகிறோ, அதற்குரிய வெகுமதியையே அஃது அனுபவிக்கிறது. இந்தப் பிரம்மனே, உலகங்கள் அனைத்தின் ஆசானாவான். பலம் கொண்ட இவனே அண்டத்தைப் படைக்கிறான்.(71,72) அவனே உங்கள் தாயும், தந்தையும், பாட்டனும் ஆவான். என் ஆணையின் பேரில் அனைத்து உயிரினங்களுக்கு அவன் வரங்களை அளிக்கிறான்.(73) அவனது ஆணையின் பேரில் அவனது புருவத்தில் இருந்து உதித்தவனும், பலம் கொண்டவனுமான அவனுடைய மகன் ருத்திரன், படைக்கப்பட்டவை அனைத்தையும் தாங்குவான்.(74) நீங்கள் உங்களுக்குரிய அதிகாரங்களை அடைந்து, விதிப்படி உலகங்களின் நன்மையை நாடுவீராக. உலகங்கள் அனைத்திலும் சாத்திரச் செயல்பாடுகள் நடைபெறட்டும். இதில் எந்தத் தாமதமும் வேண்டாம்.(75)
தேவர்களில் முதன்மையானோரே, அனைத்து உயிரினங்களின் செயல்களையும், அதன்மூலம் அவை அடையப்போகும் கதிகளையும் நீங்களே விதிப்பீராக. உயிரினங்கள் அனைத்தும் வாழக்கூடிய கால அளவையும் நீங்களே நிர்ணயிப்பீராக.(76) யுகங்கள் அனைத்திலும் முதன்மையானதும், இப்போது நடைபெறுவதுமான இந்த யுகம், கிருதம் என்ற பெயரில் அறியப்பட வேண்டும். இந்த யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில் உயிரினங்கள் கொல்லப்படக்கூடாது. என் ஆணையன்றி வேறுவகையில் இது நடைபெறக்கூடாது.(77) இந்த யுகத்தில் அறம் முழுமையாகத் தழைக்கும். இதன் பிறகு திரேதம் என்றழைக்கப்படும் யுகம் நேரும். அந்த யுகத்தில் வேதங்கள் ஒரு பகுதியை இழக்கும். அவற்றில் மூன்று மட்டுமே நீடித்திருக்கும்.(78) அந்த {திரேத} யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில், விலங்குகள் புனித மந்திரங்களின் துணையால் காணிக்கையாக்கப்பட்ட பிறகு கொல்லப்படும். அறத்தைப் பொறுத்தவரையில் ஒரு பகுதியை இழந்து மூன்று பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(79) திரேதம் முடிந்ததும், துவாபரம் என்ற பெயரிலான கலப்பு யுகம் நேரும். அந்த யுகத்தில் அறம் இரண்டு பகுதிகளை இழக்கும், இரண்டு பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(80) துவாபரம் முடிந்ததும் நேரும் யுகம் திஷ் என்றழைக்கப்படும், அது தனக்கு முன்பு கலியை {கலிபுருஷனைக்} கொண்டுவரும். அறம் மூன்று பகுதிகளை இழக்கும். அனைத்து இடங்களிலும் ஒரேயொரு பகுதி மட்டுமே நீடித்திருக்கும்” என்றான் {நாராயணன்}.(81)
அந்தப் பெருந்தேவன் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, தேவர்களும், தெய்வீக முனிவர்களும் அவனிடம், “அந்த யுகத்தில் ஒவ்வொரு இடத்திலும் அறத்தின் நான்காவது பகுதி மட்டுமே நீடித்திருக்கும் என்றால், ஓ! புனிதமானவனே, நாங்கள் எங்கே செல்வோம்? என்ன செய்வோம்?” என்று கேட்டனர்.(82)
அதற்கு அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “தேவர்களில் முதன்மையானோரே, அந்த யுகத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை நிறைந்த கடமைகளின் துணையுடன் எங்கெல்லாம் வேதங்கள், வேள்விகள், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை அப்போதும் நீடித்திருக்குமோ அத்தகைய இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும். பாவத்தால் உங்களை ஒருபோதும் தீண்ட முடியாது” என்றான்”.(83)
வியாசர் தொடர்ந்தார், “அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட தேவர்களும், அவர்களுடன் கூடிய முனிவர்கள் அனைவரும், அவனுக்குத் தலைவணங்கிய பிறகு, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(84) சொர்க்கவாசிகள் அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகு, அப்போது அநிருத்தனின் வடிவில் வசித்திருந்த அந்தப் பெருந்தேவனைக் காணும் விருப்பத்தில் அங்கேயே இருந்தான்.(85) அந்தத் தேவர்களில் முதன்மையானவன் ஒரு பெரிய குதிரைத் தலையைக் கொண்ட வடிவை ஏற்றுப் பிரம்மனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். வேதங்களையும், அதன் அங்கங்களையும் உரைத்தபடியே அவன் ஒரு கமண்டலத்துடனும், திரிதண்டத்துடனும், பிரம்மனின் முன்னிலையில் தோன்றினான்.(86) உலகங்கள் அனைத்தையும் படைப்பவன் {பிரம்மன்}, அளவிலா சக்தி கொண்ட அந்தப் பெருந்தேவனைக் குதிரைத் தலை மகுடம் சூட்டப்பட வடிவில் கண்டு, அந்த வரமளிக்கும் தலைவனைத் தலைவணங்கி வழிபட்டு, அவனது முன்னிலையில் மதிப்புடன் கரங்கூப்பி நின்றான். அந்தப் பெருந்தேவன் பிரம்மனை ஆரத்தழுவி இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்.(88)
அந்தப் புனிதமானவன் {அஸ்வசிரஸுடன் கூடிய பெருந்தேவன்}, “ஓ! பிரம்மாவே, உயிரினங்கள் பின்பற்றவேண்டிய செயல் நடைமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக. நீயே அண்டத்தின் தலைவனாகவும், ஆசானாகவும் இருக்கிறாய். உன் மேல் சுமையை நிறுத்திபிறகு விரைவில் நான் கவலையில் இருந்து விடுபடுவேன்.(89) எனினும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் கடினமான நிலை ஏற்படும் நேரங்களில், அந்த நெருக்கடி நிலையின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ளும் வகையிலான வடிவங்களில் வந்து பிறப்பேன் {அவதாரம் எடுப்பேன்}” என்றான்.(90)
இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, குதிரைத் தலையைக் கொண்ட அந்த மகத்தான வடிவம் அங்கேயே, அப்போதே மறைந்தது. அவனது ஆணையை ஏற்ற பிரம்மனும் விரைவில் தன் உலகத்திற்குச் சென்றான்.(91) இதனாலேயே, ஓ! அருளப்பட்டவர்களே, தொப்புளில் தாமரையைக் கொண்ட அந்த நித்திய தேவன், வேள்விகளில் முதல் பங்கை ஏற்பவனாகி, அதன் காரணமாகவே வேள்விகள் அனைத்தையும் நித்தியமாகத் தாங்குபவன் என்றழைக்கப்படுகிறான்.(92) அழிவில்லாத கனிகளை விரும்பும் உயிரினங்கள் எந்தக் கதியை அடைய விரும்புகின்றனவோ அந்தக் கதியைக் கொண்ட நிவிருத்தி அறத்தையே அவன் பின்பற்றுகிறான். அதே நேரத்தில் அண்டத்தில் பல்வேறு கருத்துகளைக் கொடுக்கும் நோக்கத்தில் அவனே பிறருக்காகப் பிரவிருத்தி அறத்தையும் விதித்தான்.(93) இருப்பிலுள்ள படைக்கப்பட்ட அனைத்திற்கும் அவனே தொடக்கமும், நடுநிலையும், முடிவுமாக இருக்கிறான். அவனே அவர்களது படைப்பாளனாகவும், தியானிக்கத் தகுந்து பொருளாகவும் இருக்கிறான். செயல்படுபவனாகவும், செயலாகவும் அவனே இருக்கிறான். யுக முடிவில் அண்டத்தைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, உறங்கச் சென்று மற்றொரு யுகம் தொடங்கும்போது மீண்டும் அண்டத்தைப் படைக்கிறான்.(94)
உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், முக்குணங்களைக் கடந்தவனும், பிறப்பற்றவனும், அண்டமே வடிவானவனும், சொர்க்கவாசிகள் அனைவரின் வசிப்பிடமாகவும், புகலிடமாகவும் இருப்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனை நீங்கள் அனைவரும் வணங்குவீராக.(95) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனாகவும், ருத்திரர்களின் தலைவனாகவும், ஆதித்தியர்கள் மற்றும் வசுக்களின் தலைவனாகவும் உள்ள அவனை நீங்கள் வணங்குவீராக.(96) அசுவினிகளின் தலைவனும், மருத்துகளின் தலைவனும், வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகள் அனைத்தின் தலைவனும், வேதாங்கங்களின் தலைவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக.(97) பெருங்கடலில் எப்போதும் வசிப்பவனும், ஹரி என்றழைக்கப்படுபவனும், தர்ப்பைப் புற்களைப் போன்ற முடியைக் கொண்டவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக. அமைதி மற்றும் நிலையமைதியாக இருப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மோக்ஷ அறத்தைப் புகட்டுபவனுமான அவனை வணங்குவீராக.(98) தவங்கள், அனைத்துவகைச் சக்திகள், புகழ் ஆகியவற்றின் தலைவனும், வாக்கின் தலைவனும், ஆறுகளின் தலைவனுமான அவனை வணங்குவீராக.(99) கபர்தின் {சடையுள்ளவன்} என்றழைக்கப்படுபவனும், பெரும் பன்றியும், ஒற்றைக் கொம்புடன் கூடிய குதிரையும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், சூரியனும், நன்கறியப்பட்ட குதிரைத் தலையைக் கொண்டவனும், எப்போதும் நான்கு வகை வடிவங்களில் வெளிப்படுபவனுமான அவனை வணங்குவீராக.(100) வெளிப்படாதவனும், அறிவால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், அழியத்தக்கதாகவும், அழிவில்லாததாகவும் இருப்பவனுமான அவனை வணங்குவீராக. மாற்றமில்லாதவனாக இருக்கும் அந்த உயர்ந்த தேவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(101) அவன் ஞானக் கண்ணின் துணையால் மட்டுமே அறிய முடிந்த உயர்ந்த தலைவனாக இருக்கிறான். இவ்வாறு, பழங்காலத்தில் ஞானக்கண்ணின் துணையால் நான் அந்த முதன்மையான தேவனைக் கண்டேன்.(102) சீடர்களே, நீங்கள் கேட்ட அனைத்தையும் சொல்லிவிட்டேன். நீங்கள் என் சொற்களின்படி செயல்பட்டு, ஹரி என்றழைக்கப்படும் அந்த உயர்ந்த தலைவனுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவீராக. வேத சொற்களில் அவன் புகழைப் பாடித் துதித்து, முறையான சடங்குகளின்படி அவனை வழிபடுவீராக” என்றார் {வியாசர்}”.(103)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வேதங்களைத் தொகுத்தவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான அவர், இது குறித்து எங்களால் கேட்கப்பட்ட போது இவ்வாறே சொன்னார். உயர்ந்த அறவனோனான அவரது மகனும் {சுகரும்}, சீடர்கள் {நாங்கள்} அனைவரும் இஃதை அவர் சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்தோம்.(104) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, எங்கள் ஆசானும், நாங்களும், நான்கு வேதங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரிக்குகளால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைத்} துதித்தோம்.(105) இவ்வாறே நீ கேட்டது குறித்த அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஓ! மன்னா, தீவில் பிறந்தவரான எங்கள் ஆசான் இவ்வாறே எங்களுக்குச் சொன்னார்.(106)
“அந்தப் புனிதமான தலைவனை வணங்குகிறோம்” என்ற வார்த்தைகளை எவன் சொல்கிறானோ, குவிந்த கவனத்துடன் இந்த உரையாடலை எவன் கேட்கிறானோ, எவன் படிக்கிறானோ, எவன் பிறருக்குச் சொல்கிறானோ,(107) அவன் புத்தியும், உடல்நலமும் கொண்டவனாகவும், அழகையும், பலத்தையும் உடையவனாகவும் ஆவான். நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த நோயில் இருந்து அவன் விடுபடுவான்; கட்டுகளில் {பந்தங்களில்} அகப்பட்டிருந்தால் அந்தக் கட்டுகளில் இருந்து அவன் விடுபடுவான். ஆசைகளைப் பேணி வளர்க்கும் மனிதன், (இதன் மூலம்) தன் விருப்பங்கள் அனைத்தும் கனியப்பெற்று, நீண்ட வாழ்நாளையும் எளிதாக அடைவான்.(108)
ஒரு பிராமணன் இதைச் செய்வதால் வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாவான். ஒரு க்ஷத்திரியன் இதைச் செய்வதால் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவான். ஒரு வைசியன் இதைச் செய்வதால் பெரும் லாபங்களையும், ஒரு சூத்திரன் இதைச் செய்வதால் பேரின்பத்தையும் அடைவார்கள்.(109) மகனற்ற மனிதன் ஒரு மகனை அடைவான். கன்னிப்பெண் விரும்பத்தக்க கணவனை அடைவாள். கருவுற்ற பெண்மணி {இதைச் செய்தால்} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(110) மலட்டுப் பெண்ணும் கருவுற்று, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்ற செல்வத்தை அடைவாள். பயணத்தில் இந்த உரையை வரிசை மாறாமல் உள்ளடியே கூறுபவன், தன் வழியில் எந்தத் தடங்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் செல்வான். உண்மையில், ஒருவன் இந்த உரையைப் படிப்பதாலோ, உரைப்பதாலோ {கேட்பதாலோ}, தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(111) நிறைவான முடிவைக் கொண்டதும், இருப்பிலுள்ள அனைத்திலும் முதன்மையான உயர்ந்த ஆன்மாவின் {பரமனின்} குணங்களைச் சுமந்திருப்பதுமான அந்தப் பெரும் முனிவரின் {வியாசரின்} இந்த வார்த்தைகளையும், முனிவர்களின் பெருங்கூட்டமும், சொர்க்கவாசிகளும் {தேவர்களும்} சொல்லும் இந்த உரையைக் கேட்டுப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைவார்கள். {இது வியாஸமகரிஷியின் உறுதியான வார்த்தை}” {என்றார் வைசம்பாயனர்}.(112)
பெயர்களின் தனிப்பொருள்! – சாந்திபர்வம் பகுதி – 342-கிருஷ்ணன் தனது மகிமையையும், தன் பெயர்களின் தனிப்பட்ட பொருள்களையும் அர்ஜுனனுக்குச் சொன்னது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! புனிதமானவரே, பெருமுனிவரான வியாசர் தமது சீடர்களுடன் மதுசூதனின் புகழைப் பாடியபோது குறிப்பிட்ட பல்வேறு பெயர்களின் தனிப்பொருள்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனான {பகவானான} ஹரியின் அந்தப் பெயர்களைக் கேட்க நான் விரும்புகிறேன். உண்மையில் அந்தப் பெயர்களைக் கேட்பதன் மூலம் நான் பிரகாசமான கூதிர் கால நிலவைப் போலத் தூய்மையடைந்து புனிதமடைவேன்” என்று கேட்டான்.(1,2)
வைசம்பாயனர் சொன்னார், “குணங்கள் மற்றும் செயல்களின் மூலம் அமைந்த ஹரியின் பல்வேறு பெயர்களுடைய தனிப்பொருள்களை அந்தப் பலமிக்க ஹரியே உற்சாகம் நிறைந்த ஆன்மாவோடு பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} விளக்கியதைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில், பகைவீரர்களைக் கொல்பவனான பல்குனன், எந்தப் பெயர்களால் உயர் ஆன்ம கேசவன் துதிக்கப்படுகிறானோ அவற்றில் சிலவற்றின் பொருளைக் கேசவனிடமே கேட்டான்.(4)
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! புனிதமானவனே, ஓ! கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை விதிப்பவனே, ஓ! இருப்பிலுள்ள அனைத்தையும் படைத்தவனே, ஓ! மாற்றமில்லாதவனே, ஓ! உலகங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனே, ஓ! அண்டத்தின் தலைவா, ஓ! அனைத்து மனிதர்களின் அச்சங்களை விலக்குபவனே,(5) ஓ! கேசவா, ஓ! தேவா, உன்னுடைய பல்வேறு செயல்களின் விளைவால் வேதங்களிலும், புராணங்களிலும் பெரும் முனிவர்களால் குறிப்பிடப்படும் உன்னுடைய பெயர்கள் அனைத்தின் தனிப்பொருள் விளக்கத்தை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். ஓ! தலைவா, அந்தப் பெயர்களின் தனிப்பொருட்களை உன்னையன்றி வேறெவரும் விளக்கத்தகுந்தவர் அல்ல” என்று கேட்டான்[1].(6,7)அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “ஓ! அர்ஜுனா, ரிக்வேதம், யஜுர் வேதம், அதர்வணங்கள், சாமங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், கணிய சாத்திரம் {சோதிட சாத்திரம்},(8) சாங்கிய சாத்திரங்கள், யோக சாத்திரங்கள், மற்றும் வாழ்வியல் சாத்திரங்கள் ஆகியவற்றில் பெரும் முனிவர்களால் சொல்லப்படும் பெயர்கள் பலவாகும்.(9) அந்தப் பெயர்களில் சில என் குணங்களுக்கும், சில என் செயல்களுக்கும் தொடர்புடையனவாகும். ஓ! பாவமற்றவனே, (குறிப்பாக) என் செயல்களைக் குறித்த பெயர்கள் ஒவ்வொன்றின் பொருளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(10) பழங்காலத்தில் நீ என் உடலின் பாதியாக இருந்தாய் என்று சொல்லப்படுகிறது. பெரும் மகிமை கொண்டவனும், உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தின் பரமாத்மாவாக இருப்பவனுமானவனை வணங்குகிறேன்[2].(11) அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படையான) முக்குணங்களைக் கடந்தவனும், அந்தக் குணங்களின் ஆன்மாவுமான நாராயணனை வணங்குகிறேன். அவனது அருளிலிருந்து பிரம்மன் எழுந்தான், அவனது கோபத்திலிருந்து ருத்திரன் எழுந்தான்.(12) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எங்கிருந்து எழுந்தனவோ, அதன் தோற்றுவாயாக அவனே இருகிறான். சத்வ குணம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையானவனே, சத்வ குணம் பதினெட்டுக் குணங்களைக் கொண்டதாகும்[3].வானத்தையும், பூமியையும் தன் ஆன்மாவாகக் கொண்டவளும், தன் படைப்பு சக்தியால் அண்டத்தைத் தாங்குவதில் வெல்பவளுமான பரம இயற்கையின் குணம் அதுவே {சத்வ குணமே}. அந்த இயற்கையானவள் செயல்கள் அனைத்தின் கனியினோடு (உயிரினங்கள் தங்கள் செயல்களின் மூலம் அடையும் பல்வேறு இன்ப உலகங்களின் வடிவில்) அடையாளம் காணப்படுகிறாள்.(13) அவள் தூய சித்-ஆகவும் இருக்கிறாள். அவள் இறப்பற்றவளாகவும், வெல்லப்பட முடியாதவளாகவும், அண்டத்தின் ஆன்மாவாகவும் அழைக்கப்படுகிறாள். அவளிடமிருந்தே படைப்பு மற்றும் அழிவு என்ற இரண்டு மாறுபாடுகளும் {விகாரங்களும்} தோன்றுகின்றன.(14) (அவள் எனது பிரகிருதி அல்லது இயற்கையோடு அடையாளம் காணப்படுகிறாள்). பாலினமற்ற அவளே, அல்லது அவனே மக்கள் செய்யும் தவங்களாக இருக்கிறாள்/ன். செய்யப்படும் வேள்வியாகவும், வேள்வியைச் செய்யும் வேள்வியாளனாகவும் அவனே இருக்கிறான். அவனே புராதனனும், முடிவற்றவனுமான புருஷனாவான். வேறு பெயரில் அநிருத்தன் என்றழைக்கப்படும் அவன், அண்டத்தின் படைப்பு மற்றும் அழிவுக்கான தோற்றுவாயாக இருக்கிறான்[4].(15)ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மனின் இரவு முடிந்த போது, அந்த அளவிலா சக்தி கொண்டவனுடைய {அநிருத்தனுடைய} அருளின் மூலம் முதலில் ஒரு தாமரை தோன்றியது.(16) அநிருத்தனின் அருளின் மூலம் அந்தத் தாமரையினுள் பிரம்மன் தோன்றினான். பிரம்மனுடைய பகல்பொழுதின் மாலை வேளையில் அநிருத்தன் கோபத்தால் நிறைந்ததன் விளைவால், (அண்ட அழிவுக்கான வேளை நேரும்போது) அனைத்தையும் அழிக்க வல்லவனாகவும், ருத்திரன் என்றழைக்கப்படுபவனாகவும் அவனது நெற்றியில் இருந்து ஒரு மகன் பிறந்தான். (அநிருத்தனின்) உற்சாகம் மற்றும் கோபம் ஆகியவற்றில் இருந்து உண்டான பிரம்மன் மற்றும் ருத்திரன் என்ற இவ்விருவரும் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாவர்.(17,18)அநிருத்தனின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் தேவர்கள் இருவரும் படைக்கவும், அழிக்கவும் செய்கின்றனர். அனைத்து உயிரினங்களுக்கும் வரங்களை அளிக்கவல்லவர்களாக இருப்பினும், (படைப்பு மற்றும் அழிவு என்று) தாங்கள் கவனிக்கும் அலுவலின் காரியத்தில் அவர்கள் அநிருத்தனின் கைகளில் இருக்கும் கருவிகளே ஆவர். (அண்டத்தைப் பொறுத்தவரையில் வெளிப்படையாகச் செயல்படுபவர்களாகப் பிரம்மனையும், ருத்திரனையும் அமைத்து, அநிருத்தனே அனைத்தையும் செய்கிறான்).(19)
ருத்திரன் வேறுபெயரில் கபர்தின் என்றும் அழைக்கப்படுகிறான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்தவனாக இருக்கிறான், சில வேளைகளில் வழுக்கைத் தலையை வெளிப்படுத்துகிறான். அவன் தன் இல்லமாக அமைந்த சுடலைக்கு மத்தியிலேயே வசிக்க விரும்புகிறான். அவன் கடும் நோன்புகளை நோற்பவனாக இருக்கிறான். அவன் பெரும் பலமும், சக்தியும் கொண்ட ஒரு யோகியாவான்.(20) தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும் அவனே. ஓ! பாண்டுவின் மகனே, ருத்திரன் தன் ஆன்மாவாக நாராயணனையே கொண்டிருக்கிறான் என்று எப்போதும் அறியப்பட வேண்டும்.(21) ஓ! பார்த்தா, தேவர்களின் தேவனான மஹேஸ்வரன் வழிபடப்படும்போது, பலமிக்க நாராயணனும் வழிபடப்பட வேண்டும்.(22) ஓ! பாண்டுவின் மகனே, அண்டமனைத்தின், உலகங்களனைத்தின் ஆன்மாவாக நானே இருக்கிறேன். அதே போல ருத்திரனே என் ஆன்மாவாக இருக்கிறான். இதன் காரணமாகவே நான் எப்போதும் அவனைத் துதிக்கிறேன்.(23) மங்கலனும், வரமளிப்பவனுமான ஈசானனை நான் துதிக்கவில்லையெனில், எவனும் என்னைத் துதிக்கமாட்டார்கள்.(24) நான் நிறுவும் விதிகளையே உலகங்கள் அனைத்தும் பின்பற்றுகின்றன. அந்த விதிகள் எப்போதும் துதிக்கப்பட வேண்டும், அதன் காரணமாகவே நான் அவற்றைத் துதிக்கிறேன்.(25)
எவன் ருத்திரனை அறிவானோ, அவன் என்னை அறிவான், எவன் என்னை அறிவானோ அவன் ருத்திரனை அறிவான். எவன் ருத்திரனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னையே பின்பற்றுகிறான். ருத்திரனே நாராயணனாவான். அவர்கள் இருவரும் ஒருவரே; ஒருவனே இரண்டு வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான்.(26) ஒருவராகவே உள்ள ருத்திரனும், நாராயணனும் வெளிப்படும் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்து, அவற்றை {அந்தப் பொருட்களைச்} செயல்பட வைக்கின்றனர். ஓ! பாண்டுவின் மகனே, ருத்திரனைத் தவிர வேறு எவனும் எனக்கு வரமருளத் தகுந்தவனல்ல.(27) இஃதை என் மனத்தில் தீர்மானித்துக் கொண்டு, ஒரு மகனைப் பெறும் வரத்தை அடைவதற்காகப் பழங்காலத்தில் நான் ருத்திரனைத் துதித்தேன். இவ்வாறு ருத்திரனைத் துதிப்பதால் நான் என்னையே துதிக்கிறேன்.(28) விஷ்ணு தன்னையன்றி {தன் சுயத்தையன்றி} வேறு எந்தத் தேவனுக்கும் தலைவணங்குவதில்லை. இதன் காரணமாகவே (ஏற்கனவே நான் உனக்குச் சொன்னது போலவே ருத்திரனாக நானே இருப்பதால்) நான் ருத்திரனைத் துதிக்கிறேன்.(29) பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மற்றும் பெரும் முனிவர்கள் அனைவரும், ஹரி என்று வேறு பெயரில் அழைக்கப்படும் தேவர்களில் முதன்மையான நாராயணனையே துதிக்கின்றனர்.(30) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றில் இருப்பில் உள்ள அனைத்திலும் முதன்மையானவனாக விஷ்ணு எப்போது துதிக்கப்பட்டு, மதிப்புடன் வழிபடப்பட வேண்டும்.(31) விஷ்ணுவுக்கு நீ தலைவணங்குவாயாக. அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனுக்கு நீ தலைவணங்குவாயாக. ஓ! குந்தியின் மகனே, தேவர்களில் முதன்மையானவனும், வேள்விகளில் தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்பவனுமான அந்தப் பெரும் வரமளிக்கும் தேவனை வணங்குவாயாக.(32)
நான்கு வகை வழிபாட்டாளர்கள் இருப்பதாக நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவரிலும், வேறு எந்தத் தேவனைத் துதிக்காமல் என்னிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோரே முதன்மையானவர்கள் ஆவர். நானே அவர்கள் தேடும் கதியாக இருக்கிறேன். அவர்கள் செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றின் கனிகளை ஒருபோதும் நாடுவதில்லை.(33) என் வழிபாட்டாளர்களில் எஞ்சிய மூன்று வகையினர், தங்கள் செயல்களுக்கான கனிகளை விரும்புபவர்கள் ஆவர். அவர்கள் பெரும் இன்ப நிலை கொண்ட உலகங்களை அடைந்தாலும், அவர்களது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் மீண்டும் அங்கிருந்து வீழ்வார்கள். எனவே என் வழிபாட்டாளர்களில், முழு விழிப்புநிலையை அடைந்தவர்கள் (அத்தகைய விழிப்பு நிலையின் மூலம், என்னோடும் அடையாளங்காணப்படும் மனிதர்களால் அடையப்படும் கதியைத் தவிர வேறு இன்பங்கள் அனைத்தும் நிலையில்லாதவை என்பதை அறிந்து) முதன்மையான (அருமதிப்புள்ள) கதியை அடைகின்றனர்[5].(34) இத்தகைய தெளிவை வெளிப்படுத்தும் ஒழுக்கம் கொண்டவர்களும், விழிப்படைந்தவர்களுமான அவர்கள், பிரம்மன், அல்லது மஹாதேவன், அல்லது சொர்க்கத்தில் தோன்றும் பிற தேவர்களைத் துதிப்பதில் ஈடுபட்டாலும், இறுதியாக அவர்கள் என்னையே அடைவதில் வெல்கிறார்கள்.(35) ஓ! பார்த்தா, என் வழிபாட்டாளர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையே இவ்வாறு உனக்குச் சொன்னேன்.(36)ஓ! குந்தியின் மகனே, நீயும், நானும் நரன் மற்றும் நாராயணன் என்று அறியப்படுகிறோம். பூமியின் சுமையைக் குறைக்கும் நோக்கத்திற்காகவே நாமிருவரும் மனித உடல்களை ஏற்றோம்.(37) ஆன்மாவைச் சார்ந்திருக்கும் பல்வேறு வகை யோகங்களை நானறிவேன். ஓ! பாரதா, நான் யார் என்பதையும், நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நானறிவேன். நிவிருத்தி அறத்தையும், உயிரினங்களின் செழிப்புக்குப் பங்களிக்கும் அனைத்தையும் நானறிவேன்.(38) நான் நித்தியமானவன், மனிதர்கள் அனைவருக்கும் நானே ஒரே புகலிடமாக இருக்கிறேன். நரன் என்றழைக்கப்படுவனிடமிருந்து தோன்றியதால் நீர்நிலைகள் நாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பழங்காலத்தில் இருந்து நீர்நிலைகளையே என் புகலிடமாக நான் கொள்வதால், நாராயணன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(39) சூரியனின் வடிவை ஏற்கும் நான், என் கதிர்களால் அண்டத்தைத் தழுவுகிறேன். அனைத்து உயிரினங்களின் வசிப்பிடமாக நானே இருப்பதால் வாசுதேவன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(40)
ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களின் கதியாகவும், அவற்றின் தந்தையாகவும் நானே இருக்கிறேன். ஆகாயம் மற்றும் பூமி முழுமையிலும் நான் நீக்கமற நிறைந்திருக்கிறேன், என் காந்தியானது காந்திகள் அனைத்தையும் கடந்திருக்கிறது.(41) ஓ! பாரதா, உயிரினங்கள் அனைத்தும் முடிவில் அடைய விரும்பும் கதியாக நானே இருக்கிறேன். அண்டமனைத்திலும் நான் விஸ்தரித்திருப்பதால் {நிறைந்திருப்பதால்} விஷ்ணு என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(42) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெற்றியை அடைய விரும்பும் மக்கள், சொர்க்கமாகவும், பூமியாகவும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ள ஆகாயமாகவும் உள்ள என்னையே அடைய முனைகின்றனர். இதன் காரணமாக நான் தாமோதரன்[6] என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(43) பிருச்னி என்ற சொல்லில் உணவு, வேதங்கள், நீர் மற்றும் அமுதம் ஆகியவையும் அடங்கும். இவை நான்கும் எப்போதும் என் வயிற்றில் இருக்கின்றன. எனவே நான் பிருச்னிகர்ப்பன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(44) ஒரு காலத்தில், ஏகதர் மற்றும் திவிதரால் முனிவர் திரிதர் கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்ட போது, மனம் தளர்ந்த திரிதர், “ஓ பிருச்னிகர்ப்பா, வீழ்ந்துவிட்ட திரிதனைக் காப்பாயாக” என்று என்னை இருப்புக்கு அழைத்ததாக முனிவர்கள் சொல்கின்றனர்.(45) முனிவர்களில் முதன்மையானவரும், பிரம்மனின் (ஆன்ம) மகனுமான திரிதர், இவ்வாறு என்னை அழைத்ததும், அந்தக் குழியில் இருந்து அவர் காக்கப்பட்டார்.(46) உலகிற்கு வெப்பத்தை வழங்கும் சூரியனிலிருந்தும், சுடர்மிக்க நெருப்பிலிருந்தும் {அக்னியிலிருந்தும்}, சந்திரனிலிருந்தும் வெளிப்படும் கதிர்களே என் மயிராகின்றன. எனவே, கல்வியாளர்களான பிராமணர்களில் முதன்மையானோர் என்னைக் கேசவன் என்ற பெயரால் அழைக்கின்றனர்.(47)உயர் ஆன்ம உதத்தியர், தமது மனைவியைக் கருவுறச் செய்து, தேவர்களின் மாயையால் அவளிடமிருந்து மறைந்தார். தம்பியான பிருஹஸ்பதி, அந்த உயர் ஆன்மாவுடைய {உதத்தியருடைய} மனைவியின் முன் தோன்றினார்.(48) ஓ! குந்தியின் மகனே, உதத்தியருடைய மனைவியின் கருவறையில் இருந்தவனும், ஏற்கனவே அடிப்படையான ஐம்பூதங்களால் உடலமைந்ததுவனுமான குழந்தை, கலவி விருப்பத்தால் அங்கே வந்த அந்த முதன்மையான முனிவரிடம் {பிருஹஸ்பதியிடம்},(49) “ஓ! வரங்களை அளிப்பவரே, நான் ஏற்கனவே இந்தக் கருவறையில் நுழைந்துவிட்டேன். என் தாயைத் தாக்குவது உமக்குத் தகாது” என்றான். இன்னும் பிறக்காதவனான அந்தக் குழந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருஹஸ்பதி, கோபத்தால் நிறைந்து, ஒரு சாபத்தை அளிக்கும் வகையில்,(50) “கலவி இன்பத்தை விரும்பி இங்கே நான் வந்தபோது, இவ்வழியில் நீ எனக்குத் தடங்கலாக அமைந்ததால், என் சாபத்தின் மூலம் நீ குருடனாகப் பிறப்பாய் என்பதில் ஐயமில்லை” என்றார்.(51) அந்த முதன்மையான முனிவர் அளித்த இந்தச் சாபத்தின் மூலம், உதத்தியரின் பிள்ளை குருடாகப் பிறந்து, நீண்ட நாட்கள் குருடனாகவே இருந்தார். இதன் காரணமாக, பழங்காலத்தில் அந்த முனிவர் தீர்க்கதமஸ் என்ற பெயரால் அறியப்பட்டார்.(52)
எனினும் அவர், நான்கு வேதங்களையும், அவற்றின் நித்திய அங்கங்கள் மற்றும் உப அங்கங்களையும் அடைந்தார். அதன் பிறகு அவர், இந்த எனது இரகசிய பெயரைச் சொல்லி, அடிக்கடி என்னை இருப்புக்கு அழைத்தார். உண்மையில், விதிக்கப்பட்ட விதியின்படியே மீண்டும் மீண்டும் அவர் என்னைக் கேசவன் என்ற பெயரைக் கொண்ட அழைத்தார்.(53) இந்தப் பெயரை மீண்டும் மீண்டும் சொன்னதனால் அடைந்த தகுதியின் {புண்ணியத்தின்} மூலம், தனது குருட்டு நிலையில் இருந்து குணமடைந்த அவர், அதுமுதல் கௌதமர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். எனவே, ஓ! அர்ஜுனா, தேவர்கள் மற்றும் உயர் ஆன்ம முனிவர்கள் அனைவருக்கும் மத்தியில் என்னுடைய இந்தப் பெயரைச் சொல்வது வரங்களை விளைவிக்கும். நெருப்பின் தேவனும், சோமனும் ஒன்றாகக் கலந்து ஒன்றாகவும், ஒரே பொருளாகவும் ஊடுகலந்தனர். இதன் காரணமாகவே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் இவ்விரு தேவர்களால் நீக்கமற நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது[7].(55) புராணங்களில், அக்னியும் சோமனும் ஒரே இயல்பைக் கொண்டவர்களாகவும், ஒரே விளைவைக் கொண்டவர்களாகவும் சொல்லப்படுகின்றனர். ஒரே விளைவுக்கு வழிவகுக்கும் இயல்பைக் கொண்ட இவை இரண்டின் விளைவால், அவர்கள் ஒருவருக்கொருவர் தகுந்தவரென்றும், அண்டத்தைத் தாங்குபவர்கள் என்றும் சொல்லப்படுகின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.(56)
ருத்திர நாராயணப் போர்! – சாந்திபர்வம் பகுதி – 343-அக்னி மற்றும் சோமனின் இயல்பொற்றுமை; ருத்திரனுக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த போர்…
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “பழங்காலத்தில், அக்னியும், சோமனும் எவ்வாறு தங்கள் சொந்த இயல்பில் சீரான தன்மையை அடைந்தனர்? இந்த ஐயம் என் மனத்தில் எழுகிறது. ஓ! மதுசூதனா, இதை விலக்குவாயாக” என்றான்.(1)
உயர்ந்தவனான அந்தப் புனிதமானவன் {ஸ்ரீ கிருஷ்ண பகவான்}, “ஓ! பாண்டுவின் மகனே, என் சக்தியில் இருந்து எழும் நிகழ்வுகளைக் கொண்ட ஒரு புராதனக் கதையைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அதைக் கேட்பாயாக.(2) தேவ அளவின்படி நாலாயிரம் {4000} யுகங்கள் கடந்ததும், அண்ட அழிவு ஏற்படுகிறது. புலப்படுவது, புலப்படாததில் மறைகிறது. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் அழிவை அடைகின்றன.(3) ஒளி, பூமி, காற்று ஆகிய அனைத்தும் மறைந்து போகின்றன. அண்டத்தில் இருள் பரவி, அஃது ஒரே நீர்ப்பரப்பாகிறது.(4) இரண்டாவது ஒன்றில்லாத பிரம்மத்தைப் போல முடிவில்லாமல் நீர் மட்டுமே இருக்கும்போது, பகலும் இருப்பதில்லை, இரவும் இருப்பதில்லை. இருப்பும், இல்லாமையும் இருப்பதில்லை; புலப்படுவதும், புலப்படாததும் இருப்பதில்லை.(5) அண்டத்தின் நிலை இவ்வாறு இருக்கும்போது, அழிவற்றவனும், இறப்பற்றவனும், புலன்களற்றவனும், உணரப்பட முடியாதவனும், பிறப்பற்றவனும், கருணை நிறைந்த வாய்மையின் சுயமும், சிந்தாமணி என்றழைக்கப்படும் ரத்தினத்தின் கதிர்கள் எனும் இருப்பின் வடிவத்துடன் கூடியவனும், பகைமை, சிதைவு, மரணம், மூப்பு ஆகிய கோட்பாடுகள் அற்றவனும், வடிவமற்றவனும், நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டப்படைப்பின் கோட்பாடாகவும், தொடக்கம், நடுநிலை, முடிவு இல்லாது நித்தியமாக இருப்பவனுமான நாராயணனின் குணக் கலவையான தமஸில் இருந்து இருப்பவற்றில் முதன்மையானவனும், நித்தியமானவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி எழுகிறான்.(6) இந்தத் துணிவுரைக்கு அதிகாரம் இருக்கிறது.
ஸ்ருதி {வேதம்}, “பகல் இல்லை. இரவு இல்லை. இருப்பு இல்லை. இல்லாமை இல்லை. தொடக்கத்தில் தமஸ் மட்டுமே இருந்தாள்” என்று சொல்கிறது[1].(7)அவள் அண்டத்தின் வடிவில் இருந்தாள், அவள் நாராயணனுடைய அண்ட வடிவத்தின் இரவாக இருந்தாள். இதுவே தமஸ் என்ற சொல்லின் பொருளாகும்.(8) இவ்வாறு தமஸில் பிறந்த (ஹரி என்றழைக்கப்படும்) அந்தப் புருஷனிலிருந்து பிரம்மத்தைக் காரணமாகக் கொண்டு பிரம்மன் என்றழைக்கப்படுபவன் இருப்புக்கு வந்தான். உயிரினங்களைப் படைக்க விரும்பிய பிரம்மன், தன் கண்களிலிருந்து அக்னியையும், சோமனையும் உண்டாக்கினான். அதன் பிறகு உயிரினங்கள் படைக்கப்பட்டபோது, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் என்ற முறையான வரிசையில் மனிதர்கள் படைக்கப்பட்டனர். சோமனாகப் பிறந்தவன் பிரம்மாவன்றி வேறு எவனுமல்ல; பிராமணராகப் பிறந்தோர் அனைவரும்உண்மையில் சோமனே ஆவர். அக்னியாகப் பிறந்தவன் க்ஷத்திரியனன்றி வேறு எவனுமல்ல. பிராமணர்கள் க்ஷத்ரர்களைவிடப் பெருஞ்சக்தி கொண்டவர்களாக இருந்தனர். இதன் காரணம் யாதென நீ கேட்டால், க்ஷத்திரியர்களை விடப் பிராமணர்கள் மேன்மையானவர்கள் என்பது உலகம் முழுவதிலும் வெளிப்படும் ஒரு குணமாகும் என்பதே பதிலாகும். இது பின்வருமாறு நேர்ந்தது. மனிதர்களைப் பொறுத்தவரையில் பிராமணர்களே மூத்த படைப்பாக இருக்கின்றனர். பிராமணர்களை விட மேன்மையான எவரும் அவர்களுக்கு முன்பு படைக்கப்பட்டதில்லை. எவன் ஒரு பிராமணனின் வாயில் உணவூட்டுவானோ அவன் (தேவர்களை நிறைவு செய்வதற்காக) சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவபவனாகக் கருதப்படுகிறான். பிரம்மன் உயிரினங்களைப் படைக்கும் காரியம், இவ்வழியில் பொருட்களை விதித்தே நிறைவடைந்தது எனச் சொல்கிறேன். அவன் {பிரம்மன்} படைக்கப்பட்ட அனைத்தையும் அதனதன் நிலைகளில் நிறுத்தி மூவுலங்களையும் தாங்கினான். ஸ்ருதிகளின் மந்திரங்களில் இதே போன்ற தீர்மானம் ஒன்றிருக்கிறது.(9) {ஸ்ருதியில்}, “ஓ! அக்னி, வேள்விகளில் ஹோத்ரி நீயே, அண்டத்திற்கு நன்மை செய்பவன் நீயே. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், உலகங்கள் அனைத்திற்கும் நன்மை செய்பவன் நீயே” {என்றிருக்கிறது}.(10)
இதற்கு (வேறொரு) சான்றாதாரமும் இருக்கிறது. {ஸ்ருதியில்}, “ஓ! அக்னி, அண்டம் மற்றும் வேள்விகளின் ஹோத்ரி நீயே. தேவர்களும், மனிதர்களும் எதன் மூலம் அண்டத்திற்கு நன்மை செய்வார்களோ, அந்தத் தோற்றுவாய் நீயே” {என்றிருக்கிறது}.(11) “உண்மையில் அக்னியே ஹோத்ரியாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்கிறான். மேலும் வேள்வியின் பிரம்மாவாக அக்னியே இருக்கிறான்.(12) மந்திரங்கள் சொல்லாமல் வேள்வி நெருப்புக்குள் ஆகுதிகள் ஏதும் ஊற்றப்படக்கூடாது; தவங்களைச் செய்யும் மனிதர்களில்லாமல் தவங்களில்லை; மந்திரங்களுடன் ஆகுதிகள் ஊற்றுவதாலேயே தேவர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்களின் வழிபாடுகள் நிறைவடைகின்றன. எனவே, ஓ அக்னி, வேள்விகளின் ஹோத்ரியாக நீயே கருதப்படுகிறாய். மனிதர்களின் ஹோமச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கும் மந்திரங்கள் அனைத்தும் நீயே” {என்றுமிருக்கிறது}. பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுக்கும் கடமை பிராமணர்களுக்கு விதிக்கப்படுகிறது. மறுபிறப்பாள, அல்லது இரு பிறப்பாள வகையைச் சேர்ந்தவர்களான க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்ற வேறு இருவகையினனுக்கு அதே கடமை பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, பிராமணர்களே அக்னியைப் போல வேள்வியைத் தாங்குகின்றனர். (பிராமணர்கள் செய்து கொடுக்கும்) வேள்விகள் தேவர்களைப் பலமடையச் செய்கின்றன. இவ்வழியில் பலமடையும் தேவர்கள், (வாழும் உயிரினங்கள் அனைத்தையும் ஆதரிப்பதன் மூலம்) பூமியைக் கனியச் செய்கின்றனர். ஆனால் முதன்மையான வேள்விகளின் மூலம் அடையப்படும் விளைவானது, பிராமணர்களின் வாயின் மூலமும் அடையப்படலாம்.(13) பிராமணனின் வாயில் உணவை அளிக்கும் கல்விமான், தேவர்களை நிறைவு செய்வதற்காகப் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(14) இவ்வழியில் பிராமணர்களே அக்னியாகக் கருதப்படுகின்றனர். கல்வியைப் பெற்றவர்கள் அக்னியைத் துதிக்கின்றனர். மேலும் அக்னியே விஷ்ணு ஆவான். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் நுழையும் அவனே அவற்றின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப்பிடிக்கிறான்.(15)
இது தொடர்பாகச் சநத்குமாரரால் பாடப்பட்ட ஒரு சுலோகம இருக்கிறது. பிரம்மன் அண்டத்தைப் படைத்த போது, முதலில் பிராமணர்களைப் படைத்தான். பிராமணர்கள் வேத கல்வியின் மூலம் இறவாமையை அடைந்து, அத்தகைய கல்வியின் துணையால் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். பிராமணர்களின் நுண்ணறிவு, வாக்கு, செயல்கள், நோன்புகள், நம்பிக்கை மற்றும் தவங்கள் ஆகியன பசுவின் அமுதத்தை {வெண்ணையைத்} தாங்கும் உறியைப் போலப் பூமியையும் சொர்க்கத்தையும் தாங்குகின்றன.(16) வாய்மையைவிட உயர்ந்த கடமை வேறேதும் இல்லை. தாயைவிட மதிக்கத்தகுந்த மேன்மையானவர்கள் வேறு எவரும் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் இன்பநிலையை அளிப்பதற்குப் பிராமணனைவிட மிகத் தகுந்தவன் வேறு எவனும் இல்லை.(17) பிராமணர்கள் (தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் மற்றும் பிற வகை உடைமைகளிலிருந்து) வாழ்வாதாரத்திற்கு எந்தக் குறிப்பிட்ட வழிமுறையும் இல்லாத ஆட்சிப்பகுதிகளில் வசிப்போர் துன்பத்தை அடைவார்கள். அங்கே எருதுகள் மக்களைச் சுமக்கவோ, ஏர் உழுவோ செய்வதில்லை, அதே போல எந்த வகை வாகனங்களும் அவற்றை ஏற்பதில்லை. குடுவைகளில் உள்ள பால் ஒருபோதும் வெண்ணைப் பெறுவதற்காகக் கடையப்படுவதில்லை. மறுபுறம், அங்கே வசிப்பவர்கள், அனைத்து வகைச் செழிப்புகளையும் இழந்து, (அமைதியின் அருளை அடைவதற்குப் பதிலாக) திருடர்களாகிறார்கள்.(18)
வேதங்கள், புராணங்கள், வரலாறுகள், மற்றும் அதிகாரமிக்கப் பிற எழுத்துகளில் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும், அனைத்துப் பொருட்களையும் படைப்பவர்களும், இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அடையாளங்காணப்படுகிறவர்களுமான பிராமணர்களே நாராயணனின் வாயாக இருக்கிறார்கள். உண்மையில், அந்த வரமளிக்கும் பெருந்தேவன் பேச்சைக் கட்டுப்படுத்தித் தவமிருந்தபோது, அவனது வாயில் இருந்து முதலில் வந்தவர்கள் பிராமணர்களே. விளக்கப்படமுடியாத வடிவத்தில் பிரம்மனாக நானே இருந்து, தேவர்கள், அசுரர்கள் மற்றும்பெரும் முனிவர்களைப் படைத்து, அவரவருக்குரிய நிலைகளில் நிறுத்தி, தேவைப்படும் நேரத்தில் தண்டிக்கவும் செய்வதால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மேம்பட்ட நிலையைப் பிராமணர்கள் அடைகிறார்கள். அஹல்யை சிற்றின்ப வன்தாக்குதலுக்கு உள்ளான விளைவால், அவளது கணவரான கௌதமரால் இந்திரன் சபிக்கப்பட்டான், அதன் மூலமே அவன் தன் முகத்தில் பச்சை தாடியைக் கொண்டான். கௌசிகரின்அந்தச் சாபத்தின் மூலம் இந்திரன் தன் விதைப்பைகளையும் (அண்டத்தை) இழந்தான், பின்னர், (பிற தேவர்கள் அவன் மீது கொண்ட அன்பால்) ஓர் ஆட்டின் விதைப்பைகளால் (அஜத்தின் விருஷணத்தால்) அந்த இழப்பு சமன் செய்யப்பட்டது.
மன்னன் சர்யாதியின் வேள்வியில், பெரும் முனிவரான சியவனர், அசுவின் தேவர்கள் இருவரையும் வேள்விக்காணிக்கைகளின் பங்காளிகளாக்க விரும்பியபோது, இந்திரன் அதைத் தடுத்தான். சியவனர் இவ்வாறு வற்புறுத்தியபோது, அவர் மீது வஜ்ரத்தை வீச நினைத்தான் இந்திரன். அந்த முனிவர் {சியவனர்} இந்திரனின் கரங்களை முடக்கினார். ருத்திரனால் தமது வேள்வி அழிந்த பெரும் முனிவர் தக்ஷர், மீண்டும் தம்மைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டு அடைந்த உயர்ந்த பலத்தின் விளைவால், ருத்திரனின் நெற்றில் மூன்றாவது கண் போன்ற ஒன்றைத் தோன்றச் செய்தார். ருத்திரன், அசுரர்களுக்குச் சொந்தமான முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்க முயன்ற போது, சகிப்புத்தன்மையைக் கடந்து தூண்டப்பட்டவரும், அசுரர்களின் ஆசானுமான உசானஸ், தமது தலையின் சடாமுடியில் இருந்து ஒன்றைப் பிடுங்கி, அந்த ருத்திரன் மீது வீசினார். அந்தச் சடாமுடியில் இருந்து பல பாம்புகள் எழுந்தன. அந்தப் பாம்புகள் ருத்திரனைக் கடித்ததால் அவனது தொண்டை நீல நிறமானது. கடந்த காலமான {யுகமான} சுயம்புவான மனுவின் காலத்தில், நாராயணன் ருத்திரனின் தொண்டையைப் பற்றியதாகவும், அதனால் ருத்திரனின் தொண்டை நீலமானதாகவும் சொல்லப்படுகிறது[2].அமுதத்திற்காகப் பெருங்கடல் கடையப்பட்ட நிகழ்வின்போது, அங்கிரஸ் குலத்தைச் சார்ந்த பிருஹஸ்பதி, புருஷ்சாரணம் என்ற சடங்கைச் செய்வதற்காகப் பெருங்கடலின் கரையில் அமர்ந்தார். தொடக்க ஆசமனத்திற்காக {நீராடலுக்காக} அவர் சிறிதளவு நீரை எடுத்தபோது, அது புழுதி நிறைந்ததாகக் காணப்பட்டது. இதனால் கோபமடைந்த பிருஹஸ்பதி, “நான் உன்னைத் தீண்ட வந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நீ இவ்வளவு தூய்மையில்லாமல் இருப்பதாலும், தெளிவடையாமல் இருப்பதாலும், இந்த நாள் முதல் மீன்கள், சுறாக்கள், ஆமைகள் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகளால் நீ கறைபடிந்திருப்பாய்” என்று சொல்லி பெருங்கடலுக்குச் சாபமளித்தார். அந்தக் காலத்திலிருந்து பெருங்கடலின் நீரானது, பல்வேறு வகைக் கடல் விலங்குகளாலும், ராட்சசர்களாலும் நிறைந்திருக்கிறது.
முன்பொரு சமயம் தாஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகன் விஷ்வரூபர், தேவர்களின் புரோகிதரானார். அவருடைய தாயானவள் ஓர் அசுரனின் மகள் என்பதால் அவர் தாய்வழியில் அசுரர்களோடு தொடர்புடையவராக இருந்தார். வேள்வி காணிக்கைகளில் தேவர்களுக்குரிய பங்கை பொதுவெளியில் கொடுத்தாலும், தனிப்பட்ட முறையில் அசுரர்களுக்கும் பங்கைக் கொடுத்தார். ஹிரண்ய கசிபுவைத் தங்கள் தலைமையில் கொண்ட அசுரர்கள், விஷ்வரூபரின் தாயான தங்கள் தங்கையிடம் சென்று, அவளிடம், “தாஷ்டிரியின் மூலம் உண்டானவனும், திரிசிரிஸ் என்ற வேறு பெயரால் அழைக்கப்படுபவனுமான உன் மகன் விஷ்வரூபன், இப்போது தேவர்களின் புரோகிதராக இருக்கிறான். பொது வெளியில் வேள்விக் காணிக்கைகளில் தேவர்களுக்குரிய பங்கை அவன் கொடுக்கும்போது, அதில் எங்கள் பங்கையும் தனிப்பட்ட முறையில் கொடுத்து வருகிறான். இதன் விளைவால் தேவர்கள் பெருக்கத்தையும், நாங்கள் பலவீனதைதயும் அடைகிறோம். எனவே, அவனை எங்கள் தரப்பை அடையச் செய்வதே உனக்குத் தகும்” என்றார்கள்.
அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட விஷ்வரூபரின் தாய், (இந்திரனின்) நந்தன வனத்தில் இருந்து தன் மகனிடம் சென்று அவரிடம், “ஓ! மகனே, நீ ஏன் உன் எதிரிகளைப் பெருக்கி உன் தாய் மாமன்களின் தரப்பை பலவீனப்படுத்துகிறாய்? இவ்வழியில் செயல்படுவது உனக்குத் தகாது” என்றாள்.
தன் தாயால் இவ்வாறு வேண்டப்பட்ட விஷ்வரூபர், அவளது வார்த்தைகளைக் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைத்து, அந்தச் சிந்தனையின் விளைவால், தன் தாய்க்கு உரிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு, ஹிரண்யகசிபுவின் தரப்பை அடைந்தார். திரிசிரஸ் {விஷ்வரூபர்} வந்ததும், மன்னன் ஹிரண்யகசிபு, பிரம்மனின் மகனும், தன் பழைய ஹோத்ரியுமான வசிஷ்டரை அனுப்பிவிட்டு, {ஹோத்ரி என்ற} அந்த அலுவலில் திரிசிரஸை நியமித்தான். இதனால் கோபமடைந்த வசிஷ்டர், “என்னை அனுப்பிவிட்டு, வேறொருவரை உன் ஹோதிர்யாக நியமித்துக் கொண்டதால் இந்த உனது வேள்வி நிறைவு பெறாது, இதற்கு முன் இல்லாத ஓர் உயிரினம் உன்னைக் கொல்லும்” என்று அவனுக்குச் சாபமளித்தார். இந்தச் சாபத்தின் விளைவால், ஹிரண்யகசிபு சிங்க மனிதனின் {நரசிம்மத்தின்} வடிவில் இருந்த விஷ்ணுவால் கொல்லப்பட்டான்.
விஷ்வரூபர், தமது தாய்வழி உறவினர்களின் தரப்பை அடைந்து, அவர்களைப் பெருக்குவதற்காகக் கடுந்தவங்களைச் செய்தார். அவரைத் தமது நோன்புகளில் இருந்து பிறழச் செய்ய விரும்பிய இந்திரன் அழகிய பல அப்சரஸ்களை அவரிடம் அனுப்பினான். ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களும், தெய்வீகமானவர்களுமான அந்தத் தேவகன்னிகளைக் கண்டு விஷ்வரூபரின் இதயம் கலக்கமடைந்தது. குறுகிய காலத்திற்குள் அவர் அவர்களிடம் மிகுந்த பற்றைக் கொண்டார். அவர் அவர்களிடம் பற்றுக் கொண்டார் என்பதை அறிந்த அந்தத் தெய்வீக தேவ கன்னிகள், ஒருநாள் அவரிடம், “இனியும் நாங்கள் இங்கே இருக்க மாட்டோம். உண்மையில் நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்லப் போகிறோம்” என்றனர்.
தம்மிடம் அவ்வாறு சொன்னவர்களிடம் அந்தத் தாஷ்டிரியின் மகன், “நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்? என்னோடே இருங்கள். நான் உங்களுக்கு நன்மையைச் செய்வேன்” என்றார்.
அவர் இவ்வாறு சொல்வதைக் கேட்ட அந்த அப்சரஸ்கள், “நாங்கள் அப்சரஸ்கள் என்றழைக்கப்படும் தெய்வீகமான தேவகன்னிகளாவோம். சிறப்புமிக்கவனும், பெரும் பலம் கொண்டவனும், வரமளிப்பவனுமான இந்திரனையே பழங்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்தோம்” என்றனர்.
அப்போது விஷ்வரூபர் அவர்களிடம், “இந்த நாளே, தேவர்கள் அனைவரையும், அவர்களின் தலைமையில் உள்ள இந்திரனையும் இல்லாமல் செய்வேன்” என்றார்.
இதைச் சொன்ன திரிசிரஸ், பெரும் திறம் கொண்ட குறிப்பிட்ட புனிதமான மந்திரங்களை மனதிதல் சொல்லத் தொடங்கினார். அந்த மந்திரங்களின் சக்தியால் அவரது சக்தி அதிகரிக்கத் தொடங்கியது. வேள்விகளுக்கு அடிமையாக இருந்த பிராமணர்கள், முறையான சடங்குகளுடன் புனித நெருப்பில் ஊற்றிய சோமம் அனைத்தையும் ஒரு வாயினால் பருகத் தொடங்கினார். இரண்டாவது வாயினால் அவர் (வேள்விகளில் கொடுக்கப்பட்ட) உணவுகள் அனைத்தையும் உண்ணத் தொடங்கினார். மூன்றாம் வாயினால் அவர் இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரின் சக்தியையும் பருகத் தொடங்கினார. அவர் குடித்துஃக கொண்டிருந்த சோமத்தினால், அவரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சக்தியில பெருகுவதைக் கண்ட தேவர்கள் அனைவரும், இந்திரனுடன் சேர்ந்து பெரும்பாட்டன் பிரம்மனிடம் சென்றனர்.
அவனது {பிரம்மனின்} முன்னிலையை அடைந்த அவர்கள், “எங்கும் செய்யப்படும் வேள்விகளில் முறையாக அளிக்கப்படும் சோமம் அனைத்தும் விஷ்வரூபரால் பருகப்படுகிறது. எங்களுக்குரிய பங்குகள் ஏதும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அசுரர்கள் பெருகுகிறார்கள், நாங்களோ பலவீனமடைகிறோம். எனவே, எங்களுக்கான நன்மை எதுவோ, அதை விதிப்பதே உமக்குத் தகும்” என்றனர்.
தேவர்கள் நிறுத்தியதும், பெரும்பாட்டன் அவர்களிடம், “பிருகு குலத்தைச் சேர்ந்த பெரும் முனிவர் ததீசி இப்போதும் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தேவர்களே, அவர்களிடம் சென்று ஒரு வரத்தை வேண்டுங்கள். அவர் தமது உடலைக் கைவிடும்படி ஏற்பாடு செய்யுங்கள். பிறகு அவரது எலும்புகளைக் கொண்டு வஜ்ரம் என்றழைக்கப்படும் புதிய ஆயுதம் ஒன்றை உண்டாக்குங்கள்” என்றான்.
பெரும்பாட்டனால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட தேவர்கள், புனிதமான முனிவர் ததீசி தமது தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அந்தத் தவசியிடம், “ஓ! புனிதமானவரே, உமது தவங்கள் தடையில்லாமல் நன்றாக நடைபெறுகிறது என நம்புகிறோம்” என்றனர்.
அதற்குத் தவசியான ததீசி அவர்களிடம், “உங்கள் அனைவருக்கும் நல்வரவு. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக. நீங்கள் சொல்வதை நிச்சயம் நான் செய்வேன்” என்றார்.
அப்போது அவர்கள் அவரிடம் {தேவர்கள் முனிவர் ததீசியிடம்}, “உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக நீர் உமது உடலைக் கைவிடுவதே உமக்குத் தகும்” என்றனர்.
பெரும் யோகியும், இன்ப துன்பங்களை ஒரே ஒளியில் காண்பவரும், உற்சாகத்துடன் இருப்பவருமான தவசி ததீசி இவ்வாறு வேண்டப்பட்டதும், தமது யோக சக்தியால் தம் ஆன்மாவைக் குவித்துத் தமது உடலைக் கைவிட்டார்[3]. களிமண்ணாலான அந்தத் தற்காலிகமான வசிப்பிடத்தை அவரது ஆன்மா கைவிட்டபோது, தாத்ரியானவர் {பிரம்மன்}, அவரது எலும்புகளை எடுத்து வஜ்ரம் என்றழைக்கப்படும் ஒரு தடுக்கப்பட முடியாத ஆயுதத்தை உண்டாக்கினார்.ஒரு பிராமணரின் எலும்புகளால் இவ்வாறு செய்யப்பட்டதும், பிற ஆயுதங்களால் ஊடுருவப்பட முடியாததும், தடுக்கப்பட முடியாததும், விஷ்ணுவின் சக்தியால் நிறைந்ததுமான அந்த வஜ்ரத்தைக் கொண்டு இந்திரனானவன், தாஷ்டிரியின் மகனான விஷ்வரூபரைத் தாக்கினான். இவ்வாறு தாஷ்டிரியின் மகனைக் கொன்ற இந்திரன், அவரது தலையை உடலில் இருந்து துண்டித்தான். எனினும், விஷ்வரூபரின் உயிற்ற உடல் கடையப்பட்ட போது, அதனுள் இருந்த சக்தி, விருத்திரன் என்ற பெயரைக் கொண்ட வலிமைமிக்க அசுரன் ஒருவனை உண்டாக்கியது. விருத்திரன் இந்திரனின் பகைவனானான், ஆனால் அவனையும் இந்திரன் வஜ்ரத்தால் கொன்றான். இவ்வாறு பிரம்மஹத்தி என்ற பாவம் இரண்டுமுறை செய்யப்பட்ட விளைவால், பேரச்சமடைந்த இந்திரன் சொர்க்கத்தின் ஆட்சியுரிமையைக் கைவிட்டான். பிறகு அவன் மானஸத் தடாகத்தில் வளர்ந்த ஒரு குளிர்ந்த தாமரைத் தண்டில் நுழைந்தான். அனிமா என்ற யோக குணத்தின் விளைவால் மிக நுட்பமான வடிவை அடைந்த அவன் அந்தத் தாமரைத் தண்டின் இழைகளுக்குள் நுழைந்தான்.
மூவுலகங்களின் தலைவனான, சச்சியின் கணவன், பிரம்மஹத்தி என்ற பாவத்தில் கொண்ட அச்சத்தினால் காணாமல் போன போது, இந்த அண்டம் தலைவனற்றதானது. ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தேவர்களைத் தாக்கின. பெரும் முனிவர்களால் சொல்லப்பட்ட மந்திரங்கள் தங்கள் திறன்கள் அனைத்தையும் இழந்தன. எங்கும் ராட்சசர்கள் தோன்றினர். மன்னனற்றவர்களாக இருந்த அனைத்து உலகவாசிகளும் பலத்தை இழந்தவர்களாக ராட்சசர்களுக்கும், பிற தீய உயிரினங்களுக்கும் எளிய இரையாக வீழத் தொடங்கினர். அப்போது தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து ஆயுஷின் மகனான நஹுஷனை மூவுலகங்களின் மன்னனாக அவனுக்கு முறையாக முடிசூட்டினர். நஹுஷன் தன் நெற்றியில் முழுமையாகக் கொண்டிருந்த ஐநூறு ஒளிக்கோள்களின் சுடர்மிக்கப் பிரகாசம், ஒவ்வொரு உயிரினத்தின் சக்தியையும் குன்றச் செய்தது. இவ்வாறு இருந்த நஹுஷன் தொடர்ந்து சொர்க்கத்தை ஆளத் தொடங்கினான். மூவுலகங்களும் இயல்பான நிலைக்குத் திரும்பின. அண்டத்தில் வசித்தவர்கள் மீண்டும் மகிழ்ச்சியானவர்களாகவும், உற்சாகமானவர்களாகவும் ஆனார்கள்.
அப்போது நஹுஷன், “அந்த இந்திரன் அனுபவித்த அனைத்தும் என் முன்னிலையில் இருக்கின்றன. அவனது மனைவியான சச்சி மட்டுமே இல்லை” என்றான்.
இதைச் சொன்ன நஹுஷன் சச்சி {இந்திராணி} இருந்த இடத்திற்குச் சென்று, அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, நான் தேவர்களின் தலைவன் வந்திருக்கிறேன். என்னை ஏற்பாயாக” என்றான்.
சச்சி அவனுக்கு மறுமொழியாக, “நீர் இயல்பாகவே அறவொழுக்கத்தில் பற்று கொண்டவராவீர். மேலும் நீர் சோம {சந்திர} குலத்தைச் சார்ந்தவராக இருக்கிறீர். நீர் மாற்றான் மனைவியைப் பீடித்தல் தகாது” என்றாள்.
அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட நஹுஷன், அவளிடம், “இந்திரனின் நிலை {பதவி} இப்போது என்னால் அடையப்பட்டது. நான் இந்திரனின் ஆட்சிப்பகுதிகளையும், அவனுடைய மதிப்புமிக்க உடைமைகள் அனைத்தையும் அனுபவிக்கத் தகுந்தவனாவேன். உன்னை அனுபவிக்க நினைப்பதில் பாவமேதும் இல்லை. முன்பு நீ இந்திரனுடையவளாக இருந்ததால் இப்போது எனதாக வேண்டும்” என்றான்.
சச்சி அவனிடம், “நான் நோற்கும் நோன்பொன்று நிறைவடையாமல் இருக்கிறது. {நோன்பின்} இறுதியான சடங்குகள் நிறைவடைந்ததும், ஒரு சில நாட்களில் நான் உம்மிடம் வருகிறேன்” என்றாள்.
இந்திரனின் மனைவியிடம் இந்த உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு நஹுஷன் அவளது முன்னிலையில் இருந்து அகன்றான். அதே வேளையில் துயரத்தாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்ட சச்சி, தன் தலைவனைக் காணும் ஆவலாலும், நஹுஷன் மீது கொண்ட அச்சத்தாலும் (தேவர்களின் தலைமைப் புரோஹிதரான) பிருஹஸ்பதியிடம் சென்றாள். முதல் பார்வையிலேயே பிருஹஸ்பதி அவள் கவலையடைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டார். உடனே அவர், அவள் தன் கணவனை மீட்கத் தேவையானவற்றைச் செய்யும் நோக்கம் கொண்டிருப்பதைத் தியான யோகத்தின் மூலம் அறிந்தார்.
பிருஹஸ்பதி அவளிடம், “தவத்தகுதியையும், நீ இப்போது நோற்கும் நோன்பின் விளைவால் உண்டாகும் தகுதியையும் கொண்டு, வரமளிக்கும் தேவியான உபஸ்ருதியை இருப்புக்கு அழைப்பாயாக. உன்னால் இருப்புக்கு அழைக்கப்படும் அவள், உடனே தோன்றி உன் கணவன் வசிக்கும் இடத்தைக்காட்டுவாள்” என்றார்.
அவள் அந்தக் கடும் நோன்பு நோற்றுக் கொண்டிருந்த போது, உரிய மந்திரங்களின் துணையுடன் வரமளிக்கும் தேவியான உபஸ்ருதியை இருப்புக்கு அழைத்தாள்.
சச்சியால் இருப்புக்கு அழைக்கப்பட்ட அந்தத் தேவி அவள் முன் தோன்றி, “உன் விருப்பத்தைக் கேட்க நான் இங்கிருக்கிறேன். உன்னால் இருப்புக்கு அழைக்கப்பட்டதால் நான் வந்திருக்கிறேன். நீ பேணி வளர்க்கும் எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்?” என்று கேட்டாள்.
அவளுக்குத் தலைவணங்கிய சச்சி, “ஓ! அருளப்பட்ட மங்கையே {பகவதி}, என் கணவர் எங்கிருக்கிறார் என்பதைக் காட்டுவதே உனக்குத் தகும். வாய்மை நீயே. ரிதம் {ஸத்துக்களுக்குத் தாய்} நீயே” என்றாள்.
இவ்வாறு சொல்லப்பட்ட தேவி உபஸ்ருதி, அவளை மானஸத் தடாகத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே வந்த அவள், தாமரைத் தண்டின் இழைகளுக்குள் வசிக்கும் சச்சியின் தலைவனான இந்திரனை அவளுக்குச் சுட்டிக் காட்டினாள். தன் மனைவி நிறம் குன்றி, மெலிந்திருப்பதைக் கண்ட இந்திரன், மிகவும் கவலையடைந்தான்.
அந்தச் சொர்க்கத்தின் தேவன் தனக்குள்ளேயே, “ஐயோ, பெருஞ்சோகம் என்னை மூழ்கடிக்கிறது. நான் என் நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டேன். என் நிமித்தமாகக் கவலையடைந்திருக்கும் என் மனைவி காணாமல் போன என்னைக் கண்டுபிடித்து இங்கே வந்திருக்கிறாள்” என்றான்.
இவ்வாறு சிந்தித்த இந்திரன், அன்புக்குரிய தன் மனைவியிடம், “இப்போது நீ எந்நிலையில் இருக்கிறாய்?” என்று கேட்டான்.
அவள், “நஹுஷன் என்னை அவனது மனைவியாகும்படி அழைக்கிறான். நான் அவனிடம் செல்லப் போகும் காலத்தை நிர்ணயித்து அவகாசம் பெற்றிருக்கிறேன்” என்றாள்.
இந்திரன் அவளிடம், “நீ நஹுஷனிடம் சென்று, ’இதற்கும் முன் ஒருபோதும் பயன்படுத்தப்படாததும், சில முனிவர்கள் பூட்டப்பட்டதுமான வாகனத்தில் உன்னிடம் வந்து, அந்நிலையிலேயே உன்னை மணக்க வேண்டும்’ என்றும், ’இந்திரன் மிக அழகிய பல வாகனங்களைக் கொண்டிருந்தான், அவை அனைத்தும் அவனைச் சுமந்திருக்கின்றன’ என்றும், ’எனினும், இந்திரனுக்கே இல்லாத அத்தகைய வாகனத்தில் அவன் வர வேண்டும்’ என்றும் சொல்வாயாக” என்றான்.
இவ்வாறு தன் தலைவனால் ஆலோசனை கூறப்பட்ட சச்சி, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள். இந்திரன் மீண்டும் தாமரைத் தண்டின் இழைகளுக்குள் நுழைந்தான்.
இந்திரனின் ராணி மீண்டும் சொர்க்கத்திற்குத் திரும்பியதைக் கண்ட நஹுஷன், அவளிடம், “நீ நிர்ணயித்த காலம் முடிவடைந்தது” என்றான். இந்திரன் அவளிடம் செய்யச் சொன்னதைச் சச்சி அவனிடம் சொன்னாள்.
நஹுஷன், தான் செலுத்திய வாகனத்தில் பெரும் முனிவர்கள் பலரைப் பூட்டி, சச்சி வாழ்ந்து வந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டான். மைத்ரவருணனின் உயிர்வித்தின் மூலம் கும்பத்தில் பிறந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அகஸ்தியர், இவ்வழியில் நஹுஷனால் அவமதிக்கப்படும் அந்த முதன்மையான முனிவர்களைக் கண்டார். அவரை {அகஸ்தியரை} நஹுஷன் தன் காலால் தாக்கினான்.
அவனிடம் அகஸ்தியர், “இழிந்தவனே, பெரும் முறையற்ற செயலைச் செய்வதால் நீ பூமியில் விழுவாயாக. பாம்பாக மாறி, இந்தப் பூமியும் மலைகளும் உள்ளவரை அந்த வடிவத்திலேயே தொடர்ந்து வாழ்வாயாக” என்று சபித்தார்.
அந்தப் பெரும் முனிவரால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டவுடனே நஹுஷன் அந்த வாகனத்தில் இருந்து கீழே விழுந்தான். மூவுலகங்களும் மீண்டும் தலைவனற்றவையாகின. தேவர்களும் முனிவர்களும் ஒன்றுசேர்ந்து விஷ்ணு இருக்கும் இடத்திற்குச் சென்று, இந்திரனை மீட்டுக் கொண்டு வரக் கோரினர்.
அவனை {விஷ்ணுவை} அணுகிய அவர்கள், “ஓ! புனிதமானவனே, பிரம்மஹத்தி என்ற பாவத்தில் மூழ்கியிருக்கும் இந்திரனை மீட்பாயாக” என்றனர்.
வரமளிப்பவனான விஷ்ணு அவர்களிடம், “இந்திரன் ஒரு குதிரை வேள்வியை விஷ்ணுவை மதிக்கும் வகையில் செய்யட்டும். அப்போது அவன் தனது முந்தைய நிலையை அடைவான்” என்றான்.
தேவர்களும், முனிவர்களும் இந்திரனைத் தேடத் தொடங்கினர், ஆனால் அவர்களால் அவனைக் காண முடியாததால் சச்சியிடம் சென்று, “ஓ! அருளப்பட்ட மங்கையே, இந்திரனிடம் சென்று அவனை இங்கே கொண்டு வருவாயாக” என்றனர்.
அவர்களால் வேண்டிக்கொள்ளப்பட்ட சச்சி {இந்திராணி} மீண்டும் மானஸத் தடாகத்திற்குச் சென்றாள். இந்திரன், அத்தடாகத்திலிருந்து எழுந்து பிருஹஸ்பதியிடம் வந்தான். தேவ புரோஹிதரான பிருஹஸ்பதி, ஒரு நல்ல குதிரைக்குப் பதில் அனைத்து வழியிலும் வேள்விக்குத் தகுந்த ஒரு கருப்பு மானை வைத்து, குதிரை வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பிருஹஸ்பதி, மருத்துகளின் தலைவனான இந்திரனை (கொல்வதில் இருந்து காக்கப்பட்ட) அந்தக் குதிரையிலேயே அவனது இடத்திற்கு வழிநடத்தினார்[4]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவராலும் துதிகளால் துதிக்கப்பட்டான். பிரம்மஹத்தி பாவமானது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பெண், நெருப்பு, மரங்கள், பசு ஆகியவற்றில் வசிக்கும்படி விதிக்கப்பட்டு, அதனிலிருந்து தூய்மையடைந்த அவன் தொடர்ந்து சொர்க்கத்தை ஆளத் தொடங்கினான். இவ்வாறே ஒரு பிராமணரின் சக்தியால் பலமடைந்த இந்திரன், தன் பகைவனைக் கொல்வதில் வென்றான் (அந்தச் செயலின் விளைவாகப் பாவத்தில் மூழ்கியபோது, மற்றொரு பிராமணரின் சக்தியால் மீட்கப்பட்டான்). இவ்வாறே இந்திரன் மீண்டும் தன் நிலையை அடைந்தான்.பழங்காலத்தில், பெரும் முனிவரான பரத்வாஜர் தெய்வீக கங்கையின் கரையில் தமது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு மூன்று அடி வடிவைக் கொண்டு {வாமனனாக} அந்த இடத்திற்கு வந்தான்[5]. அந்த இயல்புக்குமீறிய காட்சியைக் கண்ட பரத்வாஜர், கை நிறையக் கொண்ட நீரால் விஷ்ணுவைத் தாக்கினார். இதனால் விஷ்ணுவின் மார்பில் (ஸ்ரீவத்ஸம் என்றழைக்கப்படும்) ஒரு வடுவை அடைந்தான்[6].முனிவர்களில் முதன்மையானவரான பிருகுவால் சபிக்கப்பட்ட அக்னி, அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் கடப்பாடு உடையவனாகச் செய்யப்பட்டான்.(19-57) ஒரு காலத்தில் தேவர்களின் தாயான அதிதி, தன் மகன்களுக்காக உணவு சமைத்திருந்தாள். அந்த உணவை உண்டு, அதன் மூலம் பலமடையும் தேவர்கள் அசுரர்களைக் கொல்வார்கள் என்று அவள் நினைத்திருந்தாள். உணவு சமைக்கப்பட்ட பிறகு, புதன் (என்ற பெயரால் அறியப்படும் கோளின் தலைமைத் தேவன்) ஒரு கடும் நோன்பை நிறைவு செய்து, அதிதி முன்னிலையில் வந்து, “எனக்குப் பிச்சை கொடு” என்று கேட்டான். இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட அதிதி, தன் மகன்களான தேவர்கள் முதலில் உண்ணாமல் வேறு யாரும் உணவை உண்ணக்கூடாது என்று நினைத்து அவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. இவ்வாறு தனக்குப் பிச்சை அளிக்க மறுத்த அதிதியின் நடத்தையால் கோபமடைந்தவனும், பிரம்மனின் சுயமுமான புதன், தான் நிறைவு செய்திருந்த கடும் நோன்பின் மூலம் சபித்தான். அதிதி தனக்குப் பிச்சையிட மறுத்ததால் விவஸ்வான் {சூரியன்} தனது இரண்டாம் பிறவியில் அவளது கருவறையில் முட்டையின் {அண்டத்தின்} வடிவில் பிறப்படையும்போது அவள் பெரும் வலியை உணர்வாள் {துன்பமடைவாள்} என்று சபித்தான். அந்த நேரத்தில் அதிதி விவஸ்வானிடம் புதனின் சாபத்தை நினைவு கூர்ந்தாள், அதன் காரணமாகவே சிராத்தங்களில் துதிக்கப்படும் தேவனான விவஸ்வான் அதிதியின் கருவறையில் இருந்து வெளி வந்ததும், மார்த்தாண்டன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(58)
பிரஜாபதியான தக்ஷன் அறுபது {60} மகள்களின் தந்தையானான். அவர்களில் இருபத்துமூவர் கசியபருக்கும்; பத்து பேர் தர்மனுக்கும்; பத்து பேர் மனுவுக்கும், இருபத்தெழுவர் சோமனுக்கும் அளிக்கப்பட்டனர். நக்ஷத்திரங்கள் என்றழைக்கப்படுபவர்களும், சோமனுக்கு அளிக்கப்பட்டவர்களுமான அந்த இருபத்தெழுவரும் அழகிலும், சாதனைகளிலும் இணையானவர்களாகவே இருப்பினும், சோமன், எஞ்சியோரைவிட ரோகிணியிடமே அதிகப் பற்றுடன் இருந்தான். அவனது மனைவிகளில் எஞ்சியோர் அனைவரும், பொறாமையில் நிறைந்து, அவனை விட்டு அகன்று தங்கள் தந்தையிடம் சென்று தங்கள் கணவனின் நடத்தை குறித்துச் சொல்லும் வகையில், “ஓ! புனிதமானவரே, அழகில் நாங்கள் அனைவரும் இணையானவர்களாகவே இருப்பினும், எங்கள் கணவரான சோமர், எங்கள் சகோதரியான ரோஹிணியிடம் அதிகப் பற்றுடன் இருக்கிறார்” என்றனர். தன் மகள்கள் சொன்ன வெளிப்பாடுகளில் கோபமடைந்த தெய்வீக முனிவரான தக்ஷன், தன் மருமகனை காச நோய் தாக்கி அவனிடமே வசிக்கட்டும் என்று சாபமளித்தான். தக்ஷனின் இந்தச் சாபத்தினால் பலமிக்கச் சோமனைப்ப பீடித்த காசநோய் அவனது உடலுக்குள் நுழைந்தது. இவ்வழியில் காசநோயால் பீடிக்கப்பட்ட சோமன், தக்ஷனிடம் வந்தான். பின்னவன் {தக்ஷன்} அவனிடம், “நீ உன் மனைவியரிடம் சமமாக நடந்து கொள்ளாததால் நான் உன்னைச் சபித்தேன்” என்றான். பிறகு அந்த முனிவன் {தக்ஷன்}, சோமனிடம், “உன்னைப் பீடித்திருக்கும் காசநோயால் நீ குறைவை அடைகிறாய். மேற்குப் பெருங்கடலில் ஹிரண்யசரம் என்றழைக்கப்படும் புனித நீர்நிலை இருக்கிறது. அந்தப் புனித நீருக்குச் சென்று அங்கே நீராடுவாயாக” என்றான். அந்த முனிவனின் ஆலோசனையின் பேரில் சோமன் அங்கே சென்றான். சோமன் அந்த ஹிரண்யசிரத்தை அடைந்து அங்கே நீராடினான். தூய்மைச் சடங்குகளைச் செய்து அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான். சோமனால் அந்தப் புனித நீர்நிலை ஒளிர்ந்ததால் (அபாசிதம் அடைந்ததால்), அந்த நாள் முதல் அது பிரபாஸை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எனினும், பழங்காலத்தில் தக்ஷன் அளித்த சாபத்தின் விளைவால் முழு நிலவின் {பௌர்ணமியின்} இரவிலிருந்து தேயத்தொடங்கிப் புது நிலவின் {அமாவாசையின்} இரவில் முற்றாக மறைவதும், அதன் பிறகு மீண்டும் முழு நிலவின் இரவு வரை வளர்வதும் இன்று வரை நடக்கிறது. பிரகாசமான சந்திர வட்டில் {இவ்வாறு} களங்கமடைந்த காலத்திலிருந்து சோமனின் உடலில் குறிப்பிட்ட சில கரும்புள்ளிகள் இருக்கின்றன. உண்மையில் நிலவின் அற்புத வட்டில் அந்த நாள் முதல் முயலின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.(59)
ஒரு காலத்தில் ஸ்தூலசிரஸ் என்ற பெயரைக் கொண்ட முனிவர் ஒருவர் மேரு மலைகளின் வடக்குச் சாரலில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தார். அவர் அந்தக் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தபோது, அனைத்து வகை இனிய நறுமணங்களையும் சுமந்தபடி ஒரு தூய்மையான தென்றல் அங்கே வீசத் தொடங்கி அவரது உடலுக்கு விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. அவன் செய்த கடுந்தவத்தால் அவரது உடல் வெந்து கொண்டிருந்ததாலும், அனைத்து வகை உணவையும் தவிர்த்து அவர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து கொண்டிருந்ததாலும் அவரைச் சுற்றிலும் வீசிய இனிய தென்றலின் விளைவால் அவர் உயர்வான நிறைவை அடைந்தார். தனக்கு விசிறிவிட்ட அந்த இனிய தென்றலிடம் அவர் இவ்வாறு நிறைவடைந்ததால், அவரைச் சுற்றிலும் இருந்த மரங்கள் (பொறாமையடைந்து) அவரது புகழைப் பழிக்கும் வகையில் மலர்களை வெளியிட்டன. மரங்களின் இந்நடத்தையால் வெறுப்படைந்த முனிவர், “இதுமுதல் உங்களால் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு உரிய மலர்களை வெளிப்படுத்த முடியாது” என்று சபித்தார்.(60)
பழங்காலத்தில் நாராயணன் உலகத்திற்கு நன்மை செய்வதற்காகப் பெரும் முனிவர் வடவாமுகராகப் பிறந்தான். மேருவின் சாரலில் கடுந்தவம் செய்து கொடிருந்தபோது அவர் பெருங்கடலை தன் முன்னிலைக்கு வருமாறு அழைத்தார். எனினும், பெருங்கடல் அவரது ஆணைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. இதனால் சினமடைந்த அந்த முனிவர்கள் வெப்பத்தோடு கூடிய தன் உடலைக் கொண்டு பெருங்கடலின் நீரைத் திடமாக்கி மனித வியர்வையின் சுவையுடன் அதை உப்புத்தன்மை அடையச் செய்தார். மேலும் அந்த முனிவர், “இனி உன் நீர் பருகும் நிலையில் இராது. உனக்குள் திரியும் குதிரைத் தலைக்கு மட்டுமே உன் நீர் பருகுவதற்கு இனிமையானதாக இருக்கும்” என்றார். இதன் காரணமாகவே பெருங்கடலின் நீரானது இந்த நாள்வரை சுவையில் உப்புத்தன்மை கொண்டதாகவும், குதிரைத் தலையைத் தவிர வேறு எவராலும் பருக முடியாததாகவும் இருக்கிறது[7].(61)உமை என்ற பெயரைக் கொண்ட இமய மலையின் மகளைத் திருமணம் செய்து கொள்ள ருத்திரன் விரும்பினான். (மஹாதேவனிடம உமையை அளிப்பதாக ஹிமவான் {இமயம்} உறுதியளித்த பிறகு) ஹிமவானை அணுகிய பெரும் முனிவர் பிருகு, அவனிடம், “உனது மகளான இவளை எனக்கு மணமுடித்துத் தருவாயாக” என்று கேட்டார். அதற்கு ஹிமவான், “என மகளுக்கு மணவாளனாக ருத்திரனை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று மறுமொழி கூறினான். இந்த மறுமொழியால் கோபமடைந்த பிருகு, “உன் மகளை அளிக்க மறுத்து இவ்வாறு என்னை அவமதித்ததால் இனி ஒருபோதும் நீ ரத்தினங்களாலும், தங்கத்தாலும் நிறைந்திருக்கமாட்டாய்” என்றார். அந்த {பிருகு} முனிவருடைய சொற்களின் விளைவால் இந்த நாள் வரை இமய மலைகளில் தங்கமோ, ரத்தினங்களோ இருப்பதில்லை. பிராமணர்களின் மகிமை இவ்வாறானதே.(62)
பிராமணர்களின் உதவியின் மூலமே, நித்தியமானவளும், சிதைவில்லாதவளுமான பூமியைத் தங்கள் மனைவியாகக் கொள்ளவும், அவளை அனுபவிக்கவும் க்ஷத்திரியங்களால் முடிகிறது. மேலும் பிராமணர்களின் சக்தியானது, அக்னி மற்றும் சோமனாலானதாகும். இந்த அண்டம் அந்தச் சக்தியாலேயே தாங்கப்படுவதால், ஒன்று சேர்ந்த அக்னி மற்றும் சோமனாலேயே அது தாங்கப்படுகிறது.(63)
சூரியனும், சந்திரமாஸும் நாராயணனின் கண்களாக இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. சூரியனின் கதிர்களே என் கண்களாக அமைகின்றன. சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் இந்த அண்டத்தை வலுவூட்டவும், வெப்பமூட்டவும் செய்கின்றனர்.(64) இவ்வாறு சூரியனும் சந்திரனும் அண்டத்திற்கு வலுவும், பலமும் ஊட்டுவதால் அவர்கள் அண்டத்தின் ஹர்ஷம் (இன்பம்) எனக் கருதப்படுகிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அக்னி மற்றும் சோமன் அண்டத்தைத் தாங்குவதற்குச் செய்யும் இச்செயல்களின் விளைவாலேயே நான் ரிஷிகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். உண்மையில் நானே அண்டத்தைப் படைப்பவனும், வரமளிப்பவனுமான ஈசானன் ஆவேன்[8].(65)புனித நெருப்பில் ஆகுதியாகத் தெளிந்த நெய் ஊற்றப்படும்போது சொல்லப்படும் மந்திரங்களின் சக்தியால், வேள்விகளில் அளிக்கப்படும் (முக்கிய) பங்கை நான் பெறுகிறேன். என் நிறமானது, ஹரித் என்றழைக்கப்படும் முதன்மையான ரத்தினத்தின் நிறத்தைக் கொண்டதாகும். இந்தக் காரணத்தால் நான் ஹரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன்.(66)
நான் உயிரினங்கள் அனைத்தின் நிலையான வசிப்பிடமாக இருக்கிறேன். சாத்திரங்களை அறிந்த மனிதர்களால் நான் உண்மை, அல்லது அமுதத்தோடு அடையாளம் காணப்படுகிறேன். இதன் காரணமாக, கல்விமானான பிராமணர்கள் என்னை ரிததாமன் (உண்மையின் வசிப்பிடம், அல்லது அமுதத்தின் வசிப்பிடம்) என்ற பெயரில் அழைக்கிறார்கள்.(67)
பழங்காலத்தில் பூமி நீருக்குள் மூழ்கிக் காணாமல் போன போது, பெருங்கடலின் ஆழங்களில் அவளைக் கண்டு அங்கிருந்துஅவளை உயர்த்தியவன் நானே. இதன் காரணமாகத் தேவர்கள், கோவிந்தன் என்ற பெயரால் என்னைத் துதிக்கின்றனர்.(68)
சிபி என்ற சொல், உடலில் முடியில்லாத ஒருவனைக் குறிக்கும். சிபியின் வடிவில் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் சிபிவிஷ்டன் என்ற பெயரால் அறியப்படுகிறான்.(69) இந்தக் காரணத்திற்காகவே நான் இந்த இரகசியப் பெயரைக் கொண்டிருக்கிறேன்.(70) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான யாஷ்கர் {யாஷ்க முனிவலர்}, சிபிவிஷ்டன் என்ற பெயரில் என்னைத் துதித்து, பூமியின் பரப்பிலிருந்து மறைந்து போனவையும், பாதாள லோகத்தில் மூழ்கிக் கிடந்தவையுமான நிருக்தங்களை மீட்பதில் வென்றார்.(71)
நான் ஒருபோதும் பிறந்ததில்லை. நான் ஒருபோதும் பிறப்பதில்லை. நான் ஒருபோதும் பிறக்கப்போவதுமில்லை. அனைத்து உயிரினங்களின் க்ஷேத்ரஜ்ஞன் நானே. எனவே, நான் அஜன் (பிறக்காதவன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[9].(72)இழிவான எதனையும், நயமற்ற எதனையும் நான் ஒருபோதும் சொன்னதில்லை. வாய்மையின் சுயமானவளும், பிரம்மனின் மகளும், ரிதை என்ற பெயரால் அழைக்கப்படுபவளுமான தெய்வீக சரஸ்வதி என் வாக்கைப் பிரதிபலித்து எப்போதும் என் நாவில் குடியிருக்கிறாள்.(73) இருப்பில் உள்ளவையும், இல்லாதவையும் என்னால் என் ஆன்மாவில் கலக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மனின் வசிப்பிடமாகக் கருதப்படும் புஷ்கரையில் வசிக்கும் முனிவர்கள் என்னை வாய்மை என்ற பெயரால் அழைக்கின்றனர்.(74) நான் சத்வ குணத்தில் இருந்து ஒருபோதும் பிறழ்ந்ததில்லை, சத்வ குணம் என்னில் இருந்தே தோன்றியது என்பதை அறிவாயாக. ஓ! தனஞ்சயா, இப்பிறவியிலும் கூட என் புராதன குணமான சத்வ குணம் என்னைவிட்ட அகலவில்லை. நான் என்னைச் சத்வ குணத்தில் நிறுவிக் கொண்டு, கனிகளை எப்போதும் விரும்பாமல் செயல்களைச் செய்வதில் ஈடுபடுகிறேன். என் இயல்பான சத்வக குணத்தின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையும் என்னை, சத்வ குணத்தைப் பின்பற்றுவதால் எழும் ஞானத்தின் துணையால் மட்டுமே காண முடியும். அந்தக் குணத்தில் பற்று கொண்டோரின் மத்தியில் மட்டுமே நான் அறியப்படுகிறேன். இந்தக் காரணத்திற்காகத் தான் நான் சாத்வதன் என்ற பெயரால் அறியப்படுகிறேன்.(75,76)
நான் இரும்பினால் செய்யப்பட்ட பெரிய கலப்பைக் கொழுவின் வடிவை ஏற்று, பூமியை உழுகிறேன். என் நிறம் கருப்பாக இருப்பதால், நான் கிருஷ்ணன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(77)
நான் பூமியை நீரோடும், வெளியை மனத்தோடும், காற்றை ஒளியோடும் இணைக்கிறேன். எனவே நான் வைகுண்டன் என்றழைக்கப்படுகிறேன்[10].(78)பரப்பிரம்மத்துடன் அடையாளம் காணப்படுவதன் மூலம் தனிப்பட்ட நனவுநிலை இருப்பைத் தவிர்ப்பது ஒரு வாழும் உயிரினம் அடையக்கூடிய உயர்ந்த குணம் அல்லது நிலையாகும். நான் அந்தக் குணம் அல்லது நிலையில் இருந்து ஒருபோதும் பிறழாதவனாக இருப்பதால் நான் அச்சுதன் {பிறழாதவன்} என்றழைக்கப்படுகிறேன்.(79)
பூமியும், ஆகாயமும் அனைத்துத் திசைகளிலும் விரிந்திருப்பதாக அறியப்படுகின்றன. அவை இரண்டையும் நானே தாங்குவதால் நான் அதோக்ஷஜன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(80) வேதங்களை அறிந்தவர்களும், சாத்திரங்களில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு விளக்கம் கூறுவதில் ஈடுபடுபவர்களுமான மனிதர்கள் அதே பெயரை அழைத்தே வேள்விகளில் என்னைத் துதிக்கின்றனர்.(81) பழங்காலத்தில் பெரும் முனிவர்கள் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, “அதோக்ஷஜன் என்ற பெயரால் அழைக்கப்படத்தகுந்தவன் பலமிக்க நாராயணனைத் தவிர வேறு எவனுமில்லை” என்றனர்.(82)
அண்ட உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் நீட்டிக்கச் செய்யும் தெளிந்த நெய்யானது என் பிரகாசமாக இருக்கிறது {என்னைப் பிரகாசிக்கச் செய்யும் தெளிந்த நெய்யானது அண்ட உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் நீட்டிக்கச் செய்கிறது}. வேதமறிந்தவர்களும், குவிந்த ஆன்மாக்களைக் கொண்டோருமான பிராமணர்கள் இதன் காரணமாகவே கிருதார்ச்சிஸ் என்ற பெயரால் என்னை அழைக்கின்றனர்.(83)
உடலில் {பித்தம், சிலேத்துமம், வாதம் என்று} நன்கு அறியப்பட்ட மூன்று தாதுக்கள் இருக்கின்றன. செயலையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அவை பித்த நீர் {பித்தம்}, சளி {சிலேத்துமம்}, காற்று {கபம்} என்றழைக்கப்படுகின்றன. உடலானது இம்மூன்றின் கலவையாகவே அழைக்கப்படுகிறது. இம்மூன்றால் தாங்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், இவை பலவீனமடையும் போது, தாங்களும் பலவீனமடைகின்றன. உயிர் அறிவியல் சார்ந்த சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அனைவரும் இதன் காரணமாகவே திரிதாது என்ற பெயரால் என்னை அழைக்கின்றனர்.(84,85)
ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் புனிதமான தர்மம் {அறம்} விருஷம் என்ற பெயரில் அறியப்படுகிறது. எனவே நிகண்டுகம் என்றழைக்கப்படும் வேத அகரமுதலியில் சிறந்த விருஷன் என்று நான் அழைக்கப்படுகிறேன்.(86) கபி என்ற சொல் முதன்மையான பன்றியைக் குறிக்கிறது, தர்மம் வேறுபெயரில் விருஷம் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் தலைவரும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் தந்தையுமான கசியபர், இதன் காரணமாகவே விருஷகபி என்ற பெயரால் என்னை அழைத்தார்.(87)
தேவர்களாலும், அசுரர்களாலும் எனது தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவை ஒருபோதும் காண இயன்றதில்லை. இதன் காரணமாகவே நான் அநாதி, அமத்தியன், அனந்தன் என்று பாடப்படுகிறேன். நானே பலமிக்க உயர்ந்த தலைவனாவேன் {ஈஸ்வரனாவேன்}, நானே அண்டத்தின் (அடுத்தடுத்த தோற்றங்களையும், அழிவுகளையும் காணும்) நித்திய சாட்சியாவேன்.(88) ஓ! தனஞ்சயா, நான் எப்போதும் தூய்மையான, புனிதமான சொற்களைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், ஒருபோதும் பாவம் நிறைந்ததைக் கேட்பதில்லை. எனவே நான் சுசிசிரவஸ் என்றழைக்கப்படுகிறேன்.(89)
ஓ! பிறரின் இன்பத்தை அதிகரிப்பவனே, பழங்காலத்தில் ஒற்றைக் கொம்புடைய பன்றியாகப் பிறந்து, கடலின் அடியில் மூழ்கிய பூமியை நான் உயர்த்தினேன். இதன் காரணமாக நான் ஏகசிருங்கன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(90) இந்நோக்கத்திற்காக நான் பெரும்பன்றியின் வடிவை ஏற்றபோது, என் முதுகில் மூன்று கூன்களைக் கொண்டிருந்தேன். உண்மையில், அந்த என் தனிப்பட்ட வடிவின் விளைவால் நான் திரிககுத் (மூன்று கூன் கொண்டவன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[11].(91)கபிலரால் எடுத்துரைக்கப்பட்ட அறிவியலை {சாங்கியத்தை} அறிந்தவர்கள் பரமாத்மாவை விரிஞ்சன் என்ற பெயரால் அழைக்கிறார்கள். அந்த விரிஞ்சனே வேறு பெயரில் பெரும் பிரஜாபதி (அல்லது பிரம்மன்) என்று அழைக்கப்படுகிறான். அண்டத்தின் படைப்பாளனான நான் உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரைக் கொடுத்ததன் விளைவால் விரிஞ்சன் என்றழைக்கப்படுபவனோடு அடையாளம் காணப்படுகிறேன்.(92) (அனைத்து தத்துவங்களிலும்) முடிவான தீர்மானங்களைக் கொண்ட சாங்கிய தத்துவ ஆசான்கள், ஞானத்தையே துணையாகக் கொண்டு சூரிய வட்டிலுக்கு மத்தியில் நிற்கும் நித்திய கபிலராக என்னை அழைக்கிறார்கள்.(93) வேத ஸ்லோகங்களில் பிரகாசமிக்க ஹிரண்யகர்ப்பனாகப் பாடப்படுபவனும், யோகியரால் எப்போதும் வழிபடப்படுபவனுமான அவனோடு பூமியில் எப்போதும் நான் அடையாளம் காணப்படுகிறேன்.(94)
இருபத்தோராயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட ரிக் வேதத்தின் உடல்வடிவமாக நான் கருதப்படுகிறேன். வேதங்களை அறிந்த மனிதர்கள், ஆயிரம் கிளைகளை {சாகைகளைக்} கொண்ட சாம வேதத்தின் உடல்வடிவமாக அழைக்கிறார்கள். அதே போலவே என்னை அர்ப்பணிப்புடன் வழிபடும் கல்விமான்களான பிராமணர்களில் சிலர் ஆரண்யகங்களில் என்னைப் பாடுகிறார்கள்.(95) அத்யார்யுக்களில் {அத்வரியுகாண்டத்தில்} என்னை ஆறும், ஐம்பதும், எட்டும், ஏழும், முப்பதுமான {அதாவது மொத்த எண்ணிக்கையில் நூற்றொரு} கிளைகளை {சாகைகளைக்} கொண்ட யஜுர் வேதமாக என்னைப் பாடுகிறார்கள்.(96) அதர்வணங்களை அறிந்த கல்விமான்களான பிராமணர்கள் ஐந்து கல்பங்களையும், அனைத்து கிரியைகளையும் கொண்ட அதர்வணங்களோடு அடையாளம் காணப்படுபவனாக என்னைக் கருதுகிறார்கள்.(97) ஓ! தனஞ்சயா, கிளைகளை {சாகைகளைப்} பொறுத்தவரையில் பல்வேறு வேதங்களில் இருக்கும் உட்பிரிவுகள், அந்த உட்பிரிவுகளில் அமைந்திருக்கும் ஸ்லோகங்கள், அந்த ஸ்லோகங்களில் உள்ள உயிரெழுத்துகள், உச்சரிக்கும் விதிகள் அனைத்தும் என் படைப்பே என்பதை அறிவாயாக.(98) ஓ! பார்த்தா, (படைப்பின் தொடக்கத்தில், பிரம்மன் மற்றும் தேவர்கள் அனைவரால் இருப்புக்கு அழைக்கப்பட்டு, பாற்கடலில் இருந்து) எவன் எழுகிறானோ, எவன் பல்வேறு தேவர்களுக்குப் பல்வேறு வரங்களை அளிக்கிறானோ அவன் நானன்றி வேறெவனுமல்ல. வேதங்களின் உப அங்கங்களில் உள்ள அசைகள் மற்றும் உச்சரிப்பு அறிவியலின் கொள்ளிடம் நானே.(99)
வாமதேவரால் சுட்டிக்காட்டப்பட்ட பாதையைப் பின்பற்றிய உயர் ஆன்ம பாஞ்சாலன், என் அருளால் (வேதங்களைப் படிப்பதில்) அசைகள் மற்றும் சொற்களின் பிரிவில் உள்ள விதிகளில் நித்திய தன்மையை அடைந்தான். பாப்ரவ்ய குலத்தில் {கோத்திரத்தில்} பிறந்த காலவர், உயர்ந்த தவ வெற்றியை அடைந்து, நாராயணனிடம் இருந்து வரத்தையும் அடைந்து, அசைகள் மற்றும் சொற்களின் பிரிவுகளையும், உச்சரிப்பு விதிகளையும் வகுத்து இவ்விரு காரியங்களையும் அறிந்த முதல் அறிஞரானார். குண்டரீகனும் {கோத்திரப் பெயர்}, பெருஞ்சக்தி கொண்டவனுமான மன்னன் பிரம்மதத்தன்,(100,101) பிறப்பிறப்பில் நேரும் துன்பத்தைச் சிந்தித்து, என் அருளால் தொடர்ந்த ஏழு பிறவிகளின் போக்கில் யோகத்தில் அர்ப்பணிப்புடைய மனிதர்களால் அடையப்படும் செழிப்பை அடைந்தான்.(102)
ஓ! பார்த்தா, ஓ! குரு குலத்தின் தலைவா, பழங்காலத்தில் ஒரு காரியத்திற்காகத் தர்மனின் மகனாகப் பிறப்படைந்த நான் தர்மஜன் என்ற பெயரால் கொண்டாடப்பட்டேன்.(103) நரன் என்றும் நாராயணன் என்றும் இரு வடிவங்களில் பிறப்பை அடைந்தேன். அவ்விரு வடிவங்களில் இருந்த நான், சாத்திரக் கடமைகள் மற்றும் வேறு கடமைகளைச் செய்வதற்கு உதவும் வாகனத்தைச் செலுத்தி, கந்தமாதன மலைகளில் ஓயாத தவத்தில் ஈடுபட்டேன்.(104)
அந்த நேரத்தில் தக்ஷன் பெரும் வேள்வியைச் செய்தான். எனினும், ஓ! பாரதா, அந்தத் தக்ஷன் வேள்விக் காணிக்கைகளில் ருத்திரனுக்கு ஒரு பங்கைக் கொடுக்க மறுத்துவிட்டான்.(105) தவசி ததீசியால் தூண்டப்பட்ட ருத்திரன் அந்தப் பெரும் வேள்வியை அழித்தான். ஒவ்வொரு கணமும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட ஓர் ஈட்டியை {சூலத்தை} அவன் ஏவினான்.(106) அவ்வீட்டி, தக்ஷன் வேள்விக்காக ஏற்பாடு செய்திருந்த அனைத்துப் பொருட்களையும் எரித்த பிறகு, பதரியின் ஆசிரமத்தில் (நரன் மற்றும் நாராயணனான) எங்களை நோக்கிப் பெருஞ்சக்தியுடன் வந்தது.(107) பெரும் வேகத்துடன் வந்த அந்த ஈட்டி {சூலம்} நாராயணனின் மார்பில் விழுந்தது. அந்த ஈட்டியின் சக்தியால் தாக்கப்பட்டதால் நாராயணனின் தலையில் இருந்த முடி பச்சை நிறமானது. உண்மையில் என் முடியின் நிறம் மாறியதன் விளைவால், நான் முஞ்சகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(108)
நாராயணன் ஹும் என்று சொல்லி, சக்தியை இழந்த அந்த ஈட்டி மீண்டும் சங்கரனின் கரங்களில் கொடுத்தான்.(109) இதனால் பெருங்கோபம் அடைந்த ருத்திரன், கடுந்தவப் பலத்துடன் கூடிய முனிவர்களான நரநாரயணர்களை நோக்கி விரைந்தான்.(110) அப்போது நாராயணன், அவ்வாறு விரைந்து வந்த ருத்திரனின் தொண்டையைத் தன் கரத்தால் பற்றினான். அண்டத்தின் தலைவனான நாராயணனால் பற்றபட்டதும், ருத்திரனுடைய தொண்டையின் நிறம் மாறி கருப்பானது. அந்நேரத்தில் இருந்து ருத்திரன் சிதிகாந்தன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்.(111) அதே வேளையில் நரன், ருத்திரனை அழிப்பதற்காக ஒரு புல்லை எடுத்து அதை மந்திரங்களால் ஈர்த்தான். இவ்வாறு ஈர்க்கப்பட்ட அந்தப் புல்லானது வலிமைமிக்க ஒரு போர்க்கோடரியாக மாறியது.(112) நரன் திடீரென அதை ருத்திரன் மீது வீசினான். ஆனால் அது துண்டுகளாக நொறுக்கி விழுந்தது. அவ்வாயுதம் துண்டுகளாக நொறுங்கியதன் விளைவால் நான் கண்டபரசு என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[12].(113)அர்ஜுனன், “ஓ! ஜனார்த்தனா, மூவுலகங்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய வெற்றியடைந்தது யார் என்பதை எனக்குச் சொல்வாயாக”என்றான்.(114)
அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “ருத்திரனும், நாராயணனும் போரில் ஈடுபட்டபோது அண்டம் முழுவதும் திடீரெனக் கவலையால் நிறைந்தது.(115) நெருப்பின் தேவன், வேத மந்திரங்களின் துணையுடன் வேள்வகளில் முறையாக ஊற்றப்படும் தூய, தெளிந்த நெய் காணிக்கைகளை ஏற்க மறுத்தான். அப்போது தூய்மையான ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்களின் மனங்களில் வேதங்கள் உள்ளொளியால் ஒளிரவில்லை.(116) ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தேவர்களைப் பீடித்தன. பூமி நடுங்கினாள். ஆகாய ஓடு இரண்டாகப் பிளந்ததாகக் காணப்பட்டது.(117) ஒளிக்கோள்கள் அனைத்தும் தங்கள் ஒளியை இழந்தன. படைப்பாளனான பிரம்மனே தன் இருக்கையில் இருந்து விழுந்தான். பெருங்கடல் வற்றியது. இமய மலைகள் பிளந்தன.(118)
ஓ! பாண்டுவின் மகனே, எங்கும் இத்தகைய பயங்கரச் சகுனங்கள் தோன்றியபோது, தேவர்கள் மற்றும் உயர் ஆன்ம முனிவர்கள் அனைவரும் சூழ பிரம்மன் போர் நடந்த அந்த இடத்திற்கு வந்தான். நிருக்தங்களின் துணையால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நான்முகப் பிரம்மன் தன் கரங்களைக் கூப்பி ருத்திரனிடம்,(119,120) “மூவுலகங்களுக்கு நன்மை ஏற்படட்டும். ஓ! அண்டத்தின் தலைவா, அண்டத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தில் உன் ஆயுதங்களைக் கீழே வீசுவாயாக.(121) அழிவற்றதும், மாற்றமில்லாததும், பரமும், அண்டத்தின் தோற்றுவாயும், சீரானதும், உயர்ந்த செயல்படு பொருளும், முரண்பட்ட இரட்டைகளைக் கடந்ததும், செயலற்றதும் எதுவோ,(122) அது வெளிப்பட விரும்பி (இரண்டாக இருந்தாலும் ஒன்றேயான) இந்த அருளப்பட்ட வடிவை ஏற்றிருக்கிறது. (பரப்பிரம்மத்தின் வெளிப்படு வடிவங்களான) இந்த நரனும், நாராயணனும், தர்மனின் குலத்தில் பிறந்தவர்களாவர்.(123) தேவர்களில் முதன்மையானவர்களான இவர்கள் உயர்ந்த நோன்புகளை நோற்று, கடுந்தவங்களைச் செய்து வருகிறார்கள். அவன் மட்டுமே அறியும் சிறந்த காரணத்தாலும், அவனது அருள் குணத்தாலும் அவனிடமிருந்தே எழுந்தவன் நான் என்பது அறியப்பட வேண்டும்.(124) அவனது கோபத்தில் இருந்து எழுந்தவனாக நீ இருந்தாலும், முன்படைப்புகள் அனைத்திற்கும் முன்பே நீடித்திருப்பதால் நித்தியமானவன் நீ. நானும், தேவர்கள் மற்றும் பெரும் முனிவர்களான இவர்களும்,(125) நீயும், பிரம்மத்தின் இந்த வெளிப்படு வடிவத்தைத் துதிக்க வேண்டும். தாமதமில்லாமல் உலகங்கள் அனைத்திலும் அமைதி ஏற்படட்டும்” என்றான். பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்ட ருத்திரன், நெருப்பெனும் தன் கோபத்தை நிறுத்தி,(126) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான நாராயணனை நிறைவு செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான். உண்மையில், அவன் துதிக்கத்தக்கவனும், வரமளிப்பவனும், பலமிக்கவனுமான நாராயணனை அடைந்தான்.(127)
வரமருள்பவனும், கோபம் மற்றும் புலன்களை முழுக் கட்டுப்பட்டில் கொண்டவனுமான அந்தத் தேவன் {நாராயணன்} ருத்திரனிடம் நிறைவையும், சமாதானத்தையும் அடைந்தான்.(128) அண்டத்தின் தலைவனும், ஹரி என்ற பெயரால் அழைக்கப்படுபவனுமான அந்தப் பெருந்தேவன், முனிவர்கள், பிரம்மன், தேவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்ட பிறகு, சிறப்புமிக்க ஈனானனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(129) “எவன் உன்னை அறிவானோ அவன் என்னை அறிவான். எவன் உன்னைப் பின்பற்றுவானோ அவன் என்னைப் பின்பற்றுவான். எனவே, உனக்கும் எனக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது. நீ ஒருபோதும் வேறுவகையில் நினைக்காதே.(130) உன் சூலத்தால் என் மார்பில் ஏற்பட்ட இந்த அடையாளம் இந்த நாள் முதல் அழகிய சுழியின் வடிவை ஏற்கும், உன் தொண்டையில் என் கரம் ஏற்படுத்தியிருக்கும் அடையாளம் அழகிய வடிவை ஏற்கட்டும், இதன் விளைவால் நீ ஸ்ரீகண்டன் என்ற பெயரால் அழைக்கப்படுவாய்” என்றான் {நாராயணன்}.(131)
அருள் நிறைந்த புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “ஒருவருக்கொருவர் தங்கள் மேனிகளில் இத்தகைய அடையாளங்களை உண்டாகிக் கொண்டு, இவ்வாறே ருத்திரனிடம் நட்பை வளர்த்துக் கொண்ட நரன் மற்றும் நாராயணன் ஆகிய இரு முனிவர்களும்,(132) தேவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, அமைதியான ஆன்மாக்களோடு மீண்டும் தங்களைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பழங்காலத்தில் ருத்திரனுக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த போரில் பின்னவன் {நாராயணன்} எவ்வாறு வென்றான் என்பதைச் சொல்லிவிட்டேன்.(133) மேலும், அந்தப் பெருந்தேவனுக்கு முனிவர்கள் அளித்த தனிப்பொருள் கொண்ட இரகசிய பெயர்களையும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(134) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியில் பல்வேறு வடிவங்களை ஏற்கும் நான், பிரம்ம லோகத்திலும், அதற்கு மேலும் உயர்ந்த நித்திய உலகங்களிலும், கோலோகம் என்றழைக்கப்படும் உலகத்திலும் என் விருப்பப்படியே திரிந்து வருகிறேன்.(135)
பெரும்போரில் என்னால் பாதுகாக்கப்பட்டுப் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே, நீ செய்த போர்கள் அனைத்திலும் உனக்கு முன்பு நீ கண்டவன், தேவர்களுக்குத் தேவனும், கபர்தின் என்ற வேறு பெயரால் அழைக்கப்படுபவனுமான ருத்திரனையன்றி வேறு எவனுமல்ல.(137) வேறு பெயரில் காலன் என்றும் அறியப்படும் அவன் என் கோபத்தில் இருந்த உண்டானவன் என்பதை அறிவாயாக.(138) தேவர்களுக்குத் தேவனும், அளவிலா பலம் கொண்டவனுமான அந்த உமையின் தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்குவாயாக. அண்டத்தின் சிறப்புமிக்கத் தலைவனும், ஹரி என்ற பெயரில் அழைக்கப்படுபவனுமான அந்த அழிவற்ற தேவனுக்கும் {நாராயணனுக்கும்} குவிந்த ஆன்மாவோடு தலைவணங்குவாயாக. நான் மீண்டும் மீண்டும் சொன்னது போல அந்தத் தேவன் {ருத்திரன்}, என் கோபத்தில் இருந்து பிறந்தவனன்றி வேறெவனும் அல்ல. ஓ! தனஞ்சயா, இதற்கு முன்பு அவனது பலத்தையும், சக்தியையும் குறித்துக் கேட்டிருக்கிறாய்” என்றான் {கிருஷ்ணன்}”.(140)
நாரதரும் நரநாராயணர்களும்! – சாந்திபர்வம் பகுதி – 344-நாரதர் ஸ்வேதத்வீபத்தில் இருந்து திரும்பியது; அவர் மீண்டும் பதரியை அடைந்தது; நாரதருக்கும் நரநாராயணர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்…
சௌனகர், “ஓ! சௌதி, நீ சொன்ன இந்தக் கதை சிறப்பானதாகும். உண்மையில், இதைக் கேட்ட தவசிகள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருக்கின்றனர்.(1) ஓ! சௌதி, பூமியில் உள்ள புனிதத் தலங்கள், மற்றும் புண்ணிய நீர்நிலைகள் அனைத்திற்கும் சென்று தூய்மைச் சடங்குகளைச் செய்வதால் கிட்டும் தகுதியைவிட {புண்ணியத்தைவிட} நாராயணனைக் குறித்துச் சொல்லும் ஒரு கதை அதிகக் கனிதரும் என்று சொல்லப்படுகிறது.(2) புனிதமானதும், ஒவ்வொரு பாவத்தையும் கழுவ வல்லதும், நாராயணனைக் குறித்ததுமான உனது இவ்வுரையைக் கேட்டு நிச்சயம் நாங்கள் அனைவரும் புனிதமடைந்தோம்.(3) அனைத்து உலகங்களாலும் துதிக்கப்படுபவனும், சிறப்புமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேவன் {நாராயணன்}, பிரம்மனோடு கூடிய தேவர்களாலும், முனிவர்கள் அனைவராலும் கூடக் காணப்பட இயலாதவனாவான்.(4) இருப்பினும், ஓ! சூதரின் மகனே, ஹரி என்றழைக்கப்படும் நாராயணனை நாரதரால், காண முடிந்தது. தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான அந்தத் தலைவனின் அருளாலேயே அவரால் காண முடிந்தது.(5) எனினும், அண்டத்தின் உயர்ந்த தலைவனான அவன் அநிருத்த வடிவத்தில் இருந்த காட்சியைப் பெற்ற பிறகும் கூடத் தெய்வீக முனிவரான நாரதர் தேவர்களில் முதன்மையானவர்களான நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரையும் காண (இமயச் சாரலில் உள்ள பதரி ஆசிரமத்தை நோக்கி) ஏன் மீண்டும் விரைந்து வந்தார்? ஓ! சௌதி, நாரதரின் அந்த நடத்தைக்கான காரணத்தை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(6)
சௌதி, “பரிக்ஷித்தின் அரசமகனான ஜனமேஜயன் தன் (பாம்பு) வேள்வி தொடர்ந்து கொண்டிருந்தபோது, ஓ! சௌனகரே, வேள்விச் சடங்குகளின் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மன்னர்களின் மன்னன் {ஜனமேஜயன்}, தன் பாட்டின் பாட்டனும், வியாசர் என்றழைக்கப்படுபவரும், பலத்துடன் கூடிய தவசிகளில் முதன்மையானவரும், தீவில் பிறந்தவருமான முனிவர் கிருஷ்ணர் அல்லது வியாசர் என்றழைக்கப்பட்டவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(8)ஜனமேஜயன் {வியாசரிடம்}, “தெய்வீக முனிவரான நாரதர், வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} இருந்து திரும்பியதும், புனிதனான நாராயணன் அவரிடம் சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்து, அடுத்ததாக என்ன செய்தார்?(9) இமய மலைகளின் சாரலில் உள்ள பதரி என்றழைக்கப்படும் ஆசிரமத்திற்கு வந்து, அவ்விடத்தில் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரன் மற்றும் நாராயணன் ஆகிய இரு முனிவர்களைக் கண்டு எவ்வளவு காலம் அங்கே வசித்தார்? அவருக்கும் அந்த முனிவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்களின் பொருள் என்ன?(10)உண்மையில் ஞானப் பெருங்கடலாக இருக்கும் நாராயணனைக் குறித்த இந்த உரையாடலானது, நூறாயிரம் {ஒரு லட்சம்} ஸ்லோகங்களாலான பாரதம் என்றழைக்கப்படும் பெரும் வரலாற்றை நுண்ணறிவைக் கொண்ட நீர் கடந்ததனால் எழுந்தது.(11) தயிரில் இருந்து வெண்ணைப் போலவும், மலய மலைகளில் இருந்து சந்தன மரம் போலவும், வேதங்களில் இருந்து ஆரண்யகங்களைப் போலவும், மருத்துவ மூலிகைகள் அனைத்தில் இருந்தும் வரும் அமுதம் போலவும், ஓ! தவப்பெருங்கடலே, ஓ! பிராமணரே, நாராயணனைக் குறித்ததும், அமுதம் போன்றதுமான இந்த உரையாடலானது, உலகில் உள்ள பல்வேறு வரலாறுகள் மற்றும் புராணங்களில் இருந்து உம்மால் எழுப்பப்பட்டிருக்கிறது.(13) நாராயணனே உயர்ந்த தலைவனாவான் {ஈஸ்வரன்} ஆவான். சிறப்புமிக்கவனும், பெரும்பலம் கொண்டவனுமான அவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருக்கிறான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உண்மையில் அந்த நாராயணனின் சக்தி தடுக்கப்பட முடியாததாகும்.(14)
கல்பத்தின் முடிவில் பிரம்மன் முதலான தேவர்களும், கந்தர்வர்களுடன் கூடிய முனிவர்களும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் யாவும் நாராயணனுக்குள்ளேயே நுழைகின்றன.(15) எனவே, நாராயணனைத் தவிர உயர்ந்த வேறு எதுவும், புனிதமான வேறு எதுவும் பூமியிலோ, சொர்க்கத்திலோ இல்லை என நான் நினைக்கிறேன். புனிதத் தலங்கள் அனைத்திற்கும் செல்வது, புனித நீர் நிலைகள் அனைத்திலும் நீராடி தூய்மையடைவது ஆகியனவும், நாராயணனைக் குறித்த ஓர் உரையாடலைவிட அதிகத் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை. அண்டத்தின் தலைவனான ஹரி குறித்ததும், பாவங்கள் அனைத்தையும் அழிப்பதுமான இந்த உரையாடலைத் தொடக்கம் முதல் கேட்டதனால், எங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்ததாகவும், முற்றிலும் புனிதமடைந்ததாகவும் நாங்கள் உணர்கிறோம். என் மூதாதையான தனஞ்சயன், தன் கூட்டாளியாக வாசுதேவனைக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தால், அவன் குருக்ஷேத்திரப் பெரும்போரில் வெற்றியடைந்து ஒருபோதும் ஆச்சரியமாகாது. அண்டத்தின் பெருந்தலைவனான விஷ்ணுவையே தன் கூட்டாளியாகக் கொண்ட ஒருவனால் மூவுலகங்களிலும் அடையமுடியாதது எதுவுமில்லை என நான் நினைக்கிறேன். என் மூதாதையர்களின் உலகம் சார்ந்த செழிப்பு மற்றும் ஆன்ம செழிப்பைக் கவனித்துக் கொள்ள ஜனார்த்தனன் இருந்தான் எனும்போது அவர்கள் நிச்சயம் பெரும் பெரும் நற்பேற்றைப் பெற்றவர்களே, புகழத்தக்கவர்களே. உலகங்கள் அனைத்தினாலும் துதிக்கப்படும் புனிதமான நாராயணனை, கடுந்தவத்தின் துணையால் மட்டுமே காண முடியும்.(17-21) எனினும், மார்பில் அழகிய சுழியுடன் கூடிய நாராயணனைக் காண்பதில் அவர்கள் வெற்றியடைந்தனர். என் மூதாதையர்களைவிட, பரமேஷ்டியின் மகனான தெய்வீக முனிவர் நாரதர் பெரும் நிற்பேற்றைப் பெற்றவரே.(22) உண்மையில் அழிவுகள் அனைத்தையும் கடந்திருக்கும் நாரதர், வெண்தீவுக்குச் சென்று ஹரியைக் காணப் பெரும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.(23) உண்மையில் அவர் அந்த உயர்ந்த தலைவனை {ஈஸ்வரனைக்} கண்டது அவனது அருளால் மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது. அநிருத்தனின் வடிவில் உள்ள நாராயணனை நாரதர் கண்டது அவரது நற்பேற்றாலேயே.(24) நாராயணனை அவ்வடிவில் கண்ட நாரதர், பதரியில் இருக்கும் நர நாராயணர்களைக் காண மீண்டும் ஏன் விரைந்து வந்தார்? ஓ! தவசியே, பரமேஷ்டியின் மகனான நாரதர் வெண்தீவில் இருந்து திரும்பி, பதரியை அடைந்து, நர நாராயண முனிவர்களைக் கண்ட பிறகு, அங்கே எவ்வளவு காலம் வாழ்ந்தார்? அவர்களிடம் என்ன பேசினார்? உயர் ஆன்மா கொண்ட அவ்விருவரும் அந்த முதன்மையான முனிவரிடம் என்ன சொன்னார்கள்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {ஜனமேஜயன்}.(26-28)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,[1] “அளவிலா சக்தி கொண்ட புனித வியாசருக்கு வணக்கம். நாராயணனைக் குறித்த இந்தக் கதை அவரது {வியாசரின்} அருளால் சொல்லப் போகிறேன்.(29) வெண்தீவை அடைந்த நாரதர் மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டார். ஓ! மன்னா, அந்த உயர்ந்த தலைவன் சொன்ன கனமான வார்த்தைகளைத் தம் மனத்தில் சுமந்தபடியே அந்த இடத்தைவிட்டு அகன்று விரைவாக மேரு மலைகளை நோக்கிச் சென்றார். ஓ! மன்னா, மேருவை அடைந்ததும், தான் பெற்ற அனுபவத்தை நினைத்து ஆச்சரியத்தால் நிறைந்தார்.(30,31) அவர் தமக்குள்ளேயே, “இஃது எவ்வளவு ஆச்சரியமானது. நான் மேற்கொண்டது நீண்ட பயணமாகும். இத்தகைய நெடுந்தொலைவுக்குச் சென்று உடல்நலத்தோடும், பாதுகாப்பாகவும் திரும்பியிருக்கிறேன்” என்று நினைத்தார். பிறகு அவர் மேரு மலைகளில் இருந்து கந்தமாதனத்தை நோக்கிச் சென்றார்.(32)வானத்தில் பறந்து சென்ற அவர், பதரி என்ற பெயரில் அறியப்படும் அந்தப் பெரிய ஆசிரமத்தில் விரைவாக இறங்கினார். அங்கே அவர் (நரன் என்றும், நாராயணன் என்றும் அழைக்கப்படும்) அந்தப் புராதனத் தேவர்கள், தங்கள் சுயத்தையே சார்ந்திருந்து, உயர்ந்த நோன்புகளை நோற்றுக் கொண்டு, தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்.(33) துதிக்கத்தக்கவர்களான அவ்விருவரும் தங்கள் மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் அழகிய சுழிகளையும், தங்கள் தலைகளில் சடாமுடிகளையும் தரித்திருந்தனர். உலகத்திற்கு ஒளியூட்டும் அவர்களது பிரகாசமானது சூரியனின் சக்தியைக் கடந்ததாக இருந்தது.(34) அவர்கள் இருவரின் உள்ளங்கைகளிலும் அன்னப்பறவையின் பாதம் {ஹம்ஸரேகை} என்றழைக்கப்படும் அடையாளத்தைக் கொண்டிருந்தன. அவர்களது உள்ளங்கால்களில் சக்கரத்தின் அடையாளம் இருந்தது. அவர்களது மார்பு மிக அகலமாக இருந்தது; அவர்களது கரங்கள் கால்மூட்டு வரை நீண்டிருந்தன.(35) அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முஷ்கங்களைக்[2] கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அறுபது பற்களையும், நான்கு கரங்களையும் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் குரலும் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமானதாக இருந்தது. அவர்களது முகம் அழகானதாகவும், அவர்களது நெற்றி அகலமானதாகவும், புருவங்கள் அழகானதாகவும், கன்னங்கள் நன்கு அமையப்பெற்றனவாகவும், மூக்குகள் நீண்டவையாகவும் இருந்தன.(36) அந்த இரண்டு தேவர்களின் தலையும் பெரியவையாகவும், உருண்டையாகவும், திறந்த குடைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இந்த அடையாளங்களைக் கொண்டிருந்த அவர்கள் தோற்றத்தில் மிக மேன்மையானவர்களாகத் தெரிந்தனர்.(37)அவர்களைக் கண்ட நாரதர், மகிழ்ச்சியால் நிறைந்தார். அப்போது அவர் அவர்களை மதிப்புடன் வணங்கினார், பதிலுக்கு அவர்களும் அவரை வணங்கினர். அவர்கள் அந்தத் தெய்வீக முனிவரை “நல்வரவு” கூறி வரவேற்று வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். முதன்மையானவர்களான அவ்விருவரையும் கண்ட நாரதர் தமக்குள்ளேயே இவ்வாறு நினைக்கத் தொடங்கினார்,(38) “அனைத்து உயிரினங்களாலும் மதிக்கப்படும் இந்த முதன்மையான முனிவர்கள் இருவரும், வெண்தீவில் நான் கண்டவனைப் போன்ற அதே தோற்றத்தைக் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள்” {என்று நினைத்தார்}.(39) இவ்வழியில் சிந்தித்த அவர், அவர்கள் இருவரையும் வலம் வந்து, அவருக்கு வழங்கப்பட்ட குசப் புற்களால் அமைந்த சிறந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.(40) இதன் பிறகு, தவங்களின் வசிப்பிடமானவர்களும், புகழ்மிக்கச் சாதனைகளைச் செய்தவர்களும், சக்தி மிக்கவர்களுமான அந்த முனிவர்கள் இருவரும், அமைதியான இதயத்துடனும், தற்கட்டுப்பாட்டுடனும் தங்கள் காலை சடங்குகளைச் செய்தனர்.(41) பிறகு அவர்கள் ஆவல் நிறைந்த இதயத்துடன், நாரதருக்கு அவரது கால்களைக் கழுவ நீரையும், வழக்கமான அர்க்கிய பொருட்களையும் கொடுத்து அவரை வழிபட்டனர். தங்கள் காலைச் சடங்குகளைச் செய்து, தங்கள் விருந்தினரை வரவேற்று தேவையான விருந்தோம்பல்களையும் செய்த பிறகு அவர்கள் மரப்பலகைகளால் ஆன இரண்டு இருக்கைகளில் அமர்ந்தனர்.(42) அந்த இரு முனிவர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது, புனித நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றுவதன் விளைவால் ஒளிரும் வேள்விப் பீடங்களைப் போலவே அந்த இடம் ஒருவித அழகுடன் ஒளிரத் தொடங்கியது.(43) அப்போது நாராயணர், களைப்பில் இருந்து புத்துணர்வை அடைந்து, தமக்குள் அளிக்கப்பட்ட விருந்தோம்பலுடன் கூடிய வரவேற்பில் நிறைவடைந்து, சுகமாக அமர்ந்திருக்கும் நாரதரைக் கண்டு, அவரிடம் இவ்வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார்.(44)
நரனும், நாராயணனும், “நித்தியமானவனும், தெய்வீகமானவனும், எதிலிருந்து நாம் பிறந்தோமோ அந்த உயர்ந்த தோற்றுவாயுமான பரமாத்மாவை வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} கண்டீரா?” என்று கேட்டனர்.(45)
நாரதர், “மாற்றமில்லாதவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான அந்த அழகனை நான் கண்டேன். உலகங்கள் அனைத்தும், முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் அவனிலேயே வசிக்கின்றனர்.(46) இப்போதும் நித்தியமானவர்களான உங்கள் இருவரையும் காணும்போது அவனையே காண்கிறேன். அந்த ஹரியின் அடையாளங்கள் மற்றும் குறியீடுகள், புலன்களுக்கு முன்பு வெளிப்படும் உங்கள் இருவரின் வடிவங்களிலும் தெரிகின்றன. உண்மையில் நான் உங்கள் இருவரையும் அந்தப் பெருந்தேவனின் அருகிலேயே காண்கிறேன். பரமாத்மாவால் விடைகொடுத்து அனுப்பப்பட்டே இன்று நான் இங்கே வந்தேன்.(47-49) சக்தி, புகழ் மற்றும் அழகில் அவனுக்கு இணையானவர்களாகத் தர்மனின் குலத்தில் பிறந்த உங்கள் இருவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?(50) க்ஷேத்ரஜ்ஞன் குறித்த கடமைகளின் மொத்த நடைமுறைகளையும் அவன் எனக்குச் சொன்னான். எதிர்காலத்தில் அவன் இவ்வுலகத்தில் எடுக்கப்போகும் அவதாரங்கள் அனைத்தையும் எனக்குச் சொன்னான்.(51)
வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்பவர்கள், சாதாரண மனிதர்களுக்குச் சொந்தமான ஐம்புல்களில் ஏதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விழிப்படைந்த ஆன்மா கொண்டவர்களாகவும், உண்மை ஞானத்துடன் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் அண்டத்தின் உயர்ந்த தலைவனான அந்த முதன்மையானவனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அந்தப் பெருந்தேவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள் அவனும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(52) புனிதமானவனான அந்தப் பரமாத்மா தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் எப்போதும் அன்புடன் இருக்கிறான். மறுபிறப்பாளர்களை அவன் விரும்புகிறான். தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் எப்போதும் அன்பாக இருக்கும் அவன், தன்னை வழிபடுபவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(53) அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டத்தை அனுபவிப்பவனும், சிறப்புமிக்கவனுமான மாதவன் தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் அன்புடன் இருக்கிறான். அவனே செயல்படுபவன்; அவனே காரணன்; அவனே விளைவுமாக {காரியமாகவும்} இருக்கிறான். அவன் எல்லாம் வல்லவனாகவும், அளவிலா காந்தியைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.(54) அனைத்துப் பொருட்களும் எங்கே பிறக்கின்றனவோ அதன் காரணமாக அவனே இருக்கிறான். சாத்திர விதிகள் அனைத்தின் உடல்வடிவமாக அவனே இருக்கிறான். தத்துவங்கள் அனைத்தின் உடல்வடிவமாகவும் அவனே இருக்கிறான். அவன் பெரும்புகழைக் கொண்டவனாக இருக்கிறான்.(55)
தவங்களின் மூலம் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளும் அவன், வெண்தீவில் (நேரும்) சக்தியைவிட உயர்ந்த காந்தியுடன் தன்னை ஒளியூட்டிக் கொள்கிறான். தவங்களால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அவன், மூவுலகங்களிலும் அமைதியை விதித்திருக்கிறான்.(56) இத்தகைய மங்கல புத்தியைக் கொண்ட அவன், புனிதத்தையே உடல்வடிவமாகக் கொண்ட மிக மேன்மையான நோன்பை நோற்பதில் ஈடுபடுபட்டிருக்கிறான். கடுந்தவங்களில் ஈடுபட்டபடியே அவன் வசிக்கும் ஆட்சிப்பகுதியில், சூரியன் சுடுவதில்லை, சோமன் அந்தப் பகுதியை அலங்கரிப்பதில்லை. அங்கே காற்று வீசுவதில்லை.(57) சிறப்புமிக்கவனான அண்டப் படைப்பாளன், எட்டு விரற்கட்டைகளின் அளவில் ஒரு பீடத்தை அமைத்துக் கொண்டு, கிழக்கு நோக்கிய முகத்துடன் கரங்களை உயர்த்தியபடியே ஒற்றைக் காலில் நின்று கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறான்.(58)
அங்கங்களுடன் கூடிய வேதங்களை ஓதியபடியே அவன் கடுந்தவங்களில் ஈடுபட்டு வருகிறான். பிரம்மனின் விதிகளுக்கு ஏற்ப முனிவர்களாலும், பசுபதியாலும், எஞ்சியிருக்கும் முக்கியத் தேவர்களாலும், தைத்தியர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான, அல்லது இறைச்சியாலான ஆகுதிகள் எதுவும் அந்தப் பெருந்தேவனின் பாதங்களையே அடைகின்றன.(59-61) அவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்களால் செய்யப்படும் எந்தச் சடங்கையும், எந்த அறச் செயலையும் அந்தப் பெருந்தேவன் தன் தலையால் பெற்றுக் கொள்கிறான்.(62) விழிப்படைந்தவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்களைவிட மூவுலகிலும் வேறு எவரும் அவனுக்கு அன்புக்குரியவர் இல்லை. அவனிடம் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டவன் {பக்திமான்} அந்த மனிதர்களைவிட அன்புக்குரியவன் ஆவான்.(63) அந்தப் பரமாத்மாவால் விடைகொடுத்தனுப்பப்பட்டே நான் இங்கே வந்தேன். சிறப்புமிக்கவனும், புனிதமானவனுமான ஹரி இஃதையே எனக்குச் சொன்னான். எனவே நான் இதுமுதல் அநிருத்தனின் வடிவில் உள்ள நாராயணனிடம் அர்ப்பணிப்புடன் உங்கள் இருவருடன் வசிக்கப் போகிறேன்” என்றார் {நாரதர்}.(64)
பதரியில் வசிக்கும் நாரதர்! – சாந்திபர்வம் பகுதி – 345-பரமாத்மாவின் மகிமையைச் சொன்ன நரனும், நாராயணனும்; தவத்தில் ஈடுபட்ட நாரதர்…
நரனும், நாராயணனும் {நாரதரிடம்}, “(அநிருத்தனின் வடிவில்) பலமிக்க நாராயணனை நீர் கண்டதால் உயர்ந்த அருளைக் கொண்டவராகவும், உயர்ந்த புகழுக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். வேறு எவராலும், ஏன் ஆதி தாமரையில் பிறந்த பிரம்மனாலும் கூட அவனைக் காண முடிந்ததில்லை.(1) பலமிக்கவனும், புனிதம் நிறைந்தவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், வெளிப்படாத மூலத்தையும், காணப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் ஓ! நாரதரே, நாங்கள் உமக்குச் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே.(2) அர்ப்பணிப்புடன் அவனைத் துதிப்பவனைவிட இந்த அண்டத்தில் வேறு எவனும் அவனுக்கு அன்புக்குரியவன் இல்லை. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதன் காரணமாகவே அவன் உம்மிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தவங்கள் நோற்பதில் ஈடுபட்டுவரும் அந்தப் பரமாத்மாவின் ஆட்சிப்பகுதிக்கு எங்கள் இருவரைத் தவிர வேறு எவராலும் செல்ல முடியாது.(4) அந்த இடம் அவனால் அலங்கரிக்கப்பட்டிருப்பதன் விளைவால், அஃது {அவ்விடம் / வெண்தீவு / ஸ்வேதத்வீபம்} ஆயிரம் சூரியர்கள் ஒன்றுதிரண்டதற்கு ஒப்பான காந்தியைக் கொண்டிருக்கிறது.(5)
ஓ! பிராமணரே {நாரதரே}, சிறப்புமிக்கவனும், அண்டப் படைப்பாளனின் தோற்றுவாயுமான அவனிடம் இருந்தே பூமியுடன் தொடர்புடைய மன்னிக்கும் குணம் பிறந்தது.(6) அனைத்து உயிரினங்களின் நன்மைக்கான குணங்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவனில் இருந்தே ரசம் (சுவை) எழுந்தது. நீருடன் தொடர்புடைய ரஸம் என்ற குணம் நீராகவே இருக்கிறது.(7) அவனிடமிருந்தே வடிவம் அல்லது பார்வையை ஆன்மாவாகக் கொண்ட குணத்துடன் கூடிய வெப்பம் அல்லது ஒளி எழுந்தது. அது சூரியனைப் பற்றுவதன் விளைவால், சூரியனால் ஒளிரவும், வெப்பத்தைத் தரவும் முடிகிறது.(8) சிறப்புமிக்கவனும், முதன்மையானவனுமான அவனிடமிருந்தே தீண்டலும் எழுந்தது. அது காற்றைப் பற்றுவதன் விளைவால் காற்றானது தீண்டல் உணர்வை உண்டாக்கியபடியே உலகம் முழுவதும் திரிகிறது.(9) மொத்த அண்டத்தின் பலமிக்கத் தலைவனான அவனிடம் இருந்தே ஒலி எழுந்தது. அது வெளியுடன் பற்று கொள்வதன் விளைவால் மறைக்கப்படாததாகவும், அடைக்கப்படாததாகவும் இருக்கிறது.(10) அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மனம் இந்தச் சிறப்புமிக்கவனிடம் இருந்தே எழுந்தது. சந்திரனுடன் பற்று கொள்வதன் விளைவால் சந்திரன் அனைத்துப் பொருட்களையும் வெளிப்படுத்தும் குணத்தைக் கொண்டிருக்கிறான்.(11)
வேள்விகளில் அளிக்கப்படும் ஆகுதிகள் மற்றும் பிற காணிக்கைகளை உண்ணும் தெய்வீக நாராயணன், ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு எந்த இடத்தில் வசிக்கிறானோ, அந்த இடமே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கும் காரணமான சத் என்ற பெயரில் அறியப்படுகிறது.(12) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, களங்கமற்றவர்களும், அறம் மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் விடுபட்டவர்களுமான மனிதர்களின் பாதையானது மங்கலமும், இன்பமும் நிறைந்ததாகும்.(13) உலகங்கள் அனைத்தின் இருளை விலக்கும் சூரியனே (முக்தன் ஒருவன் கடந்து செல்லும்) வாயிலாகச் சொல்லப்படுகிறான். சூரியனுக்குள் நுழையும் அத்தகைய மனிதர்களின் உடல்கள் அவனது நெருப்பில் எரிக்கப்படுகின்றன. அதன் பிறகு அவர்கள் எக்காலத்திலும், எவராலும் காண முடியாத நிலையை அடைகிறார்கள்.(14) புலப்படாத அணுக்களாகக் குறைக்கப்படும் அவர்கள் பிறகு (சூரியனின் நடுப்பகுதியில் வசிக்கும்) நாராயணனுக்குள் நுழைகிறார்கள். அவனிலிருந்தும் கடந்து செல்லும் அவர்கள் அநிருத்தன் என்ற வடிவத்திற்குள் நுழைகிறார்கள்.(15)
உடல்சார்ந்த குணங்கள் அனைத்தையும் மொத்தமாக இழந்து, மனமாக மட்டுமே மாறும் அவர்க்ள பிரத்யும்னனுக்குள் நுழைகிறார்கள். பிரத்யும்னனிலிருந்தும் கடந்து செல்பவர்களும், சாங்கிய தத்துவத்தை அறிந்தவர்களும், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், ஜீவன் என்றழைக்கப்படும் சங்கர்ஷணனுக்குள் நுழைகிறார்கள். அதன் பிறகு, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படை முக்குணங்களையும் இழக்கும் அந்த மறுபிறப்பாளர்கள் அந்த அடிப்படை முக்குணங்களைக் கடந்தவனான க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் பரமாத்மாவுக்குள் நுழைகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் அசல் புகலிடம் அல்லது வசிப்பிடம் வாசுதேவனே என்பதை நீர் அறிய வேண்டும்.(16-18) குவிந்த மனத்தைக் கொண்டவர்களும், அனைத்து வகைக் கட்டுப்பாடுகளையும் நோற்பவர்களும், புலனடக்கம் கொண்டவர்களும், மொத்த ஆன்மாவுடன் சேர்த்து அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களே வாசுதேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(19)
ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நாங்கள் இருவரும் தர்மனின் இல்லத்தில் பிறப்பை அடைந்தோம். மேலும் நாங்கள் இனிமையான இந்தப் பெரிய ஆசிரமத்தில் கடுந்தவங்களைச் செய்து வருகிறோம்.(20) ஓ! மறுபிறப்பாளரே, பரம்பொருளால் வெளிப்படுத்தப்பட்டவையும், மூவுலகங்களிலும் தேவர்கள் அனைவருக்கும் அன்புக்குரியவையுமான பொருட்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிற உயிரினங்களால அடையப்பட முடியாத பல்வேறு சாதனைகளை அடைவதற்காக) நாங்கள் இவ்வாறு தவத்தில் ஈடுபடுகிறோம்.(21) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பொதுவில் இல்லாதவையும், எங்கள் இருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடியவையுமான விதிகளுக்கு இணக்கமாகச் சிறந்த மற்றும் உயர்ந்த நோன்புகள் நிறைந்த கடுந்தவங்களை நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செய்து வருகிறோம்.(22) ஓ! தெய்வீக முனிவரே, தவங்களைச் செல்வமாகக் கொண்ட தெய்வீக முனிவரான உம்மை நாங்கள் வெண்தீவில் கண்டோம். நாராயணனைச் சந்தித்த பிறகு நீர் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறீர்.(23) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மூவுலகங்களிலும் நாங்கள் அறியாதது ஏதுமில்லை. ஓ! பெருந்தவசியே, {மூவுலகங்களிலும்} நடக்கப் போகும், அல்லது நடந்த, அல்லது நடந்து கொண்டிருக்கும் நன்மை அல்லது தீமையை அந்தத் தேவதேவன் உமக்குச் சொன்னான்” என்றனர்”.(24)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கடுந்தவங்களில் ஈடுபட்டுவந்த நரநாராயணர்கள் இருவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தெய்வீக முனிவரான நாரதர், மதிப்புடன் தன் கரங்களைக் கூப்பி நாராயணனில் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டார்.(25) நாராயணனால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணற்ற புனித மந்திரங்களை அவர் காலத்திற்கும் தன் மனத்தில் முறையான நோன்புகளுடன் உரைத்துக் கொண்டே இருந்தார். பெரும் சக்தியுடன் கூடிய நாரதர், பரம தேவனான நாராயணனை வழிபட்டும், தர்மனின் இல்லத்தில் பிறந்த புராதன முனிவர்கள் இருவரையும் துதித்துக் கொண்டும், இமயச் சாரலில் உள்ள நரநாராயணர்களுக்குச் சொந்தமான பதரி எனும் ஆசிரமத்தில் ஓராயிரம் தேவ வருடங்களுக்குத் தொடர்ந்து வசித்து வந்தார்”.(26-27)
பித்ரு வழிபாடு! – சாந்திபர்வம் பகுதி – 346-பித்ருக்களுக்குச் செய்யும் சடங்குகளின் சிறப்பை நாரதருக்குச் சொன்ன நரனும், நாராயணனும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு சமயத்தில் பரமேஷ்டியின் மகனான நாரதர், நர நாரயணரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தேவர்களை மதிக்கும் சடங்குகளையும், நோன்புகளையும் முறையாகச் செய்துவிட்டு, பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்கைச் செய்வதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(1) இவ்வாறு அவர் ஆயத்தமாவதைக் கண்ட தர்மனின் மூத்த மகனான பலமிக்க நாராயணர், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் தொடர்புடைய இந்தச் சடங்குகள் மற்றும் நோன்புகளில் யாரை நீர் வழிபடுகிறீர்? ஓ! புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவரே, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் எனக்கு இது குறித்துச் சொல்வீராக. நீர் செய்வது என்ன? நீர் செய்யும் இந்தச் சடங்குகளால் என்ன கனிகளை {பலன்களை} நீர் விரும்புகிறீர்” என்று கேட்டார்.(2,3)
நாரதர், “முந்தைய நிகழ்வொன்றில் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் சடங்குகளும், நோன்புகளும் செய்யப்பட வேண்டும் என்று நீர் என்னிடம் சொன்னீர். தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சடங்குகள் உயர்ந்த வேள்வியாகும் என்றும், நித்தியமான பரமாத்மாவை வழிபடுவதற்கு இணையானவை என்றும் நீர் சொன்னீர்.(4) அந்தப் போதனையில் அறிவுரை பெற்ற நான், தேவர்களை வழிபட்டுச் செய்யப்படும் இந்தச் சடங்குகளின் மூலம் நித்தியமானவனும், மாற்றமில்லாதவனான விஷ்ணுவைக் கௌரவித்து வேள்வி செய்கிறேன். அந்தப் பரம தேவனிலிருந்த உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன் பழங்காலத்தில் உதித்தெழுந்தான்.(5) பரமேஷ்டி என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் அந்தப் பிரம்மன் என் தந்தையை (தக்ஷனை) உண்டாக்கினான். (தக்ஷ முனிவரின் சாபத்தால் பின்னாளில் அவருடைய மகனாகப் பிறப்பை அடைந்தாலும்) நான் அனைவருக்கும் முன்பாகப் பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவருடைய ஆன்ம மகனாவேன் {பிரம்மனின் மானஸபுத்திரனாவேன்}.(6) ஓ! சிறப்புமிக்கவரே, அறவோரே, நாராயணனால் விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களைக் கௌரவிக்கும் இந்தச் சடங்குகளை நான் நாராயணனுக்காகவே செய்கிறேன். சிறப்பு மிக்க நாராயணனே, (அனைத்து உயிரினங்களின்) தந்தையும், தாயும், பாட்டனுமாவான்.(7) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகள் அனைத்திலும் அண்டத்தின் தலைவனான அவனே துதிக்கப்படுகிறான், வழிபடப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தந்தைமாரான தேவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்ருதிகளைச் சொல்லிக் கொடுத்தனர்.(8) ஸ்ருதிகளில் ஞானத்தை இழந்த அந்தத் தந்தைமார் தாங்கள் சொல்லிக் கொடுத்தவற்றை மீண்டும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து அடைந்தனர். இந்நிகழ்வின் விளைவால், தங்கள் தந்தைமாருக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்த மகன்கள் தந்தையின் நிலையை அடைந்தனர் (தங்கள் மகன்களிடம் மந்திரங்களைப் பெற்ற தந்தைமார் மகன்களின் நிலையை அடைந்தனர்)[1].(9) அச்சந்தர்ப்பத்தில் தேவர்கள் என்ன செய்தனர் என்பதை நீங்கள் இருவரும் நன்கு அறிவீர்கள். (அந்தச் சந்தர்ப்பத்தில்) மகன்களும், தந்தைமாரும் ஒருவரையொருவர் இவ்வாறு வழிபட்டுக் கொண்டனர்.(10) முதலில் சில தர்ப்பை புற்களைப் பரப்பி வைத்துக் கொண்ட தேவர்களும், பித்ருக்களும் (தேவர்களின் பிள்ளைகளும்) மூன்று பிண்டங்களை அதில் வைத்து இவ்வழியில் ஒருவரையொருவர் வழிபட்டனர். எனினும், பழங்காலத்தில் பிண்டங்கள் என்ற பெயரை பித்ருக்கள் ஏன் அடைந்தனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றார்.(11)நரனும், நாராயணனும், “பழங்காலத்தில், கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி காட்சியில் இருந்து மறைந்து போனாள். பெரும் பன்றியின் வடிவையேற்ற கோவிந்தனர் (தன் வலிமைமிக்கத் தந்தத்தால்) அவளை மேலே உயர்த்தினான்.(12) பூமியை மீண்டும் அவளது பழைய நிலையிலேயே நிலைநிறுத்தியவனும், நீரும், புழுதியும் பூசப்பட்டவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், உலகத்திற்கும், அதில் வசித்தவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(13) ஓ! நாரதரே, சூரியன் நடுவானை அடைந்து, காலை துதிகளுக்கான வேளை {ஆந்நிக காலம்} வந்த போது, அந்தப் பலமிக்கத் தலைவன் {வராகன்}, தன் தந்தத்தைக் கொண்டு, திடீரென மூன்று மண் உருண்டைகளை உருட்டி, ஏற்கனவே புல் பரப்பப்பட்ட பூமியில் வைத்தான். நித்திய விதியில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி அந்தப் பலமிக்க விஷ்ணு அந்த மண் உருண்டைகளைத் தன் சுயத்திற்கே அர்ப்பணித்தான்.(14,15) அந்தப் பலமிக்கத் தலைவன் தன் தந்தங்களால் உருட்டிய மண் உருண்டைகளைப் பிண்டங்களாகக் கருதி, தன் உடல் வெப்பத்தால் எழுந்தவையும், உள்ளே எண்ணெய் உள்ளவையுமான எள்வித்துகளைக் கொண்டு, கிழக்கு முகமாக அமர்ந்து அந்த அர்ப்பணிப்புச் சடங்கைத் தானே செய்தான். அப்போது அந்தத் தேவர்களில் முதன்மையானவன், மூவுலகங்களில் வசிப்போருக்கு உண்டான ஒழுக்க விதிகளை நிறுவும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(16,17)
அந்த விருஷாகபி, “உலகங்களைப் படைத்தவன் நானே. நான் பித்ருக்கள் என்றழைக்கப்படுவோரை உண்டாக்கத் தீர்மானித்திருக்கிறேன்” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், பித்ருக்களைக் கௌரவிப்பதற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படுத்தும் உயர்ந்த விதிகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(18)
அவன் அவ்வாறு ஈடுபட்டிருந்தபோது, தன் தந்தத்தால் உருட்டப்பட்ட மண் உருண்டைகள் மூன்றும் தெற்கு நோக்கி விழுந்திருப்பதைக் கண்டான். அப்போது அவன், “என் தந்தத்தால் உருட்டப்பட்ட இந்த உருண்டைகள், பூமியின் பரப்பில் தென் திசை நோக்கி விழுந்திருக்கின்றன. இதனால் வழிநடத்தப்படும் நான், இதுமுதல் இவை பித்ருக்கள் என்ற பெயரில் அறியப்பட வேண்டும் என அறிவிக்கிறேன்.(19) உருண்டையாக எந்தக் குறிப்பிட்ட வடிவத்திலும் இல்லாத்த இவை மூன்றும், உலகின் பித்ருக்களாகக் கருதப்பட வேண்டும். இவ்வாறே நான் நித்திய பித்ருக்களை உண்டாக்குகிறேன்.(20) தந்தையும், பாட்டனும், பெரும்பாட்டனுமான நானே இந்த மூன்று பிண்டங்களில் வசிப்பதாகக் கருதப்பட வேண்டும்.(21) எனக்கு மேன்மையானவன் வேறு எவனும் இல்லை. நான் வழிபடவோ, சடங்குகளுடன் துதிக்கவோ வேறு எவன் இருக்கிறான்? இந்த அண்டத்தில் என் தந்தையென எவன் இருக்க முடியும்? நானே என் பாட்டனாவேன்.(22) உண்மையில் நானே பெரும்பாட்டனாகவும் தந்தையாகவும் இருக்கிறேன். (அண்டமனைத்திற்கும்) நானே ஒரே காரணனாவேன்” என்றான்.ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, விருஷாகபி என்றழைக்கப்படும் அந்தத் தேவர்களின் தேவன் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வராஹ மலைகளின் சாரலில் பெரும் சடங்குகளுடன் அந்தப் பிண்டங்களுக்குக் காணிக்கையளித்தான். அந்தச் சடங்குகளின் மூலம் அவன் தன்னையே வழிபட்டான். அந்த வழிபாட்டை நிறைவு செய்த அவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(23,24) இதனாலேயே பித்ருக்கள் பிண்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இதுவே அந்தப் பொறுப்புப் பெயரின் அடித்தளமாகும். அச்சந்தர்ப்பத்தில் விருஷாகபியால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்புடைய வகையிலேயே அனைவராலும் செய்யப்படும் வழிபாட்டைப் பித்ருக்கள் அடைகிறார்கள்.(25) பித்ருக்கள், தேவர்கள், ஆசான் அல்லது மதிப்புமிக்கப் பெரியவர், வீட்டிற்கு வரும் விருந்தினர், பசு, மேன்மையான பிராமணர்கள், பூமாதேவி, தாய்மார் ஆகியோரை எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் துதித்துக் கௌரவித்து வேள்வி செய்பவர்கள் விஷ்ணுவையே துதிப்பதாகவும், அவனுக்கே அவர்கள் வேள்வியைச் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவனே அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருக்கிறான்.(26,27) இன்ப துன்பங்களால் பாதிப்படையாத அவன் அனைத்திடமும் சமமாக நடக்கும் மனோநிலையைக் கொண்டவனாவான். மகிமை கொண்டவனும், பேரான்மாவுமான நாராயணனே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகச் சொல்லப்படுகிறான்” என்றனர் {நரனும், நாராயணனும்}”.(28)
நாராயண மகிமை! – சாந்திபர்வம் பகுதி – 347-தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற நாரதர்; ஜனமேஜயனுக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன வைசம்பாயனர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நரனும், நாராயணனும் சொன்ன இந்த வார்த்தைகளைக்கேட்ட முனிவர் நாரதர், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பில் {பக்தியில்} நிறைந்தார்.(1) நரநாராயணர்களின் ஆசிரமத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் வசித்து, மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டு, நாராயாணனைக் குறித்த சிறந்த உரையாடல்களைக் கேட்ட பிறகு அந்தத் தெய்வீக முனிவர், இமயச் சாரலில் உள்ள தன் சொந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(2) எனினும், முதன்மையான தவசிகளான நரனும், நாராயணனும், கடுந்தவப் பயிற்சிகளில் ஈடுபட்டபடியே இனிமை நிறைந்த தங்கள் பதரி ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தனர்.(3) நீ பாண்டவ குலத்தில் பிறந்தவனாவாய். நீ அளவிலா சக்தி கொண்டவனாவாய். ஓ! பாண்டவ குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, நாராயணனைக் குறித்த இந்த உரையைத் தொடக்கம் முதல் கேட்ட உனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் கழுவப்பட்டு, ஆன்ம புனிதம் அடைந்தவனாக நீ இருக்கிறாய்.(4)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மாற்றமில்லாதவனான ஹரியை விரும்பி மதிப்பதற்குப் பதிலாக வெறுக்கும் ஒருவனுக்கு இம்மையுமில்லை, மறுமையுமில்லை.(5) தேவர்களில் முதன்மையானவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை வெறுக்கும் மனிதனுடைய மூதாதையர்கள் நிச்சயம் நித்திய நரகில் மூழ்குவார்கள்.(6) ஓ! மனிதர்களில் புலியே, விஷ்ணுவே இருப்பிலுள்ள அனைத்தின் ஆன்மாவாக இருக்கிறான். அவ்வாறிருக்கையில், ஒருவன் விஷ்ணுவை வெறுப்பதன் மூலம் தன்னையே வெறுப்பதால், எவ்வாறு எவனாலும் அவனை வெறுக்க முடியும்?(7) நமது ஆசானும், காந்தவதியின் {சத்தியவதியின்} மகனுமான முனிவர் வியாசரே, உயர்ந்த மற்றும் மாற்றமில்லாத மகிமையான நாராயணனின் மகிமையைக் குறித்த இந்த உரையை நமக்குச் சொல்லியிருக்கிறார். ஓ! பாவமற்றவனே, நான் அவரிடமிருந்தே இதைக் கேட்டேன், நான் கேட்டவாறே சரியாக இதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(8)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, புதிர்களுடன் கூடியதும், விவரங்களின் சுருக்கமுமான இந்த வழிபாட்டு மரபானது, அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே நாரதரால் அடையப்பட்டது.(9) இந்தப் பெரும் வழிபாட்டு மரபின் விபரங்கள் இவ்வாறே இருக்கின்றன. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதற்கு முன்பே ஹரி கீதையில், விதிகளுடன் கூடிய சுருக்கமான குறிப்புடன் இதை நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன்[1].(10) வியாசர் என்றும் அழைக்கப்படும் தீவில் பிறந்தவரான கிருஷ்ணரே பூமியில் நாராயணர் என்பதை அறிவாயாக. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, மஹாபாரதத்தைப் போன்ற ஓர் ஆய்வை அவரைத் தவிர வேறு எவனால் தொகுக்க முடியும்?(11) நீ ஒரு பெரும் வேள்வியைச் செய்யத் தீர்மானித்திருக்கிறாய். நீ தீர்மானித்தவாறே அந்த வேள்வி நடைபெறட்டும். பல்வேறு வகைக் கடமைகள் மற்றும் வழிபாட்டு மரபுகளைக் கேட்டவனான உனது குதிரை வேள்வி நடைபெறட்டும்” {என்றார் வைசம்பாயனர்}”.(12)சௌதி {சௌனகரிடம்} தொடர்ந்தார், “அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜனமேஜயன்}, இந்தப் பெரும் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, தன் பெரும் வேளிவியின் நிறைவுக்காக விதிப்படி விதிக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சடங்குகளையும் செய்யத் தொடங்கினான்.(13) ஓ! சௌனகரே, உம்மால் கேட்கப்பட்ட நான், நாராயணனைக் குறித்த அந்தப் பெரும் சொற்பொழிவை {நாராயணீயத்தை} உமக்கும், நைமிசக் காட்டில் வசிப்பபோரான இந்த முனிவர்கள் அனைவருக்கும் முறையாகச் சொல்லிவிட்டேன்.(14) இதற்கு முன்பு, கிருஷ்ணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையில், பல முனிவர்களும், பாண்டுவின் மகன்களும் கேட்டுக் கொண்டிருந்தபோது நாரதர் என் ஆசானுக்கு இதைச் சொன்னார்[2].(15) பரமதேவனான நாராயணனே மூவுலகங்களுக்கும், முனிவர்களில் முதன்மையான அனைவருக்கும் தலைவனாவான். பேரளவு கொண்ட இந்தப் பூமியைத் தாங்குபவன் அவனே. ஸ்ருதிகள் மற்றும் பணிவெனும் குணம் ஆகியவற்றின் கொள்ளிடம் அவனே. அமைதியான இதயத்தை அடையச்செய்யும் பயிற்சி விதிகள் அனைத்திற்கும், யமன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனிடம் செல்வோர் அனைவருக்கும் பெருங்கொள்ளிடம் அவனே. எப்போதும் முதன்மையான மறுபிறப்பாளர்கள் சூழ இருப்பவன் அவனே. அந்தப் பெருந்தேவனே உன் புகலிடமாக இருக்கட்டும்.(16)சொர்க்கவாசிகளுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் செய்பவன் ஹரியே. (மூவுலகங்களுக்குத் தொல்லையாக அமையும்) அசுரர்களை எப்போதும் கொல்பவனும் அவனே. தவங்களின் கொள்ளிடம் அவனே. பெரும் புகழ் கொண்டவன் அவனே. மது மற்றும் கைடபன் என்ற பெயர்களில் அறியப்படும் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. சாத்திரங்கள் மற்றும் பிற கடமைகளை {தர்மங்களை} அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அடையப்படும் கதிகளை விதிப்பவன் அவனே. வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் முதன்மையான காணிக்கைகளை எடுத்துக் கொள்பவன் அவனே. உன் புகலிடமும், பாதுகாப்பும் அவனே.(17) குணங்களுடன் கூடியவன் அவன். குணங்களில் இருந்து விடுபட்டவனும் அவனே. நான்கு வகை வடிவங்களில் இருப்பவன் அவனே. குளங்களை அர்ப்பணித்தல், அதே வகையிலான அறச் சடங்குகளைச் செய்தல் ஆகியவற்றில் இருந்து எழும் தகுதிகளை {புண்ணியங்களைப்} பகிர்ந்து கொடுப்பவன் அவனே. வெல்லப்பட முடியாதவனாகவும், பெரும் வலிமை கொண்டவனாகவும் இருந்து, அறச்செயல்கள் செய்த முனிவர்களின் ஆன்மாவால் மட்டுமே அணுகக்கூடிய கதியை எப்போதும் விதிப்பவனும் அவனே.(18) உலகங்களின் சாட்சி அவனே. பிறப்பில்லாதவன் அவனே. புராதனப் புருஷன் அவனே. சூரியனின் நிறத்திலான உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்} அவனே, அனைத்தின் புகலிடமும் அவனே. நீரில் இருந்து எழுந்தவனே (நாராயணனே) அவனுக்கு {வாசுதேவனுக்குத்} தலைவணங்குவதால் நீங்கள் அனைவரும் அவனுக்கு {வாசுதவேனுக்குத்} தலைவணங்குவீராக.(18) அண்டத்தின் தோற்றுவாய் அவனே. அமிர்தம் என்றழைக்கப்படும் இருப்பு அவனே. நுட்பமானவன் அவனே. அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் புகலிடம் அவனே. மாற்றமில்லாத தன்மை பொருந்திய ஒருவன் அவனே. சாங்கியர்களும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்ட யோகியரும் நித்தியமான அவனையே தங்கள் புத்திகளில் தாங்கியிருக்கின்றனர்” {என்றார் சௌதி}[3].(20)
ஹயக்ரீவனும் மதுகைடபர்களும்! – சாந்திபர்வம் பகுதி – 348-பிரம்மனைப் படைத்த நாராயணன்; ஹயக்ரீவ வடிவத்தை ஏற்றது; மது கைடபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்ட வரலாறு…
ஜனமேஜயன் {அல்லது சௌனகர்}, “தெய்வீகமான பரமாத்மாவின் மகிமையை நான் உம்மிடம் இருந்து கேட்டேன். தர்மனின் இல்லத்தில், நரன் மற்றும் நாராயணரின் வடிவத்தில் பரமதேவன் பிறந்ததையும் கேட்டேன்.(1) (மூழ்கிப் போன பூமியை உயர்த்துவதற்காகப் பரமதேவன் ஏற்ற வடிவமான) வலிமைமிக்கப் பன்றியில் இருந்து பிண்டம் தோன்றியதையும் கேட்டேன். பிரவிருத்தி அறம் மற்றும் நிவிருத்தி அறம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களைக் குறித்தும் நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(2) ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, நீர் எங்களுக்கு வேறு கதைகளையும் சொல்லியிருக்கிறீர். பெருங்கடலின் வடகிழக்கில் தோன்றிய வடிவமும், வேள்விக் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகளை உண்பவனும், குதிரைத் தலை கொண்டவனும், பெருவடிவம் கொண்டவனுமான விஷ்ணுவைக் குறித்தும் நீர் எங்களுக்குச் சொன்னீர். பரமேஷ்டி என்ற பெயரில் அறியப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனால் அந்த வடிவம் காணப்பட்டது.(3,4)
எனினும் அந்தச் சந்தர்ப்பத்தில், அதற்கு முன்பு ஒரு போதும் தோன்றியிராத பெரும்பொருளைப் போன்றவனும், அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவனுமான அந்த ஹரியின் வடிவம், சரியாக என்ன தன்மைகளைக் கொண்டிருந்தது? என்ன சக்தியைக் கொண்டிருந்தது?(5) ஓ! தவசியே, அதற்கு முன்பு ஒருபோதும் காணப்படாதவனும், அளவிலா சக்தி கொண்டவனும், குதிரைத் தலை கொண்டவனும், புனிதத்தையே சுயமாகக் கொண்டவனுமான அந்த முதன்மையான தேவனைக் கண்டதும் பிரம்மன் என்ன செய்தான்?(6) ஓ! மறுபிறப்பாளரே, இந்தப் புராதன ஞானப்பொருளைக் குறித்த இந்த ஐயம் எங்கள் மனங்களில் எழுகிறது. ஓ! புத்திமான்களில் முதன்மையானவரே, அந்தப் பரமதேவன் என்ன காரணத்திற்காக அந்த வடிவை ஏற்றான்? பிரம்மனின் முன்பு ஏன் அவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்?(7) இந்தப் பல்வேறு புனித காரியங்களைக் குறித்து எங்களிடம் உரையாற்றி நிச்சயம் நீர் எங்களைப் புனிதமடையச் செய்திருக்கிறீர்” என்றான் {ஜனமேஜயன்}[1].(8)சௌதி சொன்னார், “வேதங்களுக்கு முற்றிலும் இணக்கமானதும், பெரும் பாம்பு வேள்வியில் பரிக்ஷித்தின் மகனுக்குச் {ஜனமேஜயனுக்குச்} சிறப்புமிக்க வைசம்பாயனரால் சொல்லப்பட்டதுமான புராதன வரலாற்றை நான் உமக்குச் சொல்லப் போகிறேன்.(9) குதிரைத் தலையுடன் கூடிய விஷ்ணுவின் வலிமைமிக்க வடிவைக் குறித்துக் கேட்ட பரிக்ஷித்தின் அரச மகனும் {ஜனமேஜயனும்} இதே ஐயத்தையே கொண்டு, இதே கேள்விகளையே வைசம்பாயனரிடம் கேட்டான்.(10)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவரே, நீர் சொன்ன நிகழ்வின் போது வடக்குப் பெருங்கடலின் கரைகளில் படைப்பாளனான பிரம்மனால் காணப்பட்டதும், குதிரைத்தலையுடன் கூடியதுமான அந்த வலிமைமிக்க வடிவத்தை ஹரியானவன் என்ன காரணத்திற்காக ஏற்றான்?” என்று கேட்டான்.(11)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, இவ்வுலகில் இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களும், மற்றும் உயர்ந்த தலைவனின் புத்தியின் மூலம் உண்டாகும் கலவையான அடிப்படையான ஐம்பூதக் கலவையின் விளைவால் உண்டானவையே.(12) முடிவிலாத் தன்மையைக் கொண்ட பலமிக்க நாராயணனே உயர்ந்த தலைவனும் {ஈஸ்வரனும்}, அண்டப்படைப்பாளனும் ஆவான். அனைத்துப் பொருட்களின் அக ஆன்மாவாகவும், வரங்களை அளிப்பவனாகவும் அவனே இருக்கிறான். குணங்கள் அற்ற அவனே அவற்றைக் கொள்ளவும் செய்கிறான்.(13) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அனைத்துப் பொருட்களுக்கும் அழிவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. முதலில் நிலம் எனும் பூதம் நீருடன் கலந்து அனைத்துப் பக்கங்களிலும் ஒரே பரப்பாக நீர் மட்டுமே காணப்படும்.(14) அதன்பிறகு நீரானது ஒளிக்குள்ளும், ஒளியானது காற்றுக்குள்ளும் கலக்கின்றன. பிறகு காற்றானது வெளிக்குள்ளும், வெளியானது மனத்துக்குள்ளும் கலக்கின்றன.(15) மனமானது புலப்படுவதற்குள் (அல்லது நனவுநிலை, அல்லது அகங்காரத்திற்குள்) கலக்கிறது. புலப்படுவது, புலப்படாததற்குள் (அல்லது பிரகிருதிக்குள்) கலக்கிறது. புலப்படாதது (பிரகிருதியானது) புருஷனுக்குள் (ஜீவாத்மாவுக்குள்) கலக்கிறது, புருஷன் பரமாத்மாவுக்குள் (அல்லது பிரம்மத்திற்குள்) கலக்கிறான்.(16) அப்போது ஏதும் உணரப்படாதவகையில் அண்டம் முழுவதும் இருள் பரவுகிறது. அந்த ஆதி இருளுக்குள் இருந்து (படைப்புக் கொள்கையுடன் கூடிய) பிரம்மம் எழுகிறது. அந்த இருள் ஆதியானதாகவும், அழிவில்லா தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.(17)
அந்த ஆதி இருளில் இருந்து எழும் பிரம்மம், (தன் சொந்த ஆற்றலின் மூலம்) அண்டமெனும் கருத்தாக வளர்ந்து புருஷனின் வடிவை ஏற்கிறது. அத்தகைய புருஷன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான். பாலினமற்ற அவன், பிராதானம் (உயர்ந்தது, தொடக்கம்) என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுகிறான்.(18) ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, அவன் முக்குணங்களின் கவலை, அல்லது புலப்படாதது என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு நிலைத்திருக்கிறான். அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கவன் விஷ்வக்ஸேனன் அல்லது ஹரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறான்.(19) யோக உறக்கத்தின் வசப்படும் அவன் நீரில் தன்னைக் கிடத்திக் கொள்கிறான். பிறகு அவன், பல்வேறு வகைத் தோற்றப்பாடுகள் மற்றும் அளவிலா குணங்கள் நிறைந்த அண்டத்தைப் படைப்பது குறித்துச் சிந்திக்கிறான்.(20)
அவன், படைப்புக் குறித்துச் சிந்திக்கும்போதே தன் உயர்ந்த குணங்களை நினைவுகூர்கிறான். இதிலிருந்து அநிருத்தனின் புத்தியைப் பிரதிபலிக்கும் நான்முகப் பிரம்மன் எழுகிறான்.(21) ஹிரண்யகர்ப்பன் என்றும் அழைக்கப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனே உலகங்கள் அனைத்தின் பாட்டனாவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன், அநிருத்தனில் (அவனது தொப்புளில்) இருந்து எழும் தாமரைக்குள் தன் பிறப்பை அடைகிறான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், நித்தியமானவனும், அற்புதக்கூறுகளைக் கொண்டவனுமான பிரம்மன் அந்தத் தாமரைக்குள அமர்ந்தபடியே அனைத்துப் பக்கங்களில் இருக்கும் நீரைக் கண்டான்.(23) பரமேஷ்டி என்றும் அழைக்கப்படும் பிரம்மன் சத்வ குணத்தைப் பின்பற்றி அண்டத்தைப் படைக்கத் தொடங்கினான். சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த ஆதி தாமரையில் நாராயணன் பெரும் தகுதி நிறைந்த இரு நீர்த்துளிகளை விட்டான். தொடக்கமும், முடிவும் இல்லாதவனும், அழிவைக் கடந்திருப்பவனுமான நாராயணன், தன் கண்களை அந்த இரு நீர்த்துளிகளில் செலுத்தினான்.(24,25)
அந்த இரு நீர்த்துகளில் மிக அழகாகவும், பிரகாசமாகவும் இருந்த ஒரு துளி தேன்துளியைப் போலத் தெரிந்தது. நாராயணனின் ஆணையின் பேரில் அந்தத் துளியில் இருந்து தமஸ்குணத்தால் அமையப்பெற்றவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு தைத்தியன் உதித்தான். அந்தத் தாமரைக்குள் இருந்த மற்றொரு நீர்த்துளி மிகக் கடினமானதாக இருந்தது. அதிலிருந்து ரஜஸ் குணத்தைக் கொண்ட தைத்தியன் கைடபன் உதித்தான்.(26) தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களைக் கொண்டவர்களும், வலிமையுடன் கூடியவர்களும், கதாயுதங்கள் தரித்தவர்களுமான அந்தத் தைத்தியர்க்ள இருவரும், தங்கள் பிறப்பை அடைந்த உடனேயே அந்தப் பரந்த ஆதி தாமரைக்குள் திரியத் தொடங்கினர்.(27) மிக இனிய வடிவைக் கொண்ட நான்கு வேதங்களையும் படைப்பதில் ஈடுபட்டுவரும் அளவிலா பிரகாசம் கொண்ட பிரம்மன் அதற்குள் {அந்தத் தாமரைக்குள்} இருப்பதை அவர்கள் கண்டனர்.(28) உடல்படைந்த அந்த முதன்மையான அசுரர்கள் இருவரும், நான்கு வேதங்களையும் கண்டு, அதைப் படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவற்றை அவனிடம் இருந்து பறித்தனர்.(29) நித்தியமான வேதங்களைப் பறித்த அந்த வலிமைமிக்கத் தானவர்கள் இருவரும், தாங்கள் கண்ட பெருங்கடலின் நீருக்குள் பாய்ந்து அதனடியை நோக்கிச் சென்றனர்.(30) தன்னிடம் இருந்த வேதங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டதைக் கண்ட பிரம்மன் துயரத்தால் நிறைந்தான். இவ்வழியில் வேதங்களைக் களவு கொடுத்த பிரம்மன், இவ்வார்த்தைகளில் உயர்ந்த தலைவனிடம் {ஈஸ்வரனிடம்} பேசினான்.(31)
பிரம்மன், “வேதங்களே என் பெருங்கண்களாகும். வேதங்களே என் பெரும்பலமும் ஆகும். வேதங்களே என் பெரும்புகலிடமாகும். வேதங்களே என் உயர்ந்த பிரம்மம் ஆகும்.(32) இருப்பினும் என்னிடமிருந்த அந்த வேதங்களை அவ்விரு தானவர்களும் பலவந்தமாக அபகரித்துச் சென்றனர். நான் படைத்த உலகங்கள் வேதங்களை இழந்து இருளில் மூழ்குகின்றன.(33) (என்னிடம்) வேதங்கள் இல்லாமல், என் சிறந்த படைப்பை இருப்புக்குக் கொண்டுவர எவ்வாறு என்னால் இயலும்? ஐயோ, (இத்தகைய செயல்பாட்டின் மூலம்) வேதங்களை இழந்ததன் விளைவால் நான் அடையும் துயரம் பெரியதாகும்.(34) என் இதயம் மிகவும் துன்புறுகிறது. அது பெருஞ்சோகத்தின் வசிப்பிடமாகிவிட்டது. என் இழப்பினால் நான் மூழ்கியிருக்கும் இந்தத் துன்பப் பெருங்கடலில் இருந்து என்னை மீட்கப் போவது யார்? நான் தொலைத்த வேதங்களைக் கொண்டுவரப் போவது யார்? என்னிடம் கருணை கொள்ள யார் இருக்கிறார்?” என்றான்.(35)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவனே, பிரம்மன் இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, திடீரென ஹரியை இவ்வார்த்தைகளில் துதிக்கும் எண்ணம் அவனுக்கு எழுந்தது. அப்போது பலமிக்கப் பிரம்மன், மதிப்புடன் தன் கரங்களைக் குவித்த படி, தன் மூதாதையின் பாதத்தைப் பற்றியபடியும், நாராயணனைக் கௌரவிக்கும் இந்த உயர்ந்த துதிகளைப் பாடினான்.(36)
பிரம்மன், “ஓ! பிரம்மனின் இதயமே, உன்னை நான் வணங்குகிறேன். எனக்கு முன்பே பிறந்திருந்த {எனக்கு முன்னிருப்பவனே} உன்னை நான் வணங்குகிறேன். அண்டத்தின் தோற்றுவாய் நீயே. அனைத்திலும் முதன்மையான வசிப்பிடம் நீயே. ஓ! பலமிக்கவனே, அனைத்துக் கிளைகளுடன் கூடிய யோகப் பெருங்கடல் நீயே.(37) புலப்படுவது {ஸ்தூலம்} மற்றும் புலப்படாதது {ஸூக்ஷ்மம்} ஆகிய இரண்டையும் படைத்தவன் நீயே. உணரப்படமுடியாத பரப்பைக் கொண்ட மங்கலப் பாதையில் நடப்பவன் நீயே. அண்டத்தை உண்பவன் நீயே. உயிரினங்கள் அனைத்தின் உள்ளான்மா {அந்தராத்மா} நீயே. எந்தத் தோற்றுவாயும் இல்லாதவன் நீயே.(38) அண்டத்தின் புகலிடம் நீயே. தோற்றுவாயேதும் அற்றவனாக இருப்பதால் சுயம்புவாக இருப்பவன் நீயே. என்னைப் பொறுத்தவரையில் நான் உன் உற்சாகநிலையில் இருந்து உதித்தேன். உன்னில் இருந்தே நான் பிறப்பை அடைந்தேன். மறுபிறப்பாளர்கள் அனைவராலும் புனிதமானதாகக் கருதப்படும் {மானஸம் என்றழைக்கப்படும்} என் முதல் பிறவி உன் விருப்பத்தின் மூலம் அடைந்தேன். பழங்காலத்தில் {சாக்ஷுஷம் என்கிற} என் இரண்டாம் பிறவி உன் கண்களில் இருந்து உண்டானது.(39,40)
உன் அருளால் {வாசிகம் என்கிற} என் மூன்றாம் பிறப்பு உன் வாக்கில் இருந்து உண்டானது. ஓ! பலமிக்கத் தலைவா, {ஸ்ரோத்ரஜம்} என் நான்காம் பிறப்பு உன் காதுகளில் இருந்து உண்டானது.(41) ஓ! தலைவா, {நாஸத்யம் என்கிற} என் ஐந்தாம் பிறப்பு அனைத்து வகையிலும் சிறப்பான உன் மூக்கில் இருந்து உண்டானது. {அண்டஜம் என்கிற} என்னுடைய ஆறாம் பிறப்பு உன் மூலம் ஒரு முட்டையில் உண்டானது.(42) இது {பத்மஜென்மம் என்கிற} என் ஏழாம் பிறவியாகும். ஓ! தலைவா, இஃது இந்தத் தாமரைக்குள் நேர்ந்திருக்கிறது. ஓ! முக்குணமுமற்றவனே, ஒவ்வொரு படைப்பிலும் நான் உன் மகனாகவே பிறக்கிறேன்.(43) ஓ! தாமரை இதழ் கண்ணனே, உண்மையில் முக்குணங்களிலும் முதன்மையான சத்வ குணத்தால் அமைந்த உன் மூத்த மகனாக நான் பிறக்கிறேன். பரம {உயர்ந்த} இயல்பைக் கொண்டவன் நீ. உன்னிலிருந்தே உதிப்பவன் நீ.(44) உன்னால் படைக்கப்பட்டவன் நான். வேதங்களே என் கண்கள். எனவே நான் காலங்கடந்தவனாக இருக்கிறேன். இந்த யோக உறக்கத்தில் இருந்து எழுவாயாக. என் கண்களை மீண்டும் எனக்குத் தருவாயாக. நான் உனக்கு அன்பானவன், நீ எனக்கு அன்பானவன்” என்று துதித்தான் {பிரம்மன்}.(45)
பிரம்மனால் இவ்வாறு துதிக்கப்பட்டவனும், அனைத்துப் பக்கத்திலும் முகம் கொண்டவனுமான சிறப்புமிக்கப் புருஷன், தன் உறக்கத்தை உதறி, வேதங்களை (அவற்றைப் பலவந்தமாக அபகரித்துச் சென்ற தைத்தியர்களிடம் இருந்து) மீட்கத் தீர்மானித்தான். அவன், தனது யோகபலத்தைப் பயன்படுத்தி இரண்டாம் வடிவம் ஒன்றை ஏற்றான்.(46) சிறந்த மூக்கைக் கொண்ட அவனது உடல் சந்திரனைப் போலப் பிரகாசமடைந்தது. அவன் வேதங்களின் வசிப்பிடமான பெரும்பிரகாசமுடைய குதிரைத் தலை கொண்ட வடிவை ஏற்றான்.(47) ஒளிக்கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களுடன் கூடிய ஆகாயமே அவனது தலையின் மகுடமானது. நீண்டு பாயும் அவனது தலை முடிகள் சூரியக் கதிர்களின் காந்தியுடன் இருந்தன.(48) மேலுலகமும், கீழுலகமும் அவனது இரு காதுகளாகின. பூமியே அவனது நெற்றியானது. கங்கை மற்றும் சரஸ்வதி ஆகிய ஆறுகள் இரண்டும் அவனது இடைகளாகின. பெருங்கடல்கள் இரண்டும் அவனது இரு புருவங்களாகின.(49) சூரியனும், சந்திரனும் அவனது இரு கண்களாகினர். சந்தியொளி அவனது மூக்கானது. ஓம் என்ற அசை அவனது நினைவும், புத்தியுமானது. மின்னல் அவனது நாவானது.(50)
இரண்டு இன்பலோகங்களான கோலோகமும், பிரம்மலோகமும் அவனது மேலுதடும், கீழுதடுமாகின. அண்ட அழிவை ஏற்படுத்துவதும், முக்குணங்களையும் கடந்திருப்பதுமான பயங்கரமான இரவு {காளராத்ரியானது} அவனது கழுத்தானது.(51) பல்வேறு பொருட்களைப் பல்வேறு அங்கங்களாகவும், குதிரைத் தலையையும் கொண்ட அந்த {ஹயக்ரீவ} வடிவை ஏற்றபிறகு, அந்த அண்டத்தின் தலைவன் அங்கேயே அப்போதே மறைந்து பாதாள லோகத்திற்குச் சென்றான்.(52) அந்த உலகத்தை அடைந்ததும் அவன் தன்னை உயர்ந்த யோகத்தில் நிறுவிக் கொண்டான். சிக்ஷை என்றழைக்கப்படும் அறிவியல் விதிகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட குரலைப் பின்பற்றி வேத மந்திரங்களை அவன் உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.(53) தனித்தன்மை வாய்ந்த அவனது உச்சரிப்பு அனைத்து வகையிலும் இனிமையாகக் காற்றின் ஊடாக எதிரொலித்தது. அவனது குரல் பாதாளலோகத்தின் எல்லை முதல் மறுயெல்லை வரை நிறைந்திருந்தது. அனைத்து பூதங்களின் தன்மைகளையும் கொண்ட அது பெரும் நன்மைகளை உண்டாக்கவல்லதாக இருந்தது.(54) அப்போது அந்த அசுரர்கள் இருவரும், மீண்டும் வந்து எடுத்துக் கொள்ளும் வகையில் காலத்தால் வேதங்களிடம் ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டு {ஸங்கேதத்தால் [இரகசிய மொழியால்] வேதங்களைக் கட்டி}, அவ்வொலி வருவதாகத் தென்பட்ட இடத்தை நோக்கி ஓடினர்.(55)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே வேளையில் பாதாள லோகத்தில் இருந்தவனும், குதிரைத் தலையுடன் கூடியவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான அந்த உயர்ந்த தலைவன் {ஹயக்ரீவன்}, வேதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.(56) அவன், பிரம்மன் இருந்து இடத்தில் மீண்டும் வந்து வேதங்களை அவனிடம் கொடுத்தான். வேதங்களை மீட்டுப் பிரம்மனிடம் கொடுத்த அந்த உயர்ந்த தலைவன் மீண்டும் தன் சொந்த இயல்பை அடைந்தான்.(57) மேலும் அந்த உயர்ந்த தலைவன், குதிரைத் தலையுடன் கூடிய தன் வடிவை {ஹயக்ரீவனைப்} பெருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் நிறுவினான். (இவ்வழியில்) வேதங்களின் வசிப்பிடமான அவனை நிறுவியபிறகு, மீண்டும் குதிரைத் தலைக் கொண்ட வடிவை ஏற்றான்[2].(58) மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்களும், ஒலியை வெளியிடும் எவரையும் காணாது மீண்டும் அதே இடத்திற்கு விரைவாகத் திரும்பி வந்தனர். அவர்கள் தங்கள் கண்களைச் சுற்றிலும்சுழல விட்டும், வேதங்களை அவர்கள் வீசிய அந்த இடம் வெறுமையாக இருப்பதைக் கண்டனர்.(59) வலிமையானவர்களில் முதன்மையான அவர்கள் இருவரும் பெரும் வேகத்துடன் பாதாள லோகத்தில் இருந்து எழுந்தார்கள்.(60)தாங்கள் பிறப்படைந்த ஆதி தாமரைக்குத் திரும்பி வந்த அவர்கள், பலமிக்கவனும், வெண்ணிறத்தையும், சந்திரனுக்கு ஒப்பான காந்தியையும் கொண்டவனும், அநிருத்தனின் வடிவில் இருந்தவனுமான அந்த உண்மையான படைப்பாளனைக் கண்டார்கள்.(61) அளவிலா ஆற்றலைக் கொண்டவனான அவன் யோக உறக்கத்தின் ஆதிக்கத்தில் தன் உடலைப் பரந்த நீர்ப்பரப்பை ஆக்கிரமிக்கும் வகையில் கிடத்தியிருந்தான்.(62) பெரும் பிரகாசத்தைக் கொண்டதும், சத்வமெனும் களங்கமிலா குணத்துடன் கூடியதுமான அந்தப் பரம தேவனின் உடலானது, நெருப்பைக் கக்குவதாகத் தெரிந்த ஒரு பாம்பின் சிறந்த தலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது[3].(63)அந்தத் தலைவன் இவ்வாறு கிடப்பதைக் கண்ட அந்த முதன்மையான தானவர்கள் இருவரும், உரக்கச் சிரித்து முழங்கினார்கள். ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுடன் கூடிய அவர்கள்,(64) “இவனே வெண்ணிறமுடைய அவன். இப்போது உறக்கத்தில் கிடக்கிறான். இவனே பாதாளலோகத்தில் இருந்து வேதங்களைக் கொண்டு வந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(65) இவன் யாருடையவன்? யார் இவன்? பாம்பின் தலையில் ஏன் இவ்வாறு உறங்குகிறான்?” என்றனர். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தானவர்கள் இருவரும் யோகத்துயிலில் இருந்த ஹரியை விழிப்படைச் செய்தனர்.(66)இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவன் (நாராயணன்) இவ்வாறு விழிப்படையச் செய்யப்பட்டதும், அந்தத் தானவர்கள் இருவரும் தன்னோடு போரிடும் நோக்கம் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். தன்னோடு போரிட ஆயத்தமாக இருக்கும் அந்த முதன்மையான அசுரர்கள் இருவரையும் கண்ட அவனும் அவர்களது அசையை நிறைவு செய்வதில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(67) அதன் பேரில் ஒரு புறம் அவர்கள் இருவரும் மறுபுறம் நாராயணன் என அவர்களுக்கிடையில் போர் நடைபெற்றது. அசுரர்களான மதுவும், கைடபனும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களின் உடல்வடிவங்களாக இருந்தனர். பிரம்மனை நிறைவு செய்வதற்காக நாராயணன் அவ்விருவரையும் கொன்றான். அது முதல் அவன் மதுசூதனன் (மதுவைக் கொன்றவன்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.(68) அந்தப் பரம்பொருளானாவன், அவ்விரு அசுரர்களுக்கும் அழிவை ஏற்படுத்தி, பிரம்மனிடம் வேதங்களை மீட்டுத் தந்து, பிரம்மனின் துயரை விலக்கினான்.(69) பிறகு பிரம்மன், ஹரியின் துணையுடனும், வேதங்களின் உதவியுடனும் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தையும் படைத்தான்.(70) இதன்பிறகு, படைப்பு தொடர்புடைய முதன்மையான வகையிலான புத்தியைப் பெரும்பாட்டனுக்கு அருளிய ஹரி, தான் எங்கிருந்து வந்தானோ அந்த இடத்திற்குச் செல்வதற்காக அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(71) இவ்வாறே, குதிரை தலை கொண்ட வடிவை ஏற்ற நாராயணன் {ஹயக்ரீவன்}, மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்களையும் கொன்றான் (கொன்ற பிறகு, பிரம்மனின் பார்வையில் இருந்து மறைந்தும் போனான்). எனினும், அண்டத்தில் பிரவிருத்தி அறத்தை உண்டாக்கும் நிமித்தமாக மீண்டும் அவன் அவ்வடிவை {ஹயக்ரீவ வடிவத்தை} ஏற்றான்.(72)இவ்வாறே அருள் நிறைந்த ஹரியானவன் பழங்காலத்தில் குதிரை தலை கொண்ட அந்த மகத்தான வடிவத்தை ஏற்றான். அவனது அனைத்து வடிவங்களிலும், பலத்துடன் கூடிய இந்த வடிவமே மிகப் பழமையானதாகக் கொண்டாடப்படுகிறது.(73) நாராயணன் குதிரைத் தலை தரித்த இந்த வரலாற்றை அடிக்கடி கேட்பவன், அல்லது மனத்தால் பாராயணம் செய்பவன் ஒருபோதும் வேதங்களையோ, பிற சாத்திரங்களையோ மறக்கமாட்டான். குதிரை தலை கொண்ட சிறப்புமிக்கத் தேவனைக் கடுந்தவங்களுடன் துதித்த முனிவர் பாஞ்சாலர் (காலவர் என்று வேறு பெயரால் அழைக்கப்படுபவர்) தேவனால் (ருத்திரனால்) சுட்டிக்காட்டப்பட்ட பாதையில் சென்று கிரம அறிவியலை அடைந்தார்[4].(75) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேதங்களுக்கு இசைவானதும், நீ என்னிடம் கேட்டதுமான ஹயசிரஸின் பழங்கதையை நான் உனக்குச் சொன்னேன்.(76) அண்டத்தின் காரியங்களைச் சீரமைக்க அந்தப் பரம தேவன் என்னென்ன வடிவங்களை ஏற்பானோ, அவற்றை அவன் தன் உள்ளார்ந்த சக்திகளைப் பயன்படுத்தி உடனே ஏற்கிறான்.(77) அனைத்து செழிப்பையும் கொண்ட அந்தப் பரமதேவனே வேதங்களின் கொள்ளிடமாவான். அவனே தவங்களின் கொள்ளிடமும் ஆவான். பலமிக்க அந்த ஹரியே யோகமுமாவான். சாங்கிய தத்துவத்தின் உடல்வடிவமாகவும் அவனே இருக்கிறான். அவனே நாம் கேள்விப்படும் முதன்மையான பிரம்மமுமாக இருக்கிறான்.(78)வாய்மை நாராயணனையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ரிதம் {கர்ம பயன் / செயற்கனி} நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. திரும்பி வராத நிவிருத்தி அறமும் நாராயணனையே தன் உயர்ந்த வசிப்பிடமாகக் கொண்டுள்ளது.(79) பிரவிருத்தியின் அடிப்படையிலான மற்றொரு அறமும் இணையாக நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. பூமி என்ற பூதத்திற்குரிய குணங்கள் அனைத்திலும் முதன்மையானது மணமாகும். அந்த மணமும் தன் ஆன்மாவாக நாராயணனையே கொண்டுள்ளது.(80) ஓ! மன்னா {ஜனமேஜயா}, நீரின் குணங்கள் (பல்வேறு வகையான) சுவைகள் என்றழைக்கப்படுகின்றன. இந்தச் சுவைகளும் நாராயணனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. ஒளியின் முதன்மைக் குணம் வடிவமாகும். வடிவமும் நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(81) காற்றின் குணமான தீண்டலும் நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. காற்றின் {ஆகாயத்தின் என்றிருக்க வேண்டும்} குணமான ஒலியும் பிறவற்றைப் போன்றே நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(82) புலப்படாததன் (பிருகிருதியின்) குணமான மனமும், நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. தெய்வீக ஒளிக்கோள்களின் நகர்வுகளால் கணக்கிடப்படும் காலமும் அதே போல நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(83)
புகழ், அழகு மற்றும் செழிப்பின் தலைமைத் தேவர்களும் அதே உயர்ந்த தேவனையே தங்கள் ஆன்மாக்களாகக் கொண்டுள்ளனர். சாங்கியம் மற்றும் யோக தத்துவங்கள் இரண்டும் நாராயணனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(84) பரம்பொருளே இவை அனைத்தின் காரணமான புருஷனாக இருக்கிறான். மேலும் அவன் அனைத்தின் காரணமான பிரதானனாகவும் (அல்லது பிரகிருதியாகவும்) இருக்கிறான்.(85) அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் அடித்தளம் அவனே. செயல்படுபவன் அவனே, அண்டத்தில் காணப்படும் பலவகைகளின் காரணம் அவனே. அண்டத்தில் செயல்படும் பல்வேறு வகைச் சக்திகள் அவனே. ஐந்தாவதாக, மக்களால் பேசப்படும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் புலப்படாத ஆதிக்கம் அவனே.(86) பரந்த பயன்பாட்டில் உள்ள இத்தகைய காரணங்களின் துணையுடன் பல்வேறு காரியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபடுவோர் மேலே சொல்லப்படும் ஐந்து காரணங்களுடனும், அனைத்துப் பொருட்களின் இறுதிப் புகலிடத்துடனும் ஹரியையே அடையாளம் காண்கின்றனர்.(87) உண்மையில், உயர்ந்த யோகபலத்துடன் கூடிய நாராயணனே ஒரே தத்துவமாக இருக்கிறான். ஆன்மாவை அறிந்தவர்களான பிரம்மன், உயர் ஆன்ம முனிவர்கள், சாங்கியர்கள், யோகியர், யதிகள் உள்ளிட்ட உலகவாசிகள் அனைவரின் பொதுவான எண்ணங்களும் கேசவனால் முழுமையாக அறியப்படுகின்றன, ஆனால் இவர்கள் எவராலும் அவனது எண்ணங்கள் ஒருபோதும் அறியமுடியாது.(88,89)
தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் எந்தச் செயலும், கொடுக்கப்படும் எந்தக் கொடையும், செய்யப்படும் எந்தத் தவமும்,(90) தனது உயர்ந்த விதிகளில் நிறுவப்பட்டிருக்கும் அந்த விஷ்ணுவையே புகலிடமாகக் கொண்டிருக்கின்றன. உயிரினங்கள் அனைத்தின் வசிப்பிடமாக இருப்பதாலேயே அவன் வாசுதேவன் என்ற பெயர் சூட்டப்பட்டான்.(91) அவன் மாற்றமில்லாதவன். அவன் பரமன் {உயர்ந்தவன்}. அவன் முனிவர்களில் முதன்மையானவன். அவன் உயர்ந்த பலத்தைக் கொண்டவன். அவன் முக்குணங்களையும் கடந்தவன் எனச் சொல்லப்படுகிறான். (அந்த அறிகுறியுமின்றி வேகமாக ஓடும்) காலமானது, அடுத்தடுத்த பருவகாலங்களின் வடிவில் வெளிப்படும்போது இவ்வாறே குறியீடுகளை ஏற்கிறது. அவன் குணங்களற்றவனாக இருந்தாலும், (தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக) குணங்களை ஏற்கிறான்.(92) உயர் ஆன்மாவைக் கொண்டவர்கள் கூட அவனது இயக்கங்களை {செயல்பாடுகளைப்} புரிந்து கொள்வதில் வெல்வதில்லை. ஞானத்தையே தங்கள் ஆன்மாக்களாகக் கொண்ட முதன்மையான முனிவர்கள் மட்டுமே குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்தப் புருஷனைத் தங்கள் இதயங்களில் காண்பதில் வெல்கிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(93)
பக்தி அறம் – ஏகாந்தம்! – சாந்திபர்வம் பகுதி – 349-பக்தி அறத்தை முதலில் தொடங்கியவர்; தொடக்க காலத்தில் இருந்து வழிவழியாக வந்த அறத்தின் வரலாறு; பக்திஅறத்தை ஏன் அனைத்து மனிதர்களும் பின்பற்றுவதில்லை; இந்த ஏகாந்த அறத்தின் மூலம் பிரம்மத்தை அடையும் வகையை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “சிறப்புமிக்கவனாக ஹரி, தன்னிடம் முழு ஆன்மாக்களோடு தங்களை அர்ப்பணிப்போரிடம் அருள் நிறைந்தவனாகிறான். விதிக்கு ஏற்புடைய வகையில் அவனுக்கு அளிக்கப்படும் வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஏற்கிறான்.(1) தங்கள் விறகை எரித்தவர்களும், தகுதி மற்றும் தகுதியின்மை {புண்ணியப் பாவங்கள்} ஆகிய இரண்டும் இல்லாதவர்களுமான மனிதர்கள் ஆசானிலிருந்து ஆசான் மூலமாக வழிவழியாக அடையும் ஞானத்தையும், இறுதியில் அவர்கள் அடையும் வெற்றியைக் குறித்தும் சொன்னீர்[1].(2) அத்தகைய மனிதர்கள், வேறு மூன்றின் மூலமாக நான்காவதான புருஷர்களில் முதன்மையான சாரத்தை, அல்லது வாசுதேவனையே எப்போதும் அடைகிறார்கள்[2]. எனினும், தங்கள் முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் {ஏகாந்திகள்} உடனே உயர்ந்த கதியை {பரமபதத்தை} அடைகிறார்கள்[3].(3) பக்தி அறமே (ஞானத்தை விட) மேன்மையானதாகவும், நாராயணனின் விருப்பத்திற்குரியதாகவும் தெரிகிறது என்பதில் ஐயமில்லை. இவர்கள் (அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற) அடுத்தடுத்த மூன்று நிலைகளைக் கடக்காமல் மாற்றமில்லாத ஹரியை உடனே அடைகிறார்கள்.(4) முறையான நோன்புகள், ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளின்படியான உபநிஷத்துகளுடன் கூடிய வேத கல்வி ஆகியவற்றால் பிராமணர்களாலும், யதிகளின் அறத்தைப் பின்பற்றுவோராலும் அடையப்படும் கதியானது,(5) முழு ஆன்மாக்களுடன் ஹரியிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்களால் அடையப்படும் கதியைவிடக் குறைந்ததாக நான் நினைக்கிறேன். பக்தி அறத்தை முதலில் தொடங்கியது யார்? அஃதை அறிவித்தது தேவனா? முனிவரா?(6) முழு ஆன்மாக்களோடு அர்ப்பணிப்பில் ஈடுபடுபவர்களால் பயிலப்படும் நடைமுறைகள் என்னென்ன? அந்த நடைமுறைகள் எப்போது தொடங்கின? இவற்றில் எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. இவ்வையங்களை நீர் விலக்குவீராக. நீர் விளக்கப் போகும் பல்வேறு கூறுகளைக் கேட்க நான் பேராவலுடன் இருக்கிறேன்” என்றான் {ஜனமேஜயன்}.(7)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்கள் மற்றும் குரு படைகளின் பல்வேறு பிரிவுகள் போருக்காக அணிவகுத்தபோதும், அர்ஜுனன் உற்சாகமிழந்த போதும், அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களால் அடையப்படும் கதி எது, அடையப்படாத கதி எது என்ற கேள்வியை விளக்கினான். இதற்கு முன்பு நான் அந்தப் புனிதமானவனின் வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறேன். அச்சந்தர்ப்பத்தில் அந்தப் புனிதமானவனால் போதிக்கப்பட்ட அறம் புரிந்த கொள்ளக் கடினமானதாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது.(8,9) ஓ! மன்னா, பழங்காலமான கிருதயுகத்தில் சாமங்களுக்கு {சாம வேதத்திற்கு} முற்றிலும் ஏற்புடைய வகையில் படைக்கப்பட்ட இந்த அறம், உயர்ந்த தலைவனான {ஈஸ்வரனான} நாராயணனாலேயே தாங்கப்படுகிறது.(10) உயர்ந்த அருளைக் கொண்டவனான பார்த்தன் {யுதிஷ்டிரன்}, முனிவர்களுக்கு மத்தியிலும், கிருஷணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையிலும் நாரதரிடம் (அவரது சொற்பொழிவுக்காக) இதையே கேட்டான்.(11) தீவில் பிறந்த கிருஷ்ணரான என் ஆசான் {வியாசர்} நாரதர் சொன்னதைக் கேட்டார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீக முனிவரிடம் இருந்து அடைந்து, அந்தத் தெய்வீக முனிவரிடம் இருந்து பெற்ற அதே வகையிலேயே எனக்கு அதைச் சொன்னார். ஓ! ஏகாதிபதி, நாரதரிடம் இருந்து அடையப்பட்ட அதே வழியிலேயே இப்போது நான் அஃதை உனக்குச் சொல்லப் போகிறேன். எனவே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(12)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதா, படைப்பாளனான பிரம்மன் நாராயணனின் மனத்தில் பிறந்து அவனது வாய்வழியே வெளிப்பட்ட கல்பத்தில், இந்த அறத்திற்கு ஏற்புடைய வகையில் தனது தைவ மற்றும் பைத்ர சடங்குகளை நாராயணனே செய்தான். நீரின் நுரையை உண்டு வாழும் முனிவர்கள் {பேனபர்கள்} அதை நாராயணனிடம் இருந்து அடைநனர்.(13,14) நுரையுண்ணும் முனிவர்களிடம் {பேனபர்களிடம்} இருந்து இந்த அறமானது, வைகானஸர்கள் என்ற பெயரைக் கொண்ட முனிவர்களால் அடையப்பட்டது. வைகானஸர்களிடம் இருந்து அதைச் சோமன் அடைந்தான். அதன்பிறகு அஃது அண்டத்தில் இருந்து மறைந்து போனது.(15)
ஓ! மன்னா, நாராயணனின் கண்களில் இருந்து உதித்த பிரம்மனின் {சாக்ஷுஷம் என்கிற} இரண்டாம் பிறப்புக்குப் பிறகு, பெரும்பாட்டன் (பிரம்மன்) மீண்டும் சோமனிடமிருந்து இவ்வறத்தைப் பெற்றான்.(16) இவ்வாறு நாராயணனின் ஆன்மாவாக இருக்கும் அவ்வறத்தைப் பெற்ற பிரம்மன், அதை ருத்திரனுக்குக் கொடுத்தான். ஓ! ஏகாதிபதி, அந்தப் புராதனக் கல்பத்தின் கிருத யுகத்தில் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ருத்திரன்,(17) வாலகில்யர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர்கள் அனைவருக்கும் அதைச் சொன்னான். பிறகு நாராயணனின் மாயை மூலமாக அது மீண்டும் அண்டத்தில் இருந்து மறைந்து போனது.(18)
ஓ! மன்னா, நாராயணனின் வாக்கில் உண்டான பிரம்மனின் {வாசிகம் என்ற} மூன்றாம் பிறப்பில், இவ்வறமானது மீண்டும் நாராயணனிடமிருந்து உண்டானது.(19) பிறகு, சுபர்ணர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் அஃதை அந்த முதன்மையானவனிடம் இருந்தே அடைந்தார்.(20) முனிவர் சுபர்ணர் முதன்மையான வழிபாட்டு மரபான இந்தச் சிறப்பான அறத்தை {தினமும்} பகல் வேளையில் மூன்று முறை சொல்லிக் கொண்டிருந்தார். இதன் விளைவால் அது திரிசௌபர்ணம் என்ற பெயரால் உலகத்தில் அழைக்கப்பட்டது.(21) இவ்வறம் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்படும் கடமைகள் அவதானிக்க மிகக் கடினமானவையாக இருக்கின்றன. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவ்வறமானது அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் தக்க வைக்கும் காற்றின் தேவனால் {வாயுவால்} முனிவர் சுபர்ணரிடமிருந்து அடையப்பட்டது. காற்றின் தேவன், விருந்தினர்களும் பிறரும் உண்ட பிறகு எஞ்சும் வேள்விக் காணிக்கைகளில் வாழும் முனிவர்களுக்கு அதைச் சொன்னான்.(22,23) இந்தச் சிறந்த அறமானது அந்த முனிவர்களிடம் இருந்து பெருங்கடலால் அடையப்பட்டது. பிறகு அது மீண்டும் அண்டத்தில் இருந்து மறைந்து நாராயணனில் கலந்தது.(24)
ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம பிரம்மன், நாராயணனின் காதிலிருந்து பிறந்த {ஸ்ரோத்ரஜம் என்ற} அடுத்த {நான்காவது} பிறப்பைக் கொண்ட கல்பத்தில் என்ன நடந்தது என்பதைக் கேட்பாயாக.(25) ஹரி என்றழைக்கப்படும் சிறப்புமிக்க நாராயணன், படைப்பைச் செய்யத் தீர்மானித்தபோது, அண்டத்தைப் படைக்கக்கூடிய பலமிக்க ஒருவனைக் குறித்துச் சிந்தித்தான்.(26) அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய காதுகளில் இருந்து அண்டத்தைப் படைக்கத்தகுந்த ஒருவன் எழுந்தான். அனைவரின் தலைவன் {நாராயணன்}, அவனைப் பிரம்மன் என்ற பெயரில் அழைத்தான்.(27)
உயர்ந்தவனான {பரமனான} நாராயணன் பிரம்மனிடம், “ஓ! மகனே, என் வாயிலிருந்தும், பாதத்திலிருந்தும் அனைத்து வகை உயிரினங்களையும் படைப்பாயாக. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, இந்தப் பணியை நீ செய்வதற்குப் போதிய சக்தியையும் பலத்தையும் நான் தருவேன் என்பதால் உனக்கு நன்மையானதையே செய்யப் போகிறேன்.(28) சாத்வதம் என்ற பெயரில் அறியப்படும் இந்தச் சிறந்த அறத்தையும் என்னிடம் இருந்து நீ பெறுவாயாக. இவ்வறத்தின் துணை கொண்டு நீ கிருத யுகத்தைப் படைத்து, முறையாக அதை விதிப்பாயாக” என்றான்.(29)
இவ்வாறு சொல்லப்பட்ட பிரம்மன், அந்தச் சிறப்புமிக்க ஹரிமேதஸுக்குத் தலைவணங்கி, நாராயணனின் வாயில் இருந்து பிறந்ததும், புதிர்கள், விளக்கங்களின் சுருக்கங்கள்(30) மற்றும் ஆரண்யகங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் முதன்மையானதுமான அந்த வழிபாட்டு மரபை அவனிடம் இருந்து பெற்றான். அந்த வழிபாட்டு மரபை அளவிலா சக்தி கொண்ட பிரம்மனுக்குக் கற்பித்த நாராயணன், அவனிடம்(31) “ஒவ்வொரு யுகத்திலும் பின்பற்றப்பட வேண்டிய கடமைகளைப் படைப்பவன்” என்றான். பிரம்மனிடம் இதைச் சொன்ன நாராயணன், அங்கேயே மறைந்து, தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்ததும், புலப்படாதது வசித்திருப்பதும், கனியில் விருப்பமில்லா செயல்களின் பெயரில் அறியப்படுவதுமான இடத்திற்குச் சென்றான்.(33) இதன் பிறகு, வரங்களை அளிப்பவனும், உலகங்களின் பெரும்பாட்டனுமான பிரம்மன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட பல்வேறு உலகங்களைப் படைத்தான்.(33) முதலில் தொடங்கிய யுகம் உயர்ந்த மங்கலமுடையதாக இருந்து கிருதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அந்த யுகத்தில் சாத்வத அறம் அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து நீடித்திருந்தது.(34) அனைத்து உலகங்களையும் படைத்தவனான பிரம்மன், அந்த ஆதி அறநீதியின் துணையுடன் தேவர்கள் அனைவரின் தலைவனும், ஹரி என்றழைக்கப்படுபவனுமான பலமிக்க நாராயணனை வழிபட்டான்.(35)
அப்போது அவ்வறம் பரவுவதற்கும், உலகங்களுக்கு நன்மை செய்யவும் விரும்பிய பிரம்மன், ஸ்வாரோசிஷ் என்ற பெயரால் அறியப்பட்ட மனுவுக்கு அந்த வழிபாட்டு மரபைக் கற்பித்தான்.(36) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உலகங்கள் அனைத்தின் தலைவனும், பலமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ஸ்வாரோசிஷ் மனு, சங்கபதன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தன் மகனுக்கு அந்த வழிபாட்டு மரபின் ஞானத்தை உற்சாகமாக அளித்தான்.(37) மனுவின் மகனான சங்கபதன், முக்கிய மற்றும் துணைத்திசைகளை ஆட்சி செய்யும் {திக்பாலனான} தன் மகன் சுவர்நபானுக்கு {ஸுதர்மாவுக்கு} அந்த வழிபாட்டு மரபின் ஞானத்தை அளித்தான். கிருத யுகம் முடிந்து திரேதா யுகம் தொடங்கியதும், மீண்டும் அந்த வழிபாட்டு மரபு உலகில் இருந்து மறைந்துபோனது.(38)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, நாராயணனின் மூக்கில் இருந்து பிறந்த பிரம்மனின் {நாஸத்யம் என்ற} அடுத்தப் பிறப்பில், ஓ! பாரதா, சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான நாராயணன், அல்லது தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஹரியே பிரம்மனின் முன்னிலையில் இவ்வறத்தைக் குறித்துப் பாடினான். பிறகு பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவனது மகன் சனத்குமாரர் இந்த வழிபாட்டு மரபைக் கற்றார்.(39,40) ஓ! குருக்களில் புலியே, கிருத யுகத்தின் தொடக்கத்தில் பிரஜாபதியான வீரணன் சனத்குமாரரிடம் இருந்து இந்த வழிபாட்டு மரபை அடைந்தான்.(41) இவ்வழியில் அதைக் கற்ற வீரணன் அதைத் தவசி ரைப்யருக்குக் கற்பித்தான். பதிலுக்கு ரைப்யர் தூய ஆன்மாவையும், நல்ல நோன்புகளையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனும், முக்கிய மற்றும் துணைத் திசைகளை அறம்சார்ந்து ஆளும் திக்பாலனுமான தன் மகன் குக்ஷிக்கு {குக்ஷிபாலனுக்கு} அதைச் சொன்னார். இதன்பிறகு நாராயணனின் வாயில் இருந்து பிறந்த அந்த வழிபாட்டு மரபானது மீண்டும் உலகத்தில் இருந்து மறைந்து போனது.(42,43)
ஹரியில் இருந்து உதித்த ஒரு முட்டையில் இருந்து பிரம்மன் அடைந்த {அண்டஜம் என்ற} அடுத்தப் பிறப்பில், மீண்டும் இவ்வறம் நாராயணனின் வாயில் இருந்தே வெளிப்பட்டது.(44) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதைப் பெற்றுக் கொண்ட பிரம்மன், அதை முறையாக முழுமையாகப் பின்பற்றினான். ஓ! ஏகாதிபதி, பிறகு பிரம்மன், பர்ஹிஷதர்கள் என்ற பெயரால் அறியப்பட்ட முனிவர்களுக்கு அதைச் சொன்னான். பிறகு, சாம வேதத்தை நன்கறிந்தவரும், ஜியேஷ்டர் என்ற பெயரால் அறியப்பட்டவருமான ஒரு பிராமணர் பர்ஹிஷதர்களிடம் இருந்து அஃதை அடைந்தார். அவர் சாமங்களை நன்கறிந்தவராக இருந்ததாலேயே ஜியேஷ்டசாமவிரத ஹரி என்ற பெயரால் அறியப்பட்டார்.(46) ஜியேஷ்டர் என்ற பெயரால் அறியப்பட்ட பிராமணரிடம் இருந்து அவிகம்பனன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மன்னன் இந்த வழிபாட்டு மரபை அடைந்தான். இதன் பிறகு, பலமிக்க ஹரியிடம் இருந்து பெறப்பட்ட இந்த வழிபாட்டு மரபானது உலகத்தில் இருந்து மீண்டும் மறைந்துபோனது.(47)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, நாராயணனின் தொப்புளில் உதித்த தாமரையின் முலம் பிரம்மன் அடைந்த {பத்மஜென்மம் என்ற} ஏழாம் பிறப்பில், இந்தக் கல்பத்தின் தொடக்கத்தில் இந்த வழிபாட்டு மரபானது அனைத்து உலகங்களையும் படைத்தவனும், தூய ஆன்மாவைக் கொண்டவனுமான பெரும்பாட்டனுக்கு நாராயணனாலேயே அறிவிக்கப்பட்டது. பழங்காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, (தன் விருப்பத்தால் படைக்கப்பட்ட தன் மகன்களில் ஒருவனான) தக்ஷனுக்குக் கொடுத்தான்.(48,49) பதிலுக்குத் தக்ஷன், ஓ! ஏகாதிபதி, தன் மகன்களின் மகன்கள் அனைவரிலும் மூத்தவனும், வயதில் சாவித்ரிக்கு மூத்தவனுமான ஆதித்யனுக்கு அதைக் கொடுத்தான். ஆதித்யனிடம் இருந்து விவஸ்வான் அஃதை அடைந்தான்.(50) திரேதா யுகத்தின் தொடக்கத்தில் விவஸ்வான் இந்த வழிபாட்டு மரபை மனுவுக்குக் கொடுத்தான். மனு, அனைத்து உலகங்களைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் அதைத் தன் மகனான இக்ஷ்வாகுவுக்குக் கொடுத்தான்.(51) இக்ஷ்வாகுவால் வெளியிடப்பட்ட அந்த வழிபாட்டு மரபானது மொத்த உலகிலும் பரவியது. அண்ட அழிவு நேரும்போது அது மீண்டும் நாராயணனிடமே திரும்பி அவனிலேயே கலக்கும்.(52)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, யதிகளால் பயிலப்பட்டுப் பின்பற்றப்படு அறமானது ஏற்கனவே ஹரிகீதையில் {பகவத்கீதையில்}, சுருக்கமான விதிகளுடன் உனக்குச் சொல்லப்பட்டது.(53) ஓ! மன்னா, தெய்வீக முனிவரான நாரதர், புதிர்கள் மற்றும் விளக்கங்களின் சுருக்கம் ஆகிய அனைத்துடன் அஃதை அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே பெற்றார்.(54) இவ்வாறே இந்த முதன்மையான அறமானது, மிகப் பழமைவாய்ந்ததும், நித்தியமானதுமாகும். எளிதில் புரிந்துகொள்ளப்பட முடியாததும், பயில்வதற்கு மிகக் கடினமானதுமான அது {இந்த அறமானது}, சத்வ குணத்தில் பற்றுக் கொண்ட மனிதர்களால் எப்போதும் ஆதரிக்கப்படுகிறது.(55) கடமைகளின் முழு அறிவுடன் நன்கு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவையும், எந்த உயிரினத்திற்கும் எந்தத் தீங்கையும் செய்யாதவையுமான செயல்களின் மூலமே உயர்ந்த தலைவனான {ஈஸ்வரனான} ஹரி நிறைவை அடைகிறான்.(56)
சிலர் அநிருத்தன் என்ற ஒரேயொரு வடிவத்தைக் கொண்டவனாக நாராயணனைத் துதிக்கிறார்கள், சிலர் அநிருத்தன் மற்றும் பிரத்யும்னன் என்ற இரு வடிவங்களைக் கொண்டவனாக அவனைத் துதிக்கிறார்கள். சிலர், அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற மூன்று வடிவங்களைக் கொண்டவனாகத் துதிக்கின்றனர். நான்காம் வகையினரோ, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டவனாக அவனைத் துதிக்கின்றனர்.(57) ஹரியே க்ஷேத்ரஜ்ஞன் (ஆன்மா) ஆவான். (எப்போதும் முழுமையான அவன்) பிரிவுகள் இல்லாதவனாக இருக்கிறான். ஐந்து அடிப்படை பூதங்களைக் கடந்து அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஜீவன் அவனே. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி அவற்றைச் செலுத்தும் மனமும் அவனே ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அவனே அண்டத்தைப் படைத்தவனும், விதிப்பவனுமாவான். அவன் செயல்பாடு உள்ளவனாகவும், செயல்பாடு இல்லாதவனாக இரண்டாகவும் இருக்கிறான். காரணம், விளைவு {காரணக் காரியங்கள்} ஆகிய இரண்டும் அவனே. ஓ! மன்னா, தான் விரும்பியபடி விளையாடும் மாற்றமில்லாத ஒரே புருஷன் அவனே.(60)
இவ்வாறே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாததும், என் ஆசானின் {வியாசரின்} அருளால் என்னால் அடையப்பட்டதுமான பக்தி அறத்தை நான் உனக்குச் சொல்லுவிட்டேன்.(61) ஓ! மன்னா, முழு ஆன்மாக்களுடன் நாராயணனில் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் மிக அரிதானவர்களே. ஓ! குரு குலத்தின் மகனே {ஜனமேஜயனே}, உலகளாவிய கருணையால் நிறைந்தவர்களும், ஆன்ம அறிவை {ஆத்மஞானத்தைக்} கொண்டவர்களும், பிறருக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களுமான மனிதர்களே உலகம் முழுவதும் இருந்தால், கிருத யோகம் தோன்றி, மனிதர்கள் அனைவரும் கனியில் விருப்பமில்லாமல் செயல்களை நிறைவேற்றுவார்கள்.(62,63) ஓ! ஏகாதிபதி, சிறப்புமிக்கவரும், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவரும், என் ஆசானுமான வியாசர், பல முனிவர்களின் முன்னிலையில், கிருஷ்ணனும், பீஷ்மரும் கேட்டுக் கொண்டிருந்தபோது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இந்தப் பக்தி அறத்தைக் குறித்து இவ்வகையிலேயே உரையாடினார். தவங்களின் செல்வத்துடன் கூடிய தெய்வீக முனிவரான நாரதரிடமிருந்தே அவர் அஃதை அடைந்தார்.(64,65) முழுமையான ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள், தேவர்களில் உயர்ந்தவனும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவனும், தூய நிறம் கொண்டவனும், சந்திரனின் பிரகாசம் கொண்டவனும், மாற்றமில்லாதவனுமான நாராயணனையே தங்கள் கதியாக அடைவதில் வெல்கிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(66)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பல்வேறு வகைக் கடமைகளைப் பயின்று விழிப்படைந்த ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாளர்களை நான் காண்கிறேன். பிராமணர்கள் அவ்வகைக் கடமைகளைப் பயிலாமல் ஏன் பிற வகை நோன்புகளையும், சடங்குகளையும் செய்கிறார்கள்?” என்று கேட்டான்.(67)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தையும் பொறுத்தவரையில் சத்வ குணம் தொடர்புடையது என்றும், ரஜஸ் குணத்தின் தொடர்புடையது என்றும், தமஸ் குணத்தின் தொடர்புடையது என்றும் மூன்று வகை மனோநிலைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.(68) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! மனிதர்களில் புலியே, உடல்படைத்த உயிரினங்களைப் பொறுத்தவரையில், சத்வ குணத்தில் பற்றுக் கொண்ட முதன்மையான மனிதன் நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்.(69) சத்வ குணத்தைக் கொண்டு, அதன் துணையால் மட்டுமே ஒருவன் பிரம்மத்தை அறிந்த மனிதனைப் புரிந்து கொள்ள முடியும். விடுதைலையை {முக்தியைப்} பொறுத்தவரையில் அது முற்றிலும் நாராயணனையே சார்ந்திருப்பதாகும். எனவே, சத்வ குணத்தால் ஆனதே விடுதலையாக {முக்தியாகக்} கருதப்படுகிறது.(70)
இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனை நினைப்பதன் மூலம் முழு ஆன்மாவுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதன் பெரும் ஞானத்தை அடைகிறான்.(71) ஞானம் கொண்டவர்களும், யதிகளின் நடைமுறைகளையும், விடுதலையறத்தை {முக்தி அறத்தைப்} பின்பற்றுபவர்களும், தாகம் தணிந்தவர்களுமான மனிதர்கள், தங்கள் விருப்பம் கனிவதற்கு உதவும் ஹரியையே எப்போதும் காண்கிறார்கள்.(72) பிறப்புக்கு (மற்றும் இறப்புக்கு) உட்பட்டு, ஹரியின் கருணை பார்வையை அடைந்த மனிதன், சத்வ குணத்தைக் கொண்டவனாகவும், விடுதலை அடைவதில் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் அறியப்பட வேண்டும்.(73) நாராயணனிடம் முழு ஆன்மாவுடன் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதனால் பின்பற்றப்படும் அறமானது, சாங்கியர்களின் அமைப்புக்கு இணையான அல்லது அதே போன்ற தகுதியுடையதாகக் கருதப்படுகிறது.(74) ஒருவன், அவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம், நாராயணனையே ஆன்மாவாகக் கொண்ட விடுதலையை {முக்தியை} அடைவதால் உயர்ந்த கதியை அடைகிறான். நாராயணனால் கருணையுடன் பார்க்கப்படும் மனிதன் விழிப்படைந்தவனாகிறான் {புத்தனாகிறான்}.(75)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, எவனாலும் தன் விருப்பத்தால் விழிப்படைய முடியாது. ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரு குணங்களையும் கொண்டிருக்கும் இயல்பானது கலப்பு எனச் சொல்லப்படுகிறது.(76) இத்தகைய கலப்பு இயல்பைக் கொண்டவனும், பிறப்புக்கு (மற்றும் இறப்புக்கும்) உட்படுபவனும், அவ்வகையில் பிரவிருத்தி {செயல்} கோட்பாட்டைப் பின்பற்றுபவனுமான மனிதன் மீது ஹரி ஒருபோதும் தன் கருணை பார்வையைச் செலுத்துவதில்லை.(77) பிறப்பிறப்பிற்கு உட்படும் மனிதன், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரண்டு தாழ்ந்த குணங்களில் மூழ்கிய மனத்தைக் கொண்டிருப்பதால் உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மனே அவனைப் பார்க்கிறான்[4].(78) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, தேவர்களும் முனிவர்களும் சத்வ குணத்தில் பற்றுக் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் நுட்பமான வடிவைக் கொண்ட அந்தக் குணம் {சத்வ குணம்} இல்லாதவர்கள் எப்போதும் மாறும் இயல்பைக் கொண்டவர்களாகவே கருதப்படுவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}[5].(79)ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “மாற்றக் கோட்பாடுகள் நிறைந்த ஒருவனால் எவ்வாறு இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானதை அடைய முடியும்? இவற்றை நிச்சயம் நீர் அறிவீர் என்பதால் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும் பிரவிருத்தியையும் முறையான வகையில் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(80)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “(சாங்கிய அமைப்பின் தத்துவப் பட்டியலில்) இருபத்தைந்தாவதாக உள்ள ஜீவனால், செயல்களை முற்றிலும் தவிர்க்க இயலும்போது, மிக நுட்பமானதும், (நுட்பமான வடிவிலான) சத்வ குணத்தால் நிறைந்ததும், (அ, உ, ம என்ற) மூன்று எழுத்துகளைக் கொண்ட {ஓம் என்ற} அசையின் சாரத்தால் நிறைந்ததுமான முதன்மையான இருப்பை அடைவதில் வெல்ல முடியும்[6].(81) சாங்கிய அமைப்பு, வேத ஆரண்யகம், பஞ்சராத்ர சாத்திரங்கள் என அனைத்தும் ஒன்றாகவும், முழுமையான ஒன்றின் பகுதிகளாகவும் இருக்கின்றன. நாராயணனையே சாரமாகக் கொண்ட அறமே, நாராயணனிடம் முழு ஆன்மாக்களுடன் அர்ப்பணிப்பு கொள்வரின் அறமாகும்[7].(82) பெருங்கடலின் அலைகள் எழுந்து, வெளியே சென்றாலும் முடிவில் மீண்டும் திரும்பிவிடுவதைப் போலவே பல்வேறு வகை ஞானங்களும் நாராயணனிலிருந்து எழுந்து முடிவில் மீண்டும் நாராயணனையே அடைகின்றன.(83) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே நான் உனக்குச் சாத்வத அறத்தைக் குறித்து விளக்கியிருக்கிறேன். ஓ! பாரதா, நீ அதற்குத் தகுந்தவனாக இருந்தால் முறையாக அவ்வறத்தையே பயில்வாயாக.(84)இவ்வாறே உயர்ந்த அருளைக் கொண்டவரான நாரதர், வெள்ளையர்களாலும், யதிகளாலும் பின்பற்றப்படுவதும், ஏகாந்தம் என்றழைக்கப்படுவதுமான இந்த நித்தியமான மாற்றமில்லாததை என் ஆசானான தீவில் பிறந்த கிருஷ்ணருக்கு {வியாசருக்குச்} சொன்னார்[8].(85) தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் நிறைவடைந்த வியாசர், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இவ்வறத்தைச் சொன்னார். என் ஆசானிடம் இருந்து அதைப் பெற்ற நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(86) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இந்தக் காரணங்களாலே இவ்வறமானது பயில்வதற்கு மிகக் கடினமானதாக இருக்கிறது. உன்னைப் போலவே இதைக் கேட்ட பிறரும் கலக்கமடைகின்றனர் {மோகமடைந்து இதைப் பின்பற்றுவதில்லை}.(87) ஓ! மன்னா, அண்டத்தைப் பாதுகாப்பவனும், வஞ்சிப்பவனும் கிருஷ்ணனே ஆவான். ஓ! ஏகாதிபதி, அழிப்பவனாகவும், காரணமாகவும் அவனே இருக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.(88)
வியாசரின் முற்பிறவி – அபாந்தரதமஸ்! – சாந்திபர்வம் பகுதி – 350-வியாசர் விஷ்ணுவுக்கு மகனாகப் பிறந்த பழங்கதை; பல்வேறு வழிபாட்டு மரபுகளும்; அவை சுட்டும் இறுதி கதியும்..
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, சாங்கிய அமைப்பு, பஞ்சராத்திர சாத்திரங்கள், வேத ஆரண்யகங்கள் ஆகிய பல்வேறு ஞான அமைப்புகள் அல்லது அற அமைப்புகளே தற்போது உலகில் இருக்கின்றன.(1) இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே போன்ற கடமை நடைமுறைகளைப் போதிக்கின்றனவா? அல்லது ஓ! தவசியே, அவற்றால் போதிக்கப்படும் கடமைகளின் நடைமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவையா? என்னால் கேட்கப்படும் நீர், பிரவிருத்தி குறித்து முறையான வகையில் உரைப்பீராக” என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இருளை விலக்குபவரும், தீவுக்கு மத்தியில் பராசரருக்கு சத்தியவதியால் பெறப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவரும், பெருந்தகைமையுடன் கூடிய ஆன்மாவைக் கொண்டவருமான பெரும் முனிவரை {வியாசரை} நான் வணங்குகிறேன்.(3) அவரே பெரும்பாட்டனான பிரம்மனின் தோற்றுவாய் என்றும்; அவரே நாராயணனின் ஆறாவது வடிவம் என்றும்; அவர் யோக பலம் கொண்டவர் என்றும்; தம் பெற்றோருக்கு ஒரே மகனான அவர் நாராயணனின் அவதாரம் என்றும்; இயல்புக்கு மீறிய சூழ்நிலைகளில் ஒரு தீவில் பிறந்த அவர் வற்றாத வேதக் கொள்ளிடம் என்றும் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(4) கிருத யுகத்தில் பெரும் பலம் கொண்டவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான நாராயணன் அவரைத் தன் மகனாகப் படைத்தான். உண்மையில் உயர் ஆன்ம வியாசர், பிறப்பற்றவரும், புராதனமானவரும், வற்றாத வேதக் கொள்ளிடமும் ஆவார்” என்றார்.(5)
ஜனமேஜயன் {வைசம்பாயனிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, முனிவர் வசிஷ்டருக்கு, சக்திரி என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தச் சக்திரிக்கு, பாராசரர் என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தப் பராசரர் பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணன் {கருப்பன்_வியாசர்} என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெற்றார் என்றும் நீரே இதற்கு முன்பு சொன்னீர்.(6) இப்போது மீண்டும் நீரே வியாசர் நாராயணனின் மகன் என்றும் சொல்கிறீர். அளவிலா சக்தியைக் கொண்டவரான வியாசர், தமது முற்பிறவியில் நாராயணனில் இருந்து உதித்தவரா? ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நாராயணன் மூலம் ஏற்பட்ட வியாசரின் பிறப்பு குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(7)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஸ்ருதிகளின் பொருளைப் புரிந்து கொள்ள விரும்பியவரும், தவப் பெருங்கடலும், சாத்திரக் கடமைகள், அறிவை ஈட்டுவது ஆகியவை அனைத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பவருமான என் ஆசான் {வியாசர்}, சில காலம் இமய மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசித்து வந்தார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் {வியாசர்}, மஹாபாரதத்தைத் தொகுக்கும்போது சக்தியில் நேர்ந்த கடுஞ்சோர்வின் விளைவால் அவர் தம் தவங்களில் களைப்படைந்தார். அந்நேரத்தில் சுமந்தன், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலன், நான்காவதாக நான் {வைசம்பாயனர்}, அவருடைய மகனான சுகர் ஆகியோர் அவருக்குச் சீடர்களாக இருந்தோம். ஓ! மன்னா, எங்கள் ஆசான் உணர்ந்த களைப்பை நோக்கில் கொண்ட நாங்கள் அவரது களைப்பைப் போக்கத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டு அவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்தோம்.(9,10) தமது சீடர்களால் சூழப்பட்ட வியாசர், கணங்களுக்கு மத்தில் உள்ள கணங்களின் தலைவனான மஹாதேவனைப் போல இமய மலையின் சாரலில் அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) அங்கங்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும், மஹாபாரத ஸ்லோகங்கள் அனைத்தின் பொருட்களையும் தொகுத்த பிறகு ஒரு நாள், குவிந்த கவனத்தோடு கூடிய நாங்கள் அனைவரும் புலனடக்கம் கொண்டவரும், அந்த நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவருமான எங்கள் ஆசானை அணுகினோம்.(12) உரையாடலுக்கான ஓர் இடைவேளையை உண்டாக்கிக் கொண்ட நாங்கள், வேதங்கள், மஹாபாரத ஸ்லோகங்கள் ஆகியவற்றின் பொருட்களை எங்களுக்கு விளக்கிச் சொல்லுமாறும், நாராயணனிடம் இருந்து அவர் {வியாசர்} அடைந்த பிறவி குறித்த நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லுமாறும் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம் கேட்டுக் கொண்டோம்.(13) தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவரான அவர், முதலில் ஸ்ருதிகள் மற்றும் மஹாபாரதத்தின் விளக்கங்களையும் சொல்லி, பிறகு நாராயணனிலிருந்து தாம் அடைந்த பிறப்பு சம்பந்தமான பின்வரும் நிகழ்வுகளை எங்களுக்குச் சொன்னார்.(14)
வியாசர், “சீடர்களே, ஒரு முனிவரின் பிறப்பு தொடர்புடைய வரலாறுகளில் சிறந்தந்தும், உரைகளில் முதன்மையானதுமான இவ்வுரையை நீங்கள் கேட்பீராக. மறுபிறப்பாளர்களே, கிருத யுகத்தில் நடந்த இந்தக் கதையை என் தவங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.(15) ஆதி தாமரையில் நேர்ந்த {பிரம்மனின் பத்மஜென்மம் என்கிற} ஏழாம் பிறப்பின் போது, கடுந்தவங்களைக் கொண்ட நாராயணன், நன்மை தீமைகள் இரண்டையும் கடந்தும், ஒப்பற்ற காந்தியை ஏற்று முதலில் பிரம்மனைத் தன் தொப்புகளில இருந்து படைத்தான்.
பிரம்மன் பிறப்படைந்ததும் நாராயணன் அவனிடம்,(16,17) “நீ என் தொப்புளில் இருந்து பிறந்திருக்கிறாய். படைப்பின் பலத்தைக் கொண்ட நீ, பகுத்தறிவுடைய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல்வேறு வகையிலான உயிரினங்களைப் படைப்பதில் உன்னை நிறுவிக் கொள்வாயாக” என்றான்.(18)
இவ்வாறு தன்னிருப்பின் ஆசிரியனால் சொல்லலப்பட்ட பிரம்மன், கவலையடைந்த மனத்துடன், தன் பணியின் கடினத்தை உணர்ந்து, தனக்கு இடப்பட்ட அணையைச் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தான். வரமளிப்பவனும், அண்டத்தின் தலைவனுமான சிறப்புமிக்க ஹரிக்குத் தலைவணங்கி இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(19) “ஓ! தேவர்களின் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன், ஆனால் பல்வேறு உயிரினங்களைப் படைக்க எனக்கென்ன பலம் இருக்கிறது என்று கேட்கிறேன்? நான் ஞானமில்லாதவன். இதை நோக்கில் கொண்டு என்ன விதிக்கப்பட வேண்டுமோ அதை விதிப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அண்டத்தின் தலைவனான நாராயணன், பிரம்மனின் பார்வையில் இருந்து அங்கேயே அப்போதே மறைந்து போனான். புத்தியுடன் கூடியவை அனைத்திலும் முதன்மையான அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, அப்போது புத்தியைக் குறித்துச் சிந்தித்தான்.(21) ஹரியின் வடிவத்திற்கு ஒப்பான வடிவத்துடன் கூடிய புத்தியானவள், பலமிக்க ஹரியின் முன்பு தோன்றினாள். யோகமனைத்தையும் கடந்தவனான நாராயணன் இப்போது புத்தியெனும் தேவியிடம் முறையாக யோகத்தைப் பயன்படுத்தினான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி, செயல்பாடு, நன்மை மற்றும் யோகபலம் அனைத்துடன் கூடிய புத்தியெனும் தேவியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(23) “உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கான பணியை நிறைவு செய்வதற்காக நீ பிரம்மனுக்குள் நுழைவாயாக” என்றான். இவ்வாறு அந்த உயர்ந்த தலைவனால் {ஈஸ்வரனால்} ஆணையிடப்பட்ட புத்தியானவள், அதன் பேரில் பிரம்மனுக்குள் நுழைந்தாள்.(24)
ஹரியானவன், புத்தியுடன் கலந்தவனாகப் பிரம்மனைக் கண்டபோது, மீண்டும் அவனிடம், “இப்போது நீ பல்வேறு வகை உயிரினங்களையும் படைப்பாயாக” என்றான்.(25) “சரி” என்ற சொல்லை நாராயணனிடம் மறுமொழியாகக் கூறிய பிரம்மன் மதிப்புடன் தன் மூதாதையின் ஆணையை ஏற்றான். அப்போது பிரம்மனின் முன்னிலையில் இருந்து மறைந்த நாராயணன்,(26) ஒளி அல்லது பிரகாசம் என்ற பெயரில் அறியப்பட்ட தன் இடத்தில் ஒரு கணத்தில் சென்று சேர்ந்தான். (புலப்படாத்தன்மையுடன் கூடிய) தன் சுயநிலைக்கு மீண்டும் திரும்பிய ஹரி, ஒரே அண்ட இயல்பில் தன்னை இருத்திக் கொள்ளத் தீர்மானித்தான்.(27)
எனினும், பிரம்மனால் படைப்பின் பணி நிறைவடைந்ததும், நாராயணனின் மனத்தில் மற்றொரு எண்ணம் எழுந்தது. உண்மையில் அவன் இவ்வாறே சிந்தித்தான், “பரமேஷ்டி என்றழைக்கப்படும் பிரம்மன், தைத்தியர்கள், தானவர்கள், கந்தர்வகள் மற்றும் ராட்சசர்களை உள்ளடக்கிய இந்த உயிரினங்கள் அனைத்தையும் படைத்துவிட்டான். ஆதரவற்றவளான பூமாதேவி இந்த உயிரினங்களின் கனத்தால் சுமை நிறைந்தவளாகிவிட்டாள்.(29) உலகத்தில் உள்ள தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலர் பெரும்பலத்துடன் கூடியவர்களாவார்கள். தவங்களைச் செய்யும் அவர்கள், பல்வேறு நேரங்களில் பல அற்புத வரங்களை அடைவதில் வெல்வார்கள்.(30) தாங்கள் பெற்ற அந்த வரங்களின் விளைவால் செருக்கிலும், வலிமையிலும் பெருகும் அவர்கள், தேவர்களையும், தவ வலிமை கொண்ட முனிவர்களையும் ஒடுக்கிப் பீடிப்பார்கள். எனவே, சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு அடுத்தடுத்து பல்வேறு வடிவங்களை ஏற்று நான் இப்போது பூமியின் சுமையைக் குறைக்க வேண்டும்.(32) தீயவர்களைத் தண்டித்தும், நல்லோரை ஆதரித்தும் நான் இப்பணியை நிறைவேற்றுவேன். (இவ்வாறு என்னால் கவனித்துக் கொள்ளப்படுபவளும்) வாய்மையின் உடல்வடிவமுமான பூமியானவள், உயிரினங்களின் சுமையைச் சுமப்பதில் வெல்வாள்.(33) ஒரு பெரும்பாம்பின் வடிவை ஏற்கும் நான், வெட்டவெளியில் பூமியைத் தாங்க வேண்டும். இவ்வாறு என்னால் தாங்கப்படும் அவள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் தாங்குவாள். எனவே, பூமியில் பல்வேறு வடிவங்களில் அவதரிக்கும் நான், அத்தகைய நேரங்களில் அவளை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும்” {என்று நினைத்தான்}.(34) இவ்வழியில் சிந்தித்த அந்த மதுசூதனன், தன் நோக்கத்தில் கொண்ட பணியை நிறைவேற்றுவதற்காகக் காலாகாலத்தில் தோன்றப்போகும் பல்வேறு வடிவங்களைத் தன் மனத்தில் படைத்தான்.(35)
“பன்றி {வராஹம்}, சிங்க மனிதன் {நரசிம்மம்}, குள்ளன் {வாமனன்} மற்றும் {இராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட} மனிதர்களின் வடிவை ஏற்கும் நான், தீயவர்களாகவும், அடங்காதவர்களாகவும் மாறிவிட்ட தேவர்களின் எதிரிகளைக் கொல்வேன்” என்று நினைத்தான்.(36)
இதன்பிறகு அண்டத்தை உண்மையில் படைத்தவனான அவன் மீண்டும் “போ” என்ற ஓரசையைச் சொல்லி, சுற்றிலும் அஃதை எதிரொலிக்கச் செய்தான். இந்த வாக்கின் அசையில் (சரஸ்வதியில்} இருந்தே சாரஸ்வதர் என்ற பெயரைக் கொண்ட முனிவர் எழுந்தார்.(37) இவ்வாறு நாராயணனின் வாக்கில் பிறந்தவரான அந்த மகன் அபாந்தரதமஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் பலம் கொண்டவரான அவர், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை முழுமையாக அறிந்தவராக இருந்தார். நோன்புகளை நோற்பதில் உறுதிமிக்க அவர் வாக்கில் வாய்மை நிறைந்தவராக இருந்தார்.(38) பிறந்ததும் நாராயணனுக்குத் தலைவணங்கிய அந்த முனிவரிடம், தேவர்கள் அனைவரையும் உண்மையில் படைத்தவனும், மாற்றமில்லாத இயல்பைக் கொண்டவனுமான அவன் {நாராயணன்}, “ஓ! புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, வேதங்களை வகுப்பதில் நீ உனது கவனத்தை அர்ப்பணிக்க வேண்டும். எனவே, ஓ! தவசியே, நான் ஆணையிட்டதைச் செய்வாயாக” என்றான்.(39)
சுயம்புவான மனுவின் பெயரைக் கொண்ட கல்பத்தில், நாராயணனின் வாக்கில் இருந்து இருப்புக்கு வந்த முனிவர் அபாந்தரதமஸ் அந்த உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} இந்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து, வேதங்களை வகுத்துத் தொகுத்தார்.(40) சிறப்புமிக்கவனான ஹரி, முனிவரின் அச்செயலுக்காகவும், அவரால் நன்கு செய்யப்பட்ட தவங்களுக்காகவும், நோன்புகள் மற்றும் நியமங்களுக்காகவும், அவரது புலனடக்கத்திற்காகவும் அவனிடம் நிறைவை அடைந்தான்.(41)
அவரிடம் பேசிய நாராயணன், “ஓ! மகனே {அபந்தரமஸே}, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேதங்களைப் பொறுத்தவரையில் நீ இவ்வழியிலேயே செயல்படுவாய். ஓ! மறுபிறப்பாளனே, நீ செய்த இந்தச் செயலின் விளைவால் நீ மாற்றமில்லாதவனாகவும், எவராலும் விஞ்ச முடியாதவனாகவும் ஆவாய்.(42) கலியுகம் தோன்றும்போது, கௌரவர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பாரதக் குலத்தின் குறிப்பிட்ட இளவரசர்கள் உன்னில் இருந்து பிறப்பை அடைவார்கள். அவர்கள், பலமிக்க நாடுகளை ஆளும் உயர் ஆன்ம இளவரசர்களாகப் பூமியில் கொண்டாடப்படுவார்கள்.(43) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உன் மூலம் பிறந்தவர்களான அவர்களுக்கிடையில், நீ இல்லாத போது, ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் வகையில் பிணக்கு ஏற்படும்.(44) அந்த யுகத்திலும் கடுந்தவங்களைச் செய்யும் நீ, வேதங்களைப் பல்வேறு வகைகளாக வகுப்பாய். உண்மையில் அந்த இருள் யுகத்தில் உன் நிறம் கருமையாகும்.(45)
நீ பல்வேறு வகைக் கடமைகளையும், பல்வேறு வகை ஞானங்களையும் தோன்றச் செய்வாய். கடுந்தவங்களைச் செய்பவனாக இருந்தாலும், உலகின் மீது கொண்ட ஆசை மற்றும் பற்றில் இருந்து ஒருபோதும் விடுபட இயலாதவனாகவே இருப்பாய்.(46) எனினும் உன் மகன் {சுகர்}, மாதவனின் அருளால் பரமாத்மாவைப் போல அனைத்துப் பற்றுகளில் இருந்தும் விடுபடுவான். இது வேறு வகையில் ஆகாது.(47) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் பிறந்த மகன் என்று கல்விமான்களான பிராமணர்களால் அழைக்கப்படுபவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவப்பெருங்கடலைப் போன்றவரும், சூரியனின் காந்தியையே கடந்தவருமான வசிஷ்டர்,(48) வலிமையும், சக்தியும், ஆற்றலும் கொண்டவரும், பராசரர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெரும் முனிவர் பிறக்கப் போகும் குலத்தின் மூதாதையாக இருப்பார். வேதப் பெருங்கடலும், தவங்களின் வசிப்பிடமுமான அந்த முதன்மையான மனிதர் {பராசரர்} (அந்தக் கலியுகத்தில் நீ பிறக்கும்போது) உன் தந்தையாவார்.(49) தந்தையின் இல்லத்தில் வசித்து வரும் ஒரு கன்னிப் பெண், பெரும் முனிவரான பராசரரிடம் கொள்ளும் கலவிச் செயல்பாட்டின் மூலம் அவளுக்கு நீ மகனாகப் பிறப்பாய்.(50)
கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த முக்கியப் பொருட்களில் உனக்கு எந்த ஐயமும் ஏற்படாது. தவங்களுடன் கூடியவனும், என்னால் கற்பிக்கப்பட்டவனுமான நீ, ஆயிரமாயிரம் யுகங்கள் கடந்த நிகழ்வுகளையும் காண்பாய். எதிர்காலத்தில் நேரப்போகும் ஆயிரமாயிரம் யுகங்களையும் நீ காண்பாய்.(51,52) ஓ! தவசியே, அப்பிறவியில் நீ, பிறப்பிறப்பற்றவனான நான், சக்கரம் தரித்துப் பூமியில் (யது குலத்தின் கிருஷ்ணனாக) அவதரிக்கப் போவதைப் பார்ப்பாய். ஓ! தவசியே, நீ என்னிடம் கொள்ளும் இடையறாத அர்ப்பணிப்பின் விளைவால் அடையப்படும் உன் தகுதியின் மூலம் இவை அனைத்தும் உனக்கு நடக்கும். நான் சொல்லும் இந்த வார்த்தைகள் வேறுவகையாகாது.(53) நீ உயிரினங்களில் முதன்மையான ஒருவனாக இருப்பாய். உன் புகழ் மகத்தானதாக இருக்கும். எதிர்காலக் கல்பத்தில் சூரியனின் மகனான சனியே, அந்தக் காலத்திற்கான பெரும் மனுவாகப் பிறப்பை அடைவான்.(54) ஓ! மகனே, அந்த மன்வந்தரத்தில், தகுதிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு காலங்களைச் சார்ந்த மனுக்களைவிட மேன்மையானவனாக இருப்பாய். என் அருளால் நீ அவ்வாறே ஆவாய் என்பதில் ஐயமில்லை.(55) இந்த உலகில் நீடித்திருக்கும் எதுவும் என் முயற்சியின் விளைவாக இருப்பவையே. பிறரின் எண்ணங்கள் அவர்களுடைய செயல்களுடன் பொருந்தாது. எனினும் என்னைப் பொறுத்தவரையில், சிறு தடையுமின்றி நான் நினைப்பதையே எப்போதும் விதிக்கிறேன்” {என்றான் நாராயணன்}.(56)
சாரஸ்வதர் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரதமஸிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, “செல்வாயாக” என்று சொல்லி அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.
{வியாசர் தொடர்ந்தார்} ஹரியின் ஆணையின் பேரில் பிறந்த அபாந்தரதமஸ் நானே. மேலும் நான் வசிஷ்ட குலத்தைத் திளைப்படைச் செய்பவனாக, கொண்டாடப்படும் கிருஷ்ண துவைபாயனன் என்ற பிறப்பை அடைந்திருக்கிறேன்.(57,58) என் முற்பிறவியில் நாராயணனின் அருளால் நான் அந்த நாராயணனின் ஒரு பகுதியாகவே பிறப்பை அடைந்தேன் என்பதை என் அன்புக்குரிய சீடர்களான உங்களுக்குச் சொன்னேன்.(59) நுண்ணறிவுமிக்கவர்களில் முதன்மையானவர்களே, பழங்காலத்தில் உயர்ந்த மன ஒருங்கமைப்பின் உதவியுடன் நான் கடுந்தவங்களைச் செய்தேன்.(60) பிள்ளைகளே, என்னிடம் பெரும் மதிப்புக் கொண்ட உங்களிடம் பேரன்பு கொண்டே, பழங்காலத்தில் என் முந்தைய பிறப்பில் நடந்தவையுமான நீங்கள் அறிய விரும்பிய அனைத்தையும் சொன்னேன்” என்றார் {வியாசர்}”.(61)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, களங்கமில்லா மனம் கொண்ட எங்கள் மதிப்புமிக்க ஆசானான வியாசரின் முற்பிறவி தொடர்புடைய சூழ்நிலைகளை நீ கேட்டதால் நான் உனக்குச் சொன்னேன். மீண்டும் நான் சொல்வதைக் கேட்பாயாக.(62) ஓ! அரசமுனியே, சாங்கியம், யோகம், பஞ்சராத்ரம், வேதங்கள் மற்றும் பசுபதி போன்ற பல்வேறு பெயர்களில் பல்வேறு வகை வழிபாட்டு மரபுகள் இருக்கின்றன.(63)
சாங்கிய வழிபாட்டு மரபானது பெரும் முனிவரான கபிலரால் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யோக அமைப்பை அறிவித்தது ஆதி ஹிரண்யகர்ப்பனை {பிரம்மனைத்} தவிர வேறு எவனும் அல்ல.(64) பிராசீனகர்ப்பர் என்ற சிலரால் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரந்தமஸ் வேதங்களின் ஆசானாகச் சொல்லப்படுகிறார்.(65) உமையின் தலைவனும், அனைத்து உயிரினங்களின் ஆசானும், ஸ்ரீகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், பிரம்மனின் மகனும், உற்சாகமிக்கவனுமான சிவனே, பாசுபதம் என்ற பெயரில் அறியப்படும் வழிபாட்டு மரபை அறிவித்தவன்.(66) சிறப்புமிக்க நாராயணனே, பஞ்சராத்ர சாத்திரங்களை உள்ளடக்கிய வழிபாட்டு மரபு மொத்தத்தையும் அறிவித்தவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும், பலமிக்க நாராயணனே ஒரே விளக்கப் பொருளாகக் காணப்படுகிறான்.(67) இந்த வழிபாட்டு மரபுகளைச் சார்ந்த சாத்திரங்களின்படியும், அவற்றில் உள்ளடங்கியிருக்கும் ஞானத்தின் அளவுகளின் படியும், அவை நாராயணனையே ஒரே வழிபாட்டுப் பொருளாக அறிவிக்கின்றன.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, இருளால் {அறியாமையால்} குருடான பார்வையைக் கொண்ட மனிதர்கள், நாராயணனையே அண்டத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாகப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(68) சாத்திரங்களின் ஆசிரியர்களான ஞானிகள், முனிவனான நாராயணனே அண்டத்தில் மதிப்புடன் வழிபடத்தக்க பொருளாவான் என்று சொல்கின்றனர். அவனைப் போன்ற வேறு எவனும் இல்லை என்று நான் சொல்கிறேன்.(69) ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் பரமதேவன், ஐயங்கள் அனைத்தையும் (சாத்திரங்கள் மற்றும் உள்ளுணர்வின் துணையால்) விலக்குவதில் வென்றோரின் இதயங்களில் வசிக்கிறான். போலி மொழிகளின் துணையுடன் அனைத்திலும் சச்சரவு செய்பவர்கள் மற்றும் ஐயத்தின் ஆதிக்கத்தில் உள்ளோரின் இதயங்களில் மாதவன் ஒருபோதும் வசிப்பதில்லை.(70) பஞ்சராத்திர சாத்திரங்களை அறிந்தவர்களும், அதில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நோற்பவர்களும், முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும் நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(71) சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் நித்தியமானவையாகும். மேலும், ஓ! ஏகாதிபதி, வேதங்கள் அனைத்தும் நித்தியமானவையாகும். இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் பழங்காலத்தில் இருந்து நீடித்திருக்கும் இந்த அண்டம் நாராயணனின் சுயமே என்று முனிவர்கள் அறிவிக்கின்றனர்.(72) வேதங்களில் விதிக்கப்பட்டவையும், சொர்க்கத்திற்கும், பூமிக்கும், வானத்திற்கும், நீருக்கும் இடையில் நேரும் நன்மையான அல்லது தீமையான எந்தச் செயலும் புராதன முனிவனான நாராயணனால் செய்யப்பட்டு, அவனிலிருந்தே உண்டாகின்றன” {என்றார் வைசம்பாயனர்}.(73)
வைஜயந்த மலை! – சாந்திபர்வம் பகுதி – 351-பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, புருஷர்கள் பலரா? அல்லது ஒரே ஒருவரா? அண்டத்தில் புருஷர்களில் முதன்மையாவன் எவன்? அனைத்துப் பொருட்களின் மூல காரணம் எனச் சொல்லப்படுவது எது?” என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளின் ஊகங்களில் பல்வேறு புருஷர்கள் பேசப்படுகிறார்கள். ஓ! குரு குலத்தின் ஆசானே, இவ்வமைப்புகளைப் பின்பற்றுவோர் அண்டத்தில் ஒரே புருஷனே இருக்கிறான் {வேறு எவரும் இல்லை} என்பதை உறுதிப்படுத்த விரும்பவில்லை[1].(2) இதே வகையிலேயே பரம புருஷன் எனும் ஒரே மூலத்தில் இருந்து பல புருஷர்கள் வந்ததாகச் சொல்லப்படுவதில், இந்த மொத்த அண்டமும் மேன்மையான குணங்களைக் கொண்ட அந்த ஒரே புருஷனோடு அடையாளம் காணப்படுவதே என்றும் சொல்லலாம். முனிவர்களில் முதன்மையானவரும், ஆன்மாவைக் குறித்து அறிந்தவரும், தவங்கள், தற்கட்டுப்பாடு மற்றும் மதிக்கத்தக்க வழிபாட்டுக்குத் தகுந்தவரும் என் ஆசானுமான வியாசரை வணங்கி, இப்போது இதைக் குறித்து விளக்கப் போகிறேன்.(3,4)ஓ! மன்னா {ஜனமேஜயா}, புருஷனைக் குறித்த இந்த ஊகம் வேதங்கள் அனைத்திலும் நேர்கிறது. அது ரிதம் மற்றும் வாய்மையுடன் அடையாளம் காணப்படுவதாக நன்கறியப்பட்டிருக்கிறது. முனிவர்களில் முதன்மையான வியாசர் இது குறித்துச் சிந்தித்தார்.(5) ஓ! மன்னா, அத்யாத்மா என்றழைக்கப்படுவதைக் குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டவர்களும், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களுமான பல்வேறு முனிவர்கள், இக்காரியத்தில் பொதுவாகவும், குறிப்பிட்ட வகையிலும் தங்கள் கருத்துகளை அறிவித்திருக்கின்றனர்.(6) அளவிலா சக்தி கொண்ட வியாசரின் அருளின் மூலம், புருஷனின் ஒருமையைக் குறித்த கேள்வியை விளக்க வியாசர் சொன்னதை விவரிக்கப் போகிறேன்.(7) ஓ! மன்னா, இது தொடர்பாகப் பிரம்மனுக்கும், முக்கண் மஹாதேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! ஏகாதிபதி, பாற்கடலுக்கு மத்தியில் வைஜயந்தம் என்ற பெயரில் தங்கத்தைப் போன்ற பெரும் பிரகாசமுடைய மலை ஒன்று இருக்கிறது.(9) சிறப்புமிக்கவனான பிரம்ம தேவன் பெருங்காந்தியும், இன்பநிலையையும் கொண்ட தன் வசிப்பிடத்தில் இருந்து தனியாக அங்கே சென்று அத்யாத்ம நடைமுறை குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(10)
பெரும் நுண்ணறிவைக் கொண்ட நான்முகப் பிரம்மன் அங்கே அமர்ந்திருக்கையில், ஒருநாள் அவனது {பிரம்மனது} நெற்றியில் இருந்து பிறந்தவனும், அவனுடைய மகனுமான மஹாதேவன் அண்டத்தில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைச் சந்தித்தான்.(11) பலமிக்கவனும், உயர்ந்த யோகத்தைக் கொண்டவனுமான முக்கண்ணனான சிவன், பழங்காலத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மலையில் அமர்ந்திருக்கும் பிரம்மனைக் கண்டதால் அதனுச்சியில் விரைவாக இறங்கினான்.(12) தன் மூதாதையின் முன் உற்சாகமிக்க இதயத்துடன் சென்று அவனது பாதங்களை வழிபட்டான். மஹாதேவன் தன் பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்ததைக் கண்ட பிரம்மன், அவனைத் தன் இடது கையால் உயர்த்தினான்.(13) பலமிக்கவனும், அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே தலைவனுமான பிரம்மன் இவ்வாறு மஹாதேவனை உயர்த்தி, நீண்ட காலம் கழித்துக் கண்ட தன் மகனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(14)
பெரும்பாட்டன் {பிரம்மன் சிவனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உனக்கு நல்வரவு. நற்பேற்றாலேயே நீண்ட நாள் கழித்து என் முன்னிலையில் உன்னைக் காண்கிறேன். ஓ! மகனே, உன் தவங்கள், வேத கல்வி மற்றும் பாராயணம் ஆகியவை அனைத்தும் சரியாக நடைபெறுகின்றன என நம்புகிறேன். நீ எப்போதும் கடும் தவங்களைச் செய்பவன். எனவேதான் நான் உன் தவங்களின் முன்னேற்றம் மற்றும் நன்னிலை குறித்து உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.(15,16)
ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, உமது அருளால் வேதகல்வி மற்றும் என் தவங்கள் அனைத்தும் நன்றாக நடைபெறுகின்றன. மேலும் அண்டமும் நன்றாகவே இருக்கிறது.(17) சிறப்புமிக்கவரான உம்மை நீண்ட காலத்திற்கு முன்பு இன்பமும், பிரகாசமும் நிறைந்த உமது இல்லத்தில் கண்டேன். இப்போது உமது பாதத்தின் வசிப்பிடமாக இருக்கும் இந்த மலைக்கு வந்திருக்கிறேன்.(18) இன்பமும், காந்தியும் நிறைந்த உமது வழக்கமான இடத்தைவிட்டு இத்தகைய ஒரு தனிமையான இடத்திற்கு நீர் வந்திருப்பது என் மனத்தில் பெரும் ஆவலைத் தூண்டுகிறது. ஓ! பெரும்பாட்டா, நீர் இவ்வாறு செயல்படுவதற்குப் பெருங்காரணம் இருக்க வேண்டும்.(19) வசிப்பிடங்களில் முதன்மையான உமது வசிப்பிட, பசி மற்றும் தாகமெனும் துன்பங்களில் இருந்து விடுபட்டதாகவும், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும், அளவிலா காந்தி கொண்ட முனிவர்களாலும், கந்தர்வார்களாலும், அப்சரஸ்களாலும் வசிக்கப்படுவதாகவும் இருக்கிறது. அத்தகைய இன்பமான இடத்தைக் கைவிட்டு, இந்த முதன்மையான மலையில் தனிமையில் வசிக்கிறீர். இதற்கான காரணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்காது” என்றான்.(21)
பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “மலைகளில் முதன்மையான இந்த வைஜயந்த மலையே எப்போதும் என் வசிப்பிடமாகும். இங்கே குவிந்த மனத்துடன் முடிவிலா அளவுகளுடன் கூடிய அண்டத்தின் ஒரே புருஷனைத் தியானிக்கிறேன்” என்றான்.(22)
ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, “நீர் சுயம்பு ஆவீர். உம்மால் படைக்கப்பட்ட புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். ஓ! பிரம்மாவே, மேலும் பிறரும் உம்மால் படைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் நீர் சொல்லும் இந்த முடிவிலா புருஷனை தனித்தவனாகவும், ஒருவனாகவும் சொல்கிறீர்.(23) ஓ! பிரம்மாவே, உம்மால் தியானிக்கப்படும் முதன்மையான புருஷன் யார்? இதில் நான் பேராவல் அடைகிறேன். என் மனத்தைப் பீடித்திருக்கும் இந்த ஐயத்தை நீர் கருணையுடன் விலக்குவீராக” என்றான்.(24)
பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “ஓ! மகனே, நீ சொல்லும் புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். எனினும், புருஷர்கள் அனைவரையும் விஞ்சியிருப்பவனும், புலப்படாதவனுமான ஒரே புருஷனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.(25) அண்டத்தில் நீடித்திருக்கும் பல புருஷர்கள் இந்த ஒரே புருஷன் எனும் அடித்தளத்திலேயே அமைந்திருக்கின்றனர்; இந்த ஒரே புருஷன் என்ற மூலத்தில் இருந்தே எண்ணிலடங்கா புருஷர்கள் பிறந்தனர் என்று சொல்லப்படுகிறது,(26) எனவே, அவர்கள் அனைவரும் குணங்களை இழப்பதில் வென்றால், அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், உயர்ந்தவனும் {பரமனும்}, முதன்மையிலும் முதன்மையானவனும், நித்தியமானவனும், மேற்கண்ட அனைத்து குணங்களும் இல்லாதவனுமான அந்த ஒரே புருஷனுக்குள் நுழையத் தகுந்தவர்கள் ஆவார்கள்” என்றான்.(27)
மஹாபுருஷன்! – சாந்திபர்வம் பகுதி – 352-பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் தொடர்ச்சி…
பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “ஓ! மகனே, அந்தப் புருஷன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறான் என்பதைக் கேட்பாயாக. அவன் நித்தியமானவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறான். அவன் சிதைவற்றவனாகவும், அளவிடமுடியாதவனாகவும் இருக்கிறான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்[1].(1) ஓ! அனைத்து உயிரினங்களிலும் சிறந்தவனே, அந்தப் புருஷனை உன்னாலோ, என்னாலோ, பிறராலோ காண முடியாது. புத்தியையும், புலன்களையும் கொண்டிருந்தாலும், தற்கட்டுப்பாடும், ஆன்ம அமைதியும் இல்லாது இருப்பவர்களால் ஒருபோதும் அவனைக் காண முடியாது. பரமபுருஷன் ஞானத்தின் துணையால் மட்டுமே காணப்படக்கூடியவனாகச் சொல்லப்படுகிறது.(2) உடலற்றவனாக இருந்தாலும் அவன் அனைத்து உடல்களிலும் வசிக்கிறான். உடல்களில் வசித்தாலும் அவன் அவ்வுடல்களால் செய்யப்படும் செயல்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.(3) அவன் உடல்கொண்ட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அனைத்தையும் காணும் சாட்சியாக வசித்து அவற்றின் செயல்களைக் குறித்துக் கொள்வதில் ஈடுபடுகிறான். எப்போதும் எவராலும் அவனைப் புரிந்து கொள்ள முடியாது.(4)இந்த அண்டமானது அவனது தலையின் மகுடமாகும். அண்டமானது அவனது கரங்கள் ஆகும், அண்டமானது அவனது பாதமாகும். அண்டமானது அவனது கண்களாகும். அண்டமானது அவனது மூக்காகும். தனியொருவனாக க்ஷேத்திரங்கள் {உடல்கள்} அனைத்திலும் தன் விருப்பப்படி வரையறைகளின்றிச் சுகமாக உலவுகிறான்.(5) க்ஷேத்திரம் என்பது உடலுக்கான மற்றொரு பெயராகும். யோகத்தின் ஆன்மாவான அவன், க்ஷேத்திரங்கள அனைத்தையும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அறிந்திருப்பதால், க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்[2].(6) உடல் கொண்ட உயிரினங்களுக்குள் அவன் எவ்வாறு நுழைகிறான், அவற்றை விட்டு எவ்வாறு வெளியேறுகிறான் என்பதை உணர்வதில் ஒருவரும் வெல்வதில்லை. சாங்கிய முறைக்கு ஏற்புடைய வகையிலும், யோகத்தின் துணை மூலமும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை முறையாகச் செய்வதன் மூலமும், அந்தப் புருஷனுக்கான காரணத்தைக் குறித்துச் சிந்திப்பதில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அந்தச் சிறந்த காரணத்தால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், நான் கொண்டிருக்கும் ஞானத்தின் அளவுக்கு ஏற்ப அந்த நித்திய புருஷனையும், அவனது ஒருமையையும், உயர்ந்த மகிமையையும் உனக்குச் சொல்கிறேன்.(7,8)கல்விமான்கள் ஒரே புருஷன் என்றே அவனைக் குறித்துச் சொல்கிறார்கள். இருப்பில் நித்தியமாக இருக்கும் அவன், மஹாபுருஷன் (பெரியவனும், உயர்ந்தவனுமான புருஷன்) என்ற குறிச்சொல்லுக்குத் தகுந்தவனாவான்.(9) நெருப்பு ஒரு பூதமாக இருந்தாலும், ஆயிரம் பல்வேறு சூழ்நிலைகளில் ஆயிரம் இடங்களில் அது சுடர்விட்டு எரிவது காணப்படுகிறது. ஒரே ஒரு சூரியனாக இருந்தாலும், அவனது கதிர்கள் பரந்த அண்டம் முழுதும் விரிந்திருக்கின்றன. பல்வேறு வகைகளில் தவங்கள் இருந்தாலும், அவை உண்டான ஒரே பொதுவான மூலத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரே காற்றாக இருந்தாலும், அஃது உலகில் பல்வேறு வடிவங்களில் வீசுகிறது. ஒரே பெருங்கடலானது, உலகில் பல்வேறு சூழ்நிலைகளில் காணப்படும் நீர்நிலைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருக்கிறது. குணங்கள் அற்றவனான அந்தப் புருஷனே எல்லையற்ற வெளியாக வெளிப்படும் அண்டமாக இருக்கிறான். அவனிடம் இருந்து உண்டான எல்லையற்ற அண்டமானது, அழிவுக்காகக் காலம் நேரும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்த ஒரே புருஷனுக்குள்ளேயே நுழைகிறது.(10)
உடல் மற்றும் புலன்களின் நனவுநிலையைக் கைவிடுவதன் மூலமும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலமும், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவதன் மூலமும் ஒருவன் தன்னிடமுள்ள குணங்களைக் கைவிடுவதில் வெல்கிறான்.(11) புலப்படாத புருஷனை உணர்ந்து கொண்டு, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேன் என்ற நான்கு வடிவங்களின் நுட்பமான இருப்பைப் புரிந்து கொள்பவனுமான ஒருவன், அத்தகைய புரிதலின் விளைவால் இதயத்தில் முற்றான அமைதிநிலையை அடைந்து, அந்த ஒரே மங்கலப் புருஷனுக்குள் நுழைவதிலும், அவனோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலும் வெல்கிறான்.(12)
கல்விமான்களான சிலர் அவனையே பரமாத்மா என்று சொல்கின்றனர்.
வேறு சிலர் அவனை ஒரே ஆத்மாவாக {ஏகாத்மாவாகக்} கருதுகிறார்கள்.
மூன்றாம் வகைக் கல்விமான்கள் அவனையே ஆன்மாவாக விளக்குகிறார்கள்[3].(13)
உண்மை என்னவென்றால், பரமாத்மாவானவன் எப்போதும் குணங்களற்றவனாக இருக்கிறான் என்பதாகும். அவனே நாராயணன். அவனே அண்டத்தின் ஆன்மாவும், அவனே ஒரே புருஷனும் ஆகிறான். நீரில் வீசப்பட்டாலும் அதனால் ஒருபோதும் நனையாத தாமரை இலையைப் போலவே, செயல்களின் கனிகளால் அவன் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(14) செயல்படும் ஆன்மா வேறு வகையானது. அந்த ஆன்மா சில நேரங்களில் செயல்களில் ஈடுபடுகிறது. அது செயல்களைக் கைவிடுவதில் வெல்லும்போது, விடுதலையை, அல்லது பரமாத்மாவோடு அடையாளங்காணப்படும் தன்மையை அடைகிறது.(15) செயல்படும் ஆன்மாவானது பதினேழு உடைமைகளைக் கொண்டிருக்கிறது[4]. எனவே, முறையான வரிசையில் எண்ணற்ற வகைப் புருஷர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(16)எனினும், உண்மையில் ஒரேயொரு புருஷனே இருக்கிறான். அண்டத்தைப் பொறுத்தவரையில் அவனே விதிமுறைகள் அனைத்தின் வசிப்பிடமாவான். அவனே ஞானத்தின் உயர்ந்த பொருளாவான். அவனே, அறிபவனாகவும், அறியப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே சிந்திப்பவனாகவும், சிந்திக்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே உண்பவனாகவும், உண்ணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே நுகர்பவனாகவும், நுகரப்படும் மணமாகவும் இருக்கிறான். அவனே தீண்டுபவனாகவும், தீண்டப்படும் பொருளாகவும் இருக்கிறான்.(17) அவனே காண்பவனாகவும், காணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கேட்பவனாகவும், கேட்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கருத்தில் கொள்பவனாகவும், கருதுபொருளாகவும் இருக்கிறான். அவனே குணங்களைக் கொண்டவனாகவும், அவற்றில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான். ஓ! மகனே, அவனே நீடித்திருப்பதும், நித்தியமானதும், மாறாததுமான பிரதானம் என்ற பெயரில் இருகிறான்.(18) தாத்ரியைப் பொறுத்தவரையில் ஆதி விதியைப் படைப்பவன் அவனே. கல்விமான்களான பிராமணர்கள் அவனை அநிருத்தன் என்ற பெயரில் அழைக்கிறார்கள். வேதங்களில் இருந்து உண்டானவையும், சிறந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டவையும், அருள் நிறைந்தவையுமான செயல்கள் அனைத்தும் அவனாலேயே உண்டாகின்றன.(19)
அமைதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும், வேள்விப்பீடங்களில் தங்கள் இடங்களை அடைந்து, தங்கள் வேள்விக் காணிக்கைகளின் முதல் பங்கை அவனுக்கே அளிக்கின்றனர்[5].(20) அனைத்து உயிர்களின் ஆசானாகிய பிரம்மனான நான், அவனிலிருந்தே பிறப்பை அடைந்தேன், நீயோ {சிவனாகிய நீயோ} என்னில் இருந்து பிறப்பை அடைந்தாய். ஓ! மகனே {சிவனே}, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட அண்டமும், புதிர்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தும் என்னில் இருந்து உண்டாகின.(21) நான்கு பிரிவுகளாகப் பிரிந்து அவன் விரும்பும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இத்தகைய சிறப்புமிக்க தெய்வீகத் தலைவனும் கூட, தன் சொந்த ஞானத்தாலேயே விழிப்படைகிறான்.(22) ஓ! மகனே {சிவனே}, நீ கேட்ட கேள்விகளின்படியும், சாங்கிய அமைப்பு மற்றும் யோக தத்துவம் ஆகியவற்றில் இக்காரியம் விளக்கப்பட்டிருக்கும் வழியின்படியும் இவ்வாறே நான் உனக்குப் பதிலளித்தேன்” என்றான் {பிரம்மன்}.(23)
மேன்மையான ஆசிரமம் எது? – சாந்திபர்வம் பகுதி – 353-மேன்மையான ஆசிரமம் குறித்து பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; இந்திரனுக்குக் கதை சொல்லத் தொடங்கிய நாரதர்…
சௌதி {சௌனகரிடம்}, “வைசம்பாயனர், நாராயணனின் மகிமையை ஜனமேஜயனுக்கு இவ்வகையில் விளக்கிய பிறகு அவர், மற்றொரு காரியம் குறித்து யுதிஷ்டிரன் கேட்ட கேள்வியையும், கிருஷ்ணன், முனிவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் முன்னிலையிலும் பீஷ்மர் அவற்றுக்கு அளித்த பதில்களையும் சொல்லத் தொடங்கினார். உண்மையில் வைசம்பாயனர் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்[1].யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, ஓ! பாட்டா, முக்தி அறம் தொடர்புடைய கடமைகள் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர். இப்போது பல்வேறு வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் மக்களுக்கான முதன்மையான கடமைகளை எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்[2].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒவ்வொரு வாழ்வுமுறையைப் பொறுத்தவரையிலும் அவற்றில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நன்கு நடைமுறைப்படுத்தினால் அவை சொர்க்கத்திற்கும், வாய்மையின் உயர்ந்த கனிக்கும் {முக்திக்கும்} வழிவகுக்கவல்லவையே. கடமைகள் பல வாயில்களைக் கொண்டவையாகும். அவற்றால் கற்பிக்கப்படும் நடைமுறைகள் எதுவும் விளைவுகளைப் பொறுத்தவரையில் பயனற்றுப் போனதில்லை.(2)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நிலையான மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் எந்தக் கடமைகளையும் பின்பற்றும் எவனும், தன்னால் பின்பற்றப்படும் கடமைகளைப் புகழ்ந்து, எஞ்சியவற்றைத் தவிர்க்கிறான்.(3)
எனினும், நான் சொல்ல வேண்டும் என நீ விரும்பும் இந்தக் குறிப்பிட்ட காரியம் பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதருக்கும், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலின் பொருளாக இருந்தது.(4)
ஓ! மன்னா, உலகங்கள் அனைத்தினாலும் மதிக்கப்படும் பெரும் முனிவரான நாரதர், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவார். அவர், நீக்கமற நிறைந்திருக்கும் காற்றைப் போல, எதனாலும் தடுக்கப்பட முடியாதவராக உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருக்கிறார்.(5)
ஒரு காலத்தில் அவர் இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார். தேவர்களின் தலைவனால் முறையாகக் கௌரவரிக்கப்பட்ட அவர், அவனது அருகில் அமர்ந்தார்.(6)
அவர் களைப்பு நீங்கி சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட சச்சியின் தலைவன் {இந்திரன்}, அவரிடம் {நாரதரிடம்}, “ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, ஏதாவது ஆச்சரியம் நிறைந்ததை நீர் கண்டீரா?(7) ஓ! மறுபிறப்பாள முனிவரே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட நீர், அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய அண்டத்தின் ஊடாக அனைத்தையும் சாட்சியாகக் கண்டபடி ஆவலுடன் திரிந்து வருகிறீர்.(8) ஓ! தெய்வீக முனிவரே, இந்த அண்டத்தில் நீர் அறியாதது ஏதுமில்லை. எனவே, நீர் கண்ட, அல்லது கேட்ட, அல்லது உணர்ந்த ஆச்சரியமான நிகழ்வு எதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பேசுபவர்களில் முதன்மையான நாரதர் இவ்வாறு கேட்கப்பட்டதும், பின்வரும் பெரிய வரலாற்றை அந்தத் தேவர்களின் தலைவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(10)
நாரதர் தம் கருத்தில் கொண்டிருந்த அதே நோக்கத்திற்காகவே, இந்திரனிடம் அவர் சொன்ன அந்தக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக” என்றார் {பீஷ்மர்}.(11)
மூவகை கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 354-ஒரு பிராமணரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மூவகை கடமைகளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த பிராமணர்; அந்தப் பிராமணரின் இல்லத்திற்கு விருந்தினராக வந்த மற்றொரு பிராமணர்..
{இந்திரனிடம் நாரதர் சொல்வதாக} பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, கங்கையாற்றின் தென்கரையில் அமைந்திருந்ததும், மஹாபத்மம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான ஒரு சிறந்த நகரத்தில் குவிந்த ஆன்மாவுடன் கூடிய ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1)
அத்ரி குலத்தில் பிறந்த அவர் இனிமையானவனாக இருந்தார். (நம்பிக்கையாலும், தியானத்தாலும்) ஐயங்கள் அனைத்தையும் விலக்கிய அவர், தாம் பின்பற்றும் பாதையை நன்கறிந்தவராக இருந்தார். அறக்கடமைகளை எப்போதும் நோற்பவரான அவர், தமது கோபத்தை முற்றான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். எப்போதும் மனம் நிறைந்திருந்த அவர், தமது புலன்களை முழுமையாக ஆள்பவராக இருந்தார்.(2)
தவங்கள் மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், நல்ல மனிதர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டார். அறவழிகளின் மூலம் செல்வமீட்டிய அவரது ஒழுக்கமானது, அனைத்து பொருட்களிலும் அவர் சார்ந்ததும், அவர் பின்பற்றுவதுமான வாழ்வுமுறைக்குத் தொடர்புடையதாக இருந்தது.(3)
அவரது குடும்பம் மிகப் பெரியதாகவும், கொண்டாடப்படுவதாகவும் இருந்தது. அவருக்கு உற்றார், உறவினர், பிள்ளைகள், மனைவிகள் எனப் பலர் இருந்தனர். அவரது ஒழுக்கம் எப்போதும் மதிக்கத்தக்கதாகவும், களங்கமற்றதாகவும் இருந்தது.(4)
தாம் பல பிள்ளைகளைப் பெற்றிருப்பதைக் கண்ட அந்தப் பிராமணர், பெரிய அளவிலான அறச்செயல்களைச் செய்து வந்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவரது அற நோன்புகள், அவரது குடும்ப வழக்கங்கள் தொடர்புடையவையாகவே இருந்தன[1].(5)மூன்று வகைக் கடைமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று அந்தப் பிராமணர் சிந்தித்தார். ’தாம் பிறந்த வகைக்கெனவும் {வர்ணத்துக்கெனவும்}, தாம் பின்பற்றும் (இல்லறம் நோற்கும் ஒரு பிராமணனின்) வாழ்வுமுறைக்கெனவும் {ஆசிரமத்திற்கெனவும்} வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் முதல்வகை. தர்ம சாஸ்திரங்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகள் இரண்டாம் வகை. வேதங்களிலும், சாத்திரங்களிலும் இல்லாவிட்டாலும் பழங்காலத்தில் இருந்து மதிப்புமிக்க, திறன்மிக்க மனிதர்களால் பின்பற்றப்படும் கடமைகள் மூன்றாம் வகை’ {எனச் சிந்திதார்}.(6)
“இதில் எந்தெந்த கடமைகளை நான் பின்பற்ற வேண்டும்? நான் பின்பற்றப்போகும் எந்தெந்த கடமைகள் எனக்கான நன்மைக்கு வழிவகுக்கும்? உண்மையில் எது என் புகலிடமாக இருக்க வேண்டும்?” என்பது போன்ற சிந்தனைகள் அவரை {அந்தப் பிராமணரைக்} கலங்கடித்தன. அவரால் தமது ஐயங்களுக்கு விடைகாண முடியவில்லை.(7)
இத்தகைய சிந்தனைகளால் கலக்கமடைந்திருந்த அந்த வேளையில், குவிந்த ஆன்மாவைக் கொண்டவரும், மிக மேன்மையான ஓர் அறத்தைப் பின்பற்றுபவருமான ஒரு பிராமணர் அவரது இல்லத்திற்கு விருந்தினராக வந்தார்.(8)
அந்த இல்லறத்தான் {முதல் பிராமணர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வழிபாட்டு விதிகளின் படி தமது விருந்தினரை முறையாகக் கௌரவித்தார். தமது விருந்தினர் புத்துணர்வடைந்ததையும், சுகமாக அமர்ந்திருப்பதையும் கண்ட அந்த விருந்தோம்பி {முதல் பிராமணர்}, அவரிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(9)
சொர்க்கத்தின் கதவுகள்! – சாந்திபர்வம் பகுதி – 355-பிராமணர் தன் விருந்தினரிடம் முக்திக்கான வழிமுறை குறித்துக் கேட்டது; தமக்கும் அதில் ஐயமிருப்பதாக விருந்தினர் சொன்னது…
பிராமணர் {தன் இல்லத்திற்கு விருந்தினராக வந்த பிராமணரிடம்}, “ஓ! பாவமற்றவரே, உமது இனிய உரையாடலின் விளைவால் நான் உம்மிடம் மிகுந்த பற்றைக் கொண்டிருக்கிறேன். நீர் என் நண்பராகிவிட்டீர். நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; கேட்பீராக.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஓர் இல்லறத்தானாக {கிருஹஸ்தாஸ்ரமத்தைச் சேர்ந்தவனாக} என் மகனிடம் கடமைகளை ஒப்படைத்துவிட்டு, மனிதனின் உயர்ந்த கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளரே, என் பாதை எதுவாக இருக்க வேண்டும்?(2) ஆன்மாவைச் சார்ந்திருந்து ஒரே ஆன்மாவின் இருப்பை அடைய விரும்புகிறேன். ஐயோ, பற்றுகளில் கட்டப்பட்டிருக்கும் என்னால் அந்தப் பணியை நிறைவேற்றுவதில் என்னை நிறுவிக் கொள்ளும் இதயம் உண்மையில் வாய்க்கவில்லை[1].(3) இல்லற நோற்பில் என் வாழ்வின் சிறந்த பகுதி கடந்து விட்டதால், வரப்போகும் காலத்தில் எஞ்சியுள்ள என் வாழ்நாளில் என் {வாழ்வெனும்} பயணத்திற்கான செலவுகளைக் கொடுப்பதற்கான {பரலோகம் செல்வதற்கான} வழிமுறைகளை ஈட்ட விரும்புகிறேன்.(4) உலகமெனும் பெருங்கடலைக கடக்கும் விருப்பம் என் மனத்தில் எழுந்துள்ளது. ஐயோ, (என் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும்) அறமெனும் தெப்பத்தை எப்போது அடையப் போகிறேன்?(5) தேவர்களே கூடத் தங்கள் செயல்களின் கனிகளைப் பொறுத்துக் கொள்ளவும், தண்டிக்கப்படவும் செய்கிறார்கள் என்பதைக் கேட்டும், அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலும் யமனின் கொடிக்கம்ப வரிசைகளையும், பறக்கும் கொடிகளையும் கண்டும்,(6) நான் சந்திக்கும் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களில் என் இதயம் இன்பத்தை அடையத் தவறுகிறது. பிச்சையெடுத்துத் திரிந்து கிடைக்கும் பிச்சையில் தங்கள் வாழ்வாதாரத்தைச் சார்ந்திருக்கும் யதிகளைக் கண்டு, யதிகளின் அறத்தில் எனக்கு மதிப்பேதும் உண்டாகவில்லை. ஓ! மதிப்புமிக்க விருந்தினரே, புத்தியின் மற்றும் காரணத்தின் அடிப்படையிலான அறத்தின் துணை கொண்டு, குறிப்பிட்ட கடமைகளின் நடைமுறையில் {அறத்தில்} என்னை நீர் நிறுவுவீராக” என்றார் {முதல் பிராமணர்}”.(7)பீஷ்மர் தொடர்ந்தார், “பெரும் ஞானத்தைக் கொண்ட அந்த விருந்தினர், அறம் சார்ந்த தம் விருந்தினரின் இந்தப் பேச்சைக் கேட்டு, இனிமையானதும், மென்மையானதும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(8)
அந்த விருந்தினர் {இரண்டாம் பிராமணர்}, “இக்காரியம் குறித்து நானும் குழப்பத்திலேயே இருக்கிறேன். இதே எண்ணமே என் மனத்திலும் இருக்கிறது. இதில் ஒரு நிச்சயமான தீர்மானத்தை என்னால் அடையமுடியவில்லை. சொர்க்கத்திற்குப் பல கதவுகள் இருக்கின்றன.(9) விடுதலையை {முக்தியை} மெச்சும் சிலர் இருக்கிறார்கள். சில மறுபிறப்பாளர்கள், வேள்விகளைச் செய்வதால் கிட்டும் கனிகளைப் புகழ்கின்றனர். சிலர் காட்டு வாழ்க்கைமுறையை {வானப்ரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுகின்றனர்.(10) சிலர், மன்னர்களின் கடமைகளை நோற்பதால் அடையப்படும் தகுதிகளை {புண்ணியங்களைச்} சார்ந்திருக்கின்றனர். சிலர் ஆன்மக் கட்டுப்பாடு எனும் பண்பாட்டில் விளையும் கனிகளைச் சார்ந்திருக்கின்றனர். ஆசான்கள் மற்றும் பெரியோர்களுக்குக் கடமையுணர்வுடன் கீழ்ப்படிவதால் விளையும் தகுதிகள் நன்மையானவை என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் வாக்குக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகின்றனர்.(11) சிலர் தங்கள் தாய் தந்தையரைக் கடமையுணர்வுடன் பார்த்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றிருக்கின்றனர். வாய்மை மற்றும் கருணை என்ற கடமைகளைப் பின்பற்றிச் சிலர் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கின்றனர்.(12) சிலர் போரிட விரைந்து, தங்கள் உயிர்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்திருக்கின்றனர். மேலும் சிலர் உஞ்சம் என்றழைக்கப்படும் நோன்பைப் பின்பற்றி வெற்றியை அடைந்து சொர்க்கத்தின் பாதையை அடைந்திருக்கின்றனர்.(13) சிலர் தங்களை வேத கல்விக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். மங்கலங்கூடிய அத்தகைய கல்வியில் பற்று கொண்டவர்களும், நுண்ணறிவையும் அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், தங்கள் புலன்களை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுமான இந்த மனிதர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர்.(14) எளிமையும், வாய்மையும் கொண்ட வேறு சிலர் தீய மனிதர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். வாய்மையும், எளிமையும், தூய்மையான ஆன்மாவையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சொர்க்கவாசிகளாகக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர்.(15) எப்போதும் அகலத் திறந்திருக்கும் கடமைகள் {அறங்கள்} எனும் ஆயிரம் வாசல்களின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவது இவ்வுலகில் காணப்படுகிறது. காற்றின் முன்பான மேகத் திரள் போல உமது இந்தக் கேள்வி என் புத்தியைக் கலங்கடிக்கின்றன” என்றார் {விருந்தினர்}.(16)
நாகன் பத்மநாபன்! – சாந்திபர்வம் பகுதி – 356-நாகன் பத்மனிடம் செல்லும்படி விருந்தளிப்பவரிடம் சொன்ன விருந்தினர்…
விருந்தினர் தொடர்ந்தார், “ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் உமக்கு முறையாக விளக்க முயற்சிக்கிறேன். நான் என் ஆசானிடமிருந்து கேட்டதை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(1)
முந்தைய படைப்பில் அறச்சக்கரம் சுழலத் தொடங்கிய இடமும், கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருப்பதும், நைமிஷம் என்ற பெயரில் அறியப்படுவதுமான காட்டில் {காட்டின் அருகில்} நாகர்களின் பெயரில் அழைக்கப்படும் ஒரு நகரம் இருக்கிறது.(2)
பழங்காலத்தில் தேவர்கள் அனைவரும் அந்த இடத்தில் ஒன்றுகூடி ஒரு மகத்தான வேள்வியைச் செய்தனர். அங்கே உலகமன்னர்களில் முதன்மையான மாந்தாத்ரி {மாந்தாதா}, இங்கேதான் தேவர்களின் தலைவனான இந்திரனை வென்றான்.(3)
அற ஆன்மா கொண்ட வலிமைமிக்க நாகன் ஒருவன், அந்தப் பகுதியில் இருக்கும் அந்த நகரத்தில் வசித்து வருகிறான். அந்தப் பெரும் நாகன், பத்மநாபன் அல்லது பத்மன் என்ற பெயரில் அறியப்படுகிறான்.(4)
(செயல்கள், அறிவு, துதி என்ற) முப்பாதையில் நடக்கும் அவன் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைத்து உயிரினங்களையும் நிறைவு செய்கிறான்.(5)
அனைத்திலும் பெருங்கவனத்துடன் சிந்தித்து, நல்லோரைப் பாதுகாத்து, இணக்கம் {சாம}, கொடை, அல்லது கையூட்டளித்தல் {தான}, வேற்றுமையை உண்டாக்கல் {பேத}, பலத்தைப் பயன்படுத்தல் {தண்டம்} என்ற நால்வகைக் கொள்கையைப் பின்பற்றித் தீயோரைத் தண்டித்தும் வருகிறான்.(6)
அங்கே சென்று நீர் விரும்பும் கேள்விகளை அவனிடம் கேட்பீராக. உயர்ந்த அறம் எது என்பதை உண்மையில் அவன் உமக்குக் காட்டுவான்.(7)
அந்த நாகன் விருந்தினர்களை எப்போதும் விரும்புபவன் ஆவான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் சாத்திரங்களையும் நன்கறிந்தவனாவான். அவன், வேறு எந்த மனிதனிலும் காணப்படாதவையும், விரும்பத்தக்கவையுமான ஒழுக்கங்கள் அனைத்தையும் கொண்டவனாவான்.(8)
அவன், நீருடனோ, நீரில்லாமலோ செய்யப்படும் கடமைகளை எப்போதும் நோற்கும் மனநிலை கொண்டவனாவான். வேத கல்வியில் அவன் அர்ப்பணிப்புமிக்கவனாவான். அவன் தவங்களையும், தற்கட்டுப்பாட்டையும் கொண்டவனாவான். அவன் பெருஞ்செல்வத்தைக் கொண்டவனாவான்.(9)
அவன் வேள்விகளைச் செய்கிறான், கொடையளிக்கிறான், தீங்கிழைப்பதைத் தவிர்க்கிறான், மன்னிக்கவும் செய்கிறான். அவன் ஒழுக்கம் அனைத்து வகையிலும் சிறப்பானதாகும். பேச்சில் வாய்மை கொண்டவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான அவன் நன்னடத்தைக் கொண்டவனும், தன் புலன்களை முறையாகக் கட்டுப்படுத்துபவனுமாக இருக்கிறான்.(10)
அவன் தன் விருந்தினர்கள் மற்றும் பணியாட்கள் அனைவரும் உண்ட பிறகே உண்கிறான். அவன் அன்புடன் பேசக்கூடியவனாவான். அவன், எது நன்மையானது, எது எளிமையானது, எது சரியானது, எது கண்டிக்கத்தக்கது என்ற அறிவைக் கொண்டவனாவான். அவன் செய்வதையும், செய்யாமல் விடுவதையும் கணக்கில் கொள்கிறான். அவன் எவரிடமும் ஒருபோதும் பகைமையுடன் நடந்து கொள்வதில்லை. அவன் எப்போதும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுகிறான். அவன், கங்கையின் மத்தியில் உள்ள ஒரு தடாகத்தின் நீரைப் போலத் தூய்மையானதும், களங்கமற்றதுமான ஒரு குடும்பத்தைச் சார்ந்தவனாவான்” {என்றார் விருந்தினர்}.(11)
பிராமணரின் புறப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 357-சரியான பாதை காட்டியதற்காகத் தமது விருந்தினரை மெச்சிய பிராமணர்; இரவு முழுவதும் தமது விருந்தினருடன் உரையாடி, காலையில் நாகன் இருக்கும் நகரம் நோக்கிப் புறப்பட்டது…
விருந்தளிப்பவர் தம் மறுமொழியாக, “ஆறுதலளிக்கும் உமது இந்த வார்த்தைகளைக் கேட்டு, கனமான சுமையைத் தூக்கிக் கொண்டிருக்கும் ஒருவனது தலையில் இருந்தோ, தோள்களில் இருந்து அந்தச் சுமை எடுக்கப்பட்டால் அவனுக்கு உண்டாகும் அந்த அளவு நிறைவை நானும் அடைகிறேன்.(1)
நான்கு சக்கரங்களில் நீண்ட பயணத்தை மேற்கொண்ட ஒருபயணி, படுக்கையில் கிடக்கும்போது உணர்வதும், இடமில்லாததால் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன், ஓர் இருக்கைக் கிடைக்கும்போது உணர்வதும், அல்லது தாகத்தில் இருக்கும் மனிதன் குளிர்ந்த நீரைக் காணும்போது உணர்வதும், அல்லது பசித்த மனிதன் தன் முன் சுவைமிக்க உணவைக் காணும்போது உணர்வதும்,(2) அல்லது ஒரு விருந்தாளி சரியான நேரத்தில் தன் முன்பு விரும்பத்தக்க உணவு வைக்கப்படும்போது உணர்வதும், அல்லது நீண்ட காலம் ஆசைப்பட்டு ஒரு மகனைப் பெற்ற ஒரு முதிய மனிதன் உணர்வதும், ஒருவன் எவனை நினைத்து அதிகக் கவலைப்படுவானோ அந்த அன்புக்குரிய நண்பனையோ, உறவினனையோ சந்திக்கும்போது உணர்வதுமான நிறைவுக்கு ஒப்பாக உம்மால் சொலப்பட்ட இந்த வார்த்தைகளின் விளைவால் நான் நிறைவடைந்திருக்கிறேன்.(3,4)
மேல்நோக்கிய பார்வை கொண்ட ஒரு மனிதனைப் போல நான், உமது உதடுகளில் இருந்து விழுந்தவற்றைக் கேட்டும், அதன் முக்கியத்துவத்தைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறேன். விவேகமிக்க இந்த வார்த்தைகளால் நீர் உண்மையில் எனக்கு அறிவுரையை வழங்கியிருக்கிறீர்.(5)
ஆம், நீ சொன்னது போலவே நான் செய்யப் போகிறேன். இந்த இரவை என்னோடு மகிழ்வாகக் கழித்து, அத்தகைய ஓய்வின் மூலம் உமது களைப்பை அகற்றிக் கொண்டு நாளை விடியற்காலையில் நீர் செல்லலாம்.(6) தெய்வீகச் சூரியனின் கதிர்கள் மங்கியிருப்பதையும், பகலின் தேவன் கீழ்நோக்கிய பாதையில் செல்வதையும் காண்பீராக” என்றார் {விருந்தளிப்பவர்}”.(7)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகைவர்களைக் கொல்பவனே, அந்தப் பிராமணரால் விருந்தோம்பலுடன் கவனிக்கப்பட்டவரும், கல்விமானுமான அந்த விருந்தாளி, தனக்கு விருந்தளிப்பவரின் துணையுடன் அந்த இரவைக் கழித்தார்.(8)
உண்மையில் அவர்கள் இருவரும் நான்காவது வாழ்வுமுறையான சந்நியாச {துறவுக்} கடமைகள் குறித்து ஒருவருக்கொருவர் உற்சாகமாகப் பேசியபடியே அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். கவரும் வகையிலான அவர்களது உரையாடும் இயல்பினால் அந்த இரவு பகலைப் போலக் கழிந்து சென்றது.(9)
காலை விடிந்ததும், (விருந்தாளியின் உரையாடலின்படி) தமக்கு நன்மையானது எனக் கருதப்பட்டதை நிறைவேற்றும் ஆவல் நிறுவப்பட்ட இதயத்தைக் கொண்ட அந்தப் பிராமணரால் அந்த விருந்தாளி உரிய சடங்குகளுடன் வழிபடப்பட்டார்.(10)
அறவோரான அந்தப் பிராமணர் தமது விருந்தினருக்கு விடைகொடுத்தனுப்பி, தன் நோக்கத்தை அடையத் தீர்மானித்து, தமது உற்றார் உறவினரிடம் விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் முதன்மையான வசிப்பிடத்தில் தம் இதயத்தை உறுதியாக நிலைக்கச் செய்து, சரியான நேரத்தில் அதை நோக்கிப் புறப்பட்டார்” {என்றார் பீஷ்மர்}.(11)
நாகனின் மனைவி! – சாந்திபர்வம் பகுதி – 358-வழிவிசாரித்து நைமிஷவனத்தில் உள்ள நாகப்பட்டணத்தை அடைந்த பிராமணர்; நாகனின் மனைவியைக் கண்டது; நாகன் அங்கில்லாதது; நாகன் வரும் வரை கோமதி ஆற்றங்கரையில் காத்திருந்த பிராமணர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இனிய காடுகள், தடாகங்கள் மற்றும் புனித நீர்நிலைகளைக் கடந்து சென்ற அந்தப் பிராமணர் இறுதியாக ஒரு குறிப்பிட்ட தவசியின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(1)
அங்கே வந்த அவர், தமது விருந்தினரிடம் கேட்ட நாகனைக் குறித்து அவரிடம் {அந்தத் தவசியிடம்} சரியான வார்த்தைகளில் விசாரித்து, அவரது அறிவுறுத்தலின் படி தம் பயணத்தைத் தொடர்ந்தார்.(2)
தமது பயண நோக்கத்திற்கான தெளிவான கருத்துடன் கூடிய அந்தப் பிராமணர், நாகனின் இல்லத்தை அடைந்தார். அதற்குள் முறையாக நுழைந்த அவர், சரியான வார்த்தைகளால் தம்மை அறிவித்தபடியே, “ஹோ, இங்கே இருப்பது யார்? நான் ஒரு பிராமணன் இங்கே விருந்தினனாக வந்திருக்கிறேன்” என்றார்.(3)
பேரழகு படைத்தவளும், கடமைகள் அனைத்தையும் நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவளும், கற்புடையவளுமான அந்த நாகனின் மனைவி இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.(4)
விருந்தோம்பும் கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருக்கும் அவள், முறையான சடங்குகளுடன் விருந்தினரை வழிபட்டு, அவரை வரவேற்று, “நான் உமக்குச் செய்யக்கூடியது என்ன?” என்று கேட்டாள்.(5)
அந்தப் பிராமணர், “ஓ! பெண்ணே, நீ என்னிடம் சொன்ன இனிமையான வார்த்தைகளால் நான் போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டேன். என் பயணத்தால் உண்டான களைப்பும் அகன்றது. ஓ! அருள்நிறைந்த பெண்ணே, நான் சிறப்புமிக்கவனான உன் கணவனைக் காண விரும்புகிறேன்.(6) இதுவே என் உயர்ந்த நோக்கமாகும். இஃது ஒன்றே என் விருப்பத்திற்குரிய பொருளுமாகும். இந்தக் காரணத்திற்காகவே நான் இன்று உன் கணவனான நாகனின் வசிப்பிடத்திற்கு வந்திருக்கிறேன்” என்றார்.(7)
நாகனின் மனைவி, “மதிப்புமிக்க ஐயா, என் கணவர் ஒரு மாத காலம் சூரியனின் தேரை இழுப்பதற்காகச் சென்றிருக்கிறார். ஓ! கல்விமானான பிராமணரே, அவர் பதினைந்து நாட்களில் திரும்பி, உமக்குக் காட்சியளிப்பார்.(8) என் கணவர் இல்லத்தில் இல்லாத காரணத்தை உமக்குச் சொன்னேன். உள்ளபடி இஃது இவ்வாறிருக்கட்டும், நான் உமக்கு வேறென்ன செய்ய வேண்டும்? இதைச் சொல்வீராக” என்றாள்[1].(9)பிராமணர் {நாகனின் மனைவியிடம்}, “ஓ! கற்புடைய பெண்ணே, உன் கணவனைக் காணும் நோக்கத்துடனே நான் இங்கே வந்திருக்கிறேன். ஓ !மதிப்புமிக்க இல்லத்தலைவியே, நான் அருகில் இருக்கும் காட்டில் வசித்தபடியே, அவன் திரும்பி வருவதற்காகக் காத்திருப்பேன்.(10) உன் கணவன் திரும்பியதும், அவனைக் காணும் விருப்பத்தால் தூண்டப்பட்டு நான் இவ்விடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதை அவனிடம் கருணையுடன் சொல்வாயாக. அவன் திரும்பி வந்ததும் அஃதை எனக்குச் சொல்வாயாக.(11) ஓ! அருளப்பட்ட மங்கையே, அது வரை நான் சொற்ப உணவை உண்டு, உன் கணவன் திரும்பி வருவதற்காகக் கோமதியாற்றங்கரையில் காத்திருப்பேன்” என்றார்.(12)
நாகனின் மனைவியிடம் இதை மீண்டும் மீண்டும் சொன்ன அந்த முதன்மையான பிராமணர், அந்த நாகன் திரும்பி வரும் காலம் வரை வசித்திருப்பதற்காகக் கோமதியாற்றங்கரைக்குச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(13)
பிராமணரின் உண்ணாநோன்பு! – சாந்திபர்வம் பகுதி – 359-உணவு உண்ணும்படி பிராமணரிடம் கேட்டுக் கொண்ட நாகர்கள்; நாகர்களின் கோரிக்கையை மறுத்த பிராமணர்..
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நகரத்தைச் சார்ந்த நாகர்கள், தவப்பயிற்சியில் அர்ப்பணிப்பு மிக்க அந்தப் பிராமணர், நாகத்தலைவனின் வரவை எதிர்பார்த்து, உணவை முற்றிலும் துறந்து காட்டில் தொடர்ந்து வசித்து வருவதைக் கண்டு மிகவும் துன்புற்றனர்.(1)
அந்தப் பெரும் நாகனின் சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் மனைவி உள்ளிட்ட உற்றார் உறவினர்கள் ஒன்றாகத் திரண்டு அந்தப் பிராமணர் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.(2)
கோமதி ஆற்றங்கரைக்கு வந்த அவர்கள், அற்புத நோன்புகளை நோற்றபடியே அனைத்துவகை உணவுகளையும் துறந்து, அமைதியாகக் குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு தனிமையான ஓரிடத்தில் அமர்ந்திருந்த அந்த மறுபிறப்பாளரைக் {பிராமணரைக்} கண்டனர்.(3)
அந்தப் பெரும் நாகனின் உற்றார் உறவினர், அந்தப் பிராமணரின் முன்பு வந்து, அவருக்கு உரிய வழிபாட்டைச் செய்து, கள்ளங்கபடற்ற தன்மை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(4) “ஓ! தவச் செல்வத்தைக் கொண்ட பிராமணரே, நீர் இங்கு வந்து ஆறு நாட்கள் ஆகின்றன. ஓ! அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள மறுபிறப்பாளரே, இருப்பினும் உணவுக்கென ஒரு வார்த்தையும் நீர் சொல்லவில்லை.(5) நீர் எங்களிடம் வந்திருக்கிறீர். உம்மைக் கவனிக்க நாங்கள் இருக்கிறோம். உமக்கான விருந்தோம்பல் கடமைகளை நாங்கள் அவசியம் செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும் உமக்குக் காரியம் இருக்கும் அந்த நாகத் தலைவனின் உறவினர்கள் ஆவோம்.(6) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, கிழங்குகள், அல்லது கனிகள், இலைகள், அல்லது நீர், அல்லது அரிசி, அல்லது இறைச்சியை உமது உணவாக உட்கொள்வதே உமக்குத் தகும்.(7) முற்றிலும் உணவைத் தவிர்த்த நிலையில் இந்தக் காட்டில் நீர் வசிப்பதன் விளைவால், இளைஞர்களும், முதியவர்களுமான மொத்த நாகச் சமூகமும் பீடிக்கப்பட்டிருக்கிறது.(8) எங்களில் எவரும் பிராமணக்கொலை என்ற குற்றத்தைச் செய்தவர்களல்ல. எங்களில் எவரும் பிறந்த உடனே மகனை இழந்தவர்களுமல்ல. எங்கள் குலத்தில், தன் வசிப்பிடத்திற்கு வந்த தேவர்கள், அல்லது விருந்தினர்கள் அல்லது உறவினர்கள் உண்பதற்கு முன்னர் எவரும் உண்டதில்லை” என்றனர்.(9)
அந்தப் பிராமணர், “உங்கள் அனைவருடைய வேண்டுகோளின் விளைவால் என் நோன்பு முறிந்ததாகக் கருதப்படலாம். நாகத் தலைவன் திரும்பி வருவதற்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கின்றன.(10) எட்டாம் இரவு கடந்த பின்னும் நாகர்களின் தலைவன் திரும்பி வரவில்லையெனில், உணவை உண்பதன் மூலம் நான் என் நோன்பை முறித்துக் கொள்வேன். நாகத் தலைவனிடம் நான் கொண்ட மதிப்பின் விளைவாலேயே உணவனைத்தையும் துறக்கும் இந்த நோன்பை நோற்கிறேன்.(11) என் செயலுக்காக நீங்கள் வருந்தக்கூடாது. நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள். இஃது அவன் நிமித்தமாகச் செய்யப்படும் நோன்பாகும். என்னுடைய இந்த நோன்பு முறியும் வகையில் எதையும் நீங்கள் செய்யக்கூடாது” என்றார்.(12)
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கூடிவந்த நாகர்கள் அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்டு அவரால் விடைகொடுத்து அனுப்பப்பட்டனர். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அதன் பேரில் அவர்களும் தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” என்றார் {பீஷ்மர்}.(13)
திரும்பி வந்த நாகன்! – சாந்திபர்வம் பகுதி – 360-திரும்பி வந்த நாகன்; அவனது மனைவி அவனைப் பிராமணரிடம் போகச் சொன்னது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முழுமையாகப் பதினைந்து நாள் நிறைவடைந்ததும், சூரியனின் தேரை இழுக்கும் பணியை முடித்து, அவனது {சூரியனின்} அனுமதியைப் பெற்றுக்கொண்டு அந்த நாகத் தலைவன் (பத்மநாபன்) தன் வீட்டுக்குத் திரும்பினான்.(1)
அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது மனைவி, அவனது காலைக் கழுவி விடவும், அதே இயல்பிலான பிற பணிகளைக் கடமையுணர்வுடன் செய்யவும் அவனை அணுகினாள். இந்தப் பணிகளைச் செய்த பிறகு அவள் அவன் அருகில் அமர்ந்தாள். அப்போது களைப்பில் இருந்து புத்துணர்வு அடைந்த நாகன், கடமையுணர்வுமிக்கவளும், கற்புடையவளுமான தன் மனைவியிடம்,(2) “என் அன்பு மனைவி நான் இல்லாதபோது, நான் சொன்னவற்றுக்கு ஏற்புடைய வகையிலும், சாத்திர விதிகளின்படியும் தேவர்களையும், விருந்தினர்களையும் வழிபடுவதைக் கண்டுகொள்ளாமல் இல்லையென நம்புகிறேன்.(3) உன் பாலினத்திற்கு {பெண்களுக்கு} இயல்பான தூய்மையற்ற புத்திக்கு வசப்படாமல், இல்லத்தில் நானில்லாத போது, விருந்தோம்பல் கடமைகளை உறுதியாகப் பின்பற்றியிருப்பாய் என நம்புகிறேன். கடமை மற்றும் அறத்தின் தடைகளை நீ கடக்காமல் இருக்கிறாய் என நம்புகிறேன்” என்றான்.(4)
நாகனின் மனைவி, “சீடர்களின் கடமை, தங்கள் ஆசான் சொல்வதை மதிப்புடன் நிறைவேற்றுவது; பிராமணர்களின் கடமை வேத கல்வியும், அவற்றை நினைவில் கொள்வதும்; பணியாட்களின் கடமை தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது; மன்னனின் கடமை, நல்லோரைப் பாதுகாத்து, தீயோரைத் தண்டித்து மக்களைப் பாதுகாப்பதாகும்.(5) க்ஷத்திரியனின் கடமைகள் தீமையில் இருந்து ஒடுக்குமுறையில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதைத் தழுவியது என்று சொல்லப்படுகிறது.(6) சூத்திரனின் கடமை, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்ற மூன்று மறுபிறப்பாள வகையினரிடம் {வர்க்கத்தினரிடம்} பணிவுடன் தொண்டாற்றுவது. ஓ! நாகர்களின் தலைவரே, ஓர் இல்லறத்தானின் அறம் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதில் அடங்கியிருக்கிறது.(7) சொற்ப உணவை உண்பது, உரிய வகையில் நோன்புகளை நோற்பது ஆகியவை புலன்களுக்கும், அறக்கடமைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பின் விளைவான (அனைத்து வகை {வர்க்க} மக்களின் தகுதியில் {புண்ணியத்தில்} அடங்கியிருக்கிறது.(8)
விடுதலைக்கு வழிவகுக்கும் வாழ்க்கையைப் பின்பற்றுபவன், “நான் யார்? எங்கிருந்து வந்திருக்கிறேன்? பிறக்கு எனக்கு என்னவாக இருக்கிறார்கள்? நான் பிறருக்கு என்னவாக இருக்கிறேன்?” என்ற இந்த நினைவுகளையே தன் மனத்தை எப்போதும் செலுத்த வேண்டும்.(9) கற்புடைமை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியனவே மனைவியின் உயர்ந்த கடமையாக அமைகிறது. ஓ! நாகர்களின் தலைவரே, உமது போதனைகளால் நான் இதை நன்கறிந்திருக்கிறேன்.(10) எனவே, என் கடமையை அறிந்தவளும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் உம்மை என் கணவனாக அடைந்தவளுமான நான் ஏன் கடமையின் பாதையில் இருந்து நழுவி, கீழ்ப்படியாமை மற்றும் பாவத்தின் பாதையில் நடக்கப் போகிறேன்?(11) நீர் இல்லத்தில் இல்லாத போது, எவ்வகையிலும் தேவர்களுக்கான துதி நிற்கவில்லை. சிறு புறக்கணிப்பும் இல்லாமல் உமது வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்களை விருந்தோம்பல் கடமைகளுடன் நான் கவனித்துக் கொண்டேன்.(12)
பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு பிராமணர் இங்கே வந்தார். அவர் தமது நோக்கத்தை என்னிடம் வெளிப்படுத்தவில்லை. அவர் உம்மைச் சந்திக்க விரும்பினார்.(13) கோமதி ஆற்றங்கரையில் உம் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து வசித்து வருகிறார். கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பிராமணர், பிரம்மத்தைச் சொல்வதில் ஈடுபட்டபடியே அங்கே அமர்ந்திருக்கிறார்.(14) ஓ! நாகர்களின் தலைவரே, நீர் உமது வசிப்பிடத்திற்குத் திரும்பிய உடனேயே உம்மை அங்கு அனுப்பி வைப்பதாக அவருக்கு உறுதியளித்திருக்கிறேன்.(15) ஓ! நாகர்களில் சிறந்தவரே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு அங்கே செல்வதே உமக்குத் தகும். ஓ! கண்களால் கேட்பவரே, அந்த மறுபிறப்பாளரை இங்கே கொண்டு வந்த அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்” என்றாள் {நாகனின் மனைவி}[1].(16)
கோபமடைந்த நாகன்! – சாந்திபர்வம் பகுதி – 361-மனிதன் நாகனை அழைப்பதா என மனைவியிடம் கோபித்துக் கொண்ட நாகன்; தன் கணவனை அமைதிப்படுத்தி பிராமணரிடம் செல்லச் சொன்ன அவனது மனைவி…
நாகன் {பத்மநாபன் தன் மனைவியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, அந்தப் பிராமணன் யாரென நினைக்கிறாய்? அவர் உண்மையில் மனிதன்தானா? அல்லது பிராமணரின் வடிவில் வந்த தேவனா?(1) ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நோக்கத்திற்குத் தக்க என்னைக் காணவிரும்பும் மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? என்னைக் காண விரும்பும் மனிதனால், அவன் வசிக்கும் இடத்திற்கு வந்து தன்னைப் பார்க்குமாறு இவ்வாறு எனக்கு ஆணையிடமுடியுமா?(2) ஓ! இனிய பெண்ணே, தேவர்கள், அசுரர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்கு மத்தியில் நாகர்கள் பெருஞ்சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் சிறந்த நறுமணத்தையும் கொண்டிருக்கிறார்கள்.(3) அவர்கள் {மனிதர்களால்} வழிபடத்தக்கவர்கள். அவர்கள் வரம் அருளவல்லவர்கள். உண்மையில், நாமும் பிறரால் பின்பற்றப்படத் தகுந்தவர்கள். ஓ! பெண்ணே, நாம் மனிதர்களால் காண இயலாதவர்களாக இருக்கிறோம்” என்றான்.(4)
அந்த நாகத்தலைவனின் {பத்மநாபனின்} மனைவி, “அந்தப் பிராமணரின் எளிமை மற்றும் கவர்ச்சியில் இருந்து, அவர் காற்றில் வாழும் எந்தத் தேவனும் அல்ல என அறிகிறேன். ஓ! பெருங்கோபம் கொண்டவரே, அவர் தம் முழு இதயத்துடன் உம்மை மதிக்கிறார் என்பதையும் நான் அறிவேன்.(5) உமது துணையைக் கொண்டு நிறைவேற வேண்டிய நோக்கம் ஏதோ அவரது இதயத்தில் நிலைத்திருக்கிறது. மழையை விரும்புவதும், சாதகம் என்றழைக்கப்படுவதுமான பறவை, (தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக) மழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதைப் போலவே, உம்மைச் சந்திப்பதற்காக அந்தப் பிராமணரும் காத்துக் கொண்டிருக்கிறார்.(6) உம்மைக் காண இயலாமையின் விளைவால் பேரிடர் அவரை அணுகாதிருக்கட்டும். உம்மைப் போன்ற மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்த எந்த மனிதனும், வீட்டிற்கு வந்த விருந்தினரைப் புறக்கணிப்பதன் மூலம் மதிப்புடன் நீடித்திருக்க முடியாது.(7)
உமக்கு இயல்பான கோபத்தைக் கைவிட்டு அந்தப் பிராமணரைக் காணச் செல்வதே உமக்குத் தகும். அந்தப் பிராமணரை ஏமாற்றுவதன் மூலம் தாழ்மையை அடைவது உமக்குத் தகாது.(8) துயர் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வந்த மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க மறுக்கும் மன்னன் அல்லது இளவரசன் கருவைக் கொன்ற குற்றத்தை இழைத்தவனாவான். பேச்சைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் ஞானத்தை அடைகிறான்.(9) கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்புகழை அடைகிறான். பேச்சியில் வாய்மையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் நாநலமென்ற கொடையை அடைந்து, சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான்.(10) நிலத்தைக் கொடையளிப்பதால் ஒருவன் புனித வாழ்வு முறையைப் பின்பற்றும் முனிவர்களுக்கு விதிக்கப்படும் உயர்ந்த கதியை அடைகிறான். அறவழிகளின் மூலம் செல்வம் ஈட்டுவதால் ஒருவன் விரும்பத்தக்க பல கனிகளை அடைகிறான்.(11) தனக்கான நன்மையை முழுமையாகச் செய்வதால் ஒருவன் நரகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கிறார். அறவோர் இதையே சொல்கின்றனர்” என்றாள்.(12)
நாகன், “செருக்கால் நான் ஆணவமேதும் அடையவில்லை. எனினும், என் பிறப்பின் விளைவால் ஓரளவு ஆணவம் என்னால் கருதத்தக்கதே. ஓ! அருளப்பட்ட பெண்ணே, என்னிடம் ஆசையில் பிறக்கும் கோபமேதும் கிடையாது. அவை அனைத்தும் உன் சிறந்த போதனைகளெனும் நெருப்பால் எரிக்கப்பட்டன.(13) ஓ அருளப்பட்ட இல்லத் தலைவியே, கோபத்தை விட அடர்ந்த இருள் எதனையும் நான் காணவில்லை. எனினும், நாகர்கள் கொண்டிருக்கும் மிகுந்த கோபத்தின் விளைவால், அவர்கள் மனிதர்கள் அனைவராலும் நிந்திக்கப்படும் பொருட்களாகின்றனர்.(14)
பேராற்றலைக் கொண்டவனான பத்து தலை இராவணன், கோபத்தின் ஆதிக்கத்திற்கு வீழ்ந்து இந்திரனின் பகைவனாகி, அந்தக் காரணத்தினாலேயே போரில் இராமனால் கொல்லப்பட்டான்.(15) பிருகு குல முனிவர் இராமர் {பரசுராமர்}, தமது தந்தையின் ஹோமப்பசுவுடைய கன்றைக் கொண்டு வருவதற்காகத் தங்கள் அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்ததைக் கேட்ட கார்த்தவீரியனின் மகன்கள், இவ்வாறு தங்கள் அரசக்குடிலில் நுழைந்ததை அவமதிப்பாகக் கருதி கோபவசப்பட்டதால், இராமரின் கரங்களில் அழிவை அடைந்தனர்.(16) உண்மையில் பெரும்பலத்தைக் கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனுக்கு ஒப்பானவனவனுமான கார்த்தவீரியன் கோபவசப்பட்டதால் ஜமதக்னி குலத்தின் இராமரால் போரில் கொல்லப்பட்டான்.(17)
ஓ! இனிய பெண்ணே, உண்மையில் தவங்களுக்குப் பகையும், எனக்கான நன்மை அனைத்தையும் அழிப்பதுமான என் கோபத்தை உன் வார்த்தைகளால் கட்டுப்படுத்திக் கொண்டேன்.(18) அனைத்து அறங்களையும், தீராத தகுதிகளையும் {புண்ணியங்களையும்} கொண்ட உன்னை என் மனைவியாக அடைந்த நற்பேற்றினால் என்னை நானே பெரிதாகப் புகழ்ந்து கொள்கிறேன்.(19) நான் இப்போது அந்தப் பிராமணர் இருக்கும் இடத்திற்குச் செல்லப் போகிறேன். நிச்சயம் நான் அந்தப் பிராமணரிடம் முறையான வார்த்தைகளைப் பேசுவேன். அவர் நிச்சயம் தமது விருப்பங்கள் நிறைவேறியே இங்கிருந்து செல்வார்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(20)
தர்மாரண்யர்! – சாந்திபர்வம் பகுதி – 362-பிராமணரைக் கண்ட நாகன்; பிராமணர் தன் பெயரைச் சொல்லி தன் விருப்பத்தையும் சொன்னது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நாகர்களின் தலைவன் {பத்மநாபன்} தன் அன்புக்குரிய மனைவியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்தப் பிராமணர் தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்திற்குச் சென்றான். அவ்வாறு செல்லும் போதே அந்தப் பிராமணரைக் குறித்துச் சிந்தித்த அவன், அவர் நாக நகரத்திற்கு வந்த காரணம் எது என ஆச்சரியமடைந்தான்.(1) ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முதன்மையான நாகன், தன்னுடைய இயல்பான அற அர்ப்பணிப்பால் அவர் முன்பு சென்று, தன் விருந்தாளியான அவரிடம் இனிய வார்த்தைகளில்,(2) “ஓ! பிராமணரே, கோபவசப்படாதீர். நான் உம்மிடம் அமைதியாகப் பேசுகிறேன். கோபம் கொள்ளாதீர். யாரை எதிர்பார்த்து நீர் இங்கு வந்தீர்? உமது நோக்கம் என்ன?(3) கோமதி ஆற்றங்கரையின் இந்தத் தனிமையான இடத்தில் நீர் யாரைத் துதித்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(4)
அந்தப் பிராமணர் {நாகன் பத்மநாபனிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, என் பெயர் தர்மாரண்யன் என்றும், நான் நாகன் பத்மநாபனைக் காண இங்கே வந்திருக்கிறேன் என்றும் அறிவாயாக. அவனிடம் எனக்கு ஒரு காரியம் இருக்கிறது.(5) அவன் இப்போது இல்லத்தில் இல்லை எனக் கேள்விப்பட்டேன். எனவே, இப்போது நான் அவன் அருகில் இல்லை. மேகங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாதகப் பறவையைப் போல எனக்கு அன்பானவனாக நான் கருதும் ஒருவனுக்காக நான் காத்திருக்கிறேன்.(6) அவனுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் களையவும், அவனுக்கு நன்மையைக் கொண்டுவரவும், அவன் வரும் வரை வேதங்களை உரைப்பதில் ஈடுபட்டு, யோகத்தில் மகிழ்ச்சியாக என் நேரத்தைக் கடத்தி வருகிறேன்” என்றார் {தர்மாரண்யர்}.(7)
நாகன், “உண்மையில் உமது ஒழுக்கம் மிக நல்லதாக இருக்கிறது. பக்திமானான நீர், அறவோர் அனைவருக்கும் நன்மை செய்வதில் அர்ப்பணிப்புள்ளவராக இருக்கிறீர். ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணரே, உமக்கு எல்லாப் புகழும் உண்டாகட்டும். நீர் அந்த நாகனைக் கருணைக் கண்களுடன் காண்கிறீர்.(8) ஓ! கல்விமானான முனிவரே, நீர் தேடும் அந்த நாகன் நானே. உமக்கு ஏற்புடைய எந்தக் காரியத்தை நான் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆணையிடுவீராக.(9) ஓ! மறுபிறப்பாளரே, நீர் இங்கிருக்கிறீர் என்பதை என் மனைவியிடம் இருந்து அறிந்து, உம்மைக் காண்பதற்காக நான் இவ்விடம் வந்திருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, எந்தப் பணியையும் நம்பிக்கையுடன் எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்.(11) உமது நன்மையை அலட்சியம் செய்து, எங்கள் நன்மை நாடுவதில் உமது நேரத்தை ஈடுபடுத்தும் உமது தகுதிகளால் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கிவிட்டீர்” என்றான்.(12)
அந்தப் பிராமணர் {தர்மாரண்யர்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட நாகா, உன்னைக் காணும் விருப்பத்தால் உந்தப்பட்டே நான் இங்கே வந்தேன். ஓ! பாம்பே, அனைத்திலும் அறியாமையைக் கொண்டிருக்கும் நான் உன்னிடம் ஒன்றைக் கேட்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.(13) ஆன்மாவைச் சார்ந்திருக்கும் நான், ஜீவாத்மாவின் கதியான பரமாத்மாவை அடைய விரும்புகிறேன். நான் இவ்வுலகத்தில் மீது பற்றுடனோ, அதனுடன் தொடர்பறுத்துக் கொண்டோ இல்லை.(14) நீ சந்திரனைப் போன்ற ஏற்புடைய {இனிமையான} பிரகாசத்துடனும், தூய புகழில் மறைக்கப்படும் தகுதிகளின் பிரகாசத்திலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்.(15) ஓ! காற்றை மட்டுமே உண்டு வாழ்பவனே, நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு முதலில் பதிலளிப்பாயாக. அதன்பிறகு, என்னை இங்கே கொண்டு வந்த நோக்கத்தைக் குறித்து உனக்குச் சொல்கிறேன்” என்றார் {தர்மாரண்யர்}.(16)
சூரிய அற்புதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 363-சூரியனிலுள்ள அதிசயங்களை தர்மாரண்யர் என்ற பிராமணருக்குச் சொன்ன நாகன் பத்மநாபன்..
பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, “ஒரே சக்கரமுடைய விவஸ்வானின் தேரை உன் முறைப்படி இழுக்கச் சென்று வந்தாய். நீ பயணம் செய்த உலகங்களில் ஆச்சரிக்கரமாக நீ கவனித்த எதையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்” என்றார்.(1)
அந்த நாகன் {தர்மாரண்யரிடம்}, “தெய்வீகமான சூரியனே எண்ணற்ற ஆச்சரியங்களின் இல்லமாகவும், புகலிடமாகவும் இருக்கிறான். மூவுலகங்களில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் சூரியனில் இருந்து உண்டானவையே.(2) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான எண்ணற்ற முனிவர்களும், தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மரக்கிளைகளில் அமரும் பறவைகளைப் போலச் சூரியனின் கதிர்களிலேயே வசிக்கின்றனர்.(3)
சூரியனில் இருந்து வெளிப்படும் பெருங்காற்றானது {வாயுவானது}, அதன் {சூரியனின்} கதிர்களையே புகலிடமாகக் கொண்டு, அங்கிருந்து அண்டத்தைக் கண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட அதிக ஆச்சரியம் தரத்தக்கது வேறு எது?(4) ஓ! மறுபிறப்பாள முனிவரே {தர்மாரண்யரே}, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தில் காற்றை {வாயுவை} பல பகுதிகளாகப் பிரிக்கும் சூரியன், அதை மழைக்காலங்களில் பொழியும் மழையாகச் செய்வதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(5) சூரிய வட்டிலுக்குள் இருக்கும் பரமாத்மா, சுடர்மிக்கப் பிரகாசத்தில் குளித்தபடியே அண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(6) சூரியனின் கருங்கதிர்கள் {சுக்கிரன் எனும் கோளின் சக்தி} மழை நிறைந்த மேகங்களாகி, பருவகாலத்தில் மழையாகப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(7) தான் பொழியும் மழையை எட்டு மாதங்கள் பருகியிருந்து, மழைக்காலங்களில் மீண்டும் அதைப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(8)
சூரியனின் குறிப்பட்ட கதிர்களில் அண்டத்தின் ஆன்மா வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவனிலேயே அனைத்துப் பொருட்களின் வித்துகளும் இருக்கின்றன. அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய பூமியைத் தாங்குபவன் அவனே {சூரியனே}.(9) ஓ! பிராமணரே, புருஷர்களில் முதன்மையானவனும், பெரும் பிரகாசத்தைக் கொண்டவனும், நித்தியமானவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமானா முதன்மையான புருஷன் சூரியனில் வசிக்கிறான் என்பதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(10) எனினும், நான் இப்போது சொல்லப் போவதைக் கேட்பீராக. இஃது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதாகும். சூரியனுக்கு அருகிலேயே இருந்ததால் தெளிந்த வானில் நான் இதைக் கண்டேன்.(11)
பழங்காலத்தில் ஒரு நாள் நடுப்பகலில் சூரியன் மகிமையுடன் ஒளிர்ந்து அனைத்திற்கும் வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, சூரியனின் பிரகாசத்திற்கு இணையாக ஒளிர்வதாகத் தெரிந்த ஒருவன் சூரியனை நோக்கி வந்தான்.(12) நான் ஏற்கனவே சொன்னது போலத் தன் சக்தியால் உலகங்கள் அனைத்தையும் தன் மகிமையால் சுடர்விடும்படியும், தன் சக்தியால் நிறையும்படியும் ஆகாயத்தைப் பிளந்து அதனுடாகத் தனக்கான பாதையை உண்டாகிக் கொள்பவனைப் போல அவன் வந்தான்.(13) அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட கதிர்கள், வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதியின் சுடர்மிக்கப் பிரகாசத்துக்கு ஒப்பாகத் தெரிந்தது. தன் சக்தியாலும், காந்தியாலும் அவன் பார்க்கப்பட முடியாதவனாக இருந்தான். அவனுடைய வடிவம் விளக்கப்பட முடியாததாக இருந்தது. உண்மையில் அவன் இரண்டாம் சூரியனைப் போலவே இருந்தான்.(14)
அவன் அருகே வந்ததும், சூரியன் (மதிப்புமிக்க வரவேற்பைக் கொடுக்கும் வகையில்) தன் கரங்கள் இரண்டையும் விரித்தான். பதிலுக்குச் சூரியனைக் கௌரவிக்கும் வகையில் அவனும் தன் வலக்கரத்தை நீட்டினான்.(15) பிறகு அவன், ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு, சூரியனின் வட்டிலுக்குள் நுழைந்தான். சூரியனின் சக்திக்குள் கலந்த அவன், சூரியனாகவே மாறிவிட்டதாகத் தெரிந்தது.(16) இவ்வாறு அவ்விரு சக்திகளும் சந்தித்துக் கொண்டபோது, எது எதுவாக இருக்கிறது என்பதில் நாங்கள் குழப்பமடைந்தோம். உண்மையில், நாங்கள் தேரில் சுமந்த சூரியன் யார், வானத்தின் ஊடாக வந்தவன் யார் என்பதை அடையாளங்காண்பதில் நாங்கள் தவறினோம்.(17) குழப்பமடைந்த நாங்கள் சூரியனிடம், “ஓ! சிறப்புமிக்கவனே, உன்னில் கலந்தவனும், இரண்டாமவனாக உன்னைப் போல மாறியவனும் யார்?” என்று கேட்டோம்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(18)
உஞ்ச விருத்தி! – சாந்திபர்வம் பகுதி – 364-தன்னுள் நுழைந்த ஒளியின் வரலாற்றைச் சொன்ன சூரியன்…
சூரியன் {நாகன் பத்மநாபனிடம்}, “இவன் அக்னி தேவனல்ல, இவன் அசுரனல்ல. இவன் நாகனுமல்ல. உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கப்படும் நோன்பை நோற்பதில் வெற்றி மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால், சொர்க்கத்தை அடைந்த பிராமணன் இவன்[1].(1)இந்த மனிதன், மரத்தில் இருந்து விழுந்த பழங்கள், கிழங்குகள் மற்றும் இலைகளை உண்டு வாழ்ந்து வந்தான். சில வேளைகளில் இவன் நீரையும், சில வேளைகளில் காற்றை மட்டுமே உண்டும் குவிந்த ஆன்மாவோடு தன் நாட்களைக் கடத்தி வந்தான்.(2)
இவன் தொடர்ந்து உரைத்த சம்ஹிதைகளால் தேவன் மஹாதேவன் இவனிடம் நிறைவடைந்தான். இவன் சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் செயல்கள் நிறைவேற்றுவதில் முயற்சி செய்து வந்தான். அந்தச் செயல்களின் தகுதியாலேயே இவன் இப்போது சொர்க்கத்தை அடைந்திருக்கிறான்.(3)
செல்வம் இல்லாமல், எவ்வகை ஆசையும் இல்லாமல் இருக்கும் இவன், தன் வாழ்வாதாரக் காரியத்தில் உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கும் நோன்பை நோற்று வந்தான். நாகர்களே, கல்விமானான இந்தப் பிராமணன், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தான்.(4), {என்றான் சூரியன்}.
{நாகன் தர்மாரண்யரிடம்}, “சூரிய வட்டிலுக்கு வரும் இந்தச் சிறந்த கதியை அடையும் உயிரினங்களைவிடத் தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, நாகர்களோ மேன்மையானவர்கள் கிடையாது. ஓ! மறுபிறப்பாளரே {தர்மாரண்யரே}, அந்தச் சந்தர்ப்பத்தில் நான் கண்ட அற்புத நிகழ்வு இதுவே.(5)
ஓ! மறுபிறப்பாளரே, உஞ்ச நோன்பை நோற்றதால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்படும் மனிதர்களால் அடையப்படும் கதியை அடைந்தவருமான அந்தப் பிராமணர், இந்த நாள் வரை சூரிய வட்டிலிலேயே தங்கி இருக்கிறார்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(6)
விடைபெற்றுக்கொண்ட பிராமணர்! – சாந்திபர்வம் பகுதி – 365- தாம் வந்த நோக்கத்திற்கான விடையை நாகனின் பதில் இருந்து அடைந்த பிராமணர்; பத்மநாபனிடம் விடைபெற்றுச் சென்ற தர்மாரண்யர்…
பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, “ஓ! நாகா, உண்மையில் இது மிகுந்த அற்புதம் நிறைந்ததாகும். நீ சொன்னதைக் கேட்டதால் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். நுட்பமான பொருள் நிறைந்த உன் வார்த்தைகள், நான் பின்பற்ற வேண்டிய வழியை எனக்குக் காட்டுகின்றன.(1) ஓ !நாகர்களில் சிறந்தவனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். என்னைக் குறித்து விசாரிக்க உன் பணியாட்களை அனுப்பி, இப்போதும், எப்போதும் என்னை நீ நினைவுகூற வேண்டும்” என்றார்[1].(2)நாகன் {பத்மநாபன்}, “உம்மை இங்கே கொண்டு வந்த நோக்கம் இன்னும் உமது நெஞ்சில் இருக்கிறது. நீர் இன்னும் எனக்கு அதை வெளிப்படுத்தவில்லை. பிறகு நீர் எங்கே செல்லப் போகிறீர்? ஓ! மறுபிறப்பாளரே {தர்மாரண்யரே}, என்னால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும், உம்மை இங்கே கொண்டு வந்த நோக்கத்தையும் எனக்குச் சொல்வீராக.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது காரியம் என்னவாக இருந்தாலும், அதை நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னை வணங்கி, வாக்கால் அதை வெளிப்படுத்தியோ, வெளிப்படுத்தாமலோ, என்னால் விடைகொடுக்கப்பட்டு, உற்சாகம் நிறைந்தவராக நீர் செல்லலாம்.(4) நீர் என்னிடம் நட்பைக் கொண்டிருக்கிறீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, இந்த மரநிழலில் அமர்ந்திருக்கும் உம்மை நான் காண மட்டுமே செய்திருக்கிறேன், இந்நிலையில் நீர் செல்வது உமக்குத் தகாது.(4) நீர் எனக்கு அன்புக்குரியவராகவும், நான் உமக்கு அன்புக்குரியவனாகவும் ஆகிவிட்டோம் என்பதில் ஐயமில்லை. இந்த நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் உம்முடையவர்களேயாவர். ஓ! பாவமற்றவரே, என் இல்லத்தில் சில காலத்தைக் கழிப்பதில் உமக்குத் தடையென்ன இருக்கிறது?” என்று கேட்டான்.(6)
அந்தப் பிராமணர் {தர்மாரண்யர் பத்மநாபனிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! ஆன்ம ஞானத்தை அடைந்த நாகா, இஃது இவ்வாறே இருக்கிறது. தேவர்கள் எவ்வகையிலும் உனக்கு மேன்மையானவர்களாக இல்லை என்பது உண்மையே.(7) நீயாக இருப்பவன் நானே, நானாக இருப்பவன் உண்மையில் நீயே. நானும், நீயும், பிற உயிரினங்கள் அனைத்தும், பரமாத்மாவுக்குள் நுழைய வேண்டியவர்களே.(8) ஓ! நாகர்களின் தலைவா, அறம் அல்லது தகுதியை வென்றெடுக்கும் சிறந்த வழிமுறைகளுக்கான காரியத்தில் என் மனத்தில் ஓர் ஐயம் ஊடுருவியிருக்கிறது. உன்னிடம் இருந்து உஞ்ச நோன்பைக் குறித்து அறிந்ததால், உன் சொற்பொழிவின் மூலம் அந்த ஐயம் விலகப்பெற்றேன்.(9) எனவே, நன்மையான விளைவுகளைக் கொடுக்கும் காரியத்தில் மிகவும் திறன்மிக்கதான அந்த நோன்பை இதுமுதல் நான் பின்பற்றப் போகிறேன். ஓ! அருளப்பட்டவனே, சிறந்த காரணங்களின் அடிப்படையிலான இந்த நிச்சயத் தீர்மானத்தை நான் இப்போது அடைந்திருக்கிறேன். நான் உன்னிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். உனக்கு ஆசிகள். ஓ! நாகா, என் நோக்கம் நிறைவடைந்தது” என்றார் {தர்மாரண்யர்}”.(10)
நாகப் பிராமண வரலாறு! – சாந்திபர்வம் பகுதி – 366-தர்மாரண்யருக்கும் நாகன் பத்மநாபனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் உலகில் வரலாறான கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இவ்வழியில் அந்த முதன்மையான நாகனை வணங்கிய (தர்மாரண்யர் என்ற பெயரைக் கொண்ட) அந்தப் பிராமணர், உஞ்ச வகை வாழ்வுமுறையைப் பின்பற்றுவதில் உறுதியான தீர்மானதைத அடைந்து, அந்த நோன்பை முறையாகக் கற்கவும், தொடங்கவும் பிருகு குலத்தின் சியவனரிடம் சென்றார்.(1)
சியவனர் அந்தப் பிராமணருக்கான சம்ஸ்கார சடங்குகளைச் செய்து, முறையாக அவரது உஞ்ச வகை வாழ்வுமுறையைத் தொடங்கி வைத்தார். ஓ !ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தப் பிருகுவின் மகனே இந்த வரலாற்றை மன்னன் ஜனகனின் அரண்மனையில் உரைத்தார். மன்னன் ஜனகனும் பதிலுக்கு உயர் ஆன்மாவைக் கொண்ட தெய்வீக முனிவரான நாரதருக்கு இதைச் சொன்னான்.(2,3)
களங்கமற்ற செயல்களைக் கொண்டவரான முனிவர் நாரதரும் ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்று, இந்த வரலாறு கேட்கப்பட்ட போது இதை இந்திரனுக்குச் சொன்னார்.(4) நாரதரிடம் இருந்து இவ்வாறு இஃதை அடைந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, ஓ! ஏகாதிபதி, பிராமணர்களில் முதன்மையானோர் அனைவரும் அடங்கிய ஒரு கூட்டத்தில் இந்த அருளப்பட்ட வரலாற்றைச் சொன்னான்.(5)
ஓ! மன்னா, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்} நான் பிருகு குலத்தின் ராமருடன் {பரசுராமருடன்} பயங்கரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, தெய்வீக வசுக்கள் இந்த வரலாற்றை எனக்குச் சொன்னார்கள்.(6)
ஓ! அறவோரில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உன்னால் கேட்கப்பட்ட நான் பெருந்தகுதி நிறைந்ததும், புனிதமானதும், சிறந்ததுமான இந்த வரலாற்றை உனக்குச் சொன்னேன்.(7)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த கடமை எது என்று நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்விக்கான என் பதில் இந்த வரலாறே ஆகும். ஓ! ஏகாதிபதி, எந்தக் கனியையும் எதிர்பாராமல் இவ்வழியில் உஞ்ச நோன்பைப் பின்பற்றி அவர் {தர்மாரண்யர் நிச்சயம்} துணிவுமிக்க மனிதரே.(8) நாகர்களின் தலைவனால் {பத்மநாபனால்} தமது கடமை குறித்துக் கற்பிக்கப்பட்ட அந்தப் பிராமணர், உறுதியான தீர்மானத்தை அடைந்து, யமம் மற்றும் நியமம் என்ற நடைமுறைகளைப் பின்பற்றி, மற்றொரு காட்டிற்குச் சென்று, உஞ்ச நோன்பில் அனுமதிக்கப்பட்ட வகையிலான உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார்” என்றார் {பீஷ்மர்}.(8)
மோக்ஷதர்மம் உபபர்வம் முற்றும்
சாந்தி பர்வம் முற்றிற்று*
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply