காலனும் கர்மமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 01-அழிவுக்குத் தானே காரணமாக அமைந்ததை எண்ணி வருந்திய யுதிஷ்டிரன்; கௌதமி என்ற கிழவி, அர்ஜுனகன் என்ற வேடன், மிருத்யு மற்றும் யமன் ஆகியோருக்கிடையில் மரணம் குறித்து நிகழ்ந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பிதாமஹரே}, மன அமைதி என்பது நுட்பமானதென்றும், பல்வேறு வடிவங்களைக் கொண்டதென்றும் சொல்லப்படுகிறது. நான் உமது உரையாடல்கள் அனைத்தையும் கேட்டேன், ஆனாலும் மன அமைதி எனதாகவில்லை. ஓ! ஐயா, இக்காரியத்தில் மனத்தை அமைதியடைய {ஆறுதலடையச்} செய்ய உம்மால் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன, இருந்தாலும், இவ்வளவு காரியங்கள் நடப்பதற்கும் காரணமாக அமைந்த என்னால், பல்வேறு வகைகளிலான அமைதிநிலைகளை அறிந்து கொள்வதால் மட்டுமே மனோ அமைதியை எவ்வாறு அடைய முடியும்?(2) ஓ! வீரரே உமது உடல் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதையும், கடுங்காயங்களால் அவதியுறுவதையும் கண்டு, நான் ஏற்படுத்தியிருக்கும் தீமைகளைக் குறித்த எண்ணத்தால் நான் மன அமைதியை அடையத் தவறுகிறேன் {எனக்கு ஆறுதல் உண்டாகவில்லை}.(3) ஓ! மனிதர்களில் பெரும் வீரரே, அருவிகளில் நீர் பெருகியிருக்கும் ஒரு மலையைப் போலக் குருதியால் குளித்திருக்கும் உமது உடலைக் கண்டு, மழைகாலத்துத் தாமரையைப் போல நான் துயருறுகிறேன்.(4)
ஓ! பாட்டா {பீஷ்மரே}, போர்க்களத்தில் என் மக்கள் என் நிமித்தமாகத் தங்கள் எதிரிகளுடன் போரிட்டதால் நீர் இந்த அவல நிலையை அடைந்ததைவிட அதிகத் துன்பத்தை வேறு எது அளிக்க முடியும்?(5) என் நிமித்தமாக வேறு இளவரசர்களும், தங்கள் மகன்கள் மற்றும் உற்றார் உறவினருடன் சேர்ந்து அழிவை அடைந்திருக்கின்றனர். ஐயோ, இதைவிடத் துன்பம் தரத்தக்கது வேறு எது?(6) ஓ! இளவரசரே {பீஷ்மரே}, விதி மற்றும் கோபத்தின் வசத்தை அடைந்து இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்த எங்களுக்கும், திருதராஷ்டிரர் மகன்களுக்கும் என்ன விதி காத்திருக்கிறது {நாங்கள் என்ன கதியை அடையப் போகிறோம்} என்பது எங்களுக்குச் சொல்வீராக.(7) ஓ! மனிதர்களின் தலைவரே, உம்மை இந்நிலையில் காணாததால், திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} நற்பேறு பெற்றவன் என நான் நினைக்கிறேன்.(8) ஆனால், நமது நண்பர்கள் மற்றும் உமது மரணத்திற்குக் காரணமாக அமைந்த எனக்கு, வெறுந்தரையில் இந்த அவல நிலையில் உம்மைக் காண்பதால் மன அமைதி மறுக்கப்பட்டிருக்கிறது.(9)
தன் குலத்தில் இழிந்தவனான தீய துரியோதனன், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றி தன் துருப்புகள் மற்றும் தன் தம்பியர் அனைவருடன் போர்க்களத்தில் இறந்தான்.(10) தீய ஆன்மா கொண்ட இழிந்தவன் இப்போது வெறுந்தரையில் கிடக்கும் உம்மைக் காணவில்லை. உண்மையில், இந்தக் காரணத்திற்காக, வாழ்வை விட மரணமே {எனக்கு} விரும்பத்தக்கது என நான் கருதுகிறேன்.(11) ஓ! நோன்பு வழுவா வீரரே, நானும் என் தம்பிகளும் போர்க்களத்தில் எங்கள் எதிரியின் கரங்களில் மாண்டிருந்தால்,(12) நீர் கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கும் இந்த அவல நிலையை நான் கண்டிருக்க மாட்டேன். ஓ! இளவரசரே {பீஷ்மரே}, படைப்பாளன் {பிரம்மன்} தீச்செயல் செய்பவர்களாக எங்களைப் படைத்திருக்கிறான் என்பது திண்ணம்.(13) ஓ! மன்னா, நீர் எனக்கு நன்மை செய்ய விரும்பினால், மறுமையிலும் {மறுமையிலாவது} இந்தப் பாவத்தில் இருந்து நான் தூய்மை அடையும் வழியை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! நற்பேறு பெற்றவனே, (தெய்வம், விதி மற்றும் காலத்தைச்) சார்ந்திருக்கும் உன் ஆன்மாவே உன் செயல்களுக்கான காரணமென ஏன் நீ நினைக்கிறாய்? அதன் {ஆன்மாவுடைய} செயல்பாடின்மையின் வெளிப்பாடானது, நுட்பமானதும், புலன்களால் உணரப்பட முடியாததுமாகும்.(15) இக்காரியத்தில், மிருத்யு {யமன்}, கௌதமி, காலன், வேடன் மற்றும் ஒரு பாம்பு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! குந்தியின் மகனே, கௌதமி என்ற பெயரையும், பெரும் பொறுமையையும், மனோ அமைதியையும் கொண்ட ஒரு கிழவி {முதிர்ந்த பெண்மணி} இருந்தாள். ஒரு நாள் அவள், பாம்பால் கடிக்கப்பட்டதன் விளைவால் தன் மகன் மரணமடைந்ததைக் கண்டாள். அர்ஜுனகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கோபக்கார வேடன், ஓர் இழையில் அந்தப் பாம்பைக் கட்டி அதைக் கௌதமியின் முன் கொண்டு வந்தான்.(16-19)
அவன் அவளிடம், “ஓ! அருளப்பட்ட பெண்மணியே, இந்த இழிந்த பாம்பே உன் மகனின் மரணத்திற்குக் காரணமாகும். இழிவான இஃதை எவ்வகையில் கொல்லலாம் என்பதை எனக்கு விரைந்து சொல்வாயாக. நான் இதை நெருப்பில் வீசவா? அல்லது துண்டுகளாக வெட்டிப் போடவா? குழந்தையைக் கொன்ற இந்த ஈனப்பிறவி இனியும் வாழ்ந்திருப்பது தகாது” என்றான்.(20)
கௌதமி { வேடன் அர்ஜுனகனிடம்}, “ஓ! சிறு புத்தி கொண்ட அர்ஜுனகா, இந்தப் பாம்பை விடு. இஃது உன் கரங்களில் இறப்பது தகாது. தனக்காகக் காத்திருக்கும் தவிர்க்கப்பட முடியாதவற்றை அலட்சியம் செய்து பாவத்தில் மூழ்கும் வகையில் தன்னைக் கனமாக்கிக் கொள்ளும் மூடன் எவன்?(21) நற்செயல்களைச் செய்வதன் மூலம் தங்களைக் கனமற்றவர்களாக்கிக் கொள்வோர் பெருங்கடலைக் கடக்கும் ஓடத்தைப் போல உலகக் கடலைக் கடக்கிறார்கள். ஆனால் பாவத்தால் தங்களைக் கனமாக்கிக் கொள்பவர்கள் நீருக்குள் வீசப்பட்ட கணையைப் போல அடி ஆழத்தில் மூழ்குகிறார்கள்.(22) இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் என் பிள்ளை மீண்டும் உயிர்பெற மாட்டான், மேலும் இதை வாழ விடுவதால் உனக்கும் எந்தத் தீங்கும் நேராது. இந்த உயிரினத்தைக் கொல்வதன் மூலம் முடிவில்லாத யம லோகத்திற்கு எவன் செல்வான்?” என்று கேட்டாள்.(23)
வேடன், “ஓ! சரிதவறுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்த பெண்ணே, உயிரினங்கள் அனைத்தின் துன்பத்திலும் பெரியோர் பீடிக்கப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நீ சொன்ன இந்த வார்த்தைகள் (துயரத்தில் மூழ்காமல்) தன்னிறைவடைந்த ஒரு மனிதனால் சொல்லப்படும் அறிவுரை நிறைந்தவையாக இருக்கின்றன. எனவே, நான் இந்தப் பாம்பைக் கொல்லத்தான் வேண்டும்.(24) மனோ அமைதியை விரும்புபவர்கள் அனைத்திற்கும் காலத்தின் போக்கையே காரணமாகக் கொள்கின்றனர், ஆனால் நடைமுறை அறிந்த மனிதர்கள் (பழி தீர்த்துக் கொள்வதன் மூலம்) தங்கள் துயரத்தை உடனே தணித்துக் கொள்கின்றனர். நிலையான மாயையில் இருக்கும் மனிதர்கள், (இவ்வாறான செயல்களினால் மறுமையில் கிட்டும்) பேரின்பத்தை இழந்து விடுவோமென அஞ்சுகின்றனர்[1]. எனவே, ஓ! பெண்ணே, (என்னைக் கொண்டு) இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் உன் துயரத்தைத் தணித்துக் கொள்வாயாக” என்றான்.(25)கௌதமி, “நம்மைப் போன்ற மக்கள் (கெடுபேறால்) ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. நல்ல மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களில் அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிள்ளையின் மரணம் ஏற்கனவே விதிக்கப்பட்டதாகும். எனவே, இந்தப் பாம்பைக் கொல்வதை அங்கீகரிக்க இயலாதவளாக இருக்கிறேன்.(26) சினம் துன்பத்திற்கே வழிவகுக்கும் என்பதால் பிராமணர்கள் சினங்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! நல்ல மனிதா, இந்தப் பாம்பை மன்னித்து, கருணையோடு அதை விடுவாயாக” என்றாள்.(27)
வேடன், “பீடத்தில் வேள்வி செய்வதன் மூலம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் மனிதன், அதைத் தன் பலிக்கும் {பலியான விலங்குக்கும்} கொடுப்பதைப் போல நாமும் (இந்த உயிரனத்தைக்) கொல்வதன் மூலம் மறுமையில் வற்றாத பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவோம். ஓர் எதிரியைக் கொல்வதன் மூலம் தகுதி அடையப்படுகிறது. வெறுக்கத்தக்க இந்த உயிரினத்தைக் கொல்வதன் மூலம் மறுமையில் நீ உண்மையான பெரும் தகுதியை ஈட்டுவாய்” என்றான்(28).
கௌதமி, “ஓர் எதிரியை வதைப்பதிலும், கொல்வதிலும் என்ன நன்மை இருக்கிறது? நம் அதிகாரத்தில் உள்ள ஓர் எதிரியை விடுவிக்காததன் மூலம் என்ன நன்மை வெல்லப்படுகிறது? எனவே, ஓ! நலமான முகத்தோற்றத்தைக் கொண்டவனே, நாம் ஏன் இந்தப் பாம்பை மன்னித்து விடுவதனால் கிட்டும் தகுதியை {புண்ணியத்தை} அடைய முயற்சிக்கக்கூடாது?” என்று கேட்டாள்.(29)
வேடன், “(பல உயிரினங்களைக் காக்காமல்) இந்த ஒற்றை உயிரினத்தைக் காப்பதற்குப் பதிலாக, இதனிடமிருந்து ({இந்த ஒற்றை உயிரினத்தின்} தீமையில் இருந்து) பெரும் எண்ணிக்கையாலனவை காக்கப்பட வேண்டும். நல்லோர் (அழிந்து போகட்டுமெனவே) தீயோரைக் கைவிடுகிறார்கள். எனவே, இந்தத் தீய உயிரினத்தைக் கொல்வாயாக” என்றான்.(30)
கௌதமி, “ஓ! வேடா, இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் என் மகன் மீண்டும் உயிர் பெற மாட்டான், மேலும், இதன் {இந்தப் பாம்பின்}} மரணத்தால் அடையப்படும் வேறு எந்தக் கதியையும் நான் காணவில்லை. எனவே, ஓ! வேடா, வாழும் உயிரினமான இந்தப் பாம்பை விட்டுவிடுவாயாக” என்றாள்.(31)
வேடன், “விருத்திரனைக் கொன்றதன் மூலம், (வேள்விக் காணிக்கைகளில்) சிறந்த பகுதியை இந்திரன் அடைந்தான். ஒரு வேள்வியை அழித்ததன் மூலம் வேள்விக் காணிக்கைகளில் தன் பங்கை மஹாதேவன் அடைந்தான். எனவே, மனத்தில் எந்த அச்சத்திற்கும் இடம் தராமல், இந்தப் பாம்பை உடனே கொல்வாயாக” என்றான்”.(32)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த உயர் ஆன்ம கௌதமி, அந்தப் பாம்பைக் கொன்றுவிடுமாறு அந்த வேடனால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டாலும், அவள் அந்தப் பாவச்செயலை மனத்தாலும் நினைக்கவில்லை.(33) அப்போது கயிற்றில் கட்டப்பட்டிருந்த அந்தப் பாம்பு, பெருமூச்சு விட்டுப் பெரும் சிரமத்துடன் மனோ அமைதியைத் தக்க வைத்துக் கொண்டு, மெதுவாக மனிதக் குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னது.(34)
பாம்பு {வேடனிடம்}, “ஓ! மூட அர்ஜுனகா, என்னுடைய குற்றமென்ன? எனக்குச் சொந்த விருப்பமும் கிடையாது, நான் சுதந்திரமானவனும் {எச்சார்பும் இல்லாதவனும்} கிடையாது. இந்தச் சிறு வேலைக்கு மிருத்யுவே என்னை அனுப்பினான்.(35) அவனது ஆணையின் பேரிலேயே நான் இந்தப் பிள்ளையைக் கடித்தேனேயன்றி என் பங்கில் எந்தக் கோபத்தினாலும் அல்ல. எனவே, ஓ! வேடா, இதில் பாவமேதும் இருந்தால் அந்தப் பாவம் அவனுடையதே {மிருத்யுவினுடையதே}” என்றது.(35)
வேடன், “மற்றொருவரால் வழிநடத்தப்பட்டு நீ இந்தத் தீமையைச் செய்திருந்தால், இச்செயலில் கருவியாக இருந்த பாவமும் உன்னையே சேரும்.(37) ஓ! பாம்பே, மண் பாத்திரம் செய்வதில் குயவனின் சக்கரம், தடி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பதைப் போலத்தான் நீயும் (இவ்விளைவை உண்டாக்கிய காரணங்களின் ஒன்றாக இருக்கிறாய்). குற்றவாளி என் கரங்களால் மரணமடையத் தகுந்தவன். ஓ! பாம்பே, நீ குற்றவாளி. உண்மையில், இக்காரியத்தை நீயே ஏற்றுக் கொண்டாய்” என்றான்.(39)
பாம்பு, “குயவனின் சக்கரம், தடி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் சார்பற்ற {சுதந்திரமான} காரணங்களாக இல்லாததைப் போலவே நானும் ஒரு சார்பற்ற {தானே காரியம் செய்ய இயலாத} காரணமாக இருக்கிறேன். எனவே, இக்குற்றம் எனதில்லை என்றே நீ கருத வேண்டும்.(40) வேறு வகையில் நீ சிந்தித்தால், இவற்றை ஒன்றோடொன்றாக இயங்கும் காரணங்களாகக் கருத வேண்டும். இவ்வாறு ஒன்றாக இயங்குவதால், காரணம் மற்றும் விளைவில் அவற்றின் தொடர்பு குறித்து ஐயம் எழுகிறது.(41) இஃது இவ்வாறிருக்கையில், குற்றம் எனதில்லை, இக்காரியத்தில் நான் மரணமடையத் தகாதவன், மேலும் நான் எந்தப் பாவத்தையும் செய்த குற்றவாளியுமல்லேன். அல்லது இதில் பாவம் இருக்கிறது என நீ கருதினால், அந்தப் பாவமும் காரணங்களின் தொகுப்பில் இருக்கிறது” என்றது.(42)
வேடன், “நீ இக்காரியத்தில் முக்கியக் காரணமாவோ இயக்கமாகவோ இல்லை என்றாலும் (இந்தப் பிள்ளையின்) மரணத்திற்கு நீயே காரணமாக இருக்கிறாய். எனவே, நீ மரணத்திற்குத் தகுந்தவன் என்பது எனது கருத்து.(43) ஓ! பாம்பே, ஒரு தீயச் செயலைச் செய்தும், அதைச் செய்தவனுக்கு அதில் தொடர்பில்லை என நீ நினைத்தால், இக்காரியத்தில் வேறெந்தக் காரணமும் இல்லை. ஆனால் உண்மையில் இதைச் செய்ததற்கு நீயே உண்மையில் மரணத்திற்குத் தகுந்தவன். இன்னும் நீ வேறென்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.(44)
பாம்பு, “எந்தக் காரணமும் இருக்கிறதோ, இல்லையோ,[2] (இடையில்) {முதுகெலும்பாக இருக்கும்} ஒரு செயலில்லாமல் எந்த விளைவும் உண்டாவதில்லை. எனவே, இவ்விரண்டிலும் {காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்} தூண்டும் காரணத்தின் திறன் எதனையும் கொள்ளாமல், (இக்காரியத்தில்) என் இயக்கம் மட்டுமே காரணம் எனக் கொள்வதில் முறையான நோக்கமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(45) ஓ! வேடா, உண்மையில் நானே காரணம் என நீ நினைத்தால், ஓர் உயிரினத்தைக் கொன்ற இந்தக் குற்றச்செயல், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கியவனின் தோள்களில் இருக்கிறது[3]” என்றது.(46)வேடன், “ஓ! மூடா, ஓ! இழிந்த பாம்பே, வாழத்தகாத நீ, ஏன் இவ்வளவு வார்த்தைகளைப் பந்தாக எறிந்து கொண்டிருக்கிறாய். நீ என் கரங்களால் மரணமடையத் தகுந்தவனே. நீ இந்தக் குழந்தையைக் கொன்றதன் மூலம் மிகக் கொடிய செயலொன்றைச் செய்திருக்கிறாய்” என்றான்.(47)
பாம்பு, “ஓ! வேடா, வேள்வியைச் செய்து தரும் புரோஹிதர்கள், நெருப்பில் தெளிந்த நெய்யை ஆகுதியாக ஊற்றும் செயலில் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஈட்டாததைப் போலவே, நானும் இவ்வகையான விளைவில் தொடர்புடையவனாகவே கருதப்பட வேண்டும்” என்றது”.(48)
பீஷ்மர் தொடர்ந்தார், “மிருத்யுவால் இயக்கப்பட்ட பாம்பு இவ்வாறு சொன்னதும், மிருத்யுவே {யமனே} அங்கே தோன்றி, அந்தப் பாம்பிடம் இவ்வாறு பேசினான்.(49)
மிருத்யு, “ஓ! பாம்பே, காலனால் வழிநடத்தப்பட்டே நானும் நீயும் இந்தக் குற்றேவலைச் செய்தோம். நானோ, நீயோ இந்தப் பிள்ளையின் மரணத்திற்குக் காரணமானவர்களல்ல.(50) ஓ! பாம்பே, காற்றால் அங்கேயும், இங்கேயும் அலைக்கப்படும் மேகங்களைப் போலவே நான் காலனால் இயக்கப்படுகிறேன்.(51) சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தொடர்புடைய ஆதிக்கங்கள் அனைத்தும் காலனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டு அனைத்து உயிரினங்களிலும் இயங்குகின்றன.(52) சொர்க்கத்திலோ, பூமியிலோ உள்ள அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் காலனின் இதே ஈர்ப்பிலேயே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஓ! பாம்பே, மொத்த அண்டமும் காலனின் இதே ஆதிக்கத்திலேயே ஊக்கம்பெறுகிறது.(53) இவ்வுலகில் உள்ள செயல்கள், செயலின்மைகள், அவற்றின் மாற்றங்கள் {விகாரங்கள்} ஆகிய அனைத்தும் காலனின் ஆதிக்கத்திலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(54) சூரியன், சோமன், விஷ்ணு, நீர், காற்று, நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, நெருப்பு {அக்னி}, வானம், பூமி, மித்ரன், பர்ஜன்யன், அதிதி, வசுக்கள், ஆறுகள், பெருங்கடல்கள் என இருப்பில் உள்ள மற்றும் இருப்பில் இல்லாத பொருட்கள் அனைத்தும் காலனாலேயே படைக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன.(55) ஓ! பாம்பே, இஃதை அறிந்து நீ ஏன் என் மீது பழி சுமத்த நினைக்கிறாய்? இதில் எக்குற்றமும் எனதாகா இருந்தால், நீயும் பழி சுமத்தப்பட வேண்டியவனே” என்றான் {மிருத்யு}.(56,57)
பாம்பு, “ஓ! மிருத்யு, நான் உன்னைப் பழிக்கவில்லை, மேலும் அனைத்துப் பழியில் இருந்தும் உன்னை விடுவிக்கவில்லை. உனது ஆதிக்கத்தில் உன் இயக்கத்தின் பேரிலேயே நான் (என் செயல்களைச்) செய்தேன் என்று மட்டுமே நான் சொல்கிறேன்.(58) காலன் மீது எப்பழியும் இருந்தாலோ, எப்பழியும் இல்லா விட்டாலோ அக்குற்றத்தை ஆராய்வது என் வேலையல்ல. அதற்கான உரிமையும் நமக்கில்லை.(59) இந்தப் பழியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வது என் பொறுப்பாக இருப்பதைப் போலவே மிருத்யுவிடம் எந்தப் பழியும் இல்லை எனக் காண்பதும் என் கடமையாகும்” என்றது”.(60)
பீஷ்மர் தொடர்ந்தார், “பிறகு அந்தப் பாம்பானது அர்ஜுனகனிடம் {அந்த வேடனிடம்}, “மிருத்யு சொன்னதை நீ கேட்டாய். எனவே, குற்றமற்றவனான என்னை இந்தக் கயிற்றில் கட்டி என்னை வதைப்பது உனக்கு முறையாகாது” என்றது.(61)
ஓ! பாம்பே, “நான் உன் வார்த்தைகளையும், மிருத்யுவின் வார்த்தைகளையும் கேட்டேன். ஆனால், இவை உன் மீதான பழியைத் துடைக்கவில்லை.(62) மிருத்யுவும், நீயும் இந்தப் பிள்ளையின் மரணத்திற்கான காரணங்களாக இருக்கிறீர்கள். நான் உங்கள் இருவரையுமே காரணங்களாகக் கருதுகிறேன், ஆனால் நீங்களே உண்மையான முக்கியக் காரணம் என்று நான் சொல்லவில்லை.(63) நல்லோருக்குத் துன்பத்தை உண்டாக்கும் தீயவனும், பழி நிறைந்தவனுமான மிருத்யு தெறுமொழி பெற்றவனாவான் {சபிக்கப்பட்டவனாவான்}. பாவம் நிறைந்தவனான நீ பாவச் செயல்களில் ஈடுபடுவதால் உன்னை நான் கொல்லப் போகிறேன்” என்றான்.(64)
மிருத்யு, “நாங்கள் இருவரும் சுதந்திரமானவர்களல்ல, ஆனால் காலனைச் சார்ந்தவர்கள்; {அவனால்} நியமிக்கப்பட்ட பணியைச் செய்ய விதிக்கப்பட்டவர்ள். இக்காரியத்தை நீ முழுமையாகக் கருத்தில் கொண்டால் எங்களிடம் எக்குற்றத்தையும் காணமாட்டாய்” என்றான்.(65)
வேடன், “ஓ! பாம்பே, ஓ! மிருத்யுவே, நீங்கள் இருவரும் காலனைச் சார்ந்திருப்பவர்கள் என்றால், (நன்மையில் இருந்து எழும்) இன்பமும், (தீமையில் இருந்து எழும்) கோபமும் எவ்வாறு உண்டாகின்றன என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்றான்.(66)
மிருத்யு, “எது செய்யப்பட்டதோ அது காலனின் ஆதிக்கத்திலேயே செய்யப்பட்டது. ஓ! வேடா, காலனே அனைத்திற்கும் காரணம் என்றும், நாங்கள் இருவரும் காலனால் ஈர்க்கப்பட்ட காரணத்தால் எங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்தோம் என்றும் ஏற்கனவே சொன்னேன், எனவே, ஓ! வேடா, எங்கள் இருவரையும் நீ எவ்வகையிலும் நிந்திக்கலாகாது” என்றான்”.(67,68)
பீஷ்மர் தொடர்ந்தார், “அப்போது அறநெறி அறிவியல் சார்ந்த அந்தச் சச்சரவுக் காட்சியில் காலன் {காலபுருஷன்} தோன்றி, அங்கே கூடியிருந்த பாம்பு, மிருத்யு மற்றும் வேடனிடம் இவ்வாறு பேசினான்.(69)
காலன், “ஓ! வேடா, மிருத்யுவோ, இந்தப் பாம்போ, நானோ எந்த உயிரினத்தின் மரணத்திலும் குற்றவாளிகளல்ல. நிகழ்வைத் தூண்டும் உடனடி காரணங்களாக மட்டுமே நாங்கள் இருக்கிறோம். ஓ! அர்ஜுனகா, இக்காரியத்தில் இந்தப் பிள்ளையின் கர்மமே எங்கள் செயல்பாட்டைத் தூண்டும் காரணமாக இருந்தது.(70) வேறு எக்காரணத்தாலும் இப்பிள்ளை இறக்கவில்லை. இவன் தன் கர்மத்தின் விளைவாலேயே இறந்திருக்கிறான்.(71) இவன் தன் முற்பிறவியில் செய்த கர்மத்தின் விளைவாலேயே மரணத்தைச் சந்தித்திருக்கிறான். நாங்கள் அனைவரும் எங்கள் ஒவ்வொருவருக்குமுரிய கர்மத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறோம்.(72) மகன்களைப் போலவே கர்மமே விடுதலைக்கான துணையாகும், மேலும் கர்மமே மனிதனின் அறத்தையும், மறத்தையும் குறிப்பிடுகிறது. செயல்கள் ஒன்றையொன்று தூண்டுவதைப் போலவே, நாங்கள் ஒருவரையொருவர் தூண்டுகிறோம்.(73) களிமண் குவியலை மனிதர்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் அமைத்துக் கொள்வதைப் போல மனிதர்கள் அடையும் பல்வேறு விளைவுகள் கர்மத்தாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.(74) ஒளியும், நிழலும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல மனிதர்கள் தங்கள் சொந்த செயல்களின் மூலம் அமையும் கர்மத்தையே சார்ந்திருக்கிறார்கள்.(75) எனவே, நீயோ, நானோ, மிருத்யுவோ, பாம்போ, இந்தப் பிராமணப் பெண்ணோ இந்தப் பிள்ளையின் மரணத்திற்கான காரணங்கள் இல்லை.(76) இங்கே இவனே {இந்தப் பிள்ளையே அவனது மரணத்திற்கான} காரணமாக இருக்கிறான்” என்றான் காலன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, காலன் இவ்வழியில் இக்காரியத்தை விளக்கியதும், மனிதர்கள் தங்கள் செயல்களாலேயே துன்பத்தை அடைகிறார்கள் என்று தன் மனத்துக்குள் சமாதானமடைந்த கௌதமி, {வேடனான} அர்ஜுனகனிடம் இவ்வாறு பேசினாள்.(77)
கௌதமி {வேடன் அர்ஜுனகனிடம்}, “காலனோ, மிருத்யுவோ {யமனோ}, பாம்போ இக்காரியத்தில் காரணமாக அமையவில்லை. இந்தப் பிள்ளை தன் சொந்த கர்மத்தின் விளைவாலேயே மரணத்தை அடைந்திருக்கிறான்.(78) என் மகனின் இறப்பில் (அதன் காரணமாக அமையும் முற்பிறவி செயலில்) நானும் பங்குபெற்றிருக்கிறேன். காலனும், மிருத்யுவும் இவ்விடத்தில் இருந்து செல்லட்டும். ஓ! அர்ஜுனகா, நீ இந்தப் பாம்பை விடுதலை செய்வாயாக” என்றாள்”.(79)
பீஷ்மர் தொடர்ந்தார், “காலன், மிருத்யு மற்றும் அந்தப் பாம்பு ஆகியோர் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றதும், கௌதமியும், அந்த வேடனும் தங்கள் மனத்தில் ஆறுதலடைந்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை யாவற்றையும் கேட்டு உன் துன்பவிலகி மனத்தில் அமைதியை அடைவாயாக. மனிதர்கள் தங்கள் சொந்த கர்மத்தின் விளைவாகவே சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகின்றனர்.(81) இந்தத் தீமையை நீயோ, துரியோதனனோ உண்டாக்கவில்லை. (இந்தப் போரில்) பூமியின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டது காலனின் செயல் என்று அறிவாயாக” {என்றார் பீஷ்மர்}”.(82)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பலமிக்கவனும், அறம் சார்ந்தவனுமான யுதிஷ்டிரன் இவை அனைத்தையும் கேட்டு மனத்தில் ஆறுதல் அடைந்து, மீண்டும் பின்வருமாறு விசாரித்தான்”.(83)
சுதர்சனனும், ஓகவதியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 02-இல்லறத்தின் சிறப்பை விளக்க சுதர்சனன் மற்றும் ஓகவதியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! மனிதர்களில் விவேகியே, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவரே, ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, நான் இந்தப் பெருங்கதையைக் கேட்டிருக்கிறேன்.(1) அறபோதனைகள் நிறைந்த வரலாறுகளே மேலும் கேட்க நான் விரும்புகிறேன், என்னை நிறைவுசெய்வதே உமக்குத் தகும்.(2) ஓ! பூமியின் தலைவா, இல்லறத்தான் எவனும் {கிருஹஸ்தன் எவனும்} அறப்பயிற்சியின் மூலம் மிருத்யுவை வென்றிருக்கிறானா என்பதை எனக்குச் சொல்வீராக. விவரங்கள் அனைத்துடன் எனக்கு இதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இல்லறத்தான் ஒருவன் அறப்பயிற்சியின் மூலம் மிருத்யுவை வென்ற இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது.(4) ஓ! மன்னா, பிரஜாபதியான மனு, இக்ஷ்வாகு என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சூரியனைப் போன்று ஒளிமிக்கவனான அந்த மன்னனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} நூறு மகன்கள் பிறந்தனர்.(5) ஓ! பாரதா, அவனுடைய பத்தாவது மகனுக்குத் தசாஸ்வன் என்ற பெயர் சூட்டப்பட்டது. பிழையற்ற ஆற்றல் கொண்ட இந்த அறம்சார்ந்த இளரவசனே மாஹிஷ்மதியின் மன்னனானான்.(6) ஓ! மன்னா, இந்தத் தசாஸ்வனின் மகன், வாய்மை, ஈகை மற்றும் அர்ப்பணிப்பை நிலையாகப் பயிலும் அறம் சார்ந்த ஓர் இளவரசனாக இருந்தான். மதிராஸ்வன் என்ற பெயரில் அறியப்பட்ட அவன், பூமியின் தலைவனாக அவளை {பூமியை} ஆண்டான். அவன் வேத கல்வி மற்றும் ஆயுத அறிவியல் கல்வி ஆகியவற்றில் தன்னை நிலையாக அர்ப்பணித்திருந்தான்.(8) அந்த மதிராஸ்வனின் மகன், பெரும் நற்பேற்றையும், பலம், சக்தி, அதிகாரம் ஆகியவற்றுடன் கூடியவனாகத் தியுதிமான் என்ற பெயரைக் கொண்டிருந்தான்.(9) தியுதிமானின் மகன், மிகுந்த அர்ப்பணிப்பும், பக்தியும் மிக்க மன்னனாகச் சுவீரன் என்ற பெயரில் உலகங்கள் அனைத்திலும் புகழ்பெற்றிருந்தான். அறநோக்கு ஆன்மாவுடன் கூடிய அவன், தேவர்களின் தலைவனான மற்றொரு இந்திரனைப் போலப் பெருஞ்செல்வம்படைத்தவனாக இருந்தான்.(10)
சுவீரனுக்குப் போரில் வெல்லப்பட முடியாதவனாகவும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும், சுதுர்ஜயன் என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு மகன் இருந்தான்.(11) இந்திரனைப் போன்ற உடலைக் கொண்ட துர்ஜயனுக்கும், நெருப்பின் காந்தியைக் கொண்ட ஒரு மகன் இருந்தான். துரியோதனன் என்ற பெயரைக் கொண்ட அவன் அரச முனிகளில் முதன்மையான பெரும் ஏகாதிபதியாக இருந்தான்.(12) போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவனும், இந்திரனைப் போன்ற வீரத்தைக் கொண்டவனுமான இந்த ஏகாதிபதியின் நாட்டில் இந்திரன் அபரிமிதமான மழையைப் பொழிந்தான்.(13) இந்த மன்னனின் நாடு மற்றும் நகரங்கள் ரத்தினங்கள், கால்நடைகள், பல்வேறு வகைத் தானியங்கள் மற்றும் செல்வங்களுடன் நிறைந்திருந்தன.(14) அவனுடைய நாட்டில் கஞ்சர்கள் யாரும் இல்லை, துன்பத்தால் அல்லது வறுமையால் பீடிக்கப்பட்ட எந்த மனிதனும் இல்லை. பலவீனமான அல்லது நோயால் பீடிக்கப்பட்ட உடல் கொண்ட எந்த மனிதனும் அவனுடைய நாட்டில் இல்லை.(15)
அந்த மன்னன் {துரியோதனன்}, மிகுந்த புத்திமானாகவும், பேச்சில் மென்மையானவனாகவும், பொறாமையற்றவனாகவும், தன் ஆசைகளை அடக்கி ஆள்பவனாகவும், அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனாகவும், கருணை நிறைந்தவனாகவும், ஆற்றல் கொண்டவனாகவும், தற்பெருமையில் ஈடுபடாதவனாகவும் இருந்தான்.(16) அவன் வேள்விகளைச் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும், நுண்ணறிவுமிக்கவனாகவும், பிராமணர்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருந்தான். அவன் ஒருபோதும் பிறரை அவமதிக்காதவனாகவும், ஈகையாளனாகவும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்றவனாகவும் இருந்தான்.(17) ஓ! பாரதா, மங்கலமானவளும், புனிதமானவளும், குளிர்ந்த நீரைக் கொண்டவளுமான நர்மதையெனும் தெய்வீக ஆறானவள், தன் சொந்த இயல்பினோடு {அந்த தெய்வீக வடிவத்தோடு} அவனிடம் வந்தாள்.(18) அவன் அந்த ஆற்றிடம், தாமரைக் கண்களையும், பேரழகையும் கொண்டவளும், சுதர்சனை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மகளைப் பெற்றான்.(19) ஓ! யுதிஷ்டிரா, துரியோதனனின் மகளான அந்தச் சிறந்த கன்னிகையைப் போன்று அதற்கு முன் பெண்குலத்தில் எந்த ஓர் உயிரினமும் அழகாக இருந்ததில்லை.(20)
ஓ! ஏகாதிபதி, அக்னி தேவன், ஒரு பிராமண வடிவில் மன்னனிடம் வந்து, அழகுநிறைந்த இளவரசி சுதர்சனையின் கரத்தை வேண்டினான்.(21) அம்மன்னன் {துரியோதனன்}, ஏழையும், தனக்கு ஒப்பான பதவி இல்லாதவனுமான அந்தப் பிராமணனுக்குத் தன் மகளைக் கொடுக்க விரும்பவில்லை.(22) எனவே அக்னி அவனுடைய பெரும் வேள்வியில் இருந்து மறைந்து போனான்[1].இதயத்தில் துயர் கொண்ட அம்மன்னன் பிராமணர்களை அழைத்து அவர்களிடம்,(22) “சிறப்புவாய்ந்த பிராமணர்களே, தீயோருக்குச் செயப்படும் நன்மை அவர்களது கருத்தில் இருந்து மறைந்து போவது போல அக்னி இவ்வேள்வியில் இருந்து மறைந்து போகும் அளவுக்கு நான் என்ன பாவம் செய்தேன், அல்லது நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள்?(24) உண்மையில், அக்னி மறைந்து போகுமளவுக்கு நாம் செய்த பாவம் நிச்சயம் பெரியதாக இருக்கும். இந்தப் பாவம் உங்களுடையதாகவோ, என்னுடையதாகவோ இருக்க வேண்டும். இக்காரியத்தை முழுமையாக விசாரிப்பீராக” என்று சொன்னான்.(25)
ஓ! பாரதகுல இளவரசர்களில் முதன்மையானவனே, மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள், வாக்கைக் கட்டுப்படுத்தி, அக்னி தேவனின் பாதுகாப்பைக் குவிந்த கவனத்தோடு நாடினார்கள்.(26) கூதிர்காலச் சூரியனைப் போல ஒளிமிக்கவனும், ஆகுதிகளைச் சுமக்கும் தெய்வீக வாகனமுமான அவன், மகிமைபொருந்திய ஒளி சூழ அவர்கள் முன்பு தோன்றினான்.(27)
அப்போது உயர் ஆன்ம அக்னி அந்தச் சிறந்த பிராமணர்களிடம், “நான் எனக்காகவே துரியோதனனின் மகளைக் கேட்டேன்” என்றான்.(28) இதனால் ஆச்சரியமடைந்த பிராமணர்கள் அனைவரும் காலையில் எழுந்து அக்னி தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளை மன்னனிடம் சொன்னார்கள்.(29)
ஞானியான அம்மன்னன், பிரம்மத்தைச் சொல்பவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இதயத்தில் மகிழ்ச்சியடைந்து, “அப்படியே ஆகட்டும்” என்றான். மேலும் அம்மன்னன் சிறப்புமிக்கவனான அக்னிதேவனிடம், “ஓ! அக்னியே, நீ எப்போதும் இங்கே எங்களுடன் இருக்க எண்ணுவாயாக” என்று ஒரு வரத்தை வரதட்சணையாக {கன்யாசுக்லமாக} வேண்டிக் கேட்டான்.(30) தெய்வீக அக்னியும், “அப்படியே ஆகட்டும்” என்று அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்} சொன்னான். இந்தக் காரணத்தினாலேயே இந்த நாள்வரை மாஹிஷ்மதி நாட்டில் அக்னி இருக்கிறான்;(31) தென்திசை வெற்றிப் பயணத்தில் {திக்விஜயத்தில்} சகாதேவனாலும் காணப்பட்டான்.(32) பிறகு மன்னன் தன் மகளைப் புதிய ஆடைகளில் நகைகளுடன் அலங்கரித்து, அந்த உயர் ஆன்ம தேவனுக்குக் கொடுத்தான், அக்னியும், வேள்விகள் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஏற்பதைப் போலவே, இளவரசியான சுதர்சனையைத் தன் மனைவியாக வேத சடங்குகளுடன் ஏற்றுக் கொண்டான்.(33,34) அவளது தோற்றம், அழகு, அருள், பண்பு, உன்னதப் பிறப்பு ஆகியவற்றில் நிறைவடைந்த அக்னி, அவளிடம் வாரிசைப் பெற மனம் கொண்டான். சுதர்சனன் என்ற பெயரைக் கொண்ட மகனை விரைவில் அவளிடம் பெற்றான்.(35,36) சுதர்சனனும், தோற்றத்தில் முழுநிலவைப் போன்ற அழகுடன் இருந்தான். பிள்ளைப்பருவத்திலேயே அவன் உயர்ந்ததும், எப்போதும் நீடிப்பதுமான பிரம்ம ஞானத்தை அடைந்தான்[2].(37)நிருகனின் பாட்டனும், ஓகவான் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னன் இருந்தான். ஓகவதி என்ற பெயரில் ஒரு மகளும், ஓகரதன் என்ற பெயரில் ஒரு மகனும் அவனுக்குப் பிறந்தனர்.(38) மன்னன் ஓகவான், தேவியைப் போன்ற அழகுநிறைந்தவளான ஓகவதி என்ற தன் மகளைக் கல்விமானான சுதர்சனனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.(39) ஓ! மன்னா, சுதர்னன், ஓகவதியுடன் ஓர் இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} வாழ்வுமுறையை நோற்று, குருக்ஷேத்திரத்தில் அவளுடன் சேர்ந்து வாழ்ந்தான்.(40) புத்திமானும், சுடர்மிக்க சக்தி கொண்டவனுமான அந்த இளவரசன் {சுதர்சனன்}, ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையைப் பின்பற்றியபடியே மரணத்தை {யமனை} வெல்லும் நோன்பை நோற்றான்.(41)
ஓ! மன்னா அந்த அக்னிமகன் {சுதர்சனன்}, {தன் மனைவியான} ஓகவதியிடம், “நமது விருந்தோம்பலை நாடுவோருக்கு (அவர்களது விருப்பங்களுக்கு} எதிரான எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யாதே.(42) நீ உன்னையே கொடுக்க வேண்டியிருந்தாலும், விருந்தினர்களை வரவேற்கும் வழிமுறைகளில் எந்த ஐயுணர்வும் கொள்ளாதே[3].(43) ஓ! அழகியே, விருந்தினர்களுக்கு இணங்கும் விருந்தோம்பலைவிட இல்லறத்தாருக்கு உயர்ந்த அறம் வேறேதும் கிடையாது என்பதால் இந்நோன்பே எப்போதும் என் மனத்தில் இருக்கிறது.(44) என் வார்த்தைகளுக்கு உன்னிடம் எந்த அதிகாரமாவது இருந்தால், ஐயமில்லாமல் இஃதை உன் மனத்தில் எப்போதும் கொள்வாயாக.(45) ஓ! பாவமற்றவளே, அருளப்பட்டவளே, நீ என்னை நம்பினால், நான் உன் அருகில் இருந்தாலும், உன்னிடம் இருந்து தொலைவாக இருந்தாலும் ஒருபோதும் விருந்தினரை அவமதிக்காதே” என்றான்.(46)அப்போது ஓகவதி, தன் தலைக்கு மேலே கரங்களைக் குவித்து, “நீர் ஆணையிடும் எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன்” என்று மறுமொழி கூறினாள்.(47)
அப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சுதர்சனனை வெல்ல விரும்பிய மிருத்யு {யமன்}, அவனிடம் தாமதங்களை {அவன் செய்யும் தவறுகளைக்} காண அவனைக் கண்காணிக்கத் தொடங்கினான்.(48)
ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், காட்டில் இருந்து விறகைக் கொண்டுவர அக்னிமகன் {சுதர்சனன்} வெளியே சென்றபோது, அருள்நிறைந்த பிராமணர் ஒருவர் ஓகவதியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விருந்தோம்பலை வேண்டினார்,(49) “ஓ! அழகிய பெண்ணே, இல்லறத்தாருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விருந்தோம்பலெனும் அறத்தில் உனக்கு நம்பிக்கையேதும் இருந்தால், இன்று நீ என்னை விருந்தோம்பல் சடங்குகளுடன் வரவேற்க வேண்டும் என உன்னை வேண்டுகிறேன்” என்றார்.(50)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் புகழைக் கொண்ட அந்த இளவரசி {ஓகவதி}, அந்தப் பிராமணரால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி அவரை வரவேற்றாள்.(51) அவர் அமர்வதற்கு இருக்கையும், கால் கழுவிக்கொள்ள நீரும் கொடுத்த அவள், “உமது காரியம் என்ன? நான் உமக்கு என்ன தர வேண்டும்?” என்று கேட்டாள்.(52)
அதற்கு அந்தப் பிராமணர், “ஓ! அருளப்பட்டவளே, உன் மேனியில் என் காரியம் இருக்கிறது. மனத்தில் எத்தயக்கமுமின்றி அதன்படியே நீ செயல்படுவாயாக.(53) இல்லறத்தாருக்குப் பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் உனக்கு ஏற்புடையனவாக இருந்தால், ஓ! இளவரசியே, உன் மேனியை எனக்குக் கொடுப்பதன் மூலம் என்னை நிறைவு செய்வாயாக” என்றார்.(54)
பல்வேறு பொருட்களைக் கொடுப்பதாக அந்த இளவரசியால் ஆசைகாட்டப்பட்டாலும் அந்தப் பிராமணர் வேறு கொடை எதையும் கேட்காமல் அவளது மேனியையே கேட்டுக் கொண்டிருந்தார்.(55) தீர்மானமாக இருக்கும் அவரைக் கண்ட அந்தப் பெண்மணி, முன்பே தன் கணவனால் கொடுக்கப்பட்ட ஆணைகளை நினைவுகூர்ந்து, வெட்கமடைந்து {அவமானமடைந்தவளாக} அந்தச் சிறந்த பிராமணரிடம் “அப்படியே ஆகட்டும்” என்றாள்.(56) இல்லறத்தாரின் அறத்தை ஈட்ட விரும்பிய தன் கணவனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவள் உற்சாகத்துடன் அந்த மறுபிறப்பாள முனிவரை அணுகினாள்.(57)
அதே வேளையில் விறகு சேகரித்துக் கொண்டு அக்னிமகன் {சுதர்சனன்} தன் இல்லம் திரும்பினான். கடுமையான, இரக்கமில்லாத இயல்புடன் கூடிய மிருத்யுவானவன், அர்ப்பணிப்புமிக்க ஒரு நண்பனுடன் இருப்பது போலவே அவனது அருகிலேயே எப்போதும் இருந்தான்.(58) அந்தப் பாவகனின் {அக்னியின்} மகன் {சுதர்சனன்} தன் ஆசிரமத்திற்குத் திரும்பியதும், ஓகவதியின் பெயர் சொல்லி அழைத்தும் (எந்தப் பதிலையும் அடையாமல்) மீண்டும் மீண்டும், “நீ எங்கே சென்றுவிட்டாய்?” என்று கேட்டான்.(59)
தன் கணவனிடம் அர்ப்பணிப்புமிக்க அந்தக் கற்புடைய பெண்மணி, அந்தப் பிராமணரின் கரங்களில் அகப்பட்டிருந்ததால் தன் கணவனுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.(60) உண்மையில் அந்தக் கற்புமிக்கப் பெண், கறைபட்டவளாகத் தன்னைக் கருதி, வெட்கத்தால் {அவமானத்தால்} பேச்சற்றவளானாள்.(61)
சுதர்சனன் மீண்டும் அவளிடம், “கற்புடைய என் மனைவி எங்கே இருக்கக்கூடும்? அவள் எங்கே சென்றுவிட்டாள்? (அவள் மறைந்ததைவிட) எனக்குப் பெரியது வேறு ஏதும் இல்லை.(62) எளிமையும், வாய்மையும் நிறைந்தவளும், கணவனிடம் அர்ப்பணிப்புமிக்கவளுமான அந்தப் பெண்மணி, ஐயோ, இனிய புன்னகையுடன் ஏன் இன்று என் அழைப்புக்குப் பதில் சொல்லாமல் இருக்கிறாள்?” என்றான்.(63)
அப்போது அந்தக் குடிசையில் இருந்த பிராமணர், சுதர்சனனிடம், “ஓ!பாவகனின் மகனே {சுதர்சனா}, ஒரு பிராமணன் வந்திருக்கிறான்,(64) வரவேற்புக்குரிய பல்வேறு பொருட்களைக் கொண்டு உனது மனைவியான இவளால் ஆசை காட்டப்பட்டாலும், அவன் அவளது மேனியை மட்டுமே விரும்பினான்,(65) இப்போது இந்த அழகிய முகம்படைத்த பெண் உரிய சடங்குகளுடன் என்னை வரவேற்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிவாயாக. இத்தருணத்திற்குத் தகுந்தது எனக் கருதும் எதையும் நீ செய்யலாம்” என்றார்.(66)
இரும்பு தண்டத்துடன் கூடிய மிருத்யுவானவன், அந்த முனிவன் {சுதர்சனன்} தன் உறுதிமொழியில் இருந்து பிறழ்வான் என நினைத்து அவனை அழிப்பதற்காக அக்கணத்தில் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.(67)
சுதர்சனன் அதிர்ச்சியடைந்தாலும், பார்வை, சொல், செயல் அல்லது எண்ணத்தில் உள்ள பொறாமை மற்றும் கோபம் அனைத்தையும் கைவிட்டு,(68) “ஓ! பிராமணரே, நீர் இன்புற்றிருப்பீராக. எனக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓர் இல்லறத்தான் தன் விருந்தினரைக் கௌரவிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(69) இல்லறத்தானைப் பொறுத்தவரையில், தன் விருந்தினருக்குத் தன் இல்லத்தில் இருப்பதை முறையாகக் கொடுத்துக் கௌரவிப்பதில் விளைவதை விடப் பெருந்தகுதி {பெரும்புண்ணியம்} வேறேதும் கிடையாது என்று கல்விமான்கள் சொல்கின்றனர்.(70) என் உயிர், என் மனைவி, மேலும் நான் கொண்டுள்ள உலக உடைமைகள் ஆகிய அனைத்தும் என் விருந்தினர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையே. இதை நான் என் நோன்பாக நோற்கிறேன்.(71) ஓ! பிராமணரே, இம்மொழியை நான் உண்மையில் சொல்வதால், தன்னறிவை {சுயஞானத்தை} நான் அடைவேன்.(72) ஓ! அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே, நெருப்பு, காற்று, பூமி, நீர் மற்றும் வானம் என்ற ஐம்பூதங்களும், மனம், புத்தி, ஆன்மா, காலம், வெளி மற்றும் பத்து புலன்கள்(73) ஆகிய அனைத்தும் மனிதர்களின் உடல்களில் இருந்து, அவர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களை எப்போதும் சாட்சியாகக் காண்கின்றன.(74) இந்த உண்மை இன்று என்னால் சொல்லப்படுகிறது, இதற்காகத் தேவர்கள் எனக்கு அருள் தரட்டும், அல்லது நான் பொய் பேசினால் என்னை அழிக்கட்டும்” என்றான்.(75)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அப்போது அனைத்துத் திசைகளிலும் எதிரொலிக்கும்படி ஒரு குரல், “இஃது உண்மை, இது பொய்யல்ல” என்று அலறியது.(76)அப்போது அந்தப் பிராமணர், பூமியையும், வானத்தையும் சூழ்ந்து எழும் காற்றைப் போலக் குடிசையில் இருந்து வெளியே வந்து,(77) வேதவொலிகளால் மூவலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அறம்சார்ந்த அம்மனிதனின் பெயர் சொல்லி அழைத்து, அவனை வாழ்த்தி,(78) “ஓ! பாவமற்றவனே, நான் தர்மன். மகிமை அனைத்தும் உனக்கே ஆகும். ஓ! வாய்மை விரும்பியே, உன்னைச் சோதிக்கவே நான் இங்கே வந்தேன். நீ அறம் சார்ந்தவன் என்பதை அறிந்து நான் நிறைவடைகிறேன்.(79) உன் தவறுகளைத் தேடி உன்னை எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருந்த மிருத்யுவை நீ வென்றுவிட்டாய்.(80) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, தன் கணவனிடம் அர்ப்பணிப்புள்ள இந்தக் கற்புடைய பெண்ணை, பார்வையால் அவமதிக்கும் திறனும் மூவுலகத்தில் ஒருவனுக்கும் இல்லை எனும்போது அவளது மேனியை {எவனாலும்} தொடவும் முடியாது.(81) உன் நற்குணத்தினாலும், தன் சொந்த கற்பினாலும் இவள் பாதுகாக்கப்பட்டிருக்கிறாள். பெருமைமிக்க இந்தப் பெண்மணி சொல்வதற்கு முரணாக ஏதும் இருக்க முடியாது.(82) பிரம்மம் ஓதுபவளும், கடுந்தவங்களுடன் கூடியவளுமான இவள், உலகத்தின் விடுதலைக்காக {விமோசனத்துக்காக} ஒரு பெரிய ஆறாக வடிவ மாற்றம் பெறுவாள்.(83) நீ உனது சொந்த உடலுடன் அனைத்து உலகங்களையும் அடைவாய், மேலும் யோக அறிவியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இவளது உடலின் ஒரு பாதி உன்னைப் பின்தொடரும், மறுபாதியானது ஓகவதி என்று கொண்டாடப்படும் ஆறாக மாறும்[4].(84) தவங்களின் மூலம் அடையப்படும் அனைத்து உலகங்களையும் நீ இவளுடன் சேர்ந்து அடைவாய்.(85) திரும்பி வராத நித்தியமாக நீடித்திருக்கும் உலகங்களை நீ இந்தத் திரள் உடலுடனே அடைவாய்.(86) நீ மரணத்தை வென்றாய், உயர்ந்த இன்ப நிலைகள் அனைத்தையும் அடைந்தாய், உன் (மனத்தின்) சக்தியால் எண்ணத்தின் வேகத்தை அடைந்து, ஐம்பூதங்களின் சக்திக்கு மேலாக எழுந்திருக்கிறாய்.(87) ஓ! அறம்சார்ந்த மனிதர்களின் இளரவசே, இவ்வாறு ஓர் இல்லறத்தானின் கடமைகளைப் பின்பற்றியதன் மூலம் நீ உன் ஆசைகள், விருப்பங்கள், கோபம் ஆகியவற்றை வென்றிருக்கிறாய், இந்த இளவரசியோ உனக்குத் தொண்டாற்றி, துன்பம், ஆசை, மாயை, பகைமை, மனத்தளர்ச்சி ஆகியவற்றை வென்றிருக்கிறாள்” என்றான் {தர்மன்}”.(88)(ஓகவதி என்பது, சரஸ்வதி ஆற்றின் கிளை ஆறாகும்–குருக்ஷேத்திரத்தின் அருகில் தென்படுவதுதான் ஓகவதியாறு தோன்றுமிடம். சரஸ்வதியின் மறைவோடு, இந்தக் கிளையாறும் மறைந்திருக்க வேண்டும்.)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது (தேவர்களின் தலைவனான) மகிமைபொருந்திய வாசவன், ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட ஓர் அழகிய தேரைச் செலுத்திக் கொண்டு அந்தப் பிராமணனை {சுதர்சனனை} அணுகினான்.(89) மரணம், ஆன்மா, அனைத்து உலகங்கள், அனைத்துப் பூதங்கள், புத்தி, மனம், காலம், வெளி, ஆசை, கோபம் ஆகிய அனைத்தும் வெல்லப்பட்டன.(90) எனவே, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓர் இல்லறத்தானுக்கு விருந்தினரை விட உயர்ந்த தெய்வீகம் வேறெதுவும் இல்லை என்பதை மனத்தில் தாங்குவாயாக.(91) கௌரவிக்கப்பட்ட ஒரு விருந்தினருடைய அருளானது, ஆயிரம் வேள்விகளின் தகுதியைவிட நன்மைமிக்கது என்று கல்விமான்களால் சொல்லப்படுகிறது.(92) தகுதிவாய்ந்த விருந்தினர் ஒருவன் ஓர் இல்லறத்தானின் விருந்தோம்பலை நாடும்போது, அவனால் கௌரவிக்கப்படவில்லையெனில் அவனது புண்ணியங்கள் அனைத்தையும் (தன்னோடு) எடுத்துக் கொண்டு (பதிலுக்கு) தன் பாவங்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுக்கிறான்.(93) என் மகனே {யுதிஷ்டிரனே}, ஓர் இல்லறத்தானால் எவ்வாறு மரணம் வெல்லப்பட்டது என்ற இந்தச் சிறந்த கதையை இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(94) (கேட்போருக்கு) இச்சிறந்த கதையைச் சொல்வது, மகிமை, புகழ் மற்றும் நீண்டவாழ்நாள் {நீண்ட ஆயுள்} ஆகியவற்றைக் கொடுக்கும். உலகம் சார்ந்த செழிப்பை நாடும் மனிதன், அனைத்துத் தீமைகளையும் விலக்குவதில் இது திறன்மிக்கது எனக் கருத வேண்டும்.(95) ஓ! பாரதா, இந்தச் சுதர்சனனின் வாழ்க்கைக் கதையைத் தினமும் உரைக்கும் மனிதன் அருள் உலகங்களை அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(96)
விஷ்வாமித்ரர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 03-அடைதற்கரிதான பிராமணத் தன்மையானது க்ஷத்திரியரான விஷ்வாமித்ரரால் எவ்வாறு அடையப்பட்டது என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்…
[1]யுதிஷ்டிரன், “ஓ! இளவரசரே {பீஷ்மரே} பிராமணத்தன்மையானது வேறு மூன்று வர்ணங்களால் (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோரால்) அடைவதற்கு மிக அரிதானது என்றால், ஓ! மன்னா, உயர் ஆன்ம விஷ்வாமித்ரர், (பிறவியால்) ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமணத் தன்மையை அடைந்தது எவ்வாறு? ஓ! ஐயா, இதை நான் அறிய விரும்புகிறேன். எனவே இக்காரியம் குறித்த உண்மையை எனக்குச் சொல்வீராக.(1,2) ஓ! ஐயா, அந்தப் பலமிக்க மனிதர் தன் தவத்தகுதிகளின் மூலம் உயர் ஆன்ம வசிஷ்டரின் நூறு மகன்களை ஒரு கணத்தில் அழித்துவிட்டார்.(3) அவர் கோப வசத்தில் இருந்தபோது, எண்ணற்ற தீய ஆவிகளையும், வலிமையும், வீரமும் கொண்டவர்களையும், காலனுக்கு ஒப்பானவர்களுமான ராட்சர்களையும் படைத்தார்.(4) நூற்றுக்கணக்கான மறுபிறப்பாள தவசிகளைக் கொண்டதும், பெருமையும், கல்வித்தகுதியும் கொண்டதும், பிராமணர்களால் போற்றிப் புகழப்படுவதுமான குசிக குலமானது இந்த மனிதர்களின் உலகில் அவராலேயே உண்டானது.(5)ரிசீகரின் மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுனச்சேபர், அம்பரீஷனின் பெரும் வேள்வியில் ஒரு விலங்காகக் கொல்லப்பட்ட வேண்டியவராக இருந்தாலும் விஷ்வாமித்ரரின் மூலம் விடுவிக்கப்பட்டார்.(6) ஹரிஷ்சந்திரன் {ஹரிச்சந்திரன்} வேள்வியில் தேவர்களை நிறைவு செய்ததால், அவர் {சுனச்சேபர்} ஞானியான விஷ்வாமித்ரரின் மகனானார்.(7) அண்ணனான தேவவிரதனை மதிக்காததால், அவனது ஐம்பது தம்பிகளும் சண்டார்களாகப் போகும்படி சபிக்கப்பட்டனர்.(8) இக்ஷ்வாகுவின் மகனான திரிசங்கு, தன் நண்பர்களால் கைவிடப்பட்டு, கீழ் உலகங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தபோது, விஷ்வாமித்ரரின் விருப்பப்படி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.(9) விஷ்வாமித்ரர், கௌசிகி என்ற பெயரைக் கொண்டதும், தெய்வீக முனிவர்களால் அடிக்கடி நாடப்படுவதுமான ஒரு பெரும் ஆற்றை {தன் தங்கையாகக்} கொண்டிருந்தார். அந்தப் புனிதமான, மங்கலமான ஆறானது, தேவர்களாலும், மறுபிறப்பாள முனிவர்களாலும் அடிக்கடி நாடப்பட்டது.(10)
புகழ்பெற்ற தேவகன்னிகையும், அழகிய கைவளைகளைக் கொண்டவளுமான ரம்பை, அவரது தவங்களுக்கு இடையூறு செய்ததால் சபிக்கப்பட்ட ஒரு பாறையாகச் சமைக்கப்பட்டாள்.(11) மகிமைபொருந்திய வசிஷ்டர், விஷ்வாமித்ரரின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் பழங்காலத்தில் தன்னைக் கொடிகளால் சுற்றிக் கொண்டு ஆற்றில் விழுந்து, பிறகு கட்டுகளில் இருந்து விடுபட்டு வெளியே வந்தார்.(12) பெரியதும், புனிதமானதுமான அந்த ஆறு இதன் விளைவால் அதுமுதல் விபாசை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[2].(13) அவர் {விஷ்வாமித்ரர்} மகிமை பொருந்தியவனும், பலமிக்கவனுமான இந்திரனை வேண்டியதால், அவரிடம் நிறைவடைந்த அவன் அவரைச் சாபத்தில் இருந்து விடுவித்தான்[3]. அவர் ஆகாயத்தின் வட பக்கத்தில் இருந்து கொண்டு, ஏழு மறுபிறப்பாள முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்} சார்ந்து உத்தானபாதன் மகனான துருவனுக்கும் நடுவில் எப்போதும் ஒளியைப் பொழிந்து கொண்டிருக்கிறார்.(14,15)இவையும், இன்னும் பலவும் அவரது சாதனைகளாக இருக்கின்றன. ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே, இவை ஒரு க்ஷத்திரியரால் செய்யப்பட்டிருப்பதால் எனக்கு ஆவல் மேலிடுகிறது.(16) எனவே, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இக்காரியத்தை எனக்கு உண்மையாக விளக்குவீராக. தன் உடற்கட்டைக் கைவிட்டு, சதையாலான மற்றொரு வசிப்பிடத்தைக் கொள்ளாமல் அவரால் எவ்வாறு பிராமணராக முடிந்தது?(17) ஓ! ஐயா, மதங்கனின் கதையை எனக்குச் சொன்னதைப் போலவே இக்காரியத்தை உண்மையில் விளக்குவீராக[4].(18) மதங்கன் (தவங்கள் அனைத்தையும் செய்திருந்தாலும்) சண்டாளனாகப் பிறந்தவனாதலால் பிராமணத்தன்மையை அடைய முடியாதபோது, இந்த மனிதனால் {விஷ்வாமித்ரரால்} எவ்வாறு பிராமண நிலையை அடைய முடிந்தது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(19)
விஷ்வாமித்ர குலம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 04-விஷ்வாமித்ரரின் பிறப்பு; அடைதற்கரிதான பிராமணத் தன்மையை அவர் அடைந்த காரணம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, பழங்காலத்தில் விஷ்வாமித்ரர் எவ்வாறு பிராமணர் மற்றும் பிராமண முனிவர் என்ற நிலைகளை அடைந்தார் என்பதை விளக்கமாகக் கேட்பாயாக.(1) ஓ! பாரத வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, பாரதக் குலத்தில் பல வேள்விகளைச் செய்தவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனுமான ஆஜமீடன்[1] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான்.(2) அவனது மகன் ஜன்னு என்ற பெயர் கொண்ட பெரும் மன்னன் ஆவான். உயர்ந்த மனம் கொண்ட இந்த இளவரசனின் மகளாகக் கங்கை இருந்தாள்.(3) பெரும் புகழ்பெற்றவனும், தந்தைக்கு இணையான அறவோனுமான சிந்துத்வீபன் இந்த இளவரசனின் {ஜன்னுவின்} மகனாக இருந்தான். சிந்துத்வீபனிடமிருந்து பெரும் அரசமுனியான பலாகாஸ்வன் உண்டானான்.(4) வல்லபன் என்ற பெயரைக் கொண்ட அவனுடைய மகன் உடல் படைத்த இரண்டாவது தர்மனைப் போல இருந்தான். அவனது மகனான குசிகன், ஆயிரங்கண் இந்திரனைப் போல மகிமையுடன் பிரகாசித்தான்.(5)(சந்திரன் – புதன் – ப்ரூரவஸ் – அமாவசு – பீமன் – காஞ்சனன் – கதோத்திரன்(ஆஜமீடன்) – ஜன்னு – சுமந்து(சிந்துத்வீபன்) – அசகன் – பலகாஸ்வன் – குசன் (வல்லபன்) – குசநாபன் (குசிகன்) – காதி – கௌசிகன்(விசுவாமித்திரர்))குசிகனின் மகனும், சிறப்புமிக்கவனுமான மன்னன் காதி, பிள்ளையற்றவனாக இருந்ததால், தனக்கு ஒரு மகன் பிறக்க விரும்பி காட்டுக்குச் சென்றான்.(6) அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு ஒரு மகள் பிறந்தாள். சத்தியவதி என்ற பெயரால் அழைக்கப்பட்ட அவள் பூமியில் ஒப்பற்ற அழகுடையவளாக இருந்தாள்.(7) பிருகு குலத்தவரும், சியவனரின் சிறப்புமிக்க மகனும், கடுந்தவங்களுடன் கூடியவரும், ரிசீகர் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவர் இந்தப் பெண்ணின் கரத்தை வேண்டினார்.(8) எதிரிகளை அழிப்பவனான காதி, உயர் ஆன்ம ரிசீகரை ஏழையாக நினைத்து தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்காமல் இருந்தான்.(9) பின்னவர் {ரிசீகர்} இவ்வாறு விடைகொடுத்தனுப்பப்பட்டுத் திரும்பிச் செல்கையில் அந்தச் சிறப்புமிக்க மன்னன் {காதி} அவரிடம் {ரிசீகரிடம்}, “நீர் எனக்கு மணக்கொடையளித்தால் {வரதட்சணை அளித்தால்} என் மகளை உமது மனைவியாக அடையலாம்” என்றான்.(10)
ரிசீகர் {காதியிடம்}, “ஓ! மன்னா, உன் மகளின் கரத்திற்காக நான் என்ன மணக்கொடையை அளிக்க வேண்டும்? தயக்கமேதும் இல்லாமல் இக்காரியத்தை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(11)
காதி, “ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, காற்றின் வேகம் கொண்டவையும், சந்திரக்கதிரின் வண்ணத்தைக் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஓராயிரம் குதிரைகளை எனக்குக் கொடுப்பீராக” என்றான்”.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிருகு குலத்தில் முதன்மையானவரான அந்த வலிமைமிக்கச் சியவனரின் மகன் {ரிசீகர்}, அதிதியின் மகனும், நீர்நிலைகள் அனைத்தின் தலைவனுமான வருண தேவனிடம்,(13) “ஓ! தேவர்களில் சிறந்தவனே, காற்றின் வேகம் கொண்டவையும், சந்திரனின் பிரகாசத்தையே நிறமாகக் கொண்டவையும, ஒரு காது கருப்பாக இருப்பவையுமான ஓராயிரம் குதிரைகளைக் கொடுக்க வேண்டுமென உன்னை நான் வேண்டுகிறேன்” என்று வேண்டினார்.(14)அதிதியின் மகனான வருண தேவன், சிறப்பானவரான அந்தப் பிருகு குலக்கொழுந்திடம், “அப்படியே ஆகட்டும். நீர் எங்கே தேடினாலும் (உமது முன்னிலையில்) குதிரைகள் எழும்” என்றான்.(15)
ரிசீகர் அவற்றைக் குறித்து நினைத்த உடனேயே உயர்வகையைச் சேர்ந்தவையும், சந்திரனின் காந்தி மக்கிய நிறத்தையும் கொண்ட ஆயிரம் குதிரைகள் கங்கையின் நீரில் இருந்து எழுந்தன.(16) கான்யகுப்ஜத்திற்கு அருகில் புனிதமான கங்கைக்கரையில் அந்தக் குதிரைகள் தோன்றியதன் விளைவால் இன்றும் மனிதர்களுக்கு மத்தியில் அவ்விடம் அஸ்வதீர்த்தம் என்ற பெயரில் புகழ்பெற்றிருக்கிறது.(17) அப்போது தவசிகளில் சிறந்தவரான ரிசீகர் மனத்தில் நிறைவடைந்து, காதியிடம் மணக்கொடையாக அந்தச் சிறந்த ஆயிரம் குதிரைகளையும் கொடுத்தார்.(18) மன்னன் காதி, ஆச்சரியத்தால் நிறைந்து, சபிக்கப்படுவோமென அஞ்சி தன் மகளை நகைகளால் அலங்கரித்து அந்தப் பிருகு மகனுக்கு {ரிசீகருக்குக்} கொடுத்தான்.(19) அந்த முதன்மையான மறுபிறப்பாள முனிவர், திருமணத்தில் பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளின் படி அவளது கரத்தை ஏற்றார். அந்த இளவரசியும் தன்னை அந்தப் பிராமணரின் மனைவியாகக் கண்டு பெரும் நிறைவையடைந்தாள்.(20)
ஓ! பாரதா, அவளது ஒழுக்கத்தில் பெரும் நிறைவை அடைந்த அந்த மறுபிறப்பாள முனிவர், அவளுக்கு ஒரு வரத்தை அருளும் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.(21) ஓ! சிறப்புமிக்க மன்னா, அந்த இளவரசி {சத்தியவதி} இக்காரியத்தைத் தன் தாய்க்குச் சொன்னாள். அந்தத் தாய், தன் முன்பு கீழ் நோக்கிய கண்களுடன் {தலை குணிந்து} நின்றிருந்த தன் மகளிடம்,(22) “ஓ! என் மகளே, உன் கணவனிடம் எனக்கும் ஓர் உதிவியைப் பெறுவதே உனக்குத் தகும். கடுந்தவங்களுடன் கூடிய அந்தத் தவசி எனக்கு ஒரு மகன் பிறப்பதற்குரிய வரத்தை அருள வல்லவர்” என்றாள்.(23)
ஓ! மன்னா, அப்போது அந்த இளவரசி {சத்தியவதி} தன் கணவரான ரிசீகரிடம் உடனே திரும்பி தன் தாயின் விருப்பத்தைச் சொன்னாள்.(24) ரிசீகர், “ஓ! அருளப்பட்டவளே, என் உதவியால் அனைத்து நற்குணமும் கொண்ட ஒரு மகனை அவள் விரைவில் பெறுவாள். உன் வேண்டுகோள் நிறைவேறும்.(25) வலிமைமிக்கவனும், மகிமைமிக்கவனும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவனும், என் குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான ஒரு மகன் உனக்குப் பிறப்பான். இதை நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்.(26) நீங்கள் இருவரும் உங்கள் பருவ காலத்தில் நீராடிய {ருது ஸ்நானம் முடிந்த} பிறகு, ஓ! சிறந்த பெண்ணே, அவள் அரச மரத்தையும், நீ அத்தி மரத்தையும் தழுவினால் உங்கள் விரும்பத்திற்குரிய பொருளை நீங்கள் அடைவீர்கள்.(27) ஓ! இனிய புன்னகை கொண்ட பெண்ணே, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட இந்த வேள்விக் காணிக்கைகள் (சாரு) இரண்டை நீங்கள் இருவரும் உண்டால் (நீங்கள் விரும்பியபடியே) மகன்களை அடைவீர்கள்” என்றார்.(28)
இதனால் இதயத்தில் மகிழ்ச்சியடைந்த சத்தியவதி, ரிசீகரால் சொல்லப்பட்ட அனைத்தையும், சாரு {ஹவிஸ்}[2] உருண்டைகள் இரண்டைக் குறித்தும் தன் தாய்க்குச் சொன்னாள். அந்தத் தாய் தன் மகளான சத்தியவதியிடம், “ஓ! மகளே, உன் கணவனை விட நான் உன்னால் பெரிதும் மதிக்கப்படத் தகுந்தவள் என்பதைக் கருதி என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக.(30) மந்திரங்களால் புனிதமாக்கப்பட்டு உன் கணவனால் உனக்குக் கொடுக்கப்பட்ட சாருவை {ஹவிஸை} எனக்குக் கொடுப்பாயாக, மேலும் எனக்குப் பரிந்துரைக்கப்பட்டதை நீ எடுத்துக் கொள்வாயாக.(31) ஓ! பழியற்ற குணத்துடன் கூடிய இனிய புன்னகை கொண்டவளே, என் வார்த்தைக்கு உன்னிடம் மதிப்பிருந்தால், நமக்காக நிர்ணயிக்கப்பட்ட மரங்களையும் நாம் மாற்றிக் கொள்வோம்.(32) தனக்குச் சிறந்தவனும், களங்கமற்றவனுமான மகன் வேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புவார்கள். மகிமை பொருந்திய ரிசீகரும் இக்காரியத்தில் இவ்வாறே செய்திருக்க வேண்டும். அது முடிவில் தெரியப் போகிறது.(33) ஓ! அழகிய பெண்ணே, இக்காரணத்தால் என் இதயம் உன் சாருவையும், உன் மரத்தையும் கொள்ள விரும்புகிறது. நீயும் உனக்குச் சிறந்த தம்பியை அடைவாய் என்பதைக் கருத்தில் கொள்வாயாக” என்றாள்.(34)இவ்வாறு, ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தாய், மகளான சத்யவதி ஆகிய இருவரும் கருவுற்றனர்.(35) பிருகுவின் சிறந்த வழித்தோன்றலான அந்தப் பெரும் முனிவர் {ரிசீகர்}, தமது மனைவி கருவுற்றதை அறிந்து, இதயத்தில் நிறைவடைந்து, அவளிடம் {சத்யவதியிடம்},(36) “ஓ! சிறந்த பெண்ணே, சாருவை மாற்றிக் கொண்டதில் நீ நல்லது செய்யவில்லை என்பது விரைவில் வெளிப்படையாகும். நீ மரங்களை மாற்றிக் கொண்டாய் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.(37) உன்னுடைய சாருவில் மொத்தமாகச் சேகரிக்கப்பட்ட பிரம்ம சக்தியையும், உன் தாய்க்குரிய சாருவில் க்ஷத்திரிய சக்தியையும் வைத்திருந்தேன்.(38) நீ மூவுலகங்களிலும் புகழத்தக்க நற்குணங்களைக் கொண்ட ஒரு பிராமணனை ஈன்றெடுக்கும்படியும், அவள் (உன் தாய்) ஒரு சிறந்த க்ஷத்திரியனை ஈன்றெடுக்கும்படியும் விதித்திருந்தேன்.(39) ஆனால், ஓ! சிறந்த பெண்ணே, நீ (சாருவை) மாற்றிவிட்டதால் உன் தாய் சிறந்த பிராமணனையும், செய்கையில் கொடூரம் நிறைந்த க்ஷத்திரியனை நீயும் ஈன்றெடுப்பீர்கள். ஓ! பெண்ணே, உன் தாய் மீது கொண்ட பாசத்தால் நீ செய்தது நல்லதல்ல” எனறார்.(41)
ஓ! மன்னா, சிறந்த பெண்மணியான அந்தச் சத்தியவதி இதைக் கேட்டுக் கவலையடைந்து, இரண்டாக ஒடிந்துவிழும் அழகிய கொடியைப் போலத் தரையில் விழுந்தாள்.(42) புலனுணர்வு மீண்டு தன் தலைவனுக்குத் தலைவணங்கிய அந்தக் காதியின் மகள், பிருகு குலத்தில் முதன்மையானவரான தன் கணவரிடம்,(43) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவரே, உம்மிடம் மன்றாடும் உமது மனைவிடம் கருணை கொண்டு, எனக்கு க்ஷத்திரிய மகன் பிறக்காமல் இருக்க வகைச் செய்வீராக.(44) ஓ! பிராமணரே, உமக்கு விருப்பமிருந்தால் என் மகன் அவ்வாறில்லாமல், என் பேரன் தன் கொடூரச் செயல்களுக்குப் புகழ்பெற்றவனாக இருக்கட்டும். நீர் எனக்கு இந்த உதவியைச் செய்வீராக” என்றாள்.(45)
ஓ! மன்னா, கடுந்தவங்களைக் கொண்ட அந்த மனிதர், தம் மனைவியிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னார். அதன் பிறகு அவள் ஜமதக்னி என்ற பெயரில் அருள்நிறைந்த ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(46) காதியின் கொண்டாடப்பட்ட மனைவியும், அந்த முனிவரின் {ரிசீகரின்} அருளால் பிரம்ம ஞானத்தை அறிந்த மறுபிறப்பாள முனி விஷ்வாமித்ரரை ஈனறெடுத்தாள்.(47) பெரும் அர்ப்பணிப்பணிப்பைக் கொண்டிருந்த விஷ்வாமித்ரர் ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமண நிலையை அடைந்து, ஒரு பிராமணக் குலத்தையே உண்டாக்கியவரானார்.(48) அவரது மகன்கள், கடுந்தவங்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், வேதங்களில் கல்விமான்களும், பல கோத்ரங்களை உண்டாக்கியவர்களுமான பல பிராமணக் குலங்களின் உயர் ஆன்ம மூதாதையர்களாக இருந்தனர்.(49)
புகழத்தக்க மதுச்சந்தர், வலிமைமிக்கத் தேவராதர், அக்ஷீணர், சகுந்தர், பப்ரு, காலபதன்,(50) கொண்டாடப்பட்ட யாஜ்ஞவல்க்யர், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட ஸ்தூணர், உலூகர், முத்கலர் {யமதூதர்}, தவசி ஸைந்தவயானர்,(51) சிறப்புமிக்கப் பல்குஜங்கர் {பர்ணஜங்கர்}, பெரும் முனிவர் காலவர், ருசி, கொண்டாடப்பட்ட வஜ்ரர், ஸாலங்காயனர்,(52) லீலாத்யர், நாரதர், கூர்ச்சாமுகர் என்ற பெயரில் அறியப்பட்டவர், வாஹுலி {வாதுலி}, முஸலர், வக்ஷோக்ரீவர்,(53) ஆங்க்ரிகர், நைகத்ருக், சிலாயூபர், சிதர் {ஸிதர்}, சுசி, சக்ரகர், மாருதந்தவ்யர், வாதக்னர், அஸ்வலாயனர்,(54) ஸ்யாமாயனர், கார்க்யர், ஜாபாலி, ஸுஸ்ருதர், காரீஷி, ஸம்ச்ருத்யர், பர பௌரவர், தந்து,(55) பெருந்தவசி கபிலர், தாடகாயனர், உபகஹனர், ஆஸுராயணர், மார்கமர் {மார்த்தர்}, ஹிரண்யாக்ஷர், ஜங்காரி, பாப்ரவாயணி, ஸூதி {பூதி}, விபூதி, ஸூதர், ஸூரக்ருத்,(56) ஆராணி {அராலி}, நாசிகர், சாம்பேயர், உஜ்ஜயனர், நவதந்து, பகநகர், ஸேயனர், யதி,(57) அம்போருஹர் {அம்போருதர்}, அமத்யஸின் {சாருமத்ஸ்யர்}, சீரிஷின், கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேக்ஷின், பெரும் முனிவர் நாரதி(58) ஆகிய முனிவர்கள் அனைவரும் விஷ்வாமித்ரரின் மகன்களாகவும், பிரம்மஞானத்தை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.
ஓ! மன்னன் யுதிஷ்டிரா, ஓ! பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனே, உயர்ந்த தவமும், அர்ப்பணிப்பும் மிக்க விஷ்வாமித்ரர் (பரம்பரை வழியில்) ஒரு க்ஷத்திரியராக இருந்தாலும்,(59) ரிசீகரால் (சாருவில்) உயர்ந்த பிரம்ம சக்தி இடப்பட்டதால் ஒரு பிராமணரானார். சூரியன், சந்திரன், அக்னி தேவன் ஆகியோரின் சக்திகளைக் கொண்ட விஷ்வாமித்ரர் பிறந்த கதையை உனக்கு விளக்கமாகச் சொல்லிவிட்டேன்.(61) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உனக்கு வேறு எந்தக் காரியத்தில் ஐயம் இருந்தாலும், எனக்கு அறியச் செய்வாயாக, நான் அவற்றைப் போக்குவேன்” என்றார் {பீஷ்மர்}.(62)
இந்திரனும் கிளியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 05-கருணை மற்றும் பக்தியின் சிறப்புகளை விளக்குவதற்காக இந்திரனுக்கும், ஒரு கிளிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அற உண்மைகளை அறிந்தவரே, கருணையின் தகுதிகளையும் {சிறப்புகளையும்}, பக்திமான்களின் பண்புகளையும் {மேன்மைகளையும்} நான் கேட்க விரும்புகிறேன். ஓ! ஐயா, எனக்கு அவற்றை விளக்குவீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, வாசவன் {இந்திரன்} மற்றும் உயர்ந்த மனம் படைத்த சுகனின் {கிளியின்} கதை அடங்கிய இந்தப் பண்டைய புராணம் மேற்கோளாகக் குறிப்பிடப்படுகிறது.(2) காசி மன்னனின் ஆட்சிப்பகுதிகளில், ஒரு வேடன் நஞ்சு தோய்த்த கணைகளை எடுத்துக் கொண்டு, தன் கிராமத்திலிருந்து மான்களைத் தேடி வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(3) ஒரு பெருங்காட்டில் தேடுதல் வேட்டையில் இருந்தபோது, அருகில் இருக்கும் மான்களைக் கண்ட அவன், இறைச்சியை அடையும் விருப்பத்தில் அவற்றில் ஒன்றின் மீது தன் கணையை ஏவினான்.(4) மானின் அழிவுக்காக ஏவப்பட்ட, தடுக்கப்பட முடியாத கரங்களைக் கொண்ட அந்த வேடனின் கணையானது இலக்கு தவறி அந்தக் காட்டில் ஒரு பெரும் மரத்தைத் துளைத்தது.(5)
கடும் நஞ்சில் தோய்க்கப்பட்ட அந்தக் கணையால் பலமாகத் துளைக்கப்பட்ட அந்த மரம், இலைகளையும், கனிகளையும் உதிர்த்து உலர்ந்து போனது.(6) அந்த மரம் உலர்ந்து போனாலும், அதன் பொந்தில் தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து வந்த ஒரு கிளி, அந்தக் கானகத் தலைவன் {மரத்தின்} மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் கூட்டை விட்டு அகலாமல் இருந்தது.(7) நன்றியறிந்ததும், அறம்சார்ந்ததுமான அந்தக் கிளி, தானும் அம்மரத்துடன் சேர்ந்து அசைவில்லாமலும் {வெளியே செல்லாமலும்}, உணவில்லாமலும், அமைதியாகவும், துன்பத்துடனும் உலர்ந்து போனது.(8)
பாகனைக் வென்றவன் {இந்திரன்}, உயர் ஆன்மா கொண்டதும், பெரும் இதயம் படைத்ததுமான அந்தப் பறவை இவ்வாறு இன்பதுன்பங்களின் ஆதிக்கத்தில் இயல்புக்கு மீறிய உறுதியுடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(9) சக்ரனின் {இந்திரனின்} மனத்தில் இந்த எண்ணம் எழுந்தது, “இழிந்த விலங்கு பிறவிக்குச் சாத்தியமில்லாத மானுடத்தன்மை வாய்ந்த இந்தத் தாராள உணர்வு இப்பறவைக்கு எவ்வாறு வாய்த்தது?.(10) உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று அன்பையும், தாராள உணர்வையும் வெளிப்படுத்துவதைக் காண முடிவதால் தற்செயலான இக்காரியத்தில் ஆச்சரியமில்லைதான்” {என்று இந்திரன் நினைத்தான்}.(11)
சக்ரன் {இந்திரன்}, ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்றுப் பூமிக்கு வந்து அந்தப் பறவையிடம்,(12) “ஓ! சுகா, ஓ! பறவைகளில் சிறந்தவனே, தக்ஷனின் பேத்தி (சுகி), (உன்னைத் தன் வாரிசாகப் பெற்றதால்) அருளடைந்தவளானாள். இந்த உலர்ந்த மரத்தை விட்டு நீ என்ன காரணத்தினால் விலகவில்லை?” என்று கேட்டான்.(13)
இவ்வாறு கேட்கப்பட்ட சுகன், அவனுக்குத் தலைவணங்கி, “ஓ! தேவர்களின் தலைவா, என் கடுந்தவங்களின் தகுதியால் நான் உன்னை அடையாளம் கண்டேன். உனக்கு நல்வரவு” என்று மறுமொழி கூறினான்.(14)
ஆயிரங்கண் தேவன் {இந்திரன்}, “நன்று, நன்று” என்று சொல்லி ஆச்சரியமடைந்து தன் மனத்தினுள், “இவன் பெற்றிருக்கும் அறிவு எவ்வளவு ஆச்சரியகரமானது” என்று புகழ்ந்தான்.(15) அந்தக் கிளியானவன் உயர்ந்த நன்னடத்தையும், செயற்தகுதியும் கொண்டவன் என்பதை அறிந்தும், ’அம்மரத்தை விட்டு அவன் அகலாமல் இருக்கும் பற்றுக்கான காரணமென்ன?’ என்று விசாரித்து,(16) “இந்த மரம் உலர்ந்து விட்டது, இலைகளும், கனிகளுமற்றதாக இருக்கிறது, மேலும் பறவைகளின் புகலிடமாகும் தகுதி இதற்கில்லை. இன்னும் நீ ஏன் இதில் தொற்றிக் கொண்டிருக்கிறாய்? இந்தக் கானகம் பெரியதாகும்,(17) மேலும் இதய நிறைவுடன் நீ விரும்பித் தேர்ந்தெடுக்கும் வகையில் இலைகள் அடர்ந்த பொந்துகளைக் கொண்ட எண்ணற்ற அழகிய மரங்கள் இக்காட்டில் இருக்கின்றன.(18) ஓ! பொறுமைசாலியே, உன் ஞானத்தின் மூலம் பகுத்தறிந்து, இறந்ததும், பயனற்றதும், இலைகள் அனைத்தும் உதிர்ந்ததும், இனியும் எந்நன்மையும் கொடுக்க இயலாததுமான இந்தப் பழைய மரத்தைக் கைவிடுவாயாக” என்றான் {இந்திரன்}”.(19)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறம் சார்ந்த சுகன் {கிளி}, சக்ரனின் {இந்திரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, ஆழமான பெருமூச்சுவிட்டபடியே, கவலையுடன்,(20) “ஓ! சச்சியின் கணவா {இந்திரா}, தேவர்களின் தலைவா, தேவர்களின் விதிகளுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். நீ கேட்ட கேள்வி தொடர்புடைய பொருளுக்கான காரணத்தைக் கேட்பாயாக.(21) இந்த மரத்திற்குள்தான் நான் பிறந்தேன், என் குணத்தின் நல்லியல்புகள் அனைத்தையும் நான் இங்கேயே அடைந்தேன். குஞ்சாக இருந்த போது, என் பகைவர்களின் தாக்குதலில் இருந்து இந்த மரத்தில்தான் நான் பாதுகாக்கப்பட்டேன்.(22) ஓ! பாவமற்றவனே, அன்புடையவனான நீ, என் வாழ்வொழுக்கக் கோட்பாட்டில் இருந்து என்னை ஏன் வழுவச் செய்கிறாய்? நான் கருணை நிறைந்தவனாகவும், அறநோக்கத்தில் அர்ப்பணிப்புள்ளவனாகவும் {பக்தியுடனும்}, ஒழுக்கத்தில் உறுதியானவனாகவும் இருக்கிறேன்.(23) நல்லோருக்கு மத்தியில் அன்பு மனப்பான்மையே பெரும் அறச்சோதனை, இதே கருணையும், {மனிதாபிமானம் சார்ந்த} இரக்கவுணர்வும்தான் அறவோருக்கான வற்றாத இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகும்.(24) அறத்தில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தேவர்கள் அனைவரும் உன்னிடமே கேட்கின்றனர், ஓ! தலைவா, இந்தக் காரணத்தினாலேயே அவர்கள் அனைவருக்கும் மேலாக அரசுபுரியும் நிலையில் நீ நிறுத்தப்பட்டிருக்கிறாய்.(25) ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, இம்மரத்தைக் கைவிடுமாறு எனக்கு நீ அறிவுரை கூறுவது உனக்குத் தகாது. நல்லது செய்ய இயன்ற போது, இஃது {இம்மரம்} என் வாழ்வை ஆதரித்தது. இப்போது என்னால் எவ்வாறு இதைக் கைவிட முடியும்?” என்று அவனிடம் {இந்திரனிடம்} மறுமொழி கூறினான்.(26)
பாகனைக் கொன்றவனான அந்த அறம்சார்ந்தவன் {இந்திரன்}, நற்பொருள் கொண்ட அந்தக் கிளியின் வார்த்தைகளில் நிறைவடைந்து, அவனிடம் {அந்தக் கிளியிடம்}, “இரக்கமும், கருணையும் கொண்ட உன் மனோநிலையில் நான் நிறைவடைந்திருக்கிறேன்.(27) என்னிடம் இருந்து ஒரு வரத்தைக் கேட்பாயாக” என்றான்.
கருணைநிறைந்த அந்தக் கிளியானவன், “இந்த மரம் மீண்டும் உயிர் பெறட்டும்” என்ற இந்த வரத்தையே அவனிடம் வேண்டினான்.(28) கிளியானவன், அம்மரத்திடம் கொண்ட பெரும்பற்றையும், அவனது உயர்ந்த பண்பையும் அறிந்து பெரும் நிறைவடைந்த இந்திரன், அம்மரத்தின் மீது விரைவில் அமுதத்தைத் தெளிக்கச் செய்தான்.(29) அப்போது அம்மரம் அந்தக் கிளியின் தவங்களின் மூலம் மீண்டும் நிறைந்து, மிக நேர்த்தியான மகத்தான நிலையை அடைந்தது,(30) ஓ! பெரும் மன்னா, அந்தக் கிளியானவனும் தன் வாழ்வின் நெருக்கத்தில் {முடிவில்}, அந்தக் கருணைச்செயலில் விளைந்த அறத்தின் மூலம் சக்ரனின் தோழமையை அடைந்தான்.(31) ஓ! மனிதர்களின் தலைவா, இவ்வாறு கிளியிடம் தோழமை கொண்ட மரத்தைப் போலவே மக்களும் பக்திமான்களின் சேர்க்கை மற்றும் தோழமையின் மூலம் தங்கள் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைவார்கள்” என்றார் {பீஷ்மர்}.(32)
முயற்சியின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 06-முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டுக்குமிடையில் எது சக்திமிக்கது என்பதை விளக்க பிரம்மனுக்கும் வசிஷ்டருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் கற்ற ஐயா, முயற்சி மற்றும் விதி ஆகியவற்றில் எது சக்திமிக்கது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, வசிஷ்டருக்கும், பிரம்மனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை கருத்தில் கொள்ளத்தக்க விளக்கமாக இருக்கிறது.(3) புகழத்தக்கவரான வசிஷ்டர் பழங்காலத்தில் பிரம்மனிடம், இப்பிறவியில் ஓர் உயிரினத்தால் அடையப்பட்ட கர்மம், அல்லது முற்பிறவிகளில் அடையப்பட்டவை (விதி என்றழைக்கப்படுவது) ஆகிய இரண்டில் அதன் வாழ்வை வடிவமைப்பதில் எது அதிகச் சக்தி கொண்டது என்று கேட்டார்.(3) அப்போது, ஓ! மன்னா, ஆதி தாமரையில் இருந்து உதித்த பெருந்தேவனான பிரம்மன், அறிவுக்குப் பொருத்தமான பொருள் நிறைந்த சீரிய சொற்களால் அவருக்குப் பதிலளித்தான்.(4)
பிரம்மன் {வசிஷ்டரிடம்}, “வித்தில்லாமல் எதுவும் இருப்புக்கு வருவதில்லை. வித்தில்லாமல் கனிகள் வளர்வதில்லை. வித்தில் இருந்து வேறு வித்துகள் முளைக்கின்றன. எனவே, கனிகள் வித்திலிருந்து உண்டாகின்றன என அறியப்படுகிறது[1].(5) உழவன் வயலில் விதைக்கும் நல்ல அல்லது தீய வித்துகளைப் போலவே அவன் நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களை} அறுவடை செய்கிறான்.(6) உழுதாலும் வித்துகள் விதைக்கப்படாத மண் கனியற்றுப் போவதைப் போலவே, தனிப்பட்ட முயற்சி இல்லாமல் விதியால் எந்தப் பயனையும் அளிக்க முடியாது.(7) ஒருவன் செய்யும் முயற்சி மண் போன்றது, விதியோ (அல்லது முற்பிறவி செயல்களின் தொகையோ) வித்தாக ஒப்பிடப்படுகிறது. மண்ணும் வித்தும் கலப்பதில் இருந்தே அறுவடை விளைகிறது.(8) செயலைச் செய்பவன் தான் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் கனிகளை அறுவடை செய்வதும்; நற்செயல்களில் இருந்து மகிழ்ச்சி விளைவதும் மற்றும் தீச்செயல்களில் இருந்து துன்பம் விளைவதும்; செய்யப்படும் செயல்கள் எப்போதும் கனிவதும் {பலன் தருவதும்}; செய்யப்படாத செயல்களில் கனிகள் உண்டாகாததும் {பயனில்லாமல் போவதும்} இவ்வுலகில் தினந்தோறும் காணப்படுகிறது.(9,10)நற்செயல்களைச் செய்யும் மனிதன் நற்பேற்றுடன் கூடிய தகுதிகளை {புண்ணியங்களை} ஈட்டுகிறான், அதே வேளையில், ஒரு சோம்பேறி தன் நிலையில் இருந்து வீழ்ந்து, புண்ணில் உப்புநீர் செலுத்தப்படுவது போன்ற தீமையை அறுவடை செய்கிறான்.(11) அர்ப்பணிப்புமிக்கச் செயல்பாட்டின் மூலம் ஒருவன் அழகு, நற்பேறு மற்றும் பல்வேறு வகை வளங்களை அடைகிறான். முயற்சியின் மூலம் அனைத்தையும் அடையலாம்; ஆனால் முயற்சியற்ற ஒரு மனிதனால் விதியால் மட்டுமே ஒன்றையும் அடைய முடியாது.(12) இவ்வாறே ஒருவன் சொர்க்கத்தையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, தனிப்பட்ட வகையில் செய்யும் நல்ல முயற்சியின் மூலம் தன் இதய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறான்.(13) ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்கள் அனைத்தும் , தேவர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும், சூரியன், சந்திரன், காற்று ஆகிய அனைத்தும், தங்கள் சொந்த செயல்பாடு என்ற உழைப்பின் மூலமே மனித நிலையில் இருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சியில் அந்த உயர்ந்த நிலைகளை அடைந்தனர்.(14) வளங்கள், நண்பர்கள், பரம்பரையாக வழிவழியாகத் தொடரும் செழிப்பு, வாழ்வின் சிறப்புகள் ஆகியற்றை முயற்சியற்றவர்கள் அடைவது மிகக் கடினமாகும்.(15)
பிராமணன் புனித வாழ்வின் மூலமும், க்ஷத்திரியன் ஆற்றலின் மூலமும், வைசியன் உடல் உழைப்பின் மூலமும், சூத்திரன் தொண்டின் மூலமும் செழிப்பை அடைகின்றனர்.(16) வளங்களும், இன்பத்திற்குரிய பிற பொருட்களும், கஞ்சனையோ, திறனற்றவனையோ, சோம்பேறியையோ ஒருபோதும் அடையாது. மேலும், சுறுசுறுப்போ, ஆண்மையோ, அறம்சார்ந்த தவமோ இல்லாத மனிதனால் இவற்றை ஒருபோதும் அடைய முடியாது.(17) தைத்தியர்கள் மற்றும் தேவர்கள் அனைவருடன் கூடிய மூவுலகங்களையும் படைத்தவனும், துதிக்கப்பட வேண்டியவனுமான விஷ்ணுவே கூட, ஆழக்கடலில் தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.(18) ஒருவனுடைய கர்மம் எக்கனியையும் தரவில்லையெனில், செயல்பாடுகள் அனைத்தும் கனியற்றுப் போகும்; மனிதர்களும் விதியை நம்பி சோம்பேறிகளாக இருப்பார்கள்.(19) மனித செயல்முறைகளைப் பின்பற்றாமல் விதியை மட்டுமே நம்பும் ஒருவன், திறனற்ற கணவனைக் கொண்ட ஒரு பெண்ணைப் போல வீணாவான்.(20)
இம்மையில் முயற்சியில்லாமல் மறுமையின் இன்ப துன்பங்களை ஒருவன் உணர்வதைப் போலச் சாதகமில்லாத விதியுடன் இவ்வுலகில் நன்மை தீமையை உணர்வது பெரிதல்ல[2].(21) சரியாக முயற்சிக்கப்படும் மனித சக்தியை விதி பின்தொடருமே அன்றி முயற்சியில்லாத இடத்தில் விதியால் மட்டுமே எந்த நன்மையையும் செய்துவிட முடியாது.(22) தேவலோகங்களில் தேவர்களின் நிலைகளே நிலையில்லாதவையாகக் காணப்படும்போது, சரியான கர்மமில்லாமல் தேவர்களால் தங்கள் நிலைகளையோ, பிறரின் நிலைகளையோ எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடியும்?[3](23) இவ்வுலகில் பிறரின் நற்செயல்களைத் தேவர்கள் எப்போதும் அங்கீகரிப்பதில்லை. (அந்த நற்செயல்களால்) தாங்கள் வீழ்வோம் என்று உணர்வதால், அவர்கள் பிறரின் செயல்களைத் தடை செய்கின்றனர்.(24) தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நிலையான பகை இருக்கிறது, அவர்கள் அனைவரும் தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டுமென்றாலும், அனைத்துக் கர்மங்களையும் விதியே தொடங்கி வைப்பதால், விதி என்ற ஏதும் இல்லை என்று ஒருபோதும் கூற முடியாது[4].(25)தொடக்கத்தில் இருந்தே மனித செயல்பாட்டின் மூலம் விதி உண்டாகிறதென்றால், கர்மம் எவ்வாறு உண்டாகிறது? இந்த வழிமுறைகளின் மூலம் தேவலோகங்களிலேயே பல அறங்கள் {நற்செயல்கள்} வளர்கின்றன என்பதே (இதற்கான பதிலாகும்).(26) ஒருவன் தானே தன் நண்பனாகவும், பகைவனாகவும், தன் நல்ல மற்றும் தீச்செயல்களின் சாட்சியாகவும் இருக்கிறான்.(27) நன்மையும் தீமையும் கர்மத்தின் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. நல்ல மற்றும் தீய செயல்கள் போதுமான விளைவுகளைத் தருவதில்லை.(28) அறமே தேவர்களின் புகலிடமாக இருக்கிறது, அறத்தின் மூலமே அனைத்தும் அடையப்படுகின்றன. நல்லொழுக்கம் மற்றும் அறத்தை அடைந்த மனிதனை விதி தடுப்பதில்லை[5].(29)பழங்காலத்தில் யயாதி, சொர்க்கத்தின் உயர்ந்த நிலையில் இருந்து பூமியில் விழுந்தாலும், அறம்சார்ந்த தன் பேரப்பிள்ளைகளின் {தௌஹித்ரர்களால் / மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளின்} நற்செயல்களால் மீண்டும் தேவலோகத்தை அடைந்தான்.(30) ஐலனின் வழித்தோன்றலாகக் கொண்டாடப்படும் அரச முனியான புரூரவஸ், பிராமணர்களின் பரிந்துரையால் சொர்க்கத்தை அடைந்தான்.(31) அஸ்வத்தாமன் மற்றும் ராமர் {பரசுராமர்} ஆகியோர் இருவரும் போர்வீரர்களாகவும், முனிவர்களின் மகன்களாவும் இருந்தாலும், இவ்வுலகில் அவர்கள் செய்த செயல்களின் காரணமாகச் சொர்க்கத்தை அடையத் தவறினர்.(32) கோசல மன்னன் சௌதாசன், அஸ்வமேதம் மற்றும் பிற வேள்விகளைச் செய்த மதிப்பை அடைந்தவனாக இருந்தாலும், ஒரு பெரும் முனிவரின் சாபத்தின் மூலம் மனிதர்களை உண்ணும் ராட்சச நிலையை அடைந்தான்.(33) வசுவானவன், இரண்டாவது வாசவனை {இந்திரனைப்} போல நூறு வேள்விகளைச் செய்திருந்தாலும், ஒரே ஒரு பொய் சொன்னதால் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டான்.(34) விரோசனன் மகனான பலி, அவனுடைய உறுதிமொழியின் மூலம் விஷ்ணுவின் ஆற்றலால் அறமெனும் கட்டுகளால் கட்டப்பட்டு, பூமிக்கு அடியில் அனுப்பப்பட்டான்.(35)
சக்ரனின் {இந்திரனின்} பாதச்சுவடுகளைப் பின்பற்றியவனான ஜனமேஜயன், ஒரு பிராமணப் பெண்ணைக் கொன்றதற்காகத் தேவர்களால் தடுக்கப்பட்டுக் கைவிடப்படவில்லையா?[6](36) அறியாமையினால் ஒரு பிராமணரைக் கொன்று, ஒரு குழந்தையையும் கொன்றதால் களங்கமடைந்திருந்த மறுபிறப்பாள முனிவர் வைசம்பாயனர் தேவர்களால் கைவிடப்படவில்லையா?[7](37) பழங்காலத்தில் அரச முனியான நிருகன் ஓணானாக மாற்றப்பட்டான். அவன் தனது பெரும் வேள்வியில் பசுக்களைக் கொடையளித்திருந்தாலும் அஃது அவனுக்குப் பயனளிக்கவில்லை[8].(38) அரசமுனியான துந்துமாரன், வேள்விகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே முதுமை அடைந்து, தன் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் துறந்து கிரிவ்ரஜத்தில் உறங்கிக் கிடந்தான்.(39) பாண்டவர்களும், திருதராஷ்டிரனுடைய பலமிக்க மகன்களால் இழந்த தங்கள் நாட்டை விதியின் பரிந்துரைமூலமல்லாமல் தங்கள் சொந்த வீரத்தின் மூலமே மீண்டும் அடைந்தனர்.(40)கடும் நோன்புகளைக் கொண்டவர்களும், கடுந்தவப்பயிற்சிகளுக்கு அடிமையானவர்களுமான முனிவர்கள், சாபம் கொடுப்பது இயல்புக்கு மீறிய எந்தச் சக்தியின் உதவியினாலா? தனிப்பட்ட தங்கள் செயல்களால் அடைந்த பலத்தைப் பயன்படுத்துவதாலா?(41) இவ்வுலகில் பெருங்கடினத்துடன் அடையப்படும் நன்மைகள் அனைத்தையும், தீயோர் அடைந்தாலும் விரைவில் அவற்றைத் தொலைத்துவிடுவார்கள். ஆன்ம அறியாமை மற்றும் பேராசையில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு விதி ஒருபோதும் உதவி செய்வதில்லை.(42) சிறு அளவிலான நெருப்பும், காற்று வீசப்பட்டால் வலிமையடைவதைப் போலவே விதியும் தனிப்பட்ட முயற்சியுடன் கூடும்போது, (திறனளவில்) பெரிதாக அதிகரிக்கிறது.(43) எண்ணெய் குறைவதால் விளக்கின் ஒளி மங்குவதைப் போலவே விதியின் ஆதிக்கமும் ஒருவனுடைய செயல்களால் தணிவடைகிறது.(44) பெருஞ்செல்வத்தையும், மகளிரையும், இவ்வுலகின் இன்பங்கள் அனைத்தையும் அடைந்தாலும், செயலில் விடாமுயற்சியில்லாதிருக்கும் மனிதனால் அவற்றை நீண்டு அனுபவிக்க முடியாது, ஆனால், விடாமுயற்சியுள்ள மனிதன், விதியால் காக்கப்பட்டு, பூமியில் புதைந்திருக்கும் வளங்களையும் கண்டடைபவனாக இருக்கிறான்.(45)
மானிட லோகத்தைவிடத் தேவலோகம் சிறந்ததாக இருப்பினும், (அறக்கொடைகள் மற்றும் வேள்விகளில்) பெரும் செலவு செய்யும் நல்ல மனிதன், அவனது நல்லொழுக்கத்திற்காகத் தேவர்களால் வேண்டப்படுகிறான், ஆனால் கஞ்சனின் வீடு செல்வத்தால் நிறைந்திருந்தாலும், இறந்தவனின் வீடாகவே தேவர்களால் காணப்படுகிறது[9].(46) முயற்சி செய்யாத மனிதன் இவ்வுலகில் ஒருபோதும் நிறைவடைவதுமில்லை, விதியும் தவறாகச் சென்ற மனிதனின் பாதையை மாற்றுவதுமில்லை. விதிக்கு உள்ளார்ந்த சக்தி ஏதும் கிடையாது. ஆசானைப் பின்தொடரும் சீடனைப் போலவே, விதியால் வழிநடத்தப்படும் ஒருவனுடைய செயல்பாடும், அவனது முயற்சியைப் பின்தொடர்ந்து வருகிறது. எங்கே ஒருவன் முயற்சி செய்கிறானோ அங்கே மட்டுமே விதி தன் கரத்தை {செயலைக்} காட்டுகிறது.(47) ஓ! முனிவர்களில் சிறந்தவனே {வசிஷ்டரே}, தனிப்பட்ட முயற்சியை, உண்மையான முக்கியத்துவத்துடன் எப்போதும் அறிந்திருக்கும் நான் அதன் தகுதிகள் அனைத்தையும் விளக்கிச் சொன்னேன்.(48) விதியின் ஆதிக்கத்தின் மூலமும், தனிப்பட்ட முறையில் முயற்சி செய்வதன் மூலமும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர். விதி மற்றும் முயற்சியின் ஒன்று சேர்ந்த துணை நன்மையைச் செய்கிறது” என்றான் {பிரம்மன்}[10].(49)
செயல்களும், கனிகளும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 07-நல்வினை மற்றும் தீவினைகளின் பயன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே, பெரியோர்களில் முதன்மையானவரே, நற்செயல்களின் கனிகள் என்னென்ன என்பது குறித்து நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என்னை விழிப்படைச் செய்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கேட்டதற்கு நான் பதில் சொல்கிறேன். ஓ! யுதிஷ்டிரா, முனிவர்களின் இரகசிய ஞானமான இதைக் கேட்பாயாக.(2) வெகு காலம் விரும்பியவையும், இறந்த பிறகு மனிதர்களால் அடையப்படுபவையுமான கதிகளை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக. எந்தெந்த உடல்களில் அல்லது இருப்பின் வடிவங்களில் உயிரினங்களால் செயல்கள் செய்யப்படுகின்றனவோ,(3) அவற்றின் கனிகள் {பலன்கள்} அதைச் செய்பவர்கள் அதே உடல்களைக் கொண்டிருக்கும்போதே அறுவடை செய்யப்படுகின்றன {அடையப்படுகின்றன}. உயிரினங்கள் எந்த நிலைகளில் நல்ல அல்லது தீய செயல்களைச் செய்கின்றனவோ, அடுத்தடுத்த பிறவிகளில் அதே நிலையில் இருக்கும்போது அவை அவற்றின் கனிகளை அறுவடை செய்கின்றன. ஐம்புலன்களின் உதவியால் செய்யப்படும் எந்தச் செயலும் தொலைந்து போவதில்லை {எந்த செயலுக்கும் பலனில்லாமல் போவதில்லை}.(4)
ஐம்புலன்களும், ஆறாவதாக அழிவில்லாத ஆன்மாவும் சாட்சிகளாக நீடிக்கின்றன. ஒருவன் தன் கண்களை (பிறரின் தொண்டில்) அர்ப்பணிக்க வேண்டும்;(5) அவன் தன் இதயத்தையும் (அதே காரியத்திற்கே) அர்ப்பணிக்க வேண்டும்; அவன் ஏற்புடைய {இனிமையான} சொற்களையே பேச வேண்டும்;(6) மேலும் அவன் (தன் விருந்தினரை) வழிபட்டுப் பின்பற்றவும் வேண்டும். இதுவே ஐங்கொடைகளுடன் கூடிய வேள்வி என்றழைக்கப்படுகிறது. முன்பின் தெரியாதவனும், நீண்ட பயணத்தால் களைப்படைந்தவனும், சோர்வடைந்தவனுமான ஒரு பயணிக்கு நல்ல உணவை அளிப்பவன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான்.(7) வேள்வித் தரைகளை மட்டுமே தங்கள் படுக்கையாகப் பயன்படுத்துபவர்கள், (அடுத்தடுத்த பிறவிகளில்) மாடமாளிகைகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளையும், கந்தலாடைகளையும் மட்டுமே உடுத்துபவர்களுக்கு நல்ல ஆடை மற்றும் ஆபரணங்கள் கிடைக்கின்றன.(8)
தவம் செய்து தன் ஆன்மாவை யோகத்தில் நிலைக்கச் செய்தவர்கள், (இம்மையில் தங்கள் துறவின் கனியாக) வாகனங்களையும், விலங்குகளையும் அடைகிறார்கள். வேள்வி நெருப்பின் அருகே படுக்கும் ஏகாதிபதி வீரத்தை அடைகிறான்.(9) சுவை மிக்கவை அனைத்தையும் அனுபவிக்காமல் துறப்பவன் செழிப்பை அடைகிறான், விலங்குணவைத் தவிர்ப்பவன், பிள்ளைகளையும், கால்நடைகளையும் {விலங்குகளையும்} அடைகிறான்.(10) தலைகீழாகத் தொங்கிக் கொண்டு, அல்லது நீரில் வாழ்ந்து, அல்லது தனிமையாக வாழ்ந்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் விரும்பப்படும் கதிகள் அனைத்தையும் அடைகிறான்.(11) ஒரு விருந்தினருக்கு உறைவிடமளித்து, கால் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து, உணவு, ஒளி மற்றும் படுக்கையும் அளிப்பவன், ஐங்கொடைகளுடன் கூடிய வேள்வி செய்ததன் தகுதிகளை {புண்ணியங்களை} அடைகிறான்.(12)
போர்க்களத்தில், போர்வீரனின் நிலையை {வீராஸனத்தை} அடைந்து, போர்வீரனின் படுக்கையில் {வீரசயனத்தில்}[1] தன்னைக் கிடத்திக் கொள்ளும் ஒருவன், விருப்பத்திற்குரிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் நித்திய உலகங்களை அடைகிறான்.(13) ஓ! மன்னா, ஈகையுடன் கொடையளிக்கும் மனிதன் வளங்களை அடைகிறான். பேசாநோன்பினால் {மௌனமிருப்பதனால்} அதிகாரம் செலுத்தும் தகைமையையும், தவப் பயிற்சியினால் வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும், பிரம்மச்சரியத்தினால் பெருகும் நீண்ட வாழ்நாளையும், பிறருக்குத் தீங்கிழையாமல் இருப்பதன் மூலம் அழகு, செழிப்பு மற்றும் நோயிலிருந்து விடுதலை {உடல்நலம்} ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(14) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்பவர்களுக்கு அரசுரிமை கிடைக்கிறது. மரங்களின் இலைகளை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், சொர்க்கவாசத்தை அடைகின்றனர்.(15) ஓ! மன்னா, உணவைத் தவிர்ப்பதன் மூலம் {உண்ணா நோன்பினால்} ஒரு மனிதன் இன்பத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது. மூலிகைகளை மட்டுமே தன் உணவாகச் சுருக்கிக் கொள்பவன், பசுக்களை அடைகிறான். புற்களை மட்டுமே உண்டு வாழ்பவன் தேவலோகங்களை அடைகிறான்.(16)ஒருவன் தன் மனைவியுடன் கலவியைத் தவிர்ப்பதன் மூலமும், பகலின் மூன்று வேளைகளில் தூய்மைச் சடங்குகளை {நீராடுதலைச்} செய்வதன் மூலமும், வாழ்வுக்காகக் காற்றைமட்டுமே உண்டு வாழ்வதன் மூலமும் ஒருவன் ஒரு வேள்வியின் தகுதியை அடைகிறான். வாய்மை பயில்வதன் மூலம் சொர்க்கமும், வேள்விகளின் மூலம் உன்னதப் பிறவிகளும் அடையப்படுகின்றன.(17) தூய ஒழுக்கத்தைக் கொண்டவனும், நீரை மட்டுமே உண்டு வாழ்பவனும், இடையறாமல் அக்னிஹோத்ரம் செய்பவனும், காயத்ரியை உரைப்பவனுமான பிராமணன் ஒரு நாட்டை அடைகிறான். உணவைத் தவிர்ப்பதன் மூலம் அல்லது அதை ஒழுங்குமுறை செய்வதன் மூலம் ஒருவன் சொர்க்க வாசத்தை அடைகிறான்.(18) ஓ! மன்னா, வேள்விகளில் ஈடுபடும்போது பரிந்துரைக்கப்படும் உணவுகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலமும், பனிரெண்டு வருடங்கள் புனிதப்பயணம் {யாத்திரை} செய்வதன் மூலமும் வீரர்களுக்காக ஒதுக்கப்படும் வசிப்பிடங்களைவிடச் சிறந்த இடத்தை ஒருவன் அடைகிறான்.(19) வேதங்கள் அனைத்தையும் படிப்பதன் மூலம் ஒருவன் உடனடியாகத் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான், எண்ணத்தால் அறம்பயில்வதன் மூலம் அவன் சொரக்கலோகத்தை அடைகிறான்[2].(20)ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயைக் கண்டடையும் கன்றைப் போலவே, மனிதனின் முற்பிறவி செயல்களும் (அவன் {வெவ்வேறு பிறவிகளில்} வெவ்வேறு வகையில் மாற்றமடையும்போதும்) அவனைப் பின்தொடர்கின்றன.(22) மரத்தின் மலர்களும், கனிகளும், புலப்படும் ஆதிக்கங்கள் எதன் மூலமும் தூண்டப்படாமல், பருவ காலத்தைத் தவறவிடாததைப் போலவே முற்பிறவியில் செய்த கர்மம், சரியான காலத்தின் தன் கனிகளைக் கொண்டு வருகிறது.(23) வயதானதும் மனிதனின் மயிரில் நரைகூடுகிறது; அவனது பற்கள் தளர்கின்றன; அவனது கண்களும், காதுகளும் செயல்பாட்டில் மங்குகின்றன; ஆனால் இன்பங்களில் அவனுக்குரிய ஆசை மட்டுமே தணிவடையாத ஒரே பொருளாக இருக்கிறது.(24) தந்தையை நிறைவு செய்யும் செயல்களால் பிரஜாபதி நிறைவடைகிறான், தாயை நிறைவு செய்யும் செயல்களால் பூமாதேவி நிறைவடைகிறாள், ஆசானை நிறைவு செய்யும் செயல்களால் பிரம்மனே துதிக்கப்படுகிறான். இம்மூவரை மதிப்பவர்களால் அறமே மதிக்கப்படுகிறது. இம்மூன்றையும் வெறுப்போரின் செயல்கள் அவர்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது” என்றார் {பீஷ்மர்}”.(25,26)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பீஷ்மரின் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குருகுல இளவரசர்கள் ஆச்சரியத்தால் நிறைந்து, மனமத்தில் நிறைவடைந்தவர்களான இன்புற்றார்கள்”.(27) {மேலும் பீஷ்மர் தொடர்ந்தார்},[3] “வெற்றி அடையும் விருப்பத்தில் பயன்படுத்தப்பட்ட மந்திரங்கள், அல்லது உரிய கொடைகள் அளிக்கப்படாமல் செய்யப்படும் சோம வேள்வி, அல்லது உரிய ஸ்லோகங்களைச் சொல்லாமல் நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் பயனளிக்காமல், தீய விளைவுகளுக்கு வழி வகுப்பதைப் போலவே, பாவமும், தீய விளைவுகளும் பொய்மையில் இருந்து உண்டாகின்றன.(28) ஓ! இளவரசே {ஜனமேஜயா}, நல்ல மற்றும் தீய செயல்களின் கனிகள் குறித்த இந்தக் கோட்பாட்டைப் பழங்கால முனிவர்கள் சொன்னபடியே நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறென்ன நீ கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(29)
பிராமணர்களின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 08-பிராமணர்களின் சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வழிபடத்தகுந்தவர் எவர்? வணங்கத்தகுந்தவர் எவர்? ஓ! பாரதரே, தலைவணங்கத்தகுந்தவர் எவர்? நீர் விரும்புபவர் எவர்? ஓ! இளவரசே {பீஷ்மரே}, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(1) நீர் துன்பத்தின் பீடிப்பில் மூழ்கும்போது உமது மனம் எதில் வசித்திருக்கும்? மனிதர்களின் உலகான இம்மையிலும், இதன்பின் வரும் மறுமையிலும் கிடைக்கும் நன்மை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிரம்மத்தையே உயர்ந்த செல்வமாகக் கொண்டவர்களும், தளராத ஊக்கத்துடன் கூடிய தங்கள் வேத கல்வியின் மூலம் உண்டாகும் தவங்களைச் செய்பவர்களுமான மறுபிறப்பாளர்களையே {பிராமணர்களையே} நான் விரும்புகிறேன்.(3) எவரின் குலத்தில் சிறுவர்களும், கிழவர்களும், தளராது ஊக்கத்துடன் தங்கள் மூதாதையரின் பணிச்சுமையைச் சோர்வின்றிச் சுமக்கிறார்களோ அவர்களுக்காக என் இதயம் ஏங்குகிறது {அவர்களை என் இதயம் விரும்புகிறது}.(4) அறிவின் பல்வேறு கிளைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்களும், தற்கட்டுப்பாடு, மென்மையான பேச்சு ஆகியவற்றைக் கொண்டவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களும், பிரம்ம அறிவு, அறவொழுக்கம் கொண்டவர்களுமான பிராமணர்கள்,(5) அன்னக்கூட்டங்களைப் போல மதிப்புமிக்கச் சபைகளில் உரையாற்றுகின்றனர்[1]. ஓ! யுதிஷ்டிரா, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் மங்கலமானைவையும், ஏற்புடையவையும் {இனிமையானவையும்}, சிறப்பானவையும், நன்றாக உச்சரிக்கப்படுபவையுமாக இருக்கின்றன. அவர்கள் ஏகாதிபதிகளின் சபைகளில் சொல்லும் உலகியல் சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த இரு மகிழ்ச்சிகளும் நிறைந்த வார்த்தைகள், அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களால் கவனமாகவும், மதிப்புடனும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன[2].(6,7)உண்மையில், ஞானத்தையும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களும், பிறரால் மதிக்கப்படுபவர்களுமான அவர்கள் மன்னர்களின் சபைகளில் சொல்லும் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் அவர்களுக்காக ஏங்குகிறது {அவர்களிடம் விருப்பம் கொள்கிறது}.(8) ஓ! ஏகாதிபதி, பிராமணர்களின் மனம் நிறைவதற்காக நன்கு சமைக்கப்பட்ட தூய உணவை நிறைவாக அர்ப்பணிப்புடன் கொடுப்பவர்களுக்கு என் இதயம் ஏங்குகிறது.(9) போர்க்களத்தில் போரிடுவது எளிது, ஆனால் செருக்கும், தற்பெருமையுமின்றிக் கொடையளிப்பது அவ்வாறானதல்ல.(10) ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகில் துணிச்சல்மிக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கணக்கிடுகையில் கொடைகளில் வீரனாக இருப்பவனே மேன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(11) ஓ! இனியவனே, நல்ல குலத்தில் பிறந்து, நன்னடத்தைக் கொண்டவனாகத் தவங்களிலும், கல்வியிலும் அர்ப்பணிப்புள்ளவனாக இருப்பதைவிட நான் ஓர் ஈனப் பிராமணனாக இருந்தாலும் என்னைப் பெரியவனாகக் கருதிக் கொள்வேன்.(12) ஓ! பாண்டுவின் மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வுலகில் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவன் வேறெவனும் இல்லையென்றாலும், பிராமணர்கள் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவர்களாவர்[3].(13)எனக்குப் பிராமணர்கள் உன்னைவிட அன்புக்குரியவர்கள் என்ற உண்மையால், என் தந்தையான சந்தனுவால் அடையப்பட்ட இன்பலோகங்கள் அனைத்திற்கும் செல்வேன் என நான் நம்புகிறேன்.(14) என் தந்தையோ, என் தந்தையின் தந்தையோ, குருதியால் என்னுடன் தொடர்புடைய வேறு எவருமோ பிராமணர்களைவிட எனக்கு அன்புக்குரியவர்கள் இல்லை.(15) (நான் வழிபாட்டுக்குத் தகுந்த பிராமணர்களைத் தேவர்களாக வழிபடுவதால்) என் பிராமண வழிபாட்டின் மூலம் நான் சிறிய அல்லது பெரிய பலன் எதையும் எதிர்பார்க்கவில்லை.(16) எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் பிராமணர்களுக்கு நான் செயல்பட்டிருக்கும் விளைவால் நான் இப்போது (இந்தக் கணைப்படுக்கையில் கிடந்தாலும்) எந்தத் துன்பத்தையும் உணரவில்லை.(17) பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாக மக்கள் என்னை அழைக்கிறார்கள். இவ்வகை அழைப்பு எப்போதும் என்னை உயர்வான நிறைவை அடையச் செய்கிறது. பிராமணர்களுக்கு நன்மை செய்வது என்பது புனிதச் செயல்கள் அனைத்திலும் புனிதமானதாகும்.(18) பிராமணர்களுக்குப் பின்னால் மதிப்புடன் நடந்து சென்ற எனக்கு அருள்நிறைந்த உலகங்கள் காத்திருப்பது எனக்குத் தெரிகிறது. ஓ! மகனே, காலத்திற்கும் எப்போதும் நீடித்திருக்கும் உலகங்களுக்கு நான் மிக விரைவில் செல்லப் போகிறேன்.(19)
ஓ! யுதிஷ்டிரா, பெண்களின் கடமைகள் அவர்களது கணவர்களின் {கடமைகளுக்குத்} தொடர்புடையதாகவும் அவற்றையே சார்ந்துமிருக்கின்றன. உண்மையில் ஒரு பெண்ணுக்குக் கணவனே தெய்வமாவான், அவள் அடைய விரும்பும் உயர்ந்த கதியும் அவனே ஆவான். மனைவிக்குக் கணவனைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் பிராமணர்கள் இருக்கிறார்கள்[4].(20) முழுமையாக நூறு வயதுடைய ஒரு க்ஷத்திரியனும், பத்து வயதேயுடைய ஒரு நல்ல பிராமணச் சிறுவனும் இருந்தால், பிராமணனே முதன்மையானவன் என்பதால் பின்னவன் {பிராமணச் சிறுவன்} தந்தையாகவும், முன்னவன் {க்ஷத்திரிய முதியவர்} மகனாகவும் கருதப்பட வேண்டும்.(21) {பழங்காலத்தில்} ஒரு பெண், தன் கணவன் இல்லாதபோது, அவனுடைய தம்பியையே தன் கணவனாகக் கொண்டதைப் போலவே பூமியும் பிராமணனை அடையாமல், க்ஷத்திரியனைத் தன் தலைவன் ஆக்கிக் கொண்டாள்.(22) பிராமணர்களை மகன்களைப் போலப் பாதுகாக்கவும், தந்தைமார் அல்லது ஆசான்களைப் போல வழிபடவும் வேண்டும். ஓ! குருக்களில் சிறந்தவனே, உண்மையில், வேள்வி அல்லது ஹோம நெருப்பின் முன்னால் மக்கள் மதிப்புடன் காத்திருப்பதைப் போலவே அவர்கள் {பிராமணர்கள்} முன்பும் காத்திருக்க வேண்டும்.(23) பிராமணர்கள் எளிமையானவர்களாகவும், அறம்சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் வாய்மைக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள். அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே அவர்கள் எப்போதும் ஈடுபடுவார்கள். இருப்பினும், அவர்கள் கோபமடையும்போது, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாகிறார்கள். இக்காரணங்களால் அவர்கள் மதிப்புடனும், பணிவுடனும் தொண்டாற்றப்பட்டு, எப்போதும் காத்திருக்கப்பட வேண்டும் {அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டும்}.(24)ஓ! யுதிஷ்டிரா, சக்தி {அதிகாரம்} மற்றும் தவங்கள் {சாந்தம்} ஆகிய இரண்டிற்கும் ஒருவன் எப்போதும் அஞ்ச வேண்டும். இவை இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும், அல்லது தொலைவில் வைக்கப்பட வேண்டும்.(25) இவை இரண்டின் விளைவுகளும் மிக விரைவானவை. எனினும், தவங்களுடன் கூடிய பிராமணர்கள் கோபப்பட்டால், தங்கள் கோபத்திற்குரிய பொருளை (அந்தப் பொருள் எவ்வளவு தான் சக்தியைக் கொண்டிருந்தாலும்) கொன்றுவிடலாம் என்பதால் {சக்தியைக் காட்டிலும்} தவங்களுக்கு மேன்மையுண்டு.(26) கோபத்தை வென்ற ஒரு பிராமணன் மீது பெரும் அளவிலான சக்தியும், தவங்களும் பயன்படுத்தப்பட்டாலும் அவை தணிவையே அடையும். சக்தி மற்றும் தவங்கள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் அழிவு இரண்டுக்கும் ஏற்படும், அதே வேளையில், தவங்களுக்கு எதிராக சக்தி பயன்படுத்தப்பட்டால், அதற்கு {சக்திக்கு} ஒன்றும் எஞ்சாத அழிவு ஏற்படும்; சக்திக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தவங்களை முழுமையாக அழிக்க முடியாது[5].(27) கையில் தடியுடன் மந்தையைப் பாதுகாக்கும் ஓர் இடையனைப் போலவே க்ஷத்திரியர்களும் வேதங்களையும், பிராமணர்களையும் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.(28) உண்மையில், ஒரு தந்தை தன் மகன்களைப் பாதுகாப்பதைப் போலவே ஒரு க்ஷத்திரியன் பிராமணர்களில் அறவோர் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். பிராமணர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கண்காணிக்கும் விதமாக அவனது கண்கள் எப்போதும் அவர்களது இல்லத்தின் மீது இருக்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(29)
நரியும், குரங்கும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 09-கொடையளிப்பதாக உறுதியளித்தும் அவற்றைக் கொடாமல் இருப்பவன் கதியை விளக்க நரி மற்றும் குரங்கின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் காந்தி கொண்டவரே, பிராமணர்களுக்குக் கொடுக்கிறேன் என்று உறுதியளித்த கொடைகளைப் புத்தி மயக்கத்தால் {லோபத்தினால்} கொடுக்காமலிருக்கும் மனிதர்கள் என்ன ஆகிறார்கள்?(1) ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, இவ்வகையில் உள்ள கடமைகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், உறுதியளித்த கொடையைக் கொடுக்காதிருக்கும் தீய ஈனர்களின் கதி என்னவாகிறது?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உறுதிமொழியளித்த கொடை சிறிதாகவோ, பெரிதாவோ இருந்தாலும், அதைக் கொடுக்காத மனிதன், சந்ததியை எதிர்பார்க்கும் அலியைப் போல (அனைத்துத் திசைகளிலும்) தனது நம்பிக்கைகள் கனியற்றுப் போவதைப் பார்க்கும் பேரிழிவை அடைகிறான்.(3) ஓ! பாரதா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அத்தகைய மனிதன் தான் பிறந்த நாள் முதல், தன் மரணம் வரை செய்த நற்செயல்கள் எதுவும்,(4) வேள்வி நெருப்பில் அவன் ஊற்றும் ஆகுதிகள் எதுவும், அவன் அளிக்கும் கொடைகள் எதுவும், அவன் செய்யும் தவங்கள் எதுவும் என அனைத்தும் கனியற்று {பலனற்றுப்} போகின்றன.(5) ஓ! பாரதர்களின் தலைவா, சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், நன்கு அமைக்கப்பட்ட தங்கள் புத்தியின் துணை கொண்டு இதையே தங்கள் கருத்தாக அறிவிக்கின்றனர்.(6) அத்தகைய மனிதன், கருப்பு நிறக் காதுடைய ஆயிரம் குதிரைகளைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் கருதுகின்றனர்.(7)
இது தொடர்பாக ஒரு நரிக்கும், ஒரு குரங்குக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! பகைவர்களைச் சுடுபவனே, அவை இரண்டும் மனிதர்களாக இருந்தபோது அணுக்கமான நண்பர்களாக இருந்தன. மரணத்திற்குப் பிறகு அவர்களில் ஒருவர் நரியாகவும், மற்றவர் குரங்காகவும் ஆகினர்.(9) சுடலைக்கு மத்தியில் ஒரு விலங்கின் சடலத்தை உண்ணும் நரியைக் கண்ட குரங்கு, முற்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது அது {நரி} தன் நண்பனாக இருந்ததை நினைவு கூர்ந்து அதனிடம்,(10) “உண்மையில், ஒரு விலங்கின் அழுகிய சடலத்தைப் போன்ற வெறுக்கத்தக்க இந்த உணவை இப்பிறவியில் உண்ணும் கடப்பாட்டை அடையும் அளவுக்கு முற்பிறவியில் நீ இழைத்த பயங்கரப் பாவம் என்ன?” என்று கேட்டது.(11)
இவ்வாறு கேட்கப்பட்ட நரியானது, குரங்கிடம், “ஒரு பிராமணருக்குக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு அக்கொடையை நான் அவருக்குக் கொடுக்காதிருந்தேன்.(12) ஓ! குரங்கே, இந்த இழிந்த இருப்பு நிலையில் நான் வீழ்ந்ததற்கு அந்தப் பாவமே காரணம். அந்தக் காரணத்திற்காகவே எனக்குப் பசியேற்படும்போது, இத்தகைய உணவை உண்ணும் கடப்பாட்டை நான் அடைந்தேன்” என்று மறுமொழி சொன்னது”.(13)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பிறகு அந்த நரியானது குரங்கிடம், “ஒரு குரங்காவதற்கு நீ இழைத்த பாவமென்ன?” என்று கேட்டது.(14)
அந்தக் குரங்கு {நரியிடம்}, “என்னுடைய முற்பிறவியில் பிராமணர்களுக்குச் சொந்தமான கனிகளை நான் அபகரித்து வந்தேன். அதனால் நான் குரங்கானேன். புத்தியும், கல்வியும் கொண்ட ஒருவரும் பிராமணர்களுக்குச் சொந்தமானதை ஒருபோதும் அபகரிக்கக்கூடாது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், ஒருவன் இதைத் தவிர்க்கும் அதே வேளையில் பிராமணர்களுடன் எந்தச் சச்சரவையும் தவிர்க்க வேண்டும். ஒருவன் அவர்களுக்கு உறுதியளித்த பிறகு அந்தக் கொடையை அவர்களுக்கு நிச்சயம் அவன் கொடுக்க வேண்டும்” என்றது”.(15)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, நான் என் ஆசானுடன் பிராமணர்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்தே இதை நான் கேட்டேன். இக்காரியத்தில் புராதனமான, புனிதமான அறிவுக்குள் அந்த அறம் சார்ந்த மனிதர் உரைத்துக் கொண்டிருக்கும்போது, இதை நான் கேட்டேன்.(16) ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, பிராமணர்களைக் குறித்துக் கிருஷ்ணர் {வியாசர்} உரையாடிக் கொண்டிருக்கும்போதும் இதை நான் கேட்டிருக்கிறேன்[1].(17) ஒரு பிராமணனின் உடைமை ஒருபோதும் அபகரிக்கப்படக்கூடாது. அவர்களை ஒருபோதும் தனிமையில் விடக்கூடாது. ஏழையாகவோ, கஞ்சனாகவோ, வயதில் இளையவராகவோ இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது.(18) பிராமணர்கள் இஃதை எனக்குக் கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுப்பதாக உறுதியளித்த கொடையை நிச்சயம் கொடுக்க வேண்டும். மேன்மையான ஒரு பிராமணர் தன் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடையக்கூடாது.(19) ஓ! மன்னா, ஒரு பிராமணனுக்குள் எழும் எதிர்பார்ப்பானது சுடர்மிக்க நெருப்பைப் போன்றது எனச் சொல்லப்படுகிறது[2].(20)எதிர்பார்ப்புகள் எழுந்த ஒரு பிராமணர், எந்த மனிதன் மீது தன் கண்களைச் செலுத்துவாரோ அவன், ஓ! ஏகாதிபதி, சுடர்மிக்க நெருப்பால் எரிய வல்ல வைக்கோல் குவியலைப் போலவே எரியத்தகுந்தவனாவான்[3].(21) ஓ! பாரதா, மன்னன் கொடுக்கும் (கௌரவங்கள் மற்றும் கொடைகளில்) ஒரு பிராமணன் நிறைவடைந்து அந்த மன்னனிடம் இனிமையும், அன்பும் நிறைந்த வார்த்தைகளை {ஆசிகளைச்} சொல்லி அவன் அந்த நாட்டிலேயே தொடர்ந்து வாழும்போது, உடலில் உள்ள பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு மருத்துவனைப் போல அவன் அந்த மன்னனின் பெரும் நன்மைக்கான ஊற்றுக்கண்ணாகிறான்.(22) அத்தகைய ஒரு பிரமாணன், அந்த மன்னனின் மகன்கள், பேரர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், பிற அதிகாரிகள் ஆகியோரும் விலங்குகள், நகரம் மற்றும் மாகாணங்கள் ஆகியவையும் நன்மையும், அமைதியும் அடையும்படி செய்கிறான்.(23) பூமியில் ஆயிரங்கதிர் சூரியனைப் போல ஒரு பிராமணனின் சக்தி அவ்வளவு பெரியதாகும்.(24)எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தனது அடுத்தப் பிறவியில் மதிப்புமிக்க அல்லது மகிழ்ச்சிமிக்க நிலையை அடைய விரும்பினால், அவன் ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதாக உறுதியளித்ததை நிச்சயம் கொடுக்க வேண்டும்.(25) ஒரு பிராமணனுக்குக் கொடைகளை அளிப்பதால் அவன் நிச்சயம் உயர்ந்த சொர்க்கத்தை அடைவான். உண்மையில், கொடையளிக்கும் ஈகையே ஒருவன் அடையும் உயர்ந்த காரியம் {கர்மம்} ஆகும்.(26) ஒரு பிராமணனுக்கு ஒருவன் அளிக்கும் கொடைகளால், தேவர்களும், பித்ருக்களும் ஆதரிக்கப்படுகிறார்கள். எனவே, ஞானம் கொண்ட ஒருவன், பிராமணர்களுக்கு எப்போதும் கொடைகளை அளிக்க வேண்டும்.(27) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அளிக்கத் தகுந்த பிராமணனே ஒருவனுடைய உயர்ந்த நோக்கம் எனச் சொல்லப்படுகிறான்[4]. எக்காலத்திலும் ஒரு பிராமணனை முறையாக வழிபடாமல் அவன் வரவேற்கப்படக்கூடாது. {எப்போதும் ஒரு பிராமணன் முறையாக வழிபடப்பட்டு வரவேற்கப்பட வேண்டும்}.” {என்றார் பீஷ்மர்}.(28)
சூத்திரனும், பிராமணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 10-சூத்திரனுக்கு அறிவுரை சொன்ன பிராமணரின் நிலையை எடுத்துக் காட்டி தாழ்ந்தோருக்கு அறிவுரை சொல்லக்கூடாது என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அரசமுனியே, பிறப்பால் தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதனுக்கு நட்பின் விருப்பத்தாலோ, இல்லாமலோ {அன்பினாலோ} அறிவுரை சொல்வதால் ஒருவன் களங்கம் {பாவம்} இழைத்தவன் ஆவானா இல்லையா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! பாட்டா, எனக்கு இது விரிவாகச் சொல்லப்படுவதைக் கேட்க விரும்புகிறேன். கடமையின் பாதை {அறம்} மிக நுட்பமானதாகும். அவ்வழியில் மனிதர்கள் தடுமாறுவதே அடிக்கடி காணப்படுகிறது” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இது தொடர்பாகப் பழங்காலத்தில் குறிப்பிட்ட முனிவர்களிடம் இருந்து நான் கேட்டவற்றை முறையாக நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) தாழ்ந்த அல்லது இழிந்த சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு அறிவுரை வழங்கக்கூடாது[1]. அத்தகையை மனிதனுக்கு அறிவுரையை வழங்கும் ஓராசான் பெரும்பாவத்தை இழைப்பதாகச் சொல்லப்படுகிறது.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! யுதிஷ்டிரா, ஓ! ஏகாதிபதி, துன்பத்தில் வீழ்ந்தவனும், தாழ்ந்த பிறவியைக் கொண்டவனுமான ஒரு மனிதனுக்கு அறிவுரை வழங்குவதன் தீய விளைவுகளைப் பழங்காலத்தில் நடந்த இந்நிகழ்வின் மூலம் நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(5)நான் சொல்லப்போகும் இந்நிகழ்வு, மங்கலமான இமயச் சாரத்தில் உள்ள குறிப்பிட்ட மறுபிறப்பாள தவசிகளின் ஆசிரமத்தில் நேர்ந்ததாகும். அங்கே, அந்த மலைகளின் இளவரசனுடைய சாரலில், பல்வேறு வகையான மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு புனிதமான ஆசிரமம் இருந்தது.(6) பல்வேறு வகைச் செடிகொடிகள் நிறைந்த அந்த இடம், விலங்குகள் மற்றும் பறவைகள் பலவற்றின் ஓய்விடமாகவும் இருந்தது. சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த அந்த இடமானது, ஒவ்வொரு பருவகாலத்தில் மலர்ந்திருக்கும் சோலைகளின் விளைவால் மிக இனிமை நிறைந்ததாக இருந்தது.(7) அங்கே பிரம்மச்சாரிகள் பலரும், காட்டு வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்} வாழ்வோர் பலரும் அங்கே இருந்தனர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், சக்தி மற்றும் பிரகாசத்தில் சூரியனையோ, நெருப்பையோ போன்றவர்களுமான பிராமணர்கள் பலரும் அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(8) பல்வேறு நோன்புகளையும், நியமங்களையும் கொண்டவர்களும், தீக்ஷை பெற்றவர்களும், எளிய உணவை உண்பவர்களும், தூய்மையான ஆன்மாவைக் கொண்டவர்களுமான பல்வேறு வகைத் தவசிகள் அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(9) பெரும் எண்ணிக்கையிலான வாலகில்யர்களும், சந்நியாச நோன்பை நோற்கும் பலரும் அங்கே எப்போதும் வசித்து வந்தனர். இவை அனைத்தின் விளைவால் அந்த ஆசிரமம், அங்கே வசிப்பவர்கள் சொல்லும் வேதங்கள் மற்றும் புனித மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(10)
ஒரு காலத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட ஒரு சூத்திரன் அந்த ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்திற்கு அவன் வந்ததும், தவசிகள் அனைவராலும் அவன் முறையாகக் கௌரவிக்கப்பட்டான்[2].(11) ஓ! பாரதா, பல்வேறு வர்க்கங்களை {வர்ணங்களைச்} சேர்ந்தவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், (தூய்மையிலும், சக்தியிலும்) தேவர்களுக்கு ஒப்பானவர்களும், பல்வேறு வகைத் தீக்ஷைகளைப் பெற்றவர்களுமான அந்தத் தவசிகளைக் கண்டு அந்தச் சூத்திரன் இதயத்தில் பெரும் நிறைவை அடைந்தான்.(12) அனைத்தையும் கண்ட அந்தச் சூத்திரன், தவப்பயிற்சிக்குத் தன்னை அர்ப்பணிக்கும் விருப்பத்தை {தன்னுள்} உணர்ந்தான். ஓ! பாரதா, அவன் குலபதியின் பாதங்களைத் தீண்டி[3],(13) “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமது அருளால் நான் அறக்கடமைகளைக் கற்க (பயிற்சி செய்ய) விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கவரே, அக்கடமைகளைக் குறித்துச் சொல்லி, (தொடக்கச் சடங்குகளைச் செய்வதன் மூலம்) துறவு வாழ்வுக்கு என்னை அறிமுகம் செய்வதே உமக்குத் தகும்.(14) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, சாதியால் சூத்திரனான நான், நிச்சயம் வர்ணத்தால் தாழ்ந்தவனே. நான் இங்கே உமக்குப் பணிவிடை செய்யவும், தொண்டாற்றவும் விரும்புகிறேன். உமது உறைவிடத்தை எளிமையாக நாடும் என்னிடம் நிறைவு கொள்வீராக” என்றான்.(15)குலபதி, “ஒரு சூத்திரன், துறவு வாழ்வுக்கான குறியீடுகளைப் பின்பற்றி இங்கே வாழ்வது சாத்தியமில்லை. நீ விரும்பினால், எங்களுக்குப் பணிவிடை செய்து கொண்டும், தொண்டாற்றிக் கொண்டும் இங்கேயே இருக்கலாம்.(16) அத்தகைய தொண்டின் மூலம் நீ உயர்ந்த இன்பலோகங்கள் பலவற்றை அடைவாய் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(17)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, அந்தத் தவசியால் இவ்வாறு சொல்லப்பட்டும், அந்தச் சூத்திரன் தன் மனத்தில் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கினான், “நான் இப்போது என்ன செய்வது? தகுதிக்கு {புண்ணியத்திற்கு} வழிவகுக்கும் அந்த அறக்கடமைகளில் நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன்.(18) எனினும், எனக்கான நன்மையை நானே செய்து கொள்ளத் தீர்மானிக்கிறேன்” {என்று நினைத்தான்}. அந்த ஆசிரமத்தில் இருந்து தொலைவான ஓர் இடத்தை அடைந்த அவன், மரத்தின் குச்சிகள் மற்றும் இலைகளால் ஒரு குடிசையை அமைத்தான்.(19) ஓ! பாரதர்களின் தலைவா, ஒரு வேள்வி மேடையையும் அமைத்து, தனது உறக்கத்திற்கான சிறு இடத்தையும் ஒதுக்கிக் கொண்ட அவன், தேவர்களுக்காகச் சில மேடைகளை அமைத்து, பேச்சைத் தவிர்த்து, கடும் நோன்புகள், நியமங்கள் மற்றும் தவங்களுக்கான ஒரு வாழ்வைப் பின்பற்றத் தொடங்கினான்.(20) அவன், ஒரு நாளைக்கு மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்யவும், (உணவு மற்றும் உறக்கத்தைப் பொறுத்தவரையில்) பிற நோன்புகளை நோற்கவும், தேவர்களுக்கான வேள்விகளைச் செய்யவும், வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றவும், இவ்வழியில் தேவர்களைத் துதித்து வழிபடவும் தொடங்கினான்.(21) உடல் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் தவித்து, கனிகள் மற்றும் கிழங்குகளைக் குறைவாகவே உண்டு, புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, தன் ஆசிரமத்திற்கு வந்த விருந்தாளிகள் அனைவரையும் வரவேற்று உபசரித்து, சுற்றிலும் அபரிமிதமாக வளர்ந்திருந்த கனிகளையும், கீரைகளையும் அவர்களுக்குக் கொடுத்தான். இவ்வழியில் அவன் தன் ஆசிரமத்திலேயே நெடுங்காலத்தைக் கழித்தான்.(22,23)
ஒரு நாள் ஒரு தவசி தம்மை அறிமுகம் செய்து கொள்ளும் நோக்கில் அந்தச் சூத்திரனின் ஆசிரமத்திற்கு வந்தார். சூத்திரன், முறையாக சடங்குகளுடன் அந்த முனிவரை வரவேற்று வழிபட்டு, அவரை உயர்வான நிறைவைக் கொள்ளச் செய்தான்.(24) பெரும் சக்தியும், அற ஆன்மாவும் கொண்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த முனிவர், தனக்கு விருந்தளிப்பவனிடம் ஏற்புடைய பல்வேறு காரியங்களைக் குறித்துப் பேசி, தாம் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்தையும் அவனுக்குச் சொன்னார்.(25) ஓ! பாரதர்களின் தலைவா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இவ்வழியில் அந்த முனிவர், அந்தச் சூத்திரனைக் காண எண்ணற்ற முறை அந்த ஆசிரமத்திற்கு வந்தார்.(26) ஓ! மன்னா, இந்தச் சந்தர்ப்பங்கள் ஒன்றில் சூத்திரன் அம்முனிவரிடம், “நான், பித்ருக்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன். இக்காரியத்தில் நீர் எனக்கு அன்பைக் காட்டுவீராக {கருணை கொள்வீராக}” என்று கேட்டான்.(27) ஓ! ஏகாதிபதி, “மிக்க நன்று” என அந்தப் பிராமணர் மறுமொழி கூறினார்.(28)
அப்போது அந்தச் சூத்திரன் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அந்த முனிவர் தமது காலைக் கழுவிக் கொள்ள நீரையும், குச {தர்ப்பைப்} புற்களையும், காட்டின் காய் கனிகளையும், ஒரு புனிதமான இருக்கையையும், விருஷி என்றழைக்கப்பட்ட இருக்கையையும் கொண்டு வந்தான்.(29) மேலும் அவன் தெற்கு நோக்கி நின்று கொண்டு அந்த விருஷியை மேற்கு நோக்கிப் போட்டான். இதைக் கண்டு, இது விதிக்கு எதிரானது என்பதை அறிந்த அந்த முனிவர் அந்தச் சூத்திரனிடம்,(30) “விருஷியின் தலையைக் கிழக்கு நோக்கித் திருப்புவாயாக, நீயும் உன்னைத் தூய்மை செய்து கொண்டு, வடக்கு நோக்கிய முகத்துடன் அமர்வாயாக” என்றார். அம்முனிவர் சொன்னது போலவே அந்தச் சூத்திரன் அனைத்தையும் செய்தான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அறம் நோற்பவனுமான அந்தச் சூத்திரன், தவங்களைக் கொண்ட அந்த முனிவரிடம் இருந்து, குசப் புற்களை {தர்ப்பைகளைப்} பரப்புவது முறை, அர்க்கியம் வைப்பது போன்ற முறைகள், ஆகுதிகளை ஊற்றும் காரியத்தில் செய்யப்பட வேண்டிய சடங்குகள், காணிக்கை அளிக்கப்பட வேண்டிய உணவு ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்து, விதிப்படி விதிக்கப்பட்டுள்ள சிராத்தம் குறித்த அனைத்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டான். பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்குகள் நிறைவடைந்ததும் சூத்திரன் அந்த முனிவரை அவரது வசிப்பிடத்திற்கே அனுப்பி வைத்தான்[4].(32,33)இத்தகைய தவங்கள் மற்றும் நோன்புகளைச் செய்து கொண்டே நீண்ட காலத்தைக் கழித்த அந்தச் சூத்திரத் தவசி அந்தச் சோலையிலேயே மரணத்தைச் சந்தித்தான். அந்தப் பயிற்சிகளால் அந்தச் சூத்திரன் ஈட்டிய தகுதியின் {புண்ணியத்தின்} விளைவாக மறுபிறவியில் பெரும் மன்னனின் குடும்பத்தில் பிறந்து,(34) காலத்தில் அவன் பெருங்காந்தியைக் கொண்டவனானான். அந்த மறுபிறப்பாள முனிவரும் காலம் வந்தபோது இயற்கைக்குத் தன் கடனைச் செலுத்தினார் {இறந்து போனார்}.(35) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவர் மறுபிறவியில் ஒரு புரோஹிதரின் குடும்பத்தில் பிறந்தார். தவத்தில் வாழ்வைக் கழித்த அந்தச் சூத்திரன், அன்பினால் அவனுக்குப் பித்ரு பூஜையில் செய்யப்படும் சடங்குகளைக் கற்பித்த அந்த மறுபிறப்பாள முனிவர் ஆகிய இருவரில் ஒருவர் அரச குடும்பக் கொழுந்தாகவும், மற்றொருவர் புரோகிதக் குடும்பத்தின் உறுப்பினராகவும் மறுபிறவி அடைந்தனர்.(36) இருவரும் வளரத் தொடங்கினர், இருவரும் வழக்கமான கல்விக் கிளைகளில் பெரும் ஞானத்தை அடைந்தனர்.
அந்தப் பிராமணர் வேதங்களையும், அதர்வணங்களையும் நன்கறிந்தவரானார்[5].(37) மேலும், மறுபிறவி அடைந்த அந்த முனிவர், அறச்சடங்குகள், நோன்புகள், கணியம் {சோதிடம்}, வானவியல் தொடர்பான வேதாங்க சூத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகள் அனைத்திலும் பெருந்திறனைப் பெற்றார். சாங்கியத் தத்துவத்திலும் அவர் பெரும் திளைப்பை அடையத் தொடங்கினார்.(38) அதே வேளையில், இளவரசனாக மறுபிறவியடைந்த அந்தச் சூத்திரன், தன் தந்தையான மன்னன் இறந்தபோது, அவனது இறுதிச் சடங்குகளைச் செய்து, ஈமக் காரியங்கள் அனைத்தையும் செய்வதன் மூலம் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்ட பிறகு, குடிமக்கள் அவனது தந்தை வழியில் வந்த அரியணையில் அவனைத் தங்கள் மன்னனாக நிறுவிக் கொண்டனர்.(39) அவன் மன்னனாக நிறுவப்பட்ட உடனேயே அவன், மறுபிறவி எடுத்திருந்த அந்த முனிவரைத் தன் புரோஹிதராக நியமித்தான். உண்மையில், அந்தப் பிராமணரைத் தன் புரோகிதராக்கிக் கொண்ட அந்த மன்னன் பெரும் மகிழ்ச்சியில் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்.(40)அவன் தன் நாட்டை நீதியுடன் ஆட்சி செய்து, தன் குடிமக்கள் அனைவரையும் பேணி வளர்த்துப் பாதுகாத்தான். எனினும், ஒவ்வொரு நாளும் தன் புரோகிதரிடம் ஆசி பெறும்போதும், அறச்சடங்குகள் அல்லது புனிதமான பிற சடங்குகளைச் செய்யும்போதும் அவரைக் காணும் மன்னன் புன்னகைக்கவோ, உரக்கச் சிரிக்கவோ செய்தான். ஓ! ஏகாதிபதி, இவ்வகையில் மறுபிறவியில் மன்னனான அந்தச் சூத்திரன், எண்ணற்ற சந்தர்ப்பங்களில் தன் புரோகிதரைக் கண்டு சிரித்தான்.(41,42) மன்னன் எப்போதும் சிரிப்பதைக் கவனித்த புரோகிதர், எப்போதெல்லாம் தமது கண்களை அவன் மேல் செலுத்தினாரோ அப்போதெல்லாம் கோபமடைந்தார்.(43) ஒரு தருணத்தில் அவர் யாருமற்ற ஓரிடத்தில் அம்மன்னனைச் சந்தித்தார். அவர் ஏற்புடைய உரையின் மூலம் மன்னனை நிறைவு கொள்ளச் செய்தார்.(44) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அக்கனத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் புரோகிதர் மன்னனிடம், “ஓ! பெரும் காந்தி கொண்டவனே, நீ எனக்கு ஒரு வரமளிக்க வேண்டுகிறேன்” என்றார்.(45)
மன்னன், “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நான் உமக்கு நூறு வரங்களை அளிக்கவும் தயாராக இருக்கிறேன் எனும்போது ஏன் ஒன்று மட்டுமே கேட்கிறீர்? நான் உம்மிடம் கொண்ட அன்புக்கும், மதிப்புக்கும் என்னால் உமக்குக் கொடுக்க முடியாதது எதுவுமில்லை” என்றான்.(46)
புரோஹிதர், “ஓ! மன்னா, நீ என்னிடம் நிறைவுகொண்டிருந்தால் ஒரே ஒரு வரத்தை மட்டுமே விரும்புகிறேன். பொய் சொல்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வதாக உறுதியளிப்பாயாக” என்றார்”.(47)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, புரோகிதரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மன்னன் அவரிடம், “அவ்வாறே ஆகட்டும். நீர் என்னிடம் கேட்பது நான் அறிந்ததாக இருந்தால் நிச்சயம் நான் உமக்கு உண்மையைச் சொல்வேன். மறுபுறம் அக்காரியத்தை நான் அறியவில்லையென்றால் நான் ஒன்றையும் சொல்லமாட்டேன்” என்றான்.(48)
புரோஹிதர், “ஒவ்வொரு நாளும் என் ஆசிகளைப் பெறும் தருணங்களிலும், உன் சார்பாக நான் அறச்சடங்குகளைச் செய்வதில் ஈடுபடும்போதும், ஹோமம் மற்றும் பிற தணிவுச் சடங்குகளைச் செய்யும் தருணங்களிலும் நீ ஏன் என்னைக் கண்டு சிரிக்கிறாய்?(49) அத்தருணங்கள் அனைத்திலும் நீ சிரிப்பதைக் கண்டு என் மனம் வெட்கத்தால் ஒடுங்குகிறது. ஓ! மன்னா, உண்மையான பதிலைச் சொல்ல வேண்டுமென நான் உன்னை உறுதியளிக்கச் செய்திருக்கிறேன். பொய் சொல்வது உனக்குத் தகாது.(50) உன் நடத்தைக்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்க வேண்டும். உன் சிரிப்புக் காரணமற்றதாக இருக்க முடியாது. அக்காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது. நீ எனக்கு உண்மையைச் சொல்வாயாக” என்றார்.(51)
மன்னன், “ஓ! மறுபிறப்பாளரே, நீர் இவ்வாறு கேட்ட பிறகு, நீர் கேட்கத்தகாததாக இருப்பினும் உமக்கு இக்காரியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நான் கட்டுப்பட்டிருக்கிறேன். நான் உமக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். ஓ! மறுபிறப்பாளரே, மிகக் கவனமாகக் கேட்பீராக.(52) ஓ!இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நமது முற்பிறவிகளில் (நமக்கு) என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக. அப்பிறவியை நான் நினைவில் கொண்டுள்ளேன். குவிந்த மனத்தோடு நான் சொல்வதைக் கேட்பீராக.(53) முற்பிறவியில் நான் கடுந்தவங்களில் ஈடுபடும் ஒரு சூத்திரனாக இருந்தேன். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நீரோ கடுந்தவங்களைக் கொண்ட ஒரு முனிவராக இருந்தீர்.(54) ஓ! பாவமற்றவரே, ஓ! பிராமணரே, (ஒரு சந்தர்ப்பத்தில்) என் பித்ருக்களைக் கௌரவிக்க நான் செய்த சடங்குகளில், எனக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்ட நீர் குறிப்பிட்ட சில அறிவுரைகளைச் சொல்லி என்னை நிறைவு கொள்ளச் செய்தீர்.(55) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, விருஷி மற்றும் குச {தர்ப்பைப்} புற்களைப் பரப்பும் முறை, ஆகுதிகள், இறைச்சி மற்றும் பிற உணவுகளைக் காணிக்கை அளிப்பது குறித்த அறிவுரைகளை நீர் எனக்குச் சொன்னீர். இந்தக் குற்றத்தின் விளைவால் நீர் ஒரு புரோஹிதராகப் பிறந்தீர். ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நானோ மன்னாகப் பிறந்திருக்கிறேன். காலம் கொண்டு வரும் மாற்றங்களைக் காண்பீராக. (முற்பிறவியில்) நீ எனக்கு அறிவுரை கூறியதன் விளைவால் இக்கனியை அறுவடை செய்திருக்கிறீர் {இந்தப் பலனை அடைந்திருக்கிறீர்}.(57) ஓ! பிராமணரே, இக்காரணத்திற்காகவே நான் உம்மைப் பார்க்கும்போதெல்லாம் சிரிக்கிறேன். உம்மை அவமதிக்கும் விருப்பத்தில் நிச்சயம் நான் சிரிக்கவில்லை. நீர் என் ஆசானாவீர்.(58) இந்நிலை மாறுபாட்டில் நான் உண்மையில் வருத்தமடைகிறேன். இந்த நினைப்பில் என் இதயம் எரிகிறது. நமது முற்பிறவியை நினைவுகூர்ந்தே உம்மைக் காணும்போது நான் சிரிக்கிறேன்.(59) நீர் எனக்குக் கொடுத்த அறிவுரைகளின் மூலம் உமது கடுந்தவங்கள் அனைத்தும் அழிவடைந்தன. புரோஹிதரான உமது தற்போதைய அலுவலைத் துறந்து மீண்டும் மேன்மையான பிறவியை அடைய முயற்சிப்பீராக.(60) இப்பிறவியில் உள்ளதைவிட மறுபிறவியில் இழிந்த நிலையை அடையாமல் இருக்க முயற்சி செய்வீராக. ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, விரும்பிய அளவுக்குச் செல்வங்களை எடுத்துக் கொண்டு உமது ஆன்மாவைத் தூய்மையடையச் செய்வீராக” என்றான்”.(61)
பீஷ்மர் தொடர்ந்தார், “(புரோஹித அலுவலில் இருந்து) மன்னனால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட அந்தப் பிராமணர், தன் வகையைச் சேர்ந்தோருக்குச் செல்வம், நிலம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட பல கொடைகளை அளித்தார்.(62) அவர் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட கடும் தவங்களைச் செய்தார். அவர் புனித நீர்நிலைகள் பலவற்றுக்குச் சென்று அந்த இடங்களில் வைத்துப் பல கொடைகளை அளித்தார்.(63) மறுபிறப்பாள வகையினருக்குப் பசுக்களைக் கொடையளித்து ஆன்மத் தூய்மையை அடைந்து ஞானத்தை ஈட்டுவதில் வென்றார். அவர், முற்பிறவியில் தாம் வாழ்ந்த அதே ஆசிரமத்திற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தார்.(64) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இவை அனைத்தின் விளைவால் அந்தப் பிராமணர் உயர்ந்த வெற்றியை அடைவதில் வென்றார். அவர் அந்த ஆசிரமத்தில் வசித்த தவசிகள் அனைவரின் மதிப்பிற்குரிய பொருளாக இருந்தார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, இவ்வகையிலேயே அந்த மறுபிறப்பாள முனிவர் பெரும் துயரத்தை அடைந்தார். எனவே ஒரு பிராமணன் சூத்திரர்களுக்கு ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது.(66)
ஓ! மன்னா, ஒரு பிராமணன் தாழ்ந்த பிறவியைக் கொண்ட ஒரு மனிதனுக்கு அறிவுரை சொல்லி துயரத்தை அடைந்ததால் பிராமணன் (அத்தகைய தாழ்ந்த பிறவியைக் கொண்டோருக்கு) அறிவுரை சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.(67) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, ஒரு பிராமணன் தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒரு மனிதனிடமிருந்து அறிவுரை பெறவோ, அறிவுரை சொல்லவோ கூடாது.(68) பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினர் {வர்ணத்தார்} இருபிறப்பாளர்களாக {த்விஜர்களாகக்} கருதப்படுகிறார்கள். ஒரு பிராமணன் இவர்களுக்கு அறிவுரை சொல்வதால் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான்.(69) எனவே, தாழ்ந்த வகையைச் சார்ந்த மனிதர்களின் முன்பு நல்லோர் ஒருபோதும் எந்த அறிவுரையும் சொல்லக்கூடாது. அறத்தின் பாதை மிக நுட்பமானதும், தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாததும் ஆகும்.(70) இந்தக் காரணத்திற்காகவே தவசிகள் அமைதி நோன்பை நோற்று (மௌன விரதம் இருந்து), பேச்சில் ஈடுபடாமல் தீக்ஷையைக் கடந்து அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். சரியற்றது அல்லது வருத்தமளிக்கக்கூடியதைச் சொல்வதற்கு {சொற்குற்றத்துக்கு} அஞ்சியே தவசிகள் பேச்சை துறக்கிறார்கள்[6].(71)அறவோரும், அனைத்துச் சாதனைகளையும் செய்தோரும், உண்மை மற்றும் எளிய நடத்தை கொண்டோரும் கூடச் சரியாகப் பேசாத வார்த்தைகளின் விளைவால் பெருங்களங்கத்தை {பெரும்பாவத்தை} இழைத்ததாக அறியப்படுகிறார்கள்.(72) {அறியாமல்} யாருக்கும் எது குறித்தும் ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது. சொல்லப்பட்ட அறிவுரையின் காரணமாக, அறிவுரை பெற்றவன் பாவமேதும் செய்தால் அந்தப் பாவம் அறிவுரை சொன்ன பிராமணனையே சாரும்.(73) எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் மனிதன் எப்போதும் ஞானத்துடன் செயல்பட வேண்டும். பணப் பறிமாற்றத்திற்காகச் சொல்லப்படும் அறிவுரை உபதேசிப்பவனைக் களங்கமடையச் செய்யும் {பாவமீட்ட வைக்கும்}.(74) பிறரால் வேண்டப்படும் ஒருவன் தன் நினைவின் துணையுடன் தீர்மானத்தை அடைந்த பிறகு சரியானதை மட்டுமே சொல்ல வேண்டும்.(75) நான் இப்போது அறிவுரை குறித்த காரியங்கள் அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். அறிவுரை சொல்வதன் விளைவால் மனிதர்கள் எப்போதும் பெரும் துன்பத்தில் மூழ்குகிறார்கள். எனவே, ஒருவன் பிறருக்கு அறிவுரைகள் சொல்வதைத் தவிர்ப்பது அவசியமாகிறது” {என்றார் பீஷ்மர்}[7].(76)
திருமகள் வசிப்பிடம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 11-லட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் ருக்மிணிக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதர்களின் தலைவரே, எந்த வகை ஆண், அல்லது எந்த வகைப் பெண்ணில் செழிப்பின் தேவி {லட்சுமி} எப்போதும் வசிக்கிறாள்?” எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக உள்ளபடியே நடந்ததையும், நான் கேட்டதையும் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு காலத்தில் இளவரசி ருக்மிணி, தேவகி மகனின் {கிருஷ்ணனின்} முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(2) தன் கொடியில் மகரத்தைக் கொண்டவனான பிரத்யும்னனின் தாயானவள் {ருக்மிணி}, அழகில் சுடர்விடுபவளும், தாமரையின் நிறத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவியை {லட்சுமியைக்} கண்டு, ஆவலால் நிறைந்தவளாக இந்த வார்த்தைகளைச் சொன்னாள்:(3) “நீ யாரின் அருகில் இருக்கிறாய், யாருக்குத் தொண்டாற்றுகிறாய்? மேலும் நீ யாருக்குத் தொண்டாற்றுவதில்லை? ஓ! அனைத்துயிரினங்ளுடைய தலைவனின் அன்புக்குரியவளே, ஓ! தவத்திலும், பலத்திலும் ஒரு பெருமுனிவருக்கு இணையானவளே, இஃதை எனக்கு உண்மையில் சொல்வாயாக” என்று கேட்டாள்.(4) அந்த இளவரசியால் {ருக்மிணியால்} இவ்வாறு கேட்கப்பட்டவளும், சந்திரனைப் போன்ற அழகிய முகத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவி, அருளால் தூண்டப்பட்டு, இனிமையானவையும், அழகானவையுமான இந்த வார்த்தைகளைக் கருடனைத் தன் கொடியில் கொண்டவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து மறுமொழியாகக் கூறினாள்.(5)
ஸ்ரீ {லட்சுமி}, “ஓ! அருளப்பட்ட பெண்ணே {ருக்மிணி}, நாநலம், சுறுசுறுப்பு, காரியத்தில் கவனம் ஆகியவற்றைக் கொண்டவனும், கோபத்தில் இருந்து விடுபட்டவனும், தேவர்களை வழிபடுபவனும், நன்றியுணர்வுமிக்கவனும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த மனத்தைக் கொண்டவனுமாக இருப்பவனிடம் எப்போதும் வசிக்கிறேன்.(6) காரியத்தில் கவனமில்லாதவன், நம்பிக்கையில்லாதவன் {நாத்திகன்}, காமத்தின் விளைவால் இனக்கலப்பு செய்பவன், நன்றிமறந்தவன், தூய்மையற்ற நடைமுறைகளைக் கொண்டவன், கடுமையான மற்றும் கொடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவன், கள்வன், தன் ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் வன்மத்தை வளர்ப்பவன் ஆகியோரிடத்தில் ஒருபோதும் வசிப்பதில்லை.(7) சக்தி, பலம், வாழ்வு, கௌரவம் ஆகியவை குறைந்திருப்போர், அற்ப காரியம் ஒவ்வொன்றிற்கும் துயரமடைபவர்கள், எப்போதும் கோபமடைபவர்கள் ஆகியோரிடத்தில் நான் ஒருபோதும் வசிப்பதில்லை. மேலும், எண்ணத்தில் ஒன்றாகவும், செயலில் மற்றொன்றாகவும் இருப்போரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை.(8) தனக்காக எந்த உடைமையையும் ஒருபோதும் விரும்பாதவன், அல்லது முயற்சியின்றிக் கிட்டும் பொருளில் நிறைவடைந்து எஞ்சியவற்றில் குருடாயிருப்பவன், அல்லது சொற்ப உடைமைகளிலேயே நிறைவடைபவர்கள் ஆகியோரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை[1].(9) தங்கள் வகைக்கான {வர்ணத்திற்கான} கடமைகளைச் செய்வோர், அல்லது அறக்கடமைகளை அறிந்தோர், அல்லது, முதியோரின் தொண்டிற்குத் தங்களை அர்ப்பணித்தோர், தங்கள் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டோர், அல்லது தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோர், அல்லது மன்னிக்கும் தன்மை என்ற அறத்தை நோற்பவர்கள், அல்லது செயல்படுவதில் திறனும் ஊக்கமும் வாய்ந்தவர்கள், அல்லது மன்னிக்கும் தன்மை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட பெண்களிடம் நான் எப்போதும் வசிப்பேன்.(10)
வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தேவர்களை வழிபடுபவர்களுமான பெண்களிடமும் நான் வசிக்கிறேன். வீட்டு அறைகலன்கள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கவனிக்காதவர்கள், தங்கள் கணவர்களின் விருப்பங்களுக்கு முரணான வார்த்தைகளையே எப்போதும் சொல்பவர்கள் ஆகிய பெண்களிடம் நான் வசிப்பதில்லை.(11) வேறு மனிதர்களின் வீடுகளில் விருப்பமுள்ளவர்கள் மற்றும் பணிவில்லாதவர்களாக இருக்கும் பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். மறுபுறம், தங்கள் கணவர்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்போர், நன்னடத்தையால் அருளப்பட்டவர்கள், எப்போதும் ஆபரணங்களை அணிந்து கொள்பவர்கள், நல்ல ஆடைகளை உடுத்துபவர்கள் ஆகிய பெண்களிடம் எப்போதும் நான் வசிக்கிறேன்.(12) பேச்சில் வாய்மை நிறைந்தோர், அழகிய ஏற்புடைய குணங்களைக் கொண்டோர், அருளப்பட்டோர், அனைத்து சிறப்புகளையும் கொண்டோர் ஆகிய பெண்களில் எப்போதும் நான் வசிக்கிறேன். பாவம் நிறைந்தோர், தூய்மையற்றோர், கடைவாயை நாவால் நனைப்போர், பொறுமையோ, மனோவுறுதியோ இல்லாதோர், சண்டை சச்சரவுகளில் விருப்பமுள்ளோர்;(13) அதிகம் உறங்குவோர் மற்றும் எப்போதும் படுத்தே கிடப்பவர்கள் ஆகிய பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். வாகனங்கள், அவற்றை இழுக்கும் விலங்குகள், கன்னிப் பெண்கள், ஆபரணங்கள், நல்ல ஆபரணங்கள், வேள்விகள், மழை நிறைந்த மேகங்கள்,(14) முற்றாக மலர்ந்த தாமரைகள், கூதிர் கால ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் எப்போதும் நான் வசிக்கிறேன். யானைகள், மாட்டுக் கொட்டில், நல்ல இருக்கைகள், முற்றாக மலர்ந்த தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட தடாகங்கள் ஆகியவற்றில் நான் வசிக்கிறேன்.(15)
நாரைகளின் இனிய இசையைக் கொண்டவையும், பல்வேறு மர வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட கரைகளைக் கொண்டவையும், பிராமணர்கள், தவசிகள் மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறரால் அடையப்பட்டவையும், தங்கள் போக்கில் இனிமையான மென் சலசலப்பைக் கொண்டவையுமான ஆறுகளிலும் நான் வாழ்கிறேன்.(16) நீராடவும், தாகம் தணித்துக் கொள்வதற்காகவும் மூழ்கும் சிங்கங்கள் மற்றும் யானைகளால் சேறாகக் கலங்கி பெரும் அளவில் கரைபுரண்டோடும் நீருடன் கூடிய ஆழமான ஆறுகளிலும் நான் எப்போதும் வசிக்கிறேன். மதங்கொண்ட யானைகள், காளை மாடுகள், அரியணை ஆகியவற்றிலும், மன்னர்கள் மற்றும் நல்ல மனிதர்களிடத்திலும் நான் வசிக்கிறேன்.(17) எந்த வீட்டு மக்கள் வேள்வித் தீயில் ஆகுதிகளை ஊற்றி, பசுக்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்களை வணங்குகிறார்களோ அந்த வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன். தேவர்களின் வழிபாட்டில் சரியான நேரங்களில் மலர்களைக் காணிக்கையளிப்போர் உள்ள வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன்[2].(18)வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்கள், அறம் நோற்பதில் அர்ப்பணிப்புள்ள க்ஷத்திரியர்கள், உழவில் அர்ப்பணிப்புள்ள வைசியர்கள், மூன்று மேல் வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} (மேனியால் செய்யப்படும்) தொண்டில் அர்ப்பணிப்புள்ள சூத்திரர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(19) நான் நாராயணனில் உறுதிமிக்க மாற்றமில்லாத இதயத்துடன் கூடியவளாக உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிக்கிறேன். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு, ஏற்புடைய குணம், முற்று முழுதான அறம் ஆகியவை அவனிலேயே இருக்கின்றன.(20) ஓ! பெண்ணே {ருக்மிணி}, (நாராயணனைத் தவிர, நான் குறிப்பிட்ட எந்த இடத்திலும்) உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிப்பதில்லை என நான் சொல்ல முடியாதா? எந்த மனிதனிடம் நான் சக்தியாக வசிக்கிறேனோ, அவனிடம் அறமும், புகழும், ஆசைக்குரிய பொருட்களும், செல்வமும் தழைத்துப் பெருகும்” என்றாள் {ஸ்ரீ}” {என்றார் பீஷ்மர்}.(21)
பெண்ணாகவே நீடிக்க விரும்பிய பங்காஸ்வனன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 12-ஆண் பெண் கலவியில் யாருக்கு இன்பம் அதிகமென்பதைச் சொல்ல பங்காஸ்வனன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் புரியும் கலவிச் செயல்பாட்டில் அவ்விருவரில் அதிக இன்பத்தைப் பெறுபவர் எவர் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். அருள்கூர்ந்து இக்காரியத்தில் எனது ஐயத்தைப் போக்குவீராக” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பங்காஸ்வனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை இக்கேள்வியை முன்வைக்கும் முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் பங்காஸ்வனன் என்ற பெயரில் ஒரு மன்னன் வாழ்ந்தான். அவன் பெரும் அறவோனாகவும், அரசமுனியாகவும் அறியப்பட்டிருந்தான். எனினும், ஓ! மனிதர்களின் தலைவா, அவன் பிள்ளையற்றவனாக இருந்ததால், ஒரு பிள்ளையைப் பெறும் விருப்பத்தில் ஒரு வேள்வியைச் செய்தான்.(3) அந்த வலிமைமிக்க ஏகாதிபதி செய்த அக்னிஸ்டுதம் என்ற அவ்வேள்வியில், நெருப்பின் தேவன் மட்டுமே துதிக்கப்படுவதன் விளைவால் இந்திரன் அஃதை {அவ்வேள்வியை} எப்போதும் விரும்பியதில்லை. எனினும் அது {அவ்வேள்வி}, பிள்ளை பெறும் நோக்கில் தங்கள் பாவங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக் கொள்ள முனையும் மனிதர்களால் விரும்பப்படும் வேள்வியாக இருந்தது[1].(4)உயர்வாக அருளப்பட்டவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன், அந்த ஏகாதிபதி {பங்காஸ்வனன்} அக்னிஷ்டுத வேள்வியைச் செய்ய விரும்புவதை அறிந்து, (அவனிடம் சில தவறுகளைக் கண்டால் தன்னை அவமதித்தவனை அவனால் தண்டிக்க முடியும் என்பதால்) நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட அந்த அரசமுனியிடம் {பங்காஸ்வனிடம்} அந்தக் கணம் முதல் தவறுகளைத் தேடத் தொடங்கினான்.(5) எனினும், ஓ! மன்னா, எப்போதும் இந்திரனின் கண்காணிப்பு இருந்தபோதிலும், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடம் அவனால் தவறுகளை எதையும் காண முடியவில்லை. சில காலம் கழித்து ஒரு நாள், அந்த மன்னன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(6) இந்திரன் தனக்குள்ளேயே, “உண்மையில் இஃது ஒரு வாய்ப்புதான்” எனச் சொல்லிக் கொண்டு அந்த ஏகாதிபதியை புத்திமயங்கச் செய்தான். தேவர்களின் தலைவனால் புலன்கள் திகைத்துக் குழப்பத்தில் இருந்த அம்மன்னன் தன் குதிரையில் தனியாகச் சென்று கொண்டிருந்தான்.(7) பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்ட அம்மன்னனால் திசைப்புள்ளிகளை உறுதி செய்து கொள்ள முடியாத வண்ணம் அவனது மயக்கம் பெரிதாக இருந்தது.(8) அப்போது அவன் தெளிந்த நீர் நிரம்பிய மிக அழகிய தடாகம் ஒன்றைக் கண்டான். தன் குதிரையில் இருந்து இறங்கிய அவன், தடாகத்திற்குள் மூழ்கித், தன் விலங்கையும் {குதிரையையும் நீர்} குடிக்கச் செய்தான்.(9) பிறகு, தாகம் தணிக்கப்பட்ட தன் குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, தன் தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காக அம்மன்னன் மீண்டும் தடாகத்திற்கு மூழ்கினான். அந்த நீரின் தன்மையால் அவன் பெண்ணாக மாறிவிட்டதைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான்.(10)இவ்வாறு தான் பாலின மாற்றம் அடைந்ததைக் கண்ட அம்மன்னன் வெட்கமடைந்தான் {அவமானமடைந்தான்}. புலன்களும், மனமும் முற்றிலும் கலங்கிய அவன் முழு இதயத்துடன் இவ்வகையில் நினைக்கத் தொடங்கினான்:(11) “ஐயோ, என் குதிரையை நான் எவ்வாறு செலுத்தப் போகிறேன்? என் தலைநகருக்கு எவ்வாறு திரும்பப் போகிறேன்? அக்னிஷ்டுத வேள்வி செய்ததன் விளைவால், பெரும் வலிமைமிக்கவர்களும், என் மடியில் பிறந்தவர்களுமான நூறு மகன்களைப் பெற்றிருக்கிறேன். ஐயோ, இவ்வாறு மாற்றமடைந்திருக்கும் நான் அவர்களிடம் என்ன சொல்லப் போகிறேன்? என் மனைவியர், உறவினர், நலன்விரும்பிகள், நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள என் குடிமக்கள் ஆகியோரிடம் நான் என்ன சொல்லப் போகிறேன்?(12,13) கடமை, அறம் மற்றும் பிற காரியங்களின் உண்மைகளை அறிந்த முனிவர்கள், அமைதியான குணம், மென்மை, பெருங்கலக்கமடையும் தன்மை {பிறருக்கு உட்படுதல், நகை, விளையாட்டு, தேக ஒளி} ஆகியவற்றைப் பெண்களின் குணங்கள் என்றும்,(14) செயல்பாடு {உடல் உழைப்பு}, கடுமை, சக்தி ஆகியவற்றை ஆண்களின் குணங்கள் என்றும் சொல்கிறார்கள். ஐயோ என் ஆண்தன்மை மறைந்துவிட்டதே. என்ன காரணத்திற்காக எனக்குப் பெண்தன்மை உண்டானது? இந்தப் பாலின மாறுபாட்டின் விளைவால், என் குதிரையில் நான் மீண்டும் எவ்வாறு ஏறப் போகிறேன்?” {என்று நினைத்தான்}.(15)
இந்தச் சோகமான எண்ணங்களுடன் கூடிய அந்த ஏகாதிபதி, பெண்ணாக மாறியிருந்தாலும், பெரும் முயற்சிக்குப் பிறகு தன் குதிரையில் ஏறி தலைநகரத்திற்குத் திரும்பினான்.(16) அவனது {மன்னன் பங்காஸ்வனது மகன்கள், மனைவியர், பணியாட்கள், நகரம் மற்றும் மாகாணங்களின் குடிமக்கள் ஆகியோர் இந்த இயல்புக்கு மீறிய மாறுபாட்டைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.(17) அப்போது நாநலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அந்த அரச முனி {பங்காஸ்வனன்}, அவர்கள் அனைவரிடமும், “ஒரு பெரும் படையின் துணையுடன் நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன். திசைப்புள்ளிகளின் அறிவனைத்தையும் இழந்த நான், விதியின் உந்துதலால் அடர்த்தியானதும், பயங்கரமானதுமான ஒரு காட்டுக்குள் நுழைந்தேன்.(18) அந்தப் பயங்கரக் காட்டில், தாகத்தால் பீடிக்கப்பட்ட நான் என் புலனுணர்வை இழந்தேன். அப்போது, நீர்க்கோழிகள் நிறைந்ததும், அனைத்து வர்ணனைகளுக்கும் தகுந்ததுமான ஓர் அழகி தடாகத்தைக் கண்டேன்.(19) தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காக அந்த ஓடைக்குள் மூழ்கிய நான் ஒரு பெண்ணாக மாறிவிட்டேன்” என்றான்.
பெண்ணாக மாறியிருந்த அந்த ஏகாதிபதி {பங்காஸ்வனன்}, பிறகு, தன் மனைவியர் மற்றும் அமைச்சர்களை அழைத்து,(20) தன் மகன்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னான்: “நீங்கள் இந்நாட்டை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். மகன்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன்” என்றான்.(21) அந்த ஏகாதிபதி தன் பிள்ளைகளிடம் இவ்வாறு சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றான்.
அங்கே வந்த அவள் {பெண்ணாக மாறியிருக்கும் அந்த ஏகாதிபதி} ஒரு தவசி வசித்து வந்த ஓர் ஆசிமத்தை அடைந்தாள்.(22) {பெண்ணாக} மாற்றமடைந்திருந்த அந்த ஏகாதிபதி {பங்காஸ்வன்}, அந்தத் தவசியின் மூலம் நூறு மகன்களைப் பெற்றாள். அந்தப் பிள்ளைகள் அனைவரையும் கூட்டிக் கொண்டு தன் முந்தைய பிள்ளைகளிடம் சென்ற அவள் அவர்களிடம் {பழைய பிள்ளைகளிடம்},(23) “நான் ஆணாக இருந்த போது என் மடியில் பிறந்த பிள்ளைகள் நீங்கள். மாற்றமடைந்திருக்கும் இந்நிலையில் என்னால் ஈன்றெடுக்கப்பட்ட பிள்ளைகள் இவர்கள். மகன்களே, ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்த சகோதரர்களைப் போலவே நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக என் நாட்டை அனுபவிப்பீராக” என்றாள்.(24)
தங்களைப் பெற்றவரின் இந்த ஆணையின் படி அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அந்த நாட்டை அனுபவிக்கத் தொடங்கினர். அந்த மன்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த சகோதரர்களைப் போல ஒற்றுமையாக நாட்டை அனுபவிப்பதைக் கண்டு,(25) கோபத்தில் நிறைந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, “இந்த அரசமுனியைப் பெண்ணாக மாற்றியதன் மூலம் நான் அவனுக்குத் தீங்கிழைப்பதற்குப் பதில் நன்மையையே செய்திருப்பதாகத் தெரிகிறது” என்று சிந்திக்கத் தொடங்கினான்.(26) நூறு வேள்விகளைச் செய்தவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன் இவ்வாறு சொல்லி ஒரு பிராமணனின் வடிவை ஏற்று, மன்னனின் தலைநகருக்குச் சென்று அந்தப் பிள்ளைகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவதில் வென்றான்.(27) அவன் அவர்களிடம், ” ஒரே தந்தைக்குப் பிறந்த பிள்ளைகளே கூடச் சகோதரர்களாக அமைதியாக ஒரு போதும் நீடித்ததில்லை. தவசி கசியபரின் மகன்களான தேவர்களும், அசுரர்களும் மூவுலகங்களின் அரசுரிமையினிமித்தம் ஒருவரோடொருவர் பிணக்கு கொண்டனர்.(28) இளவரசர்களான உங்களைப் பொறுத்தவரையில், நீங்களே அரச முனியான பங்காஸ்வனனின் பிள்ளைகள் ஆவீர். மற்றும் இவர்களோ ஒரு தவசியின் பிள்ளைகளாவர். தேவர்களும், அசுரர்களும் கூட ஒரே தந்தையின் பிள்ளைகள்தானே (இருப்பினும் அவர்களும் ஒருவருடனொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். எனவே, நீங்கள் சண்டயிடுவதற்கு வேறு என்ன காரணம் வேண்டும்}?(29) உங்கள் தந்தைவழியில் நீங்கள் அடைந்த இந்த நாடு ஒரு தவசியின் பிள்ளைகளால் அனுபவிக்கப்படுகிறது” என்றான்.
இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்குள் ஒரு பிளவை உண்டாக்குவதில் இந்திரன் வென்றதால், மிக விரைவில் அவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் கொன்றனர்.(30) ஒரு பெண் தவசியாக வாழ்ந்து வந்த மன்னன் பங்காஸ்வனன், இதைக் கேட்டுத் துயரத்தில் எரிந்து, அழுது புலம்பினான். தேவர்களின் தலைவனான இந்திரன், ஒரு பிராமணனின் வடிவை ஏற்று, அந்தப் பெண் தவசி வாழ்ந்து வந்த இடத்திற்குச் சென்று அவளைச் சந்தித்து,(31) “ஓ! அழகிய முகம் படைத்தவளே, எந்தத் துயரத்தின் எரிச்சலில் நீ இவ்வாறு அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.
பிராமணனைக் கண்ட அந்தப் பெண், பரிதாபகரமான குரலில்,(32) “ஓ! மறுபிறப்பாளரே, என்னுடைய இருநூறு மகன்கள் காலத்தால் {காலனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர். ஓ! கல்விமானான பிராமணரே, முன்பு நான் ஒரு மன்னனாக இருந்தேன், அந்நிலையில் எனக்கு நூறு மகன்கள் இருந்தனர்.(33) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, என் சொந்த வடிவத்தில் அவர்கள் என்னால் பெறப்பட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நான் வேட்டைக்குச் சென்றேன். மயக்கத்துடன் கூடிய நான் ஓர் அடர்த்தியான காட்டில் திரிந்து கொண்டிருந்தேன்.(34) இறுதியாக ஒரு தடாகத்தைக் கண்டு அதற்குள் மூழ்கினேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, எழுந்த போது நான் பெண்ணாக மாறியிருப்பதைக் கண்டேன். என் தலைநகருக்குத் திரும்பி என் ஆட்சிப்பகுதிகளுக்கான அரசுரிமையின் என் மகன்களை நிறுவிவிட்டு நான் காட்டுக்குத் திரும்பினேன்.(35) பெண்ணாக மாறிய நான், என் கணவரான ஓர் உயர் ஆன்ம தவசியின் மூலம் நூறு மகன்களைப் பெற்றேன். அவர்கள் அனைவரும் அந்தத் தவசியின் ஆசிரமத்திலேயே பிறந்தனர். அவர்களைத் தலைநகரத்திற்கு அழைத்துச் சென்றேன்.(36) ஓ! இருபிறப்பாளரே, காலத்தின் ஆதிக்கத்தில் என் பிள்ளைகள் ஒருவரோடொருவர் சச்சரவில் ஈடுபட்டனர். இவ்வாறு காலத்தால் பீடிக்கப்பட்ட நான் துயரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.(37)
அப்போது இந்திரன் அவளிடம் {பங்காஸ்வனிடம்} கடும் வார்த்தைகளில், “ஓ! பெண்ணே, பழங்காலத்தில் இந்திரனுக்குப் பிடிக்காத ஒரு வேள்வியைச் செய்ததால் நீ எனக்குப் பெருந்துன்பத்தைத் தந்தாய்.(38) உண்மையில், நான் அப்போது இருந்தாலும், என்னை நீ மதித்து அழைக்கவில்லை. ஓ! தீய புத்தி கொண்டவளே, நானே அந்த இந்திரன். நீ யாரிடம் வேண்டுமென்றே பகையை நாடினாயோ அவன் நானே” என்றான்.(39)
இந்திரனைக் கண்ட அந்த அரசமுனி, அவனது பாதங்களில் வீழ்ந்து தன் தலையால் அவற்றைத் தீண்டி, “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, என்னிடம் நிறைவுகொள்வாயாக. நீ சொல்லும் வேள்வியானது வாரிசை விரும்பி செய்யப்பட்டது (செய்யப்பட்டதே அன்றி உனக்குத் தீங்கிழைக்கும் எந்த நோக்கத்திலும் செய்யப்படவில்லை).(40) எனவே, எனக்கு உன் மன்னிப்பை அருள்வதே உனக்குத் தகும்” என்றான்.
{பாலின} மாற்றமடைந்த அந்த ஏகாதிபதி தன்னிடம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடப்பதைக் கண்ட இந்திரன் அவனிடம் நிறைவை அடைந்து, அவனுக்கு ஒரு வரத்தைக் கொடுக்க விரும்பி,(41) “ஓ! மன்னா, பெண்ணாக மாறிய நிலையில் உன்னால் பெறப்பட்டவர்கள், ஆண் பாலினம் கொண்ட மனிதனின் நிலையில் இருந்து உன்னால் பெறப்பட்டவர்கள் ஆகிய உன் மகன்களில் நீ எவரை மீட்க விரும்புகிறாய்? {அவர்களில் எவர் பிழைக்க வேண்டும்?}” என்று கேட்டான்.(42)
அந்தப் பெண் தவசி தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு இந்திரனிடம், “ஓ! வாசவா, பெண்ணாக இருந்து என்னால் பெறப்பட்ட என் மகன்கள் மீண்டும் உயிர் பெறட்டும்” என்றாள்.(43)
இந்த மறுமொழியால் ஆச்சரியத்தால் நிறைந்த இந்திரன் மீண்டும் அந்தப் பெண்ணிடம், “மனிதரில் ஆண் பாலின வடிவில் இருந்த போது உன்னால் பெறப்பட்ட பிள்ளைகளிடம் ஏன் குறைவான அன்பைக் கொண்டிருக்கிறாய்?(44) {பெண்ணாக} மாற்றமடைந்த இந்த நிலையில் உன்னால் பெறப்பட்ட பிள்ளைகளிடம் ஏன் அதிக அன்பைக் கொண்டிருக்கிறாய்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றான்.(45)
அந்தப் பெண், “ஆண் கொள்ளும் பாசத்தைவிடப் பெண்கொள்ளும் பாசமே பெரிது. ஓ! சக்ரா, ஒரு பெண்ணாக என்னால் பெறப்பட்ட பிள்ளைகள் மீண்டும் உயிர் பெறுவதையே நான் விரும்புகிறேன்” என்றாள்”.(46)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டதும் பெரும் நிறைவடைந்த இந்திரன் அவளிடம், “ஓ! வாய்மை நிறைந்த பெண்ணே, உன் பிள்ளைகள் அனைவரும் உயிர் பெறட்டும்.(47) ஓ! மன்னர்களில் முதன்மையானவனாக இருந்தவளே, நீ மற்றுமொரு வரத்தையும் கொள்வாயாக. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே உண்மையில் நீ எந்த வரத்தை விரும்பினாலும் கேட்பாயாக. பெண், அல்லது ஆண் என நீ தேர்ந்தெடுக்கும் எந்நிலையையும் நீ என்னிடம் இருந்து பெறலாம்” என்றான்.(48)
அதற்கு அந்தப் பெண், “ஓ! சக்ரா, நான் பெண்ணாக நீடிக்கவே விரும்புகிறேன். உண்மையில், ஓ! வாசவா, நான் ஆண் தன்மையை மீண்டும் பெற விரும்பவில்லை” என்றாள்.
இந்தப் பதிலைக் கேட்ட இந்திரன், மீண்டும் அவளிடம்,(49) “ஓ! பலமிக்கவளே, ஆண்மை நிலையைக் கைவிட்டு ஏன் நீ பெண்மையை விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
ஏகாதிபதிகளில் முதன்மையானவனாக இருந்து பெண்ணாக மாறியிருப்பவள் இவ்வாறு கேட்கப்பட்டதும்,(50) “கலவிச் செயல்பாடுகளில் ஆண்களால் அனுபவிக்கப்படுவதை விடப் பெண்களால் அனுபவிக்கப்படும் இன்பமே பெரியது. ஓ! சக்ரா, இந்தக் காரணத்திற்காக நான் பெண்ணாகவே தொடர விரும்புகிறேன்.(51) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, பெண்ணாக இருக்கும் என்னுடைய தற்போதைய நிலையிலேயே நான் பெரும் இன்பத்தைப் பெற்றேன் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். இப்போது பெண்ணாக இருக்கும் இந்நிலையிலேயே நான் நிறைவாக இருக்கிறேன். ஓ! சொர்க்கத்தின் தலைவா, இப்போது நீ என்னைவிட்டுச் செல்லலாம்” என்றாள்[2].(52)அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்களின் தலைவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! ஏகாதிபதி, நீ கேட்டதன் அடிப்படையில் பார்த்தால், ஆண்களைவிடப் பெண்களே அதிக இன்பத்தைப் பெறுபவர்களாக அறியப்படுகிறார்கள்” {என்றார் பீஷ்மர்}.(53)
தீய பாதைகள் பத்து! – அநுசாஸனபர்வம் பகுதி – 13-வினைகளைப் புரிவோர், அவற்றின் நல்ல, தீய விளைவுகளை அனுபவிக்கவே வேண்டும் என்பது குறித்தும், தவிர்க்கப்பட வேண்டிய பத்து தீய பாதைகளைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இம்மை, மறுமை ஆகியவற்றை இன்பமாகக் கடந்து செல்ல ஒரு மனிதன் செய்ய வேண்டியது என்ன? உண்மையில் ஒருவன் தன் ஒழுக்கத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? இந்நோக்கில் ஒருவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உடலைக் கொண்டு செய்யப்படும் மூன்று செயல்களையும், பேச்சால் செய்யப்படும் நான்கையும் {நான்கு செயல்களையும்}, மனத்தால் செய்யப்படும் மூன்றையும், செயல்பாட்டின் இந்தப் பத்து பாதைகளையும் ஒருவன் தவிர்க்க வேண்டும்.(2) பிற உயிரினங்களின் உயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தல், களவு, அல்லது பிறருக்கு உரியவற்றை அபகரித்தல், அடுத்தவர் மனைவிகளை அனுபவித்தல் ஆகிய உடலால் செய்யப்படும் மூன்று {தீய} செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(3) தீய உரை, கடுஞ்சொற்கள், அடுத்தவரின் குறைகளை அறிக்கையிடல், பொய்மை ஆகிய வாக்கால் செய்யப்படும் நான்கு {தீய} செயல்களை ஒருபோதும் செய்யவோ, நினைக்கவோ கூடக் கூடாது.(4) பிறரின் உடைமைகளில் பேராசை கொள்வது, பிறருக்குத் தீங்கிழைப்பது, வேத விதிகளில் அவநம்பிக்கை ஆகிய மனத்தால் செய்யப்படும் மூன்று {தீய} செயல்களையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(5) எனவே ஒருவன் சொல், உடல் அல்லது மனத்தால் எந்தத் தீய செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது. நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்வதால் ஒருவன் அவற்றின் நியாயமான விளைவுகளை நிச்சயம் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ நேரும். இதைவிட அதிகம் வேறெதுவும் இல்லை” என்றார் {பீஷ்மர்}.(6)
ஜாம்பவதியும் கிருஷ்ணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14அ-பீஷ்மர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் வரம் கேட்ட ஜாம்பவதி; இமயம் சென்ற கிருஷ்ணன்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! கங்கையாற்றின் மைந்தரே, அண்டத்தின் தலைவனுடைய பெயர்கள் அனைத்தையும் நீர் கேட்டிருக்கிறீர். ஓ! பாட்டா, ஓ! பலமிக்கவரே, ஈசன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனின் பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக.(1) அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவருக்கும் சிறப்புமிக்க ஆசானும், சங்கரன் என்றழைக்கப்படுபவனும், புலப்படாத தோற்றத்தைக் கொண்டவனும், பப்ரு அல்லது பரந்தவன் {பெரியவன்} என்றும் அழைக்கப்படுபவனுடைய பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக. அந்த மஹாதேவனின் பலத்தையும் எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனின் குணங்களை உரைக்க நான் சக்தியுள்ளவன் அல்லன். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்தவனாய் இருந்தாலும் எங்கும் காணப்படாதவனாக அவன் இருக்கிறான்.(3) பிரம்மன், விஷ்ணு மற்றும் இந்திரனைப் படைத்தவனும் அவனே {ஈசனே}, அவர்களுடைய ஆசானும் அவனே. பிரம்மன் முதலான தேவர்கள் முதல் பிசாசங்கள் வரை அனைவராலும் துதிக்கப்பட்டு வழிபடப்படுபவன் அவனே.(4) பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் கடந்தவன் அவனே. யோகத்தை அறிந்தவர்களும், கேள்வி சம்பந்தப்பட்ட காரியங்களில் ஞானத்தைக் கொண்டவர்களுமான முனிவர்கள் சிந்திப்பதும், நினைப்பதும் அவனையே.(5) அழிவற்றவனான பரப்பிரம்மம் அவனே. இருப்பு மற்றும் இல்லாமை என்ற இரண்டாகவும் இருப்பவன் அவனே. பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் தன் சக்தியின் மூலம் கலங்கடித்து, அவற்றிலிருந்து உயிரினங்களின் அண்டத்தலைவனான பிரம்மனைப் படைத்தவன் அவனே.(6)
உயர்ந்த நுண்ணறிவுடன் கூடிய அந்தத் தேவ தேவனுடைய குணங்களைச் சொல்லத் தகுந்தவன் எவன்? மனிதன், (தாயின் கருவறையில்) கருவை அடைதல், பிறவி, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றுக்கு உட்பட்டவனாவான்.(7) அவ்வாறிருக்கையில் பவனைப் புரிந்து கொள்ள என்னைப் போன்ற மனிதனால் முடியுமா? ஓ! மகனே, சங்கு, சக்கரம் கதாயுதம் ஆகியவற்றைத் தாக்கும் நாராயணனால் மட்டுமே மஹாதேவனைப் புரிந்து கொள்ள முடியும்.(8) அவனே ஞானவான். அனைத்துப் பொருட்களின் குணங்களில் முதன்மையானவன் அவனே. அண்டத்தில் நீக்கமற நிறைந்திருப்பதால் விஷ்ணு அவனே. தடுக்கப்பட முடியாதவன் அவனே. ஆன்மப் பார்வையுடன் கூடிய உயர்ந்த சக்தியைக் கொண்டவன் அவனே. அனைத்துப் பொருட்களையும் யோகக் கண்களால் காண்பவன் அவனே.(9) ஓ! பாரதா, பதரி ஆசிரமத்தில் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சிறப்புமிக்க ருத்திரனை நிறைவு செய்ததன் விளைவால் இந்த உயரான்மக் கிருஷ்ணன் மொத்த அண்டத்தையும் {தன்னால்} நிறைப்பதில் வென்றான்.(10)
ஓ! மன்னர்களின் மன்னா, செல்வம் என்ற பெயரில் உள்ள பொருட்கள் அனைத்தையும் விட உலகளாவிய அளவில் ஏற்கப்படும் தன்மையை தெய்வீகப் பார்வை கொண்ட மஹேஸ்வரனின் மூலமே இந்த வாசுதேவன் அடைந்தான்[1].(11) இந்த மாதவன், முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கடுந்தவங்களைச் செய்து, சிறப்புமிக்கவனும், வரமளிப்பவனும், அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆசானுமான அந்தச் சிவனை நிறைவு செய்வதில் இறுதியாக வென்றான்.(12) ஒவ்வொரு யுகத்திலும் உயர் ஆன்மக் கிருஷ்ணனின் பெரும் அர்ப்பணிப்பால் மஹாதேவன் நிறைவடைகிறான்.(13) சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனான ஹரி, ஒரு மகனை அடைவதற்காகப் பதரி ஆசிரமத்தில் தவங்களைச் செய்த போது, அண்டத்தின் மூலக் காரணனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மஹாதேவனின் பலம் என்ன என்பதைத் தன் கண்களாலேயே கண்டான்[2].(14) ஓ! பாரதா, மஹாதேவனைவிட மேன்மையானவன் எவனையும் நான் காணவில்லை. மேலும் கேட்கும் விருப்பத்தை உண்டாக்காமல் அந்தத் தேவ தேவனின் பெயர்களை முழுமையாக விளக்கிச் சொல்ல கிருஷ்ணன் மட்டுமே தகுந்தவனாவான்.(15) யது குலத்தைச் சேர்ந்த இந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} மட்டுமே சிறப்புமிக்கச் சிவனின் குணங்களைச் சொல்லத் தகுந்தவனாவான். ஓ! மன்னா, உண்மையில், அந்தப் பரமதேவனின் பலத்தை முழுமையாகச் சொல்ல அவனால் மட்டுமே சொல்ல முடியும்” என்றார் {பீஷ்மர்}”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களின் பாட்டனான சிறப்புமிக்கப் பீஷ்மர் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, ஓ! ஏகாதிபதி, பவனின் பெருமையைச் சொல்லும் பின் வரும் வார்த்தைகளை வாசுதேவனிடம் சொன்னார்.(17)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசான் நீயே. சிறப்புமிக்கவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால் விஷ்ணு நீயே. யுதிஷ்டிரனால் என்னிடம் கேட்கப்பட்டவனும், அண்ட வடிவிலானவனுமான சிவன் தொடர்புடைய காரியங்களைக் குறித்துச் சொல்வதே உனக்குத் தகும்.(18) பழங்காலத்தில் பிரம்மனிடம் இருந்து உதித்த முனிவர் தண்டின் {தண்டி}, பிரம்ம லோகத்தில், பிரம்மனின் முன்னிலையில் வைத்து மஹாதேவனின் ஆயிரம் பெயர்களைச் சொன்னார்.(19) தவத்தைச் செல்வமாகக் கொண்டவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான இந்த முனிவர்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் தீவில் பிறந்த கிருஷ்ணரும்{வியாசரும்} கேட்கும் வகையில் இந்தச் சபையின் முன்னிலையில் அந்த ஆயிரம் பெயர்களையும் நீ சொல்வாயாக.(20) மாற்றமில்லாதவனும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக, மகிழ்ச்சியாக இருப்பவனும், ஹோத்ரியும், அண்டத்தின் பாதுகாவலனும், அண்டத்தின் படைப்பாளனும், முண்டின் {முடிகளற்றவன்} மற்றும் கபர்த்தின் {சடாமுடிதரித்தவன்} என்று அழைக்கப்படுபவனின் உயர்ந்த அருள்நிலையைக் குறித்துச் சொல்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(21)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பெரும்பாட்டனான பிரம்மனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருக்கும் பெரும் முனிவர்களும் கூட, மஹாதேவனின் செயற்போக்குகளையும், அவற்றின் விபரங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளத் தக்கவர்களல்லர்.(22) மக்களில் அறவோர் அனைவரும் அடையப்போகும் கதி அவனேயாவான். நுண்பார்வை கொண்ட ஆதித்யர்களே கூட அவனது வசிப்பிடத்தைக் காணத் தகுந்தவர்களல்லர். அவ்வாறிருக்கையில், சாதாரண ஒரு மனிதனால் எவ்வாறு அவனைப் புரிந்து கொள்ள முடியும்?(23) எனவே, வேள்விகள் மற்றும் நோன்புகள் அனைத்தின் தலைவனாகக் கருதப்படுபவனும், அசுரர்களைக் கொல்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனின் குணங்களில் சிலவற்றை மட்டுமே உண்மையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்” என்றான்”.(24)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க வாசுதேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, நீரைத் தீண்டி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் நுண்ணறிவையுடைய உயர் ஆன்ம மஹாதேவனின் குணங்களைக் குறித்துச் சொல்லத் தொடங்கினான்.(25)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பிராமணர்களில் முதன்மையானவர்களே, ஓ!ஐயா யுதிஷ்டிரரே, ஓ! ஆற்றின் மைந்தரே {பீஷ்மரே}, கபர்த்தினுக்கு {கபர்த்திக்கு [மஹாதேவனுக்கு]} உரிய பெயர்களைக் கேட்பீராக.(26) காணக்கிடைக்காத (அந்தப் பெருந்தேவனை) {எனது மகன்} சாம்பனுக்காகப் பழங்காலத்தில் கண்டேன். உண்மையில் அந்த நாட்களில் தியான யோகத்தின் விளைவால் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, என்னால் காணப்பட்டான்[3].(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், ருக்மிணியின் மகனுமான பிரத்யும்னன், பழங்காலத்தில் அசுரன் சம்பரனைக் கொன்ற காலத்திலிருந்து பனிரெண்டு வருடங்கள் கடந்ததும், என் மனைவியான ஜாம்பவதி என்னிடம் பேசினாள்.(28)உண்மையில் ஓ! யுதிஷ்டிரரே, ருக்மிணிக்கு பிறந்தவர்களான பிரத்யும்னன், சாருதேஷ்ணன் மற்றும் பிற மகன்களைக் கண்ட ஜாம்பவதி, தானும் ஒரு மகனைப் பெற விரும்பி என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்,(29) “ஓ! மங்கா மகிமை கொண்டவரே, வீரம், மிக ஏற்புடைய குணங்கள், பாவமற்ற ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனாகவும் உள்ள உம்மைப் போன்ற ஒரு மகனை எனக்கு அருள்வீராக. ஓ!, இந்த என் வேண்டுதலை எத்தாமதமுமின்றி அருள்வீராக.(30) மூவுலகங்களிலும் உம்மால் அடையப்பட முடியாது எதுவும் இல்லை. ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நீர் விரும்பினால் வேறு உலகங்களையே கூட உண்டாக்க முடியும். பனிரெண்டு வருட நோன்பை நோற்று, உம்மைத் தூய்மை செய்து கொண்டு, உயிரினங்கள் அனைத்தின் தலைவனை (மஹாதேவனைத்) துதித்து, ருக்மிணியின் மகன்களைப் பெற்றீர்.(31,32) சாருதேஷ்ணன், ஸுசாரூ, சாருவேசன், யசோதரன், சாருஸ்ரவன், சாருயசஸ், பிரத்யும்னன், சம்பு என்ற மகன்களை அவள் {ருக்மிணி} உம்மிடம் இருந்து பெற்றாள்.(33) ஓ! மதுசூதனா {மதுவெனும் அரக்கனைக் கொன்றவரே}, ருக்மிணி பெற்றிருக்கும் பேராற்றல் வாய்ந்த மகன்களைப் போல எனக்கும் ஒரு மகனை அருள்வீராக” என்று கேட்டாள்.(34)
அந்த இளவரசியால் இவ்வாறு கேட்கப்பட்டதும், நான் அந்தக் கொடியிடையாளிடம் {ஜாம்பவதியிடம்}, “ஓ! ராணி, (உன்னை விட்டுச் சிலகாலம் பிரிந்து செல்ல) உன் அனுமதி எனக்கு வேண்டும். நிச்சயம் நான் உனதாணைக்குக் கீழ்ப்படிவேன்” என்றேன்.(35)
அவள் என்னிடம், “செல்வீராக, வெற்றியும், செழிப்பும் எப்போதும் உமக்குத் துணை புரியட்டும். பிரம்மன், சிவன், கசியபர், ஆறுகள், மனத்தை ஆளும் தேவர்கள்,(36) மண், இலையுதிர் மூலிகைகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளைச் சுமப்பதாகக் கருதப்படும் சந்தங்கள் {த்ரேதாக்னிகள் மற்றும் வேதங்கள்}, முனிவர்கள், பூமி, பெருங்கடல்கள், வேள்விக் கொடைகள், சாமங்களின் {இசையில் உள்ள} ஏற்றத்தாழ்வுகளை நிறைவு செய்யச் சொல்லப்படும் அசைகள், ரிக்ஷங்கள் {நட்சத்திரங்கள்}, பித்ருக்கள்,(37) ஓ! யாதவரே, கோள்கள், தேவர்களின் மனைவிகள் {தேவிகள்}, தேவகன்னிகள், தேவர்களின் தாய்மார், பெரும் யுகங்கள் {மன்வந்தரங்கள்}[4], பசுக்கள், சந்திரமாஸ் {சந்திரன்}, சாவித்ரி {சூரியன்}, அக்னி {விஷ்ணு},(38) காயத்ரி, வேத அறிவு {பிரம்ம வித்தை}, பருவ காலங்கள் {ருதுக்கள்}, ஆண்டுகள், க்ஷணங்கள் {கணங்கள்}, லவங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள்,(39) என்ற அனைத்தாலும் பாதுகாக்கப்படுவீராக. நீரெங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பீராக. ஓ! பாவமற்றவரே உமது வழியில் உம்மை ஆபத்து அணுகாதிருக்கட்டும், விழிப்புணர்வின்மை உமதாக வேண்டாம் {ஜாக்ரதையாக இருப்பீராக}” என்று மறுமொழி கூறினாள்.(40)இவ்வாறு குரங்குகளின் இளவரசனுடைய மகளால் {ஜாம்பவதியால்} ஆசி கூறப்பட்ட {மங்களசாஸனம் செய்யப்பெற்ற} நான் நல்வாழ்த்து கூறி அவளிமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். மனிதர்களில் முதன்மையானவரான என் தந்தை {வசுதேவர்}, தாய் {தேவகி}, மன்னன் மற்றும் ஆஹுகர் ஆகியோரிடம்(41) சென்று வித்யாதரர்களின் இளவரசனுடைய மகள் {ஜாம்பவதி}[5] பெருந்துன்பத்துடன் என்னிடம் சொன்ன வார்த்தைகளைத் தெரிவித்தேன். கவலை நிறைந்த இதயத்துடன் அவர்களிமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு கதன் மற்றும் பெரும் வலிமை கொண்ட ராமர் {பலராமர்} ஆகியோரிடம் சென்றேன்.(42) அவர்கள் இருவரும் உற்சாகம் நிறைந்தவர்களாக, “எத்தடையுமின்றி உன் தவங்கள் பெருகட்டும்” என்று என்னிடம் சொன்னார்கள்.(43) அவர்கள் அனைவரிடமும் அனுமதிபெற்றுக் கொண்ட நான் கருடனை நினைத்தேன். உடனே என்னிடம் வந்த அவன் (என் ஆணையின் பேரில்) என்னை இமயத்துக்குச் சுமந்து சென்றான். இமயத்தை அடைந்ததும் நான் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினேன்.(44) அந்த முதன்மையான மலையில் நான் அற்புதக் காட்சிகள் பலவற்றைக் கண்டேன். தவம் பயில்வதற்கு ஏற்புடையதும், அற்புதமானதும், சிறந்ததுமான ஓர் ஆசிரமத்தைக் கண்டேன்.(45)
உபமன்யு! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஆ-இமயம் சென்ற கிருஷ்ணன்; உபமன்சுவின் ஆசிரமத்தை அடைந்தது; அந்த ஆசிரமம் இருந்த பகுதி குறித்த வர்ணனை; கிருஷ்ணனுக்கும் உபமன்யுவுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சிவனின் பெருமையைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு…
இனிமை நிறைந்த அந்த ஆசிரமம், வியாக்ரபாதரின் வழித்தோன்றலான உயர் ஆன்ம உபமன்யுவினுடையதாகும். தேவர்கள், கந்தர்வர்களால் மதித்து மெச்சபடும் அந்த ஆசிரமமானது வேத அழகில் மறைந்திருப்பதாகத் தெரிந்தது.(46) மலர்கள் மற்றும் கனிகளுடன் கூடியவையான தவங்கள், ககுபங்கள் {மருது}, கடம்பங்கள் {கடம்பு}, தென்னை, குருவாகங்கள் {மருதாணி}, கேதகங்கள் {தாழை}, நாவல், பாடலங்கள் {பாதிரி}, ஆல், வருணகங்கள் {வருணம்}, வத்ஸநாபங்கள், வில்வங்கள், ஸரளங்கள், கபிட்டங்கள் {விளா}, பியாளங்கள் {பரியாளம்}, சாலங்கள் {ஆச்சா}, பனைகள்,(47) பதரிகள் {இலந்தை}, இங்குடிகள் {குருக்கத்தி}, புன்னகங்கள் {புன்னை}, அசோகங்கள், ஆம்ரங்கள் {மா}, {பச்சிலை, இலுப்பை}, கோவிதாரங்கள், சண்பகங்கள், பலா மரங்கள்,(48) ஆகியவற்றாலும் இன்னும் பிற மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆசிரமம் வாழை மரங்களின் நேர்த் தண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(49) உண்மையில் அவ்வாசிரமம், பல்வேறு வகைப் பறவைகளுக்கு உணவாக அமையும் பல்வேறு வகைக் கனிகளையுடைய பல்வேறு வகை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் (வேள்வி நெருப்புகளின்) சாம்பற்குவியல்கள் {திருநீற்றுக் குவியல்கள்} உரிய இடங்களில் வீசப்பட்டிருந்தது அக்காட்சிக்கு மேலும் அழகூட்டியது.(50)
மேலும் அது புள்ளிமான்கள், குரங்குகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் பல்வேறு மான்வகைகள், மயில்கள், பூனைகள் மற்றும் பாம்புகளால் நிறைந்திருந்தது.(51) உண்மையில், பெரும் எண்ணிக்கையிலான வேறு விலங்குகளும், எருமைகளும், கரடிகளும் அங்கிருந்தன. தெய்வீக மங்கையரின் இனிய இசையைச் சுமந்தபடியே தொடர்ந்து இனிய தென்றல் அங்கே வீசிக்கொண்டிருந்தது.(52) ஓ! வீரரே, மலையருவிகள் மற்றும் ஊற்றுகளின் பிதற்றல்கள், சிறகு படைத்த இசைக்குழுவின் {பறவைகளின்} இனிய கூவல்கள், யானைகளில் பிளிறல்கள், கின்னரர்களின் இனிய இசை, சாமங்களைப் பாடும் தவசிகளின் மங்கலக் குரல், மற்றும் இனிமை நிறைந்த பல்வேறு இசைகளுடன் கூடிய அந்த ஆசிரமம் மிக அழகானதாக இருந்தது. நான் கண்ட அந்த இனிமை நிறைந்த ஆசிரமத்தைப் போன்று மற்றொன்றைக் கற்பனையிலும் காண முடியாது. அந்த ஆசிரமத்தில் புனித நெருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் எங்கும் மலர்ந்த கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த பெரிய வீடுகளும் {அக்னி ஹோத்ர சாலைகளும்} இருந்தன.(53,54) புனிதமான தெளிந்த நீரைக் கொண்ட கங்கை ஆற்றினால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அந்த ஜானுவின் மகள் {கங்கை} எப்போதும் அங்கே இருந்தாள்.[6] அறவோர் அனைவரில் முதன்மையானவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், சக்தியில் நெருப்புக்கு ஒப்பானவர்களுமான பல தவசிகளாலும் அது நிறைந்திருந்தது.(55)அந்தத் தவசிகளில் சிலர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் ஜபம் அல்லது புனித மந்திரங்களை அமைதியாகப் பாராயணம் செய்வதில் ஈடுபட்டனர். சிலர் கருணை மற்றும் வேறு சில அறங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தியான யோகத்தின் தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யோகியராக இருந்தனர். அவர்களில் சிலர் புகையை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், வேறு சிலர் நெருப்பையும், வேறு சிலர் பாலையும் உண்டு வாழ்ந்தனர். இவ்வாறே அந்த ஆசிரமம் மறுபிறப்பாளர்களில் முதன்மையான பலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(56) அங்கே இருந்த சிலர், கைகளைப் பயன்படுத்துவதைத் துறந்து பசுவைப் போல உண்ணவும், குடிக்கவும் செய்யும் நோன்பை நோற்றுவந்தனர். சிலர் தானியங்களை நசுக்க இரு கற்துண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர், மேலும் சிலர் அக்காரியத்திற்காகத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்தினர். சிலர் சந்திரனின் கதிர்களைப் பருகுவதன் மூலமும், நுரையை மட்டுமே பருகியும் வாழ்ந்து வந்தனர். வேறு சிலர் மானைப் போல வாழும் நோன்பைக் கைக்கொண்டிருந்தனர்[7].(57) சிலர் அரசம்பழங்களை உண்டு வாழ்கின்றனர், சிலர் நீரிலேயே கிடக்கின்றனர். சிலர் கந்தைகளை உடுத்திக் கொள்கின்றனர், சில மான்தோல்களையும், சிலர் மரவுரிகளையும் உடுத்துகின்றனர்.(58) உண்மையில், முதன்மையான வகையைச் சார்ந்த பல்வேறு தவசிகள் இவற்றையும், இன்னும் வலிநிறைந்த பிற நோன்புகளை நோற்பதையும் கண்டேன். பிறகு நான் அந்த ஆசிரமத்திற்குள் நுழைய விரும்பினேன்.(59) உண்மையில் அந்த ஆசிரமம், தேவர்கள், உயர் ஆன்மாக்கள், சிவன், அறச் செயல்களைச் செய்யும் அனைத்து உயிரினங்களாலும் மதித்துத் துதிக்கப்பட்டது. இவ்வாறு சொல்லப்படும் அஃது ஆகாயத்திலுள்ள சந்திர வட்டிலைப் போலவே இமயச் சாரலில் மிக அழகானதாக இருந்தது.(60)சுடர்மிகு தவங்களைச் செய்த உயர் ஆன்ம தவசிகளுடைய அருகாமையின் விளைவாக அங்கே கீரிப்பிள்ளை பாம்புடனும், புலியானது மானுடனும் தங்கள் இயல்பான பகைமையை மறந்து விளையாடிக் கொண்டிருந்தன.(61) அனைத்து உயிரினங்களும் திளைத்திருக்கும் அந்த முதன்மையான ஆசிரமத்தில் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் முழுமையாக நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலரும்,(62) கடினமான நோன்புகளை நோற்பதற்காகக் கொண்டாடப்படும் உயர் ஆன்ம முனிவர்கள் பலரும் வசித்திருப்பதை நான் கண்டேன். அந்த ஆசிரமத்தில் நான் நுழைந்தபோது, தலையில் சடாமுடி தரித்தவரும், மரவுரி உடுத்தியவரும்,(63) தவங்கள் மற்றும் சக்தியால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், சீடர்களால் பணிவிடை செய்யப்படுபவரும், வயதில் இளமையானவருமான ஒரு முதன்மையான பிராமணரைக் கண்டேன்.(64)
அவரது பெயர் உபமன்யு ஆகும். தலைவணங்கி நின்ற என்னிடம் அவர் {உபமன்யு}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷா}, உனக்குநல்வரவு. இன்று நீ இங்கு வந்திருப்பதால் எங்கள் தவங்களைக் கனிவதை நாங்கள் காண்கிறோம். துதிக்கத்தக்கவனாக இருப்பினும் எங்களை நீ துதிக்கிறாய். காணத்தகுந்தவனாக இருப்பினும் நீ எங்களைக் காண விரும்புகிறாய்” என்றார்.(65) நான் என் கரங்களைக் கூப்பி அவரது ஆசிரமத்தில் வசிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் நலத்தையும், அவருடைய சீடர்களின் ஆன்ம முன்னேற்றத்தையும் குறித்து விசாரித்தேன்.(66)
சிறப்புமிக்கவரான அந்த உபமன்யு, அப்போது மிக இனிமையான வார்த்தைகளை எனக்குச் சொன்னார் “ஓ! கிருஷ்ணா, உன்னைப் போன்றே ஒரு மகனை நீ நிச்சயம் அடைவாய்.(67) கடுந்தவங்களைப் பயின்று உயிரினங்கள் அனைத்தின் தலைவனான ஈசானனை நீ நிறைவடையச் செய்வாயாக. அதோக்ஷஜன் {எப்போதும் கீழே வீழாதவன்} என்றும் அழைக்கப்படும் அந்தத் தெய்வீக ஆசான், தன் அருகே இருக்கும் தன் மனைவியுடன் சேர்ந்து இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான்.(68) ஓ! ஜனார்த்தனா, பழங்காலத்தில் இங்கேதான் முனிவர்கள் அனைவருடன் கூடிய தேவர்கள், தங்கள் தவங்கள், பிரம்மச்சரியம், வாய்மை மற்றும் தற்கட்டுப்பாட்டின் மூலம் தேவர்களில் முதன்மையானவனை நிறைவடையச் செய்து உயர்ந்த விருப்பங்கள் பலவும் கனியும் தன்மையை அடைவதில் வென்றனர். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சக்திகள் மற்றும் தவங்கள் அனைத்தின் பரந்த கொள்ளிடமாக இருக்கிறான்.(69,70) ஓ! எதிரிகளை அழிப்பவனே, நீ யாரைத் தேடுகிறாயோ அந்தச் சிந்தனைக்கெட்டாத தேவன், நன்மை மற்றும் தீமை நிறைந்த அனைத்துப் பொருட்களையும் மீண்டும் தன்னுள் ஈர்த்து இருப்புக்கு வந்து தன் மனைவியுடன் இங்கே வாழ்கிறான்.(71) ஹிரண்யகசிபு என்ற பெயரில் பிறந்தவனும், மேரு மலைகளையே அசைக்கும் பெரும்பலம் கொண்டவனுமான தானவன், மஹாதேவனிடம் இருந்து தேவர்கள் அனைவரின் பலத்தையும் பெற்றுக் கொண்டு ஒரு கோடி வருடங்கள் அதை அனுபவித்தான்.(72)
அவனது மகன்கள் அனைவரிலும் முதன்மையானவனும் {மூத்த மகனும்}, மந்தாரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒருவன், மஹாதேவனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் சக்ரனோடு பத்து லட்சம் வருடங்கள் போரிடுவதில் வென்றான்.(73) ஓ! கேசவா, அண்டத்தின் துன்பத்திற்குப் பெருங்காரணனாக இருந்த அவனுடைய {அந்த மந்தாரனுடைய} உடலில், விஷ்ணுவின் பயங்கரச் சக்கரத்தாலும், இந்திரனின் வஜ்ரத்தாலும் சிறு தடயத்தையும் ஏற்படுத்த முடியவில்லை[8].(74) ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ கொண்டிருக்கும் சக்கரமானது, நீருக்குள் வாழ்ந்து வந்தவனும், தன் பலத்தில் செருக்குடையவனுமான ஒரு தைத்தியனைக் கொன்ற பிறகு, மஹாதேவனால் உனக்குக் கொடுக்கப்பட்டது.(75) சுடர்மிக்க சக்தியைக் கொண்டதும், நெருப்பைப் போன்றதுமான அந்தச் சக்கரம், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட பெருந்தேவனால் படைக்கப்பட்டதாகும். அற்புதம் நிறைந்ததும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டதுமான அஃது அந்தச் சிறப்புமிக்கத் தேவனாலேயே உனக்குக் கொடுக்கப்பட்டது.(76) அஃது அதன் சுடர்மிக்க சக்தியின் விளைவால் பிநாகைபாணியைத் தவிர வேறு எவனாலும் பார்க்க முடியாததாகும். அதன் காரணமாகவே பவன் அதற்குச் சுதர்சனம் என்ற பெயரைச் சூட்டினான்.(77) அந்தக் காலத்தில் இருந்தே உலகம் எங்கும் சுதர்சனம் என்ற பெயர் இருப்புக்கு வந்தது. ஓ! கேசவா, அந்த ஆயுதம் கூட மூவுலகங்களிலும் ஒரு தீய கோளைப் போலத் தோன்றியவனும், ஹிரண்யகசிபுவின் மகனுமான மந்தாரனின் உடலில் சிறு தடத்தையும் ஏற்படுத்த தவறியது.(78) மஹாதேவனிடம் வரத்தைப் பெற்றவனும், பெரும் பலத்துடன் கூடியவனுமான அந்தத் தீய கோளின் உடலில் உன்னுடைய சக்கரத்தைப் போன்ற நாற்றுக்கணக்கான சக்கரங்களாலும், சக்ரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான வஜ்ராயுதங்களாலும் சிறு காயத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.(79) வலிமைமிக்கவனான மந்தாரனால் பீடிக்கப்பட்ட தேவர்கள், அவனையும், மஹாதேவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற அவனுடைய துணைவர்களையும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர்.(80)வித்யுத்பிரபன் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு தானவனிடம் நிறைவடைந்த மஹாதேவன் அவனுக்கு மூவுலகங்களின் ஆட்சியுரிமையை அருளினான். அந்தத் தானவன் மூவுலகங்களின் ஆட்சியுரிமையில் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்தான்.(81) மஹாதேவன் அவனிடம் {வித்யுத்பிரபனிடம்}, “நீ என்னுடைய பணியாட்களில் ஒருவனாக இருப்பாய்” என்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தலைவன் {சிவன்} அவனுக்குக் கோடிக்கணக்கான பிள்ளைகளை வரமாக அளித்தான். பிறப்பில்லாதவனான அந்த அனைத்து உயிரினங்களின் ஆசான் குசத்வீபம் என்ற பெயருடைய ஒரு நாட்டை மேலும் ஒரு வரமாக அவனுக்கு அளித்தான்.(82)
சதமுகன் என்ற பெயரையுடைய மற்றொரு பேரசுரன் பிரம்மனால் படைக்கப்பட்டான். அவன் தன்னுடலின் சதையையே (மஹாதேவனுக்கான காணிக்கையாக) வேள்வி நெருப்பில் நூறு வருடங்கள் ஊற்றிக் கொண்டிருந்தான்.(83) இத்தகைய தவங்களால் நிறைவையடைந்த சங்கரன் அவனிடம் {சதமுகனிடம்}, “நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டான். அதற்குச் சதமுகன், “ஓ! அற்புதமிக்கவனே, புதிய உயிரினங்களையும், விலங்குகளையும் படைக்கும் சக்தி எனக்கு வேண்டும்.(84) ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நித்திய சக்தியையும் எனக்குக் கொடுப்பாயாக” என்று மறுமொழி கூறினான்[9]. அவன் இவ்வாறு சொன்னதும் அந்தப் பலமிக்கத் தலைவன் அவனிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.(85)பழங்காலத்தில் சுயம்புவான பிரம்மன், பிள்ளைகளை அடையும் நோக்கில் யோகத்தில் தன் மனத்தைக் குவித்து முன்னூறு ஆண்டுகளாக ஒரு வேள்வியைச் செய்தான்.(86) மஹாதேவன் அந்த வேள்வியின் தகுதிகளுக்கு ஏற்ற திறனைக் கொண்ட ஓராயிரம் மகன்களை அவனுக்கு அளித்தான். ஓ! கிருஷ்ணா, தேவர்களால் பாடப்படும் அந்த யோகத் தலைவனை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(87) யாஜ்ஞவல்கியர் என்ற பெயரில் அறியப்படும் முனிவர் பெரும் அறவோனாவார். அவர் மஹாதேவனைத் துதித்ததன் மூலம் பெரும் புகழை அடைந்தார்.(88) பராசரரின் மகனும், யோகத்தில் ஆன்மாவை நிலைக்கச் செய்யும் பெருந்தவசியுமான வியாசர் சங்கரனைத் துதித்ததன் மூலம் பெரும்புகழை அடைந்தார்.(89)
முன்பொரு சந்தர்ப்பத்தில் வாலகில்யர்கள் மகவத்தால் {இந்திரனால்} அவமதிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த அவர் சிறப்புமிக்க ருத்திரனை நிறைவடையச் செய்தனர்.(90) தேவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அண்டத்தில் தலைவன், வாலகில்யர்களால் இவ்வாறு நிறைவை அடைந்து, அவர்களிடம், “இந்திரனிடம் இருந்து அமுதத்தை அபகரிக்கும் ஒரு பறைவையைப் படைப்பதில் உங்கள் தவத்தின் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்” என்றான்.(91) முன்பொரு சந்தர்ப்பத்தில் மஹாதேவனின் கோபத்தின் மூலம் நீர்கள் {நீர்நிலைகள் அனைத்திலும் உள்ள நீர்) அனைத்தும் மறைந்தன. தேவர்கள் சப்தகபாலம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்து அவனை நிறைவடையச் செய்து, அவனது அருளின் மூலம் உலகங்களில் வேறு நீர் பாயும்படி செய்தார்கள். உண்மையில், அந்த முக்கண் தேவன் நிறைவடைந்தபோது, மீண்டும் உடனடியாக உலகில் நீர் தோன்றியது.(92)
வேதங்களை அறிந்தவளான அத்ரியின் மனைவி {அனசூயை} ஒரு கோபத்தில் தன் கணவனைக் கைவிட்டு, “அந்தத் தவசியின் ஆதிக்கத்தின் கீழ் இனி ஒருபோதும் வாழ மாட்டேன்” என்றாள்.(93) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவள் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினாள். தன் கணவரான அத்ரியிடம் கொண்ட அச்சத்தால் அவள் {மஹாதேவனின் பாதுகாப்பை நாடி} உணவனைத்தையும் துறந்து முன்னூறு வருடங்களைக் கழித்தாள்.(94) அக்காலம் முழுவதும் அவள் பவனை நிறைவடையச் செய்யும் நோக்கத்தால் உலக்கைகளில் மீது உறங்கினாள். பிறகு அந்தப் பெருந்தேவன் அவள் முன்பு தோன்றி புன்னகைத்தவாறே, “நீ ஒரு மகனை அடைவாய்.(95) கணவனின் தேவை இல்லாமல், ருத்திரனின் அருளால் மட்டுமே நீ ஒரு மகனைப் பெறுவாய். தந்தையின் குலத்தில் பிறக்கும் அந்த மகன் தன் தகுதிக்குத்தக்க உன் பெயராலேயே {தத்தாத்ரேயர் என்ற பெயரில்} கொண்டாடப்படுவான்” என்றான்[10].(96ஓ! மதுசூதனா, சிறப்புமிக்க விகர்ணரும் {விகர்ண முனிவரும்} கூட மஹாதேவனிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்டு, கடுந்தவங்களால் அவனை நிறைவடையச் செய்து, மகிழ்ச்சியையும் உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(97) ஓ! கேசவா, கட்டுப்பாடுடைய ஆன்மாவைக் கொண்ட சாகல்யரும்[11] கூடத் தொள்ளாயிரம் ஆண்டுகள் மனோ வேள்வி செய்து பவனைத் துதித்தார்.(98) அவரிடம் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவரிடம், “நீ பேராசானாவாய் {கிரந்தகர்த்தாவாவாய்}. ஓ! மகனே, உனது புகழ் மூவுலகங்களிலும் வற்றாமல் இருக்கும்.(99) பெரும் முனிவர்கள் பிறப்பால் உன் குலம் முடிவற்றதாக அவர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உன் மகன் பிராமணர்களில் முதன்மையானவனாகி, உன் படைப்பில் சூத்திரங்களை உண்டாக்குவான்” என்றான்.(100) கிருத யுகத்தில் சாவர்ணி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் இந்த ஆசிரமத்தில் ஆறாயிரம் வருடங்கள் கடுந்தவமிருந்தார்.(101) சிறப்புமிக்க ருத்திரன், “ஓ! பாவமற்றவனே, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். முதுமை அல்லது மரணத்திற்கு ஆட்படாதவனும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவனுமான ஓர் ஆசானாக நீ இருப்பாய்” என்றான்.(102)
ஓ! ஜனார்த்தனா, அர்ப்பணிப்பில் நிறைந்த சக்ரனும் {இந்திரனும்} கூடப் பழங்காலத்தில் வாராணசியில் {காசியில்}, வெட்ட வெளியையே தன் ஆடைகளாகக் கொண்டவனும், ஏற்புடைய தைலமாகச் சாம்பலைப் பூசிக் கொள்பவனுமான மஹாதேவனைத் துதித்தான்.(103) இவ்வாறு மஹாதேவனைத் துதித்த அவன் தேவர்களின் அரசுரிமையை அடைந்தான். நாரதரும் கூடப் பழங்காலத்தில் அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் பெரும் பவனைத் துதித்தார். தேவகுருவுக்குக் குருவான அந்த மஹாதேவன் அவரிடம் நிறைவடைந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(104) “சக்தியிலும், தவங்களிலும் உனக்கு இணையானவர்களாக யாரும் இருக்க மாட்டார்கள். பாட்டினாலும், இசைக்கருவியினாலும் எப்போதும் நீ எனக்குப் பணிவிடை செய்வாயாக” என்றான்.(105) ஓ! மாதவா, ஓ! தலைவா, பழங்காலத்தில், உயிரினங்கள் அனைத்தின் ஆசானான அந்தத் தேவ தேவனைக் காண்பதில் நான் எவ்வாறு வென்றேன் என்பதைக் கேட்பாயாக.(106) மேலும், ஓ! பெரும்பலம் கொண்டவனே, உயர்ந்த சக்தியுடன் கூடிய அந்தச் சிறப்புமிக்கத் தேவனைக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள் மற்றும் மனத்துடன் எந்த நோக்கத்திற்காக இருப்புக்கு அழைத்தேன் என்பதையும் விபரமாகக் கேட்பாயாக.(107) ஓ! பாவமற்றவனே, தேவதேவனான அந்த மஹேஸ்வரனிடம் பெற்றத்தில் இருந்து நான் அடைந்த வெற்றிகள் அனைத்தையும் முழு விபரங்களுடன் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(108)
சிவ வடிவங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14இ-உபமன்யு தாம் சிவனைக் கண்ட வகையைக் கிருஷ்ணனுக்குச் சொல்லத் தொடங்கியது; தமது அன்னையிடம் பால் உணவு கேட்ட உபமன்யு; பால் உணவு கொடுக்க முடியாத அவரது அன்னை சிவனை வேண்டச் சொன்னது; சிவனின் இருப்புநிலைகளை உபமன்யுவுக்குச் சொன்ன அவரது அன்னை…
{உபமன்யு தொடர்ந்தார்}, பழங்காலத்தில் கிருத யுகத்தில், ஓ! மகனே, வியாக்ரபாதர் என்ற பெயரில் பெரும் புகழைக் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் தனது ஞானத்திற்காகவும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களில் கொண்ட திறனுக்காகவும் கொண்டாடப்பட்டார்.(109) அந்த முனிவரின் மகன்களாக நானும், என் தம்பியாகத் தௌமியனும் பிறந்தோம். ஓ! மாதவா, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட சில முனிவர்களின் ஆசிரமத்தை தௌமியனின் துணையுடன் நான் அடைந்தேன். அங்கே ஒரு பசுவிடம் பால் கறக்கப்படுவதைக் கண்டேன். நான் பாலைக் கண்டேன், அஃது அமுதத்துக்கு ஒப்பான சுவையுடையதாக எனக்குத் தோன்றியது.(111) பிறகு வீடு திரும்பிய நான், குழந்தைத்தனத்தால் உந்தப்பட்டு என் அன்னையிடம், “பாலில் தயாரிக்கப்பட்ட ஏதாவது உணவைத் தருவாயாக” என்று கேட்டேன்.(112)
அப்போது வீட்டில் பாலில்லை என்பதால், நான் அதைக் கேட்டதும் என் அன்னை மிகவும் வருத்தமடைந்தாள். ஓ! மாதவா, என் அன்னை (அரிசி) மாவைத் தண்ணீரில் கொதிக்கவைத்தாள்.(113) நீரானது வெண்ணிறமானது, என் தாய் அஃதை எங்கள் முன்பு வைத்து, பாலென்று சொல்லி எங்களைக் குடிக்கச் சொன்னாள். அதற்கு முன்பே ஒரு சந்தர்ப்பத்தில் செழிப்புமிக்கவரான எங்கள் உறவினரின் வசிப்பிடத்திற்கு ஒரு வேள்விக்காக என் தந்தை அழைத்துச் சென்ற போது நான் பாலைக் குடித்திருக்கிறேன்.(114) அந்தச் சந்தர்ப்பத்தில் தேவர்களைத் திளைக்கச் செய்யும் ஒரு தெய்வீகப் பசுக் கறக்கப்பட்டது. சுவையில் அமுதத்திற்கு ஒப்பான அவளது பாலைக் குடித்திருந்ததால்,(115) பாலின் தன்மையை நான் அறிந்திருந்தேன். எனவே, பாலென்று சொல்லி என் அன்னை கொடுத்த பொருளின் தோற்றத்தை உடனடியாகப் புரிந்து கொண்டேன். ஓ! மகனே, உண்மையில் அந்த மாவு எனக்கு எந்த இன்பத்தையும் அளிக்கவில்லை.(116)
குழந்தைத்தனத்தால் உந்தப்பட்ட நான் என் தாயாரிடம், “ஓ! தாயே, நீ எனக்குக் கொடுத்தது பாலில் தயாரிக்கப்பட்ட உணவல்ல” என்றேன்.(117)
ஓ! மாதவா, இதனால் துயரத்தில் நிறைந்த என் அன்னை பெற்ற பாசத்தால் என்னைத் தழுவி உச்சி முகர்ந்து, என்னிடம், “ஓ! குழந்தாய், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட தவசிகளால் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை எங்கே பெற முடியும்? அத்தகைய மனிதர்கள், எப்போதும் காட்டில் வசித்து, கிழங்குகள், வேர்கள் மற்றும் கனிகளை உண்டு வாழ்கின்றனர்.(119) ஓ! குழந்தாய், மலைகளையும் காடுகளையும் இல்லங்களாகக் கொண்டவர்களும், வாலகில்யர்களின் ஓய்விடங்களான ஆற்றங்கரைகளில் வாழ்பவர்களுமான நம்மால் பாலை எங்குப் பெற முடியும்?(120) ஓ! அன்புக் குழந்தாய், நாம் (சில வேளைகளில்) காற்றையும், சில வேளைகளில் நீரையும் உண்டு வாழ்கிறோம். காடுகள் மற்றும் சோலைகளுக்கு மத்தியில் உள்ள ஆசிரமங்களில் நாம் வாழ்கிறோம். கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மனிதர்கள் உண்ணும் அனைத்து வகை உணவுகளையும் தவிர்ப்பதே நமது வழக்கம். காட்டில் விளையும் உணவை உண்பதே நமது வழக்கம்.(121) ஓ! குழந்தாய், சுரபியின் சந்ததி {பசுக்கள்} ஏதும் இல்லாத காட்டில் பால் கிடைக்காது[12]. ஆற்றங்கரைகள், அல்லது குகைகள், அல்லது மலைச்சாரல்கள், அல்லது தீர்த்தங்கள், அல்லது அதுபோன்ற வேறுவகை இடங்களில் வசித்து,(122) சிவனையே நமது உயர்ந்த புகலிடமாகக் கொண்டு தவங்களிலும், புனித மந்திரங்களை உரைப்பதிலும் நம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். ஓ! குழந்தாய், வரமளிப்பவனும், முக்கண்களைக் கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த ஸ்தாணுவை நிறைவடையச் செய்யாமல்,(123) பாலில் தயாரிக்கப்பட்ட உணவையும், நல்ல ஆடைகளையும், உலகில் இன்பத்திற்குரிய பிற பொருட்களை ஒருவன் எங்கிருந்து அடைவான்? ஓ! அன்பு மகனே, முழு ஆன்மாவுடன் சங்கரனிடம் உன்னை அர்ப்பணிப்பாயாக {சங்கரனிடம் நீ பக்தி கொள்வாயாக}.(124) ஓ! குழந்தாய், அவனது அருளின் மூலம் உனது விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் நீ நிச்சயம் அடைவாய்” என்றாள்.
ஓ! பகைவர்களைக் கொல்பவனே, அந்நாளில் என் தாயாரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான்,(125) மதிப்புடன் என் கரங்களைக் கூப்பி அவளை வணங்கி, “ஓ! தாயே, இந்த மஹாதேவன் எவன்? என்ன வகையில் அவனை ஒருவனால் நிறைவடையச் செய்ய இயலும்?(126) அந்தத் தேவன் எங்கே வசிக்கிறான்? அவனை எவ்வாறு காணலாம்? எதனால் அவன் நிறைவை அடைவான்? அந்தச் சர்வனின் வடிவம் எது? அவனைக் குறித்த அறிவை அடைவதில் ஒருவன் எவ்வாறு வெல்லலாம்? ஓ! தாயே, என்னிடம் நிறைவை அடைந்தால், அவனை எனக்குக் காட்டுவாயாக” என்றேன்.(127)
ஓ! கிருஷ்ணா, ஓ! கோவிந்தா, நான் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு என் தாயார் பெற்ற பாசத்தால் நிறைந்து என் தலையை முகர்ந்த போது அவளது கண்களைக் கண்ணீர் மறைத்தது.(128) ஓ! மதுசூதனா, ஓ! தேவர்களில் சிறந்தவனே, அப்போது என் உடலை மென்மையாகத் தட்டிக் கொடுத்த என் தாயார், பெரும் பணிவுடன் கூடிய தொனியில் பின்வரும் வார்த்தைகளை என்னிடம் சொன்னாள்.(129) என் தாயார், “தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் மஹாதேவனை அறிவது மிகக் கடினமாகும். இந்த மனிதர்கள் அவனைத் தங்கள் இதயங்களில் சுமக்க, அல்லது அவனைப் புரிந்துகொள்ள வல்லவர்களல்ல. அவர்களால் அவனைத் தங்கள் மனங்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அவர்களால் அவனைப் பற்றவும் முடியாது, மேலும் அவர்களால் அவனைக் காணவும் முடியாது,(130) அவனது வடிவங்கள் பலவாகும் என ஞானிகள் உறுதியாகச் சொல்கின்றனர். மேலும் அவன் வசிக்கும் இடங்களும் பலவாகும். அவனது அருளின் வடிவங்கள் பலவாகும்.(131) ஈசனின் சிறந்த செயல்கள் அனைத்தையும், பழங்காலத்தில் அவன் ஏற்ற வடிவங்கள் அனைத்தையும் என அவற்றின் விபரங்களுடன் புரிந்து கொள்ள எவன் இருக்கிறான்?(132) சர்வன் எவ்வாறு விளையாடுவான்?, எவ்வாறு நிறைவை அடைவான் என்ற யாரால் சொல்ல முடியும்? அண்டத்தின் வடிவிலான மஹேஸ்வரன் அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கிறான்.(133) ஈசானனின் மங்கலமான அற்புதச் செயல்கள் குறித்து முனிவர்கள் உரையாடும்போது, தன்னை வழிபடுபவர்களிடம் கருணையால் தூண்டப்பட்டு அவன் எவ்வாறு நேரடியாகக் காட்சி கொடுப்பான் என்பதைக் கேட்டிருக்கிறேன்.(134) பழங்காலத்தில் மஹாதேவன் ஏற்ற பல்வேறு வடிவங்கள் குறித்த செய்திகளைப் பிராமணர்களுக்குக் கருணை காட்டும் நோக்கில் சொர்க்கவாசிகள் சொல்லியிருக்கின்றனர். அவற்றைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மகனே, நான் அவற்றை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றாள்.(135)
என் அன்னை தொடர்ந்தாள், “பிரம்மன், விஷ்ணு, தேவர்களின் தலைவன், ருத்திர்கள், ஆதித்தியர்கள், அஸ்வினிகள், விஸ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்கள் ஆகிய வடிவங்களைப் பவன் {சிவன்} ஏற்கிறான்.(136) மனிதர்கள், பெண்கள், பிரேதங்கள், பிசாசங்கள், கிராதர்கள், சபரர்கள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். காடுகள் மற்றும் சோலைகளில் வசிக்கும் சபரர்களின் வடிவங்களையும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் ஏற்கிறான்.(137) ஆமைகள், மீன்கள், சங்குகள் ஆகிய வடிவங்களையும் அவன் ஏற்கிறான். மனிதர்கள் ஆபரணங்களாகப் பயன்படுத்தும் பவளக் கொடிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(138) யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், தைத்தியர்கள், தானவர்கள் ஆகியோரின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், பொந்துகளில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களையும் ஏற்கிறான்.(139) புலிகள், சிங்கங்கள், மான்கள், ஓநாய்கள், கரடிகள், பறவைகள், ஆந்தைகள் மற்றும் நரிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(140)
அன்னங்கள், காக்கைகள், மயில்கள், ஓணான்கள், பல்லிகள் மற்றும் நாரைகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். கொக்குகள், கழுகுகள், சக்கரவாகங்கள் ஆகிய வடிவங்களையும் அவனே ஏற்கிறான்.(141) உண்மையில் அவன், சாசங்கள் மற்றும் மலைகளின் வடிவங்களையும் ஏற்கிறான். ஓ! மகனே, பசுகள், யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகிய வடிவங்களையும் மஹாதேவனே ஏற்கிறான்.(142) ஆடுகள், சிறுத்தைப்புலிகள் மற்றும் பல்வேறு வகை விலங்குகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். அழகிய தோகைகளைக் கொண்ட பல்வேறு வகைப் பறவைகளின் வடிவங்களையும் பவனே ஏற்கிறான்.(143) பிராமணர்களுக்கு மத்தியில் தண்டங்கள், குடைகள் மற்றும் கமண்டலங்களுடன் இருக்கும் மனிதர்களின் வடிவங்களைத் தரிப்பவன் மஹாதேவனே. சில வேளைகளில் அவன் ஆறு முகம் படைத்தவனாகிறான், சில வேளைகளில் பல முகங்களைத் தரித்தவனாகிறான். சில வேளைகளில் அவன் மூன்று கண்களை உடைய வடிவங்களையும், பல தலைகளையுடைய வடிவங்களையும் ஏற்கிறான்.(144) சில வேளைகளில் பல கோடி கால்களைக் கொண்ட வடிவங்களையும், எண்ணற்ற வயிறுகள் மற்றும் முகங்களைக் கொண்ட வடிவங்களையும், எண்ணற்ற கரங்கள் மற்றும் எண்ணற்ற இடைகளையுடைய வடிவங்களையும் அவன் ஏற்கிறான். சில வேளைகளில் அவன் எண்ணற்ற கணங்கள் மற்றும் பூதங்கள் சூழ இருக்கிறான்.(145) முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்களின் வடிவங்களை அவனே ஏற்கிறான். சில வேளைகளில் அவன் சாம்பற் {திருநீறு} பூசப்பட்ட வெண்ணிறத்துடன், நெற்றியில் அரை மதியால் அலங்கரிக்கப்பட்ட வடிவத்தை ஏற்கிறான்.(146)
பல்வேறு வகைக் குரல்களில் பாடப்படும் பல்வேறு துதிகளால் துதிக்கப்படுபவனும், புகழ்மாலைநிறைந்த பல்வேறு மந்திரங்களால் வழிபடப்படுபவனும், சில வேளைகளில் சர்வன் என்றழைக்கப்படுபவனுமான அவன், அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவனாக இருக்கிறான், மேலும் அனைத்து உயிரினங்களும் சார்ந்திருக்கும் பொதுவான அடித்தளமாக அவனே இருக்கிறான்.(147) மஹாதேவனே அனைத்து உயிரினங்களின் ஆன்மா ஆவான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். (கடமைகள் {தர்மங்கள்} மற்றும் சடங்குகள் குறித்த) உரைகள் அனைத்தையும் பேசுபவன் அவனே ஆவான். எங்கும் வசிக்கும் அவன், அண்ட உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிப்பவனாக அறியப்பட வேண்டும்.(148) தன்னை வழிபடும் ஒவ்வொருவனாலும் வளர்க்கப்படும் ஆசைகளை அறிந்தவன் அவன். தன்னைத் துதிப்பவனின் நோக்கத்தை அறிபவன் அவன். உனக்கு விருப்பமிருந்தால், அந்தத் தேவர்களுடைய தலைவனின் பாதுகாப்பை நாடுவாயாக.(149) அவன் சில வேளைகளில் மகிழ்வான், சில வேளைகளில் கோபவசப்படுவான், சில வேளைகளில் ஹும் என்ற அசையை மிக உரக்கச் சொல்வான். அவன் சில வேளைகளில் சக்கரத்தைத் தரிக்கிறான், சில வேளைகளில் திரிசூலத்தையும், சில வேளைகளில் கதாயுதத்தையும், சில வேளைகளில் உலக்கைகளையும், சில வேளைகளில் வாள்களையும், சில வேளைகளில் போர்க்கோடரிகளையும் தரிப்பான்.(150)
உலகைத் தலையில் தாங்கும் சேஷனின் வடிவை ஏற்பவன் அவனே. அவன் பாம்புகளைத் தன் கச்சையாகக் கொண்டிருக்கிறான், அவனது காதுகள் பாம்புகளால் செய்யப்பட்ட காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. அவன் சூடும் புனித நூலாகவும் பாம்புகளே அமைகின்றன. யானைத் தோல் அவனது மேலாடையாக அமைகிறது.(151) சில வேளைகளில் அவன் சிரிக்கிறான், சில வேளைகளில் பாடுகிறான், சில வேளைகளில் மிக அழகாக ஆடுகிறான். எண்ணற்ற பூதங்களாலும், கணங்களாலும் சூழப்பட்ட அவன் சில வேளைகளில் இசைக்கருவிகளை இசைக்கிறான். அவன் இசைக்கும் பல்வேறு வகைக் கருவிகள் இனிமையான ஒலிகளை வழங்குகின்றன.(152) அவன் சில வேளைகளில் (சுடலைகளில்) திரிகிறான், சில வேளைகளில் கொட்டாவி விடுகிறான், சில வேளைகளில் அழுகிறான், சில வேளைகளில் பிறரை அழச் செய்கிறான். சில வேளைகளில் அவன் பித்தனின் தோற்றத்தை ஏற்கிறான், சில வேளைகளில் மது மயக்கத்துடன் கூடியவனாகவும், சில வேளைகளில் மிக இனிய சொற்களைச் சொல்பவனாகவும் இருக்கிறான்.(153) அச்சுறுத்தும் கடுமையுடன் கூடிய அவன் சில வேளைகளில், தன் கண்களால் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் உரக்கச் சிரிக்கிறான். சில வேளைகளில் அவன் உறங்குகிறான், சில வேளைகளில் விழித்திருக்கிறான், சில வேளைகளில் விரும்பியவாறு கொட்டவீ விடுகிறான்.(154) சில வேளைகளில் அவன் புனித மந்திரங்களை ஓதுகிறான், சில வேளைகளில் ஓதப்படும் அந்த மந்திரங்களின் தேவனாகிறான். சில வேளைகளில் அவன் தவங்களைச் செய்கிறான், சில வேளைகளில் செய்யப்படும் அத்தவங்களில் துதிக்கப்படும் தேவனாகிறான். சில வேளைகளில் அவன் கொடைகளை அளிக்கிறான், சில வேளைகளில் கொடைகளை ஏற்கிறான்; சில வேளைகளில் யோகத்தில் ஆழ்கிறான், சில வேளைகளில் பிறருடைய தியான யோகத்தின் பொருளாகிறான்.(155)
வேள்விப் பீடத்திலோ {யாகவேதியின் நடுவிலோ}, வேள்வித் தண்டிலோ {யூபஸ்தம்பத்திலோ} அவன் காணப்படுகிறான்; மாட்டுக் கொட்டில் அல்லது நெருப்பின் மத்தியிலும் அவன் காணப்படுகிறான். மீண்டும் அவனை அங்கே காணமுடியாதும் போகலாம். அவன் சிறுவனாகவோ, முதிர்ந்தவனாகவோ காணப்படுகிறான்.(156) அவன் முனிவர்களின் மகள்கள் மற்றும் மனைவிகளுடன் விளையாடுகிறான். அவனுடைய முடி நீண்டதாகவும் நிமிர்ந்து நிற்பதாகவும் இருக்கிறது. திசைகளையே ஆபரணங்களாகக் கொண்ட அவன் முழு அம்மணமாக இருக்கிறான். அவன் பயங்கரக் கண்களைக் கொண்டவனாக இருக்கிறான்.(157) அவன் வெண்மையாகவும், கருமையாகவும், கருப்பனாகவும், வெளுப்பனாகவும் இருக்கிறான், புகையின் நிறத்தைக் கொண்டவனாகவும், சிவப்பாகவும் அவன் இருக்கிறான். நீண்ட பயங்கரமான கண்களைக் கொண்டவனாக அவன் இருக்கிறான். வெட்ட வெளியையே ஆடையாகக் கொண்டவன் அவன், அனைத்துப் பொருட்களையும் மறைப்பவனும் அவன்.(158)
வடிவமற்றவனும், மாயையால் அமைந்தவனும், அண்டத்தின் செயல்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்தின் வடிவைக் கொண்டவனும், ஹிரண்யகர்ப்பனின் வடிவத்தை ஏற்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாதவனுமான அவன் பிறப்பற்றவனாக இருக்கிறான்.(159) அவன் (ஒவ்வொரு உயிரினத்தின்) இதயத்தில் வாழ்கிறான். அவனே உயிர் மூச்சு, அவனே மனம், அவனே (உடற்பொதியில் மறைந்திருக்கும்) ஜீவனும் ஆவான் . அவன் யோகத்தின் ஆன்மாவாக இருக்கிறான், அவனே யோகம் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியர் நுழையும் தியான யோகமாக அவனே இருக்கிறான். அவனே பரமாத்மா ஆவான். உண்மையில், புலன்களாலல்லாமல், அவனது இருப்பைப் பற்றும் ஆன்மாவால் மட்டுமே அவன் புரிந்து கொள்ளப்படுகிறான்.(160) அவன் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கிறான். அவன் பாடகனாகவும் இருக்கிறான். அவன் ஒரு லட்சம் கண்களைக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு வாயைக் கொண்டிருக்கிறான், இரண்டு வாய்கள், மூன்று வாய்கள் மற்றும் பல வாய்களையும் கொண்டிருக்கிறான். (161) ஓ! மகனே {உபமன்யு}, உன்னை அவனுக்கு அர்ப்பணித்து, அவனில் உன் இதயத்தை நிலை நிறுத்தி, அவனையே சார்ந்திருந்து, அவனையே ஒரே புகலிடமாக ஏற்று மஹாதேவனைத் துதிப்பாயாக. அவ்வாறு செய்தால் உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாய்” என்றாள் {என் தாயார்}.(162)
லிங்கமும், பகமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஈ-அன்னையின் சொல் கேட்டு, சிவனை நினைத்துத் தவமிருந்த உபமன்யு; உபமன்யுவிடம் நிறைவடைந்த சிவன், அவரைச் சோதிக்க இந்திரனின் வடிவில் வந்தது; வேறு எந்தத் தேவனிடமும் வரம்பெற மாட்டேன் என உபமன்யு சொன்னது; சிவனின் மகிமையைச் சொன்னது; சிவலிங்கச் சின்னத்தின் பொருள் சொன்ன உபமன்யு…
{உபமன்யு தொடர்ந்தார்}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே என் அன்னையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்த நாள் முதல் வேறு எந்த நோக்கமும் இல்லாத என் அர்ப்பணிப்பை மஹாதேவனிடம் செலுத்தினேன்.(163) பிறகு நான், சங்கரனை நிறைவடையச் செய்வதற்காகக் கடுந்தவங்கில் ஈடுபட்டேன். ஓராயிரம் வருடங்கள் நான் என் இடக்கால் கட்டைவிரலில் நின்றேன்.(164) அதன் பிறகு ஓராயிரம் வருடங்கள் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். அதன்பிறகு ஓராயிரம் வருடங்கள் மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். அடுத்த ஆயிரம் வருடங்கள் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தேன்.(165) அதன் பிறகு எழுநூறு ஆண்டுகள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். இவ்வகையில் நான் முழுமையாக ஓராயிரம் தேவ வருடங்கள் மஹாதேவனைத் துதித்தேன்.(166) இதன்பிறகு அண்டத்தின் ஆசானான பலமிக்க மஹாதேவன் என்னிடம் நிறைவடைந்தான். நான் அவனிடம் மட்டுமே முற்றான அர்ப்பணிப்புடன் இருக்கிறேனா என்பதை உறுதி செய்து கொள்ள விரும்பிய அவன்,(167) தேவர்கள் அனைவராலும் சூழப்பட்ட சக்ரனின் {இந்திரனின்} வடிவில் என் முன்னிலையில் தோன்றினான்.
மேனியில் ஆயிரம் கண் கொண்டவனும், வஜ்ராயுதம் தரித்தவனும், கொண்டாடப்படுபவனுமான சக்ரனாக அவன் தோன்றினான்.(168) அவன், தூய வெண்ணிறம் கொண்டதும், கண்கள் சிவந்ததும், காதுகள் மடங்கியதும், மதநீர் பெருகுவதும், துதிக்கை மடங்கியதும், காணப் பயங்கரமானதும், நான்கு தந்தங்களுடன் கூடியதுமான ஒரு யானையைச் செலுத்திக் கொண்டு வந்தான். உண்மையில், அத்தகைய யானையைச் செலுத்தி வரும் தேவர்களின் தலைவன் சக்தியால் சுடர்விடுபவனாகத் தெரிந்தான். தலையில் அழகிய மகுடத்துடனும், கழுத்தைச் சுற்றும் மாலைகளுடனும், கரங்களைச் சுற்றும் கங்கணங்களுடனும் அவன் நான் இருந்த இடத்திற்கு வந்தான்.(169,170) அவனது தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டிருந்தது. பல அப்சரஸ்கள் அவனுக்குப் பணிவிடையும், பல கந்தர்வர்கள் அவனது புகழைப் பாடவும் செய்தனர்.(171) அவன் என்னிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் உம்மிடம் நிறைவடைந்தேன். நீர் விரும்பும் வரத்தை என்னிடம் இரந்து பெறலாம்” என்றான்.(172)
சக்ரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் மகிழவில்லை. உண்மையில், ஓ! கிருஷ்ணா, நான் தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினேன்,(173) “நான் உன்னிடமோ, வேறு பிற தேவர்களிடமோ எந்த வரத்தையும் விரும்பவில்லை. ஓ! இனிய தேவா, மஹாதேவனிடம் மட்டுமே வரங்களைக் கேட்பேன் என நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(174) உண்மை, இஃது உண்மை, நான் உன்னிடம் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே. மஹேஸ்வரன் தொடர்பானவற்றைத் தவிர வேறு எந்தச் சொற்களும் எனக்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல.(175) அந்த அனைத்து உயிரினங்களின் தலைவனுடைய ஆணையின் பேரில் நான் புழுவாகவோ, பல கிளைகளையுடைய மரமாகவோ ஆயத்தமாக இருக்கிறேன். மஹாதேவனின் வரங்களின் மூலம் அடையப்படாத அருளானது மூவுலகங்களின் அரசுரிமையே ஆனாலும் அஃது எனக்கு ஏற்புடையதல்ல.(176) நான் ஸ்வபாகர்களுக்கு {சண்டாளர்களுக்கு} மத்தியில் பிறப்பை அடைந்தாலும், ஹரனின் பாதத்திலேயே அர்ப்பணிப்புடன் இருப்பேன். மேலும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பசுபதியிடம்} அர்ப்பணிப்பில்லாமல் இந்திரனின் அரண்மனையில் பிறக்கவும் நான் விரும்பவில்லை.(177)
தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானான அண்டத்தின் தலைவனிடம் அர்ப்பணிப்பில்லாதவன் உணவில்லாமல் வெறும் காற்று மற்றும் நீரை உண்டு வாழ்ந்தாலும் அவனது துன்பம் தீராது.(178) மஹாதேவனின் பாதத்தை நினையாமல் ஒரு கணமும் வாழ விரும்பாத மனிதர்களுக்கு அறம் மற்றும் பிறவகை நெறிகள் நிறைந்த உரைகள் ஏதும் தேவையில்லை.(179) அறமற்ற, அல்லது பாவம் நிறைந்த யுகம் தோன்றும்போது, ஒருவன் மஹாதேவனிடம் தன் இதயத்தை அர்ப்பணிக்காமல் ஒரு கணத்தையும் கடத்தக்கூடாது. ஹரனிடம் அர்ப்பணிப்பு என்ற அமுதத்தைப் பருகிய ஒருவன் உலக அச்சங்களில் இருந்து விடுபடுகிறான்.(180) மஹாதேவனின் அருளைப் பெறாத ஒருவனால் ஒரு நாள், அரை நாள், ஒரு முகூர்த்தம், ஒரு க்ஷணம் {ஒரு நிமிடம்}, ஒரு லவம் {ஒரு நொடி} கூட மஹாதேவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதில் ஒருபோதும் வெல்ல முடியாது.(181) ஓ! சக்ரா, மஹாதேவனின் ஆணையின் பேரில் நான் உற்சாகமாக ஒரு புழுவாகவோ, பூச்சியாகவோ ஆவேனேயன்றி, மூவுலகங்களின் அரசுரிமையை நீ கொடுக்க முன்வந்தாலும் அஃது எனக்கு உவப்பாகாது.(182)
ஹரனின் சொல்லால் நான் நாயாகவும் ஆவேன். உண்மையில், அஃது என் உயர்ந்த விருப்பத்திற்கு இணக்கமாகவே அமையும். மஹேஸ்வரனால் கொடுக்கப்படவில்லையென்றால் நான் தேவர்களின் அரசுரிமையையும் கொள்ள மாட்டேன்.(183) சொர்க்கத்தின் ஆட்சிப்பகுதிகளை நான் அடைய விரும்பவில்லை. பிரம்ம லோகத்தை நான் விரும்பவில்லை. உண்மையில், விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுவதும், முற்றாகப் பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுவதுமான தனிப்பட்ட இருப்பின் அழிவை நான் விரும்பவில்லை. ஆனால் நான் ஹரனின் அடிமையாக வேண்டுகிறேன்[13].(184) தலையில் மகுடம் தரித்தவனும், சந்திர வட்டிலைப்போன்ற தூய வெண்ணிற உடலைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான அந்தச் சிறப்புமிக்க மஹேசன் என்னிடம் நிறைவடையாத வரையில் உடல் படைத்த உயிரினங்கள் அனைத்திற்கும் நூறு முறை நேரும் முதுமை, மரணம், பிறவி மூலம் கிட்டும் துன்பம் அனைத்தையும் நான் உற்சாகமாகப் பொறுத்துக் கொள்வேன்.(185) முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டவனும், சூரியன், சந்திரன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டவனும், மூவுலகங்களில் காணப்படும் உண்மையான மற்றும் உண்மையற்ற அனைத்தின் வேராக இருப்பவனும், அல்லது அவற்றுக்கு மூலக் காரணனனும், பகுபடாத ஒரே இருப்பாக உள்ளவனுமான ருத்திரனை நிறைவடையச் செய்யாமல் இந்த அண்டத்தில் அமைதிநிலையை அடைய இயன்றவன் எவன் இருக்கிறான்?(186) என் குற்றங்களின் விளைவால் எனக்கு மறுபிறவிகள் நேருமாயின், அந்தப் பிறவிகள் அனைத்திலும் நான் பவனிடம் மட்டுமே என்னை அர்ப்பணிப்பேன் {பக்தி கொள்வேன்}” என்றேன்.(187)இந்திரன் {இந்திரனாக வந்த சிவன்}, “பரம்பொருளின் இருப்புக்கு, அல்லது காரணங்கள் அனைத்திற்கும் காரணமாக அவன் இருப்பதற்கு என்ன காரணங்களை உம்மால் சொல்ல முடியும்?” என்று கேட்டான்.(188)
உபமன்யு {நான்}, “இருப்பு மற்றும் இல்லாமையாக, வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாதவனாக, நித்தியமானவனாக அல்லது மாற்றமில்லாதவனாக, ஒருவனாக மற்றும் பலராகப் பிரம்மத்தை ஓதுபவர்கள் எவனை விளக்குகிறார்களோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(189) தொடக்கம், நடுவுநிலை, முடிவு ஆகியவை இல்லாதவனும், ஞானம் மற்றும் பலமாக இருப்பவனும், புலப்படாதவனும், பரமாத்மாவும் எவனோ அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(190) பலம் அனைத்தும் வரும் இடமாக இருப்பவனும், எவராலும் படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், எந்த வித்திலிருந்தும் எழாதவனாக இருந்தாலும், அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களின் வித்தாக இருப்பவன் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(191) இருள் குணத்தை {தமஸ் குணத்தைக்} கடந்தவனும், சுடர்மிக்கப் பிரகாசமாக இருப்பவனும், தவங்கள் அனைத்தின் சாரமாக இருப்பவனும், அவனைப் புரிந்து கொள்ளும் நோக்கில் நாம் கொள்ளும் திறன்கள் அனைத்தையும் கடந்தவனும், துன்பம் அல்லது கவலையில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் அறிய வேண்டியவனும் எவனோ அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(192) ஓ! புரந்தரா, பூதங்கள் அனைத்தின் படைப்பையும், உயிரினங்கள் அனைத்தின் எண்ணங்களையும் அறிந்தவனும், இருப்புக்கு, அல்லது அனைத்து உயிரினங்களின் படைப்புக்கு மூலக் காரணனும், எங்கும் நிறைந்திருப்பவனும், அனைத்தையும் கொடுக்கும் பலம் கொண்டவனும் எவனோ அவனையே நான் வழிபடுகிறேன்.(193)
வாதத்தால் {விவாதத்தால்} புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், சாங்கிய மற்றும் யோக அமைப்பு தத்துவங்களின் பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களையும் கடந்திருப்பவனும், வேண்டப்படும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அனைவராலும் வழிபடப்பட்டுத் துதிக்கப்படுபவனும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(194) ஓ! மகவத், மகவத்தின் ஆன்மாவாக இருப்பவனும், தேவர்களின் தேவனும், உயிரினங்கள் அனைத்தின் ஆசானும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(195) உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரம்மனை முதலில் படைத்தவனும், வெளியை (தன் சக்தியால்) நிறைத்து ஆதி முட்டையை இருப்புக்கு அழைத்தவனும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்[14].(196) நெருப்பு, நீர், காற்று, நிலம், வெளி, மனம், மஹத் என்றழைக்கப்படுவது ஆகியற்றைப் படைத்தவன் பரமனைத் தவிர வேறு எவன்?(197) ஓ! சக்ரா, எனக்குச் சொல்வாயாக; மனம், புத்தி, அகங்காரம், தன்மாத்திரைகள் மற்றும் புலன்களைச் சிவனைத் தவிர வேறு எவனால் படைக்க முடியும்? சிவனைவிட உயர்ந்தவன் வேறு எவன்?[15](198) இந்த அண்டத்தைப் படைத்தவன் பெரும்பாட்டனான பிரம்மனே என ஞானிகள் சொல்கின்றனர். எனினும், அந்தப் பிரம்மன், தேவர்களின் தேவனான மஹாதேவனைத் துதித்து, நிறைவடையச் செய்ததன் மூலமே தன் பலத்தையும், செழிப்பையும் அடைந்தான்.(199) பிரம்மன், விஷ்ணு மற்றும் ருத்திரனைப் படைத்த அந்தச் சிறப்புமிக்கவனில் இருக்கும் (படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற) அந்த உயர்ந்த பலமானது மஹாதேவனிடமிருந்து அடையப்பட்டதே. எனக்குச் சொல்வாயாக; அந்தப் பரமனுக்கு மேலானவன் வேறு எவன்?[16](200)தைத்தியர்கள் மற்றும் தானவர்களில் முதன்மையானவர்களின் ஒடுக்கும் சக்தி மற்றும் அரசுரிமையின் மூலம் தீர்மானிக்கும் பலத்தைக் கொடுக்கவும், திதியின் மகன்களைத் தலைமைத்துவத்துடன் இணைக்கவும் வல்லவன் அந்தத் தேவர்களின் தேவனைத் தவிர வேறு எவன்?[17](201) திசைகளின் பல்வேறு புள்ளிகள், காலம், சூரியன், ஒளிரும் பொருட்கள், கோள்கள், காற்று, நீர், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள் ஆகியவையும் நீ மஹாதேவனிடம் இருந்து வந்தவன் என்பதை அறியும். எமக்குச் சொல்; அந்தப் பரமனை விட உயர்ந்தவன் வேறு எவன்?(202) வேள்வியைப் படைத்து, திரிபுரத்தை அழித்த காரியங்களில் மஹாதேவனைத் தவிர வேறு எவன் இருக்கிறான்? தைத்தியர்கள் மற்றும் தானவர்களை அடைந்து பகைவர்களை நொறுக்குபவனாகச் செயல்படுபவன் மஹாதேவனைத் தவிர வேறு எவன்? (203) ஓ! புரந்தரா, ஓ! தேவர்களில் சிறந்தவனே, சித்தர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் மற்றும் முனிவர்களால் வழிபடப்படும் ஆயிரங்கண் கொண்ட உன்னை நான் காணும்போது, போலி தத்துவங்கள் நிறைந்த பல போலி வாக்கியங்களின் தேவை என்ன இருக்கிறது? ஓ! குசிகர்களில் சிறந்தவனே, இவை அனைத்தும், தேவர்களின் தேவனான மஹாதேவனின் கருணையால் விளைந்தவையே[18].(204,205)ஓ! கேசவா, சொர்க்கத்திலும், பிற காணப்படாதவற்றிலும் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும், நீக்கமற நிறைந்திருக்கும் தலைவனையே ஆன்மாவாகக் கொண்டிருக்கும் இந்த உலகங்களும் மஹேஸ்வரனிடம் இருந்தே வந்தன, ஜீவன் அனுபவிப்பதற்காக (அவனால்) படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக[19].(206) கேட்கப்படும் அனைத்தையும் அறிந்தவர்கள், பூ, புவ, சுவ, மஹா என்ற பெயர்களில் அறியப்படும் உலகங்களிலும், லோகாலோக மலைகளுக்கு மத்தியிலும், தீவுகளிலும், மேரு மலைகளிலும், மகிழ்ச்சியை விளைவிக்கும்அனைத்துப் பொருட்களிலும், உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் மஹேஸ்வரன் வசிப்பதாகச் சொல்கிறார்கள்.(207) ஓ! சக்ரா, பவனைத் தவிர வேறு எந்தப் பலமிக்க வடிவையும் தேவர்களும் அசுரர்களும் காணமுடியவில்லையெனில், அதிலும் குறிப்பாக முன்னவர்கள் {தேவர்கள்} எதிர்க்கப்படும்போதும், பின்னவர்களால் {அசுரர்களால்} பீடிக்கப்படும்போதும் அவ்வடிவத்தின் பாதுகாப்பை நாடவில்லையா?(208) தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்களுக்கிடையில் பரஸ்பர அழிவை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் பகைமிக்கப் போர்கள் அனைத்திலும், அழிவடைவோரின் செயல்கள் சார்ந்த நிலைக்கு இணங்கிய பலத்தைப் பவனே அவர்களுக்குக் கொடுக்கிறான்.(209) எனக்குச் சொல்வாயாக; அந்தகன், சுக்ரன், துந்துபி, மஹிஷன், முதன்மையான யக்ஷர்கள் பலர், பலன், ராட்சசர்கள் மற்றும் நிவாதகவசர்கள் ஆகியோருக்கு வரங்களை அருளி மீண்டும் அவற்றை அவர்களிடம் இருந்து பறிக்க மஹேஸ்வரனைத் தவிர வேறு எவனால் இயலும்?(210) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசானான {தந்தையான} மஹாதேவனின் உயிர் வித்து நெருப்பில் ஆகுதியாக ஊற்றப்படவில்லையா? அந்த வித்தில் இருந்தே தங்க மலை {பொன்மலை} உதித்தது. இத்தகைய குணத்துடன் கூடிய வித்தைக் கொண்டவன் வேறு எவன்?[20](211)திசைகளையே தன் ஆடையாகக் கொண்டவன் என இவ்வுலகில் பாடப்படுபவன் வேறு எவன் இருக்கிறான்? மேல்நோக்கிய உயிர்வித்துடன் கூடிய ஒரு பிரம்மச்சாரி என்று சொல்லப்படுபவன் வேறு எவன்? தன் உடலில் பாதியை அன்பு மனைவிக்குக் கொடுப்பவன் வேறு எவன்? காமதேவனை அடக்கவல்லவன் வேறு எவன்?(212) ஓ! இந்திரா, தேவர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பரமானந்தம் நிறைந்த உயர்ந்த பகுதியைக் கொண்டவன் வேறு எவன்? சுடலையையே தனது விளையாட்டு மைதானமாகக் கொண்டவன் வேறு எவன்? ஆடலுக்காகப் புகழப்படுபவன் வேறு எவன்?(213) எவனுடைய வழிபாடும், பலமும் மாற்றமில்லாததாகவே நீடிக்கிறது? பூத கணங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பவன் வேறு எவன்? ஓ! தேவா, தன்னைப் போலவே பலம் நிறைந்தவர்களையும், அந்தப் பலத்தில் செருக்கு கொண்டவர்களையும் தன் துணைவர்களாகக் கொண்டிருப்பவன் வேறு எவன்?[21](214) மாற்றமில்லாதது என மூவுலகங்களாலும் மதிக்கப்பட்டு வழிபடப்படும் இடத்தை {கைலை மலையைக்} கொண்டவன் வேறு எவன்? மழையைப் பொழிந்து, வெப்பத்தைக் கொடுத்து, சக்தியால் சுடர்விடுபவன் வேறு எவன்?(215) நம் மூலிகைச் செல்வத்தை யாரிம் இருந்து நாம் பெறுகிறோம்? அனைத்து வகைச் செல்வங்களையும் தாங்குபவன் எவன்? அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட மூவுலகங்களிலும் விரும்பியவாறு விளையாடுபவன் வேறு எவன்?(216)ஓ! இந்திரா, மஹேஸ்வரனே (அனைத்திற்கும்) மூலக் காரணன் என்பதை அறிவாயாக. ஞானம், (தவ) வெற்றி, சாத்திர விதிகளில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் ஆகியவற்றின் மூலம் யோகிகள், முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்களால் அவன் துதிக்கப்படுகிறான்.(217) வேள்விகள் செய்வது மற்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்வது ஆகியவற்றின் துணை மூலம் தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும் அவன் துதிக்கப்படுகிறான். செயற்கனிகள் அனைத்தையும் கடந்தவனாக இருப்பதால் அவற்றால் அவனை ஒருபோதும் தீண்டமுடியாது. இவ்வாறு இருக்கும் அவனையே அனைத்தின் மூலக் காரணன் என்று நான் அழைக்கிறேன்.(218) அவன் திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {ஸூக்ஷ்மமாகவும்} இருக்கிறான். அவன் ஒப்பில்லாதவனாக இருக்கிறான். புலன்களால் அவனை உணர முடியாது. குணங்களுடன் கூடியவனாகவும், அவை அற்றவனாகவும் அவன் இருக்கிறான். குணங்கள் அவனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவனே குணங்களின் தலைவனாவான். மஹேஸ்வரனின் இடம் இத்தகையதே.(219) (அண்டத்தின்) வாழ்வுக்கும், அழிவுக்கும் காரணன் அவனே. அண்டத்தின் காரணனும், அதன் அழிவுக்குக் காரணனும் அவனே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே. அனைத்துப் பொருட்களுக்கும் தந்தை அவனே. உண்மையில், அனைத்துக்கும் காரணன் அவனே.(220)
அவன் மாற்றமில்லாதவன், அவன் வெளிப்படாதவன், ஞானம் அவனே; அறியாமை அவனே; ஒவ்வொரு செயலும் அவனே; ஒவ்வொரு விடுபடலும் அவனே; அறம் அவனே; மறம் அவனே. ஓ! சக்ரா, அனைத்துக்கும் காரணன் என என்னால் அழைக்கப்படுபவனும் அவனே.(221) ஓ! இந்திரா இரு பாலினங்களின் குறியீட்டையும் கொண்டிருக்கும் மஹாதேவனின் சின்னத்தை {லிங்கத்தைக்} காண்பாயாக. படைப்பு மற்றும் அழிவு ஆகிய இரண்டுக்கும் காரணனும், தேவதேவனுமான அந்த ருத்திரன், தன் வடிவத்தில் அண்டத்தின் படைப்புக்கான ஒரே காரணமான இரண்டு பாலினங்களின் குறியீடுகளையும் வெளிப்படுத்துகிறான்[22].(222) முன்பு எனக்கு அவனே அண்டத்தின் காரணன் என்றும், அனைத்திற்கும் காரணமான ஒருவன் என்றும் என் அன்னை சொல்லியிருக்கிறாள். ஓ! சக்ரா, ஈசனைவிட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உனக்கு விருப்பமிருந்தால் அவனது அன்பையும், பாதுகாப்பையும் பெற அவனிடம் பணிவாயாக.(223) ஓ! தேவர்களின் தலைவா, (மஹாதேவனால் வெளிப்படுத்தப்படும்) பாலினக் கலப்பின் மூலமே அண்டம் உதித்தது என்பது காணத்தக்க சான்றே. குணங்கள் கொண்டவை, குணங்கள் அற்றவை, பிரம்மன் மற்றும் பிற வித்துகளை உடனடிக் காரணங்களாகக் கொண்டவை ஆகியவற்றின் தொகையே அண்டம் என்பதை நீ அறிவாய். ஆயிரம் ஆசைகள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்ட பிரம்மன், இந்திரன், ஹுதாசன் {அக்னி}, விஷ்ணு மற்றும் பிற தேவர்கள், தைத்தியர்கள் அசுரர்கள் அனைவரும் மஹாதேவனை விட உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை என்று எப்போதும் சொல்கிறார்கள்.(224) அசையும் மற்றும் அசையாதன அடங்கிய அண்டத்தில் அனைவராலும் அறியப்பட்டவனும், சிறந்தவன், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவன், மங்கலமே வடிவானவன் என்று சொல்லப்படுபவனுமான அந்தத் தேவனிடம் ஆசையால் உந்தப்பட்டு, கட்டுப்பாட்டுடன் கூடிய மனத்துடன் உடைமைகள் அனைத்திலும் உயர்ந்த விடுதலையை {முக்தியைத்} தாமதமில்லாமல் கேட்கிறேன்[23].(225)(நான் நம்புவது என்ன என்பதை நிறுவ) வேறு காரணங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? உயர்ந்த மஹாதேவனே அனைத்துக் காரணங்களுக்கும் காரணமாக இருக்கிறான். மஹாதேவனைத் தவிர வேறு எந்தத் தேவனின் அடையாளத்தையும் {லிங்கத்தையும்} தேவர்கள் துதித்ததாக நாம் ஒருபோதும் கேட்டதில்லை.(226) மஹேஸ்வரன் ஏற்கப்படவில்லையென்றால், வேறு யாருடைய சின்னமாவது வழிபடப்படுகிறது, அல்லது தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுகிறது என்று நீ எப்போதாவது கேட்டதுண்டா?(227) ஓ! இந்திரா, நீ உட்படப் பிரம்மன், விஷ்ணு மற்றும் பிற தேவர்கள் அனைவராலும் வழிபடப்படும் சின்னத்தை {லிங்கத்தைக்} கொண்டவனே உண்மையில் துதிக்கத்தக்க தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(228) பிரம்மன் தாமரையைத் தன் சின்னமாகக் கொண்டிருக்கிறான். விஷ்ணு சக்கரத்தைக் கொண்டிருக்கிறான். இந்திரன் வஜ்ரத்தைக் கொண்டிருக்கிறான். ஆனால் உலகின் உயிரினங்கள் இந்தத் தேவர்களின் சின்னங்களைத் தரிப்பதில்லை. மறுபுறம், மஹாதேவன் மற்றும் அவனது மனைவியின் சின்னங்களையே உயிரினங்கள் அனைத்தும் தரித்திருக்கின்றன. எனவே, உயிரினங்கள் அனைத்தும் மஹேஸ்வரனுக்குச் சொந்தமானவை என்றே கருதப்பட வேண்டும்.(229) உயிரினங்களில் பெண் பாலினத்தவர் அனைவரும் உமையின் இயல்பையே தங்கள் காரணமாகக் கொண்டு உதித்தவர்கள் எனவே உமைக்குச் சொந்தமான பெண்மையின் குறியீட்டை அவர்கள் தரிக்கிறார்கள்; அதே வேளையில் உயிரினங்களில் ஆண் பாலினத்தவர் அனைவரும் சிவனில் இருந்து உதித்து, சிவனுக்குச் சொந்தமான ஆண் குறியைத் தரிக்கின்றனர். அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும், மஹாதேவனின் குறியீட்டையோ, அவனது மனைவியின் குறியீட்டையோ தரிக்காமலும், அந்த உயர்ந்த தலைவனைத் தவிர வேறு காரணம் இருக்கிறது என்று சொல்பவன் மிக இழிந்தவனாகக் கருதப்பட்டு, அவனை அண்டத்தின் உயிரினங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது[24].(230) ஆண் பாலினக் குறியீட்டுடன் கூடிய ஒவ்வொருவரும் ஈசானன் என்றும், பெண் பாலினக் குறியீட்டுடன் கூடிய ஒவ்வொருவரும் உமை என்றும் அறியப்பட வேண்டும். அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் இரு வகை வடிவங்களால் நீக்கமற நிறைந்திருக்கின்றன.(231) மஹாதேவனிடம் இருந்தே நான் வரங்களைப் பெற விரும்புகிறேன். ஓ! கௌசிகா, இதில் தவறினால் நான் அழிவையே விரும்புகிறேன். ஓ! சக்ரா, ஓ! பலனைக் கொன்றவனே, விரும்பியவாறு செல்வாயாக, அல்லது இருப்பாயாக.(232) வரங்களையோ, சாபங்களையோ நான் மஹாதேவனிடம் இருந்தே பெற விரும்புகிறேன். வேறு எந்தத் தேவனையும் நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என் விருப்பங்கள் அனைத்தும் கனியும் வரத்தை வேறு எந்தத் தேவனிடம் இருந்தும் பெறவும் மாட்டேன்” என்றேன் {என்றார் உபமன்யு}.(233)
உபமன்யுவின் சிவத் துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 14உ-உபமன்யுவிடம் இந்திரனாக வந்தவன் சிவனாக மாறியது; அந்தக் காட்சி மாறுதலை நுணுக்கமாக விவரித்த உபமன்யு; உபமன்யு சொன்ன சிவத் துதி…
{உபமன்யு தொடர்ந்தார்}, தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, என் கடுந்தவங்களாலும் மஹாதேவனை நிறைவடையச் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் தந்த துயரத்தில் மூழ்கினேன்.(234) எனினும், கண்ணிமைப்பதற்குள் என் முன்னிருந்த தெய்வீக யானையானது, அன்னம், அல்லது குருக்கத்திப்பூ, அல்லது தாமரைத் தண்டு, அல்லது வெள்ளி, அல்லது பாற்கடலைப் போன்ற வெண்ணிறம் கொண்ட ஒரு காளையாக மாறியது. பேருடலைப் படைத்திருந்த அதன் வால் கருப்பாகவும், அதன் கண்கள் தேனைப் போன்ற பழுப்பு நிறத்திலும் இருந்தன.(235,236) வஜ்ரம் போன்று கடினமானதாக இருந்த அதன் கொம்புகள் தங்க நிறத்தில் இருந்தன. இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அதன் கூர்முனைகளைக் கொண்டு அந்தக் காளை பூமியைப் பிளக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(237) அவ்விலங்கு, பசும்பொன்னாலான ஆபரணங்களால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் முகம், குளம்புகள், மூக்கு, காதுகள் ஆகியன மிக அழகாக இருந்தன, அதன் இடையும் கட்டுக்கோப்பாக இருந்தது.(238) அதன் விலாப்புறங்கள் பேரழகுடன் இருந்தன, அதன் கழுத்து மிகப்பருத்திருந்தது. அதன் திமில் பேரழகுடன் ஒளிர்ந்து, தோள் பகுதி முழுவதையும் நிறைத்திருப்பதாகத் தெரிந்தது. (239) அது பனிமலைச் சிகரம் போலவோ, வானத்தில் உள்ள மேகங்களைப் போலவோ தெரிந்தது. அவ்விலங்கின் முதுகில் சிறப்புமிக்க மஹாதேவனும், அவனது மனைவியான உமையும் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(240)
உண்மையில் மஹாதேவன் முழுமையாக இருக்கும் நட்சத்திரத் தலைவனை {சந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவனது சக்தியில் பிறந்த நெருப்பானது, மேகங்களுக்கு மத்தியில் தோன்றும் மின்னல் கீற்றுகளின் பிரகாசத்துக்கு ஒப்பாக இருந்தது. உண்மையில் பளிச்சிடும் காந்தியால் அனைத்துப் புறங்களையும் நிறைத்தபடி ஆயிரம் சூரியர்கள் எழுந்ததைப் போலத் தெரிந்தது. அந்தப் பரமனின் சக்தியானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தது.(241,242) திசைகள் அனைத்தும் அந்தச் சக்தியால் நிறைந்திருந்ததால் என்னால் எந்தப் பக்கத்திலும் எதையும் காண முடியவில்லை. கவலையில் நிறைந்த நான் இஃது என்னவாக இருக்கும் என்று மீண்டும் சிந்தித்தேன்.(243) எனினும், அந்தச் சக்தி நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை, அந்தத் தேவதேவன் மாயையின் மூலம் திசைகள் தெளிவடைந்தன.(244) அதன்பிறகே நான் காளையின் முதுகில் அருளப்பட்டவனாக, ஏற்புடைய தோற்றத்தில், புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்த சிறப்புமிக்க ஸ்தாணு அல்லது மஹேஸ்வரனைக் கண்டேன்.(245) அந்தப் பெருந்தtவன் களங்கமற்ற குணங்களைக் கொண்ட பார்வதியுடன் இருந்தான்.
உண்மையில், எதிலும் பற்று கொள்ளாதவனும், அனைத்து வகைச் சக்திகளின் கொள்ளிடமாக இருப்பவனும், நீலமிடறு கொண்டவனுமான உயர் ஆன்ம ஸ்தாணுவை, பதினெட்டுக் கரங்களுடன், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனாகக் கண்டேன்.(246) அவன் வெள்ளுடைகள் உடுத்தி, வெண் மாலைகள் சூடி, மேனியில் வெண்பூச்சுப் பூசியிருந்தான். அண்டத்தில் தடுக்கப்படமுடியாததான அவனது கொடியின் நிறம் வெள்ளையாக இருந்தது. அவனது மேனியைச் சுற்றியிருந்த நூலும் {பூணூலும்} வெள்ளையாகவே இருந்தது.(247) தனக்கு இணையான ஆற்றலைக் கொண்டவர்களும், ஆடுபவர்களும், பாடுபவர்களும், பல வகை இசைக்கருவிகளை இசைப்பவர்களுமான அவனது துணைவர்களால் {கணங்களால்} அவன் சூழப்பட்டிருந்தான்.(248) வெண்ணிறம் கொண்ட பிறைச் சந்திரன் அவனது மகுடமாக அமைந்து, அவனது நெற்றியில் கூதிர் கால ஆகாயத்தில் எழும் சந்திரனைப் போலத் தெரிந்தது. மூன்று சூரியர்களைப் போலத் தெரிந்த அவனது முக்கண்களின் விளைவால் அவன் காந்தியில் பளிச்சிடுபவனாகத் தெரிந்தான்.(249) அவனது உடலில் இருந்த தூய வெண்ணிற மாலை, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தூய வெண்ணிற தாமரைச் சரத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(250)
ஓ! கோவிந்தா, அளவிலா ஆற்றலைக் கொண்டவையும், பவனுக்குச் சொந்தமானவையும், அனைத்து வகைச் சக்திகளும் நிறைந்தவையுமான ஆயுதங்களை அவற்றின் உடல் கொண்ட வடிவங்களை நான் கண்டேன்.(251) அந்த உயர் ஆன்ம தேவன் வானவில்லுக்கு ஒப்பான நிறங்களைக் கொண்ட ஒரு வில்லை ஏந்தியிருந்தான். பிநாகம் என்ற பெயரில் கொண்டாடப்படும் அந்த வில் உண்மையில் ஒரு பெரும்பாம்பாகும்.(252) உண்மையில் ஏழு தலைகள், பேருடல், கூரிய பற்கள், கடும் நஞ்சு, பெருங்கழுத்து ஆகியவற்றைக் கொண்ட ஓர் ஆண் பாம்பே அதைச் சுற்றிலும் நாண்கயிறாகக் கட்டப்பட்டிருந்தது.(253) சூரியன் அல்லது யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போன்ற காந்தியுடன் ஒரு கணையும் அதில் இருந்தது. உண்மையில் அந்தக் கணையானது, வலிமைமிக்கதும், பயங்கரமானதும், தனக்கு இணையான மற்றொன்று இல்லாததும், விவரிக்க முடியாத சக்தியைக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய ஆயுதமுமான சிறப்புமிக்கப் பாசுபதமே ஆகும். பெரும் வடிவத்தில் இருந்த அஃது இடையறாமல் நெருப்புப் பொறிகளைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(254,255)
அஃது {ஒரே} ஒரு காலையும், பெரிய பற்களையும், ஓராயிரம் தலைகளையும், ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களையும், ஆயிரம் நாவுகளையும், ஆயிரம் கண்களையும் கொண்டிருந்தது. உண்மையில் அது தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(256) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உண்மையில் அவ்வாயுதம், பிரம்ம, நாராயண, ஐந்திர, ஆக்நேய, வருண ஆயுதங்களைவிட மேன்மையானதாகும். உண்மையில் அண்டத்தில் உள்ள வேறு எந்த ஆயுதத்தையும் தணிவடையச் செய்யவல்லதாக அஃது இருந்தது.(257) பழங்காலத்தில் சிறப்புமிக்க மஹாதேவன் அவ்வாயுதத்தைக் கொண்டே அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} ஒரு கணத்தில் எரித்து அழித்தான். ஓ! கோவிந்தா, மஹாதேவன் அந்த ஒரே கணையைக் கொண்டு மிக எளிமையாக அந்தச் சாதனையைச் செய்தான்.(258) மஹாதேவனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அவ்வாயுதம், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டத்தையும் கண்ணிமைக்க ஆவதில் பாதி நேரத்திலேயே நிச்சயம் எரித்து விடும் ஆற்றலைக் கொண்டதாகும்.(259) இந்த அண்டத்தில் பிரம்மன், விஷ்ணு மற்றும் தேவர்கள் உட்பட இந்த ஆயுதத்தால் கொல்லப்பட முடியாத வேறு எவனும் இல்லை. ஓ! ஐயா, சிறப்பானதும், அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதுமான அந்த ஆயுதத்தை நான் மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.(260)
பாசுபதத்திற்கு இணையானதும், ஒருவேளை மேன்மையானதும், பெரும் பலம் வாய்ந்ததுமான புதிர்மிக்க மற்றுமோராயுதம் இருக்கிறது. நான் அதையும் கண்டேன். சூலபாணியான மஹாதேவனின் சூலம் என்று அஃது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது.(261) அந்தச் சிறப்புமிக்கத் தேவனால் ஏவப்படும் அவ்வாயுதத்தால், மொத்த பூமியைப் பிளக்கவும், கடலின் நீரை வற்ற செய்யவும், மொத்த அண்டத்தையே அழிக்கவும் இயலும்.(262) பழங்காலத்தில் யுவனாஸ்வனின் மகனும், மூவுலகங்களையும் வென்றவனும், ஏகாதிபத்திய ஆட்சியைக் கொண்டவனும், அளவிலா ஆற்றலைக் கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, அவனது துருப்பினர் அனைவருடன் சேர்த்து {லவணாசுரன் கையில் இருந்த} அவ்வாயுதத்தாலேயே அழிக்கப்பட்டான்.(263) ஓ! கோவிந்தா, பெரும் வலிமையும், பெருஞ்சக்தியும் கொண்டு ஆற்றலில் சக்ரனுக்கு ஒப்பான அந்த மன்னன் {மாந்தாதா}, சிவனிடம் இருந்து பெற்ற சூலத்தின் துணையால் ராட்சசன் லவணனால் கொல்லப்பட்டான்.(264) அந்தச் சூலம் மிகக் கூரிய முனையைக் கொண்டதாகும். மிகப் பயங்கரமான அஃது அனைவருக்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தச் செய்வதாகும். நெற்றியில் மூன்று சுருக்கங்களுடன் சீற்றத்துடன் முழங்கிக் கொண்டு அது மஹாதேவனின் கரத்தில் இருப்பதைக் கண்டேன்.(265) ஓ! கிருஷ்ணா, அது புகையற்ற நெருப்புக்கோ, யுக முடிவில் எழும் சூரியனுக்கோ ஒப்பானதாகும். அந்தச் சூலத்தின் கைப்பிடி ஒரு பெரும்பாம்பினாலானதாகும். அஃது உண்மையில் விவரிக்கப்பட முடியாததாகும். கையில் பாசத்துடன் நிற்கும் யமனைப் போலவே அது தெரிந்தது.(266) ஓ! கோவிந்தா, நான் அவ்வாயுதத்தை மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.
ராமரிடம் {பரசுராமரிடம்} நிறைவடைந்த மஹாதேவனால், க்ஷத்திரியர்களை அழிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட கூர்முனை போர்க்கோடரியான மற்றொரு ஆயுதத்தையும் நான் கண்டேன். (பிருகு குலத்தின்) ராமர் {பரசுராமர்} இந்த ஆயுதத்தைக் கொண்டுதான் உலகமனைத்தின் ஆட்சியாளனாக இருந்த பெரும் கார்த்தவீரியனைப் பயங்கரமான போரில் கொன்றார்.(267,268) ஓ! கோவிந்தா, அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, அந்த ஆயுதத்தைக் கொண்டுதான் இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(269) சுடர்மிக்க முனையைக் கொண்டதும் மிகப் பயங்கரமானதுமான அந்தக் கோடரியானது, பாம்பால் அலங்கரிக்கப்பட்டிருந்த மஹாதேவனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், அது மஹாதேவனின் மேனியில் சுடர்மிக்க நெருப்பின் தழலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(270)
பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனிடம் நான் எண்ணற்ற வேறு தெய்வீக ஆயுதங்களையும் கண்டேன். இருப்பினும், ஓ! பாவமற்றவனே, முக்கியக் குணங்களைக் கொண்ட சிலவற்றின் பெயரை மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(271) அந்தப் பெருந்தேவனின் இடப்புறத்தில், மனோவேகம் கொண்ட அன்னப்பறவைகளுடன் பூட்டப்பட்டதும், பெரும்பாட்டனான பிரம்மன் அமர்ந்திருந்ததுமான தேர் நின்று கொண்டிருந்தது.(272) அதே புறத்திலேயே, சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதங்களைத் தரித்து, வினதையின் மகன் {கருடன்} மீது அமர்ந்திருக்கும் நாராயணனும் தென்பட்டான்.(273) உமா தேவியின் அருகில், பயங்கர ஈட்டி {வேல்} மற்றும் மணிகளைத் தரித்தவனும், மற்றொரு அக்னியைப் போலத் தெரிந்தவனுமான ஸ்கந்தன் {முருகன்} தன் மயில் மீது அமர்ந்திருந்தான்.(274) மஹாதேவனுக்கு முன்பாக, (ஆற்றலிலும், சக்தியிலும்) இரண்டாம் சங்கரனைப் போலத் தெரிந்த நந்தி தன் சூலத்துடன் நிற்பதையும் நான் கண்டேன்.(275)
சுயம்புவான மனுவின் தலைமையிலான முனிவர்கள், பிருகுவைத் தங்களில் முதல்வராகக் கொண்ட முனிவர்கள், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.(276) பூத கணங்கள், தெய்வீகத் தாய்மார்கள்[25] அனைவரும் மஹாதேவனைச் சூழ்ந்து நின்று மதிப்புடன் அவனை வழிபட்டனர்.(277) தேவர்கள் பல்வேறு பாடல்களைப் பாடுவதன் மூலம் மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். ரதந்தரம் {சாம வேத மந்திரம்} சொல்லும் பெரும்பாட்டன் பிரம்மனும் மஹாதேவனைத் துதித்தான்.(278) ஜியேஷ்ட சாமன் சொல்லும் நாராயணனும், பவனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தான். வேத மந்திரங்களில் முதன்மையான சதருத்ரீயத்தின் துணையுடன் சக்ரனும் {இந்திரனும்} துதித்துக் கொண்டிருந்தான்.(279) உண்மையில், பிரம்மன், நாராயணன், சக்ரன் {இந்திரன்} ஆகிய உயர் ஆன்ம தேவர்கள் மூவரும் மூன்று வேள்வி நெருப்புகளைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(280) கூதிர் கால மேகங்களுக்கிடையில் தன் ஒளிவட்டத்திற்கு மத்தியில் உள்ள சூரியனைப் போல அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(281) ஓ! கேசவா, நான் வானில் கூட்டங்கூட்டமாகப் பல சூரியர்களையும், சந்திரர்களையும் கண்டேன். பிறகு அண்டத்தின் பரகுருவான அனைத்தின் சிறப்புமிக்கத் தலைவனைத் துதித்தேன்”.(282)உபமன்யு தொடர்ந்தார் {உபமன்யு கிருஷ்ணனிடம் நான் தொடர்ந்தேன் என்று சொல்கிறார்}, “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! அனைத்துப் பொருட்களின் புகலிடமே, ஓ! மஹாதேவன் என்றழைக்கப்படுபவனே, உன்னை வணங்குகிறேன். சக்ரனின் ஆடை மற்றும் வடிவம் பூண்டு, சக்ரனின் வடிவை ஏற்றுச் சக்ரனாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(283) வஜ்ரதாரியாக, பழுப்பாக, சிவப்பாக இருக்கும் உன்னை வணங்குகிறேன். எப்போதும் பிநாகம் தரித்திருப்பவனும், சங்கு மற்றும் சூலத்தை ஏந்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(284) கருப்பு உடை உடுப்பவனும், கரியவனும், சுருள் முடி கொண்டவனும், கருப்பு மான் தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், தேய்பிறையின் எட்டாம் திதிக்கு {கிருஷ்ணபக்ஷஅஷ்டமிக்குத்} தலைமை தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(285)
வெள்ளை நிறம் கொண்டவனும், வெண்மை என்று அழைக்கப்படுபவனும், வெள்ளுடை உடுத்துபவனும், அங்கமெங்கும் வெண்சாம்பல் {திருநீறு} பூசியவனும், வெண்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(286) செந்நிறம் கொண்டவனும், செவ்வாடை உடுத்துபவனும், செங்கொடிகளுடன் கூடிய செம்பதாகைகள் கொண்டவனும், செம்மாலை சூடுபவனும், செஞ்சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(287) பழுப்பு {பொன்} நிறம் கொண்டவனும், பழுப்பு ஆடை உடுத்துபவனும், பழுப்புக் கொடிகளுடன் கூடிய பழுப்புப் பதாகைகள் கொண்டவனும், பழுப்பு மாலைகளைச் சூடுபவனும், பழுப்புச் சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.தலைக்கு மேலே அரசக்குடை கொண்டவனும், முதன்மையான மகுடத்தைச் சூடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(288) மனோ வேகம் கொண்டவனும், பெரும்பிரகாசம் கொண்டவனும், பாதிப் பாகத்தில் ஹாரம், தோள்வளை மற்றும் குண்டலம் அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(289) தேவர்களில் முதன்மையானவனும், முனிவர்களில் முதன்மையானவனும், இந்திரர்களில் முதன்மையானவனுமான உன்னை வணங்குகிறேன். பாதிப்பாகத்தில் தாமரை மாலை அணிந்தவனும், உடலில் பல தாமரைகளைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(290)
பாதி உடலில் சந்தனக் குழம்பு பூசப்பட்டவனும், பாதி உடலில் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், நறுமணப்பொருட்களால் பூசப்பட்டவனுமான உன்னை வணங்குகிறேன்[26].(291) சூரியனின் நிறத்தைக் கொண்டவனும், சூரியனையே போன்றவனும், சூரியன் போன்ற முகத்தைக் கொண்டவனும், சூரியனைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(292) சோமனாக இருப்பவனும், சோமனைப் போன்று மென்மையானவனும், சந்திர வட்டிலைத் தரிப்பவனும், சந்திரனின் குணத்தைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அழகிய பற்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(293) கருப்பு நிறம் கொண்டவனும், வெள்ளை நிறம் கொண்டவனும், பாதி மஞ்சள் பாதி வெள்ளையான வடிவம் கொண்டவனும், பாதி ஆண், பாதிப் பெண்ணாக இருக்கும் உடலைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(294) காளையை வாகனமாகக் கொண்டவனும், முதன்மையான யானையைச் செலுத்துபவனும், அரிதாக அடையப்படுபவனும், பிறரால் அணுக முடியாத இடங்களுக்குச் செல்ல வல்லவனுமான உன்னை வணங்குகிறேன்.(295)கணங்களால் புகழ் பாடப்படுபவனும், பல்வேறு கணங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், கணங்கள் நடக்கும் பாதையைப் பின்பற்றுபவனும், கணங்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதை நோன்பாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(296) வெண்மேக நிறம் கொண்டவனும், மாலைவேளை மேகங்களின் காந்தியைக் கொண்டவனும், பெயர்களால் விவரிக்கப்பட முடியாதவனும், (அண்டத்தில் வேறு எதனுடனும் ஒப்பிடப்பட முடியாத) சுய வடிவைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(297) செந்நிறத்தில் அழகிய மாலை சூடியிருப்பவனும், செவ்வாடை உடுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(298) தலையில் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மகுடம் கொண்டவனும், அரைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்டவனும், கிரீடத்தில் பல அழகிய ரத்தினங்களைச் சூடுபவனும், தலையில் எட்டு மலர்களைக்[27] கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(299) நெருப்பு வாயும், நெருப்புக் கண்களையும் கொண்டவனும், ஓராயிரம் சந்திரர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், நெருப்பின் வடிவே ஆனவனும், அழகனும், இனிமையானவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், புதிரானவனுமான உன்னை வணங்குகிறேன்.(300)ஆகாயத்தில் திரிபவனும், பசுக்கள் மேயும் புல்வெளிகளில் வசிப்பதை விரும்புபவனும், பூமியில் நடப்பவனும், பூமியாகவே இருப்பவனும், முடிவிலாதவனும், மங்கலம் மிகுந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(301) உடையற்றவனும் (அல்லது திசைகளை மட்டுமே ஆடையாகக் கொண்டவனும்), இருக்கும் ஒரு கணத்திலேயே ஒவ்வோர் இடத்தையும் மகிழ்ச்சிமிக்க இல்லமாக மாற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன். அண்டத்தையே இல்லமாகக் கொண்டவனும், ஞானத்தையும், இன்பத்தையும் ஆன்மாவாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(302) எப்போதும் கிரீடம் தரிப்பவனும், பெரிய தோள்வளையை அணிபவனும், கழுத்தைச் சுற்றும் மாலையாகப் பாம்பைக் கொண்டவனும், மேனியில் அழகிய ஆபரணங்கள் பலவற்றை அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(303) சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களைக் கொண்டவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனும், பாலினமற்றவனும், சாங்கியனும், யோகியுமான உன்னை வணங்குகிறேன்.(304) வேள்விகளில் வழிபடப்படும் தேவர்களின் அருளாக இருப்பவனும், அதர்வணமாக இருப்பவனும், அனைத்து வகை நோய் மற்றும் துன்பங்களைக் குறைப்பவனும், கவலைகள் யாவையும் அகற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(305)
மேகங்களைப் போல ஆழ முழங்குபவனும், பல்வேறு வகை மாயைகளைச் செய்பவனும், மண்ணுக்கும், அதில் விதைக்கப்படும் வித்துக்கும் தலைமை தாங்குபவனும், அனைத்தையும் படைத்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(306) தேவர்கள் அனைவரின் தலைவனும், அண்டத்தின் ஆசானும், காற்றின் வேகம் கொண்டவனும், காற்றின் வடிவே ஆனவனுமான உன்னை வணங்குகிறேன்.(307) பொன்மாலை அணிபவனும், மலைகளிலும், குன்றுகளிலும் விளையாடுபவனும், தேவர்களின் பகைவர் அனைவராலும் துதிக்கப்படுபவனும், கடும் வேகமும், சக்தியும் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(308) பெரும்பாட்டனான பிரம்மனின் தலைகளில் ஒன்றைத் துண்டித்தவனும், மஹிஷன் என்ற பெயர் கொண்ட அசுரனைக் கொன்றவனும், மூன்று வடிவங்களை ஏற்பவனும், அனைத்த வடிவங்களையும் தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(309) அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனும், (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், காம தேவனின் உடலை அழித்தவனும், தண்டக்கோலைத் தரிப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(310)
ஸ்கந்தனும், விசாகனும், பிராமணத் தண்டமும், பவனும், சர்வனும், அண்ட வடிவுமான உன்னை நான் வணங்குகிறேன்.(311) ஈசானனும், பகனை அழித்தவனும், அந்தகனைக் கொன்றவனும், அண்டமேயானவனும், மாயைகளைக் கொண்டவனும், புலப்படுபவனும், புலப்படாதவன் என இரண்டாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(312) உயிரினங்கள் அனைத்தின் கதியும், முதன்மையானவனும், அனைத்தின் இதயமும் நீயே. தேவர்கள் அனைவரிலும் பிரம்மன் நீயே, ருத்திரர்களில் சிவப்பும், நீலமும் {நீல லோகிதன்} நீயே.(313) அனைத்து உயிரினங்கள் ஆன்மா நீயே, சாங்கிய தத்துவத்தில் புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே. புனிதப் பொருட்கள் அனைத்திலும் ரிஷபம் {சிறந்தவன்} நீயே. மங்கலம் என்றும் அங்கங்கள் இல்லாதவன் (பகுபடாதவன்) என்றும் யோகியரால் அழைக்கப்படுபவன் நீயே.(314) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} நோற்பவர்களில் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} நீயே, அண்டத் தலைவர்களில் பெருந்தலைவன் நீயே. யக்ஷர்கள் அனைவரிலும் குபேரன் நீயே, வேள்விகள் அனைத்திலும் விஷ்ணு {முதன்மையான வேள்வி} நீயே.(315)
மலைகளில் மேரு நீயே, ஆகாயத்து ஒளிக்கோள்களில் சந்திரன் நீயே, முனிவர்களில் வசிஷ்டர் நீயே, கோள்களில் சூரியன் நீயே.(316) காட்டு விலங்குகளில் சிங்கம் நீயே, வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் அனைத்து மக்களாலும் வழிபடப்படும் காளை நீயே.(317) ஆதித்தியர்களில் விஷ்ணு (உபேந்திரன்) நீயே, வசுகளில் பாவகன் நீயே, பறவைகளில் வினதையின் மகன் (கருடன்) நீயே, பாம்புகளில் அனந்தன் (சேஷன்) நீயே.(318) வேதங்களில் சாமங்கள் நீயே, யஜுஸ்களில் சதருத்ரீயம் நீயே, யோகிகளில் சனத்குமாரர் நீயே, சாங்கியர்களில் கபிலர் நீயே.(319) மருத்துகளில் சக்ரன் {இந்திரன்} நீயே, பித்ருக்களில் தேவராதன் நீயே, (படைக்கப்பட்டவை வசிப்பதற்கான) உலகங்கள் அனைத்திலும் பிரம்மலோகம் நீயே, உயிரினங்கள் அடையும் கதிகள் அனைத்திலும் விடுதலை {முக்தி}, அல்லது மோக்ஷம் நீயே.(320) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, மலைகளில் இமய மலை நீயே, வகைகள் {வர்ணங்கள்} அனைத்திலும் பிராமணன் நீயே, கல்விமான்களான பிராமணர்கள் அனைவரிலும் தீக்ஷை {யாகதீக்ஷை} பெற்றவன் நீயே.(321)
உலகில் உள்ள பொருட்கள் அனைத்திலும் சூரியன் நீயே, அனைத்தையும் அழிக்கும் காலன் நீயே. அண்டத்தில் உள்ள மேன்மையான சக்தி மற்றும் திறன்கள் அனைத்தும் நீயே.(322) உயர்ந்த பலத்தைக் கொண்டவன் நீயே. இதுவே என் நிச்சயமான தீர்மானமாகும். ஓ! பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, ஓ! வழிபடுபவர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவனே, உன்னை வணங்குகிறேன்.(323) ஓ! யோகியரின் தலைவா, உன்னை வணங்குகிறேன். ஓ! அண்டத்தின் மூலக் காரணனே, உனக்குத் தலைவணங்குகிறேன். உன்னை வழிபடுபவனும், ஏழையும், ஆதரவற்றவனுமான என்னிடம் நிறைவடைவாயாக.(324) ஓ! நித்திய தலைவா, உன்னை வழிபடுபவனும், மிகப் பலவீனனும், வறியவனுமான இவனுக்கு {எனக்குப்} புகலிடமாவாயாக. ஓ! பரமனே, நான் செய்த பிழைகளை மன்னித்து, உன்னை அர்ப்பணிப்புடன் வழிபடுபவன் என்ற அடிப்படையில் என்னிடம் கருணை கொள்வதே உனக்குத் தகும்.(325) ஓ! தேவர்கள் அனைவருக்கும் தலைவா, நீ எனக்கு முன் தோன்றிய தோற்றத்தின் விளைவால் நான் மயக்கமடைந்தேன். {எனவே}, ஓ! மஹேஸ்வரா, நான் உன் பாதங்களைக் கழுவ நீர், அல்லது அர்க்கியம் கொடுக்க வில்லை” {என்று சொல்லி சிவனை வணங்கினேன்}.(326)
கிருஷ்ணனின் சிவத் துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஊ-சிவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற உபமன்யு; சிவனை நோக்கித் தவமிருந்த கிருஷ்ணன்; கிருஷ்ணன் சொன்ன சிவத் துதி…
{உபமன்யு {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தார்}, ஈசானனின் புகழை இவ்வாறு பாடிவிட்டு, பெரும் அர்ப்பணிப்புடன் அவனது காலைக் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியப் பொருட்களும் கொடுத்து, அவன் இடப்போகும் எந்த ஆணைக்கும் கீழ்ப்படியத் தயாராக என் கரங்களைக் கூப்பி நின்றேன்.(327) ஓ! ஐயா, அப்போது, தெய்வீக நறுமணத்தைக் கொண்டதும், குளிர்ந்த நீர் படர்ந்ததுமான மங்கல மலர்மாரி என் தலையில் பொழிந்தது.(328) தேவ இசைக்கலைஞர்கள் தங்கள் பேரிகைகளை இசைக்கத் தொடங்கினர். ஏற்புடைய, நறுமணமிக்க இனிய தென்றல் வீசத் தொடங்கி என்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(329) அப்போது காளையைத் தன் சின்னமாகக் கொண்டவனும், மனைவியின் துணையுடன் கூடியவனுமான மஹாதேவன் என்னைப் பெரும் மகிழ்ச்சியில் நிறைக்கும் வகையில் தேவர்களிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்,(330) “தேவர்களே உயர் ஆன்ம உபமன்யுவின் அர்ப்பணிப்பைப் பாருங்கள். உண்மையில் அந்த அர்ப்பணிப்பு மாறாமல் நீடித்திருப்பதும், நிலையானதும், பெரியதும், முற்றிலும் மாற்றமில்லாததுமாகும்” என்றான்.(331)
சூலபாணியான அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஓ!கிருஷ்ணா, அவனுக்குத் தலைவணங்கிய தேவர்கள் மதிப்புடன் தங்கள் கரங்களைக் குவித்துக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்,(332) “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் ஆசானே, ஓ!அனைவருக்கும் தலைவா, இந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடையட்டும்” என்றனர்.(333)
பெரும்பாட்டனான பிரம்மனுடன் கூடிய தேவர்கள் அனைவராலும் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஈசன் மற்றும் சங்கரன் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படும் சர்வன், புன்னகைத்தவாறே என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(334) அந்தச் சிறப்புமிக்கச் சங்கரன் {உபமன்யுவிடம்}, “ஓ! அன்புக்குரிய உபமன்யு, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். ஓ! முனிவர்களில் முதன்மையானவனே, என்னைப் பார். ஓ! கல்விமானான முனிவனே, என்னிடம் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்ட நீ என்னால் சோதிக்கப்பட்டாய்.(335) சிவனிடம் நீ கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் நான் உன்னிடம் மிக உயர்வான நிறைவை அடைந்தேன். எனவே, உன் இதயத்தில் நீ கொண்டுள்ள எந்த விருப்பமும் கனியும் தன்மையை நான் இன்று உனக்கு அளிக்கப் போகிறேன்” என்றான்.(336)
பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சியால் என் கண்கள் கண்ணீரால் குளமானது, (அதே உணர்ச்சியின் மூலம்) எனக்கு மயிர்ச்சிலிர்ப்பும் ஏற்பட்டது.(337) மண்டியிட்டு மீண்டும் மீண்டும் அவனை வணங்கிய நான், மகிழ்ச்சியால் அடைபட்ட குரலுடன், அவனிடம்,(338) “ஓ! சிறப்புமிக்கத் தேவா, நான் இவ்வளவு நாளும் இறந்திருந்ததாகவும், இன்றுதான் பிறந்ததாகவும் தெரிகிறது, தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானின் முன்பு இப்போது இருப்பதால் இன்றுதான் நான் என் பிறவிப்பயனை அடைந்தேன்.(339) தேவர்களும் கூட இதயப்பூர்வமான வழிபாட்டைச் செலுத்தாமல் காண முடியாத அளவிலா ஆற்றல் கொண்டவனை நான் என் கண்களால் காண்பதால் என்னைவிடப் பெருமைமிக்கவன் எவன் இருக்க முடியும்?(340) தத்துவங்கள் அனைத்திலும் உயர்ந்தது, நித்தியமானது, அனைத்திலிருந்து வேறுபட்டது, பிறப்பில்லாதது, அறிவே ஆனது, அழிவற்றது என்று கல்வியும் ஞானமும் கொண்டோர் எதைச் சொல்வார்களோ, ஓ! பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, அது தத்துவங்கள் அனைத்தின் தொடக்கமாக இருப்பவனும், அழிவற்றவனும், மாற்றமற்றவனும், தத்துவங்கள் அனைத்தையும் ஆளும் விதிகளை அறிந்தவனும், புருஷர்களில் முதன்மையானவனும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனுமான உன்னுடன் அடையாளங்காணப்படுகிறது.(341,342)
வலப்புறத்தில் இருந்து பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தவனும், அனைத்துப் பொருட்களைப் படைத்தவனும் நீயே. படைப்பைப் பாதுகாக்க இடப்புறத்தில் இருந்து விஷ்ணுவைப் படைத்தவன் நீயே.(343) யுக முடிவு வந்த போதும், படைப்பு மீண்டும் அழிக்கப்படும்போதும் ருத்திரனைப் படைக்கும் பலமிக்கத் தலைவன் நீயே. உன்னிலிருந்து எழுந்த அந்த ருத்திரன், பெருஞ்சக்தி கொண்ட காலன் மற்றும் (பெருங்கடலும் கொள்ள முடியாத அளவு நீரைக் கொண்ட) சம்வர்த்தக மேகம் மற்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவங்களை ஏற்று அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட படைப்பை அழித்தான். உண்மையில் அண்ட அழிவுக்கான காலம் நேரும்போது, அண்டத்தை விழுங்கத் தயாராக ருத்திரன் நிற்கிறான்.(344,345) அசைவன மற்றும் அசையாதன என அனைத்தையும் கொண்ட அண்டத்தின் மூலப் படைப்பாளனான அந்த மஹாதேவன் நீயே. கல்பத்தின் முடிவில் அனைத்துப் பொருட்களையும் உன்னுள் ஈர்த்துக் கொள்பவன் நீயே.(346) அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவும், அனைத்துப் பொருட்களைப் படைத்தவனையும் படைத்தவன் நீயே. தேவர்களாலும் காணப்பட இயலாதவனான நீ அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நீடித்து நிறைந்திருக்கிறாய்.(347) ஓ! தலைவா, என்னிடம் நீ நிறைவடைந்திருந்தால், நீ எனக்கு வரங்களை அளிக்க விரும்பினால், ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, உன்னிடம் நான் கொண்டுள்ள இந்த அர்ப்பணிப்பு எப்போதும் மாறாது நீடித்திருக்கட்டும்.(348) ஓ! தேவர்களில் சிறந்தவனே, உன் அருளின் மூலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் ஞானத்தை நான் அடைய வேண்டுகிறேன்.(349) மேலும் நான் என் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் அனைவருடன் எப்போதும் பால் கலந்த உணவை உண்ண வேண்டும். சிறப்புமிக்கவனான நீ எப்போதும் எங்கள் ஆசிரமத்தில் இருப்பாயாக” என்று கேட்டேன்.(350)
இவ்வாறு என்னால் சொல்லப்பட்டதும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆசானும், அண்டம் அனைத்தினாலும் வழிபடப்படுபவனும், சிறப்புமிக்க மஹேஸ்வரனுமான சிவன், இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னான்.(351) அந்தச் சிறப்புமிக்கத் தேவன், “துன்ப துயரங்கள் அனைத்தில் இருந்தும் நீ விடுபட்டிருப்பாயாக, முதுமைக்கும், மரணத்திற்கும் மேலானவனாக இருப்பாயாக. பெரும் சக்தியுடனும், ஆன்ம அறிவுடன் கூடியவனாகப் புகழடைவாயாக. என் அருளின் மூலம் முனிவர்கள் எப்போதும் உன்னை நாடி வருவார்கள். உன் நடத்தை நல்லதாகவும், அறம் நிறைந்ததாகவும் இருக்கட்டும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தும் உனதாகட்டும், அண்ட அறிவைப் பெற்று, ஏற்புடைய இனிய தோற்றத்துடன் இருப்பாயாக.(353) சிதைவற்ற இளமை உனதாகட்டும், நெருப்பைப் போன்ற சக்தி உனதாகட்டும். மேலும், உனக்கு மிக ஏற்புடையதாக இருக்கும் பாற்கடலானது, நீ விரும்பிய இடத்தில் (உனது மற்றும் உன் நண்பர்களின் உணவுத் தேவைக்காகத்) தோன்றும். நீயும் உன் நண்பர்களும், தேவ அமுதம் கலந்த பாலால் தயாரிக்கப்பட்ட உணவை எப்போதும் அடைவீர்கள்.(354,355) ஒரு கல்பம் நிறைவடைந்ததும் நீ என் தோழமையை அடைவாய். உனது குடும்பம், குலம் மற்றும் உற்றார் உறவினர் வற்றாதவர்களாக இருப்பார்கள்.(356) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, என்னிடம் நீ கொண்ட அர்ப்பணிப்பு நித்தியமானதாக இருக்கும். ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நான் எப்போதும் உன் ஆசிரமத்தில் இருப்பேன்.(357) ஓ! மகனே, நீ விரும்பிய இடத்தில் வாழ்வாயாக, எந்தக் கவலையும் உனதாக வேண்டாம். ஓ! கல்விமானான பிராமணா, நீ நினைத்த மாத்திரத்தில் நான் உன் முன் தோன்றுவேன்” என்றான் {சிவன்}.(358)
இவ்வார்த்தைகளைச் சொல்லி இந்த வரங்களை அளித்தவனும், கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடியவனுமான அந்தச் சிறப்புமிக்க ஈசானன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(359) ஓ! கிருஷ்ணா, கடுந்தவங்களின் துணையுடன் இவ்வாறே நான் அந்தத் தேவர்களின் தேவனைக் கண்டேன். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அந்தப் பெருந்தேவனால் சொல்லப்பட்ட அனைத்தையும் நான் அடைந்தேன்.(360) ஓ!கிருஷ்ணா, இங்கே வசிக்கும் சித்தர்கள், முனிவர்கள், வித்யாதரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரை உன் கண்களின் முன்பு பார்.(361) அனைத்து வகை மலர்களையும், கனிகளையும் விளைவிக்கும் இந்த மரங்களையும், செடி கொடிகளையும் பார். சுற்றிலும் இனிய நறுமணத்தைப் பொழிந்த படியே அழகிய இலைகளுடன் கூடிய அவை அனைத்துக் காலங்களுக்கும் உரிய மலர்களைச் சுமந்து கொண்டிருப்பதைப் பார்.(362) ஓ!வலிய கரங்களைக் கொண்டவனே, உயர்ந்த தலைவனும், உயர் ஆன்ம தேவனுமான அந்தத் தேவர்களின் தேவனுடைய அருளின் மூலம் இவை அனைத்தும் தெய்வீக இயல்பைக் கொண்டிருக்கின்றன” என்றார் உபமன்யு”.(363)
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அவரது வார்த்தைகளைக் கேட்டும், அவன் சொன்ன அனைத்தையும் என் கண்களாலேயே கண்டும் நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். பிறகு நான் பெருந்தவசியான அந்த உபமன்யுவிடம்,(364) “ஓ! கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவரே, தேவர்களின் தேவனே வந்து மதித்த ஆசிரமத்தைக் கொண்ட அறவோன், பெரும்புகழுக்குத் தகுந்து உம்மைத் தவிர வேறு எவன் இருக்கிறான்?(365) ஓ! தவசிகளின் தலைவரே, பலமிக்கவனும், பெரும் சங்கரனுமான அந்தச் சிவன் எனக்கும் காட்சி கொடுத்து எனக்கு நன்மையை அருள்வானா?” என்று கேட்டேன்.(366)
உபமன்யு {கிருஷ்ணனிடம்}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, ஓ! பாவமற்றவனே, நான் கண்டது போலவே நீயும் மஹாதேவனின் காட்சியை வெகு விரைவில் பெறுவாய்.(367) ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவனே, ஓ! மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, இன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து நீ மஹாதேவனின் காட்சியைப் பெறுவாய் என என் ஆன்மப் பார்வையில் நான் காண்கிறேன்.(368) ஓ! யதுக்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, மஹேஸ்வரனிடமிருந்தும், அவனது மனைவியிடமிருந்தும் நீ இருபத்துநான்கு வரங்களைப் பெறுவாய். எது உண்மை என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.(369) உயர்ந்த ஞானத்தைக் கொண்ட அந்தப் பெருந்தேவனுடைய அருளின் மூலம், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை நான் அறிவேன்.(370) ஆயிரக்கணக்காக இருக்கும் இம்முனிவர்களுக்கும், எண்ணற்ற வேறு பிறருக்கும் அந்தப் பெரும் ஹரன் நன்மையைச் செய்திருக்கிறான். ஓ! மாதவா, அந்தப் பெருந்தேவன் உனக்கு ஏன் நன்மையைச் செய்ய மாட்டான். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், கருணையும் நம்பிக்கையும் நிறைந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனைத் தேவர்கள் சந்திப்பது மெச்சத்தகுந்ததே. நான் சில மந்திரங்களை உனக்குச் சொல்கிறேன். நீ அவற்றைத் தொடர்ந்து சொல்வாயாக. இதன் மூலம் நீ நிச்சயம் சங்கரனைக் காண்பாய்” என்றார் {உபமன்யு}” {என்றான் கிருஷ்ணன்}.(372)
அருள்நிறைந்த விஷ்ணு {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “பிறகு நான் அவரிடம், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, ஓ! பெருந்தவசியே, திதியின் மகன்களைக் கூட்டங்கூட்டமாகக் கலங்கடித்த அந்தத் தேவர்கள் தலைவனை உமது அருளின் மூலம் நான் நிச்சயம் காண்பேன்.(373) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, மஹாதேவனைக் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த எட்டு நாட்களும் ஒரு மணி நேரத்தைப் போலக் கடந்து சென்றது.(374) எட்டாம் நாளில் நான் சடங்குகளின்படி அந்தப் பிராமணரின் கரங்களில் தீக்ஷையைப் பெற்றேன். நான் தண்டத்தை அவரது கரங்களில் இருந்து பெற்றேன். பரிந்துரைக்கப்பட்டபடி தலையையும் மழித்துக் கொண்டேன். என் கரங்களில் ஓரளவுக்குக் குசப் புற்களை எடுத்துக் கொண்டேன். மரவுரியை உடுத்திக் கொண்டேன். என் மேனியெங்கும் நெய் பூசிக் கொண்டேன். முஞ்சப் புற்களை நான் என் மடியைச் சுற்றிக் கட்டிக் கொண்டேன்.(375) ஒரு மாத காலம் நான் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். இரண்டாம் மாதத்தில் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் மாதங்களைக் காற்றை மட்டுமே உண்டு கடத்தினேன்.(376) அவ்வளவு காலமும் நான் கரங்களை உயர்த்தியபடி ஒற்றைக் காலில் நின்று கொண்டு, உறக்கத்தைத் துறந்திருந்தேன். ஓ! பாரதரே, பிறகு ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்துடன் தெரிந்த ஒரு ஒளியை நான் ஆகாயத்தில் கண்டேன்.(377)
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்தப் பிரகாசத்துக்கு மத்தியில் நீலமலைத் திரளைப் போலத் தெரிவதும், நாரைவரிசையால் அலங்கரிக்கப்பட்டதும், மகத்தான் வானவில்களால் துலங்கியதும், மின்னல் கீற்றுகள் மற்றும் கண்களுடன் கூடிய இடி நெருப்புடன் கூடியதுமான ஒரு மேகத்தைக் கண்டேன்.(378) அந்த மேகத்திற்கு மத்தியில் பலமிக்க மஹாதேவன் பெரும் பிரகாசத்துடனும், தன் மனைவியான உமையின் துணையுடனும் இருந்தான். உண்மையில் அந்தப் பெருந்தேவன், தவங்கள், சக்தி, அழகு, பிரகாசம் ஆகியவற்றுடன் தன் அருளில் தன் அன்புக்குரிய மனைவியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(379) மனைவியுடன் கூடிய அந்தப் பலமிக்க மஹேஸ்வரன் அந்த மேகத்தின் மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். மேக அடுக்குகளுக்கு மத்தியல் சூரியனும், சந்திரனும் இருப்பதைப் போல அந்தக் காட்சி தோன்றியது.(380) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தேவர்கள் அனைவரின் புகலிடமும், துயரங்கள் அனைத்தையும் விலக்குபவனுமான ஹரனைக் கண்டதால் என் உடலில் மயிர் சிலிர்ப்பு ஏற்பட்டு, என் கண்கள் ஆச்சரியத்தால் விரிவடைந்தன.(381)
மஹாதேவன் தன் தலையில் ஒரு கிரீடம் சூடியிருந்தான். அவன் சூலம் தரித்திருந்தான். புலித்தோல் உடுத்தி, தலையில் சடாமுடி தரித்து, தன் கரங்களில் ஒன்றில் (சந்நியாசிக்குரிய) தண்டத்தைக் கொண்டிருந்தான். மேலும் அவன் பிநாகத்தையும், வஜ்ரத்தையும் கொண்டிருந்தான். அவனது பற்கள் கூர்முனை கொண்டவையாக இருந்தன. தோளில் சிறந்த தோள்வளை பூட்டியிருந்தான். அவனது புனித நூலாக {பூணூலாக} ஒரு பாம்பு அமைந்திருந்தது.(382) பாதம் வரை தொங்குவதும், பலவண்ண மலர்களாலானதுமான சிறந்த மாலை அவன் மார்பில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், கூதிர் கால மாலைப் பொழுதில் மிகப் பிரகாசமாகத் தெரியும் சந்திரனைப் போல நான் அவனைக் கண்டேன்.(383) பல்வேறு வகைப் பூத கணங்களால் சூழப்பட்டிருந்த அவன், பளிச்சென்ற பிரகாசத்துடன் பார்க்கக் கடினமான கூதிர் காலச் சூரியனைப் போலத் தெரிந்தான்.(384) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவும், வெண்செயல்களும் கொண்டவனும், காளையில் அமர்ந்திருந்தவனுமான அந்தத் தேவனைச் சுற்றிலும் ஆயிரத்துநூறு {1100} ருத்திரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அவனைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தனர்.(385)
ஆதித்தியர்கள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் சாத்திரங்களில் உள்ள பாடல்களைச் சொல்லி அந்த அண்டத் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(386) அதிதியின் மகன்களான இந்திரன் மற்றும் அவனது தம்பியான உபேந்திரன் {விஷ்ணு} ஆகிய இருவரும், பெரும்பாட்டன் பிரம்மனும் என இவர்கள் அனைவரும் பவனின் முன்னிலையில் ரதந்தரச் சாமத்தைப் பாடினார்கள்.(387) எண்ணற்ற யோக ஆசான்கள், பிள்ளைகளுடன் கூடிய முனிவர்கள், தெய்வீக முனிவர்கள், பூமாதேவி, (பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடைப்பட்ட) வானம், நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, பருவங்கள், இரவு, வருடங்கள், க்ஷணங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள், தெய்வீக அறிவியல்கள், அறிவின் கிளைகள், வாய்மையை அறிந்தவர்கள் ஆகியோர் பெருந்தகப்பனும் யோகத்தை அளித்தவனுமான அந்த உயர்ந்த ஆசானுக்குத் தலை வணங்கினர்.(388-390)
சனத்குமாரர், வேதங்கள், வரலாறுகள், மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது,(391) மனுக்கள் எழுவர், சோமன், அதர்வணங்கள், பிருஹஸ்பதி, பிருகு, தக்ஷன், காசியபர், வசிஷ்டர், காசியர்,(392) ஓ! யுதிஷ்டிரரே, சந்தங்கள், தீக்ஷை, வேள்விகள், தக்ஷிணை, வேள்வி நெருப்புகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஹவிஸ் (தெளிந்த நெய்) வேள்விக்குத் தேவையான பொருட்கள் என உடல்கொண்ட வடிவங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தோர் அனைவரையும் நான் கண்டேன்.(393) லோகபாலர்கள், ஆறுகள், பாம்புகள், மலைகள், தெய்வீகத் தாய்மார், தேவர்களின் மனைவிமார் மற்றும் மகள்கள்,(394) ஆயிரமாயிரமாக, கோடிக்கணக்கில் இருந்த தவசிகள் ஆகியோர் அமைதியான ஆன்மா கொண்ட அந்தப் பலமிக்கத் தலைவனுக்குத் தலைவணங்குவதை நான் கண்டேன். மலைகள், பெருங்கடல்கள், திசைகள் ஆகியனவும் அதையே செய்தன, கந்தர்வர்கள், இசையில் திறம்பெற்ற அப்ரசரஸ்கள் ஆகியோர்,(395) அற்புதம் நிறைந்தவனான பவனின் புகழை தெய்வீகத் தொனியில் பாடிக் கொண்டிருந்தனர். வித்யாதரர்கள், தானவர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள்,(396) அசைவன, அசையாதன எனப் படைக்கப்பட்டவை அனைத்தும் எண்ணத்ததாலும், சொல்லாலும், செயலாலும் அந்தப் பலமிக்கத் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். தேவர்கள் அனைவரின் தலைவனான சர்வன் என் முன் தோன்றி, மகிமை அனைத்துடன் அமர்ந்திருந்தான்.(397) என் கண் முன்னே மகிமையுடன் அமர்ந்திருக்கும் ஈசானனைக் கண்டு, பெரும்பாட்டன் மற்றும் சக்ரனுடன் கூடிய மொத்த அண்டமும் என்னைப் பார்த்தது.(398) எனினும், மஹாதேவனைப் பார்க்கும் சக்தி எனக்கிருக்கவில்லை.
அப்போது அந்தப் பெருந்தேவன் என்னிடம், “ஓ! கிருஷ்ணா, பார், என்னிடம் பேசுவாயாக.(399) நீ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முறை என்னைத் துதித்திருக்கிறாய். மூவுலகங்களிலும் எனக்கு உன்னைவிட அன்புக்குரியவன் வேறு எவனும் கிடையாது” என்றான்.(400)
நான் அவனுக்குத் தலைவணங்கியதும், அவனது மனைவியான உமாதேவி என்னிடம் நிறைவடைந்தாள். பிறகு, பெரும்பாட்டனான பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படும் அந்தப் பெருந்தேவனிடம் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்”.(401)
அருள் நிறைந்த விஷ்ணு சொன்னான், “நான் மஹாதேவனிடம், ஓ! அனைத்துப் பொருட்களின் நித்திய மூலமா உன்னை வணங்குகிறேன். வேதங்களின் தலைவன் என்று முனிவர்கள் உன்னைச் சொல்கிறார்கள். தவம் என்றும், சத்வம் என்றும், ரஜஸ் என்றும், தமஸ் என்றும், வாய்மை என்றும் அறவோர் உன்னைச் சொல்கிறார்கள்.(402) பிரம்மன் நீயே, ருத்திரன் நீயே, வருணன் நீயே, அக்னி நீயே, மனு நீயே, பவன் நீயே, தாத்ரி நீயே, தாஷ்டிரி நீயே, விதாத்ரி நீயே, அனைத்துப் பொருட்களின் பலமிக்க ஆசான் நீயே, எங்கும் இருப்பவன் நீயே.(403) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் உன்னில் இருந்தே எழுந்தன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டன.(404) புலன்கள், மனம், உயிர் மூச்சுகள் {வாயுக்கள்}, ஏழு வேள்வி நெருப்புகள், நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மாவையே புகலிடமாகக் கொண்டோர், துதிக்கப்படுபவர்களும், துதிகளுக்குத் தகுந்தவர்களுமான தேவர்கள் அனைவரையும்விட மேன்மையானவன் என்று முனிவர்கள் உன்னைச் சொல்கிறார்கள்.(405)
ஓ! சிறப்புமிக்கவனே, வேதங்களும், வேள்விகளும், சோமன், தக்ஷிணை, பாவகன், ஹவிஸ் மற்றும் வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நீயே.(406) வேள்வியால் பெறும் தகுதி {புண்ணியம்}, பிறர் கொடுக்கும் கொடைகள், வேத கல்வி, நோன்புகள், கட்டுப்பாடுடையோரின் ஒழுக்க நெறிகள், பணிவு, புகழ், செழிப்பு, காந்தி, மனநிறைவு, வெற்றி ஆகியன உன்னிடம் வழிநடத்திச் செல்லவே நீடித்திருக்கின்றன.(407) ஓ!சிறப்புமிக்கவனே, ஆசை, கோபம், அச்சம், காமம், செருக்கு, மயக்கம், வன்மம், துன்பம், நோய்கள் ஆகியன உனது பிள்ளைகளே.(408) உயிரினங்கள் செய்யும் செயல்களும் நீயே, அந்தச் செயல்களால் விளையும் இன்பதுன்பங்களும் நீயே, இன்பதுன்பமற்ற நிலைகளும் நீயே, ஆசையின் அழிவில்லாத வித்தான அறியாமை நீயே, மனத்தின் உயர்ந்த மூலம் நீயே, பலம் நீயே, நிலைபேறும் நீயும்.(409) வெளிப்படாதவன் நீயே, பவனன் நீயே, புலப்படாதவன் நீயே, ஆயிரங்கதிர் சூரியன் நீயே, பிரகாசமான சித் நீயே, தத்துவங்கள் அனைத்திலும் முதல் தத்துவம் நீயே, உயிரின் புகலிடம் நீயே.(410)
மஹத், ஆன்மா, புத்தி, பிரம்மன், அண்டம், சம்பு, சுயம்பு, ஆகிய சொற்களின் மூலமும், (வேதங்களில்) அடுத்தடுத்து தோன்றும் இதுபோன்ற பிற சொல்களின் மூலமும், மஹத்துடனும், ஆன்மாவுடனும் உனது இயல்பு (வேதங்களை அறிந்த மனிதர்களால்) அடையாளம் காணப்படுகிறது. உண்மையில் இவையாவும் நீயெனக் கருதியே கல்விமானான ஒரு பிராமணன், உலகத்தின் வேராக இருக்கும் அறியாமையை வெல்கிறான்.(411,412) உயிரினங்கள் அனைத்தின் இதயம் நீயே, க்ஷேத்ரக்ஞன் என்று முனிவர்களால் துதிக்கப்படுபவன் நீயே. உன் கரங்களும் பாதங்களும் அனைத்து இடங்களிலும் நீண்டிருக்கின்றன, உன் கண்களும், தலையும், முகமும் எங்கும் இருக்கின்றன. அண்டத்தில் எங்கும் உள்ளதைக் கேட்பவன் நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே.(413) சூரியனின் விளைவால் எழும் நிமிஷங்கள் மற்றும் காலத்தின் வேறு பிரிவுகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கனியாக இருப்பதும் நீயே.(414) (உயர்ந்த சித்தின்) மூலப் பிரகாசம் நீயே. புருஷன் நீயே, அனைத்துப் பொருட்களில் வசிப்பவன் நீயே. வெற்றியின் யோக குணங்களான நுட்பம், திரள், கனி, மேன்மை, பிரகாசம் மற்றும் மாற்றமில்லாமை ஆகியவை நீயே.(415)
புத்தி, நுண்ணறிவு, மற்றும் உலகங்கள் அனைத்தும் உன்னைச் சார்ந்தே இருக்கின்றன. தியானத்தில் அர்ப்பணிப்பு மிக்கவர்களும், யோகத்தில் எப்போதும் ஈடுபடுபவர்களும் வாய்மையில் அர்ப்பணிப்பும் உறுதியும் கொண்டவர்களும், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களும் உன்னையே நாடுகிறார்கள், உன்னைச் சார்ந்திருக்கிறார்கள்.(416) மாற்றமில்லாதவனாக, அல்லது அனைத்து இதயங்களிலும் வசிப்பவனாக, அல்லது உயர்ந்த பலம் கொண்டவனாக, அல்லது ஆதி புருஷனாக, அல்லது தூய ஞானமாக, அல்லது பிரகாசமிக்கச் சித்தாக, அல்லது நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக உன்னை அறிபவர்கள் நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்களே. உண்மையில் அத்தகைய மனிதர்கள் புத்தியைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள்.(417) (மஹத், அகங்காரம், தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் நுட்பமான ஐம்பூதங்கள் ஆகியவை அடங்கிய) ஏழு நுட்பமான காரியங்கள், (அனைத்துமறிந்த நிலை, நிறைவு அல்லது முழுமை, தொடக்கமற்ற ஞானம், சார்பில்லா நிலை {சுதந்திரம்}, எக்காலத்திலும் பழுதில்லாததும், முடிவற்றதுமான பலம் ஆகிய) ஆறு குணங்கள், போலிக் கருத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட யோகத்தை அறிதல் ஆகியவற்றின் மூலம் ஞானம் கொண்ட மனிதன், பெரியவனான உனக்குள் நுழைவதில் வெல்கிறான்” என்றேன்.(418)
ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, துன்ப துயரங்களை அகற்றுபவனான பவனிடம் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னதும், அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டமானது (என் வார்த்தைகளில் உள்ள உண்மையை அங்கீகரிப்பதை வெளிப்படுத்தும் விதமாக) சிங்க முழக்கம் செய்தது.(419) அங்கிருந்த எண்ணற்ற பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், பல்வேறு ராட்சசர்கள், பூத கணங்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அந்தப் பெருந்தேவனுக்குத் தலைவணங்கினர்.(420) அப்போது பெரும் நறுமணத்தைக் கொண்ட தெய்வீக மலர்கள் என் தலையில் பொழிந்தன, அந்த இடத்தில் இனிமையான தென்றல் வீசியது.(421) பிறகு, அண்டத்தின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், பலமிக்கவனுமான சங்கரன், உமாதேவியையும், தேவர்கள் தலைவனையும், என்னையும் கண்டு, என்னிடம்,(422) “ஓ! கிருஷ்ணா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ எம்மிடம் பெரும் அர்ப்பணிப்பில் நிறைந்திருக்கிறாய் என்பதை நாம் அறிவோம். உன் நன்மைக்கானதைச் செய்வாயாக. நான் உன்னிடம் கொண்ட அன்பும், பாசமும் பெரியதாகும்.(423) நீ எட்டு வரங்களைக் கேட்பாயாக.[28] ஓ! கிருஷ்ணா, ஓ! மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, அவற்றை நான் உனக்கு நிச்சயம் தருவேன். ஓ! யாதவர்களின் தலைவா, அவை எவை என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ விரும்புபவற்றைச் சொல்வாயாக. அவை அடைவதற்கு மிகக் கடினமானவையாக இருந்தாலும் அவற்றை நிச்சயம் நீ பெறுவாய்” என்றான் {சிவன்}.(424)
கிருஷ்ணன் பெற்ற வரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 15-பார்வதியும், பரமேஸ்வரனும் தனக்குக் கொடுத்த வரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
அருள்நிறைந்த கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தச் சக்திமிக்க ஒளித்திரளுக்கு {சிவனுக்கு}, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் தலைவணங்கி, அவனிடம் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்,(1) “அறத்தில் உறுதி, போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல், உயர்ந்த புகழ், பெரும் வலிமை, யோகத்தில் அர்ப்பணிப்பு, {அனைவருடனும் அன்பாக இருத்தல்}, உன் அருகாமை, நூறு நூறாகப் {பத்தாயிரம்} பிள்ளைகள் ஆகியனவே நான் உன்னிடம் கேட்கும் வரங்களாகும்” என்றேன்.(2) சங்கரன் நான் சொன்ன வார்த்தைகளை மீண்டும் சொல்லி “அப்படியே ஆகட்டும்” என்றான்.
அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் தாங்குபவளும், அனைத்துப் பொருட்களையும் தூய்மையாக்குபவளும்,(3) சர்வனின் மனைவியும், தவங்களின் கொள்ளிடமுமான அண்டத்தின் அன்னை {பராசக்தி}, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள், “ஓ! பாவமற்றவரே, சாம்பன் என்று பெயர் சூட்டப்படும் மகன் ஒருவனைப் பலமிக்க மஹாதேவன் உமக்கு அருளியிருக்கிறார்.(4) நீர் என்னிடம் இருந்தும் எட்டு வரங்களைக் கேட்பீராக. நான் அவற்றை உமக்கு நிச்சயம் தருவேன்” என்றாள்.
ஓ! பாண்டுவின் மகனே, அவளுக்குத் தலைவணங்கிய நான், அவளிடம், “பிராமணர்களிடம் மாறாப் பற்று, என் தந்தையின் அருள், நூறு மகன்கள், உயர்ந்த இன்பங்கள், என் குடும்பத்தில் அன்பு, என் அன்னையின் அருள், அமைதி நிலையை அடைந்தல், ஒவ்வொரு செயலையும் புத்திசாலித்தனமாகச் செய்தல் ஆகியவற்றை நான் உன்னிடம் வேண்டுகிறேன்” என்றேன்.(5,6)
உமை {கிருஷ்ணனிடம்}, “ஓ தேவனுக்கு இணையான ஆற்றலையும், பலத்தையும் கொண்டவரே, உண்மையற்றதை {பொய்யை} நான் ஒருபோதும் சொன்னதில்லை. உமக்குப் பதினாறாயிரம் {16000} மனைவியர் வாய்ப்பர். அவர்களிடம் நீர் கொள்ளும் அன்பும், உம்மிடம் அவர்கள் கொள்ளும் அன்பும் அளவற்றதாக இருக்கும்.(7) உமது உற்றார் உறவினர் அனைவரிடம் இருந்தும் உயர்ந்த பாசத்தை நீர் பெறுவீர். உமது உடல் பேரழகு வாய்ந்ததாக இருக்கும். நீர் உம் அரண்மனையில் தினமும் ஏழாயிரம் விருந்தினர்களுக்கு உணவூட்டுவீர்” என்றாள்”.(8)
வாசுதேவன் தொடர்ந்தான், “ஓ! பாரதரே, ஓ! பீமரின் அண்ணனே, எனக்கு இவ்வாறு வரங்களை அருளிய தேவனும் தேவியும், பூத கணங்களுடன் அங்கேயே அப்போதே மறைந்தனர்.(9) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, (மஹாதேவனைத் துதிக்க நான் யாரிடம் தீக்ஷை பெற்றேனோ அந்தப்) பெருஞ்சக்தி கொண்ட பிராமணரான உபமன்யு குறித்து நான் உமக்குச் சொன்ன செய்திகள் முழுமையும் அற்புதம் நிறைந்தவையாகும்.
உபமன்யு, அந்தப் பெருந்தேவனை வணங்கிவிட்டு, என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(10) உபமன்யு, “சர்வனைப் போன்று வேறு தேவனில்லை. சர்வனைப் போன்றொரு கதியோ, புகலிடமோ வேறில்லை. இவ்வளவு உயர்ந்த வரங்களை வேறு எவனாலும் கொடுக்க முடியாது. போரில் அவனுக்கு இணையானவன் வேறு எவனும் கிடையாது” என்றார்.(11)
தண்டி முனிவரின் சிவத்துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 16-தண்டி முனிவர் பரமசிவனைப் புகழ்ந்து செய்த துதியை கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு…
உபமன்யு {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஐயா, கிருத யுகத்தில் தண்டி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட முனிவர் ஒருவர் இருந்தார். இதயத்தில் பெரும் அர்ப்பணிப்புடன் கூடிய அவர், தியான யோகத்தின் துணையுடன் பத்தாயிரம் {10000} வருடங்கள் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார். அத்தகைய இயல்புக்கு மீறிய அர்ப்பணிப்பின் மூலம் அவர் பெற்ற கனி அல்லது வெகுமதியை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக. மஹாதேவனைக் காண்பதில் வென்ற அவர், சில பாடல்களைப் பாடி அவனைப் புகழ்ந்தார்.(1,2) மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனுமான அந்தப் பரமாத்மாவை தவங்களின் துணையுடன் சிந்தித்து, ஆச்சரியத்தில் நிறைந்த தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(3) “உயர்ந்தவனாகச் சாங்கியர்களால் விளக்கப்படுபவனும், யோகியரால் நினைக்கப்படுபவனும், முதன்மையானவனும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், இருப்பிலுள்ளவை அனைத்தின் ஆசானும், அண்டத்தின் படைப்புக்கும், அழிவுக்கும் காரணன் என்று கல்விமான்களால் சொல்லப்படுபவனும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவனும், அனைத்தையும் விட உயர்ந்தவனும், பிறப்பற்றவனும், அனைத்துப் பொருட்களின் தலைவனும், தொடக்கமும், முடிவும் அற்றவனும், உயரந்த பலத்தைக் கொண்டவனும், உயர்ந்த இன்பநிலையில் இருப்பவனும், பிரகாசமானவனும், பாவமற்றவனுமான புருஷனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்” என்றார்.(4-6)
தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தவப் பெருங்கடலும், மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனும், ஒப்பில்லாதவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், நித்தியமானவனும், எந்த மாற்றமும் இல்லாதவனும், பகுபடாதவனும், முழுமையானவனும், பிரம்மமே ஆனவனும், குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், குணங்களுடன் கூடியவனும், யோகிகளின் உயர்ந்த மகிழ்ச்சியும், சிதைவற்றவனும், விடுதலை {மோக்ஷம் / முக்தி} என்றழைக்கப்படுபவனும், மனம், இந்திரன், காற்று தேவன், மொத்த அண்டம், பெரும்பாட்டனான பிரம்மன் ஆகியோரின் புகலிடமும், மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், எவ்வகை மாற்றமும் இல்லாதவனும், தூயனும், புத்தியால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக்கூடியவனும், மனத்தைப் போலப் பருப்பொருளற்றவனும்;(7-9) புரிந்து கொள்ளக் கடினமானவனும், அளவிடப்பட முடியாதவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அடைதற்கரியவனும், அண்டத்தின் தோற்றுவாயும், அண்டம் மற்றும் இருள் குணம் {தமஸ் குணம்} ஆகிய இரண்டையும் கடந்தவனும், புராதனமானவனும், புருஷனும், பிரகாசமிக்கவனும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனுமான அந்தப் பெருந்தேவனை அவர் தம்முன் கண்டார்.(10) அவனைக் காண விரும்பி, உயிர் மூச்சுகளுடன் தன்னை அமைத்துக் கொண்டு ஜீவனில் இருந்து விளைவதில் மனம் என்றழைக்கப்படும் பிரகாசத்தின் வடிவில் வசித்து, கடுந்தவங்களைப் பயில்வதில் பல வருடங்களைக் கடத்திய முனிவர் தண்டி, அத்தவங்களின் வெகுமதியாக அவனைக் காண்பதில் வென்றதும் , பின்வரும் வார்த்தைகளால் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார்.(11)
தண்டி {மஹாதேவனிடம்}, “புனிதங்கள் அனைத்திலும் புனிதமானவன் நீயே, ஓ! புத்தியுள்ளோர் அனைவரிலும் முதன்மையானவனே, அனைத்தின் புகலிடமும் நீயே. அனைத்து வகைச் சக்திகளிலும் கடுஞ்சக்தி நீயே. தவங்கள் அனைத்திலும் கடுந்தவம் நீயே.(12) ஓ! பலமிக்கவனே, அருள்களை வழங்கும் தயாளன் நீயே. உயர்ந்த வாய்மை நீயே. உன்னை வணங்குகிறேன்.(13) ஓ! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே, ஓ! அனைத்து இன்பங்களின் புகலிடமே, உன்னை வணங்குகிறேன். ஓ! பலமிக்கவனே, பிறப்பிறப்புக்கு அஞ்சி மிகக் கடுமையாக முயல்பவர்களுக்கு நிர்வாணத்தைக் கொடுப்பவன் நீயே.(14) பெரும்பாட்டனான பிரம்மன், நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்), விஷ்ணு, விஸ்வேதேவர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோரே கூட உனது உண்மை இயல்பைப் புரிந்து கொள்ள வல்லவர்களல்ல. அவ்வாறிருக்கையில் எங்களைப் போன்ற மனிதர்களால் எவ்வாறு உன்னைப் புரிந்து கொள்ள முடியும்?(15)
காலன் என்றழைக்கப்படுபவன் நீயே, புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே, பிரம்மன் என்றுமழைக்கப்படுபவன் நீயே. புராணங்களை அறிந்த தெய்வீக முனிவர்கள் மூவுடலைக் கொண்டவன் {மூன்று மூர்த்திகள் – பிரம்மா, விஷ்ணு, சிவன்} நீ என்று சொல்கின்றனர்.(16) அதிபுருஷன் {அதிபௌருஷம்-ஆத்மாவிலுள்ளவன்}, அத்யாத்மம் {உடலில் உள்ளவன்}, அதிபூதம் {ஐம்பூதங்களில் உள்ளவன்}, அதிதைவதம் {அதிதெய்வம்-தேவர்களில் உள்ளவன்}, அதிலோகம் {உலகங்களில் உள்ளவன்}, அதிவிஜ்ஞானம் {ஞானத்தில் உள்ளவன்}, அதியஜ்ஞம் {யாகத்தில் இருப்பவன்} நீயே.(17) ஞானிகள், தங்களில் வசிப்பவனும், தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனுமான உன்னை அறிவதில் வெல்லும்போது, பந்தங்களில் இருந்து விடுபட்டு, கவலைகள் அனைத்தையும் கடந்த இருப்பு நிலையை அடைகின்றனர்.(18) ஓ! பெரும்பலம் கொண்டவனே, உன்னை அறிய விரும்பாதவர்கள், எண்ணற்ற பிறப்பிறப்புகளை அடைகின்றனர். சொர்க்கம் மற்றும் விடுதலையின் {முக்தியின்} வாயிலாக இருப்பவன் நீயே. அனைத்துப் பொருட்களையும் இருப்பில் இருக்கச் செய்பவனும், மீண்டும் தன்னுள்ளேயே ஈர்த்துக் கொள்பவனும் நீயே. பெருங்கொடையாளன் நீயே.(19) சொர்க்கம் நீயே, விடுதலை {முக்தி} நீயே, (செயல்பாட்டின் வித்தாக விளங்கும்) ஆசை நீயே. உயிரினங்களை ஈர்க்கும் கோபம் நீயே. சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, கீழுலகங்கள் {பாதாளம் முதலான உலகங்கள்} நீயே, மேலுலகங்கள் நீயே.(20)
பெரும்பாட்டனான பிரம்மன் நீயே, பவன் நீயே, விஷ்ணு நீயே, ஸ்கந்தன் நீயே, இந்திரன் நீயே, சாவித்ரி நீயே, யமன் நீயே, வருணன் நீயே, சோமன் நீயே, தாத்ரி நீயே, மனு நீயே, விதாத்ரி நீயே, கருவூலத் தலைவனான குபேரன் நீயே.(21) பூமி நீயே, காற்று நீயே, நீர் நீயே, அக்னி நீயே, வெளி நீயே, வாக்கு நீயே, புத்தி நீயே, நிலைமாறாவுறுதி நீயே, நுண்ணறிவு நீயே, உயிரினங்கள் செய்யும் செயல்கள் நீயே, மெய் நீயே, பொய் நீயே, இருப்பு நீயே, இன்மை {இல்லாமை} நீயே.(22) புலன்கள் நீயே, பிரகிருதியைக் கடந்திருப்பவன் நீயே, மாற்றமில்லாதவன் நீயே. அண்டத்திலுள்ளவை அனைத்திலும் மேன்மையானவன் நீயே, அண்டத்தில்லாதவை அனைத்திலும் மேன்மையானவன் நீயே, சிந்தைக்கு எட்டுபவன் நீயே, சிந்தைக்கு எட்டாதவன் நீயே.(23) பரப்பிரம்மமும், உயர்ந்த தனிவடிவ உட்பொருள் நீயே, சாங்கியர்கள் மற்றும் உன்னைப் போன்ற யோகியர்கள் இருவரும் அடையும் கதி நிச்சயம் நீயே. (24) உண்மையில், உன் வடிவைக் காண அருள் செய்த விளைவால் நீ எனக்கு இன்று வெகுமதியளித்திருக்கிறாய். அறவோர் மட்டுமே எட்டும் கதியை நான் அடைந்திருக்கிறேன். அறிவால் தூய்மையடைந்த புத்தியைக் கொண்டோரால் வேண்டப்படும் கதியையே நான் வெகுமதியாக அடைந்திருக்கிறேன்.(25)
ஐயோ, இவ்வளவு காலம் நான் அறியாமையில் இருந்தேனே; ஞானிகள் அனைவராலும் அறியப்படும் நித்திய உட்பொருளும், உயர்ந்த தேவனுமான உன்னைக் குறித்த அறிவில்லாமல் இவ்வளவு நீண்ட காலம் உணர்வற்ற மூடனாக இருந்தேனே.(26) ஓ! அர்ப்பணிப்பு கொண்டருக்கு அருள் வழங்குபவனே, எண்ணற்ற பிறவிகளின் போக்கில் நீ காட்டிய கருணையின் விளைவால் இறுதியாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொள்வதில் வென்றேன். உன்னை அறிவதில் வெல்வபன் அழிவின்மையை அனுபவிக்கத் தகுந்தவனாகிறான்.(27) தேவர்கள், அசுரர்கள் மற்றும் தவசிகளுக்கு எப்போதும் புதிராக இருப்பவன் நீயே. பிரம்மம் குகைக்குள் மறைந்திருக்கிறது. தவசிகளாலேயே கூட அதைக் காணவோ, அறியவோ முடியவில்லை[1].(28) அனைத்தையும் படைத்தவனும், அனைத்துத் திசைகளிலும் முகத்தைக் கொண்டவனுமான பலமிக்கத் தேவன் நீயே. அனைத்துப் பொருட்களின் ஆன்மா நீயே, அனைத்துப் பொருட்களையும் காண்பவன் நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே. அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் நீயே.(29) உனக்கான உடலை உண்டாக்குபவன் நீயே. அவ்வுடலைச் சுமப்பவன் நீயே. உடல்படைத்தவன் நீயே. உடலை அனுபவிப்பவன் நீயே, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தின் புகலிடமும் நீயே. உயிர் மூச்சுகளைப் படைத்தவன் நீயே, உயிர்மூச்சுகளைக் கொண்டவன் நீயே, உயிர்மூச்சுகளோடு கூடியவன் நீயே, உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்தின் புகலிடமும் நீயே.(30)
[1] “ஒவ்வொரு உயிரினத்தின் இதயமே இங்குக் குகை என்று சொல்லப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும், முனிவர்களுக்கும் தெரியாமல் குகையில் வைக்கப்பட்டதும், வேதத்தால் அறியக்கூடாததுமான பரப்ரம்மம் எதுவோ அஃது இந்தப் பகவனான ஈஸ்வரர்தாம்” என்றிருக்கிறது.
தியான யோகத்தில் அர்ப்பணிப்பு மிக்கவர்களும், ஆன்மாவை அறிந்தவர்களும், மறுபிறவி தவிர்க்க வேண்டுபவர்களுமான அறவோர் அனைவரின் புகலிடமான அந்த அத்யாத்மம் நீயே. உண்மையில், அந்தப் புகலிடத்துடன் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவன் நீயே.(31) உயிரினங்கள் அனைத்திற்கும் இன்ப துன்பம் நிறைந்த கதிகளைக் கொடுப்பவன் நீயே. படைக்கப்பட்டவை அனைத்தின் பிறப்பிறப்பை விதிப்பவன் நீயே.(32) விருப்பங்கள் கனிவதில் வெற்றியால் மகுடம் சூட்டப்படும் முனிவர்களுக்கு வெற்றியை அருளும் பலமிக்கத் தலைவன் நீயே. பூலோகம் தொடங்கிச் சொர்க்கவாசிகள் அனைவருடன் சேர்ந்து அனைத்து உலகங்களையும் படைத்து அவை அனைத்தையும் பேணித் தாங்குபவனான நீ, நன்கறியப்பட்ட எட்டு வடிவங்களில் உன்னைப் பகுத்துக் கொள்கிறாய்.(33) உன்னில் இருந்தே அனைத்தும் உண்டாகின்றன. உன்னையே அனைத்தும் சார்ந்திருக்கின்றன. மேலும் அனைத்துப் பொருட்களும் உன்னிலையே மறைகின்றன. நித்தியமான ஒரே பொருள் நீயே.(34) அறவோரால் வேண்டப்படுவதும், அவர்களால் உயர்ந்ததாகக் கருதப்படுவதுமான வாய்மை உலகம் {சத்தியலோகம்} நீயே. யோகியர் வேண்டும் தனிப்பட்ட இருப்பு முறித்துக் கொள்ளும் நிலையாக இருப்பவன் நீயே. ஆன்மாவை ஆறிந்தோரால் நாடப்படும் விடுதலை {முக்தி} நீயே.(35)
தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் உன்னைக் காணாதிருக்க வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிரம்மன் முதலானவர்களால் குகையில் மறைத்து வைக்கப்பட்டவன் நீயே.(36) இதயத்தில் வசிப்பவனாக இருந்தாலும் மறைக்கப்பட்டிருப்பவன் நீயே. எனவே, ஓ! பவா, உன்னால் திகைப்படைந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் விபரங்கள் அனைத்துடன் உன்னைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாகின்றனர்.(37) ஓ! அனைவரின் இதயங்களிலும் வசிப்பவனே, அர்ப்பணிப்பால் இதயத் தூய்மை அடைவதில் வெல்லும் மனிதர்களுக்கு உன் விருப்பத்தின் பேரில் நீ காட்சியளிக்கிறாய்.(38) உன்னை அறிவதால் ஒருவன் இறப்பையும், மறுபிறப்பையும் தவிர்க்கலாம். உயர்ந்த அறிவுப்பொருள் {ஞானப்பொருள்} நீயே. உன்னை அறிவதால் ஒருவன் அறிய வேண்டிய உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை.(39) அடையத்தக்க உயர்ந்த பொருள் நீயே. உண்மையில் ஞானியாக இருப்பவன், உன்னை அடைந்ததும், அடையத்தக்க உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை என்று நினைக்கிறான். மிக நுட்பமானவனும், அடையத்தக்க உயர்ந்த பொருளுமான உன்னை அடைவதன் மூலம் ஒரு ஞானியானவன் அழிவற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் ஆகிறான்.(40)
தத்துவம் அறிந்தவர்களும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) குணங்களின் அறிவைப் பெற்றவர்களும், நுட்பமான அல்லது அழிவற்ற அறிவை அடைவதன் மூலம் அழிவுநிலையைக் கடப்பவர்களும், கல்விமான்களுமான சாங்கிய அமைப்பின் தொண்டர்கள், அனைத்துப் பந்தங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வதில் உன்னை அறிந்து வெற்றி அடைகிறார்கள்.(41) வேதங்களை அறிந்தவர்கள், வேதாந்தங்களில் விளக்கப்பட்டிருக்கும் அறிவுப்பொருள் என உன்னையே கருதுகிறார்கள். மூச்சுப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க இம்மனிதர்கள் எப்போதும் உன்னை நோக்கியே தியானித்து இறுதியாக உயர்ந்த கதியை அடைவதன் மூலம் உன்னில் நுழைகிறார்கள்.(42) அம்மனிதர்கள், ஓங்காரத்தால் அமைக்கப்பட்ட தேரைச் செலுத்திக் கொண்டு மஹேஸ்வரனுக்குள் நுழைகிறார்கள். தேவ பாதை என்றழைக்கப்படும் பாதையில் ஆத்தியம் என்றழைக்கப்படும் வாயில் நீயே.(43) பித்ரு பாதை என்றழைக்கப்படும் பாதையில் சந்திரமாஸ் {சந்திரன்} என்றழைக்கப்படும் வாயில் நீயே. காஷ்டை நீயே, திசைப்புள்ளிகள் நீயே, ஆண்டு நீயே, யுகங்களும் நீயே.(44) சொர்க்கங்களின் அரசு நீயே, பூமியின் அரசும் நீயே, வட மற்றும் தென் அயனங்களும் நீயே. ஓ! நீலம் மற்றும் சிவப்பு {நீலலோகிதன்} என்றழைக்கப்படுபவனே, பழங்காலத்தில் உன் புகழைப் பல்வேறு பாடல்களில் பாடி உயிரினங்களைப் படைக்குமாறுப் பெரும்பாட்டனான பிரம்மன் உன்னைத் தூண்டினான்.(45)
ரிக்குகளை அறிந்த பிராமணர்கள், அனைத்துப் பொருட்களிலும் பற்றற்றவனாகவும், வடிவங்களேதும் அற்றவனாகவும் உன்னைக் கருதி ரிக்குகளை ஓதி உன்னைப் புகழ்கிறார்கள். வேள்விகளில் அதர்யுக்கள், ஒரே ஞானப்பொருளான உன்னை மதிக்கும் வகையில் நன்கறியப்பட்ட மூன்று வழிகளில் யஜுஸ்களைப் பாடுகிறார்கள்.(46) தூய்மையடைந்த புத்தியைக் கொண்டவர்களும், சாமங்களை அறிந்தவர்களுமான மனிதர்கள், சாமங்களின் துணையுடன் உன்னைப் பாடுகிறார்கள். மேலும், அதர்வணங்களை அறிந்த மறுபிறப்பாளர்கள், ரிதன் என்றும், வாய்மை என்றும், மேன்மை என்றும், பிரம்மம் என்றும் உன்னைக் குறித்துப் பாடுகிறார்கள். வேள்வி நடைபெறும் இடங்களில் உயர்ந்த காரணமாக இருப்பவன் நீயே. தலைவனும், பரமனும் நீயே.(47) இரவும், பகலும் உன் கேள்விப் புலனாகவும், பார்வைப்புலனாகவும் இருக்கின்றன. பிறை நாட்களும், மாதங்களும் உன் தலையாகவும், கரங்களாகவும் இருக்கின்றன. பருவகாலங்கள் உன் சக்தியாகும், தவங்கள் உன் பொறுமையாகும் {தைரியமாகும்}, வருடம் உன் குதமும், தொடைகளும் பாதங்களுமாகும்.(48) மிருத்யு நீயே, யமன் நீயே, ஹுதாஸன் நீயே, காலன் நீயே, அழிவைத் தருவதில் வேகமாகச் செயல்படுபவன் நீயே, காலத்தின் மூலக் காரணம் நீயே, நித்திய காலம் நீயே.(49) ஆகாயத்தை நிறைத்திருக்கும் வெளி, கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் சேர்ந்த சந்திரமாஸும் {சந்திரனும்}, ஆதித்தியனும் நீயே. துருவ நட்சத்திரம் நீயே, சப்தமுனிவக் கூட்டம் நீயே, பூலோகம் முதலான ஏழு உலகங்கள் நீயே.(50)
பிரதானனும் {முக்கிய முதல்வனும்}, மஹத்தும் நீயே, வெளிப்படாதவன் நீயே, இவ்வுலகமும் நீயே. பிரம்மன் முதல் தாழ்ந்த செடி வடிவங்கள் வரையான அண்டம் நீயே. அனைத்து உயிரினங்களின் தொடக்கம் அல்லது மூலக் காரணன் நீயே. இருப்பு நீயே, இல்லாமையும் நீயே.(51) எட்டுப் பிரகிருதிகள் நீயே. அந்த எட்டு பிரகிருதிகளுக்கும் மேலானவன் நீயே. இருப்பில் உள்ள அனைத்தும் தெய்வீகமான உன் சுயத்தின் ஒரு பகுதியையே பிரதிபலிக்கின்றன.(52) நித்தியமான உயர்ந்த இன்ப நிலை {பரமானந்தம்} நீயே. அனைத்துப் பொருட்களாலும் அடையப்படும் கதி நீயே. அறவோரால் வேண்டப்படும் உயர்ந்த இருப்புநிலை நீயே.(53) கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட நிலை நீயே. நித்திய பிரம்மம் நீயே. சாத்திரங்கள் மற்றும் வேதாங்கங்களைக் கற்ற மனிதர்களின் தியானத்தில் அமையும் உயர்ந்த நிலை நீயே.(54) உயர்ந்த காஷ்டை நீயே, உயர்ந்த காலம் நீயே. உயர்ந்த வெற்றி நீயே, உயர்ந்த புகலிடமும் நீயே.(55) உயர்ந்த அமைதிநிலை நீயே. இருப்பின் உயர்ந்த முற்றுநிலை நீயே. உன்னை அடைவதால் உயர்ந்த வெற்றியை அடைவதாக யோகியர் நினைக்கின்றனர்.(56) மனநிறைவு நீயே, வெற்றி நீயே, ஸ்ருதி நீயே, ஸ்மிருதியும் நீயே. யோகிகள் முயற்சிக்கும் ஆன்மப் புகலிடம் நீயே, ஞானிகள் தொடரும் அழிவற்ற பிராப்தி நீயே.(57)
வேள்விக்கு அடிமைகளும், குறிப்பிட்ட ஆசைகளால் தூண்டப்பட்டு வேள்விகளில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், அத்தகைய தருணங்களில் பெருங்கொடைகளை அளிப்பவர்களும் தங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பவன் நிச்சயம் நீயே.(58) இடையறாத பாராயணம், கடும் நோன்புகள், அமைதியான வாழ்வுமுறைக்கு இணங்கும் உண்ணா நோன்புகள் மற்றும் தன்னொடுக்கத்திற்கான பிற வழிமுறைகளுடனும், கடுந்தவங்களாலும் தங்கள் உடல்களை வீணாக்கும் மனிதர்களால் நாடப்படும் உயர்ந்த கதி நீயே.(59) ஓ! நித்தியமானவனே, அனைத்துச் செயல்களையும் துறந்தவர்களும், அனைத்துப் பொருட்களிலும் பற்றற்றவர்களுமாக இருக்கும் மனிதர்களின் கதி நீயே.(60) ஓ! நித்தியமானவனே, மறுபிறப்பில் இருந்து விடுதலை {முக்தி} அடைய விரும்புவோர், இன்பங்கள் அனைத்தின் தொடர்பறுந்து வாழ்வோர், பிரகிருதி பூதங்களின் அழிவை விரும்புவோர் ஆகியோரின் கதி நீயே.(61) ஓ! சிறப்புமிக்கவனே, விளக்க முடியாததும், களங்கமற்றதும், மாற்றமில்லாததும், ஞானம் மற்றும் அறிவியலில் அர்ப்பணிப்பு மிக்கோருக்குச் சொந்தமானதுமான உயர்ந்த கதி நீயே.(62) வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் புராணங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஐந்து கதிகள் இவையே. உன் அருளின் மூலமே அம்மனிதர்கள் அக்கதிகளை அடைகிறார்கள் அல்லது அடையத் தவறுகிறார்கள், உன் அருளின் மூலமே அவை அவர்களுக்கு மறுக்கவும் படுகின்றன” என்றார் {தண்டி}.(63) தவங்களின் பெருங்குவியலான தண்டி இவ்வாறே ஈசானனைப் புகழ்ந்தார் {துதித்தார்}. மேலும் அவர், (மஹாதேவனை மகிமை படுத்தும் வகையில்) படைப்பாளனால் பழங்காலத்தில் படாடப்பட்ட உயர்ந்த பிரம்மத்தையும் பாடினார்”[2].(64)
[2] கும்பகோணம் பதிப்பில், “தவங்களுக்கெல்லாம் இருப்பிடமாகிய தண்டி மஹாமுனிவர் முன்னர் உலகம் படைத்த ப்ரம்மதேவர் எந்தப் பரப்பிரம்மத்தைத் துதித்தாரோ அந்தப் பரப்ரம்மமாகிய ஈஸ்வரரை மனமாரத் துதித்தார்” என்றிருக்கிறது.
உபமன்யு {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தார், “பிரம்மத்தை ஓதுபவரான தண்டியால் இவ்வாறு துதிக்கப்பட்டவனும், சிறப்புமிக்கவனும், உயர்ந்த தேவனுமான மஹாதேவன், தன் மனைவியான உமையின் துணையுடன் வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(65) தண்டி மேலும், “பிரம்மனோ, இந்திரனோ, விஷ்ணுவோ, விஸ்வேதேவர்களோ பெரும் முனிவர்களோ உன்னை அறிய மாட்டார்கள்” என்றார். இதனால் நிறைவடைந்த சிவன் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(66)
அந்தப் புனிதமானவன் {சிவன்}, “நீ அழிவற்றவனாகவும், நித்தியமானவனாகவும் இருப்பாய். நீ கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவாய். பெரும் புகழ் உனதாகும். நீ சக்தியுடனிருப்பாய். ஆன்ம அறிவு உனதாகும்.(67) முனிவர்கள் அனைவரும் உன்னை நாடுவார்கள், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, என் அருளின் மூலம் உன் மகன் சூத்திரங்களின் ஆசானாவான்.(68) நான் இன்று உனக்கு என்ன வரங்களைத் தர வேண்டும்? ஓ! மகனே, நீ விரும்பும் பொருட்களை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான். இதன் பேரில் தண்டி, தமது கரங்களைக் கூப்பிக் கொண்டு, “ஓ! தலைவா, உன்னிடம் நான் கொண்டுள்ள அர்ப்பணிப்பு நிலையான உறுதியுடன் இருக்கட்டும்” என்று கேட்டார்”.(69)
உபமன்யு தொடர்ந்தார், “அந்தப் பெருந்தேவன், தண்டிக்கு இந்த வரங்களைக் கொடுத்து, தேவர்கள் மற்றும் முனிவர்களின் துதிகளை ஏற்றுக் கொண்டு அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(70) ஓ! யாதவர்களின் தலைவா, அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் தொண்டர்களுடன் இவ்வாறு மறைந்ததும், அந்த முனிவர் {தண்டி} என் ஆசிரமத்திற்கு வந்து அவருக்கு நேர்ந்த அனைத்தையும் எனக்குச் சொன்னார்.(71) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தண்டியால் எனக்குச் சொல்லப்பட்ட (மஹாதேவனின்) அந்தக் கொண்டாடப்படும் பெயர்கள் அனைத்தையும் உன் வெற்றிக்காகக் கேட்பாயாக.(72) பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு காலத்தில் மஹாதேவனுக்குப் பொருந்தும் பத்தாயிரம் பெயர்களைச் சொன்னான். அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் ஓராயிரம் பெயர்கள் சாத்திரங்களில் இருக்கின்றன.(73) இந்தப் பெயர்கள் அனைவராலும் அறியப்பட்டவை அல்ல. ஓ! அழிவைக் கடந்தவனே, பழங்காலத்தில் அந்த உயர் ஆன்ம தேவனைத் துதிப்பதற்காகப் பெரும்பாட்டனான பிரம்மன் இந்தப் பெயர்களைச் சொன்னார். பெரும்பாட்டனின் அருள் மூலம் அவற்றை அடைந்த தண்டி, அவற்றை எனக்குச் சொன்னார்” {என்றார் உபமன்யு}.(74)
சிவஸஹஸ்ரநாமம் – சிவனின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 17-தண்டி முனிவரால் அருளப்பட்டதாக உபமன்யு சொன்ன சிவஸஹஸ்ரநாமத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! யுதிஷ்டிரரே, மறுபிறப்பாள முனிவர் உபமன்யு, தம் மனத்தைக் குவித்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி (மஹாதேவனுக்குப் பொருந்தும்) இந்தப் பெயர்களின் தொகுப்பைத் தொடக்கமுதல் சொல்லத் தொடங்கினார்.(1)
உபமன்யு, “பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட சிலவற்றையும், முனிவர்களால் சொல்லப்பட்ட சிலவற்றையும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களில் தோன்றும் சிலவற்றைக் கொண்டவையும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவையுமான பெயர்களைச் சொல்லி அனைத்து உயிரினங்களின் துதிக்குத் தகுந்தவனான அந்தப் பெருந்தேவனைத் துதிக்கப் போகிறேன்.(2) திறம்பெற்ற மனிதர்களால் (பெருந்தேவனுக்குப் பொருத்தமான) அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் அவை, வாய்மையும் வெற்றியும் நிறைந்தவையும், {அந்தப் பெயர்களைச்} சொல்வோரின் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லவையுமாக இருக்கின்றன. வேத உரைகளால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும், தமது அர்ப்பணிப்பின் துணையால் அப்பெயர்களைக் கண்டடைந்தவருமான தண்டியால் அவை மஹாதேவனுக்குப் பயன்படுத்தப்பட்டன.(3) உண்மையில், நன்கறியப்பட்ட அறவோர் மற்றும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்த தவசிகள் பலரால் சொல்லப்பட்ட அப்பெயர்களைக் கொண்டு, முதன்மையானவனும், முதல்வனே ஆனவனும், சொர்க்கத்திற்கு வழிவகுப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மைகளைக் கொடுப்பவனுமான அந்த மங்கலனை நான் துதிக்கப் போகிறேன்.(4) (அவை உண்மையில் எங்கிருந்து உண்டானதோ அந்தப்) பிரம்ம லோகத்தில் இருந்து பரவிய அப்பெயர்கள் அண்டம் முழுவதும் கேட்கப்படுகின்றன. அவை அனைத்தும் உண்மை நிறைந்தவையாக இருக்கின்றன. வேதங்களின் மூலம் (அண்டத்திற்கு) அறிவிக்கப்பட்டவனும், நித்தியமானவனுமான அந்தப் பரப்பிரம்மனை அப்பெயர்களைக் கொண்டு நான் துதிக்கப் போகிறேன்.(5)
ஓ! யது குலத் தலைவா {கிருஷ்ணா}, நான் இப்போது அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. நீ {கிருஷ்ணா} அந்தப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளனாவாய். தேவர்கள் அனைவரிலும் தனித்துவமானவனும், சிறப்புமிக்கவனுமான அந்தப் பவனை நீ வழிபடுவாயாக.(6) நீ அவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருப்பதாலேயே நீ கேட்கும்படி நான் அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். மஹாதேவனே நித்திய பிரம்மமாவான். நூறு வருடங்கள் தொடர்ந்து சொன்னாலும், யோக பலம் கொண்டவர்களாலும் அந்தப் பெருந்தேவனின் மகிமையையும், பலத்தையும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. உண்மையில் மஹாதேவனின் தொடக்கமும், நடுவும், முடிவும் தேவர்களாலேயே கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை.(7,8) ஓ! மாதவா, உண்மை இவ்வாறிருக்கையில், மஹாதேவனின் குணங்களை வேறு யாரால் உரைக்க முடியும்? இருப்பினும், சிறப்புமிக்கவனும், முற்றான ஞானம் கொண்டவனுமான அந்தப் பரமதேவனின் கருணையால், நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால் சில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளின் தொகுதி என்ற வடிவில் நான் அவனது குணங்களைச் சொல்லப் போகிறேன்.(9) அந்த உயர்ந்த தலைவனின் அனுமதி பெறாமல் எவராலும் அவனைத் துதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், அவனது அனுமதி பெறுமளவுக்கு நற்பேறு பெற்ற பிறகே அவனைத் துதிப்பதில் வென்றேன்.(10)
பிறவியும், அழிவும் அற்றவனும், அண்டத்தின் மூலக் காரணனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், வெளிப்படாத தோற்றம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனின் பெயர்களில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிடுகிறேன்.(11) ஓ! கிருஷ்ணா, வரமளிப்பவனும், துதிக்கத்தக்க தேவனும், பலமிக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான அந்தத் தேவனின் பெயர்களில் பிரம்மன் மூலம் சொல்லப்பட்ட சிலவற்றைக் கேட்பாயாக.(12) நான் சொல்லப் போகும் இந்தப் பெயர்கள், தயிரில் இருந்து வெண்ணையை எடுப்பதைப் போல, பழங்காலத்தில் பெரும்பாட்டனால் சொல்லப்பட்ட பத்தாயிரம் பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.(13) தங்கமானது மலைப்பாறைகளின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், தேனானது மலர்களின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், மந்தமானது {நெய்யானது} வெண்ணையைப் பிரதிபலிப்பதைப் போலவும், தொகுக்கப்பட்டிருக்கும் இப்பெயர்கள், பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தப் பத்தாயிரம் பெயர்களின் சாரத்தையே பிரதிபலிக்கின்றன.(14) இந்தப் பெயர்களின் தொகுப்பானது, மிகக் கொடிய பாவத்தையும் கழுவும் வல்லமை பெற்றதாகும். நான்கு வேதங்களின் தகுதி இதற்கும் உண்டு. இது முயற்சியுடன் புரிந்து கொள்ளப்பட்டு, குவிந்த ஆன்மாவுடன் நினைவில் செதுக்கப்பட வேண்டும்.(15)
இது மங்கலம் நிறைந்ததாகும். இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கும்[1]. இது பரிசுத்தமடையச் செய்யும் பெருமை கொண்டது. பெருந்தேவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவனிடம் அர்ப்பணிப்புள்ளவனும், நம்பிக்கையுள்ளவனுமான ஒருவனுக்கு மட்டுமே இது சொல்லப்பட வேண்டும். அர்ப்பணிப்பில்லாதவனும், நம்பிக்கையில்லாதவனும், தன் ஆன்மாவை வெல்லாதவனுமான ஒருவனுக்கு ஒருபோதும் இதைச் சொல்லக் கூடாது[2].(16) ஓ! கிருஷ்ணா, அனைத்துப் பொருட்களின் மூலக் காரணனும், பரமாத்மாவும், பெருந்தேவனும், சிறப்புமிக்கவனுமான மஹாதேவனிடம் வன்மத்தை வளர்க்கும் உயிரினம் தனக்கு முன்பான மூதாதையருடனும், தனக்குப் பின் வரும் தன் பிள்ளைகள் அனைவருடனும் நிச்சயம் நரகத்திற்கே செல்வான்.(17) இப்போது நான் சொல்லப்போகும் இந்தப் பெயர்களின் தொகுப்பு தியான யோகமாகப் பார்க்கப்படுகிறது. இது யோகமாகவும் காணப்படுகிறது. தியானத்தின் உயர்ந்த நோக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஒருவன் ஜபமாக இதைத் தொடர்ந்து உரைக்க வேண்டும். இஃது அறிவுக்கு இணையானதாகும். இஃது உயர்ந்த புதிரைக் கொண்டதாகும்.(18) ஒருவன் தன் இறுதிக் கணத்திலாவது, இதை உரைத்தாலோ, உரைப்பதைக் கேட்டாலோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான். இது புனிதமானதாகும். அனைத்து வகை நன்மைகளும் நிறைந்த இது மங்கலமானதாகும். இஃது அனைத்துப் பொருட்களிலும் சிறந்ததாகும்.(19) அண்டமனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனால் பழங்காலத்தில் தொகுக்கப்பட்டு, சிறந்த துதிகள் {ஸ்தோத்திரம்} அனைத்திலும் முதன்மையான இடத்தில் அவனால் இது வைக்கப்பட்டது.(20)
அந்தக் காலத்திலிருந்து உயரான்ம மஹாதேவனின் மகிமையையும், பெருமையையும் சொல்லும் இந்தத்துதி தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு, துதிகள் அனைத்தின் மன்னனாக {ஸ்தோத்திர ராஜவெனக்} கருதப்படுகிறது.(21) துதிகள் அனைத்தின் மன்னனான இது, முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்திற்குச் சொல்லப்பட்டது. தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பெற்றார். எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்ட துதியாக அறியப்படுகிறது.(22) தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார். இது மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாகும், இது கொடும்பாவங்களையும் கழுவவல்லதாகும்.(23) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துதிகள் அனைத்திலும் சிறந்த துதியான இதை நான் உனக்கு உரைக்கப் போகிறேன். வேதங்களின் வேதமானவனை, புராதனப் பொருட்கள் அனைத்திலும் பழமையானவனை,(24) சக்திகள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவனை, தங்கள் அனைத்திற்கும் தவமாக இருப்பவனை, அமைதியான உயிரினங்கள் அனைத்திலும் பேரமைதி கொண்டவனை, காந்திகள் அனைத்திலும் காந்தி கொண்டவனை,(25) கட்டுப்பாடு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் கட்டுப்பாடுடையவனை, நுண்ணறிவு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நுண்ணறிவைக் கொண்டவனை, தேர்களின் தேவனாகவும், முனிவர்களின் முனிவனாகவும் காணப்படுபவனை,(26) வேள்விகள் அனைத்தின் வேள்வியாகவும், மங்கலம் நிறைந்த பொருட்கள் அனைத்திலும் பெரும் மங்கலம் கொண்டவனாகவும் கருதப்படுபவனை, ருத்திரர்கள் அனைவரின் ருத்திரனை, பிரகாசத்துடன் கூடிய அனைத்திலும் பிரகாசமிக்கவனை,(27) யோகிகள் அனைவரின் யோகியை, காரணங்கள் அனைத்தின் காரணனை, இல்லாமையில் உலகங்கள் அனைத்தும் சென்று சேர்பவனை,(28) இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனை, அளவற்ற சக்தியுடைய ஹரன் என்று அழைக்கப்படுபவனையே இந்தத் துதி குறிப்பிடுகிறது. அந்தப் பெரும் சர்வனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களை {சிவசஹஸ்ரநாமத்தை} உரைக்கப் போகிறேன் கேட்பாயாக.(29) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, அந்தப் பெயர்களைக் கேட்பதால் நீ உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாயாக {என்றார் உபமன்யு}.{உபமன்யு சொன்னார்}, “ஓம் {ௐ}. அசைவற்றவன் {ஸ்திரன்} நீயே. நிலையானவன் {ஸ்தாணு} நீயே, பலமிக்கவன் {ப்ரபு} நீயே, பயங்கரன் {பாநு / பீமன்} நீயே, முதன்மையானவன் {பரவரன்} நீயே, வரமளிப்பவன் {வரதன்} நீயே, மேன்மையானவன் {வரன்} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தாலும் கொண்டாடப்படுபவன் {ஸர்வவிச்யாதன்} நீயே, அனைத்துப் பொருட்களும் {ஸர்வன்} நீயே, அனைத்தையும் படைத்தவன் {ஸர்வகன்} நீயே, பவன் நீயே.(30-1) தலையில் சடாமுடி தரித்தவன் {ஜடி} நீயே, விலங்கின் தோலை ஆடையாக அணிபவன் {சர்மி} நீயே, மயிலைப் போலத் தலையில் கொண்டை கொண்டவன் {சிகண்டி/சீகி/கட்கீ} நீயே, மொத்த அண்டத்தையும் அங்கங்களாகக் கொண்டவன் {ஸர்வாங்கன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் {ஸர்வபாவநன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருக்கும் விளைவால் ஹரன் நீயே. மானுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {ஹரிணாக்ஷன்} நீயே, அனைத்து உயிரினங்களையும் அழிப்பவன் {ஸர்வபூதஹரன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கும் உயர்ந்தவன் {ப்ரபு} நீயே.(31-2)
அனைத்துச் செயல்பாடுகளும் உண்டாகும் ப்ரவ்ருத்தி நீயே, செயலின்மை {நிவ்ருத்தி} நீயே, நோன்புகளை நோற்பவன் {நியதன்} நீயே, நித்தியமானவன் {சாஸ்வதன்} நீயே, மாற்றமில்லாதவன் {த்ருவன்} நீயே, சுடலையில் வசிப்பவன் {ஸ்மசாநவாஸி} நீயே, தலைமை முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந} நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பவன் {கசரன்} நீயே, புலன்களால் அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {கோசரன்} நீயே, பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிப்பவன் {அர்த்தநன்} நீயே.(32-3) அனைவரும் வணங்கத்தக்கவன் {அபிவாத்யன்} நீயே, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மன்} நீயே, தவங்களையே செல்வமாகக் கொண்டவன் {தபஸ்வி} நீயே, பூதங்கள் அனைத்தையும் விரும்பியபடி படைத்தவன் {பூதபாவநன்} நீயே, பித்தன் போல வேடமிட்டு உண்மை இயல்பை மறைப்பவன் {உந்மத்தவேஷப்ரச்சந்நன்} நீயே, உலகங்கள் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆசான் {ஸர்வலோகப்ரஜாபதி} நீயே.(33-4) அளவிடமுடியாத வடிவம் கொண்டவன் {மஹாரூபன்} நீயே, பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே, அறத்தின் வடிவம் {வ்ருஷரூபன்} நீயே, பெரும்புகழ் {மஹாயசஸ்} நீயே, உயர்ந்த ஆன்மா {மஹாத்மா} நீயே, அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வபூதாத்மா} நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஸ்வரூபன்} நீயே, (அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் காலத்தில் அண்டத்தை விழுங்குவதற்கான) பெரும் கோரப்பற்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(34-5)
உலகங்கள் அனைத்தின் பாதுகாவலன் {லோகபாலன்} நீயே, அறியாமை எனும் இருளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆன்மா {அந்தர்ஹிதாத்மா} {வெளிப்படா குணம் கொண்டவன்} நீயே, மகிழ்ச்சி {ப்ரஸாதன்} நீயே. கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஹயகர்த்தபி} நீயே. மறுபிறவியெனும் இடியில் இருந்து ஜீவனைப் பாதுகாப்பவன் {பவித்ரன்} நீயே, துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே, தூய்மை, தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளால் அடையத்தக்கவன் {நியமன்} நீயே. தூய்மை மற்றும் தற்கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நோன்புகள் மற்றும் நியமங்களின் புகலிடம் {நியமாச்ரிதன்} நீயே.(35-6) அனைத்துக் கலைகளையும் அறிந்த தெய்வீகக் கைவினைஞன் {ஸர்வகர்மா} நீயே, (எவராலும் படைக்கப்படாத) சுயம்பு {ஸ்வயம்பூதன்} நீயே. அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தொடக்கம் {ஆதி} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைக்கும் ஹிரண்யகர்ப்பன் {ஆதிகரன்} நீயே, வற்றாத பலமும் இன்பநிலையும் {நிதி} நீயே, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்} நீயே, பெரும் சக்தியுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {விசாலாக்ஷன்} நீயே, ஸோமன் நீயே. ஆகாயத்தில் ஒளிர்வதற்காக உயிரினங்களில் அறவோரை மகிமையின் வடிவங்களை ஏற்கச் செய்பவன் {நக்ஷத்ரஸாதகன்} நீயே.(36-7)
சந்திரமாஸ் {சந்திரன்} நீயே, ஸூர்யன் நீயே, சனிக்கோள் {சநி} நீயே, சந்திரனின் இறங்கு கணு {கேது} நீயே, ஏறு கணுவும் {க்ரஹன் / ராஹு} நீயே, மங்கலன் (செவ்வாய் கோள்) {கோள்களின் தலைவன்} {க்ரஹபதி} நீயே, பிருஹஸ்பதி (வியாழன் கோள்) நீயே, சுக்கிரன் (வெள்ளி கோள்) நீயே, புதன் (புதன் கோள்) நீயே, அத்ரியின் மனைவியை வழிபடுபவன் {அதரி} நீயே, {அத்ரியாநமஸ்கர்த்தன்}, கோபம் கோண்ட வேள்வியானது மானின் வடிவில் தப்பி ஓடிய போது அந்த வேள்வியை நோக்கி கணை ஏவியவன் {ம்ருகபாணார்ப்பணன்} நீயே, பாவமண்டாதவன் {அநகன்} நீயே.(37-8) அண்டத்தைப் படைக்கும் சக்தி கொண்ட தவங்களை உடையவன் {மஹாதபஸ்} நீயே, அண்டத்தை அழிக்கும் சக்தி கொண்ட தங்களை உடையவன் {கோரதபஸ்} நீயே, (பக்தர்களிடம் கொண்ட பெருங்கருணையின் விளைவால்) உயர்ந்த மனம் கொண்டவன் {அதீநன்} நீயே, உன்னிடம் வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தீநஸாதகன்} நீயே, (சூரியனாகவும், கோள்களாகவும் வடிவத்தை ஏற்றுக் காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பதால்) வருடத்தை உண்டாக்குபவன் {ஸம்வத்ஷரகரன்} நீயே, (பிரணவ வடிவம், வேறு புனிதச் சொற்கள் மற்றும் அசைகளின் வடிவில் இருக்கும்} மந்திரன் {மந்தரன்} நீயே, (வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் வடிவில்) அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதிகாரம் கொடுப்பவன் {ப்ரமாணன்} நீயே, உயர்ந்த தவம் {பரமதபன்} நீயே.(38-9)
யோகத்தில் அர்ப்பணிப்புமிக்கவன் {யோகி} நீயே, (தியான யோகத்தின் மூலம்) பிரம்மத்தில் கலக்கச் செய்பவன் {யோஜ்யன்} நீயே, (காரணங்களுக்குக் காரணனான) பெரும் வித்து {மஹாபீஜன்} நீயே, அண்டத்தில் வெளிப்பட்ட வடிவத்தில் வெளிப்படாததைக் காட்டுபவன் {மஹாரேதஸ்} நீயே, அளவிலா வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே, தங்கத்தையே வித்தாகக் கொண்டவன் {ஸ்வர்ணரேதஸ்} நீயே, (அனைத்துப் பொருட்களாகவும் இருந்து பேரறிவைக் கொண்டவனாக இருப்பதால்) அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்} நீயே, அனைத்துப் பொருட்களின் காரணன் {ஸுபீஜன்} நீயே, இம்மையிலிருந்து மறுமைக்குச் செல்லும் வழிமுறைகளுக்கான (அறியாமை மற்றும் ஆசை எனும்) செயல்பாட்டு வித்தாக இருப்பவன் {பீஜவாஹனன்} நீயே.(39-10) பத்துக் கரங்களைக் கொண்டவன் {தசபாஹு} நீயே, (எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதால்) இமைக்காத கண்களைக் கொண்டவன் {அநிமிஷன்} நீயே, நீலமிடறு (தொண்டை) கொண்டவன் {நீலகண்டன்} நீயே, உமையின் தலைவன் {உமாபதி} நீயே, அண்டத்தில் தோன்றும் எண்ணற்ற வடிவங்கள் அனைத்தின் தோற்றுவாயும் {விஷ்வரூபன்} நீயே, சுயமேன்மை கொண்டவன் {ஸ்வயம்ஸ்ரேஷ்டன்} நீயே, வலிமையில் வீரன் {பலவீரன்} நீயே, செயலாற்றலற்ற பருப்பொருள் {பலன்} நீயே, (சாங்கியர்களால் சொல்லப்படும்) தத்துவங்கள் அனைத்தும் {கணன்} நீயே.(40-11) தத்துவங்களை விதிப்பவனும் ஆள்பவனும் {கணகர்த்தன்} நீயே, கணங்கள் என்றழைக்கப்படும் உன் தொண்டர்களின் தலைவன் {கணபதி} நீயே, முடிவிலா வெளியை மறைப்பவன் {திக்வாஸஸ்} நீயே, ஆசையின் தேவனான காமன் நீயே, (ஞானத்தையே தவமாகக் கொண்ட) மந்திரங்களை அறிந்தவன் {மந்தரவித்} நீயே, (ஆத்மாவின் இயல்பையும், குணங்களையும் உறுதி செய்வதும், ஆத்மா அல்லாதவற்றிலிருந்து வேறுபடுவதுமான தத்துவமாக நீயே இருப்பதால்) உயர்ந்த மந்திரம் {பரமோமந்த்ரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் உன் ஆத்மாவில் இருந்து பிறந்ததால்) அண்டத்தின் காரணன் {ஸர்வபாவகரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் மறையும்போது, வெளிப்படாத பிரம்மமான உன்னிலேயே கலப்பதால்) அண்டத்தை அழிப்பவன் {ஹரன்} நீயே.(41-12)
உன் கரங்களில் ஒன்றில் கமண்டலம் தரிப்பவன் {கமண்டலுதரன்} நீயே. மற்றொன்றில் வில்லைத் தரிப்பவன் {தந்வி} நீயே. மற்றொன்றில் கணைகளைத் தரிப்பவன் {பாணஹஸ்தன்} நீயே. மற்றொன்றில் மண்டையோட்டைத் தரிப்பவன் {கபாலவாந்} நீயே. வஜ்ரத்தைத் தரிப்பவன் {அசநி} நீயே. நூறு கொல்லியை {சதக்நியைத்} தரிப்பவன் நீயே. வாள் தரிப்பவன் {கட்கி} நீயே. போர்க்கோடரி தரிப்பவன் {பட்டிசி} நீயே. சூலந்தரித்தவன் {ஆயுதங்கள் அனைத்தையும் தரிப்பவன்} {ஆயுதி} நீயே. துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே.(42-13) உன் கரங்களில் ஒன்றில் வேள்விக் கரண்டியைக் கொண்டிருப்பவன் {ஸ்ருவஹஸ்தன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {ஸுரூபன்} நீயே. அபரிமிதமான சக்தியைக் கொண்டவன் {தேஜஸ்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரை அலங்கரிக்கும் அனைத்தையும் அளவில்லாமல் கொடுப்பவன் {தேஜஷ்கரன்} நீயே. தலையில் தலைப்பாகை அணிபவன் {உஷ்ணீஷி} நீயே. அழகிய முகம் கொண்டவன் {ஸுவக்த்ரன்} நீயே. காந்தியிலும் பலத்திலும் பெருகுபவன் {உதக்ரன்} நீயே. எளிமையும், பணிவும் கொண்டவன் {விந்தன்} நீயே.(43-14) மிக நெடியவன் {தீர்க்கன்} நீயே. புலன்களையே கதிர்களாகக் கொண்டவன் {ஹரிகேசன்} நீயே. ஆசான்களில் பேராசான் {ஸுதீர்த்தன்} நீயே. (இருப்பிலுள்ள தூய இன்ப நிலையான)[3] பரப்பிரம்மம் {க்ருஷ்ணன்} நீயே. (செல்வந்தனான ஒரு வைசியனால் அவமதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்த பிராமணனுக்கு ஆறுதலளிக்க) நரியின் வடிவை ஏற்றவன் {ஸ்ருகாலரூபன்} நீயே. (தவங்களில் இருந்து பெறும்) பலத்திற்காகக் காத்திராமல் நோக்கங்களை அனைத்தும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தார்த்தன்} நீயே. (துறவின் குறியீடாக) மொட்டைத் தலையுடன் இருப்பவன் {முண்டன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவன் {ஸர்வசுபங்கரன்} நீயே.(44-15)பிறப்பற்றவன் {அஜன்} நீயே. எண்ணற்ற வடிவங்களைக் கொண்டவன் {பஹுரூபன்} நீயே. அனைத்து வகை நறுமணங்களையும் மேனியில் தரிப்பவன் {கந்தகாரி} நீயே. (மன்னன் பகீரதனின் மெய்யுறுதியுடன் கூடிய வேண்டுதலால் கங்கை நீரைக் கொடுத்தாலும்) சொர்க்கத்தில் இருந்து கங்கை ஆறு பாய்ந்த போது, தலையில் உள்ள சடாமுடியில் அதனை உறிஞ்சிக் கொண்டவன் {கபர்த்தி} நீயே. அரசையும், தலைமைத்துவத்தையும் கொடுப்பவன் நீயே. காமமடக்கும் கடும் நோன்பிலிருந்து ஒருபோதும் வீழாத பிரம்மச்சாரி {ஊர்த்வரேதஸ்} நீயே. பாலுறவுக் காமம் அடக்கலில் புகழ்பெற்றவன் {மேல்நோக்கிய குறியைக் கொண்டவன்} {ஊர்த்வலிங்கன்} நீயே. எப்போதும் அண்ணாந்து {மல்லாந்து / மேல்நோக்கிப்} படுப்பவன் {ஊர்த்வசாயி} நீயே. பலத்தையே வசிப்பிடமாகக் கொண்டவன் {நபஸ்தலன்} நீயே.(45-16) தலையில் மூன்று சடைகளைக் கொண்டவன் {த்ரிஜடி} நீயே. மரவுரி தரித்தவன் {சீரவாஸஸ்} நீயே. (கடுஞ்சீற்றத்தின் விளைவால்) ருத்திரன் நீயே. தேவர்களின் படைத்தலைவன் {ஸேநாபதி} நீயே, அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விபு} நீயே. பகலில் உலவுபவன் {அஹஸ்சரன்} நீயே. இரவில் உலவுபவனும் {நக்தஞ்சரன்} நீயே[4]. கடுங்கோபம் கொண்டவன் {திக்மமந்யு} நீயே. (வேத கல்வி மற்றும் தவங்களால் பிறக்கும்) பளிச்சென்ற பிரகாசம் கொண்டவன் {ஸுவர்ச்சலன்} நீயே.(46-17) உன் புனித நகரான வாராணசியை அழிப்பதற்காக மதங்கொண்ட யானையின் வடிவில் வந்த பெரும் அசுரனைக் கொன்றவன் {கஜஹன்} நீயே. அண்டத்தை ஒடுக்குபவர்களான தைத்தியர்களைக் கொல்பவன் {தைத்யஹன்} நீயே. அண்டத்தை அழிக்கும் காலன் நீயே. அண்டத்தின் தலைமை ஆணையாளன் {லோகதாதா} நீயே. சிறந்த சாதனைகள் அனைத்தின் சுரங்கம் {குணாகரன்} நீயே. சிங்கம் மற்றும் புலியின் வடிவம் {ஸிம்மசார்த்தூலரூபன்} நீயே. {குருதியால் நனைந்த} யானைத் தோலை உடுத்தியிருப்பவன் {ஆர்த்ரசர்மாம்பராவ்ருதன்} நீயே.(47-18) காலத்தின் தடுக்கப்பட முடியாத ஆதிக்கத்தைக் கடந்த, காலத்தை வஞ்சிக்கும் யோகி {காலயோகி} நீயே. அசல் ஒலி {மஹாநாதன்}நீயே. விருப்பங்கள் அனைத்தின் கனியும் {ஸர்வகாமன்} நீயே. நான்குவழிகளில் துதிக்கப்படுபவன் {சதுஷ்பதன்} நீயே[5]. (வேதாளம் மற்றும் பிறவற்றைப் போன்ற) இரவுலாவி {நிசாசரன்} நீயே. சடலங்களின் துணையுடன் திரிபவன் {பிரேதசாரி} நீயே. பூதங்களின் துணையுடன் திரிபவன் {பூதசாரி} நீயே. இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும் உயர்ந்த தலைவன் {மஹேஸ்வரன்} நீயே.(48-19) இருப்பிலுள்ள மற்றும் இருப்பில் இல்லாத அனைத்துப் பொருட்களின் வடிவில் உன்னை முடிவிலாமல் பெருக்கிக் கொண்டவன் {பஹுபூதன்} நீயே. மஹத் மற்றும் ஐம்பூதங்களின் எண்ணற்ற கலவைகளைத் தாங்குபவன் {பஹுதரன்} நீயே. ராஹு என்ற பெயரில் அறியப்படும் ஆதி அறியாமை, அல்லது தமஸ் {ஸ்வர்ப்பாநு} நீயே. அளவற்றவன் {அமிதன்} நீயே. விடுதலை அடைந்தவர்களால் {முக்தர்களால்} அடையப்படும் உயர்ந்த கதி நீயே. நடன விரும்பி {ந்ருத்யப்ரியன்} நீயே. எப்போதும் நடனமாடிக் கொண்டிருப்பவன் {நித்யநர்த்தன்} நீயே. பிறரை நடனமாடச் செய்பவன் {நர்த்தகன்} நீயே. அண்டத்தின் நண்பன் {ஸர்வலாலஸன்} நீயே.(49-20)அமைதியான, மென்மையான குணம் கொண்டவன் {கோரன்} நீயே. அண்டத்தை உண்டாக்கவும், அழிக்கவும் வேண்டிய தவப் பலத்தைக் கொண்டவன் {மஹாதபஸ்} நீயே. மாயையின் பந்தங்களால் உயிரினங்கள் அனைத்தையும் கட்டியிருப்பவன் {பாசன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {நித்யன்} நீயே. (கைலாச) மலையில் வசிப்பவன் {கிரிருஹன்} நீயே. பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், வெளி போன்ற பொருட்கள் அனைத்திலும் பற்றற்றவனும் {நபன்} நீயே. ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரஹஸ்தன்} நீயே. வெற்றி {விஜயன்} நீயே. சோம்பலற்றவனும், விடாமுயற்சி தேவைப்படும் காரியங்களில் தாமதம் செய்யாதவனும் {வ்யவஸாயன், அதந்த்ரிதன்} நீயே.(50-21) அச்சமற்றவன் {அதர்ஷணன்} நீயே. அச்சமும் {தர்ஷணாத்மா} நீயே. பலியின் வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் {யஜ்ஞஹன்} நீயே. பக்தர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமநாசகன்} நீயே. தக்ஷனின் வேள்வியை அழித்தவன் {தக்ஷாயாகபஹாரி} நீயே. இனிமையானவன் {ஸுஸஹன்} நீயே. சற்றே இனிமையானவன் {சார்பற்றவன்} {மத்யமன்} நீயே.(51-22) கடுஞ்சீற்றம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் சக்தியை அபகரிப்பவனும் {தேஜோபஹாரி} நீயே. அசுரன் பலனைக் கொன்றவன் {பலஹன்} நீயே. எப்போதும் மகிழ்ச்சிமிக்கவன் {முதிதன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் செல்வத்தின் {அர்த்தன்} வடிவம் நீயே. ஒருபோதும் வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. உன்னைத் தவிரத் துதிக்கத்தக்கவன் எவனும் இல்லாதவன் {அவரன்} நீயே. (பெருங்கடலின் வடிவில்) ஆழ்ந்த முழக்கங்களை இடுபவன் {கம்பீரதோஷன்} நீயே. (வெளியின் வடிவில் இருப்பதால்) எவராலும் அளக்க முடியாத ஆழத்தைக் கொண்டவன் {கம்பீரன்} நீயே. எவராலும் அளக்க முடியாத பலமும், வலிமையும் கொண்ட துணைவர்கள் மற்றும் காளையைக் கொண்டவன் {கம்பீரபலவாஹநன்} நீயே.(52-23) (மேல் நோக்கிய வேர்களைக் கொண்டதும், கீழ்நோக்கித் தங்கும் கிளைகளைக் கொண்டதுமான உலக மரம் {ந்யக்ரோதரூபன்} நீயே. ஆலமரம் {ந்யக்ரோதன்} நீயே. அண்டத்திற்கு அழிவு நேரும் வேளையில், அளவற்ற நீரில் ஓர் ஆலம் இலையில் உறங்கிக் கொண்டிருப்பவன் {வ்ருக்ஷகர்ணஸ்திதி} நீயே. ஹரி, ஹரன், கணேசன், அர்க்கன், அக்னி, வாயு முதலி வடிவங்களில் வழிபாட்டாளர்கள் அனைவருக்கும் கருணை காட்டுபவன் {விபு} நீயே. (கடலைகளை மெல்வதைப் போல எண்ணற்ற உலகங்களை மென்று விரைவாக அவற்றை விழுங்க வல்லவன் என்பதால்) கூரிய பற்களைக் கொண்டவன் {ஸுதீக்ஷ்ணதசநன்} நீயே. வடிவத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவு கொண்டவன் {மஹாகாயன்} நீயே. அண்டத்தை உடனே விழுங்கும் அளவுக்குப் பெரிய வாயைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே.(53-24) எவனுடைய துருப்புகள் எங்கும் துதிக்கப்படுமோ அவன் {விஷ்வக்ஸேநன்} நீயே. யானைகளின் இளவரசன் கைப்பற்றப்பட்ட போது தேவர்களின் அச்சங்கள் அனைத்தையும் அகற்றியவன் {ஹரி} நீயே. அண்டத்தின் வித்து {யஜ்ஞன்} நீயே. போர்க்கொடியில் சின்னமாகக் கொண்ட அதே காளையை வாகனமாகவும் கொண்டவன் {ஸம்யுகாபீடவாஹநன்} நீயே. அக்னியையே ஆன்மாவாகக் கொண்டவன் {தீக்ஷ்ணதாபன்} நீயே. தேரில் பச்சை குதிரைகள் பூட்டப்பட்ட சூரியன் {ஹர்யச்வன்} நீயே. ஜீவனின் நண்பன் {ஸஹாயன்} நீயே. அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய முறையான காலத்தை அறிந்தவன் {கர்மகாலவித்} நீயே.(54-25)
(கொண்டாடப்படும் சக்கரத்தை அடைவதற்காக) விஷ்ணுவால் துதிக்கப்பட்டவன் நீயே. விஷ்ணு நீயே. {ப்ரஸாதிதன், யஜ்ஞன்} பெருங்கடல் {ஸமுத்ரன்} நீயே. நெருப்பைக் கக்கிக் கொண்டும், வேள்வி நெய்யைப் போல உப்பு நீரைக் குடித்துக் கொண்டும் பெருங்கடலுக்குள் திரியும் குதிரைத் தலை {படபாமுகன்} நீயே. அக்னியின் நண்பனான காற்று {வாயு / ஹுதாசநஸஹாயன்} நீயே. மென்மையான தென்றலாலும் கலக்கப்படாதபோது ஓய்ந்திருக்கும் பெருங்கடலைப் போல அமைதியான ஆன்மா கொண்டவன் {ப்ரசாந்தாத்மா} நீயே. மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யெனும் ஆகுதிகளைப் பருகுபவன் {ஹுதாசநன்} நீயே.(55-26) அணுகப்பட முடியாதவன் {உக்ரதேஜஸ்} நீயே. முடிவிலா அண்டத்தில் பிரகாசத்தைப் பரப்புபவன் {மஹாதேஜஸ்} நீயே. போரில் வல்லவன் {ஜந்யன்} நீயே. வெற்றியடையும்பொருட்டுப் போரில் எப்போது ஈடுபட வேண்டும் என்ற காலத்தை நன்கறிந்தவன் {விஜயகாலவித்} நீயே. கோள்களின் நகர்வுகளைக் குறித்த அறிவியல் {ஜோதிடம்} {ஜ்யோதிஷாம்அயநன்} நீயே. வெற்றியின் வடிவம் {ஸித்தி} நீயே. (உடல் ஒருபோதும் சிதைவடையாதவனாக இருப்பதால்) எப்போதும் உடலைக் கொண்டவன் {ஸர்வவிக்ரஹன்} நீயே.(56-27) தலையில் குடுமி தரிப்பதால் இல்லறத்தான் {கிருஹஸ்தன் / சிகி} நீயே. தலை மொட்டையாக இருப்பதால் சந்நியாசி {முண்டி} நீயே. (வானப்ரஸ்தனாக இருப்பதால்) தலையில் சடாமுடி தரிப்பவன் {ஜடி} நீயே. (உன்னோடு அடையாளங்காணப்படும் அறவோர் நடந்து செல்லும் பாதை பிரகாசமானதாக இருப்பதால்) உன் கடுங்கதிர்களுக்காகப் புகழ்பெற்றவன் {ஜ்வாலி} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் உடலில் பொதிந்திருக்கும் இதய ஆகாயத்தில் தோன்றுபவன் {மூர்த்திஜன்} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் மண்டையோட்டுக்குள் (மூளைக்குள்) நுழைபவன் {மூர்த்தகன்} நீயே. வயதின் தோல்சுருக்கங்களைத் தரித்தவன் {பலி} நீயே. மூங்கில் புல்லாங்குழலைத் தரிப்பவன் {வேணவி} நீயே. சிறு முரசும் {பணவமும்} கொண்டவன் {பணவி} நீயே. தாளி என்றழைக்கப்படும் இசைக்கருவியைத் தரிப்பவன் {தாளி} நீயே. தானியங்களின் உமி நீக்க மரக்கலத்தைப் பயன்படுத்துபவன் {கலி} நீயே. யமனை மறைக்கும் மாயையை மறைப்பவன் {காலகடங்கன்} நீயே[6].(57-28) ஆகாயக் கோள்களால் அமைந்த காலச்சக்கர நகர்வுகளில் எப்போதும் புத்தியைச் செலுத்துவதால் கணியன் {சோதிடன் / நக்ஷத்ரவிக்ரஹமதி} நீயே. சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களின் விளைவாக இருக்கும் பொருட்களில் புத்தியைச் செலுத்தும் ஜீவன் {குணபுத்தி} நீயே. அழிவேற்படும்போதும் அனைத்துப் பொருட்களும் எதில் கலக்குமோ அந்நிலை {லயன்} நீயே. எவ்வகை மாற்றத்திற்கும் உட்படும் எந்தப் பொருளையும் தன்னில் கொள்ளாத நிலையாவன் {அகமன்} நீயே. அனைத்து உயிரினங்களின் தலைவன் {ப்ரஜாபதி} நீயே. பரந்த அண்டம் முழுவதும் பரவும் கரங்களைக் கொண்டவன் {விஸ்வபாஹு} நீயே. நுணுக்கமான எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுபவன் {விபாகன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகன்} நீயே. (படைக்கும் பொருட்களை அனுபவிக்காதவனாக இருப்பதால்) வாயில்லாதவன் {முகமில்லாதவன் / அறிவாயிருப்பவன் {அமுகன்} நீயே.(58-29) உலகப் பந்தங்களில் இருந்து உயிரினங்களை விடுவிப்பவன் {விமோசநன்} நீயே. எளிமையாக அடையத்தக்கவன் {ஸுஸரணன்} நீயே. தங்கக் கவசத்துடன் வெளிப்படுபவன் {ஹிரண்யகவசோத்பவன்} நீயே. லிங்கச் சின்னத்தில் தோன்றுபவன் {மேட்ரஜன்} நீயே. நீர்க்கோழிகள் மற்றும் விலங்குகளைத் தேடி காடுகளில் திரிபவன் {பலசாரி} நீயே. மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருப்பவன் {மஹீசாரி} நீயே. எங்குமிருப்பவன் {ஸ்ருதன்} நீயே.(59-30)மூவுலகங்களிலும் முழக்கப்படும் எக்காளங்கள் அனைத்தினாலும் உண்டாக்கப்படும் முழக்கம் {ஸர்வதூர்யநிநாதி} நீயே. அனைத்து உயிரினங்களையும் உறவினர்களாகக் கொண்டவன் {ஸர்வாதோத்யபரிக்ரஹன்} நீயே. (சேஷன் என்றழைக்கப்படும் வலிமைமிக்க நாகனைப் போல நீ இருப்பதால்) பாம்பின் வடிவம் கொண்டவன் {வ்யாலரூபன்} நீயே. (ஜைகிஷவ்யரையோ, பிற யோகியரையோ போல) மலைக்குகைகளில் வாழ்பவன் {குஹாவாசி} நீயே. (தேவர்ப்படைத்தலைவன்) குஹனைப் போன்றவன் {குஹன்} நீயே. மலர் மாலைகளை அணிபவன் {மாலி} நீயே. உலகப் பொருட்களை அடைவதால் எழும் மகிழ்ச்சியை அனுபவிப்பவன் {தரங்கவிதன்} நீயே.(60-31) பிறப்பு, இறப்பு மற்றும் அழிவு என்ற மூன்று நிலைகளை அனைத்து உயிரினங்களும் எதனிலிருந்து பெறுகின்றனவோ அந்நிலை {த்ரிதசன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று கால நிலைகளில் தோன்றும், அல்லது இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்குபவன் {த்ரிகாலத்ருக்} நீயே. முற்பிறவி செயல்கள் மற்றும் தற்காலத்தில் செய்த செயல்கள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும், அறியாமை மற்றும் ஆசைகளில் உள்ள பற்றுகள் அனைத்தில் இருந்தும் உயிரினங்கள் விடுவிப்பவன் {கர்மஸர்வபந்தவிமோசநன்} நீயே. அசுரத் தலைவர்களைக் கட்டுபவன் {அஸுரேநத்ராணாம்பந்தநன்} நீயே. போரில் பகைவர்களைக் கொல்பவன் {யுதிசத்ருவிநாசகன்} நீயே.(61-32) ஞானத்தால் மட்டுமே அடையப்படுபவன் {ஸாங்க்யப்ரஸாதன்} நீயே. துர்வாசர்கள் {துர்வாஸர்} நீயே. அறவோர் அனைவராலும் பணிவிடை செய்யப்படுபவனும், துதிக்கப்படுபவனும் {ஸர்வஸாதுநிஷேவிதன்} நீயே. பிரம்மன் மற்றும் பிறரின் வீழ்ச்சிக்குக் காரணன் {ப்ரஸ்கந்தநன்} நீயே. செயல்களுக்குத் தகுந்த இன்ப துன்பங்களை அனைத்து உயிரினங்களுக்கும் நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பவன் {விபாகஜ்ஞன்} நீயே. ஒப்பற்றவன் {அதுல்யன்} நீயே. வேள்விகளில் கொடுக்கப்படும், பெறப்படும் பங்குகளை நன்கறிந்தவன் {யஜ்ஞபாகவித்} நீயே.(62-33) எங்கும் வசிப்பவன் {ஸர்வவாஸன்} நீயே. எங்கும் திரிபவன் {ஸர்வசாரி} நீயே. அழிவற்றவன் {த்ரோத்தமன்} நீயே. {துர்வாசன், வாஸவன், அமரன் நீயே} இமய மலைகளைப் போன்றவன் {ஹைமன்} நீயே. பசும்பொன்னைச் செய்பவன் {ஹேமகரன்} நீயே. செயல்களற்றவன் {அயஜ்ஞன்} நீயே. செயல்கள் அனைத்தின் கனிகளையும் உன்னில் தாங்குபவன் {ஸர்வதாரி} நீயே. தாங்குபவர்களாகக் கருதப்படும் முதன்மையான உயிரினங்கள் அனைத்தும் {தரோத்தமன்} நீயே.(63-34) குருதி தோய்ந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்} நீயே. முடிவிலா அண்டம் முழுவதும் பரவும் பார்வையுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்} நீயே. எப்போதும் வெற்றிவாகை சூடும் சக்கரங்களுடன் கூடிய தேரைக் கொண்டவன் {விஜயாக்ஷன்} நீயே. பெரும் கல்வியுடையவன் {விசாரதன்} நீயே. பணியாட்களான உன் பக்தர்களை ஏற்பவன் {ஸங்க்ரஹன்} நீயே. புலன்களை அடக்கி ஒடுக்குபவன் {நிக்ரஹன்} நீயே. செயல்படுபவன் {கர்த்தன்} நீயே. பாம்புகளாலான இழைகளையும் துணிகளையும் கொண்ட ஆடைகளை உடுத்துபவன் {ஸர்ப்பசீரநிவாஸநன்} நீயே.(64-35)
பரமன் {முக்யன்} நீயே. தேவர்களில் இறுதியானவன் {அமுக்யன்} நீயே. நன்கு வளர்ந்தவன் {தேஹன்} நீயே. காஹளம் {எக்காளம் / காளம் / காகளம்} என்றழைக்கப்படும் இசைக்கருவியைக் கொண்டவன் {காஹலி} நீயே. அனைத்து ஆசைகளையும் அளிப்பவன் {ஸர்வகாமதன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று கால நிலைகள் அனைத்திலும் அருளின் உடல்கொண்ட வடிவம் {ஸர்வகாலப்ரஸாதன்} நீயே. எப்போதும் நன்கு பயன்படுத்தப்படும் வலிமையைக் கொண்டவன் {ஸுபலன்} நீயே. (கிருஷ்ணனின் அண்ணனான) பலராமனின் வடிவத்தை ஏற்றவன் {பலரூபத்ருதன்} நீயே.(65-36) விரும்பப்படும் அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான விடுதலையாக {முக்தியாக}, அல்லது உயிரினங்கள் அடையும் உயர்ந்த கதிகள் அனைத்துமாக இருப்பவன் {ஸர்வகாமவரன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் கொடுப்பவன் {ஸர்வதன்} நீயே. திசைகள் அனைத்திலும் முகத்தைக் கொண்டவன் {ஸர்வதோமுகன்} நீயே. வெளி அல்லது அந்தப் பூதத்தின் மாறுபாடுகளில் இருந்து அனைத்து வடிவங்களும் உதித்ததைப் போலவே பல்வேறு உயிரினங்கள் எவனிடம் உதித்தவனவோ அவன் {ஆகாசநிர்விரூபன்} நீயே. உடல் என்றழைக்கப்படும் குழிக்குள் விழுபவன் {நிபாதி} நீயே. (உடலால்அமைந்த குழிக்குள் விழுந்து உன் பங்குக்கான கவலையைக் கடக்க முடியாதவனாக இருப்பதால்) ஆதரவற்றவன் {யாருக்கும் உட்படாதவன்} {அவசன்} நீயே. இதய ஆகாயத்தில் வசிப்பவன் {ககன்} நீயே.(66-37) மிகக் கொடிய வடிவம் கொண்டவன் {ரௌத்ரரூபன்} நீயே. அம்சு என்றழைக்கப்படும் தேவன் நீயே. அம்சுவின் தோழன் நீயே, ஆதித்தியன் என்றழைக்கப்படுபவன் நீயே. எண்ணற்ற கதிர்களைக் கொண்டவன் {பஹுரச்மி} நீயே. பளிச்சென்ற பிரகாசத்துடன் கூடியவன் {ஸுவர்ச்சஸி} நீயே. காற்றை விடப் பெரும் வேகம் கொண்டவன் {வஸுவேகன், மஹாவேகன்} நீயே. மனோ வேகம் கொண்டவன் {மநோவேகன்} நீயே. அறியாமையுடன் கூடிய அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {நிசாசரன்} நீயே.(67-38) ஒவ்வொரு உடலிலும் வசிப்பவன் {ஸர்வவாஸி} நீயே. செழிப்பைத் தோழனாகக் கொண்டு வசிப்பவன் {ஸ்ரீயாவாஸி} நீயே. அறிவையும், கல்வியைக் கற்பிப்பவன் {உபதேசகரன்} நீயே. முற்றான அமைதி குறித்த கல்வியைக் கற்பிப்பவன் {அகரன்} நீயே. (அமைதியைப் போதிப்பவனாக இருப்பதால்) உள்ளடங்கிப் பேசாதவன் {முநி} நீயே. ஆன்மாவைக் காண உடலைக் கடந்தவன் {ஆத்மநிராலோகன்} நீயே. நன்கு துதிக்கப்படுபவன் {ஸம்பக்நன்} நீயே. (கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {குபேரன்} அந்தக் கருவூலங்களை உன்னிடம் இருந்தே பெற்றதால்) ஆயிரங்கணக்கானவற்றைக் கொடுப்பவன் {ஸஹஸ்ரதன்} நீயே.(68-39) (கசியபர் மற்றும் வினதையின் மகனான கருடனாக இருப்பதால்) பறவைகளின் இளவரசன் {பக்ஷி} நீயே. உதவி செய்யும் நண்பன் {பக்ஷன்} நீயே. (ஆயிரம் சூரியர்கள் சேர்ந்தது போன்ற காந்தியைக் கொண்டவனாக இருப்பதால்) பெரும் பிரகாசம் கொண்டவன் {ரூபன், அதிதீப்தன்} நீயே. படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆசான் {விசாம்பதி} நீயே. பசிகளைத் தூண்டுபவன் {மயங்கச் செய்பவன்} {உந்மாதன்} நீயே. காம தேவன் {மதநன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் அழகிய பெண்களின் வடிவம் {காமன்} நீயே. உலகின் மரம் {அச்வதன்} நீயே. கருவூலங்களின் தலைவன் {அர்த்தகரன்} நீயே. புகழைக் கொடுப்பவன் {யசஸ்} நீயே.(69-40)
உயிரினங்கள் அனைத்தின் செயல்களுக்காக (இன்ப துன்பங்கள் என்ற வடிவில்) அவற்றின் கனிகளைப் பகிர்ந்தளிக்கும் தேவன் {வாமதேவன்} நீயே. நீ பகிர்ந்து கொடுக்கும் அந்தக் கனிகளும் {ப்ராக்} நீயே. (இருப்பில் ஏதும் இல்லாத காலத்தில் இருப்பதால்) மிகப் பழமையானவன் {தக்ஷிணன்} நீயே. மூவுலகங்களையும் ஓரடியில் மறைக்கத் தகுந்தவன் {வாமனே} நீயே. அசுரத் தலைவன் பலியை வஞ்சித்து (அவனது அரசுரிமையை அபகரித்து இந்திரனுக்கு மீட்டளித்தவனான குள்ளனும் {வாமநன்} நீயே. (சனத்குமாரர் மற்றும் பிறரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட யோகி {ஸித்தயோகி} நீயே. (வசிஷ்டர் மற்றும் பிறரைப் போல) பெரும் முனிவன் {மஹரிஷி} நீயே. (ரிஷபர் மற்றும் தத்தாத்ரேயர் ஆகியவர்களைப் போல) எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுபவன் {ஹித்தார்த்தன்} நீயே. (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) சந்நியாசி {ஸித்தஸாதகன்} நீயே.(70-41) துறவி வகைக் குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்டவன் {பிக்ஷு} நீயே. அத்தகைய குறியீடுகள் அற்றவன் {பிக்ஷுரூபன்} நீயே. துறவி வகையினரின் நடைமுறைகளைக் கடந்து நிற்பவன் {விபணன்} நீயே. அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் காப்பவன் {மென்மையானவன்} {ம்ருது} நீயே. (மகிமையையும், அவமதிப்பையும் ஒன்றாகவே கருதுபவனாதலால்) ஆசைகளேதும் அற்றவன் {அவ்யபன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் என்றழைக்கப்படுபவன் {மஹாஸேநன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் மீது இந்திரன் வஜ்ரத்தை ஏவியபோது, அவனது உடலில் இருந்து எழுந்த விசாகன் நீயே. அறுபது தத்துவங்கள் அல்லது அண்டத்தின் தலைமைப் பொருட்களை அனுபவிப்பவன் {ஷஷ்டிபாகன்} நீயே. (புலன்கள் அதனதன் செயல்பாடுகளுக்கு உன்னாலேயே வழிநடத்தப்படுவதால்) புலன்களின் தலைவன் {கவாம்பதி} நீயே.(71-42) (மலைகளைப் பிளக்கும்) வஜ்ரத்தைத் தரிப்பவன் {வஜ்ரஹஸ்தன்} நீயே. முடிவற்றவன் {விஷ்கம்பி} நீயே. போர்க்களத்தில் தைத்தியர் படையைக் கலங்கடிப்பவன் {சமூஸ்தம்பநன்} நீயே. தன் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும், எதிரிகளின் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும் தேரில் வலம் வந்து, அவர்களை அழித்து, நலமாகவும், பாதுகாப்பாகவும் திரும்பி வருபவன் {வ்ருத்தாவ்ருத்தசரன்} நீயே. (பிரம்ம அறிவின் விளைவால்) உலகப் பெருங்கடலின் அடியாழத்தை அறிந்தவன் {தாலன்} நீயே. (கிருஷ்ணன் பிறந்த குலத்தைத் தோற்றுவித்த) மது என்றழைக்கப்படுபவன் நீயே. தேனுக்கு ஒப்பான நிறத்தில் கண்களைக் கொண்டவன் {மதுகலோசநன்} நீயே.(72-43) பிருஹஸ்பதிக்கு அடுத்து பிறந்தவன் {வாசஸ்பத்யன்} நீயே. வேள்விகளில் அதர்யுக்கள் செய்யும் செயல்களைச் செய்பவன் {வாஜஸநன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களாலும் எப்போதும் துதிக்கப்படுபவன் {நித்யம் ஆஸ்ரமபூஜிதன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்பு மிக்கவன் {ப்ரம்மசாரி} நீயே. (துறவியாக இருக்கும் விளைவால்) உலகில் மனிதர்களின் வசிப்பிடங்களில் திரிபவன் {லோகசாரி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வசாரி} நீயே. வாய்மை அறிந்தவன் {விசாரவித்} நீயே.(73-44) ஒவ்வொரு இதயத்தையும் அறிந்து, அவற்றுக்கு வழிகாட்டுபவன் {ஈசாநன்} நீயே. மொத்த அண்டத்திலும் பரவி இருப்பவன் {ஈச்வரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தின் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்களுக்கான கனிகளை அவற்றுக்கு வெகுமதியாகக் கொடுப்பதற்காக அச்செயல்களைத் திரட்டிச் சேகரிப்பவன் {காலன்} நீயே. அண்ட அழிவைப் பின்தொடரும் இரவிலும் உயிரோடு இருப்பவன் {நிசாசாரி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரித்தவன் {பிநாகவாந்} நீயே. உன் கணைகள் எட்டும் இலக்குகளான தைத்தியர்களுடனும் வசிப்பவன் {நிமித்தஸ்தன்} நீயே. செழிப்பின் ஆசான் {நிமித்தன்} நீயே. {நந்தி, நந்திகரன்}, ராமாவதாரத்தில் ராவணனுக்கு எதிரான படையெடுப்பில் பெருங்குரங்கின் உதவி பெற்ற விஷ்ணு {ஹரி} நீயே.(74-45)
உன் தோழர்களாக இருக்கும் கணங்களின் தலைவன் {நந்தீஸ்வரன்} நீயே. பல்வேறு கணங்கள் ஒவ்வொன்றும் {நந்தி} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவன் {நந்தநன்} நீயே. {நந்திவர்த்தநன்}. அனைவரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவன் நீயே {பகஹாரி} நீயே. இந்திரனைப் போன்ற உயர்ந்தவர்களின் அரசுரிமையையும். செழிப்பை பறிப்பவன் {நிஹந்தன்} நீயே. மரணம் என்ற வடிவில் அண்டத்தை அழிப்பவனாக இருப்பவன் {காலன்} நீயே. அறுபத்து நான்கு கலைகளில் வசிப்பவன் நீயே. மிகப் பெரியவன் {ப்ரம்மன்} நீயே. (முப்பாட்டன்களின் தந்தையாக இருப்பதால்) பெரும்பாட்டன் {பிதாமஹன்} நீயே. {சதுர்முகன்}.(75-46) தேவர்களாலும். அசுரர்களாலும் துதிக்கப்படும் பெரும் லிங்கம் {மஹாலிங்கன்} நீயே. ஏற்புடைய அழகிய குணங்களைக் கொண்டவன் {சாருலிங்கன்} நீயே. இருப்பிலுள்ள அனைத்துக் கருத்துகளுக்கும் உள்ள பல்வேறு வகைச் சாட்சிகளைப் புரிந்து கொள்ளச் செய்பவன் {லிங்காத்யக்ஷன்} நீயே. பார்வை மற்றும் பிற புலன்களின் மூலம் பெறப்படும் கருத்துக்ள அனைத்தின் தலைவன் {ஸுராத்யக்ஷன்} நீயே. (புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் ஈர்த்து. அவ்விடத்தில் அவை அனைத்தையும் கலப்பதற்கு உன் துணை தேவை என்பதால்) யோகத்தின் தலைவன் {யோகாத்யக்ஷன்} நீயே. (யுகங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்து) கிருதம் மற்றும் பிற யுகங்களைத் தாங்குபவன் {யுகாவஹன்} நீயே.(76-47) (நற்செயல் மற்றும் தீச்செயல்கள் அனைத்தின் கனிகளையும் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) வித்துகளின் தலைவன் {பீஜாத்யக்ஷன்} நீயே. அத்தகைய வித்துகளின் மூலக் காரணன் {பீஜகர்த்தன்} நீயே. ஆன்மா தொடர்பாகச் சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள வழிகளில் செயல்படுபவன் {அத்யாத்மாநுகதன்} நீயே. வலிமைக்கும். பிற குணங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பலன்} நீயே. மஹாபாரதம் மற்றும் பிற வகை வரலாறுகள் அனைத்தும் {இதிஹாஸன்} நீயே. மீமாம்ஸை என்றழைக்கப்படும் சாத்திரங்கள் {கல்பன்} நீயே. (இயக்கவியலை நிறுவிய) கௌதமர் நீயே. சந்திரனின் பெயரில் உள்ள இலக்கணப் பெரும் சாத்திரத்தின் ஆசான் {நிசாகரன்} நீயே.(77-48) எதிரிகளைத் தண்டிப்பவன் {தம்பன்} நீயே. எவராலும் தண்டிக்கப்பட முடியாதவன் {அதம்பன்} நீயே. அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்திலும் உண்மையாக இருப்பவன் {வைதம்பன்} நீயே. அர்ப்பணிப்பு கொண்டோருக்குக் கீழ்ப்படிபவன் {வஸ்யன்} நீயே. பிறரை அடக்க வல்லவன் நீயே {வஸகரன்} நீயே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் சச்சரவுகளுக்கு ஒத்திசைபவன் {கலி} நீயே. (பூலோகம் முதலான) பதினான்கு உலகங்களைப் படைத்தவன் நீயே {லோககர்த்தன்} நீயே. பிரம்மன் முதல் (புல் மற்றும் துரும்பைப் போன்ற) இழிந்த தாவர வடிவங்கள் ஈராக அனைத்து உயிரினங்களையும் பேணிக் காப்பவன் {பசுபதி} நீயே. ஐம்பூதங்களைப் படைத்தவன் {மஹாகர்த்தன்} நீயே. (பற்றற்றவனாக எப்போதும் இருப்பதால்) எதையும் ஒருபோதும் அனுபவிக்காதவன் {அநௌஷதன்} நீயே.(78-49) அழிவற்றவன் {அக்ஷரன்} நீயே. இன்பநிலையின் உயர்ந்த வடிவம் {பரமம்ப்ரம்ம} நீயே. வலிமையில் செருக்குடைய தேவன் {பலவத்} நீயே. சக்ரன் நீயே. அறநெறி சாத்திரங்களில் காணப்படுவதும், குற்றவாளிகளைப் பீடிப்பதுமான தண்டனை {நீதி} நீயே. உலகத்தில் நிலவும் கொடுங்கோன்மையின் வடிவம் {அநீதி} நீயே. தூய ஆன்மா கொண்டவன் {சுத்தாத்மா} நீயே. (அனைத்து வகைக் களங்கங்களில் இருந்தும் மேம்பட்டவனான) களங்கமற்றவன் {சுத்தன்} நீயே. துதிக்கப்படத் தகுந்தவன் {மாந்யன்} நீயே. இடையறாமல் தோன்றி மறையும் உலகம் {கதாகதன்} நீயே.(79-50)
பெருமளவு அருளைக் கொண்டவன் {பஹுப்ரஸாதன்} நீயே. நல்ல கனவுகளைக் கொண்டவன் {ஸுஸ்வப்நன்} நீயே. அண்டத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி {தர்ப்பணன்} நீயே. அக மற்றும் புறப்பகைவர்கள் அனைவரையும் அடக்குபவன் {அமித்ரஜித்} நீயே. வேதத்தைப் படைத்தவன் {வேதகாரன்} நீயே. தந்திரங்களிலும், புராணங்களிலும், மனிதமொழி வடிவிலும் உள்ள சாற்று மொழியைப் படைத்தவன் {மந்த்ரகாரன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வித்வாந்} நீயே. போரில் எதிரிகளைக் கலங்கடிப்பவன் {ஸமரமர்த்தநன்} நீயே.(80-51) அண்ட அழிவுக் காலத்தில் தோன்றும் பயங்கர மேகங்களில் வசிப்பவன் {மஹாமேகநிவாஸி} நீயே. (அண்ட அழிவைக் கொண்டு வரும் விளைவால்) மிகப் பயங்கரன் {மஹாகோரன்} நீயே. மனிதர்கள் அனைவரையும், அனைத்துப் பொருட்களையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வெல்பவன் {வசீகரன்} நீயே. பேரழிவை உண்டாக்குபவன் {அக்நிஜ்வாலன்} நீயே. நெருப்பையே சக்தியாகக் கொண்டவன் {மஹாஜ்வாலன்} நீயே. நெருப்பைவிட வலிய சக்தி கொண்டவன் {அதிதூம்ரன்} நீயே. அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்பு {ஹுதன்} நீயே. வேள்வி ஆகுதிகளின் மூலம் நிறைவடைய வல்லவன் {ஹவி} நீயே.(81-52) மந்திரங்களின் உதவியுடன் வேள்விகளில் ஊற்றப்படும் நீரும், பிற நீர்மங்களும் {வ்ருஷ்ணன்} நீயே. நல்ல மற்றும் தீய செயல்களுடன் தொடர்புடைய கனிகளைச் சிதறடிக்கும் அற தேவனின் வடிவத்தில் இருப்பவன் நீயே, பேரின்பத்தைக் கொடுப்பவன் {சங்கரன்} நீயே. எப்போதும் பிரகாசத்துடன் கூடியவனும் {நித்யம்வர்ச்சஸ்வி} நீயே. நெருப்பின் வடிவம் {தூமகேதநன்} நீயே. வைடூரிய நிறம் கொண்டவன் {நீலன்} நீயே. லிங்கச் சினத்தில் எப்போதும் இருப்பவன் {அங்கலுப்தன்} நீயே. அருள் நிலையின் ஊற்றுக்கண் {சோபநன்} நீயே. நோக்கங்களைச் செயல்படுத்துவதில் எதனாலும் கலங்கடிக்கப்பட இயலாதவன் {நிரவக்ரஹன்} நீயே.(82-53) அருளை வழங்குபவன் {ஸ்வஸ்திதன்} நீயே. அருளின் வடிவம் {ஸ்வஸ்திபாவன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் பங்கு கொடுக்கப்படுபவன் {பாகி} நீயே. வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் ஒவ்வொரு பங்கையும் பகிர்பவன் {பாககரன்} நீயே. பெரும் வேகம் கொண்டவன் {லகு} நீயே. அனைத்துப் பொருட்களிலும் தொடர்பறுந்தவன் {பற்றற்றவன்} {உத்ஸங்கன்} நீயே. வலிமைமிக்க உறுப்புகளைக் கொண்டவன் {மஹாங்கன்} நீயே. உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுபவன் {மஹாகர்ப்பபராயணன்} நீயே.(83-54) (விஷ்ணுவின் வடிவத்தில் இருக்கும்) கரிய நிறத்தவன் {க்ருஷ்ணவர்ணன்} நீயே. (கிருஷ்ணனின் மகனான சாம்பனின் வடிவத்தில் இருக்கும்) வெண்ணிறத்தவன் {ஸுவர்ணன்} நீயே. உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் புலன்கள் {ஸர்வதேஹிநாம் இந்த்ரியன்} நீயே. பெரும் பாதம் கொண்டவன் {மஹாபாதன்} நீயே. பெருங்கரங்களைக் கொண்டவன் {மஹாஹஸ்தன்} நீயே. பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே. பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே.(84-55)
பெருந்தலை கொண்டவன் {மஹாமூர்த்தன்} நீயே. பேரளவுகளைக் கொண்டவன் {மஹாமாத்ரன்} நீயே. பரந்த பார்வையைக் கொண்டவன் {மஹாநேத்ரன்} நீயே. அறியாமையற்ற இரவின் இல்லம் {நிசாலயன்} நீயே. அழிப்பவனை அழிப்பவன் / யமனுக்கு யமன் {மஹாந்தகன்} நீயே. பெருங்காதுகளைக் கொண்டவன் {மஹாகர்ணன்} நீயே. பெரிய உதடுகளைக் கொண்டவன் {மஹோஷ்டன்} நீயே. பெரும் கன்னங்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(85-56) பெரும் மூக்கைக் கொண்டவன் {மஹாநாஸன்} நீயே. பெரும் தொண்டை கொண்டவன் {மஹாகம்பு} நீயே. பெரும் கழுத்தைக் கொண்டவன் {மஹாக்ரீவன்} நீயே. உடலின் பற்றுகளை அறுப்பவன் {ச்மசாநபாக்} நீயே. பரந்த மார்பைக் கொண்டவன் {மஹாவக்ஷஸ்} நீயே. பரந்த நெஞ்சம் {மஹோரஸ்கன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மா {அந்தராத்மா} நீயே. மடியில் மானைக் கொண்டவன் {ம்ருகாலயன்} நீயே.(86-57) மரத்தில் கனிகள் தொங்குவதைப் போல எண்ணற்ற உலகங்கள் எதில் தொங்குமோ அவன் {லம்பநன்} நீயே. அண்ட அழிவின் போது அண்டத்தை விழுங்க உதடுகளைத் திறப்பவன் {லம்பிதோஷ்டன்} நீயே. {மஹாமாயன்}. பாற்கடல் {பயோநிதி} நீயே. பெரிய பற்களைக் கொண்டவன் {மஹாதந்தன்} நீயே. பெரிய தாடைகளைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. பெரிய நாவைக் கொண்டவன் {மஹாஜிஹ்வன்} நீயே. பெரிய வாயைக் கொண்டவன் {மஹாமுகன்} நீயே.(87-58) பெரிய நகங்களைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே. பெரிய மயிர்களைக் கொண்டவன் {மஹாரோமன்} நீயே. முடிவிலா நீளம் கொண்ட முடிகளைக் கொண்டவன் {மஹாகேசன்} நீயே. பெரும் வயிறு படைத்தவன் {மஹாகோசனே} நீயே, பெரும் நீளம் கொண்ட சடாமுடி தரித்தவன் {மஹாஜடன்} நீயே. எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஸந்நன்} நீயே. அருளின் வடிவம் {ப்ரஸாதன்} நீயே. நம்பிக்கையின் வடிவம் {ப்ரத்யயன்} நீயே. (போரில் ஆயுதமாக அல்லது) வில்லாக மலைகளைக் கொண்டவன் {கிரிஸாதநன்} நீயே.(88-59) பிள்ளையிடம் தாயைப் போல அனைத்து உயிரினங்களிடமும் அன்பு நிறைந்தவன் {ஸ்நேஹநன்} நீயே. அன்பேதும் இல்லாதவன் {அஸ்நேஹநன்} நீயே. வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. தியான (யோகத்தில்) எப்போதும் அர்ப்பணிப்புள்ளவன் {மஹாமுநி} நீயே. உலக மரத்தின் வடிவம் கொண்டவன் {வ்ருக்ஷாகாரன்} நீயே. உலக மரத்தால் குறிப்பிடப்படுபவன் {வ்ருக்ஷகேது} நீயே. (பூதங்கள் அனைத்திலும், ஒருபோதும் தணிவடையாத நெருப்பைப் போல) உண்பதில் ஒருபோதும் தணிவடையாதவன் {நெருப்பு} {அநலன்} நீயே. (நெருப்போடு அடையாளம் காணப்படுவதன் விளைவால்) இடத்திற்கு இடம் செல்லம் காற்றையே வாகனமாகக் கொண்டவன் {வாயுவாஹநன்} நீயே.(89-60)
மலைகளிலும் சிறு குன்றுகளிலும் திரிபவன் {கண்டலி} நீயே. மேரு மலைகளில் வசிப்பிடம் கொண்டவன் {மேருதாமன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவாதிபதி} நீயே. தலையை அதர்வணங்களாகக் கொண்டவன் {அதர்வசீர்ஷன்} நீயே. வாயை சாமங்களாகக் கொண்டவன் {ஸாமாஸ்யன்} நீயே. எண்ணற்ற கண்களை ஆயிரம் ரிக்குகளாகக் கொண்டவன் {ரிக்ஸஹஸ்ராமிதேக்ஷணன்} நீயே.(90-61) பாதங்களையும, கரங்களையும் யஜுஸ்களாகக் கொண்டவன் {யஜுப்பாதபுஜன்} நீயே. உபநிஷதங்கள் {குஹ்யன்} நீயே. (சாத்திரங்களில் தோன்றும்) மொத்த சடங்குகளும் {ப்ரகாசன்} நீயே. அசைவன அனைத்தும் {ஜங்கமன்} நீயே. வேண்டுதல்களை ஒருபோதும் வீண்போகச்செய்யாதவன் {அமோகார்த்தன்} நீயே. எப்போதும் அருள் வழங்குபன் {ப்ரஸாதன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {அபிகம்யன்} நீயே. {ஸுதர்சநன் நீயே}.(91-62) (பக்தர்கள் உன்னை நெருங்கும் அளவுக்கு) பக்தர்களை நெருங்குபவன் {உதவி செய்பவன்} {உபகாரன்} நீயே. அன்புக்குரியவன் {ப்ரியன்} நீயே. {ஸர்வன்}. அனைவருக்கும் பிடித்த தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்கள் {கநகன்} நீயே. புடம்போட்ட தங்கத்தைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {காஞ்சநச்சவி} நீயே. (அண்டத்தின்) தொப்புளாக இருப்பவன் {நாபி} நீயே. (உன் மகிமைக்காக வேள்வி செய்வோரின் நன்மைக்காக) வேள்விக் கனிகளை வளரச் செய்பவன் {நந்திகரன்} நீயே. வேள்விகளைப் பொறுத்தவரையில் அறவோர் கொள்ளும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வடிவம் {பாவன்} நீயே. அண்டத்தை வடிவமைத்தவன் {புஷ்கரஸ்தபதி} நீயே. (மலைகள் மற்றும் பொருட்களின்) வடிவில் அழிவற்றவனாக இருப்பவன் {ஸ்திரன்} நீயே.(92-63) ஒரு மனிதன் கடந்து செல்ல வேண்டிய பனிரெண்டு நிலைகள்[7] {த்வாதசன்} நீயே. (இப்பட்டியலில் உள்ள பத்து நிலைகளுக்கிடையில் ஏற்கப்படும் நிலைகளில்) அச்சத்தை உண்டாக்குபவன் {த்ராஸநன்} நீயே. அனைத்துப் பொருட்களின் தொடக்கம் {ஆத்யன்} நீயே. யோகத்தின் மூலமாகப் பரப்பிரம்மத்தில் ஜீவனைக் கலக்கச் செய்வன் {யஜ்ஞன்} நீயே. ஜீவன் மற்றும் பரப்பிரம்மத்திற்கிடையில் யோகத்தின் மூலம் கலப்பை எது உண்டாக்குமோ அது {யஜ்ஞஸமாஹிதன்} நீயே. (ஆழ்ந்த மயக்கத்துடன் கூடிய) வெளிப்படாதவன் {நக்தன்} (காமம், கோபம், பேராசை, தீய ஆசைகளை உண்டாக்குவதால்) நான்காம் யுகத்தின் தலைமைத் தேவன் {கலி} நீயே. (அண்டத்தில் அடுத்தடுத்து பிறப்பிறப்புகளை உண்டாக்கும்) நித்தியமான காலம் {காலன்} நீயே.(94) ஆமையின் வடிவில் இருப்பவன் {மகரன்} நீயே. காலனால் வழிபடப்படுபவன் {காலபூஜிதன்} நீயே. (93-64)தோழர்களின் {கணங்களின்} மத்தியில் வாழ்பவன் {ஸகணன்} நீயே. கணங்களின் பட்டியலில் உன் பக்தர்களைச் சேர்ப்பவன் {கணகாரன்} நீயே. உன் தேருக்குப் பிரம்மனை சாரதியாகக் கொண்டவன் {பூதவாஹநஸாரதி} நீயே. சாம்பலில் {திருநீற்றில்} உறங்குபவன் {பஸ்மசயன்}[8] நீயே. சாம்பலால் அண்டத்தைக் காப்பவன் {பஸ்மகோப்தன்} நீயே. சாம்பலாலான உடலைக் கொண்டவன் {பஸ்மபூதன்} நீயே. அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளும் மரம் {தரு} நீயே. கணங்களின் வடிவைக் கொண்டவன் {கணன்} நீயே.(94-65)
பதினான்கு உலகங்களையும் பாதுகாப்பவன் {லோகபாலன்} நீயே. அனைத்து உலகங்களையும் கடந்திருப்பவன் {அலோகன்} நீயே. (எந்தக் குறையுமில்லாத) முழுமையானவன் {மஹாத்மா} நீயே. அனைத்து உயிரினங்களாலும் துதிக்கப்படுபவன் {ஸர்வபூஜிதன்} நீயே. (தூய்மையானவனும், களங்கமற்றவனுமாக இருப்பதால்) வெண்மையானவன் {சுக்லன்} நீயே. உடல், வாக்கு மனம் ஆகியவற்றை முன்னிலும் களங்கமற்றவையாகக் கொண்டவன் {த்ரிசுக்லன்} நீயே. விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் தூய இருப்பை அடைந்தவன் {ஸம்பநநன்} நீயே. எவ்வகைத் தூய்மையின்மையாலும் களங்கப்பட இயலாதவன் {சுசி} நீயே. பழங்காலத்தின் பேராசான்களால் அடையப்பட்டவன் {பூதநிஷேவிதன்} நீயே.(95-66) அறம் அல்லது நான்கு வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} முறையான வடிவம் {ஆச்ரமஸ்தன்} நீயே. சடங்குகள் மற்றும் வேள்விகளின் வடிவில் உள்ள அறம் {க்ரியாவஸ்தன்} நீயே. அண்டத்தின் தெவ்வீக வடிவமைப்பாளனுடைய திறனின் வடிவம் {விச்வகர்மமதி} நீயே. அண்டத்தின் ஆதி வடிவமாகத் துதிக்கப்படுபவன் {வரன்} நீயே. பரந்த கரங்களைக் கொண்டவன் {விசாலசாகனே} நீயே. தாமிர வண்ணம் இதழ்களைக் கொண்டவன் {தாம்ரோஷ்டன்} நீயே. பெருங்கடலில் உள்ள பேரளவு நீரின் வடிவம் {அம்புஜாலன்} நீயே. (மலைகள் மற்றும் குன்றுகளின் வடிவில்) உறுதியாக நிலைத்திருப்பவன் {ஸுநிச்சலன்} நீயே.(96-67) கபிலர் நீயே. பழுப்பு நிறத்தவன் {கபிசன்} நீயே. வெண்கலவை கொண்ட வண்ணங்கள் அனைத்தும் {சுக்லன்} நீயே. வாழ்வுக்காலம் {ஆயுஸ்} நீயே. தொன்மையானவன் {பரன்} நீயே. அண்மையானவன் {அபரன்} நீயே. கந்தர்வன் நீயே. தேவர்களின் தாயான அதிதியின் வடிவில் இருப்பவன் (அல்லது அனைத்துப் பொருட்களின் தாயான பூமியின் வடிவில் இருப்பவன்) {அதிதி} நீயே. பறவைகளின் இளவரசனும், வினதையிடம் கசியபருக்குப் பிறந்தவனும் தார்க்ஷயன் என்று வேறுபெயரால் அழைக்கப்படுபவனும் {தார்க்ஷயன்} நீயே. எளிதில் புரிந்துகொள்ளப்படக்கூடியவன் {ஸுவிஜ்ஞேயன்} நீயே. ஏற்புடைய சிறந்த வாக்கை உடையவன் {ஸுசாரதன்} நீயே.(97-68) போர்க்கோடரி தரித்தவன் {பரச்வதாயுதன்} நீயே. வெற்றியை விரும்புபவன் {தேவன்} நீயே. திட்டங்களை நிறைவேற்றுவதில் பிறருக்குத் துணை புரிபவன் {அநுகாரி} நீயே. {கிருஷ்ணனைப் போன்ற} சிறந்த நண்பன் {ஸுபாந்தவன்} நீயே. துளையுள்ள இரு சுரைக்காய்களால் அமைந்த வீணையைச் சுமப்பவன் {தும்பவீணன்} நீயே. (அண்ட அழிவின்போது வெளிப்படும்) பயங்கரக் கோபம் {மஹாக்ரோதன்} நீயே. மனிதர்கள் மற்றும் தேவர்களைவிட உயர்ந்தவர்களை (பிரம்மன் மற்றும் விஷ்ணுவைப்) பிள்ளைகளாகக் கொண்டவன் {மேல்நோக்கிய உயிரணு கொண்டவன் / புலன்களை வென்றவன்} {ஊர்த்வரேதஸ்} நீயே. அண்ட அழிவிக்குப் பிறகு நீரில் மிதக்கும் விஷ்ணுவின் வடிவம் {ஜலேசயன்} நீயே.(98-69) பெருஞ்சீற்றத்துடன் அனைத்தையும் எரிப்பவன் {உக்ரன்} நீயே. வாரிசுகளை உண்டாக்குபவன் {வம்சக்ரன்} நீயே. பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பமும், குலமும் {வம்சன்} நீயே. மூங்கிலாலான புல்லாங்குழலின் இசை {வம்சநாதன்} நீயே. களங்கமற்றவன் {அநிந்திதன்} நீயே. எவனுடைய உடலில் ஒவ்வொரு உறுப்பும் அழகாய் இருக்குமோ அவன் {ஸர்வாங்கரூபன்} நீயே. மாயை நிறைந்தவன் {மாயாவி} நீயே. திரும்பிவரும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் {பிரதிபலன் பாராமல்} பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருதன்} நீயே. {வாயு என்றழைகெகப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(99-70)ஜீவனைக் கட்டும் உலகபந்தங்கள் {பந்தநன்} நீயே. அந்தக் கட்டுகளைப் படைப்பவன் {பந்தகர்த்தன்} நீயே. அத்தகைய கட்டுகளை அறுப்பவன் {ஸுபந்தநவிமோசநன்} நீயே. (வேள்விகள் அனைத்திற்கும் பகைவர்களான} தைத்தியர்களிலும் வசிப்பவன் {ஸயஜ்ஞாரி} நீயே. (அனைத்துச் செயல்களையும் கைவிட்டவர்களான) செயல்கள் அனைத்தின் பகைவர்களில் வசிப்பவன் {ஸகாமாரி} நீயே. பெரும் பற்களைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. வலிமைமிக்க ஆயுதங்கள் {மஹாயுதன்} நீயே.(100-71) பெரிதும் நிந்திக்கப்படுபவன் {பஹுதாநிந்திதன்} நீயே. தாருகா வனத்தில் வசிக்கும் முனிவர்களைத் திகைக்கச் செய்தவன் {சர்வன்} நீயே. தாருகா வனத்தில் வசிப்பவர்களும், உன்னை இகழ்பவர்களுமான முனிவர்களுக்கும் நன்மை செய்பவன் {சங்கரன்} நீயே. அம்முனிவர்களின் அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, அவர்களுக்கு முக்தியளிப்பவன் {சங்கரன்} நீயே. (உடுக்கத் தேவையான ஆடையை அடைய இயலாத விளைவால்) செல்வமற்றவன் {அதநன்} நீயே. தேவர்களின் தலைவன் {அமரேசன்} நீயே. (தேவர்களில் உயர்ந்தவனாகக் கருதப்பட்டு இந்திரனாலும் துதிக்கப்படுவதன் விளைவால்) தேவர்களில் பெரியவன் {மஹாதேவன்} நீயே. விஷ்ணுவாலும் துதிக்கத்தக்கவன் {விச்வதேவன்} நீயே. தேவர்களின் பகைவர்களைக் கொல்பவன் {ஸுராரிஹா} நீயே.(101-72) அதளபாதாளத்தில் (சேஷன் என்ற பாம்பின் வடிவில்) வசிப்பவன் {அஹிர்புத்நியன்} நீயே. புலப்படாதிருக்கும் காற்றானது அனைவராலும் உணரப்படுவதைப் போலவே புலப்படாதவனாக இருப்பினும் புரிந்து கொள்ளப்படக்கூடியவன் {அநிலோபன் / அநிலாபன்} நீயே. அனைத்தின் வேர் வரை பரந்த ஞானம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் உள் இயல்பை அறிந்தவனும் {சேகிதாநன்} நீயே. உன்னில் இன்பம் கொள்பவனில் இன்பம் கொள்பவன் {ஹவிஸ்} நீயே. அஜைகபாத் என்றழைக்கப்படும் பதினோரு ருத்திரர்களில் ஒருவன் நீயே. மொத்த அண்டத்தின் ஆட்சியாளன் {காபாலி} நீயே. (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற நன்கறியப்பட்ட முக்குணங்களால் மறைக்கப்படுவதன் விளைவால்) அண்ட ஜீவன்கள் அனைத்தின் வடிவம் {த்ரிசங்கு} நீயே. முக்குணங்களுக்கு உட்படாதவன் {அஜிதன்} நீயே. குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், மொழி வழங்கும் எந்த உரிச்சொல்லின் துணையாலும் விளக்கப்பட இயலாதவனுமான தூய இருப்பு {சிவன்} நீயே.(102-73) தந்வந்தரி என்றழைக்கப்படும் மருத்துவ இளவரசன் நீயே. (பாவிகளுக்கு நேரும் பேரிடர்களை உண்டாக்கும் விளைவாக உள்ள) வால்நட்சத்திரம் {தூமகேது} நீயே. ஸ்கந்தன் என்றழைக்கப்படும் தேவர்ப்படைத்தலைவன் நீயே. இணைபிரியாத் தோழனும், உலகக் கருவூலங்கள் அனைத்தின் தலைவனும், குபேரன் என்றழைக்கப்படுபவனுமான யக்ஷர்களின் மன்னன் {வைச்ரவணன்} நீயே. தாத்ரி {தாதா} நீயே. சக்ரன் நீயே. விஷ்ணு நீயே. மித்ரன் நீயே. (தெய்வீகத் தச்சனான) தாஷ்டிரி {த்வஷ்டா} நீயே. துருவ நட்சத்திரம் {த்ருவன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்குபவன் {தரன்} நீயே.(103-74) வசுக்களில் பிரபாவன் என்றழைக்கப்படுபவன் {ப்ரபாவன்} நீயே. (அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இணைக்கும் ஆன்ம இழையாக) எங்கும் செல்லவல்ல காற்று {ஸர்வகோவாயு} நீயே. அர்யமான் {சூரியனின் பெயர்} {அர்யமா} நீயே. சாவித்ரி {ஸவிதா} நீயே. ரவி நீயே. உஷங்கு என்ற பெயரில் அறியப்பட்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான புராதன மன்னன் {எரியும் கதிர்களைக் கொண்டவன்} {உஷங்கு} நீயே. பல்வேறு வழிகளில் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன் {விதாதா} நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும் நிறைவளிக்கவல்ல) மாந்தாத்ரி {மாந்தாதா} நீயே. அனைத்து உயிரினங்களும் உயிர் பெறும் இடம் {பூதபாவநன்} நீயே.(104-75)
பல்வேறு வடிவங்களில் இருப்பவன் {விபு} நீயே. அண்டத்தில் இருக்கும் பல்வேறு வண்ணங்களை உண்டாக்குபவன் {வர்ணவிபாவி} நீயே. (உன்னில் இருந்து உண்டாகுபவையாக உள்ள_ ஆசைகள் அனைத்தையும், குணங்கள் அனைத்தையும் தாங்குபவன் {ஸர்வகாமகுணாவஹன்} நீயே. தொப்புளில் தாமரையைக் கொண்டவன் {பத்மநாபன்} நீயே. வலிமைமிக்க எண்ணற்ற உயிரினங்களுள்ள கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. சந்திரனைப் போன்ற அழகு நிறைந்த முகத்தைக் கொண்டவன் {சந்த்ரவக்த்ரன்} நீயே. {வாயு என்றழைக்கப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(105-76) பெரும் வலிமை {பலவாந்} நீயே. ஆன்ம அமைதி கொண்டவன் {திறனை வெளிக்காட்டாதவன்} {உபசாந்தன்} நீயே. பழைமையானவன் {புராணன்} நீயே. அறத்தின் துணையால் அறியப்படுபவன் {புண்யசஞ்சு} நீயே. {ஸ்ரீ என்றழைக்கப்படும்} லக்ஷ்மி {ஈ} நீயே. (பரமதேவனைத் துதிக்க மனிதர்களுக்குப் பயன்படும்) செயற்களத்தை அமைப்பவன் {குருகர்த்தன்} நீயே. செயற்களத்தில் வாழ்பவன் {குருவாஸி} நீயே. செயற்களத்தின் ஆன்மா {குருபூதன்} நீயே. அரச குணங்களைத் தூண்டுபவன் அல்லது அவற்றுக்கான மருந்து {குணௌஷதன்} நீயே.(106-77) (கனவற்ற உறக்க நிலையை வெளிக்காட்டும் நினைவற்ற இயல்பைக் கொண்ட நீயாகவே அனைத்துப் பொருட்களும் ஆகின்றன என்று ஸ்ருதிகள் அறிவிப்பதால்) அனைத்துப் பொருட்களும் கிடக்கும் இடம் {ஸர்வாசயன்} {தர்ப்பசாரி} நீயே. உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஷாம்ப்ராணிநாம்பதி} நீயே. தேவர்களுக்குத் தேவன் {தேவதேவன்} நீயே. இன்பநிலையுடன் தொடர்புடையவன் {ஸுகாஸக்தன்} நீயே. (காரண வடிவமான) ஸத் நீயே. (விளைவின் / காரிய வடிவமான) அஸத் நீயே. அனைத்திலும் சிறந்தவன் {ஸர்வரத்நவித்} நீயே.(107-78) கைலாச மலைகளில் வசிப்பவன் {கைலாஸகிரிவாஸி} நீயே. இமய மலைகளுக்குச் செல்பவன் {ஹிமவத்கிரிஸம்ச்ரயன்} நீயே. கரைகளில் நிற்கும் மரங்களை அடித்துச் செல்லும் பேரோடையைப் போல அனைத்தையும் அடித்துச் செல்பவன் {கூலஹாரி} நீயே. புஷ்கரை, பெருந்தடாகங்கள் மற்றும் இயற்கையான நீர்நிலைகள் அனைத்தையும் படைத்தவன் {கூலகர்த்தன்} நீயே. முடிவிலா ஞானவகைகளைக் கொண்டவன் {பஹுவித்யன்} நீயே. முடிவற்ற அருளை வழங்குபவன் {பஹுப்ரதன்} நீயே.(108-79) (மனிதர்களின் நன்மைக்காக இந்நாட்டுப் பொருட்களை வேறு நாட்டிற்கும், வேறு நாட்டுப் பொருட்களை இந்த நாட்டிற்கும் கொண்டு வரும்) வணிகன் {வணிஜன்} நீயே. மரத்தச்சன் {வர்த்தகி} நீயே. (உன் கோடரிக்குக் காம்பை வழங்கும் உலகமெனும்) மரம் {வ்ருக்ஷன்} நீயே. வகுளம் {மகிழம்} என்றழைக்கப்படும் மரம் நீயே. சந்தன மரம் {சந்தநம்} நீயே. {ஏழிலைப்பாலை என்றழைக்கப்படும்} சத மரம் {சதம்} நீயே. மிக உறுதியான கழுத்தைக் கொண்டவன் {ஸாரக்ரீவன்} நீயே. பெருந்தோள்களைக் கொண்டவன் {மஹாஜத்ரு} நீயே. (செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியானவனாக இருந்தாலும்) அமைதியற்றவன் {ஆசையற்றவன்} {அலோலன்} நீயே. (அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய வகைகளில் உள்ள) முக்கியப் பயிர்களும், செடிகளும் {மஹௌஷதன்} நீயே.(109-80)
பிறர் தங்கள் இதயங்களில் விரும்பும் பொருட்களை அடைய வெற்றியை அருள்பவன் {ஸித்தார்த்தகாரி}, {ஸித்தார்த்தன்} நீயே. வேதங்கள் மற்றும் இலக்கணத்தில் சரியான தீர்மானங்கள் {சந்தோவ்யாகரணோத்தரன்} நீயே. சிங்க முழக்கம் செய்பவன் {ஸிம்மநாதன்} நீயே. சிங்கப் பற்களுடன் கூடியவன் {ஸிம்மதம்ஷ்ட்ரன்} நீயே. பயணங்கள் செய்யச் சிங்கத்தில் செல்பவன் {ஸிம்மகன்} நீயே. சிங்கத்தால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஸிம்மவாஹநன்} நீயே.(110-81) உண்மையின் உண்மையென அழைக்கப்படுபவன் {ப்ரபாவாத்மா} நீயே. அண்டத்தின் காலனை உணவுத்தட்டாகக் கொண்டவன் {ஜகத்காலஸ்தாலன்} நீயே. உலகங்களுக்கு நன்மையை எப்போதும் நாடுபவன் {லோகஹிதன்} நீயே. (விடுதலையின் {முக்தியின்} இன்பநிலைக்கு வழிவகுக்கும் வகையில்) உயிரினங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்பவன் {தரு} நீயே. சாரங்கம் என்றழைக்கப்படும் பறவை {ஸாரங்கன்} நீயே. புதிய அன்னப்பறவை {நவசக்ராங்கன்} நீயே. (சேவலைப் போலவோ, மயிலைப் போலோ} நீ தலையில் கொண்டுள்ள மகுடத்தின் விளைவாக அழகுடன் தெரிபவன் {கேதுமாலி} நீயே. நீதியை நிலைநாட்ட ஞானிகள் அமரும் சபைகளைப் பாதுகாப்பவன் {ஸபாவநன்} நீயே.(111-82) அனைத்து உயிரினங்களின் வசிப்பிடம் {பூதாலயன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் பேணிப் பாதுகாப்பவன் {பூதபதி} நீயே. (நித்திய பூதங்களாக அமைந்திருக்கும்) பகலும், இரவும் {அஹோராத்ரன்} நீயே. குற்றமற்றிருப்பதால் ஒருபோதும் இகழப்படாதவன் {அநிந்திதன்} நீயே.(112-83) அனைத்து உயிரினங்களையும் தாங்குபவன் {ஸர்வபூதாநாம்வாஹிதன்} நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் {நிலயன்} நீயே. பிறப்பற்றவன் {விபு} நீயே. இருப்பவன் {பவன்} நீயே. எப்போதும் கனிநிறைந்தவன் {அமோகன்} நீயே. தாரணை, தியானம் மற்றும் சமாதியுடன் கூடியவன் {சார்ந்தோருக்குக் கட்டுப்பட்டவன்} {ஸம்யதன்} நீயே. உச்சைஸ்ரவஸ் முதலிய குதிரைகள் {அச்வன்} நீயே. உணவளிப்பவன் {போஜநன்} நீயே. உயிரினங்களின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பவன் {ப்ராணதாரணன்} நீயே.(113-84) பொறுமையுடன் கூடியவன் {த்ருதிமாந்} நீயே. நுண்ணறிவு கொண்டவன் {மதிமாந்} நீயே. முயற்சியும், புத்திசாலித்தனமும் கொண்டவன் {தக்ஷன்} நீயே. அனைவராலும் மதிக்கப்படுபவன் {ஸத்க்ருதன்} நீயே. அறம் மற்றும் மறத்திற்கான {புண்ணியபாவங்களுக்கான} கனிகளைக் கொடுப்பவன் {யுகாதிபன்} நீயே. (புலன்களுக்குத் தலைமை தாங்கி அவை தங்கள் தங்களுக்குரிய செயல்களைச் செய்ய வைப்பதால்) புலன்களைப் பேணிக் காப்பவன் {கோபாலி} நீயே. ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவன் {கோபதி} நீயே. பொருட்களின் திரட்டுகள் அனைத்தும் {க்ராமன்} நீயே. மாட்டுத் தோல்களாலான உடைகளைக் கொண்டவன் {கோசர்மவஸநன்} நீயே. பக்தர்களின் துயரை அகற்றுபவன் {ஹரி} நீயே.(114-85)
தங்கக் கரம் கொண்டவன் {ஹிரண்யபாஹு} நீயே. தங்கள் தங்களுக்குள் நுழைய முயலும் யோகியரின் உடல்களைப் பாதுகாப்பவன் {ப்ரவேசிநாம்குஹாபாலன்} நீயே. எதிரிகள் அனைவரையும் ஒன்றுமற்ற நிலைக்குக் குறைப்பவன் {ப்ரக்ருஷ்டாரி} நீயே. மகிழ்ச்சியைப் பெருமளவில் கொண்டவன் {மஹாஹர்ஷன்} நீயே. தடுக்கப்பட முடியாத காம தேவனை வென்றவன் {ஜிதகாமன்} நீயே. புலன்களை வென்றவன் {ஜிதேந்த்ரியன்} நீயே.(115-86) இசையின் எட்டாம் சுரமான காந்தாரம் நீயே. (இனிமை நிறைந்த கைலாய மலைகளில் அமைந்திருப்பதன் விளைவால்) சிறப்பான மற்றும் அழகிய இல்லம் கொண்டவன் {ஸுவாஸன்} நீயே. எப்போதும் தவங்களுடன் தொடர்புடையவன் {தபஸ்ஸக்தன்} நீயே. உற்சாகம் மற்றும் நிறைவின் வடிவம் {ரதி} நீயே. முடிவற்றவன் அல்லது பரந்தவன் {நரன்} நீயே. தொகுக்கப்பட்டவற்றுள் முதன்மையான பாடல் {மஹாகீதன்} நீயே. நீண்ட அடிகள் மற்றும் பெரும் தாவல்களுடன் ஆடுபவன் {மஹாந்ருத்யன்} நீயே. அப்ஸரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் மதிப்புடன் துதிக்கப்படுபவன் {அப்ஸரோகணஸேவிதன்} நீயே.(116-87) (காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட) பெரும் கொடிமரத்தைக் கொண்டவன் {மஹாகேது} நீயே. மேரு மலை {மஹாதாது} நீயே. பெரும் மலைச்சிகரங்கள் அனைத்தின் மத்தியிலும் திரிபவன் {நைகஸாநுசரன்} நீயே. பற்றிக்கொள்ள மிகக் கடினமான பெரும் வேகத்தைக் கொண்டவன் {சலன்} நீயே. சொற்களால் விளக்கப்பட முடியாதவனாக இருப்பினும் ஆசான்களால் சீடர்களுக்கு விவரிக்கப்படவல்லவன் {ஆவேதநீயன்} நீயே. ஆசான்களால் சீடர்களுக்குப் போதிக்கப்படும் கல்வயின் வடிவம் {ஆதேசன்} நீயே. இனிய நறுமணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் உணரக் கூடியவன் {ஸர்வகந்தஸ்ஸுகாவஹன்} நீயே.(117-88) நகரங்கள் மற்றும் அரண்மனைகளின் முகப்புவாயில் {தோரணன்} நீயே. அரணமைக்கப்பட்ட நகரங்களைச் சூழ்ந்திருப்பவையும், முற்றுகையிடப்பட்ட கோட்டைக் காவற்படைகளுக்கு வெற்றியை அளிப்பவையுமான அகழிகள் மற்றும் குழிகளின் வடிவம் {தாரணன்} நீயே. காற்று நீயே {வாதன்} நீயே. மதில்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்ட அரணமைக்கப்பட்ட நகரங்கள் மற்றும் ஊர்களின் வடிவம் {பரிதீபதி} நீயே. (கருடனின் வடிவில் நீயே இருப்பதால்) சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்தின் இளவரசன் {கேசரன்} நீயே. எதிர்பாலினக் கலவியால் உற்பத்தியைப் பெருக்குபவன் {ஸம்யோகன்} நீயே. அறங்கள் மற்றும் அறிவுகள் அனைத்திலும் முதன்மையானவன் {வர்த்தநன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் முதல்வன் {வ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் மூத்தவனுக்கும் மேன்மையானவன் {அதிவ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் குணங்கள் அனைத்தையும் கடந்தவன் {குணாதிகன்} நீயே.(118-89) நித்தியமானவனும், மாற்றமில்லாதவனும், சுயம்சார்ந்தவனும் {நித்யாத்மஸஹாயன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானும், பாதுகாவலனும் {தேவாஸுரபதி} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆசானும், பாதுபாவலனும் {பதி} நீயே. கவசம் தரிப்பவன் {யுக்தன்} நீயே. பகைவர்கள் அனைவரையும் கலங்கடிக்கவல்ல கரங்களைக் கொண்டவன் {யுக்தபாஹு} நீயே. சொர்க்கத்தில் ஸுபர்வன் என்றழைக்கப்படுபவனைக் காட்டிலும் துதிக்கத்தக்க பொருள் {திவிஸுபர்வணோதேவன்} நீயே.(119-90)
அனைத்துப் பொருட்களையும் தாங்கும், அல்லது சுமக்கும் சக்தியை அருள்பவன் {ஆஷாடன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் சுமக்கவல்லவன் {ஸுஷாடன்} நீயே. (ஒருபோதும் உறுதியற்றவனாக இல்லாத) நிலையுறுதி கொண்டவன் {த்ருவன்} நீயே. (எக்களங்கமும் இல்லாத) வெண்மையானவன், அல்லது தூயன் {ஹரிணன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும்) அழிக்கவல்ல திரிசூலம் தரிப்பவன் {ஹரன்} நீயே. அண்டத்தில் தொடர்ந்து பிறப்பிறப்பில் சுழன்று கொண்டிருப்போருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன் {ஆவர்த்தமாநேப்யோவபு} நீயே. செல்வத்தைவிட மதிப்புமிக்கவன் {வஸுச்ரேஷ்டன்} நீயே. (நன்மை மற்றும் பணிவன்பின் வடிவிலான) அறவழி அல்லது ஒழுக்கம் {மஹாபதன்} நீயே.(120-91) (வெறும் கோபத்தால் தூண்டப்படாமல்) ஆழமான முறையான ஆய்வுக்குப் பின் பிரம்மனின் தலையை அறுத்தவன் {சிரோஹாரி} நீயே. {விமர்சன் நீயே}. கைவரை நூல் {ரேகை சாஸ்திரம்}, அடிக்காலியல், தலை அமைப்பியல், மற்றும் விசித்திர மனத்தன்மைகளைக் குறிக்கும் உடல்வடிவம் தொடர்புடைய பிற அறிவுக்கிளைகள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மங்கலக்குறிகள் அனைத்தையும் கொண்டவன் {ஸர்வலக்ஷணலக்ஷிதன்} நீயே. தேரின் அக்ஷம் என்றழைக்கப்படும் மரச்சட்டமாக இருப்பவனும், உடலெனும் தேரில் தொடர்புடையவனும் {ரதயோகிஅக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களிலும் அவற்றின் ஆன்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களிலும் தொடர்புடையவன் {ஸர்வயோகி} நீயே. வீரர்களுக்கு வீரனான பெரும் வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே.(121-92) வேதம் {ஸமாம்நாயன்} நீயே. ஸ்மிருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் {அஸமாம்நாயன்} நீயே. ஒவ்வொரு புண்ணியத்தலத்தின் சிறப்புமிக்கத் தேவன் {தீர்த்ததேவன்} நீயே. பூமியைத் தேராகக் கொண்டவன் {மஹாரதன்} நீயே. ஒவ்வொரு உயிரின உடற்தொகுப்புக்குள்ளும் நுழையும் செயலாற்றலற்ற பூதங்கள் {நிர்ஜீவன்} நீயே. செயலாற்றலற்ற பூதங்களாலான ஒவ்வொரு தொகுப்புக்கும் உயிரைக் கொடுப்பவன் {ஜீவநன்} நீயே. உயிரற்ற பருப்பொருளில் உயிரை உட்செலுத்தும் புனித மந்திரங்களும், பிரணவமும் {மந்த்ரன்} நீயே. அமைதியான பார்வைகளைச் செலுத்துபவன் {சுபாக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருப்பதால்) மிகக் கடுமையானவன் {பஹுகர்க்கசன்} நீயே.(122-93) மதிப்புமிக்க எண்ணற்ற குணங்களையும், உடைமைகளையும் கொண்டவன் {ரத்நப்ரபூதன்} நீயே. சிவந்த உடல் கொண்டவன் {ரத்நாங்கன்} நீயே. நீ பருகுவதற்காகப் பல குளங்கள் நிறைவதால் பரந்த பெருங்கடல்கள் அனைத்தும் {மஹார்ணவநிபாநவித்} நீயே. உலக மரத்தின் வேர் {மூலன்} நீயே. பெருஞ்சிறப்புகளைக் கடந்து ஒளிர்பவனும், மிக அழகியவனும் {விசாலன்} நீயே. அமுதத்தின் வடிவம் {அம்ருதன்} நீயே. காரணம், விளைவு {காரியம்} ஆகிய இரண்டும் {வ்யக்தாவ்யக்தன்} நீயே. (பெரும் யோகியாக இருப்பதால்) தவப்பெருங்கடல் {தபோநிதி} நீயே.(123-94) இருப்பின் உயர்ந்த நிலைக்கு உயரச் செய்பவன் {ஆரோஹணன்} நீயே. அந்நிலையை ஏற்கனவே அடைந்தவன் {அதிரோஹன்} நீயே. தூய ஒழுக்கம், தூய செயல்கள் மற்றும் நோன்புகளுக்காகப் புகழ்பெற்றவன் {சீலதாரி} நீயே. (அறநடத்தையின் விளைவால்) பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே. (ஆற்றல் மற்றும் துணிவின் வடிவமாக நீயே இருப்பதால்) படைகளின் ரத்தினம் {ஸேநாகல்பன்} நீயே. தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {மஹாகல்பன்} நீயே. யோகம் நீயே. யுகங்கள் மற்றும் கல்பங்களால் அளக்கப்படும் நித்திய காலத்தை உண்டாக்குபவன் {யுகசரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்புபவன் {ஹரி} நீயே.(124-95)
(அடுத்தடுத்த யுகங்களில் வெளிப்படும் {யுகரூபத்தில்} அறம், மறம் மற்றும் அவற்றின் கலவைகளின் வடிவம்) {மஹாரூபன்} நீயே. பெரியவனும், வடிவமற்றவனும் {மஹாநாகஹநன்} நீயே. மதங்கொண்ட பெரும் யானையின் வடிவில் வாராணசி என்ற புனித நகரத்தை எதிர்த்து வந்த வலிமைமிக்க அசுரனைக் கொன்றவன் {வதன்} நீயே. காலனின் வடிவம் {ந்யாயநிர்வபணன்} நீயே. உயிரினங்கள்அனைத்தின் தகுதிகளுக்கு ஏற்ப அவற்றின் விருப்பங்களைக் கனியச் செய்பவன் {பாதன்} நீயே. {பண்டிதன்} நீயே. அணுகப்படக்கூடியவன் {அசலோபமன்} நீயே.(125-96) புலன்களின் உணர்வைக் கடந்த அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் {பஹுமாலன்} நீயே. தத்துவங்களை அறிந்தவன் (என்பதால் முற்றிலும் நிலையாக இருப்பவன்) {மஹாமாலன்} நீயே. இடைவிடாமல் அழகில் ஒளிர்பவன் {சுசீஹரஸுலோசநன்} நீயே. கழுத்தில் இருந்து பாதம் வரை நீளும் மாலைகளை அணிபவன் {விஸ்தாரன்} நீயே. சந்திரனைத் தன் அழகிய கண்களாகக் கொண்ட ஹரன் {லவணன்} நீயே. பரந்து விரிந்த உப்புப் பெருங்கடல் {கூபன்} நீயே. (கிருதம், திரேதம், துவாபரம் என்ற) மூன்று யுகங்கள் {த்ரியுகன்} நீயே. பிறருக்கான நற்பலன்கள் நிறைந்த தோற்றம் கொண்டவன் {ஸபலோதயன்} நீயே.(126-97) (சாத்திரங்கள், ஆசான் மற்றும் தியான வடிவங்களில்) மூன்று கண்களைக் கொண்டவன் {த்ரிலோசநன்} நீயே. (ஆதி பூதங்களின் நுண்வடிவங்களாக இருப்பதால்) மிக நுட்பமான வடிவங்களைக் கொண்டவன் {விஷண்ணாங்கன்} நீயே. குண்டலங்கள் அணிந்த காதுகளைக் கொண்டவன் {மணிவித்தன்} நீயே. சடாமுடி தரித்தவன் {ஜடாதரன்} நீயே. மூக்கொலியைக் குறிக்கும் (எழுத்தில்) புள்ளியாக இருப்பவன் {பிந்து} நீயே. ஹ என்ற மூச்சொலியைக் குறிக்கும் (எழுத்தில்) இரு புள்ளிகளாக இருப்பவன் {படைப்பவன்} {விஸர்க்கன்} நீயே. சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்} நீயே. பகைவனின் அழிவுக்காகப் போர்வீரனால் ஏவப்படும் கணை {சரன்} நீயே. போர்வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் {ஸர்வாயுதன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கவல்ல பொறுமையுடன் கூடியவன் {ஸஹன்} நீயே.(127-98) அக மற்றும் புறச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதால் எழும் ஞானம் கொண்டவன் {நிவேதநன்} நீயே. இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்துவதன் விளைவால் வெளிப்படும் உண்மை {ஸுகாஜாதன்} நீயே. காந்தாரம் என்றழைக்கப்படும் உலகத்தில் இருந்து எழும் காதுக்கு மிக இனிய சுரம் {ஸுகந்தாரன்} நீயே. (பிநாகம்) என்றழைக்கப்படும் பெரும் வில்லைத் தரிப்பவன் {மஹாதநு} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கும் தலைமையானவனாக இருப்பதல்லாமல் அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஆசைகளும் புத்தியும் {அண்ட அழிவு வரை செயல்மணத்தைக் காக்கும் தலைவன்} {கந்தபாலீபகவாந்} நீயே. செயல்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஸர்வகர்மணாம்உத்தாநன்} நீயே.(128-99) அண்ட அழிவுக்காலத்தில் எழுவதும், பாற்குடத்தில் பாலைக் கடையும் பெண்ணின் கரத்தில் இருக்கும் மத்தைப் போல மொத்த அண்டத்தையும் கடையவல்லவனுமான காற்று {மந்தாநோபஹுலோவாயு} நீயே. முழுமையாக இருப்பவன் {ஸகலன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் காண்பவன் {ஸர்வலோசநன்} நீயே. உள்ளங்கைகளைத் தட்டுவதால் எழும் ஒலி {தலஸ்தாலன்} நீயே. உணவிருக்கும் பாத்திரமாக, அல்லது உணவாகப் பயன்படும் உள்ளங்கையைக் கொண்டவன் {கரஸ்தாலி} நீயே. கடினமான உடல் படைத்தவன் {ஊர்த்வஸம்ஹநநன்} நீயே. மிகப் பெரியவன் {மஹாந்} நீயே.(129-100)
குடையின் வடிவில் இருப்பவன் {சத்ரன்} நீயே. சிறந்த குடையைக் கொண்டவன் {ஸுச்சத்ரன்} நீயே. அனைத்து உயிரினங்களுடனும் அடையாளம் காணப்படுபவனாக நன்கறியப்பட்டவன் {விக்யாதோலோகன்} நீயே. இரண்டு அடியால் அண்டத்தை மறைத்து, மூன்றாவது அடிக்கு இடத்தைக் கேட்டவன் {ஸர்வாச்ரயக்ரமன்} நீயே. மொட்டைத்தலை கொண்டவன் {முண்டன்} நீயே. மிகக் கோர வடிவம் கொண்டவன் {விரூபன்} நீயே. முடிவற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமானவன் {விக்ருதன்} நீயே. சந்நியாசத்தின் குறியீடாக நன்கறியப்பட்ட தண்டத்தைக் கொண்டவன் {தண்டி} நீயே. குண்டத்தைக் கொண்டவன் {குண்டி} நீயே. செயல் வழிமுறைகளின் மூலம் அடையப்பட இயலாதவன் {விகுர்வணன்} நீயே.(130-101) பச்சை நிறக் கண்களைக் கொண்ட விலங்குகளின் மன்னனோடு (சிங்கத்தோடு) அடையாளம் காணப்படுபவன் {ஹர்யக்ஷன்} நீயே. திசைகள் அனைத்தின் வடிவம் {ககுபன்} நீயே. வஜ்ரதாரி {வஜ்ரி} நீயே. நூறு நாவுகளைக் கொண்டவன் {சதஜிஹ்வன்} நீயே. ஆயிரம் கால்களையும் {ஸஹஸ்ரபாத்}, ஆயிரம் தலைகளையும் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவேந்த்ரன்} நீயே. தேவர்கள் அனைவருமாக அமைந்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. பேராசான் {குரு} நீயே.(131-102) ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாஹு} நீயே. அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்பவன் {ஸர்வாங்கன்} நீயே. அனைவராலும் நாடப்படும் பாதுகாப்பு {சரண்யன்} நீயே. அனைத்து உலகங்களையும் படைத்தவன் {ஸர்வலோகக்ருத்} நீயே. புனிதத்தலங்கள் மற்றும் புண்ணிய நீர்நிலைகள் என்ற விடவங்களில் பாவங்கள் அனைத்தையும் கழுவும் பெரும் தூய்மையாளன் {பவித்ரன்} நீயே. மூன்று உயர்ந்த மந்திரங்களைக் கொண்டவன் {த்ரிக்குந்மந்த்ரன்} நீயே. (அதிதி மற்றும் கசியபரின் மகனும், உபேந்திரன் என்று அறியப்பட்ட குள்ள வடிவம் கொண்டவனும், அசுரன் பலியை வஞ்சித்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பெற்று தேவர்களின் தலைவனிடம் மீண்டும் கொடுத்த) இளையவன் {கநிஷ்டன்} நீயே. (ஹரிஹரன் என்றழைக்கப்படும் வடிவத்துடன் இருப்பதால்) கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரண்டாகவும் இருப்பவன் {கருஞ்சிவப்பு நிறமாக இருப்பவன்} {க்ருஷ்ணபிங்களன்} நீயே.(132-103) பிராமணர்களின் தண்டத்தை அமைப்பவன் {ப்ரம்மதண்டவிநிர்மாதா} நீயே. நூற்றுவக்கொல்லி {சதக்னி}, பாயக்கயிறு, ஈட்டி {சக்தி} ஆகியவற்றைத் தரித்தவன் {சதக்நீபாசசக்திமாந்} நீயே. ஆதித் தாமரையில் பிறந்தவன் {பத்மகர்ப்பன்} நீயே. பெரும் கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. வேதங்களைத் தன் கருவறையில் கொண்டவன் {ப்ரம்மகர்ப்பன்} நீயே. அண்ட அழிவைத் தொடர்ந்து முடிவிலாதிருக்கும் நீரில் எழுபவன் {ஜலோத்பவன்} நீயே.(133-104) பிரகாச ஒளியின் கதிர்களுடன் கூடியவன் {கபஸ்தி} நீயே. வேதங்களைப் படைத்தவன் {ப்ரம்மக்ருத்} நீயே. வேத கல்வி {ப்ரம்மி} நீயே. வேதங்களின் பொருள் அறிந்தவன் {பிரம்மவித்} பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொண்டவன் {ப்ராம்மணன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் அனைவரின் புகலிடம் {கதி} நீயே. அளவற்ற வடிவு கொண்டவன் {அநந்தரூபன்} நீயே. எண்ணற்ற உடல்களைச் சுமப்பவன் {நைகாத்மா} நீயே. தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவன் {திக்மதேஜாஸ்வயம்புவன்} நீயே.(134-105)
(சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) உலகளாவிய முக்குணங்களைக் கடந்த இயல்பாக அல்லது ஆன்மாவாக இருப்பவன் {ஊர்த்வகாத்மா} நீயே. ஜீவன்கள் அனைத்தின் தலைவன் {பசுபதி} நீயே. காற்று வேகம் கொண்டவன் {வாதரம்ஹஸ்} நீயே. மனோவேகம் கொண்டவன் {மநோஜவன்} நீயே. சந்தனக் குழம்பை எப்போதும் பூசிக் கொள்பவன் {சந்தநி} நீயே. ஆதி தாமரையின் நுனி {பத்மநாளாக்ரன்} நீயே. தெய்வீகப் பசுவான சுரபியைச் சபித்து மேன்மையான இடத்தில் இருந்து தாழ்ந்த இடத்திற்கு அனுப்பியவன் {ஸுரப்யுத்தரணன்} நீயே. உன் எல்லையைக் காண முடியாத பிரம்மன் {நரன்} நீயே.(135-106) பெரும் கர்ணிகார மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன் {கர்நிகாரமஹாஸ்ரக்வி} நீயே. நீல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் கொண்டவன் {நீலமௌலி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவன் {பிநாகத்ருத்} நீயே. இமயத்தின் மகளான உமையின் கணவன் {உமாபதி} நீயே. {உமாகாந்தன்}, தலையில் கங்கையைத் தாங்குபவன் {ஜாஹ்நவீத்ருக்} நீயே. {உமாதவன் நீயே}.(136-107) (மூழ்கிப்போன பூமியை உயர்த்த பெரும்பன்றியின் வடிவை ஏற்றதன் விளைவால்) வலிமைமிக்கவன் {வரோவராஹன்} நீயே. பல்வேறு அவதாரங்களை ஏற்று அண்டத்தைப் பாதுகாப்பவன் {வரதன்} நீயே. துதிக்கத்தகுந்தவன் {வரேண்யன்} நீயே. இடிபோன்ற குரலில் வேதங்களை உரைத்த குதிரைத்தலையுடன் கூடிய ஆதி இருப்பு {ஸுமஹரஸ்வநன்} நீயே. பேரருளாளன் {மஹாப்ரஸாதன்} நீயே. பெரிதாக அடக்கி ஒடுக்குபவன் {தமநன்} நீயே. (ஆசைகளின் வடிவில் இருக்கும்) பகைவர்கள் அனைவரையும் கொல்பவன் {சத்ருஹன்} நீயே. (ஆண்பாதி, பெண்பாதியாக இருப்பதால்) வெள்ளையும், பழுப்புமாக இருப்பவன் {ச்வேதபிங்களன்} நீயே.(137-108) தங்கம் போன்ற நிறத்தையுடைய உடலைக் கொண்டவன் {பீதாத்மா} நீயே. (அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் உள்ளிட்ட) ஜீவனின் ஐந்து உறைகளைக் கடந்திருக்கும் தூய இன்பத்தின் வடிவம் {பரமாத்மா} நீயே. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாவைக் கொண்டவன் {ப்ரயதாதத்மா} நீயே. பிரதானம் என்றழைக்கப்படும் அறியமை சார்ந்திருப்பதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதும், அண்டம் உண்டாகக் காரணமானதுமான அடித்தளம் {ப்ரதாநத்ருத்} நீயே. அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் {ஸர்வபார்ச்வமுகன்} நீயே. (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முக்கண்களைக் கொண்டவன் {த்ரியக்ஷன்} நீயே. (பேரளவில் அறத்தைக் கொண்டிருக்கும் விளைவால்) உயிரினங்கள் அனைத்திலும் மேன்மையானவன் {தர்மஸாதாரணவரன்} நீயே.(138-109) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மா {சராசராத்மா} நீயே. (புலப்படமுடியாத) நுட்பமான ஆத்மாவின் வடிவம் {ஸூக்ஷ்மாத்மா} நீயே. கனிகளில் ஆசையற்று உயிரினங்களால் அடையப்படும் அறச்செயல்கள் அனைத்தின் கனியாக விடுதலை {முக்தி} என்ற வடிவில் இறவாமையை அருள்பவன் {அம்ருதகோவ்ருஷேச்வரன்} நீயே. தேவர்களின் தேவர்களுக்கும் ஆசான் {ஸாத்யரிஷி} நீயே. அதிதியின் மகனான வசு {ஆதித்யவஸு} நீயே. எண்ணற்ற ஒளிக்கதிர்களைக் கொண்டவனும் {விவஸ்வாந்}, அண்டத்தை உண்டாக்குபவனும் {ஸவிதா}, வேள்விகளில் பருகப்படும் சோமத்தின் வடிவமும் {அம்ருதன்} நீயே.(139-110)
புராணங்கள் மற்றும் புனித வரலாறுகள் பிறவற்றின் ஆசானான வ்யாஸன் நீயே. (புராணங்கள் மற்றும் பிற புனித வரலாறுகளோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) வியாசரின் மூளையில் உதித்த சுருக்கப்பட்ட மற்றும் சுருக்கப்படாத படைப்புகள் {ஸம்க்ஷேபோவிஸ்தரஸ்ஸர்க்கன்} நீயே. ஜீவன்களின் மொத்த தொகை {பர்யயோநரன்} நீயே. பருவகாலம் {ருது} நீயே. வருடம் {ஸம்வத்ஸரம்} நீயே. மாதம் {மாஸம்} நீயே. அரைத்திங்கள் {பக்ஷம்} நீயே. இக்காலங்களை நிறைவு செய்யும் புனித நாட்கள் {ஸங்க்யாஸமாபநன்} நீயே.(140-111) கலை நீயே. காஷ்டை நீயே. லவம் நீயே. மாத்திரை நீயே. முஹூர்த்தம் நீயே. அஹஸ் {பகலாய் இருப்பவன்} நீயே. க்ஷபம் நீயே. க்ஷணம் நீயே. அண்டமெனும் மரம் நிற்கும் மண் {விச்வக்ஷேத்ரம்} நீயே. (எங்கே உயிரினங்கள் அனைத்தும் எழுமோ அந்த மாயையுடன் கூடிய புலப்படாத சைதன்யத்தின் வடிவமாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் வித்து {ப்ரஜாபீஜம்} நீயே. மஹத்தத்துவம் {லிங்கம்} நீயே. (மஹத் தத்துவத்தை உண்டாக்கும் நனவுநிலையின் வடிவமாக இருப்பதால்) ஜீவனின் அரும்பு {ஆத்யநிர்க்கமம்} நீயே.(141-112) ஸத் அல்லது விளைவு {காரியம்} நீயே. அஸத் அல்லது காரணம் நீயே. (புலன்களுக்குப் பிடிபடும் வகையில்) புலப்படுபவன் {வ்யக்தம்} நீயே. (புலன்களுக்குப் பிடிபடாத வகையில்) புலப்படாமல் இருப்பவன் {அவ்யக்தம்} நீயே. தந்தை {பிதா} நீயே. தாயும் {மாதா} நீயே. பாட்டன் {பிதாமஹன்} நீயே. (தவங்களோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) சொர்க்கத்தின் வாயில் {ஸ்வர்க்கத்வாரம்} நீயே. (ஆசையோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் உற்பத்தி வாயில் {ப்ரஜாத்வாரம்} நீயே. (எதனால் மட்டுமே பிரம்மத்தோடு கலக்கும் நிலைக்கு வழிநடத்த முடியுமோ அந்த ஆசையின்மையோடு அடையாளம் காணப்படுபவனாக இருக்கும் காரணத்தால்) விடுதலையின் {முக்தியின்} வாயில் {மோக்ஷத்வாரம்} நீயே. சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவக்கும் அறச்செயல்கள் {த்ரிவிஷ்டபம்} நீயே.(142-113) நிர்வாணம் (அல்லது தனிப்பட்ட இருப்பைத் தவிர்த்த விடுதலை {முக்தி} நிலை) நீயே. (ஒவ்வொரு உயிரினத்திற்கும் அனைத்து வகை இன்பங்களையும் கொடுத்து) மகிழ்ச்சிப்படுத்துபவன் {ஹ்லாதநன்} நீயே. (அறவோரில் முதன்மையானோர் அடையும்) வாய்மையின் உலகம் {ப்ரம்மலோகன்} நீயே. (அறவோரால் அடையப்படும்) வாய்மையின் உலகத்தைக் காட்டிலும் மேன்மையான நிலை {பரகதி} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களைப் படைத்தவன் {தேவாஸுரவிநிர்மாதா} நீயே. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரபராயணன்} நீயே.(143-114) (பிருஹஸ்பதி மற்றும் சுக்ரனின் வடிவில் இருப்பதால்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆசானாக இருப்பவன் {தேவாஸுரகுரு} நீயே. எப்போதும் வெற்றியடைபவன் {தேவன்} நீயே. தேவர்களாலும், அசுரர்களாலும் எப்போதும் வழிபடப்படுபவன் {தேவாஸுரநமஸ்க்ருதன்} நீயே. யானையை வழிநடத்தும் மஹாமாத்ரத்தைப் போலத் தேவர்களையும், அசுரர்களையும் வழிநடத்துபவன் {தேவாஸுரமஹாமாத்ரன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அனைவருக்கும் உரிய புகலிடம் {தேவாஸுரகணாச்ரயன்} நீயே.(144-115)
(இந்திரன் மற்றும் விரோசனன் ஆகிய இருவரின் வடிவிலும் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைவனாக இருப்பவன் {தேவாஸுரகணாத்யக்ஷன்} நீயே. (தேவ மற்றும் தைத்திய படைத்தலைவர்களான கார்த்திகேயன் மற்றும் கேசியின் வடிவில் நீயே இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் போர்த்தலைவன் {தேவாஸுரகணாக்ரணி} நீயே. புலன்களைக் கடந்து ஒளிர்ந்து கொண்டிருப்பவன் {தேவாதிதேவன்} நீயே. (நாரதர் மற்றும் பிறரைப் போன்ற) தெய்வீக முனிவர்களின் வடிவில் இருப்பவன் {தேவரிஷி} நீயே. (பிரம்மன் மற்றும் ருத்திரனின் வடிவில் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு வரங்களை அளிப்பவன் {தேவாஸுரவரப்ரதன்} நீயே.(145-116) தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களை ஆள்பவன் {தேவாஸுரேச்வரன்} நீயே. (அண்டம் அழியும்போது) அண்டம் நுழையப் போகும் இடம் {விச்வன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதங்களை ஆள்பவனுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரமஹேச்வரன்} நீயே. தேவர்கள் அனைவராலுமான உடல்படைத்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. சிந்திக்கத் தனக்கு மேம்பட்ட எதுவும் இல்லாதவன் {அசிந்த்யன்} நீயே. தேவர்களின் உள் ஆன்மாவாக இருப்பவன் {தேவதாத்மா} நீயே. சுயத்தில் பிறந்தவன் {ஆத்மஸம்பவன்} நீயே.(146-117) அசைவற்ற பொருட்களின் வடிவம் {மாயையைப் பிளந்து வெளிப்படுபவன்} {உத்பித்} நீயே. மூன்று அடிகளில் உலகை மறைத்தவன் {த்ரிவிக்ரமன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வைத்யன்} நீயே. களங்கமற்றவன் {விரஜன்} நீயே. ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவன் {நீரஜன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {அமரன்} நீயே. புகழ் துதிகளால் துதிக்கப்பட வேண்டியவன் {ஈட்யன்} நீயே. காலத்தைப் பிரதிபலிக்கும் தடுக்கப்பட முடியாத யானையின் ஆசான் {ஹஸ்தீச்வரன்} நீயே. கலிங்கர்களின் நாட்டில் வழிபடப்படும் புலிகளின் தலைவனுடைய வடிவம் {வ்யாக்ரன்} {வியாக்ரேஸ்வரன்} நீயே. (ஆற்றலில் ஏற்றம் கொண்டவனாக இருப்பதன் விளைவால்) தேவர்களுக்கு மத்தியில் சிங்கம் என்றழைக்கப்படுபவன் {தேவஸிம்மன்} நீயே. மனிதர்களில் முதன்மையானவன் {நரர்ஷபன்} நீயே.(147-118) பெரும் ஞானம் கொண்டவன் {விபுதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் முதல் பங்கை எடுத்துக் கொள்பவன் {அக்ரவரன்} நீயே. உணரப்பட முடியாதவன் {ஸூக்ஷ்மன்} நீயே. தேவர்கள் அனைவரின் மொத்தத் தொகை {ஸர்வதேவன்} நீயே. தவங்களால் மேம்பட்டிருப்பவன் {தபோமயன்} நீயே. எப்போதும் சிறந்த யோகத்தில் இருப்பவன் {ஸுயுக்தன்} நீயே. மங்கலமானவன் {சோபநன்} நீயே. வஜ்ரம் தரித்தவன் {வஜ்ரி} நீயே. பிராசங்கள் என்றழைக்கப்படும் பிறக்கும் தோற்றுவாய் {ப்ராஸாநாம்ப்ரபவன்} நீயே. பக்தர்களால் பல்வேறு வழிகளில் அடையப்படுபவன் {அவ்யயன்} நீயே.(148-119) (தேவர்ப்படைத்தலைவனான) குஹன் நீயே. இன்பநிலையின் உயர்ந்த எல்லை {காந்தன்} நீயே. படைப்போடு அடையாளம் காணப்படுபவன் {நிஜஸர்க்கன்} நீயே. (விடுதலையை {முக்தியை} அருளி) உயிரினங்களை மரணத்தில் இருந்து காப்பவன் {பவித்ரன்} நீயே. பிரம்மஹத்தி உட்பட அனைத்துப் பாவங்களையும் கழுவுபவன் {ஸர்வபாவநன்} நீயே. காளைகள் மற்றும் கொம்பு படைத்த பிற விலங்குகளின் வடிவில் இருப்பவன் {ஸ்ருங்கி} நீயே. மலைச்சிகரங்களை விரும்புபவன் {ஸ்ருங்கப்ரியன்} நீயே. சனிக்கோள் {பப்ரு} நீயே. யக்ஷர்களின் தலைவனான குபேரன் {ராஜராஜன்} நீயே. முற்றான களங்கமற்ற நிலை {நிராமயன்} நீயே.(149-120)
மகிழ்ச்சியை ஊக்கப்படுத்துபவன் {அபிராமன்} நீயே. தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தவன் {ஸுரகணன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் இடை நிறுத்துபவன் {தவிர்ப்பவன்} {விராமன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளின் தொடர்புடைய கடமைகள் அனைத்தும் {ஸர்வஸாதநன்} நீயே. நெற்றியிலும் ஒரு கண் கொண்டவன் {லலாடாக்ஷன்} நீயே. பளிங்குப் பந்தைப் போல அண்டத்தை வைத்து விளையாடுபவன் {விச்வதேவன்} நீயே. மானின் வடிவைக் கொண்டவன் {ஹரிணன்} நீயே. ஞானம் மற்றும் தவத்தின் வடிவிலான சக்தியுடன் கூடியவன் {ப்ரம்மவர்ச்சஸன்} நீயே.(150-121)(இமயம் மற்றும் மேரு முதலியவற்றின் வடிவிலான) அடையாத பொருட்கள் அனைத்தின் தலைவன் {ஸ்தாவராணாம்பதி} நீயே. பல்வேறு நோன்பு மற்றும் நியமங்களின் மூலம் புலன்களை அடக்கியவன் {நியமேந்த்ரியவர்த்தநன்} நீயே. நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்தவன் {ஸித்தார்த்தன்} நீயே. விடுதலையுடன் {முக்தியுடன்} அடையாளம் காணப்படுபவன் {ஸித்தபூதார்த்தன்} நீயே. நாங்கள் வழிபடுபவனிடத்தில் இருந்து வேறுபட்டவன் {அசிந்த்யன்} நீயே. வாய்மையையே தவமாகக் கொண்டவன் {ஸத்யவ்ரதன்} நீயே. தூய இதயம் கொண்டவன் {சுசி} நீயே.(151-122) (நோன்புகளுக்கான கனிகளைக் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) நோன்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் {வ்ரதாதிபன்} நீயே. (துரியத்தின் வடிவில் இருக்கும்) உயர்ந்தவன் {பரம்} நீயே, ப்ரம்மம் நீயே. பக்தர்களின் உயர்ந்த புகலிடம் {பக்தாநாம்பரமாகதி} நீயே. (விடுதலை கொண்டவனாக {முக்தனாக} இருப்பதால்) பந்தங்கள் அனைத்தையும் கடந்தவன் {விமுக்தன்} நீயே. லிங்க உடலில் இருந்து விடுபட்டவன் {முக்ததேஜஸ்} நீயே. அனைத்து வகைச் செழிப்புடன் கூடியவன் {ஸ்ரீமாந்} நீயே. பக்தர்களின் செழிப்பை அதிகரிப்பவன் {ஸ்ரீவர்த்தநன்} நீயே. இடையறாத மாற்றங்களுக்கு உட்படுபவன் {ஜகத்} நீயே[9].(152-123)ஓ! கிருஷ்ணா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்கத் தேவனுடைய பெயர்களை அவற்றின் முக்கியத்துவத்தின் வரிசையில் புகழ்ந்து பாடினேன். நமது துதிகள், வழிபாடு மற்றும் மதிப்புக்குத் தகுந்தவனும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் புகழப்பட முடியாதவனும், முனிவர்களாலும் துதிக்கப்பட முடியாதவனும், அனைவரின் பெருந்தேவனுமான அந்த அண்டத் தலைவனின் புகழை வேறு எவனால் துதிக்க முடியும்?(153) எனினும், உயர்ந்த பலத்தைக் கொண்ட தேவனும், நுண்ணறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த வேள்விகளின் தலைவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால், அவனிடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனைப் புகழ்ந்தேன்.(154) ஒருவனிடம் மங்கலத்தைப் பெருக்கும் இந்தப் பெயர்களால் அருள்நிலையின் பெருந்தேவனைப் புகழ்வதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க ஆன்மா மற்றும் தூய இதயத்துடன் கூடிய ஒரு வழிபாட்டாளன் தன்னை {சுயத்தை} அடைவதில் வெல்கிறான்.(155)
பிரம்மத்தை அடையும் சிறந்த வழிமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு துதியாக இந்தப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. இந்தத் துதியின் துணையுடன் நிச்சயம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வான். முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் இந்தத் துதியைத் துதிப்பதன் மூலம் அந்த உயர்ந்த தேவனைப் புகழ்கின்றனர் {துதிக்கின்றனர்}.(156) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவரால் துதிக்கப்படும்போது, இவ்வாறு தன் புகழைப் பாடுவோரிடம் மஹாதேவன் நிறைவை அடைகிறான். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் பக்தர்களிடம் எப்போதும் கருணை நிறைந்தவனாவான். எல்லாம் வல்லவனான அவன் தன்னை வழிபடுவோருக்கு விடுதலையை {முக்தியை} அளிக்கிறான்.(157) நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் {பக்தியும்} கொண்ட மனிதர்களில் முதன்மையானோர், உயர்ந்தவனும், நித்திய தேவனுமான ஈசானனின் {இந்தத்} துதியைக் கேட்டாலும், பிறருக்காக மதிப்புடன் உரைத்தாலும், அவர்கள் தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் கிடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், நடக்கும் போதும், விழித்திருக்கும்போதும், கண் இமைகளைத் திறக்கும்போதும், அவற்றை மூடும்போதும் என அனைத்து நேரங்களிலும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவனை இவ்வாறே துதித்து, அவனைக் குறித்தே மீண்டும் மீண்டும் நினைத்து, தங்கள் சக மனிதர்களுக்கு மத்தியில் மதிப்பிற்குரியவர்களாகி பெரும் நிறைவையும், பேரின்பத்தையும் அடைவார்கள்.(158-161)
பல்வேறு வகைகளில் பல கோடி பிறவிகளின் போக்கில் ஓர் உயிரினம் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ளும்போதே, அவனது இதயத்தில் மஹாதேவனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} உண்டாகும்.(162) (அண்டத்தின்) மூலக்காரணனான பவனை வழிபடும் ஒவ்வொரு வழிமுறையையும் அறிந்த ஒருவனுடைய இதயத்தில் நற்பேற்றால் மட்டுமே அந்தப் பெருந்தேவனிடம் சிதறாத அர்ப்பணிப்பானது {பக்தியானது} முழுமையாக எழும்.(163) ஒரே நோக்கத்தைக் கொண்டதும், நடைமுறையில் ஒருபோதும் தடுக்கப்பட முடியாததுமான ருத்திரனிடம் கொள்ளும் களங்கமற்ற தூய அர்ப்பணிப்பானது தேவர்களிடம் அரிதாகக் காணப்பட்டாலும் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படவில்லை.(164) ருத்திரனின் அருளின் மூலமே மனிதர்களின் இதயங்களில் இத்தகைய அர்ப்பணிப்பு எழுகிறது. இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால், மஹாதேவனுடன் முழுமையாகத் தங்களை அடையாளம் காணும் மனிதர்கள், உயர்ந்த வெற்றியை அடைவதில் வெல்கிறார்கள்.(165)
தன்னை நாடுவோருக்கு அருளை எப்போதும் வழங்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், முழு ஆன்மாவைத் தன்னிடம் செலுத்துவோரைப் பணிவன்புடன் இவ்வுலகத்தில் இருந்து மீட்கிறான்.(166) மறுபிறவியிலிருந்து உயிரினங்களைக் காக்கும் அந்தப் பெருந்தேவனைத் தவிர, பிற தேவர்கள் அனைவரும், மனிதர்களுக்குத் தவங்களைப் போல வேறு ஏதும் பலத்தின் ஊற்றுக்கண் இல்லாததால் அவற்றைத் தொடர்ந்து வீணாக்கச் செய்கின்றனர்.(167) ஆன்ம அமைதியைக் கொண்டவரும், காந்தியில் இந்திரனுக்கு ஒப்பானவருமான தண்டி, விலங்குத் தோல்களை உடுத்தியிருந்தவனும், இருப்பில் உள்ள மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தின் தலைவனுமான அந்தப் பெருந்தேவனை இவ்வாறே துதித்தார்.(168) இந்தத் துதியை பிரம்மனே சுமந்திருந்தான் (தனக்குள் வைத்திருந்தான்). உண்மையில் பிரம்மன் சங்கரன் முன்னிலையிலேயே இதைத் துதித்தான். (பிரம்மத்தை அறிந்தவனாகவும், பிரம்மத்தை அறிந்தோரிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் இருப்பதால்) பிராமணன் நீயே. எனவே, உன்னால் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.(169) இது பாவங்கள் அனைத்தையும் கழுவி தூய்மைப்படுத்தும். இது யோகத்தையும், விடுதலையையும் {முக்தியையும்}, சொர்க்கத்தையும், மனநிறைவையும் கொடுக்கும்.(170)
இந்தத் துதியைக் கொண்டு சிதறாத அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சங்கரனைத் துதிப்பவன், சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளில் அர்ப்பணிப்புள்ளோரின் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(171) ஒரே அர்ப்பணிப்புடன் இந்தத் துதியைக் கொண்டு தினமும் ஒரு வருடம் துதிக்கும் வழிபாட்டாளன் தான் விரும்பும் கதியை அடைவதில் வெல்கிறான்.(172) இந்தத் துதி பெரும் புதிரைக் கொண்டதாகும். இது தொடக்கத்தில் படைப்பாளனான பிரம்மனின் நெஞ்சத்தில் வசித்தது. பிரம்மன் இதைச் சக்ரனுக்குச் சொன்னான். சக்ரன் இதை மிருத்யுவுக்குச் சொன்னான்.(173) மிருத்யு இதை ருத்திரர்களுக்குச் சொன்னான். தண்டி ருத்திரர்களிடம் இருந்தே இதைப் பெற்றார். உண்மையில், தண்டி தமது கடுந்தவங்களுக்கு வெகுமதியாகப் பிரம்மலோகத்தில் இதைப் பெற்றார்.(174) தண்டி இதைச் சுக்கிரனுக்குச் சொன்னார், பிருகு குலச் சுக்கிரன் இதைக் கௌதமருக்குச் சொன்னார். ஓ! மதுவின் வழித்தோன்றலே, கௌதமர் தம் பங்குக்கு இதை வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார்.(175)
மனு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாராயணனுக்கு இதைச் சொன்னான். சாத்தியர்களில் ஒருவனாக எண்ணப்படுபவனும், குறைவில்லா மகிமை கொண்டவனும், சிறப்பு மிக்கவனுமான நாராயணன் இதை யமனுக்குச் சொன்னான்.(176) வைவஸ்வத யமன் இதை நசிகேதனுக்குச் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தவனே, நசிகேதன் இதை மார்க்கண்டேயருக்குச் சொன்னான்.(177) ஓ! ஜனார்த்தனா, என் நோன்புகள் மற்றும் நியமங்களுக்கு வெகுமதியாக நான் இதை மார்க்கண்டேயரிடம் இருந்து பெற்றேன். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, பிறரால் கேட்கப்படாத இந்தத் துதியை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(178) இத்துதி சொர்க்கத்திற்கு வழிவகுக்கும். இது நோய்களை விலக்கி, நீண்ட வாழ்நாளை அளிக்கும். இது {இந்தத் துதி} வேதங்களுக்கு இணக்கமானதும், உயர்ந்த புகழுக்குத் தகுந்ததுமாகும்” {என்றார் உபமன்யு}”[10].(சாந்தி பர்வம் -285 பகுதியில் தக்ஷன் சிவனை ஆயிரத்தெட்டு பெயர்களால் துதித்ததும் சிவ சஹஸ்ர நாமாவளி என்று அழைக்கப்படுகிறது. வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் வரும் சிவ சஹஸ்ர நாமாவளி அதனுடன் ஒத்துப் போகிறது. முனிவர் உபமன்யு சொன்ன துதியை யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் நினைவுகூர்கிறான். இதுவும் சிவஸஹஸ்ரநாமாவளி என்றே அழைக்கப்படுகிறது. லிங்க புராணத்திலும் சிவஸஹஸ்ரநாமாவளி இடம்பெற்றிருக்கிறது. அஃது இந்தச் சிவஸஹஸ்ரநாமாவளியோடு ஒத்துப் போகிறது. மஹாபாரத அனுசாசன பர்வம் 17ம் பகுதியில் வரும் இத்துதியே உண்மையில் சிவஸஹஸ்ரநாமாவளியாக அங்கீகரிக்கப்படுகிறது.)கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஓ! பார்த்தரே, பிரம்மச்சரிய நோன்பை நூற்று, புலன்களைக் கட்டுப்படுத்தி, தூய இதயத்துடன் முழுமையாக ஒரு வருடத்திற்கு இந்தத் துதியைத் துதிப்பவன், ஒரு குதிரை வேள்வியின் கனிகளை அடைவதில் வெல்கிறான். தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள் மற்றும் பாம்புகளால் அவனுக்கு {இத்துதியைத் துதிப்பவனுக்கு} எத்தீங்கையும் செய்ய முடியாது” {என்றான் கிருஷ்ணன்}.(179-180)
சிவமகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 18-வியாசர், கபிலர், சாருசீர்ஷர், வால்மீகி, பரசுராமர், விஷ்வாமித்ரர், அசிததேவலர், கிருத்ஸமதர், ஜைகீஷவ்யர், கர்க்கர், பராசரர், மாண்டவ்யர், காலவர் உள்ளிட்ட முனிவர்களும், கிருஷ்ணனும், உபமன்யுவும் பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வாசுதேவன் {கிருஷ்ணர்} பேசுவதை நிறுத்தியதும், பெரும் யோகியும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்}, யுதிஷ்டிரனிடம், “ஓ! மகனே, மஹாதேவனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைக் கொண்ட இந்தத் துதியைச் சொல்வாயாக, மஹேஸ்வரன் உன்னிடம் நிறைவை அடைவானாக.(1) ஓ! மகனே, பழங்காலத்தில், நான் ஒரு மகனை அடைய விரும்பி மேரு மலைகளின் சாரலில் கடுந்தவம் பயின்றேன். அப்போது இதே துதியைச் சொல்லித்தான் நான் துதித்தேன்.(2) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அதற்கான வெகுமதியாகத் தான் என் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை நான் அடைந்தேன். நீயும் இதே துதியைச் சொல்வதன் மூலம், உன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அந்தச் சர்வனிடம் இருந்து அடைவாய்” என்றார்.(3)
அதன்பிறகு, சாங்கியம் என்ற பெயரில் வரும் கோட்பாடுகளைச் செய்தவரும், தேவர்களாலேயே மதிக்கப்படும் முனிவருமான கபிலர், “பல பிறவிகளாகப் பெரும் அர்ப்பணிப்புடன் நான் பவனைத் துதித்தேன். இறுதியாக அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம் நிறைவை அடைந்து, மறுபிறவியைக் கடக்கும் அறிவை எனக்குக் கொடுத்தான்” என்றார்.(4)
அதன்பிறகு, சக்ரனின் நண்பரும், ஆலம்பனன் மகன் {ஆலம்பாயனர்} என்று வேறு பெயர் கொண்டவரும், கருணை நிறைந்தவருமான முனிவர் சாருசீர்ஷர்,(5) “நான் பழங்காலத்தில் கோகர்ண மலைகளுக்குச் சென்று நூறு வருடக் கடும் தவப்பயிற்சியில் அமர்ந்தேன். ஓ! மன்னன் பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அத்தவத்திற்கு வெகுமதியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் கூடியவர்களாக, அறமறிந்தவர்களாக, பெருங்காந்தி கொண்டவர்களாக, நோய் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவர்களாக, ஒரு லட்சம் வருடங்கள் வாழும் வாழ்நாட்களைக் கொண்டவர்களாக, எந்தப் பெண் தொடர்பும் இல்லாமல் பிறந்தவர்களாக நூறு மகன்களை அந்தச் சர்வனிடம் இருந்து அடைந்தேன்” என்றார்.(6,7)
அதன்பிறகு, சிறப்புமிக்க வால்மீகி- யுதிஷ்டிரனிடம், “ஒரு காலத்தில், ஒரு மெய்மை முரண் குறித்த ஒரு சர்ச்சையின் போது, ஹோம நெருப்பைக் கொண்ட தவசிகள் சிலர், பிராமணக்கொலை செய்த {பிரம்மஹத்தி எனும்} குற்றமிழைத்தவனாக என்னைப் பழித்து ஒதுக்கினர்.(8) ஓ! பாரதா, இவ்வாறு அவர்கள் என்னை ஒதுக்கிய பிறகு, பிராமணக்கொலை செய்தது போன்ற பாவம் என்னைப் பீடித்தது.[1] அப்போது என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக, பாவமற்றவனும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவனுமான ஈசானனின் பாதுகாப்பை நான் நாடினேன்.(9) என் பாவங்கள் அனைத்தில் இருந்தும் நான் தூய்மையடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விலக்குபவனும், அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனுமான அவன் என்னிடம், “உலகில் உன் புகழ் பெரிதாக இருக்கும்” என்றான் {சிவன்}” என்றார் {வால்மீகி}.(10)அதன்பிறகு, அறவோர் அனைவரிலும் முதன்மையானவரும், முனிவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் சுடர்மிக்கக் காந்தியுடன் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்},(11) “ஓ! பாண்டுவின் மூத்த மகனே, கற்றறிந்த பிராமணர்களாக இருந்த என் சகோதரர்களை {தமையன்களைக்} கொன்றதால் நான் பிராமணக் கொலை செய்த பாவத்தால் பீடிக்கப்பட்டிருந்தேன். ஓ! மன்னா, என்னைத் தூய்மை செய்து கொண்டு நான் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினேன்.(12) அந்தப் பெருந்தேவனின் பெயர்களைச் சொல்லி நான் அவனைத் துதித்தேன். இதனால் என்னிடம் நிறைவை அடைந்த பவன், எனக்கு ஒரு போர்க்கோடரியையும், இன்னும் பிற தெய்வீக அயுதங்களையும் கொடுத்தான்.(13) பிறகு அவன் என்னிடம், “நீ பாவத்தில் இருந்து விடுபட்டுப் போரில் வெல்லப்பட முடியாதவனாவாய். நோயில் இருந்து விடுபட்டவனாக இருப்பதால் உன்னைக் காலனாலும் வெல்ல முடியாது” என்றான்.(14) சிறப்புமிக்கவனும், {சடா} மகுடம் தரித்தவனும், மங்கல வடிவைக் கொண்டவனுமான அந்தத் தேவன் என்னிடம் இவ்வாறே சொன்னான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அந்தத் தேவனின் {ஸர்வஜ்ஞனின்} கருணையால் அவன் சொன்னதனைத்தையும் அடைந்தேன்” என்றார் {பரசுராமர்}.(15)
அதன்பிறகு விஷ்வாமித்ரர், “முன் நான் க்ஷத்திரியனாக இருந்தேன். பிராமணனாக விரும்பிய நான் என் துதிகளைப் பவனுக்குச் செலுத்தினேன். அந்தப் பெருந்தேவனின் கருணையால் அடைதற்கு மிக அரிதான உயர்ந்த பிராமண நிலையை நான் அடைந்தேன்” என்றார் {விஷ்வாமித்ரர்}.(16)
அதன்பிறகு, முனிவர் அசித-தேவலர், பாண்டுவின் அரச மகனிடம், “ஓ! குந்தியின் மகனே, பழங்காலத்தில், நான் செய்த அறச்செயல்கள் மூலம் பெற்றிருந்த தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தும் சக்ரனுடைய சாபத்தினால் அழிவடைந்தன. அந்தத் தகுதிகளுடன் சேர்த்து, பெரும் புகழையும், நெடும் வாழ்நாளையும் அந்தப் பலமிக்க மஹாதேவனே அன்புடன் எனக்குத் திருப்பிக் கொடுத்தான்” என்று சொன்னார்.(18)
சக்ரனின் அன்புக்குரிய நண்பரும், தெய்வீக ஆசானான காந்திமிக்கப் பிருஹஸ்பதிக்கு ஒப்பானவரும், சிறப்புமிக்கவருமான முனிவர் கிருத்ஸமதர், ஆஜமீட குலத்தைச் சார்ந்த யுதிஷ்டிரனிடம்,(19) “சிந்தைக்கெட்டாதவனான சக்ரன், பழங்காலத்தில் ஆயிரம் வருடங்களுக்கு நீண்ட ஒரு வேள்வியை {ஸத்ரயாகத்தைச்} செய்தான். அந்த வேள்வி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, {ரதந்தரமென்னும்} சாமங்கள் உரைக்கச் சக்ரனால் நான் ஈடுபடுத்தப்பட்டேன். பிரம்மனின் கண்களில் பிறந்தவரான மனுவின் மகன் வரிஷ்டர் அந்த வேள்விக்கு வந்து, என்னிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ரததந்தரங்களை நீர் முறையாகச் சொல்லவில்லை.(20,21) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, குறையுடன் படிப்பதன் மூலம் தகுதியிழப்பை ஈட்டாமல், உமது புத்தியின் துணையுடன் சாமங்களைச் சரியாகப் படிப்பீராக. ஓ! தீய புத்தி கொண்டவரே, வேள்வியை அழிக்கும் இத்தகைய பாவத்தை ஏன் நீர் செய்கிறீர்? என்று கேட்டார்.(22) பெரும் கோபக்காரரான முனிவர் வரிஷ்டர், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, கோபவசப்பட்டு மீண்டும் என்னிடம், “காற்றும், நீரும் இல்லாதவையும், வேறு விலங்குகளால் புறக்கணிக்கப்பட்டவையும், பாதைகளற்றவையுமான காடுகளில் அச்சத்தால் நிறைந்ததும், துயரத்துடன் கூடியதும், புத்தியற்றதுமான ஒரு விலங்காவீராக. இவ்வாறு பதினோராயிரத்து எண்ணூறு ஆண்டுகள் காலத்தை நீர் கழிப்பீராக.(23,24) இக்காலத்தை நீர் கழிக்கப்போகும் காடானது, புனித மரங்கள் ஏதும் இல்லாததாகவும், ருருக்களும் {புள்ளிமான்களும்}, சிங்கங்களும் நிறைந்ததாக இருக்கும். உண்மையில், பெருந்துயரத்தில் மூழ்கிய ஒரு கொடும் மானாவீராக” என்று சொன்னார்.(25) ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, அவர் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனேயே நான் ஒரு மானாக மாறினேன். பிறகு நான் மஹேஸ்வரனின் பாதுகாப்பை நாடினேன். அந்தப் பெருந்தேவன் என்னிடம்,(26) “அனைத்துவகை நோய்களில் இருந்தும் விடுபடுவதுடன் அழிவற்றவனாகவும் {மரணமற்றவனாகவும்} நீ இருப்பாயாக. துயரம் ஒருபோதும் உன்னைப் பீடிக்காதிருக்கட்டும். சக்ரனுடன் உன் நட்பு மாறாதிருக்கட்டும், இந்திரனுடைய மற்றும் உன்னுடைய வேள்விகள் பெருகட்டும்” என்றான்.(27) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வழியிலேயே அனைத்து உயிரினங்களுக்கும் உதவி செய்கிறான். அனைத்து உயிரினங்களின் இன்ப துன்பங்களை விதிப்பவனாகவும், விலக்குபவனாகவும் எப்போதும் அவனே இருக்கிறான்.(28) அந்தச் சிறப்புமிக்கத் தேவன், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புரிந்துகொள்ளப்பட இயலாதவனாவான். ஓ! மகனே, ஓ! போர்வீரர்களில் சிறந்தவனே, (மஹாதேவனின் கருணையால்) கல்வியில் இணையற்றவனாக நான் இருக்கிறேன்” என்றார் {கிருத்ஸமதர்}.(29)
அதன்பிறகு, புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான வாசுதேவன் {கிருஷ்ணன்}, மீண்டும் ஒருமுறை, “தங்கக் கண்களைக் கொண்ட மஹாதேவன் என் தவங்களால் என்னிடம் நிறைவை அடைந்தான்.(30) ஓ! யுதிஷ்டிரரே, நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம், “ஓ! கிருஷ்ணா, அனைவரும் ஆசைப்படும் செல்வத்தைவிட என் அருளால் அனைத்து மனிதர்களின் அன்புக்குரியவனாவாய்.(31) போரில் நீ வெல்லப்பட முடியாதவனாவாய். நீ நெருப்பு நிகரான சக்தியுடையவனாவாய்” என்றான். அச்சந்தர்ப்பத்தில் மஹாதேவன் ஆயிரக்கணக்கான வேறு வரங்களையும் எனக்களித்தான்.(32) முந்தைய அவதாரமொன்றில், மணிமந்தம் என்ற மலையில் கோடிக்கணக்கான வருடங்கள் {ஒரு கோடியே ஆயிரத்து நூறு வருடங்கள்} மஹாதேவனை நான் துதித்தேன்.(33) நிறைவையடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம் இந்த வார்த்தைகளில், “நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ விரும்பும் வரங்களை வேண்டுவாயாக” என்று சொன்னான்.(34) அவனுக்குத் தலைவணங்கிய நான் அவனிடம் இவ்வார்த்தைகளில், “பலமிக்க மஹாதேவன் என்னிடம் நிறைவை அடைந்திருந்தால்,(35) ஓ! ஈசானனே, நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பு மாறாதிருக்கட்டும். இதுவே நான் வேண்டும் வரமாகும்” என்றேன். அந்தப் பெருந்தேவன் என்னிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்து போனான்” என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(36)
ஜைகீஷவ்யர், “ஓ! யுதிஷ்டிரா, முன்பு வாராணசி {காசி} நகரத்தில் என்னைத் தேடி வந்த அந்தப் பலமிக்க மஹாதேவன், இறையாண்மையின் எட்டுக் குணங்களை {அணிமா முதலிய எண்குணங்களோடு கூடிய ஸித்தியை} எனக்கு அளித்தான்” என்றார்.(37)
கர்க்கர், “ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரஸ்வதி ஆற்றங்கரையில், நான் செய்த மனோவேள்வியின் விளைவால் என்னிடம் நிறைவை அடைந்த அந்தப் பெருந்தேவன், அற்புத அறிவியலும், அறுபத்துநான்கு அங்கங்களுடன் கூடியதுமான காலஞானத்தை {அறுபத்து நான்கு கலைகளிலும் அற்புத ஞானத்தை} எனக்குக் கொடுத்தான்.(38) வேதங்களை முழுமையாக அறிந்தவர்களும், இணையான தகுதிகளை உடையவர்களுமான ஓராயிரம் மகன்களையும் எனக்குக் கொடுத்தான். அவனது கருணையின் மூலம், அவர்களுடைய வாழ்நாளும், என்னுடைய வாழ்நாளும் பத்து லட்சம் ஆண்டுகளென நீண்டிருக்கின்றன” என்றார் {கர்க்கர்}.(39)
பராசரர், “ஓ! மன்னா, பழங்காலத்தில் நான் சர்வனை நிறைவடையச் செய்தேன். பிறகு நான், பெருந்தவத்தகுதியை உடையவனும், மேன்மையான சக்தியைக் கொண்டவனும், உயர்ந்த யோகத்தை அறிந்தவனும், பார்பரவும் புகழை ஈட்டுபவனும்,(40) வேதங்களைத் தொகுப்பவனும், செழிப்பின் இல்லமாக இருப்பவனும், வேதங்கள் மற்றும் பிராமணர்களிடம் அர்ப்பணிப்புள்ளவனும், கருணைக்காகப் புகழ்பெறக் கூடியவனுமான ஒரு மகனை அடைய விரும்பினேன். அத்தகைய ஒரு மகனையே நான் மஹேஸ்வரனிடமிருந்து பெற விரும்பினேன்.(41) என் இதய விருப்பம் இதுதான் என்பதை அறிந்து கொண்ட அந்த முதன்மையான தேவன், என்னிடம், “நீ என்னிடம் அடைய விரும்பும் உன் நோக்கம் கனிவதன் மூலம், கிருஷ்ணன் {கருப்பன்} என்ற பெயரில் நீ ஒரு மகனை அடைவாய். ஸாவர்ணி-மனு என்ற பெயரில் அறியப்படும் படைப்பில், உன்னுடைய மகன் ஏழு முனிவர்களில் ஒருவனாகக் கருதப்படுவான். அவன் வேதங்களைத் தொகுத்து, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனாக இருப்பான். இது தவிர அவன் பழைய வரலாறுகளின் ஆசானாக இருந்து, அண்டத்திற்கு நன்மை செய்வான். கடுந்தவங்களுடன் கூடிய அவன், சக்ரனின் அன்புக்குரிய நண்பனாக இருப்பான். உன் மகன் அனைத்து வகை நோய்களில் இருந்து விடுபட்டவனாக இருப்பதுடன், மரணமற்றவனாகவும் இருப்பான்” என்றான். அந்தப் பெருந்தேவன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அங்கேயே அப்போது மறைந்து போனான். ஓ! யுதிஷ்டிரா, அழிவற்றவனும், மாற்றமற்றவனும், உயர்ந்த தவங்கள் மற்றும் பரமசக்தியுடன் கூடியவனுமான அந்தத் தேவனிடம் இருந்து இத்தகைய நன்மையையே நான் அடைந்தேன்” என்றார் {பராசரர்}.(45)
மாண்டவ்யர், “பழங்காலத்தில், கள்வனாக இல்லாவிட்டாலும், கள்வனென்ற ஐயப்பாட்டினால் (மன்னனின் ஆணைகளின் பேரில்) நான் சூலத்தின் மேல் ஏற்றப்பட்டேன். அப்போது சிறப்புமிக்க மஹாதேவனை நான் துதித்தபோது அவன் என்னிடம்,(46) “சூலத்தில் இருந்து விரைவில் விடுபட்டு கோடிக்கணக்கான {நூறு கோடி} வருட காலம் வாழ்ந்திருப்பாய். சூலத்தினாலுண்டாகும் நோய் உனதாகாது.(47) அனைத்துவகைத் துயரங்கள் மற்றும் நோய்களில் இருந்து நீ விடுபடுவாய். ஓ! தவசியே, உன்னுடல் தர்மத்தின் (வாய்மையின்) நான்காவது காலில் இருந்து உண்டானதால்,(48) பூமியில் நீ ஒப்பற்றவனாக இருப்பாய். உன் வாழ்வைக் கனிநிறைந்ததாக்குவாயாக. பூமியின் புனித நீர்நிலைகள் அனைத்திலும் எத்தடையுமின்றி நீராட இயன்றவனாயிருப்பாய்.(49) ஓ! கற்றறிந்த பிராமணா, உன்னுடல் அழிவடைந்ததும், நீ சொர்க்கத்தின் இன்பநிலையை எல்லையில்லா காலத்திற்கு அனுபவிக்குமாறு நான் செய்வேன்” என்றான். காளையைத் தன் வாகனமாகக் கொண்டவனும், ஒப்பற்ற காந்தியைக் கொண்டவனும், விலங்குத் தோலை உடுத்தியவனும், துதிக்கத்தக்க தேவனுமான மஹேஸ்வரன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே, அப்போதே மறைந்து போனான்” என்றார் {மாண்டவ்யர்}.(50, 51)
காலவர், “முற்காலத்தில் நான் என் ஆசானான விஷ்வாமித்ரரின் பாதத்தில் கல்வி கற்று வந்தேன். என் தந்தையைக் காணும் நோக்கத்தோடு அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு என் இல்லத்திற்குப் புறப்பட்டேன். (விதவையாகியிருந்த) என் தாயார் கவலையால் நிறைந்து, அழுதுகொண்டே என்னிடம்,(52) “ஐயோ, வேத ஞானத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், இல்லம் திரும்ப ஆசானால் விடுவிக்கப்பட்டவனும், இளமையின் அருள்கள் அனைத்தையும் கொண்டவனும், தற்கட்டுப்பாடுடையவனுமான தமது மகனை உன் தந்தை ஒரு போதும் காணமாட்டார்” என்றாள்.(53) என் தாயாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, என் தந்தையைக் காண முடியாத வருத்தத்தால் நான் நிறைந்தேன். பிறகு குவிந்த ஆன்மாவுடன் நான் மஹேஸ்வரனுக்கு என் துதிகளைச் செலுத்தியபோது, அவன் என்னிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு,(54) “ஓ! மகனே, உன் தந்தை, உன் தாய் மற்றும் நீ ஆகியோர் அனைவரும் மரணத்தில் இருந்து விடுபட்டவர்களாவீர்கள். விரைவாகச் சென்று உன் வசிப்பிடத்திற்குள் நுழைவாக; அங்கே நீ உன் தந்தையைக் காண்பாய்” என்றான்.(55) ஓ! யுதிஷ்டிரா, அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு நான் என் இல்லத்திற்குத் திரும்பிய போது, தமது தின வேள்வியை நிறைவுசெய்து வெளியே வரும் என் தந்தையைக் கண்டேன்.(56) அவர் தமது கையில் ஹோமத்திற்கான விறகையும், குசப் புற்களையும் {தர்ப்பங்களையும்}, உதிர்ந்த கனிகளையும் கைநிறையச் சுமந்து வந்தார். முறையாகத் தம்மைக் கழுவிக் கொண்டிருந்ததால் அவர் ஏற்கனவே தம் தின உணவை உண்டுவிட்டதாகத் தெரிந்தது. ஓ! பாண்டுவின் மகனே, (மகிழ்ச்சியால்) கண்ணீரில் குளித்த கண்களுடன், தமது கரங்களில் வைத்திருந்த அப்பொருட்களைக் கீழே வீசிவிட்ட என் தந்தை, அவரது பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த என்னை உயர்த்தித் தழுவிக் கொண்டு, என் தலையை முகர்ந்து {உச்சி முகர்ந்து}, என்னிடம், “ஓ! மகனே, நான் உன்னைக் காண்பது நற்பேற்றினாலேயே. உன் ஆசானிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டு நீ திரும்பியிருக்கிறாய்” என்று சொன்னார் {என் தந்தை}” என்றார் {காலவர்}”.(58)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க மஹாதேவனின் அதிசயமிக்க, அற்புதம் நிறைந்த அருஞ்செயல்களைக் குறித்துத் தவசிகள் சொன்னது கேட்டு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} வியப்பை அடைந்தான்.(59) அப்போது புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவனான கிருஷ்ணன், புருஹுதனிடம் பேசும் விஷ்ணுவை {இந்திரனிடம் பேசும் ஈசுவரனைப்} போல அறப்பெருங்கடலான யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினான்.(60)
வாசுதேவன், “சூரியனைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசிப்பவராகத் தெரிந்த உபமன்யு, என்னிடம், “மறச்செயல்களால் {நியாயமற்ற செயல்களால்} களங்கமடைந்திருக்கும் பாவிகள்,(61) ஈசானனை அடைவதில் வெற்றி அடைய மாட்டார்கள். ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் களங்கமடைந்த மனோநிலைகளைக் கொண்ட அவர்களால் அந்தப் பரமதேவனை ஒருபோதும் அணுக முடியாது. தூய ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாளர்களால் மட்டுமே அந்தப் பரமதேவனை அடைவதில் வெல்ல முடியும்.(62) ஒரு மனிதன் அனைத்து வகை இன்பங்கள் மற்றும் ஆடம்பரங்களை அனுபவித்து வாழ்ந்தாலும், அந்தப் பரமதேவனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தானானால், அவன் தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட காட்டுத் துறவிகளுக்கு இணையானவனாகக் கருதப்படுவான்.(63) ஒரு மனிதனிடம் ருத்திரன் நிறைவையடைந்தால், பிரம்ம நிலையையோ, கேசவ நிலையையோ {விஷ்ணுவின் நிலையையோ}, தேவர்கள் அனைவருடன் கூடிய சக்ரனின் {இந்திரனின்} நிலையையோ, மூவுலகங்களின் அரசுரிமையையோ அவனால் வழங்க முடியும்.(64) ஓ! ஐயா, பவனை மனத்தில் வழிபடும் மனிதர்கள், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு, தேவர்கள் அனைவருடன் கூடிய சொர்க்கவாசத்தை அடைகிறார்கள்.(65) குளங்கள் மற்றும் தடாகங்களை அழித்துத் தன் இல்லங்களுக்கான அடித்தளத்தை எழுப்பி உண்மையில் மொத்த அண்டத்தையே அழிப்பவனுமாக உள்ள ஒருவனும், முக்கண்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவனை வழிபட்டுத் துதிப்பானானால், பாவத்தால் களங்கமடையமாட்டான்.(66) மங்கலக் குறியீடுகளேதும் அற்றவனும், பாவங்கள் அனைத்தாலும் கறைபடிந்தவனுமான ஒருவனும், சிவனைத் தியானிப்பதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறான்.(67) ஓ! கேசவா, மஹாதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்த புழு பூச்சிகள் மற்றும் பறவைகள் கூட முற்றிலும் அச்சமற்ற நிலையில் திரியவல்லவையாகின்றன.(68) மஹாதேவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்கள் நிச்சயம் மறுபிறவியில் இருந்து விடுதலை அடைவார்கள் {முக்தி அடைவார்கள்} என்பது திடநம்பிக்கையுடன் கூடிய என் தீர்மானமாகும்” என்றார் {உபமன்யு}.(69) அதன் பிறகு கிருஷ்ணன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் மீண்டும் பின்வரும் வார்த்தைகளில் பேசினான்.(70)
அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, “ஆதித்யன், சந்திரன், காற்று, நெருப்பு, சொர்க்கம், பூமி, வசுக்கள், விஸ்வேதேவர்கள், தாத்ரி {தாதா}, அர்யமான், சுக்கிரன், பிருஹஸ்பதி, ருத்திரர்கள், சாத்யர்கள், வருணன், கோபன்,(71) பிரம்மன், சக்ரன், மருத்துகள், பிரம்ம அறிவைக் கற்பிக்கும் உபநிஷத்கள், வாய்மை, வேதங்கள், வேள்விகள், வேள்விக் கொடைகள், வேதங்களை உரைக்கும் பிராமணர்கள், சோமம், வேள்வி செய்வபர், வேள்விக்காணிக்கைகளில் தேவர்களின் பங்குகள், வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய், தீக்ஷை, நோன்பு நியமங்கள் என்ற வடிவில் உள்ள நலந்தரும் அனைத்துவகைக் கட்டுப்பாடுகள்,(72) ஸ்வாஹா, வஷட், பிராமணர்கள், தெய்வீகப் பசு, முதன்மையான அறச் செயல்கள், காலச் சக்கரம், பலம், புகழ், தற்கட்டுப்பாடு, புத்தி கொண்டோர் அனைவரின் உறுதி, நன்மை தீமைகள் அனைத்தும், ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்},(73) முதல் தரமான புத்தி, அனைத்து வகைகளைச் சார்ந்த சிறந்த தீண்டல்கள், (அறச்) செயல்கள் அனைத்தின் வெற்றி, தேவர்களின் பல்வேறு இனக்குழுக்கள், வெப்பத்தைப் பருகுபவர்கள் {ஊஷ்ம்பர்கள்}, சோமத்தைப் பருகுபவர்கள் {ஸோமபர்கள்}, லேகர்கள், ஸுயாமர்கள், துஷிதர்கள், மந்திரங்களையே தங்கள் உடல்களாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் {பிரம்மகாயர்கள்},(74) ஆபாஸுரர்கள், மணங்களில் மட்டுமே வாழ்பவர்கள் {கந்தபர்கள்}, பார்வையில் மட்டுமே வாழ்பவர்கள் {தூமபர்கள்}, தங்கள் பேச்சைக் கட்டுபடுத்தியவர்கள் {வாசாவிருத்தர்கள்}, தங்கள் மனங்களைக் கட்டுப்படுத்தியவர்கள் {மனோவிருத்தர்கள்}, தூய்மையானவர்கள் {சுத்தர்கள்}, யோக பலத்தின் மூலம் பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்கள் {நிர்மாணரதர்கள்}, தீண்டலையே {தங்கள் உணவாகக்} கொண்டு வாழும் தேவர்கள் {ஸ்பர்சாசசனர்கள்}, பார்வையை உண்டு வாழும் தேவர்கள் {தர்சபர்கள்}, வேள்வியில் ஊற்றப்படும் நெய்யை உண்டு வாழும் தேவர்கள் {ஆஜ்யபர்கள்},(75) வேண்டி பொருட்களைத் தங்கள் விருப்பப்படிப் படைக்கும் வல்லமை கொண்டவர்கள் {சிந்த்யத்யோதர்கள்}, தேவர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுவோர், ஓ! ஆஜமீடரே {யுதிஷ்டிரரே}, சுபர்ணர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், தானவர்கள், யக்ஷர்கள், சாரணர்கள், பாம்புகள்,(76) திரளான அனைத்தும், மிக நுட்பமான அனைத்தும், மென்மையான அனைத்தும், நுட்பமில்லாத அனைத்தும், கவலைகள் அனைத்தும், இன்பங்கள் அனைத்தும், இன்பத்திற்குப் பின் வரும் கவலைகள் அனைத்தும், கவலைக்குப் பின் வரும் இன்பங்கள் அனைத்தும், சாங்கிய தத்துவம், யோகம், முதன்மையானவையாகவும், மிக மேன்மையானவையாகவும் கருதப்படும் பொருட்களைக் கடந்திருக்கும் துதிக்கத்தக்க பொருட்கள் யாவும், தேவர்கள் அனைவரும், அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் புராதனமான இந்தப் படைப்பைத் தாங்கி, அண்டத்தைப் பாதுகாக்கும் அனைவரும், அனைத்து உயிரினங்களையும் படைத்தவனிடம் இருந்தே பிறப்பை அடைந்தனர்.(77,78)
நான் சொன்ன இவை யாவும் தவங்களின் துணையுடன் ஞானிகள் சிந்திப்பதைவிடத் திரளானவையாகும். உண்மையில் நுட்பமான பிரம்மமே வாழ்வின் {உயிரின்} காரணமாகும். நான் மதிப்புடன் அதற்குத் தலைவணங்குகிறேன். மாற்றமற்றவனும், அழிவற்றவனும், நம்மால் எப்போதும் துதிக்கப்படுபவனுமான அந்தத் தலைவன் நாம் விரும்பிய வரங்களை நமக்கு அருளட்டும்.(79) எந்த மனிதன், தன் புலன்களை அடக்கி, தன்னைத் தூய்மை செய்து கொண்டு, இந்தத் துதியைத் தன் நோன்புக்குத் தடையில்லாமல் ஒரு மாத காலம் உரைப்பானோ, அவன் ஒரு குதிரை வேள்வி செய்ததற்கு இணையான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்வான்.(80) இத்துதியை உரைப்பதனால் ஒரு பிராமணன் வேதங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்; ஓ! பிருதையின் மகனே, ஒரு க்ஷத்திரியன், வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான்; ஒரு வைசியன் செல்வத்தையும், புத்திசாலித்தனத்தையும் அடைகிறான்; ஒரு சூத்திரன் இம்மையில் மகிழ்ச்சியையும், மறுமையில் நற்கதியையும் அடைகிறான்.(81) பெரும்புகழைக் கொண்ட மனிதர்கள், அனைத்துப் பாவங்களையும் கழுவவல்லதும், மிகப் புனிதமானதும், தூய்மையடையச் செய்வதுமான இந்தத் துதிகளின் இளவரசனை உரைப்பதால் தங்கள் இதயங்களை ருத்திரனில் நிலைக்கச் செய்கிறார்கள்.(82) இந்தத் துதிகளின் இளவரசனை உரைக்கும் மனிதன், தன் உடலில் உள்ள மயிர்க்கால்களின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வாழும் நிலையை அடைவதில் வெல்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(83)
கிழவியும், அஷ்டவக்கிரரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 19-வதான்யரின் மகளைத் திருமணம் செய்ய நினைத்த அஷ்டவக்கிரர், அவரது கட்டளையின் பேரில் வடக்குத் திசை சென்று அந்தத் திசையின் தேவனைக் கண்டு உரையாடியது; ஒரு முதிய பெண்ணுக்கும் அஷ்டவக்கிரருக்கும் இடையில் நடந்த உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஒரு மனிதன் திருமணத்தில் தன் துணைவியின் {ஸஹதர்மையின்} கரத்தை ஏற்கும் தருணத்தில், இருவரும் சேர்ந்து ஆற்றப்போகும் கடமைகள் {ஸஹதர்மங்கள்} அனைத்தையும் குறித்த உறுதிமொழியின் தோற்றுவாய் என்ன?(1) ஒன்றாகச் சேர்ந்து ஆற்றப்போகும் கடமைகள் {ஸஹதர்மங்கள்} அனைத்தின் உறுதிமொழியானது, பழங்காலத்தில் பெரும் முனிவர்களால் விதிக்கப்பட்டவையா? அஃது அறநோக்கங்களில் வாரிசுகளைப் பெறும் கடமையைக் குறிக்குமா? அல்லது பாலினக் கலவியால் ஏற்படும் உடலின்பத்தை மட்டுமே குறிக்குமா?(2) இது குறித்து என் மனத்தில் நிறையும் ஐயம் பெரியதாகும். நான் குறிப்பிடும் உறுதிமொழியானது, உண்மையில் பாலினக் கலவிக்கு வழிவகுக்கும் இயற்கையான தூண்டல்களுக்கு முரணாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இவ்வுலகத்தில் அனைத்துக் கடமைகளையும் சேர்ந்தே ஆற்றுவதற்காக ஏற்படும் சேர்க்கையானது, மறுமையில் நீடிக்காமல் மரணத்தோடு முடிந்துவிடுவதே காணப்படுகிறது.(3) அனைத்துக் கடமைகளையும் சேர்ந்தே ஆற்றுவதற்கான இந்தச் சேர்க்கை சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால், ஓ! பாட்டா, சொர்க்கமானது இறந்து போன மனிதர்களாலேயே அடையப்படுகிறது. திருமணம் செய்து கொண்ட இணையில் ஒரு நேரத்தில் ஒருவர் இறப்பதே காணப்படுகிறது. மற்றொருவர் எங்கே இருப்பார்? எனக்கு இதைச் சொல்வீராக.(4) பல்வேறு வகைக் கடமைகளைப் பயில்வதன் மூலம் மனிதர்கள் பல்வேறு வகைக் கனிகளை {பலன்களை} அடைகின்றனர். மேலும் மனிதர்கள் பல்வேறு வகைத் தொழில்களைச் செய்கின்றனர். மாறுபட்ட இத்தகைய கடமைகள் மற்றும் செயல்களின் விளைவால் அவர்கள் செல்லும் நரகங்களும் மாறுபட்டவையாக இருக்கின்றன.(5)
குறிப்பாகப் பெண்கள் போலி நடத்தை கொண்டவர்கள் {பொய்யர்கள்} என்று முனிவர்கள் சொல்கிறார்கள். மனிதர்கள் இவ்வாறு இருக்கும்போது, குறிப்பாகப் பெண்கள் பொய்யர்கள் என்று விதிகளில் அறிவிக்கப்படும்போது, ஓ! ஐயா, கடமைகள் அனைத்தையும் சேர்ந்தே செய்வதற்கான நோக்கத்தில் பாலினங்களுக்கிடையில் எவ்வாறு சேர்க்கை ஏற்பட முடியும்?(6) பெண்கள் பொய்யர்கள் என்பதை ஒருவன் வேதங்களிலிலேயே படிக்கலாம். கடமை {தர்மம்} என்ற சொல்லானது, வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள படி, முதலில் பொதுவான பயன்பாட்டுக்காக (தகுதியேதும் இல்லாத நடைமுறைகளில் பயன்படுத்துவதற்காக) அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, திருமணச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் அந்தச் சொல்லானது, சரியானதாக இருப்பதற்குப் பதில், பயன்பாடு ஏதும் இல்லாதவற்றில் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் பேச்சின் வடிவமாக மட்டுமே இருக்கிறது.(7) இக்காரியம் குறித்து இடையறாமல் சிந்தித்தாலும், எனக்கு விளக்க முடியாததாக இருக்கிறது. ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஸ்ருதியில் விதிக்கப்பட்டுள்ளபடி தெளிவாகவும், விரிவாகவும் எனக்கு இதை விளக்குவதே உமக்குத் தகும். உண்மையில், அஃது என்ன? அதன் தன்மைகள் என்னென்ன? அதை நடைமுறைப்படுத்தும் வழியென்ன? என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக”[1].(8,9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக அஷ்டவக்கிரருக்கும், திசை என்ற பெயரில் அறியப்படும் பெண்ணுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(10) பழங்காலத்தில் கடுந்தவங்களைச் செய்த அஷ்டவக்கிரர், திருமணம் செய்து கொள்ளவிரும்பி, உயர் ஆன்ம முனிவரான வதான்யரின் மகளை இரந்து கேட்டார்.(11) அந்தக் கன்னிகை சுப்பிரபை என்ற பெயரில் அறியப்பட்டிருந்தாள். பூமியில் ஒப்பிலா அழகுடையவளாக அவள் இருந்தாள். குணம், கண்ணியம், ஒழுக்கம் மற்றும் நடைமுறைகளில் அவள் அனைத்துப் பெண்களைவிட மேன்மையானவளாக இருந்தாள். (12) மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த காலத்தில் பார்வையாளரின் இதயத்தைக் களவாடும் இனிய தோட்டத்தை {மலர்வனத்தைப்} போலவே, அழகிய கண்களைக் கொண்ட அந்தப் பெண் ஒற்றைப் பார்வையிலேயே அவரது இதயத்தைக் களவாடினாள்.(13)
அந்த முனிவர் {வதான்யர்} அஷ்டவக்கிரரிடம், “சரி. நான் என் மகளை உனக்கு அளிக்கிறேன். எனினும், நான் சொல்வதைக் கேட்பாயாக. புனிதமான வடதிசை நோக்கிப் பயணிப்பாயாக. அங்கே நீ பலவற்றைக் காண்பாய்” என்றார்[2].(14)அஷ்டவக்கிரர் {வதான்யரிடம்}, “அந்தப் பகுதியில் நான் என்ன காண்பேன் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில் உம்மால் விதிக்கப்படும் எக்கட்டளையையும் செயல்படுத்த நான் ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார்.(15)
வதான்யர் {அஷ்டவக்கிரரிடம்}, “நீ கருவூலத்தலைவனின் {குபேரனின்} ஆட்சிப்பகுதிகளைக் கடந்து, இமய மலைகளையும் கடந்து செல்ல வேண்டும். அப்போது ருத்திரன் வசிக்கும் மேட்டு நிலத்தைக் காண்பாய். அது சித்தர்களும், சாரணர்களும் வசிக்கும் இடமாகும்.(16) ஆட விரும்பி துள்ளிக் குதிப்பவர்களும், பல்வேறு வடிவங்களிலான முகங்களைக் கொண்டவர்களுமான மஹாதேவனின் கணங்கள் அங்கே நிறைந்திருக்கின்றனர். ஓ! முதன்மையானவனே, பல்வேறு வண்ணங்களிலான நறுமணப்பொடிகளைப் பூசிக் கொண்டவர்களும், வெங்கலத்தாலான பல வகை இசைக்கருவிகளின் துணையுடனும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் ஆடிக்கொண்டிருக்கும் பல்வேறு வடிவங்களிலான பிசாசங்கள் பலவும் நிறைந்திருக்கின்றன. மின்னல் வேகத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்களும், முன்னே, பின்னே, குறுக்கே என அனைத்து வகை அசைவுகளையும் செய்பவர்களுமான இவை சூழவே அங்கே மஹாதேவன் வசித்து வருகிறான்.(17,18) நாம் கேள்விப்பட்டிருக்கும் மலைகளில் உள்ள அந்த இனிய இடமே அந்தப் பெருந்தேவனுக்குப் பிடித்தமான வசிப்பிடமாகும். அந்தப் பெருந்தேவன் தன் தோழர்களுடன் {கணங்களுடன்} எப்போதும் அங்கே இருக்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(19) முக்கண் தேவனின் (அவனைத் தன் தலைவனாக அடையும்) நிமித்தமாக உமாதேவி அங்கேதான் கடுந்தவங்களைச் செய்தாள். எனவே, மஹாதேவன் மற்றும் உமை ஆகிய இருவராலும் மிகவும் விரும்பப்படும் இடம் எனச் சொல்லப்படுகிறது.(20)
பழங்காலத்தில், மஹாதேவனின் புனித மலைகளுக்கு வடக்கே அமைந்திருக்கும் மஹாபார்ஷ்வ மலைகளின் உச்சியில், பருவகாலங்கள், இறுதி இரவு, தேவர்கள் பலர், (முதன்மையான வகையைச் சேர்ந்த) மனிதர்கள் பலர்,(21) தங்கள் உடல் கொண்ட வடிவங்களோடு மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்[3]. வடக்கு நோக்கிய உன் பயணத்தில் நீ அந்தப் பகுதியையும் கடந்து செல்ல வேண்டும். பிறகு, மேகத்திரளுக்கு ஒப்பானதும், நீலவண்ணம் கொண்டதுமான ஓர் அழகிய காட்டை நீ காண்பாய். அங்கே, அந்தக் காட்டில், ஸ்ரீயை {லட்சுமியைப்} போலத் தெரியும் ஓர் அழகிய பெண் தவசியை நீ காண்பாய்.(23) வயதின் காரணமாக மதிக்கப்படுபவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான அவள், தீக்ஷை நோற்றுக் கொண்டிருக்கிறாள். அங்கே அவளைக் கண்டு மதிப்புடன் நீ அவளை வழிபட வேண்டும்.(24) அவளைக் கண்ட பிறகு இவ்விடம் திரும்பியதும், என் மகளின் கரத்தைத் திருமணத்தில் பற்றுவாயாக. உன்னால் இந்த உடன்பாட்டை ஏற்க முடிந்தால், பயணம் சென்று நான் ஆணையிட்டதைச் செய்வாயாக” என்றார் {வதான்யர்}.(25)அஷ்டவக்கிரர் {வதான்யரிடம்}, “அப்படியே ஆகட்டும். நான் உமதாணையைச் செய்வேன். ஓ! அற ஆன்மாவே, நீர் சொல்லும் பகுதிக்கு நிச்சயம் நான் செல்வேன். உமது தரப்பில், நீர் உமது வார்த்தைகளை வாய்மைக்கு இணக்கமானதாகச் செய்வீராக” என்றார்”.(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க அஷ்டவக்கிரர் புறப்பட்டுச் சென்று பயணம் மேற்கொண்டார். அவன் மேன்மேலும் வடக்குநோக்கிச் சென்று இறுதியாகச் சித்தர்களும், சாரணர்களும் நிறைந்த இமய மலைகளை அடைந்தார்.(27) இமய மலைகளை அடைந்த பிறகு, அந்த முதன்மையான பிராமணர், பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும் பாஹுதை என்ற புனித ஆற்றுக்குச் சென்றார்.(28) அவர், சேறற்றவையும் {தெளிந்த நீரைக் கொண்டவையும்}, இனிமை நிறைந்தவையுமான அந்த ஆற்றின் தீர்த்தங்களில் நீராடி, நீர்க்காணிக்கைகளால் தேவர்களை நிறைவடையச் செய்தார். அவரது தூய்மைச் சடங்குகள் நிறைவடைந்ததும், குசப்புற்களை {தர்ப்பங்களைப்} பரப்பிச் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காகத் தம்மைக் கீழே கிடத்திக் கொண்டார்.(29) இவ்வகையில் அந்தப் பிராமணர் இரவைக் கழித்துப் பகலில் எழுந்தார். பாஹுதையின் புனித நீர்களில் மீண்டும் தமது தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, தமது ஹோம நெருப்பை மூட்டி, முதன்மையான வேத மந்திரங்கள் பலவற்றின் துணையுடன் அதை வழிபட்டார்.(30)
பிறகு அவர், ருத்திரன் மற்றும் அவனது மனைவியான உமை ஆகிய இருவரையும் முறையான சடங்குகளுடன் வழிபட்டு, அந்தப் பாஹுதையின் போக்கில் உள்ள ஒரு தடாகத்தின் அருகில் மேலும் சிறிது நேரம் ஓய்ந்திருந்தார். இத்தகைய ஓய்வினால் புத்துணர்ச்சியடைந்த அவர், அந்தப் பகுதியில் இருந்து கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.(31) அப்போது அவர் அழகில் சுடர்விடுவதாகத் தெரிந்த ஒரு தங்க வாயிலைக் கண்டார். மேலும் அவர் மந்தாகினியையும், கருவூலங்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரனின் நளினியையும் கண்டார்[4].(32) அழகிய தாமரைகள் நிறைந்த அந்தத் தடாகத்தைப் பாதுகாப்பவர்களும், மாணிபத்ரனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான ராட்சசர்கள் அனைவரும், அங்கே வந்த முனிவரைக் கண்டு, சிறப்புமிக்க அந்தப் பயணியை வரவேற்றுக் கௌரவிப்பதற்காக வெளியே வந்தனர்.(33) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்களைப் பதிலுக்கு வழிபட்ட அம்முனிவர், தமது வருகையைக் கருவூலங்களின் தலைவனுக்குத் தாமதமில்லாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.(34) இதைச் செய்ய அவரால் வேண்டப்பட்ட ராட்சசர்கள், அவரிடம், “மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்}, புலனாய்வுக்காகக் காத்திராமல் தமது விருப்பப்படியே உமது முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்.(35) சிறப்புமிக்கவரான கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, உமது பயணத்தின் நோக்கத்தை நன்கறிந்திருக்கிறார். சக்தியால் தாமே ஒளிர்பவரான அந்த அருளப்பட்ட தலைவரை இதோ காண்பீராக” என்றனர்.(36)அப்போது மன்னன் வைஸ்ரவணன், களங்கமற்ற அஷ்டவக்கிரரை அணுகி, முறையாக நலம்விசாரித்தான். மதிப்பு நிமித்தமான வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகு, அந்தக் கருவூலங்களின் தலைவன், அந்த மறுபிறப்பாள முனிவரிடம்,(37) “இங்கே வந்த உமக்கு நல்வரவு. என்னிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! மறுபிறப்பாளரே, நீர் நிறைவேற்றச் சொல்லும் எதையும் நான் நிறைவேற்றுவேன்.(38) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விருப்பத்துடன் என் வசிப்பிடத்திற்குள் நுழைவீராக. என்னால் முறையாக உபசரிக்கப்பட்டு, உமது காரியம் நிறைவடைந்த பிறகு, உமது வழியில் எத்தடையுமின்றி நீர் செல்லலாம்” என்றான் {குபேரன்}.(39)
குபேரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்த முதன்மையான பிராமணரிடம் இருந்து தன் கரத்தை எடுத்து, தன் அரண்மனைக்கு அவரை வழிநடத்திச் சென்றான். தன் இருக்கையையே அவருக்கு அளித்து, கால் கழுவ நீர்கொடுத்து, வழக்கமான பொருட்களுடன் கூடிய அர்க்கியத்தையும் கொடுத்தான். அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, மாணிபத்ரனின் தலைமையிலான குபேரனின் யக்ஷர்களும், கந்தர்வர்கள் மற்றும் கிண்ணரர்கள் பலரும் அவர்களுக்கு முன்னிலையில் அமர்ந்தார்கள்.(41)
அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, கருவூலனங்களின் தலைவன் {குபேரன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “எது உமக்குப் இன்பமெனப் புரிந்த பிறகு {உமது கருத்தை அறிந்த பிறகு}, அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் இங்கே தங்கள் ஆடலைத் தொடங்குவார்கள்.(42) நான் உம்மை விருந்தோம்பலுடன் உபசரிக்க வேண்டும், முறையான உதவிகளுடன் உமக்குத் தொண்டாற்றவும் வேண்டும்” என்றான்.
இவ்வாறு சொல்லப்பட்டதும், தவசியான அஷ்டவக்கிரர் இனிய குரலில், “ஆடல் தொடங்கட்டும்” என்றார்.(43)
அப்போது, உர்வரை, மிச்ரகேசி, ரம்பை, ஊர்வசி, அலம்புஸை, கிருதாசி, சித்ரை, சித்ராங்கதை, ருசி,(44) மனோஹரை, ஸுகேசி, ஸுமுகி, ஹாஸினி, ப்ரபை, வித்யுதை, ப்ரசமி, தாந்தை, வித்யோதை, ரதி ஆகியோரும்,(45) இன்னும் அழகிய பல அப்சரஸ்களும் ஆடத் தொடங்கினர். கந்தர்வர்கள் பல்வேறு வகையான இசைக்கருவிகளை இசைத்தனர்.(46) இத்தகைய சிறப்பான இசையும், ஆடலும் தொடங்கிய பிறகு, கடுந்தவங்களைக் கொண்ட முனிவர் அஷ்டவக்கிரர், தன்னினைவில்லாமலேயே மன்னன் வைஸ்ரவணனின் வசிப்பிடத்தில் முழுமையாக ஒரு தேவ வருடத்தைக் கழித்தார்.(47) பிறகு, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்}, அந்த முனிவரிடம், “ஓ! கற்றறிந்த பிராமணரே, நீர் இங்கே வந்து ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமான காலம் கடந்திருப்பதைக் காண்பீராக. குறிப்பாகக் கந்தர்வம் என்ற பெயரில் அறியப்படும் இந்த இசையும், ஆடலும், இதயத்தை (காலத்தைக்) களவாடுபவையாகும். உமது விருப்பப்படி செயல்படுவீராக, அல்லது இதுவே உமது இன்பமென்றால் {உமக்கு விருப்பமென்றால்} இது தொடரட்டும். நீர் என் விருந்தினர், எனவே, துதிக்கத்தகுந்தவராவீர். இஃது உமது இல்லமாகும். ஆணையிடுவீராக. நாங்கள் அனைவரும் உமக்குக் கட்டுப்படுகிறோம்” என்றான்.(50)
சிறப்புமிக்க அஷ்டவக்கிரர், மன்னன் வைஸ்ரவணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவனிடம், “நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டேன். ஓ! கருவூலங்களின் தலைவா, நான் இப்போது இங்கிருந்து செல்ல விரும்புகிறேன்.(51) உண்மையில் நான் உயர்வான மகிழ்ச்சியை அடைந்தேன். ஓ! கருவூலங்களின் தலைவா, இவை அனைத்தும் உனக்குத் தகும். ஓ! சிறப்புமிக்கவனே, உன் அருளாலும், உயர் ஆன்ம முனிவர் வதான்யரின் ஆணைக்கு ஏற்புடைய வகையிலும்,(52) என் பயணத்தின் எல்லைக்கு இப்போது புறப்படப் போகிறேன். வளர்ச்சியும், செழிப்பும் உனதாகட்டும்” என்றார். அந்தச் சிறப்புமிக்க முனிவர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு, வடக்கு நோக்கிச்சென்றார்.(53)
கைலாசம், மந்தரம் மற்றும் தங்க மலைகளையும் அவர் கடந்து சென்றார். எங்கே மஹாதேவன் எளிய தவசியாக உடுத்திக் கொண்டு தன் வசிப்பிடத்தை அமைத்திருக்கிறானோ, அஃது உயர்ந்தவையும், பெரியவையுமான அந்த மலைகளைக் கடந்து அமைந்திருக்கிறது.(54) அவர், குவிந்த மனத்துடனும், மதிப்புடன் தலைவணங்கியபடியும் அந்த இடத்தை வலம் வந்தார். பிறகு பூமிக்கு வந்த அவர், மஹாதேவனின் வசிப்பிடமான அந்தப் புனிதமான இடத்தைக் கண்டதால் புனிதமடைந்ததாகத் தம்மைக் கருதினார்.(55) அம்மலையை மும்முறை வலம் வந்த அந்த முனிவர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் {மேலும்} வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.(56)
பிறகு அவர் இனிமை நிறைந்த மற்றொரு காட்டைக் கண்டார். அஃது அனைத்துக் காலத்திற்குமுரிய கனிகளாலும், கிழங்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அது சிறகு படைத்த ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்களையும் {பறவைகளின் ஒலிகளையும்} எதிரொலித்துக் கொண்டிருந்தது.(57) அந்தக் காடு முழுவதும் இனிமைநிறைந்த சோலைகள் ஏராளம் இருந்தன. அப்போது அந்தச் சிறப்புமிக்க முனிவர் ஓர் அழகிய ஆசிரமத்தைக் கண்டார்.(58) அம்முனிவர், ரத்தினங்கள் நிறைந்தவையும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவையுமான பல தங்க மலைகளையும் கண்டார். ரத்தினங்கள் நிறைந்த அந்த மண்ணில் அவர் பல தடாகங்களையும், குளங்களையும் கூடக் கண்டார்.(59) மேலும் அவர் பெரும் இனிமைநிறைந்த பல்வேறு பொருட்களையும் கண்டார். இப்பொருட்களையெல்லாம் கண்டதும், தூய ஆன்மாகக் கொண்ட அந்த முனிவரின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.(60)
அப்போது அவர் தங்கத்தாலானதும், பல வகை ரத்திரனங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் அழகிய மாளிகையைக் கண்டார். அற்புதம் நிறைந்த வடிவமைப்புடன் கூடிய அம்மாளிகை, அனைத்து வகையிலும் குபேரனின் அரண்மையையும் விட மேம்பட்டிருந்தது.(61) அதைச் சுற்றிலும் பல மலைகளும், ரத்தினக் குவியல்களும் இருந்தன. அந்த இடத்தில் அழகிய பல தேர்களும், பல்வேறு வகைகளிலான ரத்தினக்குவியல்களும் காணப்பட்டன.(62) அங்கே அம்முனிவர் மந்தார மலர்கள் விரவிக்கிடக்கும் நீரைக் கொண்ட மந்தாகினி ஆற்றைக் கண்டார். தன்னொளி கொண்ட ரத்தினங்கள் பலவும் அங்கே காணப்பட்டன, சுற்றிலுமிருந்த மண்ணும் பல்வேறு வகை வைரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(63) முனிவர் கண்ட மாட மாளிகையில் பல்வேறு வகைக் கற்களால் அழகூட்டப்பட்ட வளைவுகளைக் கொண்ட அறைகள் பலவற்றைக் கொண்டிருந்தது. மேலும் அந்த அறைகள், இடையிடையே பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(64) இதயத்தையும், கண்ணையும் களவாடவல்ல பல்வேறு வகை அழகிய பொருட்கள் அந்த அரண்மனையில் இருந்தன. இனிமைநிறைந்த ஆசிரமத்தில் எண்ணற்ற முனிவர்கள் வசித்தனர்.(65)
சுற்றிலுமுள்ள இந்த அழகிய காட்சிகளைக் கண்ட முனிவர், தாம் எங்கே தங்குவது என நினைக்கத் தொடங்கினார். அந்த மாளிகையின் வாயிலுக்குச் சென்ற அவர்,(66) “(உறைவிடம் விரும்பி) ஒரு விருந்தாளி வந்திருக்கிறான் என இங்கே வாழ்பவர்கள் அறியட்டும்” என்ற வார்த்தைகளைச் சொன்னார். முனிவரின் குரலைக் கேட்டதும், அம்மாளிகையில் இருந்து கன்னிகைகள் பலர் வெளியே வந்தனர்.(67) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்ணிக்கையில் அவர்கள் எழுவராக இருந்தனர். அழகின் பல்வேறு வகைப் பாணிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும் பெருங்கவர்ச்சியுடன் இருந்தனர். முனிவர் தமது கண்களைச் செலுத்திய கன்னிகையர் ஒவ்வொருவரும் அவரது இதயத்தைக் களவாடினர்.(68) எவ்வளவு சிறப்பாக முயன்றாலும் அந்தத் தவசியால் தமது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உண்மையில், மிக மேன்மையான அழகைக் கொண்ட அந்தக் கன்னிகையரைக் கண்ட மாத்திரமே அவர் தமது இதயத்தின் அமைதி முழுமையையும் இழந்தார். இத்தகைய ஆதிக்கங்களுக்குத் தாம் வசப்படுவதைக் கண்ட முனிவர், பெரும் ஞானியாக இருந்ததால் கடுமுயற்சி செய்து இறுதியில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் வென்றார்.(69)
அப்போது அந்த வனிதையர் அம்முனிவரிடம், “சிறப்புமிக்கவரே, நீர் உள்ளே நுழையலாம்” என்றனர்.
அழகுமிக்கக் காரிகைகள் மற்றும் மாடமாளிகையால் ஆவலில் நிறைந்திருந்த அந்த மறுபிறப்பாள முனிவர், தாம் கேட்டுக்கொள்ளப்பட்ட படியே உள்ளே நுழைந்தார். மாளிகைக்குள் நுழைந்ததும், முதுமையின் தளர்ச்சிக் குறியீடுகளைக் கொண்டவளும், வெள்ளுடை உடுத்தியவளும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமாக ஒரு முதிய பெண்மணியைக் கண்டார்.
முனிவர் {அஷ்டவக்கிரர்}, “நன்மை விளையட்டும்” என்று அவளுக்கு ஆசி கூறினார்.
அந்த முதிய பெண்மணியும் உரிய வகையில் அவருக்கான நல்வாழ்த்துகளைத் திரும்பச் செலுத்தினாள். அவள் எழுந்திருந்து முனிவருக்கு ஓர் இருக்கையைக் கொடுத்தாள்.(70-72)
தமது இருக்கையில் அமர்ந்த அஷ்டவக்கிரர், “கன்னிகையர் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லட்டும். ஒருத்தி மட்டும் இங்கே இருக்கட்டும். எவள் ஞானம் படைத்தவளோ, எவள் தன் இதயத்தில் அமைதியைக் கொண்டவளோ அவள் மட்டும் போகாமல் இருக்கட்டும். உண்மையில், மற்ற அனைவரும் தங்கள் விருப்பப்படிச் செல்லலாம்” என்றார்.(73)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கன்னிகையர் அனைவரும் அம்முனிவரை வலம்வந்து அந்த அறையைவிட்டு வெளியேறினர். அந்த முதிய பெண்மணி மட்டும் போகாமல் அங்கேயே இருந்தாள்.(74) பகல் விரைவாகக் கடந்ததும், இரவும் வந்தது. மிக நல்ல படுக்கையில் அமர்ந்திருந்த முனிவர் அந்த முதிய பெண்மணியிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, இரவு ஆழ்கிறது. நீ உறங்குவாயாக” என்றார்.(75)
அம்முனிவரால் தங்கள் விவாதம் இவ்வாறு நிறுதப்பட்டதும், முதிய பெண்மணி பெருங்காந்திமிக்கச் சிறந்த படுக்கை ஒன்றில் தன்னைக் கிடத்திக் கொண்டாள்.(76) விரைவில் தன் படுக்கையில் இருந்து எழுந்த அவள், குளிரில் நடுங்குவதாகப் பாசாங்கு செய்தபடியே முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(77) சிறப்புமிக்க அஷ்டவக்கிரர் மதிப்புடன் நல்வரவு கூறினார். எனினும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தப் பெண்மணி தன் கரங்களை விரித்து அம்முனிவரை மென்மையாக அணைத்தாள்.(78) முனிவர் அசைவற்றவராகவும், மரக்கட்டையைப் போல அசைவற்றவராகவும் இருப்பதைக் கண்ட அவள், மிக வருத்தமடைந்து அவருடன் பேசத் தொடங்கினாள்.(79)
{அவள்}, “ஒரு பெண்ணுக்கு எதிர் பாலினத்திடம் {ஓர் ஆணிடம்} இருந்து ஆசை {காமம்} மூலம் கிட்டக்கூடியதைவிட இன்பம் வேறேதுமில்லை. நான் இப்போது ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தின் கீழிருக்கிறேன். அக்காரணத்திற்காகவே நான் உம்மை நாடுகிறேன். பதிலுக்கு நீரும் என்னை நாடுவீராக.(80) ஓ! கற்ற முனிவரே, உற்சாகமாக என்னுடன் கலப்பீராக. ஓ! கல்விமானே, உம்மை நான் பெரிதும் விரும்புவதால் என்னைத் தழுவிக் கொள்வீராக.(81) ஓ! அற ஆன்மாவே, என்னுடன் கலப்பது நீர் மேற்கொண்ட கடுந்தவங்களுக்கான மிகச் சிறந்த, விரும்பத்தக்க வெகுமதியாகும். முதல் பார்வையிலேயே உம்மை நாடும் மனநிலையை நான் அடைந்துவிட்டேன். நீரும் என்னை நாடுவீராக.(82) இந்தச் செல்வமனைத்தும், இங்கே நீர் காணும் மதிப்புமிக்க அனைத்தும் என்னுடையவையே. உண்மையில் இவை யாவற்றுக்கும், எனக்கும் என் இதயத்துக்கும் நீரே தலைவராவீராக.(83) நான் உமது விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றுவேன். எனவே, ஓ! பிராமணரே, அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல இந்த இனிமை நிறைந்த காட்டில் என்னுடன் திளைத்திருப்பீராக.(84) அனைத்துவகையிலும் நான் உமக்குக் கீழ்ப்படிந்தவளாக இருப்பேன். நீர் உமது விருப்பப்படி என்னுடன் இன்புற்றிருப்பீராக. மனித மற்றும் மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட தெய்வீக ஆசைகள் அனைத்தையும் நாம் அனுபவிப்போம்.(85) ஒரு பெண்ணுக்கு இதைவிட (எதிர்பாலினத் {ஆணின்} துணையால் கிட்டும் இன்பத்தைவிட) ஏற்புடைய இன்பம் வேறேதும் கிடையாது. உண்மையில் எதிர் பால் கலவியே நாம் அறுவடை செய்யக்கூடிய மிக இனிய இன்பக்கனியாகும்.(86) காமதேவனால் தூண்டப்படும்போது பெண்கள் கணிக்கமுடியாத பெருங்கிறுக்கர்களாகிவிடுவார்கள். அத்தகைய நேரங்களில் அவர்கள் பாலைவனச் சுடுமணலில் நடந்து சென்றாலும் எந்த வலியையும் உணரமாட்டார்கள்” என்றாள்.(87)
அஷ்டவக்கிரர், “ஓ! அருளப்பட்ட மங்கையே, மற்றவர் துணைவியை நான் ஒருபோதும் அணுகுவதில்லை. அடுத்தவர் மனைவியுடன் ஒருவன் கொல்லும் கலவியானது, அறநெறி சாத்திரமறிந்தவர்களால் கண்டிக்கப்படுகிறது.(88) அனைத்துவகை இன்பங்களுக்கும் நான் முற்றிலும் அறிமுகமற்றவனாவேன். ஓ! அருளப்பட்ட மங்கையே, சந்ததி அடைவதற்காகத் திருமணத்தில் நான் விருப்பம் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவாயாக. நான் வாய்மையின் மீது ஆணையாகக் கூறுகிறேன்.(89) நியாயமாக அடையப்பட்ட சந்ததியின் துணையுடன், அத்தகைய துணையில்லாமல் கிட்ட முடியாத இன்பலோகங்களுக்குச் செல்வேன். உத்தமியே, அறநெறிக்கு இணக்கமானதை அறிவாயாக, அறிந்து கொண்டு உன் முயற்சிகளில் இருந்து விலகுவாயாக” என்றார்[5].(90)அந்தப் பெண்மணி, “ஓ! மறுபிறப்பாளரே, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் {வருண} தேவர்களோ, பிற தேவர்களோ கூடக் காமதேவனைப் போலப் பெண்களுக்கு ஏற்புடையவர்கள் ஆகமாட்டார்கள். உண்மையில், பெண்கள் பாலினக்கலவியை மிகவும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.(91) ஆயிரம், அல்லது ஒருவேளை ஒரு லட்சம் பெண்களில் ஒருத்தி மட்டுமே தன் கணவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவளாகக் காணப்படுகிறாள்.(92) ஆசையின் {காம} ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் தங்கள் குடும்பத்தையோ, தந்தையையோ, தாயையோ, சகோதரனையோ, கணவனையோ, மகன்களையோ, கணவனின் சகோதரனையோ {மைத்துனனையோ} குறித்துக் கவலைப்படுவதில்லை (காமம் இழுக்கும் வழியிலேயே அவர்கள் செல்வார்கள்).(93) உண்மையில், தங்களைக் கொள்ளும் கரைகளை இடிக்கும் பேராறுகளைப் போலவே அவர்கள் தங்களுக்கு இன்பமெனக் கருதவதைத் தேடி {லீலை செய்து} (தாங்கள் பிறந்த அல்லது திருமணத்தின் மூலம் இணைந்த) குடும்பத்தை அழிக்கிறார்கள். படைப்பாளனே, பெண்களின் களங்கங்களை விரைவாகக் குறித்துக் கொண்டு இதைச் சொல்லியிருக்கிறான்” என்றாள்”.(94)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெண்களின் குறைகளை அறிந்து கொள்ள விரும்பிய அம்முனிவர் பிறகு அந்தப் பெண்ணிடம், “இவ்வகையில் என்னிடம் பேசுவதை நிறுத்துவாயாக. ஆசைகளில் {காமத்தில்} இருந்தே ஏக்கம் எழுகிறது. நான் (வேறு) என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றார் {அஷ்டவக்கிரர்}[6].(95)அதற்குப் பதிலாக அந்தப் பெண்மணி, “ஓ! சிறப்புமிக்கவரே, காலம் மற்றும் இடத்திற்கு ஏற்றபடி (என்னில் ஏற்புடைய எதையும்) நீர் காண்பீர். அதுவரை (சில காலத்திற்கு) நீர் இங்கே வாழ்வீராக, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே. போதிய வெகுமதியளிக்கப்பட்டவளாக நான் என்னைக் கருதிக் கொள்வேன்” என்றாள்.(96)
ஓ! யுதிஷ்டிரா, அவளால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த மறுபிறப்பாள முனிவர், அவளது வேண்டுகோளுக்கு இணங்கும் தீர்மானத்தை வெளிப்படுத்தும் வகையில், “உண்மையில், என்னால் முடிந்தவரை நான் இந்த இடத்தில் உன்னுடன் வசித்திருப்பேன்” என்றார்[7].(97)பிறகு அந்த முனிவர், முதுமையில் பீடிக்கப்பட்ட அந்தப் பெண்ணைக் கண்டு, அக்காரியம் குறித்து நியாயமாகச் சிந்திக்கத் தொடங்கினார். தமது எண்ணங்களால் கொதிப்புற்றவராக அவர் காணப்பட்டார்.(98) பிராமணர்களில் முதன்மையான அவர், அந்தப் பெண்ணின் மேனியில் எந்தப் பகுதியில் தமது கண்களைச் செலுத்தினாலும், அவரது கண்கள் எந்த மகிழ்ச்சியையும் அடையத் தவறின. மறுபுறம், அவ்வுறுப்புகளைக் கண்ட அருவருப்பினால் அவரது பார்வை விலகுவதாகத் தெரிந்தது.(99)
{அவர்}, “இந்தப் பெண்மணியே நிச்சயம் இந்த அரண்மனையின் தேவியாக இருக்க வேண்டும். ஏதாவது சாபத்தின் மூலம் இவள் அருவருப்பானவளாக்கப் பட்டாளா? இந்தக் காரணத்தை விரைவாக நான் உறுதி செய்து கொள்வது முறையாகாது” {என நினைத்தார்}.(100) தமது இதயத்தில் கமுக்கமாய் நினைத்து, காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் இருந்த அம்முனிவர், அந்த நாளின் எஞ்சிய நேரத்தையும் {பகலையும்} இக்கவலையுடனே கழித்தார்.(101)
அப்போது அந்தப் பெண் அவரிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, மாலை மேகங்களின் மூலம் சூரியன் சிவந்திருப்பதைக் காண்பீராக. நான் உமக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்ன?” என்று கேட்டாள்.(102)
முனிவர் அவளிடம், “என் தூய்மைச் சடங்குகளுக்காக நீர் கொண்டு வா. நீராடி முடித்ததும், என் நாவையும், புலன்களையும் அடக்கி நான் என் மாலைத் துதிகளைச் செலுத்த வேண்டும்” என்றார்.(103)
கன்னியான கிழவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 20-அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறியது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பெண்மணி, “அப்படியே ஆகட்டும்” என்றாள். பிறகு அவள் (முனிவரின் உடலில் பூசுவதற்காக) எண்ணெயும் {தைலமும்}, தூய்மைச்சடங்கின் போது அணியும் துண்டையும் கொண்டு வந்தாள்.(1) அந்தத் தவசியால் அனுமதிக்கப்பட்ட அவள், தான் கொண்டு வந்த நறுமணத் தைலத்தை அவரது உடல்முழுவதும் பூசினாள்.(2) மென்மையாக {தைலம் கொண்டு} பூசப்பட்ட அந்த முனிவர், பூச்சு முடிந்ததும், தூய்மைச் சடங்கிற்கான அறைக்கு {மஞ்சனமாடுமிடத்திற்குச்} சென்றார். அங்கே அவர் பெருங்காந்தியைக் கொண்டதும், சிறந்ததுமான புதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.(3) முனிவர் தமது இருக்கையில் அமர்ந்த பிறகு, அந்த முதிய பெண்மணி தன் மென்மையான கரங்களால் இனிமையாகத் தீண்டி அவரது உடலைக் கழுவத் தொடங்கினாள்.(4) முனிவரின் தூய்மைச்சடங்கு காரியத்தில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக மிக ஏற்புடைய தொண்டைச் செய்தாள். கடும் நோன்புகளைக் கொண்ட அம்முனிவர், தம்மைக் கழுவிய வெண்ணீருக்கும், தம்மைக் கழுவுவதில் ஈடுபடும் மென்கரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காணத் தவறியதால் மொத்த இரவும் இவ்வாறே கழிந்தது. நீராடலில் இருந்து எழுந்த முனிவர் மிகவும் ஆச்சரியமடைந்தார்[1].(5,6) கிழக்கு அடிவானில் சூரியன் எழுவதை அவர் கண்டார்.இதனால் ஆச்சரியமடைந்த அவர், தமக்குள்ளேயே, “இஃது உண்மையா? என் புத்திமயக்கமா?” எனக் கேட்டுக் கொண்டார்.(7) அம்முனிவர் ஆயிரங்கதிர் தேவனை {சூரியனை} முறையாக வழிபட்டார். அது முடிந்ததும், தாம் என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். அந்த முதிய பெண்மணி, அமுதத்தின் சுவைக்கு ஒப்பான சுவைமிக்க உணவை அம்முனிவருக்குப் படைத்தாள்.(8) உணவு சுவைமிக்கதாக இருந்ததன் விளைவால் முனிவரால் அதிகம் உண்ண முடியவில்லை. அவர் சிறிதளவே உட்கொண்டாலும் பகல் கடந்து மாலை வந்தது.(9) அப்போது அந்த முதிய பெண்மணி படுக்கைக்குச் சென்று உறங்கும்படி முனிவரிடம் கேட்டுக் கொண்டாள். முனிவருக்கு ஒரு சிறந்த படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, மற்றொரு படுக்கையில் அவள் படுத்துக் கொண்டாள்.(10) முதலில் முனிவரும், அந்த முதிய பெண்ணும் வெவ்வேறு படுக்கையில் படுத்திருந்தாலும், நள்ளிரவில் அந்தப் பெண் தன் படுக்கையைவிட்டு எழுந்து முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(11)
அஷ்டவக்கிரர், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, மாற்றான் மனைவியுடன் பாலினக் கலவியில் ஈடுபட என் மனம் மறுக்கிறது. உத்தமியே, என் படுக்கையைவிட்டுச் செல்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக, நீயே விரும்பி இதிலிருந்து விலகுவாயாக” என்றார்[2].(12)அந்தப் பெண், “ஓ! கல்விமானான பிராமணரே, நான் ஆசையால் {காமத்தால்} கொடுமைப்படுத்தப்படுகிறேன் {காமக்கொடுமையிலிருக்கிறேன்}. என் அர்ப்பணிப்பை {பக்தியைக்} குறித்துக் கொள்வீராக. என்னை அன்புடன் அழைக்க மறுப்பதால் நீர் பாவத்தை இழைக்கிறீர்” என்றாள்.(15)
அஷ்டவக்கிரர், “தான்விரும்பியபடி செயல்படும் மனிதன் பல்வேறு பாவங்கள் இழுத்துச் செல்லும். என்னைப் பொறுத்தவரையில், தற்கட்டுப்பாட்டின் மூலம் நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவல்லவனாக இருக்கிறேன். உத்தமியே, உன் படுக்கைக்குத் திரும்பிச் செல்வாயாக” என்றார்.(16)
அந்தப் பெண், “நான் உமக்குத் தலைவணங்குகிறேன். எனக்குக் கருணை காட்டுவதே உமக்குத் தகும். ஓ பாவமற்றவரே, நான் உம்முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறேன், நீர் எனது புகலிடமாவீராக.(17) உண்மையில், உமது துணைவியாக இல்லாத ஒருத்தியுடன் கலவியில் ஈடுபடுவதைப் பாவமாகக் கண்டீரெனில், நான் என்னை உமக்குக் கொடுக்கிறேன். ஓ! மறுப்பிறப்பாளரே, திருமணத்திற்காக என் கரத்தை நீர் ஏற்பீராக.(18) நீர் எப்பாவமும் இழைத்தவராக மாட்டீர். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். நானே எனக்கு அதிகாரி என்பதை அறிவீராக.[3] இதில் பாவமேதும் இருந்தால், அஃது என்னை மட்டுமே சேரட்டும். நீர் என்னை ஏற்பீராக” என்றாள்.(19)அஷ்டவக்கிரர், “ஓ! உத்தமியே, நீயே உனக்கு அதிகாரியாக இருப்பது எவ்வாறு? இதன் காரணத்தை எனக்கு நீ சொல்வாயாக. மூவுலகிலும் தனக்குத்தானே தலைவியாகக் கருதத்தக்க ஒரு பெண்ணாவது இல்லையே.(20) கன்னிகையாக இருக்கும்போது அவளைத் தந்தை பாதுகாக்கிறார். இளமையில் இருக்கும்போது அவளைக் கணவன் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். பெண்கள் தாங்கள் வாழுங்காலம் வரை ஒரு போதும் சார்பற்றவர்களாக {சுதந்திரமானவர்களாக} இருப்பதில்லை” என்றார்[4].(21)அந்தப் பெண், “கன்னிப்பருவத்தில் இருந்தே நான் பிரம்மச்சரிய நோன்பைக் கடைப்பிடித்து வருகிறேன். இதில் ஐயமேதும் கொள்ளாதீர். நான் இன்னும் கன்னியாகவே இருக்கிறேன். என்னை உமது மனைவியாக்கிக் கொள்வீராக. ஓ! பிராமணரே, நான் உம்மிடம் கொண்ட இந்த அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொன்றுவிடாதீர் {என் ஆசையைக் கெடாதீர்}” என்றாள்.(22)
அஷ்டவக்கிரர், “நீ என்னை விரும்புவதைப் போலவே நானும் உன்னை விரும்புகிறேன். எனினும், தீர்க்க வேண்டிய இந்தக் கேள்வியுமிருக்கிறது. என் விருப்பங்களுக்கு நான் வசப்படுவதால், முனிவரின் {வதான்யரின்} விருப்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டவனாகக் கருதப்படுவேனா?(23) இஃது ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கிறது. இது நன்மைக்கு வழிவகுக்குமா?”. {இந்தக் கணத்தில் கிழவி குமரியாகிறாள்}.
{அஷ்டவக்கிரர் தமக்குள்ளேயே}, “இதோ அழகிய ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னி இருக்கிறாள்.(24) இவள் பேரழகுடன் இருக்கிறாள். இவ்வளவு காலம் இவளது அழகை ஏன் முதுமை மறைத்திருந்தது? தற்போது ஓர் அழகிய கன்னியாகத் தெரிகிறாளே. இதன் பிறகு இவள் என்ன வடிவத்தை ஏற்கப்போகிறாள் என்பதை அறிய முடியாது[5].(25) ஆசைகள் மற்றும் விருப்பங்களிடம் நான் கொண்டுள்ள கட்டுப்பாட்டையோ, நான் ஏற்கனவே அடைந்திருக்கும் மனநிறைவிலிருந்தோ நான் ஒருபோதும் பிறழமாட்டேன். அத்தகைய பிறழ்வு நன்மையானதாகத் தெரியவில்லை. நான் வாய்மையுடனே என்னை ஒருங்கிணைத்துக் கொள்வேன்” {என்றார்}[6] {என்றார் பீஷ்மர்}.(26)
அஷ்டவக்கிரர் திருமணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 21-அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறிய வட திசை தேவி…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அஷ்டவக்கிரர் பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும் அந்தப் பெண் அஷ்டவக்கிரரின் சாபத்திற்கு ஏன் அஞ்சவில்லை என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் அஷ்டவக்கிரர் அந்த இடத்தில் இருந்து திரும்பி வந்தது எவ்வாறு?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அஷ்டவக்கிரர் அவளிடம், “நீ இவ்வாறு உன் வடிவை மாற்றிக் கொண்டது எவ்வாறு? உண்மையற்ற எதையும் நீ சொல்லக்கூடாது. இதை நான் அறிய விரும்புகிறேன். ஒரு பிராமணன் முன்பு உண்மையைப் பேசுவாயாக” என்றார்.(2)
அந்தப் பெண், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சொர்க்கத்திலோ, பூமியிலோ எங்கு நீர் வசித்தாலும், {எங்கும்} பாலினங்களுக்கிடையிலான கலவி ஆசை காணப்படுகிறது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, இவை யாவும் என்ன என்பதைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(3) ஓ! பாவமற்றவரே, நீர் சரியாக இருக்கிறீரா என்பதைச் சோதிக்க நான் வகுத்த சோதனையிது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, உமது மனோபலத்தால் உலகங்கள் அனைத்தையும் நீர் ஆடக்கிவிட்டீர்.(4) நான் வட திசைப்புள்ளியின் உடல் வடிவம் என்பதை அறிவீராக. நீர் பெண்மையின் மென்மையைக் கண்டீர். முதிய பெண்களும் கூடக் கலவியாசையின் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.(5) பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறார்கள். சிறப்புமிக்கவரான நீர் இங்கு வந்த நோக்கத்தை நான் அறிவேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமக்கான மணப்பெண்ணின் தந்தையும், முனிவருமான வாதன்யர், நான் உமக்குப் போதிக்கும் வகையில் உம்மை இங்கே அனுப்பி வைத்தார். அம்முனிவரின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் ஏற்கனவே உமக்குப் போதித்துவிட்டேன்[1].(7) நீர் பாதுகாப்பாக இல்லம் திரும்புவீர். நீர் திரும்பிப் பயணிக்கையில் உமக்குச் சிரமமேற்படாது. நீர் தேர்ந்தெடுத்த பெண்ணையே நீர் மனைவியாக அடைவீர். அவள் உமக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(8) ஆசையினாலே நான் உம்மை வேண்டினேன். நீர் எனக்குச் சிறந்த பதிலைக் கொடுத்தீர். பாலினக்கலவியாசையானது மூவுலகிலும் கடக்கப்பட முடியாததாகும்[2].(9) இத்தகைய தகுதியை அடைந்த நீர் உமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்வீராக. (என்னிடம் இருந்து) வேறு என்ன கேட்க விரும்புகிறீர்? ஓ! அஷ்டவக்கிரரே, வாய்மைக்குப் பொருந்தும் வகையில் அதை நான் உமக்குச் சொல்வேன்.(10) ஓ! மறுபிறப்பாள தவசியே, உம் நிமித்தமாக முனிவர் வதான்யரால் நான் முதலில் நிறைவடையச் செய்யப்பட்டேன் {வதான்யரால் நான் வேண்டிக் கொள்ளப்பட்டேன்}. அவரைக் கௌரவிக்கவே இவை யாவற்றையும் நான் உமக்குச் சொன்னேன்” என்றாள் {வடதிசைதேவி}”.(11)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், மறுபிறப்பாளருமான அஷ்டவக்கிரர் மதிப்புமிக்க மனோநிலையில் தமது கரங்களைக் கூப்பினர். பிறகு அவர் அந்தப் பெண்ணிடம் தாம் திரும்பிச் செல்வதற்கான அனுமதியைக் கேட்டார். வேண்டிய அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவர் தமது ஆசிரமத்திற்கே திரும்பிச் சென்றார்.(12) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, அவர் தமது இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தபிறகு, தம் உற்றார் உறவினரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பிராமணரான வதான்யரை நோக்கி முறையான வழியில் சென்றார்.(13) வழக்கமான விசாரிப்புகளுடன் வதான்யரால் நல்வரவு கூறப்பட்ட முனிவர் அஷ்டவக்கிரர், (தாம் வடக்கே பயணம் மேற்கொண்டிருந்தபோது) கண்ட அனைத்தையும் நன்கு நிறைவடைந்த இதயத்துடன் உரைத்தார்.(14)
அவர், “உம்மால் ஆணையிடப்படியே நான் கந்தமாதன மலைகளுக்குச் சென்றேன். அம்மலைகளுக்கு வடக்கே கிடக்கும் பகுதியில் மிக மேன்மையான தேவி ஒருத்தியைக் கண்டேன்.(15) அவள் அன்போடு என்னை வரவேற்றாள். நான் கேட்க அவள் உமது பெயரைச் சொன்னாள், மேலும் பல்வேறு காரியங்களில் போதனையும் செய்தாள். ஓ! தலைவரே, நான் அவள் சொன்னதைக் கேட்ட பிறகு அங்கிருந்து திரும்பி வந்தேன்” என்றார்.(16)
இவ்வாறு சொன்ன அவரிடம் {அஷ்டவக்கிரரிடம்} வதான்யர், “நல்ல நட்சத்திர நாளில் உரிய சடங்குகளுடன் என் மகளின் கரத்தைப் பெறுவாயாக. என் பெண்ணுக்கு மணமகனாக நீயே தகுந்தவனாவாய்” என்றார்”.(17)
பீஷ்மர் தொடர்ந்தார், “அஷ்டவக்கிரர், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அந்தப் பெண்ணின் கரத்தை ஏற்றார். உண்மையில், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட அந்த நீதிமிக்க முனிவர் இன்பத்தால் நிறைந்தார்.(18) அந்த அழகிய கன்னிகையைத் தம் மனைவியாக அடைந்த அம்முனிவர், அனைத்து வகை (மன) நோயிலிருந்தும் விடுபட்டவராகத் தமது ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்” {என்றார் பீஷ்மர்}[3].(19)
கொடைக்கான தகுதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 22-கொடைக்குத் தகுந்த தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கொடைகளுக்குத் தகுந்தவரென நித்திய பிராமணர்கள் யாரை அழைக்கிறார்கள்? வாழ்வு முறைக்கான குறியீடுகளைச் சுமப்பவன் பிராமணனாகக் கருதப்பட வேண்டுமா? அத்தகைய குறியீடுகள் இல்லாதவனும் அவ்வாறு கருதப்படலாமா?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, தன் வகைக்கான கடமைகளைப் பின்பற்றும் ஒரு பிராமணன், குறியீடுகளைச் சுமப்பவனாக இருந்தாலும், அவை அற்றவனாக இருந்தாலும், இரண்டும் குற்றமற்ற நிலைகளே என்பதால் அவன் பிரம்மச்சரியக் குறியீடுகளைத் தரித்திருக்கிறானோ இல்லையோ, அவனுக்குக் கொடைகள் வழங்கப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது” என்றார்.(2)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தூய்மையடையாத ஒருவன் வேள்வி நெய்யையோ, உணவையோ பெரும் அர்ப்பணிப்புடன் மறுபிறப்பாள வகையினருக்குக் கொடையாகக் கொடுத்தால் என்ன குற்றமேற்படும்?” என்று கேட்டான்[2].(3)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்], “தற்கட்டுப்பாடென்பதே சிறிதும் அற்றவனும்கூட அர்ப்பணிப்பின் மூலம் நிச்சயம் தூய்மையடைகிறான். ஓ! பெருங்காந்தி கொண்டவனே, அத்தகைய மனிதன், (கொடைகளால் மட்டுமல்லாமல்) அவன் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் தூய்மையடைகிறான்” என்றார்[3].(4)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தேவர்கள் சார்ந்த ஒரு செயலில் ஈடுபட ஒரு பிராமணன் முனையும்போது அவன் ஒருபோதும் சோதிக்கப்படக்கூடாது என்று சொல்லப்படுகிறது. எனினும், பித்ருக்கள் சார்ந்த அத்தகைய செயல்களில் ஈடுபட அந்தப் பிராமணன் முனையும்போது (ஒழுக்கம் மற்றும் தகுதி காரியங்களில்) அவன் சோதிக்கப்பட வேண்டும் என்று கல்விமான்கள் சொல்கின்றனர்” என்றான்.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தேவர்களைக் குறிக்கும் செயல்களைப் பொறுத்தவரையில் அவற்றைச் செய்வதில் ஈடுபடும் பிராமணரின் விளைவால் அல்லாமல், தேவர்களின் அருளாலேயே கனிதருகின்றன. வேள்விகளைச் செய்பவர்கள், அச்செயல்களுடன் பற்றியிருக்கும் தகுதியைத் தேவர்களின் மூலம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை[4].(6) ஓ! பாரதர்களின் தலைவா, பிராமணர்கள் எப்போதும் பிரம்மத்தை ஓதுபவர்களாவர். நுண்ணறிவுடன் கூடிய முனிவர் மார்க்கண்டேயர், உலகங்கள் அனைத்திலும் இதையே பழங்காலத்தில் சொன்னார்” என்றார்[5].(7)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறிமுகமற்றவன் {பழகாதவன்}, (தன் வகைக்கான கடமைகளுடன் தொடர்புடைய) கல்விமான், திருமணத்தின் மூலம் தொடர்புடையவன் {சுற்றத்தான்}, தவங்களுடன் கூடியவன், வேள்விச் செயல்களில் வேட்கை கொண்டவன் ஆகிய இந்த ஐவரும் ஏன் {கொடைக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்?” என்று கேட்டான்.(8)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறிமுகமற்றவர்கள், உறவினர்கள், தவசிகள் ஆகிய முதல் மூவரும், தூய பிறவி, அறச்செயல்களில் வேட்கை, கல்வி, கருணை, பணிவு, நேர்மை, வாய்மை ஆகிய குணங்களைக் கொண்டிருந்தால் {கொடைகளுக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதத்தக்கவராவர். கல்விமான்கள் மற்றும் வேள்விகளில் வேட்கை கொண்டோர் ஆகிய வேறு இருவரும், தூய பிறவி, கருணை, பணிவு, நேர்மை மற்றும் வாய்மை ஆகிய ஐந்து குணங்களைக் கொண்டிருந்தால் {கொடைகளுக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதத்தக்கவர்களாவர்.(9) ஓ! பிருதையின் மகனே, வலிமையும், சக்தியும் கொண்டவர்களான பூமாதேவி, முனிவர் காசியபர், நெருப்பு தேவன் {அக்னி}, தவசி மார்க்கண்டேயர் ஆகிய நால்வரின் கருத்துகளை இப்போது சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(10)
பூமியானவள், “பெருங்கடலில் போடப்பட்ட மண்கட்டி விரைவாகக் கரைந்துவிடுவதைப் போலவே, வேள்வி செய்யத் துணைபுரிதல், கல்வி கற்பித்தல் மற்றும் கொடை ஆகிய மூன்று உயர்ந்த குணங்களில் அனைத்து வகைப் பாவங்களும் மறைந்து போகின்றன” என்றாள்[6].(11)காசியபர், “ஒரு மறுபிறப்பாளன் நற்குணத்தில் இருந்து வீழ்ந்தால், ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்கள், சாங்கிய தத்துவம், புராணங்கள், உயர் குடி பிறப்பு ஆகியவற்றாலும் அவனைக் காக்க முடியாது” என்றார்.(12)
அக்னி, “கல்வியில் ஈடுபட்டு, தன்னைக் கல்விமானாகக் கருதும் பிராமணன், தன் கல்வியின் மூலம் பிறரின் மதிப்பை அழிக்க முனைந்தால், அறம்வீழ்ந்தவனாகி, வாய்மையிலிருந்து தொடர்பறுந்தவனாகக் கருதப்படுகிறான். இத்தகைய அழிவு மேதையான ஒருவனால் மறுமையில் இன்ப உலகங்களை ஒருபோதும் அடையமுடியாது” என்றான்.(13)
மார்க்கண்டேயர், “ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் தராசில் எடை பார்க்கப்பட்டால், முன்னது பின்னதின் பாதி எடைக்காவது நிற்குமா என்பதை நான் அறியவில்லை” என்றார்”.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அளவிலா சக்தி கொண்டவர்களான பூமாதேவி, காசியபர், அக்னி மற்றும் ஆயுததாரியான பிருகுவின் மகன் {மார்க்கண்டேயர்} ஆகிய நால்வரும் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு விரைவாகச் சென்றுவிட்டனர்”.(15)
யுதிஷ்டிரன், “இவ்வுலகில் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் பிராமணர்கள், (இறந்து போன மூதாதையருக்குச் சிராத்தங்களில்) ஒருவன் அளிக்கும் காணிக்கைகளை {உணவை} வேண்டி உண்டால், சிராத்தங்களைச் செய்பவன் அத்தகைய பிராமணர்களுக்குக் காணிக்கையளிப்பதால், அவற்றை {அந்த சிராத்தங்கள்} நன்கு செய்யப்பட்டவையாகக் கருத முடியுமா?” என்று கேட்டான்[7].(16)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “குறிப்பிட்ட கால அளவுக்கு (பனிரெண்டு ஆண்டுகள்) பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் திறமைடைந்த ஒரு பிராமணன், சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை வேண்டி உண்டால், அவன் தன் நோன்பில் இருந்து வீழ்ந்தவனாகக் கருதப்படுவான். எனினும், அந்தச் சிராத்தம், எவ்வழியிலும் களங்கமடைந்ததாகக் கருதப்படமுடியாது” என்றார்.(17)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறம் அல்லது கடமைக்குப் பல கதிகளும், எண்ணற்ற வாயில்களும் இருப்பதாக ஞானிகள் சொல்கின்றனர். எனினும், ஓ! பாட்டா, இக்காரியத்தில் முடிவான தீர்மானங்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, தீங்கிழையாமை, வாய்மை, கோபமின்மை (மனிக்கும் தன்மை), கருணை, தற்கட்டுப்பாடு, நேர்மை ஆகியவை அறத்தின் குறியீடுகளாகும்.(19) ஓ!! மன்னா, அறத்தைப் புகழ்ந்தாலும், அதன்படி செயல்படாமல், எப்போதும் பாவத்தில் ஈடுபட்டபடியே பூமியில் திரியும் மனிதர்கள் உண்டு.(20) அத்தகைய மனிதர்களுக்கு, தங்கமோ, ரத்தினங்களோ, பசுக்களோ, குதிரைகளோ கொடுப்பவன், இறந்து போன பசுக்கள் மற்றும் எருமைகளின் இறைச்சியை உண்டு வாழ்பவர்களும், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வெளியில் வாழ்பவர்களும், புகாசர்கள் என்றழைக்கப்படுபவர்களுமான மனிதர்கள் மற்றும் பிறர் செய்யும் செயல்களையும், செய்யாதவற்றையும் கோபம், மடமையின் ஆதிக்கத்தில் வெளியிடும் மனிதர்கள் ஆகியோரின் மலத்தை உண்டபடியே பத்துவருடங்கள் பாழ்நரகில் மூழ்கியிருப்பார்கள்[8].(21,22) ஓ! ஏகாதிபதி, பிரம்மச்சரிய நோன்பு நோற்கும் பிராமணன் ஒருவனுக்கு, (இறந்து போன மூதாதையருக்குச் செய்யும்) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைக் கொடுக்காத மூடர்கள், பெரும் துன்பம் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்றார்.(23)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பிரம்மச்சரியத்தைவிட மேன்மையானது எது? உயர்ந்த அறக் குறியீடு எது? உயர்ந்த வகைத் தூய்மை எது” என்று கேட்டான்.(24)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்த்தல் பிரம்மச்சரியத்தைவிட மேன்மையானது என நான் சொல்வேன். அறமானது எல்லைகள் அல்லது கட்டுப்பாடுகளுக்குள் கிடக்கிறது. துறவே சிறந்த அறக்குறியீடாகும் (அஃது உயர்வகைத் தூய்மையுமாகும்)” என்றார்.(25)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எக்காலத்தில் அறம்பயில வேண்டும்? எக்காலத்தில் செல்வம் நாடப்பட வேண்டும்? எக்காலத்தில் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரன், “ஒருவன் தன் வாழ்நாளின் முதற்பாகத்தில் {காலையில்} செல்வமீட்ட வேண்டும். பிறகு அறமீட்ட வேண்டும். அதன் பிறகு {இரவில்} இன்பத்தை அனுபவிக்க வேண்டும். எனினும், அவன் இவை எவற்றிலும் பற்றுக் கொள்ளக் கூடாது.(27) அவன் பிராமணர்களை மதிக்க வேண்டும், ஆசான்களையும், பெரியோரையும் வழிபட வேண்டும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்ட வேண்டும், மென்மனோநிலையுடனும், ஏற்புடைய வாக்குடனும் இருக்க வேண்டும்.(28) நீதிமன்றத்தில் பொய்யுரைப்பது, மன்னனை வஞ்சிப்பது, ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் போலியாக நடந்து கொள்வது ஆகியவை பிராமணக்கொலைக்கு {பிரம்மஹத்திக்கு} இணையானதாக (இணையான கொடுமையாகக்) கருதப்படுகின்றன.(29) அவன் மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது. பசுவை ஒருபோதும் அடிக்கக்கூடாது. இவ்விரு குற்றங்களும் கருக்கொலைக்கு இணையான பாவங்களாகும்.(30) அவன் தன் (ஹோம) நெருப்பை ஒருபோதும் கைவிடக்கூடாது. வேத கல்வியை ஒருபோதும் கைவிடக்கூடாது. அவன் ஒரு பிராமணனைச் சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக்கூடாது. இவை அனைத்தும் பிராமணக்கொலைக்கு இணையான குற்றங்கள் ஆகும்” என்றார்.(31)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எவ்வகைப் பிராமணர்கள் நல்லோராகக் கருதப்பட வேண்டும்? எந்தப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் ஒருவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்ட முடியும்? எவ்வகைப் பிராமணர்களுக்கு ஒருவன் உணவூட்ட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(32)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கோபத்தில் இருந்து விடுபட்டவர்களும், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், வாய்மையில் உறுதியுள்ளவர்ளும், தற்கட்டுப்பாட்டைப் பயில்பவர்களும் நல்ல பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டலாம்.(33) செருக்கிலிருந்து விடுபட்டவர்களும், அனைத்தையும் பொறுத்துக் கொள்ளக்கூடியவர்களும், தங்கள் நோக்கத்தை அடைவதில் உறுதியுள்ளவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத் தங்களை அர்ப்பணிப்பவர்களும், அனைவரிடமும் நட்பு மனோநிலையுடன் இருப்பவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டலாம்.(34) பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், தூய இதயம் கொண்டவர்களும், ஒழுக்கத் தூய்மை கொண்டவர்களும், கல்வி மற்றும் பணிவு கொண்டவர்களும், வாக்கில் வாய்மை கொண்டவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தங்கள் கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(35) நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் கற்பவனும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) நன்கறியப்பட்ட ஆறு கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனுமான பிராமணனே கொடைகளுக்குத் தகுந்தவன் என முனிவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். அத்தகைய தகுதிகளைக் கொண்ட பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(36)
தகுந்த பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் தன் தகுதியைப் பல்லாயிரம் மடங்கு பெருக்கிக் கொள்கிறான். ஞானமும், வேத அறிவும் கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்பவனும், ஒழுக்கத் தூய்மைக்காகப் புகழப்படுபவனும், அறம் சார்ந்தவனுமான தனியொரு பிராமணன், மொத்த குலத்தையும் மீட்கும் வல்லமை கொண்டவனாவான்[9].(37) ஒருவன், அத்தகைய தகுதிகளையுடைய பிராமணனுக்கு, பசுக்கள், குதிரைகள், செல்வம், உணவு மற்றும் பிறவகைப் பொருட்களைக் கொடையளிக்க வேண்டும். அத்தகைய மனிதர்களுக்கு அத்தகு கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைகிறான்.(38) நான் ஏற்கனவே சொன்னது போல, அத்தகைய ஒரே ஒரு பிராமணன் கூட, கொடையாளியின் மொத்த குலத்தையும் மீட்கவல்லவனாவான். எனவே, ஓ! அன்பு மகனே, அத்தகைய தகுதிகளைக் கொண்ட பல பிராமணர்களுக்குக் கொடுப்பதற்கு நான் என்ன சொல்ல முடியும்? ஒருவன் கொடையளிக்கும்போது அந்தக் கொடைக்குத் தகுந்தவனையே எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(39) சரியான தகுதிகளைக் கொண்டவனும், நன்மக்கள் அனைவராலும் மதிப்புடன் கருதப்படுபவனுமான ஒரு பிராமணனைக் குறித்துக் கேள்விப்படும் ஒருவன், அவன் தொலைவில் வசித்தாலும் அழைத்து, அவன் வரும்போது வரவேற்று, தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் அவனை வழிபட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(40)
கொடைகளும், கொடுக்கும் முறைகளும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 23-தேவ காரியங்கள் மற்றும் பித்ரு காரியங்கள், அவற்றுக்குரிய காலங்கள், அவற்றுக்கு அழைக்கப்படத்தக்கவர், தகாதவர் ஆகியோர் குறித்தும், கொடையறங்கள் குறித்தும், சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்பவர்கள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தேவ காரியங்கள் மற்றும் (இறந்து போன) மூதாதையருக்குச் சிராத்தங்களில் செய்யும் காரியங்களுக்காக விதிக்கப்பட்டட விதிகள் என்னென்ன என்பதை நீர் எனக்குச் சொல்வதை கேட்க விரும்புகிறேன்” எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் (நீராடல் மற்றும் தூய்மையடையச்செய்யும் பிற செயல்களின் மூலம்) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, நன்கறியப்பட்ட மங்கலச் சடங்குகளைச் செய்த பிறகே, அவன் தேவர்களுக்குரிய காரியங்களை முற்பகலிலும், பித்ருக்களுக்குரிய காரியங்கள் அனைத்தையும் பிற்பகலிலும் செய்ய வேண்டும்.(2) மனிதர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவற்றை அன்பு மற்றும் மதிப்புடன் நடுப்பகலில் கொடுக்க வேண்டும். பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடையானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது[1].(3) எவராலும் தாண்டப்பட்ட, அல்லது நக்கப்பட்ட, அல்லது உறிஞ்சப்பட்ட, அமைதியற்ற நிலையில் கொடுக்கப்பட்ட, பருவகாலத்தின் விளைவால் தூய்மையற்றிருக்கும் பெண்களால் காணப்பட்டவையுமான கொடைகள் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும் / பலனையும்} உண்டாக்குவதில்லை. அத்தகைய கொடைகள் ராட்சசர்களின் பங்காகக் கருதப்படுகின்றன.(4) பலருக்கு முன்னிலையில் அறிவிக்கப்பட்ட, அல்லது ஒரு சூத்திரன் உண்டதில் ஒரு பகுதியாக உள்ள, அல்லது நாயால் பார்க்கப்பட்ட அல்லது நக்கப்பட்ட கொடைப் பொருட்கள் ராட்சசர்களின் பங்குகளாக அமைகின்றன.(5)முடியோ புழுவோ விழுந்த, அல்லது எச்சிலால் களங்கமடைந்த, அல்லது நாயால் பார்க்கப்பட்ட, அல்லது கண்ணீர் துளிகள் விழுந்த, அல்லது மிதிபட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(6) ஓ! பாரதா, ஓம் என்ற சொல்லைச் சொல்லத்தகாதவர்களால் உண்ணப்பட்ட, அல்லது ஆயுததாரிகளால் உண்ணப்பட்ட, அல்லது தீய மனிதனால் உண்ணப்பட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்[2].(7) வேறொருவரால் ஏற்கனவே உண்ணப்பட்ட, அல்லது தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் உண்ணப்படும் உணவானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது. அத்தகைய களங்கமடைந்த உணவை தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கும்போது, அஃது அவர்களால் ஏற்கபடாமல் ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது.(8) மந்திரங்கள் சொல்லப்படாத, அல்லது முறையாகச் சொல்லப்படாதவையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்காதவையும் சிராத்தங்களில் மூவகை மறுபிறப்பாளர்களால் கொடுக்கப்படும் உணவை, விருந்தினர்களுக்கும், பிற மக்களுக்கும் பரிமாறினால் அது ராட்சசர்களால் அபகரிக்கப்படும்.(9) புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளின் துணையுடன் தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அர்ப்பணிக்கப்படாத, அல்லது அறவொழுக்கமற்ற தீய மனிதனால் உண்ணப்பட்டதன் விளைவால் களங்கமடைந்த உணவை விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டால், அது ராட்சசர்களின் பாங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(10)எவை ராட்சசர்களின் பங்காகின்றன என்று நான் உனக்குச் சொன்னேன். இனி, கொடைகளுக்குத் தகுந்த பிராமணனை உறுதி செய்யும் விதிகளை விதிக்கப் போகிறேன் கேட்பாயாக.(11) (கொடும்பாவம் செய்த குற்றத்தால்) விலக்கப்பட்ட பிராமணர்கள் {பிரஷ்டப்ராமணர்கள்}, மூடர்களாகவும், பித்தர்களாகவும் இருக்கும் பிராமணர்கள் ஆகியோர், தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அளிக்கப்படும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல.(12) ஓ! மன்னா வெண்படை நோயால் பீடிக்கப்பட்ட, அல்லது ஆண்மையற்ற, அல்லது தொழுநோய் கொண்ட, அல்லது காசநோய் கொண்ட, அல்லது (மூளைத் திரிபுடன் கூடிய) வலிப்பு {காக்காய் வலிப்பு} நோய் கொண்ட, அல்லது கண்பார்வையற்ற எந்தப் பிராமணனும் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படக்கூடாது.(13) மருத்துவம் செய்பவர்களும், வளமிக்கோரால் நிறுவப்பட்ட தேவ சிலைகளுக்குத் தொண்டாற்றுவதற்காக ஊதியம் பெறும் வழக்கம் கொண்டவவர்களும், தேவர்களுக்குத் தொண்டாற்றி வாழ்பவர்களும், செருக்கு அல்லது வேறு போலி நோக்கங்களுக்காக நோன்பு நோற்பவர்களும், சோமத்தை விற்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(14) ஓ! மன்னா, தொழிலால் பாடகராக, நர்த்தகராக, விளையாட்டுவீரராக, இசைக்கருவி இசைப்பவராக, புனித நூல்களை உரைப்பவர்களாக, போர்வீரர்களாக, தடகள வீரராக உள்ள பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(15)
சூத்திரர்களின் புனித நெருப்பில் ஆகுதி ஊற்றுபவர்களும், சூத்திரர்களின் ஆசான்களும், சூத்திரத் தலைவர்களுக்குப் பணியாட்களாக இருப்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(16) ஆசானாகப் பணிபுரிவதற்கு ஊதியம் வழங்கப்படுபவர்களும், ஊதியம் பெற்றுக் கொண்டு சில ஆசான்களிடம் சீடனாக இருப்பவர்களுமான பிராமணர்கள் வேதங்களை விற்பவர்களாகக் கருதப்படுவதால் அவ்விரு வகையினரும் அழைக்கபடத் தகுந்தவர்களல்ல.(17) சிராத்தத்தின் தொடக்கத்திலேயே கொடையளிக்கப்பட்டவனும், சூத்திரப் பெண்ணை மனைவியாக மணந்து கொண்டவனுமான பிராமணன் அனைத்து வகை ஞானத்தையும் கொண்டிருந்தாலும் அவன் அழைக்கப்படத்தகுந்தவனல்ல[3].(18) ஓ! மன்னா, இல்லற நெருப்பற்றவர்களும், சடலங்களுக்குக் காரியம் செய்பவர்களும், கள்வர்களும், {வேறு வகைகளில்} வீழ்ந்துவிட்டவர்களுமான பிராமணர்கள் அழைக்கப்படத்தகாதவர்களாவர்[4].(19) ஓ! மன்னா, முன்பின் தெரியாதவர்களும், தீயவர்களும், புத்ரிகாபுத்திரர்களுமான பிராமணர்கள் சிராத்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல[5].(20) ஓ! மன்னா, கடனுக்குப் பணமளிப்பவனும், கடனில் கிட்டும் வட்டியில் வாழ்பவனும், உயிரினங்களை விற்று வாழ்பவனுமான பிராமணன் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவனாவான்.(21) ஓ! மன்னா, மனைவிகளுக்கு அடங்கியவர்களும், கற்பற்ற பெண்களுக்குக் கள்ளக் காதலனாக வாழ்பவர்களும், காலை மாலை துதிகளைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகாதவர்களாவர்.(22)இனி, தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் செய்யும் செயல்களுக்காக விதிக்கப்பட்ட பிராமணனைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், (மேற்கண்ட களங்கங்கள் இருந்தாலும்) ஒருவன் எதன் விளைவால் சிராத்தங்களில் கொடையளிப்பவனாகவோ, கொடையேற்பவனாகவோ ஆவானோ அந்தத் தகுதிகளை {சிறப்புகளை} உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! மன்னா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளையும், விழாக்களையும் நோற்பவர்களும், தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டவர்களும், காயத்ரி {மந்திரத்தை} அறிந்தவர்களும், பிராமணர்களின் பொதுக்கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்கள், உழவில் ஈடுபட்டு வாழ்பவர்களாக இருந்தாலும் சிராத்தங்களுக்கு அவர்கள் அழைக்கப்படத்தகுந்தவர்களாவர்.(24) நற்குடியில் பிறந்த ஒரு பிராமணன், பிறருக்காகப் போரில் ஈடுபடும் படைத்தொழில் செய்து கொண்டிருந்தாலும் அவன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தக்கவனாவான். எனினும், ஓ! மகனே, வாழ்வை நடத்துவதற்காக வணிகத்தில் ஈடுபடும் பிராமணன் (தகுதி கொண்டவனாகவே இருப்பினும்) அவன் {சிராத்தங்களில்} நிராகரிக்கப்பட வேண்டும்.(25)
ஓ! மன்னா, தினமும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், அல்லது வசிக்கத்தக்க நிலையான இடங்களில் {கிராமங்களில்} வசிப்பவனும், கள்வனல்லாதவனும், தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(26) ஓ! பாரதக் குலத் தலைவா, ஓ! மன்னா, காலையிலும், நடுப்பகலிலும், இரவிலும் சாவித்ரியை உரைப்பவன் {முக்காலமும் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவன்}, அல்லது ஈகையில் கிட்டும் பிச்சையில் வாழ்பவனும், தன் வகை மனிதர்களுக்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் மற்றும் விழாக்களை {கர்மானுஷ்டாங்களைச்} செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகுந்தவனாவான்.(27) காலையில் செல்வமீட்டி பிற்பகலில் வறியவனாகுபவன், அல்லது காலையில் வறியவனாக இருந்து மாலையில் செல்வந்தனாகுபவன், அல்லது வன்மமற்றவன், அல்லது சிறு குற்றத்தால் {மட்டுமே} களங்கப்பட்டவனாக இருக்கும் பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்[6].(28) செருக்கோ, பாவமோ அற்றவனும், வரட்டுச் சச்சரவுகளில் ஈடுபடாதவன், அல்லது வீட்டுக்குவீடு திரிந்து கிட்டும் பிச்சையில் வாழ்பவனுமான பிராமணன் வேள்விகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(29) நோன்புகளை நோற்காதவன், அல்லது (வாக்கிலும், ஒழுக்கத்திலும்) பொய்மைக்கு அடிமையாகவும், கள்வனாகவும் இருப்பவன், அல்லது உயிரினங்களை விற்று வாழ்பவன் அல்லது பொது வணிகத்தின் மூலம் வாழ்பவனான பிராமணன், வேள்விகளில் சோமத்தை அடுத்தடுத்து பருகி வருபவனாக இருந்தால், ஓ! மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(30)குற்ற வழிமுறைகள், அல்லது கொடிய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைந்து, அடுத்தடுத்த தேவர்களைத் துதிக்கவும், விருந்தோம்பல் கடமைகளைச் செய்தும் வந்தால், ஓ! மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(31) வேத விற்பனை மூலம் அடைந்த, அல்லது ஒரு பெண்ணால் ஈட்டப்பட்ட, அல்லது (நீதிமன்றங்களில் போலி சான்றுரைத்து) வஞ்சகமாக ஈட்டப்பட்ட செல்வத்தை ஒரு போதும் பிராமணர்களுக்குக் கொடுக்கவோ, பித்ருக்கான காணிக்கைகளில் செலவிடவோ கூடாது.(32) ஓ! பாரதக் குலத் தலைவா, தன் உதவியுடன் செய்யப்பட்ட ஒரு சிராத்த நிறைவின் போது, யுக்த சொற்களை {உசிதத்தைச்} சொல்ல மறுக்கும் பிராமணன், நில வழக்கில் போலி உறுதிமொழி அளிக்கும் பாவத்தை ஈட்டுகிறான்[7].(33) ஓ! யுதிஷ்டிரா, ஒரு நல்ல பிராமணன், தயிர், நெய், புது நிலவின் {அமாவாசை எனும்} புனித நாள், மான் மற்றும் காட்டு விலங்குகள் பிறவற்றின் இறைச்சி ஆகியவை கிட்டும் நேரமே சிராத்தம் செய்யப்பட வேண்டிய நேரமாகும்[8].(34)ஒரு பிராமணனால் செய்யப்படும் ஒரு சிராத்தம் நிறைவடையும் போது, ஸ்வதா என்ற சொல் சொல்லப்பட வேண்டும். ஒரு க்ஷத்திரியனால் செய்யப்பட்டால், “உன் பித்ருக்கள் நிறைவடையட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்.(35) ஒரு வைசியனால் செய்யப்பட்ட சிராத்தம் நிறைவடையும்போது, “அனைத்தும் வற்றாதிருக்கட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். அதே போல, ஒரு சூத்திரனால் செய்யப்படும் சிராத்தம் நிறைவடையும்போது, ஸ்வஸ்தி என்ற சொல் சொல்லப்பட வேண்டும். பிராமணர்களைப் பொறுத்தவரையில், புண்யாஹத் தீர்மானம் ஓம் என்ற அசையுடன் சொல்லப்பட வேண்டும். க்ஷத்திரியன் வழக்கில், அத்தகைய தீர்மானத்தை ஓம் என்ற அசையைச் சொல்லாமல் செய்ய வேண்டும். ஒரு வைசியனால் செய்யப்படும் செயல்களில் {சிராத்தம் அல்லது வேள்விகளில்}, ஓம் என்ற அசைக்குப் பதிலாக “தேவர்கள் நிறைவடையட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்[9]. (அனைத்து வகையினரின்) விதிகளுக்கு இணக்கமாகச் செய்யப்பட வேண்டிய சடங்குகளை உனக்கு ஒன்றபின் ஒன்றாகச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(36-38)ஓ! பாரதா, ஜாதகர்மம் என்ற பெயரில் உள்ள சடங்குகள் அனைத்தும் (மறுபிறப்பாளர்களான) மூவகையினருக்கும் தவிர்க்கப்படக்கூடாததாகும். ஓ யுதிஷ்டிரா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரின் வழக்கில் இந்தச் சடங்குகள் அனைத்தும் மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட வேண்டும்.(39) ஒரு பிராமணன் இடைக்கச்சை {உபநயனத்தில் இடையிற்கட்டும் கயிறு} முஞ்சப் புற்களால் ஆனதாக இருக்க வேண்டும். அரச வகையினுக்கு வில்லின் நாண்கயிறால் {மௌர்வி புற்களால்} ஆனதாக இருக்க வேண்டும். வைசியர்களின் இடைக்கச்சை, பல்பஜி புற்களால் {பல்பஜமென்னும் சணல் நாரினால்} ஆனதாக இருக்க வேண்டும். இவ்வாறே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(40)
கொடையளிப்பவர் மற்றும் கொடையளிப்பவரின் குறைநிறைகளை இப்போது விளக்கிச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(41) ஒரு பிராமணன் ஒரு பொய்யைச் சொல்வதால் கடமைதவறும் குற்றம்புரிந்தவனாகிறான். அவன் பங்குக்கு அத்தகைய செயல் பாவம் நிறைந்ததாகும். பொய் சொல்வதால் ஒரு பிராமணன் ஈட்டும் பாவத்தைப் போல ஒரு க்ஷத்திரியன் நான்கு மடங்கும், வைசியன் எட்டு மடங்கும் பாவத்தை ஈட்டுகிறான்.(42) உண்பதற்கு ஒரு பிராமணனால் முன்பே அழைக்கப்பட்ட மற்றொரு பிராமணன் {இவ்வாறு அழைக்கப்பட்ட பிறகு} வேறெங்கும் உண்ணச் செல்லக்கூடாது. காலத்தால் பிந்தி அழைத்தவனின் வீட்டில் உண்பதன் மூலம் அவன் கீழ்மையடைகிறான், மேலும், வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தையும் ஈட்டுகிறான்[10].(43) அதே போலவே, அரச வகையைச் சார்ந்த ஒருவன் {க்ஷத்திரியன்} அல்லது ஒரு வைசியனால் அழைக்கப்பட்ட பிறகு அவன் வேறு எங்கும் உண்டால், அவன் தன் நிலையில் இருந்து வீழ்ந்து, வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தில் பாதி அளவை ஈட்டுகிறான்.(44) ஓ! மன்னா, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்களாலும், க்ஷத்திரியர்களாலும், வைசியர்களாலும் செய்யப்படும் நிகழ்வுகளில், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் உண்ணும் பிராமணன், ஒரு பசுவுக்காக {ஒரு பசுவைக் கொடையாகப் பெறுவதற்காகப்} பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(45)தன் இனம் சார்ந்தோர் மத்தியில் உண்டான பிறப்பு, அல்லது இறப்பின் விளைவால் தூய்மையற்றவனாக இருந்து, தான் தூய்மையற்றிருப்பதை அறிந்தோ, சபலத்தினாலோ மூன்று உயர்வகையைச் சார்ந்தவர் எவராலும் செய்யப்படும் அத்தகைய நிகழ்வுகளில் உண்ணும் பிராமணனும், அதே பாவத்தையே ஈட்டுகிறான்[11].(46) ஓ! ஏகாதிபதி, புனிதத் தலங்களுக்குப் பயணம் செல்வது போலப் போலிப் பாசாங்கு செய்தோ, அறச்செயல்களுக்குச் செலவழிக்கப் போவதாக நடித்தோ கொடையாளியை வேண்டி அடைந்த செல்வத்தில் வாழ்பவன், பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(47) ஓ! யுதிஷ்டிரா, மூன்று உயர் வகையினரில் எவரும், சிராத்தங்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் மந்திரங்களில் உதவியுடன் உணவைப் பகிரும் போது, வேதங்கல்லாத, அல்லது நோன்பு நோற்காத, அல்லது ஒழுக்கத் தூய்மையற்ற பிராமணர்களுக்கு {உணவை} வழங்கினால் நிச்சயம் பாவத்தையே ஈட்டுவர்” என்றார் {பீஷ்மர்}.(48)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்படும் பொருட்களை எவருக்குக் கொடையாகக் கொடுத்தால் ஒருவனால் பேரளவு வெகுமதியை ஈட்ட முடியும் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(49)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, காலத்திற்கு ஏற்ற மழையை எதிர்பார்த்து மதிப்புடன் காத்திருக்கும் உழவர்களைப் போலவே, தங்கள் கணவர்கள் உண்ட மிச்சத்த்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவிகளைக் கொண்ட பிராமணர்களுக்கு நீ உணவூட்டுவாயாக.(50) ஓ! மன்னா, எப்போதும் ஒழுக்கத் தூய்மை நோற்பவர்களும், ஆடம்பரங்களையும், முழுவுணவை உண்ணாமலும் தவிர்த்து மெலிந்தவர்களும், உடல் மெலிவுக்கு வழிவகுக்கும் நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், கொடை பெறும் விருப்பத்தோடு கொடையாளிகளை அணுகுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(51) உணவுத் தேவை, மனைவிகள் மற்றும், பிள்ளைகளின் தேவை, பலத்திற்கான தேவை, இவ்வுலகைக் கடப்பதற்கான தங்கள் புகலிடத்திற்கும், மறுமையில் இன்பநிலையை அடைவதற்குமான தேவை இருக்கும் போதும் ஒழுக்கத்தை மதிப்பவர்களும் {ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருப்பவர்களும்}, நிச்சயம் தேவைப்படும்போது மட்டுமே செல்வத்தை வேண்டுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(52) ஓ! யுதிஷ்டிரா, கள்வர்களின் மூலமோ, பகைவர்களின் மூலமோ அனைத்தையும் தொலைத்தவர்களும், கொடுப்பவர்களை அணுகுபவர்களுமான மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(53) பிறரிடம் ஏதும் பெறும் தங்கள் வகையைச் சார்ந்த ஏழையின் கரங்களில் இருந்து உணவை வேண்டும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(54) உலகளாவிய பேரிடரின் போது தங்களுக்குச்சொந்தமான அனைத்தையும் இழந்தவர்களும், அத்தகைய நிகழ்வின் போது தங்கள் மனைவிகளை இழந்தவர்களும், பிச்சை கேட்டு வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(55)
நோன்புகளை நோற்பவர்களும், துன்பம் நிறைந்த விதிகள் மற்றும் வகைமுறைகளுக்குள் வலியத் தங்களை நிறுத்திக் கொள்பவர்களும், வேதங்களில் விதிக்கப்பட்டுள தீர்மானங்களுக்கு இணங்ககமாகத் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்பவர்களும், தங்கள் நோன்புகள் அல்லது நியமங்களின் நிறைவுக்குத் தேவைப்படும் சடங்குகளுக்கான செலவுக்காகச் செல்வத்தை வேண்டி வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(56) பாவிகள் மற்றும் தீயோரால் செய்யப்படும் செயல்களுக்குப் பெருந்தொலைவில் வாழ்பவர்களும், போதுமான ஆதரவில்லாமல் பலவீனமாக இருப்பவர்களும், உலகம் சார் உடைமைகளில் மிக வறியவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(57) முற்றிலும் அப்பாவிகளாக இருந்தும் வலிமையான மனிதர்களால் உடைமைகள் அனைத்தும் களவாடப்பட்டவர்களும், உணவின் தரத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் {உணவு} எவ்வாறிருந்தாலும் தங்கள் வயிறுகளை நிறைத்துக் கொள்ள விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(58) தவங்கள் நோற்பவர்கள் மற்றும் தங்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் சார்பில் பிச்சையெடுப்பவர்களும், சிறு கொடையிலும் நிறைவடைபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கொடையளிப்பதன் மூலம் பெருந்தகுதியை ஈட்டுவது தொடர்பான சாத்திரத் தீர்மானங்களையே நீ இப்போது கேட்டாய். இனி, நரகத்திற்கோ சொர்க்கத்திற்கோ வழிவகுக்கும் செயல்களை விளக்கப் போகிறேன், கேட்பாயாக.(60)
ஆசானின் காரியத்திற்குத் தொண்டாற்றுவதற்காக, அல்லது உயிருக்கான அச்சத்திலிருக்கும் மனிதனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தேவைப்படும் பொய்களைத் தவிர வேறு தருணங்களில் பொய் பேசுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(61) பிறர் மனைவிகளைக் கெடுப்பவர்கள், அல்லது அவர்களுடன் பாலினக்கலவியில் ஈடுபடுபவர்கள், அல்லது அத்தகைய தீச்செயல்களுக்குத் துணை புரிபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(62) பிறரின் செல்வத்தைக் களவாடுபவர்கள், அல்லது பிறரின் செல்வத்தையும், உடைமைகளையும் அழிப்பவர்கள், அல்லது பிறரின் குற்றங்களை அறிக்கையிடுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(63) தாகந்தணிக்கக் கால்நடையால் பயன்படுத்தப்படும் நீர்நிலைகளின் கரைகள், பொதுக்கூட்டங்களுக்குப் பயன்படும் மண்டபங்கள், மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் {சுமைதாங்கிகள்} ஆகியவற்றை இடிப்பவர்கள், வசிப்பதற்குப் பயன்படும் வீடுகளை இடிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(64) ஆதரவற்ற பெண்கள், அல்லது சிறுமிகள், அல்லது முதிய பெண்கள், அல்லது அச்சத்திலிருக்கும் அத்தகைய பெண்களை ஏமாற்றி வஞ்சிப்போர் நரகில் மூழ்குவார்கள்.(65)
பிறரின் வாழ்வுக்குத் தேவையானவற்றை அழிப்பவர்கள், பிறரின் வசிப்பிடங்களை அழிப்பவர்கள், பிறர் மனைவிகளைக் களவாடுபவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் வேற்றுமையை விதைப்பவர்கள், பிறரின் நம்பிக்கை அழிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(66) பிறரின் குறைகளை அறிக்கையிடுபவர்கள், மேம்பாலங்கள் அல்லது தரைப்பாலங்களை {சுமைதாங்கிகளை} உடைப்பவர்கள், பிறருக்காக விதிக்கப்பட்ட பிழைப்புத்தொழிலைப் பின்பற்றி வாழ்பவர்கள், நண்பர்களின் தொண்டு பெற்றும் நன்றிமறந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(67) வேதங்களில் நம்பிக்கையற்று, அவற்றை மதிக்காதவர்கள், தங்கள் உறுதிமொழிகளைப் பிளப்பவர்கள், அல்லது பிறரைக் கொண்டு பிளக்கச் செய்பவர்கள், பாவத்தால் தங்கள் நிலையில் இருந்து வீழ்ந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(68) ஒழுக்கத்தில் முறையற்றவர்கள், மிகை வட்டி வாங்குபவர்கள், விற்பனையில் முறையற்ற வகையில் பெரும் லாபம் மீட்டுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(69) சூதாடிகள், ஐயுணர்வேதுமின்றித் தீச்செயல்களில் ஈடுபடுபவர்களும், உயிரினங்களைக் கொல்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(70)
வெகுமதிகளை, அல்லது அவசியத் தேவைக்கானவற்றை, அல்லது கூலியையோ, ஊதியத்தையோ, அல்லது தான் செய்த மதிப்புமிக்கத் தொண்டுகளுக்கான பதில் உதவியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் பணியாட்களைப் பணிநீக்கம் செய்யும்படி முதலாளிகளைச் செயல்பட வைப்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்[12].(71) தங்கள் மனைவிகளுக்கு, அல்லது புனித நெருப்புக்கு, அல்லது பணியாட்களுக்கு, அல்லது தங்கள் விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களை மதிப்பதற்காகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைத் தவிர்ப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(72) வேதங்களை விற்பனை செய்வோர், வேதங்களில் குறை காண்போர், வேதங்களை எழுத்தாக்கி அவற்றைத் தாழ்த்துவோர் ஆகியோரனைவரும் நரகில் மூழ்குவார்கள்[13].(73) நன்கறியப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} சேராதவர்கள், ஸ்ருதிகள் மற்றும் சாத்திரங்களால் தடைசெய்யப்பட்ட நடைமுறைகளைச் செயல்படுத்துபவர்கள், தீய, அல்லது பாவம் நிறைந்த, அல்லது தங்கள் பிறப்பின் வகையைச் சாராத செயல்களைச் செய்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(74) தலைமயிரை விற்று வாழ்பவர்கள், நஞ்சை விற்று வாழ்பவர்கள், பாலை விற்று வாழ்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(75)ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள், பசுக்கள் மற்றும் கன்னிகைகளின் பாதையில் தடைகளை ஏற்படுத்துபவர்கள் {அவர்களின் குறுக்கே செல்பவர்கள்} நரகில் மூழ்குவார்கள்.(76) ஆயுதங்களை விற்பவர்கள், ஆயுதங்களைச் செய்பவர்கள், கணைகளைச் செய்பவர்கள், விற்களைச் செய்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(77) கற்களாலும், முட்களாலும், குழிகளாலும் பாதைகள் மற்றும் சாலைகளில் தடையேற்படுத்துபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(78) போதிய வயதை அடையாத இளங்காளைகளைப் பணியில் ஈடுபடுத்துவோர், பணியில் ஈடுபடுத்தும்போது இளங்காளைகள் மற்றும் பிற விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் மூக்குகளில் துளையிடுபவர்கள், விலங்குகளை எப்போதும் கட்டியே வைத்திருப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(80)
வயல் விளைச்சலில் ஆறிலொரு பங்கை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டும் தங்கள் குடிமக்களைக் காக்காத மன்னர்களும், இயன்றவர்களாக இருந்தும், வளமிருந்தும் கொடையளிப்பதைத் தவிர்ப்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(81) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தற்கட்டுப்பாடு, ஞானம் கொண்ட மனிதர்களையும், பல வருடங்களாகத் துணைபுரிந்தவர்களாக இருந்தும் அதற்கு மேலும் பணி செய்ய இயலாத மனிதர்களையும் கைவிடுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(82) சிறுவர்கள், முதியவர்கள், பணியாட்கள் ஆகியோருக்கு உணவைக் கொடுக்காமல் உண்ணும் மனிதர்கள் நரகில் மூழ்குவார்கள்.(83)
மேற்குறிப்பிடப்பட்ட மனிதர்கள் யாவரும் நரகத்திற்குச் செல்வார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, சொர்க்கத்திற்கு உயரும் மனிதர்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக.(84) தேவர்களைத் துதிக்கும் செயல்கள் யாவையும் செய்ய விடாததன் மூலம் ஒரு பிராமணனுக்கு எதிராக வரம்புமீறும் மனிதன் தன் பிள்ளைகள் அனைவரையும், விலங்குகள் அனைத்தையும் இழந்து துன்பப்படுவான். (அதாவது, பிராமணர்களின் அறச்செயல்களைத் தடுத்து அவர்களுக்கு எதிராக வரம்புமீறாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்).(85) ஓ! யுதிஷ்டிரா, சாத்திரங்களில் தங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, ஈகை, தற்கட்டுப்பாடு, வாய்மை ஆகிய அறங்களைப் பயிலும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(86) தங்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து பணிகள் செய்வதன் மூலம் அறிவை ஈட்டி, கடுந்தவங்களை நோற்று, கொடையேற்கும் விருப்பமற்றவர்களானவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(87)
அச்சம், பாவம், நிறைவேற்ற விரும்புவதற்குரிய வழியில் கிடக்கும் தடைகள், வறுமை, நோயின் துன்பம் ஆகியவற்றில் இருந்து பிறரை விடுவிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(88) மன்னிக்கும் மனோ நிலை, பொறுமை ஆகியவற்றைக் கொண்டவர்களும், அறச்செயல்கள் யாவையும் உடனே செய்பவர்களும், மங்கலவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(89) தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்ப்பவர்களும், பிறன் மனைவியருடன் பாலினக் கலவியைத் தவிர்ப்பவர்களும், மது, சாராயங்களைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(90) ஓ! பாரதா, தவசிகளுக்கான ஆசிரமங்களை நிறுவுவதில் உதவி செய்பவர்களும், குடும்பங்களை நிறுவுபவர்களும், மனிதர்கள் வசிக்கப் புதிய நாடுகளை உண்டாக்குபவர்களும், நகரங்கள் மற்றும் ஊர்களைப் பதிப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(91) உடைகள், ஆபரணங்கள், உணவு, பானம் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களும், பிறர் {ஆதரவற்றவர்கள்} திருமணம் செய்து கொள்ள உதவி செய்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(92)
உயிரினங்கள் அனைத்திற்கும் எவ்வகைத் தீங்கைச் செய்வதையும் தவிர்ப்பவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளவல்லவர்களும், அனைத்து உயிரினங்களின் புகலிடமாகத் தங்களை அமைத்துக் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(93) தங்கள் தந்தையர் மற்றும் தாய்மாரிடம் பணிவுடன் காத்திருப்பவர்களும், தங்கள் புலன்களை அடக்கியவர்களும், உடன்பிறந்தோரிடம் அன்புடன் நடந்து கொள்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(94) உலகம் சார்ந்த பொருட்களுடன் வளமாகவும், வலிமையும், பலமும் கொண்டவர்களாகவும், இளமை இன்பத்தில் இருப்பவர்களாகவும் இருந்தாலும், தங்கள் புலன்களை அடக்கிய மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(95) தங்களுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களிடமும் அன்பாக நடந்து கொள்பவர்களும், மென்மையான மனநிலை கொண்டவர்களும், மென்னடத்தைக் கொண்டோர் அனைவரிடமும் அன்பு கொண்டவர்களும், பணிவுடன் அனைத்து வகைத் தொண்டையும் செய்து பிறருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(96)
ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொடையளிப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களைத் துயரில் இருந்து மீட்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(97) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கம், பசுக்கள், வாகனங்கள் மற்றும் விலங்குகளைக் கொடையாள அளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(98) திருமணத்திற்குத் தேவையான பொருட்கள், பணியாட்கள், பணிப்பெண்கள், துணிமணிகள் போன்றவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(99) ஓ! பாரதா, பொதுமக்களுக்கான மகிழ்மன்றங்கள், தோட்டங்கள், கிணறுகள், ஓய்வில்லங்கள், பொதுக்கூட்டங்களுக்கான கட்டடங்கள், கால்நடை மற்றும் மனிதர்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளக்கூடிய குளங்கள், உழவுக்களங்கள் {வயல்கள்} ஆகியவற்றை அமைக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(100)
வேண்டி வரும் மனிதர்களுக்கு வீடுகள், களங்கள் {வயல்கள்}, கிராமங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(101) இன்சுவை கொண்ட கனிச்சாறுகள், வித்துகள், நெல் அல்லது அரசி {தானியங்கள்} ஆகியவற்றைப் பிறருக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(102) உயர்குடியில் அல்லது கீழ்க்குடியில் பிறந்தும், நூற்றுக்கணக்கான பிள்ளைகளைப் பெற்று நீண்ட நாள் வாழ்ந்து, கருணை பயின்று, கோபத்தை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(103) ஓ! பாரதா, மறுமைக்காகத் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவிக்கும் வகையில் மக்களால் செய்யப்படும் சடங்குகள், கொடைகள் குறித்த விதிகளையும், கொடைகள் மற்றும் அவற்றை அளிக்கும் செயல்முறைகள் ஆகியவற்றைக் குறித்த பழங்காலத்து முனிவர்களின் பார்வைகளையும் நான் உனக்கு விளக்கிச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(104)
பிரம்மஹத்தி! – அநுசாஸனபர்வம் பகுதி – 24-ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே பிரம்மஹத்தி பாவம் பீடிக்கக்கூடிய சூழ்நிலைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் அரச மகனே, நான் கேட்கும் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில் ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே ஒரு மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாகும் தருணங்கள் என்னென்ன?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, முன்பு ஒரு நாள் இதே காரியம் குறித்து விளக்கிச் சொல்லுமாறு வியாசரை வேண்டினேன். அத்தருணத்தில் வியாசர் சொன்னதை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2)
வியாசரிடம் சென்ற நான், “ஓ! பெருந்தவசியே, வசிஷ்டரின் நாலாம் தலைமுறை வழித்தோன்றல் {வாரிசு} நீர். இஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. உண்மையில் ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே ஒரு மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாகும் {பிரம்மஹத்தி பீடித்தவனாகும்} தருணங்கள் என்னென்ன?” என்று கேட்டேன்.(3) ஓ! மன்னா, இவ்வாறு என்னால் கேட்கப்பட்டவரும், பராசரர் மடியில் பிறந்த மகனும், அறநெறிகளில் திறம்பெற்றவருமான அவர், சிறப்பு நிறைந்த, உறுதியான பதிலை பின்வருமாறு அளித்தார்.(4)
{வியாசர்}, “அறமொழுகும் பிராமணர் ஒருவருக்குப் பிச்சை தருவதாக அவரைத் தானே அழைத்துவிட்டு, வீட்டில் ஏதுமில்லை என்ற பாசாங்குடன் ஏதும் கொடுக்க மறுக்கும் மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் {அவன் பிரம்மஹத்தி என்ற பாவத்தைச் செய்தவன்} என்பதை நீ அறிய வேண்டும்.(5)
ஓ! பாரதா, வேதங்களையும், அவற்றின் அங்கங்களை யாவையும் கற்றவரும், உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டவருமான ஒரு பிராமணருடைய வாழ்வாதாரங்களை அழிக்கும் ஒருவன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(6)
ஓ! மன்னா, தாகம் தணித்துக் கொண்டிருக்கும் பசுவை தண்ணீர் அருந்த விடாமல் தடை செய்பவன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(7)
காலகாலமாக ஆசான் மூலம் சீடனிடம் வரும் ஸ்ருதிகள், அல்லது முனிவர்களால் தொகுக்கப்பட்ட சாத்திரங்கள் ஆகியவற்றைப் படிக்காமலேயே அவற்றிடம் குறை காண்பவனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ கருத வேண்டும்.(8)
அழகையும், பிற சிறப்புகளைக் கொண்ட தன் மகளைத் தகுந்த மணமகனுக்கு {திருமணம் செய்து கொடுக்காத} அளிக்காத மனிதனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(9)
இதயம்பிளக்கும் துன்பத்தைப் பிராமணர்களுக்கு அளிக்கும் பாவம் நிறைந்த ஒரு மூடனை பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(10) பார்வையற்றவர்கள், முடவர்கள், மூடர்கள் ஆகியோரின் செல்வங்கள் அனைத்தையும் களவாடுபவனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(11) தவசிகளின் ஆசிரமங்களுக்கோ, காடுகளுக்கோ, கிராமத்திற்கோ, நகரத்திற்குத் தீ வைக்கும் மனிதனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்” என்றார் {என்றார் வியாசர் எனச் சொன்னார் பீஷ்மர்}.(12)
புண்ணியத்தீர்த்தங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 25-புனிதநீர்நிலைகளின் மகிமை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்வது பலன் நிறைந்தது {புண்ணியம் நிறைந்தது} என்றும்; அத்தகைய நீர்நிலைகளில் தூய்மைச்சடங்குகளைச் செய்வது பலன்மிக்கது என்றும்; அத்தகைய சிறப்புமிக்க நீர்நிலைகளைக் குறித்துக் கேட்பதும் பலன்மிக்கது என்றும் சொல்லப்படுகிறது. ஓ! பாட்டா, இக்காரியத்தில் உமது விளக்கத்தை நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளை எனக்குக் குறிப்பிட்டுச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பெரும்பலம் கொண்டவரே, இக்காரியத்தில் உமது உரையைக் கேட்க நான் விரும்புகிறேன்” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெருங்காந்தி {பெரும்புகழ்} கொண்டவனே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளைக் குறித்த பின்வரும் பட்டியல் அங்கிரஸால் {அங்கிரஸ் முனிவரால்} செய்யப்பட்டதாகும். அருளப்பட்டிருப்பாயாக, நீ பெரும்பலனை அடையப் போகிறாய், அதைக் கேட்பதே உனக்குத் தகும்.(3)
ஒரு காலத்தில், கடும் நோன்புகளைக் கொண்டவரான கௌதமர், பெருமைமிக்கவரும், கல்விமானும், அமைதியான ஆன்மாவைக் கொண்ட முனிவருமான அங்கிரஸ் காட்டில் வசித்து வந்த போது அவரை அணுகி,(4) “ஓ! சிறப்புமிக்கவரே, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத்தலங்களோடு தொடர்புடைய பலன்கள் குறித்து எனக்குச் சில ஐயங்கள் உண்டு {எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை}. இக்காரியத்தில் உமது உரையை நான் கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ! தவசியே, எனக்கு அவற்றைக் குறித்துச சொல்வீராக.(5) ஓ! பெரும் ஞானியே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளில் நீராடுவதன் மூலம் ஒரு மனிதனால் மறுமையில் அடையப்படும் பலன்கள் என்னென்ன? இதுகுறித்து உண்மையாகவும், விதிப்படியும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்றார்.(6)
அங்கிரஸ், “எப்போதும் அலைகள் நடனமிடும் நீரைக் கொண்டவையான சந்திரபாகையிலோ {செனாபிலோ}, விதஸ்தையிலோ {ஜீலத்திலோ}[1] ஏழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து நீராடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திதையும் முற்றிலும் கழுவிக்கொண்டு, ஒரு தவசியின் {தவசி ஒருவர் பெறுவதைப் போன்ற} பலனை அடைவான்.(7) காஷ்மீரம் என்றழைக்கப்படும் நாட்டில் பல ஆறுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சிந்து (இண்டஸ்) என்றழைக்கப்படும் பேராற்றில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் நீராடுவதன் மூலம் ஒருவன் நிச்சயம் நற்குணத்தை அடைந்து, இவ்வுலகத்தில் இருந்து சென்ற பிறகு சொர்க்கத்திற்கு உயர்வான்.(8)புஷ்கரை, பிரபாஸம், நைமிசம் {நைமிசாரண்யத்தில் உள்ள தீர்த்தம்}, பெருங்கடல் {சமுத்திர தீர்த்தம்}, தேவிகை, இந்திரமார்க்கம், ஸ்வர்ணபிந்து ஆகிய ஆறுகளில் நீராடும் ஒருவன், தெய்வீகத் தேரில் அமர்ந்து கொண்டு, அப்ஸரஸ்கள் புகழ நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வான்[2].(9)ஹிரண்யபிந்துவின் நீரில் மூழ்கி குவிந்த மனத்துடன் அந்தப் புனித ஆற்றைத் துதிப்பதன் மூலமும், அடுத்ததாகக் குசேசயம் தேவாந்தம் ஆகியவற்றில் நீராடுவதன் மூலமும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் கழுவப் பெறுகிறான்[3].(10)கந்தமாதனத்தின் அருகில் இந்திரதோயைக்கும், அடுத்ததாகக் குரங்கம் என்றழைக்கப்படும் நாட்டில் உள்ள கரதோயைக்கும் செல்லும் ஒருவன் மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, குவிந்த இதயத்துடனும், தூய உடலுடனும் அந்தப் புனித நீர்நிலைகளில் நீராட வேண்டும். இதைச் செய்வதன் மூலம் ஒருவன் குதிரை வேள்வியொன்றைச் செய்த பலனை நிச்சயம் ஈட்டுவான்[4].(11)நீல மலைகளில் உள்ள கங்காத்வாரம், குசத்வாரம் {குசாவர்த்தம்}, வில்வகம் ஆகியவற்றிலும், கனகலத்திலும் நீராடும் ஒருவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்வான்[5].(12)ஒருவன் பிரம்மசாரியாக, தன் கோபத்தை அடக்கி, வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணையோடிருந்து, நீர்நிலைகளின் தடாகத்தில் {அபாம்ஹ்ரதம் எனும் தீர்த்தத்தில்} நீராடினால், அவன் நிச்சயம் ஒரு குதிரைவேள்வி செய்த பலனை அடைவான்.(13)
பாகீரதி-கங்கை வடதிசை நோக்கிப் பாயும் பகுதியானது, சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகியவை சேருமிடம் என்று அழியப்படுகிறது. ஒரு மாத காலம் நோன்பிருந்து, மஹேஸ்வரனுக்கு ஏற்புடையதாக அறியப்படும் அந்தப் புனிதத் தீர்த்ததில் {ஈஸ்வரஸ்தானத்தில்} நீராடும் ஒருவன் தேவர்களைக் காணத்தகுந்தவனாகிறான்.(14)
சப்தகங்கம், திரிகங்கம், இந்திரமார்க்கம் ஆகிவற்றில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன், மறுபிறவியடைய நேர்ந்தால் அமுதத்தையே உணவாக அடைகிறான்[6].(15)உடலையும் மனத்தையும் தூய நிலையில் வைத்துக் கொண்டு, நாள்தவறாமல் அக்னிஹோத்ரம் செய்து, ஒரு மாத காலம் உண்ணா நோன்பிருந்து மஹாஸ்ரமத்தில் நீராடும் மனிதன் நிச்சயம் ஒரே மாதத்தில் வெற்றியை அடைவான் {அம்மாதத்திலேயே தவசித்தி பெறுவான்}.(16)
மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, தீய ஆசைகள் அனைத்தில் இருந்தும் மனத்தூய்மையடைந்து, {மலைச்சிகரமான} பிருகுதுங்கத்தில் அமைந்திருக்கும் பெருந்தடாகத்தில் {மஹாஹ்ரதமெனும் தீர்த்தத்தில்} நீராடுவதன் மூலம் ஒருவன் பிராமணக் கொலை செய்த பாவத்தில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்தும் கழுவப்படுவான்[7].(17)கன்யாகூபத்தில் நீராடி, பலாகையில் {பலாகை ஆற்றில்} தூய்மைச்சடங்குகளை {தர்ப்பணங்களைச்} செய்யும் ஒருவன், அதன் மூலம் தேவர்களுக்கு மத்தியில் பெரும்புகழை அடைந்து மகிமையில் ஒளிர்வான்.(18)
தேவிகையிலும், சுந்தரிகை என்ற பெயரில் அறியப்படும் தடாகத்திலும், அஸ்வினி என்றழைக்கப்படும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், தனது மறுபிறவியில் பேரழகுடன் கூடிய வடிவத்தைப் பெறுவான்.(19)
ஒரு பிறைபக்க காலம் {பக்ஷம்} உண்ணா நோன்பிருந்து, மஹாகங்கையிலும், கிருத்திகாங்காரகையிலும் நீராடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான்[8].(20)வைமானிகை, கிங்கிணிகை ஆகியவற்றில் நீராடும் ஒருவன் விரும்பிய எங்கும் செல்லும் சக்தியை அடைந்து, அப்சரஸ்களின் தேவலோகத்தில் பெரிதும் மதிப்பிற்குரிய பொருளாவான்[9].(21)ஒரு மனிதன் தன் கோபத்தை அடக்கி, மூன்று நாட்கள் பிரம்மச்சரிய நோன்பிருந்து, காளிகை என்றழைக்கப்படும் ஆசிரமத்தில் {காளிகாஸ்ரமம் எனும் இடத்தில்} உள்ள விபாசை {பியாஸ்} ஆற்றில்[10] நீராடினால், அவன் மறுபிறவி எனும் கடப்பாட்டைக் கடப்பதில் நிச்சயம் வெல்வான்.(22)கிருத்திகைகளுக்குப் புனிதமான ஆசிரமத்தில் {கிருத்திகாஸ்ரமம் என்ற இடத்தில் உள்ள நீர்நிலையில்} நீராடி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை செலுத்தி, மஹாதேவனை நிறைவடையச் செய்யும் ஒருவன், தன் உடலும், மனமும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்கு உயர்வான்.(23)
ஒருவன், தூய்மையடைந்த உடல் மற்றும் மனத்துடன் மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து மஹாபுத்தில் {மஹாகூபத்தில்} நீராடினால், அசையாதனவற்றிடும், அசையும் விலங்குகள் அனைத்திடமும், இரு கால்களைக் கொண்ட விலங்குகள் அனைத்திடமும் {மனிதர்களிடமும்} கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(24)
தேவதாருக்காட்டில் நீராடி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து, தூய உடலுடனும், மனத்துடனும் ஏழு நாட்கள் அங்கேயே வசிப்பதன் மூலம் ஒருவன் இவ்வுலகை விட்டுச் சென்றதும் தேவர்களின் உலகை அடைவான் {தேவதை என்ற பெயர் பெறுவான்}.(25)
சரஸ்தம்பம், குசஸ்தம்பம், துரோணசர்மபதம் ஆகியவற்றில் உள்ள அருவிகளில் நீராடும் ஒருவன், நிச்சயம் அப்சரஸ்களின் உலகை அடைந்து, மனிதர்களைவிட அதிக ஆற்றல்களைக் கொண்ட அவர்களின் {அந்த அப்சரஸ்களின்} கடமையுணர்வுமிக்கப் பணிவிடைகளைப் பெறுவான்.(26)
ஒருவன் உண்ணா நோன்பிருந்து சித்திரகூடம், ஜனஸ்தானம்[11] மற்றும் மந்தாகினியின் நீரில் நீராடினால், அவன் நிச்சயம் அரச செழிப்பில் கலப்பான் {அரசுரிமை அடைவான்}.(27)சியாமை என்ற பெயரில் அறியப்படும் ஆசிரமத்திற்குச் சென்று, ஒருபிறைபக்க {பக்ஷ} தாகாலம் அங்கேயே வசித்து, அங்கே இருக்கும் புனித நீர்நிலையில் நீராடுவதன் மூலம் ஒருவன் விரும்பியபோது மறையும் சக்தியை அடைகிறான் (அந்தச் சக்தியை அடைந்து கந்தர்வர்களுக்காக விதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவிப்பான்).(28)
கௌசிகி என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திற்குச் சென்று, மூன்று நாட்கள் உணவும், பானமும் தவிர்த்து தூய இதயத்துடன் அங்கே வசித்திருப்பவன், (மறுமையில்) கந்தர்வர்களின் இன்பலோகத்தில் வசிக்கும் சக்தியைப் பெறுவான்[12].(29)காந்ததாரகை என்ற பெயரில் உள்ள இனிய தீர்த்தத்தில் நீராடி, உணவும், பானமும் துறந்து ஒரு மாத காலம் அங்கே வசித்திருக்கும் ஒருவன் விரும்பிய போது மறையும் சக்தியை அடைந்து இருபத்தோரு நாட்களில் சொர்க்கத்திற்கு உயர்வான்.(30)
மதங்கம் என்ற பெயரில் அறியப்படும் தடாகத்தில் {மதங்கவாபியென்னும் தீர்த்தத்தில்} நீராடும் ஒருவன் நிச்சயம் ஒரே இரவில் {அதே இரவில்} வெற்றியை அடைவான். நித்ய அந்தகை, அல்லது அநாலம்பத்திலோ,(31) நைமிசத்திலோ, ஸ்வர்க்கம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடி, தன் புலன்களை அடக்கி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் மனித வேள்வி {புருஷமேத யாகம்} செய்த பலனை அடைகிறான்[13].(32)கங்காஹ்ரதத்திலும், உத்பலாவனம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும் நீராடி, ஒரு மாதகாலத்தில் நாள்தோறும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைவான்.(33)
கங்கையும், யமுனையும் சேருமிடத்திலும், காலஞ்சர மலைகளின் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி, ஒரு மாதகாலத்தில் நாள்தோறும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் பத்து குதிரை வேள்விகளைச் செய்த பலனை அடைவான்[14].(34)சஷ்டி தடாகத்தில் {யஷ்டிஹ்ரதத் தீர்த்தத்தில்} நீராடும் ஒருவன், அன்னதானத்தின் பலனைவிடப் பெரிய பலனை அடைகிறான். ஓ! பாரதக் குலத் தலைவா, மக {மாசி} மாதத்தில், பத்தாயிரம் தீர்த்தங்களும், வேறு மூன்று கோடி தீர்த்தங்களும் (கங்கையும், யமுனையும் சேருமிடமான) பிரயாகைக்கு {இன்றைய அலாகாபாத், உத்திரபிரதேசம்} வருகின்றன. ஓ! பாரதக் குலத் தலைவா, கட்டுப்படுத்திய ஆன்மாவுடன் கூடிய ஒருவன், மக {மாசி} மாதத்தில் கடும் நோன்புகள் நோற்றுப் பிரயாகையில் நீராடினால் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்தை அடைவான்[15].(35,36)மருத்துக்களுக்குப் புனிதமான தீர்த்தத்திலும், பித்ருக்களின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தீர்த்தத்திலும், வைவஸ்வதம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், ஒரு தீர்த்தத்தைப் போலவே புனிதமும், தூய்மையும் அடைந்து, தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவனாவான்.(37)
பாகீரதியில் {கங்கையில்} பிரம்மஸரஸுக்குச் சென்று, நீராடி, ஒருமாதம் உணவனைத்தையும் துறந்து நாள்தோறும் பித்ருக்களுக்குக் காணிக்கை அளிக்கும் ஒருவன் நிச்சயம் சோமலோகத்தை அடைவான்.(38)
உத்பாதகத்திலும், அஷ்டாவக்ரத்திலும் நீராடி, அடுத்தடுத்து பனிரெண்டு நாட்கள் உணவைத் தவிர்த்து ஒவ்வொரு நாளும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் குதிரை வேள்விக்கான பலன்களை அடைவான்.(39)
கயையில் இருக்கும் அஸ்மப்ருஷ்டம், நிரவிந்த மலைகள், கிரௌஞ்சபதி ஆகிய மூன்றிலும் நீராடும் ஒருவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} என்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்[16].(40) முதலிடத்தில் நீராடுவது ஒற்றைப் பிராமணக் கொலை என்ற பாவத்தில் இருந்து தூய்மையாக்கும்; இரண்டாமிடத்தில் நீராடுவது அத்தன்மையிலுள்ள இரு குற்றங்களில் ஒன்றைத் தூய்மையாக்கும்; மூன்றாமிடத்தில் நீராடுவது அத்தகைய மூன்று குற்றங்களில் ஒன்றைத் தூய்மையாக்கும்.(40)கலவிங்கத்தில் நீராடும் ஒருவன் (மறுமையில் பயன்படுத்த) பேரளவு நீரை அடைகிறான். அக்னியின் நகரத்தில் {அக்னிபுரத்தில்} நீராடும் ஒரு மனிதன், அக்னி மகளின் நகரத்தில் மறுபிறவியை அடைந்து வாழும் பலனைப் பெறுவான்.(41)
கரவீரபுரத்தின் விசாலை ஆற்றில் நீராடி, தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து, தேவஹ்ரதத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்யும் ஒருவன் பிரம்மனைப் போன்றவனாகி அத்தகைய மகிமையில் ஒளிர்கிறான்.(42)
புனராவர்த்த-நந்தை மற்றும் மஹாநந்தையில் நீராடும் ஒரு மனிதன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உலகளாவிய கருணை கொண்டு இந்திரனுக்குச் சொந்தமான நந்தனம் என்றழைக்கப்படும் தெய்வீகத் தோட்டத்திற்குச் சென்று பல்வேறு அப்சரஸ்களால் பணிவிடை செய்யப்படுகிறான்.(43)
லோஹிதை ஆற்றில் அமைந்திருப்பதும், ஊர்வசி என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தின் முழுநிலவு {பௌர்ணமி} நாளில் குவிந்த ஆன்மாவுடன் நீராடும் ஒருவன், புண்டரீகம் என்றழைக்கப்படும் வேள்வியோடு தொடர்புடைய பலன்களை அடைவான்[17].(44)பனிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து ராமஹ்ரதத்தில் நீராடி, விபாசை {பியாஸ்} ஆற்றில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கையளிக்கும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(45)
ஒரு மாதகாலம் உண்ணாநோன்பிருந்து தூய இதயத்துடன் மஹாஹ்ரதம் என்றழைக்கப்படும் நீராடும் ஒருவன் நிச்சயம் தவசி ஜமதக்னியின் கதியை அடைவான்.(46)
விந்தியம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தின் வெப்பத்திற்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு மனிதன், வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டு, பணிவால் இயக்கப்படும் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் ஒரே மாத காலத்தில் நிச்சயம் தவ வெற்றியை அடைவான்.(47)
நர்மதையிலும், சுபாரகம் {சூர்ப்பாரகோதகம்} என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்தில் நீராடி, ஒரு முழுப் பிறைபக்க {பக்ஷ} காலம் உண்ணா நோன்பிருக்கும் ஒருவன் நிச்சயம் அடுத்தப் பிறவியில் அரசகுடியில் இளவரசனாகப் பிறப்பான்.(48)
ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடனும், குவிந்த ஆன்மாவுடனும், ஜம்புமார்க்கம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திற்குச் சென்றால், ஒரே பகல் மற்றும் இரவு அடங்கிய காலத்திற்குள் நிச்சயம் அவன் வெற்றியை அடைவான்.(49)
சாந்தாலிகாஸ்ரமம் சென்று, கோகாமுகம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடி, இலைகளை மட்டுமே உண்டு, மரவுரிகளை உடுத்தி வாழ்பவன் தன் மனைவிகளாகப் பேரழகுடன் கூடிய பத்து கன்னிகைகளை நிச்சயம் அடைவான்.(50)
கன்யாஹ்ரதம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தின் அருகில் வாழ்வபவன் ஒருபோதும் யமலோகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. அத்தகைய மனிதன் நிச்சயம் தேவர்களுக்குச் சொந்தமான இன்பலோகங்களுக்கு உயர்வான்.(51)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஒரு புதுநிலவு {அமாவாசை} நாளில் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் பிரபாஸை என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், உடனே வெற்றியையும், இறவாத்தன்மையும் நிச்சயம் அடைவான்.(52)
ஆர்ஷ்டிசேணரின் மகனுடைய ஆசிரமத்திற்கு அருகில் உஜ்ஜானகம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும், அடுத்ததாகப் பிங்கையின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவனாவான்.(53)
மூன்று நாட்கள் உண்ணாநோன்பிருந்து, குல்யை {ரிஷிகுல்யை} என்று அறியப்படும் தீர்த்தத்தில் நீராடி, அகமர்ஷணம் என்ற பெயரைக் கொண்ட புனித மந்திரங்களை உரைக்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைவான்.(54)
ஓரிரவு உண்ணாநோன்பிருந்து, பிண்டாரகையில் நீராடும் ஒருவன், அடுத்த நாளுக்குள் தூய்மையடைந்து, அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைவான்.(55)
தர்மாரண்யம் என்றழைக்கப்படும் காடுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மசரத்திற்குச் செல்லும் ஒருவன், தன் பாவங்களை அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து புண்டரீக வேள்வி செய்த பலனை அடைவான்.(56)
மைநாக மலையின் நீரில் நீராடி, காலையும், மாலையும் துதிகளைச் செய்து, ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு மாத காலம் அங்கே வசிக்கும் ஒருவன் அனைத்து வேள்விகளையும் செய்த பலனை அடைவான்.(57)
காலோதகம், நந்திகுண்டம், உத்தரமானஸம் ஆகியவற்றுக்குப் புறப்பட்டு அவற்றிலிருந்து நூறு யோஜனை தொலைவில் உள்ள இடத்தை அடைந்தாலே ஒருவன் கருவைக் கொன்ற பாவத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(58) அவன் நந்தீஸ்வரனின் தோற்றத்தைக் காண்பதில் வென்று, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான். ஸ்வர்க்கமார்க்கம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நிச்சயம் பிரம்மலோகத்திற்குச் செல்வான்.(59)
கொண்டாடப்படும் இமயம் புனிதமானதாகும். அந்த மலைகளின் இளவரசனே சங்கரனின் மாமனாவான். அவன் ரத்தினங்கள் அனைத்தின் சுரங்கமாகவும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் வந்து போகும் இடமாகவும் இருக்கிறான்.(60) வேதங்களை முழுமையாக அறிந்தவனும், இவ்வாழ்வை மிக நிலையற்றதெனக் கருதுபவனுமான ஒரு மறுபிறப்பாளன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணக்கமாக உணவு மற்றும் பானங்கள் அனைத்தையும் தவிர்த்து, தேவர்களைத் துதித்து, தவசிகளுக்குத் தலைவணங்கி இந்த மலைகளில் தன் உடலைக் கைவிட்டால் நிச்சயம் வெற்றியை அடைந்து, நித்தியமான பிரம்ம லோகத்தை அடைவான்.(61,62)
கோபத்தை அடக்கி, காமத்தைக் கட்டுப்படுத்தித் தீர்த்தத்தில் வசித்து வருபவன், அத்தகைய வாசத்தின் விளைவால் அவனுக்கு அடையப்பட முடியாத {பலன்} எதுவும் இல்லை.(63) உலகில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் செல்லும் நோக்கில் ஒருவன் அவற்றில் அடைதற்கரிதான, பயணிக்க மிகக் கடுமையான வழிகளைக் கொண்டவற்றையும் மனத்தால் நினைக்க வேண்டும் {அவற்றிற்கும் செல்ல நினைக்க வேண்டும்}.(64) தீர்த்தங்களுக்குப் பயணம் செய்வது வேள்விகள் செய்த பலனை உண்டாக்கவல்லதாகும். அனைவரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்பவை அவை. பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அவற்றால் சொர்க்கத்திற்கே வழிவகுக்க இயலும். இக்காரியம் உண்மையில் பெரும்புதிராகும் {பெரும் ரகசியமாகும்}. தேவர்களே கூடத் தீர்த்தங்களில் நீராடுகின்றனர். அவை அவர்களையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்கின்றன.(65) பிராமணர்களுக்கும், தனக்கான நன்மையை அடையும் நோக்கம் கொண்ட அறம் சார்ந்த நேர்மையாளர்களுக்கும் தீர்த்தங்கள் குறித்த இந்த உரை சொல்லப்பட வேண்டும். மேலும் அவனது நலன்விரும்பிகள், நண்பர்கள், அவனுக்குக் கீழ்ப்படிந்து அர்ப்பணிப்புடன் இருக்கும் சீடர்கள் ஆகியோரும் கேட்கும் வகையில் இது சொல்லப்பட வேண்டும்” {என்றார் அங்கிரஸ்}.(66)
பெரும் தவத்தகுதியைக் கொண்ட அங்கிரஸ் இந்த உரையைக் கௌதமருக்குச் சொன்னார். அங்கிரஸ், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கசியபரிடம் இருந்து இதைப் பெற்றார்.(67) இவ்வுரையானது பெரும் முனிவர்களாலும் சொல்லத்தகுந்ததாகக் கருதப்படுகிறது. {ஒருவனைத்} தூய்மையடையச் செய்யும் யாவற்றிலும் இது முதன்மையானதாகும். இதை விடாமல் நாள்தோறும் சொல்லும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, இவ்வாழ்வை விட்டுச் சொர்க்கத்தை அடைவான்.(68) “அங்கிரஸின் இவ்வுரை, புதிராகக் கருதப்படுகிறது” என்று இந்த உரை குறித்துக் கேட்கும் ஒருவன், அடுத்தப் பிறவியில் நற்குடியில் பிறந்தும் தன் முற்பிறவியின் நினைவுகளுடன் கூடியவனாக இருப்பான்” என்றார் {பீஷ்மர்}”.(69)
கங்கையின் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 26-தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு முனிவருக்கும், சீல நோன்புடன் கூடிய உஞ்சவிருத்தி செய்து வந்த ஒரு பிராமணருக்குமிடையில் கங்கையின் மகிமையைக் குறித்து நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கும், மன்னிக்கும் தன்மையில் {பொறுமையில்} பிரம்மனுக்கும் இணையானவரும், ஆற்றலில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, சக்தியில் சூரியனுக்கும் ஒப்பானவரும்,(1) அளவிலா வலிமை கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மர், போரில் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தார். மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் பல மக்கள் சூழ இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.(2) வீரர்கள் விரும்பும் படுக்கையில் கிடந்த அந்த முதிய வீரர், தமது உடலில் இருந்து விடுபெறும் மங்கல நேரத்திற்காகக் காத்திருந்தார். பாரதக் குலத்தில் முதன்மையானவரான அவரைக் காணப் பெரும் முனிவர்கள் பலர் அங்கே வந்தனர்.(3)
அவர்களில் அத்ரி, வசிஷ்டர், பிருகு, புலஸ்தியர், புலக்ஷர் மற்றும் கிரது ஆகியோரும் இருந்தனர். அங்கிரஸ், கௌதமர், அகஸ்தியர், நன்கு அடக்கப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஸுமதி,(4) விஷ்வாமித்திரர், ஸ்தூலசிரஸ், ஸம்வர்த்தர், பிரமதி, தமர் ஆகியோரும் அங்கிருந்தனர். பிருஹஸ்பதி, உசானஸ் {சுக்ராசாரியர்}, வியாசர், சியவனர், காசியபர், துருவர்,(5) துர்வாஸர், ஜமதக்நி, மார்க்கண்டேயர், காலவர், பரத்வாஜர், ரைப்யர், யவக்ரீதர், திரிதர் ஆகியோரும் அங்கிருந்தனர்.(6) ஸ்தூலாக்ஷர், சுபலாக்ஷர், கண்வர், மோதாதிதி, கிருசர், நாரதர், பர்வதர், ஸுதன்வா, ஏகதர், துவிதர்,(7) நிதம்பூ, புவனர், தௌம்யர், சதானந்தர், அக்ரதவ்ரணர், பரசுராமர், கசர் ஆகியோரும் அங்கிருந்தனர்.(8) உயர் ஆன்மா கொண்டவர்களான இந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும் கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மரைக் காண வந்தனர். தம்பிகளுடன் கூடிய யுதிஷ்டிரன், ஒருவர் பின் ஒருவரா அங்கே வந்த உயர் ஆன்ம முனிவர்களை வழிபட்டான். அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட அந்த முதன்மையான முனிவர்கள் அங்கே அமர்ந்து ஒருவரோடு ஒருவர் உரையாடத் தொடங்கினர்.(9,10)
பீஷ்மர் தொடர்பான அவர்களது உரையாடல் மிக இனிமையானதாகவும், புலன்கள் அனைத்திற்கும் ஏற்புடையதாகவும் இருந்தது. அவர்கள் தம்மைக் குறித்துப் பேசுவதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ச்சியால் நிறைந்து, ஏற்கனவே தாம் சொர்க்கத்தில் இருப்பதாகக் கருதினார்.(11) அப்போது அந்த முனிவர்கள் பீஷ்மரிடமும், பாண்டவ இளவரசர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, காண்போர் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கிருந்து மறைந்தனர்.(12) பாண்டவர்கள் அந்தப் பேரருள் கொண்ட முனிவர்கள் மறைந்த பிறகும் அவர்களை மீண்டும் மீண்டும் துதித்துக் கொண்டிருந்தனர்.(13) பிறகு உற்சாகமிக்க ஆன்மாக்களுடன் கூடிய அவர்கள், உதிக்கும் சூரியனுக்காகக் காத்திருக்கும் மந்திரங்களில் திறன்மிக்கப் பிராமணர்களைப் போலக் கங்கையின் மைந்தரிடம் காத்திருந்தனர்.(14) அவர்களது தவசக்தியின் விளைவால் திசைப்புள்ளிகள் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அக்காட்சியைக் கண்டு பாண்டவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(15) அம்முனிவர்கள் பெற்றிருந்த பேரருளையும், பலத்தையும் நினைத்துப் பார்த்த பாண்டவ இளவரசர்கள், அக்காரியம் குறித்துத் தங்கள் பாட்டனான பீஷ்மரிடம் உரையாடத் தொடங்கினர்”.(16)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவ்வுரையாடல் முடிந்த பிறகு, பாண்டுவின் மகனான நீதிமான் யுதிஷ்டிரன், பீஷ்மரின் பாதங்களைத் தன் தலையால் தொட்டு, அதன் பிறகு அறம் மற்றும் நெறிகள் தொடர்பான தன் கேள்விகளை மீண்டும் கேட்கத் தொடங்கினான்.(17)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புனிதத்தின் நோக்கில் கண்டால் எந்த நாடுகள், எந்த மாகாணங்கள், எந்த ஆசிரமங்கள், எந்த மலைகள், எந்த ஆறுகள் முதன்மையானவை?” என்று கேட்டான்.(18)
சீலம் மற்றும் உஞ்ச {சீலோஞ்சவிருத்தி} நோன்புகளை ஒரு பிராமணருக்கும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு முனிவருக்கும் இடையில் இது தொடர்பாக நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் தென்படுகிறது.(19) ஒரு காலத்தில், மலைகளால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த ஒரு முதன்மையான மனிதன், இறுதியாகச் சீல {சீல விருத்தி} நோன்புக்கு இணக்கமான இல்லறவாழ்வு முறையைப் பின்பற்றி வாழும் ஒரு முதன்மையான மனிதரின் இல்லத்திற்கு {ஒரு கிருஹஸ்தனின் வீட்டுக்கு} வந்தார்.(20) பின்னவர் தமது விருந்தினரை உரிய சடங்குகளுடன் வரவேற்றார். இத்தகைய விருந்தோம்பலைப் பெற்று மகிழ்ந்த அந்த முனிவர், தமக்கு விருந்தளிப்பவரின் இல்லத்திலேயே அவ்விரவை மகிழ்ச்சியாகக் கடத்தினார்.(21) அடுத்தநாள் காலையில் சீல நோன்பை நோற்கும் அந்தப் பிராமணர், காலையில் தாம் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் சடங்குகளை முடித்து, தம்மை முறையாகத் தூய்மை செய்து கொண்டு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கும் தமது விருந்தினரை உற்சாகமாக அணுகினார்.(22) ஒருவரையொருவர் சந்தித்துச் சுகமாக அமர்ந்த அவ்விருவரும், வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள் தொடர்பான இனிமையான உரையாடலைத் தொடங்கினர்.(23) அந்த உரையாடலின் முடிவில் சீல நோன்பை நோற்கும் பிராமணர், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவரிடம் மதிப்புடன் பேசினார். ஓ! யுதிஷ்டிரா, நுண்ணறிவுடன் கூடிய அவர், நீ என்னிடம் கேட்ட அதே கேள்வியை முன்வைத்தார்.(24)
அந்த வறிய பிராமணர், “புனிதத்தின் நோக்கில் கண்டால் எந்தெந்த நாடுகள், எந்தெந்த மாகாணங்கள், எந்த ஆசிரமங்கள், எந்தெந்த மலைகள், எந்தெந்த ஆறுகள் முதன்மையானவையாகக் கருதப்பட வேண்டும்? இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(25)தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர், “ஆறுகள் அனைத்திலும் முதன்மையான பாகீரதி {கங்கை} பாயும் கரைகளுக்கு அருகே உள்ள நாடுகள், மாகாணங்கள், ஆசிரமங்கள், மலைகள் ஆகியவையே முதன்மையான புனிதம் கொண்டவை.(26) தவங்கள், பிரம்மச்சரியம், வேள்விகள், துறவு, ஆகியவற்றின் மூலம் ஓர் உயிரினம் அடையவல்ல கதியைப் பாகீரதியின் புனித நீரில் நீராடி அதன் அருகில் வாழ்வதால் மட்டுமே ஒருவன் நிச்சயம் அடைவான்.(27) மேனியில் பாகீரதியின் புனித நீர் தெளிக்கப்பட்டவை, அல்லது அந்தப் புனித ஆற்றில் எலும்புகள் இடப்பட்டவையான உயிரினங்கள் எக்காலத்திலும் சொர்க்கத்தில் இருந்து வீழ நேராது.(28) ஓ! கல்விமானான பிராமணரே, தங்கள் செயல்கள் அனைத்திலும் பாகீரதியின் நீரைப் பயன்படுத்தும் மனிதர்கள், இவ்வுலகில் இருந்து சென்றதும் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(29) தங்கள் வாழ்வின் முதல் பகுதியில் பாவம் நிறைந்த செயல்கள் பலவற்றைச் செய்த மனிதர்களும் கூட, வருடக்கணக்கில் கங்கையில் அருகில் வசிப்பதன் மூலம் மேன்மைமிக்கக் கதியை அடைவதில் வெல்வார்கள்.(30)
கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் கங்கையின் புனித நீரில் நீராடுவதன் மூலம் விளையும் பலனை நூறு வேள்விகளாலும் உண்டாக்க முடியாது.(31) கங்கையின் ஓடையில் ஒரு மனிதனின் எலும்புகள் கிடக்கும் காலம் வரை அவன் சொர்க்கத்தில் மதித்து வழிபடப்படுவான்.(32) நாள் புலர்கையில் இருளை அகற்றி, காந்தியில் சுடர்விட்டு எழும் சூரியனைப் போலவே, கங்கை நீரில் நீராடிய மனிதன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து காந்தியில் ஒளிர்வது காணப்படுகிறது.(33) கங்கையின் புனித நீர் இல்லாத நாடுகளும், திசைப்புள்ளிகளும் நிலவற்ற இரவுகள் போன்றவையோ, மலர்களற்ற மரங்களையோ போன்றவையாகும்.(34) உண்மையில், கங்கையில்லாத உலகம் என்பது, அறமற்ற பல்வேறு வகையினரையும், வாழ்முறைகளைக் கொண்டவர்களையும், அல்லது சோமமற்ற வேள்விகளைப் போன்றதாகும்.(35)
கங்கை இல்லாத நாடுகளும், திசைப்புள்ளிகளும், சூரியனற்ற ஆகாயத்தையோ, மலைகளற்ற பூமியையோ, காற்றில்லாத வெளியையோ போன்றவை என்பதில் ஐயமில்லை.(36) மூவுலகங்களில் உள்ள மொத்த உயிரினங்களும் கங்கையின் மங்கல நீரால் தொண்டாற்றப்பட்டால் {தர்ப்பணம் செய்யப்பட்டால்} எந்த ஆதாரத்தில் இருந்தும் அடையப்பட இயலாத இன்பத்தை அவை அடையும்.(37) சூரியனின் கதிர்களால் வெப்பமூட்டப்பட்ட கங்கையின் நீரைப் பருகும் ஒருவன், மாட்டுச் சாணத்தில் இருந்து சேகரிக்கப்படும் கோதுமை, அல்லது வேறு எந்தத் தானியத்தையும் உண்டு வாழும் நோன்பு தருவதை விடப் பெரும்பலனை அடைவான்.(38) தன்னுடலைத் தூய்மை செய்து கொள்ள ஓராயிரம் சாந்திராயணச் சடங்குகளைச் செய்யும் ஒருவன், கங்கை நீரைப் பருகும் ஒருவன் ஆகிய இருவரும் இணையானவர்களா? இல்லையா என்பதைச் சொல்ல முடியாது.(39) ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக் காலில் நிற்பவன், கங்கையின் கரையில் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்தவன் ஆகிய இருவரும் இணையானவர்களா? இல்லையா என்பதைச் சொல்ல முடியாது[1].(40)கங்கையின் கரையில் நிரந்தரமாக வாழும் ஒருவன், பத்தாயிரம் யுகங்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பவனை விடத் தகுதியில் மேம்பட்டவனாவான்.(41) நெருப்புடன் தொடர்பேற்படுகையில் மிச்சமில்லாமல் எரியும் பஞ்சைப் போலவே, கங்கையில் நீராடும் மனிதனின் பாவங்களும் மிச்சமில்லாமல் எரிக்கப்படுகின்றன.(42) துன்பத்தால் பீடிக்கப்பட்ட இதயங்களுடன் தங்கள் சோகத்தை விலக்கும் கதியை அடைய முனையும் உயிரினங்களுக்குக் கங்கையைவிட மேன்மையான கதி வேறேதும் இல்லை.(43) கருடனைக் கண்டதும் தங்கள் நஞ்சை இழக்கும் பாம்புகளைப் போலவே, கங்கையின் புனித ஓடையைக் கண்ட உடனேயே ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(44) அறப்புகழற்றவர்கள், பாவம் நிறைந்த செயல்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் ஆகியோர் கங்கையில் தங்கள் புகழையும், பாதுகாப்பையும், மீட்புக்கான வழிகளையும், தங்கள் புகலிடத்தையும், மறைவிடத்தையும் கொண்டுள்ளனர்[2].(45)கொடிய இயல்புடன் கூடிய பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இழிந்தவர்கள் பலர், நரகத்தில் மூழ்கப் போகும்போது (பாவிகளாக இருந்தாலும், அவர்கள் கங்கையின் துணையை நாடினால்) மறுமையில் கங்கையால் அவர்கள் மீட்கப்படுவார்கள் {கங்கை அவர்களைக் கரையேற்றுவாள்}.(46) ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே, கங்கையின் புனித நீரில் நாள்தோறும் மூழ்குபவர்கள், பெரும் முனிவர்களுக்கும், வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களுக்கும் இணையானவர்களாவார்கள்.(47) ஓ! பிராமணரே, பணிவோ, அடக்கமான நடத்தையோ இல்லாத மனிதர்களில் இழிந்தவர்களும், பாவம் நிறைந்தவர்களும், கங்கையில் அருகில் செல்வதால் அறவோராகவும், நல்லோராகவும் மாறுவார்கள்.(48) தேவர்களுக்கு அமுதம் போலவும், பித்ருக்களுக்கு ஸ்வதா போலவும், நாகர்களுக்குச் ஸுதா[3] போலவும் மனிதர்களுக்கு உள்ளதே கங்கையின் நீராகும்.(49) பசியால் பீடிக்கப்பட்ட பிள்ளைகள் தங்கள் அன்னையரிடம் உணவை வேண்டுவதைப் போலவே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பும் மனிதர்களும் கங்கையிடம் செல்கிறார்கள்.(50)சுயம்புவான பிரம்மனின் உலகமே இடங்கள் அனைத்திலும் முதன்மையாக இருப்பதைப் போல, நீராட விரும்புவோருக்கு ஆறுகள் அனைத்திலும் முதன்மையான கங்கையே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.(51) தேவர்களுக்குத் தலைமை ஆதாரங்களாகப் பூமியும், பசுக்களும் சொல்லப்படுவதைப் போலவே, வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கங்கையே தலைமை ஆதாரமாக இருக்கிறாள்[4].(52) சூரியனிலும், சந்திரனிலும் தோன்றும் அமுதத்தைக் கொண்டு தங்களை ஆதரித்துக் கொள்ளும் தேவர்களைப் போலவே மனிதர்கள் ஆதரித்துக் கொள்ளத்தக்கது கங்கையின் நீராகும்.(53) கங்கைக் கரைகளில் உள்ள மண்ணை எடுத்துப் பூசிக் கொள்பவன், தேவ களிம்புகளால் அலங்கரிக்கப்பட்டுச் சொர்க்கத்தில் இருக்கும் சொர்க்கவாசியைப் போலத் தன்னைக் கருதிக் கொள்ளலாம்.(54) கங்கைக் கரையில் உள்ள சேற்றைத் தன் தலையில் பூசிக் கொள்பவன், சுற்றிலும் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றும் சூரியனுக்கு இணையான பிரகாசத்தை அடைவான்.(55)கங்கை நீர்த்துகள்களால் ஈரமூறிய காற்று ஒருவனைத் தீண்டிய உடனேயே அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாகிறான்.(56) துன்பங்களால் பீடிக்கப்பட்ட மனிதன் கனம் தாங்காமல் மூழ்கப்போகும் நிலையில் அந்தப் புனித ஓடையைக் கண்டதும், இதயத்தில் எழும் இன்பத்தால் தன் துன்பங்கள் அனைத்தும் விலகுவதைக் காண்கிறான்.(57) கங்கையானவள், அன்னங்கள், கோகங்கள் மற்றும் தன் மார்பில் விளையாடும் பிற நீர்க்கோழிகளின் {சக்ரவாகங்களின்} இனிய ஒலியின் மூலம் கந்தர்வர்களையும், தன் உயர்ந்த கரைகளால் {மணல் மூடுகளினால்} பூமியில் உள்ள மலைகளையும் கங்கை அறைகூவி அழைக்கிறாள்[5].(58) அவளது பரப்பில் மொய்க்கும் அன்னங்கள் மற்றும் பிற வகை நீர்க்கோழிகளையும், பசுக்கள் மேயும் மேய்ச்சல் நிலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கரைகளைக் கொண்டிருப்பதையும் கண்டு சொர்க்கதேவி தன் செருக்கை அழிக்கிறாள்.(59) கங்கைக்கரையில் வசிப்பதின் மூலம் ஒருவன் அனுபவிக்கும் உயர்ந்த இன்பமானது சொர்க்கத்தில் வசிக்கும் ஒருவனுக்குக்கூடக் கிட்டாது.(60)வாக்கு, எண்ணம் மற்றும் வெளிப்படையான செயல் ஆகியவற்றின் மூலம் செய்த பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதனும் கங்கையைக் கண்ட உடனே தூய்மையடைவான் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(61) அந்தப் புனித ஓடையைக் கண்டு, அதைத் தொட்டு, அதன் நீரில் நீராடும் ஒருவன், தன்னுடைய ஏழு தலைமுறை மூதாதையர்களையும், ஏழு தலைமுறை வழித்தோன்றல்களையும் {வாரிசுகளையும்} இன்னும் அதிக மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் காப்பாற்றுவான்.(62) கங்கைக் குறித்துக் கேட்டு, அந்த ஆற்றுக்குச் செல்ல விரும்பி, அதன் நீரைப் பருகி, அதன் நீரைத் தொட்டு, அதனில் நீராடும் ஒரு மனிதன், தன் தந்தைவழி மற்றும் தாய்வழி குலங்கள் இரண்டையும் காப்பாற்றுகிறான்.(63) கங்கையின் நீரைக் கண்டு, தொட்டுப் பருவதன் மூலமோ, அதைப் புகழ்வதன் மூலமோ, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாவிகள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகின்றனர்.(64) பிறவி, வாழ்வு, கல்வி ஆகியவற்றைக் கனிநிறைந்ததாக்க விரும்புபவர்கள், கங்கைக்குச் சென்று, நீர்க்காணிக்கைகளை வழங்குவதன் மூலம் பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.(65)
கங்கையில் நீராடுவதன் மூலம் ஒருவன் ஈட்டும் தகுதியானது, மகன்களைப் பெறுவதாலோ செல்வத்தைப் பெறுவதாலோ, தகுதிமிக்கச் செயல்களைச் செய்வதாலோ ஈட்ட இயலாததாகும்.(66) உடல் திறனிருந்தும், புனித ஓடையான மங்கலக் கங்கையைக் காண முனையாதவர்களை, பிறவிக் குருடர்களாகவோ, இறந்தவர்களாகவோ, வாதம் அல்லது முடத்தன்மையின் மூலம் நகரும் சக்தியற்றவர்களாகவோ நிச்சயம் கருதலாம்.(67) நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த பெரும் முனிவர்களாலும், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் கூடத் துதிக்கப்படும் இந்தப் புனித ஓடையை எந்த மனிதன் மதிக்க மாட்டான்?(68) காட்டுத்துறவிகள், இல்லறவாசிகள், யதிகள், பிரம்மச்சாரிகள் போன்றோரால் பாதுகாப்பு நாடப்படும் கங்கையிடம் எந்த மனிதன் பாதுகாப்பை நாட மாட்டான்?(69) தன் உயிர் மூச்சானது தன் உடலை விட்டு வெளியேறப்போகும் காலத்தில் குவிந்த ஆன்மாவுடன் கங்கையை நினைக்கும் அறவொழுக்கம் கொண்ட மனிதன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்வான்.(70)
மரணகாலத்தில் கங்கையின் அருகில் வசித்து, மதிப்புடன் அவளைத் துதிக்கும் மனிதன், அனைத்து வகைத் துயரங்கள், பாவம் மற்றும் மன்னர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(71) மிகப்புனிதமான அந்த ஓடை {கங்கை} ஆகாயத்தில் இருந்து பாய்ந்த போது, மஹேஸ்வரன் அவளைத் தன் தலையில் தாங்கினான். இந்த ஓடையே சொர்க்கத்திலும் துதிக்கப்படுகிறது[6].(72) இந்தப் புனித ஓடையின் மூன்று பாதைகளால் மூவுலகங்களும் (பூமி, சொர்க்கம் மற்றும் பாதாள லோகங்களும்) அலங்கரிகப்பட்டிருக்கின்றன. அந்த ஓடையின் நீரைப் பயன்படுத்தும் மனிதன் நிச்சயம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான்.(73) சொர்க்கத்தில் தேவர்களுக்குச் சூரியக் கதிரைப் போலவும், பித்ருக்களுக்குச் சந்திரமாஸைப் போலவும், மனிதர்களுக்கு மன்னனைப் போலவும், அனைத்து ஓடைகளுக்கும் கங்கை இருக்கிறது.(74) கங்கையை இழக்கும்போது ஒருவன் அடையும் துயரத்தின் அளவுக்கு, தாயையோ, தந்தையையோ, மகன்களையோ, மனைவிகளையோ, செல்வத்தையோ இழப்பவன் துயரை உணர மாட்டான்.(75)கங்கையைக் காணும் ஒருவன் அடையும் இன்பத்தின் அளவுக்கு எவனும் பிரம்ம லோகத்திற்கு வழிவகுக்கும் செயல்களைச் செய்வதன் மூலமோ, சொர்க்கத்திற்கு வழிவகுக்கக்கூடிய வேள்விகள் மற்றும் சடங்குகளின் மூலமோ, பிள்ளைகள் அல்லது செல்வத்தின் மூலமோ அஃதை {இன்பத்தை} அடைய மாட்டான்.(76) கங்கையைக் காண்பதன் மூலம் மனிதர்கள் அடையும் மகிழ்ச்சியானது, அவர்கள் முழு நிலவைக் காணும் போது அடைவதற்கு {அடையும் மகிழ்ச்சிக்கு} இணையானதாகும்.(77) கங்கையிடம் முழுமையாக நிலைபெறச் செய்த மனத்துடனும், ஒப்பற்ற மதிப்புடனும், அவளைத் தவிர அண்டத்தில் துதிக்கத்தக்க வேறேதும் இல்லை {அவளே ஆதாரம், அவளே பரகதி} என்ற உணர்வுடனும், வீழாத உறுதியுடனும் உள்ள மனிதன் கங்கையின் அன்புக்குரியவனாகிறான் {அவளது அனுக்கிரகத்திற்குப் பாத்திரனாவான்}.(78) பூமி, ஆகாயம், அல்லது சொர்க்கத்தில் வாழும் உயிரினங்களும், உண்மையில் மிக மேன்மையானவர்களும் எப்போதும் கங்கையில் நீராட வேண்டும். உண்மையில், கடமைகள் அனைத்திலும் அறவோருக்கு இதுவே முதன்மையான கடமையாகும்.(79) சாம்பலாக்கப்பட்ட சாகரனின் மகன்கள் அனைவரையும் அடித்துச் சென்றதாலும் புனிதமான கங்கையின் புகழ் உம்மையில் இருந்து சொர்க்கம் வரை மொத்த அண்டத்திலும் பரவியிருக்கிறது[7].(80)கங்கையில் காற்றால் எழுப்பப்படுபவையும், பிரகாசமானவையும், அழகியவையும், உயர்ந்தவையும், வேகமாகப் பாய்பவையுமான அலைகளால் கழுவப்பட்ட மனிதர்கள், தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, ஆயிரங்கதிர் கொண்ட பகல் நட்சத்திரத்திற்கு ஒப்பான காந்தியைப் பெறுவார்கள்.(81) வேள்விகளில் ஊற்றப்படும் நெய் மற்றும் பிற பானங்களைப் போன்ற பெருமையும், புனிதமும் கொண்டதும், பெரும் வேள்விகளின் பலன்களைத் தரவல்லதுமான கங்கையின் நீரில் தங்கள் உடல்களை விட்டவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள், நிச்சயம் தேவர்களுக்கு இணையான நிலையை அடைவார்கள்.(82) உண்மையில், புகழையும், பெரும் பரப்பையும் கொண்டவளும், மொத்த அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவளும், மனிதர்களாலும், முனிவர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் மதிக்கப்படுபவளான கங்கையானவள், குருடர்கள், மூடர்கள், அனைத்தையும் இழந்தவர்கள் ஆகியோரின் விருப்பங்கள் அனைத்தையும் கனியும் நிலையை அளிக்கவல்லவளாவாள்.(83) அண்டமனைத்தையும் காப்பவளும், மூவோடைகளாகப் பாய்பவளும், அனைத்து வகை நன்மைகளை உண்டாக்கவல்லதும், உயர்ந்ததும், புனிதமானதும், தேனைப் போன்று இனியதுமான நீரால் எப்போதும் நிறைந்திருப்பவளுமான கங்கையைத் தஞ்சமடைந்தவர்கள் சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவதில் வெல்வார்கள்.(84) கங்கையின் அருகில் வசிப்பவனும், நாள்தோறும் அவளைக் காண்பவளுமான மனிதன், அவளைப் பார்ப்பதன் மூலமும், தொடுவதன் மூலமும் தூய்மையடைகிறான். தேவர்கள் அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் அனைத்து வகை மகிழ்ச்சியையும் கொடுப்பார்கள்.(85)
ஒவ்வொரு உயிரினத்தையும் பாவத்தில் இருந்து பாதுகாத்து, சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவகுக்கவல்லவளாகக் கங்கை கருதப்படுகிறாள். அவள் விஷ்ணுவின் தாயான பிருச்நியாகக்[8] கருதப்படுகிறாள். சொல் அல்லது வாக்காக அவளே கருதப்படுகிறாள். அவள் வெகு தொலைவுக்குச் செல்வபவளாகவும், எளியதில் அடையப்பட முடியாதவளுமாக இருக்கிறாள். அவள் மங்கலத்தன்மை மற்றும் செழிப்பின் உடல் வடிவம் ஆவாள். அவள், தலைமைத்தன்மை அல்லது பலம் முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொடுக்க வல்லவளாவாள். அவள் எப்போதும் தன் அருளை வழங்குகிக் கொண்டிருக்கிறாள். அவளே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களை வெளிக்காட்டுபவளும், அனைத்து உயிரினங்களின் உயர்ந்த புகலிடமும் ஆவாள். இம்மையில் அவளது பாதுகாப்பை நாடுபவர்கள், நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள்.(86) கங்கையின் புகழானது, ஆகாயம், சொர்க்கம், பூமி, திசைகள் மற்றும் துணைத்திசைகளின் புள்ளிகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. அந்த முதன்மையான ஓடையின் நீரைப் பயன்படுத்தவதுன் மூலம் மனிதர்கள் எப்போதும் உயர்ந்த வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறார்கள்.(87) கங்கையைக் கண்டு, அவளைப் பிறருக்குச் சுட்டிக் காட்டும் மனிதன், கங்கையானவள் தன்னை மறுபிறவியில் இருந்து மீட்பதையும், தனக்கு முக்தியை அருள்வதையும் காண்கிறான். கங்கையானவள், தேவர்களின் படைத்தலைவனான குஹனைத் தன் கருவறையில் சுமந்தாள். உலகங்களில் விலைமதிப்புமிக்கத் தங்கத்தையும் அவள் தன் கருவறையில் சுமக்கிறாள். ஒவ்வொரு நாளும் காலையில், அவளது நீரில் நீராடுபவர்கள், அறம் பொருள் இன்பமென்ற முத்தொகையையும் அடைவதில் வெல்கிறார்கள். மேலும் அந்த நீரானது, வேள்வி நெருப்பில் மந்திரங்களுடன் ஊற்றப்படும் நெய்யின் புனிதத்துக்கு இணையானதாக இருக்கிறது. பாவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்ல அவள், தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தவளாவாள், மேலும் அவளது ஓடையானது ஒவ்வொருவராலும் உயர்வாக மதிக்கப்படுகிறது.(88) கங்கையானவள், இமயத்தின் மகளும், ஹரனின் மனைவியும், சொர்க்கம் மற்றும் பூமி ஆகிய இரண்டின் ஆபரணமுமாவாள். அவள் மங்கலமான அனைத்தையும் வழங்குபவளும், தலைமைத்தன்மை அல்லது பலம் முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களை அளிக்கவல்லவளும் ஆவாள்.(89) உண்மையில், ஓ! ஏகாதிபதி, கங்கையானவள் அறத்தின் நீர் வடிவமாவாள். அவள் பூமியில் நீர் வடிவில் ஓடிக் கொண்டிருக்கும் சக்தியுமாவாள். அவள், வேள்வி நெருப்பில் மந்திரங்களுடன் ஊற்றப்படும் நெய்யுடைய காந்தியைக் கொண்டவள் ஆவாள். அவள் எப்போதும் பேரலைகளாலும், அவளது நீரில் தூய்மைச் சடங்குகளைச் செய்யும் பிராமணர்களாலும் எப்போதும் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். சொர்க்கத்தில் இருந்து பாய்ந்த அவளைச் சிவன் தன் தலையில் தாங்கினான். உண்மையில் சொர்க்கங்களின் தாயான அவள், சம வெளிகளில் பாய்ந்து, பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மதிப்புமிக்க நன்மைகளை வழங்குவதற்காகவும் உயர்ந்த மலையில் உதித்தாள்.(90)அவளே அனைத்துப் பொருட்களின் உயர்ந்த காரணமாகவும்; முற்றிலும் களங்கமற்றவளாகவும் இருக்கிறாள். அவள் பிரம்மத்தைப் போல நுட்பமானவளாக இருக்கிறாள். அவள் சிறந்த மரணப் படுக்கையை அளிக்கிறாள். அவள் உயிரினங்களை மிக விரைவில் சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறாள். பேரளவு நீருடன் அவள் பாய்கிறாள். அவள் அனைவருக்கும் பெரும்புகை அளிக்கிறாள். அவள் அனைத்து வடிவங்களுடனும் அடையாளம் காணப்படுகிறாள். வெற்றியால் மகுடம் சூட்டபட்ட மனிதர்களால் அவள் பெரிதும் விரும்பப்படுகிறாள். கங்கையில் நீராடியவர்களுக்கு அவளே சொர்க்கத்தின் பாதையாக இருக்கிறாள்.(91) கங்கையானவள் மன்னிக்கும் தன்மையில், பாதுகாப்பதில், தன்னால் வாழ்பவர்களை ஆதரிப்பதில் பூமாதேவிக்கு இணையானவள் என்றும், சக்தியிலும், காந்தியிலும் நெருப்புக்கும், சூரியனுக்கும் இணையானவள் என்றும், மறுபிறப்பாளர்களுக்குக் கருணை காட்டும் காரியத்தில் எப்போதும் குஹனுக்கு இணையானவள் என்றும் பிராமணர்கள் கருதுகிறார்கள்.(92) முனிவர்களால் புகழப்படுபவளும், விஷ்ணுவின் பாதத்தில் இருந்து உண்டாகுபவளும், மிகப் பழமையானவளும், மிகப் புனிதமானவளுமான அந்த ஓடையை இம்மையில் தங்கள் மொத்த ஆன்மாக்களுடன் மனத்தாலும் நாடும் மனிதர்கள், பிரம்மலோகம் செல்வதில் வெல்வார்கள்.(93) பிள்ளைகள், பிற உடைமைகள், அனைத்து வகை இன்ப நிலைகளையும் கொண்ட உலகங்கள் ஆகியவை நிலையற்றவை, அல்லது அழியத்தக்கவை என்று முழுமையாக நம்புபவர்களும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும், பிரம்மத்துடன் அடையாளம் காணப்படும் நிலையில் எப்போதும் நீடித்திருக்கும் நிலையை அடைய விரும்புபவர்களுமான மனிதர்கள், தாயிடம் மகன் கொள்ளும் அன்பையும், மதிப்பையும் கொண்டு கங்கைக்குத் தங்கள் துதிகளை எப்போதும் செலுத்துகின்றனர்.(94) வெற்றியை அடைய விரும்பும் தூய ஆன்மா கொண்ட மனிதன், சாதாரணப் பாலுக்குப் பதிலாக அமுதத்தைக் கொடுக்கும் பசுவைப் போன்றவளும், செழிப்பின் உடல் வடிவம் போன்றவளும், எங்கும் இருப்பவளும், உயிரினங்களின் மொத்த அண்டத்தில் இருப்பவளும், அனைத்து வகை உணவுகளின் ஊற்றுக்கண்ணாக இருப்பவளும், மலைகள் அனைத்தின் அன்னையும், அறவோர் அனைவரின் புகலிடமும், அளவிலா பலமும், சக்தியும் கொண்டவளும், பிரம்மனின் இதயத்திற்கு இன்பமளிப்பவளுமான கங்கையின் பாதுகாப்பை நாட வேண்டும்.(95)
பகீரதன் கடுந்தவங்களைச் செய்து, பரமத்தலைவனுடன் (விஷ்ணுவுடன்) கூடிய தேவர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்து, கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான். அவளிடம் செல்லும் மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் உள்ள அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவதில் வெல்கிறார்கள்.(96) கங்கை தரும் பலன்களில் சிறு பகுதியை மட்டுமே என் புத்தியின் துணையால் கண்டு நான் உமக்குச் சொல்லியிருக்கிறேன். எனினும், அந்தப் புனித ஆற்றின் தகுதிகள் அனைத்தையும், அல்லது உண்மையில் அவளது பலம் மற்றும் புனிதத்தன்மை அனைத்தையும் உரைக்க எனக்குச் சக்தி கிடையாது.(97) ஒருவனால் தன் சக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தி மேரு மலையில் உள்ள கற்களை எண்ணி விடவும், பெருங்கடலில் உள்ள நீரை அளந்துவிடவும் முடியலாம். ஆனால் கங்கை நீரின் பலன்கள் அனைத்தையும் அவன் எண்ணிவிட முடியாது.(98) எனவே, பெரும் அர்ப்பணிப்புடன் நான் சொன்ன கங்கையில் சில குறிப்பிட்ட பலன்களைக் கேட்ட ஒருவன், நம்பிக்கையுடனும், பக்தியுடனும், எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை அவற்றை மதிக்க வேண்டும்.(99) நான் சொன்ன பலன்களைக் கேட்டதன் விளைவால், நீர் மூவுலகங்களையும் உமது புகழால் நிறைத்து, எந்த மனிதனும் அடைவதற்கரியதும், அளவில் பெரியதுமான வெற்றியை நிச்சயம் அடைவீர். தன்னை மதிப்பவர்களுக்குக் கங்கையால் உண்டாக்கப்பட்ட இன்பமிக்கப் பல பகுதிகளை நீர் மிக விரைவில் அடைந்து, நிச்சயம் இன்பத்தில் திளைப்பீர்.(100) இதயப்பணிவுடன் தன்னிடம் அர்ப்பணிப்பு கொள்வோருக்குக் கங்கை எப்போதும் அருள்புரிவாள். தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோருக்கு அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அவள் அளிப்பாள். உயர்ந்த அருளைக் கொண்டவளான கங்கை, உமது இதயத்தையும் என் இதயத்தையும் அறம் நிறைந்த குணங்களில் ஈர்க்க வேண்டுகிறேன்” என்றார் {முனிவர்}”.(101)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மாவையும், பெருங்காந்தியையும் கொண்டவரும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், கல்விமானுமான அந்தத் தவசி, சீல நோன்பு நோற்கும் அந்த வறிய பிராமணரிடம் இவ்வகையில் கங்கையின் முடிவிலா பலன்களைக் குறித்துப் பேசி ஆகாயத்தில் உயர்ந்தார்.(102) சீல நோன்பை நோற்கும் அந்த வறிய பிராமணர், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசியின் சொற்களால் விழிப்படைந்து, கங்கையின் பாதுகாப்பை முறையாகப் பெற்று உயர்ந்த வெற்றியை அடைந்தார்.(103) ஓ! குந்தியின் மகனே, நீயும் பேரர்ப்பணிப்புடன் கங்கையை நாடி, அதன் மூலம் வெகுமதியையும், உயர்ந்த சிறப்பான வெற்றியையும் அடைவாயாக” {என்றார் பீஷ்மர்}.(104)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கங்கையின் புகழ் நிறைந்த இவ்வுரையைப் பீஷ்மரிடம் இருந்து கேட்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுடன் சேர்ந்து பெருமகிழ்ச்சியடைந்தான்.(105) கங்கையின் புகழ் நிறைந்த இந்தப் புனித உரையைச் சொல்லும், அல்லது கேட்கும் எந்த மனிதனும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்” {என்றார் வைசம்பாயனர்}.(106)
பிராமண நிலை! – அநுசாஸனபர்வம் பகுதி – 27- பிராமண நிலை அடைதற்கரியது என்பதைச் சொல்ல மதங்கனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்} யுதிஷ்திரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சாத்திரங்களில் ஞானமும், அறிவும் கொண்டராக, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக் கொண்டவராக, பல்வேறு வகையான சிறந்த குணங்களைக் கொண்டவராக, வயதில் முதியவராக நீர் இருக்கிறீர்.(1) புத்தி, ஞானம், தவங்களில் பிறருக்கு மேம்பட்டவராகப் புகழப்படுகிறீர். எனவே, ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, அறம் தொடர்பாக நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்.(2) ஓ! மன்னா, இத்தகைய காரியங்களில் கேள்வி கேட்கத்தகுந்த வேறொரு மனிதன் உலகங்கள் அனைத்திலும் கிடையாது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ உள்ள ஒருவன், பிராமண நிலையை அடைவதில் வெல்வதெவ்வாறு? அதற்கான வழிமுறைகளைச் சொல்வதே உமக்குத் தகும். தாழ்ந்த மூன்று வகைகளில் எதையும் சார்ந்த ஒரு மனிதன், பிராமண நிலையை அடவதில் வெல்வது மிகக் கடுமையான தவங்களாலா? அறச்செயல்களா? சாத்திரங்களில் உள்ள ஞானத்தாலா? ஓ! பாட்டா இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, மூன்றில் எந்த வகையைச் சார்ந்த எந்த மனிதரும் பிராமணநிலையை அடைய இயலாதவராவர். உயிரினங்கள் அனைத்திலும் உயர்ந்த நிலை அது.(5) மறுபிறவிகளுக்கு உட்பட்டு மீண்டும் மீண்டும் எண்ணற்ற வகை இருப்புகளில் பயணிப்பதன் மூலமே ஒருவன் இறுதியாக ஏதாவதொரு பிறவியில் பிராமணனாகப் பிறக்கிறான்.(6) ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக மதங்கருக்கும், ஒரு பெண் கழுதைக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல் ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(7) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் ஒரு மகனை அடைந்தான். அவன் வேறு வகை மனிதரால் உண்டாக்கப்பட்டவனாக இருந்தாலும்,[1] அவனது குழந்தைப்பருவ, இளமைப்பருவ சடங்குகள் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்பவே செய்யப்பட்டன. மதங்கன் என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை, அனைத்து சிறப்புகளையும் கொண்டவனாக இருந்தான்.(8) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவனது தந்தை, அச்செயலுக்குத் தேவைப்படும் பொருட்களைத் திரட்டி வருமாறு அவனைப் பணித்தார். தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, காரியத்தை நிறைவேற்றப் புறப்பட்ட அவன், ஒரு கழுதையால் இழுக்கப்பட்ட தேரை மிக வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.(9) அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த கழுதையானது வயதில் இளையதாக இருந்தது. எனவே, அந்த விலங்கு கடிவாளத்திற்குக் கட்டுப்படாமல், தன்னை ஈன்ற தாயான பெண்கழுதையின் அருகில் தேரைக் கொண்டு சென்றது. இதனால் பொறுப்பு நிறைவேற்படாத மந்தங்கன் சாட்டையினால் அந்த விலங்கின் மூக்கில் மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான்.(10)தன் பிள்ளையின் மூக்கில் உள்ள வன்முறைக் குறியீடுகளைக் கண்ட அந்தப் பெண் கழுதை அதனிடம் அன்பால் நிறைந்து, “ஓ! குழந்தாய், இவ்வாறு நடத்தப்படுவதற்காக வருந்தாதே. உன்னைச் செலுத்திச் செல்பவன் ஒரு சண்டாளனாவான்.(11) ஒரு பிராமணனிடம் கடுமையேதும் இருக்காது. ஒரு பிராமணன் அனைத்து உயிரினங்களின் நண்பன் எனச் சொல்லப்படுகிறான்.[2] அவனே அனைத்து உயிரினங்களுக்கும் ஆசானாகவும், அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறான். {அப்படிப்பட்ட} அவனால் எந்த உயிரினத்தையும் கொடுமைப்படுத்த இயலுமா?(12) எனினும் இவன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன். உன்னைப் போன்ற இளம் வயதுடைய உயிரினத்திடமும் அவன் கருணை காட்டவில்லை. இவ்வழியில் நடப்பதால் அவன் தன் பிறப்பின் வகையையே உறுதி செய்து கொண்டிருக்கிறான். தன் தந்தையிடம் இருந்து இவன் அடைந்திருக்கும் இயல்பானது, பிராமண இயல்பான கருணை, அன்பு ஆகியவை எழுவதைத் தடுக்கிறது” என்றது.(13)பெண் கழுதையின் இந்தக் கடுஞ்சொற்களைக் கேட்ட மதங்கன், தன் தேரில் இருந்து விரைவாகக் கீழே இறங்கி, அந்தப் பெண் கழுதையிடம், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, என் தாய் எக்குற்றத்தால் களங்கமடைந்தாள்?(14) நான் ஒரு சண்டாளன் என்பதை நீ எவ்வாறு அறிவாய்? தாமதிக்காமல் எனக்குப் பதிலளிப்பாயாக.(15) என் பிராமண நிலை எவ்வாறு தொலைந்தது. ஓ! பெரும் ஞானியே, தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(16)
அதற்கு அந்தப் பெண் கழுதை {மதங்கனிடம்}, “சவரத்தொழில் செய்யும் ஒரு சூத்திரன் மூலம் ஆசையால் தூண்டப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். எனவே, பிறப்பால் நீ ஒரு சண்டாளனாவாய். உனக்குப் பிராமண நிலை எப்போதும் கிடையாது” என்றது”[3].(17)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெண் கழுதையால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் தான் வந்த சுவடுகளின் வழியே மீண்டும் தன் இல்லம் நோக்கி சென்றான். அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது தந்தை,(18) “நான் செய்ய நினைத்த வேள்விக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் கடினமான பணியில் நான் உன்னை ஈடுபடுத்தினேன். உன் பொறுப்பை நிறைவேற்றாமல் நீ ஏன் திரும்பி வந்தாய்? உனக்கு ஏதும் {உடல்நலம்} சரியில்லையா?” என்று கேட்டார்.(19)
மதங்கன், “எவ்வித உறுதியுமற்ற வகையில், அல்லது மிகத் தாழ்ந்த வகையில் பிறந்த ஒருவன், சரியாக இருப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எவ்வாறு கருதமுடியும்? ஓ! தந்தையே, களங்கமுள்ள தாயைக் கொண்ட ஒருவனால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்?(20) ஓ! தந்தையே, மனிதர்களைவிட மேலானதாகத் தெரியும் இந்தப் பெண் கழுதை, நான் ஒரு சூத்திரனால் ஒரு பிராமணிப் பெண்ணிடம் பெறப்பட்டவன் என்று சொல்கிறது. இக்காரணத்தினால் நான் கடுந்தவங்களைச் செய்யப் போகிறேன்” என்றான்.(21)
அவன், தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தான் சொன்னதை உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பெருங்காட்டிற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(22) மகிழ்ச்சியாகப் பிராமண நிலையை அடையும் நோக்கத்திற்காகத் தவங்களைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்ட மதங்கன், தன் தவத்தின் கடுமையால் தேவர்களை எரிக்கத் தொடங்கினான்.(23)
இவ்வாறு தவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவனிடம் தேவர்களின் தலைவனான இந்திரன் தோன்றி, “ஓ! மதங்கா, அனைத்து வகை மனித இன்பங்களையும் தவிர்த்து இத்தகைய துன்பத்தில் நீ ஏன் உன் காலத்தைக் கழிக்கிறாய்?(24) நான் உனக்கு வரமளிக்கப் போகிறேன். நீ விரும்பும் வரங்களைச் சொல்வாயாக. தாமதிக்காமல் உன் நெஞ்சில் இருப்பதைச் சொல்வாயாக. அடைவதற்கரிதாக இருந்தாலும் நான் அஃதை உனக்களிப்பேன்” என்றான்.(25)
மதங்கன், “பிராமண நிலையை அடைய விரும்பியே நான் இந்தத் தவங்களைச் செய்யத் தொடங்கினேன். அஃதை அடைந்ததும் நான் இல்லந்திரும்புவேன். இதுவே என்னால் வேண்டப்படும் வரமாகும்” என்றான்”.(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன், அவனிடம், “ஓ! மதங்கா, நீ அடைய விரும்பும் பிராமண நிலையானது உண்மையில் உன்னால் அடையப்பட முடியாத நிலையாகும்.(27) நீ அஃதை அடைய விரும்புகிறாய் என்பது உண்மையே என்றாலும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அஃது அடையப்பட இயலாது. ஓ! மூடப்புத்தி கொண்டவனே, நீ இந்நாட்டத்தில் பிடிவாதமாயிருந்தால் நிச்சயம் அழிவையே அடைவாய். எனவே தாமதிக்காமல் இந்த வீண்முயற்சியில் இருந்து விலகுவாயாக.(28) அனைத்திலும் முதன்மையான பிராமண நிலையை அடைய விரும்பும் இந்த உனது நோக்கமானது, தவங்களால் வெல்லப்பட இயலாததாகும். எனவே, அந்த முதன்மையான நிலையை அடைய ஆசைப்படுவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடைவாய்.(29) சண்டாளனாகப் பிறந்த ஒருவனால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் மிகப் புனிதமாகக் கருதப்படும் அந்நிலையை {பிராமண நிலையை} ஒருபோதும் அடைய முடியாது” என்றான் {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}”.(30)
மதங்கனின் தவம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 28-பிராமண நிலை அடைவதற்குக் கடுந்தவம் இருந்த மதங்கன்; அவனைத் தடுத்த இந்திரனென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மங்கா மகிமை கொண்டோனே, இந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கட்டுப்பாடுடைய நோன்புகள் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்மாவுடன் கூடிய மதங்கன், (தேவர்களின் தலைவனுடைய ஆலோசனைகளைக் கவனித்துக் கேட்காமல்), நூறு வருட காலம் ஒற்றைக் காலில் நின்றான்.(1)
பெரும்புகழைக் கொண்ட சக்ரன் மீண்டும் அவன் முன்பு தோன்றி, அவனிடம், “ஓ! குழந்தாய், பிராமண நிலை அடையத்தக்கதன்று. நீ அதில் நாட்டங்கொண்டாலும், அதை அடைவது உனக்குச் சாத்தியமில்லை.(2) ஓ! மதங்கா, அந்த உயர்ந்த நிலையில் ஆசை கொள்வதன் மூலம் நீ நிச்சயம் அழிவடையப் போகிறாய். ஓ! மகனே, இத்தகைய மூர்க்கத்தை வெளிப்படுத்தாதே. இஃது உன்னால் பின்பற்றத்தக்க அறப்பாதையல்ல.(3) ஓ! மூடப்புத்தி கொண்டோனே, இவ்வுலகில் நீ அதை அடைவது சாத்தியமில்லை. உண்மையில், அடையப்பட முடியாததில்ஆசை கொண்டுள்ள நீ எப்போதும் அழிவை அடையலாம்.(4) நான் மீண்டும் மீண்டும் உன்னைத் தடுத்து வருகிறேன். எனினும், தொடர்ந்து என் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் உன் தவங்களின் துணையுடன் உயர்ந்த நிலையை அடைய முனைவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடையப் போகிறாய்.(5)
விலங்கு வாழ்வில் இருந்து ஒருவன் மனித நிலையை அடைகிறான். மனிதனாகப் பிறக்கும்போது, நிச்சயம் அவன் புல்காஸ, அல்லது சண்டாள வகையிலேயே பிறப்பான்.(6) ஓ! மதங்கா, உண்மையில் ஒருவன் புல்காஸம் எனும் பாவம் நிறைந்த இருப்பு வகையில் {புல்காஸனாகப்}[1] பிறந்து நீண்ட காலம் திரிய வேண்டும்.(7) ஓராயிரம் {1000} வருடகாலம் அவ்வகையில் {சண்டாளனாகக்} கடத்திய ஒருவன் அடுத்ததாகச் சூத்திர நிலையை அடைவான்.(8) அதன் பிறகு அந்தச் சூத்திர வகையிலேயே அவன் நீண்ட காலம் திரிய வேண்டும். முப்பதாயிரம் {30,000} ஆண்டுகளுக்குப் பிறகு அவன் வைசிய நிலையை அடைவான். அந்த வகையிலும் அவன் நெருங்காலத்தைக் கடத்த வேண்டும்.(9) சூத்திர இருப்புக்குக் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில் அறுபது மடங்கு காலம் {18 லட்சம் வருடங்கள் (30,000 X 60 =18,00,000)} இருந்த பிறகு அவன் அரச {க்ஷத்திரிய} வகையை அடைவான். க்ஷத்திரிய வகையிலும் அவன் நீண்ட காலத்தைக் கடத்த வேண்டும்.(10)இறுதியாகக் குறிப்பிட்ட காலத்தில் அறுபது {60} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் வீழ்ந்த பிராமணனாகப் பிறக்கிறான்.
{அதாவது 18,00,000X60 =10,80,00,000 பத்து கோடியே எண்பது லட்சம் வருடங்களுக்குப் பிறகு அவன் சத்திரிய வகையிலிருந்து, வீழ்ந்த பிராமணனாகப் பிறக்கிறான்}
இவ்வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(11) இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் இருநூறு {200} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் ஆயுதந்தரித்து வாழும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.
{அதாவது 10,80,00,000X200 =2,160,00,00,000 இரண்டாயிரத்து நூற்று அறுபது கோடி வருடங்களுக்குப் பிறகு அவன் ஆயுதந்தரித்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.}
அந்த வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(12) இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் முன்னூறு {300) மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் காயத்ரி மற்றும் பிற மந்திரங்களை உரைக்கும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.(13)
{அதாவது 2,160,00,00,000X300 =6,48,000,00,00,000 ஆறு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி வருடங்களுக்குப் பிறகு அவன் மந்திரங்களை உரைக்கும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.}
அந்த வகையிலேயே அவன் நீண்ட காலம் திரிய வேண்டும். இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் நானூறு {400} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான். அந்த வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(14)
{அதாவது 6,48,000,00,00,000X400 =259200000,00,00,000 வருட காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்}
அந்த இருப்புநிலையில் அவன் திரிந்து கொண்டிருக்கும்போது இன்பதுன்பம், விருப்புவெறுப்பு, போலியான மற்றும் தீய பேச்சு ஆகியவை அவனுக்குள் நுழைந்து அவனை இழிந்தவனாக்க முனையும்.(15) அந்த எதிரிகளை அடக்குவதில் வென்றால், அவன் உயர்ந்த கதியை அடைகிறான். மறுபுறம், அவனை அடக்குவதில் அந்த எதிரிகள் வென்றால், பனைமர உச்சியில் இருந்து தரையில் விழும் மனிதனைப் போல அவன் உயர்ந்த நிலையில் இருந்து கீழே வீழ்கிறான்.(16) ஓ! மதங்கா, நான் உனக்குச் சொல்வதை உறுதியாகத் தெரிந்து கொண்டு, வேறேதேனும் வரத்தைக் கேட்பாயாக. (நீ ஒரு சண்டாளனாகப் பிறந்திருப்பதால்) பிராமண நிலையானது உன்னால் அடையப்பட முடியாததாகும்” {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}.(17)
மதங்கன் பெற்ற வரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 29-பிராமண நிலை அடைய தவம் செய்த மதங்கன்; இந்திரனால் தடுக்கப்பட்டது; மீண்டும் தவம் செய்தது; பிராமண நிலையன்றி வேறு வரங்களைக் கேட்டுப் பெற்ற மதங்கன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட மதங்கன், அவன் சொன்னதைக் கேட்க மறுத்தான். மறுபுறம், ஒழுங்கமைக்கப்பட்ட நோன்புகள் மற்றும் தூய ஆன்மாவுடன் கூடிய அவன், ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக்காலில் நின்று கொண்டு, தன் ஆன்மாவை ஆழமான தியான யோகத்தில் ஈடுபடுத்தி, கடுந்தவங்களைப் பயின்று வந்தான்.(1) ஓராயிரம் வருடங்கள் கடந்ததும், மீண்டும் அவனைக் காண சக்ரன் அங்கே வந்தான். உண்மையில், பலனையும், விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்} அதே சொற்களையே மீண்டும் அவனிடம் சொன்னான்.(2)
மதங்கன் {இந்திரனிடம்}, “நான் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, தியானத்தில் குவிந்த ஆன்மாவுடன் ஒற்றைக் காலில் நின்று ஓராயிரம் ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன். பிராமண நிலையை அடைவதில் நான் இன்னும் ஏன் வெல்லாமல் இருக்கிறேன்?” என்று கேட்டான்.(3)
சக்ரன், “சண்டாளனாகப் பிறந்தவனால் எந்த வழிமுறைகளின் மூலமும் பிராமண நிலையை அடைய முடியாது. எனவே, நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. உன் கடும் உழைப்புக் கனியற்றதாகிவிடக்கூடாது” என்று சொன்னான்.(4)
தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் துயரால் நிறைந்தான். அவன் கயைக்குச் சென்று ஒற்றைக் காலில் நின்றபடியே நூறாண்டு காலத்தைக் கழித்தான்.(5) பொறுத்துக் கொள்ள மிகக் கடினமான அத்தகைய யோகத்தை நோற்றதன் விளைவால் தன் நாடி நரம்புகள் புடைத்து, கண்ணுக்குத் தெரியும் வகையில் மிகவும் மெலிந்து போனான். வெறும் தோலும் எலும்புகளும் கொண்டவனாக அவன் குறைந்து போனான். உண்மையில், அந்த அற ஆன்மா கொண்ட மனிதன் {மதங்கன்}, கயையில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த போது, மிகவும் சோர்வடைந்து கீழே தரையில் விழுந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். வரங்களை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை அளிப்பதில் ஈடுபடும் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, அவன் விழுவதைக் கண்டு, விரைவாக அந்த இடத்திற்கு வந்து உடனே அவனைத் தாங்கிக் கொண்டான்[1].(7)சக்ரன், “ஓ! மதங்கா, நீ நாடும் பிராமண நிலை உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை. அந்நிலை உன்னால் அடையப்பட முடியாததாக இருக்கிறது. உண்மையில் உன் வழக்கில் அது பல ஆபத்துகள் சூழப்பட்டதாக இருக்கிறது.(8) ஒரு மனிதன் ஒரு பிராமணரை வழிபடுவதால் மகிழ்ச்சியை அடைகிறான்; அவ்வாறு வழிபடுவதைத் தவிர்க்கும்போது அவன் துயரத்தையும் இடர்களையும் அடைகிறான். அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை வெகுமதியாகக் கருதுவதை, அல்லது ஆசைப்படுவதைக் கொடுப்பவனாகவும், அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ளதைக் காப்பவனாகவும் பிராமணன் இருக்கிறான்.(9) பிராமணர்கள் மூலமே பித்ருக்களும், தேவர்களும் நிறைவை அடைகின்றனர். ஓ! மதங்கா, படைக்கப்பட்டவற்றுள் முதன்மையானவனாகப் பிராமணன் சொல்லப்படுகிறான். ஆசைப்படும் பொருட்கள் யாவையும், ஆசைப்படப்பட்ட அதே வகையிலேயே பிராமணன் அருள்கிறான்[2].(10) எண்ணற்ற வகையில் இருக்கும் படைப்புகளில் திரிந்து, மீண்டும் மீண்டும் மறுபிறவிகளில் சுழலும் ஒருவன், அடுத்தடுத்த பிறவிகளிலேயே பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான்.(11) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் உண்மையில் அந்நிலையை அடைய முடியாது. நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. நீ வேண்டிக் கேட்கும் இந்தக் குறிப்பிட்ட வரமானது, உனக்குக் கொடுக்கப்பட இயலாததாக இருக்கிறது” என்றான் {இந்திரன்}.(12)
மதங்கன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் என்னை, (இத்தகைய சொற்களால்) நீ மேலும் துன்புறுத்துகிறாயா? இந்நடத்தையால், ஏற்கனவே இறந்துவிட்டவனை நீ அடித்துக் கொண்டிருக்கிறாய். பிராமண நிலையை அடைந்தும் அதைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறிய (என்னைப் போன்ற ஒருவனுக்குக் கருணைக் காட்டாமல் இருக்கும்) உனக்காக நான் பரிதாபப்படுகிறேன்[3].(13) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, மூன்று வகையினர் எவராலும் பிராமண நிலையை உண்மையில் அடைய முடியாது என்றால், ஐயோ, அந்த உயர்ந்த நிலையை (இயற்கையான வழிமுறைகளின் மூலம்) அடைவதில் வென்றவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லையே (பிராமணர்கள் எந்தப் பாவத்தைச் செய்யவில்லை)?(14) அடைதற்கரிதான செல்வத்தைப் போன்ற பிராமண நிலையை அடைந்தும், (தேவையான கடமைகளைச் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள முனையாதவர்கள் இம்மையில் இழிந்த ஈனர்களாகக் கருதப்பட வேண்டும்.(15) பிராமண நிலையை அடைவது மிகக்கடினமானது, அடைந்த பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்வதும் கடுமையானது என்பதில் ஐயமில்லை. அஃது அனைத்து வகைத் துன்பத்தையும் போக்கவல்லதாகும். ஐயோ, மனிதர்கள் அஃதை அடைந்தும் (அதற்குண்டான அறத்தையும் பிற கடமைகளையும் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள எப்போதும் முனைவதில்லையே.(16)அத்தகைய மனிதர்களும் பிராமணர்களாகக் கருதப்படும்போது, தன்னில் நிறைவடைந்தவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்திற்கும் மேம்பட்டவனும், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்தவனும், அனைத்து உயிரினிங்களிடமும் கருணை என்ற கடமையை நோற்பவனும், தற்கட்டுப்பாடு எனும் ஒழுக்கத்துடன் கூடியவனுமான நான் ஏன் அந்த நிலைக்குத் தகுந்தவனாகக் கருதப்படவில்லை?(17) ஓ! புரந்தரா, நான் நடத்தையில் ஒழுக்கம் கொண்டவனாக இருப்பினும், என் தாயின் குற்றத்தால் இந்த நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேனே, எவ்வளவு கெடுபேறு கொண்டவன் நான்?(18) ஓ! தலைவா, அடைய வேண்டிய நோக்கம் என இதயத்தில் நிலைநிறுத்தி, தொடர்ந்து இவ்வளவு முயற்சிகளைச் செய்த போதிலும் என்னால் அஃதை அடையமுடியவில்லை என்றால், விதியைத் தவிர்க்க முடியாது, அல்லது தனிப்பட்ட முயற்சிகளால் வெல்ல முடியாது என்பதில் ஐயமில்லை.(19) ஓ! அறவோனே, நிலை இவ்வாறிருக்கையில், உண்மையில் நான் உன் அருளுக்குத் தகுந்தவன் என்றால், அல்லது சிறு தகுதியையேனும் கொண்டிருந்தால் வேறு வரங்களை அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {மதங்கன்}”.(20)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பலனையும், விருத்திரனையும் கொன்றவன் {இந்திரன்}, அவனிடம் {மதங்கனிடம்}, “வேண்டும் வரத்தைச் சொல்வாயாக” என்றான். இவ்வாறு பெரும் இந்திரனால் தூண்டப்பட்ட மதங்கன் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(21)
மதங்கன், “விரும்பிய வடிவை ஏற்கும் சக்தியுடன், வானத்தின் ஊடாகப் பயணிக்கவும், என் இதயத்தில் நான் நிலைநிறுத்தும் எந்த இன்பத்தை அனுபவிக்கவும் கூடிய வல்லமை எனக்கு வேண்டும். பிராமணர்கள், மற்றும் க்ஷத்திரியர்களின் விருப்பத்துடன் கூடிய துதிகள் எனக்கு வேண்டும்.(22) ஓ! தேவா, நான் உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! புரந்தரா, இவ்வுலகில் என் புகழை எப்போதும் வாழச் செய்யவும் வேண்டும்” என்றான்.(23)
சக்ரன் {மதங்கனிடம்}, “ஒரு குறிப்பிட்ட மந்திரத்தின் தேவனாக {சந்தோதேவனாகக்} கொண்டாடப்பட்டு, அனைத்துப் பெண்களாலும் நீ வழிபடப்படுவாய். ஓ! மகனே, உன் புகழ் மூவுலகங்களிலும் ஒப்பற்றதாக இருக்கும்” என்றான்[4].(24) அவனுக்கு இவ்வரங்களை அளித்த வாசவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். மதங்கனும் தன் உயிர் மூச்சைக் கைவிட்டு உயர்ந்த இடத்தை அடைந்தான்.(25) ஓ! பாரதா, பிராமண நிலை எவ்வளவு உயர்ந்தது என்பதை நீ இவ்வாறு காணலாம். பெரும் இந்திரனால் சொல்லப்பட்டதைப் போல அந்த நிலையானது (இயற்கையான பிறப்பு வழியாலன்றி) இம்மையில் அடையக்கூடியதல்ல” என்றார் {பீஷ்மர்}[5].(26)
பிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 30-வத்ஸ நாட்டு மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலை அடைந்த வரலாறு; வத்ஸ நாட்டு வீதஹவ்யனின் முன்னோர்கள்; காசி நாட்டு பிரதர்த்தனனின் முன்னோர்கள்; இரு நாட்டுக்கும் இருந்த பகை; வத்ஸர்களால் பீடிக்கப்பட்ட காசி; வீதஹவ்யனை வீழ்த்திய பிரதர்த்தனன்; பிருகுவிடம் தஞ்சமடைந்த வீதஹவ்யன்; அவனைத் தேடி வந்த பிரதர்த்தனன்; வீதஹவ்யன் பிராமணனான பிறகு அவனுக்கு உண்டான வழித்தோன்றல்களின் பட்டியல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, இந்தக் கதையை நான் கேட்டிருக்கிறேன். ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, பிராமண நிலையானது அடைவதற்கு மிக அரிதானது என்று நீர் சொல்கிறீர்.(1) எனினும், பழங்காலத்தில் விஷ்வாமித்திரரால் பிராமண நிலை அடையப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். எனினும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, அந்நிலை அடையப்பட இயலாதது என எங்களுக்கு நீர் சொல்கிறீர்.(2) பழங்காலத்தில் மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலையை அடைவதில் வென்றான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! பலமிக்கவரே, ஓ! கங்கையின் மைந்தரே, மன்னன் வீதஹவ்யன் மேன்மையடைந்த கதையை நான் கேட்க விரும்புகிறேன்.(3) அந்த மன்னர்களில் சிறந்தவன், பிராமண நிலை அடைவதில் எந்தச் செயல்களின் மூலம் வென்றான்? (பெரும்பலம் கொண்ட எவரிடம் இருந்தாவது அடையப்பட்ட) ஏதாவது வரத்தின் மூலமோ, தவ அறத்தின் மூலமோ அது நடந்ததா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, பெரும் புகழைக் கொண்ட அரசமுனி வீதஹவ்யன், அடைதற்கரிதானதும், உலகில் உள்ள அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுவதுமான பிராமண நிலையை அடைவதில் பழங்காலத்தில் வென்றான்.(5) பழங்காலத்தில் உயர் ஆன்ம மனு தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுக் கொண்டிருந்த போது, அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனும், சர்யாதி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒரு மகனை அடைந்தார்.(6) ஓ! ஏகாதிபதி அந்தச் சர்யாதியின் குலத்தில் ஹைஹயன் மற்றும் தாலஜங்கன் என்ற இரு மன்னர்கள் பிறந்தனர். ஓ! வெற்றிமிக்க மன்னர்களில் முதன்மையானவனே, அந்த இருவரும் வத்ஸ மகன்களாக {வத்ஸ நாட்டைச் சார்ந்தவர்களாக} இருந்தனர்[1]. ஓ! ஏகாதிபதி ஹைஹயனுக்குப் பத்து மனைவியர் இருந்தனர். ஓ! பாரதா, அவன் புறமுதுகிடாத வீரர்களான நூறு மகன்களை அவர்களிடம் {தன் மனைவிகளிடம்} பெற்றான்.(8) அவர்கள் அனைவரும் குணத்திலும் ஆற்றலிலும் ஒத்தவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பெரும்பலம் கொண்டவர்களாகவும், போரில் பெருந்திறம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் முற்றாகக் கற்றனர்.(9)ஓ! ஏகாதிபதி, காசியில் திவோதாசனின் பாட்டனான ஒரு மன்னன் இருந்தான். வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் ஹர்யஸ்வன் என்ற பெயரால் அறியப்பட்டான்[2]. ஓ! மனிதர்களின் தலைவா (வீதஹவ்யன் என்ற வேறு பெயரிலும் அறியப்பட்டிருந்த) மன்னன் ஹைஹயன், காசி நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து, கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கிடையில் கிடக்கும் அந்நாட்டிற்குச் சென்று மன்னன் ஹர்யஸ்வனுடன் போரிட்டு அவனைக் கொன்றான்.(11) இவ்வழியில் மன்னன் ஹர்யஸ்வனைக் கொன்ற பிறகு, பெரும் தேர்வீரர்களான ஹைஹயனின் மகன்கள் வத்சர்களின் நாட்டில் உள்ள இனிமையான தங்கள் நகரத்திற்கு அச்சமில்லாமல் திரும்பிச் சென்றனர்.(12) அதே வேளையில், காந்தியில் தேவனைப் போலத் தெரிபவனும், இரண்டாம் நீதிதேவன் போல இருந்தவனும், ஹர்யஸ்வதனின் மகனுமான சுதேவன், காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(13) காசிக்கு மகிழ்ச்சியை அளிப்பவனான அந்த அற ஆன்மா கொண்ட இளவரசன் தன் நாட்டைச் சில காலம் ஆண்டு வந்தான். அப்போது வீதஹவ்யனின் நூறு மகன்களும் மீண்டும் அவனது ஆட்சிப்பகுதிக்குள் படையெடுத்து வந்து, போரில் அவனை வீழ்த்தினார்கள்.(14)இவ்வாறு மன்னன் சுதேவனை வென்ற வெற்றியாளர்கள் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர். அதன் பிறகு, சுதேவனின் மகனான திவோதாசன் காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(15) வீதஹவ்யனின் மகன்களான அந்த உயர் ஆன்ம இளவரசர்களின் ஆற்றலை உணர்ந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான திவோதாசன், இந்திரனின் ஆணையின் பேரில் வாராணசி நகரத்தை மீண்டும் கட்டுமானம் செய்து அரணமைத்தான்[3].(16) திவோதாசனுடைய நாட்டின் எல்லைகளில் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் நிறைந்திருந்தனர். அனைத்து வகைப் பொருட்களும், தனிவகைப் பொருட்களும் அங்கு நிறைந்திருந்தன. செழிப்பில் பெருகும் கடைகள் மற்றும் கடைவீதிகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அந்த எல்லைகள் கங்கைக்கரையின் வடக்குப்புறத்தில் இருந்து கோமதியாற்றின் தென்கரை வரை பரந்திருந்தது. அது {அந்த வாராணஸி நகரமானது} (இந்திரனின் நகரமான அமராவதியைப் போல) இரண்டாம் அமராவதிக்கு {இரண்டாம் அமராவதி என்று சொல்வதற்கு} ஒப்பாக இருந்தது.(17,18) ஓ! பாரதா, அந்த மன்னர்களில் புலி {திவோதாசன்} தன் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் ஹைஹயர்கள் தாக்கினார்கள்.(19) வலிமைமிக்க மன்னனான திவோதாசன், தன் தலைநகரைவிட்டு வெளியே வந்து அவர்களுடன் போரிட்டான். பழங்காலத்தின் தேவாசுரப் போரைப் போல இரு தரப்புகளுக்குமிடையே நடந்த அந்தப் போர் மிகக் கடுமையானதாக இருந்தது.(20)எதிரியுடன் ஆயிரம் நாட்கள் போரிட்ட மன்னன் திவோதாசன், இறுதியில் பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களும், விலங்குகளும் கொல்லப்பட்ட பிறகு மிகவும் துன்பமடைந்தான்(21) ஓ! ஏகாதிபதி, தன் படையை இழந்த மன்னன் திவோதாசன், தன் கருவூலம் தீர்ந்துவிட்டதைக் கண்டு தன் தலைநகரைவிட்டுத் தப்பிச் சென்றான்.(22) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அந்த மன்னன், பெரும் ஞானியான பரத்வாஜரின் இனிய ஆசிரமத்திற்குச் சென்று, தன் கரங்களை மதிப்புடன் கூப்பிக் கொண்டு அம்முனிவரின் பாதுகாப்பை நாடினான்.(23)
பிருஹஸ்பதியின் மூத்த மகனும், ஒழுக்கச் சிறப்பைக் கொண்டவரும், மன்னன் திவோதாசனின் புரோகிதருமான பரத்வாஜர், தம் முன் இருக்கும் அந்த ஏகாதிபதியைக் கண்டு, அவனிடம்,(24) “நீ இங்கு வந்திருக்கும் காரணம் என்ன? ஓ! மன்னா, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. எந்தத் தயக்கமுமின்றி உனக்கு ஏற்புடையதை நான் செய்வேன்” என்றார்.(25)
மன்னன் {திவோதாசன்}, “ஓ! புனிதமானவரே, வீதஹவ்யனின் மகன்கள் என் வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். எதிரியால் முற்றிலும் உருக்குலைக்கப்பட்ட நான் மட்டுமே உயிரோடு தப்பி வந்தேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(26) ஓ! புனிதமானவரே, ஒரு சீடனைக் காப்பதைப் போல என்னைப் பாதுகாப்பதே உமக்குத் தகும். பாவச் செயல்களைச் செய்யும் அந்த இளவரசர்கள், என்னை மட்டுமே உயிருடன் விட்டுவிட்டு, என் குலம் மொத்தத்தையும் கொன்றுவிட்டனர்” என்றான்”.(27)
பீஷ்மர் தொடர்ந்தார், “பெருஞ்சக்தியைக் கொண்ட பரத்வாஜர், தம்மிடம் பரிதாபகரமாக இரைஞ்சிக் கொண்டிருந்த அவனிடம் {திவோதாசனிடம்}, “அஞ்சாதே, ஓ! சுதேவன் மகனே, உன் அச்சங்கள் அகலட்டும். நீ ஆஞ்சாதே.(28) ஓ! ஏகாதிபதி, வீதஹவ்யன் தரப்பினரை ஆயிரமாயிரமாகத் தாக்கவல்ல ஒரு மகனை நீ பெறும் வகையில் நான் ஒரு வேள்வியைச் செய்யப் போகிறேன்” என்றார்.(29)
அதன்பிறகு திவோதாசனுக்கு ஒரு மகனைப் பெறும் நோக்கத்தில் அம்முனிவரால் ஒரு வேள்வி நடத்தப்பட்டது. அதன் விளைவாகத் திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான்[4].(30) அவன் பிறந்த உடனேயே பதிமூன்று வயது பாலகனாக வளர்ந்து, வேதங்களிலும், மொத்த ஆயுத அறிவியலிலும் விரைவாகத் திறம்பெற்றான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரத்வாஜர் தமது யோக சக்திகளின் துணையுடன் அந்த இளவரசனுக்குள் {பிரதர்த்தனனுக்குள்} நுழைந்தார். உண்மையில் பரத்வாஜர், அண்டத்தில் உள்ள பொருட்களின் சக்திகள் அனைத்தையும் திரட்டி அவற்றை, இளவரசன் பிரதர்த்தனனின் உடலுக்குள் நுழையச் செய்தார்.(32) ஒளிரும் கவசத்தைத் தன் மேனியில் பூட்டிக் கொண்டும், வில்லைத் தரித்துக் கொண்டும், வந்திகள் மற்றும் தெய்வீக முனிவர்களால் புகழப்பட்டும், உதிக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான் பிரதர்த்தனன்.(33) கச்சையில் வாளைக் கட்டிக் கொண்டு தன் தேரில் ஏறிய அவன், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான். வாள் மற்றும் கேடயத்துடனும், தன் கேடயத்தைச் சுழற்றிக் கொண்டும் அவன் தன் தந்தையிடம் {திவோதாசனிடம்} சென்றான்.(34) சுதேவனின் மகனான மன்னன் திவோதாசன், இளவரசனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தான். உண்மையில் அந்த முதிர்ந்த மன்னன், தன் எதிரியான வீதஹவ்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாக நினைத்தான்.(34)திவோதாசன் தன் மகன் பிரதர்த்தனனை யுவராஜனாக நிறுவி, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(36) அதன் பிறகு அந்த முதிர்ந்த மன்னன், எதிரிகளைத் தண்டிப்பவனான இளவரசன் பிரதர்த்தனனிடம், வீதஹவ்யனின் மகன்களை எதிர்த்துச் சென்று போரில் அவர்களைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.(37) பேராற்றல்வாய்ந்தவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பிரதர்த்தனன் தன் தேரில் கங்கையைக் கடந்து, வீதஹவ்யர்களின் நகரத்தை எதிர்த்துச் சென்றான்.(38) வீதஹவ்யனின் மகன்கள், அவனது தேரின் சக்கரங்கள் உண்டாக்கிய சடசடப்பொலியைக் கேட்டு, அரணமைக்கப்பட்ட மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், பகை வாகனங்களை அழிக்கவல்லவையுமான தங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு, தங்கள் நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(39) மனிதர்களில் புலிகளும், கவசம்பூண்ட திறமிக்கப் போர்வீரர்களுமான வீதஹவ்யனின் மகன்கள் யாவரும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பிரதர்த்தனனை நோக்கி விரைந்து, தங்கள் கணை மாரியால் அவனை மறைத்தனர்.(40)
ஓ! யுதிஷ்டிரா, எண்ணற்ற தேர்களில் சென்று பிரதர்த்தனனைச் சூழ்ந்து கொண்ட வீதஹவ்யர்கள், இமயச் சாரலில் மழைத்தாரையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு ஆயுதங்களின் மழையை அவன் மீது பொழிந்தனர்.(41) வலிமையும், சக்தியும் கொண்ட பிரதர்த்தனன், அவர்களுடைய ஆயுதங்களைத் தனதால் கலங்கடித்து, இந்திரனின் இடிநெருப்புக்கு ஒப்பான கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(42) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அகன்ற தலைக் கணைகளால் {அர்த்தச்சந்திர பாணங்களால்} தலை துண்டிக்கப்பட்ட வீதஹவ்யனனின் போர்வீரர்கள், கோடரிகளுடன் கூடிய மரவெட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் வெட்டி வீழ்த்தப்படும் கின்சுக {பலாச} மலர்களைப் போலக் குருதியால் நனைந்த உடல்களுடன் கீழே விழுந்தனர்.(43) மன்னன் வீதஹவ்யன், தனது போர்வீரர்களும், மகன்கள் அனைவரும் போரில் வீழ்ந்த பிறகு, தன் தலைநகரில் இருந்து பிருகுவின் ஆசிரமத்திற்குத் தப்பிச் சென்றான்.(44) உண்மையில், அங்கே வந்த அந்த அரச அகதி, பிருகுவின் பாதுகாப்பை நாடினான். ஓ! ஏகாதிபதி, தோல்வியடைந்த மன்னனின் பாதுகாப்பை முனிவர் பிருகு உறுதி செய்தார்.(45)
பிரதர்த்தனன், வீதஹவ்யனின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தான். முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த திவோதாசன் மகன் {பிரதர்த்தனன்} உரத்த குரலில்,(46) “ஹோ… உள்ளே இருக்கும் உயர் ஆன்ம பிருகவின் சீடர்களே கேட்பீராக. நான் அந்த முனிவரைக் காண விரும்புகிறேன். அவரிடம் சென்று இதைத் தெரிவிப்பீராக” என்றான்.(47)
வந்திருப்பது பிரதர்த்தன் என்பதை அறிந்து கொண்ட முனிவர் பிருகு, தமது ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்து அந்த மன்னர்களில் சிறந்தவனை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(48) அவனிடம் பேசிய முனிவர், “ஓ! மன்னா, என்ன காரியம் என்று எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார். இதனால் தான் வந்த காரணத்தை முனிவரிடம் சொன்னான் மன்னன்.(49)
மன்னன் (பிரதர்த்தனன்), “ஓ! பிராமணரே, மன்னன் வீதஹவ்யன் இங்கே வந்திருக்கிறான். அவனை என்னிடம் கொடுப்பீராக. ஓ! பிராமணரே, அவனது மகன்கள் என் குலத்தையே அழித்திருக்கின்றனர்.(50) காசியின் எல்லைகளும், செல்வமும் அவர்களால் வீணடிக்கப்பட்டன {அழிக்கப்பட்டன / அபகரிக்கப்பட்டன}. எனினும் வலிமையில் செருக்குற்றிருந்த இந்த மன்னனின் நூறு பிள்ளைகளும் என்னால் கொல்லப்பட்டனர்.(51) இந்த மன்னனை {வீதஹவ்யனைக்} கொல்வதன் மூலம் நான் என் தந்தைக்குப் பட்ட கடனை அடைத்தவனாவேன்” என்றான்.
நீதிமிக்க மனிதர்களில் முதன்மையானவரான முனிவர் பிருகு, கருணை கொண்டவராக அவனிடம்,(52) “இந்த ஆசிரமத்தில் எந்த க்ஷத்திரியனும் இல்லை. இங்கே இருப்பவர்கள் அனைவரும் பிராமணர்களே” என்றார்.
பிருகுவின் சொற்களைக் கேட்ட பிரதர்த்தனன்,(53) அஃதை உண்மையென்றெண்ணி, முனிவரின் பாதங்களைத் தொட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, மெதுவாக மெதுவாக, “ஓ! புனிதமானவரே, என் ஆற்றலின் விளைவால் இந்த மன்னன் தன் பிறவி வகையையே இழந்திருப்பதனால் நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டேன் என்பதில் ஐயமில்லை. ஓ!பிராமணரே, நான் விடைபெற்றுச் செல்ல அனுமதிப்பீராக, எனக்கான நன்மையை நான் உம்மிடம் வேண்டுகிறேன்.(55) ஓ! உமது பெயரால் ஒரு குலத்தை நிறுவியவரே, என் வலிமையால் இந்த மன்னன் தன் பிறவி வகையை இழந்திருக்கிறான்” என்றான்[5].முனிவர் பிருகுவால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட மன்னன் பிரதர்த்தனன் அந்த ஆசிரமத்தில் இருந்து வெளியேறி,(56) நஞ்சைக் கக்கும் பாம்பைப் போல நான் சொன்னது போலவே சொல்நஞ்சைக் கக்கிவிட்டு, தனது இடத்திற்குத் திரும்பிச் சென்றான். அதே வேளையில், மன்னன் வீதஹவ்யன், பிருகுவின் அறத்தகுதியால் மட்டுமே, மறுபிறப்பாள தவசி என்ற நிலையை அடைந்தான்.(57) மேலும், அதே காரணத்தின் மூலம் வேதங்கள் அனைத்தையும் முற்றாக அறிந்த நிலையையும் அடைந்தான்[6]. கிருத்சமதன் என்ற பெயரில் இரண்டாம் இந்திரனைப் போன்ற அழகுடன் வீதஹவ்யனுக்கு ஒரு மகன் இருந்தான்.(58) ஒரு காலத்தில் அவனே இந்திரன் என்று நினைத்த தைத்தியர்களால் அவன் பீடிக்கப்பட்டான். அந்த உயர் ஆன்ம முனியை {கிருத்சமதனைப்} பொறுத்தவரையில், “ஓ! பிராமணரே, எங்கே கிருத்சமதர் இருக்கிறாரோ, அங்கே உள்ள மறுபிறப்பாள மனிதர்கள் அனைவராலும் அவர் உயர்வாக மதிக்கப்பட்டார்” என்று ஸ்ருதிகளில் முதன்மையான ரிக்கில் {ரிக் வேதத்தில்} இருக்கிறது. பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான கிருத்சமதன் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் மறுபிறப்பாள முனிவரானான்.(60)கிருத்சமதனுக்குச் சுதேஜஸ் {ஸாவைநஸன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சுதேஜஸுக்கு வர்ச்சஸ் {விதஸ்த்யன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். வர்ச்சஸின் மகன் விஹவ்யன் {சிவஸ்தன்} என்ற பெயரில் அறியப்பட்டான்.(61) விஹவ்யன் தன் மடியில் பிறந்த மகனாக விதத்யன் என்ற பெயரில் ஒருவனைக் கொண்டிருந்தான். விதத்யன் சத்யன் என்ற பெயரில் மகனைக் கொண்டிருந்தான். சத்யன் சந்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சந்தன் முனிவர் சிரவஸை மகனாகக் கொண்டிருந்தான். சிரவஸுக்கு தமன் {தமஸ்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். தமன், மிக மேன்மையான பிராமணனும், பிரகாசன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான்.(63) பிரகாசன், புனித மந்திரங்களை அமைதியாகச் சொல்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வாகிந்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான். வாகிந்திரன், வேதங்கள் மற்றும் அதன் அங்கங்கள் அனைத்திலும் முற்றிலும் திறன் பெற்றிருந்தவனும், பிரமதி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றிருந்தான். பிரமதி, அப்சரஸ் கிருதாசியிடம் ருரு என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ருரு தன் மனைவியான பிரம்மத்வரையிடம் ஒரு மகனைப் பெற்றான்[7]. அந்த மகன் மறுபிறப்பாள முனிவரான சுனகராவார். சுனகர், சௌனகர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இவ்வாறே, க்ஷத்திரியர்களின் தலைவா, மன்னன் வீதஹவ்யன் தன் பிறப்பின் வகையால் {வர்ணத்தால்} ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிருகுவுடைய அருளின் மூலம் பிராமண நிலையை அடைந்தான்.(66) அவனது மகனான கிருத்சமதனிடம் இருந்து உதித்த குலத்தின் பரம்பரைப் பட்டியலையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறென்ன கேட்கப் போகிறாய்?”[8] என்றார் {பீஷ்மர்}.(67)
வணக்கத்திற்குரியோர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 31-வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரியவர்கள் யாவர் என்பது குறித்து கிருஷ்ணனுக்கு நாரதர் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன், “ஓ பாரதக் குலத்தின் தலைவரே, மூவுலகிலும் மதிக்கத்தக்க வணக்கத்திற்குத் தகுந்த மனிதர்கள் யாவர்? உண்மையில் இக்காரியங்களைக் குறித்து நீர் பேசுவதைக் கேட்டு நான் ஒருபோதும் தணிவடைவதில்லை, இது குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர், “இது தொடர்பாக நாரதருக்கும், வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) ஒரு சந்தர்ப்பத்தில் நாரதர் பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபடுவதைக் கண்ட கேசவன், அவரிடம்,(3) “யாரை நீர் வழிபடுகிறீர். ஓ! புனிதமானவரே, இந்தப் பிராமணர்களுக்கு மத்தியில், பெருமதிப்புடன் நீர் யாரை வழிபடுகிறீர்? இஃது என்னால் கேட்கத்தக்கது என்றால் அதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ!அறவோரில் முதன்மையானவரே, இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)
நாரதர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கோவிந்தா, ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, நான் யாரை வழிபடுகிறேன் என்பதைக் கேட்பாயாக. இவ்வுலகில் இதைக் கேட்கத் தகுந்தவன் வேறு யார் இருக்கிறான்?(5) ஓ! பலமிக்கவனே, வருணன், வாயு, ஆதித்தியன், பர்ஜன்யன் {மழை தேவனான இந்திரன்}, நெருப்பின் தேவன் {அக்நி}, ஸ்தாணு {சிவன்}, ஸ்கந்தன் {முருகன்}, லக்ஷ்மி, விஷ்ணு, பிராமணர்கள் {பிரம்மன்}, வாக்கின் தேவன் {வசஸ்பதி / பிருஹஸ்பதி}, சந்திரமாஸ் {சந்திரன்}, நீர், பூமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோரைத் தொடர்ந்து வழிபடுபவர்களை நான் வழிபட்டு வருகிறேன்.(6,7) ஓ! விருஷ்ணி குலத்துப் புலியே, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், வேத கல்வியில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், உயர்ந்த தகுதியைக் கொண்டவர்களுமான பிராமணர்களை எப்போதும் நான் வழிபடுகிறேன்.(8) ஓ! பலமிக்கவனே, தற்பெருமையில் இருந்து விடுபட்டவர்களும், தேவர்களை மதிக்கும் சடங்குகளை வெறும் வயிற்றுடன் வழிபாடு செய்பவர்களும், தாங்கள் கொண்டுள்ளதில் எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடியவர்களுமான மனிதர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.(9) ஓ! யாதவா, வேள்விகளைச்செய்பவர்களும், மன்னிக்கும் மனோ நிலையைக் கொண்டவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், புலன்களை ஆள்பவர்களும், வாய்மை மற்றும் அறத்தை வழிபடுபவர்களும், நல்ல பிராமணர்களுக்கு நிலத்தையும், பசுக்களையும் கொடையளிப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(10)
ஓ! யாதவா, தவநோற்பில் அர்ப்பணிப்புள்ளவர்களும், காடுகளில் வசிப்பவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களும், நாளைக்கென ஒருபோதும் எதையும் சேமிக்காதவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(11) ஓ! யாதவா, தங்கள் பணியாட்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்ப்பவர்களும், விருந்தாளிகளை எப்போதும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட்ட மிச்சங்களை மட்டுமே உண்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(12) வேத கல்வயின் மூலம் தடுக்கப்பட முடியாதவர்களானவர்களும், சாத்திரங்களை உரையாடுவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவர்களும், பிறருக்கு வேள்விகளைச் செய்து கொடுப்பது மற்றும் சீடர்களுக்குப் போதிப்பது ஆகிய கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(13) அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் நடந்து கொள்பவர்கும், சூரியன் முதுகைச் சுடும்வரை வேத கல்வியில் ஈடுபடுபவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(14) ஓ! யாதவா, தங்கள் ஆசான்களின் அருளை அடைய முனைபவர்களும், வேதங்களை அடைய உழைப்பவர்களும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருப்பவர்களும், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(15)
ஓ! யாதவா, சிறந்த நோன்புகளை நோற்பவர்களும், எண்ணங்களை வெளியிடாமல் பேசாநோன்பு நோற்பவர்களும், பிரம்மஞானம் கொண்டவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், தெளிந்த நெய் ஆகுதிகளை {ஹவ்யங்களை} காணிக்கையளிப்பவர்களும், இறைச்சியை {கவ்யங்களை} படையல் செய்பவர்களுமான[1] மனிதர்களை நான் வணங்குகிறேன்.(16) ஓ! யாதவா, பிச்சையெடுத்து உண்டு வாழ்பவர்களும், போதுமான உணவும் பானமும் இல்லாமல் மெலிந்திருப்பவர்களும், தங்கள் ஆசான்களின் வசிப்பிடங்களில் வாழ்பவர்களும், இன்பங்களை வெறுப்பவர்களும், பூமி சார்ந்த பொருட்களை வறியவர்களுமானவர்கள் நான் வணங்குகிறேன்.(17) ஓ!யாதவா, பூமியில் உள்ள பொருட்களில் எந்தப் பற்றும் இல்லாதவர்களும், பிறரிடம் சச்சரவு செய்யாதவர்களும், ஆடை அணியாதவர்களும், எந்தத் தேவையுமற்றவர்களும், வேதங்களை அடைந்து தடுக்கப்பட முடியாதவர்களாக ஆனவர்களும், அறத்தை விளக்குவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மத்தைச் சொல்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(18) அனைத்து உயிரினங்களிடம் கருணை என்ற கடமையைப் பயில்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், வாய்மை பயில்வதில் உறுதியாக இருப்பவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், நடத்தையில் அமைதி நிறைந்தவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(19) ஓ! யாதவா, தேவர்கள் மற்றும் விருந்தினர்களை வழிபடுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், இல்லற வாழ்வை நோற்பவர்களும், வாழ்வுக்கான காரியத்தில் புறாக்களின் நடைமுறையைப் பின்பற்றுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்[2].(20)தங்கள் செயல்கள் எதனிலும் பலவீனப்படாமல் முத்தொகையை[3] {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச்} செய்பவர்களும், வாய்மை பயின்று அறமொழுகுபவர்களுமான மனிதர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(21) ஓ! கேசவா, பிரம்மத்தை அறிந்தவர்களும், வேதங்களின் அறிவைக் கொண்டவர்களும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகையில் கவனமாக இருப்பவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், நடத்தையில் நீதியுடன் செயல்படுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(22) ஓ! மாதவா, நீரை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது காற்றை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் காணிக்கையளிப்பட்ட உணவில் மிஞ்சியதை உண்டு வாழ்பவர்கள் பல்வேறு வகைச் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள் ஆகியோரை நான் வணங்குகிறேன்.(23) (தாங்கள் நோற்கும் மணம்செய்யா நோன்பின் விளைவால்) மனைவிகளற்றவர்களையும், (தாங்கள் வாழும் இல்லற வாழ்வின் விளைவால்) இல்லற நெருப்பையும், மனைவிகளையும் கொண்டவர்களையும், வேதங்களின் புகலிடமாக இருப்பவர்களையும், (தாங்கள் உணரும் கருணையின் விளைவால்) அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாக இருப்பவர்களையும் எப்போதும் நான் வணங்குகிறேன்.(24) ஓ! கிருஷ்ணா, அண்டத்தைப் படைப்பவர்களும், அண்டத்தின் பெரியோர்களும், ஒரு குலம் அல்லது குடும்பத்தில் உள்ள மூத்தோரும், அறியாமை எனும் இருளை அகற்றுபவர்களும், (அறவொழுக்கம் மற்றும் சாத்திரஞானம் ஆகியவற்றுக்காக) அண்டத்தில் உள்ள மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான முனிவர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(25)ஓ! விருஷ்ணி குலத்தின் கொழுந்தே, இந்தக் காரணங்களுக்காக, நான் சொல்லும் இந்த மறுபிறப்பாளர்களை நாள்தோறும் நீயும் வழிபடுவாயாக. மதிப்புடன் வழிபடத்தகுந்த அவர்கள், ஓ! பாவமற்றவனே, வழிபடப்படும்போது, உனக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள்.(26) நான் சொல்லும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பவர்கள் ஆவர். அனைவராலும் மதிக்கப்பட்டு இவ்வுலகில் திரியும் அவர்கள், உன்னால் வழிபடப்பட்டால் நிச்சயம் உனக்கு மகிழ்ச்சியை வழங்குவார்கள்.(27) தம்மிடம் விருந்தினர்களாக வரும் மனிதர்கள் அனைவரையும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், பிராமணர்கள், பசுக்கள் மற்றும் (பேச்சு, ஒழுக்கத்தில்) வாய்மை ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(28) அமைதியான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களும், வேத கல்வியில் எப்போதும் கவனமாக இருப்பவர்களும், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(29) (எவரையும் முதன்மையாகக் கொள்ளாமல், சகிப்பை நிரூபிக்கும் வகையில்) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், வேதங்களில் ஒன்றைத் தங்கள் புகலிடமாகக் கொள்பவர்களும், நம்பிக்கை கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான மனிதர்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(30)
பிராமணர்களில் முதன்மையானோரை மதிப்புடன் வழிபட்டு, சிறந்த நோன்பை நோற்பதிலும், ஈகையறம் பயில்வதிலும் உறுதியாக இருப்போர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(31) தவப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், மணம்செய்யா நோன்பை எப்போதும் நோற்பவர்கள், தவங்களால் ஆன்மத் தூய்மை அடைந்தவர்கள் ஆகியோர் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(32) தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்தோர், பித்ருக்கள் ஆகியோரின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள், சார்ந்தோர் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்போர் ஆகியோர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(33) இல்லற நெருப்பை மூட்டி, அதைத் தொடர்ந்து எரியச் செய்து, மதிப்புடன் அதை வழிபடுபவர்களும், சோம வேள்விகளில் (தேவர்களுக்கு) ஆகுதிகளை முறையாக ஊற்றியவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(34) நீ நடந்து கொள்வது போலவே, தங்கள் தாய்மார், தந்தைமார், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் நடந்து கொள்பவர்கள் (துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்)” என்றார் {நாரதர்}. இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பேசுவதை நிறுத்தினார் அந்தத் தெய்வீக முனிவர்
“.(35)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காக, உன் மாளிகையில் தேவர்களையும், பித்ருக்களையும், பிராமணர்களையும், விருந்தினர்களையும் எப்போதும் வழிபடுவாயாக. இத்தகைய நடத்தையின் விளைவால் நிச்சயம் நீ விரும்பிய கதியை அடைவாய்”.(36)
மன்னன் சிபி! – அநுசாஸனபர்வம் பகுதி – 32-பாதுகாப்பை நாடி வருவோரைப் பாதுகாப்பதால் கிட்டும் பயன் குறித்துச் சொல்ல மன்னன் சிபியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, கடமை மற்றும் அறம் தொடர்பான காரியங்கள் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்.(1) ஓ!பாரதக் குலத்தின் தலைவா, நான்கு வகை உயிரினங்களில் பாதுகாப்பை வேண்டுவோருக்குப் பாதுகாப்பை அளிக்கும் மனிதர்கள் அடையும் பயனென்ன?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஞானமும், பரந்த புகழும் கொண்ட தர்மத்தின் மகனே {தர்மபுத்ரா}, பணிவுடன் பாதுகாப்பு நாடப்படும்போது, பிறருக்குப் பாதுகாப்பை அளிப்பதால் உண்டாகும் பெரும்பலன் குறித்த இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில் ஒரு பருந்தால் விரட்டப்பட்ட ஓர் அழகிய புறாவானது, வானத்தில் இருந்து விழுந்து, உயர்ந்த அருளைக் கொண்டவனான மன்னன் விருஷதர்பனின் பாதுகாப்பை நாடியது.(4) தூய ஆன்மாவைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அச்சத்தால் தன் மடியில் தஞ்சமடைந்த புறாவைக் கண்டு, அதற்கு ஆறுதலளித்து, “ஓ! பறவையே, ஆறுதலடைவாயாக. உனக்கு அச்சம் ஏதும் கிடையாது.(5) இத்தகைய பேரச்சம் உனக்கு எங்கிருந்து வந்தது? நீ என்ன செய்தாய்? எங்கே செய்தாய்? எதன் விளைவாக நீ அச்சத்தால் புலன்களை இழந்து இறந்தவன் போலிருக்கிறாய்?(6) ஓ! அழகிய பறவையே, உன் நிறமானது, நீல வகையைச் சார்ந்ததும், புதிதாக மலர்ந்ததுமான கருநெய்தல் மலருக்கு ஒப்பாக இருக்கிறது. உன் கண்கள் அசோக மலர், அல்லது மாதுளையின் வண்ணத்தில் இருக்கிறது. அஞ்சாதே, ஆறுதலடைவாயாக.(7) நீ எனது பாதுகாப்பை நாடியிருக்கும்போது, உன்னைப் பாதுகாக்க இத்தகைய பாதுகாவலன் இருக்கும்போது, எவனும் உன்னைப் பிடிக்கவும் துணியமாட்டன் என்பதை அறிவாயாக.(8) உனக்காக நான் இன்று காசி நாட்டையே கொடுப்பேன், தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன். எனவே, ஓ! புறாவே, அச்சம் உனதாக வேண்டாம், ஆறுதலைவாயாக” என்றான் {விருஷதர்பன்}.(9)
பருந்து {மன்னன் விருஷதர்பனிடம்}, “இந்தப் பறவை {புறா} என் உணவாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, நீ இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது. நான் இந்தப் பறவையை விரட்டி வந்து பிடித்திருக்கிறேன். உண்மையில், பெரும் முயற்சி செய்த பிறகு இறுதியாகவே நான் இவனை அடைந்திருக்கிறேன்.(10) இவனது இறைச்சி, குருதி, மஜ்ஜை, கொழுப்பு ஆகியவை எனக்கும் பெரும் உணவாக இருக்கும். இந்தப் பறவை என்னைப் பெரிதும் நிறைவடையச் செய்யும் வாழ்வாதாரமாக இருக்கும். ஓ! மன்னா, எனக்கும் இவனுக்கும் இடையில் இவ்வழியில் நீ குறுக்கே நிற்காதே.(11) என்னைப் பீடிக்கும் தாகம் கடுமையானதாக இருக்கிறது. பசி என் வயிற்றை எரிக்கிறது. இந்தப் பறவையை விடுவித்து, அவனைக் கைவிடுவாயாக. இனியும் என்னால் பசிக்கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.(12) இவனை என் இரையாகவே விரட்டி வந்தேன். என் சிறகுகளாலும், அலகுகளாலும் இவனது உடல்கள் கிழிக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் காண்பாயாக. இவனது மூச்சும் பலவீனமடைவதைக் காண்பாயாக. ஓ! மன்னா, இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது.(13) உனக்குரிய அதிகாரத்தின்படி, பிற மனிதர்களின் மூலம் அழிவை அடையும் போது உன் பாதுகாப்பை நாடும் மனிதர்களை நீ காக்கலாம். எனினும், தாகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு வானுலாவி பறவையிடம் உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.(14) உன் எதிரிகள், உன் பணியாட்கள், உறவினர்கள் உன் குடிமக்களுக்கிடையில் நடைபெறும் சச்சரவுகள் ஆகியவற்றின் மீது உனக்கு அதிகாரம் பரவலாம். உண்மையில், உன் ஆட்சிப்பகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவலாம், உன் புலன்களுக்கும் பரவலாம். எனினும், உன் அதிகாரம் ஆகாயம் வரை பரந்திருப்பதல்ல.(15) உன் விருப்பங்களுக்கு எதிராகச் செயல்படும் எதிரிகளிடம் உன் ஆற்றலை வெளிப்படுத்தி, அவர்கள் மீது உன் ஆட்சி அதிகாரத்தை நிறுவலாம். எனினும், உன் ஆட்சி, வானத்தில் பறக்கும் பறவைகள் வரை பரந்திருக்கவில்லை. உண்மையில், (இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம்) நீ தகுதியை ஈட்ட விரும்பினால், என்னைப் பார்ப்பதும் (என் பசியைத் தணிக்க முறையானதைச் செய்து, என் உயிரைக் காப்பதும்) உன் கடமையே” என்றது {பருந்து}”.(16)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம} தொடர்ந்தார், “பருந்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அரசமுனி ஆச்சரியத்தால் நிறைந்தான். அவனது {பருந்தின்} இந்தச் சொற்களை அலட்சியம் செய்யாத மன்னன், அவனது {பருந்தின்} வசதிகளையும் கவனிக்க விரும்பி, பின்வரும் சொற்களில் அவனுக்கு மறுமொழி கூறினான்.(17)
மன்னன் {விருஷதர்பன்}, “ஒரு காளையோ, பன்றியோ, மானோ, எருமையோ இன்று உனக்காக உரிக்கப்படட்டும். இன்று அத்தகைய உணவை உட்கொண்டு உன் பசியைத் தணித்துக் கொள்வாயாக.(18) என் பாதுகாப்பை நாடிய எவரையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பது என் உறுதியான நோன்பாகும். ஓ! பறவையே, இந்தப் பறவை என் மடியை விட்டு அகலாமல் இருப்பதைக் காண்பாயாக” என்றான்.(19)
பருந்து, “ஓ! ஏகாதிபதி, பன்றி, எருது அல்லது பல்வேறு வகையிலான எந்த நீர்க்கோழியின் இறைச்சையையும் நான் உண்ண மாட்டேன். இந்த வகை, அல்லது அந்த வகை உணவில் எனக்கென்ன தேவையிருக்கிறது? என் வகை உயிரினங்களுக்காக நித்தியமாக விதிக்கப்பட்டிருக்கும் உணவைக் குறித்துத் தான் என் காரியம் இருக்க முடியும்? பருந்துகள் புறாக்களை உண்பது நித்திய விதியாகும்.(20,21) ஓ! பாவமற்ற உசீநரா, இந்தப் புறாவிடம் நீ இவ்வளவு பற்றை உணர்வாயெனில், இந்தப் புறாவின் எடைக்கு இணையாக உன் உடல் சதையில் இருந்து எனக்கு இறைச்சியை அளிப்பாயாக” என்றது.(22)
மன்னன், “நீ இந்த வகையில் என்னிடம் பேசியதன் மூலம் நீ இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறாய். ஆம், நீ சொன்னதை நான் செய்வேன்” என்றான். இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன்,(23) தன் சதையை அறுத்துத் தராசில் புறாவுக்கு எதிராக எடை நிறுத்தினான். அதே வேளையில் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான மன்னனின் மனைவிகள்,(24) நடைபெறும் காரியத்தைக் கேள்விப்பட்டு, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்துடன் அலறியபடியே வெளியே வந்தனர்.(25) பெண்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் இவ்வாறு அலறியதன் விளைவால் உண்டான ஆழ்ந்த இரைச்சல் அந்த அரண்மனையில் மேக முழக்கமென எழுந்தது. மிகத் தெளிவாக இருந்த வானம், அனைத்துப் புறங்களிலும் அடர்த்தியான மேகங்களால் சூழப்பட்டது.(26) அந்த ஏகாதிபதியின் வாய்மைக்கு இணக்கமான செயலின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள். மன்னன் தன் விலாப்புறங்கள், தோள்கள் மற்றும் தொடைகளில் இருந்து சதை அறுக்கத் தொடங்கி,(27) அந்தப் புறாவுக்கு எதிராக எடைபார்ப்பதற்காகத் தராசில் விரைவாக நிரப்பினான். அவ்வளவும் செய்து புறாவானது தொடர்ந்து எடை அதிகமாகவே இருந்தது.(28)
இறுதியாக மன்னன் சதைகளேதுமற்று குருதியால் மறைக்கப்பட்ட வெறும் எலும்புக்கூடாக ஆன பிறகு, தன் மொத்த உடலையே கைவிட விரும்பி, ஏற்கனவே தான் அறுத்த சதைகளை வைத்திருந்த தராசில் ஏறினான்.(29) அந்நேரத்தில், இந்திரனின் தலைமையிலான மூவுலகத்தாரும் அவனைக் காண அந்த இடத்திற்கு வந்தனர். ஆகாயத்தில் இருந்த கண்ணுக்குப்புலப்படாத பூதங்களின் மூலம் தெய்வீகப் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(30) மன்னன் விருஷதர்பன், தன் மீது பொழியப்பட்ட அமுத மழையில் நீராடினான். இனிய நறுமணமும், தீண்டலும் கொண்ட தெய்வீக மலர்களும் அவன் மீது மீண்டும் மீண்டும் அபரிமிதமாகப் பொழியப்பட்டன.(31) தேவர்களும், பெரும் எண்ணிக்கையிலான கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரும், பெரும்பாட்டனான பிரம்மனைச் சுற்றி ஆடிப் பாடுவதைப் போல இவனை {இம்மன்னனைச்} சுற்றி ஆடவும் பாடவும் தொடங்கினர்.(32) அப்போது அந்த மன்னன், (அழகிலும், மகிமையிலும்) முற்றாகத் தங்கத்தாலான மாதும், தங்கம் மற்றும் ரத்தினங்களாலான வளைவுகளைக் கொண்டதும், வைடூரியங்களாலான தூண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மாளிகையைவிட விஞ்சி மிளிர்ந்து கொண்டிருந்த ஒரு தெய்வீகத் தேரில் ஏறினான்.(33) அரசமுனியான அந்தச் சிபி[1] தன் செயற்தகுதியின் மூலம் நித்தியமான சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! யுதிஷ்டிரா, நீயும் உன்னிடம் பாதுகாப்பை நாடி வருவோரிடம் இதே வழியில் நடப்பாயாக.(34)தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரையும், தன்னைச் சார்ந்திருப்பவர்களையும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களையும் காப்பாற்றும் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறான்.(35) நீதியும், ஒழுக்கமும் கொண்டவனும், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடியவனுமான ஒருவன் தன் நேர்மையான செயல்களின் மூலம் மதிப்புமிக்க வெகுமதிகள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36) தூய ஆன்மா கொண்டவனும், பெரும் ஞானியும், கலங்கா ஆற்றல் கொண்டவனும், காசிகளின் ஆட்சியாளனும், அரச முனியுமான சிபி, நீதிமிக்கத் தன் செயல்களுக்காக மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்டான்.(37) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பாதுகாப்பு நாடி வருவோரை (சிபியைப் போலவே) பாதுகாக்க முனையும் எவரும் அதே மகிழ்ச்சியான கதியையே அடைவார்கள்.(38) அரச முனியான விருஷதர்பனின் இந்த வரலாற்றை உரைப்பவன், நிச்சயம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான், இந்த வரலாற்றை மற்றொருவர் சொல்லி கேட்கும் மனிதனும் நிச்சயம் அதே கதியையே அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(39)
பிராமண மேன்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 33-ஒரு மன்னனின் முக்கியக் கடமை பிராமணர்களை வழிபடுவது என்பதையும், பிராமணர்களின் மேன்மையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மன்னனுக்காக விதிக்கப்பட்ட செயல்கள் அனைத்திலும் முதன்மையான செயல் எது? எந்தச் செயலைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் இம்மை மற்றும் மறுமை இரண்டிலும், இன்புறுவதில் வெல்கிறான்?” எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, முறையாக அரியணையில் நிறுவப்பட்ட ஒரு மன்னன் பெரும் மகிழ்ச்சியை அடைய விரும்பினால், செயல்கள் அனைத்திலும் பிராமணர்களை வழிபடுவதே அவனுக்கு முதன்மையானதாக விதிக்கப்பட்டிருக்கிறது.(2) முதன்மையான மன்னர்கள் அனைவரும் இதையே செய்ய வேண்டும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதை நன்கறிவாயாக. வேத கல்வி பெற்றவர்களும், நீதிமிக்கவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் ஒரு மன்னன் எப்போதும் மதிப்புடன் வழிபட வேண்டும்.(3)
ஒரு மன்னன், விற்கள், ஆறுதலளிக்கும் பேச்சுகள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் கொடையாகக் கொடுத்து, தன் நகரம் அல்லது மாகாணங்களில் வசிக்கக்கூடியவர்களும், பெருங்கல்வியைக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் வழிபட வேண்டும்.(4) இதுவே மன்னர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செயல்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில், ஒரு மன்னன் எப்போதும் தன் கண்களை இதில் நிலைநிறுத்தியிருக்க வண்டும். அவன், தன்னையும், தன் சொந்த பிள்ளைகளயும் பாதுகாப்பதைப் போல அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.(5) (கல்வி மற்றும் புனிதத்தன்மையில் தாங்கள் பெற்றிருக்கும் மேன்மைக்காக) பிராமணர்களுக்கு மத்தியில் பெரும் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருப்பவர்களை மன்னன் வழிபட வேண்டும். அத்தகைய மனிதர்கள் கவலையில் இருந்து விடுபடும்போது, மொத்த நாடும் அழகில் சுடர்விடுகிறது.(6)
அத்தகைய நபர்கள் துதிக்கப்படத்தக்கவராவர். மன்னன் அத்தகையோருக்குத் தலைவணங்க வேண்டும். உண்மையில் ஒருவன் தன் தந்தைமாரையோ, பாட்டன்மாரையோ எவ்வாறு மதிப்பானோ அதே வகையில் அவர்களை மதிக்க வேண்டும். உயிரினங்கள் அனைத்தின் இருப்பும் வாசவனைச் சார்ந்திருப்பதைப் போலவே மனிதர்கள் பின்பற்றும் ஒழுக்க வழிகள் அவர்களையே சார்ந்திருக்கின்றன.(7) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையும், பெரும் சக்தியையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சீற்றமடைந்தால், தங்கள் விருப்பத்தால் மட்டுமே, அல்லது மந்திரங்களைச் சொல்வதால் மட்டுமே, அல்லது (தவச் சக்தியின் மூலம் பெறப்பட்ட) பிற வழிமுறைகளின் மூலம் மொத்த நாட்டையும் எரித்து விட வல்லவர்களாக இருப்பார்கள்.(8) அவர்களை அழித்துவிடக்கூடிய ஏதொன்றையும் நான் காணவில்லை. அவர்களது சக்தி அண்டத்தின் இறுதி எல்லையையும் அடையவல்ல நிலையில் கட்டுப்படுத்தப்பட முடியாததாக இருக்கிறது. கோபத்தில் இருக்கும்போது, காட்டின் மீது விழும் சுடர்மிக்கத் தழலைப் போலவே மனிதர்கள் மற்றும் பொருட்களின் மீது அவர்களது பார்வைகள் விழும்.(9)
பெரும் துணிவுமிக்க மனிதர்களும் அவர்களது பெயரைக் கேட்டாலே அச்சத்தால் பீடிக்கப்படுவார்கள். அவர்களது குணங்களும், சக்திகளும் அளக்கமுடியாதனவும், இயல்புக்கு மீறியனவுமாகும். அவர்களில் சிலர், புற்கள் மற்றும் கொடிகளால் அமைக்கப்பட்ட வாய்களைக் கொண்ட கிணறுகள் மற்றும் குழிகளைப் போலவும், அதே வேளையில் வேறு சிலர், மேகங்களும் இருளும் அற்ற தெளிந்த வானம் போலவும் இருக்கிறார்கள்.(10) அவர்களில் (துர்வாசர் முதலியவர்களைப் போன்ற) சிலர் கடும் மனோநிலையைக் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களில் (கௌதமர் மற்றும் பிறரைப் போன்ற) சிலர் மென்மையான மனநிலை கொண்டவர்களும் இருக்கின்றனர். அவர்களில் (அசுரர் வாதாபியை விழுங்கிய அகஸ்தியரைப் போன்ற) சிலர் பெரும் தந்திரக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புமிக்கோராக இருக்கிறார்கள்.(11) அவர்களில் (உத்தாலகரின் ஆசானைப் போல) உழவுப் பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் சிலர் (ஆசானிடம் பணி செய்த உபமன்யுவைப் போல) பசுப் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலர் பிச்சையெடுத்து வாழ்கின்றனர். அவர்களில் சிலர் (ஆதிகாலத்து வால்மீகி போலவும், பஞ்ச கால விஷ்வாமித்திரரைப் போலவும்) கள்வராகவும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் (நாரதரைப் போல) சச்சரவுகளை உண்டாக்குவதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் சிலர், (பரதரைப் போல) நடிகர்களாகவும், நடனக் கலைஞர்களாகவும் இருக்கின்றனர்.(12)
அவர்களில் சிலர், (உள்ளங்கை நிறைய உள்ள நீரைப் போல மொத்த கடல்நீரையும் பருகிய அகஸ்தியரைப் போல) இயல்புக்குமீறிய செயல்கள் மற்றும் சாதாரணச் செயல்கள் அனைத்தையும் செய்யத்தகுந்தவர்களாவர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்கள் பல்வேறு இயல்புகளையும், நடத்தைகளையும் கொண்டவர்களாவர்.(13) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், அழமொழுகுபவர்களும், பல்வேறு செயல்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், பல்வேறு வகைத் தொழில்களில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வாதாரத்தை அடைபவர்களுமான பிராமணர்களை எப்போதும் ஒருவன் புகழவே வேண்டும்.(14) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பித்ருக்கள், தேவர்கள் மற்றும் (மூன்று வகை) மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோரைவிட முதிய பிராமணர்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர்.(15)
தேவர்களாலோ, பித்ருக்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, பிசாசங்களாலோ இந்த மறுபிறப்பாளர்களை வெல்ல முடியாது.(16) பிராமணர்கள், தேவனல்லாத ஒருவனையும் தேவனாக்கவல்லவர்களாவர். மேலும் தேவ நிலையில் உள்ளோரை அந்நிலையற்றவர்களாக்கவும் அவர்களால் இயலும். அவர்கள் எவனை மன்னனாக்க விரும்புவார்களோ அவனே மன்னனாவான். மறுபுறம், அவர்களால் விரும்பப்படாதவர்கள் {அனைத்தையும் தோற்று மீண்டும்} சுவற்றுக்கே செல்ல வேண்டும்.(17) ஓ! மன்னா, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், பிராமணர்களை இகழ்ந்து, அவர்களை நிந்திக்கும் மூடர்கள் நிச்சயம் அழிவையே அடைவார்கள்.(18)
ஓ! மன்னா, புகழ்வதிலும், இகழ்வதிலும் திறம் கொண்டவர்களும், பிறரின் புகழ் மற்றும் இழிவுக்குக் காரணம் அல்லது மூலமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், தங்களுக்குத் தீங்கிழைக்க முனைவோரிடம் எப்போதும் கோபம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(19) பிராமணர்கள் எந்த மனிதனைப் புகழ்கிறார்களோ, அவன் செழிப்பில் வளர்வான். பிராமணர்களால் நிந்திக்கப்பட்டுக் கைவிடப்படும் மனிதன் விரைவில் தோல்வியையும் ஏமாற்றத்தையும் அடைகிறான்.(20) சகர்கள், யவனர்கள், காம்போஜர்களில் பிராமணர்கள் இல்லாததன் விளைவால் க்ஷத்திரிய இனக்குழுக்களும் இழிந்த சூத்திர நிலையை அடைந்து வீழ்ச்சியடைந்தன.(21)
திராவிடர்கள் {திரவிடர்கள் / திரமிளர்கள்}[1], களிங்கர்கள், புலிந்தர்கள், உசீநரர்கள், கோலிஸர்ப்பர்கள், மாஹிஷர்கள் மற்றும் பிற க்ஷத்திரியர்களுக்கு(22) மத்தியில் பிராமணர்கள் இல்லாததால், அவர்கள் சூத்திரர்களாக இழிநிலையை அடைந்தனர். ஓ! வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, அவர்களை {பிராமணர்களை} வெல்வதை விட அவர்களிடம் தோற்பதே ஏற்புடையது.(23) இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் கொல்லும் எவனும், ஒற்றைப் பிராமணனைக் கொன்றதைப் போன்ற கொடிய பாவத்தை ஈட்டுவதில்லை.(24)ஒரு பிராமணனை இழித்தோ, பழித்தோ எவனும் ஒருபோதும் பேசக்கூடாது. எங்கே பிராமணர்கள் இகழப்படுகிறார்களோ, அங்கே (அதைச் சொல்பவனையும், அவனது வார்த்தைகளையும் தவிர்க்கும் வகையில்) ஒருவன் தன் தலையைத் தொங்கப் போட்டு அமர வேண்டும், அல்லது அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல வேண்டும்.(25) எந்த மனிதன் பிராமணர்களோடு சச்சரவு செய்வானோ, அவன் இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை, அல்லது பிறந்தால் மகிழ்ச்சியாகத் தன் வாழ்நாளைக் கடத்துவதில்லை.(26) காற்றை எவனும் தன் கையால் பிடிக்க முடியாது. நிலவை எவனும் தன் கரத்தால் தீண்ட முடியாது. பூமியை எவனும் தன் கரங்களில் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போலவே, ஓ! மன்னா, எவனாலும் இவ்வுலகில் பிராமணர்களை வெல்ல முடியாது” என்றார் {பீஷ்மர்}.(27)
பூமாதேவி சொன்ன மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 34-பிராமணர்களின் மேன்மை குறித்துக் கிருஷ்ணனிடம் பேசிய பூமாதேவியின் உரையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் எப்போதும் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அவர்கள் சோமனைத் தங்கள் மன்னனாகக் கொண்டவர்கள், அவர்களால் பிறருக்கு மகிழ்ச்சியையும், துன்பத்தையும் தர முடியும்.(1) ஓ! மன்னா, ஒருவன் தன் தந்தைமாரையும், பாட்டன்மாரையும் எவ்வாறு பேணிப் பாதுகாப்பார்களோ அதே போன்று இவர்களும் பேணிப் பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்டு, உணவு மற்றும் ஆபரணக் கொடைகளையும், அவர்கள் விரும்பும் அனுபவிக்கத்தக்க பொருட்களையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தேவர்களின் தலைவனான வாசவனிடம் இருந்து அனைத்து உயிரினங்களுக்கும் பாயும் அமைதியும் மகிழ்ச்சியும் போல, பிராமணர்கள் இவ்வாறு மதிக்கப்படும் நாட்டில், அமைதியும் மகிழ்ச்சியும் பாயும்.(2) தூய ஒழுக்கம் கொண்டவர்களும், பிரம்ம ஒளி கொண்டவர்களுமான பிராமணர்கள் ஒரு நாட்டில் பிறக்க வேண்டும். (ஒரு நாட்டில் வந்து குடியேறுபவர்களுக்கு மத்தியில்) அற்புதமான தேர்வீரர்களும், எதிரிகள் அனைவரையும் எரிக்க வல்லவர்களுமான க்ஷத்திரியர்களும் விரும்பப்பட வேண்டும்.(3) இது நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! மன்னா, நற்குடி பிறப்பு, அறம் மற்றும் நெறிகள் குறித்த அறிவு ஆகியவற்றைக் கொண்டவனும், சிறந்த நோன்புகளை உறுதியுடன் நோற்பவனுமான ஒரு பிராமணனை ஒருவன் தன் மாளிகையில் வசிக்கச் செய்வதைவிட வேறு உயர்ந்தது ஏதுமில்லை. அத்தகைய செயல் அனைத்துவகை அருளையும் உண்டாக்கவல்லது.(4) பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் வேள்விக் காணிக்கைகள், அவற்றை ஏற்கும் தேவர்களையே சென்றடைகின்றன. பிராமணர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாராவர். ஒரு பிராமணனைவிட உயர்ந்தது ஏதுமில்லை.(5)
ஆதித்தியன் {சூரியன்}, சந்திரமாஸ் {சந்திரன்}, காற்று {வாயு}, நீர், பூமி, வானம், திசைப்புள்ளிகள் ஆகிய அனைத்தும் பிராமணனின் உடலுக்குள் நுழைந்து, பிராமணன் உண்பவற்றை எடுத்துக் கொள்கின்றன[1].(6) எந்த வீட்டில் பிராமணர்கள் உண்பதில்லையோ, அங்கே பித்ருக்களும் உண்ண மறுப்பார்கள்.(7) பிராமணர்களை வெறுக்கும் இழிந்தவனின் வீட்டில் தேவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. பிராமணர்கள் நிறைவடையும்போது, பித்ருக்களும் நிறைவடைகின்றனர்.(8) பிராமணர்கள் நிறைவடையும்போது, தேவர்களும் நிறைவடைகின்றனர். இதில் ஐயமேதும் இல்லை. பிராமணர்களுக்கு வேள்வி ஹவிஸைக் கொடுப்பவர்கள் (இம்மையிலும் மறுமையிலும்) நிறைவை அடைகின்றனர்.(9) அத்தகைய மனிதர்கள் அழிவை அடைவதில்லை. உண்மையில் அவர்கள் உயர்ந்த கதிகளையே அடைகின்றனர்.பிராமணர்களை நிறைவடையச் செயவதற்காகக் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வேள்வி காணிக்கைகள்,(10) பித்ருக்கள் மற்றும் தேவர்கள் ஆகிய இருவரையும் நிறைவடையச் செய்கின்றன. உயிரினங்கள் அனைத்தும் எங்கே தோன்றினவோ அந்த வேள்வியின் காரணன் பிராமணனே.(11) இந்த அண்டம் எதனில் உண்டாகிறதென்பதையும், அழிவில் இருந்து மீண்டும் எப்போதும் வெளிப்படையாகத் திரும்புகிறது என்பதையும் அறிந்தவன் பிராமணன். உண்மையில், சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதையையும், எதிரிடத்திற்கு வழிவகுக்கும் மறுபாதையையும் பிராமணன் அறிவான்.(12) நடந்தது, நடக்கப் போவது என அனைத்தையும் பிராமணன் அறிவான். இருகால் உயிரினங்கள் அனைத்திலும் பிராமணனே முதன்மையானவனாவான். ஓ! பாரதர்களின் தலைவா, பிரமாமணன் தன் வகைக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முழுமையாக அறிந்தவனாவான்.(13) பிராமணர்களைப் பின்பற்றும் மனிதர்கள் ஒருபோதும் வீழ்வதில்லை. இவ்வுலகில் இருந்து செல்லும்போது அவர்கள் ஒருபோதும் அழிவையடைவதில்லை. உண்மையில், வெற்றி எப்போதும் அவர்களுடையதே.(14) பிராமணர்களின் உதடுகளில் இருந்து உதிரும் சொற்களை ஏற்பவர்களும், தங்கள் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தியவர்களுமான உயர் ஆன்ம மனிதர்கள், ஒருபோதும் வீழ்வதில்லை. வெற்றி எப்போதும் அவர்களுடையதாகவே இருக்கிறது.(15)
தங்கள் சக்தியாலும், வலிமையாலும் அனைத்தையும் எரிக்கும் க்ஷத்திரியர்களின் சக்தி, பிராமணர்களுடன் மோதும்போது தணிவடைகிறது {அழிவை அடைகிறது}.(16) {பிராமண} பிருகுக்கள், {க்ஷத்திரிய} தாலஜங்கர்களை வென்றனர். அங்கிரஸின் மகன்கள் நிபர்களை வென்றனர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பரத்வாஜர் வீதஹவ்யர்களையும், ஐலர்களையும் வென்றார்.(17) இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் பல்வேறு வகை ஆயுதங்களைப் பயன்படுத்தவல்லவர்களாக இருந்தும், கருப்பு மான் தோலை மட்டுமே தங்களது சின்னமாகக் கொண்டவர்களும், அதையே பெயராகக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அவர்களை வென்று பயனடைந்தனர். பிராமணர்களுக்குப் பூமியை அளித்து, அத்தகைய செயலின் மூலம் {இம்மை, மறுமை என்ற} இரண்டு உலகங்களுக்கும் ஒளியூட்டும் ஒருவன், இறுதியாக அனைத்தும் பொருட்களின் கதியை அடைவதில் வெல்வான்[2].(18) மரத்திற்குள் மறைந்திருக்கும் நெருப்பைப் போல, இவ்வுலகில் சொல்லப்படும், அல்லது கேட்கப்படும், அல்லது, படிக்கப்படும் அனைத்தும் பிராமணனில் அடங்கிக் கிடக்கிறது.(19) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இது தொடர்பாக வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(20)வாசுதேவன், “ஓ! உயிரினங்களின் தாயே, ஓ! மங்கலத் தேவியே, என்னுடைய இந்த ஐயத்திற்கான தீர்வை நான் உன்னிடம் கேட்க விரும்புகிறேன். இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்கும் மனிதன் எச்செயலைச் செய்வதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான்” என்று கேட்டான்.(21)
பூமி, “ஒருவன் பிராமணர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். இந்த ஒழுக்கமே தூய்மையடையச் செய்வதும், சிறந்ததுமாகும். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றும் மனிதனின் மாசுகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.(22) இதிலிருந்தே (இந்த ஒழுக்கத்தில் இருந்தே) செழிப்பு எழுகிறது. இதிலிருந்து புகழ் எழுகிறது. இதிலிருந்தே புத்தியும், ஆன்ம அறிவும் எழுகிறது. இந்த ஒழுக்கத்தைக் கொண்ட ஒரு க்ஷத்திரியன் வலிமைமிக்க ஒரு தேர்வீரனாகவும், எதிரிகளை எரிப்பவனாகவும் ஆகி, பெரும் புகழை ஈட்டுவதில் வெல்கிறான்.(23) “அனைத்து வகைச் செழிப்பையும் அடைய விரும்பும் ஒருவன், நற்குடியில் பிறந்தவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனும், சாத்திரங்களை அறிந்தவனுமான ஒரு பிராமணனை எப்போதும் மதிக்க வேண்டும்” என்பதையே நாரதர் என்னிடம் சொன்னார்.(24) உயர்ந்த அல்லது தாழ்ந்த மனிதர்கள் அனைவருக்கும் மேலாகக் கருதப்படுபவர்களுக்கும் உயர்ந்த பிராமணர்களால் புகழப்படும் மனிதன் நிச்சயம் செழிப்பில் வளர்வான்.(25)
சுடப்படாத மண்ணாங்கட்டி கடலில் இடப்படும்போம் அழிவையடைவது போலவே பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசும் மனிதனும் விரைவில் தோல்வியையும், ஏமாற்றத்தையும் அடைகிறான்.(26) இதே வகையில் பிராமணர்களைத் துன்புறுத்தும் செயல்கள் அனைத்தும் நிச்சயம் தோல்வியையும், அழிவையும் கொண்டு வரும். நிலவில் கரும்புள்ளிகளையும், பெருங்கடலில் உப்பையும் காண்பீராக[3].(27) பெரும் இந்திரனே ஒருமுறை மேனியெங்கும் ஆயிரம் பாலினக்குறிகளை {பெண்குறிகளை} அடைந்தான். பிறகு பிராமணர்களின் சக்தியின் மூலமே அவை ஆயிரம் கண்களாக மாற்றமடைந்தன.(28) ஓ! மாதவரே, இவை யாவும் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் காண்பீராக. ஓ! மதுசூதனரே, புகழ், செழிப்பு, மறுமையின் பல்வேறு இன்பலோகங்கள் ஆகியவற்றை விரும்புபவனும், தூய நடத்தையும், தூய ஆன்மாவையும் கொண்டவனுமான ஒரு மனிதன், பிராமணர்களின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாக வாழ வேண்டும்” என்றாள் {பூமாதேவி}.(29)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குரு குலத்தோனே, பூமாதேவியின் இச்சொற்களைக் கேட்ட மதுசூதனன், “நல்லது, நல்லது” என்று சொல்லி உரிய வடிவில் அந்தத் தேவியைக் கௌரவித்தான்.(30) ஓ! பிருதையின் மகனே, பூமாதேவிக்கும், மாதவனுக்கும் இடையில் நடந்த இந்த உரையாடலைக் குவிந்த ஆன்மாவோடு கேட்ட நீ, மேன்மையான பிராமணர்கள் அனைவரையும் வழிபடுவாயாக. இதைச் செய்வதன் மூலம் நீ விரைவில் உனக்கான் உயர்ந்த நன்மையை அடைவாய்”.(31)
பிரம்ம விதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 35-பிராமணர்களின் சிறப்பு; அவர்களுக்கான விதிகளைப் பிரம்மன் சொன்னது; பிராமணர்களின் சக்தி ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! அருளப்பட்ட மன்னா, ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே அனைத்து உயிரினங்களால் துதிக்கப்படும் தகுதியையும், சமைக்கப்பட்ட உணவின் முதல் பங்கை உண்ணும் விருந்தினரெனும் தகுதியையும் அடைகிறான்.(1) (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) பெரும் நோக்கங்கள் அனைத்தும் அவர்களில் இருந்தே உண்டாகின்றன. அவர்கள் {பிராமணர்கள்} அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாவர். மேலும் (அவர்களின் வாயில் ஊற்றப்படும் உணவை தேவர்களே உண்பதால்) அவர்கள் தேவர்களின் வாயாகவும் இருக்கின்றனர். மதிப்புடன் வழிபட்டப்படும் அவர்கள், மங்கலம் நிறைந்த வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் நாம் செழிப்படையும்படி வாழ்த்துகின்றனர்.(2) நம் எதிரிகளால் அலட்சியம் செய்யப்படும் அவர்கள், தங்களை எதிர்ப்பவர்களிடம் {எதிரிகளிடம்} சினம்கொண்டு, கடும் சாபங்களை இட்டுத் அவர்களுக்குத் தீமையை விரும்பட்டும்[1].(3)பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள், பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களையும், அவர்களது கடமைகளைப் படைத்தபோது சொன்ன பின்வரும் பழைய ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {அந்த ஸ்லோகங்கள்}, “ஒரு பிராமணன், தனக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது. பாதுகாப்பை அடைந்திருக்கும் அவர்கள், பிறரைப் பாதுகாக்க வேண்டும். இவ்வழியில் நடப்பதால் அவர்கள் தங்களுக்கு உயர்ந்த பயனைத் தரும் கதியை நிச்சயம் அடைவார்கள்.(5) தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் செயல்களைச் செய்வதன் மூலம் அவர்கள் நிச்சயம் பிரம்ம செழிப்பை அடைவார்கள். நீங்களே அனைத்து உயிரினங்களுக்கும் முன்னுதாரணமாகவும், அவர்களைக் கட்டுப்படுத்தும் கடிவாளங்களாகவும் இருப்பீர்கள்.(6) கல்விமானான ஒரு பிராமணன், சூத்திரர்களுக்காக விதிக்கப்பட்டவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது. அத்தகைய செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் தகுதியை இழக்கிறான். வேத கல்வியின் மூலம் அவன் செழிப்பையும், புத்தியையும், சக்தியையும், அனைத்தையும் எரிக்கவல்ல சக்தியையும், மிக மேலான மகிமையையும் அவன் நிச்சயம் அடைவான்.(8) தேவர்களுக்குத் தெளிந்த நெய் ஆகுதிகளைக் காணிக்கையாக அளிப்பதன் மூலம் உயர்ந்த அருளை அடையும் பிராமணர்கள், பிரம்ம செழிப்புடன் சமைக்கப்படும் அனைத்து வகை உணவுகளையும் குழந்தைகளுக்கு முன்பே உண்ணக் கூடிய தகுதியைப் பெறுகிறார்கள்[2].(9) அனைத்து உயிரினங்களிடமும் கருணையால் நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாடு மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் கூடியவர்களுமான நீங்கள் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவீர்கள்.(10) மனிதர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ, தேவர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தும், தவங்கள் மற்றும் அறிவின் துணையுடனும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பதன் மூலமும் {உங்களால்} அடையப்படும்” {என்று சொல்கின்றன}.(11) ஓ! பாவமற்றவனே, பிரம்மனால் பாடப்பட்ட ஸ்லோகங்களையே நான் இவ்வாறு உனக்கு உரைத்தேன். உயர்ந்த நுண்ணறிவையும் ஞானத்தையும் கொண்ட படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களிடம் கொண்ட கருணையின் மூலம் இவற்றை விதித்தான்.(12)அவர்களில் தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்தோரின் பலம், மன்னர்களின் வலிமைக்கு நிகரானதாகும். அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாகவும், சீற்றமிக்கவர்களாகவும், மின்னலின் வேகத்தைக் கொண்டவர்களாகவும், தாங்கள் செய்யும் செயல்களை மிக விரைவாகச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) அவர்களில் சிங்கத்தின் வலிமையைக் கொண்டவர்களும், புலியின் வலிமையைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். காட்டுப்பன்றியின் பலத்தைக் கொண்ட சிலரும், மான் மற்றும் முதலைகளின் பலங்களைக் கொண்ட சிலரும் இருக்கின்றனர்.(14) கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சிலரும், சுறாக்களுக்கு ஒப்பாகக் கடிக்கும் {சுறாக்களின் கடிக்கு ஒப்பான வலியைத் தரும்} சிலரும் இருக்கின்றனர். தங்களை எதிர்ப்பவர்களைத் தங்கள் வாக்கால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும், தங்கள் கண்களின் பார்வையால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும் இருக்கிறார்கள்.(15) ஏற்கனவே சொல்லப்பட்டது போலக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலச் சிலரும், மிக மென்மையான மனநிலை கொண்ட சிலரும் இருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள் பல்வேறு மனோநிலைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(16)
மேகலர்கள், திராவிடர்கள் {திரமிடர்கள்}[3], லாடர்கள், பௌண்டரர்கள், கொன்வசிரர்கள், சௌண்டிகர்கள், தரதர்கள், தார்வர்கள், சௌரர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள்,(17) கிராதர்கள், யவனர்கள் மற்றும் எண்ணற்ற க்ஷத்திரிய இனக்குழுக்கள், பிராமணர்களின் கோபத்தின் மூலம் சூத்திர நிலைக்குத் தாழ்ந்திருக்கிறார்கள்[4].(18) பிராமணர்களை அலட்சியம் செய்ததன் விளைவால் அசுரர்கள் ஆழ்கடலைத் தஞ்சமாகக் கொள்ளும் நிலையை அடைந்தனர். பிராமணர்களுடைய அருளில் மூலமே தேவர்களும் சொர்க்த்தின் இன்பலோகவாசிகளாகும் நிலையை அடைந்தன்ர.(19)வெளி, அல்லது ஆகாயமென்ற பூதம் தீண்டப்பட முடியாதது. இமய மலைகள் தங்கள் நிலைகளில் இருந்து அசைக்கப்பட முடியாதன. கங்கையின் நீரோட்டம் அணைக்கு அடங்காதது. பிராமணர்கள் அடக்கப்பட இயலாதவர்களாவர்.(20) பிராமணர்களின் நல்விருப்பங்களை விளைவிக்காத {பேணி வளர்க்காத} க்ஷத்திரியர்கள் எவரும் பூமியை ஆள இயலாதவர்களாவர் {ஆளும் தகுதியற்றவர்களாவர்}. பிராமணர்கள் உயர் ஆன்மா கொண்டவர்களாவர் {மகாத்மாக்களாவர்}. அவர்கள் தேவர்களுக்கே தேவராவர்.(21) கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியின் அரசுரிமையை நீ உண்மையில் அனுபவிக்க விரும்பினால், கொடைகளாலும், கீழ்ப்படிந்த தொண்டுகளாலும் அவர்களை {பிராமணர்களை} எப்போதும் வழிபடுவாயாக.(22) ஓ! பாவமற்றவனே, பிராமணர்கள் கொடைகளை ஏற்பதன் விளைவால், அவர்களது சக்தியும், வலிமையும் குன்றுகின்றன. ஓ!மன்னா, கொடைகளை ஏற்க விரும்பாத பிராமணர்களிடம் இருந்து நீ உன் குலத்தைப் பாதுகாத்துக் கொள்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(23)
சோம விதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 36-இந்திரனிடம் சம்பாசுரன் சொன்ன பிராமண மகிமை; சம்பரனின் தந்தை மற்றும் சோமனுக்கு இடையில் இது குறித்து நடந்த உரையாடல் ஆகியவற்றைக் யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகச் சக்ரனுக்கும், சம்பரனுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் சக்ரன் {இந்திரன்}, தலையில் சடாமுடி தரித்து உடல் முழுவதும் சாம்பலை {திருநீற்றைப்} பூசிக் கொண்டும் ஒரு தவசியின் வேடத்தை ஏற்றுக் கொண்டு, கோரமான தேரொன்றைச் செலுத்திக் கொண்டு அசுரன் சம்பரனின் முன்னிலையை அடைந்தான்.(2)சக்ரன் {அசுரன் சம்பரனிடம்}, “ஓ! சம்பரா, எந்த ஒழுக்கத்தின் மூலம் நீ உன் குலத்தின் தலைவனானாய்? எந்தக் காரணத்தினால் மக்கள் உன்னை அனைவருக்கும் மேம்பட்டவனாகக் கருதுகிறார்கள்? இதை நீ எனக்கு உண்மையாகவும், விரிவாகவும் சொல்வாயாக” என்று கேட்டான்.(3)
சம்பரன் {சக்ரனிடம்}, “பிராமணர்களிடம் நான் ஒரு போதும் தீய உணர்வுகளை வளர்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் எந்தப் போதனையையும் கேள்வி கேட்காத மதிப்புடன் அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். பிராமணர்கள் சாத்திரங்களை விளக்க முற்படும்போது, பெரும் மகிழ்ச்சியோடு நான் அதைக் கேட்கிறேன்.(4) அவர்களது விளக்கங்களைக் கேட்ட பிறகு நான் ஒருபோதும் அவர்களை அலட்சியம் செய்ததில்லை. அல்லது பிராமணர்களுக்கு எதிராக எவ்வகையான குற்றமும் இழைத்ததில்லை. புத்தியுள்ள பிராமணர்களை நான் எப்போதும் வழிபடுகிறேன். அவர்களிடம் இருந்தே செய்திகளை எப்போதும் நான் நாடுகிறேன். நான் எப்போதும் அவர்களது பாதங்களை வழிபடுகிறேன்.(5) அவர்கள் நம்பிக்கையுடன் என்னை அணுகி, எப்போதும் என்னிடம் அன்புடன் பேசி, என் நலத்தை விசாரிக்கின்றனர். அவர்கள் கவனமற்றிருந்தாலும் நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன். அவர்கள் உறங்கினாலும், நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன்.(6)
சாத்திரங்களால் சுட்டிக்காட்டப்படும் பாதையிலும், பிராமணர்களிடமும் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வன்மம் மற்றும் தீய ஆசைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டவனுமான நான், தேனீக்கள் தங்கள் கூட்டின் அடைகளை {தேனடைகளைத்} தேனால் நிறைப்பதைப் போல, என் ஆசான்களாக இருப்பவர்களும், என்னை ஆள்பவர்களுமான பிராமணர்கள், ஞானமெனும் அமுதத்தால் எப்போதும் என்னை நிறைக்கிறார்கள்.(7) உற்சாகமிக்க இதயங்களுடன் அவர்கள் சொல்லும் எதையும், நினைவு மற்றும் புத்தியின் துணையுடன் நான் எப்போதும் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களிடம் நான் கொண்டுள்ள நம்பிக்கையில் எப்போதும் கவனமாக இருக்கிறேன், மேலும், அவர்களை விட எவ்வாறு தாழ்ந்திருக்கிறேன் என்பதையும் எப்போதும் நினைக்கிறேன்.(8) அவர்களது நாவின் நுனியில் வசிக்கும் அமுதத்தை எப்போதும் பருகுவதன் காரணத்தால், நட்சத்திரங்கள் அனைத்தையும் விஞ்சியிருக்கும் நிலவைப் போல நான் என் குலத்தில் உள்ள பிறர் அனைவரையும் விட மேலான நிலையை அடைந்திருக்கிறேன்.(9) பிராமணர்களின் உதடுகளில் இருந்து விழும் சாத்திர விளக்கங்களையும், உலகின் ஞானிகள் ஒவ்வொருவரின செயல்களையும் கேட்பதே உலகத்தின் அமுதமாகவும், குறிப்பிடத்தகுந்த சிறப்பாகவும் கருதப்பட வேண்டும்.(10) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலைக் கண்டும், பிராமணர்கள் சொன்ன போதனைகளின் பலத்தைப் புரிந்து கொண்டும் என் தந்தை {கசியப முனிவர்} மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் நிறைந்தார்.(11) உயர் ஆன்ம பிராமணர்களின் பலத்தைக் கண்ட என் தந்தை, சந்திரமாஸிடம் {சந்திரனிடம்}, “பிராமணர்கள் எவ்வாறு வெற்றியை அடைகின்றனர்?” என்று கேட்டார்.(12)சோமன்{சந்திரன் முனிவர் கசியபரிடம்}, “பிராமணர்கள் தவங்களின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றனர். வாக்கே அவர்களது பலமாக அமைகிறது. அரச வகையைச் சார்ந்தோரின் ஆற்றல் அவர்களின் கரங்களில் {தோள்களில்} இருக்கிறது. எனினும் பிராமணர்கள், வாக்கையே தங்கள் பலமாகக் கொண்டுள்ளனர்.(13) ஒரு பிராமணன், வசதியேதுமில்லாத தன் ஆசானின் இல்லத்தில் வசித்து, வேதங்களையோ, குறைந்தது பிரணவத்தையோ கற்க வேண்டும். அவன் கோபத்தில் இருந்து விடுபட்டு, உலகம் சார்ந்த பற்றுகளைத் துறந்து, அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைப் பெற்று ஒரு யதியாக வேண்டும்.(14) ஒருவன் தன் தந்தையின் வசிப்பிடத்திலேயே வேதங்கள் அனைத்திலும் திறம்பெற்று, மரியாதைக்குறிய நிலையை அடையுமளவுக்குப் பெரும் ஞானத்தை ஈட்டினாலும், பயணிக்காதவன், அல்லது வீட்டில் வளர்ந்தவன் {ஸாமான்யன்} என்றே மக்கள் அவனை நிந்திப்பார்கள்.(15) பூமியானது, போரிட விரும்பாத மன்னன், இல்லத்தைவிட்டுச் சென்று ஞானம் அடைய விரும்பாத பிராமணன் ஆகிய இருவரையும் எலிகளை விழுங்கும் ஒரு பாம்பைப் போல விழுங்குகிறது {அவர்கள் புகழின்றிப் போகிறார்கள்}.(16) செருக்கானது சிறுமதி கொண்டோரின் செழிப்பை அழிக்கிறது. {மணமாகாத} ஒரு கன்னிகை கருவுறுவதால் களங்கமடைகிறாள் {கெட்டுப் போகிறாள்}. ஒரு பிராமணன் வீட்டிலேயே இருப்பதால் நிந்திக்கத்தகுந்தவனாகிறான் {கெட்டுப் போகிறான்}” {என்றான் சோமன்}.(17)
அற்புதத்தன்மை நிறைந்த சோமனிடமிருந்து என் தந்தை இதைக் கேட்டறிந்தார். இதன் விளைவால் என் தந்தை பிராமணர்களை மதிக்கவும், வழிபடவும் தொடங்கினார். நான் அவரைப் போலவே உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பிராமணர்கள் அனைவரையும் வழிபடுகிறேன்” என்றான் {சம்பரன்}”.(18)
பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தத் தானவ இளவரசனின் {சம்பரனின்} வாயில் இருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், பிராமணர்களை வழிபடத் தொடங்கி, அதன் விளைவாக அவன் தேவர்களின் தலைமையிடத்தை அடைவதில் வென்றான்” {என்றார் பீஷ்மர்}.(19)
கொடைபெறத் தகுந்தவர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 37-கொடைபெறத் தகுந்தவர் யாரென்பது குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அந்நியர் ஒருவர், அல்லது நீண்டகாலம் உடன் வாழ்ந்த ஒருவர், அல்லது தொலைவில் இருந்து வரும் ஒருவர் எனக் கொடையாளியின் முன் தோன்றும் மூவரில் கொடைபெறத் தகுந்தவராக எவரைக் கருத வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவர்கள் அனைவரும் சம தகுதி கொண்டவர்களே. வேள்விகள் செய்வதற்கோ, ஆசானுக்கான கட்டணத்தை {தட்சணையை} வழங்குவதற்கோ, மனைவி மக்களைப் பராமரிப்பதற்கோ பிச்சையெடுப்பதால் சிலர் தகுதி பெறுகின்றனர். பூமி முழுதும் திரிந்து, ஒருபோதும் எதையும் வேண்டாமல் இருந்து, கொடுக்கப்படுவதைப் பெற்றுக் கொள்ளும் நோன்பைப் பின்பற்றுவதால் சிலர் கொடைபெறும் தகுதியைப் பெறுகின்றனர். மேலும், ஒருவன் வேண்டுவதை நாம் கொடுக்க வேண்டும்.(2) எனினும், நம்மைச் சார்ந்திருப்பவர்கள் துன்பமடையாத வகையில் நாம் கொடையளிக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் ஒருவன் தன்னையே துன்புறுத்திக் கொள்கிறான்.(3) முதல் முறையாக வந்திருக்கும் அந்நியனும் உரிய கொடைக்குத் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும். தெரிந்தவரும், நன்கறியப்பட்டவரும், கொடையாளியுடன் வாழ்ந்து வருபவருமான ஒருவரும் அதே வகையிலேயே கருதப்பட வேண்டும். தொலையில் இருந்து வருபவரும் சமமாகவே கருதப்பட வேண்டும் என்றும் ஒரு கல்விமான் அறிவான்” என்றார் {பீஷ்மர்}.(4)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எவருக்கும் தீங்கிழைக்காமலும், சாத்திர விதிகளுக்கு முரண்படாமலும் கொடையளிக்க வேண்டும் என்பது உண்மைதான். எனினும், கொடை பெறுவதற்குத் தகுந்தவர் எவர் என்பதை ஒருவன் சரியாக உறுதி செய்ய வேண்டும். ஒருவனுக்குக் கொடுக்கப்படும் கொடைக்குக் குறைவேற்படாத வகையில் அவன் இருக்க வேண்டும்” என்றான்[1].(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ரித்விஜர், புரோஹிதர், ஆசான், ஆச்சாரியர், சீடன், (திருமண உறவின் மூலமான) உற்றார் உறவினர் ஆகியோர் கல்விமான்களாகவும், வன்மமற்றவர்களாகவும் இருக்கும்போது அவர்களை மதிப்பிற்கும், வழிபாட்டிற்கும் தகுந்தவர்களாக மதிக்க வேண்டும்.(6) அத்தகைய குணங்கள் அற்றவர்களைக் கொடைகளுக்கோ, விருந்தோம்பலுக்கோ தகுந்தவராக ஒருபோதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் தன்னோடு தொடர்பு கொள்ளும் மனிதர்களை எச்சரிக்கையுடன் ஆராய்ந்தறிய வேண்டும்.(7) கோபமின்மை, வாக்கில் வாய்மை, தீங்கிழையாமை, நேர்மை, அமைதி நிறைந்த நடத்தை, செருக்கின்மை, பணிவு, துறவு, தற்கட்டுப்பாடு, ஆன்ம நிறைவு அல்லது ஆன்ம அமைதி ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவனும், தீய செயல்கள் ஏதுமற்றவனுமான ஒருவனே {கொடைபெறத்} தகுதியுடையவனாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய மனிதனே கௌரவிக்கப்படத் தகுந்தவன்.(8,9)
ஒருவன் நற்கறியப்பட்டவனாகவோ, தெரிந்தவனாகவோ இருந்தாலும், ஒருவன் புதியவனானாலும், ஏற்கனவே காணப்படாதவனானாலும் இந்தத் தகுதிகளைக் கொண்டிருக்கும் அவன் கௌரவங்களுக்கும், விருந்தோம்பலுக்கும் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும்.(10) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவன், அல்லது சாத்திரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று காட்ட முனைபவன், அல்லது சமூகத்தில் உள்ள நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுவதை அங்கீகரிப்பவன் எவனும் வெறுமனே தனக்கான அழிவையே கொண்டு வருகிறான் (அவனைக் கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருத முடியாது).(11)
கல்வியை வீணாக்குபவனும், வேதங்களைப் பழித்துப் பேசுபவனும், பயனற்ற சர்ச்சைகளின் அறிவியலில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும்,(12) நல்லோரின் சபையில் (சச்சரவுகளில்) வெற்றியை ஈட்ட விரும்பி அறம் மற்றும் நெறிகளுக்கான காரணங்களை மறுத்து, அனைத்தையும் விதியின் மேல் சாத்துபவனும், மனிதர்கள் அனைவரிடமும் ஐயுணர்வு கொண்டவனும், மூடனும், தீர்மானம் கொள்ள இயலாதவனும், வாக்கில் கசந்தவனுமான ஒரு பிராமணன் வெறுப்பு நிறைந்த நாயாக அறியப்பட வேண்டும்.(14) நாயானது, குரைத்துக் கொண்டே கடிக்க முனைவதைப்போலவே, இத்தகைய மனிதனும் தன் மூச்சை வீணாகச் செலவழித்து, சாத்திரங்கள் அனைத்தின் அதிகாரங்களையும் அழிக்க முனைகிறான்.(15)
சமூகத்தை ஆதரிக்கும் நடைமுறைகள், அறம் சார்ந்த கடமைகள், சுயத்திற்கு நன்மையை உண்டாக்கவல்ல அனைத்துச் செயல்கள் ஆகியவற்றையும் ஒருவன் செய்ய வேண்டும். இவற்றைச் செய்து வாழும் மனிதன், காலத்தால் எப்போதும் நீடித்திருக்கும் அளவு செழிப்பில் வளர்கிறான்.(16) வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களுக்கும், வேத கல்வியின் மூலம் முனிவர்களுக்கும், பிள்ளைகளைப் பெறுவதன் மூலம் பித்ருக்களுக்கும், கொடைகளை அளிப்பதன் மூலம் பிராமணர்களுக்கும், உணவூட்டுவதன் மூலம் விருந்தினர்களுக்கும் பட்ட கடனைத் தூய நோக்கத்துடனும், சாத்திர விதிகளின் படியும் சரியாகத் திரும்பச் செலுத்தும் ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தாசிரமவாசி} அறத்தில் {தர்மத்தில்} இருந்து ஒருபோதும் வீழமாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(17,18)
பஞ்சசூடை! – அநுசாஸனபர்வம் பகுதி – 38-பெண்களின் இயல்பு குறித்து நாரதரிடம் பேசிய பஞ்சசூடையின் உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பெண்களின் மனோநிலை {இயல்பைக்} குறித்து நீர் உரையாடுவதை நான் கேட்க விரும்புகிறேன். தீமைகள் அனைத்திற்கும் வேராகப் பெண்களே சொல்லப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மிகவும் பலவீனமானவர்களாகவே கருதப்படுகிறார்கள்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தெய்வீக முனிவர் நாரதருக்கும், (தேவலோக) அரசவை மங்கை {வேசி} பஞ்சசூடைக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்த போது, பிரம்மலோகத்தில் தன் வசிப்பிடத்தைக் கொண்டவளும், குற்றமற்ற அழகைக் கொண்ட அப்ஸரஸுமான பஞ்சசூடை என்பவளைச் சந்தித்தார்.(3) உடலின் ஒவ்வொரு அங்கமும் பேரழகுடன் இருக்கக்கூடிய அந்த அப்சரஸைக் கண்ட அந்தத் தவசி, அவளிடம், “ஓ! கொடியிடையாளே, என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது. அதை எனக்கு விளக்கிச் சொல்வாயாக” என்று கேட்டார்”.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அம்முனிவரால் {நாரதரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த அப்சரஸ் அவரிடம், “{நீர் கேட்கும்} காரியம் நான் அறிந்ததாக இருந்தால், நான் அதைக் குறித்துப் பேசத் தகுந்தவள் என்று நீர் நினைத்தால், நிச்சயம் என் மனத்தில் இருப்பதை நான் சொல்வேன்” என்றாள்.(5)
நாரதர் {பஞ்சசூடையிடம்}, “ஓ! இனியவளே, உன் தகுதிக்கு அப்பாற்பட்ட எந்தப் பணியிலும் நிச்சயம் நான் உன்னை ஈடுபடுத்த மாட்டேன். ஓ! அழகிய முகம் கொண்டவளே, பெண்களின் மனோநிலையை {இயல்பை} நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்” என்றார்”.(6)
பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தத் தெய்வீக முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான அப்சரஸ் {பஞ்சசூடை}, அவரிடம், “நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பெண்களைக் குறித்துத் தவறாகப் பேச இயலாதவளாக இருக்கிறேன்.(7) பெண்கள் என்னவாக இருக்கிறார்கள், அவர்கள் எத்தகைய இயல்புடன் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீர். ஓ! தெய்வீக முனிவரே, இத்தகைய பணியில் என்னை ஈடுபடுத்துவது உமக்குத் தகாது” என்று மறுமொழி கூறினாள்.(8)
அவளிடம் அந்தத் தெய்வீக முனிவர், “ஓ! கொடியிடையாளே, அஃது உண்மைதான். பொய் பேசுவதன் மூலமே ஒருவர் குற்றமிழைத்தவராகிறார். எனினும், உண்மையைச் சொல்வதில் எக்குற்றமும் இருக்க முடியாது” என்றார்.(9)
அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், இனிய புன்னகையுடன் கூடியவளுமான அப்சரஸ் பஞ்சசூடை, நாரதரின் கேள்விக்குப் பதிலளிக்க உடன்பட்டாள். பெண்களிடம் நித்தியமாக {எப்போதும்} உள்ள உண்மையான குற்றங்களை அவள் சொல்லத் தொடங்கினாள்.
பஞ்சசூடை {நாரதரிடம்}, “பெண்கள், உயர்ந்த குடியில் பிறந்திருந்தாலும், அழகுடன் கூடியவர்களாக இருந்தாலும், பாதுகாவலர்களை {கணவர்களைக்} கொண்டிருந்தாலும், அவர்கள் {பெண்கள்} தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறவே விரும்புகிறார்கள். ஓ! நாரதரே, இக்குற்றம் உண்மையில் அவர்களைக் களங்கப்படுத்துகிறது.(11) பெண்களைவிடப் பாவம் நிறைந்தது வேறு எதுவுமில்லை. உண்மையில் பெண்களே குற்றங்கள் அனைத்தின் வேராக இருக்கிறார்கள். ஓ! நாரதரே, அதை நிச்சயம் நீர் அறிவீர்.(12) பெண்கள், புகழுடனும், செல்வத்துடனும், அழகிய பண்புகளுடனும், முற்றிலும் தங்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உள்ள கணவர்களைப் பெற்றிருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்களை அவமதிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்[1].(13) ஓ! பலமிக்கவரே, அடக்கத்தைக் கைவிட்டு, பாவம் நிறைந்த பழக்கவழக்கங்களையும், நோக்கங்களையும் கொண்ட மனிதர்களின் தோழமையை {துணையை} வளர்ப்பது, பெண்களாகிய நாங்கள் கொண்டுள்ள பாவம் நிறைந்த மனோநிலையாகும் {இயல்பாகும்}[2].(14) பெண்கள் தங்கள் முன்னிலையில் வந்து சிறிதளவு மதிப்புடன் பேசும் மனிதர்களையும் விரும்புகிறார்கள்.(15)கட்டுப்பாடுகள் எதையும் இயல்பாகவே பொறுத்துக் கொள்ளாத பெண்களும், வேறு பாலினத்தைச் சேர்ந்தவரால் {ஆண்களால்} வேண்டப்படாததாலோ, உறவினர்களிடம் கொண்ட அச்சத்தாலோ தங்களுக்காக விதிக்கப்பட்டவற்றை {கட்டுப்பாடுகளை} மீறாமல் தங்கள் கணவர்களிடமே உள்ளனர்.(16) தங்கள் உதவிகளுக்காக {விருப்பங்களுக்காக} அனுமதிக்க இயலாதவர்கள் என அவர்களுக்கு எவரும் இல்லை. அவர்கள் யாருக்கு உதவத் தயாராக இருக்கிறார்களோ, அந்த மனிதனின் வயதை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. அழகாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவன் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவனாக மட்டும் இருந்தாலே பெண்கள் அவனது துணையை அனுபவிக்கத் தயாராக இருக்கிறார்கள்.(17) பாவத்தில் கொண்ட அச்சம், அல்லது கருணை, அல்லது செல்வம், அல்லது உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகளுக்காகத் தங்கள் நெஞ்சங்களில் எழும் அன்பு ஆகியவற்றுக்காகப் பெண்கள் தங்கள் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதில்லை.(18) மதிப்பிற்குரிய குடும்பங்களின் மத்தியில் வாழும் பெண்களும் {குலப் பெண்களும் கூட}, இளமையானவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும், விடுதலையுடன் கூடிய வாழ்வை நோற்பவர்களுமான தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {வேசிகளின்} நிலையைக் கண்டு பொறாமை கொள்கின்றனர்.(19) கணவர்களால் காதலிக்கப்படுபவர்களும், பெரும் மதிப்புடன் நடத்தப்படுபவர்களுமான பெண்களும் கூட, கூனர்கள், குருடர்கள், மூடர்கள், அல்லது குள்ளர்களுக்கும் தங்கள் உதவிகளை அளிப்பது {அவர்களோடு சேர்வதும்} காணப்படுகிறது.(20)
நகரும் சக்தியை இழந்த மனிதர்கள் {முடவர்கள்}, அல்லது அழகற்ற இழிமனிதர்களின் துணையையும் பெண்கள் விரும்புவது காணப்படுகிறது. ஓ! பெரும் முனிவரே, பெண்கள், தங்களுக்குத் துணையாகக் கொள்ளத் தகாதவன் எனக் கருதப்படுபவன் இவ்வுலகில் எவனுமில்லை.(21) எனினும், பெண்கள் தங்கள் கணவனுக்காகக் காத்திராமல் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக, தங்களுக்குள்ளேயே ஒருவரோடொருவர் தவறாகக் கலக்க முற்படுவார்கள்[3].(22) எதிர் பாலினத்தவனை அடைய இயலாமை, அல்லது உறவினர்களிடம் கொண்ட அச்சம், அல்லது மரணம் மற்றும் சிறைவாசம் குறித்த அச்சம் ஆகியவற்றின் மூலமே பெண்கள் தங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் நிலைத்திருக்கிறார்கள்.(23) எப்போதும் புதிய துணைகளிடம் மிகுந்த விருப்பம் கொண்டவர்களான அவர்கள் {துருதுருவென} மிகவும் அமைதியற்றவர்களாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாத தங்கள் இயல்பின் விளைவால் அவர்களை அன்பாக நடத்துவதன் மூலம் கீழ்ப்படியச் செய்ய முடியாது. மீறும் எண்ணம் கொண்டிருக்கும்போது கட்டுபடுத்த முடியாதவர்களாகவே அவர்களது இயல்பு இருக்கிறது. உண்மையில் பெண்கள், ஞானிகளால் சொல்லப்படும் சொற்களைப் போன்றவர்களாவர்[4].(24) விறகால் நெருப்பு ஒருபோதும் தணிவடைவதில்லை. ஆறுகளின் நீரால் பெருங்கடல் ஒருபோதும் நிறைவை அடைவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதால் யமன் தணிவடைவதில்லை. அதே போலவே, பெண்களும் ஆண்களால் ஒருபோதும் தணிவடைவதில்லை.(25)ஓ! தெய்வீக முனிவரே, இது பெண்களுடன் தொடர்புடைய மற்றொரு புதிராகும். அவர்கள், அழகானவனாகவும், அழகிய பண்புகளைக் கொண்டவனாகவும் ஒரு மனிதனைக் கண்டால், அவர்களின் மேனியில் நிறைவில்லா ஆசையின் குறியீடுகள் தோன்றுகின்றன[5].(26) தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவர்களும், தங்களுக்கு ஏற்புடையவற்றை எப்போதும் செய்பவர்களும், ஆபத்து மற்றும் தேவைகளின் போது அவர்களைப் பாதுகாப்பவர்களுமாக இருக்கும் கணவர்களுக்குக் கூட அவர்கள் போதுமான மதிப்பை ஒருபோதும் காட்டுவதில்லை.(27) பெண்கள் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {ஆண்களின்} துணையைப் போல விருப்பத்திற்குரிய பொருட்களின் நிறைவையோ, ஆபரணங்களையோ, இனிய வகை உடைமைகளையோ கூட ஒருபோதும் உயர்வாகக் கருதுவதில்லை[6].(28) யமன், காற்று தேவன் {வாயு}, காலன், பாதாள லோகம், பெருங்கடலில் திரியும் இடையறாத நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரை வாய் {வடவாமுகம்}, கூரிய கத்தி, கடும் நஞ்சு, பாம்பு, நெருப்பு போன்ற இவை அனைத்தும் பெண்ணோடு கலந்திருக்கும் நிலையில் அவளோடு இருக்கின்றன.(29) ஐம்பெரும்பூதங்கள் எங்கிருந்து இருப்பில் உதித்தனவோ, படைப்பாளனான பிரம்மன் எங்கிருந்து அண்டத்தை விதித்தானோ, மனிதர்கள் எங்களிருந்து உதித்தனரோ அதே நித்திய பிரம்மத்தில் இருந்துதான் பெண்களும் இருப்பில் உதித்தனர். ஓ நாரதரே, பெண்கள் படைக்கப்பட்டபோதே, நான் பட்டியலிட்ட இந்தக் குற்றங்களும் அவர்களுக்குள் விதைக்கப்பட்டன” என்றாள் {பஞ்சசூடை}.(30)
பெண்களின் நடத்தை! – அநுசாஸனபர்வம் பகுதி – 39- பெண்கள் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்களாக இருப்பதைக் குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, இவ்வுலகில் உள்ள மனிதர் அனைவரும், தெய்வீக இருப்பால் படைக்கப்பட்ட மாயையில் மூழ்கி பெண்களிடம் தங்களை இணைத்துக் கொள்வது {பெண்களிடம் பற்று கொள்வது} காணப்படுகிறது.(1) அதே போலவே பெண்களும், ஆண்களிடம் தங்களை இணைத்துக் கொள்வதும் காணப்படுகிறது. இவையனைத்தும் உலகமெங்கும் காணப்படுகின்றன. இக்காரியத்தில் என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது.(2) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, (பெண்கள் இவ்வளவு குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும்போது) ஆண்கள் ஏன் தங்களைப் பெண்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள்? மேலும், பெண்களால் மிகவும் விரும்பப்படும் ஆடவர் யாவர்? அவர்கள் விரும்பாதவர்கள் யாவர்?(3) ஓ! மனிதர்களின் தலைவரே, மனிதர்கள் பெண்களைப் பாதுகாப்பது எவ்வாறு என்பதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்[1].(4)மனிதர்கள் பெண்களிடம் மகிழ்ந்து, அவர்களுடன் விளையாடும்போது, பெண்கள் அவர்களை வஞ்சிப்பதாகத் தெரிகிறது. மேலும், ஒரு மனிதன் ஒருமுறை அவர்களது கைகளில் வீழ்ந்துவிட்டால், பிறகு அவன் அவர்களிடம் இருந்து தப்புவது அரிதாகிவிடுகிறது. புதிய புல்வெளிகளை எப்போதும் பீடிக்கும் பசுக்களைப் போலப் பெண்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய மனிதர்களைப் பீடிக்கின்றனர்.(5) அசுரன் சம்பரன் கொண்டிருந்த மாயை, அசுரன் நமுசி கொண்டிருந்த மாயை, பலி அல்லது கும்பிநசி {லவணன்} கொண்டிருந்த மாயை ஆகியவற்றின் மொத்த தொகையையும் பெண்கள் கொண்டிருக்கின்றனர் {அந்த அசுரர்கள் அறிந்த மாயைகள் அனைத்தையும் பெண்களும் அறிவர்}.(6) ஆண் சிரித்தால், பெண்களும் சிரிப்பர். ஆண் அழுதால், அவர்களும் அழுவர். வாய்ப்பும், தேவையும் அமைத்தால் அவர்கள் தங்களுக்கு ஏற்பில்லாத {தங்களுக்குப் பிடிக்காத} மனிதனையும், ஏற்புடைய {இனிய} சொற்களால் வரவேற்பர்.(7) அசுரர்களின் ஆசான் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியல் கோட்பாடுகளையும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதி அறிந்த அறிவியல் கோட்பாடுகளையும், இயற்கையாகவே ஒரு பெண் கொண்டுள்ள நுண்ணறிவின் அளவுக்கு ஆழமானவையாகவோ, மிக நுட்பமானவையாகவோ கருத முடியாது. எனவே, உண்மையில், ஆண்களால் எவ்வாறு பெண்களைக் கட்டுப்படுத்த முடியும்?(8)
அவர்கள் பொய்யை உண்மையாகவும், உண்மையைப் பொய்யாகவும் தோன்றச் செய்வர். ஓ! வீரரே, நான் கேட்கிறேன், இதைச் செய்ய இயன்றவர்களை எதிர் பாலினத்தாரால் {ஆண்களால்} எவ்வாறு ஆள முடியும்?(9) ஓ! பகைவரை அழிப்பவரே, பெண்களின் புத்தியை அவதானித்தே {அவர்களின் புத்தியில் இருந்து தேடியெடுத்துத்தான்}, பிருஹஸ்பதியும், பெரும் சிந்தனையாளர்களும் அறிவியல் கோட்பாடுகளை {சாத்திரங்களைப்} படைத்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.(10) ஆண்களால் மதிப்புடன் நடத்தப்பட்டாலும், அசட்டையுடன் நடத்தப்பட்டாலும் பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்த்து அவர்களின் இதயங்களைக் கலங்கடிக்கின்றனர்[2].(11)ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வாழும் உயிரினங்கள் அறம்சார்ந்தவையாக இருக்கின்றன. இதுவே நம்மால் கேள்விப்படப்படுகிறது. (பிறகு, இஃது எவ்வாறு உண்மைகளுக்கு இணக்கமாக இருக்க முடியும்?) அன்பு, மதிப்பு ஆகியவற்றுடன் நடத்தப்படும் பெண்கள் (உயிரினங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளவர்களான இவர்கள்) ஆண்களிடம் தாங்கள் கொண்டுள்ள நடத்தைக்காக நிந்திக்கத்தகுந்தவர்களாக இருப்பதே காணப்படுகிறது.(12) அவர்களுடைய நடத்தை இவ்வாறு இருக்கும்போது, அவர்களை எந்த மனிதனால் அறக்கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்பது என் மனத்தில் பெரும் ஐயமாக நிறைகிறது.(13) ஓ! குருக்களின் தலைவரே, சாத்திரங்களால் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்குள் உண்மையில் பெண்களைக் கட்டுப்படுத்திவைக்க முடியுமா? அல்லது நாம் வாழும் காலத்திற்கு முன்பு, அவர்களைக் கட்டுப்படுத்துவதில் எவராவது உண்மையில் வென்றிருக்கிறார்களா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(14)
விபுலர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 40-விபுலர் மற்றும் தேவசர்மர் ஆகியோருடைய கதையைச் சொன்ன பீஷ்மர்; தேவசர்மர் வேள்வி செய்ய வெளிய செல்ல எண்ணியது; தமது மனைவியை இந்திரனிடம் இருந்து காக்கும்படி தமது சீடரான விபுலரிடம் சொல்லிச் சென்றது; விபுலர் தம் ஆசானின் மனைவியுடைய உடலுக்குள் புகுந்தது..
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. ஓ! குரு குலத்தோனே, ஓ! ஏகாதிபதி, பெண்கள் குறித்து நீர் சொல்வது அனைத்திலும் பொய்யென்றேதும் இல்லை.(1) இது தொடர்பாகப் பழங்காலத்தில் உயர் ஆன்ம விபுலர், பெண்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் எவ்வாறு வென்றார் என்ற பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! மன்னா, மேலும் பெரும்பாட்டனான பிரம்மனால் பெண்கள் எவ்வாறு படைக்கப்பட்டனர்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அவனால் படைக்கப்பட்டனர்? என்பதையும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஓ! மகனே, பெண்களைவிட அதிகப் பாவம் நிறைந்த வேறு எந்த உயிரினமும் கிடையாது. பெண் என்பவள் சுடர்மிக்க நெருப்பாவாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தைத்தியன் மயனால் உண்டாக்கப்பட்ட மாயை அவள். கத்தியின் கூர்முனை அவள். நஞ்சவள். பாம்பவள். நெருப்பவள். உண்மையில் இவை அனைத்துமே கலந்திருப்பவள் அவள்.(4)
மனித குலத்தில் தோன்றிய அனைவரும் அறத்தன்மை கொண்டவர்களாக இருந்ததால் இயல்பான முன்னேற்றத்தின் போக்கில் அவர்கள் அனைவரும் தேவ நிலையை அடைந்து வந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். இந்தச் சூழ்நிலை தேவர்களை அச்சுறுத்தியது.(5) எனவே, ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனிடம் சென்றனர். தங்கள் மனத்தில் இருந்ததை அவனிடம் {பிரம்மனிடம்} சொல்லிவிட்டு, கண்களைக் கீழே செலுத்தியவாறு அவர்கள் அமைதியாக அவனது முன்னிலையில் {தலைகுனிந்து} நின்று கொண்டிருந்தனர்.(6) பலமிக்கப் பெரும்பாட்டன், தேவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொண்டு, ஓர் அதர்வணச் சடங்கின் உதவியுடன் பெண்களைப் படைத்தான்.(7) ஓ! குந்தியின் மகனே, முந்தைய படைப்பில் பெண்கள் அனைவரும் அறம்சார்ந்தவர்களாக இருந்தனர். எனினும், மாயையின் துணையுடன் பிரம்மனால் இப்போது படைக்கப்பட்டவர்கள் பாவம் நிறைந்தவர்களாக இருந்தனர். பெரும்பாட்டன் {பிரம்மன்} உடல்சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கும் ஆசை அவர்களுக்கு அளித்தான்.(8)
அனுபவிக்கும் ஆசையில் மயங்கிய அவர்கள் வேறு பாலினத்தவரைத் தேடத் தொடங்கினர். பலமிக்கவனான தேவர்களின் தலைவன் காமத்தின் துணையாகக் கோபத்தைப் படைத்தான்.(9) காமம் மற்றும் கோபத்தின் சக்திக்கு வசப்பட்ட ஆடவர்கள் பெண்களின் துணையை நாடினார்கள். பெண்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட செயல்கள் என்று ஏதும் கிடையாது. இதுவே விதிக்கப்பட்ட விதியாகும்.(10) மிக வலிமையான புலன்களைக் கொண்டவர்கள் பெண்கள், பின்பற்ற வேண்டிய சாத்திரமேதுமில்லை, அவர்கள் வாழும் பொய்கள் {பொய் சொல்பவர்கள்} என்று ஸ்ருதி அறிவிக்கிறது. படுக்கைகள், இருக்கைகள், ஆபரணங்கள், உணவு, பானம், மதிக்கத்தக்க, அறம்சார்ந்த அனைத்தும் இல்லாத நிலை,(11) ஏற்பில்லாத {இனிமையற்ற} சொல் பயன்பாடு, பாலியல் துணையில் விருப்பம் ஆகியவை பிரம்மனால் பெண்களுக்கு அளிக்கப்பட்டன. ஆண்கள் கிட்டத்தட்ட அவர்களைக் கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(12)
முறையான வரையறைகளுக்குள் அவர்களைப் படைப்பாளனாலேயே {பிரம்மனாலேயே} கட்டுப்படுத்த இயலாது எனும்போது, ஆண்களைக் குறித்து என்ன சொல்வது?(13) ஓ! மனிதர்களின் தலைவா, பழங்காலத்தில் விபுலர் தமது ஆசானின் மனைவியைக் காப்பதில் எவ்வாறு வென்றார் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(14) பழங்காலத்தில் உயர்ந்த அருளைக் கொண்டவரும், பெரும் புகழைக் கொண்டவருமாகத் தேவசர்மன் என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்தார். அவர், பூமியில் ஒப்பற்ற அழகுடன் கூடியவளும், ருசி என்ற பெயருடன் கூடியவளுமாக ஒரு மனைவியைக் கொண்டிருந்தார்.(15) தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்களில் காண்போர் ஒவ்வொருவரையும் அவளுடைய அழகானது மயக்கியது. ஓ! ஏகாதிபதி, பகனைத் தண்டித்தவனும், விருத்திரனைக் கொன்றவனுமான இந்திரன், அவள் மீது குறிப்பிட்ட மயக்கத்துடனும், அவளது மேனியில் ஆசை கொண்டவனுமாக இருந்தான்.(16)
பெரும் தவசியான தேவசர்மன் பெண்களின் மனோநிலையை {இயல்பை} முழுமையாக அறிந்தவராக இருந்தார். எனவே, அவர் தமது சக்தி மற்றும் ஆற்றலில் சிறந்ததைப் பயன்படுத்தி, (அனைத்து வகைத் தீய ஆதிக்கத்தில் இருந்தும்) அவளைப் பாதுகாத்து வந்தார்.(17) அடுத்தவர் மனைவிகளின் துணையை நாடும் காரியத்தில் இந்திரன் எந்தத் தயக்கமும் கொண்டவன் அல்ல என்பதை அம்முனிவர் அறிந்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் தன் சக்தி அனைத்தையும் செலவிட்டு தன் மனைவியைப் பாதுகாத்து வந்தார்.(18) ஓ! மகனே, ஒரு காலத்தில், அந்த முனிவர் ஒரு வேள்வியைச் செய்யும் விருப்பத்தை அடைந்தார். (அவர் வீட்டில் இல்லாத போது) தமது மனைவியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார்.(19) உயர்ந்த தவத்தகுதியைக் கொண்டிருந்த அவர் இறுதியில் தாம் பின்பற்றவேண்டிய வழிமுறையைக் கண்டடைந்தார். பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், விபுலர் என்ற பெயரைக் கொண்டவரும், தமக்குப் பிடித்தவருமான சீடரை அழைத்துப் பின்வருவனவற்றைச் சொன்னார்.(20)
தேவசர்மன், “ஒரு வேள்வியைச் செய்வதற்காக நான் (சிறிது காலம்) வீட்டை விட்டுச் செல்லப் போகிறேன். தேவர்களின் தலைவன் {இந்திரன்} எப்போதும் என் ருசியின் மீது பேராசை கொண்டிருக்கிறான். எனவே, நான் இல்லாதபோது, நீ உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி அவளைப் பாதுகாப்பாயாக.(21) புரந்தரனை {இந்திரனைக்} கருத்தில் கொண்டு நீ விழிப்புடன் உன் நேரத்தைக் கடத்துவாயாக. ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, அந்த இந்திரன் பல்வேறு வேடங்களைத் தரிப்பவனாவான்” என்றார்”.(22)
பீஷ்மர் தொடர்ந்தார், “புலன்களைக் கட்டுப்படுத்தியவரும், கடுந்தவங்களில் ஈடுபடுபவரும், நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்டவரும், அறக்கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், பேச்சில் வாய்மை நிறைந்தவரும், தவசியுமான விபுலர், தமது ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டதும் “அப்படியே ஆகட்டும்” என்றார். எனினும், தமது ஆசான் புறப்படும் நேரத்தில், விபுலர் மீண்டும் இந்த வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(23,24)
விபுலர், “ஓ! முனிவரே, சக்ரன் தோன்றும்போது என்னென்ன வடிவங்களை ஏற்பான் என்பதை எனக்குச் சொல்வீராக. அவனது உடல் எவ்வகையானது? அவனது சக்தி எப்படிப்பட்டது? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றார்”.(25)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, அப்போது அந்தச் சிறப்புமிக்க முனிவர், சக்ரனின் மாயைகளை அனைத்தையும் குறித்து உயர் ஆன்ம விபுலரிடம் உண்மையில் விரிவாக எடுத்துச் சொன்னார்.(26)
தேவசர்மன், “ஓ! மறுபிறப்பாள முனிவனே, பாகனைத் தண்டித்த அந்தப் பலமிக்கவன் மாயை நிறைந்தவனாவான். தான் விரும்பும் வடிவங்களையே அவன் ஒவ்வொரு கணமும் ஏற்கிறான்.(27) சில வேளைகளில் அவன் ஒரு கிரீடத்தை அணிந்து கொண்டு, வஜ்ரதாரியாக இருக்கிறான். சில வேளைகளில் கையில் வஜ்ரத்துடன், தலையில் மகுடம் அணிந்து கொண்டு, காது குண்டலங்களால் அவன் தனைன அலங்கரித்துக் கொள்கிறான். ஒரே கணத்தில் அவன் அந்த வடிவத்தில் இருந்து ஒரு சண்டாளனின் வடிவத்தை ஏற்பான்.(28) சில வேளைகளில் அவன் தலையில் மணிமுடி தரித்தவனாகத் தோன்றுவான்; ஓ! மகனே, மிக விரைவில் அவன் சடாமுடி தரித்துக் கொண்டு, மேனியில் மரவுரி தரித்தவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வான். சில வேளைகளில் அவன் நல்ல பெரிய உடல்வடிவத்தை ஏற்கிறான். அடுத்தக் கணமே அவன் மெலிந்த உடலைக் கொண்டவனாகவும், மரவுரி உடுத்தியவனாகவும் மாறுகிறான்.(29) சில வேளைகளில் அவன் வெள்ளையாகவும், சில வேளைகளில் பச்சையாகவும், சில வேளைகளில் கருப்பு நிறம் கொண்டவனாகவும் அவன் மாறுகிறான். சில வேளைகளில் அழகற்றவனுமாகவும், சில வேளைகளில் பேரழகு கொண்டவனாகவும் அவன் மாறுகிறான். சில வேளைகளில் இளைஞனாகவும், சில வேளைகளில் முதிர்ந்தவனாகவும் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.(30)
சில வேளைகளில் ஒரு பிராமணனாகவும், சில வேளைகளில் க்ஷத்திரியனாகவும், சில வேளைகளில் வைசியனாகவும், சில வேளைகளில் ஒரு சூத்திரனாகவும் அவன் தோன்றுகிறான். உண்மையில் அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, மேன்மையான தந்தை, தாழ்ந்த வகைத் தாய், அல்லது தாழ்ந்தவகைத் தந்தை, மேலான வகைத் தாயின் மூலம் தூய்மையற்ற வகையில் தோன்றிய பிறவியாகிறான்.(31) சில வேளைகளில் கிளியாகவும், சில வேளைகளில் காக்கையாகவும், சில வேளைகளில் அன்னப்பறவையாகவும், சில வேளைகளில் கோகிலமாகவும் {குயிலாகவும்} அவன் தோன்றுகிறான். சிங்கம், புலி அல்லது யானையின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(32) சில வேளைகளில் தேவனாகவும், சில வேளைகளில் தைத்தியனாகவும், சில வேளைகளில் மன்னனின் வேடத்தையும் அவன் ஏற்கிறான். சில வேளைகளில் பருமனாகவும், குண்டாகவும், சில வேளைகளில் வாயுக் கோளாறால் முடங்கிய அங்கங்களைக் கொண்டவனாகவும், சில வேளைகளில் பறவையாகவும், சில வேளைகளில் கோரமான பண்புகளைக் கொண்ட ஒருவனாகவும் அவன் தோன்றுகிறான்.(33) சில வேளைகளில் அவன் நான்கு கால் உயிரினமாகவும் தோன்றுகிறான். எவ்வடிவத்தையும் ஏற்கவல்ல அவன், சில வேளைகளில் புத்தியிழந்த மூடனாகவும் தோன்றுகிறான். கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(34)
ஓ! விபுலா, அவன் எண்ணற்ற வேடங்களை ஏற்கவல்லவனாக இருப்பதன் விளைவால் யாராலும் அவனை அடையாளங்காண முடியாது. இந்த அண்டத்தைப் படைத்தவனாலேயே கூட அவற்றைச் செய்ய முடியாது.(35) அவன் வேண்டிய போதும் புலப்படாதவனாகி தன்னை மறைத்துக் கொள்கிறான். அறிவுக்கண்ணைத் தவிர வேறு எதனாலும் பார்க்க முடியாதவனாகிறான். தேவர்களின் தலைவன் {இந்திரன்} சில வேளைகளில் காற்றாகவும் மாறுகிறான்.(36) பாகனைத் தண்டித்தவன் இந்த வேடங்களை எப்போதும் ஏற்பான். எனவே, ஓ! விபுலா, மெலிந்த இடை கொண்டவளான என் மனைவியைப் பெருங்கவனத்துடன் பாதுகாப்பாயாக.(37) ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, வேள்விக்காக வைக்கப்பட்டிருக்கும் ஹவிஸை நக்கும் ஓர் இழிந்த நாயைப் போல அந்தத் தேவர்களின் தலைவன் என் மனைவியைக் கெடுத்துவிடாமல் அனைத்து வகையிலும் கவனம் செலுத்துவாயாக” என்றார் {தேவசர்மன்}.(38)
உயர்ந்த அருளைக் கொண்ட முனிவரான தேவசர்மன், ஓ! பாரதர்களின் தலைவா, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஒரு வேள்வியைச் செய்ய எண்ணி தன் வசிப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(39) தன் ஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட விபுலர் தமது மனத்திற்குள், “நான் அந்தப் பலமிக்கத் தேவர்களின் தலைவனிடமிருந்து இந்தப் பெண்மணியை அனைத்து வகையிலும் நிச்சயம் காப்பேன்.(40) ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன? என் ஆசானின் மனைவியைக் காக்குங்காரியத்தில் என்னால் என்ன செய்ய முடியும்? தேவர்களின் தலைவன் பெரும் மாயசக்திகளைக் கொண்டவனாவான். பெருஞ்சக்தியைக் கொண்ட அவனைத் தடுப்பது மிகக் கடினமாகும்.(41) இந்திரனால் எண்ணற்ற வடிவங்களை ஏற்க முடியும் என்பதால் நமது ஆசிரமத்தை அடைப்பதாலோ, முற்றத்தில் வேலியடைப்பதாலோ, அவனை வெளியே நிறுத்த முடியாது.(42)
காற்றின் வடிவத்தை ஏற்றுத் தேவர்களின் தலைவனால் எனதாசானின் மனைவியை வலிய அபகரிக்க முடியும். எனவே, (யோக சக்தியின் மூலம்) இந்தப் பெண்மணிக்குள் நுழைந்து, நான் அங்கேயே இருப்பதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும்.(43) என் ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் என்னால் அந்தப் பெண்ணைப் பாதுகாக்க முடியாது, ஏனெனில், பாகனைத் தண்டித்த பலமிக்கவன், தான் விரும்பிய வடிவத்தை ஏற்கவல்லவன் என்பதை நான் கேட்டிருக்கிறேன்.(44) எனவே, என் யோக சக்தியின் மூலம் நான் இவளை இந்திரனிடம் இருந்து காக்கப்போகிறேன். என் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நான் இந்தப் பெண்மணியின் உடலுக்குள் நுழையப் போகிறேன்.(46) என் ஆசான் திரும்பிவரும்போதும் அவரது மனைவி கெட்டுப்போனதைக் கண்டால், கோபத்தால் அவர் நிச்சயம் என்னைச் சபிப்பார். பெரும் தவசியான அவர் ஆன்மப் பார்வையையும் கொண்டவராவார்.(46)
தேவர்களின் தலைவன் பெரும் மாயா சக்திகளுடன் கூடியவனாக இருப்பதால், வேறு பெண்களை மனிதர்கள் காப்பதைப் போல இந்தப் பெண்ணைக் காக்க முடியாது. ஐயோ, நான் இருக்கும் சூழ்நிலை நெருக்கடிமிக்கதாய் இருக்கிறதே.(47) என் ஆசானின் ஆணைக்கு நான் கீழ்ப்படி வேண்டும். எனவே, நான் என் யோக சக்தியின் மூலம் அவளைப் பாதுகாத்தால் அக்காரியம் அற்புதமான ஒன்றாய் அனைவராலும் கருதப்படும்.(48) என் யோக சக்தியின் மூலம் நான் என் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் புகப் போகிறேன். தாமரையில் உள்ள நீர்த்துளி இலையை நனைக்காதிருப்பதைப் போல, நான் அவளுக்குள் இருந்தாலும், அவளது மேனியைத் தீண்டாமல் இருப்பேன்.(49) ஆசையின் கறையில் இருந்து விடுபட்டவனாக நான் இருந்தால், நான் செய்யும் காரியத்தால் எந்தக் களங்கமும் உண்டாகாது. ஒரு பயணி, தன் பயணத்தின் ஊடாக (சற்று நேரம்) வெற்று மாளிகையில் வசிப்பதைப் போலவே,(50) நானும் என் ஆசானுடைய மனைவியின் உடலில் இன்று வசிக்கப்போகிறேன். உண்மையில், யோகத்தில் குவிந்த மனத்துடன் நான் இன்று இந்தப் பெண்ணின் உடலில் வசிக்கப் போகிறேன்” என்று நினைக்கத் தொடங்கினார் {விபுலர்}.(51)
இந்த அறக் காரியங்களைச் சிறப்பாகக் கருத்தில் கொண்டு, தமது ஆசானும் தாமும் பேரளவில் கொண்டுள்ள தவத்தில் பார்வையைச் செலுத்தி, வேதங்கள் அனைத்தையும் சிந்தித்து,(52) (தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக) யோக சக்தியின் மூலம் பெண்ணின் மேனிக்குள் நுழைந்து அவளைப் பாதுகாப்பது குறித்து மனத்தில் ஒரு தீர்மனத்தை அடைவதில் அந்தப் பிருகு குல விபுலர் பெருங்கவனம் கொண்டார். ஓ! ஏகாதிபதி, அவர் என்ன செய்தார் என்று இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(53) பெருந்தவங்களைக் கொண்ட விபுலர், குற்றமற்ற பண்புகளுடன் குடிசையில் அமர்ந்திருந்த தமது ஆசானுடைய மனைவியின் அருகில் அமர்ந்தார். பிறகு, அறம் மற்றும் வாய்மையில் அவளை நிலை நிறுத்துவதற்காக விபுலர் அவளிடம் பேசத் தொடங்கினார்.(54) விபுலர், தமது கண்களை {பார்வையை} அவளுடைய கண்களில் செலுத்தி, அவளது பார்வைப் புலனில் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்களுடன், தம் பார்வையின் ஒளிக்கதிர்களைக் கலந்து, காற்று எனும் பூதம், வெளி, அல்லது ஆகாயம் என்ற பூதத்துக்குள் நுழைவதைப் போலவே அந்தப் பெண்ணின் உடலுக்குள் (நுட்பமான வடிவில்) நுழைந்தார்.(55) விபுலர், தம் கண்களால் அவளுடைய கண்களையும், தம் முகத்தால் அவளுடைய முகத்தையும் ஊடுருவி, அவளுக்குள் புலப்படாமல் அவளது நிழலைப் போலவே அசைவற்றிருந்தார்.(56) இந்திரனிடம் இருந்து அவளைப் பாதுகாக்கும் நோக்கில் விபுலர் அவளது உடலின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்தியபடியே அவளுக்குள் தொடர்ந்து வசித்தார். அந்தப் பெண் இது குறித்து அறியாமல் இருந்தாள்.(57) ஓ! ஏகாதிபதி, இவ்வகையில் விபுலர், தமது உயர் ஆன்ம ஆசான் வேள்வி செய்துவிட்டுத் திரும்பி வரும் வரை அந்தப் பெண்ணை இவ்வாறே காப்பதில் தொடர்ந்தார்” என்றார் {பீஷ்மர்}.(58)
நாணி மறைந்த இந்திரன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 41-விபுலர் ருசி தேவியின் உடலுக்குள் இருந்த போது ஆசிரமத்திற்கு வந்த இந்திரன்; ருசியின் உடலுக்குள் இருந்து அவளது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திய விபுலர்; இவற்றை ஞானக்கண்ணால் கண்ட இந்திரன்; விபுலரின் எச்சரிக்கை; இந்திரன் நாணி மறைந்தது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு நாள் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தெய்வீக அழகுடன் கூடிய ஒரு வடிவத்தை ஏற்று, தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இறுதியாக வாய்த்ததென எண்ணி அந்த முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(1) ஓ! மன்னா, உண்மையில் அந்த இந்திரன் ஒப்பற்ற அழகுடன் கூடியதும், பெண்களைப் பெரிதும் மயக்கக்கூடியதும், மிக இனிமையானதுமான ஒரு வடிவத்தை ஏற்று, அந்தத் தவசியின் {தவசி தேவசர்மனின்} ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(2) அமர்ந்திருக்கும் நிலையில் இருப்பதும், மரத்தைப் போல அசையாமல் இருப்பதும், பார்வையற்ற விழிகளைக் கொண்டதும், துணியில் வரையப்பட்ட படத்தைப் போன்ற விபுலரின் உடலைக் கண்டான்.(3) மேலும் அவன், மிக அழகிய கடைக்கண்கள், சிறுத்த இடை, மற்றும் பருத்த முலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருசி அங்கே அமர்ந்திருப்பதையும் கண்டான். அவளது கண்கள் தாமரை இதழ்களைப் போல நீளமாகவும், பெரியதாகவும் இருந்தன, அவளது முகம் முழு மதியைப் போல அழகாகவும், இனிமையாகவும் இருந்தது.(4)
அந்த வேடத்தில் வந்திருக்கும் இந்திரனைக் கண்ட அந்தப் பெண்மணி (ருசி), எழுந்து அவனை வரவேற்க விரும்பினாள். அவனது ஒப்பற்ற அழகால் ஆச்சரியத்தால் தூண்டப்பட்ட அவள், அவன் யார் என்பதைக் கேட்க விரும்பினாள்.(5) ஓ! மன்னா, அவள் எழும்பி அவனை வரவேற்க விரும்பினாலும், அவளுக்குள் வசித்து வந்த விபுலரால் அவளது அங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டதால், அவளால் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை. உண்மையில் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவளால் நகர முடியவில்லை.(6) அப்போது தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவளிடம் இனிய குரலில் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசினான்.(7) உண்மையில் அவன், “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நான் இந்திரன், உனக்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! இனிய பெண்ணே, உன் நினைவின் மூலம் காம தேவனால் நான் பீடிக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிவாயாக. ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, நான் உன்னிடம் வந்திருக்கிறேன். காலம் கடந்து செல்கிறது” என்றான்.(8)
இந்திரனால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் தவசி விபுலரால் கேட்கப்பட்டது. தமது ஆசான் மனைவியின் உடலுக்குள் இருந்த அவர், நேரும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.(9) களங்கமில்லா அழகுடைய அப்பெண் (ருசி), இந்திரன் சொன்னதைக் கேட்டாலும், தேவர்கள் தலைவனை வரவேற்கவோ, கௌரவிக்கவோ அவளால் எழ முடியவில்லை. விபுலரால் அவளது புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் மறுமொழியாக அவளால் ஒரு சொல்லையும் சொல்ல இயலவில்லை.(10) வலிமையும், சக்தியும் கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்து {விபுலர்}, தமது ஆசான் மனைவியின் உடல் தரும் குறியீடுகளைக் கொண்டு, அவள் இந்திரனை அன்புடன் வரவேற்க விரும்பாமலில்லை என்று தீர்மானித்து, தமது யோக சக்திகளை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தி அவளது அங்கங்கள் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தினார்.(11) சச்சியின் தலைவன் {இந்திரன்}, கலக்கத்திற்கான எந்தக் குறியீட்டையும் மேனியில் காட்டாமல் அமர்ந்திருக்கும் அவளைக் கண்டு நாணமடைந்து, தன் கணவரின் சீடனுடைய யோக சக்தியின் மூலம் மயக்கத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் மீண்டும் பேசினான்.(12)
{இந்திரன்}, “ஓ! இனிய பெண்ணே, வா, வருவாயாக” என்றான். அப்போது அந்தப் பெண் {ருசி} அவனுக்கு {இந்திரனுக்குப்} பதிலளிக்க முயற்சி செய்தாள். எனினும், அவள் சொல்ல எண்ணிய சொற்களை விபுலர் கட்டுப்படுத்தினார்.(13) எனவே, (விபுலரின் ஆதிக்கத்தில் இருந்த) அவளது உதடுகள் உதிர்த்த சொற்கள் உண்மையில் “நீ இங்கு வந்த காரணமென்ன?” என்பதாகும். நிலவு போன்று அழகுடையவளாக இருந்த அவளது வாயில் இருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகள் இலக்கணச் சுத்தமாக இருந்தன[1].(14) வேறொருவரின் ஆளுகைக்குள் இருந்த அவள் இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், அவற்றைச் சொன்னதற்காக வெட்கப்பட்டாள். அவள் சொன்னதைக் கேட்டதும் புரந்தரன் உற்சாகத்தை இழந்தான்.(15) ஓ! ஏகாதிபதி, அந்த எதிர்பாராத விளைவைக் கண்டவனும், ஆயிரம் கண்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான தேவர்களின் தலைவன் அனைத்தையும் தன் ஆன்மப் பார்வையால் கண்டான்.(16)அவன் அந்தப் பெண்ணின் உடலுக்குள் இருக்கும் தவசியைக் கண்டான். உண்மையில், கண்ணாடியில் பிரதிபிம்பம் இருப்பது போலத் தன் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் அந்தத் தவசி இருந்தார்.(17) ஓ! ஏகாதிபதி, பயங்கரத் தவ வலிமை கொண்ட அந்தத் தவசியைக் கண்ட புரந்தரன், முனிவரின் சாபத்திற்கு அஞ்சி நடுக்கமடைந்தான்.(18) அப்போது, உயர்ந்த தவ வலிமையைக் கொண்ட விபுலர், தமது ஆசானுடைய மனைவியின் உடலைவிட்டு, அதன் அருகில் இருந்த தன் உடலுக்குத் திரும்பினார். பிறகு, பீதியடைந்திருந்த இந்திரனிடம் அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)
விபுலர் {இந்திரனிடம்}, “ஓ! தீய ஆன்மா கொண்ட புரந்தரா, ஓ! புலனடக்கம் இல்லாத பாவம் நிறைந்த மனத்தைக் கொண்டோனே, தேவர்களோ, மனிதர்களோ உன்னை நெடுங்காலம் வழிபடமாட்டார்கள்.(20) கௌதமர் கொடுத்த சாபத்தின் விளைவால், உன் மேனி ஆயிரம் பாலினக் குறிகளுடன் {பெண்குறிகளுடன்} சிதைவடைந்ததையும், அம்முனிவரின் கருணையால் அவை கண்களாக மாற்றப்பட்டதையும் மறந்து போனாயோ? அஃது உன் நினைவில் இல்லையா?(21) நீ அதீத மூட புத்தி கொண்டவன் என்பதையும், தூய்மையற்ற ஆன்மாவைக் கொண்டவன் என்பதையும், நிலையற்ற மனத்தைக் கொண்டவன் என்பதையும் நான் அறிவேன். ஓ! மூடா, இந்தப் பெண்மணி என்னால் பாதுகாக்கப்படுகிறாள் என்பதை அறிவாயாக. ஓ! இழிந்த பாவியே, எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்வாயாக.(22) ஓ! மூட ஆன்மாவைக் கொண்டவனே, நான் இன்று என் சக்தியால் உன்னைச் சம்பலாக எரிக்கப் போவதில்லை. உண்மையில், நான் உன்னிடம் கருணையால் நிறைந்திருக்கிறேன். ஓ! வாசவா, எனவே நான் உன்னை எரிக்காமலிருக்கிறேன்.(23) பெரும் நுண்ணறிவைக் கொண்ட என் ஆசான் பயங்கர வலிமையைக் கொண்டவராவார். அவர் பாவம் நிறைந்தவனான உன்னைக் கண்டால், கோபத்தால் சுடர்விடும் தமது கண்களைக் கொண்டு இன்றே உன்னை எரித்துவிடுவார்.(24) ஓ! சக்ரா, இது போல மீண்டும் செய்யாதே. பிராமணர்கள் உன்னால் மதிக்கப்பட வேண்டும். பிராமணர்களின் வலிமையால் பீடிக்கப்படுவதன் மூலம் உன் பிள்ளைகள் மற்றும் ஆலோசகர்களுடன் சேர்ந்து அழிவடையாமல் இருப்பாயாக.(25) நீ அழிவற்றவன் என நினைத்து இது போல விரும்பியவாறு செயல்படுகிறாய். பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. தவத்தால் அடையப்பட முடியாதது எதுவும் கிடையாது” என்றார் {விபுலர்}”.(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம விபுலரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், எதுவும் சொல்லாமல் வெட்கத்தில் மூழ்கி, தன்னை {புலப்படாதவனாக} மறைத்துக் கொண்டான்.(27) அவன் சென்ற ஒரு கணத்தில் உயர்ந்த தவத்தகுதியைக் கொண்ட தேவசர்மன், தாம் நினைத்த வேள்வி நிறைவேற்றி விட்டுத் தமதாசிரமத்திற்குத் திரும்பினார்(28) ஏற்புடைய செயலைச் செய்திருந்த விபுலர், தமது ஆசான் திரும்பி வந்ததும், இந்திரனின் சதியில் இருந்து தம்மால் பாதுகாக்கப்பட்டவளும், களங்கமற்ற அழகைக் கொண்டவளுமான அவரது {தேவசர்மனின்} மனைவியை ஒப்படைத்தார்.(29) அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், தமது ஆசானிடம் பெரும் மதிப்பு கொண்டவருமான விபுலர், அவரை வணங்கி, அச்சமற்ற இதயத்துடன் அவரது முன்னிலையில் நின்றார்.(30)
அவரது ஆசான் சற்றே ஓய்வெடுத்து, தமது மனைவியுடன் சேர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்த போது, விபுலர் அவரிடம் சக்ரன் செய்தது அனைத்தையும் சொன்னார்.(31) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்த முதன்மையான முனிவர் {தேவசர்மன்}, விபுலரின் சொற்களைக் கேட்டு, அவரது ஒழுக்கம், இயல்பு, தவம் மற்றும் நோன்புகளில் மிகவும் நிறைவடைந்தார்.(32) விபுலரின் ஆசானும், பலமிக்கவருமான தேவசர்மன், தம்மிடம் அவர் {விபுலர்} கொண்ட நடத்தை மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டும், அவரது அறவுறுதியைக் கவனித்தும், “நன்று, நன்று” என்று சொன்னார்.(33)
உயர் ஆன்ம தேவசர்மன், அறம்சார்ந்த தமது சீடரை நல்வரவு சொல்லி வரவேற்று, ஒரு வரத்தைக் கொடுத்து அவரைக் கௌரவித்தார்.(34) உண்மையில், அறவுறுதி கொண்ட விபுலர், அறவுறுதியில் இருந்து ஒருபோதும் தவறாத வரத்தைத் தமது ஆசானிடம் இருந்து பெற்றார். பிறகு தமது ஆசானால் விடைகொடுத்து அனுப்பப்பட்டுத் தமது வசிப்பிடத்திற்குச் சென்று மிகக் கடுமையான தவங்களைப் பயின்றார்.(35) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனிடம் {இந்திரனிடம்} முற்றிலும் அச்சமற்று, அந்த நாளில் இருந்து தமது மனைவியுடன் அந்தத் தனிமையான காட்டில் வாழ்ந்து வந்தார்” {என்றார் பீஷ்மர்}.(36)
விபுலரின் வரம்புமீறல் ! – அநுசாஸனபர்வம் பகுதி – 42-பதிவின் சுருக்கம்: கடுந்தவங்களைச் செய்த விபுலர்; ருசி தேவிக்குக் கிட்டிய தெய்வீக மலர்கள்; சம்பையில் உள்ள தன் சகோதரியின் வசிப்பிடத்திற்குச் சென்ற ருசி; சகோதரி அம்மலர்களை விரும்பவே ஆசானின் ஆணையின் பேரில் மலர் கொணரச் சென்ற விபுலர்; மலர் கொணர்ந்து திரும்புகையில் விபுலர் கண்ட காட்சிகளும், கேட்ட உறுதிமொழிகளும்..
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விபுலர், தமது ஆசானின் ஆணையை நிறைவேற்றிய பிறகு, மிகக் கடும் தவங்களைச் செய்தார். பெரும் சக்தியைக் கொண்ட அவர் இறுதியாகப் போதுமான தவத்தகுதியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார்.(1) தாம் செய்திருக்கும் சாதனையில் செருக்கடைந்த அவர், ஓ! ஏகாதிபதி, தமது சாதனைக்கான பெரும் புகழால் அனைவராலும் மதிக்கப்பட்டு அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் உலகத்தில் திரிந்து கொண்டிருந்தார்.(2) அந்தப் பலமிக்கப் பார்க்கவர், தமது சாதனையாலும், கடுந்தவங்களாலும் இம்மையையும், மறுமையையும் தாம் வென்றுவிட்டதாகக் கருதினார்.(3)
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சில காலம் கடந்ததும், ருசியின் சகோதரி செய்ய வேண்டிய கொடையளிக்கும் விழாவுக்கான {ஆதான விழாவுக்கான} தருணம் வந்தது. அபரிமிதமான செல்வமும், தானியங்களும் அதில் கொடுக்கப்பட வேண்டும்[1].(4) அதே வேளையில், பேரழகுடன் கூடிய ஒரு தெய்வீகக் காரிகை வானத்தினூடே சென்று கொண்டிருந்தாள்.(5) அவள் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது அவளது உடலில் இருந்து சில மலர்கள் பூமியில் விருந்தன. தெய்வீக நறுமணம் கமழ்ந்த அந்த மலர்கள் ருசியின் கணவருடைய {தேவர்சர்மனுடைய} ஆசிரமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் விழுந்தன.(6) தரையில் சிதறிக் கிடந்த அந்த மலர்கள், அழகிய கண்களைக் கொண்ட ருசியால் எடுக்கப்பட்டன. விரைவில் அங்க நாட்டில் இருந்து ருசிக்கு ஓர் அழைப்பு வந்தது {தூதன் வந்தான்}.(7)மேற்குறிப்பிடப்பட்ட ருசியின் சகோதரியுடைய பெயர் பிரபாவதியாகும். அவள் அங்கர்களின் ஆட்சியாளனான சித்திரரதனின் மனைவியாக இருந்தாள்[2].(8) மிக மேன்மையான நிறத்தைக் கொண்டவளான ருசி, அந்த மலர்களைத் தன் கூந்தலில் சூடிக் கொண்டு, தான் அழைக்கப்பட்ட அங்கர்களின் மன்னனுடைய அரண்மனைக்குச் சென்றாள்.(9) அவளது கூந்தலில் இருந்த மலர்களைக் கண்டவளும், அழகிய கண்களைக் கொண்டவளுமான அங்கர்களின் ராணி, தன் சகோதரியிடம் தனக்கும் சிலவற்றைத் தருமாறு கேட்டாள்.(10)
அழகிய முகத்தைக் கொண்ட ருசி, தன் சகோதரியின் கோரிக்கையைத் தன் கணவனிடம் {தேவர்சர்மனிடம்} விரைவாகத் தெரிவித்தாள். முனிவர் தமது மனைவின் சகோதரியுடைய {கொழுந்தியுடைய} வேண்டுதலை ஏற்றுக் கொண்டார்.(11) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மன், தமது சீடரான விபுலரைத் தம் முன் அழைத்து, “செல், செல்வாயாக” என்று சொல்லி அவரிடம் அதே வகையைச் சார்ந்த சில மலர்களைக் கொண்டு வரச் சொன்னார்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எந்தத் தயக்கமும் இல்லாமல் தமது ஆசானின் ஆணையை ஏற்றுக் கொண்ட அந்தப் பெருந்தவசியான விபுலர், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்துவிட்டு, ருசி தேவி தனது சகோதரி ஆசைப்பட்ட மலர்களை எங்கிருந்து எடுத்திருந்தாளோ அதே இடத்திற்குச் சென்றார்.(13) ஆகாயத்தில் இருந்து மலர்கள் விழுந்த (ருசியால் எடுக்கப்பட்ட மலர்கள் விழுந்த) இடத்திற்கு வந்த விபுலர், அங்கே இன்னும் சில மலர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். அந்த மலர்கள் அனைத்தும், தாங்கள் வளர்ந்த செடியில் இருந்து புதிதாகப் பறிக்கப்பட்டவை போல இருந்தன. அவற்றில் எதுவும் கொஞ்சம்கூட வாடாமல் இருந்தன.(14)
அவர் பேரழகுடைய அந்தத் தெய்வீக மலர்களை எடுத்துக் கொண்டார். ஓ! பாரதா, தெய்வீக நறுமணத்தைக் கொண்ட அம்மலர்களைத் தமது கடும் தவங்களின் விளைவால் விபுலர் அடைந்தார்.(15) தமது ஆசானின் ஆணைகளை நிறைவேற்றி, அவற்றை அடைந்த அவர் பெரும் மகிழ்ச்சியுடன் சம்பக மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சம்பை {சம்பா} நகரத்திற்கு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.(16) அவ்வாறு அவர் செல்லும்போது வழியில் இரண்டு மனிதர்கள் தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு வட்டமாக வலம் வந்து கொண்டிருந்தனர்.(17) அவர்களில் ஒருவன் அடிகளை வேகமாக வைத்து, அந்த இயக்கத்தின் இசைவைக் கெடுத்தான். ஓ மன்னா, இதன் காரணமாக அவர்களுக்குள் ஒரு சச்சரவு நேர்ந்தது.(18)
உண்மையில் அவர்களில் ஒருவன், “நீ வேகமாக அடி எடுத்து வைத்தாய்” என்று அடுத்தவனைக் குற்றஞ்சாட்டினான். மற்றவனோ, “இல்லை” என்றான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ஒவ்வொருவனும் அடுத்தவர் மறுத்ததை உறுதி செய்தும், அடுத்தவர் உறுதி செய்ததை மறுத்தும், தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தான்.(19) இவ்வாறு பெரும் நம்பிக்கையுடன் அவர்களுக்குள் சச்சரவு நடந்து வந்தபோது, அவர்களுக்கு மத்தியில் ஓர் உறுதிமொழி கேட்கப்பட்டது. உண்மையில், அவர்களில் ஒவ்வொருவனும் திடீரென விபுலரின் பெயரைச் சென்னான்.(20) அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட உறுதிமொழி இதுதான்: “நம்மிருவரில் எவன் பொய் சொல்கிறானோ, அவன் மறுமையில் மறுபிறப்பாளனான விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்” என்றனர்.(21)
அவர்களுடைய இச்சொற்களைக் கேட்டதும் விபுலரின் முகம் உற்சாகத்தை இழந்தது. அவர் தமக்குள், “நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். இந்த இருவருக்கிடையிலான சச்சரவு கடுமையாக இருக்கிறது. மேலும் இஃது எனக்குத் துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. உயிரினங்கள் அனைத்திற்காகவும் மறுமையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மிகவும் துன்பம் நிறைந்த கதியை நான் அடைவேன் என்று இவர்கள் இருவரும் குற்றஞ்சுமத்தும் வகையில் நான் என்ன பாவம் செய்தேன்?” என்று நினைத்தார்.(22,23) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, விபுலர், இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே, தமது தலையைத் தொங்கவிட்டு, உற்சாகமிழந்த மனத்துடன் தாம் என்ன பாவம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கத் தொடங்கினார்.(24)
அவர் தமது வழியில் சிறிது தொலைவைக் கடந்து சென்றதும் தங்கம் மற்றும் வெள்ளியாலான பகடைக் காய்களைக் கொண்டு சூதாடிக் கொண்டிருக்கும் ஆறு மனிதர்களைக் கண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் உடலில் ஏற்பட்டிருக்கும் மயிர்ச் சிலிர்ப்புடன் ஆவலோடு சூதாடுபவர்களாகத் தெரிந்தனர். (அவர்களுக்கு மத்தியில் சச்சரவு ஏற்பட்ட போது) அவர்களும் ஏற்கனவே முதல் இருவர் ஏற்ற உறுதிமொழியைப் போலவே ஏற்பதை விபுலர் கேட்டார். உண்மையில், அவர்களது சொற்களும் விபுலரை அதே வகையிலேயே குறிப்பிட்டன.(25,26) {அவர்கள்}, “நம்மில் எவன் பேராசையால் வழிநடத்தப்பட்டு முறையற்ற வழியில் செயல்படுகிறானோ அவன் மறுமையில் விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்” {என்றனர்}.(27)
எனினும், ஓ! குருகுலத்தோனே, எவ்வளவுதான் முயன்று நினைவுகூர்ந்தாலும், தமது சிறு வயதில் இருந்து கூடத் தாம் அத்துமீறலேதும் செய்ததாக விபுலரால் நினைவுகொள்ள முடியவில்லை.(28) உண்மையில், நெருப்புக்கு மத்தியில் உள்ள மற்றொரு நெருப்பைப் போல அவர் எரியத் தொடங்கினார். அந்தச் சாபத்தைக் கேட்டு அவரது மனம் துயரால் எரிந்தது.(29) இத்துன்ப நிலையிலேயே நீண்ட நேரம் கடந்து சென்றது. இறுதியாக, இந்திரனின் சதியில் இருந்து தமது ஆசானின் மனைவியைப் பாதுகாக்கத் தாம் மேற்கொண்ட வழிமுறைகளை நினைவுகூர்ந்தார்.(30) {அவர்}, “அங்கத்தோடும் அங்கமும், முகத்தோடு முகமும் வைத்து நான் அந்தப் பெண்ணின் உடலில் ஊடுருவினேன். இவ்வழியில் நான் செயல்பட்டிருந்தாலும் நான் இந்த உண்மையை என் ஆசானிடம் சொல்லவில்லையே” {என்று நினைத்தார்}.(31)
ஓ! குரு குலத்தோனே, விபுலர் தம்மிடம் கண்ட வரம்புமீறல் இதுவே. உண்மையில், ஓ! அருளப்பட்ட ஏகாதிபதி, அதுதான் அவர் செய்த அத்துமீறல் என்பதில் ஐயமில்லை.(32) அவர் சம்பை நகரத்திற்குத் திரும்பி தமது ஆசானிடம் மலர்களைக் கொடுத்தார். மூத்தோரிடமும், பெரியோரிடமும் அர்ப்பணிப்புமிக்க அவர், தமது ஆசானை முறையான வடிவில் வழிபட்டார்” என்றார் {பீஷ்மர்}.(33)
விபுலரின் கதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 43-விபுலர் செய்த வரம்புமீறலை விளக்கிச் சொன்ன தேவசர்மன்; ஆசானால் மீட்கப்பட்ட விபுலர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பெருஞ்சக்திமிக்கவரான தேவசர்மன், பணி செய்து திரும்பி வந்த தமது சீடரைக்{விபுலரைக்} கண்டு சொன்ன சொற்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(1)
தேவசர்மன், “ஓ! விபுலா, ஓ! சீடா, பெருங்காட்டில் நீ பயணித்தபோது கண்டதென்ன? ஓ! விபுலா, நீ யாவரைக் காண்டாயோ அவர்கள் உன்னை அறிவர். ருசியைப் பாதுகாக்கும் காரியத்தில் நீ எவ்வாறு செயல்பட்டாய் என்பதை நானும், என் மனைவியான ருசியும் அறிவோம்” என்றார்.(2)
விபுலர், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, நான் முதலில் கண்ட அந்த இருவர் யாவர்? அதற்கடுத்து நான் கண்ட அறுவர் யாவர்? அவர்கள் யாவரும் என்னை அறிந்திருந்தனர். உண்மையில், உமது பேச்சினூடாகக் குறிப்பாகச் சொல்லும் அவர்கள் யாவர்?” என்று கேட்டார்.(3)
தேவசர்மன் {விபுலரிடம்}, “ஓ! மறுபிறப்பாளா, நீ முதலில் கண்ட இருவர் பகலும், இரவும் ஆவர். அவர்கள் இடையறாமல் ஒரு வட்டத்தைப் போல நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும் உன் குற்றத்தின் வரம்புமீறலை அறிவார்கள்.(4) ஓ! கல்விமானான பிராமணா, உற்சாகமாகப் பகடையாடிக் கொண்டிருப்பவர்களாக (எண்ணிக்கையில் அறுவராக) நீ கண்ட வேறு மனிதர்கள் பருவ காலங்களாவர் {ருதுக்களாவர்}. அவர்களும் உன் வரம்புமீறல்களை அறிந்திருக்கின்றனர்.(5) கமுக்கத்தில் பாவமிழைத்த எந்தப் பாவியும், தன் வரம்புமீறலைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும், வேறு எவரும் அறியவில்லை என்பதாகவும் ஓர் உறுதியான எண்ணத்தை வளர்க்கக்கூடாது.(6) ஒரு மனிதன் கமுக்கத்தில் செய்யும் பாவச் செயலை பருவகாலங்களும் {ருதுக்களும்}, பகலும், இரவும் எப்போதும் காண்கின்றன.(7)
(நீ செய்த காரியத்திற்கு) பாவிகளுக்கான உலகமே உனதாகும். நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல்லவில்லை. உன் பாவத்தை யாரும் அறியவில்லை என்பதே உன் நம்பிக்கையாக இருந்தது, அந்தத் தீர்மானமே உன்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(8) நீ உன் ஆசானிடம் மொத்த உண்மையையும் சொல்லவில்லை; ஒரு குறிப்பிட்ட பகுதியை அவரிடம் மறைத்தாய். நீ கேட்கும் வகையில் இவ்வாறு பேசிய பருவகாலங்களும், பகலும், இரவும், இந்த உன் வரம்புமீறலை உனக்கு நினைவூட்டுவது முறை என நினைத்தன.(9) பகல், இரவு மற்றும் பருவகாலங்கள், ஒரு மனிதன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் எப்போதும் அறிபவையாக இருக்கின்றன.(10) ஓ! மறுபிறப்பாளா, தவறு செய்ததாக அஞ்சி நீ என்னிடம் சொல்லத் துணியாததை முழுதும் அறிந்தவர்களாக இருந்ததால் அவர்கள் இவ்வழியில் உன்னிடம் பேசினார்கள்.(11) இதன் காரணமாகப் பாவிகளுக்கான உலகங்களே உனதாகும். நீ செய்ததை என்னிடம் நீ சொல்லவில்லையே.(12)
ஓ! மறுபிறப்பாளா {விபுலா}, இயற்கையாகவே பாவம் நிறைந்த இயல்பைக் கொண்ட என் மனைவியைப் பாதுகாக்க முழு வல்லமையுடன் நீ இருந்தாய். நீ செய்த காரியத்தில் பாவமேதும் இல்லை. இதனாலேயே நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன்.(13) ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நீ தீச்செயலேதும் செய்திருந்தால் எத்தாமதமுமின்றி உன்னை மொத்தமாகச் சபித்திருப்பேன்.(14) பெண்கள் ஆண்களுடன் கலக்கிறார்கள். ஆண்கள் இத்தகைய கலவியை மிகவும் விரும்புகின்றனர். எனினும், நீ வேறுபட்ட ஆவலுடன் {பாதுகாக்கும் நோக்கத்துடனே} என் மனைவியைப் பாதுகாத்தாய்[1]. நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தால், நிச்சயம் ஒரு சாபம் கிட்டியிருக்கும். இதையே நான் நினைக்கிறேன்.(15) ஓ! மகனே, நீ என் மனைவியைப் பாதுகாத்தாய். நீ செய்த விதமும், நீ சொல்லியிருந்தால் எவ்வாறு அறிவேனோ அவ்வாறே என்னால் அறியப்பட்டது. ஓ! மகனே, நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விட்டு நீ சொர்க்கத்திற்குச் செல்வாயாக” என்றார் {தேவசர்மன்}.(16)பெரும் முனிவரான தேவசர்மன், விபுலரிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தமது மனைவியுடனும், தமது சீடருடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார்.(17) ஓ! மன்னா, இந்த வரலாற்றை முன்னொரு சந்தர்ப்பத்தில் கங்கைக்கரையில் வைத்து ஓர் உரையாடலின் போக்கில் பெரும் தவசியான மார்க்கண்டேயர் எனக்குச் சொன்னார்.(18) எனவே, நான் இஃதை உனக்குச் சொன்னேன். (அனைத்தை வகை மயக்கங்கள் மற்றும் வாய்ப்புகளில் இருந்தும்) பெண்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களில் அறம் சார்ந்தவர்கள் மற்றும் சாராதவர்கள் என்ற இருவகையினரும் காணப்படுகின்றனர்.(19)
அறம் சார்ந்த பெண்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர். (உயிரினங்கள் அனைத்தையும் எங்கும் பேணி வளர்ப்பதால்) அவர்களே இந்த அண்டத்தின் தாய்மார் {லோகமாதாக்கள்} ஆவர். நீர்நிலைகள் மற்றும் காடுகளோடு கூடிய இந்தப் பூமியைத் தாங்குபவர்கள் அவர்களே.(20) பாவம் நிறைந்தோரும், தீய நடத்தை கொண்டோரும், குலத்தை அழிப்போரும், பாவம் நிறைந்த செயல்களையே செய்யத் துணிந்தோருமான பெண்களை அவர்களின் உடல்களில் தோன்றி வெளிப்படும் தீய குறியீடுகளை {துர்லக்ஷணங்களைக்} கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.(21) உயர் ஆன்ம மனிதர்களாலும் இவ்வாறே பெண்களைப் பாதுகாக்க முடியும். ஓ! மன்னர்களில் புலியே, வேறு எந்த வகையிலும் அவர்களைப் பாதுகாக்க முடியாது.(22) ஓ! மனிதர்களின் தலைவா, பெண்கள் கொடியவர்களாவர். அவர்கள் கொடிய ஆற்றலைக் கொண்டவர்கள். அவர்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவர்களைவிட, அவர்களின் அன்புக்கோ, விருப்பத்திற்கோ உரியவர்கள் வேறு எவருமில்லை.(23) பெண்கள், உயிருக்கே அழிவை ஏற்படுத்தும் (அதர்வண) மந்திரங்களைப் போன்றவர்களாவர். ஒருவனோடு வாழ்வதாக உடன்பட்ட பிறகும், பிறரோடு செல்ல அவர்கள் அவனைக் கைவிடத் தயாராக இருப்பார்கள். ஓ! பாண்டுவின் மகனே, எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒரே ஒருவனிடம் ஒருபோதும் அவர்கள் நிறைவடைவதில்லை.(24)
மனிதர்கள் அவர்களிடம் அன்பேதும் உணர வேண்டியதில்லை. ஓ! மன்னா அவர்களிடம் பகைமையும் பாராட்ட வேண்டியதில்லை. அறத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் துணையைத் தயக்கத்துடனும், பற்றில்லாமலும் அனுபவிக்க வேண்டுமேயன்றி ஊக்கத்துடனும், பற்றுடனும் {அனுபவிக்கக்}கூடாது.(25) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வேறுவகையில் செயற்படும் ஒரு மனிதன் நிச்சயம் அழிவையே அடைவான். ஓ! மன்னர்களில் புலியே, அனைத்துக் காலங்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறிவே மதிப்பிற்குரியதாக இருக்கிறது.(26) பெண்ணைப் பாதுகாப்பதில் வென்ற ஒரே மனிதர் விபுலர் மட்டுமே. ஓ! மன்னா, மூவுலகிலும் பெண்களைப் பாதுகாக்கவல்லவர்களென வேறு எவரும் இல்லை” என்றார் {பீஷ்மர்}.(27)
ஐவகைத் திருமணங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 44-எவ்வகை மனிதனுக்கு ஒருவன் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்; திருமண வகைகள்; திருமணம் முழுமை பெற அவசியமானவை எவை; திருமணம் குறித்துப் பாஹ்லீகர் மற்றும் சத்தியவான் ஆகியோர் சொன்ன நீதிகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடமைகள் அனைத்தின் வேர் எது? உற்றார் உறவினரின் வேரெது? இல்லத்தின் வேரெது? பித்ருக்கள் மற்றும் விருந்தினர்களின் வேர்களெவை? என்பவை குறித்து எனக்குச் சொல்வீராக.(1) இந்தக் காரியமே (ஒருவனுடைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பதே) கடமைகள் அனைத்திலும் முதன்மையானது என்று நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மன்னா, ஒருவன் எவ்வகை மனிதனுக்குத் தன் மகளைக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நன்மக்கள், ஒரு மனிதனின் ஒழுக்கம், இயல்பு {குணம்}, அவனது கல்வி, ஈட்டம் {சாதனைகள்}, அவனது பிறப்பு {குலம்} மற்றும் அவனது செயல்கள் ஆகியவற்றை விசாரித்த பிறகே தேர்ந்த ஒரு மணமகனுக்குத் தங்கள் மகளைத் கொடுப்பார்கள்.(3) ஓ! யுதிஷ்டிரா, அறம் சார்ந்த பிராமணர்கள் அனைவரும் (தங்கள் மகள்களை {திருமணம் செய்து} கொடுக்கும் காரியத்தில்) இவ்வழியிலேயே செயல்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, இது பிரம்மத் திருமணம் {பிரம்ம விவாகம்} என்று அறியப்படுகிறது.(4) ஒரு பெண்ணின் தந்தையானவன், தகுந்த மணமகனைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு வகைப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் அந்த மணமகனைத் தூண்டி, தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வகைத் திருமணமானது {பிராஜாபத்ய / க்ஷத்ர விவாகமானது}, நல்ல க்ஷத்திரியர்கள் அனைவரின் நித்திய நடைமுறையாக இருக்கிறது.(5) ஒரு பெண்ணின் தந்தையானவன், தன் சொந்த விருப்பங்களை அலட்சியம் செய்து, தன் மகளால் விரும்பப்படுபவனும், அந்தப் பெண்ணின் அவ்வுணர்வை ஏற்பவனுமான ஒருவனுக்குத் தன் மகளை அளிக்கும்போது, ஓ! யுதிஷ்டிரா, அவ்வகைத் திருமணமானது காந்தர்வம் {காந்தர்வ விவாகம்} என்று வேதங்களை அறிந்தோரால் அழைக்கப்படுகிறது.(6)
ஒரு பெண்ணின் உறவினர்களுடைய பேராசையை நிறைவடையச் செய்து, பெரும் விலை கொடுத்து அவளை வாங்கித் திருமணம் செய்து கொள்வது அசுரர்களின் நடைமுறை {இவ்வகைத் திருமணத்தை ஆசுர விவாகம்} என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றனர்.(7) சில வேளைகளில் ஒரு மணமகன், அழுது கொண்டிருக்கும் உறவினர்களின் தலைகளைக் கொய்து, அவர்களைக் கொன்று, அவர்களது பெண்ணை வலுக்கட்டாயமாக அபகரித்துச் செல்றான். ஓ! மகனே, அத்தகைய திருமணம் ராட்சசம் {ராக்ஷஸ விவாகம்} என்ற பெயரில் அழைக்கப்படுகிறது[1].(8) ஓ! யுதிஷ்டிரா, இவ்வைந்தில் (பிரம்மம், க்ஷத்ரம், காந்தர்வம், ஆசுரம், ராட்சசம் ஆகியவற்றில்) அறம்சார்ந்தவை {தர்மம்} மூன்றும், அறமற்றவை {அதர்மம்} இரண்டும் என இருக்கின்றன. பைசாச மற்றும் ஆசுர வகைகளை ஒருபோதும் செய்யக்கூடாது[2].(9) ஓ! மனிதர்களின் இளவரசே, பிரம்ம, க்ஷத்ர, காந்தர்வ வடிவங்கள் {திருமண வகைகள்} அறம்சார்ந்தவை ஆகும். இவற்றைத் தனித்தனியாகவும், சேர்த்தும் செய்யலாம் என்பதில் ஐயமில்லை.(10)ஒரு பிராமணன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். ஒரு க்ஷத்திரியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். வைசியனைப் பொறுத்தவரையில், அவன் தன் வகையைச் சார்ந்த ஒரு மனைவியைக் கொள்ள வேண்டும். இந்த மனைவிகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும்[3].(11) ஒரு பிராமணன் கொள்ளும் மூன்று மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு பிராமணி} முதன்மையானவளாகக் கருதப்பட வேண்டும். அதே போல ஒரு க்ஷத்திரியனுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு க்ஷத்திரியப் பெண்ணே} மேன்மையானவளாகக் கருதப்பட வேண்டும். உயர் வகையைச் சார்ந்தவர்கள் மூவரும் {முதல் மூன்று வர்ணத்தாரும்}, (அறத்திற்காக அல்லாமல்) இன்ப காரியங்களுக்காக மட்டும் தாழ்ந்த, அல்லது சூத்திர வகையில் மனைவிகளைக் கொள்ளலாம் என்று சிலர் சொல்கிறார்கள், எனினும், வேறு சிலர் இந்த நடைமுறையைத் தடை செய்கின்றனர்.(12) சூத்திரப் பெண்களிடம் பிள்ளை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை நல்லோர் கண்டிக்கின்றனர். ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிள்ளைகளைப் பெறுவதன் மூலம், ஈடு செய்யக்கூடிய {பரிகாரத்தோடு கூடிய} பாவத்தை ஈட்டுகிறான்.(13) முப்பது வயதுடைய ஒரு மனிதன், நக்நிகாம்[4] என்றழைக்கப்படும் பத்து வயதுடைய பெண்ணை மணக்கலாம். அல்லது இருபத்தோரு வயதுடைய ஒருவன், ஏழு வயதுடைய ஒரு பெண்ணை மணக்கலாம்.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சகோதரனோ, தந்தையோ இல்லாத ஒரு பெண், தன் தகப்பனுக்குப் புத்ரிகையாகக் கருதப்படலாம் என்பதால், அத்தகையவளை மணந்து கொள்ளக்கூடாது[5].(15)பூப்பெய்திய பிறகு (திருமணமாகாத) ஒரு பெண் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான்காம் ஆண்டில், (உறவினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் எனக் காத்திருக்காமல்) தானே தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.(16) அத்தகைய ஒரு பெண்ணின் வாரிசு {சமூக} மதிப்பை இழப்பதில்லை, அத்தகைய பெண்ணுடனான கலவியும் இழிவாவதில்லை. தானே கணவனைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக வேறுவகையில் செயல்பட்டால், அவள் பிரஜாபதியின் பழிமொழியை ஈட்டுகிறாள் {பிரம்மனால் இகழத்தக்கவள் ஆகிறாள்}.(17) ஒருவன், தன் அன்னைக்கு ஸபிண்டையாக[6] இல்லாத, அல்லது தன் தந்தையின் கோத்ரத்தையே கொண்டவளாக {ஸகோத்ரையாக} இல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுவே மனு அறிவித்திருக்கும் (புனித விதிக்கு இணக்கமாக) நடைமுறையாகும்” என்றார் {பீஷ்மர்}.(18)யுதிஷ்டிரன், “திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒருவன், பெண்ணின் உறவினர்களுக்கு மணக்கொடை {கன்னிகாசுல்கம்} அளிக்கிறான்; வேறொருவன் பெண்ணின் உறவினர்களிடம் மணக்கொடை தருவதாக உறுதியளிக்கிறான்; வேறொருவன், “நான் இந்தப் பெண்ணைப் பலவந்தமாக அபகரிக்கப் போகிறேன்” என்கிறான்; வேறொருவன் தன் செல்வத்தை (அந்தப் பெண்ணுக்குத் தன் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொண்டு மணக்கொடை அளிக்கும் நோக்கில் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு அவற்றை) வெளிக்காட்டுகிறான்;(19) மற்றொருவன் உண்மையில் திருமணச் சடங்குகளுடன் அப்பெண்ணின் கரத்தைப் பற்றுகிறான் {பாணிக்ரகணம் செய்கிறான்}. ஓ! பாட்டா, நான் உம்மைக் கேட்கிறேன், உண்மையில் அந்தப் பெண் {இவர்களில்} யாருடைய மனைவியாவாள்? உண்மையை அறிந்து கொள்ள விரும்பும் எங்களுக்குப் பார்வையைத் தரும் கண்ணாக நீரே இருக்கிறீர்” என்றான்.(20)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஞானிகள் ஆலோசித்து, அங்கீகரித்த அல்லது தீர்மானித்த மனித செயல்கள் எவையும் நன்மையை உண்டாக்குபவையாகவே காணப்படுகின்றன. எனினும், பொய் பேசுவது எப்போதும் பாவம் நிறைந்ததாகும்[7].(21) ஒரு பெண்ணானவள், தான் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவனைத் தவிர வேறு ஒருவனிடம் தன் கரத்தைக் கொடுத்தால், {அவ்வாறு} மனைவியாகும் அந்தப் பெண், அவளுக்குப் பிறக்கும் மகன்கள், ரித்விஜர்கள், ஆசான்கள் {குருமார்}, சீடர்கள், அந்தத் திருமணத்தின் போது உள்ள உபாத்யாயர்கள் அனைவரும் பாவக்கழிவு {பிராயச்சித்தம்} செய்ய வேண்டியவர்களாகிறார்கள். அத்தகைய நடத்தைக்குப் பாவக்கழிவேதும் செய்ய வேண்டியதில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள்.(22) மனு, ஒரு பெண் தான் விரும்பாத ஒருவனுடன் வாழும் நடைமுறையை மெச்சவில்லை[8]. அவள் விரும்பாத ஒருவனுடன் மனைவியாக வாழ்வது இழுக்குக்கும், பாவத்திற்கும் வழிவகுக்கும். பின்வரும் வழக்குகள் எதனிலும் எவனும் அதிகப் பாவமீட்டுவதில்லை.(23) திருமணத்திற்காக ஒரு பெண் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படும் போது, பெண்ணின் உறவினர்கள் மூலம் உரிய சடங்குகளுடன் அப்பெண்ணானவள் கடத்தியவனுக்கே கொடுக்கப்படும் காரியத்திலும், மணக்கொடை கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் காரியத்திலும் பெரும் பாவமேதும் இல்லை.(24)பெண்ணின் உறவினர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்த பிறகே மந்திரங்களும், ஹோமங்களும் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் மந்திரங்களே உண்மையில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுகின்றன. உறவினர்களால் கொடுக்கப்படாத ஒரு பெண்ணின் வழக்கில் சொல்லப்படும் மந்திரங்களும், செய்யப்படும் ஹோமங்களும் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுவதில்லை.(25) ஒரு பெண்ணின் உறவினர்கள் மூலம் செய்யப்படும் ஏற்பாடுதான் கட்டமைப்புடன் கூடியதும், புனிதமிக்கதும் ஆகும் என்பதில் ஐயமில்லை. மந்திரங்களின் துணையுடன் திருமணம் செய்து கொடுப்பவர் மற்றும் திருமணம் செய்து கொள்பவர் ஆகியோர் செய்து கொள்ளும் ஏற்பாடு (கணவன் மனைவி என்ற உறவுமுறையை உண்மையில் உண்டாக்குவதால் இந்த ஏற்பாடே) மிகப் புனிதமானதாகும்.(26) சாத்திரவிதிகளின்படி, ஒரு கணவன், தன் முற்பிறவி செயல்கள், அல்லது கடவுளால் விதிக்கப்பட்டதன் விளைவாக அடைந்த உரிய உடைமையாகத் தன் மனைவியைக் கருத வேண்டும். எனவே, உறவினரால் மற்றொருவனுக்குக் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்பதன் மூலமோ, எந்தப் பெண்ணுக்காக மற்றொருவனிடம் இருந்து அவர்கள் {உறவினர்கள்} மணக்கொடை பெற்றார்களோ, அந்தப் பெண்ணைத் தன் மனைவியாக ஏற்பதன் மூலமோ ஒருவன் எந்தப் பழியையும் ஈட்டுவதில்லை” என்றார் {பீஷ்மர்}.(27)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு பெண்ணின் தந்தை, அவளுக்கான மணக்கொடையை {ஒருவனிடமிருந்து} பெற்ற பிறகு, தகுதிமிக்கவனும், சரியான விகிதங்களில் முத்தொகையை {அறம், பொருள் மற்றும் இன்பத்தைக்} கொண்டவனுமான மற்றொருவன் அவளது கரத்தைப் பெற முன்வந்தால், அந்தத் தகுதிமிக்கவனை ஏற்பதற்காக, {ஏற்கனவே} மணக்கொடை அளித்தவனை மறுப்பதன் மூலம் அந்தப் பெண்ணின் தந்தை பழியை ஈட்டுவானா?(28) இத்தகைய வழக்கில், பெண்ணைக் கொடுப்பதாக உறுதிமொழி அளித்துவிட்டு அவனை மறுப்பது மதிப்பிற்குரியதாகாது, அதே வேளையில் (மிகவும் தகுதி வாய்ந்த ஒருவனுக்குத் தன் மகளை அளிக்க வேண்டும் என்ற கடமையைக் கருத்தில் கொள்ளும்போது) தகுதிமிக்க ஒருவனை மறுப்பதும் ஒருபோதும் நன்மையைத் தராது என்பதால், இவ்விரண்டு நிலைகளும் குற்றம் நிறைந்தவையாகவே தெரிகின்றன. நான் கேட்கிறேன், அந்தத் தந்தை என்ன செய்தால் நன்மை செய்தவனாகச் சொல்லப்படுவான்? கடமைகள் அனைத்திலும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய நடவடிக்கையாக நமக்கு இது தெரிகிறது.(29) உண்மையை உறுதி செய்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். உண்மையில், நீரே எங்கள் கண்களாவீர். இதை நீர் எங்களுக்கு விளக்குவீராக. நீர் சொல்வதைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை” என்றான்.(30)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மணக்கொடையானது {கன்யாசுல்கம்} அப்பெண்ணை மனைவியின் நிலையை அடையச் செய்யாது. அதை {மணக்கொடையைச்} செலுத்தும் மனிதனும் இதை நன்கறிவான். அவன் அந்தப் பெண்ணுக்கான விலையாகவே அதைச் செலுத்துகிறான். மேலும், பிறர் கொடுக்கும் மணக்கொடைகளுக்காக நல்லோர் ஒருபோதும் தங்கள் மகள்களை அவர்களுக்கு அளிக்கமாட்டார்கள்.(31) திருமணத்தை விரும்பும் மனிதன் {முதுமை முதலிய} விரும்பாத குணங்களைக் கொண்டிருக்கும்போதே, பெண்ணின் உறவினர்கள் அவனிடம் மணக்கொடையைக் கோருகின்றனர். எனினும், ஒருவனுடைய சாதனைகளால் கவரப்பட்டு, “நீ என் மகளைத் தங்கம் மற்றும் ரத்தின ஆபரணங்களாக முறையாக அலங்கரித்து, அவளைத் திருமணம் செய்து கொள்வாயாக” என்று சொல்லும் மனிதனும்,(32) இந்த வேண்டுகோளுக்கு இணங்கும் மனிதனும், உண்மையில் இத்தகைய பரிமாற்றத்தால் விற்பனையில் ஈடுபடவில்லை என்பதால், அவர்களை மணக்கொடை கொடுத்தவர்களாகவோ, பெற்றவர்களாகவோ சொல்ல முடியாது. (அன்பினாலும், பாசத்தினாலும் கொடுக்கப்படும்) கொடைகளை ஏற்றுக் கொண்டு ஒரு மகளை அளிப்பது நித்திய நடைமுறையே.(33) திருமணக் காரியங்களில் சில தந்தைமார், “இத்தகைய, இத்தகைய மனிதனுக்கு நான் என் மகளை அளிப்பேன்” என்று சொல்கிறார்கள்; சிலர், “இத்தகைய ஒருவனுக்கு என் மகளை அளிக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள்; மேலும் சிலர், “இத்தகைய ஒருவனுக்கே நான் என் மகளை அளிப்பேன்” என்று உணர்ச்சித்துடிப்புடன் சொல்கிறார்கள்.(34)
இத்தகைய அறிவிப்புகள் உண்மையில் திருமணமாகாது. கன்னிகையரின் கரங்களுக்காக மக்கள் ஒருவருக்கொருவர் வேண்டுவது (உறுதிமொழி கொடுப்பதும், பின்வாங்குவதும்) காணப்படுகிறது. உரிய சடங்குகளுடன் உண்மையில் கரங்களை ஏற்காதவரையில் திருமணம் நடந்ததாகச் சொல்ல முடியாது. கன்னிகையரைப் பொறுத்தவரையில், பழங்காலத்தில் மருத்துகளால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட வரம் இதுவேன் என்று நாம் கேள்விப்படுகிறோம்[9].(35) மனிதர்கள் மிகத் தகுந்தவர்களாக இல்லாதவரையில் அவர்களுக்குக் கன்னிகையரை அளிக்கக்கூடாது என மனிதர்கள் அனைவருக்கும் முனிவர்கள் ஒரு கட்டளையை விதித்திருக்கின்றனர். ஒரு மகள் என்பவள், ஆசை மற்றும் இடையுறவு வழித்தோன்றல்களின் வேராக இருக்கிறாள். இதையே நான் நினைக்கிறேன்[10].(36) மகளை விற்பது மற்றும் வாங்குவது என்ற நடைமுறை மனிதர்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக இருக்கிறது. இந்நடைமுறைக்கு இத்தகைய பரிச்சயம் இருக்கும் விளைவால், கவனமிக்க ஆய்வில் அதில் எண்ணற்ற குற்றங்களை உன்னால் கண்டுபிடிக்க முடியும். மணக்கொடை கொடுப்பது, அல்லது ஏற்பது என்பவை மட்டுமே கணவன் மற்றும் மனைவி என்ற நிலையை உண்டாக்குவதாக ஒருபோதும் கருத முடியாது. இது குறித்து நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக.(37)முன்பொரு காலத்தில், மாகதர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள் அனைவரையும் வீழ்த்தி, விசித்திரவீரியனுக்காக இரு கன்னிகைகளை {அம்பிகை, அம்பாலிகை மற்றும் அம்பை ஆகிய மூவரை} நான் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தேன்.(38) அந்தக் கன்னிகையர் இருவரில் ஒருத்தி {அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய இருவரும்} உரிய சடங்குகளுடன் திருமணம் செய்யப்பட்டாள்[11]. மற்றொரு கன்னிகை {அம்பை} களத்தில் வீரம் என்ற வடிவில் மணக்கொடை கொடுக்கப்பட்டவள் ஆதலால் முறையாக மணக்கப்படவில்லை. குருகுலத்தைச் சேர்ந்தவரும் என் தந்தையின் சகோதரருமான மன்னர் பாஹ்லீகர், இவ்வாறு கொண்டு வரப்பட்ட கன்னிகை உரிய சடங்குகளுடன் மணக்கப்படவில்லையெனில் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்று சொன்னார். எனவே, அந்தக் கன்னிகையை முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்ளும்படி விசித்திரவீரியனுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.(39) என் தந்தையின் {தந்தையின் சகோதரரான பாஹ்லீகரின்} சொற்களில் ஐயம் கொண்டு நான் பிறரிடம் கருத்துக் கேட்டேன். அறநெறி குறித்த காரியங்கள் என் தந்தை {பாஹ்லீகர்} அதீத கவனத்துடன் இருந்தார் என நான் நினைத்தேன்.(40)ஓ! மன்னா, பிறகு திருமணம் குறித்த காரியங்களில் அறவோரின் நடைமுறை என்ன என்பதை அறியும் விருப்பத்தில் நான் என் தந்தையிடமே சென்று, இந்தச் சொற்களைச் சொன்னேன்: “ஓ! தந்தையே {தந்தையின் சஹோதரரான பாஹ்லீகரே}, அறம்சார்ந்த மக்களின் நடைமுறைகள் என்ன என்பதை உண்மையில் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டேன். என் ஆவலும் ஊக்கமும் அதிகமாக இருந்ததால் என் விருப்பத்தை நான் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தினேன்.(41) நான் இச்சொற்களைச் சொன்னதும், அறவோரில் முதன்மையானவரும், எனக்குத் தந்தை முறையுமான பாஹ்லீகர்,(42) “உண்மையில் உரிய சடங்குகளுடன் கன்னிகையின் கரத்தைப் பற்றாமல், மணகொடைக் கொடுப்பது மற்றும் ஏற்பதால் கணவன் மனைவி என்ற நிலை அடையப்படுவதாக நீ கருதினால், (மணக்கொடை அளித்தவனுடன் தன் மகளைச் செல்ல அனுமதிப்பதன் மூலம்) அந்தக் கன்னிகையின் தந்தையானவன் தன் குல நடைமுறையைப் பின்பற்றுவதாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளலாமேயன்றி சாத்திர நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஏற்றுக்கொள்ளப்படும் சாத்திரங்களை இதையே அறிவிக்கின்றன.(43) அறநெறி மற்றும் கடமைகளை அறிந்த மனிதர்கள், உரிய சடங்குகளுடன் கரத்தைப் பற்றாமல், மணக்கொடை கொடுப்பது மற்றும் ஏற்பதில் கணவன் மனைவி என்ற நிலை ஏற்படுகின்றது என்று சொல்பவர்களின் சொற்களை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(44)
ஒரு தந்தையால் அவனது மகள் கொடுக்கப்படும்போது (உரிய சடங்குகளுடன் அவளைக் கணவன் ஏற்றுக் கொள்ளும்போது) தான் கணவன் மற்றும் மனைவி என்ற நிலை ஏற்படுகிறது என்பது நன்கறியப்பட்ட சொலவடையாகும். விற்பனை அல்லது கொள்முதலின் மூலம் கன்னிகையர் மனைவி என்ற நிலையை அடைய முடியாது. விற்பனை, மணக்கொடை ஆகியவற்றின் மூலம் அத்தகைய நிலையை அடைவதாகக் கருதுவோர் நிச்சயம் சாத்திரங்களை அறிந்தோரல்ல.(45) எவரும் தம் மகளை இத்தகைய மனிதர்களுக்கு அளிக்கக்கூடாது. உண்மையில், அவர்கள் அவனுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய நபர்கள் அல்ல. ஒரு மனைவியானவள் ஒருபோதும் விலைக்கு வாங்கப்படக்கூடாது. அதே போல் ஒரு தந்தையும் தன் மகளை விற்பனை செய்யக்கூடாது.(46) பேராசையால் பீடிக்கப்பட்டவர்களும், பெண்களைப் பணிப்பெண்களாக அவர்களை அடிமைகளாக விற்பவர்களும், வாங்குபவர்களும் மட்டுமே, மணக்கொடை கொடுப்பது மற்றும் பெறுவதன் மூலம் மனைவி என்ற நிலை அடையப்படுவதாகக் கருதுகிறார்கள்.(47)
ஒரு சந்தர்ப்பத்தில் இதே காரியம் குறித்துச் சில மக்கள் இளவரசன் சத்யவானிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டனர். {அவர்கள்}, “கன்னிகையின் உறவினரிடம் மணக்கொடை கொடுப்பவன் திருமணத்திற்கு முன்பே மாண்டு போனால்,(48) வேறொருவன் அந்தக் கன்னிகையின் கரத்தைப் பற்றித் திருமணம் செய்து கொள்ளலாமா? இக்காரியத்தில் எங்களுக்கு ஐயம் இருக்கிறது. நீ பெரும் ஞானம் கொண்டவனாக இருப்பதாலும், ஞானிகளால் மதிக்கப்படுவதாலும் எங்களுடைய இந்த ஐயங்களை அகற்றுவாயாக.(49) வாய்மை கற்க விரும்பும் எங்களுக்கு நீ பார்வைப் புலனாக {கண்களாக} இருப்பாயாக” {என்று கேட்டனர்}. இளவரசன் சத்யவான், இச்சொற்களைச் சொன்னவர்களிடம்,(50) “கன்னிகையின் உறவினர்கள், எவனைத் தகுந்தவனாகக் கருதுகிறார்களோ அவனுக்கே அவளை அளிக்க வேண்டும். இதில் எத்தயக்கமும் வேண்டியதில்லை. மணக்கொடை அளித்தவன் உயிருடன் இருந்தாலே அறவோர் இவ்வழியில் செயல்படுவார்கள் எனும்போது, கொடை கொடுத்தவன் இறந்திருந்தால் இக்காரியத்தில் சிறு ஐயமும் கொள்ள வேண்டியதில்லை.(51) கணவன் இல்லாததாலோ, அவன் மாண்டுவிட்டதாலோ உண்மையில் பாலினக்கலவி மூலம் மணவுறவு ஏதும் நிகழாமல் கன்னி மனைவியாகவோ, விதவையாகவோ உள்ள ஒருத்தியை, அவளுடைய கணவனுடைய தம்பி, அல்லது அத்தகைய பிற உறவினருடன் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும். மணவுறவுக்கு முன்பே கணவன் இறந்த கன்னி விதவையானவள் தன்னை அவனது தம்பியிடம் ஒப்படைக்கலாம் அல்லது தவப்பயிற்சிகளில் ஈடுபடலாம்.(52)
கணவனின் தம்பி அல்லது அத்தகைய உறவினர், இவ்வாறு விதவையானவளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் கருதுகின்றனர், வேறு சிலரோ, இத்தகைய நடத்தை பரவலாக இருந்தாலும், சாத்திய விதியின் படி இல்லாமல் ஆசையில் இருந்து எழுந்ததாகவே இருக்கிறது என்கின்றனர். அவ்வாறு சொல்பவர்கள், மற்றொருவனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மற்றும் ஏற்கப்பட்ட மணக்கொடையை அலட்சியம் செய்து, அவளை எந்தத் தகுந்தவனுக்கும் அளிக்க ஒரு கன்னிகையின் தந்தைக்கு உரிமையுண்டு என்ற தெளிவான கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.(53) கன்னிகையின் கரத்தைக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு, திருமணத்திற்கு முன்பான தொடக்கச் சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தாலும், வாக்களிக்கப்பட்டவனுக்கல்லாமல் அந்தக் கன்னிகையை வேறு ஒருவனுக்கும் கொடுக்கலாம். கொடையளிப்பவனே பொய்மையின் பாவத்தை ஈட்டுகிறான்; எனினும், மனைவி என்ற நிலையைப் பொறுத்தவரையில் இஃது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.(54) திருமண மந்திரங்கள் ஏழாவது அடியிலேயே பிரிக்க முடியாத திருமணப் பந்தத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் நீர்க்கொடையுடன் ஒருவனுக்கு அளிக்கப்படும்போதே அந்தக் கன்னிகை அவனது மனைவியாகிறாள்[12].(55) கன்னிகைகளைக் கொடையளிப்பது {கன்னிகாதானம் செய்வது} பின்வரும் வழியிலேயே செய்யப்பட வேண்டும். ஞானிகள் இதை நிச்சயம் அறிவார்கள். மேன்மையான பிராமணன் ஒருவன், விருப்பமுள்ளவளும், தன் குடும்பத்திற்கு இணையான தூய்மையும், நிலையும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவளும், சகோதரனால் கொடுக்கப்படுபவளுமான ஒரு கன்னிகையை மணக்க வேண்டும். அத்தகைய பெண்ணையும், நெருப்பின் முன்னிலையில் வைத்து, உரிய சடங்குகளுடன், வழக்கமான எண்ணிக்கையில் தன்னை வலம்வரச் செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான் {சத்தியாவன்}” என்றார் {பீஷ்மர்}.(56)
மரபுரிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 45-மணக்கொடை கொடுக்கப்பட்ட கன்னிகைக்குக் கணவனில்லாத போது செய்ய வேண்டிய விதியும், பெண்களுக்கு உரிய தாய்ப்பாகம் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்], “ஒரு மனிதன், ஒரு கன்னிகைக்காக மணக்கொடையைக் கொடுத்த பிறகு சென்றுவிட்டால் {காணாமல் போய்விட்டால்}, அந்தக் கன்னிகையின் தந்தையோ, அவளை {பிறருக்குக்} கொடுக்கத்தகுந்த வேறு உறவினரோ எவ்வாறு செயல்பட வேண்டும்?[1] ஓ பாட்டா, அதனை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகைய கன்னிகை, மகனற்றவனும், வளமிக்கவனுமான ஒரு தந்தையின் மகளாக இருந்தால், (மணக்கொடை அளித்தவன் திரும்பட்டும் என்ற நோக்கில்) அந்தத் தந்தையே அவளைப் பராமரித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், அந்தத் தந்தை அந்த மணக்கொடையைக் கொடுத்தவனின் உறவினர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கவில்லையெனில், அந்தக் கன்னிகை மணக்கொடை கொடுத்தவனுக்கு உரியவள் என்றே கருதப்பட வேண்டும்.(2) அவள், (கொடையளித்தவன் இல்லாதபோதும்) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் எதனைக் கொண்டும் அவனுக்காக {கொடையளித்தவனுக்காக} வாரிசை உண்டாக்கலாம். எனினும், முறையான சடங்குகளுடன் அவளை மணந்து கொள்ளத் தகுந்தவன் வேறு யாரும் கிடையாது.(3) பழங்காலத்தில், தந்தையால் ஆணையிடப்பட்ட இளவரசி சாவித்ரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவனுடன் சேர்ந்திருந்தாள். அவளுடைய இச்செயல் சிலரால் மெச்சப்படுகிறது; ஆனால் சாத்திரங்களை அறிந்த பிறர் இதைக் கண்டிக்கின்றனர்.(4) அறவோரான வேறு சிலர் இவ்வழியில் செயல்படுவதில்லை. வேறு சிலர், அறவோரின் நடத்தையே, கடமை அல்லது அறநெறிக்கான முதன்மையான சான்றாகக் கருதப்பட வேண்டும் என்று சொல்கின்றனர்[2].(5)விதேஹர்களின் ஆட்சியாளனான உயர் ஆன்ம ஜனகனின் பேரனான சுக்ரது, இக்காரியத்தில் பின்வரும் கருத்தை அறிவித்தான்:(6) {சுக்ரது}, “பெண்கள், தங்கள் வாழ்வின் எக்காலத்திலும் விடுதலையை அனுபவிக்கத் தகுந்தவர்களில்லை என்ற நன்கறியப்பட்ட சாத்திரங்களின் தீர்மானம் இருக்கிறது. இஃது அறவோர் நடக்கும் பாதையாக இல்லாதிருந்தால், இந்தச் சாத்திரத் தீர்மானம் எவ்வாறு இருக்கும்? எனவே, அறவோரைப் பொறுத்தவரையில், இக்காரியத்தில் அவர்களுக்குக் கேள்வி என்றோ, ஐயம் என்றோ ஏது இருக்க முடியும்? வேறுவகையில் நடக்கத் தீர்மானிக்கும் மக்கள் எவ்வாறு அந்தத் தீர்மானத்தைக் கண்டிப்பார்கள்?[3](7) நித்திய வழக்கில் இருந்து அறமற்ற வகையில் தவறுதலே அசுரர்களின் நடைமுறையாகக் கருதப்படுகிறது. இத்தகையை நடைமுறையைப் பழங்கால ஒழுக்கமுறையில் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை[4].(8) (விதியால் பெறப்படுவதும், அதன் காரணமாக, சாத்திரத் தீர்மானங்களில் உள்ள ஈர்ப்பின் துணையால் மட்டுமே புரிந்துகொள்ளப்படக்கூடியதுமான) கணவன், மனைவி என்ற உறவுமுறை மிக நுட்பமானதாகும். இஃது, ஆண் பெண் பாலியல் இன்ப விருப்பத்தை மட்டுமே உள்ளடக்கிய இயற்கை உறவுமுறையில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும்” {என்றான் சுக்ரது}. ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னனால் {சுக்ரதுவால்} சொல்லப்பட்டது இதுவே[5]” என்றார் {பீஷ்மர்}.(9)யுதிஷ்டிரன், “மனிதர்களின் செல்வமானது, (அவர்களுக்கு மகள்கள் இருக்கும்போது, பிறரால்) எந்த அதிகாரத்தின் பேரில் மரபுரிமையாகப் பெறப்படுகிறது? மகளானவள், அவளது தந்தையைப் பொறுத்தவரையில் மகனைப் போலவே கருதப்பட வேண்டும்” என்றான்.(10)
பீஷ்மர், “மகன் என்பவன் தன் சுயத்தைப் போன்றவனாவான், மகளும் ஒரு மகனைப் போன்றவள்தான். எனவே, ஒருவன் தன் மகளின் வடிவில் வாழும்போது, வேறு எவராலும் அவனது செல்வத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும்? தாயின் யௌதுக உடைமை {சீர்வரிசை} என்று அழைக்கப்படும் செல்வம் எதுவும் {தாயின் ஸ்த்ரீதனமெல்லாம்}, கன்னிகையான மகளின் பங்காகிறது. தாய்வழி பாட்டனானவன், மகன்கள் இல்லாமல் இறந்தால், மகளின் மகனே அதை மரபுரிமையாகப் பெற வேண்டும்.(12) மகளின் மகன், தன் தந்தைக்கும், தன் தாயின் தந்தைக்கும் பிண்டங்களை அளிக்கிறான். எனவே, நீதியின் கருத்துக்கிணங்க மகனுக்கும், மகளின் மகனுக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது.(13) ஒரு மனிதன் ஒரு மகளை மட்டுமே பெற்றிருந்து, அவளே மகன் என்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும்போது, அவன் ஒரு மகனைப் பெற நேர்ந்தால், அத்தகைய மகன் (தன் தந்தையின் செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக) மரபுரிமையை அந்த மகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்[6]. மேலும், ஒரு மனிதன் ஒரு மகளைப் பெற்றிருந்து, அவள் மகன் என்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும்போது, அவன் ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொண்டாலும், விலைக்கு வாங்கினாலும், அப்போது அந்த மகளே அத்தகைய மகனைவிட மேன்மையானவளாகக் கருதப்படுவாள் (அப்போது அவள் தன் தந்தையின் செல்வத்தில் {ஐந்தில்} மூன்று பங்கையும், அந்த மகன் இரண்டு பங்கையும் எடுத்துக் கொள்ள வேண்டும்).(14)பின் வரும் வழக்கில், மகளுடைய மகனின் நிலையானது, ஒருவனுடைய மகளின் மகன்களுடன் {உண்மையில்} ஏன் தொடர்புப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. தந்தையால் விற்கப்பட்ட மகளைக் குறித்ததே அவ்வழக்கு. உண்மையாகத் தந்தையால் விலைக்கு விற்கப்பட்ட மகளுக்குப் பிறந்த மகன்கள், (அவர்களுடைய தந்தை தானே அவர்களைப் பெறாமல், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிறர் மூலம் சந்ததியைப் பெற்றிருந்தாலும்) அவர்களின் தந்தைக்கே முற்றிலும் உரியவர்கள் ஆவர். அத்தகைய மகன்கள், தங்கள் தாய் விலைக்கு விற்கப்பட்டதன் விளைவால் தங்கள் உரிமைகள் அனைத்தையும் இழப்பதால், அவர்கள் தங்கள் தாய்வழி பாட்டனுக்கு மகள்களின் பிள்ளைகளாக ஒருபோதும் கருதப்படமாட்டார்கள்[7].(15) மேலும் அத்தகைய மகன்கள், வன்மம் நிறைந்தவர்களாகவும், அறமற்ற ஒழுக்கம் கொண்டவர்களாகவும், அடுத்தவரின் சொத்துகளை அபகரிப்பவர்களாகவும், வஞ்சகம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆசுரம் என்றழைக்கப்படும் பாவம் நிறைந்த திருமண வகையில் பிறந்த பிள்ளைகள் நடத்தையில் தீமையானவர்கள் ஆகின்றனர்.(16)பழங்கால வரலாறுகளை அறிந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், சாத்திரங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அவற்றில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் உறுதியானவர்களுமான மனிதர்கள், இது தொடர்பாகப் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட சுலோகங்களைச் சொல்கின்றனர்.(17) யமன் பாடியது இதுவே. “தன் மகளை விற்றதன் மூலம் எவன் செல்வமீட்டுவானோ, அல்லது தன் வாழ்வாதாரத்திற்காக மணக்கொடையை ஏற்ற பிறகு எவன் தன் மகளை அளிக்கிறானோ,(18) அவன் காலஸம் {காலஸூத்ரம்} என்ற பெயரில் அறியப்படும் பயங்கரமான ஏழு நரகங்களில் அடுத்தடுத்து மூழ்குவான். அங்கே அந்த இழிந்தவன், முழு நேரமும் வியர்வையையும், சிறுநீரையும், மலத்தையும் உண்டு கொண்டிருப்பான்” {என்பதே யமன் பாடிய ஸ்லோகம்}.(19)
ஆர்ஷம் என்றழைக்கப்படும் திருமண வகையில், திருமணம் செய்து கொள்ளும் ஒருவன், கன்னிகையின் தந்தைக்கு ஒரு காளையையும், பசுவையும் கொடையாக அளிக்க வேண்டும். சிலர் இந்தக் கொடையை மணக்கொடையாக (அல்லது விலையாக) கருதுகின்றனர், அதே வேளையில், அஃதை அவ்வாறு கருதக்கூடாது என்று சிலர் கருதுகின்றனர். எனினும், ஓ மன்னா, அத்தகைய ஒரு நோக்கத்திற்காகக் கொடுக்கப்படும் கொடையானது, சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது மணக்கொடையாகவோ, விலையாகவோ கருதப்படும், அத்தகைய சூழ்நிலையில் மகளை அளிப்பது விற்பனையாகவே பார்க்கப்படும் என்பதே உண்மையான கருத்தாகும்.(20) சில மனிதர்களால் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், இதை ஒருபோதும் நித்திய வழக்கமாகக் கொள்ள முடியாது. உறவினர்களுக்கு மத்தியில் இருந்து வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்ற பிறகு அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வேறு திருமண வடிவங்களும் மனிதர்களால் செய்யப்படுகின்றன.(21) ஒரு கன்னிகையைப் பலத்தால் ஒடுக்கி அவளுடன் பாலினக் கலவியில் ஈடுபடும் மனிதர்கள், பாவமிழைத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் இருள் நிறைந்த நரகத்தில் மூழ்குவார்கள்[8].(22) குருதியுறவு இல்லாத மனிதன் எவனும் விற்பனைக்குரியவனாக மாட்டான். அவ்வாறிருக்கையில் ஒருவனுடைய சந்ததியைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் அடையப்படும் செல்வத்தைக் கொண்டு, புண்ணியத்திற்கு வழிவகுக்கும் எந்தச் செயலையும் செய்ய முடியாது” என்றார் {பீஷ்மர்}.(23)
பெண்களை மதிப்பீராக! – அநுசாஸனபர்வம் பகுதி – 46-பெண்களுக்குப் பொருள் கொடுத்தல் மற்றும் அவர்களை அன்போடு நடத்தல் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிம்}, “பழைய வரலாறை அறிந்தவர்கள், பிரசேதஸின் மகனான தக்ஷனின் பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்கிறார்கள். “எந்தக் கன்னிகையைப் பொறுத்தவரையில், அவளது உறவினர்களால் மணக்கொடையின் வடிவில் ஏதும் பெறப்படவில்லையோ, அவளை விற்பனை செய்யப்பட்டவளாகச் சொல்ல முடியாது” {என்பதே அந்த ஸ்லோகம்}[1].(1) திருமணத்தில் கரம்பற்றப்படும் கன்னிகையை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தி, ஏற்புடைய அனைத்தையும் கொடுக்க வேண்டும்.(2) அவளது தந்தை, சகோதரர்கள், மாமனார், மைத்துனர்கள் {கணவனின் சகோதரர்கள்} ஆகியோர் நன்மையை அறுவடை செய்யும் விருப்பம் கொண்டவர்களாக இருந்தால், அவளை அனைத்து வகையிலும் மதித்து, ஆபரணங்களால் அவளை அலங்கரிக்க வேண்டும். அத்தகைய நடத்தை அவர்களைப் போதுமான மகிழ்ச்சிக்கும், நன்மைக்கும் வழிநடத்திச் செல்லும்.(3)மனைவிக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலோ, இத்தகைய விருப்பமின்மை மற்றும் இன்பமில்லாமையால் {அவள்} அவனை மகிழ்ச்சியடையச் செய்யத் தவறினாலோ, அந்தக் கணவன் தன் குலத்தைப் பெருக்க ஒருபோதும் சந்ததியைப் பெறக்கூடாது.(4) ஓ! மன்னா, பெண்கள் எப்போதும் வழிபடப்பட்டு, அன்புடன் நடத்தப்பட வேண்டும். எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தேவர்களே மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(5) எங்கே பெண்கள் வழிபடப்படவில்லையோ, அங்கே செயல்கள் அனைத்தும் கனியற்றவையாகின்றன. ஒரு குடும்பத்திலுள்ள பெண்கள், தாங்கள் நடத்தப்படும் விதத்தால் துன்பத்தை அடைந்து கண்ணீர் விட்டால், அந்தக் குடும்பம் விரைவில் அழிந்து போகும்.(6)
பெண்களால் சபிக்கப்படும் வீடுகள், ஏதோ அதர்வணச் சடங்கால் எரிக்கப்பட்டதைப் போல அழிந்து, நிர்மூலமடையும். அத்தகைய வீடுகள் தங்கள் ஒளியை இழக்கும். ஓ! மன்னா, அவற்றின் வளர்ச்சியும், செழிப்பும் இல்லாமல் போகும்.(7) மனு, தாம் சொர்க்கத்திற்குச் செல்லுமுன், “பெண்கள் பலமில்லாதவர்கள், ஆண்களின் கவர்ச்சிமிக்க மயக்கும் தந்திரங்களுக்கு எளிதில் இரையாகிறவர்கள், தங்களுக்கு அளிக்கப்படும் அன்பை ஏற்கும் இயல்புடையவர்கள், வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்கள்” என்று சொல்லி ஆண்களின் பாதுகாப்பின்கீழ் அவர்களைக் கொண்டு வந்தார்.(8) அவர்களுக்கு மத்தியிலேயே வன்மம் நிறைந்தவர்களும், கௌரவங்களில் பேராசை கொண்டோரும், கொடிய மனம் கொண்டவர்களும், அன்பற்றவர்களும், ஊடுருவ முடியாத அறிவைக் கொண்டவர்களுமான சிலரும் இருக்கின்றனர். எனினும், பெண்கள் மதிக்கத் தகுந்தவர்களாவர். மனிதர்களே அவர்களை மதிப்பீராக.(9)
ஆண்களின் அறம் பெண்களையே சார்ந்திருக்கிறது. இன்பங்கள் மற்றும் கேளிக்கைகள் அனைத்தும் முற்றிலும் அவர்களையே சார்ந்திருக்கின்றன. நீங்கள் அவர்களுக்குத் தொண்டு செய்து, அவர்களை வழிபடுவீராக. நீங்கள் உங்கள் விருப்பங்களை அவர்களின் முன்னிலையில் தளர்த்துவீராக.(10) சந்ததியைப் பெறுதல், ஏற்கனவே பிறந்த பிள்ளைகளைப் பேணி வளர்த்தல், சமூகத்திற்குத் தேவையான அனைத்துச் செயல்களையும் செய்தல் ஆகிய இவை அனைத்தும் பெண்களையே தங்களுக்கான காரணமாகக் கொண்டிருக்கின்றன.(11) பெண்களைக் கௌரவிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நோக்கங்கள் அனைத்தும் கனியும் நிலையை நிச்சயம் அடைவீர்கள்.
இது தொடர்பாக, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகனின் வீட்டைச் சார்ந்த ஓர் இளவரசி {சீதை} பாடிய ஸ்லோகம் ஒன்றிருக்கிறது. அது பின்வருமாறு:(12) “பெண்களுக்கென விதிக்கப்பட்ட வேள்விகள் ஏதுமில்லை. அவர்கள் செய்ய வேண்டிய சிராத்தங்கள் ஏதுமில்லை. அவர்கள் நோற்க வேண்டிய நோன்புகள் ஏதுமில்லை. அவர்கள் தங்கள் கணவர்களுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதும், விருப்பத்துடன் கீழ்ப்படிருந்திருப்பதும் மட்டுமே அவர்களுடைய ஒரே கடமையாகும். அந்தக் கடமையைச் செய்வதன் மூலமே அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(13) குழந்தைப் பருவத்தில் தந்தை அவளைப் பாதுகாக்கிறான். இளமையில் கணவன் அவளைப் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். அவளது வாழ்வின் எக்காலத்திலும் பெண்ணானவள் விடுதலை பெறத் தகுந்தவளல்ல.(14) செழிப்பின் தேவிகள் பெண்களே. செல்வாக்கையும், செழிப்பையும் விரும்பும் மனிதன் அவர்களைக் கௌரவிக்க வேண்டும். ஓ! பாரதா, பெண்களைப் பேணிக் காப்பதன் மூலம் ஒருவன் செழிப்பின் தேவியையே பேணி வளர்க்கிறான் என்றும், அவளைப் பீடிப்பதன் மூலம் அவன் செழிப்பின் தேவியைத் துன்புறுத்துகிறான் என்றும் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(15)
மரபுரிமைச் சட்டம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 47-பலவர்ணப் பெண்களிடம் பிறந்த மகன்களுக்குத் தந்தையின் உடைமைகளையும், செல்வங்களையும் எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “சாத்திரங்கள் அனைத்தின் விதிகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். மன்னர்களின் கடமைகளை அறிந்தவர்களில் முதன்மையானவர் நீர். ஐயங்களை விலக்குவதில் பெரியவர் என்று உலகம் முழுவதும் நீர் கொண்டாடப்படுகிறீர்.(1) ஓ! பாட்டா, எனக்கோர் ஐயம் இருக்கிறது அஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்தைப் பொறுத்தவரையில், நான் வேறு எந்த மனிதனிடமும் அதற்கான தீர்வைக் கேட்க மாட்டேன்.(2) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, கடமை மற்றும் அறத்தின் பாதையில் நடக்க விரும்பும் ஒரு மனிதனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக.(3) ஓ! பாட்டா, ஒரு பிராமணன், தன் வகையைச் சேர்ந்த ஒருத்தி, க்ஷத்திரியரில் ஒருத்தி, வைசியரில் ஒருத்தி மற்றும் அந்தப் பிராமணன் கலவி இன்பத்தில் ஈடுபட விரும்பினால் சூத்ரரில் ஒருத்தி என நான்கு மனைவிகளை அவன் கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(4) ஓ! குருக்களில் சிறந்தவரே, அந்த மகன்களில் எவன் தந்தையின் செல்வத்தை மரபுரிமையாகப் பெறத் தகுந்தவன் என்பதை ஒருவன் பின் ஒருவராக எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, அவர்களில் எவரெவர், தங்கள் தந்தைவழி செல்வத்தில் எவ்வளவு பங்கை எடுத்துக் கொள்ளலாம்? அவர்களுக்கு மத்தியில் தந்தை வழி உடைமைகளை எவ்வாறு பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய மூவரும் மறுபிறப்பாள வகையினராகக் கருதப்படுகின்றனர். ஓ! யுதிஷ்டிரா, இந்த மூன்று வகைகளில் {வர்ணங்களில்} திருமணம் செய்து கொள்வதே பிராமணனின் கடமை என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(7) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஒரு பிராமணன், பிழையான தீர்மானம், அல்லது பேராசை, அல்லது காமம் ஆகியவற்றால் சூத்திரரில் ஒருத்தியை மனைவியைக் கொள்கிறான். எனினும், சாத்திரங்களின் படி அத்தகைய மனைவியை ஏற்க அவன் தகுந்தவனல்ல.(8) ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணைப் படுக்கைக்கு இட்டுச் செல்வதன் மூலம், மறுமையில் இழிந்த கதியை அடைகிறான். அத்தகைய செயலைச் செய்த அவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி பாவக்கழிப்பை {பரிகாரத்தைச்} செய்ய வேண்டும்.(9) ஓ! யுதிஷ்டிரா, அந்தப் பிராமணன் அத்தகைய ஒரு செயலின் விளைவால் சந்ததியைப் பெற்றிருந்தால், அந்தப் பாவக்கழிப்பு இரண்டு மடங்கு கனமானதாக, அல்லது கடுமையானதாக இருக்க வேண்டும். ஓ! பாரதா, (தந்தைவழி) செல்வத்தை (வெவ்வேறு மனைவிகளின் பிள்ளைகளுக்கு மத்தியில்) எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(10)
முதலிடத்தில், ஒரு பிராமணி மனைவியிடம் பிறந்த மகனானவன், தன் தந்தையின் செல்வத்திலிருந்து நற்குறிகளைக் கொண்ட ஒரு காளையையும், சிறந்த தேர், அல்லது வாகனத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(11) ஓ!யுதிஷ்டிரா, அதன் பிறகு அந்தப் பிராமணரிடம் எஞ்சியிருக்கும் உடைமைகளைச் சமமான பத்து பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். பிராமணி மனைவி மூலம் பிறந்த மகன், தன் தந்தைவழி செல்வத்தில் அத்தகைய நான்கு பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(12) க்ஷத்திரிய மனைவியிடம் பிறந்த மகன் பிராமண நிலையைக் கொண்டவன் என்பதில் ஐயமில்லை. எனினும், தன் தாயின் மூலம் உண்டான வேறுபாட்டின் விளைவாக அவன் பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடைமையில், மூன்று பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(13) மூன்றாவது வகையான வைசிய சாதியைச் சார்ந்த மனைவிக்குப் பிராமணத் தந்தையின் மூலம் பிறந்த மகன், அந்தத் தந்தையின் உடைமையில் எஞ்சியிருக்கும் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(14) பிராமணத் தந்தை மூலம் சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனை வாரிசாகக் கருத முடியாது என்பதால், அவன் தன் தந்தையின் செல்வத்தில் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லப்படுகிறது. எனினும், சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனுக்குத் தந்தை வழி செல்வத்தில் சிறிதளவேனும் கொடுக்க வேண்டும் என்பதால், எஞ்சியிருக்கும் ஒரு பகுதியைக் கருணையின் அடிப்படையில் அவனுக்குக் கொடுக்கலாம்.(15)
ஒரு பிராமணனின் செல்வம் இவ்வகையிலேயே பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒரே தாய்க்கு, அல்லது ஒரே வகைத் தாய்மாருக்குப் பிறந்த மகன்கள் அனைவரும் தங்களுக்குரிய பகுதியைத் தங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.(16) சூத்திர மனைவிக்குப் பிறந்த மகன், (பிராமணர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் சாத்திரங்கள் மற்றும் கடமைகளில்) திறமற்றவனாக இருப்பதன் விளைவால் அவனைப் பிராமண நிலை கொண்டவன் என்று கருத முடியாது. உயர்ந்த மூன்று வகையைச் சார்ந்த மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகள் மட்டுமே பிராமண நிலை கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டும்.(17) நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது, ஐந்தாவதாக வேறேதும் பட்டியலிடப்படுவதில்லை. சூத்திர மனைவியின் மகன், தன் தந்தையின் செல்வத்தில் (மேற்சொன்ன வகையில் பிறருக்கு ஒதுக்கிவிட்டு எஞ்சியிருக்கும்) பத்தாவது பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.(18) எனினும், அவனுடைய தந்தை அஃதை அவனுக்குக் கொடுத்தால் மட்டுமே அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். அவனது தந்தை அஃதை அவனுக்குக் கொடுக்காதிருந்தால் அவன் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஓ! பாரதா, தந்தையின் செல்வத்தில் சிறு பகுதியாவது சூத்திர மனைவியின் மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.(19) கருணையானது உயர்ந்த அறங்களில் ஒன்றாகும். கருணையின் மூலமே சூத்திர மனைவியின் மகனுக்கு ஏதாவது கொடுக்கப்படுகிறது. கருணை எழுவதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், இதயப்பூர்வமான அறமாக அஃது எப்போதும் புண்ணியத்தையே உண்டாக்கும்.(20)
ஓ! பாரதா, ஒரு தந்தைக்கு (பிற வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனைவிகள் மூலம்) பிள்ளைகள் இருந்தாலும், அல்லது (அத்தகைய மனைவிகள் மூலம்) இல்லாவிட்டாலும், சூத்திர மனைவியின் மகனுக்கு, தந்தையின் செல்வத்தில் பத்தில் ஒரு பகுதிக்கு மேல் எதுவும் கொடுக்கப்படக்கூடாது.(21) ஒரு பிராமணன், தன்னையும், தன் குடும்பத்தையும் மூன்று வருடங்கள் பராமரித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குச் செல்வத்தைக் கொண்டிருந்தால், அவன் அந்தச் செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்ய வேண்டும். ஒரு பிராமணன் ஏதுமில்லாமல் ஒருபோதும் செல்வமீட்டக்கூடாது[1].(22) ஒரு கணவன் தன் மனைவியிடம் கொடுக்க வேண்டிய உயர்ந்த தொகை (நடைமுறையில் நிலவும் நாணய முறையின்படி {பண வகையின்படி}) மூவாயிரம் நாணயங்கள் ஆகும். கணவன் மனைவிக்குக் கொடுக்கும் இந்தச் செல்வத்தை அவள் தான் விரும்பியவாறு செலவு செய்யலாம்.(23) கணவன், பிள்ளையில்லாமல் இறந்து போனால், அவனுடைய மனைவி அவனுடைய செல்வம் அனைத்தையும் அனுபவிக்கலாம். (எனினும், அவள் அவற்றில் எந்த ஒரு பகுதியையும் விற்கவோ, கொடுக்கவோ கூடாது). மனைவியானவள் (கணவன் அறியாமல்) ஒருபோதும் கணவனின் செல்வத்தில் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.(24) ஓ! யுதிஷ்டிரா, ஒரு பிராமணி மனைவி, தன் தந்தையிடம் இருந்து எந்தக் கொடையை அடைந்திருந்தாலும், மகளும் மகனைப் போன்றவளே என்பதால், (அவளது மரணத்திற்குப் பிறகு) அதை மகள் எடுத்துக் கொள்ளலாம்.(25) ஓ! மன்னா, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மகளானவள் ஒரு மகனுக்கு இணையானவளாகவே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, மரபுரிமை சட்டமும் {சொத்துரிமை சட்டமும்} அவ்வாறே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவன், செல்வத்தைப் பிரித்தல் மற்றும் கொடுத்தல் குறித்த இந்த விதிகளை நினைவுகூர்ந்து ஒருபோதும் பயனில்லாமல் செல்வத்தை ஈட்டக்கூடாது” என்றார் {பீஷ்மர்}.(26)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “சூத்திரப் பெண்ணிடம், பிராமணத் தந்தையின் மூலம் பிறந்த மகன், எந்தச் செல்வத்திற்கும் உரிமையில்லாதவனாகச் சாத்திரங்களால் அறிவிக்கப்பட்டிருந்தால், வேறு எந்த விதிவிலக்கின் மூலம் தந்தைவழி உடைமையில் பத்தில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படுகிறது?(27) ஒரு பிராமணி மனைவிக்கு, ஒரு பிராமணன் மூலம் பிறந்த மகன் ஒரு பிராமணனே என்பது கேள்விக்கப்பாற்பட்டது. க்ஷத்திரிய மனைவி, மற்றும் வைசிய மனைவி ஆகியோருக்கு ஒரு பிராமணக் கணவன் மூலம் பிறந்த ஒருவனும் பிராமண நிலையைக் கொண்டவனாகிறான்.(28) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அத்தகைய மகன்கள் தங்கள் தந்தைவழி செல்வத்தை ஏன் சமமற்ற வகையில் பகிர்ந்து கொள்கிறார்கள்? மறுபிறப்பாளர்கள் என்ற பெயரில் சமமான உரிமை பெற்ற மூன்று உயர்ந்த வகைகளைச் சார்ந்த தாய்மாருக்குப் பிறந்ததால் அவர்கள் அனைவரும் பிராமணர்கள் என்று நீர் சொன்னீர்” என்று கேட்டான்.(29)
பீஷ்மர், “ஓ! பகைவர்களை எரிப்பவனே, இவ்வுலகத்தில் உள்ள மனைவிகள் அனைவரும் தாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். அந்தப் பெயர் அனைவருக்கும் பயன்படுத்தப்பட்டாலும், இந்தப் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.(30) மூன்று பிற வகைகளைச் சேர்ந்த மூன்று மனைவிகளை மணந்து கொண்ட பிறகு, ஒரு பிராமணன் அவர்கள் அனைவருக்கும் இறுதியாக ஒரு பிராமணி மனைவியைக் கொண்டால், அவளே மனைவிகள் அனைவரின் மத்தியில் முதல்வியாகவும், பெரும் மதிப்புக்குத் தகுந்தவளாகவும் கருதப்படுவாள். உண்மையில், சக மனைவியர் அனைவருக்கும் மத்தியிலும் அவளே முதன்மையானவளாகக் கருதத்தக்கவளாவாள்.(31) கணவனுக்கான நீராடல், மேனி அலங்காரங்கள், பல் துலக்குதல், கண்களுக்கு மையிடுதல் போன்றவற்றிற்குத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் அவளது அறையிலேயே வைக்கப்பட வேண்டும். ஹவ்யம், கவ்யம் மற்றும் அறச்செயல்கள் செய்யக் கணவனுக்குத் தேவைப்படும் வேறு அனைத்தும் அவளது அறையிலேயே வைக்கப்பட வேண்டும்.(32) அந்தப் பிராமணி மனைவி வீட்டில் இருந்தால், கணவனின் தேவைகளைக் கவனிக்கும் உரிமை வேறு எந்த மனைவிக்கும் கிடையாது. ஓ!யுதிஷ்டிரா, பிராமணி மனைவியே கணவனுக்கு இச்செயல்களில் துணைபுரிய வேண்டும்.(33) கணவனின் மனைவிகள் அனைவரிலும், முதல்வியாகக் கருதப்படுவதால், கணவனின் உணவு, பானம், மலர்மாலைகள், ஆடைகள், ஆபரணங்கள் ஆகிய இவை அனைத்தும் பிராமணி மனைவியால் கணவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(34) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மனுவால் விதிக்கப்பட்ட சாத்திர விதிகள் இதுவே. ஓ! ஏகாதிபதி, இதுவே நித்திய நடைமுறையின் போக்காகக் காணப்படுகிறது.(35)
ஓ! யுதிஷ்டிரா, ஒரு பிராமணன், காமத்தால் வழிநடத்தப்பட்டு, வேறு வகையில் நடந்து கொண்டால் அவன் பிராமணர்களுக்கு மத்தியில் சண்டாளனாகக் கருதப்படுவான்[2].(36) க்ஷத்திரிய மனைவிக்குப் பிறந்த மகன், பிராமணி மனைவிக்குப் பிறந்த மகனின் நிலைக்கு இணையாகவே சொல்லப்படுகிறான். பிறப்பு வகையைப் பொறுத்தவரையில், க்ஷத்திரியரைவிடப் பிராமணி மேன்மையானவளாக இருப்பதன் விளைவால் பிராமண மனைவியின் மகனிடம் ஒரு வேறுபாடு உண்டு.(37) பிறவியின் அடிப்படையில் ஒரு க்ஷத்திரியரை ஒரு பிராமணிக்கு இணையாகக் கருதப்பட முடியாது. எனவே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிராமணி மனைவிக்குப் பிறந்த மகனே, க்ஷத்திரிய மனைவிக்குப் பிறந்த மகனை விட முதல்வனும், மேன்மையானவனுமாவான்.(38) பிறவியின் அடிப்படையில் க்ஷத்திரியர் பிராமணிக்கு இணையாக இல்லாததால், ஓ! யுதிஷ்டிரா, பிராமணி மனைவியின் மகன் தன் தந்தையின் உடைமைகளில் சிறந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்வான்.(39) அதே போலவே, பிறப்பின் அடிப்படையில் வைசியரை, க்ஷத்திரியருக்கு இணையாகக் கருத முடியாது. ஓ! யுதிஷ்டிரா, செழிப்பு, அரசு, கருவூலம் ஆகியவை க்ஷத்திரியரைச் சார்ந்தவை.(40)
இவை அனைத்தும் க்ஷத்திரியருக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியும் அவனுக்குச் சொந்தமானவையே. தன் வகைக்கான கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு க்ஷத்திரியன் பெரிய செல்வாக்கை ஈட்டுகிறான்.(41) அரச செங்கோலானது அவனால் ஏந்தப்படுகிறது. ஓ! மன்னா, க்ஷத்திரியரில்லாமல் பாதுகாப்புக் கிடையாது. பிராமணர்கள் தேவர்களுக்கும் தேவர்களாக இருப்பதால் அவர்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாவர்.(42) முனிவர்களால் விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றும் க்ஷத்திரியர்கள், உரிய சடங்குகளுடன் பிராமணர்களை வழிபட வேண்டும். இதுவே நித்திய வழக்கமாகும்.(43) கள்வர் முதலியோரால் பேராசையுடன் விரும்பப்படும் அனைத்து மனிதர்களின் உடைமைகளும் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் பாதுகாக்கப்படுகிறது. உண்மையில், மக்களுக்குச் சொந்தமான செல்வம், மனைவிகள் மற்றும் பற உடைமைகள் ஒவ்வொன்றும் க்ஷத்திரியரால் பாதுகாக்கப்படவில்லையெனில் அபகரிக்கப்படும்.(44) மன்னனாக இருக்கும் க்ஷத்திரியன், அனைத்து வகையினரையும் பாதுகாப்பவன், அல்லது மீட்பவனாகிறான். எனவே, க்ஷத்திரிய மனைவியின் மகன், வைசிய மனைவிக்குப் பிறந்தவனைவிட மேன்மையானவனாகக் கருதப்படுவான் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகத் தந்தையின் உடைமையில் க்ஷத்திரிய மனைவியின் மகனானவன், வைசியத் தாய்க்குப்பிறந்த மகனைவிடப் பெரிய பங்கை எடுத்துக் கொள்ளலாம்” என்றார் {பீஷ்மர்}.(45)
யுதிஷ்டிரன், “பிராமணர்களுக்கும் பொருந்தும் விதிகளை முறையாகச் சொன்னீர். எனினும், பிறருக்குப் பொருந்தும் விதிகள் என்னென்ன?” என்று கேட்டான்.(46)
பீஷ்மர், “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, க்ஷத்திரியன் இரண்டு மனைவிகளைக் கொள்ளலாம் என விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு க்ஷத்திரியன் சூத்திர வகையிலிருந்து மூன்றாம் மனைவியைக் கொள்ளலாம். அத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருப்பது உண்மையென்றாலும், சாத்திரங்களால் அஃது ஏற்கப்படவில்லை.(47) ஓ! யுதிஷ்டிரா, ஒரு க்ஷத்திரியனுக்கான மனைவிகளின் வகை இவ்வாறு இருக்க வேண்டும். ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனின் உடைமை எட்டு பங்குகளாகப் பிரிக்கபட வேண்டும்.(48) க்ஷத்திரிய மனைவியின் மகன் தந்தையின் உடைமையில் அத்தகைய பங்குகளில் நான்கை எடுத்துக் கொள்ளலாம். வைசிய மனைவியின் மகன் அத்தகைய பங்குகளில் மூன்றை எடுத்துக் கொள்ளலாம்.(49) எஞ்சியுள்ள ஒரு பங்கு, அல்லது எட்டாவது பங்கை சூத்திர மனைவியின் மகன் எடுத்துக் கொள்ளலாம். எனினும், சூத்திர மனைவியின் மகன் தந்தை கொடுத்தால் மட்டுமே எடுத்துக்கொள்ளலாமே அன்றி வேறு வகையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.(50)
வைசியனுக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. சூத்திர வகையில் இருந்து இரண்டாம் மனைவியைக் கொள்ளலாம். அத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருப்பது உண்மையென்றாலும், சாத்திரங்களால் அஃது ஏற்கப்படவில்லை.(51) ஒரு வைசியனுக்கு, வைசியரில் ஒருத்தி, சூத்திரரில் ஒருத்திய என இரு மனைவிகள் இருந்தால், அவர்களுக்கு இடையிலான நிலையில் வேறுபாடு இருக்கும்.(52) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒரு வைசியனின் செல்வமானது ஐந்து பங்குகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, ஒரு வைசியனுக்குத் தன் வகையைச் சார்ந்த மனைவியின் மூலமான மகன்கள் மற்றும் தாழ்ந்த வகையைச் சார்ந்தவளுடைய மகன்கள் குறித்தும், அவனுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் அவனது செல்வம் பிரிக்கப்பட வேண்டிய வகைக் குறித்தும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(53) வைசிய மனைவிக்குப் பிறந்த மகன் தன் தந்தையின் செல்வத்தில் அத்தகைய பங்குகளில் நான்கை எடுத்துக் கொள்ளலாம். ஓ! பாரதா, ஐந்தாம் பங்கானது சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனைச் சார்ந்தது எனச் சொல்லப்படுகிறது.(54) எனினும், அத்தகைய மகன் தன் தந்தை கொடுக்கும்போதே எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை அவனுக்குக் கொடுக்காதவரை அவன் எதையும் எடுக்கக் கூடாது. மூன்று உயர்ந்த வகையினரிலும், சூத்திர மனைவியால் பெறப்பட்ட மகன், தந்தையின் செல்வத்தில் எந்தப் பங்குக்கும் உரிமையற்றவனாகவே எப்போதும் கருதப்பட வேண்டும்.(55)
ஒரு சூத்திரன் தன் வகையைச் சார்ந்த ஒரே ஒரு மனைவியை மட்டுமே கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவன் மற்றொரு மனைவியைக் கொள்ளக் கூடாது. அத்தகைய மனைவியானவள் மூலம் அவன் நூறு மகன்களையே பெற்றிருந்தாலும், அவன் விட்டுச் செல்லும் செல்வத்தை அவர்கள் அனைவரும் சமமாகவே பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(56)
பிற வகையினரைப் பொறுத்தவரையில், கணவனின் சொந்த வகையில் கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தங்கள் தந்தையின் செல்வத்தைத் தங்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(57) மூத்த மகனானவன், தன் தந்தையின் சிறந்த பொருட்களில் தன் தம்பிகள் ஒவ்வொருவரையும்விட ஒரு பங்கு அதிகமாகப் பெறுவதால், அவனுடைய பங்கானது பிற மகன்கள் ஒவ்வொருவரையும் விட அதிகமானதாக இருக்கும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே சுயம்புவால் அறிவிக்கப்பட்ட மரபுரிமை {சொத்துரிமை / வாரிசுரிமைச்} சட்டமாகும்.(58) ஓ! மன்னா, கணவனின் சொந்த வகையிலேயே கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் அனைவருக்கும் மத்தியில் மற்றொரு வேறுபாடு இருக்கிறது. திருமணம் செய்து கொள்வதில், மூத்தவன் எப்போதும் இளைவர்களை முந்த வேண்டும்.(59) மனைவிகள் தங்கள் பிறப்பு வகையின் அடிப்படையில் சமமாகவும், பிள்ளைகள், தங்கள் தாய்மாரின் நிலையைப் பொறுத்தவரையில் சமமாகவும் இருக்கையில், முதலில் பிறந்த மகனானவன், தன் தம்பிகள் ஒவ்வொருவரையும் விட ஒரு பங்கு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் மகன், மதிப்பில் அடுத்ததாக இருக்கும் பங்கைக் கொள்ள வேண்டும். அதே வேளையில், அனைவரிலும் இளைய மகன், இளையவனுக்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்[3].(60) இவ்வாறு, அனைத்து வகை மனைவிகளுக்கும் மத்தியில், கணவனின் வகையையே சார்ந்த மனைவிகள் முதல்விகளாகக் கருதப்படுகிறார்கள். மரீசியின் மகனான பெரும் முனிவர் காசியபரால் இதுவே தீர்மானிக்கப்பட்டது[4]” என்றார் {பீஷ்மர்}.(61)
கலப்பு வர்ண சாதிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 48-கலப்பு வர்ண சாதிகளின் வரலாறு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “செல்வத்தின் தூண்டல் மூலமோ, வெறும் காமத்தின் மூலமோ, (ஆண், பெண் இருவரின்) உண்மையான பிறப்பு வகைக் குறித்த அறியாமையின் மூலமோ, அல்லது மடமையின் மூலமோ பல்வேறு வகையான கலப்புகள் {வர்ணங்களில் பல்வேறு வகை கலப்புகள்} ஏற்படுகின்றன.(1) ஓ! பாட்டா, கலப்பு வகுப்புகளில் பிறந்த மனிதர்களின் கடமைகள் மற்றும் அவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள செயல்கள் என்னென்ன? இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தொடக்கத்தில், அனைத்து உயிரினங்களின் தலைவன் நான்கு வகைகளைப் படைத்து, வேள்வியின் நிமித்தம் அவரவருக்குரிய செயல்களையும், கடமைகளையும் விதித்தான்[1].(3) பிராமணன், நான்கு வகைகள் ஒவ்வொன்றில் இருந்தும் ஒன்றென நான்கு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {பிராமண வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {க்ஷத்திரிய வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களின் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்). எனினும், அடுத்தடுத்த வகைகளில் (வைசிய மற்றும் சூத்திர வகைகளில்) அவன் கொள்ளும் இரு மனைவிகளிடம் பிறக்கும் மகன்கள், தந்தையுடைய நிலையால் தீர்மானிக்கப்படாமல், அவர்களுடைய தாய்மாரின் நிலையால் தீர்மானிக்கப்படுவதால் தாழ்ந்தவர்களாவர்.(4)சூத்திரப் பெண்ணின் உடலானது சடலத்தைப் போல மங்கலமற்றது என்பதால், ஒரு பிராமணனால் ஒரு சூத்திர மனைவியிடம் பெறப்படும் மகனானவன், சடலத்தைக் குறிக்கும் வகையில் அவன் பாராசவன் என்றழைக்கப்படுகிறான். அவன் தன் (தந்தையின்) குலத்தைச் சேர்ந்த மனிதர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். உண்மையில், அவனுக்காக விதிக்கப்பட்டிருக்கும் தொண்டெனும் கடமையைக் கைவிடுதல் அவனுக்கு முறையாகாது.(5) அவன் தன் சக்திக்குத்தக்க அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றித் தன் குடும்பச் சுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். வயதால் அவனே மூத்தவனாக இருப்பினும், தன் தந்தைக்குப் பிறந்தவர்களும், தன்னிலும் வயது குறைந்தவர்களுமான வேறு பிள்ளைகளுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றி, தான் ஈட்ட நேர்வதையெல்லாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(6)
ஒரு க்ஷத்திரியன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {க்ஷத்திரிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {வைசிய வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {க்ஷத்திரிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்). சூத்திர வகையைச் சார்ந்த அவனது மூன்றாவது மனைவி மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படுகிறாள். அவளிடம் அவன் பெறும் மகனானவன், ஓர் உக்ரன் என்றழைக்கப்படுகிறான்.(7)
வைசியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {வைசிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {சூத்திர வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வைசிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்).
சூத்திரன், தன் சொந்த வகையில் மட்டுமே ஒரே ஒரு மனைவியைக் கொள்ளலாம். அவனால் பெறப்படும் மகனும் சூத்திரனாகிறான்.(8)
மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர வேறு சந்தர்ப்பங்களில் பிறக்கும் ஒரு மகன் மிகத் தாழ்ந்தவனாகப் பார்க்கப்படுகிறான். தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதன், மேன்மையான வகையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால் அத்தகைய மகன், நான்கு தூய வகைகளுக்கு வெளியே உள்ள வகையாகக் கருதப்படுவான். உண்மையில், அத்தகைய மகன், அடிப்படையான நான்கு வகைகளோடு பார்க்கப்படும்போது இகழத்தக்கவனாகிறான்.(9)
ஒரு க்ஷத்திரியன் ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால், அத்தகைய மகன், நான்கு தூய வகைகள் {வர்ணங்கள்} எதனிலும் சேர்த்துக் கொள்ளப்படாமல் ஒரு சூதனாகவே கருதப்படுவான். ஒரு சூதனின் கடமைகள் அனைத்தும், மன்னர்கள் மற்றும் வேறு பெரும் மனிதர்களின் புகழ்மாலைகள் மற்றும் துதிகளை உரைப்பது தொடர்புடையனவாகும்.
ஒரு வைசியனால், பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வைதேஹகன் எனக் கருதப்படுகிறான். அவனுக்கான கடமைகள், மதிக்கத்தக்க குடும்பங்களின் பெண்களின் தனிமையைப் பாதுகாக்கும் வகையில் தடிகளைத் தாங்குதல் மற்றும் அவர்கள் பின்னால் ஓடுதல் போன்ற பொறுப்புகளாகும்[2]. அத்தகைய மகன்களுக்குத் தூய்மைச் சடங்குகள் ஏதும் விதிக்கப்படவில்லை[3].(10)
ஒரு சூத்திரன், நான்கு வகைகளில் முதன்மையான வகை {பிராமண வர்ணப்} பெண்ணுடன் கலப்பதால் பெறப்படும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். கடும் இயல்புகளுடன் கூடிய அவன், நகரங்களுக்கும், ஊர்களுக்கும் வெளியில் வாழ வேண்டும். அவன் பொதுமக்களுக்குக் கொடுக்கப்படும் மரணதண்டனைகளை நிறைவேற்றும் தொழிலைச் செய்ய வேண்டும். இத்தகைய மகன்கள் தங்கள் குலத்தில் இழிந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் கலப்புவர்ண சந்ததியாவர்.(11)
ஒரு வைசியனால், ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வந்தியாகவோ, மாகதனாகவோ ஆகிறான். அவனுக்கான கடமைகள் சொற்திறமிக்கப் புகழுரைகளை உரைப்பதாகும் {பாடுவதாகும்}. வரம்புமீறப்பட்டு, ஒரு சூத்திரனால், ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் ஒரு நிஷாதனாகிறான். அவனுக்கான கடமைகள் மீன் பிடித்தலாகும்.(12)
ஒரு சூத்திரன் ஒரு வைசியப்பெண்ணிடம் கலந்து அவளிடம் பெறப்பட்ட மகன் ஆயோகவன் என்றழைக்கப்படுகிறான். அத்தகைய ஒரு மனிதனுக்கு ஒதுக்கப்பட்ட கடமையானது தக்ஷனுக்குரியதாகும் (தச்சனுக்குரியதாகும்) {தச்சு வேலையாகும்}. அவர்கள் எவ்வகைச் செல்வத்தை வைத்துக் கொள்ள உரிமையற்றவர்களாவர்.(13)
கலப்பு வர்ணங்களைச் சார்ந்த மனிதர்கள், தங்கள் சொந்த கலப்பு வர்ணங்களைச் சார்ந்த மனைவிகளிடம் பெறும் பிள்ளைகள் அதே வகையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் சாதிகளுக்குக் கீழான சாதி பெண்களிடம் பெறும் பிள்ளைகள், தங்கள் தாய் சார்ந்த நிலையை அடைவதால் தங்கள் தந்தையை விட இழிந்தவர்களாகிறார்கள்.(14)
நான்கு தூய வகைகளைப் பொறுத்தவரையில், மனிதர்கள் தங்கள் வகைகளிலும், தங்களுக்கு அடுத்த வகைகளிலும் மனைவிகளைக் கொண்டு பெறும் பிள்ளைகள் தங்கள் சொந்த வகைகளையே {வர்ணங்களையே} அடைகிறார்கள். எனினும், வேறு மனைவிகளிடம் பெறப்படும் சந்ததி, அடிப்படையான நான்கு தூய வகைகளுக்கு வெளியே உள்ள நிலையைக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள்.(15) அத்தகைய பிள்ளைகள் தங்கள் சொந்த வகுப்புப் பெண்களிடம் மகன்களைப் பெறும்போது, அந்த மகன்கள் தங்கள் தந்தைமாரின் நிலையை {வர்ணத்தையே} அடைகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சாதிக்கு {வர்ணத்திற்கு} வெளியே மனைவிகளைக் கொள்ளும்போது மட்டுமே, அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தாழ்ந்த நிலையை அடைகின்றனர்.(16)
ஒரு சூத்திரன், மிக மேன்மையான வகையை {பிராமண வர்ணத்தைச்} சார்ந்த ஒரு பெண்ணிடம் நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகையில் ஒரு மகனைப் பெறுவது (அத்தகைய மகன் மிகத் தாழ்ந்த சண்டாளனாகக் கருதப்படுவதால்) இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகையைச் சார்ந்த மகன், அடிப்படையான நான்கு வகைகளைச் சார்ந்த பெண்களிடம் கலப்பதன் மூலம், மிகத் தாழ்ந்த, இழிந்த நிலை கொண்ட சந்ததியை உண்டாக்குகின்றனர்.(17) நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகைகளைச் சார்ந்த மற்றும், அவ்வகைகளுக்கும் வெளியே உள்ள வகைகளைச் சார்ந்த பிள்ளைகள் தங்களை விட மேன்மையான வகுப்புகளைச் சார்ந்த பெண்களுடன் கலப்பதால் பெருகுகிறார்கள். இவ்வழியில் தாழ்ந்த நிலை வகுப்புகளைச் சார்ந்த மனிதர்களிடம் இருந்து பதினைந்து மிக இழிந்த நிலை கொண்ட வகுப்புகள் உண்டாகின்றன[4].(18)கலக்கத்தகாத பெண்களுடன் பாலினக் கலவி கொள்வதால் மட்டுமே கலப்பு வகுப்புகள் உண்டாகின்றன. அடிப்படையான அல்லது தூய்மையான நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகுப்புகளின் மத்தியில், சைரந்திரி என்றழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த பெண்களிடம், {வைசிய தந்தைக்கும், க்ஷத்திரிய தாய்க்கும் பிறந்த} மாகதன் என்றழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த ஆண்களால் பிள்ளைகள் பெறப்படுகின்றனர்.(19) அத்தகைய சந்ததியின் தொழிலானது, மன்னர்கள் மற்றும் பிறரின் மேனிகளை அலங்கரிப்பதாகும். அவர்கள் களிம்புகள் {மருந்துகள்} தயாரிப்பது, மலர்மாலைகள் தயாரிப்பது, மேனி அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்வது ஆகியவற்றை நன்கறிந்தவர்களாவர். அவர்கள் தங்கள் பிறப்பின் அடிப்படையில் சுதந்திரமானவர்களாக இருப்பினும், தொண்டுக்குரிய வாழ்வையே அவர்கள் நோற்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகை மாகதர்கள் மற்றும் சைரந்திரி என்றழைக்கப்படும் பெண்களுக்கு மத்தியில் ஏற்படும் கலப்பில் ஆயோகவம் என்றழைக்கப்படும் மற்றொரு சாதி உண்டாகிறது. அவர்களது தொழில் (மீன், நீர்க்கோழி மற்றும் விலங்குகளைப் பிடிக்க உதவும்) வலைகளை உண்டாக்குவதாகும். சைரந்திரி சாதி பெண்களிடம் வைதேஹகர்கள் கலப்பதன் மூலம், மது மற்றும் சாராயம் உற்பத்தி செய்யும் மைரேயகர்கள் என்றழைக்கப்படும் பிள்ளைகள் பிறக்கிறார்கள்.(20)
நிஷாதர்களில் இருந்து மத்குரன் என்றழைக்கப்படும் சாதியும், ஓடம் செலுத்துவதைத் தொழிலாகக் கொண்ட தாஸர்கள் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு சாதியும் உண்டாகிறது. சண்டாளனிலிருந்தும், பிணங்களைக் காக்கும் தொழிலைக் கொண்ட ஸ்வபாகன் என்றழைக்கப்படும் குலம் உண்டாகிறது.(21) மாகதி சாதிப் பெண்கள், தீய நிலைகளைக் கொண்ட இந்த நான்கு சாதிகளுடன் கலப்பதன் மூலம் வஞ்சத்தையே பயின்று வாழ்வை நடத்தும் இன்னும் மூன்று சாதிகளை உண்டாக்குகின்றனர். அவர்கள் மாம்ஸன் {இறைச்சி விற்பனை செய்பவர்கள்}, ஸ்வாதுகரன் {ருசிமிக்க உணவுவகைகளைச் செய்பவர்கள்}, க்ஷௌத்ரன் {தேனெடுப்பவர்கள்}, ஸௌகந்தன் {நறுமணப் பொருள் செய்பவர்கள்} ஆகியோராவர்.(22)
வைதேஹனிலிருந்து வஞ்சகத்தைப் பயின்றும் வாழும் கொடுமையும், பாவமும் நிறைந்த சாதி தோன்றுகிறது. நிஷாதர்களில் இருந்து, கழுதை பூட்டப்பட்ட தேரில் பயணிப்பவர்களான மத்ரநாப சாதியினர் தோன்றுகின்றனர்.(23)
சண்டாளர்களில் இருந்து, கழுதைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் இறைச்சியை உண்பவர்களான புல்கஸன் என்ற சாதி உண்டாகிறது. இவர்கள் மனித சடலங்களின் தோலுரிப்பதால் கிடைக்கும் ஆடைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். உடைந்த மண்கலங்களில் அவர்கள் உண்பதும் காணப்படுகிறது.(24) மிக இழிந்த இந்த மூன்று சாதிகளும் ஆயோகவ சாதிப் பெண்களிடம் (வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த தந்தைகள் மூலம்) பிறக்கின்றன.
க்ஷுத்ரன் என்றழைக்கப்படும் சாதி வைதேஹகனிலிருந்து உண்டாகிறது. புறநகரங்கள் மற்றும் ஊர்களுக்கு வெளியே வசிப்பவர்களான ஆந்திரன் என்றழைக்கப்படும் சாதியும் (வைதேஹகர்களிலிருந்து) உண்டாகிறது.(25)
ஒரு சர்மகாரன், ஒரு நிஷாத சாதி பெண்ணிடம் கலப்பதன் மூலம் காராவரன் என்றழைக்கப்படும் வகுப்பை உண்டாக்குகிறான். மேலும் ஒரு சண்டாளனில் இருந்து, கூடைகள் மற்றும் மூங்கில் வேலைப்பாடுகள் செய்யும் பாண்டுசௌபாகன் என்ற பெயரால் அறியப்படும் சாதி உண்டாகிறது.(26)
ஒரு நிஷாதன், வைதேஹி சாதிப் பெண்ணுடன் கலப்பதன் மூலம் ஆஹிண்டகன் என்ற பெயரில் அழைக்கப்படும் சாதி உண்டாகிறது. ஒரு சண்டாளன், ஒரு சௌபாகப் பெண்ணிடம் பெறும் மகன், சண்டாளன் என்ற நிலை அல்லது தொழிலில் இருந்து வேறுபடாதவனாக இருக்கிறான்.(27)
ஒரு நிஷாதிப் பெண், ஒரு சண்டாளனுடன் கலப்பதன் மூலம் கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கு வெளியே வாழும் {அந்தேவஸாயி {பாண்டுஸௌபகன்}-ஆன) ஒரு மகனைப் பெறுகிறாள். அத்தகைய சாதிக்காரர்கள் சுடலையில் வாழ்கிறார்கள். அவர்கள் மிக இழிந்த வகையினராகக் கருதப்படுகின்றனர்.(28)
இவ்வாறே வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த தந்தைமார் மற்றும் தாய்மாரின் முறையற்ற, பாவம் நிறைந்த கலவியின் மூலம் இந்தக் கலப்புச் சாதிகள் உண்டாகின்றன. அவர்கள் மறைந்து வாழ்ந்தாலும், வெளிப்படையாக வாழ்ந்தாலும், அவர்களை அவர்களின் தொழில் கொண்டு அறிய வேண்டும்.(29)
அடிப்படையான நான்கு வகையினருக்கு {வர்க்கத்தினருக்கு} மட்டுமே சாத்திரங்களில் கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பிறரைப் பொறுத்தவரையில் சாத்திரங்கள் முற்றிலும் அமைதியாக இருக்கின்றன. அனைத்து வகையினருக்கு மத்தியிலும், சாத்திரங்களில் கடமைகள் நிர்ணயிக்கப்படாத சாதிகளுக்கு, (தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட) என்ன செய்ய வேண்டும் என்பதில் அச்சங்கள் ஏதும் கிடையாது.(30)
வேள்வி செய்யும் வழக்கமில்லாத, அல்லது வேள்விகள் விதிக்கப்படாத மனிதர்களும், அடிப்படையான நான்கு வகைகள் {வர்ணங்களில்} இருந்தாலும், அவற்றுக்கு வெளியே இருந்தாலும், அறவோரின் தோழமையும், போதனையும் இல்லாதவர்களும், அறக்கருத்து ஏதுமின்றிக் கட்டுப்படுத்தப்பட முடியாத காமத்தினால் பிற சாதிப் பெண்களுடன் கலப்பதன் மூலம், எண்ணற்ற கலப்புச் சாதிகள் உண்டாகின்றன. அவற்றின் தொழிலும், வசிப்பிடங்களும் முறையற்ற கலவியின் மூலம் உண்டாகும் அவற்றின் பிறப்பைச் சார்ந்திருக்கின்றன.(31) நான்கு சாலைகள் சந்திக்கும் இடம், அல்லது சுடலை, அல்லது மலைகள் மற்றும் குன்றுகள், அல்லது காடுகள் மற்றும் மரங்கள் சார்ந்த இடங்களில் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் இரும்பாலான ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர்.(32) அத்தகைய இடங்களில் வாழ்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான தொழில்களை வெளிப்படையாகச் செய்கின்றனர். அவர்கள் தங்கள் மேனியை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பல்வேறு வகை வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வாழ்ந்து வருவது காணப்படுகிறது.(33) பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்கு உதவி செய்வதன் மூலமும், கொடுமையின்மை, கருணை, பேச்சில் வாய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகிய அறங்களைப் பயில்வதன் மூலமும்,(34) பிறருக்காகத் தங்களின் உயிர்களையே விடுவதன் மூலமும் கலப்பு சாதி மனிதர்கள் நிச்சயம் தங்கள் வெற்றியைத் தேடிக் கொள்கின்றனர். ஓ! மனிதர்களின் தலைவா, இவ்வறங்களே அவர்களின் வெற்றிக்கான காரணங்களாக அமைகின்றன என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(35)
புத்தியைக் கொண்ட ஒருவன், அனைத்தையும் கருத்தில் கொண்டு, சாத்திர விதிகளின் படி தனக்குத் தகுந்த அல்லது முறையெனத் தீர்மானிக்கப்பட்ட பெண்களிடம் சந்ததியை உண்டாக்க வேண்டும். இழிந்த சாதியைச் சார்ந்த பெண்ணிடம் பெறப்படும் மகன், நீர்நிலையைக் கடக்க விரும்பும் நீச்சற்காரனுக்குப் பெருங்கனத்தைப் போலவே தன் தந்தையைக் காப்பதற்குப் பதிலாகத் துயரைக் கொண்டு வருகிறான்.(36) ஒரு மனிதன் கல்விமானாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவ்வுலகில் காமமும், கோபமும் மனிதனுக்கு இயற்கையான குணங்களாகவே அமைகின்றன. எனவே, பெண்கள் ஆண்களைத் தவறான பாதையில் இழுத்துச் செல்வதே எப்போதும் காணப்படுகிறது.(37) ஆண்கள் தொடர்பு கொண்டால் துன்பத்தை விளைவித்துக் கெடுப்பதே பெண்களின் இயல்பான மனப்பான்மையாக இருக்கிறது. எனவே, ஞானம் கொண்ட மனிதர்கள், பெண்களிடம் பெரும்பற்று கொள்வதில்லை” என்றார் {பீஷ்மர்}.(38)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கலப்புசாதிகளைச் சார்ந்த, தூய்மையற்ற பிறப்பைக் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்சங்களைப் பார்க்கையில், அவர்கள் உண்மையில் மதிக்கத்தகுந்தவர்களாக இல்லை. இந்தப் புறத் தன்மைகளின் விளைவாக அவர்களுடைய பிறப்பைக் குறித்த உண்மையை நாம் அறிய முடியாது. ஓ! பாட்டா, இத்தகைய பிறப்பைக் கொண்ட மனிதர்களைக் குறித்த உண்மையை அறிய ஏதேனும் குறியீடுகள் இருக்கின்றனவா?” என்று கேட்டான்.(39)
பீஷ்மர், “முறையற்ற கலவியின் மூலம் பிறந்த ஒருவன், பல்வேறு குண இயல்புகளைக் கொண்டவனாக இருக்கிறான். மேலும், நல்லோராகவும், அறவோராகவும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்களின் செயல்களுடன் ஒருவனுடைய செயல்களை ஒப்பிடுவதன் மூலம் அவனது பிறப்பின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்.(40) மதிப்பில்லா நடத்தை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்று எதிரான செயல்கள், நேர்மையின்மை, கொடூரத்தன்மை, வேள்விகள் மற்றும் புண்ணியத்திற்கு வழிவகுக்கும் வேறு சாத்திரச் செயல்களைச் செய்யாமை ஆகியவை ஒருவனுடைய தூய்மையற்ற பிறப்பை அறிவிக்கும்.(41) ஒரு மகன் தன் இயல்புகளைத் தந்தையிடமிருந்தோ, தாயிடமிருந்தோ பெறுகிறான். சில வேளைகள் அவன் அவற்றை இருவரிடமிருந்தும் பெறுகிறான். தூய்மையற்ற பிறப்பைக் கொண்டவனால் ஒருபோதும் தன் உண்மை இயல்பை மறைக்க முடியாது.(42) ஒரு புலி அல்லது ஒரு சிறுத்தையின் குட்டி, மேனியில் உள்ள வரிகள் அல்லது புள்ளிகளில் தன் தந்தையையோ, தாயையோ பிரதிபலிப்பதைப் போலவே ஒரு மனிதனால் தன் பிறப்புச் சூழ்நிலைகளைக் குறித்து ஒருபோதும் வஞ்சனை செய்ய முடியாது. (43) ஒருவனுடைய பிறப்பின் வழியை எவ்வளவுதான் மறைத்தாலும், அந்தப் பிறப்புத் தூய்மையற்றதாக இருந்தால், அதன் குணமோ, இயல்போ, சிறிதாகவோ, பெரிதாகவோ நிச்சயம் வெளிப்படும்.(44) அறவொழுக்கம் பயில்பவனைப் போல ஒரு மனிதன் நேர்மையாற்ற பாதையில் நடக்கக்கூடும். எனினும், அவன் அந்தச் செயல்களைச் செய்யும் காரியத்தில், அவன் நல்ல வகையைச் சேர்ந்தவனா {ஆரியனா}, வேறு வகையானவனா என்று தன் இயல்பை எப்போதும் அவன் அறிவிக்கிறான்.(45)
இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் பல்வேறு வகை இயல்புகளைக் கொண்டனவாக இருக்கின்றன. இவ்வாறு உள்ள உயிரினங்களுக்கு மத்தியில், தூய பிறப்பு மற்றும் அறவொழுக்கம் ஆகியவற்றைப் போன்ற நன்மை, அல்லது மதிப்பு வேறு எதனிலும் இல்லை.(46) ஒரு மனிதன் இழிந்த வகையில் பிறந்தவனாக இருந்தால், சாத்திரக் கல்வியின் மூலம் எழும் நற்புத்தியானது, இழிந்த செயல்களில் இருந்து அவனது உடலைப் பாதுகாப்பதில் தவறுகிறது. முற்றான நற்புத்தி பல்வேறு அளவுகளில் இருக்கிறது. அஃது உயர்வாகவோ, நடுத்தரமாகவும், தாழ்வாகவோ இருக்கலாம். தாழ்ந்த வகை மனிதனிடம் அஃது இருந்தாலும், எவ்விளைவையும் உண்டாக்காமல் கூதிர் கால மேகங்களைப் போல அது மறைந்து போகும். மறுபுறம் நற்புத்தியானது, பிறந்திருக்கும் மனிதனிடம் உள்ள தன் அளவுக்கு ஏற்ப அவனது செயல்களில் வெளிப்படுகிறது[5].(47) ஒரு மனிதன் மேன்மையான வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவனாக இருந்தாலும், அவன் நன்னடத்தையற்றவனாக இருந்தால், எந்த மதிப்பையோ, வழிபாட்டையோ அவன் பெறத்தகுந்தவனல்ல. கடமைகளை அறிந்தவனும், நன்னடத்தைக் கொண்டவனுமான ஒரு சூத்திரனைக் கூட ஒருவன் வழிபடலாம்.(48) ஒரு மனிதன், தான் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமும், தான் கொண்ட நல்ல அல்லது தீய இயல்களின் மூலமும், பிறந்த குலத்தின் மூலமும் தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிறான். ஒருவன் பிறந்த குலமானது எக்காரணத்தினாலும் தாழ்ந்ததாக இருந்தால், அவன் தனது செயல்களின் மூலம் அதை விரைவில் உயர்த்தி, பிரகாசிக்கச் செய்து புகழடையச் செய்கிறான்.(49) ஞானம் கொண்ட மனிதர்கள், இந்தக் காரணங்களுக்காவே பலவகைக் கலப்புச் சாதிகள் மற்றும் தூய சாதிகளைச் சார்ந்த பெண்களில், தங்கள் சந்ததி உண்டாக்கத் தகாதவர்களைத் தவிர்க்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(50)
இருபது வகை மகன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 49-இருபது வகை மகன்ளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, வகைகள் {வர்ணங்கள்} மற்றும் வகுப்புகள் {கலப்பு சாதிகள்} ஆகியவற்றைத் தனித்தனியாகவும், எவ்வகைப் பெண்களிடம் எவ்வகை மகன் பெறப்படுகிறான்? மகன்களாக எவரை உரிமை கொண்டாடலாம்? என்னென்ன வகை மகன்கள் இருக்கின்றனர்? என்பவை குறித்தும் எங்களுக்குச் சொல்வீராக.(1) மகன்களைப் பொறுத்தவரையில் சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன. ஓ! மன்னா, எங்கள் மனத்தைப் பீடிக்கும் ஐயங்களைப் போக்குவதே உமக்குத் தகும். உண்மையில், இக்காரியத்தில் நாங்கள் கலக்கத்தில் {தெளிவற்ற நிலையில்} இருக்கிறோம்” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் மடியில் பிறந்த பிள்ளையாக {அனந்தராஜனாக}{1} ஒருவனுடைய சுயமே கருதப்படுகிறது {தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் தானே பெறும் மகன் ஔரஸன் என்றழைக்கப்படுகிறான்}.
பிள்ளை பெறும் பணிக்காகத் தன்னால் அழைக்கப்பட்ட ஒருவன் மூலம் தன் மனைவியிடம் பிறந்த மகன் நிருக்தஜன்{2} என்றழைக்கப்படுகிறான்.
தன் மனைவியிடம் தன் அனுமதி இல்லாமல் வேறு எவராலோ பெறப்பட்ட மகன் பிரஸ்ருதஜன்{3} ஆவான்[1].(3)
தன் நிலையின் இருந்து வீழ்ந்தவிட்ட மனிதன் மூலம் தன் மனைவியிடம் பெறப்பட்ட மகன் பதிதஜன்{4} என்றழைக்கப்படுகிறான்.
கொடுக்கப்பட்டவன், ஆக்கப்பட்டவன் என மேலும் இரு மகன்களும்{5,6} இருக்கின்றனர்.
அத்யுதன்{7} என்றழைக்கப்படும் மற்றொருவனும் இருக்கிறான்[2].(4)
ஒரு கன்னிகையுடைய தந்தையின் இல்லத்தில் பிறந்த மகன் கானீனன்{8} என்றழைக்கப்படுகிறான்.
இவை தவிர்த்து அபத்வம்ஸஜர்கள் என்று அழைக்கப்படும் ஆறுவகை மகன்களும்{9….14},
அபஸதர்கள் என்றழைக்கப்படும் மேலும் அறுவரும்{15….20} இருக்கின்றனர்.
ஓ! பாரதா, சாத்திரங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு வகை மகன்கள் இவர்களே ஆவர் என்பதை அறிவாயாக” என்றார் {பீஷ்மர்}[3].(5)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அபத்வம்ஸஜர் என்றழைக்கப்படும் அறுவர் யாவர்? மேலும் அபஸதர்கள் என்பவர்கள் யாவர்? இவை யாவையும் விரிவாக எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தாழ்ந்த மூன்று வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு பிராமணனால் பெறப்படும் மகன்கள் {மூவர்}, தாழ்ந்த இரு வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு க்ஷத்திரியனால் பெறப்படும் மகன்கள் {இருவர்}, ஓ! பாரதா, தாழ்ந்த ஒரு வகையைச் சார்ந்த மனைவியிடம் ஒரு வைசியனால் பெறப்படும் மகன் {ஒருவன்} ஆகியோரே {இந்த அறுவரே} அபத்வம்ஸஜர்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறே ஆறு வகைகளாக விளக்கப்படுகின்றனர். இப்போது அபஸதர்கள் யார் என்பதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(8)
ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு சூத்திரன் பெறும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் சூத்திர வகையைச் சார்ந்த ஒருவன் பெறும் மகன் விராத்யன் என்றழைக்கப்படுகிறான். வைசியப் பெண்ணிடம், ஒரு சூத்திரத் தந்தை பெறும் மகன் வைத்யன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவகை மகன்களும் அபஸதர் என்று அழைக்கப்படுகின்றனர்.(9)
ஒரு வைசியன் பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணுடன் கலப்பதன் மூலம் மாகதன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான், அதே வேளையில் க்ஷத்திரியப் பெண்ணிடம் வாமகன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான்.
க்ஷத்திரியனால் மேன்மையான வகைப் பெண்ணிடம் ஒரு வகை மகனைப் பெற முடியும்.(10) உண்மையில் ஒரு க்ஷத்திரியனால், ஒரு பிராமணப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் சூதன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவரும் கூட அபஸதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஓ! மன்னா, இந்த ஆறு வகை மகன்களும் மகன்களல்ல என்று சொல்ல முடியாது” என்றார் {பீஷ்மர்}.(11)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவனுடைய நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனே அவனுடைய மகன் என்று சிலர் சொல்கின்றனர். மறுபுறம், ஒருவனுடைய வித்தில் இருந்து பெறப்பட்டவனே ஒருவனுடைய மகன் என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த இரு வகை மகன்களும் சமமானவர்கள்தானா? மேலும், அந்த மகன் யாருடையவன்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவனுடைய வித்தில் இருந்து பிறந்தவன் அவனுடைய மகனே. எனினும், வித்துக்குச் சொந்தக்காரன் அதில் இருந்து பிறக்கும் மகனைக் கைவிட்டால், அத்தகைய மகன் எவனுடைய மனைவியிடம் பெறப்பட்டானோ அவனுடையவனாவான். அத்யுதன் என்றழைக்கப்படும் மகனுக்கும் இதே விதியே பொருந்தும். அவன் எந்த மனிதனின் வித்திற்குப் பிறந்தானோ அவனுக்கே உரியவனாவான். இருப்பினும், வித்துக்குச் சொந்தக்காரன் அவனைக் கைவிட்டால், அவன் தன் தாயின் கணவனுடைய மகனாகிறான். சட்டம் இதையே அறிவிக்கிறது என்பதை அறிவாயாக” என்றார்.(13)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எவனுடைய வித்தில் பிறக்கிறானோ அவனுக்கு மகனாகிறான் என்பதை நாம் அறிவோம். அந்த மகனை ஈன்றெடுக்கும் பெண்ணின் கணவன் அவனிடம் {அந்த மகனிடம்} உரிமையைப் பெறுவது எவ்வாறு? அதே போல அத்யுதன் என்றழைக்கப்படும் மகன், எவனுடைய வித்தில் இருந்து பிறந்தானோ அவனது மகனாகவே அறியப்பட வேண்டும். உரிமையும் வளர்ப்பும் முறிந்து போனதன் விளைவால் அவன் பிறரின் மகனாவது எவ்வாறு?” என்று கேட்டான்.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தன் மடியில் பிறந்த மகனை ஏதோ ஒரு காரணத்திற்காகக் கைவிட்டால், உயிர் வித்து மட்டுமே மகன் என்ற நிலையை உண்டாக்க முடியாது என்பதால், அவனை அத்தகைய மகனின் தந்தையாகக் கருத முடியாது. நிலத்தை {மனைவியை} உரிமையாகக் கொண்ட மனிதனுக்கு உரியவனாகவே அத்தகைய மகன் கருதப்பட வேண்டும்.(15) ஒரு மனிதன் ஒரு மகனைப் பெற விரும்பி, கருவுற்றிருக்கும் பெண்ணை மணக்கும்போது, தன் மனைவிக்குப் பிறந்த மகனானவன், தன் நிலத்தில் விளைந்த கனியே என்பதால் அவனுக்கே உரியவனாவான். எந்த மனிதனின் உயிர்வித்தில் அந்த மகன் பிறந்தானோ, அவன் அத்தகைய மகனிடம் எந்த உரிமையும் கொள்ள முடியாது.(16) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒருவனது நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனும், தன்னால் பெறப்படாதவனுமான மகன், தன்னை உண்மையில் பெற்ற தந்தையின் அடையாளங்கள் அனைத்தையும் சுமக்கிறான் (தன் தாயின் கணவனுடைய அடையாளங்களைச் சுமப்பதில்லை). இவ்வாறு பிறக்கும் மகன், உடற்குறி அளிக்கும் சான்றுகளை மறைக்க முடியாது. அவன் கண் பார்வையிலேயே (மற்றொருவனுக்குரியவன் என்று) அறியப்படுவான்[4].(17) ஆக்கப்பட மகனைப் பொறுத்தவரையில், அவன் சில வேளைகளில் ஆக்கியவரின் பிள்ளையாகவும், வளர்த்தவரின் பிள்ளையாகவும் {கிருத்ரிமபுத்ரனாகக்} கருதப்படுகிறான். அவனது வழக்கில், மகன்தன்மைக்கான காரணமாக உயிர்வித்தோ, பிறந்த நிலமோ இருப்பதில்லை” என்றார்.(18)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மகனாக ஆக்கப்பட்டவனும், எடுத்து வளர்க்கப்பட்டதன் காரணமாக மகன் என்ற நிலை உண்டானவனும், உயிர்வித்தையோ, பிறந்த நிலத்தையோ மகன் என்ற நிலைக்குக் காரணமாகக் கொள்ளாதவனுமான மகன் எவ்வகை மகனாவான்?” என்று கேட்டான்.(19)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தந்தை மற்றும் தாயால் சாலையில் கைவிடப்பட்ட ஒரு மகனை ஒருவன் எடுத்து வளர்க்கும்போது, அவ்வாறு எடுத்து வளர்ப்பவன், பெற்றோரைத் தேடியும் காணத்தவறும்போது, அவனே அத்தகைய மகனின் தந்தையாகிறான், பின்னவனும் ஆக்கப்பட்ட மகன் {கிருத்ரிமபுத்ரன்} என்று அழைக்கப்படுகிறான்.(20) சொந்தங்கொள்ள எவரும் இல்லாதபோது அவன் தன்னை வளர்ப்பவருக்கு உரிமையாகிறான். மேலும் அத்தகைய மகன், தன்னை வளர்ப்பவர் சார்ந்த வகைக்கு உரியவனாகவே கருதப்படுகிறான்” என்றார்.(21)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அத்தகைய ஒருவனின் தூய்மைசெய் சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எவருக்கு எத்தகைய சடங்குகள் செய்யப்பட வேண்டும்? அவன் எந்தப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டும்? ஓ!பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(22)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெற்றோரால் கைவிடப்பட்ட மகன், தன்னை எடுத்து வளர்த்தவரின் வகையையே அடைவதால், தன்னை எடுத்து வளர்ப்பவரின் வழக்கத்திற்கு இசைவாகவே அத்தகைய மகனின் {உபநயனம் முதலிய} தூய்மைச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.(23) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உண்மையில், அத்தகைய மகனை வளர்ப்பவன், தன் சொந்த குல மற்றும் உறவுகளின் நடைமுறைப்படி அவனுக்குண்டான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அத்தகைய மகனுக்குத் திருமணத்தில் அளிக்கப்படும் பெண்ணைப் பொறுத்தவரையிலும்கூட, அவள், அவனை வளர்ப்பவனின் வகையைச் சார்ந்தவளாகவே இருக்க வேண்டும்.(24) ஒரு மகனின் உண்மைத் தாயை உறுதி செய்ய முடியாதபோது மட்டுமே இவை யாவும் செய்யப்பட வேண்டும். மகன்களுக்கு மத்தியில், ஒரு கன்னிகைக்குப் பிறந்தவனும் {கானீனனும்}, திருமணத்திற்கு முன்பே கருவுற்ற தாய்க்குப்பிறந்து அதையடுத்து {திருமணத்திற்குப் பிறகு அவளால்} வளர்க்கப்பட்டு வருபவனும் {ஸஹோடனும்} மதிப்பற்றவர்களாகவும், மிக இழிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(25) எனினும், சட்டப்படியான திருமணத்தின் மூலம் தந்தையால் பெறப்பட்ட மகன்களுக்கு விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளையே இவர்கள் இருவரும் பெற வேண்டும். தந்தையின் வித்தில் பிறந்ததன் விளைவால் தந்தையின் மகனாகுபவன் {க்ஷேத்ரஜன்}, அபஸதர்கள் என்றழைக்கப்படும் மகன்கள், கன்னிப்பருவத்தில் மனைவியால் பெறப்பட்டு, திருமணத்திற்குப் பிறகு வளர்க்கப்படுபவர்கள் {ஸகோடர்கள்} ஆகியோரைப் பொறுத்தவரையில்,(26) பிராமணர்களும், பிறரும் தங்கள் தங்கள் வகைக்குரிய அதே தூய்மைச் சடங்குகளையே அவர்களுக்கும் செய்ய வேண்டும். பல்வேறு வகை மகன்கள் பொறுத்தவரையில் சாத்திரங்களில் காணப்படும் தீர்மானங்கள் இவையே. உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார் {பீஷ்மர்}.(27)
சியவனரும் மீன்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 50-தோழமையினால் ஏற்படும் கருணை குறித்துச் சொல்வதற்காக சியவனரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பனிரெண்டு வருடம் நீரில் தவமிருந்த சியவனர்; நீர்வாழ் உயிரினங்களுடன் அவருக்கு இருந்த தோழமை; மீன்பிடித்த மீனவர்கள்; இறந்த மீன்களைக் கண்டு துயருற்ற சியவனர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அடுத்தவர் துயரத்தைக் கண்டு உணரும் கருணை, அல்லது பரிதாப உணர்வின் இயல்பென்ன? ஒருவன் மற்றவனுடன் தோழமையுடன் வாழ்வதன் விளைவால் அந்த மற்றவனிடம் அவன் கொள்ளும் கருணை, அல்லது பரிவு உணர்வின் இயல்பென்ன? பசுக்கள் தொடர்புடைய உயர்ந்த அருளின் (அளவென்ன?) இயல்பென்ன? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, இதுதொடர்பாக ஒரு பழங்கதையில் நஹுஷனுக்கும், முனிவர் சியவனருக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில், பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவருமான பெரும் முனிவர் சியவனர், உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைச் சில காலத்திற்கு வாழ விரும்பி அதன் படியே வாழவும் தொடங்கினார்.(3) செருக்கு, கோபம், இன்பதுன்பங்கள் ஆகியவற்றைக் கைவிட்ட அந்தத் தவசி அந்நோன்பு நோற்கும் உறுதியேற்றுக் கொண்டு, உதவாஸ விதிகளின் படி பனிரெண்டு ஆண்டுகள் வாழத் தொடங்கினார்[1].(4) அம்முனிவர் அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதேபோலவே அவர் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அந்தப் பலமிக்கத் தவசி அனைவரும் நடந்து கொள்ளும் நடத்தையால் நிலவுக்கு ஒப்பானவராக இருந்தார்.(5)தேவர்கள் அனைவரையும் வணங்கி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தம்மைத் தூய்மை செய்து கொண்ட அவர், கங்கையும், யமுனையும் கலக்கும் இடத்தில் உள்ள நீரில் நுழைந்து, உயிரற்ற ஒரு மரக்கட்டையைப் போல அங்கே நின்று கொண்டிருந்தார்.(6) காற்றுக்கு ஒப்பான வேகத்தைக் கொண்டவையும், சீற்றத்துடன் முழங்கி வருபவையுமான அவ்விரு ஆறுகளின் நீரோட்டத்தை எதிர்த்து அஃதை அவர் தமது தலையில் தாங்கினார்.(7) பிரயாகையில் கலக்கும் கங்கை, யமுனை, பிற ஆறுகள், தடாகங்கள் ஆகியன அந்த முனிவரைப் பீடிக்காமல் (அவருக்கான மதிப்பைக் காட்டி) அவரைக் கடந்து சென்றன.(8) ஒரு மரக்கட்டையின் தன்மையை அடைந்த அந்தப் பெரும் முனிவர் சில வேளைகளில் அந்த நீரிலேயே கிடந்து சுகமாக உறங்கினார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சில வேளைகளில் அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி நிமிர்ந்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.(9) அந்த நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஏற்புடையவராக அவர் இருந்தார். இவை யாவும் சிறு அச்சமேதுமில்லாமல் அந்த முனிவரின் உதடுகளை முகர்ந்து பார்த்தனர்.(10)
அந்தப் பெரும் நீர்ச் சங்கமத்தில் அம்முனிவர் இவ்வழியிலேயே நெடுங்காலம் இருந்தார். ஒரு நாள், சில மீனவர்கள் அங்கே வந்தனர்.(11) ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, அம்மனிதர்கள் கைகளில் வலைகளுடன் அம்முனிவர் இருந்த இடத்திற்கு வந்தனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அவர்கள் அனைவரும் மீன் பிடிக்க விரும்பினர்.(12) நல்ல உடற்கட்டு, அகன்ற மார்பு, பெரும் பலம் தன்னுத் துணிவைக் கொண்டவர்களும், நீருக்கஞ்சி ஒருபோதும் திரும்பாதவர்களும், தங்கள் வலைகளின் மூலம் ஈட்டுவதைக் கொண்டு வாழ்பவர்களுமான அம்மனிதர்கள், மீன்பிடிக்கத் தீர்மானித்தனர்.(13) ஓ! பாரதர்களின் தலைவா, பல மீன்களைக் கொண்ட அந்த நீர்நிலைக்கு வந்த அந்த மீனவர்கள், தங்கள் வலைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டினர்.(14) மீனை விரும்பியவர்களும், எண்ணிக்கையில் பலராக இருந்தவர்களுமான அந்தக் கைவர்தர்கள் {செம்படவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் வலைகளுடன் கங்கை மற்றும் யமுனையின் நீரில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டனர்.(15)
உண்மையில் அவர்கள், புதுக் கயிறுகளால் அமைக்கப்பட்டதும், போதுமான அளவுக்கு நீள அகலங்களுடன் கூடிய ஒரு பெரிய இடத்தைக் கவரவல்லதுமான தங்கள் வலையை நீரில் வீசினர்.(16) நீருக்குள் இறங்கிய அவர்கள் அனைவரும், மிகப் பெரியதும், ஒரு பெரிய இடத்தில் நன்கு பரவியிருந்ததுமான தங்கள் வலையைப் பெரும்பலத்துடன் இழுக்கத் தொடங்கினர்.(17 அவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், ஒருவர் சொல்வதை மற்றவர் செய்ய முழுமையாகத் தீர்மானித்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வலைக்குள் சிக்க வைப்பதில் வென்றனர்.(18) ஓ! மன்னா, அவ்வாறு அவர்கள் தங்கள் வலையை இழுத்த போது, பெரும் எண்ணிக்கையிலான மீன்களுடன் சேர்த்து பிருகுவின் மகனான சியவனரையும் எளிதாக இழுத்தனர்.(19) அவரது உடலில் ஆற்றுப் பாசிகள் அதிகம் வளர்ந்திருந்தன. அவரது தாடியும், சடாமுடியும் பச்சைநிறத்தில் இருந்தன. அவரது மேனி முழுவதும் சங்குகளும், தலைகளுடன் கூடிய வேறு மெல்லுடலிகளும் {பன்றிமுட்களும்} காணப்பட்டன.(20)
வேதங்களை நன்கறிந்தவரான அம்முனிவர் நீரில் இருந்து இவ்வாறு இழுக்கப்பட்டதைக் கண்ட அந்த மீனவர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் நின்று, நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்தும், மீண்டும் மீண்டும் தலைவணங்கினர்.(21) வலையில் அகப்பட்ட மீன்கள், வலை இழுக்கப்பட்டதன் மூலம் உண்டான அச்சம் மற்றும் துன்பத்தினாலும், நிலத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் விளைவாலும், தங்கள் உயிரை விட்டன.(22) மீன்களுக்கு நேர்ந்த இந்தப் பெரும் படுகொலையைக் கண்ட அந்தத் தவசி, கருணையால் நிறைந்து மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டார்.(23)
மீனவர்கள், “அறியாமையின் மூலம் நாங்கள் (புனிதமானவரான உம்மை நீரில் இருந்து இழுத்து) இப்பாவத்தை இழைத்துவிட்டோம். எங்களிடம் நிறைவடைவீராக. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் எது? ஓ !பெருந்தவசியே, எங்களுக்கு ஆணையிடுவீராக” என்று கேட்டனர்”.(24)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தம்மைச் சுற்றிலும் மீன்குவியல்களுக்கு மத்தியில் இருந்த சியவனர், “நான் மிகவும் விரும்பும் விருப்பத்தைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக.(25) நான் இந்த மீன்களோடு இறக்கப் போகிறேன், அல்லது என்னை இவற்றோடு சேர்த்து விற்று விடுவீராக. நான் இவற்றோடு சேர்ந்து நீரில் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன். இத்தகைய நேரத்தில் நான் இவற்றைக் கைவிட விரும்பவில்லை” என்றார் {சியவனர்}.
அவர் இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னதும், அந்த மீனவர்கள் பெரும் அச்சமடைந்தனர். வெளிறிய முகங்களுடன் கூடிய அவர்கள் மன்னன் நஹுஷனிடம் சென்று, நடந்தது அனைத்தையும் தெரிவித்தனர்” {என்றார் பீஷ்மர்}.(27)
மீன்களும் மீனவரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 51-சியவனருக்கான விலையைச் சொன்ன நஹுஷன்; பசுவின் பெருமை; மீனவர்களிடம் இருந்து பசுவைப் பெற்றுக் கொண்ட சியவனர்; சொர்த்தையடைந்த மீன்களும், மீனவர்களும்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன் நஹுஷன், சியவனர் அடைந்த நிலையைக் கேட்டு தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதரின் துணையுடன் அந்த இடத்திற்கு விரைவாகச் சென்றான்.(1) முறையாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட அந்த மன்னன் தன் கரங்களைக் கூப்பிக் குவிந்த கவனத்துடன் உயர் ஆன்ம சியவனரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.(2) அப்போது மன்னனின் புரோகிதர், ஓ! ஏகாதிபதி, வாய்மை நோன்பு நோற்றவரும், உயர் ஆன்மா கொண்டவரும், (காந்தியிலும், சக்தியிலும்) தேவர்களுக்கே ஒப்பானவருமான அந்த முனிவரை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(3)
நஹுஷன் {சியவனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, “உமக்கு ஏற்புடையவகையில் நான் செய்ய வேண்டிய செயலென்ன? ஓ! புனிதமானவரே, செய்வதற்குக் கடினமான செயலாக இருந்தாலும், உமது ஆணையின் பேரில் என்னால் நிறைவேற்ற முடியாத செயலேதும் கிடையாது” என்றான்.(4)
சியவனர், “மீன் பிடித்து வாழும் இம்மனிதர்கள் தங்கள் உழைப்பால் முற்றிலும் களைப்படைந்திருக்கின்றனர். இந்த மீன்களுடன் சேர்த்து எனக்குமான விலையை நீ இவர்களுக்குக் கொடுப்பாயாக” என்றார்.(5)
நஹுஷன், “இந்தப் புனிதமானவர் ஆணையிட்டபடியே இவரை விலைக்கு வாங்க என் புரோகிதர் இந்த நிஷாதர்களிடம் ஓராயிரம் நாணயங்களை {ஓராயிரம் பொன்னை} விலையாகக் கொடுக்கட்டும்” என்றான்.(6)
சியவனர், “ஓராயிரம் நாணயங்கள் {ஓராயிரம் பொன்} என் விலையாக முடியாது. கேள்வி உன் விவேகத்தைச் சார்ந்தது. அஃது என்னவாக இருக்க வேண்டும் என்பதை உன் புத்தியில் தீர்மானித்து ஒரு நல்ல விலையைக் கொடுப்பாயாக[1]” என்றார்.(7)நஹுஷன், “ஓ! கல்விமானான பிராமணரே, இந்த நிஷாதர்களிடம் நூறாயிரம் நாணயங்கள் கொடுக்கப்படட்டும். ஓ! புனிதமானவரே, இஃது உமது விலையாகுமா? அல்லது வேறு வகையில் நினைக்கிறீரா?” என்று கேட்டான்.(8)
சியவனர், “ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, நூறாயிரம் நாணயங்களால் என்னை விலைக்கு வாங்கக் கூடாது. இவர்களுக்குச் சரியான விலையைக் கொடுப்பாயாக. நீ உன் அமைச்சர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்.(9)
நஹுஷன், ” இந்த நிஷாதர்களிடம் ஒரு கோடி நாணயங்களை என் புரோகிதர் கொடுக்கட்டும். இதுவும் உமது விலையாகாது என்றால், மேலும் அதிகம் அவர்களுக்குக் கொடுக்கப்படட்டும்” என்றான்.(10)
சியவனர், “ஓ! மன்னா, ஒரு கோடி நாணயங்களாலோ, அதற்கு மேலோ கொடுத்து விலைக்கு வாங்க நான் தகுந்தவனன்று. எது முறையானதோ, சரியானதோ அந்த விலை இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். நீ பிராமணர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்.(11)
நஹுஷன், “என் நாட்டில் பாதி, அல்லது மொத்த நாடும் இந்த நிஷாதர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அஃது உமது விலையாகலாம் என நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே, நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டான்.(12)
சியவனர், “ஓ! மன்னா, நான் உன்னுடைய நாட்டில் பாதியையோ, முழு நாட்டையோ விலையாகக் கொள்ளத் தகுந்தவனல்ல. இந்த மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்த சரியான விலை கொடுக்கப்பட வேண்டும். நீ முனிவர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்”.(13)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தப் பெரும் முனிவரின் இந்தச் சொற்களைக் கேட்டு நஹுஷன் பெரும் துன்பத்தால் பீடிக்கப்பட்டான். அவன் தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதருடன் சேர்ந்து இக்காரியம் குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான்.(14) அப்போது அங்கே, கனி மற்றும் கிழங்குகளை உண்டு காட்டில் வாழ்பவரும், ஒரு பசுவுக்குப் பிறந்தவருமான ஒரு தவசியானவர் மன்னன் நஹுஷனிடம் வந்தார்.(15)
ஓ! மன்னா, அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் அந்த ஏகாதிபதியிடம், “நான் விரைவில் உன்னை நிறைவடையச் செய்கிறேன். இம்முனிவரும் நிறைவடைவார்.(16) கேலிக்காகக் கூட நான் பொய் பேசியவனல்ல, எனும் போது வேறு சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? நான் சொல்வதை நீ தயங்காமல் செய்ய வேண்டும்” என்றார்.(17)
நஹுஷன், “ஓ! சிறப்புமிக்கவரே, பிருகு குலத்தைச் சேர்ந்த இந்தப் பெரும் முனிவருக்கான விலை என்ன என்பதைச் சொல்வீராக. இந்தப் பயங்கர நிலையில் இருந்து என்னையும், என் நாட்டையும், என் குலத்தையும் காப்பீராக.(18) புனிதரான சியவனர் கோபமடைந்தால் மூவுலகங்களை அழித்துவிடுவார் எனும்போது, தவங்களில்லாதவனும், கர வலிமையை மட்டுமே சார்ந்திருப்பவனும், வேறொன்றுமில்லாதவனுமான என்னைக் குறித்துச் சொல்ல வேண்டுமா?(19) ஓ! பெரும் முனிவரே, எங்கள் அமைச்சர்கள் மற்றும் எங்கள் புரோகிதருடன் சேர்த்து அடியற்ற கடலில் வீழ்ந்து விட்ட எங்களுக்குத் தெப்பமாவீராக. இந்த முனிவருக்கான விலை என்ன என்பதைத் தீர்மானிப்பீராக” என்று கேட்டான்”.(20)
பீஷ்மர், “பசுவுக்குப் பிறந்தவரும், பெருஞ்சக்தியுடன் கூடியவருமான அந்தத் தவசி நஹுஷனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த ஏகாதிபதியையும், அவனது அமைச்சர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இவ்வாறு பேசினார்:(28) “ஓ! மன்னா, பிராமணர்கள் நான்கு வகையினரில் முதன்மையானவர்களாவர். எனினும் அவர்களுக்கு விலையேதும் நிர்ணயிக்க முடியாது. பசுக்களும் மதிப்பில்லாதவையே. எனவே, ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முனிவரின் விலையாக நீ ஒரு பசுவைக் கருதுவாயாக” என்றார்.(22)
ஓ! மன்னா, அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நஹுஷன், தன் புரோகிதர் மற்றும் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) கடும் நோன்புகளைக் கொண்டவரும், பிருகுவின் மகனுமான சியவனரின் முன்பு சென்ற அவன், ஓ! ஏகாதிபதி, தன்னால் இயன்றதில் சிறந்த முறையில் அவரை நிறைவடையச் செய்யும் வகையில் அவரிடம் இவ்வாறு பேசினான்.(24)
நஹுஷன், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, எழுவீராக, ஓ! பிருகுவின் மகனே, எழுவீராக, ஒரு பசுவை உமக்கான விலையாகக் கொண்டு நீர் விலைக்கு வாங்கப்பட்டீர். ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே. இதுவே உமது விலை என நான் நினைக்கிறேன்” என்றான்.(25)
சியவனர், “சரி, ஓ! மன்னர்களின் மன்னா, இதோ எழப் போகிறேன். ஓ! பாவமற்றவனே, நீ முறையாகவே என்னை விலைக்கு வாங்கியிருக்கிறாய். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, பசுவுக்கு நிகராக வேறு எந்தச் செல்வத்தையும் நான் காணவில்லை.(26) பசுவைக் குறித்துப் பேசுவது, அவற்றைக் குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்பது, பசுக்களைக் கொடையளிப்பது, பசுக்களைப் பார்ப்பது ஆகியவை மிக மெச்சத்தகுந்தவையும், உயர்மங்கலமானவையும், பாவம் போக்குபவையுமான செயல்களாகும்.(27) பசுக்களே செழிப்பின் வேராக எப்போதும் இருக்கின்றன. பசுக்களில் குற்றமேதும் கிடையாது. ஹவிஸ்-ன் வடிவில் தேவர்களுக்குச் சிறந்த உணவை எப்போதும் அளிப்பவை பசுக்களே.(28) ஸ்வாஹா மற்றும் வஷட் என்ற புனித மந்திரங்கள் எப்போதும் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. அவையே வேள்வியின் வாயாக இருக்கின்றன.(29) அவை பலத்தைக் கொடுக்கக் கூடிய சிறந்த அமுதத்தை விளைவிக்கின்றன. அனைத்து உலகங்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளும் அவை அமுதத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகின்றன(30). உண்மையில் பசுக்கள், உயர்ந்த சக்தியாகவும், அனைத்த உயிரினங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவையாகவும் கருதப்படுகின்றன.(31) எந்த நாட்டில் பசுக்கள், தங்கள் உரிமையாளர்களால் நிறுவப்பட்டு, அச்சமில்லாமல் அழகில் ஒளிர்கின்றனவோ, அந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.(32) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் படிக்கட்டுக்களாகப் பசுக்களே இருக்கின்றன. பசுக்கள் சொர்க்கத்திலேயே புகழப்படுகின்றன. பசுக்கள் ஒவ்வொரு விருப்பத்தையும் கொடுக்க வல்லவர்களும், அனைத்தையும் கொடுக்கவல்லவர்களுமான தேவிகளாக இருக்கின்றன. இவ்வளவு உயர்வானவையாகவும், மேன்மையானவையாகவும் இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது” என்றார்”.(33)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பசுக்களின் மகிமை மற்றும் மேன்மை குறித்து நானும் இதையே உனக்குச் சொல்கிறேன். பசுக்கள் தொடர்புடைய புண்ணியங்களில் ஒரு பகுதியைச் சொல்வதற்கு மட்டுமே நான் தகுந்தவன் ஆவேன். இக்காரியம் குறித்து முழுமையும் சொல்லும் தகுதி எனக்கில்லை.(34)
நிஷாதர்கள், “ஓ! தவசியே, நீர் எங்களைக் கண்டீர், எங்களிடம் பேசவும் செய்தீர். நல்லோருடன் நட்பு கொள்வது ஏழே சொற்களை மட்டுமே சார்ந்ததாகும் எனச் சொல்லப்படுகிறது.(35) சுடர்மிக்க வேள்வி நெருப்பு, அதன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகள் அனைத்தையும் உண்ணும். அற ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட நீர், மனிதர்களுக்கு மத்தியில் சுடர்மிக்க நெருப்பின் சக்தியுடன் இருக்கிறீர்.(36) ஓ! பெரும் கல்விமானே, நாங்கள் உம்மை அமைதிப்படுத்துகிறோம். நாங்கள் உம்மிடம் சரண் அடைகிறோம். எங்களுக்கு அருள் செய்ய, எங்களிடம் இருந்து இந்தப் பசுவை எடுத்துக் கொள்வீராக” என்றனர்.(37)
சியவனர், “வறியவர், அல்லது துயரில் வீழ்ந்த ஒருவரின் கண், ஒரு தவசியின் கண், அல்லது கடும் நஞ்சுமிக்க ஒரு பாம்பின் கண் ஆகியன, காற்றின் உதவியுடன் சுடர்விடுவதும், வைக்கோல் பொதியை எரிப்பதுமான நெருப்பைப் போல ஒரு மனிதனை அவனது வேர்வரை எரித்துவிடும் சக்தி கொண்டவையாகும்.(38) நீங்கள் எனக்கு அளிக்க விரும்பும் பசுவை நான் ஏற்றுக் கொள்கிறேன். மீனவர்களே, ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் விடுபட்டு, உங்கள் வலைகளில் பிடிபட்டிருக்கும் இந்த மீன்களுடன் சேர்த்து, எந்தத் தாமதமும் இல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்வீர்களாக” என்றார்”.(39)
பீஷ்மர் தொடர்ந்தார், “இதன்பிறகு, தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெரும் முனிவருடைய சக்தியின் விளைவால், அவர் சொன்ன அந்தச் சொற்களின் மதிப்பால், அந்த மீனவர்களும், அந்த மீன்களும், சொர்க்கத்திற்குச் சென்றனர்.(40) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னன் நஹுஷன், மீனவர்களும் அந்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(41) பிறகு பசுவிடம் பிறந்த முனிவரும், பிருகு குல சியவனரும் என அந்த இரு முனிவர்களும் மன்னன் நஹுஷனுக்குப் பல வரங்களை அளித்து அவனை மகிழ்வித்தனர்.(42)
அப்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பெரும் சக்தியைக் கொண்டவனும், பூமி அனைத்தின் தலைவனுமான மன்னன் நஹுஷன் மகிழ்ச்சியால் நிறைந்து, “போதும்” என்று சொன்னான்.(43) தேவர்களின் தலைவனான இரண்டாம் இந்திரனைப் போல இருந்த அவன், தன்னறத்தை உறுதி செய்ய அந்த வரங்களை ஏற்றுக் கொண்டான். முனிவர்கள் வரமளித்ததும் மகிழ்ச்சியால் நிறந்த அம்மன்னன் அவ்விருவரையும் பெரும் மதிப்புடன் வழிபட்டான்.(44) சியவனரைப் பொறுத்தவரையில், அவரது நோன்பு முடிந்ததால் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். பசுவில் பிறந்தவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான முனிவரும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(45) ஓ! ஏகாதிபதி, நிஷாதர்கள் அனைவரும், அவர்கள் பிடித்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்ந்தன. மன்னன் நஹுஷனும், மதிப்புமிக்க வரங்களை அடைந்து தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(46) ஓ! மகனே, இவ்வாறே நீ கேட்ட அனைத்தையும் குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டன். ஓ! யுதிஷ்டிரா, பிறரைப் பார்ப்பதாலும், அவர்களுடன் வாழ்வதாலும் உண்டாகும் பாசத்தையும், பசுக்களின் உயர்ந்த அருளையும், உண்மை அறத்தை உறுதி செய்வது போன்ற காரியங்களைக் குறித்து நான் உன்னுடன் உரையாடினேன். ஓ! வீரா, உன் நெஞ்சில் இன்னும் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(47,48)
சியவனரும், குசிகனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 52-பரசுராமர், விஷ்வாமித்ரர் பிறப்புக் காரியமாகச் சியவனர் குசிகனிடம் வசித்தது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனக்குக் கடலைப் போன்றொரு பெரிய ஐயம் உள்ளது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, அதைக் கேட்பீராக. அதை அறிந்து கொண்டு அதைக் குறித்து எனக்கு விளக்கம் அளிப்பீராக.(1) ஜமதக்னியின் மகனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான ராமர் {பரசுராமர்} குறித்து எனக்குப் பேராவல் இருக்கிறது. அந்த ஆவலை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(2) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட ராமர் {பரசுராமர்} எவ்வாறு பிறந்தார்? அவர் பிறப்பால் மறுபிறப்பாள முனிவர்களைச் சார்ந்தவர். அவர் எவ்வாறு க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவரானார்?(3) ஓ! மன்னா, ராமர் {பரசுராமரின்} பிறப்பு சூழ்நிலைகளைக் குறித்து எனக்கு விளக்கமாக உரைப்பீராக. மேலும் குசிக குலமகனான ஒரு க்ஷத்திரியன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு பிராமணர் ஆனார்?(4) ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்} மற்றும் விஷ்வாமித்ரரின் பலம் நிச்சயம் பெரியதாகும்.(5) ரிசீகரின் மகனுக்கு {ஜமதக்னிக்குப்} பதிலாக அவரது பேரன் {பரசுராமர்} க்ஷத்திரிய ஒழுக்கத்தைக் கொண்டதேன்? மேலும் குசிகனின் பேரன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு ஒரு பிராமணரானார்? அவர்கள் இருவரின் மகன்களுக்குப் பதிலாக, அவர்களுடைய பேரர்களுக்கு இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நேர்ந்ததேன்? இந்தச் சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் உண்மையை விளக்குவதே உமக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(6)
பீஷ்மர், “இது தொடர்பாகச் சியவனருக்கும், குசிகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவசிகளில் சிறந்தவரும், பிருகு குலத்தைச் சேர்ந்தவருமான சியவனர், இந்தக் களங்கம் (க்ஷத்திரிய நடைமுறைகளைச் செய்யும் தமது வழத்தோன்றலின் விளைவாக) தமது சொந்த குலத்தையும் பாதிக்கும் என்பதை (தமது ஆன்மப் பார்வையில்) கண்டார்.(8) அந்நிகழ்வின் நல்லது, கெட்டது, பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தவரும், தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான சியவனர் குசிகர்களின் குலத்தை (அந்தக் குலத்தில் இருந்துதான் தமது குலம் க்ஷத்திரிய நடைமுறைகளின் களங்கத்தை அடையப்போகிறது என்பதால் அக்குலத்தை) எரிக்க விரும்பினார்.(9)
மன்னன் குசிகனிடம் சென்ற சியவனர், அவனிடம், “ஓ! பாவமற்றவனே, உன்னுடன் சில காலம் வசிக்கும் விருப்பம் என் இதயத்தில் எழுந்துள்ளது” என்றார்.(10)
குசிகன், “ஓ! புனிதமானவரே, பெண்கள் கொடுக்கப்படும்போது ஒன்றாக வசிப்பது குறித்துக் கல்விமான்கள் விதிக்கின்றனர். ஞானம் கொண்டவர்கள் இத்தகைய தொடர்பிலான நடைமுறையை மட்டுமே பேசுகின்றனர்.(11) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவரே, என்னுடன் வசிப்பதற்கு நீர் நாடும் காரியம் விதிகளால் அங்கீகரிக்கப்படவில்லை. கடமை மற்றும் அறங்களின் விதிகளுக்கு முரணாக இருப்பினும், நீர் விரும்பி ஆணையிடுவதை நான் செய்வேன்” என்றான்”.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும் தவசியான சியவனரின் முன் ஓர் இருக்கையை வைக்க ஆணையிட்ட மன்னன் குசிகன், தன் மனைவயின் துணையுடன் அந்தத் தவசியின் முன்னிலையில் நின்றான்.(13) சிறு குடுவையில் உள்ள நீரைக் கொண்டு வந்த அந்த மன்னன், அவரது பாதங்களைக் கழுவிக் கொள்ள அந்நீரை அளித்தான். பிறகு அவன் தன் உயர் ஆன்ம விருந்தினரைக் கௌரவிக்கும் வகையில் முறையான சடங்குகள் அனைத்தையும் செய்தான்.(14) நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பவனான உயர் ஆன்ம குசிகன், தேன் மற்றும் பிற பொருட்கள் அடங்கிய உரிய வடிவத்திலான பொருட்களை அந்தப் பெரும் முனிவருக்குக் கொடுத்து, அவரை ஏற்கச் செய்தான்.(15)
கல்விமானான அந்தப் பிராமணரை இவ்வழியில் வரவேற்றுக் கௌரவித்த அந்த மன்னன் {குசிகன்} மீண்டும் அவரிடம் {சியவனரிடம்}, “உமது ஆணைகளுக்காக நாங்கள் இருவரும் காத்திருக்கிறோம். ஓ! புனிதமானவரே, உமக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென ஆணையிடுவீராக.(16) ஓ! கடும் நோன்புகளைக் கொண்டவரே, நாடோ, செல்வமோ, பசுவோ, வேள்விகளில் கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமோ, அஃது உமக்கு வேண்டுமோ அந்தச் சொல்லை எங்களுக்கச் சொன்னால் அவை அனைத்தையும் நாங்கள் உமக்கு அளிப்போம்.(17) இந்த அரண்மனை, இந்த நாடு, நீதிமிக்க இந்த இருக்கை {சிம்மாசனம்} ஆகியவை உமது விருப்பத்திற்காகக் காத்திருக்கின்றன. நீரே இவை அனைத்தின் தலைவராவீர். பூமியை நீர் ஆள்வீராக. என்னைப் பொறுத்தவரையில் முற்றிலும் நான் உம்மையே சார்ந்திருக்கிறேன்” என்றான்.(18)
மன்னனால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளில் பெரும் மகிழ்ச்சியடைந்த பிருகு குலத்தின் சியவனர், குசிகனிடம் மறுமொழியாக இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)
சியவனர் {குசிகரிடம்}, “ஓ! மன்னா, நான் உன் நாட்டிலோ, செல்வத்திலோ, நீ கொண்டிக்கும் கன்னிகையரிலோ, உன் பசுக்களிலோ, உன் மாகாணங்களிலோ, வேள்விக்குத் தேவையான பொருட்களிலோ பேராசை கொள்ளவில்லை. நான் சொல்வதைக் கேட்பாயாக.(20) உனக்கும், உன் மனைவிக்கும் விருப்பம் உண்டானால் நான் ஒரு குறிப்பிட்ட நோன்பை நோற்கத் தொடங்குவேன். அந்தக் காலத்தில் நீயும் உன் மனைவியும் எத்தயக்கமும் இல்லாமல் எனக்குத் தொண்டாற்ற விரும்புகிறேன்” என்றார்.(21)
ஓ! பாரதா, முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும் ராணியும் மகிழ்ச்சியால் நிறைந்து, “ஓ! முனிவரே, அப்படியே ஆகட்டும்” என்று அவருக்குப் பதிலளித்தனர்.(22)
முனிவரின் சொற்களில் மகிழ்ச்சியடைந்த மன்னன் அவரை அந்த அரண்மனையில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். அது காண்பதற்கினிய சிறப்பான ஒன்றாக இருந்தது. மன்னன் அந்த அறையில் உள்ள அனைத்தையும் அவருக்குக் காட்டினான்.(23)
மன்னன், “ஓ! புனிதமானவரே, இஃது என் படுக்கையாகும். நீர் விரும்பியவாறு இங்கே வாழலாம். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நானும், என் ராணியும் உமக்குத் தேவையான வசதிகள் மற்றும் இன்பங்கள் அனைத்தையும் கொடுப்பதற்குச் சிறப்பாக முனைவோம்” என்றான்.(24)
அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே சூரியன் நடுவானைக் கடந்தான். முனிவர் மன்னனிடம் உணவும், பானமும் கொண்டு வரும்படி ஆணையிட்டார்.(25)
முனிவரை வணங்கிய மன்னன் குசிகன், “என்ன வகை உணவு உமக்கு ஏற்புடையது? உண்மையில் உமக்கு என்ன உணவை நான் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டான்.(26)
ஓ! பாரதா, மகிழ்ச்சியால் நிறைந்த அம்முனிவர் அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {குசிகனிடம்}, “சரியான உணவு எனக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று கேட்டார்[1].(27)இச்சொற்களை மதிப்புடன் ஏற்றுக் கொண்ட மன்னன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி உரிய வகை உணவை அம்முனிவருக்குக் கொடுத்தான்.(28)
கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான புனிதர் சியவனர், அவரது உணவை முடித்துக் கொண்டு, மன்னன் மற்றும் ராணியிடம், “நான் உறங்க விரும்புகிறேன். ஓ! பலமிக்கவனே, உறக்கம் எனை ஆட்கொள்கிறது” என்று சொன்னார்.(29)
பிறகு அந்த முனிவர்களில் சிறந்தவர், அவருக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த ஓர் அறைக்குச் சென்று, ஒரு படுக்கையில் தம்மைக் கிடத்திக் கொண்டார். மன்னனும், ராணியும் அங்கே அமர்ந்தனர்.(30)
முனிவர், “நான் உறங்கும் போது என்னை விழிப்படையச் செய்யாதீர். நீங்கள் விழித்திருந்து, நான் உறங்கும் வரை என் கால்களை அழுத்துவீராக” என்றார்.(31)
கடமைகள் அனைத்தையும் அறந்த குசிகன், சிறு தயக்கமும் கொள்ளாமல், “அப்படியே ஆகட்டும்” என்றான்.
உண்மையில் மன்னனும், ராணியும் அன்றிரவு முழுவதும் விழித்திருந்து,(32) முனிவர் சொன்ன வகையிலேயே அவரைப் பார்த்துக் கொண்டு தொண்டாற்றினர். ஓ! ஏகாதிபதி, அந்த அரச இணை, பெரும் ஊக்கத்துடனும், கவனத்துடனும் அந்த முனிவரின் ஆணையை நிறைவேற்றினர்.(33) அதே வேளையில், மன்னனிடம் இவ்வாறு ஆணையிட்ட அம்முனிவர், தன் நிலை மாறாமல், ஒரு முறை கூடத் திரும்பிப் படுக்காமல், தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.(34)
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மன்னன் தன் மனைவியுடன் சேர்ந்து, அந்த மொத்த காலத்திற்கும் உணவனைத்தையும் கைவிட்டு, அம்முனிவரை பார்த்துக் கொண்டு தொண்டாற்றினான்.(35) இருபத்தோரு நான்கள் கழிந்ததும் அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} தாமாக எழும்பினார். அந்தப் பெரும் தவசி, அவர்களை அழைக்காமலேயே அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.(36) பட்டினியால் களைத்துப் போயிருந்த மன்னனும், ராணியும் அவரைப் பின்தொடர்ந்தாலும் அந்த முனிவர்களில் முதன்மையானவர் அவர்கள் மேல் ஒரு பார்வையைக் கூடச் செலுத்தவில்லை.(37) சிறிது தொலைவு சென்றதும், அந்த அரச இணையரின் பார்வையில் இருந்து அந்தப் பிருகுவின் மகன் (தமது யோக சக்தியால் தம்மை மறைத்துக் கொண்டு) மறைந்து போனார். இதனால் துயரால் பீடிக்கப்பட்ட மன்னன் பூமியில் விழுந்தான்.(38) பிறகு, பெரும் காந்தியைக் கொண்ட அந்த ஏகாதிபதி, ஆறுதலடைந்து விரைவாக எழுந்து, தன் ராணியின் துணையுடன், அந்த முனிவரை எங்கும் தேடத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(39)
குசிகனைத் துன்புறுத்திய சியவனர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 53-மீண்டும் இருபத்தோரு நாட்கள் உறங்கிய சியவனர்;. நீராடச் சென்று மீண்டும் மறைந்தது; தனக்குப் பரிமாறப்பட்ட உணவை எரித்தது; மன்னனையும் அவனது மனைவியையும் தேரில் பூட்டி தம்மை இழுக்கச் செய்தது; சாட்டையால் அவர்களை அடித்தது; மன்னனின் அவல நிலையைக் கண்டு துயருற்ற குடிமக்கள்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “முனிவர் {சியவனர்} மறைந்ததும் மன்னன் {குசிகன்} என்ன செய்தான்? உயர்ந்த அருளைக் கொண்ட அவனது மனைவி என்ன செய்தாள்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த முனிவரை {சியவனரைக்} காணாத மன்னன் {குசிகர்}, களைத்துப் போனவனாக, பொறிகலங்கியவனாக, வெட்கமடைந்தவனாகத் தன் ராணியின் துணையுடன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.(2) உற்சாகமற்ற மனநிலையில் தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் யாரிடமும் எந்த வார்த்தையும் பேசாதிருந்தான். அவன் சியவனரின் நடத்தையை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான்.(3) பிறகு நம்பிக்கை இழந்த இதயத்துடன் தன் அறைக்குச் சென்றான். அங்கே அவன் {குசிகன்} தன் படுக்கைக்கு எதிரில் படுத்திருக்கும் பிருகுவின் மகனை {சியவனரைக்} கண்டான்.(4) அம்முனிவரை அங்கே கண்ட அவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். உண்மையில் அவர்கள், அந்த ஆச்சரியகரமான நிகழ்வைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினர். முனிவரைக் கண்டதும் அவர்களது களைப்பு மறைந்து போனது.(5)
அவரது அருகில் உள்ள தங்கள் இருக்கைகள் மீண்டும் அமர்ந்த அவர்கள், முன்பைப் போலவே அவரது பாதங்களை மெதுவாக அழுத்த {பிடித்துவிடத்} தொடங்கினர். அதே வேளையில் அந்தப் பெருந்தவசி முன்பைப் போலவே தமது ஆழ்ந்த உறக்கத்தைத் தொடர்ந்தார். இப்போது அவர் மறுபுறம் திரும்பிப் படுத்திருந்தது மட்டுமே வேறுபாடு.(6) பெரும் சக்தியைக் கொண்ட அவர் மீண்டும் இருபத்தோரு நாட்களை இவ்வாறு கழித்தார். அச்சத்தால் கலக்கமடைந்திருந்த அந்த அரச இணையர் அம்முனிவர் குறித்த தங்கள் மனநிலையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.(7) தமது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அந்தத் தவசி, மன்னன் மற்றும் ராணியிடம், “என் உடலில் எண்ணெய் பூசுங்கள். நாங்கள் நீராட விரும்புகிறேன்” என்றார்.(8) அவர்கள் களைத்துப் போனவர்களாக இருந்தாலும், உடனே சம்மதித்து, நூறு முறை கொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட விலைமதிப்புமிக்க எண்ணெயுடன் {சதபாகத் தைலத்துடன்} அம்முனிவரை அணுகினர்.(9) அந்த முனிவர் சுகமாக அமர்ந்திருந்தபோது, அந்த மன்னனும், ராணியும், பேசாமல் அவருக்குப் பூசிவிடுவதைத் தொடர்ந்தனர். உயர்ந்த தவத் தகுதியைக் கொண்ட அந்தப் பிருகுவின் மகன் போதும் என்ற சொல்லை ஒருமுறையேனும் சொல்லவில்லை.(10)
எனினும் அந்த அரச இணையர் முற்றிலும் வெறுப்பற்றவர்களாக இருப்பதைக் கண்டார். அவர், திடீரென எழுந்து, நீராடும் அறைக்குச் சென்றார்.(11), மன்னனின் பயன்பாட்டுக்குத் தகுந்தவையும், நீராடலுக்குத் தேவையானவையுமான பல்வேறு பொருட்கள் அங்கே தயாராக இருந்தன. எனினும், அந்தப் பொருட்களை எடுக்காமல், அவற்றிற்கு எம்மதிப்பையும் காட்டாமல் அந்த முனிவர் மன்னன் குசிகன் ({குசிகனும்} அவனது மனைவியும்) பார்த்துக் கொண்டிருக்கும்போதே தமது யோக சக்தியால் மீண்டும் அங்கேயே அப்போதே மறைந்து போனார். எனினும், ஓ! பாரதர்களின் தலைவா, இஃது அந்த அரச இணையரின் உள்ளச்சமநிலையைக் குலைக்கவில்லை.(12,13) அடுத்து அந்தப் பலமிக்க முனிவர், நீராடி முடித்து அரியணையில் அமர்ந்திருப்பவராகத் தென்பட்டார். உண்மையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, இந்த இடத்தில் தான் அவர் தம்மை அரசனுக்கும், அரசிக்கும் வெளிப்படுத்திக் கொண்டார்.(14) உற்சாகமிக்க முகத்துடன் கூடிய மன்னன் குசிகன் தன் மனைவியுடன் சேர்ந்து, பெரும் மதிப்புடன் சமைக்கப்பட்ட உணவை அம்முனிவருக்கு அளித்தான். ஞானத்துடனும், முற்றிலும் மனக்கலக்கம் ஏதும் இல்லாமலும் குசிகன் இந்தக் காணிக்கையை அளித்தான்.(15)
அந்தத் தவசி, “உணவு கொண்டவரப்படலாம்” என்ற சொற்களைச் சொன்னார். மன்னன் தன் மனைவியின் துணையுடன் விரைவில் அங்கே உணவைக் கொண்டு வந்தான்.(16) பல்வேறு வகை இறைச்சிகளும், அது போன்ற வெவ்வேறு தயாரிப்புகளும் அதில் இருந்தன. பல வகைக் காய்கறிகளும், கீரைகளும் அதில் இருந்தன.(17) பாகுகள், மாப்பண்டங்கள், ரஸாலை[1] ஆகியவை இருந்தன. அப்பம், பல்வேறு சுவைகளுடன் கூடிய மோதகங்களும் அதில் இருந்தன. முனிவர்கள் உண்ணும் காட்டு உணவுகள் அதில் இருந்தன.(18) மன்னர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் பலவகைக் கனிகள், இலந்து, புன்கம், காஸ்மரியம் {பெருங்குமிழம்பழம்}, பல்லாதகம் {சேங்கொட்டை} ஆகியவையும் இருந்தன.(19) இல்லற வாழ்வை நோற்பவர்கள் {கிருகஸ்தர்கள்} உண்ணத்தக்கவை, காட்டில் வசிப்பவர்களால் {வானப்ரஸ்தர்கள்} உண்ணத்தக்கவை ஆகியவையும் அதில் இருந்தன. இவ்வாறு அனைத்து வகை உணவுகளையும் முனிவரின் சாபத்திற்கு அஞ்சி மன்னன் கொண்டு வந்து, தன் விருந்தினரின் முன்பு வைத்தான்.(20)சமையலறையில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவனைத்தும் சியவனரின் முன்பு வைக்கப்பட்டது. அவருக்காக ஓர் இருக்கை வைக்கப்பட்டது, ஒரு படுக்கையும் விரிக்கப்பட்டது. உணவுவகைகள் வெண் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. எனினும், பிருகு குலத்தின் சியவனர் அந்தப் பொருட்கள் அனைத்திற்கும் நெருப்பிட்டு அவற்றைச் சாம்பலாகக் குறைத்தார்.(21,22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த அரச இணையர் முனிவரின் இந்த நடத்தையினால் கோபமேதும் அடையாதிருந்தனர். முனிவரும் முன்பைப் போலவே மன்னன் மற்றும் ராணியின் கண்களுக்கு முன்பாகவே அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(23) அரச முனியான குசிகன், ஒரு வார்த்தையும் பேசாமல் தன் அருகில் உள்ள தன் மனைவியுடன் அதே நிலையில் அந்த இரவு முழுவதும் அங்கேயே நின்றிருந்தான். பெருஞ்செழிப்புடன் கூடிய அவன் கோபவசப்படாமல் இருந்தான்.(24) பல்வேறு வகையிலான தூய மற்றும் நல்ல உணவுகளும், சிறந்த படுக்கைகளும், நீராடலுக்கு வேண்டிய அபரிமிதமான பொருட்களும், பல்வேறு வகைத் துணிகளும் ஒவ்வொரு நாளும் திரட்டப்பட்டு, முனிவருக்காக அந்த அரண்மனையில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. உண்மையில் சியவனரால் அந்த மன்னனின் நடத்தையில் எந்தக் களங்கத்தையும் காண முடியவில்லை.(25,26)
அப்போது அந்த மறுபிறப்பாள முனிவர், மன்னன் குசிகனிடம், “நீயும் உன் மனைவியும் ஒரு தேரில் உங்களைப் பூட்டிக் கொண்டு, நான் சொல்லும் இடங்களுக்கு என்னைச் சுமந்து செல்வீராக” என்றார்.(27) அம்மன்னன் {குசிகன்}, தவத்தையே செல்வமாகக் கொண்ட சியவனரிடம், “அப்படியே ஆகட்டும்” எனத் தயக்கமேதுமின்றிச் சொன்னான். மேலும் அவன் முனிவரிடம், “எந்தத் தேரை நான் கொண்டு வர வேண்டும்? இன்பமான பயணத்திற்குரிய தேர் வேண்டுமா? அல்லது என்னுடைய போர்த்தேரைக் கொண்டு வரவா?” என்று கேட்டான்.(28)
மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்ட மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தத் தவசி அவனிடம், “பகை நகரங்களை ஊடுருவ நீ பயன்படுத்தும் தேரை முறையாக ஆயத்தம் செய்வாயாக. உண்மையில், ஆயுதங்கள், கொடிமரங்கள், கொடிகள், ஈட்டிகள், கணைகள், தங்கத் தூண்கள், தடிகள், ஆகியவற்றுடன் உன் போர்த்தேரை ஆயத்தம் செய்வாயாக.(29,30) அதன் சடசடப்பொலி மணியோசைக்கு ஒப்பானதாகும். பசும்பொன்னாலான எண்ணற்ற வளைவுகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. உயர்ந்த மற்றும் சிறந்த ஆயுதங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் எப்போதும் அதில் இருக்கின்றன” என்றார்.
மன்னன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தன் பெரிய போர்த்தேரைத் தயார் செய்தான்.(31) பிறகு அவன் தன் மனைவியை {அத்தேரின்} இடதுபுறத்திலும், தன்னை வலப்புறத்திலும் பூட்டிக் கொண்டான். மூன்று கைப்பிடிகளைக் கொண்டதும், ஒரே நேரத்தில் வஜ்ரம்போன்ற கடினத்தையும், ஊசிபோன்ற கூர்மையையும் கொண்ட முனையுடன் கூடியதுமான சாட்டையை அந்தத் தேரில் வைத்தான்[2].(32)தேவையான அனைத்தையும் அந்தத் தேரில் வைத்த மன்னன், அம்முனிவரிடம், “ஓ! புனிதமானவரே, தேர் எங்கே செல்ல வேண்டும்? ஓ!, பிருகுவின் மகன் {சியவனர்} ஆணையிடட்டும்.(33) நீர் குறிப்பிட விரும்பும் இடத்திற்கு உமது தேர் செல்லும்” என்றான்.
இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தப் புனிதர் அம்மன்னனிடம் {குசிகனிடம்},(34) “இங்கிருந்து படிப்படியாக மிக மெதுவாக இந்தத் தேர் இழுக்கப்பட வேண்டும். நீங்கள் இருவரும் என் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து, களைப்பேதும் நான் உணராத வகையில் செல்ல வேண்டும்.(35) மிக இனிமையான வகையில் நான் சுமக்கப்பட வேண்டும். உன் மக்கள் அனைவரும் அவர்களுக்கு மத்தியில் செல்லும் போது இதைப் பார்க்க வேண்டும். நான் சாலையில் செல்லும்போது என்னிடம் வரும் எந்த மனிதனும் விரட்டப்படக்கூடாது. நான் அனைவருக்கும் செல்வக் கொடை கொடுப்பேன்.(36) வழியில் என்னை அணுகும் பிராமணர்கள் அனைவருக்கும் அவர்களுடைய விருப்பங்களையும், ரத்தினங்களையும், செல்வத்தையும் மிச்சமில்லாமல் கொடுப்பேன்.(37) ஓ! மன்னா, எத்தயக்கத்திற்கு இடமின்றி இவை அனைத்தையும் நிறைவேற்றுவாயாக” என்றார்.
முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தன் பணியாட்களை அழைத்து அவர்களிடம்,(38) “இந்தத் தவசி ஆணையிடும் எதையும் நீங்கள் அச்சமில்லாமல் கொடுக்க வேண்டும்” என்றான்.
முனிவர் அந்தத் தேரில் சுமக்கப்பட்டபோது, அபரிமிதமான ரத்தினங்கள், தங்கம், அழகிய பெண்கள், ஆடுகள்,(39) நாணயமாக்கப்பட்ட மற்றும் ஆக்கப்படாத தங்கம், குன்றுகள் அல்லது மலைச்சிகரங்களுக்கு ஒப்பான பெரும் யானைகள், மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தன.(40) இயல்புக்கு மீறிய இக்காட்சியைக் கண்டு துயரடைந்த அந்த நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன. கூர்முனை கொண்ட அந்தச் சாட்டையைக் கொண்டு முனிவர் திடீரென மன்னனையும், ராணியையும் தாக்கினார்.(41) முதுகிலும், கன்னங்களிலும் இவ்வாறு தாக்கப்பட்டாலும் அந்த அரச இணையர் கலக்கத்திற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. மறுபுறம் அவர்கள் அம்முனிவரை முன்பு போலவே தொடர்ந்து சுமந்தனர்.(42) ஐம்பது இரவுகளாக உணவேதும் அவர்களது உதடுகளைக் கடக்கவில்லை என்பதால் தலை முதல் பாதம் வரை நடுங்கியபடியே மிகப் பலவீனமாக இருந்த அந்த வீர இணை எவ்வாறோ அந்தச் சிறந்த தேரை இழுத்துக் கொண்டிருந்தனர்.(43) சாட்டையால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு ஆழமான வெட்டுக் காயங்களை அடைந்த அந்த அரச இணையர் குருதியால் நனைந்தவர்களாகினர். உண்மையில், ஓ! ஏகாதிபதி, பூவுண்டாகுங்காலத்தைச் சேர்ந்த இரு கின்சுக {பலாச} மரங்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(44)
தங்கள் மன்னனும், ராணியும் அடைந்திருக்கும் அவல நிலையைக் கண்ட குடிமக்கள் பெரும் துயரால் பீடிக்கப்பட்டனர். முனிவர் தங்களைச் சபித்துவிடப் போகிறார் என்ற அச்சத்தில் நிறைந்திருந்த அவர்கள் துன்பத்திலும் அமைதி காத்தனர்.(45) ஈரிருவராக ஒன்று சேர்ந்த அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “தவங்களின் வலிமையைப் பார். நாம் அனைவரும் கோபமடைந்திருந்தாலும் இந்த முனிவரைப் பார்க்கவும் இயலாதவர்களாக இருக்கிறோம்.(46) தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட இந்தப் புனித முனிவர் பெரும் சக்திமிக்கவராக இருக்கிறார். அரசன் மற்றும் அரசியின் பொறையை {உறுதியான தாங்கும் திறனைப்} பார்.(47) களைப்பு மற்றும் பசியில் சோர்வுற்றிருந்தாலும் அவர்கள் இன்னும் தேரை இழுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்றனர். பிருகுவின் மகன் {சியவனர்}, குசிகனுக்கும் அவனது ராணிக்கும் இந்தத் துயரை உண்டாக்கினாலும், அவர்களிடம் நிறைவின்மை அல்லது கலக்கத்தின் எந்தக் குறியீட்டையும் காணத் தவறினார்”.(48)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவர் {சியவனர்}, அரசனும், அரசியும் கலங்கமடையாதிருப்பதைக் கண்டு, தாமே இரண்டாவது கருவூலத் தலைவன் {குபேரன்} என்பதைப் போல (மன்னனின் கருவூலத்தில் இருந்து அடையப்பட்ட செல்வத்தை) பெரிய அளவில் கொடையளிக்கத் தொடங்கினார்.(49) இச்செயலாலும் மன்னன் குசிகன் நிறைவின்மைக்கான எந்தக் குறியீட்டையும் காட்டவில்லை. (அந்தக் கொடைகளின் காரியத்தில்) முனிவர் ஆணையிட்டவாறே அவனும் செயல்பட்டான். இவை யாவற்றையும் கண்ட அந்தச் சிறந்த தவசி (அந்த அரச இணையரிடம்) மகிழ்ச்சியடைந்தார்.(50) அந்தச் சிறந்த தேரில் இருந்து கீழே இறங்கிய அவர், அந்த அரச இணையரைப் பூட்டுகளில் இருந்து விடுவித்தார்.(51)
உண்மையில் அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்}, மென்மையான, ஆழமான, மகிழ்ச்சி மிக்கக் குரலில், “உங்கள் இருவருக்கும் நான் ஒரு சிறந்த வரத்தைத் தர ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார்.(52)
அவர்களுடைய உடல்கள் சாட்டையால் துளைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் மின் மென்மையானவர்களாக இருந்தனர். அன்பால் உந்தப்பட்ட அந்தச் சிறந்த தவசி, ஓ! பாரதர்களின் தலைவா, அமுதத்துக்கு ஒப்பாகக் குணம் செய்யும் அறங்களைக் கொண்ட தமது கரங்களால் அவர்களை மென்மையாகத் தீண்டினார்.(53)
பிறகு அம்மன்னன் {குசிகன்}, “நானும், என் மனைவியும் களைப்பேதும் உணரவில்லை” என்றான். உண்மையில் அவர்களது களைப்பனைத்தும் முனிவரின் பலத்தால் விலகின, அதனால்தான் மன்னனால் முனிவரிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது.(54)
அவர்களுடைய நடத்தையில் மகிழ்ச்சியடைந்த சிறப்புமிக்கச் சியவனர், அவர்களிடம், “நான் இதற்கு முன்பு ஒருபோதும் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் சொல்வது போல்தான் நடக்க வேண்டும்.(55) கங்கையின் கரையிலுள் உள்ள இவ்விடம் மிக இனிமை நிறைந்ததும், மங்கலமிக்கதாகவும் இருக்கிறது. ஓ! மன்னா, நான் ஒரு நோன்பிருந்து சிறிதுகாலம் இங்கே வசிக்கப் போகிறேன்.(56) நீ உன் நகரத்திற்குத் திரும்பிச் செல். நீ களைத்திருக்கிறாய். நீ மீண்டும் இங்கு வரலாம். ஓ! மன்னா, நாளை உன் மனைவியுடன் இங்கே மீண்டும் வந்து என்னைக் காண்பாயாக.(57) கோபம் அல்லது துயரத்தின் வசப்படாதே. பெரும் வெகுமதியை நீ அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. எது உன்னால் விரும்பப்படுகிறதோ, எது உன் இதயத்தில் இருக்கிறதோ, அது நிச்சயம் நிறைவேறும்” என்றார்.(58)
முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய மன்னன் குசிகன், முக்கியப் பொருள் கொண்ட இந்த வார்த்தைகளை அந்த முனிவருக்கு மறுமொழியாகச் சொன்னான்.(59) {குசிகன்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, நான் கோபத்தையோ, துன்பத்தையோ வளர்ப்பதில்லை. ஓ! புனிதமானவரே, நாங்கள் உம்மால் தூய்மையடையச் செய்யப்பட்டு, உம்மால் புனிதமடைந்தோம். நாங்கள் மீண்டும் இளமையை அடைந்திருக்கிறோம். எங்கள் உடல்கள் அதிக அழகையும், பெரும் பலத்தையும் கொண்டிருப்பதைப் பாரும்.(60) உம்மால் சாட்டையைக் கொண்ட உண்டாக்கப்பட்ட காயங்களையும், தழும்புகளையும் காண முடியவில்லை. உண்மையில் என் மனைவியுடன் கூடிய நான் மிக நல்ல உடல்நிலையில் இருக்கிறேன்.(61) என் தேவி ஓர் அப்ரசஸைப் போன்ற அழகிய உடல்படைத்தவளாகிவிட்டதைப் பார்க்கிறேன். உண்மையில் அவள் இதற்கும் முன்பு கொண்டிருந்த இனிமையையும் காந்தியையும் கொண்டிருக்கிறாள்.(62) ஓ! பெரும் தவசியே, இவை அனைத்தும் உமது அருளால் ஏற்பட்டது. உண்மையில், ஓ கலங்கடிக்க முடியாத பலத்தைக் கொண்ட புனிதமான முனிவரே, இவையாவற்றிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை” என்றான்.(63)
மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட சியவனர், அவனிடம், “ஓ! ஏகாதிபதி, நாளை மீண்டும் இங்கே உன் மனைவியுடன் வருவாயாக” என்றார்.(64)
இந்த வார்த்தைகளுடன் அரசமுனியான குசிகன் விடைகொடுத்து அனுப்பப்பட்டான். அழகிய உடலைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அந்த முனிவரை வணங்கிவிட்டு தேவர்களின் இரண்டாம் தலைவனை {இரண்டாம் இந்திரனைப்} போலத் தன் தலைநகருக்குத் திரும்பிச் சென்றான்.(65) அமைச்சர்களும், புரோகிதரும் அவனை வரவேற்க வெளியே வந்தனர். அவனது துருப்பினரும், ஆடல் மகளிரும், அவனது குடிமக்கள் அனைவரும் அவ்வாறே வந்தனர்.(66) அவர்கள் அனைவராலும் சூழப்பட்டவனும், அழகு மற்றும் காந்தியால் சுடர்விடுபவனுமான மன்னன் குசிகன், வந்திகளும், மாகதர்களும் அவனது புகழ்பாட, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(67)
தன் நகரத்திற்குள் நுழைந்து, காலைச் சடங்குகள் அனைத்தையும் செய்து, தன் மனைவியுடன் சேர்ந்து உண்டான். பெரும் காந்தியைக் கொண்ட அந்த ஏகாதிபதி அவ்விரவை மகிழ்ச்சியாகக் கடத்தினான்.(68) அவர்கள் ஒவ்வொருவரும் தங்களில் மற்றவரை புது இளமை பெற்றவராகக் கண்டனர். துன்பங்கள் மற்றும் கவலைகள் ஏதுமற்ற அவர்கள் தங்களில் ஒவ்வொருவரையும் ஒரு தேவராகக் கண்டனர். அந்த முதன்மையான பிராமணரிடம் இருந்து வரமாகப் பெற்ற காந்தியுடனும், தாங்கள் கொண்டிருந்த அழகிய, இனிமையான வடிவங்களுடனும் அவர்கள் இருவரும் அவ்விரவைத் தங்கள் படுக்கையில் மகிழ்ச்சியாகக் கடத்தினர்.(69) அதே வேளையில், பிருகு குலத்தின் புகழைப் பெருகச் செய்பவரான அந்த முனிவர் {சியவனர்}, தமது யோக சக்தியினால், கங்கைக்கரையில் உள்ள அந்த இனிய காட்டை, அனைத்து வகைச் செல்வங்களும் நிறைந்ததும், தேவர்களின் தலைவனுடைய வசிப்பிடத்தின் அழகையும், காந்தியையும் விஞ்சும் வகையில் பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் இடமாக மாற்றினார்” {என்றார் பீஷ்மர்}.(70)
குசிகனிடம் நிறைவடைந்த சியவனர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 54-மாய மாளிகையையும், பல அற்புதக் காட்சிகளையும் கண்ட மன்னன் குசிகன்; தன் மனைவியிடம் முனிவரின் பெருமைகளைச் சொன்னது; குசிகனின் எண்ணங்களை மனத்தால் அறிந்த சியவனர் அவனுக்கு ஒரு வரமளிக்க முன்வந்தது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த இரவு கடந்ததும், விழித்தெழுந்த அந்த உயர் ஆன்ம மன்னன் {குசிகன்} தன் காலைச் சடங்குகளைச் செய்தான். தன் வசிப்பிடமாக முனிவரால் {சியவனரால்} தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் காட்டுக்கு அவன் தன் மனைவியின் துணையுடன் சென்றான்.(1) அங்கே வந்ததும் அந்த ஏகாதிபதி {குசிகன்}, முற்றிலும் பொன்னாலானதும் அரண்மனை போன்றதுமான ஒரு மாளிகையைக் கண்டான். ரத்தினங்களாலும், விலைமதிப்பற்ற கற்களாலும் ஆன ஆயிரம் தூண்களைக் கொண்ட அது {மாளிகை} கந்தர்வர்களின் நீர்மாடக்கூடம் போல இருந்தது[1].(2) குசிகன், அந்தக் கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வீக வடிவமைப்புக்கான சான்றுகளைக் கண்டான். மேலும் அவன் அழகிய பள்ளத்தாக்குகளுடன் கூடிய மலைகளையும், தாமரைகளுடன் கூடிய தடாகங்களையும் அங்கே கண்டார்;(3) ஓ! பாரதா, விலைமதிப்புமிக்க, ஆச்சரியகரமான பொருட்கள் நிறைந்தவையும், வாயில்கள் மற்றும் தோரணங்களோடு கூடியவையுமான மாளிகைகளையும் கண்டான். பொன்வயல்களுக்கு ஒப்பான வகையில் செழித்து வளர்ந்த புற்களுடன் கூடிய திறந்தவெளிகளையும், இடங்களையும் அங்கே கண்டான்.(4)மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சஹகாரங்கள் {ஒட்டுமாமரங்கள்}, கேதகங்கள் {தாழைகள்}, உத்தாலகங்கள் {குறும்பலா}, தவங்கள், அசோகங்கள், மலரும்நிலையில் உள்ள குந்தங்கள் {குறுக்கத்தி மரங்கள்}, அதிமுகங்களையும் {முல்லைக்கொடிகள்} அவன் கண்டான்.(5) சம்பகங்கள் {சண்பக மரங்கள்}, திலகங்கள் {திலகமரங்கள்}, பவ்யங்கள் {பலா மரங்கள்}, பனசங்கள் {மகிழ மரங்கள்}, வியாஞ்ஜுலங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணீகாரங்களையும் {கொன்றைமரங்கள்} அவன் அங்கே கண்டான்.(6) அழகாக வளர்ந்திருக்கும் சியாமங்கள், வாரணபுஷ்பங்கள் அஷ்டபடிகம் என்றழைக்கப்படும் கொடிகள் பலவற்றையும் மன்னன் கண்டான்.(7) மேலும் அம்மன்னன், பல்வேறு வகைத் தாமரங்களைப் பேரழகுடன் மலரும் மரங்களையும் (!), ஒவ்வொரு பருவகாலத்திற்கும் உரிய மலர்களையும் சுமக்கும் சில மரங்களையும் அங்கே கண்டான்[2]. தெய்வீகத்தேர்களையோ, அழகிய மலைகளையோ போலத் தெரிந்த பல மாளிகைகளையும் அவன் கவனித்தான்.(8)ஓ! பாரதா சில இடங்களில் குளிர்ந்த நீர் நிறைந்த தடாகங்களும், வேறு சில இடங்களில் வெண்ணீர் நிறைந்த தடாகங்களும் இருப்பதைக் கண்டான். பல்வேறு வகைச் சிறந்த இருக்கைகளும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளும்,(9) பொன் மற்றும் இரத்தினங்களால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையும், மதிப்புமிக்கவையுமான துணிகள் மற்றும் போர்வைகள் விரிக்கப்பட்டவையுமான கட்டில்களும் அங்கே இருந்தன. நன்கு சமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு ஆயத்தமாக உணவு வகைகளும், பானங்களும் அங்கே இருந்தன.(10) பேசும் கிளிகள், பெண் கிளிகள், பிரிஞ்சராஜங்கள் {வண்டுகள்}, கோகிலங்கள் {குயில்கள்}, சதபத்ரங்கள் {மரங்குத்திகள்}, கோயஷ்டிகங்கள் {நாரைகள்}, குக்குபங்கள் {காட்டுக் கோழிகள்},(11) மயில்கள், சேவல்கள், தாத்யுஹங்கள் {குருட்டுக் காக்கைகள்}, ஜீவஜீவகங்கள் {கவுதாரிகள்}, சக்கோரங்கள், குரங்குகள், அன்னங்கள், சாரசங்கள் {கொக்குகள்}, சக்கரவாகங்கள் {வாத்துகள்} ஆகியன அங்கே இருந்தன.(12)
ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியாக இருக்கும் அப்சரஸ்களும், மகிழ்ச்சியான கந்தர்வக்கூட்டங்களும் ஆங்காங்கே இருப்பதை அவன் கண்டான்.(13) வேறு சில கந்தர்வர்கள் தங்கள் அன்புக்குரிய மனைவிகளுடன் அங்கே விளையாடிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான். மன்னன் சில வேளைகளில் இந்தக் காட்சிகளைக் கண்டான், சில வேளைகளில் அவனால் காண முடியவில்லை (ஏனெனில் அவை அவனது கண்களுக்கு முன்னால் தோன்றி மறைபவையாக இருந்தன).(14) மென்மையான குரலிசைகளையும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களைத் தங்கள் சீடர்களுக்கு எடுத்துரைக்கும் ஆசான்களின் இனிய குரல்களையும் அந்த ஏகாதிபதி கேட்டான். தடாகங்களில் விளையாடும் வாத்துகளின் இணக்கமான கொக்கரிப்புகளையும் கேட்டான்.(15)
இத்தகைய அழகிய காட்சிகளைக் கண்ட மன்னன் தனக்குள்ளேயே நினைக்கத் தொடங்கினான், “இது கனவா? இவை யாவும் என் மனத்தின் மயக்கத்தால் ஏற்படுகின்றனவா? அல்லது இவையனைத்தும் உண்மைதானா?(16) ஓ!, நான் என் பூலோகவாசத்தைக் கைவிடாமலேயே சொர்க்கத்தின் இன்பத்தை அடைந்துவிட்டேன். ஒருவேளை இஃது உத்தரக் குருக்களின் புண்ணிய நாடா? அல்லது அமராவதி என்றழைக்கப்படும் தேவர்த்தலைவனின் வசிப்பிடமா?(17) ஓ! காண்பதற்கினிய அற்புதக் காட்சிகளைப் பார்க்கிறேன்” {என்று நினைக்கத் தொடங்கினான்}. இவ்வகையில் நினைத்த அந்த ஏகாதிபதி இறுதியாக அந்த முதன்மையான முனிவரை {சியவனரைக்} கண்டான்.(18) ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அமைக்கப்பட்ட தூண்களுடன் கூடிய அந்தப் பொன்மாளிகையில் ஒரு விலைமதிப்புமிக்கச் சிறந்த படுக்கையில் பிருகுவின் மகன் {சியவனர்} கிடந்தார்.(19) தன் மனைவியுடன் கூடிய மன்னன், மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் முனிவர் கிடந்த படுக்கைக்குச் சென்றான். எனினும், சியவனர் தாம் கிடந்த படுக்கையுடன் சேர்ந்து விரைவில் மறைந்துபோனார்.(20)
மன்னன் காட்டின் மற்றொரு பகுதியில், அம்முனிவர் குசப்புல்லாலான விரிப்பில் {தர்ப்பாஸனத்தில்} அமர்ந்து கொண்டு, மனத்தில் சில உயர்ந்த மந்திரங்களை உரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(21) இவ்வாறே அம்முனிவர் தமது யோக சக்தியால் மன்னனை மலைப்படையச் செய்தார். அந்தக் கணத்திலேயே அந்த இனிய காட்டில் இருந்த அப்சரஸ் கூட்டங்களும், கந்தர்வக்கூட்டங்களும், அந்த அழகிய மரங்கள் அனைத்தும் மறைந்தன.(22) கங்கையின் கரை எப்போதும் போன்ற அமைதியை அடைந்து, குசப்புற்களாலும், எரும்புப்புற்றுகளாலும் மறைந்திருக்கும் பழைய தன்மையை அடைந்தது.(23) மன்னன் குசிகன், அந்த அற்புதக் காட்சியையும், உடனே அது மறைந்து போனதையும் தன் மனைவியுடன் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(24)
மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன்கூடிய அம்மன்னன் தன் மனைவியிடம், “ஓ! இனியவளே, எங்கும் காண முடியாத இனிமையான காட்சிகள் பலவற்றை நாமிருவரும் கண்டோம்.(25) இவையனைத்தும் பிருகு மகனின் {சியவனரின்} அருளாலும், அவருடைய தவப் பலத்தாலும் நடைபெறுகிறது. ஒருவன் தன் கற்பனையில் காணும் அனைத்தையும் தவங்களின் மூலம் அடைய முடிகிறது.(26) மூவுலகங்களின் ஆட்சியுரிமையைவிடத் தவங்கள் மேன்மையானவை. நன்கு செய்யப்பட்ட தவங்களின் மூலம் விடுதலையையே {முக்தியையே} அடைய முடியும். உயர் ஆன்மா கொண்டவரும், தெய்வீகமானவருமான முனிவர் சியவனருடைய தவங்களின் வலிமையைப் பார். அவர் விரும்பினால் (இப்போது இருப்பதைத் தவிர இன்னும்) வேறு உலகங்களையும் உண்டாக்க முடியும்.(27,28) புனிதமான வாக்கு, புத்தி மற்றும் செயல்களை அடைவதற்காக மட்டுமே இவ்வுலகில் பிராமணர்கள் பிறக்கிறார்கள். சியவனரைத் தவிர வேறு யாரால் இவை அனைத்தையும் செய்ய முடியும்?(29) அரசுரிமையை எளிதில் அடைந்துவிடலாம். ஆனால் பிராமண நிலையானது அடைய முடியாததாகும். ஒரு பிராமணரின் பலத்தின் மூலமே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகளைப் போல நாம் ஒரு தேரில் பூட்டப்பட்டோம்” என்றான்.(30)
மன்னனின் மூளையில் தோன்றிய இந்நினைவுகளைச் சியவனர் அறிந்தார். மன்னனின் சிந்தனைகளை உறுதி செய்து கொண்ட முனிவர் அவனிடம் {குசிகனிடம்} “விரைவாக இங்கே வா” என்று சொன்னார்.(31)
இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும், ராணியும் பெரும் தவசியை அணுகி வழிபாட்டுக்குத்தகுந்த அவரிடம் தலைவணங்கி நின்றனர்.(32) ஓ! மனிதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு ஆசிகூறி அம்மன்னனுக்கு ஆறுதல் அளித்து, “இந்த இருக்கையில் அமர்வாயாக” என்றார்.(33)
இதன் பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பிருகுமகன் {சியவனர்} எவ்வகை வஞ்சனையோ, பொய்மையோ இன்றி மென்மையான சொற்கள் பலவற்றால் மன்னனை நிறைவடையச் செய்து,(34) “ஓ! மன்னா, செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட அறிவுப்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும் நீ முற்றிலும் அடக்கியிருக்கிறாய். அதன் காரணமாகவே நான் உனக்காகத் தயாரித்த கடுஞ்சோதனைகளில் இருந்து சிறுதீங்குமின்றி நீ வெளியேறியிருக்கிறாய்.(35) ஓ! மகனே, வாக்குடைய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டுத் துதிக்கப்பட்டேன். உன்னிடம் எப்பாவமும் இல்லை, மிகச் சிறிய பாவமும் உன்னிடம் இல்லை.(36) ஓ! மன்னா, எனக்கு விடை கொடுப்பாயாக, நான் எந்த இடத்தில் இருந்து வந்தேனோ அங்கே இப்போது திரும்பிச் செல்லப் போகிறேன். ஓ! ஏகாதிபதி, நான் உன்னிடம் பெரும் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குத் தரத் தயராக இருக்கும் வரத்தை ஏற்பாயாக” என்றார்.(37)
குசிகன் {சியவனரிட, “ஓ! புனிதமானவரே, நெருப்புக்கு மத்தியில் வசிப்பவனைப் போலவே நான் உமது முன்னிலையில் இருந்தேன். ஓ! பிருகு குலத்தின் தலைவரே, நான் இன்னும் எரியாமல் இருப்பதே போதுமானதாகும்.(38) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, இதுவே நான் அடைந்த உயர்ந்த வரமாகும். ஓ! பாவமற்றவரே, ஓ! பிராமணரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததும், நானும் என் குலம் அழியாமல் மீட்டதும் என் வழக்கில் சிறந்த வரங்களாகும்.(39) ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளுக்கான குறிப்பிடத்தகுந்த சான்றாக இதை நான் கருதுகிறேன். என் வாழ்வின் இலக்கு நிறைவேறியது. என் அரசுரிமைக்கான கதியாகவும் இதையே நான் கருதுகிறேன். என் தவங்களின் உயர்ந்த கனியாகவும் நான் இதையே கருதுகிறேன்.(40) ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, நீர் என்னிடம் நிறைவடைந்திருந்தால் என் மனத்தில் உள்ள ஐயங்கள் சிலவற்றை விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(41)
சியவனர் அருளிய வரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 55-ன் மனத்தில் இருந்த ஐயங்கள் அனைத்தையும் சியவனரிடம் கேட்ட குசிகன்; தமது செயல்பாடுகளுக்கான காரணங்களைக் குசிகனுக்கு விளக்கிச் சொல்லி அவனுக்கு வரமளித்த சியவனர்…
சியவனர் {மன்னன் குசிகனிடம்}, “நீ என்னிடம் இருந்து ஒரு வரத்தை ஏற்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, உன் மனத்தில் இருக்கும் ஐயம் என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்” என்றார்.(1)
குசிகன் {முனிவர் சியவனரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பிருகுவின் மகனே, நீர் என்னிடம் நிறைவடைந்தீரானால், என் அரண்மனையில் சில காலம் நீர் வசித்த நோக்கத்தை எனக்குச் சொல்வீராக, அதை நான் கேட்க விரும்புகிறேன். என்னால் உமக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் பக்கம் திரும்பாமல் இருபத்தோரு நாட்கள் உறங்கியதில் உமது நோக்கம் என்ன?(2) மேலும், ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த அறையை விட்டுச் சென்றது ஏன்?(3) மேலும், வெளிப்படையான காரணம் ஏதும் இல்லாமல் ஏன் மறைந்தீர்? பிறகும் மீண்டும் ஏன் மறைந்தீர்? ஓ! கல்விமானான பிராமணரே, முன்பைப் போலவே மீண்டும் இருபத்தோரு நாட்கள் ஏன் படுக்கையில் கிடந்து உறங்கினீர்?(4) உமது நீராட்டத்திற்காக உம் மீது நாங்கள் எண்ணெய் பூசியதும் என்ன காரணத்தினால் நீர் சென்றுவிட்டீர்? பல்வேறு வகையான உணவு வகைகளை என் அரண்மனையில் திரட்டச் செய்துவிட்டு, அதன்பிறகு தீயின் துணையுடன் அவற்றை ஏன் எரித்தீர்?(5)
திடீரென என் தேரில் என் நகரில் நீர் செய்த பயணத்திற்கான காரணம் என்ன? அவ்வளவு செல்வத்தைக் கொடையளித்ததில் உமது நோக்கம் என்ன? உமது யோக பலத்தால் உண்டான காட்டில் உள்ள அதிசயங்களை எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(6) உண்மையில், ஓ! பெருந்தவசியே, பொன்னாலான மாட மாளிகைகள் பலவற்றையும், ரத்தினங்கள் மற்றும் கற்களாலான சட்டங்களால் தாங்கப்படும் படுக்கைக்ள பலவற்றையும் எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(7) அந்த அதிசயங்கள் அனைத்தும் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போனது ஏன்? இவை யாவற்றின் காரணங்களையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ!பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, உமது செயல்கள் இவ்வளவையும் நினைத்து நான் மீண்டும் மீண்டும் திகைப்படைகிறேன்.(8) உம்மில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையும் நான் காணத்தவறுகிறேன். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, உமது செயல்கள் அனைத்தையும் குறித்த உண்மைகளை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {குசிகன்}.(9)
சியவனர் {மன்னன் குசிகனிடம்}, “நான் செய்த இச்செயல்கள் அனைத்தையும் என்னைச் செய்யத் தூண்டிய காரணங்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, உன்னால் கேட்கப்பட்டுப் பிறகு உன்னைத் தெளிவடையச் செய்ய என்னால் மறுக்க முடியாது.(10) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் தேவர்கள் அனைவரும் கூடியிருந்தபோது, பெரும்பாட்டனான பிரம்மன் சில வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மன்னா, நான் அவற்றைக் கேட்டேன், அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(11) {பிரம்மன்}, “பிரம்ம, க்ஷத்திரிய சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் விளைவால் என் குலத்தில் கலப்பு நேரப் போகிறது” {என்றான் பிரம்மன்}[1]. ஓ! மன்னா, உன் பேரன் பெரும் சக்தியும் பலமும் கொண்டவனாக இருப்பான்.(12) இதைக் கேட்டதும், உன் குலத்தை அழிக்கும் தீர்மானத்துடன் நான் இங்கே வந்தேன். ஓ! குசிகா, உண்மையில் உன் குலத்தை முற்றாக அழித்து, உன் வழித்தோன்றல்கள் அனைவரையும் சாம்பலாக்கவே நான் வந்தேன்[2].(13) ஓ! ஏகாதிபதி, இந்நோக்கத்தால் தூண்டப்பட்டு உன் அரண்மனைக்கு வந்த நான் உன்னிடம், “நான் ஒரு நோன்பை நோற்கப் போகிறேன். என்னைக் கவனித்துக் கொண்டு கடமையுணர்வுடன் தொண்டு செய்வாயாக” என்றேன்.(14) எனினும் உன் வீட்டில் நான் வசித்திருந்தபோது, உன்னிடம் நான் எந்தக் களங்கத்தையும் காணத் தவறினேன். ஓ! அரசமுனியே, அந்தக் காரணத்தினால்தான் நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய். இல்லையெனில் இறந்தோருடன் நீ ஏற்கனவே கணக்கிடப்பட்டிருப்பாய்.(15)இந்தத் தீர்மானத்துடன், நானே எழுவதற்கு முன் யாராவது என்னை விழிப்படையச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் இருபத்தோரு நாட்கள் உறங்கினேன்.(16) எனினும், நீயும் உன் மனைவியும் என்னை விழிப்படையச் செய்யவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன்.(17) படுக்கையில் இருந்து எழுந்து உங்களிடம் ஏதும் பேசாமலேயே நான் அந்த அறையை விட்டு வெளியே சென்றேன். ஓ! ஏகாதிபதி, நீ என்னைக் கேட்பாய், அதனால் உன்னைச் சபிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே நான் அதைச் செய்தேன்.(18) பிறகு நான் என்னை மறைத்துக் கொண்டு, உன் அரண்மனையின் ஓர் அறையில் மீண்டும் என்னை வெளிப்படுத்திக் கொண்டு மீண்டும் இருபத்தோரு நாட்கள் யோகத்துயில் கொண்டேன்.(19) என்னைத் தூண்டிய நோக்கம் இதுதான். பசியாலும், களைப்பாலும் கோபமடையும் நீங்கள் இருவரும் நான் விரும்பாததைச் செய்வீர்கள் என்று நினைத்தேன். இந்த நோக்கத்துடன்தான் நான் உன்னையும் உன் மனைவியையும் பசியால் பீடிக்கச் செய்தேன்.(20)
எனினும், ஓ! மன்னா, உன் இதயத்தில் சிறு கோப உணர்ச்சியோ, எரிச்சலோ எழுவில்லை. ஓ! ஏகாதிபதி இதனால் நான் உன்னிடம் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.(21) பல்வேறு உணவு வகைகளைக் கொண்டுவரச் செய்து, அவற்றுக்குத் தீ மூட்டியபோது, அதைக் கண்டு நீயும் உன் மனைவியும் கோபமடைவீர்கள் என்று நினைத்தேன். எனினும், என்னுடைய அந்தச் செயலையும் நீங்கள் பொறுத்தீர்கள்.(22) பிறகு, ஓ! ஏகாதிபதி, தேரில் ஏறிக் கொண்டு உன்னிடம், “நீயும், உன் மனைவியும் என்னைச் சுமப்பீராக” என்றேன். ஓ! மன்னா, நான் சொன்னதை நீங்கள் சிறு தயக்கமுமின்றிச் செய்தீர்கள். இதனால் நான் மகிழ்ச்சியால் நிறைந்தேன். நான் கொடுத்த செல்வக் கொடைகளும் உங்கள் கோபத்தைத் தூண்டவில்லை.(23,24) ஓ! மன்னா, உன்னிடம் நிறைவடைந்த நான், நீயும் உன் மனைவியும் இங்கே கண்ட அந்தக் காட்டை என் யோக பலத்தின் உதவியால் உண்டாக்கினேன். ஓ! ஏகாதிபதி, நான் கொண்டிருந்த நோக்கத்தைக் கேட்பாயாக.(25)
உன்னையும், உன் ராணியையும் நிறைவடையச் செய்வதற்காக உன்னை நான் சொர்க்கத்தில் ஒரு பார்வை காணச் செய்தேன். ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டில் நீ கண்ட அனைத்துப் பொருட்களும் சொர்க்கத்தின் முன்சுவையாகும்.(26) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீயும் உன் மனைவியும் பூமிசார்ந்த உடல்களைக் கொண்டிருந்தாலும், உங்களைச் சில காலம் சொர்க்கத்தின் காட்சிகள் சிலவற்றைக் காணும்படி செய்தேன்.(27) தவங்களின் பலத்தையும், அறத்திற்காகச் சேமிப்பில் இருக்கும் வெகுமதியையும் காட்டுவதற்காகவே இவை யாவும் செய்யப்பட்டன. ஓ! ஏகாதிபதி, அந்த இனிமைநிறைந்த பொருட்களைக் கண்டதும் உன் இதயத்தில் எழுந்த ஆசையை நான் அறிவேன்.(28) ஓ! பூமியின் தலைவா, பூமியின் அரசுரிமையையும், சொர்க்கத்தின் அரசையும் அலட்சியம் செய்து, பிராமணத் தன்மையையும், தவங்களின் தகுதியையும் நீ அடைய விரும்பினாய்.(29) ஓ! மன்னா, இதையே நீ நினைத்தாய். பிராமண நிலையை அடைவது மிகக் கடினமாகும்; பிராமணனான பிறகு, ஒரு முனிவரின் நிலையை அடைவது மிகக் கடினமாகும்; முனிவரான பிறகு ஒரு தவசியாவது மிகக் கடினமாகும்.(30)
நான் உனக்குச் சொல்கிறேன், உன் ஆசை நிறைவடையும். ஓ! குசிகா, உன் பெயரால் {கௌசிகர் [விஷ்வாமித்ரர்] என்று} அழைக்கப்படும் பிராமணன் ஒருவன் உன்னில் இருந்து எழுவான். உன்னிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவன் பிராமண நிலையை அடைவான்.(31) ஓ! ஏகாதிபதி, உன் பேரன், பிருகுக்களின் சக்தியின் மூலம் நெருப்பின் காந்தியுடன் கூடிய ஒரு தவசியாக இருப்பான்.(32) அவன் மனிதர்கள் அனைவருக்கும், மூவுலகங்களில் வசிப்போருக்கும் எப்போதும் அச்சத்தை ஊட்டுவான். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்.(33) ஓ! அரச முனியே, உன் மனத்தில் இப்போது இருக்கும் அந்த வரத்தை ஏற்பாயாக. நான் விரைவில் புனித நீர்நிலைகள் அனைத்திற்கும் பயணம் புறப்பட {தீர்த்த யாத்திரை செல்ல} இருக்கிறேன். காலம் கடந்து போகிறது” என்றார் {சியவனர்}.(34)
குசிகன், “ஓ! பெருந்தவசியே, என் வழக்கில் நீர் என்னிடம் நிறைவடைந்திருப்பதே எனக்கு உயர்ந்த வரமாகும். நீர் சொன்னது நடக்கட்டும். ஓ! பாவமற்றவரே, என் பேரன் ஒரு பிராமணனாகட்டும்.(35) உண்மையில், ஓ! புனிதமானவரே, பிராமணத்வ நிலை என் குலத்தைப் பற்றட்டும். நான் இந்த வரத்தையே கேட்கிறேன். ஓ! புனிதமானவரே, மீண்டும் நான் உம்மை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(36) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, பிராமணத்வ நிலை எவ்வழியில் என் குலத்தைப் பற்றும்? எவன் என் நண்பனாக இருப்பான்? என் அன்பையும், மதிப்பையும் எவன் பெறுவான்?[3]” என்று கேட்டான் {குசிகன்}.(37)
விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமர் பிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 56-பிருகு குலத்திலும், குசிக குலத்திலும் நேரப்போகும் வர்ணக் கலப்புக் குறித்துக் குசிகனிடம் சொன்ன சியவனர்; விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமரின் பிறப்பை முன்கூட்டியே அறிவித்தது…
சியவனர் {மன்னன் குசிகனிடம்*}, “ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! ஏகாதிபதி, உன் குலத்தை அழிப்பதற்காக நான் இங்கே வந்த சூழ்நிலைகள் அனைத்தையும் நிச்சயம் நான் உனக்குச் சொல்ல வேண்டும்.(1) ஓ! மன்னா, வேள்விக் காரியங்களில் க்ஷத்திரியர்களுக்குப் பிருகு மகன்களின் துணை எப்போதும் வேண்டும் என்பது நன்கறியப்பட்டதே. தடுக்கப்பட முடியாத அளவுக்கான விதியின் மூலம் க்ஷத்திரியர்களும், பார்க்கவர்களும் வீழப் போகிறார்கள்.(2) ஓ! மன்னா, பிருகுவின் வழித்தோன்றல்கள் அனைவரையும் க்ஷத்திரியர்கள் கொல்லப் போகிறார்கள். விதி விதிக்கும் விதியால் பீடிக்கப்படும் அவர்கள் தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளையும் விட்டுவிடாமல் பிருகு குலத்தை அழிக்கப் போகிறார்கள்.(3)
*குசிகன்= கௌசிகன், கவுசிகன்
அவுர்வன் {ஔர்வன்} என்ற பெயரில் பிருகு குலத்தில் ஒரு முனிவன் தோன்றுவான். பெருஞ்சக்தியுடன் கூடிய அவன் நிச்சயம் நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் இருப்பான்.(4) அவன் மூன்று உலகங்களையும் எரிக்கப் போதுமான அளவுக்குக் கோபத்தை வளர்ப்பான். மலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய மொத்த உலகத்தையும் சாம்பலாகக் குறைக்கத்தக்கவனாக அவன் இருப்பான்.(5) சிறிது காலத்திற்குப் பிறகு அந்தக் கோப நெருப்பின் தழல்களை, கடலில் உலவும் குதிரையின் {வடவையின்} வாயில் வீசித் தணிக்கப் போகிறான்.(6) அவன் {ஔர்வன்} ரிசீகன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான். ஓ! பாவமற்றவனே, மொத்த ஆயுத அறிவியலும் உடல்கொண்ட வடிவத்துடன் அவனிடம் வந்து சேரும்.(7) விதி விதிக்கும் விதியின்படி மொத்த க்ஷத்திரிய குலத்தையும் அழிப்பதற்காக அவனிடம் வந்து சேரும். உள்ளொளியின் மூலம் அந்த அறிவியலைப் பெற்றுக் கொள்ளும் அவன், உயர் ஆன்மா கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனுமான அவனது மகன் ஜமதக்னிக்குத் தன் யோக பலத்தின் மூலம் அதை {அந்த ஆயுத அறிவியலைக்} கொடுப்பான். அந்தப் பிருகு குலப் புலியும் {ஜமதக்னியும்} அதைத் தன் மனத்தில் தாங்குவான்.(8,9)
ஓ! அற ஆன்மா கொண்டவனே, ஓ! பாரதர்களின் தலைவனே, ஜமதக்னி உன் குலத்தின் {குசிக குலத்தின்} மகிமையைப் பரவச் செய்வதற்காக அக்குலத்தில் ஒரு பெண்ணை மணப்பான்.(10) காதியின் மகளும், உன் பேத்தியுமானவளைத் தன் மனைவியாகக் கொள்ளும் அந்தப் பெரும் தவசி {ஜமதக்னி}, க்ஷத்திரிய வித்தகங்களுடன் கூடிய ஒரு மறுபிறப்பாள மகனை {பரசுமாரமனைப்} பெறுவான்.(11) உன் குலத்தில் பிராமணக் குணங்களுடன் கூடிய க்ஷத்திரியனாக ஒரு மகன் {விஷ்வாமித்திரன்} பிறப்பான். பேரறத்துடன் கூடிய அவன் காதியின் மகனாக {விஷ்வாமித்ரனாக} இருப்பான். விஷ்வாமித்ரன் என்ற பெயரில் அறியப்படும் அவன், தேவர்க்காசானான பிருஹஸ்பதிக்கு இணையான சக்தி கொண்டவனாகக் கருதப்படுவான்.(12) சிறப்புமிக்க ரிசீகனே, பெரும் தவங்களுடன் கூடிய இந்த க்ஷத்திரியனை {விஷ்வாமித்ரனை} உன் குலத்திற்குக் கொடுப்பான். (பிருகு குலத்தில் ஒரு க்ஷத்திரியன் மற்றும் உன் குலத்தில் ஒரு பிராமணன் என்று) மகன்களைப் பரிமாறிக் கொள்ளும் இக்காரியத்திற்கு இரு பெண்களே காரணமாக இருப்பார்கள்.(13) இவை யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணைப்படியே நடந்தேறும். இஃது ஒருபோதும் வேறுவகையாகாது. உன்னில் இருந்து மூன்றாம் வழித்தோன்றலைப் பிராமணத்வம் என்ற நிலை பற்றும். (திருமண உறவின் மூலம்) நீ பார்க்கவர்களுக்கு உறவினனாவாய்” என்றார் {சியவனர்}”.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம தவசியான சியவனர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் குசிகன் இன்பத்தால் நிறைந்து பின்வரும் சொற்களில் பதிலுரைத்தான்.(15) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, உண்மையில் அவன், “அப்படியே ஆகட்டும்” என்றான். பெருஞ்சக்தியுடன் கூடிய சியவனர் மீண்டும் மன்னனிடம் பேசி,(16) ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அவனைத் தூண்டினார். மன்னன், “மிக்க நன்று. ஓ! பெரும் தவசியே, என் விருப்பம் கனியும் நிலையை நான் உம்மிடம் இருந்து பெறுவேன்.(17) என் குலம் பிராமணத்வ நிலை கொண்டதாகட்டும். அஃது எப்போதும் தன் இதயத்தில் அறத்தை நிலைநிறுத்திக் கொள்ளட்டும்” என்றான். இவ்வாறு வேண்டப்பட்ட தவசி சியவனர், மன்னனின் வேண்டுதலை அருளி,(18) அந்த ஏகாதிபதியிடம் விடைபெற்றுக் கொண்டு தாம் எண்ணியிருந்த புனிதநீர்நிலைகளுக்கான பயணத்திற்குப் புறப்பட்டார். ஓ! பாரதா, பிருகுக்களும், குசிகர்களும் {கௌசிகர்களும்} எவ்வாறு திருமணத்தின் மூலம் இணைந்தனர் என்பது குறித்த உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், ஓ! மன்னா, முனிவர் சியவனர் சொன்னவாரே அனைத்தும் நடந்தன. (பிருகு குலத்தில்) ராமர் {பரசுராமர்} பிறப்பும், (குசிக (கௌசிக) குலத்தில்) விஷ்வாமித்ரர் பிறப்பும் சியவனர் குறிப்பிட்ட வழியிலேயே நடந்தேறின” {என்றார் பீஷ்மர்}.(20)
தவமும் கொடையும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 57-தவம், கொடை ஆகியவற்றின் சிறப்புக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, உமது சொற்களைக் கேட்டு நான் திகைப்படைகிறேன். பெருஞ்செழிப்பைக் கொண்டிருந்த எண்ணற்ற மன்னர்கள் அனைவரும் இப்போது இந்தப் பூமியில் இல்லாததை நினைத்து என் இதயம் துயரால் நிறைகிறது.(1) ஓ! பாரதரே, ஓ! பாட்டா, நான் பூமியை வென்று, நூற்றுக்கணக்கான நாடுகளை அடைந்திருந்தாலும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்றிருப்பதை நினைத்து துயரடைகிறேன்.(2) ஐயோ, எங்களால் கணவர்களையும், மகன்களையும், தாய்மாமன்களையும், சகோதரர்களையும் இழந்திருக்கும் முதன்மையான பெண்மணிகளின் அவலநிலை என்னவாக இருக்கும்?(3) எங்கள் உறவினர்களும், நண்பர்களும், நலன்விரும்பிகளுமான குருக்களைக் கொன்றதால் நாங்கள் தலைகீழாக நரகில் மூழ்கப் போகிறோம். இதில் ஐயமேதும் கிடையாது.(4) ஓ! பாரதரே, நான் என் உடலைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்த விரும்புகிறேன். ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கதியை நோக்கில் கொண்டு நான் உம்மிடம் இருந்து போதனைகளைப் பெற விரும்புகிறேன்” என்றான்”.(5)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம பீஷ்மர், யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தம் புத்தியின் துணையுடன் அவை குறித்துக் கூர்மையாகச் சிந்தித்து யுதிஷ்டிரனுக்கு மறுமொழி கூறினார்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. அது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாகவும், பெரும் புதிராகவும் இருக்கிறது. உயிரினங்கள் செய்யும் குறிப்பிட்ட செயல்கள் அல்லது அவை பின்பற்றும் ஒழுக்க வழிகளின் வெகுமதியாக மரணத்திற்குப் பின்னால் அடையும் கதிகள் குறித்துச் சொல்லப் போகிறேன்.(7) ஒருவன் தவங்களின் மூலம் சொர்க்கத்தை அடைகிறான். ஒருவன் தவங்களின் மூலம் புகழை அடைகிறான். ஓ! பலமிக்க மன்னா, ஒருவன் தவங்களின் மூலம் நீண்ட வாழ்நாளையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்.(8) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவங்களின் மூலம் ஞானம், அறிவியல், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, மேனி அழகு, செழிப்பு, அருள் நிலை ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(9) தவங்களின் மூலம் ஒருவன் செல்வத்தை அடைகிறான். பேசாத அமைதி நோன்பை {மௌனவிரதம்} நோற்பதன் மூலம் ஒருவன் மொத்த உலகையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வருகிறான். கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய அனைத்துவகைப் பொருட்களையும் அடைகிறான். தீக்ஷை சடங்கைச் செய்வதன் {வேள்விதீக்ஷை செய்வதன்} மூலம் ஒருவன் நல்ல உயர்ந்த குடும்பத்தில் பிறக்கிறான்.(10)
(சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு தங்கள் வாழ்வைக் கழிப்பவர்கள் நாட்டையும், அரசு உரிமையையும் அடைவதில் வெல்கிறார்கள். செடி மற்றும் மரங்களின் இலைகளைத் தங்கள் உணவாக உண்டு வாழ்வோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(11) நீரை மட்டுமே உண்டு வாழும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறான். ஒருவன் தனது ஆசானுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் கல்வியை அடைகிறான். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாள்தோறும் சிராத்தங்கள் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பிள்ளைகளை அடைகிறான்.(12) கீரை மற்றும் காய்கறிகளில் தீக்ஷை {சாக விரதம்} நோற்கும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களை அடைகிறான். புற்கள் மற்றும் துரும்புகளை உண்டு வாழ்பவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தேவையான சடங்குகளுடன் மும்முறை நீராடும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான மனைவிகளை அடைகிறான். வெறும் காற்றை மட்டுமே குடிக்கும் ஒருவன் பிரஜாபதியின் உலகவாசத்தை அடைகிறான்.(13)
ஒவ்வொரு நாளும் நீராடி, இரு சந்தி வேளைகளிலும் புனித மந்திரங்களை உரைக்கும் பிராமணன், தக்ஷனின் நிலையை அடைகிறான் {நெடுங்காலம் உயிர்வாழ்வான்}. காடு மற்றும் பாலைவனத்தில் உள்ள தேவர்களை வழிபடுவதன் மூலம் ஒருவன் நாட்டையோ, அரசுரிமையையோ அடைகிறான். நீண்ட உண்ணா நோன்பின் மூலம் உடலைக் கைவிடும் நோன்பை நோற்கும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(14) தவச் செல்வத்துடன் கூடிய ஒருவன் எப்போதும் தன் நாட்களை யோகத்தில் கடத்துவதால், நல்ல படுக்கைகள், இருக்கைகள் மற்றும் வாகனங்களை அடைகிறான். சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைவதன் மூலம் உடலைக் கைவிடும் ஒருவன், பிரம்மலோகத்தில் மதிப்பிற்குரிய பொருளாகிறான்.(15) கடினமாக உள்ள வெறுந்தரையில் {கட்டாந்தரையில்} கிடப்பவர்கள், வீடுகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளை உடுத்துபவர்கள் நல்ல ஆடை மற்றும் ஆபரணங்களை அடைகிறார்கள்.(16)
இனிமையான சுவைகள் பலவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பை ஈட்டுவதில் வெல்கிறான். இறைச்சி மற்றும் மீனைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைக் கொண்ட பிள்ளைகளைப் பெறுகிறான்.(17) {நீரில் வசிக்கும்} உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் சில காலம் கழிக்கும் ஒருவன் சொர்க்கத்தின் தேவனாகவே ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வாய்மை பேசும் மனிதன், தேவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடுவதில் வெல்கிறான்.(18) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன், தனது உயர்ந்த சாதனைகளின் விளைவால் பெரும் புகழை ஈட்டுகிறான். கொடூரம் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைகிறான். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், அரசுரிமையையும், பிராமணன் என்ற உயர்ந்த நிலையையும் அடைகிறான்.(19) நீரையும், பிற பானங்களையும் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் உயர்ந்த சாதனையின் விளைவாக ஒருவன் நித்தியமான புகழை ஈட்டுகிறான். உணவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களை அடைகிறான்.(20)
(தீங்கிழைக்காமல் தவிர்ப்பதன் மூலம்) உயிரினங்கள் அனைத்திற்கும் அமைதியான நிலையைக் கொடுக்கும் ஒருவன் ஒவ்வொரு துயரத்தில் இருந்து விடுபடுகிறான். தேவர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், தெய்வீக அழகையும் அடைகிறான்.(21) மக்கள் அடிக்கடி செல்லக்கூடியவையும், இருளாக இருப்பவையுமான இடங்களுக்கு விளக்கை அளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல பார்வையை அடைகிறான். நல்ல மற்றும் அழகிய பொருட்களைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் நல்ல நினைவையும், புத்தியையும் அடைகிறான்.(22) நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் பெரும் பரப்பில் பரவியிருக்கும் புகழை அடைகிறான். தலைமுடி மற்றும் தாடிகளை மழிக்காமல் தவிர்ப்பவர்கள் சிறந்த பிள்ளைகளை அடைவதில் வெல்கிறார்கள்.(23) ஓ! பாரதா, நோன்புகள், தீக்ஷை மற்றும் நீராடல்களை (விதிப்படி) பனிரெண்டு ஆண்டுகள் நோற்கும் ஒருவன், திரும்பிவராத வீரர்களால் அடையப்படும் உலகத்தை விட மேன்மையான உலகத்தை அடைகிறான்.(24) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஒருவன் தன் மகளைத் தகுந்த மணமகனுக்குப் பிரம்ம வடிவத்தின் படி அளிப்பதன் மூலம் {திருமணம் செய்து கொடுப்பதன் மூலம்} அவன் ஆண், பெண் பணியாட்களையும், ஆபரணங்களையும், வயல்களையும், வீடுகளையும் அடைகிறான்.(25)
ஓ! பாரதா, வேள்விகள் செய்வது மற்றும் நோன்புகள் நோற்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். கனிகளையும், மலர்களையும் கொடையளிப்பவன் மங்கல ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(26) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய ஆயிரம் பசுக்களைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான். சொர்க்கத்தில் நடந்த தேவர்களின் கூட்டத்தில் இதுவே சொல்லப்பட்டது.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொண்டுகளுடன் கூடியதும், கன்றுடன் சேர்ந்ததுமான ஒரு கபிலைப் பசுவைப் பால் கறப்பதற்கான வெண்கலக் குடத்தோடு கொடையளிப்பவன் பல்வேறு சாதனைகளைச் செய்பவனாகி, அந்தப் பசுவிடம் இருந்து தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், தான் செய்த கொடையின் விளைவால், அந்தப் பசுவின் உடலில் உள்ள முடிகளுடைய எண்ணிக்கையின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து, மறுமையில் (நரகத் துன்பங்களிலிருந்து) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தன் குலத்தின் ஏழாம் தலைமுறை வரை மீட்கிறான்[1].(29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கொம்புளுடன் கூடிய பசுவையும், அதனுடன் சேர்த்து பால் கறப்பதற்கான வெங்கலக் குடத்தையும், தங்கத்தால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துணியையும், எள்ளையும் {திலதேனுவையும்}, ஒரு தொகை பணத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்கும் மனிதன் வசுக்களின் உலகை அடைகிறான்[2].(30)கடலில் மூழ்கும் மனிதனை ஒரு படகின் பாய்மரம் காற்றைப் பற்றிக் கொண்டு மீட்பதைப் போலவே, பசுவைக் கொடையளிப்பவன் மறுமையில் நரகத்தின் ஆழ்ந்த இருளில் வீழும்போது, இம்மையில் செய்த செயல்களால் அவன் தடுக்கப்படுவான்.(31) தன் மகளைப் பிரம்ம வடிவ திருமண முறையின்படி தகுந்த மனிதனுக்கு அளிக்கும் ஒருவன், அல்லது ஒரு பிராமணனுக்கு நிலத்தைக் கொடையாக அளிக்கும் ஒருவன், அல்லது உரிய சடங்குகளின்படி (ஒரு பிராமணனுக்கு) உணவைக் கொடையளிக்கும் ஒருவன் புரந்தரலோகத்தை அடைவதில் வெல்கிறான்.(32) அனைத்துவகை அறைகலன்களுடன் ஒரு வீட்டை, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அனைத்து வகைச் சாதனைகளையும், நல்லொழுக்கத்தையும் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் உத்தரக் குருக்களின் நாட்டில் ஒரு வசிப்பிடத்தை அடைவான்.(33) வண்டியிழுக்கும் காளைகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான். தங்கத்தைக் கொடையளிப்பது சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. பசும்பொன்னைக் கொடையளிப்பது இன்னும் பெரிய பலனுக்கு வழிவகுக்கிறது.(34) குடையைக் கொடையளிக்கும் ஒருவன் மாட மாளிகையை அடைகிறான். காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல வாகனங்களை அடைகிறான். துணிகளைக் கொடையளிப்பது மேனி அழகைத் தருகிறது, நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் நறுமணமிக்க மனிதனாகிறான்.(35)
ஒரு பிராமணனுக்கு மலர்கள், கனிகள், செடிகள் மற்றும் மரங்களைக் கொடையளிப்பவன், எந்த உழைப்பும் இல்லாமலேயே, அழகிய பெண்கள் மற்றும் அபரிமிதமான செல்வத்துடன் கூடிய மாட மாளிகையை அடைவான்.(36) பல்வேறு வகைச் சுவைகளுடன் கூடிய உணவு மற்றும் பானங்களையும், இன்பத்திற்குரிய பிற பொருட்களையும் கொடையளிப்பவன், அத்தகைய பொருட்களை அபரிமிதமாக அடைவதில் வெல்கிறான். வீடுகள் மற்றும் துணிகளைக் கொடையளிப்பவன் அதே வகைப் பொருட்களைப் பெறுவான். இதில் ஐயமேதும் கிடையாது.(37) மலர்மாலைகள், தூபங்கள், நறுமணப் பொருட்கள், களிம்புகள், நீராடலுக்குப் பிறகு மனிதர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், மலர் வளையங்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டு, மேனி அழகையும் அடைந்து, பெரும் மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்ட உலகத்தில் இன்பமாக விளையாடுவான்.(38) ஓ! மன்னா, தானியம் சேமித்து வைக்கப்பட்டதும், படுக்கைகள் அமைக்கப்பட்டும், செல்வங்கள் நிரம்பியதும், மங்கலமானதும், இனிமை நிறைந்ததுமான ஒரு வீட்டை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அரண்மனை போன்ற வசிப்பிடத்தை அடைகிறான்.(39) நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டதும், சிறந்த போர்வை விரிக்கப்பட்டதும், தலையணைகளுடன் கூடியதுமான ஒரு நல்ல படுக்கையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளும், இனிமையான குணங்களைக் கொண்டவளுமான ஓர் அழகிய மனைவியை எந்த முயற்சியுமின்றி அடைவதில் வெல்வான்.(30) போர்க்களத்தில் வீரனின் படுக்கையை {வீரசயனம்} ஏற்கும் மனிதன், பெரும்பாட்டனான பிரம்மனுக்கு இணையானவனாவான். இதைவிட உயர்ந்த கதி வேறேதும் இல்லை. இதையே பெரும் முனிவர்கள் அறிவித்திருக்கிறார்கள்” என்றார் {பீஷ்மர்}”.(41)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன், தன் பாட்டனின் சொற்களைக் கேட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் கதியை விரும்பினாலும், ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதில் எந்த அருவருப்பையும் அதற்கு மேலும் வெளிக்காட்டவில்லை[3].(42) ஓ! மனிதர்களின் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அதன்பிறகு பாண்டுவின் பிற மகன்களிடம் பேசிய யுதிஷ்டிரன், “நமது பாட்டன் சொன்ன சொற்கள் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கட்டும்” என்றான்.(43) இதைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களுக்கு மத்தியில் இருந்த புகழ்பெற்ற திரௌபதியும் யுதிஷ்டிரனின் சொற்களை மெச்சி, “சரி” என்று சொன்னார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(44)
குளமும், மரங்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 58-மரங்களை நடுதல் மற்றும் குளம் வெட்டல் ஆகியவற்றால் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! குருக்களில் சிறந்தவரே, மரங்களை நடுதல் {தோட்டம் வைத்தல்} மற்றும் குளங்களைத் தோண்டுதல் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களை நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பார்வைக்கு இனிமையானதும், வளமிக்கதும், பல்வேறு வகை உலோகங்களால் அலங்கரிக்கப்பட்ட {காவிக் கற்களினால் விளங்கிக் கொண்டு} இனிமை நிறைந்த காட்சிகளுக்கு மத்தியில் அமைந்திருப்பதும், அனைத்து வகை உயிரினங்கள் வசிப்பதுமான ஒரு நிலமே முதன்மையான இடமாகக் கருதப்படுகிறது.(2) அத்தகைய நிலத்தில ஒரு குறிப்பிட்ட பகுதியே ஒரு குளத்தைத் தோண்டத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பல்வேறு வகைக் குளங்களை முறையான வரிசையில் நான் உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும் (அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நீரைப் பெருகச் செய்யும் நோக்கில்) குளங்களைத் தோண்டுவதால் உண்டாகும் பலன்களையும் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஒரு குளத்தைத் தோண்டச் செய்யும் மனிதன் மூவுலகங்களிலும் மதிப்புக்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவனாகிறான்.(4) நீர் நிறைந்த ஒரு குளமானது, ஒரு நண்பனின் வீட்டைப் போல ஏற்புடையதும், நன்மையானதும் ஆகும். அது சூரியனையே நிறைவடையச் செய்வதாகும். தேவர்களின் வளர்ச்சியிலும் அது பங்காற்றுகிறது. (தோண்டச் செய்பவனின்) புகழுக்கு வழிவகுக்கும் பொருட்கள் அனைத்திலும் அதுவே {குளம் வெட்டுதலே} முதன்மையானதாகும்.(5)
குளம் வெட்டுதல், அறம், பொருள், இன்பம் என்ற முத்தொகைக்கும் பங்காற்றுகிறது[1]. மதிப்பிற்குரிய மனிதர்கள் வசிக்கும் நிலத்தில் ஏற்படுத்தப்படுவதையே முறையாகத் தோண்டப்பட்ட குளமாக ஞானிகள் சொல்கின்றனர். உயரினங்களுக்குத் தேவையான நான்கு காரியங்களுக்கும் தொண்டாற்றுவதே ஒரு குளம் என்று சொல்லப்படுகிறது. மேலும், குளங்களே ஒரு நாட்டின் மிகச் சிறந்த எழிலாக அமைகின்றன.(6,7) தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், உரகர்கள், ராட்சசர்கள், மேலும் அசைவற்ற உயிரினங்களும் கூட நீர் நிறைந்த ஒரு குளத்தையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(8) எனவே, குளங்களால் உண்டாகும் பயன்களையும், அவற்றைத் தோண்டச் செய்த மனிதர்களுக்குக் கிட்டும் பலன்களையும் குறித்துப் பெரும் முனிவர்களால் சொல்லப்பட்டதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(9)மழைக்காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன் ஓர் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்த பலனை அறுவடை செய்கிறான் என்று ஞானிகள் சொல்கின்றனர்.(10) கூதிர்காலத்திலும் {சரத்காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், ஆயிரம் பசுக்களைக் கொடையளித்தவன் இம்மையில் அறுவடையச் செய்த பலனை அடைகிறான்.(11) குளிர் காலத்தில் {ஹேமந்த காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், அபரிமிதமான தங்கத்தைக் கொடையளித்து வேள்வி செய்தவனின் பலனை அடைகிறான்.(12) பனிக்காலத்தில் {சிசிரருது காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன், ஓர் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(13) வசந்த காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் அதிராத்ர வேள்வியைச் செய பலனை அடைகிறான்.(14) கோடைக்காலத்திலும் {க்ரீஷ்மகாலத்திலும்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான் என்று முனிவர்கள் சொல்கிறார்கள்.(15)
எவன் செய்த குளத்தில் பசுக்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வது காணப்படுகிறதோ, எதிலிருந்து அறவோர் நீர் எடுக்கின்றனரோ அந்த மனிதன் தன் குலம் முழுவதையும் காக்கிறான்.(16) எவனுடைய குளத்தில் பசுக்களும், பிற விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கின்றனரோ அந்த மனிதன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(17) ஒருவனுடைய குளத்தில் இருந்து எவ்வளவு நீர் குடிக்கப்படுகிறதோ, நீராடுவதற்காகப் பிறரால் எவ்வளவும் நீர் எடுக்கப்படுகிறதோ, அவ்வள்ளவும் குளத்தைத் தோண்டியவனின் நன்மைக்காகச் சேமிக்கப்பட்டு, மறுமையில் அவன் முடிவிலாத நாட்களுக்கு அவற்றை அனுபவிக்கிறான்.(18) ஓ! மகனே, நீரானது, குறிப்பாக மறுமையில் அடைவதற்கரிதானதாக இருக்கும். நீரைக் கொடையளிப்பது நித்திய மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.(19) இங்கே எள்ளைக் கொடையளிப்பாயாக. நீரைக் கொடையளிப்பாயாக. விளக்குகளைக் கொடையளிப்பாயாக. உயிரோடு இருக்கும்போதும், விழிப்புடன் இருக்கும்போதும் நீ உறவினர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பாயாக. மறுமையில் இச்செயல்களை உன்னால் செய்யவே இயலாது.(20)
ஓ! மனிதர்களின் தலைவா, அனைத்துக் கொடைகளையும்விட நீரைக் கொடையளிப்பது உயர்ந்ததாகும். பலனைப் பொறுத்தவரையில் இது பிற கொடைகள் அனைத்திலும் மேலானதாக இருக்கிறது. எனவே, நீ நீரைக் கொடையளிப்பாயாக.(21) இவ்வாறே குளங்கள் வெட்டுவதில் கிட்டும் உயர்ந்த பலன்களை முனிவர்கள் அறிவித்திருக்கின்றனர். இப்போது மரங்களை நடுதல் {தோட்டம் அமைத்தல்} குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(22) ஆறு வகை அசைவற்ற பொருட்கள் {தாவரங்கள்} சொல்லப்படுகின்றன. அவை விருக்ஷங்கள் {மரங்கள்}, குல்மங்கள் {புதர்கள்}, லதைகள் {கொடிகள்}, வள்ளிகள் {செடிகள்}, த்வக்ஷாரங்கள் {மூங்கில்}, பல்வேறு வகைத் திரினங்கள் {புற்பூண்டுகள்} ஆகியனவாகும்.(23) இவையே பல்வேறு வகைக் காய்கறிகள் {தாவரங்கள்}. அவற்றை நடுவதால் ஏற்படும் பலனை இப்போது கேட்பாயாக. மரங்களை நடுவதன் மூலம் ஒருவன், மனிதர்களின் உலகில் புகழையும், மறுமையில் மங்கலப் பலன்களையும் அடைகிறான்.(24) அத்தகைய மனிதன், பித்ருக்களின் உலகில் மெச்சி மதிக்கப்படுகிறான். அத்தகைய மனிதன் தேவர்களின் உலகில் வசிப்பவனாக மாறினாலும் அவனுடைய பெயர் மறையாது.(25)
மரங்களை நடும் மனிதன், தனது தந்தை வழி மற்றும் தாய் வழிகளில் உள்ள மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ மரங்களை நடுவாயாக.(26) ஒரு மனிதன் நடும் மரங்களே அவனுடைய பிள்ளைகளாகின்றன. இதில் ஐயமேதும் இல்லை. அத்தகைய மனிதன் இந்த உலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்திற்கு உயர்கிறான். உண்மையில், நித்தியமான அருள் உலகங்கள் பலவும் அவனுடையவை ஆகின்றன.(27) மரங்கள் தங்கள் மலர்களால் தேவர்களையும், தங்கள் கனிகளால் பித்ருக்களையும், தாங்கள் தரும் நிழலால் விருந்தினர்கள் மற்றும் அந்நியர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன.(28) கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் மரங்களையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(29)
மலர்களையும், கனிகளையும் சுமக்கும் மரங்கள் மனிதர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன. மரங்களை நடுபவன், பிள்ளைகளால் மீட்கப்படும் ஒரு தந்தையைப் போல மறுமையில் மரங்களால் காக்கப்படுவான்.(30) எனவே, தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், குளக்கரைகளில் மரங்களை நட்டுத் தன் பிள்ளைகளைப் போலவே அவற்றை வளர்க்க வேண்டும். அறிவு மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டின்படியும் ஒரு மனிதன் நடும் மரங்கள், அவற்றை நடுபவனின் பிள்ளைகளே ஆகின்றன.(31) ஒரு குளத்தை வெட்டும் பிராமணன், மரங்களை நடுபவன், வேள்விகளைச் செய்பவன் ஆகியோர் அனைவரும் வாக்கில் வாய்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைப் போலவே சொர்க்கத்தில் வழிபடப்படுகிறார்கள்.(32) எனவே, ஒருவன் குளங்களை வெட்டச் செய்து, மரங்களை நடச் செய்து, பல்வேறு வேள்விகளில் தேவர்களை வழிபட்டு வாய்மை பேச வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)
பிராமண வழிபாடு! – அநுசாஸனபர்வம் பகுதி – 59- பிராமண வழிபாடு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தின் தலைவரே, வேதங்களைத் தவிர வேறு சாத்திரங்களில் குறிப்பிடப்படும் கொடைகளில் உமது கருத்தின்படி மிகச் சிறந்தது எது?(1) ஓ! பலமிக்கவரே, இக்காரியத்தில் நான் பேராவலைக் கொண்டுள்ளேன். கொடையளித்தவனின் கொடை மறுமையில் அவனைப் பின்தொடர்வதைக் குறித்தும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அனைத்து உயிரினங்களுக்கும் அன்பையும், பற்றையும் உறுதியளிப்பதும், அனைத்து வகைத் தீங்குகளையும் செய்யாதிருப்பதும், துயரில் இருக்கும் மனிதனுக்கு அன்போடு உதவி செய்வதும், தாகத்துடன் வேண்டுபவனுக்கு வேண்டிய பொருட்களைக் கொடையளிப்பதும்,(3) தன்னால் அளிக்கப்படும் கொடையென்று ஒருபோதும் நினைக்காமலேயே கொடையாளிகளால் கொடுக்கப்படும் கொடைகளும் உயர்ந்த மற்றும் சிறந்த கொடைகளாகும்.(4) தங்கத்தைக் கொடையளிப்பது, பசுவைக் கொடையளிப்பது, பூமியைக் கொடையளிப்பது ஆகிய இவையே பாவம் போக்குபவையாகக் கருதப்படுகின்றன. கொடையளிப்பவனைத் தீயச் செயல்களில் இருந்து இவை காக்கின்றன.(5) ஓ! மனிதர்களின் தலைவா, நீ எப்போதும் அறவோருக்கு அத்தகைய கொடைகளை அளிப்பாயாக. கொடைகள் கொடையளிப்பவனைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் பாதுகாக்கின்றன என்பதில் ஐயமில்லை.(6)
தன் கொடைகள் நித்தியமானவையாக இருக்க வேண்டும் என விரும்பும் மனிதன், அனைவராலும் விரும்பப்படும் பொருட்கள் எதையும், தன் வீட்டில் உள்ள சிறந்த பொருட்கள் எதையும் தேவையுள்ளோருக்கு எப்போதும் கொடுக்க வேண்டும்.(7) ஏற்புடைய பொருட்களைக் கொடையளிப்பவனும், பிறருக்கு ஏற்புடையவற்றைச் செய்பவனுமான மனிதன், தனக்கு ஏற்புடைய பொருட்களை அடைவதில் எப்போதும் வெல்கிறான். அத்தகைய மனிதன் நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான்.(8) ஓ! யுதிஷ்டிரா, வறியவனும், ஆதரவற்றவனும், உதவியை வேண்டுபவனுமான ஒருவனுடைய விருப்பங்களைப் போலிப் பகட்டுடன் தன் சக்திக்கு ஏற்ற வகையில் செய்யாத மனிதன் கொடியவனும், இழிந்தவனுமாவான்[2].(9)துயரில் வீழ்ந்திருப்பவனும், ஆதரவற்றவனுமான ஒரு பகைவன் உதவியை வேண்டிக் கேட்கும்போதும், அத்தகைய பகைவனுக்கும் உதவி செய்பவன் உண்மையில் மனிதர்களில் முதன்மையானவனாவான்.(10) இளைத்தவனும், கல்விமானும், ஆதரவேதுமில்லாதவனும், துயரால் பலவீனமடைந்தவனுமான ஒரு மனிதனின் பசியை நிறைவடையச் செய்யும் ஒருவனுக்கு எந்த மனிதனும் (தகுதியில்) இணையாகமாட்டார்கள்.(11) ஓ! குந்தியின் மகனே, மகன்கள் மற்றும் மனைவி இல்லாதவர்களாக, துயரில் மூழ்கியவர்களாக இருந்தாலும் பிறரிடம் எவ்வகை உதவியையும் வேண்டாதவர்களும், நோன்புகளையும், கர்மங்களையும் நோற்பவர்களுமான அறம் சார்ந்த மனிதர்களின் துயரத்தை அனைத்து வழிமுறைகளின் மூலமும், சக்திக்குத் தகுந்த வகையிலும் ஒருவன் எப்போதும் விலக்க வேண்டும்.(12)
(கொடை பெறும் எதிர்பார்ப்பில்) தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஆசி கூறாதோரும், மதிப்புக்குத் தகுந்தவர்களும், எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், எவ்வகையிலும் வேண்டாமல் பெறும் பிச்சையை உண்டு வாழ்பவர்களுமான மனிதர்கள்,(13) கடும் நஞ்சுமிக்கப் பெரும் பாம்பாகக் கருதப்படுகிறார்கள். ஓ! பாரதா, அவர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் அவர்களிடமிருந்து எப்போதும் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. அவர்கள் முதன்மையான ரித்விக்குகளாத் தகுந்தவர்களாவர். ஒற்றர்கள் மற்றும் முகவர்கள் மூலம் அவர்களைக் கண்டுபிடிப்பாயாக.(14) ஓ! குருவின் மகனே, தேவையான அனைத்துப் பொருட்களுடனும், பணியாட்கள், நல்ல ஆடைகள், இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய பொருட்கள் அனைத்துடனும் கூடிய நல்ல வீடுகளைக் கொடையளிப்பதன் மூலம் அம்மனிதர்களை நீ கௌரவிக்க வேண்டும்.(15) அறச்செயல்களைச் செய்யும் அறவோர், வெகுமதிகளை அறுவடை செய்யும் விருப்பத்தால் இவ்வழியில் செயல்படாமல், தங்கள் கடமை என்ற நோக்கத்தால் உந்தப்பட்டு இத்தகைய கொடைகளை அளிக்க வேண்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, மேற்கண்ட அறவோர், பக்தி மற்றும் நம்பிக்கையின் மூலம் புனிதப்படுத்தப்பட்ட அந்தக் கொடைகளை ஏற்காமல் போகும் வகையில் நல்ல மனிதர்கள் செயல்படக்கூடாது.(16)
கல்வியில் குளித்தவர்களும், நோன்புகளில் குளித்தவர்களுமான மனிதர்கள் இருக்கிறார்கள். எவரையும் சாராமல் அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடைகின்றனர். கடும் நோன்புகளைக் கொண்ட இந்தப் பிராமணர்கள், தங்கள் பயிற்சிகளை எவருக்கும் அறிவிக்காமல், வேத கல்வி மற்றும் தவங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கிறார்கள்.(17) தூய நடத்தை கொண்டோரும், புலனடக்கம் கொண்டோரும், ஆசையைப் பொறுத்தவரையில் தாங்கள் மணந்து கொண்ட மனைவிகளோடு எப்போதும் நிறைவாக இருப்பவர்களுமான அந்த மனிதர்களுக்கு நீ எந்தக் கொடைகளை அளித்தாலும், நீ செல்லப் போகும் உலங்கங்கள் அனைத்திலும் உனக்குத் துணையாக இருக்கும் புண்ணியத்தை நீ அடைவாய்.(19) காலையிலும், மாலையிலும் புனித நெருப்புக்குள் முறையாக ஆகுதிகளை ஊற்றுவதன் மூலம் ஒருவன் வெல்லும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாள மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலமும் அதே தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் அறுவடை செய்யலாம்.(19) பக்தி மற்றும் நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதும், தக்ஷிணையுடன் கூடியதுமான ஒருவேள்வி உனக்காகக் காத்திருக்கிறது. அதுவே வேள்விகள் அனைத்திலும் உயர்ந்ததாகும். நீ கொடையளிக்கும்போது அந்த வேள்வி தடையில்லாமல் பாயட்டும் {நடக்கட்டும்}[3].(20)ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய மனிதர்களை நோக்கில் கொண்டு செய்யப்படும் வேள்வியில், பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் அத்தகைய மேன்மையான மனிதர்களுக்குப் பக்தியுடனும், வழிபாட்டுடனும் கொடுக்கப்படும் கொடைகளை அர்ப்பணிக்கத் தெளிக்கப்படும் நீரானது, ஒருவன் தேவர்களுக்குப் பட்டிருக்கும் கடனிலிருந்து அவனை விடுவிக்கிறது[4].(21) கோபவசப்படாதவர்கள் பிறருக்குச் சொந்தமான துரும்பையும் எடுக்க விருப்பம் இல்லாதவர்கள், இனிமையான வாக்கை உடையவர்கள் ஆகியோர் உயர்ந்த மதிப்புமிக்க வழிபாட்டைப் பெறத் தகுந்தவர்களாவர்.(22) அத்தகைய மனிதர்களும், (ஆசையிலிருந்து விடுபட்டவர்கள்) பிறரும் கொடுப்பவர்களை மதிப்பதில்லை. அதே போலக் கொடைகளைப் பெறவும் முனைவதில்லை. எனினும், கொடையாளிகள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதைப் போல அவர்களைப் பேணி வளர்க்க வேண்டும். நான் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். அவர்களிடம் இருந்து ஒருவனுக்குச் சொர்க்கமும், நரகமும் கிடைக்கலாம்[5].(23) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் வேதங்களை அறிந்திருக்கும்போதும், சீடர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும்போதும் அவ்வாறு ஆகிறார்கள். க்ஷத்திரிய சக்தியானது ஒரு பிராமணனோடு மோதும்போது அதன் பலத்தை இழக்கிறது என்பதில் ஐயமில்லை.(24)ஓ! யுதிஷ்டிரா, நீ ஒரு மன்னன் என்றும், பெரும் சக்தியைக் கொண்டவன் என்றும், செல்வாக்குடையவன் என்றும் நினைத்துக் கொண்டு, பிராமணர்களுக்கு எதுவும் கொடுக்காமல் உன் செல்வத்தை அனுபவிக்காதே.(25) ஓ! பாவமற்றவனே, உன் வகைக்கான கடமைகளைச் செய்து, உன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உன்னிடமுள்ள செல்வத்தைக்கொண்டு பிராமணர்களை வழிபடுவாயாக.(26) பிராமணர்கள் அவர்கள் விரும்பியவண்ணம் வாழட்டும். நீ எப்போதும் அவர்களுக்கு மதிப்புடன் தலைவணங்க வேண்டும். உன் பிள்ளைகளைப் போலவே அவர்களும் தங்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து எப்போதும் இன்பமாக இருக்கட்டும்.(27) ஓ! குருக்களில் சிறந்தவனே, நித்திய நிறைவுடன் கூடியவர்களும், உன் நலம் விரும்பிகளும், சிறிதளவிலேயே நிறைவடைபவர்களுமான அத்தகைய பிராமணர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கத்தகுந்தவன் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?(28)
கணவர்களைச் சார்ந்திருந்து அவர்களுக்குக் கீழ்ப்படிவதை மட்டுமே நித்திய கடமையாகக் கொண்ட பெண்களுக்கு அத்தகைய கடமையே ஒரே கதியென்பதைப் போலவே, பிராமணர்களுக்குத் தொண்டாற்றுவதே நமது நித்திய கடமையும், கதியுமாகும்.(29) மதிக்கப்படாத பிராமணர்கள், க்ஷத்திரியர்களில் உள்ள கொடுமைகளையும், பாவம்நிறைந்த பிற செயல்களையும் கண்டு நம்மைக் கைவிடுவார்களேயானால், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, (30) பிராமணர்களின் தொடர்பில்லாமல், குறிப்பாக வேத கல்வி கற்பது, வேள்விகள் செய்வது, மறுமையில் அருள் உலகங்களை எதிர்பார்ப்பது, பெரும் சாதனைகளைச் செய்வது ஆகியவற்றைச் செய்ய இயலாமலேயே நாம் இருந்தால் அப்படிப்பட்ட உயிரால் நமக்கென்ன பயன்?(31) இது தொடர்பான நித்திய நடைமுறை என்ன என்பதை நான் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா பழங்காலத்தில் க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குத் தொண்டாற்றினார்கள்.(32)
அதே போலவே வைசியர்கள் அந்தக் காலத்தில் அரச வகையினரை {க்ஷத்திரியர்களை} வழிபடுவதும், சூத்திரர்கள் வைசியர்களை வழிபடுவதும் நடைமுறையில் இருந்தது. இதையே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பிராமணன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாவான். அந்தப் பிராமணனைத் தீண்டவோ, அவனது முன்னிலைக்குச் செல்லவோ இயலாத சூத்திரன் தொலைவிலிருந்தே அவனுக்குத் தொண்டாற்றினான்.(33) க்ஷத்திரியனும், வைசியனும் மட்டுமே அந்தப் பிராமணனைத் தொட்டு, அல்லது அவனது முன்னிலைக்குச் சென்று அவனுக்குத் தொண்டாற்ற முடியும். பிராமணர்கள் மென்மையான இயல்பைக் கொண்டவர்களாவர். அவர்கள் நடத்தையில் உண்மை நிறைந்தவர்கள். அவர்கள் உண்மையான அறத்தைப் பின்பற்றுபவர்களாவர்.(34) கோபமாக இருக்கும்போது அவர்கள் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாவர். ஓ! யுதிஷ்டிரா, இத்தகைய இயல்பைக் கொண்டவர்களை மதிப்புடன் கீழ்ப்படிந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுவாயாக. உயர்ந்தவர்களுக்கும் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் ஆகியோரை விடப் பிராமணர்கள் மேன்மையானவர்களாவர்.(35) சக்தி மற்றும் வலிமையில் சுடர்விடும் க்ஷத்திரியர்களின் சக்தியும் தவங்களும் கூடப் பிராமணர்களிடம் சக்தியற்றுப் போகும்.(36)
பிராமணர்களைவிட என் தந்தையே கூட எனக்கு அன்புக்குரியவரல்ல. என் தாயும் கூட அவர்களைவிட எனக்கு அன்புக்குரியவளல்ல. ஓ! மன்னா, என் பாட்டனும் அவர்களைவிட எனக்கு அன்புக்குரியவரல்ல. என் உயிரும் அவர்களைவிட எனக்கு அன்புக்குரியதல்ல.(37) ஓ! யுதிஷ்டிரா, இந்தப் பூமியில் உன்னைவிட எனக்கு அன்புக்குரியது வேறேதுமில்லை. ஆனால், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவர்களாவர்.(38) ஓ! பாண்டுவின் மகனே, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். சந்தனு அடைந்த அருள் உலகங்கள் அனைத்தையும் எதைக் கொண்டு நான் அடைவேன் என நம்புகிறேனோ அந்த வாய்மையின் மீது ஆணையாக உறுதிகூறுகிறேன்.(39) அவர்களுக்கு முன்னிலையில் பிரம்மனோடு ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் புனித உலகங்களைத் தெளிவாக நான் காண்கிறேன். ஓ! மகனே, நான் அங்கே சென்று முடிவிலா நாட்களுக்கு அவர்களுடன் வசிக்கப் போகிறேன்.(40) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஓ! ஏகாதிபதி, பிராமணர்களை மதிக்கும் வகையிலும், அவர்களுக்குத் துணையாகவும் செய்திருக்கும் இந்தச் செயல்கள் அனைத்தையும் சிந்தித்தும், (என் ஆன்மக் கண்களால்) இந்த உலகங்களைக் கண்டும் நான் மகிழ்ச்சியால் நிறைகிறேன்” என்றார் {பீஷ்மர்}[6].(41)
கொடை வேள்வி! – அநுசாஸனபர்வம் பகுதி – 60-வேண்டி நிற்பவர்கள், வேண்டாதவர்கள் ஆகிய இருவரில் யாருக்குக் கொடுக்கும் கொடை சிறந்தது என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தூய நடத்தை, கல்வி, பிறப்பு மற்றும் குருதித் தூய்மை ஆகியவற்றில் இணையானவர்களான இரு பிராமணர்களில், ஒருவர் வேண்டுபவர், மற்றொருவர் வேண்டாதவர் என்ற வேறுபாட்டை மட்டும் கொண்டிருந்தால், அவ்விருவரில் எவருக்குக் கொடையளிப்பது சிறந்தது என நான் கேட்கிறேன்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, வேண்டும் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, வேண்டாமல் இருக்கும் ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் கொடையே பெரும் பலனைத் தருமெனச் சொல்லப்படுகிறது. மனநிறைவுடைய ஒரு மனிதனே அக்குணமில்லாதவனும், உலகின் புயல்கள் மற்றும் உணவுகளுக்கு மத்தியில் ஆதரவற்றவனுமான ஒருவனை விட நிச்சயம் அதிகத் தகுதி வாய்ந்தவன்.(2) ஒரு க்ஷத்திரியனின் உறுதியானது, அவன் பிறரைப் பாதுகாப்பதில் இருக்கிறது. பிராமணனின் உறுதியானது, அவன் {பிறரை} வேண்ட மறுப்பதில் இருக்கிறது. உறுதி, கல்வி, மனநிறைவு ஆகியவற்றைக் கொண்ட பிராமணன் தேவர்களை மகிழச் செய்கிறான்.(3) ஒரு வறிய மனிதனின் தரப்பில் வேண்டி நிற்கும் செயலானது பெரும் நிந்தனைக்குரியது என ஞானிகள் சொல்கின்றனர். பிறரை வேண்டும் இந்த மனிதர்கள் கள்வர்களையும், கொள்ளையர்களையும் போல உலகிற்குத் தொல்லை கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(4) வேண்டி நிற்கும் மனிதன் இறப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், கொடுப்பவன் இறப்பதாகச் சொல்லப்படுவதில்லை. கொடுப்பவன் வேண்டுபவனுக்கு உயிரைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, ஒரு கொடையின் மூலம் அந்தக் கொடையாளி தன்னையே மீட்டுக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.(5)
கருணை மிக உயர்ந்த குணமாகும். கருணையால் வழிநடப்படும் மக்கள் வேண்டி நிற்போருக்குக் கொடையளிக்கிறார்கள். எனினும், இரக்காதவர்களும், ஆனால் வறுமையிலும், துயரிலும் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக மதிப்புடன் அழைக்கப்பட வேண்டும்.(6) தங்கள் வகையில் முதன்மையானவர்களாகக் கருதப்பட வேண்டிய அத்தகைய பிராமணர்கள் உன்னுடைய நாட்டில் வாழ நேர்ந்தால், சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பாக அவர்களை நீ கருத வேண்டும்.(7) தவங்களில் சுடர்விடும் அவர்கள், மொத்த பூமியையும் எரிக்கவல்லவர்களாவர். ஓ! குரு குலத்தின் மகனே, அத்தகைய மனிதர்கள் பொதுவாக வழிபடப்படுவதில்லை என்றாலும், அவர்களை அனைத்து வழியிலும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாகவே கருத வேண்டும்.(8) ஞானம், ஆன்மப் பார்வை, தவம், யோகம் ஆகியவற்றுடன் கூடிய அத்தகைய மனிதர்கள் எப்போதும் நமது வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. ஓ! பகைவர்களை எரிப்பவனே, அத்தகைய பிராமணர்களை நீ எப்போதும் வழிபடுவாயாக.(9) எவரிடமும் வேண்டி நிற்காத முதன்மையான பிராமணர்களிடம் ஒருவன் தானே சுயமாகச் சென்று, பல்வேறு வகைச் செல்வங்களை அபரிமிதமாக அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். வேத கல்வியும், உயர்ந்தவையும், சிறந்தவையுமான நோன்புகளைக் கொண்டவருமான ஒரு பிராமணருக்குக் கொடையளிக்கும் மனிதன், ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் புனித நெருப்பில் முறையாக ஊற்றப்படும் ஆகுதிகளில் இருந்து பாயும் பலனை அடைவதில் வெல்கிறான்.(10)
ஓ! குந்தியின் மகனே, கல்வி, வேதங்கள் மற்றும் நோன்புகளின் மூலம் தூய்மையடைந்தவர்களும், சார்பற்று {சுதந்திரமாக} வாழ்பவர்களும், வேத கல்வியும், தவங்களும் வீட்டின் உச்சியில் இருந்து அறிவிக்கப்படாமல் மறைத்து வைத்திருப்பவர்களும், சிறந்த நோன்புகளை நோற்பவர்களுமான முதன்மையான பிராமணர்களை அழைத்து, பணியாட்கள், ஆடைகள், அறைகலன்கள், இன்பத்திற்குரிய பிற பொருட்கள் ஆகியவற்றுடன் கூடியவையும், நன்கு கட்டப்பட்டவையுமான இனிமையான வீடுகளை நீ அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(11,12) ஓ! யுதிஷ்டிரா, கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், நுணுக்கமான பார்வை கொண்டவர்களுமான அந்த முதன்மையான பிராமணர்கள், பக்தியுடனும், மதிப்புடனும் கொடுக்கப்படும் கொடைகளை மறுப்பதால் கொடையாளியை வருத்தமடையச் செய்யக் கூடாது என நினைத்து அவற்றை ஏற்கலாம்.(13) மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழவர்களைப் போல எந்தப் பிராமணர்கள் திரும்பி வருவதற்காக அவர்களுடைய மனைவிமார் காத்திருப்பார்களோ அவர்களை {அந்தப் பிராமணர்களை} நீ அழைக்க வேண்டும். அவர்களுக்கு உணவைக் கொடுத்த பிறகு, அவர்கள் வீடு திரும்பியதும், அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவர்களுடைய மனைவிமார், உணவுக்காக உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுக் காத்திருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும் வகையில் மேலும் அதிகமான உணவை நீ கொடையளிக்க வேண்டும்[1].(14) ஓ! மகனே, கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் கூடிய பிரம்மசாரிகள், முற்பகலில் ஒருவனுடைய வீட்டில் உண்பதன் மூலம் அவர்கள் எந்த வீட்டில் உண்கிறார்களோ அந்த இல்லறத்தானிடம் மூன்று நெருப்புகளையும் நிறைவடையச் செய்கிறார்கள் {அது ப்ராதஸ்ஸவனம் [காலை ஹோமம்]}.(15)-ஓ! மகனே, உன் இல்லத்தில் கொடை வேள்வி நடுப்பகலில் நடைபெறட்டும், அப்போது (உன் விருந்தினர்களுக்கு நன்றாக உணவு அளித்த பிறகு) நீ பசுக்களையும், தங்கத்தையும், ஆடைகளையும் கொடையளிப்பாயாக. நீ இவ்வாறு நடந்து கொள்வதால் நிச்சயம் தேவர்களின் தலைவனை {இந்திரனை} நிறைவடையச் செய்வாய். {இது மாத்யாந்நஸவனம்}.(16) தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களுக்குக் காணிக்கையளிப்பது மூன்றாம்வேள்வியாகும். இத்தகைய வேள்வியால் நிச்சயம் நீ விஸ்வேதேவர்களை நிறைவடையச் செய்வாய். {இது மூன்றாவது ஸவனம்}.(17) அனைத்து உயிரினங்களிடமும் கருணை, அனைத்து உயிரினங்களுக்கும் உரியதைக் கொடையளித்தல், புலனடக்கம், துறவு, உறுதி, வாய்மை ஆகியவையே அந்தக் கொடை வேள்வியின் இறுதி நீராடலாக {அவபிருதங்களாக} அமைகிறது.(18) ஓ! மகனே, பக்தி மற்றும் நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதும், பெரும் தக்ஷிணையுடன் கூடியதுமான இந்த வேள்வி உனக்காகக் காத்திருக்கிறது. கொடையால் அமைந்த இந்த வேள்வியே பிற வேள்விகள் அனைத்தையும் விஞ்சி இருக்கிறது. ஓ! மகனே, இந்த வேள்வி உன்னால் எப்போதும் செய்யப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(19)
நான்கில் ஒரு பங்கு! – அநுசாஸனபர்வம் பகுதி – 61-ஒரு மன்னன் கொடுக்கக்கூடிய கொடைகள் மற்றும் செய்யத்தக்க வேள்விகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, கொடைகள் மற்றும வேள்விகளுக்கான உயர்வான வெகுமதிகளை ஒருவன் எங்கே அடைகிறான் என்பதைக் குறித்து விவரமாக அறிய விரும்புகிறேன். அவ்வெகுமதிகள் இம்மையில் ஈட்டப்படுகின்றனவா? மறுமையில் வருமா? இவை இரண்டில் மேன்மையான பலனை உண்டாக்கவல்லதாக எது சொல்லப்படுகிறது? யாருக்குக் கொடைகள் அளிக்கப்பட வேண்டும்? எந்த வகையில் கொடைகளும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்? எப்போது அவை செய்யப்பட வேண்டும்? ஓ! கல்விமானான ஐயா, நான் உம்மைக் கேட்கிறேன். கொடைகளுக்கான கடமை குறித்து என்னிடம் உரையாடுவீராக.(1,2) ஓ! பாட்டா, நான் உம்மைக் கேட்கிறேன், வேள்வி மேடையில் கொடுக்கப்படும் கொடைகள், அல்லது அந்த இடத்திற்கு வெளியே கொடுக்கப்படும் கொடைகள் ஆகியவற்றில் எது உயர்ந்த வெகுமதிக்கு வழிவகுக்கும்?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, பொதுவாகவே ஒரு க்ஷத்திரியன் கடுஞ்செயல்களில் ஈடுபடுபவனாவான். அவனது வழக்கில், வேள்விகளும், கொடைகளும் அவனைத் தூய்மைப்படுத்துவதாகவோ, புனிதப்படுத்துவதாகவோ கருதப்படுகிறது.(4) நல்லோராகவும், அறவோராகவும் இருப்பவர்கள், பாவச்செயல்களில் ஈடுபடும் அரச வகையினரின் கொடைகளை ஏற்பதில்லை. இதன் காரணமாகவே மன்னனானவன் தக்ஷிணையின் வடிவிலான அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்ய வேண்டும்[1].(5) ஓ! ஏகாதிபதி, நல்லோரும், அறவோரும் தங்களுக்கு அளிக்கப்படும் கொடைகளை ஏற்றால் க்ஷத்திரியனானவன் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இடையறாமல் கொடையளிக்க வேண்டும். கொடைகள் பெரும் பலன்களை உண்டாக்கவல்லவையும், பெரிதாகத் தூய்மை செய்பவையுமாகும்.(6) ஒருவன் நோன்புகளை நோற்று, வேள்விகளைச் செய்து, அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாக இருப்பவர்களும், அறவோரும், வேதங்களை அறிந்தவர்களும், செயல்கள், ஒழுக்கம் மற்றும் தவங்களில் பெரும் திறம் கொண்டவர்களுமான பிராமணர்களைச் செல்வத்தால் நிறைவடையச் செய்ய வேண்டும்.(7) அத்தகைய பிராமணர்கள் உன் கொடைகளை ஏற்கவில்லையெனில் எப்பலனும் உனதாகாது. அபரிமிதமான தக்ஷிணையுடன் வேள்விகளைச் செய்து, அறவோருக்கு ஏற்புடைய நல்ல உணவைக் கொடையளிப்பாயாக.(8)ஒரு கொடையைச் செய்வதன் மூலம் ஒரு வேள்வியைச் செய்தவனாக உன்னை நீ கருதிக் கொள்ளலாம். வேள்விகளைச் செய்யும் பிராமணர்களுக்குக் கொடைகள் கொடுத்து அவர்களைத் துதிக்க வேண்டும். அதைச் செய்தால், அவர்கள் செய்யும் அந்த வேள்விகளின் பலன்களில் ஒரு பங்கை நீ அடையலாம்.(9) அத்தகைய பிராமணர்களைப் பிள்ளைகளைப் போலவும், சொர்க்கத்திற்கு மக்களை அனுப்புபவர்களைப் போலவும் நீ ஆதரிக்க வேண்டும். இவ்வாறு செயல்படுவதால் நீ நிச்சயம் பெரும் சந்ததியை அடைவாய். உண்மையில் பிரஜாபதியைப் போலவே பெரும் சந்ததியை அடைவாய்.(10) அறவோரானவர்கள், அறச் செயல்கள் அனைத்தின் காரணங்களையும் ஆதரித்து முன்னேற்றமடையச் செய்வார்கள். ஒருவன் தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து அத்தகைய மனிதர்களையும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவர்களையும் ஆதரிக்க வேண்டும்.(11) ஓ! யுதிஷ்டிரா, செழிப்பை அனுபவிக்கும் நீ, பசுக்களையும், வண்டிக்காளைகளையும், உணவையும், குடைகளையும், ஆட்கள், பாதுகைகள் அல்லது காலணிகளையும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(12) வேள்வி செய்யும் பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யையும், உணவு, தேர்கள், குதிரைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், வசிக்கும் வீடுகள், மாளிகைகள் மற்றும் படுக்கைகளையும் கொடையளிப்பாயாக.(13) ஓ! பாரதா, அத்தகைய கொடைகள் கொடையாளியைச் செழிப்பிலும், செல்வத்தில் நிறையச் செய்யும், மேலும் தூய்மையானதாகவும் கருதப்படும். செய்யும் செயல்களுக்காக நிந்திக்கப்படாதவர்களும், தங்களுக்கென வாழ்வாதாரங்கள் ஏதும் இல்லாதவர்களுமான பிராமணர்களைத் தேட வேண்டும்.(14) அத்தகைய பிராமணர்களுக்கு வாழ்வாதாரங்களை ஒதுக்கி வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. எப்போதும் அத்தகைய ஒழுக்கம் க்ஷத்திரியர்களுக்கு ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகளைவிட உயர்ந்த நன்மையை அளிக்கும்.(15)
பாவத்தில் இருந்து தூய்மையடைந்தால் நிச்சயம் நீ சொர்க்கத்தை அடைவாய். உன் கருவூலத்தை நிறைத்து உன் நாட்டிற்கு நீ நன்மையைச் செய்ய வேண்டும்.(16) அத்தகைய ஒழுக்கத்தால் நீ நிச்சயம் அதிகச் செல்வத்தை அடைந்து (அடுத்த வாழ்வில்) {மறுமையில்} ஒரு பிராமணனாவாய். ஓ! பாரதா, (அறச்செயல்கள் செய்வதற்கான, ஆதரிப்பதற்கான) உன் வழிமுறைகளையும், வேறு மனிதர்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பாயாக.(17) நீ உன் பணியாட்களை உன் பிள்ளைகளைப் போல ஆதரிப்பாயாக. ஓ! பாரதா, பிராமணர்கள் என்ன கொண்டிருக்கிறார்களோ அதை அனுபவிக்க விட்டும், என்ன கொண்டிருக்கவில்லையோ அவற்றைக் கொடையளிக்கவும் செய்து அவர்களைப் பாதுகாப்பாயாக.(18) உன் வாழ்வு பிராமணர்களின் காரியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கட்டும். பிராமணர்களுக்கு நீ பாதுகாப்பை வழங்கவில்லை என்று ஒருபோதும் சொல்லப்படாதிருக்கட்டும். அதிகச் செல்வத்தை, ஒரு பிராமணன் கொண்டிருக்கும்போது; அஃது அவனுக்குத் தீமையின் ஊற்றுக்கண்ணாக மாறும்.(19) நிலையான செல்வம் மற்றும் செழிப்பின் தொடர்பு அவனை நிச்சயம் செருக்கால் நிறைத்து (உண்மைக் கடமைகளில் இருந்து) அவனைத் திகைப்படையச் செய்யும். பிராமணர்கள் திகைப்படைந்து, மடமையில் மூழ்கினால், அறமும், கடமைகளும் நிச்சயம் அழிந்து போகும். அறத்திற்கும், கடமைக்கும் ஒரு முடிவு ஏற்பட்டால், அஃது அனைத்து உயிரினங்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.(20)
செல்வத்தைத் திரட்டி, கருவூல அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் அதைக் கொடுத்துவிட்டு, தன் அதிகாரிகளிடம், “இந்நாட்டில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செல்வத்தை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்லி, மீண்டும் தன் நாட்டைக் கொள்ளையடிக்கத் தொடங்கும் ஒரு மன்னன்,(21) அச்சம் மற்றும் கடுஞ்சூழ்நிலைகளில் அவனது ஆணைகளுக்கிணங்க இவ்வாறு திரட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகள் செய்வதில் செலவிட்டால், அவ்வேள்விகள் ஒருபோதும் அறவோரால் மெச்சப்படுவதில்லை என்பதை நீ அறிவாயாக.(22) கொடுமைப்படுத்தப்படாத குடிமக்களின் மூலம் கருவூலத்தில் விருப்பத்துடன் செலுத்தப்படும் செல்வத்தைக் கொண்டே ஒரு மன்னன் வேள்விகளைச் செய்ய வேண்டும். கடுமை மற்றும் பலவந்த அபகரிப்பு மூலம் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு ஒருபோதும் வேள்விகள் செய்யக்கூடாது.(23) மன்னன் தன் குடிமக்களின் நலனில் அர்ப்பணிப்புடன் இருப்பதன் விளைவால் அவர்கள் அபரிமிதமானதும், நோக்கத்திற்காகவே விருப்பத்துடன் கொடுக்கப்பட்டதுமான செல்வமாரியால் மன்னனை நீராட்டும்போது, அவன் தக்ஷிணையின் வடிவிலான பெரும் கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்.(24) முதியோர், சிறார், குருடர், வேறுவகையில் தகுதியிழந்தோர் ஆகியவர்களின் செல்வங்களை மன்னன் பாதுகாக்க வேண்டும். வறட்சிக்காலத்தில் தன் மக்கள் கிணறுகளில் இருந்து பெற்ற நீரின் துணையுடன் ஏதோ தானியங்களை வளர்ப்பதில் வென்றால், மன்னன் அவர்களிடம் இருந்து செல்வமெதையும் ஒருபோதும் எடுக்கக்கூடாது. அதேபோல, அழுது கொண்டிருக்கும் பெண்களிடம்[2] இருந்தும் எந்தச் செல்வத்தையும் எடுக்கக்கூடாது.(25)வறியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களிடம் இருந்து எடுக்கப்படும் செல்வம் நாட்டையும், நாட்டின் செழிப்பையும் நிச்சயம் அழித்துவிடும். மன்னன் அறவோருக்கு எப்போதும் இன்பத்திற்குரிய பொருட்களை அபரிமிதமாகக் கொடையளிக்க வேண்டும். அம்மனிதர்கள் கொண்டுள்ள பட்டினி குறித்த அச்சத்தை நிச்சயம் அவன் விலக்க வேண்டும்.(26) முறையாக உண்ண இயலாத பிள்ளைகள், எவர்களுடைய உணவைப் பரிதாபமான ஏக்கத்துடன் பார்ப்பார்களோ அம்மனிதர்களைவிடப் பெரும்பாவிகள் வேறு யாரும் இல்லை.(27) உன் நாட்டிற்குள் அந்தப் பிள்ளைகளைப் போலக் கல்விமானான எந்தப் பிராமணராவது ஏக்கத்துடன் இருந்தால், அத்தகைய செயலை அனுமதித்தற்காகக் கருவைக் கொன்ற பாவத்தை நீ ஈட்டுவாய்.(28)
மன்னன் சிபி, “எவனுடைய நாட்டில் ஒரு பிராமணனோ வேறு எந்த மனிதனோ பசியால் ஏங்குகிறானோ அம்மன்னனுக்கு ஐயோ” என்று சொல்லியிருக்கிறான்.(29)
எந்த நாட்டில் ஸ்நாதக வகைப் பிராமணர்கள் பசியேக்கத்தில் இருக்கிறார்களோ அந்நாடு ஏழ்மையில் மூழ்கும். அத்தகைய நாடு அதன் மன்னனுடன் சேர்ந்து நிந்திக்கப்படும்.(30) எவனுடைய நாட்டில் கணவர்கள் மற்றும் மகன்களுக்கு மத்தியில் அழுது கதறி, உள்ளங்கொதித்துத் துன்பப்படும் பெண்கள் எளிதாகக் கடத்தப்படுகிறார்களோ அந்த மன்னன் உயிரோடிருந்தாலும் இறந்தவனேயாவான்.(31) தங்களைப் பாதுகாக்காதவனும், தங்கள் செல்வங்களை வெறுமனே கொள்ளையடிப்பவனும், வேறுபாடுகள் அனைத்தையும் போட்டுக் குழப்புபவனும், வழிநடத்த இயலாதவனும், கருணையற்றவனும், மன்னர்களிலேயே பெரும்பாவியாகக் கருதப்படுபவனுமான மன்னனைக் கொல்ல குடிமக்கள் ஆயுதமேந்த வேண்டும்.(32) எந்த மன்னன் தன் மக்களிடம் தானே அவர்களின் பாதுகாவலன் என்று சொன்னாலும் அவர்களைப் பாதுகாக்க இயலாதவனாக இருக்கிறானோ அவன் விசர்நோயால் பீடிக்கப்பட்டதும், வெறி கொண்டதுமான நாயைப் போலத் தன் குடிமக்களால் கொல்லப்பட வேண்டும்.(33) ஓ! பாரதா, பாதுகாப்பைக் கொடுக்காத மன்னன், குடிமக்கள் இழைக்கும் பாவங்களில் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான்.(34) மொத்த பாவங்களும் அத்தகையே மன்னனையே சேரும் எனச் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் பாதி அவனுடையதாகும் எனக் கருதுகிறார்கள். எனினும், மனுவின் அறிவிப்பை மனத்தில் சுமக்கும் நாம், பாதுகாப்பைக் கொடுக்காத மன்னர்கள் அத்தகைய பாவங்களில் நான்கில் ஒரு பகுதியை அடைவார்கள் என்று கருதுகிறோம்.(35)
ஓ! பாரதா, எந்த மன்னன் தன் குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறானோ அவன் தன் பாதுகாப்பின் கீழ் தன் குடிமக்கள் ஈட்டும் பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான்.(36) ஓ! யுதிஷ்டிரா, அனைத்து உயிரினங்களும் மழையின் தேவனுடைய புகலிடத்தை நாடுவதைப் போலவோ, சிறகுபடைத்த காற்றுவாசிகள் {பறவைகள்} ஒரு பெரும் மரத்தைப் புகலிடமாக நாடுவதைப் போலவே நீ உயிரோடுள்ளவரை, உன் குடிமக்கள் அனைவரும் உன்னைப் புகலிடமாக நாடும் வகையில் நீ செயல்படுவாயாக.(37) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ராட்சசர்கள் குபேரனை நாடுவதைப் போலவோ, தேவர்கள் இந்திரனை நாடுவதைப் போலவோ, உன் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் உன்னையே அவர்களது புகலிடமாக நாடட்டும்” என்றார் {பீஷ்மர்}.(38)
பூமி தானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 62-நிலக்கொடை குறித்தும், வேறு கொடைகளைக் குறித்தும் பிருஹஸ்பதி இந்திரனுக்குச் சொன்ன விபரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “’இதைக் கொடுக்க வேண்டும், இதையும் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லும் ஸ்ருதிகளின் அறிவிப்புகளை மக்கள் அன்புடன் ஏற்கிறார்கள். மேலும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பல்வேறு மனிதர்களுக்குப் பல்வேறு பருட்களைக் கொடையளிக்கிறார்கள். எனினும், ஓ! பாட்டா, கொடைகள் அனைத்திலும் சிறந்தது, அல்லது முதன்மையானது எது?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்து வகையான கொடைகளிலும் (பலனின் அடிப்படையில்) நிலக்கொடையே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. நிலம் அசைவற்றதாகவும், அழிவற்றதாகவும் இருக்கிறது. அதன் உரிமையாளன் தன் இதயத்தில் நிலைநிறுத்தும் சிறந்த பொருட்கள் அனைத்தையும் அது கொடுக்கவல்லது.(2) ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், விலங்குகள், நெல், வாற்கோதுமை ஆகியவற்றை அது கொடுக்கிறது. உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும், நிலக் கொடை கொடுப்பவன் என்றென்றைக்கும் செழிப்பில் வளர்வான்.(3) நிலம் நீடித்திருக்கும்வரை அந்தக் கொடையாளி செழிப்பில் வளர்வான். ஓ! யுதிஷ்டிரா, நிலக்கொடையை விட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை.(4) மனிதர்கள் அனைவரும் ஒரு சிறு அளவு நிலத்தையாவது கொடையளிப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். மனிதர்கள் அனைவரும் நிலக்கொடையளித்திருப்பதாலேயே அவர்கள் அனைவரும் சிறு அளவு நிலத்திலாவது இன்புற்றிருக்கிறார்கள்.(5)
இம்மையிலாகட்டும், மறுமையிலாகட்டும் எச்சூழ்நிலையில் வாழ்ந்தாலும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் செயல்களைச் சார்ந்தே வாழ்கின்றன. பூமாதேவி {நிலம்} செழிப்பின் சுயமாக இருக்கிறாள். அவள் வலிமைமிக்கத் தேவியாவாள். இம்மையில் பிறருக்குத் தன்னைக் கொடையளிப்பவனை (மறுமையில்) அவள் தன் தலைவனாக்கி {கணவனாக்கிக்} கொள்கிறாள்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அழிவற்றதான நிலத்தைத் தக்ஷிணையாகக் கொடையளிப்பவன், மறுமையில் மனிதனாகப் பிறந்து, பூமியின் தலைவனும் ஆகிறான்.(7) இம்மையில் ஒருவன் அடையும் இன்பம், முற்பிறவியில் அவன் அளித்த கொடைகளின் அளவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும். சாத்திரங்கள் சுட்டிக் காட்டும் தீர்மானம் இதுவே ஆகும். ஒரு க்ஷத்திரியன் நிலக் கொடை அளிக்க வேண்டும், அல்லது போர்க்களத்தில் தன் உயிரை விட வேண்டும்.(8) க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரையில் இதுவே செழிப்பின் உயர்ந்த ஊற்றுக்கண்ணாகிறது. நிலம் கொடையளிக்கப்படும்போது, அது கொடையாளியைத் தூய்மைப்படுத்துகிறது, புனிதப்படுத்துகிறது என நாம் கேள்விப்படுகிறோம்.(9) பாவம் நிறைந்த நடத்தை கொண்டவனும், பொய்யுரைத்தவனும், பிராமணக் கொலை செய்த குற்றவாளியுமான மனிதன் கூட நிலக்கொடையின் மூலம் தூய்மடைகிறான். உண்மையில் அத்தகைய கொடை அத்தகைய பாவியையும் கூட, அவன் செய்யும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் மீட்கிறது.(10)
அறவோரானவர்கள், பாவம் நிறைந்த மன்னர்களிடம் இருந்து நிலக்கொடையை மட்டுமே ஏற்பார்கள், வேறெதையும் ஏற்கமாட்டார்கள். பூமியானவள் கொடையளிக்கப்படும்போது ஒரு தாயைப் போலவே கொடுப்பவனையும், பெற்றுக் கொள்பவனையும் தூய்மையாக்குகிறாள்.(11) பிரியதத்தை என்பது பூமாதேவியின் நித்தியமான மற்றும் ரகசியமான மற்றுமொரு பெயராகும்[1]. கொடையாகக் கொடுக்கப்படுபவள், அல்லது ஏற்கப்படுபவளுமான அவளது அன்புக்குரிய பெயர் பிரியதத்தை என்பதாகும்.(12) நிலக்கொடை விரும்பத்தக்கதாகும். ஒரு கல்விமானான பிராமணனுக்கு நிலக்கொடையளிக்கும் மன்னன், ஒரு நாட்டையே கொடையாக அடைகிறான்.(13) அத்தகைய மனிதன், இவ்வுலகில் தன் மறுபிறவியில், ஒரு மன்னனுக்கு இணையான நிலையையே அடைகிறான். எனவே, ஒரு மன்னனானவன், தனக்குப் பூமி கிடைத்த உடனேயே பிராமணர்களுக்கு நிலக்கொடை அளிக்க வேண்டும்.(14) பூமியின் தலைவனான ஒருவனைத் தவிர வேறு எவனும் {அரசனல்லாதவன் எவனும்} நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல. அதே போலத் தகாத எவனும் நிலக்கொடையை ஏற்பதும் தகாததே[2].(15)நிலத்தை விரும்புபவர்கள் (நிலக்கொடை அளிக்கும்) இவ்வழியிலேயே தங்களைச் செலுத்திக் கொள்ள வேண்டும். அறம்சார்ந்த மனிதனுக்கு உரிமையான நிலத்தை அபகரிப்பவன் ஒருபோதும் நிலத்தை அடையமாட்டான்.(16) அறவோருக்கு நிலக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் நன்னிலத்தை அடைவான். அற ஆன்மா கொண்டவனான அத்தகைய கொடையாளி இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை ஈட்டுவான்.(17) பிராமணர்கள், எந்த மன்னனைக் குறித்து, “இவன் கொடையளித்த நிலத்தில் நாங்கள் வாழ்கிறோம்” என்று சொல்வார்களோ, அவனது நாட்டைக் குறித்த சிறு பழியையும் அவனுடைய எதிரிகளாலும் சொல்ல முடியாது[3].(18) வாழ்வாதாரம் இல்லாததால் ஒரு மனிதன் இழைக்கும் பாவங்கள் அனைத்தும், மாட்டுக் குளம்பினால் மறைக்கப்படும் அளவுக்கு நிலக்கொடையளிப்பதன் மூலம்கூடக் கழுவப்பட்டுவிடுகின்றன.(19) தங்கள் செயல்பாடுகளில் வஞ்சகமாக இருப்பவர்கள், அல்லது கடுச் செயல் புரியும் மன்னர்களுக்கு, நிலக்கொடையே அதிகம் தூய்மைப்படுத்தும், (பலனடிப்படையில்) அதுவே உயர்ந்த கொடையுமாகும் என்பது கற்பிக்கப்பட வேண்டும்.(20)ஒரு குதிரை வேள்வியை {அஸ்வமேதயாகத்தைச்} செய்யும் மனிதனுக்கும், ஓர் அறவனோக்கு நிலக்கொடை அளிக்கும் ஒருவனுக்கும் இடையில் மிகச் சிறிய வேறுபாடு மட்டுமே உண்டெனவே பண்டைக்காலத்தவர் எண்ணினர்.(21) வேறு அறச்செயல்கள் எதனையும் செய்வதன் மூலம் கிட்டும் பலனில் கல்விமான்கள் ஐயுறுவார்கள். உண்மையில், அவர்கள் ஐயுறாத ஒரே செயல், கொடைகள் அனைத்திலும் முதன்மையான நிலக்கொடையே ஆகும்.(22) நிலக்கொடை அளிக்கும் விவேகியானவன், பொன், வெள்ளி, ஆடை, ரத்தினங்கள், முத்துகள் மற்றும் விலமதிப்புமிக்கக் கற்கள் ஆகிய அனைத்தையும் கொடுத்தவனாகிறான்.(23) தவங்கள், வேள்வி, வேதப் புலமை, நன்னடத்தை, பேராசையின்மை, வாய்மையில் உறுதி {சொல்தவறாமை}, பெரியோர், ஆசான்கள் மற்றும் தேவர்களுக்குச் செய்யும் வழிபாடு ஆகிய இவை அனைத்தும் நிலக்கொடை அளித்தவனிடம் வசிக்கின்றன.(24) தங்கள் தலைவர்கள் நன்மையடைவதற்காகத் தங்களைத் துச்சமாக எண்ணிப் போரிட்டுத் தங்கள் உயிரைப் போர்க்களத்தில் விட்டுப் பிரம்ம லோகத்திற்கு உயர்ந்தவர்களும் கூட, நிலக்கொடையளிப்போர் அடையும் பலன்களை விஞ்சிவிட இயலாது.(25)
முலைப்பால் கொண்டு தன் பிள்ளைக்கு எப்போதும் உணவூட்டும் ஒரு தாயைப் போலவே பூமாதேவியானவள், நிலக்கொடை அளிக்கும் மனிதனை {தான் கொண்டுள்ள} சுவைகள் அனைத்திலும் நிறைவடையச் செய்கிறாள்.(26) மிகக் கொடிய மிருத்தியு, வைகின்கர, தண்டம், தமம், நெருப்பு மற்றும் பயங்கரமான மிகக் கொடிய பாவங்கள் அனைத்தும் நிலக்கொடை அளிக்கும் மனிதனை அணுக முடியாது[4].(27) நிலக்கொடையளிக்கும் அமைதியான ஆன்மா கொண்ட மனிதன், (அந்தச் செயலின் மூலம்) பித்ருலோகத்தில் வசிப்பவர்களையும், தேவலோகத்தில் வசிப்பவர்களையும் நிறைவடையச் செய்கிறான்.(28) உடல் மெலிந்தவனும், உற்சாகமற்றவனும், வாழ்வாதரமற்றவனும், பலவீனத்துடன் ஏங்கிக் கொண்டிருப்பவனுமான ஒருவனுக்கு நிலக்கொடையளிக்கும் மனிதன், அவனுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதால் ஒரு வேள்வி செய்த பலனுக்கும், கௌரவத்துக்கும் தகுந்தவனாகிறான்.(29) நிறைந்த மடியில் பால் வழியும் பசுவானது, அன்புடன் தன் கன்றை நோக்கி ஓடுவதைப் போலவே உயர்ந்த அருளைக் கொண்ட பூமியானவளும் நிலக்கொடையளிப்பவனை நோக்கி ஓடுகிறாள்.(30)உழப்பட்டதாகவோ, விதை தூவப்பட்டதாகவோ, பயிர் விளைந்திருப்பதாகவோ உள்ள நிலத்தை, அல்லது தேவைகள் அனைத்துடன் கூடிய ஒரு மாளிகையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் (மறுமையில்) அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றவல்லவனாகிறான்.(31) வாழ்வாதாரத்தையும் இல்லற நெருப்பையும் கொண்டவனும், தூய நோன்புகள் மற்றும் பயிற்சிகளைக் கொண்டவனுமான ஒரு பிராமணனை நிலக்கொடையை ஏற்கச் எசய்யும் மனிதன், எந்த ஆபத்திலோ, துயரத்திலோ ஒருபோதும் வீழ மாட்டான்.(32) நாளுக்கு நாள் நிலவு வளர்வதைப் போலவே நிலக்கொடை அளித்தவனின் பலனும் அந்நிலத்தில் ஒவ்வொரு முறை பயிர் விளையும்போதும் மேன்மையடைகிறது.(33) பண்டைய வரலாற்றை அறிந்தவர்கள், நிலக்கொடை தொடர்பாக இந்த ஸ்லோகத்தைப் பாடியிருக்கிறார்கள். அந்த ஸ்லோகத்தைக் கேட்ட ஜமதக்னியின் மகன் (ராமர்) மொத்த நிலத்தையும் கசியபருக்குக் கொடையளித்தார்.(34) “என்னைக் கொடையாகப் பெறுவாயாக. என்னைக் கொடையளிப்பாயாக. என்னைக் கொடையளிப்பதன் மூலம் (ஓ! கொடையாளியே) நீ மீண்டும் என்னையே அடைவாய். இம்மையில் கொடையளித்தது மறுமையில் மீண்டும் அடையப்படும்” என்பதே நான் குறிப்பிடும் ஸ்லோகமாகும்[5].(35)வேதங்களின் இந்த உயர்ந்த அறிவிப்பை சிராத்தம் செய்யும் நேரத்தில் உரைக்கும் பிராமணன் உயர்ந்த வெகுமதியை அடைகிறான்.(36) பிறருக்குத் தீங்கிழைப்பதற்காக அதர்வணச் சடங்குகளைச் செய்யும் பலமிக்க மனிதனின் பாவத்திற்கு நிலக்கொடையே உயர்ந்த பாவக்கழிவாகும். உண்மையில், நிலக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன், தனது தந்தைவழி மற்றும் தாய்வழியில் பத்து தலைமுறைகளை மீட்கிறான்[6].(37) நிலக்கொடையின் பலன்களைக் குறித்த இந்த வேதத் தீர்மானத்தை அறிந்தவன், தன் தந்தைவழி மற்றும் தாய் வழி குடும்பங்கள் இரண்டிலும் பத்து தலைமுறைகளை மீட்பதில் வெல்கிறான். (அனைத்து உயிரினங்களும் தங்கள் வாழ்வாதாரங்களை நிலத்திலேயே அடைவதால்) நிலமே அனைத்து உயிரினங்களின் அசல் தோற்றுவாயாகும் {காரணமாக இருக்கிறது}. நெருப்பின் தேவனே {அக்னியே} பூமிக்குத் தலைமைதாங்கும் மேதையாகச் சொல்லப்படுகிறான்.(38) ஒரு மன்னனின் பட்டமேற்பு விழா நடைபெற்றதும், அவன் நிலக்கொடைகளை அளிக்கும் வகையிலும், அறவோரிடம் இருந்து அவன் நிலத்தை ஒருபோதும் அபகரிக்காத வகையிலும் இந்த வேதத் தீர்மானமானது அவனுக்குச் சொல்லப்பட வேண்டும்.(39) மன்னனின் உரிமையில் இருக்கும் மொத்த செல்வமும் பிராமணர்களுக்குரியது என்பதில் ஐயமில்லை. அறநெறி அறிவியலை நன்கறிந்த மன்னனே அந்த நாட்டுடைய செழிப்புக்கான முதல் தேவையாக இருக்கிறான்.(40)நேர்மையற்ற ஒழுக்கமும், நாத்திக நம்பிக்கையும் உள்ள மன்னனைக் கொண்ட மக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அத்தகைய மக்கள் ஒருபோதும் அமைதியாக உறங்கவோ, விழிக்கவோ முடியாது.(41) அவனுடைய தீச்செயல்களின் விளைவால் அவனுடைய குடிமக்கள் எப்போதும் கவலையால் நிறைந்திருப்பார்கள். குடிமக்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் உடைமைகளையும், புதிய உடைமைகளையும் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி பாதுகாக்கும் நிகழ்வுகளை அத்தகைய ஆட்சியாளனின் நாட்டில் ஒருபோதும் காண முடியாது.(42) மேலும், ஞானியாகவும், அறம் சார்ந்தவனாகவும் உள்ள மன்னனைக் கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் உறங்கி, மகிழ்ச்சியாகவே விழிக்கிறார்கள்.(43) அத்தகைய மன்னனின் அருள்நிறைந்த அறச்செயல்களின் மூலம் அவனது குடிமக்கள் கவலையில் இருந்து விடுபடுகிறார்கள். தீச்செயல்களில் இருந்து தடுக்கப்படும் குடிமக்கள் தங்கள் ஒழுக்கத்தின் மூலம் செழிப்பில் வளர்கிறார்கள். தாங்கள் கொண்டுள்ளதைத் தக்கவைத்துக் கொள்ளவல்ல அவர்கள், புதிய உடைமைகளை மேலும் மேலும் அடைகிறார்கள்.(44) நிலக்கொடையளிக்கும் மன்னன் நற்பிறப்பைக் கொண்டவனாகக் கருதப்படுகிறான். அவனே ஆண்மகனாகக் கருதப்படுகிறான். அவன் நண்பனுமாவான். அவன் தன் செயல்களில் அறம் சார்ந்தவனாக இருக்கிறான். அவன் கொடையாளியாகவும் இருக்கிறான். அவன் ஆற்றல் படைத்தவனாகவும் கருதப்படுகிறான்.(45)
வளமான நிலத்தைப் போதிய அளவில் வேதமறிந்த பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் தங்கள் சக்தியின் விளைவால் பல சூரியர்களைப் போல இந்த உலகத்தில் ஒளிர்கிறார்கள்.(46) மண்ணில் தூவப்படும் விதைகள் வளர்ந்து நல்ல பயிராக விளைவதைப் போலவே, நிலக்கொடையளிப்பதன் விளைவால் ஒருவனுடைய விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையால் அவன் மகுடம் சூட்டப்படுகிறான்.(47) ஆதித்யன், வருணன், விஷ்ணு, பிரம்மன், சோமன், ஹுதாசனன் {அக்னி}, சிறப்புமிக்கவனும், திரிசூலபாணியுமான மஹாதேவன் ஆகியோர் அனைவரும் நிலக்கொடையளிக்கும் மனிதனை மெச்சுகிறார்கள்.(48) உயிரினங்கள் பூமியில் இருந்து உயிர்பெறுகின்றன, மேலும் அவை மறையும்போதும் பூமியிலேயே கலக்கின்றன. நால்வகை உயிரினங்களும் பூமியையே தங்கள் மூலக்கூறுகளின் சாரமாகக் கொண்டிருக்கின்றன {பூமியின் குணங்களையே கொண்டிருக்கின்றன}.(49) ஓ! ஏகாதிபதி, அண்டத்தின் உயிரினங்களுக்குத் தாயும், தந்தையும் பூமியே ஆவாள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பூமியோடு ஒப்பிடத்தக்க பூதம் வேறேதும் கிடையாது.(50)
ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகத் தேவ ஆசானான பிருஹஸ்பதிக்கும், சொர்க்கத்தின் ஆட்சியாளனான இந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(51) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய நூறு வேள்விகளில் விஷ்ணுவைத் துதித்த மகவத் {இந்திரன்}, நாநயமிக்கவர்கள் அனைவரிலும் முதன்மையான பிருஹஸ்பதியிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(52)
மகவத், “ஓ! சிறப்புமிக்கவரே, எக்கொடையை அளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு வருவதிலும், இன்பநிலையை அடைவதிலும் வெல்கிறான்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, உயர்ந்ததும், வற்றாததுமான பலனை உண்டாக்கவல்ல கொடையைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்”.(53)
பீஷ்மர் தொடர்ந்தார், “தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தேவர்களின் ஆசானும், பெருஞ்சக்தி கொண்டவருமான பிருஹஸ்பதி, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(54)
பிருஹஸ்பதி, “ஓ! விருத்திரனைக் கொன்றவனே, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, பொற்கொடை, பசுக்கொடை, நிலக்கொடை ஆகிய இவற்றாலேயே ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(55) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! பலமிக்கவனே, நிலக்கொடையை விட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை. ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ள படி இக்கொடையையே நான் மிக உயர்ந்ததாகக் கருதுகிறேன்.(56) போர்க்களத்தில் அச்சமில்லாமல் பகைவர்களுடன் மோதி தங்கள் உயிரை விடும் வீரர்கள் சொர்க்கத்திற்கு வருகிறார்கள். அவர்களின் கதி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நிலக்கொடையளிக்கும் கொடையாளியை அவற்றில் எதனாலும் விஞ்சமுடியாது.(57) தங்கள் உடல்களை அலட்சியம் செய்து, தங்கள் தலைவர்களின் நன்மைக்காக முயன்று போர்க்களத்தில் தங்கள் உயிரைவிடும் மனிதர்கள் பிரம்ம லோகத்திற்கே உயர்கிறார்கள். அவர்களும் கூட (ஒருவன் அடையும் பலன் அல்லது அவன் வெல்லும் இன்ப நிலையைப் பொறுத்தவரையில்) நிலக்கொடையளிப்பவனைக் கடக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(58) நிலக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன், தனது மூதாதையரில் ஐந்து தலைமுறையினரையும், வழித்தோன்றல்களில் ஆறு தலைமுறைகளையும் என இந்தப் பதினொருவரை மீட்கிறான்.(59) ஓ! புரந்தரா, பொன் மற்றும் ரத்தின வளம் கொண்ட நிலத்தைக் கொடையளிக்கும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறான்.(60)
ஓ! மன்னா, (விளைச்சலைப் பொறுத்தவரையில்) அனைத்து விருப்பங்களையும் தரவல்ல வளமிக்க நிலத்தைக் கொடையளிக்கும் ஒருவன் (மறுமையில்) மன்னர்களுக்கு மன்னன் என்ற நிலையை அடைவதில் வெல்கிறான். எனவே, நிலக்கொடையே கொடைகள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(61) ஓ! வாசவா, (விளைச்சலைப் பொறுத்தவரையில்) அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையால் மகுடம் சூட்டவல்ல நிலத்தைக் கொடையளிப்பவன் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(62) ஓ! ஆயிரம் கண்களைக் கொண்டவனே, அனைத்துச் சிறப்புகளையும் கொண்டதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையைக் கொடுக்கவல்லதுமான ஒரு பசுவைக் கொடையளிக்கும் மனிதன், சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(63) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையளிக்கும் கொடையாளி, சொர்க்கத்திற்கு வரும்போது, நூற்றுக்கணக்கான தேனாறுகள், நெய், பால் மற்றும் தயிராறுகளால் நிறைவடைகிறான்.(64) ஒரு மன்னன் நிலக்கொடைகளை அளிப்பதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். எனவே, நிலக்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை.(65)
பெருங்கடலால் சூழப்பட்ட பூமியைத் தன் ஆயுதங்களின் துணையுடன் வென்று அதைக் கொடையளிக்கும் மன்னன், மனிதர்கள் அனைவராலும் பேசப்படுவான், பூமியின் பரப்பில் மலைகள் இருக்கும் வரையிலும் அவனது நினைவுகளும் நீடித்திருக்கும்.(66) நிலக்கொடைக்கான பலனுடன் கூடியவன், அனைத்துச் சுவைகளுடன் கூடிய மங்கலமிக்க, வளமான நிலத்தைக் கொடையளிப்பவனுக்கு ஒதுக்கப்படும் வற்றாத இன்ப உலகத்தை அடைகிறான்.(67) ஓ! சக்ரா, செழிப்பையும், மகிழ்ச்சியையும் அடைய விரும்பும் மன்னன், உரிய சடங்குகளுடன் தகுந்தோருக்கு நிலக்கொடையை எப்போதும் அளிக்க வேண்டும்.(68) எண்ணற்ற பாவங்களைச் செய்த மனிதன், மறுபிறப்பாள வகையினருக்கு நிலத்தைக் கொடையளித்தால், பாம்பானது தன் சட்டையை உரித்துக் கொள்வதைப் போலத் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(69) நிலக்கொடையளிப்பவன், கடல்கள், ஆறுகள், மலைகள், காடுகள் என அனைத்தையும் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்.(70)
நிலத்தைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், தடாகங்களையும், குளங்களையும், கிணறுகளையும், ஓடைகளையும் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். நிலத்தில் உள்ள ஈரப்பதத்தின் விளைவால் ஒருவன் நிலக்கொடையளிப்பதன் மூலம் பல்வேறு சுவைகளுடன் கூடிய பொருட்களைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்.(71) நிலக்கொடையளிக்கும் மனிதன், பயன்விளைவிக்கும் உயர்ந்த குணங்களைக் கொண்ட மூலிகைகள் மற்றும் செடிகளையும், மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்களையும், இனிமை நிறைந்த காடுகளையும், சிறுகுன்றுகளையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(72) நிலத்தைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனானது, தக்ஷிணையின் வடிவில் அபரிமிதமான கொடைகளுடன் செய்யப்படும் அக்னிஷ்டோமம் மற்றும் பிறவற்றைப் போன்ற பெரும் வேள்விகளைச் செய்வதன் மூலமும் அடையப்பட முடியாததாகும்.(73) நிலக்கொடையளிப்பவன், தன் தந்தைவழி மற்றும் தாய்வழிக் குலங்களின் பத்து தலைமுறைகளை மீட்கிறான் என்று ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அதே போல, கொடையளிக்கப்பட்ட நிலத்தை அபகரிப்பதன் மூலம் ஒருவன் நரகில் மூழ்கித் தன் தந்தை வழி மற்றும் தாய் வழி குலத்தின் பத்து தலைமுறையினரை அதே துன்பத்தில் ஆழ்த்துகிறான்.(74) நிலக்கொடை அளிப்பதாக உறுதியளித்தவிட்டு அளிக்காத, அல்லது கொடையளித்துவிட்டு மீண்டும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்ட மனிதன், யமனின் ஆணையால் வருணனின் பாசத்தில் கட்டப்படுவதன் விளைவால் நீண்ட காலத்தைப் பெருந்துன்பத்தில் கடத்துவான்.(75)
இல்லற நெருப்பில் நாள்தோறும் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், மிகக் குறைந்த வாழ்வாதாரங்களைக் கொண்டவர்களும், தங்கள் வசிப்பிடங்களில் உறைவிடம் நாடி வரும் ஒவ்வொரு விருந்தினரையும் விருந்தோம்பலுடன் வரவேற்பவர்களுமான முதன்மையான பிராமணர்களை மதித்து வழிபடுவோர் ஒருபோதும் யமனிடம் செல்ல வேண்டியதில்லை.(76) ஓ! புரந்தரா, ஒரு மன்னன் பிராமணர்களுக்குத் தான் பட்ட கடனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பிற வகையினரில் உள்ள ஆதரவற்றவர்களையும், பலவீனர்களையும் பாதுகாக்க வேண்டும்.(77) ஓ! தேவர்களின் தலைவா, வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற ஒரு பிராமணனுக்கு வேறொருவனால் கொடையளிக்கப்பட்ட நிலத்தை ஒரு மன்னன் திரும்பப்பெறக்கூடாது.(78) உற்சாகமற்றவர்களும், ஏதுமற்றவர்களுமான அத்தகைய பிராமணர்களின் நிலங்கள் திரும்பப் பெறப்படுவதால் அவர்களது விழிகளில் இருந்து விழும் கண்ணீரானது, திரும்பப் பெறுபவனின் மூதாதையர்கள் மற்றும் வழித்தோன்றல்களில் மூன்று தலைமுறையனரை அழிக்கவல்லதாகும்.(79) நாட்டில் இருந்து விரட்டப்பட்ட ஒரு மன்னனை மீண்டும் நிறுவ முயற்சித்து அதில் வெல்லும் மனிதன், சொர்க்கவாசத்தை அடைந்து, அங்கே வசிப்பவர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறான்.(80)
கரும்போ, யவமோ {வாற்கோதுமையோ}, கோதுமையோ போன்ற பயிர்கள் விளையும், அல்லது பசுக்கள், குதிரைகள் மற்றும் இழுவைக்கான வேறு கால்நடைகள் நிரம்பியதும், கொடையாளின் கரவலிமையால் வெல்லப்பட்டதும், அடியில் கனிமவளம் கொண்டதும், பரப்பில் அனைத்து வகைச் செல்வங்களாலும் மறைக்கப்பட்டதுமான நிலத்தைக் கொடையளிக்கும் மன்னன், மறுமையில் வற்றாத இன்ப உலகங்களை அடைவான், மேலும் அத்தகைய மன்னன் பூமி வேள்வி {பூமிஸத்திரம்} செய்தவனாகச் சொல்லப்படுகிறான்.(81,82) நிலக்கொடை அளிக்கும் மன்னன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் கழுவப்பட்டு, அதன் மூலம் தூய்மையடைந்து, அறவோரால் அங்கீகரிக்கப்படுகிறான். இவ்வுலகில் அறம்சார்ந்த மனிதர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறான்.(83) நிலத்தைக் கொடையளிப்பதால் கிட்டும் பலனானது, நீரில் விழும் எண்ணெய்த் துளி அனைத்துப் பக்கங்களிலும் பரவி, நீர்ப்பரப்பை மறைப்பதைப் போலவே {நிலத்தினுடைய} உரிமையாளரின் நன்மைக்காக அந்நிலத்தில் பயிர் விளையும் ஒவ்வொரு முறையும் அதிகரிக்கிறது.(84) ஓ! சக்ரா, பகைவரை நோக்கிப் போர்க்களத்தில் தங்கள் உயிரை விடும் வீரர்களும், சபைகளின் ரத்தினங்களுமான மன்னர்கள் பிரம்ம லோகத்தை அடைகிறார்கள்.(85) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையளித்தவன் பூமிலிருந்து சொர்க்கத்திற்கு வரும்போது ஆடல் பாடலில் திறன்பெற்றவர்களும், தெய்வீக மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அழகிய காரிகையர் அவனை அணுகுகிறார்கள்.(86)
உரிய சடங்குகளுடன் மறுபிறப்பாள வகையினருக்கு நிலக்கொடையளிக்கும் மன்னன், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களால் எப்போதும் துதிக்கப்பட்டு தெய்வீக அருள் உலகங்களில் திளைத்திருக்கிறான்.(87) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையாளி ஒருவன் பிரம்மலோகத்திற்கு உயரும்போது தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நூறு அப்சரஸ்கள் அவனை அணுகுகின்றனர்.(88) நிலக்கொடையளிக்கும் ஒருவனுக்கு, சிறந்த நறுமணம் கொண்ட மலர்கள், ஒரு சிறந்த சங்கு, சிறந்த இருக்கை, ஒரு குடை, சிறந்த வாகனங்களுடன் கூடிய சிறந்த குதிரைகள் ஆகியவை எப்போதும் தயாராக இருக்கின்றன.(89) ஒரு மன்னன் நிலக்கொடையளிப்பதன் மூலம், நறுமணமிக்கச் சிறந்த மலர்களையும், பொற்குவியல்களையும் எப்போதும் பெறுகிறான். அனைத்துவகைச் செல்வங்களையும் பெறும் அத்தகைய மன்னனின் கட்டளைகள் எங்கும் மீறப்படுவதில்லை, அவன் எங்கே சென்றாலும் {ஜய எனும் ஒலியாலான} வெற்றிக்கூச்சல்கள் மட்டுமே அவனை வாழ்த்திக் கொண்டிருக்கும்.(90) ஓ! புரந்தரா, சொர்க்கவாசம், பொன், மலர்கள், மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் மற்றும் செடிகள், குசம், கனிமவளம் மற்றும் பசும்புற்கள் ஆகியன நிலக்கொடைக்கான வெகுமதிகளாக அமைகின்றன. நிலக்கொடையளிக்கும் ஒருவன் மறுமையில் அமுதம் விளையும் நிலத்தை அடைவான்.(91) நிலக்கொடைக்கு நிகரான கொடை வேறேதும் இல்லை. தாயைவிடப் பெருமதிப்புக்குத் தகுந்த பெரியோர் வேறெவரும் இல்லை. வாய்மையை விட உயர்ந்த கடமை வேறேதும் இல்லை. கொடையளித்ததைவிட விலைமதிப்புமிக்கச் செல்வம் வேறேதும் இல்லை” என்றார் {பிருஹஸ்பதி}”.(92)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அங்கிரஸ் மகனிடமிருந்து {பிருஹஸ்பதியிடமிருந்து} இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசவன், பொன், ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகைச் செல்வங்களுடன் கூடிய மொத்த பூமியையும் அவருக்குக் கொடையளித்தான்.(93) நிலக்கொடைக்கான பலன்களை அறிவிக்கும் இந்த ஸ்லோகங்களைச் சிராத்த நிகழ்வின் போது உரைத்தால், அதில் அளிக்கப்படும் காணிக்கைகளின் எந்தப் பகுதியையும் ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ அபகரிக்க முடியாது.(94) இத்தகைய சிராத்தத்தில் பித்ருக்களுக்கு ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் வற்றாதவை ஆகின்றன என்பதில் ஐயமில்லை. எனவே, சிராத்த நிகழ்வுகளின் போது, அழைக்கப்படும் பிராமணர்கள் உண்ணும்போது, கல்விமானான ஒருவன் நிலக்கொடையின் பலன்கள் தொடர்பான இந்த ஸ்லோகங்களை உரைக்க வேண்டும்.(95) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அனைத்திலும் முதன்மையான கொடையைக் குறித்து நான் சொல்லிவிட்டேன். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(96)
அன்னதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 63-உணவுக் கொடை குறித்துப் பீஷ்மருக்குச் சொன்ன நாரதர்; உணவுக்கொடையாளி செல்லும் உலகங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மன்னன் இவ்வுலகில் கொடைகளை அளிக்க விரும்பும்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே, உண்மையில் மேன்மையான சிறப்புகளைக் கொண்ட பிராமணர்களுக்கு அவன் வழங்க வேண்டிய கொடைகள் என்ன?(1) என்ன கொடையால் பிராமணர்கள் உடனே நிறைவடைவார்கள்? பதிலுக்கு அவர்கள் வழங்கும் பலன்கள் என்ன? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கொடைகளில் இருந்து எழும் பலன் மூலம் அடையத்தக்க உயர்ந்த வெகுமதி என்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, இம்மையிலும், மறுமையிலும் வெகுமதிகளை விளைவிக்கும் கொடைகள் என்னென்ன? இவை யாவற்றையும் நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இவை யாவற்றையும் குறித்து என்னிடம் விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தெய்வீகத் தோற்றமுடைய நாரதரிடம் முன்பொரு சந்தர்ப்பத்தில் இதே கேள்விகள் என்னால் முன்வைக்கப்பட்டன. அந்தத் தெய்வீகத் தவசி என்னிடம் மறுமொழியாகச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)
நாரதர், “தேவர்களும், முனிவர்கள் அனைவரும் உணவைப் புகழ்கிறார்கள். உலக நடைமுறையும், அறிவுசார் துறைகள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(5) இதற்கு முன்பு உணவுக்கொடைக்கு நிகரான கொடை வேறேதும் இருந்ததும் இல்லை, இனி இருக்கப்போவதுமில்லை. எனவே, மனிதர்கள் எப்போதும் உணவுக் கொடை அளிப்பதையே குறிப்பாக விரும்புகிறார்கள்.(6) இவ்வுலகில், சக்திக்கும், பலத்துக்கும் உணவே காரணமாகிறது. உயிர்மூச்சுகள் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(7) இல்லறத்தார், துறவிகள், தவசிகள் {கிருஹஸ்தர்கள், பிரம்மசாரிகள், ஸந்நியாசிகள், வானப்பிரஸ்தர்கள்} என மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் உணவைச் சார்ந்தே இருக்கின்றனர். உயிர்மூச்சுகள் உணவைச் சார்ந்தே இருக்கின்றன. இதில் ஐயமேதும் இல்லை.(8) (தேவையின் அடிப்படையில்) தன் உறவினர்களில் எவரையும் துன்புறுத்திய ஒருவன், தன் செழிப்பை விரும்பினால் அவன் உயர் ஆன்ம பிராமணர் அல்லது துறவி ஒருவருக்கு உணவுக்கொடை அளிக்க வேண்டும்.(9) சிறப்புகள் நிறைந்த பிராமணர் வேண்டுதலின் பேரில் உணவைக் கொடையளிக்கும் மனிதன், மறுமையில் பெரும் மதிப்புமிக்கச் செல்வத்தை அடைவான்.(10)
செழிப்பாக இருக்க விரும்பும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, இல்லத்திலிருந்து நெடுந்தொலைவு பயணத்தால் களைத்துப் போயிருக்கும் ஒரு தகுதியான முதிய மனிதர் அந்த இல்லறத்தானின் வசிப்பிடத்திற்கு வரும்போது அவரை மதிப்புடன் வரவேற்க வேண்டும்.(11) பந்தங்கள் அனைத்தையும் தாண்டும் கோபத்தைக் கைவிட்டு, அறம் சார்ந்த இயல்பை அடைந்து, வன்மத்திலிருந்து விடுபட்டு, உணவைக் கொடையளிக்கும் மனிதன், நிச்சயம் இம்மையிலும் {இப்பிறவியிலும்}, மறுமையிலும் {மறுபிறவியிலும்} மகிழ்ச்சியை அடைவான்.(12) ஓர் இல்லறத்தான் தன் வசிப்பிடத்திற்கு வரும் மனிதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தவோ, திருப்பி அனுப்புவதன் மூலம் அவனை அவமானப்படுத்தவோ கூடாது. ஒரு சண்டாளனுக்கோ, ஒரு நாய்க்கோ கொடுக்கப்பட்ட உணவுக்கொடை ஒருபோதும் தொலைவதில்லை {வீண்போகாது}.(13) முன்பின் அறியாதவனும், வழியில் களைப்படைந்தவனுமான ஒருவனுக்குத் தூய உணவைக் கொடையளிக்கும் மனிதன் நிச்சயம் பெரும்பலனை அடைவான்.(14) பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், பிராமணர்கள், தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்கள் ஆகியோரை உணவுக்கொடையால் நிறைவடையச் செய்யும் மனிதன், மிகப் பேரளவு பலன்களை அடைவான்.(15)
கொடும்பாவத்தைச் செய்த ஒருவனும், வேண்டி வரும் ஒருவனுக்கு, அல்லது குறிப்பாக ஒரு பிராமணனுக்கு உணவைக் கொடையளித்தால் அவன் அந்தக் கொடும்பாவத்தின் மூலம் ஒருபோதும் கலக்கமடையமாட்டான்.(16) ஒரு பிராமணனுக்கு அளிக்கும் உணவுக்கொடை வற்றாததாகிறது {அழியாததாகிறது}. ஒரு சூத்திரனுக்கு அளிக்கப்படும் உணவுக்கொடை பெரும் பலனை விளைவிக்கவல்லதாகும். இதுவே பிராமணர்களுக்கும், சூத்திரர்களுக்கும் கொடுக்கப்படும் உணவுக்கொடையால் உண்டாகும் பலன்களுக்கிடையிலான வேறுபாடு ஆகும்.(17) ஒரு பிராமணனால் வேண்டப்படும்போது ஒருவன் அவனது குலத்தையோ, ஒழுக்கத்தையோ, வேதப் புலமையையோ விசாரிக்கக்கூடாது. அவன் கேட்ட உணவை ஒருவன் கொடுக்க வேண்டும்.(18) ஓ! மன்னா, உணவுக்கொடை அளிப்பவன், உணவைத் தரும் பல மரங்களையும், இன்னும் பிற விருப்பத்திற்குரிய பொருட்களையும் இம்மையிலும் மறுமையிலும் அடைவான்.(19) மங்கல மாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழவர்களைப் போலப் பித்ருக்களும் (சிராத்தங்களில்) தங்கள் மகன்களும், பேரப்பிள்ளைகளும் உணவைக் கொடையளிப்பார்கள் என்று எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.(20)
பிராமணன் என்பவன் பெரும்பொருளாவான். அவன் ஒருவனுடைய வசிப்பிடத்தில் வந்து, “எனக்குக் கொடு {தேஹி}” என்று கேட்கும்போது, அந்த வசிப்பிடத்தின் உரிமையாளன் பலனடைய விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த வேண்டுதலைக் கேட்பதன் {கொடுப்பதன்} மூலம் நிச்சயம் பெரும் பலனை அடைகிறான்.(21) பிராமணன் இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் விருந்தினனாவான். அனைத்து உணவுகளிலும் முதல் பங்குக்கு அவன் உரியவனாகிறான்[1]. பிச்சை வேண்டும் விருப்பத்தில் வந்தடைந்ததும், பிராமணர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதன் விளைவால் மதிப்புடன் திரும்பிச் சென்றதுமான வீடு செழிப்பில் பெருகும். அத்தகைய வீட்டின் உரிமையாளன், மறுமையில் வாழ்க்கையின் அனைத்து ஆடம்பர வசதி வாய்ப்புகளுடன் கூடிய ஒரு குடும்பத்தில் பிறவியை அடைவான்.(22,23) இவ்வுலகில் உணவுக்கொடைகளை அளிக்கும் மனிதன் மறுமையில் நிச்சயம் சிறந்த இடத்தை அடைவான். இன்பண்டங்களையும், இனிப்பான உணவுகளையும் கொடையளிக்கும் ஒருவன் சொர்க்க வாசத்தை அடைந்து, அங்கே வசிக்கும் பிறராலும், தேவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவான்.(24) உணவே மனிதர்களின் உயிர் மூச்சுகளாக அமைகிறது. அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளது. உணவுக் கொடைகளை அளிப்பவன், (தன் செல்வமாக) பல விலங்களையும், பல பிள்ளைகளையும், (வேறு வடிவில்) குறிப்பிடத்தக்க செல்வத்தையும் அடைந்து, இன்புத்திற்குரிய ஆடம்பர வசதிகளுடன் கூடிய பொருட்களை அனைத்தையும் அபரிமிதமாக அடைவான்.(25)உணவுக் கொடையாளி ஒருவன் உயிரைக் கொடுத்தவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அவன் அனைத்தையும் கொடுத்தவனாகச் சொல்லப்படுகிறான். எனவே, ஓ! மன்னா, அத்தகைய மனிதன் இம்மையில் பலம் மற்றும் வடிவ அழகு ஆகிய இரண்டையும் அடைகிறான்.(26) கொடையாளியின் வீட்டுக்கு ஒரு விருந்தினனாக வந்த ஒரு பிராமணனுக்கு முறையாக உணவு கொடுக்கப்பட்டால், அந்தக் கொடையாளி பெரும் மகிழ்ச்சியை அடைந்து, தேவர்களாலேயே துதிக்கப்படுபவனாகிறான்.(27) ஓ! யுதிஷ்டிரா, பிராமணன் என்பவன் பெரும்பொருளாவான். அவன் வளமிக்க நிலமுமாவான். அந்த நிலத்தில் விதைக்கப்படும் எந்த வித்தும் பலனெனும் அபரிமிதமான பயிராக விளைகிறது.(28) உணவுக் கொடையானது கொடையாளிக்கும், கொடை பெறுபவனுக்கும் உடனே மகிழ்ச்சியை உண்டாக்குவது காணப்படுகிறது. வேறு கொடைகள் அனைத்தும் காணப்படாத {கண்ணுக்குத் தெரியாத} கனிகளையே {பலன்களையே} உண்டாக்குகின்றன.(29) உணவில் இருந்தே உயிரினங்கள் தோன்றின. ஓ! பாரதா, உணவில் இருந்து மகிழ்ச்சியும் இன்பமும் உண்டாகின்றன. அறம், செல்வம் ஆகிய இரண்டும் உணவில் இருந்தே பாய்கின்றன {உண்டாகின்றன}. நோய்த்தீர்வு அல்லது உடல்நலமும் உணவில் இருந்தே பாய்கிறது.(30)முந்தைய கல்பத்தில், அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உணவே அமுதம், அல்லது இறவாமையின் தோற்றம் என்று சொன்னார். உணவே பூமி, உணவே சொர்க்கம், உணவே ஆகாயம். அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(31) உணவு இல்லாத போது, உடலுயிராக அமையும் ஐம்பூதங்களும் ஒன்று கலந்த நிலையில் நீடிக்காது {அவை பிரிந்து போகின்றன}. உணவு இல்லையென்றால் பலவானின் பலமும் தவறுவது காணப்படுகிறது.(32) அழைப்புகள், திருமணங்கள் மற்றும் வேள்விகள் அனைத்தும் உணவில்லாமல் நின்று போகின்றன. உணவில்லாத போது வேதங்களும் மறைந்துபோகும்.(33) அண்டத்தில் உள்ள அசையும் மற்றும் அசைவற்ற உயிரினங்கள் அனைத்தும் உணவையே சார்ந்திருக்கின்றன. மூன்று உலகங்களிலும் அறமும், செல்வமும் உணவையே சார்ந்திருக்கின்றன. எனவே ஞானிகள் உணவுக்கொடை அளிக்க வேண்டும்.(34) ஓ! மன்னா, உணவுக்கொடையளிக்கும் மனிதனின் பலம், சக்தி, புகழ், சாதனைகள் ஆகியன மூவுலகங்களிலும் இடைவிடாமல் அதிகரிக்கின்றன.(35)
உயிர்மூச்சுகளின் தலைவனான காற்று தேவன் {வாயு}, (சூரியனால் உறிஞ்சப்படும் நீரைக் கொண்டு சென்று) மேகங்களுக்கு மேலே அமர்கிறான். இவ்வாறு மேகங்களுக்குச் சுமந்து செல்லப்படும் நீரானது, ஓ! பாரதா, சக்ரனால் பூமியின் மீது பொழியப்படுகிறது.(36) சூரியன் தன் கதிர்களின் மூலம் பூமியின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறான். காற்று தேவன் {வாயு} சூரியனிலிருந்து அந்த ஈரப்பதத்தை விழச் செய்கிறான்.(37) ஓ! பாரதா, மேகங்களில் இருந்து அந்த நீர் பூமியின் மீது விழும்போது பூமாதேவி ஈரமடைகிறாள்[2].(38) அப்போது மக்கள், அண்டத்தின் உயிரினங்கள் சார்ந்திருக்கும் மொத்த விளைச்சலைத் தரும் பல்வேறு வகைப் பயிர்களை விதைக்கிறார்கள். இவ்வாறு உண்டாக்கப்படும் உணவிலேயே இறைச்சி, கொழுப்பு, எலும்புகள், அனைத்து உயிரினங்களின் உயிர் வித்து ஆகியவற்றின் தோற்றம் இருக்கிறது.(39) ஓ! மன்னா, இவ்வாறு தோன்றும் உயிர் வித்தில் இருந்து பல்வேறு வகை உயிரினங்கள் உண்டாகின்றன. உடலுக்குள் உள்ள அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் உயிர்வித்தை உண்டாக்கிப் பராமரிக்கிறார்கள்.(40) இவ்வாறு உணவில் இருந்தே சூரியன், காற்று மற்றும் உயிர்வித்து உண்டாகி செயல்படுகின்றன. ஒரே பூதம், அல்லது ஒரே அளவு என்று சொல்லப்படுகிற இவை யாவற்றில் இருந்துதான் அனைத்து உயிரினங்களும் உண்டாகின்றன.(41) ஓ! பாரதர்களின் தலைவா, தன் வீட்டுக்கு வரும் ஒருவனுக்கு உணவைக் கொடுக்கும் மனிதன், உயிரினங்களுக்கு உயிர் மற்றும் சக்தி ஆகிய இரண்டையும் காணிக்கையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்” என்றார் {நாரதர்}”.(42)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட நான் எப்போதும் உணவுக் கொடைகளைக் கொடுத்து வருகிறேன். எனவே, நீயும் வன்மத்தில் இருந்து விடுபட்டு, உற்சாகமிக்க இதயத்துடன் உணவைக் கொடையளிப்பாயாக.(43) ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, உரிய சடங்குகளுடன் தகுந்த பிராமணர்களுக்கு உணவைக் கொடையளிப்பதன் மூலம் நீ சொர்க்கத்தை அடைவதில் உறுதிகொள்ளலாம்.(44) ஓ! ஏகாதிபதி, உணவைக் கொடையளிக்கும் கொடையாளிகளுக்காக ஒதுக்கப்படும் உலகத்தைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. சொர்க்கத்தில் உள்ள அந்த உயர் ஆன்ம மனிதர்களின் மாளிகைகள் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.(45) ஆகாயத்து நட்சத்திரங்களைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவையாக, பல தூண்களால் தாங்கப்பட்டவையாக, சந்திர வட்டிலைப் போன்று வெண்மையாக, கிங்கிணி மணிகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவையாக, புதிதாய் உதித்த சூரியனைப் போல நம்பிக்கையூட்டுபவையாக உள்ள அரண்மனை போன்ற அந்த வசிப்பிடங்கள் நிலையானவையாகவோ, அசைபவையாகவோ இருக்கின்றன.(46) அந்த மாளிகைகளில், தரையில் வாழும் விலங்குகளும், பொருட்களும், நீரில் வாழும் விலங்குகளும் பொருட்களும் நூற்றுக்கணக்கில் இருக்கும். அவற்றில் சில வைடூரியத்தின் பிரகாசத்துடனும், சில சூரியப்பிரகாசத்துடனும் இருக்கும். அவற்றில் சில வெள்ளியாலானவையாகவும், சில பொன்னாலானவையாகவும் இருக்கும்.(47) அந்த மாளிகையில் வசிப்போரின் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டவல்ல பல மரங்களும் அங்கே இருக்கும். சுற்றிலும் பல குளங்கள், சாலைகள், சபைகள், கிணறுகள், தடாகங்களும் இருக்கும்.(48) எப்போது உரத்த சடசடப்பொலியை வெளியிடும் சக்கரங்களுடன் கூடியவையும், குதிரைகளும் பிற விலங்குகளும் பூட்டப்பட்டவையுமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் அங்கே காணப்படும். உணவு மற்றும் அனுபவிக்கத்தக்க பொருட்களின் மலைகளும், ஆடை ஆபரணக் குவியல்களும் அங்கே காணப்படும்.(49) பாலோடும் ஆறுகள் எண்ணற்றவையும், அரிசிக் குன்றுகளும், வேறு உணவு வகைகளும் அங்கே காணப்படும். உண்மையில், பொன்னொளிப் படுக்கைகளுடன் கூடிய வெண்மேகங்கள் போன்ற பல அரண்மனைகள் அந்த உலகங்களில் காணப்படும்.(50)
இவ்வுலகில் உணவுக்கொடை அளித்த மனிதர்களால் இவை அனைத்தும் அடையப்படும். எனவே, நீ உணவுக் கொடையாளியாவாயாக. உண்மையில், இவ்வுலகில் உணவுக் கொடையளிக்கும் உயர் ஆன்மா கொண்ட அறவோருக்கு ஒதுக்கப்படும் உலகங்கள் இவையே. இக்காரணங்களுக்காகவே இவ்வுலகில் மனிதர்கள் எப்போதும் உணவுக்கொடையளிக்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(51)
தானத்திற்கான கால அட்டவணை! – அநுசாஸனபர்வம் பகுதி – 64-எந்தெந்த நட்சத்திரங்களில் என்னென்ன கொடையளிக்கலாம் என்பது குறித்து தேவகியிடம் சொன்ன நாரதர்; அவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உணவுக்கொடைக்கான விதிகளைக் குறித்த உமது உரையாடலை நான் கேட்டேன். இப்போது கொடைகள் அளிக்கக்கூடிய கோள்கள் மற்றும் விண்மீன் சேர்க்கைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தேவகிக்கும், முதன்மையான முனிவரான நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் தேவர்களைப் போன்ற இயல்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர் துவாரகைக்கு வந்த போது தேவகி அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(3) தம்மிடம் கேள்வி கேட்ட அவளுக்கு அந்தத் தெய்வீக முனிவர் பின்வரும் சொற்களில் முறையாகப் பதிலளித்தார். அவற்றை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)
நாரதர், “ஓ! அருளப்பட்ட பெண்மணியே, கிருத்திகை நட்சத்திரத்தில்[2], நெய் கலந்த பாயசத்தைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடுத்து நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் மகிழ்ச்சி நிறைந்த உலகங்களை அடைகிறான்.(5)பிராமணர்களுக்குத் தான் பட்ட கடனில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஒருவன், ரோகிணி நட்சத்திரத்தில் அரிசி, நெய், பால், பிறவகை உணவு மற்றும் பானங்களுடன் பல கைப்பிடிகள் நிறைந்த மான் இறைச்சியை அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} கொடையளிக்க வேண்டும்[3].(6)சோமதைவதம் (அல்லது மிருகசீரிஷ) நட்சத்திரத்தில் கன்றுடன் கூடிய பசுவை கொடையளிப்பவன் மனிதர்களின் இவ்வுலகில் இருந்து, பேரின்பம் நிறைந்த சொர்க்கலோகத்திற்குச் செல்கிறான்.(7)
{திருவாதிரை நட்சத்திரத்தில்} உண்ணா நோன்பிருந்து, எள் கலந்த கிருசர உணவைக் கொடையளிப்பதன் மூலம் மறுமையில் கத்தி போன்ற கூர் முனைகளைக் கொண்ட பாறைகளுடன் கூடிய மலைகள் உள்ளிட்ட கடினங்கள் அனைத்தையும் கடக்கிறான்[4].(8)ஓ! அழகு நிறைந்த பெண்மணியே, புநர்வஸு {புனர்பூசம்} நட்சத்திரத்தில், உணவுப்பண்டங்களைக் கொடையளிக்கும் ஒருவன் தன் மறுபிறவியில் மேனி அழகு கொண்டவனாக, பெரும் புகழைக் கொண்டவனாக, அபரிமிதமான உணவு இருக்கும் குடும்பத்தில் பிறப்பான்.(9)
புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தில் நாணயமாக்கப்பட்ட, அல்லது கட்டியாகவுள்ள பொன்னைக் கொடையாக அளிக்கும் ஒருவன், இருளால் சூழப்பட்ட உலகங்களில் {பகுதிகளில்} வசித்தாலும் சோமனைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருப்பான்.(10)
அஷ்லேஷ (ஆயில்யம்} நட்சத்திரத்தில் வெள்ளியையோ, காளையையோ கொடையாக அளிப்பவன் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு பெருஞ்செழிப்பையும் செல்வாக்கையும் ஈட்டுவான்.(11)
மகம் நட்சத்திரத்தில் எள் நிறைந்த மட்பாண்டங்களை {மடக்குகளைக்} கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இவ்வுலகில் பிள்ளைகளையும், விலங்குகளையும், மறுமையில் இன்பநிலையையும் அடைகிறான்[5].(12)பூர்வ பால்குனி {பூரம்} நட்சத்திரத்தில் உண்ணா நோன்பிருக்கும் கொடையாளி, பானிதம் {கற்கண்டு} கலந்த உணவை பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் அவனுக்குக் கிட்டும் வெகுமதி இம்மையிலும், மறுமையிலும் பெருஞ்செழிப்பாகும்[6].(13)உத்தர பால்குனி {உத்திரம்} என்றழைக்கப்படும் நட்சத்திரத்தில் ஷஷ்திகம் என்றழைக்கப்படும் அரிசியுடன் நெய்யும் பாலும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடையலாம்.(14) உத்திர பால்குனி {உத்திரம்} நட்சத்திரத்தில் மனிதர்களால் அளிக்கப்படும் எக்கொடையும் வற்றாததாகிறது. இது மிக நிச்சயமானதாகும்.(15)
ஹஸ்தம் நட்சத்திரத்தில் உண்ணா நோன்பை நோற்று நான்கு யானைகளுடன் கூடிய தேர் ஒன்றைக் கொடையாக அளிக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளவல்ல பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16)
சித்திரை நட்சத்திரத்தில் ஒரு காளையையும், நறுமணப் பொருட்களையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், நந்தனக் காடுகளில் விளையாடும் தேவர்களைப் போல அருள் நிறைந்த அப்சரஸ் உலகங்களில் விளையாடுகிறான்[7].(17)சுவாதி நட்சத்திரத்தில், செல்வக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் விருப்பம்போலவே சிறந்த உலகங்களை அடைந்து, அதையும் தவிரப் பெரும்புகழையும் அடைகிறான்.(18)
விசாக நட்சத்திரத்தில், ஒரு காளையையும், மிக அதிக அளவில் பாலைத் தரும் ஒரு பசுவையும், ஒரு வண்டி நிறைய நெல்லையும், அவற்றை மறைக்கும் பிராஸங்கத்தையும்[8], அணிந்து கொள்ள ஆடைகளையும் கொடையளிப்பதன் மூலம்(19) ஒரு மனிதன் பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்து மறுமையில் வற்றாத பலன்களை அடைகிறான். அத்தகைய மனிதன் எந்தப் பேரிடரையும் சந்திக்காமல் நிச்சயம் சொர்க்கத்தை அடைகிறான்.(20) பிராமணர்கள் வேண்டும் எப்பொருளையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தான் விரும்பும் வாழ்வாதாரங்களை அடைந்து, மரணத்திற்குப் பிறகு பாவிகள் அடையும் அனைத்து இடர்களில் இருந்தும் நரகத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான்.(21)அனுராதா {அனுஷம்} நட்சத்திரத்தில், உண்ணா நோன்பிருந்து, சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய துணிகள் மற்றும் வேறு ஆடைகளையும், உணவையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தில் நூறு யுக காலம் மதிக்கப்படுகிறான்.(22)
ஜியேஷ்டம் {கேட்டை} நட்சத்திரத்தில், {மூலகம் என்றழைக்கப்படும்} கிழங்குகளுடன் {முள்ளங்கியுடன்} சேர்த்துக் காலசாகம் என்றழைக்கப்படும் கீரையை {கருவேப்பிலையைக்} கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பையும், விரும்பத்தக்க கதியையும் அடைகிறான்.(23)
அடக்கப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஒருவன், மூல நட்சத்திரத்தில், பிராமணர்களுக்குக் கனிகள் மற்றும் கிழங்குகளைக் கொடையளிப்பதன் மூலம் பித்ருக்களை நிறைவடையச் செய்து, விரும்பத்தக்க கதியை அடைகிறான்.(24)
பூர்வாஷாதம் {பூராடம்} நட்சத்திரத்தில், உண்ணா நோன்பிருக்கும் ஒருவன், நற்குடியில் பிறந்தவரும், நல்லொழுக்கம் கொண்டவரும், வேதங்களை அறிந்தவருமான ஒரு பிராமணருக்கு தயிர் நிறைந்த குடுவைகளை {தயிர்ப்பாத்திரங்களைக்} கொடையளிப்பதன் மூலம், தன் மறுபிறவியில் பசுக்கள் நிறைந்த குடும்பத்தில் பிறக்கிறான்.
உத்தராஷாதம் {உத்திராடம்} நட்சத்திரத்தில், அபரிமிதமான நெய் மற்றும் கற்கண்டு ஆகியவற்றுடன் வாற்கோதுமைக் கஞ்சி நிறைந்த குடுவைகளைக் கொடையளிக்கும் ஒருவன் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(25,26) அபிஜித் என்றழைக்கப்படும் நட்சத்திரத்தில் {உத்தராட நட்சத்திரத்தின் நடுப்பகல் வேளையில்} தேனையும், நெய்யையும் ஞானிகளுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஓர் அறவோன் சொர்க்கத்தை அடைந்து அங்கே மதிக்கத்தகுந்தவனாகிறான்[9].(27)சிரவண {திருவோணம்} நட்சத்திரத்தில் கம்பளம் மற்றும் அடர்த்தியான இழைநய அமைப்புக் கொண்ட {தடிமனான} வேறு துணிகளையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தூய ஒளியுடன் கூடிய வெண்தேரைச் செலுத்திக் கொண்டு இன்பலோகமெங்கும் உலவுவான்.(28)
தனிஷ்டை {அவிட்ட} நட்சத்திரத்தில் காளைகள் பூட்டப்பட்ட ஒரு வாகனத்தையோ, துணிக்குவியல்கள் மற்றும் செல்வத்தையோ அடக்கப்பட்ட ஆன்மாவுடன் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தன் மறுபிறவியில் சொர்க்கத்தை அடைகிறான்.(29)
சதபிஷை {சதய} நட்சத்திரத்தில் அகில் மற்றும் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் அப்சரஸ்களின் தோழமையையும், பல்வேறு வகையான நித்திய நறுமணப் பொருட்களையும் அடைகிறான்.(30)
பூர்வபாத்ரபதம் {பூரட்டாதி} நட்சத்திரத்தில் ராஜமாஷத்தை {மொச்சைக் கொட்டையைக்}[10] கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து, அனைத்து வகை உணவுப் பொருட்களையும், கனிகளையும் ஏராளமாகக் கையிருப்பில் கொண்டிருப்பான்.(31)உத்தரா {உத்திரட்டாதி} நட்சத்திரத்தில் ஆட்டிறைச்சியை {செம்மறியாட்டு இறைச்சியைக்} கொடையாக அளிக்கும் ஒருவன், அத்தகைய செயலின் மூலம் பித்ருக்களை நிறைவடைச் செய்து, மறுமையில் வற்றாத பலன்களை அடைகிறான்.(32)
ரேவதி நட்சத்திரத்தில் கறப்பதற்குரிய வெண்கலப் பாத்திரத்துடன் ஒரு பசுவைக் கொடையாக அளிக்கும் ஒருவனை, அவ்வாறு கொடையளிக்கப்பட்ட பசுவானது, அவன் விரும்பும் அனைத்தும் கனியும் நிலையை அருளத் தயாராக மறுமையில் {அவனை} அணுகுகிறது.(33)
அஸ்வினி நட்சத்திரத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்து, பெரும் சக்தியுடன் திகழ்கிறான்.(34)
பரணி நட்சத்திரத்தில் பசுவையும், எள்ளையும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் பெரும்புகழையும் ஏராளமான பசுக்களையும் அடைகிறான்” என்றார் {நாரதர்}.(35)
பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறே எந்தெந்த நட்சத்திர நாள்களில் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை நாரதர் தேவகிக்குச் சொன்னார். இதைக் கேட்ட தேவகியும் தன் மருமகள்களுக்கு (கிருஷ்ணனின் மனைவியருக்கு) அவற்றை மீண்டும் சொன்னாள்” {என்றார் பீஷ்மர்}.(36)
வேறு தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 65-பொன், வெள்ளி, நீர், நெய், குடை, தேர் ஆகியவற்றைக் கொடையளிபதால் உண்டாகும் பலன்களையும், அவை குறித்த பெரியோர்களின் கருத்துகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும்பாட்டன் பிரம்மனின் மகனான சிறப்புமிக்க அத்ரி, “பொன்னைக் கொடையளிப்பவர்கள் இவ்வுலகில் அனைத்தையும் கொடையளிபவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்” என்றார்.(1)
மன்னன் ஹரிச்சந்திரன், “பொன்னைக் கொடையளிப்பது பாவத்தைப் போக்கவல்லது, நெடுநாள் வாழ்வுக்கு {நீடித்த ஆயுளுக்கு} வழிவகுப்பது, பித்ருக்களுக்கு வற்றாத பலனை உண்டாக்கவல்லது” என்றான்.(2)
மனு, “நீர்க்கொடையே அனைத்துக் கொடைகளிலும் சிறந்தது” என்றார். எனவே, ஒரு மனிதன் கிணறுகளையும், குளங்களையும், தடாகங்களையும் தோண்ட வேண்டும்.(3) பல்வேறு உயிரினங்கள் நீரைப் பெறும் நிறைந்த கிணறானது, அதைத் தோண்டிய மனிதனின் பாவச்செயல்களில் பாதியை நீக்கிவிடுவதாகச் சொல்லப்படுகிறது.(4) பசுக்களும், பிராமணர்களும், அறவோரும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளப் பயன்படும் கிணறு, குளம் அல்லது தடாகங்களைத் தோண்டிய ஒரு மனிதன் சார்ந்த மொத்த குலமும் நரகம் மற்றும் பாவத்தில் இருந்து மீட்கப்படுகிறது.(5) கோடை காலத்தில் தடையில்லாமல் அனைவரும் நீர் பெறும் வண்ணம் கிணறு அல்லது குளத்தைத் தோண்டிய மனிதன் அனைத்து வகைப் பேரிடர்களையும் கடக்கிறான்.(6)
சிறப்புமிக்கப் பிருஹஸ்பதி, பூஷன், பகன், அஸ்வினி இரட்டையர்கள், நெருப்பு தேவன் {அக்னி} ஆகியோரை நெய் நிறைவடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது.(7) நெய்யானது உயர்ந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். அது வேள்விக்கான உயர்ந்த {மிக முக்கிய} தேவையாக இருக்கிறது. நீர்மங்கள் அனைத்திலும் அதுவே சிறந்தது. நெய்யைக் கொடையளிப்பது மிக மேன்மையான பலனை உண்டாக்குகிறது.(8) மறுமையில் இன்பத்தை வெகுமதியாக அடைய விரும்புபவனும், புகழையும் செழிப்பையும் விரும்புபவனுமான மனிதன், தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவுடன் பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்க வேண்டும்.(9) அஸ்வினி மாதத்தில் பிராமணர்களுக்கு நெய்க்கொடையளிக்கும் மனிதனிடம் நிறைவடையும் அஸ்வினிகள் அவனுக்கு மேனி அழகை அளிக்கின்றனர்.(10) பிராமணர்களுக்கு நெய்க் கலந்த பாயசத்தைக் கொடையாக அளிக்கும் மனிதனின் வசிப்பிடத்தை ராட்சசர்கள் தாக்குவதில்லை.(11)
நீர் நிறைந்த குடுவைகளைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் தாகத்தால் இறக்கமாட்டான். அத்தகைய மனிதன் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் அடைவான், அவன் எந்த வகைத் துன்பத்திற்கும் ஆளாகமாட்டான்.(12) பெரும் பக்தியுடனும், புலனடக்கத்துடனும் பிராமணர்களில் முதன்மையானோருக்கு கொடையளிக்கும் மனிதன், அந்தப் பிராமணர்கள் தங்கள் தவங்களின் மூலம் வென்ற பலன்களில் ஆறில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறான்.(13) பிராமணர்களுக்கு வாழ்வாதாரங்களையும், சமைப்பதற்கும், குளிர்விரட்டவும் உதவும் விறகுகளையும் கொடையளிக்கும் மனிதன், தன் நோக்கங்கள் அனைத்தும், செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவதைக் காண்பான். அத்தகைய ஒருவன், தன் பகைவர்கள் அனைவரையும் விட அதிகக் காந்தியுடன் ஒளிர்வது காணப்படுகிறது.(14,15) அத்தகைய மனிதனிடம் சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி} நிறைவடைகிறான். மற்றொரு வெகுமதியாக அவன் ஒருபோதும் கால்நடைகள் {விலங்குகள்} அற்றவனாக ஆவதில்லை, மேலும் போரில் அவன் நிச்சயம் வெற்றி அடைவான்.(16)
ஒரு குடையைக் கொடையளிக்கும் மனிதன், பிள்ளைகளையும் {சந்ததியையும்}, பெருஞ்செழிப்பையும் அடைகிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் கண் நோயால் பாதிக்கப்படுவதில்லை. ஒரு வேள்வியைச் செய்வதால் உண்டாகும் பலன் அவனுடையதாகிறது.(17) கோடை காலத்திலோ, மழைக்காலத்திலோ ஒரு குடையைக் கொடையளிக்கும் மனிதனின் இதயம், எக்காரணத்தினாலும் எரிச்சல் அடைவதில்லை.(18) அத்தகைய மனிதன் அனைத்து வகைக் கடினங்கள் மற்றும் தடைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் விரைவாக வெல்கிறான். ஓ! மன்னா, உயர்ந்த அருளைக் கொண்டவரும், சிறப்புமிக்க முனிவருமான சாண்டில்யர், அனைத்துக் கொடைகளிலும் தேர்க்கொடையே சிறந்தது” என்று சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(19-20)
தானபலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 66-காலணி, எள், நிலம், பசு, உணவு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சுடு மணலில் நடக்கும்போது, பாதம் சுடும் பிராமணர் ஒருவருக்குக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன் என்ன பலன்களை அடைகிறான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர்களின் பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்குக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன், முட்கள் அனைத்தையும் நசுக்குவதில் வென்று, அனைத்து வகைக் கடினங்களையும் கடகிறான்.(2) ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய மனிதன் தன் எதிரிகளை அனைவரின் தலைகளுக்கு மேல் இருக்கிறான். ஓ! ஏகாதிபதி, கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டவையும், பொன் மற்றும் வெள்ளியாலானவையுமான வாகனங்கள் அவனுக்குக் கிடைக்கும். காலணிகளைக் கொடையளிப்பவன், நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வாகனத்தைக் கொடையளித்த பலனை ஈட்டுவதாகச் சொல்லப்படுகிறது” என்றார்.(3,4)
யுதிஷ்டிரன், “ஓ! பாட்டா, எள், நிலம், பசு மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடையளிப்பதால் கிட்டும் பலன்களை மீண்டும் விரிவாக எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)
பீஷ்மர், “ஓ! குந்தியின் மகனே, எள்ளைக் கொடையளிப்பதனால் கிட்டும் பலனென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் சொல்வதைக் கேட்ட பிறகு, விதிப்படி எள்ளைக் கொடையளிப்பாயாக.(6) எள்ளானது, பித்ருக்களுக்கான சிறந்த உணவாகச் சுயம்புவான பிரம்மனால் உண்டாக்கப்பட்டது. எனவே, எள்ளைக் கொடையளிப்பது பித்ருக்களை எப்போதும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. மாக {மாசி} மாதத்தில் பிராமணர்களுக்கு எள்ளைக் கொடையளிக்கும் மனிதன், அச்சுறுத்தும் அனைத்துவகை உயிரினங்களும் நிறைந்த நரகத்தை ஒருபோதும் காண வேண்டியதில்லை.(8) எள்ளைக் காணிக்கையளித்துப் பித்ருக்களைத் துதிக்கும் ஒருவன், அனைத்து வேள்விகளிலும் தேவர்களை வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். ஒருவன் எந்நோக்கமும் இல்லாமல் ஒரு சிராத்தத்தில் எள்ளைக் காணிக்கையளிக்கக்கூடாது[1].(9) பெரும் முனிவரான கசியபரின் அங்கங்களில் இருந்து எள் உண்டானது. எனவேதான் கொடை குறித்த காரியங்களில் அவை உயர்ந்த பலனைத் தரக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.(10)எள்ளானது செழிப்பையும், மேனி அழகையும் கொடுத்து அந்தக் கொடையாளியைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையச் செய்கிறது. இந்தக் காரணத்தினால்தான் எள்ளைக் கொடையளிப்பது வேறு எந்தப் பொருளையும் கொடையளிப்பதைவிடச் சிறப்புமிக்கதாகிறது.(11) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ஆபஸ்தம்பர், சங்கர், லிகிதர், பெரும் முனிவரான கௌதமர் ஆகியோரனைவரும் எள்ளைக் கொடையளித்ததன் மூலமே சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(12) பாலினக் கலவியைத் தவிர்த்து பிரவிருத்தி அறங்கள் அல்லது செயல்களை நோற்று, எள் காணிக்கையுடன் ஹோமம் செய்யும் பிராமணர்கள் (தூய்மையிலும், திறனிலும்) தடுப்பு மருந்தான ஹவிக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்[2].(13) எள்ளுக்கொடையானது அனைத்துக் கொடைகளுக்கும் மேலானதாகப் புகழ்பெற்றது. கொடைகள் அனைத்தின் மத்தியிலும் எள்ளுக்கொடையானது வற்றாத பலனை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுகிறது.(14) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஹவி (தெளிந்த நெய்) கிடைக்காத போது, ஓ! பகைவர்களை எரிப்பவனே, முனிவர் குசிகர் தன் வேள்வி நெருப்புக்ள மூன்றுக்கும் எள்ளையே காணிக்கையளித்துச் சிறந்த கதியை அடைவதில் வென்றார்.(15) ஓ! குருக்களின் தலைவா, இவ்வாறே சிறந்த எள்ளுக்கொடை குறித்த விதிமுறைகளை உனக்குச் சொன்னேன். இந்த விதிமுறைகளின் விளைவாலேயே எள்ளுக்கொடையானது மிக மேன்மையான பலனைக் கொண்டது எனக் கருதப்படுகிறது.(16)இதன்பிறகு நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, ஒரு காலத்தில் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், சுயம்புவான பிரம்மனின் முன்னிலைக்குச் சென்றனர்.(17) பூமியில் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவர்கள் பிரம்மனை சந்தித்து, “எங்கள் வேள்விக்காக இஃது எங்களுக்கு வேண்டும்” எனச் சொல்லி மங்கலப் பூமியில் ஓர் இடத்தை அவனிடம் இரந்து கேட்டனர்.(18)
தேவர்கள், “ஓ! சிறப்புமிக்கவரே, நீரே தேவர்கள் அனைவரின் மற்றும் பூமி அனைத்தின் தலைவராவீர். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, உமது அனுமதியுடன் நாங்கள் ஒரு வேள்வியைச் செய்ய விரும்புகிறோம்.(19) வேள்விப் பீடத்தை அமைக்கச் சட்டப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் பூமியைப் பெறாத மனிதன், தான் செய்யும் வேள்வியின் பலனை ஒருபோதும் ஈட்டுவதில்லை.(20) அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட அண்டமனைத்தின் தலைவன் நீரே. எனவே, நாங்கள் செய்ய விரும்பும் வேள்விக்காகப் பூமியில் ஒரு பகுதியை எங்களுக்கு அருள்வதே உமக்குத் தகும்” என்று கேட்டனர்.(21)
பிரம்மன், “தேவர்களில் முதன்மையானோரே, கசியபனின் மகன்களே, நீங்கள் நினைத்த வேள்வியை நீங்கள் எங்கே செய்வீர்களோ அந்த நிலப்பகுதியை நான் உங்களுக்குத் தருவேன்” என்றான்.(22)
தேவர்கள், “ஓ! புனிதமானவரே, எங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டன. நாங்கள் எங்கள் வேள்வியைப் பெரிய தக்ஷிணையுடன் இங்கே செய்யப் போகிறோம். எனினும், முனிவர்கள் இந்த நிலப்பகுதியை எப்போதும் துதிக்கட்டும்” என்றனர்.(23)
அப்போது அந்த இடத்திற்கு அகஸ்தியர், கன்வர், பிருகு, அத்ரி, விருஷாகபி, அசிதர் மற்றும் தேவர்கள் ஆகியோர் வந்தனர்.(24) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, அப்போது உயர் ஆன்ம தேவர்கள் அங்கே தங்கள் வேள்வியைச் செய்தனர். அந்த முதன்மையான தேவர்கள் அதை {அந்த வேள்வியை} உரிய நேரத்தில் நிறைவடையச் செய்தனர்.(25) மலைகளில் முதன்மையான இமயத்தின் சாரலில் தங்கள் வேள்வியை நிறைவடையச் செய்த தேவர்கள், தங்கள் வேள்வியில் இருந்து எழும் பலனில் ஆறில் ஒரு பகுதியை நிலக்கொடைக்குக் கொடுத்தனர்.(26) சாணளவு நிலத்தையாவது நம்பிக்கையுடனும், மதிப்புடனும் (ஒரு பிராமணனுக்குக்) கொடையளித்த மனிதன் எந்தக் கடின சூழ்நிலையிலும் ஒருபோதும் சோர்வடைய வேண்டியதில்லை, மேலும் அவன் எந்தப் பேரிடரையும் ஒருபோதும் சந்திக்க மாட்டான்.(27)
குளிர், காற்று, சூரியன் ஆகியவற்றை வெளியே வைப்பதும், ஒரு தூய நிலப்பகுதியில் நிற்பதுமான ஒரு வீட்டைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி தேவலோகத்தை அடைந்து, அவனது பலன் தீர்ந்தாலும் ஒருபோதும் அங்கிருந்து வீழாமல் இருப்பான்.(28) ஓ! மன்னா, ஞானம் கொண்ட ஒரு கொடையாளி, வசிப்பதற்குரிய ஒரு வீட்டைக் கொடையளிப்பதன் மூலம், சக்ரனின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான். அத்தகைய மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(29) புலனடக்கம் கொண்டவரும், வேதங்களை நன்கறிந்தவரும், பிறவியால் ஆசான்களின் குடும்பத்தைச் சார்ந்தவருமான ஒரு பிராமணர் எவனுடைய வீட்டில் மனநிறைவுடன் வசிக்கிறாரோ அவன் உயர்ந்த இன்ப உலகங்களை அடைவதில் வென்று இன்புற்றிருக்கிறான்[3].(30)ஓ! பாரதர்களில் சிறந்தவனே, குளிர் மற்றும் மழையை வெளியே வைப்பதும், கணிசமான அளவுக்குக் கட்டமைப்பைக் கொண்டதும், பசுவுக்கு உறைவிடமளிப்பதுமான ஒரு கொட்டகையைத் தானம் அழிப்பதன் மூலம் ஒரு கொடையாளி தன் குலத்தை ஏழு தலைமுறைக்கு (நரகத்திலிருந்து) மீட்கிறான்.(31) உழத்தகுந்த ஒரு நிலப்பகுதியைக் கொடையளிப்பதன்மூலம் அந்தக் கொடையாளி சிறந்த செழிப்பை அடைகிறான். கனிம வளம் உள்ள ஒரு நிலப்பகுதியைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி தன் குலம் மற்றும் குடும்பத்தின் செல்வாக்கைப் பெருக்குகிறான்.(32) தரிசு நிலத்தையோ, வறண்ட நிலத்தையோ ஒருவன் ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது; அதேபோலச் சுடலைக்கு அருகிலுள்ள நிலத்தையோ, அத்தகைய கொடையளிப்பதற்கு முன்னர் ஒரு பாவியால் அனுபவிக்கப்பட்டு, சொந்தங்கொண்டாடப்பட்ட நிலத்தையோ ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது.(33) ஒரு மனிதன், வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராதத்தைச் செய்யும்போது, அந்த நிலக்கொடையையும், சிராத்ததையும் பித்ருக்கள் கெட்டுப் போகச் செய்வார்கள்.(34) எனவே ஞானம் கொண்ட ஒருவன் சிறு நிலப்பகுதியையாவது விலைக்கு வாங்கி அதைக் கொடையளிக்க வேண்டும். முறையாக விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் ஒருவனுடைய மூதாதையர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் பிண்டம் வற்றாததாகிறது {அழிவடையாததாகிறது}.(35)
காடுகள், மலைகள், ஆறுகள், தீர்த்தங்கள் ஆகியவை உரிமையாளர்கள் அற்றவை எனக் கருதப்படுகின்றன. இங்கே சிராத்தம் செய்வதற்கு நிலமேதும் விலைக்கு வாங்கப்பட வேண்டியதில்லை.(36) ஓ! மன்னா, நிலக்கொடையின் பலன்கள் குறித்த காரியத்தில் இதுவே சொல்லப்படுகிறது. ஓ! பாவமற்றவனே, இதன் பிறகு, பசுக்கொடைகுறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(37) தவசிகள் அனைவரையும் விடப் பசுக்கள் மேன்மையானவையாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு இருப்பதாலேயே, இந்தக் காரணத்தினாலேயே தெய்வீகமான மஹாதேவன் அவற்றின் துணையுடன் தவங்களைச் செய்தான்.(38) ஓ! பாரதா, பசுக்கள் சோமனின் துணையுடன் பிரம்மலோகத்தில் வசிக்கின்றன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாள முனிவர்கள் உயர்ந்த கதியாக இருக்கும் இந்த உலகத்தை {பிரம்மலோகத்தை} அடையவே முயற்சிக்கிறார்கள்.(39) ஓ! பாரதா, பால், நெய், தயிர், சாணம், தோல், எலும்புகள், கொம்புகள் மற்றும் மயிர் ஆகியவற்றைக் கொடுத்துப் பசுக்கள் மனிதர்களுக்கு நன்மை செய்கின்றன.(40)
பசுக்கள் குளிரையோ, வெப்பத்தையோ உணர்வதில்லை. அவை எப்போதும் பணி செய்கின்றன. மழைக்காலங்களும் அவற்றைப் பாதிப்பதில்லை.(41) பசுக்கள், பிராமணர்களின் துணையுடன் உயர்ந்த கதியை (பிரம்மலோக வாசத்தை) அடைவதால், பசுக்களும், பிராமணர்களும் இணையானவர்கள் என ஞானிகள் சொல்கின்றனர்.(42) பழங்காலத்தில், மன்னன் ரந்திதேவனால் செய்யப்பட்ட ஒரு பெரும் வேள்வியில் பெரும் எண்ணிக்கையிலான பசுக்கள் கொன்று காணிக்கையளிக்கப்பட்டன. கொல்லப்பட்ட அவ்விலங்குகளின் தோல்களில் சுரந்த சாற்றிலிருந்து சர்மண்வதி என்ற பெயரில் அழைக்கப்படும் ஓர் ஆறே உண்டானது.(43) அதன் பிறகு, பசுக்கள் வேள்விக்குத் தகுந்த விலங்குகளாக கொள்ளப்படுவதில்லை[4]. அவை கொடைக்குத் தகுந்த விலங்குகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி முதன்மையான பிராமணர்களுக்குப் பசுக்கொடையளிக்கும் மன்னன், தனக்கு நேரும் ஒவ்வொரு இடரையும் நிச்சயம் கடப்பான். ஆயிரம் பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன் நரகத்திற்குச் செல்ல மாட்டான்.(44,45)ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அத்தகைய மனிதன் எங்கும் வெற்றியை அடைகிறான். பசுவின் பால் அமுதமெனத் தேவர்களின் தலைவனே சொல்லியிருக்கிறான்.(46) இதன் காரணமாகப் பசுக்கொடை அளிக்கும் ஒருவன் அமுதத்தைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான். நோய் தடுக்கும் பாலில் இருந்து உண்டாக்கப்படும் நெய்யானது வேள்வி நெருப்பில் ஊற்றத்தக்க ஆகுதிகள் அனைத்திலும் மிகச் சிறந்ததென வேதங்களை அறிந்த மனிதர்கள் அறிவித்திருக்கிறார்கள்.(47) இக்காரணத்தினால், ஒரு பசுவைக் கொடையளிக்கும் மனிதன், வேள்விக்கான ஆகுதியைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான். காளை மாடானது சொர்க்கத்தின் உடல்வடிவமாகும். சிறப்புகளைக் கொண்ட ஒரு பிராமணனுக்கு ஒரு காளையைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உயிரினங்களின் உயிர் மூச்சுகளாகப் பசுக்கள் சொல்லப்படுகின்றன.(48,49) எனவே, பசுக்கொடை அளிக்கும் மனிதன் உயிர்மூச்சுகளைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். வேதங்களை அறிந்த மனிதர்கள், வாழும் உயிரினங்களின் உயர்ந்த புகலிடமாகப் பசுக்கள் இருப்பதாகச் சொல்கின்றனர்.(50)
எனவே, பசுக்கொடையளிக்கும் மனிதன், அனைத்து உயிரினங்களுக்குமான உயர்ந்த புகலிடத்தைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். பசுவானது கொல்லப்படுவதற்காக (அவளைக் கொல்பவனிடம்) ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது; அதே போல மண்ணை உழுபவனுக்கும் பசுவைக் கொடுக்கக்கூடாது; அதே போல ஒரு நாத்திகனிடமும் பசுவைக் கொடுக்ககூடாது. ஓ! பாரதர்களின் தலைவா, பசுவை வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டவனுக்கும் பசுக்கொடை அளிக்கப்படக்கூடாது[5].(51) {பசுவுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்} அத்தகைய பாவிகளுக்குப் பசுவைக் கொடுக்கும் மனிதன் எப்போதும் நீடிக்கும் நரகத்தில் மூழ்குவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(52) ஒருவன், உடல் மெலிந்ததோ, வாழும் கன்றை உண்டாக்காததோ, மலடாகவுள்ளதோ, நோய்வாய்ப்பட்டதோ, அங்கக் குறைபாடு கொண்டதோ, களைத்திருப்பதோவான பசுவை ஒரு பிராமணனுக்கு ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது.(53) பத்தாயிரம் பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தை அடைந்து, இந்திரனின் துணையுடன் அருள்நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இலட்சக்கணக்கான பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன், வற்றாத இன்பலோகங்களை அடைவான்.(54) இவ்வாறே பசுக்கொடை மற்றும் எள்ளுக் கொடை மற்றும் நிலக்கொடை ஆகியவற்றின் பலன்களை உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதா, உணவுக்கொடை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(55)ஓ! குந்தியின் மகனே, உணவுக் கொடையானது மிக உயர்ந்த கொடையாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததன் மூலமே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(56) களைத்தவனும், பசித்தவனுமான ஒருவனுக்கு உணவுக்கொடையளிக்கும் மன்னன் சுயம்புவுக்குச் சொந்தமான உயர்ந்த இன்பலோகத்தை அடைகிறான்.(57) ஓ! பெரும்பலம் கொண்டவனே, உணவுக்கொடை அளிப்பவர்களுக்குக் கிட்டும் இன்ப நிலையைப் பொன், ஆடைகள், மற்றும் பிற பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் கூட மனிதர்கள் அடையத் தவறுகிறார்கள்.(58) உண்மையில் உணவே முதல் பொருளாகும். உணவே உயர்ந்த செழிப்பாகக் கருதப்படுகிறது. உணவிலிருந்து உயிர் தோன்றுகிறது, சக்தியும், ஆற்றலும் பலமும் தோன்றுகின்றன.(59) எப்போதும் கவனத்துடன் அறவோருக்கு உணவுக்கொடையளிக்கும் ஒருவன் ஒருபோதும் எந்தத் துன்பத்திலும் வீழ்வதில்லை. பராசரரால் இதுவே சொல்லப்படுகிறது.(60)
தேவர்களை முறையாக வழிபட்ட பிறகு, உணவே முதலில் அவர்களுக்குப் படைக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, குறிப்பிட்ட மனிதர்கள் என்ன வகை உணவை உண்பார்களோ, அந்த மனிதர்களால் வழிபடப்படும் தேவர்களும் அதே வகை உணவையே உண்பதாகச் சொல்லப்படுகிறது[6].(61) கார்த்திகை மாத வளர்பிறையில் உணவுக்கொடையளிக்கும் மனிதன் இம்மையில் ஒவ்வொரு கடினத்தையும் கடப்பதில் வென்று, மறுமையில் வற்றாத இன்பநிலையை அடைகிறான்.(62) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தன் வசிப்பிடத்தில் பசியுடன் வரும் விருந்தினருக்கு உணவுக்கொடையளிக்கும் மனிதன், பிரம்மத்தை அறிந்த மனிதர்களுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அனைத்தையும் அடைகிறான்.(63) உணவுக்கொடையளிக்கும் மனிதன், அனைத்து கடினங்களையும், துன்பத்தையும் நிச்சயம் கடப்பான். அத்தகைய மனிதன் ஒவ்வொரு பாவத்தையும் கடந்து, ஒவ்வொரு தீச்செயலில் இருந்தும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான்.(64) இவ்வாறு உணவு, எள், பூமி {நிலம்} மற்றும் பசுக் கொடைகள் அளிப்பதன் பலன்களை நான் உனக்குச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(65)
ஜல தானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 67-தண்ணீரைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, நீர் சொன்ன பல்வேறு வெகை கொடைகளின் பலன்களைக் கேட்டேன். ஓ! பாரதரே, குறிப்பாக உணவுக்கொடையே மெச்சத்தகுந்தது, உயர்வானது என நான் புரிந்து கொள்கிறேன்.(1) எனினும், நீர்க்கொடை அளிப்பதன் பெரும்பலன்கள் என்னென்னன? ஓ! பாட்டா, நான் இதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன்.(3) ஓ! பாவமற்றவனே, கொடைகளைக் குறித்து நீர் தொடங்கி உனக்குச் சொல்லப் போகிறேன். உணவுக்கொடை மற்றும் நீர்க்கொடை மூலம் ஒரு மனிதன் அடையும் பலனை, வேறு எந்தக் கொடையினாலும் அடைய இயலாது என்றே நான் நினைக்கிறேன். எனவே, உணவு அல்லது நீர் கொடுப்பதைவிட மேன்மையான கொடை வேறேதும் இல்லை. உணவாலேயே அனைத்து உயிரினங்களாலும் நீடித்திருக்கமுடிகிறது.(4,5)
இந்தக் காரணத்தினாலேயே உலகங்கள் அனைத்திலும் உணவே மிக மேன்மையான பொருளாகக் கருதப்படுகிறது. உணவிலிருந்தே உயிரினங்களுக்குப் பலமும் சக்தியும் நிலையாக அதிகரிக்கிறது.(6) எனவே, உணவுக்கொடையே மிக மேன்மையான கொடை என உயிரினங்கள் அனைத்தின் தலைவனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். ஓ! குந்தியின் மகனே, (உணவுக்கொடை குறித்து) சாவித்திரி சொன்ன மங்கலச் சொற்கள் என்னென்ன என்பதை நீ கேட்டிருக்கிறாய்.(7) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அச்சொற்கள் சொல்லப்படுவதற்கான காரணமென்ன, அச்சொற்கள் என்னென்ன, புனித மந்திரங்களின் போக்கில் அவை சொல்லப்பட்டதெவ்வாறு என்பதை நீ அறிவாய். உணவுக்கொடை அளிப்பதன் மூலம் ஒரு மனிதன் உயிரையே கொடையாக அளிக்கிறான்.(8)
உயிர்க்கொடையைவிட இவ்வுலகில் மேன்மையான கொடை வேறேதுமில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, லோமசர் சொன்ன வாக்கியத்தை நீ அறியாதவனல்ல.(9) ஓ! ஏகாதிபதி, முற்காலத்தில் மன்னன் சிபி ஒரு புறாவுக்கு உயிரளித்ததன் விளைவால் அடைந்த கதியானது, ஒரு பிராமணனுக்கு உணவை அளிக்கும் கொடையாளியால் அடையப்படுகிறது.(10) எனவே, உயிரைக் {கொடையாகக்} கொடுப்பவர்கள் மறுமையில் மிக மேன்மையான இன்ப உலகங்களை அடைவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! குருக்களில் சிறந்தவனே, உணவானது {உணவுக்கொடையானது}, நீருக்கு {நீர்க்கொடைக்கு} மேன்மையானதாகவோ, அல்லாததாகவோ இருக்கலாம்.(11) நீரின் துணையின்றி எதனாலும் நீடித்திருக்க இயலாது. கோள்கள் அனைத்தின் தலைவனான சிறப்புமிக்கச் சோமனே {சந்திரனே} நீரில் இருந்துதான உதித்தான்.(12)
அமுதம், சுதை, ஸ்வதை, பால், அனைத்து வகை உணவு, இலையுதிர் மூலிகைகள், செடிகொடிகள் ஆகியன நீரில் இருந்தே உண்டாகின்றன.(13) ஓ! மன்னா, இவற்றில் இருந்தே அனைத்து உயிரினங்களின் உயிர் மூச்சுகளும் உண்டாகின்றன. தேவர்கள் அமுதத்தையே தங்கள் உணவாகக் கொள்கின்றனர். நாகர்கள் சுதையை உணவாகக் கொள்கின்றனர்.(14) பித்ருக்கள் ஸ்வதையைத் தங்கள் உணவாகக் கொள்கின்றனர். விலங்குகள் செடி கொடிகளைத் தங்கள் உணவாகக் கொள்கின்றன. அரிசி முதலியன மனிதர்களின் உணவாக அமைகின்றன என ஞானிகள் சொல்கின்றனர்.(15) ஓ! மனிதர்களின் தலைவா, இவை அனைத்தும் நீரில் இருந்தே உண்டாகின்றன. எனவே, நீர்க்கொடைக்கு மேலான கொடை வேறேதும் இல்லை.(16)
ஒரு மனிதன் செழிப்படைய விரும்பினால் அவன் எப்போதும் நீர்க்கொடை அளிக்க வேண்டும். நீர்க்கொடையானது மிகவும் புகழத்தக்கதாகும். அது கொடையாளிக்கு பெரும் புகழையும் நீண்ட வாழ்நாளையும் அளிக்கிறது.(17) ஓ! குந்தியின் மகனே, நீர்க்கொடையாளியானவன், எப்போதும் தன்னுடைய பகைவர்களின் தலைகளுக்கு மேலேயே இருப்பான் {அவர்களைவிட உயர்ந்தவனாக இருப்பான்}. அத்தகைய ஒருவன் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, என்று நீடித்திருக்கும் புகழையும் ஈட்டுகிறான்.(18) ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! பேரொளி கொண்டவனே, அந்தக் கொடையாளி தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்குச் செல்லும்போது மறுமையில் முடிவிலா இன்பத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் மறுமையில் வற்றாத அருள் உலகங்களை ஈட்டுகிறான் என மனுவே சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(19)
யமன் சொன்ன தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 68-எள், விளக்கு, உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பது குறித்து யமனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, எள், இருள்விலக்கி ஒளிதரும் விளக்குகள், உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தில் இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், யமனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட கதை குறிப்பிடப்படுகிறது.(2) கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் உள்ள நாட்டில், யாமுனை என்றழைக்கப்படும் {யமுனை உற்பத்தியாகும் களிந்த} மலையடிவாரத்தில் பிராமணர்கள் வசித்து வந்த ஒரு பெரிய நகரம் இருந்தது.(3) ஓ! மன்னா, பர்ணசாலை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட அந்த நகரம் தோற்றத்தில் மிக இனிமை நிறைந்ததாக இருந்தது. அங்கே கல்விமானான பிராமணர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர்.(4)
ஒரு நாள், இறந்தோரின் ஆட்சியாளனான யமன், கறுப்பு உடை உடுத்தியிருந்தவனும், குருதிச்சிவப்பான கண்களுடன் கூடியவனும், நட்டவகையில் நிற்கும் முடியுடன் கூடியவனும், காகம் போன்ற கண்களும், மூக்கும் பாதங்களும் கொண்டவனான தன் தூதுவனை {கிங்கரனை} அழைத்து,(5) “பிராமணர்கள் வசிக்கும் நகரத்திற்குச் சென்று, அகஸ்திய குலத்தில் பிறந்தவனும், சர்மின் {சர்மி} என்ற பெயரைக் கொண்டவனுமான மனிதனை இங்கே கொண்டு வருவாயாக.(6) மன அமைதியையே நோக்கமாகக் கொண்ட அவன் கல்விமானாகவும் இருக்கிறான். அவன் வேதங்களைக் கற்பிப்பதில் ஈடுபடும் ஆசானாகவும் இருக்கிறான், அவனது நடைமுறைகள் நன்கு அறியப்பட்டவையாக இருக்கின்றன. அங்கேயே வாழும் அதே குலத்தைச் சேர்ந்த வேறு எவனையும் என்னிடம் கொண்டு வராதே.(7) அந்த மற்றொருவனும், குணங்கள், கல்வி மற்றும் பிறவியில் அவனுக்கு இணையானவனே. பிள்ளைகள் மற்றும் ஒழுக்கக் காரியங்களில் இவனும் நுண்ணறிவு மிக்கச் சர்மினுக்கு ஒப்பானவனே.(8) நான் கருத்தில் கொண்டவனையே நீ கொண்டு வருவாயாக. அவன் (இங்கே மதிப்பில்லாமல் இழுத்து வரப்படுவதற்குப் பதிலாக) மதிப்புடன் வழிபடப்பட வேண்டும்” என்றான். அந்த இடத்திற்குச் சென்ற தூதன், அவன் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு முரணாகவே செயல்பட்டான்.(9) கொண்டுவரப்பட யமனால் தடுக்கப்பட்ட மனிதனைத் தாக்கி அங்கே கொண்டு வந்தான். பெருஞ்சக்தி கொண்ட யமன் அந்தப் பிராமணனைக் கண்டதும் எழுந்திருந்து, முறையாக அவனை வழிபட்டான்.(10)
பிறகு, அந்த இறந்தோரின் மன்னன் {யமன்} தன் தூதனை அழைத்து, “இவனைக் கொண்டு சென்று, மற்றொருவனைக் கொண்டு வருவாயாக” என்றான்.
இறந்தோரின் பெரும் நீதிபதியான அவன் {யமன்} இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, அந்தப் பிராமணன் அவனிடம், “நான் என் வேத கல்வியை முடித்துவிட்டேன். மேலும் நான் இப்போது உலகப் பந்தத்தோடு இல்லை. என் உயிர் இருப்புக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவற்றை இங்கே வசித்துக் கடத்த விரும்புகிறேன்” என்றான்.(11,12)
யமன், “ஒருவன் உயிர்வாழ, காலத்தால் விதிக்கப்பட்ட சரியான கால அளவை என்னால் உறுதி செய்ய முடியாது. எனவே, காலத்தால் தூண்டப்படாத என்னால் ஒருவனை இங்கே வசிக்க அனுமதிக்க முடியாது. நான் இவ்வுலகில் ஒருவன் செய்யும் அறச்செயல்களை {அல்லது மறச்செயல்களைக்} குறித்துக் கொள்கிறேன்.(13) ஓ! கல்விமானும், பேரொளியும் கொண்ட பிராமணா, உடனே உன் வசிப்பிடத்திற்குத் திரும்புவாயாக. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் மனத்தில் இருப்பது என்ன என்பதையும், நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(14)
பிராமணன், “என்னென்ன செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் பலனை {புண்ணியத்தை} ஈட்டுகிறான். ஓ! அனைத்திலும் சிறந்தவனே, மூவுலகங்களில் (இக்காரியத்தில்) முதன்மையான அதிகாரங்களைக் கொண்டவன் நீயே” என்றான்.(15)
யமன், “ஓ! மறுபிறப்பாள முனியே, கொடைகள் குறித்த சிறப்புவிதிகளைக் கேட்பாயாக. எள்ளுக்கொடையளிப்பது மிக மேன்மையான கொடையாகும். அஃது என்றும் நிலைக்கும் பலனை உண்டாக்குகிறது.(16) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, ஒருவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எள்ளுக்கொடையை அளிக்க வேண்டும். நாள்தோறும் எள்ளுக்கொடையளிப்பதன் மூலம் தன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை நிச்சயம் அடைகிறான்.(17) சிராத்தங்களில் எள்ளுக்கொடையளிப்பது மெச்சப்படுகிறது. உண்மையில், எள்ளுக்கொடையானது மிக மேன்மையான கொடையாகும். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பாயாக.(18) வைசாக {வைகாசி} மாத முழு நிலவு நாளில் {பௌர்ணமியில்} ஒருவன், பிராமணர்களுக்கு எள்ளுக்கொடையளிக்க வேண்டும். ஒருவன் தன்னால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எள்ளை அவர்களை உண்ணச் செய்யவும், தீண்டச்செய்யவும் வேண்டும்.(19) தங்களுக்கு நன்மையை அடைய விரும்புபவர்கள், தங்கள் மொத்த ஆன்மாக்களுடன் தங்கள் வீடுகளில் இதைச் செய்ய வேண்டும்.[1] அதே போல மனிதர்கள் நீர்க்கொடை அளிக்கவும், குடிநீர் விநியோகிக்கும் ஓய்விடங்களை நிறுவவும் வேண்டும்[2].(20) ஒருவன் குளங்களையும், தடாகங்களையும், கிணறுகளையும் வெட்ட வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அத்தகைய செயல்கள் உலகில் அரிதானவையாகும்.(21) எப்போதும் நீர்க்கொடை அளிப்பாயாக. இச்செயல் புண்ணியம் நிறைந்ததாகும். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அத்தகைய கொடைகள் அளிப்பதற்காக நீ சாலையோரங்களில் நீர் பகிர்ந்து கொடுக்கும் ஓய்விடங்களை {நிழற்பந்தல்களை} நிறுவ வேண்டும்.(22) ஒருவன் உண்ட பிறகு, அவனுக்குக் குறிப்பாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடை குடிப்பதற்கான நீராகும்” என்றான் {யமன்}”.(23)பீஷ்மர் தொடர்ந்தார், “அவனிடம் {அந்தப் பிராமணனிடம்} இச்சொற்களை யமன் சொன்னதும், தூதுவன் அவனை மீண்டும் அவனது வசிப்பிடத்தில் கொண்டு விட்டான். அந்தப் பிராமணன் திரும்பியதும், தான் பெற்ற போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான்.(24) இவ்வாறு அவனை அவனது வசிப்பிடத்தில் திரும்ப விட்ட யமனின் தூதவன் {கிங்கரன்} யமனால் உண்மையில் வேண்டப்பட்ட சர்மினைப் பிடித்தான். சர்மினைக் கொண்டு சென்று தன் தலைவனிடம் {யமனிடம்} சொன்னான்.(25) பெருஞ்சக்தி கொண்டவனான அந்த இறந்தோரின் நீதிபதி {யமன்}, அறம்சார்ந்த அந்தப் பிராமணனை வழிபட்டு, சிறிது நேரம் அவனோடு உரையாடிவிட்டு, மீண்டும் அவனது வசிப்பிடத்திற்குக் கொண்டு செல்ல விடைகொடுத்தான். அவனிடமும் யமன் அதே போதனைகளையே சொன்னான். சர்மினும் மனிதர்களின் உலகிற்குத் திரும்பி வந்து யமன் சொன்ன அனைத்தையும் செய்தான்.(27) பித்ருக்குக்கு நன்மை செய்யும் விருப்பத்தின் மூலம் யமன் நீர்க்கொடையைப் போலவே, இருள் நிறைந்த இடங்களுக்கு விளக்கைக் கொடையளிப்பதையும் மெச்சுகிறான். எனவே, இருள்நிறைந்த இடத்தை ஒளியூட்ட விளக்கைக் கொடையளிப்பவன் பித்ருக்களுக்கு நன்மை செய்பவனாகக் கருதப்படுகிறான்.(28) எனவே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்ட ஒருவன் எப்போதும் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும். விளக்கைக் கொடையளிப்பது, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் சுயத்தின் பார்வைத்திறனை அதிகரிக்கிறது[3].(29)ஓ! மன்னா, ரத்தினங்களைக் கொடையளிப்பது மிக மேன்மையான கொடை என்று சொல்லப்படுகிறது. ரத்தினக்கொடையேற்ற ஒரு பிராமணன், ஒரு வேள்வியைச் செய்வதற்காக அவற்றை விற்றால் எப்பிழையும் இழைத்தவனாகான்.(30) ரத்தினக் கொடையேற்று, அவற்றை மீண்டும் பிராமணர்களுக்கே கொடையளிக்கும் பிராமணன் வற்றாத பலனை ஈட்டி, அவன் உண்மையில் யாரிடம் இருந்து அவற்றைப் பெற்றானோ அவனுக்கும் வற்றாத பலனை அளிக்கிறான்.(31) அனைத்துக் கடமைகளையும் அறிந்த மனு, முறையான கட்டுப்பாடுகளை நோற்பவனான ஒருவன், முறையான கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு பிராமணனுக்கு ரத்தினக் கொடையளிக்கும்போது, தானும் வற்றாத பலனை ஈட்டி, அவற்றைப் பெறுபவனுக்கும் வற்றாத பலனை அளிக்கிறான்.(32)
தான் மணந்து கொண்ட மனைவியுடனே மனநிறைவுடன் இருப்பவனும், ஆடைகளைக் கொடையளிப்பவனுமான மனிதன், சிறந்த நிறத்தையும், தனக்கான சிறந்த ஆடைகளையும் ஈட்டிக் கொள்கிறான்.(33) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பசு, பொன், எள் ஆகியவற்றைக் கொடையளிப்பதால் கிட்டும் பலன்களை வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் பல்வேறு பணிப்பாணைகளுக்கு ஏற்புடைய வகையில் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(34) ஒருவன் திருமணம் செய்து கொண்டு, தான் மணந்த மனைவியரிடம் சந்ததியை எழுப்ப {உண்டாக்க} வேண்டும். ஓ!குருகுலத்தின் மகனே, அனைத்து உடைமைகளைக் காட்டிலும் ஆண் குழந்தை {மகனைப்} பெறுவதே முதன்மையானதாகக் கருதப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(35)
கோதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 69-யுதிஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க பசுக்கொடை, நிலக்கொடை ஆகியவற்றைக் குறித்து மீண்டும் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, கொடைகள் குறித்த சிறப்பு விதிகளையும், முக்கியமாக நிலக்கொடை குறித்தும் எனக்கு மீண்டும் சொல்வீராக.(1) அறச்செயல்களைச் செய்யும் பிராமணனுக்கு ஒரு க்ஷத்திரியன் நிலக்கொடை அளிக்க வேண்டும். அத்தகைய பிராமணன் உரிய சடங்குகளுடன் அக்கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், க்ஷத்திரியனைத் தவிர வேறு எவனும் நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல.(2) இப்போது, பலனை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்த மனிதர்கள் கொடையளிக்ககூடிய பொருட்கள் யாவை என்பதைச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியம் குறித்து வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மூன்று கொடைகள் ஒரே பலன்களை உண்டாக்கவல்லவையாக, ஒரே பெயரைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. உண்மையில் அம்மூன்றும் அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கவல்லவையாகும். அத்தகைய குணங்களைக் கொண்டவை பசு, நிலம் மற்றும் அறிவு {கல்வி} என்ற மூன்று பொருட்கள் ஆகும்.(4) வேதங்களில் இருந்து பெறப்பட்ட அறச் சொற்களைத் தன் சீடர்களுக்குச் சொல்லும் மனிதன், நிலம் மற்றும் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டுவதற்கு இணையான பலனை அடைகிறான்.(5) அதே போல, பசுக்களும் (கொடைக்குத்தகுந்த பொருட்களாக) புகழப்படுகின்றன. அவற்றைவிட உயர்ந்த கொடையாக வேறு எந்தப் பொருளும் இருப்பதில்லை. பசுக்கள் உடனே பலனை அளிக்கவல்லவையாக இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய கொடை பெரும்பலனுக்கு வழிவகுக்குமேயன்றி வேறில்லை.(6) பசுக்கள் அனைத்து உயிரினங்களுக்கு அன்னைகளாகின்றன. அவை அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அளிக்கின்றன. தன் செழிப்பை விரும்பும் ஒருவன் எப்போதும் பசுக்கொடையளிக்க வேண்டும்.(7) எவனும் பசுவை உதைக்கவோ, பசுக்களுக்கு மத்தியில் செல்லவோ கூடாது. பசுக்கள், மங்கல இல்லங்களான தேவிகளாக இருக்கின்றன. இதன் காரணமாகவே எப்போதும் அவை வழிபடத்தகுந்தவையாக இருக்கின்றன.(8)பழங்காலத்தில தேவர்கள் ஒரு வேள்வியைச் செய்வதற்காக நிலத்தை உழுதபோது கலப்பையில் பூட்டப்பட்ட இளங்காளைகளைத் தாக்க சாட்டையைய்ப பயன்படுத்தினர். எனவே, அத்தகைய நோக்கத்திற்கு நிலத்தை உழும்போது, காளைகள் மீது சாட்டையைப் பயன்படுத்துவது நிந்தனையையோ, பாவத்தையோ ஈட்டாது. எனினும், வேறு செயல்களில் காளைகள் ஒருபோதும் சாட்டையால் தாக்கப்படக்கூடாது.(9) பசுக்கள் மேயும்போதோ, கிடக்கும்போதோ எவரும் எவ்வழியில் அவற்றை எரிச்சலூட்டக்கூடாது. தாகமாக இருக்கும் பசுக்களுக்குத் தண்ணீர் கிட்டாதபோது, (அவை குளத்திற்கோ, தடாகத்திற்கோ, ஆற்றுக்கோ செல்வதைத் தடுப்பதன் விளைவாக) {அவற்றை எரிச்சலூட்டும்} அத்தகைய மனிதனை வெறுமனே பார்ப்பதன் மூலமே அவற்றால் அவனையும், அவனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிட முடியும்.(10) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சிராத்தங்களில் அல்லது தேவர்களை வழிபடும் இடங்களில் உள்ள பீடங்களே கூடப் பசுஞ்சாணம் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு, புனிதப்படுத்தப்படுகின்றன எனும்போது பசுவை விடப் புனிதமான விலங்குகள் வேறு எவை இருக்கக்கூடும்?(11) தான் உண்பதற்கு முன்பாக, வேறு ஒருவனுக்குச் சொந்தமான பசுவுக்குக் கைப்பிடி நிறையப் புல்லைக் கொடுக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கும் நோன்பை நோற்பவனாகக் கருதப்படுகிறான்.(12) அத்தகைய ஒருவன் பிள்ளைகளையும், புகழ், செலவம், செழிப்பு ஆகியவற்றையும் அடைந்து, அனைத்துத் தீமைகளையும், தீய கனவுகளையும் விலக்குகிறான்” என்றார் {பீஷ்மர்}.(13)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கொடையளிக்கத்தகுந்த பசுக்களுக்கான குறியீடுகள் என்னென்ன? கொடைகளாகக் கொடுக்கக்கூடிய பசுக்கள் என்னென்ன? பசுக்கொடை கொடுக்கப்பட வேண்டிய மனிதர்களின் குணங்கள் என்னென்ன? மேலும், யார் யாருக்கெல்லாம் பசுக்கள் கொடுக்கப்படக்கூடாது?” என்று கேட்டான்.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒழுக்கத்தில் நேர்மையற்ற ஒருவனுக்கோ, பாவம் நிறைந்தவனுக்கோ, பேராசை நிறைந்தவனுக்கோ, வாக்கில் பொய்மை கொண்டவனுக்கோ, பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்குக் காணிக்கையளிக்காதவனுக்கோ பசுவை ஒருபோதும் கொடுக்கக்கூடாது.(15) வேதங்களைக் கற்றவனும், உலகம்சார்ந்த செல்வத்தில் வறியவனும், பல பிள்ளைகளைக் கொண்டவனும், இல்லற நெருப்பைக் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16) ஒரு மனிதன், வேறு ஒருவரிடம் இருந்து கொடையாகப் பெற்றதைத் துணையாகக் கொண்டு பலன் நிறைந்த செயல் எதைச் செய்யும்போதும், அச்செயலால் உண்டாகும் பலனில் ஒரு பகுதியானது, எவனுடைய செல்வத்தைக் கொண்டு அச்செயல் செய்யப்பட்டதோ அவனுக்குரியதாகிறது.(17) ஒருவனை உற்பத்தி செய்தவன் {தந்தை}, ஒருவனைக் காப்பாற்றியவன், ஒருவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்கியவன் ஆகியோர் மூன்று தந்தைமாராகக் கருதப்படுகிறார்கள்.(18) ஆசானுக்குக் கடமையுணர்வுடன் செய்யும் தொண்டு பாவத்தை அழிக்கிறது. செருக்கானது பெரும்புகழையும் அழித்துவிடும். மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது பிள்ளையில்லாப் பழியை அழிக்கிறது, பத்துப் பசுக்களை உடைமையாக்கிக் கொள்வது வறுமைப் பழியை அகற்றுகிறது.(19)
வேதாந்தத்தில் அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் கல்வியைக் கொண்டவனும், ஞானம் நிறைந்தவனும், புலன்களில் முழுக்கட்டுப்பாடு கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவனும், உலகம் சார்ந்த அனைத்துப் பற்றுகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களிடமும் இனிமையான சொற்களைச் சொல்பவனும், பசியால் உந்தப்பட்டாலும் ஒருபோதும் தீச்செயல் ஏதும் செய்யாதவனும், மென்மையானவனும், அமைதியான மனநிலையைக் கொண்டவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனுமான ஒரு பிராமணனுக்கு, அதே நடத்தைகளைக் கொண்டவனும், பிள்ளைகள் மற்றும் மனைவிகளைக் கொண்டவனுமான ஒரு மனிதன் வாழ்வாதாரங்களைக் கொடுக்க வேண்டும்.(20,21) தகுந்த மனிதனுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் எவ்வளவு பலன் கிட்டுமோ, அதே அளவு பாவம் ஒரு பிராமணனுக்கு உரியதைக் களவாடுவதன் மூலம் கிட்டுகிறது. அனைத்துச் சூழ்நிலைகளிலும் பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிடுவது தவிர்க்கப்பட வேண்டும், அவனது மனைவிகள் தொலைவில் வைக்கப்பட வேண்டும்[2]” என்றார் {பீஷ்மர்}.(22)
மன்னன் நிருகன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 70-மன்னன் நிருகனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வழிதவறி வந்த பசு; பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்த மன்னன் நிருகன்; ஓணானாக மாறியது; கிருஷ்ணன் நிருகனை விடுவித்தது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒரு பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிட்டதன் விளைவால் மன்னன் நிருகன் அடைந்த பேரிடரைக் குறித்த கதையை இது தொடர்பாக அறவோர் குறிப்பிடுகின்றனர்.(1) சில காலத்திற்கு முன்பு, யதுகுலத்தைச் சார்ந்த சில குறிப்பிட்ட இளைஞர்கள் நீர் தேடிச் சென்ற போது, புல் மற்றும் கொடிகளால் நன்கு மறைக்கப்பட்ட ஒரு பெரிய கிணற்றை அடைந்தனர்.(2) அதனிலிருந்து நீரெடுக்கும் விருப்பத்தில் அதன் வாயைச் சுற்றியிருந்த கொடிகளை அகற்ற பெரிதும் முயற்சி செய்தனர். அந்த வாயில் தூய்மையடைந்ததும், அதனுள் ஒரு பெரிய ஓணான் வசிப்பதைக் கண்டனர். அந்த இளைஞர்கள் அச்சூழலில் இருந்து அந்த ஓணானை மீட்க மீண்டும் மீண்டும் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(3,4) மலையின் அளவுக்கு ஒப்பாக இருந்த அந்த ஓணானைக் கயிறுகளாலும், தோல் வார்களாலும் விடுவிக்க முயன்றனர். தங்கள் நோக்கத்தில் வெல்ல முடியாத அந்த இளைஞர்கள் ஜனார்த்தனனிடம் சென்றனர்.(5)
அவர்கள் அவனிடம், “கிணற்றின் மொத்த இடத்தையும் ஒரு பெரிய ஓணான் மறைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. எங்கள் சிறந்த முயற்சிகளினாலும் அதை அச்சூழலில் இருந்து மீட்க முடியவில்லை” என்றனர். கிருஷ்ணனிடம் இதுவே சொல்லப்பட்டது.(6) அந்த இடத்திற்குச் சென்ற வாசுதேவன், அந்த ஓணானை வெளியே எடுத்து யாரது என அதனிடம் கேட்டான். அந்த ஓணான் பழங்காலத்தில் பல வேள்விகளைச் செய்து புகழ்பெற்ற மன்னன் நிருகனின் ஆன்மாவைத் தான் கொண்டிருப்பதாக அந்த ஓணான் சொன்னான்.(7)
இச்சொற்களைச் சொன்ன அந்த ஓணானிடம் மாதவன், “நீ அறச்செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறாய். நீ எப்பாவத்தையும் இழைக்கவில்லை. ஓ!மன்னா, உனக்கு ஏன் இந்தத் துன்பம் நிறைந்த கதி ஏற்பட்டது? இஃது ஏன்? எதனால் ஏற்பட்டது?(8) நூறும், ஆயிரமும், மீண்டும் நூறும், எண்ணூறும் பத்து லட்சமுமான பசுக்களை நீ கொடையளித்திருப்பதாக நாங்கள் கேட்டிருக்கிறோம். எனவே, இந்தக் கதி உனக்கு ஏன் ஏற்பட்டது?” என்று கேட்டான்.(9)
அப்போது நிருகன் கிருஷ்ணனிடம் மறுமொழியாக, “ஒருநாள், இல்லற நெருப்பை முறையாக வழிபட்டு வந்த ஒரு பிராமணருக்குச் சொந்தமான பசுவானது, உரிமையாளர் இல்லாதபோது அவரது வசிப்பிடத்தில் இருந்து தப்பி என் மந்தையில் நுழைந்துவிட்டது.(10) என்னுடைய மேய்ப்பர்கள் அந்தப் பசுவைத் தங்கள் ஆயிரம் பசுக்களையில் அதையும் சேர்த்துக் கொண்டனர். சமயத்தில், சொர்க்கத்தில் மகிழ்ச்சியை அடைய விரும்பி நான் அந்தப் பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்தேன்.(11) உண்னையான உரிமையாளர் வீடு திரும்பியதும், தொலைந்து போன தன் பசுவைத் தேடி இறுதியாக மற்றொருவருடைய வீட்டில் அதைக் கண்டடைந்தார். அவளைக் கண்டதும் அதன் உரிமையாளர், “இஃது என்னுடைய பசு” என்றார்.(12) மற்றொருவர் தன் கூற்றை ஆதரிக்கவும், அவ்விருவருக்குள்ளும் சச்சரவு எழுந்து இறுதியாகக் கோபத்துடன் என்னிடம் வந்தனர்.
அவர்களில் ஒருவர் என்னிடம், “இந்தப் பசுவை எனக்குக் கொடையளித்தவன் நீயே” என்றார். மற்றொருவர், “இந்தப் பசு என்னுடையவள், நீ அவளை என்னிடம் இருந்து களவு செய்துவிட்டாய்” என்றார்.(13)
நான் யாரிடம் பசுவைக் கொடுத்திருந்தேனோ அவரிடம் நூற்றுக்கணக்கான வேறு பசுக்களுக்கு மாற்றாக அந்தப் பசுவை வேண்டிக் கேட்டேன். ஆவல் நிறைந்த என் வேண்டுதலுக்கு இணங்காமல் அவர் என்னிடம்,(14) “நான் பெற்ற பசுவானவள் இடத்திற்கும் காலத்திற்கும் நன்கு பொருந்தியிருக்கிறாள். அவள் அமைதியானவளாகவும், எங்களை மிகவும் விரும்புபவளாகவும் இருப்பதையும் தவிர்த்து அபரிமிதமான பாலையும் தருகிறாள். அவள் தரும் பால் மிக இனிமையானதாக இருக்கிறது. அவள் என் வீட்டில் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாகக் கருதப்படுகிறாள்.(15) அதையும் தவிர, மெலிந்து பலவீனமாக இருக்கும் என் பிள்ளைக்கு அவளே உணவூட்டுக்கிறாள். என்னால் அவளைக் கொடுக்கவே இயலாது” என்றார். இச்சொற்களைச் சொல்லிவிட்டு அந்தப் பிராமணர் சென்று விட்டார்.(16)
பிறகு நான் அந்த மற்றொரு பிராமணரிடம் அவருக்கு ஒரு மாற்றைக் கொடுக்கும் வகையில், “இந்த ஒரு பசுவுக்குப் பதிலாக நூறாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொள்வீராக” என்றேன்.(17)
எனினும், அந்தப் பிராமணர் என்னிடம் மறுமொழியாக, “அரச வகையைச் சார்ந்தோரிடம் இருந்து நான் கொடைகளை ஏற்பதில்லை. ஆதரவில்லாமலே என்னால் செயல்பட இயலும். காலத்தைக் கடத்தாமல் என் பசுவையே எனக்குக் கொடுப்பாயாக” என்றார். ஓ! மதுசூதனா, இவ்வாறே அந்தப் பிராமணர் என்னிடம் பேசினார்.(18)
நான் அவருக்குப் பொன், வெள்ளி, குதிரைகள் மற்றும் தேர்களையும் கொடையாகக் கொடுக்க முன்வந்தேன். அந்த முதன்மையான பிராமணரோ அக்கொடைகள் எதையும் ஏற்க மறுத்துச் சென்றுவிட்டார்.(19) அதே வேளையில், தடுக்கப்படமுடியாத காலத்தின் ஆதிக்கத்தால் உந்தப்பட்டு நான் இவ்வுலகில் இருந்து சென்றேன். பித்ரு லோகத்திற்குச் சென்ற நான் அங்கிருந்து இறந்தோரின் மன்னனிடம் {யமனிடம்} அழைத்துச் செல்லப்பட்டேன்.(20)
என்னை முறையாக வழிபட்ட யமன், என்னிடம், “ஓ! மன்னா, உன் அறச்செயல்களின் கதியை உறுதிசெய்ய முடியவில்லை.(21) எனினும், ஒரு சிறிய பாவம் நீ அறியாமலேயே உன்னால் இழைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாவத்திற்கான தண்டனையை இப்போதோ, பிறகோ நீ விரும்பியவாறு அனுபவித்துக் கொள்வாயாக.(22) நீ (அரியணை ஏறியதும் சொந்த அனுபவம் கொண்ட அனைத்து மனிதர்களையும்) காப்பாய் என உறுதிமொழியேற்றாய். நீ கூறிய அந்த உறுதிமொழியானது உன்னால் கண்டிப்புடன் காக்கப்படவில்லை. நீ ஒரு பிராமணனுக்கு உரியதை அபகரித்தாய். இந்த இருவகைப் பாவத்தை நீ இழைத்திருக்கிறாய்” என்றான்.(23)
நான், “முதலில் தண்டனை எனும் துன்பத்தை நான் அனுபவிக்கப் போகிறேன், அது முடிந்ததும், ஓ! தலைவா, எனக்காகக் காத்திருக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பேன்” என்றேன். நான் இச்சொற்களை இறந்தோரின் மன்னனிடம் {யமனிடம்} சொன்னதும் பூமியில் விழுந்தேன்.(24)
அவ்வாறு விழுந்தாலும், யமனால் உரக்கச் சொல்லப்பட்ட சொற்களை என் காதுகள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தச் சொற்கள், “வசுதேவனின் மகனான ஜனார்த்தனன் உன்னைக் காப்பான்.(25) ஓராயிரம் வருடங்கள் நிறைவடைந்ததும், உன் பாவச்செயலுக்கான தண்டனை தீரும்போது, உன் அறச்செயல்களின் மூலம் நீ ஈட்டிய வற்றாத இன்ப உலகங்கள் பலவற்றை நீ அடைவாய்” என்பதாகும்.(26)
தலைகீழே விழுந்த நான், இடைநிலை வகையைச் சார்ந்த ஓர் உயிரினமாக வடிவம் மாறி இந்தக் கிணற்றுக்குள் கிடப்பதைக் கண்டேன். எனினும் என் நினைவு என்னைவிட்ட அகலவில்லை.(27) இன்று உன் மூலமாக நான் மீட்கப்பட்டேன். உன் தவங்களின் பலத்தைத் தவிரச் சாட்சியங்கூறக் கூடியது வேறென்ன? ஓ! கிருஷ்ணா, உன் அனுமதியுடன் நான் விடைபெற வேண்டும். நான் சொர்க்கத்திற்கு உயர விரும்புகிறேன்” என்றான் {நிருகன்}.(28)
கிருஷ்ணனால் அனுமதிக்கப்பட்ட மன்னன் நிருகன், அவனைத் தலைவணங்கியபிறகு ஒரு தெய்வீகத் தேரில் ஏறிச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(29) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நிருகன் இவ்வாறு சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வாசுதேவன் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான்.(30) {அவன்}, “ஒரு பிராமணனுக்கு உரிய எதையும் எவனும் அறிந்தே அபகரிக்கக்கூடாது. ஒரு பிராமணனின் உடைமை அபகரிக்கப்பட்டால் அஃது அந்தப் பிராமணனின் பசு மன்னன் நிருகனை அழித்தது போலவே அவ்வாறு அபகரித்தவனை அழித்துவிடும்” {என்றான் கிருஷ்ணன்}.(31)
ஓ! பார்த்தா, நல்லோரைச் சந்திப்பது ஒருபோதும் கனியற்றுப் போகாது என்பதை நான் மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ஒரு நல்லோனைச் சந்தித்ததால் நரகத்தில் இருந்து மன்னன் நிருகன் மீட்கப்பட்டதைப் பார்.(32) ஒரு கொடையானது பலனை விளைவிப்பதைப் போலவே, ஒரு கொள்ளைச் செயலும் பாவத்திற்கே வழிவகுக்கிறது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் பசுக்களுக்கு எத்தீங்கையும் இழைப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)
நாசிகேதன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 71-யமன் பசுக்கொடை குறித்து நாசிகேதனுக்குச் சொன்ன சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாவமற்றவரே, பசுக்கொடை அளிப்பதன் மூலம் அடையப்படும் பலன்களை இன்னும் விரிவாக எனக்குச் சொல்வீராக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது சொற்களில் ஒருபோதும் நான் தணிவடைவதில்லை” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழைய வரலாற்றில் முனிவர் ஔத்தாலகிக்கும் நாசிகேதன் என்றழைக்கப்பட்டவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2)
ஒரு காலத்தில் பெரும் நுண்ணறிவுடன் கூடிய முனிவர் ஔத்தாலகி தன் மகனான நாசிகேதனை அணுகி, அவனிடம், “நீ எனக்குப் பணிவிடை செய்து தொண்டாற்றுவாயாக” என்றார்.(3) தாம் நோற்றுவந்த நோன்பின் நிறைவுக்குப் பிறகு அந்தப் பெரும் முனிவர் மீண்டும் தமது மகனிடம், “தூய்மைச் சடங்கைச் செய்வதில் ஈடுபட்ட நான், வேத கல்வியில் ஆழமாக ஈர்க்கப்பட்டதால்,(4) விறகுகள், தர்ப்பை புற்கள், மலர்கள், நீர்க்குடுவை மற்றும் நான் சேகரித்து வைத்திருந்த கீரைகள் ஆகியவற்றைக் கொண்டுவர மறந்துவிட்டேன். ஆற்றங்கரையில் இருந்து அந்தப் பொருட்களை நீ என்னிடம் கொண்டு வருவாயாக” என்றார்.(5)
குறிப்பிடப்பட்ட அந்த இடத்திற்குச் சென்ற அந்த மகன், அந்தப் பொருட்கள் அனைத்தும் ஓடையால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டான். தன் தந்தையிடம் திரும்பி வந்த அவன், “அந்தப் பொருட்களை நான் காணவில்லை” என்றான்.(6)
பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தவரும், உயர்ந்த தவத்தகுதியைக் கொண்டவருமான முனிவர் ஔத்தாலகி, திடீரெனக் கோபமடைந்து, “நீ இன்று யமனைச் சந்திப்பாய்” என்று தன் மகனை சபித்துவிட்டார்.(7)
இவ்வாறு தன் தந்தையின் இடி வாக்கால் தாக்கப்பட்ட மகன், கூப்பிய கரங்களுடன் “என்னிடம் நிறைவடைவீராக” என்றான். எனினும், அவன் விரைவில் பூமியில் விழுந்து உயிரை இழந்தான்.(8)
பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் நாசிகேதனைக் கண்ட அவனது தந்தையும் துயரத்தால் தன் உணர்வுகளை இழந்தார். அவரும், “ஐயோ, நான் என்ன செய்துவிட்டேன்” என்று வருந்தி பூமியில் விழுந்தார்.(9) துயரத்தால் நிறைந்திருந்த அவர் அழுது புலம்பியதிலேயே எஞ்சிய நாள் முழுவதும் கடந்து இரவும் வந்தது.(10)
ஓ! குரு குலத்தவனே, அப்போது தன் தந்தையின் கண்ணீரால் நனைந்திருந்த நாசிகேதன், தான் கிடந்த தர்ப்பைப் புல் விரிப்பில் உயிர் திரும்புவதற்கான அறிகுறிகளை வெளியிட்டான். தந்தையின் கண்ணீரில் அவன் உயிர் மீண்டது, மங்கலமாரியில் நனைந்த வித்துகள் முளைப்பதற்கு ஒப்பானதாக இருந்தது.(11) அப்போதே நினைவு திரும்பியிருந்த மகன் இன்னும் பலவீனமாகவே இருந்தான். நறுமணக் களிம்புகள் பூசப்பட்ட உடலுடன் கூடிய அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து அப்போதுதான் எழுந்தவனைப் போலத் தெரிந்தான். முனிவர் {ஔத்தாலகி} அவனிடம்,(12) “ஓ! மகனே, உன் செயல்களின் மூலம் நீ மங்கல உலகங்களை அடைந்தாயா? நீ என்னிடம் மீண்டு வந்தது நற்பேறே. உன்னுடல் மானுட உடலாகத் தெரியவில்லையே” என்று கேட்டார்.(13)
இவ்வாறு உயர் ஆன்மாவான தந்தை கேட்டதும், தன் கண்களாலேயே அனைத்தையும் கண்ட நாசிகேதன், முனிவர்களுக்கு மத்தியில் பின்வரும் பதிலை அளித்தான்.(14) {அவன்}, “உமது ஆணைக்குக் கீழ்ப்படிந்து இனிமையான பிரகாசத்துடன் கூடிய பரந்த யமலோகத்திற்குச் சென்றேன். அங்கே ஆயிரம் யோஜனைகள் பரந்திருப்பதும், அனைத்துப் பகுதியிலும் பொன்னொளி வீசுவதுமான ஓர் அரண்மனையைக் கண்டேன்.(15) யமன், தன்னை முகம் நோக்கி வரும் என்னைக் கண்டதும், தன் பணியாட்களிடம், “இவனுக்கு நல்ல இருக்கையைக் கொடுப்பீராக” என்றான். உண்மையில் இறந்தோரின் மன்னனான அவன் உமது நிமித்தமாகவே அர்க்கியம் மற்றும் பிற பொருட்களுடன் என்னை வழிபட்டான்.(16)
யமனால் இவ்வாறு வழிபடப்பட்டு, அவனது அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்த நான், மென்மையாக அவனிடம், “ஓ! இறந்தோரின் நீதிபதியே {அறமன்னா}, நான் உன் வசிப்பிடத்திற்கு வந்திருக்கிறேன். என் செயல்களுக்குத் தகுந்த உலகங்களை எனக்கு ஒதுக்குவாயாக” என்றேன்.(17)
யமன் {நாசிகேதனிடம்}, “ஓ! இனியவனே, நீ இன்னும் இறக்கவில்லை. தவசக்தி கொண்ட உன் தந்தை “யமனைச் சந்திப்பாயாக” என்றார். உன் தந்தையின் சக்தி சுடர்மிக்க நெருப்பைப் போன்றதாகும். என்னால் அவரது வாக்கைப் பொய்யாக்க இயலாது.(18) நீ என்னைப் பார்த்துவிட்டாய். ஓ! குழந்தாய், இனி நீ செல்லலாம். உன் உடலை உண்டாக்கியவர் உனக்காக அழுது புலம்புகிறார். நீ என் அன்புக்குரிய விருந்தினனாவாய். உன் இதயத்தில் உள்ள விருப்பத்தைச் சொன்னால் நான் உனக்கு அருள்வேன். நீ வளர்க்கும் விருப்பம் எதையும் வேண்டுவாயாக” என்றான்.(19)
இறந்தோரின் மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட நான், அவனிடம், “எந்தப் பயணியும் திரும்பிச் செல்ல முடியாத உனது ஆட்சிப்பகுதிக்குள் நான் வந்துவிட்டேன். ஓ! இறந்தோரின் மன்னா, உண்மையில் நான் உன் கவனத்தை ஈர்க்கத்தகுந்தவனாக இருக்கிறேனெனில் அறச்செயல் செய்தோருக்கென ஒதுக்கப்படுபவையும், உயர்ந்த செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டவையுமான உலகங்களைப் பார்க்க விரும்புகிறேன்” என்றேன்.(20)
இவ்வாறு என்னால் கேட்டுக்கொள்ளப்பட்ட யமன், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட பிரகாசமிக்க ஒரு வாகனத்தில் என்னை ஏறச் செய்தான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அந்த வாகனத்தில் என்னைச் சுமந்து சென்று அறவோருக்கென ஒதுக்கப்பட்ட இன்பம் நிறைந்த உலகங்களை எனக்குக் காட்டினான்.(21) நான் அந்த உலகங்களில் உயர் ஆன்ம மனிதர்களுக்காக ஒதுக்கப்படும் பெரும் பிரகாசமிக்க மாளிகைகள் பலவற்றைக் கண்டேன். அந்த மாளிகைகள் பல்வேறு வடிவங்களிலும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன.(22) சந்திர வட்டிலைப் போலப் பிரகாசமாக இருந்த அவை கிண்கிணி மணி வரிசையால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கானவை பல அடுக்குக் கொண்டவையாக இருந்தன. அவற்றுக்குள் இனிய தோட்டங்களும், காடுகளும், தெளிந்த நீர்த்தேக்கங்களும் இருந்தன.(23) வைடூரியம் மற்றும் சூரியப் பிரகாசத்தைக் கொண்டவையும், வெள்ளி மற்றும் பொன்னாலானவையுமான அவை தங்கள் நிறத்தில் காலைச் சூரியனுக்கு ஒப்பானவையாக இருந்தன.(24) அவற்றுக்குள் பல உணவு மலைகளும், அனுபவிக்கத்தக்க பொருட்களும், ஆட்கள் மற்றும் படுக்கைகளும் அபரிமிதமாக இருந்தன. அவற்றுக்குள் அனைத்து விருப்பங்கள் கனியும் நிலையையும் அருளவல்ல மரங்கள் பலவும் இருந்தன.(25)
அங்கே பல ஆறுகளும், சாலைகளும், பரந்த மண்டபங்களும், தடாகங்களும், பெரிய ஏரிகளும் இருந்தன. சடசடப்பொலி கொண்ட சக்கரங்களுடன் கூடியவையும், சிறந்த தேர்கள் பூட்டப்பட்டவையுமான ஆயிரக்கணக்கான தேர்கள் அங்கே காணப்படுகின்றன.(26) பாலோடும் ஆறுகள் பலவும், நெய்யாலான மலைகள் பலவும், தெளிந்த நீரைக் கொண்ட பெரிய நீர்த்தேக்கங்களும் அங்கே இருந்தன. உண்மையில் இதற்கு முன்பு என்னால் காணப்படாதவையும், இறந்தோரின் மன்னனால அங்கீகரிக்கப்பட்டவையுமான இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை நான் கண்டேன்.(27) அப்பொருட்கள் அனைத்தையும் கண்ட நான், பழைமையானவனும், பலமிக்கவனுமான அந்த இறந்தோரின் நீதிபதியிடம் {யமனிடம்}, “பாலும், நெய்யும் நித்தியமாக ஓடும் இந்த ஆறுகள் யாருடைய பயன்பாட்டுக்கும் அனுபவத்திற்கும் விதிக்கப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டேன்.(28)
யமன் {நாசிகேதனிடம்}, “நோய் தடுக்கும் பால் மற்றும் நெய்யாலான இந்த ஓடைகள் மனிதர்களின உலகில் கொடையளிக்கும் அறவோரின் இன்பத்திற்காக இருக்கின்றன என்பதை அறிவாயாக. அனைத்து வகைக் கவலைகளில் இருந்தும் விடுபட்ட மாளிகைகள் நிறைந்த வேறு நித்திய உலகங்களும் இருக்கின்றன. அவை பசுக்கொடை அளிப்பதில் ஈடுபடும் மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.(29) வெறுமனே பசுக்கொடை மட்டுமே புகழத்தக்கதன்று. பொருத்தமுடைமை, அல்லது பசுக்கொடை கொடுக்கப்படும் நபர், அந்தக் கொடைகளை அளிக்கும் காலம், கொடையாக அளிக்கப்படும் பசுவின் வகை, கொடையளிக்கும்போது நோற்கப்படும் சடங்குகள் ஆகியனவும் கருத்தில் கொள்ளத்தக்கனவாகும். பசுக்கொடையானது, (அவற்றைப் பெறும்) பிராமணர்கள் மற்றும் (கொடுக்கப்படும்) பசுக்கள் ஆகிய இரண்டின் குறிப்பிடத்தக்க தகுதிகளையும் உறுதிசெய்து கொண்டபிறகு கொடுக்கப்பட வேண்டும். எவனுடைய வசிப்பிடத்தில் நெருப்பு அல்லது சூரியனால் துன்பப்பட நேருமோ அவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(30)
வேதங்களை அறிந்தவனும், கடுந்தவங்களைச் செய்தவனும், வேள்விகளைச் செய்பவனுமான பிராமணனே பசுக்கொடை பெறுவதற்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான். துன்பம் நிறைந்த சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவை, அல்லது உணவூட்டவும் வளர்க்கவும் போதிய வழிமுறைகள் இல்லாத வறிய இல்லறவாசிகளால் கொடுக்கப்படுபவை ஆகிய பசுக்கள் இந்தக் காரணங்களுக்காகவே உயர்ந்த மதிப்புள்ளவையாகக் கருதப்படுகின்றன[1].(31) பசுக்கொடையளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகளுக்கு உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே பருகி வாழ்ந்து, வெறும் நிலத்தில் உறங்கி, அவற்றைப் பெறும் பிராமணர்களை (வேறு கொடைகளாலும்) நிறைவடையச் செய்த பிறகு கொடையளிக்க வேண்டும்.(32) கொடையளிக்கப்படும் பசுவுடன் அவற்றின் கன்றுகளும் துணையாகச் செல்ல வேண்டும். மேலும் அவை உரிய பருவகாலங்களில் நல்ல கன்றுகளை ஈனக்கூடியவையாக இருக்க வேண்டும். அவ்வாறு கொடையளிகப்படும்போது அவற்றோடு சேர்த்து பிற பொருட்களுக்கும் துணையாகக் கொடுக்கப்பட வேண்டும். கொடையளித்த பிறகு, அந்தக் கொடையாளி, பிறவகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து, நோய் தடுக்கும் பாலை மட்டுமே மூன்று நாட்கள் உண்டு வாழ வேண்டும்.(33)குற்றமற்றதும், உரிய இடைவெளிகளில் நல்ல கன்றுகளை ஈனக்கூடியதும், உரிமையாளரின் வீட்டில் இருந்து தப்பி ஓடாததுமான ஒரு பசுவுடன் துணையாகக் கறப்பதற்குரிய வெண்கல பாத்திரத்தையும் கொடையாக அளிக்கும் ஒருவன் அந்த விலங்கின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுள்ள காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான். நன்கு பயிற்சியளிக்கப்பட்டதும், சுமைகளை இழுக்கவல்லதும், பலமுள்ளதும், வயதில் இளமையானதும், எந்தத் தொல்லையும் கொடுக்காததும், பெரிய வடிவில் உள்ளதும், சக்தியுடன் கூடியதுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் ஒருவன், பசுக்களைக் கொடையளிப்பவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், அறவோரால் அங்கீகரிக்கப்படுபவையுமான உலகங்களை அனுபவிக்கிறான்.(34)
பசுக்களிடம் மென்மையாக நடந்து கொள்பவனாக அறியப்படுபவனும், பசுக்களையே புகலிடமாகக் கொள்பவனும், நன்றி மறவாதவனும், தனக்கென வாழ்வாதாரம் ஏதுமற்றவனுமான ஒருவனே பசுக்கொடை பெறத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான். ஒரு முதிர்ந்த மனிதன் நோய்வாய்ப்படும்போதோ, ஒரு பஞ்சம் ஏற்படும்போதோ, ஒரு பிராமணன் ஒரு வேள்வியைச் செய்ய எண்ணும்போதோ, ஓர் உழவன் உழவுக்காக உழ விரும்பும்போதோ, பிள்ளை பெறும் நோக்கத்திற்காக ஹோமத் திறன் மூலம் ஒருவன் மகனைப் பெறும்போதோ,(35) ஒருவனுடைய ஆசானின் பயன்பாட்டிற்காகவோ, ஒரு குழந்தையை வளர்ப்பதற்காகவோ ஒருவன் தன் அன்புக்குரிய பசுவைக் கொடையளிக்கலாம். (பசுக்கொடை அளிக்கும் காரியத்தில்) காலம் மற்றும் இடம் குறித்த வகையில் மெச்சத்தகுந்த கருத்துகள் இவையே. பெருமளவு பாலைத் தருபவையோ, (பணிவு மற்றும் வேறு பண்புகளுக்கென) நன்கறியப்பட்டவையோ, விலைக்கு வாங்கப்பட்டவையோ, கல்விக்கான வெகுமதியாக அடையப்பட்டவையோ, (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) உயிரினங்களுக்கு மாற்றாகக் காணிக்கையாக அடையப்பட்டவையோ, கரங்களின் வலிமையால் வெல்லப்பட்டவையோ, (மாமனார் மற்றும் மனைவியின் உறவினர்களிடம் இருந்து) திருமண வரதட்சணையாகப் பெறப்பட்டவையோ அத்தகைய பசுக்களே கொடையளிக்கத் தகுந்தவை” என்றான் {யமன்}”.(36)
நாசிகேதன் {தந்தை ஔத்தாலகரிடம்} தொடர்ந்தான், “வைவஸ்வதனின் இச்சொற்களைக் கேட்ட நான் மீண்டும் அவனிடம், “பசுக்களைப் பெற முடியாத போது, எந்தப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் கொடையாளிகள் பசுக்கொடை அளிக்கும் மனிதர்களுக்காக ஓதுக்கப்படும் உலகங்களை அடைய முடியும்” என்று கேட்டேன்.(37)
என்னால் கேட்கப்பட்டவனும், ஞானியுமான யமன், பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம் அடையப்படும் கதியை மேலும் விளக்கினான். அவன், “பசுக்கள் இல்லாத போது ஒரு மனிதன் பசுக்களுக்குப் பதிலாகக் கருதப்படுபவற்றைக் கொடையளிப்பதன் மூலம் பசுக்கொடை அளித்த பலனைப் பெறுகிறான்.(38) பசுக்கள் இல்லாத போது, நோன்பை நோற்று, நெய்யாலான ஒரு பசுவைக் கொடையளிக்கும் ஒருவன் தன் பயன்பாட்டுக்கு நெய் ஆறுகளை அடைவான். அவை அன்புக்குரிய தன் குழந்தையை அணுகும் அன்னையைப் போல அவனை அணுகும்.(39) நெய்யாலான பசுவும் இல்லாத போது, நோன்பை நோற்று எள்ளாலான பசுவைக் கொடையளிக்கும் ஒருவன், இவ்வுலகின் துன்பங்கள் அனைத்தையும் கடந்து, மறுமையில் நீ காணும் பாலாறுகளில் இருந்து எழும் பெரும் மகிழ்ச்சிகளை அனுபவிக்கிறான்.(40) எள்ளாலான பசுவும் இல்லாத போது, நீராலான பசுவைக் கொடையளிக்கும் ஒருவன், மகிழ்ச்சிமிக்க இந்த உலகங்களுக்கு வருவதில் வென்று, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளவல்லதும், தெளிந்த நீரைக் கொண்டதும், குளுமையானதுமான இந்த ஆற்றையும் அனுபவிக்கிறான்” என்றான் {யமன்}.(41)
ஓ! மங்கா மகிமை கொண்டவரே, இறந்தோரின் மன்னன் {யமன்}, நான் அவனுடைய விருந்தினனாக இருக்கையில் இவையாவற்றையும் விளக்கிச் சொன்ன போது, அவன் காட்டிய அற்புதங்கள் அனைத்தையும் கண்டு பேரின்பத்தையே உணர்ந்தேன்.(42) இனி நான் உமக்கு நிச்சயம் ஏற்புடையதைச் சொல்லப் போகிறேன். நான் இப்போது அதிகச் செல்வம் தேவைப்படாத ஒரு பெரும் வேள்வியைப் பெற்றிருக்கிறேன். ஓ! தந்தையே, (பசுக்கொடையால் அமைந்த) அந்த வேள்வி என்னில் இருந்து உண்டாவதாகச் சொல்லப்படலாம். அதைப் பிறரும் அடைவார்கள். அது வேத விதிகளுக்கு இணக்கமற்றதல்ல.(43) இறந்தோரின் பெரும் மன்னனைக் காண இயன்றதால், நீர் என்னைச் சபித்தது எனக்குச் சாபமாக அமையாமல், உண்மையில் அருளாகவே அமைந்தது. அங்கே கொடைகளுக்குக் கிட்டும் வெகுமதிகளைக் கண்டேன். எனவே, ஓ! பேரான்மாவே, என் மனத்தில் ஐயமேதும் மறைந்திராமல் இனி கொடையெனும் கடமையைப் பயில்வேன்.(44)
ஓ! பெரும் முனிவரே, அறவோனான யமன், மகிழ்ச்சியால் நிறைந்தவனாக என்னிடம் மீண்டும் மீண்டும், “அடிக்கடி கொடையளிக்கும் ஒருவன் மனத்தூய்மையை அடைவதில் வென்ற பிறகு குறிப்பாகப் பசுக்கொடையை அளிக்கிறான்.(45) (கொடைகள் குறித்த) இவ்வுரை புனிதம் நிறைந்ததாகும். கொடைகள் குறித்த கடமைகளை ஒருபோதும் அவமதிக்காதே. மேலும், கொடைகளானவை தகுந்த மனிதர்களுக்கு, தகுந்த காலம் மற்றும் இடத்தில் வழங்கப்பட வேண்டும். எனவே, எப்போதும் நீ பசுக்கொடை அளிப்பாயாக. இக்காரியத்தில் ஒருபோதும் ஐயமேதும் கொள்ளாதே.(46) பழங்காலத்தில், கொடைகளின் பாதைகளில் அர்ப்பணிப்புள்ள உயர் ஆன்ம மனிதர்கள் பலர் பசுக்கொடைகளை அளித்துவந்தனர். கடுந்தவங்களைச் செய்வதற்கு அஞ்சிய அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கபடி கொடைகளை அளித்து வந்தனர்.(47) காலத்தில் அவர்கள் தங்கள் செருக்கு, பகட்டு ஆகிய மிகையுணர்வுகள் அனைத்தையும் கைவிட்டுத் தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தங்கள் மற்றும் அறச்செயல்கள் அனைத்திலும் ஈடுபடும் அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்க பசுக்கொடைகளை அளித்து, அச்செயல்களுக்கு வெகுமதியாகச் சொர்க்கத்தை அடைந்து, அத்தகைய அறத்திற்காகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.(48)
ஒருவன், காம்யாஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படும் சந்திரனின் எட்டாம் நாளில் (ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி) கொடைபெறுவோரின் தகுதியை உறுதி செய்து கொண்டு முறையாக ஈட்டப்பட்ட பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். கொடையளித்த பிறகு, ஒருவன் பத்து நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் (வேறு வகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து) பசுவின் பால், அவற்றின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ வேண்டும்.(49) ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன் தெய்வீகப் பசுவைக் கொடையளித்ததற்கு இணையானதாகும். இரு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வேதங்களின் தேர்ச்சி என்ற வெகுமதியை அடைகிறான். பசுக்கள் பூட்டப்பட்ட தேர்கள் மற்றும் வாகனங்களைக் கொடையாளிப்பதன் மூலம் ஒருவன் புனித நீர்நிலைகளில் நீராடிய பலனை அடைகிறான். கபிலை இனப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(50) உண்மையில், முறையான வழியில் அடையப்பட்டதும், கபிலை வகையைச் சார்ந்ததுமான ஒரே ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் தான் இழைத்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பசுத் தரும் பாலைவிட (சுவையில்) உயர்ந்தது வேறேதும் அல்ல. பசுக்கொடையே உண்மையில் மிக மேன்மையான கொடையாகக் கருதப்படுகிறது.(51) பசுவானது பாலைத் தருவதன் மூலம் உலகங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்கிறது. மேலும், பசுவே உயிரினங்கள் உண்ணும் உணவை உண்டாக்குகிறது. பசுச் செய்யும் தொண்டின் அளவை அறிந்த ஒருவன் தன் இதயத்தில் அதன் மீது அன்பை வளர்க்கவில்லையெனில் அவன் நிச்சயம் நரகில் மூழ்கக் கூடிய பாவியாவான்[2].(52)ஒருவன் ஆயிரம், நூறு, பத்து, அல்லது ஐந்து பசுக்களைக் கொடையளிப்பவனும், உரிய இடைவெளிகளில் நல்ல கன்றுகளை ஈனும் ஒரே ஒரு பசுவை அறம் சார்ந்த ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவனுமான ஒருவன், அந்தப் பசுவை அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் புனித நீர் கொண்ட ஆற்றின் வடிவில் நிச்சயம் சொர்க்கத்தில் காண்பான்.(53) பசு அளிக்கும் செழிப்பு மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தவரையில், பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் பசுக்கள் வழங்கும் பாதுகாப்புக் காரியத்தில் பசுக்கள் பூமியில் விழும் சூரியக் கதிர்களுக்கு இணையானவையாக இருக்கின்றன. பசுவைக் குறிக்கும் சொல், சூரியக்கதிர்களையும் குறிப்பதாக இருக்கிறது. பசுக்கொடையளிப்பவன், பூமியின் பெரும்பகுதியில் பரந்திருக்கும் ஒரு பெரிய குலத்தை உண்டாக்குவான். எனவே, பசுக்கொடையளிக்கும் ஒருவன் இரண்டாம் சூரியனைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்வான்.(54) பசுக்கொடை அளிக்கும் காரியத்தில் ஒரு சீடன் தன் ஆசானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய சீடன் ஒவ்வொருமுறையும் சொர்க்கத்திற்குச் செல்வதில் நிச்சயம் வெல்கிறான். (அறச் செயல்களைச் செய்யுங்காரியத்தில்) ஆசானைத் தேர்ந்தெடுப்பது, விதிகளுக்கு இணக்கமான மனிதர்களால் உயர்ந்த கடமையாகக் கருதப்படுகிறது. உண்மையில், இதுவே தொடக்க விதியாகும். (பசுக்கொடையைப் பொறுத்தவரையில்) அனைத்து விதிகளும் அதையே சார்ந்திருக்கின்றன.(55) ஆய்வுக்குப் பிறகு, பிராமணர்களுக்கு மத்தியில் தகுந்த மனிதனைத் தேர்ந்தெடுக்கும் ஒருவன், முறையான வழிமுறைகளில் அடையப்பட்ட ஒரு பசுவை அவனுக்குக் கொடையளித்து, அந்தக் கொடையை அவனை ஏற்கச் செய்ய வேண்டும். தேவர்கள், மனிதர்கள் மற்றும் நாமும், பிறருக்கு நல்லதை விரும்பும் காரியத்தில், “உன் அறத்தின் விளைவாகக் கொடைகளுக்குரிய பலன்கள் உனதாகாட்டும்” என்று சொல்கிறோம்” என்றான் {யமன்}.(56)
ஓ! மறுபிறப்பாள முனிவரே, இறந்தோரின் நீதபதி இவ்வாறே என்னிடம் பேசினான். பிறகு நான் அறவோனான அந்த யமனுக்குத் தலைவணங்கினேன். அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனது ஆட்சிப்பகுதிகளை விட்டகன்று உமது பாதங்களின் அடியில் வந்து சேர்ந்தேன்” என்றான் {நாசிகேதன்}[3].(57)
இந்திரன் கேள்விகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 72-பசுக்கொடை தொடர்பாகப் பிரம்மனிடம் இந்திரன் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, முனிவர் நாசிகேதர் பசுக்கொடை குறித்துப் பேசியதை நீர் எனக்குச் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, அந்தச் செயலின் பலனையும், முன்சிறப்புகளையும் குறித்தும் சொன்னீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கப் பாட்டா, ஒரே ஒரே பிழையின் விளைவாக உயர் ஆன்ம மன்னன் நிருகனுக்கு நேர்ந்த துன்பத்தின் அதீத விளவையும் எனக்குச் சொன்னீர்.(2) அவன் (ஓணானின் வடிவில்) நீண்ட காலம் துவாராவதியில் வசிக்க நேர்ந்ததையும், அவனது பரிதாபகரமான நிலையில் இருந்து கிருஷ்ணனால் எவ்வாறு மீட்கப்பட்டான் என்பதையும் சொன்னீர்.(3) எனினும், இதில் எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அது பசுக்கொடை குறித்ததாகும். நான் பசுக்கொடை அளித்தவர்கள் வசிப்பதற்காக ஒதுக்கப்படும் உலகங்களைக் குறித்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தொடக்ககாலத் தாமரையில் உதித்தவனுக்கும் {பிரம்மனுக்கும்}, நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5)
சக்ரன், “ஓ! பாட்டா {பிரம்மாவே}, கோலோகத்தில் வசிப்போர், தங்கள் பிரகாசத்தால் சொர்க்கலோகவாசிகளின் செழிப்பையும் விஞ்சியவர்களாக, (அவர்களைத் தாழ்ந்த நிலையடைந்தவர்களாக்கி) அவர்களைக் கடந்து நிற்பதாகக் காண்கிறேன். இஃது என் மனத்தில் ஓர் ஐயத்தை எழச்செய்கிறது.(6) ஓ! புனிதமானவரே, கோலோகங்கள் என்னவகைச் சார்ந்தவை? ஓ! பாவமற்றவரே, அவற்றைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. உண்மையில், பசுக்கொடை அளிப்போர் வசிக்கும் உலகங்களின் இயல்பு என்ன? அதை அறிய விரும்புகிறேன்.(7) அந்த உலகங்கள் என்ன வகைச் சார்ந்தவை? அவை என்ன பலன்களைக் கொடுக்கின்றன? அங்கே வசிப்பவர்கள் என்ன உயர்ந்த பொருளை அடைவதில் வெல்கிறார்கள்? அதன் குணங்கள் என்ன? மேலும் மனிதர்கள் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு அந்த உலகங்களை அடைவதில் எவ்வாறு வெல்கிறார்கள்?(8)
பசுக்கொடையளிப்பவன் தன் கொடையின் பலன்களை எவ்வளவு காலம் அனுபவிக்கிறான்? மனிதர்கள் எவ்வாறு பல பசுக்களைக் கொடையளிக்கலாம், மேலும் எவ்வாறு அவர்கள் கொடையளிக்கலாம்?(9) பல பசுக்களைக் கொடையளிப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? சிலவற்றை மட்டுமே கொடையளிப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? உண்மையில் எந்தப் பசுவையும் கொடையளிக்காமல் மனிதர்கள் எவ்வாறு பசுக்கொடையாளிகள் ஆகலாம்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக.(10) ஓ! பலமிக்கத் தலைவரே, பல பசுக்களைக் கொடையளித்தவனும், சில பசுக்களை மட்டுமே கொடையளித்தவனுக்கு இணையானவனாக ஆவது எவ்வாறு? சில பசுக்களை மட்டுமே கொடையளிப்பவன், பல பசுக்களைக் கொடையளித்தவனுக்கு இணையாவது எவ்வாறு?(11) பசுக்கொடையின் சிறப்புக்காக என்ன வகைத் தக்ஷிணை புகழ்பெற்றதாக இருக்கிறது? ஓ! புனிதமானவரே, வாய்மைக்கு ஏற்புடையவகையில் இவை யாவற்றையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {இந்திரன்}.(12)
பிரம்மனின் பதில்! – அநுசாஸனபர்வம் பகுதி – 73-பசுக்கொடை தொடர்பாக இந்திரன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரம்மன்…
பெரும்பாட்டன் {பிரம்மன், இந்திரனிடம்}, “ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பசுக்கொடை தொடங்கி, அவை குறித்து நீ கேட்ட கேள்விகள் மூவுலகிலும் வேறு யாராலும் சொல்ல முடியாதவையாக இருக்கின்றன.(1) ஓ! சக்ரா, நீ கூடக் காண முடியாத பலவகை உலகங்கள் இருக்கின்றன. ஓ! இந்திரா, அவ்வுலகங்கள் என்னாலும், கணவனுடன் பாசமாக உள்ள கற்புடைய பெண்களாலும் காணப்படுகின்றன.(2) பக்தி மற்றும் அறச்செயல்களின் மூலம் சிறந்த நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், அற ஆன்மாக்களான பிராமணர்களும் தங்கள் உடலுடன் அந்த உலகங்களுக்குச் செல்கிறார்கள்.(3) சிறந்த நோன்புகளை நோற்கும் மனிதர்கள், பிரகாசமான கனவுப்படைப்புகளுக்கு ஒப்பான அந்த உலகங்களைத் தங்கள் தூய்மையான மனங்களால் கண்டு, உடல் குறித்த தங்கள் நினைவை இழந்து (தற்காலிக) முக்தி நிலையை அடைவதில் வெல்கிறார்கள்[1].(4)ஓ! ஆயிரம் கண்களைக் கொண்டவனே {இந்திரா}, அந்த உலகங்களுக்குரிய பண்புகளை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அங்க காலத்தின் நடைமுறை இருப்பதில்லை. அங்கே முதுமையோ, அண்டத்தில் எங்குமிருக்கும் நெருப்போ இருப்பதில்லை. அங்கே சிறு தீமையோ, நோயோ எந்த வகைப் பலவீனமோ கிடையாது.(5) ஓ! வாசவா, அங்கே வாழும் பசுக்கள், தங்கள் இதயங்களில் வளர்க்கும் ஆசைகள் அனைத்தும் கனியும் நிலையை அடைகின்றன.(6) விரும்பிய எங்கும் செல்ல இயன்று, உண்மையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிமையாகச் சென்று தங்கள் மனங்களில் எழும் விருப்பங்கள் அனைத்தும் கனியை நிலையை அவை அடைகின்றன. தடாகங்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் பல்வேறு வகைக் காடுகள், மாளிகைள், குன்றுகள் மற்றும் உயிரினங்களுக்கு உரிய இனிமை நிறைந்த பொருட்கள் அனைத்தும் அங்கே காணப்படுகின்றன. நான் சொல்லும் இவை அனைத்திலும் மேன்மையாக வேறு எந்த இன்ப உலகமும் இல்லை.(7,8)
ஓ! சக்ரா, அனைத்து உயிரினங்களிடமும் மன்னிக்கும் குணத்துடன் கூடியவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ள வல்லவர்களும், அனைத்துப் பொருட்களிடமும் அன்புபாராட்டுபவர்களும், ஆசானிடம் கடமையுணர்வுடன் கீழ்ப்படிந்து நடந்து கொள்பவர்களும், செருக்கு மற்றும் பகட்டில் இருந்து விடுபட்டவர்களுமான முதன்மையான மனிதர்கள் உயர்ந்த இன்பநிலையைக் கொண்ட அவ்வுலகங்களுக்குச் செல்கிறார்கள்.(9) அனைத்து வகை இறைச்சியையும் தவிர்ப்பவனும், தூய்மையான இதயத்தைக் கொண்டவனும், அறமொழுகுபவனும், பெற்றோரை மதிப்புடன் வழிபடுபவனும், பேச்சு மற்றும் ஒழுக்கத்தில் வாய்மையைக் கடைப்பிடிப்பவனும், பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனும், குற்றமற்ற ஒழுக்கம் கொண்டவனும்,(10) பசுக்களிடமும், பிராமணர்களிடமும் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனும், அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புள்ளவனும், ஆசான்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுபவனும், மொத்த வாழ்வையும் வாய்மைக்கும், கொடைக்கும் அர்ப்பணித்தவனும், தனக்கு எதிரான வரம்புமீறல்கள் அனைத்தையும் எப்போதும் மன்னிப்பவனும், மென்மையானவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், தேவர்களிடம் மதிப்பு நிறைந்தவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனும், கருணை நிறைந்தவனுமான ஒருவன், மாறும் இயல்பற்றதும், நித்தியமானதுமான கோலோகத்தை அடைவதில் வெல்வான்.(12)
பிறன்மனையுறவில் ஈடுபடுபவன் அத்தகைய உலகத்தைக் காண மாட்டான்; ஆசானைக் கொன்றவனும், பொய்மை பேசுபவனும், பகட்டான வெற்றுப் பேச்சுகளில் ஈடுபடுபவனும், பிறருடன் எப்போதும் சச்சரவு செய்பவனும், பிராமணர்களிடம் எப்போதும் பகைமை பாராட்டுபவனும் ஒருபோதும் அத்தகைய உலகத்தைக் காண மாட்டார்கள். உண்மையில், அத்தகைய குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும் தீய பாவியால் அந்த இன்பலோகங்களைக் காணவும்முடியாது;(13) நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், கபடம் நிறைந்தவன், நன்றி மறந்தவன், வஞ்சனை செய்பவன், ஒழுக்கக்கேடன், அறத்தை அலட்சியம் செய்பவன், பிராமணர்களைக் கொன்றவன் ஆகியோராலும் அவ்வுலகங்களைக் காணவும் முடியாது. அத்தகைய மனிதர்களால், அறச் செயல்களைச் செய்வோரின் வசிப்பிடமாக இருக்கும் கோலோகத்தைக் கற்பனையிலும் காண முடியாது.(14) ஓ! தேவர்களின் தலைவா, கோலோகத்தின் நுட்பமான விளக்கம் உட்பட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! நூறு வேள்விகளைக் செய்தவனே, இனி பசுக்கொடை அளிப்போர் அடையும் பலன்களைக் குறித்துக் கேட்பாயாக.(15)
நியாயமாக அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு அவற்றை விலைக்கு வாங்கிப் பசுக்கொடையளிப்பவன், அத்தகைய செயலின் கனியாக வற்றாத இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை அடைகிறான்.(16) ஓ! சக்ரா, பகடையில் {சூதில்} வென்ற செல்வத்தைக் கொண்டு பசுக்கொடை அளிப்பவன் பத்தாயிரம் தேவ வருடங்களுக்கு இன்ப நிலையை அனுபவிக்கிறான்.(17) மூதாதையர் செல்வத்தில் தன் பங்காக ஒரு பசுவை அடையும் ஒருவன், அதை நியாயமாக அடைந்ததாகவே சொல்லப்படுகிறது. அத்தகைய பசுவையும் கொடையளிக்கலாம். அவ்வாறு அடைந்த பசுக்களைக் கொடையளிப்பவர்கள், வற்றாத நித்திய இன்ப உலகங்களை அடைகின்றனர்.(18) ஓ! சச்சியின் தலைவா, ஒரு பசுவைக் கொடையாக அடைந்தவன், தூய இதயத்துடன் அவளை {மீண்டும் வேறொருவனுக்கு} கொடையளித்தால் அவன் இன்பம் நிறைந்த நித்திய உலகங்கள் நிச்சயமாக அடைகிறான்.(19) பிறந்ததிலிருந்து (இறக்கும் காலம் வரையில்) புலனடக்கத்துடன் வாய்மையையே பேசுபவனும், ஆசான் மற்றும் பிராமணர்கள் செய்யும் அனைத்தையும் தாங்கிக் கொள்பவனும், பொறுமையைக் கடைப்பிடிப்பவனுமான ஒருவன் பசுவிற்கு இணையான கதியை அடைவதில் வெல்கிறான் {கோக்களுக்கும் அவற்றின் மீது தயையோடு இருப்பவனுக்கும் கதியொன்றே}.(20)
ஓ! சச்சியின் தலைவா, பிராமணர்களிடம் ஒருபோதும் முறையில்லாமல் {சொல்லத்தகாத சொல்லைப்} பேசக்கூடாது. மேலும் மனத்தாலும் ஒருவன் ஒரு பசுவக்கு எத்தீங்கையும் செய்யக் கூடாது. ஒருவன் பசுவின் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, பசுவிடம் கருணை காட்ட வேண்டும்[2].(21) ஓ! சக்ரா, வாய்மை எனும் கடமையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனுக்குக் கிட்டும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக. ஒருவன் ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்த ஒரு பசு ஆயிரம் பசுக்களுக்கு இணையானதாகிறது.(22) அத்தகைய தகுதிகளைக் கொண்ட {வாய்மையுடன் கூடிய} ஒரு க்ஷத்திரியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால் அவன் ஒரு பிராமணனுக்கு இணையான பலனைப் பெறுகிறான். ஓ! சக்ரா, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கும் அந்த ஒரு பசுவானது, அதே சூழ்நிலையில் ஒரு பிராமணன் கொடுக்கும் ஒற்றைப் பசுத் தரும் பலனைத் தருகிறது. இது சாத்திரங்களில் நிச்சயமான தீர்மானமாக இருக்கிறது.(23) அதேபோன்ற சிறப்புகளைக் கொண்ட ஒரு வைசியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தப் பசு ஐநூறு பசுக்களுக்கு இணையானதாகும் (ஐநூறு பசுக்களைக் கொடையளித்ததற்கு இணையான பலனைத் தரும்).(24)தவங்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புடனும், ஆசான்களிடம் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவதன் மூலம் (சாத்திரங்களிலும், அனைத்து செயல்களிலும்) திறனுடனும், மன்னிக்கும் மனநிலையுடனும், தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டும், அமைதியான ஆன்மாவுடனும், (உடல் மற்றும் மனத்தில்) தூய்மையுடனும், அறிவொளியுடனும், அனைத்துக் கடமைகளையும் நோற்றும், அனைத்து வகைத் தற்பெருமைகளில் இருந்தும் விடுபட்டும் இருக்கும் ஒரு மனிதன், ஒரு பிராமணனுக்கு ஒரு பசுவைக் கொடையளித்தால், உரிய சடங்குகளுடன் கொடையளித்த அந்தச் செயலின் மூலம் அவன் அபரிமிதமாகப் பாலைத் தரும் ஒரு பசு அடையும் பெரும் பலனை அடைகிறான். எனவே, ஒருவன் வாய்மையை நோற்று, தன் ஆசானிடம் பணிவுடன் தொண்டாற்றி, ஒற்றை அர்ப்பணிப்புடன் எப்போதும் பசுக்கொடையை அளிக்க வேண்டும்.(25,26) ஓ! சக்ரா, வேதங்களை முறையாகக் கற்று, பசுக்களிடம் மதிப்புள்ளவனாக, பசுக்களைப் பார்ப்பதாலேயே எப்போதும் மகிழ்ச்சியடைபவனாக, பிறவி முதல் பசுக்களிடம் எப்போதும் தலைவணங்குபவனாக உள்ள ஒருவன் அடையும் பலன்களைக் கேட்பாயாக.(27) ராஜசூய வேள்வி செய்வதனால் ஒருவன் அடையும் பலன், பொற்குவியல்களைக் கொடையளிப்பதால் ஒருவன் அடையும் பலன் ஆகிய உயர்ந்த பலன்களைப் பசுக்களிடம் மதிப்பு காட்டும் ஒருவன் அடைகிறான். அறம்சார்ந்த முனிவர்களும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயர் ஆன்ம மனிதர்களும் இவ்வாறே சொல்கின்றனர்.(28)
வாய்மையில் அர்ப்பணிப்புடனும், அமைதியான ஆன்மாவுடனும், பேராசையில் இருந்து விடுபட்ட நிலையுடனும், பேச்சில் எப்போதும் வாய்மையுடனும், பசுக்களிடம் மதிப்பு காட்டுவதை உறுதியான நோற்பாக நோற்று வருபவனும், தான் உணவு உட்கொள்வதற்கு முன் சீரான வகையில் பசுக்களுக்கு ஏதாவது உணவைக் கொடுத்து வருபவனுமான ஒரு மனிதன் அத்தகைய செயலின் மூலம் ஆயிரம் பசுக்களைக் கொடையளித்த பலனை அடைகிறான்.(29) ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு, மற்ற வேளை உணவுகளைப் பசுக்களுக்குக் கொடுப்பவனும், இத்தகைய கருணையையும், மதிப்பையும் அவற்றுக்குக் காட்டுபவனுமான மனிதன், பத்து வருடங்கள் அளவில்லாத இன்பத்தை அனுபவிப்பான்.(30) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு மற்ற வேளை உணவுக்கான பொருளைச் சேமித்து ஒரு பசுவை விலைக்கு வாங்கி, அதை (ஒரு பிராமணனுக்குக்) கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் மூலம் அந்த ஒரே ஒரு பசுவின் உடலில் உள்ள முடிகளின் எண்ணிக்கை அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்த பலனை ஈட்டுகிறான்.(31) பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் அடையும் பலன்களைக் குறித்த அறிவிப்புகள் இவையே. இனி க்ஷத்திரியர்கள் அடையும் பலன்களைக் கேட்பாயாக. இவ்வகையில் ஒரு பசுவை விலைக்கு வாங்கி அதை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் க்ஷத்திரியன் ஐந்து வருட காலத்திற்கான பேரின்ப நிலையை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு வைசியன் க்ஷத்திரியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு சூத்திரன், வைசியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான்.(32)
தன்னை விற்று அதன் மூலம் பசுக்களை விலைக்கு வாங்கி அவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் பசுக்கள் காணப்படும் காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான்.(33) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, தன்னையே விற்று அதன் மூலம் அடையப்படும் பசுவில் உள்ள ஒவ்வொரு முடியிலும் வற்றாத இன்பத்தைத் தரும் ஓர் உலகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. போரிட்டுப் பசுக்களை அடைந்து அவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையளிக்கும் மனிதன்,(34) தன்னையே விற்று பசுவை அடைந்து அதைக் கொடையளிப்பதால் கிட்டும் பலனை அடைகிறான். பசு இல்லாத போது, புலனடக்கத்துடன் கூடிய எள்ளால் ஆன பசுவைக் கொடையளித்தால், அவன் அத்தகைய பசுவின் மூலம் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்து மீட்கப்படுகிறான். அத்தகைய மனிதன் பெரும் இன்பநிலையில் திளைத்திருக்கிறான்.(35) வெறும் பசுக்கொடை மட்டுமே பலனைக் கொடுத்துவிடுவதில்லை. கொடை பெறுபவனின் தகுதி, காலம், பசுவின் வகை, நோற்கப்படும் சடங்கு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒருவன் பசுக்கொடை அளிப்பதற்கான காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். (கொடையளிக்கப்படும்) பசுக்கள் மற்றும் (அவற்றைப் பெற்றுக் கொள்ளப் போகும்) பிராமணர்களின் குறிப்பிடத்தக்க தகுதிகளும் உறுதிசெய்யப்பட வேண்டும். நெருப்பு, அல்லது சூரியனால் துன்பத்துக்கு ஆளாகக் கூடிய வசிப்பிடம் கொண்ட ஒருவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(36)
வேதமறிந்தவனும், தூய குலத்தில் வந்தவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவனும், பாவம் இழைக்க அஞ்சுபவனும், பல்வேறு வகை ஞானங்களைக் கொண்டவனும், பசுக்களிடம் கருணை கொண்டவனும், மென்மையான நடத்தையைக் கொண்டவனும், அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனும், தனக்கென உறுதியான வாழ்வாதார வழிமுறைகள் இல்லாதவனுமான ஒருவன், பசுக்கொடை பெறத் தகுந்த மனிதனாகக் கருதப்படுகிறான்.(37) வாழ்வாதார வழிமுறைகள் ஏதும் அற்றவனும், (எடுத்துக்காட்டாக, பஞ்சகாலத்தில்) உணவில்லாமையால் பெரிதும் பீடிக்கப்பட்டவனுமான ஒரு பிராமணனுக்கு, உழவு காரியங்களுக்காகவோ, ஹோமத்தின் விளைவால் பிறந்த ஒரு பிள்ளைக்காகவோ, அவனுடைய ஆசானுக்காகவோ, (இயற்கையான நடைமுறையில்) பிறந்த ஒரு பிள்ளையைக் காப்பதற்காகவோ ஒரு பசுவைக் கொடையளிக்கலாம். உண்மையில், அந்தக் கொடையானது உரிய காலத்தில், உரிய இடத்தில் கொடுக்கப்பட வேண்டும்.(38) ஓ! சக்ரா, இயல்புகள் நன்றாக அறியப்பட்டவையும், அறிவுக்கான வெகுமதியாக அடையப்பட்டவையும், (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) வேறு விலங்குகளுக்கு மாற்றாக விலைக்கு வாங்கப்பட்டவையும், கரங்களின் ஆற்றலால் வெல்லப்பட்டவையும், திருமணத்தில் வரதட்சணையாகப் பெறப்பட்டவையும், ஆபதான சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவையும், வறிய உரிமையாளர்களால் பராமரிக்கப்பட இயலாமல் வேறொருவனின் இல்லத்தில் வளர்த்துக் கொள்ளக் கொடுக்கப்பட்டவையுமான பசுக்களை உரிய கொடைப் பொருளாகக் கருதலாம்.(39) உறுதியான உடல்படைத்தவையும், நல்ல இயல்புகளைக் கொண்டவையும், இனிய நறுமணத்துடன் கூடியவையும், புகழத்தக்க கொடைகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓடைகள் அனைத்திலும் முதன்மையான கங்கையைப் போலவே மாட்டின விலங்குகள் அனைத்திலும் கபிலைப் பசுவே முதன்மையானதாகும்.(40)
பசுக்கொடை அளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகள் உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே உண்டு வாழ்ந்து, அதே காலத்திற்கு வெறும் தரையில் உறங்கி, பிராமணர்களுக்கு வேறு கொடைகளை அளித்து நிறைவடையச் செய்த பிறகு அவர்களுக்குப் பசுக்கொடை அளிக்க வேண்டும். குற்றங்குறையற்ற அத்தகைய பசுவும், மெலிந்ததாக இல்லாமல் நலமான கன்றுகளுடன் கொடுக்கப்பட வேண்டும். அந்தக் கொடையை அளித்த பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தக் கொடையாளி பசுத் தரும் பொருட்களை மட்டுமே உணவாக உண்ண வேண்டும்.(41) அமைதியாகப் பால் கறக்க விடுவதும், நலமிக்கக் கன்றுகளை ஈனுவதும், உரிமையாளரின் இல்லத்தில் இருந்து தப்பி ஓடாததுமான நல்ல இயல்பைக் கொண்ட ஒரு பசுவைக் கொடுப்பதன் மூலம், அந்தக் கொடையாளியானவன் அந்தப் பசுவின் உடலில் இருந்த மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் மறுமையில் இன்பத்தை அனுபவிப்பான்.(42) அதே போல, பெருஞ்சுமைகளை இழுக்க வல்லதும், இளமையானதும், பலமானதும், அடக்கமானதும், கலப்பையில் பூட்டப்படுவதை அமைதியாகப் பொறுத்துக் கொள்வதும், பெரும் உழைப்பைக் கோரும் பணிகளைச் செய்யும் சக்தி படைத்ததுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கும் ஒருவன், பத்துப் பசுக்களைக் கொடையளித்தவன் அடையும் உலகங்களை அடைவான்.(43) காட்டில் பசுக்களையும் பிராமணர்களையும் (ஆபத்திலிருந்து) காக்கும் மனிதன், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான். அவன் அடையும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(44)
அத்தகைய மனிதன் ஈட்டும் பலனானது, ஒரு குதிரை வேள்வி செய்த நித்திய பலனுக்கு இணையானதாகும். அத்தகைய மனிதன், மரணக் காலத்தில் தான் விரும்பும் கதியையே அடைவான்.(45) உண்மையில் அவன் த்ன இதயத்தில் எந்த வகை இன்பத்தை விரும்பினாலும், அவை அவனது செயலின் விளைவால் அடையத்தக்கதாகின்றன.(46) உண்மையில், பசுக்களால் அனுமதிக்கப்பட்ட அத்தகைய மனிதன், அனைத்து இன்ப லோகங்களிலும் கௌரவிக்கப்பட்டு வாழ்கிறான். இந்த நோக்கோடு காடுகளில் நாள்தோறும் பசுக்களைப் பின்தொடரும் மனிதன் ஒருவன்,(47) புல், சாணம் மற்றும் மரத்தின் இலைகளை உண்டு வாழ்ந்து, பலனில் உள்ள விருப்பத்தில் இருந்து விடுபட்டு, முறையற்ற பொருட்கள் ஒவ்வொன்றில் இருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அனைத்து வகைக் களங்கங்களில் இருந்து மனம் தூய்மையடைந்து, அவன் விரும்பும் எந்த உலகம், அல்லது மகிழ்ச்சியான வேறு எந்த உலகமாக இருந்தாலும், அங்கே ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான்” என்றான் {பிரம்மன்}.(48)
பொன்தானமும் தக்ஷிணையும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 74-பசுக்கொடை, பசுத்திருட்டு, பசு விற்பனை, பொற்கொடை மற்றும் தக்ஷிணை தொடர்பாக இந்திரனுக்குப் பதிலளித்த பிரம்மன்…
இந்திரன் {பிரம்மனிடம்}, “ஓ! பாட்டா, தெரிந்தே பசுவைக் களவு செய்பவன் அல்லது பேராசையின் காரணமாக அதை விற்பவன் என்ன கதியை அடைகிறான் என்பதை அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)
பெரும்பாட்டன் {பிரம்மன்}, “உணவுக்காகக் கொல்லவோ, செல்வத்திற்காக விற்கவோ, ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதற்காகவோ ஒரு பசுவைக் களவாடும் மனிதர்களுக்கு நேரும் விளைவுகள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக.(2) சாத்திரக் கட்டுப்பாடுகளை எண்ணிப் பார்க்காமல் ஒரு பசுவை விற்பவன், அல்லது கொல்பவன், அல்லது ஒரு பசுவின் இறைச்சியை உண்பவன், செல்வத்திற்காக ஒரு பசுவைக் கொல்லச் செய்பவன்(3) எனக் கொல்பவன், உண்பவன், கொலையை அனுமதிப்பவன் ஆகியோர் கொல்லப்பட்ட அந்தப் பசுவின் உடலில் உள்ள மயிரின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் நரகில் வாடுவார்கள்.(4) ஓ! பெரும்பலம் கொண்டவனே, இந்தக் குற்றங்களும், ஒரு பிராமணனின் வேள்வியைத் தடை செய்வதால் உண்டாகும் வகையிலான குற்றங்களும் பசுக்களை விற்பனை செய்வது மற்றும் களவாடுவது ஆகியனவற்றின் மூலம் {ஒருவனைப்} பற்றுகின்றன.(5) ஒரு பசுவைக் களவாடி அவளை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் வெகுமதியாகச் சொர்க்கத்தின் இன்ப நிலையை அனுபவித்தாலும், களவு செய்த பாவத்திற்காக நெடுங்காலம் நரகில் துன்பத்தை அனுபவிக்கிறான்.(6)
ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக் கொடையில் பொன்னே தக்ஷிணையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், வேள்விகள் அனைத்திலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகச் சொல்லப்படுகிறது.(7) பசுக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தன் மூதாதையரில் ஏழு தலைமுறையினரையும், வழித்தோன்றல்களில் ஏழு தலைமுறையினரையும் மீட்பதாகச் சொல்லப்படுகிறான். பொன் தக்ஷிணையுடன் பசுக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மேற்சொன்னதில் இரட்டிப்பு எண்ணிக்கையில் {பதினான்கு தலைமுறைக்கான} தன் மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான்.(8) கொடைகளில் சிறந்தது பொன் கொடையே. மேலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகவும் இருக்கிறது. ஓ! சக்ரா, பொன்னே தூய்மையடையச் செய்வதில் பெரியதாகும், மேலும் உண்மையில் தூய்மை செய்யும் பொருட்கள் யாவிலும் சிறந்ததுமாகும்.(9) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பொற்கொடையளிப்பவனின் மொத்த குலத்தையும் அந்தப் பொன்னே புனிதப்படுத்துகிறது. ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, இவ்வாறு நான் தக்ஷிணை குறித்து உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன்” என்றான் {பிரம்மன்}”.(10)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதையே பிரம்மன் இந்திரனிடம் சொன்னான். இந்திரன் இதைத் தசரதனுக்கும், தசரதன் இதைத் தன் மகனான ராமனுக்கும் சொன்னார்கள்.(11) ரகுகுல ராமன் அதைத் தன் அன்புக்குரிய தம்பியும், பெரும்புகழைக் கொண்டவனுமான லக்ஷ்மணனுக்குச் சொன்னான். லக்ஷ்மணன் காட்டில் வசித்தபோது இதை முனிவர்களுக்குச் சொன்னான்.(12) அதன்பிறகு தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த அஃதை கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், பூமியின் அறமன்னர்களும் தங்களுக்கு மத்தியில் தாங்கிப் பிடித்தனர்.(13) ஓ! யுதிஷ்டிரா, என் ஆசான் இதை எனக்குச் சொன்னார். பிராமணர்களின் கூட்டங்களில், வேள்விகளில், அல்லது பசுக்கொடைகளில், அல்லது இருவர் சந்திக்கும்போது ஒவ்வொரு நாளும் இதை உரைக்கும் பிராமணன், மறுமையில் தேவர்களின் துணையுடன் வசிக்கும் வற்றாத இன்ப லோகங்கள் பலவற்றை அடைகிறான்.(14,15) உயர்ந்த தலைவனும், புனிதமானவனுமான பிரம்மன், (பசுக்கொடை குறித்து இந்திரனிடம்) இதையே சொன்னான்” என்றார் {பீஷ்மர்}.(16)
நோன்புகளும், நியமங்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 75-நோன்பு, நியமம், கற்றல், அடக்கம், வேதம் மறவாமை, கற்பித்தல், உரிய கடமைகளைச் சிறப்பாகச் செய்தல் முதலியவற்றின் பலன் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பலமிக்கவரே, கடமைகளைக் குறித்து என்னிடம் நீர் சொல்வதன் மூலம் எனக்குப் பெரிதும் நம்பிக்கையுண்டாகிறது. எனினும், நான் கொண்டுள்ள சில ஐயங்களைச் சொல்கிறேன். ஓ! பாட்டா, அவற்றை விளக்குவீராக.(1) மனிதர்கள் நோற்கும் நோன்புகளுக்காக {விரதங்களுக்காக} சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பலன்கள் என்னென்ன? ஓ! பெரும் காந்தி கொண்டவனே, வேறு வகை நியமங்களை நோற்பதற்குண்டான பலன்களின் இயல்பென்ன? மேலும், வேதங்களை முறையாகக் கற்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்கள் என்னென்ன?[1](2) கொடைகளின் பலன்கள் என்ன? வேதங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் உள்ள பலன்கள் என்ன? வேதங்களைக் கற்பிப்பதில் கிட்டும் பலன்கள் என்ன? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்.(3)ஓ! பாட்டா, இவ்வுலகில் கொடைகளை ஏற்காமல் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? அறிவைக் கொடையளிப்பதில் தெரியும் பலன்கள் என்ன?(4) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் மனிதர்களுக்கும், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடாத வீரர்களுக்கும் கிட்டும் பலன்கள் என்ன? தூய்மை மற்றும் பிரம்மச்சரிய ஒழுக்கம் ஆகியவற்றால் கிட்டும் பலன்கள் என அறிவிக்கப்பட்டவை என்னென்ன?(5) தாய் தந்தையருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? ஆசான்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? கருணை மற்றும் அன்புக்குரிய பலன்கள் என்ன?(6) ஓ! பாட்டா, ஓ!சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரே, இவை யாவற்றையும் உண்மையாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இதில் நான் கொண்டிருக்கும் ஆவல் பெரியதாகும்” என்று கேட்டான்.(7)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு விரதத்தை (நோன்பை) முறையாகத் தொடங்கி ஒரு தடையும் இல்லாமல் அதைச் சாத்திரங்களின் படி நிறைவடையச் செய்யும் ஒருவன் நித்திய இன்ப உலகங்களைத் தனதாகக் கொள்கிறான்.(8) ஓ! மன்னா, நியமங்களின் பலன்கள் இம்மையிலேயே காணக்கிடைக்கின்றன. நீ வென்றுள்ள இந்த வெகுமதிகள் அனைத்தும் நியமங்கள் மற்றும் வேள்விகளுக்குரியவையாகும்.(9) வேத கல்வியின் பலன்கள் இம்மையிலும், மறுமையிலும் காணப்படுகின்றன. வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் இவ்வுலகத்திலும், பிரம்மலோகத்திலும் இன்பமாகத் திளைத்திருப்பதே காணப்படுகிறது.(10)
ஓ! மன்னா, தற்கட்டுப்பாட்டின் பலன்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக. தற்கட்டுப்பாடு கொண்டவர்கள் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தற்கட்டுப்பாடுடையவர்கள், ஆசையற்றதனால் அல்லது ஆசையை அடக்குவதனால் உண்டாகும் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.(11) தற்கட்டுப்பாடுடையவர்கள் பகைவர்கள் அனைவரையும் அழிக்கவல்லவர்களாவர். தற்கட்டுப்பாடுடையவர்கள் தாங்கள் நாடும் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தற்கட்டுப்பாடுடையவர்கள் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைகிறார்கள். தவங்கள் மற்றும் (கர) வலிமையின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தில் இன்புறும் மகிழ்ச்சியானது தற்கட்டுப்பாடும், மன்னிக்கும் தன்மையும் கொண்டோரின் உடைமையாகிறது.(13) கொடையை விடத் தற்கட்டுப்பாடே பலன்மிக்கதாகும். ஒரு கொடையாளி, பிராமணர்களுக்கு ஒரு கொடையை அளித்தபிறகு கோபவசப்படக்கூடும். எனினும், தற்கட்டுப்பாடுடைய மனிதன் ஒருபோதும் கோபவசப்பட மாட்டான். கோபவசப்படாமல் கொடையளிக்கும் மனிதனே நித்திய இன்பலோகங்களை அடைவதில் வெல்கிறான். கோபமானது கொடையின் பலனை அழிக்கிறது. எனவே தற்கட்டுப்பாடே கொடையைவிட மேன்மையானதாகும். (14-16)
ஓ! ஏகாதிபதி, சொர்க்கத்தில் பத்தாயிரக்கணக்கில் கண்ணுக்குத்தெரியாத பல்வேறு இடங்கள் இருக்கின்றன. சொர்க்கத்தில் உள்ள இந்த இடங்கள் யாவும் முனிவர்களுக்கு உரியனவாகும். இவ்வுலகை விட்டு அகலும் மனிதர்கள் அவற்றை அடைந்து, தேவர்களாக மாறுகிறார்கள்.(17) ஓ! மன்னா, பெரும் முனிவர்கள் தங்கள் தற்கட்டுப்பாட்டின் துணையால் மட்டுமே அங்கே செல்கின்றனர், பிறகு தங்கள் முயற்சிகளின் கதியாக மேலான மகிழ்ச்சிமிக்க உலகங்களை அடைகின்றனர். எனவே, தற்கட்டுப்பாடே (திறனில்) கொடையை விட மேன்மையானதாகும்.(18) ஓ! மன்னா, (வேதங்களைக் கற்பிப்பதற்காக) ஆசானாக ஆகிறவனும், நெருப்பை முறையாக வழிபடுபவனுமான மனிதன், இவ்வுலகத் துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மலோகத்தில் வற்றாத இன்பநிலையை அனுபவிப்பான்.(19) வேதங்களைக் கற்று, அறம்சார்ந்த சீடர்களுக்கு அந்த அறிவைக் கற்பித்தவனும், தன் ஆசானின் செயல்களைப் புகழ்பவனுமான மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(20)
வேத கல்வி கற்பவனும், வேள்விகளைச் செய்பவனும், கொடையளிப்பவனும், போரில் பிறரின் உயிர்களைக் காப்பவனுமான ஒரு க்ஷத்திரியனும் அதே போன்ற பெரும் கௌரவங்களைச் சொர்க்கத்தில் அடைகிறான்.(21) தன் வகைக்கான கடமைகளை நோற்பவனும், கொடைகளை அளிப்பவனுமான ஒரு வைசியன், மகுடம் சூடும் வெகுமதியாக அக்கொடைகளுக்கான பலன்களை அறுவடை செய்கிறான். தன் வகைக்கான கடமைகளை (மூன்று வகையினருக்கான தொண்டுகளை) முறையாக நோற்பவனான ஒரு சூத்திரன் தன் தொண்டுகளுக்கான வெகுமதியாகச் சொர்க்கத்தை வெல்கிறான்.(22)
(சாத்திரங்களில்) பல்வேறு வகை வீரர்கள் பேசப்படுகின்றனர். அவர்கள் அடைந்த வெகுமதிகள் என்னென்ன என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. வீர குலத்தைச் சார்ந்த ஒரு வீரனுக்கு வெகுமதிகள் நிலையானவையே.(23) வேள்வி வீரர்கள், தற்கட்டுப்பாட்டு வீரர்கள், வாய்மை வீரர்கள், வீரன் என்ற பெயருக்குத் தகுந்த பிறர் என்று பலர் இருக்கின்றனர். போர்க்கள வீரர்கள், மனிதர்களுக்கு மத்தியில் கொடைவீரர்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.(24) சாங்கிய நம்பிக்கை கொண்ட வீரர்கள் என்றழைக்கப்படும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், யோக வீரர்கள் என்றழைக்கப்படும் வேறு பலரும் இருக்கிறார்கள். காட்டு {வானப்பிரஸ்த} வாழ்வில், வீட்டு {கிருஹஸ்த} வாழ்வில், துறவு (அல்லது சந்நியாச) வாழ்வில் என வீரர்களாக வேறு சிலர் கருதப்படுகின்றனர்.(25)
அதே போலவே புத்திவீரர்கள் மற்றும் பொறுமைவீரர்கள் என்றழைக்கப்படுவோரும் உண்டு. அமைதிநிலையில் வாழ்பவர்களும், அறவீரர்களாகக் கருதப்படும் பிற மனிதர்களும் இருக்கிறார்கள்.(26) பல்வேறு வகை நோன்புகளையும், நியமங்களையும் பயிலும் பல்வேறு வகை வீரர்களும் இருக்கிறார்கள். வேதகல்வி வீரர்கள், அதையே கற்பிப்பதில் அர்ப்பணிப்புள்ள வீரர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.(27) மேலும், அர்ப்பணிப்புடன் ஆசான்களுக்குத் தொண்டாற்றுவதில் வீரர்கள், தங்கள் தந்தைமாரை மதிப்பதில் வீரர்கள் எனவும் சில மனிதர்கள் கருதப்படுகிறார்கள். தாய்க்குக் கீழ்ப்படிவதில் வீரர்கள், தாங்கள் நோற்கும் பிச்சைக்கார வாழ்வில் வீரர்களும் இருக்கிறார்கள்.(28) காட்டுத்துறவியாக {வானப்ரஸ்தராக} அல்லது இல்லறவாசியாக {கிருஹஸ்தராக} வாழ்ந்தாலும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பும் வீரர்களும் இருக்கிறார்கள். இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் செயல்களுக்காக வெகுமதியையும் அடையும் வகையில் மேன்மையான இன்ப உலகங்களை அடைகிறார்கள்.(29)
வேதங்கள் அனைத்தையும் நினைவில் கொள்வது, அல்லது புனித நீர்வெளிகள் அனைத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்வது ஆகியவை, ஒருவன் நாள்தோரும் வாய்மை பேசுவதற்கு இணையானவையாகவோ அல்லாதவையாகவோ இருக்கலாம்.(30) ஒரு காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் ஒரே தராசில் எடைபார்க்கப்பட்டன. அப்போது வாய்மையே ஓராயிரம் குதிரைவேள்விகளைவிட எடைமிக்கதாகத் தெரிந்தது.(31) வாய்மையினாலேயே சூரியன் வெப்பத்தைத் தருகிறான்; வாய்மையாலேயே நெருப்புச் சுடர்விடுகிறது; வாய்மையாலேயே காற்று வீசுகிறது; உண்மையில் அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(32)
தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களை வாய்மையே நிறைவடையச் செய்கிறது. வாய்மையே உயர்ந்த கடமையெனச் சொல்லப்படுகிறது. எனவே எவனும் ஒருபோதும் வாய்மையெனும் வரம்பை மீறக்கூடாது.(33) முனிவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களது ஆற்றல் வாய்மையைச் சார்ந்தே இருக்கிறது. அவர்கள் வாய்மையின் மூலமே உறுதியேற்கிறார்கள். எனவே வாய்மையே மேன்மையானதாகும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வாய்மை நிறைந்த மனிதர்கள் அனைவரும் தங்கள் வாய்மையின் மூலமே சொர்க்கத்தை அடைவதில் வென்று, அங்கே இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள்.(34) வாய்மை தரும் வெகுமதியே தற்கட்டுப்பாடாகும். நான் முழு இதயத்துடன் அதுகுறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். தற்கட்டுப்பாடுடையவனும், எளிய இதயம் கொண்டவனுமான மனிதன், நிச்சயம் சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளை அடைகிறான்.(35)
ஓ! பூமியின் தலைவா, பிரம்மச்சரியத்தின் பலன்களை உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன் இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, பிறப்பிலிருந்து மரணம் வரை பிரம்மச்சரிய நோன்பைப் பயிலும் மனிதனால் அடையமுடியாதது எதுவுமில்லை என்பதை அறிவாயாக. பல கோடி முனிவர்கள் பிரம்மலோகத்தில் வசிக்கின்றனர்.(36,37) இங்கே இருந்தபோது, அவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், உயிர்வித்தை மேலிழுத்தவர்களாகவும் இருந்தனர். ஓ! மன்னா, ஒரு பிராமணனால் பிரம்மச்சரிய நோன்பு முறையாக நோற்கப்பட்டால் அவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்துவிடுவான். அந்தப் பிராமணன் சுடர்மிக்க நெருப்பெனச் சொல்லப்படுகிறான். தவங்களில் அர்ப்பணிப்புள்ள அந்தப் பிராமணர்களில் நெருப்பு தேவன் {அக்னி} காணப்படுகிறான்.(38,39) ஒரு பிரம்மசாரியானவன் சிறு கோபத்தை அடைந்தாலும் தேவர்களின் தலைவனே அச்சத்தில் நடுங்குவான். இதுவே முனிவர்களால் நோற்கப்படும் பிரம்மச்சரிய நோன்பில் காணப்படும் பலனாகும்.(40)
ஓ! யுதிஷ்டிரா, தந்தை தாயை வழிபடுவதில் உள்ள பலனைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! மன்னா, எதனிலும் குறுக்கிடாமல் தன் தந்தைக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றும் ஒருவன், அதே போலத் தன் தாய்க்கோ, தன் அண்ணனுக்கோ, வேறு பெரியோருக்கோ, ஆசானுக்கோ தொண்டாற்றும் ஒருவன் ஆகியோர் சொர்க்கவாசத்தை ஈட்டுகிறார்கள் என்பது அறியப்பட வேண்டும். தூய்மையடைந்த ஆன்மைவைக் கொண்ட மனிதன், பெரியோர்களுக்குச் செய்யும் இத்தகைய தொண்டின் விளைவாக அவன் நரகை ஒருபோதும் காணவும் மாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(41,42)
கோதான விதிமுறைகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 76-பசுக்கொடைக்கு உரிய விதிமுறைகள் மற்றும் சிறப்புகள் முதலியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன பிருஹஸ்பதி…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, எவ்விதிகளின்படி (பசுக்) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற நித்திய இன்பலோகங்களை அடைகிறானோ, {எவ்விதிகள்} பசுக்கொடைகளை ஒழுங்கு படுத்துமோ, அந்த உயர்ந்த விதிகளைக் குறித்து நீர் விரிவாகச் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, பலன்களைப் பொறுத்தவரையில் பசுக்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை. நியாயமான முறையில் அடையப்பட்ட ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தக் கொடையாளியின் மொத்த குலமும் உடனே மீட்கப்படுகிறது.(2) அறவோரின் நன்மைக்கென உண்டான அந்தச் சடங்கு, அடுத்து அனைத்து உயிரினங்களுக்காக அறிவிக்கப்பட்டது. அந்தச் சடங்கு தொடக்கக் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அஃது அறிவிக்கப்படும் முன்பே இருந்தது. உண்மையில், ஓ! மன்னா, பசுக்கொடை குறித்த அந்தச் சடங்கைப் பற்றிச் சொல்கிறேன் கேட்பாயாக[1].(3) பழங்காலத்தில் எண்ணற்ற பசுக்கள் (கொடையளிப்பதற்காக) மன்னன் மாந்தாத்ரியிடம் {மாந்தாதாவிடம்} கொண்டுவரப்பட்ட போது, (உண்மையில் அவற்றைக் கொடையளிப்பதற்காக) நோற்கப்பட வேண்டிய சடங்குகளைக் குறித்த ஐயத்தால் நிறைந்த அவன், (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதியிடம் அந்த ஐயத்திற்கான விளக்கத்தை முறையாகக் கேட்டான்.(4)பிருஹஸ்பதி {மந்தாதாவிடம்}, “பசுக்கொடையாளி {கொடையளிப்பதற்கு} முந்தைய நாளே முறையாகக் கட்டுப்பாடுகளை நோற்று, பிராமணர்களை முறையாகக் கௌரவித்து, கொடைக்கான (சரியான) நேரத்தைக் குறிக்க வேண்டும். கொடையளிக்கப்பட வேண்டிய பசுக்களைப் பொறுத்தவரையில் அவை ரோகிணி என்றழைக்கப்படும் வகையைச் சார்ந்தவையாக {சிவப்பு பசுக்களாக} இருக்க வேண்டும்.(5) அந்தப் பசுக்களிடம் சமங்கே {அங்கங்கள் நிரம்பியவளே}, வாஹுலே {அபிவிருத்தியடைகிறவளே} என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். பசுக்களை நிறத்தப்பட்டிருக்கும் இடத்திற்குள் நுழைந்து, பின்வரும் ஸ்ருதி சொல்லப்பட வேண்டும்,(6) “பசுவே என் அன்னை. காளை என் தந்தை. சொர்க்கம் மற்றும் பூமி சார்ந்த செழிப்பை (எனக்குக் கொடுப்பாயாக). பசுவே என் புகலிடமாக இருக்கிறாள்” {என்பதே அந்த ஸ்ருதி}. அங்கே நுழைந்து இவ்வழியில் செயல்படும் கொடையாளி அங்கேயே அந்த இரவைக் கழிக்க வேண்டும். மேலும் அவன் அந்தப் பசுவைக் கொடையளிக்கும்போதும் அந்தச் சூத்திரத்தை {மந்திரத்தைச்} சொல்ல வேண்டும்[2].(7) பசுவோடு இருக்கும் அந்தக் கொடையாளி, அவற்றின் சுதந்திரத்தைத் தடுக்கும் எதையும் செய்யாமல், (பசுக்களை எரிச்சலூட்டுவது போலத் தன்னையும் எரிச்சலூட்டும் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டாமல்) வெறும் தரையில் படுப்பவன், தன்னைச் சரியாகப் பசுவின் நிலைக்கே குறைத்துக் கொள்வதன் விளைவாக அவனது பாவங்கள் அனைத்தும் உடனே தூய்மையடைகின்றன.(8)காலையில் சூரியன் எழும்போது, கன்று மற்றும் காளையுடன் பசுவானது கொடையளிக்கப்பட வேண்டும். அத்தகைய செயலின் வெகுமதியாக, நிச்சயம் சொர்க்கமே உன்னால் அடையப்படுகிறது. மந்திரங்களில் குறிப்பிடப்படும் அருள் அனைத்தும் உனதாகும்.(9) மந்திரங்களில் “பசுக்கள் பலம் மற்றும் சக்தியுடன் கூடிய முயற்சி ஆகியவற்றைக் கொண்டனவாகும். பசுக்கள் தங்களிடம் ஞானத்தையும் கொண்டிருக்கின்றன. வேள்வி அடையும் அமரநிலையை {இறவாநிலையை} அவை கொண்டிருக்கின்றன. சக்திகள் அனைத்திற்கும் அவை புகலிடமாக இருக்கின்றன. உலகம் சார்ந்த செழிப்பை வெல்லும் படிநிலைகள் அவையே. அண்டத்தின் நித்திய நடைமுறைகளை அவையே கொண்டிருக்கின்றன. ஒருவனுடைய குலத்தைப் பெருக்குபவை அவையே.(10) (நான் கொடையளிக்கும்) பசுக்கள் என் பாவங்களை அழிக்கட்டும். அவை சூரியன் மற்றும் சோமனின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. நான் சொர்க்கத்தை அடைவதற்கு இவை துணைபுரியட்டும். ஒரு தாயானவள் தன் பிள்ளையைக் காப்பது போல இவை என்னைக் காக்கட்டும். நான் சொல்லும் மந்திரங்களில் இல்லாத அருள்களும் எனதாகட்டும்” என்று சொல்லப்படுகிறது.(11) காச நோய், அல்லது வேறு நோய்களை ஒழிப்பதிலும், உடலில் இருந்து விடுபடும் காரியத்திலும், பசுவின் ஐந்து பொருட்களை ஒரு மனிதன் எடுத்துக் கொண்டால், பசுவானது சரஸ்வதியாற்றைப் போல அவனுக்கு அருளை வழங்குகிறது.
(ஒரு கொடையாளி), “பசுக்களே, நீங்களே அனைத்து வகைப் பலன்களையும் அழிப்பவர்கள். என்னிடம் நிறைவடையும் நீங்கள் எனக்கு விரும்பத்தக்க கதியைக் கொடுப்பீராக.(12) நான் இன்று நீங்களாகவே ஆகிறேன். உங்களைக் கொடையளிப்பதன் மூலம், நான் என்னையே கொடுக்கிறேன்” (என்று சொன்னதும், கொடையைப் பெற்றுக் கொள்பவன்), “நீங்கள் இனி உங்களைக் கொடுப்பவர்களுக்கு உரிமையானவர்கள் இல்லை. நீங்கள் இப்போது எனதாகிறீர்கள். சூரியன் மற்றும் சோமனின் இயல்பைக் கொண்ட நீங்கள் கொடையாளியையும், கொடை பெறுபவனையும் அனைத்து வகைச் செழிப்பாலும் சுடர்விடச் செய்கிறீர்கள்” (என்று சொல்ல வேண்டும்).(13) (ஏற்கனவே குறிப்பிட்டது போல) கொடையாளி, மேற்கண்ட ஸ்லோகத்தின் முதல் பகுதியைச் சொல்ல வேண்டும். அதைப் பெறுபவனும், பசுக்கொடையை ஒழுங்குபடுத்தும் சடங்கை அறிந்தவனுமான மறுபிறப்பாளன் {பிராமணன்}, பசுவைக் கொடையாகப் பெறும்போது, (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) மேற்கண்ட ஸ்லோகத்தின் பிற்பாதியைச் சொல்ல வேண்டும்.(14)
ஒரு மனிதன், பசுக்கொடை அளிப்பதற்குப் பதிலாக அதற்குரிய விலையையோ, துணிமணிகளையோ, பொன்னையோ கொடையளித்தாலும் பசுக்கொடை அளித்தவனாகவே கருதப்படுகிறான். (பசுவுக்குப் பதிலாக) பசுவுக்குரிய விலையைக் கொடையளிப்பவன், “மேல்நோக்கும் முகம் கொண்ட இந்தப் பசுவானவள் கொடையளிக்கப்படுகிறாள். நீ இவளை ஏற்பாயாக” என்று சொல்ல வேண்டும். (பசுவுக்குப் பதிலாக) துணிமணிகளைக் கொடையளிப்பவன், “(இந்தக் கொடை பசுவாகக்கருதப்படட்டும் என்ற பொருள் படும்) பவிதவ்யா” என்ற சொல்லைச் சொல்ல வேண்டும். (பசுவுக்குப் பதிலாகப்) பொன்னைக் கொடையளிக்கும் மனிதன், “(நான் கொடுக்கும் இந்தப் பொன், பசுவின் இயல்பையும் வடிவையும் கொண்டதாகும் எனப் பொருள்படும்படி) வைஷ்ணவி” என்ற சொல்லைச் சொல்ல வேண்டும்.(15) மேற்குறிப்பிட்ட வகையில் கொடையளிக்கும்போது இவ்வார்த்தைகளே சொல்லப்பட வேண்டும். பிறருக்காக இத்தகைய பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம், {உண்மையான பசுக்கொடைக்கு} முப்பத்தாறாயிரம் {36,000} வருடங்களும், {பசுவுக்குப் பதிலாகத் துணிமணிகளைக் கொடையளித்தால்} எட்டாயிரம் {8,000} வருடங்களும், {பசுவுக்குப் பதிலாகப் பொற்கொடை அளித்தால்} இருபதாயிரம் {20,000} வருடங்களும் சொர்க்கவாசம் வெகுமதியாக அறுவடை செய்யப்படுகின்றன[3].(16)பசுவுக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் கொடைகளின் முறையான பலன்கள் இவையே. அதே வேளையில், உண்மையான பசுவையே கொடையளிப்பவனைப் பொறுத்தவரையில், பசுவுக்குப் பதிலாகக் கொடையளிப்பதில் உள்ள பலன்கள் அனைத்தும், கொடை பெறுவனின் (அவன் தன் இல்லம் நோக்கி எடுத்து வைக்கும்) எட்டாவது அடியிலேயே கொடையாளிக்குக் கிட்டிவிடுகிறது[4].(17) உண்மையான பசுவைக் கொடையளிப்பவன் இவ்வுலகில் அற நடத்தை கொண்டவனாக மாறுகிறான். பசுவுக்கான விலையைக் கொடையளிப்பவன் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறான். (உண்மைப் பசுவைக் கொடையளிப்பதற்குப் பதில் இவ்வழியில்) பசுக்கொடையளிப்பவன் கவலைகள் எதையும் அடையமாட்டான். {உண்மையான பசுவைக் கொடையளிப்பவன், பசுவுக்கான விலையைக் கொடையளிப்பவன், பசுவுக்குப் பதிலாக வேறு ஒரு பொருளைக் கொடையளிப்பவன் ஆகிய} இந்த மூவரும், அதிகாலையிலேயே முறையாகத் தங்கள் தூய்மைச் சடங்குகளையும் பிற {வழிபாட்டுச்} செயல்களையும் செய்பவர்களும், மஹாபாரதத்தை நன்கறிந்தவனும் விஷ்ணு மற்றும் சோமனின் உலகங்களை அடைகிறார்கள்[5].(18) ஒரு பசுவைக் கொடையளித்த பிறகு அந்தக் கொடையாளி மூன்று இரவுகளுக்கு நோய் தடுக்கும் பால் நோன்பை {கோவிரதத்தைப்} பின்பற்றிப் பசுக்களுடன் ஓரிரவைக் கழிக்க வேண்டும். அந்தப் பிறைநாள் {திதி} தொடங்கி, காம்யம் என்ற பெயரில் அறியப்படும் எட்டாம் நாளில் இருந்து பசுவின் பால், சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றை மட்டுமே உண்டு அவன் மூன்று இரவுகளைக் கழிக்க வேண்டும்[6].(19)ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தெய்வீக நோன்புக்கு (பிரம்மச்சரிய நோன்புக்கு) உரிய பலனை அடைகிறான். இரண்டு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் அவன் வேதங்களில் திறன் பெறுகிறான். ஒரு வேள்வியைச் செய்து, விதிப்படியான சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடையளிக்கும் மனிதன், மேன்மையான தன்மையிலான பல உலகங்களை அடைகிறான். எனினும், அந்தச் சடங்கைக் குறித்து அறியாத மனிதனால் (சாத்திர அறிவுப்புகளைக் காணாது பசுக்கொடையளிப்பவனால்) அவற்றை ஒருபோதும் அடைய முடியாது.(20) அபரிமிதமான பாலைத் தரும் ஒற்றைப் பசுவைக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் ஒன்றாகத் திரட்டப்படும் விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் கொடையளித்த பலனை ஈட்டுகிறான். எனவே, நிறைந்த மடியைக் கொண்டதன் விளைவால் ஹவ்யகவ்யங்களைத் தரும் அத்தகைய பசுக்கள் பலவற்றைக் கொடையளிப்பதைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? மேன்மையான எருதொன்றைக் கொடையளித்தால் உண்டாகும் பலனானது, பசுக்கொடையால் கிட்டும் பலனைவிடப் பெரியதாகும்.(21)
ஒருவன், தன் சீடனாக இல்லாத, அல்லது நோன்புகளை நோற்காத, அல்லது நம்பிக்கையற்ற, அல்லது கோணல் புத்தி கொண்ட மற்றொருவனுக்கு இந்தச் சடங்கைக் குறித்த அறிவைப் போதிக்கக்கூடாது. உண்மையில் இவ்வறம், வெகுமக்கள் அறியாத ஒரு புதிராகும். அதையறிந்தவன் அனைத்து இடங்களிலும் அதைக் குறித்துப் பேசக் கூடாது.(22) இவ்வுலகில் நம்பிக்கையற்ற மனிதர்கள் பலர் இருக்கின்றனர். மனிதர்களுக்கு மத்தியில் ஈனர்களும், ராட்சசர்களுக்கு ஒப்பானவர்களுமானவர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு இவ்வறத்தைப் போதிப்பது தீமைக்கே வழிவகுக்கும். நாத்திகத்தை உறைவிடமாகக் கொண்ட அத்தகைய பாவிகளுக்குப் போதிக்கப்பட்டால் அதற்கு ஈடான தீமையே விளையும்” என்றார் {பிருஹஸ்பதி}”.(23)
{பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “ஓ! மன்னா, பிருஹஸ்பதியின் போதனைகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடையளித்து, பேரின்ப உலகங்களை அடைந்த அறம்சார்ந்த ஏகாதிபதிகளின் பெயரை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(24) உசீனரன், விஷ்வகசுவன், நிருகன், பகீரதன், யுவனாசுவன் மகனும் கொண்டாடப்பட்டவனுமான மாந்தாத்ரி {மாந்தாதா}, முசுகுந்தன், பூரித்யும்னன், நைஷதன், ஸோமகன்,(25) புரூரவன், பாரதர்களில் முதல்வனான பரதன், தசரதன் மகனும், வீரனுமான ராமன், மற்றும் பெரும் சாதனைகளைச் செய்த கொண்டாடப்பட்ட மன்னர்கள் பலரும்,(26) பரந்து அறியப்பட்ட செயல்களைச் செய்த மன்னன் திலீபனும், சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடை அளித்ததன் விளைவால் சொர்க்கத்தை அடைந்தனர். மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, வேள்விகள், கொடைகள், தவங்கள், அரச கடமைகள், பசுக்கொடைகள் ஆகியவற்றை எப்போதும் செய்து வந்தான்.(27) எனவே, ஓ! பிருதையின் மகனே, (பசுக்கொடை குறித்து) பிருஹஸ்பதி சொன்னதான, நான் உன்னிடம் சொன்ன போதனைகளை மனத்தில் கொள்வாயாக. குருக்களின் நாட்டை அடைந்ததும், உற்சாகமிக்க இதயத்துடன் நீ முதன்மையான பிராமணர்களுக்குப் பசுக்கொடையளிப்பாயாக” என்றார் {பீஷ்மர்}”.(28)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு பீஷ்மரால், பசுக்கொடையை அளிக்கும் சரியான வழிமுறைகள் குறித்துச் சொல்லப்பட்டவனான மன்னன் யுதிஷ்டிரன், பீஷ்மர் விரும்பிய அனைத்தையும் செய்தான். உண்மையில், மன்னன் யுதிஷ்டிரன், தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அரசன் மாந்தாத்ரிக்கு {மாந்தாதாவுக்குச்} சொன்ன அறம் முழுவதையும் தன் மனத்தில் கொண்டான்.(29) யுதிஷ்டிரன் அந்தக் காலத்தில் இருந்த பசுக்கொடைகளை அளிக்கவும், {அவ்வாறு பசுக்கொடையளிக்கும் போது} யவையரிசி நொய்களையும், பசுஞ்சாணத்தையும் தன் உணவாகவும் பானமாகவும் கொள்ளத் தொடங்கினான். மேலும் அம்மன்னன் அந்த நாள் முதலே வெறுந்தரையில் உறங்கத் தொடங்கி, ஆன்மக் கட்டுப்பாட்டுடனும், ஒரு காளையின் ஒழுக்கத்துடனும் முதன்மையான ஏகாதிபதியாக ஆனான்[7].(30) அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} அந்த நாள் முதலே பசுக்களைக் கவனிக்கவும், எப்போதும் அவற்றை வழிபடவும், அவற்றின்புகழைப் பாடவும் தொங்கினான். அந்த நாள் முதலே அம்மன்னன், பசுக்களைத் தன் வாகனங்களில் பூட்டும் நடைமுறையைக் கைவிட்டான். அவன் எங்குச் செல்ல நேர்ந்தாலும் நல்ல இனக் குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களிலேயே சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)
கபிலைப் பசு! – அநுசாஸனபர்வம் பகுதி – 77-பசுக்கொடையின் சிறப்பு மற்றும் கபிலைப் பசுக்களின் வரலாறு குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்}, “பணிவுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் சந்தனுவின் அரசமகனிடம் {பீஷ்மரிடம்} பசுக்கொடை குறித்து விரிவாகக் கேள்வி எழுப்பினான்.(1)
மன்னன் {யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, பசுக்கொடையின் பலன்களை இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. ஓ! வீரரே, அமுதம் போன்ற உமது வார்த்தைகளைக் கேட்பது எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை” என்றான்”.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, பசுக்கொடையின் பலன்களைக் குறித்தும் விரிவாக மீண்டும் சொல்லத் தொடங்கினார்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கன்றுடன் கூடியதும், பணிவானதும், வேறு நற்குணங்களைக் கொண்டதும், வயதில் இளமையானதுமான ஒரு பசுவை துணியால் சுற்றிலும் மூடி ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாகிறான்.(4) (நரகத்தில்) சூரியனற்ற பல உலகங்கள் இருக்கின்றன. பசுக்கொடையளிக்கும் ஒருவன் அங்கே செல்லமாட்டான்.(5) எனினும், பருகவும், உண்ணவும் இயலாததும், பால் வற்றியதும், பலவீனமான புலன்களைக் கொண்டதும், நோய்வாய்ப்பட்டதும், முதுமையடைந்ததும், நீர் வற்றிய குளத்தைப் போன்றதுமான பசுவை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதன் மூலம், அவனுக்குத் துன்பத்தையும், ஏமாற்றத்தையும் அந்த மனிதன், காரிருள் நரகில் நிச்சயம் நுழைவான்.(6) கோபம் நிறைந்த, தீய, அல்லது நோய்வாய்ப்பட்ட, அல்லது பலவீனமான, அல்லது ஏற்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் வாங்கப்பட்ட, அல்லது ஏற்போனான மறுபிறப்பாளனை துன்பத்தாலும், ஏமாற்றத்தாலும் பீடிக்கச் செய்யும் பசுவை ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது. அத்தகைய மனிதன் (செய்த வேறு அறச்செயல்களின் வெகுமதியாக) அடையும் உலகங்கள் அவனுக்கு எந்த மகிழ்ச்சியையோ, எந்தச் சக்தியையோ அளிக்காது.(7) பலமானதும், நன்னடத்தைக் கொண்டதும், வயதில் இளையதும், நறுமணத்துடன் கூடியமான பசுக்கள் மட்டுமே (கொடையளிக்கும் காரியத்தில்) அனைவராலும் மெச்சப்படுகின்றன. உண்மையில், கங்கையே அனைத்து ஆறுகளிலும் முதன்மையானவளாக இருப்பது போலவே பசுக்கள் அனைத்திலும் முதன்மையானதாகக் கபிலைப் பசு ஆகும்” என்றார்.(8)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடையளிக்கப்படும் நல்ல பசுக்கள் அனைத்தும் சமமாகவே கருதப்படும் போது கபிலைப் பசுவைக் கொடையளிப்பது (அதிகப் பலனைத் தருவதாக) அறவோரால் ஏன் மெச்சப்படுகிறது? ஓ! பெரும்பலம் கொண்டவரே, கபிலைப் பசுவின் தனித்தன்மை என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், இக்காரியம் குறித்து எனக்குச் சொல்லத் தகுந்தவர் நீரே” என்றான்[1].(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, கபிலைப்பசு படைக்கப்பட்ட சூழ்நிலை குறித்த இந்த வரலாற்றைப் பழங்கால மனிதர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அந்தப் பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(10)
பழங்காலத்தில், சுயம்புவான பிரம்மன் முனிவர் தக்ஷரை அழைத்து, “உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய தக்ஷர் முதலில் உணவைப் படைத்தார்.(11) ஓ! பலமிக்கவனே, தேவர்கள் அமுதத்தைச் சார்ந்திருப்பதைப் போலவே, தக்ஷர் நிர்ணயித்த உணவைச் சார்ந்தே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன.(12) அசைபவை {உயிருள்ள} மற்றும் அசைவற்ற {உயிரற்ற} பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் அசைபவையே {உயிருள்ளவையே} மேன்மையானவை. அசையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்களே மேன்மையானவர்கள். வேள்விகள் அனைத்தும் அவர்களிலேயே நிறுவப்பட்டுள்ளன.(13) வேள்வியின் மூலமே சோமம் (அமுதம்) கிடைத்தது. வேள்வியானது பசுக்களில் நிறுவப்பட்டுள்ளது[2]. தேவர்கள் வேள்விகளின் மூலமே நிறைவடைகின்றனர். படைப்பைப் பொறுத்தவரையில், வாழ்வாதார வழிமுறைகளே முதலில் தோன்றின, அடுத்துதான் உயிரினங்கள் வந்தன.(14) உயிரினங்கள் பிறந்ததும் அவை உணவுக்காக உரக்க அழத் தொடங்கின. அவை அனைத்தும், தாயையோ, தந்தையையோ அணுகும் பிள்ளைகளைப் போல உணவைத் தரும் படைப்பாளனை அணுகின.(15)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)பாலை உறிஞ்சி கொண்டிருந்த கன்றுகளின் வாயில் இருந்த நுரைகள், அப்போது பூமியில் அமர்ந்திருந்த மஹாதேவனின் தலையில் விழுந்தது. பலமிக்க மஹாதேவன், கோபத்தால் நிறைந்து, தன் கண்களை அந்தப் பசுக்களின் மேல் செலுத்தினான்.(20) அவனது நெற்றியை அலங்கரித்திருந்த மூன்றாவது கண்ணால் அவன் அவற்றைப் பார்ப்பது, அவற்றை எரிப்பதைப் போலத் தெரிந்தது. மேகங்களைப் பல வண்ணங்களில் ஒளிரச் செய்யும் சூரியனைப் போலவே, மஹாதேவனின் மூன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட சக்தியானது, அந்தப் பசுக்களில் பல்வேறு நிறங்களை உண்டாக்கியது. எனினும், சோமலோகத்தில் நுழைந்ததன் மூலம் மஹாதேவனின் பார்வையில் இருந்து தப்பித்தவையின் நிறத்தில் எந்த மாற்றமும் உண்டாகததால் அவை பிறந்த போது இருந்த நிறத்துடனேயே இருந்தன.(21,22)
உயிரினங்கள் அனைத்தின் தலைவரான தக்ஷர், மஹாதேவன் பெருங்கோபம் கொண்டதைக் கண்டு, அவனிடம்,(23) “ஓ! பெருந்தேவா, நீ அமுதத்தால் நனைந்திருக்கிறாய். தாயிடம் பால் பருகும் கன்றுகளின் வாயில் இருந்து விழும் பாலோ, நுரையோ தூய்மையான எச்சமாக[4] ஒருபோதம் கருதப்பட்டதில்லை. அமுதத்தைப் பருகும் சந்திரமாஸ் {சந்திரன்}, மீண்டும் அதைப் பொழிகிறான். எனினும், அது தூய்மையற்றதாகப் பார்க்கப்படுவதில்லை.(24) அதே போலவே, பசுக்கள் தரும் பாலும், அமுதத்தில் இருந்தே பிறந்ததால், (கன்றின் வாயால் மடி தீண்டப்பட்டதால்) அஃது ஒருபோதும் தூய்மையற்றாகக் கருதப்படக்கூடாது. காற்று ஒருபோதும் தூய்மையற்றதாகாது. நெருப்பு ஒருபோதும் தூய்மையற்றதாகாது. பொன் ஒருபோதும் தூய்மையற்றதாகாது. கடல் ஒருபோதும் தூய்மையற்றதாகாது.(25) அமுதமானது, தேவர்களால் பருகப்பட்டாலும் கூட ஒருபோதும் தூய்மையற்றதாகாது. அதே போலவே, பசுவின் பாலும், கன்றால் மடி உறிஞ்சப்பட்டாலும் ஒருபோதும் தூய்மையற்றதாகாது. இந்தப் பசுக்கள், தாம் தரும் பாலின் மூலமும் அதிலிருந்து உண்டாகும் நெய்யின் மூலம் மூன்று உலகங்களையும் ஆதரிக்கப் போகின்றன.(26) அமுதத்தோடு அடையாளங்காணப் படக்கூடிய பசுவின் மங்கலச் செல்வத்தை அனைத்து உயிரினங்களும் அனுபவிக்க விரும்புகின்றன” என்றார் {தக்ஷர்}. உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, மஹாதேவனுக்கு ஒரு காளையையும், பசுவையும் கொடையளித்தார்.(27)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தக் கொடையின் மூலம் தக்ஷர், ருத்திரனின் இதயத்தை நிறைவடையச் செய்தார். இவ்வாறு நிறைவடைந்த மஹாதேவன், தன் வாகனமாக அந்தக் காளையை அமைத்துக் கொண்டான். அந்தப் பசுவின் வடிவத்தைக் கொண்டே மஹாதேவன் தன் போர்த்தேரில் மிதக்கும் கொடிமரத்தின் பொறியை அமைத்துக் கொண்டான். இந்தக் காரணத்தினாலேயே ருத்திரன், காளைக்கொடி தேவன் என்று அறியப்படுகிறான்.(28) அந்நிகழ்வில்தான் தேவர்கள் அனைவரும் கூடி மஹாதேவனை விலங்குகளின் தலைவனாக நிறுவினர். உண்மையில் பெரும் ருத்திரன் பசுக்களின் தலைவனாகி, காளைக்கொடி தேவனென்றும் பெயரிடப்பட்டான்.(29)
எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பசுக்கொடையளிக்கும் காரியத்தில், பெருஞ்சக்தி கொண்டதும், (வெண்மையிலிருந்து) மாறா நிறம் கொண்டதுமான கபிலைப்பசுவே அடிப்படையில் விரும்பப்படும் கொடையாகக் கருதப்படுகிறது.(30) இவ்வாறே உலகத்தின் உயிரினங்கள் அனைத்திலும் பசுக்களே முதன்மையானவையாக இருக்கின்றன. அவற்றில் இருந்தே உலகங்கள் அனைத்திற்கும் தேவையான வாழ்வாதாரங்கள் தோன்றின. அவை ருத்திரனையே தங்கள் தலைவனாகக் கொண்டவையாகும். அவை பாலின் வடிவில் சோமத்தை (அமுதத்தைக்) கொடுக்கின்றன. அவை மங்கலமானவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்து விருப்பங்களையும் அருள வல்லவையாகவும், உயிரைக் கொடுக்கவல்லவையாகவும் இருக்கின்றன. ஒரு பசுவைக் கொடையளிப்பவன், மனிதர்களால் விரும்பப்படும் அனுபவிக்கத்தக்க அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(31) செழிப்பை அடைய விரும்பும் மனிதன், தூய இதயத்துடனும், தூய உடலுடனும் பசுவின் தோற்றத்தைக் குறித்த இந்த ஸ்லோகங்களைப் படித்தால், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, செழிப்பு, பிள்ளைகள், செல்வம் மற்றும் விலங்குகளை அடைகிறான்.(32) ஓ! மன்னா, பசுக்கொடையளிப்பவன் ஹவ்ய மற்றும் கவ்ய கொடைகளுக்குரிய பலன்களையும், பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துவதற்குரிய, அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும் வேறு அறச்செயல்களுக்குரிய, வாகனங்கள் மற்றும் துணிமணிகளைக் கொடையளிப்பதற்குரிய, பிள்ளைகள் மற்றும் முதியோரைப் பேணிவளர்ப்பதற்குரிய பலன்களையும் அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}”.(33)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவனும், பிருதையின் மகனுமான அசரன் யுதிஷ்டிரன், தன் பாட்டனின் இச்சொற்களைக் கேட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, முதன்மையான பிராமணர்களுகு பல்வேறு நிறங்களிலான காளைகளையும், பசுக்களையும் கொடையளிக்கத் தொடங்கினான்.(34) உண்மையில், மறுமையில் இன்பலோகங்களை வெல்வதற்கும், இம்மையில் பெரும்புகழை அடைவதற்கும், மன்னன் யுதிஷ்டிரன் பல வேள்விகளைச் செய்து, பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களை வேள்விக் கொடையாக அளித்தான்”.(35)
கோமதி மந்திரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 78-பசுக்களின் சிறப்புகளையும், கோமதி மந்திரத்தையும் சௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்காலத்தில், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் சௌதாசன்[1], தன் குடும்பப் புரோகிதரும், முனிவர்களில் முதன்மையானவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், எங்கும் செல்ல வல்லவரும், பிரம்மத்தின் கொள்ளிடமும், நித்திய வாழ்வை {மரணமற்ற வாழ்வைக்} கொண்டவருமான வசிஷ்டரை அணுகி அவரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(1,2)சௌதாசன் {வசிஷ்டரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, மூவுலகங்களில் புனிதமானது எது? எப்போதும் உரைப்பதால் ஒரு மனிதனை உயர்ந்த பலனை அடையச் செய்வதும் எது?” என்று கேட்டான்”.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், ” தம் முன்பு தலைவணங்கி நின்ற மன்னன் சௌதாசனிடம் கல்விமானான வசிஷ்டர், முதலில் பசுக்களை வணங்கி (உடலாலும், மனத்தாலும்) தம்மைத் தூய்மைசெய்து கொண்டு, அனைவருக்கும் உயர்ந்த நன்மைகளை விளைவிக்கும் பசுக்கள் குறித்த புதிரைக் குறித்து உரையாடினார்.(4)
வசிஷ்டர், “பசுக்கள் எபோதும் நறுமணமிக்கவை. குங்கிலியம் கசிவதன் மூலம் தோன்றும் நறுமணம் அவற்றின் உடலில் இருந்து வெளிப்படுகிறது. பசுக்களே அனைத்து உயிரினங்களின் பெரும்புகலிடமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்துக்குமான அருள் ஊற்றாக அமைகின்றன.(5) பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன. பசுக்களே வளர்ச்சியின் நித்திய ஊற்றாக இருக்கின்றன. பசுக்களே செழிப்பின் வேராக இருக்கின்றன. பசுக்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் தொலைந்து போவதில்லை.(6) பசுக்களே உயர்ந்த உணவாக அமைகின்றன. அவையே தேவர்களுக்குச் சிறந்த ஹவியாக இருக்கின்றன. ஸ்வாஹா மற்றும் வஷட் என்றழைக்கப்படும் மந்திரங்கள் பசுக்களிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கின்றன.(7) பசுக்கள வேள்விக்கனிகளாக அமைகின்றன. வேள்விகள் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன, அவற்றைச் சார்ந்தே வேள்விகளும் இருக்கின்றன.(8) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, ஹோமத்தில் பயன்படுத்தப்படும் ஹவியை முனிவர்களுக்குப் பசுக்களே காலையும், மாலையும் தருகின்றன.(9) ஓ! பெரும்பலம் கொண்டவனே, பசுக்களைக் கொடையளிப்போர், தாங்கள் இழைத்த பாவங்கள் அனைத்தையும் தாங்கள் வீழ நேரும் அனைத்து வகைத் துன்பங்களையும் கடக்கின்றனர்.(10)
தான் கொண்ட பத்துப் பசுக்களில் ஒரு பசுவைக் {10%} கொடையளிப்பவனும், நூறு பசுக்களில் பத்தைக் {10%} கொடையளிப்பவனும், ஆயிரம் பசுக்களில் நூறைக் {10%} கொடையளிப்பவனும் ஒரே அளவு பலனையே ஈட்டுகின்றனர்.(11) நூறு பசுக்களைக் கொண்டிருந்தாலும், நாள்தோறும் வழிபடுவதற்காக இல்லற நெருப்பை நிறுவாதவன், ஆயிரம் பசுக்களைக் கொண்டிருந்தாலும் வேள்விகளைச் செய்யாதவன், செல்வத்தைக் கொண்டிருந்தாலும் (கொடையளிக்காமல், விருந்தோம்பல் கடமைகளைச் செய்யாமல்) கஞ்சனாகச் செயல்படுபவன் ஆகிய மூவரும் மதிப்பெதற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்,(12) தீமையற்றவையும், துணிகளால் மறைக்கப்பட்டவையுமான கபிலைப்பசுக்களைக் கன்றுகளுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்களுடனும் கொடையளிக்கும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைகிறார்கள்.(13) பலமிக்கப் புலன்களைக் கொண்டதும், நூற்றுக்கணக்கான மந்தையில் முதன்மையானதாகக் கருதப்படுவதும், (பொன் அல்லது வெள்ளியிலான) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடியதுமான இளங்காளையை வேத கல்வி கொண்ட ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள், இவ்வுலகில் பிறப்பெடுக்கும்போதெல்லாம் பெருஞ்செழிப்பையும், செல்வாக்கையும் அடைவதில் வெல்கிறார்கள்.(14,15)
ஒருவன் பசுக்களின் பெயர்களை உரைக்காமல் ஒருபோதும் படுக்கைக்குச் செல்லக்கூடாது. அதே போல, காலையில் பசுக்களின் பெயர்களைச் சொல்லாமல் ஒருபோதும் படுக்கையில் இருந்து எழவும் கூடாது. அவன் காலையும், மாலையும் பசுக்களிடம் மதிப்புடன் தலைவணங்க வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(16) பசுக்களின் சிறுநீர் மற்றும் சாணத்தில் அவன் ஒருபோதும் வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது. அவன் ஒருபோதும் பசு இறைச்சி உண்ணக்கூடாது. இதன் காரணமாக அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(17) ஒருவன் எப்போதும் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அவன் ஒருபோதும் எவ்வகையிலும் பசுக்களை அவமதிக்கக்கூடாது. கெட்ட கனவுகளைக் கண்டால் மனிதர்கள் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(18) எப்போதும் பசுஞ்சாணம் பயன்படுத்தி நீராட வேண்டும். காய்ந்த பசுஞ்சாணத்திலே அமர வேண்டும். அவன் ஒருபோதும் பசுஞ்சாணத்தில் மலமும், சிறுநீரும் கழிக்கக்கூடாது, உமிழவும் கூடாது. அவன் ஒருபோதும் பசுவின் வழியில் தடங்கலேற்படுத்தக்கூடாது.(19) ஒருவன், நீரில் நனைத்துத் தூய்மை செய்யப்பட்ட பசுத்தோலில் அமர்ந்து, மேற்கு நோக்கிக் கண்களைச் செலுத்தி உண்ண வேண்டும். பேச்சை அடக்கி, வெறும் மண்ணை உணவாக்கி {தரையையே பாத்திரமாக்கி} அவன் நெய்யுண்ண வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் பசுக்களையே தோற்றுவாயாகக் கொண்ட செழிப்பை அடைவான்[2].(20)ஒருவன் நெய்யைப் பயன்படுத்தி நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் நெய்யைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அவன் நெய்க்கொடையளிக்க வேண்டும். அவன் நெய்யை உண்ணவும் வேண்டும். அத்தகைய செயல்களுக்கான வெகுமதியாக அவன் பசுக்கள் அழிக்கும் செழிப்பை நிச்சயம் அடைவான்.(21) கோமதி என்ற பெயரில் அழைக்கப்படும் வேத மந்திரங்களைச் சொல்லி எள்ளினாலான பசு வடிவத்தைச் செய்து, அனைத்து வகை ரத்தினங்களாலும் அஃதை அலங்கரித்துக் கொடையளிப்பவன், தான் செய்த செயல்கள் மற்றும் தவிர்த்த செயல்களின் காரணமாக எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(22) “பெரும் அளவில் பாலைத் தருபவையும், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையும், சுரபியின் மகள்களுமான பசுக்கள், பெருங்கடலை அணுகும் ஆறுகளைப் போலவே என்னை அடையட்டும்.(23) நான் எப்போதும் பசுக்களைக் காண்பேன். பசுக்களும் என்னைப் பார்க்கட்டும். பசுக்கள் எங்களுக்குரியவை. நாங்கள் அவற்றுக்குரியவர்கள் பசுக்கள் இருக்கும் இடத்திலேயே நாங்கள் இருப்போம்”(24) என்று {மேற்கண்ட கோமதி மந்திரத்தைப்}[3] பேரச்சம் நேரும் வேளைகளில் இரவிலோ, பகலிலோ, இன்பத்திலோ, துன்பத்திலோ ஒரு மனிதன் சொல்ல வேண்டும். இத்தகைய சொற்களைச் சொல்வதன் மூலம் அவன் நிச்சயம் அனைத்து அச்சங்களில் இருந்து விடுபடுவான்” என்றார் {வசிஷ்டர்}.(25)
கோதானப் பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 79-பல்வேறு வகைப் பசுக்களைக் கொடையளிப்பதால் கிட்டும் பல்வேறு வகையான பலன்கள் குறித்து ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…
வசிஷ்டர் {மன்னன் சௌதாசன் (அ) கல்மாஷபாதனிடம்}, “முற்காலத்தில் படைக்கப்பட்ட பசுக்கள், பெரும் முன்சிறப்புகளுடன் கூடிய நிலையை அடையும் விருப்பத்தில் நூறாயிரம் வருடங்கள் கடுந்தவங்களைப் பயின்றன.(1) உண்மையில், ஓ! பகைவரை எரிப்பவனே, அவை தமக்குள்ளேயே, “இவ்வுலகின் வேள்விகளில் அனைத்து வகையிலும் சிறந்த தக்ஷிணையாக மாறுவோம், எக்குற்றமும் இல்லாதவராவோம்.(2) நமது சாணம் கலந்த நீரில் நீராடுவதன் மூலம் மக்கள் புனிதமடையட்டும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் தேவர்களும், மனிதர்களும் நமது சாணத்தைப் பயன்படுத்தட்டும். நம்மைக் கொடையளிப்பவர்களும் நமக்கான இன்பலோகங்களை அடையட்டும்” என்று {தங்களுக்குள்ளேயே} சொல்லிக் கொண்டன[1].(3,4)அவற்றின் தவங்கள் நிறைவடையும் தருணத்தில் அவற்றின் முன் தோன்றிய பலமிக்கப் பிரம்மன், அவை வேண்டிய வரங்களைக் கொடுத்து, “நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும். நீங்கள் உலகங்கள் அனைத்தையும் (இவ்வாறு) காப்பீராக” என்றான்.(5)
கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அன்னையரான அவை அனைத்தும், தங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு எழுந்தன. ஒவ்வொரு காலை வேளையிலும் மக்கள் மதிப்புடன் பசுக்களை வணங்க வேண்டும். இதன் விளைவாக அவர்கள் நிச்சயம் செழிப்பை வெல்வார்கள்.(6) ஓ! ஏகாதிபதி, பசுக்களின் தவங்கள் நிறைவடைந்தபோது அவை உலகின் புகலிடங்களாகின. இதன் காரணமாகவே பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்திலும் முதன்மையானவையாகவும் சொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவே பசுக்கள் அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(7)
தனக்கு ஒப்பான கன்றுகளுடன் கூடியதும், அபரிமிதமான அளவில் பாலைக் கொடுப்பதும், தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி பிரம்மலோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(8)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு சிவப்பு நிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சூரிய லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(9)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு பலவண்ணப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சோம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(10)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு வெண்ணிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இந்திர லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(11)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கருநிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அக்னி லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(12)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும், புகைவண்ணத்துடன் கூடியதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் யம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(13)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், நீர் நுரையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வருணலோகத்தை அடைகிறான்.(14)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், காற்றில் பறக்கும் தூசியின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் காற்றுதேவனின் உலகத்தில் {வாயுலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(15)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், பழுப்புநிறக் கண்களுடன் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், பொன் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் குபேரலோகத்தில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(16)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வைக்கோல் புகையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பித்ருக்களின் உலகத்தில் {பிதிருலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(17)
கன்றுடன் கூடியதும், தொண்டைச் சதை தொங்கும் ஒரு பருத்த பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எளிதாக விஸ்வேதேவர்களின் உயர்ந்த உலகத்தை அடைகிறான்.(18)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பாலைத் தருவதும், அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும்மான ஒரு கௌரி பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான்.(19)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வெண்கம்பளி நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சாத்தியர்களின் உலகை அடைகிறான்.(20)
ஓ! மன்னா {சௌதாசா}, உயர்ந்த திமிலைக்கொண்டதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(21)
வயதால் முழுமையாக வளர்ந்ததும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் நீல நிறமாக இருப்பதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களை அடைகிறான்.(22)
தொண்டைச் சதை தொங்குவதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி அனைத்துத் துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிரஜாபதிக்கே சொந்தமான உலகங்களை அடைகிறான்.(23)
ஓ! மன்னா, பசுக்கொடை அளிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், சூரியப் பிரகாசம் கொண்ட ஒரு தேரில் மேகங்களின் ஊடாகத் துளைத்துச் சென்று சொர்க்கத்தை அடைந்து அங்கே காந்தியுடன் ஒளிர்கிறான்.(24)
பசுக்கொடையளிப்பதை வழக்கமாகக் கொண்ட மனிதன் மனிதர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்லும்போது, அழகிய இடைகளைக் கொண்டவர்களும், அழகிய ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் தெய்வீகக் காரிகையரால் அவன் வரவேற்கப்படுகிறான். இப்பெண்கள் அங்கே அவனுக்குப் பணிவிடை செய்து, அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள்.(25) அமைதியாக அங்கே உறங்கும் அவன், அந்த மான்விழி மங்கையரின் வீணை இசையாலும், அவர்களுடைய வல்லகிகளின் மென்மையான சுரத்தாலும், நுபரங்களின் {காற்சிலம்புகளின்} இனிய கிண்கிணி ஒலியாலும், அவர்களுடைய சிரிப்பிசையாலும் விழிப்படைகிறான்[2].(26) பசுக்கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தில் வசிக்கிறான்; தான் கொடுக்கும் பசுக்களின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் அங்கே கௌரவிக்கப்படுகிறான். (புண்ணியம் தீர்ந்து) சொர்க்கத்தில் வீழ நேரும் அத்தகைய மனிதன் மனித வகையிலேயே பிறப்பெடுக்கிறான்; உண்மையில் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு மேம்பட்ட குடும்பத்திலேயே பிறப்பெடுக்கிறான்” என்றார் {வசிஷ்டர்}.(27)
கோ மந்திரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 80- பசுவைக் குறிக்கும் புனித மந்திரங்களை ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…
வசிஷ்டர் {மன்னன் சௌதாசனிடம்}, “பசுக்கள் நெய்யையும், பாலையும் தருகின்றன. அவையே நெய்யின் ஊற்றுக்கண்ணாகவும், {அமுதம் போன்ற} நெய்யில் இருந்து உண்டானவையாகவும் இருக்கின்றன. அவையே நெய்யாறுகளாகவும், நெய்ச்சுழல்களாகவும் இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் வீட்டில் இருக்கட்டும்.(1) நெய்யே எப்போதும் என் இதயமாக இருக்கிறது. நெய்யானது என் தொப்புளிலும் நிறுவப்பட்டிருக்கிறது. நெய்யானது என் அங்கங்கள் யாவிலும் உள்ளது. நெய் என் மனத்தில் வசிக்கிறது.(2) பசுக்கள் எப்போதும் என் முன்னே இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் பின்னே இருக்கின்றன. என் மேனியின் அனைத்துப் பக்கங்களிலும் பசுக்கள் இருக்கின்றன. நான் பசுக்களின் மத்தியிலேயே வாழ்கிறேன்”(3) என்ற இந்த மந்திரத்தை நீரைத்தொட்டுத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு நாளும் ஒருவன் சொல்ல வேண்டும். இதனால் அந்த நாளில் தான் இழைக்கும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் அவன் விடுபடுவான்.(4)
ஆயிரம் {1,000} பசுக்களைக் கொடையளித்து இவ்வுலகத்தைவிட்டுச் செல்லும் ஒருவன், வசு என்றழைக்கப்படும் தெய்வீக கங்கை ஏங்கே பாய்கிறதோ, எங்கே பொன் மாளிகைகள் பல இருக்கின்றனவோ, எங்கே கந்தர்வர்களும், அப்சரஸ்களும் இருக்கின்றனரோ அந்த உலகங்களுக்குச் செல்கிறான்.(5) ஆயிரம் {1,000} பசுக்களைக் கொடையளித்தவர்கள், ஓடும் நீராகப் பாலையும், சேறாகப் பாலாடைக்கட்டிகளையும் {வெண்ணையையும்}, மிதக்கும் பாசியாகத் தயிரையும் கொண்ட பல ஆறுகள் எங்கே ஓடுகின்றனவோ அங்கே செல்கிறார்கள்.(6) சாத்திரங்களிலுள்ள சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன், (இம்மையில்) பெருஞ்செழிப்பை அடைந்து, சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(7) அத்தகைய மனிதன் தன் தந்தைவழி மற்றும் தாய்வழி மூதாதையரில் பத்து தலைமுறையினரை பேரின்பம் நிறைந்த உலகங்களை அடையச்செய்து தன் மொத்த குலத்தையும் புனிதப்படுத்துகிறான்.(8)
பசுக்கள் புனிதமானவை. அவை உலகில் உள்ள அனைத்திலும் முதன்மையானவை. அவையே உண்மையில் அண்டத்தின் புகலிடமாக இருக்கின்றன. அவையே தேவர்களின் அன்னையராகவும் இருக்கின்றன. அவை உண்மையில் ஒப்பற்றவையாகும். அவற்றை வேள்விக்கெனவே அர்ப்பணிக்க வேண்டும்.(9) ஒருவன் பயணம் புறப்படும்போது அவற்றுக்கு வலப்பக்கமாக (அவற்றைத் தனக்கு இடப்பக்கமாக வைத்துச்) செல்ல வேண்டும். சரியான காலத்தை உறுதிசெய்து கொள்ளும் அவர்கள் அவற்றைத் தகுந்த நபர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(10) பெருங்கொம்புகளைக் கொண்டதும், கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், அச்சத்தில் இருந்து விடுபட்டவனாக, நுழையக் கடினமான யமனின் அரண்மனைக்குள் நுழைவதில் வெல்லலாம்.(11)
ஒருவன் எப்போதும், “பசுக்கள் அழகிய வடிவைக் கொண்டவை. பசுக்கள் பல்வேறு வடிவங்களிலானவை. அவை அண்டத்தின் வடிவம் கொண்டவை. அவையே அண்டத்தின் அன்னையராக இருக்கின்றன. ஓ! பசுக்கள் என்னை அணுகட்டும்” என்ற புனித மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.(12)பசுக்கொடையைவிடப் புனிதமிக்க வேறு கொடையேதும் இல்லை. அதிக அருள் பலனைக் கொடுக்கவல்ல வேறு கொடையேதும் இல்லை. பசுவுக்கு இணையான வேறேதும் இல்லை, அதே போலவே பசுவுக்கு இணையான வேறேதும் இருக்கப் போவதுமில்லை.(13) பசுவின் தோல், மயிர், கொம்புகள், வால், பால், கொழுப்பு ஆகியவை அனைத்தும் வேள்வியை ஆதரிக்கின்றன. பசுவை விடப் பயன்மிக்கதாக இருப்பது வேறு எது?(14) கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் தாயும், அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மொத்த அண்டத்தையும் மறைத்திருப்பதுமான பசுவுக்கு நான் மதிப்புடன் தலைவணங்குகிறேன்.(15) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பசுத் தரும் உயர்ந்த பலன்களில் ஒரு பகுதியை மட்டுமே நான் உனக்கு உரைத்திருக்கிறேன். பசுக்கொடையைவிட மேன்மையான கொடை இவ்வுலகில் வேறேதும் இல்லை. பசுவை விட உயர்ந்த புகலிடமும் இவ்வுலகில் வேறேதும் இல்லை” என்றார் {வசிஷ்டர்}”.(16)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மா கொண்ட அந்த நிலக் கொடையாளி (மன்னன் ஸௌதாசன்) முக்கியமானவற்றில் முதன்மையான முனிவர் வசிஷ்டரின் இந்தச் சொற்களை நினைவுகூர்ந்து, புலனடக்கத்துடன் கூடியவனாகப் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மேலும், அக்கொடைகளின் விளைவாக அந்த ஏகாதிபதி மறுமையில் பல இன்பலோகங்களை அடைவதில் வென்றான்” {என்றார் பீஷ்மர்}.(17)
கோலோகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 81-அருளப்பட்டவர்கள் அடையும் பசுக்களின் உலகத்தைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புனிதப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் இவ்வுலகில் உயர்வானதும், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வேறு புனிதங்கள் யாவற்றையும் விட மிகப் புனிதமானது எது?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. அவை மிகப் புனிதமானவை மற்றும் அவையே மனிதர்களை (அனைத்து வகைப் பாவங்கள் மற்றும் துன்பங்களில் இருந்தும்) மீட்கின்றன. தாங்கள் தரும் பால், மற்றும் அதிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றின் மூலம் பசுக்களே அண்டத்தின் உயிரினங்கள் யாவற்றையும் தாங்கிப் பிடிக்கின்றன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பசுக்களைவிடப் புனிதமானது வேறேதும் இல்லை. மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் முதன்மையான பசுக்களே புனிதமானவையாகவும், பிறரைத் தூய்மைப்படுத்த வல்லவையாகவும் இருக்கின்றன.(3) பசுக்கள், தேவலோகத்தையும் விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன. கொடையளிக்கப்படும் போது தங்களைக் கொடையளித்தவர்களை அவை மீட்கின்றன. ஞானமுள்ள மனிதர்கள் பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(4)
யுவனாஸ்வனின் மகன் மாந்தாத்ரி {மாந்தாதா}, யயாதி, (அவனது தந்தையான) நஹுஷன் ஆகியோர் ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தனர்.(5) அந்தக் கொடைகளின் வெகுமதியாக அவர்கள் தேவர்களாலும் அடைய முடியாத அத்தகைய உலகங்களை அடைந்தனர். ஓ!பாவமற்றவனே, இது தொடர்பாகப் பழங்காலத்தில் ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. அதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) ஒரு காலத்தில், நுண்ணறிவுமிக்கச் சுகர், தமது காலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, மன அடக்கத்துடன் கூடியவராக, தீவில் பிறந்தவரும், முனிவர்களில் முதன்மையானவரும், மேன்மை, கீழ்மை ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாட்டை அறிந்தவரும், தமது தந்தையுமான கிருஷ்ணரை {வியாசரை} அணுகி, அவரை வணங்கி, அவரிடம், “வேள்விகள் அனைத்திலும் முதன்மையானது என உமக்குத் தோன்றும் வேள்வி யாது?(7,8) ஞானமுள்ள மனிதர்கள் எச்செயலைச் செய்வதன் மூலம் உயர்ந்த உலகத்தை அடைவதில் வெல்கின்றனர்? புனிதமான எச்செயலைச் செய்ததன் மூலம் தேவர்கள் சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறார்கள்?(9) எந்த வேள்விப் பண்பு வேள்வியாக அமைகிறது? {அதாவது, வேள்வியை நிறைவடையச் செய்வது எது?} வேள்வியானது எதைச் சார்ந்திருக்கிறது? தேவர்களால் சிறந்ததெனக் கருதப்படுவது எது? ஓ! ஐயா, அனைத்திலும் மிகப் புனிதமானது எது என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(10)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, தமது மகனின் இச்சொற்களைக் கேட்டவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசர் அவரிடம் பின்வருமாறு உரையாடினார்.
வியாசர் {சுகரிடம்}, “பசுக்களே அனைத்து உயிரினங்களின் ஆதாரமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கின்றன. பசுக்கள் புனிதமானவை, பசுக்களே அனைத்தையும் புனிதப்படுத்துபவையுமாகும்.(12) முன்பு பசுக்கள் கொம்பற்றவையாக இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொம்புகளைப் பெறுவதற்காக நித்தியமானவனும், பலமிக்கவனுமான பிரம்மனை அவை துதித்தன.(13) பலமிக்கப் பிரம்மன், பசுக்கள் பிராயத்தில் அமர்ந்து தங்கள் துதிகளைச் செலுத்துவதைக் கண்டு, அவை ஒவ்வொன்றும் விரும்பியதைக் கொடுத்தான்.(14) அதன் பிறகு அவற்றுக்குக் கொம்புகள் முளைத்தன, அவை ஒவ்வொன்றுக்கும் விரும்பியவை கிடைத்தன. ஓ! மகனே, பல்வேறு வண்ணங்களிலும் இருந்தவையும், கொம்புகளுடன் கூடியவையுமான அவை அழகில் ஒளிரத் தொடங்கின.(15)
பிரம்மனாலேயே வரமளிக்கப்படப் பசுக்கள் மங்கலமானவையாகவும், ஹவ்யகவ்யங்களைக் கொடுப்பவையாகவும் இருக்கின்றன. அவையே பலன்களின் உடல்வடிவமாக இருக்கின்றன. அவை புனிதமானவையாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. அவை சிறந்த வடிவங்களையும், குணங்களையும் கொண்டவையாக இருக்கின்றன.(16) பசுக்களில் உயர்ந்த மற்றும் சிறந்த சக்தி இருக்கிறது. பசுக்கொடை பெரிதும் மெச்சப்படுகிறது. செருக்கிலிருந்து விடுபட்டு, பசுக்கொடையளிக்கும் நல்லோர்(17) அறச்செயல்களைச் செய்பவர்களாகவும், அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஓ! பாவமற்றவனே, அத்தகைய மனிதர்கள் உயர்ந்ததும் புனிதமானதுமான பசுக்களின் உலகத்தை அடைகிறார்கள்.(18) அங்குள்ள மரங்கள் இனிய கனிகளை உண்டாக்குகின்றன. உண்மையில் அம்மரங்கள் சிறந்த மலர்களாலும், கனிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஓ!மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அம்மலர்கள் தெய்வீக நறுமணத்துடன் கூடியவையாக இருக்கின்றன.(19) அவ்வுலகத்தில் உள்ள மொத்த நிலமும் ரத்தினங்களால் ஆனதாக இருக்கிறது. மண் யாவும் பொன்னாக இருக்கின்றன. ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் உரிய சிறப்பான தட்பவெப்ப நிலையே அங்கே நிலவுகிறது. அங்கே புழுதியோ, தூசியோ இருப்பதில்லை. உண்மையில் உயர்ந்த மங்கலம் நிறைந்ததாக அஃது இருக்கிறது.(20)
அங்கே பாயும் ஓடைகள், மலர்ந்த செந்தாமரைகளைத் தங்கள் மார்பில் தாங்கி, ரத்தினங்களையும் பொன்னையும் தங்கள் கரைகளில் தாங்கி காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(21) விலைமதிப்புமிக்க ரத்தின இதழ்களையும், பொன்மயமாகப் பிரகாசிக்கும் மகரந்தங்களையும் கொண்ட கருநெய்தல் மற்றும் தாமரை மலர்கள் கலந்து நிலையில் நிரம்பியிருக்கும் மடுக்களும் அங்கே நிறைந்திருந்தன.(22) சுற்றிலும் கொடிகளால் பின்னப்பட்டு மலர்ந்திருக்கும் அலரிக் காடுகளாலும், மலர்ச்சுமைகளுடன் கூடிய ஸந்தானக {ஸகஸ்ராவர்த்த} காடுகளாலும் அவை {அந்த மடுக்கள்} அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.(23) பிரகாசமான முத்துகள், மிளிரும் ரத்தினங்கள் மற்றும் ஒளிரும் பொன் ஆகியவற்றால் பல வண்ணங்களை அடைந்திருக்கும் கரைகளைக் கொண்ட ஆறுகளும் அங்கே இருக்கின்றன.(24) அந்த உலகத்தின் சில பகுதிகள் அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறந்த மரங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில பொன்னாலானவையாகவும், சில நெருப்பின் காந்தியை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.(25)
பொன் மலைகள் பலவும், ரத்தினங்களாலான குன்றுகள் மற்றும் கொடுமுடிகள் பலவும் அங்கே இருக்கின்றன. அனைத்து வகை ரத்தினங்களாலும் அமைந்த நெடுஞ்சிகரங்களின் விளைவால் அவை அழகில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(26) அவ்வுலகதை அலங்கரிக்கும் மரங்கள் எப்போதும் மலர்களையும், கனிகளையும் விளைவிக்கின்றன, அவையும் எப்போதும் அடர்த்தியாக இருக்கும் இலைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா[1], அம்மலர்கள் எப்போதும் தெய்வீக நறுமணத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன, கனிகளும் பெரும் சுவைமிக்கவையாகவும் இருக்கின்றன.(27) ஓ! யுதிஷ்டிரா, அறச்செயல்களைச் செய்த மனிதர்க்ள எப்போதும் அங்கே இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். துன்பம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்ட அவர்கள் தங்கள் விருப்பங்கள் யாவும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டுத் தங்கள் காலத்தை அங்கே கழிக்கின்றனர்.(28) ஓ! பாரதா, அறச்செயல்களைச் செய்தவர்களும், புகழ் கொண்டவர்களுமான மனிதர்கள், பேரழகுடன் கூடிய இனிய வாகனங்களில் ஓரிடத்தில் இருந்து மறுஇடத்திற்குச் சென்று மகிழ்ச்சியில் அங்கே விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.(29) மங்கலமான அப்சரஸ் கூட்டங்கள், தங்கள் ஆடல் பாடல்களின் மூலம் அங்கே அவர்களை மகிழ்வித்துக் கொண்டு இருக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, உண்மையில் பசுக்கொடைகளை அளிப்பதற்கன வெகுமதியாக ஒரு மனிதன் அத்தகைய உலகத்திற்குச் செல்கிறான்.(30)பூஷன் மற்றும் பெரும்பலம் கொண்ட மருத்துகளைத் தங்கள் தலைவர்களாகக் கொண்ட உலகங்கள் பசுக்களைக் கொடையளிப்பவர்களால் அடையப்படுகின்றன. அரச வருணன் செல்வத்ததில் மேம்பட்டவனாகக் கருதப்படுகிறான். பசுக்கொடையாளியானவன், வருணனைப் போன்ற செல்வநிலையை அடைவான். ஒருவன், உறுதியான நோன்பு கொண்டவனாக, “யுகாந்தரா {காலத்தைத் தாங்குபவை}, சுரூபா {அழகான வடிவம் கொண்டவை}, பஹுரூபா {பல நிறங்களைக் கொண்டவை}, விஷ்வரூபா {அண்டந்தழுவியவை}, மாதரா {அன்னையராய் இருப்பவை ஆகிய பசுக்கள் என்னைக் காக்கட்டும்}” என்று (பசுக்களைப் பொறுத்தவரையில்) பிரஜாபதியாலேயே அறிவிக்கப்பட்ட இந்த மந்திரத்தை நாள்தோறும் சொல்ல வேண்டும்[2].(31,32)மதிப்புடன் பசுக்களுக்குத் தொண்டாற்றுபவனும், பணிவுடன் அவற்றைப் பின் தொடர்பவனுமான ஒருவன், தன்னிடம் நிறைவடைந்த பசுக்களிடமிருந்து மதிப்புமிக்கப் பல வரங்களை அடைவதில் வெல்கிறான்.(33) ஒருவன் தன் இதயத்தாலும் {மனத்தாலும்} ஒருபோதும் பசுக்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது. உண்மையில் அவன் அவற்றுக்கு மகிழ்ச்சியையே அளிக்க வேண்டும். அவன் எப்போதும் பசுக்களை மதித்து, தலைவணங்கி அவற்றை வழிபட வேண்டும்.(34) புலனடக்கத்துடனும், உற்சாகத்துடனும் கூடிய ஒருவன் பசுவால் அனுபவிக்கக்கூடிய (பசுவால் மட்டுமே கொடுக்கப்படக்கூடிய) இன்பநிலையை அனுபவிப்பதில் வெல்கிறான். அவன் மூன்று நாட்கள் பசுவின் சூடான சிறுநீரைக் குடிக்க வேண்டும். அடுத்த மூன்று நாளைக்கு அவன் பசுவின் சூடான பாலைக் குடிக்க வேண்டும்.(35) இவ்வாறு மூன்று நாட்கள் சூடான பாலைக் குடிக்கும் அவன் அடுத்த மூன்று நாள் சூடான நெய்யைக் குடிக்க வேண்டும். இவ்வகையில் மூன்று நாள் சூடான நெய்யைக் குடித்த ஒருவன், அடுத்த மூன்று நாட்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ வேண்டும்.(36) {இவற்றின் மூலம்} இன்ப உலகங்களை அனுபவிக்கத் தேவர்களுக்குத் துணை செய்வதும், புனிதமான பொருட்கள் அனைத்திலும் மிகப் புனிதமானதுமான நெய்யானது தலையில் தாங்கப்பட வேண்டும்[3].(37)நெய்யின் துணை கொண்டே ஒருவன் ஆகுதிகளைப் புனித நெருப்பில் ஊற்ற வேண்டும். நெய்க்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பிராமணர்களைத் தனக்கு ஆசி கூறச் செய்ய வேண்டும். ஒருவன் நெய்யுண்டு, நெய்க்கொடை அளிக்க வேண்டும். இந்நடத்தையின் வெகுமதியாக அவன் பசுக்களுக்குச் செந்தமான செழிப்பை அடைவான்.(38) ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் பசுஞ்சாணத்தில் இருந்து யவங்கள் எனும் அரிசியை உண்பதால் ஒருவன் பிராமணனைக் கொன்ற பாவத்தைப் போன்ற கொடும்பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(39) தைத்தியர்களிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு தேவர்கள் பாவக்கழிப்பாக இதையே செய்தனர். இந்தப் பாவக்கழிப்பின் விளைவாகவே அவர்களால் தேவர்கள் என்ற தங்கள் நிலையை மீண்டும் பெற முடிந்தது. உண்மையில் இதன் மூலமே அவர்கள் தங்கள் பலத்தை மீண்டும் அடைந்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(40) பசுக்கள் புனிதமானவை. அவை பலன்களின் {புண்ணியங்களின்} உடல் வடிவங்களாக இருக்கின்றன. அவை பாவங்களைப் போக்கவல்ல அனைத்திலும் எதிர்பார்க்கும் பலனைத் தரவல்லவையாகவும், உயர்வையாகவும்இருக்கின்றன. பிராமணர்களுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(41) பசுக்களுக்கு மத்தியில் தூய நிலையில் வாழும் ஒருவன், நீரைத் தீண்டிய பிறகு, கோமதி என்ற பெயரால் அறியப்படும் புனித மந்திரங்களை மனத்தால் உரைக்க வேண்டும். இதைச் செய்வதால் ஒருவன் (பாவங்கள் அனைத்தில் இருந்து) தூய்மையடைந்து புனிதமடைகிறான்.(42)
அறச்செயல்களைச் செய்வோரும், அறிவாலும், வேத கல்வியாலும், நோன்புகள் நோற்பதாலும் தூய்மையடைந்தோருமான பிராமணர்கள், புனித நெருப்புகளின் மத்தியிலோ, பசுக்கள், அல்லது பிராமணக் கூட்டங்களின் மத்தியிலோ மட்டுமே வசித்து, அனைத்து வகையிலும் ஒரு வேள்வியைப் போன்றதாக இருக்கும் (கோமதி மந்திரம் விளைவிக்கும் பலனுக்காக) கோமதி மந்திரத்தின் அறிவைத் தங்கள் சீடர்களுக்குப் போதிக்க வேண்டும். ஒருவன் கோமதி மந்திர ஞானம் எனும் வரத்தை அடைவதற்காக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(43,44) ஒரு மகனை அடைய விரும்பும் மனிதன் இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் அஃதை அடைவான். செல்வத்தை அடைய விரும்பும் ஒருவன் இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் தன் விருப்பம் நிறைவேறப்பெறலாம். நல்ல கணவரை அடைய விரும்பும் பெண்ணானவள், இதே வழிமுறைகளின் மூலம் தன் விருப்பம் வெற்றியால் மகுடம் சூடப்படும் நிலையை அடையலாம். உண்மையில், இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் ஒருவன் தான் விரும்பும் எதுவும் கனியும் {தான் விரும்பும் எதையும் பெறும்} நிலையை அடையலாம்.(45) ஒருவன் பசுக்களுக்குச் செய்யும் தொண்டினால் அவனிடம் நிறைவடையும் அவை, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள வல்லவையாக நிச்சயம் இருக்கின்றன. பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவை. அவையே வேள்விக்கான முக்கியத் தேவையாக இருக்கின்றன. அவை அனைத்து விருப்பங்களையும் அருளக்கூடியவை ஆகும். பசுவைவிட மேன்மையானது வேறேதும் இல்லை என்பதை அறிவாயாக” {என்றார் வியாசர்}.(46)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு தமது உயர் ஆன்மத் தந்தையால் சொல்லப்பட்டவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சுகர், அக்காலம் முதல் ஒவ்வொரு நாளும் பசு வழிபாட்டைச் செய்யத் தொடங்கினார். ஓ! மகனே, நீயும் அதே வழியில் உன்னை நடத்திக் கொள்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(47)
கோமயம் மற்றும் கோமியத்தில் ஸ்ரீதேவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 82-ஸ்ரீதேவிக்கும் பசுக்களுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பசுக்களின் சாணத்திலும், சிறுநீரிலும் அந்த ஸ்ரீதேவியே வசிப்பது குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்},[1] “பசுக்களின் சாணத்தில் ஸ்ரீ {லட்சுமி} இருக்கிறாள் என நான் கேட்டிருக்கிறேன். அஃது எவ்வாறு என்பதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, என் ஐயங்களை நீர் அகற்ற வேண்டும்” என்று கேட்டான்.(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாகப் பசுக்களுக்கும், ஸ்ரீக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் ஸ்ரீதேவி {லட்சுமி தேவி}, ஓர் அழகிய வடிவை ஏற்றுக் கொண்டு ஒரு பசுமந்தைக்குள் நுழைந்தாள். அவளது அழகெனும் செல்வத்தைக் கண்ட பசுக்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(3)
பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, “ஓ! தேவி, நீ யார்? பூமியில் ஒப்பற்ற இவ்வழகை நீ எங்கிருந்து பெற்றாய்? ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட தேவியே, உன் அழகெனும் செல்வத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியத்தால் நிறைகிறோம்.(4) நீ யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். உண்மையில், நீ யார்? நீ எங்கே செல்லப் போகிறாய்? ஓ! மிக மேன்மையான ஒளிமிக்க நிறத்தைக் கொண்டவளே, நாங்கள் அறிய விரும்பும் அனைத்தையும் எங்களுக்கு விரிவாகச் சொல்வாயாக” என்றன.(5)
ஸ்ரீ {பசுக்களிடம்}, “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நான் உயிரினங்கள் அனைத்தின் அன்புக்குரியவள் ஆவேன். உண்மையில் நான் ஸ்ரீ என்ற பெயரால் அறியப்படுகிறேன். என்னால் கைவிடப்பட்ட தைத்தியர்கள் என்றென்றும் கெட்டுப் போனார்கள்.(6) இந்திரன், விவஸ்வத் {விவஸ்வான்}, சோமன், விஷ்ணு, வருணன், அக்னி ஆகிய தேவர்கள் என்னை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.(7) உண்மையில், முனிவர்களும், தேவர்களும் தங்களிடம் என்னைக் கொண்டிருக்கும்போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூடப்படுகின்றனர். பசுக்களே, எந்த உயிரினங்களுக்கு மத்தியில் நான் நுழையவில்லையோ அங்கே அழிவு நேருகிறது.(8) அறம், பொருள், இன்பம் ஆகியவை என்னுடன் சேர்ந்திருக்கும்போது மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பசுக்களே, நான் அத்தகைய சக்தியைக் கொண்டவள் என்பதை அறிவீராக.(9) நான் உங்களில் ஒவ்வொருவரிடமும் வசிக்க விரும்புகிறேன். நானே முன்வந்து உங்களை வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் ஸ்ரீ உள்ளவர்களாவீராக” என்றாள்.(10)
பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, “நீ நிலையற்றவளாகவும், ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். மேலும் நீ பலரால் அனுபவிக்கப்படுபவளாகவும் இருக்கிறாய் {நீ பலருக்குப் பொதுவானவளாக இருக்கிறாய்}. நாங்கள் உன்னைக் கொள்ள விரும்பவில்லை. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(11) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் நல்வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது? நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. (எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்ததன் மூலம்) நீங்கள் ஏற்கனவே எங்களை மிகவும் நிறைவடையச் செய்துவிட்டாய்” என்றன.(12)
ஸ்ரீ, “பசுக்களே, நீங்கள் என்னை வரவேற்காதது முறையா? நான் அடைதற்கரிதானவள். என்னை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்?(13) சிறந்த நோன்புகளைக் கொண்ட உயிரினங்களே, வேண்டாமல் மற்றொருவரிடம் செல்லும் ஒருவன் அவமதிக்கப்படுவது நிச்சயம் என்ற உலகமறிந்த இப்பழமொழி உண்மை என்றே தெரிகிறது.(14) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள் ஆகியோர் மிகக் கடுந்தவங்களைச் செய்தபிறகு மட்டுமே என்னை அடைவதில் வெல்கிறார்கள்.(15) இத்தகைய சக்தியைக் கொண்ட நீங்கள் என்னை ஏற்பீராக. இனியவர்களே, அசையும், மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும் ஒருபோதும் எவராலும் நான் அவமதிக்கப்படுவதில்லை” என்றாள்.(16)
பசுக்கள், “ஓ! தேவி, நாங்கள் உன்னை அவமதிக்கவில்லை. நாங்கள் உன்னை அவதூறு செய்யவும் இல்லை. நீ நிலையற்றவளாகவும், இதயத்தில் ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக மட்டுமே நாங்கள் உன்னை விடுகிறோம்.(17) அதிகம் பேச என்ன இருக்கிறது? நீ தேர்ந்தெடுக்கும் இடத்திற்குச் செல்வாயாக. நாங்கள் அனைவரும் சிறந்த வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். ஓ! பாவமற்றளவே, உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது?” என்று கேட்டன.(18)
ஸ்ரீ, “கௌரவங்களை அளிப்பவர்களே, இவ்வகையில் உங்களால் கைவிடப்படும் நான் நிச்சயம் உலகமெங்கும் அவமதிப்புக்குரியவளாக இருப்பேன். எனக்கு அருள் புரிவீராக.(19) நீங்கள் அனைவரும் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். உங்களிடம் பாதுகாப்பை நாடுவோரைப் பாதுகாக்க எப்போதும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பை வேண்டியே நான் உங்களிடம் வந்திருக்கிறேன். என்னிடம் குற்றமேதுமில்லை. (இந்நிலையில் இருந்து) என்னைக் காப்பீராக.(20) நான் எப்போதும் உங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்பதை அறிவீராக. உங்கள் உடலில் உள்ள இழிவான பகுதி ஒன்றிலாவது நான் வசிக்க விரும்புகிறேன். உண்மையில், நான் உங்கள் குதத்திலாவது வசிக்க விரும்புகிறேன்.(21) பாவமற்றவர்களே, நீங்கள் புனிதமானவர்களாகவும், உயர்ந்த அருளைப் பெற்றவர்களாகவும் இருப்பதால் உங்கள் உடலில் யாதொரு பாகத்தையும் அருவருக்கத்தக்கதாகக் கருதவில்லை. எனினும், என் வேண்டுதலை அருள்வீராக. உங்கள் உடல்களில் எந்தப் பகுதியில் நான் வசிக்க வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டாள்”.(22)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஸ்ரீயால் இவ்வாறு சொல்லப்பட்டவையும், எப்போதும் மங்கலமாக இருப்பவையும், தங்களிடம் அர்ப்பணிப்புள்ளவர்களிடம் அன்பு பாராட்டுபவையுமான பசுக்கள், ஓ! மன்னா, ஒன்றோடொன்று ஆலோசித்து, ஸ்ரீயிடம் இந்தச் சொற்களைச் சொல்லின.(23)
பசுக்கள், “ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நாங்கள் உன்னைக் கௌரவிக்க வேண்டும் என்பது நிச்சயம் விரும்பத்தக்கதே. நீ எங்களது சிறுநீரிலும், சாணத்திலும் வாழ்வாயாக. ஓ! மங்கல தேவியே, இவை இரண்டும் புனிதமானவையே” என்றன.(24)
ஸ்ரீ, ” உதவ விரும்பி எனக்கு நீங்கள் அருள் புரிந்தது என் நற்பேறே. நீங்கள் சொன்னவாறே ஆகட்டும். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. மகிழ்ச்சியை அளிப்பவர்களே, நான் உண்மையில் உங்களால் கௌரவிக்கப்பட்டேன்” என்றாள்”.(25)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, பசுக்களுடன் இந்த உடன்படிக்கையைச் செய்து கொண்ட ஸ்ரீ, அங்கேயே, அப்போதே அந்தப் பசுக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னைக் காட்சியில் இருந்து மறைத்துக் கொண்டாள்.(26) ஓ! மகனே, இவ்வாறே நான் பசுஞ்சாணத்தின் மகிமை குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். பசுக்களின் மகிமை குறித்து மீண்டுமொருமுறை உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(27)
சுரபிக்காக உண்டான கோலோகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 83-சுரபி மேற்கொண்ட கடுந்தவத்தையும், பிரம்மன் சுரபிக்குக் கொடுத்த இறவாமை குறித்தும், கோலோகம் தேவலோகத்துக்கு மேலிருப்பதன் காரணத்தைக் குறித்தும் இந்திரனுக்குச் சொன்ன பிரம்மன்…
பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, பசுக்கொடையளிப்போரும், புனித நெருப்பில் ஆகுதிகளாகக் காணிக்கையளிக்கப்பட்டவற்றில் எஞ்சியிருப்பதை உண்டு வாழ்வோரும் அனைத்து வகை வேள்விகளையும் எப்போதும் செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(1) தயிர் மற்றும் நெய்யின் துணையின்றி எந்த வேள்வியையும் செய்ய முடியாது. வேள்வியின் தன்மையே நெய்யைச் சார்ந்திருக்கிறது. எனவே, வேள்வியின் வேராகவே நெய் (அல்லது அதை உண்டாக்கிய பசு) கருதப்படுகிறது.(2) கொடைகளனைத்திலும் பசுக்கொடையே உயர்ந்ததென மெச்சப்படுகிறது. பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. புனிதமான அவை, தூய்மை செய்வதிலும், புனிதப்படுத்துவதிலும் சிறந்தவையாக இருக்கின்றன.(3) செழிப்பையும், அமைதியையும் அடைவதற்காக மக்கள் பசுக்களைப் பேணி வளர்க்க வேண்டும். பசுக் கொடுக்கும் பால், தயிர் மற்றும் நெய் ஆகியன அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்லவையாகும்.(4) பசுக்கள், இவ்வுலகிலும், மேலுலகிலும் பெருஞ்சக்தி கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசுக்களை விடப் புனிதமிக்கவை வேறு எதுவும் இல்லை.(5)
ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பெரும்பாட்டனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(6) தேவர்கள் வீழ்த்தப்பட்டு மூவுலகங்களின் தலைவனாகச் சக்ரன் ஆன பிறகு, அனைத்து உயிரினங்களும் செழிப்பில் வளர்ந்து, உண்மை அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவையாக மாறின.(7) அப்போது ஒரு சந்தரப்பத்தில், ஓ! குரு குலத்தின் காளையே, முனிவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், அசுரர்கள், சிறகு படைத்த உயிரினங்கள், பிரஜாபதிகள் என அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனைத் துதித்தனர். அங்கே நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹா-ஹுஹு ஆகியோர்,(8,9) அந்த அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனைத்} துதித்து தெய்வீகத் தொனியில் பாடிக்கொண்டிருந்தனர். காற்றின தேவன் அங்கே தெய்வீக மலர்களின் நறுமணத்தைச் சுமந்து வந்தான்.(10)
உடல்வடிவங்களுடன் கூடிய பருவகாலங்களும், தெய்வீக இசையின் துணையுடன் தெய்வீகக் கன்னியர் ஆடிப் பாடிக் கொண்டிருந்த தேவர்களின் கூட்டத்திற்கு மலர்களின் குறிப்பிட்ட நறுமணங்களைத் தனித்தனியாகச் சுமந்து வந்தன. அந்தச் சபைக்கு மத்தியில் தேவர்களின் தலைவனிடம் {பிரம்மனிடம்} தலைவணங்கிய இந்திரன், அவனிடம்,(11,12) “ஓ! பெரும்பாட்டா, ஓ! புனிதமானவரே, உலகங்கள் அனைத்தின் தலைவர்களான தேவர்களின் உலகத்தைவிடக் கோலோகம் ஏன் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.(13) ஓ! தலைவா, பசுக்கள் செய்த எந்தத் தவம் அல்லது எந்தப் பிரம்மச்சரியத்தின் விளைவால் அவை தேவர்களைவிட உயர்ந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வசிக்கவல்லவையாக இருக்கின்றன?” என்று கேட்டான் {இந்திரன்}.(14)
இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட பிரம்மன் அந்தப் பலனைக் கொன்றவனிடம், “ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, நீ எப்போதும் பசுக்களை அவமதித்திருக்கிறாய்.(15) எனவே, உன்னால் பசுக்களின் மகிமையை முன்கூட்டியே அறிய முடியவில்லை. ஓ! பலமிக்கவனே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்களின் மகிமையையும் பெருஞ்சக்தியையும் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பசுக்கள் வேள்வியின் அங்கங்களாகச் சொல்லப்படுகின்றன. ஓ! வாசவா அவை வேள்விக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. அவை இல்லாமல் வேள்வி ஏதும் இருக்க முடியாது.(17) அவற்றின் பால், அதனிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றால் அவை அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன.(18) அவற்றில் ஆண் கன்றுகள் உழவுக்குத் துணை செய்வதன் மூலம் நெல் முதலிய தானியங்களை விளைவிக்கன்றன.(19) அவற்றில் இருந்தே வேள்விகளும், ஹவ்யகவ்யங்களும், பால், தயிர் மற்றும் நெய்யும் உண்டாகின்றன. எனவே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்கள் புனிதமானவையாக இருக்கின்றன. பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்படும் அவை பல்வேறு சுமைகளைச் சுமக்கின்றன.(20)
பசுக்கள் முனிவர்களை ஆதரிக்கின்றன. அவை பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன. ஓ! வாசவா, பசுக்கள் தங்கள் நடத்தையில் வஞ்சனையற்றவையாகும். அத்தகைய நடத்தையின் விளைவாலும், நன்கு செய்யும் செயல்களின் விளைவாலும் அவை நம்மை விட உயர்ந்த உலகங்களில் எப்போதும் வாழ்கின்றன.(21) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பசுக்கள் ஏன் தேவர்களை விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன என்பதை நான் இன்று உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(22) ஓ! வாசவா, பல சிறந்த பல வடிவங்களைக் கொண்ட பசுக்களே (பிறருக்கு) வரங்களை அளிப்பவையாகவும் இருக்கின்றன. அவை சுரபிகள் என்றழைக்கப்படுகின்றன. புனிதமான செயல்பாடுகளையும், மங்கலக் குறிகள் பலவற்றையும் கொண்ட அவை புனிதப்படுத்துவனவற்றில் உயர்ந்தவையாக இருக்கின்றன.(23) ஓ! பலனைக் கொன்றவனே, ஓ! தேவர்களின் தலைவா, சுரபியின் பிள்ளைகளான பசுக்கள் ஏன் பூமிக்கு இறங்கிச் சென்றன என்ற காரணத்தை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(24)
ஓ! மகனே, பழங்காலத்தில் தேவயுகத்தில் உயர் ஆன்ம தேவர்கள் மூவுலகங்களின் தலைவர்களாக இருந்தபோது, அதிதி கடுந்தவங்களைச் செய்து (அதன் வெகுமதியாகத்) தன் கருவறையில் விஷ்ணுவைக் கொண்டாள். உண்மையில், ஓ! தேவர்களின் தலைவா, அவள் ஒரு மகனை விரும்பி நீண்ட பல வருடங்களாக ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(25,26) பெருந்தேவியான அதிதி இவ்வாறு கடுந்தவங்களைச் செய்வதைக் கண்டவளும், தக்ஷனின் மகளும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவளும், சிறப்புமிக்கவளுமான சுரபியும், அவளைப் போலவே தேவர்களும், கந்தர்வர்களும் செல்லும் அழகிய கைலாச மலைகளின் சாரலில் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினாள்.(27,28) உயர்ந்த யோகத்தில் நிறுவப்பட்ட அவள், பதினோராயிரம் {11,000} வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(29) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பெரும் நாகர்கள் அனைவரும் அவளது தவங்களால் கடுமையாகச் சுடப்பட்டனர். என்னுடன் சேர்ந்து வந்த அவர்கள் அனைவரும் அந்த மங்கலத் தேவியைத் துதிக்கத் தொடங்கினர்.(30)
அப்போது நான், “ஓ! தேவி, ஓ! களங்கமற்ற ஒழுக்கம் கொண்டவளே, எக்காரியத்திற்காக நீ இத்தகைய கடுந்தவங்களைச் செய்கிறாய்?(31) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஓ! அழகானவளே, உன் தவங்களால் நான் நிறைவடைந்தேன். ஓ! தேவி, நீ வரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் எதையும் நான் தருவேன்” என்றேன். ஓ! புரந்தரா, இவையே நான் சுரபியிடம் சொன்ன சொற்களாகும்.
என்னால் இவ்வாறு சொல்லப்பட்டதும், எனக்குப் பதிலளிக்கும் வகையில் சுரபி, “ஓ! பெரும்பாட்டனே, எனக்கு வரங்கள் தேவையில்லை. ஓ! பாவமற்றவரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததே எனக்குக் கிட்டிய பெரும் வரமாகும்” என்றாள்.(33)
ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, இச்சொற்களை என்னிடம் சொன்ன அந்தச் சிறப்புமிக்கச் சுரபியிடம் நான்,(34) “ஓ! தேவி, ஓ! அழகிய முகம்படைத்தவளே, ஆசை மற்றும் பேராசையில் இருந்து விடுப்பட்ட உனது வெளிப்பாட்டிலும், நீ செய்த தவங்களிலும் நான் மிகையான நிறைவை அடைந்தேன். எனவே நான் உனக்கு இறவாமையை வரமாகத் தருகிறேன்.(35) என் அருளின் மூலம் மூவுலங்களிலும் உயர்ந்த இடத்தில் உள்ள உலகத்தில் நீ வசிப்பாயாக. அந்த உலகம் கோலோகம் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படப் போகிறது.(36) எப்போதும் நற்செயல்களையே செய்யும் உன் சந்ததி, மனிதர்களின் உலகில் இருக்கட்டும். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, உண்மையில் உன் மகள்கள் அங்கே வசிக்கப் போகிறார்கள்.(37) தெய்வீக மற்றும் மானுட இன்பங்கள் அனைத்தும் நீ நினைத்த மாத்திரத்தில் உனதாகும். ஓ! அருளப்பட்டவளே, சொர்க்கத்தில் இருக்கும் இன்பம் எதுவும் உனதே ஆகும்” என்று பதிலளித்தேன்.(38)
ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, சுரபியின் உலகங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவடையச் செய்ய வல்லவையாகும். மரணமோ, முதுமையோ, நெருப்போ அங்கே வசிப்பவர்களைத் தாக்காது.(39) ஓ! வாசவா, தீயூழேதும் அங்கே ஏற்படாது. இனிய காடுகள் பலவும், இனிய ஆபரணங்கள் மற்றும் அழகிய பொருட்கள் யாவும் அங்கே காணப்படுகின்றன.(40) ஓ! வாசவா, சிறப்பான ஆயத்தங்களுடன் கூடியவையும், செலுத்துபவரின் விருப்பத்திற்கேற்பச் சொல்லக்கூடியவையுமான பல அழகிய தேர்களும் அங்கே இருக்கின்றன. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மச்சரியம், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு, கொடைகள், பல்வேறு வகை அறச்செயல்கள், புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்ளல் ஆகியவற்றாலும், உண்மையில், கடுந்தவங்கள், நன்றாகச் செய்யப்பட்ட அறச்செயல்கள் ஆகியவற்றாலும் மட்டுமே ஒருவன் கோலோகத்தை அடைய முடியும்.(41,42) ஓ! சக்ரா, நீ கேட்டவை அனைத்திற்கும் நான் முழுமையாகப் பதிலளித்துவிட்டேன். ஓ! அசுரர்களைக் கொல்பவனே, ஒருபோதும் பசுக்களை அவமதியாதே” என்றான் {பிரம்மன்}”.(43)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, சுயம்புவான பிரம்மனின் இச்சொற்களைக் கேட்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான சக்ரன், அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பசுக்களை வழிபடவும், அவற்றுக்குப் பெரும் மதிப்பளிக்கவும் தொடங்கினான்.(44) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக்களின் புனிதத்தன்மை குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இவ்வாறே, ஓ!மனிதர்களின் தலைவா, ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல பசுக்களின் புனிதத்தன்மை, முன்சிறப்புகள் மற்றும் மகிமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். பிற பொருட்களில் இருந்து புலன்விலக்கம் பெற்ற மனிதன், ஹவ்யகவ்யங்கள் காணிக்கையளிக்கப்படும் தருணங்கள், அல்லது வேள்விகளிலோ, பித்ருக்களைத் துதிக்கும் தருணங்களிலோ இதைக் குறித்துப் பிராமணர்களுக்குச் சொன்னால் அவன் தன் மூதாதையர்களின் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(45-47)
பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான். உண்மையில், பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட பெண்களும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(48) மகன்களைப் பெற விரும்புபவன் மகன்களை அடைகிறான். மகள்களைப் பெற விரும்புபவன் மகள்களைப் பெறுகிறான். செல்வத்தை விரும்புபவன், செல்வத்தை அடைவதில் வெல்கிறான், அறத்தகுதியை விரும்புபவன் அறத்தகுதியை ஈட்டுவதில் வெல்கிறான்.(49) அறிவை விரும்புபவன் அறிவை அடைகிறான். இன்பத்தை விரும்புபவன், இன்பத்தை அடைவதில் வெல்கிறான். உண்மையில், ஓ! பாரதா, பசுக்களிடம் அர்ப்பணிப்புள்ள ஒருவனால் அடைய முடியாதது ஏதுமில்லை” {என்றார் பீஷ்மர்}.(50)
பொன் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 84-தங்கத்தின் தோற்றம்; பொன்தானத்தின் முன்சிறப்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பலன் நிறைந்த பசுக்கொடை குறித்து எனக்குச் சொன்னீர். கடமைகளை நோற்பவர்களான மன்னர்களின் வழக்கில் அக்கொடை பெரும் பலன்மிக்கதாகும்.(1) கோன்மை {அரசுரிமை} எப்போதும் துன்பம் நிறைந்ததாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அது சுமக்கப்பட இயலாததாகும். பொதுவாகவே மன்னர்கள் மங்கல கதிகளை அடையத் தவறுகிறார்கள்.(2) எனினும், எப்போதும் நிலக்கொடை அளிப்பதன் மூலம் அவர்கள் தங்களை (தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும்) தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறார்கள். ஓ! குரு குலத்தின் இளவரசரே, பல கடமைகளைக் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர்.(3) பழங்காலத்தில் மன்னன் நிருகன் பசுக்கொடையளித்ததையும் எனக்குச் சொன்னீர். பழங்காலத்தில் முனிவர் நாசிகேதர் செய்த செயல்களின் பலன்களையும் எனக்குச் சொன்னீர்.(4)
அனைத்து வேள்விகளிலும், உண்மையில் அனைத்து வகை அறச்செயல்களிலும் நிலத்தையோ, பசுவையோ, பொன்னையோ கொடையளிக்க வேண்டும் என்று வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் விதிக்கப்பட்டிருக்கிறது.(5) எனினும், ஸ்ருதிகள் தக்ஷிணைகள் அனைத்திலும் மிக மேன்மையானதும், சிறந்ததும் பொன்னே என்று அறிவிக்கின்றன. ஓ! பாட்டா, இக்காரியம் குறித்து உண்மையில் நீர் சொல்ல விரும்புகிறேன்.(6) பொன் என்றால் என்ன? அஃது உண்டானது எவ்வாறு? அஃது எப்போது இருப்புக்கு வந்தது? அதன் சாரம் என்ன? அதற்குத் தலைமை தாங்கும் தேவன் யார்? அதன் கனிகள் {பலன்கள்} என்னென்ன? அனைத்திலும் முதன்மையானதாக அஃது ஏன் கருதப்படுகிறது?(7) ஞானிகள் பொற்கொடையை மெச்சும் காரணம் என்ன? அனைத்து வேள்விகளிலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகக் கருதப்படுவதற்கான காரணம் என்ன?(8) நிலம் மற்றும் பசுக்களை விடப் பொன்னே தூய்மையாக்குவதில் மேன்மையானதாக ஏன் கருதப்படுகிறது? உண்மையில் அஃது ஏன் மேன்மையான தக்ஷிணையாகக் கருதப்படுகிறது? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, என்னால் புரிந்து கொள்ள முடிந்த அளவுக்குப் பொன்னின் தோற்றம் தொடர்புடைய சூழ்நிலைகளை விரிவாகச் சொல்கிறேன், குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(10) பெருஞ்சக்தி கொண்ட என் தந்தை சாந்தனு இவ்வுலகை விட்டுச் சென்றபோது, நான் அவரது சிராத்தத்தைச் செய்யக் கங்காத்வாரத்திற்குச் சென்றேன்.(11) அங்கே சென்றதும் என் தந்தையின் சிராத்தத்தைத் தொடங்கினேன். என் தாயான ஜானவி அங்கே வந்து எனக்குப் பேருதவி புரிந்தாள்.(12) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பல தவசிகளை அழைத்து அவர்களை என் முன் அமரச் செய்து, நீர்க்கொடை மற்றும் பிற கொடைகள் உள்ளிட்ட தொடக்கச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினேன்.(13) குவிந்த மனத்துடன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தொடக்கச் சடங்குகள் அனைத்தையும் செய்து ஈமப்பிண்டத்தை முறையாகக் கொடையளிப்பதில் என்னை நிறுவிக் கொண்டேன்.(14) அப்போது, ஓ! மன்னா, தரையைத் துளைத்துக் கொண்டு நான் விரித்து வைத்திருந்த குசப் புற்களின் ஊடாக அங்கதங்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய கரம் எழுவதை நான் கண்டேன்.(15) தரையில் இருந்து எழும் அந்தக் கரத்தைக் கண்ட நான் ஆச்சரியத்தில் நிறைந்தேன். உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் கொடுக்க இருந்த பிண்டத்தை ஏற்பதற்காக என் தந்தையே வந்ததாக நான் எண்ணினேன்.(16)
பிறகு, சாத்திர ஒளியில் சிந்தித்தபோது, யாருடைய சிராத்தம் செய்யப்படுகிறதோ அவருடைய கையில் பிண்டத்தைக் கொடுக்கக்கூடாது என்று வேதங்களில் தோன்றும் விதி எனக்குத் திட நம்பிக்கையை அளித்தது. எவருடைய ஈமச் சடங்குகள் நடைபெறுகிறதோ அம்மனிதரின் கரத்தில் ஈமப் பிண்டத்தை ஒருபோதும் கொடுக்கக்கூடாது என்ற என் மனத்தில் இவ்வாறே ஒரு திடமான நம்பிக்கை எழுந்தது. பித்ருக்கள் பிண்டத்தைப் பெறுவதற்காகக் காணத்தக்க வடிவங்களில் வருவதில்லை. மறுபுறம், அதற்கெனப் பூமியில் விரிக்கப்பட்ட குசப்புற்களிலேயே அதை வைக்க வேண்டுமென விதி சொல்கிறது. என் தந்தையின் இருப்பைக் குறிப்பதாக அமைந்த அந்தக் கரத்தை அலட்சியம் செய்துவிட்டு,(17-19) பிண்டம் அளிக்கும் முறையைக் குறித்த சாத்திர அதிகாரத்தைச் சார்ந்த உண்மை விதியை நினைவகூர்ந்து, என் முன்னே பரப்பி வைக்கப்படிருந்த குசப்புற்களிலேயே முழுப் பிண்டத்தையும் காணிக்கையிட்டேன்.(20) ஓ! மனிதர்களின் இளவரசே, நான் செய்தது சாத்திர விதிக்கு முற்றிலும் இணக்கமானது என்பதை அறிவாயாக. ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு என் தந்தையின் கரம் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போயிற்று.(21)
அவ்விரவு நான் உறங்கிய போது, என் கனவில் பித்ருக்கள் தோன்றினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே} என்னிடம் நிறைவடைந்த அவர்கள், இச்சொற்களில், “நாங்கள் உன்னிடம் நிறைவடைந்தோம்.(22) விதியில் பற்றுடன் இருப்பதை நீ இன்று வெளிப்படுத்தினாய். சாத்திர விதிகளில் இருந்து நீ வழுவாததைக் கண்டு நாங்கள் நிறைவடைந்தோம். ஓ! மன்னா, சாத்திர விதிகள் உன்னால் பின்பற்றப்பட்டதால் மேலும் அதிகாரமிக்கவையாகிவிட்டன.(23) இத்தகைய உன் நடத்தையின் மூலம், நீ உன் அதிகாரத்தையும், சாத்திரங்கள், வேத திறன், பித்ருக்கள், முனிவர்கள், பெரும்பாட்டனான பிரம்மன், பெரியோர்களான பிரஜாபதிகள் ஆகியோரின் அதிகாரங்களையும் கௌரவித்துப் பராமரித்திருக்கிறாய். சாத்திரப் பற்றுப் பராமரிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நீ இன்று மிகச் சரியாகச் செயல்பட்டிருக்கிறாய்.(24,25) நீ நிலக்கொடையும், பசுக்கொடையும் அளித்தாய். நீ பொற்கொடையும் அளிப்பாயாக. பொற்கொடை தூய்மைடையச் செய்தவதில் பெரியதாகும். ஓ! கடமைகளை நன்கறிந்தவனே, அத்தகைய உன் செயல்பாடுகளின் மூலம் நாங்களும், உன்னுடைய மூதாதையர் அனைவரும் எங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைவோம் என்பதை அறிவாயாக. அத்தகைய கொடைகள் மூதாதையரிலும், வழித்தோன்றல்களிலும் பத்து தலைமுறையினரை மீட்கின்றன” என்றார்கள். என் கனவில் தோன்றிய என் மூதாதையரால் சொல்லப்பட்ட சொற்கள் இவையே. ஓ! மன்னா, பிறகு விழிப்படைந்த நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன்.(26-28)
உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் பொற்கொடை அளிப்பதில் என் இதயத்தை நிலைநிறுத்தினேன். ஓ! ஏகாதிபதி, இப்போது இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(29) இது மிகுந்த பாராட்டுக்குரியதும், கேட்பவரின் வாழ்நாள் காலத்தை நீட்டிப்பதும் ஆகும். இது முதலில் ஜமதக்னியின் மகனான ராமருக்கு {பரசுராமருக்கு} உரைக்கப்பட்டது. பழங்காலத்தில் பெருங்கோபத்தில் நிறைந்த ஜமதக்னியின் மகன் ராமர்,(30) பூமியின் பரப்பில் இருந்து இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தார். வீரரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவருமான ராமன், மொத்த பூமியையும் அடக்கிய பிறகு, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் அனைவராலும் புகழப்படுவதும், அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அருளவல்லதுமான குதிரை வேள்வியைச் செய்தற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.(31,32) அந்த வேள்வியானது அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்து, அதைச் செய்தவரின் சக்தி மற்றும் காந்தியையும் மேம்படுத்துகிறது. பெருஞ்சக்தி கொண்ட ராமர் அந்த வேள்வியைச் செய்ததன் மூலம் பாவமற்றவரானார்.(33) எனினும், அந்த முதன்மையான வேள்வியைச் செய்த உயர் ஆன்ம ராமர் முற்றிலும் மென்மையான இதயத்தை அடையத் தவறினார்.(34) பிருகு குல ராமர், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவர்கள் மற்றும் தேவர்களிடமும் சென்று அவர்களிடம் கேள்வி கேட்டார். பின்னிரக்கம் மற்றும் கருணையால் நிறைந்திருந்த அவர், அவர்களிடம், “உயர்ந்த அருளைக் கொண்டவர்களே, கடுஞ்செயல் புரிந்த மனிதர்களையும் தூய்மையாக்குவது எது என்பதை அறிவிப்பீராக” என்றார்.
இவ்வாறு அவரால் சொல்லப்பட்டவர்களும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களை முழுமையாக அறிந்தவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் அவரிடம்,(35,36) “வேத அதிகாரங்களால் வழிநடத்தப்பட்டுக் கல்விமான்களான பிராமணர்கள் அனைவரையும் நீ கௌரவிப்பாயாக. சில காலத்திற்கு இவ்வொழுக்கத்தைப் பின்பற்றிய பிறகு, உன்னைத் தூய்மை செய்து கொள்வதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை மறுபிறப்பாள முனிவர்களிடம் மீண்டும் கேட்பாயாக.(37) அந்தப் பெரும் ஞானிகள் உனக்குத் தரும் ஆலோசனையைப் பின்பற்றுவாயாக” என்றனர்.
பிறகு, பெருஞ்சக்தி கொண்டவரும், பிருகுக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் {பரசுராமர்}, வசிஷ்டர், அகஸ்தியர், கசியபர் ஆகியோரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்கும் வகையில், “பிராமணர்களில் முதன்மையானோரே, என் இதயத்தில் எழும் விருப்பம் இதுவே. உண்மையில் என்னைத் தூய்மை செய்து கொளவதில் வெல்வது எவ்வாறு?(38,39) எந்தச் செயல்கள் மற்றும் சடங்குகளின் மூலம் இதைச் செய்யலாம்? அல்லது கொடையின் மூலம் எட்டப்படும் என்றால், என்னுடைய இவ்விருப்பம் நிறைவேற எப்பொருள் கொடையளிக்கப்பட வேண்டும்? அறவோரில் முதன்மையானோரே, தவத்தையே செல்வமாகக் கொண்ட நீங்கள் எனக்கு உதவ விரும்பினால் என்னைத் தூய்மை செய்து கொள்வதில் நான் வெல்வது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக” என்றார்.(40)
முனிவர்கள், “ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, பாவம் செய்த மனிதன் பசு, நிலம் மற்றும் செல்வத்தைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைகிறான். இதையே நாம் கேள்விப்படுகிறோம்.(41) தூய்மையடைவதற்கு பெரிதும் உதவுவதாகக் கருதப்படும் மற்றொரு கொடையும் இருக்கிறது. ஓ! மறுபிறப்பாள முனிவா, நாங்கள் சொல்வதைக் கேட்பாயாக. அப்பொருள் சிறந்ததும், அற்புதத் தன்மை நிறைந்ததும், நெருப்பின் சந்ததியுமாக இருக்கிறது.(42) பழங்காலத்தில் அக்னி தேவன் உலகமனைத்தையும் எரித்தான். அவனது வித்தில் இருந்தே பிரகாச நிறம் படைத்த பொன் உண்டானது என நாம் கேள்விப்படுகிறோம். பொற்கொடை அளிப்பதன் மூலம் உன் விருப்பம் கனியும் நிலையால் நிச்சயம் மகுடம் சூட்டப்படுவாய்” என்றனர்.(43)
அப்போது, கடும் நோன்பைக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான வசிஷ்டர் குறிப்பாக, “ஓ! ராமா {பரசுராமா}, நெருப்பின் காந்தியைக் கொண்ட பொன் முதலில் இருப்பில் உதித்தது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக.(44) அந்தப் பொன்னே உனக்குப் பெரும் பலனை அளிக்கும். கொடையளிக்கப்படுவதில் பொன் மிகவும் மெச்சப்படுகிறது. தங்கம் என்றால் என்ன? அஃது எங்கிருந்து வந்தது? அது மேன்மையான தன்மைகளைப் பெற்றது எவ்வாறு? என்பனவற்றையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(45) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இவை குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக. பொன்னானது நிச்சயம் நெருப்பு மற்றும் சோமனின் சாரமாகும் என்பதை அறிவாயாக.(46)
செம்மறியாடு (அக்னிலோகத்துக்கு வழிவகுப்பதால்) நெருப்பாக (அக்னியாக) இருக்கிறது; வெள்ளாடு (வருணலோகத்துக்கு வழிவகுப்பதால்) வருணனாக இருக்கிறது; குதிரை (சூரியலோகத்துக்கு வழிவகுப்பதால்) சூரியனாக இருக்கிறது; யானைகள் (நாகலோகத்துக்கு வழிவகுப்பதால்) நாகர்களாக இருக்கின்றன; எருமைகள் (அசுரலோகத்துக்கு வழிவகுப்பதால்) அசுரர்களாக இருக்கின்றன;(47) கோழிகளும், பன்றிகளும் (ராட்சசலோகத்துக்கு வழிவகுப்பதால்) ராட்சசர்களாக இருக்கின்றன; ஓ!பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே. பூமி (வேள்வியின் பலனுக்கும், கோலோகத்துக்கும், வருணலோகத்துக்கும், சோமலோகத்துக்கும் வழிவகுப்பதால்) வேள்வியாக, பசுவாக, நீராக, சோமனாக இருக்கின்றன. இதையே ஸ்மிருதிகள் அறிவிக்கின்றன.(48) மொத்த அண்டத்தையும் கடைந்த போது திரளான ஒரு சக்தி கண்டடையப்பட்டது. அந்தச் சக்தியே பொன்னாகும். எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவா, (நான் ஏற்கனவே குறிப்பிட்ட) இந்தப் பொருட்கள் அனைத்துடனும் ஒப்பிடும்போது நிச்சயம் பொன்னே மேன்மையானது. அது விலைமதிப்புமிக்க, உயர்ந்த, சிறந்த பொருளாகும்.(49)
இதன் காரணமாகவே தேவர்களும், கந்தர்வர்களும், உரகர்களும், ராட்சசர்களும், மனிதர்களும் பிசாசங்களும் அதைக் கவனத்துடன் பற்றிக் கொள்கின்றனர்.(50) ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமா}, இவர்கள் அனைவரும் தங்கத்தை மகுடங்களாகவும், தோள்வளைகளாகவும், பலவகை ஆபரணங்களாகவும் மாற்றி அவற்றின் துணையுடனே ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.(51) ஓ! மனிதர்களின் இளவரசே[1], இதன் காரணமாகவே பொன்னானது தூய்மைப்படுத்தும் நிலம், பசு மற்றும் பிற வகைப் பொருட்கள் அனைத்தையும் காட்டிலும் மிகுந்த தூய்மைப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.(52) ஓ! பலமிக்க மன்னா, பொற்கொடையே உயர்ந்த கொடையாகும். அது நிலம், பசு மற்றும் பிற பொருட்களைக் கொடையளிப்பதைக் காட்டிலும் மேலான புகழைத் தருவதாகும்.(53)ஓ! தேவப் பிரகாசம் கொண்டவனே, பொன்னானது நித்தியமாகத் தூய்மைப்படுத்தும் பொருளாகும். அதுவே தூய்மைப்படுத்துவனவற்றில் முதன்மையானதாக இருப்பதால் பிராமணர்களில் முதன்மையானோருக்கு நீ அதைக் கொடையளிப்பாயாக.(54) தக்ஷிணைகள் அனைத்திலும் பொன்னே சிறந்ததாகும். பொன்னைக் கொடையளிப்பவர்கள் அனைத்தையும் கொடையளிப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(55) உண்மையில், பொன்னைக் கொடையளிப்பவர்கள் தேவர்களைக் கொடையளிப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அனைத்து தேவர்களும் சேர்ந்தவன் அக்னியாவான், தங்கம் அக்னியையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது.(56) எனவே, தங்கத்தைக் கொடையளிப்பவன் தேவர்கள் அனைவரையும் கொடையளித்தவனாகச் சொல்லப்படுகிறான். எனவே, ஓ! மனிதர்களின் தலைவா, பொற்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை” என்றார் {வசிஷ்டர்}.(57)
வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், “ஓ! மறுபிறப்பாள முனிவா, ஓ! ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனே, தங்கத்தின் முன்சிறப்புகளை மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(58) ஓ! பிருகு குலத்தின் மகனே, நான் இதை முன்பு புராணத்தில் கேட்டிருக்கிறேன். இது பிரஜாபதியின் பேச்சையே பிரதிபலிக்கிறது.(59) ஓ! பிருகு குலத்தின் மகனே, சிறப்புமிக்கவனும், உயர் ஆன்மாவைக் கொண்டவனும், திரிசூலபாணியுமான ருத்திரனுக்கும், அவனது மனைவியான {உமா} தேவிக்கும் முதன்மையான மலையான ஹிமவத்தின் {இமயத்தின்} சாரலில் திருமணம் முடிந்த பிறகு, சிறப்புமிக்கவனும், உயர் ஆன்மா கொண்டவனுமா அந்தத் தேவன் {சிவன்}, தேவியுடன் தன்னைக் கலக்க விரும்பினான்.
கவலை நிறைந்த தேவர்கள் அனைவரும் ருத்திரனை அணுகினார்கள். மஹாதேவனிடமும், வரமளிக்கும் அவனது மனைவியான உமைக்கும் மதிப்புடன் தலைவணங்கி, சேர்ந்து அமர்ந்திருக்கும் அவர்களை நிறைவடையச் செய்த அவர்கள், ஓ! பிருகு குலத்ததைத் தழைக்கச் செய்பவனே, ருத்திரனிடம், “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! பாவமற்றவனே, தேவியுடன் நீ கலப்பது என்பது,(60-62) தவங்களுடன் கூடிய ஒருவனுக்கும், தவங்களுடன் கூடிய மற்றொருவருக்கும் இடையே ஏற்படும் கடும் கலவியாகும். உண்மையில், ஓ! தலைவா, இது பெரும் சக்தி கொண்ட ஒருவனுக்கும், அதற்குச் சற்றும் குறையாத சக்தியுடன் கூடிய மற்றொருவருக்கும் இடையில் ஏற்படும் கலவியாகும். ஓ! சிறப்புமிக்கவனே, நீ தடுக்கப்பட முடியாத சக்தியுடன் கூடியவன். உமாதேவியும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவள்.(63) ஓ! சிறப்புமிக்கத் தேவா, இந்தக் கலவியால் உண்டாகும் சந்ததி நிச்சயம் பெரும்வலிமை கொண்டதாகவே இருக்கும். உண்மையில், ஓ! பலமிக்கத் தலைவா, அந்தச் சந்ததி மூவுலகங்களிலும் எதையும் எஞ்சவிடாமல் அனைத்துப் பொருட்களையும் எரித்துவிடும்.(64)
ஓ! அண்டமனைத்தின் தலைவா, ஓ! பெரிய கண்களைக் கொண்டவனே, மூவுலகங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தில், உன் முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் இந்தத் தேவர்களுக்கு ஒரு வரத்தை அருள்வாயாக.(65) ஓ! பலமிக்கவனே, சந்ததிக்குரிய வித்தாகும் இந்த உயர்ந்த சக்தியைக் கட்டுப்படுத்துவாயாக.(66) உண்மையில், இந்தச் சக்தி மூவுலகங்களில் உள்ள சக்திகள் அனைத்தின் சாரமாகும். நீங்கள் இருவரும் கலக்கும் செயலின் மூலம் இந்த அண்டத்தை நிச்சயம் எரிப்பீர்கள்.(67) உங்கள் இருவருக்கும் பிறக்கும் சந்ததி நிச்சயம் தேவர்களைப் பீடிக்க வல்லதாக இருக்கும். ஓ! பலமிக்கவனே, பூமாதேவியோ, ஆகாயமோ, சொர்க்கமோ, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தோகூட உன் சக்தியைத் தாங்க முடியாது என உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.(68,69) ஓ! பலமிக்கவனே, ஓ! சிறப்புமிக்கத் தேவா, நீ எங்களுக்குத் துணைபுரிவதே உனக்குத் தகும். ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உமாதேவியிடம் நீ ஒரு மகனைப் பெறாமல் இருப்பதிலேயே அந்த உதவி அடங்கியிருக்கிறது.(70) எனவே, கடுமையானது, பலமிக்கதுமான உன் சக்தியைப் பொறுமையுடன் தடுப்பாயாக” என்றனர்.
ஓ! மறுபிறப்பாள முனிவா, அப்படிச் சொன்ன தேவர்களிடம், காளை மாட்டைத் தன் சின்னமாகக் கொண்ட மஹாதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தான். இவ்வாறு சொன்னவனும், காளையைத் தன் வாகனமாகக் கொண்டவனுமான அந்தத் தேவன், தன் உயிர் வித்தை மேலிழுத்தான் {மேல்நோக்கச் செய்தான்}.(71,72) அந்தக் காலம் முதலே அவன் (உயிர்வித்தை மேல்நோக்கி இழுத்தவன் என்ற பொருள் கொண்ட) ஊர்த்தவரேதஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறான். எனினும் ருத்திரனின் மனைவி, உற்பத்தியைத் தடுத்த தேவர்களின் முயற்சியால் பெருஞ்சினமடைந்தாள்.(73) எதிர் பாலினமாக இருந்ததன் விளைவால் (கோபத்தைச் சிறிது கட்டுப்படுத்த முடியாதவளாக) அவள் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி, “என் தலைவர் என்னிடம் சந்ததியை உண்டாக்க விரும்பிய போது, அக்காரியத்தில் அவரை நீங்கள் எதிர்த்தீர்கள், அச்செயலின் விளைவால், தேவர்களே நீங்கள் மகனற்றவர்கள் ஆவீர்கள். உண்மையில், என்னிடம் சந்ததி பிறப்பை நீங்கள் எதிர்த்தீர்கள்,(75) எனவே, உங்களுக்குச் சந்ததி உண்டாகாமல் போகட்டும்” என்றாள்.
ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்நேரத்தில் நெருப்பின் தேவன் {அக்னி} அங்கே இல்லை.(76) அந்தத் தேவியுடைய சாபத்தின் விளைவாகவே தேவர்கள் பிள்ளையற்றவர்களானார்கள். அவர்களால் வேண்டப்பட்ட ருத்திரன், ஒப்பற்ற பலத்துடன் கூடிய தன் சக்தியை {வீரியத்தைத்} தானே தாங்கிக் கொண்டான்.(77) எனினும், அதிலொரு சிறு பகுதி அவனுடைய உடலில் இருந்து வெளியேறி பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த அந்த வித்தானது, சுடர்மிக்க நெருப்பில் குதித்து மிக ஆச்சரியகரமாக (அளவிலும், சக்தியிலும்) வளரத் தொடங்கியது.(78) ருத்திரனின் சக்தி, பெரும்பலமிக்க மற்றொமொரு சக்தியுடன் கலந்து ஒரே சாரமானது {ஒளியில் ஒளி சேர்ந்து ஒன்றாகிவிட்டது}. அதே வேளையில், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரும்,(79) தாரகன் என்ற பெயரைக் கொண்ட அசுரனால் நன்றாக வாட்டப்பட்டனர். ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத்துகள், அசுவினிகள்,(80) சத்யஸ்கள் ஆகியோரனைவரும், அந்தத் திதியின் மகனுடைய ஆற்றலின் விளைவால் மிகவும் பீடிக்கப்பட்டனர். அழகிய தேர்கள் மற்றும் மாட மாளிகைகளுடன் கூடிய தேவலோகங்கள் அனைத்தும்,(81) முனிவர்களின் ஆசிரமங்கள் ஆகியவையும் அசுரர்களால் அபகரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடியவர்களாகப் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனும், மங்கா மகிமை கொண்டவனுமான பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள்” {என்றார் வசிஷ்டர்}.(82)
பொன் வரலாறு! – அநுசாஸனபர்வம் பகுதி – 85அ-அக்னியை விரட்டிச் சென்று பிடித்த தேவர்கள்; தேவர்களால் வேண்டப்பட்ட அக்னி; அக்னி கங்கையைக் கருவூட்டியது; அதை மேருமலையின் சாரலில் விட்ட கங்கை; தத்தெடுத்துக் கொண்ட கிருத்திகை தேவி; தங்கமும், கந்தனும் பிறந்த கதை…
தேவர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! பலமிக்கவரே, உம்மிடம் இருந்து வரங்களைப் பெற்றவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் பீடித்து வருகிறான். அவனுக்கு மரணத்தை விதிப்பீராக.(1) ஓ! பெரும்பாட்டனே, ஓ! சிறப்புமிக்கவரே, அவனிடம் இருந்த எழும் பேரச்சத்திலிருந்து எங்களை மீட்பீராக. உம்மைத் தவிரே வேறு புகலிடம் எங்களுக்குக் கிடையாது” என்றனர்.(2)
பிரம்மன், “நான் அனைத்து உயிரினங்களிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன். எனினும், நீதியற்றதை என்னால் ஏற்க இயலாது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் எதிரியான தாரகன் விரைவில் அழிவை அடைவான்.(3) தேவர்களில் முதன்மையானோரே, வேதங்களும், நித்திய கடமைகளும் அடியோடு அழிக்கப்படாது. இக்காரியத்தில் நான் முறையான விதியைச் செய்திருக்கிறேன். உங்கள் இதய நோய் விலகட்டும்” என்றான்.(4)
தேவர்கள் {பிரம்மனிடம்}, “நீர் வரமளித்ததன் விளைவாலும் அந்தத் திதியின் மகன் தன் வலிமையில் செருக்குற்றிருக்கிறான். அவன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். பிறகு எவ்வாறு அவனைக் கொல்ல முடியும்?(5) ஓ! பெரும்பாட்டனே, தேவர்களாலோ, அசுரர்களலோ, ராட்சசர்களாலோ கொல்லப்பட முடியாதவகையில் அவன் உம்மிடம் இருந்து வரம்பெற்றிருக்கிறான்.(6) முற்காலத்தில் செய்த வினையின் விளைவால் தேவர்கள் பெருகாதவாறு ருத்திரனின் மனைவியால் {உமாதேவியால்} சபிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓ! அண்டத்தின் தலைவா, “நீங்கள் சந்ததியைப் பெற மாட்டீர்கள்” என்பதே அவள் விதித்திருக்கும் சாபமாகும்” என்றார்கள்.(7)
பிரம்மன், “தேவர்களில் முதன்மையானோரே, அந்தத் தேவி சபித்தபோது அக்னி அங்கில்லை. அவனே தேவர்களின் எதிரியை அழிக்கும் சந்ததியைப் பெறப் போகிறான்.(8) தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் மற்றும் இறகு படைத்த உயிரினங்கள் அனைத்தையும் கடந்தவனாகவும், ஒரு முறை ஏவினாலே எதிரியைக் கலங்கடிக்கும் ஆயுதமான ஈட்டியுடன் கூடியவனுமான அக்னியின் வாரிசு {ஸ்கந்தன்}, எவனை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அந்தத் தாரகனை அழிப்பான். உண்மையில் உங்கள் எதிரிகள் யாவரும் அவனால் அழிக்கப்படுவார்கள்.(9,10)
ஆசை என்பது அழிவற்றது. காமம் என்ற பெயரில் அறியப்படும் அந்த ஆசையும், அக்னியின் சுடர்மிக்க வடிவில் விழுந்த ருத்திரனுடைய வித்தின் ஒரு பகுதியும் ஒன்றே.(11) வலிமைமிக்கதும், இரண்டாவது அக்னிக்கு ஒப்பானதுமான அந்தச் சக்தியானது, தேவர்களின் எதிரிகளை அழிக்கக்கூடிய ஒரு வாரிசை உண்டாக்குவதற்காக அக்னியால் கங்கையில் விடப்படும்.(12) அக்னி உமையின் சாபத்திற்கு உள்ளாகவில்லை. அந்தச் சாபம் இடப்பட்ட போது வேள்வி ஆகுதிகளை உண்பவன் அங்கே இல்லை.(13) எனவே, நெருப்பின் தேவனை {அக்னி தேவனைத்} தேடுங்கள். அவனை இப்பணியில் நிறுவுங்கள். பாவமற்றவர்களே, தாரகனை அழிக்கு வழிமுறைகளை நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.(14)
சக்தியுடையவர்களின் சாபங்கள், சக்தியுடையவர்களிடம் எந்த விளைவையும் உண்டாக்காமல் தவறிப் போகும். பலமான சக்தியுடன் தொடர்பேற்படும்போது வேறு சக்திகள் பலவீனமடையும்.(15) தவங்களுடன் கூடியோர், அழிவற்றவர்களாக இருப்பவர்களும், வரமளிக்க இயன்றவர்களுமான தேவர்களையே அழிக்கத்தகுந்தவர்களாவர். பழங்காலத்தில் தோன்றிய விருப்பம், அல்லது ஆசை, அல்லது காமம் அனைத்து உயிரினங்களிடமும் அழிவற்றதாக இருக்கிறது.(16) அக்னி அண்டத்தின் தலைவனாவான். அவன் புரிந்து கொள்ளப்படவோ, விளக்கப்படவோ இயலாதவன். விரும்பிய எங்கும் செல்லவல்லவனும், அனைத்திலும் இருப்பவனுமான அவனே அனைத்தையும் படைத்தவனுமாவான். அவன் உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வாழ்கிறான். பெரும்பலம் கொண்ட அவன் {அக்னி} ருத்திரனைவிடவும் மூத்தவனாவான்.(17) பெரும் சக்தியின் திரளாக இருப்பவனும், வேள்வி ஆகுதிகளை உண்பவனுமான அவனைத் தேடுங்கள். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் உங்கள் இதயங்களில் உள்ள விருப்பத்தை நிறைவேற்றுவான்” என்றான் {பிரம்மன்}.(18)
பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மத் தேவர்கள், தங்கள் நோக்கம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால் உற்சாகமிக்க இதயங்களுடன் நெருப்பின் தேவனை {அக்னிதேவனைத்} தேடிச் சென்றனர்.(19) தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களின் ஒவ்வொரு பகுதிக்கும் அக்னியை நினைத்துக் கொண்டே அவனைக் காண விரும்பி தேடிச் சென்றனர்.(20) ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே {பரசுராமா}, தவமும், செழிப்பும் உடைவயர்களும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான அந்த உயர் ஆன்மாக்கள் {தேவர்கள்} அனைவரும் அண்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றனர்.(21) எனினும், வேள்வி ஆகுதிகளை உண்பவன் {அக்னி} தனக்குள்ளேயே தன்னை மறைத்துக் கொண்டதால் அவர்களால் அவனைக் காண முடியவில்லை. அந்த நேரத்தில், நீரில் வாழும் ஒரு தவளையானது, அக்னியின் சக்தி சுட்டதன் விளைவால் பாதாள லோகத்தின் ஆழத்தில் இருந்து உற்சாகமற்ற இதயத்துடன் தரையில் தோன்றியது.(22)
அச்சிறு உயிரினம் {தவளை}, அச்சத்தால் துளைக்கப்பட்டவர்களும், நெருப்பின் தேவனைக் காணும் ஆவலில் உள்ளவர்களுமான அந்தத் தேவர்களிடம்,(23) “தேவர்களே அக்னி இப்போது பாதாள லோகத்தில் வசித்து வருகிறான். அந்தத் தேவனின் சக்தியால் எரிக்கப்பட்டு, அதைத் தாங்கிக் கொள்ள இயலதாவனாகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.(24) தேவர்களே, வேள்வி ஆகுதிகளைத் தாங்கிச் செல்லும் சிறந்தவன் {அக்னி} இப்போது நீருக்கடியில் இருக்கிறான். நாங்கள் அனைவரும் அவனது சக்தியால் எரிக்கப்படுகிறோம்.(25) உங்களுக்கு அவனால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமெனில் அங்கே செல்வீராக. உண்மையில் அங்கே செல்வீராக. எங்களைப் பொறுத்தவரையில், அக்னி மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நாங்கள் இவ்விடத்தைவிட்டுத் தப்பிச் செல்லப் போகிறோம்” என்றது. இவ்வளவையும் சொல்லிவிட்டு அந்தத் தவளை நீருக்குள் குதித்தது.(27)
வேள்வி ஆகுதிகளை உண்பவன் {அக்னி} அந்தத் தவளையின் நயவஞ்சகத்தை அறியவந்தான். அவ்விலங்கிடம் வந்த அவன், அதன் மொத்த {தவளை} இனத்தையும் சபிக்கும் வகையில், “இது முதல் நீங்கள் சுவைப் புலன் இழந்தவர்களாக இருப்பீர்கள்” என்றான்.(28) தவளைகளுக்கு இந்தச் சாபத்தைக் கொடுத்து விட்டு அவன் அந்த இடத்தைவிட்டு அகன்று வேறு இடத்திற்கு வெகு வேகமாகச் சென்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தேவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.(29) ஓ! பிருகுக்களில் சிறந்தவனே, தங்களுக்குச் செய்த தொண்டின் காரணமாகத் தவளைகள் அடைந்த பரிதாப நிலையைக் கண்ட தேவர்கள் அவற்றுக்கு அருள் புரிய விரும்பினார்கள். அது தொடர்பான அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன். ஓ! வலிய கரங்களைக் கொண்ட வீரா, நான் சொல்வதைக் கேட்பாயாக.
தேவர்கள், “அக்னியின் சாபத்தால் நாக்குகளை இழந்து, அதன் காரணமாகச் சுவை உணர்வு இல்லாதிருந்தாலும், பல்வேறு வகை வாக்குகளைச் சொல்ல இயன்றவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.(31) உணவு இல்லாமல், தன்னினைவு இல்லாமல், களைத்து, வற்றிப் போய், உயிரற்ற ஒன்றைப் போலப் பொந்துகளுக்குள் வாழ்ந்தாலும், பூமி உங்கள் அனைவரையும் தாங்கிக் கொள்ளும் {ஆதரிக்கும்}.(32) இரவு நேரத்திலும், அனைத்தும் அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்தாலும் உங்களால் உலவ இயலும்” என்றனர்.
தவளைகளிடம் இதைச் சொன்ன தேவர்கள், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட தேவனைக் கண்டுபிடிக்கப் பூமியின் ஒவ்வொரு பகுதிக்கும் மீண்டும் செல்லத் தொடங்கினர். எனினும், அவர்களது முயற்சிகள் அனைத்திற்கும் பிறகும் அவர்கள் அவனை அடையத் தவறினார்கள்.(33)
அப்போது, ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, சக்ரனின் யானையின் அளவுக்குப் பெரியதும், வலிமைமிக்கதுமான மற்றொரு யானை, தேவர்களிடம், “அக்னி இப்போது அரச மரத்திற்குள் வசித்து வருகிறான்” என்றது.(34)
ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, சினத்தால் தூண்டப்பட்ட அக்னி, யானைகள் அனைத்தையும் சபிக்கும் வகையில், “உங்கள் நாவுகள் தலைகீழாக மாறிப் போகட்டும்” என்றான்.(35)
யானைகளால் சுட்டிக்காட்டப்பட்ட நெருப்பின் தேவன் இவ்வாறே யானைகள் அனைத்தையும் சபித்துவிட்டு, சில காலம் வன்னி மரத்தில் வசித்திருக்கலாம் என்றெண்ணி அதன் இதயத்திற்குள் நுழைந்தான்.(36) ஓ! பலமிக்க வீரா, ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, யானைகளின் பிரதிநிதி ஒன்று செய்த தொண்டில் நிறைவடைந்தவர்களும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான தேவர்கள் யானைகளுக்குக் காட்டிய அருளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(37)
தேவர்கள், “யானைகளே, மாறிப் போன இந்நாவைக் கொண்டே அனைத்தையும் உண்பீர்கள். இந்த நாவுகளைக் கொண்டே தெளிவற்ற உரத்த குரலைக் கொடுக்க இயன்றவையாக இருப்பீர்கள்” என்றனர்.(38)
இவ்வாறு யானைகளுக்கு அருள் வழங்கிய சொர்க்கவாசிகள் மீண்டும் அக்னியைத் தேடிச் சென்றனர். உண்மையில், அரச மரத்தைவிட்டுவெளியே வந்த நெருப்பின் தேவன் வன்னி மரத்தின் இதயத்திற்குள் நுழைந்தான்.(39) அக்னியின் இந்தப் புதிய வசிப்பிடத்தையும் ஒரு கிளி வெளிப்படுத்தியது. தேவர்கள் அந்த இடத்திற்குச் சென்றார்கள். கிளியின் நடத்தையில் சினம் மூண்ட சுடர்மிக்கத் தழல்களின் தேவன் {அக்னி}, மொத்த கிளி இனத்தையும் சபிக்கும் வகையில், “இந்நாள் முதல் நீங்கள் பேசும் சக்தியை இழப்பீர்கள்” என்றான்.(40)
உண்மையில், வேள்வி ஆகுதிகளை உண்பவனால் கிளிகள் அனைத்தின் நாவுகளும் புரட்டப்பட்டன. கிளியால் சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் அக்னியைக் கண்டு, அதன் மீது விதிக்கப்பட்ட சாபத்தையும் கண்ட தேர்கள், அந்தப் பாவப்பட்ட உயிரினத்திடம் கருணை கொண்டு,(41) “நீ கிளியாக இருப்பதன் விளைவால், உன் பேச்சு சக்தி முழுவதையும் இழக்க மாட்டாய். உன் நாவு புரட்டப்பட்டிருந்தாலும், கி என்ற எழுத்துடன் கூடிய பேச்சைக் கொண்டிருப்பாய்.(42) ஒரு குழந்தையையோ, ஒரு முதியவரையோ போன்று உன் பேச்சு இனிமையாகவும், தெளிவில்லாமலும், அற்புதமாகவும் இருக்கும்” என்றனர்.
கிளியிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு, வன்னி மரத்தின் இதயத்திற்குள் இருக்கும் நெருப்பின் தேவனைக் கண்ட தேவர்கள்,(43) அஃதை அறச்சடங்குகள் அனைத்திலும் நெருப்புண்டாக்குவதற்கான புனித விறகாக்கினர். அந்தக் காலத்தில் இருந்துதான் வன்னி மரத்திற்குள் வசிக்கும் வகையில் நெருப்பு காணப்படுகிறது.(44) மனிதர்கள், (வேள்விகளில்) நெருப்புண்டாக்குவத்றகு முறையான வழிமுறையாக வன்னிமரத்தையே கருதுகின்றனர். பாதாள லோகத்தில் உள்ள தண்ணீரும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.(45) ஓ! பிருகு குலத்தவனே, அந்தக் கொதி நீரே, மலையூற்றுகளில் கக்கப்படுகிறது. அக்னி அதில் சில காலம் வசித்ததன் விளைவால் அவனது சக்தியின் மூலம் அவை வெப்பமடைந்தன.(46)
அதே வேளையில் அக்னி, தேவர்களைக் கண்டு வருந்தினான். அவன் தேவர்களிடம், “என்ன காரணத்திற்காக இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டான். தேவர்களும், பெரும் முனிவர்களும் அவனிடம், “நாங்கள் உன்னை ஒரு குறிப்பிட்ட பணியில் நிறுவ விரும்புகிறோம். அதை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(48) அதைச் செய்வதனால் உனக்கும் மிகப் பெரிய நன்மை உண்டாகும்” என்றனர்.(49)
அக்னி, “உங்கள் காரியம் என்ன என்பதை எனக்குச் சொல்லுங்கள். தேவர்களே நான் அதை நிறைவேற்றுவேன். நீங்கள் விரும்பும் எந்தக் காரியத்திலும் நிறுவப்படவே எப்போதும் நான் விரும்புகிறேன். எனவே தயங்காமல் ஆணையிடுவீராக” என்றான்.(50)
தேவர்கள், “பிரம்மனிடம் பெற்ற வரத்தின் விளைவால் செருக்கால் நிறைந்திருப்பவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அசுரன் இருக்கிறான். அவனது சக்தியின் மூலம் அவன் எங்களை ஒடுக்கிப் பீடிக்கிறான். அவனது அழிவை நீ விதிக்க வேண்டும்.(51) ஓ! ஐயா, ஓ! உயர் அருளைக் கொண்ட பாவகா, இந்தத் தேவர்களையும், பிரஜாபதிகளையும், முனிவர்களையும் நீ காப்பாயாக.(52) ஓ! பலமிக்கவனே, ஓ! வேள்வி ஆகுதிகளைச் சுமப்பவனே, அந்த அசுரனிடமுள்ள எங்கள் அச்சங்களை எல்லாம் விலக்கக்கூடியவனும், உன் சக்தியுடன் கூடியவனுமான ஒரு வீர மகனைப் பெறுவாயாக.(53) நாங்கள் பெருந்தேவியான உமையால் சபிக்கப்பட்டிருக்கிறோம். உன் சக்தியைவிட எங்களுக்குப் புகலிடம் வேறேதும் இல்லை. எனவே, ஓ! பலமிக்கத் தேவா, எங்கள் அனைவரையும் நீ காப்பாயாக” என்றனர்.(54) இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறப்புமிக்கவரும், வேள்வி ஆகுதிகளைச் சுமப்பதில் தடுக்கப்பட முடியாதவனுமான அவன்{அக்னி}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி பாகீரதி என்ற வேறு பெயரால் அழைக்கப்படும் கங்கைக்குச் சென்றான்.(55)
அக்னியானவன், அவளோடு (ஆன்மக்) கலவி புரிந்து, அவளைக் கருவுறச் செய்தான். உண்மையில் (விறகும் ஊட்டப்பட்டு, காற்றின் துணையும் இருக்கும் போது) அக்னி வளர்வதைப் போலவே அக்னியின் வித்தும் கங்கையின் கருவறைக்குள் வளரத் தொடங்கியது.(56) அந்தத் தேவனின் சக்தியால் கங்கையின் இதயம் மிகவும் கலக்கமடைந்தது. உண்மையில், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் பெரும் துன்பத்தை அனுபவித்தாள்.(57) சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட தேவன், பெருஞ்சக்தி கொண்ட தன் வித்தைக் கங்கையின் கருவறைக்குள் விடும்போது, ஒரு குறிப்பிட அசுரன் (தன் சொந்த காரியம் எதற்காகவோ) அச்சுறுத்தும் வகையில் முழக்கமிட்டான்.(58) (அவளை அச்சுறுத்துவதற்காக அல்லாமல்) தன் சொந்த காரியத்திற்காக அந்த அசுரனால் வெளியிடப்பட்ட அச்சுறுத்தும் முழக்கத்தால், மிகவும் கலக்கமடைந்த கங்கையின் கண்கள் அச்சத்தால் உருளத் தொடங்கின, அவளது கலக்கத்தை வெளிப்படுத்தின.(59) தன்னினைவை இழந்த அவள், தன் உடலையும், தன் கருவறைக்குள் உள்ள வித்தையும் தாங்கிக் கொள்ள முடியாதவளானாள். சிறப்புமிக்கத் தேவனின் சக்தியால் கருவூட்டப்பட்டிருத ஜானுவின் மகள் {கங்கை} நடுங்கத் தொடங்கினாள்.(60)
ஓ! கல்விமானான பிராமணா {பரசுராமா}, அவள் தன் கருவறையில் சுமக்கும் வித்தின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சுடர்மிக்க நெருப்பின் தேவனிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, என்னால் இனியும் உமது வித்தை என் கருவறையில் சுமக்க முடியாது.(61) உண்மையில், உமது வித்தின் மூலம் நான் மிகவும் பலவீனமடைந்திருக்கிறேன். முன்பிருந்த உடல்நலம் இப்போதில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! பாவமற்றவரே, மிகவும் கலக்கமடைந்திருக்கும் எனது இதயம் எனக்குள் இறந்தேவிட்டது.(62) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, இன்னியும் என்னால் உமது வித்தைச் சுமக்க முடியாது. எனக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தின் காரணமாகவே நான் அதை விடப்போகிறேனேயன்றி உறுதியின்மையால் அல்ல.(63) ஓ! சுடர்மிக்கத் தழல்களின் சிறப்புமிக்கத் தேவா, உண்மையில் உமது வித்துடன் என் மேனி தொடர்பில் இல்லை. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, நமது கலவி, தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக நுட்பமாக நேர்ந்ததே அன்றி, சதைக்காக அல்ல.(64) ஓ! வேள்வி ஆகுதிகளை உண்பவரே, (நான் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட) இந்தச் செயலால் கிட்டும் பலனெதுவும் உம்மையே சேர வேண்டும். உண்மையில், இச்செயலின் அறமோ, மறமோ உம்மையே சாரவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றாள்.(65)
நெருப்பின் தேவன், அவளிடம், “என் வித்தைச் சுமப்பாயாக. உண்மையில், என் சக்தியுடன் கூடிய கருவைச் சுமப்பாயாக. அது பெரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.(66) நீ மொத்த பூமியையும் தாங்கிக் கொள்ளக் கூடியவளாவாய். இந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ளாததன் மூலம் உனக்கு எதுவும் கிடைக்காது” என்றான்.(67)
நெருப்பின் தேவனாலும், வேறு தேவர்களாலும் அறிவுறுத்தப்பட்டாலும் ஓடைகளில் முதன்மையான அவள் {கங்கை}, மலைகள் அனைத்திலும் முதன்மையான மேருவின் சாரலில் அந்த வித்தை விட்டாள்.(68) (ஏதோ வகையில்) அந்த வித்தைத் தாங்கிக் கொள்ள முடிந்தாலும், (அக்னியும், ருத்திரனும் ஒன்றென்பதால்) ருத்திரனின் சக்தியால் ஒடுக்கப்பட்ட அவளால், எரியும் சக்தியின் விளைவால் அந்த வித்தை அதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(69)
ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பெருந்துன்பத்துக்குப் பிறகு நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தச் சுடர்மிக்க வித்தை அவள் கைவிட்ட பிறகு, அக்னி அவளைக் கண்டு,(70) அந்த ஓடைகளில் முதன்மையானவளிடம், “நீ கைவிட்ட கரு நலமாக இருக்கிறதா? ஓ! தேவி, அஃது எந்த நிறத்தில் இருந்தது? அஃது என்ன வடிவத்தில் தெரிந்தது? அஃது எத்தகைய சக்தியைக் கொண்டிருந்தது? அதைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(71)
கங்கை {அக்னியிடம்}, “அந்தக் கரு தங்க நிறத்தில் இருந்தது. ஓ! பாவமற்றவனே, அதன் சக்தியில் உம்மைப் போல இருந்தது. முற்றிலும் களங்கமற்றதாக, சுடர்மிக்கக் காந்தியுடனும், சிறந்த நிறத்துடனும் கூடிய அது மொத்த மலையையே ஒளியூட்டியது.(72) ஓ! தவசிகள் அனைவரிலும் முதன்மையானவரே, அதன் மணம் தாமரைகளும், நெய்தல்களும் உள்ள மடுக்களின் மணம் போலவும், கடப்ப மலர்களின் மணம் போலவும் குளிர்ச்சியாக இருந்தது.(73) சூரியனின் கதிர்களின் மூலம், மலையில் உள்ள பொருட்களும், தாழ்நிலமும் பொன்னாக மாறுவதாகத் தோன்றுவதைப் போலவே அந்தக் கருவைச் சுற்றிலும் இருந்த அனைத்தும் அதன் காந்தியால் தங்கமாக மாறிவிட்டதாகத் தெரிந்தது.(74) உண்மையில், அந்தக் கருவின் காந்தியானது, மலைகளிலும், ஆறுகளிலும், ஊற்றுகளிலும் வெகு தொலைவுக்குப் பரவியிருக்கிறது.(75) உண்மையில், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகங்களும் அதன் மூலம் ஒளியூட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஓ! வேள்வி ஆகுதிகளைச் சுமக்கும் சிறப்புமிக்கவரே, உமது பிள்ளை இவ்வகையிலேயே இருக்கிறான்.(76) சூரியனையோ, சுடர்மிக்க உம்மைப் போன்றோ, அழகில் இரண்டாம் சோமனைப் போன்றோ அவன் இருக்கிறான்” என்றாள் {கங்கை}. இச்சொற்களைச் சொன்ன அந்தத் தேவி அங்கேயே, அப்போதே மறைந்து போனாள்.(77)
ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, பெருஞ்சக்தியைக் கொண்டவனான பாவகனும் {அக்னியும்}, தேவர்களின் காரியத்தை நிறைவேற்றிவிட்டு தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டான்.(78) இச்செயலின் விடைக்கான விளைவாலேயே முனிவர்களும், தேவர்களும், நெருப்பின் தேவனுக்கு ஹிரண்யரேதஸ் என்ற பெயரை அளித்தனர்[1].(79) (கங்கைக் கைவிட்ட பிறகு) அந்த வித்தைப் பூமி தாங்கிய காரணத்தால் அவளும் வசுமதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்.[2] அதேவேளையில், பாவகனிடம் இருந்து பிறந்து, குறிப்பிட்ட காலம் கங்கையால் தாங்கப்பட்டு,(80) நாணற்காட்டில் விழுந்த அந்தக் கருவானது, வளரத் தொடங்கி இறுதியாக ஓர் அற்புத வடிவை அடைந்தது. கிருத்திகை நட்சத்திரத்திற்குத் தலைமை தாங்கும் தேவி எழுஞாயிறுக்கு ஒப்பான அந்த வடிவைக் கண்டாள்.(81) அது முதல் அவள் தன் முலையை உண்ணக் கொடுத்து தன் மகனாகவே அந்தப் பிள்ளையை வளர்க்கத் தொடங்கினாள். இந்தக் காரணத்தினாலேயே சிறந்த காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை அவளது பெயரைக் கொண்டு கார்த்திகேயன் என்று அழைக்கப்படலானான்.(82) ருத்திரனின் உடலில் இருந்து வெளிய விழுந்த வித்தில் இருந்து அவன் வளர்ந்ததால், அவன் ஸ்கந்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். அவனது பிறப்புச் சம்பவம் தனிமையான நாணற்காட்டில் அனைவரின் பார்வைக்கும் மறைவில் நடந்ததால் அவன் குஹன் என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.
இவ்வழியிலேயே சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய வாரிசாகவே தங்கம் இருப்புக்கு வந்தது[3].(83) எனவே அந்தத் தங்கமே பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகக் காணப்பட்டு, தேவர்களின் ஆபரணங்களானது. இந்தச் சூழ்நிலையில் இருந்து அந்தத் தங்கம், ஜாதரூபம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[4].(84) விலைமதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகவும், ஆபரணங்களுக்கு மத்தியில் முதன்மையானதாகவும் அது {தங்கம்} இருக்கிறது. தூய்மைப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் அதிகத் தூய்மைப்படுத்துவதும், மங்கலப் பொருட்கள் அனைத்திலும் அதிக மங்கலமானதாகவும் அஃது இருக்கிறது. தங்கமானது, அனைத்தின் தலைவனும், பிரஜாபமதிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அக்னியே ஆகும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, புனிதப் பொருட்கள் அனைத்திலும் அதிகப் புனிதம் வாய்ந்தது தங்கமே. உண்மையில் தங்கமானது, அக்னி மற்றும் சோமனின் சாரத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது” {என்றார் வசிஷ்டர்}.(86)
பிருகு, அங்கிரஸ், கவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 85ஆ-பிரம்மனின் வேள்வியில் பிறந்தவர்கள்; மஹாதேவனின் மகனான பிருகு; அக்னியின் மகனான அங்கிரஸ்; பிரம்மனின் மகனான சுக்கிரன்; பிருகு, அங்கிரஸ் மற்றும் சுக்கிர சந்ததிகள்; பொற்கொடையளிப்பவர்கள் அடையும் கதி…
வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், “ஓ! ராமா, பரமாத்மாவோடு அடையாளம் காணப்படும் பெரும்பாட்டனின் சாதனை குறித்த பிரம்ம தரிசனம் என்றழைக்கப்படும் இவ்வரலாற்றை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(87) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, தேவர்களில் முதன்மையானவனும், அச்சந்தர்ப்பத்தில் வருணனின் வடிவை ஏற்றவனுமான தலைவன் ருத்திரன் பழங்காலத்தில் செய்த வேள்விக்கு(88) அக்னியைத் தலைமையாகக கொண்ட தேவர்களும் முனிவர்களும் வந்தனர். (உடல்வடிவத்துடன் கூடிய) வேள்வி அங்கங்கள் அனைத்தும், உடல்வடிவத்துடன் கூடிய வஷத் என்றழைக்கப்படும் மந்திரமும் அந்த வேள்விக்கு வந்தன.(89) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான சாமங்களும், யஜுஸ்களும் தங்கள் உடல்வடிவத்துடன் அங்கே வந்தன. சொற்களை உச்சரிக்கும் வதிகளால் அலங்கரிக்கப்பட்ட ரிக் வேதமும் அங்கே வந்தது.(90) லக்ஷணங்கள், ஸ்வரங்கள், ஸ்தோபங்கள், நிருக்தங்கள், ஸ்வரங்களின் வகைகள், ஓங்கார அசை, நிக்ரகம், பிரக்கிரகம் ஆகியவை அனைத்தும் மஹாதேவனின் கண்களில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டன.(91) உபநிஷத்துகள், வித்யை, சாவித்திரி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை அனைத்தும் அங்கே வந்து சிறப்புமிக்கச் சிவனால் ஆதரிக்கப்பட்டன.(92)
அனைவரிலும் பலமிக்க அத்தலைவன் {சிவன்} அப்போது தனக்குள் தானே ஆகுதிகளை ஊற்றினான். உண்மையில், பிநாகைபாணி பலவகை வடிவங்களைக் கொண்ட அந்த வேள்வியை அழகானதாகத் தெரியச் செய்தான்.(93) சொர்க்கம், ஆகாயம், பூமி, வானம் அவனே. அவன் பூமியின் தலைவன் என அழைக்கப்படுகிறான். தடங்கல்கள் அனைத்தையும் ஆளும் தலைவன் அவனே. அவன் ஸ்ரீயுடன் கூடியவன், மேலும் அவன் சுடர்மிக்கத் தழல்களின் தேவனோடு {அக்னியோடு} அடையாளம் காணப்படுகிறான்.(94) அந்தச் சிறப்புமிக்கத் தேவன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான். பிரம்மன், சிவன், ருத்திரன், வருணன், அக்னி, பிரஜாபதி ஆகியோரும் அவனே. அவனை உயிரினங்கள் அனைத்தின் மங்கலத் தலைவனாவான்.(95) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, (உடல்வடிவம் கொண்ட) வேள்வி, தவம், கலவிச் சடங்குகள், கடும் நோன்புகளுடன் சுடர்விடும் திக்ஷா தேவி, பல்வேறு திசைப்புள்ளிகள் மற்றும் அவற்றைத் தலைமை தாங்கும் தேவர்கள், அவர்களின் மகள்கள், தெய்வீக அன்னையர் ஆகியோர் அனைவரும் ஒரே திரளாக ஒன்றாகப் பசுபதியிடம் வந்தனர்.(96,97)
உண்மையில் வருணனின் வடிவத்தை ஏற்றிருந்த உயர் ஆன்ம மஹாதேவனின் வேள்வியைக் கண்ட அவர்கள் அனைவரும் மிகவும் நிறைவடைந்திருந்தனர். பேரழகுடன் கூடிய தெய்வீகக் காரிகையரைக் கண்டு பிரம்மனின் வித்து வெளியேறி பூமியில் விழுந்தது.(98) அந்த வித்துப் புழுதியில் விழுந்ததன் விளைவால், பூஷன் (சூரியன்), அந்தவித்தின் துகள்களோடு கலந்த மண்ணைத் தன் கையால் பூமியில் இருந்து எடுத்து வேள்வி நெருப்புக்குள் விட்டான்.(99) அதே வேளையில், சுடர்மிக்கத் தழல்களுடனும், புனித நெருப்புடனும் கூடிய வேள்வி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. (ஹோத்ரியாக) பிம்மன் நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்தான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும்பாட்டன் ஆசையால் தூண்டப்பட்டான் (எனவே அவனது வித்து வெளிவந்தது).(100) ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, அந்த வித்து வெளிவந்ததும், வேள்விக் கரண்டியில் அதை எடுத்த அவன், சுடர்மிக்க நெருப்பில் தேவையான மந்திரங்களுடன் ஆகுதி நெய்யாக அஃதை ஊற்றினான்.(101) பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் அந்த வித்திலிருந்தே நான்கு வகை உயிரினங்களை இருப்புக்குள் எழச் செய்தான். பெரும்பாட்டனின் வித்தானது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களுடன் கூடியதாக இருந்தது. அதில் உள்ள ரஜஸ் குணத்திலிருந்து பிரவிருத்தி, அல்லது செயற்கோட்பாட்டுடன் கூடிய அசையும் உயிரனங்கள் அனைத்தும் உண்டாகின.(102) தமஸ் குணத்திலிருந்து அசைவற்ற உயிரினங்கள் அனைத்தும் தோன்றின. எனினும், அந்தவித்துக்குள் வசித்த சத்வ குணம் இரு வகை இருப்புகளுக்குள் நுழைந்தது. அந்தச் சத்வ குணம், தேஜஸ் அல்லது ஒளியின் இயல்பாக (புத்தியுடன் அடையாளங் காணப்படுவதா) இருக்கிறது[5].(103)அனைத்து உயிரினங்களிலும் உள்ள சத்வ குணமானது, எது சரி, எது தவறு என்பதைக் காட்டும் ஒளியோடு அடையாளம் காணப்படுகிறது. பிரம்மனின் வித்தானது இவ்வாறு வேள்வி நெருப்பில் ஆகுதியாக ஊற்றப்பட்ட போது, ஓ! வலிமைமிக்கவனே, அதிலிருந்து மூவர் இருப்புக்குள் எழுந்தனர்.(104) தத்தமது காரணங்களினால் வந்த குணங்களைக் கொண்டவர்களும், சிறந்த உடல்களைக் கொண்டவர்களுமாக மூன்று ஆண்கள் {புருஷர்கள்} உண்டானார்கள். (பிரிக் என்றழைக்கப்படும்) நெருப்பின் தழல்களில் இருந்து முதலில் எழுந்ததன் காரணமாக ஒருவர் பிருகு என்ற பெயரில் அழைக்கப்பட்டார். (அங்காரம் என்றழைக்கப்படும்) எரியும் கரித்துண்டிலிருந்து {தணலிலிருந்து} இரண்டாமவர் வந்ததால் அவர் அங்கிரஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.(105) அணைந்த கரித்துண்டு குவியலில் இருந்து {தணலின் ஒளியிலிருந்து} மூன்றாமவர் வந்ததால், கவி {சுக்கிராச்சாரியர்} என்ற பெயரில் அவர் அழைக்கப்பட்டார். உடலில் இருந்து தழல்கள் வெளிப்பட முதலில் வந்தவர் பிருகு என்றழைக்கப்பட்டார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.(106)
வேள்வி நெருப்பின் கதிர்களில் இருந்து மரீசி என்ற மற்றொருவரும் எழுந்தார். மரீசியில் இருந்து (பின்னர்) கசியபர் எழுந்தார். (எரியும்) கரித்துண்டில் இருந்து அங்கிரஸ் எழுந்தார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அந்த வேள்வியில் பரப்பப்பட்டிருந்த குசப்புற்களில் {தர்ப்பைகளில்} இருந்து வாலகில்யர்கள் என்றழைக்கப்படும் (மிகக் குறுகியவர்களான) முனிவர்கள் உண்டாகினர். ஓ! பெரும்பலம் கொண்டவனே, அதே குசப்புற்களில் {தர்ப்பைகளில்} இருந்தே அத்ரி உண்டானார். நெருப்பின் சாம்பலில் இருந்து, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், சிறந்த சாதனைகள் அனைத்தும் கொண்டவர்களும், மறுபிறப்பாள முனிவர்களுமான வைகானசர்கள் தோன்றினர்.(108,109) அக்னியின் கண்களில் இருந்து பேரழகு மேனியுடன் அசுவினி இரட்டையர்கள் தோன்றினர். இறுதியாக அவனது காதுகளில் இருந்து பிரஜாபதிகள் அனைவரும் தோன்றினர்.(110)
அக்னியுடைய உடலின் மயிர்க்கால்களில் {வியர்வைத் துளைகளில்} இருந்து முனிவர்கள் உண்டாகினர். அவனது வியர்வையில் இருந்து சந்தங்களும் {வேதங்களும்}, அவனது பலத்திலிருந்து மனமும் உண்டாகின. இதன் காரணமாகவே அக்னியானவன், அனைத்துத் தேவர்களும் ஒன்றுதிரண்ட வடிவம்(11) என வேதமறிந்த முனிவர்களால் வேத அதிகாரத்தின் வழிகாட்டுதற்படி சொல்லப்படுகிறான். அக்னியின் தழல்களை உயிருடன் வைத்திருக்கும் மரத்துண்டுகள் மாதங்களாகக் கருதப்படுகின்றன. விறகு அளிக்கும் சாரம் பிறைநாட்களாக {பக்ஷங்களாக} அமைகின்றன.(112) அக்னியின் ஈரல் பகல் இரவு என்றழைக்கப்படுகிறது அவனது கடும் ஒளி முஹுர்த்தங்களாக அழைக்கப்படுகின்றன. அக்னியின் குருதியே ருத்திரர்களின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகிறது. அவனது குருதியில் இருந்து மைத்ரதேவதைகள் என்ற தங்க நிறம் கொண்ட தேவர்கள் உண்டாகிறார்கள்[6].(113) அவனது புகையில் இருந்து வசுக்கள் உண்டாகினர். அவனது தழல்களில் இருந்து ருத்திரர்களும், பிரகாசத்துடன் கூடிய (பனிரெண்டு) ஆதித்தியர்களும் உண்டாகினர்.(114) ஆகாயத்தில் நிறுவப்பட்டுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் பிற விண்மீன்கள் ஆகியவை அக்னியின் (எரியும்) கரித்துண்டுகளாகக் கருதப்படுகின்றன. அண்டத்தை முதலில் படைத்தவன் அக்னியையே பரப்பிரம்மமாகவும், நித்தியமானவனாகவும், அனைத்து விருப்பங்களையும் அருள வல்லவனாகவும் அறிவித்தான்.(115) இஃது உண்மையில் ஒரு புதிராகும்.இந்தப் பிறவிகள் அனைத்தும் உண்டான பிறகு, (வேள்விக்காக) வருண வடிவத்தை ஏற்றிருந்த மஹாதேவன், பவனனைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனிடம்,(116) “இந்தச் சிறந்த வேள்வி என்னுடையதாகும். நானே இதன் கிரஹபதி. வேள்வி நெருப்பில் இருந்து முதலில் உண்டான மூவரும் என்னுடையவராவர். அவர்கள் என் வாரிசுகளாகக் கருதப்படுவர் என்பதில் ஐயமில்லை. வானை அதிகாரம் செய்யும் தேவர்களே இஃதை அறிவீராக. அவர்கள் இவ்வேள்வியின் கனிகளாவர் {பயன்களாவர்}” என்றான் {சிவன்}.(117)
அக்னி, “இந்த வாரிசுகள் என் அங்கங்களில் இருந்து பிறந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உயிர்பெற என்னையே சார்ந்திருக்கின்றனர். எனவே, அவர்கள் என் பிள்ளைகளாகவே கருதப்பட வேண்டும். வருணனின் வடிவில் உள்ள மஹாதேவன் இக்காரியத்தில் பிழை செய்கிறான்” என்றான்.(118)
இதன்பிறகு, “உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும், உலகங்கள் அனைத்தின் தலைவனுமான பிரம்மன், “இவர்கள் என் பிள்ளைகளாவர். வேள்வி நெருப்புக்குள் ஊற்றபட்ட வித்து என்னுடையதாகும்.(119) நானே இவ்வேள்வியை நிறைவேற்றியவன். என்னில் இருந்து வெளிவந்த வித்தை வேள்வி நெருப்புக்குள் ஊற்றியவன் நானே. கனியானது, எப்போதும் வித்தை நட்டு வைத்தவனுக்கே உரியதாகும். என்னுடைய வித்தே இந்த மூவரின் பிறப்புக்கு அடிப்படைக் காரணமாகும்” என்றான்.(120)
பெரும்பாட்டனிடம் சென்ற தேவர்கள், தலைவணங்கி, மதிப்புடன் கைகூப்பியவாறு அவனிடம்,(121) “ஓ! சிறப்புமிக்கவரே, நாங்கள் அனைவரும், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் உம் வாரிசுகளே ஆவோம். ஓ! ஐயா, (வாரிசு குறித்த காரியத்தில்) சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட அக்னி,(122) சிறப்பும் பலமும்மிக்க மஹாதேவன் ஆகியோரின் விருப்பங்கள் நிறைவேறட்டும்” என்றனர்.
இந்த வார்த்தைகளின் மூலம், சூரியப் பிரகாசத்துடன் கூடியவரும், முதலில் பிறந்தவருமான பிருகு, பிரம்மனுக்குப் பிறந்தவராகவே இருந்தாலும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் ஆட்சியாளனும், வருண வடிவில் இருந்தவனுமான பலமிக்க மஹாதேவனே அவரை {பிருகுவைத்} தன் சொந்த பிள்ளையாகப் பெற்றுக் கொண்டான். பிறகு பெரும்பாட்டன் {பிரம்மன்} அங்கிரஸ் அக்னியின் மகனாக வேண்டும் என நினைத்தான்.(123,124) அனைத்து உண்மைகளை அறிந்த பெரும்பாட்டன் பிறகு கவியை {சுக்கிரரைத்} தன் மகனாக எடுத்துக் கொண்டான். பூமியில் மக்கள் பெருகுவதற்காக உயிரினங்களை உண்டாக்கும் காரியத்தில் ஈடுப்பட்டவரும், பிரஜாபதிகளில் ஒருவராகக் கருதப்படுபவருமான பிருகு, அதுமுதல் வருணனின் வாரிசாக {வாருணி என்று} அழைக்கப்பட்டார்.(125) அனைத்து செழிப்பையும் கொண்ட அங்கிரஸ் அக்னியின் வாரிசாக {ஆக்னேயர் என்று} அழைக்கப்பட்டார், கொண்டாடப்படும் கவி {சுக்கிரன்} பிரம்மனின் பிள்ளையாக அறியப்பட்டார். முறையே அக்னியின் தழல்கள் மற்றும் கரித்துண்டுகளில் இருந்து உண்டான பிருகுவும், அங்கிரஸும் உலகில் பேரினங்களையும் குலங்களையும் உண்டாக்கியவர்களானார்கள்.(126) உண்மையில், பிருகு, அங்கிரஸ் மற்றும் கவி ஆகியோரே பிரஜாபதிகளாகவும், பல குலங்கள் மற்றும் இனங்களை உண்டாக்கியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அனைவரும் இம்மூவரின் பிள்ளைகளே. ஓ! பலமிக்க வீரா, இஃதை அறிவாயாக.(127)
பிருகு தமக்கு இணையான தகுதிகளையும், சாதனைகளையும் கொண்ட ஏழு மகன்களைப் பெற்றார். சியவனர், வஜ்ரசீர்ஷர், சுசி, ஔர்வர்,(128) வரமளிக்கும் சுக்ரர், விபு {வரேண்யர்}, ஸவனர் என்பதே அவர்கள் பெயர்கள். இவர்கள் எழுவர். அவர்கள் பிருகுவின் பிள்ளைகளாதலால் பார்க்கவர்களாவார்கள். அவர்கள் தங்கள் மூதாதையான பிருகு, வருண வடிவில் இருந்த மஹாதேவனால் தத்தெடுக்கப்பட்டதால் வாருணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பிருகு குலத்தைச் சேர்ந்தவர்களாவர்.(129)
அங்கிரஸ் எட்டு மகன்களைப் பெற்றார். அவர்களும் வாருணர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள் பிருஹஸ்பதி, உதத்தியர் {உசத்தியர்}, வயஸ்யர், சாந்தி,(130) தீரர் {கோரர்}, விருபர், ஸம்வர்த்தர், எட்டாவதாக ஸுதன்வா என்ற பெயர்களைக் கொண்டவராவர். இந்த எண்மரும் அக்னியின் வாரிசுகளாகக் கருதப்படுகின்றனர். அனைத்துத் தீமைகளில் இருந்து விடுபட்ட அவர்கள் அறிவுக்கு மட்டுமே அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.(131)
பிரம்மனால் எடுத்துக் கொள்ளப்பட்ட கவியின் மகன்களும் வாருணர்கள் என்ற அறியப்படுகிறார்கள். எண்ணிக்கையில் எண்மரான அவர்கள் அனைவரும் (மணம்செய்து கொள்ளாமல் வாழும் வாழ்வை நோற்காமல்) இனங்களையும், குலங்களையும் உண்டாக்கினார்கள். இயல்பில் மங்கலர்களான இவர்கள் அனைவரும் பிரம்மத்தை அறிந்தவர்களாக இருந்தனர்.(132) கவியுடைய எட்டு மகன்களின் பெயர்கள், கவி, காவியர், திருஷ்ணு {விஷ்ணு}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட உசநஸ் {சுக்கிரர்}, பிருகு, விரஜர் {வருணன்}, காசி {காசியபர்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்த உக்ரர் {அக்னி} ஆகும்.(133) இவர்களே கவியின் எட்டு மகன்களாவர். இவர்களின் மூலமே மொத்த உலகத்திலும் மக்கள் பெருகினர். அவர்கள் அனைவரும் பிரஜாபதிகளாவர், அவர்களின் மூலமே பல சந்ததிகள் உண்டாக்கப்பட்டன.(134) ஓ! பிருகு குலத் தலைவா, இவ்வாறே மொத்த உலகமும், அங்கிரஸ், கவி மற்றும் பிருகுவின் சந்ததியால் பெருகியது.(135) ஓ! கல்விமானான பிராமணா, பலமிக்கவனும், வேள்விக்காக வருணனின் வடிவில் இருந்தவனும், பரமனுமான தலைவன் மஹாதேவனே முதலில் கவியையும், அங்கிரஸையும் தத்தெடுத்தவர். எனவே, அவர்கள் இருவரும் வருணனாகக் கருதப்படுகின்றனர்.(136) வேள்வி ஆகுதிகளை உண்பவனும், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்டவனுமான தேவன் அதன் பிறகே அங்கிரஸைத் தத்தெடுத்தான். எனவே, அங்கிரஸின் சந்ததி அக்னி குலத்திற்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது.(137)
பழங்காலத்தில் தேவர்கள், பெரும்பாட்டனான பிரம்மனை நிறைவடையச் செய்து, அவனிடம், “(பிருகு, அங்கிரஸ், கவி மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களைக் குறிப்பிட்டு) அண்டத்தின் தலைவர்களான இவர்கள் எங்கள் அனைவரையும் காக்கட்டும்.(138) அவர்கள் அனைவரும் (பூமியில் பெருகும்) வாரிசுகளை உண்டாக்குபவர்களாட்டும். அவர்கள் அனைவரும் தவம் செய்பவர்களாட்டும். உமது அருளால் இவர்கள் அனைவரும் (யாரும் வசிக்க முடியாத காடாகிவிடாமல்) உலகத்தைக் காக்கட்டும்.(139) இவர்கள் தங்கள் சக்தியால் பெரும் குலங்களையும், இனங்களையும் உண்டாக்கி சக்தியில் பெருகட்டும். இவர்கள் அனைவரும் வேதங்களின் ஆசான்களாகவும் பெரும் செயல்களைச் செய்பவர்களாகவும் ஆகட்டும். இவர்கள் அனைவரும் தேவர்களின் நண்பர்களாகட்டும். உண்மையில் இவர்கள் அனைவரும் மங்கலம் நிறந்திருக்கட்டும். இவர்கள் பெரும் இனங்களையும் குலங்களையும் நிறுவுபவர்களாகவும், பெரும் முனிவர்களாகவும் ஆகட்டும். பெரும் தவம் செய்பவர்களாகவும், உயர்ந்த பிரம்மச்சரியத்தில் அர்ப்பனிப்புமிக்கவர்களாகவும் ஆகட்டும்.(141) ஓ! பெரும் பலம் கொண்டவரே {பிரம்மாவே}, நாங்களும், இவர்கள் அனைவரும் உமது சந்ததியே. ஓ! பெரும்பாட்டனே, தேவர்களையும், பிராமணர்களையும் படைத்தவர் நீரே.(142) மரீசியே உமது முதல் வாரிசு. பார்க்கவர்கள் என்று அழைக்கப்படும் யாவரும் உமது சந்ததியே. (நாங்களும் அவ்வாறே ஆகிறோம்). ஓ! பெரும்பாட்டனே, இந்த உண்மையைக் கண்டு நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி ஆதரிப்போம்.(143) இவ்வழியில் இவர்கள் அனைவரும் தங்கள் சந்ததியைப் பெருக்கி, அண்ட அழிவுக்குப் பிறகு ஒவ்வொரு படைப்பின் போதும் உம்மை நிறுவட்டும்” என்றனர்.(144)
இவ்வாறு சொல்லப்பட்டவரும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான பிரம்மன், அவர்களிடம், “அவ்வாறே ஆகட்டும். நான் உங்கள் அனைவரிடமும் நிறைவடைந்தேன்” என்றார். தேவர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே சென்றான்.(145) பழங்காலத்தில், தேவர்களில் அனைவரிலும் முதன்மையானவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான வேள்விக்காரணத்திற்காக வருண வடிவத்தை ஏற்றிருந்தவனுமான மஹாதேவனின் வேள்வியில் இதுவே நடந்தது.(146) அக்னியே பிரம்மனாவான். அவனே பசுபதியுமாவான். அவன் சர்வனுமாவான். அவன் ருத்திரனுமாவான். அவன் பிரஜாபதியுமாவன்[7]. தங்கம் அக்னியின் வாரிசு என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(147) (வேள்வி காரியங்களுக்கு) நெருப்பு அடையப்பட முடியாத போது, தங்கம் அதற்கு மாற்றாக இருக்கிறது. வேத திறன்தேர்வின் மூலம் கொடுக்கப்படும் குறியீடுகளால் வழிநடத்தப்படுபவனும், அதிகாரங்களை அறிந்தவனும், நெருப்போடு தங்கம் அடையாளம் காணப்படுவதை அறிந்தவனுமான ஒருவன் இவ்வழியிலேயே செயல்படுவான்.(148)வேள்வி செய்பவன், தரையில் குசப்புற்களை {தர்ப்பங்களை} பரப்பி வைத்து விட்டு அதில் தங்கத்தை வைத்து, அதில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். எறும்புப்புற்றின் துளைகளிலும், வெள்ளாட்டின் வலக்காதிலும்,(149) சமமான தரைப்பகுதியிலும், தீர்த்தங்களின் நீரிலும், பிராமணன் கையிலும் ஆகுதிகள் ஊற்றப்பட்டால், அதனால் நிறைவடையும் சிறப்புமிக்க நெருப்பின் தேவன் {அக்னி}, தன் பெருக்கத்திற்காகவும், தன் மூலம் தேவர்கள் பெருக்கத்திற்காகவுமான ஆதாரமாக இதைக் கருதுவான்.(150) எனவேதான் தேவர்கள் அனைவரும் அக்னியைத் தங்கள் புகலிடமாகக் கொண்டு அவனிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் என நாம் கேள்விப்படுகிறோம். அக்னி பிரம்மனில் இருந்து உதித்தான், அக்னியில் இருந்து தங்கம் உதித்தது.(151) எனவே, பொற்கொடையளித்து அறம் நோற்கும் மனிதர்கள், தேவர்கள் அனைவரையும் கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(152) பொற்கொடை அளிக்கும் மனிதன் மிக உயர்ந்த கதியை அடைகிறான். சுடர்மிக்கப் பிரகாச உலகங்கள் அவனுடையவையாகும். உண்மையில், ஓ! பார்க்கவா, அவன் சொர்க்கத்தில் மன்னர்களுக்கு மன்னனாக நிறுவப்படுகிறான்.(153)
சூரியன் எழும்போது உரிய மந்திரங்களுடன் விதிப்படி பொற்கொடை அளிக்கும் மனிதன், கெட்ட கனவுகளால் முன்னறிவிக்கப்படும் தீய விளைவுகளை அகற்றுவதில் வெல்கிறான்.(154) சூரியன் எழுந்ததும் {முதல் சந்திப்பொழுதில்}, பொற்கொடை அளிக்கும் மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான். நடுப்பகலில் பொற்கொடை அளிப்பவன், எதிர்காலப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(155) இரண்டாம் சந்திப்பொழுதில் {மாலை வேளையில்} ஆன்ம அடக்கத்துடன் பொற்கொடை அளிக்கும் ஒருவன் பிரம்ம, வாயு, அக்னி, சோம தேவர்களுக்குரிய உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(156) அத்தகைய மனிதன் இந்திரனுக்கு உரிய பேரின்ப உலகங்களின் மங்கலப் புகழை ஈட்டுகிறான். இவ்வுலகில் பெரும்புகழை அடையும் அவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து இன்பத்திலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறான்.(157)
உண்மையில், அத்தகைய மனிதன் மகிழ்ச்சிகரமான உலகங்கள் பலவற்றை அடைந்து, புகழிலும், மகிமையிலும் ஒப்பற்றவனாகத் திகழ்கிறான். தடையற்ற பாதையைக் கொண்ட அவன், விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்வதில் வெல்வான்.(158) அவன் அடையும் உலகங்களில் இருந்து ஒருபோதும் விழ நேராமல், அவன் ஈட்டிய மகிமை பெரிதாகும். உண்மையில், பொற்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற இன்ப உலகங்களை அடைந்து நித்திய இன்பத்தை அனுபவிப்பான்.(159) சூரியன் எழும்போது நெருப்பை மூட்டி, ஒரு குறிப்பிட்ட நோன்பு நோற்கும் நோக்கில் பொற்கொடை அளிக்கும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(160) தங்கம் அக்னியோடு அடையாளங்காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, பொற்கொடை பேரின்பத்தை விளைவிக்கும். விரும்பப்படுபவையும், இதயத்தைத் தூய்மைப்படுத்துபவையுமான சாதனைகளும் பலன்களையும் அடைவதற்குப் பொற்கொடையானது வழிவகுக்கிறது.(161)
ஓ! பாவமற்றவனே, இவ்வாறு பொன்னின் தோற்றத்தைக் குறித்து உனக்குச் சொன்னேன். ஓ! பலமிக்கவனே, ஓ! பிருகு குலத்தைத் திளைக்கச் செய்பவனே, கார்த்திகேயன் எவ்வாறு வளர்ந்தான் என்பதை அறிவாயாக.(162) நீண்ட காலத்திற்குப் பிறகு கார்த்திகேயன் வளர்ந்தான். ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அதன் பிறகு அவன் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அனைவராலும் தேவ படையின் தளபதியாக {படைத்தலைவனாகத்} தேர்ந்தெடுக்கப்பட்டான்.(163) ஓ! பிராமணா, அவன் உலகங்கள் அனைத்திலும் நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுத் தேவர்களின் தலைவனுடைய ஆணையின் பேரில் தைத்தியன் தாரகனையும், அசுரர்கள் பலரையும் கொன்றான்.(164) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, பொற்கொடை அளிப்பதன் பலன்களைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன். எனவே, ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நீ பொற்கொடை அளிப்பாயாக” என்றார் {வசிஷ்டர்}”.(165)
பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு வசிஷ்டரால் சொல்லப்பட்டவரும், பேராற்றல் கொண்டவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்குப் பொற்கொடை அளித்து, தம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தார்.(166) ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறே நான் பொற்கொடை குறித்த அனைத்தையும், பொன்னின் தோற்றம் குறித்தும் சொன்னேன்.(167) எனவே, நீ பிராமணர்களுக்கு அபரிமிதமாகப் பொற்கொடை அளிப்பாயாக. உண்மையில், ஓ! மன்னா, பொற்கொடையளிப்பதன் மூலம் நீ நிச்சயம் உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(168)
தாரக வதம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 86-குமரனுக்கு முலையுண்ணக் கொடுத்த கார்த்திகைப் பெண்கள்; தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் குமரனுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்கள்; தாரகன் கொல்லப்பட்டது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வேத கேள்வியில் குறிப்பிடப்படுவதும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடையதுமான பொற்கொடையால் உண்டாகும் பலன்களைக் குறித்து விரிவாகச் சொன்னீர்.(1) பொன்னின் தோற்றம் குறித்தும் நீர் சொன்னீர். இப்போது தாரகனின் அழிவு குறித்து எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, அந்த அசுரன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான் என நீர் சொன்னீர். அவனுடைய அழிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விரிவாக எனக்குச் சொல்வீராக.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, தாரகன் கொல்லப்பட்டதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன். அதைக் கேட்பதில் என் ஆவல் பெரிதாக இருக்கிறது” என்றான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, (தாரகனின் ஆற்றல் மூலமும், கங்கை அக்னியின் வித்தைக் கைவிட்ட நடத்தையின் மூலமும்) பெரும் துன்பத்தில் இருந்த தேவர்களும், முனிவர்களும், கிருத்திகை அறுவரிடமும் அந்தப் பிள்ளையை வளர்க்கத் தூண்டினர்.(5) தெய்வீக மங்கையரில் (அவர்களைத் தவிர வேறு) எவரும் அக்னியின் வித்தைத் தங்கள் கருவறையில் தாங்கும் சக்தி கொண்டவர்களாக இல்லை.(6) பெரும் சக்தி கொண்ட அக்னியின் வித்தைக் கைவிட்ட பிறகு அதைத் தாங்கத் தயாராக இருந்த அந்தத் தேவிகளிடம் நெருப்பின் தேவன் பெரும் நிறைவடைந்திருந்தான்.(7) ஓ! மன்னா, அக்னியின் சக்தி ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு (கருவறைக்குச் செல்லும்) வழியில் வைக்கப்பட்டபோது, கிருத்திகைகள் அறுவரும், தங்கள் கருவறையில் கொண்ட ஒவ்வொரு பகுதியையும் பேணி வளர்க்கத் தொடங்கினர்.(8)
எனினும், உயர் ஆன்மக் குமாரன் அவர்களின் கருவறைகளில் வளரத் தொடங்கியபோது, அவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்ட அவர்களது உடல்கள் (சொர்க்கத்திலோ, பூமியிலோ) எங்கும் அமைதியைக் காணத் தவறின.(9) அவர்களது உடல்களால் சக்தியால் நிறைக்கப்பட்டு ஈனும் காலமும் இறுதியாக வந்தது. ஓ! மனிதர்களின் இளவரசே, அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கருவை ஈன்றனர்.(10) ஆறு வெவ்வேறு கருவறைகளில் தாங்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதிகள் அனைத்தும் வெளியே வந்ததும் ஒன்றாகின. பூமாதேவி அப்பிள்ளையை, பொற்குவியலில் இருந்து எடுத்தாள்.(11) உண்மையில், சிறந்த வடிவத்தில் இருந்த அந்தப் பிள்ளை, நெருப்பின் தேவனை {அக்னியைப்} போலக் காந்தியுடன் சுடர்விட்டான். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், காண்பதற்கினிய நாணற்காடுகளில் வளரத் தொடங்கினான்.(12)
காந்தியில் காலைச் சூரியனைப் போல இருந்த அவர்களது பிள்ளையைக் கிருத்திகைகள் கண்டனர். அன்பால் நிறைந்தவர்களாக, உண்மையில் அவனிடம் அதிக அன்புடன் கூடிய அவர்கள் தங்கள் முலைகள் உண்ணக் கொடுத்து அவனை வளர்க்கத் தொடங்கினர்.(13) கிருத்திகைகளுக்குப் பிறந்து அவர்களாலேயே வளர்க்கப்பட்டதால் மூவுலகங்களிலும் அவன் கார்த்திகேயன் என்று அறியப்படலானான். ருத்திரனிடமிருந்து விழுந்த வித்தில் உதித்த அவன் ஸ்கந்தன் எனப் பெயரிடப்பட்டான், தனிமையான நாணற்காட்டில் பிறந்ததால் அவன் குஹன் (ரஹஸ்யமாகப் பிறந்தவன்) என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.(14) முப்பத்து மூன்று தேவர்கள், (உடல்வடிவங்களுடன் கூடிய) திசைப்புள்ளிகள், அவற்றுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {திக்பாலர்கள்}, ருத்திரன், தாத்ரி {தாதா}, விஷ்ணு, யமன், பூஷன், அர்யமன், பகன்,(15) அம்சன், மித்திரன், ஸாத்தியர்கள், வாசவன் {இந்திரன்}, வசுக்கள், அசுவினிகள், நீர், காற்று, ஆகாயம், சந்திரமாஸ், நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள், சூரியன்,(16] உடல்வடிவத்தோடு கூடிய ரிக், சாமம், யஜுஸ்கள் அனைத்தும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய {அக்னியுடைய} மகனான அந்த அற்புதமான பிள்ளையைக் காண அங்கே வந்தனர்.(17)
ஆறு தலைகளைக் கொண்டவனும், பனிரெண்டு கண்களைக் கொண்டவனும், பிராமணர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனும், குமாரன் என்றழைக்கப்படுபவனுமான அந்தப் பிள்ளையின் புகழை முனிவர்களும், கந்தர்வர்களும் பாடினர்.(18) அவனது தோள்கள் அகலமாக இருந்தன, அவனுக்குப் பனிரெண்டு கரங்கள் இருந்தன, அவனுடைய காந்தி நெருப்புக்கும், ஆதித்தியனுக்கும் ஒப்பானதாக இருத்தது. நாணற்புதரில் நீண்டு கிடக்கும் அக்குழந்தையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும்,(19) பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, அந்தப் பேரசுரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினர். தேவர்கள் அவனுக்கு உற்சாகமூட்ட பல்வேறு வகைகளிலான பொம்மைகளையும், பொருட்களையும் கொண்டு வந்தனர்.(20) அவன் குழந்தையைப் போல விளையாடியபோது, அவனுக்குப் பல்வேறு வகைப் பொம்மைகளும், பறவைகளும் கொடுக்கப்பட்டன. சிறந்த இறகுகளைக் கொண்டவனான கருடன், பலவண்ண தோகைகளை உடைய தன் பிள்ளையான மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(21)
ராட்சசர்கள் அவனுக்குப் பன்றியையும், எருமையையும் கொடுத்தனர். அருணன் அவனுக்கு, கடுங்காந்தியைக் கொண்ட சேவலொன்றைக் கொடுத்தான்.(22) சந்திரமாஸ் செம்மறியாட்டையும், ஆதித்தியன் தன் பளபளக்கும் கதிர்களையும் கொடுத்தனர். பசுக்கள் அனைத்தின் தாயான சுரபி அவனுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுத்தாள்.(23) அக்னி அவனுக்குப் பல நற்குணங்களைக் கொண்ட வெள்ளாடு ஒன்றைக் கொடுத்தான். ஐலன் அவனுக்குப் பெரும் அளவிலான மலர்களையும் கனிகளையும் கொடுத்தான். சூதன்வான் அவனுக்கு ஒரு வண்டியையும், அளவிலாத கூபரம் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான்.(24) வருணன் கடலில் விளையும் பல சிறந்த மங்கலப் பொருட்களைஉம், சில யானைகளையும் கொடுத்தான். தேவர்களின் தலைவன், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் பல்வேறு வகைப் பறவைகள்,(25) இரைதேடும் பயங்கர விலங்குகள், மற்றும் பல்வேறு வகைக் குடைகள் பலவற்றையும் கொடுத்தான். பெரும் கூட்டங்களாக இருந்த ராட்சசர்களும், அசுரர்களும் அந்தப் பலமிக்கப் பிள்ளையின் பின்னால் அணிவரிசையில் நடக்கத் தொடங்கினர்.(26)
அக்னியின் மகன் வளர்வதைக் கண்ட தாரகன், பல்வேறு வகைகளில் அவனை அழிக்க முயன்றாலும் அந்தப் பலமிக்கத் தேவனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.(27) சரியான நேரத்தில் தேவர்கள் தனிமையில் (நாணற்காட்டில்) அக்னிக்குப் பிறந்த மகனை தங்கள் படைத்தலைவனாக நிறுவினர். அசுரன் தாரகன் தங்களை ஒடுக்கு வருவது குறித்தும் அவனுக்குச் சொன்னார்கள்.(28) தேவர்களின் படைத்தலைவன் வளர்ந்ததும், பெரும் பலத்தையும், சக்தியையும் கொண்டவனாக இருந்தான். காலத்தில் அந்தக் குஹன் தன் தடுக்கப்பட முடியாத ஈட்டியை {வேலைக்} கொண்டு தாரகனைக் கொன்றான்.(29) உண்மையில், குமரன் அந்த அசுரனை விளையாட்டு போல எளிமையாகக் கொன்றான். தாரகனைக் கொன்ற பிறகு அவன் தேவர்களின் தலைவனை மூவுலகங்களின் அரசாட்சியில் மீண்டும் நிறுவினான்.(30)
வலிமையும், ஆற்றலும் கொண்ட அந்தத் தேவர் படைத்தலைவன் அழகிலும், காந்தியிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தான். பலமிக்க ஸ்கந்தன், தேவர்களின் பாதுகாவலனாகி, சங்கரனுக்கு ஏற்புடையதைச் செய்தான்.(31) பாவகனின் சிறப்புமிக்க மகன், தங்க வடிவம் கொண்டவனாக இருந்தான். உண்மையில் குமாரனே எப்போதும் தேவர்களின் படைத்தலைவனாக இருந்தான்.(32) நெருப்பு தேவனுடைய பலமும், சக்தியுமாக இருந்த தங்கம் கார்த்திகேயனுடன் (ஒரே வித்தில்) பிறந்ததாகும். எனவே, தங்கமானது, உயர்வானதும், மங்கலமானதும், மதிப்புமிக்கதும், சிறந்ததும், வற்றாத பலனைக் கொண்டதுமாக இருக்கிறது.(33) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே பழங்காலத்தில் பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} வசிஷ்டர் சொன்னார். எனவே, ஓ! மனிதர்களின் மன்னா, பொற்கொடை அளிப்பாயாக.(34) ராமர் {பரசுராமர்}, பொற்கொடை அளித்ததன் மூலம் தம் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, இறுதியாகப் பிற மனிதர்களால் அடைய முடியாத சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைந்தார்” என்றார் {பீஷ்மர்}.(35)
சிராத்த பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 87-நீத்தார் வழிபாட்டுக்குரிய விதிகள் மற்றும் ஒவ்வொரு திதியிலும் சிராத்தம் செய்வதன் பலன் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அற ஆன்மாவே, நான்கு வகைக்கான கடமைகள் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர். அதுபோலவே, ஓ! மன்னா, (இறந்து போன மூதாதையருக்கான) சிராத்தம் {நீத்தார் வழிபாடு} தொடர்பான விதிகள் அனைத்தையும் இப்போது எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்”.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டதும், அந்தச் சாந்தனுவின் மகன் {பீஷ்மர்}, விதிகளுக்கு இணக்கமாகச் சிராத்தம் தொடர்பான பின் வரும் சடங்கை அறிவிப்பதில் தம்மைத் தாமே நிறுவிக் கொண்டார்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, சிராத்த சடங்கு குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மங்கலமானதும், புகழத்தக்கதும், புகழையும், சந்ததியையும் உண்டாக்கவல்லதுமான அந்தச் சடங்கு, பித்ருக்களைக் கௌரவிப்பதில் ஒரு வேள்வியாகக் கருதப்படுகிறது.(3) தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, கந்தர்வர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, பிசாசங்கள் அல்லது கின்னரர்களோ எவராக இருந்தாலும் ஒருவன் பித்ரு வழிபாட்டை எப்போதும் செய்ய வேண்டும்.(4) மக்கள் பித்ருக்களை முதலில் வழிபடுவதும், அதன் பிறகு தேவர்களைத் துதித்து அவர்களை நிறைவடையச் செய்வதும் காணப்படுகிறது. எனவே, ஒருவன் மிகக் கவனமாக எப்போதும் பித்ரு வழிபாட்டைச் செய்ய வேண்டும்[1].(5)ஓ! மன்னா, பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தத்தைப் பின்னர்ச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் பொதுவிதி (புதுநிலவு {அமாவாசை} நாளின் பிற்பகலில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராத்தம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்) ஒரு சிறப்பு விதியால் தடுக்கப்பட்டிருக்கிறது[2].(6) (இறந்து போன) பாட்டனார்கள் {மூதாதையர்கள்} எந்த நாளில் சிராத்தம் செய்தாலும் நிறைவடைவார்கள்[3]. எனினும், (பின்பற்றத் தகுந்த சூழ்நிலைகளை நோக்கில் கொண்டு சிராத்தங்களைச் செய்யும்) குறிப்பிட்ட சந்திர நாட்களின் {திதிகளின்} நிறைகுறைகளை இப்போது சொல்லப் போகிறேன். (7) ஓ! பாவமற்றவனே, எந்த நாட்களில் சிராத்தங்களைச் செய்தால் என்ன கனிகள் அடையப்படும் என்பது குறித்துச் சொல்லப் போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(8)வளர்பிறையின்[4] ஒன்றாம் நாளில் {பிரதமையில்} பித்ருக்களைத் துதிப்பதன் மூலம் ஒருவன், விரும்பத்தக்க சாதனைகளைச் செய்யும் பிள்ளைகள் பலரைப் பெறவல்ல அழகிய மனைவிகளைத் தன் வசிப்பிடத்தில் அடைவான்.(9)வளர்பிறையின் இரண்டாம் நாளில் {துவிதியையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் மகள்கள் பலரை அடைகிறான். மூன்றாம் நாளில் {திருதியையில்} அதைச் செய்பவன் பல குதிரைகளை அடைகிறான். நான்காம் நாளில் {சதுர்த்தியில்} அதைச் செய்பவன் (வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் போன்ற) சிறு விலங்குகளின் பெரும் மந்தையைத் தன் வீட்டில் அடைகிறான்.(10)
ஓ! மன்னா, ஐந்தாம் நாளில் {பஞ்சமியில்} சிராத்தம் செய்பவர்கள் மகன்கள் பலரை அடைகிறார்கள். ஆறாம் நாளில் {சஷ்டியில்} சிராத்தம் செய்வோர் பெரும் காந்தியை அடைகிறார்கள்.(11)
ஏழாம் நாளில் {சப்தமியில்} அதைச் செய்யும் ஒருவன் பெரும் புகழை அடைகிறான். எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அதைச் செய்யும் ஒருவன் வணிகத்தில் பெரும் லாபங்கள் ஈட்டுகிறான்.(12)
ஒன்பதாம் நாளில் {நவமியில்} அதைச் செய்யும் ஒருவன் பிளவில்லாத {ஒற்றைக்} குளம்பைக் கொண்ட விலங்குகள் பலவற்றை அடைவான். பத்தாம் நாளில் {தசமியில்} அதைச் செய்யும் ஒருவன் பசுக்கள் என்ற பெருஞ்செல்வத்தை அடைகிறான்.(13)
பதினொன்றாம் நாளில் {ஏகாதசி} அதைச் செய்யும் ஒருவன் துணிமணிகள் மற்றும் (பித்தளை மற்றும் பிற உலோகங்களாலான) பாத்திரங்கள் போன்ற செல்வத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் பிரம்ம காந்தியுடன் கூடிய மகன்கள் பலரையும் அடைவான்.(14)
பனிரெண்டாம் நாளில் {துவாதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், விரும்பினால் வெள்ளி மற்றும் தங்கத்தினாலான பல்வேறு வகை அழகிய பொருட்களை எப்போதும் காண்பான்.(15)
பதிமூன்றாம் நாளில் {திரையோதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், தன் இனத்தில் சிறப்புமிக்கவனாவான். பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} சிராத்தம் செய்பவனுடைய குடும்பத்தில் உள்ள இளையோர் அனைவரும் {புருஷர்கள் அனைவரும் இளமைப் பருவத்திலேயே} மரணமடைவார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதன் போரில் சிக்குவான். புதுநிலவு நாளில் {அமாவாசையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைவான்.(16,17)
தேய்பிறையில் பத்தாம் நாள் {தசமி} தொடங்கி, (தசமி தொடங்கி அமாவாசை வரை வரும் நாட்களில்) பதினான்காம் நாளை {சதுர்த்தசியை} மட்டும் விட்டுவிட்டு வரும் அனைத்து நாட்களும் சிராத்தம் செய்வதற்கு மெச்சத்தகுந்த நாட்களே. தேய்பிறையின் மற்ற நாட்கள் {தேய்பிறையில் பிரதமை தொடங்கி நவமி வரையுள்ள நாட்கள்} அவ்வாறானவை அல்ல {சிராத்தம் செய்யத் தகுந்தவை அல்ல}.(18) மேலும், சிராத்த காரியங்களில் வளர்பிறையைவிடத் தேய்பிறை சிறந்ததாக இருப்பதைப் போலவே, முற்பகலைவிட, நாளின் பிற்பகலே சிறப்பானதாகும்[5]” என்றார் {பீஷ்மர்}.(19)
சிராத்த ஹவிஸுகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 88-சிராத்தத்தில் ஆகுதிகளாகப் பயன்படுத்தத் தகுந்த பொருட்களையும், அவற்றின் பலன்களையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும்பலம் கொண்டவரே, பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் எந்தப் பொருள் வற்றாததாகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் (காணிக்கை அளிக்கப்படும்) எந்த ஹவிஸ் {ஆகுதி பொருள்} காலத்திற்கும் நீடித்திருக்கிறது? உண்மையில் (கொடுக்கப்பட்டால்) நித்தியத் தன்மையை அடைவது எது?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, சிராத்த சடங்கை அறிந்த மனிதர்கள், சிராத்த நோக்கில் தகுந்ததெனக் கருதும் ஹவிஸ்கள் {வேள்வி நெருப்பில் இடத்தக்க பொருட்கள்} எவை என்பதையும், அவை ஒவ்வொன்றினாலும் விளையும் பலன்களையும் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, எள், அரிசி, வாற்கோதுமை, உளுந்து, நீர், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றைக் கொண்டு சிராத்தம் கொடுக்கப்பட்டால் ஒரு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருப்பார்கள்.(3) அதிக அளவிலான எள்ளைக் கொண்டு சிராத்தம் செய்யப்பட்டால், அத்தகைய சிராத்தம் வற்றாததாகிறது என மனு சொல்லியிருக்கிறார். அனைத்து வகை உணவுகளிலும், எள்ளே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.(4) சிராத்தங்களில் மீன்கள் காணிக்கையளிக்கப்பட்டால், இரண்டு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருக்கின்றனர். {செம்மறி} ஆட்டிறைச்சியினால் மூன்று மாதங்கள் வரையும், முயலிறைச்சியினால் அவர்கள் நான்கு மாதங்கள் வரையும் நிறைவடைந்திருக்கின்றனர்.(5)
ஓ! மன்னா, வெள்ளாட்டு இறைச்சியால் ஐந்து மாதங்கள் வரையும், பன்றியிறைச்சியால் ஆறு மாதங்கள் வரையும், பறவைகளின் இறைச்சியால் ஏழு மாதங்கள் வரையும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(6) பிருஷதம் {புள்ளிமான்} என்றழைக்கப்படும் மான்களில் இருந்து கிடைக்கும் இறைச்சியால் எட்டு மாதங்கள் வரையும், ருருவிடம் {கறுப்பு மானில் இருந்து} கிடைக்கும் இறைச்சியால் ஒன்பது மாதங்கள் வரையும், கவய {மற்றொரு வகை மான்} இறைச்சியால் பத்து மாதங்கள் வரையிலும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(7) எருமை இறைச்சியால் அவர்கள் பதினோரு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றனர். சிராத்தத்தில் அளிக்கப்படும் மாட்டிறைச்சியால் அவர்கள் ஒரு முழு வருடத்திற்கு நிறைவடைந்திருக்கிறார்கள்.(8) மாட்டிறைச்சியைப் போலவே நெய்யுடன் கலந்த பாயசம் பித்ருக்களுக்கு மிகவும் ஏற்புடையதாகும். வாத்ரீநச இறைச்சியால் பித்ருக்கள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் அளவுக்கு நிறைவடைந்திருக்கிறார்கள்[1].(9) பித்ருக்கள் இறந்த சந்திர நாளில் {திதியில்} ஆண்டுதோறும் காண்டாமிருகத்தின் இறைச்சி காணிக்கையளிக்கப்பட்டால் அது வற்றாததாகிறது. காலசாகம் என்றழைக்கப்படும் கீரை {அறைக்கீரை}, காஞ்சன மலரின் இதழ்கள், வெள்ளாட்டிறைச்சி ஆகியவை காணிக்கையளிக்கப்பட்டால் அவையும் வாற்றாதவையாகின்றன.(10)ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக உண்மையில் பித்ருக்களாலேயே பாடப்பட்ட சில ஸ்லோகங்கள் (இவ்வுலகில்) பாடப்படுகின்றன. இவை பழங்காலத்தில் சனத்குமாரரால் சொல்லப்பட்டவை.(11) {அந்த ஸ்லோகங்கள்}, “எங்கள் குலத்தில் பிறந்தவன் எவனும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்கையில் {தக்ஷிணாயனத்தில்}, மக நட்சத்திரத்தின் கீழ் வரும் (தேய்பிறையின்) பதிமூன்றாம் நாளில் {திரயோதசியில்} எங்களுக்கு நெய் கலந்த பாயசம் கொடுக்க வேண்டும்.(12) எங்கள் குலத்தில் பிறந்த ஒருவன், நோன்பு நோற்பவனைப் போலவே, மக நட்சத்திரத்தின் கீழ் வெள்ளாட்டு இறைச்சியையோ, காஞ்சன மலரின் இதழ்களையோ {எங்களுக்குக்} காணிக்கையளிக்க வேண்டும். அவன், ஒரு யானையின் நிழலால் மறைக்கப்படும் இடத்தில் உரிய சடங்குகளுடன் நெய் கலந்த பாயசத்தை எங்களுக்குக் காணிக்கையளிக்கும் வகையில் அர்ப்பணிக்க வேண்டும்” {என்று சொல்கின்றன}[2].(13)பல மகன்களைப் பெற ஆசைப்பட வேண்டும், ஏனெனில் அவர்களில் ஒருவனாவது, எது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறதோ, எதன் கிளைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றானவாகின்றனவோ அந்த ஆலமரம் நிற்கும் கயைக்கு (தன் மூதாதையருக்குச் சிராத்தம் செய்வதற்காகச்) செல்வான்[3].(14) சிறிதளவு நீர், கிழங்குகள், கனிகள், இறைச்சி, அரிசி ஆகியவற்றைத் தேனில் கலந்து ஆண்டுதோறும் {குறிப்பிட்ட மூதாதையரின்} இறந்த நாளில் காணிக்கையளித்தால் அவை வற்றாதனவாகின்றன” என்றார் {பீஷ்மர்}.(15)
சிராத்த நட்சத்திர பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 89-சிராத்தங்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் செய்யப்பட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை சசபிந்துவுக்குச் சொன்ன யமன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, வெவ்வேறு நட்சத்திரங்களில் விரும்பினால் செய்ய வேண்டிய {கட்டாயமில்லா} சிராத்தங்களைக் குறித்து மன்னன் சசபிந்துவிடம் யமன் சொன்னதை உனக்குச் சொல்லப்போகிறேன்; கேட்பாயாக[1].(1)எப்போதும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன், புனித நெருப்பை நிறுவி ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன் நோயில் இருந்து விடுபட்டு, தன் பிள்ளைகளுடன் சொர்க்கத்திற்கு உயர்கிறான்.(2)
பிள்ளைகளைப் பெற விரும்புபவன், ரோகிணி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும், அதே வேளையில் சக்தியைப் பெற விரும்புபவன் மிருசீரிஷ நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும். ஆர்த்திரா {திருவாதிரை} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒரு மனிதன் கடும் செயல்களைச் செய்தவனாகிறான் {அவன் கொடுஞ்செய்கையுள்ளவனாவான்}.(3)
புனர்பூசத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் உழவில் லாபம் ஈட்டுவான். வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் விருப்பமுள்ள மனிதன் புஷ்யத்தில் {பூசத்தில்} சிராத்தம் செய்ய வேண்டும்.(4)
அஷ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் அதைச் செய்யும் ஒருவன், வீரமைந்தர்களைப் பெறுகிறான். மகத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் தன் இனத்தில் சிறந்தவனாகிறான்.(5)
பால்குனியில் {பூரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் நற்பேறு பெறுகிறான். பிந்தைய பால்குனத்தில் {உத்தரத்தில்} அதைச் செய்பவன் பல பிள்ளைகளைப் பெறுகிறான்; ஹஸ்த நட்சத்திரத்தில் அதைச் செய்பவன் தன் விருப்பங்கள் கனியும் நிலையை அடைகிறான்.(6)
சித்திரை மாதத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் பேரழகுடன் கூடிய பிள்ளைகளைப் பெறுகிறான். ஸ்வாதி நட்சத்திரத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் வணிகத்தில் லாபம் ஈட்டுகிறான்.(7)
பிள்ளைகளைப் பெற விரும்பும் மனிதன், விசாக நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் தன் விருப்பம் கனியும் நிலையை அடைகிறான். அனுராதாவில் {அனுஷத்தில்} செய்வதன் மூலம் ஒருவன் மன்னர்களுக்கு மன்னனாகிறான் {சக்கரவர்த்தியாகிறான்}.(8)
ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, ஜியேஷ்ட {கேட்டை} நட்சத்திரத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பக்தியுடனும், பணிவுடனும் காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் அரசுரிமையை அடைகிறான்.(9)
மூல நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் ஒருவன் உடல் நலத்தை அடைகிறான், ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்பவன், சிறந்த புகழை ஈட்டுகிறான். ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் கவலைகள் அனைத்தில் இருந்து விடுபட்டு மொத்த உலகத்தையும் சுற்றுவதில் வெல்கிறான்.(10)
அபிஜித் {உத்திராடம்} நட்சத்திரத்தில் அதைச்செய்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த ஞானத்தை அடைகிறான். சிரவணத்தில் {திருவோணம்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் இவ்வுலகத்தில் இருந்து செல்லும்போது மிக உயர்ந்த கதியை அடைகிறான்.(11)
தனிஷ்ட {அவிட்டம்} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் ஒரு நாட்டின் ஆட்சியாளனாகிறான். வருணனால் தலைமைதாங்கப்படும் நட்சத்திரத்தில் (சதபிஷ {சதயம்} நட்சத்திரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் மருத்துவராக வெற்றி அடைகிறான்.(12)
முந்தைய பாத்திரபத {பூரட்டாதி} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் அளவிலான வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும் உடைமையாக அடைகிறான்; அதையே பிந்தைய பாத்திரபதத்தில் {உத்திரட்டாதியில்} செய்யும்போது அவன் ஆயிரம் பசுக்களை அடைகிறான்.(13)
ரேவதி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அதிகமான வெண்கல மற்றும் தாமிரப் பாத்திரங்களைச் செல்வமாக அடைகிறான். அஸ்வினியில் செய்வதன் மூலம் அவன் பல குதிரைகளை அடைகிறான். அதே வேளையில் பரணியில் செய்தால் அவன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்.(14)
சிராத்தம் குறித்த இந்த விதிமுறைகளைக் கேட்ட மன்னன் சசபிந்து, அதன்படியே செயல்பட்டு, மொத்த உலகையும் அடக்குவதில் எளிதாக வென்று {உலகம் முழுவதும்} ஆட்சி செலுத்தினான்” என்றார் {பீஷ்மர்}.(15)
நிமந்திரணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 90-சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படுவனவற்றை எவ்வகைப் பிராமணர்களுக்குக் கொடுக்கலாம்; பந்திக்குத் தகுந்த, தகாத பிராமணர்கள் யாவர் என்பவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை எவ்வகைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் என்பது குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கொடை குறித்த விதிகளை அறிந்த க்ஷத்திரியன், (கொடையளிக்கும்போது) ஒருபோதும் பிராமணர்களைச் சோதிக்கக்கூடாது. எனினும், தேவ மற்றும் பித்ரு வழிபாட்டுச் செயல்கள் {கர்மங்கள்} அனைத்திலும் பரிசோதனை செய்வது முறையே எனச் சொல்லப்படுகிறது.(2)
மனிதர்கள், தேவர்களிடம் இருந்து வரும் பக்தியால் நிறையும்போது மட்டுமே பூமியில் அவர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள். எனவே ஒருவன் தேவர்களுக்கே கொடையளிப்பதாகக் கருதி, பிராமணர்கள் அனைவருக்கும் கொடையளித்த பிறகே தேவர்களை அணுக வேண்டும்.(3) எனினும் சிராத்தங்களில், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு நுண்ணிறிவுமிக்க மனிதன், (சிராத்த சடங்குகளைச் செய்வதற்குத் துணை புரியவும், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளைக் கொடையளிக்கவும் தக்க) பிராமணர்களைச் பரிசோதித்தறிய வேண்டும். அத்தகைய ஆய்வு அவர்களுடைய பிறப்பு, நடத்தை, வயது, தோற்றம், கல்வி, பெற்றோரின் உன்னத நிலை ஆகியவை தொடர்புடையதாக இருக்க வேண்டும்.(4)
பிராமணர்களில் சிலர் தாங்கள் அமர்ந்த பந்தியைக் கெடுப்பவர்களாகவும், சிலர் அதைப் புனிதப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ! மன்னா, பந்தியில் தவிர்க்கப்பட வேண்டிய பிராமணர்கள் யாவர் என்பதைச் சொல்கிறேன், கேட்பாயாக[1].(5) சூதுநிறைந்தவனாகவோ, கருவைக் கொன்ற குற்றம் புரிந்தவனாகவோ, காச நோய் கொண்டவனாகவோ, விலங்குகளை வளர்ப்பவனாகவோ, வேத கல்வியற்றவனாகவோ, கிராமத்தின் பொதுப் பணியாளனாகவோ {ஊர்ப் பொதுவுக்கு ஏவல் தொழில் செய்பவனாகவோ}, கடன் கொடுத்து, அதில் வரும் வட்டியைக் கொண்டு வாழ்பவனாகவோ, பாடகனாகவோ, அனைத்துப் பொருட்களை விற்பவனாகவோ,(6) தீ வைப்பவனாகவோ, நஞ்சு கொடுப்பவனாகவோ, காமத்தரகு தொழில்புரிபவனாகவோ, சோமத்தை விற்பவனாகவோ, கைவரைநூல் {கைரேகை சாஸ்திர} அறிஞனாகவோ, மன்னனிடம் பணிசெய்பவனாகவோ {அரசு ஊழியனாகவோ}, எண்ணெய் விற்பவனாகவோ, வஞ்சகனாகவோ, பொய் உறுதி மொழியேற்பவனாகவோ,(7) தந்தையிடம் சச்சரவு செய்பவனாகவோ, தன் வீட்டில் தன் மனைவியின் கள்ளக்காதலைப் பொறுத்துக் கொள்பவனாகவோ {வேறு புருஷனை வைத்திருக்கும் மனைவியுள்ளவனாகவோ}, சபிக்கப்பட்டவனாகவோ, கள்வனாகவோ, ஏதோவொரு கைத்தொழில் செய்து பிழைப்பவனாகவோ,(8) வேடம் தரிப்பவனாகவோ {நடிகனாகவோ}, நடத்தையில் வஞ்சனையுள்ளவனாகவோ, நண்பர்களென அழைக்கப்படுபவர்களுக்குப் பகையாக நடப்பவனாகவோ {நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவனாகவோ}, பிறன்மனை நயப்பவனாகவோ, சூத்திரர்களின் ஆசானாகவோ {நோன்பு நோற்காதவர்களுக்குக் கற்பிப்பவனாகவோ}, ஆயுதந்தரிக்கும் தொழிற் செய்பவனாகவோ,(9) (வேட்டைக்காக) நாய்களுடன் திரிபவனாகவோ, நாயால் கடிபட்டவனாகவோ, மூத்த சகோதரர்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவனாகவோ, விருத்தசேதனம் செய்து கொண்டவனாகவோ {தோல் நோயுள்ளவனாகவோ / தொழுநோயாளியாகவோ}[2], தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனாகவோ,(10) நடிகனாகவோ, ஒரு தேவனை {தெய்வத்தை} அலங்கரித்து {பூஜை செய்து} வாழ்பவனாகவோ, கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களின் சேர்க்கைகளைக் கணிப்பதன் மூலம் வாழ்பவனாகவோ {ஜோதிடனாகவோ} இருப்பவர்கள் பந்தியில் தவிர்க்கப்படத் தகுந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(11)ஓ! யுதிஷ்டிரா, சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் அத்தகைய பிராமணர்களால் உண்ணப்பட்டால், அவை (பித்ருக்களின் வயிற்றை நிரப்புவதற்குப் பதிலாக) ராட்சசர்களின் வயிற்றை நிரப்புமென வேதமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(12) ஒரு சிராதத்தத்தில் உண்ட பிறகு, அன்றைய வேதகல்வியைத் தவிர்க்காதவனும், அந்த நாளில் ஒரு சூத்திரப் பெண்ணுடன் பாலினக் கலவி புரிந்தவனுமான ஒருவன், தன்னுடைய அத்தகைய செயல்களின் விளைவாகத் தன்னுடைய பித்ருக்கள் ஒரு மாத காலத்திற்குச் சாணத்தில் கிடக்க நேரிடும் என்பதை அறிய வேண்டும்.(13) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள், சோமத்தை விற்கும் பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை மனிதவுடற் கழிவுகளாக {மலஜலமாக} மாறும்; மருத்துவத் தொழில் பழகும் ஒருபிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை சீழாகவும், குருதியாகவும் மாறும்; தேவனை அலங்கரித்து {பூஜை செய்து} வாழும் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் எக்கனியையும் {எப்பலனையும்} கொடுக்கத் தவறும்; வட்டித் தொழிலில் வாழ்பவனுக்குக் கொடுக்கப்பட்டால் புகழ்க்கேட்டுக்கு வழிவகுக்கும்;(14) வணிகத்தில் ஈடுபடும் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை இம்மையிலும், மறுமையிலும் கனி {பலன்} கொடுக்காது. விதவையான தாய்க்கு (இரண்டாம் கணவன் மூலம்) பிறந்த பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால், அவை சாம்பலில் ஊற்றப்படும் ஆகுதிகளைப் போலக் கனியற்றவையாகிவிடும்.(15)
(சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும்) ஹவ்யகவ்யங்களை, தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாதவர்களும், தங்கள் வகைக்குரிய நல்லொழுக்க விதிகளைப் பின்பற்றாதவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பவர்கள், மறுமையில் எவ்வித பலனையும் அத்தகைய கொடைகள் உண்டாக்காததைக் காண்பார்கள்.(16) இத்தகைய மனிதர்களின் இயல்புகளை அறிந்தும், அவர்களுக்கு இத்தகைய பொருட்களைக் கொடையளிக்கும் சிறுமதியாளன், தன்னுடைய நடத்தையால் தன் பித்ருக்களை மறுமையில் மனிதக் கழிவுகளை உண்ணச் செய்கிறான்.(17) பிராமணர்களில் இழிந்தவர்களான இவர்கள் பந்தியில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறிவாயாக. சூத்திரர்களுக்குப் போதிக்கும் சக்தியற்ற பிராமணர்களும் அதே வகையைச் சார்ந்தவர்களே.(18) குருடனாக இருக்கும் பிராமணன் பந்தியில் உள்ள அறுபது பேரைக் களங்கப்படுத்துகிறான்; ஆண்மையற்ற ஒருவன் நூறு பேரைக் களங்கப்படுத்துகிறான். ஓ! மன்னா, வெண்குஷ்டம் கொண்டவன், எத்தனை பேரைப் பார்ப்பானோ அத்தனை பேரையும் களங்கப்படுத்துகிறான்.(19) தலையைத் துணியால் மூடிக் கொண்டும், தெற்கு நோக்கி அமர்ந்தும், கால்களில் பாதுகைகளை அணிந்த நிலையிலும் சிராத்தங்களில் உண்ணப்படும் எதுவும், அசுரர்களையே நிறைவடையச் செய்யும்.(20)
வன்மத்துடனும், மதிப்பில்லாமலும் கொடுக்கப்படும் எதுவும், அசுர இளவரசனின் (பலியின்) பங்காகிறது என்று பிரம்மனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது.(21) நாய்களையும், பந்தியைக் கெடுக்கும் இத்தகைய பிராமணர்களையும், சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் தங்கள் கண்களைச் செலுத்த அனுமதிக்கக்கூடாது. இந்தக் காரணத்திற்காக, பிறர் பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட இடங்களிலேயே சிராத்தங்கள் நடத்தப்பட வேண்டும். அந்த இடத்தில் எள்ளைத் தூவி {இறைத்து} வைத்திருக்க வேண்டும்.(22) எள் இல்லாமல் செய்யப்படும், அல்லது ஒரு மனிதனால் கோபத்துடன் செய்யப்படும் சிராத்தத்தில் ராட்சசர்களாலும், பிசாசங்களாலும் ஹவி களவாடப்படும்.(23) பந்தியில் தவிர்க்கப்படத் தகுந்தவனை உண்ண அழைத்து சிராத்தம் செய்யும் மூடன், ஒப்பீட்டளவில் {அத்தகைய} ஒருவனால் பார்க்கப்படும் பிராமணர்களின் எண்ணிக்கை அளவுக்கான {அந்த சிராத்தத்திற்குரிய} பலனை இழப்பான்.(24)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பந்தியைப் புனிதப்படுத்துபவர்கள் யாவர் என்பதை இப்போது சொல்கிறேன், கேட்பாயாக. பரிசோதனையின் மூலம் அவர்களை நீ கண்டறிய வேண்டும்.(25) தூய அறிவு, வேத கல்வி, நோன்புகள், நியமங்களையும், நல்ல மற்றும் அற நடத்தையையும் கொண்ட பிராமணர்கள் அனைவரும் அனைத்தையும் புனிதப்படுத்துபவர்களாக அறியப்பட வேண்டும்.(26) பந்தியில் அமரத் தகுந்தவர்கள் யாவர் என்பதைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். நான் இப்போது குறிப்பிடும் வகையில் நீ அவர்களை அறிந்து கொள்ளலாம். மூன்று நாசிகேதங்கள்[3], ஐந்து வேள்வி நெருப்புகள்[4], ஐந்து சுபர்ணங்கள்[5], (வேத அங்கங்களெனும்) ஆறு கிளைகள் ஆகியவற்றை அறிந்தவனும்,(27) வேதங்களைப் போதித்த தந்தைமாரின் வழித்தோன்றலும், சந்தங்களை நன்கறிந்தவனும், ஜியேஷ்ட சாமத்தை அறிந்தவனும்[6], பெற்றோரின் ஆளுகைக்குக் கீழ்ப்படிந்தவனும், வேதங்களை அறிந்தவனும், பத்துத் தலைமுறை மூதாதையர்களைக் கொண்டவனும்,(28) தான் மணந்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே அவர்களுடைய பருவகாலங்களில் கலவிபுரிபவனும், அறிவாலும், வேதத்தாலும், நோன்புகள் மற்றும் நியமங்களாலும் தூய்மையடைந்தவனுமான ஒரு பிராமணன் பந்தியைப் புனிதப்படுத்துகிறான்.(29)அதர்வசிரசை {அதர்வண வேதத்தைப்} படிப்பவனும்[7], பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவனும், அற நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளனும், வாய்மை நிறைந்தவனும், அறவொழுக்கம் ஒழுகுபவனும், தன் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளை முறையாக நோற்பவனும்,(30) களைப்படையும் வகையில் தீர்த்த நீர்நிலைகளில் நீராடுதவற்கு முயற்சி செய்பவனும், உரிய மந்திரங்களுடன் வேள்விகளைச் செய்து இறுதி நீராடலைச் செய்தவர்களும்,(31) கோபத்தின் ஆளுகையில் இருந்து விடுபட்டவர்களும், கலக்கமடையாதவர்களும், மன்னிக்கும் இயல்பைக் கொண்டவர்களும் {பொறுமைசாலிகளும்}, புலனடக்கத்துடன் கூடிய தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்பட வேண்டும்.(32) இவர்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் வற்றாததாகிறது. உண்மையில் இவர்களே பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாவர். உயர்ந்த அருளைக் கொண்ட வேறு சிலரும் பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாகக் கருதப்பட வேண்டும்.(33)அவர்கள் யதிகள், மோக்ஷ அறத்தைக் குறித்து அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளர்கள், அற்புத நோன்புகளை முறையாக நோற்பவர்கள், குவிந்த மனத்தோடு (புனித) வரலாறுகளை முதன்மையான பிராமணர்களுக்கு உரைப்பவர்கள் ஆவர் {இவர்களும் பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாகக் கருதப்பட வேண்டும்}.(34) பாஷ்யங்களை {சாத்திர விரிவுரைகளை} அறிந்தவர்கள், இலக்கணக் கல்வியில் அர்ப்பணிப்புள்ளவர்கள், புராணங்களைப் படிப்பவர்கள், தர்மசாத்திரங்களைப் படிப்பவர்கள்,(35) (தர்ம சாத்திரங்கள் மற்றும் புராணங்களைப் படித்துவிட்டு) அவற்றில் விதிக்கப்பட்டுள்ள தரத்தில் செயல்படுபவர்கள், ஆசானின் வசிப்பிடத்தில் (குறிப்பிட்ட காலம்) வாழ்ந்தவர்கள், பேச்சில் வாய்மை நிறைந்தவன், ஆயிரங்களைக் கொடையளித்தவன்,(36) வேதங்கள், சாத்திரங்கள், தத்துவச் சூத்திரங்கள் அனைத்திலும் {இவை அனைத்தின் அறிவில்} முதன்மையானவர்கள் ஆகியோர் தாங்கள் காணும் தொலைவுக்குரிய அளவில் அப்பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாவர்.(37) பந்தியில் அமர்பவர்கள் அனைவரையும் அவர்கள் புனிதப்படுத்துவதாலேயே அவர்கள் பந்திகளைப் புனிதப்படுத்துபவர்கள் {பந்தி பாவனர்} என்றழைக்கப்படுகிறார்கள். வேத ஆசிரியராக இருந்த தந்தையின் வழித்தோன்றலும், தானே வேத ஆசிரியராக இருப்பவனுமாகிய ஒரே ஒருவனே கூடத் தன்னைச் சுற்றிலும் முழுமையாக ஏழு மைல்களை {இரண்டரை குரோசங்கள் தொலைவைப்} புனிதப்படுத்துகிறான் என்று பிரம்மஞானிகள் சொல்கிறார்கள்.(38) ரித்விக்காக இல்லாதவன், வேத ஆசிரியராக இல்லாதவன் ஆகியோர் ஒரு சிராத்தத்தில் முதன்மையான இருக்கையில் அமர்ந்தால், அங்கே இருக்கும் பிற ரித்விக்குகளின் அனுமதியோடே அவன் (தனது அச்செயலின் மூலம்) பந்தியில் அமர்ந்திருப்போர் அனைவரின் பாவங்களை எடுத்துக் கொள்கிறான்.(39) மறுபுறம், வேதங்களை அறிந்தவனும், பந்தியைக் கெடுக்கவல்லதாகக் கருதப்படும் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் (சிராத்தத்தில் முதன்மையான இருக்கையில் அமர்வதன் மூலம்) வீழ்ந்துவிட்டவனாகக் கருதப்பட மாட்டான். அத்தகைய மனிதன் நிச்சயம் அப்பந்தியைப் புனிதப்படுத்துபவனாகவே இருப்பான்.(40)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காகவே சிராத்தங்களுக்கு அழைப்பதற்கு முன் நீ பிராமணர்களை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். தன் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவர்களையும், நல்ல குடும்பங்களில் பிறந்தவர்களையும், பெருங்கல்வி கற்றவர்களையும் மட்டுமே நீ அழைக்க வேண்டும்.(41) தன் நண்பர்களுக்கு உணவூட்ட மட்டுமே சிராத்தங்களைச் செய்பவனுடைய ஹவி, தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்யாமல் சொர்க்கத்திற்கு உயர்வதில் தவறுகிறது.(42) தான் செய்யும் சிராத்தங்களில் (தகுந்த மனிதர்களை அழைத்து அவர்களுக்கு உணவூட்டுவதில் முறையான கவனம் செலுத்தாமல்) நண்பர்களையும், உறவினர்களையும் மட்டுமே திரட்டும் ஒருவன் (துன்பங்கள் மற்றும் தடைகளில் இருந்து விடுபட்டு ஒளியூட்டப்பட்ட பாதையாக இருக்கும்) தேவ பாதையில் நடக்கத் தவறுகிறான். நண்பர்களை மட்டுமே திரட்டி, சிராத்தம் செய்யும் மனிதன், சொர்க்கத்திற்கு உயர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உண்மையில், நண்பர்களைக் கவனிக்கும் நிகழ்வாகச் சிராத்தங்களை மாற்றும் மனிதன், கட்டியிருந்த சங்கலி அறுபடும்போதே, தான் அமர்ந்திருந்த கொம்பில் இருந்தும் விடுபடும் பறவையைப் போலவே அவன் சொர்க்கத்திலிருந்து தொடர்பறுந்தவனாகி விடுவான்[8].(43) எனவே, சிராத்தம் செய்பவன் (அத்தகைய நிகழ்வுகளின்போது) தன் நண்பர்களைக் கௌரவிக்கக்கூடாது. வேறு சந்தர்ப்பங்களில் அவர்களை ஒன்றாகத் திரட்டி, அவர்களுக்குச் செல்வக்கொடை அளிக்கலாம். சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும் ஹவியும், கவியும் நண்பர்களாகவும், பகைவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும் இல்லாதவர்களுக்கே அளிக்கப்பட வேண்டும்.(44) வறண்ட நிலத்தில் விதை விதைத்தால் அது முளைக்காததைப் போலவோ, விதைக்காதவன் விளைச்சலின் பங்கைப் பெறாததைப் போலவோ சிராத்தக் காணிக்கைகளும், தகாத மனிதனால் உண்ணப்பட்டால் இம்மையிலும், மறுமையிலும் எப்பலனையும் உண்டாக்காது[9].(45)வேத கல்வியற்ற பிராமணன், புல் அல்லது வைக்கோல் எரிவதால் உண்டாகும் நெருப்பைப் போன்றிருந்து, விரைவில் அத்தகை நெருப்பைப் போலவே அணைந்து போகிறான். வேள்வி நெருப்பின் சாம்பலில் ஆகுதிகளை ஊற்றக்கூடாது என்பதைப் போலவே சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை அத்தகைய ஒருவனுக்கு {வேத கல்வியற்ற பிராமணனுக்குக்} கொடுக்கக்கூடாது.(46) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் (தகுந்த மனிதர்களுக்குக் கொடையளிக்கப்படுவதற்குப் பதிலாக) {சிராத்தங்களைச்} செய்பவர்களுக்குள்ளேயே பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்போது, அவை பிசாசங்களுக்கான கொடைகளாகக் கருதப்படும் நிலையை அடைகின்றன. அத்தகைய காணிக்கைகள் தேவர்களையோ, பித்ருக்களையோ நிறைவடையச் செய்வதில்லை. மறுவுலகை அடைவதற்குப் பதிலாக அவை, கன்றையிழந்து கொட்டிலுக்குள் திரியும் பசுவைப் போல இங்கேயே சுற்றித் திரிகின்றன.(47) வேள்வி நெருப்பு அணைந்து உண்டாகும் சாம்பலில் ஊற்றப்படும் நெய் ஆகுதியானது தேவர்களையோ, பித்ருக்களையோ ஒருபோதும் அடையாததைப் போலவே, ஒரு நர்த்தகருக்கோ, பாடகருக்கோ, அளிக்கப்படும் கொடை, அல்லது வஞ்சகனுக்கோ, பொய்யனுக்கோ கொடுக்கப்படும் தக்ஷிணையும் ஒரு பலனையும் உண்டாக்குவதில்லை.(48) பொய்யனுக்கோ, வஞ்சகனுக்கோ அளிக்கப்படும் தக்ஷிணையானது, கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் எந்த நன்மையையும் அளிப்பதில்லை. அத்தகைய தக்ஷிணை அழிவைத் தருவதும், நிந்தனைக்குரியதுமாகும். அதைச் செய்யும் மனிதனின் பித்ருக்கள் தேவர்களின் பாதையில் இருந்து விழ நேரிடும்.(49)
ஓ! யுதிஷ்டிரா, கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களால் நிறுவப்பட்ட எல்லைகளுக்குள்ளேயே எப்போதும் நடப்பவர்களும், தங்கள் திறனில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களுமான மனிதர்களையே தேவர்கள் பிராமணர்களாக அறிகிறார்கள்.(50) ஓ! பாரதா, வேத கல்வி, அறிவு, தவம், செயல்கள் {கர்மங்கள்} ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களை முனிவர்கள் என்றறிய வேண்டும். சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் அறிவில் அர்ப்பணிப்புள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிராமணர்களைக் குறித்து ஒருபோதும் தவறாகப் பேசாதவர்களையே மனிதர்களாகக் கருத வேண்டும்.(52) சபைக்கூட்டங்களுக்கு மத்தியில் நேரும் உரையாடல்களில் பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசும் மனிதர்களுக்குச் சிராத்த நிகழ்வுகளில் ஒருபோதும் உணவு அளிக்கப்படக்கூடாது. ஓ! மன்னா, பிராமணர்கள் பழிக்கப்பட்டால், அவர்கள் தங்களைப் பழித்தவனின் மூன்று தலைமுறைகளை அளித்துவிடுவார்கள்[10].(53) ஓ! மன்னா, இதுவே வைகானச முனிவர்களின் அறிக்கையாகும். வேதங்களை அறிந்த பிராமணர்களை ஒரு தொலைவிலேயே கண்டுவிட முடியும்.(54) ஒருவன் பிராமணர்களை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சிராத்தங்களில் அத்தகையவர்களுக்கே காணிக்கை அளிக்க வேண்டும். ஓ! பாரதா, ஆயிரமாயிரம் போலிப் பிராமணர்களுக்கு உணவூட்டுவதால் விளையும் பலனை, வேத அறிவுள்ள ஒரேயொரு பிராமணனுக்கு உணவூட்டுவதன் மூலம் ஒருவன் அடைந்துவிடலாம்” என்றார் {பீஷ்மர்}.(55)
சிராத்தம் தோன்றிய வரலாறு! – அநுசாஸனபர்வம் பகுதி – 91-சிராத்தம் உண்டான வரலாறு மற்றும் சிராத்தத்தில் கைவிட வேண்டியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “சிராத்தம் என்பது முதலில் யாரால், எந்த நேரத்தில் கருதப்பட்டது? அதன் சாரம் என்ன? {அது எவ்வகையானது?} பிருகு மற்றும் அங்கிரஸின் வழித்தோன்றல்கள் மட்டுமே உலகத்தில் இருந்த நேரத்தில் எந்த முனிவர் சிராத்தத்தை நிறுவினார்?(1) சிராத்தத்தில் எச்செயல்களைச் செய்யக் கூடாது? கிழங்குகளும், கனிகளும் காணிக்கையளிக்கப்படும் சிராத்தங்கள் யாவை? சிராத்தங்களில் என்ன வகை அரிசி தவிர்க்கப்பட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, சிராத்தம் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது, அறிமுகம் செய்த காலம், அந்தச் சடங்கின் சாரம் {வகை}, அதைக் கருதிய முனிவர் யார் என்பனவற்றைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! குரு குலத்தவனே, சுயம்புவான பிரம்மனில் இருந்து அத்ரி உண்டானார். அத்ரியின் குலத்தில் தத்தாத்ரேயர் என்ற பெயரில் ஒரு முனிவர் பிறந்தார்.(4) தத்தாத்ரேயர், தவத்தையே செல்வமாகக் கொண்டவரும், நிமி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார். நிமி, பெரும் மேனியழகைக் கொண்ட ஸ்ரீமான் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றார்.(5) முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கழிந்ததும், கடுந்தவங்களைச் செய்தவரான ஸ்ரீமான் காலத்தின் ஆளுகைக்கு வீழ்ந்து, இவ்வுலகை விட்டுச் சென்றார்.(6) அவரது தந்தையான நிமி, சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்கின் படி தூய்மைக்கான கர்மங்களைச் செய்து, தன் மகனின் இழப்பையே தொடர்ந்து நினைத்துக் கொண்டு பெருந்துயரில் நிறைந்திருந்தார்[1].(7)அந்தக் கவலையின் காரணத்தை நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்ம நிமி, பதினான்காம் சந்திர நாளில் {சதுர்த்தசியில்} (உணவு பானம் உள்ளிட்ட) ஏற்புடைய பல்வேறு பொருட்களைத் திரட்டினார். அடுத்தக் காலையில் அவர் படுக்கையில் இருந்து எழுந்தார்.(8) துயரமிக்க இதயத்துடன் உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், ஒரு பொருளில் அஃது {இதயம்} ஈர்க்கப்பட்டிருப்பதிலிருந்து விலகுவதில் வென்றார். அவரது புத்தியானது வேறு காரியங்களில் சுறுசுறுப்பாக இயங்கத் தொங்கியது.(9) அப்போதுதான் அவர் குவிந்த கவனத்துடன் சிராத்தம் செய்யும் கருத்தை அடைந்தார். தவங்களையே செல்வமாகக் கொண்ட அந்தத் தவசியால், கனிகள் மற்றும் கிழங்குகள் உள்ளிட்ட தமது உணவுப் பொருட்கள் அனைத்தும், தமக்கு ஏற்புடைய அனைத்து வகைத் தானியங்களும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டன.(11) புதுநிலவு {அமாவாசை} நாளில் அவர் துதிக்கத்தக்க எண்ணற்ற பிராமணர்களை (தமது ஆசிரமத்திற்கு அழைத்தார்). பெரும் ஞானம் கொண்ட நிமி அவர்களை (குசப் புற்களாலான) இருக்கைகளில் அமரச் செய்து, அவர்களை வலம் வந்து கௌரவித்தார்.(12) தன் வசிப்பிடத்திற்கு அழைத்து வந்த ஏழு பிராமணர்களை அணுகிய அந்தப் பலமிக்க நிமி, உப்பு கலக்காத சியாமாக அரசியாலான {சாமையரிசியாலான} உணவை அவர்களுக்குக் கொடுத்தார்.(13) உணவுண்டு கொண்டிருந்த அந்தப் பிராமணர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் தெற்கு நோக்கிய நுனிகளைக் கொண்ட எண்ணற்ற குசப்புற்கள் {தர்ப்பங்கள்} அவர்களது பாதங்களை நோக்கி வைக்கப்பட்டன.(14) தூய உடல், மனம் மற்றும் குவிந்த கவனத்துடன் கூடிய நிமி, குறிப்பிட்ட வகையில் அந்தப் புனிதப் புற்களை வைத்து, இறந்து போன மகனின் பெயரையும், அவனது குடும்பத்தையும் {கோத்திரத்தையும்} சொல்லி அவனுக்கு அரிசி பிண்டத்தை அளித்தார் {பிண்டப் பிரதானம் செய்தார்}.(15)
முனிவர்களில் முதன்மையான அவர் {நிமி}, இதைச் செய்துவிட்டு, (தம் அறிவுக்கு எட்டிய வரையிலும்) எந்தச் சாத்திரத்திலும் விதிக்கப்படாத செயலைச் செய்துவிட்டோமெனக் கருதி வருத்தத்தால் நிறைந்தார். உண்மையில் இவ்வாறு வருத்தத்தால் நிறைந்த அவர், தாம் செய்ததை நினைக்கத் தொடங்கினார்.(16) “ஐயோ, இதற்கும் முன்பு முனிவர்களால் ஒருபோதும் செய்யப்படாததைச் செய்திருக்கிறேன். (விதிக்கப்படாத ஒரு செயலைச் செய்து வினோதமான சடங்குகளை அறிமுகம் செய்தவன் என்ற வகையில்) பிராமணர்களின் சாபங்களை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்” என்று அவர் நினைத்தார்.(17) அப்போது அவர் தம் குலத்தின் அசல் மூதாதையரை நினைத்தார். அவர் நினைத்த மாத்திரத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அத்ரி அங்கே வந்தார்.(18) இறப்பற்றவரான அத்ரி, மகன் நிமித்தமாகத் துன்பத்தில் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் அவரை {நிமியைக்} கண்டு, ஏற்புடைய ஆலோசனைகளின் மூலம் அவருக்கு ஆறுதல் வழங்கினார்.(19)
அவர் {அத்ரி} அவரிடம் {நிமியிடம்}, “ஓ! நிமியே, உன்னால் செய்யப்பட இந்தச் சடங்கு பித்ருக்களைக் கௌரவிக்கும் ஒரு வேள்வியாகும். ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவனே, அச்சமேதும் உனதாக வேண்டாம். பழங்காலத்தில் பெரும்பாட்டனே {பிரம்மாவே} இதைக் கண்டடைந்தார்.(20) நீ செய்த இந்தச் சடங்கு சுயம்புவாலேயே விதிக்கப்பட்டதாகும். சுயம்புவை {பிரம்மாவைத்} தவிர வேறு எவரால் சிராத்தத்திற்கான இந்தச் சடங்கை விதிக்க இயலும்?(21) ஓ! மகனே, சிராத்தங்கள் குறித்து விதிக்கப்பட்ட அந்தச் சிறந்த விதியை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மகனே, சுயம்புவால் விதிக்கப்பட்டதையே நீயும் பின்பற்றுவாயாக. முதலில் நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவனே, மந்திரங்களின் உதவியுடன் புனித நெருப்பில் முதலில் கரணம் செய்த பிறகு, அடுத்ததாக ஒருவன் நெருப்பின் தேவனுக்கும் {அக்னிக்கும்}, சோமன் வருணன் போன்ற தேவர்களுக்கும் எப்போதும் ஆகுதிகளை ஊற்ற வேண்டும்.(23) அடுத்ததாகப் பித்ருக்களின் துணைவர்களான விஸ்வேதேவர்களுக்கும் சுயம்பு காணிக்கைகளில் {அவிர்ப்பாகத்தில்} ஒரு பகுதியை விதித்தார்.(24)
சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைத் தாங்கும் தேவியான பூமாதேவியும் அப்போது வைஷ்ணவி, காசியபி, வற்றாதவள் {அக்ஷயை} என்ற பெயர்களில் புகழப்பட வேண்டும்.(25) சிராத்தத்திற்கான நீர் இறைக்கப்படும்போது, பெரும்பலம் கொண்டவனான வருணன் புகழப்பட வேண்டும். ஓ! பாவமற்றவனே, அதன் பிறகு அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் மதிப்புடன் இருப்புக்கு அழைக்கப்பட்டு (ஆகுதிகளால்) நிறைவடையச் செய்யப்பட வேண்டும்.(26) பித்ருக்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் தேவர்கள் சுயம்புவாலேயே படைக்கப்பட்டனர். உயர் ஆன்மாவைக் கொண்ட உஷ்மபர்களும் அவராலேயே படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்குகள் {அவிர்ப்பாகங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(27) சிராத்தங்களில் இந்தத் தேவர்கள் அனைவரும் துதிக்கப்படுவதன் மூலம், {துதிப்பவரின்} மூதாதையர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். சுயம்புவால் படைக்கப்பட்டவர்களான மேலே குறிப்பிடப்படும் பித்ருக்கள் எண்ணிக்கையில் எழுவராவர்.(28) அக்னியைத் தங்கள் வாயாகக் கொண்டிருக்கும் விஸ்வேதேவர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இப்போது சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்குகளுக்கு {அவிர்ப்பாகங்களுக்குத்} தகுந்த உயர் ஆன்ம தேவர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(29)
பலன் {ஸஹன்}, திருதி {கிருதி}, விபாப்மன், புண்ணியக்ருத், பாவனன், பார்ஷ்னி {கிராம்யன்}, க்ஷேமன் {க்ஷேம்யன்}, ஸமூஹன், திவ்யஸானு,(30) விவஸ்வத் {விவஸ்வான்}, வீரியவத் {வீர்யவான்}, ஹ்ரீமத் {ஸ்ரீமான்}, கீர்த்திமத் {கீர்த்திமான்}, கிருதன், ஜிதாத்மன், முனிவீர்யன், தீப்தரோமன், பயங்கரன்,(31) அனுகர்மன், பிரதீதன் {பிரீதன்}, பிரதாத்ரி {பிரதாதா}, அம்சுமான், சைலாபன், பரமன், குரோதி, தீரோஷ்ணி, பூபதி,(32) ஸ்ரஜஸ் {ஸ்ரஜன்}, வஜ்ரின் {வஜ்ரீ}, வரி ஆகியோர் நித்திய விஷ்வேதேவர்களாவர். வித்யுத்வர்ச்சஸ், ஸோமவர்ச்சஸ், ஸூர்யஸ்ரீ என்ற பெயர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர்.(33) அவர்களுக்கு மத்தியில் உள்ளவர்களான ஸோமபன், ஸூர்யஸாவித்ரன், தத்தாத்மன், புண்டரீயகன், உஷ்ணீநாபன், நபோதன், விஷ்வாயு, தீப்தி,(34) சமூஹரன், ஸுரேசன், வியோமாரி, சங்கரன், பவன், ஈசன், கர்த்திரி {கர்த்தா}, கிருதி, தக்ஷன், புவனன், திவ்யகர்மக்ருத்,(35) கணிதன், பஞ்சவீர்யன், ஆதித்யன், ரஷ்மிமத் {ரஷ்மிவான்}, ஸப்தக்ருத், ஸோமவர்ச்சஸ், விஷ்வக்ருத், கவி,(36) அனுகோப்திரி {அனுகோப்தா}, சுகோப்திரி {ஸுகோப்தா}, நப்திரி {நப்தா}, ஈஷ்வரன் ஆகிய இவர்கள் அனைவரும் விஸ்வேதேவர்களாவார்கள். நித்தியமானவர்களான அவர்கள், காலத்தில் நேர்வது அனைத்தையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.(37)
கோத்ரவம் {கேழ்வரகு}, புலகம் என்றழைக்கப்படும் தானிய வகைகளைச் சிராத்தத்தில் காணிக்கையளிக்கக்கூடாது. சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பெருங்காயம் சேர்ந்த உணவு வகைகள், கிழங்குகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு {உள்ளி},(38) முருங்கை, மலையாத்தி, {கஞ்சா, பூசணி வகைகள்}, நஞ்சு தடவிய கணைகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சி, பரங்கிக்காய், சுரைக்காய், கரியுப்பு வகைகள் அனைத்தும் காணிக்கையளிக்கப்படக்கூடாது.(39) ஊர்ப்பன்றி இறைச்சி, வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சி, கருஞ்சீரகம், இந்துப்பு வகைகள், சீதபாகியென்னும் கீரை,(40) முளை, இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டி செய்யப்படும் பலகாரங்கள், சிங்காரக் கொட்டை {சிருங்காடகம்} ஆகியவை சிராத்தத்தில் கைவிடப்பட வேண்டியவை ஆகும். சிராத்தங்களில் அளிக்கப்படும் அனைத்துக் காணிக்கைகளிலும் அனைத்து வகை உப்புகளும், நாவற்கனிகளும் கைவிடப்பட வேண்டும்.(41) உமிழப்பட்ட, கண்ணீர் விழுந்த பொருட்கள் யாவும் சிராத்தங்களில் கொடுக்கப்படக்கூடாது[2]. பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில், அல்லது ஹவ்யகவ்யங்களோடு தேவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில் சுதர்சனம் என்றழைக்கப்படும் கீரை தவிர்க்கப்பட வேண்டும்.(42) இவை கலந்த ஹவி பித்ருக்களால் ஏற்கப்படுவதில்லை. சிராத்தம் நடைபெறும் இடங்களில் சண்டாளனும், ஸ்வபசனும் {சக்கிலியனும்} தவிர்க்கப்பட வேண்டும்;(43) மஞ்சள் கலந்த துணிகளை அணிந்திருப்பவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், (வரம்புமீறலுக்காக) விலக்கப்பட்டவர்கள், பிராமணக் கொலைக் குற்றவாளிகள், கலப்பு பிராமணன், விலக்கப்பட்ட மனிதனின் உறவினர் ஆகியோரும் தவிர்க்கப்பட வேண்டும். சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருந்து ஞானம் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் விலக்கப்பட வேண்டும்” என்றார் {அத்ரி}.(44)பழங்காலத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான அத்ரி, தம் குலத்தைச் சேர்ந்த முனிவர் நிமியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு சொர்க்கத்திலுள்ள பெரும்பாட்டனின் சபைக்குத் திரும்பிச் சென்றார்” என்றார் பீஷ்மர்.(45)
செரிமானத் துணைவன் அக்னி! – அநுசாஸனபர்வம் பகுதி – 92-சிராத்தம் செய்த முனிவர்கள்; செரிமானம் அடையாத தேவர்களும், பித்ருக்களும்; துணை செய்த அக்நி; ஹோமத்தோடு சிராத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மேற்குறிப்பிட்ட வகையில் நிமி செயல்பட்டபிறகு, விதிகளில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி (சிராத்தம் என்றழைக்கப்படும்) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலான வேள்வியைப் பெருமுனிவர்கள் அனைவரும் செய்யத் தொடங்கினர்.(1) கடமைகள் அனைத்தையும் செய்வதில் உறுதியாகவுள்ள முனிவர்கள் சிராத்தங்களைச் செய்து, புனித நீர் காணிக்கைகளை (பித்ருக்களுக்குக்) கவனமாக அளிக்கத் தொடங்கினர்.(2) எனினும், அனைத்து வகை {வர்ண} மனிதர்களாலும் (பித்ருக்களுக்கு) அளிக்கப்படும் காணிக்கைகளின் விளைவாக, அவ்வுணவைப் பித்ருக்கள் செரிக்கத் தொடங்கினர்.(3) விரைவில் அவர்களும், தேவர்களும் செரியாமையால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், அனைத்து மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிய உணவுக் குவியல்களால் பீடிக்கப்பட்ட அவர்கள் {பித்ருக்களும், தேவர்களும்} சோமனிடம் சென்றனர்.(4)
சோமனை அணுகிய அவர்கள், “ஐயோ, சிராத்தங்களில் எங்களுக்கு அளிக்கப்படும் உணவின் விளைவால் உண்டான எங்கள் துன்பம் பெரிதாக இருக்கிறது. எங்கள் சுகத்திற்குத் தேவையானதை நீ விதிப்பாயாக” என்றனர்.(5)
அவர்களிடம் சோமன், “தேவர்களே, சுகமடைய விரும்புபவர்களே, நீங்கள் சுயம்புவின் {பிரம்மனின்} வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அவர் உங்களுக்கான நன்மையைச் செய்வார்” என்று பதிலளித்தான்.(6)
ஓ! பாரதா, சோமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும் மேரு மலைகளின் சிகரத்தில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனிடம் சென்றனர்.(7)
தேவர்கள், “ஓ! சிறப்புமிக்கவரே, வேள்விகளிலும், சிராத்தங்களிலும் எங்களுக்கு அளிக்கப்படும் உணவால் நாங்கள் பெரிதும் பீடிக்கப்படுகிறோம். ஓ! தலைவா, எங்களுக்கு அருள்புரிந்து எங்களுக்கான நன்மையைச் செய்வீராக” என்று கேட்டனர்.(8)
அவர்களுடைய சொற்களைக் கேட்ட சுயம்பு {பிரம்மன்} அவர்களிடம் மறுமொழியாக, “இதோ என்னருகில் அக்னி தேவன் அமர்ந்திருக்கிறான். அவனே உங்களுக்கான நன்மையைச் செய்வான்” என்றான்.(9)
அக்னி, “ஐயன்மீர், சிராத்தம் செய்யப்படும்போது, நமக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை நாம் சேர்ந்தே உண்போம். அக்காணிக்கைகளை என்னுடன் சேர்ந்து நீங்கள் உண்டால், அவற்றை எளிதிற் செரிப்பதில் வெல்வீர் என்பதில் ஐயமில்லை” என்றான்.(10)
நெருப்பு தேவனின் இச்சொற்களைக் கேட்ட பித்ருக்களின் இதயம் சுகமடைந்தது. இக்காரணத்தினாலேயே, ஓ! மன்னா, சிராத்தங்களில் காணிக்கை அளிக்கப்படும்போது, முதல் பங்கானது நெருப்பு தேவனுக்கு அளிக்கப்படுகிறது.(11) ஓ! மனிதர்களின் இளவரசே, சிராத்தத்தில் காணிக்கைகளின் முதல் பங்கு நெருப்பு தேவனுக்கு அளிக்கப்பட்டால், மறுபிறப்பாள வகையில் பிறந்த ராட்சசர்களால் அத்தகைய சிராத்தத்திற்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது[1].(12) சிராத்தத்தில் நெருப்பு தேவனைக் கண்டதும் ராட்சசர்கள் அதனைவிட்டுத் தப்பி ஓடுவார்கள். சிராத்த சடங்கென்பது, முதலில் பிண்டத்தை (இறந்துபோன) தந்தைக்கு அளிப்பதாகும். அடுத்ததாக மற்றொன்று பாட்டனுக்கு அளிக்கப்பட வேண்டும்.(13) அடுத்ததாக ஒன்று பூட்டனுக்கு {பெரும்பாட்டனுக்கு} வழங்கப்பட வேண்டும். இதுவே சிராத்த விதியாகும். ஒவ்வொரு பிண்டம் கொடுக்கப்படும் போதும், அந்தக் கொடையாளி குவிந்த கவனத்துடன் சாவித்திரி மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(14) இந்த மந்திரமானது பித்ருக்களுக்குப் பிடித்தவனான சோமனிடமும் சொல்லப்பட வேண்டும். பருவகாலம் தொடங்கிய ஒரு பெண், அல்லது காதறுந்த ஒருவன் ஆகியோர் சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருக்க அனுமதிக்கப்படக்கூடாது. அதேபோல, சிராத்தம் செய்யும் மனிதனின் கோத்திரத்தைத் தவிர வேறு கோத்திரப்பெண்ணையும் அங்கே கொண்டுவரக்கூடாது[2].(15)ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஒருவன் தன் பித்ருக்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி அவர்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிக்க வேண்டும். உண்மையில், வழியில் ஓர் ஆறு வரும்போது ஒருவன் தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து அவர்களை நிறைவடைச் செய்ய வேண்டும்.(16) முதலில் தன் சொந்த குலத்தைச் சேர்ந்த மூதாதையருக்கு நீர்க்காணிக்கைகளை அளித்துவிட்டு, அதன் பிறகே (இறந்து போனவர்களான) தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அத்தகைய காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(17) ஒருவன் ஓர் ஓடையைப் பலவண்ணங்களிலான இரு எருதுகள் பூட்டப்பட்ட தேரில் கடக்கும்போதோ, ஓர் ஓடையைப் படகுகளில் கடக்கும் போதோ அவனுடைய பித்ருக்கள் நீர்க்காணிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள்.(18) இதையறிந்தவர்கள் எப்போதும் பித்ருக்களுக்குக் குவிந்த கவனத்துடன் நீர்க்காணிக்கைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் அமாவாசை நாளில் ஒருவன் இறந்து போன தன் மூதாதையருக்குக் காணிக்கை அளிக்க வேண்டும்.(19)
பித்ருக்களிடம் அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் வளர்ச்சி, நீடித்த வாழ்வு, சக்தி, செழிப்பு ஆகியன அனைத்தும் அடையத்தக்கவையாகின்றன. பெரும்பாட்டனான பிரம்மன், புலஸ்தியர், வசிஷ்டர், புலஹர்,(20) அங்கிரஸ், கிரது, பெரும் முனிவரான கசியபர் ஆகிய இவர்கள், ஓ! குரு குலத்தின் இளவரசே, யோகப் பேராசன்களாகக் கருதப்படுகிறார்கள்.(21) அவர்கள் பித்ருக்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, இதுவே சிராத்தம் குறித்த உயர்ந்த சடங்காகும். பூமியில் செய்யப்படும் சிராத்தங்களின் மூலம் ஒருவனுடைய குலத்தைச் சேர்ந்த, இறந்து போனவர்கள், துன்பநிலையில் இருந்து விடுபடுகிறார்கள்.(22) ஓ! குரு குல இளவரசே, இவ்வாறே சிராத்த விதிகள் குறித்துச் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் விளக்கிச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(23)
உபவாஸம், விகஸம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93அ-உண்ணாநோன்பின் குறியீடுகள்; தவங்களுக்கும் உண்ணாநோன்புகளுக்கும் இடையிலான வேறுபாடு; ஒருவன் விகஸம் உண்பவனாகும் நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு பிராமணரின் அழைப்பின் பேரில், (உண்ணா) நோன்பை நோற்கும் பிராமணர்கள், (அந்தச் சிராத்தத்தில் அளிக்கப்படும்) ஹவியை உண்டால், தங்கள் நோன்பு தவறிய வரம்புமீறலுக்காக அவர்கள் குற்றம் சுமத்தப்படலாமா? (அல்லது அவர்கள் அத்தகைய அழைப்பைப் பெறும்போது அந்தப் பிராமணரின் அழைப்பை மறுக்க வேண்டுமா?) ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களில் குறிப்பிடப்படாத அத்தகைய நோன்புகளை {அவேதோக்த விரதங்களை} நோற்கும் பிராமணர்கள் தங்கள் விருப்பத் தூண்டுதலின் பேரில் உண்ணலாம். எனினும், வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்கும் பிராமணர்களைப் பொறுத்தவரை, ஓ! யுதிஷ்டிரா, சிராத்தம் செய்பவனின் வேண்டுகோளுக்கு இணங்க சிராத்த ஹவியை உண்பதன் மூலம் அவர்கள் தங்கள் நோன்பைக் கெடுத்த குற்றம்புரிந்தவராகக் கருதப்படுவார்கள்” என்றார்.(2)
யுதிஷ்டிரன், “சில மனிதர்கள் உண்ணா நோன்பை {உபவாஸத்தை} தவம் என்கின்றனர். உண்மையில் தவமானது உண்ணா நோன்புடன் அடையாளங்காணத் தக்கதா? இல்லையா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பீஷ்மர், “ஒரு மாத காலமோ, அரை மாத {ஒரு பக்ஷ} காலமோ தொடர்ந்து உண்ணா நோன்பிருப்பதைத் தவம் என்றே மக்கள் கருதுகிறார்கள். எனினும், தன் உடலைத் துன்புறுத்திக் கொள்பவன் தவசியாகவோ, கடமைகளை அறிந்தவனாகவோ கருதத்தக்கவனல்ல என்பதே உண்மை[1].(4) எனினும், துறவானது தவங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு பிராமணன் எப்போதும் உணவைத் தவிர்ப்பவனாகவும், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்பவனாகவும் இருக்க வேண்டும்[2].(5) ஒரு பிராமணன் வாக்கையும் {பேச்சையும்} தவிர்த்து எப்போதும் தன்மறுப்பைப் பயின்று வேதமுரைக்க வேண்டும். அந்தப் பிராமணன், அறமீட்டும் விருப்பத்தால், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளும், உறவினர்களும் சூழ இருக்க வேண்டும். அவன் உறங்கக்கூடாது {எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கக்கூடாது}.(6) அவன் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். அவன் எப்போதும் வேதங்களையும், சாத்திரங்களையும் படிக்க வேண்டும். அவன் எப்போதும் வாய்மை பேசி, தன்மறுப்பைப் பயில வேண்டும்.(7) அவன் விகசம் (தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படைத்த பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். உண்மையில் அவன் தன் வசிப்பிடத்திற்கு வரும் அனைவரையும் விருந்தோம்பலுடன் வரவேற்க வேண்டும். அவன் எப்போதும் அமுதம் (விருந்தினர், பணியாட்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உண்ட பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். அவன் சடங்குகள் அனைத்தையும் முறையாக நோற்று, வேள்விகளைச் செய்ய வேண்டும்” என்றார்.(8)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எப்போதும் உண்ணா நோன்புகளை நோற்பவனாகக் கருதப்படுவது எவ்வாறு? அவன் நோன்புகள் நோற்பவனாவது எவ்வாறு? ஓ! மன்னா, அவன் விகசத்தை உண்பவனாவது எவ்வாறு? எதைச் செய்வதன் மூலம் அவன் விருந்தினர்களுக்குப் பிடித்தமானவன் ஆகிறான்” என்று கேட்டான்.(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “காலையிலும், மாலையிலும் குறிப்பிடப்படும் நேரங்களில் மட்டுமே உணவை எடுத்துக் கொண்டு இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவையும் தவிர்ப்பவன், உணவைத் தவிர்ப்பவனாக {உண்ணா நோன்பிருப்பவனாகச்} சொல்லப்படுகிறான்.(10) ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியிடம் மட்டும், அவளது பருவகாலங்களில் மட்டும் கலவி புரிபவனாக இருந்தால் அவன் பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான். எப்போதும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வாக்கில் {பேச்சில்} வாய்மைநிறைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(11) {வேள்வியில்லாமல்} ஒன்றுமில்லாமல் கொல்லப்படும் விலங்குகளில் இருந்து கிட்டும் இறைச்சிகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் இறைச்சியைத் தவிர்ப்பவனாகிறான்[3]. கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பகல் நேரத்தில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடன் இருப்பவனாகக் கருதப்படுகிறான்.(12) விருந்தினர்கள், பணியாட்களின் தேவைகளுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சுவதையே எப்போதும் உண்பவன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(13)பிராமணர்கள் (உணவை) உண்ணும் வரை உண்ணாமல் தவிர்ப்பவன், அத்தகைய தவிர்த்தலின் மூலம் சொர்க்கத்தையே வெல்பவனாகக் கருதப்படுகிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், உறவினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்குப் படைத்த பிறகு எஞ்சுவதை உண்பவன் விகசம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15) அத்தகைய மனிதர்கள், பிரம்மனின் வசிப்பிடத்தில் பேரின்ப உலகங்கள் பலவற்றை அடைகிறார்கள். ஓ! மன்னா, அங்கே அவர்கள் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்கள் ஆகியோருடன் வசிக்கிறார்கள்.(16) உண்மையில், அவர்கள் தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் துணையுடனும், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் சூழவும் திளைத்து அனைத்து வகைகளிலும் அந்த உலகங்களில் இன்புற்றிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய உயர்ந்த கதியாகிறது” என்றார் {பீஷ்மர்}.(17)
தானம் – தக்கார் தகவிலார்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93ஆ-கொடைபெறத் தகுந்தவர், தகாதவர் யார் என்பதைக் குறித்து விருஷாதர்ப்பிக்கும் சப்தரிஷிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பிராமணர்களுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை மக்கள் கொடுப்பது காணப்படுகிறது. எனினும், ஓ! பாட்டா, கொடையாளிக்கும், கொடைபெறுபவருக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?” என்று கேட்டான்.(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணன் நீதிமானிடம் இருந்தும், நியாயமற்றவனிடம் இருந்தும் கொடைகளைப் பெறுகிறான். கொடையாளி அறவோனாக இருந்தால் அதைப் பெறுபவன் சிறு களங்கத்தையே {பாவத்தையே} ஈட்டுவான். மறுபுறம் கொடையாளி அறமற்றவனாக {அதர்மியாக} இருந்தால் அதைப் பெறுபவன் நரகத்தில் மூழ்குவான்.(19) இது தொடர்பாக, ஓ! பாரதா, விருஷாதர்ப்பிக்கும், முனியெழுவருக்கும் {சப்தரிஷிகளுக்கும்} இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(20)
கசியபர், அத்ரி, வசிஷ்டர், பரத்வாஜர், கோதமர் {கௌதமர்}, விஷ்வாமித்திரர், ஜமதக்னி, கற்புக்கரசியான (வசிஷ்டரின் மனைவி) அருந்ததி ஆகியோர் அனைவருக்கும் பொதுவாகக் கண்டை என்ற பெயரில் பெண் பணியாள் ஒருத்தி இருந்தாள். பசுஸகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன் அளவது கணவனானான்.(21,22) கசியபரும், பிறரும், பழங்காலத்தில் தியான யோகத்தின் துணை கொண்டு பிரம்மத்தை அடைய விரும்பி கடுந்தவங்களைச் செய்தபடியே உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தனர்.(23) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அந்தக் காலத்தில் கடும் பஞ்சம் தோன்றியது. உலகம் முழுவதும் உள்ள உயிரினங்கள் பசியால் பீடிக்கப்பட்டு மிகவும் பலவீனமடைந்தன.(24) முன்பொரு காலத்தில் {அந்தப் பஞ்ச காலத்தில்} சிபியின் மகனால் {விருஷாதர்ப்பியால்} செய்யப்பட்ட வேள்வி ஒன்றில், அவன் தன் மகனையே {அநிலனை} வேள்விக் கொடையாக ரித்விக்குகளுக்கு அளித்தான்.(25) நீண்ட வாழ்நாளைப் பெறாத அவன் அக்காலத்தில் பசியால் இறந்தான். ஏற்கனவே சொல்லப்பட்டவர்களும், பசியால் பீடிக்கப்பட்டவர்களுமான அம்முனிவர்கள், இறந்து போன அந்த இளவரசனை {அநிலனை} அணுகி, அவனைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர்.(26) பசிக்கொடுமையால் தூண்டப்பட்ட அவர்கள், எவனுடைய வேள்வியைச் செய்து கொடுத்தார்களோ அவனுடைய மகனின் உடலையே ஒரு பாத்திரத்தில் இட்டுச் சமைக்கத் தொடங்கினர்.(27) மானுடலோகத்தில் {மனிதர்களின் உலகத்தில்} இருந்த உணவனைத்து மறைந்து போகவே, தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அந்தத் தவசிகள், தங்களைத் தாங்கிக் கொள்வதற்காக அத்தகைய துன்பகரமான மாற்றத்தை அடைந்தனர்.(28) அவர்கள் இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திரிந்து கொண்டிருந்த விருஷாதர்ப்பனின் மகனான மன்னன் சைப்யன், அந்த முனிவர்களிடம் வந்தான். உண்மையில் அவன், பசிக் கொடுமையால் தூண்டப்பட்டுச் சடலத்தைச் சமைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களைத் தன் வழியில் சந்தித்தான்.(29)
விருஷாதர்ப்பனின் மகன் {சைப்யன்}, “(என்னிடமிருந்து) நீங்கள் பெறும் கொடை உங்கள் அனைவரையும் உடனே விடுவிக்கும். எனவே, உங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்ட ஒரு கொடையே ஏற்பீராக. தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, என்னிடம் உள்ள செல்வத்தைச் சொல்கிறேன் கேட்பீராக.(30) எந்தப் பிராமணர் என்னிடம் (கொடைகளை) வேண்டுகிறாரோ அவரே எப்போதும் எனது அன்புக்குரியவர். உண்மையில், நான் உங்களுக்கு ஆயிரம் கோவேறு கழுதைகளைக் கொடுக்கிறேன். வெள்ளை மயிர் கொண்டவையும், வேகத்தில் முதன்மையானவையும், ஒவ்வொரு காளையைத் தன்னுடன் கொண்டவையும், நல்ல முறையில் கன்றீன்றவையும், பால் தருபவையுமான ஆயிரம் பசுக்களையும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறேன்.(31) வெண்ணிறம் கொண்டவையும், சிறந்த இனத்தில் பிறந்தவையும், கனமான சுமைகளை இழுக்க வல்லவையுமான ஆயிரம் காளைகளையும் உங்களுக்குத் தருகிறேன். நல்ல இயல்பைக் கொண்டவையும், தங்கள் வகையில் முதன்மையானவையும், கொழுத்தவையும், ஒவ்வொன்றும் முதல் கன்றை ஈன்றவையும், வயிற்றில் இரண்டாம் கன்றைக் கொண்டவையுமான பெரும் எண்ணிக்கையிலான பசுக்களையும் {தலையீற்றுப் பசுக்களையும்} கொடுக்கிறேன்[4].(32) முதன்மையான கிராமங்கள், தானியங்கள், பண்டங்கள், மிக அரிதானவையும், விலைமதிப்புமிக்கவையுமான ரத்தினங்கள் ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு வேறு என்ன கொடுக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்லுங்கள். உண்ணத்தகாத இவ்வுணவை உண்ண முயலாதீர். உங்கள் உடல்களைத் தாங்கிக் கொள்ள உங்களுக்கு என்ன தர வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(33)
முனிவர்கள், “ஓ! மன்னா, ஓர் ஏகாதிபதியிடம் இருந்து கொடையேற்பது முதலில் இனிமையாகத் தான் தெரியும், ஆனால் முடிவில் அது நஞ்சாக இருக்கும். ஓ! மன்னா, இதை நன்கறிந்தும், நீ ஏன் இந்தக் காணிக்கைகளால் எங்களுக்கு ஆசை காட்டுகிறாய்?[5](34) ஒரு பிராமணனின் உடலானது தேவர்களின் களமாகும் {வயலாகும்}. தவத்தின் மூலம் அது தூய்மையடைகிறது. மேலும் பிராமணனை நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் தேவர்களையே நிறைவடையச் செய்கிறான்.(35) ஒரு மன்னன் தனக்குக் கொடுக்கும் கொடைகளை ஒரு பிராமணன் ஏற்றுக் கொண்டால் அத்தகை ஏற்பின் மூலம் அவன் அந்த நாளின் தவத்தால் அவன் அடைய வேண்டிய பலனை இழக்கிறான். உண்மையில், இவ்வாறு ஏற்றுக் கொள்வது ஒரு காட்டையே எரிக்கும் சுடர்மிக்கக் காட்டுத்தீயைப் போலவே பலன்களை எரித்துவிடுகிறது.(36) ஓ! மன்னா, உன்னிடம் வேண்டுவோருக்குக் கொடையளிப்பதன் விளைவால் கிட்டும் மகிழ்ச்சி உனதாகட்டும்” என்ற சொற்களைச் சொல்லிவிட்டு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வேறு வழியில் சென்றுவிட்டனர்.(37)அந்த உயர் ஆன்மாக்கள் சமைக்க நினைத்த இறைச்சி சமைக்கப்படாமலேயே எஞ்சியது. உண்மையில் அந்த இறைச்சியைக் {இளவரசன் அநிலனைக்} கைவிட்டுச் சென்ற அவர்கள், உணவு தேடி காடுகளுக்குள் நுழைந்தனர்.(38) அதன் பிறகு, மன்னனின் அமைச்சர்கள், தங்கள் தலைவனால் தூண்டப்பட்டுக் காடுகளுக்குள் நுழைந்து அத்திக்கனிகளைப் பறித்து அவற்றை அந்த முனிவர்களுக்குக் கொடுக்க முயற்சித்தனர்.(39) மன்னனின் அதிகாரிகள் அவற்றில் சில அத்திகளைத் தங்கத்தால் நிரப்பி, அவற்றைப் பிறவற்றோடு கலந்து அந்தத் தவசிகளை ஈர்த்து, அவர்களை ஏற்கச்செய்ய முயன்றனர்.(40)
அந்த அத்திக்கனிகளில் சிலவற்றை எடுத்த அத்ரி, அவை கனமாக இருப்பதைக் கண்டு அவற்றை ஏற்க மறுத்தான். அவர் {அத்ரி}, “நாங்கள் அறிவற்றவர்கள் அல்ல. நாங்கள் மூடர்களும் அல்ல.(41) இந்த அத்திகளுக்குள் பொன்னிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். எங்களுக்குப் புலன்களிருக்கின்றன. உண்மையில் நாங்கள் உறங்காமல் விழித்திருக்கிறோம். இவ்வுலகில் ஏற்கப்பட்டால் அவை மறுமையில் கசப்பான விளைவுகளை உண்டாக்கும். இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை நாடும் எவனும் ஒருபோதும் இவற்றை ஏற்கக்கூடாது” என்றார்.(42)
வசிஷ்டர், “ஒரு பொன் நாணயத்தை நாங்கள் ஏற்றாலும்கூட, அது (அதனோடு தொடர்புடைய பாவம்) நூறாகவோ, ஆயிரமாகவோ கணக்கிடப்படும். எனவே, நாங்கள் பல நாணயங்களை ஏற்றால் நிச்சயம் மறுமையில் நாங்கள் மகிழ்ச்சியற்ற நிலையையே உறுதியாக அடைவோம்” என்றார்.(43)
கசியபர், “பூமியில் உள்ள நெல் மற்றும் யவம் யாவும், உலகில் தோன்றும் பொன், விலங்குகள் மற்றும் பெண்கள் யாவும், ஒரு தனி மனிதனின் ஆசையை நிறைவடையச் செய்ய இயலாதவையாகும். எனவே, ஞானம் கொண்ட ஒருவன் பேராசையைக் கைவிட்டு அமைதியைப் பின்பற்ற {ஒழிவடைய} வேண்டும்” என்றார்.(44)
பரத்வாஜர், “ருருவின் கொம்புகள் முதலில் தோன்றிய பிறகு, அந்த விலங்கோடு சேர்ந்து தானும் வளர்கிறது. மனிதனின் பேராசையும் அதுபோன்றதுதான். அதற்கு ஓர் அளவில்லை” என்றார்.(45)
கோதமர் {கௌதமர்}, “உலகிலுள்ள பொருட்கள் யாவும் ஒரு மனிதனை நிறைவடையச் செய்யவல்லவையல்ல. மனிதன் (ஆறுகளின் நீர் அனைத்தினாலும் நிறைவடையாத கடலைப் போலவே) நிறைவடையாதவன் என்பதால் அவன் பெருங்கடைப் போன்றவனாவான்” என்றார்.(46)
விஷ்வாமித்திரர், “ஒருவன் பேணிவளர்த்த ஆசை நிறைவடையும்போது, உடனே மற்றொன்று {மற்றொரு ஆசை} முளைத்து நிறைவைத் தேடி அவனைக் கணையாகத் துளைக்கிறது” என்றார்.(47)
ஜமதக்னி, “கொடையேற்காமையே அடித்தளமாக இருந்து தவங்களைத் தாங்குகிறது. எனினும், ஏற்பது செல்வத்தை (தவத்தின் பலன்களை) அழிக்கிறது” என்றார்.(48)
அருந்ததி, “உலகின் பொருட்கள் (வேள்விகள் மற்றும் கொடைகளின் மூலம்) அறமீட்டச் செலவு செய்யும் நோக்கில் சேமிக்கப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள். எனினும், உலகச் செல்வத்தைக் காட்டிலும் அறமீட்டுவதே சிறந்ததென நான் கருதுகிறேன்” என்றாள்.(49)
கண்டை, “பெருஞ்சக்தி கொண்ட என் தலைவர்களே பெரும்பயங்கரமாகத் தெரியும் இதற்கு இவ்வளவு அஞ்சுகிறார்கள் என்றால் பலவீனமான நான் இன்னும் அதிகம் அஞ்சுகிறேன்” என்றாள்.(50)
பசுஸகன், “அறச்செல்வமே மிக மேன்மையானதாகும். அதைவிட மேன்மையானது வேறேதும் இல்லை. அந்தச் செல்வத்தையே பிராமணர்கள் அறிகிறார்கள். அச்செல்வத்தின் மதிப்பைக் கற்பதற்காக மட்டுமே நான் இவர்களிடம் பணியாளாகப் பணிபுரிகிறேன்” என்றான்.(50)
முனிவர்கள் (அனைவரும் ஒன்றாக), “இந்நிலத்து மக்களின் மன்னன் அளிக்கும் கொடையால் மகிழ்ச்சி அவனுடையதாகட்டும். பொன்னை உட்பொதிந்து இக்கனிகளை எங்களுக்கு அனுப்பியவனின் கொடை வெற்றியடையட்டும்” என்றனர்”[6].(52)பீஷ்மர் தொடர்ந்தார், “உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட அம்முனிவர்கள் இச்சொற்களைச் சொல்லிவிட்டு பொன்னுள்ள அத்திகளைக் கைவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(53)
அமைச்சர்கள், “ஓ! மன்னா, அம்முனிவர்கள், அத்திகளுக்குள் பொன் இருப்பதை அறிந்து கொண்டு சென்று விட்டனர். இதை நீ அறிவாயாக” என்றனர்”.(54)
பீஷ்மர் தொடர்ந்தார், “அமைச்சர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட விருஷாதர்ப்பி, அந்த முனிவர்கள் அனைவரின் மீதும் கோபத்தால் நிறைந்தான். உண்மையில் அந்த ஏகாதிபதி அவர்களைப் பழிவாங்க விரும்பி தன் வீட்டிற்குள் சென்றான்.(55) கடுந்தவங்களை நோற்ற அவன், மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொரு முறையும் நெய்யாலான ஆகுதிகளைப் புனித நெருப்பில் {ஆகவனீயமெனும் அக்கினியில்} ஊற்றினான்.(56) அந்த ஓதலின் விளைவால் அனைவரையும் அச்சுறுத்தவல்ல வடிவம் ஒன்று {பேயொன்று} அந்நெருப்பில் இருந்து எழுந்தது. விருஷாதர்ப்பி அவளுக்கு யாதுதானி என்ற பெயரைச் சூட்டினான்.(57) மன்னனின் மந்திர ஓதலில் இருந்து வந்ததும், இறுதி இரவை {காளராத்திரியைப்} போன்று பயங்கரமானதுமான அந்த வடிவம் {அந்தப் பேய்}, அந்த ஏகாதிபதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் தோன்றியது. மன்னன் விருஷாதர்ப்பியிடம் அவள், “நான் நிறைவேற்ற வேண்டியதென்ன?” என்று கேட்டாள்.(58)
விருஷாதர்ப்பி, “செல், முனியெழுவரையும், அருந்ததியையும், பெண்பணியாளின் கணவனையும், பெண்பணியாளையும் தொடர்ந்து சென்று அவர்களுடைய பெயர்களின் பொருளைப் புரிந்து கொள்வாயாக.(59) அவர்களின் பெயர்களை உறுதி செய்து கொண்ட பிறகு, அவர்கள் அனைவரையும் கொல்வாயாக[7]. அவர்களைக் கொன்ற பிறகு, நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக” என்றான்”.(60)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தனக்குரிய வடிவத்தில், யாதுதானி என்று பெயரிடப்பட்ட அந்த ராட்சசி “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அந்தப் பெரும் முனிவர்கள் உணவு தேடி திரிந்து கொண்டிருந்த காட்டை நோக்கிச் சென்றாள்”.(61)
பேராசை தவிர்த்தல்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93c-சப்தரிஷிகளுக்கும், யாதுதானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; சப்தரிஷிகள் தங்கள் ஆசையை ஒழித்து சொர்க்கம் சென்றது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்….
{பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “உண்மையில், ஓ! மன்னா, அத்ரியைத் தங்களுக்கு மத்தியில் கொண்ட அம்முனிவர்கள் கிழங்குகளையும், கனிகளையும் உண்டு அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர்.(62) அப்படி அவர்கள் திரிந்து வரும்போது, அகன்ற தோள்களையும், பருத்த கரங்கள் மற்றும் கால்களையும், ஊட்டமிக்க முகம் மற்றும் வயிற்றைக் கொண்ட ஒரு துறவியை {சுனஸ்ஸகனைக்} கண்டனர். கொழுப்புநிறைந்த அங்கங்களைக் கொண்ட அவர் ஒரு நாயுடன் திரிந்து கொண்டிருந்தார்.(63)
நன்கு வளர்ந்து அழகாக இருந்த அங்கங்களுடன் கூடிய அந்தத் துறவியைக் கண்ட அருந்ததி, முனிவர்களிடம், “உங்களில் எவராலும் இத்தகைய நன்கு பருத்த தன்மையை ஒரு போதும் வெளிக்காட்ட இயலாது[8]” என்றாள்.(64)வசிஷ்டர், “இந்த மனிதரின் புனித நெருப்பு நம்மைப் போன்றதல்ல, ஏனெனில், காலையிலும் மாலையிலும் அவரால் அதில் ஆகுதிகளை ஊற்ற இயலும், நம்மில் எவரும் அதைச் செய்ய இயலாது. இதன் காரணமாகவே அவரும், அவரது நாயும் நன்கு பருக்கிறார்கள்” என்றார்[9].(65)அத்ரி, “இந்த மனிதன் நம்மைப் போலப் பசிக்கொடுமையை அனுபவிக்கவில்லை. இவனது சக்திக்கு நம்மைப் போல எந்தக் குறைவும் ஏற்படவில்லை. பெரும் சிரமத்துடன் அடையப்பட்ட அவனுடைய வேதங்கள் நம்முடையதைப் போலத் தொலைந்து போகவில்லை. எனவே, அவனும் அவனது நாயும் நன்கு பருத்திருக்கிறார்கள்” என்றார்.(66)
விஷ்வாமித்திரர், “இந்த மனிதன் நம்மைப் போலச் சாத்திரங்களில் உள்ள நித்திய கடமைகளை நோற்க இயலாதவனாக இல்லை. நான் சோம்பலானவனாக இருக்கிறேன். நான் பசிக்கொடைமையை அனுபவிக்கிறேன். நான் அடைந்த ஞானத்தைத் தொலைத்துவிட்டேன். இவ்வகையில் இந்த மனிதன் நம்மைப் போன்றவனில்லை. எனவே இவனும், இவனது நாயும் பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்[10].(67)ஜமதக்னி, “நம்மைப் போல, ஆண்டுக்குத் தேவையான தானியங்களையும், விறகுகளையும் சேமிக்க வேண்டிய எண்ணம் இந்த மனிதனுக்கு இல்லை. எனவே, இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்.(68)
கசியபர், “நம்மைப் போல, வீட்டுக்கு வீடு சென்று “கொடுப்பீராக, கொடுப்பீராக” என்று சொல்லி பிச்சையெடுப்பவர்களும், குருதியுடன் கூடியவர்களுமான நான்கு சகோதரர்கள் இம்மனிதனுக்கு இல்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாகக் காண்கிறேன்” என்றார்.(69)
பரத்வாஜர், “நம்மைப் போல இந்த மனிதன் தன் மனைவியை நிந்தித்துச் சபித்தற்காக வருந்த வேண்டியதில்லை. அவன் இவ்வளவு தீமையாகவும், உணர்வற்றவனாகவும் செய்படவில்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாகக் காண்கிறேன்” என்றார்[11].(70)கோதமர் {கௌதமர்}, “இந்த மனிதன் நம்மைப் போலக் குசப் புற்களாலான மூன்றே துண்டுகளாலான மறைப்பையும், மூன்று வருடம் பழைமையான ஒரே ஒரு ரங்கு தோலையும் {உடுத்திக்} கொண்டிருக்கவில்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்”[12].(71)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “திரிந்து கொண்டிருந்தவரான அத்துறவி, இந்தப் பெரும் முனிவர்களைக் கண்டு, அவர்களை அணுகி, வழக்கப்படியே அவர்கள் அனைவரின் கரங்களையும் தொட்டு வணங்கினார்.(72) அப்போது அந்தக் காட்டில் வாழ்வாதாரங்களை அடைவதற்கான சிரமத்தையும், அதன் விளைவாகத் தாங்கிக் கொள்ள வேண்டிய பசிக் கொடுமையையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிவிட்டு அனைவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.(73) உண்மையில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான கனிகளைப் பறித்தல் மற்றும் கிழங்குகளைத் தோண்டி எடுத்தல் போன்ற ஒரு பொதுக் காரியத்துக்காகவே அவர்கள் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர்.(74) ஒருநாள், அவர்கள் திரிந்து கொண்டிருந்தபோது, தாமரைகள் நிறைந்த ஓர் அழகிய தடாகத்தைக் கண்டனர். அதன் கரைகள் ஒன்றுக்கொன்று அருகில் அடர்த்தியாக நின்ற மரங்களால் மறைக்கப்பட்டிருந்தன. அத்தடாகத்தின் நீர் தூய்மையானதாகவும், தெளிவானதாகவும் இருந்தது.(75) உண்மையில், அத்தடாகத்தை அலங்கரித்திருந்த தாமரைகள் அனைத்தும் காலைச் சூரியனின் நிறத்தைக் கொண்டிருந்தன. நீரில் மிதந்த இலைகள் வைடூரிய நிறத்தில் இருந்தன.(76) பல்வேறு வகை நீர்க்கோழிகள் அதன் பரப்பில் விளையாடிக் கொண்டிருந்தன. அதனிடம் செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே இருந்தது. கரைகள் சேறாக இல்லை, நீரை அடைவதும் எளிதாக இருந்தது.(77)
பயங்கர முகத்தோற்றம் கொண்டவளும், மந்திரங்களில் இருந்து உண்டானவளும், விருஷாதர்ப்பியால் தூண்டப்பட்டவளுமான ராட்சசி யாதுதானி அத்தடாகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தாள்.(78) பசுஸகனின் துணையுடன் கூடிய அந்த முதன்மையான முனிவர்கள், சில தாமரைத் தண்டுகளை {தாமரைக் கிழங்குகளைத்} திரட்டும் நோக்கத்தில், யாதுதானியால் காக்கப்பட்ட அத்தடாகத்தை நோக்கிச் சென்றனர்[13].(79)தடாகத்தின் கரையில் நிற்கும் பயங்கரத் தன்மை கொண்ட யாதுதானியைக் கண்ட அந்தப் பெரும் முனிவர்கள், அவளிடம்,(80) “இந்தத் தனிமையான காட்டில் தனியாக நிற்கும் நீ யார்? யாருக்காக நீ இங்கே காத்திருக்கிறாய்? உண்மையில் உன் நோக்கம் என்ன? தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இத்தடாகத்தின் கரையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.(81)
யாதுதானி, “நான் யார் என்பது ஒரு பொருட்டில்லை. (என் பெயர், குலம் மற்றும் நோக்கம் குறித்து) நான் கேட்கத்தகாதவளாவேன். தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களே, இத்தடாகத்தைக் கண்காணிக்க நிறுவப்பட்டிருக்கும் காவலாளி நான் என்பதை அறிவீராக” என்றாள்[14].(82)முனிவர்கள், “நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். எங்களிடம் உண்பதற்கு வேறேதும் இல்லை. உன் அனுமதியுடன் நாங்கள் சில தாமரைத் தண்டுகளைத் திரட்டிக் கொள்கிறோம்” என்று கேட்டனர்.(83)
யாதுதானி, “ஓர் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டு நீங்கள் விரும்பிய அளவுக்குத் தாமரைத் தண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பின் ஒருவராக நீங்கள் உங்கள் பெயர்களை என்னிடம் சொல்ல வேண்டும். பிறகு, தாமதமில்லாமல் நீங்கள் தண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்” என்றாள்”.(84)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளுடைய பெயர் யாதுதானி என்பதையும், (அவர்களுடைய பெயர்களின் பொருள்களையும், தங்கள் சக்தியின் எல்லையையும் அறிந்த பிறகு) தங்களைக் கொல்லவே அவள் அங்கே நின்று கொண்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டவரும், பசியால் துடித்துக் கொண்டிருந்தவருமான அத்ரி, அவளிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்.(85)
அத்ரி, “நான் உலகத்தைப் பாவத்தில் இருந்து தூய்மையடையச் செய்கிறேன் என்பதால் நான் அத்ரி என்று அழைக்கப்படுகிறேன். மேலும், நாள்தோறும் வேதங்களை மும்முறை படிப்பதால் நான் என் இரவுகளைப் பகலாக்கியிருக்கிறேன். மேலும், நான் வேதங்கல்லாத இரவேதும் இல்லை. ஓ! அழகிய பெண்ணே, இந்தக் காரணங்களுக்காகவும் நான் அத்ரி என்று அழைக்கப்படுகிறேன்” என்றார்[15].(86)யாதுதானி, “ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, உமது பெயருக்கு நீர் கொடுத்த விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, சென்று தாமரைகள் நிறைந்த இந்தக் குளத்திற்குள் மூழ்குவீராக” என்றாள்.(87)
வசிஷ்டர், “நான் (பலம் முதலியவற்றின் யோக குணங்களைக் கொண்ட) செல்வத்தை உடையவன். மேலும், இல்லற வாழ்வுமுறையை நோற்கும் நான் அத்தகைய வாழ்வு முறையை நோற்கும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறேன். (இத்தகைய) செல்வத்துடன் கூடியவனாகவும், இல்லறத்தானாக வாழ்வதனாலும், இல்லறத்தார் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுவதாலும் நான் வசிஷ்டன் என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[16].(88)யாதுதானி, “உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. அசல் வேர்கள் அடைந்த சொல்வடிவ மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைத் தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்[17].(89)கசியபர், “நான் எப்போதும் என் உடலைப் பாதுகாக்கிறேன், என் தவங்களின் விளைவாகப் பிரகாசத்துடன் இருக்கிறேன். இவ்வாறு என் உடலைப் பாதுகாப்பதினாலும், என் தவங்களின் மூலம் உண்டான பிரகாசத்தினாலும் நான் கசியபன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்” என்றார்[18].(90)யாதுதானி, “ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(91)
பரத்வாஜர், “என் மகன்கள், சீடர்கள், தேவர்கள், பிராமணர்கள் மற்றும் என் மனைவி ஆகியோரை நான் எப்போதும் ஆதரிக்கிறேன். இவர்கள் அனைவரையும் சுகமாக ஆதரிப்பதன் விளைவால் நான் பரத்வாஜன் என்று அழைக்கப்படுகிறேன்” என்றார்[19].(92)யாதுதானி, “வேர்ச்சொல்லானது சொல்வடிவத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதன் விளைவால் உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(93)
கோதமர் {கௌதமர்}, “தற்கட்டுப்பாட்டின் உதவியால் நான் சொர்க்கத்தையும், பூமியையும் வென்றேன். அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களைச் சம பார்வையுடன் பார்ப்பதன் விளைவால் நான் புகையற்ற நெருப்பைப் போன்றவனாக இருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடக்கப்பட முடியாதவனாவேன். மேலும், நான் பிறந்த போது, என் உடற்பிரகாசம் சுற்றிலும் இருந்து இருளை விலக்கியது. இந்தக் காரணங்களினால் நான் கோதமன் என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[20].(94)யாதுதானி, “ஓ! பெருந்தவசியே, உமது பெயருக்கு நீர் என்னிடம் சொன்ன விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(95)
விஷ்வாமித்திரர், “அண்டத்தின் தேவர்கள் என் நண்பர்களாவர். நான் அண்டத்தின் நண்பனுமாவேன். எனவே, ஓ! யாதுதானியே நான் விஷ்வாமித்திரன் என்றறியப்படுகிறேன்” என்றார்[21].(96)யாதுதானி, “வேர்ச்சொல்லானது சொல்வடிவத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதன் விளைவால் உமது பெயருக்கான நீர் சொல்லும் விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(97)
ஜமதக்னி, “நான் தேவர்களின் வேள்வி நெருப்பில் இருந்து உண்டானவன். எனவே, ஓ! அழகிய பண்புகளைக் கொண்டவளே, நான் ஜமதக்னி என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[22].(98)யாதுதானி, “ஓ! பெருந்தவசியே, (வேர்ச்சொல்லின் பல்வேறு சொல்வடிவ மாற்றங்களின் விளைவால்) நீர் சொன்ன உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(99)
அருந்ததி, “நான் எப்போதும் என் கணவரின் அருகில் நின்று, அவரோடு சேர்ந்து பூமியைத் தாங்குகிறேன். நான் எப்போதும் என் கணவரின் இதயத்தை என்னை நோக்கித் திருப்புகிறேன். இக்காரணங்களுக்காக நான் அருந்ததி என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[23].(100)யாதுதானி, “வேர்ச்சொற்களில் உண்டாகியிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உமது பெயருக்கு நீ கொடுத்த விளக்கத்தை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(101)
கண்டை, “கண்ட என்றால், கன்னத்தின் ஒரு பகுதி என்பது பொருளாகும். ஓ! சைப்யனின் வேள்வி நெருப்பில் உதித்தவளே, என்னிடம் அந்தப் பகுதி பிறரைவிட உயர்ந்திருப்பதால் நான் கண்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன்” என்றாள்.(102)
யாதுதானி, “வேர்ச்சொல்லில் ஏற்பட்டிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உன் பெயருக்கு நீ சொன்ன விளக்கம் முற்றிலும் என்னால் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(103)
பசுஸகன், “நான் காணும் விலங்குகள் அனைத்தையும் நான் பாதுகாத்து வளர்க்கிறேன். மேலும் நான் விலங்குகள் அனைத்திற்கும் நண்பனாக இருக்கிறேன். எனவே, ஓ! நெருப்பில் பிறந்தவளே (மன்னன் விருஷாதர்ப்பி உண்டாக்கிய வேள்வி நெருப்பில் பிறந்தவளே), நான் பசுஸகன் என்றழைக்கப்படுகிறேன்” என்றான்[24].(104)யாதுதானி, “வேர்ச்சொல்லில் ஏற்பட்டிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உன் பெயருக்கு நீ சொன்ன விளக்கம் முற்றிலும் என்னால் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(105)
சுனஸ்ஸகன், “இத்தவசிகள் சொன்ன வகையில் என் பெயருக்கான உச்சரிப்பு விளக்கத்தை நான் சொல்ல இயலாதவனாக இருக்கிறேன். ஆனால், ஓ! யாதுதானி, சுனஸ்ஸகஸகாயன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன் என்பதை அறிவாயாக” என்றான்.(106)
யாதுதானி, “நீர் உன் பெயரை ஒரே ஒரு முறை மட்டும் சொன்னீர். நீர் சொன்ன விளக்கம் பிடிபடுவதாக இல்லை. எனவே, ஓ! மறுபிறப்பாளரே, மீண்டும் சொல்வீராக” என்றாள்[25].(107)சுனஸ்ஸகன், “நான் ஒரே ஒரு முறை சொன்னதன் விளைவால் என் பெயர் உனக்குப் பிடிபடவில்லை என்பதால், நான் என் திரிதண்டத்தால் உன்னைத் தாக்கப் போகிறேன். அதனால் தாக்கப்பட்ட நீ தாமதமில்லாமல் சாம்பலாக எரிந்து போவாயாக” என்றான்”.(108)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஒரு பிராமணனால் தரப்படும் தண்டைக்கு ஒப்பான அந்தச் சந்நியாசியின் திரிதண்டத்தால் தலையில் தாக்கப்பட்டவளும், மன்னன் விருஷாதர்ப்பின் மந்திரங்களினால் உண்டானவளுமான அந்த ராட்சசி, பூமியில் விழுந்து சாம்பலாகக் குறைந்து போனாள்.(109)
இவ்வாறு அந்த வலிமைமிக்க ராட்சசியை அழித்த சுனஸ்ஸகன் தன் தண்டத்தைப் பூமியில் ஊன்றி, புல் தரையில் அமர்ந்தான்.(110) அப்போது அந்த முனிவர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குத் தாமரைகளைப் பறித்து, தாமரைத் தண்டுகளையும் எடுத்துக் கொண்டு தடாகத்துக்கு மேலே வந்து மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(111) பெரும் முயற்சி செய்து தாங்கள் சேகரித்த தாமரைக் குவியைத் தரையில் வைத்த அவர்கள், பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை செலுத்துவதற்காக மீண்டும் அதற்குள் மூழ்கினர்.(112) மேலே வந்த அவர்கள், தாங்கள் தாமரைத் தண்டுகளைச் சேகரித்து வைத்திருந்த கரையின் பகுதிக்குச் சென்றனர். அந்த இடத்திற்கு வந்த அந்த முதன்மையான மனிதர்கள் அந்தத் தண்டுகள் எங்கும் காணப்படவில்லை என்பதைக் கண்டனர்.(113)
முனிவர்கள், “பசித்திருந்த எங்களால் உண்ணும் விருப்பத்தில் திரட்டப்பட்ட தாமரைத்தண்டுகளை எந்தப் பாவம் நிறைந்த, கடின இதயம் படைத்த மனிதன் களவாடினான்?” என்றனர்”.(114)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஐயமுற்று, “நாம் ஒவ்வொருவரும் குற்றமற்றவர் என்பது குறித்து உறுதிமொழியேற்போம்” என்றனர்.(115) அப்போது பசியாலும், களைப்பினாலும் பீடிக்கப்பட்டிருந்த அந்தத் தவசிகள் அனைவரும் இந்த முன்மொழிவுக்கு உடன்பட்டு, இந்த உறுதிமொழிகளை {சபதங்களை} ஏற்றனர்.(116)
அத்ரி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், பசுவைக் காலால் உதைத்தவனும், சூரியனைப் பார்த்து சிறுநீர் கழித்தவனும், ஓதல் விலக்கப்பட்ட நாட்களில் வேதம் ஓதுபவனும் ஆகட்டும்” என்றார்.(117)
வசிஷ்டர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், வேதங்கற்பதைத் தவிர்ப்பவனாகவோ, நாய்களை இழுத்துச் செல்பவனாகவோ, துறவு வாழ்வுமுறைக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்படாத துறவியாகத் திரிபவனாகவோ, தன் பாதுகாப்பை நாடி வந்தவனைக் கொல்பவனாகவோ, தன் மகளை விற்று வாழ்பவனாகவோ, கஞ்சனிடமும், இழிந்தோரிடமும் செல்வம் வேண்டுபவனாகவோ ஆகட்டும்” என்றார்.(118,19)
கசியபர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்து இடங்களிலும் அனைத்து வகைச் சொற்களையும் பேசுபவனாகவும், நீதிமன்றத்தில் பொய் சாட்சி கொடுப்பவனாகவும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்பவனாகவும், தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவனாகவும், தகுந்த மனிதர்களுக்குத் தகாத காலங்களில் கொடையளிப்பவனாகவும், பகல்வேளையில் பெண்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவனாகவும் ஆகட்டும்”(120,121)
பரத்வாஜர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், பெண்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களிடம் நீதியற்ற கொடும் நடத்தை கொண்டவனாகட்டும். அவன் தன் மேன்மையான அறிவையும், திறனையும் வெளிப்படுத்துவதன் மூலம் சச்சரவுகளில் பிராமணர்களை அவமதிக்கட்டும். ஆசானை அவமதித்து ரிக்குகளையும், யஜுஸ்களையும் படிக்கட்டும். வைக்கோல் அல்லது செத்தையில் உண்டாக்கப்பட்ட நெருப்பில் அவன் ஆகுதிகளை ஊற்றட்டும்” என்றார்.(122,123)
ஜமதக்னி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், நீரில் மலத்தையும் புழுதியையும் வீசிய குற்றம் புரிந்தவனாகட்டும். அவன் பசுக்களிடம் பகை பாராட்டட்டும். அவன் பருவகாலம் அல்லாமல் பெண்களிடம் பாலினக்கலவிசெய்த குற்றம்புரிந்தவனாகட்டும். அவன் அனைத்து மனிதர்களின் வெறுப்பையும் ஈர்க்கட்டும். அவன் தன் மனைவியின் ஊதியத்தில் இருந்து தன்னைப் பராமரித்துக் கொள்ளட்டும். அவன் நண்பர்கள் எவரையும் கொள்ளாதிருக்கட்டும், அவன் பல பகைவர்களைக் கொண்டிருக்கட்டும். அவன் மற்றொருவனுக்குச் செய்த விருந்தோம்பலுக்குப் பதிலாக அந்த மற்றொருவரின் விருந்தினராகட்டும்” என்றார்[26].(124,125)கோதமர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், தான் கற்ற வேதங்களை விட்ட குற்றம் புரிந்தவனாகட்டும். அவன் மூன்று புனித நெருப்புகளைக் கைவிட்டவனாகட்டும். அவன் சோமத்தை (சோமலதையை / சோமச்சாற்றை) விற்பனை செய்பவனாகட்டும். அனைத்து வகை {வர்ண} மக்களாலும் நீர் இறைக்கப்படும் ஒரேயொரு கிணற்றை மட்டுமே கொண்ட கிராமத்தில் வசிப்பவனும், ஒரு சூத்திரப் பெண்ணை மணம் செய்து கொண்டவனுமான ஒரு பிராமணனுடன் அவன் வாழட்டும்” என்றார்[27].(126,127)விஷ்வாமித்திரர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், தன் வாழ்நாளிலேயே தன் ஆசான்களையும், பெரியோர்களையும், பணியாட்களையும் பிறர் பராமரிக்கும் நிலையைக் காணும் விதியை அடையட்டும். அவன் நற்கதி அடையாதிருக்கட்டும். அவன் பல பிள்ளைகளின் தந்தையாகட்டும்.(128) அவன் எப்போதும் தூய்மையற்றவனாகவும், பிராமணர்களில் இழிந்தவனாகவும் இருக்கட்டும். அவன் தன் உடைமைகளில் செருக்குடையவனாக இருக்கட்டும். அவன் நிலத்தை உழுபவனாக இருக்கட்டும், அவன் வன்மம் நிறைந்தவனாக இருக்கட்டும்.(129) அவன் மழைக்காலங்களில் திரிபவனாக இருக்கட்டும். அவன் ஊதியம் கொள்ளும் பணியாளாகட்டும். அவன் மன்னனின் புரோகிதனாகட்டும். வேள்விக்குத் துணை புரியத் தகாத தூய்மையற்ற மனிதர்களின் வேள்விகளுக்கு அவன் துணை புரியட்டும்” என்றார்.(130)
அருந்ததி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள், தன் மாமியாரால் எப்போதும் அவமதிக்கப்படட்டும். அவள் எப்போதும் தன் கணவரிடம் எரிச்சலடையட்டும். அவள் தன் வீட்டிற்கு வரும் எந்த நல்ல பொருளையும் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் உண்ணட்டும்.(131) அவன் தன் தலைவனின் உறவினர்களை அவமதித்து, தன் கணவனின் வீட்டில் ஒவ்வொரு மாலை வேளையிலும் வறுத்த வாற்கோதுமை மாவை உண்டு வாழட்டும். அவள் (அவளைக் களங்கப்படுத்தும் கறைகளின் விளைவாக) அனுபவிக்கத்தகுந்தவளாகக் கருதப்படட்டும். அவள் ஒரு வீர மகனின் தாயாகட்டும்” என்றாள்[28].(132)கண்டை, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள், எப்போதும் பொய் பேசுபவளாக இருக்கட்டும். அவள் எப்போதும் தன் உறவினர்களுடன் சண்டையிடுபவளாகட்டும். அவள் பணத்தையே கருத்தில் கொண்டு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கட்டும்.(133) தான் சமைத்த உணவை யாருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் தனியாகவே அவள் உண்ணட்டும். அவள் தனது மொத்த வாழ்வையும் அடிமைத்தனத்தில் கழிக்கட்டும். உண்மையில், தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள் குற்றச் சூழ்நிலைகளில் பாலினக்கலவி புரிந்த விளைவால் கருவுற்றவளாகட்டும்[29]” என்றாள்.(134)பசுஸகன், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், அடிமைத் தாய்க்குப் பிறக்கட்டும். அவன் பயனற்ற பிள்ளைகள் பலரைப் பெறட்டும். அவன் ஒருபோதும் தேவர்களை வணங்காதிருக்கட்டும்” என்றான்.(135)
சுனஸ்ஸகன், “தாமரைத் தண்டுகளை அகற்றியவன், சாமங்கள் மற்றும் யஜுஸ்கள் அனைத்தையும் படித்தவனும், கவனமாகப் பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனுமான ஒரு பிராமணனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பலனை அடையட்டும். அவன் அதர்வணங்கள் அனைத்தையும் படித்த பிறகு இறுதி நீராடலைச் செய்யட்டும்” என்றான்.(136)
முனிவர்கள் அனைவரும், “நீ சொன்ன செயல்கள் அனைத்தும் பிராமணர்களால் விரும்பப்படுவது என்பதால் நீ ஏற்றது உறுதிமொழியே {சபதமே} அல்ல. ஓ! சுனஸ்ஸகா, எங்கள் தாமரைத் தண்டுகளை அபகரித்தவன் நீயே என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றனர்.(137)
சுனஸ்ஸகன்,“தாமரைத்தண்டுகள் உங்களால் வைக்கப்பட்டதைக் காணாமல், நானே அவற்றை உண்மையில் களவு செய்தேன் என்பதால் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.(138) நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தத் தண்டுகளை நான் மறைந்துபோகச் செய்தேன். பாவமற்றவர்களே, உங்களைச் சோதிக்கும் விருப்பத்திலேயே அச்செயல் என்னால் செய்யப்பட்டது.(139) நான் உங்களைக் காக்கவே இங்கே வந்தேன். கொல்லப்பட்டுக் கிடக்கும் அந்தப் பெண் யாதுதானி என்றழைக்கப்பட்டவள் ஆவாள். அவள் கடும் இயல்பைக் கொண்டவளாவாள். மன்னன் விருஷாதர்ப்பியின் மந்திரங்களில் உண்டான அவள் உங்கள் அனைவரையும் கொல்லும் விருப்பத்திலேயே இங்கே வந்தாள்.(140) தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, அந்த மன்னனால் அனுப்பப்பட்டு இங்கு வந்த அவள் என்னால் கொல்லப்பட்டாள். இல்லையென்றால், வேள்வித்தீயில் உண்டானவளும், தீயவளுமான அந்தப் பாவம் நிறைந்த உயிரினம் உங்கள் உயிர்களை வாங்கியிருப்பாள்.(141) கல்விமான்களான பிராமணர்களே அவளைக் கொல்லவும், உங்களைக் காக்கவுமே நான் இங்கே வந்தேன். நான் வாசவன் என்பதை அறிவீராக. நீங்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டீர்கள். இதன் விளைவாக நீங்கள் இதயத்தில் எழுந்தவுடனேயே விருப்பம் கனியும் நிலையைத் தரும் நித்திய உலகங்கள் பலவற்றை வென்றீர்கள். மறுபிறப்பாளர்களே, தாமதமில்லாமல் இந்த இடத்தில் இருந்து எழுந்து, உங்களுக்காக ஒதுக்கபட்ட அந்த அருள் உலகங்களுக்குச் செல்வீராக” என்றான்”.(142)
பீஷ்மர் தொடர்ந்தார், “புரந்தரனின் மறுமொழியால் உயர்ந்த நிறைவை அடைந்த அந்தப் பெரும் முனிவர்கள் “அப்படியே ஆகட்டும்” என்றனர். பிறகு அவர்கள் இந்திரனின் துணையுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(143) இவ்வாறே உயர் ஆன்மா கொண்ட அம்மனிதர்கள், பசிக்கொடுமையால் பீடிக்கப்பட்டாலும், அனுபவிக்கத்தகுந்த பல்வேறு பொருட்களைக் கொடுப்பதாக அத்தகைய நேரத்தில் ஆசை காட்டப்பட்டாலும், அந்த ஆசைக்கு வசப்படுவதைத் தவிர்த்தனர். அத்தகை தன் மறுப்பின் விளைவாலேயே அவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர். எனவே ஒருவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னிடத்திலிருந்து பேராசையைக் கைவிட வேண்டும் என்பது தெரிகிறது.(144,145) ஓ! மன்னா, இதுவே உயர்ந்த கடமையாகும். பேராசை கைவிடப்பட வேண்டும். (நீதிமிக்க முனிவர்களின் செயல்களைச் சொல்லும்) இக்கதையை மானுட சபைகளில் உரைக்கும் மனிதன்.(146) செல்வத்தை அடைவதில் வெல்கிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் துன்பகரமான கதியை அடைய வேண்டியதில்லை. பித்ருக்கள், முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும் அவனிடம் நிறைவடைகின்றனர். மேலும் மறுமையில் அவன் புகழ், அறத்தகுதி மற்றும் செல்வத்தைக் கொண்டவனாகிறான்” {என்றார் பீஷ்மர்}.(147)
களவும், சாத்திரமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 94-இந்திரனுடன் தீர்த்தயாத்திரை சென்ற ரிஷிகள்; தாமரை மலர் களவு போனதால் அனைவரும் சபதம் செய்தது; களவு செய்த இந்திரன் ரிஷிகளின் சொற்களை சாத்திரம் என்றது ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புனித நீர்நிலைகளை நோக்கிப் பயணம் செய்யும்போது (ஒருவர் பின் ஒருவராகப் பல முனிவர்கள்) ஏற்ற உறுதிமொழிகளைச் சொல்லும் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அந்தக் களவுச் செயல் இந்திரனால் செய்யப்பட்டது, அரச முனிகள் மற்றும் மறுபிறப்பாள முனிவர்கள் பலரால் உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.(2)
ஒரு காலத்தில் மேற்குப் பிரபாஸத்தை நோக்கி முனிவர்கள் கூட்டமாகச் சேர்ந்து சென்றனர். அங்கே அவர்கள் செய்த ஆலோசனையின் விளைவாக, பூமியின் புனித நீர் நிலைகளை அனைத்துக்கும் அவர்கள் பயணம் செய்வதெனத் தீர்மானித்தார்கள்.(3) ஓ! மன்னா, சக்ரன், அங்கிரஸ், பெருங்கல்வியுடையவரான கவி, அகஸ்தியர், நாரதர், பர்வதர், பிருகு, வசிஷ்டர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்திரர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் அங்கிருந்தனர்.(4) காலவர், அஷ்டகர், பரத்வாஜர், அருந்ததி, வாலகில்யர்கள், சிபி, திலீபன், நஹுஷன், அம்பரீஷன், அரசன் யயாதி, துந்துமாரன், பூரு ஆகியோரும் அங்கிருந்தனர்.(5) இந்த முதன்மையான மனிதர்கள், விருத்திரனைக் கொன்றவனான உயரான்ம சதக்ரதுவை தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, ஒன்றன்பின் ஒன்றாகப் புனித நீர்நிலைகள் அனைத்திற்குச் சென்று, இறுதியாக மாக {மாசி} மாதத்தின் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் உயர்ந்ததும், புனிதமானதுமான கௌசிகியை அடைந்தனர்.(6) புனித நீர்நிலைகள் அனைத்திலும் நீராடியதன் மூலம் தங்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவர்கள் இறுதியாக மிகப் புனிதமான பிரம்மசரஸுக்குச் சென்றனர். நெருப்பைப் போன்ற பெருஞ்சக்தி கொண்ட அம்முனிவர்கள், அத்தடாகத்தில் நீராடி, தாமரைத் தண்டுகளைத் திரட்டவும், உண்ணவும் தொடங்கினர்.(7) அந்தப் பிராமணர்களில் சிலர், தாமரையின் தண்டுகளையும், வேறு சிலர் கருங்குவளையின் {கருநெய்தல்/நீலோத்பல) தண்டுகளையும் பிரித்தெடுத்தனர். விரைவில் அவர்கள் அகஸ்தியரால் பிரித்தெடுக்கப்பட்ட (கரையில் வைக்கப்பட்டிருந்த) தண்டுகள் எவராலோ எடுக்கப்பட்டுவிட்டதைக் கண்டனர்.(8)
முனிவர்களில் முதன்மையான அகஸ்தியர், அவர்கள் அனைவரிடமும், “என்னால் பிரித்தெடுக்கப்பட்டு இங்கே வைக்கப்பட்டிருந்த நல்ல தண்டுகளை எடுத்தவர் யார்? உங்களில் எவரோ ஒருவர்தான் இச்செயலைச் செய்திருக்க வேண்டுமென நான் ஐயுறுகிறேன். அவற்றை எடுத்துக் கொண்டவன் என்னிடம் திருப்பித் தரட்டும். இவ்வாறு என் தண்டுகளைக் கையாடல் செய்வது உங்களுக்குத் தகாது.(9) அற சக்தியைக் காலங்கெடுக்கும் எனக் கேள்விப்படுகிறோம். எனவே, அறம் பீடிக்கப்படுகிறது. மறம் உலகைக் கெடுத்து, முழுமையாக இங்கே தன்னை நிறுவிக்கொள்ளும் முன்னர், நான் சொர்க்கம் செல்வது நல்லது[1].(10) காலம் வரும்போது, கிராமப் புறங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிராமணர்கள் சூத்திரர்கள் கேட்கும் வகையில் வேதங்களை உரக்கச் சொல்லும் காலம் வருவதற்கு முன்னர், கொள்கை நோக்கங்களின் மூலம் மன்னர்கள் அறவிதிகளுக்கு எதிராகச் செயல்படும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது.(11) உயர்ந்த, நடுத்தர, தாழ்ந்த வகைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை மக்கள் கருதாமல் விடும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது. உலகை அறியாமை பீடித்து, அனைத்துப் பொருட்களும் இருளில் மூழ்குவதற்கு முன்னார் நான் சொர்க்கம் செல்வது நல்லது[2].(12) பலமிக்கவர்கள் பலவீனர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை அடிமைகளாக நடத்தும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது. உண்மையில், இவற்றைப் பூமியில் காணும்வரை இருப்பதற்கு நான் துணியேன்” என்றார் {அகஸ்தியர்}.(13)அவர் சொன்னதில் மிகுந்த கவலையடைந்த முனிவர்கள் அந்தப் பெருந்தவசியிடம், “நாங்கள் உமது தண்டுகளைக் களவு செய்யவில்லை. நீங்கள் எங்களிடம் ஐயங்கொள்வது தகாது. ஓ! பெரும் முனிவரே, நாங்கள் மிகப் பயங்கர உறுதிமொழிகளை ஏற்கப் போகிறோம்” என்றனர்.(14) தங்கள் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அற விளைவைத் தாங்க விரும்பி இச்சொற்களைச் சொன்ன முனிவர்களும், அரச வழித்தோன்றல்களான தவசிகளும், ஒருவர் பின் ஒருவராகப் பின்வரும் உறுதிமொழிகளை {சபதங்களை} ஏற்கத் தொடங்கினர்.(15)
பிருகு, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வையப்படும்போது வைபவனும், தாக்கப்படும்போது தாக்குபவனும், (வேள்விகளில் கொல்லப்படும்) விலங்குகளின் முதுகெலும்புடன் இணைந்த இறைச்சியை உண்பவனுமாகட்டும்” என்றார்[3].(16)வசிஷ்டர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வேத கல்வியைப் புறக்கணித்து, நாயை இழுத்துக் கொண்டு ஒரு நகரத்திலோ, ஊரிலோ துறவியாக வாழட்டும்” என்றார்[4].(17)கசியபர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்துப் பொருட்களையும் அனைத்து இடங்களிலும் விற்பனைசெய்து, அடைக்கலப் பொருட்களைக் கையாடல் செய்து, பொய் சாட்சி சொல்பனாகட்டும்” என்றார்.(18)
கௌதமர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்து உயிரினங்களையும் சமபார்வையில் பார்க்காத புத்தியுடன், அனைத்திலும் செருக்கை வெளிப்படுத்திக் கொண்டு, எப்போதும் கோபம் மற்றும் ஆசையின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டவனாகட்டும். அவன் நிலத்தை உழுபவனாகவும், வன்மத்தால் ஈர்க்கப்பட்டவனாகவும் ஆகட்டும்” என்றார்[5].(19)அங்கிரஸ், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், எப்போதும் தூய்மையற்றவனாகட்டும். அவன் (தன் தீச்செயல்களுக்காக) நிந்திக்கத் தகுந்தவனாகட்டும். அவன் நாய்களை இழுத்துச் செல்லட்டும். அவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி பாவம்} செய்த குற்றவாளியாகட்டும். வரம்புமீறல்களைச் செய்த பிறகு பாவக்கழிப்புகளில் அவன் வெறுப்பு கொண்டவனாகட்டும்” என்றார்.(20)
துந்துமாரன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் நண்பர்களிடம் நன்றிமறந்தவனாகட்டும். அவன் ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிறக்கட்டும். அவன் (வீட்டுக்கு வரும்) எந்த நல்ல உணவையும் (பிறருக்குப் பங்களிக்காமல்) தனியாக உண்பவனாகட்டும்” என்றார்[6].(21)திலீபன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரே ஒரு கிணறு உள்ள கிராமத்தில் வசிப்பவனும், ஒரு சூத்திரப் பெண்ணுடன் பாலினக் கலவி கொண்டவனுமான ஒரு பிராமணனுக்காக ஒதுக்கப்படும் புகழ்க்கேடு கொண்ட துன்பகரமான உலகங்களை அடையட்டும்” என்றான்[7].(22)பூரு, “உமது தண்டுகளைக் களவு செய்தவன் மருத்துவத் தொழிலைப் பின்பற்றட்டும். அவன் தன் மனைவியுடைய ஊதியத்தின் மூலம் ஆதரிக்கப்படட்டும். அவன் தன் மாமனாரிடம் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டட்டும்” என்றான்.(23)
சுக்கிரன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்ணடும். அவன் பகற்பொழுதில் பாலினக் கலவி கொள்ளட்டும். அவன் மன்னனின் பணியாளாகட்டும்” என்றார்.(24)
ஜமதக்னி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தடைசெய்யப்பட்ட நாட்களில் அல்லது சந்தர்ப்பங்களில் வேதங்களைப் படிக்கட்டும். தன்னால் செய்யப்படும் சிராத்தங்களில் அவன் நண்பர்களுக்கு உணவூட்டட்டும். அவன் ஒரு சூத்திரனின் சிராத்தத்தில் உண்ணட்டும்” என்றார்.(25)
சிபி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், (நாள்தோறும் செய்யும் வழிபாட்டுக்கென) நெருப்பை நிறுவாமலேயே இறந்து போகட்டும். பிறர் செய்யும் வேள்விகளைத் தடை செய்த குற்றவாளியாகட்டும். தவம் நோற்பவர்களிடம் அவன் சச்சரவு செய்யட்டும்” என்றான்.(26)
யயாதி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் மனைவி பருவகாலத்தில் இல்லாத போதும் அவனே தன் தலையில் சடாமுடி தரித்து நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும்போதும் அவளிடம் பாலினக் கலவியில் ஈடுபட்ட குற்றவாளியாகட்டும். அவன் வேதங்களையும் அலட்சியம் செய்பவனாகட்டும்” என்றான்.(27)
நஹுஷன் {நகுஷன்}, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், துறவு நோன்பை ஏற்ற பிறகு இல்லற வாழ்வுமுறையில் வாழட்டும். ஒரு தனிப்பட்ட நோன்பு அல்லது ஒரு வேள்விக்கான தொடக்கச் சடங்குகளைச் செய்த பிறகு, அவன் (எவ்வகைக் கட்டுப்பாடுகளுமின்றி) விரும்பியவாறு செயல்படுபவனாகட்டும். (எவ்வகை அறிவுத்துறையிலும் கற்க வரும்) சீடர்களுக்கான உரைக்காகப் பணம் சார்ந்த நிறைவை ஏற்பவனாகட்டும்” என்றான்.(28)
அம்பரீஷன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், பெண்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களிடம் நீதியற்ற கொடூர நடத்தை கொண்டவனாகட்டும். அவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி பாவம்} செய்த குற்றவாளியாகட்டும்” என்றான்.(29)
நாரதர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், உடலோடு ஆன்மாவை அடையாளம் {உடலும், ஆன்மாவும் ஒன்றெனக்)காண்பவனாகட்டும். பழிக்கத்தக்க ஆசானிடம் அவன் சாத்திரங்களைப் பயிலட்டும். ஒவ்வொரு படிநிலையிலும் உச்சரிப்பு விதிகளுக்கு எதிரான குற்றம் செய்தபடியே அவன் வேதங்களை ஓதட்டும். அவன் பெரியோர் அனைவரையும் அவமதிக்கட்டும்” என்றார்.(30)
நாபாகன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், எப்போதும் பொய் பேசுபவனாகவும், அறவோரிடம் சச்சரவு செய்பவனாகவும் ஆகட்டும். அவன் தன் மருமகனால் அளிக்கப்படும் பணத்தில் நிறைவடைந்து அதை ஏற்றுத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கட்டும்” என்றான்.(31)
கவி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு பசுவதைத் தன் காலால் தாக்கிய குற்றவாளியாக்கட்டும். அவன் சூரியனைப் பார்த்து சிறுநீர் கழிக்கட்டும். தன்னிடம் உறைவிடம் நாடும் மனிதனை அவன் கைவிடட்டும்” என்றார்.(32)
விஷ்வாமித்திரர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் தலைவனிடம் வஞ்சகமாக நடந்து கொள்ளும் பணியாளாகட்டும். அவன் மன்னனின் புரோகிதனாகட்டும். வேள்விகளில் துணை செய்யத்தகாதவனுக்கு அவன் ரித்விக்காகட்டும்” என்றார்.(33)
பர்வதர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு கிராமத்தின் தலைவனாகட்டும். அவன் கழுதைகளில் பயணங்கள் போகட்டும். அவன் தன் வாழ்வுக்காக நாய்களை இழுத்துச் செல்லட்டும்” என்றார்.(34)
பரத்வாஜர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், கொடூர நடத்தையும், வாய்மையற்ற பேச்சும் கொண்ட ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் செய்த குற்றவாளியாகட்டும்” என்றார்.(35)
அஷ்டகர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஞானமற்றவனும், வினோத மனப்போக்கனும், பாவம் நிறைந்த நடத்தை கொண்டவனும், நீதியற்ற முறையில் பூமியை ஆளும் மனநிலை கொண்ட ஒரு மன்னனாகட்டும்” என்றார்.(36)
காலவர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு பாவம் நிறைந்த மனிதனைவிடப் புகழ்க்கேட்டை அடையட்டும். அவன் தன் உற்றார் உறவினரிடம் பாவச்செயல் புரிபவனாகட்டும். அவன் பிறருக்கு அளித்த கொடைகளை அறிவிப்பவனாகட்டும்” என்றார்.(37)
அருந்ததி, “உமது தண்டுகளைக் களவு செய்தவள், தனது மாமியாரைக் குறித்துக் குறைபேசுபவளாகட்டும். அவள் தன் தலைவனிடம் அருவருப்பு கொள்பவளாகட்டும். அவள் தன் வீட்டிற்கு வரும் எந்த நல்ல உணவையும் தனியாக உண்பவளாகட்டும்” என்றாள்.(38)
வாலகில்யர்கள், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், (தன் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக) ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கட்டும். அவன் தன் கடமைகளை அனைத்தையும் அறிந்தவனாக இருந்தாலும், அனைத்து அத்துமீறல்களையும் செய்த குற்றவாளியாகட்டும்” என்றனர்[8].(39)சுனஸ்ஸகன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், நாள்தோறும் செய்ய வேண்டிய ஹோமத்தை அலட்சியம் செய்து மகிழ்ச்சியாக உறங்கும் பிராமணனாகட்டும். அவன் அறத் துறவியாகி, எக்கட்டுப்பாடையும் நோற்காமல் விரும்பியபடி நடந்து கொள்பவனாகட்டும்” என்றான்.(40)
{பசுஸகனோகு கூடிய} சுரபி, “உமது தண்டுகளைக் களவு செய்தவளுடைய பால், மனித மயிராலான கயிற்றால் கட்டப்பட்ட (பின்னங்) கால்களுடனும், தன்னுடையதல்லாத கன்றுடனும், வெண்கலப் பாத்திரத்தில் கறக்கப்படட்டும்” என்றாள்[9]“.(41)பீஷமர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குரு மன்னா, முனிவர்களும், அரச தவசிகளும் இவ்வாறு பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றதும், ஆயிரங்கண் கொண்ட தேவர்களின் தலைவன், கோபம் நிறைந்தவராக இருக்கும் முனிவர் அகஸ்தியரின் மீது தன் கண்களைச் செலுத்தி மகிழ்ச்சியால் நிறைந்தவனானான்.(42) தாமரைத் தண்டுகள் மறைந்து போனதால் மிகுந்த கோபத்தில் இருந்த அந்த முனிவரிடம் பேசிய மகவத் {மகவான்}, தன் மனத்தில் ஓடியதை இவ்வாறு அறிவித்தான். ஓ! மன்னா, மறுபிறப்பாளர்களும், தெய்வீகமானவர்களும், அரசர்களாகவும் இருந்த அந்தத் தவசிகளுக்கு மத்தியில் இந்திரன் சொன்னதைக் கேட்பாயாக.(43)
சக்ரன் {இந்திரன்}, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், பிரம்மச்சரிய நோன்புகளை முறையாக நோற்றவராகவோ, சாமங்கள் மற்றும் யஜுஸ்களை முறையாகப் படித்தவராகவோ உள்ள ஒரு பிராமணருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கட்டும். அதர்வ வேதங்கற்று நிறைவடைந்ததும் இறுதி நீராடலைச் செய்த பலன் அவனை அடையட்டும்.(44) உமது தண்டுகளைக் களவு செய்தவன் வேதங்கள் அனைத்தையும் கற்ற பலன்களை அடையட்டும். அவன் அனைத்துக் கடமைகளை நோற்பவனாகவும், அறவொழுக்கம் கொண்டவனாகவும் ஆகட்டும். உண்மையில், அவன் பிரம்மலோகத்தை அடையட்டும்” என்றான்.(45)
அகஸ்தியர், “ஓ! பலனைக் கொன்றவனே, சபிப்பதற்குப் பதிலாக நீ வாழ்த்துகிறாய். (என் தண்டுகளை நீயே எடுத்திருக்கிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது). அவற்றை என்னிடம் கொடுப்பாயாக. அதுவே நித்திய கடமையாகும்” என்றார்.(46)
இந்திரன், “ஓ! புனிதமானவரே, பேராசையால் வழிநடத்தப்பட்டு நான் உமது தண்டுகளை அகற்றவில்லை. உண்மையில், நாம் நோற்க வேண்டிய கடமைகளை {தர்மங்களை} இக்கூட்டத்தில் கேட்கும் விருப்பத்தாலேயே நான் அவற்றை அகற்றினேன்.(47) ஸ்ருதிகளில் முதன்மையானவை கடமைகளாகும். கடமைகளே (உலகக் கடலைக் கடப்பதற்கான) நித்திய பாதையாகின்றன. (கடமைகளைப் பொறுத்த வகையில்) நித்தியமானவையும், மாற்றமில்லாதவையும், மாற்றங்கள் அனைத்தையும் கடந்தவையுமான முனிவர்களின் உரையாடல்களை {ரிஷிவாக்கியத்தை} நான் கேட்டேன்[10].(48) ஓ! கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவரே, உமது தண்டுகளான இவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வீராக. ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துக் களங்கங்களில் இருந்தும் விடுபட்டவரே, என்னுடைய இந்த வரம்புமீறலை மன்னிப்பதே {பொறுப்பதே} உமக்குத் தகும்” என்றான்”.(49)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மிகுந்த கோபத்தில் இருந்த தவசி அகஸ்தியர் தன் தண்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் பெரும் உற்சாகத்தை அடைந்தார்.(50) அதன் பிறகு அந்தக் காட்டுவாசிகள் பல்வேறு புனித நீர்நிலைகளுக்குச் சென்றனர். உண்மையில், அந்தப் புனித நீர்நிலைகளுக்குச் சென்ற அவர்கள், எங்கும் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்தனர்.(51) ஒவ்வொரு பர்வ நாளிலும் இந்தக் கதையை மிகுந்த கவனத்துடன் படிக்கும் மனிதன், அறியாமை கொண்ட தீய மகன் ஒருவனை ஒருபோதும் பெறமாட்டான். அவன் ஒருபோதும் கல்வியை இழக்கமாட்டான்.(52) எந்தப் பேரிடரும் அவனைத் தீண்டாது. அதுவும் தவிர, அனைத்து வகைக் கவலைகளில் இருந்து அவன் விடுபடுவான். முதுமையும், தளர்வும் ஒருபோதும் அவனுடையவையாகாது. அனைத்து வகைக் களங்கங்கள் மற்றும் தீமைகளில் இருந்து விடுபட்டு, பலன் கிட்டுபவனான அவன் சொர்க்கத்தை அடைவான்.(53) ஓ! மனிதர்களின் இளவரசே, முனிவர்களால் நோற்கப்படும் இந்தச் சாத்திரத்தைப் படிப்பவன், இன்பம் நிறைந்ததும், நித்தியமானதுமான பிரம்மலோகத்தை நிச்சயம் அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(54)
மழைதருமோ என் மேகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 95-சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஈமச் சடங்குகளில் குடைகள் மற்றும் காலணிகள் கொடையளிக்கும் வழக்கம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது? எந்த நோக்கத்திற்காக அக்கொடைகள் கொடுக்கப்பட்டன? ஈமச் சடங்குகளில் மட்டுமல்லாமல் அவை வேறு அறச்சடங்குகளிலும் கொடுக்கப்படுகின்றன. அறத்தகுதியை அடையும் நோக்கில் அவை பல இடங்களில் கொடுக்கப்படுகின்றன. ஓ! மறுபிறப்பாளரே, நான் இவ்வழக்கத்தின் உண்மையான பொருளை விரிவாக அறிய விரும்புகிறேன்” என்றான்.(1-3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இளவரசே, அறச்சடங்குகளில் குடைகளும், காலணிகளும் கொடுக்கும் வழக்கம் எவ்வாறு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை விரிவாகச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக.(4) ஓ! இளவரசே, இது நிரந்தரமாக நோற்கப்படும் சக்தியை எவாறு அடைந்தது, பலன்தரக்கூடிய {புண்ணியச்} செயலாக எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைக் குறித்து உனக்கு முழுமையாகச் சொல்லப் போகிறேன்.(5)
இது தொடர்பாகக் குறிப்பிடப்படும் ஜமதக்னிக்கும், உயர் ஆன்ம சூரியனுக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! பலமிக்க மன்னா, பழங்காலத்தில் பிருகு குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்க ஜமதக்னி, விற்பயிற்சி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.(6) அவர் இலக்கு பாரத்துக் கொண்டே கணைக்குப் பின் கணையாக ஏவி கொண்டிருந்தார். அவரது மனைவியான ரேணுகை, அவ்வாறு ஏவப்படும் கணைகளை எடுத்துக் கொண்டு சுடர்மிக்க சக்தியுடன் கூடிய அந்தப் பிருகுக் குலக் கொழுந்திடம் அவற்றைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
தமது கணைகளில் விஸ் ஒலிகளாலும், தமது வில்லின் நாணொலியாலும் நிறைவடைந்த அவர், ரேணுகை தம்மிடம் திரும்பத் தரும் கணைகளை மீண்டும் மீண்டும் மீண்டும் ஏவி தமக்குத் தாமே மகிழ்ச்சியடைந்து வந்தார். ஓ! ஏகாதிபதி, ஜேஷ்ட மூலத்தில் சூரியன் இருந்த மாதத்தில் ஒருநாள் நடுப்பகல் மதிய வேளையில்,(7-9) அந்தப் பிராமணர், தமது அம்புகள் அனைத்தையும் ஏவிவிட்டு, ரேணுகையிடம், “ஓ! அகன்ற விழிகளைக் கொண்ட பெண்ணே, என் வில்லில் இருந்து நான் ஏவிய கணைகளை எடுத்துக் கொண்டு வருவாயாக.(10) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, அவற்றை மீண்டும் என் வில்லில் இருந்து தொடுக்கப் போகிறேன்” என்றார்.
அந்தப் பெண்மணி அவ்வாறு சென்ற போது, சூரியனின் வெப்பத்தால் தலையும் பாதமும் சுட்டதன் விளைவால் மரநிழலில் அமர்ந்தாள். அருள் நிறைந்தவளும், கருங்கண்களைக் கொண்டவளுமான ரேணுகை, தன் கணவரின் சாபத்திற்கு அஞ்சியதால் ஒரு கணம் மட்டுமே ஓய்வெடுத்து, கணைகளைத் திரட்டிதிரும்பக் கடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். அருள் நிறைந்த குணங்கைக கொண்ட அந்தக் கொண்டாடப்பட்ட பெண்மணி, பாதங்களின் வலியோடும், மனக்கசப்போடும் அவற்றை எடுத்துத் திரும்பி வந்தாள். அச்சத்தால் நடுங்கியவாறே அவள் தன் கணவரை அணுகினாள்.(11-14)
போபத்தால் நிறைந்திருந்த அம்முனிவர், அழகிய முகம் படைத்த தம் மனைவியிடம், “ஓ! ரேணுகையே, நீ திரும்பி வருவதில் இவ்வளவு தாமதமேன்?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.(15)
ரேணுகை, “ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, சூரியனின் கதிர்களால் என் தலையும் பாதங்களும் சுடப்பட்டன. வெப்பத்தால் ஒடுக்கப்பட்ட நான் ஒரு மர நிழலில் ஒதுங்கினேன்.(16) என் தாமதத்திற்கு இதுவே காரணமாகும். ஓ! தலைவா, காரணத்தைச் சொல்லிவிட்டேன் நீர் என்னிடம் சினம் தவிர்ப்பீராக” என்றாள்.(17)
ஜமதக்னி, “ஓ! ரேணுகையே, சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்டவனும், இவ்வழியில் உன்னைப் பீடித்தவனுமான பகல் நட்சத்திரத்தை {சூரியனை} நான் இன்றே கடுஞ்சக்தி கொண்ட என் ஆயுதங்களால் அழிக்கப்போகிறேன்” என்றார்”.(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஜமதக்னி, பல கணைகளை எடுத்துக் கொண்டு, தமது தெய்வீக வில்லை இழுத்து, சூரியனை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, அவனது (நாள்முறை) போக்கில் அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.(19) ஓ! குந்தியின் மகனே, போரிடத் தயாராக இருக்கும் அவரைக் கண்ட சூரியன், ஒரு பிராமணனின் வேடத்தில் அணுகி, அவரிடம், “நீர் வெறுப்படையும் அளவுக்குச் சூரியன் செய்ததென்ன?(20) ஆகாயத்தில் நகர்ந்து, பூமியின் ஈரப்பத்தத்தை மேலே ஈர்த்து மீண்டும் அதனை அவளிடமே மழையாகப் பொழிகிறான்.(21) ஓ! மறுபிறப்பாளரே, இதன் மூலமே மனிதர்களுக்கு ஏற்புடைய உணவு உண்டாகிறது. உணவே உயிர் மூச்சுகளாகிறது என்று வேதங்கள் சொல்கின்றன.(22) ஓ! பிராமணரே, மேகங்களில் மறைந்து தன் கதிர்களால் சூழும் சூரியன் ஏழு தீவுகளையும் மழைப்பொழிவால் நனைக்கிறான்.(23) ஓ! பலமிக்கவmரே, இவ்வாறு பொழியப்படும் ஈரப்பதமானது, இலைகள், கனிகள், காய்கறிகள், மூலிகை ஆகியவற்றுள் பரவி உணவாக மாறுகிறது.(24)
ஓ! பிருகுவின் மகனே, பிறப்புச் சார்ந்த சடங்குகள் {ஜாதகர்மம்}, அனைத்து வகை அற சோன்புகள் {சௌளம்}, புனித நூலைத் தரித்தல் {உபநயனம்}, பசுக்கொடைகள், திருமணங்கள், வேள்வியை நோக்கமாகக் கொண்ட பொருட்கள் அனைத்தும், மனிதர்கள் ஆட்சி செய்வதற்கான விதிமுறைகள் {தர்மங்கள்}, கொடைகள் {தானங்கள்}, (மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான) அனைத்து வகை உறவுமுறைகள் {திரவியத்தினால் உண்டாகும் ஜனச்சேர்க்கைகள்}, செல்வமீட்டல் ஆகியவை உணவிலேயே தங்கள் பிறப்பிடத்தைக் கொண்டிருக்கின்றன. இதை நன்கறிவீராக.(25,26) அண்டத்தில் உள்ள ஏற்புடைய நல்ல பொருட்கள் யாவும், உயிரினங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும் உணவில் இருந்தே உண்டாகின்றன. நீர் நன்கறிந்தவற்றையே நான் முறையாக உமக்குச் சொல்கிறேன். உண்மையில், நான் சொன்ன யாவற்றையும் நீர் அறிவீர்.(27) எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமது கோபத்தைத் தணித்துக் கொள்வீராக. சூரியனை அழிப்பதன் மூலம் உமக்கு லாபமென்ன?” என்று கேட்டான் {சூரியன்}.(28)
குடை, காலணி கொடை! – அநுசாஸனபர்வம் பகுதி – 96- குடை மற்றும் காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் உண்டாகும் பலன்களைக் குறித்துச் சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நாள் சமைப்பவனால் {சூரியனால்} இவ்வாறு வேண்டப்பட்டபோது, தவசிகளில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான ஜமதக்னி என்ன செய்தார்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குரு குல வழித்தோன்றலே, நெருப்பின் பிரகாசத்துடன் கூடியவரான ஜமதக்னி, சூரியனின் முறையீடுகள் அனைத்துக்குப் பிறகும், தமது கோபத்தை வளர்ப்பதையே தொடர்ந்தார்.(2)
ஓ! மன்னா, அப்போது பிராமண வேடத்தில் இருந்து சூரியன், கூப்பிய கரங்களுடன் அவரிடம் தலைவணங்கி இனிமையான சொற்களைச் சொல்லி,(3) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, சூரியன் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறான். தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பகலின் தேவனை நீர் எவ்வாறு துளைப்பீர்?” என்று கேட்டான்.(4)
ஜமதக்னி {சூரியனிடம்}, “நீ அசைபவனாகவும், அசைவற்றவனுமாக இருக்கிறாய் என்பதை நான் என் அறிவுவிழியால் {ஞானக்கண்ணால்} அறிவேன். இந்நாளில் நான் உனக்கு நிச்சயம் ஒரு பாடத்தைப் படித்துக் காட்டுவேன் {கற்பிப்பேன்}.(5) நடுப்பகலில் ஒரு கணம் சொர்க்கங்களில் நிற்பவனாக நீ தெரிகிறாய். ஓ! சூரியா, அப்போது நான் என் கணைகளால் உன்னைத் துளைப்பேன். என்னுடைய இந்தத் தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடையாது” என்றார்.(6)
சூரியன், “ஓ! மறுபிறப்பாளர முனிவரே, ஓ! வில்லாளிகளில் சிறந்தவரே, நீர் என்னை அறிவீர் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஓ! புனிதமானவரே, நான் குற்றமிழைத்திருந்தாலும், உமது பாதுகாப்புக்காக நான் பணிந்திருப்பதைக் காண்பீராக” என்றான்”.(7)
பீஷ்மர் தொடர்ந்தார், “இதைக் கேட்டதும் துதிக்கத்தகுந்த ஜமதக்னி நாள் சமைப்பவனிடம் புன்னகையுடனே, “ஓ! சூரியா, என் பாதுகாப்பை நீ நாடும்போது எனக்கு அச்சமேதும் கிடையாது.(8) பிராமணர்களில் உள்ள எளிமை {மனநேர்மை}, பூமியின் உறுதி {அசையாமை}, சந்திரனின் மென்மை {குளிர்ச்சி}, வருணனின் ஈர்ப்பு {கடலின் ஆழம்}, அக்னியின் பிரகாசம், மேருவின் ஒளி, சூரியனின் வெப்பம் {குபேரனின் செல்வம்} ஆகியவற்றைக் கடப்பவனே, பாதுகாப்பு நாடி வந்தவனைக் கொல்வான்.(9,10) வேண்டி வந்தவனைக் கொல்ல இயன்றவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தவும், பிராமணனைக் கொல்லவும், மதுபானம் பருகவும் இயன்றவனாவான்.(11) எனவே, உன் கதிர்களால் சுடப்படும்போது, அதிலிருந்து மக்கள் விடுபடும் வகையில் இத்தீமைக்கு ஏதாவதொரு தீர்வை நீ சிந்திப்பாயாக” என்றார்.(12)
சூரியன், “ஓ! பெரும் முனிவரே, என் கதிர்களைத் தடுத்துத் தலையைக் காத்துக்கொள்வதற்குரிய இந்தக் குடையைப் பெற்றுக் கொள்வீராக. தோலாலான இந்தக் காலணிகள் இரண்டும் பாதங்களைப் பாதுகாக்கும்.(14) இந்த நாள் முதல் அறச்சடங்குகள் அனைத்திலும் இப்பொருட்களைக் கொடையளிப்பது உறுதியான பயன்பாடாக நிறுவப்படட்டும்” என்றான்”.(15)
பீஷ்மர் தொடர்ந்தார், “குடைகளையும், காலணிகளையும் கொடையளிக்கும் இவ்வழக்கம் சூரியனாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஓ! பரதனின் வழித்தோன்றலே, இக்கொடைகள் மூவுலகங்களிலும் பலன்கொடுக்க வல்லவையாகக் கருதப்படுகின்றன.(16) எனவே நீயும் பிராமணர்களுக்குக் குடைகளையும், காலணிகளையும் கொடையளிப்பாயாக. இந்தச் செயலின் மூலம் நீ பெரும் அறத்தகுதியை ஈட்டுவாய் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(17) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, நூறு விலாக்களை {கம்பிகளைக்) கொண்ட ஒரு வெண்குடையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், இறந்த பிறகு இன்ப நிலையை அடைந்து, பிராமணர்கள், அப்சரஸ்கள் மற்றும் தேவர்களால் மதிக்கப்படும் இந்திரலோகத்தில் வசிப்பான்.(18,19)
ஓ! பலமிக்கவனே, சூரியனின் வெப்பத்தால் பாதம் சுடும் ஸ்நாதகப் பிராமணர்களுக்கும், அறச் சடங்குகளைப் பயிலும் பிராமணர்களுக்கும் காலணிகளை வழங்குபவன், தேவர்களாலேயே விரும்பப்படும் உலகங்களை அடைவான்.(20) ஓ! பாரதா, அத்தகைய மனிதன், தன் மரணத்திற்குப் பிறகு உயர்ந்த சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வசிப்பான்.(21) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அறச்சடங்குகளில் குடைகளையும், காலணிகளையும் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை நான் உனக்கு முழுமையாகச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(22)
கிருஹஸ்த தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 97-இல்லறத்தானின் கடமைகள், பலிக்காணிக்கைகள், மதுபர்க்கத்துடன் கூடிய விருந்தோம்பல், அவற்றுக்குரிய பலன்கள் குறித்து வாசுதேவனுக்கும், பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இல்லற வகையின் கடமைகள் {கிருஹஸ்தாஸ்ரமத் தர்மங்கள்}அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும், இவ்வுலகில் செழிப்பையடைவதற்காக ஒரு மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் பூமாதேவி ஆகியோரைக் குறித்த பழைய கதையை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் சிறந்த இளவரசே, பலமிக்கவனான வாசுதேவன், பூமாதேவியைப் புகழ்ந்து பாடிய பிறகு, இதே கேள்வியை அவளிடம் கேட்டான்.(3)
வாசுதேவன் {கிருஷ்ணன், பூமாதேவியிடம்}, “இல்லறத்தான் என்ற நிலையைப் பின்பற்றும் நானும் என் போன்றோரும் என்ன செயல்களைச் செய்ய வேண்டும்? அத்தகைய செயல்கள் எவ்வாறு நன்மைபயக்கும்?” எனக் கேட்டான்.(4)
பூமாதேவி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவரே, ஓர் இல்லறத்தானால் முனிவர்கள், தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் ஆகியோர் வழிபடப்பட வேண்டும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்.(5) தேவர்கள் வேள்விகளாலும், மனிதர்கள் விருந்தோம்பலாலும் எப்போதும் நிறைவடைகிறார்கள் என்பதை என்னிடம் இருந்து அறிந்து கொள்வீராக. எனவே, இல்லறத்தான் அவர்கள் விரும்பும் பொருட்களால் அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.(6) ஓ! மதுசூதனரே, அத்தகைய செயல்களின் மூலம் முனிவர்களும் நிறைவடைகிறார்கள். ஓர் இல்லறத்தான், நாள் தோறும் உணவுண்ணும் முன்னர், தன் புனித நெருப்பையும், தன் வேள்விக் காணிக்கைகளையும் கவனிக்க வேண்டும்[1].(7) ஓ! மதுசூதனரே, தேவர்கள் இத்தகைய செயல்களால் நிறைவடைகின்றனர். ஓர் இல்லறத்தான் நாள்தோறும் பித்ருக்களை நிறைவடையச் செய்வதற்காக, உணவு மற்றும் நீர் மற்றும் உணவுக் காணிக்கைகளையோ,(8) கனிகள், கிழங்குகள் மற்றும் நீர்க்காணிக்கைகளையோ அளித்து விஷ்வேதேவர்களுக்கு வெந்த உணவையும், அக்னி, சோமன் மற்றும் தன்வந்தரி ஆகியோருக்கு தெளிந்த நெய்யையும் காணிக்கையளிக்க வேண்டும்.(9,10)அவன் தனிப்பட்டவையும், தனித்துவம் வாய்ந்தவையுமான காணிக்கைகளைப் பிரஜாபதிக்கு {பிரம்மனுக்கு} அளிக்க வேண்டும். அவன் தென்பகுதியில் யமனுக்கும், மேற்குப் பகுதியில் வருணனுக்கும், வடக்குப் பகுதியில் சோமனுக்கும், வீட்டுக்குள்ளேயே பிரஜாபதிக்கும், வடகிழக்கில் தன்வந்தரிக்கும், கிழக்கில் இந்திரனுக்குமென முறையான வரிசையில் வேள்விக் காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(12) வீட்டின் வாயிலில் அவன் மனிதர்களுக்கு உணவுக்காணிக்கை அளிக்க வேண்டும்[2]. ஓ! மாதவரே, இவையே பலிக் காணிக்கைகள் என்றறியப்படுகின்றன. மருத்துகளுக்கும், தேவர்களுக்கும் ஒருவனுடைய வீட்டிற்குள்ளேயே பலிக்காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13) விஷ்வேதேவர்களுக்கு அது திறந்தவெளியிலும் {ஆகாயத்திலும்}, ராட்சசர்களுக்கும், பூதங்களுக்கும் இரவிலும் கொடுக்கப்பட வேண்டும்.(14) இந்தக் காணிக்கைகளை அளித்த பிறகு அந்த இல்லறத்தான், பிராமணர்களுக்குக் காணிக்கை அளிக்க வேண்டும். பிராமணர்கள் எவரும் இல்லையென்றால் உணவின் முதல் பகுதி நெருப்பில் வீசப்பட வேண்டும்.(15)ஒரு மனிதன் தன் மூதாதையருக்குச் சிராத்தம் அளிக்க விரும்பினால் அவன், சிராத்தச் சடங்கை நிறைவு செய்யும்போது, தன் மூதாதையர்களை நிறைவடையச் செய்து, முறையான வரிசையில் பலிக்காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(16) அதன் பிறகு அவன் விஷ்வேதேவர்களுக்குக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். அடுத்ததாக அவன் பிராமணர்களை அழைத்து, தன் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு உணவுடன் விருந்தளிக்க வேண்டும்.(17) ஓ! இளவரசே, இச்செயலால் விருந்தினர்கள் நிறைவடைவார்கள். எவன் நீண்ட காலம் வீட்டில் தங்காமல், வந்த குறுகிய காலத்தில் சென்றுவிடுவானோ அவனே விருந்தினன் என்றழைக்கப்படுகிறான்.(18) ஓர் இல்லறத்தான், தன் ஆசான், தந்தை, நண்பன் மற்றும் விருந்தினனிடம், “என் வீட்டில் உமக்குக் கொடுக்க இன்னது வைத்திருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும். மேலும் அதன்படியே அவன் ஒவ்வொரு நாளும் அதைக் கொடுக்க வேண்டும்.(19,20)
அந்த இல்லறத்தான் அவர்கள் செய்யச் சொல்லும் எதையும் செய்ய வேண்டும். இதுவே நிறுவப்பட்ட வழக்கமாகும். ஓ! கிருஷ்ணா, அந்த இல்லறத்தான், அவர்கள் அனைவருக்கும் உணவளித்த பிறகு இறுதியாகவே உணவை உட்கொள்ள வேண்டும்.(21) அந்த இல்லறத்தான், தன் மன்னன், புரோகிதர், ஆசான், மாமனார், ஸ்நாதகப் பிராமணர்கள் ஆகியோர் ஒரு வருடம் முழுவதும் தன் வீட்டில் தங்கினாலும் மதுபர்க்கக் காணிக்கைகளுடன் அவர்களை வழிபட வேண்டும்.(22) காலையிலும், மாலையிலும் நாய்கள், ஸ்வபசர்கள் {சக்கிலியர்கள்}, பறவைகளுக்குத் தரையில் உணவு காணிக்கையிடப்பட வேண்டும். இது வைஷ்வேதேவ காணிக்கை என்றழைக்கப்படுகிறது[3].(23) இந்தச் சடங்குகளைப் பேரார்வத்துடன் கூடிய தெளிந்த மனத்துடன் செய்யும் இல்லறத்தான் இவ்வுலகில் {இம்மையில்} முனிவர்களின் அருளையும், இறந்த பிறகு {மறுமையில்} சொர்க்கலோகங்களையும் அடைகிறான்” என்றாள் {பூமாதேவி}.(24)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பூமாதேவியிடம் இருந்து இவை யாவற்றையும் கேட்ட பலமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்} அதன்படியே செயல்பட்டான். நீயும் அதே வழியிலேயே செயல்படுவாயாக.(25) ஓ! மன்னா, ஓர் இல்லறத்தானின் கடமைகளான இவற்றைச் செய்வதன் மூலம் நீ இவ்வுலகில் புகழை அடைந்து, இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(26)
புஷ்பதூபதீப பலிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 98-மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளித்து, பலிக்காணிக்கைகளை அளிப்பது குறித்து மன்னன் பலிக்குச் சுக்ரன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விளக்குக்கொடை எந்த வகையைச் சார்ந்தது? இக்கொடை எவ்வாறு தோன்றியது? அதைச் செய்வதனால் கிட்டும் பலன்கள் என்னென்ன? இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிர்னிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக அனைத்து உயிரினங்களின் தலைவனான மனுவுக்கும், சுவர்ணருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழங்கதை சொல்லப்படுகிறது.(2) ஓ! பாரதா, பழங்காலத்தில், சுவர்ணர் என்ற பெயரில் ஒரு தவசி இருந்தார். அவரது நிறம் தங்கம் போன்றிருந்ததால் அவர் சுவர்ணர் (தங்க நிறம் கொண்டவர்) என்றழைக்கப்பட்டார்.(3) தூய குலம், நன்னடத்தை மற்றும் சிறந்த திறன்களைக் கொண்டவராகவும் இருந்த அவர் வேதங்கள் அனைத்திலும் ஆளுமைபெற்றவராக இருந்தார். உண்மையில், அவர் கொண்டிருந்த சிறப்புத் திறனகளால் அவர் உயர்ந்த குலத்தில் பிறந்த பலரைக் கடந்திருப்பவராக இருந்தார்.(4) ஒரு நாள், கல்விமானான அந்தப் பிராமணர், உயிரினங்கள் அனைத்தின் தலைவரான மனுவைக் கண்டு அவரை அணுகினார். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், வழக்கமாக மரியாதை நிமித்தமான விசாரிப்புகளைச் செய்தனர்.(5) அவர்கள் இருவரும் வாய்மை நோற்பதில் உறுதியுள்ளவர்களாக இருந்தனர். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், தங்க மலையான அந்த மேருவின் இனிமை நிறைந்த சாரலில் அமர்ந்தனர்.(6) அங்கே அமர்ந்த அவர்கள், பழங்காலத்தின் உயர் ஆன்மத் தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள் மற்றும் தைத்தியர்கள் தொடர்புடைய பல்வேறு காரியங்களை ஒருவருக்கொருவர் சொல்லி விவாதிக்கத் தொடங்கினர்.(7)
அப்போது சுவர்ணர், சுயம்புவான மனுவிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நான் கேட்கப் போகும் ஒரு கேள்விக்குப் பதிலளிப்பதே உமக்குத் தகும்.(8) ஓ! உயிரினங்கள் அனைத்தின் தலைவரே, மலர்கள் மற்றும் வேறு நல்ல நறுமணங்களைக் கொண்டு தேவர்கள் வழிபடப்படுவது காணப்படுகிறது. இஃது என்ன? இந்த நடைமுறை எவ்வாறு தோன்றியது? அதனுடன் தொடர்புடைய பலன்கள் என்னென்ன? இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(9)
மனு {சுவர்ணரிடம்}, “இது தொடர்பாகச் சுக்கிரனுக்கும், உயர் ஆன்ம (தைத்தியனான) பலிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழைய வரலாறு சொல்லப்படுகிறது.(10) ஒரு காலத்தில், பிருகு குலத்தின் சுக்கிரர், விரோசனனின் மகனான பலி மூவுலகங்களையும் ஆண்டுக் கொண்டிருந்தபோது, அவனை அணுகினார்.(11) வேள்விக் கொடைகளை அபரிமிதமாக அளிக்கும் அந்த அசுரர்கள் தலைவன் {பலி}, அர்க்கியத்துடன் அந்தப் பிருகுவின் வழித்தோன்றலை வழிபட்டு (அவருக்கு ஓர் இருக்கையை அளித்து) தன் விருந்தினர் அமர்ந்த பிறகு அவனும் அமர்ந்தான்.(12) அச்சந்தர்ப்பத்தில் மலர்கள், நறுமணப்புகைப்பொருள், விளக்குகளுடன் பிணைந்த பலன்கள் தொடர்பாக நீர் தொடங்கிய அதே காரியம் முன் வைக்கப்பட்டது. உண்மையில், தைத்தியர்களின் தலைவன் {பலி}, தவசிகள் அனைவரிலும் பெருங்கல்வியைக் கொண்ட சுக்ரரிடம் இந்த உயர்ந்த கேள்வியை வைத்தான்.(13)
பலி {சுக்கிரரிடம்}, “ஓ! பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உண்மையில் மலர்கள், நறுமணப்புகைப்பொருள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன் என்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, இது குறித்து நீர் என்னிடம் உரையாடுவது உமக்குத் தகும்” என்றான்.(14)
சுக்கிரர் {பலியிடம்}, “முதலில் தவம் உயிர்பெற்றது. அதன் பிறகு தர்மம் (அல்லது கருணை மற்றும் பிற ஒழுக்கங்கள்) வந்தது. அதன் இடைவெளியில் செடிகொடிகள் உயிர்பெற்றன[1].(15) அவை எண்ணற்ற இனங்களாக இருந்தன. அவை அனைத்தும் (தேவன்) சோமனையே {சந்திரனையே} தங்கள் தலைவனாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் செடிகொடிகளில் சில அமுதமாகவும், சில நஞ்சாகவும் கருதப்படுகின்றன. இதுவுமல்லாமல் அதுவுமல்லாமல் சில சேர்ந்து ஒருவகையாகின.(16) மனத்திற்கு நிறைவையும் இன்பத்தையும் அளிப்பது அமுதமாகும். தன் மணத்தின் மூலம் மனத்தை அதிகம் வாட்டுவது நஞ்சாகும்.(17) அமுதமானது உயர்வானது, மங்கலமானதெனவும், நஞ்சானது மங்கலமற்றது எனவும் அறிவாயாக. இலையுதிர் மூலிகைகள் {தாவரங்கள்} அனைத்தும் அமுதமாகும். நஞ்சானது நெருப்பின் சக்தியால் பிறக்கிறது.(18) மலர்கள் மனத்திற்கு மகிழ்வூட்டி செழிப்பை அளிக்கின்றன. எனவே அறச் செயல்களைச் செய்யும் மனிதர்க்ள அவற்றுக்குச் சுமனஸுகள் என்ற பெயரை அளித்தனர்.(19) தூயநிலையில் இருக்கும் மனிதன், தேவர்களுக்கு மலர்களைக் காணிக்கையளித்து அந்தந்த ஏவர்கள் நிறைவடைவதன் விளைவால் அவர்களுக்குச் செழிப்பை அளிக்கின்றனர்.(20)ஓ! தைத்தியர்களின் ஆட்சியாளா {பலியே}, ஓ! தலைவா, வழிபாட்டாளர்கள் தேவர்களின் பெயர்களைச் சொல்லி மலர்களைக் காணிக்கையளிக்கும்போது, காணிக்கையளிப்பவர்களுடைய பக்தியின் விளைவாகத் தேவர்கள் நிறைவடைகின்றனர்.(21) (இலையுதிர்) மூலிகைகள் பல்வேறு வகைகளைச் சேர்ந்தவையாகவும், பல்வேறு வகைச் சக்திகளைக் கொண்டவையுகாவும் இருக்கின்றன.(22) வேள்வி காரியங்களுக்குப் பயன்படும் மரங்கள் எவை, பயன்படாதவை எவை என்பதை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. அசுரர்களுக்கு ஏற்புடைய மலர்மாலைகள் எவை, தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும்போது பலன்தருபவை எவை என்பதையும் கேட்பாயாக.(23) ராட்சசர்கள், உரகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையே ஏற்புடைய மலர்மாலைகள் எவை என்பதையும் முறையான வரிசையில் சொல்லப் போகிறேன்.(24) பல்வேறு வகைகளைச் சேர்ந்த மலர்களில் சில காட்டு மலர்களாகவும், சில மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் வளர்பவையாகவும், சில நன்கு உழப்பட்ட நிலத்தில் நட்டாலன்றி ஒருபோதும் வளராத மரங்களுக்கு உரியவையாகவும்; சில மலைகளில் வளரும் மரங்களில் உள்ளவையாகவும்; சில முள்மரங்களில் உள்ளவையாகவும் இருக்கின்றன. நறுமணம், அழகிய வடிவம், சுவை ஆகியவற்றிலும் வகைப்பாடுகள் உண்டு.(25)
மலர்கள் ஏற்புடையவை, ஏற்பில்லாதவை என்ற இரு வகை மணங்களைத் தருகின்றன. ஏற்புடைய மணம் கொண்ட மலர்களே தேவர்களுக்குக் காணிக்கயளிக்கப்பட வேண்டும்.(26) முள்ளில்லா மரங்களின் மலர்கள் பொதுவாக வெண்ணிறத்தில் இருக்கின்றன. ஓ! தலைவா, அத்தகைய மலர்கள் எப்போதும் தேவர்களுக்கு ஏற்புடையனவாகும்.(27) ஞானம் கொண்ட ஒருவன், தாமரை போன்ற நீர் மலர்களாலான மாலைகளைக் கந்தர்வர்கள், நாகர்கள் மற்றும் யக்ஷர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டும்.(28) காரமணமிக்கச் சிவப்பு நிற மலர்களை உண்டாக்கும் செடிகொடிகள் எதிரிகளுக்குத் தீங்கிழைக்கும் மந்திரங்களுடன் கூடிய செயல்களுக்குத் தகுந்தவையென அதர்வணங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(29) கொடுஞ்சக்தியைக் கொண்டவையும், தீண்டினால் துன்பத்தைத் தருபவையும், முள் மரங்கள் மற்றும் செடிகளில் வளர்பவையும், குருதிச்சிவப்பு அல்லது கரு நிறமுள்ளவையுமான மலர்கள், பூமி சாராத (தீய) பிசாசுகளுக்கு {பூதங்களுக்குக்} கொடுக்கப்பட வேண்டும்.(30)
ஓ! தலைவா, மனத்திற்கும், இதயத்திற்கும் மகிழ்ச்சியூட்டுபவையும், கசக்கும்போது ஏற்புடையவையும் {இனிய மணத்தைத் தருபவையும்}, அழகிய வடிவம் கொண்டவையுமான மலர்கள், மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்தவை எனச் சொல்லப்படுகின்றன.(31) மயானங்கள் மற்றும் சுடலைகள், அல்லது தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்களில் வளரும் மலர்கள், வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைத் தங்கள் நோக்கங்களாகக் கொண்ட சடங்குகள் மற்றும் திருமணம் ஆகியவற்றிலோ, காமத்திளைப்பு மற்றும் கமுக்கமான இன்பச் செயல்களிலோ கொண்டுவரப்பட்டுப் பயன்படுத்தப்படக்கூடாது.(32) மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் பிறந்தவையும், ஏற்புடைய மணம் மற்றும் தன்மைகளைக் கொண்டவையுமான மலர்கள், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட வேண்டும். அத்தகைய மலர்களில் சந்தனம் தெளித்து, சாத்திர விதிகளின்படி முறையாகக் காணிக்கயளிக்கப்பட வேண்டும்.(33) தேவர்கள் மலர்களின் மணத்திலும், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அவற்றின் தோற்றத்திலும், நாகர்கள் அவற்றின் தீண்டலிலும், மனிதர்கள் மணம், பார்வை மற்றும் தீண்டல் ஆகிய மூன்றிலும் நிறைவடைகிறார்கள்.(34) மலர்கள் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும்போது, அவர்களை உடனே நிறைவடையச் செய்கின்றன. வெறுமே நிறைவேற்ற விரும்புவதன் மூலமே ஒவ்வொரு நோக்கத்தையும் அவர்கள் {தேவர்கள்} நிறைவேற்றவல்லவர்களாக இருக்கிறார்கள். மலர்களைக் காணிக்கையளிக்கும் பக்தர்களிடம் நிறைவடையும்போது தங்கள் வழிபாட்டாளர்களால் பேணி வளர்க்கப்படும் நோக்கங்கள் அனைத்தையும் அவர்கள் உடனே நிறைவடையச் செய்கிறார்கள்.(35) நிறைவை அடையும் அவர்கள் தங்களை வழிபடுபவர்களையும் நிறைவடைச் செய்கிறார்கள். கௌரவிக்கப்படும் அவர்கள் தங்களை வழிபடுபவர்களையும் அனைத்துக் கௌரவங்களிலும் இன்புறச் செய்கிறார்கள். அலட்சியமும் அவமதிப்பும் செய்யப்படும்போது அவர்கள் அந்தத் தீய மனிதர்களை எரித்து நிர்மூலமாக்குகிறார்கள்.(36)
நறுமணப்புகைப்பொருட்கள் கொடையளிப்பது {தூபங்கொடுத்தல்} குறித்த விதிகளின் படி உண்டாகும் பலன்களை இனி உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! அசுரர்களின் இளவரசே, நறுமணப்புகைப்பொருட்கள் பலவகைப்படும் என்பதை அறிவாயாக. அவற்றில் சில மங்கலமானவையாகவும், சில மங்கலமற்றவையாகவும் உள்ளன.(37) சில நறுமணப்புகை பொருட்கள் {பிசின் போன்ற} வடிநீர் கொண்டவையாகும். சில நெருப்பில் நிறுவப்படும் நறுமண மரத்தால் ஆனவையாக இருக்கின்றன. வேறு சில, பல்வேறு பொருட்கள் கலந்து செயற்கையாகக் கரங்களால் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றின் மணம் ஏற்புடையவை, ஏற்பில்லாதவையென இருவகைப்படும். இது குறித்து விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக[2].(38) ஸல்லகி மரத்தைத்[3] தவிர மற்ற மரவடிநீர்கள் {பிசின்கள்} தேவர்களுக்கு ஏற்புடையவையே. எனினும், வடிநீர்கள் {பிசின்கள்} அனைத்திலும் குங்கிலியம்[4] நிச்சயம் சிறந்ததாகும்.(39) சாரி வகைத் தூபங்கள் அனைத்திலும் அகில்[5] சிறந்ததாகும். யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் ஆகியோருக்கு அது மிகவும் ஏற்புடையதாகும். ஸல்லகி மரத்தின் பிசினும், அதே வகையைச் சார்ந்த பிறவும் தைத்தியர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.(40) கடும் நெடிகள் கொண்ட வேறு நீர்மங்களுடன் கலந்து, சால மரம் மற்றும், தேவதாரு மரங்களின் பிசினில் செய்யப்பட்ட தூபங்கள் மனிதர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன.(41) இத்தகைய தூபங்கள் தேவர்கள், தானவர்கள் மற்றும் பூதங்களை உடனே நிறைவடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது[6]. இவற்றையும் தவிர அன்பு நோக்கங்களுக்காக மனிதர்களால் பயன்படுத்தப்படும் பல வகைத் தூபங்களும் இருக்கின்றன.(42) மலர்க்காணிக்கையில் உண்டாவதாகச் சொல்லப்படும் அனைத்துப் பலன்களும் நிறைவை விளைவிக்கும் இத்தகைய தூபங்களைக் கொடையளிப்பதாலும் கிட்டும் என்று அறியப்பட வேண்டும்.(43)விளக்குகள் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்கள்; அவற்றை யார் எந்த நேரத்தில், எவ்வகையில் கொடுக்க வேண்டும்; என்ன வகை விளக்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்பவற்றைக் குறித்து இனி சொல்லப்போகிறேன்.(44) ஒளியானது சக்தி என்றும் புகழ் என்றும், மேல்நோக்கிய போக்குக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. எனவே, சக்தியாக இருக்கும் ஒளியைக் கொடையளிப்பது மனிதர்களின் சக்தியை அதிகரிக்கிறது[7].(45) அந்ததமஸ் என்ற பெயரிலான ஒரு நரகம் இருக்கிறது. சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் {தக்ஷிணாயன} காலமும் இருளானதாகக் கருதப்படுகிறது. அந்த நரகத்திலும், அந்தக் காலத்தின் இருளிலும் இருந்து தப்புவதற்கு ஒருவன் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் {உத்தராயனத்தில்} காலத்தில் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும். இத்தகைய செயல் நல்லோரால் மெச்சப்படுகிறது[8].(46) மேலும், ஒளியானது மேல்நோக்கிய போக்கைக் கொண்டிருப்பதாலும், இருளுக்கான தீர்வாகக் கருதப்படுவதாலும் ஒருவன் ஒளிக்கொடையாளியாக இருக்க வேண்டும். இதுவே சாத்திரங்களின் தீர்மானமாகும்.(47) விளக்குகளைக் கொடையளித்ததன் மூலமே தேவர்கள், அழகையும், சக்தியையும், பிரகாசத்தையும் கொண்டவர்களானார்கள். அத்தகைய செயல்களைச் செய்யாமல் இருந்ததால், ராட்சசர்கள் அதற்கு எதிரான குணங்களுடன் கூடியவர்களானார்கள். எனவே ஒருவன் எப்போதும் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும்.(48)விளக்குகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒரு மனிதன் கூரிய பார்வையையும் பிரகாசத்தையும் பெறுகிறான். விளக்குகளைக் கொடையளிப்பவன் வேறு எவரின் பொறாமைக்கான பொருளாக இருக்கக்கூடாது. மேலும், வேறு யாரும் கொடுக்கப்படும் விளக்குகளைக் களவாடுதலும், அணைப்பதும் கூடாது.(49) விளக்கைத் திருடுபவன் குருடனாகிறான். அத்தகைய மனிதன் (மறுமையில்) இருளில் திரிந்து ஒளியற்றவனாகிறான். விளக்குகளைக் கொடையளிப்பவன் தேவலோகத்தில் ஒளிரும் ஒளி வரிசையைப் போல அழகுடன் ஒளிர்கிறான்.(50) விளக்குகளிலும், நெய்யால் எரிபவை சிறந்தவையாகும். அந்த வரிசையில் அடுத்ததாக இலையுதிர்மூலிகைச் சாறுகளால் (எண்ணெய்யால்) எரிபவை வருகின்றன. வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புபவன், விலங்குகளின் எலும்புகளில் இருந்து பாயும், சாறு, அல்லது மஜ்ஜை அல்லது கொழுப்பில் ஒருபோதும் (விளக்கை) எரிக்கக்கூடாது[9].(51) தன் முன்னேற்றத்தையும் செழிப்பையும் விரும்பும் மனிதன், மலையிறக்கங்களிலும், காடுகளில் உள்ள சாலைகளிலும், அடைதற்கரிய பகுதிகளிலும், மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் உள்ள புனித மங்களுக்குக் கீழும், சாலைகளின் சந்திப்புகளிலும் எப்போதும் விளக்குகளைக் கொடுக்க வேண்டும்.(52) விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் எப்போதும் தன் குலத்திற்கு ஒளியூட்டி, ஆன்மத் தூய்மையையும், வடிவத்தில் பிரகாசத்தையும் அடைகிறான். உண்மையில் அத்தகைய மனிதன் மரணத்திற்குப் பிறகு, ஆகாயத்தில் உள்ள ஒளியுடல்களின் {நட்சத்திரங்களின்} தோழமையை அடைகிறான்.(53)தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், மனிதர்கள், பூதங்கள் மற்றும் ராட்சசர்களுக்குப் பலிக்காணிக்கைகளை அளிப்பதன் மூலம் கிட்டும் கனிகள் தொடர்பான பலன்களைக் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(54) பிராமணர்கள், தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகள் ஆகியோருக்கு முதலில் படைக்காமல் உண்ணும் இரக்கமற்ற தீய மனிதர்கள் ராட்சசர்களாக அறியப்பட வேண்டும்.(55) எனவே, ஒருவன் தான் தயாராக வைத்திருக்கும் உணவை முதலில் தேவர்களுக்குப் படைத்து, புலனடக்கத்துடனும், குவிந்த கவனத்துடனும் முறையாக அவர்களை வணங்க வேண்டும். அவன் மதிப்புடன் தலைவணங்கி தேவர்களுக்குப் பலியை காணிக்கையளிக்க வேண்டும்.(56) இல்லறத்தோர் அளிக்கும் உணவாலேயே தேவர்கள் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றனர். உண்மையில், அவர்களுக்குக் காணிக்கையளிக்கும் வீடுகளுக்கு அவர்கள் அருள்புரிகின்றனர். யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், விருந்தினர்கள், வீடற்ற மனிதர்கள் அனைவரும் இல்லற வாழ்வு முறையை நோற்கும் மனிதர்கள் அளிக்கப்படும் உணவாலேயே ஆதரிக்கப்படுகின்றனர்.(57) உண்மையில் தேவர்களும், பித்ருக்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இத்தகைய காணிக்கைகளின் மூலமே அடைகின்றனர். இத்தகைய காணிக்கைகளால் நிறைவடையும் அவர்கள், பதில் உதவியாகக் காணிக்கையளிப்பவனுக்கு நீண்ட வாழ்நாள், புகழ் மற்றும் செல்வத்தைக் கொடுத்து நிறைடையச் செய்கின்றனர்.(58)
ஏற்புடைய மணமும், தோற்றமும் கொண்ட தூய உணவில் பால் மற்றும் தயிரைக் கலந்து, மலர்களுடன் சேர்த்துத் அவற்றைத் தேவர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டும்.(59) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் பலிகள், சாராயத்தின் துணையுடனும் கூடியவையாகவும், நெற்பொரி மற்றும் அவல்களால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், குருதி மற்றும் இறைச்சி நிறைந்தவையாக இருக்க வேண்டும்[10].(60) தாமரைக்ள மற்றும் உத்பலங்களுடன் {நெய்தல்களுடன்} கூடிய பலிகள் நாகர்களுக்கு ஏற்புடையவையாகும். வெல்லத்தில் வேகவைக்கப்பட்ட எள்ளானது, பூமி சாராத பூதங்களுக்குக் காணிக்கையளிக்கப்பட வேண்டும்.(61) பிராமணர்கள், தேவர்கள், விருந்தினர்களுக்கு முதலில் படைக்காமல் எந்த உணவையும் உண்ணாதவன், உணவின் முதல் பங்குகளுக்கான உரிமையை அடைகிறான். அத்தகைய மனிதன் பலமும், சக்தியும் பெறுகிறான். எனவே உணவின் ஒரு பகுதியை தேவர்களுக்குப் படைத்து மதிப்புடன் அவர்களை வழிபடாமல் ஒருவன் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது.(62) இல்லத்தில் தேவர்கள் வாழ்வதன் விளைவால் ஒருவனுடைய வீடு அழகில் சுடர்விடுகிறது. எனவே, தனக்கான முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பும் ஒருவன், அனைத்து உணவுகளின் முதல் பகுதியையும் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குப் படைத்து அவர்களை வழிபட வேண்டும்” என்றார் {சுக்ரர்}.(63)இவ்வாறே, பிருகு குலத்தவரும், கல்விமானானுமான கவி {சுக்கிரர்} அசுரர்களின் தலைவனான பலியிடம் சொன்னார். அடுத்ததாக முனிவர் சுவர்ணருக்கு அந்த உரையாடலே மனுவால் சொல்லப்பட்டது. சுவர்ணரும் தம் பங்குக்கு அதை நாரதருக்கு உரைத்தார்.(64) தெய்வீக முனிவரான நாரதர் குறிப்பிடப்பட்ட பல்வேறு செயல்களுக்கான பலன்களை எனக்கு உரைத்தார். ஓ! மகனே, அந்தப் பலன்களை அறிந்து கொண்ட நீ குறிப்பிடப்பட்ட பல்வேறு செயல்களைச் செய்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(65)
பிருகுவும் அகத்தியரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 99-மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன் குறித்த நஹுஷன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பிருகு முனிவருக்கும் அகஸ்தியருக்கும் இடையில் நடந்த உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவரே, மலர்கள், நறுமணப்புகைப்பொருட்கள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களால் வெல்லப்படும் பலன்களை நான் கேட்டேன். பலி அளிப்பதில் விதிகளை முறையாகப் பின்பற்றுவதில் உள்ள பலன்களைக் குறித்தும் நான் கேட்டேன். ஓ! பாட்டா, இது குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(1) உண்மையில், ஓ! ஐயா, நறுமணப்புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக. இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தை} நோற்கும் மனிதர்களால் பலிகள் தரையில் இடப்படுவதேன்?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக நஹுஷன் {நகுஷன்}, அகஸ்தியர் மற்றும் பிருகு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) ஓ! ஏகாதிபதி, தவங்களையே செல்வமாகக் கொண்ட அரச முனி நஹுஷன், தன் நற்செயல்களின் மூலம் சொர்க்கத்தின் ஆட்சி உரிமையை அடைந்தான்.(4) ஓ! மன்னா, புலனடக்கத்துடன் சொர்க்கத்தில் வசித்த அவன், மனித மற்றும் தேவ இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்வதில் ஈடுபட்டு வந்தான்.(5) ஓ! மனிதர்களின் தலைவா, அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடமிருந்தே பல்வேறு வகை மனிதச் செயல்களும் {கர்மங்களும்}, பல்வேறு வகைத் தெய்வீகச் செயல்களும் தோன்றின.(6) ஓ! ஏகாதிபதி, வேள்வி நெருப்பு, புனித விறகு, குசப்புல் {தர்ப்பை}, மலர்கள் ஆகியவற்றைத் திரட்டுவது, (மாவாக்கப்பட்ட) நெற்பொரியால் அலங்கரிக்கப்பட்ட உணவைக் கொண்ட பலி அளிப்பு, நறுமணப்புகைப்பொருள் மற்றும் விளக்குகளைக் காணிக்கையளிப்பது போன்ற அனைத்துக்கும் தொடர்புடைய பல்வேறு சடங்குகள், அந்த உயர் ஆன்ம மன்னன் சொர்க்கத்தில் வசித்தபோது நாள்தோறும் உண்டானவையே ஆகும். உண்மையில், அவன் சொர்க்கத்தில் வசித்திருந்தாலும், யப {ஜப} வேள்வியையும் (அமைதியாக மந்திரங்களை ஓதுவதையும்), தியான வேள்வியையும் செய்து வந்தான்.(7,8)
ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, நஹஷன் {நகுஷன்}, தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும், பழங்காலத்தில் தான் செய்து வந்ததைப் போலவே உரிய சடங்குகள் மற்றும் விழாக்களுடன் தேவர்கள் அனைவரையும் அவன் வழிபட்டு வந்தான்.(9) சில காலம் கழிந்த பிறகுதான் நஹுஷன் தான் தேவர்களின் அனைவரின் தலைவன் என்ற நிலையை உணர்ந்தான். இதனால் அவன் செருக்கில் நிறைந்தான். அந்தக் காலம் முதல் (இங்குச் சொன்ன வகையிலான) அவனுடைய செயல்கள் {கர்மங்கள்} அனைத்தும் நின்று போயின.(10) தேவர்கள் அனைவரிடம் இருந்தும் தான் பேற்ற வரத்தின் விளைவால் ஆணவத்தில் நிறைந்திருந்த நஹுஷன், முனிவர்களையே தங்கள் தோள்களில் அவனைச் சுமக்கச் செய்தான். எனினும் அறச்சடங்குகள் அனைத்தையும் அவன் கைவிட்டதன் விளைவால் அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களில் முதன்மையானோரைத் தன் வாகனங்களைச் சுமக்கச் செய்வதைத் தொடரும் அளவுக்கு நஹுஷன் மிக நீண்ட காலம் செருக்கால் நிறைந்திருந்தான்.(12) அவன் முனிவர்களை அவமதிக்கும் வகையில் இந்த வேலைகளை அவர்களைச் செய்ய வைத்தான். ஓ! பாரதா, ஒரு நாள் அகஸ்தியர் அவனுடைய {நகுஷனுடைய} வாகனத்தைச் சுமக்கும் நாள் வந்தது.(13)
அந்தக் காலத்தில், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான பிருகு, ஆசிரமத்தில் அமர்ந்திருந்த அகஸ்தியரின் முன்பு சென்று அவரிடம்,(14) “ஓ! பெருந்தவசியே, தேவர்களின் தலைவனாகியிருக்கும் இந்தத் தீய ஆன்மா கொண்ட நஹுஷனால் நம்மீது இழைக்கப்படும் இத்தகைய கண்ணியமின்மைகளுக்கு நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று கேட்டார்.(15)
அகஸ்தியர் {முனிவர் பிருகுவிடம்}, “ஓ! பெரும் முனிவரே, நஹுஷனை சபிப்பதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? வரங்களை அளிப்பவரே {பிரம்மரே}, நஹுஷனுக்குச் சிறந்த வரங்களை எவ்வாறு கொடுத்தார் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.(16) சொர்க்கத்திற்கு வந்த நஹுஷனால் வேண்டப்பட்ட வரம், தன் பார்வையில் பட்ட அனைத்தும் அதன் சக்தியனைத்தையும் இழந்து தன் ஆளுகைக்குள் வர வேண்டும் என்பதாகும்.(17) சுயம்புவான பிரம்மன் இவ்வரத்தையே அவனுக்கு அளித்திருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே உம்மாலோ, என்னாலோ அவனை எரிக்க இயலவில்லை. முனிவர்களில் முதன்மையான வேறு யாராலும் அவனை எரிக்கவோ, அவனது உயர்ந்த நிலையில் இருந்து தள்ள இயலாததும் இந்தக் காரணத்தினாலேயே ஆகும்.(18) ஓ! தலைவரே, முன்பொரு சமயம் நஹுஷன் குடிப்பதற்காகப் பிரம்மனால் அமுதம் கொடுக்கப்பட்டது. இந்தக் காரணத்தினாலும் நாம் அவன் எதிரில் பலமற்றவர்களாகிறோம்.(19) அந்தப் பரமதேவன், உயிரினங்கள் அனைத்தையும் துயரத்திற்குள் மூழ்கடிக்கவே நஹுஷனுக்கு அவ்வரத்தை அளித்ததாகத்தெரிகிறது. மனிதர்களில் இழிந்தவனான அவன் பிராமணர்களிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறான்.(20) ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இந்நிலையைக் கருத்தில் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்குச் சொல்வீராக. உமது அறிவுரைப்படியே நான் செயல்படுவேன் என்பதில் ஐயமில்லை” என்றார்{அகஸ்தியர்}.(21)
பிருகு {அகஸ்தியரிடம்}, “பெரும் சக்தி கொண்டவனும், ஆனால் விதியால் மயக்கப்பட்டிருப்பவனுமான நஹுஷனின் பலத்திற்கு எதிர்ச்செயல் செய்யும் நோக்கில் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலேயே நான் இங்கே வந்திருக்கிறேன்.(22) தேவர்களுக்குத் தலைவனாகியிருக்கும் தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன் இன்று உம்மையே அவனுடைய தேரில் பூட்டப் போகிறான். அவன் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்ததன் விளைவாலும், என் சக்தியின் துணையுடனும் அவன் இந்திரனின் நிலையில் இருந்து என்னால் வீசியெறியப்படப் போகிறான்.(23) நான் இன்று உம் பார்வையிலேயே தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான நஹுஷனை இந்திரனின் இருக்கையில் இருந்து வீசியெறிந்து, நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனை அதில் அமர்த்தப் போகிறேன்.(24) தேவர்களின் தலைவனாக இருக்கும் அந்த நேர்மையற்றவன், விதியால் பீடிக்கப்படிருக்கும் அவனது புத்தியின் விளைவால் அவனது வீழ்ச்சியைக் கொண்டு வரும்பொருட்டு ஓர் உதையின் மூலம் இன்று உம்மை அவமதிக்கப் போகிறான்.(25)
அத்தகைய அவமதிப்பால் சினமடையும் நான், பிராமணர்களின் எதிரியும், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த இழிந்தவனிடம், “நீ ஒரு பாம்பாவாயாக” என்று இன்று சபிக்கப் போகிறேன்.(26) ஓ! பெருந்தவசியே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ச்சீ ச்சீ என்று சொல்லப்படுவதன் விளைவால் சக்தி அனைத்தையும் இழந்திருக்கும் தீய ஆன்மாகக் கொண்ட நஹுஷனை நான் இந்து பூமிக்கு வீசப் போகிறேன்[1].(27) உண்மையில், தலைமைத்துவம் மற்றும் சக்தியால் மயங்கியிருப்பவனும், நியாயமற்ற செயல்களைச் செய்யும் அற்பனுமான நஹுஷனை நான் இன்று வீசியெறியப் போகிறேன். ஓ! தவசியே, உமக்கு ஏற்புடையதென்றால் நான் இதைச் செய்வேன்” என்றார் {பிருகு}.(28இவ்வாறு பிருகுவால் சொல்லப்பட்டவரும், மித்ராவருணனின் மகனும், மங்கா மகிமையும் பலமும் கொண்ட அகஸ்தியர், உயர்ந்த நிறைவை அடைந்து அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டார்” என்றார் {பீஷ்மர்}.(29)
தீபதானமும், நஹுஷனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 100-அகஸ்தியரின் சடையில் மறைந்திருந்த பிருகு; அகஸ்தியரைக் காலால் தாக்கிய நஹுஷன்; நஹுஷனைச் சபித்த பிருகு; தான் அளித்த கொடைகளால் சாபத்தில் இருந்து மீண்ட நஹுஷன்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நஹுஷன் எவ்வாறு துன்பத்தில் மூழ்கினான்? அவன் எவ்வாறு பூமியில் வீசப்பட்டான்? உண்மையில் அவன் எவ்வாறு தேவர்களின் அரசுரிமையை இழந்தான்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிருகு மற்றும் அகஸ்தியர் ஆகிய முனிவர்கள் இருவரும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நஹுஷன் முதலில் தேவர்களின் தலைவனான போது நல்ல வழியிலேயே செயல்பட்டான் என்பதை ஏற்கனவே சொன்னேன். உண்மையில் மனித மற்றும் தெய்வீக இயல்புடைய அனைத்துச் செயல்களும் அந்த உயர் ஆன்ம அரச முனியிடமிருந்தே உண்டாகின.(2) விளக்குகள் கொடை மற்றும் அதே வகைச் சடங்குகள் அனைத்தும், பலிகளை முறையாக அளிப்பது, குறிப்பாகப் புனித நாட்களில் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும்(3) என இவை யாவும் தேவர்களின் அரசுரிமையில் அமர்ந்த உயர்ந்த ஆன்ம நஹுஷனால் முறையாக நோற்கப்பட்டன. பக்திச் செயல்பாடுகள் அனைத்தும் ஞானம் கொண்ட மனிதர்களாலேயே மனிதர்களின் உலகிலும், தேவர்களின் உலகிலும் எப்போதும் நோற்கப்படுகின்றன. உண்மையில், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அத்தகைய செயல்பாடுகள் நோற்கப்பட்டால், இல்லறவாசிகள் எப்போதும் செழிப்பையும், முன்னேற்றத்தையும் அடைவதில் வெற்றி அடைகிறார்கள். தேவர்களுக்கு விளக்குகள், நறுமணப்புகைப்பொருட்களைக் கொடையளிப்பதும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும் அவ்விளைவுகளையே ஏற்படுத்தும்.(4,5)
உணவு சமைக்கப்படும்போது, அதன் முதல் பகுதியானது ஒரு பிராமணருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பலி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட காணிக்கைகள் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அத்தகைய கொடைகளால் நிறைவடைகின்றனர்.(6) அத்தகைய காணிக்கைகளால் தேவர்கள் எவ்வளவு நிறைவடைகிறார்களோ அதற்கு நூறு மடங்களவுக்குப் பெரிதாக அந்த இல்லறவாசியைப் பதிலுக்கு அவர்கள் நிறைவடையச் செய்வார்கள்.(7) பக்தியும் ஞானமும் கொண்ட மனிதர்கள் நறுமணப்புகைப் பொருட்களையும், விளக்குகளையும் கொடையளித்து நெடுஞ்சாண்கிடையாக வணங்கவும் செய்வார்கள். அத்தகைய செயல்கள் அவற்றைச் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தையும், செழிப்பையும் எப்போதும் கொண்டு வரும்.(8) தூய்மைச் சடங்குகளின் போது, நீரின் உதவியுடன் தேவர்களுக்குப் பணிந்து செய்யப்படும் சடங்குகள் யாவும் தேவர்களை நிறைவடையச் செய்யவே உதவுகின்றன.(9) முறையான சடங்குகளுடன் வழிபடப்படும்போது உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்களும், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும், வீட்டில் வசிக்கும் தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(10)
தேவர்களின் அரசுரிமையை அடைந்தபோது, இத்தகைய கருத்துகளால் நிறைந்திருந்த பெரும் மன்னன் நஹுஷன், பெரும் மகிமையால் நிறைந்த இந்தச் சடங்குகள் மற்றும் கடமைகள் அனைத்தையும் பின்பற்றினான்.(11) சில காலம் கழித்து நஹுஷனின் நற்பேறு தேய்வடைந்ததன் விளைவாக அவன் இந்த நோன்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, நான் ஏற்கனவே சொன்னவாறு கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறிச் செயல்படத் தொடங்கினான்.(12) நறுமணப் புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் காணிக்களிப்பதில் உள்ள விதிகளை நோற்காமல் தவிர்த்ததன் விளைவாகத் தேவர்களின் தலைவனான அவனிடம் சக்தி குன்றத்தொடங்கியது.(13) அவனுடைய வேள்விச் சடங்குகளும், கொடைகளும் ராட்சசர்களால் தடுக்கப்பட்டன. இந்தக் காலத்தில்தான் அவன் முனிவர்களில் முதன்மையானவரான அகஸ்தியரைத் தன்தேரில் பூட்டினான்.(14) பெரும்பலம் கொண்ட நஹுஷன், சிரித்துக்கொண்டே, சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்து (தான் குறிப்பிட்ட இடத்திற்கு) வாகனத்தைச் சுமக்க அந்தப் பெருமுனிவருக்கு ஆணையிட்டு, அவரை அந்தப் பணியில் நிறுவினான்.
அந்நேரத்தில, பெருஞ்சக்தி கொண்ட பிருகு, மித்ராவருணனின் மகனிடம் {அகஸ்தியரிடம்),(15) “நான் உமது தலையில் உள்ள சடாமுடிக்குள் நுழைவது வரை நீர் உமது கண்களை மூடிக் கொள்வீராக” என்றார். மங்கா மகிமை கொண்டவரும், வலிமையும், சக்தியும் கொண்டவருமான பிருகு இதைச் சொல்லவிட்டு, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நஹுஷனை வீசி எறிவதற்காக, மரக்கட்டையைப் போல அசையாமல் நின்றிருந்த அகஸ்தியரின் சடாமுடிக்குள் நுழைந்தார். விரைவில் நஹுஷன், தன் வாகனத்தைச் சுமக்க வரும் அகஸ்தியரைக் கண்டான்.(16,17)
தேவர்களின் தலைவனான அவனைக் கண்ட அகஸ்தியர், அவனிடம், “தாமதமில்லாமல் என்னை உன் வாகனத்தில் பூட்டுவாயாக. நான் உன்னை எந்த இடத்திற்குச் சுமந்து செல்ல வேண்டும்.(18) ஓ! தேவர்களின் தலைவா, நீ செல்ல விரும்பும் இடத்திற்கு நான் உன்னைச் சுமந்து செல்வேன்” என்றார். இவ்வாறு அவரால் சொல்லப்பட்ட நஹுஷன் அந்தத் தவசியைத் தன் வாகனத்தில் பூட்டினான்.(19) அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு, நஹுஷனின் இச்செயலால் பெரும் நிறைவடைந்தார். அவர் நஹுனனின் மீது தம் கண்களைச் செலுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார்.(20) பிரம்மனிடம் இருந்து சிறப்புமிக்க நஹுஷன் பெற்றிருக்கும் வரத்தின் சக்தியை முழுமையாக அறிந்தவரான பிருகு இவ்வழியில் செயல்பட்டார். அகஸ்தியரும் நஹுஷனால் இவ்வாறு நடத்தப்பட்டாலும் கோபவசப்படாமல் இருந்தார்.(21) ஓ! பாரதா, அப்போது மன்னன் நஹுஷன் தன் அங்குசத்தைக் கொண்டு அகஸ்தியரைத் தூண்டினான். அந்த உயர் ஆன்ம முனிவர் அப்போதும் கோபவசப்படாமல் இருந்தார். தேவர்களின் தலைவன் கோபமடைந்தவனாகத் தன் இடதுகாலால் அகஸ்தியரின் தலையைத் தாக்கினான்.
அம்முனிவர் இவ்வாறு தலையில் தாக்கப்பட்ட போது, அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு,(22,23) சினத்தால் தூண்டப்பட்டவராக, பாவம் நிறைந்த ஆன்மாவான நஹுஷனைச் சபிக்கும் வகையில், “இந்தப் பெரும் முனிவரின் தலையை உன் காலால் நீ தாக்கியதால்,(24) ஓ! தீய புத்தி கொண்ட அற்பனே, பாம்பாக மாறி பூமியில் விழுவாயாக” என்றார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு காணப்படாதவராக இருந்த பிருகுவால் சபிக்கப்பட்ட நஹுஷன் உடனடியாகப் பாம்பாக மாறி பூமியில் விழுந்தான். ஓ! ஏகாதிபதி, நஹுஷன் பிருகுவைக் கண்டிருந்தால், அவரால் தன் சக்தியைக் கொண்டு அவனைப் பூமியில் வீழ்த்துவதில் வெற்றியடைந்திருக்க முடியாது. நஹுஷன் அளித்திருந்த பல்வேறு கொடைகள், அவன் செய்திருந்த தவங்கள் மற்றும் அற நோன்புகளின் விளைவாக,(25-27) ஓ! மன்னா, அவன் பூமியில் வீசப்பட்டால் தன் நினைவை இழக்காமல் இருப்பதில் வென்றான். அப்போது அவன் சாபத்தில் இருந்து வெளியே வரும் நோக்கில் பிருகுவை அமைதிப்படுத்தினான்.(28) கருணையில் நிறைந்த அகஸ்தியரும் சாபத்தை முடிவுக்குக் கொண்டுவர பிருகுவை அமைதிப்படுத்துவதில் நஹுஷனுடன் சேர்ந்து கொண்டார். இறுதியாக நஹுஷனிடம் கருணை கொண்ட பிருகு, அந்தச் சாபத்தில் இருந்து வெளியே வரும் வழியைச் சொன்னார்.(29)
பிருகு {நஹூஷனிடம்}, ” குரு குலத்தின் முதன்மையானவனாக யுதிஷ்டிரன் என்ற பெயரில் (பூமியில்) ஒரு மன்னன் தோன்றுவான். அவனே உன்னை இந்தச் சாபத்தில் இருந்து விடுவிப்பான்” என்றார். இதைச் சொன்ன அம்முனிவர் நஹுஷனின் பார்வையில் இருந்து மறைந்தார்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட அகஸ்தியரும், நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனின் காரியத்தில் இவ்வாறு ஈடுபட்டு, மறுபிறப்பாள வகையினர் அனைவராலும் வழிபடப்பட்டுத் தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(31)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயே பிருகுவின் சாபத்தில் இருந்து நஹுஷனை மீட்டாய். உண்மையில் உன்னால் விடுவிக்கப்பட்ட அவன் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரம்மலோகத்திற்கு உயர்ந்தான்.(32) நஹுஷனை பூமியில் வீசியெறிந்த பிருகு பிரம்மலோகத்திற்குச் சென்று பெரும்பாட்டனிடம் அதைச் சொன்னார்.(33)
இந்திரனைத் திரும்ப அழைத்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தேவர்களிடம், “தேவர்களே, நான் கொடுத்த வரத்தின் மூலம் நஹுஷன் சொர்க்கத்தின் அரசுரிமையை அடைந்தான்.(34) எனினும், சினம் கொண்ட அகஸ்தியரால் அரசுரிமையை இழந்த அவன் பூமியில் வீசப்பட்டான். தேவர்களே, ஒரு தலைவன் இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாது.(35) எனவே, நீங்கள் மீண்டும் இந்திரனையே சொர்க்கத்தின் அரசுரிமையில் நிறுவுவீராக” என்றான்.
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மகிழ்ச்சியால் நிறைந்த தேவர்கள் தங்களிடம் இவ்வாறு சொன்ன பெரும்பாட்டனிடம் மறுமொழியாக “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னார்கள். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தெய்வீகப் பிரம்மனும் சொர்க்கத்தின் அரசுரிமையில் இந்திரனை நிறுவினான். மீண்டும் தேவர்களின் தலைவனான வாசவன், அழகிலும், பிரகாசத்திலும் ஒளிரத்தொடங்கினான். பழங்காலத்தில் நஹுஷனின் வரம்புமீறலால் நேர்ந்தது இதுவே.(36-38) எனினும், நான் குறிப்பிட்ட வகையிலான செயல்களின் மூலம் அடைந்த பலன்களால் இழந்த தன் நிலையை மீண்டும் அடைவதில் நஹுஷன் வென்றான். எனவே, மாலை வந்ததும், இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள் ஒளிக்கொடையளிக்க வேண்டும்.(39) ஒளியைக் கொடையளிப்பவன் நிச்சயம் மரணத்திற்குப் பிறகு தெய்வீகப் பார்வையை அடைவான். உண்மையில், ஒளியைக் கொடையளிப்பவர்கள் முழு நிலவைப் போலப் பிரகாசமடைவார்கள்.(40) ஒளிக்கொடையளிப்பவர்கள், எத்தனை இமைப்பொழுதுகள் அவ்விளக்குகள் எரியுமோ அவ்வளவு வருடங்கள் வடிவு அழகுடன் கூடியவர்களாக, பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்” என்றார் {பீஷ்மர்}.(41)
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply