ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ ஸ்வர்க்காரோஹணிக  உப பர்வம்–

உத்தராயணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 167-உத்தராயணம் வந்ததும் பீஷ்மரிடம் சென்ற யுதிஷ்டிரன்; பீஷ்மர் இவ்வுலகை விட்டுச் சென்று வசுக்களை அடைய அனுமதித்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தன் குடிமக்களையும், தன் மாகாணத்தில் வசிப்போரையும் முறையாகக் கௌரவித்து, அவர்களுக்குரிய இல்லங்களுக்கு அனுப்பி வைத்தான்.(1) பிறகு, போரில் தங்கள் வீரக் கணவர்களையும், மகன்களையும் இழந்த பெண்களுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்து அவர்களுக்கு ஆறுதலளித்தான்.(2) பெரும் ஞானியான யுதிஷ்டிரன், தன் நாட்டை மீட்டு, அரியணையில் முறையாகத் தன்னை நிறுவிக் கொண்டான். பிறகு அந்த மனிதர்களில் முதன்மையானவன், நல்விருப்பத்தின் படியான பல்வேறு செயல்களைச் செய்வதாகத் தன் குடிமக்கள் அனைவருக்கும் உறுதியளித்தான்.(3) அப்போது அறவோரில் முதன்மையான அவன், பிராமணர்கள், படை அதிகாரிகளில் முதன்மையானோர், முன்னணி குடிமக்கள் ஆகியோரின் பெருவாரியான ஆசிகளை ஈட்டுவதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(4)அருள் நிறைந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} ஐம்பது இரவுகளைக் கழித்த பிறகு, தன் பாட்டன் {பீஷ்மர்} இவ்வுலகில் இருந்து செல்வதற்கான காலமெனக் குறிப்பிட்ட நேரத்தை நினைவுகூர்ந்தான்.(5) சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதை நிறுத்தி, வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதைக் கண்ட அவன், பெரும் எண்ணிக்கையிலான புரோகிதர்களின் துணையுடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றான்.(6) குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரின் உடலுக்கு எரியூட்ட தன்னுடன் பெரும் அளவிலான தெளிந்த நெய், மலர் மாலைகள், நறுமணப் பொருட்கள், பட்டுத் துணிகள், சிறந்த சந்தனம், கறுப்பும், வெளுப்புமான அகிற்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். விலைமதிப்புமிக்கப் பல்வேறு வகை மாலைகளும், ரத்தினங்களும் அந்தச் சேகரிப்பில் இருந்தன.(7,8)திருதராஷ்டிரன், நற்பண்புகளுக்காகக் கொண்டாடப்படும் ராணி காந்தாரி, தன் தாயான குந்தி, தன் தம்பிகள் அனைவரையும் முன்னணியில் நிறுத்திய பெரும் நுண்ணறிவுமிக்க யுதிஷ்டிரன்,(9) கிருஷ்ணன் மற்றும் பெரும் ஞானியான விதுரன் ஆகியோர் துணையுடனும், யுயுத்சு மற்றும் யுயுதானனுடனும்,(10) வேறு உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடனும் கூடிய ஒரு பெரிய வரிசையில், வந்திகளும், பாணர்களும் தன்னைத் துதிக்கப் பின் சென்றான். பீஷ்மரின் வேள்வி நெருப்புகளும் ஊர்வலத்தில் சுமந்து செல்லப்பட்டன.(11) இவ்வாறான துணையுடன் மன்னன் தன் நகரத்தில் இருந்து தேவர்களின் இரண்டாவது தலைவனைப் போலப் புறப்பட்டுச் சென்றான். விரைவில் அவன் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} தமது கணைப்படுக்கையில் கிடந்த இடத்தை அடைந்தான்.(12)

பெரும் நுண்ணறிவுமிக்கவரும், பராசரரின் மகனுமான வியாசர், நாரதர், தேவலர், அசிதர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து திரண்டவர்களும், கொல்லப்படாமல் எஞ்சியவர்களுமான மன்னர்கள் ஆகியோர் தம் பாட்டனுக்கு மதிப்புடன் பணிவிடை செய்து கொண்டிருப்பதை அவன் கண்டான். உண்மையில் அந்த மன்னன், பாதுகாக்கும் கடமையில் நியமிக்கப்பட்ட போர்வீரர்களால் அனைத்துப் புறங்களிலும் நன்கு பாதுகாக்கப்பட்ட வீரர்களின் படுக்கையில் கிடக்கும் தன் உயர் ஆன்ம பாட்டனைக் கண்டான். தன் தேரில் இருந்து இறங்கிய மன்னன் யுதிஷ்டிரன், பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவரான தன் பாட்டனைத் தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து வணங்கினான். தீவில் பிறந்தவரான வியாசரைத் தலைமையாகக் கொண்ட முனிவர்களையும் அவர்கள் வணங்கினார்கள். தாங்களும் அவர்களால் பதிலுக்கு வணங்கப்பட்டனர்.(13-16) மங்கா புகழ் கொண்டவனான யுதிஷ்டிரன், பெரும் பாட்டன் பிரம்மனுக்கே ஒப்பானவர்களான தன் புரோகிதர்கள் துணையுடனும், தன் தம்பிகளுடனும் சேர்ந்து, இந்த மதிப்புமிக்க முனிவர்கள் சூழ கணைப்படுக்கையில் பீஷ்மர் கிடக்கும் இடத்திற்குச் சென்றான்.(17)

அப்போது தன் தம்பிகளுக்குத் தலைமையில் நின்றிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அப்படுக்கையில் கிடந்தவரும், கங்கையாற்றின் மைந்தருமான அந்தக் குருகுலத்தில் முதன்மையானவரிடம் {பீஷ்மரிடம்},(18) “ஓ! மன்னா, நான் யுதிஷ்டிரன். ஓ! ஜானவி ஆற்றின் மைந்தரே, உம்மை வணங்குகிறேன். ஓ! நீர் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால், நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக.(19) ஓ! மன்னா, உமது வேள்வி நெருப்புகளைச் சுமந்து கொண்டு, நீர் குறிப்பிட்ட காலம் வரை உமக்குப் பணிவிடை செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன். கல்வியின் அனைத்துக் கிளைகளையும் சார்ந்த ஆசான்கள், பிராமணர்கள், ரித்விஜர்கள் ஆகியோரும், என் தம்பிகள் அனைவரும்,(20) உமது மகனான பெருஞ்சக்தி கொண்ட மன்னன் திருதராஷ்டிரரும், என் அமைச்சர்களும், பேராற்றல் கொண்ட வாசுதேவன் ஆகியோரும் இங்கிருக்கின்றனர்.(21) கொல்லப்படாமல் எஞ்சிய போர்வீரர்களும், குருஜாங்கலத்தில் வசிப்போர் அனைவரும் இங்கே இருக்கின்றனர். ஓ! குரு குலத்தின் தலைவா, உமது கண்களைத் திறந்து அவர்களைக் காண்பீராக.(22) இந்தச் சந்தர்ப்பத்திற்குத் தேவையான அனைத்தையும் நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். உண்மையில், நீர் குறிப்பிட்ட இந்தக் காலத்திற்கான அனைத்துப் பொருட்களும் ஆயத்தமாக இருக்கின்றன” என்றான் {யுதிஷ்டிரன்}”.(23)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் நுண்ணறிவைக் கொண்ட குந்தியின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட கங்கையின் மைந்தர், தன் கண்களைத் திறந்து, அங்கே தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த பாரதர்கள் அனைவரையும் கண்டார்.(24) அப்போது வலிமைமிக்கப் பீஷ்மர், யுதிஷ்டிரனின் வலிய கரங்களைப் பிடித்துக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழமான குரலில் அவனிடம் பேசினார்.(25)

சொற்களை முற்றிலும் ஆள்பவரான அவர், “ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, நற்பேற்றின் மூலமே, நீ உன் அமைச்சர்கள் அனைவருடனும் இங்கே வந்திருக்கிறாய். நாள் சமைக்கும் ஆயிரங்கதிரோனான புனிதமான சூரியன், தன் வடக்கு நோக்கிய போக்கைத் தொடங்கிவிட்டான்.(26) நான் என் படுக்கையில் எண்பத்தைந்து நாட்கள் கிடந்திருக்கிறேன். இந்தக் கூர்முனைக் கணைகளில் நீட்டிக் கிடந்த நான், இந்தக் காலத்தை நூறு ஆண்டுகளாக உணர்ந்தேன்.(27) ஓ! யுதிஷ்டிரா, மாகச் சந்திர மாதம் {மாசி மாதம்} தொடங்கிவிட்டது. மேலும் இது வளர்பிறைக் காலமாகும், (என் கணக்கீடுகளின்படி) இதில் நான்கில் ஒருபகுதி முடிந்திருக்க வேண்டும்[1]” என்றார்.(28)தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொன்ன கங்கையின் மகன் பீஷ்மர், திருதராஷ்டிரனை வணங்கி, அவனிடம் பின்வருமாறு சொன்னார்.(29)

பீஷ்மர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நீ கடமைகளை நன்கறிந்தவனாக இருக்கிறாய். பொருளியல் தொடர்பான உன் ஐயங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டன. பெருங்கல்வி கொண்ட பல பிராமணர்களுக்கு நீ பணிவிடை செய்திருக்கிறாய்.(30) வேதங்களுடன் தொடர்புடை நுண்ணறிவியல்களையும், அறக்கடமைகள் அனைத்தையும், முழுமையாக நான்கு வேதங்களையும் நீ நன்கறிந்திருக்கிறாய்.(31) எனவே, ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரனே}, நீ வருந்தாதே. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. இது வேறு வகையில் ஆகாது. தேவர்கள் தொடர்பான புதிர்களை {ரகசியங்களை} தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து நீ கேட்டிருக்கிறாய்.(32) யுதிஷ்டிரனும், அவனுடைய தம்பிமாரும், பாண்டுவின் மகன்களாவதைப் போலவே நியாயமாக உனக்கும் மகன்களாவர். அறக்கடமைகளை நோற்கும் நீ அவர்களைப் பேணி வளர்த்துப் பாதுகாப்பாயாக. அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களாவர்.(33) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தூய ஆன்மா கொண்டவனாவான். அவன் எப்போதும் உனக்குக் கீழ்ப்படிந்திருப்பான். கருணையறம் {கொல்லாமை} அல்லது தீங்கிழையாமையில் அவன் அர்ப்பணிப்புடன் இருப்பதை நான் அறிவேன். பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அவன் அர்ப்பணிப்புமிக்கவனாவான்.(34) உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராவர். அவர்கள் கோபமும், பேராசையும் கொண்டவர்களாக இருந்தனர். பொறாமையில் மூழ்கிய அவர்கள் அனைவரும் தீய நடத்தை கொண்டிருந்தனர். அவர்களுக்காக வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {பீஷ்மர்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் ஞானியான திருதராஷ்டிரனிடம் இவ்வளவும் சொன்ன அந்தக் குரு வீரர் {பீஷ்மர்}, பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினார்.(36)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! புனிதமானவனே, ஓ! தேவர்கள் அனைவருக்கும் தேவா, ஓ! தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனே, ஓ! மூன்று அடியால் மூவுலகங்களையும் மறைத்தவனே, ஓ! சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவனே உன்னை வணங்குகிறேன்.(37) வாசுதேவன் நீயே, பொன்னுடல் நீயே, ஒரே புருஷன் (அல்லது ஒரே செயல்படும் இயக்கம்) நீயே, (அண்டத்தைப்) படைத்தவன் நீயே, பேரளவு கொண்டவன் நீயே. ஜீவன் நீயே. நுட்பமானவன் நீயே. நித்தியமான பரமாத்மா நீயே.(38) ஓ! தாமரைக் கண்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே என்னைக் காப்பாயாக.(39) ஓ! கிருஷ்ணா, ஓ! பரமானந்தமே, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே இவ்வுலுகில் இருந்து செல்வதற்கு எனக்கு அனுமதி அளிப்பாயாக. பாண்டுவின் மகன்களை எப்போதும் நீ பாதுகாக்க வேண்டும். உண்மையில், ஏற்கனவே ஒரே புகலிடமாக அவர்களுக்கு இருப்பவன் நீயே.(40)

முன்பொரு சமயம், தீய புத்தி கொண்ட மூடனான துரியோதனனிடம்எங்கே அறம் இருக்குமோ அங்கே கிருஷ்ணன் இருப்பான், எங்கே அறம் இருக்குமோ அங்கேயே வெற்றியும் இருக்கும் என்று சொன்னேன்.(41) மேலும் நான் அவனிடம் வாசுதேவனையே புகலிடமாகக் கொண்டு அவனைச் சார்ந்திருந்து பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை கூறினேன். உண்மையில் நான் அவனிடம் மீண்டும் மீண்டும், “அமைதியை ஏற்படுத்திக் கொள்ள உனக்கு இதுவே தகுந்த நேரம்” என்று சொன்னேன்.(42) எனினும், தீய புத்தி கொண்ட மூடனான துரியோதனன், நான் சொன்னதைக் கேட்டானில்லை. அவன் {துரியோதனன்}, பூமியில் ஒரு பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டு தன் உயிரையும் விட்டுவிட்டான்.(43) ஓ! சிறப்புமிக்கவனே, பதரி ஆசிரமத்தில் நரனின் துணையுடன் பல ஆண்டுகள் வசித்த பழைமையான சிறந்த முனிவன் நீ என்பதை நான் அறிவேன்.(44) தெய்வீக முனிவர் நாரதரும், கடுந்தவங்களைச் செய்த வியாசரும் இதை எனக்குச் சொல்லியிருக்கின்றனர். அவர்களே இதை எனக்குச் சொன்னார்கள். நீயும், அர்ஜுனனும், பழங்காலத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருந்த நாராயணன் மற்றும் நரன் என்ற முனிவர்களாவீர்.(45) ஓ! கிருஷ்ணா, நான் என் உடலைக் கைவிடப் போகிறேன் எனக்கு விடை அருள்வாயாக. உன்னால் அனுமதிக்கப்பட்டு நான் உயர்ந்த கதியை அடையப் போகிறேன்” என்றார் {பீஷ்மர்}.(46)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பீஷ்மரே, நான் உமக்கு விடைகொடுக்கிறேன். ஓ! மன்னா, நீர் வசுக்களின் நிலையை அடைவீராக. ஓ !பெரும் காந்தி கொண்டவரே, இவ்வுலகில் ஒரே ஒரு மீறலையும் செய்த குற்றமுள்ளவரில்லை.(47) ஓ! அரசமுனியே, நீர் உமது தந்தையிடம் பக்தி கொண்டவராவீர். எனவே, நீர் இரண்டாவது மார்க்கண்டேயனைப் போன்றவராவீர். இதன் காரணமாகவே உம் விருப்பப்படியே யமன், உமது விருப்பத்தைப் படிக்க எதிர்பார்த்து உமது அடிமையாகக் காத்திருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}”.(48)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன கங்கையின் மைந்தர், திருதராஷ்டிரன் தலைமையிலான பாண்டவர்களிடமும், வேறு நண்பர்களிடமும், தன் நலம் விரும்பிகளிடமும் மீண்டும் பேசினார்.(49) {அவர்}, “நான் என் உயிர்மூச்சைக் கைவிட விரும்புகிறேன். நீங்கள் எனக்கு விடை கொடுப்பதே தகும். வாய்மையை அடைய நீங்கள் முயல வேண்டும். வாய்மையே உயர்ந்த பலமாக இருக்கிறது.(50) தவங்களில் அர்ப்பணிப்புடனும், எப்போதும் கொடூர நடத்தைகளைக் கைவிட்டும், ஆன்மாக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் அறமொழுகும் பிராமணர்களுடனே நீங்கள் எப்போதும் வாழ வேண்டும்” என்றார்.(51)

தன் நண்பர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன நுண்ணறிவுமிக்கப் பீஷ்மர் மீண்டும் யுதிஷ்டிரனிடம்,(52) “ஓ! மன்னா, பிராமணர்கள் அனைவரும், குறிப்பாக ஞானம் கொண்டோரும், ஆசான்களும், வேள்விகளில் துணைபுரியவல்ல புரோகிதர்களும் உன் மதிப்பீட்டின்படி துதிக்கத்தக்கவர்களாகவே இருக்கட்டும்” என்றார் {பீஷ்மர்}”.(53)

கங்கையின் துயரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 168-யோகத்தில் நிலைத்து தமது உயிரைப் பிரித்த பீஷ்மர்; பீஷ்மரின் ஈமச் சடங்குகள்; கங்கையின் துயரம்; கங்கையைத் தேற்றிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, குருக்கள் அனைவரிடமும் இவ்வாறு சொன்ன சந்தனுவின் மகன் {பீஷ்மர்} சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(1) அவர் யோகத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அடுத்தடுத்து தன் உடற்பாகங்களில் இருந்து உயிர் மூச்சுகளை நிறுத்தினார். அந்த உயர் ஆன்மாவின் உயிர் மூச்சுகள் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மேல் நோக்கி எழுப்பப்பட்டது.(2) யோகத்தை ஏற்றிருந்ததன் விளைவால் உயிர்மூச்சுகள் மேல்நோக்கிச் செல்லும்போது, சந்தனு மகனின் {பீஷ்மரின்} உடற்பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வலியற்றவையாகின.(3) ஓ! மன்னா, வியாசரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் உள்ளிட்ட உயர் ஆன்ம மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் காட்சி வியப்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.(4) குறுகிய காலத்திற்குள் பீஷ்மரின் மொத்த உடலும் கணையற்றதாகவும், வலியற்றதாகவும் ஆனது. வாசுதேவனின் தலைமையிலான புகழ்பெற்ற மனிதர்களும், வியாசருடன் கூடிய தவசிகள் அனைவரும் இதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(5) கட்டுப்படுத்தப்பட்டவை, எந்த வழியிலும் வெளியேற இயலாதவையுமான உயிர்மூச்சுகள், இறுதியாக உச்சந்தலையைத் துளைத்துக் கொண்டு சொர்க்கத்தை நோக்கிச் சென்றது.(6)

தேவதுந்துபிகள் முழங்கத் தொடங்கின, மலர்மாரி பொழிந்தது. சித்தர்களும், மறுபிறப்பாள முனிவர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொன்னார்கள்.(7) உச்சந்தலையைப் பிளந்து சென்ற பீஷ்மரின் உயிர்மூச்சுகள் பெரும் எரிகல்லைப் போல ஆகாயத்தில் சென்று விரைவில் புலப்படாமல் போனது.(8) ஓ! பெரும் மன்னா, பாரதக் குலத்தின் தூணாகத் திகழ்ந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, இவ்வாறு தம்மை நித்தியத்தோடு கலந்தார்.(9)

பிறகு, உயர் ஆன்ம பாண்டவர்களும், விதுரரும் பெரும் அளவிலான விறகுகளையும், பல்வேறு வகை நறுமணப் பொருட்களையும் கொண்டு ஈமச்சிதையை அமைத்தனர்.(10) யுயுத்சுவும் பிறரும் அந்த ஆயத்தங்களைக் கண்காணிதனர். அப்போது யுதிஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரரும்,(11) பீஷ்மரின் உடலை, பட்டுத் துணியாலும், மலர் மாலைகளாலும் போர்த்தினர். யுயுத்சு ஒரு சிறந்த குடையை அதன் மேல் ஏந்தினான்.(12) பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் தங்கள் கரங்களில் தூய வெண்ணிறத்திலான சாமரங்களை ஏந்தினர். மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் தங்கள் கரங்களில் இரண்டு கிரீடங்களைக் கொண்டிருந்தனர்.(13) யுதிஷ்டிரனும், திருதராஷ்டிரனும் உடலின் {பீஷ்மருடைய சடலத்தின்} கால்மாட்டில் நின்றனர். குருக்களின் தலைவனுடைய மனைவிமார், பனையோலை விசிறிகளை எடுத்து, உடலைச் சுற்றிலும் நின்று மெதுவாக விசிறத் தொடங்கினர்.(14) உயர் ஆன்ம பீஷ்மரின் பித்ரு வேள்வி முறையாகச் செய்யப்பட்டது. புனித நெருப்பில் ஆகுதிகள் பல ஊற்றப்பட்டன. சாமங்களைப் பாடுவோர் பல சாமங்களைப் பாடினர்.(15)

கங்கையின் மகனுடைய உடலை சந்தனம், மரமஞ்சள் மற்றும் காரகில் கட்டைகளாலும், நறுமணமிக்க வேறு விறகுகளாலும் மறைத்து, அதற்கு நெருப்பிட்டு, அச்சிதைக்கு வலப்புறத்தில் திருதராஷ்டிரனுடன் கூடிய குருக்கள் நின்று கொண்டிருந்தனர்.(16,17) குரு குலத்தில் முதன்மையானோரான அவர்கள், இவ்வாறு கங்கையின் மகனுடைய உடலை எரித்து, முனிவர்கள் துணையுடன் புனித பாகீரதிக்கு {கங்கைக்குச்} சென்றனர்.(18) அந்த இடத்திற்கு வியாசர், நாரதர், அசிதர், கிருஷ்ணன், பாதர குலத்தின் பெண்கள், ஹஸ்தினாபுரவாசிகள் ஆகியோர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(19) அந்தப் புனித ஆற்றுக்கு வந்தடைந்த அனைவரும், உயர் ஆன்ம கங்கைமைந்தருக்கு நீர்க்காணிக்கைகளை முறையாகச் செலுத்தினர்.(20)

பாகீரதி தேவி, தன் மகனுக்கான நீர்க்காணிக்கைகள் செலுத்தப்பட்ட பிறகு, கவலையால் உடைந்தவளாக அழுது கொண்டே அந்த ஓடையில் இருந்து எழுந்தாள்.(21) அவளது புலம்பல்களுக்கு மத்தியில் குருக்களிடம் அவள், “பாவமற்றவர்களே, (என் மகனுக்கு) நேர்ந்ததனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன்; கேட்பீராக.(22) அறவொழுக்கம் மற்றும் இயல்புகளைக் கொண்டவனும், உயர்ந்த பிறவியையும், ஞானத்தைக் கொண்டவனுமான என் மகன், தன் குலத்துப் பெரியவர்கள் அனைவருக்கும் நன்மை செய்பவனாக இருந்தான். அவன் தன் தந்தையிடம் பக்தி கொண்டவனாகவும், உயர்ந்த நோன்புகளைக் கொண்டவனாகவும் இருந்தான்.(23) பெருஞ்சக்தியுடன் கூடிய தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ஜமதக்னி குல ராமரால் {பரசுராமராலும்} வெல்லப்பட முடியாதவனாக அவன் இருந்தான். ஐயோ, அந்த வீரன் சிகண்டியால் கொல்லப்பட்டானே.(24) மன்னர்களே, என் மகன் போனதைக் கண்டும் பிளாக்காமல் இருக்கும் என் இதயம் இரும்பாலானது என்பதில் ஐயமில்லை.(25) காசியில் நடந்த சுயம்வரத்திற்குத் தனியாக ஒற்றைத் தேரில் சென்று, அங்கே கூடியிருந்த க்ஷத்திரியர்களை வீழ்த்தி, (தன் சகோதரனுக்காக) மூன்று இளவரசிகளை அபகரித்து வந்தான்.(26) அவனது வலிமைக்கு இணையாக இந்தப் பூமியில் எவனும் இல்லை. ஐயோ, அவ்வாறு இருந்த என் மகன் சிகண்டியால் கொல்லப்பட்டான் என்று கேட்டும் என் இதயம் பிளக்காமல் இருக்கிறதே” என்று சொல்லி புலம்பினாள்.(27)

பலமிக்கக் கிருஷ்ணன், பேராறாக ஓடும் அந்தத் தேவியின் புலம்பல்களைக் கேட்டு, ஆறுதலான பல சொற்களைச் சொல்லி அவளைத் தேற்றினான். கிருஷ்ணன், “ஓ! இனியவளே, ஆறுதலடைவாயாக. ஓ அழகிய பண்புகளைக் கொண்டவளே, வருந்தாதே. உன் மகன் இன்பம்நிறைந்த உயர்ந்த உலகத்திற்குச் சென்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.(28-30) அவர் வசுக்களில் பெருஞ்சக்தி கொண்டவராக இருந்தார். ஓ! அழகிய பண்புகளைக் கொண்டவளே, ஒரு சாபத்தின் மூலம் அவர் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தார். அவருக்காக வருந்துவது உனக்குத் தகாது.(31) க்ஷத்திரியக் கடமைகளுக்கு ஏற்புடைய வகையில், போர்க்களத்தில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் தனஞ்செயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டார். ஓ! தேவி, அவர் சிகண்டியால் கொல்லப்படவில்லை.(32) பீஷ்மர் தம் கரத்தில் வில் வளைத்து நின்றால், தேவர்களின் தலைவனாலும் அவரைக் கொல்ல முடியாது.(33) ஓ! அழகிய முகம் கொண்டவளே உன் மகன் இன்பமாகச் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார். தேவர்கள் அனைவரும் கூடியிருந்தாலும் அவரைப் போரில் கொல்ல முடியாது.(34) எனவே, ஓ! கங்கா தேவி, குரு குலத்தின் மகனுக்காக நீ வருந்தாதே. ஓ! தேவி, அவர் வசுக்களில் ஒருவராவார். உன் மகன் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார். உன் இதய நோய் அகலட்டும்” என்றான் {கிருஷ்ணன்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளான அவள் {கங்கை}, ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ணனாலும், வியாசராலும் இவ்வாறு சொல்லப்பட்டதும், தன் துயரைக் கைவிட்டு உள்ளச் சமநிலையை அடைந்தாள்.(36) ஓ! ஏகாதிபதி, அங்குக் கிருஷ்ணனின் தலைமையில் இருந்த மன்னர்கள் அனைவரும், முறையாக அந்தத் தேவியைக் கௌரவித்து, அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவளது கரையில் இருந்து அகன்று சென்றனர்”.(37)

ஸ்வர்க்காரோஹணிக உப பர்வம் முற்றும்

அநுசாஸன பர்வம் முற்றிற்று 

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading