இந்திரன் விருத்திராசுரன் போர்! – சாந்திபர்வம் பகுதி – 281-இந்திரனுக்கும், விருத்தாசுரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அளவிலா சக்தி கொண்டவனும், ஒப்பிலா அறிவைக் கொண்டவனும், விஷ்ணுவிடம் பெரும் பக்தி கொண்டவனுமான விருத்திரன் அறத்தின் பால் கொண்டிருந்த விருப்பம் மிகப் பெரியதாகும்.(1) அளவிலா சக்தியைக் கொண்ட விஷ்ணுவால் நிரப்பப்படும் இடத்தைப் புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருக்கிறது. ஓ! மன்னர்களில் புலியே, அஃதை (அசுரனான) விருத்திரனால் எவ்வாறு (இவ்வளவு நன்றாகப்) புரிந்து கொள்ள முடிந்தது?(2) நீர் விருத்திரனின் செயல்களைக் குறித்துப் பேசினீர். நானும் முழு நம்பிக்கையுடன் உம்மைக் கேட்டேன். எனினும், (உமது பேச்சில்) ஒரு காரியம் அறிவுக்குப் பொருத்தமாக எனக்குத் தெரியாததால் (எனவே, அதற்கான விளக்கம் தேவைப் படுவதால்), உம்மைக் கேள்வி கேட்கும் ஆவல் எனக்கு வளர்ந்திருக்கிறது[1].(3)ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, அறவோனும், விஷ்ணுவிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும் {விஷ்ணு பக்தனும்}, உபநிஷத்துகள் மற்றும் வேதாந்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதால் கிட்டும் உண்மை அறிவைக் கொண்டவனுமான விருத்திரன், எவ்வாறு இந்திரனால் வீழ்த்தப்பட்டான்?(4) ஓ! பாரதர்களின் தலைவரே, இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக. உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, எவ்வாறு விருத்திரன் சக்ரனால் {இந்திரனால்} வெல்லப்பட்டான் என்பதை எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, (தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரர்களில் முதன்மையானவனுக்கும் {விருத்திரனுக்கும்} இடையில் நடந்த) அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. அதைக் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்காலத்தில், தெய்வீகப் படைகளின் துணையுடன் தன் தேரில் சென்ற இந்திரன், தன் முன்னே ஒரு மலையைப் போல நின்று கொண்டிருந்த அசுரன் விருத்திரனைக் கண்டான்.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அவன் {விருத்திரன்} முழுமையாக ஐந்நூறு யோஜனைகள் உயரத்தையும், முந்நூறு யோஜனைகள் சுற்றளவையும் கொண்டிருந்தான்.(8) மூவுலகங்கள் ஒன்றுசேர்ந்தாலும் வெல்லப்படமுடியாத விருத்திரனின் அவ்வடிவத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் ஊடுருவப்பட்டு முழுக் கவலை அடைந்தனர்.(9) உண்மையில், ஓ! மன்னா, தன் எதிராளியின் மிகப் பெரும் வடிவைத் திடீரெனக் கண்ட இந்திரனின், அடிமுனைகள் {கால்கள்} வாதத்தால் பீடிக்கப்பட்டன[2].(10) பிறகு, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போர் தொடங்கியதும், இருபுறங்களில் இருந்தும் பேரொலி எழுந்தது, பேரிகைகளும், பிற இசைக்கருவிகளும் முழங்கின.(11) ஓ! குருகுலத்தவனே, தன்னெதிரே சக்ரனை {இந்திரனைக்} கண்ட விருத்திரன், அச்சத்தை உணரவுமில்லை, போருக்காகத் தன் சக்திகள் அனைத்தையும் திரட்டும் மனநிலையிலும் இல்லை.(12)அப்போது, மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், உயர் ஆன்மாவான விருத்திரனுக்கும் இடையில் போர் தொடங்கியது.(13) இருபுறத்தில உள்ள போராளிகளின் வாள்கள், போர்க்கோடரிகள் {பட்டஸங்கள்}, சூலங்கள், வேல்கள், தோமரங்கள், கனத்த கதாயுதங்கள், பல்வேறு அளவுகளிலான கற்பாறைகள், உரத்த நாணொலி கொண்ட விற்கள், பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்கள், நெருப்புகள், எரிகொள்ளிகள் ஆகியவற்றால் மொத்த ஆகாயமும் மறைக்கப்பட்டது.(14,15) பெரும்பாட்டனை {பிரம்மனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் அனைவரும் அப்போரைக் காண அங்கே வந்தனர்,(16) ஓ! பாரதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, சித்தர்களும், அப்சரஸ்களுடன் கூடிய கந்தர்வர்களும், தங்கள் முதன்மையான அழகிய தேர்களில் (அதே காரியத்திற்காக {போரைக் காண்பதற்காக})அங்கே வந்தனர்.(17)
அப்போது, அறவோரில் முதன்மையான விருத்திரன், ஆகாயத்தையும், தேவர்களின் தலைவனையும் அடர்த்தியான பாறைகளின் மழையால் வேகமாக மறைத்தான்.(18) இதனால் சினத்தில் நிறைந்த தேவர்கள், அப்போரில் விருத்திரனால் பொழியப்பட்ட அடர்த்தியான பாறைகளின் மழையைத் தங்கள் கணைகளின் மழையால் விலக்கினர்.(19) பிறகு, ஓ! குருக்களில் புலியே {யுதிஷ்டிரனே}, வலிமை மற்றும் பலத்தைக் கொண்டவனும், பெரும் மாயாசக்திகளைக் கொண்டவனுமான விருத்திரன், தன் மாயாசக்திகளின் துணையோடு மட்டுமே போரிடுவதன் மூலம் தேவர்களின் தலைவனைத் திகைக்கச் செய்தான்.(20) நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, இவ்வாறு விருத்திரனால் பீடிக்கப்பட்டு மலைப்படைந்த போது {மயங்கிய போது}, தவசி வசிஷ்டர் சாமங்களைச் சொல்லி அவனது புலன்களை மீண்டெழச் செய்தார் {அவனது மயக்கத்தைத் தெளிவித்தார்}[3].(21)வசிஷ்டர் {இந்திரனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஓ! தைத்தியர்கள் மற்றும் அசுரர்களைக் கொல்பவனே, தேவர்களில் முதன்மையானவன் நீயே. மூவுலகங்களின் பலம் உன்னில் இருக்கிறது. ஓ! சக்ரா, பிறகு ஏன் நீ இவ்வாறு சோர்வடைகிறாய்?(22) பிரம்மன், விஷ்ணு, அண்டத்தின் தலைவனான சிவன், சிறப்புமிக்கவனும், தெய்வீகமானவனுமான சோமன், உயர்ந்த முனிவர்கள் அனைவரும் (உன்னைப் பார்த்தபடியே) அதோ நிற்கின்றனர்.(23) ஓ! சக்ரா, சாதாரண மனிதனைப் போல நீ பலவீனத்திற்கு வசப்படாதே. ஓ தேவர்களின் தலைவா, போரில் உறுதியான தீர்மானத்துடன் உன் எதிரிகளைக் கொல்வாயாக.(24) உலகங்கள் அனைத்திற்கும் குருவும், உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனுமான முக்கண்ணன் (சிவன்) அதோ உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓ! தேவர்களின் தலைவா, இந்த உன் மயக்கத்தைக் கைவிடுவாயாக.(25) பிருஹஸ்பதியால் தலைமைதாங்கப்பட்ட மறுபிறப்பாள முனிவர்கள், உனது வெற்றிக்காக தெய்வீகப் பாடல்களால் அதோ உன்னைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார் {வசிஷ்டர்}”.(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெருஞ்சக்தி கொண்ட வாசவன் {இந்திரன்}, உயர் ஆன்ம வசிஷ்டரால் இவ்வாறு நனவுநிலை மீண்ட போது, அவனது பலம் பெரிதும் அதிகரித்திருந்தது.(27) அப்போது பகனைத் தண்டிக்கும் அந்தச் சிறப்புமிக்கவன், தன் நுண்ணறிவைச் சார்ந்து, உயர் யோகத்தின் துணையுடன் விருத்திரனின் மாயைகளை அகற்றினான்.(28) பிறகு அங்கிரஸின் மகனான பிருஹஸ்பதியும், பெருஞ்செழிப்புடைய அந்த முனிவர்களில் முதன்மையானவர்களும், விருத்திரனின் ஆற்றலைக் கொண்டு மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்று, மூவுலகங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, அந்தப் பேரசுரனை அழிக்குமாறு அவனை {சிவனைத்} தூண்டினர்.(29) அண்டத்தின் சிறப்புமிக்கத் தலைவனுடைய சக்தி, ஒரு கடும் நோயின் வடிவை ஏற்று, அசுரர்களின் தலைவனான விருத்திரனின் உடலில் ஊடுருவியது.(30) உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனும், அண்டத்தைப் பாதுகாப்பவனும், சிறப்புமிக்கவனும், தெய்வீகமானவனுமான விஷ்ணு, இந்திரனின் வஜ்ராயுதத்திற்குள் நுழைந்தான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதி, பெருஞ்சக்தியைக் கொண்ட வசிஷ்டர், முனிவர்களில் முதன்மையான பிறர் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனும், உலகங்கள் அனைத்தாலும் புகழப்படுபவனும் வரமளிப்பவனுமான வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, “ஓ! பலமிக்கவனே, தாமதமில்லாமல் விருத்திரனைக் கொல்வாயாக” என்றனர்.(33)
மஹேஸ்வரன், “ஓ! சக்ரா {இந்திரா}, பெரும் படையின் துணையுடன் கூடிய பெரும் விருத்திரன் அதோ நிற்கிறான். எங்கும் செல்லவல்லவனும், பெரும் மாயாசக்திகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான அவனே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறான்.(34) எனவே, இந்த அசுரர்களில் முதன்மையானவன் {விருத்திரன்}, மூவுலகங்கள் ஒன்றாகச் சேர்ந்தாலும், வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். ஓ! தேவர்களின் தலைவா, யோகத்தின் துணையுடன் நீ அவனைக் கொல்வாயாக. அவனை அலட்சியம் செய்யாதே.(35) ஓ! தேவர்களின் தலைவா, பலத்தை அடைவதற்காக அவன் முழுமையாக அறுபதாயிரம் {60,000} வருடங்கள் கடுந்தவம் செய்திருக்கிறான். பிரம்மன் அவன் வேண்டிய வரங்களான,(36) யோகிகளுக்குச் சொந்தமான மகிமை, பெரும் மாயாசக்திகள், அதீத வலிமை, மிக அபரிமிதமான சக்தி ஆகியவற்றை அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.(37) ஓ! வாசவா, நான் என் சக்தியை உனக்குத் தருகிறேன். அந்தத் தானவன் இப்போது தன் பொறுமையை இழந்திருக்கிறான். எனவே, இப்போது நீ உன் வஜ்ரத்தால் அவனைக் கொல்வாயாக” என்றான் {சிவன்}.(38)
சக்ரன், “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உன் அருளின் மூலம் என் வஜ்ரத்தைக் கொண்டு இந்த வெல்லப்பட முடியாத திதியின் மகனை உன் கண்ணெதிரே கொல்லப் போகிறேன்” என்றான்”.(39)
பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தப் பேரசுரன் அல்லது தைத்தியன் {விருத்திரன்}, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட போது, மகிழ்ச்சியில் நிறைந்த தேவர்களும், முனிவர்களும் உற்சாகப் பேரொலி எழுப்பினர்.(40) அப்போது துந்துபிகள், சங்கங்கள், மத்தளங்கள், டிண்டிமங்கள், ஆகியவை ஒரே நேத்தில் முழங்ககப்பட்டன.(41) திடீரென அசுரர்கள் அனைவரும் நினைவிழப்பால் பீடிக்கப்பட்டனர். ஒரு கணத்தில் அவர்களது மாயாசக்திகளும் மறைந்து போயின.(42) முனிவர்களும், தேவர்களும் தங்கள் எதிரிகள் இவ்வாறு பீடிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு, இந்திரன் மற்றும் ஈசானன் ஆகிய இருவரையும் புகழ்ந்து, (விருத்திரனை அழிப்பதில் தாமதிக்காதவாறு) முன்னவனை {இந்திரனைத்} தூண்டத் தொடங்கினர்.(43) அந்த மோதலின் போது, முனிவர்களால் துதிபாடல்கள் பாடப்பட்டபோது தேரில் அமர்ந்திருந்த இந்திரன் ஏற்ற வடிவமானது, அச்சமின்றி யாராலும் பார்க்க முடியாததாக இருந்தது” என்றர் {பீஷ்மர்}[4].(44)
விருத்திரன் வதம் – பிரம்மஹத்தி! – சாந்திபர்வம் பகுதி – 282-சிவனின் சக்தியில் பிறந்த நோயால் விருத்திரனின் உடலில் தோன்றிய அறிகுறிகள்; விருத்திரனைக் கொன்றதும் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி; அக்னி முதலிய நால்வருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவம் பிரித்துக் கொடுக்கப்பட்டது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட விருத்திரனின் உடலில் தோன்றிய அடையாளங்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(1) வீரனான அந்த அசுரனின் வாய் நெருப்புத் தழல்களை வெளியிடத் தொடங்கியது. அவனது நிறம் மிகவும் குன்றியது. அவன் மேனியெங்கும் நடுங்கத் தொடங்கியது. அவனது மூச்சு கனமாகவும், அடர்த்தியாகவும் ஆனது.(2) அவனது முடி சிலிரிப்படைந்தது. ஓ! பாரதா, அவனது நினைவு, கடுமையான, பயங்கரமான, மங்கலமற்ற ஓநாயுடைய ஊளையின் வடிவில் அவனது வாயில் இருந்து வெளிப்பட்டது. சுடர்மிக்க எரி கோள்கள் அவனது வலப்புறத்திலும், இடப்புறத்திலும் விழுந்தன.(3) கழுகுகள், கங்கங்கள், நாரைகள் ஆகியன ஒன்றாகத் திரண்டு கடுமையாக அலறியபடியே விருத்திரனின் தலைக்கு மேல் வட்டமிட்டன.(4) பிறகு அம்மோதலில், தேவர்களால் துதிக்கப்பட்டவனும், வஜ்ரம் தரித்தவனுமான இந்திரன், தேரில் அமர்ந்திருந்த அந்தத் தைத்தியனைக் கடுமையுடன் பார்த்தான்.(5)
கடும் நோயால் பீடிக்கப்பட்ட அந்த அசுரன், ஓ! ஏகாதிபதி, கொட்டாவி விட்டபடியே மனிதத்தன்மையற்ற கூச்சலிட்டான்.(6) அந்த அசுரன் கொட்டாவி விட்ட போது, இந்திரன் தன் வஜ்ரத்தை அவன் மீது வீசினான். பெரும் சக்தியைக் கொண்டதும், யுக முடிவில் படைப்பை அழிக்கும் நெருப்புக்கு ஒப்பானதுமான அந்த வஜ்ரம், பெரும் வடிவிலான விருத்திரனை ஒரு கணத்தில் வீழ்த்தியது.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, விருத்திரன் கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து உரத்த கூச்சலிட்டனர்.(8) தானவர்களின் எதிரியும், பெரும் புகழைக் கொண்டவனுமான மகவத் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்ற பிறகு, விஷ்ணுவால் ஊடுருவப்பட்டிருந்த வஜ்ரத்துடன் சொர்க்கத்திற்குள் நுழைந்தான்.(9) ஓ! குரு குலத்தவனே, சரியாக அப்போது, பிராமணக் கொலை என்ற பாவமானது {பிரம்மஹத்தியானது}, கடுமையான, பயங்கரமான வடிவில் (உடல் படைத்த வடிவில்) அனைத்து உலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி, கொல்லப்பட்ட விருத்திரனின் உடலில் இருந்து வெளிப்பட்டாள்.(10)
ஓ! அற ஆன்மாவே {யுதிஷ்டிரனே}, பயங்கரப் பற்களும், கோரமான முகமும், கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில், கலைந்த முடியுடன், பயங்கரக் கண்களுடன் இருந்த அவள் {பிரம்மஹத்தி}, தன் கழுத்தில் கபால மாலையுடன் (உடல் கொண்டு வந்த அதர்வன) மந்திரத்தைப் போல, முழுவதும் குருதியால் மறைக்கப்பட்டு, மரவுரி உடுத்திக் கொண்டு விருத்திரனின் உடலில் இருந்து வெளியே வந்தாள். ஓ !ஏகாதிபதி, அத்தகைய பயங்கரத் தோற்றத்தையும், முகத்தையும் கொண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, வஜ்ரதாரியை {இந்திரனைப்} பீடிக்க அவனைத் தேடினாள்.(13) ஓ! குரு குலத்தவனே, சிறிது நேரங்கழித்ததும், விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, மூவுலகங்களின் நன்மைக்குத் தொடர்புடைய ஏதோவொரு காரணத்திற்காகச் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.(14) பெரும் சக்தியுடன் கூடிய இந்திரன் தன் காரியத்திற்காகச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, தேவர்களின் தலைவனைப் பற்றிக் கொண்டு, அந்தக் கணமுதல் அவனைப் பீடித்தாள்.(15)
பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} தன் மேனியை இவ்வாறு பீடித்ததும், அச்சமடைந்த இந்திரன், தாமரைத் தண்டின் இழைகளில் புகுந்து பல நீண்ட வருடங்களாக அங்கேயே வசித்தான்.(16) ஆனால் அந்தப் பிராமணக் கொலை என்ற பாவம் {பிரம்மஹத்தி} அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரா}, உண்மையில் அவளால் பற்றப்பட்ட இந்திரன் தன் சக்திகள் அனைத்தையும் இழந்தான்.(17) அவளை விரட்டுவதற்காக அவன் பெரும் முயற்சிகளைச் செய்தாலும், அந்த முயற்சிகள் அனைத்தும் பலிக்காமலாகின.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவளால் பீடிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் இறுதியாகப் பெரும்பாட்டனின் முன்னிலைக்குச் சென்று, சிரம் தாழ்த்தி அவனை வணங்கினான்.(19) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, சக்ரன் {இந்திரன்}, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்ட பிரம்மன், (தன்னை வேண்டுபவனை விடுவிக்கும் வழிமுறைகளைக் குறித்து) சிந்திக்கத் தொடங்கினான்.(20)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இறுதியாகப் பெரும்பாட்டன் {பிரம்மன்} அந்தப் பிரம்மஹத்தியிடம் இனிய குரலில் அவளைத் தணிப்பதற்காக,(21) “ஓ! இனியவளே, எனப் பிடித்தமான இந்தத் தேவர்களின் தலைவன் உன்னால் விடுபடட்டும். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிறைவேற்ற வேண்டிய உனது விருப்பமென்ன?” என்று கேட்டான்.
அப்போது பிரம்மஹத்தி {பிரம்மனிடம்}, “மூவுலகங்களின் படைப்பாளனும், அண்டத்தால் துதிக்கப்படுபவனுமான சிறந்த தேவனே என்னிடம் நிறைவுடன் இருக்கும்போது, என் விருப்பங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாக நான் கருதுகிறேன். என் வசிப்பிடம் இப்போது உறுதி செய்யப்படட்டும்.(23) உலகங்களைப் பராமரிக்க வேண்டிய இந்த விதி உம்மால் அமைக்கப்பட்டது. ஓ! தலைவா, இந்த முக்கியமான விதியை நீரே அறிமுகப்படுத்தினீர்.(24) ஓ அறத் தலைவா, ஓ! உலகங்கள் அனைத்தின் பலமிக்கக் குருவே, நீர் என்னிடம் நிறைவுடனிருப்பதால் நான் நிச்சயம் சக்ரனை விட்டகல்வேன். ஆனால் நான் வசிப்பதற்கு ஒரு வசிப்பிடத்தை எனக்கு அருள்வீராக” என்று கேட்டாள் {பிரம்மஹத்தி}”.(25)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும்பாட்டன் {பிரம்மன் பிரம்மஹத்தியிடம்}, “அவ்வாறே ஆகட்டும்” என்று பிரம்மஹத்தியிடம் சொன்னான். உண்மையில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, இந்திரனின் மேனியில் இருந்து பிரம்மஹத்தியை அகற்றும் வழிமுறைகளைக் கண்டடைந்துவிட்டான்.(26) அந்தச் சுயம்பு உயர் ஆன்ம அக்னியை நினைத்தான். பின்னவன் {அக்னி தேவன்} உடனடியாகப் பிரம்மனின் முன்பு தோன்றி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! சிறப்புமிக்க, தெய்வீகத் தலைவா, ஓ! எந்தக் குறையும் இல்லாதவரே, நான் உம் முன்பு தோன்றியிருக்கிறேன். நான் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(28)
பிரம்மன் {அக்னிதேவனிடம்}, “நான் இந்தப் பிராமணக் கொலை என்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} பல பகுதிகளைப் பிரிக்கப் போகிறேன். அவளிடம் இருந்து சக்ரனை {இந்திரனைக்} காப்பதற்காக, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பங்கை நீ ஏற்பாயாக” என்று கேட்டான்.(29)
அக்னி {பிரம்மனிடம்}, “ஓ! பிரம்மாவே, நான் எவ்வாறு அவளிடம் இருந்து மீட்கப்படுவேன்? ஓ! பலமிக்கத் தலைவா, அதற்கு ஒரு வழியைச் சொல்வீராக. ஓ! அனைத்து உலகங்களாலும் புகழப்படுபவரே, (நான் காக்கப்படும்) வழிமுறைகளை விவரமாக அறிய நான் விரும்புகிறேன்” என்றான்.(30)
பிரம்மன் நெருப்பிடம், “தமஸ் குணத்தில் மூழ்கிய எந்த மனிதன், உன்னைச் சுடர்மிக்க வடிவில் கண்டும், தானியங்களையும், மூலிகைகளையும், சாறுகளைக் காணிக்கையாக்கி, ஹவிஸை உனக்கு அளிக்காமல் தவிர்க்கிறானோ,(21) அந்த மனிதனுக்குள், நீ கொண்ட பிரம்மஹத்தியின் {முதல்} பகுதி உடனடியாக நுழைந்து, அதுமுதல் அவனிலேயே வசித்திருக்கும். ஓ! ஹவிஸை சுமப்பவனே, உன் இதய நோய் அகலட்டும்” என்றான்”[1].(32)
பீஷமர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், ஹவிசையும், வேள்விக்காணிக்கைகளையும் உண்பவனுமான அவன் {அக்னி} அவனது கட்டளையை ஏற்றுக் கொண்டான். ஓ! மன்னா, அப்போது அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதி அவனது உடலுக்குள் நுழைந்தது.(33) பிறகு பெரும்பாட்டன், மரங்களையும், மூலிகைகளையும், புல் வகைகள் அனைத்தையும் அழைத்து, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அக்னியைப் போலவே அந்த வேண்டுதலால் கலக்கமடைந்த மரங்கள், மூலிகைகள் மற்றும் புற்கள், பெரும்பாட்டனிடம், (35) “ஓ! பெரும்பாட்டா, உலகங்கள் அனைத்திலும் உள்ள நாங்கள் எவ்வாறு இந்தப் பாவத்தில் இருந்து காக்கப்படுவோம். ஏற்கனவே விதியால் பீடிக்கப்பட்டிருக்கும் எங்களை மேலும் பீடிப்பது உமக்குத் தகாது.(36) ஓ! தேவா, நாங்கள் எப்போதும் வெப்பம், குளிர் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்கிறோம், காற்றால் இழுத்து வரப்படும் (மேகங்களின்) மழை ஆகியவற்றாலும், (மனிதர்களின் கரங்களால்) வெட்டப்படுவதாலும் பாதிக்கப்படுகிறோம்.(37) ஓ! மூவுலகங்களின் தலைவா, பிராமணக் கொலை என்ற பாவத்தின் (இந்தப் பிரம்மஹத்தியிலன் ஒரு பகுதியை) உமது உத்தரவின் பேரில் ஏற்றுக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். எனினும், நாங்கள் எவ்வாறு மீட்கப்படுவோம் என்பதை எங்களுக்குச் சுட்டிக்காட்டுவீராக” என்றன.(38)
பிரம்மன் மரங்களிடம், “நீங்கள் ஏற்கும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் இரண்டாம் பகுதி}, தீர்மான மயக்கத்தால், உங்களைப் பருவ காலங்களில் வெட்டும் மனிதனைப் பீடிக்கப் போகிறது” என்றான்.(39)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு உயர் ஆன்ம பிரம்மனால் சொல்லப்பட்டதும், மரங்களும், செடிகளும், புற்களும் அந்தப் படைப்பாளனைப் புகழ்ந்துவிட்டு, அங்கே மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்று விட்டன.(40) பிறகு, ஓ! பாரதா, அனைத்து உலகங்களின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அப்சரஸ்களை அழைத்து, அவர்களை நிறைவு கொள்ளச் செய்யும் வகையில் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்:(41) “பெண்களில் முதன்மையான இந்தப் பிரம்மஹத்தி, இந்திரனின் உடலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள். என்னால் வேண்டப்படும் நீங்கள், (தேவர்களின் தலைவனைக் காப்பதற்காக) இவளது நான்கில் ஒரு பகுதியை உங்கள் மேனியில் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.(42)
அதற்கு அந்த அப்சரஸ்கள் {பிரம்மனிடம்}, “ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தப் பாவத்தின் ஒரு பகுதியை நாங்கள் முழுமையாக விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஓ! பெரும்பாட்டா, (நாங்கள் உம்மிடம் செய்து கொள்ளும்) இந்தப் புரிந்துணர்வால் (விளையும் விளைவுகளில் இருந்து) நாங்கள் விடுபடும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திக்க வேண்டும்” என்றனர்.(43)
பிரம்மன் பெண்களிடம், “உங்கள் இதயங்களின் நோய் அகலட்டும். நீங்கள் ஏற்றுக் கொள்ளும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் மூன்றாம் பகுதி}, பெண்கள் மாதவிடாயில் இருக்கும்போது அவர்களுடன் கலவியை நாடும் மனிதனை உடனே பீடித்து, உங்களிடம் இருந்து அகன்றுவிடும்” என்றான்”.(44)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே, பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்சரஸ்களும், உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு, தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று இன்பமாக விளையாடத் தொடங்கினர்.(45)
பிறகு, பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான, மூவுலகங்களின் சிறப்புமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, நீர்நிலைகளை நினைத்தவுடன் அவை உடனே அவனிடம் வந்தன.(46) அளவிலா சக்தியைக் கொண்ட பிரம்மனின் முன்னிலைக்கு வந்த அந்த நீர்நிலைகள், அவனை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னன:(47) “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது உத்தரவின் பேரில் நாங்கள் உமது முன்னிலையை அடைந்திருக்கிறோம். ஓ! அனைத்துலகங்களின் பலமிக்கக் குருவே, நாங்கள் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டன.(48)
பிரம்மன் {நீர்நிலைகளிடம்} , “விருத்திரனைக் கொன்றதன் விளைவால் இந்தக் கொடிய பாவம் இந்திரனைப் பீடித்திருக்கிறது. பிரம்மஹத்தியின் நான்கில் ஒரு பகுதியை நீங்கள் ஏற்றுக் கொள்வீராக” என்றான்.(49)
நீர்நிலைகள் {பிரம்மனிடம்}, “ஓ! உலகங்கள் அனைத்தின் குருவே, நீர் அணையிட்டவாறே ஆகட்டும். எனினும், ஓ! எங்களின் பலமிக்கத் தலைவா, இந்தப் புரிந்துணர்வில் (இதன் விளைவில்) இருந்து நாங்கள் காக்கப்படும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திப்பதே உமக்குத் தகும்.(50) தேவர்கள் அனைவரின் தலைவரும், அண்டத்தின் உயர்ந்த புகலிடமும் நீரே ஆவீர். துதிகளால் துயரில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்?” என்று கேட்டன.(51)
பிரம்மன் நீர்நிலைகளிடம், “புத்தி மயக்கம் கொண்ட எந்த மனிதன், உங்களை இழிவாகக் கருதி, சளி, சிறுநீர் மற்றும் மலத்தை உங்களில் விடுவானோ,(52) அவனை இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் நான்காம் பகுதி} உடனடியாகப் பீடித்து, அதுமுதல் அவனிலேயே வசித்துவரும். உண்மையில், இவ்வழியிலேயே நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான்”.(53)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அப்போது பிராமணக் கொலை என்ற அந்தப் பாவம் {பிரம்மஹத்தி}, தேவர்களின் தலைவனை விட்டு அகன்று, தனக்காகப் பெரும்பாட்டனின் ஆணையால் விதிக்கப்பட்ட வசிப்பிடங்களுக்குச் சென்றாள்.(54)
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, இவ்வாறே இந்திரன் அந்தப் பயங்கரப் பாவத்தால் பீடிக்கப்பட்டான், (இவ்வாறே அவளிடம் இருந்து விடுதலையும் பெற்றான்). பிறகு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அனுமதியுடன் இந்திரன் ஒரு குதிரை வேள்வியைச் செய்யத் தீர்மானித்தான்.(55) ஓ! ஏகாதிபதி, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கபட்ட இந்திரன், அந்த வேள்வியின் மூலமே தூய்மையடைந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(56) ஓ! பூமியின் தலைவா, தன் செழிப்பை மீண்டும் பெற்று, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்று, வாசவன் அடைந்த மகிழ்ச்சி மிகப்பெரியதாக இருந்தது.(57) ஓ! பிருதையின் மகனே, விருத்திரனின் குருதியில் இருந்து உயர்ந்த மகுடங்களைக் கொண்ட சேவல்கள் பிறந்தன. இந்தக் காரணத்தினாலேயே அந்த வளர்ப்புப் பறவைகள் {சேவல்கள்} மறுபிறப்பாள வகையினரும், தொடக்கச் சடங்கை மேற்கொண்ட தவசிகளுகும் (உணவாகக்) கொள்ளத் தூய்மையற்றதானது[2].(58)
ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, இருபிறப்பாளர்களே {பிராமணர்களே} பூமியில் தேவர்களாக அறியப்படுவதால், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு ஏற்புடையதையே செய்வாயாக.(59) ஓ! குரு குலத்தவனே, இவ்வழியிலேயே, நுட்பமான நுண்ணறிவின் துணையுடனும், வழிமுறைகளைச் செயல்படுத்தியதன் மூலமும், அளவிலா சக்தி கொண்ட சக்ரனால் வலிமைமிக்க அசுரன் விருத்திரன் கொல்லப்பட்டான்.(60) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் வெல்லப்படஇயலாதவனான நீயும் கூட மற்றொரு இந்திரனாகி உன் எதிரிகள் அனைவரையும் கொல்பவனாகலாம்.(61) ஒவ்வொரு பர்வ நாளிலும், விருத்திரனின் இந்தப் புனிதக் கதையைப் பிராமணர்களுக்கு மத்தியில் சொல்வோர், எந்தப் பாவத்தினாலும் ஒருபோதும் களங்கப்படமாட்டார்கள்.(62) விருத்திரன் தொடர்புடைய இந்திரனின் மிகப் பெரிய, அற்புதம் நிறைந்த சாதனையை நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்” என்று கேட்டார் {பீஷ்மர்}.(63)-
தக்ஷன் வேள்வி! – சாந்திபர்வம் பகுதி – 283-தக்ஷனின் வேள்வியை அழித்த சிவன்; தன் நெற்றி வியர்வையில் உதித்த நோயைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பெரும் ஞானத்தைக் கொண்ட நீர், கல்வியின் ஒவ்வொரு துறையையும் முழுமையாக அறிந்திருக்கிறீர். விருத்திரன் கொல்லப்பட்ட கதையில் இருந்தே உம்மிடம் கேட்க என்னில் ஒரு கேள்வி எழுந்துள்ளது.(1) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ! பாவமற்றவரே, விருத்திரன் (முதலில்) நோயால் பீடிக்கப்பட்டான் என்றும், அதன் பிறகே வாசவனின் வஜ்ரத்தால் கொல்லப்பட்டான் என்றும் நீர் சொன்னீர்.(2) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்த நோய் எவ்வாறு உண்டானது? ஓ! தலைவா, அந்நோயின் தோற்றம் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நோயின் தோற்றத்தைக் கேட்பாயாக. ஓ! பாரதா, நோயானது முதலில் இருப்பில் எவ்வாறு உதித்தது என்பது குறித்து முழுமையாக விளக்கி விரிவாகப் பேசப் போகிறேன்.(4) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் மேரு மலைகளில் சாவித்ரி என்ற பெயருடைய ஒரு சிகரம் இருந்தது. உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்ட அது, பெரும் காந்தியுடனும், அனைத்து வகை ரத்தினங்கள் மற்றும் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(5) அளவிலா பரப்பைக் கொண்டிருந்த அந்தச் சிகரத்திற்கும் யாரும் செல்ல முடியாது. அந்த மலையின் சிகரத்தில் தெய்வீக மஹாதேவன் {சிவன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தான்.(6)
மலைகளின் மன்னனுடைய மகள் {உமை / பார்வதி} அவனது பக்கத்தில் பிரகாசத்துடன் ஒளிர்ந்தபடி அமர்ந்திருந்தாள். உயர் ஆன்ம தேவர்கள், அளவிலா சக்தி கொண்ட வசுக்கள்,(7) மருத்துவர்களில் முதன்மையான உயர் ஆன்ம அசுவினிகள், குஹ்யர்கள் பலரால் பணிவிடை செய்யப்பட்டவனும், பலமும் செழிப்பும் கொண்டவனும், கைலாச சிகரத்தையே தன் வசிப்பிடமாகக் கொண்டவனுமான யக்ஷர்களின் தலைவன் மன்னன் வைஸ்ரவணன் ஆகியோர் அனைவரும் உயர் ஆன்ம மஹாதேவனுக்காக அங்கே காத்திருந்தனர். பெரும் தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியர்},(8,9) முனிவர்களில் முதன்மையானவர்கள் தங்களில் முதன்மையானவராகக் கொண்ட ஸனத்குமாரர், அங்கிரஸின் தலைமையிலான பிற தெய்வீக முனிவர்கள்,(10) கந்தர்வர்கள், விஸ்வாவசு, நாரதர், பர்வதர், அப்சரஸ்களின் பல்வேறு இனங்கள் ஆகியோர் அனைவரும் அந்த அண்டத்தின் குருவுக்காக அங்கே காத்திருந்தனர்.(11) தூய்மையான, மங்கலமான காற்று, பல்வேறு நறுமணங்களைச் சுமந்தபடி அங்கே வீசிக் கொண்டிருக்கும். அனைத்துப் பருவங்களுக்கும் உரிய மலர்களுடன் கூடிய மரங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன.(12) ஓ! பாரதா, எண்ணற்ற வித்யாதரர்களும், சித்தர்களும், தவசிகளும் அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவனிடம் காத்திருப்பதற்காக அங்கே சென்றனர்.(13)
பல்வேறு வடிவங்களையும் தன்மைகளையும் கொண்ட பல பூதங்களும், பயங்கரமான பல ராட்சசர்களும், பல்வேறு தன்மைகளைக் கொண்ட வலிமைமிக்கப் பிசாசங்களும்,(14) இன்பத்தில் பித்துப் பிடித்து, பல்வேறு வகை ஆயுதங்களை உயர்த்தியபடி, சக்தியில் சுடர் நெருப்புக்கு ஒப்பாக மஹாதேவனின் அணிவரிசையில் காத்திருந்தனர்.(15) சிறப்புமிக்க நந்தி, அந்தப் பெருந்தேவனின் ஆணையின் பேரில், தன் சுடர்மிக்க சக்தியுடன், நெருப்பின் தழலுக்கு ஒப்பான ஒரு வேலுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(16) ஓ! குருகுலத்தின் மகனே, ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளும், அண்டத்தின் புனித நீர்கள் அனைத்திற்கும் பிறப்பிடமானவளுமான கங்கையும், தன் மெய்யுடலுடன் அந்தச் சிறப்பு மிக்கத் தேவனிடம் காத்திருந்தாள்.(17) இவ்வாறு தெய்வீக முனிவர்களாலும், தேவர்களாலும் துதிக்கப்பட்டவனும், அளவிலா சக்தி கொண்ட சிறப்புமிக்கவனுமான மஹாதேவன் அந்த மேருவின் சிகரத்தில் வசித்திருந்தான்.(18)
சில காலம் கழிந்ததும், பிரஜாபதியான தக்ஷன், (வேதங்களில் விதிக்கப்பட்ட) பழங்காலச் சடங்குகளின் படி ஒரு வேள்வியைச் செய்யத் தொடங்கினான்.(19) தக்ஷனின் அந்த வேள்விக்கு, சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்கள் அனைவரும் கூடி செல்வதெனத் தீர்மானித்திருந்தனர்.(20) அந்த உயர் ஆன்ம தேவர்கள், மஹாதேவனின் அனுமதியுடன், காந்தியில் நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான தங்கள் தெய்வீகத் தேர்களில் ஏறி, (இமயத்தில்) கங்கை வெளிப்படுகிறது என்று சொல்லப்படும் இடத்திற்குச் சென்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(21)
தேவர்கள் செல்வதைக் கண்டதும், மலைகளின் மன்னனுடைய சிறந்த மகள் {உமை} தன் கணவனிடம் {சிவனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, சக்ரனின் தலைமையிலான அந்தத் தேவர்கள் எங்கே செல்கின்றனர்? ஓ! உண்மையை அறிந்தவரே, என் மனத்தில் பெரும் ஐயம் நிறைந்திருப்பதால் எனக்கு உண்மையைச் சொல்வீராக” என்று கேட்டாள்.(23)
மஹேஸ்வரன், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, சிறந்தவனான பிரஜாபதி தக்ஷன் ஒரு குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிக்கிறான். இந்தச் சொர்க்கவாசிகள் அங்கேதான் செல்கின்றனர்” என்றான்.(24)
உமை, “ஓ! மஹாதேவரே, நீர் அவ்வேள்விக்குச் செல்லவில்லையா? அவ்விடத்திற்குச் செல்ல உமக்கென்ன தடை இருக்கிறது?” என்று கேட்டாள்.(25)
மஹேஸ்வரன், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, பழங்காலத்தில் தேவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்தனர், அதன் விளைவாக வேள்விகள் அனைத்திலும் என் பங்கெனக் காணிக்கைகளேதும் ஒதுக்கப்படுவதில்லை.(26) ஓ! அழகிய நிறம்படைத்தவளே, அந்த ஒப்பந்தத்தின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்புடைய வகையிலும், பழைய வழக்கத்தைப் பின்பற்றியும், தேவர்கள் வேள்விக் காணிக்கைகளில் எந்தப் பங்கையும் எனக்குத் தருவதில்லை” என்றான்.(27)
உமை, “ஓ! சிறப்புமிக்கவரே, உள்ளவை அனைத்திலும் நீரே பலத்தில் முதன்மையானவர். தகுதி, சக்தி, புகழ், செழிப்பு ஆகியவற்றில் நீர் யாருக்கும் வசப்பட்டவரில்லை, உண்மையில் நீர் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவர்.(28) எனினும், ஓ! பாவமற்றவரே, வேள்விக் காணிக்கையைப் பொறுத்தவரையில் உள்ள இயலாமையின் விளைவால் நான் பெருந்துயரமடைகிறேன், தலை முதல் பாதம் வரை எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது” என்றாள்”.(29)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தத் தேவி (பார்வதி), உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தன் தெய்வீகத் துணைவரிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, துயரில் இதயம் எரிய அமைதியாக இருந்தாள்.(30)
அப்போது மஹாதேவன், அவளது இதயத்தில் இருப்பதையும், அவளது எண்ணங்களையும் புரிந்து கொண்டு, (அந்த அவமதிப்பைத் துடைப்பதற்காக) நந்தியிடம், “(தேவியுடன்) இங்கேயே காத்திருப்பாயாக” என்றான்.(31) தேவர்களின் தேவனும், பிநாகைதாரியும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், யோகத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவனும் அவன் {சிவன்}, தன் யோக சக்தி அனைத்தையும் திரட்டி, பயங்கரமான தன் தொண்டர்கள் (பூத கணங்கள்) அனைவரின் துணையுடன் (தக்ஷன் வேள்வி செய்து கொண்டிருந்த) அந்த இடத்திற்குச் சென்று அவ்வேள்வியை அழித்தான். ஓ! மன்னா, அவனது தொண்டர்களில் சிலர் உரத்த கூச்சலிட்டனர், சிலர் பயங்கரமாகச் சிரித்தனர்,(32,33) சிலர் அந்த (வேள்வி) நெருப்புகளைக் குருதியால் தணித்தனர்; பயங்கர முகங்களைக் கொண்ட சிலர், வேள்விப்பீடங்களைத் தள்ளி அவற்றைச் சுழற்றத் தொடங்கினர். வேறு சிலர் அந்த வேள்வியில் துணை புரிந்து கொண்டிருந்தவர்களை விழுங்கத் தொடங்கினர். பிறகு, இவ்வாறு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீடிக்கப்பட்ட அந்த வேள்வி மானின் வடிவை ஏற்று வானத்தினூடாகத் தப்பிச் செல்ல முனைந்தது.(35)
அவ்வடிவில் வேள்வியே அவ்வாறு தப்பிச் செல்வதை உறுதிசெய்து கொண்ட மஹாதேவன், வில் மற்றும் கணையுடன் அதைப் பின்தொடரத் தொடங்கினான்.(36) அளவிலா சக்தி படைத்தவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனது இதயம் கோபத்தில் நிறைந்ததன் விளைவால், பயங்கரமான ஒரு வியர்வைத் துளி அவனது நெற்றியில் தோன்றியது.(37) அந்த வியர்வைத்துளி பூமியில் விழுந்த போது, அதிலிருந்து, யுகத்தின் முடிவில் (அனைத்தையும்) அழிக்கும் நெருப்புக்கு {காலாக்னிக்கு} ஒப்பான சுடர்மிக்க நெருப்பு தோன்றியது.(38) ஓ ஏகாதிபதி, அந்நெருப்பிலிருந்து குட்டையான வடிவம் கொண்டவனும், குருதிசிவப்பிலான கண்களைக் கொண்டவனும், பச்சை {மஞ்சள்} நிற மீசை கொண்டவனுமான ஒருவன் தோன்றினான்.(39)
ஒரு பருந்தையோ, ஓர் ஆந்தையையோ போல அவனது உடல் முழுவதும் மயிரால் மறைக்கப்பட்டிருந்தது, அவனது தலைமயிர் சிலிர்த்து நின்று கொண்டிருந்தது. பயங்கரமானவனான அவனுடைய நிறம் கரியதாகவும், அவனது ஆடை குருதி சிவப்பாகவும் இருந்தது. வைக்கோற்பொதியை எரிக்கும் நெருப்பைப் போல, பெருஞ்சக்தி கொண்ட அவன், வேள்வியின் மெய்யுடலை {அந்த மானை / மானின் வடிவில் இருந்த வேள்வியை} விரைவாக எரித்தான்.(40) காரியத்தைச் சாதித்த அவன், அங்கே கூடியிருந்த தேவர்களையும், முனிவர்களையும் நோக்கி விரைந்தான். அச்சத்தால் நிறைந்த தேவர்கள் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(41) ஓ ஏகாதிபதி, அவனுடைய நடையின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள்.(42) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அண்டமெங்கும் கதறல்கள் கேட்டன. இதைக் குறித்துக் கொண்ட பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன்னை மஹாதேவனிடம் வெளிப்படுத்திக்கொண்டு, பின்வார்த்தைகளில் அவனிடம் பேசினான்.(43)
பிரம்மன் {மஹாதேவனிடம்}, “ஓ! பலமிக்கவனே, இது முதல் தேவர்கள் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பங்கை உனக்குத் தருவார்கள். ஓ தேவர்கள் அனைவரின் தலைவா, இந்த உன் கோபம் உன்னால் விலக்கப்பட வேண்டும்.(44) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஓ! மஹாதேவா, அதோ தேவர்களும், முனிவர்களும் உன் கோபத்தின் விளைவால் மிகவும் கலக்கமடைந்திருக்கின்றனர்.(45) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! அற ஆன்மாவே, உன் வியர்வையில் இருந்து உதித்தவன், நோய் என்ற பெயரில் உயிரினங்களின் மத்தியில் உலவுவான்.(46) ஓ! பலமிக்கவனே, இவனது சக்தி அனைத்தும் திரண்ட நிலையிலேயே எஞ்சியிருந்தால் இவனைப் பூமாதேவியால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, அவனைப் பல்வேறு பகுதிகளாகப் பிரிப்பாயாக” என்றான்.(47)
வேள்விக்காணிக்கைகளில் தனக்குரிய பங்கு முறையாக ஒதுக்கப்படும் என்று பிரம்மன் இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, பெரும் சக்தி கொண்ட அந்தப் பெரும்பாட்டனிடம் மஹாதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறினான்.(48) உண்மையில், பிநாகைதாரியான அந்தப் பவன் {சிவன்}, சற்றே புன்னகைத்து மகிழ்ச்சியால் நிறைந்தான். வேள்விக்காணிக்கைகளில் இருந்து தனக்கெனப் பெரும்பாட்டனால் ஒதுக்கப்பட்ட பங்கை அவன் ஏற்றான்.(49) அனைத்தின் தன்மைகளையும் அறிந்த மஹதேவன், அனைத்து உயிரினங்களின் அமைதிக்காக அந்த நோயை பல பகுதிகளாகப் பிரித்தான். ஓ மகனே, அஃதை அவன் எவ்வாறு செய்தான் என்பதைக் கேட்பாயாக.(50) யானைகளின் தலையில் உணரப்படும் வெப்பம் {மண்டை கொதிப்பு}, மலைகளின் தாது {நிலக்கீல்}, நீரில் மிதக்கும் பாசி, பாம்புகளின் சட்டை,(51) காளைகளின் குளம்புகளில் தோன்றும் புண், விளைச்சலற்ற பூமிப் பகுதிகளின் உப்பு, விலங்குகள் அனைத்தின் மங்கலான பார்வை,(52) குதிரைகளுக்குக் தொண்டையில் தோன்றும் நோய்{கண்டத்தில் தோன்று சதையடைப்பு}, மயில்களுக்குத் தலையில் தோன்றும் கொண்டை {மண்டை வெடிப்பு}, குயில்களின் கண்ணோய் ஆகியன அந்த உயரான்ம மஹாதேவனால் நோயெனப் பெயரிடப்பட்டன.(53)
இதையே நாம் கேள்விப்படுகிறோம். ஆட்டின் ஈரல் நோய், கிளிகளின் விக்கல் ஆகியனவும் நோயின் வடிங்களாகவே அறியப்படுகின்றன. ஓ! அற மன்னா, புலிகளின் களைப்பும் நோயெனவே அறியப்படுகிறது.(54) ஓ! பாரதா, இவற்றைத் தவிர்த்து, மனிதர்களுக்கு மத்தியில் நோயானாது, பிறப்பின்போதும், மரணத்தின் போதும், அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் அனைவரின் உடலுக்குள்ளும் நுழைகிறது.(55) நோய் என்றழைக்கப்படும் இவையும், அவையும் பயங்கர சக்தி கொண்ட மஹேஸ்வரனாகவே அறியப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் மேலும் அதிகாரம் கொண்டவன் அவன் என்பதால் அவன் அனைவராலும் வழிபடத்தகுந்தவனாவான்.(56)
அவனே {மகாதேவனே} அறவோரில் முதன்மையான விருத்திரன் கொட்டாவி விட்டபோது அவனை வென்றவனாவான். அதன் பிறகே சக்ரன் {இந்திரன்} அவன் மீது வஜ்ரத்தை ஏவினான்.(57) ஓ! பாரதா, விருத்திரனின் உடலுக்குள் புகுந்த அந்த வஜ்ரம் அவனை இரண்டாகப் பிளந்தது. வஜ்ரத்தால் இரண்டாகப் பிளக்கப்பட்டவனும், பெரும் யோக சக்திகளைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தச் சூரன், அளவிலா சக்தியுடன் கூடிய விஷ்ணுவின் உலகத்திற்கு {வைகுந்தத்திற்குச்} சென்றான்.(58) விஷ்ணுவிடம் அவன் கொண்ட பக்தியின் விளைவால் அவன் மொத்த அண்டத்தையும் மூழ்கடிப்பதில் வென்றான். விஷ்ணுவிடம் அவன் கொண்ட பக்தியின் விளைவாலேயே அவன் கொல்லப்பட்ட போது விஷ்ணுவின் உலகத்திற்கு உயர்ந்தான்.(59) ஓ! மகனே, இவ்வாறு விருத்திரனின் கதையைச் சொன்னதன் வழியாக நோயைக் குறித்த விவரங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு எதைக் குறித்து நான் உன்னிடம் பேச வேண்டும்?(60) மிகுந்த கவனத்துடனும், உற்சாகம் நிறைந்த இதயத்துடனும் நோயின் தோற்றத்தைக் குறித்த இந்தக் கதையைப் படிப்பவன், நோயில் இருந்து விடுபட்டு, தன் பங்காக மகிழ்ச்சியையே எப்போதும் பெறுவான். மகிழ்ச்சியால் நிறையும் அவன், தனது இதயத்தில் நிறுவும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்” {என்றார் பீஷ்மர்}”.(61)
வீரபத்ரன், பத்ரகாளி! – சாந்திபர்வம் பகுதி – 284-மஹாதேவன் வீரபத்ரனைக் கொண்டு தக்ஷனின் வேள்வியை அழித்ததையும், பத்ரகாளியின் தோற்றத்தையும், சிவனிடம் தக்ஷன் பெற்ற வரத்தையும் ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்.
{நாகவேள்வியில்} ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, பிரசேதஸின் மகனான பிரஜாபதி தக்ஷனின் குதிரை வேள்வி வைவஸ்வத மனுவின் காலத்தில் எவ்வாறு அழிக்கப்பட்டது?(1) உமா தேவி சினத்திலும், துயரத்திலும் நிறைந்ததைப் புரிந்து கொண்டவனும், பலமிக்கவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மா ஆனவனுமான மஹாதேவன் கோப வசப்பட்டான். பிறகு பிரிந்து போன அந்த வேள்வியின் அங்கங்களை அவனது {சிவனின்} அருளைக் கொண்டு தக்ஷனால் எவ்வாறு ஒன்றுதிரட்ட முடிந்தது? இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பிராமணரே, உண்மையில் நடந்தவாறே இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் சொன்னார், “பழங்காலத்தில் தக்ஷன், மலைகளில் கங்கை வெளிப்படும் இடமும், முனிவர்களும் சித்தர்களும் வசிக்கும் புனிதமான இடமுமான இமயச் சாரலில் ஒரு வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.(3) மரங்கள் மற்றும் பல்வேறு வகைக் கொடிகளால் அடர்ந்த அந்தப் பகுதியில் கந்தர்வர்களும், அப்சரஸ்களும் நிறைந்திருந்தனர். முனிவர் கூட்டங்களால் சூழப்பட்டவனும், அறவோரில் முதன்மையானவனும், உயிரினங்களை உண்டாகச் செய்பவனுமான தக்ஷனிடம் மரியாதையுடன் கைகூப்பியவாறு பூலோகவாசிகளும், ஆகாயவாசிகளும், சொர்க்கவாசிகளும் ஒன்றாகக் காத்திருந்தனர்.(4,5) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள், ஹாஹா, ஹுஹு என்ற பெயரைக் கொண்ட இரு கந்தர்வர்கள், தும்புரு, நாரதர்,(6) விஸ்வாவசு, விஸ்வசேனன், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சாத்தியர்கள், மருத்துகள்,(7) ஆகியோர் அனைவரும் வேள்வியில் பங்கெடுக்க இந்திரனுடன் அங்கே வந்தனர். வெப்பத்தைப் பருகுபவர்கள், சோமத்தைப் பருகுபவர்கள், புகையைப் பருகுபவர்கள், ஆஜ்யத்தைப் பருகுபவர்கள்,(8) முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோரும் பிராமணர்களுடன் அங்கே வந்தனர். இவர்களும், ஜராயுஜம், அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் எனும் நான்கு வகை உயிரினங்களும் அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டன. மதிப்புடன் அழைக்கப்பட்ட தேவர்களும் தங்கள் துணைகளுடன் அங்கே தெய்வீகத் தேர்ஃகளில் வந்திருந்து சுடர்மிக்க நெருப்புகளைப் போல ஒளிர்ந்தபடியே அமர்ந்திருந்தனர்.(9,10)
அவர்களைக் கண்ட முனிவர் ததீசி துயராலும், கோபத்தாலும் நிறைந்து, “இந்த வேள்வியில் ருத்திரன் துதிக்கப்படாததால், இஃது ஒரு வேள்வியுமல்ல, தகுதியைத் தரும் அறச்சடங்கும் அல்ல.(11) உங்களை நீங்களே மரணத்திற்கும், கட்டுகளுக்கும் நிச்சயம் வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள். ஐயோ, காலத்தின் போக்கு எவ்வாறு இப்படி அமைந்தது? பிழையால் திகைக்கும் நீங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும் அழிவைக் காணவில்லை. இந்தப் பெருவேள்வியின் போக்கில் உங்கள் வாயிலில் ஒரு பயங்கரப் பேரிடர் நிற்கிறது. அதை நீங்கள் காணவில்லை” என்றார்.(12)
இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெரும் யோகி {ததீசி}, (யோக) தியானத்தின் கண்களைக் கொண்டு எதிர்காலத்தைக் கண்டார். அவர் மஹாதேவனையும்ம், சிறந்த வரங்களை அளிப்பவளான அவனது தெய்வீக மனைவியையும்,(13), அந்தத் தேவிக்கு அருகில் உயர் ஆன்ம நாரதரையும் (கைலாச மலைச் சிகரத்தில் அர்ந்திருப்பதையும்) கண்டார். யோகத்தை அறிந்தவரான ததீசி நடக்கப் போவதை உறுதி செய்து கொண்டு உயர்வான நிறைவை அடைந்தார்.(14) தேவர்கள் அனைவரும், அங்கே வந்திருந்த பிறரும், அனைத்து உயிரினங்களின் தலைவனை அழைக்கத் தவறுவதில் ஒரே மனமாய் இருந்தனர்.
ததீசி மட்டுமே, அந்த இடத்தை விட்டு அகல விரும்பி,(15) “எவன் வழிபடப்படக் கூடாதோ அவனை வழிபட்டு, வழிபட வேண்டியவனை வழிபட மறுப்பதன் மூலம் ஒரு மனிதன் கொலை செய்த பாவத்தை எப்போதும் பெற்றிருப்பான்.(16) நான் ஒருபோதும் பொய் பேசியவனில்லை, ஒரு பொய்யையும் நான் ஒரு போதும் பேச மாட்டேன். இங்கே தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு மத்தியில் நான் உண்மையைச் சொல்கிறேன்.17) அண்டத்தைப் படைத்தவனும், அனைவரின் தலைவனும், பலமிக்கக் குருவும், வேள்விக் காணிக்கைகளை ஏற்பவனுமான அனைத்துயிரினங்களின் பாதுகாவலன் விரைவில் இந்த வேள்விக்கு வருவான், நீங்கள் அனைவரும் அவனைக் காண்பீர்கள்” என்றார்.(18)
தக்ஷன், “சூலபாணிகளாகவும், தலையில் சடாமுடி தரித்தவர்களாகவும் பல ருத்திரர்களை நாம் கொண்டிருக்கிறோம். அவர்கள் எண்ணிக்கையில் பதினொருவராக இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் நான் அறிவேன், ஆனால் இந்த (புதிய ருத்திரனான) மஹேஸ்வரனை நான் அறியவில்லை” என்றான்.(19)
ததீசி, “மஹேஸ்வரனை அழைக்கக்கூடாது என்பது இங்குள்ளவர் அனைவரின் ஆலோசனையாகத் தெரிகிறது. எனினும், அவனை விட மேன்மையாகச் சொல்லக் கூடிய எந்தத் தேவனையும் நான் காணவில்லை. முன்மொழியப்பட்டிருக்கும் இந்தத் தக்ஷனின் வேள்வி நிச்சயம் அழிவடையப் போகிறது என நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.(20)
தக்ஷன், “இங்கே இந்தத் தங்கக் கலசத்தில், மந்திரங்களாலும், (சடங்குளின்) விதிப்படியும் புனிதமாக்கப்பட்ட வேள்விக் காணிக்கையானது வேள்விகள் அனைத்தின் தலைவனுக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. நான் இந்தக் காணிக்கையை, ஒப்பீட்டைக் கடந்து விஷ்ணுவுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அவனே பலமிக்கவனும், அனைவரின் குருவுமாவான். அவனுக்காகவே வேள்விகள் செய்யப்படுகின்றன” என்றான்”.(21)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதேவேளையில் தன் தலைவனுடன் அமர்ந்திருந்த உமாதேவி இந்த வார்த்தைகளைச் சொன்னாள். “வேள்விக் காணிக்கைகளில் பாதியையோ, மூன்றில் ஒரு பகுதி பங்கையோ சிறப்புமிக்க என் கணவர் பெறுவதற்கு நான் என்ன கொடைகளைக் கொடுக்க வேண்டும்? என்ன நோன்புகளை இருக்க வேண்டும், என்ன தவங்களைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டாள்.(22)
துயரால் கலக்கமடைந்து திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் மனைவியிடம் சிறப்புமிக்க அந்த மஹாதேவன் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன், “ஓ! தேவி, நீ என்னை அறியவில்லை. ஓ! மென்மையான அங்கங்களையும், இடையையும் கொண்டவளே, வேள்விகளின் தலைவனிடம் பேச வேண்டிய சரியான வார்த்தைகளை நீ அறியவில்லை.(23) ஓ! நீண்ட கண்களை உடையவளே, தியானமற்ற பாவிகளால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். உன் மாயா சக்தியால்தான் இந்திரனின் தலைமையிலான தேவர்களும், மூன்று உலகங்கள் அனைத்தும் திகைப்படைகின்றன[1].(24) வேள்விகளில் ஓதுவார்கள் என்னையே துதிக்கிறார்கள். சாமங்கள் பாடுபவர்கள் தங்கள் ரதந்தரங்களில் என்னையே பாடுகிறார்கள். வேதங்களை அறிந்த பிராமணர்கள் தங்கள் வேள்விகளை எனக்காகவே செய்கிறார்கள். மேலும், அதர்யுக்கள், வேள்விக் காணிக்கைகளின் பங்குகளை {ஹவிர்ப்பாகத்தை} எனக்கே அர்ப்பணிக்கிறார்கள்” என்றான்.(25){உமா} தேவி, “சாதாரணத் திறன் கொண்டவர்கள் கூட, தங்கள் மனைவியரின் முன்னிலையில் தங்களையே மெச்சிக் கொண்டு, தற்பெருமையில் ஈடுபடுவார்கள். இதில் எந்த ஐயமும் இல்லை” என்றாள்.(26)
புனிதமானவன் {சிவன்}, “ஓ! தேவர்கள் அனைவரின் ராணியே {தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியே}, நிச்சயமாக என்னை நானே மெச்சிக் கொள்ளவில்லை. ஓ! கொடியிடையாளே, நான் செய்யப் போவதை இப்போது பார். ஓ! அழகிய நிறம் படைத்தவளே, ஓ! என் அழகிய மனைவியே, (உனக்கு நிறைவைத் தராத) இந்த வேள்விக்காக (இந்த வேள்வியை அழிப்பதற்காக) நான் உண்டாக்கப்போகும் ஒருவனைக் காண்பாயாக” என்றான்.(27)
உயிரினும் அன்புக்குரிய தன் மனைவி உமையிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன பலமிக்க மஹாதேவன், காண்போருக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தச் செய்யும் ஒரு பயங்கரப் பூதத்தைத் தன் வாயில் இருந்து உண்டாக்கினான். அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கத் தழல்களுடன் அவனைக் காண இன்னும் பயங்கரமாக இருந்தது. அவனது கரங்கள் எண்ணிக்கையில் பலவாக இருந்தன, அவை ஒவ்வொன்றிலும் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தும் ஓர் ஆயுதமும் இருந்தது.(28)
அவ்வாறு உண்டாக்கப்பட்ட அந்தப் பூதம், அந்தப் பெருந்தேவனின் முன்பு கூப்பிய கரங்களுடன் நின்று, “நான் நிறைவேற்ற வேண்டிய கட்டளைகள் என்ன?” என்று கேட்டது. மஹேஸ்வரன், “சென்று, தக்ஷனின் வேள்வியை அழிப்பாயாக” என்றான்.(29)
இவ்வாறு அணையிடப்பட்டதும், சிங்கத்தின் ஆற்றலைக் கொண்டதும், மஹாதேவனின் வாயில் இருந்து வெளிவத்துமான அந்தப் பூதம், தன் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தாமல், வேறு எவரின் துணையும் இல்லாமல் உமையின் கோபத்தைத் தணிக்கத் தக்ஷனின் வேள்வியை அழிக்க விரும்பியது.(30) கோபத்தால் தூண்டப்பட்டவளான மஹேஸ்வரன் மனைவியும், மஹாகாளி என்று பெயரில் அறியப்பட்ட ஒரு பயங்கர வடிவத்தைத் தானே ஏற்று, (தனக்காக அந்த வேள்வியை அழிக்கத் தன் தலைவனைத் தூண்டியது அவளே என்பதால்) தனது அழிக்கும் செயலைத் தானே தன் கண்களால் காண்பதற்காக, மஹாதேவனின் வாயிலிருந்து வெளிப்பட்ட அந்தப் பூதத்திற்குத் துணையாகச் சென்றாள். அந்த வலிமைமிக்கப் பூதம், மஹாதேவனிடம் தலைவணங்கி அனுமதிபெற்ற பிறகு புறப்பட்டது.(31) சக்தியிலும், பலத்திலும், வடிவத்திலும் அவன் {அந்தப் பூதம்}, தன்னைப் படைத்த மஹேஸ்வரனுக்கு ஒப்பாக இருந்தான். உண்மையில் அவன் (மஹாதேவனின்) கோபம் வாழும் உடலாக இருந்தான்.(32)
அளவிலா வலிமையும், சக்தியும், அளவிலா துணிவும், ஆற்றலும் கொண்ட அவன், தேவியின் கோபத்தைப் போக்குபவனான வீரபத்ரன் என்ற பெயரால் அழைக்கப்படலானான். அப்போது அவன், தன் உடலின் மயிர்க்கால்களில் இருந்து ரௌம்மியர்கள் என்ற பெயரில் அறியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணங்களைப் படைத்தான்.(33) பயங்கர சக்தியும், ஆற்றலும் கொண்டவையும், அக்காரியத்தில் ருத்திரனுக்கு ஒப்பானவையும், கடுமை நிறைந்தவையுமான அந்தக் கணக்கூட்டம், தக்ஷனின் வேள்வியை அழிக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு இடியின் விசையுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றது. பயங்கரம் நிறைந்தவையும், பெரும் வடிவங்களையும் கொண்ட அவை, எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன.(34) அவை தங்கள் குழப்பமான கதறல் மற்றும் அலறல்களால் வானத்தை நிறைத்தன. அவ்வொலி சொர்க்கவாசிகளை அச்சத்தில் நிறைத்தது.(35)
மலைகள் பிளந்து விழுந்தன, பூமி நடுங்கியது. சுழற்காற்றுகள் வீசத்தொடங்கியது. பெருங்கடல் பொங்கியது.(36) தூண்டப்படும் நெருப்புகள் சுடர்விட மறுத்தன. சூரியன் மங்கினான். கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன் ஆகியவை ஒளிரவில்லை.(37) முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் நிறம் மங்கினர். அண்டந்தழுவிய இருள் வானத்திலும் பூமியிலும் பரவியது. அவமதிக்கப்பட்ட ருத்திரர்கள் அனைத்திற்கும் தீமூட்டத் தொடங்கினர்.(38) பயங்கர வடிவிலான அவர்களில் சிலர் அடிக்கவும், தாக்கவும் தொடங்கினர். சிலர் கலங்கடிக்கவும், பிறரை நசுக்கவும் தொடங்கினர்.(39) காற்று அல்லது மனோவேகத்தைக் கொண்ட சிலர், நெருக்கத்திலும், தொலைவிலும் விரையத் தொடங்கினர். சிலர் வேள்விப்பாத்திரங்களையும், தெய்வீக ஆபரணங்களையும் நொறுக்கத் தொடங்கினர். ஆகாயத்தில் மினுங்கும் நட்சத்திரங்களைப் போலத் துண்டுகள், தரையில் சிதறிக் கிடந்தன.(40)
சிறந்த பண்டங்கள், பானக்குடுவைகள் மற்றும் உணவுக் குவியல்கள் மலைகளைப் போலத் தெரிந்தன. தெளிந்து நெய்யையும், பாயசத்தையும் சகதியாகவும், கட்டித் தயிரை நீராகவும், சர்க்கரைக் கட்டிகளை மணலாகவும் கொண்ட பாலாறுகள் அனைத்துப் பக்கங்களிலும் ஓடின. அந்த ஆறுகள் அறுசுவைகளைக் கொண்டவையாக இருந்தன. பாகாலான மிக அழகிய தடாகங்களும் அவற்றில் இருந்தன.(41,42) பல்வேறு சிறந்த வகைகளிலான இறைச்சி, பல்வேறு வகையான உணவுகள், பல அற்புத வகைகளிலான பானங்கள், நக்கவும், உறிஞ்சவும் தக்க பல்வேறு வகைகளிலான உணவுகள் ஆகியவற்றைப்(43) பல்வேறு வாய்களைக் கொண்ட அந்தக் கணங்களின் படை உண்ணத் தொடங்கியது. பிறகு அவை, அந்தப் பல்வேறு வகை உணவுகளை வீசவும், சிதறவும் செய்தன. ருத்திரனுடைய கோபத்தின் விளைவால் அந்தப் பெரும் பூதங்கள் ஒவ்வொன்றும் அனைத்தையும் அழிக்கும் யுக நெரிப்பைப் போலத் தெரிந்தன.(44) தெய்வீகத் துருப்புகளைக் கலங்கடித்த அவை, அவர்களை அச்சத்தால் நடுங்கச் செய்து, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடச் செய்தன. கடுமைநிறைந்த அந்தக் கணங்கள், ஒன்றோடொன்று விளையாடிக் கொண்டு, தெய்வீகக் காரிகைகளைப் பிடித்துத் தள்ளவும், வீசவும் செய்தன.(45)
ருத்திரனின் கோபத்தால் தூண்டப்பட்டுக் கடுஞ்செயல்களைச் செய்த அந்தக் கணங்கள், தேவர்கள் அனைவராலும் பெருங்கவனத்துடன் பாதுகாக்கப்பட்ட அந்த வேள்வியை மிக விரைவில் எரித்தன.(46) ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தால் பீடிக்கச் செய்த அவற்றின் முழக்கங்கள் மிக உரத்தவையாக இருந்தன. அவை வேள்வித் தலையைக் கொய்து முழக்கமிட்டபடியே மகிழ்ந்தன.(47) பிறகு, பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், உயிர்களின் மூதாதையான தக்ஷனும் மரியாதையுடன் அந்த வலிமைமிக்கப் பூதத்திடம் தங்கள் கரங்களைக் கூப்பி, “நீ யார் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர்.(48)
அதற்கு வீரபத்ரன், “நான் ருத்திரனுமல்லேன், அவனது மனைவியான உமாதேவியும் அல்லேன். (இந்த வேள்வியில் அளிக்கப்படும்) கூலியைப் பெறுவதற்காகவும் நான் இங்கே வரவில்லை. உமை கோபமடைந்த செய்தியை அறிந்து, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவான பலமிக்கத் தலைவன் {சிவன்} கோப வசமடைந்தான்.(49) பிராமணர்களில் முதன்மையானவர்களைக் காண நான் இங்கே வரவில்லை. ஆவலால் தூண்டப்பட்டும் நான் இங்கே வரவில்லை. நான் உங்களுடைய இந்த வேள்வியை அழிக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவீராக.(50) வீரபத்ரன் என்ற பெயரால் அறியப்படும் நான், ருத்திரனின் கோபத்தில் இருந்து எழுந்தவனாவேன். பத்திரகாளி என்று அழைக்கப்படும் (என் தோழியான) இந்த மங்கை, தேவியின் கோபத்தில் இருந்து உதித்தவளாவாள். தேவர்களின் தேவனால் அனுப்பப்பட்டே நாங்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறோம்.(51) ஓ! பிராமணர்களில் முதன்மையானவர்களே, தேவர்களின் தலைவனான உமையின் கணவனிடம் பாதுகாப்பை நாடுவீராக. வேறு எந்தத் தேவனிடம் இருந்தும் வரங்களைப் பெறுவதைவிட அந்த முதன்மையான தேவனின் கோபத்தைத் தூண்டுவதைத் தவிர்ப்பதே கூடத் தகுந்ததாகும்” என்றான் {வீரபத்ரன்}.(52)
வீரபத்ரனின் வார்த்தைகளைக் கேட்டவனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவனுமான தக்ஷன், மஹேஸ்வரனை வணங்கி, அவனை நிறைவு செய்வதற்காகப் பின்வரும் ஸ்லோகத்தைச் சொன்னான்.(53) {தக்ஷன்} “பிரகாசமானவனும், நித்தியமானவனும், நிலையானவனும், அழிவற்றவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், அண்டமனைத்தின் தலைவனுமான ஈசானின் பாதங்களின் நான் வீழ்கிறேன்” {என்றான்}[2].(54)இவ்வாறு புகழப்பட்ட பெருந்தேவனான அந்த மஹாதேவன், பிராணன் மற்றும் அபானன் (ஐந்து உயிர் மூச்சுகளில் முதன்மையான இரண்டு) ஆகிய இரண்டையும் நிறுத்தி, தன் வாயைச் சரியாக மூடி,(60) அனைத்துப் புறங்களிலும் (நலம் பயக்கும்) தன் பார்வையைச் செலுத்தி, அங்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பல கண்களைக் கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், தேவர்கள் அனைவரின் தேவர்களுக்கே தலைவனுமான அவன், வேள்வி நெருப்புள்ள குளியில் இருந்து திடீரென எழுந்தான்.(61) ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், மற்றொரு சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தவனுமான அந்தப் பெருந்தேவன், (தக்ஷனைக் கண்டு) மென்மையாகச் சிரித்து, அவனிடம், “ஓ பிராமணா, நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(62)
சரியாக அந்த நேரத்தில், தேவர்கள் அனைவரின் குருவானவர் {பிருஹஸ்பதி}, மோக்ஷ பகுதிகள் அடங்கிய வேத ஸ்லோகங்களைக் கொண்டு மஹாதேவனைத் துதித்தார். அப்போது அனைத்து உயிரினங்களின் மூதாதையான தக்ஷன், அதீதக் கலக்கமடைந்தும், அச்சத்தாலும், பீதியாலும் நிறைந்து, மரியாதையுடன் தன் கரங்களைக் குவித்து, கண்ணீரால் குளித்த கண்கள் மற்றும் முகத்துடன் அந்தப் பெருந்தேவனிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(63)
தக்ஷன், “பெருந்தேவன் என்னிடம் மனம் நிறைந்திருந்தால், அனைத்துயிரினங்களின் பெருந்தலைவன் எனக்கு வரமருளும் மனநிலையில் இருந்தால்,(64) பெருங்கவனத்துடன் நீண்ட வருட காலங்கள் சேகரிக்கப்பட்டவையும், இப்போது எரிக்கப்பட்டு, உண்ணப்பட்டு, பருகப்பட்டு, விழுங்கப்பட்டு, அழிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, சீர்குலைக்கப்பட்டவையுமான இந்த என் பொருட்கள் அனைத்தும்,(65) ஒன்றுக்குமாகாமால் போக வேண்டாம் {வீணாக வேண்டாம்}. இந்தப் பொருட்கள் எனக்குப் பயன்பட வேண்டும். இதுவே நான் வேண்டிக் கேட்கும் வரமாகும்” என்று கேட்டான்.(66)
பகனின் கண்களைப் பிடுங்கியவனான சிறப்புமிக்க ஹரன் அவனிடம் {தக்ஷனிடம்}, “நீ கேட்பது போலவே ஆகட்டும்” என்றான். அனைத்து உயிரினங்கள்ளின் சிறப்புமிக்க மூதாதையும், அறத்தின் பாதுகாவலனுமான அந்த முக்கண் தேவனால் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(67) பவனிடம் இருந்து அந்த வரத்தைப் பெற்ற தக்ஷன், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவனின் முன்பு முழங்காலில் விழுந்து, அவனது ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்தான்” {என்றார் வைசம்பாயனர்}[3].(68)
சிவசஹஸ்ரநாமாவளி! – சாந்திபர்வம் பகுதி – 285-சிவபெருமானின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்த தக்ஷன்; தக்ஷனுக்கு வரமளித்த சிவன்; பாசுபத விரதம் குறித்துச் சொன்ன சிவன்; சிவசஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் உண்டாகும் பயனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்}, “யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, உயிரினங்களின் மூதாதையான தக்ஷன் பெருந்தெய்வத்தை {மஹாதேவனைத்} துதித்த அந்தப் பெயர்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, மதிப்புடன் கூடிய ஆவல் என்னை அவற்றைக் கேட்கத் தூண்டுகிறது” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இயல்புக்கு மீறிய செயல்களைச் செய்பவனும், இரகசிய நோன்புகளையுடையவனுமான அந்தத் தேவதேவனின் இரகசியமான மற்றும் வெளிப்படையான பெயர்களை இப்போது கேட்பாயாக.(2)
தக்ஷன், ஓ! தேவதேவர்கள் அனைவருக்கும் தலைவா {ஈஸ்வரா}, அசுரர்களின் படைகளை அழிப்பவனை நான் வணங்குகிறேன். தேவர் தலைவனின் பலத்தை முடக்குபவன் நீயே. தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படுபவன் நீயே.(3) ஆயிரங்கண் கொண்டவன் நீயே, கடுமை நிறைந்த கண் கொண்டவன் நீயே, முக்கண்ணன் நீயே. யக்ஷ ஆட்சியாளனின் நண்பன் நீயே. அனைத்து இடங்களிலும், அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் கரங்களையும் கால்களையும் கொண்டவன் நீயே. அனைத்துப் புறங்களிலும் திரும்பும் கண்களும், தலையும், வாயும் கொண்டவன் நீயே.(4) அண்டத்தில் எங்கும் காதுகளைக் கொண்டவன் நீயே, ஓ! தலைவா, எங்கும் இருப்பவன் நீயே. கணை போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே, பெரிய காதுகளைக் கொண்டவன் நீயே, குடம் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் கொள்கலன் நீயே.(5) யானை, அல்லது காளை, அல்லது விரிந்த உள்ளங்கையைப் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. உன்னை வணங்குகிறேன். நூறு வயிறுகளைக் கொண்டவனே, நூறு மயிர்ச்சுழிகளைக் கொண்டவனே, நூறு நாவுகளைக் கொண்டவனே. நான் உன்னை வணங்குகிறேன்.(6)
காயத்ரியை பாடுபவர்கள், உன் பெருமைகளையே துதித்தே அந்தக் காயத்ரியைப் பாடுகின்றனர், சூரிய வழிபாட்டாளர்கள், சூரியனைத் துதிப்பதில் உன்னையே துதிக்கின்றனர். பிரம்மன் என்றும், இந்திரன் என்றும், (அளவற்ற) ஆகாயம் {ஊர்த்தவன்} என்றும் முனிவர்கள் உன்னையே கருதுகின்றனர்.(7) ஓ! வலிமைமிக்க வடிவம் கொண்டவனே, பெருங்கடலும் வானும் உன் இரு வடிவங்களாகும். கொட்டிலுக்குள் உள்ள பசுவைப் போல அனைத்துத் தேவர்களும் உன் வடிவத்திலேயே வசிக்கின்றனர்.(8) சோமன், அக்னி, நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, ஆதித்தியன், விஷ்ணு, பிரம்மன், பிருஹஸ்பதி ஆகியோரை நான் உன் உடலிலேயே காண்கிறேன்.(9) ஓ சிறப்புமிக்கவனே, காரணனும், விளைவும் {காரியமும்}, செயல்பாடும் {ப்ரிகையை}, உண்மை மற்றும் உண்மையற்ற அனைத்திற்கான கருவியும் நீயே, படைப்பும், அழிவும் நீயே.(10)
பவன் என்றும், சர்வன் என்றும் ருத்திரன் {பாவத்தை விலக்குபவன்} என்றும் அழைக்கப்படும் உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவனான {வரதனே} உன்னை நான் வணங்குகிறேன்.(11) அனைத்து உயிரினங்களின் தலைவனான உன்னை வணங்குகிறேன். அந்தகனைக் கொல்பவனான உன்னை வணங்குகிறேன்.(12) மூன்று சடை, மூன்று தலை ஆகியவற்றைக் கொண்டு, சிறந்த திரிசூலத்தைத் தரித்து, மூன்று கண்களைக் கொண்டவன் நீயே, எனவே, திரயம்பகம் என்றும் திரிநேத்திரன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே. மூன்று நகரத்தை {திரிபுரத்தை} அழித்த உன்னை வணங்குகிறேன்.(13) சண்டன் {குரூர வடிவத்தக் கொண்டன்} என்றும் குண்டன் {சட்டி போன்றவன்} என்றும் அழைக்கப்படுவனும், (அண்ட) முட்டையாய் இருப்பவனும், (அண்ட) முட்டையைச் சுமப்பவனும், தவசியின் தண்டத்தைத் தரித்தவனும், எங்கும் காதுகளைக் கொண்டவனும், தந்திமுண்டன் என்றழைக்கப்படுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(14) மேல்நோக்கிய கோரப் பற்களும், தலைமயிரும் கொண்டவனும், களங்கமற்று வெண்மையாயிருப்பவனும் {சுக்லனும்}, அண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருப்பவனும் {அவத்தன்}, {ரஜோ குணத்தால்} சிவப்பானவனும் {விலோஹிதனும்}, பழுப்பானவும் {தூம்ரனும்}, நீலத் தொண்டை கொண்டவனுமான {நீலகண்டனுமான} உன்னை வணங்குகிறேன்.(15)
ஒப்பிலாத பயங்கர வடிவம் கொண்டவனே {விரூபனே}, மிக மங்கலமானவனே {சிவனே} உன்னை நான் வணங்குகிறேன். சூரியனே, கழுத்தில் சூரியர்களின் மாலை தரித்தவனே, சூரியச் சின்னம் பொறித்த கொடிமரங்களையும், கொடிகளைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்.(16) பூத கணங்களின் தலைவனே, காளையின் கழுத்தைக் கொண்டவனே, வில்லைத் தரித்தவனே {தந்வியே}, எதிரிகள் அனைவரையும் நொறுக்குபவனே, தண்டனையின் வடிவமே {தண்டனே}, மரவுரியாடை தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்.(17) வயிற்றில் தங்கம் கொண்டவனே, தங்கக் கவசம் பூண்டவனே, தங்க மகுடம் கொண்டவனே, உலகில் உள்ள தங்கமனைத்திற்கும் தலைவனே, உன்னை வணங்குகிறேன்.(18) துதிக்கப்படுபவனே {ஸ்துதனே}, துதிக்கத் தகுந்தவனே {ஸ்துத்பனே}, துதிக்கப்பட வேண்டியவனே {ஸ்தூயமானவனே}, அனைத்துப் பொருளும் ஆனவனே {சர்வனே}, அனைத்தையும் விழுங்குபவனே, அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(19) (வேள்விகளில்) ஹோத்ரியே {ஹோதாவே}, (வேள்விகளில்) ஓதப்படும் (வேத) மந்திரமே {மந்திரனே}, வெள்ளைக் கொடிகளையும், கொடிமரங்களையும் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். அண்டத்தின் தொப்புளாய் இருப்பவனே {நாபனே, நாப்யனே}, ஐம்பூதங்களின் வடிவில் காரணக் காரியமாய் இருப்பவனே, மறைப்பவை அனைத்தையும் மறைப்பவனே உன்னை வணங்குகிறேன்.(20)
கிருசநாசன் {மெல்லிய மூக்குடையவன்} என்றழைக்கப்படுபவனே, மெல்லிய அங்கங்களைக் கொண்டவனே, மெலிவானவனே {கிருசனே} உன்னை வணங்குகிறேன். எப்போதும் உற்சாகமாய் இருப்பவனே {ஸம்ஹ்ருஷ்ட விஹ்ருஷ்டனே}, குழப்பமான ஒலிகள் மற்றும் குரல்களின் உடல்வடிவமே {கிலகிலனே}, உன்னை வணங்குகிறேன்.(21) பூமியில் படர்ந்திருப்பவனே {சயமே}, ஏற்கனவே படர்ந்து விரிந்திருப்பவனே {சயிதனே}, செங்குத்தாக எழுந்து நிற்பவனே {உத்திதனே} உன்னை வணங்குகிறேன். நிலையானவனே {ஸ்திதனே}, ஓடுபவனே {தாவமே}, வழுக்கைத் தலை கொண்டவனே {முண்டனே}, தலையில் சடாமுடி தரித்தவனே {ஜடிலனே} உன்னை வணங்குகிறேன்.(22) ஆடல் விருப்பம் கொண்டவனே, காற்றால் நிறைந்த கன்னங்களைத் தட்டி வாயை உடுக்கையாக்குபவனே {முக வாத்தியம் வாசிப்பவனே} உன்னை வணங்குகிறேன்[1]. ஆறுகளில் மலரும் தாமரைகளை விரும்புபவனே, பாடுவதையும், இசைக்கருவிகளை இசைப்பதையும் விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(23) மூத்த பிறவியே {ஜ்யேஷ்டனே}, உயிரினங்கள் அனைத்தில் முதன்மையானவனே {ச்ரேஷ்டனே}, அசுரன் பலனைக் கொன்றவனே உன்னை வணங்குகிறேன். காலத்தின் உரிமையாளனே {காலனின் கடவுளே}, கல்பத்தின் வடிவமே {கல்யனே}; அனைத்து வகைச் சிறு மற்றும் பேரழிவுகளின் வடிவமே {க்ஷயனே, உபக்ஷயனே} உன்னை வணங்குகிறேன்.(24) பயங்கரமாகவும், பேரிகையொலிக்கு ஒப்பாகவும் சிரிப்பவனே, பயங்கர நோன்புகளை நோற்பவனே உன்னை வணங்குகிறேன். கடுமையானவனும், பத்துக் கரங்களைக் கொண்டவனுமான உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.(25)கைகளில் எலும்புகளை {மண்டையோட்டைத்} தரித்தவனே, ஈமச்சிதைகளின் சாம்பலை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். அச்சத்தை ஏற்படுத்துபவனே {விபீஷ்ணனே}, காண்பதற்குப் பயங்கரனே {பீஷ்மனே}, பயங்கர நோன்புகளையும், நடைமுறைகளையும் கொண்டவனே {பீமனே} உன்னை வணங்குகிறேன்.(26) விகார வாயை {முகத்தைக்} கொண்டவனே, கத்தி போன்ற நாக்கைக் கொண்டவனே, பெரிய பற்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சமைத்த மற்றும் பச்சை இறைச்சியை விரும்புபவனே, சுரைக்காய் வீணையில் மிகுந்த விருப்பமுள்ளவனே உன்னை வணங்குகிறேன்[2].(27) மழையைப் பொழியச் செய்பவனே {வ்ருஷனே}, அறம் விளைய உதவுபவனே {வ்ருஷ்யனே}, நந்தி வடிவனே {நந்திரூபனே}, அறத்தின் சுயமே உன்னை வணங்குகிறேன். காற்றையும், பிற சக்திகளையும் போல எப்போதும் நகர்பவனே {கடங்கடனே}, அனைத்துப் பொருட்களையும் கட்டுப்படுத்துபவனே {தண்டனே}, (காலமெனும் கொப்பரையில்) அனைத்து உயிரினங்களையும் சமைப்பதில் எப்போதும் ஈடுபடுபவனே {பசபசனே} உன்னை வணங்குகிறேன்.(28) அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனே, மேன்மையானவனே, வரங்களை அளிப்பவனே {வரதனே} உன்னை வணங்குகிறேன். சிறந்த மாலைகளையும், சிறந்த நறுமணப் பொருட்களையும், சிறந்த ஆடைகளையும் கொண்டவனே, சிறந்த உயிரினங்களுக்குச் சிறந்த வரங்களை அளிப்பவனே உன்னை வணங்குகிறேன்.(29) பற்றுள்ளவனே {ஆசையுள்ளவனே}, பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவனே {ஆசையற்றவனே}, தியான யோகத்தின் வடிவமே {பாவநனே}, அக்ஷங்களின் மாலைகளால் {ருத்ராக்ஷமாலைகளால்} அலங்கரிக்கப்பட்டவனே உன்னை வணங்குகிறேன். காரணத்தில் கலந்தவனே {ஸம்பந்நனே}, விளைவுகளில் விலகுபவனே {விபிந்நனே}, நிழலாகவும், ஒளியாகவும் இருப்பவனே {சாயனே, ஆத்பனரூபனே} உன்னை வணங்குகிறேன்.(30)இனிமையானவனே, பயங்கரமானவனே, மிகப் பயங்கரமானவனே உன்னை வணங்குகிறேன். மங்கலமானவனே {சிவனே}, அமைதியானவனே {சாந்தனே}, பேரமைதிமிக்கவனே உன்னை வணங்குகிறேன்.(31) ஒரு காலைக் கொண்டவனே, பல கண்களைக் கொண்டவனே, ஒரே தலை கொண்டவனே, கடுமையானவனே {ருத்ரனே}, அற்ப காணிக்கைகளில் நிறைவடைபவனே, ஒப்புரவை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(32) அண்டத்தின் கைவினைஞனே {பஞ்சாலனே}, அமைதிக் குணத்துடன் எப்போதும் கலந்தவனே உன்னை வணங்குகிறேன். பகைவரை அச்சுறுத்தும் மணியை {கண்டாமணியைக்} கொண்டவனே, மணியில் உண்டாகும் கிங்கிணி வடிவானவனே {கண்டாநாதரூபனே}, காதுகளால் உணர முடியாத ஒலியின் வடிவானவனே உன்னை வணங்குகிறேன்.(33) ஒன்றுசேர்ந்த ஆயிரம் மணியொலியைப் போன்றவனே, மணிமாலைகளை விரும்புபவனே, உயிர் மூச்சு உண்டாக்கும் ஒலியைப் போன்றவனே, மணங்கள் அனைத்தின் வடிவமே {கந்தனே}, கொதிக்கும் நீர்மங்களின் குழம்பிய ஒலியின் வடிவமே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(34) மூன்று ஹுங்களைக் கடந்தவனே, இரண்டு ஹுங்களை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். மிக அமைதியானவனே, மலையின் மரங்களுடைய நிழலையே வசிப்பிடமாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்[3].(35)உயிரினங்கள் அனைத்தின் இதயச் சதையை விரும்புபவனே, பாவங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவனே {தாரகரே}, வேள்விக் காணிக்கைகளின் வடிவமே {தரனே} உன்னை வணங்குகிறேன். வேள்வியின் வடிவமே {யஜ்ஞனே}, வேள்வி செய்பவனே {யஜியே}, வேள்வி நெய் ஊற்றப்படும் வாயுடைய பிராமணனே {ஹுதனே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட நெய் ஊற்றப்படும் நெருப்பே {ப்ரஹுதனே} உன்னை வணங்குகிறேன்[4].(36) (வேள்வியின்) ரித்விஜர்களின் வடிவமே {யஜ்ஞவாஹனே}, புலன்களைக் கட்டுக்குள் கொண்டவனே {தாந்தனே}, சத்வமே ஆனவனே {தப்யனே}, ரஜஸையும் கொண்டவனே {ஆத்மநனே} உன்னை வணங்குகிறேன். ஆற்றங்கரை வடிவானவனே {தடனே}, ஆறுகளே ஆனவனே {தட்யனே}, ஆறுகள் அனைத்தின் தலைவனே (பெருங்கடலே) {ஸமுத்திரமே} உன்னை வணங்குகிறேன்.(37) உணவை அளிப்பவனே {அந்நதனே}, உணவுகள் அனைத்தின் தலைவனே, உணவை உண்பவனுக்கு ஒப்பானவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரம் கரங்களைக் கொண்டவனே, ஆயிரம் கால்களைக் கொண்டவனே,(38) கரங்களில் ஆயிரம் திரிசூலங்களை உயர்த்திப் பிடிப்பவனே, ஆயிரம் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உதிக்கும் சூரியனின் வடிவானவனே, குழந்தையின் வடிவானவனே,(39) பிள்ளைகளின் வடிவில் உள்ள ஊழியர்கள் {நண்பர்கள்} அனைவரின் பாதுகாவலனே, பிள்ளைகளின் பொம்மை வடிவானவனே உன்னை வணங்குகிறேன். முதியவனே {வ்ருத்தனே}, பேராசைமிக்கவனே {லுப்தனே}, ஏற்கனவே கலக்கமடைந்தவனே {க்ஷுப்தனே}, கலக்கமடையப் போகிறவனே {க்ஷோபணனே} உன்னை வணங்குகிறேன்.(40)கங்கை அலைகளின் அடையாளம் கொண்ட சடையைக் கொண்டவனே, முஞ்ச {தர்ப்பைப்} புற்களுக்கு ஒப்பான சடைமயிர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். (நன்கறியப்பட்ட) ஆறு செயல்களில் நிறைவடைபவனே, மூன்று செயல்களைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனே உன்னை வணங்குகிறேன்[5].(41) {நான்கு} வாழ்வுமுறைகளுக்குரிய {ஆசிரமங்களுக்குரிய} கடமைகளை வகுத்தவனே உன்னை வணங்குகிறேன். ஒலிகளால் துதிக்கத்தகுந்தவனே {குஷ்யனே}, கவலை வடிவானவனே, ஆழ்ந்த குழப்பமான ஒலியின் வடிவானவனே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(42) வெண்மையும், பழுப்பும், கருப்பும், சிவப்புமெனக் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உயிர்மூச்சுகளை வென்றவனே, ஆயுதங்களின் வடிவானவனே {தண்டனே}, அனைத்துப் பொருட்களையும் பிளப்பவனே {ஸ்போடநனே}, மிக மெலிதானவனே {க்ருசனே} உன்னை வணங்குகிறேன்.(43) அறம், இன்பம், பொருள் மற்றும் விடுதலையை எப்போதும் சொல்பவனே உன்னை வணங்குகிறேன். சாங்கியனே, சாங்கியர்களில் முதன்மையானவனே, சாங்கிய யோகத்தை அறிமுகம் செய்தவனே உன்னை வணங்குகிறேன்.(44) (பயணங்களில்) தேருள்ளவனே, தேரில்லாதவனே உன்னை வணங்குகிறேன். நாற்சந்தி சாலைகளைத் தேராகக் கொண்டவனே, கருப்பு மானின் தோலை மேலாடையாக {உத்தரீயமாகக்} கொண்டவனே, பாம்பை புனித நூலாகக் கொண்டவனே {ஸர்ப்பயஜ்ஞோபவீதமுடையவனே} உன்னை வணங்குகிறேன்.(45)ஈசானனே {மிக விரும்பப்படுபவனே}, வஜ்ரம் போன்ற கடின உடல் கொண்டவனே, பச்சை {மஞ்சள்} சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். முக்கண்ணனே, அம்பிகையின் தலைவனே, புலப்படுபவனே {வ்யக்தனே}, புலப்படாதவனே {அவ்யக்தனே} உன்னை வணங்குகிறேன்.(46) ஆசையே {காமனே}, ஆசைகளைக் கொடுப்பவனே {காமதனே}, ஆசைகள் அனைத்தையும் கொல்பவனே {காமகநனே}, நிறைவு மற்றும் நிறைவின்மையைப் பாகுபடுத்துபவனே உன்னை வணங்குகிறேன். அனைத்துப் பொருளாக இருப்பவனே {ஸர்வனே}, அனைத்துப் பொருளையும் கொடுப்பவனே {ஸாவதனே}, அனைத்துப் பொருளையும் அழிப்பவனே {ஸாவகநனே} உன்னை வணங்குகிறேன். மாலை வானில் தோன்றும் வண்ணங்களாக {சிவப்பு வண்ணமாக} இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(47) வலிமையும், பலமும் ஆனவனே, வலிமைமிக்கக் கரங்களாக இருப்பவனே, வலிமைமிக்கவனே, பெரும் பிரகாசம் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். பெரும் மேகத் திரளைப் போலத் தெரிபவனே, நித்தியத்தன்மையின் வடிவமே உன்னை வணங்குகிறேன். நன்கு வளர்ந்த உடலைக் கொண்டவனே {மஹாகாலரூபியே}, மெலிந்த அங்கங்களைக் கொண்டவனே, தலையில் சடாமுடி தரித்தவனே, மரவுரியும், விலங்குத் தோலும் அணிபவனே உன்னை வணங்குகிறேன்.(48) சூரியனையோ, நெருப்பையோ போன்ற பிரகாசத்தையுடைய சடாமுடி கொண்டவனே, மரவுரியும், தோலும் ஆடையாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரஞ்சூரியப் பிரகாசம் கொண்டவனே, எப்போதும் தவங்களில் ஈடுபடுபவனே உன்னை வணங்குகிறேன்.(49) நோய்த்தூண்டல் உள்ளவனே {உந்மாதநனே / மயக்கமடையச் செய்பவனே}, நூற்றுக்கணக்கான அலைகளைக் கொண்ட கங்கை நீரால் நனைந்த சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சந்திரன், யுகங்கள் மற்றும் மேகங்களை மீண்டும் மீண்டும் சுழற்றுபவனே உன்னை வணங்குகிறேன்[6].(50)உணவே {அந்நமே}, உணவை உண்பவனே {அத்தா}, உணவைக் கொடுப்பவனே {போக்தா}, உணவை வளர்ப்பவனே {அந்நதனே}, உணவை உண்டாக்குபவனே உன்னை வணங்குகிறேன். உணவை சமைப்பவனே, சமைத்த உணவை உண்பவனே {பக்வபுக்}, காற்றும் நெருப்புமாக இருப்பவனே {பவனனே, அநலனே} உன்னை வணங்குகிறேன்.(51) ஓ! தேவதலைவர்கள் அனைவரின் தலைவனே {தேவேசனே}, பாலூட்டிகள் {ஜராயுஜங்கள்}, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை {அண்டஜங்கள்}, கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜங்கள்}, தாவரங்கள் {உத்பிஜ்ஜங்கள்} ஆகிய நான்கு வகை உயிரினங்களாக இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(52) அசைபவை மற்றும் அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தைப் படைத்தவனே, அவற்றை அழிப்பவனே உன்னை வணங்குகிறேன். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனே, பிரம்மத்தை அறிந்தவர்கள் உன்னையே பிரம்மமாகக் கருதுகின்றனர்.(53) பிரம்மத்தைச் சொல்பவர்கள் உன்னையே மனத்தின் உயர்ந்த தோற்றமாகவும், ஆகாயம், காற்று மற்றும் ஒளி உறங்கும் புகலிடமாகவும் சொல்கின்றனர். ரிக்குகள், சாமங்கள் மற்றும் ஓம் எனும் அசை நீயே.(54) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, சாமங்களைப் பாடி பிரம்மத்தைச் சொல்பவர்கள், ஹாயி-ஹாயி, ஹுவா-ஹாயி, ஹுவா-ஹோயி என்ற அசைகளைச் சொல்லும்போது உன்னையே தொடர்ந்து பாடுகின்றனர்[7].(55)யஜுஸ்கள், ரிக்குகள் மற்றும் வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் காணிக்கைகளால் ஆனவன் நீயே. வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் உள்ள துதிகளில் துதிக்கப்படுபவன் நீயே.[8](56) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், கலப்பு வர்ணங்களும் நீயே. வானத்தில் தோன்றும் மேகத்திரள்கள் நீயே; மின்னல் நீயே; இடிமுழக்கம் நீயே.(57) வருடங்கள் நீயே, பருவ காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பிறைநாட்களும் நீயே. யுகம் நீயே, கண் இமைப்பால் பிரதிபலிக்கப்படும் நேரம் {நிமிடம்} நீயே, காஷ்டை நீயே, நட்சத்திரங்கள் நீயே, கோள்கள் நீயே, கலையும் நீயே.(58) மரங்கள் அனைத்தின் உச்சி நீயே, மலைகள் அனைத்தின் சிகரங்கள் நீயே. இழிந்த விலங்குகளில் புலி நீயே, பறவைகளில் கருடன் நீயே, பாம்புகளில் அனந்தன் நீயே.(59) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, ஆயுதம் ஏவும் கருவிகளில் வில் நீயே. ஆயுதங்களில் வஜ்ரம் நீயே, நோன்புகளில் வாய்மை நீயே.(60)வெறுப்பும் நீயே, விருப்பும் நீயே; பற்றும் நீயே, (தீர்மான) மயக்கமும் நீயே; மன்னிக்கும் தன்மை நீயே, மன்னிக்கா தன்மையும் நீயே. முயற்சி நீயே, பொறுமை நீயே, பேராசை நீயே, காமம் நீயே, கோபம் நீயே; வெற்றி நீயே, தோல்வியும் நீயே.(61) கதாயுதம் தரித்தவன் நீயே, கரங்களில் கட்டாங்கமும், ஜர்ஜ்ஜரமும் தரித்தவன் நீயே. வெட்டுபவன், துளைப்பவன், அடிப்பவன் நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும்) வழிகாட்டுபவனும், இன்ப துன்பங்களைக் கொடுப்பவனும் நீயே.(62) {யமம் ஐந்து, நியமம் ஐந்து என்ற} பத்து ஒழுக்கங்களால் குறிப்பிடப்படும் அறம் நீயே; அனைத்து வகைச் செல்வம், அல்லது பொருள் நீயே; இன்பமும் நீயே. கங்கை நீயே, பெருங்கடல்கள் நீயே, ஆறுகள் நீயே, குளங்கள் {பல்வலங்கள் / குட்டைகள்} நீயே, தடாகங்கள் {ஸரஸ்கள் / ஏரிகள்} நீயே.(63) மெல்லிய கொடிகள் நீயே, அடர்த்தியான செடிகொடிகள் நீயே, அனைத்து வகைப் புற்களும் நீயே, உதிர்களின் மூலிகைகள் நீயே. இழிந்த விலங்குகள் நீயே, பறவைகள் நீயே. அனைத்துக் காரியங்கள் மற்றும் செயல்களின் தோற்றம் நீயே, கனிகளும், மலர்களும் விளையும் பருவகாலங்கள் நீயே.(64) வேதங்களின் தொடக்கம் நீயே, அவற்றின் முடிவும் நீயே; காயத்ரி நீயே, ஓம் எனும் அசை நீயே.(65)
பச்சையானவன் {ஹரிதம்} நீயே, சிவப்பானவன் {ரோஹிதம்} நீயே, நீலமானவன் {நீலம்} நீயே, கருப்பானவன் {கிருஷ்ணம்} நீயே, குருதி வண்ணம் {ரத்தம்} நீயே, சூரிய வண்ணம் {அருணம்} நீயே, அடர்பழுப்பானவன் {கத்ரு} நீயே, {கபிலம் / கரிக்குருவியின் நிறம் நீயே}, மென்பழுப்பவானவன் {கபோதம்} நீயே, அடர் நீலமானவன் {மேசகம் / மயில்தோகையின் நிறம்} நீயே[9].(66) நிறமற்றவன் நீயே, சிறந்த நிறம் நீயே, நிறங்களை உண்டாக்குபவன் நீயே, ஒப்பற்றவன் நீயே. தங்கப் பெயர் கொண்டவன் நீயே, தங்கத்தை விரும்புபவன் நீயே.(67) இந்திரன் நீயே, யமன் நீயே, வரமளிப்பவன் நீயே, செல்வத்தின் தலைவன் நீயே, அக்னி நீயே, கிரகணம் {ஒளி மறைப்பு} நீயே, சித்திரபானு என்றழைக்கப்படும் நெருப்பு நீயே, ராஹு நீயே, சூரியன் நீயே.(68) வேள்வி நெய் ஊற்றப்படும் நெருப்பு நீயே. நெய்யை ஊற்றுபவன் நீயே. நெய் ஊற்றி கௌரவிக்கப்படுபவன் நீயே, ஊற்றப்படும் நெய்யே ஆனவன் நீயே, அனைவரின் பலமிக்கத் தலைவன் நீயே. திரிசுபர்ணர்கள் என்றழைக்கப்படும் பிராமண வகையினர் நீயே; வேதங்கள் அனைத்தும் நீயே; யஜுஸ்களில் சதருத்ரீயம் என்றழைக்கப்படும் பகுதிகள் நீயே.(69) புனிதங்களில் புனிதன் நீயே, மங்கலமான அனைத்துப் பொருட்களிலும் மங்கலமானவன் நீயே. அசைவற்ற உடலில் அசைவு {ஹிண்டுகள்} நீயே. மனித வடிவில் வசிக்கும் சித் நீயே. குணங்களை அடைந்து, அழிவை அடையத்தக்கவனாகுபவனும் நீயே. ஜீவன் நீயே, குணங்கள் இல்லாதிருக்கையில் ஒருபோதும் அழிவில்லாதவன் நீயே. ஜீவனுடன் கூடிய உடலின் வடிவில் சிதைவுக்கும், மரணத்திற்கும் தகுந்தவனாக இருப்பினும் முழுமையானவன் நீயே.(70)உயிர்மூச்சு நீயே, சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, குற்றமில்லாதவன் நீயே. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள் நீயே. விழிதிறப்பும் {உந்மேஷமும்}, விழி அடைப்பும் {நிமேஷமும்} நீயே. தும்மலும் {க்ஷுதமும்}, கொட்டாவியும் {ஜ்ரும்பிதமும்} நீயே, எப்போதும் உள்நோக்கித் திரும்பிய சிவந்த கண்களைக் கொண்டவன் நீயே. பெரிய வாயும், வயிறும் படைத்தவன் நீயே.(72) ஊசிகளைப் போல உன் உடலில் மயிர் கொண்டவன் நீயே. பச்சையான தாடி கொண்டவன் நீயே {செம்பட்டையான மீசை கொண்டவன் நீயே}. மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவன் நீயே. வேகத்திலும் வேகமானவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையின் கோட்பாடுகளை அறிந்தவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையை விரும்புபவன் நீயே.(73) நீரில் உலவும் மீன் {மத்ஸ்யன்} நீயே, வலையில் சிக்கிய மீனும் {ஜலசரன்} நீயே. நிறைவானவன் நீயே, விளையாட்டை விரும்புபவன் நீயே, அனைத்து வகைச் சச்சரவுகளின் வடிவமாக இருப்பவன் நீயே. காலம் {கலி} நீயே, கெட்ட காலம் {துஷ்காலன்} நீயே, முதிரா காலம் {அகாலன்} நீயே, மிகைமுதிர்ந்த காலம் {அதிகாலன்} நீயே[10].(74) கொலை {மரணம் / மிருத்யு} நீயே, (கொல்லும்) கத்தி {க்ஷுரம்} நீயே, கொல்லப்படுபவனும் {க்ருத்யன்} நீயே. துணைவன் {பக்ஷன்} நீயே, எதிரி நீயே, துணைவர்களையும், எதிரிகளையும் அழிப்பவன் நீயே. மேகங்கள் தோன்றும் காலம் நீயே, பெரும்பற்கள் நீயே, சம்வர்த்தகமும், வலாஹமும் நீயே[11].(75)காந்தியின் வடிவில் புலப்படுபவன் {கண்டன்} நீயே. மாயையால் பீடிக்கப்பட்டதன் விளைவால் மறைந்திருப்பவன் {புலப்படாதவன் / அகண்டன்} நீயே. உயிரினங்களை அவற்றின் செயல்களின் கனிகளால் இணைப்பவன் {கடி} நீயே. கையில் மணியைக் கொண்டவன் {கண்டி} நீயே. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் (உன் பொம்மைகளாக வைத்துக் கொண்டு) விளையாடுபவன் {சருசேலி} நீயே. காரணங்கள் அனைத்தின் காரணம் {மிலீமிலி} நீயே. (பிரணவத்தின் வடிவிலான) பிரம்மம் நீயே, ஸ்வாஹா நீயே, தண்டதாரி {தண்டி} நீ, வழுக்கை {மொட்டைத்} தலையன் {முண்டன்} நீயே, சொற்கள், செயல்கள் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியவன் நீயே.(76) நான்கு யுகங்கள் நீயே, நான்கு வேதங்கள் நீயே, நான்கு (வேள்வி) நெருப்புகள் உற்பத்தியாகும் மூலம் நீயே. நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகள் அனைத்தையும் இயக்குபவன் நீயே. நான் வகைகளை {வர்ணங்களை} உண்டாக்குபவனும் நீயே.(77) பகடையில் எப்போதும் விருப்பம் கொண்டவன் நீயே. வஞ்சகன் {சூதாடி / தூர்த்தன்} நீயே. கணங்களாகப் பிரிந்திருக்கும் பூதங்களின் தலைவன் நீயே, அவர்களின் ஆட்சியாளனும் நீயே. சிவப்பு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, செவ்வாடைகளை உடுத்துபவன் நீயே. மலைச்சாரலில் உறங்குபவன் {கிரிசன்} நீயே, சிவப்பு வண்ணத்தை {காஷாயன்} விரும்புபவன் நீயே.(78) கலைஞன் {சில்பிகன்} நீயே; கலைஞர்களில் முதன்மையானவன் நீயே; கலைகள் அனைத்தின் தோற்றமும் நீயே. பகனின் கண்களைப் பிடுங்கியவன் நீயே; கடுமையானவன் நீயே, பூஷனின் பற்களைச் சிதைத்தவன் நீயே.(79) ஸ்வாஹா நீயே, ஸ்வதா நீயே, வஷட் நீயே, வணக்கத்தின் வடிவம் நீயே, வழிபாட்டாளர்கள் அனைவராலும் சொல்லப்படும் நமஸ் நமஸ் {நமோநமஹ} என்ற சொற்கள் நீயே. பிறர் அறியாத நோன்புகளையும், தவங்களையும் கொண்டவன் நீயே. பிரணவம் {தாரகன்} நீயே; நட்சத்திரக்கூட்டங்கள் மின்னிக் கொண்டிருக்கும் ஆகாயம் நீயே.(80)
தாத்ரி {தாதா / விஷ்ணு}, விதாத்ரி {விதாதா / நான்முகப் பிரம்மன்}, சந்தாத்ரி {சந்தாதா / அனைத்தையும் ஒன்றாகச் செய்பவன்}, விதாத்ரி {விதிகளை வடிவமைப்பவன் / மஹேஸ்வரன்}, உயர்ந்த காரணமான அனைத்துப் பொருட்களின் புகலிடமாகவும் {தாரணனாகவும்}, புகலிடங்கள் அனைத்தின் சார்பற்றவனாகவும் {அதரனாகவும்} இருப்பவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் {பிரம்மம்} நீயே, தவம் நீயே, வாய்மை நீயே, பிரம்மச்சரியத்தின் ஆன்மா நீயே, எளிமை {ஆர்ஜவம்} நீயே.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா {பூதாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தின் படைப்பாளன் {பூதக்ருத்} நீயே, முழு இருப்பு {பூதன்} நீயே, கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவை எழுந்த காரணன் நீயே. பூமி {பூ:} நீயே, ஆகாயம் {புவ:) நீயே, சொர்க்கம் {ஸ்வ:) நீயே. நித்தியமானவன் நீயே, தற்கட்டுப்பாடு கொண்டவன் {தாந்தா} நீயே, பெருந்தேவன் {மஹாதேவன்} நீயே.(82) தொடக்கம் {தீக்ஷிதன்} நீயே, தொடக்கமில்லாதவன் {அதீக்ஷிதன்} நீயே. மன்னிப்பவன் {க்ஷாந்தன்} நீயே, மன்னிக்காதவன் நீயே; புரட்சியாளர்கள் {அடங்காதவர்கள்} அனைவரையும் தண்டிப்பவன் நீயே. சந்திர மாதம் நீயே, யுகச்சக்கரம் (கல்பம்) நீயே, அழிவு {ஸம்வர்த்தன்} நீயே, படைப்பும் {ஸம்பரவர்த்தகன்} நீயே.(83) காமம் {காமன்} நீயே, உயிர் வித்து {பிந்து} நீயே, நுட்பமானவன் {அணு} நீயே, திரளானவன் {ஸ்தூலன்} நீயே, கர்ணிகார மலர்களாலான மாலைகளை விரும்புபவன் நீயே. நந்தி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே, பயங்கர முகத்தைக் கொண்டவன் நீயே, அழகிய முகம் கொண்டவன் {ஸுமுகன்} நீயே, கொடூர முகம் {துன்முகன்} கொண்டவன் நீயே, முகமற்றவன் {அமுகன்} நீயே.(84) நான்கு முகம் கொண்டவன் நீயே, பல முகங்களைக் கொண்டவன் நீயே, போரில் ஈடுபடும்போதும் நெருப்பின் முகம் {அக்நிமுகன்} கொண்டவன் நீயே. தங்க வயிற்றைக் கொண்டவன் (நாராயணன்) {ஹிரண்யகர்ப்பன்} நீயே, (உணவும், உடைமைகளும் அற்ற பூமியில் பற்று கொள்ளாத) பறவை {சகுநி} நீயே, (வலிமைமிக்கப் பாம்புகளின் தலைவன்) அனந்தன் நீயே, (பெரிதிலும் பெரிதான) விராட் நீயே.(85)
மறத்தை {அநீதியை} அழிப்பவன் நீயே, மஹாபார்ஸ்வன் என்றழைக்கப்படுபவன் நீயே, சண்டதாரன் நீயே, பூதகணங்களின் தலைவன் நீயே. பசுவைப் போன்ற இழிந்தவன் நீயே, பசுவின் பாதுகாவலன் நீயே, காளைகளின் தலைவனை {நந்தியை} உன் பணியாளாகக் கொண்டவன் நீயே.(86) மூவுலகங்களின் பாதுகாவல் நீயே, கோவிந்தன் நீயே, புலன்களை இயக்குபவன் நீயே, புலன்களால் புரிந்து கொள்ள முடியாதவன் நீயே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே, நிலையானவனே நீயே, அசைவற்றவன் {நிஷ்கம்பன்} நீயே, நடுங்காதவன் {கம்பன்} நீயே, நடுக்கத்தின் வடிவம் நீயே.(87) தடுக்கப்பட முடியாதவன் நீயே, நஞ்சுகள் அனைத்தையும் முறிப்பவன் நீயே, (போரில்) தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் நீயே, கடந்து செல்லப்பட முடியாதவன் நீயே, நடுங்கச்செய்ய முடியாதவன் நீயே, அளவிட முடியாதவன் நீயே, வெல்லப்பட முடியாதவன் நீயே, வெற்றி {ஜயன்} நீயே.(88) வேகம் {சசன்} நீயே, சந்திரன் நீயே, (அண்டத்தை அழிப்பவனான) யமன் நீயே, (செல்லவிடாமல்) குளிர், வெப்பம், பசி, பலவீனம் மற்றும் நோயை பொறுப்பவன் நீயே. மனத்துயர்கள் அனைத்தும் நீயே, உடல் நோய்கள் அனைத்தும் நீயே, அந்த நோய்களற்றவன் நீயே.(89) மானின் வடிவில் தப்பிச் செல்ல முயற்சித்த என் வேள்வியை அழித்தவன் நீயே. நோய்கள் அனைத்தின் தோற்றமும், விலக்கமும் நீயே. உயர்ந்த முகடு {சிகண்டி} நீயே. தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் நீயே. காட்டுத் தாமரைகளின் மத்தியில் வசிப்பவன் நீயே.(90)
தவசியின் தண்டத்தைத் தரித்தவன் நீயே. மூன்று வேதங்களை முக்கண்களாகக் கொண்டவன் நீயே. கடுமையான தண்டனைகளைக் கொடுப்பவன் நீயே. (அண்டம் உதித்தபோது தோன்றிய) முட்டையை அழிப்பவன் நீயே. நஞ்சு மற்றும் நெருப்பு ஆகிய இரண்டையும் பருகுபவன் நீயே, தெய்வங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. சோமம் பருகுபவன் நீயே, மருத்துகளின் தேவன் நீயே.(91) அமுதம் பருகுபவன் நீயே. அண்டத்தின் ஆண்டவன் நீயே. மகிமையில் ஒளிப்பவன் நீயே, ஒளிர்வதனைத்தின் தலைவன் நீயே. நஞ்சிலிருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாப்பவன் நீயே. பாலும், சோமமும் பருகுபவன் நீயே. சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தவர்களைப் பாதுகாப்பவர்களில் முதன்மையானவன் நீயே. தேவர்களில் முதல்வனை {பிரம்மனைப்} பாதுகாப்பவன் நீயே.(92) தங்கமே உயிர் வித்தாகக் கொண்டவன் {ஹிரண்யரேதஸ்} நீயே. ஆண் நீயே, பெண் நீயே, அலி நீயே. குழந்தை நீயே, இளைஞன் நீயே, பற்கள் உதிர்ந்த முதிர்ந்தவன் {ஸ்தவிரன்} நீயே, நாகர்களில் முதன்மையானவன் {ஐராவதன்} நீயே, சக்ரன் {இந்திரன்} நீயே, அண்டத்தை அழிப்பவன் நீயே, படைப்பாளன் நீயே.(93) பிரஜாபதி நீயே, பிரஜாபதிகளில் துதிக்கப்படுபவன் நீயே, அண்டத்தை ஆதரிப்பவன் நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் நீயே, பெருஞ்சக்தி கொண்டவன் நீயே, அனைத்துத் திசைகளிலும் திரும்பி முகங்களைக் கொண்டவன் நீயே. சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாய் கொண்டவன் நீயே, பெரும்பாட்டனை இதயமாகக் கொண்டவன் நீயே. பெருங்கடல் நீயே. சரஸ்வதி தேவியை உன் வாக்காகக் கொண்டவன் நீயே, நெருப்பையும் {அநலனையும்}, காற்றையும் {அநிலனையும்} உன் வலிமையாக {பலமாகக்} கொண்டவன் நீயே. பகலும், இரவும் நீயே. இமை திறத்தல் மற்றும் அடைத்தல் உள்ளிட்ட செயல்கள் அனைத்தும் நீயே.(94) ஓ! மங்கல தேவனே {சிவ பெருமானே}, பிரம்மனோ, கோவிந்தனோ {விஷ்ணுவோ}, புராதன முனிவர்களோ உண்மையில் உன் மகிமையைப் புரிந்து கொள்ளத் தகுந்தவர்களல்ல.(95)
நீ கொண்ட நுட்பமான வடிவங்கள் எங்களுக்குப் புலப்படவில்லை. ஓ!, தந்தையானவன் தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் பாதுப்பத்தைப் போல என்னைக் காப்பாயாக.(96) ஓ! என்னைப் பாதுகாப்பாயாக. நான் உன் பாதுகாப்புக்குத் தகுந்தவனாவேன். ஓ! பாவமற்றவனே நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சிறப்பு மிக்கவனே, உன் பக்தர்களிடம் கருணை நிறைந்தவன் நீயே. நான் எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்.(97) பெருங்கடலின் அடுத்தக் கரையில், புரிந்து கொள்ளக் கடினமான வடிவில், பல்லாயிரம் மனிதர்களை மறைத்துத் தனிமையில் உள்ளவன் என் பாதுகாவலனாகட்டும்.(98) புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், சத்வ குணத்தைக் கொண்டவர்கள், தங்கள் உயிர் மூச்சுகளை ஒழுங்கு செய்தவர்களும், உறக்கத்தை வென்றவர்களுமான மனிதர்களால் பிரகாசமான ஒளியின் வடிவில் காணப்பட்ட யோகத்தின் ஆன்மாவை நான் வணங்குகிறேன்.(99) சடாமுடி தரித்தவனும், தவசியின் தண்டத்தைக் கையில் கொண்டவனும், நீண்ட வயிற்றுப் பகுதியைக் கொண்ட உடலைக் கொண்டவனும், முதுகில் கமண்டலம் கட்டப்பட்டவனும் பிரம்மனின் ஆன்மாகவும் இருப்பவனை நான் வணங்குகிறேன்.(100)
நீரின் ஆன்மாவாக இருப்பவனை, மேகத்தை முடியாய் கொண்டவனை, மூட்டுகளில் ஆறுகளைக் கொண்டவனை, வயிற்றில் நான்கு கடல்களைக் கொண்டவனை நான் வணங்குகிறேன்.(101) யுக முடிவு நேரும்போது உயிரினங்களை அனைத்தையும் விழுங்கி அண்டத்தை மறைக்கும் நீர்ப் பரப்பில் (உறங்குவதற்கு) பரந்து விரிந்து கிடப்பவனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(102) ராஹுவின் வாய்க்குள் நுழைந்து இரவில் சோமனைப் பருகுபவனும், சுவர்பானுவாகி சூரியனையும் விழுங்குபவனும் என்னைப் பாதுகாக்கட்டும்.(103) பிரம்மனின் படைப்புக்குப் பிறகு உன்னில் இருந்து எழுந்த குழந்தனைகளான தேவர்கள் (வேள்விக் காணிக்கைகளில்) தங்களுக்குரிய பங்குகளை அனுபவிக்கிறார்கள். ஸ்வாஹா மற்றும் ஸ்வதாவுடன் செய்யப்படும் காணிக்கைகளை அவர்கள் (அமைதியாக) அனுபவிக்கட்டும், அந்தக் கொடைகளில் இருந்து அவர்கள் இன்பத்தை அடையட்டும். நான் அவர்களை வணங்குகிறேன்.(104) அனைத்து உடல்களிலும் கட்டைவிரல் அளவில் வசிக்கும் மூர்த்திகள் {ருத்திரர்கள் / மஹாருத்திரனின் பகுதிகள்} என்னை எப்போதும் பாதுகாத்து, நிறைவு கொள்ளச் செய்யட்டும்.(105)
உடல்படைத்த உயிரினங்களில் வசித்து, தாங்கள் துன்புற்று அழாமல் அவற்றைத் துயரில் அழச் செய்து, தாங்கள் மகிழ்ச்சியடையாமல் அவற்றை மகிழ்ச்சியடைச் செய்யும் அந்த மூர்த்திகளை எப்போதும் நான் வணங்குகிறேன்.(106) ஆறுகள், பெருங்கடல்கள், குன்றுகள், மலைகள், மலைக்குகைகள், மரத்தின் வேர்கள், பசுக்கொட்டில்கள், அடைதற்கரிய காடுகள், நாற்சந்திகள், சாலைகள், வெட்ட வெளிகள், (ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடல்களின்) கரைகள், யானைச்சாலைகள், குதிரைச் சாலைகள், தேர்ச்சாலைகள், கைவிடப்பட்ட தோட்டங்கள் மற்றும் வீடுகள், ஐம்பூதங்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகளில் வசிக்கும் ருத்திரர்களை நான் எப்போதும் வணங்குகிறேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட வெளியிலும், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களிலும் வசிப்பவர்களையும், பாதாள லோகத்தில் வசிப்பவர்களையும், துறவை மேற்கொண்டவர்களையும், உயர்ந்ததை அடைவதற்கான பிற மேன்மையான நடைமுறைகளில் ஈடுபடுபவர்களையும் நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(107-110)
எண்ணமுடியாதவர்களும், அளவிடமுடியாதவர்களும், வடிவமில்லாதவர்களும், முடிவிலா குணங்களைக் கொண்டவர்களுமான ருத்திரர்களை நான் வணங்குகிறேன்.(111) ஓ! ருத்திரா, அனைத்து உயிரினங்களையும் படைதவன் நீயே, ஓ! ஹரனே, அனைத்து உயிரினங்களின் ஆண்டவன் நீயே, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மாவும் நீயே என்பதால்தான் (என் வேள்விக்கு) உன்னை நான் அழைக்கவில்லை.(112) அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகள் அனைத்திலும் துதிக்கப்படுபவனே நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நீயே என்பதால்தான் நான் உன்னை அழைக்கவில்லை.(113) அல்லது, ஓ! தேவா, உன் நுட்பமான மாயையில் திகைப்படைந்த நான் உன்னை அழைக்கத் தவறிவிட்டேன்.(114) என்னிடம் நிறைவு கொள்வாயாக, ஓ! பவா, ரஜஸ் குணத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னிடம் அருள்கூர்வாயாக. ஓ! தேவா, என் மனம், புத்தி, சித்தம் அனைத்தும் உன்னிலேயே வசிக்கிறது” என்றான் {என்று துதித்தான் தக்ஷன்}[12].(115)அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவன் {சிவன்}, இந்தத் துதிகளைக் கேட்டு (மேலும் தக்ஷனுக்குத் தீங்கிழைக்க எண்ணாமல்) நின்றான். உண்மையில், மிகவும் நிறைவடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, தக்ஷனிடம், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்ட தக்ஷா, உன் துதிகளால் நான் நிறைவடைந்தேன். மேலும் என்னைத் துதிக்க வேண்டாம். நீ என் உதவியைப் பெறுவாய்.(117) ஓ! உயிரினங்களின் மூதாதையே, (நிறைவடையாத இந்த ஒரு வேள்வியின் விளைவாக) என் அருளால் ஆயிரம் குதிரை வேள்விகள் மற்றும் நூறு வாஜபேயங்களின் கனியை நீ ஈட்டுவாய்” என்றான்.(118)
சொற்களின் முற்றான ஆசானான மஹாதேவன் மீண்டும் தக்ஷனிடம், உயர்ந்த ஆறுதல் கூறும் வகையில், “உலகின் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனே நீயே இருப்பாயாக.(119) ஓ! தக்ஷா, இந்த வேள்வியில் நிகழ்ந்த தீங்குகளுக்கான நீ துயரடையாதே. முந்தைய கல்பங்களில் கூட நான் உன் வேள்வியை அழித்திருக்கிறேன்[13].(120) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, நான் மேலும் உனக்குச் சில வரங்களைக் கொடுக்கப் போகிறேன். என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. உன் முகத்தில் பரவியிருக்கும் இந்த உற்சாகமற்ற தன்மையைக் களைந்து, சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(121){சிவன் தொடர்ந்தான்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களிலிருந்தும், ஸாங்கியத்திலிருந்தும் பெற்ற அறிவுக்குப் பொருத்தமான வாதத்தின் துணையால், பல நீண்ட வருடங்கள் செய்யக்கூடிய கடுந்தவங்களைத் தேவர்களாலும், தானவர்களாலும் செய்ய முடிந்தது.(122) எனினும், நான் வகுத்த சாரமானது ஒப்பற்றதும், அனைத்து திசைகளிலும் நன்மையை உண்டாக்கவல்லதுமாகும். இஃது அனைத்து வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} கொண்ட மனிதர்களாலும் செய்யப்படலாம். இது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. பல வருடங்கள், அல்லது புலன்களை அடங்கிய மனிதர்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் இஃது அடையப்படுகிறது. இது புதிரால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானமற்றவர்கள் இதைக் கண்டிக்கத்தக்கதாகக் கருதுகிறார்கள்.(123) இது நான்கு வகைகள் {வர்ணங்கள்} மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} ஆகியவற்றில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு முரண்பட்டதும், மிகச் சொற்பமான கடமைகளில் மட்டுமே உடன்பட்டதுமாக இருக்கிறது. (அனுமானங்களில் இருந்து) தீர்மானங்களை (வரையறுக்கும்) அறிவியலில் நன்கு திறம்பெற்றவர்களாலும் அனைத்து வாழ்வுமுறைகளையும் கடந்து, அதைப் பின்பற்றத் தகுந்தவர்களாலும் அதன் ஏற்புடைமையைப் புரிந்து கொள்ள முடியும்.(124) ஓ! தக்ஷா, பழங்காலத்தில், பாசுபதம் என்றழைக்கப்பட்ட மங்கலமான அறம் {விரதம்} என்னால் உண்டாக்கப்பட்டது. அவ்வறத்தைச் சரியாகப் பின்பற்றுவது அபரிமிதமான நன்மைகளை உண்டாக்கும்.(125) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, அந்த நன்மைகள் யாவும் உனதாகட்டும். உன் இதயத்தில் உள்ள இந்த நோயை விலக்குவாயாக” என்றான்{சிவன்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன் {சிவன்}, தன் மனைவி (உமை) மற்றும் தன் தொண்டர்கள் அனைவருடன் அளவிலா ஆற்றலைக் கொண்ட தக்ஷனின் பார்வையில் இருந்து மறைந்து போனான்.(126)
தக்ஷனால் முதலில் சொல்லப்பட்ட இந்தத் துதியை உரைப்பவன், அல்லது மற்றொருவனால் உரைக்கப்படுவதைக் கேட்பவன், சிறு தீமையையும் சந்திக்காமல் நீண்ட வாழ்நாளை அடைவான்.(127) உண்மையில், தேவர்களில் முதன்மையானவனாகச் சிவன் இருப்பதைப் போலவே துதிகள் அனைத்திலும் முதன்மையாக ஸ்ருதிகளுக்கு ஏற்புடைய இந்தத் துதியும் இருக்கிறது.(128) புகழ், அரசாட்சி, மகிழ்ச்சி, இன்பம், பொருள் {லாபம்}, செல்வம் ஆகியவற்றை விரும்பும் மனிதர்களும், கல்வியில் விருப்பமுள்ளவர்களும் இந்தத் துதியைப் பக்தியுணர்வுடன் கேட்க வேண்டும்.(129) நோயால் பீடிக்கப்பட்டவன், துன்பத்தால் வருந்துபவன், துயரில் மூழ்கியவன், கள்வர்கள் அல்லது அச்சத்தால் பீடிக்கப்பட்டவன், அரசனின் வெறுப்புக்கு உள்ளானவன் ஆகியோர் (இந்தத் துதியை உரைப்பதால், அல்லது கேட்பதால்) அச்சத்தில் இருந்து விடுபடுவார்கள்.(130)
இந்தத் துதியைக் கேட்பது, அல்லது உரைப்பதன் மூலம் ஒருவன் உலகம் சார்ந்த இந்த உடலுடனே, மஹாதேவனின் தொண்டர்களாக அமைந்திருக்கும் கணங்களுக்கு இணையான தன்மையை அடைவான். (இந்தத் துதியின் மூலம்) ஒருவன் சக்தியையும், புகழையும் பெறுவான், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(131) இந்தத் துதி உரைக்கப்படும் இல்லத்தில் ராட்சசர்களாலோ, பிசாசங்களாலோ, பூதங்களாலோ, விநாயகர்களாலோ எந்த அமளிகளிலும் ஈடுபடமுடியாது.(132)
பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்று இந்தத் துதியைக் கேட்கும் பெண்ணானவள், தன் தந்தை மற்றும் தன் கணவனின் இல்லத்தில் ஒரு தேவியின் வழிபாட்டை வெல்வாள்.(133) இந்தத் துதியைக் கவனத்துடன் கேட்பவன் அல்லது உரைப்பவனின் செயல்கள் அனைத்தும் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும்.(134) இந்தத் துதியை உரைப்பதன் விளைவால் ஒருவன் தன் மனத்திற்குள் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும், வார்த்தைகளில் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும் அவை கனிவதால் மகுடம் சூட்டப்படும்.(135) தற்கட்டுப்பாட்டைப் பயின்று மஹாதேவன், குஹன், உமை, நந்தி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உரிய சடங்குகளை உரிய முறையில் அர்ப்பணிப்புடன் செய்யும் மனிதன், தான் விரும்பிய அனைத்துப் பொருட்களையும், அனுபவிக்கத்தக்க, இன்பத்திற்குரிய அனைத்தையும் அடைவான்.(136) அத்தகைய மனிதன் இப்பிறவியை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தால், இடைநிலை உயிரினங்களான விலங்குகளாகவோ, பறவைகளாகவோ மீண்டும் ஒருபோதும் பிறப்பை அடைய மாட்டான். இதைப் பராசரரின் மகனான பலமிக்க வியாசரும் சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(137)
ஆன்மிகவியல்! – சாந்திபர்வம் பகுதி – 286-அத்யாத்மா குறித்து மீண்டும் விசாரித்த யுதிஷ்டிரன்; ஆத்மா, புத்தி, பூதங்கள், புலன்கள் மற்றும் கொணங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விவரித்த பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மனிதனைப் பொறுத்தவரையில் அத்யாத்மா என்பது என்ன? அஃது எங்கிருந்து எழுகிறது” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்யாத்ம அறிவியலின் துணையுடன் ஒருவனால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் அஃது அனைத்து பொருட்களிலும் மேன்மையானது. நான் என் புத்தியின் உதவியைக் கொண்டு நீ கேட்கும் அத்யாத்மா குறித்து உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, என் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி ஆகியவையே பெரும்பூதங்களாகும். இவையே தோற்றமும், அழிவுமாகும் (தோற்றம் மற்றும் அழிவிற்கான காரணங்களாகும்).(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உயிரினங்களின் உடல்கள் (நுண்ணுடல் மற்றும் பருவுடல் ஆகிய இரண்டும்) இந்த ஐந்தின் பண்புகளுடைய கலவையின் விளைவேயாகும். அந்தப் பண்புகள் மீண்டும் மீண்டும் தொடங்கி, மீண்டும் மீண்டும் (அனைத்துப் பொருட்களுக்கும் மூலக் காரணமான பரமாத்மாவுக்குள்) கலக்கிறது.(4) பெருங்கடலின் முடிவிலா அலைகள் எழுந்து, தங்களுக்குக் காரணமான கடலிலேயே கலப்பதைப் போல, இந்த ஐந்து அடிப்படை பூதங்களில் இருந்து படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும், இந்த ஐந்து பெரும்பூதங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கலக்கின்றன.(5) ஓர் ஆமை தன் கால்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போல, எண்ணிலா உயிரினங்கள் அனைத்தும் இந்த ஐந்து நிலையான பெரும்பூதங்களில் இருந்து எழுந்து (அதனுள்ளேயே நுழைகின்றன).(6)
உண்மையில் ஒலியானது ஆகாயத்தில் இருந்து உண்டாகிறது, அடர்த்தியான பொருள் அனைத்தும் பூமியின் குணத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரானது காற்றில் இருந்து வருகிறது. சுவை நீரில் இருந்து வருகிறது. வடிவமானது ஒளியின் தன்மையாகும்.(7) இவ்வாறே அசையும் மற்றும் அசையாதவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும், இந்த ஐந்து பெரும்பூதங்களின் பல்வேறு கலவைகளிலேயே ஒன்றாக நீடித்திருக்கின்றன. அழிவு நேரும்போது, பல்வேறு வகையான முடிவற்ற உயிரினங்களும் தங்களை மீண்டும் அந்த ஐந்தினுக்குள் கலக்கின்றன, பிறகு படைப்புத் தோன்றும்போது மீண்டும் அந்த அந்த ஐந்தில் இருந்து உதிக்கின்றன.(8) படைப்பாளன், அனைத்து உயிரினங்களிலும் தான் சரியென நினைக்கும் அளவுகளில் இந்த ஐம்பூதங்களையும் கலந்து வைக்கிறான்.(9)
ஒலி, காதுகள் மற்றும் துளைகள் அனைத்தும் – ஆகிய இம்மூன்றும் – வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றத்தின் காரணமாகக் கொண்டிருக்கின்றன. சுவை, நீர்மங்கள் அனைத்தும் மற்றும் நாக்கு ஆகியவை நீரின் தன்மையைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(10) வடிவம், கண், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு ஆகியன ஒளியின் இயல்பைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மணம், நுகரும் உறுப்பு {மூக்கு}, உடல் ஆகியன பூமியின் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.(11) உயிர், தீண்டல் மற்றும் செயல்பாடு ஆகியன காற்றின் தன்மைகளாகச் சொல்லப்படுகின்றன. ஓ மன்னா, ஐம்பூதங்களைக் குறித்தும் நான் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(12)
ஓ! பாரதா, இவற்றைப் படைத்த பரமன், சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் நனவுநிலையின் {அகங்காரத்தின்}செயல்பாடுகள் மற்றும் ஆறாவதாக அமையும் மனத்துடன் சேர்த்து இவற்றைக் கலந்து வைத்தான்.(13) புத்தி என்றழைக்கப்படும் ஒன்று, உள்ளங்காலுக்கு மேலும், உச்சந்தலைக்குக் கீழும் நீ காணும் உட்பகுதியில் வசிக்கிறது.(14) மனிதனில் ஐந்து (அறிவுப்) புலன்கள் இருக்கின்றன. ஆறாவதாக (ஆறாவது புலனாக) மனம் இருக்கிறது. ஏழாவதே புத்தி என்றழைக்கப்படுகிறது. க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மா எட்டாவதாகும்.(15) புலன்களும், செயல்படும் பொருள்களும், அதனதனுக்குரிய செயல்பாடுகளை உணர்வதன் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். சத்வம், ரஜஸ், தமஸ் என்றழைக்கப்படும் நிலைகள், அவற்றின் புகலிடத்திற்காகவோ, அமைப்பிற்காகவோ புலன்களையே சார்ந்திருக்கின்றன.(16) புலன்களானவை, தங்கள் தங்களுக்குரிய பொருட்களின் தாக்கத்தைப் பற்றுவதற்காகவே நீடித்திருக்கின்றன. மனமானது ஐயத்தையே தன் செயல்பாடாகக் கொண்டுள்ளது. புத்தியானது உறுதி {செய்வதையே தன் செயல்பாடாகச்} செய்கிறது. க்ஷேத்ரஜ்ஞன் (பிறவற்றின் {ஏழின்} செயல்பாட்டைக் காணும்) செயல்பாடற்ற சாட்சியாக மட்டுமே சொல்லப்படுகிறான்.(17) சத்வம், ரஜஸ், தமஸ், காலம், செயல்கள் ஆகிய குணங்கள் புத்தியை இயக்குகின்றன. புலன்களும், மேற்குறிப்பிட்ட ஐந்து குணங்களுமே புத்தியாகிறது.(18) புத்தி இல்லாத போது, புலன்களோடு கூடிய மனமும் இன்னும் பிற குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் செயல்கள் ஆகிய) ஐந்தும் இயங்குவதில்லை.
எதைக் கொண்டு புத்தியானது பார்க்கிறதோ அது கண் என்று அழைக்கப்படுகிறது.
புத்தி கேட்கும்போது, அது காது என்று அழைக்கப்படுகிறது.
அவள் {புத்தி} நுகரும்போது, அவள் மணத்தின் புலனாகிறாள்;
அவள் சுவைக்குரிய பல்வேறு பொருட்களைச் சுவைக்கும்போது, அவள் நாக்கு என்ற பெயரின் மூலம் அழைக்கப்படுகிறாள்.(19)
மேலும் அவள் தீண்டலின் பல்வேறு பொருட்களைத் தீண்டும்போது அவள் தீண்டும் புலனாகிறாள்.
புத்தியே பல்வேறு வகையில் அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகிறாள். புத்தியானவள் எதையும் விரும்பும்போது மனமாகிறாள்.(20)
(புத்தி எனும்) தனிப்பட்ட அமைப்பின் அடிப்படைகளான மனத்தோடு கூடிய ஐம்புலன்களும் புத்தியின் படைப்புகளேயாகும். அவை இந்திரியங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை களங்கப்படும்போது, புத்தியும் களங்கமடைகிறது.(21) ஜீவனில் புத்தியானவள் மூன்று நிலைகளில் இருக்கிறாள். சில வேளைகளில் அவள் இன்புறுகிறாள்; சில வேளைகளில் அவள் துன்புறுகிறாள்;(22) சில வேளைகளில் இன்பமும் துன்பமும் அற்ற நிலையில் இருக்கிறாள். புத்தியானவள், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) இந்த மூன்று நிலைகளையே தன் சாரமாகக் கொண்டு, இந்த மூன்று நிலைகளிலேயே சுழன்று கொண்டிருக்கிறாள்.(23) ஆறுகளின் தலைவனான பொங்கும் கடலானது, எப்போதும் தன் கரைகளுக்குள்ளே இருப்பதைப் போலவே, புத்தியும், இந்த (மூன்று) நிலைகளின் தொடர்புடன் (புலன்கள் உள்ளிட்ட) மனத்தில் இருக்கிறாள்.(24)
ரஜஸ் நிலை விழிப்படையும்போது, புத்தியானவள் ரஜஸாக மாறுகிறாள். மகிழ்ச்சி, இன்பம், திளைப்பு, உற்சாகம், இதய நிறைவு ஆகியன(25) ஏதோவொருவகையில் தூண்டப்படும்போது சத்வ தன்மையுள்ளதாகின்றன. குறிப்பிட்ட காரணங்களில் இருந்து எழும் இதய எரிச்சல், துயரம், கவலை, நிறைவின்மை, மன்னிக்கும்தன்மையின்மை(26) ஆகியன ரஜஸின் விளைவுகளாகும். அறியாமை, பற்று, பிழை {குற்றம்}, கவனமின்மை, திகைப்பு, கிலி,(27) அற்பத்தனம் {சிறுமை}, உற்சாகமின்மை, உறக்கம், தாமதித்தல் ஆகியன குறிப்பிட்ட காரணங்களால் உண்டாகும்போது அவை தமஸின் தன்மைகளாகின்றன.(28)
உடல் அல்லது மனமானது இன்பம் அல்லது மகிழ்ச்சியின் தொடர்புடைய எந்நிலையில் எழுந்தாலும், அது சத்வ நிலையின் விளைவாகக் கருதப்பட வேண்டும்.(29) மேலும் ஒருவனுக்குக் கவலைநிறைந்ததாகவும், ஏற்பில்லாததாகவும் இருக்கும் எதுவும் ரஜஸில் இருந்து எழுந்ததாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய செயல் எதையும் தொடங்காமலேயே (அதைத் தவிர்ப்பதற்காக) ஒருவன் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்.(30) உடல் அல்லது மனத்தில், உணர இயலாத, புதிரான வகையில் பிழை நிறைந்து அல்லது திகைப்படையச் செய்யும் எதுவும் தமஸுடன் தொடர்புடையதாக அறியப்பட வேண்டும்.(31) இவ்வாறே நான் இவ்வுலகில் புத்தியில் வசிக்கும் பொருட்கள் அனைத்தையும் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன். இவற்றை அறிவதன் மூலம் ஒருவன் விவேகியாகிறான். ஞானத்தின் குறியீடாக வேறு எது இருக்கு முடியும்?(32)
புத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரு நுண்ணியப் பொருட்களுக்கிடையிலான வேறுபாட்டை இப்போது அறிவாயாக. இவற்றில் ஒன்றான புத்தியே குணங்களை உண்டாக்குகிறது. மற்றொன்றான ஆன்மா அவற்றை உண்டாக்குவதில்லை.(33) இயல்பில் அவை ஒன்றுக்கொன்று வேறானவையாக இருந்தாலும் அவை எப்போதும் ஒரே நிலையில் கலந்தே இருக்கின்றன. ஒரு மீனானது, தான் வசிக்கும் நீரிலிருந்து வேறான ஒன்றாகும், ஆனால் மீனும், நீரும் ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும்.(34) குணங்களால் ஆன்மாவை அறிய முடியாது. எனினும் ஆன்மாவானது அவற்றை அறியும். அறியாமை கொண்டோர் புத்தியில் குணங்கள் இருப்பதைப் போல இந்தக் குணங்கள் ஆன்மாவில் கலந்த நிலையிலேயே இருக்கின்றன என்று கருதுகிறார்கள். எனினும், ஆன்மாவானது செயல்பாடின்றி அனைத்தையும் காணும் சாட்சி மட்டுமே என்பதால் உண்மை அவ்வாறானதாக இல்லை.(35) புத்திக்கு எந்தப் புகலிடமும் கிடையாது. (புத்தியின் இருப்பில் ஈடுபடும்) உயிர் என்றழைக்கப்படுவது, குணங்கள் ஒன்றாகச் சேர்வதன் விளைவுகளில் இருந்தே உண்டாகிறது. (புத்தியின் மூலம் உண்டாக்கப்பட்ட இந்தக் குணங்களைத் தவிர) காரணங்களாகச் செயல்படும் வேறு சில, உடலில் வசிக்கும் புத்தியைப் படைக்கின்றன. குணங்களின் உண்மை இயல்பையோ அவற்றுடைய இருப்பின் வடிவத்தையோ எவராலும் உணர முடியாது.(36)
ஏற்கனவே சொல்லப்பட்டது போலப் புத்தியே குணங்களைப் படைக்கிறது. ஆன்மாவானது (செயலற்ற சாட்சியாக) அவற்றைக் காண மட்டுமே செய்கிறது. புத்திக்கும், ஆன்மாவுக்கு இடையில் நீடிக்கும் இந்த ஒற்றுமை நித்தியமானதாகும்.(37) உள் வசிக்கும் புத்தியானது, உயிரற்றவையும், புரிந்து கொள்ளாதவையுமான புலன்களின் மூலமே அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்கிறது. உண்மையில் புலன்களானவை (தன்னால் பொருட்களைக் காண முடியாது என்றாலும், பிறர் காண ஒளியை வீசும்) விளக்குகளைப் போன்றவை மட்டுமே.(38) இதுவே (புலன்கள், புத்தி மற்றும் ஆன்மாவின்) இயற்கையாகும். இதை அறியும் ஒருவன், துயரத்திற்கோ இன்பத்திற்கோ வசப்படாமல் உற்சாகமாக வாழ வேண்டும். அத்தகைய மனிதனே செருக்கின் ஆதிக்கத்தைக் கடந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(39) புத்தியானவள் தன் இயல்பின் மூலம் இந்தக் குணங்கள் அனைத்தையும் உண்டாக்குகிறாள் என்பது – சிலந்தியானது (தன் இயல்பின் விளைவால்) வலை பின்னுவதைப் போன்றதாகும். இந்தக் குணங்களைச் சிலந்தி பின்னும் வலையாக அறிய வேண்டும்.(40)
அழிவடையும்போது குணங்கள் இருப்பதில்லை; அவற்றின் இருப்பு புலப்படுவதில்லை. எனினும், ஒரு பொருள் புலன்களின் திறனைக் கடக்கும்போது அதன் இருப்பு (அல்லது இல்லாமை) உள்ளுணர்வால் உறுதி செய்யப்படுகிறது. இஃது ஒரு குழுவினருடைய கருத்தாகும். வேறு சிலர், அழிவோடு சேர்த்து குணங்களும் இல்லாமல் போகின்றன என்று உறுதி செய்கின்றனர்.(41) புத்தி மற்றும் சிந்தனை குறித்துச் சொல்லப்படும் முடிச்சுகள் நிறைந்த இந்தப் பிரச்சனையை அவிழ்த்து, ஐயமனைத்தும் களையும் ஒருவன் கவலையை விட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(42) அதன் ஆழத்தை அறியாத மனிதர்கள், மயக்கமெனும் நீரால் நிறைந்த ஓர் ஆற்றைப் போன்ற இந்தப் பூமியில் விழும்போது துயரடைவதைப் போலவே, புத்தியில் ஒற்றுமை இருக்கும் இந்த நிலையில் இருந்து விழும் மனிதனும் துயரடைகிறான்.(43) எனினும் அத்யாத்மாவை அறிந்து மனோவுறுதி கொண்ட ஞானிகள், அந்த நீரின் மறுகரையை அடைய இயன்றவர்கள் என்பதால் அவர்கள் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. உண்மையில், ஞானமே (அந்த ஆற்றில்) திறமிக்கத் தோணியாகும்.(44) ஞானமற்றவர்களை அச்சுறுத்தும் பீதி நிறைந்த கிலிகளை ஞானிகள் சந்திக்க வேண்டியதில்லை. அறவோரைப் பொறுத்தவரையில், அவர்களில் எந்த மனிதனும் அடைந்த கதிக்கு மேன்மையான கதியை அவர்களில் எவரும் அடைவதில்லை. உண்மையில், இவ்வகையில் அறவோர் தங்கள் சமத்தன்மையை வெளிக்காட்டுவர்.(45) ஞானியைப் பொறுத்தவரையில், (அவன் அறியாமையில் மூழ்கியிருந்த) கடந்த காலங்களில் அவனால் செய்யப்பட்ட எந்தச் செயல்களையும், (ஞானமடைந்த பிறகு) அவன் செய்த கொடுமைநிறைந்த எந்தச் செயல்களையும் ஞானத்தையே தன் ஒரே வழிமுறையாகக் கொள்வதன் மூலம் அழிக்கிறான். பிறகு, அவன் ஞானமடைந்த பிறகு, பிறரின் தீச்செயல்களைக் கண்டிப்பது, பற்றின் ஆதிக்கத்தில் தானே தீச்செயல்களைச் செய்வது என்ற அந்த இரண்டு தீமைகளையும் செய்வதை நிறுத்துகிறான்” என்றார் {பீஷ்மர்}.(46)
துன்பமற்ற நிலை! – சாந்திபர்வம் பகுதி – 287-துக்கத்தையும், மரணத்தையும் தவிர்ப்பது எவ்வாறு என்று கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயிரினங்கள் எப்போதும் துன்பத்தையும், மரணத்தையும் கண்டு அஞ்சுகின்றன. ஓ! பாட்டா, இந்த இரண்டும் நேராமல் தவிர்ப்பது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2)
நாரதர் {சமங்கரிடம்}, “(பெரியோரை வணங்க சிலர் தங்கள் தலைகளை மட்டுமே தாழ்த்துகின்றனர்) நீர் பெரியோர்களை வணங்க உமது மார்பு தரையைத் தொடும் வரை நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்து வணங்குகிறீர். நீர் உமது கரங்களைக் கொண்டே (வாழ்வெனும் ஆற்றைக்) கடப்பதாகத் தெரிகிறது[1]. நீர் எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டவராகவும், மிகுந்த உற்சாகம் நிறைந்தவராகத் தென்படுகிறீர். நீர் எப்போதும் நிறைவுடையவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஒரு குழந்தையைப் போல (இன்பமாக) விளையாடிக் கொண்டிருப்பவராகவும் தென்படுகிறீர்” என்றார்.(4)
சமங்கர் {நாரதரிடம்}, “ஓ! கௌரவங்களை அளிப்பவரே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களைக் குறித்த உண்மையை நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் உற்சாகமிழப்பதில்லை[2].(5) இவ்வுலகில் செயல்களின் தொடக்கம் எது, அவற்றால் அடையப்படும் கனிகள் என்னென்ன, அந்தக் கனிகள் எவ்வாறு பல்வேறு வகைகளில் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை[3].(6) ஓ! நாரதரே, கல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், செல்வந்தர்கள், குருடர்கள், மூடர்கள், பித்தர்கள் என நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பாரும்[4].(7) இவர்கள் தங்கள் முற்பிறவிச் செயல்களின் மூலம் வாழ்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட்டவர்களான தேவர்களே கூட, முற்பிறவிகளின் செயற் தன்மையின் மூலம் (அந்நிலையில்) இருக்கிறார்கள். பலவீனர்களும், பலவான்களும் என அனைவரும் தங்கள் முற்பிறவி செயல்களின் தன்மையால் வாழ்கின்றனர். எனவே, நீர் நம்மை மதிப்பதே உமக்குத் தகும்.(8) ஆயிரங்களைக் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். நூறுகளைக் கொண்டவர்களும் வாழ்கிறார்கள். துன்பத்தில் மூழ்கியவர்களும் வாழ்கிறார்கள். நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் பாரும்.(9)ஓ! நாரதரே, நாம் துன்பவசப்படாமல் இருக்கும்போது, (அறக்) கடமை பயிற்சியோ, (அறச்) செயல் நோற்போ நமக்கு என்ன செய்துவிட முடியும்? இன்ப துன்பங்கள் அனைத்தும் முறிவற்றவை என்பதால், அவற்றால் ஒருபோதும் நம்மைக் கலங்கடிக்க முடிவதில்லை[5].(10) ஞானிகள் என்று எதனால் மனிதர்கள் சொல்லப்படுகிறார்கள், அது பிழையில் {குற்றத்தில்} இருந்து புலன்களை விடுபடச் செய்யும் ஞானமே ஆகும். புலன்களே பிழைக்கும் {குற்றத்திற்கும்}, துயரத்திற்கும் வசப்படுகிறது. பிழைக்கு {குற்றத்திற்கு} ஆட்படும் புலன்களைக் கொண்ட ஒருவன் ஞானத்தை அடைவான் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.(11) பிழையின் ஆதிக்கத்தால் மனிதன் கொள்ளும் செருக்கானது, அவன் அடங்கியிருக்கும் பிழையின் {குற்றத்தின்} வடிவம் மட்டுமே ஆகும். பிழை செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இம்மையும் கிடையாது, மறுமையும் கிடையாது. துன்பங்கள் எப்போதும் நீடித்திருப்பதில்லை, இன்பமும் எப்போதும் இருக்காது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்[6].(12) திருப்பங்கள் மற்றும் துன்ப நிகழ்வுகள் நிறைந்த இந்த உலகவாழ்வை என்னைப் போன்ற ஒருவன் ஒருபோதும் பின்பற்ற மாட்டான். அத்தகைய ஒருவன், இன்பத்திற்குரிய பொருட்களை விரும்புவதில் கவனம் கொள்ள மாட்டான், அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை நினைக்க மாட்டான், அல்லது அவை கொண்டு வரும் துன்பங்களையும் நினைக்க மாட்டான்.(13) தற்சார்பு கொள்ள இயன்ற ஒருவன், பிறரின் பொருள்களில் ஒருபோதும் பேராசை கொள்ள மாட்டான்; அடையப்படாத லாபங்களைக் குறித்து நினைக்க மாட்டான்; அபரிமிதமான செல்வத்தை அடைவதால் மகிழ்ச்சியை உணர மாட்டான்; செல்வத்தை இழப்பதால் துன்பவசப்பட மாட்டான்.(14) நண்பர்களாலோ, செல்வத்தாலோ, உயர்ந்த பிறப்பாலோ, சாத்திரக் கல்வியாலோ, மந்திரங்களாலோ, சக்தியாலோ மறுமையின் துன்பத்தில் ஒருவனை மீட்க முடியாது. ஒழுக்கத்தின் மூலமே ஒருவனால் அங்கே இன்பத்தை அடையமுடியும்.(15)யோகத்தை அறியாத மனிதனின் புத்தியை ஒருபோதும் விடுதலையை {முக்தியை} நோக்கிச் செலுத்த முடியாது. யோகத்தை அறியாத ஒருவனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. பொறுமையும், கவலையைக் கைவிடும் மனோவுறுதியுமே மகிழ்ச்சி உண்டாவதற்கான இரண்டு அறிகுறிகளாகும்.(16) ஏற்புடைய {இனிமையான} எதுவும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இன்பம் செருக்கைத் தூண்டுகிறது. மேலும் செருக்கானது கவலையை உண்டாக்குகிறது. இந்தக் காரணங்களுக்காகவே நான் இவை அனைத்தையும் தவிர்க்கிறேன்.(17) என் உடல் உயிருள்ளதாகத் திரிந்து கொண்டிருப்பதால், இதயத்தைத் திகைப்படையச் செய்யும் துயரம், அச்சம், செருக்கு ஆகியவற்றையும், இன்ப துன்பங்களையும் நான் (கவலையற்ற) சாட்சியாக மட்டுமே காண்கிறேன்[7].(18) செல்வம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும், தாகம் மற்றும் பிழையையும் கைவிட்டு, துயரத்தில் இருந்தும், அனைத்து வகை இதயக் கவலைகளிலும் இருந்தும் விடுபட்டுப் பூமியில் திரிந்து விருகிறேன்.(1) அமுதம் பருகிய ஒருவனைப்போல, இம்மையிலோ, மறுமையிலோ, மரணத்திலோ, கொடூரத்திலோ, காமத்திலோ, அவ்வகையான எவற்றிலோ எனக்கு அச்சமேதும் இல்லை.(20) ஓ! பிராமணரே, நான் செய்த கடுமையான, அழிவற்ற தவங்களின் விளைவாக நான் இந்த ஞானத்தை அடைந்திருக்கிறேன். ஓ! நாரதரே, இதன் காரணமாகவே, என்னிடம் வரும் துன்பத்தால் என்னைப் பீடிப்பதில் வெல்ல முடிவதில்லை” என்றார் {சமங்கர்}” {என்றார் பீஷ்மர்}.(21)
தற்கட்டுப்பாடு அற்றவனுக்கான நன்மையும் சிறப்பும்! – சாந்திபர்வம் பகுதி – 288-ஆன்ம ஞானத்தைத் தேடாத மனிதர்கள் எவ்வழியில் மேன்மையடையலாம், நன்மையும், சிறப்பும் அடையலாம் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சாத்திரங்களின் உண்மைகளை அறியாதவனும், எப்போதும் ஐயத்தில் இருப்பவனும், தற்கட்டுப்பாட்டையும், ஆன்ம ஞானத்தை நோக்கமாகக் கொண்ட பிற பயிற்சிகளையும் தவிர்ப்பவனுமான ஒருவனுக்கு எது நன்மை என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆசானை வழிபடுதல், முதியோரிடம் மதிப்புடன் காத்திருத்தல் {அவர்களுக்குப் பணிவிடை செய்தல்}, (தகுந்த பிராமணர்களால் சொல்லப்படும்) சாத்திரங்களைக் கேட்டல் ஆகியவையே (நீ சொன்னதைப் போன்ற ஒருவனுக்கு) உயர்ந்த நன்மையை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது.(2) இது தொடர்பாகக் காலவருக்கும் தெய்வீக முனிவரான நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(3)
ஒரு காலத்தில், தனக்கான நன்மையை அடைவதில் விருப்பம் கொண்ட காலவர், பிழை மற்றும் களைப்பில் {குற்றங்குறைகளில்} இருந்து விடுபட்டவரும், சாத்திரங்களில் கல்விமானும், அறிவில் நிறைவுடையவரும், தன் புலன்களை முற்றாக ஆள்பவரும், யோகத்தில் அர்ப்பணிப்புள்ள ஆன்மாவுடன் கூடியவருமான நாரதரிடம்,(4) “ஓ! முனிவரே, இவ்வுலகத்தில் ஒரு மனிதன் மதிக்கப்படுவதற்குத் தகுந்த ஒழுங்கங்கள் அனைத்தும் உம்மில் நிரந்தரமாக வசிக்கின்றன.(5) பிழையில் {குற்றத்தில்} இருந்து விடுபட்டவரான உமக்கு, பிழைக்கு ஆட்படுபவர்களும், உலகின் உண்மைகளை அறியாதவர்களுமான எங்களைப் போன்ற மனிதர்களின் மனங்களில் நிறைந்திருக்கும் ஐயங்களை அகற்றுவதே தகும்.(6) சாத்திரத் தீர்மானங்கள் செயல்களைச் செய்யத் தூண்டும் அதே வேளையில் ஞானம் (அடைவதற்கான) தூண்டலையும் உண்டாக்குகின்றன என்பதால் எங்களுக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. இக்காரியம் குறித்து எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்[1].(7) ஓ சிறப்புமிக்கவரே, வெவ்வேறு ஆசிரமங்கள் {வாழ்வுமுறைகள்} வெவ்வேறு ஒழுக்க நடைமுறைகளை அங்கீகரிக்கின்றன. “இது நன்மையானது, இந்த மற்றொன்று நன்மையானது” என்ற வகையிலேயே சாத்திரங்கள் எப்போதும் நம்மைத் தூண்டுகின்றன.(8)சாத்திரங்களால் இவ்வாறு தூண்டப்பட்டு, தங்களுக்காக அந்தச் சாத்திரங்கள் விதித்திருப்பதை முழுமையாக அங்கீகரித்து, அதன்படியே பல்வேறு பாதைகளில் பயணித்து அந்த நான்கு ஆசிரமங்களைப் பின்பற்றுவோரைக் கண்டும், எங்கள் சாத்திரங்களில் நிறைவோடு இருக்கும் எங்களைப் பார்த்தும் உண்மையில் எது நன்மையானது என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் தவறுகிறோம்.(9) சாத்திரங்கள் அனைத்தும் சமச்சீரானவை என்றால், எது உண்மையில் நன்மையானது என்பது வெளிப்பட்டிருக்குமே. எனினும், பல்வேறு வகைப்பட்ட சாத்திரங்களின் விளைவால் உண்மையான நன்மை எது என்பது புதிராகிப் போகிறது.(10) இந்தக் காரணங்களால் எது உண்மையில் நன்மையானது என்பது எனக்குக் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. எனவே, ஓ! சிறப்புமிக்கவரே, இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக. (இதற்காகவே) நான் உம்மை அணுகினேன். ஓ!, எனக்குப் போதிப்பீராக” என்றார் {காலவர்}.(11)
நாரதர் {காலவரிடம்}, “ஓ! குழந்தாய், ஆசிரமங்கள் எண்ணிக்கையில் நான்காகும். அவை அனைத்தும், தாங்கள் வடிவமைக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும், தங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும் கடமைகளுக்காகவும் தொண்டாற்றுகின்றன. ஓ! காலவா, நல்ல திறன் கொண்ட ஆசானிடம் அவற்றை முதலில் உறுதிசெய்து கொண்டு, பிறகு அவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்[2].(12) ஆசிரமங்களின் தகுதிகள் {புண்ணியங்கள்}, தங்கள் தங்களுக்குரிய வடிவில் வெவ்வேறானவையும், பொருளில் வேறுபட்டவையும், தாங்கள் தழுவும் நோன்புகளில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையுமாகும்[3].(13) அகன்ற நோக்கில் கண்டால், ஆசிரமங்கள் அனைத்தும், (ஆன்ம அறிவு என்ற) தங்கள் உண்மை நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்த மறுக்கின்றன. எனினும், நுட்பமான பார்வையைக் கொண்டவர்கள் தங்கள் உயர்ந்த கதியை அதில் காண்கிறார்கள்.(14) எது உண்மையில் நன்மையானதோ, எதில் நண்பர்களுக்கான நன்மைகள், எதிரிகளை ஒடுக்குதல்,(15) (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்றையும் அடைவதில் ஐயமேற்படவில்லையோ, அதுவே உயர்ந்த சிறப்பு {நன்மை} என்று ஞானிகளால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாவச் செயல்களைத் தவிர்ப்பது, தொடர்ந்த அற மனோநிலை, நல்லோர் மற்றும் பக்திமான்களிடம் நன்னடத்தை ஆகிய இவையே மிகச் சிறந்தவையாகும்.(16)உயிரினங்கள் அனைத்திடமும் மென்மை, நடத்தையில் உண்மை, இனிய சொற்களைப் பயன்படுத்துதல் ஆகிய இவையே சிறப்பானவை {நன்மையானவை} என்பதில் ஐயமில்லை.(17) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோரிடம் சமமான பகிர்தலையும், பணியாட்களிடம் பற்றையும் ஒருவன் கொண்டால் அவையே மிகச் சிறந்தவையாகும்.(18) பேச்சில் வாய்மை சிறந்தது. எனினும், உண்மை குறித்த அறிவை அடைவது மிகக் கடினமானதாகும். வாய்மையே உயிரினங்களுக்கு மிக நன்மையானது என நான் சொல்வேன்.(19) செருக்கைத் துறத்தல், கவனமின்மையைக் களைதல், மனோநிறைவு, தற்சார்புடன் வாழ்தல் ஆகியவையே உயர்வான சிறப்புகளாக {நன்மைகளாகச்} சொல்லப்படுகின்றன.(20)
நன்கறியப்பட்ட விதிகளின் படி வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களைக் குறித்த கல்வி, ஞானம் அடைவதற்காகச் செய்யப்படும் ஆனைத்து வகை ஆய்வுகள், மற்றும் தேடல்கள் ஆகியவை சிறப்பானவை என்பதில் ஐயமில்லை.(21) எது சிறப்பானதோ, அஃதை அடைய விரும்பும் ஒருவன், ஒலி, வடிவம், சுவை, தீண்டல் மணம் ஆகியவற்றை அதிகமாகவும், தங்களுக்காக மட்டுமே என்ற வகையிலும் ஒருபோதும் அனுபவிக்கக்கூடாது.(22) சிறப்படைய விரும்பும் ஒருவனால், இரவில் உலவுதல், பகலில் உறங்குதல், சோம்பலில் ஈடுபடுதல், அயோக்கியத்தனம், ஆணவம், புலன் நுகர் பொருட்களில் அதிகமாக ஈடுபடுதல், அவற்றை முற்றிலும் தவிர்த்தல் என்ற இவை அனைத்தும் துறக்கப்பட வேண்டும்.(23) பிறரை இகழ்வதன் மூலம் ஒருவன் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ள முனையக்கூடாது. உண்மையில், அவன் தன் தகுதிகளால் மட்டுமே புகழ்பெற்றவர்களில் இருந்து தனித்தன்மையை {விசேஷ மேன்மையை} நாட வேண்டுமேயன்றி, ஒருபோதும் தாழ்ந்தவர்களிடம் அதைச் செய்யக்கூடாது.(24) உண்மையில் தகுதியற்ற {புண்ணியமற்ற} மனிதர்கள், தன்னையே வியந்து பாராட்டிக் கொள்ளும் உணர்வால் நிறைந்து, தங்கள் சிறப்புகள் மற்றும் செல்வாக்கை உறுதி செய்வதன் மூலம் உண்மையான தகுதியுள்ள மனிதர்களை {புண்ணியவான்களை} இகழ்கிறார்கள்.(25)
தன் முக்கியத்துவம் என்ற உணர்வில் பெருகும் இம்மனிதர்கள், (சரியான உணர்வுக்கு மீளும் வகையில்) தங்களோடு எவரும் தலையிடாதபோது, அவர்கள் உண்மையில் தனிச் சிறப்புடைய மனிதர்களைவிடத் தங்களை மேன்மையானவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள்.(26) உண்மை ஞானமும், உண்மையான தகுதிகளையும் கொண்ட ஒருவன், பிறரைக் குறித்து இழிவாகப் பேசுதல் மற்றும் தற்புகழ்ச்சி செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பெரும் புகழை அடைகிறான்.(27) மலர்கள் தங்கள் சிறப்பை ஊதி முழக்காமல், தூய்மையும், இனிமையும் நிறைந்த தங்கள் நறுமணத்தை வீசுகின்றன. பிரகாசமான சூரியனும், முற்றான அமைதிநிலையில் ஆகாயத்தில் தன் காந்தியைப் பொழிகிறான்.(28) அவ்வகையிலேயே, தங்கள் நுண்ணறிவின் துணையுடன் இது போன்ற பிற குற்றங்களைக் களைந்து, தற்சிறப்புகளைப் புகழ்ந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்களே இவ்வுலகில் புகழுடன் சுடர்விடுகிறார்கள்.(29) தன் புகழையே ஊதிக்கொள்ளும் மூடனால் ஒருபோதும் இவ்வுலகில் ஒளிர முடியாது. எனினும், உண்மைத் தகுதியும், கல்வியும் கொண்ட மனிதன், குழிக்குள்ளேயே மறைந்திருந்தாலும் புகழை அடைவான்.(30)
எவ்வகைக் குரல்வளத்தோடு தீய வார்த்தைகள் சொல்லப்பட்டாலும், அஃது உடனே மறைந்துவிடும். நல்ல வார்த்தைகள் எவ்வளவு மென்மையாகச் சொல்லப்பட்டாலும் இவ்வுலகில் சுடர்விடும்.(31) சூரியன் தனது நெருப்பு வடிவத்தை (சூரியகாந்தம் என்றழைக்கப்படும் ரத்தினத்தில்) வெளிக்காட்டுவதைப் போலவே, பகட்டு நிறைந்த மூடர்களால் சொல்லப்படுபவையும் சிற்றறிவைக் கொண்டவையுமான வார்த்தைகள், அவர்களுடைய இதயங்களை (அவற்றின் அற்பத்தனைத்தை) மட்டுமே வெளிப்படுத்தும்.(32) இந்தக் காரணங்களால் மனிதர்கள் பல்வேறு ஞானங்களை அடைய முனைகிறார்கள். ஞானம் தொடர்பாக அடையப்படும் அனைத்தும் மதிப்புமிக்கவையாகவே எனக்குத் தோன்றுகின்றன.(33) ஒருவன் தன்னை எவரும் கேட்காதவரை பேசக்கூடாது; முறையற்ற வகையில் கேட்கப்படும்போதும் பேசக்கூடாது. அவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் கொண்டிருந்தாலும் (பேசுமாறு தன்னை எவரும் கேட்டுக் கொள்ளும் வரை, உரிய முறையில் கேட்கப்படும் வரை) அவன் மூடனைப் போலவே அமர்ந்திருக்க வேண்டும்.(34) அறம், ஈகையில் அர்ப்பணிப்புள்ள நேர்மையாளர்கள் மற்றும் தங்களுக்குரிய வகையின் {வர்ணக்} கடமைகளைச் செய்பவர்கள் ஆகியோருக்கு மத்தியிலேயே ஒருவன் வசிக்க வேண்டும்.(35)
சிறப்பை அடைய விரும்பும் ஒருவன், பல வகையினரின் கடமைகளில் குழப்பங்கள் நேரும் {மக்கள் தங்களுக்குத் தகாத காரியங்களைச் செய்யும்} இடங்களில் ஒருபோதும் வசிக்கக்கூடாது.(36) (வாழ்வாதார வழிமுறைகளை ஈட்டும்) பணிகள் அனைத்தையும் தவிர்த்து, முயற்சியில்லாமல் கிடைத்தவற்றில் நிறைவுடன் வாழும் மனிதனும் இங்கே காணப்படுகிறான். அறவோருக்கு மத்தியில் வாழ்வதன் மூலமே ஒருவன் தூய அறத்தை அடைவதில் வெல்கிறான். அதே வகையில், பாவிகளுக்கு மத்தியில் வாழும் ஒருவன் பாவத்தால் களங்கப்படுகிறான்.(37) நீர், நெருப்பு, நிலவின் கதிர் ஆகியவை தீண்டிய உடனேயே குளிர் அல்லது வெப்பத்தை உணர்த்துவதைப் போலவே, அறம் மற்றும் மறத்தின் சுவடுகளே இன்பதுன்பங்களை உண்டாக்குகின்றன.(38) விகாசத்தை {வேள்வியில் எஞ்சியவற்றை} உண்பவர்கள், தங்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் சுவையைக் கவனிக்காமலேயே உண்கிறார்கள். எனினும், தங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சுவையை வேறுபடுத்திப் பார்த்துக் கவனமாக உண்பவர்கள், இன்னும் செயல்பாட்டு பந்தங்களின் மூலம் கட்டப்பற்றவர்களாகவே அறியப்பட வேண்டும்.(39) எங்கே ஒரு பிராமணர், அறிவின் அடிப்படையில் ஆன்மா குறித்த அறிவை அடைய விரும்பும் சீடர்களிடம் கடமைகளைக் குறித்து உரையாடினாலும், அத்தகைய அறிவை அவர்கள் {சீடர்கள்} மதிக்கவில்லையோ அந்த இடத்தில் இருந்து அறவோன் அகல வேண்டும்[4].(40)எனினும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு முழு இணக்கமாகச் சீடர்கள் மற்றும் ஆசான்களுக்கு இடையிலான நடத்தை இருக்கும் எந்த இடத்தையும்விட்டு யார்தான் விலகிச்செல்வார்?(41) எந்த இடத்தில் கல்விமான்களின்மேல் அடிப்படையற்ற களங்கத்தை மக்கள் சொல்வார்களோ, அந்த இடத்தில் தன் மதிப்பை {சுயகௌரவத்தை} விரும்பும் எந்தக் கல்விமான்தான் இருப்பான்?(42) எங்கே பேராசைமிக்க மனிதர்கள் அறத்தின் எல்லைகளை {அறம் நிலைப்பதற்குரிய தடைகளைத்} தகர்ப்பார்களோ, அந்த இடத்தைவிட்டு ஆடையில் நெருப்பு பற்றியதைப் போல எவன்தான் விலகாமல் இருப்பான்?(43) எங்கே பணிவுடனும், அச்சமில்லாமலும் அறக்கடமைகளைப் பயிலும் மனிதர்கள் இருப்பார்களோ, அந்த இடத்தில் அறமனம் கொண்ட நல்லோருக்கு மத்தியிலேயே ஒருவன் நீடித்து வசிக்க வேண்டும்.(44) எங்கே மனிதர்கள் செல்வத்தை ஈட்டுவதற்காகவும், தற்காலிகமானப் பயன்கள் பிறவற்றிற்காகவும் அறக்கடமைகளைப் பயில்வார்களோ அந்த இடத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாவிகளாகக் கருதப்படுவதால் அங்கே அவன் வசிக்கக்கூடாது. (45)
எங்கே மனிதர்கள் வாழ்வாதாரத்தை அடைய விரும்பி பாவச்செயல்களில் ஈடுபடுவார்களோ, அங்கேயிருந்து அறையில் பாம்பைக் கண்ட ஒருவனைப் போல அவன் மிக வேகமாகத் தப்பிச் செல்ல வேண்டும்.(46) நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், எந்தச் செயலின் விளைவால் முள் படுக்கையில் கிடப்பதைப் போல உணர்வானோ, முற்பிறவிகளின் செயல்களில் பிறந்த ஆசையால் பீடிக்கப்படுவானோ, அந்தச் செயலைத் தொடக்கத்தில் இருந்தே துறக்க வேண்டும்.(47) எந்த நாட்டில் மன்னனும், மன்னனின் அலுவலர்களும் சம அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்களோ, எங்கே (விருந்திற்கு வந்த) உறவினர்களுக்கு உணவூட்டும் முன்பே உண்ணும் வழக்கம் கொண்டோர் இருக்கிறார்களோ, அந்த நாட்டை விட்டு அறவோன் விலக வேண்டும்.(48) சாத்திர அறிவைக் கொண்ட பிராமணர்களுக்கு முதலில் எங்கே உணவூட்டப்படுகிறதோ; எங்கே அவர்கள் அறக்கடமைகளை முறையாகச் செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்களோ, எங்கே அவர்கள் சீடர்களுக்குப் போதித்து, பிறரின் வேள்விகளில் துணை புரிகிறார்களோ அந்த நாட்டிலேயே ஒருவன் வசிக்க வேண்டும்.(49) ஸ்வாஹா, ஸ்வதா, வஷத் ஆகிய ஒலிகள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் எந்த நாட்டில் ஒலிக்கிறதோ, அங்கே ஒருவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் வசிக்கலாம்.(50)
எந்த நாட்டில் நஞ்சூட்டப்பட்ட இறைச்சியைப் போலப் பிராமணர்கள் வாழ்வின் தேவைகளை அடைய முடியாத துன்பத்தில் புனிதமற்ற நடைமுறைகளில் ஈடுபடுவதை ஒருவன் காண்கிறானோ, அந்த நாட்டை விட்டு அவன் அகல வேண்டும்.(51) எந்த நாட்டில் வசிப்பவர்கள் கேட்கப்படுவதற்கு முன்பே உற்சாகமாகக் கொடுக்கிறார்களோ, அந்த நாட்டில் ஓர் அறவோன் தன் விருப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த ஒருவனைப் போல நிறைவான இதயத்துடன் வசிக்க வேண்டும்.(52) எந்த நாட்டில் தீயோர் தண்டிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட தூய ஆன்மா கொண்டோருக்கு நன்மைகள் கிடைக்கிறதோ, அந்த நாட்டில், அறச்செயல்களில் அர்ப்பணிப்புடைய மனிதர்களுக்கு மத்தியில் ஒருவன் வாழ வேண்டும்.(53) எந்த நாட்டில் மன்னன் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளானோ, எங்கே மன்னன் ஆசைகளைக் கைவிட்டு, செழிப்பை அடைந்து, அறவிதிகளின்படி ஆள்கிறானோ, எங்கே தற்கட்டுப்பாடுடைய மனிதர்களிடம் சச்சரவு செய்பவர்களுக்கும், நல்லோரிடம் தீச்செயல் புரிபவர்களுக்கும், வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், பேராசை மிக்கவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த நாட்டில் ஒருவன் எந்தத் தயக்கமுமில்லாமல் வசிக்கலாம்.(54,55)
அத்தகைய மனோநிலை கொண்ட மன்னர்கள், அந்நாட்டில் வசிப்போரின் செழிப்பு குன்றும்போது அந்நாட்டுக்குச் செழிப்பைக் கொண்டுவருவார்கள்.(56) ஓ! மகனே {காலவா}, நன்மையானது, அல்லது சிறந்தது எது என்ற உன் கேள்விக்கு நான் உனக்குப் பதில் சொல்லிவிட்டேன். ஆன்மாவுக்கான நன்மை, அல்லது சிறப்பு எது என்பது மிக உயர்ந்த பண்பைக் கொண்டதாகையால் அது குறித்து எவரும் விளக்க முடியாது.(57) ஒரு மனிதன் இங்கே நேரும் தன் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக மேலே குறிப்பிட்டபடி நடந்து கொண்டு, அனைத்து உயிரினங்களின் நன்மைக்குத் தன் ஆன்மாவை அர்ப்பணித்து, தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பதன் மூலம் அடையும் உயர்ந்த சிறப்புகள் {நன்மைகள்} பலவாகும்” என்றார் {நாரதர்}.(58)
மோக்ஷோபாயங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 289-மனோவுறுதி முதலிய முக்திக்கான வழிமுறைகள் குறித்து சகரனுக்கும், அரிஷ்டநேமிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நம்மைப் போன்ற மன்னர்கள், அடைய வேண்டிய பெரும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இவ்வுலகில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மேலும் அவன், பற்றுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையில் எந்தெந்த குணங்களை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்கதையில் இது தொடர்பாக ஆலோசனை கேட்ட சகரனுக்கு, அரிஷ்டநேமி[1] சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)சகரன் {அரிஷ்நேமியிடம்}, “ஓ! பிராமணரே, எந்த நன்மையைக் கொண்டு ஒருவனால் இம்மையில் பேரின்பத்தை அனுபவிக்க முடியும்? உண்மையில் துன்பத்தையும், கலக்கத்தையும் ஒருவனால் எவ்வாறு தவிர்க்க முடியும்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சகரனால் கேட்கப்பட்டவரும், சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரும், தர்க்ஷிய குலத்தைச் சேர்ந்தவருமான அரிஷ்டநேமி, கேள்வி கேட்பவன் அனைத்து வகையிலும் தன் போதனைகளுக்குத் தகுந்தவன் என்று கருதி இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(4) {அரிஷ்டநேமி}, “இவ்வுலகில் முக்தியால் உண்டாகும் பேரின்பநிலையே உண்மையான பேரின்பமாகும். அறியாமையில் உள்ள மனிதன், பிள்ளைகள் மற்றும் விலங்குகளிடம் கொண்ட பற்றாலும், செல்வம் மற்றும் தானியங்களால் பீடிக்கப்பட்டதாலும் அது குறித்து அறிவதில்லை.(5) உலகப் பொருட்களில் பற்றுடைய புத்தி, தாகத்தால் பீடிக்கப்பட்ட மனம் {எதுவும் வேண்டும் என்ற ஏக்கங்கொண்ட மனம்} என்ற இவை இரண்டும் திறன்மிக்க அனைத்து சீர்திருத்தங்களையும் கலங்கடித்துவிடும். பற்றுகளெனும் சங்கிலிகளால் கட்டப்பட்டு அறியாமையில் உள்ள மனிதன் விடுதலையை {முக்தியை} அடைய இயலாதவனாகிறான்.(6) நான் இப்போது பற்றிலிருந்து பிறக்கும் கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தையும் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன். கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. உண்மையில், ஞானம் கொண்ட ஒருவனால் பொருளுடன் அவற்றைக் கேட்க இயலும்.(7)
{உரிய} காலத்தில் பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் இளைஞர்களானதும் திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டத்தகுந்தவர்கள்தான் என்பது உறுதி செய்துகொண்டு, பற்றுகள் அனைத்தில் இருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு, மகிழ்ச்சியாகத் திரிவாயாக.(8) உன்னால் அன்புடன் பேணிக்காக்கப்பட்ட மனைவி வயதில் முதிர்ச்சியடைந்து, அவள் ஈன்ற மகனிடம் பற்றுடன் இருக்கும்போது, உயர்ந்த பொருளை (விடுதலையை {முக்தியை}) ஈட்டும் நோக்கத்தோடு, {உரிய} காலத்தில் அவளை விட்டு அகல்வாயாக.(9) உனது வாழ்வின் முதன்மையான வருடங்களில் உன் புலன்களைக் கொண்டு அவற்றுக்குரிய பொருட்களை முறையாக அனுபவித்த பிறகு, ஒரு மகனைப் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், பற்றுகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாகத் திரிவாயாக {சுகமாக நடப்பாயாக}.(10) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {போதிய அளவுக்கு} ஈடுபடுத்திய பிறகு, மேலும் மேலும் அவற்றில் ஈடுபடும் விருப்பத்தை நீ அடக்க வேண்டும். பிறகு பற்றுகளில் இருந்து விடுபட்டு, முயற்சி இல்லாமலும், ஏற்கனவே தீர்மானிக்கப்படாமலும், கிடைப்பதில் நிறைவடைந்து, அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களில் சமபார்வையைச் செலுத்தி மகிழ்ச்சியாகத் திரிவாயாக.(11)
ஓ! மகனே, (பற்றுகளில் இருந்து விடுபடும் வழி என்ன என்பதை) இவ்வாறே உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். விடுதலை {முக்தியை} அடையும் விருப்பம் குறித்து இனி உனக்கு விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.(12)
பற்றுகள் மற்றும் அச்சத்தில் இருந்து விடுபட்ட மனிதர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள். எனினும், உலகப் பொருட்களில் பற்றுடைய மனிதர்கள் அழிவடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை.(13) (மனிதர்களைப் போலவே) புழுக்களும், எறும்புகளும் உணவை அடைவதில் ஈடுபட்டு, தேடலிலேயே இறப்பது காணப்படுகிறது. பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள் மகிழ்ச்சியை அடைகிறார்கள், அதே வேளையில் உலகப் பொருட்களில் பற்றுடையோர் அழிவடைகிறார்கள்.(14) நீ விடுதலையை அடைய விரும்பினால், “நானில்லாமல் இவர்கள் எவ்வாறு இருப்பார்கள்?” என்று நினைத்து, ஒருபோதும் உன் உறவினர்களிடம் உன் எண்ணங்களைச் செலுத்தாதே.(15) ஓர் உயிரினம் தானே பிறப்படைந்து, தானே வளர்ந்து, இன்பதுன்பங்களையும், மரணத்தையும் தானே அடைகிறது.(16)
இவ்வுலகில் மக்கள் இன்புற்று, தங்கள் பெற்றோராலோ, தங்களாலோ ஈட்டப்பட்ட உணவு, ஆடை ஆகியவற்றையும், இன்னும் பிற உடைமைகளை அடைகின்றனர். முற்பிறவின் விளைவாலன்றி எதையும் இப்பிறவியில் அடைய முடியாது என்பதால், இது முற்பிறவிச் செயல்களின் விளைவேயாகும்.(17) பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் செயல்களால் பாதுகாக்கப்பட்டு, செயல்களின் கனிகளை வகுப்பவனால் {பரமனால்} விதிக்கப்பட்ட விளைவின் காரணமாகத் தங்கள் உணவை அடைகின்றன.(18) களிமண்கட்டியான மனிதன், பிற சக்திகளையே முழுமையாகச் சார்ந்திருக்கிறான். எனவே, இவ்வளவு உறுதியற்றவனாக இருக்கும் ஒருவனால், தன் உறவினர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு உணவளிப்பதற்கும் அவனிடம் உள்ள அறிவார்ந்த கருத்து {காரணம்} என்ன?(19) உன் உறவினர்களைக் காக்க மிகுந்த முயற்சிகளைச் செய்தும், நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்களைக் காலன் கொண்டு போகும் அந்தக் கணம் மட்டுமே உன்னை விழிப்படையச் செய்யும்.(20)
உன் உறவினர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைக் காத்து, உணவளிக்கும் உன் கடமை முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து, அவர்களை நீ கைவிடக்கூடும்.(21) உன் உறவினர்கள் இவ்வுலகில் இருந்து காலனால் கொண்டு போகப்பட்ட பிறகு, அங்கே அவர்கள் இன்புறுகிறார்களா, துன்புறுகிறார்களா என்பதை உன்னால் அறிய முடியாது.(22) நீ வாழ்ந்திருந்தாலும், இறந்திருந்தாலும், உன் உறவினர்கள் தங்களின் சொந்த செயல்களுடைய கனிகளின் விளைவால், தங்களை இவ்வுலகில் தக்கவைத்துக் கொள்வதில் வெல்லும்போது, உன் நன்மைக்கானதையே நீ செய்ய வேண்டும்[2].(23) அறியப்பட்ட வழக்கம் இதுவே எனும்போது, இந்த உலகில் உள்ள எவனையும் எவனைச் சேர்ந்தவனாகக் கருத முடியும்? எனவே, விடுதலை {முக்தி} அடைவதில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக. மேலும் நான் உனக்குச் சொல்லப் போவதைக் கேள்.(24)பசி, தாகம், அத்தகைய பிற உடல்நிலைகள், கோபம், பேராசை மற்றும் குற்றங்களை வென்றவனும், உறுதிமிக்க ஆன்மா கொண்டவனுமான மனிதன் நிச்சயம் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(25) மடமையினால் சூதாட்டம், குடி, கூத்தியாள் உறவு, வேட்டை ஆகியவற்றில் ஈடுபட்டுத் தன்னை மறக்காதவன் எப்போதும் விடுதலை அடைந்தவன் ஆவான் {முக்தனாவான்}.(26) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் உண்ணும் தேவையின் விளைவால் உண்மையில் கவலையடைபவன், வாழ்வின் களங்கங்களை {குற்றங்களை} நன்கு உணர்ந்தவன் என்று சொல்லப்படுகிறான்[3].(27) பெண்களுடன் நேரும் கலவியால் மட்டுமே மீண்டும் மீண்டும் தனக்குப் பிறவிகள் நேர்கின்றன என்று கவனமான சிந்தனையின் விளைவால் கருதுபவன், பற்றுகளில் இருந்து விடுபட்டவனாகக் கருதப்படுகிறான்.(28) உயிரினங்களின் பிறப்பு, அழிவு, முயற்சி (அல்லது செயல்கள்) ஆகியவற்றின் இயல்பை உண்மையில் அறிந்த மனிதன் நிச்சயம் விடுதலையடைந்தவனே {முக்தனே} ஆவான்.(29) தானியங்கள் நிறைந்த ஆயிரம் கோடி வண்டிகளில், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ள ஒரு கைப்பிடி தானியம் மட்டுமே (தன் ஏற்புக்குத் தகுந்தது) போதுமெனக் கருதுபவனும், மூங்கில் மற்றும் நாணல்களாலான கொட்டகைக்கும், மாளிகைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டில் அலட்சியம் கொள்பவனுமான மனதின் நிச்சயம் விடுதலை அடைவான் {முக்தனாவான்}[4].(30)உலகமானது, மரணம், நோய் மற்றும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காணும் மனிதன் நிச்சயம் விடுதலையடைவான்.(31) உண்மையில், உலகை அவ்வாறு காணும் ஒருவன் நிறைவடைவதில் வெல்வான்; அதே வேளையில், உலகை அத்தகைய ஒளியில் காணத்தவறும் ஒருவன் அழிவையே அடைவான். சிறிதளவில் மட்டுமே மனம் நிறையும் மனிதனும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(32) உண்பவர்களையும், உணவுகளையும் {உண்ணப்படுபவைகளையும்} கொண்டதாக உலகைக் காண்பவனும், மாயையில் பிறக்கும் இன்ப துன்பங்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாக {முக்தனாக} கருதப்படுகிறான்.(33) மஞ்சத்தோடு கூடிய மென்மையான படுக்கையையும், கடினமான தரையையும் ஒன்றாகக் கருதுபவனும், நெல்லரிசியையும், இழிவான அரிசியையும் ஒன்றாகக் கருதுபவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(34) பட்டுத்துணியையும், தர்ப்பையாலான துணியையும் ஒன்றாகக் கருதுபவனும், பீதாம்பரத்தையும், மரவுரியையும் ஒன்றாக மதிப்பவனும், தூய ஆட்டுத் தோலுக்கும் {ஆட்டுமயிர்க்கம்பளத்துக்கும்}, தூய்மையற்ற தோலுக்குமிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(35)
ஐம்பூதக் கலவையின் விளைவெனவே இவ்வுலகைக் காண்பவனும், இக்கருத்தையே முதன்மையாகக் கொண்டு இவ்வுலகில் நடந்து கொள்பவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(36) இன்ப துன்பங்களை ஒன்றாக, ஈட்டல், இழப்புகளை இணையாகக் கருதுபவனும், வெற்றி தோல்வியில் வேற்றுமை பாராட்டாதவனும், விருப்பு வெறுப்புகளை ஒன்றாகக் கொள்பவனும், அச்சம் மற்றும் கவலையில் மாற்றமடையாமல் இருப்பவனுமான மனிதன் முற்றாக விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(37) பல குறைபாடுகளைக் கொண்ட தன் உடலை குருதி, சிறுநீர், மலம் ஆகியவற்றின் திரளாகவும், சீர்கேடுகள் மற்றும் நோய்களின் திரளாகவும் கருதும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(38) முதுமையடையும்போது இவ்வுடலானது, தோல் சுருக்கங்கள், நரை முடிகள், உடல் மெலிவு, நிறக் குறைவு, வடிவச் சீர்குலைவு ஆகியவற்றால் தாக்கப்படும் என்பதை எப்போதும் நினைக்கும் மனிதன் விடுதலை அடைகிறான்.(39) ஆண்மை இழத்தல், கண்பார்வை மங்குதல், செவிட்டுத்தன்மை, பலத்தை இழத்தல் ஆகியவற்றுக்குத் தன்னுடல் ஆட்படும் என நினைக்கும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(40)
முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோரும் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் இருந்து செல்ல வேண்டியவர்களே என்று அறியும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(41) பெரும் பலமும், தாக்கமும் கொண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களும் கூட இந்தப் பூமியில் இருந்து செல்ல வேண்டியிருந்தது என்பதை அறிந்த மனிதன் விடுதலை {முக்தி} அடைவதில் வெல்கிறான்.(42) இவ்வுலகில் பொருட்களை அடைவது எப்போதும் கடினமானது, {அதனால் பெறும்} துன்பம் அதிகமானது, உறவினர்களைப் பராமரிப்பது துன்பத்தையே எப்போதும் தரும் என்பதை அறிந்த மனிதன் விடுதலை அடைகிறான் {முக்தனாகிறான்}.(43) பிள்ளைகள் மற்றும் பிற மனிதர்களின் அபரிமிதமான குறைகளைக் கண்ட எவன் தான் விடுதலையை {முக்தியைப்} புகழ மாட்டான்?(44) சாத்திரங்கள் மற்றும் உலக அனுபவத்தில் மூலம் விழிப்படைந்தவனும், இவ்வுலகின் ஒவ்வொரு மனிதக் கவலையும் நிச்சயமற்றவை என்பதைக் கண்டவனுமான மனிதன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(45) என்னுடைய இந்த வார்த்தைகளை மனத்தில் கொண்டு, இல்லற வாழ்விலோ {கிருஹஸ்தாஸ்ரமத்திலோ}, விடுதலைக்கு வழிவகுக்கும் எந்த வாழ்விலோ {சந்நியாசத்திலோ} உன் புத்தியைக் குழப்பிக் கொள்ளாமல் விடுதலையடைந்த ஒருவனைப் போல உன்னை அமைத்துக் கொள்வாயாக” என்றார் {அரிஷ்டநேமி}[5]. (46)அவரது இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேட்ட அந்தப் பூமியின் தலைவன் சகரன் விடுதலையை {முக்தியை} விளைவிக்கும் ஒழுக்கங்களை அடைந்து, அவற்றின் உதவியோடு தன் குடிமக்களை ஆள்வதைத் தொடர்ந்தான்” என்றார் {பீஷ்மர்}.(47)
சுக்கிராச்சாரியார்! – சாந்திபர்வம் பகுதி – 290-சுக்கிராச்சாரியார் தேவர்களின் பக்கம் சேராமல் அசுரர்களின் நன்மையை நாடிய காரணம்; சுக்கிரன் என்ற பெயர் தோன்றியதற்கான காரணம் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, இந்த ஆவல் எப்போதும் என் மனத்தில் இருக்கிறது. ஓ! குருக்களின் பாட்டா, அது குறித்த அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்.(1) தெய்வீக முனிவரும், கவி என்றும் அழைக்கப்படுபவரும், உயர் ஆன்மா கொண்டவருமான உசனஸ், அசுரர்களுக்கு ஏற்புடையதையும், தேவர்களுக்கு ஏற்பில்லாததையும் செய்வதில் ஏன் ஈடுபட்டார்?(2) தேவர்களின் சக்தியை மங்கச் செய்வதில் அவர் ஏன் ஈடுபட்டார்? தானவர்கள், தேவர்களில் முதன்மையானோரிடம் ஏன் எப்போதும் பகைமையில் ஈடுபட்டனர்.(3) ஒரு தேவனைப் போன்ற காந்தியைக் கொண்ட உசனஸ் என்ன காரணத்தால் சுக்ரன் என்ற பெயரை அடைந்தார்? இக்காரியங்கள் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(4) பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும், அவர் ஏன் ஆகாய மத்தியில் பயணிப்பதில் வெல்லவில்லை? ஓ! பாட்டா, இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்[1].(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இவை அனைத்தையும் உண்மையில் நேர்ந்தபடியே கவனத்துடன் கேட்பாயாக. ஓ! பாவமற்றவனே, நான் கேள்விப்பட்டு, புரிந்து கொண்ட வகையிலேயே இக்காரியங்களைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன்.(6) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், அனைவராலும் கௌரவிக்கப்படுபவரும், பிருகு குலத்தின் வழித்தோன்றலுமான உசனஸ், போதுமான காரணத்திற்காகவே தேவர்களுக்கு ஏற்பில்லாதவற்றைச் செய்வதில் ஈடுபடலானார்[2].(7) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவரான அரசன் குபேரன், அண்டத்தின் தலைவனான இந்திரனுடைய கருவூலத்திற்குத் தலைவனாவான்[3].(8) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பெருந்தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, குபேரனின் உடலுக்குள் நுழைந்து, தமது யோக சக்தியால் அந்தக் கருவூலத் தலைவனின் விடுதலையை {சுதந்திரத்தை} இழக்கச் செய்து, அவனது செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்தார்[4].(9) தன் செல்வம் தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்ட கருவூலத் தலைவன் {குபேரன்} மிகவும் மனம் வருந்தினான். கவலையால் நிறைந்து, கோபத்தால் தூண்டப்பட்ட அவன் தேவர்களில் முதன்மையான மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்றான்.(10)குபேரன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களில் முதல்வனும், கடுமையானவனும், இனிமையானவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனுமான சிவனிடம் இந்தக் காரியத்தை எடுத்துரைத்தான்.(11) அவன், “உசனஸ், யோகத்தினால் ஆன்மத் தூய்மை அடைந்து {தம்மைத் தூய்மையாக்கிக் கொண்டு}, என் வடிவத்திற்குள் {உடலுக்குள்} நுழைந்து, என் சுதந்திரத்தை அபகரித்து, என் செல்வம் அனைத்தையும் அபகரித்துவிட்டார். யோகத்தின் மூலம் என்னுள் நுழைந்த அவர், பின்னர் அதைவிட்டு அகன்றுவிட்டார்” என்றான்.(12)
இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், உயர்ந்த யோக சக்திகளைக் கொண்டவனுமான மஹேஸ்வரன் சினத்தால் நிறைந்தான். ஓ! மன்னா, அவனது கண்கள் குருதிச் சிவப்படைந்து, (உசனஸைத் தாக்கி வீழ்த்துவதற்குத் தயாராக) தன் சூலத்துடன் காத்திருந்தான்.(13)
உண்மையில், அந்த முதன்மையான ஆயுதத்துடன் கூடிய அந்தப் பெருந்தேவன், “அவன் எங்கே? அவன் எங்கே?” என்று கேட்கத் தொடங்கினான்.
அதே வேளையில் மஹாதேவனின் நோக்கத்தை (தமது யோக சக்தியின் மூலம்) உறுதி செய்து கொண்ட உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, தொலைவிலேயே அமைதியுடன் காத்திருந்தார்.(14) உண்மையில், யோக சக்தியில் மேன்மையான உயர் ஆன்ம மஹேஸ்வரனின் கோபத்தை உறுதி செய்து கொண்ட உசனஸ், மஹேஸ்வரனிடம் செல்லலாமா, தப்பிவிடலாமா அல்லது இருந்த இடத்திலேயே இருக்கலாமா என்று சிந்திக்கத் தொடங்கினார்.(15) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஆன்மாவைக் கொண்ட உசனஸ், கடுந்தவங்களின் துணையுடன் மஹாதேவனை எண்ணிப்பார்த்து, மஹாதேவனின் சூல முனையிலேயே தம்மை நிறுத்திக் கொண்டார்.(16) வில் தரித்த ருத்திரன், தவங்களில் வெற்றியடைந்த உசனஸ், தூய ஞானத்தின் வடிவில் தம்மை மாற்றிக் கொண்டு, தன் சூல முனையில் இருப்பதை அறிந்து, அந்த ஆயுதத்தைத் தன் கரத்தால் வளைத்தான்.(17) அளவிலா சக்தி கொண்டவனும், கடுமையான கரங்களைக் கொண்டவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வாறு தன் சூலத்தை (வில்லின் வடிவத்தில்) வளைத்த நேரம் முதல், அந்த ஆயுதம் பிநாகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[5].(18) அந்த உமையின் தலைவன் {சிவன்}, இவ்வாறு தன் உள்ளங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பார்க்கவரை {உசனஸைக்} கண்டு, தன் வாயைத் திறந்தான். பிறகு அந்தத் தேவர்களின் தலைவன், பார்க்கவரைத் தன் வாய்க்குள் வீசி உடனே அவரை விழுங்கிவிட்டான்.(19) பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், பலமிக்கவரும், உயரான்மா கொண்டவருமான உசனஸ், மஹேஸ்வரனின் குடலுக்குள் நுழைந்து அங்கே திரியத் தொடங்கினார்” என்றார் {பீஷ்மர்}.(20)யுதிஷ்டிரன், “ஓ! மன்னா, மேன்மையான புத்திமான்களில் முதன்மையானவனின் குடலுக்குள் திரிவதில் எவ்வாறு உசனஸால் வெல்ல முடிந்தது? அந்தப் பிராமணர் அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் குடலுக்குள் இருக்கையில், அவன் {அந்தத் தேவன்} என்ன செய்தான்?” என்று கேட்டான்[6].(21)பீஷ்மர், “பழங்காலத்தில், மஹாதேவன் (உசனஸை விழுங்கிய பிறகு) நீருக்குள் புகுந்து, பல கோடி வருடங்களுக்கு அங்கேயே அசைவில்லாமல் ஒரு மரக்கட்டையைப் போல (தியோன யோகத்தில் ஈடுபட்டு) இருந்தான்.(22) கடுமையான வகையைச் சார்ந்த அவனது யோகத் தவம் நிறைவடைந்ததும் அந்தப் பெரும் தடாகத்தில இருந்து அவன் எழுந்தான். அப்போது தேவர்களின் ஆதி தேவனான நித்தியமான பிரம்மன் அவனை அணுகி,(23) அவனது தவங்களின் முன்னேற்றத்தையும், அவனது நலத்தையும் குறித்து விசாரித்தான்.
காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவன் {சிவன்}, “என் தவங்கள் நன்கு பயிலப்பட்டன” என்றான்.(24)
நினைத்தற்கரிய ஆன்மா கொண்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான சங்கரன், தன் குடலுக்குள் இருந்த உசனஸ், தன் தவங்களின் விளைவால் இன்னும் மேன்மையடைந்திருப்பதைக் கண்டான்.(25) அந்த முதன்மையான யோகி (உசனஸ்), தவங்களில் கிட்டிய செல்வம் மற்றும் (குபேரனிடம் இருந்து அபகரித்த) செல்வம் ஆகியவற்றால் வளம்பெற்று, பெருஞ்சக்தியுடன் மூவுலகங்களிலும் பிரகாசமாக ஒளிருந்து கொண்டிருந்தார்.(26) இதன் பிறகு, பிநாகைதாரியும், யோகத்தின் ஆன்மாவுமான மஹாதேவன் மீண்டும் தியான யோகத்தில் தன்னை ஈடுபடுத்தினான். எனினும், கவலையால் நிறைந்த உசனஸ் அந்தப் பெருந்தேவனின் குடலுக்குள் திரியத் தொடங்கினார்.(27) தப்பிச் செல்லும் வழியை அறிய விரும்பிய அந்தப் பெருந்தவசி, தாம் எங்கே இருந்தாரோ அங்கேயே இருந்து அந்தத் தேவனின் துதிகளைப் பாடத் தொடங்கினார். எனினும், வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்த ருத்திரன், அவர் வெளியே வருவதைத் தடுத்தான்.(28)
எனினும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பெருந்தவசியான உசனஸ், மஹாதேவனின் குடலுக்குள் இருந்தபடியே, அந்தத் தேவனிடம், “எனக்குக் கருணை காட்டுவாயாக” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார்.(29)
அவரிடம் {உசனஸிடம்} மஹாதேவன், “என் சிறுநீர்க்குழாயின் {சிசினத்தின்} வழியே வெளியேறுவாயாக” என்றான்.
பிறகு, தன் உடலில் இருந்து வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்தான்.(30) அனைத்துப் பக்கங்களிலும் அடைக்கப்பட்டு, வெளியேறக் குறிப்பிடப்பட்ட வழியை அறியாமல், மஹாதேவனின் சக்தியில் எரிந்தபடியே அந்தத் தவசி அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருந்தார்.(31) இறுதியாக வெளியேறும் வழியை கண்டடைந்து, அதன் வழியே வெளியேறினார். இந்தச் செய்தியின் விளைவால் அவர் சுக்கிரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இந்தச் செய்தியின் விளைவாலேயே அவர் (தமது திரிதல்களின் போக்கில்) ஆகாயத்தின் மைய புள்ளிய அடைய முடியாதவரானார்.(32) தன் குடலில் இருந்து வெளியேறி, சக்தியால் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அவரைக் கண்ட பவன் {சிவன்}, கோபத்தால் நிறைந்து, சூலத்தைத் தன் கையில் உயர்த்திப்பிடித்தபடி நின்றான்.(33)
அப்போது உமாதேவி குறுக்கிட்டு உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், கோபம் நிறைந்தவனுமான தன் கணவன் {சிவன்}, அந்தப் பிராமணனைக் கொல்லாதவாறு தடுத்தாள். இவ்வாறு உமை, நோக்கத்தை நிறைவேற்றுவதிலிருந்து தன் தலைவனைத் தடுத்ததன் விளைவால், தவசியான உசனஸ் (அந்த நாள் முதல்) அந்தத் தேவியின் மகனானார்.(34)
தேவி {உமை}, “இந்தப் பிராமணன் இனியும் உம்மால் கொல்லத்தகுந்தவனல்ல. அவன் என் மகனாகிவிட்டான். ஓ! தேவா, உமது குடலுக்குள் இருந்து வெளியேறிய ஒருவனை உமது கரங்களால் கொல்வது தகாது” என்றாள்”.(35)
பீஷ்மர் தொடர்ந்தார், “தன் மனைவியின் இவ்வார்த்தைகளால் தணிவடைந்த பவன் {சிவன்}, ஓ! மன்னா, புன்னகைத்தபடியே, “இவன் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்” என்ற இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(36) வரம் அளித்த மஹாதேவனையும், அவனது மனைவியான உமாதேவியையும் வணங்கியவரும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவருமான பெரும் தவசி உசனஸ், தாம் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் சென்றார்.(37) ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்ட உயர் ஆன்ம பார்க்கவரின் கதையை உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(38)
கர்மபலன்! – சாந்திபர்வம் பகுதி – 291-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன்பிறகு எங்களுக்கு நன்மையானது எது என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! பாட்டா, அமுதம் போல எனக்குத் தோன்றும் உமது வார்த்தைகளால் என் தாகம் தீரவில்லை.(1) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! வரங்களை அளிப்பவரே, எந்த நற்செயல்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட மன்னன் ஜனகன், உயர் ஆன்ம பராசரரிடம் என்ன கேட்டான் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(3)
ஜனகன் {பராசரரிடம்}, “இம்மையிலும், மறுமையிலும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பது எது? இது தொடர்பாக அறியப்பட வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)
இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், ஒவ்வொரு அறத்தின் விதிகளையும் அறிந்தவருமான பராசரர்[1], மன்னனுக்கு உதவ விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)பராசரர் {ஜனகனிடம்}, “செயல்களால் ஈட்டப்படும் அறமே இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையைக் கொடுக்கும். அறத்தைவிட உயர்ந்ததேதும் கிடையாது எனப் பழங்காலத்துத் தவசிகள் சொல்லியிருக்கின்றனர்.(6) அறக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனகா}, உடல் கொண்ட உயிரினங்களின் அறமானது, செயல்கள் குறித்து (சாத்திரங்களில் விதிக்கப்பட்ட) விதிகளில் இருக்கிறது. பல்வேறு வாழ்வுமுறைகளில் உள்ள நல்ல மனிதர்கள் அனைவரும், அந்த அறத்திலேயே தங்கள் நம்பிக்கையை நிறுவி தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுகின்றனர்[2].(7) ஓ! குழந்தாய், இவ்வுலகில் நான்கு வகை வாழ்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (கொடைகளை ஏற்கும் பிராமணர்கள்; வரிகளைப் பெறும் க்ஷத்திரியர்கள்; உழவைச் செய்யும் வைசியர்கள், தொண்டாற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வர்ணங்களே அந்த நான்கு வாழ்வு வகைகளாகும்). மனிதர்கள் எங்கே வாழ்கின்றனரோ அங்கே அவர்களை ஆதரிக்கும் வழிமுறைகள் தோன்றுகின்றன.(8) அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களைப் பல்வேறு வழிகளில் நிறைவேற்றும் உயிரினங்கள், ஐம்பூதங்களுக்குள் கரைந்து போகும்போது {தங்கள் அழிவின் போது}, பல்வேறு கதிகளை அடைகின்றன[3].(9) வெங்கலப்பத்திரங்கள், நீர்மமாக்கப்பட்ட தங்கத்திலோ, வெள்ளியிலோ ஊறவைக்கபடும்போது அந்த உலோகங்களின் வண்ணத்தைப் பற்றிக் கொள்வதைப் போலவே முற்பிறவி செயல்களையே முற்றாகச் சார்ந்திருக்கும் ஓர் உயிரினமும், அந்தச் செயல்களின் தன்மையிலிருந்து தன் வண்ணத்தை ஏற்றுக் கொள்கிறது.(10) விதையில்லாமல் ஏதும் முளைக்க முடியாது. மகிழ்ச்சிக்கு வழிவகுக்கவல்ல செயல்களை நிறைவேற்றாமல் எவனும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஒருவனுடைய உடல் (அடிப்படை பூதங்களுக்குள்) கறைந்து போகும்போது (அழிவடையும்போது), அவன் முற்பிறவி நற்செயல்களின் விளைவால் மட்டுமே மகிழ்ச்சியை அடைகிறான்.(11)ஓ! குழந்தாய், ஓர் ஐயுறுவாதி, “விதியின் விளைவெனவோ, முற்பிறவிகளில் செய்த அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களின் விளைவெனவோ இவ்வுலகில் எதையும் நான் காணவில்லை. {அறிந்ததைக் கொண்டு, அறியாததைக் குறித்த கருத்தை அடையும்} ஊகத்தால் இருப்பையோ, விதியின் செயல்பாட்டையோ நிறுவமுடியாது[4]. தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர் (தங்கள் முற்பிறவி செயல்களால் அல்லாமல்) தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே அந்த நிலையை அடைந்தார்கள்.(12) மனிதர்கள் முற்பிறவியில் தாங்கள் செய்த செயல்களை அடுத்தப் பிறவியில் நினைவுகூர்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட பிறவியிலும் அடையப்பட்ட கனிகளை விளக்குவதற்காக, முற்பிறவியில் செய்யப்பட்டதாக நான்கு வகைச் செயல்களின் பெயர்களையே எப்போதும் குறிப்பிடுகின்றனர்[5].(13) வேதங்களையே அதிகாரமாகக் கொண்ட தீர்மானங்கள், இவ்வுலக மனிதர்களின் நடத்தையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும், மனிதர்களின் மனங்களை அமைதியடையச் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஓ குழந்தாய், (ஐயுறுவாதி தொர்ந்து கொண்டிருக்கிறார்), உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் சொல்பவற்றை இவற்றால் பிரதிபலிக்க முடியாது” {என்று ஓர் ஐயுறுவாதி சொல்கிறான்}.(14) இந்தக் கருத்துத் தவறானதாகும். உண்மையில், கண், மனம், நாக்கு மற்றும் தசைகளால் ஒருவன் செய்யும் நான்கு வகைச் செயல்களில் உள்ள கனிகளையே அவன் அடைகிறான்[6].(15)ஓ! மன்னா, ஒரு மனிதன் தன் செயல்களின் கனியாக முழு மகிழ்ச்சியை அடைகிறான், சில வேளைகளில் அதே வளியில் துன்பத்தை அடைகிறான், சிலவேளைகளில் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் சேர்ந்தே அடைகிறான். {செய்யப்படும் செயல்கள்} அறமோ {புண்ணியமோ}, பாவமோ செயல்கள் (அனுபவக்கப்படாமலோ, அவற்றின் கனிகளைத் தாங்கிக் கொள்ளாமலோ) ஒருபோதும் அழிவதில்லை[7].(16) ஓ! குழந்தாய், சிலவேளைகளில் நற்செயல்களால் உண்டாகும் மகிழ்ச்சி மறைக்கப்படும். வாழ்வெனும் கடலில் மூழ்கும் மனிதனின் கவலைகள் மறையும் வரை அது {மகிழ்ச்சி} வெளிப்படாது.(17) கவலை (பொறுத்துக் கொள்வதன் மூலம்) தீர்ந்த பிறகு, ஒருவன் தன் நற்செயல்களை (அதன் கனிகளை) அனுபவிக்கத் தொடங்குகிறான். ஓ மன்னா, நற்செயல்களின் கனிகள் தீர்ந்ததும், பாவச் செயல்களின் கனிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை அறிவாயாக.(18) தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, பொறுமை, சக்தி, நிறைவு, பேச்சில் வாய்மை, பணிவு, தீங்கிழையாமை, வியசனம் என்றழைக்கப்படும் தீச்செயல்களில் இருந்து விடுதலை, புத்திக்கூர்மை ஆகிய இவையே மகிழ்ச்சியை உண்டாக்குபவை.(19) எந்த உயிரினமும், நற்செயல்கள் அல்லது தீச்செயல்களின் கனிகளை நித்தியமாக அனுபவிப்பதில்லை. ஞானம் கொண்ட மனிதன், தன் மனத்தைத் திரட்டுவதிலும், நிலைக்கச் செய்வதிலும் முனைப்பைச் செலுத்த வேண்டும்.(20)ஒருவன் மற்றொருவனின் நற்செயல்களையோ, தீச்செயல்களையோ ஒருபோதும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ முடியாது. உண்மையில், அவன் தான் செய்யும் செயல்களின் கனிகளை மட்டுமே இன்புறவும், பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்.(21) எனினும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்று கொள்வோர் முற்றிலும் வேறுபட்ட பாதையில் நடக்கிறார்கள்.(22) அடுத்தவன் செய்வதால், தானும் நிந்திகக்கூடிய செயலை ஒருவன் செய்யக்கூடாது. உண்மையில், பிறரைக் கண்டிக்கும் செயலைத் தானே செய்வதின் மூலம் அவன் பரிகாசத்தையே ஈட்டுவான்.(23) துணிவற்ற க்ஷத்திரியன், அனைத்து வகை உணவையும் உண்ணும் பிராமணன், (உழவு மற்றும் வர்த்தகக் காரியங்களில்) முயற்சியற்ற வைசியன், சோம்பலுடன் கூடிய (எனவே, உழைப்பை வெறுக்கும்) சூத்திரன், நன்னடத்தை இல்லாத கல்விமான், அறவொழுக்கமற்ற உயர்குடி பிறவி, வாய்மையில் இருந்து வீழ்ந்த பிராமணன், கற்பற்ற, தீய பெண்,(24) பற்றுகளைக் கொண்ட யோகி, தனக்காக மட்டுமே சமைத்துக் கொள்ளும் ஒருவன், விவாதத்தில் ஈடுபடும் மூடன், மன்னன் இல்லாத நாடு, யோகத்தில் ஈடுபடாதவனும், குடிமக்களிடம் பற்றைப் பேணி வளர்க்காதவனுமான மன்னன் ஆகிய இவர்கள் அனைவரும் பரிதாபத்திற்குரியவர்கள்” என்றார் {பராசரர்}.(25)
தற்கட்டுப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 292-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதன் தொடர்ச்சியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.
பராசரர் {ஜனகனிடம்}, “மனத்துடன் கூடிய உடலெனும் இந்தத் தேரை அடைந்து, ஞானம் எனும் கடிவாளத்தைக் கொண்டு, புலன்நுகர் பொருட்களெனும் குதிரைகளைக் கட்டுப்படுத்தும் மனிதனை நுண்ணறிவு கொண்டவன் {அவன் புத்திமான்} என நிச்சயம் கருதலாம்.(1) ஓ! மறுபிறப்பாளனே, தற்சார்புடைய மனம் கொண்டவனும், வாழ்வாதார வழிமுறைகளைக் கைவிட்டவனுமான ஒரு மனிதனால் (பரமனிடம் குவிந்த தியானம் மற்றும் பரமனிடம் கொள்ளும் பக்தியின் வடிவில்) செய்யப்படும் வணக்கமுறை மிகுந்தப் பாராட்டுக்குரியதாகும்; அந்த வணக்கமுறையானது, செயல்களைக் கடப்பதில் வென்ற மனிதனிடம் பெறப்பட்ட போதனையின் விளைவால் கிடைப்பதேயன்றி, {ஆன்ம} முன்னேற்றத்தில் ஒரே நிலையில் உள்ள மனிதர்களின் விவாதப் பரிமாற்றத்தால் கிடைப்பதல்ல[1].(2) ஓ! மன்னா {ஜனகனே}, இவ்வளவு கடினத்துடன் குறிப்பிட்ட அளவுக்கான வாழ்நாள் காலத்தை அடைந்து பிறகு, (புலன்களின் ஈடுபாட்டால்) அஃதை ஒருவன் குறைத்துக் கொள்ளக் கூடாது. மறுபுறம், மனிதன் எப்போதும் அறச்செயல்களின் மூலம் படிப்படியாக அடையக்கூடிய முன்னேற்றத்திற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும்[2].(3) ஜீவன் தன் வெவ்வேறு இருப்புக் காலங்களில் ஆறு வெவ்வேறு நிறங்களை அடைந்த பிறகு, மேன்மையான நிறத்தில் இருந்து கீழே விழுபவன் கண்டிப்புக்கும், நிந்தனைக்கும் தகுந்தவனாவான். எனவே, நற்செயல்களின் விளைவை அடைந்த ஒருவன் ரஜஸ் குணத்தால் களங்கமடைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும்[3].(4) மனிதன் செய்யும் அறச்செயல்களின் மூலம் மேன்மையான நிறத்தை அடைகிறான். அடைதற்கரிய மேன்மையான நிறத்தை அடைய இயலாத மனிதன், பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் (நரகில் மூழ்கி, தாழ்ந்த நிறத்தில் வீழ்வதன் மூலம்) தன்னைத் தானே கொன்று கொள்கிறான்.(5)விழிப்பற்ற நிலையிலோ, அறியாமையிலோ செய்யப்படும் பாவம்நிறைந்த செயல்கள் அனைத்தும் தவங்களின் மூலம் அழிக்கப்படுகின்றன. எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவச் செயலானது மிகுந்த துன்பத்தை உண்டாக்குகிறது.(6) எனவே, ஒருவன் கவலையை மட்டுமே கனியாகக் கொண்ட பாவச் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.(7) நுண்ணறிவுமிக்க மனிதன், பாவம் நிறைந்த தன்மையைக் கொண்ட ஒரு செயலானது, பெரும் பயனை விளைவிப்பதாக இருந்தாலும், சண்டாளனைத் தீண்டாத ஒரு தூய மனிதனைப் போல அஃதை {அந்தப் பாவச்செயலை} ஒருபோதும் செய்யமாட்டான்[4].(8) பாவச் செயல்கள் துன்பம் நிறைந்தவையாக இருப்பதையே நான் காண்கிறேன். பாவத்தின் மூலம், பாவியின் பார்வையே வக்கிரமடைவதால் அவன் தன் உடலையும், ஆன்மாவோடு கூடிய உடலின் அங்கங்களையும் சீர்குலைத்துக் கொள்கிறான்.(9) இந்த உலகில் துறவை மேற்கொள்ளாத மூடன், இம்மையில் விடைபெற்றுச் செல்லும்போது பெரும் துன்பத்தால் பீடிக்கப்படுகிறான்.(10)ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனத்துடன் கேட்பாயாக, நிறமற்ற துணி புழுதியடையும்போது, அதைத் தூய்மைப்படுத்தலாம், ஆனால் கருப்புச் சாயம் கொண்ட துணியைத் தூய்மைப்படுத்த முடியாது; பாவத்தின் வழக்கிலும் அதேதான் நேர்கிறது.(11) அறிந்தே பாவமிழைத்த மனிதன், அந்தப் பாவத்தைக் கழிப்பதற்காக அறச்செயல்களைச் செய்தால், அந்த நல்ல மற்றும் தீய செயல்களுக்குண்டான கனிகளைத் தனித்தனியாக அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்[5].(12) பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்}, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு, அறியாமையால் செய்யப்பட்ட தீங்கேற்படுத்தும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களால் கழிக்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள்.(13) எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவத்தை அறத்தால் ஒருபோதும் கழிக்க முடியாது. பிரம்ம சாத்திரங்களை அறிந்தவர்களும், பிரம்மத்தை ஓதுபவர்களுமான மறுபிறப்பாளர்கள் இவ்வாறே சொல்கிறார்கள். அறவோராலோ, பாவிகளாலோ அறிந்தும், அறியாமலும் செய்யப்படும் எந்தச் செயலும் (அவற்றின் கனிகள் அனுபவிக்கப்படாத, அல்லது தாங்கிக் கொள்ளப்படாத வரையில்) எஞ்சியேயிருக்கின்றன என்பதே என் பார்வையாகும்[6].(15)முழு ஆய்வுடன் மனமறியச் செய்யப்பட்ட செயல்கள், அதனதன் பருமை அல்லது நுண்மையின்படி திரளான, அல்லது நுட்பமான கனிகளை விளைவிக்கின்றன[7].(16) எனினும், ஓ! அற ஆன்மா கொண்டவனே {ஜனகனே}, பெரும் தீங்கு நிறைந்த செயல்கள், அறியாமையில் செய்யப்பட்டிருந்தால், அவற்றுக்குண்டான விளைவுகளைத் தவறாமல் உண்டாக்குபவையும், நரகத்திற்கே கூட வழிவகுப்பவையுமான அந்தச் செயல்கள், பொருத்தமற்ற வகையிலான விளைவுகளை {அற்பவிளைவுகளையே} அவனிடம் உண்டாக்கும்.(17) தேவர்கள், அல்லது மதிப்பிற்குரிய தவசிகள் போன்றோரால் செய்யப்படும் (ஐயம் நிறைந்த அல்லது அறமற்ற இயல்பைக் கொண்ட) செயல்களைப் பொறுத்தவரையில், அவற்றை ஓர் அறவோன் செய்யக்கூடாது; கேள்விப்பட்டாலும் அவற்றை நிந்திக்கக்கூடாது.(18) ஓ! மன்னா {ஜனகனே}, தன் திறனைக் குறித்துச் சிந்தித்து உறுதியடைந்து, அறச்செயல்களைச் செய்யும் மனிதன், நிச்சயம் தனக்கான நன்மையை அடைவான்.(19) சுடப்படாத {மண்} பாத்திரத்தில் ஊற்றப்படும் நீரானது படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மொத்தமாக வெளியேறிவிடும். எனினும், அது சுடப்பட்ட பாத்திரத்தில் ஊற்றப்பட்டால், அளவு குறையாமல் அப்படியே எஞ்சி நிற்கும். அதே போலவே, புத்தியின் துணையுடன் சிந்திக்காமல் செய்யப்படும் செயல்கள் நன்மையை விளைவிப்பதில்லை; அதே வேளையில் தீர்மானத்துடன் செய்யப்பட்ட செயல்கள், மங்கா சிறப்புடன் எஞ்சி தங்கள் விளைவாக மகிழ்ச்சியை விளைவிக்கும்.(20)நீருள்ள பாத்திரத்தில் மேலும் நீர் ஊற்றப்பட்டால், அங்கே ஏற்கனவே இருந்த நீரின் அளவு அதிகரிக்கும்; அதே போலவே தீர்மானத்துடன் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், அவை நியாயமானவையாக இருந்தாலும், வேறு வகையில் இருந்தாலும், அறத்தின் {புண்ணியத்தின்} அளவு அதிகரிக்கவே செய்கிறது.(21,22) ஒரு மன்னன், தன் எதிரிகளையும், தங்கள் மேன்மையை உறுதிசெய்ய முனையும் அனைவரையும் அடக்கி, முறையாக ஆண்டுத் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஒருவன், புனித நெருப்பைத் தூண்டி, பல்வேறு வேள்விகளில் அவற்றில் ஆகுதிகளை ஊற்றி, மத்திம வயதிலோ, முதிர் வயதிலோ காடுகளுக்குள் ஓய்ந்து, (இறுதி இரண்டு வாழ்வுமுறைகளைப் பயின்று) அங்கேயே வாழ வேண்டும்.(23) தற்கட்டுப்பாடு, அறவொழுக்கம் ஆகியவற்றைக் கொண்ட ஒருவன், தன்னைப் போலவே பிற உயிரினங்களையும் பார்க்க வேண்டும். மேலும், ஓ! மன்னா, அவன் பெரியோர்களை மதிக்க வேண்டும். வாய்மையும், நன்னடத்தையும் பயில்வதன் மூலம் அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்” என்றார் {பராசரர்}.(24)
அறஞ்செயவிரும்பு! – சாந்திபர்வம் பகுதி – 293-அறம் செய்ய விரும்புவதே மேன்மையடையும் வழி என ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…
பராசரர் {ஜனகனிடம்}, “இவ்வுலகில் உள்ள எவரும், மற்றொருவருக்கு நன்மை செய்வதில்லை. எவரும் பிறருக்குக் கொடையளிப்பதும் காணப்படுவதில்லை. அனைவரும் தங்களுக்காகச் செயல்படுவதே காணப்படுகிறது.(1) மக்கள் அன்பில்லாதவர்களாகும்போது, தங்கள் பெற்றோரையும், தங்கள் உடன் பிறந்தோரையும் கைவிடுவது காணப்படுகிறது. வேறு வட்டங்களைச் சார்ந்த உறவினர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[1](2) புகழ்பெற்றவருக்குக் கொடுக்கப்படும் கொடை, புகழ்பெற்றவரால் கொடுக்கப்படும் கொடைகள் ஆகிய இரண்டும் சமமான தகுதிக்கே {புண்ணியத்திற்கே} வழிவகுக்கும். எனினும், இவ்விரு செயல்களில் கொடையேற்பதைவிடக் கொடையளிப்பது மேன்மையானது[2].(3) உரிய வழிமுறைகளில் அடையப்பட்டு, உரிய வழிமுறைகளில் பெருக்கப்படும் செல்வமானது, அறமீட்டும் நிமித்தமாகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்.(4) அறமீட்ட விரும்புபவன், பிறருக்குத் தீங்கிழைக்கும் வழிமுறைகளில் ஒருபோதும் செல்வத்தை ஈட்டக்கூடாது. ஒருவன் செல்வத்தைப் பற்றார்வத்துடன் தேடாமல், தன் சக்திக்குத்தக்க செயல்களையே செய்ய வேண்டும்.(5)
(தாகத்துடன் கூடிய) விருந்தினருக்கு குளிர்ந்த அல்லது நெருப்பில் சுடப்பட்ட நீரை அர்ப்பணிப்புமிக்க மனத்துடன் கொடுப்பதன்மூலம், பசித்தவனுக்கு உணவிட்ட செயலுக்குரிய தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் ஈட்டுகிறான்.(6) உயர் ஆன்ம ரந்திதேவன், கிழங்குகள், கனிகள் மற்றும் இலைகளைத் தவசிகளுக்குக் காணிக்கையளித்து அவர்களை வழிபட்டதன் மூலம் உலகங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்தான்.(7) சிபியின் அரச மகன் {சிபி எனும் நகரத்தைச் சேர்ந்த மன்னன் [சைப்யன்]}, தோழனுடன் {மாடானுடன்}[3] கூடிய சூரியனுக்கு அதே வகைக் காணிக்கைகளை அளித்து அவனை நிறைவடையச் செய்ததன் மூலம் இன்ப உலகங்களை அடைந்தான்.(8) மனிதர்கள் அனைவரும் பிறவி அடைவதன் மூலம் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் தங்கள் சுயத்திற்குக் கடன்பட்டவர்களாகிறார்கள். எனவே, ஒவ்வொருவரும் அந்தக் கடன்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளத் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.(9) ஒருவன், வேதங்களைக் கற்பதன் மூலம் பெரும் முனிவர்களிடம் தான் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். அவன் வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். சிரார்த்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அவன் பித்ருக்களிடம் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறான். நன்மை செய்வதன் மூலம் சக மனிதர்களிடம் பட்ட கடனை அவன் அடைக்கிறான்.(10)வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், அவற்றின் கருத்தைச் சிந்திப்பதன் மூலமும், வேள்விகளில் எஞ்சியவற்றை உண்பதன் மூலமும், தன் உடலைப் பராமரிப்பதன் மூலமும் ஒருவன் தன் சுயத்திற்கு {ஆன்மாவுக்குப்} பட்ட கடனை அடைக்கிறான். அவன் தன் பணியாட்களுக்குப் பட்ட கடனுக்காகத் தொடக்கத்தில் இருந்தே செயல்கள் அனைத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.(11) மனிதர்கள் செல்வமற்றவர்களாக இருந்தாலும், பெரும் முயற்சிகளின் மூலம்[4] வெற்றியை அடைவது காணப்படுகிறது. முனிவர்கள் தேவர்களை முறையாகத் துதிப்பதன் மூலமும், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை முறையாக ஊற்றுவதன் மூலமும், தவ வெற்றியை அடைவது காணப்படுகிறது.(12) ரிசீகரின் மகன், விஷ்வாமித்திரரின் மகனானான். வேள்விக் காணிக்கைகளில் பங்குகளை {அவிர்ப்பாகங்களைக்} கொண்ட தேவர்களை ரிக்குகளைக் கொண்டு துதிப்பதன் மூலம் அவன் மறுமையில் வெற்றியை அடைந்தான்[5].(13) உசனஸ், தேவர்களின் தேவை நிறைவு செய்ததன் மூலம் சுக்கிரனானார். உண்மையில், (உமா) தேவியின் புகழைத் துதித்தன் மூலம் அவர் ஆகாயத்தில் பெருங்காந்தியுடன் திளைக்கிறார்[6].(14)மேலும், அசிதர், தேவலர், நாரதர், பர்வதர், கக்ஷீவான், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, தூய ஆன்மாவைக் கொண்ட தாண்டியர்,(15) வசிஷ்டர், ஜமதக்னி, விஷ்வாமித்திரர், அத்ரி, பரத்வாஜர், ஹரிசமச்ரு, குண்டாதரர் சுருதச்ரவஸ்(16) ஆகிய இந்தப் பெருமுனிகள், ரிக்குகளின் துணையுடனும், குவிந்த மனங்களுடனும் விஷ்ணுவைத் துதித்ததன் மூலமும், தவங்களின் மூலமும், நுண்ணறிவுடன் கூடிய அந்தப் பெருந்தேவனின் அருளின் மூலமும் வெற்றியை அடைந்தனர்.(17) தகுதியில்லாத பல மனிதர்கள், அந்த நல்ல தெய்வத்தைத் துதித்ததன் மூலம் தனிச்சிறப்பு வாய்ந்த பெரும் நிலையை அடைந்தனர். ஒருவன் தீய அல்லது நிந்திக்கத்தக்க எந்தச் செயலையும் செய்வதன் மூலம் முன்னேற்றத்தை நாடக்கூடாது.(18) அறவழிகளில் ஈட்டப்பட்ட செல்வமே உண்மையான செல்வமாகும். அறமற்ற வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் நிந்தனைக்குரியதாகும். அறமே அழிவற்றதாகும். செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால் அஃது ஒருபோதும் இவ்வுலகில் கைவிடப்படக்கூடாது.(19) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், தேவர்களுக்குத் தன் தினத் துதிகளைக் காணிக்கையாக்குபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதனே அறவோர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, வேதங்கள் அனைத்தும் (தக்ஷிணை, கார்ஹபத்யம், ஆஹவனியம் என்ற) மூன்று புனித நெருப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.(20)
எந்தப் பிராமணன், {குறைவற்ற} செயல்களை முழுமையாகச் செய்வானோ அவன் {அந்த மூன்று நெருப்புகளடங்கிய} புனித நெருப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். செயல்களைச் செய்யாமல் இருப்பவன், அந்தப் புனித நெருப்பைப் பராமரிப்பதைவிட, அஃதை உடனே கைவிடுவதே சிறந்தது[7].(21) புனித நெருப்பும், தாய், பெற்ற தந்தை, ஆசான் ஆகியோரும், முறையாகப் பணிவிடை செய்யவும், பணிவுடன் தொண்டு புரியவும் தகுந்தவர்கள் ஆவர்.(22) செருக்கடையச் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கைவிட்டு, முதியோரிடம் காத்திருந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுபவனும், கல்விமானும், காமம் இல்லாதவனும், அன்பின் கண்ணோடு உயிரினங்கள் அனைத்தையும் பார்ப்பவனும், செல்வமற்றவனும், தன் செயல்களில் அறவோனும், (எவருக்கும்) எத்தீங்கையும் செய்யும் விருப்பம் இல்லாதவனுமான மனிதனே, இவ்வுலகில் உண்மையில் மதிப்பிற்குரிய மனிதனாக நல்லோராலும், பக்திமான்களாலும் வழிபடப்படுகிறான்” என்றார் {பராசரர்}.(23)
வர்ணதர்மங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 294-வர்ணங்களின் கடமைகளையும்; அறத்தைத் தக்கவைத்துக் கொள்ள வர்ணக்கடமைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…
பராசரர் {ஜனகனிடம்}, “தாழ்ந்த வகையினர் {சூத்திர வர்ணத்தார்}, {பிராமண, க்ஷத்திரிய, வைசியர் என்ற} பிற மூன்று வகையினரிடம் தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதே முறையாகும். அன்புடனும், மதிப்புடனும் {பிற வர்ணத்தாரால்} கொடுக்கப்படும் அத்தகைய தொண்டு அவர்களை {சூத்திரர்களை} அறவோராக்கும்.(1) எந்தச் சூத்திரனின் மூதாதையராவது தொண்டில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட, அவன் (தொண்டைத் தவிர) பிற தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. உண்மையில், தொண்டையே அவன் தனது தொழிலாகக் கொள்ள வேண்டும்.(2) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள நல்லோருக்கே துணைபுரிய வேண்டும், ஒருபோதும் தீயோருக்குத் துணை புரியக் கூடாது என்பது என்னுடைய கருத்து.(3)
கிழக்கு மலைகளில் {உதயப் பர்வதத்தில்} உள்ள தங்கமும், உலோகங்களும், சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் பெரும் காந்தியுடன் சுடர்விடுவதைப் போலவே, தாழ்ந்த வகையினரும் நல்லோருடன் கொள்ளும் உறவால் காந்தியுடன் ஒளிர்வார்கள்.(4) வெள்ளைத் துணியானது சாயத்தின் நிறத்தை ஏற்கிறது. சூத்திரர்களின் வழக்கிலும் அவ்வாறே நடக்கிறது[1].(5) எனவே, ஒருவன் நல்ல குணங்கள் அனைத்துடனும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமேயன்றி ஒருபோதும் தீய குணங்களைப் பற்றக்கூடாது. இவ்வுலகில் மனிதர்களின் வாழ்நாள் மிகவேகமானதும், நிலையற்றதுமாகும்.(6)இன்பத்திலும், துன்பத்திலும் நல்லதை மட்டுமே ஈட்டும் ஞானியே உண்மையில் சாத்திரங்களை அவதானிப்பவனாகக் கருதப்படுகிறான்.(7) புத்தியுடைய மனிதன், அறம்பிறழ்ந்த எந்தச் செயலிலும் உயர்ந்த பயன்களே இருந்தாலும், அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அத்தகைய செயல்கள் உண்மையில் நன்மையானதாகக் கருதப்படுவதில்லை.(8) சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களை அபகரித்து, (தகுந்த மனிதர்களுக்கே) கொடையாக அளித்தாலும் கூட, சட்டத்தை மீறும் அம்மன்னன் (அவன் செய்த செயலை உணர்த்தும் வகையிலான) வெற்று ஒலியைத் தவிர (அந்த ஈகையிலிருந்து) வேறு எந்தக் கனியையும் அடையமாட்டான். மறுபுறம் களவு எனும் பாவத்தையே அவன் ஈட்டுகிறான்.(9)
அண்டந்தழுவிய மதிப்புடைய தாத்ரி என்றழைக்கப்படும் ஒருவனைச் சுயம்பு {பிரம்மன்} முதலில் படைத்தான். தாத்ரி அனைத்து உலகங்களையும் தாங்கிப்பிடிப்பதில் ஈடுபடும் ஒரு மகனை {பர்ஜன்யனைப்} படைத்தான்[2].(10) அந்தத் தேவனை {பர்ஜன்யனை} வழிபடும் வைசியன், தன்னை ஆதரித்துக் கொள்வதற்காக உழவிலும், கால்நடை வளர்த்தலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரியர்கள், பிற வகையினர் {பிற வர்ணத்தார்} அனைவரையும் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பிராமணர்கள் அனுபவிக்க மட்டுமே வேண்டும்[3].(11) சூத்திரர்களைப் பொறுத்தவரையில் அவர்கள், வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் பொருட்களைப் பணிவுடனும் நேர்மையுடனும் சேகரிக்கும் பணியிலும், வேள்விகள் செய்யப்பட்ட இடங்களையும் பீடங்களையும் தூய்மைப்படுத்துவதிலும் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வகையினரும் இவ்வழியில் செயல்பட்டால் அறத்திற்கு எக்குறைவும் நேராது.(12)அறம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டால், பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தின் மகிழ்ச்சியைக் காணும் சொர்க்கத்தின் தேவர்கள் மகிழ்ச்சியால் நிறைகிறார்கள்.(13) எனவே தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் பிற வகையினரைப் பாதுகாக்கும் மன்னன் மதிக்கத் தகுந்தவனாகிறான். அதே போல, சாத்திரக் கல்வியில் ஈடுபடும் பிராமணனும், செல்வமீட்டுவதில் ஈடுபடும் வைசியனும்,(14) குவிந்த கவனத்துடன் பிற மூன்று வகையினருக்கும் எப்போதும் தொண்டு செய்வதில் ஈடுபடும் சூத்திரனும் மதிப்புக்குத் தகுந்தவர்களாவர். ஓ! மனிதர்களின் தலைவா, வேறுவழிகளில் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} அறத்தில் இருந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.(15
ஆயிரக்கணக்கான கொடைகளை ஒருபுறம் வைத்தாலும், அறம் சார்ந்து ஈட்டப்பட்டு, துன்பத்துடன் ஒருவன் கொடுக்கும் இருபது சோழிகளே கூட {சோகிகளேகூட / இருபது பணம் கூட} பெரும் நன்மையை விளைவிக்கும். {அவ்வாறெனில் அறம்சார்ந்து ஈட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கொடைகள் எவ்வளவு பெரிய நன்மைகளை விளைவிக்கும்?} (16) ஓ! மன்னா {ஜனகனே}, பிராமணர்களை முறையாக மதித்து அவர்களுக்குக் கொடைகளை அளிக்கும் மனிதர்கள், அந்தக் கொடைகளுக்கு ஒப்பான சிறந்த கனிகளை அறுவடை செய்வார்கள்.(17) கொடையேற்பவரைத் தேடி, உரிய முறையில் அவரைக் கௌரவித்துக் கொடையாளியால் கொடுக்கப்படும் கொடை மதிப்புமிக்கதாகும். வேண்டுதலின் பேரில் கொடையாளி கொடுக்கும் கொடை நடுத்தரமானதாகும்.(18)
எனினும், அவமானப்படுத்தும் வகையில் எந்த மதிப்புமில்லாமல் கொடுக்கப்படும் கொடையானது (தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில்) மிகத் தாழ்ந்ததாகும். உண்மையைச் சொல்லும் தவசிகள் இதையே சொல்கின்றனர்.(19) வாழ்வெனும் பெருங்கடலில் மூழ்கும் மனிதன், பல்வேறு வழிகளின் மூலம் அந்தப் பெருங்கடலைக் கடக்கவே முனைய வேண்டும். உண்மையில், இவ்வுலகக் கட்டுகளில் இருந்து விடுபடும் வகையில் அவன் முயற்சிக்க வேண்டும்.(20) பிராமணன் தற்கட்டுப்பாட்டால் ஒளிர்கிறான்; க்ஷத்திரியன் வெற்றியாலும், வைசியன் செல்வத்தாலும்; சூத்திரன் (மூவகையினுக்கு) தொண்டு புரிவதில் {பணி செய்வதில்} உள்ள புத்திசாலித்தனத்தாலும் மகிமையில் ஒளிர்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(21)
காமகுரோதலோபம்! – சாந்திபர்வம் பகுதி – 295-மனிதர்களின் உடலுக்குள் புகுந்து காமம், குரோதம் மற்றும் லோபத்தைத் தூண்டிய அசுரர்கள்; சிவனிடம் தேவர்கள் செய்த முறையீடு; முப்புரமெரித்த சிவன்; சப்தரிஷிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தோன்றியது; பூமியில் மீண்டும் அறம் தழைத்தது ஆகியவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…
பராசரர் {ஜனகனிடம்}, “கொடையேற்பதன் மூலம் பிராமணனாலும், போரில் வெல்லப்பட்ட வெற்றியால் க்ஷத்திரியனாலும், தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைசியனாலும், பிற மூன்று வகையினருக்கும் தொண்டு செய்வதன் மூலம் சூத்திரனாலும் ஈட்டப்படும் செல்வம், அளவில் சிறியதாக இருப்பினும் புகழத் தக்கதாகும். மேலும் அறமீட்டுவதில் செலவிடப்படும்போது, பெரும் நன்மைகளை அது விளைவிக்கும். பிற மூன்று வகையினருக்கும் சூத்திரனே நிலையான தொண்டாற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(2) வாழ்வின் அழுத்தத்தில், ஒரு பிராமணன் க்ஷத்திரிய, வைசிய வகைகளின் கடமைகளைச் செய்தால், அவன் அறத்தில் இருந்து வீழ்ந்தவனாக மாட்டான். எனினும், ஒரு பிராமணன் தாழ்ந்த வகையின் {சூத்திரனின்} கடமைகளைச் செய்யும்போது, நிச்சயம் அவன் வீழவே செய்கிறான்.(3) ஒரு சூத்திரன், பிற மூன்று வகையினரிடம் செய்யும் தொண்டில் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டமுடியவில்லையெனில், விதிப்படியே அவன் வணிகம், கால்நடை வளர்த்தல், சிற்பக் கலைகள் ஆகிவற்றைப் பின்பற்றலாம்.(4) உலகில் நிந்திக்கத்தக்கவையாகக் கருதப்படுபவையான அரங்க நாடகங்களில் தோன்றுதல், பல்வேறு வடிவங்களில் வேடந்தரித்தல், பதுமையாட்டம் {பொம்மலாட்டம்}, மது மற்றும் இறைச்சி விற்பனை, இரும்பு மற்றும் தோல் விற்பனை ஆகிய தொழில்களில் ஏற்கனவே ஈடுபடாத {தன் முன்னோர்கள் செய்யாத மேற்கண்ட தொழில்களில் இதுவரை ஈடுபடாத} ஒருவன், தன் வாழ்வாதரத்தை ஈட்டுவதற்காக அவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றில் ஈடுபடுவோர், அவற்றைக் கைவிட்டால் பெரும் தகுதியை ஈட்டலாம் என்றே நாம் கேள்விப்படுகிறோம்.(5,6)
வாழ்வில் வெற்றியடைந்தவன், ஆணவம் நிறைந்த மனத்தின் விளைவால் பாவம் நிறைந்தவனாக நடந்து கொள்ளும்போது, அச்சூழ்நிலையில் அவனது செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகின்றன.(7) முந்தைய காலங்களின் மனித இனம் தற்கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அறத்தை அவர்கள் பெரும் மதிப்போடு போற்றியதாகவும்; வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பின்பற்றிய நடைமுறைகள் அனைத்தும், சாத்திர விதிகளுக்கு ஏற்புடையதாக இருந்ததாகவும்; சீ! என்று சொல்வதே அவர்களுக்குரிய ஒரே தண்டனையாக இருந்ததாகவும் புராணங்களில் இருந்து நாம் கேள்விப்படுகிறோம்.(8) ஓ! மன்னா, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அறத்தைத் தவிர மனிதர்களுக்கு மத்தியில் வேறு எதுவும் மெச்சப்படுவதில்லை. அறத்தில் பெரும் முன்னேற்றமடைந்த அந்தக் காலத்து மனிதர்கள், அவர்கள் கண்ட நற்குணங்களை மட்டுமே வழிபட்டனர்.(9) எனினும், ஓ! குழந்தாய், உலகில் அறம் மேலோங்குவதை அசுரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (எண்ணிக்கையிலும், சக்தியிலும்) பெருகிய அசுரர்கள் (காமம் மற்றும் கோபம் என்ற வடிவில்) மனிதர்களின் உடல்களுக்குள் புகுந்தனர்.(10) அப்போதுதான் அறத்தை அழிக்கும் செருக்கு மனிதர்களிடம் உண்டானது. செருக்கில் இருந்து ஆணவமும், ஆணவத்தில் இருந்து கோபமும் எழுந்தன.(11) மனிதர்கள் இவ்வாறு கோபத்தில் மூழ்கியபோது, பணிவுடன் கூடிய நடத்தையும், நாணமும் மறைந்து, அலட்சியப்போக்கு அவர்களை மூழ்கடித்தது.(12)
கவனமின்மையால் பீடிக்கப்பட்ட அவர்களால் முன்பைப் போலப் பார்க்க முடியாததன் விளைவால், அவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல் ஒருவரையொருவர் ஒடுக்குவதன் மூலம் செல்வத்தை அடையத் தொடங்கினர்.(13) மனிதர்கள் இவ்வாறான போது, “சீ” என்று நிந்திக்கும் தண்டனையால் மட்டுமே குற்றவாளிகளிடம் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை. மனிதர்கள், தேவர்களுக்கோ, பிராமணர்களுக்கோ எந்த மதிப்பையும் அளிக்காமல் தங்கள் புலன்களை முழுமையாக {புலன்நுகர் பொருட்களில்} ஈடுபடுத்த தொடங்கினர்.(14) அந்நேரத்தில் தேவர்கள், பொறுமையுடையவனும், பலவடிவத் தன்மை கொண்டவனும் {பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும்}, முதன்மையான குணங்களைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான சிவனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(15) தேவர்கள் தங்கள் இணைந்த சக்தியை அவனுக்குக் {சிவனுக்குக்} கொடுத்தனர், அதன் பேரில் அந்தப் பெருந்தேவன் {சிவன்}, ஆகாயத்தில் வசித்து வந்த ஆசை {காமம்}, கோபம் {குரோதம்}, பேராசை {லோபம்} ஆகிய மூன்று அசுரர்களையும், அவர்களது வசிப்பிடங்களையும் தன்னுடைய ஒரே கணையால் பூமியில் வீழ்த்தினான்[1].(16) கடும் ஆற்றலைக் கொண்டவனும், தேவர்களைப் பீதியடையச் செய்தவனுமான அசுரர்கள் தலைவனும் {மஹாமோஹனும்}, சூலந்தரித்த மஹாதேவனால் கொல்லப்பட்டான்.(17) அசுரர்களின் தலைவன் கொல்லப்பட்டபோது, மனிதர்கள் மீண்டும் தங்கள் முறையான இயல்புகளை அடைந்து, முந்தைய காலங்களைப் போல மீண்டும் வேதகல்வியிலும், பிற சாத்திரங்களைக் கற்பதிலும் ஈடுபடத் தொடங்கினர்.(18)அப்போது பழங்காலத்தின் ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்} முன்வந்து தேவர்களின் தலைவனாகவும், சொர்க்கத்தின் ஆட்சியாளனாகவும் வாசவனை {இந்திரனை} நிறுவினார்கள். மேலும் அவர்கள் மனித இனத்தைத் தண்டிக்கும் தண்டக்கோலைத் தாங்களே தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டனர்.(19) அந்த ஏழு முனிவர்களுக்குப் பிறகு (மனிதர்களை ஆள்வதற்காக) மன்னன் விப்ருதுவும், க்ஷத்திரிய வகையைச் சார்ந்த இன்னும் பல மன்னர்களும் தனித்தனி மனிதக்குழுக்களைத் தனித்தனியாக ஆள்வதற்காக வந்தனர்.(20) (மஹாதேவன் உயிரினங்களின் மனத்தில் இருந்து தீய ஆசைகள் அனைத்தையும் அகற்றிய போது) அந்தப் பழங்காலத்தில் தீய உணர்வுகள் அகலாத குறிப்பிட்ட சில முதியவர்கள் இருந்தனர்.(21) அவர்களுடைய தீய மனநிலையின் விளைவாலும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளாலும், பயங்கர ஆற்றலைக் கொண்ட பல மன்னர்கள் தோன்றி, அசுரர்களுக்குத் தகுந்த செயல்களை மட்டுமே செய்யத் தொடங்கினர்.(22) அதீத மடமை கொண்ட மனிதர்கள் அந்தத் தீயச் செயல்களைக் கடைப்பிடித்து, அவற்றையே அதிகாரமிக்கவையாக நிறுவி, இந்த நாள் வரை அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்[2].(23) ஓ! மன்னா, இந்தக் காரணத்தினாலேயே நான், சாத்திரங்களின் உதவியுடன் முறையாகச் சிந்தித்து, ஒருவன் தீங்கு அல்லது வன்மம் நிறைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்த்து ஆன்ம ஞானம் அடைவதற்கு முயல வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(24) ஞானம் கொண்ட மனிதன், அறச்சடங்குகளைச் செய்வதற்காக நெறிகளைக் கைவிட்டு அறமற்ற வழிகளின் மூலம் செல்வத்தை நாடமாட்டான். அத்தகைய வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் ஒருபோதும் நன்மை பயக்காது.(25)நீ இவ்வகை க்ஷத்திரியனாக வேண்டும். உன் புலன்களை அடக்கி, உன் நண்பர்களுக்கு ஏற்புடையவனாகி, உனது வகைக்கான கடமைகளின்படி உன் குடிமக்கள், பணியாட்கள் மற்றும் பிள்ளைகளைப் பேணி வளர்ப்பாயாக.(26) (மனித வாழ்வில் தோன்றும்) செழுமை மற்றும் வறுமையின் கலவையின் மூலம் நட்புகளும், பகைமைகளும் எழுகின்றன. (ஒவ்வொரு ஜீவனையும் பொறுத்தவரையில்) ஆயிரமாயிரம் இருப்புகள் தொடர்ந்து சுழல்கின்றன, ஜீவ இருப்பின் ஒவ்வொரு நிலையிலும் இவை நேர்ந்தே ஆக வேண்டும்[3].(27) இந்தக் காரணத்தினால் நீ ஒவ்வொரு வகை நற்குணங்களிலும் பற்றுக் கொள்ள வேண்டும், ஒருபோதும் களங்கங்களின் {குற்றங்களில்} பற்றுக் கொள்ளக் கூடாது. எந்த அறமும் அற்றவனும், மிகுந்த மூடனுமான ஒரு மனிதன்கூட, தனது எந்த நல்ல குணத்திற்காகவும் புகழப்படுவதைக் கேட்டால், இன்பத்தால் நிறைவான். நற்குணத்தின் தன்மை இத்தகையதே ஆகும்[4].(28) ஓ! மன்னா, அறமும் {புண்ணியமும்}, பாவமும் மனிதர்களுக்கு மத்தியில் மட்டுமே இருக்கின்றன. இவை மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கு மத்தியிலும் இல்லை.(29) எனவே, உணவுத் தேவையோ, பிற அவசிய தேவைகளோ ஏற்படும்போது, அவற்றைக் கடக்கும் ஒருவன், அற மனநிலையுடனிருந்து, ஞானத்தை அடைந்து, எப்போதும் தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் பார்த்து, எந்த வகைத் தீங்கையும் செய்வதில் இருந்து முற்றாக விலக வேண்டும்.(30) ஒருவனுடைய மனம் ஆசையற்றதாகி, அதனிலிருந்து இருள் அனைத்தும் அகலும்போதுதான் ஒருவன் மங்கலமானதை அடைவதில் வெல்கிறான் {க்ஷேமத்தை அடைகிறான்}” என்றார் {பராசரர்}.(31)
தவம்! – சாந்திபர்வம் பகுதி – 296-பற்றால் விளையும் பேராசை, பேராசையால் நேரும் பாவங்கள், பாவங்களால் நேரும் அழிவு ஆகியவற்றையும்; தவத்தின் மேன்மையையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…
பராசரர் {ஜனகனிடம்}, “இல்லறவாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் செய்ய வேண்டிய கடமை விதிகள் குறித்து நான் இப்போது உனக்குச் சொன்னேன். இனி தவங்களின் விதிகளைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன். இக்காரியத்தைச் சொல்லப்போகிறேன் நீ கேட்பாயாக.(1) ஓ! மன்னா, ரஜஸ் மற்றும் தமஸ் {ஆசை மற்றும் இருள் குணங்கள்}, பற்றிலிருந்து உண்டாகும் “நான்” என்ற அகந்தை {மமதை} ஆகியற்றால் நிறைந்த உணர்வானது இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} இதயத்தில் எழுவது பொதுவாகக் காணப்படுகிறது.(2) இல்லற வாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொள்ளும் ஒருவன், பசுக்கள், வயல்கள், பல்வேறு வகைச் செல்வங்கள், மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பணியாட்களை அடைகிறான்.(3) இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவன், இந்த நோக்கங்களிலேயே தன் கண்களைத் தொடர்ந்து செலுத்துகிறான். இச்சூழ்நிலைகளில் ஒருவனுடைய விருப்பு வெறுப்புகள் அதிகரித்து, (நிலையற்றவையான) தன் உடைமைகளை நித்தியமானவை என்றும், அழிவற்றவை என்றும் கருதுகிறான்.(4) ஓ! மன்னா, ஒருவன் விருப்பு வெறுப்பில் மூழ்கி, உலகப் பொருட்களை ஆள்வதில் வசப்படும்போது, கவனமின்மையிலிருந்து எழும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவனைப் பீடிக்கிறது {பற்றுகிறது}.(5)
இவ்வுலகின் இன்பங்களில் பெரும்பங்கைக் கொண்டிருக்கும் மனிதனே அருளப்பட்டவன் என்று நினைத்து இன்பத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் மனிதன், தன் பற்றின் விளைவால், புலன்களுக்கு நிறைவைத் தரும் காரியங்களைத் தவிர வேறு எந்த இன்பத்தையும் காணாதவனாகிறான்.(6) அத்தகைய பற்றால் விளையும் பேராசையில் மூழ்கும் அவன், தன் உறவினர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முனைந்து, பிறகு அவர்களை நிறைவு செய்வதற்காகத் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையாலும் செல்வத்தைப் பெருக்க முனைகிறான்.(7) பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் நிறையும் அத்தகைய மனிதன், செல்வத்தை அடைவதற்காக, தீமையென அவன் அறிந்த செயல்களைச் செய்து, செல்வத்தை இழக்கும்போது துயரில் வீழ்கிறான்.(8) கௌரவங்களை ஈட்டி, தன் திட்டங்களின் தோல்வியை எப்போதும் தடுக்கும் அவன், இன்பத்திற்கான தன் ஆசையை நிறைவு செய்யும் வழிமுறைகளிலேயே செயல்படுகிறான். இறுதியில், அவன் நாடும் நடத்தையின் தவிர்க்கமுடியாத விளைவாக அழிவை அடைகிறான்.(9) எனினும், புத்தியுடையவர்களும், அழிவற்ற பிரம்மத்தை ஓதுபவர்களும், மங்கலமான, நன்மையான செயல்களை மட்டுமே செய்ய முனைபவர்களும், ஆசையில் இருந்து மட்டுமே எழுபவையும், கட்டாயமற்றவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்களுமானவர்களே உண்மையான இன்பநிலையை அடைகிறார்கள் என்பது நன்கறியப்பட்டதாகும்.(10)
ஓ! மன்னா, பற்றை மையமாகக் கொண்ட அத்தகை பொருட்கள் அனைத்தையும் இழப்பது, செல்வத்தை இழப்பது, உடல்நோய் மற்றும் மனத்துன்பங்களின் வேதனை ஆகியவற்றில் மூலம் ஒரு மனிதன் மனத்தளர்ச்சியில் வீழ்க்கிறான். இந்த மனத்தளர்ச்சியின் மூலம் ஆன்ம விழிப்புணர்வு எழுகிறது. அத்தகைய விழிப்புணர்வில் இருந்து சாத்திரக் கல்வி எழுகிறது. ஓ! மன்னா, ஒருவன் சாத்திரக் கருத்துகளின் சிந்தனையில் இருந்து தவத்தின் மதிப்பைக் காண்கிறான்.(12) எது மிக முக்கியமானது, எது தற்செயலானது என்ற அறிவைக் கொண்ட அரிய மனிதன், ஏற்புடைய மனைவிகள், பிள்ளைகள் ஆகியவற்றைக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது முற்றான துன்பத்திற்கே வழிவகுக்கிறது என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டுத் தவங்களைச் செய்ய முனைகிறான்[1].(13) ஓ! குழந்தாய், தவங்கள் அனைவருக்குமானவை. தாழ்ந்த வகை மனிதர்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) அவை விதிக்கப்பட்டிருக்கின்றன. தவங்கள், தன் புலன்கள் அனைத்தையும் ஆளும் தற்கட்டுப்பாடுடைய மனிதனைச் சொர்க்கத்தின் வழியில் நிறுத்துகின்றன[2].(14) ஓ! மன்னா, பலமிக்கவனான உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவன் {ஹிரண்யகர்ப்பன்}, குறிப்பிட்ட இடைவெளிகளில் நோன்புகளைப் பயின்று, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தவங்களின் மூலமே படைத்தான்.(15)ஓ! குழந்தாய், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அக்னி, அஸ்வினிகள், மருதர்கள், விசுவேதேவர்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்துக்கள்,(16) யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சொர்க்கவாசிகளும், இன்னும் பிற தேவர்கள் அனைவரும் தங்கள் தவங்களின் மூலமே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(17) தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமணர்கள், பூமியை மட்டுமல்லாமல் சொர்க்கத்தையும் தங்கள் தவங்களால் கௌரவித்ததன் மூலம் வெற்றியடைந்து இன்பத்துடன் திரிந்தனர்.(18) மனிதர்களின் இந்த உலகில், மன்னர்களும், உயர் குடியில் பிறந்த இல்லறவாசிகள் பிறர் அனைவரும் தாங்கள் செய்த தவங்களின் விளைவால் மட்டுமே தங்கள் நிலையை அடைந்தனர்[3].(19) அவர்கள் அணியும் பட்டுத்துணிகள், தங்கள் மேனியில் அலங்கரித்துக் கொள்ளும் சிறந்த ஆபரணங்கள், அவர்கள் செலுத்தும் விலங்குகள் மற்றும் வாகனங்கள், அவர்கள் அமரும் இருக்கைகள் ஆகியன அனைத்தும் அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(20)ஆயிரக்கணக்கில் அவர்களால் அனுபவிக்கப்படும் அழகிய பெண்கள் மற்றும் அரண்மனை மாளிகை வாசம் ஆகியவை அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(21) விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், பல்வேறு வகைகளிலான இனிய உணவுப் பொருட்கள் ஆகியவை அறம் சார்ந்து செயல்படுபவர்களின் {நல்வினை செய்பவர்களின்} உடைமைகளாகின்றன.(22) ஓ! எதிரிகளை எரிப்பவனே, தவங்களால் அடைய முடியாத ஏதும் மூவுலகிலும் இல்லை. உண்மை ஞானம் அற்றவர்களும் கூடத் தங்கள் தவங்களின் விளைவால் துறவை வெல்கிறார்கள்[4].(23) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, செழிப்புடன் {மகிழ்ச்சியில்} இருந்தாலும், துன்பத்திலிருந்தாலும் ஒரு மனிதன் சாத்திரங்களை நினைவுகூர்ந்து, தன் புத்தி மற்றும் மனத்தின் துணை கொண்டு பேராசையைக் கைவிட வேண்டும்.(24) நிறைவில்லாமையே துயரை உண்டாக்குகிறது. (பேராசையின் விளைவே நிறைவின்மையாகும்). பேராசை புலன்களின் கலக்கத்திற்கே வழிவகுக்கும். ஒருவனுடைய புலன்கள் கலக்கமடைந்தால், தொடர்ந்து பயன்படுத்தாத ஞானத்தை {வித்தையைப்} போலவே அவனது விவேகம் {பிரஜ்ஞை} காணாமல் போகும்[5].(25)ஒருவனுடைய விவேகம் மறையும்போது, எது சரியானது எது முறையற்றது என்பதை வேறுபடுத்திப் பார்க்க அவன் தவறுகிறான். எனவே, ஒருவனுடைய மகிழ்ச்சி அழியும் (அழிந்து துன்பவசப்படும்) போது அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும்.(26) எது ஏற்புடையதோ அதுவே மகிழ்ச்சி {இன்பம்} என்றழைக்கப்படுகிறது. எது ஏற்பில்லாததோ அது துன்பம் என்று சொல்லப்படுகிறது. தவங்கள் பயிலப்படும்போது {அவற்றின் மூலம்} மகிழ்ச்சியே விளைகிறது. அவை பயிலப்படாத போது, துன்பமே விளைகிறது. தவங்களைப் பயில்வது மற்றும் தவிர்ப்பதால் உண்டாகும் கனிகளைக் காண்பாயாக.(27) களங்கமற்ற தவங்களைப் பயில்வதன் மூலம் மக்கள் எப்போதும் அனைத்து வகை மங்கல விளைவுகளையே அடைந்து, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் புகழை அடைகிறார்கள்[6].(28) எனினும், கனியில் விருப்பத்தால் {பலன் மீது கொண்ட ஆசையால்} அவற்றை (களங்கமற்ற தவங்களைக்) கைவிடும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைக் காரணமாகக் கொண்ட ஏற்பில்லாத விளைவுகள் பலவற்றையும், அவமதிப்பையும், பல்வேறு வகைத் துன்பங்களையும், அவற்றின் கனிகளையும் {பலன்களையும்} அடைவான்.(29) அறம், தவங்கள், ஈகை பயில்வதில் விருப்பமுடைமை இருந்தாலும், தடுக்கப்பட்ட அனைத்து வகைச் செயல்களைச் செய்யும் விருப்பமும் மனத்தில் எழுகிறது. இவ்வாறு பல்வேறு வகைப் பாவச் செயல்களைச் செய்யும் ஒருவன் நரகத்திற்கே செல்கிறான்[7].(30)ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனகனே}, இன்பத்திலும் துன்பத்திலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாத மனிதன் சாத்திரக் கண் கொண்டவன் {சாத்திரநேத்திரமுடையவன்} என்று சொல்லப்படுகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, தீண்டல், நாக்கு {சுவை}, பார்வை {ஒளி}, மணம் மற்றும் கேட்பது {ஒலி} ஆகியவற்றுக்கு உரிய புலன்களின் நிறைவால் ஒருவன் அடையும் இன்பமானது, வில்லால் ஏவப்பட்ட கணை பூமியில் விழுவதற்கு ஆகும் காலம் வரையே நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.(32) குறுகிய காலத்தையே கொண்ட அந்த இன்பம் முடிந்ததும், ஒருவன் மிகக்கூரிய துன்பத்தையே அனுபவிக்கிறான். விடுதலையால் {முக்தியின் மூலம்} விளையும் ஒப்பற்ற நிலையை மூடர்களே மெச்சமாட்டார்கள்.(33) புலன்களின் நிறைவில் உண்டாகும் துன்பத்தைக் காணும் ஞானிகள், விடுதலையை {முக்தி} அடையும் நோக்கில் அமைதி மற்றும் தற்கட்டுப்பாடெனும் நற்பண்புகளை வளர்க்கிறார்கள். அவர்களுடைய அறவொழுக்கத்தின் விளைவால் செல்வத்தாலோ, இன்பத்தாலோ அவர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில் வெல்ல முடியாது.(34) இல்லறவாசிகள் முயற்சியில்லாமல் அடையப்படும் செல்வத்தையும், பிற உடைமைகளையும் எந்தக் கழிவிரக்கமும் இல்லாமல் அனுபவிக்கலாம். எனினும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) அவர்களின் வகைக்கான கடமைகளைப் பொறுத்தவரையில், அவற்றை அவர்கள் முயற்சியின் உதவியுடனே வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து[8].(35)கௌரவம் அடைந்தவர்கள், உயர் குடியில் பிறந்தவர்கள், சாத்திரங்களின் கருத்தை நோக்கியே எப்போதும் தங்கள் கண்களைக் கொண்டவர்கள் ஆகியோரின் நடைமுறைகளை, கட்டுப்பாடில்லாத மனங்களைக் கொண்ட பாவிகளால் ஒருபோதும் பின்பற்ற இயலாது.(36) வீண்தற்பெருமையின் ஆதிக்கத்தில் மனிதனால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அழிவையே அடைகின்றன. எனவே, மதிப்பிற்குரியவர்களுக்கும், உண்மையான அறவோருக்கும் தவத்தைத் தவிர இவ்வுலகில் செய்ய வேறெந்த செயலும் இல்லை[9].(37) எனினும், செயல்களுக்கு அடிமைகளாக இருக்கும் இல்லத்தாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முழு இதயங்களுடன் தங்களை அச்செயல்களில் நிறுவிக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, தங்கள் வகைக்கான கடமைகளைப் பின்பற்று அவர்கள், கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் வேள்விகளையும், அறச்சடங்குகள் பிறவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்.(38) உண்மையில், நதி {ஆற்றின் பெண்பால்} மற்றும் நதங்களான {ஆற்றின் ஆண்பால்} ஆறுகள்[10] அனைத்தும் பெருங்கடலையே தங்கள் புகலிடமாகக் கொள்வதைப் போல, அனைத்து வகைகளைச் சார்ந்த மனிதர்களும், இல்லறத்தானையே புகலிடமாகக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(39)
வர்ண, கோத்திர வேறுபாடு! – சாந்திபர்வம் பகுதி – 297-தவம் குன்றியதால் விளைந்த வர்ண வேறுபாடு; நான்கு வர்ணங்களின் அடிப்படைத் தோற்றம்; வர்ணங்களின் கலப்பால் உண்டான கோத்திரங்கள்; வர்ணங்களுக்குத் தனிச்சிறப்புடைய கடமைகள் மற்றும் வர்ணங்களுக்குப் பொதுவான கடமைகள்; களங்கமேற்படுத்துவது பிறவியா? செயல்களா? போன்றவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…
ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் முனிவரே {பராசரரே}, பல்வேறு வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களின் மத்தியில் உள்ள இந்த வர்ண வேறுபாடு எங்கிருந்து வந்தது? இதை நான் அறிய விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) ஒருவன் ஈன்றெடுக்கும் வாரிசு தன் சுயமே ஆகும் என ஸ்ருதிகள் சொல்கின்றன. உண்மையில் பிரம்மனிலிருந்து எழுந்த அனைவரும் பிராமணர்களாகத்தானே இருந்திருக்க வேண்டும். பிராமணர்களில் இருந்து எழுந்த மனிதர்கள் ஏன் அந்தப் பிராமணர்களில் இருந்து வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்?” என்று கேட்டான்.(2)
பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, நீ சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. ஈன்றெடுக்கப்பட்ட வாரிசானவன் ஈன்றவனைத் தவிர வேறு எவனும் அல்ல. எனினும், தவத்தில் இருந்து வீழ்ந்ததன் விளைவால் பல்வேறு நிறங்களைக் கொண்ட வர்க்க {வர்ண} வேறுபாடுகள் தோன்றின. நிலமும் {தாயும்}, வித்தும் {தந்தையும்} நல்லவையாக {நல்லவர்களாக} இருந்த போது விளைந்த பயிர் {வாரிசானவன்} தகுதிமிக்கதாக {புண்ணியவானாக / பிராமணனாக} இருந்தது {இருந்தான்}. எனினும், நிலமும், வித்தும் வேறுவகையில் அல்லது தாழ்ந்த வகையில் இருக்கும்போது விளையும் பயிர் தாழ்வடைகிறது.(3,4) அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உலகங்களைப் படைக்கத் தன்னை நிறுவிக் கொண்டபோது, சில உயிரினங்கள் அவனது வாயிலிருந்தும், சில அவனது கரங்களில் இருந்தும், சில அவனது தொடைகளில் இருந்தும், சில அவனது பாதங்களில் இருந்து வந்ததைச் சாத்திரங்களை அறிந்தவர்கள் அறிவார்கள்.(5) ஓ! குழந்தாய், இவ்வாறு அவனது வாயிலிருந்து எழுந்தவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவனது கரங்களில் இருந்து எழுந்தவர்கள் க்ஷத்திரியர்கள் என்று பெயரிடப்பட்டார்கள். ஓ! மன்னா, அவனது தொடைகளில் இருந்து எழுந்தவர்கள், செல்வமிக்க வர்க்கமான {வர்ணத்தாரான} வைசியர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இறுதியாக, அவனது பாதங்களில் இருந்து பிறந்தவர்கள் தொண்டாற்றும் வர்க்கமான {வர்ணத்தாரான} சூத்திரர்களாகினர்.(6) ஓ! ஏகாதிபதி, இந்த நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இவ்வாறு படைக்கப்பட்டன. இதற்கு மேலும் உள்ள வர்க்கங்கள் {கலப்புவர்ணங்கள்}, மேலும் மேலும் இவற்றுக்குள் நேர்ந்த கலப்பால் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.(7) ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியர்கள் என்றழைக்கப்படும் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள், அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள், சண்டாளர்கள் ஆகியோர் அனைவரும் உண்மையில் இருந்த நான்கு வகையினர் ஒருவரோடொருவர் கலந்ததால் எழுந்தவர்களாவர்” என்றார் {பராசரர்}[1].(8,9)
ஜனகன் {பராசரரிடம்}, “அனைவரும் பிரம்மனில் இருந்து மட்டுமே எழுந்திருக்கும்போது, மனிதர்களிடம் எவ்வாறு இன {கோத்திர} வேற்றுமை உண்டானது? ஓ! தவசிகளில் சிறந்தவரே, இவ்வுலகில் முடிவில்லா வேற்றுமைகளைக் கொண்ட இனங்கள் {கோத்திரங்கள்} காணப்படுகின்றன.(10) வேற்றுமையற்ற தோற்றம் {பிறப்பைக்} கொண்டிருக்கும்போதும் தவங்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் எவ்வாறு பிராமணர்களின் நிலையை அடைவார்கள்? உண்மையில், தூய கருவறைகளில் பிறந்தவர்களும், தூய்மையற்ற கருவறைகளில் பிறந்தவர்களும் பிராமணர்களாகிறார்களே?” என்று கேட்டான்[2].(11)பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, தவங்களின் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வென்ற உயர் ஆன்ம மனிதர்களின் நிலையானது, அவர்கள் அடைந்த தாழ்ந்த பிறவிகளால் பாதிக்கப்பட்டது என்று கருத முடியாது.(12) ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் பாகுபாடற்ற கருவறைகளில் பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்கு {அந்தப் பிள்ளைகளுக்குத்} தங்கள் தவச் சக்தியின் மூலம் முனிவர்களின் நிலையை அளித்தனர்[3].(13) என் பாட்டா வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர், காசியபர், வேதர், தாண்டியர், கிருபர், காக்ஷீவான், கமடர் மற்றும் பிறரும்,(14) ஓ! மன்னா, யவக்ரீதர், பேசுபவர்களில் முதன்மையான துரோணர், ஆயு, மதங்கர், தத்தர், துருபதர் {திருமதர்}, மாத்ஸ்யர் ஆகியோர் அனைவரும்,(15) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா, தங்கள் தவத்தின் வன்மையால் தங்கள் தங்களுக்குரிய {முனிவர்களின் / பிராமண} நிலைகளை அடைந்தனர்.(16) ஓ! ஏகாதிபதி, முதலில் அங்கிரஸ், கசியபர், வசிஷ்டர் மற்றும் பிருகு என்ற நான்கு {மூலக்} கோத்திரங்கள் (இனங்கள்) மட்டுமே இருந்தன.(17) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, செயல்கள் மற்றும் ஒழுக்கத்தின் விளைவால் காலாகாலத்தில் பல கோத்திரங்கள் இருப்புக்கு வந்தன. அந்தக் கோத்திரங்களின் பெயர்கள், அவற்றை நிறுவியோரின் தவங்களால் உண்டானவையாகும். நல்ல மனிதர்கள் அவற்றை {கோத்திரங்களைப்} பயன்படுத்துகின்றனர்” என்றார் {பராசரர்}[4].(18)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! புனிதமானவரே, பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} சிறப்புக் கடமைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக. அவற்றின் பொதுவான கடமைகளையும் எனக்குச் சொல்வீராக. நீர் அனைத்தையும் அறிந்தவராவீர்” என்றான்.(19)
பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, கொடைளை ஏற்பது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, சீடர்களுக்குப் போதிப்பது ஆகியன பிராமணர்களின் சிறப்புக் கடமைகளாகும். பிற வகையினரை {வர்ணத்தாரைப்} பாதுகாப்பது க்ஷத்திரியனுக்கு முறையானதாகும்.(20) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியன வைசியர்களின் தொழில்களாகும். ஓ! மன்னா, அதே வேளையில் இந்த (மூன்று) மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவது சூத்திரர்களின் தொழிலாகும்.(21) ஓ! ஏகாதிபதி, நான்கு வகையினரின் {வர்ணத்தாரின்} சிறப்புக் கடமைகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! குழந்தாய், இந்த நான்கு வகையினருக்கும் {பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களுக்கும்} பொதுவான கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(22) கருணை{குரூரத்தன்மையில்லாமை}{1}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்சை}{2}, விழிப்புணர்வு {தவறுதலில்லாமை}{3}, பிறருக்கு உரியவற்றைக் கொடுத்தல் {விலகியிருத்தல்}{4}, இறந்து போன மூதாதையர்களைக் கௌரவிக்கும் வகையில் சிரார்த்தங்கள் செய்தல் {ச்ராத்தகர்மம்}{5}, விருந்தினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய விருந்தோம்பலைச் செய்தல் {அதிதிபூஜை}{6}, வாய்மை {ஸத்தியம்}{7}, கோபத்தை அடக்குதல் {குரோதமில்லாமை}{8},(23) தான் மணந்த மனைவியரிடம் நிறைவடைதல்{9}, (அக மற்றும் புறத்) தூய்மை {சுசியாயிருத்தல்}{10}, வன்மம் இல்லாமை {அஸூயையின்மை}{11}, தன்னறிவு அடைதல் {ஆத்மஜ்ஞானம்}{12}, துறவு {பொறுமை}{13} ஆகிய கடமைகள், ஓ! மன்னா, அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} பொதுவானவையாகும்.(24)
பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் மறுபிறப்பாளர்களாவர் {இரு பிறப்பாளர்கள் / த்விஜர்களாவர்}. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் அனைவருக்கும் இக்கடமைகளில் சம உரிமை உண்டு.(25) ஓ! ஏகாதிபதி, இந்த மூன்று வகையினரும் தங்கள் தங்களுக்குரிய வர்க்கங்களை {வர்ணங்களைச்} சார்ந்த ஏதோவொரு அறவோனை முன்மாதிரியாகக் கொண்டு பெரும் தகுதியை ஈட்டுவதைப் போலவே, தங்களுக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு கடமைகளைச் செய்து துன்பத்தையும் அடைகின்றனர்.(26) சூத்திரன் (தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்வதால்) ஒருபோதும் வீழ்வதுமில்லை, மறுபிறப்புச் சடங்குகளேதும் செய்யத் தகுந்தவனாவதுமில்லை. வேதங்களில் இருந்து வரும் கடமைகளின் நடைமுறைகள் அவனுடையவையல்ல. எனினும், அனைத்து வகையினருக்கும் பொதுவான {மேற்குறிப்பிடப்பட்ட} பதிமூன்று கடமைகளைப் பயில்வதில் இருந்து அவன் தடை செய்யப்படுவதில்லை.(27) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகனே}, ஓ! ஏகாதிபதி, வேதங்களைக் கற்ற பிராமணர்கள், {அறவோனான} ஒரு சூத்திரனைப் பிரம்மனுக்கு இணையானவனாகக் கருதுகிறார்கள். எனினும், நானோ அத்தகைய ஒரு சூத்திரனை உலகங்கள் அனைத்தில் முதன்மையானவனும், அண்டத்தில் பிரகாசிப்பவனுமான விஷ்ணுவாகவே பார்க்கிறேன்[5].(28) தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்த மனிதர்கள், (காமம் மற்றும் கோபம் முதலிய) தீய ஆசைகளை விட விரும்பி நல்லோரின் ஒழுக்கத்தை நோற்றுச் செயல்படலாம்; உண்மையில் அவ்வாறு செயல்படும்போது, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சடங்குகள் அனைத்தையும், அவற்றில் பிற வகையினரால் சொல்லப்படும் மந்திரங்களைத் தவிர்த்து அவற்றை {அந்தச் சடங்குகளைச்} செய்வதன் மூலம் அவர்கள் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறார்கள்.(29) எங்கெல்லாம் தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவர்கள் நல்லோரின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வென்று, அதன் விளைவாக இம்மையிலும், மறுமையிலும் தங்கள் காலத்தை இன்பமாகக் கழிக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(30)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் தவசியே, ஒரு மனிதன் தன் செயல்களால் களங்கமடைகிறானா? அல்லது, அவன் பிறக்கும் வகை அல்லது வர்க்கத்தின் {வர்ணத்தின்} மூலம் களங்கமடைகிறானா? இந்த ஓர் ஐயம் என் மனத்தில் எழுகிறது. இஃதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(31)
பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டும் களங்கத்தின் மூலங்களே ஆகும். அவற்றின் வேறுபாட்டை இப்போது கேட்பாயாக.(32) பிறப்பால் களங்கமடைந்தாலும், பாவம் செய்யாமல் இருக்கும் மனிதன் பிறவி மற்றும் செயல்களால் உண்டாகும் பாவங்களைத் தவிர்க்கிறான்.(33) எனினும், மேன்மையான பிறவியைக் கொண்ட ஒருவன் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்தால், அச்செயல்கள் அவனைக் களங்கப்படுத்தும். எனவே, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டிலும் (பிறவியை விட) அதிகக் களங்கத்தைச் செயல்களே உண்டாக்குகின்றன” என்றார்.(34)
ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் சிறந்தவரே, இவ்வுலகில் பிற உயிரினங்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காமல் செய்யப்படும் அறச்செயல்கள் என்னென்ன?” என்று கேட்டான்.(35)
பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! ஏகாதிபதி, மனிதர்களை எப்போதும் மீட்கும் தீங்கில்லா செயல்களைக் குறித்துக் கேட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக.(36) தங்கள் இல்லற நெருப்புகளை ஒருபுறம் வைத்து, உலகப் பற்றுகள் அனைத்தில் இருந்தும் தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்ளும் மனிதர்கள், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறார்கள். படிப்படியாக யோக பாதையில் அடியெடுத்து வைக்கும் அவர்கள், இறுதியாக உயர்ந்த பேரின்ப நிலையை (விடுதலையை {முக்தியைக்}) காண்கிறார்கள். நம்பிக்கையும் பணிவும் கொண்டு, எப்போதும் தற்கட்டுப்பாட்டைப் பயின்று, கூரிய புத்தியுடன், செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்கள் நித்தியமான இன்ப நிலையை அடைகிறார்கள்.(37,38) ஓ! மன்னா, மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் {வர்ணத்தாரும்} இவ்வுலகில் முறையான அறச்செயல்கள், வாய்மை பேச்சு, அறமற்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் சொர்க்கத்திற்கு உயர்கிறார்கள். இதில் எந்த ஐயமும் கிடையாது” என்றார் {பராசரர்}.(39)
மனிதப்பிறவியின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 298-மனிதப்பிறவியின் மேன்மை; அதற்குரிய பல தர்மங்கள் ஆகியவற்றைக் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…
பராசரர் {ஜனகனிடம்}, “அர்ப்பணிப்பற்ற {குணமில்லாத} மனிதர்களுக்கு அவர்களின் தந்தைமார், நண்பர்கள், ஆசான்கள், ஆசான்களின் மனைவியர் ஆகியோரால் தங்கள் அர்ப்பணிப்பில் உள்ள தகுதிகளை {புண்ணியங்களை} அவர்களுக்குக் கொடுக்க இயலாது {இவர்கள் அவர்களுக்குப் பயன்படுவதில்லை}. அத்தகைய பெரியோரிடம் உறுமிக்க அர்ப்பணிப்பைக் கொண்டவர்களும், அவர்களுக்கு ஏற்புடையதைப் பேசுபவர்களும், அவர்களின் நன்மையை நாடுபவர்களும், நடத்தையால் அவர்களுக்கு அடங்கியிருப்பவர்களும் மட்டுமே அர்ப்பணிப்பின் தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியும். (1) தந்தையே தன் பிள்ளைகளுக்குத் தேவர்களில் உயர்ந்தவனாவான். தாயைவிட உயர்ந்தவன் தந்தை எனச் சொல்லப்படுகிறது. ஞானத்தை அடைவதே உயர்ந்த உடைமையாகக் கருதப்படுகிறது. புலன்நுகர் பொருட்களை அடக்கியவர்கள் (ஞானத்தை அடைவதன் மூலம்) உயர்ந்ததை (விடுதலையை {முக்தியை}) அடைகிறார்கள்.(2)
எந்த க்ஷத்திரிய இளவரசன், போர்க்களத்திற்குச் சென்று, அனைத்துத் திசைகளிலும் பறக்கும் நெருப்புக் கணைகளுக்கு மத்தியில் காயமடைந்து அவற்றால் எரிபடுகிறானோ, அவன் தேவர்களால் அடையப்படும் உலகங்களை நிச்சயம் அடைந்து, அங்கே முற்றிலும் நிறைவான சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறான்.(3) ஓ! மன்னா, களைப்படைந்தவனையோ, அச்சமடைந்தவனையோ, ஆயுதம் இல்லாதவனையோ, அழுது கொண்டிருப்பவனையோ, போரிட விருப்பமில்லாதவனையோ, கவசம் தரிக்காதவனையோ, தேர்கள், குதிரை மற்றும் யானை இல்லாதவனையோ, போரிடும் முயற்சியை நிறுத்தியவனையோ, நோயுற்றவனையோ, இடத்தை இரந்து கேட்பவனையோ, இளம் வயதினனையோ, முதிர்ந்தவனையோ ஒரு க்ஷத்திரியன் தாக்கக்கூடாது.(4) கவசம், தேர்கள், குதிரை, யானை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவனும், தன் நிலைக்கு இணையான நிலையைக் கொண்டவனுமான ஒருவனுடனேயே ஒரு க்ஷத்திரியன் போரிட வேண்டும்.(5) இணையானவன் அல்லது மேம்பட்டவனின் கைகளில் நேரும் மரணமே மெச்சத்தக்கது; இழிந்தவன், அல்லது கோழை, அல்லது வறியவனின் கைகளில் நேர்வதல்ல {அவ்வாறு நேரும் மரணம் மெச்சப்படுவதில்லை}. இது நன்கறியப்பட்டதாகும்.(6) பாவி, அல்லது இழி பிறவி, அல்லது தீய நடத்தை கொண்டவன் கைகளில் நேரும் மரணம் மகிமையற்றதும், நரகத்திற்கு வழிவகுப்பதுமாகும்.(7)
வாழ்நாள் காலம் தீர்ந்தவனை எவனாலும் காப்பாற்ற முடியாது. அதே போலவே, வாழ்நாள் காலம் தீராதவனை எவனாலும் கொல்லவும் முடியாது.(8) ஒருவன் தன் அன்புக்குரிய பெரியோர்களை, (தன் நன்மைக்காக) இழி செயல்கள் செய்வதிலிருந்தும், பிறருக்கு தீங்கு செய்யும் செயல்களில் இருந்தும் தடுக்க வேண்டும். அவன் பிறரின் உயிரை எடுப்பதன் மூலம் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பக்கூடாது.(9) புனிதத் தலங்களில் வசித்து மனிதர்களின் கடமைகளை நோற்கும் இல்லறவாசிகள் அனைவரும், தங்களை உயிரைவிட நேரும்போது, புனித ஓடைகளின் கரைகளில் {ஆற்றங்கரைகளில்} தங்கள் உயிரை விடுவதே மெச்சத்தகுந்ததாகும்.(10) ஒருவனுடைய வாழ்நாள் காலம் தீர்ந்ததும், ஐந்து பூதங்களுக்குள் அவன் கறைந்துபோகிறான். சில வேளைகளில் (விபத்துகளின் மூலம்) இது திடீரென நேர்கிறது, சில வேளைகளில் (இயற்கையின்) விளைவுகளால் இது நேர்கிறது.(11)
உடலை அடைந்த ஒருவன், (மகிமையற்ற விபத்தின் மூலம் ஒரு புனிதத்தலத்தில்) அழிவை அடைந்தால், அதே வகையிலான மற்றொரு உடலை அடைகிறான். விடுதலையின் {முக்தியின்} பாதையில் இருந்தாலும் ஒரு பயணியாகும் அவன், ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்குச் செல்லும் மனிதனைப் போல மற்றொரு உடலை அடைகிறான்.(12) அத்தகைய மனிதன் அடையும் இரண்டாம் உடலுக்கு (புனிதத்தலத்தில் அவனது மரணம் நேர்ந்தாலும் கூட) விபத்தாலான அவனது மரணம் மட்டுமே காரணமாகும். அதற்கு இரண்டாம் காரணம் வேறேதும் இல்லை. உடல்படைத்த உயிரினங்கள் (புனிதத்தலங்களில் நேரும் விபத்தாலான மரணத்தின் விளைவால்) அடையும் புதிய உடலானது இருப்பிற்கு வந்து ருத்திரர்கள் மற்றும் பிசாசங்களோடு பற்று கொள்கிறது[1].(13) அத்யாத்மாவை அறிந்த கல்விமான்கள், தோலால் மறைக்கப்பட்டிருக்கும் பெருநரம்புகள், சிறு நரம்புகள், எலும்புக்கூட்டங்கள், தூய்மையற்ற பொருட்கள்கள், ஐம்பூதக் கலவைகள், புலன்கள், ஆசையில் பிறக்கும் புலன்நுகர் பொருட்கள் ஆகியவற்றின் திரட்டே உடல் என்று சொல்கிறார்கள். (உண்மையில்) அழகும், பிற சாதனைகளுமற்ற இந்தத் திரட்டே, முற்பிறவி ஆசைகளின் சக்தியால் மனித வடிவத்தை ஏற்கிறது.(14,15)உரிமையாளனால் {ஆன்மாவால்} கைவிடப்பட்ட உடல் அசைவற்றதாகவும், உயிரற்றதாகவும் {ஜீவனற்றதாகவும்} ஆகிறது. உண்மையில், அடிப்படை உட்பொருட்கள் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளுக்குத் திரும்பும்போது, உடலானது தூசியுடன் கலக்கிறது.(16) செயல்களின் சேர்க்கையால் உண்டான இந்த உடல், அதன் செயல்களால் தீர்மானிக்கப்பட்ட சூழ்நிலைகளிலேயே மீண்டும் தோன்றுகிறது. ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகா}, உண்மையில் எந்தச் சூழ்நிலைகளில் இந்த உடல் அழிவடைகிறதோ, அந்தச் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் மறுபிறவியில், அதன் முற்பிறவி செயல்களின் கனிகளை அஃது அனுபவிப்பதும், தாங்கிக் கொள்வதும் காணப்படுகிறது.(17) ஓ! மன்னா, ஜீவன், தான் வசித்திருந்த உடலின் அழிவுக்குப் பிறகு, உடனே வேறு உடலில் பிறப்பெடுப்பதில்லை.(18) பரந்த மேகத்தைப் போல அது சில காலம் வானத்தில் திரிந்திருக்கிறது. ஓ! ஏகாதிபதி, புதிய கொள்ளிடத்தை அடைந்தபிறகே அது மறுபிறப்பை எடுக்கிறது.(19)
ஆன்மாவானாது மனத்தைவிட உயர்ந்ததாகும். மனமானது, புலன்களைவிட உயர்ந்ததாகும். அசையும் {ஜீவனுள்ள} உயிரினங்களே படைக்கப்பட்ட பொருட்களில் முதன்மையானவையாகும்.(20) அசையும் உயிரினங்களிலும், இரு கால்களைக் கொண்டவை மேன்மையானவையாகும். இரண்டு கால் உயிரினங்களில் மறுபிறப்பாளர்கள் மேன்மையானவர்களாவர்.(21) மறுபிறப்பாளர்களில் விவேகிகள் மேன்மையானவர்களாவர். விவேகிகளில் அன்ம அறிவை அடைபவர்கள் மேன்மையானவர்களாவர். ஆன்ம அறிவை அடைந்தவர்களில் பணிவுள்ளவர்கள் மேன்மையானவர்களாவர்.(22) மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் பிறப்பை மரணம் பின்தொடர்கிறது. இது தீர்மானிக்கப்பட்டதாகும். சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் ஆளுகையில் உள்ள உயிரினங்கள், முடிவைக் கொண்ட செயல்களையே நாடுகின்றன.(23) சூரியன் வடக்கத்திய சாய்வில் {உத்தராயணத்தில்} இருக்கும் போதும், புனிதமான, மங்கலமான காலம் {முகூர்த்தம்} மற்றும் நட்சத்திரத்தின் போதும் அழிவை அடையும் மனிதன் அறவோனாகக் கருதப்படுகிறான்.(24) பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைக் கழுவிக் கொண்டு, தான் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் தன் சக்திக்குத் தக்க செய்து, எந்த மனிதனுக்கும் துன்பத்தைத் தருவதைத் தவிர்த்து, தானாக நேரும் வேளையில் மரணத்தை அடைபவன் அறவோனாவான்.(25)
நஞ்சு உட்கொண்டு, தூக்கிட்டு, எரித்துக் கொண்டு, கள்வர்களின் கரங்களில், விலங்குகளின் பற்களில் மரணத்தை அடையும் ஒருவன் மகிமையற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(26) அறவோர், மிகுந்த வேதனைகளைத் தரும் வகையிலான மன மற்றும் உடல் நோய்களால் பீடிக்கப்பட்டாலும், இத்தகைய மரணங்களை அடைவதில்லை.(27) ஓ! மன்னா, அறவோரின் உயிர்கள் {ஜீவன்கள்}, சூரியனைத் துளைத்துக் கொண்டு, பிரம்மலோகங்களுக்கு உயர்கின்றன. அறமற்றோர் மற்றும் பாவிகளாக இருந்தோரின் உயிர்கள் {ஜீவன்கள்} நடு உலங்களில் திரிந்து கொண்டிருக்கின்றன. பாவிகளின் உயிர்கள் அடி ஆழங்களில் {பாதாளங்களில்} மூழ்கிப் போகின்றன. (மனிதனுக்கு) ஒரேயொரு எதிரிதான் உண்டு, மற்றொன்றில்லை. ஓ! மன்னா, அந்த எதிரியானது அறியாமையாகும். அதனால் மூழ்கடிக்கப்பட்ட ஒருவன், அச்சம் நிறைந்த, மிக் கொடூரச் செயல்களைச் செய்ய வழி நடத்தப்படுகிறான்.(28,29) ஓ! மன்னா, எந்த எதிரி ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் படி பெரியோர்களிடம் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} மூலம் ஒருவனின் சக்திக்குள் அடக்கப்பட வேண்டுமோ, எந்த எதிரியை நிலையான முயற்சிகளைத் தவிர வேறு எதனாலும் வெல்ல முடியாதோ, அந்த எதிரி {அறியாமை} ஞானம் எனும் கணைகளின் மூலம் மட்டுமே நொறுக்கப்படுகிறது.(30)
தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன் முதலில் பிரம்மச்சாரியாகி வேதங்களைப் பயின்று, நோன்புகளை நோற்க வேண்டும். அதன் பிறகு அவன் இல்லற வாழ்வுமுறையில் {கிருஸ்தாஸ்ரமத்தில்} நுழைந்து வழக்கமான வேள்விகளைச் செய்ய வேண்டும். தன் குலத்தை நிறுவிய பிறகு அவன் காட்டுக்குள் நுழைந்து, தன் புலன்களை அடக்கி, விடுதலையை {முக்தியை} வெல்ல விரும்ப வேண்டும்.(31) ஒருவன் ஒவ்வொரு இன்பத்தையும் தவிர்ப்பதன் மூலம் தனது ஆண்மையை ஒருபோதும் நீக்கிக் கொள்ளக் கூடாது. ஒருவன் சண்டாளனாகவே ஆனாலும், அனைத்துப் பிறவிகளிலும் மனித நிலையே அவனுக்கு விரும்பத்தக்கதாகும்.(32) ஓ ஏகாதிபதி, உண்மையில் மனிதனானால் தகுதிமிக்கச் செயல்களின் மூலம் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என்பதால் அந்த வகை (மனிதப்) பிறப்பே முதன்மையானதாகும்.(33) மனித நிலையில் இருந்து வீழ்ந்து விடக்கூடாது என்பதாலே மனிதர்கள் ஸ்ருதிகளின் அதிகாரத்தால் வழிநடத்தப்படும் அறச்செயல்களை எப்போதும் செய்கிறார்கள்.(34) அடைதற்கரிய மனித நிலையை அடைந்த எந்த மனிதன், வன்மத்தில் ஈடுபட்டு, அறவோரை அவமதித்து, ஆசையின் வசப்படுகிறானோ, அவன் நிச்சயம் தன் ஆசைகளால் வஞ்சிக்கப்படுவான்.(35) எந்த மனிதன் அன்பால் வழிநடத்தப்பட்ட கண்களுடன் அனைத்து உயிரினங்களையும் அன்பால் வளர்க்கத்தகுந்தவை என்று கருதுவானோ, எவன் அனைத்து வகைச் செல்வங்களையும் அலட்சியம் செய்வானோ,(36) எவன் அவற்றுக்கு ஆறுதல் அளித்து, உணவளித்து, ஏற்புடைய வார்த்தைகளைச் சொல்வானோ, எவன் அவற்றின் மகிழ்ச்சியில் மகிழ்ந்தும், துயரில் துன்புறுவானோ, அவன் மறுமையில் ஒருபோதும் துன்புறமாட்டான்.(37)
ஒருவன் சரஸ்வதி {சரஸ்வதி ஆறு}, நைமிசக்காடு {நைமிசவசன்}, புஷ்கரை நீர்நிலைகள் மற்றும் உலகில் உள்ள புனிதத்தலங்கள் அனைத்திற்கும் சென்று, கொடைகளை அளித்து, துறவைப் பயின்று, இனிய குணங்களைக் கொண்டு, நீராடல்கள் மற்றும் தவங்களின் மூலம் தன் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.(38) தங்கள் வீடுகளுக்குள்ளேயே மரணத்தை அடையும் மனிதர்களின் உடல்களுக்கு ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டும். சுடலைக்கு {சுடுகாட்டுக்கு} வாகனங்களின் எடுத்துச் செல்லப்படும் அவர்களது உடல்கள் {சடலங்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளின் படி அங்கே எரிக்கப்பட வேண்டும்.(39) அறச்சடங்குகள், நன்மைக்கான விழாக்கள், வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, கொடைகள், தகுதிமிக்கப் பிற செயல்களைச் செய்வது, இறந்து போன தன் முன்னோர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் தன் சக்திக்குத்தக்க செய்வது ஆகிய அனைத்தையும் ஒருவன் தன் {ஆன்ம} நன்மைக்காகவே செய்கிறான்.(40) ஓ !மன்னா, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களும், பிற சாத்திரங்களும், களங்கமற்ற செயல்களைக் கொண்ட ஒருவனின் நன்மைக்காகவே உண்டாகின” என்றார் {பராசரர்}”.(41)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, இவை அனைத்தும் விதேஹர்களின் ஆட்சியாளனுடைய {ஜனகனின்} நன்மைக்காக உயர் ஆன்ம தவசியால் {பராசரரால்} அவனுக்குச் சொல்லப்பட்டவையாகும்”.(42)
முக்திக்கான வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 299-முக்திக்கான வழிமுறைகள் குறித்து ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், அனைத்துக் கடமைகளிலும் குறிப்பிட்ட அறிவை கொண்ட உயர் ஆன்ம பராசரரிடம் மீண்டும் கேள்வி கேட்டான்.(1)ஜனகன் {பராசரரிடம்}, “எது நன்மையை விளைவிக்கும்? (உயிரினங்களுக்கு) எது சிறந்த பாதை? {அடையும் பொருளில் எது} எந்தச் சாதனை ஒருபோதும் அழிவடையாதது? எந்த இடத்திற்குச் சென்ற பிறகு ஒருவன் திரும்ப வேண்டியதில்லை? ஓ! உயர்ந்த புத்தியைக் கொண்டவரே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)
பராசரர் {ஜனகனிடம்}, “(பற்றுகளில் இருந்து) தொடர்பறுத்துக் கொள்வதே நன்மைக்கான வேர் ஆகும். அறிவே உயர்ந்த பாதை. பயின்ற தவங்கள் ஒருபோதும் அழிவடைவதில்லை. தகுந்தோருக்கு அளிக்கப்படும் கொடைகளும் தொலைந்துபோவதில்லை.(3) பாவத்தின் கட்டுகளை ஒருவன் உடைக்கும்போது, அவன் அறத்தில் இன்பம் கொள்ளத் தொடங்குகிறான். ஒருவன் கொடைகள் அனைத்திலும் உயர்ந்த கொடையான அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிமொழியை எடுக்கும்போது, அவன் வெற்றியை அடைகிறான்.(4) (தகுந்த மனிதர்களுக்கு) ஆயிரம் பசுக்களையும், நூறு குதிரைகளையும் கொடையளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதி மொழியை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களிடமிருந்தும் பதிலுக்குத் தீங்கிழையாமையையே உறுதிமொழியாகப் பெறுகின்றனர்.(5) அனைத்துவகைச் செல்வம் மற்றும் இன்பங்களின் மத்தியில் வாழும் ஒருவன், புத்தி அருளப்பட்டவனாக இருந்தால், அவற்றோடு வாழமாட்டான்; புத்தியில்லாதவனோ நிலையற்றவையான இன்பப் பொருட்களிலேயே முழுமையாக வாழ்கிறான்.(6) தாமரை இலையை நனைக்க முடியாத நீரைப் போல ஞானியிடம் பாவத்தால் ஒட்ட முடியாது. மரத்தோடு உறுதியாக ஒட்டிக் கொள்ளும் அரக்கைப் போலப் பாவமானது புத்தியில்லாதவனிடம் உறுதியாக ஒட்டிக் கொள்கிறது[1].(7)பலன்களைத் தாங்கிக் கொள்ளாமல் {அனுபவிக்காமல்} தீர்ந்துபோகாத பாவமானது, அதைச் செய்தவனை ஒருபோதும் விடுவதில்லை. அதேபோல, பாவம் செய்தவனும், நேரம் வரும்போது அதனிலிருந்து எழும் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவே வேண்டும்.(8) எனினும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், பிரம்மத்தின் இருப்பை உணர்ந்தவர்களும், தங்களுடைய செயல்களின் கனிகளால் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(9) அறிவு மற்றும் செயற்புலன்களை {ஞானகர்மேந்திரியங்களைப்} பொறுத்தவரையில் அவற்றில் கவனமில்லாதவனும், தன் தீச்செயல்களை அறிந்து கொள்ளாதவனும், நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டிலும் இதயப்பற்று கொண்டவனும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.(10) எப்போதும் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனும், கோபத்தை முழுமையாக அடக்கியவனுமான ஒருவன், உலகம் சார்ந்த பொருட்களில் இன்புற்று வாழ்ந்திருந்தாலும் பாவத்தால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(11) ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட மதில் {அணை} அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்வரை, நீரைப் பெருகச் செய்வதைப் போலவே, இன்ப நுகர் பொருட்களில் பற்றில்லாத மனிதன், சாத்திர வரையறைகளுடன் கூடிய அறமென்ற மதிலை உண்டாக்கிக் கொண்டு ஒருபோதும் தளர்வுறாமல் இருக்கிறான். மறுபுறம், அவனது தகுதிகளும், தவங்களும் அதிகரிக்கின்றன[2].(12)(சூரிய காந்தம் என்றழைக்கப்படும்) தூய ரத்தினமானது தன்னைத் தானே உறிஞ்சி ஈர்த்துக் கொள்வதைப் போலவே, சூரியக் கதிர்களை ஆளும் விதியின் படியே, குவிந்த கவனத்தின் {தியானத்தின்} உதவியுடன் யோகமானது விளைகிறது[3].(13) எள் வித்துகள், (நறுமணமிக்க) மலர்களுடன் மீண்டும் மீண்டும் கலப்பதன் விளைவால் மிகுந்த ஏற்புடைய குணத்தை அடைவதைப் போலவே, சத்வ குணமும் மனிதர்கள் எந்த அளவுக்குத் தூய ஆன்மாக்களைக் கொண்ட பிற மனிதர்களோடு பழகுகிறார்களோ அந்த அளவுக்கு {அவர்களிடம் சத்வ குணம்} உண்டாகிறது.(14) ஒருவன் சொர்க்கவாசத்தை விரும்பும்போது, அவன் தன் மனைவியர், செல்வம், பதவி, வாகனங்கள், பல்வேறு வகை நற்செயல்கள் ஆகியவற்றைக் கைவிடுகிறான். உண்மையில், ஒருவன் அத்தகைய மனநிலையை அடையும்போது, அவனது புத்தியானது, புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(15) (மறுபுறம்) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட புத்தியோடு கூடிய மனிதன், தனக்கான நன்மை எது என்பதைக் காண்பதில் குருடனாகி, தூண்டிலிலுள்ள இறைச்சியைக் கண்ட மீனை (மீனானது அழிவால் இழுத்துச் செல்லப்படுவதைப்) போல உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிடமும் தன் இதயத்தால் இழுத்துச் செல்லப்படுகிறான்.(16)பல்வேறு அங்கங்களாலான உடலைப் போல மரணமடையக்கூடிய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தே நீடித்திருக்கின்றன. அவை ஒரு வாழைத்தண்டைப் போலவே வீரியமற்றவையாக இருக்கின்றன. (தற்சார்புடன் இருக்க விட்டால்) அவை (பலவீனமான பொருட்களாலான) ஒரு படகைப் போல இந்த உலகப் பெருங்கடலில் மூழ்குகின்றன[4].(17) அறமீட்டுவதற்குக் குறிப்பிட்ட நேரம் என்று ஏதும் கிடையாது. மரணம் எந்த மனிதனுக்காகவும் காத்திருக்காது. மனிதன் தொடர்ந்து மரணத்தின் {காலனின்} கோரப்பற்களை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்போது, அனைத்து நேரங்களிலும் அறச்செயல்களைச் செய்வது முறையானதே.(18) கவனத்துடன் இருக்கக்கூடிய ஒரு குருட்டு மனிதனால் தன் சொந்த வீட்டுக்குள் உலவமுடிவதைப் போலவே, யோகத்தில் நிலைத்த மனம் கொண்ட ஞானியானவன், (தான் பின்பற்ற வேண்டிய) பாதையில் செல்வதில் வெற்றியடைகிறான்.(19) பிறப்பின் விளைவால் மரணம் எழுவதாகச் சொல்லப்படுகிறது. பிறவியானது மரணத்தின் ஆளுகைக்கு உள்ளடங்கியதே. விடுதலையின் {முக்தியின்} கடமை நடைமுறைகளை அறியாத ஒருவன், விதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாதவனாகப் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் சக்கரமாகச் சுழல்கிறான்.(20)புத்தியால் பரிந்துரைக்கப்பட்ட பாதையில் நடக்கும் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை ஈட்டுகிறான். விரிவானவை துன்பத்தில் நிறைந்திருக்கின்றன, அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை என்று சொல்லப்படுகிறது. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்ம மகிழ்ச்சியை விளைவிப்பதாகும்[5].(21) தாமரைத்தண்டு தன்னுடன் கூடிய சேற்றை விரைவாக விட்டகல்வதைப் போலவே, ஆன்மாவானது மனத்தை வேகமாகக் கைவிடுகிறது[6].(22) மனமே முதலில் ஆன்மாவை யோகத்தை நோக்கிச் செலுத்துகிறது. பிறகு யோகம் மனத்தினுள் கலக்கிறது. ஆன்மா யோகத்தில் வெற்றியடையும்போது, குணங்களற்ற தன் சுயத்தைப் பார்க்கிறது[7].(23) புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில் ஈடுபட்டு, அத்தகையே ஈடுபாட்டைத் தன்னுடைய பணியெனக் கருதும் ஒருவன், அந்தப் பொருட்களில் அவன் கொண்ட இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால் தன்னுடைய உண்மையான பணியில் இருந்து வீழ்கிறான்.(24) ஒரு ஞானியின் ஆன்மாவானது, அதன் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தில் உயர்ந்த இன்பநிலையை அடையும் அதே வேளையில், ஞானமில்லாத ஒருவன் மிகுந்த ஆழத்தில் மூழ்குகிறான், அல்லது இடைநிலை உயிரினங்களுக்கு மத்தியில் பிறப்பை அடைகிறான்.(25)சுடப்பட்ட மண் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரானது, ஒழுகாமல் குறைவில்லாமல் அங்கேயே எஞ்சியிருப்பதைப் போலவே, கடுந்தவங்களுக்கு உள்ளான ஒருவடைய உடலானது, (பிரம்மலோகத்தில் உள்ள) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் (மறுக்காமல்) அனுபவிக்கிறது.(26) அதே போல உலகம் சார்ந்த பொருட்களை அனுபவிக்கும் மனிதனால் ஒருபோதும் விடுதலை {முக்தியை} அடைய முடியாது. மறுபுறம், (இவ்வுலகில்) அத்தகைய பொருட்களைக் கைவிடும் மனிதன், இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(27) பிறவிக் குருடனான ஒருவன், தன் வழியைக் காண இயலாததைப் போலவே ஒளிபுகாத கூட்டுக்குள் மறைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவுடன் கூடிய ஒரு புலனின்பவாணன், மூடுபனியால் சூழப்பட்டு (தான் அடைய வேண்டிய உண்மைப் பொருளைக்) காணத் தவறுவதே காணப்படுகிறது.(28) வணிகன் கடலோடி தங்கள் மூலதனத்திற்குத் தகுந்த இலாபங்களை ஈட்டுவதைப் போலவே, மனிதர்களின் இந்த உலகில் உள்ள உயிரினங்களும், தங்கள் தங்களுக்குரிய செயல்களின்படியே தங்கள் கதிகளை அடைகின்றன.(29) காற்றை விழுங்கும் பாம்பைப் போலவே, காலனும் முதுமையெனும் வடிவில் பகல்களாலும், இரவுகளாலும் ஆன இந்த உலகில் திரிந்து அனைத்து உயிரினங்களையும் விழுங்குகிறான்.(30)
ஓர் உயிரினம், பிறக்கும்போது, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறது. ஒருவனுடைய முற்பிறவிகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாக அல்லாமல் ஏற்புடைய, அல்லது ஏற்பில்லாத எதையும் ஒருவன் அனுபவிப்பதோ, தாங்கிக் கொள்வதோ இல்லை.(31) கிடந்தாலும், நடந்தாலும், சும்மா அமர்ந்தாலும், தன் தொழில்களில் ஈடுபட்டாலும், ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், (முற்பிறவிகளில் அவன் செய்த) நல்ல மற்றும் தீய செயல்களே அவனை எப்போதும் அணுகுகின்றன.(32) பெருங்கடலின் மறுகரையை அடைந்த ஒருவன், தான் எங்கிருந்து பயணித்து வந்தானோ அதே இடத்திற்குத் திரும்புவதற்குக் கடலைக் கடக்க விரும்புவதில்லை[8].(33) (ஆறு அல்லது தடாகத்தின்) நீரில் மூழ்கிய தன் படகைக் கயிற்றின் உதவியால் எழுப்பும் மீனவனைப் போலவே, மனமும், உடல் உணர்வில் இருந்து விடுதலையடையாமல் உலகப் பெருங்கடலில் மூழ்கிய ஜீவனைத் தியான யோகத்தின் உதவியால் எழுப்புகிறது[9].(34) ஆறுகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடி, அதனுள் கலப்பதைப் போலவே மனமும், யோகத்தில் ஈடுபடும்போது, தொடக்ககாலப் பிரகிருதியுடன் கலக்கிறது[10].(35)பற்றின் சங்கிலிகள் பலவற்றால் கட்டப்பட்ட மனங்களைக் கொண்டவர்களும், அறியாமையில் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், நீரில் மணல் வீடுகளைப் போல அழிவை அடைகின்றனர்[11].(36) தன் உடலை ஒரு வீடாகவும், அதன் (அக மற்றும் புறத்) தூய்மையைப் புனித நீராகவும் கருதுவதும், புத்தியின் பாதையில் நடப்பதுமான உடல் படைத்த ஓர் உயிரினம், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறது.(37) விரிவானவை துன்பத்தை உண்டாக்குகின்றன; அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்மாவுக்கான நன்மையை விளைவிக்கிறது.(38) ஒருவனுடைய தீர்மானத்தால் எழும் அவனது நண்பர்களும், (தன்னல) காரணங்களுக்காகப் பற்றுக் கொள்ளும் அவனது உறவினர்களும், அவனது மனைவியர், மகன்கள் மற்றும் பணியாட்களும் அவனுடைய செல்வத்தை விழுங்க மட்டுமே செய்கின்றனர்.(39) தாயாலோ, தந்தையாலோ ஒருவனுடைய மறுமைக்கான சிறு நன்மையையும் அளிக்க முடியாது. ஒருவனுயை வாழ்வாதாரத்திற்கான உணவைக் கொடைகளே கொண்டிருக்கின்றன. உண்மையில், ஒருவன் தன்னுடைய செயல்களின் கனிகளை அனுபவிக்கவே வேண்டும்.(40) தாய், மகன், தந்தை, சகோதரன், மனைவி, நண்பர்கள் ஆகியோர் தங்கத்தின் அருகிலேயே தங்கக்கோடுகளால் வரையப்பட்டதைப் போன்றவர்களாவர்.(41)முற்பிறவியில் செய்யப்பட்ட நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தும் இழைத்தவனை வந்து சேரும். முற்பிறவியின் செயல்களுக்கான விளைவைத் தற்காலத்தில் அனைவரும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறார்கள் என்பதை அறிந்து ஆன்மாவானது, (இனிமையற்ற கனிகள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் செயல்பட) புத்தியைப் பல்வேறு திசைகளில் தூண்டுகிறது.(42) உரிய துணைகளுடனும், மெய்யுறுதியுடனும் கூடிய முயற்சியைச் சார்ந்து தன் பணிகளில் தன்னை நிறுவிக்கொள்ளும் ஒருவன் தோல்விகளை ஒருபோதும் சந்திப்பதில்லை.(43) ஒளிக்கதிர்கள் ஒருபோதும் சூரியனைக் கைவிடாததைப் போலவே, செழிப்பும் ஐயமில்லா நம்பிக்கையுடன் கூடிய ஒருவனை ஒருபோதும் கைவிடுவதில்லை.(44) களங்களமற்ற ஆன்மாவைக் கொண்ட மனிதனால், நம்பிக்கையுடனும், மெய்யுறுதியுடனும், உரிய வழிமுறைகளின் துணையுடனும், செருக்கில்லாமலும், புத்தியுடனும் செய்யப்படும் செயலானது ஒருபோதும் தொலைந்து போகாது.(45) ஓர் உயிரினம் தாயின் கருவறையில் வசிக்கும் காலத்திலேயே, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அடைகிறது. தடுக்கப்பட முடியாத மரணம் {மிருத்யு}, காலத்தின் {காலனின்} துணையுடன் கொண்டுவரும் உயிருக்கான அழிவானது, அரத்தால் அரியப்படும் மரத்தின் தூசியைச் சிதறடிக்கும் காற்றைப் போல அனைத்து உயிரினங்களையும் தங்கள் கதிக்கு வழிநடத்திச் செல்கிறது.(46) முற்பிறவியில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமே மனிதன் தங்கத்தையும், விலங்குகளையும், மனைவியரையும், பிள்ளைகளையும், கௌரவப் பிறவியையும், மதிப்புமிக்க உடைமைகளையும், தனது மொத்த செழிப்பையும் அடைகிறான்” என்றார் {பராசரர்}”.(47)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, வாய்மைக்கு இணங்க தவசியால் {பராசரரால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், அறவோர்களில் முதன்மையானவனுமான ஜனகன், முனிவர் {பராசரர்} சொன்ன அனைத்தையும் கேட்டு, அதன் மூலம் பேரின்பத்தை அடைந்தான்”.(48)
பராசர கீதை முற்றும்
சாத்யர்களும், அன்னமும்! – சாந்திபர்வம் பகுதி – 300-சாத்யர்களுக்கும், அன்னப்பறவைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கடுமொழியால் ஏற்படும் பாதிப்பு; கடுமொழியைப் பொறுத்துக் கொள்பவன் ஈட்டும் தகுதி ஆகியவற்றைச் சொன்ன அன்னப்பறவை…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, ஞானம் ஆகியவற்றைக் கல்விமான்கள் புகழ்கின்றனர். இவ்வறங்களில் உமது கருத்தென்ன?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் சாத்யர்களுக்கும் ஓர் அன்னப்பறவைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் சொல்லப் போகிறேன்.(2)
ஒரு காலத்தில், பிறப்பற்றவனும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமானவன் (பிரம்மன்) தங்கத்தாலான அன்னப்பறவையின் வடிவை ஏற்று, மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தபோது சாத்யர்களைச் சந்தித்தான்.(3)
சாத்யர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! தலைவா, நாங்கள் சாத்யர்கள் என்றழைக்கப்படும் தேவர்களாவோம். உன்னிடம் கேள்வி கேட்க விரும்புகிறோம். உண்மையில், விடுதலையின் அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} குறித்தே நாங்கள் உன்னிடம் கேட்கப் போகிறோம்.(4) ஓ! பறவையானவனே, உன்னைப் பெரும் கல்விமான் என்றும், சொல்திறமிக்கவன் என்றும், வாக்கில் ஞானம் உள்ளவன் என்றும் கேள்விப்படுகிறோம். ஓ! பறவையானவனே, அனைத்துப் பொருட்களிலும் எது உயர்ந்ததென நீ நினைக்கிறாய்? ஓ! உயர் ஆன்மா கொண்டவனே, எதனில் மனம் இன்பத்தை அடைகிறது? எனவே, ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! இறகு படைத்த படைப்புகளின் தலைவனே, எதைச் செய்தால் ஒருவன் அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபடலாம் என்று நீ கருதும் முதன்மையான செயலை எங்களுக்குப் போதிப்பாயாக” என்று கேட்டார்கள்.(6)
அன்னப்பறவை {பிரம்மன்}, “அமுதம் பருகியவர்களே, தவங்கள், தற்கட்டுப்பாடு, வாய்மை மற்றும் மனத்தை அடக்குதல் ஆகியவற்றைப் பயில வேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதயத்தில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்க்கும் ஒருவன், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.(7) ஒருவன் பிறருடைய முக்கிய அங்கங்களுக்குத் தீங்கேற்படுத்தக்கூடாது. அவன் கொடூரப் பேச்சுகளைப் பேசக் கூடாது. அவன் ஒருபோதும் இழிந்தவர்களிடம் இருந்து சாத்திர போதனைகளைப் பெறக் கூடாது. பிறரைத் துன்பத்தில் பீடிக்கச் செய்யும் வார்த்தைகள், அவர்களை (துன்பத்தில்) எரிப்பதற்கான காரணமாகவும், நரகத்திற்கு வழிவகுக்கும் செயலாகவும் இருப்பதால் அவற்றை ஒருபோதும் பேசக்கூடாது.(8) உதடுகளில் இருந்து வார்த்தைகள் கணைகளாகப் பாய்கின்றன. (யாரை நோக்கி அவை ஏவப்படுகின்றனவோ அந்த) ஒருவன் அவற்றால் பீடிக்கப்பட்டு, உடனே எரிகிறான். அந்தக் கணைகள், இலக்காக்கப்பட்ட மனிதனின் முக்கிய அங்கத்தைத் தவிர வேறு எந்தப் பாகத்தையும் தாக்குவதில்லை. எனவே, கல்விமானான ஒருவன் அவற்றை ஒருபோதும் பிறரின் மீது ஏவக்கூடாது.(9) ஒரு மனிதன் ஒரு ஞானியை சொற்கணைகளால் ஆழமாகத் துளைத்தால், அந்த ஞானியானவன் (கோபவசப்படாமல்) அமைதியைப் பின்பற்ற வேண்டும். கோபப்படத் தூண்டப்பட்டாலும் கோபத்தின் வசப்படாத மனிதன், அவ்வாறு தூண்டுபவனின் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அவனிடம் இருந்து அபகரித்துக் கொள்கிறான்.(10)
எதில் ஈடுபட்டால், அது பிறரைக் குறித்துக் குறை பேச வழிவகுத்து, அவனுக்கு {அவர்களை} எதிரியாக்குமோ, அந்த நெருப்பு போன்ற தன் கோபத்தை, எந்த அற ஆன்மா கொண்ட மனிதன், முழு இன்பத்துடன் கூடியவனாக, வன்மத்தில் இருந்து விடுபட்டவனாக அடக்குவானோ, அவன் பிறரின் தகுதிகளை {அவர்களிடம் இருந்து} எடுத்துக் கொள்கிறான்[1].(11) என்னைப் பொறுத்தவரையில், மற்றொருவர் என்னைக் குறித்துத் தவறாகப் பேசும்போது, ஒருபோதும் நான் அவற்றுக்குப் பதிலளிக்கமாட்டேன். தாக்கப்பட்டால் தாக்குபவனை எப்போதும் நான் மன்னிக்கவே செய்கிறேன். மன்னிக்கும் தன்மை, வாய்மை, கபடமின்மை {மனநேர்மை}, கருணை ஆகியனவே (அறங்கள் அனைத்திலும்) முதன்மையானவை என அறவோர் கருதுகின்றனர்.(12) வாய்மையே வேதங்களின் புதிராகும் {இரகசியமாகும்}. தற்கட்டுப்பாடே வாய்மையின் புதிராகும். விடுதலையே {முக்தியே} தற்கட்டுப்பாட்டின் புதிராகும். சாத்திரங்கள் அனைத்தின் போதனையும் இதுவேயாகும்[2].(13) எந்த மனிதன், கிளர்ந்தெழும் பேச்சுத் தூண்டலையும் {வாக்கின் வேகத்தையும்}, மனத்தில் தோன்றும் கோபத்தூண்டலையும் {கோபத்தின் வேகத்தையும்}, (தகாத பொருள்களில் கொள்ளும்) தாகத் தூண்டலையும், வயிறு மற்றும் இன்ப உறுப்பின் தூண்டல்களையும் {ஆசைகளின் வேகத்தையும்} அடக்குகிறானோ, அவனையே ஒரு பிராமணனாகவும், முனியாகவும் நான் கருதுகிறேன்.(14) எவன் கோப வசப்படாமல் இருக்கிறானோ, அவன் கோபப்படுபவனைவிட மேன்மையானவன். எவன் துறவைப் பயில்கிறானோ, அவன் துறவில்லாதவனை விட மேன்மையானவன், எவன் மனிதத்தன்மைகளைக் கொண்டிருக்கிறானோ, அவன் அவை இல்லாதவனைவிட மேன்மையானவன். எவன் ஞானத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன் அஃது இல்லாதவனைவிட மேன்மையானவன்[3].(15)
கடுஞ்சொற்களால் ஒருவன் தாக்கப்படும்போதும், பதிலுக்கு அவனும் தாக்கக்கூடாது. உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் கோபத்தைத் துறக்கும் ஒருவன், அவ்வாறு தன்னைத் தாக்குபவனை எரித்து, அவனுடைய தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அபகரித்துக் கொள்கிறான்.(16) எவன் கடுமொழியால் தாக்கப்படும்போது, பதிலுக்குக் கடுமொழி பேசவில்லையோ, எவன் புகழப்படும்போது, அந்தப் புகழுரைகளை ஏற்றுப் பேசுவதில்லையோ, எவன் தாக்கப்படும்போதும், பதிலுக்குத் தாக்காமலும், தாக்குபவனுக்குத் தீங்கை விரும்பாமலும் மனோவுறுதியுடன் இருக்கிறானோ, அந்த மனிதன், தேவர்களாலும் விரும்பப்படும் தோழமையையே எப்போதும் அடைகிறான்.(17) அவமதிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுப் பழித்துக் கூறப்படும் ஒருவனால், {இந்தப் பாவங்களைச் செய்த} பாவியானவன், ஓர் அறவோனைப் போலக் கருதப்பட்டு மன்னிக்கப்பட வேண்டும். இவ்வழியில் செயல்படுவதன் மூலம் ஒருவன் வெற்றியை அடைகிறான்.(18) என் நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டாலும், அறவோரிடம் எப்போதும் நான் மதிப்புடன் காத்திருக்கிறேன் {அவர்களுக்குப் பணீவிடை செய்கிறேன்}. எனக்கு எந்தத் தாகமும் {ஆசையும்} இல்லை. என் கோபம் அடக்கப்பட்டிருக்கிறது. பேராசையில் மயங்கி நான் ஒருபோதும் அறத்தின் பாதையில் இருந்து விழ மாட்டேன். செல்வத்திற்காக (செல்வத்திற்கான வேண்டுதல்களுடன்) நான் எவரையும் அணுகுவதில்லை[4].(19) சபிக்கப்பட்டால் பதிலுக்கு நான் சபிப்பதில்லை. தற்கட்டுப்பாடே அழிவின்மையின் {முக்தியின்} வாயில் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரும்புதிரை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மனிதபிறவியை விட மேன்மையான நிலை ஏதும் இல்லை[5].(20)
[4] கும்பகோணம் பதிப்பில், “எனக்கு ஆசையும், கோபமும் மேலோங்குகிறதில்லை. நான் எதையும் அடைய விரும்பித் தர்மத்தை விட்டு விலகுகிறதில்லை. ஒன்றையும் தீய வழியில் அடைகிறதில்லை” என்றிருக்கிறது.
[5] கும்பகோணம் பதிப்பில், “என்னை ஒருவன் சபித்தாலும் நான் திரும்ப அவனைச் சபிக்கிறதில்லை. இவ்வுலகத்தில் அடக்கத்தை மோக்ஷத்திற்கு வாயிலாக நினைக்கிறேன். அப்படிப்பட்ட இந்த அடக்கத்தை ரஹஸ்யமான பிரம்மமாகச் சொல்லுகிறேன். மானிட ஜன்மத்தைக் காட்டிலும் மிகவும் மேலானது ஒன்றுமில்லையன்றோ?” என்றிருக்கிறது.
இருளார்ந்த மேகங்களில் இருந்து {விடுபடும்} சந்திரனைப் போலப் பாவத்தில் இருந்து விடுபடும் ஞானியானவன், பிரகாசத்துடன் ஒளிர்ந்து, தன் காலத்திற்காகப் பொறுமையுடன் காத்திருப்பதன் மூலம் வெற்றியை அடைகிறான்.(21) எவன் அண்டத்தைத் தாங்கும் முதன்மையான தூணாவதன் மூலம் அனைவருடைய துதியின் பொருளாகிறானோ {புகழப்படுகிறானோ}, எவனிடம் அனைவராலும் ஏற்புடைய வார்த்தைகள் மட்டுமே பேசப்படுகிறதோ, அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதன் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(22) தூற்றுபவர்கள் {அவதூறு பேசுபவர்கள்}, ஒரு மனிதனின் தகுதியின்மைகளைக் குறித்துப் பேசத் தயாராக இருப்பதைப் போல அவனுடைய தகுதிகளைப் பேச ஒருபோதும் முன்வருவதில்லை.(23) எந்த மனிதன், தன் பேச்சையும், மனத்தையும் முறையாகக் கட்டுப்படுத்தி, பரமனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவனே வேதங்கள், தவங்கள் மற்றும் துறவின் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(24) ஞானியானவன், (பதிலுக்கு) இகழ்வதன் மூலமும், அவமதிப்பதன் மூலமும் தகுதியற்றவர்களை {புண்ணியமற்றவர்களை} ஒருபோதும் தூற்றக்கூடாது. அவன் {பிறரால் மிகைப்படப் புகழப்பட்டுப் பதிலுக்கு) பிறரை மிகைப்படப் புகழக்கூடாது. {மிகைப்படப் புகழ்வதன் மூலம்} தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது.(25)
ஞானம் கொண்டவனும், கல்விமானுமான ஒரு மனிதன் அவதூறுகளை அமுதமாகக் கருதுகிறான். தூற்றப்பட்டாலும் அவன் கவலையில்லாமல் உறங்குகிறான். மறுபுறம், தூற்றியவனோ அழிவை அடைகிறான்.(26) கோபத்துடன் ஒருவன் செய்யும் வேள்விகள், கோபத்துடன் ஒருவன் தரும் கொடைகள், கோபத்துடன் ஒருவன் செய்யும் தவங்கள், கோபத்துடன் ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகள் ஆகியவற்றின் தகுதிகளை {புண்ணியங்களை} யமன் அபகரித்துக் கொள்கிறான். கோபமடையும் மனிதனின் உழைப்பனைத்தும் முற்றிலும் கனியற்றவையாகின்றன.(27) தேவர்களில் முதன்மையானவர்களே, இன்ப உறுப்பு, வயிறு, கரங்கள் இரண்டு, வாக்கு ஆகிய நான்கு வாயில்களையும் நன்கு கட்டுப்படுத்தும் மனிதனே அறமறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(28) வாய்மை, தற்கட்டுப்பாடு, கபடமின்மை, கருணை, பொறுமை, துறவு ஆகியவற்றை எப்போதும் பயிலும் மனிதன் வேத கல்வியில் அர்ப்பணிப்புமிக்கவனாகி, பிறரின் உடைமைகளில் பேராசை கொள்ளாமல், ஒரே நோக்கத்துடன் நன்மையானதைத் தேடி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(29) தாயின் மடியில் உள்ள நான்கு காம்புகளை உறிஞ்சிக் குடிக்கும் கன்றைப் போலவே ஒருவன் இந்த அறப்பயிற்சிகள் அனைத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். வாய்மையை விடப் புனிதமான வேறு எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.(30)
மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில் திரிந்த பிறகு, பெருங்கடலைக் கடக்கும் தோணி மட்டுமே ஒரே வழிமுறையாக இருப்பதைப் போல, சொர்க்கத்தை அடைய வாய்மை மட்டுமே ஒரே வழி என்று நான் அறிவிக்கிறேன்.(31) ஒரு மனிதன் எவருடன் வசிக்கிறானோ அவரைப் போலவே, எவரை மதிக்கிறானோ அவரைப் போலவே, எவ்வாறு ஆக வேண்டும் என்று விரும்புகிறானோ அவ்வாறே ஆகிறான்.(32) ஒரு மனிதன் எந்த நல்லோனிடமோ அல்லோனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, தவத்தகுதியைக் கொண்ட எந்தத் தவசியிடமோ, கள்வனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, அந்த மனிதனின் பாதையிலேயே நடக்கும் அவன், மூழ்கிய சாயத்தின் வண்ணத்தை ஏற்கும் துணியைப் போல அவனது {அந்த மனிதனின்} வண்ணத்தை {குணத்தைப்} பற்றிக் கொள்கிறான்.(33) ஞானமும், நல்லியல்பும் கொண்டோரிடம் தேவர்கள் எப்போதும் உரையாடுகிறார்கள். எனவே, அவர்கள் மனிதர்கள் கொள்ளும் இன்பங்களைக் காண ஒருபோதும் விரும்புவதில்லை. (மனிதர்கள் பேணி வளர்க்கும்) இன்ப நுகர் பொருட்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வுகளையும், {ஒன்றுக்கொன்று} சில பகைமைகளையும் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்த மனிதன், சந்திரனையும் காற்றையும் விட மேன்மையானவனாக ஆகிறான்[6].(34) ஒருவனுடைய இதயத்தில் குடியிருக்கும் புருஷன் {ஆத்மா} களங்கமடையாமல், அறப்பாதையில் நடக்கும்போது, தேவர்கள் அவனிடம் மகிழ்ச்சியடைகிறார்கள்.(35)இன்பப் புலன் {பிறப்புறுப்பு} மற்றும் வயிறு ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், களவுக்கு அடிமையாக இருப்பவர்கள், எப்போதும் கடுமொழியில் பேசுபவர்கள் ஆகியோர் உரிய சடங்குகளுடன் தங்கள் குற்றங்களான பாவக்கழிவுகளைச் செய்து கொண்டாலும், தேவர்கள் அவர்களைத் தொலைவிலேயே கைவிடுகிறார்கள்.(36) இழிந்த ஆன்மா கொண்டவன், உணவில் கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவன், பாவச் செயல்களைச் செய்பவன் ஆகியோரிடம் தேவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்வதில்லை. மறுபுறம் அத்தேவர்கள், வாய்மை நோன்பைப் பயில்பவர்கள், நன்றிமறக்காதவர்கள், அறப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொள்கிறார்கள்.(37) பேச்சை விட அமைதியே சிறந்தது. அமைதியைவிட வாய்மை பேசுவது சிறந்தது. மேலும் சொல்வதாக இருந்தால், வாய்மை பேசுவதை விட அறத்தொடர்புடன் வாய்மை பேசுவது மிகச் சிறந்தது. வாய்மையும் அறமும் கொண்டிருந்தாலும் ஏற்புடையதைப் பேசுவது, அறத்தொடர்புடைய உண்மை பேச்சைவிடச் சிறந்ததாகும்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(38)
சாத்யர்கள், “இவ்வுலகம் எதனால் மறைக்கப்பட்டிருக்கிறது? எக்காரணத்தால் ஒருவன் ஒளிரத் தவறுகிறான்? எக்காரணத்தால் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகின்றனர்? எக்காரணத்தால் மக்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்?” என்று கேட்டனர்.(39)
அன்னப்பறவை {பிரம்மன்}, “உலகமானது அறியாமை (எனும் இருளால்) மறைக்கப்பட்டிருக்கிறது. வன்மத்தின் விளைவால் மனிதர்கள் ஒளிரத் தவறுகின்றனர் {புகழடையத் தவறுகின்றனர்}. பேராசையால் தூண்டப்படும் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகிறார்கள். பற்றின் விளைவால் மனிதர்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(40)
சாத்யர்கள், “பிராமணர்களில் எவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்? பலருக்கு மத்தியில் வசித்தாலும் அவர்களில் அமைதியின் நோன்பை எவனால் மட்டுமே நோற்க முடியும்? அவர்களுக்கு மத்தியில் பலவீனனாக இருந்தாலும் எவன் மட்டுமே பலவானாகக் கருதப்படுகிறான்? அவர்களுக்கு மத்தியில் எவன் மட்டுமே சச்சரவில் ஈடுபடுவதில்லை?” என்று கேட்டனர்.(41)
அன்னப்பறவை, “பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே, பலருக்கு மத்தியில் வசித்தாலும் அமைதியின் நோன்பை நோற்பதில் வெல்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே பலவீனனாக இருந்தாலும், பலவானாகக் கருதப்படுகிறான். அவர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே சச்சரவுகளைத் தவிர்ப்பதில் வெல்கிறான்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}[7].(42)சாத்யர்கள், “பிராமணர்களின் தெய்வீகத்தன்மை எதிலிருக்கிறது? எதில் அவர்களது தூய்மை இருக்கிறது? எதில் அவர்களது தூய்மையின்மை இருக்கிறது? எதில் அவர்களின் மனிதத்தன்மை இருக்கிறது?” என்று கேட்டனர்.(43)
அன்னப்பறவை, “வேத கல்வியிலேயே பிராமணர்களின் தெய்வீகத்தன்மை இருக்கிறது. அவர்களது நோன்புகளில் அவர்களின் தூய்மை இருக்கிறது. அவதூற்றில் {பரநிந்தனையில்} அவர்களது தூய்மையின்மை இருக்கிறது. மரணத்தில் அவர்களது மனிதத்தன்மை இருக்கிறது” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}”[7].(44)
பீஷ்மர் தொடர்ந்தார், “சாத்யர்கள் (மற்றும் அன்னப்பறவைக்கு) இடையில் நடைபெற்ற சிறந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உடலே (பருவுடன் மற்றும் நுண்ணுடல் ஆகிய இரண்டும்) செயல்கள் மற்றும் இருப்பு, அல்லது ஜீவன் ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது என்பது உண்மை”.(45)
யோக பலம்! – சாந்திபர்வம் பகுதி – 301-யோகத்திற்கும், சாங்கியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு; யோக முறை; யோகிக்கான உணவுமுறை; யோகிகளின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, சாங்கிய மற்றும் யோக அமைப்புகளின் தத்துவங்களுக்கிடையில் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவரே, நீர் அனைத்தையும் அறிதிருக்கிறீர்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாங்கியத்தைப் பின்பற்றுபவர்கள் சாங்கிய அமைப்பைப் புகழ்கின்றனர், யோகிகளாக இருக்கும் மறுபிறப்பாளர்கள் யோக அமைப்பைப் புகழ்கிறார்கள். தங்கள் தங்களுக்குரிய அமைப்புகளின் மேன்மையை நிறுவுவதற்காக ஒவ்வொருவரும் தன்னுடைய அமைப்பே சிறந்ததென்று சொல்கிறார்கள்.(2) ஓ! எதிரிகளை நொறுக்குபவனே, யோகத்தில் அர்ப்பணிப்புடைய ஞானிகள், கடவுளின் இருப்பை நம்பாதவர்களால் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது என்று காட்டுவதற்காக முறையான, மிக நல்ல காரணங்களைச் சொல்கிறார்கள்.(3) மேலும் சாங்கியக் கோட்பாடுகளை நம்பும் மறுபிறப்பாளர்கள், ஒருவன் அனைத்தின் முடிவுகளின் உண்மையான ஞானத்தை அடைவதன் மூலம், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு,(4) இந்த உடலைவிட்டுச் சென்ற பிறகு, அவன் விடுதலையடைய வேண்டுமேயன்றி வேறில்லை என்று காட்டுவதற்காக நல்ல காரணங்களை முன்வைக்கிறார்கள். பெரும் ஞானம் கொண்ட மனிதர்கள் விடுதலைக்கான {முக்திக்கான} சாங்கிய தத்துவத்தை இவ்வாறே விளக்கியிருக்கிறார்கள்.(5)
இரு தரப்பிலும் காரணங்கள் இவ்வாறு சமமாக இருக்கும்போது, ஒரு தரப்பில் இருப்பவன் மாற்றுத் தரப்பை தனதாக ஏற்றுக் கொள்ளத் துணிந்தால் அவனை {அத்தரப்பு} ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில், அத்தரப்பில் சொல்லப்படும் வார்த்தைகள் நன்மையானவை என்று கருதப்பட வேண்டும். இருதரப்பிலும் நல்ல மனிதர்கள் காணப்படுகிறார்கள். உன்னைப் போன்றவர்கள் இவற்றில் எக்கருத்தையும் பின்பற்றலாம்.(6) யோகத்தின் சாட்சிகள், நேரடியாகப் புலன்களின் உற்றறியும் திறனால் சொல்லப்படுகின்றன; சாங்கியத்தினுடையவை சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, இந்த இரு தத்துவ அமைப்புகளும் என்னால் அங்கீகரிக்கப்படுகின்றன.(7) ஓ! மன்னா, இந்த அறிவியல் அமைப்புகள் இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு, மேலும் நல்லோர் மற்றும் ஞானிகளின் உடன்பாடும் உண்டு. ஓ! மன்னா, விதிகப்பட்ட அறிவுரைகளின்படி பயிலப்பட்டால் இவை இரண்டும் ஒரு மனிதனை உயர்ந்த கதி அடைய வைக்கின்றன.(8) ஓ! பாவமற்றவனே, இவ்வமைப்புகள் இரண்டிலும் தூய்மையும், அனைத்து உயிரினங்களிடம் கொள்ளும் கருணையும் சமமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் நோற்க வேண்டிய நோன்புகளும் இவ்விரண்டிலும் சமமாக விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பாதைகளைச் சுட்டிக்காட்டும் சாத்திரங்கள் மட்டுமே வேறுபடுகின்றன” என்றார் {பீஷ்மர்}.(9)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இரண்டு அமைப்புகளிலும் பரிந்துரைக்கப்படும் நோன்புகள், தூய்மை, கருணை மற்றும் கனிகள் ஆகியன ஒன்றேயெனில், அவற்றின் சாத்திரங்கள் (அவை பரிந்துரைக்கும் பாதைகளைப் பொறுத்தவரையில்) என்ன காரணத்தால் ஒன்றாக இல்லை?” என்று கேட்டான்.(10)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “யோகத்தின் துணை மூலம், பற்று {ராகம்}, கவனமின்மை {மோகம்}, பாசம் {ஸ்நேகம்}, காமம், கோபம் {க்ரோதம்} ஆகிய ஐந்து களங்கங்களை {தோஷங்களைக்} கைவிடுவதால் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(11) பெரிய மீன்கள், வலையை அறுத்துக் கொண்டு, (இன்பத்தில் உலாவ) தங்கள் சொந்த பூதத்திற்குள் {நீருக்குள்} செல்வதைப் போலவே யோகிகளும் (காமம், கோபம் முதலியவற்றை அறுத்துக் கொண்டு) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்து, விடுதலையெனும் {முக்தியெனும்} பேரின்பத்தை அடைகிறார்கள்.(12) வலிமைமிக்க விலங்குகள், தங்களைப் பிடிக்க வேடர்களால் விரிக்கப்படும் வலைகளை அறுத்துக் கொண்டு, விடுதலையெனும் இன்பநிலைக்குள் தப்பிச் செல்வதைப் போலவே, யோகிகளும் கட்டுகள் {பந்தங்கள்} அனைத்திலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கு வழிவகுக்கும் பாவமற்ற பாதையை அடைகிறார்கள்.(13) ஓ! மன்னா, உண்மையில் பேராசையில் பிறக்கும் கட்டுகளை அறுப்பவர்களும், பலத்துடன் கூடியவர்களுமான யோகிகள், விடுதலைக்கான {முக்திக்கான} பாவமற்ற மங்கலமான, உயர்ந்த பாதையை அடைகிறார்கள்.(14) ஓ! ஏகாதிபதி, வலைகளில் அகப்படும் பலவீனமான விலங்குகள் நிச்சயம் அழிவடையும். யோக பலமற்ற மனிதர்களின் வழக்கும் அவ்வாறே ஆகிறது.(15)
ஓ! குந்தியின் மகனே, ஓ! ஏகாதிபதி, வலையில் விழுந்து அதனில் சிக்கிக் கொள்ளும் பலவீனமான மீன்களைப் போலவே, யோக பலமற்றவர்கள் (உலகக் கட்டுகளின் மத்தியில்) அழிவை அடைகிறார்கள்.(16) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, வேடர்கள் விரிக்கும் நுட்பமான வலைகளில் பறவைகள் சிக்கும்போது, (பலவீனமாக இருந்தால்) அழிவைச் சந்தித்து, பலத்துடனிருந்தால் தப்பிச் செல்வதைப் போலவே,(17) யோகிகளுக்கும் நேர்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, செயல்பாட்டு பந்தங்களால் கட்டப்பட்ட பலவீனமானவர்கள் அழிவை அடைகிறார்கள், அதே வேளையில் பலமுடையவர்க்ள அவற்றை உடைக்கின்றனர்.(18) ஓ! மன்னா, வலுவில்லாத சிறு நெருப்பானது, தன் மீது பெரும் மரங்கள் போடப்பட்டால் அணைந்து போகிறது. ஓ! மன்னா, அதே போலவே பலமில்லாத யோகியானவன் (உலகத்துடனும், அதன் பற்றுகளிலும் தொடர்பு கொள்ளும்போது) அழிவை அடைகிறான்.(19) எனினும், ஓ! ஏகாதிபதி, அதே நெருப்பு வலுவடையும்போது (அணையாமல்) காற்றின் உதவியோடு மொத்த பூமியையும் எரிக்கக்கூடும்.(20) அதே போலவே, பலத்தில் வளர்ந்து, சக்தியுடன் எரிந்து வலிமையுடன் இருக்கும் யோகியானவன், அண்ட அழிவில் எழும் சூரியனைப் போல மொத்த அண்டத்தையே எரிக்கவல்லவனாகிறான்.(21)
ஓ! மன்னா, ஒரு பலவீனமான மனிதன் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போலவே, ஒரு பலவீனமான யோகி ஆதரவற்ற நிலையில் புலன்நுகர்பொருட்களால் அடித்துச் செல்லப்படுகிறான்.(22) ஒரு யானை பலமிக்கப் பெரிய ஓடையையும் தாக்குப்பிடிக்கிறது. அதே போலவே, யோகபலமடைந்த ஒரு யோகியும் புலன் நுகர் பொருட்கள் அனைத்தையும் தாக்குப்பிடிக்கிறான்.(23) அனைத்துப் பொருட்களின் சார்பற்றவர்களும், யோக பலமும், தலைமைப்பண்பும் கொண்டவர்களான யோகிகளானவர்கள், படைப்பின் தலைவர்கள், முனிவர்கள், தேவர்கள், அண்டத்தின் பெரும்பூதங்கள் ஆகியவற்றுக்குள் (ஆகியவர்களின் / ஆகியவற்றின் இதயங்களுக்குள்) நுழைகின்றனர்.(24) ஓ! மன்னா, யமனாலோ, அந்தகனாலோ, பயங்கர ஆற்றலைக் கொண்ட மிருத்யுவாலோ அளவில்லா சக்தி கொண்ட ஒரு யோகியைக் கோபத்தில் முறியடிக்க முடியாது.(25)
யோகபலமடையும் யோகியால், ஆயிரக்கணக்கான உடல்களை உண்டாக்கி, அவற்றுடன் பூமியில் உலவ முடியும்.(26) அவர்களில் சிலர் புலன் நுகர் பொருட்களை அனுபவித்துப் பிறகு மீண்டும் கடும் தவப்பயிற்சிகளில் தங்கள் நிறுவிக் கொண்டு (கதிர்களை விலக்கிக் கொள்ளும்) சூரியனைப் போல அத்தகைய தவங்களில் இருந்து மீண்டும் விலகுகிறார்கள்.(27) பலம் கொண்டவனும், கட்டுகளால் கட்டப்பட முடியாதவனுமான யோகி, விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்கிறான்.(28) ஓ! ஏகாதிபதி, யோக சக்திகள் குறித்து நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். யோகத்தின் நுட்பமான சக்திகளையும், அவற்றின் குறியீடுகளையும் நான் மீண்டும் சொல்கிறேன்.(29) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாரணை மற்றும் {யோகத்தால் ஏற்படும்} ஆத்மாவின் சமாதி நிலை ஆகியவற்றின் நுட்பமான குறியீடுகளைக் கேட்பாயாக[1].(30)விழிப்புடன், கவனத்துடனும் கூடிய ஒரு வில்லாளி தன் இலக்கை அடிப்பதில் வெல்வதைப் போலவே, ஆன்மாவில் ஈர்க்கப்பட்ட யோகியும் விடுதலை அடைகிறான் என்பதில் ஐயமில்லை.(31) (தலையில் வைக்கப்பட்ட) நீர் நிறைந்த பாத்திரத்தில் மனத்தை நிலைக்கச் செய்து படிகளில் விழிப்புடன் நடக்கும் ஒரு மனிதனைப் போலவே,(32) தன் ஆன்மாவில் நிலைத்து ஈர்க்கப்பட்ட யோகியும், அஃதை {ஆன்மாவைத்} தூய்மைப்படுத்தி, சூரியனைப் போலப் பிரகாசிக்கச் செய்கிறான்.(33) ஓ குந்தியின் மகனே, கடலின் பரப்பில் தூக்கிவீசப்படும் படகானது விழிப்புடன் கூடிய படகோட்டியால் மறுகரைக்கு விரைவாக எடுத்துச் செல்லப்படுவதைப் போலவே,(34) ஓ! ஏகாதிபதி, ஞானம் கொண்ட மனிதனும், தன் ஆன்மாவை சமாதியில் நிலைக்கச் செய்து, தன் உடலைக் கைவிட்ட பிறகு அடைதற்கரிய விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(35)
ஓ! மன்னா, விழிப்புடன் கூடிய தேரோட்டியானவன், (தேரில்) நல்ல குதிரைகளைப் பூட்டி, தேர்வீரன் விரும்பும் இடத்திற்கு அவனை இட்டுச் செல்வதைப் போலே,(36) ஓ! ஏகாதிபதி, தாரணையில் விழிப்புடன் இருக்கும் யோகியும், வில்லில் இருந்து ஏவப்பட்டு, இலக்காக வைக்கப்பட்ட இடத்தை அடையும் ஒரு கணையைப் போல உயர்ந்த இடத்தை (விடுதலையை {முக்தியை}) விரைவில் அடைகிறான்.(37) ஆன்மாவில் தன்னைச் செலுத்தி அங்கேயே அசையாமல் இருக்கும் யோகி, தன் பாவங்களை அழித்து, அறவோரால் அடையப்படும் அழிவற்ற இடத்தை அடைகிறான்.(38) ஓ! மன்னா, உயர்ந்த நோன்புகளை {மஹாவிரதத்தை} விழிப்புடன் நோற்கும் யோகியானவன், தன் ஜீவாத்மாவை நாபி {தொப்புள்}, மிடறு {தொண்டை}, தலை, இதயம், மார்பு, விலாப்புறங்கள், கண், காது, மூக்கு ஆகியவற்றில் இருக்கும் நுண் ஆத்மாவில் முறையாகக் கலந்து, மலையளவுக்கு இருக்கும் தன் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்கள் {புண்ணியப் பாவங்கள்} அனைத்தையும் எரித்து, சிறந்த யோகத்தைப் பயின்று விடுதலையை {முக்தியை} அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}, (39-41)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதரே, எந்த வகை உணவுகள் உண்டு, எந்தப் பொருட்களை வென்றால் ஒரு யோகியால் யோகபலத்தை அடைய முடியும் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(42)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, பிண்ணாக்கையும், நொய் அரிசியையும் உண்டு, எண்ணெயையும் {தைலங்களையும்}, வெண்ணையையும் தவிர்க்கும் யோகியானவன், யோக பலத்தை அடைவான்.(43) நீருடன் கலக்காத வாற்கோதுமை மாவை {யவபிஷ்டத்தை} நெடுங்காலம் உண்பதன் மூலமும், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே எனத் தன் உணவைச் சுருக்கிக் கொள்வதன் மூலமும், தூய ஆன்மா கொண்ட யோகியானவன் யோக பலத்தை அடைகிறான்.(44) முதலில் நாளின் ஒரே ஒரு வேளையும், பிறகு ஒரு பிறைநாளுக்கு {ஒரு பக்ஷகாலத்திற்கு} ஒரு முறையும், பிறகு மூன்று மாதங்களில் ஒரு முறையும், பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறையும் பாலுடன் கலந்த நீரை மட்டுமே பருகும் யோகியானவன் யோக பலத்தை அடைகிறான்.(45) ஓ! மன்னா, இறைச்சியை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் தூயஆன்மா கொண்ட யோகியானவன் பலத்தை அடைகிறான்.(46) காமம், கோபம், வெப்பம், குளிர், மழை, அச்சம், துயரம், மூச்சு, மனிதர்களுக்கு ஏற்புடைய அனைத்து ஒலிகள், புலன்நுகர் பொருட்கள்,(47) ஓ! மன்னா, வெல்வதற்கு அரிதானதும், கலவி இன்பத்தைத் தவிர்ப்பதால் பிறப்பதுமான மனஉலைவு, பயங்கரத் தாகம், தீண்டலாலும், உறக்கத்தாலும் கிட்டும் இன்பங்கள், கிட்டத்தட்ட வெல்லப்பட முடியாத காலதாமதம் ஆகியவற்றில் இருந்து, ஓ! மன்னர்களில் சிறந்தவனே,(48) பற்றில்லாதவர்களும், பெரும் ஞானம் கொண்டவர்களுமான யோகிகள், நுட்பமான ஆன்மாவைத் தங்கள் புத்திகளின் துணையாலும், கல்வி மற்றும் தியானம் எனும் செல்வங்களின் துணையாலும் விலகியிருக்கச் செய்கிறார்கள்.(49)
கல்விமான்களான பிராமணர்களின் இந்த உயர்ந்த (யோக) பாதையானது நடப்பதற்கு மிகக் கடினமானதாகும். எவராலும் இந்தப் பாதையில் எளிதாக நடக்க முடியாது.(50) இப்பாதையானது, எண்ணற்ற பாம்புகளும், தவழும் மண்புழுக்களும் நிறைந்ததும், எங்கும் (மறைவான) குழிகளைக் கொண்டதும், ஒருவனுடைய தாகத்தைத் தணிக்கும் நீரில்லாததும், முட்கள் நிறைந்ததும், அதனால் நடக்க முடியாத வகையில் இருக்கும் ஒரு பயங்கரக் காட்டைப் போன்றதாகும்.(51) உண்மையில் இந்த யோகப் பாதையானது, உணவுகள் கிடைக்காததும், காட்டுத்தீயில் எரிக்கப்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு பாலைவனத்தின் ஊடாகச் செல்வதும், கள்வர்க்கூட்டங்களால் மொய்க்கப்பட்டுப் பாதுகாப்பற்றதாக இருப்பதுமான ஒரு சாலையைப் போன்றதாகும். (இலக்கை அடைவதற்காக) வெகு சில இளைஞர்களால் மட்டுமே இதைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முடியும்.(52) இந்த இயல்பைக் கொண்ட பாதையைப் போலவே, சில பிராமணர்களால் {மட்டுமே} எளிதாகவும், சுகமாகவும் யோகபாதையில் நடந்து செல்ல முடியும். இப்பாதையை அடைந்து, நடப்பதை நிறுத்தும் (சற்று முன்னேறியதும் புறமுதுகிடும்) மனிதன், பல களங்கங்களைக் கொண்ட குற்றவாளியாகக் கருதப்படுகிறான்.(53) ஓ! பூமியின் தலைவா, தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால், கத்தியைப் போன்ற கூர்முனை கொண்ட தியான யோகத்தில் எளிதாக நிற்க முடியும். எனினும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டாரால் அவ்வாறு நிற்க முடியாது.(54) தியானயோகம் கலையும்போது, அல்லது அதற்குத் தடையேற்படும்போது, பயணிகளை மறுகரைக்குக் கொண்டு செல்ல இயலாத தலைவனில்லாத தோணியைப் போல, அஃது அந்த யோகியை மங்கலமான கதிக்கு வழிநடத்துவதில்லை.(55)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, உரிய சடங்குகளுடன் தியான யோகத்தைப் பயிலும் மனிதன், பிறப்பு மற்றும் இறப்பு, மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கைவிடுவதில் வெல்கிறான்.(56) நான் சொல்லும் இவை அனைத்தும் யோகம் குறித்த பல்வேறு சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. யோகத்தின் உயர்ந்த கனிகள் மறுபிறப்பாள வகையினரிடம் காணப்படுகின்றன.(57) அந்த உயர்ந்த கனியானது பிரம்மத்தைப் போன்றதாகும். மகிமை கொண்ட உயர் ஆன்ம யோகியால், தேவர்கள் அனைவரின் தலைவனான பிரம்மன், வரமளிக்கும் விஷ்ணு, பவன், தர்மன், ஆறுமுகம் கொண்ட கார்த்திகேயன், பிரம்மனின் (மானஸ) மகன்கள், அதிகத் துன்பத்தை உண்டாக்கும் இருள் குணம் {தமோ குணம்}, ஆசை குணம் {ரஜஸ் குணம்}, தூய்மையான சத்வ குணம், உயர்ந்ததான பிரகிருதி, வருணனைக் கணவனாகக் கொண்ட சித்தி தேவி, அனைத்து வகைச் சக்திகள், அனைத்தையும் தாங்கும் பொறுமை, சுற்றிலும் மின்னும் நட்சத்திரங்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் பிரகாசமான தலைவன் {சந்திரன்}, விஸ்வர்கள், (பெரும்) பாம்புகள், பித்ருக்கள், மலைகள், குன்றுகள், பயங்கரமான பெரிய கடல்கள், ஆறுகள், மழை நிறைந்த மேகங்கள், பாம்புகள், மரங்கள், யக்ஷர்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகள், கந்தர்வர்கள், ஆடவர்கள், பெண்கள் ஆகியோருக்குள் தன் விருப்பப்படியே நுழையவும் வெளியேறவும் முடியும்.(58-61) ஓ மன்னா, வலிமையான சக்தி கொண்ட பரம்பொருளுடன் தொடர்புடைய இந்த உரையாடல் மங்கலமானதாகக் கருதப்பட வேண்டும். யோகியானவன், நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கிறான். (பரமனில் ஆழ்ந்த தியானத்தின் மூலம்) அனைத்துப் பொருட்களையும் கடந்து நிற்கும் உயர் ஆன்ம யோகியால் அனைத்துப் பொருட்களையும் படைக்கவும் முடியும்” என்றார் {பீஷ்மர்}.(62)
சாந்தி பர்வம் – பாகம் 2 முற்றிற்று
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply