பிங்களை என்ற வேசி! – சாந்திபர்வம் பகுதி – 174-ஆன்மவிடுதலையை நாடுவதே கடமைகளில் முதன்மையானது; இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் மாறிமாறிச் சக்கரமாகச் சுழன்று வருவன என்று யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர், பிள்ளையை இழந்து வாடிக் கொண்டிருந்த மன்னன் சேனஜித்திடம் பேசிய ஒரு பிராமணரின் உரையை விளக்கமாகச் சொன்னது; துன்பத்திற்குக் காரணமான அறியாமை; விதியின் வலிமை ஆகியவற்றைச் சொல்லி மூடனும், அறிஞனும் துன்பமடைவதில்லை, மாறாக இந்த இரு நிலைகளுக்கு இடைப்பட்டவர்களே துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று மன்னன் சேனஜித்திடம் சொன்ன அந்தப் பிராமணர், பிங்களை என்ற வேசியின் கதையையும், அவள் பாடிய ஸ்லோகத்தையும் சொன்னது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மன்னர்களின் கடமைகள் தொடர்பான மங்கலக் கடமைகள் குறித்து நீர் உரையாடினீர். இப்போது, ஓ! மன்னா, (நான்கு) வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} வாழ்வோருக்குரிய முதன்மையான கடமைகளை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறம் பல வாயில்களைக் கொண்டதாகும். அறம் (பரிந்துரைக்கும் கடமைகளை) நோற்பது ஒருபோதும் பயனற்றதாகாது. ஒவ்வொரு வாழ்வுமுறைக்கும் {ஆசிரமத்திற்கும்} தனித்தனியே கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (மறுமையில் கிடைக்கக்கூடியவையாக இருக்கும் அக்கடமைகளின் கனிகள் புலப்படாதனவாக இருக்கின்றன). எனினும் ஆன்மாவை நோக்கிச் செய்யப்படும் தவத்தின் கனிகள் இம்மையிலேயே {இவ்வுலகிலேயே} அடையப்படுகின்றன[1].(2) எந்தப் பொருளில் ஒருவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அதைத் தவிர வேறு எதுவும் பேரருள் நிறைந்த உயர்ந்த உடைமையாக அவனுக்குத் தோன்றாது.(3) ஒருவன் முறையாகச் சிந்திக்கும்போது, (அத்தகைய சிந்தனையால் அவனது இதயம் தூய்மையடையும்போது), இவ்வுலகின் பொருட்கள் அனைத்தையும் அவன் வெறும் துரும்பைப் போலப் பயனற்றவையாக அறிந்து கொள்வான். அப்போது அவன் அந்தப் பொருட்கள் மீது கொண்ட பற்றிலிருந்து விடுபடுவான் என்பதில் ஐயமில்லை.(4) ஓ! யுதிஷ்டிரா, குறைகள் நிறைந்த இவ்வுலகம் இவ்வாறு இருக்கும்போது, நுண்ணறிவைக் கொண்ட ஒவ்வொரு மனிதனும், தன் ஆன்ம விடுதலையை {முக்தியை} அடைவதற்காக முயற்சிக்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(5)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒருவன் செல்வத்தை இழக்கும்போது, அல்லது ஒருவனுடைய மனைவியோ, மகனோ, தந்தையோ இறக்கும்போது, தன் துயரத்தை எந்த ஆன்ம நிலை கொண்டு கொல்ல வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் செல்வத்தை இழக்கும்போது, அல்லது அவனுடைய மனைவியோ, மகனோ, தந்தையோ இறக்கும்போது, அவன், “ஐயோ, இது பெருந்துன்பம்” என்று நிச்சயம் சொல்வான். ஆனால் அவன், சிந்தனையுடன் துணையுடன் அந்தக் கவலையைக் கொல்ல வேண்டும்.(7) இது தொடர்பாகச் {மன்னன்} சேனஜித்தின் சபைக்கு வந்த அவனுடைய மறுபிறப்பாள நண்பர், மன்னனிடம் பேசிய பேச்சைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) அந்த ஏகாதிபதி {சேனஜித்}, தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகத் துயரில் கலங்கி, கவலையில் எரிந்துகொண்டிருப்பதைக் கண்ட அந்தப் பிராமணர், உற்சாகமிழந்த இதயத்துடன் இருந்த அந்த ஆட்சியாளனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(9) “நீ ஏன் மயங்குகிறாய்? எந்த நுண்ணறிவும் இல்லாமல் இருக்கிறாய். நீயே துன்பத்திற்குப் பொருளாக இருக்கும்போது (பிறருக்காக) ஏன் வருந்துகிறாய்? சிலர் உனக்காகச் சில நாட்கள் வருந்துவார்கள், பிறகு அவர்களுக்கான சமயத்தில் அவர்களுக்காகப் பிறர் வருந்துவார்கள்.(10) ஓ! மன்னா, நானும், நீயும், உனக்காகக் காத்திருப்போரும் {உன்னிடம் பணிசெய்வோரும்} என அனைவரும் நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்லப்போகிறோம்” என்றார்.(11)
சேனஜித், “ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எதை அடைந்தால் நீர் கவலையடைய வேண்டாமோ, அந்த நுண்ணறிவு எது? அந்தத் தவம் எது? அந்த எண்ணம் எது? அந்த அறிவு எது? அந்தக் கல்வி எது?” என்று கேட்டான்.(12)
அந்தப் பிராமணர் {மன்னன் சேனஜித்திடம்}, “உயர்ந்தவையும், நடுத்தரமானவையும், தாழ்ந்தவையுமான உயிரினங்கள் அனைத்தும், அதனதன் செயல்களின் விளைவால் துயரில் சிக்கிக் கொள்வதைப் பார்.(13) என்னுடைய சுயத்தையே நான் எனதாகக் கருதவில்லை. மறுபுறம், மொத்த உலகத்தையும் நான் எனதாகக் கருதுகிறேன். மேலும், (நான் காணும்) இவை அனைத்தும் என்னைப் போலவே பிறருக்கும் சொந்தமானவை என்றும் கருதுகிறேன். இந்த எண்ணத்தின் விளைவால் என்னைத் துயரம் அணுகாது.(14) இந்த நுண்ணறிவை {புத்தியை} அடைந்தபிறகு, நான் இன்பத்திற்கோ, துன்பத்திற்கோ வசப்படுவதில்லை.(15) பெருங்கடலில் மிதக்கும் இரு மரத்துண்டுகள் ஒரு சமயத்தில் ஒன்றாகச் சேர்ந்து, பிறகு பிரிவதைத் போலவே இந்த உலகில் (வாழும்) உயிரினங்களின் சேர்க்கையும் நேர்கிறது.(16) மகன்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகியோர் அனைவரும் இவ்வகையினரே. ஒருவன் அவர்களிடம் இருந்து பிரியப்போவது நிச்சயம் என்பதால், அவன் அவர்களிடம் ஒருபோதும் பற்று கொள்ளக்கூடாது.(17) உன் மகன் புலப்படாத உலகில் இருந்து வந்தான். அவன் உன்னை அறிந்திருக்கவில்லை. நீயும் அவனை அறிந்திருக்கவில்லை. நீ யார்? யாருக்காக நீ வருந்திக் கொண்டிருக்கிறாய்?(18)
ஆசையெனும் நோயிலிருந்தே துயரம் எழுகிறது. மேலும், ஆசையெனும் நோய் நீங்குவதிலிருந்தே மகிழ்ச்சி விளைகிறது. இன்பத்தில் இருந்தே துன்பம் எழுகிறது, மேலும் துன்பமானது மீண்டும் மீண்டும் எழுகிறது.(19) இன்பத்திற்குப் பிறகு துன்பமும், துன்பத்திற்குப் பிறகு இன்பமும் {மாறி மாறி} வருகின்றன. மனிதர்களின் இன்பங்களும் துன்பகங்களும் ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன.(20) இன்பத்திற்குப் பிறகு உனக்குத் துன்பம் வரும். மீண்டும் நீ இன்பத்தை அடைவாய. எப்போதும் துன்பத்தையும், எப்போதும் இன்பத்தையும் ஒருவரும் அனுபவிப்பதில்லை.(21) இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்கும் புகலிடமாக இவ்வுடல் இருக்கிறது[2]. உடல்படைத்த உயிரினம், தன் உடலின் உதவியால் செய்யும் எந்தச் செயல்களின் விளைவுகளையும் அவனது அந்த உடலே அனுபவிக்கும்.(22) உடல் இருப்பில் எழும்போது அதனுடனே சேர்ந்தே உயிரும் எழுகிறது. இந்த இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன, ஒன்றாகவே அழிகின்றன[3].(23) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள், உலகம் சார்ந்த பல கட்டுகளால் கட்டப்பட்டு, நீரில் மணற்கரை போல அழிவைச் சந்திக்கின்றனர்.(24)அறியாமையில் பிறந்த பல்வேறு வகைத் துன்பங்கள், உயிரினங்கள் கொண்ட பற்றின் விளைவால் அவற்றைப் பீடித்து, எள்ளை நசுக்கும் செக்குகள் போலச் செயற்பட்டு, (தாங்கள் வசப்பட்டிருக்கும்) மறுபிறப்பு சுழற்சியைப் பிரதிபலிக்கும் செக்குகள் போல அவற்றை {உயிரினங்களை} நசுக்குகின்றன.(25) மனிதன், தன் மனைவிக்காக (மற்றும் பிறருக்காக) எண்ணற்ற தீச்செயல்களைச் செய்கிறான், ஆனால், இம்மையிலும், மறுமையிலும் அவன் தனியாகவே பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கிறான்.(26) பிள்ளைகள், மனைவியர், உற்றார் உறவினர் ஆகியோருடன் பற்றுடன் இருக்கும் மனிதர்கள் அனைவரும், பலமற்ற காட்டு யானைகள், புதைகுழியில் மூழ்குவதைப் போல, துன்பக்கடலெனும் சகதியில் மூழ்குகின்றனர்.(27) உண்மையில், ஓ! தலைவா, செல்வத்தின் இழப்பாலும், மகன் மற்றும் உற்றார், உறவினரின் இழப்பாலும் மனிதன் அனுபவிக்கும் பெருந்துயரானது, காட்டுத்தீயின் எரிசக்திக்கு ஒப்பானதாகும்.(28) இன்பம் துன்பம், இருப்பு இல்லாமை ஆகிய இவை அனைத்தும் விதியைச் சார்ந்தே இருக்கின்றன.(29) நண்பர்களைக் கொண்டவனாக இருந்து நண்பர்களற்றவனாக ஆனவன், எதிரிகளைக் கொண்டவனாக இருந்து எதிரிகளற்றவனாக ஆனவன், ஞானம் கொண்டவனாக இருந்து ஞானமற்றவனாக ஆனவன், ஆகிய இவர்களில் ஒவ்வொரும் விதியின் மூலமே இன்பத்தை அடைகின்றனர்.(30)
ஒருவனுடைய மகிழ்ச்சிக்கு நண்பர்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவனுடைய துன்பத்துக்கு எதிரிகள் காரணமாக இருப்பதில்லை. செல்வம் அடைவதை ஏற்படுத்த ஞானம் தகுந்ததல்ல {ஞானத்தால் செல்வத்தைக் கொண்டு வர முடியாது}; அதே போல இன்பம் அடைவதை ஏற்படுத்த செல்வம் தகுந்ததல்ல {செல்வம் இன்பத்தைத் தராது}.(31) செல்வத்திற்கு நுண்ணறிவு {புத்தி} காரணமல்ல, அதேபோவே எழைமைக்கு மடமையும் காரணமல்ல. வேறெதையும் அல்லாமல் ஞானத்தை மட்டுமே கொண்டவன் உலகின் வகையைப் புரிந்து கொள்கிறான் {ஒரு ஞானியாலன்றி வேறு எவராலும் இவ்வுலகத்தின் வகையைப் புரிந்து கொள்ள முடியாது}.(32) புத்திசாலி, வீரன், முட்டாள், கோழை, மூடன், கல்விமான், பலவீனன், பலமிக்கவன் ஆகியோரில் எவனிடம் இருந்து விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனிடம் இருந்தே மகிழ்ச்சி ஏற்படும்.(33) பசுவானவள், கன்று, உரிமையாளனான பசுமந்தையாளன் {இடையன்}, கள்வன் ஆகியோருக்கு மத்தியில், எவன் அவளது {அந்தப் பசுவின்} பாலைக் குடிப்பானோ அவனுக்கே உரிமையானவள் ஆவாள்[4].(34) முற்றிலும் செயலற்ற அறிவைக் கொண்டவர்கள், மேலான அறிவுக்கு அப்பாற்பட்ட மனநிலையை அடைந்தவர்கள் ஆகியோர் இன்பத்தை அடைவதில் வெல்கிறார்கள். இந்த இரண்டு வகையினருக்கு மத்தியில் உள்ளோரே துன்பத்தை அனுபவிக்கிறார்கள்[5].(35)ஞானம் கொண்டவர்கள், இரண்டு இறுதிநிலைகளிலேயே திளைக்கிறார்களேயன்றி நடுவில் உள்ள நிலைகளில் அல்ல. இந்த இரண்டு இறுதிநிலைகளில் எதை அடைந்தாலும் மகிழ்ச்சியை அடையலாம் என்று தவசிகள் சொல்கின்றனர். அந்த இரண்டிற்கும் இடையில் உள்ள நடுநிலைகளே துன்பத்தைக் கொண்டிருக்கின்றன[6].(36) (சமாதி நிலை கொண்டு வரக்கூடிய) உண்மையான பேரின்ப நிலையை அடைவதில் வென்றவர்கள், இவ்வுலகத்தின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டவர்கள், பொறாமையற்றவர்கள் ஆகியோர் செல்வத்தை அடைவதாலும், இழப்பதாலும் ஒருபோதும் கலங்குவதில்லை.(37) உண்மையான பேரின்பத்திற்கு வழிவகுக்கும் நுண்ணறிவை {புத்தியை} அடைவதில் தவறியவர்கள், ஆனால் (சாத்திரங்களுடைய அறிவின் துணையால்) மடமை மற்றும் அறியாமையை விஞ்சியவர்கள், அளவுக்குமீறி இன்பத்தையும், அளவுக்கு மீறிய துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.(38) சரியானது, அல்லது தவறானது என்ற கருத்தமைவுகள் எதுவும் இல்லாத மனிதர்கள் செருக்காலும், பிறரை வெற்றி கொண்டதாலும் உணர்வற்றவர்களாகி, சொர்க்கத்தின் தேவர்களைப் போல மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள்[7].(39) இன்பமானது துன்பத்திலேயே முடியும். செயலின்மையே துன்பம்; அதே வேளையில் புத்திசாலித்தனமே (செயல்படுவதே) மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. செல்வாக்கும், செழிப்பும் புத்திசாலியிடம் {செயல்படுபவனிடம்} வசிக்குமேயன்றி, ஒருபோதும் சோம்பேறியிடம் வசிக்காது.(40)இன்பமோ துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ இவற்றில் எது நேர்தாலும் அதை அனுபவிக்க வேண்டும், அல்லது வெல்லப்பட முடியாத இதயத்துடன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.(41) தினமும் நூற்றுக்கணக்கான துன்ப நிகழ்வுகளும், நூற்றுக்கணக்கான அச்சந்தரும் நிகழ்வுகளும் அறியாமையும், மடமையும் கொண்ட மனிதனைத் தாக்குகின்றனவேயன்றி, ஞானியையல்ல.(42) ஞானத்தை அடைந்தவனும், தன் நன்மைக்கான அறிவரைகளைக் கேட்பதில் கவனம் நிறைந்தவனும், பொறாமையற்றவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனுமான நுண்ணறிவுமிக்க மனிதனைத் துன்பத்தால் தீண்டமுடியாது.(43) ஞானமிக்க மனிதன், அத்தகைய அறிவைச் சார்ந்து, (விருப்பம் மற்றும் ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து) இதயத்தைப் பாதுகாத்துக் கொண்டு இங்கே செயல்பட வேண்டும். எதிலிருந்து அனைத்தும் எழுகிறதோ, எதற்குள் அனைத்தும் மறைந்துபோகிறதோ, அந்தப் பரமாத்மாவை அறிந்தவனை உண்மையில் துன்பத்தால் தீண்டமுடியாது[8].(44) எதன் நிமித்தமாகத் துன்பம், இதய எரிச்சல், கவலை ஆகியன ஏற்படுகின்றனவோ, எதன் நிமித்தமாக முயற்சி தூண்டப்படுகிறதோ, அந்த வேரானது ஒருவனின் உடல் பகுதியாகவே இருப்பினும் அதைக் கைவிட வேண்டும்[9].(45)எனது என்ற கருத்தில் பேணிவளர்க்கப்படும் எந்தப் பொருளாக இருந்தாலும், அது துயரம் மற்றும் இதய எரிச்சலின் தோற்றுவாயாக அமையும்.(46) விரும்பப்படும் எந்தப் பொருளும் கைவிடப்படும்போது, அது மகிழ்ச்சியின் தோற்றுவாயாக அமையும். ஆசைக்குரிய பொருட்களைத் தொடரும் மனிதன் அந்தத் தொடர்ச்சியின் போக்கில் அழிவையே அடைவான்.(47) புலன்களை நிறைவு செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியோ, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் பேரின்பமோ, ஆசைகள் அனைத்தின் அழிவில் இருந்து எழும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாது.(48) சரியோ, தவறோ முற்பிறவிச் செயல்களின் விளைவுகள், ஞானிகளையும், மூடர்களையும், துணிவுமிக்கோரையும், மருண்டோரையும் அடைந்தே தீரும்.(49) இவ்வாறே இன்பமும் துன்பமும், ஏற்புடையவையும், ஏற்பில்லாதவையும் தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு மத்தியில் (சக்கரமாகச்) சுழல்கின்றன.(50)
நுண்ணறிவுமிக்கவனும், ஞானியுமான மனிதன், இத்தகைய அறிவைச் சார்ந்து சுகமாக வாழ்கிறான். ஒரு மனிதன் தன் ஆசைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, தன் கோபமானது தன்னிடம் சிறந்ததைப் பெற ஒருபோதும் அனுமதிக்காமல் இருக்க வேண்டும்.(51) இந்தக் கோபம் இதயத்தில் எழுந்து, அங்கே சீற்றத்துடனும், வளத்துடனும் வளர்கிறது. மனிதர்களின் மனங்களில் பிறந்து, உடல்களில் வசிக்கும் இந்தக் கோபமே மரணம் என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது.(52) ஒரு மனிதன், ஓர் ஆமையானது தன் அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்வதைப் போலத் தன் ஆசைகள் அனைத்திலிருந்தும் விலகினால், தன்னொளியுடன் கூடிய அவனது ஆன்மா, தன்னைக் காண்பதில் வெற்றியடைகிறது[10].(53) எனது என்ற கருத்தில் பேணிவளர்க்கப்படும் அந்தப் பொருளாக இருந்தாலும், அது துயரம் மற்றும் இதய எரிச்சலின் தோற்றுவாயாக அமையும்[11].(54) ஒரு மனிதன் எந்த அச்சத்தையும் உணராமல், வேறு எவராலும் அஞ்சப்படாமல் இருக்கும்போது, விருப்பையோ, வெறுப்பையோ அவன் வளர்க்காதபோது, அவன் பிரம்ம நிலையை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(55)உண்மை, பொய்மை, துன்பம், இன்பம், அச்சம், துணிவு, ஏற்புடைமை, ஏற்பில்லாமை ஆகிய இருமைகளைக் கைவிட்டால், நீ அமைதிநிறைந்த ஆன்மாவாகலாம்.(56) ஒரு மனிதன், எந்த உயிரினத்துக்கும் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ தீங்கிழைக்காத போது, அவன் பிரம்ம நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறான்.(57) தவறான வழிநடத்தப்படுவதால் கைவிடமுடியாததும், முதுமையிலும் அழியாததும், மரண நோயாகக் கருதப்படுவதுமான தாகத்தை {ஆசையைக்} கைவிட்டவன் உண்மையான மகிழ்ச்சியை அடைவான்.(58) இதுதொடர்பாக, ஓ! மன்னா, சாதகமற்ற நிலையிலும் நித்திய தகுதியை {புண்ணியத்தை} அடைந்த பிங்களையால் {பிங்களை என்ற வேசியால்} பாடப்பட்ட சுலோகம் கேட்கப்படுகிறது.(59) பிங்களை என்ற பெயரைக் கொண்ட ஒரு வீழ்ந்த பெண்மணி, நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று, ஒரு விபத்தின் காரணமாகத் தன் காதலனின் தோழமை மறுக்கப்பட்டாள். பெரும் துன்பம் நிறைந்த அந்த நேரத்தில், அவள் ஆன்ம அமைதியை அடைவதில் வென்றாள்[12].(60)பிங்களை, “ஐயோ, அமைதிநிறைந்த சுயம் அருகில் இருக்க, வெறியின் வசப்பட்டு நான் நீண்ட பல வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். மரணம் என் வாயிலில் இருக்கிறது. எனினும், இதற்கு முன் நான் தூய்மையின் சாரத்தை நாடவில்லை.(61) ஒன்பது வாயில்களும் ஒரு தூணும் கொண்ட இந்த வீட்டை (உண்மை அறிவின் மூலம்) நான் மறைக்கப் போகிறேன்[13]. அருகில் இருக்கும் பரமாத்மாவை உண்மையில் அன்புக்குரியதாய் எந்தப் பெண்தான் கருதுகிறாள்?[14](62) நான் இப்போது விழித்துக் கொண்டேன். அறியாமையெனும் உறக்கத்தில் இருந்து இப்போது விழித்துவிட்டேன். நான் இனி ஆசைக்கு வசப்பட மாட்டேன். உண்மையில் நரகத்தின் உடல் வடிவங்களான மனிதக்காதலர்கள், காமத்துடன் அணுகி இனியும் என்னை வஞ்சிக்க இயலாது.(63) விதியின் மூலமோ, முற்பிறவி செயல்களின் மூலமோ தீமையும் நன்மையைத் தரும். (அறியாமை உறக்கத்திலிருந்து) விழிப்படைந்த நான், உலகப் பொருட்கள் மீது கொண்ட ஆசைகள் அனைத்தையும் கைவிடுகிறேன். என் புலன்களை முழுமையாக ஆட்சி செய்யப் போகிறேன்.(64) ஆசை மற்றும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் இன்பமாக உறங்குவான். நம்பிக்கை மற்றும் ஆசையில் இருந்து அடையும் விடுதலையே இன்ப நிலையாகும்” என்றாள் {என்பது அந்த ஸ்லோகமாகும்}. பிறகு, ஆசையையும், நம்பிக்கையையும் விலக்கியப் பிங்களை இன்பமாக உறங்கினாள்” என்றார் {அந்தப் பிராமணர்}”.(65)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கல்விமானான அந்தப் பிராமணர் சொன்ன இவற்றாலும் இன்னும் பிற சொற்களாலும் ஆறுதலடைந்த மன்னன் சேனஜித், (தன் துயரத்தைக் கைவிட்டு) இன்பத்தை உணர்ந்து மகிழ்ச்சியை அடைந்தான்”.(66)
மேதாவியின் நீதி! – சாந்திபர்வம் பகுதி – 175- காலம் வேகமாகச் செல்வதைக் கருத்தில் கொண்டு எந்த உயர்ந்த நன்மையை மனிதன் நாட வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; நிச்சயத்தன்மையற்ற வாழ்வைக் குறித்தும், பிரம்மத்தைத் தவிர அனைத்தும் ஒடுங்குதலைக் குறித்தும் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலை உரைத்த பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் அழிவைத் தரும் காலம் கடந்து கொண்டிருக்கிறது[1]. ஓ! பாட்டா, நாடப்பட வேண்டிய நன்மையான பொருள் எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு குறிப்பிட்ட பிராமணர், பெரும் நுண்ணறிவைக்கொண்டவனும், (இதன் காரணமாகவே) மேதாவி என்றழைக்கப்பட்ட ஒரு மகனைப் பெற்றிருந்தார்.(3) ஒரு நாள், மோக்ஷ அறம் குறித்த உண்மைகளை நன்கறிந்த அந்த மகன் {மேதாவி}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த தன் தந்தையிடம் பேசினான்.(4)
மகன் {மேதாவி}, “ஓ! தந்தையே, மனிதனின் வாழ்வுக்காலம் மிக விரைவாகக் கடந்து செல்வதைக் கொண்டு ஒரு ஞானம் கொண்ட மனிதன் என்ன செய்ய வேண்டும்? ஓ! தந்தையே, ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளின் போக்கை, அவற்றின் கனிகளைக் குறித்துத் தவறாமல் எனக்குச் சொல்வீராக. உம்மிடம் இருந்து கேட்டு, அந்தக் கடமைகளை நோற்க நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(5)
தந்தை, “ஓ! மகனே {மேதாவியே}, ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை {ஆசிரமத்தை} நோற்று, வேதங்களை முதலில் கற்க வேண்டும். பிறகு அவன் தன் மூதாதையர்களை மீட்பதற்காக {கிருஹஸ்தாசிரமத்தை ஏற்று} பிள்ளைகளைப் பெற வேண்டும். அடுத்ததாகத் தன் நெருப்பைக் கிண்டி, (பரிந்துரைக்கப்பட்டிருக்கும்) வேள்விகளை முறையான சடங்குகளுடன் செய்ய அவன் முனைய வேண்டும்[2]. இறுதியாக, அவன் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் காட்டிற்குள் நுழைய வேண்டும்” என்று சொன்னார்.(6)மகன் {மேதாவி தன் தந்தையிடம்}, “இவ்வாறு அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டு, இவ்வாறு உலகம் தாக்கப்படும்போது, மரண விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய தடுக்கப்பட முடியாத காரியங்கள் அதன் மீது பாயும்போது, எவ்வாறு நீர் இவ்வார்த்தைகளை அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(7)
தந்தை {மேதாவியிடம்}, “எவ்வாறு உலகம் தாக்கப்படுகிறது? எதனால் அது சூழப்பட்டிருக்கிறது? மரண விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் தடுக்கப்பட முடியாத அளவில் அதன் {உலகத்தின்} மீது பாய்வதுமான அஃது எது? ஏன் நீ என்னை இவ்வாறு அச்சுறுத்துகிறாய்” என்று கேட்டார்.(8)
மகன் {மேதாவி தன் தந்தையிடம்}, “காலனே உலகத்தைத் தாக்குகிறான். முதுமையால் உலகம் சூழப்படுகிறது. (மனிதனின் வாழ்வுக்காலத்தைத் தொடர்ந்து குறைக்கும் வகையில்) வந்து போய்க் கொண்டிருக்கும் இரவுகளே அந்தத் தடுக்கப்பட முடியாத காரியங்கள்.(9) காலன் யாருக்காகவும் காத்திருக்க மாட்டான், (ஆனால் ஒவ்வொரு உயிரினத்தையும் நோக்கி உறுதியாக நகர்ந்து வருகிறான்) எனும்போது, அறிவு எனும் ஆடையால் மறைத்துக் கொள்ளாமல் என்னால் எவ்வாறு காலத்தைக் கடத்த முடியும்[3]?(10) அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு இரவும், ஒருவனின் இருப்புக்குரிய காலத்தைக் குறைத்தபடியே கடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஞானம் கொண்ட மனிதன் அந்த நாளை கனியற்றதாகவே கருத வேண்டும்.(11) (காலன் உறுதியாக அணுகி வரும்போது) ஆழமற்ற நீரின் மீனைப் போல மகிழ்ச்சியை உணர்பவன் எவன் இருக்கிறான்? மனிதனின் ஆசைகள் நிறைவேறும் முன்பே அவனிடம் காலன் வந்து விடுகிறான்.(12) ஒரு மனிதன் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, அவனது இதயம் வேறுவகையில் நிலைத்திருக்கும்போது, செம்மறியாட்டைக் கவர்ந்து செல்லும் பெண்புலியைப் போலக் காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(13)நீர் உமது நன்மைக்கானதை இந்த நாளிலேயே நிறைவேற்றிக் கொள்வீராக. இந்தக் காலன் உம்மிடம் வர வேண்டாம். காலன், தன் பலியாடுகளை அவர்கள் செயல்கள் நிறைவடையும் முன்பே இழுத்துச் செல்கிறான்.(14) நாளை செய்ய வேண்டிய செயல்களை இன்றே செய்ய வேண்டும், பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலிலேயே செய்துவிட வேண்டும். தன் பலியாடுகளின் செயல்கள் நிறைவேறிவிட்டனவா, இல்லையா என்று பார்த்துக் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(15) இன்று தன்னிடம் காலன் வரமாட்டான் என்பதை எவன் அறிவான்? இளம் வயதிலேயே ஒருவன் அறம்பயில வேண்டும். வாழ்வென்பது நிலையற்றதாகும். அறம்பயிலப்பட்டால், இம்மையில் புகழும், மறுமையில் பேரின்பமும் அதன் விளைவுகளாக இருக்கும்.(16)
அறியாமையில் மூழ்கிய ஒருவன், மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் உழைக்க ஆயத்தமாக இருக்கிறான். நல்ல அல்லது தீய செயல்களைச் செய்யும் ஒருவன், அவற்றை வளர்த்துப் பெருக்குகிறான்.(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலவே, மகன்கள், விலங்குகளில் இன்புற்று, தன் ஆசைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அடிமையாக இருக்கும் மனிதனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(18) அவன் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் மலர்களைப் பறிக்க இயலும் முன்பே, தன் ஆசைக்குரிய பொருட்களை அடைந்து மனநிறைவடையும் முன்பே, இரையை அபகரிக்கும் புலியைப் போல அவனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(19) “இது செய்து முடிக்கப்பட்டது; இது செய்யப்பட வேண்டும்; இது பாதிச் செய்யப்பட்டிருக்கிறது” என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இன்பத்தை நிறைவு செய்வதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு மத்தியில் இருக்கும்போதே காலன் அவனை அடக்கி ஆட்கொள்கிறான்.(20)
மனிதன் தன் வயல், தன் கடை, அல்லது தன் இல்லம் என எத்தொழிலைப் பற்றுடன் செய்து கொண்டிருந்தாலும், அவன் தன் செயல்களின் கனியை அடையும் முன்பே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(21) பலவீனன், பலமிக்கவன், துணிவுமிக்கவன், அச்சம் கொண்டவன், மூடன், கல்விமான் இவர்களில் எவரும் தங்கள் செயல்களின் கனிகளை அடையும் முன்பே காலன் அவர்களை அபகரித்துச் செல்கிறான்.(22) பல்வேறு காரணங்களில் இருந்து எழும் மரணம், முதுமை, நோய், கவலை ஆகிய அனைத்தும் உமது உடலிலேயே வசித்து வரும்போது, எவ்வாறு உம்மால் முற்றிலும் {ஒன்றுமில்லாததுபோல} நலமாக வாழ முடிகிறது?(23) உடல்படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, அதன் அழிவுக்காக (அழிவைக் கொண்டுவர) முதுமையும், மரணமும் அதனைத் தொடர்ந்து வருகின்றன. இருப்பில் இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்களை அனைத்தும் இவ்விரண்டால் {முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால்} பாதிப்பை அடைகின்றன.(24) (தோழர்களுக்கு மத்தியில்) கிராமங்களிலும், நகரங்களிலும் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் பற்றே, காலனின் வாய் என்று சொல்லப்படுகிறது[4]. மறுபுறம், காடானது, புலன்களை அடைத்து வைக்கும் கொட்டகையாகக் கருதப்படுகிறது. இது ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது[5].(25)நல்லோர், அக்கட்டுகளை அறுத்து விடுதலையை அடைகின்றனர், அதே வேளையில் தீயோர் அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(26) எண்ணம், சொல், அல்லது செயலால் ஒருபோதும் உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காதவன், உயிருக்கும், உடைமைக்கும் அழிவைத்தரும் இத்தகையவற்றால் ஒருபோதும் தீங்குற மாட்டான்[6].(27) காலனின் தூதர்கள் (நோய் மற்றும் முதுமை) அணுகும்போது, பொய்மையை விழுங்கும் வாய்மையைத் தவிர எதனாலும் அவர்களை {நோய் மற்றும் முதுமையை} தடுக்க முடியாது. வாய்மையே அழிவில்லாதது[7].(28) இந்தக் காரணங்களுக்காகவே ஒருவன் வாய்மை எனும் நோன்பைப் பயில வேண்டும்; வாய்மையுடன் ஒன்று கலப்பத்தில் அவன் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்; வாய்மையே அவனின் வேதம் என அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்; தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, வாய்மையின் மூலம் அவன் காலனை வெல்ல வேண்டும்.(29) மரணமின்மை, மரணம் ஆகிய இரண்டும் உடலிலேயே விதைக்கப்பட்டிருக்கிறது. அறியாமை மற்றும் குழப்பம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் மரணமடைகிறான்; அதே வேளையில் வாய்மையின் மூலம் மரணமின்மை அடையப்படுகிறது.(30)எனவே, தீங்கிழைப்பதில் இருந்து விலகி, வாய்மையை அடைய முயன்று, ஆசை மற்றும் கோபத்தின் ஆதிக்கத்தை மீறி, இன்பம் மற்றும் துன்பத்தை ஒரே பார்வையில் கருதி, அமைதியை அடைந்து, மரணமில்லாதவனை {தேவனைப்} போல நான் மரணத்தைத் தவிர்க்கப் போகிறேன்.(31) சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் வரும் வரையில், என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சாந்தி வேள்வி, பிரம்ம வேள்வி, சொல்வேள்வி, மன வேள்வி, செயல் வேள்வி ஆகியவற்றில் நான் என்னை ஈடுபடுத்திப் போகிறேன்[8]. பிசாசங்கள் மட்டுமே செய்யக்கூடியதும், நிலையற்ற கனிகளை உண்டாக்கக்கூடியதுமான கொடுமையான விலங்கு வேள்விகளையோ, உடல் வேள்விகளையோ {உடலைத் தியாகம் செய்வதையோ} என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு செய்ய முடியும்[9]?(33) எவனுடைய சொற்கள், எண்ணங்கள், தவங்கள், துறவு, யோகத் தியானம் ஆகியன அனைத்தும் பிரம்மத்தில் நிலைத்திருக்குமோ, அவன் உயர்ந்த நன்மையை ஈட்டுவதில் வெல்வான்.(34) அறிவுக்கு (அறிவுக்கண்ணுக்கு) இணையான வேறு எந்தக் கண்ணும் இல்லை. வாய்மை (வாய்மையில் உள்ளதைப்) போன்ற தவம் வேறேதும் இல்லை. பற்று (பற்றில் உள்ளதற்கு) இணையான துயரம் வேறேதும் இல்லை. துறவை (துறவில் அடைவதைப் போன்ற) மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(35)பிரம்மத்தில் இருந்து பிரம்மத்தின் மூலமாகப் பிறந்தவன் நான். நான் பிள்ளையற்றவனாக இருந்தாலும், என்னைப் பிரம்மத்திற்கே அர்ப்பணிப்பேன். நான் பிரம்மத்திற்கே திரும்புவேன். என்னை மீட்க ஒரு மகன் தேவையில்லை.(36) பயிலல், நன்னடத்தை, பொறுமை, தீங்கிழையாமை, எளிமை, சடங்குகள் மற்றும் காணும் வேள்விகள் அனைத்தையும் தவிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டு அனைத்தையும் சமமாகப் பார்ப்பதால் விளையும் நிலையான தனிமையை விட ஒரு பிராமணனுக்குச் செல்வம் வேறேதும் இல்லை.(37) ஓ! பிராமணரே, ஒருவன் மரணமடையப் போகிறான் எனும்போது, செல்வம், உற்றார் உறவினர், மனைவியர் ஆகியவற்றால் அவனுக்கு என்ன பயன் இருக்க முடியும்? குகைக்குள் மறைக்கப்பட்டிருக்கும் உமது சுயத்தை {ஆன்மாவை} நாடுவீராக. உமது பாட்டன்மாரும், உமது தந்தைமாரும் எங்கே இருக்கின்றனர்” என்று கேட்டான் {மேதாவி}”[10].(38)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, (இந்தக் கதையில்) மகனின் பேச்சைக் கேட்ட பிறகு, வாய்மை எனும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அந்தத் தந்தையின் வழியில் நீயும் நடப்பாயாக” என்றார்.(39)
சம்பாகர்! – சாந்திபர்வம் பகுதி – 176-இன்பமும், துன்பமும், செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எவ்வாறு ஏற்படுகின்றன என்று கேட்ட யுதிஷ்டிரன், துன்பத்தால் அவதிப்பட்டு, முக்தியை அடைந்த சம்பாகர் எனும் ஒரு ஏழைப் பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்கு உரைத்த பீஷ்மர்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, இன்பமும், துன்பமும், வெவ்வேறு நடைமுறைகளையும், சடங்குகளையும் நோற்று வாழும் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எங்கிருந்து எவ்வாறு உண்டாகுகின்றன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அமைதியையும், விடுதலையையும் {முக்தியையும்} தானே அடைந்த சம்பாகரால் {சம்யாகரால்} என்ன பாடப்பட்டது என்பது குறித்த பழங்கதையொன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், தீய மனைவி, தீய உடை, பசி ஆகியவற்றால் துன்பத்தை அடைந்தவரும், துறவு நோன்பை நோற்று வாழ்பவருமான ஒரு குறிப்பிட்ட பிராமணர் இந்த ஸ்லோகங்களை என்னிடம் சொன்னார்[2].(3) இந்தப் பூமியில் பிறந்த மனிதனை, அவன் பிறந்த நாள் முதலே பல்வேறு வகை இன்ப துன்பங்கள் அடைகின்றன.(4) அவன் அந்த இரண்டையும் விதியின் செயல் என ஏற்றுக் கொண்டால் இன்பம் வரும்போது மகிழ்ச்சியையும், துன்பம் வரும்போது துயரத்தையும் அவன் உணர மாட்டான்.(5)உன் மனம் ஆசையற்றிருந்தாலும், நீ இன்னும் பெருஞ்சுமையைச் சுமக்கிறாய். உனக்கான நன்மையை (விடுதலையை) அடைய நீ முயல வில்லை. உன் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் நீ வெல்லவில்லையா?(6) வீட்டையும், விருப்பத்திற்குரிய உடைமைகளையும் துறந்து சென்றால், நீ உண்மையான மகிழ்ச்சியைச் சுவைக்கலாம். அனைத்தையும் இழந்த மனிதன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான்.(7) இவ்வுலகில் முற்றான ஏழைமையே மகிழ்ச்சியாகும். அதுவே நல்ல உடற்கோட்பாடாகும், அதுவே அருள்களின் தோற்றுவாயாகும், அதுவே ஆபத்திலிருந்து விடுதலையாகும். எதிரியற்ற இவ்வழி (ஆசையை வளர்ப்பவர்களால்) அடையமுடியாததாகவும், (ஆசையில் இருந்து விடுபட்டவர்களால்) எளிதாக அடையத்தக்கதாகவும் இருக்கிறது.(8) மூன்று உலகங்களின் ஒவ்வொரு பகுதிகளிலும் என் கண்களைச் செலுத்தும் என்னால், தூய நடத்தையிலும், (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றில்லாமையிலும் ஓர் ஏழைக்கு இணையான மனிதனைக் காண முடியவில்லை.(9) நான் ஏழைமையையும், அரசுரிமையையும் தராசில் எடை பார்த்தேன். அரசுரிமையைவிட ஏழைமையே கனமானதாகவும், பெரும் தகுதிகளைக் கொண்டதாகவும் தெரிந்தது.(10)
செல்வத்தைக் கொண்ட அரசுரிமை எப்போதும் கவலையால் கலங்கடிக்கப்பட்டு, காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஏழைமைக்ககும், அரசுரிமைக்குமிடையில் இந்தப் பெரும் வேறுபாடு இருக்கிறது.(11) எனினும், ஏழையைப் பொறுத்தவரையில், செல்வம் ஏதும் இல்லாதவனாக இருப்பதால் அவன் நம்பிக்கைகளில் {எதிர்பார்ப்புகளில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நெருப்போ, எதிரியோ, மரணமோ, கள்வர்களோ அவனிடம் இருந்து அடைய முடியாத விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(21) தன் விருப்பப்படி திரிபவனும், தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் கிடப்பவனும், அமைதியை அடைந்தவனுமான அத்தகைய மனிதனை தேவர்களும் மெச்சுகின்றனர்.(13) கோபம் மற்றும் காமத்தால் பாதிக்கப்படும் செல்வந்தன், தீய இதயத்தால் களங்கப்பட்டவனாக இருக்கிறான். அவன் சரிந்த பார்வைகளையும், வெற்று பேச்சுகளையும் பார்க்கவும் பேசவும் செய்கிறான். பாவம் நிறைந்தவனாகும் அவனுடைய முகம் எப்போதும் சுருக்கங்களுடன் கரியதாக இருக்கிறது.(14) தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், கோபத்தால் தூண்டப்பட்டும், கடுமையான, கொடுஞ்சொற்களை அவன் பேசுகிறான். அத்தகைய மனிதன் மொத்த உலகத்திற்கும் ஒரு கொடையளித்தாலும், அவனைப் பார்க்கவும் யார் விரும்புவார்?(15)
செல்வத்துடன் தொடர்ந்த தோழமையானது, பலவீன அறிவுடைய மனிதனைக் கலங்கடிக்கிறது. காற்றானது கூதிர் கால மேகங்களை விரட்டுவதைப் போலவே, அது {செல்வத்தின் தோழமை} அவனது அறிவை விரட்டிவிடும். செல்வத்துடனான தோழமை, “நான் அழகானவன். நான் செல்வம்படைத்தவன்.(16) நான் உயர் பிறவி கொண்டவன். நான் செய்வதனைத்திலும் வெற்றியடைபவன். நான் சாதாரண மனிதன் கிடையாது” என்று அவனை நினைக்க வைக்கிறது. இந்த மூன்று காரணங்களின் விளைவால் அவனது இதயம் போதை கொள்கிறது.(17) உலகம் சார்ந்த உடைமைகளில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட இதயத்துடன் அவன் தன் தந்தைமாரால் திரட்டப்பட்ட செல்வத்தை வீணாக்குகிறான். தேவைகளால் செல்வம் குறைந்ததும் அவன் பிறரின் செல்வத்தை அபகரிப்பதை பழியற்றதாகக் கருதுகிறான்.(18) இந்நிலையில் அவன் தடைகள் அனைத்தையும் மீறி,அனைத்துப் பக்கங்களிலும் பிறரின் உடைமைகளை அபகரிக்கும்போது, காடுகளில் காணப்படும் மானைக் கூரிய கணைகளால் பீடிக்கும் விளையாட்டு வீரனைப் போல மனிதர்களின் ஆட்சியாளர்கள் அவனைத் தடுத்துப் பீடிக்கின்றனர்.(19)
அத்தகைய மனிதன், நெருப்பு மற்றும் ஆயுதங்களால் தோன்றும் இதே வகைத் துன்பங்கள் பலவற்றில் மூழ்குகிறான்.(20) எனவே, உலகம் சார்ந்த மனச்சார்புகளையும் (பிள்ளைகள் மனைவியர் போன்ற ஆசைகளையும்), கடந்து செல்பவையான அனைத்து உண்மையின்மைகளையும் (உடல் போன்றவற்றையும்) ஒருவன் தன் நுண்ணறிவின் துணையுடன் அலட்சியம் செய்து, அந்த வலிநிறைந்த துன்பங்களுக்கு உரிய மருந்துகளை இட்டுத் தீர்வு காண வேண்டும்.(21) துறக்காமல் ஒருவனால் இன்பத்தை ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் தனக்கான உயர்ந்த நன்மையை அவனால் ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் எளிதாக ஒருபோதும் உறங்க முடியாது. எனவே, அனைத்தையும் துறந்து, நீ மகிழ்ச்சியை அடைவாயாக” என்றார்.(22)
சம்பாகர் பாடிய இவையனைத்தும், ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது. இந்தக் காரணத்திற்காக நான் துறவை அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறேன்” {என்றார் பீஷ்மர்}[3].(23)
மங்கி! – சாந்திபர்வம் பகுதி – 177-ஒரு மனிதன் ஏழையாக இருந்தால் அவன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; தன் காளைகளை இழந்த மங்கியின் அவதானிப்புகள்; கவலைகள் நிறைந்ததே இன்பம் என்ற மங்கியின் அறிவுரையையும், அவர் அழிவின்மையை அடைந்த தகவலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(ஈகை மற்றும் வேள்விச்) செயல்களை நிறைவேற்ற விரும்பி, (தேவையான) செல்வத்தை அடையத் தவறும் எந்த மனிதனும், அவனை மூழ்கச் செய்யும் செல்வ தாகத்தை அடக்கவும், இன்பத்தை அடையவும் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(இன்பம், துன்பம், மதிப்பு, அவமதிப்பு போன்ற) அனைத்தையும் சமமாகப் பார்ப்பவனும், (பூமிசார்ந்த விருப்பங்களை நிறைவு செய்ய) ஒருபோதும் முயலாதவனும், பேச்சில் வாய்மை பயில்பவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனும், செயல்பாட்டில் {காரியத்தில்} விருப்பம் இல்லாதவனுமான ஒருவனே மகிழ்ச்சியான மனிதனாவான்.(2) இந்த ஐந்தும் முற்றான அமைதி, அல்லது விடுதலைக்கான {முக்தி /மோக்ஷத்துக்கான} வழிமுறைகள் எனப் பழங்காலத்தவர் சொல்லியிருக்கின்றனர். இவையே சொர்க்கமென்று அழைக்கப்படுகின்றன. இவையே அறம். இவையே பேரின்பம்.(3) பற்றுகளில் இருந்து விடுபட்ட போதும் மங்கியால் பாடப்பட்ட பழைய கதை ஒன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(4)
செல்வத்தை விரும்பியவரான மங்கி, ஏமாற்றங்களால் தாம் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுவதைக் கண்டார். இறுதியில் சிறிதாக எஞ்சியிருந்த தன் உடைமையைக் கொண்டு, இளம் காளைகள் இரண்டை (உழவில் ஈடுபடுத்த) பயிற்றுவிப்பதற்காக நுகத்தடியுடன் சேர்த்து வாங்கினார்.(5) ஒரு நாள் நுகத்தில் பூட்டப்பட்ட இரு காளைகளும், பயிற்சிக்காக (வயலுக்குக்) கொண்டு செல்லப்பட்டன. சாலையில் படுத்திருக்கும் ஓர் ஒட்டகத்தைக் கண்டு மிரண்ட அந்த விங்குகள் திடீரென அந்த ஒட்டகத்தை நோக்கி ஓடி,(6) அதன் கழுத்தின் மீது விழுந்தன. காளைகள் தன் கழுத்தில் விழுந்ததைக் கண்டு சினந்த ஒட்டகம், தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற அந்த இரண்டு உயிரினங்களையும் சுமந்து கொண்டே, விரைவான எட்டுகளை வைத்து, பெரும் வேகத்துடன் ஓடியது.(7)
தன் காளைகள் இரண்டும் அந்தப் பலமிக்க ஒட்டகத்தால் சுமந்து செல்லப்படுவதைக் கண்டும், அவை மரணத்தருவாயில் இருப்பதைப் பார்த்தும் மங்கி, “செல்வமானது விதியால் விதிக்கப்படவில்லையெனில், கவனத்துடன் முயன்று, சாதிக்கத் தேவைப்படும் திறனும், நம்பிக்கையும் உள்ள ஒரு புத்திசாலியால் கூட அஃதை {செல்வத்தை} ஒருபோதும் அடையமுடியாது.(9) செல்வத்தை ஈட்டுவதில் அர்ப்பணிப்புடன் கூடிய நான், இதற்கு முன்பே பல்வேறு வழிமுறைகளில் முயன்றுவிட்டேன். நான் கொண்ட உடைமைக்கு விதியால் கொண்டுவரப்பட்ட தீப்பேற்றைப் பார்.(10) அந்த ஒட்டகம் சமமற்ற பாதையில் ஓடிக் கொண்டிருப்பதால் என் காளைகள் விழுவதும் எழுவதுமாகச் சுமந்து செல்லப்படுகின்றன. இந்நிகழ்வு ஒரு விபத்தாகத் தெரிகிறது[1].(11) ஐயோ, என் அன்புக்குரிய காளைகள் இரண்டும் அந்த ஒட்டகத்தின் கழுத்தில் இரண்டு ரத்தினங்களைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இது விதியின் விளைவு மட்டுமே. {சூழ்நிலைக்கேற்ப மாறும்} வாய்ப்புக்குரியவற்றில் முயற்சி பயனற்றதாகும்.(12) அல்லது, முயற்சி போன்ற (விளைவுகளை உண்டாக்கும் காரணியான) ஏதாவது ஒன்றின் இருப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஆழ்ந்த தேடலின் அதன் அடியில் விதி இருப்பது கண்டடையப்படலாம்[2].(13) எனவே இன்பத்தை விரும்பும் மனிதன் பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். பற்றுகள் ஏதும் இல்லாமல், செல்வமீட்டும் ஆசையேதும் இல்லாமல் உள்ள மனிதன் மகிழ்ச்சியாக உறங்கலாம்.(14)–சுகர், அனைத்தையும் துறந்து, தன் தந்தையின் {வியாசரின்} வசிப்பிடத்தில் இருந்து பெருங்காட்டுக்குச் சென்ற போது[3],(15) “தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தவன், தன் விருப்பங்களைக் கைவிட்டவன் ஆகிய இருவருக்கிடையில் அனைத்தையும் துறந்தவனான பின்னவனே அனைத்தின் கனிகளையும் அடைந்த முன்னவனைக் காட்டிலும் மேன்மையானவன்.(16) எவராலும் ஆசையின் எல்லையை அடைய முடியாது. அறிவும், தீர்மானமும் அற்ற ஒருவன் மட்டுமே, தன் உடலையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்வதில் ஓர் ஆர்வத்தை உணர்வான்” என்றார்.(17)செயல்படும் விருப்பம் ஒவ்வொன்றையும் தவிர்ப்பாயாக. ஓ! காமம் கொண்ட என் ஆன்மாவே, பற்றுகள் அனைத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு அமைதியை அடைவாயாக. (ஆசையாலும், நம்பிக்கையாலும் {எதிர்பார்ப்பாலும்}) நீ மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறாய். அவ்வாறிருப்பினும், நீ ஏன் இன்னும் பற்றுகளில் இருந்து விடுதலையடையவில்லை?(18) நான் உன்னால் அழிவடையத்தகாதவன், உன்னோடு விளையாடி களிக்கத் தகுந்தவன் என்றால், ஓ! செல்வத்தில் ஆசை கொண்ட ஆன்மாவே, என்னைக் காமத்தை நோக்கித் தூண்டாதே.(19) நீ திரட்டிய செல்வத்தை மீண்டும் மீண்டும் இழந்தாய். ஓ! செல்வத்தில் ஆசை பேராசை கொண்ட என் மூட ஆன்மாவே, செல்வத்தில் உள்ள ஆசையில் இருந்து எப்போதும் நீ விடுதலையடையப் போகிறாய்?(20) என் மடமையில் நான் நாணுகிறேன். நான் உனது பொம்மையாகிவிட்டேன். இவ்வாறே ஒருவன் பிறருக்கு அடிமையாகிறான்.(21) பூமியில் பிறந்த எவரும் இதற்கு முன்பு ஆசையின் எல்லையை அடைந்ததில்லை, இனி பிறக்கப் போகும் எவரும் அஃதை அடையப்போவதுமில்லை. செயல்கள் அனைத்தையும் கைவிடும் நான், இறுதியாக உறக்கத்தில் இருந்து விழிக்கிறேன். நாம் இப்போது விழித்துவிட்டேன்.(22) ஓ! ஆசையே, நூறு துன்பங்களால் எவ்வளவுதான் பாதிப்படைந்தாலும் நீ நூறு துண்டுகளாக உடைந்து போவதில்லை, ஆகையால் உன் இதயம் வஜ்ரம் போலக் கடினமானது என்பதில் ஐயமில்லை.(23) ஓ! ஆசையே, உன்னையும், உன் அன்புக்குரியவை அனைத்தையும் நான் அறிவேன். உன் அன்புக்குரியவற்றை நாடுவதால், நான் எனக்குள் மட்டுமே மகிழ்ச்சியை அடைவேன்[4].(24) ஓ! ஆசையே, நான் உன் வேரை அறிவேன். நீ விருப்பத்தில் இருந்து உதிக்கிறாய்[5]. எனவே, நான் விருப்பத்தைத் தவிர்ப்பேன். அப்போது நீ வேர்களோடு அழிக்கப்படுவாய்.(25)செல்வத்திற்கான ஆசை ஒருபோதும் மகிழ்ச்சியால் நிறைந்ததல்ல. {செல்வம்} அடையப்பட்டால், அஃதை {செல்வத்தை} அடைந்தவன் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறான். அடைந்த பிறகு தொலைத்தால், அது மரணம் என்றே உணரப்படுகிறது. இறுதியாக, {செல்வத்தை} அடைவது என்பதே உறுதியற்ற ஒன்றாகும்.(26) ஒருவன் சரணடைவதாலேயே செல்வத்தை அடையமுடியாது. இதைவிட வேறு எது வலிநிறைந்ததாக இருக்க முடியும்? அடையப்படும்போது, அதன் அளவில் ஒருவன் ஒருபோதும் நிறைவடைவதில்லை, ஆனால் {மீண்டும் மீண்டும்} அடைய முனைவதைத் தொடர்கிறான்.(27) கங்கையின் இனிய நீரைப்போலச் செல்வமானது ஒருவனுடைய ஆவலை மட்டுமே தூண்டும். அதுவே என் அழிவாகும். நான் இப்போது விழித்துவிட்டேன். ஓ! ஆசையே, என்னைவிட்டு அகல்வாயாக. (ஐந்து) பூதங்களின் தொகையான {ஐம்பூதங்களாலான} என் உடலைப் புகலிடமாகக் கொண்ட அந்த ஆசை விரும்பிய இடத்திற்குச் சென்று அது விரும்பியவாறு மகிழ்ச்சியாக வாழட்டும்[6].(29) ஆன்மா இல்லாதவர்களே, நீங்கள் ஆசை மற்றும் காமத்தைப் பின்தொடர்வதால் எனக்கு உங்களிடம் இன்பமில்லை. உங்கள் அனைவரையும் கைவிட்டு, நற்பண்பின் குணத்திடம் {சத்வ குணத்தை} என் புகலிடமாகக் கொள்ளப் போகிறேன்[7].(30)என் உடல் மற்றும் மனத்திலேயே அனைத்து உயிரினங்களையும் கண்டு, யோகத்தில் என் அறிவையும், நல்லோரின் அறிவுரைகளில் என் வாழ்வையும், பிரம்மத்தில் ஆன்மாவையும் அர்ப்பணிக்கப்போகிறேன்.(31) எந்தப் பற்றும் இல்லாமல், எவ்வகை துன்பங்களும் இல்லாமல், இத்தகைய கவலைகளில் என்னை மீண்டும் நீ மூழ்கடிக்காதவாறு நான் இவ்வுலகில் இன்பமாகத் திரியப் போகிறேன்[8].(32) ஓ! ஆசையே, நான் தொடர்ந்து உன்னால் கலங்கடிக்கப்பட்டால், (என் மீட்பை அடையும்) பாதை ஏதும் அற்றவனாக இருப்பேன். ஓ! ஆசையே, நீயே தாகத்தையும், துயரத்தையும், களைப்பையும், உலைவையும் உண்டாக்குகிறாய்.(33) செல்வ இழப்பில் ஒருவன் உணரும் துயரமானது, வேறு எந்தச் சூழ்நிலையில் உணரப்படுவதைவிடக் கூரியதாகவும், பெரியதாகவும் இருக்கிறது என நான் நினைக்கிறேன். செல்வம் இழந்தவனை உற்றாரும், நண்பர்களும் அவமதிக்கின்றனர்.(34) பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான அவமதிப்புகளும், அதற்கு மேலான வலிநிறைந்த குற்றங்கள் பலவும் உடைமையிலேயே உள்ளன. மறுபுறம், செல்வத்தில் வசிக்கும் சிறு மகிழ்ச்சியும் கூட வலி மற்றும் துன்பத்துடன் கலந்தே இருக்கிறது[9].(35)செல்வம்படைத்தவன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கள்வர்களால் கொல்லப்படுகிறான், அல்லது பல்வேறு வகைக் கடுமைகளால் அவன் பீடிக்கப்படுகிறான், அல்லது எப்போதும் அச்சத்தால் நிறைந்திருக்கிறான்.(36) நீண்ட காலத்திற்குப் பிறகு, இறுதியாக, செல்வத்தில் விருப்பம் என்பது துன்பத்தால் நிறைந்தது என்பதைப் புரிந்து கொண்டேன். ஓ! ஆசையே, எந்த நோக்கத்தில் நீ உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கிறாயோ, அதையே நீ என்னைத் தொடரும்படி வற்புறுத்துகிறாய். நீ தீர்மானமில்லாமல் இருக்கிறாய். நீ ஒரு முட்டாள். நீ நிறைவடைவதற்குக் கடினமானவன். உன்னை நிறைவு செய்ய முடியாது. நீ நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறாய்.(37) (ஒரு பொருளைத் தொடர்வதில்) அடைவதற்கு அஃது எளிதானதா, கடினமானதா என்று நீ விசாரிப்பதில்லை. நீ பாதாளத்தைப் போலவே விளிம்பு வரை நிறைவுசெய்யப்பட முடியாதவன். நீ என்னைத் துன்பத்தில் மூழ்கடிக்க விரும்புகிறாய். ஓ! ஆசையே, இந்த நாள் முதல் நான் உன்னுடன் வாழ இயலவனாகிறேன்.(38) என் உடைமையை இழந்ததால் முதலில் துன்பமடைந்த நான், இப்போது பற்றுகளில் இருந்து முற்றாக விடுபடுவதில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறேன். உன்னையும், உன்னைத் தொடர்ந்து வருபவற்றையும் நான் இந்தக் கணமுதல் ஒருபோதும் நினைக்க மாட்டேன்.(39) உன் காரியத்தில் இந்தப் பெருந்துன்பத்தை ஏற்கனவே நான் உணர்ந்திருக்கிறேன். (இப்போது) நுண்ணறிவற்றவனாக நான் என்னைக் கருதவில்லை. என் உடைமையை இழந்ததன் விளைவால் துறவைப் பின்பற்றப் போகும் நான், அனைத்து வகை நோயிலிருந்தும் விடுபட்டவனாவேன்.(40)
ஓ! ஆசையே, என் இதயத்தில் இருக்கும் விருப்பங்கள் அனைத்தையும் உன்னோடு சேர்த்து நான் கைவிடப்போகிறேன். நீ மீண்டும் என்னுடன் வசிக்கமாட்டாய், அல்லது என்னோடு விளையாட மாட்டாய்.(41) என்னைக் குறித்துத் தவறாகப் பேசுவோரையோ, அவதூறாகப் பேசுவோரையோ நான் மன்னிப்பேன். தீங்கிழைக்கப்படும்போதும் நான் தீங்கிழைக்க மாட்டேன். வெறுப்புணர்வால் எனக்கு ஏற்பில்லாத வார்த்தைகளை யாரும் பேசினாலும், அவ்வார்த்தைகளை அலட்சியம் செய்து, ஏற்புடைய வார்த்தைகளிலேயே நான் அவனிடம் பேசுவேன். நிறைவான இதயத்துடனும், சுகமான புலன்களுடனும் என்னால் அடையப்படுபவற்றைக் கொண்டு மட்டுமே நான் எப்போதும் வாழப்போகிறேன்.(42) என் எதிரியான உன்னால் ஊக்குவிக்கப்படும் எந்த விருப்பத்திலும் நான் பங்கேற்கமாட்டேன். பற்றிலிருந்து விடுதலை, ஆசை துறப்பு, மனநிறைவு, அமைதி, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, உலகளாவிய கருணை ஆகிய பண்புகள் இப்போது என்னிடம் வந்திருக்கின்றன.(43) எனவே, ஆசை, காமம், தாகம், துயர்மிக்கநிலை ஆகியன என்னைத் தவிர்க்கட்டும். நான் இப்போது நற்பண்பின் பாதையைப் பின்பற்றுகிறேன்.(44) ஆசை, காமம் ஆகியவற்றைக் கைவிட்ட எனக்கு இப்போது மகிழ்ச்சி பெரிதாக இருக்கிறது. காமத்தின் ஆதிக்கத்துக்கு ஒருபோதும் இனி வசப்படாமல், தூய்மையற்ற ஆன்மா கொண்ட ஒரு மனிதனைப் போல இனி துன்பத்தில் உழலமாட்டேன்.(45)
ஒருவன் கைவிடப்போகும் ஆசைகளின் அளவின்படி அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான். உண்மையில், ஆசையின் ஆதிக்கத்திற்கு வசப்படுபவன் எப்போதும் துன்பத்திலேயே உழல்கிறான்.(46) ஆசை தொடர்பான எந்த விருப்பங்களையெல்லாம் ஒரு மனிதன் கைவிடுகிறானோ, அவை அனைத்தும் ஆசையின் பண்பைக் கொண்டவை {ரஜோ குணத்தைச் சார்ந்தவை}. கவலை, நாணமின்மை, நிறைவின்மை ஆகிய அனைத்தும் ஆசை மற்றும் செல்வத்தில் இருந்தே எழுகின்றன.(47) கோடை காலத்தில் குளிர்ந்த தடாகத்தில் மூழ்கும் மனிதனைப் போல நான் பிரம்மத்திற்குள் இப்போது நுழைகிறேன். செயலை நான் தவிர்க்கிறேன். துயரத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். என்னிடம் இப்போது தூய மகிழ்ச்சி வருகிறது.(48) ஆசையின் நிறைவின் மூலம் விளையும் இன்பநிலை, அல்லது, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் தூய இன்ப நிலை ஆகியவை, தாக வகைகள் அனைத்தையும் கைவிடுவதால் எழும் பேரின்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாதவையாகும்.(49) ஆசையின் கொள்கையைக் கொன்று, கசந்த எதிரியான உடலை ஏழின் தொகையாக்கி, பிரம்மம் எனும் அழிவில்லா நகரத்திற்குள் நுழைந்து ஒரு மன்னனைப் போல நான் என் நாட்களைக் கடத்தப்போகிறேன்” என்றார் {மங்கி}[10].(50)இத்தகைய நுண்ணறிவைச் சார்ந்த மங்கி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, உயர் இன்ப நிலையின் வசிப்பிடமான பிரம்மத்தை அடைந்தார்.(51) உண்மையில், மங்கி தன் காளைகள் இரண்டை இழந்ததன் விளைவால் அழிவின்மையை அடைந்தார். உண்மையில், அவர் ஆசையின் வேர்களை அறுத்ததால், அதன் மூலமே அவர் அந்த உயர்ந்த பேரின்பத்தை அடைந்தார்” என்றார் {பீஷ்மர்}.(52)
போத்யர்! – சாந்திபர்வம் பகுதி – 178-மிதிலையின் மன்னன் ஜனகனின் அவதானிப்புகளையும், பழங்காலத்தில் யயாதிக்கும் முனிவர் போத்யருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; போத்யரின் ஐந்து ஆசான்கள்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பழங்கதையில் ஆன்ம அமைதியை அடைந்தவனும், விதேஹர்களின் ஆட்சியாளனுமான ஜனகனால் பாடப்பட்ட சுலோகம் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) அந்த ஏகாதிபதி {ஜனகன்}, “என் செல்வம் அளவற்றது. அதே வேளை நான் எதையும் கொண்டிருக்கவில்லை. (என் நாடான) மிதிலை மொத்தமும் எரிந்து போனாலும் எனக்கு எந்த இழப்பு இல்லை” என்று சொன்னான் {ஜனகன்}.(2)
பற்றிலிருந்து விடுபடுவது என்ற இது தொடர்பாகவே போத்யரின் உரையும் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக. ஒருகாலத்தில் நகுஷனின் அரச மகன் (யயாதி), ஆசையைக் கைவிட்டதன் விளைவாக ஆன்ம அமைதியை அடைந்தவரும், சாத்திரங்களை அணுக்கமாக அறிந்தவருமான முனிவர் போத்யரிடம் கேள்வி கேட்டான்.(4)
அந்த ஏகாதிபதி {யயாதி}, “ஓ! பெரும் ஞானியே, அமைதி குறித்து எனக்கு அறிவுரைகளை வழங்குவீராக. செயல்பாடுகள் எவற்றிலும் ஈடுபடமாலும், ஆன்ம அமைதியுடனும் எந்த அறிவைச் சார்ந்து நீர் இவ்வுலகில் திரிகிறீர்?” என்று கேடாடன்.(5)
போத்யர் {யயாதியிடம்}, “நான் பிறரின் அறிவுரைகளின்படியே என்னை நடத்திக் கொள்கிறேன், ஆனால் பிறருக்கு ஒருபோதும் நான் அறிவுரைகள் வழங்குவது கிடையாது. எனினும், (எதைக் கொண்டு என் நடத்தை கட்டமைக்கப்பட்டுள்ளதோ அந்த) அறிவுரைகளின் குறியீடுகளைக் குறிப்பிடுகிறேன். அதன் கருத்தை நீ தானாக அறிந்து கொள்வாயாக.(6) பிங்களை, அன்றில்[1], பாம்பு, காட்டின் வண்டுகள், (பின்வரும் கதையில் உள்ள) கணைகள் செய்பவன், (பின்வரும் கதையில் உள்ள) கன்னிகை ஆகிய இந்த ஆறுபேரும் எனக்கு ஆசான்களாவர்” என்றார் {போத்யர்}.(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (இதயத்தைக் கலங்கடிப்பதில்) நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மிகப் பலமிக்கதாகும். நம்பிக்கையிலிருந்து {எதிர்பார்ப்பிலிருந்து} விடுபடுவதே உயர்ந்த இன்பநிலையாகும். எதிர்பார்ப்பில்லாத அளவுக்கு நம்பிக்கையைக் குறித்த பிங்களை அமைதியாக உறங்கினாள்.(8) அலகில் இறைச்சியைக் கொண்டிருந்த அன்றிலைக் கண்டு பிற பறவைகள், வேறு இறைச்சி எதையும் காணாமல், அதைத் தாக்கி அழித்தன. ஒரு குறிப்பிட்ட அன்றிலானது, இறைச்சியை மொத்தமாகத் தவிர்த்து இன்பத்தை அடைந்தது[2].(9) தனக்கென வீட்டைக் கட்டிக் கொள்வது ஒருவனுக்குத் துன்பத்தை உண்டாக்குமேயன்றி இன்பத்தையல்ல. மற்றொரு உயிரினத்தின் வசிப்பிடத்தைத் தனதாக எடுத்துக் கொள்ளும் பாம்பு இன்பமாக வாழ்கிறது.(10)பிச்சையெடுக்கும் நிலையை அடைந்த தவசிகள், எந்த உயிரினத்திற்கும் தீங்கேற்படுத்தாமல் காட்டில் உள்ள வண்டுகளைப் போல மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.(11) கணைகளைச் செய்யும் ஒருவன் தன் அருகே மன்னன் கடந்து செல்வதையும் கவனிக்காத அளவுக்குத் தன் பணியில் ஆழ்ந்த கவனத்துடன் ஈடுபட்டு வந்தான்.(12) பலர் ஒன்றுகூடியிருக்கும்போது, சச்சரவுகள் உண்டாகும். இருவர் ஒன்றாக வசித்தால், நிச்சயம் உரையாடுவார்கள். எனினும், ஒரு கதையின் வரும் கன்னிகையின் மணிக்கட்டில் உள்ள {ஒற்றை} சங்கு வளையலை {சங்குகளாலான வளையலைப்} போல நான் தனியாகத் திரிந்து வருகிறேன்” என்றார் {பீஷ்மர்}[3].(13)(இந்தக் கதை மிகப் பழமையானது; இது பாகவதத்தில் முழுமையாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில், தன் தந்தையின் இல்லத்தில் வசித்து வந்த ஒரு கன்னிகை, எண்ணற்ற பிராமணர்களுக்கு ரகசியமாக உணவளிக்க விரும்பினாள். களஞ்சியத்தில் இருந்து தானியத்தை எடுக்கும்போது, சங்குகளாலான அவளது வளையல்கள் குலுங்கத்தொடங்கின. அவ்வொலியால் கண்டுபிடிக்கப்படுவோம் என அஞ்சிய அவள் ஒரு கைக்கு ஒரே ஒரு வளையலை மட்டும் விட்டுவிட்டு எஞ்சிய அனைத்தையும் உடைத்துவிட்டாள்”)
ஆஜகர நோன்பு! – சாந்திபர்வம் பகுதி – 179-இவ்வுலகில் வெற்றியடைவதற்குரிய ஒழுக்கத்தையும், சிறந்த கதியை அடைய மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், ஆஜகர முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; தவிர்க்கப்பட முடியாத மரணத்தைக் கருத்தில் கொண்டு உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் பாகுபாடில்லாமல் இருந்த ஆஜகரர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனிதர்களின் நடத்தைகளை அறிந்தவரே, எந்த நடத்தையின் மூலம் ஒரு மனிதன் துயரத்தில் இருந்து விடுபட்டு இவ்வுலகில் வெற்றியடைவான் என்பதை எனக்குச் சொல்வீராக. சிறந்த கதியை அடைவதற்கு ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு செயல்பட வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் உள்ளதும், பிரஹலாதனுக்கும், தவசி ஆஜகரருக்கும்[1] இடையில் நடந்ததுமான உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் பிரஹலாதன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தூய அமைதியான ஆன்மா கொண்டவருமான, திரிந்து கொண்டே இருப்பவருமான ஒரு பிராமணரிடம் கேள்வி கேட்டான்.(3)பிரஹலாதன் {தவசி ஆஜகரிடம்}, “ஆசையில் இருந்து விடுபட்டு, தூய ஆன்மாவுடன், பணிவு, தற்கட்டுப்பாடு, செயல்பாட்டில் விருப்பமின்மை, வன்மத்தில் இருந்து விடுதலை, ஏற்புடைய பேச்சு ஆகியவற்றுடனும், கண்ணியம், நுண்ணறிவு மற்றும் ஞானத்துடனும் (எளிமையாக) ஒரு குழந்தையைப் போல நீர் வாழ்கிறீர்.(4) நீர் ஒருபோதும் எந்த வகைப் பொருளை ஈட்டுவதில் மகிழ்ச்சியோ, இழப்பதில் துயரோ கொள்ளவில்லை. ஓ! பிராமணரே, நீர் எப்போதும் நிறைவுடன் இருக்கிறீர், உலகில் உள்ள எதையும் மதிப்பதாகவும் தெரியவில்லை.(5) ஆசை மற்றும் விருப்பத்தின் உந்துதலில் பிற உயிரினங்கள் அனைத்தும் சுமந்து செல்லப்படும்போது, அறம், பொருள், இன்பம் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் நீர் முற்றான பாகுபாடின்றி இருக்கிறீர். (கலக்கமடையும் தன்மை இல்லாதவராக) அமைதி நிலையில் நீடித்திருப்பவராக நீர் தெரிகிறீர்.(6) புலன்களுக்குரிய பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் நீர், விடுதலையடைந்த சுயத்துடன் (எதிலும் பங்கெடுத்துக் கொள்ளாமல்) அனைத்தையும் பார்த்துக் கொண்டே செல்கிறீர்.(7) ஓ! தவசியே, இந்த உமது ஞானம் என்ன? கல்வி என்ன? (எதன் விளைவாக இவையனைத்தும் சாத்தியப்படுகிறதோ அந்த) நடத்தை {ஒழுக்கம்} என்ன? ஓ! பிராமணரே, இஃது எனக்கு நன்மையைச் செய்யும் என்று நீர் நினைத்தால் இதை எனக்குத் தாமதமில்லாமல் சொல்வீராக” என்று கேட்டான் {யயாதி}”.(8)
பீஷ்மர் தொடர்ந்தார், “உலகக் கடமைகளை அறிந்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான அந்தப் பிராமணர் {ஆஜகர்}, பிரஹலாதனால் இவ்வாறு கேட்கப்பட்டுப் பெரும் முக்கியத்துவத் வாய்ந்த, இனிய வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(9)
{தவசி ஆஜகர்}, “ஓ! பிரஹலாதா, உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, சிதைவு, மரணம் ஆகியவை, (புத்திக்கு) எட்டக்கூடிய எந்தக் காரணமும் இல்லாதிருப்பதைப் பார். இந்தக் காரணத்திற்காகவே நான் இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதில்லை[2].(10) அண்டத்திலுள்ள (செயல்பாடுகளுக்கான) மனச்சார்புகள் அனைத்தும், உயிரினங்களின் (உள்ளுறை) இயல்புகளில் இருந்து பாய்வது காணப்படுகிறது. (அண்டத்தில் உள்ள) அனைத்துப் பொருட்களும், அதனதன் இயல்புகளைச் சார்ந்தவையாக இருக்கின்றன. எனவே, நான் எதிலும் திளைப்படைவதில்லை[3].(11) ஓ! பிரஹலாதா, அனைத்து வகைச் சேர்க்கையும், பிரிவின் இயல்திறனை {நாட்டத்தை} கொண்டவையாகும். அனைத்து உடைமைகளும் நிச்சயம் முடிவில் அழிவடையும். எனவே நான் எந்தப் பொருளையும் அடைவதில் என் இதயத்தை ஒருபோதும் நிலைநிறுத்துவதில்லை.(12) பண்புகளைக் கொண்ட அனைத்துப் பொருட்களும் அழிவடையப் போவது நிச்சயம். பொருட்களின் தோற்றம் மற்றும் முடிவு ஆகிய இரண்டையும் அறிந்த (என்னைப் போன்ற) ஒருவனுக்கு என்ன எஞ்சியிருக்கிறது?(13)பெருங்கடலின் நீரிலுண்டான பெரிய அல்லது சிறிய பொருட்கள் அனைத்திற்கும் முடிவு காணப்படுகிறது.(14) ஓ! அசுரர்களின் தலைவா {பிரஹலாதா}, நிலத்தைச் சார்ந்த அசைவன, அசையாதன ஆகிய பொருட்கள் அனைத்துக்கும் மரணம் ஏற்படுவதை நான் வெளிப்படையாகக் காண்கிறேன்.(15) ஓ! தானவர்களில் சிறந்தவனே, வானத்தில் பறக்கும் சிறகு படைத்த பலமான உயிரினங்களுக்கும் உரிய காலத்தில் மரணம் நேர்கிறது.(16) ஆகாயத்தில் நகர்ந்து வரும் பெரியனவும், சிறியனவுமான ஒளிக்கோள்களும் அவற்றின் காலம் நேர்கையில் கீழே வீழ்கின்றன.(17) படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மரணத்திற்கு ஆட்படக் கூடியன என்பதைக் கண்டு, அனைத்துப் பொருட்களும் அதே இயல்பைக் கொண்டனவே என்று நினைத்து, அறிவை அடைந்து, இதயத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் நான் அமைதியாக உறங்குகிறேன்.(18)
எந்தச் சிரமமுமின்றி அதிகமான உணவை அடைந்தால், அதை அனுபவிக்க நான் தயங்குவதில்லை. மறுபுறம், பல நாட்கள் சேர்ந்தாற்போல எதையும் உண்ணாமல் கடந்திருக்கிறேன்.(19) சில வேளைகளில் மக்கள் விலைமதிப்புமிக்க உணவு பொருட்களை அபரிமிதமகாவும், சில வேளைகளில் சிறு அளவும், சில வேளைகளில் சொற்ப அளவிலும் கொடுத்து உண்ணச் செய்கிறார்கள், சில வேளைகளில் எந்த உணவும் எனக்குக் கிடைப்பதில்லை.(20) சில வேளைகளில் நான் ஒரு தானியத்தின் ஒரு பகுதியை {நொய்யை} மட்டும் உண்கிறேன்; சில வேளைகளில் எண்ணெய் எடுக்கப்பட்ட காய்ந்த பிண்ணாக்கையும் உண்பேன். சில வேளைகளில் அரிசியும், இறைச்சியும், ஆடம்பர வகையிலான பிற உணவும் உண்பேன்.(21) சில வேளைகளில் சிறந்த வகையிலான உயர்வான படுக்க விரிப்பில் உறங்குகிறேன். சில வேளைகளில் வெறுந்தரையில் உறங்குகிறேன். சில வேளைகளில் என் படுக்கை அற்புதமான மாளிகையிலோ, அறையிலோ இருக்கிறது.(22) சில வேளைகளில் மரவுரி அணிகிறேன், சில வேளைகளில் சணலால் செய்யப்பட்ட ஆடைகளையும், சில வேளைகளில் பட்டாடைகளையும், சில வேளைகளில் மான் தோல்களையும், சில வேளைகளில் விலைமதிப்புமிக்க வையிலான ஆடைகளையும் உடுத்துகிறேன்.(23) முயற்சி இன்றி என்னால் அடையப்படும், அறத்திற்கு இசைவான எந்த இன்பங்களையும் நான் ஒருபோதும் புறக்கணிப்பது கிடையாது. அதே வேளையில் அடைவதற்கரிதான அத்தகைய பொருட்களை அடைய நான் முயற்சி செய்வதும் கிடையாது.(24) நான் பின்பற்றி வரும் கடும் நோன்பு ஆஜகரம் என்றழைக்கப்படுகிறது[4]. இந்த நோன்பால் அழியாத்தன்மையை அடையமுடியும். அது மங்கலமானதும், துன்பமற்றதுமாகும். அஃது ஒப்பற்றதும், தூய்மையானதுமாகும். அது நல்லோரின் ஆலோசனைகளுக்கு இசைவானதாகும். அதை ஒருபோதும் பின்பற்றாத மூடர்களால் அஃது அங்கீகரிக்கப்படுவதில்லை. தூய்மையான இதயத்துடன் நான் என்னை அந்த ஒழுக்கத்தின்படியே அமைத்துக் கொள்கிறேன்.(25)என் மனம் ஒருபோதும் இந்நோன்பிலிருந்து பிறழ்வதில்லை. என் வகைக்கான நடைமுறைகளில் இருந்து நான் பிறழ்ந்ததில்லை. நான் அனைத்தையும் தவிர்க்கும் நிலையில் இருக்கிறேன். நான் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் அறிவேன். அச்சம், கோபம், காமம், பிழையான தீர்மானம் ஆகியவை இல்லாமல், தூய இதயத்துடன் நான் இந்த நோன்பைப் பின்பற்றுகிறேன்.(26) இந்நோன்பில் உணவு, பானம் மற்றும் இன்பத்துக்குரிய பிற பொருட்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அனைத்தும் விதியைச் சார்ந்திருப்பது போல, எங்களைப் போன்றவர்களுக்குக் காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொள்ளும் நடைமுறை ஏதும் கிடையாது. நான் பின்பற்றும் நோன்பானது, இதயத்தின் உண்மையான மகிழ்ச்சிக்குப் பங்களிக்கிறது. தீயோரால் இஃது ஒருபோதும் பின்பற்றப்படுவதில்லை. நான் தூய இதயத்துடன் இதைப் பின்பற்றுகிறேன்.(27) காமத்தால் தூண்டப்பட்ட மனிதர்கள், பல்வேறு வகைகளில் செல்வத்தைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். அந்தத் தொடர்ச்சியில் கலங்கடிக்கப்படும் அவர்கள், கவலையுடன் மனச்சோர்வை அடைகின்றனர். பொருட்களின் உண்மைகளை ஊடுருவியிருக்கும் என் நுண்ணறிவின் துணையால் இவை அனைத்தையும் குறித்து முறையாகச் சிந்தித்து, தூய இதயத்துடன் நான் இந்நோன்பைப் பின்பற்றுகிறேன்.(28) துன்பத்தில் இருக்கும்போது, செல்வத்தை அடைவதற்காக நல்ல மற்றும் தீய மனிதர்களை நாடுவோரை நான் கண்டிருக்கிறேன். அமைதியில் பற்றுடன், விருப்பங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(29) இன்பம், துன்பம், இழப்பு, லாபம், பற்று, துறவு, மரணம், வாழ்வு ஆகிய அனைத்தும் விதியால் விதிக்கப்படுகின்றன என்பதை வாய்மையின் உதவியால் கண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(30)
அச்சம், பற்று, தீர்மானப்பிழை, செருக்கு ஆகியவை இல்லாமலும், ஞானம், நுண்ணறிவு, புரிதல், அமைதியில் பற்று ஆகியவற்றுடனும், பெரும்பாம்புகள் தன்னிடம் வரும் கனியில் அசையாமல் இன்புற்றிருக்கின்ற என்பதைக் கேட்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(31) படுக்கை மட்டும் உணவில் எந்த வகைக் கட்டுப்பாடுகளுமில்லாமல், என் இயல்புடன் கூடிய தற்கட்டுப்பாடு, சிக்கனம், தூய நோன்புகள், வாய்மை, ஒழுக்கத்தூய்மை ஆகியவற்றுடன், (எதிர்காலப் பயன்பாட்டுக்கென) செயல்களின் வெகுமதிகளில் எந்த ஆசையுமில்லாமல் மகிழ்ச்சியுடனும், தூய இதயத்துடனும் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(32) ஆசைக்குரிய நோக்கங்கள் விலக்கப்பட்டதன் விளைவால் சோகத்தின் காரணங்கள் அனைத்தும் என்னை விட்டுப் பறந்தோடிவிட்டன. ஒளியின் இணக்கத்தை அடைந்த பிறகு, தாகமுள்ளதும், கட்டுப்பாடில்லாதும், (முறையான பண்பாட்டில், வெளி பொருட்களின் எந்தத் தேவையுமின்றி) தன்னைச் சார்ந்திருப்பதில் கட்டுப்படக்கூடியதுமான என் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதற்காகத் தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(33)
என் இதயம், மனம், சொற்கள் ஆகியவை எவற்றுக்கு வழிவகுக்குமோ, அவற்றில் கவனம் கொள்ளாமல், அவை தொடர்பான மகிழ்ச்சியானது, அடைவதற்குக் கடினமானது, காலத்தைப் பொறுத்தவரையில் கடந்து போக்ககூடியது என்ற இரண்டையும் கண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(34) இக்காரியத்தைப் பொறுத்தவரையில், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கல்விமான்கள், தங்கள் சாதனைகளை அறிவிக்க விரும்பி, தங்கள் கோட்பாடுகளை நிறுவும்போது, பிறரின் கோட்பாடுகளை நிந்தித்து, சச்சரவுகளைத் தீர்க்க முடியாத இவை தொடர்பான இதையும் அதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.(35) மூடர்கள் சரியான ஒளியில் இந்நோன்பைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். எனினும், இஃதுவே அறியாமைக்கு அழிவைத் தரும் என நான் காண்கிறேன். இஃது அழிவின்மை நிறைந்தது, பல்வேறு வகையான தீமைகளுக்குத் தீர்வானது எனக் கருதி மனிதர்களுக்கு மத்தியில் திரியும் நான், குற்றங்கள் அனைத்தையும் அடக்கி, (உலகம் சார்ந்த நன்மைகளில் நான் கொண்ட) தாகங்கள் அனைத்தில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றார் (ஆஜகரர்}”.(36)
பீஷ்மர் தொடர்ந்தார், “பற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு அச்சம், காமம், மடமை, கோபம் ஆகியவை இல்லாமல், இந்த ஆஜகர நோன்பைப் பின்பற்றும், அல்லது இவ்வாறு அழைக்கப்படுவது போலவே இந்த விளையாட்டில் ஈடுபடும் உயர் ஆன்ம மனிதன், நிச்சம் பெரும் இன்பத்தில் தன் நாட்களைக் கழிப்பதில் வெல்கிறான்”.(37)
காசியபன்! – சாந்திபர்வம் பகுதி – 180-மனிதர்களின் புகலிடம் எது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அறிவே இன்பத்திற்குக் காரணம் என்பதை விளக்க இந்திரனுக்கும், காசியபருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ பாட்டா, உற்றார், செயல்கள், செல்வம், ஞானம் ஆகிய இவற்றில் ஒரு மனிதன் எதைப் புகலிடமாகக் கொள்ள வேண்டும்? என்னால் கேட்கப்படும் இதற்குப் பதில் சொல்வீராக” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஞானமே உயிரினங்களின் புகலிடமாகும். ஞானமே உடைமைகளில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஞானமே உலகில் பேரின்ப நிலையாகும். ஞானமே சொர்க்கமாகும் என்பது நல்லோர் மற்றும் அறவோரின் மதிப்பீடாகும்.(2) பலி, பிரஹலாதன், நமுசி, மங்கி ஆகியோர் (உலகம்) சார்ந்த செழிப்பை இழந்தபோதும் ஞானத்தின் மூலமே பேரின்பத்தை அடைந்தனர். ஞானத்தைவிட மேன்மையானதாக வேறு என்ன இருக்கிறது?(3) இது தொடர்பாக இந்திரனுக்கும், காசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக.(4)
ஒரு காலத்தில் செழிப்புமிக்க வைசியன் ஒருவன், தன் செழிப்பை அனுபவித்துக் கொண்டு, தன் செல்வாக்கில் செருக்குடன், தன் தேரைக் கவனமில்லாமல் செலுத்தி, தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான ஒரு முனிவரின் மகனைக் கீழே தள்ளிவிட்டான்.(5) தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த அந்த இளைஞன், வலி மிகுதியாலும், கோபவசப்பட்டு, துன்பத்தின் ஆளுகையின் கீழ் தீர்மானமுள்ளவனாக, “நான் என் உயிரை விடப் போகிறேன். ஓர் ஏழையின் உயிருக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை” என்று சொன்னான்.(6)
கலக்கமடைந்தவனான அந்தப் பிராமணன், சக்தியை இழந்து, மரணத் தருவாயில் அமைதியாகக் கிடந்த போது, நரியின் வடிவில் காட்சியில் தோன்றிய இந்திரன், அவனிடம்,(7) “(தாழ்ந்த) உயிரினங்கள் அனைத்தும் மனித குலத்தில் பிறக்க ஆசைப்படுகின்றன. மேலும் மனிதர்களில், பிராமண நிலையே மிகவும் விரும்பத்தக்கதாகும்.(8) ஓ! காசியபா, நீ மனிதனாக இருக்கிறாய், மனிதர்களிலும் ஒரு பிராமணனாக இருக்கிறாய். பிராமணர்களிலும், நீ வேதங்களை அறிந்தவனாக இருக்கிறாய். அடைதற்கரிய நிலையை அடைந்திருக்கும் உனக்கு, மடமையால் உயிரை விடுவது தகாது.(9) (உலகம் சார்ந்த) அனைத்து வகை உடைமைகளும் செருக்கு நிறைந்தவையே. அவ்வகையில் ஸ்ருதிகளின் தீர்மானமே முற்றிலும் உண்மையாகும். உயிரைக் கைவிடும் இத்தகைய தீர்மானத்தை அமைத்ததில் நீ காமத்துடன் செயல்படுகிறாய்.(10)
ஓ!, கரங்களைக் கொண்டவர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறார்கள். கரங்களைக் கொண்ட உயிரினங்களின் நிலையை அடைய ஆவலுடன் நான் விரும்புகிறேன்.(11) செல்வங்களில் நீ பேராசை கொள்வதைப் போலவே நாங்களும் கரங்களில் பேராசை கொள்கிறோம். கரங்களை அடைவதைவிட மதிப்பிக்க உடைமை வேறு ஏதும் இல்லை.(12) ஓ! பிராமணா, என் உடலில் நுழைந்திருக்கும் இந்த முள்ளை என்னால் பிடுங்க முடியாது, அல்லது, என்னைக் கடித்துப் பெரிதும் துன்புறுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பூச்சிகளையும், புழுக்களையும் என்னால் நசுக்க முடியாது.(13) பத்து விரல்களுடன் கூடிய இரு கரங்கள் கொடுக்கப்பட்டவர்கள், தங்கள் அங்கங்களைக் கடிக்கும் புழுக்களை நசுக்கி வீசுகிறார்கள்.(14) அவர்கள், மழை, குளிர் மற்றும் வெப்பத்திற்காகத் தங்களுக்காக உறைவிடங்களைக் கட்டிக் கொள்கிறார்கள். சிறந்த உடைகள், நல்ல உணவு, வசதிமிக்கப் படுக்கைகள், சிறந்த உறைவிடங்களை அனுபவிக்கவும் செய்கிறார்கள்.(15)
கரங்களைக் கொண்டோர், பசுக்கள் மற்றும் பிற விலங்குகளால் பயன்பெற்று, சுமை சுமக்கவோ, தங்கள் வாகனங்களை இழுக்கவோ அவற்றைப் பயன்படுத்தி, (தங்கள் சொந்த காரியங்களுக்காக) பல்வேறு வழிமுறைகளில் அந்த விலங்குகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு இந்தப் பூமியில் வாழ்கிறார்கள்.(16) நாவற்றவையும், ஆதரவற்றவையும், சொற்ப பலம் கொண்டவையும், கரங்களற்றவையுமான அந்த உயிரினங்கள் அனைத்தும், (மேற்குறிப்பிட்டவாறு) பல்வேறு வகையான துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கின்றன. ஓ! தவசியே, நற்பேற்றினால் நீ அவற்றைப் போன்றவனாக இல்லை.(17) நற்பேற்றினாலேயே நீ நரியாகவோ, புழுவாகவோ, எலியாகவோ, பாம்பாகவோ, தவளையாகவோ, எந்த வகையைச் சேர்ந்த வேறு எந்த விலங்காகவோ பிறக்கவில்லை.(18) ஓ! காசியபா, இந்த அளவு ஈட்டியிருக்கும் நீ மனநிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். உயிரினங்களுக்கு மத்தியில் நீ மேன்மையான பிராமணனாக இருக்கிறாய் என்ற எண்ணமே எவ்வளவு மகிழ்ச்சியை உனக்கு அளிக்க வேண்டும்?(19) இந்தப் புழுக்கள் என்னைக் கடிக்கின்றன. கரங்கள் இல்லாததால் என்னால் அவற்றை விரட்ட முடியவில்லை. என்னுடைய இந்தப் பரிதாப நிலையைப் பார்.(20)
உண்மையில் நான் என் இருப்புக்காக இன்னும் அதிகமான துன்பங்களில் வீழ்கிறேன், கூடாது என்பதனாலும், பெரும் பாவச் செயல் என்பதனாலுமே, நான் என் உயிரை விடாதிருக்கிறேன்.(21) ஒரு நரியாக இருக்கும் இந்த வகை இருப்புச் சகித்துக் கொள்ள முடியாததாகும். இதேபோன்று துயர இருப்புக்கான பலவகைகளும், அதைவிடத் துயரமான இருப்பு வகைகளும் இருக்கின்றன.(22) பிறப்பால் சில குறிப்பிட்ட வகை உயிரினங்கள் மகிழ்ச்சியாகவும், சில பெருந்துன்பத்திலும் இருக்கின்றன. ஆனால், முற்றான மகிழ்ச்சியை உடைமையாகக் கொண்ட எந்த வகை உயிரினமும் இருப்பதாக நான் காணவில்லை.(23) செல்வத்தை அடையும் மனிதர்கள், அடுத்ததாக அரசுரிமையை விரும்புகின்றனர். அரசுரிமையை அடைந்த பிறகு, அவர்களுடைய அடுத்ததாக அவர்கள் தேவ நிலையை விரும்புகிறார்கள். அந்த நிலையையும் வென்ற பிறகு, அவர்கள் தேவர்களின் தலைமையை அடைய விரும்புகிறார்கள்.(24) (பிறப்பால் நீ பிராமணனாக இருப்பதால்) நீ செல்வந்தனானால், உன்னால் ஒருபோதும் மன்னனாக முடியாது. (உன் பிராமண நிலையானது, தேவ நிலைக்குச் சமமாகவோ, மேன்மையானதாகவோ இருப்பதால்) உன்னால் தேவனாகவும் முடியாது. எவ்வழிமுறையிலாவது (எவ்வழியிலாவது தெய்வீக அருள் கிடைத்து மேன்மையான நிலையை அடைவதற்குப் பதில்) நீ தேவனாகிவிட்டால், நீ தேவர்களின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படலாம். அப்போதும் நீ நிறைவடையமாட்டாய்.(25)
விரும்பிய பொருட்களை அடைவதால் மனநிறைவு விளையாது. அதிகமாக நீரை அருந்துவதால் தாகம் தணியாது[1]. அடைவதில் உள்ள தாகம், புதுவிறகுகள் இடப்படும் நெருப்பைப் போல, இன்னும் புதியவற்றை அடையவே சுடர்விடும்.(26) உன்னில் கவலை இருக்கிறது. ஆனால் உன்னில் மகிழ்ச்சியும் இருக்கிறது. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் உன்னிலேயே இருக்கின்றன. பிறகு, நீ ஏன் துன்பவசப்படுகிறாய்?(27) ஒருவன் தனது விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தின் புலன்களையும், அறிவையும், கூண்டில் உள்ள பறவைகளைப் போல அடைத்து வைக்க வேண்டும்.(28) இரண்டாவது தலையையோ, மூன்றாவது கரத்தையோ வெட்ட முடியாது. இருப்பில் இல்லாதவற்றால் அச்சத்தை உண்டாக்க முடியாது.(29) ஒரு குறிப்பிட்ட பொருள் வழங்கும் இன்பத்தை அறியமுடியாத ஒருவன் அந்தப் பொருளை ஒருபோதும் விரும்பமாட்டான். தீண்டல், பார்வை, கேள்வி ஆகியவை கொடுக்கும் இன்பங்களை உண்மையாக அனுபவிப்பதில் இருந்தே ஆசைகள் எழுகின்றன.(30)வாருணி என்றழைக்கப்படும் மதுவின் சுவையையோ, லட்வாகம் என்றழைக்கப்படும் பறவைகளின் இறைச்சியின் சுவையையோ குறித்து உனக்குக் கருத்தேதும் இருக்க முடியாது. எந்தப் பானமும், எந்த உணவும் இவைற்றைவிட இனிமையாக இருக்க முடியாது.(31) ஓ! கசியபா, நீ ஒருபோதும் சுவைத்ததில்லை என்பதால், மனிதர்களுக்கு மத்தியில் உள்ள பிறவகை மேன்மையான பானங்களையும், உணவையும் உனக்குத் தெரியாது.(32) எனவே, சுவைக்காமல் இருப்பது, தீண்டாமல் இருப்பது, பார்க்காமல் இருப்பது ஆகியவையே மகிழ்ச்சியை அடைவதற்கான மனிதனின் நோன்பாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.(33) கரங்களைக் கொண்ட உயிரினங்கள் பலமிக்கவையாகவும், செல்வமீட்டுபவையாகவும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. மரணம், சிறை மற்றும் இன்னும் பலவித சித்திரவதைகளால் (தங்கள் குலத்தினர் கைகளாலேயே) மீண்டும் மீண்டும் துன்புற்று, மனிதர்களே மனிதர்களால் அடிமைத்தன்மையை அடைகின்றனர். அவர்களது நிலை இவ்வாறிருப்பினும் (அதற்கு வருந்தாமல்), சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இன்பங்களில் ஈடுபடுகின்றனர்.(34,35)
இன்னும் பிறர், கரங்களின் வலிமையைக் கொண்டவர்களாக, அறிவு படைத்தவர்களாக, பெரும் மனோசக்தி கொண்டவர்களாக இருப்பினும், நிந்திக்கத்தக்க, பாவகர, பரிதாபகரமான தொழில்களையே பின்பற்றுகின்றனர்.(36) (கண்ணியமிக்க) வேறு தேவைகளுக்காக அத்தகைய தொழில்களிலிருந்து மாறும் அவர்கள், (முற்பிறவின்) செயல்களாகக் கட்டடப்பட்டவர்களாகவும், விதியின் சக்திக்குக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.(37) மிகத் தீய மனிதர்களான புல்கஸனும், சண்டாளனும்[2] கூடத் தன் உயிரைக் கைவிட ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் வகைப் பிறப்பில் நிறைவுடன் இருக்கிறார்கள். இக்காரியத்தில் மாயையைப் பார்.(38) கரங்களற்றவர்களாக, வாதநோயால் தாக்கப்பட்டவர்களாக, பிற வகை நோய்களால் பீடிக்கப்பட்டவர்களாக உன் இனத்தில் இருப்போரைக் காண்டால், நீ உன்னை மகிழ்ச்சி மிக்கவனாகவும், உன் வகையில் மதிப்புமிக்க உடைமைகளைக் கொண்டவனாகவும் உன்னைக் கருதிக் கொள்வாய்.(39) உன் மறுபிறப்பாள {பிராமண} உடல் பாதுகாப்பாக, நலமாக, நோயற்றதாக, அங்கப் பழுது ஏதும் அற்றதாக இருந்தால், மனிதர்களுக்கு மத்தியில் ஒருபோதும் நீ நிந்திக்கப்பட மாட்டாய் என்பது நிச்சயம்.(40)ஓ! பிராமணா, உண்மையின் அடிப்படையில் காணப்பட்ட எந்தப் பழி இருந்தாலும், உன்னை வர்ணத்திலிருந்து விலக்கினாலும் உன்னோடு ஒட்டியிருக்கும் உன் உயிரை விடுவது உனக்குத் தகாது. எழுவாயாக, அறம் பயில்வாயாக. உன் உயிரை விடுவது உனக்குத் தகாது.(41) ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்வதைக் கேட்டு, என் சொற்களில் நம்பிக்கை வைத்தால், வேதங்களில் சொல்லப்பட்ட உயர்ந்த அற வெகுமதியை நீ அடைவாய்.(42) வேத கல்வியில் நீ உன்னை நிறுவிக் கொள்வாயாக, புனித நெருப்பை முறையாகப் பராமரிப்பாயாக, வாய்மை, தற்கட்டுப்பாடு, ஈகை ஆகியவற்றை நோற்பாயாக. தற்புகழ்ச்சியுடன் ஒருபோதும் பிறருடன் உன்னை ஒப்பிடாதே.(43) வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்கள், தங்களுக்கும், பிறருக்கும் வேள்விகளைத் தாங்களே செய்யத் தகுந்தவர்களாகி, எந்த வகை வருத்தத்தையும், எந்த வகைத் தீமையையும் அடையாமல் இருக்கலாம்.(44) மங்கலமான திதியில், மங்கலமான நட்சத்திரக்கூட்டத்தில், மங்கலமான நேரத்தில் பிறந்தவர்கள், வேள்விகள் செய்யச் சிறப்பாக முயன்று, ஈகை பயின்று, பிள்ளைகளைப் பெற்று, நற்காரியங்களைச் செய்ய விருப்பமுள்ளவர்களாகப் பேரின்பத்தை அடைவார்கள்.(45) மறுபுறம், தீய நட்சத்திரக்கூட்டங்களில், மங்கலமற்ற திதியில், தீய காலங்களில் பிறந்தவர்கள், வேள்விகளற்றவர்களாக, பிள்ளைகளற்றவர்களாக இறுதியில் அசுர வகையில் வீழ்வார்கள்.(46)
என் முற்பிறவியில் பயனற்ற கல்வியைக் கற்றேன். நான் எப்போதும் காரணங்களைத் தேடுபவனாக, மிகச் சொற்பமான நம்பிக்கைக் கொண்டவனாக இருந்தேன். நான் வேதங்களை அவதூறு செய்பவனாகவும் இருந்தேன். வாழ்வின் நால்வை நோக்கங்கள் அற்றவனாக, கண்ணக்குரிய தெளிவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தர்க்க அறிவியலுக்கு அரப்பணிப்புடன் இருந்தேன்.(47) நான் எப்போதும் (சரியாகத் தோன்றும்) காரணங்கள் அடிப்படையிலான வார்த்தைகளைச் சொல்பவனாக இருந்தேன். உண்மையில் என் சபைகளில் நான் எப்போதும் காரணங்களைப் பேசுவேன் (நம்பிக்கையை அல்ல). ஸ்துரிதிகளின் தீர்மானங்களை மதிப்பில்லாமலும், பிராமணர்களிடம் சர்வாதிகத் தொனியில் நான் பேசுவேன்.(48) நான் நம்பிக்கையற்றவனாகவும், அனைத்திலும் ஐயம் நிறைந்தவனாகவும், உண்மையில் அறியாமை கொண்டவனாக இருந்தாலும், கல்வியில் செருக்குடையவனாக இருந்தேன். அந்த என் பாவங்களின் விளைவாலேயே, ஓ! மறுபிறப்பாளனே, இந்தப் பிறவியில் நான் ஒரு நரியின் நிலையை அடைந்தேன்.(49) நூறு பகல்களும், இரவுகளும் ஒரு நரியாக நான் இருந்தால் மீண்டும் மனித நிலையை என்னால் அடைய முடியுமென்றால்,(50) இருப்பின் உண்மை நோக்கங்களில் கவனத்துடன், வேள்விகளிலும், கொடைகளிலும் ஈடுபட்டு மனநிறைவுடன் என் வாழ்வைக் கடத்துவேன். எது அறியப்பட வேண்டும் எது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நான் அப்போது அறிவேன்” {என்றான் நரியின் வடிவில் இருந்த இந்திரன்}.(51)
இவ்வாறு சொல்லப்பட்ட தவசி காசியபன், “ஓ! அறிவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனே, இவை யாவற்றிலும் நான் உண்மையில் பெரிதும் ஆச்சரியமடைகிறேன்.” என்று சொல்லி எழுந்தான்.(52)
அறிவில் விரிவடைந்த கண்களுடன் கொண்ட பார்வையில், அந்தப் பிராமணன், தன்னிடம் பேசியது தேவர்களுக்கும், சச்சிக்கும் தலைவனான இந்திரன் என்பதைக் கண்டான்.(53) தன்னைச் சுமக்கும் சிறந்த வகைக் குதிரைகளைக் கொண்ட அந்தத் தேவனைக் {இந்திரனைக்} காசியபன் வழிபட்டான். பிறகு அந்தத் தேவனின் அனுமதியோடு, அந்தப் பிராமணன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான்” என்றார் {பீஷ்மர்}.(54)
முன்வினைப் பயன்! – சாந்திபர்வம் பகுதி – 181-முற்பிறவியின் நல்வினையும், தீவினையும் அடுத்தப் பிறவியில் அதற்குரிய பலன்களைக் கொடுப்பதன் நிச்சயத் தன்மை; அறம் பயில வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், தவங்கள், ஆசான்களுக்குக் கடமையுணர்வுடன் செய்யக்கூடிய தொண்டுகள் ஆகியவை ஞானத்தையும், உயர்ந்த இன்பத்தையும் உண்டாக்குமா என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மனமானது, ஆசை, கோபம் மற்றும் தீய விருப்பங்களின் நிமித்தமாகப் பாதிப்படைந்தால், அது {மனம்} பாவத்தை நோக்கி நகரும். ஒருவனின் செயல்கள் பாவத்தால் களங்கப்பட்டால், அவன் வலிநிறைந்த {துன்பமிக்க} பகுதிகளில் வசிக்கக் கட்டுப்பட்டவனாவான்.(2) பாவிகள் வறுமையான சூழ்நிலையில் பிறந்து, பஞ்சம், துன்பம், அச்சம், மரணம் ஆகியவற்றின் வேதனைகளுக்கு மீண்டும் மீண்டும் ஆட்படுவார்கள்.(3) தங்கள் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான அறம் சார்ந்த செயல்களைச் செய்வோர் {ஆத்திகர்கள்}, செல்வந்தர்களாகப் பிறந்து, விழாக்களிலும், சொர்க்கத்திலும், மகிழ்ச்சியிலும் மீண்டும் மீண்டும் திளைக்கிறார்கள்.(4) நம்பிக்கையில்லாதவர்கள் {நாத்திகர்கள்}, விலங்கிடப்பட்ட கைகளுடனும், ஊனுண்ணும் விலங்குகள், யானைகள், பாம்புகள் மற்றும் கள்வர்களின் விளைவால் பயங்கரம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(5)
மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்போர், ஈகையாளர்கள், நல்லோரையும், நேர்மையானோரையும் விரும்புவோர் ஆகியோர், தங்கள் ஈகைச் செயல்களின் விளைவால், தூய ஆன்மாக்களுக்குச் சொந்தமான இன்பமான வழியில் செல்கின்றனர்.(6) அறத்தை மதிக்காதவர்களான மனிதர்களில் தீயோர், தானியங்களில் பதர்களைப் போலவும், பறவைகளில் கொசுக்களைப் போலவும் ஆகிறார்கள்.(7) செயல்படுபவனுடைய முற்பிறவி செயல்களை அவன் விட்டுச் செல்ல விரும்பினாலும், அவற்றின் {முற்பிறவி செயல்களின்} விளைவால் விதிக்கப்பட்டவையே அவனைப் பின்தொடரும். அவன் உறங்கும்போது, அதுவும் {முன்வினையும்} உறங்குகிறது, அவன் என்ன செய்தாலும் அதுவும் அதையே செய்கிறது[1].(8) அஃது அவனுடைய நிழலைப் போலவே, அவன் ஓயும்போது ஓய்ந்து, செல்லும் போது சென்று, செயல்படும்போது செயல்படுகிறது.(9) ஒரு மனிதன் என்ன செயலைச் செய்தாலும் அதன் கனிகளை அவன் நிச்சயம் அடைவான்.(10)(தங்களுக்குத் தகுந்த வகை இருப்புகளில்) வீழ விதிக்கப்பட்டவையும், தங்கள் செயல்களின் விளைவால் இன்புறவோ, துன்புறவோ விதிக்கப்பட்டவையுமான உயிரினங்கள் அனைத்தையும் காலம் இழுத்துச் செல்கிறது.(11) முற்பிறவியின் செயல்கள், மலர்களையும், கனிகளையும் போல உரிய காலத்தில் தங்கள் விளைவுகளைப் பெருக்கிக் கொண்டு, உரிய காலத்தில் பெரிதான எவ்வகை முயற்சியுமின்றித் தோன்ற ஒருபோதும் தவறுவதில்லை.(12) மதிப்பு, அவமதிப்பு, ஈட்டல், இழப்பு, சிதைவு, வளர்ச்சி ஆகியவை விதிக்கப்பட்டதுபோலவே, முற்பிறவியல் செய்யப்பட்ட செயல்களின் விளைவுகள் (இன்புறுவதாலோ, துன்புறுவதாலோ) தீர்ந்ததும், எவனிடமும் பாயவோ, தோன்றவோ செய்யாது {வினைகள் தீர்நதாலும் புதிதாகச் செய்யப்படும் செயல்களால்} மீண்டும் மீண்டும் நேர்கின்றன[2].(13) தாயின் கருவறையில் இருக்கும் ஓர் உயிரினம் தன் செயல்களின் விளைவுகளால் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இன்பத்த்திலோ, துன்பத்திலோ இன்புறவோ துன்புறவோ செய்கிறது.(14) குழந்தைப் பருவத்திலோ, இளமைப் பருவத்திலோ, முதுமைப் பருவத்திலோ வாழ்வின் எந்தக் காலத்திலோ நல்ல, அல்லது தீய செயலைச் செய்யும் ஒருவன், தனது அடுத்தப் பிறவியின் அதே காலத்தில் நிச்சயம் அவற்றின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.(15)ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயை அடையாளம் கண்டு அணுகும் கன்றைப் போல, முற்பிறவியின் செயல்களும், அவற்றைச் செய்தவனைப் புதுப் பிறவியில் அடைகின்றன.(16) (அழுக்கான) துணி, நீரில் அலசப்பட்டால் தூய்மையடைகிறது. அதே போல, வருத்தத்தில் எரியும் மனிதர்களும் உரிய தவங்களின் மூலம் எல்லையில்லா இன்பத்தை அடைகின்றனர்[3].(17) காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடிந்தோர், நீண்ட காலத்திற்குத் தவங்களைச் செய்து, தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டு, தங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் நோக்கங்களை அடையலாம்.(18) வானத்தில் பறவைகளின் பாதையையோ, நீரில் மீன்களின் பாதையையோ யாராலும் குறிக்க முடியாததைப் போல, அறிவால் தூய்மையடைந்த ஆன்மாக்களை அடையும் மனிதர்களின் பாதையும் எவராலும் குறிப்பிடப்பட முடியாது[4].(19) பாவச் செயல்கள் குறித்து இதற்கு மேலும் எந்தக் குறிப்புக்கும், பேச்சுக்கும் அவசியமில்லை. உரிய தீர்மானத்துடனும், தனக்குத் தகுந்த சிறப்பான முறையிலும், ஒருவன் தனக்கு நன்மையானதை செய்து கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளிலேயே ஞானத்தையும், உயர்ந்த இன்பநிலையையும் அடைய முடியும்” என்றார் {பீஷ்மர்}.(20)
படைப்புக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 182-அண்டம் படைக்கப்பட்டது குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து படைக்கப்பட்டது? அழிவு நேரும்போது அது யாரிடம் செல்கிறது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) உண்மையில், பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இவ்வண்டம் யாரால் படைக்கப்பட்டது.(2) பொருட்கள் {உயிரினங்கள்} யாவும் எவ்வாறு படைக்கப்பட்டன? இருப்பின் வகைகள் {உயிரினங்களில்} தனித்தனி பிரிவுகள் {ஜாதிகள்} எவ்வாறு ஏற்பட்டன? அறம் மற்றும் மறம் குறித்த விதிகளும், அவற்றின் தூய்மையும், மாசும் எவ்வாறு உண்டாகின? இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இதைக் குறித்தும், மறுமை குறித்தும் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பரத்வாஜரின் கேள்விகளுக்குப் பிருகு சொன்ன புனிதச் சொற்கள் அடங்கிய பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5) சுடர்மிக்க சக்தியும், காந்தியும் கொண்ட பெருமுனிவர் பிருகு, கைலாச சிகரத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட பரத்வாஜர், பின் வரும் வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(6)
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இந்த உலகம் யாரால் படைக்கப்பட்டது?(7) தொடக்கத்தில் உயிரினங்கள் அனைத்தும் எவ்வாறு படைக்கப்பட்டன? சாதிப் பாகுபாடுகள் எவ்வாறு தோன்றின?[1] (ஒழுக்கத்தில்) தூய்மையும் மாசும் எவ்வாறு உண்டாகின? உயிரினங்களுக்கான அறம் மற்றும் மறத்திற்கான விதிகள் எவ்வாறு உண்டாகின?(8) இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இம்மை மற்றும் மறுமை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(9) இவ்வாறு தன் ஐயங்களைக் கேட்ட பரத்வாஜரிடம், சிறப்புமிக்கவரும், பிரம்மத்திற்கு ஒப்பானவரும், மறுபிறப்பாள முனிவருமான பிருகு இந்த வார்த்தைகளைத் தன் மறுமொழியாகச் சொன்னார்.(10)பிருகு {பரத்வாஜரிடம்}, “பெருமுனிவர்களால் மானஸம் {மானஸர்} என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு பழம்பொருள் இருந்தது. அது தொடக்கமும் முடிவும் அற்றதாக இருந்தது. அந்தத் தெய்வீகப் பொருள் ஆயுதங்களால் ஊடுருவப்படாததாக இருந்தது. அது சிதைவும், அழிவும் அற்றதாக இருந்தது.(11) அது வெளிப்படாத பொருளாகச் சொல்லப்படுகிறது. அது நித்தியமானதாக, சிதைவற்றதாக, மாற்றமில்லாததாக இருக்கிறது. அதன் மூலமே உயிரினங்கள் பிறக்கின்றன, அதன் மூலமே இறக்கின்றன.(12) அது மஹத் என்ற பெயரில் ஒரு தெய்வீகப் பொருளை முதலில் படைத்தது[2].(13) மஹத் நனவுநிலையைப் படைத்தது. அந்தத் தெய்வீகப் பொருள் {மஹத்} வெளியைப் படைத்தது. அந்தப் பலமிக்கப் பொருளே {மஹத்தே}, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.(14) வெளியில் இருந்து நீர் பிறந்தது, நீரில் இருந்து நெருப்பும், காற்றும் பிறந்தன. நெருப்பு மற்றும் காற்றின் கலவையில் பூமி பிறந்தது.(15)தான்தோன்றியான மானஸம், ஆற்றலைக் கருவில் கொண்ட ஒரு தெய்வீகத் தாமரையைப் படைத்தது. அந்தத் தாமரையில், வேதப் பெருங்கடலான பிரம்மன் எழுந்தான்[3].(16) அந்தத் தெய்வீகமானவன் பிறந்ததும், “நானே அஃது” என்ற வார்த்தைகளைச் சொன்னான் என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. இதன் காரணமாக அவன் நனவுநிலை என்ற பெயரில் அழைக்கப்படலானான். அவனே படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் உடலாக இருக்கிறான். அவனே அவற்றின் படைப்பாளனாகவும் இருக்கிறான். நாம் காணும் இந்த ஐந்து பூதங்களும் பேராற்றல் கொண்ட அந்தப் பிரம்மனே.(17) மலைகளே அவனது எலும்புகளாக இருக்கின்றன. பூமி அவனது கொழுப்பாகவும், சதையாகவும் இருக்கிறது. பெருங்கடல்கள் அவனது குருதியாக இருக்கின்றன. அண்டவெளி அவனது வயிறாக இருக்கிறது.(18) காற்று அவனது மூச்சாக இருக்கிறது. நெருப்பு அவனது ஆற்றலாக இருக்கிறது. ஆறுகள் அவனது நரம்புகளாக இருக்கின்றன. சூரியன், சந்திரன் என்று அழைக்கப்படும் அக்னியும், சோமனும், அவனது கண்களாகச் சொல்லப்படுகின்றனர்.(19) மேலுள்ள ஆகாயம் அவனது தலையாகச் சொல்லப்படுகிறது. பூமி அவனது இரு கால்களாக இருக்கிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் அவனது கரங்களாக இருக்கின்றன. அவன் அறியப்பட முடியாதவனாகவும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்களாலேயே உணரப்பட முடியா ஆன்மா கொண்டவனாகவும் இருக்கிறான்.(20) மொத்த அண்டத்திலும் படர்ந்தூடுவியிருக்கும் அந்தத் தெய்வீகமானவன், அனந்தன் (முடிவற்றவன்) என்ற பெயரில் அறியப்படுகிறான். நனவுநிலையில் வாழும் அவன், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அறியப்பட முடியாதவனாக இருக்கிறான்.(21) உன்னால் கேட்கப்பட்டதால், எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் இருப்புக்கு அழைக்க நனவுநிலையைப் படைத்தவனோ, எவனிலிருந்து இந்த அண்டம் எழுந்ததோ அவனைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பிருகு}.(22)பரத்வாஜர், “ஆகாயம், அடிவானின் புள்ளிகள், இந்தப் பூமியின் பரப்பு, காற்று ஆகியவற்றின் எல்லை எது? உண்மையை எனக்குச் சொல்வதன் மூலம் என் ஐயங்களைத் தீர்ப்பீராக” என்று கேட்டார்.(23)
பிருகு, “நீ மேலே காணும் வானம் எல்லையற்றதாகும். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுக்கும், தெய்வீகமானவர்களுக்கும் அதுவே வசிப்பிடமாக இருக்கிறது. அஃது இனிமை நிறைந்ததாகவும், பல்வேறு உலகங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதன் எல்லைகளை உறுதிப்படுத்த முடியாது.(24) சூரியனாலும், சந்திரனாலும் தங்கள் கதிர்களின் எல்லைக்கு அப்பால் மேலேயோ, கீழேயோ பார்க்க முடியாது. சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் அடைய முடியாத இடங்களில் சூரியனையோ, நெருப்பையோ போன்ற காந்தியைக் கொண்டவையும், தன்னொளி கொண்டவையுமான ஒளிக்கோள்கள்[4] இருக்கின்றன.(25) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அடைவதற்கரிதாக, முடிவிலா எல்லைகளைக் கொண்டதாக இருப்பதன் விளைவால், பரந்த புகழ்பெற்ற காந்தியைக் கொண்ட இவற்றாலும் {ஒளிக்கோள்களாலும்} கூட ஆகாயத்தின் எல்லைகளைக் காண முடியாது.(26) தேவர்களாலும் அளக்க முடியாத இந்த அண்டவெளியில், ஒன்றன் மேல் ஒன்றாகத் தன்னொளி கொண்ட சுடர்மிக்க உலகங்கள் பல இருக்கின்றன.(27) நிலத்தின் எல்லைகளுக்கு அப்பால் பெருங்கடலின் நீர் இருக்கிறது. நீருக்கு அப்பால் இருள் இருக்கிறது. இருளுக்கு அப்பால் நீரே இருக்கிறது, அதற்கும் அப்பால் நெருப்பிருக்கிறது.(28) கீழ்நோக்கி பாதாள உலகங்களுக்கு அப்பால் நீர் இருக்கிறது. அந்த நீருக்கு அப்பால், பெரும்பாம்புகளின் உலகம் இருக்கிறது. அதற்கும் அப்பால் மீண்டும் வானம் இருக்கிறது, வானத்திற்கு அப்பால் மீண்டும் நீர் இருக்கிறது.(29) இவ்வாறே நீரும் வானமும் மாறி மாறி முடிவில்லாமல் இருக்கின்றன. நீரால் பிரதிபலிக்கப்படும் தெய்வீகத்தின் எல்லைகள் இவ்வாறே இருக்கின்றன. நெருப்பு, காற்று மற்றும் நீரின் எல்லைகளைத் தேவர்களாலும் உறுதி செய்ய முடியாது.(30)நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் இயல்பு அண்டவெளியைப் போன்றதே. உண்மையான அறிவின்மையின் மூலம் அவை தனிப்பட்டவையாகத் தெரிகின்றன.(31) மூன்று உலகங்கள் மற்றும் பெருங்கடலின் எல்லைகளைத் தீர்மானிக்கும் பல்வேறு சாத்திரங்களைத் தவசிகள் படிக்கின்றனர்.(32) எனினும், அடையமுடியாததாகவும், பார்வையால் புரிந்து கொள்ள முடியாதாக இருக்கும் ஒன்றின் எல்லைகள் எவரால் தீர்மானிக்க முடியும்?(33) தேவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களின் பாதையாக இருக்கும் ஆகாயத்தின் எல்லைகளை உறுதி செய்வது சாத்தியமானால் கூட, அளவற்றதும், முடிவிலி என்ற பெயரால் அறியப்படுவதும், உயர் ஆன்ம மானஸம் என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான ஒன்றின் அளவுகளை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.(34) சில வேளைகளில் அதன் வடிவம் சுருங்கி இருக்கிறது, சில வேளைகளில் விரிந்திருக்கிறது, அதற்கு {மானஸத்திற்கு} இணையான ஒன்றைத் தவிர, அதன் எல்லைகளைப் புரிந்து கொள்ள வேறு எவரால் முடியும்?(35) அறத்தின் சாரத்தைக் கொண்டவனாகவும், அசையும் மற்றும் அசையாத பொருட்களின் படைப்பாளனாகவும் அனைத்தையும் அறிந்த தலைவன் பிரம்மன், (நான் ஏற்கனவே சொன்னது போல) அந்தத் தாமரையில் முதன்முதலில் வடிவத்துடன் படைக்கப்பட்டான்” என்றார் {பிருகு}.(36)
பரத்வாஜர், “அந்தத் தாமரையில் இருந்து பிரம்மன் எழுந்ததால், அந்தத் தாமரையே முதலில் பிறந்ததாகக் கருதப்பட வேண்டுமேயன்றி பிரம்மன் கிடையாது. எனினும், பிரம்மன் ஏன் முதல்வனாகச் சொல்லப்படுகிறான்? எனது இந்த ஐயத்தை நீர் நீக்குவீராக” என்று கேட்டார்.(37)
பிருகு, “பூமியே அந்தத் தாமரையாகச் சொல்லப்படுகிறது. பிரம்மனாக மாறிய அந்த மானஸத்தின் வடிவத்திற்கு ஓர் இருக்கை அளிப்பதற்காக அது {அந்தத் தாமரை} படைக்கப்பட்டது.(38) சொர்க்கத்தையே அடைந்த சுமேரு அந்தத் தாமரையின் கர்ணிகையானது[5]. அதிலிருந்தே, பலமிக்க அண்டத் தலைவன் {பிரம்மன்} உலகங்கள் அனைத்தையும் படைத்தான்” என்றார்.(பிருகு}.(38)
பூமியின் தோற்றம்! – சாந்திபர்வம் பகுதி – 183-பல்வேறு பொருட்களும், பூமியும் படைக்கப்பட்ட முறை குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அந்தப் பலமிக்கப் பிரம்மன், மேருவில் வசித்துக் கொண்டு, பல்வேறு வகைப் பொருட்களை எவ்வாறு படைத்தான் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(1)
பிருகு {பரத்வாஜரிடம்}, “(பிரம்மனின் வடிவில் இருக்கும்) பெரும் மானஸம், மனவிருப்பத்தின் ஆணையால் பல்வேறு வகைப் பொருட்களைப் படைத்தது. அனைத்து உயிரினங்களின் பாதுகாப்புக்காக முதலில் அது நீரைப் படைத்தது.(2) நீரே அனைத்துயிரினங்களின் உயிராக இருக்கிறது, நீரே அவற்றின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. நீரில்லையென்றால் அனைத்து உயிரினங்களும் அழியவே வேண்டும். மொத்த அண்டமும் நீரால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(3) பூமி, மலைகள், மேகங்கள், வடிவம் கொண்ட பொருட்கள் என அனைத்தும் நீரின் நிலைமாற்றங்கள் என்றே அறியப்பட வேண்டும். அந்தப் பூதம் {நீர்} திண்மைப் பொருளாவதால் இவை அனைத்தும் உண்டாக்கப்பட்டன” என்றார் {பிருகு}.(4)
பரத்வாஜர், “நீர் எவ்வாறு உண்டானது? நெருப்பும் காற்றும் எவ்வாறு உண்டாகின? பூமியானது எவ்வாறு படைக்கப்பட்டது? இவற்றில் எனக்குப் பேரையங்கள் {பெரும் ஐயங்கள்} இருக்கின்றன” என்று கேட்டார்.(5)
பிருகு, “ஓ! மறுபிறப்பாளனே, பிரம்ம கல்பம் என்றழைக்கப்பட்ட பழங்காலத்தில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்று கூடிய போது, அண்டப் படைப்பு குறித்த இந்த ஐயத்தையே உணர்ந்தனர்.(6) அவர்கள் பேச்சைத் தவிர்த்து, அசைவற்றவர்களாக நீடித்து, (தவ) தியானத்தில் ஈடுபட்டார்கள். உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்ட அவர்கள், ஆயிரம் தேவ வருடங்களுக்கு இவ்வாறே நீடித்திருந்தனர்.(7) அந்தக் காலத்தின் முடிவில், வேதங்களைப் போன்ற புனிதமான சில குறிப்பிட்ட வார்த்தைகள் அடுத்தடுத்து அவர்கள் அனைவரின் காதுகளையும் அடைந்தன. உண்மையில், ஆகாயத்திலிருந்து இந்தத் தெய்வீகக் குரல் சொல்வது கேட்டது:(8)
{அக்குரல்},”முன்பு முற்றிலும் அசைவற்றதாக, அசைக்க முடியாததாக முடிவில்லா வெளி மட்டுமே இங்கே இருந்தது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று ஆகியவை இல்லாமல் அஃது உறங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(9) அப்போது இருளுக்குள் அதைவிடக் கரியதான ஏதோ ஒன்றைப் போல நீர் எழுந்தது. பிறகு நீரின் அழுத்தத்தால் காற்று எழுந்தது.(10) துளையில்லா வெற்றுப்பாத்திரம் முதலில் ஒலியேதும் அற்றதாக இருந்தாலும், நீரும், காற்றும் நிரப்பப்பட்டதும் பேரொலியை எழுப்புவதைப் போலவே,(11) முடிவிலா வெளி நீரால் நிரப்பப்பட்ட போது, அந்த நீரினூடாகத் துளைத்துக் கொண்டு பேரொலியுடன் காற்று எழுந்தது[1].(12) பெருங்கடலின் நீரழுத்தத்தால் இவ்வாறு உண்டான காற்றே இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது. (தடையில்லாமல்) வெளிக்கு வந்த அதன் இயக்கம் ஒருபோதும் நிற்காமல் இருக்கிறது.(13)அப்போது, காற்றுக்கும், நீருக்கும் இடையில் உண்டான உராய்வின் விளைவால், பெரும் வலிமையையும், சுடர்மிக்க ஆற்றலையும் கொண்டதும், மேல்நோக்கிய தழல்களுடன் கூடியதுமான நெருப்பு இருப்பில் எழுந்தது. வெளியை மறைத்திருந்த இருளை அந்நெருப்பு அகற்றியது.(14) காற்றின் துணையுடன் கூடிய நெருப்பு, வெளியையும், நீரையும் ஒன்றாக இழுத்தது. உண்மையில், நீருடன் இணைந்து நெருப்பு திண்மையடைந்தது.(15) நெருப்பின் நீர்ப்பகுதியானது, வானத்தில் இருந்து விழுந்தபோது திண்மையடைந்து, பூமி என்று அறியப்படும் ஒன்றாக ஆனது.(16) எதில் அனைத்தும் பிறந்தனவோ, அந்தப் பூமியே, அல்லது நிலமே, அனைத்து வகைச் சுவை, அனைத்து வகை மணம், அனைத்து வகை நீர்மங்கள், அனைத்து வகை உயிரினங்களுக்குத் தோற்றுவாயாக இருக்கிறது” என்றது {அக்குரல்}.(17)
பஞ்சபூதக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 184-தாவரங்களும் ஐம்பூதங்களைக் கொண்டன, எனவே அவைகளுக்கும் உயிர் உண்டு என்பதையும், அசையும் உயிரினங்களில் ஐம்பூதங்கள் எவ்வாறு கலந்திருக்கின்றன என்பதையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “உயர் ஆன்ம பிரம்மன் ஆயிரக்கணக்கான உயிரினங்களைப் படைத்திருக்கும்போது, அவன் முதலில் படைத்தவையும், பேருயிரினங்களும் {மஹா பூதங்களும்}, அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவையுமான ஐம்பூதங்களை மட்டுமே உயிரினங்கள் {பூதங்கள்} என்ற தனிப்பட்ட பெயரைக் கொண்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்.(1,2)
பிருகு {பரத்வாஜரிடம்}, “முடிவிலி அல்லது அகன்ற என்ற வகையைச் சார்ந்த அனைத்துப் பொருட்களும் பெரியது {மஹத்} என்ற பெயரைப் பெறுகின்றன. இதன் காரணமாகவே இந்த ஐம்பூதங்களும், பெரும் உயிரினங்கள் {மஹாபூதங்கள்} என்று அழைக்கப்படுகின்றன[1].(3) காற்றானது செயல்பாடாக இருக்கிறது. வெளியானது கேட்கப்படும் ஒலியாக இருக்கிறது. நெருப்பானது அதன் உள்ளிருக்கும் வெப்பாக இருக்கிறது. நீரானது அதில் உள்ள நீர்ச்சாரமாக இருக்கிறது. பூமியானது {நிலமானது} திண்மை அடைந்த பொருளாக {பருப்பொருளாக} சதைகளாக எலும்புகளாக இருக்கிறது. இவ்வாறே (உயிரினங்களின்) உடல்கள் (பழைமையான) ஐந்து பூதங்களால் ஆனவையாக இருக்கின்றன.(4) அசையும், அசையாத பொருட்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களால் ஆனவையாகவே இருக்கின்றன. உயிரினங்களின் ஐம்புலன்களிலும் ஐம்பூதங்களே கலந்திருக்கின்றன. காதில் வெளியின் பண்புத்தொகுதிகள் கலந்திருக்கின்றன. மூக்கில் பூமியும்; நாவில் நீரும்; தீண்டலில் காற்றும்; கண்களில் ஒளியும் (அல்லது நெருப்பும்) கலந்திருக்கின்றன” என்றார் {பிருகு}.(5)பரத்வாஜர், “அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் ஐம்பூதங்களின் தொகுதியாக இருக்குமானால், அசையாத பொருட்கள் அனைத்திலும் அந்தப் பூதங்கள் காணப்படாதது ஏன்?(6) மரங்களில் வெப்பமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவற்றுக்கு எந்த அசைவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் அவை அடர்ந்த துகள்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஐம்பூதங்கள் காணப்படவில்லை.(7) மரங்கள் கேட்பதில்லை; அவை காண்பதுமில்லை; மணம் மற்றும் சுவையையும் அவை உணரவல்லவையாக இல்லை. தீண்டல் உணர்வும் அவற்றிடம் இல்லை. எவ்வாறு அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதியாகக் கருதப்படலாம்?(8) மரங்களில் திரவபொருள், வெப்பம், பூமி {நிலம்} ஆகியவை ஏதும் இல்லாததன் விளைவால், அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதிகளாகக் கருதப்படக்கூடாது என்றே தெரிகிறது” என்றார் {பரத்வாஜர்}.(9)
பிருகு, “அடர்த்தியைக் கொண்டிருந்தாலும், மரங்களினுள் நிச்சயம் வெளி {ஆகாயம்} இருக்கிறது. மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவது அவற்றில் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.(10) அவற்றினுள் வெப்பம் இருப்பதன் விளைவாலேயே, அவற்றிலிருந்து இலைகள், பட்டைகள், கனிகள், மலர்கள் ஆகியன உதிர்கின்றன. அவை நோய்வாய்ப்பட்டு வாடுகின்றன. இது தீண்டல் உணர்வு அவற்றுக்கு இருப்பதையே காட்டுகிறது.(11) காற்றின் ஒலி, நெருப்பு, இடி ஆகிய அதிர்ச்சியின் மூலம், அவற்றின் கனிகளும் மலர்களும் விழுகின்றன. காதின் மூலம் ஒலி உணரப்படுகிறது. எனவே மரங்களுக்குக் காதுகள் இருக்கின்றன, அவை கேட்கின்றன.(12) ஒரு கொடி ஒரு மரத்தில் சுற்றி, அனைத்துப் பக்கங்களில் படர்கிறது. பார்வையில்லையென்றால் அதற்கு வழி தெரியாது. இதன் காரணமாக, மரங்களுக்குப் பார்வை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(13) மேலும் மரங்கள் நல்ல மற்றும் தீய மணங்களின் விளைவால் உயிரிவளம் தேறி, பல்வேறு வகைத் தூபங்களிலான புனித நறுமணங்களைத் தரும் மலர்களை மலரச் செய்கின்றன[2]. மரங்கள் மணத்தைக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படை[3].(14) அவை தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன. அவை பல்வேறு வகையான நோய்க்கு ஆட்படுகின்றன. அந்த நோய்களும் பல்வேறு வகைச் செயல்பாடுகளால் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மரங்களுக்குச் சுவையை உணரும் தன்மை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(15)ஒருவன் தாமரைத் தண்டின் மூலமாக நீரை உறிஞ்சுவதைப் போலவே, காற்றின் உதவியுடன், தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன.(16) அவை இன்பத்திற்கும், துன்பத்திற்கும் எளிதாக உட்படுகிறவையாகவும், வெட்டும்போதோ, கொய்யப்படும்போதோ வளர்பவையாகவும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளால் மரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதே எனக்குத் தெரிகிறது. அவை அசைவற்றவை கிடையாது.(17) இவ்வாறு உறிஞ்சப்படும் நீரை நெருப்பும் காற்றும் செரிக்கச் செய்கின்றன. மேலும், மரமானது எந்த அளவுக்கு நீரை எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவுக்கு வளர்ந்து ஈரத்தன்மை கொண்டதாகிறது.(18)
அசையும் பொருட்கள் அனைத்தின் உடல்களிலும் ஐம்பூதங்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் அளவுகள் வேறுபடுகின்றன. இந்த ஐம்பூதங்களின் விளைவாலேயே அசையும் பொருட்களால் தங்கள் உடல்களை நகர்த்திக் கொள்ள முடிகிறது.(19) தோல், சதை, எலும்புகள், மஜ்ஜை ஆகியன பூமியாலானவை {நிலத்தாலானவை}.(20) ஆற்றல், கோபம், கண்கள், உள்ளார்ந்த வெப்பம், உணவைச் செரிக்கச் செய்யும் வேறு வெப்பம் ஆகி இந்த ஐந்தும், உடல்படைத்த அனைத்து உயிரினங்களிலும் நெருப்பாக இருக்கின்றன.(21) காதுகள், மூக்கு, வாய், இதயம், வயிறு ஆகிய ஐந்தும், உயிரினங்களின் உடல்களில் வெளி பூதமாக இருக்கின்றன. சளி, பித்தநீர், வியர்வை, கொழுப்பு, இரத்தம் ஆகியவை அசையும் உடல்களில் ஐவகை நீராக இருக்கின்றன.(23) பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றின் மூலம் ஓர் உயிரினத்தால் நகர முடிகிறது. வியானம் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் செயல்பாட்டுக்குரிய பலத்தைப் பெற முடிகிறது. அபானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் கீழ்நோக்கி நகர முடிகிறது. சமானன் {ஸமானன்} என்றழைக்கப்படுவது {வாயு} இதயத்தில் வசிக்கிறது.(24) உதானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் ஒருவனால் ஏப்பம் விட {மூச்சுவிட} முடிகிறது, (நுரையீரல்கள், தொண்டை, வாய்) ஆகியவற்றைத் துளைப்பதன் விளைவால் பேசவும் முடிகிறது. இவையே உடல்படைத்த உயிரினம் வாழவும் நகரவும் வழிவகுக்கும் ஐவகைக் காற்றுகளாகும் {வாயுக்களாகும்}.(25)
உடல்படைத்த ஓர் உயிரினம் தன்னில் இருக்கும் பூமி {நிலம்} எனும் பூதத்தின் மூலம் மணத்தின் பண்புகளை அறிகிறது. நீர் எனும் பூதத்தின் மூலம் அது சுவையை உணர்கிறது. கண்களைப் பிரதிபலிக்கும் நெருப்பு எனும் பூதத்தின் மூலம், அது வடிவங்களைப் பார்க்கிறது, காற்று எனும் பூதத்தின் மூலம் அது தீண்டல் உணர்வை அடைகிறது.(26) மணம், தீண்டல், சுவை, பார்வை, ஒலி ஆகியவை அசையும் மற்றும் அசையாத பொருட்களின் (பொதுப்) பண்புகளாகக் கருதப்படுகின்றன. நான் முதலில் பல்வேறு வகை மணங்களைக் குறித்துப் பேசப் போகிறேன்.(27) ஏற்புடையமணம், ஏற்பில்லாத மணம், இனிய மணம், கடுமையான நாற்றம், தொலைதூரம் செல்கிற மணம், பல்வேறு வகையைக் கொண்ட மணங்களைக் கொண்டது, காய்ந்த மனம், மணமற்றது என அவை இருக்கின்றன[4].(28) இந்த ஒன்பது வகை மணங்கள் பூமி {நிலம்} என்ற பூதத்தால் அமைக்கப்படுகின்றன. கண்களால் ஒளி காணப்படுகிறது, காற்று எனும் பூதம் மூலம் தீண்ட முடிகிறது.(29) ஒலி, தீண்டல், பார்வை, சுவை ஆகியவை நீரின் பண்புகளாகும். இனி நான் சுவை எனும் உணர்வைக் குறித்து (விரிவாகப் பேசப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(30)உயர் ஆன்ம முனிவர்கள் பல்வேறு வகைச் சுவைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். அவை, இனிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு {காரம்} ஆகியனவாகும். இந்த ஆறுவகைச் சுவைகளும் நீரெனும் பூத்தைச் சார்ந்தவையாகும்.(32) வடிவத்தைப் பார்க்க ஒளி பங்களிக்கிறது. வடிவம் பல்வேறு வகைகளில் இருக்கிறது. குட்டை, நெட்டை {நீளம்}, பருமை, நான்கு முனை கொண்டது {சதுரம்}, உருண்டை,(33) வெளுப்பு, கறுப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், நீலச்சிவப்பு, கெட்டியானது, வெளிச்சமானது {பிசுக்குள்ளது}, வழுவழுப்பானது {மெழுக்குள்ளது}, எண்ணெய்ப்பசையுள்ளது, மென்மையானது, பயங்கரமானது.(34) இந்தப் பதினாறு வகை வெவ்வேறு வடிவங்களும் ஒளி, அல்லது பார்வையின் பண்பைக் கொண்டவை. காற்று எனும் பூதத்தின் பண்பு தீண்டல். தீண்டல் பல்வேறு வகைகளைக் கொண்டது.(35) வெப்பமானது, குளிரானது, ஏற்புடையது, ஏற்பில்லாதது, அக்கறையற்றது, எரிச்சலுள்ளது, கனிவானது, மென்மையானது, கனமில்லாதது, கனமிக்கது.(36) ஒலி, தீண்டால் ஆகிய இரண்டும் காற்றெனும் பூதத்தின் பண்புகளாக இருக்கின்றன. இந்தப் பதினோரு பண்புகளும் காற்றை {வாயுவைச்} சார்ந்தவை.(37)
வெளிக்கு {ஆகாயத்திற்கு} ஒரே ஒரு பண்பு மட்டுமே உண்டு. அஃது ஒலி என்று அழைக்கப்படுகிறது. நான் இப்போது பல்வேறு வகையான ஒலிகளைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(38) அவை, ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழு மூலக்குறிகளை {ஸ்வரங்களைக்} ஆகியவையே.(39) இந்த ஏழு வகைப் பண்புகளும் வெளி {ஆகாயம் எனும் பூதம்} தொடர்புடையவையாகும். ஒலியானது, குறிப்பாகப் பேரிகை முதலிய இசைக்கருவிகளில் வெளிப்படுவதாக இருந்தாலும் பரம்பொருளைப் போல வெளியெங்கும் பிரிக்க முடியாதவாறு உட்பொதிந்திருக்கிறது.(40) சிறி, பெரிய பேரிகைகள், சங்குகள், மேகங்கள், தேர்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் ஆகிய எதன் மூலம் கேட்கப்பட்டாலும் ஒலியானது, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட இந்த ஏழுவகை ஒலிகளையே கொண்டிருக்கிறது.(41) இவ்வாறு வெளியின் பண்பான ஒலி பல்வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கிறது. கல்விமான்கள் ஒலியானது வெளியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். காற்றின் பண்பான பல்வேறு வகைத் தீண்டல்களின் மூலம் எழுப்பப்படும்போது அது {ஒலி} கேட்கப்படுகிறது. எனினும், பல்வேறு வகையான தீண்டல்கள் தடுக்கப்பட்டால் அது {ஒலி} கேட்கப்படுவதில்லை[5]. உடலின் ஒத்த பகுதிகளில் பூதங்கள் கலந்து, பெருகி, வளர்கின்றன.(42,43) நீர், நெருப்பு, காற்று ஆகியவை உயிரினங்களின் உடல்களில் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றன. அவையே உடலின் வேர்களாக இருக்கின்றன. (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) ஐந்தும் உயிர் மூச்சுகளில் படர்ந்தூடுருவி அவை உடலில் வசித்து வருகின்றன” என்றார் {பிருகு}.(44)
உடல் இயக்கவியல்! – சாந்திபர்வம் பகுதி – 185-உடலில் உள்ள பிராண வாயு உள்ளிட்ட வாயுக்களின் செயல்பாடுகளைக் குறித்துப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “உடல்வெப்பம், அல்லது நெருப்பானது {அக்னி}, உடலுக்குள் புகுந்து எவ்வாறு அங்கே வசிக்கிறது? தனக்கென வெளியை அடையும் காற்று {வாயு} எவ்வாறு உடலை அசையச் செய்யவும், முயற்சி செய்யவும் வைக்கிறது?” என்று கேட்டார்.(1)
பிருகு {பரத்வாஜரிடம்}, “ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே}, ஓ! பாவமற்றவனே, வலிமைமிக்கப் பூதமான காற்று {வாயு}, உயிரினங்களின் உடல்களை எவ்வாறு அசையவும், முயற்சிக்கவும் வைக்கும் நடைமுறை குறித்து உனக்குச் சொல்கிறேன்.(2) வெப்பம் தலையில் (மூளையில்) வசித்துக் கொண்டு உடலை (அழியாமல்) பார்த்துக் கொள்கிறது. பிராணன் என்றழைக்கப்படும் காற்று {வாயு} அல்லது மூச்சானது, தலைக்குள் வசித்துக் கொண்டு, தன் வெப்பத்தால் அனைத்து முயற்சிகளுக்கும் காரணமாக இருக்கிறது.(3) அந்தப் பிராணனே, உயிரினமாகவும், அண்ட ஆன்மாவாவாகவும், அழிவில்லாததாகவும், உயிரினங்கள் அனைத்தின் மனமாகவும், அறிவாகவும், நனவு நிலையாகவும், புலன்நுகர்பொருட்களுக்குரிய அனைத்துப் பொருட்களாகவும் இருக்கிறது[1].(4) இவ்வாறு ஓர் உயிரினமானது, அனைத்து வகையிலும் பிராணனால் இயக்கப்பட்டு, {உடலை} முயற்சி செய்ய வைக்கிறது.சமானன் என்றழைக்கப்படும் மற்றொரு மூச்சின் விளைவாக, புலன்களில் ஒவ்வொன்றும் அதனதன் செயல்களுக்கேற்ப செயல்படுகின்றன.(5) அபானன் என்றழைக்கப்படும் மூச்சானது, சிறுநீர்ப்பை மற்றும் வயிற்றின் குடல்களில் உள்ள வெப்பத்தைக் கொண்டு அசைந்து, சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வைப்பதில் ஈடுபடுகிறது.(6) இம்மூன்றிலும் {மூன்று பகுதிகளிலும்} செயல்படும் ஒற்றை மூச்சானது, அறிவியல் அறிந்தவர்களால் உதானன் என்றழைக்கப்படுகிறது[2].(7) மனிதர்களின் உடல்களில் உள்ள இணைப்புகள் அனைத்தையும் இயங்கச் செய்யும் மூச்சானது வியானன் என்றழைக்கப்படுகிறது.(8) உயிரினங்களில் உடல்களில் உள்ள வெப்பமானது, சமானன் என்ற மூச்சினால் உடலியக்கம் முழுவதிலும் சுற்றிச் செலுத்தப்படுகிறது. இவ்வாறு உடலில் வசித்திருக்கும் அந்த மூச்சானது, பல்வேறு வகைத் திரவங்களிலும் {அன்னரஸங்களிலும்}, தாதுக்களிலும், குற்றமான பொருட்கள் அனைத்திலும் செயல்படுகிறது[3].(9) அபானன் மற்றும் பிராணனுக்கு இடையில் தொப்புகள் பகுதியில் வசிக்கும் வெப்பமானது {அக்நியானது}, இந்த இரண்டு மூச்சுகளின் {வாயுக்களின்} உதவியுடன், அந்த உயிரினம் உண்ணும் உணவுகள் அனைத்தையும் செரிக்கச் செய்கிறது.(10)வாயில் தொடங்கிக் குதம் {மலவாய்} வரையில் ஒரு நாளம் {குழாய்/குடல்} இருக்கிறது. அதன் எல்லையானது குதம் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் இந்த முக்கிய நாளத்திலிருந்து எண்ணற்ற துணைக் கிளைகள் {நாளங்கள்} பிரிந்து செல்கின்றன[4].(11) மேற்சொன்ன பெயர்களிலான பல்வேறு மூச்சுக்காற்றுகள் (இந்த நாளங்களின் வழியாக) விரைவதன் விளைவாக, அந்த மூச்சுகள் ஒன்றுகலக்கின்றன. (பிராணனில் வசிக்கும்) வெப்பமானது உஷ்மன் {உஷ்ணம்} என்றழைக்கப்படுகிறது. அந்த வெப்பமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் செரிமானத்திற்கும் காரணமாக இருக்கிறது.(12) வெப்ப ஊற்றைச் சுமந்து செல்லும் பிராணன் என்றழைக்கப்படும் மூச்சானது {வாயுவானது}, கீழ்நோக்கிச் சென்று குதக் கால்வாயெனும் எல்லையை அடைந்து, பிறகு மீண்டும் மேல்நோக்கி அனுப்பப்படுகிறது. மேலும் அதன் இருக்கையான தலைக்குத் திரும்பிவரும் அது {பிராணன்}, மீண்டும் வெப்பத்தைச் சுமந்து கொண்டு கீழே செல்கிறது.(13) தொப்புளுக்குக் கீழுள்ளது செரிக்கப்பட்டவற்றைக் கொண்ட பகுதியாகும். உடலைத் தக்கவைத்துக் கொள்ள உயிர் சக்திகள் அனைத்தும் தொப்புளில் இருக்கின்றன. பிராணனை முதலாகக் கொண்ட பத்து வகை மூச்சுகளால்[5] {வாயுக்களால்} தூண்டப்படுபவையும், {ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல} இதயத்தில் இருந்து கிளை விட்டு வருபவையுமான {ரத்த} நாளங்கள், உணவு கொடுக்கும் திரவச் சாறுகளை மேல்நோக்கியும், கீழ்நோக்கியும், குறுக்குத் திசையிலும் கொண்டு செல்கின்றன[6].(15) இன்பத்தையும், துன்பத்தையும் முற்றிலும் சமமாகக் கண்டு களைப்பை வென்றவர்களான யோகிகள், மூளைக்குள் ஆன்மாவைத் தாங்கி பிரம்மத்தை அடைவதில் வெல்வதற்கு, வாயிலிருந்து குதத்திற்குச் செல்லும் இந்த நாளமே பாதையாக இருக்கிறது[7].(16)இவ்வாறு, பிராணன், அபானன் மற்றும் பிறவாக அழைக்கப்படும் மூச்சுகளில் {வாயுக்களில்} வெப்பம் {அக்னி} வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வெப்பமானது, (புலப்படக்கூடிய) எந்தப் பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள ஒரு நெருப்பைப் போல அங்கே எரிந்து கொண்டே இருக்கிறது” என்றார் {பிருகு}.(17)
உயிர் எங்கே? – சாந்திபர்வம் பகுதி – 186-உடலைத் தவிர உயிர் என்று ஏதும் எங்கே இருக்கிறது என்று பிருகுவிடம் விளக்கம் கேட்ட பரத்வாஜர்..
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “காற்றுதான் {வாயுதான்} நம்மை உயிருடன் வைத்திருக்கிறது, நாம் அசையவும், நம்மை முயற்சி செய்யவும் வைக்கிறது, நம்மை மூச்சுவிடவும், பேசவும் வைக்கிறது என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாக {பயனற்றதாகத்} தெரிகிறது.(1) (உணவு அனைத்தையும் செரிக்கும்) விலங்கு வெப்பம் இயற்கை நெருப்பின் {அக்னியின்} இயல்பைக் கொண்டதாக இருந்தால், நாம் உண்ணும் உணவைக் கரைப்பதன் மூலம் செரிப்பதில் துணைபுரிவது அந்நெருப்பே என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாகத் தெரிகிறது.(2) ஒரு விலங்கு இறக்கும்போது, உயிர் என்று எது அழைக்கப்படுகிறதோ, அஃது அதைவிட்டு வெளியேறுவது ஒருபோதும் காணப்படுவதில்லை. மூச்சு மட்டுமே விட்டுச் செல்கிறது, உள்ளார்த வெப்பமும் அணைந்துவிடுகிறது.(3) உயிர் என்பது காற்றைத் தவிர வேறில்லை என்றாலோ, உயிரானது காற்றை மட்டுமே சார்ந்திருக்கிறது என்றாலோ, அது வெளிப்புற காற்றுக் கடலைப் போலத் தென்படும், மேலும் வெளியேறும்போது, அந்தக் காற்றுடன் கலக்கும்.(4) உயிரானது காற்றைச் சார்ந்திருக்கிறது என்றால், உடலில் இருந்து காற்று வெளியேறுவதால் அது முடிவடைகிறது என்றால், அது, நீரின் ஒரு பகுதி, பெருங்கடலுக்குள் செல்வதைப் போல, (வெளிப்புறத்தில் இருக்கும்) மற்றொரு காற்றுப்பகுதியுடன் கலந்து தன் வசிப்பிடத்தை மட்டுமே மாற்றிக் கொள்ளும்.(5)
ஒரு குறிப்பிட்ட அளவு நீர் கிணற்றுக்குள் இறைக்கப்பட்டாலோ, ஒரு விளக்கை சுடர்மிக்க நெருப்புக்குள் தூக்கி வீசினாலோ, அவை இரண்டும், ஓரின இயற்பியல் கொண்ட பூதத்துக்குள் நுழைந்து, தற்சார்பையோ, தனிப்பட்ட இருப்பையோ இழக்கின்றன. உயிரே காற்றென்றால் {வாயு என்றால்}, ஒரு விலங்கு இறக்கும்போது, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றுப் பெருங்கடலில் அது கலக்கவே செய்யும்.(6) பிறகு, ஐந்து (முக்கிய) பூதங்களால் ஆன இந்த விலங்குடம்பில் உயிர் இருக்கிறது என்று நாம் எவ்வாறு சொல்லலாம்? அந்தப் பூதங்களில் ஒன்று மறைந்தாலும், மற்ற நான்கு பூதங்களும் கரைந்துபோகின்றன.(7) உணவு உட்கொள்ளப்படவில்லையென்றால் நீரெனும் பூதம் வற்றிவிடுகிறது. மூச்சுக்காற்று தடுக்கப்பட்டால், காற்றெனும் {வாயு எனும்} பூதம் காணாமல் போகிறது. மலஜலக் கழிவுகள் நின்றால் வெளியெனும் {ஆகாயமெனும்} பூதம் மறைகிறது. உள்ளே உணவு செல்லவில்லை என்றால், நெருப்பெனும் பூதம் அணைகிறது.(8) நோய், காயங்கள் மற்றும் பிற துன்பங்களின் விளைவால் பூமியெனும் {நிலமெனும்} பூதம் துண்டுகளாக உடைகிறது. இந்த ஐந்தும் துன்புற்று, அந்தச் சேர்கை கரைந்தால் மட்டுமே, அந்த ஐந்தும் ஐந்து வெவ்வேறு திசைகளில் செல்லும்.(9) ஐந்து பூதங்களின் சேர்க்கையால் ஆன உடல் ஐந்து உள்ளடக்கங்களாகப் பிரிந்து சென்றால் உயிர் எங்கே போகும்? அஃது எதை அறிகிறது? அஃது எதைக் கேட்கிறது? அதென்ன சொல்கிறது?(10)
(பிராமணனுக்குத் தானமாக அளிக்கப்படும்) இந்தப் பசு, மறுமையில் என்னை மீட்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், தானமாகக் கொடுக்கப்பட்ட அந்த விலங்கே இறக்கிறது. அவ்வாறிருக்கையில் இந்தப் பசு யாரை மீட்கும்?(11) இந்தப் பசுவை (கொடையாகப்) பெறுபவனும், கொடுப்பவனும் (மரணத்திற்கு உட்படுவதைப் பொறுத்தவரை) இணையானவர்களே. அவர்கள் இருவரும் இவ்வுலகில் அழிவை அடைகிறார்கள். அவ்வாறிருக்கையில் இஃது எவ்வாறு பொருந்தும்?(12) பறவைகளால் உண்ணப்படக்கூடியவனாக, அல்லது மலையில் இருந்து விழுவதன் மூலம் துண்டுகளாக உடைந்து போகிறவனாக, அல்லது நெருப்பால் எரிக்கப்படுபவனாக இருப்பவன் எவ்வாறு உயிர் மீள முடியும்?(13) வேர் வெட்டப்பட்ட மரம் மீண்டும் வளராது. விதைகளால் மட்டுமே முளைவிட முடியும். இறந்து போனவன் (ஏதாவது ஒருவகையில் புதிய இருப்புக்கு) மீண்டு வருவது எங்கே காணப்படுகிறது?(14) உண்மையில் வித்துகளே படைக்கப்பட்டன. இந்த அண்டம் முழுமையும் அடுத்தடுத்து வந்த வித்துகளின் விளைவால் விளைந்தவையே. இறந்து செல்பவை அழிவடையவே இறக்கின்றன. வித்துகள் வித்துகளிலிருந்தே விளைகின்றன” என்றார் {பரத்வாஜர்}.(15)
ஆத்மா? – சாந்திபர்வம் பகுதி – 187-உடலைத் தவிர உயிர் என்ற வேறு ஒன்றும் இருக்கிறது என்று பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..
பிருகு {பரத்வாஜரிடம்}, “உயிரினத்திற்கோ, கொடுக்கப்பட்டவைக்கோ, நமது பிற செயல்களுக்கோ அழிவே கிடையாது. இறந்து போகும் உயிரினம் வடிவில் மட்டுமே மற்றொன்றாக மாறுகிறது. உடல் மட்டுமே கரைந்துபோகிறது.(1) உயிரினமானது, உடலைச் சார்ந்திருந்தாலும், உடல் அழியும் போது, அதனுடன் சேர்ந்து அழிவடைவதில்லை. விறகால் தூண்டப்பட்ட நெருப்பு, எரிந்த பிறகு எவ்வாறு காணப்படுவதில்லையோ அவ்வாறே உடல் கட்டுமானமும் அழிவுக்குப் பிறகு காணப்படுவதில்லை” என்றார் {பிருகு}.(2)
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “நெருப்பைப் போல, உயிரினத்திற்கு அழிவில்லையென்றால், (நெருப்பைத் தூண்டிய) விறகு எரிக்கப்பட்டபிறகு, நெருப்பு காணப்படுவதில்லை என்பதை ஏற்கிறேன். நான் அறிந்த மட்டிலும், எரிபொருள் ஊட்டம் நிறுத்தப்படும்போது, நெருப்பு அணைந்து, நிர்மூலமடைகிறது.(3) எது எந்தச் செயல்பாடும் இல்லாது போனதோ, எது இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையோ, எது வெளியை நிரப்பாமல் இருக்கிறதோ, அஃது அழிவடைந்ததாகவே கருதப்பட வேண்டும்” என்றார் {பரத்வாஜர்}.(4)
பிருகு {பரத்வாஜரிடம்}, “எரிபொருள் எரிக்கப்பட்டதும், நெருப்பு காணப்படாது என்பது உண்மையே. இயற்கூறாய் அமைய, புலப்படக்கூடிய எந்தப் பொருளும் இல்லாதபோது அது வெளியில் {ஆகாயத்தில்} கலக்கிறது. எனவே, அது நம்மால் உணரப்பட முடியாததாக ஆகிறது.(5) அதேபோலவே, உயிரினமானது உடலைவிட்டு அகன்றதும் வெளியில் வாழ்கிறது, {முன் சொன்ன} நெருப்பைப் போலவே மிக நுண்ணிய வடிவை ஏற்பதால் அது பார்வைக்குப் புலப்படாததாகிறது.(6) நெருப்பு, அல்லது வெப்பமே பிராணன் முதலியவையாக அழைக்கப்படும் மூச்சுக் காற்றுகளை நீடிக்கச் செய்கிறது. (இவ்வாறு நீடித்திருக்கும்) வெப்பமே உயிர் என்றோ, வாழும் ஒன்றாகவோ அழைக்கப்படுகிறது. எந்த வெப்பம் மூச்சுகளை நீடிக்கச் செய்கிறதோ, அது மூச்சு ஒடுங்குவதன் விளைவால் அணைகிறது.(7) உடல் கட்டுமானத்தில் உள்ள வெப்பம் அணைந்ததும், அந்தக் கட்டுமானமே அசைவூட்டத்தை இழக்கிறது. வீழும் அஃது {உடல் கட்டுமானம்}, இறுதியாகச் சேருமிடமான பூமியாக {நிலமெனும் பூதமாக} மாற்றமடைகிறது.(8) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்திலும் உள்ள மூச்சானது {வாயுக்கள்}, வெளியில் கலக்கும் போது, அவற்றில் உள்ள வெப்பமும் அந்த மூச்சையே {வாயுக்களையே} பின்தொடர்கிறது.(9) இம்மூன்றும் (வெளி, காற்று {வாயு} மற்றும் நெருப்பு ஆகியன) ஒன்றுகலக்கின்றன. மற்ற இரண்டும் (நீரும், பூமியும்) பூமியின் வடிவில் ஒன்று கலந்து நீடிக்கின்றன.(10) எங்கே வெளி {ஆகாயம்} இருக்கிறதோ, அங்கே காற்று {வாயு} இருக்கிறது, எங்கே காற்று இருக்கிறதோ, அங்கே நெருப்பு இருக்கிறது. அவை வடிவமற்றவை என்பது அறியப்பட வேண்டும், உடல்படைத்த உயிரினங்களைப் பொறுத்தே அவை வடிவங்கொள்கின்றன” என்றார் {பிருகு}.(11)
பரத்வாஜர், “உயிரினங்கள் அனைத்தின் உடற்கட்டுமானங்களிலும் வெப்பம், காற்று, பூமி, வெளி, நீர் ஆகியன இருக்கின்றனவென்றால், அப்போது உயிர் வாழும் ஒன்றின் {உயிரின் / ஜீவனின்} குறியீடுகள் என்ன? ஓ! பாவமற்றவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக.(12) ஐந்து முக்கியப் பூதங்களால் உண்டானவையும், ஐந்து செயல்களில் ஈடுபடுபவையும், ஐம்புலன்களைக் கொண்டவையும், அசைவூட்டம் கொண்டவையுமான உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிரின் {ஜீவனின்} இயல்பை நான் அறிய விரும்புகிறேன்.(13) சதை, குருதி, கொழுப்பு, தசைக்கட்டுகள் {நரம்புகள்}, எலும்புகள் ஆகியவற்றின் கலவையான உடல் அழிந்தபிறகு, எது உயிர் வாழ்கின்றதோ அந்த உயிர் {ஜீவன்} காணப்படுவதில்லை.(14) ஐம்பூதங்களாலான இவ்வுடல், உயிர் என்று அழைக்கப்படும் ஒன்று {ஜீவன்} இல்லாததாக இருந்தால், உடல், அல்லது மனத் துன்பம் தோன்றும்போது, அத்துன்பத்தை யார் உணர்வது? அல்லது எது உணர்கிறது?(15) எது சொல்லப்படுகிறதோ, அதைக் காதுகளின் உதவியுடன் உயிர் வாழும் ஒன்று {ஜீவன்} கேட்கிறது. எனினும், ஓ பெரும் முனிவரே, அதே ஒன்று {உயிர்}, மனம் வேறொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கேட்காமல் இருக்கிறது. எனவே, உயிர்வாழும் ஒன்று {ஜீவன்} என்றழைக்கப்படும் ஒன்றிற்கான குறிக்கோள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.(16) வாழும் உயிரானது {ஜீவனானது} மனத்தோடு இயைந்து செயல்பட்டு கண்களின் மூலமாக மொத்த காட்சியைப் பார்க்கிறது, ஆனால் மனம் வேறுவகையில் ஈடுபட்டிருக்கும்போது, கண்கள் தன் முன் இருப்பதைக் காண்பதில்லை.(17) மேலும் உறக்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அந்த ஒன்று {உயிரானது}, நுகர்வதோ, கேட்பதோ, பேசுவதோ, தீண்டல் மற்றும் சுவையின் உணர்வுகளை அனுபவிப்பதோ இல்லை.(18) கோபமடைவதும், கவலையடைவதும், பெருந்துயரை அனுபவிப்பதும் யார்? அல்லது எது? விரும்புவதும், எண்ணுவதும், வெறுப்பை உணர்வதும், சொற்களைப் பேசுவதும் எது?” என்று கேட்டார் {பரத்வாஜர்}.(19)
பிருகு, “உடலோடு சேர்ந்து பொதுவாக மனமும் ஐம்பூதங்களால் ஆனதே. இதன் காரணமாக, நீ சொன்ன எந்தச் செயல்பாடுகளின் விளைவாலும் இது நேரவில்லை. உள்ளார்ந்த ஒரே ஆன்மா மட்டுமே உடலை நீடிக்கச் செய்கிறது. மணம், சுவை, ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் (புற இயற்கையில் நீடிக்கும்) பிற பண்புகள் ஆகியவற்றை அதுவே {ஆன்மாவே} உணர்கிறது.(20) அந்த ஆத்மாவே, அங்கங்கள் அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஐம்பூதங்களால் தொகுக்கப்பட்ட உடலுக்குள் வசித்துக் கொண்டு, ஐந்து பண்புகளுடன் இருக்கும் மனத்திற்கு (மனத்தின் செயல்களுக்கு) சாட்சியாக இருக்கிறது. இன்பத்தையும், துன்பத்தையும் உணர்வது அதுவே {ஆன்மாவே}. அதனில் இருந்து உடல் பிரிக்கப்படும்போது, உடலானது அதற்குமேல் அவற்றை உணர்வதில்லை.(21) எந்த வடிவத்தையும், அல்லது தீண்டலையும் உணராதபோது, உடலில் வசிக்கும் நெருப்பில் வெப்பமேதும் இல்லாத போது, உண்மையில் அந்த விலங்குவெப்பம் அணையும்போது, ஆன்மாவால் கைவிடப்பட்டதன் விளைவால், அவ்வுடல் அழிவைச் சந்திக்கிறது.(22) இந்த மொத்த அண்டமும் நீரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீரே உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் வடிவமாக {ஸுக்ஷமசரீரமாக} இருக்கிறது. ஆன்மா என்பது அனைத்துப் பொருட்களிலும் நீடித்திருக்கும் படைப்பாளன் பிரம்மனே ஆவான்.(23)
ஆன்மா தீய பண்புகளை அடையும்போது, அது க்ஷேத்ரஜ்ஞன் என்ற அழைக்கப்படுகிறது. அப்பண்புகளில் இருந்து விடுபடும்போது, அது பரமாத்மா, அல்லது உயர்ந்த ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.(24) அஃதை ஆன்மா என்றறிவாயாக. அஃது அண்ட நல்லுணர்வால் ஊக்கமடைந்திருக்கிறது. அது {அவன்} தாமரையில் உள்ள நீர்த்துளி போல உடலில் வசிக்கிறது.(25) எது அண்ட நல்லுணர்வைக் கொண்டிருக்கிறதோ அதுவே க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறது என்பதை நன்கறிவாயாக. வாழும் உயிரானது, இருள் {தாமஸம்}, ஆசை {ரஜோ} மற்றும் நல்லுணர்வு {சத்துவம்} என்ற மூன்று பண்புகளைக் கொண்டதாகும்.(26) ஆன்மாவானது, நனவுநிலையைக் கொண்டிருக்கிறது, வாழ்வின் பண்புகளுடன் நீடித்திருக்கிறது என்று கல்விமான்கள் சொல்கின்றனர். ஆன்மாவே முயற்சி செய்கிறது, அனைத்தையும் முயற்சி செய்ய வைக்கிறது. ஆன்மா குறித்த அறிவுடையோர், ஆன்மாவானது உயிரிலிருந்து வேறானது என்று சொல்கின்றனர். ஏழு உலகங்களையும் படைத்த பரமாத்மாவே அவற்றை {ஆன்மாக்களை} இயக்குகிறது[1].(27) உடல் அழியும்போது வாழும் ஒன்று {உயிர்} அழிவதில்லை. அறிவற்ற மனிதர்களே அஃது இறக்கிறது என்று சொல்கிறார்கள். அது நிச்சயம் உண்மையல்ல. மரணம் என்று அழைக்கப்படுவது உடலின் அழிவு மட்டுமே ஆகும்.(28)இவ்வாறு பல்வேறு வடிவங்களில் பொதியப்படும் ஆன்மாவானது, ஒரு வடிவில் இருந்து மற்றொன்றாக மாறி, பிறரால் காணப்படாததாகவும், கவனிக்கப்படாததாகவும் இருக்கிறது. உண்மை ஞானத்தைக் கொண்டவர்கள், தங்கள் கூர்மையான நுண்ணறிவால் ஆன்மாவைக் காண்கிறார்கள்.(29) அனைத்துப் பாவங்களில் இருந்து தூய்மையடைந்த இதயத்துடன் எளிய உணவு உண்டு வாழும் ஞானி, யோகத் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொறு நாள் இரவு உறங்கும் முன்பும், உறங்கிய பின்னரும் தன் ஆன்மாவின் உதவியால் தன் ஆன்மாவையே காண்கிறான்[2].(30) உள்ளடங்கிய இதயத்தின் விளைவால், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, தன் ஆன்மாவைச் சார்ந்து ஒருவனால் முடிவற்ற மகிழ்ச்சியை அடைய முடியும்.(31) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டவனும், மனத்தில் வசிப்பவனுமான மன்னன், வாழும் ஒன்று என்று அழைக்கப்படுகிறான். அனைத்தின் தலைவனான அவனிலிருந்தே இந்தப் படைப்பு எழுந்தது. உயிரினங்கள் மற்றும் ஆன்மாவின் தோற்றம் குறித்த விசாரணையின் முடிவில், இந்தத் தீர்மானமே அடையப்படுகிறது” என்றார் {பிருகு}.(32)
வர்ண வேறுபாடு? – சாந்திபர்வம் பகுதி – 188-பிராமணர்கள் தத்தமது விருப்பப்படி நடந்து கொண்டதால் உண்டான வர்ண வேறுபாடு குறித்து பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..
பிருகு {பரத்வாஜரிடம்}, “பிரம்மன் முதலில் பிரஜாபதிகள் {படைப்பின் தலைவர்கள்} என்றழைக்கப்பட்ட சில பிராமணர்களைப் படைத்தான். நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியைக் கொண்ட அவர்கள், முதலில் தோன்றியவனின் {பிரம்மனின்} சக்தியின் மூலம் உண்டாக்கப்பட்டார்கள்.(1) பிறகு அந்தப் பலமிக்கத் தலைவன் {பிரம்மன்}, உயிரினங்கள் சொர்க்கத்தை அடையும்பொருட்டு, வாய்மை, கடமை, தவம், அழிவில்லா வேதங்கள், அனைத்து வகைப் பக்திச் செயல்பாடுகள், தூய்மை, ஆகியவற்றை (உயிரினங்கள் பயில்வதற்காகப்) படைத்தான்.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, அதன் பிறகு, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள், அசுரர்கள், பெரும் நாகர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், பிசாசங்கள், மனிதர்களில்(3) நான்கு பிரிவினரான பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும், படைப்பில் இருக்கும் பிற வகையைச் சார்ந்தவையும் படைக்கப்பட்டன.(4) பிராமணர்கள் வெண்ணிறத்தையும், க்ஷத்திரியர்கள் சிவப்பு நிறத்தையும் , வைசியர்கள் மஞ்சள் நிறத்தையும் அடைந்தனர், சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறம் கருப்பாகும்[1]” என்றார் {பிருகு}.(5)பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “(மனிதர்களின்) நால்வகையினருக்கிடையிலான வேறுபாடு வண்ணங்களால் (பண்புகளால்) மட்டுமே உண்டானவை என்றால், நால் வகையும் ஒன்றுகலந்ததாகவே தெரிகிறது.(6) காமம், கோபம், அச்சம், பேராசை, துயரம், கவலை, பசி, களைப்பு, ஆகியன மனிதர்கள் அனைவரையும் வசப்படுத்தி அவர்களில் நீடித்திருக்கின்றன. பண்புகள் உடைமையால் எவ்வாறு மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்?(7) மனிதர்கள் அனைவரின் உடல்களும், வியர்வை, சிறுநீர், மலம், சளி, கபம், குருதி ஆகியவற்றை வெளியிடுகின்றன. பிறகு, மனிதர்களை எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?(8) அசையும் பொருட்கள் முடிவிலா எண்ணிக்கையில் இருக்கின்றன; அசையாத பொருட்களைக் கொண்ட இனங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய வேற்றுமைகளைக் கொண்ட பொருட்களை {மனிதர்களை} எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?” என்று கேட்டார் {பரத்வாஜர்}.(9)
பிருகு {பரத்வாஜரிடம்}, “வெவ்வேறு வகைகளுக்கிடையில் உண்மையில் எந்த வேறுபாடும் கிடையாது. பிரம்மனால் (சமமாகப்) படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் செயல்பாடுகளின் விளைவால், பல்வேறு வகையினராகப் பிரிந்திருக்கிறார்கள்.(10) ஆசைகளிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடுடையவர்களும், கடுமை மற்றும் கோபம் என்ற பண்புகளைக் கொண்டவர்களும், துணிவுமிக்கவர்களும், பக்தி மற்றும் வழிபாட்டுக் கடமைகளில் கவனமில்லாதவர்களும், ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டவர்களுமான பிராமணர்களே க்ஷத்திரியர்களானார்கள்.(11) மேலும் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல், நற்பண்பு மற்றும் ஆசைப்பண்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், கால்நடை வளர்த்தல் மற்றும் உழவு என்ற தொழில்களை ஏற்று வைசியர்களானார்கள்.(12) பொய்மையில் விருப்பமுள்ளவர்களும், பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களும், பேராசை கொண்டவர்களும், வாழ்வதற்காக அனைத்து வகைச் செயல்களிலும் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத் தூய்மை தவறியவர்களும், இருளின் பண்பைக் கொண்டவர்களுமான பிராமணர்களே சூத்திரர்களானார்கள்.(13) இத்தொழில்களால் பிரிக்கப்பட்டவர்களும், தங்கள் வகையில் இருந்து வீழ்ந்தவர்களுமான பிராமணர்களே, மூன்று பிற வகையினரானார்கள். எனவே, பக்தி தொடர்புடைய கடமைகள் அனைத்தையும், வேள்விகளையும் செய்ய நான்கு வகையைச் சார்ந்த அனைவருக்கும் எப்போதும் உரிமையிருக்கிறது.(14) முதலில் சமமாகவே பிரம்மனால் படைக்கப்பட்டவர்களான இந்த நால்வகையைச் சேர்ந்த அனைவருக்கும், (வேதங்களில் உள்ள) பிரம்ம வார்த்தைகள் {அவற்றை அவர்கள் அனைவரும் பின்பற்ற} விதிக்கப்பட்டன. பலர் பேராசையால் மட்டுமே வீழ்ந்து, அறியாமை கொண்டவர்களானார்கள்.(15)
பிரம்மம் குறித்த சாத்திரங்களில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் எப்போதும் கவனம் கொண்டவர்களுமான பிராமணர்களே, பிரம்மம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வல்லர்களாக இருக்கிறார்கள்.(16) பிராமணர்களாக இல்லாதவர்கள், படைக்கப்பட்ட அனைத்தும் உயர்ந்த பிரம்மமே என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். வீழ்ந்தவர்களான இவர்கள், பல்வேறு (தாழ்ந்த) வகைகளின் உறுப்பினர்களாகின்றனர்.(17) அறிவொளியை இழந்து, கட்டுப்பாடற்ற ஒழுக்க நடைக்குப் பழகும் இவர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், பிரேதங்கள் மற்றும் பல்வேறு மிலேச்ச இனங்களில் பிறப்பை அடைகின்றனர்.(18) தொடக்கத்தில் (பிரம்மனின் மனோ விருப்பத்தால்) உயிருடன் எழுந்த பெரும் முனிவர்கள், தங்கள் தவங்களின் மூலமாக, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், அழிவற்ற வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளில் பற்றுடையவர்களுமான மனிதர்களை அடுத்தடுத்து உண்டாக்கினர்.(19) யோகத்தைப் புகலிடமாகக் கொண்டவனும், மனமே ஆனவனுமான ஆதி தேவனிலிருந்து {பிரம்மனில் இருந்து} எழுந்து, பிரம்மத்தையே அடிப்படையாகக் கொண்டு, அழிவற்ற, சிதைவற்ற மற்றொரு படைப்பும் இருக்கிறது[2]” என்றார் {பிருகு}.(20)
வர்ணக் குறியீடுகள்? – சாந்திபர்வம் பகுதி – 189-பிராமணர்களின் குறியீடுகளையும், பிரம்மத்துடன் கலப்பதற்கான தகுதிகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “ஒருவன் எந்தச் செயல்பாடுகளின் மூலம் ஒரு பிராமணனாகிறான்? எதனால் ஒரு க்ஷத்திரியனாகிறான்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, மேலும் என்ன செயல்பாடுகளின் மூலம் ஒருவன் வைசியானாகவும், சூத்திரனாகவும் ஆகிறான்? ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(1)
பிருகு {பரத்வாஜரிடம், “ஜாதம் {ஜாதகர்ம} என்றழைக்கப்படும் சடங்குகள் மற்றும் அத்தகைய சடங்குகளால் புனிதமடைந்தவனும்; ஒழுக்கத்தில் தூய்மையானவனும்; வேத கல்வியில் ஈடுபடுபவனும்; நன்கு அறியப்பட்ட ஆறு செயல்களில் (காலையும், மாலையும் தூய்மைச் சடங்குகள் செய்தல்; மந்திரங்களை அமைதியாக ஓதுதல்; வேள்வி நெருப்பில் ஆகுதி ஊற்றுதல்; தெய்வங்களை வழிபடுதல், விருந்தோம்பல் கடமைகளின் படி விருந்தினர்கள் உபசரித்தல், விஸ்வதேவர்களுக்கு உணவளித்தல் ஆகிய ஆறு செயல்களில்) அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவனும்;(2) பக்திச் செயல்பாடுகள் அனைத்தையும் செய்பவனும்; தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் முறையாக உணவளிக்காமல் உண்ணாதவனும்; ஆசான் மீது பெரும் மதிப்பு கொண்டவனும்; நோன்புகள் மற்றும் வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(3) எவனிடம் வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு[1], தவம் ஆகியன உள்ளனவோ அவனே பிராமணனாக அழைக்கப்படுகிறான்.(4)போர்த்தொழிலில் ஈடுபடுபவனும், வேதம் கற்பவனும், (பிராமணர்களுக்குக்) கொடையளிப்பவனும், (தன்னால் பாதுகாக்கப்படுகிறவர்களிடம் இருந்து) செல்வத்தைப் பெறுபவனுமான ஒருவன் க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறான்.(5)
கால்நடை வளர்ப்பு, உழவுத் தொழில், செல்வம் ஈட்டுவதற்கான வழிமுறைகளின் {வணிகத்தின்} மூலம் புகழை ஈட்டுபவனும், ஒழுக்கத்தில் தூய்மை கொண்டவனும், வேத கல்வியில் ஈடுபடுபவனுமான ஒருவன் வைசியன் என்றழைக்கப்படுகிறான்[2].(6)அனைத்து வகை உணவை உண்பதில் இன்பங்கொள்கிறவனும், அனைத்து வகை வேலைகளிலும் ஈடுபடுபவனும், ஒழுக்கத்தில் மாசுள்ளவனும், வேதங்களைக் கல்லாதவனும், தூய்மையற்ற ஒழுக்கம் கொண்டவனுமான ஒருவன் சூத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) ஒரு சூத்திரனிடம் {வாய்மை உள்ளிட்ட} இந்தப் பண்பியல்புகள்[3] காணப்பட்டாலும், ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையென்றாலும், அத்தகைய சூத்திரன் சூத்திரனுமல்ல, அத்தகைய பிராமணன் பிராமணனுமல்ல[4].(8)பேராசையும், கோபமும் அனைத்துவகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவையும், தற்கட்டுப்பாடும் அறிவின் உயர்ந்த விளைவுகளாகும்.(9) அந்த ஆவல்கள் (பேராசை மற்றும் கோபம் ஆகிய) இரண்டையும் ஒருவன் முழு இதயத்துடன் தடுக்க வேண்டும். அவை ஒருவனுடைய உயர்ந்த நன்மையை அழிக்கவே தோன்றுகின்றன.(10) ஒருவன் தன் கோபத்திடம் இருந்து தன் செழிப்பையும், செருக்கிலிருந்து தவங்களையும், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் இருந்து அறிவையும், குற்றங்களில் இருந்து தன் ஆன்மாவையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,(11)
ஓ! மறுபிறப்பாளனே, எந்தப் புத்திசாலி கனியில் விருப்பமில்லாமல் அனைத்துச் செயல்களையும் செய்வானோ, எவனுடைய மொத்த செல்வமும் ஈகைக்காகவே இருக்கிறதோ, எவன் தினப்படியான ஹோமங்களைச் செய்வானோ அவனே உண்மையில் துறவியாவான் {தியாகியாவான்}. தீங்கிழைக்கும் செயல்கள் அனைத்தையும் தவிர்த்து உயிரினங்கள் அனைத்திற்கும் நண்பனாக ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்[5].(12) கொடைகள் யாவற்றையும் ஏற்காத ஒருவன், தன் நுண்ணறிவின் மூலம், தன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாக இருக்க வேண்டும். எந்தத் துன்பமும் இல்லாத தன் ஆன்மாவிலேயே அவன் வாழ வேண்டும். அப்போது அவன் இம்மையிலும் எந்த அச்சமும் கொள்ள மாட்டான், மறுமையிலும் அச்சமற்ற உலகத்தை அடைவான்.(13) ஒருவன், தவங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக, ஆசைகள் அனைத்தையும் முற்றாகத் தவிர்ப்பவனாக, எண்ணங்களை வெளியிடாத நோன்பை நோற்பவனாக, தன்னில் குவிந்த ஆன்மாவுடன் கூடியவனாக, வெல்லமுடியா புலன்களை வெல்ல விரும்புபவனாக, பற்றுகளுக்கு மத்தியில் பற்றற்றவனாக எப்போதும் வாழ வேண்டும்.(14)புலன்களுக்குப் புலப்படும் பொருட்கள் அனைத்தும் வெளிப்பாடு {வியக்தம்} என்றழைக்கப்படுகிறது. எனினும், புலன்களுக்கு எட்டாமல், வெளிப்பாடற்றதாக {அவியக்தமாக} இருப்பவையும், நுண்ணியப் புலனுணர்வால் மட்டுமே உறுதி செய்து கொள்ளக்கூடியவையுமான அனைத்தையும் அவன் அறிய முயல வேண்டும்[6].(15) நம்பிக்கையேதும் இல்லையென்றால், ஒருவனால் அந்த நுண்ணுணர்வை அடைய முடியாது. எனவே, அவன் நம்பிக்கையுடனே இருக்க வேண்டும். மனம் பிராணனிலும், பிராணன், பிரம்மத்திலும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.(16) பற்றுகள் அனைத்திலிருந்தும் தொடர்பறுத்துக் கொள்ளும் ஒருவனே பிரம்மத்துடன் கலக்கலாம். வேறு எதையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. துறவுப் பாதையில் ஒரு பிராமணனால் எளிதாகப் பிரம்மத்தை அடைய முடியும்.(17) தூய்மை, நல்லொழுக்கம், அனைத்துயிரினங்களிடமும் கருணை ஆகியவையே ஒரு பிராமணனின் குறியீடுகளாகும்” என்றார் {பிருகு}.(18)
பூமியே மூதன்னை! – சாந்திபர்வம் பகுதி – 190-உண்மை சொர்க்கத்திற்கும், பொய் நரகத்திற்கும் இட்டுச் செல்லும்; பொய்யாலுண்டாகும் துன்பங்கள்; இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றைப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..
பிருகு {பரத்வாஜரிடம்}, “உண்மையே பிரம்மம்; உண்மையே அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குகிறது. உண்மையின் மூலமே இந்த மொத்த அண்டமும் தாங்கப்படுகிறது; உண்மையின் துணை கொண்டே ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(1) பொய்மையானது இருளின் மற்றொரு வடிவமாக மட்டுமே இருக்கிறது. இருள் கீழ்நோக்கியே வழிகாட்டும். இருளால் பாதிப்படைந்தோரும், அதனால் மறைக்கப்பட்டோரும், சொர்க்கத்தின் ஒளிமிக்க உலகங்களைக் காணத் தவறுகின்றனர்.(2) சொர்க்கம் ஒளி என்றும், நரகம் இருள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அண்டத்தில் வசிக்கும் உயிரினங்கள் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் அடையலாம்.(3) இவ்வுலகிலும், உண்மையும் பொய்மையும், அறம் மற்றும் மறம், ஒளி மற்றும் இருள், இன்பம் மற்றும் துன்பம் என்பவைபோன்ற முரண்பட்ட வழிமுறைகளுக்கும், முரண்பட்ட குறியீடுகளுக்கும் வழிவகுக்கும்.(4) இவற்றில் எது உண்மையோ அஃது அறமாகும்; எஃது அறமோ அஃது ஒளியாகும்; எது ஒளியோ அஃது இன்பமாகும். அதேபோலவே, எது பொய்மையோ அது மறமாகும்; எது மறமோ அஃது இருளாகும்; எது இருளோ அது துன்பம் அல்லது துயரமாகும்.(5)
ஞானம் கொண்டோர், இவ்வுலக வாழ்வானது உடல் மற்றும் மனம் சார்ந்த கவலையிலும், நிச்சயம் துன்பத்தில் முடியக்கூடிய இன்பத்திலும் மூழ்கியிருப்பதைக் கண்டு, ஒருபோதும் திகைப்படையாதவர்களாக இருக்கிறார்கள்.(6) எவன் ஞானியோ அவன் கவலையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முனைவான். உயிரினங்களின் மகிழ்ச்சியானது, இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் நிலையற்றதாகும்[1].(7) இருளில் மூழ்கியிருக்கும் உயிரினங்களின் மகிழ்ச்சியானது, ராகுவால் பீடிக்கப்படும் சந்திரனின் காந்தியைப் போல மறைந்து போகிறது[2].(8) உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என்று இன்பம் இரு வகையாகச் சொல்லப்படுகிறது. இம்மையிலும், மறுமையிலும், புலப்படக்கூடியவையும், புலப்படாதவையுமான (செயல்களின்) கனிகள் இன்பத்தின் நிமித்தமாகவே (வேதங்களில்) குறிப்பிடப்படுகின்றன[3]. முத்தொகையின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின்} கனிகள், அல்லது விளைவுகளில், இன்பத்தைவிட முக்கியமானது வேறேதும் இல்லை. மகிழ்ச்சியே விரும்பத்தக்கது. அதுவே ஆன்மாவின் பண்பாகும். அறமும், பொருளும் அதற்காகவே நாடப்படுகின்றன. அறமே அதன் வேராகும். உண்மையில், இதுவே அதன் தோற்றுவாயாகும். அனைத்து செயல்களும் மகிழ்ச்சியை அடைவதையே முடிவான இலக்காகக் கொண்டிருக்கின்றன” என்றார் {பிருகு}.(9)பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “இன்பமே உயர்ந்த பொருள் என்று நீர் சொல்கிறீர். என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. (நீர் சொல்வது போல) இவ்வளவு விரும்பத்தக்கதாக உள்ள ஆத்மாவின் இந்தப் பண்பை அடைய முனையாமல் முனிவர்கள் வேறு ஏதோ உயர்ந்த வெகுமதியை அடைவதில் ஈடுபடுகிறார்கள். மூவுலகங்களின் படைப்பாளனான பலமிக்கப் பிரம்மன், பிரம்மச்சரிய நோன்பை நோற்றுத் தனியாக வாழ்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறோம். இன்பத்தை நிறைவு செய்வதன் மூலம் அடையப்படும் மகிழ்ச்சியில் அவன் ஒருபோதும் பற்றுடன் இல்லை. மேலும், அண்டத்தின் தெய்வீகத் தலைவனான உமையின் தலைவன் {சிவன்}, (இன்பத்திற்கான தேவனான) காமனை இல்லாமல் செய்தான். இதன் காரணமாக, உயர் ஆன்ம மக்கள் இன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்று நாம் சொல்கிறோம். மேலும் அஃது ஆன்மாவின் உயர்ந்த பண்பாகத் தெரியவில்லை. இன்பத்தைவிட வேறேதும் உயர்ந்ததில்லை என்று தெய்வீகமான நீர் {தேவரீர்} சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளாக, நற்செயல்களில் இருந்து இன்பமும், பாவச்செயல்களில் இருந்து துன்பமும் இரண்டு வகைகளில் எழுகின்றன என்று சொல்லப்படுவது வெற்றுமொழியாக மட்டுமே இவ்வுலகில் இருக்கிறது” என்றார் {பரத்வாஜர்}[4].(10)பிருகு {பரத்வாஜரிடம்}, “இது பின்வருமாறு சொல்லப்படுகிறது: பொய்மை இருளில் {அறியாமையில்} இருந்து எழுகிறது. இருளில் {அறியாமையில்} மூழ்கியிருப்போர் அறத்தையல்லாமல் {தர்மத்தையல்லாமல்}, மறத்தை {அதர்மத்தை} மட்டுமே பின்தொடர்ந்து, கோபம், பேராசை, வன்மம், பொய்மை, மற்றும் இவை போன்ற வேறு தீமைகளுக்கும் வசப்பட்டவர்களாகிறார்கள். அவர்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. மறுபுறம், பல்வேறு வகை நோய், துன்பம் மற்றும் தொல்லைகளில் அகப்படுகின்றனர். மரணம், சிறை மற்றும் இவ்வகைத் துன்பங்கள் பிறவற்றாலும், பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் உண்டாகும் கவலைகளாலும் அவர்கள் வதைக்கப்படுகின்றனர். மழை, காற்று, எரியும் வெப்பம், மிகைப்பட்ட குளிர் ஆகியவற்றில் இருந்து எழும் எண்ணற்ற உடல் துன்பங்களையும் அவர்கள் அடைகிறார்கள். செல்வ இழப்பு, நண்பர்களிடம் இருந்து பிரிவு, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால் உண்டாகும் எண்ணற்ற மனத் துன்பங்களிலும் மூழ்குகிறார்கள்.(11)
பல்வேறு வகை உடல் மற்றும் மனத் துன்பங்களால் தீண்டப்படாதவர்களே இன்பத்தை அறிவார்கள்.(12) இந்தத் தீமைகள் ஒருபோதும் சொர்க்கத்தில் காணப்படுவதில்லை. அங்கே இனிய தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. அங்கே சொர்க்கத்தில் இடையறாத நறுமணமும் வீசிக்கொண்டிருக்கிறது. சொர்க்கத்தில் பசியோ, தாகமோ, முதுமையோ, பாவமோ கிடையாது.(13) சொர்க்கத்தில் இடையறாத இன்பம் இருக்கிறது. இவ்வுலகில் {இம்மையில்} இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. நரகத்திலோ துன்பம் மட்டுமே இருக்கிறது. எனவே, இன்பமே அடையத்தக்க பொருளில் உயர்ந்ததாகும்.(14) இந்தப் பூமியே {பூமாதேவியே} அனைத்து உயிரினங்களின் மூதன்னையாக இருக்கிறாள். பெண்கள் அவளது இயல்பையே பெற்றிருக்கின்றனர். ஆண்விலங்கானது, பிரஜாபதியைப் போன்றதாகும். உயிர்வித்தானது, படைக்கும் சக்தி என அறியப்பட வேண்டும்.(15) இவ்வழியிலேயே படைப்பு நேர வேண்டுமெனப் பழங்காலத்தில் பிரம்மனால் விதிக்கப்பட்டது. தன் செயல்களால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும், இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள்” என்றார் {பிருகு}[5].(16)
ஆசிரமதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 191-தானம், அறம், ஒழுக்கம் முதலியவற்றின் பயன்களையும், நான்கு ஆசிரமங்களுக்கு உரிய கடமைகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…
பரத்வாஜர் {பிருகுவிடம்}, “கொடையின் {தானத்தின்} விளைவும், அறம், ஒழுக்கம், நன்கு பயிலப்படும் தவம், வேத கல்வி மற்றும் வேதம் ஓதல், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல் ஆகியவற்றின் விளைவுகளும் {பயன்களும்} என்னென்ன?” என்று கேட்டார்.(1)
பிருகு {பரத்வாஜரிடம்}, “புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதன் {ஹோமத்தின்} மூலம், பாவம் எரிக்கப்படுகிறது. வேத கல்வியின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த அமைதி மனத்தை அடைகிறான். கொடையின் மூலம் ஒருவன் இன்பங்களையும், இன்பநுகர் பொருட்களையும் அடைகிறான். தவங்களின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்.(2) மறுமைக்கானது, இம்மைக்கானது என இருவகைக் கொடைகள் சொல்லப்படுகின்றன. நன்மைக்காகக் கொடுக்கப்படும் எதுவும் கொடையாளியின் மறுமையைக் கவனித்துக் கொள்கின்றன.(3) நன்மையற்றவைக்குக் கொடுக்கப்படும் எதுவும் இம்மையில் இன்புறுவதற்கான விளைவுகளை உண்டாக்குகின்றன. கொடைகளின் விளைவுகள் அந்தக் கொடைகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன” என்றார் {பிருகு}.(4)
பரத்வாஜர் {பிருகுவிடம்}, “எவனால் எந்தக் கடமைகள் செய்யப்பட வேண்டும்? கடமையின் {தர்மத்தின்} பண்பியல்புகள் என்னென்ன? கடமைகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன? இவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றார்[1].(5)பிருகு {பரத்வாஜரிடம்}, “எந்த ஞானிகள் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைச் செய்வதில் ஈடுபடுவார்களோ, அவர்கள் சொர்க்கத்தையே தங்கள் வெகுமதியாக அடைகிறார்கள். வேறு வகையில் செய்யும் மக்கள் மூடக்குற்றம் செய்தவர்களாகிறார்கள்” என்றார்.(6)
பரத்வாஜர் {பிருகுவிடம்}, “முன்பு பிரம்மனால் விதிக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, அவை ஒவ்வொன்றின் நடைமுறைகளையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(7)
பிருகு {பரத்வாஜரிடம்}, “பழங்காலத்தில், தெய்வீகப் பிரம்மன், உலகின் நன்மைக்காகவும், அறத்தைப் பாதுகாப்பதற்காகவும் நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சட்டிக்காட்டினார். (கால வரிசையின் அடிப்படையில்) அவற்றில், ஆசானின் வசிப்பிடத்தில் வசிப்பது முதலாகக் குறிப்பிடப்படுகிறது. எவன் இந்த {பிரம்மச்சரிய} வாழ்வுமுறையில் இருக்கிறானோ, அவன் ஒழுக்கத்தூய்மை, வேத சடங்குகள், நலந்தரும் கட்டுப்பாடுகள், நோன்புகள், பணிவு ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை மற்றும் மாலை சந்திகளையும், சூரியனையும், தன் புனித நெருப்பையும், தெய்வங்களையும் அவன் வழிபட வேண்டும். தாமதம் மற்றும் சோம்பலை அவனைக் கைவிட வேண்டும். அவன் தன் ஆசானை வணங்குவது, வேத கல்வி, ஆசானின் போதனைகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் (காலை, நடுப்பகல், மாலை என) மூன்று வேளை தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(8) அவன் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும். தன் புனித நெருப்பைக் கவனிக்க வேண்டும். தன் ஆசானுக்குக் கடமை உணர்வுடன் தொண்டு செய்ய வேண்டும். (தன்னை ஆதரித்தக்கொள்ள) தினமும் பிச்சையெடுக்கச் செல்ல வேண்டும். ஆசான் சொல்லும் எந்தக் கட்டளையையும் விருப்பத்துடன் நிறைவேற்றி, தன் நன்மைக்காக ஆசானால் போதிக்கப்படும் வேத கல்வியைப் பெறத் தயாராக இருக்க வேண்டும்[2]. இது குறித்து ஒரு சுலோகம் இருக்கிறது {அது பின்வருமாறு}: தன் ஆசானை மதிப்புடன் கவனித்துக் கொள்வதன் மூலம் தன் வேதத்தை அடையும் பிராமணன், சொர்க்கத்தை அடைவதில் வென்று, தன் ஆசைக் கனிகள் அனைத்தையும் அடைவான்.(9)காலவரிசையின் படி) இரண்டாவதாக அழைக்கப்படுவது இல்லற வாழ்வுமுறையாகும் {கார்ஹஸ்த்ய ஆச்ரமம்}. அந்த வாழ்வுமுறையின் செயல்பாடுகள் மற்றும் குறியீடுகள் ஆகிய அனைத்தையும் நாம் உனக்குச் சொல்வோம். ஆசானிடம் வாசத்தை நிறைவு செய்து வீடு திரும்பியவர்கள், பக்தியொழுக்கம் கொண்டவர்கள், தங்கள் துணைவியரின் தோழமையோடு அறம் சார்ந்த ஒழுக்கத்தின் கனிகளை விரும்புவோர் இந்த வாழ்வுமுறையைத் தங்களுக்கெனக் கொள்கிறார்கள். அதில் அறம், செல்வம் {பொருள்}, இன்பம் ஆகிய அனைத்தையும் அடையலாம். (இவ்வாறே) அது {இல்லறம்} முத்தொகை {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} வளர்க்கத் தகுந்ததாக இருக்கிறது. வேதங்களை ஓதுவதன் மூலம் அடையப்படும் உயர்ந்த பயனுடன் கூடிய செல்வத்தின் மூலம், அல்லது மறுபிறப்பாள முனிவர்கள் வாழ்வதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மூலம், அல்லது மலைகள் மற்றும் சுரங்கங்களில் விளைவதன் மூலம், அல்லது வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் நோன்புகள் மற்றும் பிற சடங்குகளில், முடிவில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் தெய்வகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளின் மூலம் ஓர் இல்லறத்தான் குற்றமற்ற செயல்பாடுகளின் மூலம் செல்வத்தை அடைந்து, தன் வாழ்வுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வாழ்வுமுறையே {இல்லறமே} பிற வாழ்வுமுறைகள் அனைத்திற்குமான வேராகக் கருதப்படுகிறது. ஆசான்களின் வசிப்பிடங்களில் வசித்து, பிச்சையெத்து வாழ்வோரும், நோன்புகள் அல்லது உறுதியேற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளின் படி வாழ்வோரும், இந்த வாழ்வுமுறையில் வாழ்வோரிடமிருந்தே தங்கள் வாழ்வாதாரத்தை அடைய முடியும். அவர்கள் பித்ருக்களுக்கு அளிக்கும் காணிக்கைகள் மற்றும் தெய்வங்களுக்கு அளிக்கும் காணிக்கைகளின் மூலமே அவர்கள் தங்களை முழுமையாக ஆதரித்துக் கொள்ள முடியும்.(10)
மூன்றாவது வாழ்வுமுறையானது காட்டு வாழ்வு {வானப்ரஸ்தம்} என்றழைக்கப்படுகிறது. இந்த வாழ்வுமுறையை நோற்பவர்கள் செல்வத்தையோ, பொருட்களையோ சேர்த்துவைப்பதில்லை[3]. பொதுவாக, பக்திமிக்கவர்களும், நல்லவர்களுமான இம்மனிதர்கள், சிறந்த உணவை உண்டு, வேத கல்வியில் ஈடுபட்டு, பூமியில் உள்ள தீர்த்தங்களிலும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளிலும் திரிந்து கொண்டிருப்பார்கள். எழுந்து நிற்பது, முன் சென்று வரவேற்பது, நேர்மையுடன் இனிய பேச்சுகளைப் பேசுவது, கொடுப்பவரின் தகுதிக்கேற்ற அளவில் கொடைகள் அளிப்பது, இருக்கைகளை அளிப்பது, சிறந்த வகைப் படுக்கைகளை அளிப்பது, சிறந்த வகை உணவுகளை அளிப்பது ஆகியவை அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய சில வழிமுறைகளாகும்[4].(11) இது குறித்து ஒரு ஸ்லோகம் இருக்கிறது: ஒரு விருந்தினர் நிறைவடையாத எதிர்பார்ப்புடன் ஒருவீட்டில் இருந்து சென்றால், அந்த வீட்டு உரிமையாளனின் தகுதிகளைத் தான் எடுத்துக் கொண்டு, தனது பாவங்களை அவனுக்கு விட்டுச் செல்கிறான் என்று கருதப்படுகிறது.(12)மேலும், இல்லறவாழ்வில் வேள்விகள் மூலமும், பிற அறச் சடங்குகளின் மூலமும் தேவர்கள் நிறைவுசெய்யப்படுகிறார்கள்; ஈமச் சடங்குகளின் மூலம் பித்ருக்களையும், (வேத) அறிவை வளர்ப்பதாலும், ஆசான்களின் போதனைகளைக் கேட்பதாலும், சாத்திரங்களை நினைவுகூர்வதாலும் முனிவர்களையும், இறுதியாகப் பிள்ளைகளைப் பெறுவதால் படைப்பாளனையும் நிறைவு செய்கிறார்கள்[5].(13) இக்காரியத்தில் இரண்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன: இந்த வாழ்வுமுறையில் இருப்பவன், அனைத்து உயிரினங்களிடமும், பற்று நிறைந்த, காதுக்கு இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும். துன்பத்தை அளிப்பதும், அவமதிப்பதும், கடும் வார்த்தைகளைச் சொல்வதும் நிந்திக்கத்தக்கனவாகும்.(14) அவமதிப்பு, ஆணவம், வஞ்சனை ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்சை}, வாய்மை, கோபமின்மை ஆகியன (நான்கு) வாழ்வுமுறைகளில் வாழ்பவர்களுக்கும் தவங்களுக்குரிய தகுதியை உண்டாக்கும்.(15)மலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமண எண்ணெய்கள், களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, கருவி மற்றும் குரலிசை மற்றும் ஆடல்களின் மூலம் அடையப்படும் இன்பம்; கண்ணுக்கினிய காட்சிகளைக் காண்பது முக்கிய வகை உணவுப் பொருட்களைச் சேர்ந்த பல்வேறு வகைகளைச் சார்ந்தவையும், விழுங்கத்தக்கவை, பருகத்தக்கவை, உறிஞ்சத்தக்கவை ஆகிய உணவுகளையும் பானங்களையும் அனுபவிப்பது, விளையாட்டுகளின் மூலம் இன்பமடைவது; அனைத்து வகைக் கேளிக்கைகள் மற்றும் இன்ப நிகழ்ச்சிகளும் இல்லறவாழ்வில் அனுமதிக்கப்படுகின்றன.(16)
(அறம், பொருள், இன்பம் என்ற) முத்தொகையை அடைய முனையும் வாழ்வுமுறையை நோற்கும் மனிதன், நல்லுணர்வு {சத்வ}, ஆசை {ரஜோ}, இருள் {தமோ} ஆகிய மூன்று பண்புகளின் {குணங்களின்} பெருங்கதியை[6] அடைந்து, இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து இறுதியில் அறவோர் மற்றும் நல்லோருக்காக ஒதுக்கப்படும் கதியை அடைகிறான்.(17) தன் வாழ்வுமுறைக்கு ஏற்ற கடமைகளைச் செய்வதன் மூலம், வயல் பிளவுகளில் விழுந்து கிடக்கும் தானியங்களைத் திரட்டி உண்பவனும், புலன் இன்பத்தைக் கைவிடுபவனும், செயல்பாட்டில் பற்றில்லாதவனுமாக இருக்கும் இல்லறத்தான், சொர்க்கத்தை அடைவதைக் கடினமானதாகக் காண மாட்டான்” என்றார் {பிருகு}[7].(18)
இம்மையும் மறுமையும்! – சாந்திபர்வம் பகுதி – 192-வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாச ஆசிரமங்களுக்குரிய குறியீடுகளையும், இமயத்திற்கு வடக்கே சொர்க்கத்திற்கு இணையான ஒரு பகுதியைப் பற்றிய குறிப்பையும் பரத்வாஜருக்குச் சொன்ன பிருகு…
பரத்வாஜர் {பிருகுவிடம்}, “காட்டுத் துறவிகள் {வானப்ரஸ்தர்கள்}, அறமீட்ட முனைந்து புனிதநீர்நிலைகளுக்கும், ஆறுகளுக்கும், நீரோடைகளுக்கும் பயணம் செய்து, மான்களும், எருமைகளும், பன்றிகளும், புலிகளும், காட்டு யானைகளும் நிறைந்திருக்கும் காடுகளில் தனியாகத் தவம் செய்வார்கள். அவர்கள் சமூகத்தில் வாழும் மக்கள் சுவைக்கும் அனைத்து வகை ஆடைகள், உணவுகள் ஆகியவற்றைக் கைவிடுவார்கள். அவர்கள் பல்வேறு வகைகளிலான காட்டு மூலிகைகள் {கீரைகள்}, கனிகள், கிழங்குகள், இலைகள் ஆகியவற்றைக் குறைவான அளவில் உண்டு வாழ்வார்கள். வெறுந்தரையே அவர்களது இருக்கையாக இருக்கும். அவர்கள் வெற்று பூமியிலோ, பாறைகளிலோ, கூழாங்கற்களிலோ, சரளைக் கற்களிலோ, மணலிலோ, சாம்பலிலோ படுத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் அங்கங்களைப் புற்களாலும், விலங்கு தோல்களாலும், மரவுரிகளாலும் மறைத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் தலைமுடிகளையும், தாடிகளையும் சிரைப்பதோ, தங்கள் நகங்களைக் கழிப்பதோ கிடையாது. அவர்கள் தங்கள் தூய்மைச் சடங்குகளை முறையான இடைவெளிகளில் செய்வார்கள்.
அவர்கள் முறையான நேரங்களில் தவறாமல் ஆகுதிகளைத் தரையிலும், புனித நெருப்பிலும் ஊற்றுகிறார்கள். (தங்கள் ஹோமங்களுக்குத் தேவையான) புனித விறகு, (வேள்விக்கும், வழிபாட்டுக்கும் தேவையான) புனித புற்கள், மலர்கள் ஆகியவற்றைச் சேகரிக்காத வரையிலும், (தங்கள் வேள்விப் பீடங்களை) பெருக்கி, தூய்மைப்படுத்தாத வரையிலும் அவர்கள் ஓய்வெடுக்கமாட்டார்கள். தங்கள் மேனியெங்கும் புண்ணானாலும், தங்கள் சதை, குருதி, தோல் மற்றும் எலும்புகள் மெலிந்தாலும், குளிர், வெப்பம், மழை, காற்று ஆகியவற்றைக் கிஞ்சிற்றும் கருதிப்பாராமல், பல்வேறு வகைச் சடங்குகள், தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைச் செய்வார்கள்[1]. பெரும் பொறுமையும், மனோவுறுதியும் கொண்ட அவர்கள், நல்லுணர்வின் பண்பையே {சத்வ குணத்தையே} எப்போதும் பயில்வார்கள்.(1) {இந்த வானப்ரஸ்தாச்ரமத்தைப் பற்றி ஒரு ஸ்லோகமிருக்கிறது. அதன் பொருளாவது} எந்த மனிதன், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகளைக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் செய்கிறானோ, அவன் நெருப்பைப் போலத் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்து, அடைவதற்கரிதான இன்ப உலகங்களை அடைகிறான்.(2)நான் இப்போது பரிவ்ராஜகர்கள் {துறவிகள் / சந்நியாசிகள்} என்றழைக்கப்படுபவர்களின் ஒழுக்கத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அது பின்வருமாறு: அவர்கள், புனித நெருப்பு, செல்வம், மனைவி, பிள்ளைகள், ஆடைகள், இருக்கைகள், படுக்கைகள் போன்ற இன்ப நுகர் பொருட்களின் பற்றில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, பற்றின் கட்டுகளை அறுத்துக் கொண்டு, மண்ணாங்கட்டியையோ, பாறையையோ, தங்கத்தையோ சம கண்களுடன் கருதித் திரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் முத்தொகையை அடையவதிலோ, அனுபவிப்பதிலோ தங்கள் இதயங்களை ஒருபோதும் நிலைக்கச் செய்யக் கூடாது. எதிரிகள், நண்பர்கள், நடுநிலையாளர்கள், அந்நியர்கள் ஆகியோரைச் சமக் கண்களுடன் பார்க்க வேண்டும். அசையாத பொருட்கள் {மரங்கள்} அல்லது பாலூட்டிகள், முட்டையிடும் இனங்கள், கழிவுப்பொருட்களில் பிறப்பவை ஆகிய உயிரினங்கள், அல்லது காய்கறிகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு, எண்ணம், சொல், அல்லது செயலில் ஒருபோதும் தீங்கிழைக்கமாட்டார்கள்[2].அவர்களுக்கு வீடுகள் கிடையாது. அவர்கள் குன்றுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், மரநிழல்களிலும், தெய்வங்களில் கோவில்களில் திரிந்து கொண்டிருப்பார்கள். வசிப்பதற்காக அவர்கள் நகரங்களுக்கோ, கிராமங்களுக்கோ செல்லலாம். எனினும், ஒரு நகரத்தில் அவர்கள் ஐந்து இரவுகளுக்கு மேல் வாழக்கூடாது. அதே போல ஒரு கிராமத்தில் அவர்கள் ஓரிரவுக்கு மேல் வசிக்கக்கூடாது. ஒரு நகரத்திற்குள்ளோ, கிராமத்திற்குள்ளோ நுழையும் அவர்கள், தயாளச் செயல்களைச் செய்யும் பிராமணர்களின் வசிப்பிடங்களுக்கு மட்டுமே சென்று தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தாங்கள் சுமந்து செல்லும் (மரக்) கிண்ணத்தில் விழுவதைத் தான் பிச்சையாக ஏற்க வேண்டுமேயன்றி, தவிர ஒருபோதும் பிச்சையேதும் கேட்கக்கூடாது. காமம், கோபம், செருக்கு, பேராசை, மாயை, கஞ்சத்தனம், வஞ்சனை, அவதூறு, பகட்டு, உயிரினங்களுக்குத் தீங்கிழைத்தல் ஆகியவற்றில் இருந்து அவர்க்ள விடுபட வேண்டும்[3].(3) இதுகுறித்துச் சில ஸ்லோகங்கள் இருக்கின்றன: எந்த மனிதன் தன் எண்ணங்களை வெளியிடாமை என்ற நோன்பை நோற்று, எந்த உயிரினத்தையும் அச்சுறுத்தாமல் உலவி வருகிறானோ, அவனுக்கு எந்த உயிரினத்திடம் இருந்து அச்சமேதும் எழாது.(4) (வெளிப்புற நெருப்பைக் கிண்டாமல்), தன் உடலுக்குள் உள்ள நெருப்பின் மீது தன் வாய்வழியாக ஆகுதிகளை ஊற்றி தன் உடலுக்குள் உள்ள நெருப்பின் துணையுடன் அக்னிஹோத்ரம் செய்யும் கல்விமான், ஈகைசார்ந்த வாழ்வின் மூலம் அடையப்படும் இத்தகைய ஆகுதிகளை அந்நெருப்பில் ஊட்டுவதன் விளைவாக எண்ணற்ற இன்ப உலகங்களை அடைகிறான்.(5) மேற்சொன்னது போல விடுதலையையே {முக்தியையே} முடிவாகக் கொண்ட வாழ்வு முறையை நோற்கும் மறுபிறப்பாளன், தூய இதயத்துடனும், மனவுறுதியில் இருந்து விடுபட்ட அறிவுடனும், எந்தச் சுடர்மிக்க எரிபொருளாலும் ஊட்டப்படாத அமைதியான ஒளிக்கீற்றைப் போலப் பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {பிருகு}.(6)பரத்வாஜர் {பிருகுவிடம்}, “(நாம் வசிக்கும்) இந்த உலகத்துக்கு அப்பால், ஓர் உலகம் இருப்பதாகக் கேள்விப்படுகிறோமேயன்றி ஒருபோதும் பார்த்ததில்லை. அது குறித்த அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன். அஃதை எனக்கு விளக்குவதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(7)
பிருகு {பரத்வாஜரிடம்}, “வடக்கு நோக்கிச் சென்றால், இமயத்திற்கு மறுபக்கத்தில் புனிதமானதும், அருள் நிறைந்ததும், மிகவும் விரும்பத்தக்கதுமான ஒரு பகுதி இருக்கிறது. அது வேறு உலகம் என்றழைக்கப்படுகிறது[4].(8) அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், செயல்களில் அறம் மற்றும் பக்தி சார்ந்தவர்களாக, தூய இதயங்களைக் கொண்டவர்களாக, பேராசை மற்றும் தீர்மானப்பிழைகளில் இருந்து விடுபட்டவர்களாக, எவ்வகைத் துன்பங்களுக்கும் ஆளாதாவர்களாக இருக்கிறார்கள்.(9) இத்தகைய பண்புகளைக் கொண்ட அந்தப் பகுதி உண்மையில் சொர்க்கத்திற்கு இணையானதாகவே இருக்கிறது. அங்கே மரணம் உரிய காலத்தில் மட்டுமே நேர்கிறது. அங்கே வசிப்பவர்களை நோய்கள் ஒருபோதும் தீண்டுவதில்லை[5].(10) பிறன் மனைவியர் மீது ஒருவனும் எந்த ஆசையும் வளர்த்துக் கொள்வதில்லை. அனைவரும் தங்கள் தங்கள் மனைவியிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இம்மக்கள் ஒருவரையொருவர் துன்புறுத்தாமலும், கொல்லாமலும், பிறரின் பொருளில் ஆசை கொள்ளாமலும் இருக்கின்றனர். அங்கே எந்தப் பாவமும் நேர்வதில்லை, எந்த ஐயங்களும் எழுவதில்லை[6].(11) அங்கே (அறச்) செயல்கள் அனைத்தின் கனிகளும் புலப்படுவதாக இருக்கின்றன. அங்கே சிலர், இருக்கைகளிலும், சிறந்த வகைப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களிலும் இன்பங்கொள்பவர்களாக, அரண்மனைகள் மற்றும் மாளிகைகளுக்குள் வாழ்கிறார்கள்.(12) சிலர், தங்க ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, சுற்றிலும் இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்கள் சூழ இருக்கிறார்கள். மேலும், சிலர் தங்கள் உடலையும் ஆன்மாவையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் மிகச் சொற்பமாகவே உண்கிறார்கள்.(13) அங்கே சிலர், பெரும் உழைப்புடன் தங்கள் உயிர் மூச்சைப் பிடித்துக் கொள்ள முனைகிறார்கள்[7].இங்கே (நாம் வசிக்கும் இந்தப் பகுதியில்) சில மனிதர்கள் அறத்திற்கும், சிலர் வஞ்சகத்துக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். சிலர் இன்பத்துடனும், சிலர் துன்பத்துடனும் இருக்கிறார்கள். சிலர் ஏழைகளாகவும், சிலர் செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள்.(14) இங்கே உழைப்பு, அச்சம், மாயை, வலிமிக்கப் பசி ஆகியன தோன்றுகின்றன. இங்கே செல்வத்திற்கான பேராசையும், கல்விமான்களையே மலைக்கச் செய்யும் ஆசையும் காணப்படுகிறது.(15) இங்கே நற்செயல்கள், அல்லது பாவச்செயல்கள் செய்வோரால் அளிக்கப்படும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருவகையாகப் பிரிந்திருக்கும் இந்தக் கருத்துகள் அனைத்தையும் அறிந்த ஞானி, ஒருபோதும் பாவத்தால் கறைபடியமாட்டான்.(16) ஏமாற்றத்துடன் கூடிய வஞ்சகம், களவு, அவதூறு, வன்மம், ஒடுக்குதல், தீங்கிழைத்தல், நம்பிக்கைக்குப்புறம்பாக நடத்தல், பொய்மை,(17) ஆகியவை தவங்களைச் செய்வோரின் தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கலைக்கின்றன. மறுபுறம் கல்விமானானவன், அவற்றைத் தவிர்த்து, தன் தவத்தகுதிகளை அதிகரித்துக் கொள்கிறான்.(18) இங்கே அறம் மற்றும் மறச் செயல்கள் குறித்த பல்வேறு சிந்தனைகள் இருக்கின்றன. நாம் வசிக்கும் இந்தப் பகுதி செயற்களமாகும். இங்கே நன்மையும், தீமையும் செய்யும் ஒருவன், தன் நற்செயல்களுக்காக நன்மையையும், தீச்செயல்களுக்காகத் தீமையையும் அடைகிறான்[8].(19)பழங்காலத்தில் இங்கே, முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும், படைப்பாளனும் {பிரம்மனும்} உரிய தவங்களைச் செய்து தூய்மையடைந்து பிரம்மத்தை அடைந்தனர்[9].(20) பூமியின் வட பகுதியானது மிக மங்கலமானதாகவும், புனிதமானதாகவும் இருக்கிறது. அறச்செயல்களைச் செய்பவர்களே (நாம் வசிக்கும்) இந்தப் பகுதியை உடையவர்களாக இருக்கிறார்கள், அல்லது யோகத்திற்கு மதிப்பளிப்பவர்களே இந்தப் பகுதியில் பிறக்கிறார்கள். (பல்வேறு மனநிலைகளைக் கொண்ட) பிறர் நடுத்தர இனங்களில் பிறக்கிறார்கள். மேலும் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலம் முடிந்ததும், இந்தப் பூமியிலேயே தொலைந்து போகிறார்கள்[10].(21,22) ஒருவொரையொருவர் உண்பதில் ஈடுபட்டு, பேராசை மற்றும் மாயையால் கறைபடிந்த இம்மனிதர்கள், (இறந்த பிறகு) வட பகுதிக்குச் செல்ல முடியாமல் இந்தப் பகுதிக்கே திரும்பி வருகிறார்கள்.(23) ஆசான்களின் போதனைகளை மதிப்புடன் கேட்பவர்களும், பிரம்மச்சரியத்தை நோற்பவர்களும், நோன்புகளைக் கொண்டவர்களுமான ஞானிகள், மனித வர்க்கங்கள் அனைத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள கதிகளை அறிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(24) பிரம்மனால் விதிக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகளை நான் இப்போது சுருக்கமாக உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், இவ்வுலகில் எது அறம், எது மறம் என்பதை அறிந்த ஒருவனே நுண்ணறிவு கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்” என்றார் {பிருகு}”.(25)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறே பிருகு, பெரும் சக்தி கொண்ட பரத்வாஜரிடம் பேசினார். உயரறம் சார்ந்த ஆன்மாவுடன் கூடிய பின்னவர் {பரத்வாஜர்}, ஆச்சரியத்தால் நிறைந்து, அந்தப் பெரும் முனிவரை {பிருகுவை} மதிப்புடன் வழிபட்டார்.(26) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே அண்டத்தின் தோற்றம் குறித்து உனக்கு விரிவாக உரைக்கப்பட்டது. ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இதன் பிறகு நீ என்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(27)
ஒழுக்கவிதிகள்! – சாந்திபர்வம் பகுதி – 193-ஒழுக்கம் குறித்து உரையாடுமறு பீஷ்மரைக் கேட்ட யுதிஷ்டிரன்; நல்லோர் மற்றும் தீயோரின் பண்பியல்புகளையும், ஒழுக்க விதிகளையும் சொன்ன பீஷ்மர்; மனிதர்கள் அனைவருக்குமுரிய கடமைகளைக் குறித்துச் சொன்னது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர் என நான் நினைக்கிறேன். ஓ! கடமைகளை அறிந்தவரே, ஓ! பாவமற்றவரே, ஒழுக்கம் குறித்த விதிகளைப் பற்றி நீர் என்னுடன் உரையாடுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீய செயல்களையும், தீய அறிவையும், அதீத மூர்க்கத்தையும் கொண்ட தீய ஒழுக்கத்தினர், தீயவர்கள் அல்லது கொடியவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனினும், நல்லோர் என்றழைக்கப்படுபவர்கள், தூய ஒழுக்கத்தாலும், நடைமுறைகளாலும் அடையாளம் காணப்படுகிறார்கள்.(2) நெடுஞ்சாலைகளிலோ, மாட்டுக் கொட்டகைகளிலோ, நெல் விளையும் வயல்களிலோ இயற்கையின் அழைப்புகளுக்கு ஒருபோதும் பதில் கூறாதவன் {மலஜலங்கழிக்காதவன்} நல்ல மனிதனாவான்[1].(3) ஒருவன் தேவையான செயல்களைச் செய்த பிறகு, ஆற்று நீரில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்து, நீர்க்காணிக்கையின் மூலம் தேவர்களை நிறைவு செய்ய வேண்டும். இது மனிதர்கள் அனைவரின் கடமையாகச் சொல்லப்படுகிறது.(4) சூரியன் எப்போதும் வழிபடப்பட வேண்டும். சூரியன் உதித்த பிறகு ஒருவன் உறங்கக்கூடாது. (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) காலை மற்றும் மாலை வேண்டுதல்களை முறையே கிழக்கு, மற்றும் மேற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.(5) ஒருவன், ஐந்து அங்கங்களைக் கழுவிய பிறகு[2], கிழக்கு நோக்கி அமர்ந்து அமைதியாக உண்ண வேண்டும். ஒருவன் உண்ண வேண்டிய உணவை ஒருபோதும் இழித்துரைக்கக்கூடாது. ஒருவன் நல்ல சுவைமிக்க உணவை உண்ண வேண்டும்.(6) உண்ட பிறகு அவன் தன் கைகளைக் கழுவிய பிறகே எழ வேண்டும்[3]. ஒருவன் ஈரக்காலுடன் ஒருபோதும் இரவு உறங்கச் செல்லக்கூடாது.-தெய்வீக முனிவரான நாரதர் நல்லொழுக்கத்தின் குறியீடுகள் இவையே என்று சொல்லியிருக்கிறார்.(7) ஒருவன் தினமும், ஒரு புனிதத்தலத்தையும், ஒரு காளையையும், ஒரு புனித சிலையையும் {தேவதையையும்}, பசுக் கொட்டகை, நாற் சந்தி சாலை, ஒரு பக்திமிக்கப் பிராமணன் மற்றும் ஒரு புனிதமான மரத்தை வலம் வர வேண்டும்[4].(8) உணவுக் காரியத்தில் ஒருவன் தன் விருந்தினர்கள், பணியாட்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணக்கூடாது. (இவ்வகையில்) பணியாட்களைச் சமமாக நடத்துவது மெச்சப்பட வேண்டும்.(9) (ஒரு நாளைக்கு இரண்டு வேளை) காலையும், மாலையும் உண்ண வேண்டும் என்பது தேவர்கள் விதித்ததாகும். இடைப்பட்ட எக்காலத்திலும் ஒருவன் (மீண்டுமொருமுறை) உண்ண வேண்டும் என்று விதிக்கப்படவில்லை. இவ்விதியின் படி உண்பவன் உண்ணாநோன்பிருந்த தகுதியை அடைகிறான்[5].(10)ஹோமத்திற்காக விதிப்பட்ட நேரங்களில் ஒருவன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அடுத்தவர் மனைவியரின் தோழமையை நாடாதவனும், உரிய பருவகாலத்தில் தன் மனைவியை நாடுபவனுமான ஞானி பிரம்மச்சரியத்தின் தகுதியை அடைகிறான்.(11) பிராமணர்கள் உண்டவற்றில் எஞ்சியவை அமுதம் போன்றவையாகும். அவை, வாழ்வாதாரமாகத் தாயின் மார்பு வழங்கும் பாலைப் போன்றவையாகும். அவ்வாறு எஞ்சியவற்றை உயர்ந்த மதிப்புள்ளதாகக் மக்கள் கருதுகிறார்கள். நல்லோர் அவற்றை உண்பதால் பிரம்மத்தை அடைகிறார்கள்[6].(12) (வேள்விப்பீடங்களை அமைப்பதற்காக) களிமண்ணைப் பிசைபவன், (வேள்வி எரிபொருளுக்காக) புற்களை வெட்டுபவன், (புனிதப்படுத்தப்பட்ட இறைச்சியை) உண்பதற்கு (எந்த வகை ஆயுதத்தையும் பயன்படுத்தாமல்) தன் நகங்களை மட்டுமே பயன்படுத்துபவன், பிராமணர்கள் உண்டவற்றில் எஞ்சியதையே எப்போதும் உண்பவன், வெகுமதியில் உள்ள விருப்பத்தால் செயல்படுபவன் ஆகியோர் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ மாட்டார்கள்[7].(13) (எந்த நோன்பிற்காகவும்) இறைச்சியை விலக்கியவன், இறைச்சியானது யஜுர்வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டதாகவே இருந்தாலும் அஃதை உண்ணக்கூடாது. (எந்த விலங்கின்) முதுகுத்தண்டில் உள்ள இறைச்சியையும் ஒருவன் தவிர்க்க வேண்டும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியையும் தவிர்க்க வேண்டும்.(14) ஒருவன் தன் சொந்த இடத்திலிருந்தாலும், அந்நியரின் நிலத்தில் இருந்தாலும் அவனுடைய விருந்தாளியை ஒருபோதும் பட்டினியிருக்க விடக்கூடாது. பிச்சைகளையும், மாற்றுச் செயல்களின் மூலமும் பிற கனிகளை அடையும் ஒருவன் அவற்றைப் பெரியோர்களுக்கு அளிக்க வேண்டும்.(15)ஒருவன் பெரியோர்களுக்கு இருக்கைகளை அளித்து அவர்களை மதிப்புடன் வணங்க வேண்டும். அவன் பெரியோர்களை வணங்குவதன் மூலம் நீண்ட வாழ்நாளையும், புகழையும், செழிப்பையும் அடைகிறான்.(16) உதிக்கும் கணத்தில் சூரியனை ஒருவன் பார்க்கக்கூடாது, அதே போலவே பிறன் மனைவியான ஒரு பெண்ணின் நிர்வாணத்திலும் தன் பார்வையைச் செலுத்தக்கூடாது. (உரிய பருவ காலத்தில்) தன் மனைவியுடனான கலவி பாவமாகாது, ஆனால் அஃது எப்போதும் தனிமையிலேயே நடைபெற வேண்டும்.(17) புனிதத் தலங்கள் மற்றும் தீர்த்தங்கள் அனைத்திற்கும் இதயமாக இருப்பவர் ஆசானே. தூய்மையான மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் அனைத்தின் இதயமும் நெருப்பே {அக்னியே}. பசுவாலில் உள்ள முடியைத் தீண்டுவதுடன் சேர்த்து, நல்லோரும், பக்திமான்களும் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையும், மெச்சப்படுபவையுமாகவே இருக்கும்.(18) ஒருவன் மற்றவனைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், மென்மையான நலன்விசாரிப்புகளை {ஸுகப்ரஸனங்களைச்} செய்ய வேண்டும். ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் பிராமணர்களை வணங்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(19) தேவர்களின் கோவில்களிலும், பசுக்களுக்கு மத்தியிலும், பிராமணர்களால் விதிக்கப்பட்ட அறச்சடங்குகளைச் செய்யும்போதும், வேதங்களைப் படிக்கும்போதும், உண்ணும் போதும், வலக்கரமே உயர்த்தப்பட வேண்டும்.(20)
உரிய சடங்குகளின் படி காலையிலும் மாலையிலும் பிராமணர்களை வழிபடுவது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும். இத்தகைய வழிபாட்டின் விளைவால், வணிகர்களின் கையிருப்பு பொருட்களும், உழவர்களின் விளைச்சலும் அதிகமாகும். அனைத்து வகைத் தானியங்களின் விளைச்சலும் அதிகமாகும், புலன்களால் இன்புறும் பொருட்கள் அனைத்தும் அதிகமாகப் பெறப்படும்.(21) (உண்ண அமர்ந்திருப்பவன்) மற்றவருக்கு உணவளிக்கும்போது, “போதுமானதாக இருக்கிறதா {ஸம்பந்நம்}” என்று கேட்க வேண்டும். குடிப்பதற்குப் பானம் கொடுக்கும்போது, “இது நிறைவு செய்யுமா? {தர்ப்பணம்}” என்று கேட்க வேண்டும். பாயசம், கஞ்சி, சித்திரான்னம் ஆகியவற்றை அளிக்கும்போது, “இது விழுந்துவிட்டதா? {ஸ்ரிகம்}’” என்று கேட்க வேண்டும்[8].(22) சிரைத்தபிறகும், துப்பிய பிறகும், குளித்த பிறகும், உண்ட பிறகும் மக்கள் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அத்தகைய வழிபாடு நோய்வாய்ப்பட்ட மனிதர்களுக்கு நீண்ட வாழ்நாளை நிச்சயம் அளிக்கும்.(23) ஒருவன் சூரியனை நோக்கித் திரும்பி சிறுநீர் கழிக்கக்கூடாது, அதேபோல ஒருவன் தன் மலத்தைத் தானே காணக் கூடாது. ஒருவன் ஒரே படுக்கையில் ஒரு பெண்ணுடன் படுக்கவும், அவளுடன் உண்ணவும் கூடாது[9].(24) பெரியோர்களிடம் பேசும்போது நீ என்று சுட்டும் பெயர்ச்சொல்லையோ, அவர்களுடைய பெயர்களையோ ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தாழ்ந்தவர்கள் {வயதில் இளையவர்கள்} அல்லது வயதில் சமமானவர்களிடம் நீ என்றோ, அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பதோ நிந்திக்கத்தக்கதல்ல[10].(25)பாவிகளின் இதயங்கள் அவர்களால் இழைக்கப்பட்ட பாவங்களைக் காட்டிக் கொடுக்கின்றன. தாங்கள் அறிந்தே செய்த பாவங்களை நல்லோரிடம் மறைக்கும் பாவிகள் அழிவைச் சந்திக்கிறார்கள்.(26) அறியாமை கொண்ட மூடர்களே தெரிந்தே செய்யப்பட்ட பாவங்களை மறைக்க முயல்வார்கள். அந்தப் பாவங்களை மனிதர்கள் பார்ப்பதில்லை என்பது உண்மையே, ஆனால் தேவர்கள் அவற்றைக் காண்கிறார்கள்.(27) ஒரு பாவத்தால் மறைக்கப்படும் மற்றொரு பாவம் புதிய பாவங்களுக்கு வழிவகுக்கும். அதே போலத் தகுதிமிக்க ஒரு செயல் மற்றொரு தகுதிமிக்கச் செயலால் மறைக்கப்பட்டால், அது தகுதிகளை அதிகரிக்கச் செய்கிறது. அறவோரின் செயல்கள் எப்போதும் அறத்தின் பார்வையிலேயே அவர்களைப் பின்தொடர்கிறது.(28) அறிவற்ற மனிதன் தான் இழைத்த பாவங்களை ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை. எனினும், சாத்திரங்களில் இருந்து வீழ்ந்து பாவங்களைச் செய்தவனை அவை {அந்தப் பாவங்கள்} அடையவே செய்கின்றன. (உரிய நேரத்தில்) சந்திரனிடம் வரும் ராகுவைப் போலவே, அந்தப் பாவச்செயல்கள் அந்த மூட மனிதனை வந்தடைகின்றன[11].(29) எதிர்பார்ப்புடன் திரட்டி வைக்கப்படும் {சேமிக்கப்படும்} பொருட்கள் அரிதாகவே அனுபவிக்கப்படுகின்றன. காலன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை (தன் இரை தயாராக இருக்கிறதோ, இல்லையோ அதைப் பறித்தே செல்கிறான்) என்பதால், அத்தகைய சேமிப்பு ஞானிகளால் ஒருபோதும் மெச்சப்படுவதில்லை.(30)அனைத்து உயிரினங்களுடைய மனத்தின் இயற்பண்பே அறம் என ஞானிகள் சொல்கிறார்கள். இதன் காரணமாக ஒருவன், தன் மனத்தால் அனைத்திற்கும் நன்மையைச் செய்ய வேண்டும்[12].(31) ஒருவன் அறத்தைத் தனியாகப் பயில வேண்டும். அறம் பயிலும் போது ஒருவன் பிறரின் உதவியை நாடக்கூடாது. ஒருவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளதை மட்டுமே அடைகிறான் எனும்போதும், ஒரு தோழனால் {உதவியால்} என்ன செய்ய முடியும்[13]?(32) அறமே மனிதனின் தோற்றுவாயாகும். அறமே தேவர்களின் அமுதமுமாகும். மரணத்திற்குப் பிறகு அறத்தின் மூலமே மனிதர்கள் நித்திய இன்பத்தை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(33)
அத்யாத்மா! – சாந்திபர்வம் பகுதி – 194-அத்யாத்மாவின் இயல்பைக் குறித்து விசாரித்த யுதிஷ்டிரன்; அத்யாத்மா குறித்துப் பீஷ்மரின் உரையாடல்; சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணகளின் இயல்புகளைச் சொன்னது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டிருப்பதும், அத்யாத்மா என்ற பெயரில் அழைக்கப்படுவதுமானது எது? அதன் இயல்பென்ன? என்பது குறித்து எனக்குச் சொல்வீராக[1].(1) ஓ! பிரம்மத்தைக் குறித்து அறிந்தவரே, அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் எங்கிருந்து உண்டாக்கப்பட்டது? அண்டப்பேரழிவு ஏற்படும்போது, அது யாரிடம் செல்கிறது? இக்காரியம் குறித்து என்னுடன் உரையாடுவதே உமக்குத் தகும்[2]” என்றான்.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நீ என்னிடம் கேட்கும் அத்யாத்மா குறித்து நான் இப்போது உன்னுடன் உரையாடப்போகிறேன். ஓ! ஐயா, அது மிகவும் ஏற்புடையதும், பெரும் இன்ப {பேரின்ப} நிலையை உண்டாக்குவதுமாகும்.(3) (இதற்கு முன்பு) பேராசிரியர்கள், (இந்த அண்டத்தின்) படைப்பு மற்றும் அழிவு குறித்த உண்மைகளைச் சுட்டிக்காட்டிச் சென்றிருக்கிறார்கள். அவ்வுண்மைகளை அறிந்த மனிதன், இம்மையில் பெரும் நிறைவையும், மறுமையில் இன்பநிலையையும் அடைகிறான். அத்தகைய அறிவானது, பெரும் கனிகளை அடைவதற்கும், அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த நன்மையை விளைவிப்பதற்கும் வழிவகுக்கும்.(4) பூமி {நிலம்}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்}, நீர், எண்ணிக்கையில் ஐந்தாவதாக ஒளி (அக்னி) ஆகியவை பேருயிரினங்களாக {மகாபூதங்களாக} கருதப்படுகின்றன. இவற்றிலேயே படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றமும் மறைவும் இருக்கிறது.(5) எவனிலிருந்து இந்த அடிப்படை பூதங்கள் தங்கள் தோற்றத்தைப் பெற்றனவோ, (எவனிடம் அவற்றின் தொகை நுழையுமோ) அவனிடமே அனைத்து உயிரினங்களிடமிருந்தும் தங்களைப் பிரித்துக் கொண்டு கடலின் அலைகளைப் போல (எதிலிருந்து எழுந்தனவோ அதிலேயே) மீண்டும் திரும்புகின்றன.(6) ஆமை எவ்வாறு தன் அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்கிறதோ, அவ்வாறே பரமாத்மாவும் அனைத்துப் பொருட்களையும் படைத்தும், மீண்டும் தனக்குள்ளேயே எடுத்தும் கொள்கிறது.(7)
படைப்பாளன், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும், இந்த ஐந்து அடிப்படை பூதங்களையும் பல்வேறு அளவுகளில் இடம்பெறச் செய்கிறான். எனினும், உயிரினமானது (அறியாமையின் மூலம்) அதைக் காண்பதில்லை.(8) ஒலி, கேட்பதற்கான உறுப்புகள் மற்றும் அனைத்துத் துளைகள் ஆகிய இந்த மூன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் பிறப்பிடமாகக் கொள்கின்றன. தீண்டல், செயல்பாடு, தோல் ஆகியவை காற்றின் {வாயுவின்} மூன்று பண்புகளாக இருக்கின்றன.(9) வடிவம், கண், செரிமானம் ஆகியவை நெருப்பு {அக்னி}, அல்லது சக்தியின் மூன்று பண்புகளாக இருக்கின்றன. சுவை, திரவங்கள் அனைத்தும், நாவு ஆகியவை நீரின் மூன்று பண்புகளாக இருக்கின்றன.(10) மணம், மூக்கு, உடல் ஆகியவை பூமியின் {நிலத்தின்} மூன்று தன்மைகளாக இருக்கின்றன. (அடிப்படையான) பெரும்பூதங்கள் ஐந்தாகும். ஆறாவது மனமாகும்.(11) ஓ! பாரதா, புலன்களும், மனமும் உயிரினங்களின் உணர்வுகள் (அனைத்திற்கும் மூலம்) ஆகும்[3]. ஏழாவதானது புத்தி {நுண்ணறிவு} என்றழைக்கப்படுகிறது, எட்டாவதோ ஆன்மா {ஜீவன்} என்றழைக்கப்படுகிறது[4].(12)புலன்கள் உள்ளுணர்பவை; (அந்த உள்ளுணர்தல்களைத் தொடர்பு கொள்ள இயலாத) மனம், உறுதியற்ற நிலையை உண்டாக்குகிறது. புத்தியானது அனைத்து அறிவுகளையும் உறுதியான நிலையை அடையச் செய்கிறது. ஆன்மாவானது (செயல்படாமல்) சான்றாக {சாட்சியாக} இருக்கிறது.(13) இரண்டு உள்ளங்கால்களுக்கு மேலே இருப்பவை அனைத்தும், பின்னே {கீழே} இருக்கும் அனைத்தும், குறுக்காக இருக்கும் அனைத்தும் ஆன்மாவால் காணப்படுகின்றன. ஆன்மாவானது, நிரப்ப எந்த வெளியும் இல்லாத அளவுக்கு மொத்த இருப்பிலும் {உயிரினத்திலும்} படர்ந்தூடுருவி இருக்கிறது.(14) புலன்கள், மனம் மற்றும் புத்தியை மனிதர்கள் அனைவரும் முழுமையாக அறிவார்கள். இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} ஆகிய மூன்று நிலைகள், அல்லது குணங்கள் புலன்கள், மனம் மற்றும் புத்தியைச் சார்ந்தே இருக்கின்றன[5].(15) மனிதன், உயிரினங்கள் எவ்வாறு இவ்வுலகிற்கு வந்து போகின்றன என்பதை நுண்ணறிவின் {புத்தியின் துணையுடன் புரிந்து கொள்வதன் மூலம், நிச்சயம் படிப்படியாக உறுதியான மன அமைதியை அடைவான்.(16) (ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோல, இருள், ஆசை, நல்லியல்பு ஆகிய) மூன்று குணங்களும் (உலகப் பற்றுகளை {புரிந்து கொள்வதற்கு}) புத்திக்கு வழிவகுக்கின்றன. இவ்வகையில், புத்தியானது (நுண்ணறிவானது), புலன்களையும், மனத்தையும் போன்றதாகும். எனவே, புத்தியானது (ஐம்புலன்களுடன், மனத்தையும் சேர்ந்த) ஆறையும், அவற்றை உட்கொள்ளும் பொருட்களையும் போன்றதாகும். எனினும், (இருள், ஆசை மற்றும் நல்லியல்பு ஆகிய) இந்த மூன்று குணங்களும் செயல்பாட்டுக்கு வழிவகுக்க இயலாதபோது புத்தி அழிவடைகிறது[6].(17)அசையாத மற்றும் அசையும் பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் இந்தப் புத்தியைக் கொண்டிருக்கிறது. புத்தியிலிருந்தே அனைத்தும் எழுகின்றன, அனைத்தும் அதனுள்ளேயே அடங்குகின்றன. இதன் காரணமாகவே அனைத்தும் புத்தியின் {நுண்ணறிவின்} வெளிப்பாடே என்று சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன.(18) எதைக் கொண்டு ஒருவன் பார்க்கிறானோ, அது கண்ணாகும், எதைக் கொண்டு ஒருவன் கேட்கிறானோ அது காதாகும். எதைக் கொண்டு ஒருவன் நுகர்கிறானோ, அது மணத்திற்கான உறுப்பு {மூக்கு} என்று அழைக்கப்படுகிறது. எதைக் கொண்டு ஒருவன் சுவையை வேறுபடுத்திப் பார்க்கிறானோ அது நாக்கு என்று அழைக்கப்படுகிறது.(19) தீண்டும் உணர்வை ஒருவன் உடலை மறைக்கும் தோலால் அடைகிறான். எது புத்தி என்றழைக்கப்படுகிறதோ, அது மாற்றங்களுக்கு உட்படுகிறது. புத்தியானது எதையும் விரும்பும்போது, அது மனம் என்றழைக்கப்படுகிறது.(20) எந்த அடித்தளங்களில் புத்தியானது ஓய்ந்திருக்கிறதோ, அவை {அந்த அடித்தளங்கள்} ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்திற்குத் தொண்டாற்றுபவையாகவும், எண்ணிக்கையில் ஐந்தாகவும் இருக்கின்றன. அவை புலன்கள் என்றழைக்கப்படுகின்றன. புலப்படாத கொள்கையான புத்தியானது, அவற்றிலேயே {அந்த அடித்தளங்களிலேயே} ஓய்ந்திருக்கிறது.(21)
ஓர் உயிரினத்தில் இருக்கும் புத்தியானது, (இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} என்றழைக்கப்படும்) மூன்று நிலைகளுடன் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்கிறது. சிலவேளைகளில் அஃது இன்பத்தை அடைகிறது, சில வேளைகளில் துன்பத்தை அடைகிறது.(22) சில வேளைகளில் அஃது இன்பமும், துன்பமும் அற்றதாக இருக்கிறது. இவ்வாறே புத்தியானது, மனிதர்கள் அனைவரின் மனங்களிலும் இருக்கிறது.(23) ஆறுகளின் தலைவனும், அலைகளுடன் கூடியதுமான பெருங்கடலானது கரைகளை மீறிச் செல்வதைப் போல, (ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல) மூன்று நிலைகளாலான புத்தியானது, சில வேளைகளில், (யோகத்தின் மூலம்) அந்த மூன்று நிலைகளையும் கடந்து செல்கிறது[7].(24) எந்தப் புத்தி முக்குணங்களைக் கடந்து செல்கிறதோ, அது தூய நிலையில் (மாற்றமடையாத இருப்பாக) மட்டுமே மனத்தில் இருக்கிறது. எனினும், செயல்படத் தூண்டும் இருள் குணம் {தமோகுணம்}, அதை விரைவில் பின்தொடர்கிறது.(25) அந்த நேரத்தில் புத்தியானது, புலன்கள் அனைத்தையும் செயல்பட வைக்கிறது. அந்த மூன்றின் தன்மைகள் இவ்வாறே இருக்கின்றன: நல்லியல்பில் {சத்வ குணத்தில்} இன்பமும்; ஆசையில் {ரஜோ குணத்தில்} துன்பமும், இருளில் {தமோ குணத்தில்} மாயையும் வசிக்கின்றன.(26) மனத்தில் இருக்கும் நிலைகள் அனைத்தும் (பெயர் குறிப்பிடப்பட்ட) மூன்றில் சேர்க்கப்படுகின்றன. ஓ! பாரதா, புத்தியின் போக்கு குறித்து உனக்கு இப்போது சொல்லிவிட்டேன்.(27)ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். நல்லியல்பு, ஆசை, இருள் ஆகிய முக்குணங்கள் எப்போதும் உயிரினங்களைப் பற்றியிருக்கின்றன.(28) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்லியல்பு, ஆசை, இருள் ஆகியவற்றைச் சார்ந்த மூன்று வகைப் புத்திகளும் {நுண்ணறிவுகளும்} ஒவ்வொரு உயிரினத்திலும் காணப்படுகினறன.(29) நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது; ஆசையின் குணம் {ரஜோ குணம்} கவலையை உண்டாக்குகிறது. இவ்விரண்டும், இருளின் குணத்துடன் {தமோ குணத்துடன்} சேர்ந்தால், அந்நிலை மகிழ்ச்சியையோ, கவலையையோ உண்டாக்காது (ஆனால் அதற்குப் பதில் மாயை, அல்லது குற்றத்தை மட்டுமே உண்டாக்கும்).(30) உடலிலோ, மனத்திலோ தோன்றும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிலையும், நல்லியல்பின் பண்பினாலேயே விளைகின்றன என்று சொல்லப்படுகிறது.(31) ஒருவனுக்கு ஏற்பில்லாத துன்ப நிலையானது, ஆசைப்பண்பினால் விளைகிறதேயன்றி வேறெதனாலும் அல்ல. ஒருவன் அதைக் குறித்து எப்போதும் அச்சத்துடன் நினைக்கக்கூடாது[8].(32) மேலும், மாயையுடனும், குற்றத்துடனும் சேர்ந்ததும், உறுதிசெய்யப்பட முடியாததும், அறியப்படமுடியாததுமான அந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவன் அறியவில்லையெனில், அந்நிலை இருள் பண்பைக் கொண்டது என்று கருதப்பட வேண்டும்.(33)உவகை {சந்தோஷம்}, நிறைவு {பிரியம்}, திளைப்பு {ஆனந்தம்}, {சுகம்}, இதய அமைதி {மனத்தில் நல்ல அடக்கம்} ஆகியவை நல்லியல்பு நிலையின் {சத்வ குணத்தின்} தன்மைகளாகும். இவை மனிதனுககு சில நேரங்களில் ஓரளவுக்கு உண்டாகின்றன.(34) நிறைவின்மை {சந்தோஷமில்லாமை}, இதய எரிச்சல் {பரிதாபம்}, துன்பம் {சோகம்}, பேராசை, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியவை அனைத்தும் ஆசை நிலையின் {ரஜோ குணத்தின்} குறியீடுகளாகும். அவற்றை விளைவிப்பதற்கான போதுமான தகுந்த காரணத்துடனோ, இல்லாமலோ அவை காணப்படுகின்றன.(35) அவமதிப்பு {அபிமானம்}, மாயை {அவிவேகம்}, குற்றம் {அஜாக்ரதை}, உறக்கம், மலைப்பு {சோம்பல்} மற்றும் ஒருவனின் தீயூழின் காரணமாக உண்டாகுபவை அனைத்தும் இருள் நிலையின் {தமோ குணத்தின்} பல்வேறு தன்மைகளாகும்.(36) எட்டாததை எட்டுவதும், பல திசைகளில் விரிந்து செல்லக்கூடியதும், ஆசைகளின் நோக்கங்களை வெல்லும் காரியத்தில் நம்பிக்கையில்லாததும், நன்கு கட்டுப்படுத்தப்பட்டதுமான மனத்தைக் கொண்ட மனிதன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருப்பான்[9].(37)புத்தி, ஆன்மா என்ற இரு நுண்ணியப் பொருட்களின் வேறுபாட்டைக் காண்பாயாக. இவற்றில் ஒன்று (புத்தி) குணங்களை வெளிப்படுத்துகிறது. மற்றது (ஆன்மா) அவ்வகையில் எதையும் செய்வதில்லை.(38) ஒரு கொசுவும், அத்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் காணலாம். இணைந்திருந்தாலும், அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகும்.(39) அதே போலவே, புத்தியும், ஆன்மாவும் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படி ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக இருந்தாலும், அவை எப்போதும் ஒன்றான நிலையிலேயே காணப்படுகின்றன. மீனும், நீரும் ஒன்று கலந்த நிலையிலேயே இருக்கின்றன. எனினும், அவை ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டவையாகும். இது புத்தி மற்றும் ஆன்மாவின் வழக்கிலும் அவ்வாறே ஆகிறது.(40) குணங்கள் ஆன்மாவை அறியாமல் இருக்கின்றன, ஆனால், ஆன்மாவோ அவை அனைத்தையும் அறிந்திருக்கிறது. ஆன்மாவானது, குணங்களின் சான்றாக இருந்து அவை அனைத்தும் தன்னில் இருந்தே உண்டாகின்றன என்று கருதுகிறது.(41) செயல்படாத ஆன்மாவானது, தன்னினைவற்ற {சுயநினைவற்ற} புலன்கள், மனம் மற்றும் ஏழாவதான அறிவு ஆகியவற்றின் மூலமாகச் செயல்படும் போது, அடைப்பில் உள்ள துளையின் வழியாக வரும் கதிர்களைப் பொழிந்து அனைத்துப் பொருட்களையும் காட்டும் ஒரு விளக்கைப் போல, (இருப்பில் உள்ளவற்றுக்கு மத்தியில் உள்ள) பொருட்களைக் கண்டறிகிறது.(42)
அறிவு அல்லது புத்தியே அனைத்துக் குணங்களையும் உண்டாக்குகிறது. ஆன்மாவானது அவற்றை (சான்றாக) பார்க்க மட்டுமே செய்கிறது. புத்தி மற்றும் ஆன்மாவுக்கிடையிலான தொடர்பு நிச்சயம் இத்தகையதே[10].(43) புத்தியோ, ஆன்மாவோ சார்ந்திருக்கக்கூடிய புகலிடம் ஏதும் கிடையாது. அறிவானது {புத்தியானது}, மனத்தை உண்டாக்குகிறது, ஆனால் ஒருபோதும் குணங்களை உண்டாக்குவதில்லை.(44) புலன்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள், போதுமான அளவுக்கு மனத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும்போது, ஆன்மாவானது, குடத்திலிட்ட விளக்கைப் போல, (அறிவுக்குத்) தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(45) இயல்பான செயல்கள் அனைத்தையும் துறக்கும் மனிதன், தவங்களைப் பயின்று, ஆன்ம கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, அதிலேயே திளைத்து, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே கருதுவானானால், அவன் உயர்ந்த கதியை அடைவான்.(46) நீரில் நகரும் நீர்க்கோழியானது, {நீரெனும்} அந்தப் பூதத்தால் நனையாமல் இருப்பதைப் போலவே ஒரு ஞானியும் (இவ்வுலகத்தில்) உயிரினங்களுக்கு மத்தியில் உலவுவான்.(47)ஒருவன் தனது நுண்ணறிவின் மூலம் இவ்வகையிலேயே, துன்பமும் இன்பமும் இல்லாமல், அனைத்திலும் சம கண்ணுடன், வன்மமும், பொறாமையும் அற்றவனாக இவ்வுலகில் செயல்பட வேண்டும்.(48) இவ்வழியில் வாழ்பவன், நூல்களை அறுக்கும் சிலந்தியைப் போல, (குணங்களில் சிக்கிக் கொள்வதற்குப் பதிலாக) குணங்களை உண்டாக்குவதில் வெல்கிறான். உண்மையில், குணங்கள் சிலந்தியின் நூல்களைப் போலவே கருதப்பட வேண்டும்[11].(49) அத்தகைய மனிதர்களைப் பொறுத்தவரையில் குணங்கள் தொலையாது எனச் சிலர் சொல்கின்றனர். அவை அனைத்தும் தொலைந்து போகும் என்று சிலர் சொல்கின்றனர். தொலைந்து போவதில்லை என்று சொல்பவர்கள், (ஸ்ருதிகளில்) வெளிப்படுத்தப்பட்டவையும், இதற்கு முரணான எந்த அறிவிப்பும் இல்லாதவையுமான சாத்திரங்களைச் சார்ந்திருக்கின்றனர். மறுபுறம், அனைத்துப் குணங்களும் தொலைந்து போகின்றன என்று சொல்பவர்கள், ஸ்மிருதிகளைச் சார்ந்திருக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இரண்டையும் சிந்தித்துப் பார்த்து, தனக்கு எது சரியெனத் தோன்றுவதை ஒருவன் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.(50,51) இவ்வாறே ஒருவன் கடினமானதும், முடிச்சு கொண்டதுமான, ஐயத்தால் அறிவைக் குலைக்க வல்லதுமான இந்தக் கேள்வியைக் கடந்து, அதைக் கடபபதன் மூலம் மகிழ்ச்சியை அடைய வேண்டும். அந்த ஐயம் அகன்றால், அதற்கு மேலும் அவன் எந்த வகைத் துன்பத்திற்கும் ஆளாக வேண்டாம்.(52)நன்கு நிரம்பிய நீரோடைகளில் அருவருக்கத்தக்க அனைத்துடன் சேர்ந்து மூழ்கித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்பவர்களைப் போல, அருவருக்கத்தக்க இதயங்களைக் கொண்ட மனிதர்களும் அறிவை அடைவதில் வெல்லக்கூடும்.(53) ஒரு பெரிய ஆற்றைக் கடக்க வேண்டிவன், மறுகரையைப் பார்ப்பதால் மட்டுமே மகிழ்ச்சியை உணர்ந்துவிட மாட்டான். இவ்வழக்கு வேறுமாதிரியாக இருந்தால், (பார்த்துவிடுவதால் மட்டுமே ஒருவனால் ஒரு படகைக் கொண்டு மறுகரையை அடைந்துவிட முடியுமென்றால்), அவன் ஒருவேளை மகிழ்ச்சியை அடையலாம். உண்மையை அறிந்தவனிடம் இக்காரியமோ, வேறுமாதிரி இருக்கிறது. உண்மையைக் குறித்த வெறும் அறிவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. அந்த அறிவானது, கனிகளைத் தாங்கத் தொடங்கியதும், அம்மனிதன் மறுகரையை அடைந்துவிட்டான் என்று கருதப்படலாம். ஆன்மாவை உலகப் பொருட்களில் இருந்து விடுபட்ட தனியான ஒன்றாக அறிபவர்கள், உயர்ந்ததும், சிறந்ததுமான அறிவை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(54) ஒரு மனிதன், உயிரினங்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் மறைவைக் குறித்து அறிவதன் மூலம், அக்காரியத்தைச் சிந்தித்து, படிப்படியாக முடிவிலா மகிழ்ச்சியை அடைகிறான்.(55) எவன் (அழிவற்றதாக இல்லாமல் அழியத்தக்கதாக இருக்கும்) இந்த முத்தொகையை {மூன்று குணங்களைச்} சிந்தித்துப் பார்த்து, அஃதை அறிந்து கொண்டு கைவிடுகிறானோ, அவன் யோகத்தின் மூலம் உண்மையைக் காண்பதில் வென்று, முற்றான இன்பநிலையை அடைகிறான்.(56) பல்வேறு பொருட்களில் ஈடுபாடு கொண்டவையும், கட்டுப்படுத்துவதற்குக் கடினமானவையுமான புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தாத வரையில் ஆன்மாவைக் காண முடியாது.(57)
இஃதை அறிந்தவன் உண்மையில் ஞானியாவான். ஞானிக்கு வேறென்ன குறியீடு இருக்க முடியும்? இந்த அறிவை அடைந்தவர்களும், நுண்ணறிவுமிக்கவர்களுமான மனிதர்கள், வெற்றிமகுடம் சூடியவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கிறார்கள்.(58) அறியாமையிலுள்ளோரை எது அச்சுறுத்துமோ, அஃது அறிவாளிகளை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. (விடுதலையை {முக்தியை} விட) எவருக்கும் வேறேதும் உயர்ந்த கதியில்லை. எனினும், அதீத நற்குணத்தின் விளைவாக, விடுதலையின் {முக்தியின்} அளவைப் பொறுத்தே வேறுபாடுகள் தெரிகின்றன என்று தவசிகள் சொல்கிறார்கள்.(59) கனிகளில் எதிர்பார்ப்பில்லாமல் செயல்படும் மனிதன், (அச்செயல்களின் மூலம்) முற்பிறவியில் இழைக்கப்பட்ட தன் பாவச்செயல்களை அழிக்கிறான். ஞானம் கொண்ட ஒருவனுக்கு, (இவ்வாறு கழுவப்படும்) முற்பிறவியின் செயல்களும், இப்பிறவியில் (கனியின் எதிர்பார்ப்பில்லாமல் நிறைவேற்றப்படும்) செயல்களும், (நரகத்தில் வீழ்வது போன்ற) ஏற்பில்லாத எந்த விளைவுகளையும் உண்டாக்காது. ஆனால், அவன் செயல்களைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அச்செயல்களால் எவ்வாறு ஏற்புடைய (விடுதலையை {முக்தியைக்}) கொண்டு வர முடியும்.(60) (காமம், பொறாமை மற்றும் பிற தீய ஆசைகளால்) பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனை மக்கள் நிந்திக்கிறார்கள். அத்தீமைகள் அம்மனிதனை அடுத்தப் பிறவியில் தாழ்ந்த பல வகைப் பிறப்புகளில் வீழ்த்துகின்றன[12].(61) இவ்வுலகில் (மகன்கள், மனைவியர் போன்ற) தங்கள் உடைமைகளின் இழப்பால் அதிகமாக வருந்தும் தீயோரை மிகக் கவனமாகப் பார். அதே போன்ற சூழ்நிலைகளில் ஒருபோதும் வருந்தாதவர்களையும், அறிவைக் கொடையாகக் கொண்டவர்களையும் பார். (படிப்படியான விடுதலை {முக்தி} மற்றும் உடனடி விடுதலை ஆகிய) இரண்டையும் அறிந்தோரே, உண்மையில் ஞானிகளாக அழைக்கத்தகுந்தவர்களாவர்” என்றார் {பீஷ்மர்}[13].(62)
தியானயோகம்! – சாந்திபர்வம் பகுதி – 195-தியான யோகம் குறித்துச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்தி தியானயோகத்தில் ஈடுபடச் செய்யும் வழிமுறைகள் குறித்துச் சொன்னது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, இனி நான் தியான யோகத்தின் நான்கு வகைகளைக் குறித்துப் பேசப் போகிறேன். அதைக்குறித்த அறிவை அடைந்த பெரும் முனிவர்கள், இம்மையிலேயே அழிவில்லா வெற்றியை அடைகிறார்கள்.(1) அறிவால் நிறைவடைந்த பெரும் முனிவர்கள், விடுதலையில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, யோகத்தை அறிந்து, தங்கள் தியான யோகம் சரியாகும் வழியில் செயல்படுகின்றனர்.(2) ஓ! பிருதையின் மகனே, உலகக் குற்றங்களில் இருந்து விடுபட்ட அவர்கள், ஒருபோதும் (மறுபிறவிக்காக இங்கே) திரும்பி வருவதில்லை. மறுபிறவியில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள், தங்கள் இயல்பான ஆன்ம நிலையிலேயே {ஆத்மரூபத்திலேயே} வாழ்கிறார்கள்[1].(3) (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் போன்ற) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டு, (பற்றுகளில் இருந்து) விடுதலையடைந்து, ஒருபோதும் (கொடையாக) எதையும் ஏற்காமல், தங்கள் (இயல்பான) நிலையிலேயே எப்போதும் நீடிக்கும் அவர்கள், மனைவியர் மற்றும் பிள்ளைகளின் தோழமையிலிருந்து விடுபட்டவையும், யாராலும் எந்தச் சச்சரவுகளும் எழாத நிலையில் இருப்பவையும், முற்றான இதய அமைதிக்கு ஏற்ற வகையில் இருப்பவையுமான இடங்களில் வாழ்கின்றனர்.(4) அத்தகைய மனிதன், பேச்சை அடக்கி, தியானத்தின் உதவியால் (பரமாத்மாவிடம்) பிரியாத ஒன்றிய மனத்துடன், தன் புலன்கள் அனைத்தும் நொறுங்கிய ஒரு மரத்துண்டைப் போல அமர்ந்திருக்கிறான்.(5)அவன் காதின் மூலம் எந்த ஒலியையும் உணர்வதில்லை; தோலின் மூலம் எந்தத் தீண்டலையும் உணர்வதில்லை; கண்ணின் மூலம் எந்த வடிவத்தையும் உணர்வதில்லை; நாவின் மூலம் எந்தச் சுவையையும் உணர்வதில்லை.(6) மணத்திற்கு உரிய உறுப்பின் மூலம் அவன் மணங்கள் எதையும் உணர்வதில்லை. யோகத்தில் மூழ்கிய அவன், தியானத்தில் மெய்மறந்து அனைத்துப் பொருட்களையும் கைவிடுகிறான்.(7) பெரும் மனோ சக்தியைக் கொண்ட அவன், ஐம்புலன்களைத் தூண்டக்கூடிய எதையும் விரும்புவதில்லை. ஐம்புலன்களையும் தன் மனத்திற்குள் இழுத்துக் கொள்ளும் ஞானி, உறுதியற்ற தன் மனத்தை அந்த ஐம்புலன்களைக் கொண்டு (அறிவில் {புத்தியில்}) நிலைநிறுத்த வேண்டும் {மனத்தை ஸமாதியிலிருக்கும்படி செய்வான்}.(8) பொறுமையைக் கொண்ட யோகியானவன், எந்தப் பொருட்கள் உறுதியில்லாதவையாக இருக்கின்றனவோ அவை உறுதியடையும் வகையில், (உலகம் சார்ந்த பொருட்களுக்கு மத்தியில்) எப்போதும் திரியும் தன் மனத்தை (பயிற்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள) தன் ஐந்து வாயில்களில் {புலன்களில்} நிலைநிறுத்த வேண்டும். அவன், உடலில் இருந்தோ, வேறு எந்தப் புகலிடத்திலிருந்தோ தன் மனத்தைச் சார்பற்றதாகச் செய்து, இதய ஆகாயத்தின் யோகப் பாதையில் அதை {இதயத்தை} நிலைநிறுத்த வேண்டும்[2].(9) யோகியானவன், முதலில் தன் புலன்களையும், மனத்தையும் நொறுக்கி (தியானப் பாதையில் செலுத்த வேண்டும்) என்பதால், நான் முதலில் தியானப் பாதையைக் குறித்துப் பேசினேன்.(10){புலன்களைத் தவிர்த்து} ஆறாவதாக இருக்கும் மனமானது இவ்வாறு அடக்கப்படும்போது, மேகங்களுக்கு மத்தியில் களித்தாடி கணிக்கப்படமுடியாத வேகத்தில் நகரும் மின்னலைப் போல மின்ன முனைகிறது.(11) ஒரு (தாமரை) இலையில் உள்ள நீர்த்துளி எவ்வாறு நிலையில்லாமல் அனைத்துத் திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கிறதோ, அவ்வாறே அந்த யோகியின் மனமும் தியானப் பாதையில் முதலில் நிலைக்கச் செய்யப்படும்போது {அப்பாதையில்} அலைபாய்கிறது.(12) இவ்வாறு நிலைக்கச்செய்யப்படும்போது, அந்த மனமானது சிறிது நேரத்திற்கு அந்தப் பாதையில் நிலைத்திருக்கிறது. எனினும், அது மீண்டும் காற்றின் பாதையில் சுற்றும்போது, காற்றைப் போலவே அது வேகம் கொள்கிறது.(13) தியான யோகத்தின் வழிகளை நன்கறிந்த மனிதன், இதனால் உற்சாகமிழக்காமல், உழைப்பு வீணானதை ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், சோம்பலையும், வன்மத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தைத் தியானத்தில் செலுத்த வேண்டும்.(14) ஒருவன், அமைதிநோன்பை {மௌனவிரதத்தை} நோற்று யோகத்தில் தன் மனத்தை நிலைபெறச் செய்யத் தொடங்கும்போது, பகுத்தறிவு {விகாரஸமாதி}, ஞானம் {விதர்க்கஸமாதி}, தீமையைத் தவிர்க்கும் சக்தி {விவேகஸமாதி} ஆகியவை அவனால் ஈட்டப்படுகின்றன[3].(15)மனோவேகத்தின் விளைவாக எரிச்சலை உணர்ந்தாலும், அவன் அதை {மனத்தை} (தியானத்திலேயே) நிலைநிறுத்த வேண்டும். அந்த யோகி, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல், தன் நன்மையை நாட வேண்டும்.(16) புழுதி, அல்லது சாம்பல், அல்லது எரிக்கப்பட்ட சாணக் குவியல் நீரால் நனைக்கப்படும்போது நனையாதிருப்பதாகத் தோன்றி,(17) உண்மையில், அரைகுறையாக நனைக்கப்படும்போது காய்ந்ததாகவே இருந்து, அவை {சாம்பற்குவியல்கள்} முற்றாக நனையும் முன் இடையறாமல் தொடர்ந்து நனைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பது போல,(18) அந்த யோகியும் தன் புலன்களைப் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அவன் அவற்றை {புலன்களை} (அனைத்துப் பொருட்களில் இருந்தும்) படிப்படியாக விலக்க வேண்டும். இவ்வழியில் செயல்படும் மனிதன் அவற்றை {புலன்களைக்} கட்டுப்படுத்துவதில் வெல்கிறான்.(19) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் தன் மனத்தையும், புலன்களையும் தானே தியானப் பாதையில் செலுத்துவதால், உறுதிமிக்க யோகத்தின் மூலம் அவற்றை {புலன்களை} முழுக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதில் வெல்கிறான்.(20) தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதில் எவன் வெல்கிறானோ, அவன் முயற்சியாலோ, விதியாலோ ஒருபோதும் அடைய முடியாத இன்பநிலையை உணர்வான்[4].(21) அத்தகைய இன்பநிலையில் ஒன்றியிருக்கும் அவன், தியானச் செயல்பாட்டில் தொடர்ந்து மகிழ்கிறான். இவ்வாறே யோகிகள் அருள்மிக்க உயர்ந்த நிலையான நிர்வாணத்தை அடைகின்றனர்” என்றார் {பீஷ்மர்}.(22)
ஜபம்! – சாந்திபர்வம் பகுதி – 196-ஜபம் செய்வதன் பலன்களையும், அவை செய்யப்பட வேண்டிய வழிமுறைகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நீர் நால்வகை வாழ்வு முறைகள் {ஆசாரங்கள்} மற்றும் அவற்றின் கடமைகளைக் குறித்து உரையாடினீர். அதே போல மன்னர்களின் கடமைகளைக் குறித்தும் உரையாடினீர். பல்வேறு வகை வரலாறுகளையும், அவை தொடர்பான பல்வேறு காரியங்கள் குறித்தும் உரைத்தீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அறநெறி தொடர்பான பல்வேறு உரைகளையும் நான் உம்மிடம் இருந்து கேட்டிருக்கிறேன். எனினும், எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அதைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(2) ஓ! பாரதரே, அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதுபவர்கள் {ஜபம் செய்பவர்கள்} (தங்கள் நடைமுறையால்) அடையும் கனிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அத்தகைய மனிதர்களுக்குக் குறிப்பிடப்படும் கனிகள் என்னென்ன? அவர்கள் இறந்த பிறகு எந்த உலகத்திற்குச் செல்வார்கள்?(3) ஓ! பாவமற்றவரே, அத்தகைய அமைதியான {மந்திர} ஓதலுக்கு {ஜபத்திற்கு} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓதுவார் {ஜபிப்பவர்} என்ற சொல்லைக் கேட்கும்போது, அதன் மூலம் நான் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? அத்தகைய மனிதன், சாங்கிய, அல்லது யோக, அல்லது கர்ம விதிகளைப் பின்பற்றுபவனாகக் கருதப்பட வேண்டுமா?[1](4) அல்லது, அத்தகைய மனிதன் (மனோ) வேள்விகளுக்குரிய விதிகளை நோற்பவனாகக் கருதப்பட வேண்டுமா? ஓதுவார்களின் {ஜபிப்பவர்களின்} பாதை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்? அண்ட அறிவைக் கொண்டவரென என்னால் கருதப்படும் நீர், இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, யமன், காலன் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராமணருக்கு இடையில் என்ன நிகழ்ந்தது என்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது[2].(6) விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை அறிந்த தவசிகள், சாங்கியம், யோகம் என்ற இரு வழிமுறைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். இவற்றில், வேதாந்தம் என்றும் அழைக்கப்படும் முன்னதில் {சாங்கியத்தில்), அமைதியான ஓதல் {ஜபம்} என்பதைப் பொறுத்தவரை துறவே போதிக்கப்படுகிறது. (சடங்குகளில் இருந்து) விலகப் போதிக்கும் வேதங்களின் அறிவிப்புகள், அமைதி நிரம்பியவையாகவும், பிரம்மம் தொடர்பானவையாகவும் இருக்கின்றன[3].(7) நன்மை அடைய தவசிகளால் சுட்டப்படும் சாங்கியம் {ஞானம்} மற்றும் யோகம் ஆகிய இரு பாதைகளும், (அமைதியான ஓதல்களுக்கு) தொடர்பானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்கின்றன[4].(8)(அந்த இரு பாதைகளிலும்) அமைதியான ஓதல் {ஜபம்} தொடர்பு கொண்டிருக்கும் முறையையும் {பிரவிருத்தி தர்மத்தையும்}, அதன் காரணத்தையும் நான் இப்போது விளக்கப் போகிறேன். அமைதியான ஓதலை {ஜபத்தைப்} பொறுத்தவரையில், இவ்விரண்டிலும் {சாங்கியம் மற்றும் யோகம் ஆகியவற்றில்}, புலன்களைக் கட்டுப்படுத்துவது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கி) மனத்தை நிலைநிறுத்துவது;(9) வாய்மை, (புனித) நெருப்பைப் பராமரித்தல், தனிமையில் வசித்தல், தியானம், தவம், தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, நன்மை செய்வதில் மனநாட்டம், உணவில் அளவோடிருத்தல்,(10) உலகம் சார்ந்த பற்றுகளில் இருந்து விலகல், பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர்த்தல், அமைதி ஆகியன அவசியமாகும். இவை (மறுபிறவியில் இன்பநிலைக்கோ, சொர்க்கத்திற்கோ செல்வது குறித்த ஆசையின் கனிக்கு வழிவகுக்கும்) ஒரு வேள்விக்கான {ஜபயஜ்ஞத்திற்கான} செயல்களாகும். (செயல்களில் இருந்து) விடுபடுவது தொடர்பான நடைமுறையை {நிவிருத்தி தர்மத்தை} இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.[5](11)பிரம்மச்சரிய நோன்பை நோற்று {புனித மந்திரங்களை} ஓதுபவனின் செயல்கள் {ஜபயஜ்ஞகர்மம்} நிற்கும் வகையைக் குறித்து நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். அத்தகைய மனிதன், என்னால் (ஏற்கனவே) சொல்லப்பட்ட ஒவ்வொரு வழியின்படியும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்[6].(12) துறவுப் பாதையில் நடக்கும் ஒருவன், புறம் மற்றும் அகச் சார்புகள் இரண்டையும் விடுவதில் முனைய வேண்டும்.(13) குசப்புல்லில் அமர்ந்து, கையில் குசத்துடன், அவனது சடாமுடியை குசத்தால் கட்டி, தன்னைச் சுற்றிலும் குசத்தை வைத்துக் கொண்டு அவன் குச ஆடைகளை உடுக்க வேண்டும்.(14) உலகம் சார்ந்த அனைத்தையும் வணங்கும் அவன், அவற்றில் இருந்து விடுபட்டு, ஒருபோதும் அவற்றை நினைக்காமல் இருக்க வேண்டும். தன் மனத்தின் துணையுடன் சமநிலையை அடையும் அவன், தன் மனத்தை அந்த மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும்.(15)உயர்ந்த நன்மையைத் தரும் (காயத்ரி என்ற) தொகுப்பை உரைத்துக் கொண்டும், அறிவின் துணையுடன் அவன் பிரம்மத்தை மட்டுமே தியானிக்க வேண்டும். அதன் பிறகு அவன், அதையும் கைவிட்டு, குவிந்த தியானத்தில் ஈர்க்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.(16) அவன் ஓதும் காயத்ரி {மந்திர} பலத்தைச் சார்ந்திருப்பதன் விளைவாக, குவிந்த தியானமானது தானே அவனுக்குக் கைக்கூடும். அவன் தவங்களின் மூலம் ஆன்மத் தூய்மை, தற்கட்டுப்பாடு, வெறுப்பின்மை மற்றும் ஆசைகளை அடைகிறான்.(17) பற்று மற்றும் மாயையிலிருந்து விடுபட்டு, (வெப்பம், குளிர், இன்ப துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கங்கள் அனைத்திற்கும் மேம்படும் அவன், ஒருபோதும் வருத்தம் அடையாமலும், உலகப் பொருட்களை நோக்கி இழுக்கப்படாமலும், ஒரு போதும் துன்பமடையாமலும் இருக்கிறான். அவன் தன்னைச் செயல்படுபவனாகவோ, தன் செயல்களின் விளைவுகளாலும் இன்புறுபவனாகவோ, துன்புறுபவனாகவோ கருதிக் கொள்வதில்லை.(18) தன்னலத்தின் மூலம் அவன் ஒருபோதும் வேறெதிலும் தன் மனத்தை நிலைநிறுத்துவதில்லை. செல்வத்தை அடைவதில் ஈடுபடாமல் இருக்கும் அவன், பிறரை அலட்சியம் செய்வதையோ, அவமதிப்பதையோ தவிர்க்கிறானேயன்றி செயல்படுவதைத் தவிர்ப்பதில்லை.(19)
அவன் தியானத்தில் ஈடுபடவே செயல்படுகிறான்; அவன் தியானத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான, மாறாத தியான நாட்டம் கொண்டவனாக இருக்கிறான். அவன் தியானத்தின் மூலம் குவிந்த தியான {ஸமாதி} நிலையை அடைந்து, படிப்படியாக {காலகர்மத்தில்} தியானத்தையே கைவிடுகிறான்.(20) அந்நிலையில் அவன் அனைத்துப் பொருட்களையும் கைவிடுவதால் உண்டாகும் இன்பநிலையை அனுபவிக்கிறான். ஆசையின் கோட்பாடுகளில் முழுமையான திறன் பெற்ற அவன் தன் உயிர் மூச்சுகளை {ப்ராணன்களைக்} கைவிட்டுப் பிரம்மவுடலில் {ப்ரம்மரூபமானசரீரத்தில்} நுழைகிறான்.(21) அல்லது, அவன் பிரம்மவுடலுக்குள் நுழைய விரும்பவில்லையெனில், உடனே அவன் பிரம்மலோகத்திற்கு மேல்நோக்கி {தேவயானமென்னும் மார்க்கத்தில்} சென்று, மறுபிறப்பென்பதை மீண்டும் ஒருபோதும் அடையாமல் இருக்கிறான்.(22) அமைதித்தன்மையை {ஆத்மஞானத்தை} அடைந்து, அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்ட அத்தகைய மனிதன், தன் நுண்ணறிவைச் சார்ந்திருந்து, தூயதும், அழிவற்றதும், ஒரு களங்கமும் அற்றதுமான ஆன்மாவை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(23)
ஜபமும் மறுபிறவிகளும்! – சாந்திபர்வம் பகுதி – 197- விதிப்படி ஜபிக்காதவன் அடையும் நரகங்களை யுதிஷ்டிரனுக்குப் பட்டியலிட்ட பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபம் செய்பவன் அடையும் உயர்ந்த கதியை நீர் சொன்னீர். இது மட்டுமே அவர்களது ஒரே கதியா? அல்லது அவர்கள் அடையக்கூடிய வேறேதும் கதிகள் உள்ளனவா?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பலமிக்க ஏகாதிபதியே, ஓ! மனிதர்களில் காளையே, ஜபம் செய்பவர்கள் அடையும் கதியையும், அவர்கள் மூழ்கும் பல்வேறு வகையான நரகங்களையும் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(2) ஜபம் செய்யும் எந்த மனிதன், வழிமுறைப்படி விதிக்கப்பட்டுள்ள நடத்தையில் நடந்து கொள்ள வில்லையோ, எவன் விதிக்கப்பட்ட சடங்கு, அல்லது ஒழுக்க நடைமுறையில் முழுமையாக நடந்து கொள்ள வில்லையோ, அவன் நரகத்திற்குச் செல்வான்[1].(3) நம்பிக்கையில்லாமல் ஜபம் செய்பவன், தன் செயல்பாட்டில் நிறைவில்லாதவன், அதில் எந்த மகிழ்ச்சியும் கொள்ளாதவன் ஐயமில்லாமல் நரகத்திற்குச் செல்வான்.(4) தங்கள் இதயங்களில் செருக்குடன் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நரகத்திற்கே செல்வார்கள். ஜபம் செய்பவன் பிறரை அலட்சியம் செய்பவனாகவும், அவமதிப்பவனாகவும் இருந்தால், அவன் நரகத்திற்குச் செல்வான்.(5) ஜபம் செய்யும் மனிதன், உணர்வு முழுக்க ஆதிக்கத்தின் கீழும், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தின் கீழும் அதில் ஈடுபட்டால், தன் இதயத்தில் இருக்கும் அந்தப் பொருட்கள் அனைத்தையும் அடைவான்[2].(6)தெய்வப் பெயரைக் கொண்ட பண்புகளில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து ஜபம் செய்பவனும் நரகத்திற்கே சென்று, அதில் இருந்து ஒருபோதும் விடுபடமாட்டான்[3].(7) (உலகம் சார்ந்த நோக்கங்களான செல்வம், மனைவியர் போன்ற) பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழ் ஜபம் செய்பவன், தன் இதயத்தில் நிலைபெற்றிருக்கும் அந்த நோக்கங்களை அடைவான்.(8) தீய அறிவும், தூய்மையற்ற ஆன்மாவும் கொண்டு, நிலையில்லா மனத்துடன் பணியில் ஈடுபட்டு ஜபம் செய்யும் ஒருவன், நிலையற்ற கதியை அடைவான், அல்லது நரகத்திற்குச் செல்வான்.(9) ஞானமில்லாதவனும், மூடனுமான ஒருவன் ஜபம் செய்தால், மலைப்படையவோ, மாயைவசப்படவோ செய்வான்; அத்தகைய மாயையின் விளைவால் நரகத்திற்குச் சென்று வருந்துவான்.(10) உறுதியான இதயம் கொண்ட ஒரு மனிதன், முழு ஒழுக்கத்துடன் ஜபம் செய்தாலும், தங்கள் தீய குணத்தால், நேர்மையான நம்பிக்கையில்லாமல் பலவந்தமாகப் பற்றுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு {ஜப} நிறைவை அடையாமல் இருந்தால், அவனும் நரகத்திற்கே செல்வான்” என்றார் {பீஷ்மர்}.(11)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபம் செய்யும் ஒருவன், (படைக்கப்பட்ட எந்தப் பொருளையும் போலல்லாமல்) தன்னியல்பில் நிலைத்திருப்பதும், உயர்ந்ததும், விவரிக்க முடியாததும், புலப்பட முடியாததும் {நினைத்துப் பார்க்க முடியாததும்}, ஜபம் மற்றும் தியானத்தின் காரியமாக அமைந்திருக்கும் ஓம் எனும் அசையில் வசிப்பதுமான சாரத்தை அடையும்போது, (உண்மையில், ஜபம் செய்பவர்கள் பிரம்ம நிலையை அடையும்போது), அவர்கள் ஏன் உடல்கொண்ட வடிவங்களில் மீண்டும் மறுபிறப்படைய வேண்டியிருக்கிறது” என்று கேட்டான்.(12)
பீஷ்மர், “உண்மை அறிவும், ஞானமும் இல்லாததன் விளைவால் ஜபம் செய்பவர்கள் பல்வேறு நரகங்களை அடைகிறார்கள். ஜபம் செய்பவர்கள் பின்பற்றும் ஒழுக்கங்கள் நிச்சயம் மிக மேன்மையானவையாகும். எனினும், நான் சொன்னவை அனைத்தும் குற்றங்களால் நேர்பவையாகும்” என்றார் {பீஷ்மர்}.(13)
பரலோகம்! – சாந்திபர்வம் பகுதி – 198-பரலோகத்திற்கும் பிற உலகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும், பரலோகத்தைத் தவிர ஜபிப்பவன் அடையும் வேறு எந்த உலகமும் நரகமே என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபிப்பவன் எவ்விதமான நரகத்தை அடைகிறான்? ஓ! மன்னா {பீஷ்மரே}, இஃதை அறிய ஆவலாக இருகிறேன். இது குறித்து என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ நீதிதேவனின் {தர்மதேவன்/ எமதர்மன்} ஒரு பகுதியில் இருந்து எழுந்தாய் {பிறந்தாய்}. நீ இயல்பாகவே நீதியை நோற்பவனாக இருக்கிறாய். ஓ! பாவமற்றவனே, நீதியை அடிப்படையாகக் கொண்ட இவ்வார்த்தைகளைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு கூறுகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டவையும், பல்வேறு தன்மைகளையும், பல்வேறு கனிகளையும் உண்டாக்கவல்லவையும், பெரும் சிறப்பு வாய்ந்தவையும், செலுத்துபவர்களின் விருப்பங்களுக்கு ஏற்பச் செயல்படும் தேர்களைக் கொண்டவையும், தங்கத் தாமரைகள் பளபளக்கும் பல்வேறு இன்பத் தோட்டங்களைக் கொண்டவையும், அழகிய மாளிகைகள் மற்றும் நரகங்களைக் கொண்டவையும், உயர் ஆன்மத் தேவர்களுக்குச் சொந்தமானவையும், நான்கு லோகபாலர்கள், சுக்ரன், பிருஹஸ்பதி, மருத்துகள், விஸ்வதேவர்கள், சாத்யர்கள், அசுவினிகள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள் மற்றும் பிற தேவர்களுக்குச் சொந்தமானவையுமான உலகங்களேகூட, பரமாத்மாவின் உலகத்தோடு ஒப்பிடப்படுகையில் நரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.(3-6)
இறுதியாகப் பேசப்பட்ட உலகமானது, (இழிந்த நிலைக்கு மாறிவிடும் என்ற) அச்சமேதும் இல்லாததும், படைக்கப்படாததும் (அதனால் உண்மை இயல்பைக் கொண்டதும்), (அறியாமை, மாயை போன்ற) துன்பமேதும் இல்லாததும், ஏற்புடைய, அல்லது ஏற்கப்படாத ஏதும் இல்லாததும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதும், (அடிப்படையான ஐந்து பூதங்கள், புலன்கள், மனம், புத்தி ஆகிய) {புரிபஷடகமென்னும்} எட்டில் இருந்து விடுபட்டதும், (அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் செயல் ஆகியவற்றுக்குள்ள வேறுபாடுகள்) மூன்றும் இல்லாததும்;(7) (பார்த்தல், கேட்டல், நினைத்தல், அறிதல் என்ற) நான்கு பண்பியல்களில் இருந்து விடுபட்டைதும், (அறிவின்) நான்கு வகைக் காரணங்கள் இல்லாததும், இன்பம், திளைப்பு, கவலை, நோய் ஆகியவை இல்லாததுமான ஓர் உலகமாகும்[1].(8)(கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் என்ற வடிவங்களில் உள்ள) காலம் அங்கே பயன்பாட்டுக்காக எழுகிறது. அங்கே காலம் ஆட்சியாளனாக இருப்பதில்லை. இந்த உயர்ந்த உலகமே {பரலோகமே / பரமாத்மாவே} காலத்திற்கும், சொர்க்கத்திற்கும் ஆட்சியாளனாக இருக்கிறது.(9) ஜபிப்பவன் எவன் (அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் உள்ளிழுத்துக் கொண்டு அந்த) ஆன்மாவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறானோ, அவன் அங்கே செல்கிறான். அவன் அதற்குபிறகு எந்தக் கவலையையும் உணரமாட்டான். இதுவே பரலோகம் என்றழைக்கப்படுகிறது. (நான் உன்னிடம் முதலில் பேசிய) பிற உலகங்களே நரகங்கள் ஆகும்.(10) நரகம் என்றழைக்கப்படும் உலகங்கள் அனைத்தையும் நான் உன்னிடம் சொல்லிவிடவில்லை. உண்மையில், அந்த முதன்மையான உலகத்தோடு {பரலோகத்தோடு} ஒப்பிடுகையில், பிற உலகங்கள் அனைத்தும் நரகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன” என்றார் {பீஷ்மர்}.(11)
ஜப வலிமை! – சாந்திபர்வம் பகுதி – 199-ஜபத்தின் வலிமையை விளக்க ஜபம் செய்த ஒரு பிராமணர், தன்மன், மன்னன் இக்ஷ்வாகு, காலன், மிருத்யு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “காலம், மிருத்யு, யமன், இக்ஷ்வாகு மற்றும் ஒரு பிராமணருக்கு இடையில் நடந்த சச்சரவு ஒன்றை நீர் முன்னர்க் குறிப்பிட்டீர். அந்தக் கதையை முழுமையாக உரைப்பதே உமக்குத் தகும்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் பேசிக் கொண்டிருக்கும் காரியம் தொடர்புடையதும், சூரியனின் மகனான இக்ஷ்வாகு, ஒரு குறிப்பிட்ட பிராமணர், காலம் {காலதேவன்}, மிருத்யு {யமன்}ஆகியோருக்கு இடையில் நடந்ததுமான உரையாடலைச் சொல்லும் இந்தக்கதை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) என்ன நடந்தது என்பதையும், அவர்களுக்குள் நடைபெற்ற அந்த உரையாடலையும், அஃது எங்கு நடைபெற்றது என்பதையும் என்னிடம் இருந்து கேட்பாயாக.(3) பெரும்புகழையும், பக்திமானுக்குரிய நடத்தையையும் கொண்ட குறிப்பிட்ட பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ஜபம் செய்பவராக இருந்தார். பெரும் ஞானத்தைக் கொண்டிருந்த அவர், (வேதங்களின்) ஆறு அங்கங்களையும் அறிந்தவராக இருந்தார். அவர் குசிக குலத்தைச் சேர்ந்தவராகவும், பிப்பலாதரின் மகனாகவும் இருந்தார்[1].(4) அவர் (தமது தவங்களின் மூலமாக) அங்கங்களின் ஆன்ம உட்பொருளை அடைந்தார்[2]. இமயத்தின் அடிவாரத்தில் வசித்து வந்த அவர் வேதங்களுக்குத் தம்மை அர்ப்பணித்தவராக இருந்தார்.(5)காயத்ரி தொகுப்பை அமைதியாக ஜபித்து வந்த அவர், பிரம்மத்தை அடைவதற்காகக் கடும் தவங்களைச் செய்து வந்தார். அவர் நோன்புகளிலும், உபவாசங்களிலும் ஈடுபட்டு வரும்போதே ஓராயிரம் {1000} வருடங்கள் கடந்தன.(6) (காயத்ரி அல்லது சாவித்ரி) தேவரி அவர் முன்பு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, “நான் உம்மிடம் நிறைவுகொண்டேன்” என்றாள். அந்தப் பிராமணரோ அமைதியாக அந்தப் புனித மந்திரம் உரைப்பதைத் தொடர்ந்தபடியே அந்தத் தேவியிடம் ஒருவார்த்தையும் பேசாதிருந்தார்.(7) அவரிடம் இரக்கமடைந்த அந்தத் தேவி மிகவும் நிறைவடைந்தவளானால். அப்போது அந்த வேதங்களின் மூதன்னை, அந்தப் பிராமணர் ஈடுபட்டிருந்த ஜபத்தை மெச்சினாள்.(8) அந்தப் பிராமணர் (அந்த நாளைக்கான) ஜபத்தை நிறைவு செய்து எழுந்து, தலை வணங்கி அந்தத் தேவியின் பாதங்களில் தம்மை நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்திக் கொண்டார்.
உயர் ஆன்மா கொண்டவரான அந்த ஜபம் செய்பவர், அந்தத் தேவியிடம்,(9) “ஓ! தேவி, என் நற்பேற்றினாலேயே நீ என்னிடம் நிறைவு கொண்டு, எனக்குக் காட்சியளிக்கவும் வந்தாய். உண்மையில், நீ என்னிடம் நிறைவு கொண்டவளாக இருந்தால், என் இதயம் ஜபத்திலேயே இன்புறுவதாக இருக்க வேண்டும் என்ற வரத்தையே நான் கேட்பேன்” என்றார்.(10)
சாவித்ரி {காயத்ரி}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் என்ன கேட்கிறீர்? நான் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் யாது? ஓ! ஜபிப்பவர்களில் முதன்மையானவரே, நீர் விரும்பும் அனைத்தையும் என்னிடம் சொல்வீராக” என்று கேட்டாள்.(11)
இவ்வாறு அந்தத் தேவியால் சொல்லப்பட்டவரும், கடமைகளை அறிந்தவருமான அந்தப் பிராமணர், “ஜபம் செய்வதில் எனக்குள்ள விருப்பமானது ஒவ்வொரு கணமும் அதிகரிக்க வேண்டும்.(12) ஓ! மங்கலகரமான தேவியே, என் மனத்திற்குள் ஈர்க்கப்படும் ஸமாதி நிலையானது இன்னும் அதிகமாக முழுமை பெற வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தேவி இனிமையாக, “நீர் விரும்பியவாறே ஆகட்டும்” என்றாள்.(13)
அந்தப் பிராமணருக்கு நன்மை செய்ய விரும்பிய அந்தத் தேவி மீண்டும் அவரிடம், “பெரும் பிராமணர்களும் செல்லத்தக்க நரகத்திற்கு நீர் செல்லமாட்டீர்.(14) படைக்கப்படாததும், அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுபட்டதுமான பிரம்ம லோகத்திற்கு நீர் செல்வீர். நான் இப்போது செல்கிறேன், நீர் என்னிடம் கேட்டது நடக்கும்.(15) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், {மெய்மறந்த நிலையில்} குவிந்த கவனத்துடனும் ஜபித்துக் கொண்டிருப்பீராக. தர்மதேவனே உம்மிடம் நேரில் வருவான். காலம், மிருத்யு, யமன் ஆகியோர் உம்மிடம் வருவார்கள். அறநெறி குறித்த கேள்வி ஒன்றின் நிமித்தமாக உமக்கும் அவர்களுக்குமிடையில் ஒரு சச்சரவு எழும்” என்றாள் {சாவித்ரி தேவி}”.(16)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தேவி தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றாள். அந்தப் பிராமணர் இன்னும் ஓராயிரம் தேவ வருடங்களுக்கு ஜபத்தில் ஈடுபட்டார். கோபத்தைக் கட்டுப்படுத்தி, எப்போதும் சுயத்தையும் கட்டுப்படுத்திய அவர், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடனும், வன்மத்தில் இருந்தும் விடுபட்டவராகவும் இருந்தார்.(17) நுண்ணறிவு மிக்கப் பிராமணருடைய நோன்பின் நிறைவில் அவரிடம் நிறைவடைந்த தர்மன் {தர்மதேவன்}, அந்த மறுபிறப்பாளரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(18)
தர்மன், “ஓ! மறுபிறப்பாளரே, தர்மனான என்னைப் பாரும். உம்மைக் காண்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நீர் ஈடுபட்டுவரும் இந்த ஜபத்திற்கான வெகுமதியை வென்றுவிட்டீர். அந்த வெகுமதியானது என்ன என்பதை என்னிடம் கேட்பீராக.(19) தேவர்கள் அல்லது மனிதர்கள் தொடர்புடைய அனைத்து இன்பலோகங்களையும் நீர் வென்றிருக்கிறீர். ஓ! நல்ல மனிதரே, தேவர்களின் வசிப்பிடங்கள் அனைத்திற்கும் மேலாக நீர் உயர்ந்திருப்பீர்.(20) ஓ! தவசியே, நீர் உமது உயிர் மூச்சை விட்டு, நீர் விரும்பிய உலகங்களுக்குச் செல்வீராக. உமது உடலைக் கைவிடுவதன் மூலம் நீர் இன்ப உலகங்கள் பலவற்றை நீர் வெல்வீர்” என்றான் {தர்மதேவன்}.(21)
அந்தப் பிராமணர், “நீர் சொல்லும் அந்த இன்ப உலகங்களில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? ஓ! தர்மா, நீர் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பலமிக்கத் தலைவா, இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படும் இவ்வுடலை நான் கைவிடமாட்டேன்” என்றார்.(22)
தர்மன், “ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது உடல் நிச்சயம் கைவிடப்பட வேண்டும். ஓ! பிராமணரே, நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. அல்லது, ஓ! பாவமற்றவரே, உமக்கு விருப்பமுள்ள வேறு எதையும் எங்களுக்குச் சொல்வீராக என்றான்.(23)
அந்தப் பிராமணர், “ஓ! பலமிக்கத் தலைவா, என்னுடைய இந்த உடல் இல்லாமல் நான் சொர்க்கத்தில் வசிக்க விரும்பவில்லை. ஓ! தர்மா, என்னைவிட்டுச் செல்வாயாக. என்னுடைய உடல் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை” என்றார்.(24)
தர்மன், “(இவ்வாறு) இந்த உம்முடைய உடலில் உமது இதயத்தை நிலைக்கச் செய்யாமல் அதைக் கைவிட்டு மகிழ்ச்சியை அடைவீராக. ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} இருந்து விடுபட்ட உலகங்களுக்குச் செல்வீராக. உண்மையில், நீர் அங்கே சென்றால எந்தத் துன்பத்தையும் உணர மாட்டீர்” என்றான்.(25)
அந்தப் பிராமணர், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் ஜபிப்பதிலேயே பேரின்பம் கொள்கிறேன். நீ சொல்லும் அந்த அழிவற்ற உலகங்களில் எனக்கு என்ன தேவை இருக்கிறது? உண்மையில், ஓ! பலமிக்கத் தலைவா, என்னுடைய இந்த உடல் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை” என்றார்.(26)
தர்மன், “ஓ! மறுபிறப்பாளரே, உமது உடலைக் கைவிட நீர் விரும்பவில்லையெனில், உம்மை அணுகிக் கொண்டிருக்கும் காலன், மிருத்யு, யமன் ஆகியோரைக் காண்பீராக” என்றான்”.(27)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! அருளப்பட்ட மன்னா {யுதிஷ்டிரா} தர்மன் இதைச் சொன்னதும், (இந்த உலகத்தில் இருந்து அனைத்து உயிரினங்களையும் பறித்துச் செல்பவர்களான) விவஸ்வானின் மகன் (யமன்), காலன் மற்றும் மிருத்யு ஆகிய மூவரும் அந்தப் பிராமணரை அணுகி, அவரிடம் இவ்வாறு பேசினார்கள்.(28)
யமன், “நானே யமன். உம்மால் நன்கு செய்யப்பட்ட இந்தத் தவங்களுக்காகவும், நீர் நோற்று வந்த பக்தி ஒழுக்கத்திற்காகவும் உமக்கு உயர்ந்த வெகுமதி காத்திருக்கிறது” என்றான்.(29)
காலன், “உண்மையில், நீர் செய்து வந்த ஜபத்தின் நிறைவாக உயர்ந்த வெகுமதியை வென்றிருக்கிறீர். நீர் சொர்க்கத்திற்கு உயர வேண்டிய காலம் வந்துவிட்டது. நானே காலன், நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றான்.(30)
மிருத்யு, “ஓ! அறமறிந்தவரே, நான் உரிய வடிவைக் கொண்ட மிருத்யுதேவியாவேன். ஓ! பிராமணரே, காலத்தால் தூண்டப்பட்டு உம்மைச் சுமந்து செல்வதற்காகவே நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றாள்.(31)
அந்தப் பிராமணர், “சூரியனின் மகனுக்கும் {யமனுக்கும்}, உயர் ஆன்மக் காலனுக்கும், மிருத்யுதேவிக்கும், தர்மனுக்கும் நல்வரவு. உங்கள் அனைவருக்கும் நான் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்டார்”.(32)
பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தச் சந்திப்பில், அந்தப் பிராமணர் அவர்களுடைய கால்களைக் கழுவிக் கொள்வதற்கு நீரும், அர்க்யத்திற்குத் தேவையான வழக்கமான பொருட்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். பிறகு, மிகவும் நிறைவடைந்த அவர், அவர்களிடம், “என் வலிமையைக் கொண்டு உங்கள் அனைவருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.(33)
சரியாக அதே நேரத்தில், புனித நீர்நிலைகள் மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த (மன்னன்) இக்ஷ்வாகு, தேவர்கள் ஒன்றுகூடியிருந்த அந்த இடத்திற்கு வந்தான்.(34) அரசமுனியான அந்த இக்ஷ்வாகு தலைவணங்கி அவர்கள் அனைவரையும் வழிபட்டான். மன்னர்களில் சிறந்த அவன் பிறகு அவர்கள் அனைவரின் நலன் குறித்தும் விசாரித்தான்.(35) அந்தப் பிராமணர் மன்னனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} ஓர் இருக்கையையும், அவனது பாதம் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான அர்க்யமும் கொடுத்தார். அடுத்ததாக வழக்கமான அன்பு விசாரிப்புகளுக்குப் பிறகு அவர்,(36) “ஓ! பெரும் ஏகாதிபதியே, உனக்கு நல்வரவு. உன் விருப்பங்கள் அனைத்தையும் என்னிடம் சொல்வாயாக. உன்னதமானவனான நீ, என் வலிமையைக் கொண்டு நான் உனக்கு நிறைவேற்ற வேண்டியற்றை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(37)
மன்னன் {இக்ஷ்வாகு}, “நான் ஒரு மன்னனாவேன். நீரோ நன்கறியப்பட்ட ஆறு கடமைகளைச் செய்யும் ஒரு பிராமணராவீர். (நான் கேட்க முடியாது), {எனவே} நான் உமக்குக் கொஞ்சம் செல்வம் தருகிறேன். அது நன்கறியப்பட்டது. நான் உமக்கு எவ்வளவு தரவேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(38)
அந்தப் பிராமணர், “ஓ ஏகாதிபதி, இரு வகைப் பிராமணர்கள் இருக்கிறார்கள். செயலுக்கு அடிமை, செயலின்மை என்ற இருவகை அறநெறிகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், கொடைகள் எதையும் ஏற்பதை நான் விலக்குகிறேன்.(39) ஓ! மன்னா, செயல் மற்றும் ஏற்பு ஆகிய கடமைகளுக்கு அடிமையாக இருப்போருக்கு அந்தக் கொடைகளை அளிப்பாயாக. எனவே, நான் கொடையாக எதையும் ஏற்க மாட்டேன். மறுபுறம், உனக்கு எது நன்மையானது என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்? உண்மையில், நான் உனக்கு என்ன தர வேண்டும்? ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, என் தவத்தின் மூலம் நான் அதை நிறைவேற்றுகிறேன், சொல்வாயாக” என்று கேட்டார்.(40)
மன்னன் {இக்ஷ்வாகு}, “நான் ஒரு க்ஷத்திரியன். கொடுப்பீர் என்ற சொல்லை எவ்வாறு சொல்வது என்பதை நான் அறியமாட்டேன். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நாங்கள் கேட்கக் கூடிய ஒன்றே ஒன்று போரை எங்களுக்குக் கொடுப்பீராக என்பது மட்டும்தான்” என்றான்.(41)
பிராமணர், “நீ உன் வகைக்கான கடமையைச் செய்வதில் நிறைவுடன் இருக்கிறாய். அதே போலவே, ஓ! மன்னா, நான் என் கடமைகளைச் செய்வதில் நிறைவுடன் இருக்கிறேன். எனவே, நம்மிடைய மிகச் சிறிய வேறுபாடுதான் இருக்கிறது. நீ விரும்பியவாறு செயல்படுவாயாக” என்றார்.(42)
மன்னன், “நீர், “என் வலிமைக்குத் தகுந்ததை நான் உனக்குக் கொடுப்பேன்” என்ற வார்த்தைகளை முதலில் சொன்னீர். எனவே, ஓ! மறுபிறப்பாளரே, “(நீர் செய்த) ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுப்பீராக” என்பதை நான் வேண்டுகிறேன்” என்றான்.(43)
பிராமணர், “நீ எப்போதும் போரையே கேட்பாய் என்று தற்பெருமை பேசிக் கொண்டிருந்தாய். பிறகு ஏன் நீ என்னிடம் போரைக் கேட்கவில்லை?” என்று கேட்டார்.(44)
மன்னன், “பிராமணர்கள், பேச்செனும் இடியைத் தரித்தவர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் கர வலிமையைக் கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, ஓ! கல்விமானான பிராமணரே, உனக்கும் எனக்கும் இடையில் இந்தச் சொற்போர் தொடங்கியிருக்கிறது” என்றான்.(45)
பிராமணர், “என்னைப் பொறுத்தவரையில், இன்று என்தீர்மானமும் அதுவேதான். என் வலிமைக்குத்தக்க நான் என்ன உனக்குக் கொடுக்க வேண்டும்? ஓ! மன்னர்களின் மன்னா, சொல்வாயாக, என் செல்வத்தைக் கொண்டு நான் உனக்குக் கொடுப்பேன். தாமதிக்காதே” என்றார்.(46)
மன்னன், “உண்மையில், நீர் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென விரும்பினால், இந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக ஜபம் செய்ததன் மூலம் நீர் ஈட்டிருக்கும் கனிகளை எனக்குக் கொடுப்பீராக” என்று கேட்டான்.(47)
அந்தப் பிராமணர், “நான் செய்த ஜபங்களின் உயர்ந்த கனியை எடுத்துக் கொள்வாயாக. உண்மையில், அந்தக் கனியில் பாதியை எந்த ஐயுணர்வுமின்றி எடுத்துக் கொள்வாயாக.(48) அல்லது, ஓ! மன்னா, நீ விரும்பினால் என் ஜபக்கனிகளை மொத்தமாகவும் எந்த ஐயுணர்வின்றி எடுத்துக் கொள்வாயாக” என்றார்.(49)
மன்னன், “நீர் அருளப்பட்டிருப்பீராக. நான் உம்மிடம் வேண்டிய உமது ஜபங்களின் கனிகளுக்கான எந்தத் தேவையும் எனக்கு இல்லை. உமது தலையின் மேல் அருள் நிலைக்கட்டும். நான் உம்மைவிட்டுச் செல்கிறேன். எனினும், (உமது ஜபங்களின்) அந்தக் கனிகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(50)
அதற்கு அந்தப் பிராமணர், “நான் வென்ற கனிகள் குறித்த எந்த ஞானமும் எனக்குக் கிடையாது. எனினும், ஜபத்தின் மூலம் நான் அடைந்த அந்தக் கனிகளை நான் கொண்டிருக்கிறேன். தர்மன், காலன், யமன், மிருத்யு ஆகியோர் (அந்தக் கொடைச் செயலின்) சாட்சிகளாவர்” என்றார்.(51)
மன்னன், “இந்த நோன்புகளின் மூலம் நீர் அடைந்த அந்தக் கனிகளால் எனக்கு என்ன செய்ய முடியும்? உமது ஜபங்களின் கனிகள் என்ன என்பதை எனக்கு உம்மால் சொல்ல முடியவில்லை என்றால், நிச்சயம் எனக்கு விருப்பமில்லாத அந்தக் கனிகள் உமதாகவே இருக்கட்டும்” என்றான்.(52)
பிராமணர், “நான் (உன்னிடம் இருந்து) வேறெதையும் ஏற்கமாட்டேன். ஓ! அரச முனியே, உன் வார்த்தைகளும், என் வார்த்தைகளும் உண்மையாக வேண்டும்.(53) என் ஜபத்தைப் பொறுத்தவரையில், சிறப்பான எந்த ஒரு விருப்பத்தையும் நான் பேணி வளர்த்ததில்லை. ஓ! மனிதர்களில் புலியே, பிறகு எவ்வாறு, அந்த ஜபங்களுக்கான கனிகளைக் குறித்த எந்த அறிவையும் நான் கொண்டிருப்பேன்?(54) நீ, “கொடுப்பீர்” என்றாய், நானும், “நான் கொடுத்தேன்” என்றேன். என்னால இந்த வார்த்தைகளைப் பொய்த்துக் கொள்ள முடியாது. வாய்மை காப்பாயாக. அமைதியாய் இருப்பாயாக.(55) ஓ! மன்னா, நீ என் வார்த்தையை மறுத்தால் பொய்மை மூலம் உனக்கு உண்டாகும் பாவம் பெரியதாக இருக்கும்.(56) ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, உண்மையற்ற ஒன்றைச் சொல்வது உனக்குத் தகாது. அதேபோல, நானும் நான் சொன்னதைப் பொய்த்துக் கொள்ள ஒருபோதும் துணியமாட்டேன்.(57) இதற்கு முன்பே, எந்தத் தயக்கமும் இல்லாமல் “நான் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டேன். எனவே, நீ வாய்மையில் உறுதியுள்ளவனாக இருந்தால், என் கொடையை ஏற்பாயாக.(58) ஓ! மன்னா, நீ இங்கே வந்து என் ஜபங்களின் கனிகளை வேண்டினாய். எனவே, நீ வாய்மையில் உறுதியுள்ளவனாக இருந்தால், நான் கொடுத்ததைப் பெற்றுக் கொள்வாயாக.(59) பொய்மைக்கு அடிமையாக இருப்பவனுக்கு இம்மையும் இல்லை, மறுமையும் இல்லை. அத்தகைய மனிதன் (இறந்து போன தன்) மூதாதையர்களை மீட்பதில் தவறுகிறான். அவ்வாறிருக்கையில், (பிறக்கப் போகும் அவனுடைய) வாரிசுக்கு நன்மை செய்வதால் அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(60)
ஓ! மனிதர்களில் காளையே, வேள்விகள், கொடைகள், நோன்புகள், அறச் சடங்குகள் ஆகியனவும் (ஒரு மனிதனைத் தீமையிலும், நரகத்திலும் இருந்து) இம்மையிலும், மறுமையிலும் மீட்பதில் வாய்மையை விடச் சிறந்தவை கிடையாது.(61) உன்னால் செய்யப்பட்ட தவங்கள் அனைத்தும், எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ செய்யப்போகும் தவங்கள் அனைத்தும் சிறப்பில் வாய்மையைவிடப் பெரியன கிடையாது.(62) வாய்மையே அழிவில்லா பிரம்மமாகும் {பரமாத்மரூபமாகும்}. வாய்மையே அழிவில்லாத தவமாகும். வாய்மையே அழிவல்லாத வேள்வியாகும். வாய்மையே அழிவில்லாத வேதமாகும்.(63) வாய்மை வேதங்களில் விழித்திருக்கிறது {விளங்கிக் கொண்டிருக்கிறது}. வாய்மையுடன் பிணைக்கப்பட்ட கனிகளே உயர்ந்தவையாகச் சொல்லப்படுகின்றன. வாய்மையிலிருந்து அறமும், தற்கட்டுப்பாடும் எழுகின்றன. அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன {வாய்மையிலேயே நிலைபெற்றிருக்கின்றன}.(64) வாய்மையே வேதங்களும், அவற்றின் அங்கங்களுமாகும். வாய்மையே அறிவாகும். வாய்மையே விதியாகும். வாய்மையே நோன்புகளும், உபவாசங்களுமாகும். வாய்மையே தொடக்கச் சொல்லான ஓம் ஆகும் {ஓங்காரமானது ஸத்யமாகவேயிருக்கிறது}.(65)
வாய்மையே உயிரினங்களின் தோற்றமாகும். வாய்மையே அவற்றின் சந்ததியாகிறது. வாய்மையின் மூலமே காற்று {வாயு} நகர்கிறது. வாய்மையின் மூலமே சூரியன் வெப்பத்தைக் கொடுக்கிறது.(66) வாய்மையின் மூலமே நெருப்பு எரிகிறது. வாய்மையிலேயே சொர்க்கமும் நிலைபெற்றிருக்கிறது. வாய்மையே, வேள்வி, தவம், வேதங்கள், சாம வேத சொற்கள்[3], மந்திரங்கள் மற்றும் சரஸ்வதி ஆகும்.(67) ஒரு காலத்தில் வாய்மையும், அனைத்து அறச்சடங்குகளையும் தராசின் இரு தட்டுகளில் நிறுத்தப்பட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். இரண்டையும் எடை பார்த்தபோது, வாய்மையிருந்த பக்கமே கனம் அதிகமாக இருந்தது.(68) எங்கே வாய்மை இருக்குமோ அங்கே அறம் இருக்கிறது. வாய்மையின் மூலமே அனைத்தும் அதிகரிக்கிறது. ஓ! மன்னா, பொய்மையின் களங்கம் கொண்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் விரும்புகிறாய்?(69) வாய்மையில் உறுதியுடன் இருப்பாயாக. ஓ! ஏகாதிபதி தவறாகச் செயல்படாதே. “(எனக்குக்) கொடுப்பீர்” என்று நீ சொன்ன வார்த்தைகளே ஏன் பொய்யாக்கப் போகிறாய்?(70) ஓ! ஏகாதிபதி, நான் உனக்குக் கொடுத்த என் ஜபங்களுக்கான கனிகளை நீ ஏற்க மறுத்தால், நீ அறத்தில் இருந்து வீழ்ந்து உலகத்தில் திரிய வேண்டியிருக்கும்.(71) உறுதிமொழியளித்த பிறகு கொடுக்காத மனிதனும், வேண்டிய பிறகு அஃதை ஏற்காத மனிதனும் என இருவரும் பொய்மையால் களங்கப்படுவார்கள். எனவே, நீன் உன் வார்த்தைகளைப் பொய்யாக்குவது உனக்குத் தகாது” என்றார் {பிராமணர்}.(72)மன்னன், “போரிடுவதும், (குடிமக்களைக்) காப்பதுமே க்ஷத்திரியர்களின் கடமைகளாகும். க்ஷத்திரியர்கள் (கொடைகளைக்) கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. பிறகு என்னால் எவ்வாறு நீர் (கொடையாகக் கொடுக்கும்) எதையும் ஏற்க முடியும்?” என்று கேட்டான்.(73)
அந்தப் பிராமணர், “ஓ! மன்னா, (முதலில் என்னிடம் இருந்து எதையும் ஏற்றுக்கொள்ளுமாறு ) ஒருபோதும் நான் சொல்லவில்லை. நான் வீட்டையும் நாடி வரவில்லை. நீயே இங்கு வந்து என்னிடம் வேண்டினாய். பிறகு ஏன் நீ ஏற்க மறுக்கிறாய்?” என்று கேட்டார்.(74)
தர்மன், “நானே தர்மன் என்று நீங்கள் இருவரும் அறிவீராக. உங்களுக்கிடையில் எந்தச் சச்சரவும் வேண்டாம். கொடையுடன் பிணைந்திருக்கும் வெகுமதி பிராமணருடையதாக இருக்கட்டும், வாய்மையின் தகுதியை {புண்ணியத்தை} இந்த ஏகாதிபதி அடையட்டும்” என்றான்.(75)
சொர்க்கம், “ஓ! பெரும் மன்னா, நான் உடல்வடிவம் கொண்டு இங்கே வந்திருக்கும் சொர்க்கம் என்பதை அறிவாயாக. உங்களுக்கிடையிலான இந்தச் சச்சரவு நிற்கட்டும். நீங்கள் ஈட்டிய தகுதி, அல்லது வெகுமதிகளைப் பொறுத்தவரையில் நீங்கள் இருவரும் சமமானவர்களே” என்றது.(76)
மன்னன் {இக்ஷ்வாகு}, “சொர்க்கத்தால் எனக்கு எந்தப் பயனும் கிடையாது. ஓ! சொர்க்கமே, நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே செல்வாயாக. கல்விமானான இதநப் பிராமணர் உன்னுடம் வர விரும்பினால், (வாழ்க்கையில் என் செயல்களின் மூலம்) நான் வென்ற வெகுமதிகளையும் எடுத்துக் கொண்டு உன்னோடு செல்லட்டும்” என்றான்.(77)
அந்தப் பிராமணர், “என் இளமைக் காலத்தில், அறியாமையின் மூலம் (கொடைகளை ஏற்பதற்காக) நான் என் கரங்களை நீட்டியிருக்கிறேன். எனினும், தற்போது துறவுக் {தவிர்க்கும்} கடமையை நோற்றபடி நான் காயத்ரியை ஜபித்து வருகிறேன்[4].(78) ஓ! மன்னா, துறவு {தவிர்க்கும்} கடமையை நீண்ட காலமாக நோற்கும் எனக்கு ஏன் இவ்வாறு ஆசை காட்டுகிறாய்? நான் என் கடமையை நானே செய்வேன். ஓ! ஏகாதிபதி உன்னால் வெல்லப்பட்ட வெகுமதிகளின் எந்தப் பங்கையும் பெற நான் விரும்பவில்லை. நான் தவங்களுக்கும் வேதங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து {பிச்சை} ஏற்பதைத் தவிர்த்து வருகிறேன்” என்றார்.(79)மன்னன் {இக்ஷ்வாகு}, “ஓ! பிராமணரே, நீர் உமது ஜபத்தின் சிறந்த வெகுமதியை எனக்கு உண்மையில் கொடுக்கிறீர் என்றால், அந்த வெகுமதியில் பாதி எனதாகட்டும். அதேபோல என் செயல்களின் மூலம் நான் வென்ற வெகுமதியில் பாதியை நீர் எடுத்துக் கொள்வீராக.(80) பிராமணர்கள் ஏற்புக் கடமையில் ஈடுபடுகிறார்கள். அரச வகையில் பிறந்த மனிதர்கள் கொடுக்கும் கடமையில் ஈடுபடுகிறார்கள். (இரு வகையினருக்கும் விதிக்கப்பட்டிருக்கும்) கடமைகளை நீ அறியாவிட்டால், (நான் பரிந்துரைத்தபடியே) நமது கனிகள் சமமாக இருக்கட்டும்.(81) அல்லது நமது வெகுமதிகளைப் பொறுத்தவரையில் நீர் எனக்கு இணையானவராக இருக்க விரும்பவில்லையென்றால், நான் வென்ற வெகுமதிகள் மொத்தத்தையும் நீரே எடுத்துக் கொள்ளும். நீன் எனக்கு அருள்தர விரும்பினால், நான் வென்ற தகுதியை {புண்ணியத்தைப்} பெற்றுக் கொள்வீராக” என்றான்”.(82)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த நேரத்தில் விரும்பத்தகாத தோற்றத்தைக் கொண்ட இருவர் {விரூபன், விக்ருதன்} அங்கே வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவன் தோள் மீது தன் கரத்தை வைத்திருந்தனர்; இருவரும் மோசமான ஆடைகளை உடுத்தியிருந்தனர். அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(83) “நீ எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம்” என்றும், “உண்மையில் நான் உனக்குக் கொடுக்க வேண்டும்” என்றும் சொல்லிக் கொண்டு, “நாம் இவ்வழியில் சச்சரவில் ஈடுபடுகிறோம். மனிதர்களை ஆளும் மன்னன் இதோ இருக்கிறான்.(84) உண்மையில் நீ ஏனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நீ பொய்யாகப் பேசுகிறாய். நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன்” என்றும் சூடான சச்சரவு செய்து கொண்ட அந்த இருவரும் மன்னனிடம், “ஓ! ஏகாதிபதி, எங்கள் இருவரில் எவரும் பாவத்தின் களங்கத்தை அடையாமல் பார்த்துக் கொள்வாயாக” என்றனர்.(86)
விரூபன், “ஓ! ஏகாதிபதி, என் தோழனான விக்ருதனுக்கு, ஒரு பசுக்கொடையின் தகுதிகளை நான் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை அடைக்க நான் விரும்புகிறேன். எனினும், இந்த விக்ருதன் இந்த மீட்டளிப்பை மறுக்கிறான்” என்றான்[5].(87)விக்ருதன், “ஓ! ஏகாதிபதி, இந்த விரூபன் எனக்கு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஓ! மன்னா, வாய்மையின் தோற்றத்தில் அவன் பொய்மையைப் பேசுகிறான்” என்றான்.(88)
மன்னன், “ஓ! விரூபா, நீ இங்கே உன் நண்பனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. முதலில் நீ சொல்வதைக் கேட்டு, அதன்பிறகு உரியதைச் செய்வதே என் தீர்மானமாக இருக்கிறது” என்றான்.(89)
விரூபன், “ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என் தோழனான இந்த விக்ருதனுக்குக் கொடுக்க வேண்டியவாறு அமைந்த அனைத்துச் சூழ்நிலைகளையும் விரிவாகச் சொல்கிறேன், கவனமாகக் கேட்பாயாக.(90) ஓ! பாவமற்றவனே, ஓ! அரசமுனியே, கடந்து சென்ற நாட்களில், இந்த விக்ருதன், தகுதியை {புண்ணியத்தை} வெல்லும் நிமித்தமாகத் தவங்களுக்கும், வேதகல்விக்கும் தம்மை அர்ப்பணித்திருந்த ஒரு பிராமணருக்கு ஒரு மங்கலப் பசுவைத் தானமாக அளித்தான்.(91) ஓ! மன்னா, அவனிடம் {விக்ருதனிடம்} சென்ற நான் அவனது அந்தச் செயலுக்கான வெகுமதியை இரந்து கேட்டேன். தூய இதயத்துடன் கூடிய விக்ருதன் அந்த வெகுமதியை எனக்குக் கொடையாக அளித்தான்.(92) பிறகு நான் தூய்மையடைவதற்காகச் சில நல்ல செயல்களைச் செய்தேன். மேலும் நான் கன்றுகளுடன் கூடியவையும், அதிக அளவில் பால் தரக்கூடியவையுமான இரண்டு கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களை} வாங்கினேன்.(93) பிறகு நான், அந்த இரு பசுக்களையும் உஞ்ச முறையில்[6] வாழ்ந்து வந்த ஓர் ஏழை பிராமணருக்கு உரிய சடங்குகளின் படி உரிய அர்ப்பணிப்புடன் கொடுத்தேன். ஓ! தலைவா, முன்பு என் தோழனிடம் இருந்து கொடையேற்ற நான், அவனுக்கு அந்த வெகுமதியை இரண்டு மடங்காகக் கொடுக்க விரும்புகிறேன்[7]. ஓ! மனிதர்களில் புலியே, சூழ்நிலைகள் இவ்வாறு இருக்கையில் (உன் தீர்மானத்தின்படி) எங்கள் இருவரில் அப்பாவி யார்? குற்றம் செய்தவன் யார்?(94,95) ஓ! ஏகாதிபதி, இதுகுறித்து ஒருவரோடொருவர் சச்சரவு கொண்டே நாங்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறோம். நீ சரியாகவோ, தவறாகவோ தீர்மானித்து, எங்கள் இருவருக்கிடையில் அமைதியை நிறுவுவாயாக.(96) இந்த எனது தோழன் ஏற்கனவே எனக்குக் கொடுத்ததற்குச் சமமானதை என்னிடமிருந்தும் திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லையெனில், நீயே பொறுமையாகத் தீர்மானித்து, எங்கள் இருவரையும் சரியான பாதையில் நிலைநிறுத்த வேண்டும்” என்றான் {விரூபன்}.(97)மன்னன், “கடனாகக் கொடுக்கப்பட்டது திருப்பிக் கொடுக்கப்படுகையில் நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்? தாமதிக்காமல், உனக்கு உரியயதைப் பெற்றுக் கொள்வாயாக” என்றான்.(98)
விக்ருதன், “இவன் எனக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறான். நான் கொடுத்ததைக் கொடுத்துவிட்டேன் என்று நான் அவனிடம் சொல்கிறேன். எனவே, அவன் எனக்குத் தரவேண்டியது ஏதும் இல்லை. அவன் விரும்பியவாறு எங்கும் செல்லட்டும்” என்றான்.(99)
மன்னன் {இக்ஷ்வாகு}, “அவன் உனக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனினும், நீ அதைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இஃது எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. இதற்கு நீ தண்டிக்கத்தகுந்தவன் என நான் நினைக்கிறேன். இதில் சிறு ஐயமும் இல்லை” என்றான்.(100)
விக்ருதன், “ஓ அரசமுனியே, நான் அவனுக்குக் கொடையளித்தேன். அஃதை எவ்வாறு என்னால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்? இதில் நான் குற்றவாளியென்றால், ஓ பலமிக்கவனே, எனக்குத் தண்டனையைச் சொல்வாயாக” என்றான்.(101)
விரூபன், “நான் கொடுக்கத் தயாராக இருக்கும்போது நீ மறுத்தால், நீதியை நிறுத்துபவனான இந்த மன்னன் உன்னை நிச்சயம் தண்டிப்பான்” என்றான்.(102)
விக்ருதன், “எனக்குச் சொந்தமானது அவனால் வேண்டப்பட்ட பிறகே நான் கொடுத்தேன். அதை நான் எவ்வாறு திரும்ப எடுத்துக் கொள்வேன்? நீ செல்லலாம். நான் உனக்கு விடைகொடுத்துவிட்டேன்” என்றான்.(103)
{பிப்பலாதரின் மகனான அந்தப்} பிராமணர், “ஓ! மன்னா, நீ இவ்விருவரின் வார்த்தைகளையும் கேட்டாய். நான் உனக்குக் கொடுப்பதாக உறுதியளித்ததை எந்தத் தயக்கமும் இல்லாமல் பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(104)
மன்னன், “உண்மையில் இக்காரியம் அடியற்ற குழியைப் போன்று (முக்கியத்துவத்தில்) மிக ஆழமானதாகும். ஜபிப்பவரான இவரின் பிடிவாதம் எவ்வாறு முடியப் போகிறது?(105) இந்தப் பிராமணரால் கொடுக்கப்பட்டதை நான் ஏற்கவில்லையெனில், பெரும் பாவத்தின் களங்கம் படிவதை நான் எவ்வாறு தவிர்க்க முடியும்?” என்றான்.(106)
பிறகு அந்த அரச முனி {இக்ஷ்வாகு}, “உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய நோக்கங்களை வென்றுவிட்டவர்களாக நீங்கள் இருவரும் செல்லலாம். என்னில் நிறுவப்பட்டுள்ள அரசகடமைகள் பயனற்றவையாகக் கூடாது {இந்த இடத்தில் இருந்து கொண்டு மன்னர்களுக்கான தர்மத்தைப் பொய்யாக்காதீர்கள்}.(107) மன்னர்கள் அவர்களுக்குரிய கடமைகளை நோக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். எனினும், என் தீப்பேற்றின் நிமித்தமாக இழிந்தவனான என்னைப் பிராமணர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகள் பற்றுகின்றன” என்றான்[8].(108)அதற்கு அந்தப் பிராமணன், “ஓ! மன்னா, ஏற்பாயாக. நான் உனக்குக் கொடுக்க வேண்டும். நீ வேண்டினாய், நானும் (உனக்குக் கொடுப்பதாக) உறுதியளித்துவிட்டேன். எனினும், ஓ! ஏகாதிபதி, நீ ஏற்க மறுப்பாயானால், நிச்சயம் நான் உன்னைச் சபிப்பேன்” என்றார்.(109)
மன்னன் {இக்ஷ்வாகு}, “அரச கடமைகளுக்கு ஐயோ. {கடமைகள் குறித்து} தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின் இயக்கம் இவ்வாறாகிவிட்டதே. எனினும், முற்றிலும் இணையான இரண்டு கடமைகளின் நடைமுறைகளை வெளிப்படுத்தும் ஒரே காரணத்திற்காக நீர் கொடுப்பதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்[9].(110) இதற்கு முன்பு ஒருபோதும் (கொடைகளை ஏற்க) நீட்டப்படாத என் கரமானது, கொடுப்பதற்காகவே இப்போது (ஏற்பதற்காகவும்) நீட்டப்படுகிறது. நீர் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுப்பீராக” என்றான்.(111)அந்தப் பிராமணர், “காயத்ரி ஜபத்தின் மூலம் நான் எந்தக் கனிகளையாவது வென்றிருந்தால், அவை அனைத்தையும் நீ பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(112)
மன்னன் {இக்ஷ்வாகு}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, என் கரங்களில் விழுந்திருக்கும் இந்த நீர்த்துளிகளைப் பாரும். நானும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன். என் கொடையை ஏற்பீராக. (நான் உமது கொடையை ஏற்றுக் கொண்டதைப் போல நீரும் என் கொடையை ஏற்றுக் கொள்வதன் மூலம்) நமக்கிடையில் ஒரு சமத்தன்மை இருக்கட்டும்” என்றான்.(113)
விரூபன், “ஓ! மன்னா, நாங்கள் இருவரும் ஆசையும், கோபமும் ஆவோம் என்பதை அறிவாயாக. எங்களாலேயே நீ இவ்வழியில் செயல்பட்டாய். நீ இந்தப் பிராமணருக்குப் பதில் கொடையை அளித்துவிட்டாய். மறுமையின் இன்பவுலகங்களைப் பொறுத்தவரையில் இந்த மறுபிறப்பாளருக்கும் உனக்கும் இடையில் சமத்தன்மை நிலைக்கட்டும். இந்த விக்ருதன் உண்மையில் எனக்குத் தர வேண்டியது ஏதுமில்லை. நாங்கள் உன் நிமித்தமாகவே அவ்வாறு நடந்து கொண்டோம். காலன், தர்மன், மிருத்யு மற்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து, உனக்கும் இந்தப் பிராமணருக்கும் இடையில் இந்தச் சச்சரவை உண்டாக்கி உன்னைக் குறித்த அனைத்தையும் உன் எதிரிலேயே ஆய்வு செய்தோம். உன் செயல்களின் மூலம் நீ வென்ற உலகங்களுக்கு உன் விருப்பப்படியே செல்வாயாக” என்றான் {விரூபன்}”.(116)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஜபம் செய்பவர்கள் (தாங்கள் செய்யும் ஜபத்தின்) கனிகளை எவ்வாறு அடைகிறார்கள் என்பதையும், ஜபம் செய்பவனின் கதி, அவர்கள் வெல்லும் உலகங்கள் ஆகியவற்றையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(117) காயத்ரி ஜெபம் செய்யும் ஒருவன், பரப்பிரம்மத்தை அடைவான், அல்லது அக்னியிடம் செல்வான், அல்லது சூரியலோகத்திற்குள் நுழைவான்.(118) அவன் சக்திமிக்கத் தனது (புதிய) உடலுடன் அங்கே விளையாடினால், அத்தகைய பற்றுகளில் திகைப்படையும் அவன், அந்தக் குறிப்பிட்ட உலகங்களின் பண்பியல்புகளைப் பற்றிக் கொள்வான்[10].(119) சோமன் {சந்திரன்}, வாயு, பூமி, வெளி ஆகியவற்றுக்குச் செல்பவனின் நிலையே அதே போன்றதே ஆகும். உண்மையென்னவெனில், இவை அனைத்திலும் வசிப்பவர்கள், அவற்றில் பற்றுக் கொண்டு, அந்தந்த உலகங்களின் குறிப்பிட்ட பண்பியல்புகளை வெளிக்காட்டுவார்கள். எனினும் ஒருவன் பற்றுகளில் இருந்து விடுபட்டு அந்த உலகங்களுக்குச் சென்று, (அங்கு அனுபவிக்கும் இன்பங்களில்) நம்பிக்கையில்லாமல் இருந்து, உயர்ந்ததையும், நினைத்தற்கரியதையும் விரும்பினால், அப்போது அவன் அதற்குள்ளும் நுழைவான்.(121) அவ்வழக்கில் அவன், ஆசையில் இருந்து விடுபட்டு, தனிப்பட்ட நனவு நிலை இல்லாதவனாக அமுதத்தின் அமுதத்தை அடைகிறான். முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, இன்பத்தையும் அமைதியை அடைந்து, துன்பமில்லாதவனாகப் பிரம்மமாகவே ஆகிறான்[11].(122)உண்மையில் அவன், துன்பத்தில் இருந்து விடுபட்டதும், அமைதியானதும், திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததும், ஒன்றேயானதும், நினைத்தற்கரியதுமான பிரம்ம நிலையை அவன் அடைகிறான்.(128) அச்சத்தின் நான்கு வழிமுறைகளில் இருந்தும்[12], ஆறு நிலைகளில் இருந்தும், மேலும் வேறு ஆறு மற்றும் பத்துப் பண்பியல்புகளில் இருந்தும் அவன் விடுபடுகிறான்[13]. படைப்பாளனையே விஞ்சி அவன் பரமாத்மாவுக்குள் உறிஞ்சப்பட்ட நிலையை அடைகிறான்.(124) அல்லது, பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழிருக்கும் அவன், அத்தகைய உறிஞ்சலுக்கு விரும்பாமல், அனைத்திற்கான பரம காரணத்தைச் சார்ந்த தனியான இருப்பாக இருக்க விரும்பினால், அவன் பேணி வளர்க்கும் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைவான்.(125) அல்லது (முன்னர்ச் சொல்லப்பட்டதுபோல) நரகங்கள் என்றழைக்கப்பட்ட இன்ப உலகங்கள் அனைத்தையும் (வெறுப்புடன்) கண்டு, ஆசையை விரட்டி, அனைத்திலிருந்தும் விடுபட்டு அந்தந்த உலகங்களிலேயே உயர்ந்த இன்ப நிலையை அனுபவிக்கிறான்[14].(126) ஓ ஏகாதிபதி, ஜபிப்பவர்கள் அடையும் கதியைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்லிவிட்டேன். வேறு என்ன கேட்க விரும்புகிறாய்” {என்றார் பீஷ்மர்}.(127)
ஜபிப்பவர்களின் கதி! – சாந்திபர்வம் பகுதி – 200-பிராமணரும், இக்ஷ்வாகுவும் அடைந்த கதியைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டின்; இருவரும் வெகுமதிகளை அடைந்து பிரம்மலோகத்தை அடைந்தது; அவர்கள் உயிரை விட்ட வழிமுறை; அவர்களைப் பிரம்மன் வரவேற்ற விதம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, விரூபன் பேசி முடித்ததும், அந்தப் பிராமணராலோ, அந்த ஏகாதிபதியாலோ {இக்ஷ்வாகுவாலோ} அவனுக்கு என்ன மறுமொழி கொடுக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக.(1) உம்மால் விவரிக்கப்பட்ட கதிகளுள் அவர்கள் அடைந்த கதியென்ன? உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் என்ன? அங்கே அவர்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தப் பிராமணர், “நீ சொன்னதுபோலவே ஆகட்டும்” என்று சொல்லி தர்மன், யமன், காலன், மிருத்யு, சொர்க்கம் ஆகியவர்களையும், வழிபாட்டுக்குத் தகுந்த அனைவரையும் வழிபட்டார்.(3) தம்மை வணங்கி அங்கே வந்திருந்த முதன்மையான பிராமணர்களை அனைவரையும் அவர் வழிபட்டார். பிறகு அந்த ஏகாதிபதியிடம் பேசிய அவர், “ஓ! அரசமுனியே, என் ஜபங்களுக்கான வெகுமதிகளுடன் கூடிய நீ உயர்ந்த நிலையை அடைவாயாக. நீ சென்றதும் நான் என்னை மீண்டும் ஜபங்களில் நிறுவிக் கொள்வேன்.(5) ஓ! பெரும் வலிமைமிக்கவனே, “ஜபத்தில் உனது அர்ப்பணிப்புத் தொடர்ச்சியானதாக இருக்கட்டும்” என்று சாவித்திரி தேவி எனக்கு வரமளித்திருக்கிறாள்” என்றார்.(6)
மன்னன் {இக்ஷ்வாகு}, “(ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுத்துவிட்டதன் விளைவால்) உமது வெற்றிக் கனியற்றதாக இருந்தால், உமது இதயம் மீண்டும் பயிற்சியில் நிலைக்க வேண்டுமானால், என்னிடம் பாதி, பாதியைப் பகிர்ந்து கொண்டு, உமது ஜபங்களின் வெகுமதியை அடைவீராக” என்றான்[1].(7)அதற்கு அந்தப் பிராமணர், “(உன் செயல்பாடுகளின் விளைவுகளால் நீ அடைந்த வெகுமதிகளை என்னோடு பகிர்ந்து கொள்ள) இம்மனிதர்கள் அனைவரின் முன்னிலையிலும் நீ தளர்வுறாமல் முயற்சி செய்திருக்கிறாய். எனவே, (மறுமையில்) நமது வெகுமதிகள் நமக்கிடையில் சமமானவையாக இருக்கட்டும். நாம் நமது கதியை அடைவோமாக” என்றார்.(8)
தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவர்கள் அடைந்த தீர்மானத்தை அறிந்து லோகபாலர்கள் மற்றும் தேவர்களின் துணையுடன் அந்த இடத்திற்கு வந்தான்.(9) சத்யஸ்கள், விஸ்வர்கள், மந்திரர்கள், பல்வேறு வகை இசைகள், ஆறுகள், மலைகள், கடல்கள், புனித நீர்நிலைகள்,(10) தவங்கள், யோகம் குறித்த விதிமுறைகள், சாம வேத வரிகளைப் பாடுவதற்குத் துணை புரியும் ஒலிகள், சரஸ்வதி, நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹாக்கள், ஹுஹூக்கள்,(11) குடும்பத்துடன் கூடியவனான கந்தர்வன் சித்திரசேனன், நாகர்கள், சித்தர்கள், முனிவர்கள், தேவர்களின் தேவனான பிரஜாபதி ஆகியோரும்,(12) நினைத்தற்கரியவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனுமான விஷ்ணுவும் அங்கே வந்தனர். ஆகாயத்தில் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(13) உயர் ஆன்மா கொண்ட அவர்கள் மீது தெய்வீகப் பூமாரி பொழியப்பட்டது. சுற்றிலும் அப்சரஸ் கூட்டங்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.(14)
சொர்க்கமானவன், தன் உடல்வடிவத்துடன் அங்கே வந்தான். அந்தப் பிராமணரிடம் பேசிய அவன் {சொர்க்கம்}, “நீர் வெற்றியை அடைந்தீர். நீர் உயர்வாக அருளப்பட்டிருக்கிறீர்” என்றான். அடுத்ததாக அந்த ஏகாதிபதியிடம் {இக்ஷ்வாகுவிடம்} அவன் {சொர்க்கம்}, “ஓ! மன்னா, நீயும் வெற்றியடைந்தாய்” என்றான்.(15)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இருவரும் (அந்தப் பிராமணரும், மன்னனும்) ஒருவருக்கொருவர் நன்மை செய்து, உலக நோக்கங்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கொண்டனர்.(16) பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய உயிர்மூச்சுகளை {வாயுக்களைத்} தங்கள் இதயங்களில் {மனத்தில்} நிலைக்கச் செய்த அவர்கள், ஒன்றுகலந்த பிராணன் மற்றும் அபானனில் மனத்தை குவித்தார்கள்.(17) பிறகு அவர்கள் ஒன்று கலந்த அந்த இரு மூச்சுகளையும் வயிற்றில் நிறுத்தி, தங்கள் பார்வையை மூக்கு நுனியில் செலுத்தி, மெல்ல இரு புருவங்களுக்குக் கீழே அவற்றைச் செலுத்தினார்கள். பிறகு அவர்கள், தங்கள் மனத்தின் துணைகொண்டு அந்த இரு மூச்சுக்காற்றுகளையும் படிப்படியாகத் தங்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.(18) முற்றிலும் செயலற்ற உடல்களுடன் அவர்கள் தங்கள் நிலைத்த பார்வையிலேயே மூழ்கியிருந்தார்கள் {லயித்திருந்தார்கள்}. தங்கள் ஆன்மாக்களின் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர்கள், மூளையில் தங்கள் ஆன்மாவை நிறுத்தினார்கள்.(19) அப்போது அந்த உயர் ஆன்ம பிராமணரின் மகுடத்தை {பிரம்மரந்தரஸ்தானத்தைப்} பிளந்து கொண்டு ஒரு காந்திமிக்க ஒளித்தழல் {ஜ்யோதியின் ஜ்வாலை} சொர்க்கத்திற்கு உயர்ந்தது.(20)
அனைத்து உயிரினங்களின் துன்ப ஓலங்களும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. அனைவராலும் துதிக்கப்பட்ட அந்தக் காந்தி {ஜ்யோதி}, பிரம்மனின் சுயத்துக்குள் நுழைந்தது.(21) அப்போது எதிர்கொண்டு சென்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஒரு சாண் உயரமுள்ள வடிவத்தை ஏற்றிருந்த அந்தக் காந்தியிடம் {ஒளியிடம்}, “நல்வரவு” என்று சொல்லி,(22) மீண்டும் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்: “உண்மையில், ஜபிப்பவர்களும் யோகிகளின் அதே கதியையே அடைவார்கள்.(23) (இங்கே திரண்டிருக்கும்) இவை அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பதே, யோகி அடையும் கதியாகும். ஜபிப்பவர்களைப் பொறுத்தவரையில், ஒரு வேறுபாடு இருக்கிறது. (அவர்கள் பூமியில் இருந்து புறப்பட்டதும்) பிரம்மனே எதிர்கொண்டு வந்து அழைக்கும் கௌரவம் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.(24) நீ என்னில் வசிப்பாயாக” என்றான். இவ்வாறு பேசிய பிரம்மன் மீண்டும் அந்த ஒளிக்கு நனவுநிலையைக் கொடுத்தான். உண்மையில், அந்தப் பிராமணர், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு படைப்பாளனின் வாய்க்குள் நுழைந்தார்.(25)
அந்த ஏகாதிபதியும் {இக்ஷ்வாகுவும்}, அந்த முதன்மையான பிராமணரைப் போலவே அதே வழியில் தெய்வீகப் பெரும்பாட்டனுக்குள் நுழைந்தான்.(26) (அங்கே திரண்டிருந்த) தேவர்கள் அந்தத் தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, “ஜபிப்பவர்களுக்கு உண்மையில் மேன்மையான கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) (நாங்கள் காண நீர் செய்திருக்கும்) இந்த முயற்சியானது ஜபிப்பவர்களுக்கானதாகும். எங்களைப் பொறுத்தவரையில், இதைக் காணவே நாங்கள் இங்கே வந்தோம். சமமானவர்களான இவ்விருவருக்கும் சம கௌரவத்தைக் கொடுத்து, சமகதியையே அவர்களுக்கு அளித்திருக்கிறீர்.(28) யோகிகள் மற்றும் ஜபிப்பவர்கள் அடையும் உயர்ந்த கதியை நாங்கள் இன்று கண்டோம். (இன்ப) உலகங்கள் அனைத்தையும் விஞ்சி செல்லும் இவர்கள் இருவரும் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல வல்லவர்களாக இருப்பார்கள்” என்றனர் {தேவர்கள்}.(29)
பிரம்மன், “எவன் பெரிய ஸ்மிருதியை (வேதங்களைப்) படிப்பானோ, எவன் முன்னதை {வேதங்களைப்} பின்தொடரும் (மனு மற்றும் எஞ்சிய) பிற மங்கலமான ஸ்மிருதிகளைப் படிப்பானோ, அவனும் இவ்வழியிலேயே என்னுடன் இதே உலகத்தை அடைவான்.(30) எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறானோ, அவனும் தன் மரணத்திற்குப்பிறகு இவ்வழியிலேயே எனக்குச் சொந்தமான உலகங்களை அடைவான்.(31) நான் செல்கிறேன். நீங்கள் அனைவரும் உங்களுடைய காரிய நிறைவேற்றத்திற்காக அவரவர் இடங்களுக்குச் செல்வீராக” என்றான் {பிரம்மன்}”.(32)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த முதன்மையான தேவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். முன்பே அவனிடம் விடைபெற்றிருந்தவர்களும் அங்கே திரண்டிருந்தவர்களுமான தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(33) ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் தர்மனால் கௌரவிக்கப்பட்டு, நன்கு நிறைவடைந்த இதயங்களுடன் அந்தப் பெரும் தேவனின் பின்னால் நடந்து சென்றனர்.(34) இவையே ஜபிப்பவர்களின் வெகுமதிகளும், இதுவே அவர்களுடைய கதியுமாகும். நான் கேட்டவாறே இவற்றை நான் உனக்கு விளக்கிவிட்டேன். ஓ! ஏகாதிபதி, நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(35)
ஜீவாத்மா! – சாந்திபர்வம் பகுதி – 201-செயல், ஞானம், ஜீவன், பிரம்மம் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் மனுவுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேதங்கள் அனைத்திலும், (பல்வேறு} சடங்குகளிலும், நோன்புகளிலும் ஞானத்தைப் பிரதிபலிக்கும் யோகத்தின் கனிகள் {பயன்கள்} என்னென்ன? ஜீவனை எவ்வாறு அறியலாம்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக உயிரினங்களின் தலைவரான மனுவுக்கும், பெரும் முனிவரான பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் அடங்கிய பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவர்களில் முதன்மையானவரும், மனுவின் சீடருமான பிருஹஸ்பதி, தன் ஆசானை வணங்கி உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவரும், தலைவருமான அவரிடம்,(3) “(இந்த அண்டத்தின்) காரணம் என்ன? (வேள்விகள் மற்றும் பக்திச் செயல்பாடுகள் பிறவற்றையும் குறித்த) விதிகள் எங்கிருந்து பாய்ந்தன? கற்றோர் சொல்வது போன்ற ஞானத்துடன் பிணைக்கப்பட்ட கனிகள் என்னென்ன? ஓ! சிறப்புமிக்கவரே, வேதங்களாலேயே வெளிப்படுத்தப்பட இயலாதது எது? என்பவைக் குறித்து எனக்குச் சொல்வீராக[1].(4) வேள்விகள் மற்றும் அபரிமிதமான பசுக்கொடைகளின் மூலம், பொருள் அறிவியல் {அர்த்த சாஸ்திரம்}, வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை அறிந்த அறிஞர்களால் புகழப்படும் அந்தக்கனிகள் என்னென்ன? அக்கனிகள் எங்கிருந்து எழுகின்றன? அவற்றை எங்கே காணலாம்?(5) பூமி, பூமிசார்ந்த பொருட்கள், காற்று, வானம், நீர்வாழ் உயிரினங்கள், நீர், சொர்க்கம், சொர்க்கவாசிகள் ஆகிய அனைத்தும் எங்கிருந்து எழுந்தன என்ற பழைய வரலாற்றை எனக்குச் சொல்வீராக.(6)மனிதன் எந்த ஞானத்தை அடைய முயல்கிறானோ அந்தப் பொருளை நோக்கியே அவனது உள்ளுணர்வுகள் செல்ல முனைகின்றன. அந்தப் பழைமையான, பரமனைக் {புராதானமான பரவஸ்துவை [பரம்பொருளைக்]} குறித்து எனக்கு எந்த அறிவும் இல்லை. அவனை {பரமனை} நோக்கிய உள்ளுணர்வுகளின் போலி வெளிப்பாடுகளில் இருந்து நான் எவ்வாறு என்னைக் காத்துக் கொள்ள முடியும்[2].(7) ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்கள், சந்தங்கள் {சந்தஸ்கள்}, வானியல் {நக்ஷத்ரவித்யை}, நிருக்தம், இலக்கணம் {வ்யாகரணம்}, சங்கல்பம் {கல்பஸூத்ரங்கள்}, சிக்ஷை ஆகிய அனைத்தையும் நான் கற்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொன்றின் தொகைக்குள்ளும் நுழையும் பெரும்பூதங்களின் (ஐந்து அடிப்படை பூதங்களின்) இயல்பைக் குறித்த அறிவு எனக்கில்லை[3].(8) நான் கேட்ட அனைத்தையும், எளிய கூற்றுகளை மட்டுமே பயன்படுத்தி, உரிச்சொற்கள், அல்லது அடைமொழிகளைப் பிரித்து வேறுபடுத்தி எனக்குச் சொல்வீராக[4]. ஞானத்தின் கனிகள் என்னென்ன என்பதையும், வேள்வி மற்றும் பிற அறச்சடங்குகளில் பிணைக்கப்பட்ட கனிகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வீராக. ஒருவனின் உடலில் இருந்து ஜீவன் {ஜீவாத்மா} எவ்வாறு வெளியேறுகிறது என்பதையும் அது மற்றொன்றில் எவ்வாறு அடைகிறது என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {பிருஹஸ்பதி}.(9)மனு {பிருகஸ்பதியிடம்}, “எது ஒருவனுக்கு ஏற்புடையதோ, அதுவே அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதே போலவே எது ஒருவனுக்கு ஏற்பில்லையோ அதுவே அவனது துன்பமாகச் சொல்லப்படுகிறது. “இதன் மூலம் நான் மகிழ்ச்சியை அடைந்து துன்பத்தை விலக்குவேன்” என்ற உணர்விலிருந்தே அறச்சடங்குகள் அனைத்தும் பாய்கின்றன.(10) எனினும், ஞானத்தை அடைவதற்கான முயற்சிகளோ, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டையும் தவிர்ப்பதற்கான உணர்வில் இருந்து எழுகின்றன[5].(11) வேதங்களில் தோன்றும் வேள்விகள் மற்றும் பிற சடங்குகள் குறித்த விதிகள் அனைத்தும் ஆசையுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனினும், எவன் ஆசையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ அவனே பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். மகிழ்ச்சியை அடையும் ஆசையில், பல்வேறு வகைச் செயற்பாதைகளில் நடக்கும் மனிதனோ நரகத்தையே அடைகிறான்[6]” என்றார் {மனு}.(12)பிருஹஸ்பதி {மனுவிடம்}, “இன்பத்தில் முடியும் ஏற்புடையதை அடைவதிலும், துன்பத்தைக் கொடுக்கும் ஏற்பில்லாததைத் தவிர்ப்பதிலும் மனிதர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். மேலும், இத்தகைய அடைதலும், இத்தகைய தவர்த்தலும் செயல்களாலேயே நிறைவேற்றப்படுகின்றன” என்றார்[7].(13)மனு {பிருஹஸ்பதியிடம்}, “ஒருவன், செயல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமே பிரம்மத்திற்குள் நுழைகிறான். செயல்கள் {வேள்விகள்} குறித்த விதிகளும் இந்தக் கதிக்காகத்தான் பாய்ந்தன[8]. செயல்களைக் குறித்த விதிகள், ஆசையில் இருந்து விடுபடாதோரின் இதயங்களை மட்டுமே மயக்கும். (ஏற்கனவே சொன்னது போல) ஒருவன் செயல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் உயர்ந்த நிலையை {பரமனான வஸ்துவை} அடைகிறான்.(14) இன்பநிலையில் (விடுதலையில் {முக்தியில்}) விருப்பம் கொண்ட ஒருவன், அறச்செயல்களைச் செய்து, ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயல்களின் மூலம் (பற்றுகளில் இருந்து) தூய்மையடைந்து, இறுதியாகப் பெரும் காந்தியை வெல்கிறான். ஒருவன் தன்னைச் செயல்களில் இருந்து விடுவித்துக் கொள்வதன் மூலம், அந்தச் செயல்கள் கொடுக்கும் வெகுமதிக்கும் மேலான உயர்ந்த கதியான பிரம்மத்தை அடைகிறான்.(15) உயிரினங்கள் அனைத்தும் மனம் மற்றும் செயலாலேயே {கர்மத்தாலேயே} உண்டாக்கப்படுகின்றன. மேலும் இவை இரண்டே சிறந்த வழிகளாக அனைவராலும் துதிக்கப்படுகின்றன. புறச் செயல்கள் நிலையானவையும், நிலையற்றவையுமான கனிகளை உண்டாக்குகின்றன. நிலையான கனிகளை அடைவதற்கு, மனத்தால் கனிகளைக் கைவிடுவதைவிட வேறேதும் வழி இல்லை[9].(16) இரவு கடந்ததும், கண்ணானது, தன்னிலுள்ள இருள் திரை விலகி, தன் உடைமையாளரைத் தன் சக்தியின் மூலமே வழிநடத்துவதைப் போல, புத்தியானது ஞானத்தை அடையும்போது, தவிர்க்கத்தக்க தீமைகள் அனைத்தையும் காண்பதில் வெல்கிறது.(17)பாம்புகள், கூர்முனை குசப்புற்கள் {தர்ப்பைகள்} ஆகியவை வழியில் கிடப்பதைக் காணும்போது மனிதர்கள் அவற்றைத் தவிர்க்கிறார்கள். சிலர் அவற்றை மிதித்தாலும், அல்லது அவற்றில் விழுந்தாலும் அஃதை அறியாமையின் மூலமே செய்கிறார்கள். (அந்த அறியாமையைத் தவிர்த்து) ஞானக் கனிகளின் மேன்மையைப் பார்.(18) முறையாகச் சொல்லப்படும் மந்திரங்கள், வேள்விகள், தக்ஷிணை என்றழைக்கப்படும் கொடைகள், உணவு தானம், (தெய்வீகத் தியானத்திற்கான) மனக்குவிப்பு ஆகிய ஐந்து செயல்களே கனிகளை உண்டாக்கவல்லவை என்று சொல்லப்படுகின்றனவே தவிர வேறு எதுவும் {அவ்வாறு சொல்லப்படுவது} இல்லை.(19) செயல்கள் (மூன்று) குணங்களையே (சத்வம், ரஜஸ், தமஸ் {ஆகிய மூன்று குணங்களையே}) தங்கள் ஆன்மாவாகக் கொண்டிருக்கின்றன. இதை வேதங்கள் சொல்கின்றன. (வேதங்கள் மந்திரங்களைக் கொண்டிருக்கின்றன). எனவே, மந்திரங்களின் மூலமே செயல்கள் நிறைவேற்றப்படுவதால், மந்திரங்களுக்கும் அதே மூன்று குணங்கள் இருக்கின்றன. சடங்கும் அதே மூன்று குணங்களையே கொண்டிருக்கிறது. செயலின் கனிகள் மனத்தைச் சார்ந்திருக்கின்றன. ஜீவனே அந்தக் கனிகளை அனுபவிக்கிறது[10].(20)சிறந்த வகைகளிலான ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய அனைத்தும் செயல் உலகத்தில் {கர்மலோகத்தில்} (சொர்க்கத்தில்) அடையப்படுவதால் அவையே செயல்களின் கனிகளாக இருக்கின்றன. எனினும் ஞானத்தின் கனிகளைப் பொறுத்தவரையில், மனிதன் அவற்றை மரணத்திற்கு முன்பே இம்மையிலேயே அடைகிறான்.(21) உடல் மூலம் செய்யப்படும் எந்தச் செயல்களுக்குமான கனிகளையும் ஒருவன் உடல் சார்ந்த நிலையிலேயே அனுபவிப்பான். உண்மையில், மகிழ்ச்சி பொதிந்த கட்டுமானமான உடல், துன்பம் பொதிந்த ஒரு கட்டுமானமுமாகும்[11].(22) சொற்களால் நிறைவேற்றப்படும் எந்தச் செயல்களின் கனிகளும், பேசப்படும் சொற்கள் என்ற நிலையிலேயே அனுபவிக்கப்படும். அதே போல, மனத்தால் நிறைவேற்றப்பட்ட எந்தச் செயல்களின் கனிகளும், விடுபடாத நிலையிலுள்ள மனத்தினாலேயே அனுபவிக்கப்படுகின்றன.(23) செயல்களின் கனிகளில் பற்றுடன் ஒரு மனிதன் செய்யும் நன்மையோ, தீமையோவான எவ்வகைச் செயல்களின் கனிகளையும் அதனதன் பண்பியல்புகளுடனே அவன் அனுபவிக்கிறான்.(24) நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும் மீன்களைப் போல, முற்பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனை அடைகின்றன. ஜீவன் {ஜீவாத்மா} தன் நற்செயல்களுக்காக இன்பத்தையும், தீச்செயல்களுக்காகத் துன்பத்தையும் அனுபவிக்கிறது.(25)எவனிலிருந்து {எதனிலிருந்து}, இந்த அண்டம் எழுந்ததோ, எவனை அறிவதன் மூலம் தூய்மையான ஆன்மா கொண்ட மனிதர்கள் இவ்வுலகைக் கடக்கிறார்களோ, வேத மந்திரங்களும், வார்த்தைகளும் எவனை வெளிப்படுத்துகின்றனவோ, அவனை {அஃதை} இப்போது நான் சுட்டிக்காட்டுவேன். உயர்ந்தவற்றில் உயர்வான அவனைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக.(26) பல்வேறு வகைச் சுவை, மணம், தீண்டல், ஒலி மற்றும் வடிவங்களில் இருந்து விடுபட்டவனான அவன், புலன்களுக்குப் புலப்படாதவனும், வெளிப்படாதவனும், நிறமற்றவனும், ஒருவனாக இருப்பவனுமாவான். அவனே, ஐந்து வகைப் பொருட்களைத் தன் உயிரினங்களாக {ஜீவன்களாகப்} படைத்திருக்கிறான்[12].(27) அவன் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்லன். இருப்பாகவோ, இல்லாமையாகவோ, இருந்தும் இல்லாமையாகவோ அவன் இல்லை[13]. பிரம்மத்தை அறிந்தவர்களால் மட்டுமே அவனை {பரம்பொருளைக்} காண முடியும். அவன் சிதைவில்லாதவனாவான்” {என்றார் மனு}.(28)
கர்மக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 202-பரம்பொருளுக்கும், ஐம்பூதங்களுக்குமிடையில் உள்ள உறவு; புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுக்கிடையில் உள்ள உறவும் அவற்றின் செயல்பாடுகளும்; ஆன்மாவின் தன்மையை உணரும் வழி; காரணக் காரியங்கள்; கர்மவினைகளின் தொடர்ச்சி; ஆன்மா உடல்களை உடையாகப் பயன்படுத்தல்; உடலின் அழிவுக்குப் பிறகு ஐம்பூதங்களுடன் கலக்கும் முறை; புதிய உடல் அடையும் நன்மை, தீமைகளின் தன்மைகள் ஆகியவற்றை பரத்வாஜருக்குச் சொன்ன மனு…
மனு {பரத்வாஜரிடம்}, “அழிவற்றவனும், சிதைவற்றவனுமான அவனிடமிருந்து {பரம்பொருளிடமிருந்து} முதலில் வெளி {ஆகாயம்} உண்டானது; வெளியில் இருந்து காற்று {வாயு} வந்தது; காற்றில் இருந்து ஒளி வந்தது; ஒளியில் இருந்து நீர் வந்தது. நீரில் இருந்து இந்த அண்டம் உண்டானது; அண்டத்திலிருந்து அதில் தோன்றும் அனைத்துப் பொருட்களும் உண்டாகின.(1) (பிரளயத்திற்குப் பிறகு), (உலகம் சார்ந்த) அனைத்துப் பொருட்களும் முதலில் நீருக்குள் நுழையும், அங்கிருந்து ஒளி அல்லது வெப்பத்திற்கும், அங்கிருந்து காற்றுக்கும் {வாயுவுக்கும்}, அங்கிருந்து வெளிக்குள்ளும் {ஆகாயத்திற்குள்ளும்} நுழையும். விடுதலையை {முக்தியை} நாடுவோர் வெளிக்கு {ஆகாயத்துக்குத்} திரும்ப வேண்டியதில்லை. மறுபுறம் அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள்.(2) முக்தியின் புகலிடமான பிரம்மம் வெப்பமானதோ, குளிந்ததோ, மென்மையானதோ, கடுமையானதோ, புளிப்பானதோ, துவர்ப்பானதோ, இனிமையானதோ, கசப்பானதோ கிடையாது. அவன் {பிரம்மத்தை அடைந்தவன்} ஒலியையோ, மணத்தையோ, வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. அவன் இவை அனைத்தையும் விஞ்சியவனாக, அளவுகள் அற்றவனாக இருக்கிறான்.(3) தோலானது தீண்டலை உணர்கிறது; நா சுவையையும், மூக்கு மணத்தையும், காதுகள் ஒலிகளையும், கண்கள் வடிவங்களையும் உணர்கின்றன. அத்யாத்மாவை {ஆன்ம யோகத்தை} அறியாத மனிதர்கள், இவற்றைத் தாண்டிய எதையும் காண மாட்டார்கள்.(4) சுவைகளில் இருந்து நாவையும், மணங்களில் இருந்து மூக்கையும், ஒலிகளில் இருந்து காதுகளையும், வடிவங்களில் இருந்து கண்களையும், தீண்டலில் இருந்து தோலையும் விலக்கிய ஒருவனே, (புலன்கள் மற்றும் மனத்தில் இருந்து விடுபட்ட) சுயத்தின் {ஆன்மாவின்} பண்பியல்புகளைக் {ஆத்மஸ்வபாவத்தைக்} காண்பான்.(5)
செயல், செயலுக்கான பொருள், இடம், செயலின் நேரம், விருப்பங்கள், இன்பம் மற்றும் துன்பம் குறித்த மனச்சார்புகள் ஆகியவற்றில் செயல்படுபவனின் காரணங்களாக இருப்பவையே சுயம் (அல்லது ஆத்மா) என்று அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது[1].(6) எது அனைத்தையும் ஊடுருவி {வ்யாபகமானாசுவரரூபமோ} இருக்குமோ, எது (உயிரினங்களின் வடிவை ஏற்று) அனைத்தையும் செய்யுமோ, எது மந்திரங்களை {வேதங்களைப்} போல அண்டத்தில் நிலைத்திருக்குமோ[2], எது அனைத்திற்கும் காரணமாக இருக்குமோ, எது உயர்ந்ததில் உயர்ந்ததாக இருக்குமோ, எது இரண்டாவதாக ஒன்றில்லாமல் ஒன்றாகவே இருந்து அனைத்தையும் செய்யுமோ அதுவே காரணமாகும். வேறு அனைத்தும் விளைவுகளேயாகும் {காரியங்கள் ஆகும்}.(7) ஒரு மனிதனால் செய்யப்படும் செயல்களின் விளைவால் அவன் அடையும் விளைவுகளில் நன்மையும், தீமையும் ஒன்றாக ஒற்றுமையுடன் வசிக்கின்றன. உண்மையில், செயல்களில் பிறக்கும் நன்மை மற்றும் தீமையின் கனிகள் {பலன்கள்}, உடலில் வசிக்கும் ஞானத்தைப் போலவே தங்களுக்கு {அந்தப் பலன்களுக்குப்} புகலிடமான உயிரினங்களின் உடல்களில் ஒன்றாகவே வசிக்கின்றன[3].(8) தூண்டப்பட்ட விளக்கு எரியும்போது, தன் முன்னே இருக்கும் பிற பொருட்களைக் காணச் செய்வதைப் போலவே, உயர்ந்த மரங்களில் நிறுவப்பட்ட விளக்குகளைப் போன்றவையான ஐம்புலன்களும், அறிவால் தூண்டப்படும்போது தங்கள் தங்களுக்குரிய பொருட்களைக் கண்டடைகின்றன[4].(9) ஒரு மன்னனின் பல்வேறு அமைச்சர்கள் எவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து அவனுக்கு ஆலோசனை வழங்குகிறார்களோ, அவ்வாறே உடலில் உள்ள ஐம்புலன்களும் அறிவுக்குப் பணிவிடை செய்கின்றன. அறிவே அவை அனைத்திலும் மேன்மையானதாகும்.(10) நெருப்பின் தழல்கள், காற்றோட்டம், சூரியனின் கதிர்கள், ஆறுகளின் நீர்கள் எவ்வாறு மீண்டும் மீண்டும் சென்று வருகின்றனவோ, அவ்வாறே உடல் கொண்ட உயிரினங்களின் உடல்களும் மீண்டும் மீண்டும் சென்று வருகின்றன {இறந்து பிறக்கின்றன[5].(11)ஒரு மனிதன் ஒரு கோடரியை எடுத்து ஒரு மரத்துண்டை வெட்டினாலும் கூட, புகையையோ, நெருப்பையோ காணாததைப் போலவே, ஒரு மனிதனின் கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றை வெட்டிப் பிரித்தாலும், வயிறு, கரங்கள் மற்றும் கால்களுக்கிடையில் உள்ள பொதுவான எந்த அறிவுக் கோட்பாட்டையும் {ஆன்மாவையும்} அவன் காணமாட்டான்[6].(12) மரத்தை ஒன்றோடொன்று உரசுவதால், ஒரு மனிதன் புகையையும், நெருப்பையும் காண்பதைப் போலவே, நன்கு செலுத்தப்பட்ட புத்தியையும், ஞானத்தையும் கொண்ட மனிதன், (யோகத்தின் மூலம்) புலன்களையும், ஆன்மாவையும் ஒருங்கிணைத்து, தன் இயல்பின் இருப்பில் இருக்கும் பரமாத்மாவைக் காணலாம்[7].(13) ஒருவன் கனவுக்கு மத்தியல், தன் உடலானது தன்னில் இருந்து வேறுபட்டுத் தரையில் கிடப்பதைக் காண்பதைப் போலவே, ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடன் கூடிய மனிதன், (தான் இறந்த பிறகு) தன் உடலைக் கண்ட பிறகு, வேறொரு வடிவிற்குள் செல்கிறான்.(14) பிறப்பு, வளர்ச்சி, சிதைவு மற்றும் அழிவு ஆகியவற்றுக்கு ஆன்மா ஒரு போதும் ஆட்படுவதில்லை. வாழ்வின் விளைவுகளுடன் கூடிய செயல்களின் விளைவால், உடலை ஆடையாக உடுத்தியிருக்கும் ஆன்மாவானது, (அசைவை இழந்து), பிறரால் பார்க்கப்படாதவாறு இந்த உடலில் இருந்து மற்றொன்றுக்குக் கடந்து செல்கிறது.(15)ஆன்மாவின் வடிவை ஒருவராலும் தங்கள் கண்களால் காண முடியாது. மேலும் ஆன்மாவானது, எவரின் தீண்டலுக்கும் ஆட்பட முடியாது. ஆன்மாவானது அவற்றை (புலன்களைக்) கொண்டு எந்தச் செயலையும் செய்யாது. புலன்கள் ஆன்மாவை அணுகாது. எனினும், ஆன்மாவானது அவை அனைத்தையும் உணர்கிறது.(16) பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு முன்னால் சுடர்மிக்க நெருப்புக்குள் வைக்கப்படும் எதுவும், அதில் உள்ள ஒளி மற்றும் வெப்பத்தின் விளைவால், வேறு எந்த வண்ணத்தையோ, இயல்பையோ ஏற்காமல் ஒரு குறிப்பிட்ட நிறத்தை ஏற்பதைப் போலவே, ஆன்மாவின் வடிவும் அதன் நிறத்தை உடலில் இருந்து எடுப்பதாகத் தெரிகிறது.(17) இந்த வகையிலேயே, உடலைக் கைவிடும் மனிதனும், எவராலும் பார்க்கமுடியாதவாறு மற்றொன்றில் நுழைகிறான். உண்மையில், தன் உடலை அடிப்படையான (ஐந்து) பெரும்பூதங்களில் கைவிடும் அவன், அதே போல (ஐந்து) பூதங்களால் செய்யப்பட்ட ஒரு வடிவை ஏற்கிறான்.(18) உடல் கொண்ட உயிரினமானது (தன் உடல் அழிந்ததும்), தன் உடலில் உள்ள ஒவ்வொரு குறிப்பிட்ட பூதத்தையும், (தன் உடலுக்கு வெளியே உள்ள) தன் மெய்க்கு இயல்பான குறிப்பிட்ட பூதத்தில் கலந்து வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் மற்றும் பூமி {நிலம்} ஆகியவற்றில் நுழைகிறது. பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவையும், (தங்கள் செயல்பாட்டுக்காக) ஐந்து பூதங்களைச் சார்ந்திருப்பவையுமான புலன்களும், அதனதனுக்குரிய பூதங்களில் நுழைகின்றன.(19)
காதானது தன் திறனை வெளியில் {ஆகாயத்தில்} இருந்து பெறுகிறது; மூக்கானது மணத்தின் உணர்வைப் பூமியில் இருந்து பெறுகிறது. கண்ணின் தன்மையான வடிவமானது, ஒளி அல்லது நெருப்பின் விளைவாகும். நெருப்பு அல்லது வெப்பமானது, நீரின் காரணத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறுது. சுவையைத் தன் தன்மையாகக் கொண்ட நாக்கானது, நீரில் கலக்கிறது. தீண்டலைத் தன் தன்மையாகக் கொண்ட தோலானது, அதன் இயல்பான காற்றில் {வாயுவில்} தொலைந்து போகிறது.(20) (ஒலி உள்ளிட்ட) ஐந்து வகைத் தன்மைகளும் (அடிப்படையான ஐந்து பூதங்களான) (ஐந்து) பேருயிரிகளில் வசிக்கின்றன. (வெளி உள்ளிட்ட) ஐந்து வகைப் புலன்நுகர் பொருட்களும், (ஐந்து) புலன்களில் வசிக்கின்றன. மேலும் (ஐந்து வகைத் தன்மைகள், ஐந்து வகைப் பூதங்கள், ஐம்புலன்கள் ஆகிய) இவை மனத்தின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கின்றன. மனமோ, புத்தியின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது, புத்தியோ அசுத்தமற்றதும், உண்மையானதும் எதுவோ, அதன் (பரமாத்மாவின் {ஆத்மாவின்}) வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது.(21) செயலைச் செய்தவன், தன் முற்பிறவியில் தான் செய்த செயல்கள் அனைத்திற்கு ஏற்பவும் தன் புதிய உடலின் மூலம் நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தையும் பெறுகிறான். இப்பிறவியில் செய்யப்படும் செயல்கள் மற்றும் அடுத்தடுத்த பிறவிகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், நல்ல நீரோட்டத்தில் {பிரவாஹத்தில்} அதற்கு இணக்கமாகக் கடந்து செல்லும் நீர் வாழ் விலங்குகளைப் போலவே மனத்தைப் பின்தொடர்கின்றன.(22) வேகமாக நகர்வதும், ஓய்வற்றதுமான பொருள் காணப்படுவதைப் போல, (கண்ணாடியின் மூலம் காணப்படும்) நுண்ணியப் பொருள் பெரும் அளவுகளில் தோன்றுவதைப் போல, (வேறு வகையில் காணமுடியாத) தன் முகத்தை ஒரு மனிதனுக்கு நிலைக்கண்ணாடி காட்டுவதைப் போல, ஆன்மாவும் (நுண்ணியதாகவும், புலப்படாததாகவும் இருப்பினும்) புத்தியின் உணர்வுப் பொருளாகிறது” என்றார் {மனு}[8].(23)
கர்மப்பயன்! – சாந்திபர்வம் பகுதி – 203-புலப்படாததாக இருக்கும் ஆன்மாவின் இருப்பையும், எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதையும் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…
மனு {பிருஹஸ்பதியிடம்}, “புலன்களுடன் ஒன்றிணையும் மனம், கடந்தகாலத்தில் பெறப்பட்ட பொருட்களின் மனப்பதிவுகளை நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவுகூர்கிறது. புலன்கள் அனைத்தும் (தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால்,[1] புத்தியின் வடிவில் உள்ள உயர்ந்தது (ஆன்மா), தன் உண்மையான இயல்பில் நீடித்திருக்கிறது.(1) (அத்தகைய நேரத்தில்) ஆன்மாவானது, புலன்நுகர் பொருட்களின் ஒருங்கமைவையோ, முரணையோ கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், அனைத்துத் திசைகளில் இருந்தும் அவற்றைத் திரட்டி ஒன்றாகப் பற்றி வைக்கும்போது, பொருத்தமற்ற பொருட்கள் அனைத்திற்கும் மத்தியில் அஃது அவசியம் உலவ நேர்கிறது. எனவே, அஃது (அமைதியான) சாட்சியாக இருக்கிறது. உடலுக்குள் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தனிப்பட்ட சுதந்திர இருப்பாக இருக்கிறது[2].(2)ரஜஸ், தமஸ், மற்றும் மூன்றாவதாகச் சத்வம் ஆகியவை {குணங்கள்} இருக்கின்றன. மேலும் புத்திக்கு, விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்று மூன்று நிலைகளும் இருக்கின்றன. ஆன்மாவானது, அந்த நிலைகள், முதலில் குறிப்பிட்டப்பட்ட மூன்று வகைக் குணங்களின் இயல்புகள், முரண்பட்டவையான இன்பங்கள் மற்றும் துன்பங்கள் ஆகியவற்றைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறது[3]. ஆன்மாவானது, மரத்துண்டில் உள்ள நெருப்பில் நுழையும் காற்றைப் போலப் புலன்களுக்குள் நுழைகிறது.(3) ஒருவன் தன் கண்ணால் ஆன்மாவின் வடிவத்தைக் காணவோ, புலன்களுக்கு மத்தியில் உள்ள தீண்டலின் புலனுணர்வால் அதை {ஆன்மாவை} உணரவோ முடியாது. மேலும் ஆன்மாவானது, காதால் உணரப்படும் பொருளாகவும் இல்லை. எனினும், ஸ்ருதிகளின் துணை மற்றும் ஞானியரின் போதனைகள் மூலம் அதை {ஆன்மாவைக்} காணலாம். புலன்களைப் பொறுத்தவரையில், அதை {ஆன்மாவைத்} தொடரும் குறிப்பிட்ட புலனானது, தன் உணர்வை இழந்து, புலன் என்ற தன் இருப்பையே இழக்கிறது.(4)புலன்களால் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களைத் தாங்களே உணர முடியாது. ஆன்மாவானது (அறிவதையும், அறியப்படுவதையும உணர்வதால்) அனைத்தையும் அறிந்ததாக இருக்கிறது. அஃது அனைத்துப் பொருட்களையும் பார்க்கிறது. அனைத்தையும் அறிந்ததாக இருப்பதால், (முன்னர்ச் சொன்னது போலப் புலன்களால் உணரப்படாத) ஆன்மாவே புலன்களைக் காண்கிறது.(5) இமய மலையின் மறு பக்கத்தை யாரும் பார்த்ததில்லை, அதே போலச் சந்திர வட்டிலின் பின்புறத்தையும் யாரும் பார்த்ததில்லை. எனினும் அவை இல்லை என்று சொல்ல முடியாது.(6) அதேபோலவே, புலன்களால் உணரப்படாததாக இருப்பினும், அனைத்து உயிரினங்களிலும் வசிப்பதும், நுட்பமானதும், அறிவையே தன் சாரமாகக் கொண்டதுமான ஆன்மா இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.(7)
நிலவின் களங்கங்களின் வடிவில் உலகம் பிரதிபலிக்கப்படுவதையே மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்தாலும் கூட, உலகமே அங்கே பிரதிபலிக்கப்படுகிறது என்பதை அறிவதில்லை. ஆன்ம அறிவும் அவ்வாறானதே ஆகும். அந்த அறிவு தானாகவே வர வேண்டும். ஆன்மாவானது ஆன்மாவையே சார்ந்திருக்கிறது.(8) பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பிறகும் புலப்படக்கூடிய பொருட்களின் வடிவமற்ற தன்மையைச் சிந்தித்த ஞானிகள், மேலீடான வடிவங்களாக இருக்கும் வடிவமற்ற பொருட்களைப் புத்தியின் துணையால் பார்க்கின்றனர். சூரியனின் நகர்வு காணப்படவில்லையெனினும், அஃது எழுவதையும் மறைவதையும் கண்டு, சூரியனுக்கு அசைவிருக்கிது என்று தீர்மானிக்கப்படுகிறது[4].(9) அதே போலவே, ஞானமும் கல்வியும் கொண்டவர்கள், ஆன்மாவானது எட்ட முடியாத தொலைவில் இருந்தாலும், நுண்ணறிவு {புத்தி} எனும் விளக்கின் உதவியுடன் அதை {ஆன்மாவைக்} கண்டு, அருகில் உள்ள ஐந்து வகைப் பூதங்களையும் பிரம்மத்துடன் கலக்க முனைகிறார்கள்.(10)உண்மையில், வழிமுறைகளைச் செயல்படுத்தாமல் எந்த நோக்கமும் நிறைவேற்றப்பட முடியாது. மீனவன், இழைகளால் செய்யப்பட்ட வலைகளின் வழியின் மூலமே மீனைப் பிடிக்கிறான்.(11) விலங்குகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற விலங்குகள் கைப்பற்றப்படுகின்றன. பறவைகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற பறவைகள் பிடிக்கப்படுகின்றன. யானைகளை நியமித்தே பிற யானைகள் பிடிக்கப்படுகின்றன. இவ்வழியில் ஆன்மாவை அறிவுக் கோட்பாட்டின் மூலம் உணரலாம்.(12) பாம்பின் கால்களைப் பாம்பே அறியும் என நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையிலேயே ஒருவன், மொத்த உடலுக்குள் நுட்பமான வடிவத்தில் வசிக்கும் ஆன்மாவைத் தன் அறிவின் மூலம் காண்கிறான்.(13) மக்கள் தங்கள் புலன்களின் மூலம் புலன்களை அறிவதில்லை. அதேபோல, உயர்ந்ததான ஆன்மாவை வெறும் உயர்ந்த புத்தியால் மட்டுமே காண முடியாது. (14)
தேய்பிறையின் பதினைந்தாவது நாள் {புது நிலவின் / அமாவாசை} இரவில் நிலவு மறைக்கப்படுவதால் அதைக் காண முடியாது. எனினும், அதற்கு அழிவு ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. உடலில் வசிக்கும் ஆன்மாவின் வழக்கும் அவ்வாறானது ஆகும்.(15) தேய்பிறையின் பதினைந்தாவது நாளில், நிலவின் மொத்த உடலும் புலப்படாத் தன்மையை அடைகிறது. அதே வகையிலேயே உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவையும் உணர முடியாது.(16) நிலவானது, ஆகாயத்தின் மற்றொரு புள்ளிக்கு நகர்ந்ததும், மீண்டும் ஒளிரத்தொடங்குவதைப் போலவே, ஆன்மாவும் புதிய உடலை அடைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறது.(17) நிலவின் பிறப்பு, வளர்ச்சி, மறைவு ஆகிய அனைத்தும், கண்களால் நேரடியாக உணரப்படுகிறது. எனினும், இந்தத் தோற்றப்பாடுகள், அந்த ஒளிக்கோளின் மொத்த வடிவுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. அவை ஆன்மாவின் குணங்களைப் போன்றவையல்ல.(18) தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} நிலவு மறைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, மறைந்து போன அதே ஒளிக்கோளாகவே அது கருதப்படுகிறது. அந்த வகையிலேயே, பிறப்பு, வளர்ச்சி, வயது ஆகிய மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும் ஒரு மனிதன் தன் அடையாளத்தில் ஐயங்கொள்ளாத வகையில் அதே நபராகவே கருதப்படுவான்.(19)
ராகு எவ்வாறு நிலவை அணுகுகிறது, விடுகிறது என்பது தெளிவாகக் காணப்படுவதில்லை. அந்த வகையிலேயே ஆன்மாவும், ஒருவனுடைய உடலை விட்டுப் பிரிவதையும், மற்றொன்றுக்குள் நுழையவதையும் காண முடியாது.(20) சூரியன் அல்லது நிலவுடன் இருக்கும்போது மட்டுமே ராகு புலப்படுகிறது. அதே போலவே ஆன்மாவும், உடலில் இருக்கும்போது மட்டுமே உணரப்படும் பொருளாக இருக்கிறது.(21) சூரியன் அல்லது சந்திரனிலிருந்து விடுபட்டதும் ராகுவைக் காண முடியாது. அதே போலவே, ஆன்மாவும் உடலைவிட்டு அகன்றதும் காணப்பட முடியாது.(22) மேலும், தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} சந்திரன் மறையும்போது, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களால் அது கைவிடப்படாதிருப்பதைப் போல, ஆன்மாவானதும் உடலில் இருந்து பிரிந்தாலும், அந்த உடலால் அடைந்த செயல்களின் கனிகளை {கர்மப்பலன்களைக்} கைவிடுவதில்லை” என்றார் {மனு}.(23)
ஆன்மவுணர்வு! – சாந்திபர்வம் பகுதி – 204- எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…
மனு {பிரஹஸ்பதியிடம்}, “இந்த வெளிப்பாடு (உடல்) {ஸ்தூலசரீரம்}, கனவின்போது (செயலின்றி) கிடந்து, ஜீவனானது {ஸூக்ஷமசரீரமானது} முன்னதிலிருந்து {உடலான ஸ்தூலசரீரத்திலிருந்து} தன்னை விடுவித்துக் கொண்டு நுண்ணிய வடிவில் நடப்பதைப் போல, ஆழ்ந்த உறக்கம் (அல்லது மரணம்) என்றழைக்கப்படும் நிலையில், புலன்கள் அனைத்துடன் கூடிய அந்த நுண்ணிய வடிவம் {ஜீவன் / சூக்ஷமசரீரம்} செயலற்றுப் போகவும், புத்தியானது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது. இவ்வாறு இருப்பு மற்றும் இல்லாமை {முக்தி} ஆகிய நிலைகளில நேர்கிறது[1].(1) தெளிந்த நீரில் கண்ணால் வடிவச் சாயல்கள் {பிரதிபிம்பங்கள்} காணப்படுவதைப் போல, புலன்கள் கலக்கமடையாமல் இருந்தால், ஆன்மாவானது புத்தியால் காணப்படவல்லதாக இருக்கிறது.(2) எனினும், அந்நீர் கலங்கினால், அதன் அருகில் இருக்கும் மனிதனால் அந்த வடிவத்தோற்றங்களைக் காண முடியாது. அதைப் போலவே, புலன்கள் கலக்கமடைந்தால், ஆன்மாவைப் புத்தியால் காண முடியாது.(3) அறியாமையானது மாயையைத் தோற்றுவிக்கிறது. மாயை மனத்தைப் பாதிக்கிறது. மனமானது, பழுதாகும்போது, மனத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்ட ஐம்புலன்களும் பழுதடைகின்றன.(4) அறியாமையால் மடக்கப்பட்டு, உலகம் சார்ந்த பொருட்களெனும் சகதிக்குள் மூழ்கும் ஒருவனால், மனநிறைவு அல்லது நிலையமைதியின் இனிமைகளை அனுபவிக்க முடியாது. (இவ்வாறான சூழ்நிலையில்} நன்மை மற்றும் தீமையான செயல்களின் தொடர்பறாத ஆன்மாவானது, மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த பொருட்களுக்கே திரும்புகிறது.(5)பாவத்தின் விளைவால் ஒருவனுடைய தாகம் ஒருபோதும் அடங்குவதில்லை. அவனுடைய பாவம் அழியும்போதே அவனது தாகமும் தணிகிறது.(6) தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளத்தக்க போக்கைக் கொண்ட உலகப் பொருட்களில் உள்ள பற்றின் விளைவால், ஒருவன் தான் விரும்ப வேண்டியவற்றை விடுத்து வேறு பொருட்களை விரும்புவதால், உயர்ந்ததை {பரமனை / பரம்பொருளை} அடையத் தவறுகிறான்[2].(7) அனைத்துப் பாவச் செயல்களின் அழிவிலிருந்தே மனிதர்களிடம் ஞானம் எழுகிறது. ஞானம் தோன்றியதும், ஒருவன், பளபளப்பான கண்ணாடியில் தன் வடிவத்தைக் காண்பதைப் போலவே, தன் புத்தியில் தன் ஆன்மாவைக் காண்பான்.(8) புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவால் ஒருவன் துன்பத்தை அடைகிறான். புலன்களைக் கட்டுப்படுத்தியதால் ஒருவன் இன்பத்தை அடைகிறான். எனவே, ஒருவன் புலன்களால் உணரப்படும் பொருட்களில் இருந்து தன் முயற்சியுடன் தனது மனத்தை விலக்க வேண்டும்[3].(9) புலன்களுக்கு மேலானதாக மனம் இருக்கிறது; மனத்திற்கு மேலானதாகப் புத்தி இருக்கிறது. புத்திக்கு மேலானதாக ஆன்மா இருக்கிறது; ஆன்மாவுக்கு மேலானதாக உயர்ந்தது அல்லது மிகப்பெரியது {பரம்பொருள் / பரமாத்மா} இருக்கிறது.(10)வடிவமற்றதிலிருந்து {பரம்பொருளில் இருந்து} ஆன்மா எழுந்தது; ஆன்மாவில் இருந்து புத்தி எழுந்தது; புத்தியிலிருந்து மனம் எழுந்தது. மனம் புலன்களோடு கலக்கும்போது, அஃது {மனம்} ஒலியையும், புலன் நுகர் பொருட்களான பிறவற்றையும் உணர்கிறது.(11) எவன் அந்தப் {புலன்நுகர்} பொருட்களையும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தையும் கைவிடுவானோ, எவன் மூலப் பொருளில் {ப்ரக்ருதியில்} இருந்து எழும் அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறானோ, அவன் அவ்வாறு விடுபடுவதால் அழிவின்மையை அனுபவிக்கிறான் {முக்தியை அடைகிறான்} [4].(12) உதிக்கும் சூரியன் தன் கதிர்களை வெளியிடுகிறான். அவன் மறையும்போது தன்னால் வெளியிடப்பட்ட கதிர்களைத் தானே விலக்கிக் கொள்கிறான்.(13) அந்த வகையிலேயே ஆன்மாவும், உடலுக்குள் நுழைந்து, புலன்களால் வெளியிடப்படும் கதிர்களால் புலன்களின் ஐந்து வகைப் பொருட்களை அடைகிறது. எனினும், அது திரும்பும்போது, தானே அந்தக் கதிர்களை விலக்கிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(14) செயல்களால் உண்டாக்கப்பட்ட பாதையில் மீண்டும் மீண்டும் வழிநடத்தப்படும் அது {ஆன்மா} செயல்கள் செய்யப்பட்டதைப் பின்தொடர்ந்ததன் விளைவால் தன் செயல்களுக்கான கனிகளை அடைகிறது[5].(15)புலன்நுகர் பொருட்களில் உள்ள ஆசையானது, அத்தகைய ஆசையில் ஈடுபடாத மனிதனிடம் இருந்து விலகி இருக்கிறது. எனினும், ஆசையில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனிடம் இருந்து ஆசையெனும் கோட்பாடே உண்மையில் விலகிச் செல்கிறது[6].(16) புத்தியை ஈர்த்திருக்கும் மனமானது இல்லாமல் போவது சாத்தியமென்பதால், புத்தியானது, புலன் நுகர் பொருட்களில் உள்ள பற்றில் இருந்து விடுபட்டு, மனத்தில் நிலைபெறும்போது, ஒருவன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(17) பிரம்மம் என்பது தீண்டவோ, கேட்கவோ, சுவைக்கவோ, பார்க்கவோ, நுகரவோ, ஆலோசிக்கவோ படக்கூடிய பொருள் அல்ல. (வேறு அனைத்தில் இருந்தும் விடுபட்ட) புத்தியால் மட்டுமே அஃதை அடைய முடியும்.(18) புலன்கள் மூலம் மனம் உணரும் அனைத்துப் பொருட்களும், மனத்திற்குள் ஈர்க்கப்படவல்லவை; மனமானது புத்திக்குள் ஈர்க்கப்படக்கூடியது; புத்தியானது ஆன்மாவுக்குள் ஈர்க்கப்படக்கூடியது, ஆன்மாவோ உயர்ந்ததற்குள் {பரம்பொருளுக்குள்} ஈர்க்கப்படக்கூடியது[7].(19) புலன்களால் மனத்தின் வெற்றிக்குப் பங்காற்ற முடியாது. மனத்தால் புத்தியை உணர முடியாது. வெளிப்படும் ஆன்மாவைப் புத்தியால் உணரமுடியாது. எனினும் நுட்பமான ஆன்மாவானது இவை அனைத்தையும் காண்கிறது[8]” என்றார் {மனு}.(20)
பரப்பிரம்மம்! – சாந்திபர்வம் பகுதி – 205-துன்பத்தைத் தவிர்ப்பதும், பிரம்மத்தை அடைவதும் எவ்வாறு என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…
மனு {பிரஹஸ்பதியிடம்}, “உடல் மற்றும் மனத் துன்பங்கள் தோன்றும்போது, ஒருவனால் யோகத்தைப் பயில முடியாது. எனவே, அத்தகைய கவலைகளை நினைத்தேங்கிக் கொண்டிருப்பவனுக்கு அது கைக்கொள்ளக்கூடியதல்ல.(1) கவலைகளை நினைத்து ஏங்காமல் இருப்பதே அதற்கான மருந்தாகும். துன்பங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், அவை மேலும் தீவிரமடைந்து, தீங்கை அதிகரிக்கச் செய்கிறது.(2) ஒருவன் ஞானத்தால் மனத்துன்பத்தில் இருந்தும், குணப்படுத்தும் மருந்துகளால் உடல் துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஞானம் இதையே கற்பிக்கிறது. கவலையில் இருக்கும்போது ஒருவன் குழந்தை போல நடந்து கொள்ளக்கூடாது.(3) ஞானம் கொண்ட மனிதன், நிலையற்றவையான இளமை, அழகு, நீடித்த வாழ்நாள் {ஆயுள்}, செல்வத் திரட்டு, அன்புக்குரியோரின் தோழமை ஆகிய ஆசைகளை ஒருபோதும் பேணி வளர்க்கக்கூடாது.(4) மொத்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைக்காக ஒருவன் தனியாக வருந்தக்கூடாது. வாய்ப்பைக் காணும்போது அவன் தீர்வை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.(5)
வாழ்வில் மகிழ்ச்சியை விடத் துன்பத்தின் அளவே பெரியது என்பதில் ஐயமில்லை. புலன்நுகர் பொருட்களில் நிறைவுடன் இருக்கும் ஒருவனுக்கு, அவனது மயக்கத்தின் விளைவால், ஏற்பில்லா {இனிமையற்ற} மரணம் ஏற்படுகிறது.(6) துன்பம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் தவிர்க்கும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் நிச்சயம் வெல்கிறான். அத்தகைய ஞானம் கொண்ட மனிதர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை.(7) உலகம் சார்ந்த உடைமைகள் கவலையையே கொண்டு வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பதால் உனக்கு எந்த மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியாது. மேலும் அவை துன்பப்பட்டே ஈட்டப்படுகின்றன. எனவே, ஒருவன் அவற்றின் இழப்பைக் கருத்தில் கொள்ளக்கூடாது.(8) தூய அறிவானது (அல்லது பிரம்மம்), அறிவு சார்ந்த பல்வேறு பொருட்களில் (வடிவங்களில்) இருக்கிறது என்று (அறியாமை கொண்டோரால்) கருதப்படுகிறது. மனமானது அறிவின் ஓர் இயல்பே என்று அறிவாயாக. மனமானது அறிவுப்புலங்களோடு கலக்கும்போது, (பொருள் வடிவங்களின் உடல்களை உண்டாக்கும்) புத்தியானது பிறக்கிறது.(9) புத்தியானது, செயலின் குணங்களில் இருந்து விடுபடும்போது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கப்பட்ட) மனத்தை நோக்கிச் செலுத்தப்பட்டு, தியானம், அல்லது யோக முடிவிலான முழுமையான ஈர்ப்பின் (சமாதிநிலையின்) மூலமாகப் பிரம்மத்தை அறிவதில் வெல்கிறது.(10)
அறியாமையில் இருந்து பாய்வதும், புலன்களுடன் கூடியதும், குணங்களைக் கொண்டதுமான புத்தியோ, மலை முகட்டில் இருந்து பிற பகுதிகளை நோக்கிப் பாயும் ஓர் ஆற்றைப் போலப் புறப்பொருட்களை நோக்கி ஓடுகிறது.(11) புத்தியானது, மனத்திற்குள் ஈர்க்கப்படும்போது, உரைகல்லைக் கொண்டு தங்கத்தைத் தீண்டுவதைப் போலக் குணங்களில் இருந்து விடுபட்ட சிந்தனையை ஈர்ப்பதில் வென்று பிரம்ம அறிவை அடைகிறது.(12) புலன் நுகர் பொருட்களை உணர்வது மனமே ஆகும். (பிரம்மத்தை அடைவதற்கு முன்பாக) அதுவே முதலில் அடக்கப்பட வேண்டும். தன் முன்னுள்ள பொருட்களின் குணங்களைச் சார்ந்த மனத்தால், குணங்களற்ற ஒன்றைக் காட்ட முடியாது.(13) புலன்களுக்குண்டான வாயில்களனைத்தும் அடைக்கப்பட்டு, புத்தியானது மனத்திற்குள் ஈர்க்கப்பட வேண்டும். தியானத்தில் ஈர்க்கப்பட்டிருக்கும் இந்நிலையிலேயே அது {புத்தியானது} பிரம்ம அறிவை அடைகிறது.(14) (மொத்த வடிவங்களிலான) ஐவகைப் பூதங்களும், குணங்கள் என்று அறியப்படுபவையின் அழிவுக்குப் பிறகு, (தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் தங்கள் நுட்பமான வடிவில்) விலகும் வகையிலேயே, புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகிய புலன்களுடன் கூடிய புத்தியானது மனத்திற்குள் மட்டுமே வசிக்கும்[1].(15)
நிச்சயமான குணத்தைக் கொண்டதாக இருப்பினும் புத்தியானது மனத்திற்குள் வசித்து, உட்புறத்தில் திரிந்தாலும், அது {புத்தி} மனமேயன்றி (தன்னைவிட உயர்ந்த) வேறேதுமாக இல்லை.(16) தியானத்தின் மூலம் சிறப்பை அடையும் மனம், அல்லது நனவுநிலையானது {அஹங்காரமானது}, குணங்களையும், அவற்றைக் கொண்டவைகளாகக் கருதப்படுபவற்றையும் அடையாளம் காண்பதில் வென்று, அந்தக் குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, குணங்களற்ற பிரம்மத்தை {நிர்க்குண பிரம்மத்தை} அடைகிறது[2].(17) வடிவமற்றதை (பிரம்மத்தை) {ஸூக்ஷ்மமானப்ரம்மத்தைக்} குறித்த அறிவைத் தருவதற்குப் போதுமானதாக, தகுந்ததாக எந்தக் குறியீடும் {த்ருஷ்டாந்தமும்} இல்லை. மொழியில் பொருள் அமைக்கப்பட முடியாத ஒன்று, எவராலும் அடையப்பட முடியாததாகும்[3].(18) தூய்மையடைந்த ஆன்மாவுடனும், தவங்கள், ஊகங்கள், தற்கட்டுப்பாடு, தன் வகைக்கென விதிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் பயிற்சிகள், வேதங்கள் ஆகியவை அளிக்கும் உதவியின் மூலமும் ஒருவன் உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைய முயல வேண்டும்.(19) (தங்களுக்குள் உள்ள உயர்ந்ததை {பரம்பொருளைக்} காண்பதைத் தவிர்த்து) தெளிந்த பார்வை கொண்ட மனிதர்கள், குணங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புற வடிவங்களிலும் அதை {பிரம்மத்தை} அடைய முயல்கிறார்கள். ஞேயம் (Jneya அறியப்பட வேண்டிய ஒன்று) என்ற பெயரால் அழைக்கப்படும் உயர்ந்தது {பிரம்மம்}, குணங்கள் இல்லாததன், அல்லது அவற்றின் இயல்பு இல்லாததன் விளைவாக, வாதத்தால் ஒருபோதும் உணரப்பட முடியாததாக இருக்கிறது {அது யுக்திக்கு எட்டாததாகும்}.(20)புத்தியானது, குணங்களில் இருந்து விடுபடும்போது மட்டுமே அதனால் பிரம்மத்தை அடையமுடியும். குணங்களில் இருந்து விடுபடாதபோது அஃது உயர்ந்ததிலிருந்து {பிரம்மத்திலிருந்து} மீண்டும் வீழ்கிறது. உண்மையில், குணங்களை நோக்கி விரைவதும், விறகுக்கு மத்தியில் நெருப்பைப் போல அவற்றின் மத்தியில் திரிவதுமே புத்தியின் இயல்பாகும்.(21) சுசுப்தி (கனவற்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், ஐம்புலன்களும் தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையிலேயே, உயர்ந்த பிரம்மமானது, குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்ட நிலையில், பிரக்ருதிக்கு {மூல இயற்கைக்கு} மேலாக உயர்ந்து நிலைத்திருக்கிறது[4].(22) இவ்வாறே, உடல்படைத்த உயிரினங்கள் குணங்களின் விளைவுகளால் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து அவை விலகும்போது விடுதலையை {முக்தியை} அடைகின்றன. (செயலின் மூலம்) சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன.(23) வாழும் பூதம் {ஜீவன்}, மூல இயற்கை {ப்ரக்ருதி}, புத்தி, புலன்நுகர் பொருட்கள் {விஷயங்கள்}, புலன்கள், நனவுநிலை {அஹங்காரம்}, தன்னடையாள நம்பிக்கை {அபிமானம்} ஆகியன (அழிவுக்குரியவையாக இருப்பதால்) பூதங்கள் என்றழைக்கப்படுகின்றன.(24) இவற்றின் மூலப் படைப்பு உயர்ந்ததில் {பரம்பொருளில்} இருந்து பாய்ந்தது. இரண்டாவது, அல்லது அடுத்தப் படைப்பானது, (எதிர்பாலின) இணைகள், அல்லது துணைகளின் மூலம், அடிப்படையான ஐந்தை {புலன்களைத்} தவிர்த்து அனைத்துப் பொருட்களையும்[5] உள்ளடக்கி, இனங்கள் அதே இனங்களைப் படைக்கும் விளைவிலான விதிகளுக்குக் கட்டுப்பட்டு உண்டாக்குகின்றன[6].(25) (வாழும்) உயிரினங்கள அறத்தின் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றன, பாவத்தின் மூலம் அவை இழிந்த கதியை ஈட்டுகின்றன. பற்றுகளில் இருந்து விடுதலையடையாதவன் மறுபிறப்பைச் சந்திக்கிறான்; அதே வேளையில் அவற்றில் இருந்து விடுதலை அடைந்தவன் அறிவை (அல்லது பிரம்மத்தை) {முக்தியை} அடைகிறான்” என்றார் {மனு}.(26)
செயல்விலக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 206-செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறம் என்பதைப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…
மனு {பிரஹஸ்பதியிடம்}, “ஐம்புலன்களோடும், மனத்தோடும் ஐவகை உடைமைகள் கலக்கும்போது, ரத்தினத்தின் ஊடாகக் கடக்கும் நூலைப் போலத் தனிப்பட்ட ஒருவனால் {ஆன்மாவால்} பிரம்மம் {பரம்பொருள்} காணப்படுகிறது.(1) மேலும் நூலானது எவ்வாறு தங்கம், முத்து, வைடூரியம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட எந்தப் பொருளிலும் நூலாகக் கிடக்குமோ,(2) அவ்வாறே ஒருவனின் ஆன்மாவும், அதன் செயல்களின் விளைவாக ஒரு பசுவுக்குள்ளோ, குதிரை, மனிதன், யானை, பிற விலங்கு, புழு, அல்லது பூச்சிக்குள்ளோ வாழ்கிறது.(3) தனிப்பட்ட ஒருவன் {ஆத்மா} குறிப்பிட்ட ஓர் உடலுக்குள் இருந்து செய்யும் நற்செயல்கள் உண்டாக்கும் வெகுமதிகளை அந்தக் குறிப்பிட்ட உடலுக்குள் உள்ள அந்த ஒருவனே {ஆத்மாவே} அனுபவிக்கிறான்[1].(4) குறிப்பிட்ட வகை நீர்மத்தால் நனைக்கப்பட்ட மண்ணானது, அதில் வளரும் ஒவ்வொரு வகை மூலிகை, அல்லது செடிக்கும் அதற்குத் தேவையான வகையில் உள்ள சாற்றைக் கொடுக்கிறது. அதே வகையில், ஆன்மாவை சாட்சியாகக் கொண்ட புத்தியானது, முற்பிறவிச் செயல்களால் குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றவே இணங்குகிறது[2].(5)அறிவில் இருந்து ஆசை எழுகிறது. ஆசையிலிருந்து தீர்மானம் {முயற்சி} எழுகிறது. தீர்மானத்திலிருந்து செயல் பாய்கிறது. செயலில் இருந்து கனிகள் (நல்ல மற்றும் தீய விளைவுகள்) உண்டாகின்றன.(6) எனவே கனிகள் தங்களுக்குக் காரணமான செயல்களையே சார்ந்திருக்கின்றன. செயல்களோ தங்களுக்குக் காரணமாகப் புத்தியைக் கொண்டிருக்கின்றன. புத்தி அதன் காரணமாக அறிவைக் கொண்டிருக்கிறது; அறிவு அதன் காரணமாக ஆன்மாவைக் கொண்டிருக்கிறது.(7) அறிவு, கனிகள் {பலன்கள்}, புத்தி, செயல்கள் ஆகியன அழிவதன் விளைவால் அடையப்பட்டும் சிறந்த முடிவே பிரம்ம அறிவு என்றழைக்கப்படுகிறது {அதுவே பரமாத்மரூபத்தில் நிலைபெற்ற ஞானமாகும்}[3].(8) யோகியர் காணும் தன்னிருப்பின் சாரம் {பரமாத்மரூபம்} பெரியதும், உயர்ந்ததுமாகும். ஞானமற்றவர்களும், உலக உடைமைகளில் பற்றுடைய புத்தியைக் கொண்டவர்களும், ஆன்மாவுக்குள் இருப்பதை ஒருபோதும் காண்பதில்லை.(9)
நீரானது அளவில் பூமியைவிடப் பெரியதாகும்; ஒளியானது நீரைவிடப் பெரியதாகும்; காற்றானது ஒளியைவிடப் பெரியதாகும்;(10) வெளியானது {ஆகாயமானது} காற்றைவிடப் பெரியதாகும்; மனமானது வெளியைவிடப் பெரியதாகும்; புத்தியானது மனத்தைவிடப் பெரியதாகும்; காலமானது புத்தியைவிடப் பெரியதாகும்.(11) இந்த அண்டம் எவனுடையதோ அந்தத் தெய்வீக விஷ்ணு, காலத்தைவிடப் பெரியவனாவான். அந்தத் தேவன் தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாதவனாக இருக்கிறான்.(12) அவனுக்குத் தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவு ஆகியவை இல்லாததன் விளைவால் அவன் மாற்றமில்லாதவனாக இருக்கிறான். கவலைக்கும் எல்லைகள் உண்டு என்பதால், அவன் கவலைகள் அனைத்தையும் விஞ்சியவனாக இருக்கிறான்[4].(13) அந்த விஷ்ணுவே உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} என்றழைக்கப்படுகிறான். உயர்ந்தது என்று எது அழைக்கப்படுமோ, அதன் பொருளாகவோ, புகலிடமாகவோ அவனே {விஷ்ணுவே} இருக்கிறான். அவனை அறிந்த ஞானியர், காலத்தின் ஆதிக்கத்திற்குள் உள்ள அனைத்தில் இருந்தும் விடுபட்டு, விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் நிலையை அடைகிறார்கள்.(14) (நம்மால் காணப்படும்) இவை அனைத்தும் குணங்களில் வெளிப்படுகின்றன. எது குணங்களற்ற பிரம்மம் என்றழைக்கப்படுமோ, அதுவே இவைகளைவிடப் பெரியதாகும். செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறமாகும். அவ்வறம் நிச்சயம் மரணமின்மைக்கு (விடுதலைக்கு {முக்திக்கு}) வழிவகுக்கும்.(15)ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள் ஆகியவை உடலையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அவை நாவின் நுனியில் இருந்து பாய்கின்றன. முயற்சியில்லாமல் அவற்றை அடையமுடியாது, மேலும் அவை அழிவுக்குள்ளாகுபவையே.(16) எனினும், (உடலைச் சாராத) பிரம்மம், உடலைப் புகலிடமாகக் கொண்டிருப்பவனை (அறிபவனை அல்லது ஆன்மாவைச்) சார்ந்திருப்பதால், அதை {பிரம்மத்தை} இவ்வழியில் அடையமுடியாது. (வேதங்களை அடைய எது தேவைப்படுமோ அந்த) முயற்சியால், தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாத பிரம்மத்தை அடைய முடியாது.(17) ரிக், சாமங்கள், யஜுஸ்கள் ஆகிய ஒவ்வொன்றும் தொடக்கத்தைக் கொண்டுள்ளன. தொடக்கத்தைக் கொண்டுள்ளவைக்கு முடிவும் உண்டு. ஆனால் பிரம்மம் தொடக்கமற்றது என்று சொல்லப்படுகிறது.(18) பிரம்மம் தொடக்கமோ, முடிவோ இல்லாதிருப்பதால், அளவற்றதென்றும், மாற்றமில்லாததென்றும் சொல்லப்படுகிறது. மாற்றமில்லாத் தன்மையின் விளைவால், கவலைகள் அனைத்தையும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் விஞ்சியிருக்கிறது அந்தப் பிரம்மம்.(19) சாதகமில்லாத விதியின் மூலமும், முறையான வழிமுறைகளைக் காண்பதில் உள்ள இயலாமையின் மூலமும், செயல்களால் அளிக்கப்படும் இடையூறுகளின் மூலமும், மனிதர்கள் பிரம்மத்தை அடையும் பாதையைக் காணாதிருக்கிறார்கள்.(20)
உலகம் சார்ந்த பொருட்களில் உள்ள பற்று, உயர்ந்த சொர்க்கத்தின் இன்பங்களில் உள்ள நாட்டம், பிரம்மத்தைத் தவிர வேறெதிலும் உள்ள ஆசை ஆகியவற்றின் விளைவால் மனிதர்கள் உயர்ந்ததை {பரமாத்மாவை} அடைவதில்லை.(21) உலகம் சார்ந்த பொருட்களைக் காணும் பிறர் அவற்றை அடைய ஆசை கொள்கிறார்கள். அத்தகைய பொருட்களை விரும்பும் அவர்கள், பிரம்மமானது குணங்கள் அனைத்தையும் விஞ்சியிருப்பதன் விளைவால் அஃதை அடைய ஏங்குவதில்லை.(22) தாழ்ந்தவையான குணங்களில் பிணைக்கப்பட்டவனால், மேன்மையான குணங்களைப் படைத்தவனை {பரமாத்மாவைக்} குறித்த அறிவை எவ்வாறு அடைய முடியும்? குணங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்ட அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பவனைக் குறித்த அறிவை ஒருவனால் ஊகத்தினால் மட்டுமே அடைய முடியும்.(23) நுட்பமான புத்தியினால் மட்டுமே நம்மால் அவனை அறிய முடியும். நம்மால் அவனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மனத்தை மனத்தாலும், கண்ணைக் கண்ணாலுமே கைப்பற்ற முடியும்[5].(24) கசடுகளுடன் கூடிய புத்தியை அறிவின் {ஆத்மஞானத்தின்} மூலம் தூய்மையடையச் செய்ய முடியும். மனத்தைத் தூய்மைப்படுத்த புத்தியை ஈடுபடுத்தலாம். மனத்தின் மூலம் புலன்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒருவன் இவை யாவற்றையும் அடைந்தால், மாற்றமில்லாதவனை {அழிவற்ற பரமாத்மாவை} அடையலாம்.(25)ஆழ்ந்த சிந்தனையின் {தியானத்தின்} மூலம் பற்றுகளில் இருந்து விடுபட்டு, தெளிவான மனத்தால் வளம்பெருகிய ஒருவன், ஆசையற்றதும், குணங்கள் அனைத்திற்கும் மேலானதுமான பிரம்மத்தை அடைவதில் வெல்லலாம். மரத்துண்டுக்குள் பொதிந்திருக்கும் நெருப்பில் இருந்து காற்று விலகி இருப்பதைப் போலவே, (உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள விருப்பத்தின் மூலம்) கலக்கமடைந்திருக்கும் மனிதர்கள், உயர்ந்ததில் {பரமாத்மாவில்} இருந்து விலகியே இருக்கிறார்கள்.(26) உலகம் சார்ந்த நோக்கங்கள் அனைத்தின் அழிவின் பேரில் மனமானது புத்தியைவிட உயர்ந்ததையே எப்போதும் அடைகிறது; அதே வேளையில், அவற்றின் பிரிவிலோ மனமானது புத்தியைவிடத் தாழ்ந்ததையே எப்போதும் அடைகிறது. எனவே, ஏற்கனவே விவரிக்கப்பட்ட வழிமுறைக்கேற்ப ஒருவன், உலகம் சார்ந்த நோக்கங்களை அழிப்பதில் ஈடுபட்டால், அவன் பிரம்ம உடலுக்குள் ஈர்க்கப்படும் நிலையை {பிரம்ம ரூபத்தை} அடைவான்[6].(27) ஆன்மாவானது புலப்படாததாக இருப்பினும், குணங்கள் எனும் ஆடை போர்த்தப்படும்போது, அதன் செயல்கள் புலப்படுகின்றன. (உடலுக்கு) அழிவு நேரும்போது, மீண்டும் அது புலப்படாததாகிறது. உண்மையில் ஆன்மா செயலற்றதாக இருக்கிறது. இன்பம் அல்லது துன்பத்தை உண்டாக்கவல்ல புலன்களுடன் அது கலந்திருக்கிறது.(28) புலன்களுடன் கலந்திருப்பதும், உடலுடன் கூடியதுமான அஃது {ஆன்மா} அடிப்படையான ஐந்து பூதங்களில் புகலிடத்தை அடைகிறது. எனினும், உயர்ந்ததும், மாற்றமில்லாததுமான ஒன்றின் {பரமாத்மாவின்} மூலம் சக்தியை இழக்கும்போது, அந்தச் சக்தி குறைபாட்டின் காரணமாக அது {ஆன்மா} செயல்படத் தவறுகிறது.(29)எந்த மனிதனும் இந்தப் பூமியின் முடிவைப் பார்த்ததில்லை, ஆனால் பூமிக்கும் நிச்சயம் முடிவு வரும் என்பதை அறிவாயாக. (பற்றுகளால்) இங்கே கலக்கமடையும் மனிதன், கடலில் தத்தளிக்கும் ஓடத்தைக் காற்றானது பாதுகாப்பான துறைமுகத்தில் சேர்ப்பதைப் போல, தன் இறுதி புகலிடத்திற்கு வழிநடத்தப்படுவான்.(30) தன் கதிர்களைப் பரப்பும் சூரியன், (உலகத்தின் ஒளி என்ற) ஒரு குணத்தை அடைகிறான்; (மறையும் வேளையில்) தன் கதிர்களை விலக்கிக் கொள்ளும் அவன் மீண்டும் குணங்களற்ற ஒரு பொருளாகிறான். அதே வகையில், வேறுபாடுகள் அனைத்தையும் கைவிட்டுத் தவங்களைச் செய்யும் ஒரு மனிதன், குணங்கள் யாவும் அற்றதான அழிவற்ற பிரமத்திற்குள் இறுதியாக நுழைகிறான்.(31) எவன் பிறப்பற்றவனோ, எவன் அறவோர் அனைவரின் உயர்ந்த புகலிடமோ, எவன் தான்தோன்றியோ {சுயம்புவோ}, எவனிடமிருந்து அனைத்தும் உண்டாகினவோ, எவனிடம் அனைத்தும் திரும்புமோ, எவன் தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாதவனோ, எவன் நிச்சயத்தன்மையைக் கொண்ட உயர்ந்தவனோ, அவனை {அந்தப் பரமாத்மாவைப்} பகுத்தறிவதன் மூலம் ஒரு மனிதன் அழிவின்மையை (விடுதலையை {முக்தியை}) அடைகிறான்” என்றார் {மனு}.{32)
தாமரைக் கண்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 207-விஷ்ணு உலகங்களை எவ்வாறு படைத்தான் என்று நாரதரால் சொல்லப்பட்டவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்; கிருஷ்ணன் சாதாரண மனிதனல்ல என்று சொன்னது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! பாரதர்களின் தலைவரே, தாமரைக் கண்ணனும், அழிவில்லாதவனும், அனைத்தையும் படைத்தவனும் {கர்த்தனும்}, எவராலும் படைக்கப்படாதவனும், (அனைத்திலும் படர்ந்தூடுருவியிருப்பதன் விளைவால்) விஷ்ணு என்று அழைக்கப்படுபவனும், அனைத்து உயிரினங்களின் மூலமாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களும் திரும்பிச்செல்லும் இடமாக இருப்பவனும், நாராயணன், ரிஷிகேசன் {இந்திரியங்களுக்கு ஈஸ்வரனும்}, கோவிந்தன், கேசவன் என்ற பெயர்களில் அறியப்படுபவனும், எவராலும் வெல்லப்பட முடியாதவனுமான அந்த ஒருவனைக் குறித்து விபரமாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1,2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இக்காரியம் குறித்து நான் கிருஷ்ண துவைபாயனரிடமிருந்தும் {வியாசரிடமிருந்தும்}, முனிவர் நாரதரிடமிருந்தும், இது குறித்து உரையாடிய ஜமதக்னியின் மகனான ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்தும் கேட்டிருக்கிறேன்.(3) ஓ! மகனே, அசிதர், தேவலர், கடுந்தவங்களைக் கொண்ட வால்மீகி, மார்க்கண்டேயர் ஆகியோர், ஆச்சரியம் நிறைந்தவனும், உயர்ந்தவனுமான கோவிந்தனைக் குறித்துப் பேசுகின்றனர்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தெய்வீகமான கேசவனே, அனைத்தின் பலமிக்கத் தலைவனாவான். புருஷன் என்று அழைக்கப்படும் அவன், அனைத்திற்குள்ளும் படர்ந்தூடுருவி, தன்னையே பலராக ஆக்கியிருக்கிறான்.(5) ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, அந்த உயரான்ம சாரங்கபாணியின் குணங்களைக் குறித்துப் பெரும் பிராமணர்கள் சொல்வதை இப்போது கேட்பாயாக.(6)
ஓ! மனிதர்களின் இளவரசே {யுதிஷ்டிரனே}, பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள் சொல்லும் கோவிந்தனின் செயல்களையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(7) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகவும், உயர் ஆன்மா கொண்டவனாகவும், அனைத்திலும் முதன்மையானவனாகவும் அவனே சொல்லப்படுகிறான். அவனே {அந்தப் புருஷோத்தமனே} (தன் விருப்பத்தின் பேரில்) காற்று, ஒளி, நீர், வெளி {ஆகாயம்} மற்றும் பூமி {நிலம்} என்ற ஐவகைப் பூதங்களை உண்டாக்கினான்.(8) உயர் ஆன்மா கொண்டவனும், அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்து பொருட்களின் பலமிக்கத் தலைவனுமான அவன், பூமியை {நிலமெனும் பூதத்தைப்} படைத்த பிறகு, நீரின் பரப்பில் தன்னைக் கிடத்திக் கொண்டான்.(9) அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்து வகைச் சக்தி மற்றும் காந்திக்குப் புகலிடமாக இருப்பவனுமான அவன் இவ்வாறு நீரில் மிதந்து கொண்டிருந்தபோது, அண்ட உயிரினங்கள் அனைத்திற்கும் முதலாகப் பிறந்த நனவுநிலையை உண்டாக்கினான்.(10) படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புகலிடமாக உள்ள நனவுநிலையை மனத்துடன் சேர்த்தே அவன் படைத்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த நனவுநிலையே கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்கிப் பிடிக்கிறது.(11)
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, நனவுநிலை என்ற பேரிருப்பு உதித்த பிறகு, சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட மிக அழகிய ஒரு தாமரையானது (நீரில் மிதந்து கொண்டிருந்த அந்தப்) பரம்பொருளின் தொப்புளில் இருந்து முளைத்தது.(12) ஓ! மகனே, அந்தத் தாமரையில் இருந்து சிறப்பு மிக்கவனும், தெய்வீகமானவனும், அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டனுமான பிரம்மன், தன் பிரகாசத்தால் அடிவானின் புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டியபடியே இருப்பிற்கு எழுந்தான்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவ்வாறு தொடக்ககாலத் தாமரையில் இருந்து உயர் ஆன்மப் பெரும்பாட்டன் உதித்த பிறகு, தொடக்கமேதும் இல்லாதவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு பேரசுரன் ,இருள் குணத்தில் (தமோ குணத்தில்) இருந்து உதித்துப் பிறப்பை அடைந்தான்.(14) பிரம்மனுக்கு நன்மை செய்வதற்காக, அனைத்திலும் முதன்மையானவன் (உயர்ந்த தேவன்), கடுஞ்செயல்களைச் செய்பவனும், (பெரும்பாட்டனைக் கொல்லும்) கடுஞ்செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அந்தக் கடும் அசுரனைக் கொன்றான்.(15) இவனை (மது என்ற பெயர் கொண்ட அசுரனைக்) கொன்றதிலிருந்தே, தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையான அவனை,[1] மதுசூதனன் (மதுவைக் கொன்றவன்) என்ற பெயரால் அழைக்கத் தொடங்கினர்.(16)இதன் பிறகு, பிரம்மன் தன் மனக்கட்டளையின் பேரில், தக்ஷன் முதலிய ஏழு மகன்களைப் படைத்தான். அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது (மற்றும் ஏற்கனவே குறிப்பிட்ட தக்ஷன்) ஆகியோராவர்.(17) இவர்களில் மூத்தவரான மரீசி, தன் மனக்கட்டளையின் பேரில், பெரும் சக்தி கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், கசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார்.(18) மரீசி பிறப்பதற்கு முன்பே பிரம்மன் தன் கால் பெரு விரலில் இருந்து ஒரு மகனைப் படைத்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்த மகனே, உயிரினங்களுக்கு மூதாதையான தக்ஷனாவான்[2].(19) ஓ! பாரதா, அந்தத் தக்ஷனுக்கு முதலில் பதிமூன்று மகள்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவள் திதி என்றழைக்கப்பட்டாள்.(10) ஓ! ஐயா, மரீசியின் மகனும், கடமைகள் அனைத்தையும், அவற்றின் தனிச்சிறப்புகளையும் அறிந்தவரும், அறச் செயல்களையும், பெரும்புகழையும் கொண்டவருமான கசியபரே அந்தப் பதிமூன்று மகன்களுக்குக் கணவரானார்.(21)உயர்ந்த அருளைக் கொண்டவனான தக்ஷன், (ஏற்கனவே சொல்லப்பட்ட பதிமூன்றைத் தவிர) அடுத்ததாக மேலும் பத்து மகள்களைப் பெற்றான். உயிரினங்களின் மூதாதையும், அறவோனுமான தக்ஷன் அவர்களைத் தர்மனுக்குக் கொடுத்தான்.(22) ஓ! பாரதா, தர்மனானவன், வசுக்கள், அளவிலா சக்தி கொண்ட ருத்திரர்கள், விஸ்வதேவர்கள், சத்யஸ்கள் மற்றும் மருத்துகளுக்குத் தந்தையானான்.(23) தக்ஷன் அடுத்ததாக இருபத்தேழு இளைய மகள்களைப் பெற்றான். உயர்ந்த அருளைக் கொண்ட சோமனே {சந்திரனே} அவர்கள் அனைவருக்கும் கணவனானான்.(24) கந்தர்வர்கள், குதிரைகள், பறவைகள், பசுக்கள், கிம்புருஷர்கள், மீன்கள், மரங்கள் மற்றும் செடிகளைக் கசியபரின் (பதிமூன்று) மனைவிகள் பெற்றெடுத்தனர்.(25)
{கசியபரின் பதிமூன்றிலொரு மனைவியான} அதிதியானவள், தேவர்களில் முதன்மையானவர்களும், பெரும் பலம் கொண்டவர்களுமான ஆதித்யர்களைப் பெற்றாள். அவர்களுக்கு மத்தியில் விஷ்ணு, குள்ளனின் வடிவில் {வாமன அவதாரமாகப்} பிறப்பை எடுத்தான். கோவிந்தன் என்றும் அழைக்கப்படும் அவன், அவர்கள் அனைவரிலும் முதன்மையானவனானான்.(26) அவனுடைய ஆற்றலின் மூலமே தேவர்களின் வளம் அதிகரித்தது. தானவர்கள் வெல்லப்பட்டனர். {கசியபரின் மற்றொரு மனைவியான} திதியின் வாரிசுகளாக அசுரர்கள் இருந்தனர்.(27) {கசியபரின் மற்றொரு மனைவியான} தனுவானவள், விப்ரசித்தியை முதன்மையானவனாகக் கொண்ட தானவர்களைப் பெற்றெடுத்தாள். திதியோ பெரும்பலம் கொண்ட அசுரர்கள் அனைவரையும் பெற்றெடுத்தாள்.(28)
பகல், இரவு, வரிசையான பருவகாலங்கள், காலை {முற்பகல்}, மாலை {பிற்பகல்} ஆகியவற்றையும் அந்த மதுசூதனன் படைத்தான்.(29) சிந்தனைக்குப் பிறகு, மேகங்களையும், அசையாத மற்றும் அசையும் பொருட்கள் அனைத்தையும் படைத்தான். அபரிமிதமான சக்தியைக் கொண்ட அவன் விஸ்வர்களையும், பூமியையும், அவள் மீது கொண்ட அனைத்துப் பொருட்களையும் படைத்தான்.(30) பிறகு, ஓ! யுதிஷ்டிரா, உயர்ந்த அருளைக் கொண்டவனும், பலமிக்கவனுமான கிருஷ்ணன், தன் வாயிலிருந்து {முகத்திலிருந்து} நூறு முதன்மையான பிராமணர்களைப் படைத்தான்.(31) தன்னிரு கரங்களில் இருந்தும் அவன் நூறு க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளில் இருந்து நூறு வைசியர்களையும் படைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே, அதன் பிறகு அந்தக் கேசவன் தன்னிரு பாதங்களில் இருந்து நூறு சூத்திரர்களைப் படைத்தான்.(32) பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான அந்த மதுசூதனன், இவ்வாறு நான்கு வகைகளைச் சேர்ந்த மனிதர்களையும் படைத்த பிறகு, அனைத்து உயிரினங்களின் தலைவனாகவும், ஆட்சியாளனாகவும் தாத்ரியை (பிரம்மனை) நிறுவினான்.(33)
அளவிலா பிரகாசம் கொண்ட பிரம்மன், வேத அறிவை விளக்குபவனாகவும் ஆனான். மேலும் அந்தக் கேசவன், விருபாக்ஷன் என்றழைக்கப்படுபவனை ஆவிகள், பேய்கள் {பூதங்கள், பிரமதகணங்கள்} மற்றும் மாத்ரிகைகள் (தாய்மார்) என்று அழைக்கப்படும் பெண்கள் ஆகியோரின் ஆட்சியாளன் ஆக்கினான்.(34) பிறகு அவன், பித்ருக்கள் மற்றும் பாவிகள் அனைவரின் ஆட்சியாளனாக யமனை {ஸமவர்தின்} நியமித்தான்[3]. உயிரினங்கள் அனைத்தின் பரமாத்மாவான அவன், கருவூலங்கள் அனைத்தின் {நிதிகளின்} தலைவனாகக் குபேரனையும் நியமித்தான்.(35) பிறகு அவன், நீர் நிலைகளின் தலைவனும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் ஆட்சியாளனுமான வருணனைப் படைத்தான். பலமிக்க அந்த விஷ்ணு, தேவர்கள் அனைவரின் தலைவனாக வாசவனை {இந்திரனை} நியமித்தான்.(36) அந்தக் காலங்களில் {சத்திய / கிருத யுகத்தில்}, யமனிடம் எந்த அச்சமும் இல்லாமல் மனிதர்கள் தாங்கள் விரும்பிய அளவு நீண்ட காலத்திற்கு வாழ்ந்தனர்.(37) அப்போது, கலவியானது இனவிருத்திக்கு அவசியமானதாக இருக்கவில்லை. அந்தக் காலங்களில் மனக்கட்டளையின் பேரிலேயே வாரிசுகள் பெறப்பட்டனர்.(38) அதைத் தொடர்ந்த திரேதா யுகத்தில், வெறும் தீண்டலால் மட்டுமே பிள்ளைகள் பெறப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, அப்போதும், அந்தக் காலத்தைச் சேர்ந்த மக்களுக்குக் கலவி அவசியமாக இருக்கவில்லை.(39) ஓ! மன்னா, அதற்கடுத்த காலமான துவாபர யுகத்தில் தான், கலவி நடைமுறை தோன்றி, மக்கள் மத்தியில் நீடித்தது. ஓ! ஏகாதிபதி, கலிகாலத்தில் மனிதர்கள் திருமணம் செய்து கொண்டு இணைகளாக வாழ்கின்றனர்[4].(40)அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனைக் குறித்து நான் இப்போது சொல்லிவிட்டேன். அவனே அனைத்தின் ஆட்சியாளன் என்று அழைக்கப்படுகிறான். ஓ! குந்தியின் மகனே, பூமியில் உள்ள பாவம் நிறைந்த உயிரினங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(41) ஓ! மன்னா, அவர்கள் தென் பகுதியில் பிறந்தவர்களான ஆந்திரகர்கள், குஹர்கள், புளிந்தர்கள், சபரர்கள், சூசுபர்கள் மத்ரகர்கள் ஆகியோர் ஆவர்.(42) வட பகுதியில் பிறந்தவர்களையும் நான் சொல்வேன். அவர்கள் யவனர்கள், காம்போஜர்கள், காந்தாரர்கள், கிராதர்கள், பர்ப்பரர்கள் ஆகியோராவர்.(43) ஓ! ஐயா, பாவிகளான அவர்கள் அனைவரும் சண்டாளர்கள், காக்கைகள் மற்றும் கழுகுகளுக்கு ஒப்பான நடைமுறைகளைக் கொண்டவர்களாக இந்தப் பூமியில் திரிகிறார்கள்.(44) ஓ! ஐயா, கிருத யுகத்தில் அவர்கள் இந்தப் பூமியில் எங்கேயும் இல்லை. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, திரேத யுகத்திலே தோன்றிய அவர்கள் பல்கிப் பெருகத் தொடங்கினர்.(45) திரேதா யுகமும், துவாபர யுகமும் சேர்ந்த பயங்கரக் காலத்தில், க்ஷத்திரியர்கள் ஒருவரையொருவர் அணுகி போரிட்டனர்[5].(46)ஓ! குருகுலத்தின் தலைவா, இவ்வாறே இந்த அண்டம் உயர் ஆன்ம கிருஷ்ணனால் தொடக்கி வைக்கப்பட்டது. உலகங்கள் அனைத்தையும் காண்பவரான தெய்வீக முனிவர் நாரதர், கிருஷ்ணனே உயர்ந்த தேவன் என்பதைச் சொல்லியிருக்கிறார். ஓ! மன்னா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாரதக் குலத் தலைவா, கிருஷ்ணனின் மேன்மையையும், அவனது நித்தியத்தன்மையையும் நாரதரே ஏற்றுக் கொள்கிறார்[6].(48) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, கேசவன் வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனாவான். அந்தத் தாமரைக் கண்ணன் வெறும் மனிதனல்ல. அவன் நினைத்தற்கரியவனாவான்” என்றார் {பீஷ்மர்}.(49)
பிரஜாபதிகளும், சாக்ஷீபூதங்களும்! – சாந்திபர்வம் பகுதி – 208-மரீசி முதலிய பிரஜாபதிகளையும், ஒவ்வொரு திக்கிலும் உள்ள முனிவர்களையும் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே முதல் பிரஜாபதிகள் யாவர்? இருப்பில் உள்ளவர்களான உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் யாவர்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தத் திசைப்புள்ளிகளில் {திக்குகளில்} வசிக்கிறார்கள்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்பதைக் குறித்துச் சொல்கிறேன், என்னிடம் இருந்து கேட்பாயாக. அந்தப் பிரஜாபதிகள் யாவர், அடிவானின் எந்தப் புள்ளியில் {திக்கில்} எந்தெந்த முனிவர்கள் வசிக்கிறார்கள் என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) நித்தியமானவனும், தெய்வீகமானவனும், தான் தோன்றியுமான {சுயம்புவான} பிரம்மனே முதலில் இருந்தான். தான் தோன்றியான அந்தப் பிரம்மன் சிறப்புமிக்க ஏழு மகன்களைப் பெற்றான்.(3) அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் அந்தத் தான்தோன்றிக்கே இணையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான வசிஷ்டர் ஆகியோராவர்.(4) இந்த ஏழு மகன்களே புராணங்களில் ஏழு பிரம்மர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்குப் பின் வந்த பிரஜாபதிகள் அனைவரையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(5)
அத்ரியின் குலத்தில், நித்தியமானவரும், தெய்வீகமானவரும், தவங்களையே தமது மூலமாகக் கொண்டவரும், பழமையானவருமான பர்ஹி {பராசீனபர்ஹி} பிறந்தார். {ப்ரசேதஸின் மகனான} பர்ஹியில் இருந்து பழமையானவர்களான பத்துப் பிரசேதகர்கள் எழுந்தனர்.(6) அந்தப் பத்து பிரசேதகர்களும் தங்களுக்கு மத்தியில் தக்ஷன் என்றழைக்கப்பட்ட பிரஜாபதியை ஒரு மகனாகக் கொண்டிருந்தனர். இந்த இறுதியானவருக்கு இவ்வுலகில் ’தக்ஷன்’ என்றும், ’க’ என்றும் இரண்டு பெயர் உண்டு.(7)
மரீசி, கசியபர் என்றழைக்கப்பட்ட ஒரு மகனைக் கொண்டிருந்தார். இவருக்கும் இரண்டு பெயர்கள் இருந்தன. சிலர் அவரை ’அரிஷ்டநேமி’ என்றும், சிலர் ’கசியபர்’ என்றும் அழைக்கிறார்கள்.(8)
அத்ரி, தன் மடியில் பிறந்தவனும், அழகனும், பெரும் சக்தி கொண்ட இளவரசனுமான சோமன் {சந்திரன்} என்ற மற்றொரு மகனை {ஔரசப் புத்ரனாகக்} கொண்டிருந்தார். அவன் ஓராயிரம் தேவ யுகங்கள் நெடுகிலும் தவங்களைச் செய்து கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமான அர்யமானும், அவனுக்குப் பிறந்த மகன்களும், உலகங்களைப் படைப்பவர்களென்றும், கட்டளையிடுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.(10) சசபிந்துவுக்குப் பத்தாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தலைவன் {சசபிந்து} ஓராயிரம் மகன்களைப் பெற்றார்.(11) இவ்வாறே அவருக்கு ஆயிரமாயிரம் {பத்து லட்சம்/ கோடி} மகன்கள் இருந்தனர். அந்த மகன்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் பிரஜாபதி என்று அழைக்க மறுத்தனர்.(12)
பழமையான பிராமணர்கள், சசபிந்துவிடம் இருந்து பெறப்பட்ட பட்டப்பெயரை உலகின் உயிரினங்களுக்கு அளித்தனர். பரந்த அளவில் இருந்த பிரஜாபதியான சசபிந்துவின் குலத்தவரே, காலப்போக்கில் விருஷ்ணி குலத்தின் முன்னோர்களானார்கள்.(13) என்னால் சொல்லப்படும் இவர்கள் சிறப்புமிக்கப் பிரஜாபதிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்.
இதன் பிறகு நான் மூவுலகங்களின் தலைவர்களாக இருக்கும் தேவர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(14) பகன், அம்சன், அர்யமான், மித்ரன், வருணன், சவிதன், தாத்ரி {தாதா}, பெரும் வலிமைமிக்க விவஸ்வான்,(15) துவஷ்டிரி {த்வஷ்டா}, பூஷன், இந்திரன், பனிரெண்டாவதாக அறியப்படும் விஷ்ணு ஆகிய இந்தப் பனிரெண்டு ஆதித்தியர்களும் கசியபரில் இருந்து எழுந்தவர்களாவர்.(16) நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினிகள் இருவராகச் சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மேற்கண்ட வரிசையில் எட்டாவதாக உள்ள {எட்டாவது பிரஜாபதியான} சிறப்புமிக்க மார்த்தாண்டரின் மகன்களாவர்.(17) இவர்களே தேவர்களில் முதல்வர்கள் என்றும், பித்ருக்களின் இரண்டு வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துவஷ்டிரிக்குப் பல மகன்கள் இருந்தனர். அழகர்களும், புகழ்மிக்கவர்களுமான அவர்களில் விஸ்வரூபன்,(18) அஜைகபாத், அஹி, பிரத்னன், விரூபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹுரூபன், தேவர்களின் தலைவனான திரியம்பகன்,(19) சாவித்ரியன், ஜயந்தன், வெல்லப்பட்ட முடியாத பினாகி ஆகியோர் {பதிமூன்று ருத்திரர்களாக அறியப்படும் இவர்கள்} அடங்குவர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் எட்டாக இருப்பவர்களுமான வசுக்கள் என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றனர்.(20) பிரஜாபதி மனுவின் காலத்தில் இவர்களே தேவர்களாக அறியப்பட்டனர். இவர்களே தேவர்கள் மற்றும் பித்ருக்களில் முதல்வர்களாக அழைக்கப்பட்டனர்.(21)
சித்தர்கள் மற்றும் சாத்யஸ்களில் நடத்தை மற்றும் இளமையின் விளைவால் இரண்டு வர்க்கத்தினர் இருந்தனர். முன்னர் ரிபுக்கள் மற்றும் மருத்துகள் என்று இரண்டு வர்க்கங்களாகத் தேவர்கள் கருதப்பட்டனர்.(22) விஸ்வர்கள், தேவர்கள்[1], அசுவினிகள் ஆகியோர் இவ்வாறே சொல்லப்படுகின்றனர். இவர்களில் ஆதித்தியர்கள் க்ஷத்திரியர்களும், மருத்துகள் வைசியர்களுமாவர்.(23) கடும் தவங்களில் ஈடுபடுபவர்களான அசுவினிகள் இருவரும் சூத்திரர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அங்கீரஸ குலத்தில் எழுந்த தேவர்கள் பிராமணர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இஃது உறுதியானதாகும்.(24) இவ்வாறே தேவர்களில் நால்வகை வர்ணங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஒரு மனிதன், காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்ததும், இந்தத் தேவர்களின் பெயர்களை உரைத்தால்,(25) தெரிந்தோ, தெரியாமலோ, பிறரது சேர்க்கையில் பிறந்தவையோவான தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைகிறான்.யவக்ரீதர், ரைப்யர், அர்வாவசு, பராவசு,(26) ஔஸிஜன், கக்ஷீவான், பலன் ஆகியோர் அங்கீரஸின் மகன்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவர்களும், முனிவர் மேதாதியின் மகனான கண்வர், பர்ஹிஷதன் ஆகியோரும்,(27) நன்கறியப்பட்டவர்களும், மூவுலகங்களுக்கும் மூதாதையராக இருப்பவர்களுமான ஏழு மனிவர்களும் {சப்தரிஷிகளும்} கிழக்கில் {கிழக்குத் திசையில்} வசிக்கிறார்கள்.
உன்முசர், விமுசர், பெரும் சக்தியைக் கொண்டவரான ஸ்வஸ்தாய்தரேயர், பிரமுசர், இத்மவாஹர், தெய்வீகமானவரான திருடவிரதர், மித்ரவருணர்களின் மகனும், பெரும் சக்தியைக் கொண்டவருமான அகஸ்தியர்(29) ஆகிய இந்த மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் தெற்கில் வசிக்கிறார்கள்.
உஷங்கு, கருஷர் {கவஷர்}, தௌம்யர், பெரும் சக்தியைக் கொண்டவரான பரிவ்யாதர்,(30) ஏகதர், திவிதர், திரிதர், அத்ரியின் மகனும், சிறப்புமிக்கவரும், பலமிக்கவருமான சாரஸ்வதர் {துர்வாசர்},(31) ஆகிய இந்த உயரான்மாக்களைக் கொண்டவர்கள் மேற்கில் வசிக்கிறார்கள்.
ஆத்ரேயர் {அத்ரி}, வசிஷ்டர், பெரும் முனிவரான காஸ்யபர்,(32) கௌதமர், பரத்வாஜயர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர், உயர் ஆன்மா கொண்டவரும், ரிசீகரின் சிறப்புமிக்க மகனுமான ஜமதக்நி(33) ஆகிய இந்த எழுவரும் வடக்கில் வாழ்கிறார்கள்.
இவ்வாறே, திசைகளின் பல்வேறு புள்ளிகளில் {திக்குகளில்} வாழும் கடும் சக்தி கொண்ட பெரும் முனிவர்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(34) அந்த உயர் ஆன்மாக்களே, இந்த அண்டத்தின் சாட்சிகளாகவும், உலகங்கள் அனைத்தையும் படைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறே அவர்கள் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.(35) இவர்களது பெயர்களைச் சொல்வதால் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அந்தந்தத் திசைகளில் பயணிக்கும் ஒரு மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, பாதுகாப்பாக வீட்டை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}[2].(36)
வராஹ அவதாரம்! – சாந்திபர்வம் பகுதி – 209-விஷ்ணுவின் வராஹ அவதாரம் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானமும், போரில் வெல்லப்பட முடியாத ஆற்றலும் கொண்டவரே, மாற்றமில்லாதவனும், எல்லாம் வல்லவனுமான கிருஷ்ணனைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவனது பெருஞ்சக்தி மற்றும் பழங்காலத்தில் அவனால் அடையப்பட்ட பெரும் சாதனைகள் குறித்த அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வீராக.(2) ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அந்தப் பலமிக்கவன் ஏன் ஒரு விலங்கின் வடிவை ஏற்றான்? ஓ! வலிமைமிக்கப் போர்வீரரே இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முன்பொரு காலத்தில் நான் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, மார்க்கண்டேயரின் ஆசிரமத்தை அடைந்தேன். அங்கே பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தவசிகள் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(4) அந்த முனிவர்கள் எனக்குத் தேனும், தயிர்க்கடைசலும் கொடுத்து என்னைக் கௌரவித்தனர். அவர்களது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட நான், பதிலுக்கு அவர்களை மரியாதையுடன் வணங்கினேன்.(5) அங்கே பெரும் முனிவரான கசியபர் உரைத்ததை நான் சொல்லப் போகிறேன். இனிமையான அந்தச் சிறந்த கதையைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6)
முன்பொரு காலத்தில், கோபமும், பேராசையும் நிறைந்த முக்கியத் தானவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், வலிமையில் போதையுண்டவர்களும், நரகனைத் தங்கள் முதல்வனாகக் கொண்டவர்களுமான வலிமைமிக்க அசுரர்களும்,(7) போரில் வெல்லப்பட முடியாத எண்ணற்ற தானவர்கள் பிறரும், தேவர்களின் ஒப்பற்ற செழிப்பில் பொறாமை கொண்டனர்.(8) (இறுதியாக) அந்தத் தானவர்களால் ஒடுக்கப்பட்ட தேவர்களும், தெய்வீக முனிவர்களும், அமைதியடையத் தவறிவர்களாக அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினார்கள்.(9) பூமியானவள் புண்பட்ட நிலையில் துயரத்தில் மூழ்கியிருப்பதைச் சொர்க்கவாசிகள் {தேவர்கள்} கண்டனர். பயங்கர முகத்தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்கத் தானவர்களால் நிறைந்திருந்த பூமி, பெரும் கனத்தால் ஒடுக்கப்படுவதாகத் தெரிந்தது. உற்சாகமிழந்தவளாகவும், துயரால் பீடிக்கப்பட்டவளாகவும் இருந்த அவள், பாதாளங்களின் ஆழங்களுக்குள் மூழ்கி விடுபவளைப் போலத் தெரிந்தாள்.(10)
அச்சத்தால் பீடிக்கப்பட்ட ஆதித்தியர்கள், பிரம்மனிடம் சென்று, அவனிடம், “ஓ! பிரம்மா, தானவர்களின் ஒடுக்குமுறையை நாங்கள் எவ்வாறு தொடர்ந்து தாங்கிக் கொள்வது?” என்று கேட்டனர்.(11) அதற்கு அந்தத் தான்தோன்றி {பிரம்மன்}, “இக்காரியத்தில் செய்ய வேண்டியதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன்.(12) வரங்களையும், வலிமையையும் கொண்டு, செருக்கில் பெருகியிருக்கும் உணர்வற்றவர்களான இந்த இழிந்தவர்கள், புலப்படாத வடிவைக் கொண்டவனும்,(13) ஒன்று சேர்ந்த தேவர்களாலும் வெல்லப்பட்ட முடியாத தேவனுமான விஷ்ணு, பன்றியின் வடிவை ஏற்றிருப்பதை அறிய மாட்டார்கள். அந்த உயர்ந்த தேவன் {விஷ்ணு}, பயங்கரத் தன்மையைக் கொண்டவர்களும், பூமிக்கடியில் ஆயிரக்கணக்கில் வாழ்பவர்களுமான தானவர்களில் இழிந்தவர்களின் இடத்திற்கு விரைந்து சென்று, அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறான்” என்றான். பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களில் முதன்மையானோர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(14,15)
சில காலம் கழித்து, பன்றியின் வடிவத்தில் பொதிந்திருந்தவனும், வலிமைமிக்க சக்தி கொண்டவனுமான விஷ்ணு, பாதாள உலகத்திற்குள் ஊடுருவி, அந்தத் திதியின் வாரிசுகளை எதிர்த்து விரைந்தான்.(16) இயல்புக்குமீறிய வகையில் இருந்த அந்த விலங்கைக் கண்ட தைத்தியர்கள் அனைவரும், காலத்தால் மயங்கியவர்களாக, ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் பலத்தை முயற்சி செய்து பார்க்க அதனை எதிர்த்து விரைந்து, அதைச் சூழ்ந்து கொண்டனர்.(17) பிறகு விரைவில் அந்தப் பன்றியை எதிர்த்து விரைந்த அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அதைக் கைப்பற்றினர். சினத்தால் நிறைந்த அவர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த விலங்கை இழுக்க முயற்சி செய்தனர்.(18) ஓ! ஏகாதிபதி, வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், பலத்தால் பெருகியவர்களும், பேருடல்களைப் படைத்தவர்களுமான அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களால் அந்தப் பன்றியை ஏதும் செய்ய முடியவில்லை.(19) இதனால் மிகவும் ஆச்சரியமடைந்த அவர்கள், அச்சத்தால் நிறைந்தனர். எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த அவர்கள் தங்கள் இறுதி வேளை வந்துவிட்டதெனக் கருதினார்கள்.(20)
பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா, யோகத்தைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனும், யோகத்தையே தன் தோழனாகக் கொண்டவனும், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்த தேவனுமான அவன், யோகத்தில் மெய்மறந்து, அந்தத் தைத்தியர்களையும், தானவர்களையும் கலங்கடித்தபடியே மகத்தான முழக்கங்களை வெளியிடத் தொடங்கினான்.(21) உலகங்கள் அனைத்தும், திசைகளின் பத்து புள்ளிகளும் இந்த முழக்கங்களை எதிரொலித்தன, அதன் காரணமாகக் கலக்கமடைந்த உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(22) இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட அச்சத்தால் பீடிக்கபட்டனர். அவ்வொலியின் விளைவால் மொத்த அண்டமே அசையாதிருந்தது. அது பயங்கரமான வேளையாக இருந்தது.(23) அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் யாவும் அவ்வொலியால் திகைப்படைந்தன. அவ்வொலியால் அச்சமடைந்த தானவர்கள்,(24) விஷ்ணுவின் சக்தியால் முடக்கம் அடைந்து உயிரற்றுக் கீழே விழத் தொடங்கினர். அந்தப் பன்றியானது {வராஹமானது}, தேவர்களின் எதிரிகளும், பாதாளலோகவாசிகளுமான அவர்களைத் தன் குளம்படிகளால் துளைக்கத் தொடங்கி, அவர்களது தசை, கொழுப்பு மற்றும் எலும்புகளைக் கிழிக்கத் தொடங்கியது.(25)
அந்த {பன்றியின்} மகத்தான முழக்கங்களின் விளைவால் அந்த விஷ்ணு, சனாதனன் என்ற பெயரால் அழைக்கப்படலானான்.(26) அவன் பத்மநாபன் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியரில் அவனே முதன்மையானவனாக இருக்கிறான். அவனை அனைத்துயிரினங்களின் குருவாகவும், அவர்களது உயர்ந்த தலைவனாகவும் இருக்கிறான். அப்போது, தேவ இனங்கள் அனைத்தும் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(27)
அந்த அண்டத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} வந்த அந்தச் சிறப்புமிக்கவர்கள் {தேவர்கள்}, “ஓ! பலமிக்கவரே, என்ன வகை ஒலியிது? இஃதை எங்களால் புரிந்து கொள்ள முடியவிலை. இது யார்? அல்லது அண்டமே திகைப்படையும் வகையில் உள்ள இந்த ஒலி யாருடையது?(28) இந்த ஒலி, அல்லது இதைச் செய்பவனின் சக்தி மூலம் தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்” என்றனர்.(29) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அதே வேளையில், பன்றிக்குரிய வடிவில் இருந்த விஷ்ணு, கூடியிருந்த தேவர்களின் பார்வையிலேயே, அவனது புகழைச் சொல்லும் துதிகளைக் கொண்டு பெரும் முனிவர்களால் பாடப்பட்டான்.(30)
பெரும்பாட்டன் {பிரம்மன்}, “அனைத்தையும் படைத்தவனும், அனைத்துயிரினங்களின் ஆன்மாவும், யோகியர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனே உயர்ந்த தேவனாவான். பெரும் உடலையும், பெரும் பலத்தையும் கொண்ட அவன் {விஷ்ணு}, தானவர்களில் முதன்மையானோரைக் கொன்றுவிட்டு இங்கே வந்து கொண்டிருக்கிறான்.(31) அனைத்தின் தலைவனும், யோகத்தின் குருவும், பெரும் தவசியும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும் அவனே ஆவான். நீங்கள் அனைவரும் அசையாதிருப்பீராக. அவனே, தடைகள் மற்றும் இடையூறுகள் அனைத்தையும் அழிக்கும் கிருஷ்ணன் ஆவான்.(32) அனைத்து ஆசிகளின் பெரும்புகலிடமும், அளவில்லா காந்தியைக் கொண்டவனுமான அந்த உயர்ந்த தேவன், பிறரால் நிறைவேற்ற முடியாத மிகக் கடினமான சாதனையைச் செய்து விட்டு, கலப்பில்லாத தன் சொந்த இயல்புக்கே திரும்பியிருக்கிறான்.(33) அவனுடைய தொப்புளில் {நாபியில்} இருந்தே தொடக்கக் காலத் தாமரை {ஆதி தாமரை} எழுந்தது. அவனே யோகியரில் முதன்மையானவன். பரமாத்மாவான அவனே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாவான்.(34) அவனே விதி சமைப்பவன். அவனே படைப்புக் கோட்பாடாவான். அவனே அனைத்தையும் அழிக்கும் காலம் ஆவான். அவனே அனைத்து உலகங்களையும் தாங்குபவனாவான். உங்களை அச்சுறுத்தும் இந்த முழக்கங்களை அந்த உயர் ஆன்மாவே செய்கிறான்.(35) வலிய கரங்களைக் கொண்ட அவனே உலகளாவிய வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான். சிதைவடைய இயலாதவனான அந்தத் தாமரைக் கண்ணனே அனைத்துயிரினங்களின் மூலமும், அவர்களது தலைவனுமாவான்” என்றான் {பிரம்மன்}” என்றார் {பீஷ்மர்}.(36)
யோகம்! – சாந்திபர்வம் பகுதி – 210-ஓர் ஆசானுக்கும், அவரது சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்; முற்பிறவியின் விருப்பங்களும், உள்ளுணர்வுகளும் புதிய பிறவியில் எவ்வாறு ஆன்மாவைப் பாதிக்கிறது என்பது குறித்துச் சொன்னது–
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஓ! பாரதரே, நான் விடுதலையை {முக்தியை} அடைய வகைச் செய்யும் உயர்ந்த யோகத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, யோகம் குறித்த அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகவும், விடுலை {முக்தி / மோக்ஷம்} குறித்தும் ஓர் ஆசானுக்கும், ஒரு சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒரு பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) முனிவர்களில் முதன்மையான ஒருவர் மறுபிறப்பாள ஆசானாகவும் இருந்தார். அவர் காந்தியின் திரளைப் போலத் தெரிந்தார். உயர்ந்த ஆன்மாவைக் கொண்ட அவர், உண்மையில் உறுதியுள்ளவராகவும், தன் புலன்களின் முற்றான தலைவனாகவும் இருந்தார்.(3)
ஒரு காலத்தில், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நல்ல கவனம் கொண்டவனுமான சீடன் ஒருவன் தன் ஆசானின் பாதங்களைத் தீண்டி, அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்று,(4) “ஓ! சிறப்புமிக்கவரே, என் வழிபாட்டில் நீர் நிறைவடைந்தீரென்றால், என் பெரும் ஐயம் ஒன்றைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(5) நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? இதை எனக்கு முழுமையாகச் சொல்வீராக. இறுதிக் காரணம் யாது என்பதையும் எனக்குச் சொல்வீராக. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அனைத்து உயிரினங்களின் பொருள் காரணம் ஒன்றாக இருக்கும்போது, அவற்றின் தோற்றமும், அழிவும் இத்தகைய வேறுபட்ட வழிகளில் நேர்வதேன்? ஓ! பெரும் கல்வியைக் கொண்டவரே, (பல்வேறு வகை மனிதர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள பல்வேறு சடங்குகள் குறித்து) வேதங்களில் உள்ள தீர்மானங்களின் நோக்கம், அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் ஸ்மிருதி கட்டளைகளின் பொருள் ஆகியவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்[1].(6,7)
ஆசான், “ஓ!! சீடா, ஓ! பெரும் ஞானியே, கேட்பாயாக. நீ என்னிடம் கேட்பது வேதங்களில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் {வேத ரஹஸ்யமும்}, சிந்தனை, அல்லது உரையாடலுக்குத் தகுந்த உயர்ந்த காரியமும் ஆகும். அஃது அத்யாத்மா என்றழைக்கப்படுகிறது, மேலும் கல்விக் கிளைகள் மற்றும் புனித நிலைகள் அனைத்திலும் அது மதிப்புமிக்கதாக இருக்கிறது.(8) வாசுதேவனே இந்த அண்டத்தில் ({அண்டக்} காரணத்தில்) உயர்ந்தவனாவான். அவனே வேதங்களின் மூலம் ({மூலச் சொல்லான} ஓம்) ஆவான். அவனே வாய்மை, அறிவு, வேள்வி, துறவு, தற்கட்டுப்பாடு, அறம் ஆகியவை ஆவான்.(9) வேதங்களை அறிந்த மனிதர்கள், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருப்பவனாக, அழிவில்லாதவனாக, எங்கும் படர்ந்திருப்பவனாக, அழிப்பவனாக, புலப்படாதவனாக, பிரம்மமாக, மாறும் இயல்பற்றவனாக அவனையே அறிகிறார்கள்.(10)
விருஷ்ணி குலத்தில் பிறந்தவனின் {விஷ்ணுவின்} கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஒரு பிராமணன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களுக்குத் தேவனும், விஷ்ணு என்றழைக்கப்படுபனுமான அவனின் மகிமையைப் பிராமணர்களின் உதடுகள் மூலம் அறிய வேண்டும். அரச வகையைச் சார்ந்த மனிதனர் அதே வகையைச் சார்ந்த மனிதர்கள் மூலம் கேட்க வேண்டும். ஒரு வைசியன் வைசியர்களின் மூலமும், ஓர் உயர் ஆன்ம சூத்திரன், சூத்திரர்களின் மூலம் அதைக் கேட்க வேண்டும்.(11,12) நீ அதைக் கேட்கத் தகுந்தவனே. கதைகள் அனைத்திலும் முதன்மையான கதையான கிருஷ்ணனின் மங்கலக் கதையை இப்போது கேட்பாயாக.
வாசுதேவன், தொடக்கமும் முடிவும் இல்லாத காலச்சக்கரமாவான். இருப்பு, இல்லாமை ஆகிய குணங்களின் மூலமே அவனது உண்மையான இயல்பை அறிந்து கொள்ள முடியும்.(13) அனைத்து உயிரினங்களின் தலைவனான அவனைச் சார்ந்தே இந்த அண்டமானது சக்கரம் போலச் சுழல்கிறது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கேசவன், அழிவற்றவனாகவும், புலப்படாதவனாகவும், அழிவில்லாதவனாகவும், பிரம்மமாகவும், மாறும் இயல்பற்றவனாகவும் சொல்லப்படுகிறான்.(14) உயர்ந்ததில் உயர்ந்தவனும், மாற்றமும், சிதைவும் அற்றவனுமான அவனே, பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைப் படைத்தான்.(15) வேதங்களையும், அழிவற்ற கடமைகளையும், மனிதர்களின் பழக்கவழக்கங்களையும் அவனே படைத்தான். அனைத்தையும் இல்லாமைக்குள் குறைக்கும் {அழிக்கும்} அவன், மீண்டும் (புதிய) யுகத் தொடக்கத்தில் (தொடக்கப் பருப்பொருளான) பிரக்ருதியைப் படைக்கிறான்.(16) பருவகாலத்தின் படி, ஒன்றன்பின் ஒன்றாகப் பல பருவங்களில் தோன்றும் பல்வேறு தோற்றங்களைப் போன்ற வகையிலேயே ஒவ்வொரு (தேவ) யுகத்தின் தொடக்கத்திலும் உயிரினங்கள் தோன்றுகின்றன.(17) புதிதாகப் பிறக்கும் உயிரினங்கள் தொடர்புடையதே, உலக நடைமுறையின் ஒழுங்கை நோக்கமாகக் கொண்ட விதிகள் மற்றும் கடமைகளைக் குறித்த அறிவாகும்[2].(18)(தேவ) யுகங்கள் ஒவ்வொன்றின் முடிவிலும் (பிரளயம் தோன்றும்போது), வேதங்களும், பிற சாத்திரங்கள் அனைத்தும் (எஞ்சியவை போல) காணாமல் போகின்றன. பெரும் முனிவர்கள், தான்தோன்றியின் {சுயம்புவின்} அருளின் விளைவால், தங்கள் தவங்களின் மூலம், முதலில் தொலைந்து போன வேதங்களையும், சாத்திரங்களையும் மீண்டும் அடைகின்றனர்.(19) தான்தோன்றியே (பிரம்மனே) முதலில் வேதங்களை அடைந்தான். அங்கங்கள் என்றழைக்கப்படும் அவற்றின் கிளைகளை {வேதங்கங்களை} (தேவ குருவான) பிருஹஸ்பதி முதலில் அடைந்தார். அண்டத்திற்கு நன்மை பயக்கும் அறநெறி அறிவியலை {நீதி சாத்திரத்தை} பிருகுவின் மகன் (சுக்கிரன்) முதலில் அடைந்தார்.(20) இசை அறிவியல் {சங்கீத சாஸ்திரம்} நாரதரால் அடையப்பட்டது; ஆயுத அறிவியல் {தனுர் வேதம்} பரத்வாஜரால் அடையப்பட்டது; தெய்வீக முனிவர்களின் வரலாறு {சோதிடம் / வானியல்} கர்க்கரால் அடையப்பட்டது; மருத்துவ அறிவியல் கரிய நிறத்தவரான அத்ரியின் மகனால் {கிருஷ்ணாத்ரேயரால்} அடையப்பட்டது.(21) நியாயம் (வைசேஷிகம், சாங்கியம், பாதஞ்சலம் முதலியவை) போன்ற பல்வேறு பிற அறிவியல்களை அதன் தொடர்புடைய பெயரைக் கொண்ட பல்வேறு முனிவர்கள் அறிவித்தனர். வேதங்களின் மூலமும், புலன்களின் நேரடி சாட்சியம் மூலம் பெறப்பட்ட உள்ளுணர்வின் மூலமும் அறிவில் இருந்து ஈர்க்கப்பட்ட வாதங்களைக் கொண்டு அந்த முனிவர்களால் குறிப்பிடப்படும் பிரம்மம் துதிக்கப்படட்டும்[3].(22)(“கௌதமரானவர் ந்யாயசாஸ்திரமுழுமையையும் உண்மையாய் அறிந்தார். வேதங்களையறிந்தவரும், பிரம்மத்தையறிந்தவரும் பிரபுவுமான ஸ்ரீ வ்யாஸரானவர் வேதாந்தத்தையும், கர்மயோகத்தையும் அறிந்தார். ப்ருகுவானவர் சில்பசாஸ்த்ரத்தை அறிந்தார். அந்த அந்த வாதிகளால் பல தர்க்க சாஸ்த்ரங்களும் கற்பிக்கப்பட்டன. எது யுக்தியுடனும், ஆகமத்துடனும், ஸதாசாரத்துடனும் கூறப்பட்டதோ அஃது ஆதரிக்கப்படுகிறது”)தொடக்கமில்லாததும், உயர்ந்ததில் உயர்ந்ததுமான பிரம்மத்தைத் தேவர்களோ, முனிவர்களோ (முதலில்) அறியவில்லை. அனைத்தையும் படைத்தவனும், தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான நாராயணன் மட்டுமே பிரம்மத்தைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தான்.(23) முனிவர்கள், தேவர்களில் முதன்மையானோர், அசுரர்கள், பழங்காலத்தின் அரசமுனிகள் ஆகியோர் நாராயணனிடமிருந்தே கவலைத் தீர்க்கும் உயர்ந்த மருந்தின் அறிவை அடைந்தனர்.(24) தொடக்கத்திலிருந்த பருப்பொருள், தொடக்க சக்தியின் செயல்பாட்டின் மூலம் இருப்புகளை உண்டாக்கும்போது, அதிலிருந்து திறன்கள் அனைத்துடன் கூடிய அண்டமானது உண்டாகிறது[4].(25) ஒளி ஏற்றப்பட்ட ஒரு விளக்கிலிருந்து, ஆயிரக்கணக்கான பிற விளக்குகள் ஒளியேற்றப்படவல்லனவாக உள்ளன. அதே வகையிலேயே, தொடக்ககாலப் பருப்பொருள் இருப்புக்குரிய ஆயிரக்கணக்கான பொருட்களை உண்டாக்குகிறது. மேலும், அதன் முடிவிலாத் தன்மையின் விளைவால் அந்தப் பொருள் ஒருபோதும் தீர்ந்து போவதில்லை.(26)(“ப்ரக்ருதியானது எப்பொழுது ஈசனென்னும் புருஷனால் ஆலோசிக்கப்பட்ட பொருள்களை உண்டுபண்ணத் தொடங்குகிறதோ அப்பொழுது (தர்மம் அதர்மம் என்ற) காரணங்களுடன் கூடிய உலகமானது இந்த ப்ரக்ருதியினிடத்திலிருந்து முதலில் உண்டாகிறது)புலப்படாததில் {பரம்பொருளில்}<1> இருந்து தீர்மானிக்கப்பட்ட செயல்களால் புத்தி<2> எழுகிறது. புத்தி நனவுநிலையை {அஹங்காரத்தை}<3> உண்டாக்குகிறது. நனவுநிலையிலிருந்து {அஹங்காரத்திலிருந்து} ஆகாயம்<4> உண்டாகிறது. ஆகாயம் காற்றை<5> உண்டாக்குகிறது.(27) காற்று வெப்பத்தை<6> உண்டாக்குகிறது. வெப்பம் நீரை<7> உண்டாக்குகிறது, நீரானது பூமியை {நிலத்தை}<8> உண்டாக்குகிறது. இந்த எட்டும் தொடக்ககாலப் பிரகிருதியில் இருக்கின்றன. இந்த அண்டம் அவற்றையே சார்ந்திருக்கிறது.(28) இந்த எட்டிலிருந்தே ஐந்து அறிவுப்புலன்களும் {ஞானேந்திரியங்களும்}, ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரியங்களும்}, (முதல் ஐந்து) புலன்களுக்குரிய புலன்நுகர் பொருட்களும் {விஷயங்களும்}, பதினாறாவதாக அவற்றின் மாற்றத்தின் விளைவால் உண்டான ஒரு மனமும் {சேர்ந்து பதினாறு காரியங்களாகத்} தோன்றுகின்றன.(29) காது, தோல், இரு கண்கள், நாக்கு, மூக்கு ஆகியனவே ஐந்து அறிவுப்புலன்களாகும் {ஞானேந்திரியங்களாகும்}. இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {உபஸ்தம்}, இரு கரங்கள், வாக்கு ஆகியனவே ஐந்து செயற்புலன்களாகும் {கர்மேந்திரியங்களாகும்}.(30) ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம் {ஒளி}, சுவை, மணம் ஆகியவையே அனைத்தையும் மறைத்திருப்பவையும், புலன்களுக்குரியவையுமான புலன் நுகர் பொருட்கள் {விஷயங்களாகும் [தன்மாத்திரைகள்]} ஆகும். மனமானது அனைத்துப் புலன்களிலும், அவற்றுக்குரிய பொருட்களிலும் {விஷயங்களிலும்} வசிக்கிறது.(31) சுவை என்ற உணர்வில் மனமே நாவாக இருக்கிறது, வாக்கில் இந்த மனமே வார்த்தைகளாகிறது. பல்வேறு புலன்களுடன் கூடிய மனமே, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உணர்கிறது.(32)
தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் இருக்கும் இந்தப் பதினாறும் தேவர்களாக அறியப்பட வேண்டும். எவன் அறிவுகள் அனைத்தையும் படைத்தவனோ, எவன் உடலுக்குள் வசிக்கிறானோ அவனையே {பரமாத்மா / ஆத்மா} இவை வழிபடுகின்றன.(33) சுவையானது நீரின் குணமாகவும்; மணமானது பூமியின் {நிலத்தின்} குணமாகவும்; கேள்வியானது ஆகாயத்தின் குணமாகவும்; பார்வையானது {வடிவமானது} நெருப்பு அல்லது ஒளியின் குணத்தைக் கொண்டதாதாகவும்;(34) தீண்டல் {ஊறு} என்பது காற்றின் குணத்தைக் கொண்டதாகவும் அறியப்பட வேண்டும். இதுவே அனைத்துக் காலங்களிலும் அனைத்து உயிரினங்களின் வழக்காகும்.(35) மனமானது, இருப்பின் குணமாகச் சொல்லப்படுகிறது. இருப்பானது, இருப்பிலுள்ள அனைத்துக்கும் ஆன்மாவாக இருக்கும் புலப்படாததிலிருந்து {பரமாத்மாவிலிருந்து} (அல்லது பிரகிருதியிலிருந்து} உண்டாகிறது என்பதை நுண்ணறிவுமிக்க ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டும்.(36) பிரகிருதிக்கு மேலானதாக இருக்கும் உயர்ந்த தெய்வீகத்தைச் சார்ந்தவையும், செயல்படாமல் இருப்பவையுமான இந்த இருப்புகளே {அவ்யக்தம் முதலிய பொருட்களே}, அசையும் மற்றும் அசையாதன அடங்கிய மொத்த அண்டத்தையே தாங்கிப் பிடிக்கின்றன.(37) இந்தப் புனிதமான மாளிகையின் {உடலின்} ஒன்பது வாயில்களும் இந்த இருப்புகள் அனைத்தையும் கொண்டவையே. அவற்றிலும் உயர்ந்ததான ஆன்மாவானது, அதற்குள்ளேயே {உடலிலேயே} வசித்துக் கொண்டு, முழுமையாக அதனுள் படர்ந்தூடுருவி இருக்கிறது. இதன் காரணமாகவே அது {ஆன்மா} புருஷன் என்றழைக்கப்படுகிறது.(38)
ஆன்மாவானது சிதைவற்றதும், மரணத்திற்கு உட்படாததுமாகும். புலப்படும் மற்றும் புலப்படாதவற்றைக் குறித்த அறிவு அதற்கு இருக்கிறது. மேலும் அஃது அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதாகவும், குணங்களைக் கொண்டதாகவும், நுட்பமானதாகவும், இருப்புகள் மற்றும் குணங்கள் அனைத்திற்கும் புகலிடமாகவும் இருக்கிறது.(39) பெரியதாக அல்லது சிறியதாக இருக்கும் பொருட்கள் அனைத்தையும் (அதனதன் அளவைப் பொருட்படுத்தாமல்) காணச் செய்யும் ஒரு விளக்கைப் போலவே அனைத்து உயிரினங்களில் உள்ள ஆன்மாவும், (அதம உயிரினங்களின் குணங்களைக் கருத்தில் கொள்ளாத) அறிவின் கோட்பாடாக இருக்கிறது.(40) கேட்பதைக் கேட்க காதைத் தூண்டி ஆன்மாவே கேட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோலக் கண்ணைப் பயன்படுத்தி ஆன்மாவே பார்க்கிறது. ஆன்மா அடையும் அறிவுக்கு இந்த உடலே வழிமுறைகளைக் கொடுக்கிறது. உடலில் உள்ள உறுப்புகள் செயல்படுபவையல்ல. ஆன்மாவே அனைத்துச் செயல்களையும் செய்வதாக இருக்கிறது.(41) மரத்திற்குள் நெருப்பு இருக்கிறது, ஆனால் அந்த மரத்துண்டை வெட்டித் திறந்தால் அதைக் காண முடியாது. அதே போலவே ஆன்மா உடலுக்குள் வசித்தாலும், உடலைக் கூறுபோடுவதால் அஃதை ஒருபோதும் காணமுடியாது.(42) மரத்தை மற்றொரு மரத்துடன் சரியான வழிமுறைகளின்படி உரசும்போது மரத்திற்குள் வசிக்கும் நெருப்பானது காணப்படுகிறது. அதே வகையில், உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவும், யோகம் எனும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்தும்போது காணப்படும்.(43)
நீரானது ஆறுகளில் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் எப்போதும் சூரியனையே பற்றியிருக்கிறது. அதே வகையிலேயே ஆன்மாவுக்கும் ஓர் உடல் இருக்கிறது. ஆன்மாவானது அடுத்தடுத்த உடல்களில் நுழைய வேண்டிய காரணதால் இந்தத் தொடர்பு நிற்காமல் தொடர்கிறது[5].(44) ஒரு கனவில், ஐந்து வகைப் புலன்களுடன் கூடிய ஆன்மாவானது, உடலைவிட்டகன்று பரந்த பகுதிகளில் திரிகிறது. அதே வகையிலேயே மரணம் ஏற்படும்போதும், (நுண்ணிய வடிவங்களிலான புலன்களுடன் கூடிய) ஆன்மாவானது, மற்றொரு உடலுக்குள் நுழைவதற்காக, {தானிருக்கும்} ஓர் உடலைக் கடந்து செல்கிறது.(45) ஆன்மாவானது அதன் முற்பிறவி செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. ஓர் இருப்பு நிலையில் செய்யப்பட்ட செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்கும் அது, மற்றொரு நிலையை அடைகிறது. உண்மையில், பலமிக்க விளைவுகளைக் கொண்டவையான தன் செயல்களின் மூலமே அஃது ஓர் உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு வழிநடத்தப்படுகிறது.(46) ஒரு மனித உடலுக்குச் சொந்தக்காரன் {ஆன்மாவானது}, தன் உடலை விட்டகன்று, எவ்வாறு மற்றொரு உடலுக்குள் நுழைகிறான்? உண்மையில் (கடந்த கால மற்றும் தற்கால வாழ்வுகளில்) தங்கள் தங்களுக்குரிய செயல்களின் விளைவால் எவ்வாறு மொத்த உயிரினங்களும் உண்டாகின்றன? என்பதைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன்” என்றார் {அந்த ஆசான்}(47).(“ஆறுகளில் ஜலங்களும், ஸூர்யனிடத்தில் கிரணங்களும் சேர்ந்து கொண்டு தொடர்ந்தவைகளாக எவ்விதம் செல்லுகின்றனவோ அவ்விதம் சரீரிகளுக்குச் சரீரங்கள் செல்லுகின்றன)
ஆத்ம தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 211-செயல்களின் பிறப்பு மற்றும் ஞானத்தின் இயல்பு ஆகியவற்றைக் குறித்து ஓர் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{ஆசான் தன் சீடனிடம் தொடர்ந்தார்}, “நான்கு வகைகளில் பிரிந்திருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், புலப்படாத பிறப்பையும், புலப்படாத மரணத்தையும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. புலப்படாத ஆன்மாவில் மட்டுமே இருக்கும் மனமானது, புலப்படாத குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[1].(1) மலராத அஸ்வத மலருக்குள் பதுங்கிருந்த ஒரு பெரிய மரம், வெளியே வரும்போது மட்டுமே புலப்படுவதைப் போலவே, புலப்படாததிலிருந்து பிறப்பு நேர்கிறது.(2) அசைவற்றதாக இருக்கும் இரும்புத் துண்டானது, காந்தத் துண்டை நோக்கி ஓடும். அதே போலவே, இயற்கையான உள்ளுணர்வுகளின் மூலமான விளையும் விருப்பங்கள், மனச்சார்புகள் மற்றும் யாவும் புதுப்பிறவியில் ஆன்மாவை நோக்கி ஓடுகின்றன[2].(3) உண்மையில், அந்த மனச்சார்புகளும், உடைமைகளும், அறியாமை மற்றும் மாயையிலிருந்து உண்டாகி, இயல்பில் அசைவற்றவனவாக இருந்தாலும், அந்த ஆன்மாவானது மீண்டும் {புதிய} பிறப்பை அடையும்போது, ஆன்மாவில் கலந்துவிடுவதைப் போல, பிரம்மத்தில் இருந்தே நேரடியாக வரும் அந்த ஆன்மாவின் மனச்சார்புகளும், நாட்டங்களும் பிரம்மத்தை நோக்கித் தங்கள் பார்வையைச் செலுத்தி, தங்களை அதனுடன் இணைத்துக் கொள்கின்றன[3].(4) சித் எனும் ஆன்மாவை {ஜீவனைத்} தவிரப் பூமியோ, வானமோ, சொர்க்கமோ, பொருட்களோ, உயிர்மூச்சுகளோ, அறம் மற்றும் மறமோ, வேறு எதுவுமோ முன்பு இருந்ததில்லை. அறியாமையால் மாசடைந்த சித் எனும் ஆன்மாவிடம் {ஜீவனிடம்} அவை எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை[4].(5)ஆன்மா நித்தியமானதாகும் {நிலையானதாகும்}. அஃது அழிவற்றதாகும். ஒவ்வொரு உயிரினத்திலும் அது தோன்றுகிறது. மனத்திற்கு அதுவே காரணமாக இருக்கிறது. அது குணங்களற்றதாக இருக்கிறது. நாம் காணும் இந்த அண்டமானது, அறியாமை அல்லது மாயையின் காரணமாக விளைவது என்று (வேதங்களில்) தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆன்மாவானது, முற்பிறவி விருப்பங்களின் காரணமாகவே, வடிவம் முதலியவற்றை உணர்கிறது[5].(6) ஆன்மாவானது, அந்தக் காரணங்களுடன் (விருப்பங்களுடன்) கூடியதாகும்போது, செயல்களில் ஈடுபடும் நிலைக்கு வழிநடத்தப்படுகிறது. (அந்தச் செயல்கள் மீண்டும் ஆசைகளை உண்டாக்கி புதிய செயல்களைச் செய்ய வைக்கும்) அந்நிலையில் விளைவால், இருப்பெனும் {வாழ்வெனும்} இந்தப் பெருஞ்சக்கரம் தொடக்கமும், முடிவும் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கிறது[6].(7) புலப்படாதது (ஆசைகளுடன் கூடிய புத்தியானது), அந்தச் சக்கரத்தின் அச்சாக இருக்கிறது. புலப்படக்கூடியது (புலன்களுடன் கூடிய உடலானது) அதன் ஆரங்களின் கூட்டமாக இருக்கிறது. உணர்வுகளும் {ஞானமும்}, செயல்களும் {கர்மமும்} அதன் சுற்றளவாக {சக்கரத்தின் வட்டையாக} இருக்கின்றன. ரஜஸ் (ஆசை) குணத்தால் உந்தப்படும் ஆன்மாவானது (அதன் சுழற்சியைப் பார்த்துக் கொண்டே) அதைச் சுழலச் செய்கிறது.(8) காணிகர்கள் {எண்ணெய் ஆட்டுபவர்கள்} தங்கள் செக்கில் எள்ளையிட்டு ஆட்டுவதைப் போல, அறியாமையில் பிறந்த விளைவுகள் {காரியங்கள்}, ரஜஸ் {ஆசை} குணத்தால் நனைக்கப்பட்ட (உயிரினங்களுடன் கூடிய) அண்டத்தை அந்தச் சக்கரத்தில் இட்டு, அதைத் தாக்கி, நசுக்கவோ, அரைக்கவோ செய்கின்றன.(9) உயிரினமானது {ஜீவனானது}, இந்த அடுத்தடுத்த இருப்புகளில், ஆசையின் விளைவால் உண்டான சுயக் கருத்தால் பற்றப்பட்டுச் செயல்களில் ஈடுபடுகிறது. காரணம் மற்றும் விளைவின் {காரியத்தின்} கலப்பில் அந்தச் செயல்கள் மேலும் (புதிய) செயல்களை உண்டாக்குகின்றன[7].(10)விளைவுகள் {காரியங்கள்} காரணங்களுக்குள் நுழைவதில்லை. அல்லது காரணங்களும், விளைவுகளுக்குள் {காரியங்களுக்குள்} நுழைவதில்லை. விளைவுகளை {காரியங்களை} உண்டாக்குவதில் காலமே காரணமாக இருக்கிறது[8].(11) காரணங்களால் நிறைந்தவையாக இருக்கும் தொடக்ககாலச் சாரங்களும் (முன்னர்க் குறிப்பிட்ட எட்டு காரணங்கள்), அவற்றின் (பதினாறு) மாறுதல்களும் {காரியங்களும்} ஆன்மாவால் எப்போதும் நடத்தப்படுவதன் விளைவால் {காரணங்களும், காரியங்களும்} ஒன்றுகலந்த நிலையிலேயே இருக்கின்றன[9].(12) புழுதியானது காற்றால் அசைக்கப்பட்டு, அதைப் பின்தொடர்ந்து செல்வதைப் போலவே, உடலை இழந்ததும், இன்னும் ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த விருப்பங்களுடன் கூடியதும், முடிந்து போன பிறவியில் செய்த செயல்களுக்கான காரணக் கோட்பாடுகளுடன் கூடியதுமான ஜீவாத்மாவும், பரமாத்மாவால் அசைக்கப்பட்டு, அது {பரமாத்மா} காட்டும் திசையில் செல்கிறது.(13) எனினும், ஆன்மாவானது, ஒருபோதும் அந்த விருப்பங்கள் மற்றும் மனச்சார்புகளால் தீண்டப்படுவதில்லை. அதேபோல இவற்றிலும் மேன்மையான ஆன்மாவால் இவை தீண்டப்படுவதுமில்லை. தூய இயல்பைக் கொண்ட காற்றானது ஒருபோதும் அது தாங்கிச் செல்லும் காற்றால் களங்கமடைவதில்லை[10].(14)(“அவ்யக்தமான வாஸனையைக் குடமாகவும், வ்யக்தமான சரீர முதலியவைகளை ஆர்களாகவும், ஞானம் கர்மம் முதலிய காரியங்களைச் சுற்றிலுமுள்ள வட்டையாகவும், ஆசையென்ற பசையுள்ள ரஜோகுணத்தை அச்சாகவும் கொண்ட சம்ஸாரசக்ரமானது க்ஷேத்ரஜ்ஞனான ஜீவனால் ஏறப்பட்டு உறுதியாயிருக்கிறது. எண்ணெயென்னும் ஸ்நேகமுள்ளதாயிருப்பதால் எள்ளானது செக்கார்களால் பீடிக்கப்படுவது போல இவ்வுலகம் யாவும் ஆசையென்னும் ஸ்நேகமுள்ளதாயிருப்பதனால் அஜ்ஞானத்தாலுண்டாகும் போகங்களால் ஆக்ரமித்து இந்த ஸம்ஸாரசக்ரத்தில் பீடிக்கப்படுகிறது. இந்த உலகமானது போக விருப்பத்தாலுண்டான அபிமானத்தால் பிடிகப்பட்டுக் கர்மத்தைச் செய்கிறது. அந்தக் கர்மமானது அஜ்ஞானத்திற்கும் சரீரத்திற்கும் சேர்க்கையுண்டாவதற்குக் காரணமென்று உபதேசிக்கப்படுகிறது. காரணமானது கார்யத்தைப் போய் அடைகிறதில்லை. அதுபோலக் கார்யமும் காரணத்தை அடைவதில்லை. இக்கார்யங்கள் காரணத்திலிருக்கின்றன. இதர காரணங்களுடன் கூடிய காலமானது (அவைகளை வெளிபண்ணக்) காரணமாயிருக்கிறது”–பரம்பொருள், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, ஆகாயம், காற்று, வெப்பம், நீர், பூமி ஆகிய எட்டும் தொடக்கக் காலப்ரகிருதியின் சாரங்களாகும் {காரணங்களாகும்}. அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும், செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், புலன்களுக்குரிய பொருட்கள் {விஷயங்கள்} ஐந்தும், மனமும் சேர்ந்த பதினாறும் காரியங்களாகும்.)காற்றானது, அது சுமந்து செல்லும் புழுதியில் இருந்து உண்மையில் தனித்திருப்பதைப் போலவே, ஒரு ஞானியானவன், இருப்பு அல்லது வாழ்வு என்றழைக்கப்படும் ஒன்றுக்கும், ஆன்மாவுக்கும் இடையில் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும். உடல், புலன்கள், பிற மனச்சார்புகள், நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள் ஆகியவற்றுடன் ஆன்மாவானது வெளிப்படையாகக் கலந்திருப்பதன் விளைவால், அதற்கு {ஆன்மாவுக்கு} அவை அவசியமானவை மற்றும் முழுமையான குணங்களாக இருப்பவை என்று உண்மையில் ஒருவரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மறுபுறம், ஆன்மாவானது தன்னியல்பிலேயே இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார் {ஆசான்}.(15) இவ்வாறே அந்தத் தெய்வீக முனிவர் தமது சீடனின் மனத்தில் இருந்த ஐயத்தைத் தீர்த்தார். இவை யாவும் இருந்த போதிலும், துன்பத்தைக் கைவிடுவதற்கும், மகிழ்ச்சியை வெல்வதற்கும் செயல்கள் மற்றும் சாத்திரச் சடங்குகள் அடங்கிய வழிமுறைகளையே மக்கள் சார்ந்திருக்கின்றனர்.(16) நெருப்பால் எரிக்கப்பட்ட வித்துகள் முளைப்பதில்லை. அதே வகையில், துன்பத்தை அளிக்கும் அனைத்தும் உண்மை ஞானம் என்ற நெருப்பால் எரிக்கப்பட்டால், ஆன்மாவானது இவ்வுலகில் மறுபிறவி என்ற கடப்பாட்டில் இருந்து தப்பித்துவிடும் {விடுதலை பெறும் / முக்தி அடையும்}” என்றார் {பீஷ்மர்}.(17)
தோஷங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 212-அறியாமையின் மூலம் பிறக்கும் களங்கங்கள்; மாயைகளை உண்டாக்கும் தமோ குணம்; களங்கங்களை விரட்டப் பயன்படும் ஆய்வு; குணங்களில் பிறக்கும் களங்கங்களை விரட்டி முக்தி அடையும் ஆன்மா ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் பேசிய பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “செயல்களை {கர்மங்களைச்} செய்வதில் ஈடுபடுபவர்கள் {ப்ரவ்ருத்தி தர்மத்திலிருப்பவர்கள்}, செயல்களைச் செய்வதையே உயர்வாகக் கருதுகிறார்கள். அதுபோலவே, அறிவில் ஈடுபாடு கொண்டவர்கள் {ஞானநிஷ்டையிலுள்ளவர்கள்} அறிவைத் தவிர வேறு எதையும் கருதுவதில்லை.(1) வேதங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்பட்டவற்றைச் சார்ந்தவைகளை முழுமையாக அறிந்தவர்கள் மிக அரிதானவர்களே. நுண்ணறிவுமிக்கவர்கள், சொர்க்கம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டைவிடச் சிறந்த பாதையாகச் செயல்களைத் துறக்கும் பாதையையே {ஞான வழியையே} விரும்புகிறார்கள்[1].(2) பெரும் ஞானம் கொண்டவர்களாலேயே செயல்களில் துறவு நோற்கப்படுகிறது. எனவே, அந்த ஒழுங்கே மெச்சத்தகுந்ததாகும். செயல்களில் இருந்து விடுபடத் தூண்டும் புத்தியாலேயே ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(3) உடலைக் கொண்ட ஒரு மனிதன், கோபம், பேராசை ஆகியவற்றுடனும், ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த மனச்சார்புகள் அனைத்துடனும், மடமையின் மூலமும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் பற்று கொள்கிறான்.(4) எனவே, ஒருவன், தன் உடலுடன் கொண்ட தொடர்பை அழிக்க விரும்பினால், அவன் தூய்மையற்ற எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது[2].(5)தங்கமானது, இரும்புடன் சேரும்போது, அதன் தூய்மையை இழந்து ஒளிரத் தவறுவதைப் போலவே, ஞானமானது, உலகம் சார்ந்த பற்று மற்றும் அத்தகைய களங்கங்களுடன் {தோஷங்களுடன்} இருக்கும்போது, காந்தியை வெளியிடத் தவறுகிறது.(6) பேராசையின் ஆதிக்கத்தில், கோபம் மற்றும் ஆசையின் ஆணைகளைப் பின்பற்றி, மறம் {அதர்மம்} பயின்று, அறத்தின் பாதையை மீறிச் செல்லும் ஒருவன் முற்றான அழிவையே அடைகிறான்.(7) தனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைப் பிரதிபலிக்கும் புலன்நுகர் பொருட்களில் ஒருபோதும் அதீதப் பற்றுக் கொள்ளக்கூடாது. ஒருவன் அதைச் செய்வானானால், கோபம், இன்பம் மற்றும் துன்பம் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்றாக எழும் (அவ்வாறு எழுந்து ஒருவனைத் துன்புறுத்தும்).(8) ஒவ்வொருவரின் உடலும், மூலமான ஐந்து பூதங்களாலும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ} குணம், இருள் {தமோ} குணம் ஆகிய குணங்களாலும் அமைக்கப்பட்டிருக்கும்போது, ஒருவன் யாரைத் துதிக்க வேண்டும்? எந்த வார்த்தைகளால் யாரை நிந்திக்க வேண்டும்?(9) மூடர்கள் மட்டுமே புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருக்கிறார்கள். மடமையின் விளைவால் அவர்கள், தங்கள் உடலானது, பூமியின் மாறுதல்கள் {பூமியில் உண்டான காரியங்கள்} மட்டுமே என்பதை அறியாதிருக்கிறார்கள்[3].(10)மண்ணால் அமைக்கப்பட்ட வீடானது, மண்ணால் பூசப்படுவதைப் போலவே, மண்ணாலான இந்த உடலும், பூமியின் மாறுதலான {காரியமான} உணவின் மூலம் அழிவில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.(11) தேன், எண்ணெய், பால், நெய், இறைச்சி, உப்பு, வெல்லம், அனைத்துவகைத் தானியங்கள், கனிகள், கிழங்குகள் ஆகிய அனைத்தும் நீருடன் கூடி பூமியின் மாறுதல்களே {காரியங்களே} ஆகும்.(12) காட்டில் வாழும் துறவிகள், (ஆடம்பர மற்றும் சுவைமிக்க உணவுக்கான) ஏக்கங்கள் அனைத்தையும் கைவிட்டு, உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே சுவையற்ற எளிய உணவை உண்கின்றனர்.(13) அதே வகையில், உலகின் காடுகளில் வசிக்கும் மனிதன், உழைப்புக்குத் தயாராக இருந்து, வாழ்வைக் கடந்து செல்வதற்காக மருந்தை உட்கொள்ளும் நோயாளியைப் போலவே உணவை உட்கொள்ள வேண்டும்[4].(14)உன்னத ஆன்மா கொண்ட மனிதன், தன்னிடம் வரும் உலகம்சார்ந்த பொருட்கள் அனைத்தின் இயல்பையும் ஆய்வு செய்து, வாய்மை, தூய்மை, வெளிப்படைத்தன்மை {நேர்மை}, துறவு {தியாகம்}, ஞானம், துணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி {தைரியம்}, நுண்ணறிவு {புத்தி}, சிந்தனை {மனம்}, தவங்கள், ஆகியவற்றின் உதவியுடனும், அமைதியை அடையும் விருப்பத்துடனும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.(15,16) அறியாமையின் விளைவால் திகைப்படையும் உயிரினங்கள் அனைத்தும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருளின் {தமோ குணத்தின்} மூலம் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழன்று {செயல்களில் ஈடுபட்டு} வருகின்றன.(17) எனவே அறியாமையில் பிறக்கும் களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து, அறியாமையைத் தோற்றுவாயாகக்கொண்டதும், துன்பத்தை உண்டாக்குவதுமான தன்னுணர்வைத் தவிர்க்க வேண்டும்.(18) ஐவகைப் பூதங்கள், புலன்கள், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {ரஜோ} குணங்கள், பரம்பொருளுடன் கூடிய மூவுலகங்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தன்னுணர்வை {சுயப்ரக்ஞையைச்} சார்ந்தவையாக இருக்கின்றன[5].(19) காலமானது, தன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, எப்போதும் பருவகாலத் தோற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டுவதைப் போலவே, அனைத்து உயிரினங்களிலும் உள்ள தன்னுணர்வானது, செயல்களைச் செய்யத் தூண்டுகிறது[6].(20)(எதில் தன்னுணர்வு பிறக்கிறதோ அந்த) தமஸ் {இருள் குணம்}, மாயைகளை உண்டாக்கவல்லது என்பது அறியப்பட வேண்டும். அஃது {இருள் குணமானது} இருளைப் போன்றதும் அறியாமையில் பிறந்ததும் ஆகும். நற்குணம், ஆசை குணம், இருள் குணங்கள் ஆகிய மூன்று குணங்களுடன் (உயிரினங்களின்) இன்ப துன்பங்கள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.(21) நற்குணம், ஆசை குணம் மற்றும் இருள் குணங்களில் இருந்து எழும் விளைவுகளை இப்போது கேட்பாயாக. மனநிறைவு, இன்பத்தில் இருந்து எழும் திருப்தி, உறுதித்தன்மை {ஐயமில்லாமை}, நுண்ணறிவு {தைரியம்}, நினைவு ஆகிய இவை நற்குணத்தில் பிறந்த விளைவுகளாகும். நான் இப்போது ஆசை மற்றும் இருள் குணங்களின் விளைவுகளைச் சொல்லப் போகிறேன்.(22) ஆசை, கோபம், குற்றம், பேராசை, மலைப்பு, அச்சம், களைப்பு ஆகியவை ஆசை குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும். உற்சாகமின்மை, துயரம், நிறைவின்மை, வறட்டுப் பெருமை, செருக்கு, தீமை ஆகிய அனைத்தும் இருள் குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும்.(23) இவற்றின் கனம், அல்லது கனமின்மையையும், ஆன்மாவில் வசிக்கும் பிற குறைகளையும் ஆய்வு செய்யும் ஒருவன், (அவற்றில் எவை இருக்கின்றன, எவை பலமானவை, எவை பலவீனமானவை, எவை விரட்டப்பட்டுவிட்டன, எவை இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பது உறுதி செய்வதற்காக) ஒன்றன்பின் ஒன்றாக அவை ஒவ்வொன்றையும் குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்றார் {பீஷமர்}.(24)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “விடுதலையை {முக்தியை} விரும்பும் மனிதர்கள் எந்தக் களங்கங்களைக் கைவிடுகிறார்கள்? எவற்றை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். (கைவிட இயலாத வகையில்) மீண்டும் மீண்டும் திரும்ப வரும் களங்கங்கள் யாவை?(25) உண்மையில், ஒரு ஞானியாவன், நுண்ணறிவும் மற்றும் காரணங்களின் துணையுடன் எந்தக் களங்கங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்துச் சிந்திக்க வேண்டும்? இவை குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. ஓ! பாட்டா, இவை குறித்து என்னிடம் உரையாடுவீராக” என்றான்.(26)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் களங்கங்கள் அனைத்தையும் வேருடன் பிடுங்குவதன் மூலம், விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான். இரும்பாலான கோடரியொன்று இரும்புச் சங்கிலியைப் பிளப்பதைப் போலவே, தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், இருள் குணத்தில் உதித்தவையும், (மறுபிறவியில்) ஆன்மாவுடன் சேர்ந்து பிறப்பவையுமான அந்தக் களங்கங்கள் அனைத்தையும் அழித்து, உடலுடன் கூடிய தன் தொடர்பைக் கரைப்பதில் வெல்கிறான் (விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(27) ஆசையில் இருந்து பிறக்கும் குணங்களும், இருளில் இருந்து பிறக்கும் குணங்களும், தூய்மையில் இருந்து பிறக்கும் களங்கமற்றவைகளும் (நற்குணத்தின் கீழ் சேர்க்கப்படுபவையும்), உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் எதில் வளர்கின்றனவோ அந்த வித்திலேயே இருக்கின்றன. இவற்றில், நற்குணம் மட்டுமே, தூய ஆன்மாக்களைக் கொண்டோர் விடுதலை {முக்தி} அடைவதற்குக் காரணமாக இருக்கிறது.(28) எனவே, தூய்மைடைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோகுணம்} ஆகிய குணங்களில் பிறக்கும் அனைத்தையும் கைவிட வேண்டும். மேலும், ஆசை மற்றும் இருள் சார்ந்தவற்றிலிருந்து நற்குணம் விடுபெறும்போது, அது {அந்த நற்குணம்} மேலும் ஒளிர்வடைகிறது {பிரகாசிக்கிறது}.(29) மந்திரங்களின் உதவியுடன் செய்யப்படும் பிற செயல்கள், வேள்விகள், ஆன்ம தூய்மைக்கு நிச்சய காரணமாக இருப்பவை ஆகியவை தீய அல்லது கொடுஞ்செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர். (இக்கருத்து சரியானதல்ல). மறுபுறம் அச்செயல்கள், உலகப்பற்றுகள் அனைத்திலிருந்தும் ஆன்மாவின் தொடர்பை அறுப்பதற்கும், அமைதி அறம் நோற்பதற்கும் முக்கிய வழிமுறைகளாக இருக்கின்றன[7].(30)ஆசையில் பிறக்கும் குண ஆதிக்கத்தின் மூலம், மறச்செயல்கள் {அதர்ம செயல்கள்} அனைத்தும் செய்யப்படுகின்றன, மேலும் உலகம் சார்ந்த நோக்கங்கள் நிறைந்த அனைத்தும் செயல்களும், ஆசையில் இருந்து பிறக்கும் அத்தகைய செயல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன.(31) இருளில் பிறக்கும் குணங்களின் மூலம் ஒருவன், பேராசை நிறைந்தவையும், கோபத்தில் பிறப்பவையுமான செயல்கள் அனைத்தையும் செய்கிறான். இருள் குணத்தின் விளைவால் ஒருவன் உறக்கம் மற்றும் தாமதிக்கும் இயல்பு ஆகியவற்றைத் தழுவி, கொடூரச் செயல்கள் மற்றும் உடல் இன்பத்திற்கான செயல்கள் அனைத்தையும் செய்கிறான்.(32) எனினும், நம்பிக்கையுள்ளவனும், சாத்திர அறிவுள்ளவனும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} நோற்பவனுமான ஒருவன், நற்காரியங்கள் அனைத்தையும் செய்து, (அக) அழகுடன் கூடியவனாகவும், ஒவ்வொரு களங்கத்திலிருந்தும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனாகவும் மாறுகிறான்” என்றார் {பீஷ்மர்}.(33)
புலன்களை வெற்றிகொள்! – சாந்திபர்வம் பகுதி – 213-ஆன்ம மயக்கம்; அதில் பிறக்கும் உணர்வுகள்; உணர்வுகளின் மூலம் ஏற்படும் பற்று; பற்றில் பிறக்கும் செயல்; குணங்களின் சார்பு நிலைகள்; அவற்றின் காரணமாகப் பிறக்கும் புலனுறுப்புகள்; மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைந்து முக்தி அடைவதற்குப் புலன்களை வெற்றி கொள்வதன் அவசியம் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆசை குணத்தின் {ரஜோ குணத்தின்} மூலம் மயக்கம் அல்லது தீர்மான இழப்பு எழுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இருள் குணத்தில் {தமோகுணத்தில்} இருந்து கோபம், பேராசை, அச்சம் மற்றும் செருக்கு ஆகியன எழுகின்றன. இவை யாவும் அழிக்கப்படும்போது ஒருவன் தூய்மையடைகிறான்.(1) தூய்மை அடைவதன் மூலம் ஒரு மனிதன், புலப்படாதவனான முதன்மையான தேவனின் புகலிடத்தை அடைந்து, காந்தியுடன் ஒளிர்வதும், சிதைவடைய இயலாததும், மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதுமான பரமாத்ம ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(2) மாயையில் விழுந்த மனிதர்கள், அறிவில் இருந்து வீழ்ந்து, அறிவற்றவர்களாகி, அவர்களது ஞானம் இருளடைவதன் விளைவால் கோப வசப்படுகிறார்கள்[1].(3) கோபத்தின் மூலம் அவர்கள், ஆசையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ஆசையில் இருந்து பேராசை, மாயை, வீண் தற்பெருமை, செருக்கு, தன்னலம் ஆகியவை எழுகின்றன. இத்தகைய தன்னலத்தில் இருந்து பல்வேறு செயல்கள் பிறக்கின்றன[2].(4) செயல்களில் இருந்து பல்வேறு பற்றுகளும், பிணைப்புகளும் எழுகின்றன, அந்தப் பற்றுப் பிணைப்புகளில் இருந்து துன்பம் எழுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த செயல்களில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புக்கான கடப்பாடு எழுகிறது.(5)பிறப்புக் கடமையின் விளைவால், உயிர்வித்து {சுக்லம்} மற்றும் குருதியின் {சோணிதத்தின்} கலவையின் மூலம் கருவறையில் வசிக்கும் கடப்பாடு நேர்கிறது. அந்த வாசமானது {கருவறையில் வசிக்கும் நிலையானது}, மலம், சிறுநீர் மற்றும் சளி ஆகியவற்றுடன் {மலஜலசிலேத்தமங்களுடன்} சேர்ந்து மாசடைந்து, அங்கே உற்பத்தியாகும் குருதியால் எப்போதும் கசடுள்ளதாகிறது.(6) தாகத்தில் {ஏக்கத்தில்} மூழ்கும் சித்-ஆன்மா {ஜீவன்} கோபத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சியவற்றிலும் கட்டப்படுகிறது. எனினும், அத்தீமைகளில் இருந்து தப்புவதற்கு அது முனைகிறது. இதன் காரணமாகவே, படைப்பு எனும் ஓடையை ஓடச் செய்யும் கருவிகளாகப் பெண்கள் கருதப்பட வேண்டும்.(7) பெண்கள் தங்கள் இயல்பில் க்ஷேத்திரமாகவும், ஆண்கள் தங்கள் குணங்களைப் பொறுத்தவரையில் க்ஷேத்ரஜ்ஞனாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே, (உலகப் பொருட்கள் பிறவற்றுக்கு மத்தியில்) குறிப்பாகப் பெண்களை ஞானிகள் பின்தொடரக்கூடாது[3].(8) உண்மையில் பெண்கள் பயங்கரமான மந்திர சக்திகளைப் போன்றவர்களாவர். ஞானமற்ற மனிதர்களை அவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள். அவர்கள் ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் புலன்களின் நித்தியமான உடல்வடிவங்களாவர்[4].(9) பெண்களுக்காக ஆண்கள் அடையும் ஆசையின் விளைவாலும், உயிர் வித்தின் (செயல்பாட்டின்) காரணமாகவும் அவர்களில் இருந்து வாரிசுகள் உண்டாகின்றனர். ஒருவன் தன் உடலில் இருந்து பிறக்கும் புழுக்களைத் தங்களில் ஒருபகுதியாகக் கருதாமல் அவற்றைக் கைவிடுவதைப் போலவே, அவனது சுயமாகக் கருதப்படுபவர்களும், உண்மையில் அவ்வாறு அல்லாதவர்களுமான பிள்ளைகள் என்றழைக்கப்படும் அந்தப் புழுக்களையும் அவன் கைவிட வேண்டும்.(10)வியர்வையின் (மற்றும் பிற மாசுகளின்) மூலமாக உடலில் இருந்து உயிரினங்கள் எழுவதைப் போலவே, முற்பிறவிச் செயல்களின் ஆதிக்கத்தில் அல்லது இயற்கையின் போக்கில் உயிர்வித்தில் {உயிர் நீரில்} இருந்தும் அவை {உயிரினங்கள் / பிள்ளைகள்} எழுகின்றன. எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், அவர்களிடம் ஒரு மதிப்பையும் உணரக்கூடாது[5].(11) ஆசை குணம் {ரஜோ குணம்} அந்த இருளையே {இருள் குணத்தையே} சார்ந்திருக்கிறது. மேலும் நற்குணமோ {சத்வ குணமோ} அந்த ஆசையையே {ஆசை குணத்தையே} சார்ந்திருக்கிறது. புலப்படாத இருளானது, ஞானத்தை மறைத்து, புத்தி மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} எனும் குறிப்பிடத்தக்க கூறுகளை உண்டாக்குகிறது[6].(12) புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களைக் கொண்ட அறிவே, உடல்கொண்ட ஆன்மாக்களின் வித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும், எது அத்தகைய ஞானத்தின் வித்தாக இருக்கிறதோ, அது ஜீவன் (அல்லது சித்-ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது[7]. செயல்கள், கால ஒழுங்கு ஆகியவற்றின் விளைவால் ஆன்மாவானது, பிறப்பையும், மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் சுழற்சியையும் அடைகிறது.(13) கனவில் ஆன்மாவானது, உடலைக் கொண்டிருப்பது போல், மனச் செயல்பாட்டின் மூலம் விளையாடிக் கொண்டிருப்பதைப் போல (முற்பிறவி) செயல்களைத் தங்கள் மூலமாகக் கொண்ட குணங்கள் மற்றும் மனச்சார்புகளின் விளைவாக, அஃது {ஆன்மா} ஒரு தாயின் கருவறையில் ஓர் உடலை அடைகிறது.(14) அஃது அங்கே இருக்கும்போது, முற்பிறவிச் செயல்களையே செயல்படும் காரணமாகக் கொண்டு விழிப்படையும் புலன்கள் அனைத்தும், பற்றுகளுடன் கூடிய மனத்தின் விளைவால் நனவுநிலையை {அஹங்காரத்தை} அடைகிறது[8].(15)ஆன்மாவானது, ஒலி குறித்த முற்பிறவி எண்ணங்களின் விளைவால் விழிப்படைந்து, அத்தகைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து, கேட்கும் உறுப்பைப் பெறுகிறது. அதே போலவே, வடிவங்களில் உள்ள பற்றின் மூலம், அதன் கண்கள் உண்டாகிறது, மணத்தில் உள்ள ஏக்கத்தின் மூலம், நுகரும் உறுப்பையும் அது பெறுகிறது.(16) தீண்டல் குறித்த எண்ணங்களின் மூலம் அது தோலை அடைகிறது. அதே வழியில், உடலைச் செயல்படச் செய்வதில் பங்காற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் ஆகிய ஐவகை மூச்சுகளும் {வாயுக்களும்} அதனால் அடையப்படுகிறது.(17) (முன்னர்ச் சொன்னதுபோல) முற்பிறவி செயல்களின் விளைவால் முழுதாக வளர்ந்த உறுப்புகள் அனைத்துடன் கூடிய உடலில் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உடல் மற்றும் மனத் துன்பத்துடன் கூடிய பிறப்பை எடுக்கிறது.(18) (கருவறையில்) உடலை ஏற்கிறது என்ற உண்மையிலிருந்தே கவலையும் எழுகிறது என்பது அறியப்பட வேண்டும். அது தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து (பிறப்புக்குக் காரணமான பற்றுகளைத்) துறப்பதன் மூலமே கவலைக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. கவலையின் முடிவைக் குறித்து அறிந்தவன் விடுதலையை {முக்தியை} அடைவான்.(19) புலன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் ஆசை குணத்தை {ரஜோ குணத்தைச்} சார்ந்திருக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், சாத்திரங்களால் அமைக்கப்பட்ட கண்ணின் உதவியுடனும், தகுந்த ஆய்வுடனும் செயல்பட வேண்டும்[9].(20) அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஈட்டினாலும், தாகமில்லாத {ஏக்கமில்லாத} மனிதனை நிறைவு செய்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உடல்கொண்ட ஆன்மாவானது, அதன் புலன்களைப் பலவீனமடையச் செய்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறது” என்றார் {பீஷ்மர்}.(21)
பிரம்மச்சரியம்! – சாந்திபர்வம் பகுதி – 214-பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறை; பிரம்மச்சரியம் என்றால் என்ன? பிரம்மச்சரியமும் பெண்களும்; சுக்லம் பிரியும் முறை; பிறப்பறுக்கும் உயர்ந்த நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாத்திரக் கண் கொண்டு காணும்போது, (புலன்களை வெற்றிகொள்ளக்கூடிய) வழிமுறைகள் என்ன, என்பது குறித்து இப்போது நான் சொல்லப்போகிறேன். ஓ! மன்னா, அத்தகைய அறிவின் துணையுடனும், அதன் படியும் தன் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்வதன் மூலமும் ஒரு மனிதன் உயர்ந்த கதியை அடைவான்.(1) வாழும் உயிரினங்கள் அனைத்திலும் மனிதனே முதன்மையானவனாகச் சொல்லப்படுகிறான். மனிதர்களில் மறுபிறப்பாளர்களே முதன்மையானவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்; மறுபிறப்பாளர்களில், வேதங்களை அறிந்தோரே முதன்மையானவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(2) இறுதியாகச் சொல்லப்படும் இவர்களே வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாக்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில், வேதங்களை அறிந்த பிராமணர்கள், அனைத்தையும் கண்டவர்களாகவும், அனைத்தும் அறிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் பிரம்மத்தை அறிந்த மனிதர்களாவர்.(3) வழிகாட்டியில்லாத பார்வையிழந்த மனிதன் ஒருவன், சாலைகளில் பல சிரமங்களுக்கு ஆளாவதைப் போலவே, அறிவற்ற மனிதனும் இவ்வுலகில் பல இடையூறுகளைச் சந்திப்பான். இதன் காரணமாகவே எஞ்சியோரைக் காட்டிலும் அறிவுடையோர் மேன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) அறமீட்ட விரும்புவோர், சாத்திர விதிகளின்படியான பல்வேறு வகைச் சடங்குகளைச் செய்கிறார்கள். எனினும், அவர்கள் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வதில்லை. அந்த நற்குணங்களைக் கொண்டு அவர்கள் ஈட்டுவது அனைத்தையும் குறித்து நான் இப்போது பேசப் போகிறேன்[1].(5)இருவகை அறங்களை நோற்கும் அறவோரும், வாக்கு, உடல் மற்றும் மனத்தூய்மை, மன்னிக்கும் தன்மை, வாய்மை, நிலைமாறாவுறுதி {மனத்துணிவு}, புத்தி ஆகிய இந்த நற்குணங்களையே வெளிப்படுத்துகிறார்கள்.(6) எது பிரம்மச்சரியம் (விலகும் அறம், அல்லது யோகம்) என்றழைக்கப்படுகிறதோ, அது பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறையாகக் கருதப்படுகிறது. அதுவே அறங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். அந்த அறத்தை நோற்பதாலேயே ஒருவன் உயர்ந்த கதியை (விடுதலையை {முக்தியை}) அடைகிறான்.(7) ஐந்து முக்கிய மூச்சுக்காற்றுகள், மனம், புத்தி, ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} மற்றும் ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஆகியவற்றுடன் கூடிய அனைத்துத் தொடர்புகளும் அற்ற நிலையே பிரம்மச்சரியமாகும். உள்ளுணர்வுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட காரணத்தாலேயே புலன்கள் அந்நிலையை {பிரம்மச்சரிய நிலையைக்} கொடுக்கின்றன. அஃது ஒரு சொல்லாகக் கேட்கப்படுகிறது.(8) புலப்படாத அதன் வடிவத்தைக் கருத்தால் மட்டுமே உணர முடியும். அது புலன்களுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விடுபட்ட ஒரு நிலையாகும். அந்தப் பாவமற்ற நிலையைப் புத்தியால் மட்டுமே அடைய முடியும்.(9) எவன் அதை முறையாகப் பயில்கிறானோ, அவன் பிரம்மத்தை அடைகிறான்; அதைப் பாதியே பயில்பவன், தேவர்களின் நிலையை அடைகிறான்; அதே வேளையில் அஃதை அலட்சியமாகப் பயில்பவன், பிராமணர்களுக்கு மத்தியில் பிறப்பையும், கல்வியையும் அடைந்து, உயர்ந்த நிலையை அடைகிறான்.(10)
பிரம்மச்சரியம் நோற்பது மிகக் கடினமானதாகும். அதன் {அஃதை ஒருவன் பயிலத்தக்க} வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. அதைச் செய்வதில் ஈடுபடும் மறுபிறப்பாளன் {பிராமணன்}, ஆசை குணம் {ரஜோ குணம்} தோன்றும்போதெல்லாம், அல்லது பலமிக்கதாகும்போதெல்லாம் அஃதை அடக்க வேண்டும்.(11) அந்நோன்பை நோற்பவர்கள் பெண்களுடன் பேசக் கூடாது. ஆடையற்ற பெண்களின் மீது அவன் ஒருபோதும் கண்களைச் செலுத்தக் கூடாது. அக்கறையற்ற சூழ்நிலைகளிலும்கூடப் பெண்களைப் பார்க்கும்போது, பலவீன மனம் கொண்ட மனிதர்கள் அனைவரையும் ஆசை {ரஜோ குணம்} நிறைகிறது.(12) (இந்நோன்பை நோற்கும்போது) ஒரு மனிதன், தன் இதயத்தில் பெண்ணுக்கான விருப்பத்தை உணர்ந்தால், அவன் (அதற்கு ஈடு செய்ய {பரிகாரமாக}) கிருச்சரம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்று, மூன்று நாட்களை நீரில் கடத்த வேண்டும்[2]. அந்த ஆசையானது கனவில் தோன்றினால், அவன் நீருக்குள் பாய்ந்து, அகமர்ஷணரின் மூன்று ரிக்குகள் மூன்று முறை மனத்தில் சொல்ல வேண்டும்[3].(13) இந்நோன்பை {பிரம்மச்சரிய நோன்பை} நோற்கும் ஞானியானவன், ஆசை {ரஜோ} குணத்தின் மூலம் தன் மனத்தில் உண்டான பாவங்கள் அனைத்தையும் ஞானத்துடன் கூடிய பரந்த மனத்துடன் எரிக்க வேண்டும்.(14) உடலின் கழிவை {மலத்தைச்} சுமந்து செல்லும் நாளமானது {குழாயானது [குணபம் என்ற பையானது]}, உடலுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதைப் போலவே, உடல் படைத்த ஆன்மாவும், அது பொதியப்பட்டிருக்கும் உடலின் நெருக்கமான தொடர்பிலேயே இருக்கிறது {இடைவெளியில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது}.(15)தமனிப் பிணையத்தின் {நாடிக் கூட்டத்தின்} வழியாகக் கடந்து செல்லும் பல்வேறு வகையான சாறுகள் {ரசங்கள்}, மனிதர்களின் காற்று {வாதம்}, பித்தநீர் {பித்தம்}, சளி {கபம்}, குருதி {உதிரம்}, தோல், இறைச்சி, குடல்கள், எலும்புகள், மஜ்ஜை மற்றும் மொத்த உடலுக்கும் உணவூட்டுகின்றன.(16) பத்து முக்கிய நாளங்கள் {நாடிகள்} இருக்கின்றன என்பதை அறிவாயாக. இவை ஐம்புலன்களின் செயல்பாட்டுக்கும் உதவி செய்கின்றன. இந்தப் பத்தில் {பத்து நாளங்களில்} இருந்து நுண்ணிய வடிவிலான ஆயிரக்கணக்கான பிற நாளங்கள் {நாடிகள்} கிளைகளாகப் பிரிந்து செல்கின்றன.(17) உரிய பருவகாலத்தில் பெருங்கடலை நிறைக்கும் ஆறுகளைப் போலவே, சாறுகளைக் கொண்ட இந்த நாளங்கள் அனைத்தும் உடலுக்கு உணவூட்டுகின்றன.(18) மனோவஹம் என்ற பெயரில் இதயத்துக்குச் செல்லும் ஒரு நாளமிருக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஆசையில் பிறக்கும் உயிர் வித்தை அது திரட்டுகிறது.(19) முக்கியமான அந்தவொன்றில் இருந்து, கிளைகளாகப் பிரிந்து செல்லும் எண்ணற்ற நாளங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் விரிந்தபடியே வெப்பமுன் பூதத்தைச் சுமந்து சென்று, பார்வை (உள்ளிட்ட பிற) புலனுணர்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன.(20)
பாலில் மறைந்திருக்கும் நெய்யானது மத்தால் கடைந்து எடுக்கப்படுவதைப் போலவே, (பெண்களைப் பார்ப்பது, அல்லது அவர்களைக் குறித்து எண்ணுவதன் மூலம்) மனத்தில் உண்டாகும் ஆசைகளும், உடலுக்குள் கிடக்கும் உயிர் வித்துகளை {சுக்லத்தை} ஒன்றாகத் திரட்டுகின்றன.(21) நமது கனவுகளுக்கு மத்தியிலும், கற்பனையில் பிறக்கும் ஆசையானது {ரஜோ குணமானது} மனத்தைத் தாக்கி, மனோவஹம் என்று ஏற்கனவே பெயரிடப்பட்ட அந்த நாளத்தின் விளைவால், ஆசையில் பிறக்கும் உயிர்வித்தை {சுக்லத்தை} வெளியேற்றுகிறது.(22) மகத்தானவரும், தெய்வீகமானவருமான அத்ரி முனிவர், உயிர் வித்தின் {சுக்கிலத்தின்} உற்பத்தி குறித்த காரியத்தை நன்கறிந்தவராக இருந்தார். உணவால் பெறப்படும் சாறுகள் {ரஸங்கள்}, மனோவஹம் என்றழைக்கப்பட்ட நாளம் {நாடி}, கற்பனையில் பிறக்கும் ஆசை ஆகிய இம்மூன்றும் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட உயிர்வித்தை {சுக்கிலத்தைத்} தோற்றுவிக்கும் காரணங்களாக இருக்கின்றன. எனவேதான் இந்தத் திரவத்தை வெளியேற்ற உதவும் ஆசையானது, இந்திரியம் என்றழைக்கப்படுகிறது.(23) உயிர்வித்தின் போக்கே, சாதிக் கலப்பு (என்றழைக்கப்படும் பாவகர நிலைக்குக்) காரணம் என்பதை அறிந்த மனிதர்கள், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாவர்[4]. அவர்களது பாவங்கள் எரிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது, அவர்கள் ஒருபோதும் மறுபிறப்புக்கு ஆளாவதில்லை.(24) தன் உடலைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே செயலில் ஈடுபடுபவன், மனத்தின் துணையுடன் (நற்குணம் {சத்வம்}, ஆசை குணம் {ரஜஸ்}, இருள் குணம் {தமஸ்} ஆகிய மூன்று) குணங்களைச் சீரான நிலைக்குக் குறைத்து, தன் இறுதிக் கணங்களில் மனோவஹம் என்றழைக்கப்படும் நாளத்திற்கு உயிர்மூச்சுகளைக் கொண்டுவந்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறான்[5].(25)மனமானது நிச்சயம் அறிவை ஈட்டும். மனமே அனைத்துப் பொருட்களின் வடிவத்தை ஏற்கிறது. உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரின் மனங்களும், தியானத்தின் மூலம் வெற்றியை அடைந்து, ஆசையில் இருந்து விடுபட்டு, நித்தியமானதாகவும், ஒளிபொருந்தியதாகவும் ஆகின்றன.(26) எனவே, (மனமாக இருக்கும்) மனத்தை அழிப்பதற்காக ஒருவன் பாவமற்ற செயல்களை மட்டுமே செய்து, ஆசை மற்றும் இருள் குணங்களில் {ரஜோ மற்றும் தமோ குணங்களில்} இருந்து விடுபெற்றால், அவன் நிச்சயம் மிக உயர்ந்த கதியை அடைவான்.(27) (சாதாரணமாக) இளமையில் அடையப்படும் ஞானமானது முதுமையில் பலவீனமடைகிறது. எனினும், கனிந்த புத்தியைக் கொண்ட ஒரு மனிதன், முற்பிறவி மங்கல விளைவுகளின் மூலம் தன் ஆசைகளை அழிப்பதில் வெற்றி அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், இடையூறுகள் நிறைந்த ஒரு பாதையைக் கடக்கும் பயணி, தான் காணும் தடைகள் அனைத்தையும் மீறிச் செல்வதைப் போலவே, உடல்கட்டுகள் மற்றும் புலன்களை விஞ்சுவதன் மூலம், (விடுதலையெனும் {முக்தியெனும்}) அமுதத்தைச் சுவைப்பதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(29)
வைராக்கியம்! – சாந்திபர்வம் பகுதி – 215-அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளும் மனப்பயிற்சி; அறிவை நோக்கிச் செலுத்தப்பட வேண்டிய மனம்; புலன் கட்டுப்பாட்டில் உறுதி; வைராக்கியத்தின் மூலம் அடையும் பிரம்மநிலை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வாழும் உயிரினங்கள், எப்போதும் தீமை நிறைந்தவையான புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருப்பதால் ஆதரவற்றவையாகின்றன. எனினும், அவற்றில் பற்று கொள்ளாத உயர் ஆன்ம மனிதர்கள், உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(1) நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வுலகமானது பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம், நோய், கவலைகள் ஆகிய தீமைகள் நிறைந்தது என்பதைக் கண்டு, விடுதலையை {முக்தியை} அடைய முயல வேண்டும்.(2) அவன் பேச்சு, எண்ணம், உடல் ஆகியவற்றில் தூய்மையுள்ளவனாக; செருக்கில் இருந்து விடுபட்டவனாக இருக்க வேண்டும். அமைதிமிக்க ஆன்மாவையும், அறிவையும் கொண்ட அவன், பிச்சையெடுக்கும் வாழ்வை நோற்று, உலகப் பொருட்கள் எதனிலும் பற்றுக் கொள்ளாமல் மகிழ்ச்சியைப் பின்தொடர வேண்டும்.(3) மேலும், உயிரினங்கள் மீது கொண்ட கருணையின் விளைவால், பற்றானது ஒருவனது மனத்தைப் பீடிக்கிறதென்றால், அவன் இந்த அண்டமே செயல்களின் விளைவெனக் கருதி, அந்தக் கருணையையும் புறக்கணிக்க வேண்டும்[1].(4) என்னென்ன நற்செயல்கள் செய்யப்பட்டாலும், அல்லது பாவங்கள் இழைக்கப்பட்டாலும், அதைச் செய்பவன், அதனதன் விளைவுகளைச் சுவைக்கிறான். எனவே, ஒருவன் வாக்காலும், எண்ணத்தாலும், செயலாலும் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.(5)(பிறருக்கு) தீங்கிழைப்பதில் இருந்து விலகல், பேச்சில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கவனம் ஆகியவற்றைப் பயில்பவன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) எனவே, தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்துவான்.(7) எந்த மனிதன் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அறங்களைப் பயில்வதை உயர்ந்த கடமையாகவும், அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாக்குவதாகவும் கருதுகிறானோ அவன் உயர்ந்த அறிவை அடைந்தவனாக, மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். எனவே (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்த வேண்டும்.(8) ஒருவன் பிறருக்குத் தீங்கிழைக்க ஒருபோதும் நினைக்கக்கூடாது. ஒருவன், தன் சக்திக்கு அப்பாற்பட்ட எதனிலும் பேராசை கொள்ளக்கூடாது. இல்லாத பொருட்களை நோக்கி அவன் தன் எண்ணங்களைத் திருப்பக்கூடாது. மறுபுறம், அவன், நிச்சயம் வெல்லத்தக்க தொடர் முயற்சியுடன் தன் மனத்தை அறிவை நோக்கிச் செலுத்த வேண்டும்[2].(9)ஸ்ருதிகளின் தீர்மானங்கள் மற்றும் வெற்றியை அடைய கணக்கிடப்பட்ட தொடர் முயற்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் அந்த அறிவும் நிச்சயம் பாயும். நற்சொற்களைச் சொல்ல, அல்லது கசடுகள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்த ஓர் அறத்தைப் பயில விரும்பும் ஒருவன்,(10) எந்த வன்மமோ, நிந்தனையோ இல்லாத உண்மையை மட்டுமே பேச வேண்டும். நல்ல இதயத்தைக் கொண்ட ஒருவன், நேர்மையின்மையற்றவையும் {நேர்மையானவற்றையும்}, கடுமையற்றவையும் {மென்மையானவற்றையும்}, கொடூரமற்றவையும் {அன்பானவற்றையும்}, தீமையற்றவையும் {நல்லவற்றையும்}, வம்பளக்கும் இயல்பற்றவையுமான {நல்லியல்பைக் கொண்டவையுமான} வார்த்தைகளையே பேச வேண்டும். இந்த அண்டமானது பேச்சிலேயே கட்டப்பட்டிருக்கிறது. ஒருவன், (உலகப் பொருட்கள் அனைத்திலும்) துறவைக் கொண்டால்,(11,12) பணிவு நிறைந்த மனத்துடனும், தூய்மையடைந்த புத்தியுடனும், தன் சொந்த தீச்செயல்களை அறிக்கையிடவேண்டும்[3]. செயல்களில் ஈடுபடுபவன், ஆசை {ரஜோ} குணத்துடன் கூடிய மனச் சார்புகளால் தூண்டப்பட்டு,(13) இவ்வுலகில் துன்பத்தை அடைந்து, இறுதியாக நரகத்தில் வீழ்கிறான். எனவே அவன், உடல், வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றில் தற்கட்டுப்பாட்டைப் பயில வேண்டும்.(14) உலகச் சுமைகளைச் சுமக்கும் அறியாமை கொண்டோர், (மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்பட்ட மந்தையில் இருந்து தனிமைப்பட்ட) ஆட்டைத் தங்கள் கொள்ளைப் பொருளாகத் திருடிச் சுமந்து செல்லும் கள்வர்களைப் போன்றவர்களாவர். கள்வர்கள், தங்களுக்குச் சாதகமற்றவையாக இருக்கும் சாலைகளில் (மன்னனின் கண்காணிப்பில் அவை உள்ளதால்) எப்போதும் மிகக் கவனமாக இருப்பார்கள்[4].(15)உண்மையில் அந்தக் கள்வர்கள் தங்கள் பாதுகாப்பை விரும்பி, அவர்களது கொள்ளைப் பொருளை வீசிவிடுவதைப் போலவே, ஒரு மனிதன், இன்ப நிலையை அடையவிரும்பினால், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய செயல்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.(16) உலகப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும், ஆசையற்றவனும், தனிமைவாழ்வில் நிறுவுடையவனும், சொற்ப உணவை உண்பவனும், தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளவனும்,(17) (தான் அடைந்த) ஞானத்தால் தன் துன்பங்கள் அனைத்தையும் எரித்தவனும், யோக ஒழுக்கத்தின் விவரங்கள் அனைத்தையும் பயில்வதில் இன்புற்றிருப்பவனும், தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், தன் மனத்தை அதற்குள்ளேயே ஈர்த்ததன் விளைவால் பிரம்மத்தை, அல்லது விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்வான்.(18) தூய்மையடைந்த ஆன்மாவையும், பொறுமையையும் கொண்ட ஒருவன், தன் புத்தியை நிச்சயம் கட்டுப்படுத்துவான். (இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட) புத்தியுடன் கூடிய ஒருவன், அடுத்ததாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதன் பிறகு தன் மனத்தைக் கொண்டு புலன்நுகர் பொருட்களை வெல்ல வேண்டும்.(19) இவ்வாறு மனமானது கட்டுப்படுத்தப்பட்டு, புலன்கள் அனைத்தும் வெல்லப்பட்டதும், அந்தப் புலன்கள் ஒளிர்ந்து மகிழ்ச்சியாகப் பிரம்மத்திற்குள் நுழைகின்றன.(20)
ஒருவனுடைய புலன்கள் மனத்திற்குள் ஈர்க்கப்பட்டதும், அதன் விளைவாக, பிரம்மமே அதற்குள் {மனத்திற்குள்} வெளிப்படுகிறது. உண்மையில் புலன்கள் அழிக்கப்பட்டதும், ஆன்மாவானது தூய இருப்பெனும் குணத்தை மீண்டும் அடைந்து, பிரம்மமாகவே மீண்டும் மாற்றப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.(21) ஒருவன் தனது யோக சக்தியை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது. மறுபுறம் அவன், யோக விதிகளைப் பயில்வதன் மூலம் எப்போதும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்மையில், யோக விதிகளைப் பயிலும் ஒருவன், எந்தச் செயல்களின் மூலம் தன் ஒழுக்கமும், மனநிலையும் தூய்மையடையுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) அவன் (தனது யோக சக்திகளைத் தனது வாழ்வாதாரமாகக் கொள்ளாமல்), பிச்சையாக அடையப்படும் அவல், சுண்டல், பிண்ணாக்கு, கீரைகள், {காய்கள்}, பிட்டு {யாவகம்}, {வறுத்த பருப்பின்} மாவு, கனிகள் மற்றும் கிழங்கு ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(23) காலம் மற்றும் இடத்தின் பண்புகளைக் கருத்தில் கொண்டும், உரிய ஆய்வுக்குப் பிறகும் ஒருவன் நோன்புகள், மற்றும் உபவாசங்களின் விதிகளைத் தன் விருப்பத்தின்படி நோற்க வேண்டும்.(24) நோற்றல் தொடங்கிய பிறகு அஃதை அவன் நிறுத்தக்கூடாது. மெதுவாக நெருப்பை உண்டாக்குபவனைப் போல அவன், அறிவால் தூண்டப்பட்ட ஒரு செயலைப் படிப்படியாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், அவனுக்குள் உள்ள பிரம்மமானது சூரியனைப் போலப் படிப்படியாக ஒளிரத் தொடங்குகிறது.(25)
அறிவையே தன் சார்பு நிலமாகக் கொண்ட அறியாமையானது, (விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற ஆழ்ந்த உறக்கம் ஆகிய) மூன்று நிலைகளின் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. புத்தியைப் பின்பற்றிச் செல்லும் அறிவானது {ஞானமானது}, அறியாமையால் தாக்கப்படுகிறது.(26) தீய இதயம் படைத்த மனிதர்கள், உண்மையில் ஆன்ம அறிவானது, அம்மூன்று நிலைகளையும் கடந்ததாக இருந்தாலும், அவற்றுடன் ஒன்று கலந்திருக்கிறது என நினைத்துக் கொள்வதன் விளைவால் அவர்கள் அஃதை {ஆன்ம அறிவை} அடையத் தவறுகிறார்கள். எனினும் ஒருவன், அந்த மூன்று நிலைகளுடன் கலப்பு மற்றும் அவற்றில் இருந்து பிரிவு ஆகிய இரண்டு எல்லைகள் வெளிப்பட்டு, அவற்றை உணர்வதில் வெல்லும்போது, அவன் பற்றை இழந்து, விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(27) அத்தகைய உணர்வு அடையப்பட்ட பிறகு, வயதின் எல்லைகளை விஞ்சும் அவன், முதுமை, மரணம் ஆகியவற்றின் விளைவுகளில் இருந்து மேன்மையடைந்து, நித்தியமானதும், மரணமற்றதும், மாறும் இயல்பற்றதும், சிதைவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(28)
பிரம்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 216- கனவுகள் தோன்றும்போது உடலின் நிலை; கனவுகள் தோன்றும் காரணம்; மனமும் கனவும்; மனப்பதிவுகளுடைய குணத்தின் மூலம் மனம் ஏற்படுத்தும் தோற்றங்கள்; கனவுகளின் கதவாகச் செயல்படும் உடல்; ஆன்மாவில் நுழையும் மனம் விழிப்புடன் இருப்பது; தவத்தின் வல்லமை; பிரம்ம ஞானம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பாவமற்ற பிரம்மச்சரியத்தையே எப்போதும் பயில விரும்புபவனும், கனவுகளின் தொடர்புடைய களங்களின் மனப்பதிவுகளைக் கொண்டவனுமான ஒரு யோகி, தன் முழு இதயத்துடன் உறக்கத்தைக் கைவிட முனைய வேண்டும்.(1) கனவுகளில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களால் பாதிப்படைந்த உடல் படைத்த ஆன்மாவானது, மற்றொரு உடலைக் கொள்வது போல் தோன்றுவதுடன், ஆசையின் ஆதிக்கத்தில் அசைந்து செயல்படுகிறது.(2) ஞானம் பெறுதல், தொடர்ந்த சிந்தனை, தொகுத்துரைத்தல் ஆகியவற்றைச் செய்வதன் விளைவால் யோகியானவன், ஞானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கலாம்.(3) இக்காரியத்தில், உடல்படைத்த உயிரினமானது {ஜீவாத்மாவானது}, எந்தச் சூழ்நிலையில், எந்த நோக்கங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடுவதாக நினைக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில், செயல்முடக்கப்பட்ட புலன்களைக் கொண்ட உடல்படைத்த உயிரினமானது, அறிவுப்புலன்கள் மற்றும் செயற்புலன்களுடன் {ஞான மற்றும் கர்மேந்திரியங்களுடன்} கூடிய உடலைத் தான் கொண்டிருப்பதாகவே கருதுகிறது.(4) இங்கே எழுப்பப்பட்ட கேள்வியைப் பொறுத்தவரையில், ஹரி என்ற பெயரைக் கொண்ட யோகத்தின் தலைவனே, அஃது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புரிந்தவன் எனச் சொல்லப்படுகிறது. ஹரியால் சொல்லப்பட்ட விளக்கம் சரியானதாகவும், அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருப்பதாகப் பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள்.(5)
களைப்படைந்த புலன்களின் விளைவாலேயே உயிரினங்கள் அனைத்தும் கனவுகளைக் காண்கின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். (புலன்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும்) மனமானது, ஒருபோதும் மறைவதில்லை (அல்லது செயல்படாமல் இருப்பதில்லை), எனவே கனவுகள் எழுகின்றன. கனவுக்கான குறிப்பிட்ட காரணம் என்று இதையே அனைவரும் சொல்கிறார்கள்.(6) விழிப்புநிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடைய கற்பனைகள், மனத்தின் படைப்பு சக்தியால் மட்டுமே உண்டாவதைப் போல, கனவில் தோன்றும் மனப்பதிவுகளும் மனம் தொடர்புடையனவாக மட்டுமே இருக்கின்றன.(7) ஆசை மற்றும் பற்றுடன் கூடிய ஒரு மனிதன், எண்ணற்ற முற்பிறவிகளின் மனப்பதிவுகளின் அடிப்படையில் (கனவுகளில்) அந்தக் கற்பனைகளை அடைகிறான். ஒரே ஒரு முறை மனத்தில் பதிந்த எதுவும் ஒருபோதும் தொலைந்துபோவதில்லை, மேலும், அந்த மனப்பதிவுகள் அனைத்தையும் அறிந்த ஆன்மாவானது, இருண்மையில் {தெளிவற்ற நிலையில்} இருந்து அவற்றை முன்னே கொண்டு வருகிறது[1].(8) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய மூன்று குணங்களில் முற்பிறவி செயல்களின் ஆதிக்கத்தால் எது கொண்டு வரப்படுகிறதோ, இவற்றில் {இந்த மூன்று குணங்களில்} எதனால் எவ்வழியிலாவது மனம் பாதிப்படைந்திருக்கிறதோ, அதன்படியே (நுட்பமான வடிவில் உள்ள) பூதங்களாக {பொருட்களாக} (தோற்றங்களின் வடிவில்) அவை {மனப்பதிவுகள்} வெளிப்படுகின்றன[2].(9) இவ்வாறு தோற்றங்கள் உண்டான பிறகு, முற்பிறவி செயல்களால் கொண்டுவரப்படும் சத்வம், ரஜஸ், அல்லது தமஸ் என்ற அந்தக் குறிப்பிட்ட குணம் மனத்தில் எழுந்து இன்பம், அல்லது துன்பம் என்ற விளைவை விளைவிக்கிறது.(10)அறியாமையின் மூலமும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் நிறைந்த மனச் சார்புகளின் விளைவாலும், காற்று {வாதம்}, பித்தம், சளி {கபம்} ஆகியவற்றைத் தங்கள் முக்கியக் காரணங்களாகக் கொண்ட அந்தத் தோற்றங்களை எளிதாக விலக்கிவிட முடியாது என்று சொல்லப்படுகிறது[3].(11) (விழித்திருக்கும் நிலையில்) ஒரு மனிதன், நுண்ணறிவின் நிலையிலுள்ள புலன்களின் மூலம் தன் மனத்தில் காணும் பொருட்கள் யாவும், தெளிவற்ற நிலையில் அந்தப் புலன்கள் செயல்படும்போது, {அதே பொருட்கள்} மனத்தால் கனவுகளில் உண்டாக்கப்படுகின்றன.(12) மனமானது அனைத்துப் பொருட்களிலும் தடையற்ற நிலையிலேயே இருக்கிறது. இஃது ஆன்மாவின் இயல்பினால் விளைவதாகும். ஆன்மாவானது புரிந்து கொள்ளப்பட்ட வேண்டும். பூதங்கள் அனைத்தும், அவை தொகுக்கும் பொருட்களும் ஆன்மாவிலேயே இருக்கின்றன[4].(13) கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கம் (ஸுஸுப்தி) என்றழைக்கப்படும் நிலையில், கனவுகளின் கதவான வெளிப்படையான மனித உடலானது, மனத்திற்குள் மறைகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, புலப்படாதிருப்பதும், இருக்கும் மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதுமான ஆன்மாவுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட வகை உணர்வுடன் விழிப்புநிலையில் உள்ள சாட்சியாக அது {மனம்} மாறுகிறது. இவ்வாறு, அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் தூய நனவுநிலையில் வசிக்கும் அது, நனவுநிலை மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பதாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது[5].(14) எந்த யோகி, ஆசையின் விளைவால் (ஞானம், துறவு முதலிய) தெய்வீகக் குணங்களில் பேராசை கொள்கிறானோ, அவன், தான் ஆசைப்படும் பொருளுக்குச் சமமானதாகத் தூய மனத்தைக் கருத வேண்டும் அனைத்துப் பொருட்களும் தூய மனம், அல்லது ஆன்மாவையே சார்ந்திருக்கின்றன[6].(15)தவங்களில் ஈடுபடும் ஒருவன் இந்த விளைவையே அடைகிறான். எனினும், இருள் அல்லது அறியாமையைக் கடந்த யோகியானவன், மேம்பட்ட ஒளியுடன் கூடியவனாகிறான். இருள் அல்லது அறியாமை கடக்கப்படும்போது உடல் படைத்த ஆன்மாவானது, அண்டத்தின் காரணமாக இருக்கும் பரப்ரம்மம் ஆகிறது.(16) தேவர்கள், தவங்களையும், வேத சடங்குகளையும் கொண்டிருக்கின்றனர். முந்தையதை அழிக்கும் இருளானது {செருக்கு, கொடூரம் முதலியன), அசுரர்களால் பின்பற்றப்படுகிறது. அறிவை மட்டுமே தன் குணமாகக் கொண்ட பிரம்மமானது, தேவர்களாலோ, அசுரரர்களாலோ அடைவதற்குக் கடினமானதாக இருக்கிறது.(17) நல்லியல்பு {சத்வம்}, ஆசை{ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சொந்தமானவை என்பது அறியப்பட வேண்டும். நல்லியல்பு {சத்வம்} தேவர்களின் குணமாகும்; அதே வேளையில் மற்ற இரு குணங்களும் அசுரர்களுடையவையாகும்.(18) பிரம்மம் அந்தக் குணங்கள் அனைத்தையும் கடந்ததாகும். அது தூய அறிவாகும். அது மரணமற்ற நிலையாகும். அது தூய ஒளிநிலையாகும். அது சிதைவற்றதாகும். பிரம்மத்தை அறிந்தவர்களும், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(19) அறிவையே தன் கண்ணாகக் கொண்ட ஒருவனால், ஆய்வறிவு மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் துணையுடன் இவ்வளவே சொல்ல முடியும். அழிவற்றதான பிரம்மமானது, புலன்கள் மற்றும் மனத்தை (புறப் பொருட்களில் இருந்து ஆன்மாவுக்குள்) ஈர்ப்பதன் மூலம் மட்டுமே அடையப்படமுடியும்” என்றார் {பீஷ்மர்}.(20)
நிர்க்குண, சகுன பிரம்மம்! – சாந்திபர்வம் பகுதி – 217-நிவிருத்தி மற்றும் பிரவிருத்தி அறங்கள்; பிரகிருதி மற்றும் புருஷன்; நிர்க்குண மற்றும் சகுன பிரம்மம்; ஆன்மாவுக்குக் குணங்கள் ஏற்படும் முறை; பிரம்மச்சரியம் மற்றும் அஹிம்சை ஆகிய யோகங்கள்; சகுன பிரம்மத்தின் குணங்களை முக்குணங்களில் இருந்து வேறுபட்டதாக அறிய வேண்டியதன் அவசியம்; முக்தியை அடைதல்..
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(கனவுகள், கனவுகளற்ற ஆழ்நிலை உறக்கம், குணங்களால் குறிப்பிடப்படும் பிரம்மம், குணங்கள் அனைத்தையும் விஞ்சிய பிரம்மம் ஆகிய) நான்கு காரியங்களையும், புலப்படுவது (உடல்), தத்துவம் எனப் பெரும் முனிவரால் (நாராயணனால்) விளக்கப்பட்ட புலப்படாதது (சித்-ஆன்மா) ஆகியவற்றையும் அறியாதவனைப் பிரம்மத்தை அறிந்தவன் என்று சொல்ல முடியாது[1].(1) எது புலப்படுமோ அது மரணத்திற்கு உட்பட்டதாகும். எது புலப்படாததோ, அது (சித்-ஆன்மா) மரணத்தைக் கடந்தது என்று அறியப்பட வேண்டும். முனிவன் நாராயணன் நிவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான்.(2) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் அதனிலேயே நிலைத்திருக்கிறது. மேலும், நிவிருத்தி அறமானது புலப்படாததும், அழிவற்றதுமான பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது[2].(3) படைப்பாளன் (பிரம்மன்) பிரவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான். பிரவிருத்தியானது மறுபிறவி, அல்லது திரும்புதலைக் குறிப்பால் உணர்த்துகிறது. மறுபுறம் நிவிருத்தியோ, உயர்ந்த கதியைக் குறிப்பால் உணர்த்துகிறது.(4) நன்மை மற்றும் தீமைக்கிடையிலான நிச்சய வேறுபாடுகளைப் பகுத்துப் பார்க்க விரும்புபவனும், ஆன்மாவின் இயல்பைப் புரிந்து கொள்ள எப்போதும் முயல்பவனும், நிவிருத்தி அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான தவசி உயர்ந்த கதியை அடைகிறான்[3].(5)இதை நிறைவேற்ற விரும்பும் ஒருவன், நான் தற்போது பேசிக் கொண்டிருக்கும் புலப்படாதது மற்றும் புருஷன் குறித்த இரண்டையும் அறிய வேண்டும். மேலும், புலப்படாதது மற்றும் புருஷன் ஆகிய இரண்டிலிருந்தும் எது வேறுபட்டிருக்கிறது, அவை இரண்டையும் எது கடந்திருக்கிறது,(6) அனைத்தில் இருந்தும் எது தனிப்பட்டதாக இருக்கிறது என்பனவற்றை நுண்ணறிவுடன் கூடிய அவன் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்[4]. பிரகிருதி, புருஷன் ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும் அற்றனவாக இருக்கின்றன. அவற்றுக்கிடையிலுள்ள ஒற்றுமைகளை அறியாதவகையிலேயே அவ்விரண்டும் இருக்கின்றன.(7) இரண்டும் நித்தியமானவையும், அழிவற்றவையுமாக இருக்கின்றன. இரண்டும் பெரியனவற்றில் பெரியனவாக இருக்கின்றன. இவற்றில் அவை ஒரே தன்மையைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றுக்கிடையில் சில வேறுபாடுகளும் இருக்கின்றன. (அதைக் குறித்து இப்போது நான் பேசப் போகிறேன்).(8) பிரகிருதியானது, (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களால் நிரம்பியதாக இருக்கிறது. அது படைப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. க்ஷேத்திரக்ஜனின் (புருஷன், அல்லது ஆன்மாவின்) உண்மைக் குணங்கள் வெவ்வேறானவையாக அறியப்பட வேண்டும்[5].(9) புருஷனானவன், பிரகிருதியின் மாற்றங்கள் அனைத்தையும் உணர்பவனாக இருக்கிறான் (ஆனால் {பிறவற்றால்} உணரப்படாதவனாக இருக்கிறான்). (உண்மை இயல்பைப் பொறுத்தவரையில்) அவன் அனைத்துக் குணங்களையும் கடந்தவனாக {நிர்க்குண பிரம்மமாக} இருக்கிறான். மேலும், புருஷன் மற்றும் பரமாத்மாவைப் பொறுத்தவரையில், அவை இரண்டும் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. வேறுபாடு காண குணங்கள் எவற்றையும் அவை கொண்டிருக்காததால், அவை இரண்டும் அனைத்திலும் மிகவும் வேறுபட்டிருக்கின்றன[6].(10)தலைப்பாகை அணிந்த மனிதன், தன் தலையைச் சுற்றிலும் மூன்று வகைத் துணிகளால் சுற்றியிருக்கிறான். (எனினும், அவன் அணிந்திருக்கும் தலைப்பாகையானது அந்த மனிதனல்ல).(11) அதேவகையிலேயே உடல்படைத்த ஆன்மாவானது, நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய முக்குணங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வாறு கொண்டிருந்தாலும் ஆன்மாவும், அந்தக் குணங்களும் ஒன்றல்ல.(12) இதனால், நான்கு வகைக் கருத்துகளைக் கொண்ட இந்த நான்கு காரியங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்[7]. இவை யாவற்றையும் புரிந்து கொள்ளும் ஒருவன், (அனைத்தையும் விசாரிப்பதைப் பொறுத்தவரையில்) தீர்மானத்தை எட்ட வேண்டிய தருணத்தில் ஒருபோதும் திகைப்படைய மாட்டான்.(13) உயர்ந்த செழிப்பை அடைய விரும்பும் ஒருவன், மனத்தில் தூய்மையடைந்தவனாக, உடல் மற்றும் புலன்களைப் பொறுத்தவரையில் தவப்பயிற்சிகளில் ஈடுபட்டு, கனிகளில் {பலன்களில்} எந்த விருப்பமும் இல்லாமல் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(14) யோக சக்தியானது, அண்டத்தில் மறைமுகமாகப் படர்ந்தூடுருவி, அதன் {அண்டத்தின்} ஒவ்வொரு பகுதியிலும் சுழன்று கொண்டு, அதைப் பிரகாசமாக ஒளிரச் செய்து கொண்டிருக்கிறது.(15)யோகத்தின் விளைவு ஞானமாகும். உலகத்தில் யோகம் மிக உயர்வாகச் சொல்லப்படுகிறது. உண்மைப் பண்பைப் பொறுத்தவரையில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களை எந்தெந்த செயல்கள் அழிக்கின்றனவோ அவை யோகமாக அமைகின்றன.(16) பிரம்மச்சரியம், தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியன உடலின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது; அதே வேளையில், முறையான மனக்கட்டுப்பாடு மற்றும் பேச்சுக் கட்டுப்பாடு ஆகியன மனத்தின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.(17) சடங்குகளை அறிந்த மறுபிறப்பாளர்களிடம் இருந்து பிச்சையாகப் பெறப்படும் உணவானது, மற்ற உணவுகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டிருக்கிறது. அந்த உணவைச் சொற்பமாக உண்டாலும், ஆசை {ரஜோ} குணத்தில் பிறந்தவையான ஒருவனின் பாவங்கள் மங்கத் தொடங்குகின்றன.(18) அத்தகைய உணவில் வாழும் ஒரு யோகி, அவனது புலன்கள், தங்களுக்குரிய புலனுணர்வுப் பொருட்களில் இருந்து படிப்படியாக விலகுவதைக் காண்கிறான். எனவே அவன், தன் உடலைத் தாங்கிக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டுமே அத்தகைய உணவையும் உண்ண வேண்டும்.(19) யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனத்தின் மூலம், ஒருவன் படிப்படியாக அடையும் ஞானமானது, அவனது இறுதித் தருணங்களில் வலுக்கட்டாயமாகவும், உற்சாகமாகவும் அடையப்பட வேண்டும் (என்று மற்றொரு ஆசோலனையும் வழங்கப்படுகிறது)[8].(20)உடல்படைத்த ஆன்மாவானது, ரஜஸ் {ஆசை} குணமற்றிருக்கும்போது, (உடனடியாக விடுதலையை {முக்தியை} அடையாமல், புலனுணர்வுகளனைத்தின் நுண்ணிய வடிவை ஏற்று, வெளியில் {ஆகாயத்தில்} அசைந்து கொண்டிருக்கிறது. அவனது {அந்த ஆன்மாவின்} மனம் செயல்களால் பாதிப்படையாதபோது, அத்தகைய துறவின் விளைவால் அவன் (அந்த நுண்ணிய வடிவை இழந்து) பிரகிருதியில் கலக்கிறான் (எனினும் அவன், பிரகிருதிக்கும் மேன்மையான பிரம்மம், அல்லது விடுதலையை அடைவதில்லை).(21) இந்த உடல் திரட்டு அழிந்த பிறகு, கவனமற்ற தன்மை இல்லாமையின் மூலம், (திரள், நுட்பம் மற்றும் காரணம் என்ற) மூன்று உடல்களில் இருந்து தப்பி, விடுதலையை {முக்தியை} அடைவதில் அவன் வெல்கிறான்[9]. உயிரினங்களின் இறப்பும், பிறப்பும், அவற்றின் மூலமான அறியாமையில் (அல்லது அவித்யையில்) அமைந்த காரணத்தைச் சார்ந்தே இருக்கின்றன.(22) பிரம்மஞானம் எழும்போது, அம்மனிதனைத் தேவையேதும் பின்தொடர்வதில்லை. எனினும் (உண்மையில் சுயமல்லாததைச் சுயம் என்று நம்புவதன் மூலம்) உண்மைக்கு நேர்மாறானதை ஏற்கும் மனிதர்கள், இருக்கும் அனைத்துப் பொருட்களின் பிறப்பு மற்றும் இறப்பிலேயே எப்போதும் தங்கள் புத்தியைச் செலுத்துகின்றனர். (அத்தகைய மனிதர்கள் கனவில் கூட விடுதலையை ஒருபோதும் காண்பதில்லை)[10].(23) சில யோகிகள், பொறுமையின் துணை மூலம், தங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்டு, தங்கள் புத்தியின் துணை மூலம் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும்) தங்கள் இதயங்களை விலக்கிக் கொண்டு, புலன்களின் உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, நுட்பமாக இருப்பதன் விளைவால் அந்தப் புலன்களையே துதிக்கின்றனர்[11].(24) அவர்களில் சிலர், யோகத்தால் தூய்மையடைந்த மனத்துடன் சாத்திரங்களின்படி (சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள நிலைகளின்படி) செயல்பட்டு, புத்தியின் உதவியால் உயர்வானதை அறிவதில் வென்று, உயர்ந்ததை அடைந்து, வேறு எந்தப் பொருளையும் சாராமல் தன்னிலேயே நிலைத்திருக்கும் அந்த உயர்ந்ததிலேயே வசிக்கிறார்கள்[12].(25)சிலர் பிரம்மத்தைத் தோற்றங்களாக {வடிவங்களாக / சிலைகளாக} வழிபடுகின்றனர். சிலர் குணங்களுடன் கூடியவனாக {சகுன பிரம்மமாக} அவனை வழிபடுகிறார்கள். சிலர், அழிவற்றதும், மின்னலின் கீற்றைப் போன்றதுமாக விளக்கப்படும் அந்த உயர்ந்த தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் உணர்கிறார்கள்[13].(26) தவங்களின் மூலம் தங்கள் பாவங்கை எரித்தவர்களான வேறு சிலர், முடிவில் பிரம்மத்தையே அடைகிறார்கள். இந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் உயர்ந்த கதியையே அடைகிறார்கள். சாத்திரக்கண் கொண்ட ஒருவன், பல்வேறு வடிவங்களிலான நுண்ணியக் குணங்களை, மனிதர்களால் வழிபடப்படும் பிரம்மத்தில் இருந்து வேறுபட்ட குணங்களாகக் காண வேண்டும். உடலைச் சார்ந்திருக்கும் தேவையைக் கடந்தவனும், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவனும், தியானயோகத்தில் அர்ப்பணிப்புள்ள {தாரணையில் பற்றுள்ள} மனத்தைக் கொண்டவனுமான யோகியானவன், பரம்பொருள் அல்லது புலப்படாததைப் போன்ற மற்றொருவனாகவே கருதப்பட வேண்டும்.(28) ஞானம் அடைவதில் அர்ப்பணிப்புள்ள இதயங்களைக் கொண்டோர், மனிதர்களின் உலகில் இருந்து விடுபடுவதிலேயே முதலில் வெல்கிறார்கள். அடுத்தபடியாகப் பற்றுகளைக் கைவிட்டு, பிரம்மத்தின் இயல்பில் கலந்து, இறுதியாக அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(29) வேதங்களை அறிந்த மனிதர்கள், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும் அறத்தைக் குறித்து இவ்வாறே சொல்லியிருக்கின்றனர். தங்கள் தங்கள் அறிவின் அளவுக்குத் தக்கபடி அவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(30)(ஐயுறுவாதத்தின் தாக்குதல்கள் மூலம்) அசைக்கப்பட முடியாததும், உடையவர்களை அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபடச் செய்வதுமான அறிவை அடைவதில் வெல்லும் மனிதர்கள், மரணத்திற்குப் பிறகு பல்வேறு உயர்ந்த உலகங்களை அடைந்து, தங்கள் ஞானத்தின் அளவுக்குத்தக்கபடி விடுதலை {முக்தி} அடைகிறார்கள்.(31) அறிவின் மூலம் நிறைவை உள்ளீர்த்துக் கொள்பவர்களும், ஆசைகள் மற்றும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவர்களுமான தூய இதயம் கொண்டோர், தங்கள் இயல்பின்படி, புலப்படாத குணத்தைக் கொண்டதும், தெய்வீகமானதும், பிறப்பும் இறப்பும் அற்றதுமான பிரம்மத்தின் அருகே படிப்படியாக நெருக்கமடைந்து செல்கிறார்கள்.(32) தங்கள் ஆன்மாக்களில் வசிக்கும் {நிர்க்குண} பிரம்மத்தை உணர்ந்து, தாங்களே மாறும் இயல்பற்றவர்களாகும் அவர்கள் (பூமிக்கு) மீண்டும் திரும்ப வேண்டியதில்லை. அழிவற்றதும், நித்தியமானதுமான பரம நிலையை அடைந்த அவர்கள் அந்த இன்பநிலையிலேயே நிலைத்திருப்பார்கள்.(33)
இவ்வுலகத்தைப் பொறுத்தவரையில் ஞானமென்பது (பிழை செய்பவர்களின் வழக்கில்) இவ்வளவுதான். (பிழையால் திகைப்படையாதோர் வழக்கில்) அஃது {ஞானம்} இருப்பில் இருப்பதில்லை. ஆசையில் கட்டப்பட்டுள்ள மொத்த அண்டமும் ஒரு சக்கரத்தைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறது[14].(34) தாமரைத்தண்டின் இழைகள், அத்தண்டின் அனைத்து பகுதிகளிலும் படர்ந்திருப்பதைப் போலவே, ஆசை இழைகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் உடலில் படர்ந்திருக்கிறது.(35) நெசவாளன் ஒருவன், தனது நூல்களைத் தன் ஓடத்தின் {ஊசியின்} மூலம் ஓர் ஆடையில் நெய்வதைப் போலவே, அண்டமெனும் துணியில் உள்ள நூல்கள் {ஸம்ஸாரமெனும் நூலானது} ஆசையெனும் ஓடத்தால் {ஊசியால்} {அண்டத்திற்குள்} நெய்யப்படுகிறது.(36) பிரகிருதி, பிரகிருதியின் மாறுதல்கள் {விகாரம்} மற்றும் புருஷன் {பரமாத்மா} ஆகியவற்றை முறையாக அறிந்த ஒருவன், ஆசையில் இருந்து விடுபட்டவனாக விடுதலையை {முக்தியை} அடைகிறான்[15].(37) தெய்வீக முனிவரும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன், அனைத்து உயிரினங்களிடமும் கொண்ட கருணையின் நிமித்தமாக, அழிவின்மையை {மரணமில்லா நிலையை} அடைவதற்கான இந்த வழிமுறைகளைத் தெளிவாக வெளியிட்டிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(38)
நாஸ்திக மறுப்பு! – சாந்திபர்வம் பகுதி – 218-வேள்விகளும், சடங்குகளும் மாயையின் விளைவுகள் என்று சொன்ன பஞ்சசிகர்; ஆன்மா என்ற தனிப்பட்ட இருப்புக் கிடையாது என்ற நாத்திகர்களின் கோட்பாடு; இவ்வாதத்தால் அறச் செயல்கள் மற்றும் ஒழுக்கம் ஆகியவை பொருளற்றுப் போவதை விளக்கும் பஞ்சசிகர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஒழுக்கவழிமுறைகள் அனைத்தையும் அறிந்தவரே, விடுதலை {முக்தி / மோக்ஷ} அறத்தை நன்கறிந்தவனும் மிதிலையின் ஆட்சியாளனுமான ஜனகன், உலகம் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டபிறகு, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி விடுதலையை {முக்தியை} அடைவதில் வென்றான்?” எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒழுக்க வழிமுறைகள் அனைத்தையும் முற்றிலும் அறிந்தவனான அந்த ஆட்சியாளன் {ஜனகன்}, எந்தக் குறிப்பிட்ட ஒழுக்கத்தின் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைவதில் வென்றான் என்பது தொடர்பான பின்வரும் உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) மிதிலையில், ஜனக குலத்தைச் சேர்ந்தவனும், ஜனதேவன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் ஆட்சியாளன் இருந்தான். பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒழுக்க வழிமுறைகளைக் குறித்துச் சிந்திப்பதில் அவன் எப்போதும் ஈடுபட்டு வந்தான்.(3) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை நோற்கும் மக்களால் பின்பற்றப்படும் பல்வேறு கடமைகளின் வழிமுறைகளை அவனுக்குப் போதிக்க, அவனது அரண்மனையில் எப்போதும் நூறு ஆசான்கள் இருந்து வந்தனர்[1].(4) வேத கல்வியில் ஈடுபட்டிருந்த அவன் {ஜனதேவன்}, ஆன்மாவின் குணம் குறித்துத் தனது ஆசான்களின் ஊகங்கள் மற்றும் உடலை இழந்த பிறகு ஏற்படும் அழிவு அல்லது மரணத்திற்குப் பிறகான மறுபிறவி குறித்த அவர்களின் கோட்பாடுகளில் நிறைவடையாதவனாக இருந்தான்[2].(5)ஒரு காலத்தில், கபிலையின் மகனும், பஞ்சசிகர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெருந்தவசி, உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தபோது மிதிலையை வந்தடைந்தார்.(6) துறவு தொடர்புடைய பல்வேறு கடமைகள் குறித்த அனைத்து ஊகங்களிலும் {ஸந்யாச தர்மங்கள் அனைத்திலும்} சரியான தீர்மானங்களைக் கொண்டிருந்த அவர், (வெப்பம் மற்றும் குளிர், இன்பம் மற்றும் துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகள் {துவந்துவங்கள்} அனைத்தையும் கடந்தவராகவும், ஐயங்களேதும் இல்லாதவராகவும் இருந்தார்.(7) அவர் முனிவர்களில் முதன்மையானவராகக் கருதப்பட்டார். விரும்பிய இடத்தில் வசிக்கும் அவர், மனிதர்கள் அனைவரும் அடைவதற்கு மிகக் கடினமான இன்ப நிலையை அவர்கள் எட்டும்படி செய்ய விரும்பினார்.(8) சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், கபிலர் என்ற பெயரில் யாரை அறிவார்களோ, உயிரினங்களின் தலைவரான அந்தப் பெரும் முனிவரின் வடிவை ஏற்று உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அந்தப் பஞ்சசிகர் திரிந்து கொண்டிருந்தார் என்று தெரிகிறது[3].(9) ஆசுரியின் சீடர்கள் அனைவரிலும் முதன்மையானவராக இருந்த அவர் {பஞ்சசிகர்}, மரணமற்றவர் {சிரஞ்சீவி} என்றும் அழைக்கப்பட்டார். அவர் ஆயிரம் ஆண்டுகள் நீடித்த மனோவேள்வி {மானஸயாகம் / சத்ரயாகம்} ஒன்றைச் செய்தார்[4].(10)அவர் உறுதியுள்ள மனத்தைக் கொண்டவராக இருந்து, சாத்திரங்களோடு இணைந்தவையும், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுப்பவையுமான சடங்குகள் மற்றும் வேள்விகள் அனைத்தையும் நிறைவு செய்தார். அவர், ஆன்மாவை மறைக்கும் ஐந்து உறைகளையும் {உடல்களையும்} முழுமையாக அறிந்தவராக இருந்தார்[5]. பிரம்மத் துதியுடன் தொடர்புடையவையும், (அமைதி, தற்கட்டுப்பாடு முதலிய {சமம், தமம், உபரதி, திதிக்ஷை மற்றும் ஸமாதானம் ஆகிய) ஐந்து குணங்களைக் கொண்டவையுமான ஐந்து செயல்களில் அர்ப்பணிப்புள்ளவராக அவர் இருந்தார். (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) பஞ்சசிகர் என்ற பெயரில் அறியப்பட்டிருந்த அவர், {முன்பு} ஒருநாள், சாங்கிய கோட்பாடுகளைப் பின்பற்றும் பெரும் முனிவர்க்கூட்டத்தை அணுகி, புலப்படாததும், அல்லது ஐந்து புருஷர்களோ (ஏற்கனவே {அடிக்குறிப்பு 5ல்} பெயர் சொல்லப்பட்ட) உறைகளோ சார்ந்திருப்பதும், மனிதர்கள் அடையத்தக்க உயர்ந்த நோக்கமுமான ஒன்றை {பிரம்மத்தைக்} குறித்து அவர்களிடம் விசாரித்தார்[6].(11,12) ஆன்ம ஞானம் அடைவதன் நிமித்தமாக, ஆசுரி என்பவர் ஏற்கனவே தமது ஆசானிடம் விசாரித்திருந்தார். பின்னவரின் {ஆசுரியுடைய ஆசானின்} போதனைகள் மற்றும் தன் சொந்த தவங்கள் ஆகியவற்றின் விளைவால் அந்த ஆசுரி, உடல் மற்றும் ஆன்மாவுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டு, தெய்வீகப் பார்வையை அடைந்திருந்தார்.(13) மாறும் இயல்பற்றதும், ஒன்றேயானதும், அழிவில்லாததும், பல்வேறு வடிவங்களில் காணப்படுவதுமான பிரம்மம் குறித்து {இப்போது} அந்த முனிவர்க்கூட்டத்தில் ஆசுரி தமது விரிவுரையை அளித்தார்.(14) {அந்தக் கூட்டத்தில் இருந்த} பஞ்சசிகர் ஆசுரியின் சீடரானார். அவர் மானுடப் பாலில் {மானுடப்பெண்ணின் பாலை உணவாகக் கொண்டு} வாழ்ந்தார். கபிலை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பிராமணி இருந்தாள். அவள் ஆசுரியின் மனைவியாக இருந்தாள்[7].(15)பஞ்சசிகர் அவளால் ஒரு மகனாக ஏற்கப்பட்டார், அவர் அவளது முலைப்பால் அருந்தினார் {ஸ்தன்யாபானம் செய்தார்}. இதன் விளைவால் அவர், கபிலையின் மகன் {காபிலேயர்} என்று அறியப்பட்டார். அவரது புத்தி பிரம்மத்தில் நிலைத்திருந்தது.(16) அவரது பிறப்பு மற்றும் அவர் கபிலையின் மகனானது {காபிலேயரானது} ஆகிய சூழ்நிலைகள் குறித்த இவை யாவையும் எனக்குத் தெய்வீக முனிவரால் {மார்க்கண்டேயரால் / சனத்குமாரரால்} சொல்லப்பட்டது[8]. அவரே அனைத்தையும் அறிந்தவரான பஞ்சசிகர் குறித்து எனக்குச் சொன்னார்.(17) கடமைகள் அனைத்தின் வழிமுறைகளையும் அறிந்த பஞ்சசிகர், உயர்ந்த ஞானத்தை {ஆசுரியிடமிருந்து} அடைந்த பிறகு, (ஜனகனிடம் {ஜனதேவனிடம்} வந்து), அந்த மன்னன் தன் ஆசான்கள் அனைவரையும் சமமாக மதிப்பவன் என்பதை அறிந்து, அபரிமிதமான காரணங்களால் {பலயுக்திகளால்} அந்த நூறு ஆசான்களையும் வியக்கச் செய்தார்.(18) காபிலேயரின் {பஞ்சசிகரின்} திறன்களைக் கண்ட ஜனகன் {ஜனதேவன்}, அவரிடம் அதீதப் பற்றைக் கொண்டு, தன் நூறு ஆசான்களையும் கைவிட்டு, குறிப்பாக அவரையே பின்பற்றத் தொடங்கினான்.(19) அப்போது காபிலேயர் {பஞ்சசிகர்}, (ஒரு சீடன் செய்ய வேண்டிய முறையில்) தம்மிடம் விதிப்படி தலை வணங்கியவனும், அந்தத் தவசியின் போதனைகளைப் புரிந்து கொள்ளும் முழுத் தகுதி கொண்டவனுமான ஜனகனிடம் {ஜனதேவனிடம்}, சாங்கிய ஆய்வேடுகளில் விளக்கப்பட்டுள்ள விடுதலை {முக்தி / மோக்ஷம்} எனும் உயர்ந்த அறத்தைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(20)முதலிடத்தில் பிறப்பின் துன்பங்களைச் சொன்ன அவர், அடுத்ததாக (அறச்) செயல்களின் துன்பங்களைக் குறித்துப் பேசினார். அக்காரியத்தை நிறைவு செய்த அவர், படைப்பாளனின் உயர்ந்த உலகத்திலேயே முடிவடையும் வாழ்வின் அனைத்து நிலைகளுக்குரிய துன்பங்களையும் விளக்கினார்[9].(21) அற நடைமுறை {வேள்விகள் / சடங்குகள்}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் {பலன்கள்} ஆகியவை எதன் நிமித்தமாகச் செய்யப்படுகிறதோ, எது நம்பிக்கைக்குத் தகாததோ, அழியவல்லதோ, நிலையற்றதோ, நிச்சயமற்றதோ அந்த மாயையைக் குறித்தும் சொன்னார்[10].(22) {பஞ்சசிகர்} “(உடலின்) மரணம் அனைவராலும் காணப்படும்போது, உடலில் இருந்து வேறுபட்டதும், ஆன்மா என்று அழைக்கப்படுவதுமான ஒன்று இருக்கிறது என்று, சாத்திரங்களில் உள்ள நம்பிக்கையின் விளைவால் நம்புபவர்கள் {நாஸ்திகர்களின் எதிர்} வாதத்தில் வெல்லப்படுகிறார்கள் என்று ஐயுறுவாதிகள் {நாஸ்திகர்கள்} சொல்கிறார்கள்.(23) ஒருவன் இறந்துவிட்டால், அவனது ஆன்மாவும் அழிகிறது என்றும், எனவே, துன்பம், முதுமை, நோய் ஆகியன ஆன்மாவின் (பகுதியளவு) மரணத்தையே குறிக்கிறது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உடலில் இருந்து ஆன்மா வேறானது, உடலின் இழப்பிற்குப் பிறகும் அது நீடிக்கிறது என்று பிழையாகக் கருதுபவன், அறிவுக்குப் பொருந்தாத கருத்தைப் பேணி வளர்க்கிறான் {என்று அவர்கள் சொல்கிறார்கள்}.(24) உலகில் உண்மையில் இல்லாத அஃது {ஆன்மா}, இருக்கிறது என்று கருதப்பட்டால், மன்னனும்கூட முதுமைக்கோ, மரணத்திற்கோ ஆட்படமாட்டான் என்றும் குறிப்பிடலாம். ஆனால், அந்தக் காரியத்தில் அவன் தன்னை முதுமையையும், மரணத்தையும் கடந்தவனாக உண்மையில் நம்புவானா? {என்றும் அவர்கள் கேட்கிறார்கள்}[11].(25)ஒரு பொருள் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுகையில், உறுதிகூறப்பட்ட அதன் இருப்பானது, இல்லாமையின் அனைத்துக் குறியீடுகளையும் அளிக்கிற போது, சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கைக் காரியங்களைத் தீர்மானிக்க எதனைச் சார்ந்திருப்பார்கள்?[12](26) உள்ளுணர்வு {அனுமானம்} மற்றும் சாத்திரங்கள் {ஆகமம்} ஆகிய இரண்டிலும் நேரடி சாட்சியங்களே {பிரத்யக்ஷங்களே} வேராக இருக்கின்றன. சாத்திரங்கள் {ஆகமங்கள்} நேரடி சாட்சியத்தின் மூலம் மறுத்துக்கூற வல்லனவாக இருக்கின்றன. உள்ளுணர்வை {அனுமானத்தைப்} பொறுத்தவரையில், அதன் சாட்சிய பாதிப்பு அதிகமானதாக {போதுமானதாக} இல்லை.(27) எந்தக் காரியமாக இருந்தாலும், உள்ளுணர்வை மட்டுமே காரணமாகக் கொள்வது நிறுத்தப்பட வேண்டும். இந்த உடலைத் தவிர ஜீவன் என்றழைக்கப்படும் வேறேதும் இல்லை {என்றும் அவர்கள் சொல்கிறார்கள்}.(28)ஓர் ஆலமர விதையானது, இலைகள், மலர்கள், கனிகள், வேர்கள் மற்றும் பட்டை ஆகியவற்றை உண்டாக்கும் திறனைத் தன்னுள் கொண்டுள்ளது. ஒரு பசு உண்டு பருகும், புல் மற்றும் நீரின் மூலம், உற்பத்திக்கான காரணங்களில் இருந்து வேறுபட்ட இயல்பைக் கொண்ட பொருட்களான பாலும், நெய்யும் உண்டாக்கப்படுகின்றன. நீரில் சில காலத்திற்கு அழுக விடப்படும் பல்வேறு வகைப்பட்ட பொருட்கள், தங்கள் இயல்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மதுவை உண்டாக்குகின்றன. அதேவகையில், உயிர் வித்தில் இருந்து, உடலும், புத்தியுடன் கூடிய அதன் குணங்களும், நனவுநிலையும் {அஹங்காரமும்}, மனமும், பிற உடைமைகளும் உண்டாகின்றன. இரண்டு மரத்துண்டுகள் உரசப்படும்போது அவை நெருப்பை உண்டாக்குகின்றன. சூரிய காந்தம் என்றழைக்கப்படும் கல்லானது, சூரியக் கதிர்களின் தொடர்பேற்படும்போது நெருப்பை உண்டாக்குகிறது. கடினமான நீரில் சுடப்பட்ட எந்த உலோகப் பொருளும், நீருடன் தொடர்பேற்படும்போது அதை {நீரை} வற்ற செய்கிறது. அதே போலவே, பொருளாலான உடலானது, மனத்தையும், உணர்வு, நினைவு, கற்பனை முதலியவற்றுக்கான அதன் {மனத்தின்} குணங்களையும் உண்டாக்குகிறது. காந்தக் கல்லானது இரும்பை அசைப்பதைப் போலவே, புலன்களும் மனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன {என்றும் அவர்கள் சொல்கிறார்கள்}[13].(29)இவ்வாறே ஐயுறுவாதிகள் {தர்க்க மதத்தார் / நாத்திகர்கள்} காரணம் கூறுகின்றனர். எனினும் இந்த ஐயுறுவாதிகள் {தர்க்க மதத்தால் / நாத்திகர்கள்} பிழை செய்கின்றனர். உடல் (உடலின் அசைவு சக்தி மட்டுமே) மறைவதன் மூலம் உயிரற்றதாவதே (அந்த நிகழ்வு {மரணம்} நேரும் அதே நேரத்தில் உடல் அழியாததே) அதற்கு {அந்தப் பிழைக்கு} ஆதாரமாகும். (உடலானது, ஆன்மாவல்ல. ஆன்மாவானது உடலில் இருந்து தனிப்பட்ட ஒன்று, அது நிச்சயம் கடந்து வாழ்கிறது என்ற உண்மைக்கு இதுவே ஆதாரம். உண்மையில் உடலும், ஆன்மாவும் ஒரே பொருளாக இருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில் மறைந்திருக்கும். அதற்குப் பதில், மரணம் நேர்ந்த பிறகும் சடலம் {உயிரற்ற உடல்} சிலகாலத்திற்குக் காணப்பட்டுகிறது. எனவே, உடலிலிருந்து வேறுபட்ட ஏதோவொரு பொருள் அந்த உடலில் இருந்து தப்புவதே மரணம் என்றாகிறது). ஆன்மாவின் தனிப்பட்ட இருப்பை மறுக்கும் மனிதர்கள் {தர்க்க மதத்தார்} தேவர்களிடம் வேண்டுவது (ஆன்மாவானது உடலில் இருந்து தனிப்பட்டது, அல்லது பொருள் திரட்டின் சார்பற்ற தனியிருப்பு என்ற கூற்றுக்கு) மற்றொரு நல்ல வாதமாக அமையும். (இந்த மனிதர்கள் வேண்டும் தேவர்கள் காணப்படவோ, தீண்டப்படவோ இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நுட்பமான வடிவங்களில் இருப்பதாக நம்பப்படுகிறார்கள். உண்மையில் பொருள்திரள் வடிவங்களற்ற தேவர்களின் மீதுள்ள நம்பிக்கை அறிவுக்கு எந்தக் குந்தகத்தையும் விளைவிக்கவில்லையெனில், பொருளற்றதான ஆன்மாவின் இருப்பு மட்டும் அந்த அறிவுக்கு ஏன் குந்தகத்தை விளைவிக்க வேண்டும்?). ஐயுறுவாதியின் கருத்தே செயல்களின் அழிவைக் குறிப்பிடுகிறது என்பது அவருக்கு எதிரான மற்றொரு வாதமாகும். (ஏனெனில், உடலும், ஆன்மாவும் ஒன்றாகவே இறந்தால், இப்பிறவி வாழ்வின் செயல்களும் அழிந்து போகும். இக்கருத்து, அண்டத்தில் காணப்படும் சமமற்ற நிலைகளை எந்த மனிதனாலும் விளக்கப்படச் சாத்தியமில்லாத நிலையை உண்டாக்கும்)[14].(30)இவ்வாறு குறிப்பிடப்படுபவையும், பொருள்வடிவங்களைக் கொண்டவையுமான இவை {ஜடவஸ்துக்கள்}, (பொருளற்ற {வடிவமற்ற} ஆன்மா மற்றும் பொருளற்றவையான {ஜடமல்லாதவையான} உணர்வு, நினைவு போன்றவற்றுக்கு) காரணங்களாக அமைய சாத்தியமில்லை. பொருள்வடிவமற்ற இருப்புகளைப் பொருள் வடிவமுள்ள பொருட்களுடன் அடையாளம் கண்டு அறிந்து கொள்ள முடியாது. (எனவே, பொருள்வடிவமுள்ள பொருட்கள் எவ்வழியிலும் பொருள் வடிவமில்லாத பொருட்களை உண்டாக்கும் காரணங்களாக இருக்க முடியாது).(31) சிலர், மறுபிறப்பு இருக்கிறது, மேலும் அஃது, அறியாமை, செயல்களில் உள்ள விருப்பம், பேராசை, கவனமின்மை, பிற குற்றங்களில் ஈடுபாடு ஆகியனவற்றால் உண்டாகிறது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.(32) அவர்கள் அறியாமையே (அவித்யையே) மண் {இடம் / க்ஷேத்ரம்} என்று சொல்கிறார்கள். செயல்கள், அந்த மண்ணில் விதைக்கப்படும் விதையாகும். ஆசையென்பது, அந்த விதையை வளரச் செய்யும் காரணமான நீராக அமைகிறது. இவ்வழியிலேயே அவர்கள் {தர்க்க மதத்தார் / ஐயுறுவாதிகள் / நாத்திகர்கள்} மறுபிறப்பை விளக்குகிறார்கள்.(33) அந்த அறியாமையானது, புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு வழியில் உள்தோய்ந்து, ஒரு மனித உடல் அழிந்ததும், உடனே மற்றொறு உடல் பிறக்கிறது’ அது ஞானத்தின் துணையுடன் எரிக்கப்படும்போது, இருப்பின் அழிவே தொடர்கிறது, அல்லது அந்த மனிதன் நிர்வாணம் என்றழைக்கப்படும் நிலையை அடைகிறான் என அவர்கள் {தர்க்க மதத்தார்} வாதிடுகின்றனர்.(34) இக்கருத்துப் பிழையுள்ளதாகும். (இது பௌத்தர்களின் கோட்பாடாகும்). இவ்வாறு மீண்டும் பிறக்கும் ஒன்றின் இயல்பு, பிறப்பு, அறம் மற்றும் மறம் தொடர்புடைய நோக்கங்கள் வேறுபட்டிருக்கும்போது, அஃது ஏற்கனவே இருந்த ஒன்றின் எந்த அடையாளத்தையும் கொண்டிருப்பதாக ஏன் கருதப்பட வேண்டும்? உண்மையில், குறிப்பிட்ட ஒன்றில் மொத்தமாக இருக்கும் இருப்புகளின் சங்கிலியானது, உண்மையான தொடர் இணைப்புகளைக் கொண்ட ஒரு சங்கிலி கிடையாது (ஆனால் அந்த அடுத்தடுத்த இருப்புகள், ஒன்றோடொன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன) என்ற உள்ளுணர்வை {அனுமானத்தை} மட்டுமே அடையச் செய்யும்[15].(35)மேலும், மறுபிறப்பின் விளைவாக இருக்கும் ஒன்று, உண்மையில் முந்தைய இருப்பில் வேறாக இருக்கும்போது, ஒருவன் செய்யும் செயல்கள், அடுத்த இருப்பில் (அவற்றை அனுபவிக்க அந்தச் செயலைச் செய்தவன் இல்லாமல்) மற்றொருவனின் மீது குவிவதால், ஈகை பயில்வது, அல்லது அறிவு, தவசக்தி ஆகியவற்றை அடைவது ஆகியவை ஒரு மனிதனிடம் என்ன நிறைவை ஏற்படுத்த முடியும்?(36) இப்பிறவியில் ஒருவன், முற்பிறவியில் மற்றொருவனால் செய்யப்பட்ட செயல்களுக்காகத் துன்பத்தை அடைவான், அல்லது துன்பத்தை அடைந்து மீண்டும் இன்பத்தை அடைவான் என்ற விளைவை இப்போது மறுக்கப்படும் இந்தக் கோட்பாடு முன்வைக்கிறது. எனினும், இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் காண்பதன் மூலம், புலப்படாததைக் குறித்த சரியான தீர்மானத்தை நாம் அடைய முடியும்[16].(37) (பௌத்த வாழ்வுக் கோட்பாட்டின்படி) மறுபிறவியின் விளைவால் உண்டாகும் தனிப்பட்ட நனவுநிலை, முற்பிறவியில் இருந்த நனவுநிலையில் இருந்து வேறுபட்டதாகும். எனினும், அந்தத் தனிப்பட்ட நனவுநிலையின் எழுச்சி, அல்லது தோற்றம் குறித்து அந்தக் கோட்பாட்டில் விளக்கப்படுவதும் அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. (முற்பிறவியில் இருந்த) நனவுநிலையானது, உடல் அழிவது வரை மட்டுமே இருந்து நிலையற்றதாக மட்டுமே இருப்பதால் அது நித்திய தன்மைக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. எதற்கு முடிவு உண்டோ, அஃது அதன் முடிவுக்குப் பிறகு இரண்டாம் நனவுநிலையை உண்டாக்கவல்லது என்பது ஏற்புடையதல்ல. மேலும், இரண்டாம் நனவுநிலை உண்டாவதன் காரணமாக முந்தைய நனவுநிலை அழிகிறது எனக் கொண்டால், அப்போது, ஒரு கனத்த தடியின் மூலம் மனித உடல் இறந்தவுடன், அசைவிழந்த அந்த உடலில் இருந்து உடனே இரண்டாவது உடல் எழ வேண்டும்[17].(38)மேலும், அவர்களது உயிர் அழிவு (அல்லது நிர்வாணம், அல்லது சத்வசங்கியக்) கோட்பாடானது, பருவகாலங்கள், அல்லது வருடம், அல்லது யுகம், அல்லது வெப்பம், அல்லது குளிர், அல்லது ஏற்படைய, ஏற்பில்லாத பொருட்களைப் போல மீண்டும் மீண்டும் தோன்றும் தோற்றப்பாடே அழிவு என்பதற்கான மறுப்புக்கு வெளிப்பட்டிருக்கிறது[18].(39) இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், இந்த மறுப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு புதிய நனவு நிலையும் பற்றிக் கொள்ளும் நிரந்தரமான ஓர் ஆன்மாவின் இருப்பை உறுதிசெய்தால், நிரந்தரமான ஒரு பொருள் முதுமைக்கும், மரணத்திற்கும் ஆட்பட்டு அழிவைக் கொண்டுவந்து, அதே வேளையில் தானும் பலவீனமடைந்து அழிகிறது என்ற புதிய மறுப்புக்கு வெளிப்பட்டு நிற்பார்கள். ஒரு மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்கள் காலப்போக்கில் பலவீனமடைந்தால், இறுதியில் அந்த மாளிகையே விழப்போவது நிச்சயம்[19].(40) புலன்கள், மனம், காற்று, குருதி, இறைச்சி, எலும்புகள் அகியன (மற்றும் உடலில் உள்ளடங்கிய அனைத்தும்) ஒன்றன் பின் ஒன்றாக அழிவையடைந்து, அவை ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் உற்பத்திக் காரணங்களுக்குள் நுழைகின்றன[20].(41)மேலும், மாற்றப்பட முடியாததும், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்} மற்றும் வழக்கமான பிற குணங்கள் ஆகியவற்றின் புகலிடமும், இவை யாவற்றில் இருந்தும் பிரிந்திருப்பதும், நித்தியமானதுமான ஆன்மாவின் இருப்பு உறுதி செய்யப்பட்டால், அஃது இவ்வுலகில் வழக்கமாகச் செய்யப்படும் அனைத்தையும் பொருளற்றதாக்கும், குறிப்பாக ஈகை மற்றும் பிற அறச்செயல்களின் கனிகளைப் பொருளற்றதாக்கும் அத்தகைய உறுதிப்பாடு மற்றொரு மிக முக்கிய மறுப்புக்கு வெளிப்பட்டு நிற்கும். அச்செயல்களையும், உலகின் மனித ஒழுக்கம் தொடர்புடைய செயல்கள் அனைத்தையும் தூண்டும் ஸ்ருதிகளின் தீர்மானங்களும் பொருளற்றவையாகும். ஏனெனில், புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மாவின் தொடர்பறுந்தால், நற்செயல்கள் மற்றும் வேத சடங்குகளின் கனிகளை அனுபவிக்க ஒருவனும் இருக்கமாட்டான்[21].(42) இவ்வாறு பல்வேறு வகையான ஊகங்கள் மனத்தில் எழுகின்றன. இக்கருத்து சரியா, அக்கருத்து சரியா என்பதைத் தீர்மானிக்க எவ்வழியும் இல்லை.(43) இக்கருத்துகளைச் சிந்திப்பதில் ஈடுபடும் குறிப்பிட்ட மனிதர்கள், ஊகத்தின் அடிப்படையிலான குறிப்பிட்ட வரிகளையே பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட கோட்பாடுகளை நோக்கி செலுத்தப்படும் இவற்றைக் குறித்த புரிதல்கள் {புத்தி}, முற்றிலும் அவற்றிலேயே ஈடுபட்டு, இறுதியில் அவற்றிலேயே தொலைந்து போகின்றன.(44) இவ்வாறே மனிதர்கள் அனைவரும் நன்மை அல்லது தீமையின் தொடர்ச்சியால் துன்பத்தை அடைகிறார்கள். வேதங்களே, யானைகளை வழிநடத்தும் யானைவளர்ப்பவர்களைப் போல அவற்றை {தர்க்க மதக் கருத்துகளைச்} சரியான பாதைக்குக் கொண்டுவருகின்றன[22].(45)பலவீனமான மனம் படைத்த பல மனிதர்கள், பெரும் மகிழ்ச்சி நிறைந்த பொருட்களில் பேராசை கொள்கிறார்கள். எனினும், விரைவில் அவர்கள் அதைவிடப் பெரிய துயரத்தைச் சந்தித்து, ஆசைப்பட்ட இறைச்சியிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து, மரணத்தைச் சந்திக்கிறார்கள்.(46) மரணத்திற்கு விதிக்கப்பட்டவனும், நிலையற்ற வாழ்வைக் கொண்டவனும், சொந்தங்கள், நண்பர்கள், மனைவியர் போன்ற பிற வகை உடைமைகளைக் கொண்டவனுமான ஒருவனுக்கு இவற்றால் என்ன பயன்? இவை அனைத்தையும் கைவிட்டு மரணத்தைச் சந்திக்கும் ஒருவன், இவ்வுலகை எளிதாகக் கடந்து, மீண்டும் திரும்பாமல் இருக்கிறான்.(47) பூமி {நிலம்}, வெளி {ஆகாயம்}, நீர், வெப்பம் {நெருப்பு}, காற்று ஆகியன எப்போதும் உடலை ஆதரித்து வளப்படுத்துகின்றன. இதைச் சிந்திக்கும் ஒருவனால் எவ்வாறு ஒருவனுடைய உடலில் பற்றுக் கொள்ள முடியும்? உண்மையில், அழிவுக்கு உள்ளாகும் உடலில் எந்த இன்பமுமில்லை” {என்றார் பஞ்சசிகர்}.(48) கபடத்தில் இருந்து விடுபட்டவையும், (வேள்விகள் மற்றும் பிற வேதச் செயல்பாடுகளுக்கு உற்சாகமளிக்காமல்) மாயையின் தொடர்பற்றவையும், உயர்ந்த மதிப்பு கொண்டவையும், ஆன்மாவைக் குறித்தவையுமான பஞ்சசிகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன் ஆச்சரியத்தால் நிறைந்து மீண்டும் அந்த முனிவரிடம் பேச ஆயத்தமானான்” என்றார் {பீஷ்மர்}[23].(49)
கர்மபலன்கள்! – சாந்திபர்வம் பகுதி – 219- கர்ம பலன்களை ஜனதேவனுக்குச் சொன்ன பஞ்சசிகர்; அறியாமைக்கும் அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? மனிதர்கள் ஏன் செயலை விரும்ப வேண்டும்? உயர்ந்த கதியை அடைய அவர்கள் ஏன் முயற்சிக்க வேண்டும்? என்பவை குறித்த ஜனதேவனின் ஐயங்களுக்கு விடையளித்த பஞ்சசிகர்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பெரும் முனிவர் பஞ்சசிகரால் போதிக்கப்பட்ட ஜனக குலத்தின் ஜனதேவன், மீண்டும் அவரிடம் மரணத்திற்குப் பிறகான இருப்பு மற்றும் இல்லாமை குறித்துக் கேள்வி கேட்டான்.(1)
ஜனகன் {ஜனதேவன் பஞ்சசிகரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, இப்போது இருக்கும் நிலையில் இருந்து எந்த மனிதனும் எந்த ஞானத்தையும் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனில், உண்மையில், இஃது உண்மையெனில், அறியாமைக்கும், அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? ஞானத்தால் நாம் ஈட்டுவதென்ன? அறியாமையால் நாம் இழப்பதென்ன?(2) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விடுதலை {முக்தி} என்பது இத்தகையதென்றால், அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் முடிவில் அழிவை மட்டுமே அடையும். கவனமின்மை மற்றும் கவனமிக்கத்தன்மை ஆகியவற்றின் வேறுபாட்டால் என்ன பயன் விளைகிறது?(3) இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் தொடர்பறுப்பதும், அல்லது, இல்லாத பொருட்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும்தான் விடுதலை {முக்தி} எனில், மனிதர்கள் ஏன் செயலைச் செய்ய விரும்ப வேண்டும்? அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள், விரும்பத்தக்க கதிகளை அடையத் தேவையான வழிமுறைகளை ஏன் தொடர்ந்து வகுக்க வேண்டும்? (இக்காரியம் தொடர்பான) உண்மைதான் என்ன?” என்று கேட்டான்”.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கல்விமானான பஞ்சசிகர், அடர்ந்த இருளில் மறைந்திருப்பவனும், பிழையால் திகைப்படைந்தவனும், ஆதரவற்றவனுமான அந்த மன்னனை {ஜனதேவனைக்} கண்டு, பின்வரும் வார்த்தைகளைப் பேசி அவனை அமைதிப்படுத்தினார்.(5)
{பஞ்சசிகர்}, “இதில் (விடுதலையில் {முக்தியில்}) உறவு என்பது அழிவல்ல. அதே வேளையில் உறவு என்பது (ஒருவன் உடனடியாகக் காணத்தக்க) எந்த வகை இருப்பும் அல்ல. உடல், புலன்கள் மற்றும் மனத்தின் கலவையையே நாம் காண்கிறோம். எந்தச் சார்பும் இல்லாமலும் {சுதந்திரமாகவும்}, ஒன்றையொன்று கட்டுப்படுத்திக் கொண்டும் இவை செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன[1].(6) நீர், வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, வெப்பம் {அக்னி}, பூமி {நிலம்} ஆகிய பொருட்களே உடலை அமைக்கின்றன. இவை தங்கள் தங்கள் இயல்பின்படியே (உடலாக அமைந்து) ஒன்றாக நீடித்திருக்கின்றன. இவை மீண்டும் தங்கள் சொந்த இயல்பின்படியே பிரிகின்றன.(7) வெளி, காற்று, வெப்பம், நீர் மற்றும் பூமி ஆகிய இந்த ஐந்து பொருட்களும் கலந்த நிலையிலேயே உடல் அமைகிறது. உடலானது ஒரு பூதத்தால் ஆனதல்ல.(8) புத்தி, குடல்வெப்பம் {ஜாடராக்னி}, பிராணன் முதலியவைகளாக அழைக்கப்படும் காற்றுகள் {வாயுக்கள்} என்ற உயிர்மூச்சுகள் ஆகிய இவை மூன்றும் செயல்படும் உறுப்புகளாக {கர்ம காரணங்களெனச்} சொல்லப்படுகின்றன. புலன்கள், (ஒலி, வடிவம் முதலிய) பொருள் நுகர் பொருட்கள், எதன் மூலம் அவை உணரத்தக்கவையாக மாறுகின்றனவோ (அந்தப் பொருட்களில் வசிக்கும்) அந்தச் சக்தி, எதன்மூலம் உணர முடிகிறதோ அந்த (புலன்களில் வசிக்கும்) திறன்கள், மனம், பிராணன், அபானன் முதலியவையாக அழைக்கப்படும் உயிர்மூச்சுகள், செரிமான உறுப்புகளின் விளைவாக இருக்கும் பல்வேறு சாரங்கள் ஆகியன ஏற்கனவே சொல்லப்பட்ட மூன்று உறுப்புகளில் இருந்து பாய்கின்றன[2].(9) கேள்வி {காது}, தீண்டல் {ஊறு / தோல்}, சுவை {நாக்கு}, பார்வை {கண்கள்}, மணம் {மூக்கு} ஆகியவை ஐம்புலன்களாகும் {ஐம்புலன்களால் உணரப்படுபவை}. அவை தங்கள் குணங்களை, தங்களுக்குக் காரணமாக இருக்கும் மனத்தில் இருந்து பெறுகின்றன.(10)சித் எனும் ஒரு குணமாக இருக்கும் மனத்திற்கு, இன்பம், துன்பம் மற்றும் இன்பதுன்பம் இல்லாமை ஆகிய மூன்று நிலைகள் இருக்கின்றன.(11) ஒருவன் மரணமடையும் தருணம் வரை பிரிக்கப்பட முடியாமல் உள்பொதிந்திருக்கும் ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை, மணம் மற்றும் பிற பொருட்களே, ஒருவனுக்கு ஞானம் உண்டாக்கும் காரணங்களாக இருக்கின்றன.(12) (சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்) செயல்கள் அனைத்தும், (பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும்) துறவும், விசாரிக்கும் அனைத்துக் காரியங்களிலும் உண்மையை உறுதி செய்வதும் புலன்களையே சார்ந்திருக்கின்றன. (உண்மையை) உறுதி செய்வதே இருப்பின் உயர்ந்த நிலை, அதுவே விடுதலையின் {முக்தியின்} விதை அல்லது வேர் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். புத்தியானது, விடுதலை {முக்தி} மற்றும் பிரம்மத்தை நோக்கி அவற்றை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்[3].(13) (உடல் என்றும், புலன்நுகர் பொருட்கள் என்று அழைக்கப்படும்) அழியத்தக்க குணங்களுடன் சேர்ந்த இந்தக் கலவையை {உடலை} ஆன்மாவாகக் கருதும் மனிதன், அத்தகைய தவறான ஞானத்தின் விளைவால் முடிவில்லாத துன்பத்தை உணர்கிறான்.(14) மறுபுறம், உலகம் சார்ந்த பொருட்கள் எதுவும் ஆன்மாவல்ல என்று கருதுபவர்களும், எந்தப் பற்றும் இல்லாமல் இருப்பவர்களுமான மனிதர்களின் வழக்கில், துன்பம் சார்ந்திருக்க ஓர் அடித்தளம் தேவை என்பதால் அவர்கள் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டார்கள்.(15)இது தொடர்பாகத் துறவு சம்பந்தமான ஒப்பற்ற ஒரு ஞானக்கிளையொன்று இருக்கிறது. அது சம்யாகவாதம் {மோக்ஷசாஸ்திரம்} என்றழைக்கப்படுகிறது. அது குறித்துச் சொல்லப் போகிறேன். உன் விடுதலையின் நிமித்தமாக அதைக் கேட்பாயாக.(16) மனிதர்கள் அனைவருக்கும் (விதிக்கப்பட்டிருக்கும்) செயல்களில் துறவென்பது, மெய்யுறுதியுடன் விடுதலைக்காக முனையும் மனிதர்கள் அனைவருக்குமானதாகும் {விதிக்கப்பட்டதாகும்}. எனினும், சரியாகக் கற்பிக்கப்பட்டோர் (துறவின் மூலம் அமைதியை அடைய முடியும் என நினைப்போர்), துன்பத்தின் கனத்த சுமையைச் சுமக்க வேண்டும்.(17) வேத வேள்விகளும், பிற சடங்குகளும், செல்வம் மற்றும் பிற உடைமைகளின் துறவுக்காகவே இருக்கின்றன. அனைத்து இன்பங்களையும் துறப்பதற்காகவே, பல்வேறு நோன்புகளும், உபவாசங்களும் இருக்கின்றன. இன்பத்தையும், மகிழ்ச்சியையும் துறப்பதற்காகவே தவங்களும், யோகமும் இருக்கின்றன. எனினும், அனைத்தையும் துறப்பதே உயர்ந்த வகைத் துறவாகும்.(18) இப்போது நான் உனக்குச் சொல்லப்போவது, அனைத்தையும் துறப்பதற்காகக் கல்விமான்களால் சுட்டிக்காட்டப்படும் ஒரு பாதையாகும். அந்தப் பாதையில் செல்வோர், அனைத்து துன்பங்களையும் விரட்டுவதில் வெல்கிறார்கள். எனினும், அதனிலிருந்து விலகுவோர், துன்ப துயரங்களையே அறுவடை செய்கிறார்கள்[4].(19)ஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐந்து அறிவுப் புலன்களையும் {ஞானேந்திரியங்களையும்}, புத்தியில் வசிக்கும் அனைத்தையும் முதலில் சொன்னேன். ஆறாவதாகப் பலத்தைக் கொண்ட ஐந்து செயற்புலன்களையும் {இப்போது} நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(20) இரு கரங்களும் செயல்பாட்டின் ஈருறுப்புகளாக இருக்கின்றன. இரு கால்களும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்யும் இரண்டு உறுப்புகளாக இருக்கின்றன. இன்பம் மற்றும் இனத் தொடர்ச்சி ஆகிய இரண்டிற்காக இருப்பது பிறப்புறுப்பாகும். வயிற்றில் இருந்து வரும் குதம், பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களையும் வெளியே கழிக்கும் உறுப்பாகும்.(21) பேச்சுறுப்பு {வாய்}, ஒலி உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இருக்கிறது. இந்த ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரிங்களும்}, மனத்திற்குச் சொந்தமானது அல்லது மனத்தின் தொடர்புடையது என அறிவாயாக. (மனத்தோடு கணக்கிடப்படும்) இவையே அறிவு மற்றும் செயலுக்குரிய பதினோரு உறுப்புகளாகும். ஒருவன் புத்தியுடன் கூடிய மனத்தை விரைவாகக் கைவிட வேண்டும்[5].(22) கேட்கும் செயலுக்கு, இரு காதுகள், ஒலி மற்றும் மனம் ஆகிய மூன்று காரணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்; அதே போலவே ஒலி உணர்விற்கும்; வடிவத்தை உணர்வதற்கும், சுவை மற்றும் மணத்தை உணர்வதற்கும் அவை {அந்த மூன்று காரணங்கள்} வேண்டும்[6].(23) குறிப்பிடப்பட்ட பல்வேறு வகை உணர்வுகளை உணர இந்தப் பதினைந்து {ஐந்து மூன்று காரணங்கள்} சாதனங்கள், அல்லது குணங்கள் வேண்டும். இவற்றின் விளைவால் ஒவ்வொரு மனிதனும், அந்த உணர்வுகளைப் பொறுத்தவரையில் மூன்று தனிப்பட்ட நனவுநிலைகளை (அஃதாவது, ஓர் உறுப்பு, அதன் குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் அந்தச் செயல்கள் செயல்படும் மனம் ஆகியவற்றை) அடைகிறான்.(24) மேலும் (மனத்தின் உணர்வுகள் அனைத்தையும் பொறுத்தவரையில்) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய மூன்று வகை உணர்வுகள் {சாதனங்கள்} இருக்கின்றன. அவற்றினுள், உணர்வுகள் அனைத்தும் உள்ளிட்ட மூவகை நனவுநிலைகள் {அனுபவங்கள்} இயங்குகின்றன.(25)உணரத்தக்க காரணம், அல்லது வெளிப்படையான எந்தக் காரணமும் இன்றி மனத்தில் எழும் பேரானந்தம், நிறைவு, மகிழ்ச்சி, இன்பம் மற்றும் அமைதி ஆகியவை நல்லியல்புக்குரியவையாகும் {சத்வ குணத்திற்கு உரியவையாகும்}.(26) காரணமில்லாமல் அல்லது உணரத்தக்க எந்தக் காரணத்தின் மூலமும் நேரும், நிறைவின்மை, வருத்தம், துன்பம், பேராசை, வன்மம் ஆகியவை ஆசை {ரஜஸ்} என்று அறியப்படும் குணத்தின் குறியீடுகளாகும்.(27) தவறான தீர்மானம், மயக்கம், கவனமின்மை, கனவுகள், உறக்கக்கலக்கம் ஆகிவை எவ்வாறு உண்டானாலும், அவை இருள் {தமஸ்} குணத்திற்குரியவையாகும்.(28) உடல் அல்லது மனத்தைப் பொறுத்தவரையில், இன்பம் அல்லது நிறைவுடன் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அது நல்லியல்பின் {சத்வ} குணத்தின் மூலம் உண்டானது எனக் கருதப்பட வேண்டும்.(29) நிறைவின்மை, அல்லது உற்சாகமின்மை கொண்ட எந்த உணர்வுடனும் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அஃது ஆசை {ரஜஸ்} குணத்தினால் மனத்தில் நேர்ந்தவை என்று கருதப்பட வேண்டும்.(30) உடல், அல்லது மனத்தைப் பொறுத்தவரையில் பிழை, அல்லது கவனமின்மையுடன் கலந்து எந்நிலை நீடித்தாலும், அது புரிந்து கொள்ள முடியாததும், விவரிக்க இயலாததுமான இருளை {தமஸ் குணத்தைக்} குறிப்பிடுவதாக அறியப்பட வேண்டும்.(31)
கேட்கும் உறுப்பு {காது} வெளியை {ஆகாயத்தைச்} சார்ந்திருக்கிறது; அஃது (எல்லைகளுக்குட்பட்ட) வெளியே {ஆகாயமே} ஆகும். ஒலியானது அந்த உறுப்பையே {காதையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ஒலியை உணர்வதால் ஒருவன் கேட்கும் உறுப்பு {காது} மற்றும் வெளியைக் குறித்த அறிவை உடனே அடைய மாட்டான். ஆனால் ஒலி உணரப்படும்போது, கேட்கும் உறுப்பும், வெளியும் வெகு நாளைக்கு அறியப்படாமல் நீடிக்கு முடியாது. (காதை அழிப்பதால், ஒலியும் வெளியும் அழிக்கப்படலாம்; இறுதியாக மனத்தை அழிப்பதால் அனைத்தையும் அழிக்கலாம்).(32) {செவி}, தோல், கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு ஆகியவற்றின் வழக்கிலும் இதுவே பொருந்தும். அவை தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை மற்றும் மணமாக இருக்கின்றன[7].(33) செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், அறிவுப்புலன்கள் {ஞானேந்திரிங்கள்} ஐந்தும் சேர்ந்த இந்தப் பத்தின் கலவையில் வசிக்கும் பதினொன்றாவதான மனமும், மனத்தில் பனிரெண்டாவது வசிக்கும் புத்தியும் என ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட செயல்பாட்டில் ஈடுபடுகின்றன.(34) இந்தப் பனிரெண்டும் ஒன்றாக நீடித்தால், அதனால் விளையும் விளைவானது, கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணம் ஏற்படாமல், இந்தப் பனிரெண்டையும் பொறுத்தவரையில் ஒன்றாக இருக்கின்றன. ஆனால் அவை ஆன்மாவில் இருந்து தனியாக இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பனிரெண்டும் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன என்று பொதுவாகப் பேசுவது, உலகின் சாதாராண நோக்கங்களுக்காகப் பேசப்படும் தாழ்ந்த வடிவிலான சாதாரணப் பேச்சு மட்டுமே ஆகும்.(35)கடந்தகாலப் புலனின்ப உணர்வுகளின் விளைவால் கனவு காண்பவன், நுட்பமான வடிவிலிருக்கும் அவனது புலன்களை உணர்ந்து, ஏற்கனவே (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களைக் கொண்டவனாக, தன் புலன்கள் தங்கள் தங்கள் பொருட்களில் இருப்பதாகவும், எனவே, விழித்திருக்கும் போது செயல்படுவதைப் போலவே கற்பனை உடலுடன் அசைந்து செயல்படுவதாகவும் கருதுகிறான்[8].(36) விரைவில் மறைவதும், நிலையற்றதும், இருளின் {தமோ குணத்தின்} ஆதிக்கத்தில் மட்டுமே மனத்தால் உண்டாக்கப்படுவதுமான புலன்களுடன் {புலனுணர்வுகளுடன்} கூடிய புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மா விடுபட்டிருக்கும் நிலையானது, கல்விமான்கள் சொல்வதைப் போல, இருளின் இயல்பைக் கொண்டதும், திரள் உடலால் மட்டுமே அனுபவிக்கப்படுவதுமான இன்பநிலையாகும். (விடுதலையின் இன்பநிலை நிச்சயம் இதிலிருந்து மாறுபட்டதாகும்)[9].(37) முக்தியால் கிட்டும் இன்பநிலையிலும், வேத கல்வியில் ஈர்க்கப்பட்ட விழிப்புநிலையில் கிட்டும் இன்பத்திலும், எவ்வாறு ஒருவன் துன்பத்தைக் கிஞ்சிற்றும் காண்பதில்லையோ, அவ்வாறே விவரிக்கப்பட முடியாததும், உண்மையை மறைப்பதுமான இருள் பரவுவதாக {கிட்டச்செய்வதுபோலத் தோற்றமளிப்பதாகத்} தெரிகிறது. (ஆனால் உண்மையில் முக்தியால் கிட்டும் இன்பநிலை இருளால் களங்கப்படாததாகும்)[10].(38) கனவுகளற்ற உறக்கநிலையில் தோன்றுவதைப் போலவே, விடுதலையிலும் {முக்தி நிலையிலும்}, ஒருவனின் செயல்களைத் தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அக மற்றும் புறநிலை இருப்புகள் (நனவுநிலையிலிருந்து புலன்நுகர் பொருட்கள் வரை சேர்ந்த அனைத்தும்) அனைத்தும் விலக்கப்படுகின்றன. அவித்யையில் மூழ்கிய சிலரில், அவற்றுடன் இவை நீடித்திருக்கின்றன. அவித்யையைக் கடந்து அறிவை வென்றவர்களைப் பொறுத்தவரையில், அவை எந்நேரத்தில் அவர்களுக்கு நேராது[11].(39) ஆன்மா {ஆத்மா}, ஆன்மாவற்றது {அனாத்மா} குறித்த ஊகங்களை அறிந்தவர்கள், (புலன்கள் முதலிய) இந்தத் தொகையே உடல் (க்ஷேத்திரம்) என்று சொல்கிறார்கள். மனத்தைச் சார்ந்திருக்கும் இருப்புப் பொருள் ஆன்மா (க்ஷேத்ரக்ஜன்) என்றழைக்கப்படுகிறது.(40)இச்சூழ்நிலையில், (ஆன்மா மற்றும் உடல் கலந்த நிலை என்ற) நன்கறியப்பட்ட காரணத்தின் விளைவாகவும், அடிப்படை இயல்பின் மூலமும் ஒருவன் நீடித்திருக்கும்போது, (இவை இரண்டில் {அதாவது ஆன்மா மற்றும் உடல் ஆகிய இரண்டில்}) நித்தியமாகச் சொல்லப்படுவது {ஆன்மா} எவ்வாறு அழிவடைய முடியும்?[12](41) சிற்றாறுகள் பெரியனவற்றுக்குள் பாய்ந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கின்றன. (இவ்வாறு பெரிதாகிய) பெரியனவெல்லாம் {பெரிய ஆறுகள் அனைத்தும்} பெருங்கடலுக்குள் விழுந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கிறன்றன. அதே வகையிலேயே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் உயிர் இழப்பின் வடிவமும் நேர்கிறது[13].(42) இவ்வாறிருக்கையில், குணங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் ஜீவனானது, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} அடையப் பெறும்போதும், அதன் குணங்கள் அனைத்தும் மறையும்போதும், வேறுபாட்டினால் குறிப்பிடப்படக்கூடிய பொருளாக அஃது எவ்வாறு இருக்க முடியும்[14]?(43) விடுதலை {முக்தி} அடைவதை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியை அறிந்தவனும், ஆன்மாவை அறிந்து கொள்வதற்காகக் கவனமாக முனைபவனுமான ஒருவன், தண்ணீரில் நனைக்கப்பட்டாலும் ஒருபோதும் அதனால் நனையாத தாமரை இலையைப் போலவே, தன் செயல்களின் தீய கனிகளால் ஒருபோதும் களங்கப்படாதிருப்பான்.(44) ஒருவன், மிக வலுவானவையும், எண்ணிக்கையில் பலவாக இருப்பவையும், பிள்ளைகள், மனைவியரிடம் கொண்ட அன்பு, வேள்வி மற்றும் பிற சடங்குகளில் உள்ள பற்று ஆகிய பற்றுகளில் இருந்து விடுபடும்போதும், அவன் இன்ப துன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்துப் பற்றுகளையும் கடக்கும்போதும், உயர்ந்த கதியை அடைந்து, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} நுழைந்து பாகுபாடற்றவனாகிறான்.(45) (பிரம்மத்தைக் குறித்த) சரியான உள்ளுணர்வுகளுக்கு வழிவகுக்கும் ஸ்ருதிகளின் தீர்மானங்களை ஒருவன் புரிந்து கொண்டு, அறங்களும், பிற சாத்திரங்களும் கற்பிக்கும் அந்த மங்கள அறச் செயல்களைச் செய்யும்போது, அவன் முதுமை மற்றும் மரணம் குறித்த அச்சங்களைத் தவிர்த்துச் சுகமாக இருப்பான். தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்களும், இன்ப துன்பங்களின் வடிவங்களில் இருக்கும் அவற்றின் கனிகளும் {பலன்களும்} மறைந்து அழிவடையும்போது, அனைத்திலும் பற்றற்ற மனிதர்கள் அஃதிலிருந்து எழுந்து, ஆளுமை கொண்ட பிரம்மத்தை முதலில் புகலிடமாக அடைந்து, தங்கள் புத்திகளின் மூலம் பொருள்சாரா பிரம்மத்தைக் காண்கிறார்கள்[15].(46)ஜீவன், தன் கீழ்நோக்கிய இறக்கத்தில் (செயல்களால் அமைக்கப்பட்ட உயிரணுவுக்குள்) அவித்யையின் ஆதிக்கத்தின் கீழ், தான் விரித்த வலைகளுக்குள்ளேயே வசிக்கும் பட்டுப்பூச்சியைப் போலவே இம்மையில் {இவ்வுலகில்} வாழ்கிறது. அந்தப் பட்டுப்பூச்சி அதன் உயிரணுக்களைக் கைவிட்டு விடுபடுவதைப் போலவே, ஜீவனும் செயல்களால் உண்டாக்கப்பட்ட அதன் வீட்டைக் கைவிடுகிறது. அதன் இறுதி விளைவாக, மண்குவியல் பாறைத் திரளில் வேகமாக விழுந்து அழிவதைப் போலவே அதன் துன்பங்களும் அழிவை அடைகின்றன[16].(47) ருரு மான் தனது பழைய கொம்புகளைக் கைவிடுவதைப் போலவோ, பாம்பானது எந்த அறிவிப்பும் கொடுக்காமல் தன் சட்டையைக் கைவிடுவதுபோலவோ, பற்றறுத்த மனிதன் தன் துன்பங்கள் அனைத்தையும் கைவிடுகிறான்.(48) ஒரு பறவையானது, நீருக்குள் விழப்போகும் மரத்தை விட்டு அகன்று, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, (புதிய) ஓய்விடத்தில் இறங்குவதைப் போலவே, பற்றுகளில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும், இன்ப துன்பங்களைக் கைவிட்டுத் தனது நுட்பமான, மற்றும் நுட்பத்திலும் நுட்பமான வடிவங்களில் இருந்து தொடர்பை அறுத்துக் கொண்டு, செழிப்பைக் கொண்ட உயர்ந்த கதியை அடைகிறான்[17].(49) மிதிலையின் தலைவனான ஜனகன், தன் நகரம் எரிவதைக் கண்டு, “இந்தத் தீயில் என்னுடையது எதுவும் எரியவில்லை” என்று அறிவித்தான்” என்று {ஜனதேவனிடம் பஞ்சசிகர்} சொன்னார்[18].(50)இறவாமையை வழங்கவல்லவையும், பஞ்சசிகரால் சொல்லப்பட்டவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன், பஞ்சசிகர் சொன்ன அனைத்தையும் கவனமாகச் சிந்தித்துப் பார்த்து, உண்மையை அடைந்து, தன் துயரங்கள் அனைத்தையும் கைவிட்டு, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்துவந்தான்.(51) ஓ! மன்னா, விடுதலையை {முக்தியை} மதித்து, எவன் இந்த உரையைப் படிக்கிறானோ, எவன் அதைக் குறித்து எப்போதும் சிந்திக்கிறானோ, அவன், பஞ்சசிகரைச் சந்தித்த மிதிலையின் ஆட்சியாளனான ஜனதேவனைப் போலவே, எந்தத் துயரிலும் துன்புறாமல், கவலையில் இருந்து விடுபட்டு விடுதலையை {முக்தியை} அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(52)
தமம் – தற்கட்டுப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 220-தற்கட்டுப்பாடு கொண்டவனின் குறியீடுகளையும், தற்கட்டுப்பாட்டின் சிறப்புகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எதைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியையும், எதைச் செய்வதன் மூலம் துன்பத்தையும் ஒருவன் அடைகிறான்? ஓ! பாரதரே, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் அச்சத்தில் இருந்து விடுபட்டு, (வாழ்வின் நோக்கங்களைப் பொறுத்தவரையில்) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக இங்கே பயணிக்கிறான்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஸ்ருதிகளை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியைக் கொண்டிருந்த பழங்காலத்தவர், பொதுவாக அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்}, மிகக் குறிப்பாகப் பிராமணர்களுக்கும் தற்கட்டுப்பாடு {தமம்} எனும் கடமையையே உயர்வாக மெச்சினார்கள்.(2) அறச்சடங்குகளைப் பொறுத்தவரையில் தற்கட்டுப்பாடு {தமம்} இல்லாதவர்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. அறச்சடங்குகள், தவங்கள், வாய்மை ஆகிய இவை அனைத்தும் தற்கட்டுப்பாட்டிலேயே நிறுவப்பட்டுள்ளன.(3) தற்கட்டுப்பாட்டு ஒருவனின் சக்தியை அதிகரிக்கிறது. தற்கட்டுப்பாடு புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன் பாவமற்றவனாகவும், அச்சமற்றவனாகவும் ஆகி பெரும் விளைவுகளை வெல்கிறான் {அடைகிறான்}.(4) தற்கட்டுப்பாடு உடையவன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான். அவன் இவ்வுலகில் மகிழ்ச்சியாகவே திரிகிறான், அவனது மனம் எப்போதும் உற்சாகமாக இருக்கிறது.(5)
தற்கட்டுப்பாடு கொண்டவனால் அனைத்துவகைக் கிளர்ச்சிகளும் அமைதியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தற்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் அதே போன்ற முயற்சியில் தவறுகிறான். தற்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், (காமம், ஆசை, கோபம் முதலிய வடிவங்களில் இருக்கும்) தனது எண்ணற்ற எதிரிகளைத் தனிப்பட்ட உடல்களாக வசிப்பவையாகக் காண்கிறான்.(6) தற்கட்டுப்பாடு இல்லாத மனிதர்கள், புலிகளையும், ஊனுண்ணும் பிற விலங்குகளையும் போல எப்போதும் அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றனர். {தற்கட்டுப்பாடு இல்லாத} இம்மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே சுயம்பு (பிரம்மன்) மன்னர்களைப் படைத்தான்.(7) (நான்கு) வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும், பிற அறங்கள் அனைத்தைக் காட்டிலும் தற்கட்டுப்பாட்டைப் பயில்வதே தனிச்சிறப்புடையது. அனைத்து வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} மூலமும் அடைவதைவிடத் தற்கட்டுப்பாட்டின் மூலம் அடையப்படும் கனிகள் {பலன்கள்} மிக அதிகமாகும்.(8) நான் இப்போது, தற்கட்டுப்பாட்டை உயர்வாக மதிக்கும் மனிதர்களின் குறியீடுகளைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்[1]. உயர்ந்த பண்பு, அமைதியான மனநிலை {பரபரப்பின்மை}, மனநிறைவு, நம்பிக்கை,(9) மன்னிக்கும் தன்மை, மாறாத எளிமை, அதிகம் பேசாமை, பணிவு, பெரியோர்களிடம் மரியாதை, நலநாட்டம், அனைத்து உயிரினங்களிடமும் கருணை, வெளிப்படைத்தன்மை,(10) மன்னர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்போரைக் குறித்த பேச்சையும், போலியான, பயனற்ற விவாதங்களையும், பிறரைப் புகழ்வதையும், இகழ்வதையும் தவிர்த்தல் ஆகியவையே அவை {தற்கட்டுப்பாடு கொண்டவர்களின் குறியீடுகளாகும்}. தற்கட்டுப்பாட்டுடன் கூடிய மனிதன், விடுதலையை {முக்தியை} விரும்பி, தற்போதைய இன்பங்களையும், துன்பங்களையும் அமைதியாகத் தாங்கிக் கொள்பவனாக, எதிர்பார்ப்புகளைக் கொண்டோரின் மூலம் ஒருபோதும் கிளர்ச்சியடையவோ, சோர்வடையவோ மாட்டான்.(11)பழிவாங்கும் குணம் மற்றும் அனைத்து வகை வஞ்சனைகள் அற்றவனாக, புகழ்ச்சியாலோ, பழியாலோ அசைக்கப்பட முடியாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், நன்னடத்தை, நல்ல பழக்கவழக்கம், தூய ஆன்மா, உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், தன் ஆசைகளின் முற்றான தலைவனாகவும் இருப்பான்.(12) அத்தகைய மனிதன் இவ்வுலகில் வெகுமதிகளைப் பெற்று, மறுமையில் சொர்க்கத்திற்குச் செல்வான். அடைய முடியாதவற்றைத் தன் உதவியின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அடையச் செய்யும் அத்தகைய மனிதன், மகிழ்ச்சிக் களிப்படைபவனாகிறான்[2].(13) உலகளாவிய நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அத்தகைய மனிதன், எவருடனும் ஒருபோதும் பகையை வளர்க்க மாட்டான். ஆழ்ந்த அமைதி கொண்ட பெருங்கடலைப் போல அமைதியான அவன், ஞானத்தால் ஆன்மா நிறைந்தவனாகவும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாகவும் இருப்பான்.(14) புத்தியைக் கொண்டவனும், உலகளாவிய மதிப்புக்குத் தகுந்தவனுமான அத்தகைய தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன், எந்த உயிரினத்திடமும் அச்சத்தையூட்டாதவனாகவும், தானும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாதவனாகவும் இருப்பான்.(15)பெரும் பொருள்களை அடைகையில் ஒருபோதும் மகிழ்சியடையாமலும், துயரத்தில் ஒருபோதும் துன்பங்கொள்ளாமலும் இருக்கும் அவன், நிறைவான ஞானத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதனே தற்கட்டுப்பாடு உடையவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அத்தகைய மனிதனே மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான்.(16) சாத்திரங்களை அறிந்தவனாக, தூய ஆன்மா கொண்டவனாக இருக்கும் தற்கட்டுப்பாடுடைய மனிதன், நன்மைக்காகச் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் செய்து, உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவிக்கிறான்.(17) எனினும், தீய ஆன்மா கொண்டவர்களோ, நலநாட்டம், மன்னிக்கும்தன்மை, அமைதி, நிறைவு, இனிய பேச்சு, வாய்மை, ஈகை, ஆறுதல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பாதையில் செல்ல மாட்டார்கள்.(18) அவர்களுடைய பாதையானது, காமம், கோபம், பேராசை, பிறரிடம் பொறாமை, தற்புகழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டதாகும். காமம் மற்றும் கோபத்தை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தன் புலன்களின் முற்றான தலைவனாகும் ஒரு பிராமணன்,(19) தன்னை மிகக் கடுமையான தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டும், தனக்கு முழுமையான அழிவு கிடையாது என்பதை அறிந்தாலும் தன் காலம் வரும் வரை உடலைத் தாங்கிக் கொண்டிருப்பவனாகக் காத்திருந்து இந்த உலகில் வாழ்ந்து வர வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(20)
தவமும், உபவாசமும்! – சாந்திபர்வம் பகுதி – 221-தவம் மற்றும் உண்ணாநோன்பின் முறைகளையும், அவற்றின் பயன்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேள்விகள் மற்றும் பிற சடங்குகளுக்கு அடிமைகளாக உள்ள மூன்று மறுபிறப்பாள வகையினரும், வேள்விகளில் தேவர்களுக்கான படையலாக வைக்கப்பட்டு எஞ்சும் இறைச்சி மற்றும் மது ஆகியவற்றை, பிள்ளைகள் மற்றும் சொர்க்கத்தை அடையும் நோக்கத்துடன் உண்கிறார்கள். ஓ! பாட்டா, இந்தச் செயலின் பண்பியல்பு யாது?” எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகளையும், நோன்புகளையும் நோற்காமல், தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்யும் மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். (அவர்கள் இம்மையிலேயே வீழ்ந்துவிட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்). மறுபுறம், வேத வேள்விகள், நோன்புகளை நோற்கவும், சொர்க்கத்தின் வடிவிலான கனிகளில் உள்ள விருப்பத்தாலும், பிள்ளைகளைப் பெறுவதில் உள்ள விருப்பத்தாலும் உந்தப்பட்டு அத்தகைய உணவை உண்பவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள், ஆனால் அவர்களின் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் கீழே வீழ்வார்கள்” என்றார்.(2)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உண்ணாநோன்பும் {உபவாசமும்} தபமே {தவமே} என்று சாதாரண மக்கள் சொல்கிறார்கள். எனினும், உண்ணாநோன்பு அவ்வாறானதா? அல்லது தவம் வேறேதும் ஒன்றா?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றால் அளக்கப்படும் உண்ணாநோன்பை மக்கள் தவமாகக் கருதுகிறார்கள். எனினும், நல்லோரின் கருத்தின் படி அது தவமாகாது. மறுபுறம், உண்ணாநோன்பென்பது {உபவாசம் என்பது}, ஆன்மா ஞானம் அடைவதற்கான ஒரு தடையாகும்[1].(4) (அனைத்திலும் கடினமான ஒன்றான) செயல்களைத் துறப்பது, (அனைத்துயிரினங்களையும் சமமாகக் கருதி அவை அனைத்தையும் வழிபடுவதை உள்ளடக்கிய) பணிவு ஆகியவையே உயர்ந்த தவங்களாகும். இது தவங்கள் அனைத்திலும் மேன்மையான தனிச்சிறப்புக் கொண்டதாகும். அத்தகைய தவத்தைச் செய்பவன் எப்போதும் உபவாசம் இருப்பவனாகவும், எப்போதும் பிரம்மச்சரிய வாழ்வை நோற்பவனாகவும் கருதப்படுகிறான்.(5) எப்போதும் உறக்கமற்றவனும், எப்போதும் அறத்தைச் செய்வதில் மட்டுமே ஈடுபடுபவனுமான ஒரு பிராமணன், குடும்பத்தின் மையத்தில் வாழ்ந்து வந்தாலும் அவன் எப்போதும் ஒரு முனியாகவும், தேவனாகவும், அதற்கு மேலானவனாகவும் ஆகிறான்.(6) அவன் எப்போதும் அமுதத்தை உண்பவனாகவும், எப்போதும் தேவர்கள் மற்றும் விருந்தினர்களைத் துதிப்பவனாகவும் ஆகிறான்.(7) உண்மையில் அவன், எப்போதும் வேள்வியில் எஞ்சியவற்றை மட்டுமே உண்டு வாழ்பவனாகவும், விருந்தோம்பல் கடமையில் எப்போதும் ஈடுபடுபவனாகவும், நம்பிக்கை நிறைந்தவனாகவும், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை எப்போதும் வழிபடுபவனாகவும் கருதப்படுகிறான்” என்றார் {பீஷ்மர்}.(8)யுதிஷ்டிரன், “அத்தகைய தவத்தைப் பயில்பவன், எப்போதும் உண்ணா நோன்பிருப்பவனாகவோ, எப்போதும் பிரம்மச்சரிய நோன்பில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவோ, வேள்வியில் எஞ்சுபவற்றை எப்போதும் உண்டு வாழ்பவனாகவோ, விருந்தினர்களை எப்போதும் மதிப்பவனாகவும் எவ்வாறு கருதப்படலாம்?” என்று கேட்டான்.(9)
பீஷ்மர், “ஒருவன் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் பகலில் ஒருமுறையும், இரவில் ஒருமுறையும் உண்டு, இடைவேளையில் எதையும் உண்ணாதிருந்தால், அவன் எப்போதும் உண்ணாநோன்பு {உபவாசம்} இருப்பவனாகக் கருதப்படுவான்.(10) அத்தகைய பிராமணன், எப்போதும் வாய்மை பேசுவதன் மூலமும், எப்போதும் ஞானத்தை ஒட்டி ஒழுகுவது, வேறுகாலங்களில் அல்லாமல் பருவகாலத்தில் மட்டும் தன் மனைவியிடம் செல்வது ஆகியவற்றின் மூலமும் பிரம்மச்சாரி ஆகிறான்.(11) வேள்வியில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணாமல் இருப்பதன் மூலம், அவன் புலால் உண்ணாதவனாகிறான்[2]. ஈகையாளனாக இருப்பதன் மூலம் அவன் எப்போதும் தூய்மையானவனாகவும், பகலில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடைபவனாகவும் ஆகிறான்.(12) ஓ! யுதிஷ்டிரா, தன் பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு மட்டுமே உண்ணும் மனிதன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகிறான்.(13) தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உணவு அளிக்கும் வரை உண்ணாதிருக்கும் பிராமணன், அத்தகைய நோன்பின் மூலம் சொர்க்கத்தையே வெல்கிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், பணியாட்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியவற்றை மட்டுமே உண்பவன் வேள்வி எச்சங்களில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15)அத்தகைய மனிதர்கள், மறுமையில் எண்ணற்ற இன்ப உலகங்களை வெல்கிறார்கள். அவர்களுடைய இல்லங்களுக்குப் பிரம்மனுடன் கூடிய தேவர்களும், அப்சரஸ்களும் வருகிறார்கள்.(16) தேவர்கள் மற்றும் பித்ருக்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்பவர்கள், தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் நிலையான மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்களைக் கடத்தி, இறுதியாக இவ்வுடலை விட்ட மிக உயர்ந்த கதியை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(17)
ஸ்வபாவம் – இயல்பு! – சாந்திபர்வம் பகுதி – 222-உண்மையில் மனிதனே செயல்படுபவனாகக் கருதப்பட வேண்டுமா என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ கனிகளை உண்டாக்கும் நோக்கத்தில், நற்செயல்களும், தீச்செயல்களும் மனிதனைப் பற்றுகின்றன.(1) எனினும், மனிதனையே செயல்படுபவனாகக் கருதலாமா? அல்லது அவன் அவ்வாறு கருதப்படக்கூடாதா? இக்கேள்வியில் என் மனம் ஐயத்தால் நிறைகிறது. ஓ! பாட்டா, இதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக, பழங்கதையில் பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) தைத்தியர்களின் தலைவனான பிரஹலாதன் உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்றில்லாதவனாக இருந்தான். அவனது பாவங்கள் கழுவப்பட்டன. நற்குலத்தில் பிறந்த அவன், பெரும் கல்வியைக் கற்றிருந்தான். மயக்கம் மற்றும் செருக்கில் இருந்து விடுபட்டவனாகவும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} எப்போதும் நோற்பவனாகவும், பல்வேறு நோன்புகளை அர்ப்பணிப்புடன் நோற்பவனாகவும்(4) இருந்த அவன், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாகக் கருதினான். தற்கட்டுப்பாடுடைய அவன், ஒரு வெற்று அறையில் {சிறையில்} தன் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான். படைக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் அழிவை அறிந்த அவன்,(5) தனக்கு நிறைவு தராதவற்றில் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனாகவும், ஏற்புடைய பொருட்களை அடையும்போது ஒருபோதும் மகிழாதவனுமாக இருந்தான். அவன் தங்கத்தையும், மண்ணையும் சமமான பார்வையுடன் பார்ப்பவனாக இருந்தான்.(6) ஆன்மா குறித்த கல்வி, விடுதலையை {முக்தியை} அடைவது, உறுதியான ஞானம் ஆகியவற்றில் நிலையாக ஈடுபட்ட அவன் வாய்மையைக் குறித்த நிலையான தீர்மானங்களை அடைந்தவனாக இருந்தான்.(7)
பொருட்கள் அனைத்திலும் உயர்வானது, உயர்வல்லாதது ஆகியவற்றை அறிந்தவனாக, அனைத்துமறிந்தவனாக, உலகளாவிய பார்வை கொண்டவனாக இருந்த அவன், ஒருநாள் தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்திய நிலையில் ஒரு தனிமையான அறையில் இருந்தபோது, அவனை விழிப்படையச் செய்ய விரும்பிய சக்ரன் {இந்திரன்} அவனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(8) “ஓ! மன்னா {பிரஹலாதா}, ஒரு மனிதன் அனைவரின் மதிப்பை வெல்லத்தக்க அனைத்துக் குணங்களும் உன்னுள் நிரந்தரமாக இருப்பதை நான் காண்கிறேன்.(9) உன் புத்தியானது, ஒரு குழந்தையுடையதைப் போலப் பற்று மற்றும் வெறுப்பில் {விருப்புவெறுப்பில்} இருந்து விடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. நீ ஆன்மாவை அறிந்திருக்கிறாய். ஆன்மா குறித்த அறிவை அடைய எது சிறந்த வழிமுறையென நீ கருதுகிறாய்?(10) நீ உனது முந்தைய நிலையில் இருந்து வீழ்ந்தவனாக, உனது எதிரிகள் {தேவர்கள்} கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவனாக, செழிப்பை இழந்தவனாகக் கயிறுகளால் கட்டப்பட்டவனாக இப்போது இருக்கிறாய். நீ இருக்கும் தற்போதைய சூழ்நிலை துன்பத்தைத் தரவல்லது. இருப்பினும், ஓ! பிரஹலாதா நீ எவ்வாறு துன்பங்கொள்ளாமல் இருக்கிறாய்?(11) ஓ! திதியின் மகனே, இந்நிலை ஞானத்தை அடைந்ததால் ஏற்படுகிறதா? அல்லது உன் மனோவுறுதியால் ஏற்படுகிறதா? ஓ! பிரஹலாதா, உனக்கு நேர்ந்த பேரிடர்களைப் பார், இருப்பினும் நீ மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பவனைப் போலத் தெரிகிறாயே” என்று கேட்டான் {இந்திரன்}.(12)
இவ்வாறு இந்திரனால் தூண்டப்பட்டவனும், உறுதியும், வாய்மையில் தீர்மானமான முடிவுகளைக் கொண்டவனுமான அந்தத் தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்}, முன்னவனிடம் {இந்திரனிடம்}, பெரும் ஞானத்தைக் குறிக்கும் இந்த இனிய வார்த்தைகளில் மறுமொழி கூறினான்.(13)
பிரஹலாதன் {இந்திரனிடம்}, “படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றை அறியாதவன், அந்த அறியாமையின் மூலம் திகைப்படைகிறான். எனினும், அந்த இரண்டையும் அறிந்தவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(14) அனைத்து வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கும் உள்ள பொருட்கள், இல்லாத பொருட்கள் ஆகியவை தங்கள் சொந்த இயல்பின் விளைவால் தோன்றுகின்றன, அல்லது மறைகின்றன. (அத்தகைய தோற்றப்பாடு உண்டாவதற்கு) எந்தத் தனிப்பட்ட முயற்சியும் தேவைப்படுவதில்லை[1].(15) எனவே, தனிப்பட்ட முயற்சியேதும் இல்லாத போது, நாம் காணும் இவை அனைத்தையும் எந்த ஒரு தனிப்பட்டவனும் உண்டாக்கவில்லை {எந்த மனிதனின் செயலிலும் இவை உண்டாகவில்லை} என்பது வெளிப்படை. ஆனால், (உண்மையில்) அந்த ஒருவன் (அல்லது சித்) ஒருபோதும் எதையும் செய்வதில்லை, இருப்பினும் (அறியாமையின் ஆதிக்கத்தின் மூலம்) நாமே நிறுவுகிறோம் என்ற ஒரு நனவுநிலை {அஹங்காரம்} தானே படர்கிறது.(16) நல்ல அல்லது தீய செயல்களைச் செய்பவனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன், குறை ஞானத்தைக் கொண்டவனாவான். என் தீர்மானத்தின்படி அத்தகைய மனிதன் உண்மையை அறிந்தவனல்ல[2].(17)ஓ! சக்ரா {இந்திரா}, ஒருவன் {மனிதன்} என்றழைக்கப்படுபவன் உண்மையில் செயல்படுபவனாக இருந்தால், தன் நன்மைக்காக அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட வேண்டும். அந்தச் செயல்கள் ஏதும் தோல்வியடையக் கூடாது.(18) இயன்றதில் உயர்ந்த அளவுக்குப் போராடுபவர்களுக்கு மத்தியிலும், விரும்பப்படாதது நடக்காததும், விரும்புவது நடப்பதும் காணப்படவில்லை. அவ்வாறிருக்கையில், தனிப்பட்ட முயற்சியால் என்ன பயன் ஏற்படுகிறது?(19) சிலரின் வழக்கில், அவர்களது பங்காக எந்த முயற்சியும் செய்யப்படாமலே விரும்பாதது நடக்காததையும், விரும்புவது நிறைவேறுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாறெனில், இஃது இயற்கையின் {ஸ்வபாவத்தின்} விளைவாகவே இருக்க முடியும்.(20) இயல்புக்குமிக்கத் தன்மைகளை வெளிப்படுத்தும் சிலர், மேன்மையான புத்தியைக் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த குணமும், சிறுமதியும் கொண்ட பிறரிடம் இருந்து செல்வத்தை வேண்டி நிற்பதையும் காண முடிகிறது.(21) உண்மையில், இயற்கையின் தூண்டுதலின் பேரில், ஒருவனுக்குள் நல்ல, அல்லது கெட்ட குணங்கள் அனைத்தும் நுழையும்போது, அவன் (தன் மேன்மையான உடைமைகளைக் குறித்து) தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்கு என்ன இருக்கிறது?(22) இவை அனைத்தும் இயற்கையில் {ஸ்வபாவத்தில்} இருந்து பாய்கின்றன. இதுவே என் தீர்மானமான முடிவாகும். என்னைப் பொறுத்தவரையில் விடுதலையும் {முக்தியும்}, தன்னறிவும் {சுயஞானமும் / ஆன்ம ஞானமும்} அதே மூலத்தில் இருந்தே பாய்கின்றன.(23)
இவ்வுலகில், மனிதர்களைப் பற்றியிருக்கும் நல்ல அல்லது தீய கனிகள் அனைத்தும், செயல்களின் விளைவுகளாகவே கருதப்படுகின்றன. நான் இப்போது செயல்களைக் குறித்து முழுமையாக உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(24) ஒரு காகம், ஏதோ உணவை உண்ணும்போது, மீண்டும் மீண்டும் கரைந்து (தன் இனத்தைச் சேர்ந்த பிற காகங்களுக்கு) அந்த உணவின் இருப்பை அறிவிக்கிற வகையிலேயே நம் செயல்கள் அனைத்தும் இயற்கையின் அறிகுறிகளை மட்டுமே அறிவிக்கின்றன.(25) உயர்ந்ததும், தானே நிலைத்திருப்பதுமான இயற்கையை அறியாமல், அவளது {இயற்கையின்} மாறுபாடுகளை மட்டுமே அறிந்தவன், தனது அறியாமையின் விளைவால் திகைப்படைகிறான். எனினும், இயற்கை மற்றும் அதன் மாறுபாடுகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் ஒருவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(26) இருக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கையையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. இதில் ஒருவன் அடையும் தீர்மான உறுதியின் விளைவால் அவன் செருக்காலோ, ஆணவத்தாலோ ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(27) அறவிதிகள் அனைத்தின் தோற்றுவாயும் எதுவென நான் அறியும்போதும், அனைத்துப் பொருட்களின் நிலையில்லாமையையும் நான் அறியும்போதும், ஓ! சக்ரா, துயரில் ஈடுபட இயலாதவனாகிறேன். இவை அனைத்தும் ஓர் எல்லைக்குட்பட்டவையாக {முடிவு கொண்டவையாக} இருக்கின்றன.(28)
பற்றில்லாமல், செருக்கில்லாமல், ஆசையும், நம்பிக்கையும் {எதிர்பார்ப்பும்} இல்லாமல், கட்டுகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தோன்றுவதையும், மறைவதையும் பார்த்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் நான் என் காலத்தைக் கடத்தி வருகிறேன்.(29) ஓ! சக்ரா {இந்திரா}, ஞானம், தற்கட்டுப்பாடு, நிறைவு ஆகியவற்றைக் கொண்டவனும், ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாதவனும், தன்னறிவின் {சுயஞானத்தின்} ஒளியில் அனைத்துப் பொருட்களையும் காண்பவனுமான ஒருவனுக்கு எந்தத் தொல்லையோ கவலையோ இருக்காது.(30) இயற்கையின் மீதோ, அவளது {இயற்கையின்} மாற்றங்களின் மீதோ நான் எந்த விருப்பையோ, வெறுப்பையோ கொள்வதில்லை. இப்போது நான் ஒருவரையும் என் பகைவராகவோ, என் சொந்தக்காரனாகவோ காணவில்லை.(31) ஓ! சக்ரா, எக்காலத்திலும் நான் சொர்க்கத்திலோ, இவ்வுலகிலோ, பாதாள உலகங்களிலோ பேராசை கொள்ளவில்லை. ஆன்மாவைப் புரிந்து கொள்வதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்ற நிலையேதும் கிடையாது. ஆனால் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்த நிலையில் உள்ள ஆன்மாவால் பேரின்பத்தை அனுபவிக்க முடியாது. எனவே நான் எதையும் விரும்புவதில்லை” என்றான் {பிரஹலாதன்}[3].(32)சக்ரன் {இந்திரன் பிரஹலாதனிடம்}, “ஓ பிரஹலாதா, எந்த வழிமுறைகளின் மூலம் இவ்வகை ஞானத்தை அடையலாம், எதன் மூலம் இவ்வகை அமைதியை ஒருவன் தனதாக்கிக் கொள்ளலாம் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.(33)
பிரஹலாதன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, எளிமை, கவனமிக்கத் தன்மை, ஆன்மாவைத் தூய்மையாக்கல், ஆசைகளைத் திறமையாகக் கட்டுப்படுத்தல், பெரியோர்களுக்காகக் காத்திருத்தல் {பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல்} ஆகியவற்றின் மூலம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்லலாம்.(34) இயற்கையிலிருந்தே ஒருவன் ஞானம் அடைகிறான் என்பதையும், அதே காரணத்தின் மூலமே அமைதியையும் அடைகிறான் என்பதையும் அறிவாயாக. உண்மையில், அனைத்தையும் நீ இயற்கையின் மூலமே பார்க்கிறாய்” என்றான்.(35)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பிரஹலாதனால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து, உற்சாகமிக்க இதயத்துடன் அவ்வார்த்தைகளைப் பாராட்டினான்.(36) பிறகு, அந்த மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, தைத்தியர்களின் தலைவனை {பிரஹலாதனை} வழிபட்டு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் சொந்த வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்” என்றார் {பீஷ்மர்}.(37)
இந்திரனும் பலியும்! – சாந்திபர்வம் பகுதி – 223-இந்திரனுக்கும், பலிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பலியைத் தேடிய இந்திரன்; பிரம்மனிடம் விசாரித்தது; பலி இருக்கும் இடத்தைச் சொன்ன பிரம்மன்; கழுதையாகப் பிறந்திருந்த பலியைக் கண்ட இந்திரன் அவனை எள்ளி நகையாடியது; காலத்தின் வன்மை குறித்து இந்திரனுக்குப் பதிலளித்த பலி…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, செழிப்பை இழந்தவனும், காலத்தின் கனத்த தண்டத்தால் நொறுக்கப்பட்டவனுமான ஓர் ஏகாதிபதி, எவ்வகைப் புத்தியைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் அதற்கு மேலும் வாழ முடியும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனனின் மகனான பலிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) வாசவன், அசுரர்கள் அனைவரையும் அடைக்கிய பிறகு, ஒரு நாள், பிரம்மனிடம் சென்று, கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கி, பலி எங்கிருக்கிறான் என்பது குறித்து விசாரித்தான்.(3)
{இந்திரன் பிரம்மனிடம்}, “ஓ! பிரம்மா, தான் விரும்பிய அளவுக்குப் பெரிதாகத் தானம் செய்யப்பட்டாலும் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்த பலியை எங்குக் காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக.(4) அவன் காற்றின் தேவனாக இருந்தான். அவன் வருணனாக இருந்தான். அவன் சூரியனாக இருந்தான். அவன் சோமனாக இருந்தான். அனைத்து உயிரினங்களுக்கும் வெப்பமூட்டக்கூடிய அக்னியாக அவன் இருந்தான். (நம் அனைவரின் பயன்பாட்டுக்கான) நீராகவும் ஆனான். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்பதை நான் காணவில்லை.(5) முன்பு அவன் (சூரியனாக) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டி (மாலையில்) மறைந்தான். சோம்பலைக் கைவிட்ட அவன், உரிய காலங்களில் அனைத்து உயிரினங்களின் மீதும் மழையாகப் பொழிந்தான். அந்தப் பலியை நான் இப்போது காணவில்லை. ஓ! பிரம்மா, உண்மையில் இப்போது நான் அந்த அசுரர்களின் தலைவனை {பலியை} எங்கே காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)
பிரம்மன் {இந்திரனிடம்}, “ஓ! மகவத் {இந்திரா}, இப்போது நீ இவ்வாறு பலியைக் குறித்து விசாரிப்பது உனக்குத் தகாது. எனினும், ஒருவனால் கேட்கப்படும்போது மற்றொருவன் பொய் பேசக்கூடாது என்ற காரணத்தினால் நான் பலி எங்கிருக்கிறான் என்பதை உனக்குச் சொல்வேன்.(7) ஓ! சச்சியின் தலைவா, பலி இப்போது ஓட்டகங்களிலோ, காளைகளிலோ, கழுதைகளிலோ, குதிரைகளிலோ தன் பிறப்பை எடுத்து, தன் இனத்தில் முதன்மையானவனாக ஒரு வெற்று அறையில் இருக்கலாம்” என்றான்.(8)
சக்ரன் {இந்திரன்}, “ஓ! பிரம்மா, நான் பலியை ஒரு வெற்று அறையில் சந்தித்தால், அவனை நான் கொல்லவேண்டுமா? அல்லது விட வேண்டுமா? நான் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)
பிரம்மன், “ஓ சக்ரா, பலிக்குத் தீங்கிழைக்காதே. பலி மரணத்திற்குத் தகுந்தவனல்ல. ஓ வாசவா, ஓ சக்ரா {இந்திரா}, மறுபுறம், அவனிடம் அறநெறி குறித்த போதனையை நீ விருப்பத்துடன் வேண்ட வேண்டும்” என்றான்”.(10)
பீஷ்மர் தொடர்ந்தார், “தெய்வீகமான படைப்பாளனால் {பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்ட இந்திரன், பெரும் காந்தியுடன் கூடிய சூழ்நிலையில் ஐராவதத்தின் முதுகில் அமர்ந்து கொண்டு உலகத்தில் திரிந்தான்.(11) படைப்பாளன் சொன்னது போலவே அவன் {இந்திரன்}, ஒரு கழுதையின் வடிவத்தை உடுத்தி ஒரு வெற்று அறையில் வாழ்ந்திருந்த பலியைச் சந்தித்தான்.(12)
சக்ரன் {பலியிடம்}, “ஓ! தானவா, நீ இப்போது உமிகளை உணவாக உண்டு வாழும் ஒரு கழுதையாகப் பிறந்திருக்கிறாய். நீ இவ்வகையில் பிறந்தது நிச்சயம் ஓர் இழிநிலையே. இதற்காக நீ வருந்துகிறாயா? இல்லையா?(13) நான் இதற்கு முன் ஒருபோதும் காணாததைக் காண்கிறேன். செழிப்பு, நண்பர்கள் ஆகியவற்றை இழந்தவனாக, சக்தி மற்றும் ஆற்றல் குறைந்தவனாக உன் எதிரிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் உன்னை நான் காண்கிறேன்.(14) ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்களுடன் உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களை ஒன்றுமில்லாதவர்களாகக் கணக்கிட்டு முன்பு உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய். (15) உன்னையே தங்கள் பாதுகாவலனாகக் கருதிய தைத்தியர்கள், உன் ஆட்சியின் கீழ் வாழ்ந்தார்கள். உன் சக்தியின் மூலம், பூமியானது உழவுக்குக் காத்திராமலே பயிர்களை விளைவித்தது. எனினும், இன்றோ நீ பேரிடரில் மூழ்கியிருப்பதை நான் காண்கிறேன். இதற்காக நீ துன்புறுகிறாயா? இல்லையா?(16) முன்பு நீ செருக்கு படர்ந்த முகத்துடன், கிழக்குக் கடற்கரையில் உன் உற்றாருக்கு மத்தியில் பெருஞ்செல்வங்களைப் பிரித்துக் கொடுத்த போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(17)
முன்பெல்லாம் சுடர்மிக்கக் காந்தியுடன் இருந்த நீ உன் முன் நடனமிடும் ஆயிரக்கணக்கான தெய்வீகக் காரிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாய்.(18) அவர்கள் அனைவரும் தாமரை மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் தங்கத்தைப் போன்ற பிரகாசமிக்கத் தோழிகளையும் கொண்டிருந்தனர். ஓ! தானவர்களின் தலைவா, அப்போதெல்லாம் உன் மனநில்லை என்னவாக இருந்தது? இப்போது என்னவாக இருக்கிறது?(19) தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குடையை நீ கொண்டிருந்தாய். அந்நாட்களில் முழுமையாக நாற்பத்திரண்டாயிரம் கந்தர்வர்கள் உன் முன் நடனமிடுவார்கள்[1].(20) உன் வேள்விகளில் நீ மிகப் பெரியதும், முழுமையாகத் தங்கத்தாலானதுமான யூபத்தைக் கொண்டிருந்தாய். அத்தகைய தருணங்களில் நீ ஆயிரம் லட்சம் பசுக்களைத் தானமாக அளித்தாய். ஓ! தைத்தியா, அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(21) முன்பு நீ வேள்வியில் ஈடுபட்டு, சம்யையைச் சுழற்றும் விதியைப் பின்பற்றி முழுப் பூமியையும் வலம் வந்தாய். அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?[2](22) நான் இப்போது அந்தத் தங்கக் கலனையோ {தங்க ஜாடியையோ}, உனது குடையையோ, உனது விசிறிகளையோ காணவில்லை. மேலும், ஓ! அசுரர்களின் மன்னா, பெரும்பாட்டனால் {பிரம்மனால்} உனக்குக் கொடுக்கப்பட்ட உன் மலர்மாலையையும் நான் காணவில்லை” என்றான் {இந்திரன்}.(23)பலி {இந்திரனிடம்}, “ஓ! வாசவா {இந்திரா}, நீ இப்போது என் கலனையும், குடையையும், விசிறிகளையும் காணவில்லை. பெரும்பாட்டனால் எனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட எனது மலர்மாலையையும் நீ காணவில்லை.(24) நீ கேட்கும் அந்த என் மதிப்புமிக்க உடைமைகள் இப்போது ஒரு குகையின் இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் என் நேரம் வரும்போது நான் அவற்றை நிச்சயம் காண்பேன்.(25) எனினும், இந்த உன் நடத்தை உன் புகழுக்கோ, பிறப்புக்கோ தகுந்ததல்ல. செழிப்பில் இருக்கும் நீ, வறுமையில் மூழ்கியிருக்கும் என்னைக் கேலி செய்ய விரும்புகிறாய்.(26) ஞானத்தை அடைந்தவர்கள், அதன் மூலம் நிறைவை அடைந்தவர்கள், அமைதிமிக்க ஆன்மாக்கள், உயிரினங்களுக்கு மத்தியில் அறவோராகவும், நல்லோராகவும் இருப்பவர்கள், ஒருபோதும் துயரில் துன்புறுவதோ, இன்பத்தில் மகிழ்வதோ கிடையாது.(27) எனினும், ஓ! புரந்தரா, இழிபுத்தியினாலே நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடுகறாய். என்னைப் போல நீ ஆகும்போது, இது போன்ற பேச்சுகளில் நீ ஈடுபடமாட்டாய்” என்றான் {பலி}” என்றார் {பீஷ்மர்}.(28)
காலம்! – சாந்திபர்வம் பகுதி – 224-வாழும் உயிரினங்கள் இதையும், அதையும் தாங்களே செய்வதாகத் தற்புகழ்ச்சி செய்து கொண்டாலும், அனைத்துப் பொருட்களைப் படைப்பதும் அழிப்பதும் காலமே என்ற உண்மையை இந்திரனுக்குப் பலி விளக்கியதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த பலியைக் கண்டு சிரித்த சக்ரன் {இந்திரன்}, தான் முன்பு சொன்னதைவிடக் கூர்மையான ஒன்றைச் சொல்ல அவனிடம் மீண்டும் பேசினான்.(1)
சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “முந்தைய காலத்தில், ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்கள் புடைசூழ, உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களைப் புல்லாக மதித்து, உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய்.(2) எனினும், இப்போது நீ உற்றார் மற்றும் நண்பர்கள் ஆகிய இருவராலும் கைவிடப்பட்டிருக்கிறாய். உனக்கு நேர்ந்திருக்கும் இந்த வருந்தத்தக்க நிலையைக் கண்டு, நீ துயருறுகிறாயா? இல்லையா?(3) முன்பு உலகங்கள் முழுவதும் உன் ஆட்சியின் கீழ் இருந்தன, உன் இன்பமும் பெரிதாக இருந்தது. புற காந்தியில் உனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சிக்காக நீ துயருறுகிறாயா? இல்லையா? என நான் கேட்கிறேன்” என்று கேட்டான்.(4)
பலி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, உண்மையில், காலத்தின் போக்கில் அவை யாவற்றையும் நிலையற்றதாகக் கருதுவதால் நான் துயருறவில்லை. இந்தப் பொருட்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது.(5) ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்கள் கொண்டிருக்கும் இவ்வுடல்கள் அனைத்தும் நிலையற்றவையாகும். ஓ! சக்ரா, இந்தக் காரணத்தினால் (இந்த என் கழுதைத் தோற்றத்திற்காக) நான் வருந்தவில்லை. இந்த வடிவமும் என் தவறு எதனாலும் ஏற்படவில்லை.(6) இயக்கக் கோட்பாடும், உடலும் தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே ஒன்றாகின்றன. அவை ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே அழிவை அடைகின்றன.(7) இருப்பினும், இவ்வடிவை {கழுதை வடிவை} ஏற்ற நான், நிரந்தரமாக இதனுடனே பிணைக்கப்பட்டிருக்கவில்லை. ஞானத்தின் விளைவாக இஃதை அறிந்திருப்பதால் கவலைக்கான எந்தக் காரணமும் எனக்கில்லை.(8) ஆறுகள் அனைத்தின் இறுதி ஓய்விடமாகப் பெருங்கடல் இருப்பதைப் போல, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தின் கதியும் மரணம்தான். ஓ! வஜ்ரதாரியே, இதை நன்கறிந்த மனிதர்கள் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(9) எனினும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் தீர்மான இழப்பில் மூழ்குபவர்கள், இஃதை அறிவதில்லை. புத்தியை இழந்தவர்கள் பேறின்மையுடைய கனத்தின் அடியில் மூழ்கித் தொலைகிறார்கள்.(10)
கூரிய புத்தியை அடையும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் அழிப்பதில் வெல்கிறான். பாவமற்ற ஒருவன் நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} அடைந்து, அஃதை அடைந்ததன் மூலம் உற்சாகம் நிறைந்தவனாகிறான்.(11) எனினும், நல்லியல்பின் குணத்தில் இருந்து வழுவி மீண்டும் மீண்டும் மறுபிறப்பை அடைபவர்கள், ஆசை மற்றும் புலன்நுகர் பொருட்களால வழிநடத்தப்பபட்டு, கவலை மற்றும் துயரில் ஈடுபடும் கடப்பாட்டை அடைகிறார்கள்.(12) ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைவதில் வெற்றி, அல்லது தோல்வி, வாழ்வு, அல்லது மரணம், இன்பம், அல்லது துன்பத்தைக் கொடுக்கும் செயல்பாட்டின் கனிகள் ஆகியவற்றை நான் வெறுப்பதோ, விரும்புவதோ இல்லை.(13) ஒருவன் மற்றொருவனைக் கொல்லும்போது, அவன் அந்த மற்றொருவனின் உடலை மட்டுமே கொல்கிறான். தானே மற்றொருவனைக் கொன்றதாக நினைக்கும் மனிதன், தானே கொல்லப்படுகிறான். உண்மையில், அவர்களில் கொல்பவன் மற்றும் கொல்லப்படுபவன் ஆகிய இருவரும் உண்மையை அறியாதவர்களே[1].(14) ஓ! மகவத் {மகவான் / இந்திரா}, எவன் கொன்றானோ, அல்லது தன் ஆண்மையைத் தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்காக எவரையும் வென்றானோ, அவன், தான் செயல்படுபவனல்ல, (தான் எதைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறானோ) அது (முற்றிலும் வேறுபட்ட) உண்மையான இயக்குனரால் {கர்த்தாவால்} நிறைவேற்றப்பட்டது என்பதை அறியவேண்டும்.(15)இவ்வுலகில் உள்ள பொருட்களைப் படைப்பதற்கும், அழிப்பதற்கும் காரணமாக இருப்பது யார் என்ற கேள்வி எழும்போது, (தானே உண்டான, அல்லது தன்னைத் தானே படைத்துக் கொண்ட) எவனோ ஒருவன் அச்செயலுக்குக் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும், அவ்வாறு கருதப்படுபவன் (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) ஒரு படைப்பாளனைக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவாயாக.(16) பூமி, ஒளி அல்லது வெப்பம், வெளி, நீர், ஐந்தாவதாகக் காற்று ஆகிய இவற்றிலிருந்தே அனைத்து உயிரினங்களும் எழுகின்றன. (இஃது என்னால் அறியப்பட்டிருக்கும்போது, என் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்காக) என்ன துயரத்தை நான் உணர்வேன்?(17) பெரும் கல்வியைக் கொண்டவன், அதிகம் கல்லாதவன், பலம் கொண்டவன், பலமற்றவன், மேனி அழகுடையவன், கோரமானவன், நற்பேற்றைக் கொண்டவன், பேறற்றவன்(18) ஆகியோர் அனைவரும், அளக்க முடியாத ஆழம் கொண்ட காலத்தின் சக்தியால் அடித்துச் செல்லப் படுகிறார்கள். காலத்தால் நான் வெல்லப்பட்டேன் என்பதை நான் அறியும்போது, (என் சூழ்நிலைகளில் உள்ள இந்த மாற்றத்திற்காக) என்ன துயரத்தை நான் உணர்வேன்?(19) எதையும் எரிக்கும் ஒருவன், ஏற்கனவே எரிக்கப்பட்டதையே எரிக்கிறான். கொல்பவன், ஏற்கனவே கொல்லப்பட்ட ஒன்றை மட்டுமே கொல்கிறான். அழிவடைந்த ஒருவன், ஏற்கனவே அழிக்கப்பட்டவனாவான். ஒருவனால் அடையப்பட்ட பொருள், அவன் அஃதை அடையும் நோக்கத்திற்காகவே ஏற்கனவே வந்திருந்தது.(20)
இந்தக் காலமானது ஒரு பெருங்கடலைப் போன்றதாகும். அதில் எந்தத் தீவும் கிடையாது. உண்மையில் அதன் மறுகரை எங்கே இருக்கிறது? அதன் எல்லைகளைக் காண முடியாது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தாலும், அனைத்துப் பொருட்களின் பேரியக்கமாக இருப்பதும், நிச்சயமாக தெய்வீகமானதுமான இந்தத் தொடரோடையின் எல்லையை என்னால் காண முடியவில்லை. (21) ஓ! சச்சியின் தலைவா, காலமே அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளாமல் இருந்தால், ஒருவேளை நான் மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகிய உணர்வுகளை உணர்ந்திருப்பேன்.(22) உமியை உண்டு வாழ்வதும், மனிதர்களின் வசிப்பிடங்களில் இருந்து தனியான ஓரிடத்தில் தன் நாட்களை இப்போது கழித்துக் கொண்டிருப்பதுமான கழுதையின் வடிவை நான் இப்போது சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதை உறுதி செய்து கொண்டு, நீ என்னை நிந்திக்க வந்திருக்கிறாயா?(23) எந்த வடிவங்களைக் கண்டால், நீ என் முன்னிலையில் இருந்து வெகுவிரைவாக ஓடிவிடுவாயோ, அந்தப் பயங்கர வடிவங்களை இப்போதும் நான் விரும்பினால் என்னால் ஏற்க முடியும்.(24) காலமே அனைத்தையும் கொடுக்கிறது, மீண்டும் அதுவே அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது. காலமே அனைத்துப் பொருட்களையும் விதிக்கிறது. ஓ! சக்ரா, உன் ஆண்மை குறித்துத் தற்புகழ்ச்சி செய்யாதே.(25)
ஓ! புரந்தரா, முற்காலதில் நான் கோபப்படும் தருணங்களில் அனைத்தும் கலக்கமடையும். எனினும், ஓ! சக்ரா, இவ்வுலகில் அனைத்துப் பொருட்களின் நித்திய குணத்தை {ஸனாதனமான தர்மத்தை} நான் அறிந்திருக்கிறேன்.(26) நீயும் உண்மையை அறிவாயாக. ஆச்சரியத்தால் நிறையாதே. செழிப்பும், அதன் தோற்றமும் ஒருவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதில்லை.(27) உன் மனம் ஒரு குழந்தையுடைய மனம் போல் இருப்பதாகத் தெரிகிறது. அது முன்பு போலவே இன்னும் இருக்கிறது. ஓ! மகவத் {மகவான் / இந்திரா}, உன் கண்களைத் திறந்து, உறுதியுணர்வு மற்றும் வாய்மையில் நிறுவப்பட்ட புத்தியைப் பின்பற்றுவாயாக.(28) தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் சென்ற காலங்களில் என் ஆட்சியின் கீழ் இருந்தார்கள். ஓ! வாசவா {இந்திரா}, இதை நீ அறிவாய்.(29) அறியாமையால் திகைப்படைந்த புத்தியைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும், “விரோசனனின் மகனான பலி இப்போது எந்தத் திசைப்புள்ளியில் இருப்பானோ, அதை வணங்குகிறேன்” என்று சொல்லி என்னைத் துதித்தன.(30)
ஓ! சச்சியின் தலைவா, (இப்போது கிடைக்காத) அந்த மரியாதையை நினைத்து ஒருபோதும் நான் வருந்துவதில்லை. எனது இந்த வீழ்ச்சிக்காக நான் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. இயக்குபவனுடைய ஆளுகைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வேன் என்பதில் என் புத்தி உறுதியாக இருக்கிறது.(31) உன்னதப் பிறப்பு, அழகிய பண்புகள், பேராற்றல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் கூடியவனுமான எவனோ ஒருவன், அவலநிலையில் வாழும் நிலை காணப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதாலேயே இது நேர்கிறது[2].(32) அதே போலவே, ஓ சக்ரா, உன்னதமற்ற குலத்தில் பிறந்தவனும், அறிவற்றவனும், பிறப்பில் களங்கமுடையவனுமான எவனோ ஒருவன், தன் ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் காணப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்பட்டதாலேயே இதுவும் நேர்கிறது.(33) ஓ சக்ரா, மங்கலமான ஓர் அழகிய பெண்மணி, அவலநிலையில் தன் வாழ்வைக் கடத்துவதைக் காண முடிகிறது. அதேபோலவே, அனைத்து மங்கலமற்ற குறிகளையும் கொண்ட, கோரமான ஒரு பெண் பேரின்பத்தில் தன் நாட்களைக் கடத்துவதும் காணப்படுகிறது.(34) ஓ! சக்ரா, நம் செயல்பாடுகள் எதனாலும் நாம் இந்நிலையை அடையவில்லை. ஓ! வஜ்ரபாணியே, நீ இப்போது இருக்கும் இந்நிலை உனது எந்தச் செயலாலும் உண்டானதில்லை.(35)ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே}, நீ இப்போது அனுபவிக்கும் இந்தச் செழிப்புக்குக் காரணமாக இருக்கும் எந்தச் செயலையும் நீ செய்யவில்லை. இப்போதைய எனது செழிப்பற்ற நிலைக்குக் காரணமாக இருக்கும் எதையும் நானும் செய்யவில்லை. செழிப்பும், வறுமையும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்கின்றன.(36) காந்தியில் சுடர்விடுபவனாக, செழிப்புடையவனாக, அழகைக் கொண்டவனாக, தேவர்கள் அனைவருக்கும் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்டவனாக, என்னிடம் முழங்கிக் கொண்டிருப்பவனாக இப்போது நான் உன்னைக் காண்கிறேன்.(37) காலமே என்னைத் தாக்கி நிற்கிறது என்ற உண்மையைத் தவிர இதில் வேறொன்றுமில்லை. உண்மையில், காலம் என்னைத் தாக்காதிருந்தால், நீ கையில் வஜ்ரம் தரித்தவனாகவே இருந்தாலும் கூட, என் புறங்கையின் ஒரே குத்தில் இன்று உன்னை வீழ்த்திக் கொன்றிருப்பேன்.(38) எனினும், இஃது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான காலமில்லை. மறுபுறம், அமைதியான நடத்தையைப் பின்பற்றுவதற்கான காலமே வாய்த்திருக்கிறது. காலமே அனைத்துப் பொருட்களையும் நிறுவுகிறது. காலமே அனைத்துப் பொருட்களிலும் இயங்கி, அவற்றின் இறுதி உறவிற்கு அவற்றை வழிநடத்துகிறது[3].(39) நான் தானவர்களால் வழிபடப்பட்ட அவர்களுடைய தலைவனாவேன். என் சக்தியால் அனைத்தையும் எரித்தபடி, பலத்துடனும், செருக்குடனும் நான் முழங்கிக் கொண்டிருந்தேன். {அப்படிப்பட்ட} என்னையே காலம் தாக்கியிருக்கும்போது, எவன்தான் அதனால் தாக்கப்படாதிருப்பான்?(40)சிறப்புமிக்க ஆதித்தியர்களில் ஒருவனான உன்னையும் சேர்த்து, அவர்களில் பன்னிருவரின் சக்தி அனைத்தையும் முற்காலத்தில் தனியாக நான் தாங்கினேன்.(41) ஓ! வாசவா, நீரைத் தாங்கிப் பிடித்து மழையாகவும் நானே பொழியச்செய்தேன். மூவுலகங்களுக்கமான ஒளியையும், வெப்பத்தையும் நானே கொடுத்து வந்தேன்.(42) நானே பாதுகாப்பவனாகவும், அழிப்பவனாகவும் இருந்தேன். நானே கொடுப்பவனாகவும், எடுப்பவனாகவும் இருந்தேன். நானே கட்டுபவனாகவும், கட்டறுப்பவனாகவும் இருந்தேன். அனைத்து உலகங்களிலும் நானே பலமிக்க ஒரு தலைவனாக இருந்தேன்.(43) ஓ! தேவர்களின் தலைவா, அப்போது நான் கொண்டிருந்த அரசாட்சி இப்போது என்னிடம் இல்லை. நான் இப்போது காலத்தின் சக்திகளால் தாக்கப்படுகிறேன். எனினும், அப்பொருட்கள் இப்போது என்னில் ஒளிரவில்லை.(44) (வெளிப்படையாக என்னால் செய்யப்படும் செயல்களையும்) செய்பவன் நானில்லை. (உன்னால் செய்யப்படும் செயல்களையும்) செய்பவன் நீயில்லை. ஓ! சச்சியின் தலைவா, (அந்தச் செயல்களைச்) செய்பவன் வேறு எவனும் இல்லை. ஓ! சக்ரா, காலமே அனைத்துப் பொருட்களையும் பாதுகாக்கவும், அழிக்கவும் செய்கிறது.(45)வேதங்களை அறிந்த மனிதர்கள் காலமே (நித்தியமானதே) பிரம்மம் என்று சொல்கின்றனர். பிறைநாட்களும் {பக்ஷங்களும்}, மாதங்களும் அதன் உடலாகும். அந்த உடல், பகல்களையும், இரவுகளையும் தன் ஆடைகளாகக் கொண்டிருக்கிறது. பருவகாலங்களே அதன் புலன்களாகும். வருடமே அதன் வாயாகும்.(46) சிலர், இவை அனைத்தையும் (இந்த மொத்த அண்டத்தையும்) பிரம்மமாகவே காண வேண்டும் என்று தங்கள் மேன்மையான புத்தியின் விளைவால் சொல்கின்றனர். எனினும், வேதங்களோ, ஆன்மாவின் ஐந்து உறைகளே பிரம்மமாகக் கருதப்பட வேண்டும் எனப் போதிக்கின்றன.(47) பிரம்மமானது, பரந்த நீர்ப்பரப்பைக் கொண்ட பெருங்கடலைப் போல ஆழமானதும், அடைதற்கரியதுமாகும். அதற்குத் தொடக்கமோ முடிவோ இல்லை, அஃது அழியத்தகாததும் {ஆன்மாவாகவும்}, அழியத்தக்கதுமாக {பிரபஞ்சமாகவும்} இருக்கிறது என்று சொல்லப்படுகிறது[4].(48) அது தானே குணங்களற்றதாக இருப்பினும், இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அந்தந்தப் பொருளுக்குரிய குணங்களை ஏற்கிறது. வாய்மையை அறிந்தோர் பிரம்மத்தை நித்தியமானதாகக் கருதுகிறார்கள்.(49) அறியாமையுடன் கூடிய செயல்பாட்டின் மூலம், அந்தப் பிரம்மம், (ஞானத்தை மட்டுமே குணமாகக் கொண்ட) பொருளற்ற ஆவியான சித் அல்லது ஆன்மாவுக்குரிய பொருட்பாட்டுக் குணங்களை உண்டாக்குகிறது. எனினும், அனைத்தின் உண்மைக் காரணம் குறித்த அறிவு தோன்றும்போது, அந்தப் பொருட்பாடு ஆன்மாவுக்கு உரியதாக இல்லாமல் போவதால், அஃது {அந்தப் பொருட்பாடு} ஆன்மாவின் இன்றியமையாத குணமல்ல என்றாகிறது[5].(50)காலத்தின் வடிவிலுள்ள பிரம்மமே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கிறது. அந்தக் காலத்தைக் கடந்து எங்கே நீ செல்வாய்? உண்மையில், ஓடுவதாலோ நிற்பதாலோ காலம், அல்லது பிரம்மத்தைத் தவிர்க்க முடியாது.(51) ஐம்புலன்கள் அனைத்தும் பிரம்மத்தை உணர இயன்றவை அல்ல. சிலர் பிரம்மத்தை நெருப்பு {அக்னி} என்று சொல்கிறார்கள்; சிலர் பிரஜாபதி என்றும்;(52) சிலர் பருவகாலங்கள் என்றும்; சிலர் மாதம் என்றும்; சிலர் பிறைநாட்கள் {பக்ஷம்} என்றும்; சிலர் நாட்கள் என்றும்; சிலர் மணிநேரங்கள் என்றும்; சிலர் முற்பகல் என்றும், சிலர் நன்பகல் என்றும்; சிலர் பிற்பகல் என்றும்;(53) சிலர் கணம் என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு ஒன்றேயான அதைக் குறித்துப் பலவாறாகப் பல்வேறு மக்கள் பேசுகிறார்கள். அது {பிரம்மம்} நித்தியமானதென்றும், அனைத்துப் பொருட்களையும் ஆள்வதென்றும் அறிவாயாக.(54) ஓ! வாசவா, பெரும் பலத்தையும், பேராற்றலையும் கொண்ட பல்லாயிரம் இந்திரர்கள் கடந்து சென்று விட்டார்கள். ஓ! சச்சியின் தலைவா, நீயும் அவ்வழியிலேயே கடந்து செல்வாய்.(55)
உனக்கான காலம் வரும்போது, ஓ! சக்ரா, அனைத்திலும் வலிமையான காலமானது, பெருகும் வலிமையைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனாக இருப்பவனுமான உன்னையும் கூட அழித்துவிடும்.(56) காலம் அனைத்துப் பொருட்களையும் அடித்துச் செல்கிறது. இக்காரணத்தினால், ஓ! இந்திரா, நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடாதே. உன்னாலோ, என்னாலோ, நமக்குமுன்பு சென்றுவிட்டவர்களாலோ காலம் அடக்கப்பட முடியாததாகும்.(57) ஒப்பிலாததாக உன்னால் கருதப்படுவதும், நீ அடைந்திருப்பதுமான இந்த அரச செழிப்பானது, முன்பு என்னால் கொள்ளப்பட்டிருந்தது. இது திடமற்றதும், உண்மையற்றதுமாகும் {போலியானதுமாகும்}. இவள் {செழிப்பின் தேவி} நீண்டகாலம் ஓரிடத்தில் இருப்பதில்லை.(58) உண்மையில், உனக்கு முன்பிருந்தவர்களும், உன்னிலும் மிக மேன்மையானவர்களுமான ஆயிரக்கணக்கான இந்திரர்களிடம் இவள் வசித்திருந்தாள். ஓ! தேவர்களின் தலைவா, நிலையற்றவளான இவள், என்னைக் கைவிட்டு இப்போது உன்னிடம் வந்திருக்கிறாள்.(59) ஓ! சக்ரா, இத்தகைய தற்புகழ்ச்சியில் மீண்டும் ஈடுபடாதே. நீ அமைதிநிலையை அடைவதே உனக்குத் தகும். வீண் தற்பெருமை கொண்டவனாக உன்னை அவள் {செழிப்பின் தேவியானவள்} அறிந்தால், வெகு விரைவில் உன்னைக் கைவிடுவாள்” என்றான் {பலி}” {என்றார் பீஷ்மர்}.(60)
ஸ்ரீ! – சாந்திபர்வம் பகுதி – 225-பலியின் உடலில் இருந்து வெளியேறிய பெண்ணிடம் அவள் யார் என்பதைக் கேட்ட இந்திரன்; பலியின் உடலைவிட்டு வெளியேறிய காரணத்தைச் சொன்ன ஸ்ரீ; ஸ்ரீயை நான்கு இடங்களில் பிரித்து நிறுவிய இந்திரன்; ஸ்ரீக்கு எதிராகக் குற்றமிழைப்போரைத் தண்டிக்கப்போவதாகச் சொன்ன இந்திரன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அதன்பிறகு, உயர் ஆன்ம பலியின் வடிவத்தில் இருந்து, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய உடலுடன் செழிப்பின் தேவி வெளிவருவதை நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கண்டான்.(1) பாகனைத் தண்டித்தவனான அந்தச் சிறப்புமிக்கவன், ஒளியுடன் சுடர்விடும் அந்தத் தேவியைக் கண்டு, ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன், பலியிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(2)
சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “ஓ! பலியே, உன் உடலில் இருந்து வெளிப்படும் தன் சக்தியின் விளைவால் இவ்வாறு காந்தியுடன் சுடர்விடுபவளும், மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவளும், தோள்வளைகளை அணிந்தவளும், அனைத்துப் பக்கங்களிலும் மகிமையின் ஒளியை வெளியிடுபவளுமான இவள் யார்?” என்று கேட்டான்.(3)
பலி {இந்திரனிடம்}, “இவள் அசுர வனிதையா, தேவியா, மனிதப் பிறவியா என்பதை நானறியேன். நீ இவளிடம், கேட்கலாம், அல்லது கேட்காமலும் இருக்கலாம். உனக்கு விருப்பமானதைச் செய்வாயாக” என்றான்.(4)
சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இத்தகைய ஒளியுடன் கூடியவளும், மகுடம் சூடியவளும், பலியின் உடலில் இருந்து இவ்வாறு வெளிவந்தவளுமான நீ யார்? நான் உன்னை அறியேன். கருணைகூர்ந்து எனக்கு உன் பெயரைச் சொல்வாயாக.(5) உண்மையில், தைத்தியர்களின் தலைவனைக் {பலியைக்} கைவிட்டு வந்த மாயா தேவியைப் போல, சுயகாந்தியில் சுடர்விட்டுக் கொண்டு இங்கே நிற்கும் நீ யார்? ஓ! கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக” என்றான்.(6)
ஸ்ரீ {செழிப்பின் தேவி / லட்சுமி}, “விரோசனன் என்னை அறியமாட்டான். விரோசனனின் மகனான இந்தப் பலியும் என்னை அறியமாட்டான். கல்விமான்கள் என்னைத் துஸ்ஸஹை என்ற பெயரைச் சொல்லி அழைத்தார்கள்[1]. சிலர் என்னை விதித்ஸை என்ற பெயரில் அறிவார்கள்[2].(7) ஓ! வாசவா, எனக்கு வேறு பெயர்களும் உண்டு. அவை பூதி, லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ என்பவையாகும்[3]. ஓ சக்ரா, நீயும் என்னை அறியமாட்டாய். தேவர்களில் எவரும் என்னை அறியமாட்டார்கள்” என்றாள்.(8)சக்ரன் {செழிப்பின் தேவியான ஸ்ரீயிடம்}, “ஓ! சுமக்கக் கடினமான பெண்ணே, நீண்ட காலம் பலிக்குள் வாழ்ந்திருந்த நீ இப்போது ஏன் அவனைவிட்டு அகன்று செல்கிறாய்? இஃது என் செயலின் நிமித்தமாக நேர்கிறதா? அல்லது பலி செய்த எந்தச் செயலுக்காகவாவது நேர்கிறதா?” என்று கேட்டான்.(9)
ஸ்ரீ {இந்திரனிடம்}, “படைப்பாளனோ, விதி சமைப்பவனோ என்னை ஆள்வதில்லை. காலமே என்னை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்கிறது. ஓ! சக்ரா, பலியை அவமதியாதே” என்றாள்.(10)
சக்ரன் {ஸ்ரீயிடம்}, “ஓ! மகுடத்தால் அலங்கரிக்கப்பட்ட தேவி, என்ன காரணத்திற்காக நீ பலியைக் கைவிடுகிறாய்? (என்னுடன் வாழ்வதற்காக) ஏன் என்னை நீ அணுகுகிறாய்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(11)
ஸ்ரீ {இந்திரனிடம்}, “வாய்மை, கொடைகள், நன்னோன்புகள், தவங்கள், ஆற்றல் மற்றும் அறம் ஆகியவற்றில் நான் வாழ்கிறேன். பலி இவை அனைத்தில் இருந்து வீழ்ந்துவிட்டான்.(12) முன்பு அவன் பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு மிக்கவனாக இருந்தான். அவன் உண்மைநிறைந்தவனாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான். எனினும், பின்னாட்களில் அவன் பிராமணர்களிடம் பகையுணர்வை வளர்த்தான், மேலும் தெளிந்த நெய்யை அழுக்கான கரங்களுடன் தீண்டினான்[4].(13) முன்பு அவன் எப்போதும் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுவான். இறுதியாக, காலத்தால் பீடிக்கப்பட்டு அறியாமையில் குருடான அவன், என்னை இடையறாமல் துதிப்பதாக அனைவரிடமும் தற்புகழ்ச்சி செய்யத் தொடங்கினான்.(14) ஓ! சக்ரா, (இந்தக் குற்றங்களுக்காக) இவனைக் கைவிடும் நான், இதுமுதல் உன்னிடம் வசிக்கப் போகிறேன். நீ கவனமாகவும், தவங்கள் மற்றும் ஆற்றலுடனும் என்னைச் சுமக்க வேண்டும்” என்றாள்.(15)
சக்ரன், “ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, உன்னை எப்போதும் சுமப்பதற்குத் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் ஒருவர் கூட இல்லை” என்றான்.(16)
ஸ்ரீ, “ஓ! புரந்தரா {இந்திரா}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், அல்லது ராட்சசர்களில் எவராலும் என்னை எப்போதும் சுமக்க முடியாது” என்றாள்.(17)
சக்ரன், “ஓ மங்கலமான பெண்ணே, நீ எப்போதும் என்னிடமே வசிப்பதற்கு நான் என் நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் ஆணைகளை ஏற்பேன். எனக்கு உண்மையாகப் பதிலளிப்பதே உனக்குத் தகும்” என்றான்.(18)
ஸ்ரீ, “ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன்னுடன் எவ்வாறு இருக்க முடியும் என்பதைச் சொல்கிறேன். வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதியின் படி என்னை நான்கு பகுதிகளாகப் பிரிப்பாயாக” என்றாள்.(19)
சக்ரன், “நான் என் சக்திக்கும் பலத்துக்கும் தக்கபடியான வசிப்பிடங்கள் உனக்கு ஒதுக்குகிறேன். ஓ! லக்ஷ்மி, என்னைப் பொருத்தவரையில், எவ்வழியிலாவது உனக்குக் குற்றமிழைக்காதவாறு எப்போதும் கவனத்துடன் இருக்கப் போகிறேன்.(20) மனிதர்களுக்கு மத்தியில் உள்ளவளும், அனைத்துப் பொருட்களின் மூதன்னையுமான பூமியானவள் அவர்கள் அனைவரையும் சுமக்கிறாள். அவள் உன்னில் நான்கில் ஒரு பகுதியைச் சுமப்பாள். அதற்கான பலம் அவளுக்கு இருக்கிறதென நான் நினைக்கிறேன்” என்றான்.(21)
ஸ்ரீ, “இதோ என்னில் ஒரு கால் பகுதியைக் கொடுத்தேன். இது பூமியில் நிறுவப்படட்டும். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இரண்டாம் பகுதிக்கு உரிய நிலையை அமைப்பாயாக” என்றாள்.(22)
சக்ரன், “மனிதர்களுக்கு மத்தியில் உள்ள திரவ வடிவில் உள்ள நீர்நிலைகள் மனிதர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்கின்றன. அந்த நீர் நிலைகள் உன் மேனியின் நான்கில் ஒரு பகுதியைச் சுமக்கட்டும். உன்னில் ஒரு பகுதியைச் சுமக்கும் பலம் அவற்றுக்கு இருக்கிறது” என்றான்.(23)
ஸ்ரீ, “நீர்நிலைகளில் நிறுவப்படுவதற்காக எனது மற்றொரு கால்பகுதியையும் நான் கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன் பிறகு, எனது மூன்றாம் பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக” என்றாள்.(24)
சக்ரன், “வேதங்கள், வேள்விகள் ஆகியவையும், தேவர்கள் அனைவரும் நெருப்பிலேயே நிறுவப்பட்டுள்ளனர். உனது மூன்றாம் பகுதியை நெருப்பில் இடும்போது அதனை அது சுமக்கும்” என்றான்.(25)
ஸ்ரீ, “நெருப்பிலிடப்போகும் எனது மூன்றாம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இறுதி பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக” என்றாள்.(26)
சக்ரன், “நல்லோர், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோர், பேச்சில் உண்மை நிறைந்தோர் ஆகியோர் உன்னில் நான்காம் பகுதியைச் சுமக்கட்டும். அதைச் சுமக்கும் சக்தி நல்லோருக்குண்டு” என்றான்.(27)
ஸ்ரீ, “நல்லோருக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட இருக்கும் எனது நான்காம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, பல்வேறு உயிரினங்களுக்கு என் பகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன, நீ என்னைத் தொடர்ந்து பாதுகாப்பாயாக” என்றாள்.(28)
சக்ரன், “எனது இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக. நான் இவ்வாறே உன்னைப் பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அந்த உயிரினங்களுக்கு மத்தியில் உனக்கு எதிராகக் குற்றமிழைப்போர் என்னால் தண்டிக்கப்படுவார்கள்” என்றான்.
தைத்தியர்களின் தலைவன் பலி, ஸ்ரீயால் இவ்வாறு கைவிடப்பட்ட பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(29)
பலி, “தற்போது சூரியன், மேற்கைப் போலவே கிழக்கிலும், தெற்கைப் போலவே வடக்கிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(30) எனினும், இந்தச் சூரியன் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, சுமேருவுக்கு மத்தியில் உள்ள பிரம்மலோகத்தில் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும்போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நேரப்போகும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் முறியடிப்பேன்.(31) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு பிரம்மலோகத்தில் மட்டுமே நிலையாக ஒளிரும்போதும் மீண்டும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கு இடையில் தோன்றும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொள்வேன்” என்றான்[4].(32)சக்ரன் {பலியிடம்}, “பிரம்மன் உன்னை ஒருபோதும் கொல்லக்கூடாது என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஓ! பலியே இந்தக் காரணத்தினாலேயே நான் உன் தலையில் என் வஜ்ரத்தை வீசாமல் இருக்கிறேன்.(33) ஓ! தைத்தியர்களின் தலைவா, நீ விரும்பும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பேரசுரா, உன்னில் அமைதி நிலைக்கட்டும். நெடுங்கோட்டில் {தீர்க்கரேகையில்} மட்டுமே சூரியன் ஒளிரும் எந்தக் காலமும் நேராது.(34) சூரியனின் இயக்கத்தை முறைப்படுத்தும் சட்டங்களை ஏற்கனவே சுயம்பு (பிரம்மன்) விதித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களுக்கும் ஒளியையும், வெப்பத்தையும் கொடுத்தபடியே அவன் {சூரியன்} இடையறாமல் இயங்குவான்.(35) ஆறு மாதங்கள் வடக்கு நோக்கிய {உத்தராயண} போக்கிலும், அடுத்த ஆறு மாதங்கள் தெற்கு நோக்கிய {தக்ஷிணாயணப்) போக்கிலும் அவன் {சூரியன்} பயணிப்பான். சூரியன் (ஒன்றன்பின் ஒன்றாக) இவ்வழியிலேயே பயணித்து, உயிரினங்கள் அனைத்திற்காகக் குளிர்காலத்தையும் வெயில் காலத்தையும் உண்டாக்குவான்” என்றான்”.(36)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட தைத்தியர்களின் தலைவனான பலி, தெற்கு நோக்கிச் சென்றான். புரந்தரன் வடக்கு நோக்கிச் சென்றான்.(37) ஆயிரங்கண் இந்திரன், முற்றிலும் செருக்கற்ற வகையில் அமைந்த பலியின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு வானத்திற்கு உயர்ந்தான்” {என்றார் பீஷ்மர்}.(38)
நமுசியின் ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 226- இந்திரனுக்கும், நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சோகத்தை விலக்க வேண்டிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்ன நமுசி…
[1]பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் மரணம் குறித்து அறிந்தவனான அசுரன் நமுதி, செழிப்பை இழந்தவனாக இருந்தும், முற்றிலும் அசைவற்றதாக இருக்கும் பரந்த பெருங்கடலைப் போலக் கலங்காத இதயத்துடன் இருந்த போது, புரந்தரன் {இந்திரன்} இந்த வார்த்தைகளை அவனிடம் {நமுசியிடம்} சொன்னான்:(2) “ஓ! நமுசியே, உன் நிலையில் இருந்து வீழ்ந்து, கயிறுகளால் கட்டப்பட்டு, உன் எதிரிகளின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு, செழிப்பை இழந்தவனாக இருக்கும் நீ, துயரத்தில் ஈடுபட்டு வருகிறாயா? அல்லது உன் நாட்களை உற்சாகமாகக் கழித்து வருகிறாயா?” என்று கேட்டான்.(3)நமுசி {இந்திரனிடம்}, “விலக்கப்பட முடியாத இத்தகைய துயரத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் தன் உடலை வீணாக்கிக் கொண்டு, தன் பகைவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான். மேலும், அடுத்தவனின் துயரத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு எவனாலும் அதைக் குறைக்க முடியாது. ஓ! சக்ரா, இந்தக் காரணங்களினால் நான் துயரில் ஈடுபடுவதில்லை. நீ காணும் இவை யாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது[2].(4) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, துயரில் ஈடுபடுவதால், அது மேனி அழகு, செழிப்பு, வாழ்வு {உயிர்}, அறம் ஆகியவற்றை அழிக்கிறது.(5) உண்மை ஞானம் கொண்ட ஒருவன், சரியில்லாத மனநிலையில் பிறக்கும் துயரத்தை நிச்சயம் அடக்கி, உயர்ந்த நன்மையைத் தரவல்லதும், இதயத்தில் வசிப்பதுமான ஒன்றை அவனது மனத்தில் நன்றாகச் சிந்திக்க வேண்டும்.(6) ஒருவன் தன் மனத்தை உயர்ந்த நன்மையில் நிலைபெறச் செய்யும்போது, அவனது நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை[3].(7) ஆணை விதிப்பவன் ஒருவனே, இரண்டாமவன் எவனும் கிடையாது. கருவறைக்குள் கிடக்கும் உயிர் வரை அவனது கட்டுப்பாடு பரந்து விரிந்திருக்கிறது. அந்தப் பேரியக்குனரால் கட்டுப்படுத்தப்படும் நான், அவன் என்னை நிறுவியிருப்பதைப் போலவே கீழ் நோக்கி ஓடும் ஓடை நீரைப் போல ஓடிக் கொண்டிருக்கிறேன்.(8)
இருப்பு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? என்னவற்றை அறிந்து, முன்னதை {இருப்பை} விடப் பின்னதே {விடுதலையே} மேன்மையானது என்பதையும் புரிந்து கொண்டாலும், இன்னும் நான் அஃதை அடைய முனையவில்லை. அறத் திசையை நோக்கிச் செய்யப்படும் செயல்களையும், அதற்கு எதிர்மறையானவற்றையும் செயல்களையும் செய்ய முனையும் நான், அவன் என்னை நிறுவியபடியே ஓடிக் கொண்டிருக்கிறேன்.(9) ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட பொருட்களையே அடைகிறான். எது நடைபெற வேண்டுமோ, அதுவே நடைபெறுகிறது.(10) விதிப்பவன் நிறுத்தும் கருவறைகளிலே அவன் மீண்டும் மீண்டும் வசிக்க வேண்டியிருக்கிறது. இக்காரியத்தில் அவனுக்கு வேறு வாய்ப்பேதும் இல்லை.(11) எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் நிறுத்தப்பட்டாலும், தனக்கு விதிக்கப்பட்ட நிலையை அப்படியே ஏற்றுக் கொள்பவன் அதனால் திகைப்படைவதில்லை.(12) காலத்தின் போக்கில் மீண்டும் மீண்டும் வரும் இன்பம் மற்றும் துன்பத்தால் மனிதர்கள் பாதிப்பை அடைகின்றனர். இதில் (யார் ஒருவருக்கும் ஏற்படும் இன்ப துன்பங்களில்) தனிப்பட்ட யாதொன்றும் இல்லை. துன்பத்தை விரும்பாதவன் செயல்படுபவனாகத் தன்னைக் கருதிக் கொள்வதிலேயே இந்தத் துயரம் இருக்கிறது[4].(13)
முனிவர்கள், தேவர்கள், பேரசுரர்கள் ஆகியோருக்கு மத்தியில் மூன்று வேதங்களையும் முழுமையாக அறிந்தவர்களும், காட்டில் உள்ள தவசிகளிலும் யாரைத் தான் துயரங்கள் அணுகாது? எனினும், ஆத்மா, அனாத்மா ஆகியவற்றை அறிந்தோர் ஒருபோதும் துயர்களில் அஞ்சுவதில்லை.(14) இயல்பாகவே இமயத்தைப் போல அசையாதவனாக இருக்கும் ஞானி ஒருபோதும் கோபவசப்படமாட்டான்; புலன் நுகர் பொருட்களில் பற்றுதலுடன் ஒருபோதும் துன்புறமாட்டான்; அவன் ஒருபோதும் சோகத்தில் ஒப்பாரி வைப்பதோ, மகிழ்ச்சியில் இன்புறுவதோ கிடையாது. அத்தகைய மனிதன் பெரும் துன்பங்களில் பீடிக்கப்படும்போதும் ஒருபோதும் துயருக்கு வசப்படுவதில்லை.(15) பெரும் வெற்றிகளால் மகிழ்ச்சியடையாதவனும், பேரிடர்களில் திகைப்படையாதவனும், இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கிக் கொள்பவனும், அசையாத இதயத்துடன் அவை இரண்டுக்கும் நடுவான நிலையில் இருப்பவனுமான ஒருவன் மிக மேன்மையானவன் ஆவான்.(16) ஒருவன் எந்நிலைக்கு வீழ்ந்தாலும், அவன் துயரின் வசப்படாமல் உற்சாகமாக இருக்க வேண்டும். உண்மையில் ஒருவன், தன் மனத்தால் சுமக்கப்படுவதும், பெருகுவதும், (விலக்கப்படாமல் இருந்தால்) நிச்சயம் துன்பத்தைத் தரவல்லதுமான தனது துயரை இவ்வாறே விரட்ட வேண்டும்.(17)ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகள் ஆகிய இரண்டின் அடிப்படையில் கடமைகளைக் குறித்த விவாதங்களை நடத்தும் கல்விமான்களின் எந்தச் சபையில் ஒரு தீய மனிதன் நுழைந்தால் அச்சப்படவில்லையோ, அது நல்ல சபையல்ல, உண்மையில், அது சபை என்ற பெயரில் அழைக்கப்படத் தகாததாகும். எந்த மனிதன், அறம் குறித்த விசாரணையில் நுழைந்து, தான் அடைந்த தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படுவதில் வெல்வானோ அவன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான்[5].(18) ஒரு ஞானியின் செயல்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடியனவல்ல. ஞானியானவன், தனக்குத் துன்பங்கள் நேர்கையில் ஒருபோதும் திகைப்படைவதில்லை. அவன் முதிர் வயது கௌதமரைப் போல, மிகப் பயங்கரப் பேரிடரின் விளைவால், தன் நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டாலும் கூட ஒருபோதும் திகைப்படையாதவனாகவே இருப்பான்[6].(19)
மந்திரங்கள், பம், சக்தி, ஞானம், ஆற்றல், நடத்தை, ஒழுக்கம், செல்வச்செழிப்பு ஆகிய இவற்றில் எதைக் கொண்டும் ஒரு மனிதனால், தனக்கு விதிக்கப்படாத ஒன்றை அடையமுடியாது. பிறகு, ஒருவன் தன் இதயத்தை எதில் நிலைநிறுத்தியிருந்தானோ, அஃதை அடையாததில் என்ன சோகம் இருக்க முடியும்?(20) நான் பிறப்பதற்கு முன்னால், எவை தங்கள் கரங்களில் காரியங்களை வைத்திருந்தனவோ அவையே நான் என்ன செய்ய வேண்டும், துன்புற வேண்டும் என்பதை விதித்திருக்கின்றன. இவ்வாறு எனக்காக விதிக்கப்பட்டதையே நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். பிறகு, மரணத்தால் என்னை என்ன செய்ய முடியும்?(21) ஒருவன் தனக்காக விதிக்கப்பட்டதை மட்டுமே அடைகிறான். அவன் எங்கே செல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அங்கேயே செல்கிறான். விதிக்கப்பட்ட இன்ப துன்பங்கள் மட்டுமே அடையப்படுகின்றன.(22) எந்த மனிதன், இதை முழுமையாக அறிந்து திகைப்படையாமல் இருக்கிறானோ, எவன் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிலும் நிறைவுடன் இருக்கிறானோ, அவன் தன் இனத்தில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்” என்றான் {நமுசி}” {என்றார் பீஷ்மர்}.(23)
காலவொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 227-பயங்கரத் துயரில் மூழ்கியவனுக்கு நன்மையெது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; மனோவுறுதி குறித்த பீஷ்மரின் உரையாடல்; பலி மற்றும் இந்திரனின் உரையாடலை மீண்டும் சொன்ன பீஷ்மர், நித்தியத்தன்மை குறித்து பலியின் பெரும் உரையாடல்; பலியைப் புகழ்ந்த இந்திரன்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஏகாதிபதி, பயங்கரத் துயரத்தில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு நண்பர்களின் இழப்போ, நாட்டின் இழப்போ ஏற்படும்போது உண்மையில் நன்மையானது எது?(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவ்வுலகில் நீரே எங்கள் ஆசான்களில் முதன்மையானவராவீர். இதையே நான் கேட்கிறேன். கேட்கும் எனக்குப் பதில் அளிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, மகன்கள், மனைவியர், அனைத்து வகை இன்பங்கள், செல்வம் ஆகியவற்றை இழந்தவனும், பயங்கரத் துயரில் மூழ்கியவனுமான ஒருவனுக்கு மனோவுறுதியே உயர்ந்த நன்மையாகும். எப்போதும் மனோவுறுதி கொண்ட ஒருவனின் உடல் ஒருபோதும் இளைத்துப் போவதில்லை.(3) துயரற்றநிலையானது மகிழ்ச்சியையும், மேன்மையான உடைமையான உடல்நலத்தையும் {ஆரோக்கியத்தையும்} தன்னுள் கொண்டுள்ளது. உடல் நலத்தின் விளைவால் ஒருவன் மீண்டும் செழிப்பை அடைகிறான்.(4) ஓ! ஐயா, அறவொழுக்கம் ஒழுகும் ஞானியானவன், செழிப்பு, பொறுமை, தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(5) இது தொடர்பாகப் பழங்கதையில் பலிக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.(6)
பெரும் எண்ணிக்கையிலான தைத்தியர்களும், தானவர்களும் வீழ நேர்ந்த தேவாசுரப் போர் முடிந்தபோது, பலி மன்னனாக இருந்தான். உலகங்கள் அனைத்திலும் தன் ஆட்சியை மீண்டும் நிறுவிய விஷ்ணுவால் அவன் வஞ்சிக்கப்பட்டான். நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே} மீண்டும் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.(7) தேவர்களின் அரசாட்சி இவ்வாறு மீண்டும் நிறுவப்பட்டபிறகு, நால்வகை {நான்கு வர்ணங்களைச் சேர்ந்த) மனிதர்களும் தங்கள் தங்கள் கடமைகளில் மீண்டும் நிறுவப்பட்டு, மூவுலகங்களும் மீண்டும் செழிப்பில் பெருகியதால், சுயம்புவானவன் இதயத்தில் மகிழ்ச்சியடைந்தான்.(8) அந்த நேரத்தில், ருத்ரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள், தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், மேலும் உயர்ந்த வகை உயிரினங்கள் ஆகியவர்களுடன் கூடிய பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, நான்கு தந்தங்களையுடையதும், ஐராவதம் என்றழைக்கப்படுவதுமான யானைகளின் இளவரசனின் மேல் காந்தியுடன் அமர்ந்து கொண்டு உலகங்கள் முழுவதிலும் பவனிவந்தான்.(10)
ஒருநாள், இவ்வாறான பவனியின்போது, அந்த வஜ்ரதாரி {இந்திரன்}, கடற்கரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட மலைக்குகைக்குள் விரோசனன் மகனான பலியைக் கண்டான். அந்தத் தானவர்களின் இளவரசனைக் கண்டு அவனிடம் சென்றான்.(11) தேவர்களின் தலைவனான இந்திரன் இவ்வாறு ஐராவதத்தின் முதுகில் அமர்ந்திருப்பதையும், பல்வேறு வகைத் தேவர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்ட அந்தத் தைத்தியர்களின் இளவரசன் {பலி}, கவலை, அல்லது கலக்கத்திற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(12) இந்திரன், கலங்காமல், அஞ்சாமல் நிற்கும் பலியைக் கண்டு, தன் முதன்மையான யானையின் முதுகில் இருந்தபடியே அவனிடம் பேசினான்,(13) “ஓ! தைத்தியா, எவ்வாறு நீ கலக்கமடையாமல் இருக்கிறாய்? இதற்குக் காரணம் உன் வீரமா? பெரியோர்களுக்கு நீ செய்த பணிவிடையா {புண்ணியமா}? அல்லது தவங்களின் மூலம் தூய்மையடைந்த உன் மனம் இதற்குக் காரணமா? அஃது எக்காரணமாக இருந்தாலும், இந்த மனோநிலையை அடைவது மிகக் கடினமானதாகும்.(14) உண்மையில் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்த்தப்பட்ட நீ, இப்போது உடைமைகள் அனைத்தையும் இழந்தவனாவும், உன் எதிரிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! விரோசனன் மகனே, துயர்மிக்கத் தருணத்திலும் துயரமடையாதிருக்கும் வகையில் நீ என்ன வழிவகையை அடைந்திருக்கிறாய்?(15)
முன்பு உன் வகைக்கான அரசுரிமையில் நீ நிறுவப்பட்டிருந்தபோது, ஒப்பற்ற இன்பங்கள் உனதாயிருந்தன. எனினும், இப்போதோ உன் செழிப்பு, தங்கம், அரசுரிமை ஆகியவற்றை நீ இழந்திருக்கிறாய். நீ ஏன் கலங்காமல் இருக்கிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(16) நீ இதற்கு முன்பு உன் தந்தை மற்றும் பாட்டன்களின் அரியணையில் ஒரு தேவனாக அமர்ந்திருந்தாய். இன்று உன் எதிரிகளால் வீழ்ச்சியை அடைந்திருக்கும் நீ ஏன் வருந்தாமல் இருக்கிறாய்?(17) வருணனின் பாசக்கயிறுகளால் நீ கட்டப்பட்டவனாக, என் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டவனாக இருக்கிறாய். உன் மனைவியரும், செல்வமும் அபகரிக்கப்பட்டவனாக இருக்கிறாய். நீ ஏன் துயரமடையவில்லை என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(18) செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தும் நீ துயருறாமல் இருக்கிறாய். உண்மையில் இஃது ஏதோ தனிச்சிறப்புடைய ஒன்றாகும். ஓ பலியே, மூவுலகங்களின் அரசுரிமையை இழந்த பிறகும், இருப்பெனும் சுமையைத் தாங்கவல்லவனாக உன்னையன்றி வேறு எவனால் இருக்க முடியும்?” என்று கேட்டான்.(19)
இந்திரனின் இந்த வார்த்தைகளையும், தன் மேன்மையைப் பறைசாற்றிப் பிளப்பவையான இன்னும் பிறவற்றையும் கேட்டும், விரோசனனின் மகனான பலி தன்னைக் கேள்வி கேட்பவனிடம் {இந்திரனிடம்} பின் வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(20)
பலி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, துயரங்கள் என்னை ஒதுக்கும்போது, நீ ஏன் இத்தகைய தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய்? ஓ! புரந்தரா, என் முன்னே கையில் வஜ்ரத்தை உயர்த்திப் பிடித்தவனாக உன்னைக் காண்கிறேன்.(21) எனினும், முன்பு உன்னால் இவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. இப்போதோ நீ எவ்வழிமுறைகளினாலோ அதிகாரத்தை ஈட்டிவிட்டாய். உண்மையில், இத்தகைய கொடுஞ்சொற்களை உன்னைத் தவிர வேறு எவனால் பேச முடியும்?(22) எந்த மனிதன், தண்டிக்க வல்லவனாக இருந்தும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டவனும், வீழ்த்தப்பட்டவனும், வீரனுமான ஓர் எதிரியிடம் கருணை காட்டுகிறானோ அவனே உண்மையில் மிக மேன்மையானவனாவான்.(22) இரு மனிதர்கள் போரிடும்போது, போர்க்கள வெற்றியானது நிச்சயம் ஐயத்திற்கிடம் கொண்டதாகும். இருவரில் ஒருவன் நிச்சயம் வெற்றியாளனாகவும், மற்றவன் வெல்லப்பட்டவனாகவும் ஆவான்.(24) ஓ! தேவர்களின் தலைவா, உன் மனநிலை இவ்வாறாக வேண்டாம். உன் வலிமை மற்றும் ஆற்றலால் அனைத்தையும் கைப்பற்றிய பிறகு, அனைத்துயிரினங்களுக்கும் அரசனாக உன்னை நீ கருதிக் கொள்ள வேண்டாம்.(25) ஓ! சக்ரா, நமது {எமது} எந்தச் செயலின் விளைவாகவும் இவ்வாறு நேர்ந்ததெனக் கருதாதே[1]. ஓ வஜ்ரதாரியே {இந்திரனே}, உனது செயல் எதனாலும் நீ இவ்வாறு ஆகிவிட்டாயெனக் கருதாதே.(26)நான் இப்போது இருப்பது போல எதிர்காலத்தில் நீ இருப்பாய். நீ செயற்கரிய பெரிய செயலைச் செய்துவிட்டதாகக் கருதி என்னை அவமதிக்காதே.(27) ஒரு மனிதன் காலத்தின் போக்கில் இன்பத்தையும், துன்பத்தையும் மாறி மாறி அடைகிறான். ஓ! சக்ரா, காலத்தின் போக்கிலேயே நீ அண்டத்தின் அரசுரிமையை அடைந்திருக்கிறாயே அன்றி உனது குறிப்பிட்ட எந்த ஒரு தகுதியின் விளைவாலும் அல்ல.(28) காலமே என்னை இவ்வழியில் நடத்துகிறது. அந்தக் காலமே உன்னையும் வழிநடத்துகிறது. இதன் காரணமாகவே, நீ இன்று எவ்வாறிருக்கிறாயோ அவ்வாறு நானும், நாங்கள் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு நீயும் இல்லை.(29) பெற்றோருக்குச் செய்யும் பணிவிடை, தேவ வழிபாடு, எந்த நல்ல குணத்தையும் பயில்வது ஆகியவற்றில் எதனாலும் எவன் ஒருவனுக்கும் இன்பத்தை அளிக்க முடியாது.(30)
காலத்தால் பீடிக்கப்பட்ட ஒருவனை, அறிவு, தவங்கள், கொடைகள், நண்பர்கள் மற்றும் உற்றார் என எதனாலும் காக்க முடியாது.(31) எக்கணத்திலும் நிகழவல்ல ஒரு துயரை ஆயிரம் வழிமுறைகளினாலும் மனிதர்கள் தடுக்கவல்லவர்கள் அல்லர். இத்தகைய காரியங்களில் புத்தியும், பலமும் ஒன்றுமில்லாமல் போகின்றன.(32) காலத்தின் போக்கால் பீடிக்கப்பட்ட மனிதரை எவராலும் காக்க முடியாது. ஓ! சக்ரா, செயல்படுபவன் நீயே என்று கருதுவதிலேயே அனைத்துத் துன்பங்களின் வேரும் கிடக்கிறது.(33) மேம்போக்காக ஒரு செயலைச் செய்பவனே உண்மையாகச் செயல்படுபவன் என்றால், அவன் வேறொன்றின் (பரமாத்மாவின்) படைப்பாக இருக்க மாட்டான். எனவே, மேம்போக்காகச் செயல்படுபவனே மற்றொருவனின் படைப்பாக இருப்பதால், அந்த மற்றொருவன், உயர்ந்த வேறேதும் இல்லாத பரம்பொருளாக இருக்கிறான்.(34) காலத்தின் துணையுடன் நான் உன்னை வென்றேன். காலத்தின் துணையுடனே நீயும் என்னை வென்றாய். அசையும் உயிரினங்கள் அனைத்தையும் காலமே அசைக்கிறது. அனைத்து உயிரினங்களையும் காலமே அழிக்கிறது.(35)
ஓ! இந்திரா, நீ இழிபிறவின் புத்தியைக் கொண்டதன் விளைவால், அனைத்திற்கும் காத்திருக்கும் அழிவை நீ காணாதிருக்கிறாய். உண்மையில், நீ உன் சொந்த செயல்களின் மூலம் அண்டத்தின் ஆட்சியுரிமையை அடைந்தாய் என உன்னை உயர்வாகக் கருதுவோர் சிலர் இருக்கின்றனர்.(36) இவை யாவற்றுக்காகவும் உலகின் போக்கை அறிந்த எம்மைப் போன்ற ஒருவன், காலத்தால் பீடிக்கப்பட்டதன் விளைவால் எவ்வாறு துயரில் ஈடுபடவோ, புத்தி கலக்கமடையவோ, பிழையின் ஆதிக்கத்திற்கு வசப்படும் நிலையை அடையவோ செய்வான்?(37) காலத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்போதும் கூட, கடலில் உடையும் கப்பலைப் போல எனது புத்தியோ, என்னைப் போன்ற ஒருவனின் புத்தியோ அழிவை அடையுமா?(38) ஓ! சக்ரா, நானும், நீயும், எதிர்காலத்தில் தேவர்களின் தலைவர்களாக வரப்போகும் அனைவரும், உனக்கு முன்பு ஏற்கனவே நூறு இந்திரர்கள் எவ்வழியில் சென்றார்களோ அவ்வழியிலேயே செல்வோம்.(39) இப்போது வெல்லப்பட முடியாதவனாக, ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விடுபவனாக உள்ள நீயும் கூட உனக்கான நேரம் கனியும்போது, என்னைப் போலவே நிச்சயம் அழிவை அடைவாய்.(40)
காலத்தின் போக்கில் பல்லாயிரம் இந்திரர்களும், தேவர்களும், யுகந்தோறும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். உண்மையில் காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(41) உனது தற்போதைய நிலையை அடைந்த பிறகு, உன்னை நீயே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாகவும், தெய்வீகமானவனாகவும், நித்தியமான பிரம்மனாகவும் மிக உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(42) இந்த உனது நிலையை உனக்கு முன்பே பலர் அடைந்திருக்கின்றனர். எவரிடமும் அது நிலையானதாகவோ, முடிவற்றதாவோ இருந்ததில்லை. எனினும், மூடப் புத்தியின் விளைவால் நீ மட்டுமே அதை {இந்த உன் நிலையை} மாறும் இயல்பற்றதாகவும், நித்தியமானதாகவும் கருதுகிறாய்.(43) நம்பத்தகாததை நீ நம்புகிறாய். நித்திமில்லாததை நீ நித்தியமானதாக மதிக்கிறாய். ஓ தேவர்களின் தலைவா, காலத்தால் மூழ்கடிக்கப்பட்டுக் கலக்கமடைந்திருக்கும் ஒருவன், இவ்வகையிலேயே தன்னைக் கருதிக் கொள்வான்.(44) மடமையினால் வழிநடத்தப்படும் நீ தற்போதைய உன் அரச செழிப்பை உனதாகக் கருதுகிறாய். எனினும், அஃது உன்னிலோ, என்னிலோ, பிறரிடத்திலோ ஒருபோதும் நிலையானதாக இருக்காது என்பதை அறிவாயாக.(45)
அஃது உனக்கு முன்பு எண்ணற்றவர்களுக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. அவர்களைக் கடந்து வந்த அஃது இப்போது உனதாகியிருக்கிறது. ஓ! வாசவா, அஃது உன்னிடம் சில காலம் இருந்த பிறகு தனது நிலையில்லாமையை உறுதிசெய்யும். பசுவானது, {நீரருந்த} மற்றொரு தாழியை அடைவதற்காகத் தன் தாழியைக் கைவிடுவதைப் போலவே அதுவும் வேறொருவனுக்காக உன்னை நிச்சயம் கைவிடும்.(46) உனக்கு முன்பே சென்றுவிட்ட அரசுகளின் பட்டியலை நான் சொல்லத் துணியேன். ஓ! புரந்தரா, எதிர்காலத்திலும் உனக்குப் பிறகு எண்ணற்ற அரசுகள் எழும்.(47) மரங்கள், செடிகள், ரத்தினங்கள், வாழும் உயிரினங்கள், நீர்நிலைகள், சுரங்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்தப் பூமியை முன்பு ஆண்ட அந்த ஆட்சியாளர்களை நான் இப்போது காணவில்லை.(48) பிருது, ஐலன், மயன், பீமன், நரகன், சம்பரன், அஸ்வக்ரீவன், புலோமன், அளவற்ற உயரத்துடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டிருந்த ஸ்வர்ப்பானு, பிரஹ்லாதன், நமுசி, தக்ஷன், விப்ரசித்தி, விரோசனன், ஹ்ரீநிஷேவன், ஸுஹோத்ரன், பூரிஹன், புஷ்பவான், விருஷன்,(49,50) ஸத்யேஷு, விருஷபன், பாஹு, கபிலாஸ்வன், விரூபகன், பாணன், கார்த்தஸ்வரன், வஹ்நி, விஸ்வதம்ஷ்ட்ரன், நைரிதி {நைருருதி},(51) ஸங்கோசன், வரீதாக்ஷன், வராஹன், அஸ்வன், ருசிப்ரபன், விஸ்வஜித், பிரதிரூபன், விருஷாண்டன், விஷ்கரன், மது,(52) ஹிரண்யகசிபு, தானவன் கைடபன், மேலும் தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களாக இருந்த பலரும்,(53) இவர்களுடன் சேர்த்து நெடுகிலும் நெடுங்காலத்திற்கு முன்பிருந்த பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலரும், நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் பெயர்களைக் கொண்ட பெரும் தைத்தியர்களும்,(54) தானவர்களில் முதன்மையானோரும் இந்தப் பூமியைவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் காலத்தாலேயே பீடிக்கப்பட்டனர். காலம் அவர்கள் அனைவரையும் விடத் தானே பலமிக்கது என்பதை உறுதி செய்தது.(55)
அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான வேள்விகளில் படைப்பாளனை வழிப்பட்டிருக்கின்றனர். நீ மட்டுமே இவ்வாறு செய்தவன் கிடையாது. அறப்பற்றுடன் கூடிய அவர்கள் அனைவரும் எப்போதும் பெரும் வேள்விகளைச் செய்பவர்களாக இருந்தனர்.(56) அவர்கள் அனைவரும் வானத்தில் உலாவ வல்லவர்களாகவும், போர்க்களத்தில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் மிகப் பலத்த உடற்கட்டுகளைக் கொண்டவர்களாகவும், கனத்த தடிகளுக்கு ஒப்பான கரங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(57) அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான மாயைகளில் திறமிக்கவர்களாகவும், தாங்கள் விரும்பிய வடிவங்களை ஏற்க வல்லவர்களாகவும் இருந்தனர். எந்தப் போரில் அவர்கள் தோல்வியுற்றதாக நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.(58) அவர்கள் அனைவரும் வாய்மை நோன்பை உறுதியாக நோற்பவர்களாகவும், தாங்கள் விரும்பியபடி விளையாடுபவர்களாகவும் இருந்தனர். வேதங்கள் மற்றும் வேதச்சடங்குகளில் பற்றுதலுடன் இருந்த அவர்கள் அனைவரும் பெரும் கல்வியைப் பெற்றவர்களாக இருந்தனர்.(59) பெரும் வலிமையைக் கொண்டிருந்த அவர்கள் அனைவரும் உயர்ந்த செழிப்பையும், செல்வாக்கையும் பெற்றிருந்தனர். ஆனால் அந்த உயர் ஆன்ம அரசர்களில் எவரும், தங்கள் அரசுரிமையின் விளைவால் சிறு அளவிலான செருக்கையும் கொண்டிருக்கவில்லை.(60)
அவர்கள் அனைவரும் ஈகையாளர்களாகவும், தகுந்தர்களுக்குத் தகுந்ததைக் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அனைத்து உயிரினங்களிடத்திலும் முறையாகவும், சரியாகவும் நடந்து கொண்டனர்.(61) அவர்கள் அனைவரும் தக்ஷன் மகள்களின் வாரிசுகளாக இருந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்கள் அனைவரும் படைப்பின் தலைவர்களாக இருந்தனர். தங்கள் சக்தியால் அனைத்தையும் எரித்த அவர்கள் அனைவரும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.(62) ஓ! சக்ரா, உன்னைப் பொறுத்தவரையில், பூமியை அனுபவித்த பிறகு அவளை விட்டகலும்போது உன்னால் உன் துயரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(63) பற்று மற்றும் இன்பத்திற்குரிய பொருட்களில் நீ வளர்த்துவரும் ஆசையைக் கைவிடுவாயாக. செழிப்பில் இருந்து பிறக்கும் இந்தச் செருக்கைக் கைவிடுவாயாக. நீ இவ்வகையில் நடந்து கொண்டால், அரசிழப்பு அளிக்கும் துயரை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.(64) துயர்மிக்க நேரம் வரும்போது, துன்பத்திற்கு வசப்படாதே. அதேபோல இன்பமிக்க நேரம் வரும்போது திளைத்துப் போகாதே. கடந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்து, நிகழ்காலத்தில் நிறைவுடன் வாழ்வாயாக.(65)
ஒருபோதும் உறங்காத காலம், கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருந்த என்னிடமே வந்த அதே காலம், ஓ! இந்திரா, உன்னையும் மிகவிரைவில் அடையும் என்பதால் அமைதி வழிகளில் உன் இதயத்தைத் திருப்புவாயாக.(66) நீ உன் வார்த்தைகளால் என்னைத் துளைக்கிறாய், மேலும், என்னுள் நீ நடுக்கத்தை விதைப்பதாகவும் தெரிகிறது. உண்மையில், அடங்கி இருக்கும் என்னைக் கண்டு உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(67) காலமே என்னை முதலில் தாக்கிற்று. அஃது இப்போது உன்னருகில்தான் இருக்கிறது. நான் முதலில் காலத்தாலேயே வெல்லப்பட்டேன். அதன்காரணமாகவே பிறகு நீ என்னை வென்றாய். அதனால் இவ்வாறு செருக்குடன் முழங்குகிறாய்.(68) முந்தைய காலத்தில், நான் கோபப்பட்டால், என்னெதிரே நின்று போரிட பூமியில் எவன் இருந்தான்? எனினும், காலம் வலிமையானது. அவனே {காலமே} என்னை மூழ்கடித்தான். ஓ! வாசவா, இதன்காரணமாகவே உன்னால் என் முன்னிலையில் நிற்க முடிகிறது. உன் ஆளுகையின் அளவான ஆயிரமும் (ஆயிரம் தெய்வீக வருடங்களும்) நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும்.(69) வலிமையும், சக்தியும் கொண்டவனாக இருந்தாலும், நான் இப்போது துயர்மிக்க நிலையில் இருப்பதைப் போலவே நீயும் வீழ்வாய், உன் அங்கங்களும் துயருறும். மூவுலகங்களின் ஆட்சிக்கட்டிலை ஆக்கிரமித்திருந்த உயர்ந்த இடத்தில் இருந்து நான் வீழ்ந்துவிட்டேன். நீயே இப்போது சொர்க்கத்தின் உண்மையான இந்திரனாக இருக்கிறாய்.(70)
காலப்போக்கின் விளைவால் உயிரினங்களின் இந்த இனிய உலகில் உலகளாவிய புகழுக்கான பொருளாக நீ இப்போது இருக்கிறாய். என்ன செய்ததன் மூலம் நீ இன்று இந்திரனானாய் என்பதை உன்னால் சொல்ல முடியுமா? யாம் என்ன செய்ததனால் எமது நிலையில் இருந்து வீழ்ந்தோம் என்பதையும் சொல்ல முடியுமா?(71) காலன் ஒருவனே படைப்பாளனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான். (இவ்வண்டத்தில் எந்த விளைவையும் உண்டாக்க) வேறேதும் காரணமில்லை. சரிவு, வீழ்ச்சி, அரசு, இன்பம், துன்பம், பிறப்பு இறப்பு ஆகிய இவற்றில்(72) எதனையும் எதிர்கொள்ளும் கல்விமான் திளைப்பதோ, துயரில் ஈடுபடுவதோ இல்லை. ஓ! இந்திரா, நீ எமை அறிவாய். ஓ! வாசவா, நாமும் உன்னை அறிவோம்.(73) ஓ! வெட்கங்கெட்டவனே, நீ என்னவாக இருக்கிறாயோ அதைக் காலமே தந்தது என்பதை மறந்து நீ ஏன் என் முன்னிலையில் இவ்வாறு தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்? அந்தக் காலங்களில் என் ஆற்றல் யாது என்பதை நீ கண்டிருக்கிறாய்.(74) நான் செய்த போர்கள் அனைத்திலும் நான் வெளிப்படித்திய சக்தியும் வலிமையும் போதுமான சான்றுகளை அளிப்பனவாகும். ஓ! சச்சியின் தலைவா, ஆதித்யர்கள், ருத்திரர்கள், சாத்யஸ்கள், வசுக்கள்,(75) மருத்துக்கள் ஆகியோர் அனைவரும் என்னால் வெல்லப்பட்டனர். ஓ! சக்ரா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்மோதலில்,(76) என் தாக்குதலின் மூர்க்கத்தால் தேவர்கள் விரைவாக முறியடிக்கப்பட்டனர் என்பதை நீயே நன்கறிவாய். காடுகள் மற்றும் அந்தக் காடுகளில் வசிப்பவர்களுடன் கூடிய மலைகள், எம்மால் மீண்டும் மீண்டும் சுழற்றி வீசப்பட்டன.(77) நான் உன் தலையில் உடைத்தவையும், செங்குத்தான முனைகளைக் கொண்டவையுமான மலைமுகடுகள் பலவாகும். எனினும், என்னால் இப்போது என்ன செய்ய முடியும்? காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(78)
இஃது இவ்வாறில்லையென்றால், வஜ்ரதாரியாக இருக்கும் உன்னை என் புறங்கையின் ஒரே குத்தில் வீழ்த்திக் கொல்லத் துணிந்திருக்க மாட்டேன் என்று நினைக்காதே. எனினும், தற்போது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நேரம் இல்லை. இப்போது நான் அமைதியைப் பின்பற்றவும், அனைத்தையும் பொறுத்துக் கொள்வதற்குமான நேரமே வந்திருக்கிறது. ஓ! சக்ரா, இந்தக் காரணத்தினாலேயே நான் உன் அவமானம் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன். எனினும், நான் உன்னைவிடவும் ஆணவத்தைத் தாங்கிக் கொள்ள இயலாதவன் என்பதை அறிவாயாக.(79) காலத்தின் கட்டுகளால் பலமாகக் கட்டப்பட்டவனும், காலமெனும் நெருப்பால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், காலம் கனிந்தவனுமான ஒருவன் முன்பு நீ தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்.(80) உலகத்தால் தாங்கிக் கொள்ள இயலாதவனான கரியவன் அதோ நிற்கிறான். இழிந்த விலங்கைப் போல என்னைக் கயிறுகளால் கட்டி கடும் வடிவத்துடன் அங்கே நிற்கிறான்.(81) ஈட்டல், இழத்தல், இன்பம், துன்பம், காமம், கோபம், பிறப்பு, இறப்பு, சிறைபடுதல், விடுதலையடைதல் ஆகிய இவை அனைத்தையும் ஒருவன் காலத்தின் போக்கில் சந்திக்கவே வேண்டும்.(82) நான் செயல்படுபவனல்ல. நீயும் செயல்படுபவனல்ல. உண்மையில் அனைத்தையும் அறிந்தவனே செயல்படுபவனாவான். மரத்தில் தோன்றிய ஒரு கனியைப் போல இப்போது (என்னை வீழ்த்துவதற்காகக்) காலம் என்னைக் கனியச் செய்கிறது.(83)
காலத்தின் போக்கில் ஒரு மனிதன் இன்பத்தை அடைவதற்குச் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட செயல்கள் இருக்கின்றன. அதே செயல்களைக் காலப்போக்கில் மற்றொருவன் செய்வதன் மூலம் அவன் துன்பத்தையே அடைகிறான்.(84) காலத்தின் அறங்களை {காலத் தர்மங்களை} அறிந்த நான் காலத்தால் தாக்கப்படும்போது துயருறக் கூடாது. ஓ! சக்ரா, இதன்காரணமாகவே நான் வருந்தாமல் இருக்கிறேன். துயரத்தால் நமக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. துயரில் ஈடுபட்டு ஒருவன் அடையும் வருத்தத்தால் அவனைத் துன்பத்தில் இருந்து ஒருபோதும் காக்க முடியாது. மறுபுறம், துயரம் ஒருவனுடைய சக்தியை அழிக்கிறது. இதன்காரணமாகவே நான் துயரில் ஈடுபடவில்லை” என்றான் {பலி}”.(85,86)
இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பலியால்} சொல்லப்பட்டவனும், பலமிக்கவனும், ஆயிரங்கண் கொண்டவனும், பாகனைத் தண்டித்தவனுமான நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(87)
சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “வஜ்ரந்தரித்தபடி உயர்த்தப்பட்டிருக்கும் எனக் கரங்களையும், வருணனின் பாசக்கயிறுகளையும் கண்டு, அனைத்து உயிரினங்களுக்கும் அழிவைத் தரும் யமன் உட்பட எவனுடைய புத்தி கலக்கமடையாதிருக்கும்?(88) எனினும், மிக உறுதியானதும், உண்மைப் பார்வைகளைக் கொண்டதுமான உனது புத்தி கலக்கமடையாதிருக்கிறது. ஓ! வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன் மனோவுறுதியின் விளைவாலேயே நீ இன்று கலக்கமடையாதிருக்கிறாய்.(89) இந்த அண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டும், உடல்படைத்த எவன்தான், தனது உடலின் மீதோ, தன் ஆசைக்குரிய அனைத்துப் பொருட்களின் மீதோ நம்பிக்கையை வைக்கத் துணிவான்?(90) பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், பயங்கரமானதாக இருக்கும் காலநெருப்பினுள் வீசப்பட்டதும், தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதும், உண்மையில் முடிவில்லாததுமான இந்த அண்டம் நிலையில்லாதது என்பதை உன்னைப் போலவே நானும் அறிவேன்.(91) இங்கே ஒவ்வொருவனும் காலத்தால் தாக்கப்படுகிறான். உயிரினங்களில் நுட்பமானவையோ, திரளானவையோ காலத்தின் ஆட்சியில் எந்த எதிர்ப்புணர்வையும் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்களும் காலத்தின் கொப்பரையில் {கொதிகலனில்} சமைக்கப்படுகின்றன.(92) காலத்திற்குத் தலைவன் எவனும் இல்லை. காலம் எப்போதும் கவனத்துடன் இருக்கிறது. காலம் எப்போதும் தன்னுள் அனைத்துப் பொருட்களையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. நிற்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தின் ஆளுகைக்குள் நுழைந்த எவனும், அங்கிருந்து தப்பியதில்லை.(93)
உடல்படைத்த அனைத்தும் கவனமில்லாமல் இருக்கலாம், ஆனால் காலமானது எப்போதும் கவனமாகவும் விழித்தநிலையிலும் அவைகளுக்குப் பின்னால் இருக்கிறது. எவனும் தன்னில் இருந்து காலத்தை விரட்டிவிட்டதாகக் காணப்படுவில்லை.(94) பழமையானதும், நித்தியமானதும், நீதியின் உடல்வடிவமுமான காலமானது அனைத்து உயிரினங்களிலும் சீராகவே இருக்கிறது. காலம் தவிர்க்கப்பட முடியாததாகும், அதன் போக்கும் பின்னோக்கிச் செல்வதில்லை.(95) ஈட்டிக்காரன் {வட்டிக்குக் கடன் கொடுப்பவன்} தன் வட்டியைக் கூட்டிக் கொள்வதைப் போலவே காலமும், கலைகள், லவங்கள், காஷ்டைகள், க்ஷணங்கள், மாதங்கள், பகல்கள் மற்றும் இரவுகள் எனத் தன் நுண்ணியப் பகுதிகளைச் சேர்த்துக் கொள்கிறது.(96) மரங்களின் வேர்களை அடையும் ஓர் ஆற்றின் நீரோட்டம் அம்மரத்தையே அடித்துச் செல்வதைப் போலவே, காலமானது, “இன்று இதைச் செய்வேன், இந்த மற்றொரு செயலை நாளை செய்வேன்” என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை அடித்துச் செல்கிறது.(97) “சற்றுமுன்தான் அவனைப் பார்த்தேன். அதற்குள் எவ்வாறு அவன் இறந்தான்?” என்று கேட்பவர்களையும் காலம் அடித்துச் செல்கிறது.(98)
செல்வம், வசதிகள் {போகங்கள்}, பதவி, செழிப்பு ஆகிய அனைத்தும் காலத்திற்கு இரையாகின்றன. ஒவ்வொரு உயிரினத்தையும் அணுகும் காலம் அதன் உயிரைப் பறித்துச் செல்கிறது. செருக்குடன் தங்கள் தலைகளை உயர்த்தும் அனைத்தும் வீழவே விதிக்கப்பட்டிருக்கின்றன.(99) எது இருப்பில் இருக்கிறதோ, அஃது இல்லாமையின் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும். அனைத்தும் நிலையற்றவையாகவும், உறுதியற்றவையாகவுமே இருக்கின்றன. எனினும் அத்தகைய தீர்மானத்தை அடைவது மிக அரிதான காரியமாகும்.(100) இவ்வளவு உறுதியுடனும், உண்மைப் பார்வையுடனும் கூடிய உனது புத்தி கலக்கமடையாமல் இருக்கிறது. சிலகாலத்திற்கு முன்பு நீ எவ்வாறு இருந்தாய் என்பதை நீ மனத்தால் உணரவில்லை.(101) பலமிக்கக் காலமானது, அண்டத்தைத் தாக்கி, அதைத் தன்னுள்ளேயே சமைத்து வயதின் முதுமையையோ, இளமையையோ கருதிப்பாராமல் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. இவ்வளவுக்கும், காலத்தால் இழுத்துச் செல்லப்படும் ஒருவன், தன் கழுத்தில் வீசப்பட்டிருக்கும் சுருக்கை {பாசக்கயிற்றை} அறியாதவனாகவே இருக்கிறான்.(102) பொறாமை, பகட்டு, பேராசை, காமம், கோபம், அச்சம், ஆசை, கவனமின்மை, செருக்கு ஆகியவற்றில் பற்றுடன் இருக்கும் மக்களே கலக்கமடைகிறார்கள்.(103)
எனினும், நீ இருப்பின் உண்மையை அறிந்தவனாக இருக்கிறாய். கல்வியைப் பெற்றிருக்கும் நீ, ஞானமும், தவமும் கொண்டவனாக இருக்கிறாய். உள்ளங்கையில் இருக்கும் ஒரு நெல்லிக்கனியைக் காண்பதைப் போலக் காலத்தை நீ தெளிவாகக் காண்கிறாய்.(104) ஓ! விரோசனன் மகனே {பலியே}, நீ காலவொழுக்கம் குறித்து முழுமையாக அறிந்தவனாக இருக்கிறாய். அனைத்து வகை ஞானங்களையும் நன்கறிந்திருக்கிறாய். தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட நீ, உன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக நீ ஞானியர் அனைவரின் பற்றுக்குரியவனாகவும் இருக்கிறாய்.(105) நீ உன் புத்தியைக் கொண்டு மொத்த அண்டத்தையும் முழுமையாக உணர்ந்திருக்கிறாய். அனைத்து வகை இன்பங்களை அனுபவித்தவனாக இருப்பினும், எதிலும் பற்று கொள்ளாதவனாக இருப்பதால் நீ எதனாலும் கறைபடிந்தவனாக இல்லை.(106) நீ உன் புலன்களை வென்றிருப்பதால், ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்கள் உன்னைக் களங்கப்படுத்தவில்லை. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் அற்ற உன் ஆன்மாவுக்கு மட்டுமே நீ பணிவிடை செய்கிறாய்.(107) பகையில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருந்து, அமைதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் உன்னை இவ்வாறாகக் காண்பதன் மூலம் என் இதயம் உன்னிடம் கருணை கொள்கிறது.(108)
ஞானமடைந்த உன்னைப் போன்ற ஒருவனைச் சங்கிலியால் பிணைத்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்த நான் விரும்பவில்லை. தீங்கிழையாமை {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். நான் உன்னிடம் இரக்கம் கொள்கிறேன்.(109) உன்னைக் கட்டியிருக்கும் இந்த வருண பாசங்கள், காலப்போக்கில் ஏற்படும் மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் விளைவால் தளர்வடையும். ஓ! பேரசுரா, நீ அருளப்பட்டிருப்பாயாக.(110) எப்போது ஒரு மருமகள், முதிர்ந்த மாமியாரை வேலைவாங்குவாளோ, எப்போது ஒரு மகன் எண்ண மயக்கத்தால் தனது தந்தையை வேலை வாங்குவானோ,(111) எப்போது சூத்திரர்கள் தங்கள் கால்களைப் பிராமணர்களைக் கொண்டு கழுவிக் கொள்கிறார்களோ, எப்போது அவர்கள் {சூத்திரர்கள்} மறுபிறப்பாள வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுடன் அச்சமில்லாமல் கலவியில் ஈடுபடுவார்களோ,(112) எப்போது மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டிய கருவறைகளில் தங்கள் உயிர் நீரை வெளியிடுவார்களோ, எப்போது வீட்டின் கழிவுகள் வெங்கலப் பாத்திரங்கள் மற்றும் தட்டுகளில் தாங்கப்படுமோ, எப்போது தேவர்களுக்காகப் படைக்கப்பட்ட வேள்விக் காணிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டிய பாத்திரங்களில் ஏந்தப்படுமோ,(113) எப்போது நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நால்வகையினரும் மீறுவார்களோ, அப்போது உன்னைக் கட்டியிருக்கும் பாசங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தளர்வடையும்.(114) எம்மிடம் உனக்கு அச்சமேதும் வேண்டியதில்லை. அமைதியாகக் காத்திருப்பாயாக. மகிழ்ச்சியாயிருப்பாயாக. கவலைகள் அனைத்தையும் விடுவாயாக. உன் இதயம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கட்டும். உடல்நலக் குறைவேதும் உனதாகாதிருக்கட்டும்” என்றான் {இந்திரன்}.(115)
யானைகளின் இளவரசனை {ஐராவதத்தைத்} தன் வாகனமாகக் கொண்ட அந்தத் தெய்வீக இந்திரன், இந்த வார்த்தைகளை அவனிடம் {பலியிடம்} சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான். அசுரர்கள் அனைவரையும் வென்று மகிழ்ச்சியில் திளைத்த தேவர்களின் தலைவன், உலகங்கள் அனைத்தின் ஒரே தலைவனானான்.(116) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைவனான அவனைத் துதித்துப் பெரும் முனிவர்கள் பாடினார்கள். நெருப்பின் தேவன் {அக்னி}, காணத்தக்க தன் வடிவத்தில் (அனைவராலும்) ஊற்றப்படும் தெளிந்த நெய்யை மீண்டும் சுமக்கத்தொடங்கினான். மேலும் அந்தப் பெருந்தேவன் {இந்திரன்} தன் கவனிப்பில் விடப்பட்டிருந்த அமுதத்தைக் காக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டான்.(117) வேள்விகளில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்களால் புகழ்ந்து பாடப்பட்ட தலைவன் இந்திரன், சுடர்மிக்கக் காந்தியுடன் தன் கோபம் தணிக்கப்பட்டு, தன் இதயம் அமைதியடைந்து, சொர்க்கத்திலுள்ள தன் வசிப்பிடத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று பேரின்பத்துடன் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(118)
செழிப்பு மற்றும் வறுமைக்கான அறிகுறிகள்! – சாந்திபர்வம் பகுதி – 228-லக்ஷ்மிதேவி அசுரர்களை விட்டு விலகிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்னது; செழிப்பு மற்றும் வறுமையின் அறிகுறிகள்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மனிதனைப் பொறுத்தவரையில் எதிர்கால மேன்மை மற்றும் எதிர்கால வீழ்ச்சிக்கான அறிகுறிகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ அருளப்பட்டிருப்பாயாக, ஒருவனுடைய எதிர்காலச் செழிப்பு மற்றும் எதிர்கால வீழ்ச்சிக்கான முற்குறிகளை அவனது மனமே குறிப்பிடும்.(2) இது தொடர்பாக ஸ்ரீக்கும், சக்ரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(3) பிரம்மாவைப் போன்றே அளவிலா பிரகாசத்துடன் கூடிய சக்தியைக் கொண்டவரும், தன் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டவரும், தன் தவச் செழிப்பின் மூலம் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டையும் உடனே காணவல்லவரும், படைப்பாளனின் உலகத்தில் வசிக்கும் தெய்வீக முனிவர்களுக்கு இணையானவருமான பெருந்தவசி நாரதர், மூவுலகங்களிலும் தன் விருப்பப்படி உலவிக் கொண்டிருந்தார்.(4,5) ஒரு நாள் அதிகாலையில் விழித்தெழுந்த அவர், தூய்மைக்கான சடங்குகளைச் செய்ய விரும்பி, துருவம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட கணவாயின் {துவாரத்தின்} வழியே வெளிவந்த கங்கையாற்றுக்கு அந்நோக்கத்துடனே சென்று அந்த ஓடையில் மூழ்கினார்[1].(6)
ஆயிரம் கண்களைக் கொண்டவனும், வஜ்ரந்தரித்தவனும், சம்பரன் மற்றும் பாகனைக் கொன்றவனுமான இந்திரன், நாரதர் இருந்த அதே கரைக்கு அந்த நேரத்தில் வந்தான்.(7) ஆன்மாக்களை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த முனிவர் மற்றும் தேவன் ஆகிய அவர்கள் இருவரும், அமைதியாகத் தங்கள் ஜபங்களைச் செய்துவிட்டு ஒன்றாக அமர்ந்தனர்.(8) அவர்கள் அந்த நேரத்தில் ஜபிப்பதிலும், பெரும் தெய்வீக முனிவர்களால் சொல்லப்பட்ட பல நல்ல மற்றும் உயர்ந்த செயல்களைக் கொண்ட சிறந்த கதைகளைக் கேட்பதிலும் ஈடுபட்டனர். உண்மையில், அவர்கள் இருவரும் பழைய வரலாறு குறித்த இனிய உரையாடலில் இவ்வாறு ஈடுபட்டனர்.(9) அவ்வாறு அங்கே அமர்ந்திருந்தபோது, தங்கள் முன்னிலையில் ஆயிரங்கதிர்களைப் பொழிந்து கொண்டு உதிக்கும் சூரியனை அவர்கள் கண்டனர். அந்தக் கோளை முழுமையாகக் கண்ட அவர்கள் எழுந்து நின்று அவனது புகழ்பாடினார்கள்.(10)
சரியாக அதே நேரத்தில், அந்நாளில் உதிக்கும் நட்சத்திரத்திற்கு நேரெதிர் திசையில், சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் கூடியதும், அந்த நாளின் இரண்டாவது நட்சத்திரத்தைப் போலத் தெரிந்ததுமான ஏதோ ஓர் ஒளிப்பொருளை அவர்கள் கண்டனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்த ஒளிப்பொருள் படிப்படியாகத் தங்களை நோக்கி வருவதையும் அவர்கள் கண்டனர்.(11) கருடன் மற்றும் சூரியனால் அலங்கரிக்கப்பட்டிருந்த விஷ்ணுவில் அந்தப் பொருள், ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விட்டபடி, மூவுலகங்களுக்கு ஒளியூட்டிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(12) அவர்கள் கண்ட பொருளானவள், அபார அழகைக் கொண்ட அப்சரஸ்கள் பலருடன் கூடிய ஸ்ரீயைத் தவிர வேறு எவருமல்ல. உண்மையில், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த அவள், தானே ஒரு பெரிய சூரிய வட்டிலைப் போலத் தெரிந்தாள்.(13) முழுமையான நட்சத்திரங்களைப் போலத்தெரிந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவள், முத்து மாலைகளுக்கு ஒப்பான மாலையை அணிந்திருந்தாள். இந்திரன், தாமரைகளுக்கு மத்தியில் தனது வசிப்பிடத்தைக் கொண்டிருந்த பத்மை என்றழைக்கப்படும் தேவியைக் கண்டான்.(14) தனது முதன்மையான தேரில் இருந்து இறங்கிய அந்த ஒப்பற்ற பெண்மணி, மூவுலகங்களின் தலைவன் மற்றும் தெய்வீக முனிவர் நாரதர் ஆகியோரை நோக்கி வரத் தொடங்கினாள்.(15) நாரதரால் பின்தொடரப்பட்ட மகவானும் {மகவத் / இந்திரனும்} அந்தப் பெண்மணியை நோக்கிச் சென்றான். அனைத்தையும் அறிந்தவனான அவன், கூப்பிய கரங்களுடன் அவளிடம் சென்று, விஞ்சமுடியாத மதிப்பு மற்றும் மனநேர்மையுடன் அவளை வழிபட்டான். துதிகள் முடிந்ததும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனான அவன், அந்த ஸ்ரீயிடம் பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.(16,17)
சக்ரன் {இந்திரன் ஸ்ரீயிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நீ யார்? உண்மையில் என்ன காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறாய்? ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, ஓ! மங்கலமான பெண்ணே, எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்லப் போகிறாய்?” என்று கேட்டான்.(18)
ஸ்ரீ, “மங்கல வித்துகள் நிறைந்த மூவுலங்களில் உள்ள அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் தங்கள் மொத்த இதயத்தைக் கொண்டும், என்னுடன் தொடர்பை ஏற்படுதிக் கொள்ள முனைகின்றன.(19) நான் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீயும், அனைத்து உயிரினங்களின் செழிப்பின் நிமித்தமாகச் சூரியக் கதிர்களின் தீண்டலால் மலரும் தாமரையில் உதிப்பவளுமா பத்மையும் ஆவேன்.(20) ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, லக்ஷ்மி, பூதி, ஸ்ரீ என்று நான் அழைக்கப்படுகிறேன். நானே நம்பிக்கை {ஸ்ரத்தை}, நானே புத்தி {மேதை}, நானே செல்வாக்கு {ஸன்னதி}, நானே வெற்றி {விஜிதி}, நானே மாற்றமில்லாதவளுமாவேன் {ஸ்திதியுமாவேன்}.(21) நானே பொறுமை {தருதி}, நானே வெற்றி {ஸித்தி}, நானே செழிப்புமாவேன் {ஸம்பூதியுமாவேன்}. நானே ஸ்வாஹா, நானே ஸ்வதா, நானே மதிப்பு {ஸம்ஸ்துதி}, நானே விதி {நியதி}, நானே நினைவுமாவேன் {கிருதியுமாவேன்}.(22) நான் படைமுகப்பிலும், வெற்றிமிக்கக் கொடிமரங்களிலும், அறம்சார்ந்த அரசுகளிலும், அவற்றின் இல்லங்கள், நகரங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளிலும் வசிக்கிறேன்.(23) ஓ! பலனைக் கொன்றவனே, வெற்றியடைந்த பிறகு மூச்சை விடுபவர்களும் {சுவாசிப்பவர்களும்}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான முதன்மையான மனிதர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(24) அறப்பற்றில் உறுதியுடன் இருப்பவர்கள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்கள், பிரம்மத்தில் பற்றுடையவர்கள், பேச்சில் வாய்மை நிறைந்தவர்கள், பணிவுடையவர்கள், ஈகையாளர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(25) முன்பு என் மனநிலையானது, உண்மை மற்றும் புண்ணியத்தில் கட்டப்பட்டிருந்ததன் விளைவால், அசுரர்களிடம் வசித்து வந்தேன். எனினும், அசுரர்கள் முரணியல்களை ஏற்பதைக் கண்டதால் அவர்களை விட்டு வந்திருக்கும் நான் உன்னில் வசிக்க விரும்புகிறேன்” என்றாள்.(26)
சக்ரன், “ஓ! அழகிய முகம் கொண்டவளே, அசுரர்களின் எந்த நடத்தையால் நீ அவர்களிடம் வசித்தாய்? அவர்களிடம் எதைக் கண்டதால் நீ தைத்தியர்களையும், தானவர்களையும் கைவிட்டு இங்கே வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.(27)
ஸ்ரீ, “தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், பொறுமையை இழக்காதவர்கள், சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதையில் நடப்பதில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆகியோரிடம் நான் என்னை நிலையுறுதியுடன் இணைத்துக் கொள்வேன்.(28) சாத்திரக் கல்வி, வேதங்கள், வேதச் சடங்குகள், பித்ரு, தேவ, ஆசான், பெரியோர், விருந்தினர் வழிபாடுகள் ஆகியவற்றுக்காக ஈகையளிப்பதில் புகழ்பெற்றவர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(29) முந்தைய காலத்தில் தானவர்கள் தங்கள் வசிப்பிடங்களைத் தூய்மையாக வைப்பவர்களாக, தங்கள் பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக, வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாக, தங்கள் பெரியோருக்குப் பணிவிடை செய்பவர்களாக, தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்களாக, பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, பேச்சில் வாய்மை நிறைந்தவர்களாக இருந்தனர்.(30)
நம்பிக்கை நிறைந்தவர்களாக; கோபத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக; ஈகையறம் பயில்பவர்களாக; பிறரிடம் ஒருபோதும் பகை கொள்ளாதவர்களாக; நண்பர்கள், ஆலோசகர்கள், மனைவிகள் ஆகியோரைப் பராமரிப்பவர்களாக; ஒருபோதும் பொறாமை கொள்ளாதவர்களாக இருந்தனர்.(31) முந்தைய காலத்தில் அவர்கள் கோபத்தால் நிறைந்து ஒருபோதும் ஒருவரையொருவர் தாக்குபவர்களாக இல்லை. அவர்கள் அனைவரும் நிறைவுடையவர்களாகவும், பிற மக்களின் செழிப்பையும், செல்வாக்கையும் கண்டு துன்புறாதவர்களாகவும் இருந்தனர்.(32) அவர்கள் அனைவரும் அறப்பண்புடையவர்களாக, சிக்கனம் கொண்டவர்களாக, மதிப்பிற்குரிய நடத்தை கொண்டவர்களாக, கருணை கொண்டவர்களாக இருந்தனர். அருள், எளிய நடத்தை, நம்பிக்கையில் நிலையுறுதி ஆகியவற்றை அதிகம் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் தங்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.(33) அவர்கள் தங்கள் பணியாட்கள் மற்றும் ஆலோசகர்களை நிறைவுடன் வைத்திருந்தனர், மேலும் அவர்கள் நன்றியுடையவர்களாகவும், இனிய பேச்சைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஒவ்வொருவரின் நிலை {பதவி} மற்றும் மதிப்பிற்குத் தகுந்த பணிவிடைகளை அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் நாணம் கொண்டவர்களாக இருந்தனர். கடும் நோன்புகளை அவர்கள் நோற்றனர்.(34) புனிதமான ஒவ்வொரு நாளிகளும் அவர்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்தனர். அவர்கள் தங்கள் மேனியில் நறுமணப் பொருட்களையும், மங்கலமான களிம்புகளையும் முறையாகப் பூசிக் கொள்பவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் மேனியை நன்றாக அலங்கரித்துக் கொள்பவர்களாக இருந்தனர். உபவாசங்கள், தவங்களை நோற்பவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக, வேத பாடல்களைப் பாடுபவர்களாக அவர்கள் இருந்தனர்.(35)
அவர்கள் உறங்கிக் கிடந்தபோது சூரியன் ஒருபோதும் உதித்ததில்லை. அவர்கள் ஒருபோதும் நிலவு உறங்கிய பிறகு {விடியற்காலையில்} உறங்கியதில்லை. அவர்கள் எப்போதும் {இரவில்} தயிர் மற்றும் சத்துமாவைத் தவிர்த்தனர்.(36) அவர்கள் ஒவ்வொரு காலையிலும் தெளிந்த நெய் மற்றும் பிற மங்கலப் பொருட்களைக் கண்டனர், புலன்களில் இருந்து விடுபட்டு வேதங்களை உரைத்து, பிராமணர்களுக்குக் கொடை அளித்து வழிபாடு செய்தனர்.(37) அவர்களது உரையாடல்கள் எப்போதும் அறம்சார்ந்தவையாக இருந்தன, அவர்கள் ஒருபோதும் கொடைகளை ஏற்றதில்லை. அவர்கள் எப்போதும் நடுஇறவிலேயே உறங்கச் சென்றனர், பகலில் ஒருபோதும் உறங்கியதில்லை.(38) துயரடைந்தோர், ஆதரவற்றோர், முதியோர், பலவீனர், நோய்வாய்ப்பட்டோர், பெண்கள் ஆகியோரிடம் கருணை காட்டுவதில் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியடைந்தனர், மேலும் தங்கள் உடைமைகளை அனைத்தையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தும் இன்புற்றிருந்தனர்.(39) கலக்கமடைந்தோர், உற்சாகமிழந்தோர், கவலையடைந்தோர், அச்சமடைந்தோர், நோயால் பீடிக்கப்பட்டோர், பலவீனர், உடல் இளைத்தவர்கள், களவு கொடுத்தோர் மற்றும் துன்பத்திலிருப்போர் ஆகியோருக்கு அவர்கள் எப்போதும் ஆறுதலளித்து உறுதியடையச் செய்தனர்.(40)
அறவிதிகளைப் பின்பற்றிய அவர்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்ததில்லை. அவர்கள் (நிறைவேற்றத்தகுந்த) அனைத்தை வகைச் செயல்களைச் செய்யும் நல்ல மனநிலையில் ஆயத்தமாக இருந்தனர். அவர்கள் வயதில் முதிர்ந்தோர் மற்றும் பெரியோருக்கு எப்போதும் பணிவிடை செய்பவர்களாக இருந்தனர்.(41) அவர்கள் பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்கள் ஆகியோரை முறையாக வழிபட்டு, இவர்களை நிறைவு செய்தபிறகு எஞ்சியவற்றையே ஒவ்வொரு நாளும் உண்டனர். அவர்கள் வாய்மை மற்றும் தங்களில் உறுதியான பற்றுடன் இருந்தனர்.(42) அவர்களில் எவரும் நல்ல உணவைத் தனியாக உண்ணவில்லை, பிறர் மனைவியரிடம் கலவியில் ஈடுபடவில்லை. தங்களிடம் கொண்டதைப் போலவே அவர்கள் பிற உயிரினங்களிடமும் கருணை கொண்டிருந்தனர்.(43) அவர்கள் ஒருபோதும் தங்கள் உயிர்வித்தை வெட்டவெளியிலோ, இழிந்த விலங்குகளிலோ, தவிர்க்கப்பட்ட கருவறைகளிலோ, புனிதமான நாட்களிலோ விட்டதில்லை {வெளியேற்றியதில்லை}.(44) அவர்கள் எப்போதும் கொடைகள், புத்திசாலித்தனம், எளிமை, நம்பிக்கைநிறைந்த முயற்சி, பணிவு, நட்பு, மன்னிக்கும் தன்மை ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றவர்களாக இருந்தனர்.(45)
ஓ! பலமிக்கவனே {இந்திரனே}, வாய்மை, ஈகை, தவம், தூய்மை, கருணை, மென்மையான பேச்சுகள், நண்பர்களிடம் பகையில்லாமை ஆகிய இவை அனைத்தும் அவர்களிடம் இருந்தன.(46) குறைதூக்கம், எப்போதும் தாமதம் செய்தல், எரிச்சல், பொறாமை, முன்னறிதிறனின்மை, நிறைவின்மை, மனக்கவலை, பேராசை ஆகியவை ஒருபோதும் அவர்களைத் தாக்கியதில்லை.(47) இந்தப் பண்புகளுக்காகத் தானவர்கள் புகழ்பெற்றிருந்ததன் விளைவால் படைப்பின் தொடக்கமுதல், தொடர்ந்து பற்பல யுகங்களாக நான் அவர்களுடன் வசித்து வந்தேன்.(48) காலம் மாறியது, அந்த மாற்றம் தானவர்களின் பண்பிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அறமும், அறநெறியும் அவர்களைக் கைவிட்டுச் செல்வதையும், அவர்கள் காமம் மற்றும் கோபத்தின் வசப்படுவதையும் நான் கண்டேன்.(49) சாதனைகளில் தாழ்ந்தவர்களாக இருப்பினும்கூட, மேலான தகுதிகளைக் கொண்ட பெரியோரிடம் பகை வளர்க்கத் தொடங்கினர். மேலும் அறம் மற்றும் புண்ணியத்தைக் கொண்ட அந்தப் பெரியோர் சபைகளுக்கு மத்தியில் வைத்து முறையான காரியங்களைப் பேசும்போது அவர்களைக் கேலி பேசவும், அவர்களைப் பார்த்துச் சிரிக்கவும் தொடங்கினர்.(50)
வயதில் பெரியோர்கள் வரும்போது, இளையோர் வசதியாக அமர்ந்து கொண்டு, மரியாதையுடன் எழுந்திருந்து அவர்களை வணங்க மறுத்தனர்.(51) தந்தைமாரின முன்னிலையில் மகன்கள் (தந்தைக்கு மட்டுமே உரிய காரியங்களில்) ஆளுமையை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். கூலி பெறாதவர்களின் தொண்டுகளை ஏற்றுக் கொண்டு வெட்கமில்லாமல் அந்த உண்மையைச் சொல்பவர்களாக இருந்தனர்.(52) நீதியற்ற வகையில் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்து பெருஞ்செல்வத்தைத் திரட்டுவதில் வென்றவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்[2].(53) இரவு நேரத்தில் உரக்கக் கூச்சலிட்டு, அலறுவதிலும், கதறுவதிலும் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களது ஹோம நெருப்புகள் மேல்நோக்கிய பிரகாசமான தழல்களை வெளியிடுவதை நிறுத்தின. மகன்கள் தந்தைமாரிடம் அதிகாரம் செலுத்த தொடங்கினர், மனைவியர் கணவர்களை அடக்கி ஆண்டனர்.(54) தாய்மார், தந்தைமார், வயதில் முதிர்ந்த பெரியோர், ஆசான்கள், விருந்தினர்கள், வழிகாட்டிகள் மேன்மையான நிலையில் இருந்து அதிகாரம் செய்வதை நிறுத்தினர். மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றுடன் வளர்ப்பதை நிறுத்தி அவர்களைக் கைவிடத் தொடங்கினர்.(55)பிச்சையளிக்க ஒரு பகுதியைக் கொடாமலும், தேவர்களுக்குக் காணிக்கையளிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியைக் கொடாமலும் அனைவரும் தங்களிடம் இருந்ததை மொத்தமாக உண்டனர். உண்மையில், வேள்விகளில் தங்கள் பொருட்களைத் தேவர்களுக்குக் கொடாமல், அவற்றைப் பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்கள், மதிப்பிற்குரிய பெரியோர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வெட்கமில்லாமல் தங்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துக் கொண்டனர்.(56) அவர்களது சமையற்காரர்கள், மனம் செயல் மற்றும் சொல்லில் தூய்மையைக் கருத்தில் கொள்பவர்களாக இருக்கவில்லை. மூடப்படாமல் இருப்பவற்றையே அவர்கள் உண்டனர்.(57) அவர்களது தானியங்கள், காகங்களாலும், எலிகளாலும் பாழாகும்படி வயல்களில் திறந்த வெளியில் கிடந்தன. அவர்களது பால் திறந்தே கிடந்தது, உண்டபிறகு கை கழுவாமல் தெளிந்த நெய்யைத் தீண்டத் தொடங்கினர்[3].(58) அவர்களது மண்வெட்டி, சமையல் கத்தி, கூடைகள், பாத்திரங்கள், வெங்கலக் கிண்ணங்கள் மற்றும் பிற சமையலறை பொருட்கள் வீடுகளில் சிதறியிருக்கத் தொடங்கின.(59) அவர்களது இல்லத்தரசிகள் அவற்றைக் கவனிக்காமல் தவிர்ந்திருந்தனர். அவர்கள் வீடுகளையும், சுவர்களையும் மராமத்துச் செய்யாமல் இருந்தனர். விலங்குகளைக் கட்டி வைத்துவிட்டு அவற்றுக்கு உணவும் நீரும் கொடுக்காமல் இருந்தனர்[4].(60)உணவுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளைக் கருத்தில் கொள்ளாமல் அந்தத் தானவர்கள் தாங்களே உண்டு கொண்டிருந்தார்கள்.(61) அவர்கள் பாயசம், கிரிசரம், புலாலுணவு, காஷ்குளி {அப்பம்} ஆகியவற்றை (தேவர்களுக்காகவோ, விருந்தினர்களுக்காகவோ இல்லாமல்) தங்களுக்காகவே தயாரிக்கத் தொடங்கினர். வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சிகளையும் உண்ணத் தொடங்கினர்[5].(62) சூரியன் உதித்த பிறகும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இரவுகளையே பகலாக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய வீட்டில் இரவும் பகலும் சண்டைகளும், சச்சரவுகளும் பெருகிக் கொண்டிருந்தன.(63) அவர்களில் மதிக்கத்தகாதோர், மதிக்கத்தகுந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மதிப்பளிக்காமல் இருந்தனர். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழ்ந்த அவர்கள், அமைதியான வாழ்வை வாழவும், தெய்வீக தியானத்தில் இருக்கவும் காடுகளுக்குச் சென்றவர்களை மதிப்பதை நிறுத்தினர். அவர்களுக்கிடையில் வர்ணக்கலப்புச் சாதாரணமாக நடக்கத் தொடங்கியது. மேனி மற்றும் மனத்தூய்மை பராமரிப்பதை அவர்கள் நிறுத்தினர்.(64) வேதங்களைக் கற்ற பிராமணர்களுக்கு அவர்கள் மத்தியில் எந்த மரியாதையும் இல்லாமல் இருந்தது. ரிக்குகளை அறியாத பிராமணர்கள் கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. {பிராமணர்களில்} மதிக்கத்தகுந்தோர், மதிக்கத்தகாதோர் ஆகிய இருவரும் சமமான வகையில் தாழ்வாகவே நடத்தப்பட்டனர்.(65)அவர்களது பணிப்பெண்கள் தீய நடத்தை கொண்டவர்களாகி, தங்க ஆபரணங்கள் மற்றும் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு, தங்கள் இல்லங்களில் இருந்தார்கள், அல்லது அவர்களது கண் முன்பாகவே செல்வார்கள்.(66) அவர்களில் பெண்கள் ஆண்களாகவும், ஆண்கள் பெண்களாகவும் உடை உடுத்தி விளையாடி பெரும் இன்பத்தை அடையத் தொடங்கினர்.(67) அவர்களது மூதாதையரில் செழிப்புடன் இருந்தவர்கள் தகுந்த மனிதர்களுக்குச் செல்வக்கொடை அளித்தார்கள். அந்தக் கொடையாளிகளின் வழித்தோன்றல்கள், தாங்கள் செழிப்பான நிலையில் இருந்தாலும் கூட, தாங்கள் கொண்ட நம்பிக்கையின்மையால் {நாத்திக நிலைப்பாட்டால்}, அந்தக் கொடைகளைத் திரும்பப்பெறத் தொடங்கினர்.(68) எந்தக் காரியத்தையும் நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கையில் ஒரு நண்பனிடம் இன்னொரு நண்பன் ஆலோசனை கேட்கும்போது, அக்காரியத்தை நிறுத்துவதால் எந்தப் பயனும் இல்லையென்றாலும் அதை நிறுத்தினர்.(69) அவர்களில் சிறந்தோரில் கூட அடுத்தவர் செல்வத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்ட வணிக்கர்களும், வியாபாரிகளும் தோன்றினர். அவர்களில் சூத்திரர்கள் தவப்பயிற்சி செய்யத் தொடங்கினர்.(70)
அவர்களில் சிலர், தங்கள் நேரத்தையும், உணவையும் ஒழுங்கு படுத்திக் கொள்ள விதிகளை அமைக்காமலேயே கல்வியைத் தொடங்கினர். வேறு சிலர் பயனற்ற விதிகளை அமைத்துக் கொண்டு கல்வியைத் தொடங்கினர். சீடர்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாகத் தொண்டாற்றாதவர்களாக இருந்தனர். ஆசான்களும் தங்கள் சீடர்களை நட்புடன் கூடிய தோழர்களாக நடத்தத் தொடங்கினர்.(71) வேலையால் களைத்துப் போன தந்தைமாரும், தாய்மாரும் விழா கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். முதிர்வயது கொண்ட பெற்றோர், தங்கள் மகன்களால் அதிகாரத்தை இழந்து, உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.(72) அவர்களில் வேதங்களை அறிந்தவர்களும், ஒழுக்க ஆழத்தில் கடலுக்கு ஒப்பானவர்களுமான ஞானியர் கூட உழவு மற்றும் அத்தகைய பிற தொழில்களில் ஈடுபடத் தொடங்கினர். கல்லாதவர்கள் அறியாமை கொண்டோருமான மனிதர்கள் சிராத்தங்களில் உணவு படைக்கப்பட்டனர்[6].(73) ஒவ்வொரு நாள் காலையிலும், சீடர்கள், கடமைகள் குறித்து விசாரிப்பதற்கும், செய்ய வேண்டிய செயல்களை உறுதிசெய்வதற்கும், ஆணைகளை வேண்டி ஏற்பதற்கும் ஆசான்களை அணுகுவதற்குப் பதிலாக, அவர்களே ஆசான்களின் பணிவிடைகளை ஏற்றார்கள்.(74) மருமகள்கள், தங்கள் கணவர்களின் தாய்மார் மற்றும் தந்தைமாரின் முன்னிலையே தங்கள் பணியாட்களையும், பணிப்பெண்களையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்து, தங்கள் கணவர்களை அழைத்துப் பேசி அவர்களையும் கண்டித்தனர்.(75)தந்தைமார், தங்கள் மகன்களைப் பெருங்கவனத்துடன் நல்ல மனநிலையில் வைத்துக் கொண்டோ, அச்சத்தால் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தோ, துன்பம் மற்றும் துயரத்துடன் வாழ்ந்தனர்.(76) தீ, அல்லது கள்வர்கள், அல்லது மன்னனின் மூலம் செல்வத்தை இழந்தவர்களுடன் நட்பாயிருப்பவர்கள், அவர்களது இழப்பைக் கண்டு கேலியாகச் சிரிப்பதில் ஈடுபடத் தொடங்கினர்.(77) அவர்கள் நன்றிகெட்டவர்களாகவும், நாத்திகர்களாகவும், பாவிகளாகவும், ஆசான்களின் மனைவியருடன் கூட முறைகேடான கலவி புரியும் அடிமைகளாகவும் இருந்தார்கள். தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்களானார்கள். நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் மீறினார்கள். முன்பு அவர்களைத் தனித்துக் காட்டிய காந்தி இப்போது அவர்களிடம் இல்லாமல் போனது.(78) ஓ! தேவர்களின் தலைவா, இவற்றின் விளைவாலும், முந்தைய இயல்புக்கு முரணான பிற தீய ஒழுக்கங்களின் அறிகுறிகளினாலும், நான் இனியும் அவர்களுடன் வசிக்க மாட்டேன்.(79)
எனவே, நானே என் சொந்த விருப்பத்தின் பேரில் உன்னிடம் வந்துவிட்டேன். ஓ! சச்சியின் தலைவா, என்னை மதிப்புடன் ஏற்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா, உன்னால் கௌரவிக்கப்படும் நான் பிற தேவர்கள் அனைவரிடமும் கௌரவத்தை அடைவேன்.(80) நான் எங்கு வசிக்கிறேனோ, அங்கே என்னுடன் இணைபிரியாதவர்களாக இருப்பவர்களும், என்னையே சார்ந்திருப்பவர்களுமான ஜெயாவை எட்டாவதாகக் கொண்ட மற்ற ஏழு தேவிகளும் வாழ விரும்புவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு {ஆசை}, நம்பிக்கை {ஸ்ரத்தை}, புத்தி {த்ருதி}, நிறைவு {க்ஷாந்தி}, வெற்றி {விஜிதி}, முன்னேற்றம் {ஸன்னதி}, மன்னிப்பு {க்ஷமை} ஆகியோராவர். ஓ பாகனைத் தண்டித்தவனே, அவர்களில் எட்டாவதாக இருக்கும் ஜெயா {விருத்தி} முதன்மையான இடத்தைப் பெறுவாள்.(82) அவர்கள் அனைவரும், நானும் அசுரர்களைக் கைவிட்டுவிட்டு உன் ஆட்சிப்பகுதிக்குள் வந்திருக்கிறோம். இனிமேல் நாங்கள், அறம் மற்றும் நம்பிக்கைக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களான தேவர்களுக்கு மத்தியிலேயே வசிப்போம்” என்றாள் {ஸ்ரீ}”. (83)
அந்தத் தேவி இவ்வாறு சொன்ன பிறகு, அவளை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக தெய்வீக முனிவர் நாரதரும், விருத்திரனைக் கொன்றவனான வாசவனும் மகிழ்ச்சிமிக்க வரவேற்பை அவளுக்கு அளித்தனர்.(84) அப்போது அக்னியின் நண்பனான வாயு தேவன், இனிய நறுமணங்களைச் சுமந்தபடி மென்மையாகச் சொர்க்கத்தில் வீசி அனைத்து உயிரினங்களுக்கு உற்சாகத்தை அளித்து, புலன்கள் அனைத்திற்கும் இன்பத்தை அளித்தான்.(85) (இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) தேவர்கள் அனைவரும் மகவத்தின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மியைக் காணும் எதிர்பார்ப்பில் ஒரு தூய்மையான, இனிய இடத்தில் கூடி அங்கேயே காத்திருந்தனர்.(86) அப்போது, ஆயிரம் கண்களைக் கொண்டவனான தேவர்களின் தலைவன், தன்னுடன் ஸ்ரீயையும், தனது நண்பரான பெரும் முனிவரையும் அழைத்துக் கொண்டு, பச்சை குதிரைகளால் இழுக்கப்பட்ட அற்புதத் தேரைச் செலுத்திக் கொண்டு, அனைவரின் மதிப்பையும் ஏற்றபடியே தேவர்களின் சபைக்கு வந்தான்.(87) எவருடைய ஆற்றலை தேவர்கள் அனைவரும் அறிவார்களோ அந்தப் பெரும் முனிவர் நாரதர், ஸ்ரீயின் அங்கீகாரத்துடன் வஜ்ரதாரி செய்த சைகையைக் கண்டு, அங்கே அந்தத் தேவியின் வரவை வரவேற்று, அது மிக மங்கலமானது என்பதை அறிவித்தார்.(88) சொர்க்கத்தின் ஆகாயம் தெளிவானதாகவும், பிரகாசமானதாகவும் இருந்து, சுயம்புவான பெரும்பாட்டனின் உலகத்தில் அமுதத்தைப் பொழியத் தொடங்கியது. தெய்வீகத் துந்துபிகள் எவராலும் முழக்கப்படாமலே முழங்கத் தொடங்கின. அடிவானின் புள்ளிக்ள அனைத்தும் தெளிவடைந்து காந்தியில் சுடர்விடுனவாகத் தெரிந்தன.(89)
இந்திரன் உரிய காலங்களில் தோன்றி பயிர்களின் மேல் மழையைப் பொழிந்தான். அறப்பாதையில் இருந்து எவரும் வழுவவில்லை. பூமி பல சுரங்கங்களால் அலங்கரிக்கப்பட்டு, ரத்தினங்கள் மற்றும் தங்கத்தாலும், வேத ஒலிகள் மற்றும் இன்னும் பிற இனிய ஒலிகளாலும் நிறைந்து, தேவர்களின் வெற்றியால் பெருகிக் கொண்டிருந்தது.(90) உறுதியான மனங்களைக் கொண்டவர்களும், நல்லோரால் நடக்கப்படும் மங்கலப்பாதையைப் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் அனைவரும், வேதங்கள், அறச்சடங்குகள் மற்றும் அறச்செயல்களில் இன்பங்கொள்ளத் தொடங்கினர். மனிதர்கள், தேவர்கள், கிண்ணரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் செழிப்புடன் உற்சாகம் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(91) காற்று தேவன் ஒரு மரத்தைப் பலமாகக் குலுக்கினாலும் அகாலத்தில் எந்த மலரும் விழாது எனும்போது, கனிகளைக்குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது. பசுக்கள் அனைத்தும் மனிதர்களால் கறக்கப்படும்போது இனிமைமிக்கப் பாலைக் கொடுக்கத் தொடங்கின. கடும் மொழிகளும் கொடுமொழிகளையும் எவரும் சொல்லவில்லை.(92) முன்னேற விரும்புபவர்கள், பிராமணர்களின் சபையை அணுகி, அனைத்து விருப்புங்களையும் அருள வல்ல தேவர்கள் அனைவரின் தலைமையில் உள்ள இந்திரனையும், ஸ்ரீயையும் புகழும் இந்தக் கதையைப் படித்தால், பெருஞ்செழிப்பை வெல்வார்கள்.(93) ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இவையே செழிப்பு மற்றும் வறுமைக்கான முதன்மையான அறிகுறிகளாகும். உன்னால் தூண்டப்பட்ட நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். இங்கே சொல்லப்பட்ட போதனைகளைக் கவனமாகச் சிந்தித்து அதன்படி உன்னை அமைத்துக் கொள்வதே உனக்குத் தகும்” என்றார் {பீஷ்மர்}.(94)
பிரம்மஞானியின் அறிகுறிகள்! – சாந்திபர்வம் பகுதி – 229-பிரம்ம ஞானிகளின் குறியீடுகளைப் பற்றித் தேவலருக்கும் ஜைகீஷவ்யருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எந்த மனநிலை, கடமைகளின் எந்த வழிமுறை, எந்த ஞானம், எந்தச் சக்தி ஆகியவற்றைக் கொண்டு ஒருவன், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு {பிரகிருதிக்கு} எட்டாததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நிவிருத்தி எனும் அறமொழுகுவதில் ஈடுபடுபவனும், குறைவாக உண்பவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனால், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு மேலானதுமான பிரம்மத்தை அடையமுடியும்.(2) ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜைகீஷவ்யருக்கும், அசிதருக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் பெரும் ஞானம் கொண்டவரும், கடமை மற்றும் அறநெறி குறித்த உண்மைகளை முழுமையாக அறிந்தவருமான ஜைகீஷவ்யரிடம் அசித தேவலர் பேசினார்.(4)
தேவலர் {ஜைகீஷவ்யரிடம்}, “புகழப்படும்போது நீர் மகிழ்ச்சியடைவதில்லை. பழிகூறப்படும்போதோ, நிந்திக்கப்படும்போதோ நீர் கோபவசப்படுவதில்லை. உண்மையில் உமது ஞானம்தான் என்ன? இஃதை எங்கிருந்து பெற்றீர்? உண்மையில் அந்த ஞானத்தின் புகலிடம் எது?” எனக் கேட்டார்”.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு தேவலரால் கேட்கப்பட்டவரும், கடும் தவங்களை உடைய தூய்மையானவருமான ஜைகீஷவ்யர் நம்பிக்கை நிறைந்தவையும், ஆழமான கருத்தைக் கொண்டவையும், உயர்ந்த முக்கியத்துவம் கொண்டவையுமான வார்த்தைகளைச் சொன்னார்.(6)
ஜைகீஷவ்யர் {அசித தேவலரிடம்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அறச்செயல்களைச் செய்வோர் அனைவரின் மதிப்பீட்டில் எது உயர்ந்த கதியோ, எது உயர்ந்த லட்சியமோ, எது அமைதி நிலையோ அஃதை உமக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஓ! தேவலரே, புகழ்வோரிடமும், பழிப்போரிடமும் ஒன்றாகவே நடந்து கொள்பவர்களும், தங்கள் சொந்த நோன்புகள் மற்றும் நற்செயல்களை மறைப்பவர்களும்,(8) பதில்குற்றச்சாட்டுகளை வைப்பதில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், நன்மையாக இருந்தாலும் (நன்மையை உண்டாக்குவதற்குப் பதில்) தீமையை உண்டாக்கும் என்று கணக்கிடப்படுபவற்றை ஒருபோதும் செய்யாதவர்களும், அடைந்த தீங்கிற்குப் பதில்தீங்கு செய்ய விரும்பாதவர்களுமான மனிதர்களே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்[1].(9) வரப்போவதை நினைத்து அவர்கள் ஒருபோதும் வருந்துவதில்லை. தங்கள் முன்னிலையில் இருப்பவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்வார்கள். கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக ஒருபோதும் அவர்கள் துயரில் ஈடுபட மாட்டார்கள், அல்லது அவற்றைத் தங்கள் மனங்களில் நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.(10)ஓ! தேவலரே, சக்தியையும், ஒழுங்குபடுத்தப்பட்ட மனங்களையும் கொண்ட அவர்கள், மரியாதையுடன் வேண்டிக் கொள்ளப்பட்டால், எது எவ்வழியில் செய்யப்பட வேண்டுமோ, அஃதை அவர் அனைத்துப் பொருட்களைப் பொறுத்தவரையில் எவை அவர்களுக்காகக் காத்திருக்குமோ அவற்றைத் தங்கள் விருப்பப்படியே செய்வார்கள்[2].(11) முதிர்ந்த அறிவு, பெரும் ஞானம், முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் ஆசைகளைத் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் அவர்கள் எவருக்கும் எண்ணத்திலோ, சொல்லிலோ, செயலிலோ தீங்கிழைப்பதில்லை.(12) பொறாமை அற்ற அவர்கள் எவருக்கும் தீங்கிழைக்கமாட்டார்கள். தற்கட்டுப்பாடு கொண்ட அவர்கள், அடுத்தவரின் செழிப்பைப் பார்த்து ஒருபோதும் துன்பப்பட மாட்டார்கள்.(13) அத்தகைய மனிதர்கள் மிகைப்படுத்திப் பேசுவதையோ, மற்றவர்களைத் துதிபாடுவதில் ஈடுபடுவதையோ, அவர்களைக் குறித்துத் தவறாகப் பேசுவதையோ ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தங்களைப் புகழ்பவர்களாலோ, பழிப்பவர்களாலோ அவர்கள் ஒருபோதும் பாதிப்படைவதில்லை.(14) அவர்கள் தங்கள் ஆசைகள் அனைத்தையும் பொறுத்தவரையில் அமைதியான மனநிலையில் இருந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுவார்கள். அவர்கள் ஒருபோதும் கோப வசப்படுவதோ, மகிழ்ச்சிக்கூத்தாடுவதோ, எவ்வுயிருக்கும் தீங்கிழைப்பதோ கிடையாது.(15)அவர்கள், தங்கள் இதய முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து மிக மகிழ்ச்சியாகக் கடந்து செல்வார்கள். அவர்களுக்கு நண்பர்கள் எவருமில்லை, அதே போல அவர்களும் பிறருக்கு நண்பராயிருப்பதில்லை.(16) அவர்களுக்கு எதிரிகள் எவரும் கிடையாது, அதே போல அவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிரிகளாக இருப்பதில்லை. உண்மையில், இவ்வழியில் வாழக்கூடிய மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே தங்கள் வாழ்வைக் கடத்துவார்கள்[3].(17) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அறம் மற்றும் அறநெறிகளின் விதிகளில் ஞானத்தை அடைவோரும், அவ்விதிகளை நடைமுறையில் பயில்வோரும் இன்பத்தை அடைவதில் வெல்வார்கள், அதே வேளையில் அறவழியில் இருந்து வீழ்ந்தவர்கள் துன்பங்கள் மற்றும் துயரங்களால் பீடிக்கப்படுவார்கள்.(18) நான் இப்போது அறவழியைப் பின்பற்றுகிறேன். பிறரால் இகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் எரிச்சல் அடைய வேண்டும்? அல்லது பிறரால் புகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் நிறைவு கொள்ள வேண்டும்?(19) மனிதர்கள் தாங்கள் ஈடுபடும் செயல்களில் இருந்து அவர்கள் விரும்பிய எந்தப் பொருளையும் அடையட்டும். (ஈட்டல் மற்றும் இழத்தலில் நான் வேறுபாடற்றவனாக இருக்கிறேன்). புகழும், இகழும் என் வளர்ச்சிக்கோ, குறைவிற்கோ பங்களிக்க இயலாதவையாக இருக்கின்றன[4].(20)பொருட்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டவன், அவமதிப்பையே கூட அமுதமாக எண்ணி நிறைவை அடைவான். அறிவுள்ள மனிதன், மதிப்பையே நஞ்சாக எண்ணி உண்மையில் எரிச்சலடைவான்.(21) இந்தக் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் பிறரால் அவமதிக்கப்பட்டாலும் இம்மையிலும், மறுமையிலும் அச்சமில்லாமல் உறங்குவான். மறுபுறம், அவனை அவமதிப்பவனோ அழிவை அடைவான்.(22) எந்த ஞானியர் உயர்ந்த கதியை அடைய முனைவார்களோ அவர்கள் இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றியே வெற்றியை அடைவார்கள்.(23) தன் புலன்கள் அனைத்தையும் வென்ற மனிதன், வேள்விகள் அனைத்தையும் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன், அழிவில்லாத்தும், தொடக்கக் கால இயற்கையும் {பிரகிருதியும்} எட்டமுடியாமல் விஞ்சி நிற்கும் உயர்ந்த ஏணியுமான பிரம்மத்தை அடைவான்.(24) தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள் ஆகியோராலும் கூட இந்த உயர்ந்த கதியை அடைந்தவனின் ஏணியை எட்ட முடியாது” என்றார் {ஜைகீஷவ்யர்}”.(25)
நாரதரின் பெருமை! – சாந்திபர்வம் பகுதி – 230-நற்குணங்களே உலகை வசப்படுத்தும் என்பதைச் சொல்ல நாரதரைக் குறித்து உக்ரசேனருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அனைவரின் அன்புக்குரியவனாக, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துபவனாக, அனைத்துத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்}, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாக எவன் இருக்கிறான்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக முந்தைய சந்தர்ப்பம் ஒன்றில் உக்ரசேனனால் கேட்கப்பட்டுக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்போது நான் சொல்லப் போகிறேன்.(2)
உக்ரசேனன் {கிருஷ்ணனிடம்}, “மனிதர்கள் அனைவரும் நாரதரின் தகுதிகளைக் குறித்துப் பேசுவதில் பேராவல் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தெய்வீக முனிவர் உண்மையில் அனைத்து வகைத் தகுதிகளையும் கொண்டவராக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ! கேசவா, இதைக் குறித்த யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(3)
வாசுதேவன், “ஓ! குகுரர்களின் தலைவரே {உக்ரசேனரே}, ஓ! மன்னா, நான் அறிந்த வரையில் நாரதரின் நற்பண்புகளைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக. நாரதர் எந்த அளவுக்கு ஒழுக்கத்தில் நல்லவராகவும், பக்திமானாகவும் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் சாத்திரங்களைக் கற்றவராக இருக்கிறார்.(4) இருப்பினும், அவரது ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில், அவர் ஒருவனின் குருதியைக் கொதிக்கச் செய்யும் செருக்கை ஒருபோதும் பேணிவளர்ப்பதில்லை. இதன்காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(5) நிறைவின்மை, கோபம், அலட்சியப் போக்கு {சபலம்}, அச்சம் ஆகியவை நாரதரிடம் கிடையாது. அவர்கள் காரிய தாமதம் செய்வதில் இருந்து விடுபட்டவராகவும், துணிவுமிக்கவராகவும் இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(6) நாரதர் அனைவரின் மதிப்புமிக்க வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆசை அல்லது பேராசையின் மூலம் அவர் தனது வார்த்தைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(7) அவர், ஆன்ம ஞானத்திற்கு வழிவகுக்கும் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவராகவும், அமைதியான மனநிலை கொண்டவராகவும், பெருஞ்சக்தியைக் கொண்டவராகவும், தன் புலன்களுக்குத் தலைவராகவும் இருக்கிறார். அவர் வஞ்சனையில் இருந்து விடுபட்டவராக, பேச்சில் வாய்மைநிறைந்தவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(8) சக்தி, புகழ், நுண்ணறிவு, ஞானம், பணிவு, நற்பிறப்பு, தவங்கள் மற்றும் வயதால் அவர் புகழ்பெற்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(9) அவர் நன்னடத்தைக் கொண்டவராக இருக்கிறார். அவர் நன்றாக உடுத்தி நன்றாக அலங்கரித்துக் கொள்கிறார். தூய்மையான உணவை அவர் உண்கிறார். அவர் அனைவரிடமும் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் உடலாலும் மனத்தாலும் தூய்மையானவராக இருக்கிறார். அவர் இனிய பேச்சைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பொறாமை மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(10)
நிச்சயமாக அவர் எப்போதும் அனைத்து மக்களின் நன்மையில் ஈடுபடுகிறார். அவரிடம் எந்தப் பாவமும் வசிப்பதில்லை. பிறரின் தீப்பேற்றில் அவர் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(11) வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், புராணங்களைக் கவனிப்பதன் மூலமும் அவர் உலகம் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் வெல்ல எப்போதும் முனைகிறார். அவர் பெருந்துறவியாவார், மேலும் அவர் எவரையும் ஒருபோதும் அவமதிப்பதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(12) அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்; எனவே, அவர் எவரிடமும் அன்பு கொள்வதுமில்லை எவரையும் வெறுப்பதுமில்லை. அவர் எப்போதும் கேட்பவனுக்கு இனிமையானவற்றையே பேசுகிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(13) அவர் சாத்திரங்களின் பெரும் கல்வியைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பல்வேறு இனிமையான காரியங்களைக் குறித்து உரையாடுகிறார். அவரது அறிவும், ஞானமும் பெரியனவாகும். அவர் பேராசையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனையில் இருந்தும் விடுபட்டவராக இருக்கிறார். பெரிய இதயம் கொண்டவராக இருக்கிறார். கோபத்தையும், பேராசையையும் வென்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(14) ஈட்டல் அல்லது இன்பம் தொடர்புடைய எந்தக் காரியத்திற்காகவும் அவர் ஒருபோதும் எவரிடமும் சச்சரவு செய்ததில்லை. அனைத்துக் களங்கங்களும் அவரிடம் இருந்து கிழித்து எறியப்பட்டன. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(15)
(பிரம்மத்திடம்) அவரது அர்ப்பணிப்பு உறுதியானதாகும். அவர் ஆன்மா பழியற்றதாகும். அவர் ஸ்ருதிகளை நன்கறிந்தவராக இருக்கிறார். கொடுமையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனை அல்லது குற்றங்களின் ஆதிக்கத்தைக் கடந்தவராக அவர் இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(16) (பிறரின்) பற்றுக்குரிய அனைத்துப் பொருட்களிலும் அவர் பற்றில்லாதவராக இருக்கிறார்.[1] அவர் ஒருபோதும் நீண்ட காலம் ஐயத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கியதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(17) அவர் ஈட்டல் மற்றும் இன்பம் தொடர்புடைய பொருட்களில் எந்த ஏக்கமும் கொள்பவரில்லை. அவர் தன்னைத்தானே ஒருபோதும் புகழ்ந்து கொள்வதில்லை. அவர் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். பேச்சில் மென்மை கொண்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(18) அவர் ஒன்றுக்கொன்று வெவ்வேறான மனிதர்கள் அனைவரின் இதயங்களிலும் எந்தப் பழியும் சொல்லாமல் அவற்றை {அவர்களின் இதயங்களைக்} கவனிக்கிறார். பொருட்களின் தோற்றம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் அவர் நன்கறிந்தவராக இருக்கிறார்.(19) அவர் எவ்வகை அறிவியலையும் ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை, அல்லது அவற்றில் வெறுப்பைக் காட்டுவதில்லை. அவர் தனது சொந்த தகுதிக்குரிய அறநெறியின்படி வாழ்கிறார். அவர் ஒருபோதும் கனியற்ற வகையில் காலத்தைக் கடத்துவதில்லை. அவரது ஆன்மா எப்போதும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(20)
உழைப்பைச் செலுத்த வேண்டிய காரியங்களில் அவர் எப்போதும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் அறிவையும், ஞானத்தையும் ஈட்டியிருக்கிறார். அவர் யோகத்தில் ஒரு போதும் தணிவடைந்ததில்லை. அவர் எப்போதும் கவனத்துடனும், முயற்சிக்கான ஆயத்தத்துடனும் இருக்கிறார். அவர் எப்போதும் கவனமிக்கவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(21) அவர் தன் குறைகள் எதற்காகவும் ஒருபோதும் நாணமடைந்ததில்லை. அவர் மிகுந்த கவனம் கொண்டவராக இருக்கிறார். அவர் எப்போதும் பிறருக்கான நன்மையில் அவர்களுடன் சேர்ந்து எப்போதும் ஈடுபடுகிறார். அவர் பிறரது இரகசியங்களை ஒருபோதும் வெளியிடுவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(22) மதிப்புமிக்கப் பொருட்களை அடையும் சந்தர்ப்பங்களிலும் அவர் ஒருபோதும் திளைப்பின் வசப்படுவதில்லை. எந்த இழப்பிலும் அவர் ஒருபோதும் வருந்துவதுமில்லை. அவரது புத்தி உறுதியானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. அவரது ஆன்மா அனைத்துப் பொருட்களிலும் பற்றில்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(23) இவ்வாறு அனைத்துத் தகுதிகளையும், சாதனைகளையும் கொண்டவரும், அனைத்து காரியங்களிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்பவரும், தூய்மையான உடலும் மனமும் கொண்டவரும், முற்றிலும் மங்கலகரமானவரும், காலத்தின் போக்கு மற்றும் குறிப்பிட்ட செயல்களின் வாய்ப்புக்குரிய காலங்களையும் நன்கறிந்தவரும், இனிமையான பொருட்கள் அனைத்தையும் நன்கறிந்தவருமான அவரிடம் எவர்தான் அன்புபாராட்டாமல் இருப்பார்கள்?” என்று கேட்டான் {கிருஷ்ணன்}”.(24)
வியாசரும், சுகமுனியும்! – சாந்திபர்வம் பகுதி – 231-வியாசருக்கும் அவரது மகன் சுகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; காலத்தின் பல்வேறு பிரிவினைகள், ஒவ்வொரு யுகத்தின் கால அளவு, பல்வேறு யுகங்களில் மனிதர்களின் வாழ்நாட்கள் ஆகியவற்றை வியாசர் சுகருக்கு உரைப்பது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தவரே, உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும், முடிவையும் குறித்தும்; அவற்றின் தியான இயல்பு மற்றும் அவற்றின் செயல்கள் குறித்தும்; காலப்பிரிவினைகள் மற்றும் ஒவ்வொரு யுகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாள் காலங்கள் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன்.(1) உலகத்தின் தோற்றம் மற்றும் ஒழுக்கம் குறித்தும்; உயிரினங்களின் வருகை மற்றும் அவை செயல்படும் விதம் குறித்துமான முழு உண்மையையும் நான் அறிய விரும்புகிறேன். உண்மையில், அவற்றின் படைப்பும், அழிவும் எங்கிருந்து நடைபெறுகின்றன?(2) ஓ! அறவோரில் சிறந்தவரே, நீர் எங்களுக்கு உதவ எண்ணினால், நான் கேட்பது குறித்து எங்களுக்குச் சொல்வீராக.(3) இதற்கு முன்பு நீர் சொன்னவகையில் பிருகுவுக்கும், மறுபிறப்பாள தவசியான பரத்வாஜருக்கும் இடையில் நடந்த சிறந்த உரையாடலைக் கேட்டு என் புத்தி அறியாமையில் இருந்து நீங்கி,(4) உலகம் சார்ந்த பொருட்களில் இருந்து விலகி, யோகத்தில் மிகவும் பற்றுக் கொண்டு, தெய்வீகத் தூய்மையில் நிலைத்திருக்கிறது. எனவே, இக்காரியம் குறித்து மீண்டும் உம்மிடம் நான் கேட்கிறேன். (இது குறித்து மேலும் விரிவாக) என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தெய்வீகமான வியாசரிடம் அவரது மகனான சுகர் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பழைய உரையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) எல்லையற்ற வேதங்களையும், அதன் அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்று, சிறந்த அறத்தகுதியை ஈட்டியதன் விளைவால் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்க விரும்பிய சுகர்,(7) தீவில் பிறந்த முனிவரான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இதே கேள்விகளையே கேட்டு, அவரால் ஐயங்கள் தீர்க்கப்பட்டார். அவர் (கல்வி மற்றும் தியானத்தின் மூலம்) கடமைகளைக் குறித்த உண்மைகள் தொடர்பான அனைத்து ஐயங்களையும் நீக்கினார்.(8)
சுகர் {வியாசரிடம்}, “கால அறிவால்[1] அனைத்து உயிரினங்களின் படைப்பாளனென உறுதிசெய்யப்பட்டவன் எவன் என்பதையும், ஒரு பிராமணனால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்”.(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மகனால் {சுகரால்} கேள்வி கேட்கப்பட்டவரும், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் ஆகிய இரண்டின் அறிவைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், முற்றறிவு பெற்றவருமான தந்தை {வியாசர்}, அக்காரியம் குறித்து இவ்வாறே உரைத்தார்.(10)
வியாசர் {சுகரிடம்}, “தொடக்கமும் முடிவும் இல்லாததும், பிறப்பில்லாததும், ஒளியுடன் சுடர்விடுவதும், சிதைவுக்கு அப்பாற்பட்டதும், மாற்றமில்லாததும், அழிவில்லாததும், புலப்படாததும், மேன்மையான அறிவுமான பிரம்மம் மட்டுமே படைப்புக்கு முன்பே இருக்கிறது.(11) முனிவர்கள், காலத்தை அளந்து குறிப்பிட்ட பகுதிகளுக்குக் குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளனர். பதினைந்து கண் சிமிட்டல்களின் {கால} அளவு ஒரு காஷ்டை என்று அழைக்கப்படுகிறது. முப்பது காஷ்டைகள் ஒரு கலை என்று அழைக்கப்படுகிறது. முப்பது கலைகளும், கலைகளில் பத்தில் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு முகூர்த்தம் என்றறியப்படுகிறது. முப்பது முகூர்த்தங்கள் ஒரு பகலையும் இரவையும் உண்டாக்குகின்றன. முப்பது பகல்களும் இரவுகள் ஒரு மாதம் என்றழைக்கப்படுகிறது. பனிரெண்டு மாதங்கள் ஒரு வருடங்கள் என்றழைக்கப்படுகிறது.(12,13) கணித அறிவியலை அறிந்த மனிதர்கள், (சூரியனின் போக்கைச் சார்ந்து) ஒரு வருடத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு {உத்தராயணம், தக்ஷிணாயனம்} என்ற இரண்டு அயணங்களை அமைத்திருக்கின்றனர்.(14) சூரியன் மனித உலகிற்கான பகலையும், இரவையும் அமைக்கிறான். இரவானது அனைத்து உயிரினங்களும் உறங்குவதற்காகவும், பகலானது செயல்படுவதற்காகவும் இருக்கிறது.(15)
மனிதர்களின் ஒரு மாதமானது பித்ருக்களின் ஒரு பகலுக்கும் இரவுக்கும் {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (பித்ருக்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, (மனிதர்களின்) வளர்பிறை நாட்கள் {சுக்லபக்ஷம்} செயல்படுவதற்கானதாகவும் {பித்ருக்களின் பகலாகவும்}; தேய்பிறை நாட்கள் {கிருஷ்ணபக்ஷம்} உறங்குவதற்காகவும் {பித்ருக்களின் இரவாகவும்} இருக்கிறது.(16) (மனிதர்களின்) ஒரு வருடம் தேவர்களின் ஒரு பகல் மற்றும் இரவுக்கு {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (தேவர்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, இளவேனில் காலத்தில் இருந்து கூதிர் காலம் வரையில் சூரியன் பயணிக்கும் அரை வருடம் {உத்தராயணம்} தேவர்களின் பகலாகவும், கூதிர் காலத்தில் இருந்து இளவேனில் காலம் வரையில் அவன் பயணிக்கும் அரை வருடம் {தக்ஷிணாயனம்} அவர்களின் இரவாகவும் இருக்கிறது.(17) நான் உன்னிடம் சொன்னவாறு மனிதர்களின் பகலிரவுகளைக் கணக்கிடுவதன் மூலம், பிரம்மனின் பகலிரவு மற்றும் அவனுடைய வருடங்களையும் நான் சொல்லப் போகிறேன்.(18) கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலியுகங்களைப் பொறுத்தவரையில், (இவ்வாறு) பல்வேறு காரணங்களுக்காகப் பலவாறு கணக்கிடப்படும் வருடங்களின் எண்ணிக்கையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(19) (தேவர்களின்) நாலாயிரம் வருடங்கள் முதல் அல்லது கிருத யுகத்தின் காலமாகும். அந்த யுகத்தின் காலைப் பொழுது நானூறு வருடங்களையும், அதன் மாலைப் பொழுது நானூறு வருடங்களையும் கொண்டதாகும். (எனவே கிருத யுகத்தின் மொத்த கால அளவானது தேவர்களின் வருடங்களில் நாலாயிரத்து எண்ணூறு {4800} வருடங்ளாகும்).(20)
பிற யுகங்களைப் பொறுத்தவரையில், அவை ஒவ்வொன்றின் கால அளவும் ஒன்றிணைந்த பகுதியுடன் தனித்திருக்கும் நிலை மற்றும் ஒன்றிணைந்த பகுதி ஆகிய இரண்டையும் சேர்த்து கால்பகுதி அளவுக்குப் படிப்படியாகக் குறைகிறது. (இவ்வாறு கணக்கிட்டால் திரேதா யுகமானது மூவாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது முன்னூறு வருடங்களும், மாலைப் பொழுது முன்னூறு வருடங்களும் சேர்த்து மூவாயிரத்து அறுநூறு {3600} வருடங்களாகும்.
துவாபர யுகமானது இரண்டாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது இருநூறு வருடங்களும், மாலைப்பொழுது இருநூறு வருடங்களும் சேர்த்து இரண்டாயிரத்து நானூறு {2400} வருடங்களாகும்.
கலியுகத்தின் கால அளவானது, ஆயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது நூறு வருடங்களும், மாலைப்பொழுது நூறு வருடங்களும் சேர்த்து ஆயிரத்து இருநூறு {1200} வருடங்களாகும்)[2].(21) இந்த யுகங்கள் முடிவில்லாதவையும், நித்தியமானவையுமான உலகங்களை எப்போதும் நீடிக்கச் செய்கின்றன. ஓ! குழந்தாய், பிரம்மத்தை அறிந்தவர்கள் இதையே மாற்றமில்லாத பிரம்மமாகக் கருதுகிறார்கள்.(22) கிருத யுகத்தில் வாய்மையுடன் சேர்த்து அனைத்து கடமைகளும் {தர்மங்களும்} முழுமையாக இருந்தன. நீதியற்ற அல்லது தடுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் மனிதர்களிடம் எந்த அறிவும், பொருளும் சேரவில்லை.(23) பிற யுகங்கள் ஒவ்வொன்றிலும், வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் படிப்படியாகக் கால் பகுதி குறைவது காணப்படுகிறது. களவு, பொய்மை, வஞ்சகம் ஆகியவற்றின் விளைவால் பாவம் வளர்கிறது.(24) கிருத யுகத்தில், மனிதர்கள் அனைவரும் நோயற்றவர்களாக, அவர்களது நோக்கங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றவர்களாக நானூறு வருடங்கள் வாழ்கிறார்கள். திரேதா யுகத்தில் கால்பகுதி வாழ்நாள் அளவு குறைகிறது {அதாவது மனிதர்கள் முன்னூறு வருடங்கள் வாழ்கிறார்கள்}.(25)(கிருத யுகம் 4,800 வருடங்கள் கொண்டதாகும். திரேதா யுகம் 3,600; துவாபர யுகம் 2,400; கலியுகம் 1,200 வருடங்களைக் கொண்டதாகும். எனினும் இவை தேவ வருடங்களாகும் {தேவர்களின் ஒரு வருடம் மனிதர்களின் 360 வருடங்களைக் கொண்டதாகும்}. இங்கே சொல்லப்படும் 15-17 மற்றும் 20-21 சுலோகங்கள் மனுசாத்திரம் அதிகாரம் 1ல் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், “கிருதயுகமானது நாலாயிரம் வருஷங்களென்று கூறுகிறார்கள். அந்த யுகத்தின் ஸந்தியாகாலம் நானூறு வருஷங்களும், அப்படியே ஸந்தியாம்சம் நானூறுவருஷங்களுமாகும். அதைவிட வேறான மூன்று யுகங்களிலும் அவைகளின் ஸந்தியைகளிலும் ஸந்தியாம்சங்களிலும் ஒவ்வொன்று குறையக் கூறிய ஆயிரம் வருஷங்களும் நூறு வருஷங்களும் நூறு வருஷங்களுமாகும்”)அடுத்தடுத்த யுகங்களில் வேதங்களின் வார்த்தைகள், வாழ்நாள் காலம், (பிராமணர்கள் சொல்லும்) அருளாசிகள், வேத சடங்குகளின் கனிகள் ஆகியன அனைத்தும் படிப்படியாகக் குறைவதாக நாம் கேள்விப்படுகிறோம்.(26) கிருத யுகத்திற்காக நிறுவப்பட்டுள்ள கடமைகள் ஒருவகையாக உள்ளன. திரேதா யுகத்திற்காக நிறுவப்பட்டவை மறு வகையாக உள்ளன. துவாபர யுகத்திற்காக நிறுவப்பட்டவை வேறு வகையாக உள்ளன. மேலும் கலியுகத்திற்காக நிறுவப்பட்டவை மறுவகையாக உள்ளன. இவை அடுத்தடுத்த யுகங்களில் நேரும் வீழ்ச்சி குறிக்கும்படி அமைகின்றன.(27) கிருத யுகத்தில் தவமே முதன்மையான இடத்தைப் பெறுகிறது. திரேதா யுகத்தில் அறிவே முதன்மையானதாக இருக்கிறது. துவாபர யுகத்தில் வேள்வி முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. கலியுகத்தில் தானமே ஒரே பொருளாக விதிக்கப்பட்டிருக்கிறது.(28)
(தேவர்களின்) இந்தப் பனிரெண்டாயிரம் வருடங்களே யுகங்கள் என்றழைக்கப்படுபவையாக அமைகின்றன {ஒரு தேவயுகம் என்றழைக்கப்படுகிறது} எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். இத்தகைய ஆயிரம் யுகங்களே பிரம்மனின் ஒரு பகல் வேளையாக அமைகிறது[3].(29) பிரம்மனின் இரவும் அதே கால அளவைக் கொள்கிறது. பிரம்மனின் பகல் தொடங்கியதும், அண்டம் உயிர்பெறத் தொடங்குகிறது. அண்டத்தின் அழிவுக்காலத்தில், படைப்பாளன் {பிரம்மன்} தியான யோகத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறான். உறக்க காலம் முடிந்ததும் அவன் விழிப்படைகிறான்.(30) இத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு பகலாகின்றன. அதே போல ஆயிரம் யுகங்கள் அவனது ஓரிரவு ஆகின்றன. இஃதை அறிந்தவர்களே பகல் மற்றும் இரவை அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(31) பிரம்மன், இரவு கடந்து விழித்ததும், அழிவற்ற சித்-ஐ அவித்யையால் மறைத்துத் திருத்தி அமைக்கிறான். பிறகு அவன் எழச்செய்யும் நனவுநிலையில் இருந்து, புலப்படுபவைக்கு ஒப்பான மனம் உண்டாகிறது” என்றார் {வியாசர்}[4].(32)
யுகத்தன்மைகள்! – சாந்திபர்வம் பகுதி – 232-படைப்பு எழுந்த வகை; பல்வேறு யுகங்களின் தன்மைகள்; பல்வேறு யுகங்களில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகள் ஆகியவற்றைத் தன் மகனான சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தானே நீடித்துச் செயல்படும் பிரகாசமிக்க வித்தான பிரம்மனே, அசையும் மற்றும் அசையாத இருவகை உயிரினங்கள் இரண்டையும் கொண்ட மொத்த அண்டத்தையும் எழச் செய்கிறான்[1].(1) அவனது பகலின் அதிகாலையில் விழித்தெழும் அவன் அவித்யையின் உதவியுடன் இவ்வண்டத்தைப் படைக்கிறான். முதலில் மஹத் என்றழைக்கப்படுவது எழுகிறது. அந்த மகத்தே விரைவாகப் புலப்படுவதன் ஆன்மாவான {ஸ்தூலமான உருவமுள்ள} மனமாக விரைவாக மாறுகிறது[2].(2) மனமானது, பிரகாசமான சித்-ஐ அவித்யையால் மறைத்து ஏழு பெரும் பூதங்களைப் படைக்கிறது[3]. எட்டாததை எட்டுவதும், பல வழிமுறைகளைக் கொண்டதும், தனது அடிப்படை குறியீடுகளாக ஆசையையும், ஐயத்தையும் கொண்டதுமான மனமானது, படைக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, தன்னைத் தானே திருத்தி அமைத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகைப் பொருட்களைப் படைக்கிறது. அதனிலிருந்து முதலில் வெளி {ஆகாயம்} எழுகிறது. அதன் குணம் ஒலி என்பதை அறிவாயாக.(3,4) மேலும் திருத்தி அமைத்துக் கொள்வதன் மூலம் அந்த வெளியில் இருந்து, அனைத்து மணங்களையும் சுமப்பதும், தூய்மையானதும், வலிமைமிக்கதுமான காற்று எழுகிறது. அது தீண்டலின் குணத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(5)மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் காற்றிலிருந்தும் பிரகாசத்துடன் கூடிய ஒளி எழுகிறது. அழகை வெளிப்படுத்துவதும், சுக்ரம் என்றழைக்கப்படுவதும், இவ்வாறு இருப்பில் எழுவதுமான அது, வடிவத்தைத் தன் குணமாகக் கொண்டிருக்கிறது.(6) மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் ஒளியில் இருந்து சுவையைத் தன் குணமாகக் கொண்ட நீர் எழுகிறது. நீரிலிருந்து மணத்தைக் குணமாகக் கொண்ட பூமி எழுகிறது. இவையே தொடக்கப் படைப்பைக் குறிக்கின்றன என்று சொல்லப்படுகின்றன.(7) இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தங்களுக்கு முந்தையதும், தனது பிறப்பிடமுமான பூதங்களின் குணங்களை அடைகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்குண்டான குறிப்பிட்ட குணத்தை மட்டுமல்லாமல் தங்களுக்கு முந்தைய பூதங்களின் குணங்களையும் கொண்டிருக்கின்றன[4]. (எனவே, வெளியானது ஒலியை மட்டுமே தன் குணமாகக் கொண்டிருக்கிறது. வெளிக்குப் பிறகே காற்று {வாயு} வருவதால், அஃது ஒலி மற்றும் தீண்டல் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. காற்றில் இருந்து வரும் ஒளி அல்லது நெருப்பானது, ஒலி, தீண்டல் மற்றும் வடிவம் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. ஒளியில் இருந்து வந்த நீரானது ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் சுவை ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது. நீரில் இருந்து வந்த பூமியானது, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது).(8) நீரில் மணத்தை உணரும் எவரும் அறியாமையால் அது {மணமானது} நீருக்குச் சொந்தமானது என்றால் பிழையில் வீழ்ந்தவனாகிறான், ஏனெனில், மணம் என்பது நீர் மற்றும் காற்றிலும் பற்றுக் கொண்ட நிலையில் நீடித்திருந்தாலும், அது {மணம் என்பது} பூமியின் குணமே ஆகும்.(9)பல்வேறு வகைச் சக்திகளைக் கொண்ட இந்த ஏழுவகை இருப்புகளும் முதலில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாகவே இருந்து வந்தன. இவை அனைத்தும் ஒன்று கலந்த நிலையை அடையாமல் அவற்றால் எந்தப் பொருளையும் படைக்க முடியாது.(10) இந்தப் பெரும் இருப்புகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு, ஒன்றோடொன்று கலப்பதாலேயே அங்கங்கள் {அவயவ்யம்} என்றழைக்கப்படும் உடலின் பகுதிகள் அமைகின்றன[5].(11) அந்த அங்கங்கள் ஒருங்கிணைவதால் விளையும் இந்த மொத்த கூட்டுத் தொகையும் பதினாறு {16} கூறுகளைக் கொண்ட வடிவத்தை அடைந்து உடல் என்று அழைக்கப்படுகிறது. (திரள் உடல் இவ்வாறு அமையும்போது), நுட்பமான மஹத்-ஆனது வற்றாத செயல்களின் எச்சங்களுடன் திரள் உடல் என்றழைக்கப்படும் கலவைக்குள் நுழைகிறது[6].(12) அனைத்துப் பொருட்களையும் உண்மையில் படைத்தவன், தன் மாயையைக் கொண்டு தன்னைப் பிரித்துக் கொண்டு அனைத்தையும் பார்ப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும் அந்த நுட்பமான வடிவங்களுக்குள் நுழைகிறான். அவனே அனைத்து உயிரினங்களையும் உண்மையாகப் படைப்பவனாக இருப்பதால், அவன் அனைத்து உயிரினங்களின் தலைவன் என்று அழைக்கப்படுகிறான்[7].(13) அவனே அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் படைக்கிறான். இவ்வாறு பிரம்ம வடிவை ஏற்கும் அவன், தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், மற்றும் மனிதர்களின் உலகங்களைப் படைக்கிறான்.(14) ஆறுகள், கடல்கள், பெருங்கடல்கள், அடிவானின் புள்ளிகள் {திசைகள்}, நாடுகள், மாகாணங்கள், குன்றுகள், மலைகள், பெரும் மரங்கள், மனிதர்கள், கின்னரர்கள், ராட்சசர்கள், பறவைகள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் பாம்புகள் ஆகியவற்றையும் படைக்கிறான்.(15)உண்மையில் அவன், அசைவன, அசையாதன என்றும், அழியத்தக்கன, அழிவில்லாதன என்றும் இருப்பின் இருவகைப் பொருட்களைப் படைக்கிறான். படைக்கப்பட்ட இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும், படைப்புக்கும் முன்பு இருந்த அந்தக் குறிப்பிட்ட குணங்களை அடைகின்றன;(16) உண்மையில் அவை ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த ஒவ்வொரு படைப்பில் அதே குணங்களையே அடைகின்றன. தீங்கிழைப்பது அல்லது அமைதி, மென்மை அல்லது கடுமை, அறம் அல்லது மறம், வாய்மை அல்லது பொய்மை ஆகியவற்றில் ஏதோ ஒரு குணத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு புதிய படைப்பிலும், ஏற்கனவே அவை பேணி வளர்த்து வந்த அந்தக் குறிப்பிட்ட குணத்தையே அடைகின்றன. இதன் விளைவாகவே அந்தக் குறிப்பிட்ட குணம் அதனைப் பற்றுகிறது.(17) விதி சமைப்பவனே, (வெளி, பூமி முதலிய) அந்தப் பெரும் இருப்புகளை, இருப்பில் உள்ள பொருளின் (வடிவம் முதலிய) புலனுக்குரிய பொருட்களிலும், அளவுகளிலும் இணைத்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட இருப்புகளுடன் கூடிய உயிரினங்களின் உறவுகளை நியமனம் செய்கிறான்.(18) பொருள் அறிவியலுக்குத் தங்களை அர்ப்பணித்த மனிதர்களுக்கு மத்தியில் உள்ள சிலர், விளைவுகளை உண்டாக்குவதில் முயற்சியே {மனித உழைப்பே} உயர்வானதெனச் சொல்கிறார்கள். சில கல்விமான்கள், விதியே {தெய்வமே} உயர்வானதெனவும், சிலர் இயற்கையே {பூதத் தொகுப்பே} செயல்படும் ஒன்றாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.(19) மேலும் சிலர், (உடல்) உழைப்பு, விதி ஆகியவற்றில் இருந்து எழும் செயல்களே, இயற்கையின் துணையுடன் விளைவுகளை உண்டாக்குகின்றன எனச் சொல்கிறார்கள். இவற்றில் எதுவும் விளைவுகளைத் தனியாக உண்டாக்கவல்லவை என்று கருதுவதற்குப் பதிலாக இவை மூன்றின் கலவையே விளைவுகள் அனைத்தையும் உண்டாக்குகின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள்[8].(20)இக்காரியத்தைப் பொறுத்தவரையில்[9], இதுவே நேர்கிறது எனச் சிலர் சொல்கிறார்கள்; சிலர் இது நேர்வதில்லை என்று சொல்கிறார்கள்; சிலர் இவை இரண்டுமில்லை என்கிறார்கள்; சிலர் இவற்றின் முரண்நிலைகள் நேர்வதில்லை என்கிறார்கள். பொருட்களைப் பொறுத்தவரையில், செயல்களைச் சார்ந்திருப்போரின் வாதங்களே இவை. எனினும், உண்மையை நோக்கி பார்வை கொண்டோர், பிரம்மமே காரணம் என்று கருதுகின்றனர்[10].(21) வாழும் உயிரினங்களுக்குத் தவமே உயர்ந்த நன்மையாகும். அமைதி மற்றும் சுயக்கட்டுப்பாடே தவத்தின் வேர்களாகும். தவத்தின் மூலம் ஒருவன் தன் மனத்தில் விரும்பும் அனைத்தையும் அடைகிறான்.(22) தவத்தின் மூலம் அவன் இந்த அண்டத்தைப் படைப்பவனையே அடைகிறான். எவன் (தவத்தின் மூலம்) அவனை அடைவதில் வெல்கிறானோ, அவன் அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனாகிறான்.(23) முனிவர்கள் தங்கள் தவத்தின் மூலமே வேதங்களை இடையறாமல் படிக்க இயன்றவர்களாகிறார்கள். சுயம்பு தொடக்கத்திலேயே, அறிவின் வடிவங்களும், தொடக்கமும் முடிவும் இல்லாதவையும், (குருவிடம் இருந்து சீடனுக்கும்} பாய்கின்றவையுமான அந்தச் சிறந்த வேத ஒலிகளை உண்டாக்கினான். அந்த ஒலிகளில் இருந்து அனைத்தை வகைச் செயல்பாடுகளும் உண்டாகின.(24) முனிவர்களின் பெயர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இருப்பில் தெரியும் பல்வேறு வடிவங்கள், செயல்பாடுகள் அனைத்தின் நடைமுறைகள் ஆகியன வேதங்களிலேயே தங்கள் தோற்றுவாயைக் கொண்டிருக்கின்றன[11].(25)
உண்மையில், அனைத்துப் பொருட்களின் உயர்ந்த தலைவன், தொடக்கத்தில் வேத வார்த்தைகளில் இருந்தே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கினான். உண்மையில், முனிவர்களின் பெயர்களும், படைக்கப்பட்ட வேறு அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன. படைக்கப்படாதவனான பிரம்மன் தன் இரவு கடந்ததும் (விடியற்காலையில்), ஏற்கனவே இருந்த மூலப் படிமங்களில் இருந்து, உண்மையில் ஏற்கனவே அவனால் உண்டாக்கப்பட்டவையேயான அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[12].(26) வேதங்களில், இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுதல் {கிருகஸ்தாஸ்ரமம்}, தவங்கள், வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் பொதுவான கடமைகளை நோற்பது, வேள்விகள், தூய புகழுக்கு வழிவகுக்கும் செயல்கள் அனைத்தையும் செய்தல், மூவகைத் தியானங்கள், இம்மையிலேயே வெற்றி (ஸித்தி) என்று அழைக்கப்படும் ஒருவகை விடுதலை என வேத கல்வியின் மூலம் அமையும் பத்து வழிமுறைகளுடன் சேர்த்து ஆன்ம விடுதலை {முக்தி} குறித்தும் சொல்லப்படுகிறது[13].(27) வேத வார்த்தைகளில் அறிவிக்கப்படுவதும், வேதங்களில் கூர்மதி கொண்டோரின் மூலம் உபநிஷத்துகளில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்படுவதும், புரிந்துகொள்ளப்பட முடியாததுமான பிரம்மத்தை, மேலே குறிப்பிடப்படும் நடைமுறைகளைப் பின்பற்றியே படிப்படியாக உணரலாம்.(28) தான் ஓர் உடலைக் கொண்டிருப்பதாக நினைக்கும் ஒரு மனிதனிடம், முரண்பட்ட இரட்டைகள் நிறைந்த இந்த இரட்டை நனவுநிலையானது, அவன் ஈடுபடும் செயல்களின் மூலம் மட்டுமே பிறக்கிறது. (அந்த இரட்டை நனவுநிலையானது, கனவுகளற்ற உறக்கத்திலோ, விடுதலை {முக்தி} அடையப்படும்போதோ மறைகிறது). எனினும், விடுதலையை {முக்தியை} அடைந்த ஒருவன், தன் அறிவின் துணை கொண்டு, அந்த இரட்டை நனவுநிலையை விரட்டுகிறான்.(29) (வேதங்கள் எனும்) ஒலியின் மூலமாகத் தெரியும் பிரம்மம் மற்றும் இரண்டாவதாக வேதங்கள் மற்றும் பரம்பொருளைக் கடந்த பிரம்மம் என்ற இரு பிரம்மங்கள் அறியப்பட வேண்டும். ஒலியில் தெரியும் பிரம்மத்தை அறிந்தவன் பரம்பொருளான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[14].(30)விலங்குகளைக் கொல்வதே {உயிரினங்களைக் கொல்வதே} க்ஷத்திரியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தானியங்கள் வளர்ப்பதே வைசியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. மூவகையினருக்கும் தொண்டாற்றுவதே சூத்திரர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தவங்கள் (அல்லது பிரம்ம வழிபாடே) பிராமணர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது.(31) கிருத யுகத்தில் வேள்விகள் செய்வதற்கான தேவை ஏதும் இல்லாதிருந்தது. அத்தகய செயல்பாடு திரேதா யுகத்தில் அவசியமானது. துவாபர யுகத்தில் வேள்விகள் வீழத் தொடங்கின. கலியிலும் வீழ்ந்து கொண்டே இருக்கிறது.(32) கிருத யுகத்தில் மனிதர்கள் பிரம்மம் ஒன்றை மட்டுமே வழிபட்டு, முன்னேற்றம் காணும் பெரும் நோக்கத்தோடு செயல்படும் ரிக்குகள், யஜுஸ்கள், சடங்குகள், வேள்விகள் ஆகிய அனைத்தையும் தங்கள் வழிபாட்டில் இருந்து அந்நியமாகக் கருதி தவங்களின் மூலமாக யோகத்தை மட்டுமே செய்துவந்தனர்.(33) திரேதா யுகத்தில், பெரும் வலிமைமிக்க மனிதர்கள் பலர் தோன்றி அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் ஆட்சி செய்தனர். (பொதுவாக அந்த யுகத்தின் மனிதர்கள் இயல்பாகவே அறம் சார்ந்த நடைமுறைகளைச் செய்யவில்லையெனினும், பெரும் தலைவர்கள் அத்தகைய நடைமுறைகளிலேயே அவர்களைச் செலுத்தினர்). அதன்படி அந்த யுகத்தில் வேதங்கள், வேள்விகள் மற்றும் பல்வேறு வகையினருக்கிடையிலான வேறுபாடுகள், நான்கு வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} ஆகியன ஒரு கச்சிதமான நிலையிலேயே இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலம் குறைந்ததன் விளைவால் இவை அனைத்தும் அந்த யுகத்தில் {துவாபர யுகத்தில்} அந்தக் கச்சிதமான நிலையில் இருந்து வீழ்ந்தன.(34,35)
கலியுகத்தில், வேதங்கள் அனைத்தும் மனிதர்களால் காணப்பட முடியாதபடிக்கு மிக அரிதானதாகிவிடும். கொடுமையால் பீடிக்கப்படும் அவர்கள் {கலி யுகத்தில் வாழும் மனிதர்கள்} தங்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் வேள்விகளுடன் சேர்த்து அழிவை அடைகிறார்கள்.(36) கிருத யுகத்தில் காணப்படும் அறம், இப்போது {இந்தக் கலியுகத்தில்} தூய்மையான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தவங்களுக்கும், சாத்திரக் கல்விக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான அத்தகைய பிராமணர்களிடம் மட்டுமே காணப்படும்.(37) பிற யுகங்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள், ஒரேயடியாகத் தங்கள் கடமைகளையும், அறச்செயல்களையும் விட்டுவிடாமல், வேத விதிகளை அறிந்து, தங்கள் தங்களுக்குரிய நடைமுறைகளை நோற்று, சாத்திரங்களின் அதிகாரத்தில் வழிநடத்தப்பட்டு முன்னேறும் நோக்கத்தாலும் விருப்பத்தால் வேள்விகளையும் நோன்புகளையும் செய்து, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத் தலங்களுக்குச் செல்வார்கள்[15].(38)மழைக்காலத்தில், அசையாத வகையைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு புதிய பொருட்கள், மேகத்தில் இருந்து பொழியும் மழையின் மூலம் உயிர்பெறுவதைப் போலவே ஒவ்வொரு புதிய யுகத்திலும் பல்வேறு வகைப் புதி கடமைகளும், அறநோன்புகளும் தோன்றுகின்றன.(39) குறிப்பிடத்தக்க அதேவகைத் தோற்றப்பாடுகள் பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுடன் சேர்ந்து மீண்டும் தோன்றுவதைப் போலவே ஒவ்வொரு புதிய படைப்பின்போதும், ஒவ்வொரு புதிய பிரம்மன் மற்றும் ஹரனில் அதே குணங்கள் தோன்றுகின்றன.(40) இதற்கு முன்பே நான், தொடக்கமும், முடிவும் இல்லாததும், அண்டத்தில் இந்தப் பல்வேறு வகைகளை விதிப்பதுமான காலம் குறித்தும் உன்னிடம் பேசியிருக்கிறேன். அந்தக் காலமே உயிரினங்கள் அனைத்தையும் படைக்கவும் விழுங்கவும் செய்கிறது.(41) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்படும் எண்ணற்றவையும் இருப்பில் இருப்பவையுமான உயிரினங்கள் அனைத்தும், தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படியே காலத்தைத் தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன.(42) ஓ! மகனே, இவ்வாறே படைப்பு, காலம், வேள்விகள், பிற சடங்குகள், வேதங்கள், அண்டத்தில் உண்மையில் செயல்படும் இருப்பு, செயல்பாடு, செயல்பாட்டின் விளைவுகள் குறித்து நீ கேட்ட அனைத்து காரியங்களையும் குறித்துப் பேசிவிட்டேன்” என்றார் {வியாசர்}.(43)
பிரளயம்! – சாந்திபர்வம் பகுதி – 233-அண்டமே அழிந்து போகம் பிரளயம் எவ்வாறு நேர்கிறது என்பதைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} பகல் கடந்து, அவனது இரவு வேளை வரும்போது, அனைத்துப் பொருட்களையும் அவன் தன்னுள் எவ்வாறு ஈர்த்துக் கொள்கிறான், அல்லது அவன் திரளாக இருக்கும் இந்த அண்டத்தை மிக நுட்பமானதாக்கி, அனைத்தையும் எவ்வாறு தன் ஆன்மாவுக்குள் கலக்கச் செய்கிறான் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன். அண்ட அழிவுக்கான {பிரளயத்துக்கான} காலம் வரும்போது, பனிரெண்டு சூரியர்களும், ஏழு தழல்களுடன் கொண்ட அக்னியும் எரியத் தொடங்குகின்றன. அந்தத் தழல்களால் மறைக்கப்படும் மொத்த அண்டமும், பெருந்தீயாகச் சுடர்விட்டு எரியத் தொடங்கும்.(2) பூமியில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், இந்தக் கோளானது எந்தப் பொருளால் ஆனதோ அதற்குள் முதலில் கலந்து மறையும்.(3) இவ்வாறு அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் மறைந்தபிறகு, மரம் செடி கொடிகளை இழந்த பூமியானது வெறுமையான ஆமை ஓட்டைப் போலத் தெரியும்.(4)
அப்போது நீரானது, பூமியின் குணமான மணத்தை ஏற்கிறது. பூமி தன் அடிப்படை குணத்தை இழக்கும்போது அந்தப் பூதம் {நிலமெனும் பூதம்} அழிவின் விளிம்பில் நிற்கும்.(5) அப்போது நீரே மேலோங்கி நிற்கிறது. பெரும் அலைகள் பெருகி, பயங்கர முழக்கங்களை உண்டாக்கி இந்த வெளியை நீரே நிரப்பி அசையும் அல்லது அசையாமல் நிற்கும்.(6) பிறகு நீரின் குணம் வெப்பத்தால் எடுத்துக் கொள்ளப்படும். தன் குணத்தை இழக்கும் நீரானது அந்தப் பூதத்திலேயே ஓய்வெடுக்கும்.(7) சுற்றிலும் சுடர்விட்டெழும் பிரகாசமான நெருப்பின் தழல்கள் வெளியின் மையத்தில் உள்ள சூரியனை மறைக்கும். உண்மையில் அப்போது, சீற்றமிகு தழல்கள் நிறைந்த வெளியானது பெருந்தீயாக எரியும்.(8)
காற்று {வாயு} வந்து வெப்பம், அல்லது ஒளியின் குணமான வடிவத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் பெரும் வலிமை கொண்ட காற்றின் வசப்பட்டுத் தணிவடையும் அது {வெப்பம் / ஒளி}, பயங்கரமாகக் கலக்கமடையத் தொடங்கும்.(9) காற்றானது தன் சொந்த குணமாக ஒலியை அடைந்து மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் பத்துப் புள்ளிகள் அனைத்திலும் கடந்து செல்லும்.(10) அப்போது காற்றின் குணமான ஒலியை எடுத்துக் கொள்ளும் வெளியினால் தணிவடையும் அது, கேள்விப்படாத, அல்லது சொல்லப்படாத ஒலிக்கு ஒப்பான இருப்பு வட்டத்திற்குள் நுழையும்.(11) அப்போது வெறும் வெளி மட்டுமே எஞ்சும், ஒலியைத் தன் குணமாகக் கொண்ட அந்தப் பூதமானது, எவ்வகை வடிவமும் கொள்ளாமல், வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய பண்புகளை இழந்த பிற பூதங்கள் அனைத்துடன் சேர்ந்து இருப்பின் புலப்படா நிலையான ஒலியைப் போல வசிக்கும்.(12)
பிறகு, வெளியின் பண்பான ஒலியானது, புலப்படும் பொருட்கள் அனைத்தின் சாரமாக இருக்கும் மனத்தால் விழுங்கப்படுகிறது. தானே புலப்படாததாக இருக்கும் மனமானது, இவ்வாறே மனத்தின் மூலம் வெளிப்பட்ட அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது. புலப்படாததாக, அல்லது நுட்பமானதாக மனத்தில் தெரியும் இந்த மன ஈர்ப்புநிலையே பரந்த புற அண்ட அழிவு என்றழைக்கப்படுகிறது[1].(13) அப்போது சந்திரமாஸ் {சந்திரன்}, (இவ்வாறு) மனத்தை அதன் குணத்திற்குள் தானே ஈர்க்கும்படி செய்து அதை விழுங்குகிறது. சந்திரமாஸுக்குள் நுழைந்து மனம் இருப்பில் இல்லாமல் போகும்போது, ஈஸ்வரனுக்குச் சொந்தமான பிற குணங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.(14) சங்கல்பம் என்றழைக்கப்படும் இந்தச் சந்திரமாஸ், சித்தம் அல்லது தீர்மானம் என்ற அழைக்கப்படும் செயல்பாட்டில் ஈடுபடும் புலங்களை அழிப்பது என்ற மிகக் கடினமான செயலைச் செய்ய வேண்டிய காரணத்தால். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, அந்தச் சங்கல்பம் ஈஸ்வரனின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது. இதுவும் விளைந்த பிறகு அடையப்படும் நிலையென்பது உயர்ந்த அறிவு என்று சொல்லப்படுகிறது.(15) காலம் இந்த அறிவை விழுங்குகிறது, மேலும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போலக் காலமும் தனக்கான வேளையில் வலிமை அல்லது சக்தியால் விழங்கப்படுகிறது. எனினும் வலிமை அல்லது சக்தியானது, மீண்டும் காலத்தால் விழுங்கப்பட்டு, இறுதியில் வித்யையின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது.(16)வித்யையைக் கொண்ட ஈஸ்வரன், அந்த இல்லாமையையே தன் ஆன்மாவுக்குள் விழுங்கிக் கொள்கிறான். அதுவே புலப்படாததும் உயர்ந்த பிரம்மமுமாகும். அதுவே நித்தியமானதும், உயர்ந்ததில் உயர்ந்ததுமாகும்.(17) இவ்வாறே இருப்பில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுகின்றன.(18) உண்மையில், அறிவியல் காரியமும், (சாத்திரங்களின் துணையுடன்) உணரப்பட வேண்டியதுமான இஃது, உண்மையான அனுபவத்திற்குப் பிறகு, பரம ஆத்மாக்களைக் கொண்ட யோகியரால் இவ்வாறே அறிவிக்கப்பட்டிருக்கிறது.(19) இவ்வாறே, புலப்படாத பிரம்மமானது விரிந்து சுருங்கும் (அதாவது, படைத்து, அழிக்கும்) செயல்பாட்டை மீண்டும் மீண்டும் செய்கிறது. இவ்வாறே ஆயிரம் யுகங்களைக் கொண்ட பிரம்மனின் பகலும், இரவும் இருக்கின்றன” என்றார் {வியாசர்}[2].(20)
பிராமணக் கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 234-பிராமணர்களின் கடமைகள் குறித்தும், பிராமணர்களுக்குக் கொடையளித்து உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்களைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டது குறித்து நீ கேட்டதை இப்போது முழுமையாகச் சொல்லிவிட்டேன். ஒரு பிராமணனின் கடமைகள் யாவை என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஜாதகர்மம் தொடங்கி, சமாவர்த்தனம் வரையில் உள்ள விழாக்கள் அனைத்தின் சடங்குகளுக்குரிய வேள்விக் கட்டணம் {தக்ஷிணை}, வேதங்களில் தகுதிவாய்ந்த ஓர் ஆசானின் செயல்திறனைச் சார்ந்ததாகும்[1].(2) வேதங்கள் அனைத்தையும் கற்று, ஆசானிடம் வசிக்கும் காலத்தில் அவரிடம் பணிவுடன் நடந்து கொண்டு, ஆசானுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, வேள்விகள் அனைத்தின் முற்றான அறிவுடன் அந்த இளைஞன் வீடு திரும்ப வேண்டும் {ஸமாவர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்}[2].(3) தனது ஆசானின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் அவன், நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} ஏதாவதொன்றைப் பின்பற்றி, தன் உடலைக் கைவிடும்வரை அதற்குரிய கடமைகளை நோற்று வாழ வேண்டும்.(4) அவன் மனைவியருடன் சேர்ந்து இல்லற {கிருஹஸ்த} வாழ்வை வாழ்ந்து வாரிசுகளை உண்டாக்க வேண்டும், அல்லது பிரம்மச்சரியத்தை நோற்று வாழ வேண்டும்; அல்லது காட்டில் தன் ஆசானின் துணையுடனோ, ஒரு யதிக்கு {ஸந்நியாசிக்கு} விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பயின்றோ வாழ வேண்டும்.(5)இல்லறவாழ்வானது {கிருஹஸ்தாஸ்ரமமானது}, பிற வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திற்கும் வேராகச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டை உடையவனும், உலகப் பொருட்களில் உள்ள பற்றுகள் அனைத்தையும் வென்றவனுமான ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} (வாழ்வின் பெரும் நோக்கத்தைப் பொறுத்தவரையில்) வெற்றியை அடைவான்.(6) ஒரு பிராமணன், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமும், வேத அறிவைப் பெறுவதன் மூலமும், வேள்விகளைச் செய்வதன் மூலமும், தான் பட்டிருக்கும் மூன்று கடன்களை அடைக்கிறான்[3]. பிறகு அவன், தன் செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வேறு வாழ்வுமுறைக்குள் {ஆசிரமத்திற்குள்} நுழைய வேண்டும்.(7) அவன், பூமியில் எதை மிகப் புனிதமான தலம் என்று உறுதி செய்வானோ, அங்கே வசித்து, மேன்மையான நிலையை அடைவதற்காகப் புகழுக்கு வழிவகுக்கும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.(8) பிராமணர்களின் புகழானது, மிகக் கடுமையான தவங்களின் மூலமும், அறிவின் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலமும், வேள்விகள் மூலமும், கொடைகள் மூலமும் அதிகரிக்கிறது.(9) உண்மையில் ஒரு மனிதன், இவ்வுலகில் தன் செயல்களோ, நினைவோ நீடிக்கும் வரை (மறுமையில்) அறவோரின் முடிவிலா உலகங்களில் இன்புறுகிறான்.(10)ஒரு பிராமணன், கல்வி கற்பிக்கவும், கற்கவும், பிற மக்களின் வேள்விகளை நடத்திக் கொடுக்கவும், தானே வேள்வி செய்யவும் வேண்டும். அவன் வீணான தானத்தை அளிக்கக்கூடாது, அல்லது பிறரிடம் இருந்து வீணான தானத்தை {வீணானப்ரதிக்ரகத்தைப்} பெறக் கூடாது.(11) ஒருவனுக்கு வேள்வியில் துணை புரிந்ததன் மூலமும், சீடனின் மூலமும், (திருமணத்தால்) மகளின் (உறவினர்) மூலமும் போதுமான அளவுக்குச் செல்வம் வருமென்றால், அது வேள்வி செய்வதற்கோ, தானமளிப்பதற்கோ செலவழிக்கப்பட வேண்டும். இந்த ஆதாரங்கள் எதனிலிருந்தும் வரும் செல்வம், ஒரு பிராமணனால் ஒருபோதும் தனியாக அனுபவிக்கப்படக்கூடாது[4].(12) இல்லற வாழ்வை வாழும் {கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள} பிராமணன் ஒருவனுக்கு, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், ஆசான், பெரியோர், நோய்வாய்ப்பட்டோர், பசித்தோருக்காக தானங்களை ஏற்று வாழ்வதைத் தவிர வேறு வழிமுறையேதும் கிடையாது[5].(13) புலப்படாத எதிரிகளின் மூலம் தண்டிக்கப்பட்டோருக்கு, அல்லது தங்கள் சக்திக்குரிய அளவில் அறிவை அடைய முயற்சிப்போருக்கு, சமைத்த உணவு உள்ளிட்ட தன் உடைமைகளில் இருந்து ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கும் அதிகமாகத் தானமளிக்க வேண்டும்.(14) தகுதிநிறைந்த ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படக்கூடாதது எதுவுமில்லை. நல்லோராகவும், ஞானிகளாகவும் இருப்பவர்கள், இந்திரனுக்குச் சொந்தமான உச்சைஸ்வர என்றழைக்கப்படும் குதிரைகளின் இளவரசனைப் பெறுவதற்கும் தகுந்தவர்களே[6].(15)உயர்ந்த நோன்புகளைக் கொண்டவனும், பணிவுடையவனுமான (மன்னன்) சத்யசந்தன், ஒரு பிராமணனைக் காப்பதற்காகத் தன் உயிர் மூச்சையே காணிக்கையளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(16) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு இளஞ்சூட்டுடன் கூடிய நீரை மட்டுமே கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே உயர்ந்த வெகுமதிகளைப் பெற்றான்.(17) அத்ரியின் அரசமகனும் {ஆத்ரேயனும்}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான இந்திரதமனன், தகுந்த ஒரு மனினுக்குப் பல்வேறுவகைச் செல்வங்களை அளித்து மறுமையில் பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(18) உசீனரனின் மகனான சிபி, ஒரு பிராமணனுக்காகத் தன் அங்கங்களையும், தன் மடியில் பிறந்த அன்புக்குரிய மகனையும் கொடுத்து இவ்வுலகில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(19) காசியின் ஆட்சியாளனான பிரதர்த்தனன், ஒரு பிராமணனுக்குத் தன் கண்களையே கொடுத்து இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை அடைந்தான்.(20)
மன்னன் தேவாவிருதன், தங்கத்தாலான எட்டுக் கம்பிகளுடன் கூடியதும், விலைமதிப்புமிக்கதுமான ஓர் அழகிய குடையைக் கொடுத்து, தன் நாட்டு மக்கள் அனைவருடன் சேர்ந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) அத்ரி குலத்தைச் சேர்ந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சாங்கிருதி, குணமற்ற {நிர்குண} பிரம்மத்தைக் குறித்த காரியத்தைத் தன் சீடர்களுக்குப் போதித்துப் பேரின்பத்திற்குரிய உலகங்களுக்குச் சென்றார்.(22) பேராற்றலைக் கொண்ட அம்பரீஷன், பதினோரு அர்ப்புதங்கள்{11,00,00,000} [7] அளவுக்குப் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்துத் தன் நாட்டு மக்கள் அனைவருடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(23) காது குண்டலங்களைக் கொடுத்த சாவித்ரி, தன் சொந்த உடலையே கொடுத்த மன்னன் ஜனமேஜயன் ஆகிய இருவரும் உயர்ந்த பேரின்ப உலகங்களுக்குச் சென்றனர்.(24) விருஷாதபனின் மகனான யுவனாஸ்வன், பல்வேறு வகை ரத்தினங்கள், ஓர் அழகிய மாளிகை மற்றும் பல அழகிய பெண்களைக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(25)
விதேஹர்களின் ஆட்சியாளனான நிமி தன் நாட்டையும், ஜமதக்னியின் மகன் (ராமர் ), மொத்த பூமியையும், கயன், நகரங்கள் மற்றும் ஊர்கள் அனைத்துடன் கூடிய பூமியையும் பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(26) ஒருகாலத்தில் மேகங்கள் பொழிவதை நிறுத்திக் கொண்டபோது, பிரம்மனுக்கே ஒப்பான வசிஷ்டர், ஒரு பிரஜாபதியைப் போல (தன் சக்தி மற்றும் அன்பின் மூலம்) அனைத்து உயிரினங்களையும் உயிரோடு பாதுகாத்தார்.(27) கரந்தனின் {கரந்தமனின்} மகனும், தூய்மையடைந்த ஆன்மா கொண்டவனுமான மருத்தன், தன் மகளை அங்கிரஸுக்குக் கொடுத்து விரைவாகச் சொர்க்கத்தை அடைந்தான்.(28) பாஞ்சாலர்களின் ஆட்சியாளனும், மேன்மையான புத்தியைக் கொண்டவனுமான பிரம்மதத்தன், நிதி என்றும் சங்கம் என்றும் அழைக்கப்பட்ட மதிப்புமிக்க இரு ரத்தினங்களைப் பிராமணர்களில் முதன்மையான சிலருக்குக் கொடுத்து பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(29) மன்னன் மித்ரஸஹன், தன் அன்புக்குரிய மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்து, அந்தத் தன் மனைவியுடனே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(30)
அரசமுனியும், பெரும்புகழைக் கொண்டவனுமான சஹஸ்ரஜித், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே கைவிட்டு, பேரின்ப உலகங்களுக்கு உயர்ந்தான்.(31) மன்னன் சத்யத்யும்னன், முத்கலருக்குத் தங்கத்தாலானதும் அனைத்து வசதிகளையும் கொண்டதுமான ஒரு மாளிகையை அளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(32) தியூதிமான் என்ற பெயரில் அறியப்பட்டவனும், பேராற்றலைக் கொண்டவனுமான சால்வர்களின் மன்னன், ரிசீகருக்குத் தன் மொத்த நாட்டையும் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(33) அரசமுனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்து, தேவர்களாலேயே பெரிதும் மதிக்கப்படும் உலகங்களுக்கு உயர்ந்தான்.(34) அரசமுனியும், பேராற்றலைக் கொண்டவனுமான லோம்பாதன், தன் மகள் சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குக் கொடுத்துத் தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தான்.(35)
பெருஞ்சக்தியைக் கொண்ட பிரஸேனஜித், கன்றுகளுடன் கூடிய ஒரு லட்சம் பசுக்களைக் கொடுத்து பேரின்பத்திற்குரிய சிறந்த உலகங்களுக்கு உயர்ந்தான்.(36) பெருமை கொண்டவர்களும், நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்களுமான இவர்களும், இன்னும் பிறரும், தானங்கள் மற்றும் தவங்களின் மூலம் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(37) அவர்களது புகழ் இந்தப் பூமி உள்ள வரையில் நீடித்திருக்கும். அவர்கள் அனைவரும், தாங்கள் கொடுத்த கொடைகள், வேள்விகள் மற்றும் சந்ததி உருவாக்கல் ஆகியவற்றின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றனர்” என்றார் {வியாசர்}.(38)
ஞானத்தின் சிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 235-பிராமணர்களின் கடமைகள் குறித்தும், ஞானத்தின் சிறப்பைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “வேதங்களிலும் அவற்றின் அங்கங்களிலும் தோன்றும் த்ரயி என்றழைக்கப்படும் அறிவு அடையப்பட வேண்டும். அவ்வறிவு ரிக்குகள், சாமங்கள், மற்றும் வர்ணம் என்றும் அக்ஷரம் என்றும் அழைக்கப்படும் அறிவியல்களில் இருந்து பெறப்படுகிறது. இதைத் தவிர யஜுஸ்கள் மற்றும் அதர்வணங்களும் இருக்கின்றன. இவற்றில் குறிப்பிடப்படும் ஆறு வகைச் செயல்களிலேயே {ஷட்கர்மங்களிலேயே}[1] தெய்வீகமானவன் வசிக்கிறான்.(1) வேத தீர்மானங்களை நன்கறிந்தோர், ஆன்ம அறிவைக் கொண்டோர், நற்குணத்தில் {சத்வ குணத்தில்} பற்றுடையோர், உயர்ந்த அருளைக் கொண்டோர் ஆகியோர் அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும் கதியையும் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(2) ஒரு பிராமணன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நோற்றபடியே வாழ வேண்டும். அவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட நல்லோனைப் போலத் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல் தன் வாழ்வாதாரங்களை ஈட்ட வேண்டும்.(3) நல்லோர் மற்றும் ஞானியரிடமிருந்து அறிவைப் பெறும் அவன், தன் ஆசைகளையும், மனச்சார்புகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சாத்திரங்களை நன்கறிந்தவனான அவன், தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் அக்கடமைகளைப் பயின்று, நற்குணத்தினால் வழிநடத்தப்பட்டு உலகச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லறவாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் பிராமணனும், ஏற்கனவே செல்லப்பட்ட ஆறு செயல்களைச் செய்ய வேண்டும்.(4)அந்தப் பிராமணன், நம்பிக்கை நிறைந்த இதயத்துடன் அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பொறுமை, கவனம், தற்கட்டுப்பாடு, கடமைகளை அறிதல் ஆகியவற்றுடனும், தூய்மையடைந்த ஆன்மாவுடனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவை இல்லாமல் ஒருபோதும் தளர்வுறாமல் இருக்க வேண்டும்.(5) கொடைகள், வேத கல்வி, வேள்விகள், தவங்கள், பணிவு, வஞ்சனையின்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை ஒருவனின் சக்தியைப் பெருக்கி அவனது பாவங்களை அழிக்கின்றன.(6) புத்தியுடன் கூடிய ஒருவன், குறைந்த உணவை உண்டு தன் புலன்களை வெல்ல வேண்டும். உண்மையில், காமம் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கி, தன் பாவங்கள் அனைத்தையும் கழுவி கொண்டு பிரம்மத்தை அடைய அவன் முயற்சிக்க வேண்டும்.(7) அவன் நெருப்பையும், பிராமணர்களையும் வழிபட்டு, தேவர்களை வணங்க வேண்டும். மங்கலமற்ற அனைத்து வகை உரையாடல்களையும், நீதியற்றவையும், தீங்கிழைப்பவையுமான அனைத்து செயல்களையும் தவிர்க்க வேண்டும். இந்த அடிப்படை ஒழுக்கமே ஒரு பிராமணனுக்கு முதலில் விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஞானத்தை அடைந்ததும் அவன், செயல்களிலேயே வெற்றி இருப்பதால் தன்னைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்[2].(9)புத்தியுடன் கூடிய ஒரு பிராமணன், கடப்பதற்கு அரிதானதும், கடுமையானதும், பயங்கரமானதும், ஐம்புலன்களையே நீராகக் கொண்டதும், பேராசையையே ஆதாரமாகக் கொண்டதும், கோபத்தையே சகதியாகக் கொண்டதுமான வாழ்வெனும் ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்.(10) அனைத்துப் பொருட்களையும் கலங்கடிப்பதும், விதி சமைப்பவனிடம் இருந்து வெளிவரும் தடுக்கப்பட முடியாத பெருஞ்சக்தியைக் கொண்டதுமான காலமானது, அச்சுறுத்தும் தன்மையுடன் தன் பின்னால் நின்று கொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டு அவன் தன் கண்களை மூடிக் கொள்ளக்கூடாது.(11) இயற்கையின் போக்கில் உண்டாகும் அண்டமானது இடையறாமல் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.(12) வருடங்களெனும் சுழிக்காற்றுகள் நிறைந்திருக்கும் பெரும் ஆறெனும் காலமானது {காலவெள்ளமானது}, மாதங்களையே தன் அலைகளாகவும், பருவகாலங்களையே தன் நீரோட்டமாகவும், பிறைநாட்களையே {பக்ஷங்களையே} தன்னில் மிதக்கும் புற்களாகவும், துரும்புகளாகவும்,(13) இமைகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் {இமைப்பொழுது / நிமிடங்களைத்} தன் நுரையாகவும், பகலிரவைத் தன் நீராகவும், ஆசை மற்றும் காமத்தை தன்னில் உள்ள பயங்கர முதலைகளாகவும், வேதங்கள் மற்றும் வேள்விகளைத் தன்னில் உள்ள தெப்பங்களாகவும்,(14) உயிரினங்களின் அறத்தையே தீவுகளாகவும், ஈட்டல் மற்றும் இன்பத்தைத் தன் நீரூற்றுகளாகவும், பேச்சில் வாய்மை மற்றும் விடுதலையை {முக்தியைத்} தன் கரைகளாகவும், நன்மையைத் தன்னில் மிதக்கும் மரங்களாகவும்,(15) யுகங்களைத் தன் போக்கில் நேரும் ஏரிகளாகவும் கொண்டுள்ளது. பிரம்மத்தைப் போன்றே உணரப்பட முடியாத தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்க ஆறான காலமானது, விதிசமைப்பவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் இடையறாமல் யமனின் வசிப்பிடத்தை நோக்கிச் சுமந்து செல்கிறது.(16)
ஞானமும், பொறுமையும் கொண்ட மனிதர்கள் அறிவு மற்றும் ஞானம் எனும் தெப்பங்களைப் பயன்படுத்தி, இந்தப் பயங்கர ஆற்றைக் கடப்பதில் எப்போதும் வெல்கிறார்கள். எனினும், (அந்தப் பயங்கர ஓடைக்குள் வீசப்படும்போது) இத்தகைய தெப்பங்கள் இல்லாமல் அறிவற்ற மூடர்களால் என்ன செய்ய முடியும்?(17) ஞானம் கொண்ட மனிதன் மட்டுமே இந்த ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்; அறிவுக்குப் பொருந்தும் ஞானம் இல்லாதவன் இவ்வாறு வெல்வதில்லை. முன்னவன் {ஞானம் கொண்டவன்} அனைத்தின் தகுதிகளையும், குறைகளையும் தொலைவிலிருந்தே கண்டு கொள்கிறான். (அதன்படியே அவன் பின்பற்றத் தகுந்ததைப் பின்பற்றுவதிலும், புறக்கணிக்கத்தக்கதைப் புறக்கணிப்பதிலும் வெல்கிறான்).(18) எனினும் நிலையற்ற குறை புத்தி கொண்டவனும், ஆசை மற்றும் பேராசை நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், எப்போதும் ஐயங்களாலேயே நிறைந்திருக்கிறான். எனவே, ஞானமற்ற மனிதன் அந்த ஆற்றைக் கடப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை. மேலும் (ஐயத்துடன்) செயல்படாமல் அமர்ந்திருக்கும் அவனால் ஒருபோதும் அதைக் கடக்க முடியாது.(19) ஞானமெனும் தெப்பம் இல்லாத மனிதன், பெரும் குறைகளின் கனத்தைச் சுமப்பதால் மூழ்கிவிடுகிறான். ஆசையெனும் முதலையால் பற்றப்பட்ட ஒருவன், ஞானத்தைக் கொண்டிருப்பவனாக இருந்தாலும் கூடத் தன் தெப்பம் எதுவென ஒருபோதும் அறிந்து கொள்ள மாட்டான்.(20)
ஞானமும், புத்தியும் கொண்ட ஒரு மனிதன் இந்தக் காரணங்களுக்காகவே காலமெனும் ஓடையில் (மூழ்கிவிடாமல்) மிதக்க முயற்சிக்க வேண்டும். உண்மையில், பிரம்மத்தை அறிந்தவனே {காலவெள்ளத்தில்} தன்னை மிதக்கச் செய்து கொள்வதில் வெல்கிறான்.(21) உன்னதக் குலத்தில் பிறந்த ஒருவன், இந்தக் காரணங்களுக்காகவே, கற்பித்தலின் மூன்று கடமைகளையும், பிறரின் வேள்விகளை நடத்துவதையும், கொடைகளை ஏற்பதையும் தவிர்த்து, கற்றல், வேள்வி செய்தல், கொடை அளித்தல் என்ற மூன்று செயல்களை மட்டுமே செய்து அந்த ஓடையில் {கால வெள்ளத்தில்} மிதக்க முயற்சிக்க வேண்டும். அத்தகைய மனிதன், ஞானமெனும் தெப்பத்தின் உதவியால் அதை நிச்சயம் கடப்பான்.(22) ஒழுக்கத்தில் தூய்மையாக இருப்பவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், நல்ல நோன்புகளை நோற்பவனும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவனும், ஞானம் கொண்டவனுமான ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நிச்சயம் வெல்வான்[3].(23) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுபவன், கோபம் மற்றும் பொறாமையை வென்று, ஏற்கனவே சொல்லப்பட்ட அறங்களைப் பயின்று, ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட்டு, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு உண்பவனாக இருக்க வேண்டும்.(24)
நல்லோரால் பின்பற்றப்படும் கடமைகளையே அவன் பின்பற்ற வேண்டும்; ஆளுமை செலுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதனைப் போல அவன் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்; அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல், நிந்திக்கப்படாத வழிமுறையைப் பின்பற்றித் தன் வாழ்வாதாரத்தை ஈட்ட வேண்டும்.(25) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களில் உள்ள ஞானத்தின் உண்மைகளை நன்கறிந்தவனும், நன்கு ஆளப்படும் ஆன்மாவைக் கொண்ட ஒருவனைப் போன்ற நடத்தையைக் கொண்டவனும், தெளிவான பார்வையைக் கொண்டவனும், தன் வகைக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பவனும், தன் செயல்களின் மூலம் கடமைகளில் {தர்மங்களில் / அறங்களில்} எந்தக் கலப்பையும் உண்டாக்காதவனும்,(26) சாத்திரங்களில் நிறுவப்பட்டுள்ளவற்றை நோற்பவனும், நம்பிக்கை நிறைந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், ஞானம் கொண்டவனும், பொறாமை மற்றும் வன்மம் இல்லாதவனும், நீதி மற்றும் அநீதிக்கிடையிலான வேறுபாட்டை நன்கறிந்தவனுமான ஒருவன் தன் சிரமங்களை அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(27) மனோவுறுதி கொண்டவனும், எப்போதும் கவனம் மிக்கவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், அறத்தை {நீதியை} அறிந்தவனும், தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவற்றைக் கடந்தவனுமான ஒரு பிராமணன், துயரால் ஒருபோதும் தளர்வடைய மாட்டான்.(28)
பழங்காலத்தில் ஒரு பிராமணனுக்கு இவ்வகை ஒழுக்க நடைமுறையே விதிக்கப்பட்டது. அவன் ஞானத்தை அடைய முயற்சி செய்து, சாத்திரச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இவ்வாறு வாழ்வதன் மூலம் அவன் நிச்சயம் வெற்றியை அடைவான்.(29) தெளிவான பார்வையில்லாத ஒருவன் {அறிவில்லாதவன்}, சரியானதையே செய்ய விரும்பினாலும் தவறையே செய்வான். அத்தகைய மனிதன், தன் அறிவைப் பயன்படுத்தினாலும், அநீதியின் இயல்பைக் கொண்ட அறச்செயல்களையே செய்கிறான்.(30) சரியானதைச் செய்ய விரும்பினாலும் அவன் தவறானதையே செய்கிறான். அதேபோலத் தவறானதைச் செய்ய விரும்பி, சரியானதைச் செய்கிறான். அத்தகைய மனதின் மூடனாவான். இருவகைச் செயல்களை அறியாதவன், மீண்டும் மீண்டும் மறுபிறவிகளையும் மரணங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார் {வியாசர்}.(31)
மோக்ஷகாரணம்! – சாந்திபர்வம் பகுதி – 236-முக்திக்கு வழிவகுக்கும் ஞானம்; யோக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “விடுதலை {முக்தி} விரும்பத்தக்கதானால் ஞானம் அடையப்பட வேண்டும். காலம் அல்லது வாழ்வெனும் ஓடையில் மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்படும் ஒருவன் கரையை அடைவதற்கு ஞானமே தெப்பமாகும் {படகாகும்}.(1) (உயிர் என்று அழைக்கப்படும் ஒன்று மற்றும் ஆன்மாவின் குணத்தைப் பொறுத்தவரையில்) ஞானத்தின் துணை கொண்டு குறிப்பிட்ட தீர்மானங்களை அடைந்த ஞானிகள், அந்த ஞானமெனும் தெப்பத்தைக் கொண்டு அறியாமை கொண்டோரைக் காலம் அல்லது வாழ்வெனும் ஓடையைக் கடக்க உதவ வல்லவர்களாக இருக்கிறார்கள். எனினும் அறியாமை கொண்டோர் தங்களையோ, பிறரையோ காத்துக் கொள்ள இயன்றவர்கள் அல்ல.(2) ஆசை மற்றும் பிற குறைகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்தவனுமான ஒருவன், இடம் {தேசம்}, செயல்கள் {கர்மா}, பற்று {அனுராகம்}, பொருட்கள் {திரவியம்}, வழிமுறைகள் {உபாயம்}, அழிவு {அபாயம்}, நிச்சயத்தன்மை {நிச்சயம்}, கண்கள், உணவு {ஆகாரம்}, ஒடுக்குமுறை {ஸம்ஹாரம்}, மனம் மற்றும் ஆய்வு {தரிசனம்} ஆகிய பனிரெண்டு யோகத் தேவைகளைக் கவனிக்க வேண்டும்[1].(3) மேன்மையான அறிவை அடைய விரும்புபவன், தன் புத்தியின் துணை கொண்டு, பேச்சு மற்றும் மனம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும். அமைதிநிலையை விரும்பும் ஒருவன் தன் அறிவின் துணை கொண்டு தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்த வேண்டும்.(4)கருணையுள்ளவனாகவோ, கொடூரனாகவோ, வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவோ, ரிக்குகளை அறியாதவனாகவோ, அறவோனாகி வேள்விகளைச் செய்பவனாகவோ, இழிந்த பாவியாகவோ, ஆற்றல் மற்றும் செல்வத்தில் மேம்பட்டவனாகவோ, துன்பத்தில் மூழ்கியவனாகவோ ஒருவன் இருந்தாலும், (நான் சொல்லும் குணங்களான) இவற்றை {யோகத் தேவைகளை / யோக சாதனங்களை} நோக்கி மனத்தைத் திருப்பும் அவன், கடப்பதற்கரிதான வாழ்வெனும் பெருங்கடலை நிச்சயம் கடப்பான்.(5,6) யோகத்தின் மூலம் பிரம்மத்தை அடைவதன் விளைவுகளைக் குறித்துப் பேசாமல், ஆன்ம விசாரணையில் மட்டுமே தன்னை நிறுவி கொள்ளும் ஒருவன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் தேவைகளைக் கடந்தவனாகிறான் என்று சொல்லப்படுகிறது.(7) ஜீவனைத் தன்னுள்ளே கொண்ட உடல் ஓர் அற்புதத் தேராகும். வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளைச் செய்கையில் அவை அதன் {உடலெனும் அந்த அற்புதத்தேரின்} உபஸ்தமாகவும் {அமரும் இடமாகவும்}, வெட்கம் அதன் வரூதமாகவும் {தேரைக் காக்கும் ஒரு பகுதியாகவும்}, உபாயம் மற்றும் அபாயம் ஆகியன அதன் கூபரமாகவும் {மூக்கணையாகவும்}, அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்று அதன் அக்ஷமாகவும் {அச்சாகவும்}, பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்று அதன் யுகமாகவும் {நுகமாகவும்}, அறிவு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இருப்புக் காலம் ஆகியன குதிரைகளைக் கட்டும் அதன் நுகத்தடியாகவும் {பிடிப்பாகவும்}, கவனம் அதன் அழகிய வந்தூரமாகவும் {சேர்க்கையாகவும்}, நன்னடத்தையை ஏற்றல் அதன் நேமியாகவும் {கட்டாகவும்}, பார்வை, தீண்டல், மணம், கேள்வி ஆகியன அதன் குதிரைகள் நான்காகவும், ஞானம் அதன் நாபியாகவும் {குடமாகவும்}, சாத்திரங்கள் அனைத்தும் அதன் பிரடோதமாகவும் {சாட்டையாகவும்}, குறிப்பிட்ட சாத்திரத் தீர்மானங்களின் அறிவு அதன் சாரதியாகவும், ஆன்மா உறுதியான இருக்கையைக் கொண்ட அதன் பயணியாகவும், நம்பிக்கை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியன அதன் முன்னோடியாகவும், துறவானது பின்னால் தொடர்ந்து வந்து நன்மை செய்யும் அதன் இணைபிரியாத் தோழனாகவும், தூய்மை அது செல்லும் பாதையாகவும், தியானம் (அல்லது பிரம்மத்தில் கலப்பது) இலக்காகவும் அமையும்போது, {உடலெனும்} அந்தத் தேரானது பிரம்மத்தை அடைந்து அங்கே பிரகாசத்துடன் ஒளிர்கிறது[2].(8-11)முதுமை, மரணம் ஆகியவற்றுக்கு மேலான பிரம்மமெனும் இலக்கை அடைவதற்காக இந்த உலகமெனும் காட்டைக் கடக்கும் வகையில் {உடலெனும்} தன் தேரை ஆயத்தம் செய்வதற்கான வேகமான வழிமுறைகளை நான் இப்போது சொல்லப் போகிறேன்.(12) ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனத்தை நிலை நிறுத்துவது தாரணை என்றழைக்கப்படுகிறது[3]. நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக நோற்கும் யோகியானவன் ஏழு வகைத் தாரணைகளைப் பயில்கிறான். மேலும், அருகாமை மற்றும் தொலைவு ஆகிய காரியங்களைப் பொருத்து அவற்றிலிருந்து பல்வேறு வகையான தாரணைகள் எழுகின்றன[4].(13) யோகியர் இதன் மூலம், பூமி {ப்ருதிவி}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்}, நீர் {அப்பு}, நெருப்பு {தேயு}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புத்தியில் படிப்படியாகத் தேர்ச்சி பெறுகின்றனர். அதன் பிறகு அவன் படிப்படியாகப் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} தேர்ச்சியடைகிறான்.(14) விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி யோகத்தில் ஈடுபடும் குறிப்பிடப்பட்ட தனிநபர்களால் உணரப்படும் கருத்துகளின் வகையை முறையே நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும், தன்னையே உள்நோக்கும் ஒருவனால் (விதிகளின் படி) தொடங்கப்படும் யோகத்தில் கிடைக்கும் வெற்றியின் இயல்பைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்[5].(15)
தன் திரள் உடலைக் கைவிடும் யோகி, தன் ஆசானின் போதனைகள் பின்பற்றிப் பின்வரும் நுட்பமான வடிவங்களை வெளிப்படுத்தும் தன் ஆன்மாவைக் காண்கிறான். முதல் நிலையில் அவனுக்கு ஆகாயம் என்பது பனி நிறைந்த ஆவி {புகை} போன்ற ஒரு நுட்பமான பொருளால் நிரம்பியதாகத் தெரிகிறது.(16) உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவின் வடிவமும் இத்தகையதாகவே இருக்கிறது. இந்தப் பனி மறையும்போது இரண்டாவது (அல்லது புதிய) தோற்றம் {உடல்} தென்படுகிறது.(17) அப்போது யோகி தன் இதயமெனும் ஆகாயத்தில் நீரின் வடிவத்தைக் காண்கிறான். அந்த நீர் மறைந்ததும், நெருப்பெனும் வடிவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(18) இது மறைந்ததும் உணரப்படும் வடிவம் நன்கு கடினமாக்கப்பட்டதும் பளபளப்பானதுமான ஓர் ஆயுதத்தைப் போன்ற பிரகாசமான காற்றாகும். காற்றால் வெளிப்படுத்தப்படும் அந்த வடிவம் மெல்ல மெல்ல சிலந்தி நூலை {ஆட்டு மயிரைப்} போல மெலிதாகிறது.(19) வெண்மையையும், காற்றின் நுட்பமான தன்மையையும் அடைந்த பிரம்மனின் ஆன்மா, மேலான வெண்மையையும், வெளியின் {ஆகாயத்தின்} நுட்பமான தன்மையையும் அடைவதாகச் சொல்லப்படுகிது.(20)
இந்தப் பல்வேறு சூழ்நிலைகளின் விளைவுகளை அவை நேர்வது போலவே உனக்குச் சொல்கிறேன்; கேட்பாயாக. பூமி எனும் பூதத்தை வெற்றிக் கொண்ட யோகியானவன், படைப்பு சக்தியின் தலைமைப் பொறுப்பை அடைகிறான்.(21) இரண்டாவது பிரஜாபதியைப் போல, எளிதில் கலக்கமடையாத முற்றிலும் அமைதியான இயல்பைக் கொண்ட அவனால் தன் உடலில் இருந்து பல்வேறு வகை உயிரினங்களைப் படைக்க முடியும். {வாயு எனும் பூதத்தை வென்று} காற்றின் தலைமைப் பொறுப்பை ஒருவன் அடைந்தால், அந்த மனிதனால், தன் கட்டைவிரல், அல்லது கை, அல்லது கால் ஆகியவற்றை மட்டுமே கொண்டு மொத்த பூமியையும் நடுங்கச் செய்ய முடியும்.(22) ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி இதுவே காற்றின் குணமாகும். வெளியின் தலைமைப் பொறுப்பை அடைந்த யோகி, அந்தப் பூதத்தில் கலப்பது அல்லது விரும்பியபடி மறைவது ஆகியவற்றை அடைந்ததன் விளைவால், வெளியிலேயே {ஆகாயத்திலேயே} பிரகாசமாக நிலைத்திருக்க முடியும்.(23) நீரின் தலைமைப் பொறுப்பை ஒருவன் அடைந்தால் (அகஸ்தியரைப் போல) ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடலையே கூடக் குடித்துவிட முடியும். நெருப்பின் மீதான தலைமைப் பொறுப்பை அடையும் யோகி, பார்க்கப்பட முடியாத {புலப்படாத} வடிவத்தை அடைந்து பிராகாசிக்கிறான். அவன் தன்னுள் உள்ள நெருப்பை அணைத்தால் மட்டுமே புலப்படுவான். யோகி தன் தனிப்பட்ட நனவுநிலையை {அகங்காரத்தை} அழிப்பதில் வென்றால் இந்த ஐம்பூதங்களும் அவனது ஆளுகையின் கீழ் வரும்.(24) ஐம்பூதங்கள் மற்றும் தனிப்பட்ட நனவுநிலை {அகங்காரம்}[6] ஆகியவற்றின் ஆன்மாவான புத்தியானது யோகியால் வெல்லப்படும்போது, அவன் அனைத்தையும் அறிந்தவனாக, (ஐயம் மற்றும் நிச்சமின்மையில் இருந்து விடுபட்ட உணர்வுள்ளவனாக) தன்னிடம் வரும் அனைத்துப் பொருட்களின் முற்றான அறிவைக் கொண்டவனாக ஆகிறான்.(25)
இதன் விளைவாகப் புலப்படும் நிலையில் இருக்கும் ஒன்று {ஸ்தூலமாகக் காணப்படும் ஆத்ம ரூபம்}, எதில் இருந்து இந்த உலகம் உண்டாகி புலப்பட்ட நிலையை அடைந்ததோ அந்தப் புலப்படாதது {ஸுக்ஷமம்}, அல்லது பரமாத்மாவுக்குள் கலக்கிறது[7].(26) புலப்படாதது குறித்த அறிவியலை இப்போது விரிவாக விளக்கப் போகிறேன் கேட்பாயாக. ஆனால் அனைத்திற்கும் முன்பாகச் சாங்கிய தத்துவ அமைப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி புலப்படும் அனைத்தையும் குறித்து என்னிடம் இருந்து கேட்பாயாக.(27) யோகம் மற்றும் சாங்கியம் என்ற ஈரமைப்புகளிலும் {கோட்பாடுகளிலும்}, இருபத்தைந்து வகை அறிவுகள் {தத்துவங்கள்} கிட்டத்தட்ட இதே வகையிலேயே சமமானவையாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியப் பண்புகளைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக.(28) எது புலப்படுவது {விக்தம்} என்று சொல்லப்படுகிறதோ அது பிறப்பு, வளர்ச்சி, சிதைவு {மூப்பு}, மற்றும் மரணம் என்ற நான்கு பண்புகளைக் கொண்டதாக இருக்கிறது.(29) எதில் இந்தப் பண்புகள் இல்லையோ அது புலப்படாதது {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகிறது. வேதங்களிலும், அறிவியல்களிலும் குறிப்பிடப்படும் ஈரான்மாக்கள் இவற்றின் அடிப்படையிலானவையே.(30)முதலாவதானது (ஜீவாத்மா என்றழைக்கப்படுவது) ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நான்கு பண்புகளையும், (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) நான்கு நோக்கங்களுக்கான ஏக்கத்தையும் கொண்டதாகும். ஆன்மாவானது புலப்படுவது (வ்யக்தம்) என்றழைக்கப்படுகிறது, மேலும் அது புலப்படாததிலிருந்து (பரமாத்மாவிலிருந்து) {அவ்யக்தத்திலிருந்து} பிறந்ததுமாயிருக்கிறது. அது புத்தியுள்ளதாகவும், புத்தியில்லாததாகவும் இருக்கிறது.(31) இவ்வாறே நான் சத்வம் (செயலற்ற பொருள்) {புத்தி}, க்ஷேத்ரக்ஜ்ஞன் (பொருளற்ற ஆவி) {ஜீவாத்மா} ஆகியவற்றைக் குறித்துச் சொன்னேன்[8]. வேதங்களில் இந்த இருவகை ஆன்மாக்களும் புலன்களுக்குரிய பொருட்களில் பற்றுடையவையாகவே சொல்லப்பட்டுள்ளன.(32) ஒருவன் புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுந்தவனாகத் தனிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதே சாங்கியர்களின் கோட்பாடாகும். பற்று, செருக்கு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், இன்பம் துன்பம், வெப்பம் குளிர், ஆகிய முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், கோபத்திற்கோ, வெறுப்புக்கோ வசப்படாதவனும், ஒருபோதும் பொய்மை பேசாதவனும்,(33) அவதூறு கூறப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ கூட அவதூறு செய்தவன் அல்லது தாக்கியவனிடம் நட்பை வெளிப்படுத்துபவனும், பிறருக்கு ஒருபோதும் தீங்கு நினையாதவனும், சொல், செயல் மற்றும் சிந்தை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்துபவனும்,(34) அனைத்து உயிரினங்களிடமும் சமமாக நடந்து கொள்பவனுமான யோகி பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.பூமி சார்ந்த பொருட்கள் எதனிலும் ஆசையை வளர்க்காதவனும், வருவனவற்றை விருப்பமுடன் ஏற்பவனும், தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே பூமிசார்ந்த பொருட்களைச் சார்ந்திருப்பவனும்,(35) பேராசையில் இருந்து விடுபட்டவனும், துயரங்கள் அனைத்தையும் விரட்டியவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்பவனும், மேனியின் தோற்றம் மற்றும் உடுப்பு {உடை அலங்காரங்களைக்} கருத்தில் கொள்ளாதவனும், (வாழ்வின் உண்மையான நோக்கங்களில் அர்ப்பணிப்புடன்) தன் புலன்கள் அனைத்தையும் குவித்தவனும், நிறைவேறாத காரியம் ஏதும் இல்லாதவனும்,(36) அனைத்து உயிரினங்களிடமும் சமமான நட்பைக் கொண்டவனும், மண்ணாங்கட்டியையும், தங்கக்குவியலையும் சமமான கண்ணுடன் கருத்தில் கொள்பவனும், நண்மன் மற்றும் எதிரிக்கிடையில் சமமான மனநிலையைக் கொண்டவனும், பொறுமையைக் கொண்டவனும், புகழையும் பழியையும் ஒன்றாகவே ஏற்பவனும்,(37) ஆசைக்குரிய பொருட்கள் அனைத்திலும் உள்ள ஏக்கங்களில் இருந்து விடுபட்டவனும், பிரம்மச்சரியத்தைப் பயில்பவனும், தன் நோன்புகள் மற்றும் பயிற்சிகள் அனைத்திலும் உறுதியாகவும், நிலையாகவும் இருப்பவனும், இவ்வண்டத்தில் உள்ள எந்த உயிரினத்திடமும் வன்மமோ, பொறாமையோ இல்லாதவனுமான ஒரு யோகியானவன், சாங்கிய அமைப்புமுறையின்படி வீடுபேற்றை {விடுதலையை / முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(38)
(பதஞ்சலியின் அமைப்பு முறை அல்லது) யோகத்தின் மூலம் விடுதலையை {முக்தியை} வெல்லும் மனிதனின் வழிகள் மற்றும் வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. (தொடக்கப் படிநிலைகளில்) யோகப் பயிற்சி அளிக்கும் பலத்தைக் கடந்து செயல்படுபவன், விடுதலை {முக்தி} அடைவதில் வெல்கிறான்[9].(39) (சாங்கியம், யோகம் என்ற அமைப்புமுறைகளின்படி விடுதலையை அடைவது என்பது குறித்துப்) பேசுபவர்களால் வெவ்வேறானவையாகச் சொல்லப்படும் (ஆனால் உண்மையில் ஒன்றேயான) இந்தக் காரியங்களைக் குறித்து உள்ளபடியே சொல்லிவிட்டேன்[10]. இவ்வாறே ஒருவன் முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடக்கலாம். இவ்வாறே ஒருவன் பிரம்மத்தையும் அடையலாம்” என்றார் {வியாசர்}.(40)
யார் பிராமணன்? – சாந்திபர்வம் பகுதி – 237-முக்திக்கு வழிவகுக்கும் ஞானத்தின் தன்மையைக் குறித்து வியாசரிடம் விசாரித்த சுகார்; செயல்கள் கட்டாயக் கடமையா, அல்லது விருப்பத்திற்குரியதா என்பது குறித்துச் சொன்ன வியாசர், உயிரினங்களின் உயர்வு தாழ்வையும், ஞானத்தின் சிறப்பையும் சுகருக்குச் சொன்னது…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தியானம் செய்ய வல்லவனான ஒருவன், வாழ்வெனும் பெருங்கடலில், மேலும் கீழும் சுமந்து செல்லப்படும்போது, (வேறு எந்த ஆதரவையும் பற்றிக்கொள்வதற்காக அங்கேயும், இங்கேயும் தன் கரங்களையும் நீட்டாமல்) அறிவெனும் தெப்பத்தைப் பற்றிக் கொண்டு, விடுதலையை {முக்தியை} அடைவதற்காக அந்த அறிவையே கடைப்பிடிக்கிறான்” என்றார்.(1)
சுகர் {வியாசரிடம்}, “அந்த அறிவானது யாது? அது, பிழைகள் அகன்று உண்மை காணப்படும்போது அடையப்படும் கல்வியா? அல்லது புரிந்து கொள்ளப்படும், அல்லது அடையப்படும் எந்தப் பொருளின் உதவியின் மூலமாவது செய்யப்படும், அல்லது அடையப்படும் செயல்களைக் கொண்ட கடமைகளின் வழிமுறையா {பிரவிருத்தியா}? அல்லது, ஆன்ம அழிவை நாடுவதன் மூலம், செயல்களைத் தவிர்த்தல் என்றழைக்கப்படும் கடமைகளின் வழிமுறையா {நிவிருத்தியா}? பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டும் எதன் உதவியின் மூலம் தவிர்க்கப்படுமோ அஃது என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {சுகர்}[1].(2)
வியாசர் {சுகரிடம்}, “உண்மையில் எந்தப் புகலிடமோ, அடித்தளமோ இல்லாமல், அனைத்தும் தங்கள் இயல்பின் {ஸ்வபாவத்தின்} விளைவாலேயே நிலைத்திருக்கின்றன என்று நம்பும் {சூன்யவாதியான} மூடன், சீடர்களின் நாட்டத்தை இத்தகைய போதனையால் நிறைத்து, தன் வாதத் திறமையால் அந்தச் சீடர்கள் முன்வைக்கும் முற்றிலும் முரண்பட்ட காரணங்களைப் புறக்கணித்து, எந்த உண்மையையும் அடையாமல் போகிறான்[2].(3) மேலும், பொருட்களின் இயல்பின் {ஸ்வபாவத்தின்} மூலமே அனைத்துக் காரணங்களும் உண்டாகின்றன என்று உறுதியாக நம்புபவர்கள் {லோகாயதவாதிகள்}, (ஞானமுள்ள) மனிதர்களின், அல்லது (அவர்களுக்குப் போதிக்கவல்ல) முனிவர்களின் கூற்றைக் கேட்டாலும் உண்மையை அடைவதில் தவறுகிறார்கள்.(4) இந்த இரு கோட்பாடுகளில் ஒன்றைப் பின்பற்றி (தங்கள் ஊகங்களை) நிறுத்துபவர்களும், உண்மையில் இயற்கையே {அண்டத்திற்கான} காரணம் எனக் கருதுபவர்களுமான மனிதர்கள் {சூன்யவாதிகளும், லோகாயதவாதளும்}, தங்களுக்கான நன்மையை அடைவதில் ஒருபோதும் வெல்வதில்லை[3].(5)இயற்கையே {ஸ்வபாவமே} (படைப்பிற்கும், அது நீடித்திருப்பதற்கும்) காரணம் என்ற இந்த நம்பிக்கையானது, பிழையின் ஆதிக்கத்தினால் மனத்தில் எழுந்து, அதை {அந்த நம்பிக்கையைப்} பேணி வளர்ப்பவர்களுக்கு அழிவைக் கொண்டு வருகிறது. பொருட்கள் தங்கள் சொந்த இயல்பிலேயே இருக்கின்றன என்றும்{1}, அவை {பொருட்கள்} (தங்கள் சொந்த இயல்பின் விளைவால்) தங்களுக்கு முந்தைய வேறெதனிலும் இருந்து உண்டாகின்றன என்றும்{2} {வேறு சொற்களில் ஸ்வபாவவாதம் என்றும் பரிபாவவாதம் என்றும்} சொல்லப்படும் இந்த இரு கோட்பாடுகளைக் குறித்த உண்மையை இப்போது கேட்பாயாக[4].(6) ஞானிகள், வேளாண்மை, உழவு (என்ற வழிமுறைகளின் மூலம்) பயிர் சேகரிப்பு, வாகனங்கள், இருக்கைகள், விரிப்புகள், வீடுகள் அமைத்தல் ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.(7) மேலும் அவர்கள், இன்பத்தோட்டங்கள் அமைத்தல், மாடமாளிகைகளைக் கட்டுதல், அனைத்து வகை நோய்களுக்குமான மருந்துகளைத் தயாரித்தல் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.(8) (வழிமுறைகளைப் பயன்படுத்தும்) ஞானமே காரியங்கள் கனிவதற்கு வழிவகுக்கிறது. ஞானமே நன்மையான விளைவுகளை வென்றெடுக்கிறது. மன்னர்கள், தாங்கள் ஆட்சி செய்யும் மனிதர்களைப் போன்ற அதே பண்புகளைக் கொண்டிருந்தாலும், இந்த ஞானமே அரசுரிமையை அனுபவிக்கவும், அரசைச் செலுத்தவும் அவர்களுக்குத் தகுதியைக் கொடுக்கிறது[5].(9) இந்த ஞானத்தின் மூலமே உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் அடையாளங்காணப்படுகிறார்கள். படைக்கப்பட்ட பொருட்களில் மேன்மையானவையும், தாழ்ந்தவையும் இந்த ஞானத்தின் மூலமே புரிந்து பார்க்கப்படுகிறது. இந்த ஞானம் அல்லது அறிவே அனைத்துப் பொருட்களுக்கும் உயர்ந்த புகலிடமாக இருக்கிறது[6].(10)படைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகைப் பொருட்கள் {உயிரினங்கள்} அனைத்தும் நான்கு வகைப் பிறவிகளைக் கொண்டிருக்கின்றன. அவை கன்றீனும் பாலூட்டிகள் {ஜராயுஜம்}, முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை {அண்டஜம்}, காய்கறிகளில் பிறப்பவை {தாவரங்கள் / உத்பிஜ்ஜம்}, {வியர்வை, மலம் போன்ற} கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜம்} ஆகியவையாகும். மேலும் உயிரினங்களில் அசையாதனவற்றை விட அசைவன மேன்மையானவையாக அறியப்பட வேண்டும். (புத்தியில்லாத பொருளில் இருந்து) வேறுபட்டிருப்பதும், அறிவுக்குப் பொருத்தமானதுமான புத்தியுள்ள ஆற்றலே (புத்தியில்லாத) பொருளைவிட மேன்மையானதாகக் கருதப்பட வேண்டும்[7].(12) எண்ணற்றவையாக இருக்கும் அசையும் உயிரினங்களில் பல கால்களைக் கொண்டவை மற்றும் இரு கால்களைக் கொண்டவை என்ற இரு வகைகள் உள்ளன. எனினும், பிந்தையதே {இரு கால்களைக் கொண்டதே} முந்தையதைவிட மேன்மையானதாகும்.(13) மேலும் இரு கால் கொண்ட உயிரினங்களில் நிலத்தில் வாழ்பவை, பிறவற்றில் வாழ்பவை என்று ஈரினங்கள் உள்ளன. இவற்றில் முந்தையதே பிந்தையதைவிட மேன்மையானதாகும். மேன்மையானவை சமைக்கப்பட்ட பல்வேறு வகை உணவுகளை உண்கின்றன.(14) நிலத்தில் திரியும் இரு கால் உயிரினங்களிலும், நடுத்தரமானவை, முதன்மையானவை என்று இரு வகைகள் உள்ளன. இவற்றில், தங்கள் வகைக்கான கடமைகளை நோற்பதன் விளைவால் நடுத்தரமானவையே {முதன்மையானவற்றைவிட} மேன்மையானவை என்று கருதப்படுகின்றன[8].(15)நடுத்தரமானவர்களிலும், கடமைகளை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று இருவகையாகச் சொல்லப்படுகின்றனர். அவர்களில், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற வேறுபாட்டை அறிந்திருப்பதால் முந்தைய வகையினரே, பிந்தையவர்களைவிட மேன்மையானவர்களாவர்.(16) கடமைகளை அறிந்தவர்களிலும், வேதங்களை அறிந்தவர்கள், அவற்றை அறியாதவர்கள் என இருவகையினராகச் சொல்லப்படுகின்றனர். அவர்களில் முந்தைய வகையினரிலேயே வேதங்கள் வசிப்பதால் அவர்களே முதன்மையானவர்களாகச் சொல்லப்படுகின்றனர்[9].(17) வேதங்களை அறிந்தோரிலும், வேதங்களை உரைப்போர், அல்லாதோர் என இரு வகையினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்களில் வேதங்களை, அவற்றின் கடமைகள் மற்றும் அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள், அந்தச் சடங்குகள் மற்றும் கடமைகளின் கனிகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்த முந்தைய வகையினரே, அந்தக் கடமைகளையும், சடங்குகளையும் வெளியிடுபவர்களாக இருப்பதால் அவர்களே மேன்மையானவர்களாகச் சொல்லப்படுகின்றனர். உண்மையில், கடமைகள் மற்றும் அவற்றில் உள்ள விதிகள் ஆகியவற்றுடன் சேர்ந்த வேதங்கள் அனைத்தும் அவர்களில் இருந்து பாய்வதாகச் சொல்லப்படுகிறது.(18,19) வேத ஆசான்களிலும், ஆன்மாவை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று இருவகையினர் உள்ளனர். இவர்களில், பிறப்பு மற்றும் மரணம் என்பவை என்ன என்ற அறிவைக் கொண்டிருப்பதால் முந்தையவர்களே மேன்மையானவர்களாவர்[10].(20)கடமைகளைப் பொறுத்தவரையில், அவை (பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி என்று) இரு வகைகளில் இருக்கின்றன. கடமைகளை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகவோ அண்ட அறிவைக் கொண்டவனாகவோ கருதப்படுகிறான். அத்தகைய மனிதனே துறவியாவான். அத்தகைய மனிதனே தன் நோக்கங்களை நிறைவேற்றுவதில் உறுதியுள்ளவன் ஆவான். அத்தகைய மனிதனே உண்மை நிறைந்தவனும், (அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டிலும் தூய்மையானவனும்), {யோக சக்தியால் உண்டாகும்} பலம்படைத்தவனுமாவான்.(21) (பிரவிருத்தியின் கடமைகளை மட்டுமே அறிந்தவனாக இல்லாமல்} பிரம்ம அறிவுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒரு பிராமணனாக அவனைத் தேவர்கள் அறிவார்கள். அத்தகைய மனிதன் வேதங்களையும் நன்கறிந்தவனாக, ஆன்ம கல்வியில் மெய்யுறுதியான அர்ப்பணிப்புடன் கூடியவனாகவும் இருப்பான்.(22) உண்மையான ஞானத்தைக் கொண்டவர்கள் தங்கள் ஆன்மாவானது, அகம், புறம் என்ற இரண்டிலும் இருப்பதைக் காண்பார்கள். ஓ! குழந்தாய், அத்தகை மனிதர்களே உண்மையில் மறுபிறப்பாளர்கள், மேலும் அத்தகைய மனிதர்களே தேவர்களும் ஆவர்[11].(23) உயிரினங்களின் இந்த உலகம் இவர்களையே சார்ந்திருக்கிறது, இவர்களிலேயே மொத்த அண்டமும் வசிக்கிறது. இவர்களது மகிமைக்கு இணையான வேறேதும் கிடையாது.(24) பிறப்பு, இறப்பு, வேறுபாடுகள், அனைத்து வகைச் செயல்கள் ஆகியவற்றைக் கடந்த அவர்கள் நால்வகை உயிரினங்களின் தலைவர்களும், சுயம்புவுக்கே இணையானவர்களும் ஆவர்” என்றார் {வியாசர்}[12].(25)
யுக வேற்றுமை! – சாந்திபர்வம் பகுதி – 238-செயல்கள், ஞானம் மற்றும் யுக வேற்றுமைகள் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்..
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிராமணர்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய செயல்களாக இவையே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஞானம் கொண்ட ஒருவன் எப்போதும் (பரிந்துரைக்கப்பட்ட) செயல்களின் மூலமே வெற்றியை அடைவான்.(1) செயல்களில் ஐயம் எழவில்லையெனில், அப்போது செய்யப்படும் செயல்கள் நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும். செயல்கள் கட்டாயமானவையா, வாய்ப்பிருந்தால் மட்டும் செய்யப்படுபவையா {கட்டாயமில்லாதவையா} என்ற ஐயமே இங்கே குறிப்பிடப்படுகிறது[1].(2) (செயல்களின் உண்மைப் பண்பில் கொள்ளும் ஐயமான) இதைப் பொறுத்தவரையில், (எதனைக் கொண்டு மட்டுமே பிரம்மமோ, விடுதலையோ {முக்தியோ} அடையப்படுமோ அந்த) ஞானத்தை அடைவதற்கு மனிதனுக்குச் செயல்கள் விதிக்கப்பட்டிருக்கிறதென்றால், அவை (வாய்ப்புள்ளபோது செய்யப்படக்கூடியவையாக இல்லாமல்) கட்டாயமானவையாகவே கருதப்பட வேண்டும். உள்ளுணர்வுகள் மற்றும் அனுபவத்தின் வெளிச்சத்தில் நான் அஃதை இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக[2].(3) செயல்களைப் பொறுத்தவரையில் சில மனிதர்கள், முயற்சியே {புருஷ ஸாமர்த்தியமே} அவற்றின் காரணம் என்று சொல்கின்றனர். பிறரோ தேவையே {தெய்வமே / காலமே} அதன் காரணம் என்கின்றனர். இன்னும் பிறர், இயல்பே {ஸ்வபாவமே} அதன் காரணம் என்கின்றனர்.(4) சிலரோ முயற்சி மற்றும் தேவை {காலம்} ஆகிய இரண்டின் விளைவே செயல்கள் என்று சொல்கின்றனர். மேலும் சிலர், காலம், முயற்சி, இயல்பு ஆகியவற்றில் இருந்து செயல்கள் பாய்கின்றன என்று சொல்கின்றனர். (முயற்சி, தேவை {காலம்} மற்றும் இயல்பு ஆகிய) இம்மூன்றில் (வேறு இரண்டும் காரணமல்ல, அம்மூன்றில்) ஒன்று மட்டுமே காரணம் என்று சிலர் சொல்கின்றனர். இவை மூன்றும் சேர்ந்துதான் காரணம் உண்டாகிறது என்று சிலர் கருதுகிறார்கள்[3].(5)செயல்களைச் செய்வதில் ஈடுபடும் சில மனிதர்கள், அனைத்துப் பொருட்களையும் பொறுத்த வரையில், அவை {பொருட்கள்} இருக்கின்றன, அவை இல்லை, அவை இருக்கின்றன என்று சொல்ல முடியாது, அவை இல்லை என்று சொல்லமுடியாது, இருக்கின்றன என்று சொல்ல முடியாது என்பதல்ல, மற்றும் இறுதியாக இல்லை என்று சொல்ல முடியாது என்பதல்ல என்று சொல்கிறார்கள். (இவையே மனிதர்களால் சொல்லப்படும் பல கருத்துகளாகும்). எனினும், யோகியராக இருப்பவர்கள், பிரம்மத்தையே அண்டத்தின் காரணமாகக் காண்கிறார்கள்[4].(6) திரேத, துவாபர, கலி யுகங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஐயங்களால் அகத்தூண்டல் பெற்றவர்கள் ஆவர். எனினும் கிருத யுகத்தைச் சேர்ந்த மனிதர்கள் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களாக, அறம் நோற்பவர்களாக இருந்தார்கள்[5].(7) அந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும், ரிக்குகள், சாமங்கள் மற்றும் யஜுஸ்கள் ஆகியவை வெளிப்படையாகவே வெவ்வேறானவையாக இருந்தாலும் ஒன்றெனவே கருதினார்கள். ஆசை மற்றும் பேராசையை ஆய்வு செய்த அவர்கள் தவத்தை மட்டுமே வழிபாடு செய்தனர்[6].(8) தவப்பயிற்சிகளை அர்ப்பணிப்புடனும், அவற்றில் நிலையுறுதியுடனும், கடுமையுடனும் நோற்கும் ஒருவன், தன் ஆசைகள் அனைத்தின் கனிகளைத் தவங்களால் மட்டுமே அடைகிறான்.(9) தவத்தின் மூலம் ஒருவன் அண்டத்தைப் படைத்தவனின் நிலையை அடைகிறான். தவத்தின் மூலம் அனைத்துப் பொருட்களின் பலமிக்கத் தலைவனாகிறான்[7].(10)அந்தப் பிரம்மம், வேதத் தீர்மானங்களில் {கர்மகாண்டத்தில்} விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வளவையும் மீறி, அந்தத் தீர்மானங்களை அறிந்தவர்களால் கூடப் பிரம்மம் உணரப்பட முடியாததாக இருக்கிறது. மீண்டும் அந்தப் பிரம்மம் வேதாந்தத்தில் அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், பிரம்மத்தைச் செயல்களின் வழிமுறைகளால் காண முடியாது[8].(11) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியானது, யபத்தை (தியானம் மற்றும் ஜெபத்தைக்) கொண்டது, க்ஷத்திரியர்களுக்கானது {க்ஷத்திரியர்களுக்கான வேள்வியானது} தேவர்களை நிறைவு செய்வதற்கு (தூய) விலங்குகளைக் கொல்வதைக் கொண்டது; வைசியர்களுக்கானது பயிர்களை உண்டாக்குதல் மற்றும் வீட்டு விலங்குகளை வளர்த்தலைக் கொண்டது; சூத்திரர்களுக்கானது மூவகையினருக்குத் தொண்டு செய்வதைக் கொண்டது.(12) ஒருவன் தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நோற்பது, வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களைக் கற்பது ஆகியவற்றின் மூலம் ஒரு துவிஜன் {இரு பிறப்பாளன்} (மறுபிறப்பாளன்) ஆகிறான். ஒருவன் வேறு எந்தச் செயலையும் செய்கிறானோ இல்லையோ, அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாவதன் மூலம் ஒரு பிராமணனாகிறான்.(13) திரேதா யுகத்தின் தொடக்கத்தில் வேதங்கள், வேள்விகள், வர்ணபேதங்கள் மற்றும் பல்வேறு வகையான வாழ்வுமுறைகள் அதனதன் வகையில் முழுமையாக இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலத்தின் அளவு குறைந்ததன் விளைவால் அவையும் சரிவை அடைந்தன.(14) துவாபர யுகத்திலும், கலியுகத்திலும் வேதங்கள் மனக்கலக்கத்தால் மூழ்கடிக்கப்படுகின்றன. மேலும் கலியுகத்தின் முடிவில், அவை கண்ணுக்காவது தென்படுமா என்பது ஐயம்நிறைந்த ஒன்றுதான்.(15)
அந்த யுகத்தில் ஒவ்வொரு வகைக்குமுரிய கடமைகள் மறைந்து, மனிதர்கள் கொடுமையால் பீடிக்கப்படுகிறார்கள். பசு, பூமி, நீர் மற்றும் (மருத்துவக் குணம் கொண்ட உண்ணத்தக்க) மூலிகைகளில் அவற்றின் சாறு கொண்ட தன்மை மறைந்து போகின்றன[9].(16) (உலகளாவிய) கொடுமையின் மூலம் வேதங்கள் மறைகின்றன, அவற்றோடு சேர்ந்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் நான்கு வாழ்வுமுறைகளுக்கான கடமைகளும் மறைந்து போகின்றன. தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் பீடிக்கப்படுகின்றனர், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இழிவான மாற்றத்தை அடைகின்றன.(17) சொர்க்கத்தின் மழை பூமியில் பொருட்கள் அனைத்தையும் வளரச் செய்வதைப் போலவே வேதங்களும் ஒவ்வொரு யுகத்திலும் அங்கங்கள் அனைத்தையும் வளரச்செய்கின்றன.(18) காலம் பல்வேறுவடிவங்களை ஏற்கிறது என்பதில் ஐயமில்லை. அதற்குத் தொடக்கமோ முடிவோ கிடையாது. காலமே அனைத்து உயிரினங்களையும் படைத்து அவற்றை மீண்டும் விழுங்குகிறது. நான் இது குறித்து உன்னிடம் ஏற்கனவே பேசியிருக்கிறேன்.(19) அனைத்து உயிரினங்களின் தோற்றுவாயும் காலமே ஆகும்; காலமே அவற்றை வளரச் செய்கிறது; காலமே அவற்றை அழிக்கவும் செய்கிறது; இறுதியாகக் காலமே அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறது. முடிவிலா வகைகளிலான உயிரினங்கள், (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலியவை போன்ற) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்பட்டு, (பரப்பிரம்மத்தால் விதிக்கப்பட்டதைப்போலவே இருந்து, வேறுவகையில் இல்லாமல்) தங்கள் சொந்த இயல்புகளின் படியே காலத்தைச் சார்ந்திருக்கின்றன” என்றார் {வியாசர்}”.(20)
ஞானக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 239-ஞானம், தவங்கள், புலனடக்கம், துறவு ஆகியவை இல்லாமல் வெற்றியை அடைய முடியாது என்பதையும், சாங்கிய அமைப்பில் விளக்கப்படும் அறிவுக் கோட்பாட்டையும், பிரம்மஞானத்தை அடையு வழி குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு (தன் தந்தையால் {வியாசரால்}) சொல்லப்பட்ட சுகர், அந்தப் பெருமுனிவரின் {வியாசரின்} போதனைகளை உயர்வாக மெச்சி, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் கடமைகளைக் குறித்த பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.(1)
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “ஞானம் கொண்டவனும், வேதங்களை அறிந்தவனும், வேள்விகளைச் செய்பவனும், வன்மத்திலிருந்து விடுபட்டவனுமான ஒருவன், நேரடி சாட்சியம் மூலமோ, உள்ளுணர்வின் மூலமோ உணர முடியாததும், வேதங்களில் இவ்விதம் இருக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்ட முடியாததுமான பிரம்மத்தை அடைவதில் எந்த வழிமுறைகளினால் வெற்றியடைகிறான்?(2) என்னால் கேட்கப்படும் நீர் எந்த வழிமுறைகளின் மூலம் பிரம்மத்தை உணரலாம் என்பதைச் சொல்வீராக. தவம், பிரம்மச்சரியம், அனைத்தையும் துறத்தல், புத்தி, சாங்கிய தத்துவத்தின் உதவி, யோகம் ஆகியவற்றின் மூலம் அஃதை உணர முடியுமா?(3) மனம் மற்றும் புலன்கள் ஆகிய இரண்டைப் பொறுத்தவரையில், எந்த வழிமுறைகளின் மூலம் எந்த வகைக் காரிய ஒருமை {ஒரே காரியத்தில் நிலையுறுதியுடன் இருத்தல்} மனிதர்களால் அடையப்படுகிறது? இவை யாவற்றையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(4)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஞானம் அடைதல் {வித்தை}, தவம், புலனடக்கம், அனைத்தையும் துறத்தல் ஆகியவை இன்றி வேறு எந்த வழிமுறையினாலும் எந்த மனிதனாலும் ஒருபோதும் வெற்றியடைய முடியாது[1].(5) (எண்ணிக்கையில் ஐந்தாக உள்ள) பெரும்பூதங்கள் சுயம்புவின் முதல் (அல்லது அடிப்படை) படப்பைப் பிரதிபலிக்கின்றன. அவை உலக வாழ்வில் உள்ள உடல் படைத்த உயிரினங்களில் மிகப்பெரும் அளவில் அமைந்திருக்கின்றன.(6) உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களும் பூமியில் இருந்தே பெறப்படுகின்றன. அவற்றின் உதிரம் நீரில் இருந்து பெறப்படுகிறது. அவற்றின் கண்கள் ஒளியில் இருந்து பெறப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பிராணன், அபானன், (இன்னும் மூன்று மூச்சுக்காற்றுகள்) வாயுவைத் தங்கள் புகலிடமாகக் கொண்டிருக்கின்றன. இறுதியாக, அவற்றின் உள்ளிருக்கும் (மூக்குத்துளைகள், காது துளைகள் முதலிய) வெற்றிடங்கள் வெளியாக இருக்கின்றன.(7) (உயிரினங்களின்) பாதத்தில் விஷ்ணு இருக்கிறான். அவற்றின் கரங்களில் இந்திரன் இருக்கிறான். உண்ண விரும்பும் அக்னி அவற்றின் வயிற்றுக்குள் இருக்கிறான். காதுகளுக்குள், செவிப்புலனைப் பிரதிபலிக்கும் திசைப்புள்ளிகள் இருக்கின்றன. நாவில் வாக்காகச் சரஸ்வதி இருக்கிறாள்[2].(8)காதுகள், தோல், கண்கள், நாவு, ஐந்தாவதாக மூக்கு ஆகியன அறிவுப்புலன்களாக {ஞானேந்திரியங்களாகச்} சொல்லப்படுகின்றன. இவை தங்கள் தங்களுக்குரிய பொருட்களை உணரும் நோக்கத்திற்காக இருக்கின்றன.(9) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை ஐந்தாவதாக மணம் ஆகியன (ஐந்து) புலன்களுக்கு உரிய பொருட்களாக இருக்கின்றன. இவை புலன்களில் இருந்து தனிப்பட்டவையாகவே (அல்லது சார்பற்றவையாகவே) எப்போதும் கருதப்பட வேண்டும்.(10) தேரோட்டியானவன், தான் விரும்பும் பாதையில் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட அவனது குதிரைகளைச் செலுத்துவதைப் போலவே, மனமும் (தான் விரும்பும் திசைகளில்) இந்தப் புலன்களைச் செலுத்துகிறது. இதயத்தில் அமர்ந்திருக்கும் புத்தியோ மனத்தைச் செலுத்துகிறது[3].(11) புலன்கள் அனைத்தையும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும் அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் மனமே அவற்றுக்கு {புலன்களுக்குத்} தலைவனாக இருக்கிறது. அதேபோலவே, புத்தியே மனத்தின் தலைவனாக (அவற்றை எதிலும் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும், அல்லது கட்டுப்படுத்துவதிலும் தலைவனாக) இருக்கிறது[4].(12)
புலன்கள், புலன்நுகர் பொருட்கள், இயல்பு {ஸ்வபாவம்} என்ற வார்த்தையில் சொல்லப்படும் அந்தப் பொருட்களின் குணங்கள், புத்தி, மனம், உயிர்மூச்சுகள், மற்றும் ஜீவன் ஆகியன உடல் கொண்ட அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிக்கின்றன[5].(13) புத்தியானது எதற்குள் வசிக்கிறதோ அந்த உடலுக்கு உண்மையில் இருப்பு என்ற ஏதும் கிடையாது. எனவே, உடலானது புத்தியின் புகலிடம் கிடையாது. (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) முக்குணங்களைக் கொண்ட தொடக்கக் காலப் பிரகிருதியே, ஒலிவடிவமாக மட்டும் இருக்கும் புத்தியின் புகலிடமாக இருக்கிறது. ஆன்மாவும் புத்தியின் புகலிடமாக இல்லை. ஆசையே புத்தியை உண்டாக்குகிறது. எனினும், ஆசையானது ஒருபோதும் முக்குணங்களை உண்டாக்குவதில்லை[6].(14) புலன்களைக் கட்டுப்படுத்தவல்ல ஞானியானவன், பதினாறு குணங்கள் சூழ பதினேழாவதாகத் தன் புத்தியில் இருக்கும் ஆன்மாவை தன் மனத்தின் உதவியுடன் காண்கிறான்.(15) கண்கள் அல்லது புலன்கள் அனைத்தின் உதவியினாலும் ஆன்மாவைக் காண முடியாது. அனைத்தையும் கடந்த ஆன்மாவானது, மனமெனும் விளக்கின் ஒளியில் மட்டுமே புலப்படுகிறது.(16) அதே போலவே, ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம் ஆகிய தன்மைகளை இழந்து, சுவையும் மணமும் இல்லாமல், அழிக்கப்பட முடியாததாக, (திரளான அல்லது நுட்பமான) உடலற்றதாக, புலன்களற்றதாக இருக்கும் அஃது {ஆன்மாவானது} உடலுக்குள் காணப்படுவதில்லை.(17) புலப்படாததாகவும், உயர்ந்ததாகவும் இருக்கும் அஃது {ஆன்மாவானது}, மடியக்கூடிய உடல்கள் அனைத்திலும் வசிக்கிறது. ஆசான் மற்றும் வேதங்களின் வழிகாட்டலைப் பின்பற்றி அஃதை {ஆன்மாவைக்} காணும் ஒருவன், அதன் பிறகு பிரம்மமாகவே ஆகிறான்.(18)ஞானிகள், அறிவு மற்றும் சீடர்களைக் கொண்ட ஒரு பிராமணனையும், ஒரு பசுவையும், ஒரு யானையையும், ஒரு நாயையும், ஒரு சண்டாளனையும் சம கண்ணுடன் ஒன்றாகவே பார்ப்பார்கள்[7].(19) அனைத்துப் பொருட்களையும் கடந்திருக்கும் ஆன்மாவனாது, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்திலும் வசிக்கிறது. உண்மையில், அனைத்துப் பொருட்களும் அதனால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(20) ஓர் உயிரினமானது, அனைத்துப் பொருட்களிலும் தன் சொந்த ஆன்மாவைக் காணும்போதும், அனைத்துப் பொருட்களையும் தன் ஆன்மாவில் காணும்போதும் அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(21) வேத ஒலியின் மூலம் ஒருவனுடைய ஆன்மாவிற்குள் எது நிறைகிறதோ அதற்கு ஒப்பிடத்தக்க அளவில் அவன் பரமாத்மாவை நிரப்புகிறான் {பரமாத்மாவில் அந்த அளவுக்கான இடத்தைப் பெறுகிறான்}[8]. எவன் எப்போதும் அனைத்துப் பொருட்களையும் தன் சுயத்துடன் அடையாளம் காண்கிறானோ அவன் நிச்சயம் அழிவின்மையை அடைகிறான்.(22) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவில் தன்னை அமைத்துக் கொள்பவனும், அனைத்துயிரினங்களில் நன்மையில் ஈடுபடுபவனும், (அனைத்துப் பொருட்களின்) இறுதி கதியை (பிரம்மத்தை) அடைய விரும்புபவனுமான பாதையற்ற மனிதனின் பாதையில் தேவர்களே கூடக் கலக்கமடைகின்றனர் {மயக்கமடைகின்றனர்}[9].(23) உண்மையில், ஞானம் கொண்ட மனிதனால் பின்பற்றப்படும் பாதையானது, வானத்தில் பறவைகள் செல்லும் பாதை, அல்லது நீரில் மீன்கள் செல்லும் பாதையைப் போலப் புலப்படாததாகும்.(24)காலமானது தன் சொந்த சக்தியில் தனக்குள்ளேயே அனைத்தையும் சமைக்கிறது. எனினும், எந்தக் காலத்தில் எவரெவர் சமைக்கப்படுவர் என்பதை ஒருவரும் அறிவதில்லை[10].(25) (நான் எதைக் குறித்துப் பேசுகிறேனோ) அஃது {ஆத்மாவானது}, மேலேயோ, நடுவிலோ, கீழேயோ, குறுக்காகவோ, வேறு எந்தத் திசையிலோ தோன்றுவதில்லை. நிலையற்றதான அஃது எந்த இடத்திலும் காணப்படுவதில்லை[11].(26) இந்த உலகங்கள் அனைத்தும் அதற்குள்ளேயே இருக்கின்றன. அதற்கு வெளியே உள்ள எதுவும் இந்த உலகங்களில் இல்லை. வில்லின் நாணிலிருந்து தூண்டப்பட்ட ஒரு கணையின் வேகத்தில் நிற்காமல் ஒருவன் சென்று கொண்டே இருந்தாலும்,(27) மனோவேகத்திலேயே அவன் சென்றாலும், இவை அனைத்திற்கும் காரணமான அதன் {ஆத்மாவின்} எல்லையை அவன் ஒருபோதும் அடையமாட்டான்[12].(28) வேறெதுவும் திரளானதில்லை என்ற அளவுக்கு அது திரளானதாக இருக்கிறது. அதன் கரங்களும், பாதங்களும் எங்கும் நீண்டிருக்கின்றன. அதன் கண்கள், தலை மற்றும் முகம் ஆகியன எங்குமிருக்கின்றன. அதன் காதுகள் அண்டத்தில் எங்குமுள்ளன. அஃது அனைத்துப் பொருட்களையும் கடந்து நிலைத்திருக்கிறது.(29)
அது நுட்பத்திலும் நுட்பமானதாகவும், அனைத்தின் இதயமாகவும் இருக்கிறது. புலப்படாத நிலையிலேயே அஃது இருக்கிறது என்பதில் ஐயமில்லை.(30) இவையே (பரம) ஆத்ம இருப்பின் அழியத்தக்கன {க்ஷரம்}, அழியத்தகாதன {அக்ஷரம்} என்ற இரு வடிவங்களாகும். அசைவன மற்றும் அசையாதன என்ற அனைத்திலும் அஃது அழியத்தக்க இருப்பை வெளிப்படுகிறது; அதே வேளையில், தெய்வீக சைதன்யத்தில் அஃது அழிவில்லாத மற்றும் அழியத்தகாத இருப்பை வெளிப்படுத்துகிறது.(31) இருப்பில் உள்ள அசையும் மற்றும் அசையாதவை அனைத்தின் தலைவனாக இருப்பினும், செயலற்றதாக, குணங்களற்றதாக இருப்பினும், அஃது ஒன்பது வாயில்களைக் கொண்ட நன்கறியப்பட்ட மாளிகையில் நுழைந்து, செயல்பாட்டில் ஈடுபடுகிறது.(32) அடுத்தக் கரையைக் காணவல்ல ஞானம் கொண்ட மனிதர்கள், பிறப்பில்லாதவன் (அல்லது பரமாத்மா) அசைவு {சலனம்}, இன்பம், துன்பம், பல்வேறு வடிவங்கள், நன்கறியப்பட்ட ஒன்பது உடைமைகள் ஆகியவற்றின் விளைவால் செயல்பாடெனும் குணத்தைக் கொள்கிறான் என்று சொல்கின்றனர்[13].(33) செயல்பாடெனும் குணத்தை அடைவதாகச் சொல்லப்படும் அழிவற்ற ஆத்மாவானது, செயலில்லாததாகச் சொல்லப்படும் அழிவற்ற அதே ஆத்மாவேயன்றி வேறில்லை. ஞானம் கொண்ட மனிதன், அந்த அழிவற்ற சாரத்தை அடைவதன் மூலம், வாழ்வு மற்றும் பிறவி {ஜனனம் மற்றும் மரணம்} என்ற இரண்டையும் நன்மைக்காகக் கைவிடுகிறான்” என்றார் {வியாசர்}.(34)
யோகக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 240-யோக வழிமுறையையும், செயல்கள் மற்றும் செயல்களில் இருந்து விலகுதல் குறித்த வேத அறிவுப்புகளையும் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! அருமை மகனே, உன்னால் கேட்கப்பட்ட நான், உன் கேள்விக்கான பதிலை உண்மையில் சாங்கிய அமைப்பில் விளக்கப்பட்டுள்ள ஞானக் கோட்பட்டின்படியே சொன்னேன்.(1) (அதே கதிக்காக) யோகக் கோட்பாட்டின்படி செய்யப்படும் அனைத்தையும் நான் இப்போது விளக்கப்போகிறேன்; கேட்பாயாக. புத்தி, மனம், புலன்கள்,(2) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மா ஆகியவற்றின் கலவையே ஞானத்தில் முதன்மையான வகையாகச் சொல்லப்படுகிறது. அமைதியான மனநிலையைக் கொண்டவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆள்பவனும், (தியானத்தின் மூலம்) ஆன்மாவை நோக்கித் தன் பார்வையைத் திருப்பவல்லவனும், (அத்தகைய) தியானத்தில் இன்புறுபவனும், புத்தியைக் கொண்டவனும், செயல்பாடுகளில் தூய்மையானவனுமான ஒருவன், (தன் ஆசானின் உதவியுடன்) அந்த ஞானத்தை அடைய வேண்டும். விவேகிகளால், யோகத்தின் ஐந்து களங்கங்கள் என்று அறியப்படும் ஆசை, கோபம், பேராசை, அச்சம் மற்றும் உறக்கம் ஆகியவற்றைக் கைவிட்டு இந்த ஞானத்தை அடைய அவன் முயல வேண்டும். அனைத்துக் காரியங்களைக் கைவிடுவதால் ஆசை வெல்லப்படுகிறது.(3-5)
பொறுமை கொண்ட ஒருவன், புத்தியின் துணை கொண்டு சிந்திக்கத்தகுந்தவற்றைச் சிந்திப்பதன் மூலம் உறக்கத்தைக் கைவிடுவதில் வெல்கிறான். அவன் உறுதியான முயற்சியின் மூலம் தன் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றை (தகாத பாவகர ஈடுபாடுகளில் இருந்து) கட்டுப்படுத்த வேண்டும். அவன் தன் கண்களின் (கண்களைப் பயன்படுத்துவதன்) மூலம் தன் கரங்களையும், கால்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவன் தன் மனத்தின் துணை கொண்டு, தன் கண்களையும், காதுகளையும், தன் செயல்களின் துணை கொண்டு தனது மனத்தையும் பேச்சையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வால் அச்சத்தையும், விவேகிகளுக்குப் பணிவிடை செய்வதால் செருக்கையும் தவிர்க்கவேண்டும்.(7) தாமதம் செய்வதை அடக்கும் அவன் இவ்வழிமுறைகளின் மூலம் இந்த யோகக் களங்கங்களை அடக்க வேண்டும். அவன் நெருப்பையும், பிராமணர்களையும் துதித்து, தேவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்.(8) அவன் மங்கலமற்ற அனைத்துவகை உரையாடல்களையும், வன்மம் நிறைந்த பேச்சுகளையும், பிறரின் மனங்களைப் புண்படுத்தும் சொற்களையும் தவிர்க்க வேண்டும்.
பிரம்மமே (அனைத்துப் பொருட்களின்) பிரகாசமிகு வித்தாக இருக்கிறது. மேலும் இந்த வித்தின் சாரத்திலேயே இவை அனைத்தும் இருக்கின்றன.(9) எதில் அனைத்தும் பிறக்கின்றனவோ அந்த அசைவற்ற, அசையாத அண்ட வடிவத்தில் பிரம்மமே கண்ணானது. தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, எளிமை, மன்னிக்கும் தன்மை,(10) உடல் தூய்மை, ஒழுக்கத் தூய்மை, புலனடக்கம் ஆகியன ஒருவனின் சக்தியைப் பெருக்கி, (அவ்வாறு பெருகும்போதே) அவனது பாவங்களை அழிக்கின்றன.(11) அனைத்து உயிரினங்களிடமும் சமமாக நடந்து கொள்வதன் மூலமும், எந்த முயற்சியும் இல்லாமல் எளிதாக அடையப்படுபவற்றைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்வதன் மூலமும் ஒருவன் தன் நோக்கங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்து, ஞானத்தைப் பெறுவதிலும் வெல்கிறான்.(12) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தும், சக்தியுடனும், எளிய உணவை உண்டும், புலன்களை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒருவன், ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கிய பிறகு பிரம்மத்தை அடைவதில் முனைய வேண்டும்.(13) புலன்களையும், மனத்தையும் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும் விலக்கியப் பிறகு அவற்றை) உறுதியாக ஒன்றிணைத்து, உள்நோக்கிய நிலையான பார்வையுடன், மாலை அல்லது அதிகாலையின் அமைதியான வேளைகளில் தன் மனத்தைப் புத்தியில் நிறுத்த வேண்டும்.(14) மனிதனின் ஐம்புலன்களில் ஒன்றேனும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமேயானால், ஒரு தோற்பையின் அடியில் உள்ள தடுக்கப்பட முடியாத துளையின் வழியே ஒழுகும் நீரைப் போல, அதன் {அந்தப் புலனின்} வழியே அவனது ஞானமனைத்தும் தப்பிச் செல்லும்.(15)
ஒரு மீனவன், தன் வலைகளுக்குப் பேராபத்தைத் தரும் சக்தியற்ற மீனை முதலில் பிடிக்க முனைவதைப் போலவே, ஒரு யோகியும், முதல் தருணத்திலேயே தன் மனத்தைக் கட்டுப்படுத்து முனைய வேண்டும். முதலில் மனத்தை அடக்கிவிட்ட யோகி, அடுத்ததாகத் தன் காதுகளையும், கண்களையும், அதன் பிறகு தன் நாவையும், பிறகு தன் மூக்கையும் அடக்க வேண்டும்.(16) இவை அனைத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, அவன் அவற்றைத் தன் மனத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும். பிறகு அனைத்துக் காரியங்களில் இருந்து மனத்தை விலக்கும் அவன் அதைப் புத்தியில் நிலைநிறுத்த வேண்டும்.(17) உண்மையில், ஐம்புலன்களைக் கட்டுப்படுத்திய யதியானவன், அவற்றை மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும். தங்களுடன் ஆறாவதாக மனத்தைக் கொண்ட இவை {புலன்கள்} புத்தியில் ஒருங்கே குவிந்து,(18) இவ்வாறு கலக்கமில்லாமல் அவை நிலையாகக் குவிவதால், பிரம்மமானது, சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட புகையற்ற நெருப்பைப் போலவோ, பிரகாசமான ஒளியைக் கொண்ட சூரியனைப் போலவோ உணரத்தக்கதாகிறது.(19) உண்மையில் அவன், வானத்தில் உள்ள மின்னலெனும் நெருப்பைப் போல, தன் ஆன்மாவுக்குள் தன்னையே காண்கிறான். பிறகு அதன் முடிவற்ற தன்மையின் விளைவால் அனைத்தும் அதனுள் தோன்றுகிறது, மேலும் அஃது அனைத்திலும் தோன்றுகிறது.(20)
ஞானமும், மனோவுறுதியும், உயர்ந்த அறிவையும் கொண்டவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபடுபவர்களுமான உயர் ஆன்ம பிராமணர்கள், அதை {ஆன்மாவைக்} காண்பதில் வெல்கிறார்கள்.(21) இவ்வாறு ஆறுமாதங்கள் கடுந்தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு யோகி, {யாருமற்ற} தனியான இடத்தில் அமர்ந்து, அந்த அழிவற்றதுடன் {பிரம்மத்துடன்} சமத்தன்மையை அடைவதில் {அதனுடன் கலப்பதில்} வெல்கிறான்.(22) அழிவு, வரிவு, ஒரே மனிதன் அல்லது உடலுக்குள் பல்வேறு தன்மைகளை அளிக்கும் சக்தி, தெய்வீக மணங்கள், ஒலிகள், பார்வைகள், சுவை மற்றும் தீண்டலின் இனிய உணர்வுகள், குளிர் மற்றும் வெப்பத்தின் இன்பமான உணர்வுகள், காற்றுடனான சமத்தன்மை,(23) (உள்நோக்கிய ஒளியின் மூலம்) சாத்திரங்களையும், மேதைகளின் அனைத்து படைப்புகளையும் புரிந்து கொள்ளும் வல்லமை, தெய்வீகக் காரிகையரின் தோழமை ஆகிய இவை அனைத்தையும் யோகத்தின் மூலமாக அடையும் யோகி, அவற்றை அலட்சியம் செய்து, அவை அனைத்தையும் தன் புத்தியில் கலக்க வேண்டும்[1].(24) ஒருவன் பேச்சையும், புலன்களையும் கட்டுப்படுத்தி அந்தி இருளுக்குப் பின்பும், விடியலுக்கு முன்பும், விடியலின் போதும் மலை முகட்டிலோ, ஒரு நல்ல மரத்தினடியிலோ, ஒரு மரத்திற்கு முன்பாகவோ அமர்ந்து யோகம் பயில வேண்டும்.(25)தன் புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் கட்டுப்படுத்தும் ஒருவன், புலங்கள் குவிந்த நிலையில், உலகின் மனிதன் செல்வத்தைக் குறித்தும், பிற மதிப்புமிக்க உடைமைகளைக் குறித்தும் சிந்திப்பதைப் போல நித்தியமானதும், அழிவற்றதுமான ஒன்றை {பிரம்மத்தைச்} சிந்திக்க வேண்டும். ஒருவன் யோகம் பயிலும்போது ஒருபோதும் தன் மனத்தை அதிலிருந்து விலக்கக்கூடாது.(26) யோகியானவன், அலைபாயும் மனத்தை எந்த வழிமுறைகளினால் கட்டுப்படுத்துவதில் வெல்ல முடியுமோ, அந்த வழிமுறைகளை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அவன் அதிலிருந்து ஒருபோதும் விழுந்துவிடத் தன்னை அனுமதிக்கக்கூடாது.(27) அனைத்திலிருந்தும் புலன்களும், மனமும் விடுபட்ட யோகி, (பயிற்சிக்காக) வெறுமையான மலைக்குகைகளுக்கும், தேவர்களுக்காக நேர்ந்துவிடப்பட்ட கோவில்களுக்கும், வெறுமையான வீடுகள் அல்லது அறைகளுக்கோ சென்று, அங்கே வாழ வேண்டும்.(28) அவன் மற்றொருவனுடன் பேச்சிலோ, செயலிலோ, எண்ணத்திலோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அனைத்துப் பொருட்களையும் அலட்சியம் செய்து, மிகச் சொற்பமாக உண்ணும் யோகி அடைந்த அல்லது இழந்த பொருட்களின் மீது சமமான கண்களையே செலுத்த வேண்டும்.(29)
தன்னைப் புகழ்பவனிடமும், பழிப்பவனிடமும் ஒரே வகையிலேயே நடந்து கொள்ள வேண்டும். அவன் எவருக்கும் நன்மையையோ தீமையையோ நாடக்கூடாது.(30) ஒன்றை அடைவதால் மகிழ்ச்சியையோ, தோல்வி அல்லது இழப்பால் கவலையையோ அடையக்கூடாது. அவன் காற்றை {வாயுவைப்} போல அனைத்து உயிரினங்களிடமும் சீரான நடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும்[2].(31) தன்னை நோக்கிய மனம் கொண்டவனும், தூய்மையான வாழ்வை வாழ்பவனும், அனைத்துப் பொருட்களின் மீதும் சமமாகக் கண்களைச் செலுத்துபவனும், உண்மையில் இவ்வகையிலேயே ஆறு மாதங்கள் யோகத்தில் ஈடுபடுபவனுமான ஒருவனுக்கு, ஒலியால் பிரதிபலிக்கப்படும் பிரம்மமானது மிக விளக்கமாக {பேரொளிமயமாகத்} தோன்றும்[3].(32) (செல்வம் மற்றும் வசதிகளை ஈட்டுவதில்) கவலையால் பீடிக்கப்படும் மனிதர்கள் அனைவரையும் காணும் யோகியானவன், மண்ணாங்கட்டியையும், ஒரு கல் துண்டையும், தங்கக் குவியலையும் ஒரே சமமான கண்ணுடன் பார்க்க வேண்டும். உண்மையில் அவன் (செல்வமீட்டும்) இந்தப் பாதையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதன் மீது வெறுப்பை அடைந்து, ஒருபோதும் திகைப்படையாதவனாக இருக்க வேண்டும்.(33) ஒருவன் {வர்ணத்தால்} தாழ்ந்த வகையைச் சார்ந்தவனாகவே இருப்பினும், ஒருத்தி பெண்ணாகவே இருப்பினும் அவர்கள் இருவரும் மேலே குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றினால் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்[4].(34) எவன் தன் மனத்தை அடக்குவானோ, அவன், நிலையுறுதியுடனான புலன்களைத் தவிர வேறு எதனைக் கொண்டும் அடைய முடியாததும், நுட்பத்திலும் நுட்பமானதும், திரளிலும் திரளானதும், விடுதலையேயானதும் {முக்தியேயானதும்}, படைக்கப்படாததும், பழமையானதும், சிதைவில்லாததும், நித்தியமானதுமான பிரம்மத்தைத் தன் புத்தியின் துணையால் தன்னிடமே காண்பான்” என்றார் {வியாசர்}”.(35)பீஷ்மர் தொடர்ந்தார், “ஞானம் கொண்ட மனிதர்கள், ஆசான்களின் வாயால் உறுதி செய்து கொள்வதன் மூலமும், உயர் ஆன்மாக் கொண்ட பெருமுனிவரால் இவ்வளவு சரியாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைத் தங்கள் மனத்தில் சிந்தித்துப் பார்ப்பதன் மூலமும், (சாத்திரங்கள் சொல்லும் வகையில்) பிரம்மத்துடனான சமநிலையை அடைந்து, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் பிரளய காலம் வரும்வரை அங்கேயே இருப்பார்கள்” {என்றார் பீஷ்மர்}.(36)
ஞானமும், கர்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 241-கர்மம் மற்றும் ஞானம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “வேத அறிவிப்புகள் இருவகையில் இருக்கின்றன. ஒருமுறை “செயல்கள் அனைத்தையும் செய்” என்று அவை கட்டளையிடுகின்றன. மறுமுறை (இதற்கு முரணாக) “செயல்கள் அனைத்தையும் கைவிடு” என்றும் அவை சொல்கின்றன. ஞானத்தின் துணை மூலம் மனிதர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}[1]? செயல்களின் துணை மூலம் அவர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். நீர் எனக்குச் சொல்வீராக. உண்மையில் ஞானம் மற்றும் செயல்கள் {கர்மம்} குறித்த இந்த அறிவிப்புகள் மாறுபாடு கொண்டவையாகவும், முரணானவையாகவும் இருக்கின்றன” என்று கேட்டார்”.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பராசரர் மகன் {வியாசர்}, தன் மகனிடம் {சுகரிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “முறையே செயல்கள் மற்றும் ஞானத்தைச் சார்ந்திருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவற்ற இரு பாதைகளை நான் உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! குழந்தாய், ஞானத்தின் துணை மூலம் ஒருவன் அடையும் இடத்தையும் {கதியையும்}, செயல்களின் துணை மூலம் அவன் அடையும் வேறு இடத்தையும் {கதியையும்} நான் உனக்குச் சொல்கிறேன்; குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. இந்த இரண்டு இடங்களுக்கு இடையிலான வேறுபாடானது எல்லையற்ற வானைப் போன்று மிகப் பெரிதானதாகும்.(3,4) நீ என்னிடம் கேட்டிருக்கும் இந்தக் கேள்வியானது, நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனுக்கு ஒரு நாத்திகனின் உரை அளிக்கும் வலியை எனக்குத் தருகிறது.(5)
வேதங்களில் நிறுவப்பட்டிருக்கும் இருவழிகள், பிரவிருத்தியின் மூலம் குறிப்பிடப்படும் (செயல்கள்) கடமைகள் மற்றும் நிவிருத்தியின் அடிப்படையிலான சிறப்புக் கடமைகள் ஆகியனவே ஆகும்.(6) செயல்களின் மூலம் ஓர் உயிரினம் அழிவடைகிறது. எனினும், ஞானத்தின் மூலம் அது விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}. இதன் காரணமாகவே, வாழ்வெனும் பெருங்கடலின் அடுத்தக் கரையைக் காணும் யோகியர், ஒருபோதும் தங்களைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை.(7) செயல்களின் மூலம், ஒருவன் தனது மரணத்திற்குப் பிறகு, பதினாறு உட்பொருள்களால்[1] தொகுக்கப்பட்ட உடலுடன் மறுபிறப்பெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகிறான். எனினும் ஞானத்தின் மூலம் அவன், எது நித்தியமானதோ, புலப்படாததோ, அனைத்தையும் அறிந்ததோ அதுவாகவே {பிரம்மமாகவே} மாற்றமடைகிறான்.(8) குறைந்த அறிவுள்ள ஒருவகை மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். இதன் விளைவால் அவர்கள் (ஒன்றன்பின் ஒன்றாக) இடையறாமல் உடல்களை ஏற்கின்றனர்.(9) கடமைகளைப் பொறுத்தவரையில் கூரிய உள்ளுணர்வுகளைக் கொண்டவர்களும், (ஞானத்திற்கு வழிவகுக்கும்) உயர்ந்த புத்தியை அடைந்தவர்களுமான மனிதர்கள், ஓடைகளில் நீர் அருந்துபவர்கள், எவ்வாறு கிணறுகள் மற்றும் குளங்களின் நீரை ஒருபோதும் மெச்சுவதில்லையோ அவ்வாறே செயல்களை ஒருபோதும் மெச்சுவதில்லை.(10)செயல்களின் மூலம் ஒருவன் அடையும் கனியானது, இன்பம் மற்றும் துன்பம், இருப்பு மற்றும் இல்லாமை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஞானத்தின் மூலமோ, எங்கே எந்தத் துன்பமும் இல்லையோ;(11) எங்கே ஒருவன் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிவற்றில் இருந்து விடுபடுவானோ; எங்கே ஒருவன் முதுமைக்கு ஆட்படுவதில்லையோ; எங்கே ஒருவன் நனவுநிலையிருப்பை {அகங்காரத்தைக்} கடந்த நிலையை அடைகிறானோ;(12) எங்கே உயர்வானதும், புலப்படாததும், அனைத்தையும் அறிந்ததும், எப்போதும் இருப்பதும், உணரப்பட முடியாததும், துன்பத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதும், அழிவில்லாததும், அழிவை விஞ்சி இருப்பதுமான பிரம்மம் இருக்கிறதோ;(13) எங்கே (இன்பம் மற்றும் துன்பம் முதலிய) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்தும், விருப்பம் அல்லது நோக்கத்தில் இருந்தும் அனைவரும் விடுபடுவார்களோ அந்த இடத்தை {பிரம்ம ஸ்வரூபத்தை ஞானத்தினால்} அவன் அடைகிறான். அவர்கள், அந்த நிலையை அடைந்து, அனைத்துப் பொருட்களின் மீதும் சமமான கண்களைச் செலுத்தி, உலகளாவிய நண்பர்களாகி, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் ஆகிறார்கள். ஓ! மகனே, ஞானத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுக்கும், செயல்களில் அர்ப்பணிப்புள்ளவனுக்கும் இடையில் ஒரு பெரிய வளைகுடா இருக்கிறது.(14) ஞானம் கொண்ட மனிதன் அழிவை அடையாமல், தேய்பிறையின் இறுதி இரவில் (அழிவடையாத) நுட்பமான வடிவில் இருக்கும் சந்திரனைப் போல எப்போதும் {நுட்பமாகவே} நீடித்திருக்கிறான்.(15)
(பிருஹதாரண்யகத்தில் யாக்ஞவல்கியர் எனும்) பெரும் முனிவர் இதைக் குறித்து இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதனைப் பொறுத்தவரையில், அவனது இயல்பானது {ஸ்வபாவமானது}, புதிதாகப் பிறந்த நிலவானது, ஆகாயத்தில் வளைவான நூலாகத் தெரிவதைப் போல ஊகித்தறியப்படுகிறது[2].(16) ஓ! மகனே, செயல்களைச் செய்யும் மனிதன் {கர்மமயமான புருஷன்}, மாறுதலின் விளைவுகளான பதினோரு உட்பொருள்களுடனும், பதினாறு நுட்பமான வடிவங்களுடனும் மறுபிறப்பெடுக்கிறான் என்பதை அறிவாயாக.(17) தாமரை இலையில் தண்ணீர் துளியைப் போல, அந்த (பொருள்) வடிவத்தில் {உயிரினத்தில்} புகலிடம் கொள்ளும் தேவன், நித்தியமானதும், மனம் மற்றும் புத்தியைக் கடந்து யோகத்தில் வெல்வதுமான க்ஷேத்ரஜ்ஞனாக (ஆன்மாவாக) அறியப்பட வேண்டும்[3].(18) தமஸ், ரஜஸ் மற்றும் சத்வம் ஆகியன புத்தியின் குணங்களாகும். புத்தியானது, உடலுக்குள் வசிக்கும் தனிப்பட்ட ஆத்மாவின் குணமாகும். மேலும், தனிப்பட்ட ஆன்மாவோ பரமாத்மாவில் {பரமாத்மாவின் குணத்தில்} இருந்து வருகிறது[4].(19) ஆன்மாவுடன் கூடிய உடலானது, ஜீவனின் குணமெனச் சொல்லப்படுகிறது. ஜீவனே செயல்பட்டு, அனைத்து உடல்களையும் உயிர்வாழச் செய்கிறது. எது க்ஷேத்திரம் (என்றும், எது க்ஷேத்ரஜ்ஞன்) என்று{ம்} அறிந்தவர்கள், ஏழு உலகங்களையும் படைத்தவனே {பரமாத்மாவே} மேற்கண்ட ஜீவன் {ஆத்மா} என்று சொல்கிறார்கள்” என்றார் {வியாசர்}[5].(20)
பிரம்மச்சரியம்! – சாந்திபர்வம் பகுதி – 242-செயல் பண்புகளின் கடமைகளை மீறாமல் எவ்வாறு முக்தியை அடைய முடியும் என்பது குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; ஆசிரமங்களைக் குறித்தும், நான்கு வகை ஆசிரமங்களில் பிரம்மச்சரியத்தின் நடைமுறை குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “(அண்டம் தழுவிய) க்ஷரம் என்பதோடு தொடங்கும் ஒன்று, (அண்ட) ஆன்மாவிலிருந்து மற்றொன்று என இருவகைப் படைப்புகள் இருப்பதாக நான் இப்போது புரிந்து கொள்கிறேன். புலன்கள் மற்றும் அவற்றுக்குரிய பொருட்களைக் கொண்ட அந்த மற்றொன்று புத்தியின் பலத்தால் காணத்தக்கதாக இருக்கிறது. இந்த இறுதியானது மற்றதைக் கடந்து இருப்பதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது[1].(1) எனினும் நான், எது இந்த உலகத்தை இயக்குகிறதோ, எது காலதர்மத்தால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறதோ, எதனைக் கொண்டு நல்லோர் அனைவரும் தங்கள் ஒழுக்கத்தை {நடத்தையை} அமைத்துக் கொள்கின்றனரோ அந்த அறவொழுக்கத்தைக் குறித்து நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்[2].(2) வேதங்களில், செயல்களைச் செய் என்றும், செயல்களைதப் புறக்கணி என்றும் இரு வகைத் தீர்மானங்கள் இருக்கின்றன. இஃது அல்லது அது குறித்த உண்மை உறுதி செய்வதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? இதைத் தெளிவாக விளக்குவதே உமக்குத் தகும்[3].(3) உமது போதனைகளின் மூலம் மனித ஒழுக்கத்தின் முழுமையான நடைமுறை ஞானத்தை அடைந்து, அறம் மட்டுமே பயின்று என்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, என் புத்தியையும் தூய்மையாக்கிக் கொண்டு என் உடலைக் கைவிட்டு, அழிவற்ற ஆன்மாவை நான் காணப் போகிறேன்” என்றார் {சுகர்}[4].(4)வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மனால் முதலில் நிறுவப்பட்ட ஒழுக்க நடைமுறையே {விருத்தியே}, பழங்காலத்தின் பக்திமான்களும், விவேகிகளுமான புராதானப் பெரும் முனிவர்களால் முறையாகப் பின்பற்றப்பட்டன.(5) பெரும் முனிவர்கள் பிரம்மச்சரியம் பயில்வதன் மூலம் அனைத்து உலகங்களையும் வெல்கிறார்கள். தன் நன்மைக்கான அனைத்து பொருட்களையும் நாடி, மனத்தைப் புத்தியில் நிலைக்கச் செய்து, காட்டில் வசித்துக் கடும் தவங்களைப் பயின்று, கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து, புனிதத் தலங்களுக்குச் சென்று, உலகளாவிய நன்மையைப் பயின்று,(7) புகையில்லாத, உலக்கையொலி ஓய்ந்த காலத்தில் காட்டில் உள்ள குடில்களில் பிச்சையெடுக்கச் செல்லும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[5].(8) முகத்துதியைத் தவிர்த்து, பிறருக்குத் தலைவணங்குவதையும் தவிர்த்து, நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் தவிர்த்து, வழியில் நேரும் எந்த வழிமுறையினாலும் பசியைத் தணித்துக் கொண்டு நீ காட்டில் வாழ்வாயாக” என்றார் {வியாசர்}.(9)சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “(செயல்களின் அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) வேத தீர்மானங்கள், இழிந்தோரின் கருத்துப்படி முரணானவையே. இஃது அதிகாரம் பெற்றதா அல்லது அஃது அதிகாரம் பெற்றதா? என்ற முரண் இருக்கும் போது எவ்வாறு அவற்றைச் சாத்திரம் என்று சொல்வது?(10) இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவை என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், செயற்பண்புகளின் கடப்பாடு குறித்த விதிகளை மீறாமல் {கர்மங்களுக்கு விரோதமில்லாமல்} எவ்வாறு விடுதலையை {முக்தி / மோக்ஷத்தை} அடைய முடியும்?” என்று கேட்டார்”.(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், காந்தவதியின் மகனுமான அம்முனிவர் {வியாசர்}, அளவில்லா சக்தி கொண்ட தன் மகனின் {சுகரின்} இந்த வார்த்தைகளை மெச்சி, பின்வருமாறு அவருக்குப் பதிலுரைத்தார்.(12)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மச்சாரி, இல்லறவாசி {கிருஹஸ்தன்}, காட்டில் வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, (அறம்சார்ந்து) பிச்சையெடுக்கும் வாழ்வை வாழ்பவன் {ஸன்னியாஸி} ஆகிய அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} முறையாக நோற்பதன் மூலம் ஒரே உயர்ந்த கதியையே அடைகின்றனர்.(13) அல்லது, ஒரே மனிதன், விருப்பு வெறுப்பில் இருந்து விடுபட்டு இந்த வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கையும் (ஒன்றன்றபின் ஒன்றாக) அதனதன் விதிப்படி பயின்றால், (அத்தகைய ஒழுக்கத்தின் மூலம்) நிச்சயம் அவன் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளத் தகுந்தவனாகிறான்.(14) நான்கு வாழ்வுமுறைகளும் ஏணியையோ, படிகளையோ கொண்டிருக்கின்றன. அந்த ஏற்றம் பிரம்மத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்றத்தில் ஏறுவதன் மூலம் ஒருவன் பிரம்ம லோகத்தை அடைவதில் வெல்கிறான்.(15)
கடமைகளில் உள்ள வேறுபாடுகளை அறிந்தவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான பிரம்மச்சாரியானவன், தன் வாழ்வின் நான்கில் ஒரு பங்கைத் தன் ஆசான் அல்லது ஆசானின் மகனுடன் வசிக்க வேண்டும்.(16) அவன் தன் ஆசானின் வீட்டில் வசிக்கும்போது, ஆசான் படுக்கைக்குச் சென்ற பிறகே அவன் செல்ல வேண்டும், ஆசான் எழுவதற்கு முன்பே அவன் எழ வேண்டும். சீடனால் செய்யத்தக்கவையும், பணியாளால் செய்யபட வேண்டியவையுமான செயல்கள் அனைத்தும் அவனால் {பிரம்மச்சாரியால்} செய்யப்பட வேண்டும்.(17) அவன், இவற்றை முடித்துவிட்டுத் தன் ஆசானின் அருகில் பணிவுடன் நிற்க வேண்டும். அனைத்துவகைப் பணிகளிலும் தேர்ச்சி பெறும் அவன், தன் ஆசானின் செயல்கள் அனைத்தையும் செய்து, ஒரு பணியாளாகவே நடந்து கொள்ள வேண்டும்.(18) (எதையும் விட்டுவிடாமல்) அனைத்துச் செயல்களையும் நிறைவு செய்து, தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, கற்றுக் கொள்ளும் ஆவல் மற்றும் விருப்பத்துடன் அவன் கல்வி பயில வேண்டும். எளிமையுடனும், தீய பேச்சைத் தவிர்த்தும் நடந்து கொள்ளும் அவன், தன் ஆசான் அழைக்கும்போது மட்டும் பாடங்களைப் போதிக்க வேண்டும்.(19) உடலும் மனமும் தூய்மையடைந்து, புத்திசாலித்தனம் மற்றும் விரும்பத்தக்க பிற ஒழுக்கங்களையும் அடையும் அவன், இப்போதும் எப்போதும் ஏற்புடையதையே {இனிமையானவற்றையே} பேச வேண்டும். தன் புலன்களை அடக்கும் அவன், ஏக்கமில்லாத கண்களுடன் தன் ஆசானைக் காண வேண்டும்[6].(20)அவன் தன் ஆசான் உண்பதற்கு முன் உண்பதோ, தன் ஆசான் பருகுவதற்கு முன் பருகுவதோ, தன் ஆசான் அமர்வதற்கு முன் அமர்வதோ, அதன் ஆசானை படுக்கைக்குச் செல்லும் முன் படுக்கச் செல்வதோ ஒருபோதும் கூடாது.(21) அவன் நிமிர்ந்த உள்ளங்கைகளைக் கொண்டு, தன் ஆசானின் வலக்காலை வலக்கையாலும், இடக்காலை இடக்கையாலும் மென்மையாகத் தீண்ட வேண்டும்.(22) மதிப்புடன் தன் ஆசானை வணங்கும் அவன், அவரிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, எனக்குக் கற்பிப்பீராக. ஓ! சிறப்புமிக்கவரே, நான் இதை (இந்தப் பணியைச்) செய்வேன். இஃது (இந்த வேலை) ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. ஓ! மறுபிறப்பாளரே, மரியாதைக்குரிய நீர் விரும்பி இடும் எந்த ஆணையையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும்.(23) இவை அனைத்தையும் சொல்லி, (இவ்வாறு) முறையாகத் தன்னை அவரிடம் ஒப்படைக்கும் அவன், தன் ஆசான் செய்ய வேண்டிய எந்தச் செயலையும் செய்து, அவற்றைச் செய்த பிறகு, தன் ஆசானிடம் மீண்டும் ஒருமுறை அந்தச் செயல் முடிவடைந்ததைக் குறித்துச் சொல்ல வேண்டும்.(24) பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும்போது அந்தப் பிரம்மச்சாரியால் தவிர்க்கப்பட்ட மணங்கள் அல்லது சுவைகள் அனைத்தும், அவன் தன் ஆசானின் இல்லத்தில் இருந்து திரும்பிய பிறகு பயன்படுத்தப்படலாம். இது விதிக்கு இசைவானதே.(25)
(சாத்திரங்களில்) பிரம்மச்சாரிகளுக்கென விரிவாக விதிக்கப்பட்ட வழக்கங்கள் அனைத்தும் அவனால் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். மேலும் அவன் (அழைப்பிற்குத் தயாராகத்) தன் ஆசானின் அருகிலேயே எப்போதும் இருக்க வேண்டும்.(26) தன் சக்தியில் சிறந்த வகையில் தன் ஆசானின் நிறைவுக்கான பங்கை அளிக்கும் சீடனானவன், அந்த வாழ்வுமுறையில் இருந்து (ஒன்றன்பின் ஒன்றாக) அடுத்தடுத்த வாழ்வுமுறைகளை அதனதனுக்குரிய கடமைகளுடன் பயில வேண்டும்.(27) (இவ்வாறு) தான் வாழ்வின் நான்கில் ஒரு பகுதியை வேத கல்வியில் கடத்தி, நோன்புகள் மற்றும் உபவாசங்களை நோற்று, ஆசானுக்கு (இறுதி) கட்டணத்தைக் கொடுக்கும் சீடன், இல்லற வாழ்வு {கிருஹஸ்தனாக} வாழ விதிப்படி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்ப வேண்டும்[7].(28) பிறகு, விதிப்படி மனைவிகளைப் பெற்று, கவனமாக இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ளும் அவன், எப்போதும் நோன்புகளையும் உபவாசங்களையும் கடைப்பிடித்து இல்லறவாசியாகி {கிருஹஸ்தனாகி} தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தைக் கடத்த வேண்டும்” என்றார் {வியாசர்}.(29)
கிருஹஸ்தம்! – சாந்திபர்வம் பகுதி – 243-கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள நான் வகை விருத்திகள்; இல்லறத்தானின் கடமைகள்; விருந்தினர்கள் மேன்மை; விகஸம் மற்றும் அமுதம் போன்ற உணவுகள்; அவன் ஆதரிக்க வேண்டிய உற்றார் உறவினரால் அவனுக்குக் கிடைக்கும் வெற்றி; ஓர் இல்லறத்தான் அடையும் உயர்ந்த கதி ஆகியவற்றைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தகுதி {புண்ணியங்களைத்} தரும் நோன்புகளை நோற்கும் இல்லறத்தான், தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தில், விதி குறிப்பிடும் வழிகளின்படி மனைவிகளை ஏற்று, (தனக்கான) நெருப்பை நிறுவி {அக்னியை ஆதானஞ்செய்து}, தன் இல்லத்தில் வசிக்க வேண்டும்.(1) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பொறுத்தவரையில், கல்விமான்களால் நான்கு வகை ஒழுக்கங்கள் {விருத்திகள்} விதிக்கப்பட்டுள்ளன. முதல் வகையானது, மூன்று வருடங்கள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களைக் கிடங்கில் வைத்துக் கொள்வதைக் கொண்டதாகும். இரண்டாவது, ஒரு வருடம் நீடிக்கும் கிடங்கை வைத்துக் கொள்வதைக் கொண்டதாகும்.(2) மூன்றாவது, நாளையைக் குறித்துச் சிந்திக்காமல் இன்றைக்கானதைக் கொள்வதைக் கொண்டதாகும். நான்காவது, புறாவின் முறைப்படி தானியங்களைச் சேகரிப்பதைக் கொண்டதாகும்[1]. இவை ஒவ்வொன்றிலும் தனக்கும் முந்தையதைவிடப் பிந்தையதே சாத்திர விதிப்படி தகுதி வாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}[2].(3) முதல் வகை ஒழுக்கத்தைப் பயிலும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, (தானே வேள்வி செய்வது, பிறருக்கு வேள்வி செய்து கொடுப்பது, கற்பிப்பது, கற்பது, கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) நன்கறியப்பட்ட ஆறு கடமைகளையும் செய்ய வேண்டும். இரண்டாம் வகை ஒழுக்கதை {விருத்தியைப்} பின்பற்றுபவன், இவற்றில் (கற்பது, கொடுப்பது, ஏற்பது ஆகிய) மூன்றை மட்டுமே செய்யலாம். மூன்றாம் வகை ஒழுக்கத்தை {விருத்தியைக்} கடைப்பிடிப்பவன் இல்லறக் கடமைகளில் (கற்பது, கொடுப்பது ஆகிய) இரண்டை மட்டுமே செய்யலாம். இல்லறத்தின் நான்காம் வகையைக் கடைப்பிடிக்கும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, (சாத்திரங்களைக் கற்பது என்ற) ஒரே ஒரு கடமையை மட்டுமே செய்ய வேண்டும்.(4) ஓர் இல்லறத்தானின் கடமைகள் அனைத்தும் மிகத் தகுதி வாய்ந்தவையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஓர் இல்லறத்தான் தன் பயன்பாட்டுக்காக மட்டுமே எந்த உணவையும் சமைக்கக்கூடாது; அதேபோல, வேள்விகளில் தவிர (உணவுக்காக) விலங்குகளைக் கொல்லவும் கூடாது[3].(5)ஓர் இல்லறத்தான் (உணவுக்காக) ஒரு விலங்கைக் கொல்ல விரும்பினாலோ, (விறகுக்காக) ஒரு மரத்தை வெட்ட விரும்பினாலோ, அசையும் மற்றும் அசையாத இருப்புகளுக்கு முறையாக யஜுஸ்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி அவன் செயல்பட வேண்டும். ஓர் இல்லறத்தான் பகல் பொழுதிலோ, இரவின் முதல் பகுதியிலோ, இறுதிப் பகுதியிலோ உறங்கக்கூடாது[4].(6) காலை வேளைக்கும், மாலை வேளைக்கும் இடையில் அவன் ஒருபோதும் இருமுறை உண்ணக்கூடாது[5]. பருவகாலமின்றி அவன் தன் மனைவியை ஒருபோதும் படுக்கைக்கு அழைக்கக்கூடாது. அவனது வீட்டில் எந்தப் பிராமணனும் உணவு கொடுக்கப்படாமலோ, வழிபடப்படாமலோ துன்புறக்கூடாது.(7) அத்தகைய விருந்தினர்கள், வேள்விக் காணிக்கைகளை அளிப்பவர்களாகவும், வேதங்கள் மற்றும் சிறந்த நோன்புகளை நோற்பதன் மூலம் தூய்மையடைந்தவர்களாகவும், நற்பிறப்பு கொண்டவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தவர்களாகவும்,(8) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்பவர்களாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், அறச்சடங்குகள் அனைத்திலும் கவனம் கொண்டவர்களாகவும், தவங்களில் பற்றுள்ளவர்களாகவும் இருப்பதால் அவர்களை அவன் {இல்லறத்தான்} எப்போதும் வழிபட வேண்டும். வேள்விகளிலும், விருந்தினர்களுக்குத் தொண்டாற்றுவதற்காக உள்ள இது போன்ற அறச்சடங்குகளிலும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கை அளிக்க வேண்டும்.(9) இந்த வாழ்வுமுறையில் {கிருஹஸ்தாஸ்ரமத்தில்}, (சமைக்கப்படும்) உணவின் ஒரு பகுதியை, (ஒருவனின் பிறப்பு அல்லது குணத்தை அலட்சியம் செய்துவிட்டு), வெளிப்பகட்டுக்காக நகங்களும், தாடியும் வளர்ப்பவன், செருக்குடன் தன் (அறப்) பயிற்சிகளை வெளிக்காட்டுபவன், முறையில்லாமல் தன் புனித நெருப்பைக் கைவிட்டவன், தன் குருவுக்கே தீங்கிழைத்தவன் என அனைத்து உயிரினங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று சாத்திரங்கள் விதிக்கின்றன. இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுபவன், பிரம்மச்சாரிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் (உணவு) கொடுக்க வேண்டும்.(10,11)ஓர் இல்லறத்தான் ஒவ்வொரு நாளும் விகஸம் உண்பவனாகவும், ஒவ்வொரு நாளும் அமுதத்தை உண்பவனாகவும் இருக்க வேண்டும். வேள்விகளில் காணிக்கையளிக்கப்படுவதில் எஞ்சுவதில் தெளிந்த நெய்யைக் கலந்த உணவு அமுதமாகும்[6].(12) (அனைத்து உறவினர்கள் மற்றும்) பணியாட்களுக்கு உணவளித்த பிறகு உண்ணும் இல்லறத்தான் விகஸம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான். பணியாட்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சும் உணவே விகஸம் என்றழைக்கப்படுகிறது. வேள்விக் காணிக்கைகளை அளித்த பிறகு எஞ்சுபவை அமுதம் என்றழைக்கப்படுகிறது.(13) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே மனநிறைவுடன் இருக்க வேண்டும். அவன் தற்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவன் வன்மத்தைத் தவிர்த்து, புலன்களை அடக்கிக் கொள்ள வேண்டும்.(14)
அவன், ரித்விக், புரோகிதர், ஆசான், தாய்மாமன், விருந்தினர்கள், முதியோர் மற்றும் வயதில் இளையோராகத் தன்னைச் சார்ந்திருப்பவர்கள், நோயால் பீடிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், பெற்றோர், தந்தைவழி குடும்பத்தில் வந்த பெண்கள், உடன்பிறந்தான், மகன், மனைவி, மகள் மற்றும் தன் பணியாட்களுடன் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடக்கூடாது.(15,16) சச்சரவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஓர் இல்லறத்தான் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய சச்சரவுகளை வெல்வதன் மூலம் அவன், (இம்மைக்குப் பின்பான மறுமையில்) இன்ப உலகங்கள் அனைத்தையும் வெல்வான். இதில் எந்த ஐயமும் கிடையாது[7].(17) ஆசானானவர் (முறையாக மதிக்கப்பட்டால்) பிரம்மலோகத்திற்கே வழிகாட்டக் கூடியவராவார். தந்தையானவர் (மதிக்கப்பட்டால்) பிரஜாபதியின் உலகங்களுக்கு வழிகாட்டக் கூடியவராவார். ஒரு விருந்தினர், இந்திலோகத்திற்கு வழிகாட்டக்கூடிய பலம் கொண்டவராவார். தேவலோத்தைப் பொறுத்தவரையில் ஒரு ரித்விக்குக்கு அந்தச் சக்தியுண்டு. தந்தைவழி வந்த பெண் உறவினர்களுக்கு, அப்சரஸ்களின் உலக முகரிமை {தலைமை} உண்டு. (குருதியின் மூலமான) உற்ற சொந்தங்களுக்கு விஸ்வதேவர்களின் உலக முகரிமை உண்டு.(18) திருமணத்தின் மூலம் உண்டான உறவினர்கள் மற்றும் இணை உறவினர்களுக்கு {தூரத்து சொந்தங்களுக்கு} (வடக்கு உள்ளிட்ட) பல்வேறு திசைகளிலும், தாய் மற்றும் தாய்மாமனுக்கு உலகிலும் முகரிமை {தலைமை} உண்டு. முதிர்ந்தோர், இளையோர், துன்புறுவோர், வீணானோர் ஆகியோருக்கு வானத்தில் சக்தியுண்டு[8].(19)
மூத்த தமையன் (தனக்கு இளைய தம்பிகள் அனைவருக்கும்) தந்தையைப் போன்றவனே ஆவான். மனைவியும், மகனும் ஒருவனின் சொந்த உடலே ஆவர். பணியாட்கள் தன் நிழலே ஆவர். மகளானவள் பெரும் அன்புக்குரியவளாவாள்.(20) கல்விமானும், கடமைகளை நோற்பவனும், நீடித்திருக்கும் திறன் கொண்டவனுமான ஓர் இல்லறத்தான், இறுதியாகப் பெயர் குறிப்பிடப்பட்ட உறவினர்களைப் பொறுத்தவரையில், அவர்களே தன்னை நிந்தித்தாலும் இந்தக் காரணங்களினால் இதயத்தில் கவலையையோ வருத்தமோ அடையாமல் அவர்களை அவன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(21) அறம்சார்ந்த எந்த இல்லறத்தானும், செல்வத்தைக் கருத்தில் கொண்டு அத்தூண்டுதலின் பேரில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. இல்லற வாழ்வைப் பொறுத்தவரையில் கடமை வழிமுறைகள் மூன்று இருக்கின்றன. அவற்றில் (பட்டியல் வரிசையில்) அடுத்தடுத்து வருவது, அதனதற்கு முந்தையதைவிடப் பெரிதும் தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}[9].(22) (அடிப்படையான) நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைப்} பொறுத்தவரையிலும் கூட, பிந்தி வருவது முந்தையதைவிட மேன்மையானது என்ற இதே தகுவிதி பின்பற்றப்படுகிறது. (அதன்படியே, பிரம்மச்சரியத்தை விட இல்லறம் மேன்மையானது, இல்லறத்தைவிட வானப்பிரஸ்தம் மேன்மையானது, வானப்பிரஸ்தத்தைவிடப் பிச்சையெடுத்து வாழ்வது, அல்லது முற்றிலும் துறவு கொண்டு வாழ்வது மேன்மையானது).(23) செழிப்பில் விருப்பமுள்ளவன், அந்தந்த வாழ்வுமுறைகளைப் பொறுத்தவரையில் சாத்திரங்கள் விதித்திருக்கும் கடமைகள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.(24)கும்பதானிய வகை, உஞ்ச வகை மற்றும் காபோடி வகைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு இல்லறவாழ்வை வாழும் உயர்ந்த தகுதியுடையவர்கள் வாழும் நாடு செழிப்பில் வளரும்[10].(25) எந்த மனிதன் அக்கடமைகளை நோற்று இல்லற வாழ்வை உற்சாகமாக வாழ்கிறானோ அவன் தனக்கு முந்தைய பத்துத் தலைமுறை மூதாதையர்களையும், தனக்குப் பிந்தைய பத்துத் தலைமுறை வழித்தோன்றல்களையும் புனிதப்படுத்துகிறான்.(26) ஓர் இல்லறத்தான் தன் இல்லறக் கடமைகளை முறையாக நோற்பதன் மூலம், பெரும் மன்னர்களும், பேரரசர்களும் அடையும் உலகங்களுக்கு இணையான இன்பத்தை விளைவிக்கும் கதியை அடைகிறான். புலன்களை அடக்கியவர்களுக்கும் இதே கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) உயர் ஆன்மா கொண்ட இல்லறத்தார் அனைவருக்கும் சொர்க்கமானது விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சொர்க்கமானது, (செலுத்துபவனின் விருப்பப்படி நகரும்) இனிமை நிறைந்த தேர்களைக் கொண்டதாக இருக்கிறது. அதுவே வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிமைநிறைந்த சொர்க்கமாகும்.(28) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட இல்லறத்தார் அனைவருக்கும் சொர்க்கலோகமே உயர்ந்த வெகுமதியாக இருக்கிறது.(29) சுயம்புவான பிரம்மன் இல்லற வாழ்வுமுறையே சொர்க்கத்தை உண்டாக்கும் காரணமாக இருக்க வேண்டும் என்று விதித்திருக்கிறான். இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதால், படிப்படியாக இரண்டாம் வாழ்வுமுறையை அடையும் மனிதன் சொர்க்கத்தில் இன்பத்தையும், மதிப்பையும் அடைகிறான்.(30) இதன்பிறகு, தங்கள் உடல்களைக் கைவிட விரும்புவோருக்காக, உயர்ந்ததும், மேன்மையானதுமான மூன்றாவது என்றழைக்கப்படும் வாழ்வுமுறை {வானப்பிரஸ்தாஸ்ரமம்} வருகிறது. (பல்வேறு வகைத் தவங்களின் மூலம்) தங்கள் உடல்களைக் காய்ந்த தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளாகக் குறைத்துக் கொள்ளும் வானப்பிரஸ்த வாழ்வுமுறையானது, இல்லறத்தைவிட {கிருஹஸ்தாஸ்ரமத்தைவிட} மேன்மையானதாகும். அதைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக” என்றார் {வியாசர்}”.(31)
வானப்ரஸ்தம்! – சாந்திபர்வம் பகுதி – 244-காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றி வெற்றி கண்ட முனிவர்களின் பட்டியல்; நான்காவது வாழ்வுமுறையான துறவறத்தைப் பின்பற்ற வேண்டிய வேளை ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நல்லோரால் விதிக்கப்பட்ட இல்லறவிதிகள் உனக்குச் சொல்லப்பட்டது. ஓ! யுதிஷ்டிரா, அடுத்ததாகச் சொல்லப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(1) ஒருவன் படிப்படியாக இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைக்} கைவிட்டு, சிறந்ததான மூன்றாம் வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். தவங்களின் மூலம் தங்களைத் துன்புறுத்திக் கொண்டு, மனைவியரோடு சேர்ந்து வாழும் மனிதர்களுக்குச் சொந்தமானதே இந்த வாழ்வுமுறை {ஆசிரமம்} ஆகும். காட்டில் ஒதுங்கி வாழ்வோரால் {வானப்ரஸ்தர்களால்} பயிலப்படுவதே இந்த வாழ்வுமுறையாகும்.(2) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களின் நடைமுறைகளையும் {ஒழுக்கங்களையும்}, அனைத்து வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்} சந்திக்க நேரும் இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களால் நோற்கப்படும் கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக. உண்மையில், புனிதத்தலங்களில் வசிப்போருக்கும், உரிய ஆலோசனைக்குப் பிறகு இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களுக்குமான கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக.(3)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓர் இல்லறத்தான் தன் உடலில் சுருக்கங்களையும், தன் தலையில் நரைத்த முடியையும், தன் பிள்ளைகளின் பிள்ளைகளையும் {பேரர்களையும்} கண்ட பிறகு காட்டில் ஓயச் செல்ல வேண்டும்.(4) அவன், தன் வாழ்வின் மூன்றாம் பாகத்தை வானப்ரஸ்த வாழ்வுமுறையை நோற்பதில் கடத்த வேண்டும். அவன் இல்லறத்தானாக இருந்தபோது, கவனித்த {பராமரித்த ஹோம} நெருப்புகளை இப்போதும் கவனிக்க வேண்டும். வேள்வி செய்ய விரும்பும் அவன், (சடங்குகளின் விதிப்படி) தேவர்களைத் துதிக்க வேண்டும்.(5) நோன்புகளை நோற்று, எளிய உணவை உண்ணும் அவன், நாளின் ஆறாம் பாகத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே உண்ண வேண்டும்[1]. அவன் எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்கவேண்டும். தன் நெருப்புகளைக் கவனித்துக் கொள்ளும் {பராமரிக்கும்} அவன், சில பசுக்களையும் வைத்துக் கொண்டு, கடமை உணர்வுடன் அவற்றைப் பராமரிக்க வேண்டும்[2]. வேள்விச் சடங்குகள் அனைத்திலும் அவன் கவனமாக இருக்க வேண்டும்.(6) தான் இருக்கும் பகுதியில் (எவரின் உடைமையாகவும் இல்லாமல்) {உழவின்றி} தானாக விளையும் அரிசி, கோதுமை மற்றும் பிற வகைத் தானியங்களிலேயே அவன் வாழ வேண்டும். விருந்தினர்களுக்கு உணவூட்டிய பிறகு, எஞ்சுவதையே அவன் உண்ண வேண்டும். இந்த மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்}, அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக அளிக்க வேண்டும்[3].(7)வானப்ரஸ்த வாழ்வுமுறைக்கென்று நான்கு வகை ஒழுக்க நெறிகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலர் அந்த நாளுக்குத் தேவையானதை மட்டுமே திரட்டுகின்றனர். சிலர் ஒரு மாதம் நீடிக்கும் அளவுக்குத் திரட்டிச் சேமிக்கின்றனர்.(8) {சிலர் ஓராண்டு நீடிக்கும் அளவுக்குப் போதுமானவற்றைச் சேமிக்கின்றனர்}[4]. சிலர் பனிரெண்டு ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களையும், தேவையான பிற பொருட்களையும் சேகரிக்கின்றனர். காட்டில் ஒதுங்கி வாழ்பவர்கள் {வானப்ரஸ்தர்கள்}, விருந்தினர்களை வழிபடவும், வேள்விகளைச் செய்யவும் இவ்வழிமுறைகளில் செயல்படலாம்.(9) அவர்கள், மழைக்காலங்களில் தங்களை மழைக்கு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், கூதிர் காலத்தில் {பனிக்காலத்தில்} நீரில் மூழ்க வேண்டும். வேனிற்காலத்தில் அவர்கள் தலைக்கு மேலே சூரியன் சுட்டெரிக்க நான்கு நெருப்புகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்க வேண்டும். எனினும், வருடம் முழுவதும் அவர்கள் உணவில் எளிமையானவர்களாகவே இருக்க வேண்டும்.(10) அவர்கள் வெறுந்தரையிலேயே அமரவும், உறங்கவும் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கால் கட்டைவிரல்களில் {கால் நுனிகளில்} மட்டுமே நிற்கிறார்கள். (வேறு எந்த இருக்கையோ, படுக்கையோ கொள்ளாமல்) வெறுந்தரை மற்றும் சிறிய புல் விரிப்பிலேயே நிறைவடைபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் காலை, நடுப்பகல் மற்றும் மாலை வேளைகளில் (வேள்விக்குத் தயாராவதற்கான) தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்கிறார்கள்.(11)அவர்கள் தானியங்களைத் தூய்மையாக்க தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வேறு சிலர் அக்காரியத்திற்குக் கற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்[5]. அவர்களில் சிலர், மிதமாகக் கொதிக்க வைக்கப்பட்ட கோதுமை (அல்லது பிற தானியக்) கஞ்சியை வளர்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள்.(12) வேறு சிலர் அதே போன்ற கஞ்சியைத் தேய்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள். சிலர் (எதையும் அடைய நாடாமல்) தானாக வருவதை மட்டுமே உண்கிறார்கள். கடும் நோன்புகளைப் பின்பற்றும் சிலர் கிழங்குகளை மட்டுமே, சிலர் கனிகளை மட்டுமே, சிலர் மலர்களை மட்டுமே உண்டு, வைகானசர்களால் பின்பற்றப்படும் வழிமுறையை முறையாக நோற்கிறார்கள்.(13) விவேகமும், பக்தியும் கொண்ட மனிதர்களால் இவையும் இன்னும் பல்வேறு நோன்புகளும் பின்பற்றப்படுகின்றன. (துறவறம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையான) நான்காவது உபநிஷத்துகளின் அடிப்படையிலானதாகும்.(14) அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் சமமாக அனைத்து வாழ்வுமுறைகளிலும் நோற்கப்படலாம். பிறவற்றில் இருந்து வேறுபட்ட இந்த முறை, இல்லறம் மற்றும் காட்டுவாழ்வு ஆகியவற்றுக்குப் பிறகு வருகிறது.(15)ஓ! மகனே {சுகரே}, இந்த யுகத்திலேயே கூட, அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களும், கல்விமான்களுமான பல பிராமணர்கள் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றியதாக அறியப்படுகிறார்கள். அகஸ்தியர், {சப்தரிஷிகளான அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், வசிஷ்டர், நாரதர் மற்றும் கிரது ஆகிய} ஏழு முனிவர்கள், மதுச்சந்தர், அகமர்ஷணர்,(16) ஸாங்கிருதி, விரும்பிய எங்கும் வசித்தவரும், (எதையும் நாடிப் பெறாமல்) தானாக வந்ததை எடுத்துக் கொண்டவருமான {யதாவாஸரும், அக்ருதஸ்ரமருமான} சுதிவாதண்டி[6], அஹோவீர்யர், காவ்யர், தாண்டியர், கல்விமானான மேதாதி,(17) வலிமையும் சக்தியும் கொண்டவரான {புதரும், பலவானுமான} கர்மநிர்வாஹர், தவ வலிமையைப் பெறுவதற்காகப்) பெரிதும் முயற்சி செய்தவரான {கிருதஸ்ரமரான} சூன்யபாலர் ஆகியோர் அனைவரும் இந்தக் கடமை நடைமுறைகளின் ஆசான்களாகவும், அவற்றைப் பின்பற்றிச் சொர்க்கத்தை அடைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(18) ஓ! மகனே, தங்கள் தவத்தகுதியின் கனிகளை உடனே காணும் பலம் கொண்ட பெரும் முனிவர்கள் பலர்[7], யாயாவரர்கள் என்ற பெயரில் அறியப்படும் எண்ணற்ற தவசிகள், கடமைகளின் வேறுபாடுகளைக் குறித்த துல்லிய அறிவைக் கொண்டவர்களும் மிகக்கடுமையான தவங்களைச் செய்தவர்களுமான முனிவர்கள் பலர்,(19) குறிப்பிட எண்ணற்றவர்களாக இருக்கும் வேறு பிராமணர்கள் பலர் ஆகியோர் காட்டு வாழ்வுமுறையை {வானப்ரஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றினர். கடுந்தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அறத்தில் நிலையுறுதியுடன் கூடியவர்களும், புலன்களை அடக்கியவர்களும், தங்கள் தவங்களின் கனிகளை உடனே காண வல்லவர்களுமான வைகானஸர்கள், வாலகில்யர்கள், சைகதர்கள் ஆகியோர் அனைவரும் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றி இறுதியாகச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(21)அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாக, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கிடையில் கணக்கிடப்படாமல் உள்ள அவர்கள், ஆகாயத்தில் ஒளியுடல்களாகத் தெரிகின்றனர். வாழ்வின் நான்காவது அல்லது இறுதிப் பகுதியை அடைந்ததும், முதுமையால் பலவீனமடைந்து, நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் (துறவறம் என்றழைக்கப்படும் நான்காம் முறைக்காக) காட்டு வாழ்வு முறையைக் கைவிட வேண்டும். அவன், ஒரே நாளில் நிறைவடையக்கூடியதும், தனது உடைமைகள் அனைத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டிய நிகழ்வுமான ஒரு வேள்வியைச் செய்து,(22,23) தன் ஸ்ராத்தத்தையும் செய்ய வேண்டும். அனைத்துப் பொருள்களில் இருந்து விலகும் அவன், தன்னிடம் மட்டுமே அர்ப்பணிப்புக் கொண்டு, தன்னில் மட்டுமே இன்பமடைந்து, தன்னிடமே ஓய்வு கொள்ள வேண்டும்[8]. அவன் (அதுமுதல்) தன் வேள்வி நெருப்புகள் அனைத்தையும் தன்னிலேயே நிறுவி, அனைத்து வகைப் பற்று மற்றும் பந்தங்களைக் கைவிட வேண்டும்.(24) (ஒருவேளை முற்றான துறவை அடையத் தவறினால்) அவன் ஒரே நாளில் நிறைவடையக்கூடிய அத்தகைய வேள்விகளையும், சடங்குகளையும் எப்போதும் செய்ய வேண்டும்[9]. எனினும், வேள்வி செய்பவர்களின் (பொதுவான) வேள்விகளைச் செய்யும்போது அதிலிருந்து சுய வேள்வி பிறந்தால்,(25) அப்போது (அவன் பொதுவான அனைத்து வேள்விகள் செய்வதையும் தொடராமல்) தன் விடுதலையின் {முக்தியின்} நிமித்தமாக, தன் சுயத்தையே மூன்று நெருப்புகளில் வேள்வி {தியாகம்} செய்யலாம்[10]. அவன், தன் உணவில் குறை காணாமல், (ஒவ்வொரு முறையும் நன்கறியப்பட்ட) யஜுர்வேத மந்திரங்களைச் சொல்லி, அஃதை {அந்த உணவை} ஐந்து அல்லது ஆறு வாய்நிறைய {கவளம்} உண்டு, அவற்றை முறையாக ஐந்து உயிர் காற்றுகளுக்குக் காணிக்கையாக்க வேண்டும்[11].(26)காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வைப் பின்பற்றும்போது, தவம் நோற்பதில் ஈடுபடும் ஒருவன், தன் தலைமுடி, உடலில் உள்ள மயிர் ஆகியவற்றைச் சிரைத்து, தன் நகங்களை உரித்து, செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் புனிதம் நிறைந்த நான்காம் மற்றும் இறுதியான வாழ்வுமுறைக்குள் {ஸந்நியாச ஆசிரமத்திற்குள் / துறவறத்திற்குள்} கடந்து செல்ல வேண்டும்.(27) நான்காம் வாழ்வுமுறைக்குள் நுழையும் மறுபிறப்பாளன், அனைத்து உயிரினங்களுக்கும் (அபயமளிக்கும் {தீங்கிழையாமை / அஹிம்சை என்ற}) உறுதிமொழியைக் கொடுத்து, மறுமையில் சுடர்மிக்க ஒளியுலகங்கள் பலவற்றை ஈட்டுவதில் வென்று, இறுதியாக முடிவிலியை அடைகிறான்.(28) பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, சிறந்த மனநிலையையும், ஒழுக்கத்தையும் கொண்டவனும், தன்னை அறிந்தவனுமான மனிதன், இம்மைக்கோ மறுமைக்கோ தேவையான எந்தச் செயலையும் செய்ய ஒருபோதும் விரும்பமாட்டான். கோபமில்லாதவனாக, பிழை தவிர்த்தவனாக, கவலை மற்றும் நட்பில்லாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், இவ்வுலகக் காரியங்களில் முற்றாக எந்த விருப்பமும் இல்லாத ஒருவனைப் போல வாழ்கிறான்.(29) (சந்நியாசத்தை நோற்கும்) ஒருவன், யமம், மற்றும் அவற்றுக்குப் பின்னே நடக்கும் (நியமத்திலடங்கிய) கடமைகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டக்கூடாது. அத்தகைய ஒருவன், தன் வாழ்வுமுறைக்கான விதியின் படி வாழ்ந்து, வேத கல்வியையும், தன் பிறப்பின் வகையைக் குறிக்கும் புனித நூலையும் சக்தியுடன் வீசியெறிய வேண்டும். அறத்திற்கு அர்ப்பணிப்புடனும், முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள புலன்களுடனும் கூடியவனும், தன்னறிவைக் கொண்டவனுமான அவன், தான் அடைய விரும்பும் கதியை ஐயமற அடைகிறான்[12].(30) இது மூன்றாம் வாழ்வுமுறைக்கு {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்குப்} பிறகு வரும் நான்காவது வாழ்வுமுறையாகும் {சந்நியாசாஸ்ரமமாகும்}. இது மிக மேன்மையானதும், எண்ணற்ற உயர்ந்த அறங்கள் நிறைந்ததுமாகும். மற்ற மூன்று வகை வாழ்வுமுறைகளில் உள்ள தகுதியில் இஃது அவற்றை விஞ்சியிருக்கிறது. இதுவே மிக உயர்ந்த இடத்தைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. அறிவொழுக்கத்தில் சிறந்ததும், அனைவருக்கும் உயர்ந்த புகலிடமாக இருப்பதுமான அந்த வாழ்வுமுறைக்குரிய கடமைகளைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக” என்றார் {வியாசர்}.(31)
ஸந்நியாஸம்! – சாந்திபர்வம் பகுதி – 245-சன்னியாச வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; மறுபிறப்பாளர்களும், பிராமணர்களும் யார் என்பது குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “காட்டு வாழ்வுமுறையின் கடமைகளை நோற்று வாழும்போது, உயர்ந்த ஞானப்பொருளை அடைய முனையும் ஒருவன், எவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்கு, யோகத்தில் தன் ஆன்மாவை நிறுவிக் கொள்ள முடியும்?” என்று கேட்டார்.(1)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மச்சரியம் மற்றும் இல்லறம் என்ற முதல் இரண்டு வாழ்வுமுறைகளைச் செய்வதன் மூலம் (உடலும் ஒழுக்கமும்) தூய்மையடைந்த ஒருவன், அதன் பிறகு வரும் மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்} யோகத்தில் தனது ஆத்மாவை நிறுவிக் கொள்ள வேண்டும். உயர்ந்த இலக்கை உடைமையாக அடைவதற்குச் செய்ய வேண்டியதைக் குவிந்த கவனத்துடன் இப்போது கேட்பாயாக.(2) மனம் அல்லது இதயத்தின் களங்கங்கள் அனைத்தையும் முதலில் சொல்லப்பட்ட (பிரம்மச்சரியம், இல்லறம் {கிருஹஸ்தம்}, காட்டறம் {வானப்ரஸ்தம்} என்ற) மூன்று வாழ்வு முறைகளின் நடைமுறையெனும் எளிய வழிமுறைகளில் அடக்கி, அனைத்து வாழ்வுமுறைகளிலும் மிகச் சிறந்ததும், மிக மேம்பட்டதுமான சந்நியாசம் அல்லது துறவறத்திற்குச் செல்ல வேண்டும்.(3) அவ்வாறாகத் தூய்மையை அடைந்து, நீ உன் நாட்களைக் கடத்துவாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக. ஒருவன், தனக்கு உதவி செய்யவோ, தனக்குத் துணை புரியவோ ஒருவரும் இல்லாமல், (அவனது உயர்ந்த இலக்கை அடைவதைப் பொறுத்த வரையில்) வெற்றியை அடைவதற்காகத் தனியொருவனாக யோகம் பயில வேண்டும்.(4) தோழமை இல்லாமல் யோகம் பயில்பவனும், தனது பிரதிபலிப்பாகவே அனைத்தையும் காண்பவனும், (அண்ட ஆத்மாவால் அனைத்துப் பொருட்களும் படரந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருப்பதன்} விளைவால்) ஒருபோதும் எதையும் அலட்சியம் செய்யாதவனுமான ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் இருந்து ஒருபோதும் வீழ்வதில்லை. வேள்வி நெருப்பைப் பராமரிக்காமல், நிலையான வசிப்பிடம் ஏதுமில்லாமல் உள்ள அத்தகைய மனிதன் {ஒரு சந்நியாசி}, தன் உணவுக்காகப் பிச்சையெடுக்க மட்டுமே ஒரு கிராமத்திற்குள் நுழைய வேண்டும்.(5)
அவன் நாளைக்காகச் சேர்த்து வைக்காமல் அன்றைய நாளுக்குத் தேவையானதை மட்டுமே பெற வேண்டும். அவன் உயர்ந்ததில் {பரத்தில்} இதயத்தை நிலைநிறுத்தியபடி, தவங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். உரிய ஒழுங்குமுறையின்படி சிறிதளவே உண்ணும் அவன், ஒருநாளைக்கு ஒரு முறைக்கு மேல் உண்ணக்கூடாது.(6) மண்டையோடு, மரத்தடியில் உறைவிடம், அணிந்து கொள்ளக் கந்தை, எத்தோழமையுமின்றித் தனித்திருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் பாகுபாடில்லாமை ஆகியன (அறம் பயிலும் ஒரு) துறவியின் பிற குறியீடுகளாகும்.(7) அச்சமடைந்த யானைகள் கிணற்றுக்குள் விழுவதைப் போல வார்த்தைகள் எவனிடம் நுழையுமோ, எவனிடம் இருந்து அவை மீண்டும் பேசுபவனிடம் திரும்பி வராதோ, அவனே விடுதலையை {முக்தியை} இலக்காகக் கொண்ட இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றத் தகுந்தவனாவான்[1].(8) ஆண்டியானவன் (அல்லது துறவியானவன்) எந்த மனிதனின் தீச்செயல்களையும் ஒருபோதும் கவனிக்கக்கூடாது. பிறரை இகழ்ந்து சொல்லப்படும் எதையும் அவன் ஒருபோதும் கேட்கக்கூடாது. குறிப்பாக அவன் ஒரு பிராமணனைக் குறித்துத் தீமையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் எப்போதும் பிராமணர்களுக்கு ஏற்படையவற்றை மட்டுமே பேச வேண்டும். (தன்னைக் குறித்து) இகழ்வாக ஏதும் சொல்லப்படும்போது, அவன் (பதிலளிக்காமல்) முற்றான அமைதியை நீட்டிக்க வேண்டும். உண்மையில் அத்தகைய அமைதியே அவனுக்குப் பரிந்துரைக்கப்படும் மருத்துவச் சிகிச்சையாகும்.(10)எவன் கிழக்கு வானைப் போலத் தன் ஒருவனாலேயே தான் இருக்கும் இடத்தை நிறைக்கிறானோ, தனக்கு முற்றிலும் தனிமையான அல்லது வெறுமையாகத் தோன்றும் இடத்தை எவனால் ஆயிரக்கணக்கான மனிதர்களும், பொருட்களும் நிறைந்ததாக்க முடியுமோ, அவனே உண்மையான பிராமணன் என்று தேவர்களால் கருதப்படுகிறான்[2].(11) எவன் தானாகக் கிடைக்கும் எதையும் உடுத்திக் கொள்கிறானோ, எவன் தானாகக் கிடைக்கும் எதையும் உண்டு வாழ்கிறானோ, எவன் தான் காணும் எந்த இடத்திலும் உறங்குகிறானோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று அறிகிறார்கள்.(12) பாம்பைப் போன்றதே தோழமை என்றும்; (இனிய பண்டம் மற்றும் பானங்களில் இருந்து கிடைக்கும்) முழு அளவு நிறைவானது நரகம் என்றும்; சவத்தைப் போன்றவளே பெண் என்றும் எவன் அச்சம் கொள்கிறானோ, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(13) எவன் கௌரவிக்கப்படுகையில் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, எவன் அவமதிக்கப்படுகையில் ஒருபோதும் கோபம் கொள்வதில்லையோ, எவன் அனைத்து உயிரினங்களுக்கும் கருணையை உறுதியளித்திருக்கிறானோ {அபயம் அளித்திருக்கிறானோ}, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(14) இறுதி வாழ்வுமுறையை {ஸந்நியாச வாழ்வுமுறையை} நோற்கும் ஒருவன், மரணத்தை மகிழ்ச்சியாகக் காணக்கூடாது. அதே வேளையில் அவன் வாழ்வையும் மகிழ்ச்சியாகக் காணக்கூடாது. அவன் (தலைவனின்) ஆணைக்காகக் காத்திருக்கும் பணியாளைப் போலத் தன் வேளைக்காக மட்டுமே காத்திருக்க வேண்டும்.(15)அவன் தன் இதயக் களங்கங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் தன் வாக்கின் களங்கங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ள வேண்டும். எதிரிகள் அற்றவனான அவனுக்கு எது அச்சத்தை ஏற்படுத்த முடியும்?(16) எவனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சமில்லையோ, எவனிடம் எந்த உயிரினமும் அச்சங்கொள்வதில்லையோ அவன் அனைத்து வகைக் குற்றங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதால் எந்த இடத்தில் இருந்தும் அவனுக்கு அச்சம் ஏற்பட முடியாது.(17) காலால் நகரும் பிற உயிரினங்கள் அனைத்தின் காலடித் தடங்களும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதை போலவே அனைத்துப் பதவிகளும் நிலைகளும் யோகத்திற்குள் ஈர்க்கப்படும்[3].(18) அதே போலவே, பிற கடமைகள் மற்றும் நோன்புகள் எதுவும் (அனைத்து உயிரினங்களுக்கும்) தீங்கிழையாமை என்ற ஒற்றைக் கடமைக்குள் அடங்கிவிடும். பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்ப்பவன் எப்போதும் நீடித்திருக்கும் இன்ப வாழ்வை வாழ்வான்.(19) தீங்கிழையாமல் இருப்பவனும், அனைத்து உயிரினங்களிடமும் சம பார்வை கொண்டவனும், வாய்மையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், மனோவுறுதியுடன் கூடியவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பை வழங்குபவனுமான ஒருவன், ஒப்பீட்டைக் கடந்த கதியை அடைகிறான்.(20)மரணம் என்றழைக்கப்படும் நிலையானது, தன்னறிவில் நிறைவுடன் உள்ளவனும், அச்சத்திலிருந்து விடுபட்டவனும், விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புகள் அற்றவனுமான ஒரு மனிதனைக் கடப்பதில் வெல்வதில்லை. மறுபுறம் அத்தகைய மனிதனே மரணத்தைக் கடந்து செல்வதில் வெல்கிறான்.(21) எவன் அனைத்து வகைப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனோ, எவன் தவங்களைச் செய்பவனோ, எவன் அனைத்துப் பொருட்களையும் பற்றியிருந்தாலும், பற்றில்லாமல் இருக்கும் வெளியைப் போல வாழ்கிறானோ, எவனுக்குத் தான் என்று அழைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லையோ, எவன் தனிமையான வாழ்வை வாழ்வானோ, எவனுடைய ஆன்மா அமைதியானதோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(22) எவனுடைய வாழ்வு அறப்பயிற்சிக்கானதாக இருக்கிறதோ, எவனுடைய அறம், தன்னிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களின் நன்மைக்கானதாக இருக்கிறதோ, எவனுடைய பகல்களும், இரவுகளும் தகுதியை {புண்ணியத்தை} அடைவதற்காக மட்டுமே இருக்கின்றனவோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று அறிகிறார்கள்[4].(23) எவன் ஆசையிலிருந்து விடுபட்டவனோ, எவன் (உலக மனிதர்களால் செய்யப்படும் செயல்களைச் செய்ய) ஒருபோதும் முயற்சி செய்வதில்லையோ, எவன் எவனுக்கும் தலைவணங்குவதில்லையோ, எவன் மற்றொருவனைத் துதிபாடுவதில்லையோ, எவன் அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(24) அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியில் நிறைவடைந்து, துன்ப எதிர்பார்ப்பில் அச்சத்தால் நிறைகின்றன. எனவே, பிற உயிரினங்களைத் துன்பத்தில் நிறைக்கும் வாய்ப்பில் துயரடையுபவனான நம்பிக்கையுள்ள மனிதன், அனைத்து வகைச் செயல்களிலும் இருந்தும் முற்றாக விலக வேண்டும்.(25)எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிக்கொடையானது, அனைத்துக் கொடைகளையும் கடந்து நிற்பதாகும். எவன் தொடக்கத்திலேயே தீங்கிழைக்கும் அறத்தைக் கைவிடுகிறானோ, அவன் அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதியை அளிக்கும்போது விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(26) எந்த மனிதன் திறந்திருக்கும் தன் வாயில், காட்டில் ஒதுங்கி வாழ்வோருக்கு {வானப்ரஸ்தர்களுக்காக} விதிக்கப்பட்டிருக்கும் ஐந்து அல்லது ஆறு வாய்நிறையக்கூட உண்ணவில்லையோ அவன் உலகத்தின் நாபி என்றும், இந்த அண்டத்தின் புகலிடம் என்றும் சொல்லப்படுகிறான். {அவனது} தலை, பிற அங்கங்கள், நல்ல மற்றும் தீய செயல்கள் ஆகியன நெருப்பைக் கொண்டதாகின்றன.(27) தன்னைத்தானே தியாகம் செய்யும் அத்தகைய மனிதன், தன் புலன்களையும், மனத்தையும் தன் இதய வெளிக்குள் வசிக்கும் நெருப்பில் ஆகுதி செய்கிறான். தனக்குள் உள்ள அத்தகைய நெருப்புக்குள் அத்தகைய ஆகுதியை ஊற்றுவதன் விளைவால், தேவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுடன் கூடிய இந்த அண்டமே நிறைவடைகிறது[5].(28) ஒளியுடன் கூடியதும், மூன்று உறைகளில் மறைக்கப்பட்டதும், பரமாத்மாவின் முதன்மையான இயல்பைப் பகிர்ந்து கொள்ளும் ஈஸ்வரனின் தன்மைகளான முக்குணங்களுடன் கூடியதுமான ஜீவாத்மாவைப் புரிந்து கொண்டவர்கள், அனைத்து உலகங்களிலும் பெருமதிப்பிற்குரியவர்களாகிறார்கள். மனிதர்கள் அனைவருடன் கூடிய தேவர்களும் அவர்களது தகுதிகளை உயர்வாகப் பேசுகின்றனர்.(29) எவன் தன் உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவில், வேதங்கள் அனைத்தையும், வெளியையும் {ஆகாயத்தையும்}, உணரத்தக்க பிற பொருட்களையும், சாத்திரங்களில் தோன்றும் சடங்குகளையும், ஒலியால் உணரப்படும் யாவற்றையும், பரமாத்மாவின் மேன்மையான இயல்பையும் காண்பதில் வெல்கிறானோ, அவன் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகத் தேவர்களாலும் வழிபடப்படுகிறான்.(30)எவன் தன் உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவில், (அளவில்லா) ஆகாயத்தாலும் அளக்க முடியாததும், தங்கமயமானதும், முட்டையில் இருந்து பிறந்ததும், முட்டைக்குள்ளேயே வசிப்பதும், பல சிறகுகளைக் கொண்டதும், இரு சிறகுகளைக் கொண்ட ஒரு பறவையைப் போன்றதும், பல ஒளிக்கதிர்களால் ஒளிமயமானதும், பூமியில் பற்றில்லாததுமான முதன்மையான பொருளை {பரமாத்மாவைக்} காண்கிறானோ, அவன் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகத் தேவர்களாலும் வழிபடப்படுகிறான்[6].(31) தொடர்ந்து சுழல்வதும், சிதைவற்றதும், அனைத்து உயிரினங்களின் இருப்புக் காலத்தை விழுங்குவதும், ஆறு பருவ காலங்களை அச்சாகக் கொண்டதும், பனிரெண்டு மாதங்களாலான பனிரெண்டு ஆரங்களைக் கொண்டதும், சிறந்த இணைப்புகளைக் கொண்டதும், எதன் திறந்த வாய்க்குள் (விழுங்கப்படத் தயாராக) இந்த அண்டம் செல்கிறதோ அந்தக் காலச்சக்கரத்தில் நிறுவப்பட்டிருக்கும் புத்தியைக் கொண்டவனைத் தேவர்களும் வழிபடுகிறார்கள்.(32) கனவற்ற உறக்க நிலையே அகன்ற உணர்வற்ற பரமாத்ம நிலையாக இருக்கிறது. அந்த உணர்வற்ற நிலையே இந்த அண்டத்தின் உடலாக இருக்கிறது. அது படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உணர்வற்ற அந்தப் பரந்த நிலையில் ஒரு பகுதியை அடையும் ஜீவன் தேவர்களை நிறைவடையச் செய்கிறது. இறுதியாக நிறைவடையும் அவர்கள், அந்த உணர்வற்ற நிலையின் திறந்த வாயை நிறைவு செய்கிறார்கள்.(33) ஒளியுடனும், நித்தியக் கொள்கையுடனும் கூடிய ஜீவன் தொடக்கமில்லாததாகும். அது (குறிப்பிட்ட பாதைகளைப் பின்பற்றுவதன் மூலம்) நித்திய மகிழ்ச்சியுடைய முடிவிலா உலகங்களை அடைகிறது. எவனைக் கண்டு எந்த உயிரினமும் அஞ்சாதோ, அவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(34) நித்திக்கத்தக்க எதையும் ஒருபோதும் செய்யாதவனும், மற்றொருவனை ஒருபோதும் நிந்திக்காதவனுமான ஒருவனே உண்மையில் மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் பரமாத்மாவைக் காண்பதில் வெல்கிறான். அறியாமை விலகியவனும், பாவங்கள் கழுவப்பட்டவனுமான ஒருவன், பிறரால் அனுபவிக்கப்படும் இன்பத்தை இம்மையிலும், மறுமையிலும் அனுபவிப்பதில்லை (ஆனால் அவன் முற்றான விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(35) நான்காம் வாழ்வுமுறையை {சந்நியாஸாஸ்ரமத்தை} நோற்கும் ஒருவன், அனைத்திலும் தொடர்பற்றவனாகப் பூமியில் உலவிக் கொண்டிருக்கிறான். அத்தகைய ஒருவன், கோபம் மற்றும் குற்றத்தில் இருந்து விடுதலை பெற்றவனாக இருக்கிறான். அத்தகைய ஒருவன் மண்ணாங்கட்டியையும், தங்கக் குவியலையும் சம கண்ணுடனே பார்ப்பான். அத்தகைய மனிதன் தன் பயன்பாட்டுக்காக ஒருபோதும் எதையும் சேகரிக்க மாட்டான். அத்தகைய ஒருவன் நண்பர்களையோ, பகைவர்களையோ கொள்ள மாடடான். அத்தகைய ஒருவன் புகழ் அல்லது பழி மற்றும் ஏற்புடையது மற்றும் ஏற்பில்லாதது ஆகியவற்றில் முற்றிலும் கவனமற்றவனாக இருப்பான்” என்றார் {வியாசர்}.(36)
ஆத்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 246-ஆத்மாவை அறிந்த கொள்ள இந்திரியங்கள், தன்மாத்திரைகள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஜீவாத்மாவானது, பிரகிருதியின் மாற்றங்கள் யாவற்றுடன் கூடியதாக இருக்கிறது. இவை {பிரகிருதியின் மாற்றங்கள்} ஆன்மாவை அறிவதில்லை, ஆனால் இவையனைத்தையும் ஆன்மா அறிந்திருக்கிறது.(1) பலமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், பேருறுதி கொண்டவையுமான குதிரைகளைத் தான் தேர்ந்தெடுக்கும் பாதையில் செலுத்தும் ஒரு நல்ல சாரதியின் செயல்பாட்டைப் போலவே, ஆன்மாவும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்கள் என்றழைக்கப்படுவனவற்றின் துணையுடன் செயல்படுகிறது.(2) புலன் நுகர் பொருட்களானவை {தன்மாத்திரைகளானவை}, புலன்களைவிட {இந்திரியங்களைவிட} மேன்மையானவையாக இருக்கின்றன[1]. அந்தப் பொருட்களைவிட {தன்மாத்திரைகளைவிட} மனம் மேன்மையானதாக இருக்கிறது. மனத்தைவிடப் புத்தி மேன்மையானதாக இருக்கிறது. மஹத் என்றும் அழைக்கப்படும் ஆன்மாவானது, புத்தியைவிட மேன்மையானதாக இருக்கிறது.(3) மஹத்தைவிட மேன்மையானதாகப் புலப்படாதது (அல்லது பிரகிருதி) இருக்கிறது. அந்தப் புலப்படாததுக்கும் மேன்மையானதாகப் பிரம்மம் இருக்கிறது. பிரம்மத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை. அதுவே சிறப்பின் உயர்ந்த எல்லையும், உயர்ந்த கதியுமாக இருக்கிறது.(4) பரமாத்மாவானது ஒவ்வொரு உயிரினத்திலும் மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அதைக் காண்பதில்லை. நுட்பமான பார்வை கொண்ட யோகியர் மட்டுமே தங்கள் கூரிய நுண்ணியப் புத்தியின் துணையுடன் பரமாத்மாவைக் காண்கிறார்கள்.(5)தங்களில் ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களையும், புலன்நுகர் பொருட்களையும், புத்தியின் துணையுடன் உள் ஆன்மாவில் கலந்து, சிந்தனையின் நோக்கம், சிந்தனை, சிந்திப்பவன் என்ற மூன்று நனவுநிலைகளைக் குறித்துச் சிந்தித்து,(6) தியானத்தின் மூலம் அனைத்து வகை இன்பங்களிலிருந்தும் விலகி, தானே பிரம்மம் என்ற அறிவை மனத்தில் தரித்து, அதே வேளையில் பலத்தின் நனவுநிலைகள் {அகங்காரங்கள்} அனைத்தையும் புறந்தள்ளி, அதன் மூலம் தன் ஆன்மாவை முற்றான அமைதியடையச் செய்யும் யோகி, அழிவின்மையை அடைகிறான்.(7) எனினும் தன் புலன்கள் அனைத்திற்கும் அடிமையாக இருப்பவனும், சரி மற்றும் தவறு என்ற கருத்துகளில் குழப்பமுள்ளவனும், ஏற்கனவே மரணமடையக்கூடிய நிலையிலுள்ளவனுமான மனிதன், உண்மையில் (ஆசைகளுக்கு) சுயத்தை அடிபணியச் செய்வதன் மூலமே மரணத்தைச் சந்திக்கிறான்.(8) ஒருவன் தன் ஆசைகள் அனைத்தையும் அழித்து, திரள் புத்தியை {சித்தத்தை} நுணுக்கமான புத்திக்குள் {சத்வத்திற்குள்} கலக்க வேண்டும். இவ்வாறு திரள் புத்தியை {சித்தத்தை} நுண்ணியப் புத்தியில் கலப்பதன் மூலம், ஒருவன் இரண்டாவது காலஞ்சர மலையாகிறான்[2].(9) யோகியானவன், தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கடந்தவனாகிறான். தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலமும், தன் உண்மையான இயல்பில் வாழ்வதன் மூலமும் அவன் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான்[2].(10)நான் சொன்ன அந்த இதயத் தூய்மை என்பது, ஒருவன் கனவற்ற தூக்கத்தில் (சுற்றமனைத்தையும் மறந்த) நனவற்ற நிலையில் உணர்வற்ற நிலையை அனுபவிப்பதாகும். அந்நிலையை அடைந்த யோகி, முற்றமைதியான சூழல் உள்ள இடத்தில் நிலையாக எரியும் விளக்கின் தழலைப் போல வாழ்கிறான்.(11) உணவில் எளிமையடைந்து, தன் இதயத்தைத் தூய்மை செய்து கொண்ட யோகி, தன் ஆன்மாவை ஆன்மாவுக்குள் செலுத்துவதால், ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் காண்பதில் வெல்கிறான்[4].(12) ஓ! மகனே, உனக்குப் போதிப்பதற்கான இந்த உரையாடல் வேதங்கள் அனைத்தின் சாரமாகும். இங்கே வெளிப்படுத்தப்படும் உண்மைகள், உள்ளுணர்வின் துணையால் மட்டுமோ, வெறும் சாத்திரக் கல்வியாலோ புரிந்து கொள்ள இயலாதனவாக இருக்கின்றன. ஒருவன் நம்பிக்கையின் துணை கொண்டே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்[5].(13) அறப்பணிகள் மற்றும் உண்மையின் அடிப்படையிலான உரையாடல்கள் அனைத்திலும் உள்ள செல்வத்தைக் கடைவதன் மூலமும், பத்தாயிரம் ரிக்குகளைக் கடைவதன் மூலமும் இந்த அமுதம் எழுகிறது {உதிக்கிறது}.(14) உண்மையான அனைத்து விவேகிகளின் அறிவையும் கொண்ட இஃது, தயிரிலிருந்து வெண்ணெயைப் போலவும், மரத்திலிருந்து நெருப்பைப் போலவும் என் மகனுக்காகவே எழுந்திருக்கிறது {உதித்திருக்கிறது}.(15)ஓ! மகனே, திடமான போதனைகள் நிறைந்த இந்த உரையாடலானது, ஸ்நாதகர்களுக்குச் சொல்லப்படும் நோக்கம் கொண்டவையாகும்[6]. அமைதியான ஆன்மா இல்லாதவன், அல்லது தற்கட்டுப்பாடு இல்லாதவன், அல்லது தவங்களைச் செய்யாதவன் ஆகியோருக்கு இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது.(16) வேதங்களை அறியாதவன், அல்லது பணிவுடன் தன் ஆசானுக்குப் பணி செய்யாதவன், அல்லது வன்மத்திலிருந்து விடுபடாதவன், அல்லது உண்மையும், கபடமற்றநிலையும் கொள்ளாதவன், அல்லது ஒழுக்கம் குறித்த கவலையில்லாதவன் ஆகியோருக்கு இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது.(17) விவாத அறிவியலின் மூலம் விழங்கப்படும் அறிவைக் கொண்ட ஒருவனுக்கோ, இழிந்த அல்லது தாழ்ந்த ஒருவனுக்கோ இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது. எனினும், புகழ்கொண்டவன், (தன்னொழுக்கத்திற்காக) மெச்சத்தகுந்தவன், அல்லது அமைதியான ஆன்மாவைக் கொண்டவன், அல்லது தவத்தகுதியைக் கொண்ட(18) ஒரு பிராமணன், அல்லது தனது மகன், அல்லது கடமையுணர்வுமிக்கச் சீடன் ஆகியோருக்கு கடமைகளின் சாரத்தையே கொண்ட இந்த உரையாடலைச் சொல்லலாமேயன்றி, எக்காரணம் கொண்டும் வேறு யாருக்கும் இதைச் சொல்லக் கூடாது.(19) எந்த மனிதனும் செல்வங்கள் அனைத்துடன் கூடிய மொத்த பூமியையும், உண்மையை அறிந்த ஒருவனுக்குக் கொடையாக அளித்தாலும், {உண்மையை அறிந்தவனான} அவன் அந்த {செல்வக்} கொடையைவிட இந்த அறிவுக்கொடையையே மேன்மையானதாகக் கருதுவான்.(20)இதைவிடப் பெரிய புதிரானதும், ஆன்மா தொடர்புடையதும், மனிதர்களின் சாதாரணப் புத்தியைக் கடந்ததும், முதன்மையான முனிவர்களால் காணப்பட்டதும், உபநிஷத்துகளில் சொல்லப்பட்டதும், உன் கேள்வியின் பொருளாக அமைந்திருப்பதுமான காரியம் குறித்து நான் உன்னிடம் இப்போது உரையாடப் போகிறேன்.(21) இன்னும் உனக்கு எதனில் ஐயம் உள்ளது என்பதை எனக்குச் சொல்வாயாக? ஓ! மகனே, உனக்கு முன்பே அமர்ந்திருக்கிறேன், கேட்பாயாக. உண்மையில், எதைக் குறித்து நான் உன்னிடம் மீண்டும் ஒருமுறை பேச வேண்டும்?” என்று கேட்டார் {வியாசர்}.(22)
ஐம்பூத குணங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 247-அத்யாத்மா என்றால் என்ன? வெவ்வேறு பொருட்களில் ஐம்பூதங்களின் வெவ்வேறான பகிர்மானத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு? என்பன குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; வியாசரின் பதில்; மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புகள்…
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அத்யாத்மா குறித்து இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. உண்மையில் அத்யாத்மா என்பது என்ன? எங்கிருந்து அது வருகிறது?” என்று கேட்டார்[1].(1)வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! மகனே, மனிதர்களின் அத்யாத்மா என்று கருதப்படுவதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன், (அத்யாத்மா குறித்து) நான் தரப்போகும் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) நிலம், நீர், ஒளி, காற்று, வெளி ஆகியன அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அடங்கிய பெரும்பூதங்களாகும். ஒன்றாகவே இருப்பினும் அவை பெருங்கடலின் அலைகளைப் போல வெவ்வேறானவையாகக் கருதப்படுகின்றன (உள்ளடக்கப் பொருளால் ஒன்றாகவே இருப்பினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகவே கணக்கிடப்படுகின்றன).(3) ஓர் ஆமையானது தனது அங்கங்களை நீட்டி, மீண்டும் அவற்றைச் சுருக்கிக் கொள்வதைப் போலவே, (ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட) பெரும்பூதங்களும், எண்ணிலா சிறு வடிவங்களில் வசிப்பதன் மூலம், (படைப்பு என்றும் அழிவு என்றும் அழைக்கப்படும்) மாற்றங்களுக்கு உட்படுகின்றன.(4) அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டம் முழுமையும் இந்த ஐம்பூதங்களே இருக்கின்றன. படைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அனைத்திலும், இந்த ஐந்துவகைப் பூதங்களே குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன.(5) இந்த ஐம்பூதங்களும் இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் இருக்கின்றன. எனினும், அனைத்துப் பொருட்களையும் படைத்தவன், (வெவ்வேறு பொருட்களில் வெவ்வேறு அளவுகளில் அமைத்ததன் மூலம்) வெவ்வேறு முடிவுகளை எட்டுவதற்காக அந்தப் பூதங்களைச் சமமற்ற வகையில் பகிர்ந்திருக்கிறான்” என்றார் {வியாசர்}.(6)
சுகர், “அண்டத்தின் பல்வேறு பொருட்களில் (நீர் சொல்லும் இந்த ஐம்பெரும் பூதங்களின்) சமமற்ற பகிர்வை ஒருவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அவற்றில் புலன்கள் எவை? குணங்கள் எவை? இஃதை எவ்வாறு புரிந்து கொள்வது?” எனக் கேட்டார்.(7)
வியாசர், “இவற்றை முறையாக ஒன்றன்பின் ஒன்றாக உனக்கு விளக்குகிறேன். உண்மையில் எவ்வாறு, என்ன நடக்கிறது என்பதை நான் விளக்கும்போது, அதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(8) ஒலி {சப்தம்}, கேள்விப் புலன் {செவி /ஸ்ரோதரம்}, உடலில் உள்ள துளைகள் அனைத்தும் என இம்முன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. உயிர் மூச்சுகள் {வாயுக்கள் / பிராணன்}, அங்கங்களின் செயல்பாடு {சேஷ்டை}, ஊறு {தீண்டல் /ஸ்பர்சம்} ஆகியன காற்றின் குணத்தைக் கொண்டுள்ளன.(9) வடிவம் {ரூபம்}, கண்கள் {நேத்ரம்}, குடலுக்குள் உள்ள செரிமான நெருப்பு {அக்னி} ஆகியன ஒளியால் {தேயுவால்} தோன்றுகின்றன. சுவை, நாக்கு மற்றும் உடல் நீர்மங்கள் அனைத்தும் அடங்கிய இம்மூன்றும் நீரில் இருந்து வந்தனவாகும்.(10) மணம், மூக்கு மற்றும் உடலென்ற இம்மூன்றும் பூமியின் குணங்களாக இருக்கின்றன. நான் உனக்குச் சொன்ன இவையே புலன்களுடன் தொடர்புடைய ஐம்(பெரும்)பூதங்களின் மாற்றங்கள் ஆகும்.(11)
தீண்டல் காற்றின் குணமாகவும்; சுவை நீரின் குணமாகவும், வடிவம் ஒளியின் குணமாகவும் சொல்லப்படுகின்றன. ஒலி தன் தோற்றுவாயை வெளியில் {ஆகாயத்தில்} கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது, மணமோ பூமியின் {நிலத்தின்} தன்மையாகச் சொல்லப்படுகிறது.(12) மனம், புத்தி, இயற்கை ஆகிய இம்மூன்றும் தங்கள் முந்தைய நிலைகளில் இருந்து எழுந்து, (ஒவ்வொரு மறுபிறவியிலும் தங்களுக்குரிய) குணங்களை விட உயர்ந்த நிலையை அடைந்து, அந்தக் குணங்களைக் கடந்து செல்லாமல் இருக்கின்றன[2].(13) ஆமையானது தனது அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போலவே புத்தியும், புலன்களைப் படைத்து மீண்டும் தனக்குள்ளேயே அவற்றை இழுத்துக் கொள்கிறது[3].(14) உள்ளங்காலுக்கு {பாதங்களுக்கு} மேலும், உச்சந்தலைக்குக் கீழும் உள்ள பகுதியில் இருந்து எழும் தனிப்பட்ட அடையாளத்தின் நனவுநிலையானது, அடிப்படையில் புத்தியின் செயல்பாட்டாலேயே உண்டாகிறது[4].(15)புத்தியே (வடிவம், மணம் முதலிய ஐந்து) பண்புகளாக மாற்றமடைகிறது. புத்தியே, ஆறாவதாக மனத்தைக் கொண்டிருக்கும் (ஐந்து) புலன்களாக மாற்றமடைகிறது. புத்தி இல்லாத போது இந்தப் பண்புகள் எங்கே போகின்றன?[5](16) மனிதனில் ஐம்புலன்கள் இருக்கின்றன. மனமானது ஆறாவதாக (ஆறாம் புலனாகச்) அழைக்கப்படுகிறது. புத்தியானது ஏழாவதாக அழைக்கப்படுகிறது. ஆன்மாவானது எட்டாவதாகும்.(17) கண்கள் (முதலிய புலன்கள்), வடிவ (மற்றும் மணம் முதலிய) உணர்வுகளைப் பெறுவதற்காக மட்டுமே உள்ளன. மனமானது, (அந்த உணர்வுகளின் துல்லியத்தில்) ஐயங்கொள்வதற்காக இருக்கிறது. புத்தியானது இந்த ஐயங்களைத் தீர்க்கிறது {அந்த ஐயங்களில் ஒரு தீர்மானத்தை எட்டுகிறது}. ஆன்மாவானது, அவற்றுடன் கலந்துவிடாமல் சாட்சியாக மட்டுமே இருந்து செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் காண்கிறது.(18) ரஜஸ், தமஸ், சத்வம் ஆகிய இம்மூன்றும் தங்கள் தங்களுக்கு ஏற்றபகுதிகளில் இருந்து உண்டாகின்றன. இவை (தேவர்கள் மற்றும் மனிதர்கள் முதலிய) அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே இருக்கின்றன. இவை குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும் இவை தூண்டும் செயல்களின் மூலம் இவற்றை அறியலாம்[6].(19)அந்தச் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், ஒருவன் தன்னை உற்சாகம் அல்லது மகிழ்ச்சி, அமைதி மற்றும் தூய்மையுடன் கலந்து {செயல்பட்டு} உணரும் நிலைகள் அனைத்தும் சத்வ குணம் என்று அறியப்படுகிறது.(20) கவலையுடன் கலந்த உடல் அல்லது மன நிலைகள் அனைத்தும், ரஜஸ் என்றழைக்கப்படும் குணத்தின் ஆதிக்கத்தால் விளைவதாகக் கருதப்பட வேண்டும்.(21) உறுதியற்ற தன்மையைக் காரணமாகக் கொண்டு (புலன்கள், மனம் அல்லது புத்தி கொள்ளும்) மயக்கத்தோடு கூடியவையும், (அறிவின் மூலமோ உள்ளொளியின் மூலமோ) புரிந்து கொள்ள முடியாதவையுமான நிலைகள் அனைத்தும் தமஸ் செயல்பாட்டைச் சார்ந்தவையாக அறியப்பட வேண்டும்.(22) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, உற்சாகம் {ப்ரீதி), இன்பம் {ஆனந்தம்}, உள்ளச்சமநிலை {ஸம்பாவனை}, இதய நிறைவு {மனத்தின் தெளிவு} ஆகியன அனைத்தும் சத்வ குணத்தின் விளைவுகளாகும்.(23) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் செருக்கு {அபிமானம்}, வாக்கில் பொய்மை {பொய்யுரைத்தல்}, பேராசை {லோபம்}, மயக்கம் {மோகம்}, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியன ரஜஸ் குணத்தின் குறியீடுகளாகும்.(24) எந்தவொரு காரணத்திலுமிருந்து எழும், தீர்மான மயக்கம் {மோகம்}, கவனமின்மை {அஜாக்ரதை}, உறக்கம் {நித்ரை}, மயக்கநிலை {அறியாமை}, சோம்பல் ஆகியவற்றைத் தமஸ் குணத்தின் குறீயீடுகளாக அறியப்பட வேண்டும்” என்றார் {வியாசர்}.(25)
புத்தி! – சாந்திபர்வம் பகுதி – 248-மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புத் தொடர்ச்சி…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மனமானது, (பொருட்கள் அல்லது இருப்பிலுள்ளவற்றைக் குறித்த) எண்ணற்ற கருத்துகளை (தனக்குள்ளேயே) உண்டாக்கிக் கொள்கிறது. புத்தியானது எது, எதுவாக இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. எது ஏற்புடையது, எது ஏற்பில்லாதது என்பதை இதயம் {அகங்காரம்} பகுத்தறிகிறது. இந்த மூன்று சக்திகளே செயல்களைத் தூண்டுகின்றன[1].(1) புலன்களைவிடப் புலன்நுகர் பொருட்கள் {தன்மாத்திரைகள்} மேன்மையானவை. அந்தப் பொருட்களை {தன்மாத்திரைகளை} விட மனம் மேன்மையானது. மனத்தை விடப் புத்தி மேன்மையானது. புத்தியைவிட ஆன்மா மேன்மையானதாகக் கருதப்படுகிறது.(2) (மனிதனின் பொதுவான காரியங்களைப் பொறுத்தவரையில்) புத்தியே ஒருவனின் ஆன்மாவாகும். புத்தியானது தன்னியக்கமாக (பொருட்களைக் குறித்த) கருத்துகளைத் தனக்குள்ளேயே அமைத்துக் கொள்ளும்போது அது மனம் என்று அழைக்கப்படுகிறது[2].(3) (நோக்கம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டிலும்) புலன்கள் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருப்பதன் விளைவால், (ஒன்றாகவே இருக்கும்) புத்தியானது, பல்வேறு மாறுபாடுகளின் விளைவால் வெவ்வேறு தன்மைகளை வெளிப்படுத்துகிறது. கேட்கும்போது அது செவிப்புலனாகிறது, தீண்டும் போது அஃது ஊறுபுலனாகிறது {தீண்டல் புலனாகிறது}.(4) அதேபோலவே, காணும்போது அது பார்வைப்புலனாகிறது, சுவைக்கும்போது சுவைப்புலனாகிறது, நுகரும்போது அது மணப்புலனாகிறது. (பல்வேறு செயல்பாடுகளுக்காக) மாறுபடும்போது புத்தியே அவ்வாறு பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறது.(5) புத்தியின் இந்த மாறுபாடுகளே புலன்களாக அழைக்கப்படுகின்றன. புலப்படாத ஆன்மாவானது அவற்றுக்கு மேலான தலைமைப் பொறுப்பில் (அல்லது கண்காணிப்பாளராக) நிறுத்தப்பட்டிருக்கிறது. உடலில் வசிக்கும் புத்தியானது (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) மூன்று நிலைகளில் நீடிக்கிறது[3].(6)சில வேளைகளில் அது {புத்தி} உற்சாகமடைகிறது, சிலவேளைகளில் துன்பவயப்படுகிறது; சில வேளைகளில் அது மகிழ்ச்சியோ துன்பமோ இல்லாத நிலையை அடைகிறது.(7) எனினும், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) மூன்று காரியங்களை {குணங்களை} உண்டாக்கும் புத்தியானது, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், தனக்குள் விழும் ஆறுகளின் வலிமைமிக்க நீரோட்டங்களை எதிர்த்து நீடித்திருப்பதைப் போலவே அந்த மூன்று நிலைகளையும் {முக்குணங்களையும்} விஞ்சியிருக்கிறது[4].(8) புத்தியானது எதையும் விரும்பும்போது மனம் என்ற பெயரால் அஃது அழைக்கப்படுகிறது. மேலும் புலன்கள் அனைத்தும், (வெளிப்படையாக ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருந்தாலும்) புத்திக்குள் அடங்கியவையாகவே கொள்ளப்பட வேண்டும்.(9) வடிவம், மணம் முதலிய உணர்வுகளைப் பெறுவதில் ஈடுபடும் புலன்கள் அனைத்தும் அடக்கப்பட வேண்டும்.(10)ஒரு குறிப்பிட்ட புலனானது, புத்தியில் அடங்கியொடுங்கும்போது, உண்மையில் புத்தியானது (அந்தப் புலனிலிருந்து) வேறுபட்டதில்லை என்றாலும், இருப்பில் உள்ள பொருட்களின் வடிவில் அது மனத்துக்குள் நுழைகிறது. அவற்றை {இருப்பில் உள்ள பொருட்களைத்} தொடர்ந்து வருவதாகச் சொல்லப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே, (உடன் நிகழ்வாக இல்லாமல் தனித்தனியாக) அடுத்தடுத்த புலன்களுக்கும் இதுவே நேர்கிறது[5].(11) தேர்ச்சக்கரத்தின் சுற்றளவில் தாங்கள் கொண்டுள்ள பற்றின் விளைவால் செயல்படும் ஆரங்களைப் போல, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்களும், (மனம், புத்தி, நனவுநிலை [அகங்காரம்] என்ற} இந்த மூன்றையும் பற்றிக் கொண்டு, (மனம், புத்தி மற்றும் நனவுநிலையில் இருக்கும்) பல்வேறு பொருட்களைப் பின்தொடர்கின்றன[6].(12) சிறந்த யோக காரியத்தின் துணையுடன் யோகியரால் அடையப்படும் இந்த ஞானமானது, மனிதர்களின் எந்தச் சிறப்பான முயற்சியுமின்றி உலகம் சார்ந்த பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் அடையப்படுகிறது[7].(13) அண்டமானது (புத்தியின் படைப்பான) இவ்வியல்பின்படியே இருக்கிறது. எனவே, ஞானம் கொண்ட ஒரு மனிதன் (உலகப் பொருட்களின் மீது பற்று கொள்வதன் மூலம்) ஒருபோதும் திகைப்படைவதில்லை {மயக்கமடைவதில்லை}. அத்தகைய மனிதன் ஒருபோதும் துன்புறாதவனாகவும், ஒருபோதும் மகிழாதவனாகவும், (அதிக அளவு உலகப் பொருட்களைக் கொண்டிருக்கும் மற்றொருவரைக் கண்டு உண்டாகும்) பொறாமையில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(14) ஆசைக்குரிய (உலகம் சார்ந்த) பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் திரியும் இயல்பைக் கொண்ட புலன்களின் துணை மூலம் ஆன்மா காணப்பட முடியாததாக இருக்கிறது. தூய்மையான புலன்களைக் கொண்ட அறவோரும் கூட ஆன்மாவைக் காணத் தவறுகிறார்கள் என்றால், தூய்மையற்ற புலன்களைக் கொண்ட தீயோரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(15)எனினும், ஒருவன் தன் மனத்தின் துணையுடன், அவற்றின் {புலன்களின்} கடிவாளங்களை இறுகப் பற்றிக் கொள்ளும் போதுதான், அவனது ஆத்மாவானது, (பார்க்க முடியாத இருளில்) விளக்கொளியின் விளைவால் காட்சியில் தோன்றும் ஒரு பொருளைப் போலத் தன்னையே கண்டடைகிறது.(16) உண்மையில் அனைத்துப் பொருட்களும் அவற்றைச் சூழ்ந்திருக்கும் இருள் அகன்று தென்படுவதைப் போலவே, ஆத்மாவும் அதனைச் சூழ்ந்திருக்கும் இருள் அகலும்போது தென்படுகிறது[8].(17) நீரில் நகரும் நீர்க்கோழியானது அந்தப் பூதத்தால் நனைக்கப்படாததைப் போலவே விடுதலையடைந்த ஆன்மாவைக் கொண்ட யோகியானவன், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்களின் குறைபாடுகளால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(18) அதே வகையிலேயே, உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் எந்தப் பற்றும் கொள்ளாமல் அவற்றை அனுபவிக்கும் ஞானியும் (பிறரின் வழக்கில் இத்தகைய இன்பத்தால் எழும்) எந்த வகைக் குற்றங்களாலும் களங்கப்படாதிருப்பான்.(19) எவன் செயல்களை முறையாகச் செய்த பிறகு அவற்றைத் தவிர்த்து, உண்மையாக இருப்பிலுள்ள ஆன்மா ஒன்றில் மட்டுமே திளைப்படைகிறானோ, எவன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ[9], எவன் முக்குணங்களில் இருந்து தன்னைத் தனித்திருக்கச் செய்து கொள்வதில் வெல்கிறானோ,(20) அவன் ஆன்மாவால் உண்டாக்கப்படும் புத்தியையும், புலன்களையும் பெறுகிறான்.குணங்கள் ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. எனினும் ஆன்மாவானது, எப்போதும் அவற்றை {குணங்களைப்} புரிந்து கொள்கிறது. ஆன்மாவானது சாட்சியாக இருந்து குணங்களைக் கண்டு, முறையாக அவற்றை இருப்புக்கு அழைக்கிறது. மிக நுட்பமானவையான புத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரண்டிற்கும் இடையிலான இந்த வேறுபாட்டைக் காண்பாயாக.(22) அவற்றில் ஒன்றே {புத்தியே} குணங்களைப் படைக்கிறது. மற்றது {ஆன்மாவானது} அவற்றை ஒருபோதும் படைப்பதில்லை. இயல்பாகவே அவை ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருப்பினும் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றன.(23) நீரில் வாழும் மீனானது, அது வாழும் {நீரெனும்} அந்தப் பூதத்தில் இருந்து வேறானதாகும். ஆனால், மீனும் அதன் வீடான நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும் வகையிலேயே சத்வமும், க்ஷேத்ரஜ்ஞனும் {ஆன்மாவும்} கலந்த நிலையில் ஒன்றாகவே நீடிக்கின்றன. அழுகிய அத்திப்பழத்தில் பிறந்த கொசுவானது, அதனிலிருந்து வேறானதேயன்றி உண்மையில் அஃது அத்தியல்ல. கொசுவும், அத்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைப் போலவே சத்வமும், க்ஷேத்ரஜ்ஞனும் {ஆத்மாவும்} இணைந்திருக்கின்றன.(24) {முஞ்சப்} புற்கட்டில் உள்ள ஒரு புல்லானது, அந்தப் புற்கட்டில் தனித்திருந்தாலும், அதனுடன் கலந்த நிலையில் நீடித்திருப்பதைப் போலவே, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறானவையாக இருப்பினும், தங்கள் சுயத்திலேயே நீடித்து, நிலையாக ஒன்றுகலந்த நிலையிலேயே காணப்படுகின்றன” என்றார் {வியாசர்}.(25)
ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 249-ஞானம் மற்றும் ஞானியின் பெருமைகளைச் சுகருக்கு எடுத்துச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஒருவனைச் சூழ்ந்திருக்கும் பொருட்கள் புத்தியால் படைக்கப்படுகின்றன. ஆன்மாவானது, அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்திருந்து அவற்றைக் கண்காணிக்கிறது. புத்தியே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறது. (பொருட்களின் உற்பத்திக்காக) மூன்று அடிப்படை குணங்களும் மாற்றமடைகின்றன. பலம்பொருந்திய க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவானது, அவற்றுடன் கலக்காமலேயே அவையனைத்தையும் கண்காணிக்கிறது.(1) புத்தியால் படைக்கப்படும் பொருட்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகின்றன. உண்மையில், சிலந்தியானது (தன் உடல் பொருளைக் கொண்டே) இழைகளைப் படைப்பதைப் போலவே, புத்தியால் படைக்கப்படும் பொருட்களும், புத்தியின் இயல்பைக் கொள்கின்றன.(2) யோகம் அல்லது அறிவால் விரட்டப்படும் குணங்கள் இல்லாமல் போவதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அவை சென்ற பிறகு, அவை திரும்புவதற்கான குறியீடுகள் மட்டுமே காணப்படுவதில்லை (ஆனால் அவை உண்மையாக அழிந்ததற்கான எந்தச் சாட்சியமும் கிடையாது). ஞானத்தால் விரட்டப்படும்போது, அவை ஒருபோதும் திரும்பாமல் அழிந்தே போகின்றன என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.(3) ஒருவன் இவ்விரு கருத்துகளையும் முறையாகச் சிந்தித்து, எதைச் சரியென அவன் நினைக்கிறானோ அதன்வழியே சிறப்பாக முயற்சிக்க வேண்டும். அவன் அவ்வழியிலேயே மேம்பட்டு தன் சொந்த ஆன்மாவில் மட்டுமே புகலிடம் கொள்ள வேண்டும்[1].(4)ஆன்மாவானது தொடக்கமும் முடிவுமற்றதாகும். மனிதன் தன் ஆன்மாவை முறையாக அறிந்து கொண்டு, கோபவசப்படாமல், இன்பத்தில் மூழ்காமல், பொறாமையில் இருந்து விடுபட்டவனாகத் திரிந்து செயல்பட வேண்டும்.(5) புத்திப் புலங்களின் செயற்பாட்டில், இருப்பாக விளைவதும், (அறுப்பதற்குக்) கடினமானதும், அறிவால் அழியக்கூடியதுமான முடிச்சை இவ்வழிமுறையின் மூலம் அறுக்கும் ஒருவன், (எந்த நிகழ்விலும்) வருத்தங்கொள்ளாமல், ஐயங்கள் விலகியவனாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(6) இவ்வுலகக் காரியங்களில் கலப்பவர்கள், நிலத்திலிருந்து ஆழமான பெரிய ஆற்றில் விழும் நீச்சல் தெரியாதவர்களைப் போல, உடலாலும் மனத்தாலும் துன்புறுவார்கள்.(7) எனினும் உண்மையை அறிந்த கல்விமான், திடமான தரையில் நடக்கும் ஒருவனைப் போலத் தன்னை உணர்வதால் ஒருபோதும் துன்புறுதவதில்லை. உண்மையில் அவன், அறிவை மட்டுமே குறியீடாகக் கொண்ட சித்-ன் குணத்தை மட்டுமே வெளிப்படுத்தும் ஒன்றாக ஆத்மாவைப் புரிந்து கொள்வதால் ஒருபோதும் துன்புறுவதில்லை.(8)
உண்மையில், அனைத்து உயிரினங்களின் தோற்றத்தையும் மறைவையும், அவற்றின் ஏற்றத்தாழ்வுகளையும், வேறுபாடுகளையும் இவ்வாறு புரிந்து கொள்ளும் ஒருவன், உயர்ந்த இன்பநிலையை அடைவதில் வெல்கிறான்.(9) குறிப்பாக அறத்தையே தன் பிறப்பாகக் கொண்ட பிராமணனுக்கு இந்த அறிவே உடைமையாகும். ஆன்மாவையும், இவ்வாறு சொல்லப்படும் இன்பநிலை ஆகியவற்றின் ஞானங்கள் ஒவ்வொன்றும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கப் போதுமானவையாக இருக்கின்றன.(10) அத்தகைய ஞானத்தை அடைவதால் ஒருவன் கல்விமானாகிறான். ஒரு ஞானியின் குறியீடாக வேறு எது இருக்க முடியும்? அத்தகைய ஞானத்தை அடைந்த பிறகு அவர்களில் விவேகமிக்கவர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதி விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(11)
ஞானமற்ற மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ஞானிகளுக்கு ஒருபோதும் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு ஞானியால் அடையப்படும் அழிவற்ற கதியை விட உயர்ந்த கதி வேறேதும் இல்லை.(12) உண்மையில் ஒருவன், அனைத்துவகைக் குற்றங்களும் நிறைந்த பூமிசார்ந்த இன்பப் பொருட்கள் அனைத்தையும் வெறுப்புடன் காண்பான். பிறரைக் கண்டு அத்தகைய பொருட்களில் இன்பங்கொள்ளும் மற்றொருவன் துயரத்தால் நிறைகிறான். இக்காரியத்தைப் பொறுத்தவரையில், கற்பனையான மற்றும் அதற்கு மாறான இரு பொருட்களையும் அறிந்தவர்கள் ஒருபோதும் துயரில் ஈடுபடாமல் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்பாயாக.(13) கனிகளை எதிர்பாராமல் ஒரு மனிதன் செய்யும் எதுவும், அவனது முற்பிறவிச் செயல்களை அழிக்கும். எனினும், அத்தகைய மனிதன் இப்பிறவியிலும், முற்பிறவியிலும் செய்த செயல்களால் விடுதலைக்கு {முக்திக்கு} வழிகாட்ட முடியாது. மறுபுறம், ஒரு ஞானி செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், முற்பிறவி மற்றும் இப்பிறவியின் செயல்களுக்கு நேரும் இத்தகைய அழிவால் அவனை ஏற்பில்லாத ஒன்றுக்கு (நரகத்திற்கு} வழிநடத்திச் செல்ல முடியாது” என்றார் {வியாசர்}.(14)
ஆத்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 250- கடமைகள் அனைத்திலும் உயர்ந்த தவம்; ஆத்மஞானம்; ஆத்மஞானத்தை அடையும் வழி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “இவ்வுலகில் இருப்பனவற்றில் எந்தக் கடமை உயர்ந்ததோ, கடமைகள் அனைத்திலும் எது முதன்மையானதோ, அதை மதிப்பிற்குரிய நீர் எனக்குச் சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.(1)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “புராதானத் தோற்றுவாயைக் கொண்டவையும், முனிவர்களால் விதிக்கப்பட்டவையும், அனைத்திற்கும் மேலாகத் தனித்திருப்பவையுமான கடமைகளை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு தீய பழக்கங்களில் வீழக்கூடிய அனுபவமற்ற பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு தந்தையைப் போல, பித்துக் கொள்ளச் செய்யும் புலன்களைப் புத்தியின் மூலம் கவனமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.(3) தகுதியற்ற அனைத்துப் பொருட்களில் இருந்து மனத்தையும், புலன்களையும் விலக்கிக் கொள்வதும், (தகுந்த பெருட்களில்) முறையாகக் கவனத்தைக் குவிப்பதுமே உயர்ந்த தவமாகும். அதுவே கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில் அதுவே உயர்ந்த கடமையாகச் சொல்லப்படுகிறது.(4)
ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களைப் புத்தியின் துணை கொண்டு, எண்ணற வகைச் சிந்தனைகளைத் தூண்டுந்தன்மை கொண்ட உலகப் பொருட்களைக் குறித்துச் சிந்திக்காமல், ஒருவன் தன்னிலேயே நிறைவை அடைந்து வாழ வேண்டும்.(5) புலன்களும் மனமும், வழக்கமாகத் தறிகெட்டு ஓடும் மேய்ச்சல் இடங்களில் இருந்து விலக்கப்பட்டு, தங்களுக்கு உரிய வசிப்பிடத்தில் அவற்றை வசிக்கச் செய்யும் போதுதான் நித்தியமானதையும், பரமாத்மாவையும் நீ உனக்குள்ளேயே காண்பாய்[1].(6) ஞானம் கொண்ட உயர் ஆன்ம பிராமணர்கள், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்பாகவும், உயர்ந்ததாகவும் அண்ட ஆன்மாவாகவும் இருக்கும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(7) எண்ணற்ற கிளைகளையும், பல மலர்கள் மற்றும் கனிகளையும் கொண்ட ஒரு பெரிய மரமானது, தன்னுடைய எந்தப் பகுதியில் மலர்களையும், எந்தப் பகுதியில் கனிகளையும் கொண்டிருக்கிறது என்பதை அறியாததைப் போலவே,(8) ஆன்மாவும் {புத்தியும்}, பிறப்பு மற்றும் பிற குணங்களால் மாற்றமடைந்து, அஃது எங்கிருந்து வந்தது? எங்குச் செல்லப்போகிறது என்பதை அறியாமல் இருக்கிறது[2].(9) ஒருவன் ஞானம் எனும் விளக்கின் துணையால் தன் ஆன்மாவைக் காண்கிறான். எனவே, உன்னை உன்னிலேயே கண்டு, உனது உடலை நீ என்று கருதுவதை நிறுத்தி, அனைத்தையும் அறிந்த நிலையை அடைவாயாக.(10)சட்டையை உரித்த பாம்பைப் போலப் பாவங்கள் அனைத்தையும் கழுவிய ஒருவன், இங்கேயே உயர்ந்த புத்தியை அடைந்து, ஒவ்வொரு கவலையில் இருந்தும், (மறுபிறவியில்} புதிய உடலை அடையும் கடப்பாட்டில் இருந்தும் வடுபடுகிறான்.(11) பல்வேறு திசைகளில் பரந்து விரிந்து ஓடும் நீரோட்டங்களைக் கொண்டதும், தன் போக்கில் இவ்வுலகைச் சுமந்து செல்வதுமான வாழ்வெனும் ஆறு அச்சம்நிறைந்ததாக இருக்கிறது. ஐம்புலன்களே அதன் முதலைகளாக இருக்கின்றன. மனமும், அதன் காரணமும் கரைகளாக இருக்கின்றன.(12) பேராசையும், தீர்மான மயக்கமும் அதை மறைத்து மிதக்கும் புல்லாகவும், துரும்பாகவும் இருக்கின்றன. காமமும், கோபமும், அதனில் வாழும் சீற்றமிகு பாம்புகளாக இருக்கின்றன. வாய்மை அதன் சேறுநிறைந்த கரைகளில் தீர்த்தமாக அமைந்திருக்கிறது.(13) புலப்படாததிலிருந்து பிறக்கும் அதன் நீரோட்டம் வேகமானதாகவும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் கடக்க முடியாததாகவும் இருக்கிறது. நீ புத்தியின் துணை கொண்டு, ஆசைகளையே முதலைகளாகக் கொண்ட அந்த ஆற்றைக் கடப்பாயாக.(14) உலகமும், அதன் காரியங்களும் அந்த ஆறு எதை நோக்கி ஓடுமோ அந்தப் பெருங்கடலாக இருக்கிறது. உயிரினங்களும், பேருயிரினங்களும், ஒருவராலும் புரிந்து கொள்ளப்பட முடியாத அதன் ஆழமாக இருக்கின்றன. ஓ குழந்தாய், அந்த ஓடையானது ஒருவனின் பிறப்பையே தோற்றுவாயாகக் கொண்டிருக்கிறது. வாக்கே அதன் சுழல்களாகும். கடப்பதற்கு அரிதான அதை,(15) கல்வி, ஞானம் மற்றும் புத்தியைக் கொண்ட மனிதர்களே கடக்கிறார்கள்.
அதைக் கடந்து, அமைதியான இதயத்தை அடைந்து, ஆன்மாவை அறிந்தவனாக, ஒவ்வொரு தன்மையிலும் தூய்மையடைந்தவனாக, ஒவ்வொரு பற்றில் இருந்தும் விடுபடுவதில் வெற்றியடைவாயாக.(16) தூய்மையடைந்த, மேன்மையான புத்தியைச் சார்ந்து, பிரம்மமாகவே ஆவதில் நீ வெல்வாயாக. ஒவ்வொரு உலகப் பற்றிலிருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவை அடைந்து, ஒவ்வொரு வகை பாவத்தையும் கடந்து,(17) மலையுச்சியில் இருந்து பூமியின் பரப்பில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களைக் காணும் ஒருவனைப் போல நீ இந்த உலகைக் காண்பாயாக. கோபத்துக்கோ, மகிழ்ச்சிக்கோ வசப்படாமல், கொடூரமான ஆசை எதையும் அமைத்துக் கொள்ளாமல், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும், அழிவையும் காண்பதில் வெற்றியடைவாயாக.(18) ஞானம் கொண்ட மனிதர்கள், இத்தகைய செயலையே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறார்கள். உண்மையில், அறவோரில் முதன்மையானோராலும், உண்மையை அறிந்த தவசிகளாலும், வாழ்வெனும் ஆற்றைக் கடக்கும் இச்செயலே ஒருவன் நிறைவேற்ற வேண்டிய அனைத்து செயல்களிலும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.(19) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மாவைக் குறித்த இந்த அறிவே, ஒருவனுடைய மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதெனக் கருதப்படுவதாகும். புலன்களைக் கட்டுப்படுத்தி, நேர்மையான நடத்தையுடனும், அடக்கம் அல்லது பணிவுடனும் இருக்கும் ஒருவனுக்கு இதை {இந்த அறிவை} மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(20)
ஓ! குழந்தாய், நான் இப்போது உன்னிடம் சொன்னதும், ஆன்மாவின் மூலமே உண்மையாகச் சாட்சி காணப்படுவதுமான இந்த ஆன்ம அறிவானது, புதிர்கள் அனைத்திலும் பெரியதும், ஒருவன் அடையக்கூடியதிலேயே மிக உயர்ந்த அறிவுமாகும்.(21) ஆண், பெண், அலி என்ற பாலினமேதும் பிரம்மத்திற்குக் கிடையாது. அதற்குத் துன்பமோ இன்பமோ கிடையாது. அது தன் சாரமாகக் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தைக் கொண்டிருக்கிறது.(22) பிரம்ம அறிவை அடைபவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ, எந்தப் பாலினமாகவோ இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மறுபிறப்பை அடைய வேண்டியதில்லை. மறுபிறவியைத் தவிர்க்கும் நிலையை அடைவதற்காக இந்தக் கடமை (யோகக் கடமை) மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(23) இக்காரியத்தில் பல்வேறு தவசிகளின் சொன்ன பல்வேறு மேம்பட்ட கருத்துகள் வழிவகுக்கும் வகையிலேயே உன் கேள்விக்குப் பதிலளிக்க நான் பயன்படுத்திய இந்த வார்த்தைகளும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும். இக்காரியம் எவ்வாறு விளக்கப்பட வேண்டுமோ அவ்வகையிலேயே நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன். அக்கருத்துகள் சில வேளைகளில் கனியை உண்டாக்கின்றன, சில வேளைகளில் உண்டாக்குவதில்லை. (எனினும், நான் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் வேறுவகையைச் சார்ந்தவை, ஏனெனில், இவை நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும்).(24) ஓ! நற்குழந்தாய், இந்தக் காரணத்தினாலேயே, நிறைவு, தகுதி மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மகன் அல்லது ஒரு சீடனால் கேட்கப்படும்போது, ஓர் ஆசான் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், என் மகனான உனது நன்மைக்காக என்னால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட்ட இந்தப்போதனைகளை, உண்மையில் உள்ளது உள்ளபடியே அவனது மனத்தில் ஆழப் பதிய வைக்க வேண்டும்” என்றார் {வியாசர்}.(25)
வைராக்யம்! – சாந்திபர்வம் பகுதி – 251-எவன் பிராமணன்? பிராமண நிலையை அடைவதெவ்வாறு? முக்திக்கு வழிவகுக்கும் மனோவுறுதி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மணம், சுவை மற்றும் பிறவகை இன்பங்களில் ஒருவன் எந்தப் பற்றையும் வெளிக்காட்டக்கூடாது. மேலும் அவன் ஆபரணங்களையும், மணம் மற்றும் சுவைப் புலன்களால் நுகரும் பிற பொருட்களையும் ஏற்கக் கூடாது. அவன் கௌரவம், சாதனை மற்றும் புகழில் பேராசை கொள்ளக்கூடாது. கருத்துடைய பிராமணனின் ஒழுக்கம் இதுவேயாகும்.(1) வேதங்கள் அனைத்தையும் கற்று, தன் ஆசானிடம் கடமையுணர்வுடன் பணி செய்து, பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனும், ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்கள் அனைத்தையும் அறிந்தவனுமான ஒருவன் மறுபிறப்பாளன் {பிராமணன்} ஆகமாட்டான்[1].(2) அனைத்து உயிரினங்களிடமும் சொந்தக்காரனைப் போல நடந்து கொள்பவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவனே வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஆசையற்றவனாக, (ஆத்ம ஞானத்தில் நிறைவடைந்தவனாக) இருக்கும் ஒருவன் ஒருபோதும் இறப்பதில்லை. இத்தகைய ஒழுக்கமும், இத்தகைய மனோநிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.(3) கருணையற்றவனாகவும், ஆசையைக் கைவிடாதவனாகவும் இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தக்ஷிணையுடன் கூடிய பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே பிராமண நிலையை அடைந்துவிடமுடியாது. அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும் ஒருவன் நிறுத்தும்போதும், எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் இருக்கும்போதும், அவன் பிராமண நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(5)
எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் ஒருவன் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும்போது அவன் பிராமண நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(6) இவ்வுலகில் ஆசைப் பிணைப்பு என்ற ஒரே வகையின்றி வேறு பிணைப்பேதும் கிடையாது. அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் பிராமண நிலையை அடைகிறான்.(7) இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்ட ஞானியானவன், களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.(8) அனைத்து வகை ஆசைகளையும் மனத்துக்குள் நுழைத்துக் கொள்ளும் ஒருவனால் கூட, பல்வேறு ஆறுகள் பாய்ந்தும் தன் எல்லைகளைப் பெருக்கிக் கொள்ள இயலாத பெருங்கடலைப் போன்ற அமைதியை அடையலாம்; ஆனால் பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் ஆசையைப் பேணி வளர்த்துக் கொள்பவனால் அமைதியை அடையவே முடியாது.(9) அத்தகைய மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனிவதன் விளைவால் மகிழ்ச்சியை அடைகிறான்; ஆனால் பூமி சார்ந்த பொருட்களில் ஆசையைப் பேணி வளர்ப்பவனால் அம்மகிழ்ச்சியை அடையவே முடியாது. பின்னவன் சொர்க்கத்தையே அடைந்தாலும், அதனிலிருந்து வீழவே நேரிடும்.(10)
வேதங்கள், உண்மையைத் தங்கள் மறைபொருளாகக் கொண்டுள்ளன. உண்மை, புலனடக்கத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டிருக்கிறது. புலனடக்கம், ஈகையைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. ஈகை, தவத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது.(11) தவம், துறவைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. துறவு, மகிழ்ச்சியைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. மகிழ்ச்சி, சொர்க்கத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. சொர்க்கம், அமைதியைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது[2].(12) நீ மனநிறைவை அடைவதற்காக, மதிப்புமிக்க உடைமையும், விடுதலையை {முக்தியைச்} சுட்டுவதும், துன்பம் மற்றும் ஆவலுடன் {எதிர்பார்ப்புடன்} கூடிய ஐயங்கள் அல்லது நோக்கங்கள் அனைத்தையும் சுடுவதும் {எரிப்பதும்}, இறுதியில் அவற்றை முற்றாக அழிப்பதுமான அமைதியான புத்தியை அடைய விரும்ப வேண்டும்[3].(13) மனநிறைவு, துயரின்மை, பற்றிலிருந்து விடுதலை, அமைதி, உற்சாகம், பொறாமையில் இருந்து விடுதலை ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள், அல்லது நிறைவடைவார்கள்[4].(14) உடலின் நனவுநிலைகள் அனைத்தையும் கடந்தவர்கள், சத்வ குணத்தோடு இருக்கும்போது, உடலுக்குள் வசிப்பதும், (ஏற்கனவே சொல்லப்பட்ட வேதங்கள், உண்மை முதலிய) ஆறு காரியங்களின் துணையுடனும், (கல்வி, தியானம் மற்றும் யோகம் ஆகிய) இன்னும் மூன்று காரியங்களின் துணையுடனும் ஞானிகளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதுமான ஆன்மாவை அறிந்து, விடுதலையை அடைவதில் வெல்கிறார்கள்.(15)உடலுக்குள் தலைமை கொள்வதும், பிறப்பு மற்றும் இறப்பு எனும் பண்புகளற்றதும், தன்னியல்பிலேயே நிலைத்திருப்பதும், தூய்மைப்படுத்தும் எந்தச் செயலும் தேவைப்படாத குணங்களற்ற நிலையில் இருப்பதும், பிரம்மத்தைப் போன்றதுமான ஆன்மாவைப் புரிந்து கொள்வதன் மூலம் ஞானியானவன், முடிவை அறியாத பேரின்பத்தை அடைகிறான்.(16) அனைத்துத் திசைகளிலும் திரியும் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவில் மொத்தமாக நிலைக்கச் செய்வதன் மூலம் ஞானி அடையும் நிறைவானது, வேறு எந்த வழிமுறைகளினாலும் எவனாலும் அடையப்பட முடியாததாகும்.(17) வெறுமையான வயிற்றோடு இருப்பவனை எது நிறைவடையச்செய்யுமோ, ஏழ்மையில் இருப்பவனை எது நிறைவடையச்செய்யுமோ, பசையற்ற அங்கங்களைக் கொண்டவனை எது பலமடையச் செய்யுமோ, அதை {பிரம்மத்தை} அறிந்தவனே உண்மையில் வேதங்களை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) தகுதியற்ற ஈடுபாட்டில் இருந்து முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட தன் புலன்களை நிறுத்தி, தியான யோகத்தில் ஈடுபட்டு வாழும் ஒருவனே பிராமணனாகச் சொல்லப்படுகிறான். அத்தகையவன் பிறரைக் காட்டிலும் புகழ்பெற்றவன் எனச் சொல்லப்படுகிறான். அத்தகையவன் தன் ஆன்மாவில் இருந்து இன்பத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறான்.(19)
ஆசைகளைக் குறைத்து, இருப்பில் உள்ள உயர்ந்த காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவனைப் பொறுத்தவரையில், அவனது மகிழ்ச்சியானது, (வளர்பிறைச்) சந்திரனைப் போலத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.(20) அந்தப் பேரின்ப நிலையானது, திரள் மற்றும் நுட்பமான இருவகைப் பூதங்களையும், மகத்தையும், புலப்படாததையும் {பிரகிருதி / அவ்யக்தத்தையும்} கடந்த யோகியின் துயரங்களை, இருளை விலக்கும் சூரியனைப் போல அகற்றும்[5].(21)செயல்களைக் கடந்தவனும், குண அழிவைக் கடந்தவனும், உலகம்சாந்த பொருட்களில் பற்றில்லாதவனுமான ஒரு பிராமணனை முதுமையும், மரணமும் அடைவதில்லை.(22) உண்மையில், யோகியானவன் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பற்று மற்றும் வெறுப்பு ஆகிய இரண்டையும் கடந்த நிலையில் வாழும்போது, அவன் இவ்வாழ்விலேயே தன் புலன்களையும், அவற்றுக்குரிய பொருட்கள் அனைத்தையும் கடப்பதாகச் சொல்லப்படுகிறான்.(23) பிரகிருதியைக் கடந்து உயர்ந்த காரணத்தை அடைந்த யோகி, அந்த உயர்ந்ததை அடைந்ததன் விளைவால் இவ்வுலகத்திற்குத் திரும்பும் கடப்பாட்டில் இருந்து விடுபடுகிறான்” என்றார் {வியாசர்}.(24)
புலன்கள், தன்மாத்திரைகள், பூதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 252-புலன்கள், தன்மாத்திரைகள் மற்றும் ஐம்பூதங்களுக்கிடையில் உள்ள உறவு; ஐம்பூதங்களின் குணங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, அறம், பொருள் ஆகிய இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிய ஒரு சீடனிடம், திறம்பெற்ற ஓர் ஆசான் அத்யாத்மா குறித்து முன்சொன்ன பகுதியில் சொல்லப்பட்ட அனைத்தையும் முதலில் சொல்ல வேண்டும்.(1) ஐந்து பொருட்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, ஒளி, நீர், ஐந்தாவதாகக் கணக்கிடப்படும் பூமி, பாவம், அபாவம் ஆகியற்றைக் கொண்டுள்ளது[1].(2) வெளியானது {நிரம்பாமல்} வெறுமையாக இருக்கும் இடைவெளியாகும். கேள்விப் புலன்கள் வெளியைக் கொண்டிருக்கின்றன. வடிவம் கொண்ட பொருள்களின் அறிவியலை அறிந்தவர்கள், வெளியானது ஒலியைத் தன் குணமாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.(3)
(இடம்பெயர்வதில் துணைபுரியும்) கால்கள், காற்றையே {வாயுவையே} தங்கள் சாரமாகக் கொண்டுள்ளன. முக்கிய மூச்சுக்காற்றுகள் காற்றாலானவையாகும்.
ஊறுபுலன் {தீண்டலை உணரும் புலன்} (தோல்) தீண்டலைத் தன் குணமாகக் கொண்டுள்ளது.(4)
வெப்பம், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு, அனைத்துப் பொருட்களைக் காணும் ஒளி, உடலில் உள்ள சூடு, ஐந்தாவதாகக் கண் ஆகியன அனைத்தும் பல்வேறு நிறவடிவங்களைத் தன் குணமாகக் கொண்ட ஒளியாகும்.(5)
வெளியேறும் திரவங்கள் {வியர்வை, சிறுநீர்}, பசை, அனைத்து வகைத் திரவங்கள் ஆகியன நீராகும். குருதி, மஜ்ஜை, (உடலுக்குள்) பசையுடன் இருக்கும் அனைத்தும் நீரைத் தங்கள் சாரமெனக் கொண்டவையாக அறியப்பட வேண்டும். சுவைப்புலன் நாவாகும், சுவையானது நீரின் குணமாகக் கருதப்படுகிறது.(6)
எலும்புகள், பற்கள், நகங்கள், தாடி, உடலில் உள்ள முடிகள், தலை முடி, நரம்புகள், தசைநார்கள், தோல் ஆகியவற்றைப் போலவே திடப்பொருட்கள் அனைத்தும் பூமியாலானவை.(7)
மூக்கு மணப்புலனாக அழைக்கப்படுகிறது. அப்புலனின் நுகர் பொருளான மணமே பூமியின் குணமாக அறியப்பட வேண்டும்.(8)
அடுத்தடுத்த பூதங்கள் ஒவ்வொன்றும், தன் குணத்தையும் தவிர, தனக்கு முந்தைய பூதத்தின் குணத்தையும் பெற்றிருக்கின்றன. வாழும் உயிரினங்கள் அனைத்திலும், (அவித்யை {அறியாமை}, காமம் {ஆசை}, கர்மம் {செயல்} என்ற மூன்று) அடிப்படை காரியங்களும் இருக்கின்றன. ஐம்பூதங்களையும், அவற்றின் விளைவுகளையும், அவற்றில் இருந்து பாயும், அல்லது அவற்றுக்குச் சொந்தமான குணங்களையும் முனிவர்கள் இவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.(9)
{ஐம்பூதங்கள் மற்றும் மூன்று காரியங்களைப் பொறுத்த} கணக்கீட்டில் மனமானது ஒன்பதாவதாக அமைகிறது, புத்தியானது பத்தாவதாகக் கருதப்படுகிறது. முடிவிலியாக உள்ள ஆன்மாவானது பதினொன்றாவதாக அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் உயர்ந்தவையாகச் சொல்லப்படுகின்றன.(10) மனமானது ஐயத்தைத் தன் சாரமாகக் கொண்டுள்ளது. புத்தியானது, பகுத்தறிந்து, நிச்சயத்தன்மையை உண்டாக்குகிறது. (ஏற்கனவே முடிவிலியாகச் சொல்லப்பட்ட) ஆன்மாவனது, செயல்களில் இருந்து பெறப்பட்ட விளைவுகள் மூலம் உடல்படைத்த ஜீவன் (அல்லது ஜீவாத்மன்) என அழைக்கப்படுகிறது[2].(11) உயிரினங்கள் அனைத்தும், காலத்தைத் தங்கள் சாரமாகக் கொண்ட இவை அனைத்தையும் கொண்டிருந்தாலும், {முன் சொன்னவற்றால்} அவற்றால் களங்கப்படாதனவாக அவற்றை {அந்த உயிரினங்களைப்} பார்க்கும் மனிதன், குற்றத்தால் பாதிப்படைந்த செயல்களை ஒருபோதும் தொடர வேண்டியிருக்காது {ஒருபோதும் செயல்களில் கலக்கமடைய வேண்டியதில்லை}[3]” என்றார் {வியாசர்}.(12)
யோகதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 253-யோகதர்மம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “சாத்திரங்களை அறிந்தோர், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் துணை கொண்டு, நுண்ணியவுடலை உடுத்திக் கொண்டதும், மிக நுட்பமானதும், திரள் உடலுக்குள் வசித்துக் கொண்டே அதனுடன் தொடர்பறுந்த நிலையில் இருப்பதுமான ஆத்மாவைக் காண்கிறார்கள்[1].(1) அடர்த்தியான திரளாக ஆகாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் திரியும் சூரியக் கதிர்களின் இருப்பை அறிவால் உள்ளுணர முடியுமென்றாலும் வெறுங்கண்களுக்கு அவை தெரியாததைப் போலவே, இருப்பிலுள்ளவை {உயிரினங்கள்} தங்கள் திரள் உடல்களில் இருந்து விடுபட்டு அண்டத்தில் திரிந்து கொண்டிருப்பதைக் காண்பது மனிதக் கண்களின் உற்றறியும் திறனுக்கு அப்பாற்பட்டதாகும்[2].(2) சூரியனின் பிரகாசமான வட்டில் நீரின் எதிரொளியில் {பிரதிபிம்பத்தில்} தென்படுவதைப் போலவே, யோகியும் திரளுடல்களினுள் இருப்பிலுள்ள சுயத்தை அதன் எதிரொளியில் காண்கிறான்.(3)மேலும் நுண்ணிய உடல்களில் பொதிந்திருக்கும் அந்த ஆன்மாக்கள் அனைத்தும், தாங்கள் வசித்த திரள் உடல்களில் இருந்து விடுபட்ட பிறகு, புலன்களை அடக்கியவர்களும், ஆன்ம அறிவைப் பெற்றவர்களுமான யோகிகளால் உணரத்தக்கனவாக இருக்கின்றன. உண்மையில் யோகிகள் தங்கள் ஆன்மாக்களின் துணையுடனே புலப்படாத அப்பொருட்களைக் காண்கின்றனர்.(4) பகலில் இரவு போலும், இரவில் பகலைப் போலும் உறங்கிக் கொண்டிருந்தாலும், விழித்துக் கொண்டிருந்தாலும், புத்தி, ரஜஸில் பிறந்த செயல்கள், யோகம் தரும் பலம் ஆகியவற்றால் உண்டான அனைத்தையும் கைவிட்டு யோகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், தங்கள் லிங்க வடிவத்தை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறார்கள்.(5,6)
அத்தகைய யோகியரில் வசிப்பதும், எப்போதும் (மகத், நனவுநிலை {அகங்காரம்}, ஐந்து அடிப்படை புலன்களின் ஐந்து தன்மாத்திரைகள் உள்ளிட்ட) நுட்பமான ஏழு காரியங்களுடன் கூடியதுமான ஜீவனானது, முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டு, அருள் உலகங்கள் அனைத்திலும் உலவிக் கொண்டிருக்கிறது. “எப்போதும்” என்றும் “மரணத்தில் இருந்து விடுபட்டு” என்றும் பொதுவான பேச்சு வழக்கிலேயே நான் சொல்கிறேன். ஏனெனில் உண்மையில் அந்த லிங்க வடிவமும் தற்காலிகமானதே.(7) எனினும், (அவற்றைக் கடக்க இயலாமல்) மனம் மற்றும் புத்தியின் ஆதிக்கத்தில் இருக்கும் மனிதன், தன் கனவுகளில் கூடத் தன் உடலின் வடிவத்தையும், பிறவற்றையும் பகுத்துப்பார்த்து, இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்.(8) ஆம், அவனது கனவுகளில் கூட அவன் இன்பத்தையும் துன்பத்தை அனுபவிக்கிறான்; கோபம் மற்றும் பேராசையின் வசப்பட்டு அவன் பல்வேறு வகைப் பேரிடர்களைச் சந்திக்கிறான்.(9)
அவனது கனவுகளில் அவன் பெருஞ்செல்வத்தை அடைந்து பெரும் நிறைவை உணர்கிறான்; விழித்திருக்கும் வேளைகளில் போலவே அவன் தகுதிமிக்கச் செயல்களைச் செய்கிறான், பார்க்கிறான் (கேட்கிறான், இன்னும் பிறவற்றையும் செய்கிறான்).(10) கருப்பைக்குள்ளும், அதிகமான உள் வெப்பத்துக்கு மத்தியிலும் கிடக்க வேண்டியதும், முழுமையாகப் பத்து மாதங்களை அவ்விடத்திலேயே கடத்த வேண்டியதுமான ஜீவனானது, வயிற்றுக்குள்ளேயே உணவைப் போலச் செரித்து அழியாமல் போவதைக் காண்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.(11) உயரொளியுடன் கூடிய பரமாத்மாவின் ஒரு பகுதியும், அனைத்து உயிரினங்களின் இதயங்களுக்குள் கிடப்பதுமான ஜீவாத்மாவானது, தங்கள் திரளுடலுக்குள் இருப்பதைக் காண்பதில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கிய மனிதர்கள் ஒருபோதும் வெல்வதில்லை.(12)
ஆன்மாவை (ஆன்மாவைக் குறித்த அறிவை) அடையும் நோக்கத்தில் யோக அறிவியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், உயிரற்ற திரள் உடலையும், உணரப்பட முடியாத லிங்க உடலையும், அண்ட அழிவின் போதும் அழியாத காரண உடலையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(13) நான்காவது வாழ்வுமுறை (அல்லது சந்நியாச{ஆசிரம}ம்) உள்ளிட்ட பல்வேறு வாழ்வுமுறைகளில் விதிக்கப்பட்ட கடமைகளில், யோகத்தைத் தங்களில் முதன்மையானதாகக் கொண்டவையும், மனம் மற்றும் புத்தியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நிறுத்துபவையுமான நான் சொன்ன இவை {இந்தக் கடமைகள்} (சாந்தோக்ய உபநிஷத்தில்) சாண்டில்யரால் விதிக்கப்பட்டவையாகும்[4].(14) (மனத்தின் பொருட்களான புலன்கள், மனம், புத்தி, மஹத், புலப்படாதது அல்லது பிரகிருதி மற்றும் புருஷன் உள்ளிட்ட) ஏழு நுட்பமான காரியங்களைப் புரிந்து கொண்டும், (அனைத்தின் அறிவு, மனநிறைவு, அளவற்ற அறிவு, சார்பற்ற நிலை {சுதந்திரம்}, நித்திய விழிப்புத்தன்மை, எல்லையற்ற ஆற்றல் என்ற) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த காரணத்தை {சகுன பிரம்மத்தைப்} புரிந்து கொண்டும், முக்குணங்களுடன் கூடிய அவித்யையின் மாறுபாடே அண்டம் என்பதையும் இறுதியாகப் புரிந்து கொள்ளும் ஒருவன், (சாத்திரத்தின் மூலம் வழிநடத்தப்பட்டு) உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைவதில் வெல்கிறார்” என்றார் {வியாசர்}.(15)
புத்தியும், மனமும்! – சாந்திபர்வம் பகுதி – 254-ஆசையை வெல்லும் காரியம் குறித்தும், மனம், புத்தி, புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மனிதனின் இதயத்தில் ஆசை {காமம்} என்றழைக்கப்படும் ஆச்சரியமான ஒரு மரம் இருக்கிறது. அது பிழை {மோகம்} என்றழைக்கப்பட்ட வித்தில் இருந்து பிறந்ததாகும். கோபமும், செருக்கும் அதன் பெரிய அடிமரமாக இருக்கின்றன. செயல்பாட்டு விருப்பம், (அதை வளர்க்கும் நீரைத் தக்க வைத்துக் கொள்ள) அதனடியைச் சுற்றி வடிநிலமாக {பாத்தியாக} இருக்கிறது.(1) அறியாமையே அம்மரத்தின் வேராகும், கவனமின்மை அதற்கு ஊட்டமளிக்கும் நீராக இருக்கிறது. பொறாமை அதன் இலைகளாக இருக்கிறது. முற்பிறவிகளின் தீச்செயல்கள் அதற்கு உயிர்வளத்தைக் கொடுக்கிறது.(2) தீர்மானமிழப்பு {மயக்கம்} மற்றும் கவலை ஆகியன அதன் கொப்புகளாக இருக்கின்றன; துயரம் அதன் பெரும் கிளைகளாக அமைகின்றன; அச்சம் அதன் முளையாக இருக்கிறது. (வெளிப்படையாகப் பல்வேறு பொருள்களில் உள்ள) ஏற்புடைய தாகம் அனைத்துப் புறத்தில் அதன் சுற்றிப் பிணைக்கும் கொடிகளாக அமைகிறது.(3)
இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்ட பேராசை கொண்ட மனிதர்கள், கனிகொடுக்கும் அம்மரத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டு, அதனிடமிருந்து கனியைப் பெறும் எதிர்பார்ப்பில் அதற்குத் தங்கள் வணக்கங்களைச் செலுத்துகின்றனர்.(4) எவன் அந்தச் சங்கிலிகளை வென்று, அம்மரத்தை வெட்டி, இன்ப துன்பம் இரண்டையும் கைவிட முயற்சிக்கிறானோ அவன் இரண்டு கதியையும் அடைவதில் வெல்கிறான்.(5) புலன்நுகர் பொருட்களில் ஈடுபடுவதன் மூலம் இம்மரத்தை வளர்க்கும் மூடன், விஷமுள்ள மருந்து நோயாளியை அழிப்பதைப் போலவே அவன் ஈடுபாடு காட்டும் {புலன் நுகர்} பொருட்களாலேயே அழிகிறான்.(6)
எனினும், கைத்திறன்மிக்க ஒருவன், யோகத்துணையின் மூலம் வலுவடைந்தவனாக, அடியாழம் வரை செல்லும் அம்மரத்தின் வேரை சமாதி எனும் வாளால் வெட்டி வீழ்த்துகிறான்.(7) கனியில் உள்ள விருப்பத்தால் மட்டுமே செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கதியையும் மறுபிறவி அல்லது கட்டும் சங்கிலி என அறிந்த ஒருவன், கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(8) உடல் ஒரு நகரமாகச் சொல்லப்படுகிறது. புத்தியே அதன் தலைவியாக {அரசியாகச்} சொல்லப்படுகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, தீர்மானிப்பதையே முக்கியச் செயலாகக் கொண்ட அந்தத் தலைவியின் அமைச்சராகச் சொல்லப்படுகிறது.(9)
மனத்தால் (தலைவியின் தொண்டில்) ஈடுபடுத்தப்படும் புலன்களே அதன் குடிகளாகும். அந்தக் குடிகளைப் பேணி வளர்ப்பதற்காக மனமானது பல்வேறு வகைச் செயல்களில் பலமான விருப்பத்தை வெளிக்காட்டுகிறது. அச்செயல்களின் காரியத்தில் தமஸ், ரஜஸ் எனும் இரு பெரும்பிழைகள் காணக்கிடைக்கின்றன[1].(10) அச்செயல்களின் கனிகள், (மனம், புத்தி மற்றும் நனவுநிலை என்ற) அந்நகரின் தலைவர்களோடு கூடிய குடிகளிடமே இருக்கின்றன. (ஏற்கனவே சொல்லப்பட்ட) இரு பிழைகள், தடைசெய்யப்பட்ட வழிமுறைகளின் மூலம் நிறைவேறப்பட்டும் அச்செயல்களின் கனிகளிலேயே வாழ்கின்றன.(11) இவ்வாறிருக்கையில், (ரஜஸாலோ, தமஸாலோ) வெல்லப்படமுடியாத புத்தியானது, (தனக்குத் தொண்டாற்றும் மனத்தின் அளவுக்குக் களங்கமடைந்து அந்த) மனத்திற்கு இணையான ஒரு சமநிலைக்கு இறங்குகிறது. களங்கப்பட்ட மனத்தால் கலக்கமடையும் புலன்களும் தங்கள் நிலையுறுதியை இழக்கின்றன.(12)
புத்தியானது (நன்மையெனக் கருதி) அடைய விரும்பும் பொருட்கள் துன்பத்தை உண்டாக்குவதாக அமைந்து இறுதியில் அழிவைக் கொண்டு வருகிறது. அழிவடைந்த பிறகு, மனத்தால் மீண்டும் நினைத்துப் பார்க்கப்படும் அப்பொருட்கள், அவ்வாறே அழிந்த பிறகும் மனத்தைப் பீடிக்கின்றன.(13) மனமானது, தீர்மானிக்க முடியாத நிச்சயத்தன்மையற்ற உணர்வுகளை அடையும் தன் முக்கியச் செயல்பாட்டைச் செய்யும்வரையில் மட்டுமே புத்தியில் இருந்து வேறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் உண்மையில் மனமும் புத்தியும் ஒன்றாகவே இருக்கின்றன. புத்தியில் (துன்பத்தையும், அனைத்து வகைத் தீமைகளையும் மட்டுமே உண்டாக்கியபடி) இருக்கும் ரஜஸ், நிலைக்கண்ணாடியில் உள்ள பிம்பத்தைப்போல ரஜஸால் களங்கப்பட்ட புத்தியில் கிடக்கும் ஆன்மாவை அப்போது மறைக்கிறது[2].(14) மனமே ரஜஸுடன் முதலில் நட்பில் கலக்கிறது. அவ்வாறு தன்னைக் கலந்த பிறகு, (பகைவனுடன் சதியில் ஈடுபடும் போலி அமைச்சன் மன்னனையும் அதன் குடிமக்களையும் கைப்பற்றுவதைப் போல) ஆன்மா, புத்தி மற்றும் புலன்களைக் கைப்பற்றிப் பற்றி, அவற்றை (மனம் எதனுடன் கலந்ததோ அந்த) ரஜஸிடமே அளிக்கிறது” என்றார் {வியாசர்}”.(15)
எழுபத்தோரு தனியுருக்கள்! – சாந்திபர்வம் பகுதி – 255-ஐம்பூதங்களின் ஐம்பது குணங்களையும், மனத்தின் ஒன்பது குணங்களையும், புத்தியின் ஐந்து குணங்களையும், ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய எழுபத்தோரு தனியுருக்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே, பூதங்களின் கணக்கீட்டைக்குறித்துத் தீவிற்பிறந்த முனிவரின் {துவைபாயனரின் / வியாசரின்} உதடுகளிலிருந்து விழுந்த வார்த்தைகளை மிக்கப் பெருமையுடன் மீண்டும் கேட்பாயாக.(1) (அறியாமைகள் அனைத்தையும் கடந்து) சுடர்மிக்க நெருப்பைப் போல இருந்த அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, புகையால் மூடப்பட்ட நெருப்புக்கு ஒப்பான தனது மகனிடம் {சுகரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மகனே, அவர் சொன்னவற்றில் கற்பிக்கப்பட்ட நானும் கூட (அறியாமையை அகற்றும்) அந்தக் குறிப்பிட்ட ஞானத்தை மீண்டும் விளக்கப் போகிறேன்.(2)
அசையாமை, கனம், கடினத்தன்மை, படைக்குந்தன்மை, மணம், அடர்த்தி, அனைத்து வகை மணங்களையும் ஈர்க்கும் வல்லமை, இணக்கம் {பிணைப்பு}, (காய்கறிகள் மற்றும் விலங்குகளைப் பொறுத்தவரையில்) வசிக்கும்தன்மை, பொறுமை அல்லது தாங்கிக் கொள்ளும் வல்லமை என்றழைக்கப்படும் மனப்பண்பு ஆகியவை பூமியின் குணங்களாகும்.(3)
குளிர்ச்சி, சுவை, ஈரம், நீர்மை, மென்மை, ஏற்புடைமை, நாவு, பாயுந்தன்மை {பெருகுதல்}, உறையச் செய்யுந்தன்மை, பூமிய சார்ந்த பொருட்கள் பலவற்றை உருக்கும் சக்தி ஆகியவை நீரின் குணங்களாகும்.(4)
தடுக்கப்பட முடியாத சக்தி, எரியும் தன்மை, வெப்பம், மென்மையாக்கும் வல்லமை {சமைத்தல்}, ஒளி, துக்கம், நோய், வேகம், சீற்றம் மற்றும் மாற்றமில்லாத மேல்நோக்கிய அசைவு ஆகியன நெருப்பின் {தேயுவின்} குணங்களாகும்.(5)
வெப்பமும் {உஷ்ணமும்}, குளிர்ச்சியும் {சீதமும்} இல்லாத தீண்டல் {ஸ்பரிசம்}, பேச்சுப் புலனுக்குத் துணை செய்யும் வல்லமை, (அசைவைப் பொறுத்தவரையில்) சார்பற்றிருக்கும் {சுதந்திரத்} தன்மை, பலம், வேகம், {மலஜலம் உள்ளிட்ட} அனைத்து வகை உமிழ்வுக்கும், வெளியேற்றத்திற்கும் துணைபுரியும் சக்தி, பிற பொருட்களை உயர்த்தும் சக்தி, உள்ளிழுத்து வெளியிடும்மூச்சுகள், (சித்தின் குணமான) உயிர், (மரணத்தோடு கூடிய) பிறப்பு ஆகியவை காற்றின் {வாயுவின்} குணங்களாகும்.(6)
ஒலி, விரிவு {படர்ந்திருத்தல்}, உள்ளடக்கும் வல்லமை {துவாரத்தன்மை}, தேவைகளுக்கு ஆதாரமாக இல்லாத புகலிடமின்மை, புலப்படா நிலை, மாறும் வல்லமை, தடுப்பை உண்டாக்க இயலாமை, கேள்விப் புலனை உண்டாக்கும் பொருள் காரணம், மனித உடலில் உள்ள வெறுமையான இடங்கள் {துவாரங்கள்} ஆகியன வெளியின் {ஆகாயத்தின்} குணங்களாகும்.(7)
அறிவிக்கப்பட்டபடி இவையே ஐந்து அடிப்படை பூதங்களின் சாரங்களாக அமையும் ஐம்பது குணங்களாகும்[1].(8)பொறுமை, ஆராய்தல் அல்லது நீண்ட வாதம், நினைத்தல், மறதி அல்லது பிழை {ப்ரமம்}, கற்பனை {மனோரதம்}, பொறை {தாங்குந்திறன்}, நன்மை நோக்கிய மனச்சார்பு, தீமை நோக்கிய மனச்சார்பு, நிலையில்லாமை ஆகியவை மனத்தின் {ஒன்பது} குணங்களாகும்.(9)
நல்ல மற்றும் தீய சிந்தனைகள் இரண்டின் அழிவு (கனவற்ற உறக்கம்), விடாமுயற்சி, கவனக்குவிப்பு, தீர்மானம், நேரடி சான்றைச் சார்ந்து அனைத்து பொருட்களையும் உறுதிசெய்து கொள்வது ஆகியன புத்தியின் ஐந்து குணங்களாகும்” என்றார் {பீஷ்மர்}.(10)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “புத்திக்கு ஐந்து குணங்கள் இருக்கின்றன என எவ்வாறு சொல்லப்படுகிறது? மேலும், ஐம்புலன்களும் எவ்வாறு (ஐம்பூதங்களின்) குணங்களாகச் சொல்லப்படுகின்றன? ஓ! பாட்டா, இவை அனைத்தையும் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருப்பதால் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புத்தியானது, ஐம்பூதங்களையும் தன்னகத்தைக் கொண்டுள்ளதால் அது {புத்தி} மொத்தமாக அறுபது குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[2]. அந்தக் குணங்கள் அனைத்தும் ஆன்மாவோடு கலந்த நிலையிலேயே நீடித்திருக்கின்றன. ஓ! மகனே, பூதங்கள், அவற்றின் ( ஐம்பது) குணங்கள், (அவற்றோடு மனத்தின் ஒன்பது குணங்கள் மற்றும் புத்தியின் ஐந்து குணங்கள்) ஆகிய அனைத்தும் சிதைவடையாதவனால் படைக்கப்பட்டன என்று வேதங்கள் அறிவிக்கின்றன. எனவே இந்த எழுபத்தோரு {71} தனியுருக்களும் (ஆன்மாவைப் போல) நித்தியமானவை அல்ல[3].(12) ஓ! மகனே, (அண்டத்தின் தோற்றம் மற்றும் பிற நிகழ்வுகளைக் குறித்து) உன் முன்பு முன் சொன்ன சுலோகங்களில் வைக்கப்பட்ட வெளிப்பாடுகளுக்கு முரண்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் அறிவுக்கண்ணின் முன்பு பழுதானவையாக இருக்கின்றன. எனினும், பரப்பிரம்மம் குறித்து நான் சொன்ன அனைத்தையும் இவ்வுலகில் மிகக் கவனமாகக் கவனித்து, பிரம்மஞானம் அளிக்கும் பலத்தை அடைந்த பிறகு, இதய அமைதியை வெல்ல {அமைதியான புத்தியை அடைய} முனைவாயாக”[4] என்றார் {பீஷ்மர்}.(13)
பிரம்மனின் கோபாக்னி! – சாந்திபர்வம் பகுதி – 256-மரணம் குறித்துப் பீஷ்மரிடம் வினவிய யுதிஷ்டிரன்; நாரத முனிவர் மன்னன் அனுகம்பகனுக்குச் சொன்ன கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பிரம்மன் தன் கோபத்தீயால் உயிரினங்களை எரித்தது; அத்தீயைத் தணிக்கப் பிரம்மனிடம் சென்ற ஸ்தாணு…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தங்கள் தங்கள் படைகளுக்கு மத்தியில் பூமியின் பரப்பில் கிடக்கும் பூமியின் தலைவர்களும், பெரும் வலிமையைக் கொண்டவர்களுமான இந்த இளவரசர்கள் இப்போது அசைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(1) இந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். ஐயோ, சம ஆற்றலும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) இந்த மனிதர்களைப் போரில் கொல்லக்கூடிய ஒருவரையும் நான் (இவ்வுலகத்தில்) காணவில்லை[1]. இவர்கள் அனைவரும் பேராற்றலையும், பெரும் சக்தியையும், பெரும்பலத்தையும் கொண்டவர்களாவர்.(3) பெரும் ஞானத்தைக் கொண்ட இவர்கள், இப்போது உயிரை இழந்து வெறுந்தரையில் கிடக்கிறார்கள். உயிரை இழந்து கிடக்கும் இந்த மனிதர்கள் அனைவரையும் குறிக்க இறந்தவர்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.(4) பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் இறந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இக்காரியத்தில், என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. அசைவு எங்கே இருந்து வருகிறது? மரணம் {மிருத்யு} எங்கே இருந்து வருகிறது?(5) இறப்பவன் யார்? (இறப்பது திரள் உடலா? நுண்ணுடலா? அல்லது ஆத்மாவா?) மரணம் எங்கே இருந்து வருகிறது? எக்காரணத்தினால் (வாழும் உயிரினங்களை) மரணம் அபகரித்துச் செல்கிறது? ஓ! பாட்டா, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, பழங்காலத்தில், கிருத யுகத்தில் அனுகம்பகன்[2] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். போரில் அவனது தேர்கள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து இறுதியில் அவனும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டான்.(7) ஹரி என்ற பெயரில், பலத்தில் நாராயணனுக்கு ஒப்பானவனாக இருந்த அவனது மகன், அந்தப் போரில் தனது பணியாட்கள் மற்றும் துருப்பினருடன் சேர்த்து தனது எதிரிகளால் கொல்லப்பட்டான்.(8) மகனின் மரணத்தால் உண்டான துயரால் பீடிக்கப்பட்டவனும், தானே எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டவனுமான அந்த மன்னன் {அனுகம்பகன்}, அதுமுதல் அமைதியான வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஒருநாள் எக்காரியமும் இன்றி உலவிக் கொண்டிருந்தபோது, தவசியான நாரதரைப் பூமியில் சந்தித்தான்.(9) அந்த ஏகாதிபதி {அனுகம்பகன்}, போரில் நேர்ந்த தன் மகனின் மரணம் மற்றும் எதிரிகளால் தான் கைப்பற்றப்பட்டது என நடந்ததனைத்தையும் நாரதரிடம் சொன்னான்.(10) அவனது வார்த்தைகளைக் கேட்டவரும், தவமெனும் செல்வத்தைக் கொண்டவருமான நாரதர், மகனின் மரணத்தால் நேர்ந்த அவனது துயரை விலக்க பின்வரும் கதையை உரைத்தார்.(11)நாரதர், “ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, நீண்ட விவரங்களைக் கொண்ட பின்வரும் கதையை அது நேர்ந்தவாறே இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, நானே இதை முன்பு கேட்டிருக்கிறேன்(12) பெரும் சக்தியைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, அண்டத்தைப் படைத்த வேளையில் பெரும் எண்ணிக்கையிலான உயிரினங்களைப் படைத்தான். அவை பல்கிப் பெருகின, அவற்றில் ஒன்றும் மரணமடையவில்லை.(13) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {அனுகம்பகா}, அண்டத்தில் உயிரினங்களால் நிரம்பாத எந்தப் பகுதியும் இருக்கவில்லை. உண்மையில், ஓ! மன்னா {அனுகம்பகா}, மூவுலகங்களும் உயிரினங்களால் நிறைந்து, மூச்சுவிடக் கூட இடமில்லாமல் இருந்ததாகத் தெரிந்தது.(14) அப்போது, ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, பல்கிப்பெருகியிருக்கும் உயிரினங்களின் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் உதித்தது.(15)
ஓ! மன்னா, அதன்பேரில் பிரம்மன் கோபமடைந்ததால், அந்தக் கோபத்தின் விளைவாக அவனது உடலில் இருந்து ஒரு நெருப்பு வெளிப்பட்டது. ஓ! ஏகாதிபதி, பெரும்பாட்டன் {பிரம்மன்}, தனது கோபத்தில் பிறந்த நெருப்பைக் கொண்டு அண்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் எரித்தான்.(16) உண்மையில், ஓ! மன்னா, தெய்வீகத் தலைவனின் {பிரம்மனின்} கோபத்தில் பிறந்த அந்த நெருப்பானது, சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தையும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்துடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரித்தது.(17) உண்மையில், இவ்வாறு பெரும்பாட்டன் கோப வசப்பட்டபோது, அந்த ஆசையின் தடுக்கப்பட முடியாத சக்தியால் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் எரியத் தொடங்கின.(18)
அப்போது, தெய்வீகமானவனும், மங்கலமானவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் தலைவனுமான ஸ்தாணு {சிவன்}, கருணையால் நிறைந்து, பிரம்மனை நிறைவு செய்ய முனைந்தான்.(19) ஸ்தாணு, நன்மைக்கான நோக்கங்களுடன் பிரம்மனிடம் வந்தபோது, சக்தியுடன் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} அவனிடம் {சிவனிடம்},(20) “என்னிடம் இருந்து வரங்களுக்குத் தகுந்தவன் நீ. உனது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்? உன் இதயத்தில் இருக்கும் எதையும் நிறைவேற்றுவதன் மூலம் நான் உனக்கு நன்மை செய்வேன்” என்றான் {பிரம்மன்}.(21)
மிருத்யு – மரணதேவி! – சாந்திபர்வம் பகுதி – 257-பிரம்மன் மிருத்யுவைப் படைத்து உயிரினங்களைக் கொல்ல ஏவிய கதையை அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்…
ஸ்தாணு, “ஓ! தலைவா {பிரம்மனே}, அண்டத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களின் சார்பாக என் வேண்டுதலை அறிவாயாக. இந்த உயிரினங்கள் உன்னாலேயே படைக்கப்பட்டன. ஓ! பாட்டா, அவற்றிடம் கோபங்கொள்ளாதே.(1) ஓ! சிறப்பானவனே, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், உன் சக்தியில் பிறந்த நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இத்தகைய அவல நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவற்றைக் கண்டு நான் கருணை கொள்கிறேன். ஓ! அண்டத்தின் தலைவா, அவற்றிடம் கோபங்கொள்ள வேண்டாம்” என்றான்.(2)
படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தின் தலைவன் {பிரம்மன்}, “நான் கோபமடையவில்லை; படைக்கப்பட்டவை அழிய வேண்டும் என்பது என் விருப்பமுமல்ல. பூமியின் கனத்தைக் குறைப்பதற்காக மட்டுமே இந்த அழிவு விரும்பத்தக்கதாகிறது.(3) ஓ மஹாதேவா, உயிரினங்களின் கனத்தால் பீடிக்கப்பட்டவளும், நீரில் மூழ்கி விடும் வகையில் காணப்பட்டவளுமான பூமாதேவியே, அவற்றை அழிக்குமாறு என்னிடம் வேண்டினாள்.(4) நீண்ட காலம் இது குறித்துச் சிந்தித்த பிறகும், இப்படிப் பல்கிப் பெருகியிருக்கும் தொகைக்கு அழிவை உண்டாக்கும் வழிமுறையேதும் அகப்படாததால், என் இதயத்தைக் கோபம் தன் உடைமையாக்கியது” என்றான்.(5)
ஸ்தாணு, “ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்களை அழிக்கும் இக்காரியத்தில் கோபவசப்படாதே. நிறைவு கொள்வாயாக. அசைவனவாகவும், அசையாதனவாகவும் இருக்கும் இவ்வுயிரினங்கள் அழிய வேண்டாம்.(6) அனைத்துக் குளங்களும், அனைத்து வகைப் புல் மற்றும் தாவரங்களும், அசைவற்ற அனைத்து இனங்களும், அசையும் நால்வகை உயிரினங்கள் அனைத்தும் எரிக்கப்படுகின்றன.(7) மொத்த அண்டமும் உயிரினங்களற்றதாகப் போகிறது. ஓ! தெய்வீகத் தலைவா, நிறைவு கொள்வாயாக. ஓ! நீதிமிக்க இதயம் கொண்டவனே, இதுவே உன்னிடம் நான் கேட்கும் வரமாகும்.(8) இவ்வுயிரனங்கள் அழிக்கப்பட்டால் மீண்டும் திரும்பாது. எனவே, இந்த உனது சக்தி அதனிலேயே தணிவடையட்டும்.(9) ஓ! பாட்டா, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தினிடமும் கருணை கொண்டு, இவை எரியாத வேறு வழிவகைகளைக் காண்பாயாக. ஓ! அண்டத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவா {பிரம்மா}, அனைத்து உயிரினங்களின் நனவுநிலைகளுக்குத் தலைமைதாங்குபவனாக என்னை நீயே நியமித்தாய்.(11) ஓ! அண்டத்தின் தலைவா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட இந்த அண்டம் உன்னில் இருந்தே பிறந்தது. ஓ தேவர்களின் தேவா, இந்த உயிரினங்கள் மீண்டும் மீண்டும் பிறந்த இறக்கும் தன்மையுடன் இவ்வுலகில் மீண்டும் தோன்றச் செய்து நீ அமைதியடைய வேண்டும் என நான் உன்னை வேண்டிக் கேட்கிறேன்” என்றான் {ஸ்தாணு}”.(12)
நாரதர் {அனுகம்பகனிடம்} தொடர்ந்தார், “ஸ்தாணுவின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வாக்கு மற்றும் மனக் கட்டுப்பாடு கொண்டவனுமான தெய்வீகப் பிரம்மன், அந்தச் சக்தியைத் தன் இதயத்திற்குள்ளேயே ஒடுக்கினான்.(13) இந்த அண்டத்தை அழித்துக் கொண்டிருந்த அந்நெருப்பை ஒடுக்கிய சிறப்புமிக்கவனும், அனைவராலும் துதிக்கப்படுபவனும், எல்லையற்ற பலம் கொண்டவனுமான பிரம்மன், அதன் பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டையும் ஏற்பாடு செய்தான்.(14) சுயம்பு {பிரம்மன்} அந்நெருப்பை ஒடுக்கி விலக்கிக் கொண்ட பிறகு, கருப்பு மற்றும் சிவப்பாடைகள் உடுத்தியவளும், கரிய கண்களைக் கொண்டவளும், கரிய உள்ளங்கைகளைக் கொண்டவளும், சிறந்த காதுகுண்டலங்கள் இரண்டை அணிந்தவளும், தெய்வீக ஆபரணங்கள் சூடியவளுமாக, அவனது உடலின் அனைத்துத் துளைகளில் இருந்தும் ஒரு பெண் வெளியே வந்தாள்.(15,16) பிரம்மனின் உடலில் பிறந்த அந்தப் பெண், அவனது வலப்புறத்தில் நின்றாள்[1]. முதன்மையானவர்களான அந்த இரு தேவர்களும் {பிரம்மனும், ஸ்தாணுவும்} அவளைக் கண்டனர்.(17)அப்போது, ஓ! மன்னா{அனுகம்பகா}, பலமிக்கவனும், உலகங்கள் அனைத்திற்கும் மூல காரணனுமான சுயம்பு {பிரம்மன்} அந்தப் பெண்ணை வணங்கி அவளிடம், “ஓ! மரணமே {மிருத்யு}, இந்த அண்டத்தின் உயிரினங்களைக் கொல்வாயாக.(18) கோபத்தில் நிறைந்து, படைப்புகளுக்கு அழிவைக் கொண்டுவரும் தீர்மானத்துடனே நான் உன்னை அழைத்தேன்.[2] எனவே, மூடராகவோ கல்விமானாகவோ உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தொடங்குவாயாக.(19) ஓ! பெண்ணே, எவருக்கும் உதவுவதை {அனுகூலம் செய்வதைத்} தவிர்த்து, அனைத்து உயிரினங்களையும் கொல்வாயாக. என் ஆணையின் பேரில் பெருஞ்செழிப்பை வெல்வாயாக” என்றான்.(20)இவ்வாறு சொல்லப்பட்டவளும், தாமரை மாலையால் அலங்கரிக்கப்பட்டவளுமான அந்த மரணதேவி {மிருத்யு}, கவலையுடன் சிந்திக்கத் தொடங்கிக் கண்ணீரை அபரிமிதமாகச் சிந்தினாள்.(21) எனினும், ஓ! மன்னா {அனுகம்பகா}, அந்தக் கண்ணீர் கீழே சிந்தாமல் அதைத் கூப்பிய கரங்களில் ஏந்தினாள். பிறகு அவள், மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுச் சுயம்புவிடம் வேண்டினாள்” என்றார் {நாரதர்}.(22)
மிருத்யுவின் தவங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 258-பிரம்மனுக்கும் மிருத்யுதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்களையும், அவளது தவங்களையும், இறுதியில் உயிர்களை வதைக்க அவள் சம்மதித்த காரணத்தையும் அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்…
நாரதர் {அனுகம்பனிடம்}, “தன் சக்தியால் துயரை அடக்கியவளும், பெரிய கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண் {மிருத்யுதேவி}, ஒரு கொடியைப் போன்ற பணிவான தன்மையுடனும், கூப்பிய கரங்களுடனும் பெரும்பாட்டனை {பிரம்மனை} வணங்கி, அவனிடம் பேசினாள்.(1) அவள், “ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, உம்மிலிருந்து பிறந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணால், அனைத்து உயிரினங்களையும் பீதியில் உறையவைக்கும் இந்தப் பயங்கரச் செயலை எவ்வாறு செய்ய இயலும்?(2) சிறுகொடுமையையும் செய்ய நான் அஞ்சுகிறேன். அறப்பணியில் என்னை நியமிப்பீராக. அஞ்சியவளாக என்னை நீர் காண்கிறீர். ஓ!, என் மேல் உமது கருணைப் பார்வையைச் செலுத்துவீராக.(3) குழந்தைகள், இளைஞர்கள், முதியோரென எனக்குத் தீங்கிழைக்காத உயிரினங்களை என்னால் அழிக்க இயலாது. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன், என்னிடம் நிறைவு கொள்வீராக.(4)
அன்பு மகன்களையும், அன்புக்குரிய நண்பர்கள், சகோதரர்கள், தாய்மார் மற்றும் தந்தைமாரையும் என்னால் அழிக்க முடியாது. (என் செயலின் மூலமாக) இவர்கள் அழிய நேர்ந்தால், அவர்களது உறவினர்களில் எஞ்சியிருப்போர் என்னை நிச்சயம் சபிப்பார்கள். இத்தன்மையில் நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன்.(5) உயிரோடு எஞ்சியவர்களின் கண்ணீர் என்னைக் காலத்திற்கும் எரித்துக் கொண்டிருக்கும். அவர்களிடம் (நான் கொல்ல வேண்டியவர்களின் உறவினர்களிடம்) நான் அச்சங்கொள்கிறேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(6) (என்னால் கொல்லப்படும்) பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் நரகலோகங்களில் மூழ்க வேண்டியிருக்கும்[1]. ஓ! வரமளிக்கும் தேவா, நான் உம்மை நிறைவு செய்ய முனைகிறேன். ஓ! பலமிக்கத் தலைவா, உமது கருணையை எனக்களிப்பீராக. ஓ! உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டா, என் இந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறேன். ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உமது அருளின் மூலம் கடுந்தவங்களைச் செய்யும் அனுமதியை நான் கோருகிறேன்” என்றாள் {மிருத்யு}.(8)பெரும்பாட்டன் {பிரம்மன்}, “ஓ! மரணமே {மிருத்யு}, அனைத்து உயிரினங்களின் அழிவுக்காகவே நீ என்னால் நினைக்கப்பட்டாய். செல்வாயாக, அனைத்தையும் கொல்லும் பணியில் உன்னை நிறுவிக் கொள்வாயாக. (இந்தச் செயலின் உரிமை அல்லது பிறவற்றைக் குறித்துச்) சிந்திக்காதே.(9) இது நிச்சயம் நடக்க வேண்டும். மாறாக இருக்க முடியாது. ஓ! பாவமற்றவளே, ஓ! பழுதற்ற அங்கங்களைக் கொண்டவளே, நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவாயாக” என்றான்.(10)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகை நகரங்களைக் கைப்பற்றுபவனே {அனுகம்பகா}, மரணம் {மிருத்யு} என்றழைக்கப்படும் அந்தப் பெண் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஒருவார்த்தையும் பேசாமல் உயிரினங்கள் அனைத்தின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனை} நோக்கிய கண்களுடன் பணிவுடன் அங்கே நின்றாள்.(11) பிரம்மன் மீண்டும் மீண்டும் அவளிடம் பேசினாலும், அந்தப் பெண் உயிரற்றவளைப் போலத் தெரிந்தாள். அவளை இவ்வாறு கண்ட தேவர்களின் தேவனான அந்தத் தலைவர்களின் தலைவன் {பிரம்மன்} அமைதியடைந்தான்.(12) உண்மையில் அந்தச் சுயம்பு, தன் விருப்பத்தின் முயற்சியால் நிறைவடைந்தான். உலகங்கள் அனைத்தின் தலைவனான அவன் புன்னகைத்தபடியே அண்டத்தில் தன் கண்களைச் செலுத்தினான்.(13) வெல்லப்பட முடியாதவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தேவன் தன் கோபத்தை அடக்கிய போது, (மரணம் என்றழைக்கப்பட்ட) அந்தப் பெண் அவனருகில் இருந்து சென்றுவிட்டாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(14) ஓ! மன்னா, உயிரினங்களை அழிப்பதாக உறுதிகூறாமலேயே பிரம்மனிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற மரணம் {மிருத்யு}, தேணுகம்[2] என்றழைக்கப்படும் ஒரு புனிதத்தலத்துக்குச் சென்றாள். அங்கே அந்தத் தேவி ஒற்றைக் காலில் நின்று கொண்டு ஆயிரத்தைநூறு கோடி ஆண்டுகளுக்குக் கடுந்தவத்தைப் பயின்றாள்[3].(16)அவ்விடத்தில் இத்தகைய கடுந்தவத்தைப் பயின்றபிறகு, பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் மீண்டும் அவளிடம்,(17) “ஓ! மரணமே, என் ஆணையை நிறைவேற்றுவாயாக” என்றான். அவனது {பிரம்மனது} கட்டளையை அலட்சியம் செய்த அந்தப் பெண், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மீண்டும் ஒற்றைக் காலில் நின்றபடியே இரண்டாயிரம் கோடி வருடங்கள் கடுந்தவம் இருந்தாள். ஓ! மகனே {அனுகம்பகா}, பிறகு அவள் பத்து லட்சம் கோடி வருடங்கள் அடங்கிய நீண்ட காலத்திற்கு மான்களோடு {விலங்குகளோடு விலங்காகக்} காட்டில் வாழ்ந்து வந்தாள்[4].(18,19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அனுகம்பகா}, மீண்டும் அவள் இருபதாயிரம் வருடங்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தாள். ஓ! ஏகாதிபதி, பிறகு அவள் எட்டாயிரம் வருடங்கள் முழுமையாக நீரில் கழித்தபடியே சிறந்த அமைதி நோன்பை நோற்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {அனுகம்பகா}, அதன்பிறகு அந்தக் கன்னிகை {மிருத்யு} கௌசிகி ஆற்றுக்குச் சென்றாள்.(20,21) அங்கே நீர் மற்றும் காற்றை மட்டுமே உண்டபடி மற்றொரு நோன்பை நோற்று தன் நாட்களைக் கடத்தினாள். ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அந்த அருள்நிறைந்த கன்னிகை {மிருத்யு}, கங்கைக்கும், அதன் பிறகு மேரு மலைக்கும் சென்றாள்.(22) அங்கே அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தோடு ஒரு மரத்துண்டைப் போல முற்றிலும் அசையாத நிலையில் நின்றாள். அதன் பிறகு, தேவர்கள் பெருவேள்வி செய்யும் இமயச் சிகரத்திற்குச் சென்ற அவள், கடுந்தவத்தின் மூலம் பெரும்பாட்டனை {பிரம்மனை} நிறைவு செய்யும் நோக்குடன், தன் காலின் கட்டைவிரலால் மட்டுமே தன் கனத்தைத் தாங்கியபடி பத்தாயிரம் கோடி வருடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.(24)அண்டத்தைப் படைத்து அழிப்பவன் {பிரம்மன்} அங்கே சென்று மீண்டும் அவளிடம், “ஓ! மகளே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என் வார்த்தைகளை நிறைவேற்றுவாயாக” என்றான்.(25)
மீண்டும் அந்தக் கன்னிகை {மிருத்யு} பெரும்பாட்டனிடம், “ஓ! தேவா, நான் உயிரினங்களைக் கொல்லவல்லவள் அல்ல. (இந்தக் கட்டளையில் இருந்து தப்பும் வகையில்) நான் உம்மை நிறைவு செய்யவே முனைகிறேன்” என்றாள்.(26)
கொடுந்தன்மையில் அச்சமடைந்தவளாகவும், பெரும்பாட்டனின் ஆணையில் இருந்து தப்ப அவனை வேண்டிக் கொண்டிருந்தவளுமான அந்தப் பெண்ணை அமைதியடையச் செய்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, மீண்டும் அவளிடம்,(27) “ஓ! மரணமே {மிருத்யு}, எக்கொடுமையும் உனதாகாது. ஓ! மங்கலக் கன்னியே, உயிரினங்களை அழிக்கும் பணியில் உன்னை நீ நிறுவிக் கொள்வாயாக. ஓ! இனிய பெண்ணே, நான் சொன்னது நிச்சயம் பொய்யாகாது.(28) இப்போது நித்திய அறம் உன்னைப் புகலிடமாகக் கொள்ளட்டும். நானும் தேவர்கள் அனைவரும் உன் நன்மையை நாடுவதிலேயே எப்போதும் ஈடுபட்டிருப்போம்.(29) உன் இதயத்தில் உள்ள மற்றொரு விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். வாழும் உயிரினங்கள் நோயால் பீடிக்கப்படும், (அவ்வாறு இறப்பவர்கள்) உன்னைப் பழி சொல்ல முடியாது.(30) நீ ஆண்களில் ஆணாகவும், பெண்களில் பெண்ணாகவும், அலியில் அலியாகவும் இருப்பாயாக” என்றான்[5].(31)ஓ! மன்னா {அனுகம்பகா}, இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை உயர் ஆன்மாவும், தேவர்கள் அனைவரின் அழிவில்லாத் தலைவனுமானவனிடம் இறுதியில் கூப்பிய கரங்களுடன், “நான் உமது கட்டளைக்குக் கீழ்ப்படிய இயலாதவளாக இருக்கிறேன்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(32)
அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, மனம் இரங்காமல், மீண்டும் அவளிடம், “ஓ! மரணமே {மிருத்யு} மனிதர்களைக் கொல்வாயாக.(33) ஓ! மங்கலப் பெண்ணே, இதனால் நீ எக்கொடுமையையும் ஈட்டாத வகையில் நான் விதிப்பேன். கூப்பிய உன் கரங்களுக்குள் நீ இன்னும் ஏந்திக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணீர் துளிகள் பயங்க நோய்களின் வடிவை ஏற்று, காலம் நேர்கையில் அவையே மனிதர்களை அழிக்கும்.(34) உயிரினங்களுக்கு முடிவு நேரும்போது, நீ அவற்றிடம் இருக்கும் ஆசை மற்றும் கோபத்தை விரட்டுவாய். அளவிலாத் தகுதி {புண்ணியம்} உனதாகும். முற்றிலும் பாகுபாடற்ற ஒழுக்கம் கொண்ட நீ எந்தக் கொடுமையையும் {பாவத்தையும்} ஈட்டமாட்டாய்.(35) இதைச் செய்வதன் மூலம் நீ கொடுமையில் மூழ்காமல் அறம் மட்டுமே நோற்றவளாவாய். எனவே, ஆசை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உயிரினங்களைக் கொல்லத் தொடங்கி, உன் பணியில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக” என்றான்.(36)
இவ்வாறு சொல்லப்பட்டவளும், மரணம் {மிருத்யு} என்ற பெயரில் அழைக்கப்படுபவளுமான அந்தப் பெண், பிரம்மனின் சாபத்திற்கு அஞ்சி, “சரி!” என்று அவனுக்குப் பதிலளித்தாள். அக்காலத்தில் இருந்து அவள், உயிரினங்களின் இறுதிக் காலத்தில் ஆசை மற்றும் கோபத்தை விரட்டத் தொடங்கி, அதன் மூலம் அவற்றின் உயிர்மூச்சை நிறுத்தினாள்.(37) மரணம் சிந்திய கண்ணீரே மனிதர்களின் உடலைப் பீடிக்கும் நோய்களாயிற்று. எனவே, உயிரினங்கள் அழியும்போது ஒருவன், புத்தியின் துணையுடன் இதைப் புரிந்து கொண்டு, துன்பவசப்படாமல் இருக்க வேண்டும்.(38) ஓ! மன்னர்களில் சிங்கமே! அனைத்து உயிரினங்களும் கனவுகளற்ற உறக்கத்தில் புலன்கள் மறைந்து, விழிப்புநிலையில் மீண்டும் தோன்றுவதைப் போலவே அவற்றின் உடல்களின் அழிவில், அவை மறு உலகத்திற்குச் சென்று மீண்டும் இங்கே திரும்ப வேண்டிருக்கிறது.(39) பயங்கர சக்தி, வலிமையான ஆற்றல் மற்றும் செவிடாகச் செய்யும் முழக்கம் ஆகியவற்றைக் கொண்ட காற்று {வாயு} என அழைக்கப்படும் பூதமே, அனைத்து உயிரினங்களிலும் உயிராக இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களின் உடல்கள் அழியும்போது, பழைய உடலில் இருந்து தப்பும் அந்தக் காற்று {வாயு} பல்வேறு புதிய உடல்களில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இதன் காரணமாகவே காற்றானது {வாயுவானது}, திரள் உடலில் அமைந்துள்ள பிற பூதங்களில் இருந்து வேறுபட்டு புலன்களின் தலைவனாக அழைக்கப்படுகிறது.(40) தேவர்களும் கூடத் தகுதிகள் {புண்ணியங்கள்} தீரும்போது) பூமியில் அழியத்தக்க {இறப்புடைய} உயிரினங்களாகப் பிறப்பை எடுக்கின்றனர். அதே போலவே அழியத்தக்க உயிரினங்களும் கூட (போதிய தகுதியை {புண்ணியத்தை} அடையும்போது) தேவர்களின் நிலையை அடைவதில் வெல்கின்றன. எனவே, ஓ! மன்னர்களில் சிங்கமே {அனுகம்பகா}, உன் மகனுக்காக வருந்தாதே. உன் மகன் சொர்க்கத்தை அடைந்து, அங்கே பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.(41) ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, இவ்வாறே சுயம்புவால் மரணம் {மிருத்யு} படைக்கப்பட்டாள், மேலும் இவ்வழியிலேயே அவள் உயிரினங்களின் காலம் முடிவுக்கு வரும் வேளையில் அவை அனைத்தையும் முறையாக அழிக்கிறாள். அவள் சிந்திய கண்ணீரே நோய்களாகி, உயிரினங்களின் இறுதி வேளை வரும்போது அவை அனைத்தையும் அபகரித்துச் செல்கிறாள்” என்றார் {நாரதர்}”.(42)
தர்மலக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 259-நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள், நன்னோக்கம், களவு செய்யாமை, தீங்கிழையாமை, ஈகை முதலியவையே அறத்தின் குறியீடுகளென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இந்தப் பூமியில் வசிக்கும் மனிதர்கள் அனைவரும், அறத்தின் {தர்மத்தின்} இயல்பு குறித்த ஐயங்களால் நிறைந்திருக்கின்றனர். அறம் என்றழைக்கப்படும் இஃது என்ன? அறம் எங்கிருந்து வந்தது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) அறம் இவ்வுலகத் தொண்டுக்குரியதா? மறுமைக்கான தொண்டுக்குரியதா? அல்லது இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிற்குமான தொண்டுக்குரியதா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள் ஆகிய இம்மூன்றும் அறத்தின் (மூலக்) குறியீடுகளாகும். இவை தவிர, கல்விமான்கள் (ஒரு செயலை நிறைவேற்றும்) நோக்கத்தை நான்காவதாக {மூலக் குறியீடாக} அறிவித்திருக்கிறார்கள்.(3) பழங்காலத்தின் முனிவர்கள் எவை அறச்செயல்கள் என்பதை அறிவித்து, தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில் அவற்றை மேன்மையானவை, தாழ்ந்தவை என்றும் வகுத்திருக்கிறார்கள். உலகக் காரியங்களின் ஒழுங்கிற்காகவே அறவிதிக்ள விதிக்கப்பட்டுள்ளன.(4) இம்மை மற்றும் மறுமை என்ற ஈருலகங்களிலும் அறமானது மகிழ்ச்சியையே தன் கனியாக விளைவிக்கிறது. நுட்பமான வழிகள் மூலம் தகுதியை {புண்ணியத்தை} அடைய இயலாத பாவம்நிறைந்த மனிதர்கள், பாவத்தால் மட்டுமே களங்கமடைகிறார்கள்.(5)
பாவிகளைத் தங்கள் பாவங்களில் இருந்து ஒருபோதும் தூய்மைப்படுத்த முடியாது என்ற கருத்தைச் சிலர் கொண்டுள்ளனர். அறமற்ற செயலைச் செய்தும், அதே வழிமுறையின் மூலம் அறச்செயலுக்கான தகுதியை ஒருவன் அடைவதைப் போலவே, ஆபத்துக் காலங்களில் பொய் பேசும் ஒருவன், மெய் பேசும் ஒருவனின் தகுதியை அடைகிறான். ஒழுக்கமே அறத்தின் புகலிடமாகும். ஒழுக்கத்தின் துணையுடன் கூடிய அறம் யாது என்பதை நீ அறிய வேண்டும்.(6) (தன் களங்கங்களைக் காணாமலும், அறிவிக்காமலும், பிறரின் களங்கங்களை அறிவிப்பது மனிதனின் இயல்பாகும்). {மறைமுகமாகப்} பிறருக்கு உடைமையானவற்றைக் களவு செய்யும் கள்வன், தன் களவால் உண்டான பயன்களை வெளிப்படையான அறச்செயல்களுக்குச் செலவிடுகிறான். அரசற்ற காலத்தில் பிறர் உடைமைகளை அபகரிப்பதில் அக்கள்வன் பேரின்பம் கொள்கிறான்.(7) எனினும், களவின் மூலம் தான் அடைந்ததைப் பிறர் களவாடும்போது, அவனே (அக்குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க) ஒரு மன்னனை விரும்புகிறான். உடைமையின் உரிமையில் குற்றமிழைக்கப்பட்டதாகப் பெரிய அளவில் உளக் கொதிப்படையும் அத்தகைய வேளையிலும் கூட, தங்கள் உடைமைகளில் நிறைவுடன் வாழ்வோரின் செல்வத்தில் அவனே ரகசியமாகப் பேராசை கொள்கிறான்.(8) (தானே களவால் பாதிப்படைந்தவனாக இருக்கும்போதும்) அவன், அச்சமில்லாமலும், தன் மனத்தில் எந்த ஐயமும் இல்லாமலும், பாவம் அனைத்தும் கழுவப்பட்ட மனத்துடன் மன்னனின் அரண்மனைக்குச் செல்கிறான். அவன் எந்தப் பாவச்செயலின் களங்கத்தையும் தன் இதயத்திற்குள் காண்பதில்லை.(9) உண்மை பேசுவதே தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}. வாய்மையைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வாய்மையாலேயே அனைத்தும் தாங்கப்படுகின்றன, அனைத்தும் வாய்மையையே சார்ந்திருக்கின்றன.(10)
பாவம் நிறைந்த கொடியவர்கள் கூட, தங்களுக்குள் உண்மையை {சத்தியத்தைக்} காக்க உறுதிபூண்டு, அனைத்து வகைச் சச்சரவுகளையும் புறந்தள்ளி, ஒற்றுமையடைந்து வாய்மை சார்ந்து தங்கள் (பாவச்) செயல்களில் தங்களை நிறுவிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் போலியாக நடந்து கொண்டால், நிச்சயம் அவர்கள் அழிவையே அடைவார்கள்.(11) பிறருக்குச் சொந்தமானதை ஒருவன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. இஃது ஒரு நித்தியக் கடப்பாடாகும். இது பலவீனரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என வலிய மனிதர்கள் கருதுகிறார்கள்.(12) எனினும், இம்மனிதர்களின் விதி எதிராக மாறும்போது, இந்தத் தடையாணை அவர்களது அங்கீகாரத்தைப் பெறுகிறது. மேலும் பலத்திலோ, ஆற்றலிலோ பிறரை விஞ்சி நிற்போர் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(13) எனவே, நீ எந்தத் தீய செயலிலும் ஒருபோதும் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே. இவ்வழியில் நடந்து கொள்பவனுக்கு நேர்மையற்ற மனிதர்களிடமோ, கள்வர்களிடமோ, மன்னனிடமோ அச்சமேதும் ஏற்படுவதில்லை. எவருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதன் தூய இதயத்துடன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(14) காட்டில் இருந்து வசிப்பாரற்ற ஒரு கிராமத்திற்கு விரட்டப்பட்ட மானைப் போலவே ஒரு கள்வன் அனைவரையும் {கண்டு} அஞ்சுவான். அவன் பிற மக்களையும் தன்னைப் போலப் பாவிகளாகவே நினைக்கிறான்.(15)
தூய இதயம் கொண்ட ஒருவன் எப்போதும் உற்சாகத்தில் நிறைந்தவனாக எத்திக்கிலும் அச்சமில்லாதவனாக இருப்பான். அத்தகையவன் ஒருபோதும் தன் ஒழுங்கீனத்தைப் பிறரிடம் காணமாட்டான்[2].(16) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடுவோர், ஈகை பயில்வதும் மற்றொரு உயர்ந்த கடமையெனச் சொல்லியிருக்கின்றனர். செல்வம் படைத்தோர், வறியவர்களே இந்தக் கடமையை விதித்திருக்கின்றனர் என நினைக்கிறார்கள்.(17) எனினும், அந்தச் செல்வந்தர்களின் ஊழில் திருப்பம் நேர்வதன் விளைவால் வறுமையைச் சந்திக்கும்போது ஈகை பயிற்சியானது தன்னை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறது. மிகப் பெரும் செல்வந்தர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(18) இஃது எவ்வளவு வலியைத் தரவல்லது என்பதையறிந்த ஒருவன், பிறர் தனக்கு இழைக்கும் போது விரும்பாத எதையும் ஒருபோதும் பிறனுக்கு இழைக்கக்கூடாது.(19) மாற்றான் மனைவியை விரும்பும் {காதலிக்கும்} ஒருவனால், (அதே வரம்புமீறலைச் செய்யும்) வேறொருவனுக்கு என்ன சொல்ல முடியும்? {அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?}. எனினும், அத்தகைய மனிதனும்கூடத் தன் மனைவியை மற்றொரு காதலனுடன் காணும்போது, அச்செயலை மன்னிக்க இயலாததைக் காணமுடிகிறது[3].(20)மூச்சு விட வேண்டும் என விரும்பும் ஒருவன், அதே செயலைச் செய்யும் மற்றொருவனை ஒரு கொலைபாதகச் செயலின் மூலம் எவ்வாறு தடுக்க நினைக்கலாம்?[4] ஒருவன் எதை எதைத் தனக்கு விரும்புவானோ, அவற்றை நிச்சயம் அடுத்தவருக்கும் விரும்ப வேண்டும்.(21) ஒருவன் தான் உடைமையாகக் கொண்டுள்ள அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு, வறியோரின் தேவைகளில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதன் காரணமாகவே (வணிகம் அல்லது வட்டிக்கு விடுதல் ஆகியவற்றின் மூலம்) ஒருவனுடைய செல்வத்தைப் பெருக்கும் நடைமுறையைப் படைப்பாளன் ஏற்படுத்தினான்.(22) ஒருவன் எவ்வழியில் நடந்தால் தேவர்களைச் சந்திப்பான் என்று நம்புவானோ அவ்வழியிலேயே நடக்க வேண்டும்; அல்லது செல்வம் ஈட்டப்படும் வேளைகளில், வேள்வி மற்றும் கொடை முதலிய கடமைகளைப் பின்பற்றுவது மெச்சத்தகுந்ததாகும்[5].(23)ஏற்புடைய (அமைதியான) வழிமுறைகளின் மூலம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதே அறம் எனத் தவசிகள் சொல்லியிருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, அறம் மற்றும் மறத்தின் {அநீதியின்} குறியீடுகளைத் தீர்மானிப்பதில் இதுவே நோக்கில் கொள்ளப்படும் அடிப்படைத் தத்துவம் என்பதைக் காண்பாயாக.(24) பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, உலகை ஒன்றாகத் தாங்கிக் கொள்ளும் ஊட்ட சக்தியுடன் அறத்தை {தர்மத்தை} ஏற்படுத்தினான். சிறப்புகள் நிறைந்த நல்லோரின் ஒழுக்கமானது, நுட்பமான பல கருத்துகளைச் சார்ந்த அறத்தை அடைவதற்கு (எண்ணற்ற) நலம்தரும் கட்டுப்பாடுகளைக் கொண்டதாகும்.(25) ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அறத்தின் குறியீடுகளே உனக்கு இப்போது மீண்டும் சொல்லப்பட்டது. எனவே, ஒருபோதும் நீ உன் புத்தியைத் தீச்செயலில் நிலைக்கச் செய்யாதே” என்றார் {பீஷ்மர்}.(26)
தர்மபிரமாணாக்ஷேபணை! – சாந்திபர்வம் பகுதி – 260-ஷ்மர் சொன்ன அறம் நிர்ணயிக்கும் வழிமுறைகளில் தன் மறுப்பைத் தெரிவித்த யுதிஷ்டிரன் …
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறம் அல்லது கடமை என்பது நுட்பமான கருத்துகளைச் சார்ந்தது என்றும், நல்லோர் என்றழைக்கப்படுவோரின் ஒழுக்கத்தால் குறிப்பிடப்படுகிறது என்றும், (எண்ணற்ற செயல்களில்) நலம் தரும் கட்டுப்பாடுகள் நிறைந்ததென்றும், அதன் குறியீடுகளை வேதங்களும் கொண்டிருக்கின்றன என்றும் நீர் சொல்கிறீர். எனினும், சரியான மற்றும் தவறான காரியங்களை உள்ளுணர்வின் மூலம் பகுத்தறிவதன் விளைவால் நிச்சயமாக நான் உள்ளொளியைக் கொண்டிருக்கிறேன் என்றே எனக்குப் படுகிறது[1].(1) நான் கேட்க நினைத்த எண்ணற்ற கேள்விகள் அனைத்திற்கும் நீர் பதிலளித்திருக்கிறீர். எனினும், தற்போதும் உம்மிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஓ! மன்னா {பீஷ்மரே}, வெற்றுச் சச்சரவு செய்யும் விருப்பத்தால் அது {அக்கேள்வி} தூண்டப்பட்டதில்லை.(2) உடல்படைத்த இந்த உயிரினங்கள் அனைத்தும், தங்கள் இயல்பிலேயே பிறப்பை அடைந்து, {சிறிது காலம்} நிலைத்திருந்து, உடல்களை விடுவதாகத் தெரிகிறது. எனவே, ஓ! பாரதரே, கடமையையும் அதற்கு முரணானதையும் {அறம் மற்றும் மறம் ஆகியவற்றை}, சாத்திரக் கல்வியால் மட்டுமே உறுதி செய்ய முடியாது[2].(3) நல்ல நிலையில் உள்ள ஒருவனின் கடமைகள் ஒரு வகையானவை. துயரில் வீழ்ந்த ஒருவனின் கடமைகளோ மற்றொரு வகையிலானவை. துயர்மிக்கக் காலங்களைப் பொறுத்தவரையில் சாத்திரங்களைப் படிப்பதால் மட்டுமே கடமையை {அறத்தை} எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?[3](4)நல்லோரின் செயல்கள் அறம் (அல்லது கடமையைக்) கொண்டவை என்று நீர் சொல்கிறீர். எனினும், நல்லோரை அவர்களின் செயல்களாலேயே உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது. எனவே, நல்லோரின் ஒழுக்கம் யாது என்ற கேள்விக்கு, அது தீர்மானிக்கப்பட முடியாது என்ற முடிவின் அடிப்படையிலேயே இவ்விளக்கம் இருக்கிறது.(5) சில சாதாரண மனிதர்கள் அறமற்ற செயலைச் செய்தாலும் வெளிப்படையாக அறமீட்டுவதைக் காண முடிகிறது. மேலும் இயல்புக்கு மீறிய சில மனிதர்கள் வெளிப்படையாக அறமற்ற செயல்களைச் செய்வதன் மூலம் அறமீட்டுவதையும் காணமுடிகிறது[4].(6) மேலும் (நான் சொல்வதற்கு) ஆதாரமாகச் சாத்திரத்தை நன்கறிந்தோரே சான்று பகர்கின்றனர். ஏனெனில், அடுத்தடுத்த ஒவ்வொரு யுகத்திலும் வேத விதிகள் படிப்படியாக மறைகின்றன என்று நாம் கேள்விப்படுகிறோம்.(7) கிருத யுகத்தின் கடமைகள் ஒருவகையானவை. திரேதா யுகத்தின் கடமைகள் மற்றொரு வகையிலானவே, துவாபர யுகத்திற்கானவை மேலும் வேறுபட்டவை. கலியுகத்தின் கடமைகளோ முற்றிலும் வேறொரு வகையிலானவை. எனவே, ஒவ்வொரு யுகத்தின் கடமைகளும், ஒவ்வொரு யுக மனிதர்கள் கொண்ட சக்தியின்படியே விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(8)எனவே, வேத தீர்மானங்கள் அனைத்தும், அனைத்து யுகங்களுக்கும் சமமான அளவில் பொருந்தாதபோது, வேத தீர்மானங்கள் உண்மையானவை என்ற சொலவடையானது வெகுமக்கள் நிறைவுக்காகச் சொல்லப்படும் பிரபல பேச்சுவடிவமாக மட்டுமே இருக்கிறது. ஸ்ருதிகளில் இருந்து தோன்றிய ஸ்மிருதிகளின் எல்லையும் மிக விரிவானதாக இருக்கிறது.(9) வேதங்களே அனைத்திற்குமான அதிகாரமெனில், அந்த அதிகாரம் ஸ்ருதியின் அடிப்படையிலான ஸ்மிருதிகளுக்கும் பொருந்தும். எனினும், ஸ்ருதிகளும், ஸ்மிருதிகளும் முரண்படும் போது அவை இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவையாக இருக்க முடியும்?(10) மேலும், பெரும் வலிமை கொண்ட சில தீய மனிதர்கள், குறிப்பிட்ட அறச்செயல்களின் குறிப்பிட்ட நடைமுறை பகுதிகளை நிறுத்திவிட்டால் இவை என்றைக்கும் அழிந்து போகும்[5].(11) நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும், உறுதி செய்தாலும் உறுதி செய்யாவிட்டாலும் கடமையின் வழியானது கத்தியின் முனையைவிடக் கூர்மையானதாகவும், மலையை விடவும் திரளானதாகவும் இருக்கிறது.(12)(வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் வடிவில் உள்ள) அறமானது தொலைவானில் காணப்படும் நீராவியாலான நயமிக்க மாளிகையின் வடிவில் முதலில் தோன்றுகிறது. எனினும், கல்விமான்களால் ஆய்வு செய்யப்படும்போது அது புலப்படாமல் மறைந்துபோகிறது[6].(13) கால்நடைகள் நீரருந்தும் சிறு குட்டைகள், அல்லது விளைநிலங்களோடு உள்ள ஆழமற்ற வாய்க்கால்கள் வெகுவிரைவில் வற்றிவிடுவதைப் போல, ஸ்மிருதிகளில் குறிப்பிடப்படும் நித்திய நடைமுறைகளும் தொடர்பறுந்தவையாக (கலியுகத்தில்) மொத்தமாக மறைந்து போகின்றன.(14) நல்லோருக்கு மத்தியிலும் சிலர் ஆசையின் தூண்டுதலின் பேரில் (ஆறமீட்டுவதற்காகத்} துன்புறுவதன் மூலம் கபடதாரிகளாகக் காணப்படுகின்றனர். மேலும் சிலர் பிறரின் ஆசைகளால் தூண்டப்படுகின்றனர். எண்ணிக்கையில் பலராக இருக்கும் வேறு சிலரும், அதே வகையிலான பல்வேறு நோக்கங்கள் பிறவற்றின் ஆதிக்கத்தால் அதே வழியிலேயே நடக்கின்றனர்[7].(15) (தீய ஆசைகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள மனிதர்களால் செய்யப்பட்டாலும்) அத்தகைய செயல்கள் அறமே என்பதை மறுக்க முடியாது. மேலும், நல்லோர் என்றழைக்கப்படுவோருக்கும் மத்தியில் ஒலிக்கும் வெற்றொலியே அறமென மூடர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அத்தகைய மனிதர்களைக் கேலி செய்து, அவர்களை அறிவற்றவர்களாகவே கருதுகிறார்கள்.(16)மேலும், பெரிய மனிதர்கள் பலர், (தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து) நடைபிறழ்ந்து அரச வகைக்கான கடமைகளைச் செய்கின்றனர். எனவே, (எந்த மனிதனும் பின்பற்றும்) உலகளாவிய நன்மை நிறைந்த எந்த ஒழுக்கமும் காணப்படவில்லை[8].(17) குறிப்பிட்ட ஓர் ஒழுக்க வழிமுறையின் மூலம் ஒருவன் உண்மையிலேயே தகுதிவாய்ந்தவனாகிறான். அதே ஒழுக்க வழிமுறையானது, மற்றொருவன் அறமீட்டுவதைத் தடை செய்கிறது. அவ்வொழுக்கத்தைத் தன் விருப்பப்படி பயிலும் மற்றொருவன் மாறாமல் அப்படியே இருப்பதும் காணப்படுகிறது[9].(18) எனவே எந்த ஒழுக்கத்தின் மூலம் ஒருவன் தகுதிவாய்ந்தவனாகிறானோ அதுவே மற்றொருவன் அறமீட்டுவதைத் தடுக்கிறது. இவ்வாறே ஒழுக்க நடைமுறைகள் அனைத்தும் காரியத்திலும், தன்மையிலும் தங்கள் தனித்தன்மையை இழப்பதைக் காணமுடிகிறது.(19) எனவே, பழங்காலத்தின் கல்விமான்களால் அறமென அழைக்கப்பட்டதே இந்த நாள் வரை அறமாக இருக்கிறது; (கல்விமான்களால் தீர்மானிக்கப்பட்ட) அந்த ஒழுக்க நடைமுறையின் மூலம் (உலகத்தை ஆளும்) வேறுபாடுகளும், வரம்புகளும் நிலைத்தவையாகிவிட்டன[10]” என்றான் {யுதிஷ்டிரன்}.(20)
ஜாஜலியும் துலாதாரனும்! – சாந்திபர்வம் பகுதி – 261-அறமீட்டல் அல்லது தகுதியடைதல் குறித்த யுதிஷ்டிரனின் ஐயத்திற்கு விடையளிப்பதற்காக தவசி ஜாஜலி மற்றும் வணிகன் துலாதாரனின் கதையைச் சொன்ன பீஷ்மர்; ஜாஜலி செய்த கடுந்தவங்கள்; அவரது தலையில் குருவிகள் கட்டிய கூடு; செருக்கடைந்த ஜாஜலி; வணிகனான துலாதாரனின் பெருமையை ஜாஜலிக்குச் சொன்ன வானொலி; கோபமடைந்த ஜாஜலி துலாதாரனைத் தேடிச் சென்றது; ஜாஜலியின் வரவை அறிந்த துலாதாரன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதுதொடர்பாகப் பழங்கதையில் துலாதாரனுக்கும், ஜாஜலிக்கும் இடையில் அறக்காரியம் குறித்து நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காட்டில், ஜாஜலி என்ற பெயரைக் கொண்டவரும், காட்டுத் துறவின் {வானப்பிரஸ்த வாழ்வுமுறையின்} வழிகளைப் பயின்று வந்தவருமான ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1) கடுந்தவங்களைக் கொண்ட அவர், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கடற்கரையை நோக்கிச் சென்று அங்கே மிகக் கடுமையான தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(2) பல நோன்புகளையும், நலந்தரும் கட்டுப்பாடுகளையும் நோற்றவரும், உபவாச விதிகள் பலவற்றால் ஒழுங்கமைக்கப்பட்ட உணவைக் கொள்பவரும், மரவுரி மறும் தோல்களை உடுத்திய உடலைக் கொண்டவரும், தலையில் சடாமுடி தரித்தவரும், உடல் முழுவதும் புழுதியாலும், களிமண்ணாலும் பூசப்பட்டவரும், புத்திமானுமான அந்தப் பிராமணர் {ஜாஜலி}, (தியான யோகத்தில் ஈடுபட்டபடியே) பேச்சை நிறுத்தி {மௌன விரதத்துடன்} பல வருங்களை அங்கே கடத்தி வந்தார்.(3) ஓ! ஏகாதிபதி, பெருஞ்சக்தியைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர், (கடலின்) நீருக்குள் வசித்து வந்த போது, அனைத்துப் பொருட்களையும் காணும் விருப்பத்தால் மனோவேகத்தில் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தார்.(4) கடலால் சூழப்பட்டதும், ஆறுகள், தடாகங்கள், காடுகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான மொத்த பூமியையும் கண்ட பிறகு ஒருநாள், அந்தத் தவசி நீருக்கடியில் அமர்ந்தபடியே இவ்வகையில் நினைக்கத் தொடங்கினார்.(5)
{அவர் தமக்குள்ளேயே}, “அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகில் எனக்கு இணையாக ஒருவரும் இல்லை. ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு மத்தியில் என்னுடன் உலவவும், நீருக்கடியில் வசிக்கவும் எவரால் முடியும்?” {என்று நினைத்தார்}.(6) ராட்சசர்களால் காணப்படாதவாறு அவர் தமக்குக்குள் இதை மீண்டும் சொல்லிக் கொண்டபோது, பிசாசங்கள் அவரிடம், “இவ்வாறு சொல்வது உமக்குத் தகாது. பெரும் புகழைக் கொண்டவனும், வாங்கி விற்கும் வணிகத்தில் ஈடுபடுபவனும், துலாதாரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மனிதன் {வாராணசியில்} இருக்கிறான். ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவனே கூட நீர் சொன்ன வார்த்தைகளைச் சொல்லத் தகுந்தவனல்ல” என்றன.(8) அந்தப் பூதங்களால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவருமான ஜாஜலி அவற்றிடம், “அத்தகைய ஞானம் கொண்டவனும், புகழ்பெற்றவனுமான துலாதாரனை நான் காண வேண்டும்” என்றார்.(9) அந்த முனிவர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்தப் பூதங்கள் அவரைக் கடலில் இருந்து உயர்த்தி, அவரிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தச் சாலைவழியே செல்வீராக” என்றன.(10) இவ்வாறு அந்தப் பூதங்களால் சொல்லப்பட்ட ஜாஜலி, உற்சாகமற்ற இதயத்துடன் முன்னேறிச் சென்றார். வாராணசியை அடைந்த அவர், துலாதாரனைச் சந்தித்துப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(11)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஜாஜலி அத்தகைய உயர்ந்த வெற்றியை அடைவதற்குக் காரணமான அந்தக் கடினமான சாதனைகள் என்னென்ன? அவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஜாஜலி கடுந்தவங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் காலையிலும் மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.(13) தன் நெருப்புகளை {ஹோமத்தீயைக்} கவனமாக வளர்த்த அவர், வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்தார். வானப்பிரஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நன்கறிந்தவரான ஜாஜலி, (தமது நடைமுறைகளின் விளைவாக) பிரகாசத்துடன் சுடர்விடுபவராகத் தெரிந்தார்.(14) அவர் தவங்களைச் செய்தபடியே காடுகளில் வாழ்ந்து வந்தார். தமது செயல்களின் மூலம் எந்தத் தகுதியையும் அடைந்தவராகத் தம்மை ஒருபோதும் அவர் கருதிக் கொண்டதில்லை. மழைக்காலங்களில் அவர் திறந்த வானத்துக்கு அடியிலேயே உறங்கினார். கூதிர் காலத்தில் அவர் நீரில் அமர்ந்திருந்தார்.(15) கோடை காலத்தில் அவர் தம்மைச் சூரியனுக்கும், காற்றுக்கும் வெளிப்படுத்திக் கொண்டார். எனினும் அத்தகைய செயல்களின் மூலமும் எந்தத் தகுதியையும் ஈட்டிவிட்டதாக அவர் ஒருபோதும் கருதியதில்லை. அவர் துன்பம் மிகுந்த பல்வேறு வகைப் படுக்கையிலும், வெறுந்தரையிலும் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.(16)
ஒரு மழைக்காலத்தில் அவர் வானத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தபோது, அவரது தலையில் மேகங்களில் இருந்து தொடர்ச்சியாக மழைத்துளிகள் விழுந்தன.(17) அவர் காடுகளின் ஊடாக மீண்டும் மீண்டும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. மழைக்கு வெளிப்பட்டதாலும், புழுதியடைந்ததாலும் அந்தப் பாவமற்ற முனிவரின் மயிர்கள் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டு சடைபிடித்தன.(18) ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெருந்தவசி உணவை முற்றும் துறந்து, காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து, ஒரு மரக்கட்டையைப் போலக் காட்டில் நின்று கொண்டிருந்தார். அவர், இதயத்தில் அசைவற்றவராகவும், ஓர் அங்குலமும் ஒரு முறை கூட நகராதவராகவும் அங்கே நின்று கொண்டிருந்தார்.(19) அவர் ஒரு மரக்கட்டையைப் போல முற்றிலும் அசையாமல் நின்று கொண்டிருந்தபோது, ஓ! பாரதா, ஓ! மன்னா, குளிங்கப் பறவைகளின் {சிட்டுக்குருவிகளின்} ஒரு ஜோடி அவரது {ஜாஜலி} தலையில் தங்கள் கூட்டைக் கட்டின.(20) கருணையால் நிறைந்த அந்தப் பெரும் முனிவர் {ஜாஜலி}, இறகு படைத்தவையான அந்த ஜோடி புற்கற்றைகளாலான தங்கள் கூட்டை அவரது சடாமுடியில் கட்டியதைப் பொறுத்துக் கொண்டார்.(21) அந்தத் தவசி மரக்கட்டை போல அங்கே நின்று கொண்டிருக்கையில், அந்த இரு பறவைகளும் முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக அவரது தலையில் வாழ்ந்து வந்தன.(22)
மழைக்காலம் முடிந்து கூதிர் காலம் தொடங்கியது. ஓ! மன்னா, ஆசையால் தூண்டப்பட்ட அந்த ஜோடி, படைப்பாளனின் விதிக்கிணங்க ஒன்றையொன்று அணுகி, முழு நம்பிக்கையுடன் தங்கள் முட்டைகளை அந்த முனிவரின் தலையில் இட்டன.(23) கடும் நோன்புகளையும் சக்தியையும் கொண்ட அந்தத் தவசி இஃதை அறிந்தார். பறவைகளின் இச்செயலை அறிந்த ஜாஜலி அசையாமலேயே இருந்தார். பிறருக்கு சிறு தீங்கையும் இழைக்கும் எந்தச் செயலையும் செய்யாமல் அறமீட்டுவதில் அவர் உறுதி பூண்டார்.(24) ஓ! பலமிக்க மன்னா, இறகுபடைத்த அந்த ஜோடி, ஒவ்வொரு நாளும் அவரது தலையில் இருந்து வெளியே சென்றும், திரும்பியும் முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக அங்கே வாழ்ந்து வந்தன.(25) ஜாஜலி சிறிதும் அசையாமல் இருந்ததால், காலம் கனிந்ததும் அந்த முட்டைகள் முதிர்ந்து குஞ்சுகள் வெளியே வந்து, அந்தக் கூட்டிலேயே வளரத் தொடங்கின.(26) தமது நோன்புகளில் உறுதியானவரும் உயர் ஆன்மா கொண்டவருமான அந்த முனிவர், தொடர்ந்து அந்தக் குஞ்சுகளைத் தாங்கியபடியே முற்றிலும் அசைவற்றவராக அந்த இடத்திலேயே தியான யோகத்தில் மூழ்கி நின்றிருந்தார்.(27)
காலப்போக்கில் அந்தக் குஞ்சுகள் வளர்ந்து, சிறகுகள் படைத்தவை ஆகின. குளிங்கக் குஞ்சுகள் வளர்ந்து விட்டதை அம்முனிவர் அறிந்தார்.(28) புத்திசாலி மனிதர்களில் முதன்மையான அவர், ஒரு நாள் அந்தக் குஞ்சுகளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார்.(29) தாய்தந்தை பறவைகள், தங்கள் குஞ்சுகள் சிறகு படைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நிறைவான முழு நம்பிக்கையுடன் அந்த முனிவரின் தலையிலே அவற்றுடன் வசிக்கத் தொடங்கின.(30) கல்விமானான ஜாஜலி, அந்தப் பறவைக்குஞ்சுகள் சிறகுபடைத்ததும் ஒவ்வொரு மாலையும் பறந்து சென்று, (வெகு தொலைவுக்குச் சென்றுவிடாமல்) மீண்டும் தம் தலைக்குத் திரும்பிவிடுவதைக் கண்டார். அவர் அந்த இடத்திலேயே இன்னும் அசைவற்றவராகவே நின்று கொண்டிருந்தார்.(31) சில காலத்திற்குப் பிறகு தாய் தந்தையர் இல்லாமலேயே அவை போவரும் வருவதுமாக இருப்பதை அவர் கண்டார். அப்போதும் ஜாஜலி அசையாமலேயே இருந்தார்.(32)
சில காலம் கழித்து, அந்தக் குஞ்சுகள் காலையில் சென்றபிறகு, முழு நாளையும் அவர் பார்வையில் இருந்து வெளியே கழித்து மாலையில் கூட்டில் வசிப்பதற்காகத் திரும்பி வந்தன.(33) மேலும் சில காலம் கழித்து, கூட்டிலிருந்து சென்று ஐந்து நாள் கழித்து ஆறாம் நாளில் அவை திரும்பின. ஜாஜலி அப்போதும் அசையவில்லை.(34) அடுத்ததாகப் பலத்தில் அவை முழுமையாக வளர்ந்து அவரை விட்டுச் சென்ற பின் பல நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை.(35) இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தில் அவரைவிட்டுச் சென்று ஒருமாதமாகியும் அவை திரும்பி வரவில்லை. ஓ! மன்னா, அப்போது ஜாஜலி அந்த இடத்தைவிட்டு அகன்றார்.(36) இவ்வாறு நன்மைக்காக அவை வெளியே சென்ற பிறகு மிகவும் ஆச்சரியமடைந்த ஜாஜலி, தவ வெற்றியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார். அப்போது அவரது இதயத்திற்குள் செருக்கு ஊடுருவியது.(37) நோன்புகளை உறுதியாக நோற்ற அந்தப் பெரும் தவசி, தம் தலையில் வளர்ந்த அந்தப் பறவைகள் இவ்வாறு அவரைவிட்டுச் சென்றதைக் கண்டு, தம்மைத் தாமே உயர்வாக நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார்.(38) பிறகு அவர், ஓடைக்குச் சென்று நீராடி, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, உதிக்கும் சூரியனுக்குத் தம் வணக்கங்களைச் செலுத்தினார்.(39)
உண்மையில், இவ்வாறு அந்தச் சாதகப் பறவைகளைத் தம் தலையில் வளரச் செய்தவரும், தவசிகளில் முதன்மையானவருமான அந்த ஜாஜலி, தமது கக்கங்களில் அறையத் தொடங்கி {தோள்களைதட்டத் தொடங்கி}, “நான் பெரும் தகுதியை வென்றேன்” என்று வானத்தினூடாக உரக்க அறிவித்தார்.(40)
அப்போது வானத்தில் இருந்து புலப்படாத ஒரு குரல் எழுந்தது, ஜாஜலியும் அவ்வார்த்தைகளைக் கேட்டார். “ஓ! ஜாஜலி, அறத்தின்கண் நீர் துலாதாரனுக்கு இணையாகமாட்டீர்.(41) பெரும் ஞானம் கொண்ட அந்தத் துலாதாரன் வாராணசியில் வாழ்கிறான். ஓ! மறுபிறப்பாளரே, அவனும் கூட நீர் சொல்வதைச் சொல்லத் தகுந்தவனாகான்” {என்று அக்குரல் சொன்னது}.(42)
இவ்வார்த்தைகளைக் கேட்ட ஜாஜலி, ஓ! ஏகாதிபதி, கோபத்தில் நிறைந்தவராக, துலாதாரனைச் சந்திக்கும் விருப்பத்தோடு, அமைதி நோன்பை {மௌன விரதத்தை} நோற்றும், மாலைவேளை சந்திக்கும் இடத்திலேயே அவ்விரவை கழித்தும் மொத்த பூமியிலும் திரிந்து கொண்டிருந்தார்.(43) ஒரு குறிப்பிட்ட அளவுக்கான காலத்திற்குப் பிறகு அவர் வாராணசி நகரத்தை அடைந்து சில்லறைப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துலாதாரனைக் கண்டார்[1].(44) கடைக்காரனான துலாதாரன், தன் இடத்திற்கு வந்த பிராமணரைக் கண்டதும், உற்சாகமாக எழுந்திருந்து, விருந்தினருக்கு உரிய வணக்கங்களுடன் அவரை வழிபட்டான்[2].(45)துலாதாரன் {ஜாஜலியிடம்}, “ஓ! பிராமணரே {ஜாஜலியே}, நீர் என்னிடம் வருகிறீர் என்பதை நான் அறிந்தேன். ஐயமில்லை. எனினும், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் சொல்வதைக் கேட்பீராக.(46) கடற்கரையின் அருகே பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டே நீர் கடுந்தவங்களைச் செய்து வந்தீர். அறத்தையோ, தகுதியையோ குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருந்தீர்.(47) இறுதியாக நீர் தவ வெற்றியை அடைந்த போது, குறிப்பிட்ட பறவைகளை நீர் உமது தலையில் தாங்கினீர். நீர் அந்தச் சிறு பறவைகளிடம் பெரும் கவனம் செலுத்தினீர்.(48) இறுதியில் அந்தப் பறவைகள் சிறகுகளைப் பெற்ற போது, இரை தேடி அங்கேயும் இங்கேயும் செல்வதற்காக அவை உமது தலையை விட்டுச் சென்ற போதும், ஓ! பிராமணரே, அந்தச் சாதகப் பறவைகளின் பிறப்புக்கு இவ்வாறு துணை புரிந்ததன் விளைவால், பெரும் தகுதியை அடைந்துவிட்டதாக நினைத்து, செருக்கின் தூண்டுதலை நீர் உணரத் தொடங்கினீர்.(49) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அப்போது என்னைக் குறிப்பிடும் வானொலி ஒன்றை நீர் கேட்டீர். நீர் கேட்ட வார்த்தைகள் உம்மைச் சினத்தில் நிறைத்தன, அதன் விளைவாக நீர் இங்கே வந்திருக்கிறீர். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, உமது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {தூலாதாரன்}”.(50)
தீங்கிழையாமை! – சாந்திபர்வம் பகுதி – 262-ஜாஜலிக்கு அறமுறைத்த துலாதாரன்; தீங்கிழையாமையே உயர்ந்த அறம் எனச் சொன்ன துலாதாரன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புத்திசாலியான துலாதாரனால் அந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லப்பட்டவரும், தவசிகளில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான ஜாஜலி, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(1)
ஜாஜலி {துலாதாரனிடம்}, “ஓ! வணிகனின் மகனே {வைஸ்யபுத்ரா}, சாறுகளும், நறுமணமும் கொண்ட அனைத்து வகைப் பொருட்களையும், பெரும் மரங்களின் கனிகளையும், (மரப்பட்டைகளையும், இலைகளையும்), கிழங்குகளையும் நீ விற்பனை செய்கிறாய்.(2) {இவ்வாறிருக்கையில்} மெய்யுறுதி அல்லது நிலைத்த புத்தியை அடைவதில் நீ எவ்வாறு வென்றாய்? இந்த ஞானம் எங்கிருந்து உன்னிடம் வந்தது? ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, இவை யாவற்றையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக” என்று கேட்டார்”.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும் புகழைக் கொண்ட அந்தப் பிராமணரால் {ஜாஜலியால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், வைசிய வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவனும், அறநெறி விளக்கங்களின் உண்மைகளை நன்கறிந்தவனும், ஞானத்தில் நிறைவு கொண்டவனுமான துலாதாரன், கடுந்தவங்களை மேற்கொண்ட ஜாஜலியிடம் அறத்தின் வழிமுறைகளைக் குறித்து உரையாடினான்.(4)
துலாதாரன், “ஓ! ஜாஜலி, நித்தியமான அறத்தை அதன் புதிர்கள் அனைத்துடன் நான் அறிவேன். அஃது உலகளாவிய நட்புறவு மற்றும் அனைத்துயிரினங்களுக்கான நன்மை ஆகியவற்றைக் கொண்டதும், அனைவராலும் அறியப்பட்டதுமான பழங்கால அறத்தை {சனாதன தர்மத்தைத்} தவிர வேறேதும் இல்லை.(5) அனைத்து உயிரினங்களுக்கு முற்றாகத் தீங்கிழையாமல் இருப்பது, அல்லது (உண்மையில் தேவைப்படும் இடங்களில் மட்டும்) குறைந்த அளவு தீங்கைச் செய்வது எனும் அடிப்படையில் அமைந்த வாழ்வுமுறையே உயர்ந்த அறமாகும். ஓ! ஜாஜலி, நான் அந்த வாழ்வுமுறையின்படியே வாழ்கிறேன்.(6) என்னுடைய இவ்வீடு, மரத்தையும், புல்லையும் பயன்படுத்திப் பிறரின் கைகளால் கட்டப்பட்டதாகும். ஓ! மறுபிறப்பாள முனிவரே, செம்பஞ்சு, நீலோத்பலமலரின் வேர் {பத்மகம்}, தாமரை இதழ்கள் {துங்கம்}, பல்வேறு வகையிலான நல்ல நறுமணப் பொருட்கள், மது தவிர்த்த பல்வேறு வகைத் திரவங்கள்[1] ஆகியவற்றை நான் பிறரிடம் இருந்து கொள்முதல் செய்து, வஞ்சனை ஏதுமின்றி விற்பனை செய்து வருகிறேன்.(8) ஓ! ஜாஜலி, அனைத்து உயிரினங்களுக்கு எப்போதும் நண்பனாக இருப்பவன் எவனோ, எண்ணம், வாக்கு, செயல் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவன் எவனோ, அவனே அறமறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(9) நான் எவரிடமும் ஒருபோதும் எதையும் வேண்டுவதில்லை, எவரிடமும் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடுவதில்லை; நான் ஒருபோதும் எவரையும் வெறுப்பதுமில்லை. நான் ஒருபோதும் எதனிலும் ஆசையை வளர்த்துக் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் நான் சமமான பார்வையையே செலுத்துகிறேன். ஓ! ஜாஜலி, இஃது என் நோன்பு என்பதைக் காண்பீராக.(10)ஓ! ஜாஜலி அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் என் தராசு முற்றிலும் சமமாகவே இருக்கும்.(11) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, வானத்தில் தென்படும் ஆச்சரியங்களைப் போலவே உலகின் வகைகளையும் காண்பதால் நான் பிறரின் செயல்களைப் புகழ்வதோ, பழிப்பதோ இல்லை[2].(12) ஓ! ஜாஜலி, நான் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைச் செலுத்துகிறேன் என்பதை அறிவீராக. ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே, மண்ணாங்கட்டி, சல்லிக்கற்கள் மற்றும் பொற்குவியல் ஆகியவற்றுக்கிடையில் நான் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை.(13) குருடர்கள், செவிடர்கள் மற்றும் அறிவிழந்தவர்கள் ஆகியோர் தங்கள் புலன்களை இழந்தததில் முற்றிலும் ஆறுதலடைவதைப் போலவே நானும் (இன்பங்களைத் தவிர்ப்பதில்) ஆறுதலடைகிறேன்[3].(14) முதுமையடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பலவீனர்கள், மெலிந்தவர்கள் ஆகியோர் எந்த வகை இன்பத்தையும் அனுபவிக்காததைப் போலவே, நானும் செல்வம் அல்லது இன்பத்தை அனுபவிப்பதை நிறுத்திவிட்டேன்.(15)ஒரு மனிதன் எப்போது எதையும் அச்சுறுத்தாமலும், எதற்கும் அஞ்சாமலும் இருக்கிறானோ, எப்போது அவன் ஆசையேதும் வளர்க்காமலும், வெறுப்பேதும் கொள்ளாமலும் இருக்கிறானோ, அப்போது அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(16) ஒரு மனிதன் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ பாவம்நிறைந்தவனாக எந்த உயிரினத்திடமும் நடந்து கொள்ளாதபோது, அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(17) கடந்த காலமோ, எதிர்காலமோ ஏதுமில்லை. அறமோ, மறமோ ஏதுமில்லை. எந்த உயிரினத்தின் அச்சத்திற்குரிய பொருளாகவும் இல்லாதவனே, அச்சமற்ற நிலையை அடைவதில் வெல்கிறான்[4].(18) மறுபுறம், பேச்சில் கடுமையும், தீவிரக் கோபமும் கொண்ட மனிதன், மரணத்தைப் போலவே அனைத்து உயிரினங்களின் தொல்லைக்கு மூலமாக அமைந்து, அச்சம் நிறைந்த நிலையை நிச்சயம் அடைகிறான்.(19) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதியை முறையாக நோற்றுப் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் பிள்ளைகள் {பேரர்கள்} ஆகியோருடன் சேர்ந்து வாழும் உயர் ஆன்ம நல்லோரின் நடைமுறைகளையே நான் பின்பற்றுகிறேன்.(20)உள்ளபடியே நல்லோராகவும், விவேகிகளாகவும் இருப்போரின் ஒழுக்கத்தில் காணப்படும் சில பிழைகளால் {குற்றங்களால்} திகைப்படையும் ஒருவன், (வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள) நித்திய நடைமுறைகளை முற்றிலும் கைவிடுகிறான். எனினும் கல்விமானான ஒருவன், அல்லது புலன்களை அடக்கிய ஒருவன், அல்லது மனோபலம் கொண்ட ஒருவன், அவ்வொழுக்கத்தால் வழிநடத்தப்பட்டே விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்[5].(21) ஓ! ஜாஜலி, தன் புலன்களை அடக்கி, பிறருக்குத் தீங்கிழைக்கும் ஆசைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த இதயத்துடன் நல்லோர் என்றழைக்கப்படுவோரால் பின்பற்றப்படும் ஒழுக்கத்தை நடைமுறையில் நோற்கும் ஞானியானவன் நிச்சயம் அறத்தகுதியை (அறத்தகுதியையும், அதன் கனியான விடுதலையையும் {முக்தியையும்}) ஈட்டுவான்.(22) ஆற்று நீரோட்டத்தின் போக்கில் அடித்துச் செல்லப்படும் மரத்துண்டு, அதே போல அடித்துவரப்படும் மற்றொரு துண்டுடன் (சில காலத்திற்குத்) தொடர்பில் இருப்பது இவ்வுலகில் காணப்படுகிறது. அந்நீரோட்டத்தில் அவ்வாறு சேர்ந்த மரத்துண்டுகள் மீண்டும் ஒன்றையொன்று விட்டுப்பிரிவதும் காணப்படுகிறது. புற்கள், குச்சிகள் மற்றும் சாணம் ஆகியவை ஒன்றோடொன்று கலப்பதும் காணப்படுகிறது. இந்தச் சேர்கை விபத்தின் மூலம் நேர்வதேயன்றி, அதற்கு ஒரு நோக்கமோ வடிவமைப்போ கிடையாது[6].(23,24) ஓ! தவசியே {ஜாஜலியே}, எவனைக் கண்டு எந்த உயிரினமும் கிஞ்சிற்றும் அஞ்சுவதில்லையோ, அவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ள மாட்டான்.(25)மறுபுறம், ஓ! கல்விமானே, எவனைக் கண்டதும் ஓநாயைக் கண்டது போல ஒவ்வொரு உயிரினமும் அஞ்சுகிறதோ, அவன் முழங்கும் வடவாக்னியிடம் கொண்ட அச்சத்தின் மூலம் கரைக்குத் தாவ நிர்ப்பந்திக்கப்படும் நீர்வாழ் விலங்கினங்களைப் போல அச்சத்தால் நிறைந்தவனாகிறான்.(26) அண்டந்தழுவிய {உலகந்தழுவிய} தீங்கிழையாமை நடைமுறை இவ்வாறே எழுந்தது. ஒருவன் தன் சக்திக்குத்தக்க அனைத்து வழிமுறைகளினாலும் இதைப் பின்பற்றலாம். தொண்டர்களுடையவனும், செல்வமுடையவனும் இதைப் பின்பற்ற முனையலாம். இது நிச்சயம் செழிப்புக்கும், சொர்க்கத்திற்கும் வழிவகுக்கும்.(27) செல்வமும் தொண்டர்களும் படைத்த மனிதர்கள், பிறரின் அச்சத்தை விலக்க இயன்றதன் விளைவாகக் கல்விமான்களால் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சாதாரண மகிழ்ச்சிக்காகவும், புகழுக்காகவும் மனிதர்கள் அண்டந்தழுவிய தீங்கிழையாமை எனும் கடமையைப் பயில்கிறார்கள்; அதே வேளையில் உண்மையில் திறனுடையவர்கள், பிரம்மத்தை அடைவதற்காக அதையே {உலகந்தழுவிய தீங்கிழையாமையை} பயில்கிறார்கள்.(28) தவங்கள், வேள்விகள், ஈகை, ஞானம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் என்னென்ன கனிகளை அனுபவிக்கிறானோ, அவை அனைத்தையும் தீங்கிழையாமை என்ற கடமையைப் பயில்வதால் பெறலாம்.(29) தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதியை அனைத்து உயிரினங்களுக்கு அளிப்பவன், வேள்விகள் அனைத்தின் மூலம் கிட்டும் தகுதியை அடைந்து, இறுதி வெகுமதியாக அச்சமற்ற தன்மையை அடைகிறான். பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்ப்பதைத் தவிர மேன்மையான கடமையேதும் கிடையாது.(30)
ஓ! பெரும் தவசியே, எவனைக் கண்டு எந்த உயிரினமும் கொஞ்சமும் அஞ்சவில்லையோ, அவன் அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அச்சமில்லாத தன்மையை அடைகிறான்.(31) (உறங்கும்) அறைக்குள் {படுக்கையறைக்குள்} புகுந்த பாம்பைப் போல எவனைக் கண்டு அனைவரும் அஞ்சுகிறார்களோ, அவன் இம்மையிலோ மறுமையிலோ ஒருபோதும் எந்தத் தகுதியையும் அடைய மாட்டான்.(32) எந்த மனிதன் அனைத்து நிலைகளையும் விஞ்சி இருக்கிறானோ, எவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ, எவன் அனைத்து உயிரினங்களையும் தன்னைப் போலவே நினைக்கிறானோ அந்த மனிதனின் பாதையில் தேவர்களே கூடத் திகைப்படைகிறார்கள்.(33) கொடைகள் அனைத்தைக் காட்டிலும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமையை உறுதியளிப்பதே (தகுதியின் அடிப்படையில்) உயர்ந்த கொடையாகும். ஓ! ஜாஜலி, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் என்னை நம்புவீராக.(34) செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன், முதலில் செழிப்பை வெல்கிறான், ஆனால் (தன் தகுதி {புண்ணியம்} தீரும்போது) அவன் மீண்டும் வறுமையையே அடைகிறான்.(35)
செயல்களில் (அவற்றின் தகுதிகளில்) அழிவைக் காணும் ஞானிகள், செயல்களை மெச்சுவதில்லை.(36) ஓ! ஜாஜலி, (மகிழ்ச்சிக்கான) ஏதோ ஒரு நோக்கத்தால் தூண்டப்படாத எந்தக் கடமையும் இங்கில்லை. எனினும் கடமை {அறம்} மிக நுட்பமானது. பிரம்மம் மற்றும் சொர்க்கம் ஆகிய இரண்டின் நிமித்தமாகவும் வேதங்களில் கடமைகள் {தர்மங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(37) கடமையின் காரியங்கள் பல ரகசியங்களையும், புதிர்களையும் கொண்டிருக்கின்றன. அவை எளிதில் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிக நுட்பமானவையாக இருக்கின்றன. முரண்பட்ட பல்வேறு விதிகளுக்கு மத்தியில், நல்லோரின் செயல்களைக் காண்பதன் மூலம் சிலர் கடமையைப் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(38) காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வோர், அவற்றின் நாசிகளில் துளையிடுவோர், அவற்றைப் பெருஞ்சுமைகளைச் சுமக்கச் செய்வோர், அவற்றைக் கட்டி, பல்வேறு வகைக் கட்டுப்பாடுகளில் அவற்றை நிறுத்துவோர்,(39) அவற்றைக் கொன்று உயிரினங்களின் இறைச்சியை உண்போர் ஆகியோரை நீர் ஏன் எரிக்காமலிருக்கிறீர் {நிந்திக்காமலிருக்கிறீர்}? மனிதர்கள் சக மனிதர்களை அடிப்பதன் மூலமும், கட்டுவதன் மூலமும், கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் அவர்களை அடிமையாக்கி, பகலும் இரவும் அவர்களைப் பணியில் ஈடுபடுத்துவது காணப்படுகிறது. இம்மனிதர்கள், அடிப்பது மற்றும் சங்கிலிகளில் பிணைப்பது ஆகியவற்றின் விளைவால் உண்டாகும் வலியை அறியாதவர்கள் அல்ல.(41)
ஐம்புலன்களோடு கூடிய ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் தேவர்கள் அனைவரும் வாழ்கின்றனர். சூரியன், சந்திரன், வாயு, பிரம்மன், பிராணன், கிரது, யமன் ஆகியோர் (வாழும் உயிரினங்களுக்குள்) வசிக்கின்றனர்.(42) உயிரினங்களைக் கொண்டு வாணிபம் செய்வதன் மூலம் வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு பாவம் நிறைந்த நடைமுறையின் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும்போது, உயிரற்ற உடல்களை {இறைச்சியை} விற்பதில் அவர்கள் ஐயமேதும் உணர்வார்களா? வெள்ளாடு அக்னியாகும். செம்மறி ஆடு வருணனாகும். குதிரை சூரியனாகும். பூமி விராட் தேவனாகும்.(43) பசுவும் கன்றும் சோமன் {சந்திரன்} ஆகும். இவற்றை விற்கும் மனிதர்கள் ஒருபோதும் வெற்றியை அடைவதில்லை. ஆனால், ஓ! மறுபிறப்பாளரே, எண்ணெய் {தைலம்}, கிருதம் {நெய்}, தேன், மருந்துகள் ஆகியவற்றை விற்பதில் என்ன களங்கம் இருக்கிறது?(44) கொசுக்களும், கடிக்கும் பூச்சிகளும் இல்லாத இடங்களில் பல விலங்குகள் சுகமாகவும், வசதியாகவும் வளர்கின்றன. அவை தங்கள் தாய்க்கு அன்புக்குரியவை என்பதை அறிந்தும் மனிதர்கள் அவற்றைப் பல்வேறு வகைகளில் தண்டித்து,(45) கடிக்கும் பூச்சிகள் உள்ள புழுதிகளுக்குள் அவற்றைச் செலுத்துகின்றனர். வண்டியிழுக்கும் பல விலங்குகள் கனமிக்கச் சுமைகளால் மிகவும் ஒடுக்கப்படுகின்றன. மேலும் வேறு சில, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத வகையில் நடத்தப்படுவதன் விளைவால் தளர்வடையச் செய்யப்படுகின்றன.(46) விலங்குகளுக்குத் தீங்கிழைக்கும் இத்தகைய செயல்கள், கருவைக் கொல்லும் செயலில் இருந்து எவ்வகையிலும் வேறுபட்டதில்லை என்று நான் நினைக்கிறேன்.
உழவுத்தொழில் பாவமற்றது என மக்கள் கருதுகிறார்கள். எனினும் அத்தொழிலும் நிச்சயம் கொடுமை நிறைந்ததாகும்.(47) இரும்புக்கொழுவுடன் சேர்ந்த கலப்பையானது, மண்ணுக்கும், மண்ணில் வாழும் பல உயிரினங்களுக்கும் காயத்தை ஏற்படுத்துகிறது. ஓ ஜாஜலி, கலப்பையில் பூட்டப்படும் எருதுகளில் உமது கண்களைச் செலுத்துவீராக.(48) ஸ்ருதிகளில் பசுக்கள் கொல்லத்தகாதன என்றழைக்கப்படுகின்றன. ஒரு காளையையோ, பசுவையோ கொல்வதன் மூலம் அந்த மனிதன் பெரும்பாவத்தை இழைக்கிறான்.(49)
பழங்காலத்தில் புலனக்கம் கொண்ட பல முனிவர்கள் நஹுஷனிடம், “ஓ! மன்னா, சாத்திரங்களில் ஒருவனின் தாயைப் போன்ற ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பசுவைக் கொன்றிருக்கிறாய். படைப்பாளனையப் போன்றே ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு காளையையும் கொன்றிருக்கிறாய்[7].(50) ஓ! நஹுஷா, {இதன் மூலம்} நீ தீச்செயலைச் செய்திருக்கிறாய், அதைக் கண்டு நாங்கள் மிகவும் துன்புறுகிறோம்” என்றனர். எனினும், அவர்கள் அந்த நஹுஷனைத் தூய்மைப்படுத்துவதற்காக, அந்தப் பாவத்தை நூற்றொரு பாகங்களாகப் பிரித்து, அவற்றை நோய்களாக்கி அனைத்து உயிரினங்களுக்கு மத்தியில் விட்டனர்[8].(51) ஓ! ஜாஜலி, இவ்வாறு அந்த உயர் ஆன்ம முனிவர்கள் அனைத்து உயிரினங்களின் மேலும் அந்தப் பாவத்தைச் செலுத்தி, கருவைக் கொன்ற குற்றத்தைச் செய்தவனான நஹுஷனிடம், “உன் வேள்வியில் நாங்கள் ஆகுதிகளை ஊற்ற இயலாது” என்றனர்[9].(52)உயர் ஆன்ம முனிவர்களும், அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களான யதிகளும், மன்னன் நஹுஷன் வேண்டுமென்றே அந்தப் பாவத்தைச் செய்ய வில்லை என்பதைத் தங்கள் தவச் சக்தியின் மூலம் உறுதி செய்த பிறகே இவ்வாறு சொன்னார்கள்[10].(53) ஓ! ஜாஜலி, இவை இப்போதும் இந்த உலகத்தில் உள்ள சில தீய மற்றும் பயங்கர நடைமுறைகளாகும். இவை பழங்காலத்தில் இருந்து அனைத்து மனிதர்களாலும் செய்யப்படுகிறது என்பதாலேயே நீர் அவற்றைச் செய்கிறீரேயல்லாமல், தூய்மையாக்கப்பட்ட உமது புத்தியின் விதிகளுக்கு ஏற்புடைய எந்தக் காரணத்தாலும் அல்ல.(54) ஒருவன், உலக நடைமுறைகளைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக அறிவின் மூலம் வழிநடத்தப்பட்டு எதைத் தன் கடமையாகக் கருதுகிறானோ அதையே செய்ய வேண்டும். ஓ! ஜாஜலி, தீங்கிழைப்பவன் மற்றும் என்னைப் புகழ்பவன் ஆகியோரிடம் என் நடத்தை என்ன என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பீராக.(55) அவை இரண்டையும் நான் ஒரே ஒளியிலேயே கருத்தில் கொள்கிறேன். நான் எவரையும் விரும்பவுமில்லை, எவரையும் வெறுக்கவுமில்லை. இத்தகைய ஒழுக்க நடைமுறையானது கடமை அல்லது அறத்திற்கு இணக்கமானது என ஞானிகள் மெச்சுகின்றனர்.(56) இந்த ஒழுக்க நடைமுறையே யதிகளால் பின்பற்றப்படுவதும், அறிவுக்கு இணக்கமானதுமாகும். மேன்மையான பார்வை கொண்ட கண்களுடன் எப்போதும் அறத்தை நோற்பீராக” என்றான் {துலாதாரன்}.(57)
புரோடாசயாகம்! – சாந்திபர்வம் பகுதி – 263-வேள்வியின் முக்கியத்துவத்தைத் துலாதாரனிடம் எடுத்துச் சொன்ன ஜாஜலி; வேள்விகளையும் அவற்றின் தன்மைகளையும் குறித்து ஜாஜலிக்குச் சொன்ன துலாதாரன் இறுதியில் மனோவேள்வியே அனைத்து வேள்விகளிலும் முதன்மையானது என்றது…
ஜாஜலி {துலாதாரனிடம்}, “ஓ! தராசை ஏந்துபவனே {துலாதாரா}, நீ சொல்லும் இந்தக் கடமையின் போக்கு அனைத்து உயிரினங்களுக்கும் எதிராகச் சொர்க்கத்தின் வாயிலை மூடி, அவற்றின் வாழ்வுத் தேவைக்கான வழிமுறைகளைத் தடை செய்கிறது.(1) உழவில் இருந்தே உணவு தோன்றுகிறது. உனக்கும்கூட அவ்வுணவே வாழ்வாதாரத்தைத் தருகிறது. ஓ! வணிகனே, விலங்குகள், பயிர்கள் {தானியங்கள்} மற்றும் மூலிகைகளின் துணை கொண்டு மனிதர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.(2) விலங்குகள் மற்றும் உணவில் இருந்தே வேள்விகள் தோன்றுகின்றன. உன் கோட்பாடுகள் நாத்திகத்தின் மணத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. வாழ்வாதார வழிமுறைகள் கைவிடப்பட்டால் இவ்வுலகமே ஒரு முடிவுக்கு வந்துவிடும்” என்றார் {ஜாஜலி}.(3)
துலாதாரன் {ஜாஜலியிடம்}, “வாழ்வாதார வழிமுறைகள் குறித்து நான் இப்போது சொல்லப்போகிறேன். ஓ! பிராமணரே, நான் நாத்திகனல்ல. நான் வேள்விகளைப் பழிக்கவுமில்லை. எனினும், {உள்ளபடியே} வேள்வியை அறிந்த மனிதன் மிக அரிதானவன்.(4) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியை நான் வணங்குகிறேன். அவ்வேள்வியை அறிந்தவர்களையும் நான் வணங்குகிறேன். ஐயோ, பிராமணர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேள்வியைக் கைவிட்டு க்ஷத்திரியர்களுக்குரிய வேள்விகளைச் செய்து வருகிறார்கள்[1].(5)ஓ! மறுபிறப்பாளரே, பேராசையும், செல்வத்தில் விருப்பமும் கொண்ட நம்பிக்கையாளர்கள் பலர், ஸ்ருதிகளில் உள்ள தீர்மானங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ளாமல், உண்மை போலத் தோன்றுபவையும், உண்மையில் போலியானவையுமானவற்றை அறிவித்து, பல்வேறு வகை வேள்விகளையும் அறிமுகம் செய்து,(6) “இந்த வேள்வியில் இதைக் கொடுக்க வேண்டும். இந்த மற்றொரு வேள்வியில் இந்த மற்றொரு பொருள் கொடுக்கப்பட வேண்டும். இதில் முதலில் வருவது மெச்சத்தகுந்தது” என்று சொல்கிறார்கள். எனினும், ஓ! ஜாஜலி, இவையனைத்தின் விளைவாக, களவும், பல தீச்செயல்களும் எழுகின்றன[2].(7) நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்டும் வேள்விக் காணிக்கை மட்டுமே தேவர்களை நிறைவு செய்யும் என்பது அறியப்பட வேண்டும். தேவர்களை வழிபடுவதற்குரிய வணக்கங்கள், நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள், வேதம் ஓதல், செடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் குறித்து சாத்திரங்களில் அபரிமிதமான குறிப்புகள் இருக்கின்றன.(8) அறமில்லா மனிதர்கள் தங்கள் அறச்செயல்களின் மூலம் தீய வாரிசுகளை {சந்ததிகளைப்} பெறுகின்றனர். பேராசை கொண்ட மனிதர்களில் இருந்து பேராசைமிக்கப் பிள்ளைகள் தோன்றுகின்றனர், நிறைவானவர்களிடம் இருந்து நிறைவுடைய பிள்ளைகள் பிறக்கின்றனர்.(9) வேள்வி செய்பவனும், புரோகிதரும் கனியில் உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு (அவர்கள் செய்யும் வேள்விகள் அல்லது துணைபுரியும் வேள்விகளில்) செயல்பட்டால், அவர்களது பிள்ளைகள் களங்கமடைவார்கள். மறுபுறம், அவர்கள் கனியின் மீது ஆசை கொள்ளவில்லையெனில் அவ்வாறான ஆசையில்லாத பிள்ளைகள் அவர்களுக்குப் பிறப்பார்கள். ஆகாயத்தில் இருந்து தெளிந்த நீர் உண்டாவதைப் போல, வேள்விகளில் இருந்தே சந்ததி உண்டாகிறது.(10)வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் சூரியனை நோக்கி எழுகின்றன. சூரியனில் இருந்து மழை எழுகிறது. மழையிலிருந்து உணவு எழுகிறது. உணவிலிருந்து உயிரினங்கள் பிறக்கின்றன.(11) பழங்காலங்களில் நீதிமிக்க அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த மனிதர்கள், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதையே அவற்றில் இருந்து வழக்கமாகப் பெற்றனர். உழாமலேயே பூமி பயிர்களை விளைவித்தது. முனிவர்கள் சொல்லும் வாழ்த்துகளே செடிகளையும், மூலிகைகளையும் உண்டாக்கின.(12) பழங்கால மனிதர்கள் ஒருபோதும், கனிகளின் மீதுள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்யவில்லை, மேலும், அவர்கள் கனிகளை அனுபவிப்பவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டதுமில்லை. தங்கள் திறனில் ஐயங்கொண்டிருந்தாலும், ஏதோவொரு வகையில் வேள்விகளைச் செய்வோர்,(13) தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் நேர்மையற்றவர்களாகவும், வஞ்சகர்களாகவும், செல்வத்தில் மிகுந்த ஆசை கொண்ட பேராசைக்காரர்களாகவும் பிறக்கிறார்கள். அங்கீகாரம்பெற்ற சாத்திரங்கள் அனைத்தும் தீமையால் நிறைந்தவை என்று போலி அறிவின் துணையுடன் சொல்லும் மனிதன், இத்தகைய அவனது பாவச்செயலுக்காகப் பாவம் நிறைந்த உலகங்களுக்கே நிச்சயம் செல்வான். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அத்தகைய மனிதன் நிச்சயம் பாவம் நிறைந்த ஆன்மாவாவான், மேலும் அவன் எப்போதும் இங்கேயே ஞானமற்றவனாக இருப்பான்[3].(14,15)எந்த மனிதன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளன செயல்கள் தினமும் நிறைவேற்றப்பட வேண்டியன என்று கருதுகிறானோ, எந்த மனிதன் எந்த நாளிலாவது அவற்றை நிறைவேற்றாமல் போனால் அச்சத்தால் நிறைகிறானோ, வேள்விக்கு அடிப்படையான அனைத்தையும் பிரம்மத்தைப் போன்றே எவன் பொருள் கொள்கிறானோ, தானே செயல்புரிபவன் என்று எவன் ஒருபோதும் கருதவில்லையோ, அவனே உண்மையில் பிராமணனாவான்.(16) அத்தகைய மனிதனின் செயல்கள் {வேள்விகள்} நிறைவுபெறாமல் போனாலோ, தூய்மையற்ற விலங்குகள் அனைத்தினாலும் அவற்றின் நிறைவுக்கு முன் தடுக்கப்பட்டாலோ கூட அந்தச் செயல்கள் மேன்மையான திறம்பெற்றவையே என்று நாம் கேள்விப்படுகிறோம். எனினும், அச்செயல்களின் கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் (அவை நிறைவடைவதற்கு முன்பு இத்தகைய தடங்கல்களால் தடை) செய்யப்பட்டால், பாவக்கழிவு {பரிகாரம்} நிச்சயம் தேவை.(17) வாழ்வின் உயர்ந்த நோக்கமான (விடுதலையை) அடைய ஆசைப்படுபவர்கள், உலகம் சார்ந்த அனைத்து வகைச் செல்வத்திலும் ஆசையற்றவர்கள், எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் அலட்சியம் செய்பவர்கள், பொறாமையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் வாய்மையையும், தற்கட்டுப்பாட்டையும் தங்கள் வேள்வியாக எடுத்துக் கொள்கிறார்கள்.(18) உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்கள், பிரணவத்தைத் தியானிப்பவர்கள் ஆகியோர் எப்போதும் பிறரை நிறைவு செய்வதில் வெல்கிறார்கள்.(19) தேவர்கள் அனைவரின் ஆன்மாவாகிய அண்டந்தழுவிய பிரம்மம் (பிரணவம்), பிரம்மத்தை அறிந்தவனிடமே வசிக்கிறது. எனவே, ஓ! ஜாஜலி அத்தகைய மனிதன் உண்டு நிறைவடையும்போது, தேவர்கள் அனைவரும் நிறைவடைந்தவர்களாகிறார்கள்.(20)
அனைத்து வகைச் சுவைகளிலும் நிறைவடைந்த ஒருவன், எந்த ஒரு குறிப்பிட்ட சுவையையும் விரும்பாததைப் போலவே ஞானத்தால் நிறைவடைந்தவன், முற்றான அருள் ஊற்றாக நீடிக்கும் நிறைவை அடைகிறான்.(21) அறத்தின் புகலிடமாக இருப்பவர்களும், அறத்தில் திளைப்பவர்களுமான ஞானிகளே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற நிச்சயமான ஞானத்தை அடைந்தவர்களாவர். அத்தகைய ஞானத்தைக் கொண்ட ஒருவன், இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் தன்னில் இருந்து எழுந்ததாகவே எப்போதும் கருதுவான்[4].(22) (வாழ்வெனும் இந்தப் பெருங்கடலின்) மறுகரையை அடைய முயல்பவர்களும், நம்பிக்கை நிறைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான சிலர், பேரருளை உண்டாக்குவதும், மிகப் புனிதமானதும், அறவோர் வசிப்பதும், கவலையில் இருந்து விடுபட்டு, எவ்வகையான கலக்கமோ, வலியோ இல்லாத, திரும்ப வேண்டிய அவசியமில்லாத இடமான பிரம்மலோகத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(23,24) அத்தகைய மனிதர்கள் சொர்க்கத்திற்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் ஆடம்பர வேள்விகளில் பிரம்மத்தைத் துதிப்பதில்லை. அவர்கள் அறவோரின் பாதையிலேயே நடக்கிறார்கள். அவர்கள் செய்யும் வேள்விகள் எவ்வுயிரினத்திற்கும் தீங்கிழைக்காமலேயே செய்யப்படுகின்றன.(25)இம்மனிதர்கள், மரங்கள், மூலிகைகள், கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே வேள்விக் காணிக்கையாக அறிகிறார்கள். பேராசைமிக்கப் புரோகிதர்கள், செல்வத்தை விரும்புபவர்களாக இருப்பதால், இந்த (ஏழை) மனிதர்களின் வேள்விகளை ஒருபோதும் செய்து கொடுப்பதில்லை.(26) இந்த மறுபிறப்பாளர்களோ, தங்கள் செயல்கள் அனைத்தும் நிறைவடைந்தாலும்கூட, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதற்காகவும், தங்களையே வேள்விக் காணிக்கையாக்கும் விருப்பத்தாலும் வேள்விகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.(27) இந்தக் காரணத்தினால், பேராசைமிக்கப் புரோகிதர்கள், தவறாக வழிநடத்தப்படுபவர்களின் வேள்விகளில் மட்டுமே செயல்பட்டு, விடுதலையை அடைய முயற்சி செய்யாமல் சொர்க்கத்தை நாடுகிறார்கள். எனினும், உண்மையில் நல்லவர்களாக இருப்போர், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிறரைச் சொர்க்கத்திற்கு உயரச் செய்கிறார்கள். ஓ ஜாஜலி, இந்த இருவகை நடத்தைகளையும் பார்த்து, (உலகில் உள்ள எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல்) சமமான இதயத்துடன் அனைத்து உயிரினங்களையும் நான் கருத்தில் கொள்கிறேன்.(28) ஞானம் கொண்ட முதன்மையான பிராமணர்கள் பலர், (சிலருக்குத் திரும்ப வேண்டிய அவசியமில்லாத விடுதலைக்கு வழிவகுப்பற்றையும், சிலருக்கு திரும்ப வேண்டிய அவசியமில்லாத அருள் உலகங்களுக்கு வழிவகுப்பவற்றையும் என இரு வகைக் கனிகளைத் தர வல்ல) வேள்விகளைச் செய்கிறார்கள். ஓ! பெரும் தவசியே, அவ்வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்கள் நடந்த பாதையில் அவர்கள் நடக்கிறார்கள்.(29) வேள்வி செய்பவர்களில் ஒருவகையினருக்கு (கனியில் உள்ள விருப்பத்தால் வேள்வி செய்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் உலகத்தில் இருந்து) திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும், உண்மையில் ஞானிகளாக இருப்போருக்கு (கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் தூண்டப்படாமல் வேள்வி செய்பவர்களுக்கு) திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஓ ஜாஜலி, வேள்வி செய்பவர்களில் இரு வகையினரும் (அவர்கள் செய்யும் வேள்விகளின் விளைவால்) தேவர்கள் நடந்த பாதையிலேயே நடந்தாலும், அவர்கள் அடையும் இறுதி கதிகளில் இத்தகைய வேறுபாடு இருக்கிறது.(30)
அத்தகைய மனிதர்கள், தங்கள் மனங்களில் அமையும் காரியங்களுக்குக் கிடைக்கும் வெற்றியின் விளைவால், உழவிற்குத் துணைபுரிவதற்காக காளைகள் எந்தவித கட்டாயமுமின்றித் தாங்களே தங்கள் தோள்களில் கலப்பையைச் சுமந்து, வண்டிகளை இழுக்கின்றன, பசுக்களும் மனிதக் கரங்களின் தீண்டலில்லாமலேயே தங்கள் மடியில் பாலைச் சுரந்து கொடுக்கின்றன.(31) அவர்கள், மனவிருப்பமெனும் எளிய செயலின் மூலம் வேள்விக் கம்புகளையும் {யூபங்களையும்} (வேள்விக்குத் தேவையான இன்னும் பிற பொருட்களையும்) உண்டாக்கி அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வகை வேள்விகளைச் செய்கிறார்கள்[5]. இத்தகைய தூய ஆன்மாவைக் கொண்ட ஒருவனே (வேள்விக் காணிக்கையாக) ஒரு பசுவைக் கொல்லலாம்[6].(32) எனவே, அவ்வகையல்லாதோர் (விலங்குகள் இல்லாமல்) செடிகொடி மூலிகைகளுடன் கூடிய வேள்விகளையே செய்ய வேண்டும். துறவுக்கு இத்தகைய தகுதி {புண்ணியம்} இருக்கும் காரணத்தாலேயே உம்மிடம் பேசும்போது அஃதை என் கண்முன் நிறுத்தினேன்[7].(33) கனியில் {பலனில்} உள்ள விருப்பமனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, உலகக் காரியங்களில் எவன் எம்முயற்சியும் செய்வதில்லையோ, எவனிடமும் தலைவணங்காமல் எவன் இருக்கிறானோ, எவன் ஒருபோதும் பிறரைத் துதிப்பதில்லையோ, தனது செயல்கள் அனைத்தும் பலவீனமடைந்தாலும் எவன் பலவானாக இருக்கிறானோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(34) ஓ! ஜாஜலி, வேதங்களைப் பிறருக்கு எவன் உரைப்பதில்லையோ, வேள்விகளை எவன் (முறையாகச்) செய்வதில்லையோ, (தகுந்த பிராமணர்களுக்கு) எவன் கொடைகள் அளிப்பதில்லையோ, அனைத்து வகை ஆசைகளையும் கொண்ட வாழ்வமைப்பை எவன் பின்பற்றுகிறானோ அவன் அடையப் போகும் கதி என்ன? எனினும், துறவு தொடர்பான கடமைகளை முறையாக மதிப்பதன் மூலம் ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைவான்” என்றான் {துலாதாரன்}.(35)ஜாஜலி, “ஓ!வணிகனின் மகனே {வைஸ்யா}, மனோவேள்விகளை மட்டுமே செய்யும் தவசிகளின் இந்த மறைபொருள் கோட்பாடுகளை இதற்கு முன்னர் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இந்தக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே நான் (அவற்றைக் குறித்து) உன்னிடம் கேட்கிறேன். பழங்காலத்தின் தவசிகள் இந்த யோகக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களில்லை. எனவே அவர்களுக்கு அடுத்த வந்த தவசிகள் (பொதுவான ஏற்புக்கு) அவற்றை எடுத்துரைக்கவில்லை.(36) அறிவற்ற மனம் கொண்டோர் மட்டுமே ஆன்ம மண்ணில் வேள்விகளைச் செய்யத் தவறுபவர்கள் என நீ சொல்வாயென்றால், ஓ! வணிகனின் மகனே {துலாதாரா}, அவர்கள் எச்செயல்களைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள்? ஓ பெரும் ஞானியே, இஃதை எனக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் எனக்குப் பெரிதான நம்பிக்கை இருக்கிறது” என்றார் {ஜாஜலி}.(37)
துலாதாரன், “சில வேளைகளில் சிலரால் செய்யப்படும் வேள்விகள் (அவற்றைச் செய்பவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளைவால்) வேள்விகளாவதில்லை. இந்த மனிதர்கள் (அகம் மற்றும் புறமென) எந்த வேள்வியையும் செய்யத் தகாதவர்கள் என்று சொல்லப்பட வேண்டும். எனினும், நம்பிக்கை நிறைந்தவர்களைப் பொறுத்தவரையில், பசுவானவள் தன்னிடமிருந்து தெளிந்த நெய், பால், தயிர், வால் முனையிலுள் முடி, கொம்புகள், குளம்புகள் ஆகியவற்றை முழுமையாகக் காணிக்கை அளிப்பதன் மூலம் அவள் {பசு} மட்டுமே அனைத்து வேள்விகளையும் தாங்கத் தகுந்த ஒரே பொருளாக இருக்கிறாள்[8].(38) (திருமணமாகாத மனிதர்கள் வேள்விகளைச் செய்யக் கூடாது என வேதங்கள் அறிவிக்கின்றன). எனினும், நான் சொன்னபடியே (விலங்குகளைக் கொல்லாமல், தெளிந்த நெய் முதலிய காணிக்கைகளை மட்டுமே அர்ப்பணித்துச் செய்யப்படும்) வேள்விகளைச் செய்வதால் ஒருவன், தன் நம்பிக்கையையே மனைவியாகக் கொண்டு இத்தகைய (குற்றமற்ற) காணிக்கைகளைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்கலாம் . இத்தகைய வேள்விகளை முறையாக மதிப்பதால், ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைகிறான்.(39) (வேள்விக் காணிக்கையாக அளிக்கப்பட நிச்சயம் தூய்மையற்றவையான) விலங்குகள் அனைத்தையும் தவிர்த்து, வேள்விகளில் அரிசிப் பந்தைக் காணிக்கையாக அளிப்பதே {புரோடாசயாகமே} தகுந்ததாகும். அனைத்து ஆறுகளும் சரஸ்வதியைப் போன்று புனிதமானவையே, அனைத்து மலைகளும் புனிதமானவையே.(40) ஓ ஜாஜலி, ஆன்மாவே தீர்த்தமாகும் {புண்ணியத்தலமாகும்}. புனிதத்தலங்களுக்குச் செல்வதற்காக உலகில் திரியாதீர். (எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல் நான் சொன்ன வகையில்) இக்கடமைகளைச் செய்வதன் மூலமும், தன் திறனுக்குத்தகுந்த தகுதியை ஈட்டுவதன் மூலமும் ஒருவன் மறுமையின் அருள் உலகங்களை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்” என்றான் {துலாதாரன்}.(41)பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அறிவுக்குப் பொருத்தமானவையும், நல்லோர் மற்றும் ஞானிகளால் எப்போதும் பயிலப்படுபவையுமான இந்தக் கடமைகளையே துலாதாரன் மெச்சினான்” என்றார்.(42)
தர்மதர்சனர்! – சாந்திபர்வம் பகுதி – 264-ஜாஜலி உண்மையை அறிந்து கொள்ள, அவர் வளர்த்த பறவைகளை அழைக்குமாறு அவரிடம் சொன்ன துலாதாரன்; கொல்லாமையின் முக்கியத்துவம் குறித்து ஜாஜலியிடம் பறவைகள் பேசிய நீதிமொழி; தர்மதர்சனர் உரைத்த நீதிகள் என பறவைகள் சொன்னது; ஜாஜலியும், துலாதாரனும் சொர்க்கத்தை அடைந்தது…
துலாதாரன், “ஓ! ஜாஜலி, நான் சொன்ன கடமையின் பாதையைப் பின்பற்றிய நல்லோரும், அல்லோரும் யாவர் என்பதை உமது கண்களாலேயே காண்பீராக. அப்போதுதான் உண்மையின் நிலை என்ன என்பதை நீர் முறையாகப் புரிந்து கொள்வீர்.(1) வானத்தில் வட்டமிடும் பறவைகள் பலவற்றைக் காண்பீராக. அவற்றுக்கு மத்தியில் உமது தலையில் வளர்ந்த பறவைகளும், பருந்துகள் பலவும், பிற இனங்களைச் சேர்ந்தவை பலவும் இருக்கின்றன.(2) ஓ! பிராமணரே, அந்தப் பறவைகள் தங்கள் தங்களுக்குரிய கூடுகளில் நுழைய தங்கள் சிறகுகளையும், கால்களையும் சுருக்குவதைப் பாரும். ஓ! மறுபிறப்பாளரே, அவற்றை அழைப்பீராக.(3) உம்மால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட அந்தப் பறவைகள் தங்கள் தந்தையான உம்மீது தாங்கள் கொண்ட அன்பை அங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஓ! ஜாஜலி, நீரே அவற்றின் தந்தை என்பதில் ஐயமில்லை. உமது பிள்ளைகளை அழைப்பீராக” என்றான்”.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது ஜாஜலியால் அழைக்கப்பட்ட அந்தப் பறவைகள், எவ்வுயிருக்கும் எத்தீங்குமிழைக்காத அவ்வறத்தின் விதிகளுக்கு ஏற்ப பதிலளித்தன.(5) {அப்போது அந்தப் பறவைகள்}[1]“எவ்வுயிரினுக்கும் தீங்கிழைக்காமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் (அவற்றைச் செய்தவனுக்கு) பயன்படத்தக்கனவாக இருக்கின்றன. எனினும், பிறருக்குத் தீங்கு செய்து செய்யப்படும் செயல்களோ, நம்பிக்கையை அழிக்கின்றன, நம்பிக்கை அழிந்ததும், அஃதை அழித்தவனும் {அந்தச் செயல்களைச் செய்தவனும்} அழிவடைகிறான்.(6) அடைவதையும், அடையாமல் போவதையும் ஒரே ஒளியில் கருதுவோர், நம்பிக்கையுடன் கூடியோர், தற்கட்டுப்பாடுடையோர், அமைதியான மனம் கொண்டோர், (கனியின் மீது கொண்ட விருப்பத்தால் அல்லாமல்) கடமையுணர்வால் வேள்விகளைச் செய்வோர் ஆகியோரால் செய்யப்படும் வேள்விகள் கனியை உண்டாக்குகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, பிரம்மத்தைப் பொறுத்தவரையில் நம்பிக்கை {ஸ்ரத்தை} என்பவள் சூரியனின் மகளாவாள். நம்பிக்கை என்பது (வேத) மந்திரங்கள் மற்றும் தியானத்தின் மூலம் பிறக்கும் தகுதியை {புண்ணியத்தை} விட மிக மேன்மையானதாகும்.(8) பேச்சுக் குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலானது நம்பிக்கையின் மூலம் காக்கப்படுகிறது. மனக்குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலும் நம்பிக்கையால் காக்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கை இன்மையால் தரம் தாழ்ந்த ஒரு செயலை வாக்காலோ, மனத்தாலோ ஒருபோதும் காக்க முடியாது[2].(9)பழங்காலத்தில் நேர்ந்தவற்றை அறியும் மனிதர்கள், இது தொடர்பாகப் பிரம்மன் பாடிய பின்வரும் ஸ்லோகத்தைக் குறிப்பிடுகின்றனர். (உடலாலும் செயல்களாலும்) தூய்மையான, ஆனால் நம்பிக்கையில்லாத {ஸ்ரத்தையில்லாத / அக்கறையில்லாத} ஒரு மனிதனின் வேள்விக் காணிக்கைகளையும், (உடலாலும், செயல்களாலும்) தூய்மையற்ற, ஆனால் நம்பிக்கையுள்ள {ஸ்ரத்தையுள்ள / அக்கறையுள்ள} மற்றொருவனின் வேள்விக் காணிக்கைகளையும் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) ஒன்றாகவே கருதினார்கள். வேதங்களை அறிந்தவனும் கஞ்சனுமான ஒருவனின் உணவையும், வட்டித் தொழில் செய்பவனும் தயாளனுமான மற்றொருவனின் உணவையும்(10,11) கவனமாகக் கருத்தில் கொண்ட தேவர்கள் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) அவற்றை ஒன்றாகவே ஏற்றனர். அப்போது, உயிரினங்கள் அனைத்தின் உயர்ந்த தலைவன் (பிரம்மன்) அவர்கள் பிழை செய்துவிட்டதாக அவர்களிடம் சொன்னான்.(12) தயாளனின் உணவு நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டது. எனினும், நம்பிக்கையற்றவனின் உணவோ அத்தகைய நம்பிக்கையின்மையின் விளைவால் ஒன்றுக்குமாகாததாகிறது. வட்டிக்கு விடும் தயாளனின் உணவு ஏற்புடையது, ஆனால் கஞ்சனின் உணவோ ஏற்பில்லாததாகும்.(13) இவ்வுலகில், நம்பிக்கையில்லாதவன் {ஸ்ரத்தையில்லாதவன் / அக்கறையில்லாதவன்} என்ற ஒருவன் மட்டுமே தேவர்களுக்குக் காணிக்கையளிக்கத் தகாதவனாவான். அத்தகைய மனிதனின் உணவு மட்டுமே உண்ணத்தகாததாகும். இதுவே கடமைகள் அறிந்த மனிதர்களின் கருத்தாகும்.(14)
நம்பிக்கையின்மை {ஸ்ரத்தையின்மை / அக்கறையின்மை} பெரும்பாவமாகும். நம்பிக்கையே பாவங்களைக் கழுவுகிறது. பாம்பு தனது சட்டையை உரிப்பதைப் போலவே, நம்பிக்கையுள்ள ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்தையும் விலக்குகிறான்.(15) நம்பிக்கையுடன் கூடிய துறவறமானது, புனிதமாகக் கருதப்படும் அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் மேன்மையானதாகும். நடத்தையில் உள்ள களங்கள் அனைத்தையும் தவிர்க்கும் ஒருவன் நம்பிக்கையுடன் இருப்பதால் புனிதமடைகிறான்.(16) அத்தகைய மனிதனுக்குத் தவங்கள், நடத்தை அல்லது பொறை ஆகியவற்றிற்கான தேவையென்ன இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களே. எனினும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் பாதிக்கப்பட்ட மூன்று வகை நம்பிக்கைகள் இருக்கின்றன. அதன்படியாக ஒருவன் கொண்ட நம்பிக்கை வகையின் அடிப்படையிலேயே அவன் அழைக்கப்படுகிறான்.(17) நல்லியல்பு மற்றும் அறநெறியின் உண்மையான உள்ளொளியைக் கொண்டவர்களே இவ்வாறான கடமைகளை விதித்திருக்கின்றனர். எங்கள் விசாரணையின் விளைவால் இவை யாவற்றையும் தர்மதர்சனர் என்ற தவசியிடம் இருந்து நாங்கள் பெற்றோம்.(18) ஓ! பெரும் ஞானியே {ஜாஜலியே}, நம்பிக்கை கொண்டால் மேன்மையான நிலையை {பரத்தை} அடைவீர்; எனவே நம்பிக்கை கொள்வீராக. எவன் (ஸ்ருதிகளின் தீர்மானங்களில்) நம்பிக்கையுடனிருக்கிறானோ, (அவை தனக்கான நன்மைக்கானவை என்ற நம்பிக்கையில்) அவை சொன்னவற்றின்படி எவன் செயல்படுகிறானோ அவன் நிச்சயம் அற ஆன்மா {தர்மாத்மா} ஆவான். {நம்பிக்கையுடன் கூடிய இந்த வணிகன் {துலாதாரன்}, நம்பிக்கையெனும் அறத்தைப் பின்பற்றுகிறான்}. ஓ! ஜாஜலி, எவன் (நம்பிக்கையின் ஆதிக்கத்தின் கீழ்) தன் பாதையைப் பின்பற்றுவானோ அவன் மேன்மையானவனாவான்” {என்றன அப்பறவைகள்}”.(19)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறிது காலத்திற்குப் பிறகு, பெரும் ஞானம் கொண்டவர்களான துலாதாரன் மற்றும் ஜாஜலி ஆகிய இருவரும் சொர்க்கத்திற்கு உயர்ந்து,(20) தாங்கள் செய்த செயல்களால் ஈடப்பட்ட தங்களுக்குரிய இடங்களை அடைந்து அங்கேயே மகிழ்ச்சியில் திளைத்தனர்.[3] இந்த வகையிலான பல உண்மைகள் துலாதாரனால் சொல்லப்பட்டன.(21) அந்தத் திறமிக்க மனிதன் (தீங்கிழையாமை என்ற) இவ்வறத்தை முழுமையாகப் புரிந்து கொண்டான். இந்த நித்திய கடமைகள் அவனாலேயே {துலாதாரனாலேயே} அறிவிக்கப்பட்டன.(22) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கொண்டாடத்தக்க சக்தியைக் கொண்ட துலாதாரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு மறுபிறப்பாளரான ஜாஜலி அமைதியடைந்தார். இவ்வழியில் துலாதாரன் சொன்ன பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பல உண்மைகள் போதனைக்கான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ கேட்க விரும்பும் பிற உண்மைகள் யாவை?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(23)
உடல் வாடா அறமீட்டல்! – சாந்திபர்வம் பகுதி – 265-கொல்லாமை குறித்து மன்னன் விசரக்கு சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கொல்லாமையைப் பயிலும்போது, உடலுக்குத் துன்பத்தைக் கொடுக்காமல் அறம் செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
{யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, “ஒரு விதமான தீங்கையும் செய்யாதவர்கள் தங்கள் உடலையும், ஆபத்துகளையும் அறியாமல் இருக்கிறார்கள். தொழில் இல்லாதவனுக்கு உடற்பயணம் எவ்வாறு நடக்கும்?” என்று கேட்டான்}.[1]பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதுதொடர்பாக, உயிரினங்கள் அனைத்திடமும் தான் கொண்ட கருணையின் மூலம் மன்னன் விசரக்கு {விசக்யு / விசக்நு /விசக்கண்ணன்} சொன்ன பழைய உரை குறிப்பிடப்படுகிறது.(1) உடல் சிதைக்கப்பட்ட ஒரு காளையைக் கண்டும், பசுவேள்வியில் கொல்லப்படும் பசுக்களின் வலிமிக்க வேதனைக் குரலைக் கேட்டும்,[2] விழாக்களில் துணைபுரிய அங்கே திரளும் கொடூரப் பிராமணர்களைக் கண்டும் அம்மன்னன் {விசரக்கு} இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் செழிக்கட்டும்” {என்றான்}. கொல்லத்தொடங்கும்போது (அந்த ஆதரவற்ற விலங்களுக்கு) ஆசி கூறும் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டன.(3) மேலும் அந்த ஏகாதிபதி, “வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறுபவர்கள், புத்தியற்றவர்கள், நாத்திகர்கள் மற்றும் ஐயுறுவாதிகள், வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளின் மூலம் புகழை அடைய விரும்புவோர் ஆகியோர் மட்டுமே வேள்விகளில் விலங்குகள் கொல்லப்படுவதை உயர்வாகப் பேசுகிறார்கள்.(4) அற ஆன்மாவான மனு, (அறச்) செயல்கள் அனைத்திலும் தீங்கிழையாமையை மெச்சுகிறார். உண்மையில் மனிதர்கள், கனியிலுள்ள {பலனில்} விருப்பத்தால் தூண்டப்பட்டே வேள்விகளில் விலங்குகளைக் கொல்கிறார்கள்.(5)எனவே, (கொலை மற்றும் கொல்லாமை அல்லது தீங்கிழையாமை ஆகியவற்றைப் பொறுத்தவரையில்) அதிகாரமுடையவற்றை (சாத்திரங்களை) அறிந்த ஒருவன், அவற்றால் வழிநடத்தப்பட்டு, இந்த மிக நுட்பமான, உண்மையான கடமையின் போக்கையே பின்பற்ற வேண்டும். உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும்.(6) ஒருவன், வசிப்பாரற்ற இடத்தின் அருகில் வாழ்ந்து, கடும் நோன்புகளைப் பயில்வதைப் பழகி, வேதச் செயல்களால் {அறச்சடங்குகளில்} குறிப்பிடப்படும் கனிகளை {பலன்களை} அலட்சியம் செய்து, இல்லறத்தைக் கைவிட்டு துறவற வாழ்வுமுறையைப் பின்பற்ற வேண்டும்.(7) வேள்விகள், மரங்கள் மற்றும் யூபங்களை உயர்வாக மதிப்பிடும் மனிதர்கள் களங்கமுடைய இறைச்சியை {மட்டும்} உண்ணமாட்டார்கள். எனினும், இந்நடைமுறை மெச்சத்தகுந்ததில்லை[3].(8) கள், மீன், இறைச்சி, மது {ஆஸவம் / சாராயம்}, அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் பண்டங்கள், எள் {திலான்னம்} ஆகியன கபடர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. (வேள்விகளில்) இவற்றைப் பயன்படுத்த வேதங்களில் விதிக்கப்படவில்லை.(9) செருக்கு, தீர்மானப்பிழை {மயக்கம்} மற்றும் பேராசை ஆகியவற்றிலிருந்து இவற்றின் மீது விருப்பம் ஏற்படுகிறது[4].உண்மையான பிராமணர்கள், ஒவ்வொரு வேள்வியிலும் விஷ்ணுவின் இருப்பை உணர்கிறார்கள்.(10) இனிய பாயசத்துடன் அவனது {விஷ்ணுவின்} வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களும் (அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள்),(11) தூய இதயம் கொண்டோர், தூய இயல்பு கொண்டோர் மற்றும் திறன்மிக்க ஞானமும், புனிதமும் கொண்டோரால் தகுந்ததாகக் கருதப்படும் எந்தச் செயலும், அவர்களால் தூய்மையானதாகக் கருதப்படும் வேறு எதுவும் அந்த உயர்ந்த தேவனுக்குக் காணிக்கையாக அளிக்கத்தகுந்தவையே; இவை அவன் ஏற்கத் தகாதவையல்ல” என்றார் {பீஷ்மர்}.(12)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உடலும், அனைத்து வகை ஆபத்துகளும், பேரிடர்களும் தொடர்ந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, தீங்கு செய்யும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவனும், இக்காரியத்தில் செயல்பட இயலாதவனுமான ஒருவன் தன் உடலைப் பராமரித்துக் கொள்வதில் எவ்வாறு வெல்ல முடியும்?” என்று கேட்டான்[5].(13)பீஷ்மர், “ஒருவன் தகுதியை அடைய இயலும்போது, தன் உடல் நலிவுறாமலும், வலியை அனுபவிக்காமலும், அவனுக்கு மரணம் நேராத வகையிலும் செயல்பட வேண்டும்” என்றார்[6].(14)
கௌதமர் அகலிகை! – சாந்திபர்வம் பகுதி – 266-காரணங்களை ஆராய்ந்து காரியம் செய்வதற்கு உதாரணமாகச் சிரகாரினின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சிரிகாரினிடம் அவரது தாய் அஹல்யையின் தலையை வெட்ட உத்தரவிட்ட கௌதமர்; தாமதித்த சிரகாரின்; வருந்திய கௌதமர்; சிரிகாரின் அகலிகையைக் கொல்லாததைக் கண்டு மகிழ்ந்த கௌதமர்..
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, (ஒருபுறம் பெரியோரின் கட்டளைகளும், மறுபுறம் அவற்றில் உள்ள கொடூரங்களும் இருக்கும் விளைவால்) நிறைவேற்றக் கடினமான செயல்கள் அனைத்தின் காரியத்திலும் நீரே எங்களுடைய பேராசானாக {உத்தம குருவாக} இருக்கிறீர். ஒரு செயலானது ஒருவனுடைய கடமையா? அல்லது தவிர்க்கப்பட வேண்டியதா என்பதை அவன் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? அது விரைவாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா, தாமதமாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக அங்கிரஸக் குலத்தில் பிறந்த சிரகாரினின் {சிரகாரி} பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) செயல்படுவதற்கு முன்னால் நீண்ட காலம் சிந்திப்பவன் இரட்டிப்பாக அருளப்படுவானாக. செயல்படுவதற்கு முன்னால் நீண்ட காலம் சிந்திப்பவன் நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவான். அத்தகைய மனிதன் எந்தச் செயலிலும் ஒருபோதும் குற்றமிழைப்பதில்லை.(3) ஒரு காலத்தில் கௌதமரின் மகனும், சிரகாரின் என்ற பெயரைக் கொண்டவரும், பெரும் விவேகியுமான ஒரு மனிதர் இருந்தார். அவர் தாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களையும் மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டு, நீண்ட காலம் சிந்தித்த பிறகே அவற்றைச் செய்து வந்தார்.(4) அனைத்துக் காரியங்களிலும் நீண்ட காலம் சிந்திப்பதாலும், நீண்ட காலம் விழித்திருப்பதாலும், நீண்ட காலம் உறங்குவதாலும், தாம் நிறைவேற்றும் காரியங்கள் அனைத்திலும் தம்மை நிறுவி கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாலும் {ஒரு வேலையை நீண்ட காலம் செய்வதாலும்} சிரகாரின் என்ற பெயரால் அவர் அழைக்கப்படலானார்.(5)
இதனால் அவர் சோம்பேறி என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானார். சிறுமதி கொண்ட, முன்னறிதிறன் அற்ற ஒவ்வொருவராலும் அவர் மூடர் என்றே கருதப்பட்டார்.(6) ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தந்தை கௌதமர், தமது மனைவியிடம் {அகலிகையிடம் / அஹல்யையிடம்} பெரும் செயற்பிழையொன்றைக் கண்டு, தமது பிள்ளைகள் பிறரைக் கடந்து சென்று இந்தச் சிரகாரினிடம் கோபத்துடன், “இந்தப் பெண்ணைக் கொல்வாயாக” என்று சொன்னார்.(7) கல்விமானும், யோகப் பயிற்சியில் ஈடுபடுவோரில் முதன்மையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான கௌதமர், பெரிதாகச் சிந்திக்காமல் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.(8) “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ஏற்றுக் கொண்ட சிரிகாரின், தம் இயல்பின் விளைவாலும், நீண்ட காலம் சிந்திக்காமல் ஒருபோதும் எந்தவொரு செயலையும் செய்யாத அவரது வழக்கத்தாலும், (தமது தந்தை சொன்னதில் உள்ள முறைமை மற்றும் முறையின்மை குறித்து) நீண்ட காலம் சிந்திக்கத் தொடங்கினார்.(9)
{அவர் தமக்குள்ளேயே}, “என் தந்தையின் கட்டளைக்கு எவ்வாறு நான் கீழ்ப்படியப் போகிறேன்? என் தாயைக் கொல்வதை எவ்வாறு தவிர்க்கப் போகிறேன்? முரண்பட்ட கடமைகள் எதிரெதிர் திசையில் என்னை இழுக்கும் இந்தச் சூழ்நிலையில், தீய மனிதனைப் போல மூழ்கப் போவதை நான் எவ்வாறு தவிர்க்கப் போகிறேன்?(10) தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே உயர்ந்த தகுதியாகும் {புண்ணியமாகும்}. தாயைப் பாதுகாப்பதும் தெளிவாகக் கடமையே ஆகும். ஒரு மகனின் நிலை சார்பு நிறைந்ததாகும். பாவம் பீடிப்பதை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்?(11) ஒரு பெண்ணை, அதிலும் தன் தாயைக் கொன்றுவிட்டு எவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? மேலும் தன் தந்தையை அலட்சியம் செய்வதன் மூலம் எவனால் செழிப்பையும், புகழையும் அடைய முடியும்?(12) தந்தையின் ஆணையை மதிப்பதே கடமையாகும். என் தாயைக் காப்பதும் அதற்கு இணையான கடமையே ஆகும். இரு கடமைகளையும் செய்யும் வகையில் நான் எவ்வாறு என் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ளப் போகிறேன்?(13) தந்தையானவர், தமது நடைமுறைகள் {சீலம்}, ஒழுக்கம் {ஆசாரம்}, பெயர் {கோத்ரம்} மற்றும் குலம் ஆகியவற்றைத் தொடர்வதற்காகத் தாயின் கருவறையில் தம்மையே வைத்து மகனாகப் பிறக்கிறார்.(14) நான் என் தாயாலும், தந்தையாலும் அவர்களது மகனாகப் பெறப்பட்டேன். என் தோற்றத்தை அறிந்த நான் (அவர்கள் இருவரிடம் நான் கொண்ட உறவுமுறை குறித்த) இந்த அறிவை ஏன் கொள்ளக் கூடாது?(15)
பிறப்புக்குப் பிறகு நடக்கும் முதல் சடங்கை {ஜாதகர்மத்தைச்} செய்யும்போது தந்தையால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், (ஆசானின் வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு நடக்கும்) துணைச் சடங்கில் {உபகர்மத்தில்} அவரால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், அவருக்குரிய மரியாதையைத் தீர்மானிப்பதில் போதுமானவையாகவும் (போதுமான சாட்சியாகவும்), உண்மையில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை உறுதி செய்யும் வகையிலும் இருக்கின்றன[1].(16) மகனை வளர்த்து, அவனுக்குப் போதிக்கும் விளைவால் பெரியோர் அனைவரிலும் முதன்மையானவராக, உயர்ந்த அறமுமாகத் தந்தையே இருக்கிறார். தந்தை சொல்வதையே தன் உயர்ந்த கடமையாக மகன் கருத வேண்டும் என்று வேதங்களே விதித்திருக்கின்றன.(17) தந்தைக்கு மகன் மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாவான். எனினும் மகனுக்கோ அத்தந்தையே அனைத்துமாவார். மகன் கொண்ட உடலையும், வேறு அனைத்தையும் கொடுத்தவர் தந்தையே ஆவார்.(18) எனவே, ஒருபோதும் சிறு கேள்வியேனும் கேட்காமல் அவரது கட்டளைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். தன் தந்தைக்குக் கீழ்ப்படிபவனின் பாவங்கள் (அத்தகைய கீழ்ப்படிதலால்) கழுவப்படுகின்றன.(19) அனுபவிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும், உணவுப் பொருட்கள் அனைத்தையும், வேத போதனைகளையும், உலகம் குறித்த பிற அறிவு அனைத்தையும் தந்தையே கொடுக்கிறார். (மகன் பிறப்பதற்கு முன்னர்) கர்பாதானம் மற்றும் சீமாந்தோன்னயனம் ஆகிய சடங்குகளைத் தந்தையே செய்கிறார்[2].(20)தந்தையே அறமாவார். தந்தையே சொர்க்கமாவார். தந்தையே உயர்ந்த தவமுமாவார். தந்தை நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் நிறைவடைவார்கள்.(21) தந்தையால் சொல்லப்படும் எந்த வார்த்தைகளும், மகனுக்கு ஆசிகளாகவே அமையும். தந்தை மகிழ்ந்து சொல்லும் வார்த்தைகள் அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவிவிடும்.(22) தண்டில் இருந்து மலர் விழுவது காணப்படுகிறது. மரத்தில் இருந்து கனி விழுவதும் காணப்படுகிறது. ஆனால் எத்துயரிலிருந்தாலும் ஒரு தந்தை பெற்றபாசத்தால் தம் மகனை ஒருபோதும் கைவிட மாட்டார்.(23) ஒரு மகன் தன் தந்தைக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் குறித்த என் சிந்தனைகள் இவையே. தந்தையானவர் ஒரு மகனுக்குச் சாதாரணப் பொருளல்ல {மதிப்புமிக்கப் பொருளாவார்}.
தாயை (தாய்க்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக்) குறித்து இப்போது நான் சிந்திக்கப் போகிறேன்.(24) நெருப்புக்குத் தீக்குச்சிகளைப்[3] போல, மனிதனாகப் பிறந்த என்னில் உள்ள இந்த ஐம்பூதக் கலவைக்குத் தாயே (முக்கிய) காரணமாவாள்.(25) மனிதர்கள் அனைவரின் உடலைப் பொறுத்தவரையில், தாயே தீக்குச்சி {அரணிக் கட்டையாவாள்} ஆவாள். அனைத்து வகைப் பெருந்துயரங்களுக்கும் அவளே மருந்தாவாள் {சர்வரோகநிவாரணியாவாள்}. தாயின் இருப்பே ஒருவனைப் பாதுகாக்கிறது {அவனை ஸ்னாதன் ஆக்குகிறது}. {அவள்} இல்லாமை {அவனது} பாதுகாப்புகள் அனைத்தையும் இழக்கச் செய்கிறது {அவனை அநாதனாக்குகிறது}.(26) ஒரு மனிதன், தன் செழிப்பை இழந்திருந்தாலும், “ஓ! தாயே {அம்மா}” என்ற வார்த்தைகளைச் சொல்லி தன் வீட்டிற்குள் நுழைந்தால், அவன் எத்துயரையும் அடையமாட்டான். மேலும் முதுமையும் அவனை அண்டுவதில்லை.(27) ஒருவன் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் கொண்டிருந்தாலும், அவனுக்கு நூறு வயதே ஆகியிருந்தாலும், தாயிருப்பவன் இரு வயது குழந்தையைப் போலவே தெரிவான்.(28) மகனானவன் இயன்றவனானாலும், இயலாதவனானாலும், மெலிந்தவனானாலும், திடமானவனானாலும் தாயால் எப்போதும் பாதுகாக்கப்படுவான். விதியின்படி, {தாயைத் தவிர} வேறு எவரும் மகனின் பாதுகாவலர் ஆக முடியாது.(29) மகன் தன் தாயை இழக்கும்போதே, முதுமையடைகிறான், துயரமடைகிறான், அவன் கண்ணுக்கு உலகமே வெறுமையாகத் தெரிகிறது.(30)தாயைப் போன்ற உறைவிடமேதும் கிடையாது. தாயைப் போன்ற புகலிடம் வேறேதும் கிடையாது. தாயைப் போன்ற பாதுகாப்பு வேறேதும் கிடையாது. தாயைப் போன்று அன்புக்குரியவர் வேறு யாரும் கிடையாது.(31) மகனைத் தன் கருவறையில் சுமப்பதால் அவளே அவனின் தாத்ரீயாவாள். அவனுடைய பிறப்புக்கு மூல காரணமானதால் அவளே அவனது ஜநநீ ஆவாள். அவனது இளம் அங்கங்களை வளரச் செய்வதால் அவள் அம்பை என்றழைக்கப்படுகிறாள். ஒரு பிள்ளையை வீரத்துடன் வளர்ப்பதால் அவள் வீரஸூ என்றழைக்கப்படுகிறாள்.(32) செவிலிப் பணி செய்து அவனைக் கவனித்துக் கொள்வதால் அவள் சுஸ்ரூ என்றழைக்கப்படுகிறாள். தாயே ஒருவனுடைய சொந்த உடலாகும். எவருடைய கவனிப்பால் மட்டுமே ஒருவனின் தலை உலர்ந்த சுரைக்காயைப் போலத் தெருவோரத்தில் உருளாமல் இருக்கிறதோ அந்தத் தாயை எந்த அறிவுள்ள மனிதன் கொல்வான்?(33)
உற்பத்திக்காகக் கணவனும் மனைவியும் கலக்கும்போது, (பிறக்கப் போகும்) மகனுக்காக அவர்கள் இருவராலும் ஆசைகள் வளர்க்கப்பட்டாலும், அவை கனிவது தந்தையைவிடத் தாயையே அதிகம் சார்ந்திருக்கிறது[4].(34) மகன் எந்தக் குடும்பத்தில் பிறந்தான் என்பதையும், அவனைப் பெற்ற தந்தையையும் தாயே அறிவாள். கருவுற்ற கணத்தில இருந்து தாயானவள் தன் பிள்ளையிடம் அன்பைக் காட்டவும், அவனால் மகிழ்ச்சி கொள்ளவும் தொடங்குகிறாள். (இந்தக் காரணத்திற்காகவே மகனானவன {தந்தையிடம் நடந்து கொள்வதைப் போலவே} அவளிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும்). மறுபுறம், சந்ததி தந்தைக்கு மட்டுமே உரியது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன.(35)மனிதர்கள், திருமணத்தில் மனைவியரின் கரங்களை ஏற்று, அவர்களிடம் பிரியாமல் இருந்து அறமீட்டுவதாக உறுதியளித்த பிறகு, பிறர் மனைவியருடன் கலவியை நாடினால், அப்போது அவர்கள் தங்கள் மதிப்பையும், தகுதியையும் இழக்கிறார்கள்[5].(36) மனைவியை ஆதரிப்பதால் கணவன் பர்த்திரீ {பர்த்தா} என்றழைக்கப்படுகிறான். அவன் அவளைப் பாதுகாப்பதன் காரணமாகப் பதி என்றழைக்கப்படுகிறான். இந்த இரு செயல்பாடுகளும் அவனிடம் காணாமல் போகும்போது, அவன் பர்த்திரீ மற்றும் பதி என்ற இரண்டாகவும் இருக்க மாட்டான்[6].(37) மேலும் பெண் எப்பிழையையும் செய்வதில்லை. ஆண் மட்டுமே பிழைகளைச் செய்கிறான். முறைகெட்ட ஒரு செயலைச் செய்வதன் மூலம் ஆண் மட்டுமே குற்றத்தால் களங்கமடைகிறான்[7].(38) கணவனே மனைவியின் உயர்ந்த பொருளும், உயர்ந்த தெய்வமுமாவான் என்று சொல்லப்படுகிறது. என் அன்னை தன் கணவரைப் போன்ற வடிவிலும், தோற்றத்திலும் தம்மிடம் வந்த ஒருவனிடம் தன் புனித உடலைக் கொடுத்தாள்.(39) பெண்கள் குற்றமிழைப்பதில்லை. ஆணே குற்றத்தால் களங்கமடைகிறான். உண்மையில், பெண்கள் தங்கள் பாலின பலவீனத்தை ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்தும் விளைவால், அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதவே முடியாது.(40)பழங்காலத்தில் பெண்களால் இந்திரனிடம் வேண்டப்பட்டது (இந்திரன் செய்த பிராமணக் கொலையின் {பிரம்மஹத்தியின்} பாவத்தில் மூன்றில் ஒரு பகுதி பெண் பாலினத்திற்குக் கொடுக்கப்பட்டது) நினைவுகூரப்படுகையில், அவனே பாவம் நிறைந்தவன் என்பது (இவ்வழக்கில்) தெளிவாகிறது. என் தாய் அப்பாவி என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(41) எவளைக் கொல்ல ஆணையிடப்பட்டேனோ, அவள் ஒரு பெண்ணாவாள். அந்தப் பெண்ணும் என் தாயாக இருக்கிறாள். எனவே, அவள் பெரும் மதிப்பிற்குரிய ஓரிடத்தை என்னிடம் பெறுகிறாள். தாய் கொல்லத்தகாதவள் என்பதை அறிவற்ற விலங்குகள் கூட அறியும்.(42) தந்தையோ, தேவர்கள் அனைவரின் கலவையாக அறியப்பட வேண்டியவர். எனினும் தாயானவள், உயிரினங்கள் மற்றும் தேவர்கள் அனைத்தின் கலவையாக இருக்கிறாள்[8]” {என்று சிரகாரின் தமக்குள்ளேயே நினைத்தார்}.(43)நீண்ட காலம் சிந்திக்கும் பழக்கத்தின் விளைவால் கௌதமரின் மகனான சிரகாரின் (தமது தந்தை செய்ய ஆணையிட்ட செயலைச் செய்யாமல்) இச்சிந்தனைகளில் ஈடுபட்டே நீண்ட காலத்தைக் கழித்தார். பல நாட்கள் கழிந்ததும் அவரது தந்தை கௌதமர் திரும்பினார்.(44) கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தவப்பயிற்சியில் ஈடுபடுபவரும், பெரும் ஞானியுமான மேதாதிதி {கௌதமர்} (தமது ஆசிரமத்திற்குத்) திரும்பி, நீண்ட காலம் சிந்தித்துப் பிறகு, தமது மனைவியைப் பீடிக்கச் சொல்லி தாம் சொன்ன தண்டனை முறையற்றது என நினைத்தார்.(45) துயரால் எரிந்து, சாத்திர அறிவால் அடைந்த அமைதியான மனநிலையின் நன்மையான விளைவுகளின் காரணமாக அவர் வருத்தமடைந்ததால் பெரும் அளவில் கண்ணீரைச் சிந்தினார்.(46) அவர் {கௌதமர்}, “மூவுலகின் தலைவன் புரந்தரன் {இந்திரன்}, விருந்தோம்பலை வேண்டும் ஒரு பிராமணத் தோற்றத்தில் என் ஆசிரமத்திற்கு வந்தான்.(47) (உரிய) வார்த்தைகளால் ஏற்கப்பட்டு, (உரிய) வரவேற்பால் கௌரவிக்கப்பட்ட அவனுக்கு, கால் கழுவ நீரும், வழக்கமான அர்க்கிய காணிக்கைகளும் வழங்கப்பட்டன. அவன் கேட்ட ஓய்வையும் நான் அவனுக்கு அளித்தேன்.(48) அதற்கு மேலும் அவனைப் பாதுகாவலனாக அடைந்திருப்பதாக அவனிடமே நான் சொன்னேன். அத்தகைய நடத்தை அவனை என்னிடம் ஒரு நண்பனாக நடக்கத் தூண்டும் என்று எண்ணினேன். எனினும், இவை யாவற்றுக்கும் பிறகும், அவன் {இந்திரன்} தவறாக நடந்திருக்கும்போது, என் மனைவி அஹல்யை {அகலிகை} எக்குற்றத்தையும் இழைத்ததாகக் கருதப்படலாகாது.(49) என் மனைவியோ, நானோ, வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்த போது என் மனைவியைக் {அகலிகையைக்} கண்ட (என் மனைவியின் இயல்புக்கு மீறிய அழகைக் கண்டு புலன்களை இழந்த) இந்திரனோ குற்றவாளிகள் அல்ல என்றே தெரிகிறது. என் யோக பலத்தின் கவனமின்மையே உண்மையில் பழிக்கத்தக்கது[9].(50)அனைத்துத் துயரங்களும் பொறாமையில் இருந்தே எழுகின்றன, அதன் விளைவாகத் தீர்மானப் பிழையும் எழுகிறது. பாவக்கடலில் மூழ்கியிருந்த நான் (மனைவியைக் கொல்வது என்ற வடிவில்) அந்தப் பொறாமையின் மூலமே இழுக்கப்பட்டிருக்கிறேன்.(51) ஐயோ, நான் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டேன். அதிலும் தன் தலைவனின் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதால் வாசிஷ்டை என்றழைக்கப்படுபவளும், என்னால் ஆதரித்துப் பாதுகாக்கத் தகுந்தவள் என்ற கடமையின் விளைவால் பார்யை என்றும் அழைக்கப்படுபவளுமான ஒரு பெண்ணான என் மனைவியைக் கொன்றுவிட்டேன். இப்பாவத்திலிருந்து யாரால் என்னைக் காக்க முடியும்?(52) உயர் ஆன்ம சிரகாரினிடம் (என் மனைவியைக் கொல்லுமாறு) ஆணையிட்டுக் கண்மூடித்தனமாகச் செயல்பட்டிருக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் அவன் தன் பெயரை மெய்ப்பித்திருந்தால் இந்தக் குற்றத்திலிருந்து என்னைக் காத்தவனாவான்.(53) ஓ! சிரகாரிகா, உனக்கு இரட்டிப்பான அருள் கிட்டட்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பணியை நிறைவேற்றுவதில் நீ தாமதித்திருந்தால், உண்மையில் நீ உன் பெயருக்குத் தகுந்தவனாகவே இருப்பாய்.(54) என்னையும், உன் அன்னையையும், நான் அடைந்த தவங்களையும், உன் தவங்களையும் பெரும் பாவங்களில் இருந்து காப்பாயாக. இன்று நீ உண்மையிலேயே சிரகாரிகனாக இருப்பாயாக.(55) சாதாரணமாக, உன் பெரும் ஞானத்தின் விளைவால் எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நீண்ட காலம் ஆலோசிப்பாய். இன்று உன் நடத்தை வேறுவகையில் இருக்க வேண்டாம். இன்று நீ உண்மையான சிரகாரிகனாகவே இருப்பாயாக.(56)
உன் அன்னை உன் வரவை நெடுங்காலம் எதிர்பார்த்திருந்தாள். அவள் உன்னைத் தன் கருவறையில் நெருங்காலம் சுமந்திருந்தாள். ஓ! சிரகாரிகா, செயல்படுவதற்கு முன் நெடுங்காலம் சிந்திக்கும் உன் வழக்கம் இன்று நன்மையான விளைவுகளை உண்டாக்கட்டும்.(57) ஒருவேளை என் மகன் சிரகாரிகன் (அந்த ஆணையை அவன் செயல்படுத்துவதைக் கண்டு) நான் வருத்தமடைவேன் என்ற காரணத்தால் இன்றுவரை தாமதித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, (நினைவுடன் செயல்படுத்தும் எந்த நோக்கமும் இல்லாமல்) அந்த ஆணையைத் தன் இதயத்தில் சுமந்தபடி அவன் உறங்கிக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, அவனுக்கும் எனக்கும் உண்டாகப்போகும் துயரத்தைக் கருத்தில் கொண்டும், வழக்கின் சூழ்நிலைகளைச் சிந்தித்தும் தாமதித்துக் கொண்டிருக்கலாம்” என்று {தனக்குத் தானே} சொல்லிக் கொண்டார்.(58)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா{, இத்தகைய வருத்தத்தில் ஈடுபட்ட பெரும் முனிவர் கௌதமர், தன் மகன் சிரகாரின் தன் அருகிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்.(59) தங்கள் தந்தை திரும்பி வந்ததைக் கண்ட மகனான சிரகாரின், துயரத்தில் மூழ்கி, (தாம் ஏந்திய) ஆயுதத்தை வீசிவிட்டு, தலைவணங்கி கௌதமரை தணிவடையச் செய்யத் தொடங்கினார்.(60) தமது மகன் தம் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தலைவணங்குவதையும், அவமானத்தால் கிட்டத்தட்டக் கல்லாகிப் போயிருந்த தன் மனைவியையும் கண்டும் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தார்.(61) அந்தக் காலத்தில் இருந்து அந்த உயர் ஆன்ம முனிவர் {கௌதமர்}, தன் மனைவியிடமிருந்தோ, கவனமிக்கத் தன் மகனிடமிருந்தோ பிரிந்து வாழாமால் அந்தத் தனிமையான ஆசிரமத்திலேயே வசித்து வந்தார்.(62) தமது மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற ஆணையைச் சொல்லிவிட்டு, தமது காரியம் எதையோ நிறைவேற்றிக் கொள்ள ஆசிரமத்தைவிட்டு அவர் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் இருந்து அவரது மகன் கையில் ஆயுதத்துடன் தமது தாயாரிடம் அந்தக் கட்டளையை நிறைவேற்ற பணிவுடன் நின்று கொண்டிருந்தார்.(63) மகன் தமது பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட தந்தை {கௌதமர்}, ஆயுதமேந்தி (தன் தாயையைக் கொன்ற) குற்றத்திற்காக அவர் மன்னிப்புக் கேட்பதாக {அக்கணத்தில்} நினைத்து விட்டார்.(64) பிறகு தமது மகனை நீண்ட நேரம் புகழ்ந்து கொண்டிருந்த அந்தத் தந்தை, நீண்ட நேரம் அவரது உச்சியை முகர்ந்து, “நீண்ட காலம் வாழ்வாயாக” என்ற ஆசி கூறும் வார்த்தைகளைச் சொன்னார்.(65)
பிறகு, ஓ! பெரும் ஞானியே {யுதிஷ்டிரா}, மகிழ்ச்சியால் நிறைந்தவரும், நேர்ந்த காரியத்தால் நிறைவடைந்தவருமான கௌதமர், தமது மகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(66) “ஓ! சிரகாரிகா, நீ அருளப்பட்டிருப்பாயாக. செயல்படுவதற்கு முன் எப்போதும் நீண்ட நேரம் சிந்திப்பாயாக. என் ஆணையை நிறைவேற்றுவதில் நீ தாமதித்ததன் மூலம் இன்று நீ என்னை எப்போதும் மகிழ்ச்சியுடையவனாகச் செய்துவிட்டாய்” {என்றார் கௌதமர்}.(67) முனிவர்களில் சிறந்தவரும், கல்விமானுமான அவர், பிறகு, எந்தச் செயல்பாட்டிலும் நீண்ட காலம் சிந்திக்கும் அமைதியான மனிதர்கள் அடையும் தகுதிகளை {புண்ணியங்களைக்) குறித்த இந்த ஸ்லோகங்களைச் சொன்னார்.(68) {கௌதமர்}, “ஒரு நண்பனின் மரணக் காரியமென்றால், ஒருவன் அதை நீண்ட காலத்திற்குப் பிறகே நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தைக் கைவிடும் காரியமென்றால், அவன் நீண்ட காலத்திற்குப் பிறகே அதைக் கைவிட வேண்டும். நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைந்த ஒரு நட்பே நீண்ட காலத்திற்கு நிலைக்கும்.(69) கோபம், அகந்தை, செருக்கு, சச்சரவுகள், பாவச் செயல்கள் ஆகியவற்றின் வசப்படாமல், ஏற்கத்தகாத பணிகளை நிறைவேற்றும் காரியங்கள் அனைத்திலும் தாமதிப்பவன் மெச்சத்தகுந்தவனாவான்.(70) ஓர் உறவினர், நண்பர், பணியாள், அல்லது மனைவி ஆகியவர்களுக்கெதிரான குற்றம் தெளிவாக மெய்ப்பிக்கப்படாத போது, அவர்களைத் தண்டிப்பதில் தாமதிப்பவன் மெச்சத்தகுந்தவனாவான்” {என்றார் கௌதமர்}.(71)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஓ! குரு குலத்தோனே, இவ்வாறே தமது ஆணையை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தத் தமது மகனிடம் நிறைவடைந்தார் அந்தக் கௌதமர்.(72) ஒரு மனிதன் அனைத்துச் செயல்களிலும் இவ்வழியில் நீண்ட காலம் சிந்தித்து, தீர்மானத்தை அடைந்த பிறகே செயல்பட வேண்டும். இவ்வழியில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் ஒருவன், நீண்ட காலத் துன்பங்களை நிச்சயம் தவிர்ப்பான்.(73) எந்த மனிதன் நீண்ட காலம் கோபத்தைப் பணியச் செய்கிறானோ, எவன் எச்செயலையும் செய்வதற்கு முன்னால் நீண்ட காலம் ஆலோசிக்கிறானோ அவன் வருத்தம் தரும் எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான்.(74) ஒருவன் பெரியோரிடம் நீண்ட காலம் காத்திருந்து {பணிவிடை செய்து}, அவர்களின் அருகே அமர்ந்து அவர்களிடம் மதிப்பைக் காட்ட வேண்டும். ஒருவன் தனது கடமைகளை நீண்ட காலம் கவனித்து, அவற்றை உறுதி செய்வதில் நீண்ட காலம் ஈடபட வேண்டும்.(75)
கல்விமான்களிடம் நீண்ட காலம் காத்திருந்து, நடத்தையில் நல்லோராக இருப்போரிடம் நீண்ட காலம் மதிப்புடன் பணி செய்து, தன் ஆன்மாவை நீண்ட காலம் முறையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒருவன், நீண்ட காலம் உலகால் மதிக்கப்படும் நிலையை அனுபவிப்பதில் வெல்வான்.(76) அறம் மற்றும் கடமை குறித்த காரியங்களில் ஈடுபடும் ஒருவன், அக்காரியங்களின் செய்தியை மற்றொருவன் கேட்கும்போது, அவனுக்குப் பதிலைக் கொடுப்பதற்கு முன் நீண்ட காலம் சிந்திக்க வேண்டும். அப்போது (பாவத்திற்கு வழிவகுக்கும் நடைமுறை விளைவுகளைக் கொண்ட தவறான பதிலைக் கொடுக்கும்) வருந்தத்தக்க நிலையை அவன் தவிர்க்கலாம்.(77) கடுந்தவங்களைக் கொண்ட கௌதமரைப் பொறுத்தவரையில், அம்முனிவர் நீண்ட காலம் தமது ஆசிரமத்தில் தேவர்களைத் துதித்து, இறுதியாகத் தம் மகனுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தார்” என்றார் {பீஷ்மர்}.(78)
சத்தியவான் தியுமத்சேனன்! – சாந்திபர்வம் பகுதி – 267-குடிமக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாக்கும் காரியத்தில் சத்தியவானுக்கும் தியுமத்சேனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உண்மையில் ஒரு மன்னனால் எவருக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியும்? ஓ! பாட்டா, ஓ! நல்லோரில் முதன்மையானவரே, நான் இஃதை உம்மிடம் கேட்கிறேன், எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் தியுமத்சேனனுக்கும், மன்னன் சத்தியவானுக்கும் இடையில் நடந்த பழைய உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) தந்தையின் {தியுமத்சேனனுடைய} ஆணையின் பேரில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வரும்போது, அதற்கு முன் எவராலும் சொல்லப்படாத குறிப்பிட்ட வார்த்தைகளை இளவரசன் சத்தியவான் சொன்னான்[1].(3) {சத்தியவான்}, “சிலவேளைகளில் அறமானது கொடுமையின் வடிவையும், கொடுமையானது அறத்தின் வடிவையும் ஏற்கின்றன. தனி நபர்களைக் கொல்வது ஒருபோதும் அறச்செயலாகும் சாத்தியமில்லை” {என்றான்}.(4)தியுமத்சேனன் {சத்தியவானிடம்}, “கொல்லத்தகுந்தவர்களை விடுவது அறமென்றால், ஓ! சத்தியவான், கள்வர்களைத் தண்டிக்காமல் விட்டால், (அறத்திற்கும், மறத்திற்கும் இடையிலான) வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து போகும்.(4) (தீயோரைத் தண்டிக்காமல் விட்டால்) “இஃது என்னுடையது, இஃது என்னுடையதில்லை” (என்ற உடைமை ரீதியிலான) கருத்துகள் கலியுகத்தில் நீடிக்காது.(5) (தீயோர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால்) உலகக் காரியங்கள் முடங்கிப் போகும் நிலையை எட்டும். (தீயோரைத் தண்டிக்காமல்) உலகத்தை எவ்வாறு நடத்தலாம் என்பதை நீ அறிந்தால், அது குறித்து எனக்குச் சொல்வாயாக” என்றான்.(6)
சத்தியவான் {தியுமத்சேனனிடம்}, “மூவகையினரும் (க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரரும்) பிராமணர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட வேண்டும். இந்த மூவகையினரும் அறத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டால், அவர்களின் நடைமுறைகளை (கலப்பால் உண்டான) துணை வகையினர் பின்பற்றுவார்கள்[2].(7) அவர்களுக்கு மத்தியில் (பிராமணர்களின் ஆணைகளை) மீறுவோரைக் குறித்து மன்னனிடம் புகாரளிக்க வேண்டும். “இவன் என் ஆணைகளைக் கேட்கவில்லை” என்று ஒரு பிராமணனால் சொல்லப்படும் புகாரின் பேரில் அந்தக் குற்றவாளிக்கு மன்னன் தண்டனை அளிக்க வேண்டும்.(8) மன்னன், அந்தக் குற்றவாளியின் உடலை அழிக்காமல், சாத்திரங்களில் குறிப்பிடப்படும் தண்டனைகளை அளிக்க வேண்டும். மன்னன், குற்றத்தின் தன்மையை முறையாகச் சிந்திப்பது, அறநெறி ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டு வேறு வகையில் நடந்து கொள்ளக்கூடாது.(9) மன்னன் தீயோனைக் கொல்வதன் மூலம் (நடைமுறையில்) பெரும் எண்ணிக்கையிலான தனிப்பட்ட அப்பாவிகளைக் கொல்கிறான். ஒரு கள்வனைக் கொல்வதன் மூலம், அவனது மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் ஆகிய அனைவரும் (அவர்கள் வாழ்வதற்கான வழிமுறைகளை இழக்கும் காரணத்தால்) கொல்லப்படுகின்றனர் என்பதைக் காண்பீராக. எனவே, தீய மனிதனால் தீங்கை அடையும்போது, தண்டனை வழங்கும் கேள்வியில் மன்னன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.(10)சில வேளைகளில் ஒரு தீயவன், அறவோன் ஒருவனின் நன்னடத்தையை ஈர்த்துக் கொள்வதைக் காண முடிகிறது. மேலும் சில தீய மனிதர்களிடம் இருந்து நல்ல பிள்ளைகள் பிறப்பதும் காணப்படுகிறது.(11) எனவே, தீயவர்கள் வேரோடு அழிக்கப்படக்கூடாது. தீயோரைக் கொல்வது நித்திய நடைமுறைக்கு {ஸநாதன தர்மத்துக்கு} இணக்கமானதல்ல. சிறு தண்டனைகள் மூலம் அவர்களின் குற்றங்களை ஈடு செய்ய வேண்டும்.(12) அவர்களது செல்வம் அனைத்தையும் இழக்கச் செய்தல், சங்கிலியில் பிணைத்து நிலவறைகளில் சிறைவைத்தல், அவர்களது வடிவத்தை இழக்கச் செய்தல் {உடல் உறுப்புகளை அகற்றுதல்} ஆகியவற்றின் மூலம் அவர்களது குற்றம் ஈடுசெய்யப்பட வேண்டும். அவர்களுக்கு மரணத் தண்டை அளிப்பதன் மூலம், அவர்களது உறவினர்கள் தண்டிக்கப்படக்கூடாது. பாதுகாப்பை அடையும் விருப்பத்தால், புரோகிதர்கள் மற்றும் பிறரின் முன்னிலையில் அவர்கள், “ஓ! பிராமணரே, நாங்கள் மீண்டும் ஒருபோதும் எந்தப் பாவச் செயலையும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி உறுதி அளித்தால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் அளிக்காமல் விடுவதே தகுந்ததாகும்.(13,14) இதுவே படைப்பாளனின் ஆணையாகும். மான்தோலுடுத்தி, (துறவிகளுக்கான) தண்டம் தரித்து, தலைமழித்தவர்களாக இருக்கும் பிராமணனாகவே ஒருவன் இருந்தாலும் கூட, (அவன் வரம்பை மீறும்போது) தண்டிக்கப்பட வேண்டும்[3].(15) பெரிய மனிதர்கள் வரம்புமீறினால் அவர்களது பெருமைக்குத் தக்க அளவில் தண்டனை இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் முதல் தருணத்தில் விடப்படுவது போலத் தண்டனையின்றி விடத்தகாதவர்கள் ஆவர்” என்றான் {சத்தியவான்}.(16)
தியுமத்சேனன் {சத்தியவானிடம்}, “மனிதர்கள் தாங்கள் இருக்க வேண்டிய வரம்புகளை மீறாதவரை அவர்கள் அறத்தின் பெயரால் அமர்த்தப்படலாம்.(17) அந்த வரம்புகளை மீறும்போது, மரணத்தைக் கொண்டு அவர்களைத் தண்டிக்கவில்லையெனில், அந்த வரம்புகள் விரைவில் அழிந்துவிடும். நெடுங்காலத்துக்கு முந்தைய மனிதர்கள் வெகு எளிதாக ஆளப்படத் தகுந்தவர்களாக இருந்தனர்[4].(18) அவர்கள் (பேச்சிலும், ஒழுக்கத்திலும்) மிக உண்மையுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் சச்சரவுகளிலும், சண்டைகளிலும் குறைவாகவே ஈடுபட்டனர். அவர்கள் எப்போதாவதுதான் கோபவசப்பட்டார்கள், அல்லது அவர்களது கோபம் அடக்கத்தகாததாக ஒருபோதும் இருந்ததில்லை. அந்தக் காலங்களில் “சீ” என்று சொல்வதே குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனையாக இருந்தது. அதன் பிறகு, கடுமொழிகள் அல்லது நிந்தனைகளே தண்டனைகளாகின.(19) அதன் பிறகு, அபராதங்களும், பறிமுதல்களும் தண்டனைகளாகப் பின்தொடர்ந்தன. எனினும், இக்காலத்தில் மரணமே தற்போதைய தண்டனையாக இருக்கிறது. ஒருவரை மட்டும் கொல்வதாலேயே பிறரைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்ற அளவுக்குத் தீமையின் அளவு அதிகரித்திருக்கிறது[5].(20) கள்வனுக்கு மனிதர்களுடனோ, தேவர்களுடனோ, கந்தர்வர்களுடனோ, பித்ருக்களுடனோ தொடர்பேதும் கிடையாது. அவன் யாருக்கு என்னவாக இருக்கிறான்? அவன் எவருக்கும் எவருமாக இல்லை. இதுவே ஸ்ருதிகளின் தீர்மானமாகும்[6].(21) கள்வன் இடுகாடுகளில் உள்ள சடலங்களின் ஆபரணங்களையும் எடுத்துக் கொள்கிறான், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களின் (அதனால் அறிவிழந்தவர்களின்) உடைகளை அணிந்து கொள்கிறான். இந்த இழிந்த பாவிகளிடம் எந்த உடன்படிக்கையையோ, (அதைச் சார்ந்திருப்பதற்காக) அவர்களிடம் இருந்து எந்த உறுதிமொழியையோ ஏற்று ஏற்படுத்திக் கொள்ளும் மனிதன் மூடனாவான்” என்றான் {தியுமத்சேனன்}[7].(22)
சத்தியவான், “அந்த நேர்மையற்றமுரடர்களில் இருந்து நேர்மையான மனிதர்களை உருவாக்குவதிலும், கொலையோடு தொடர்பில்லாத வழிமுறைகளின் மூலம் அவர்களைக் காப்பதிலும் நீர் வெல்லவில்லையெனில், வேள்வி எதையாவது ஏற்பாடு செய்து அவர்களை அழிப்பீராக[8].(23) குடிமக்கள் தங்கள் வாழ்வின் தொழிலில் செழிக்க வேண்டும் என்பதற்காக மன்னர்கள் கடுந்தவங்களைப் பயில்கிறார்கள். அவர்களது நாடுகளில் கொள்ளையர்களும், கள்வர்களும் பெருகும்போது அவர்கள் {மன்னர்கள்} அவமானமடைகிறார்கள். எனவே, கொள்ளையையும், களவையும் ஒடுக்குவதற்காகவும், தங்கள் குடிமக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்யவும் அவர்கள் தவங்களைச் செய்கிறார்கள்.(24) அச்சுறுத்துவதால் மட்டுமே குடிமக்களை (மன்னனால்) நேர்மையானவர்களாக மாற்ற முடியும். நல்ல மன்னர்கள் பழிக்கு பழி செய்யும் நோக்கத்துடன் தீயவர்களை ஒருபோதும் கொல்வதில்லை. (மறுபுறம், அவர்கள் கொல்வார்கள் என்றாலும், கொல்லப்படுபவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு வேள்வியிலேயே அவர்களைக் கொல்வார்கள்). நல்ல மன்னர்கள் (கொடுமையான தண்டனைகளுக்குப் பதிலாக) நல்லொழுக்கத்தின் துணையுடன் தங்கள் குடிமக்களை முறையாக ஆள்வதன் மூலமே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.(25) மன்னர்கள் முறையுடன் செயல்பட்டால், மேன்மையான குடிமக்கள் அவர்களை {அந்த மன்னர்களைப்} போலவே செயல்படுவார்கள். தாழ்ந்த மக்களோ, தங்கள் பங்குக்கு, தங்களுக்கு அடுத்தபடியில் மேன்மையானவர்களாக இருப்போரைப் போலவே செயல்படுவார்கள். மனிதர்கள் தங்களைவிடச் சிறந்தவர்கள் என்று யாரைக் கருதுவார்களோ, அவர்களைப் போலவே செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்[9].(26) கட்டுப்பாடு இல்லாத மன்னன், (தீய வழிகளில் இருந்து) பிறரைத் தடுக்க முனைந்தால், புலன்களுக்கு அடிமையாக உலக இன்பங்கள் அனைத்திலும் ஈடுபடும் இயல்பின் விளைவால், அவன் மனிதர்கள் அனைவரின் பரிகாசத்திற்கான பொருளாகவே ஆவான்.(27) அகங்காரம் அல்லது தீர்மானப்பிழையின் மூலம் மன்னனுக்கெதிராக எவ்வழியிலாவது குற்றமிழைக்கும் மனிதன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தடுக்கப்பட வேண்டும்.(28) இவ்வழியின் மூலமே புதிய குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து அவனைத் தடுக்க முடியும். (தேவைப்பட்டால்) அவன் நண்பர்களையும், நெருக்கமான உறவினர்களையும் கூடக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.(29) ஒரு வெறுக்கத்தக்க குற்றவாளி எந்த நாட்டில் கடும் தண்டனைகளைச் சந்திக்கவில்லையோ, அங்கே குற்றங்கள் பெருகி, அறம் குறையும் என்பதில் ஐயமில்லை.(30)
கருணை கொண்டவரும், கல்விமானுமான ஒரு பிராமணர் முற்காலத்தில் இஃதை எனக்குப் போதித்தார். உண்மையில், ஓ! தந்தையே, மக்களிடம் கருணையால் உந்தப்பட்ட நமது முப்பாட்டன்களும், இதே அளவுக்கான தீங்கிழையாமையை அவர்களுக்கு உறுதி செய்திருக்கின்றனர்.(31) அவர்களது வார்த்தைகள், “கிருதயுகத்தில், முற்றிலும் தீங்கிழைக்காத வழிகளைப் பின்பற்றியே மன்னர்கள் தங்கள் குடிமக்களை ஆள வேண்டும்.(32) திரேதா யுகத்தில், முழு நிறைவில் இருந்து நான்கில் ஒரு பகுதி விழுந்த அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியே மன்னர்கள் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். துவாபர யுகத்தில், பாதி அளவுக்கு விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும், அதைத் தொடர்ந்து வரும் {கலி} யுகத்தில் நான்கில் மூன்று பகுதிகள் விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.(33) கலியுகம் நேரும்போது, மன்னர்களின் தீய தன்மையின் மூலமும், அந்த யுகத்திற்கே உரிய இயல்பின் விளைவாகவும் அறத்தின் நான்காவது பகுதியிலும் பதினைந்து பகுதிகள் மறைந்து, அதனில் பதினாறாவது பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும்.(34) ஓ! சத்தியவான், இதில் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் குழப்பம் நேர்ந்தால், அம்மன்னன், மனித வாழ்வின் கால அளவையும், மனிதர்களின் பலத்தையும், நேரும் நேரத்தின் இயல்பையும் கருத்தில் கொண்டு தண்டனைகளை அளிக்க வேண்டும்” {என்று முன்னோர்கள் சொன்னார்கள்}.(35) உண்மையில், சுயம்புவின் {பிரம்மனின்} மகனான மனு, மனிதர்களிடம் தாம் கொண்ட கருணையால், எந்த வழிமுறைகளின் மூலம் (தீங்கிற்குப் பதிலாக) விடுதலைக்கான {முக்திக்கான} அறிவை அவர்கள் அடைவார்களோ அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்” என்றான் {சத்தியவான்}”.(36)
கபிலர், ஸ்யூமரஸ்மி! – சாந்திபர்வம் பகுதி – 268-விலங்குகளைக் கொல்லாமல் வேள்வி செய்ய வேண்டும் என்பது குறித்து கபிலருக்கும் ஸ்யூமரஸ்மிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நன்கறியப்பட்ட ஆறு குணங்களுக்கு {செல்வம் [ஐஸ்வர்யம்], ஞானம், புகழ் [கீர்த்தி], அமைதி [சாந்தி], மனோவுறுதி [வைராக்யம்], அறம் [தர்மம்] என்ற ஆறு குணங்களுக்கு} வழிவகுக்கும் யோக அறத்தை எவ்வாறு பின்பற்றலாம்? எந்த உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு அதைப் பயிலலாம் என்பது குறித்து நீர் ஏற்கனவே எனக்கு விளக்கிச் சொன்னீர். ஓ! பாட்டா, இன்பம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டு விளைவுகளுக்கும் வழிவகுக்கும் அறத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக.(1) ஒரே கதியையே அடையச் செய்யும் இல்லறக்கடமைகள் {கிருகஸ்ததர்மம்} மற்றும் யோகக்கடமைகள் {யோகதர்மம்} ஆகிய இரண்டில் எது மேன்மையானது?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தக் கடமை நடைமுறைகள் இரண்டும் உயர்ந்த அருளைக் கொண்டவையே. இவை இரண்டும் சாதிப்பதற்கு மிகக் கடினமானவையே. இரண்டும் உயர்ந்த கனிகளை உண்டாக்கவல்லவையே. இவை இரண்டும் மறுப்பிற்கிடமின்றி நல்லோராக இருப்போரால் பயிலப்படுபவையே.(3) நான் இப்போது இந்தக் கடமை நடைமுறைகள் இரண்டின் உண்மைக் கருத்தில் நீ கொண்டுள்ள ஐயங்களை விலக்குவதற்காக அவற்றின் முக்கியத்துவத்தை உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) இது தொடர்பாகக் கபிலருக்கும், ஒரு பசுவுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(5)
பழங்காலத்தில், மன்னன் நஹுஷனின் அரண்மனைக்குத் தேவன் தாஷ்டிரி {த்வஷ்டா} வந்த போது, அவன் {நஹுஷன்} தன் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்துவதற்காக உண்மையானதும், புராதனமானதும், நித்திய தடையாணையுமான வேதங்களுக்கு ஏற்புடைய வகையில் ஒரு பசுவைக் கொல்ல ஆயத்தமானான்.(6) பரந்தமனம் கொண்டவரும், சத்வக் கடமைகளை எப்போதும் நோற்பவரும், தமது புலன்களைக் கட்டுப்படுத்துவதில் எப்போதும் ஈடுபடுபவரும், உண்மை ஞானம் கொண்டவரும், எளிய உணவை உண்பவரும்,(7) நம்பிக்கையுடன் கூடிய சிறந்த அறிவை அடைந்தவரும், முற்றிலும் அச்சமற்றவரும், நன்மையானவரும், உறுதியானவரும், எப்போதும் உண்மையை நோக்கித் தம்மைச் செலுத்திக் கொள்பவருமான கபிலர், கொல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள பசுவைக் கண்டு, “ஐயோ, வேதங்களே” என்ற வார்த்தைகளை ஒருமுறை சொன்னார். அந்த நேரத்தில, ஸ்யூமரஸ்மி என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் (யோக சக்தியின் மூலம்) அந்தப் பசுவின் வடிவத்திற்குள் நுழைந்து, யதியான அந்தக் கபிலரிடம், “ஓ! கபிலரே, ஆச்சரியமாக இருக்கிறது.(8) வேதங்கள் (அவற்றில் உள்ள தீர்மானங்களின் மூலம் உயிரினங்களைக் கொல்ல அனுமதிப்பதன் விளைவால்) நிந்திக்கத்தகுந்தவையென்றால், (உயிரினங்கள் அனைத்திற்கும் முற்றிலும் தீங்கிழையாமையைக் கொடுக்கும்) பிற கடமைகளை அதிகாரம் பெற்றவையாக எதைக் கொண்டு கருத முடியும்?[1](9) தவங்களுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், நுண்ணறிவுடன் கூடியவர்களும், ஸ்ருதிகளையும், ஞானத்தையும் தங்கள் கண்களாகக் கொண்டவர்களுமான மனிதர்கள், முனிவர்களால் தொகுக்கப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட வேதங்களின் தடையாணைகளை தெய்வத்தின் வார்த்தைகளாகவே கருதுகிறார்கள்.(10) வேதங்களின் உட்பொருளைப் பொறுத்தவரையில், கனியின் விருப்பில் விடுபட்டவனும், (பொறாமை மற்றும் வெறுப்பு என்ற) நோயற்றவனும், எதற்கும் அடிமையாக இல்லாதவனும், (தன் விருப்பங்கள் அனைத்தும் உடனே கனிவதன் விளைவால்) எந்த முயற்சியும் இல்லாதவனுமான பரம்பொருளின் வார்த்தைகளாகவே அவை இருக்கும்போது (அவற்றை நிந்திப்பதாலோ, புகழ்வதாலோ) எவராலும் என்ன சொல்ல முடியும்?” என்று கேட்டார் {ஸ்யூமரஸ்மி}[2].(11)கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “நான் வேதங்களை நிந்திக்கவில்லை. எவ்வகையிலும் அவற்றைக் குறைத்துப் பேசவும் நான் விரும்பவில்லை. பல்வேறு வாழ்வுமுறைகளுக்கு {ஆசிரமங்களுக்கு} விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகளின் நடைமுறைகளும் ஒரே கதிக்கே வழிவகுக்கின்றன என நாம் கேள்விப்படுகிறோம்.(12) ஒரு சந்நியாசி உயர்ந்த கதியை அடைகிறார். ஒரு காட்டுவாசியும் {வானப்ரஸ்தனும்} உயர்ந்த கதியை அடைகிறான். இல்லறத்தான் {கிருஹஸ்தன்} மற்றும் பிரம்மச்சாரியாகிய மற்ற இருவரும் கூட அதே கதியையே அடைகின்றனர்.(13) வாழ்வுமுறைகள் நான்கும் எப்போதும் தேவையான வழிகளாகவே கருதப்படுகின்றன[3]. ஒப்பீட்டளவில் இவற்றின் பலம், அல்லது பலவீனமானது, அவற்றுக்குரிய கதிகளின் தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.(14) ‘இவற்றை அறிந்து கொண்டு, சொர்க்கத்திற்கும் மற்ற அருள்களுக்கும் வழிவகுக்கும் செயல்களை நிறைவேற்றுவாயாக’ என்பது வேதத் தீர்மானத்தில் ஒன்றாகும். ’செயல்களைச் செய்யாதே’ என்பதும் மற்றொரு வேத தீர்மானமே ஆகும்.(15) செயல்களைத் தவிர்ப்பது தகுதியுடையதென்றால், அவற்றை நிறைவேற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். சாத்திரங்களின் நிலை இவ்வாறு இருக்கும்போது, குறிப்பிட்ட தீர்மானங்களின் பலம், அல்லது பலவீனத்தை உறுதி செய்வது மிகக் கடினமாகவே இருக்க வேண்டும்.(16) சாத்திரங்களில் அல்லாமல் நேரடி சாட்சியம் சார்ந்த, தீங்கிழையாமை எனும் அறத்தை விட மேன்மையான கடமையின் நடைமுறை எதனையும் நீர் அறிவீரென்றால், அஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {கபிலர்}.(17)ஸ்யூமரஸ்மி, “’ஒருவன் சொர்க்கத்ததில் உள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்ய வேண்டும்’ என்ற இந்த ஸ்ருதி நம்மால் அடிக்கடி கேட்கப்படுகிறது. (அடையப்பட வேண்டிய) கனியை முதலில் நினைத்தே ஒருவன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்கிறான்.(18) வெள்ளாடு, குதிரை, செம்மறியாடு, பசு, பறவையினங்கள் அனைத்தும், வளர்ப்பு விலங்குகள், காட்டு விலங்குகள், செடி கொடிகள் ஆகியன வாழும் உயிரினங்கள் பிறவற்றின் உணவாகின்றன. இதை நாம் கேள்விப்படுகிறோம்[4].(19) உணவானது, தினத்திற்கு தினம் காலையும் மாலையும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல ஸ்ருதியானது, விலங்குகள் மற்றும் தானியங்கள் வேள்விகளின் அங்கங்களாகும் எனத் தீர்மானிக்கிறது[5].(20)அண்டத்தின் தலைவன் அவற்றை {அந்த உயிரினங்களை} வேள்வியோடு சேர்த்துப் படைத்தான். அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவன், அவற்றின் உதவியுடனே தேவர்களை வேள்விகள் செய்ய வைத்தான்.(21) மொத்தம் ஏழு (வளர்ப்பு விலங்குகளும்), ஏழு (காட்டு) விலங்குகளும் வேள்விக்குத் தகுந்தவை எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை அனைத்தும் இணையான தகுதியைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அடுத்தடுத்தவை ஒவ்வொன்றும் தங்களுக்கு முந்தையவற்றுக்குத் தாழ்ந்தவையாக இருக்கின்றன. அதே போல, மொத்த அண்டமே வேள்விக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என வேதங்கள் அறிவிக்கின்றன. எவன் புருஷன் என்று அழைக்கப்படுகிறானோ, அவனையும் அதே காரியத்திற்காகவே வேதங்கள் நியமித்திருக்கின்றன[6].(22) மிகப் பழங்காலத்து மனிதர்களால் இஃது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கல்விமானான எந்த மனிதன், தன் திறனுக்குத் தக்கபடி வேள்விக்கான உயிரினங்களில் குறிப்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பான்?(23) தாழ்ந்த விலங்குகள், மனிதர்கள், மரங்கள், செடிகள் ஆகிய அனைத்தும் சொர்க்கத்தை அடைவதை விரும்புகின்றன. எனினும், அவை அஃதை அடைவதற்கு வேள்வியைத் தவிர வேறெந்த வழிமுறையும் கிடையாது.(24)உதிர்ந்த செடிகள், விலங்குகள், மரங்கள், கொடிகள், தெளிந்த நெய், பால், தயிர், இறைச்சி மற்றும் (வேள்வி நெருப்பில் ஊற்றப்படும்) அங்கீகரிக்கப்பட்ட பிற பொருட்கள், நிலம், திசைப்புள்ளிகள், நம்பிக்கை, காலம் எனப் பனிரெண்டும்,(25) அவற்றுடன் ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள், வேள்வி செய்பவன் ஆகியவற்றைச் சேர்த்தால் பதினாறும், இல்லறத்தானாக அறியப்படும் நெருப்பும் சேர்ந்த இந்தப் பதினேழும்(26) வேள்வியின் அங்கங்கள் எனச் சொல்லப்படுகின்றன. வேள்வியே உலகின் வேரென்றும், அதன் நடைமுறை என்றும் ஸ்ருதி {வேதம்} தீர்மானிக்கிறது. பசுக் கொடுக்கும் தெளிந்த நெய், பால், தயிர், சாணம், பாலுடன் கலந்த தயிர், தோல், வால்மயிர், கொம்புகள் மற்றும் குளம்புகள் ஆகியவற்றால் மட்டுமே வேள்விக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துவிட முடியும். இவற்றில் குறிப்பிட்ட வேள்விகளுக்கு விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்டவையும்,(27,28) ரித்விஜர்களும், (புரோகிதர்கள் மற்றும் பிற பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும்) கொடைகளும் சேர்ந்தே வேள்விகளை நீடிக்கச் செய்கின்றன[8]. மனிதர்கள் இவற்றை ஒன்றாகத் திரட்டி வேள்விகளைச் செய்கிறார்கள்.(29) வேள்வி செய்வதற்காகவே அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மைக்கு இணக்கமாக இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. இவ்வாறே பழங்காலத்தின் மனிதர்கள் அனைவரும் தங்களை வேள்வி செய்வதில் நிறுவிக் கொண்டார்கள்.(30)
எனினும், வேள்விகளைக் கனிக்காகவோ, வெகுமதிக்காகவோ செய்யாமல், அவை செய்யப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வின் காரணமாகச் செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில், அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்கவோ, எதனுடனும் பகைமை பாராட்டவோ, எந்த உலகக் காரியத்திலும் தன்னை நிறுவிக் கொள்ளவோ செய்வதில்லை என்பதே காணப்படுகிறது.(31) வேள்வியின் அங்கங்களென மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள், வேள்விக்குத் தேவையானவை எனச் சொல்லப்பட்ட பிற பொருட்கள், விதிகளில் குறிப்பிடப்பட்டவை ஆகிய அனைத்தும், (வேள்விகளின் நிறைவுக்கான) அங்கீகரிக்கப்பட்ட சடங்கிற்காகப் பயன்படுத்தப்படும்போது ஒன்றையொன்று தாங்கிப் பிடிக்கின்றன.(32) முனிவர்களால் எவை தொகுக்கப்பட்டவையோ, வேதங்களை எவை அறிமுகப்படுத்துகின்றவோ அந்த ஸ்மிருதிகளையும் நான் காண்கிறேன். அவை பிராமணங்களைப் பின்பற்றுவதன் விளைவால் கல்விமான்களால் அதிகாரமிக்கவையாகக் கருதப்படுகின்றன.(33) வேள்விகள் பிராமணங்களையே தங்கள் மூலமாகக் கொண்டிருக்கின்றன, அவை உண்மையில் பிராமணங்களையே சார்ந்திருக்கின்றன. மொத்த அண்டமும் வேள்வியைச் சார்ந்திருக்கிறது, வேள்வியும் அண்டத்தைச் சார்ந்திருக்கிறது.(34) ஓம் என்ற அசையே வேதங்கள் எழுந்த வேராக இருக்கிறது. (எனவே, பெரும் கருத்தைக் கொண்ட அந்த அசையைச் சொல்லியே எந்தவொரு சடங்கும் தொடங்கப்பட வேண்டும்). ஓம், நமஹ, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட் என்ற அசைகளைச் சொல்பவனும், தன் திறனுக்குத் தக்க வகையில் வேள்விகளையும் பிற சடங்குகளையும் செய்பவனுமான ஒருவனுக்கு(35) அடுத்தப் பிறவியில் நேரப்போகும் மூவுலகங்கள் அனைத்திலும் அச்சமேதும் ஏற்படாது. இவ்வாறே வேதங்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசிகளும், முதன்மையான முனிவர்களும் சொல்கின்றனர்.(36)
எவனிடம் ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள் மற்றும் வேத இலக்கணத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி சாமப்பாடல்களை நிறைவு செய்யத் தேவைப்படும் அசைநிலை {சொல்லின் தன்மை} ஆகியவை இருக்கின்றவோ அவனே உண்மையில் பிராமணனாவான்.(37) ஓ! துதிக்கத்தக்க பிராமணரே, அக்னிஹோத்ரம், சோம வேள்வி மற்றும் பெரும் வேள்விகள் பிறவற்றின் கனிகளை நீர் அறிவீர்.(38) இதன் காரணமாகவே, எவ்வகை ஐயுணர்வுமின்றி ஒருவன் வேள்வி செய்யவும், பிற மக்களின் வேள்விகளில் துணை புரியவும் வேண்டும் என நான் சொல்கிறேன். சொர்க்கத்திற்கு வழிவகுக்கத்தக்க (யோதிஷ்டோமம் முதலிய) வேள்விகளைச் செய்யும் ஒருவன், தெய்வீகப் பேரின்பத்தின் வடிவிலான உயர்ந்த வெகுமதிகளை அடைகிறான்.(39) வேள்விகளைச் செய்யாதவர்களுக்கு இம்மையுமில்லை மறுமையுமில்லை என்பது நிச்சயமானதாகும். வேதங்களின் தீர்மானங்களை உண்மையில் நன்கறிந்தவர்கள், (செயல்படத் தூண்டுபவை, அவற்றைச் செய்வதைத் தவிர்க்க போதிப்பவை ஆகிய) இரண்டு வகைத் தீர்மானங்களையும் சம அதிகாரம் கொண்டவையாகவே கருதுகின்றனர்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(40)
சாத்திரக் கள்வர்கள், பிரம்மக் கொள்ளையர்கள்! – சாந்திபர்வம் பகுதி – 269-இல்லறத்தைவிடத் துறவறம் ஏன் மேன்மையானது என்பதைச் சொன்ன கபிலர்; இல்லறவாழ்வின் முக்கியத்துவத்தையும், துறவின் தாழ்வையும் எடுத்துக் காட்டிய ஸ்யூமரஸ்மி; துறவின் பெருமையையும், எவன் பிராமணன் என்பதையும், பிராமண ஒழுக்கத்தையும் எடுத்துச் சொன்ன கபிலர்; முக்தியில் ஐயங்கொள்ளும் ஸ்யூமரஸ்மி.
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “சுயக்கட்டுப்பாட்டையும், அமைதியையும் பின்பற்றும் யதிகள், செயல்களால் அடையப்படும் கனிகள் அனைத்தும் அழிவற்றவையாக இல்லாமல் நிலையற்றவையாகவே இருக்கின்றன என்பதைக்கண்டு, அறிவுப்பாதையின் மூலமாகப் பிரம்மத்தை அடைகிறார்கள். (விரும்பியதும் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூடப்படுவதால்) அவர்களைத் தடுக்கக்கூடிய எதுவும் எந்த உலகத்திலும் கிடையாது.(1) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்திலிருந்தும் அவர்கள் விடுபடுகிறார்கள். அவர்கள் எதற்கும், அல்லது எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தலைவணங்குவதில்லை. அவர்கள் பந்த பாசங்கள் அனைத்தையும் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஞானம் அவர்களுடையதாக இருக்கிறது. அவர்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தூய்மையான, களங்கமற்ற வாழ்வை வாழ்ந்து, (பெரும் மகிழ்ச்சியுடன்) திரிந்து கொண்டிருக்கிறார்கள்.(2) அவர்கள் அழிவடையக்கூடிய அனைத்துப் பொருட்கள் மற்றும் துறவு வாழ்வு (ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம்) தங்கள் புத்தியினால் தீர்மானமான முடிவுகளை அடைந்திருக்கிறார்கள். பிரம்மத்திடம் அர்ப்பணிப்புடன், பிரம்மத்தைப் போன்று ஏற்கனவே ஆகிவிட்ட அவர்கள் பிரம்மத்திலேயே தங்கள் புகலிடத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.(3) துன்பத்தைக் கடந்து, ரஜஸிலிருந்து (ரஜஸ் என்ற குணத்தில் இருந்து) விடுபட்ட அவர்கள், அழிவற்றவற்றையே தங்கள் உடைமைகளாகக் கொள்கின்றனர். உயர்ந்த கதியானது இந்த மனிதர்கள் அடையும் தொலைவுக்குள் இருக்கும்போது, அவர்களுக்கு இல்லற வாழ்வுமுறையின் கடமைகளைப் பயிலும் தேவை என்ன இருக்கிறது?” என்று கேட்டார் {கபிலர்}[1].(4)
ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “உண்மையில், அதுவே {முக்தியே} அடையத்தக்க உயர்ந்த பொருளாக இருந்தால், உண்மையில் (துறவை பயில்வதால் அடையப்படும்) உயர்ந்த கதி அதுவேயென்றால், அப்போதும் இல்லற வாழ்வுமுறையின் முக்கியத்துவமே புலப்படுகிறது. ஏனெனில் இல்லற வாழ்வுமுறையில்லாமல் எந்த வாழ்வுமுறையும் சாத்தியமில்லை.(5) உண்மையில், உயிரினங்கள் அனைத்தும், அவற்றுக்குரிய தாய்மாரைச் சார்ந்திருப்பதன் விளைவாலே வாழ இயல்வதைப் போலவே, இல்லறவாழ்வுமுறையைச் சார்ந்திருக்கும் விளைவால் மட்டுமே பிற மூன்று வாழ்வுமுறைகளும் நீடித்திருக்கின்றன.(6) இல்லற வாழ்வுமுறையை நோற்கும் ஓர் இல்லறத்தான், வேள்விகளைச் செய்து, தவங்களையும் பயில்கிறான். மகிழ்ச்சிக்கான விருப்பத்தின் பேரில் எவராலும் செய்யப்படும் எதுவும், இல்லற வாழ்வுமுறையிலேயே தனது வேரைக் கொண்டிருக்கிறது.(7) சந்ததிகளை உண்டாக்குவதையே பேரின்பத்தின் ஊற்றுக்கண்ணாக உயிரினங்கள் அனைத்தும் கருதுகின்றன. எனினும், (இல்லற வாழ்வுமுறையைத் தவிர) பிற வாழ்வுமுறைகள் எதனிலும் சந்ததிகளை உண்டாக்குவது சாத்தியமற்றதாகிறது.(8) அனைத்து வகைப் புல்லும், துரும்பும், (தானியங்களையும், பயிர்களையும் விளைவிக்கும்) செடி கொடிகள் அனைத்தும், குன்றுகளிலும், மலைகளிலும் வளரும் அதே வகையைச் சார்ந்த பிறவும் தங்கள் வேர்களை இல்லற வாழ்வுமுறையிலேயே கொண்டுள்ளன. உயிரினங்கள் வாழ்வு இவற்றையே சார்ந்திருக்கிறது. (இந்த அண்டத்தில்) உயிரைத் தவிர வேறு எதுவும் காணப்படாததால், இந்த அண்டம் முழுமைக்குமான புகலிடமாக இல்லறமே பார்க்கப்படுகிறது.(9) இவ்வாறிருக்கையில், இல்லறமானது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்காது என்று சொல்லும் உண்மையைக் குறித்து யாரால் பேச முடியும்?
நம்பிக்கையற்றவர்கள், ஞானமற்றவர்கள், {சிந்தனையில்} ஆழமற்றவர்கள்,(10) மதிப்பற்றவர்கள், சோம்போறிகள், உழைப்பால் களைத்தவர்கள், கடந்த காலச் செயல்களின் விளைவால் துயரமடைந்தவர்கள் ஆகியோராலும் மட்டுமே துறவு வாழ்வில் பெரும் அமைதியைக் காண முடியும்.(11) (வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள) குறிப்பிட்ட அழிவற்ற வேறுபாடுகளே மூவுலகங்களையும் தாங்கிப் பிடிக்கும் காரணங்களாக இருக்கின்றன. உயர்ந்த வகையைச் சார்ந்தவனும், வேதங்களை அறிந்தவனுமான சிறந்த மனிதன், தான் பிறந்த நாள் முதலே வழிபடப்படுகிறான்.(12) கர்ப்பாதானம் செய்தலைத் தவிர, மறுபிறப்பாளர்களை இம்மையிலும் மறுமையிலும் செயல்களனைத்தையும் செய்ய வல்லவர்களாக்க வேத மந்திரங்களும் அவசியமாகின்றன[2].(13) (அவர்களின் மரணத்திற்குப் பிறகு) உடலைத் தகனம் செய்வது, இரண்டாவது உடலை அடையச் செய்வது, அத்தகைய அடைதலுக்குப் பிறகு பானம் மற்றும் உணவைக் கொடுப்பது, வாழும் உலகத்தையும் யமலோகத்தையும் பிரிக்கும் ஆற்றைக் கடக்க உதவும் பசுக்களையும் பிற விலங்குகளையும் கொடை அளிப்பது, ஈமப் பிண்டங்களை நீரில் மூழ்கச் செய்வது ஆகியவற்றில் வேத மந்திரங்கள் அவசியமாகின்றன.(14) இறந்தோரின் வழக்கில், அர்ச்சிஷ்மான்கள், பர்ஹிஷத்துக்கள், கிரவியாதர்கள் என்ற மூவகைப் பித்ருக்கள் மந்திரங்களின் தேவையை அங்கீகரிக்கின்றனர், மேலும் மந்திரங்களும் திறன்மிக்கக் காரணங்களாகக் கொள்ளப்பட்டு (நோக்கங்களை அடைவதற்காக இந்த விழாக்களையும் சடங்குகளையும் செய்ய வழிகாட்டப்பட்டு) அனுமதிக்கப்படுகின்றன.(15) வேதங்கள் இஃதை இவ்வளவு உரக்கச் சொல்லும்போதும், பித்ருக்கள், முனிவர்கள், தேவர்கள் ஆகியோருக்கு மனிதர்கள் கடன்பட்டிருக்கின்றனர் என்று சொல்லப்படும்போதும், எவராலும் விடுதலையை {முக்தியை} எவ்வாறு அடைய முடியும்?(6)வேத தீர்மானங்களின் உண்மைக் கருத்தை நிலைகுலைப்பதாக இருந்தாலும், (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் அருவ இருப்பைக் குறித்த) இந்தப் போலிக் கோட்பாடானது, செழிப்பிழந்தவர்களும், சோம்பலால் உண்ணப்பட்டவர்களுமான கல்விமானங்களால் வெளிப்படையாக உண்மையின் வண்ணங்களில் போர்த்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது[4].(17) வேத தீர்மானங்களின் அடிப்படையில் வேள்விகளைச் செய்யும் பிராமணன், ஒருபோதும் பாவத்தால் குற்றஞ்செய்யத் தூண்டப்படுவதில்லை. அத்தகைய மனிதன், வேள்விகள் மூலம், தான் வேள்விகளில் கொன்ற அந்த விலங்குகளுடன் சேர்ந்து இன்பலோகங்களை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தையும் அடைவதன் மூலம் நிறைவடைந்து, அவ்விலங்குகளின் விருப்பங்களையும் நிறைவேற்றி, அவற்றையும் நிறைவுகொள்ளச் செய்வதில் வெல்கிறான்.(18) வேதங்களை அலட்சியம் செய்வதன் மூலமும், வஞ்சனை மற்றும் தவறான வழிகாட்டுதலின் மூலமும் ஒருவன் உயர்ந்ததை {பரமனை} அடைவதில் வெல்வதில்லை. மறுபுறம், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்வதன் மூலமே ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(19)கபிலர், “(செயல்களே கடமை {கர்மமே தர்மம்} ஆனால்), நுண்ணறிவு கொண்ட மனிதன் செய்யத் தர்சம், பௌர்ணமாஸம், அக்னிஹோத்ரம், சாதுர்மாஸ்யம் மற்றும் பிற செயல்கள் இருக்கின்றன. அதைச் செய்வதில் அழிவில்லாத தகுதியும் {புண்ணியமும்} இருக்கிறது. (பிறகு, அவன் கொடுமை நிறைந்த செயல்களை ஏன் செய்ய வேண்டும்?).(20) செயல்கள் அனைத்தில் இருந்தும் விலகியவர்களாக, பொறுமையுடன் கூடியவர்களாக, (கோபம் மற்றும் அனைத்துக் களங்கங்களில் இருந்தும்) தூய்மையடைந்தவர்களாக, பிரம்மத்தை அறிந்தவர்களாகச் சந்நியாச வாழ்வுமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அத்தகைய பிரம்ம அறிவாலேயே வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளை மிகவும் விரும்பும் தேவர்களிடம் (முனிவர்களிடமும், பித்ருக்களிடமும்) பட்டிருக்கும் கடன்களை அடைப்பதில் வெல்கிறார்கள்.(21) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களையும் சமமான கண்ணில் பார்ப்பவனுமான பாதையற்ற ஒருவனின் {வித்வானின்} பாதையை அறிவதில் தேவர்களேகூட மலைத்துப் போகிறார்கள்.(22) ஆசான்களிடம் பெற்ற போதனைகளின் மூலம் ஒருவன், நான்கு வாயில்களையும், நான்கு வாய்களையும் கொண்டதும், நான்கு வகை இயல்பைக் கொண்டதுமான இந்தச் சட்டகத்திற்குள் {உடற்கட்டுக்குள்} வசிக்கும் ஒன்றை {ஆத்மாவை} அறிகிறான். இரு கரங்கள், வாக்கு புலன் {நாக்கு}, வயிறு, இன்ப புலன் ஆகியவற்றின் (ஆகியவற்றைக் கொண்டதன்) விளைவால் தேவர்களும் நான்கு வாயில்களைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். எனவே ஒருவன் அந்த வாயில்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்குத் தன்னால் இயன்ற அளவு சிறப்பாக முனைய வேண்டும்[5].(23) ஒருவன் பகடையைக் கொண்டு சூதாடக்கூடாது. அவன் பிறருக்குச் சொந்தமானதை அபகரிக்கக்கூடாது. உன்னதமற்ற பிறப்பைக் கொண்ட ஒரு மனிதனின் வேள்வியில் அவன் துணைபுரியக்கூடாது. அவன் கோபவசப்பட்டு மற்றொருவனைக் கைகளாலோ, கால்களாலோ தாக்கக்கூடாது. எந்தப் புத்திமான் இவ்வாறு தன் நடத்தையை அமைத்துக் கொள்கிறானோ, அவன் தன் கைகளையும், கால்களையும் கட்டுப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.(24) ஒருவன் உரத்துக் கூக்குரலிடும் நிந்தனையிலோ, கண்டிப்பதிலோ ஈடுபடக்கூடாது. அவன் வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது. குறும்புகள் செய்வதில் இருந்தும், பிறரைப் பழித்துக் கூறுவதில் இருந்தும் விலக வேண்டும். அவன் வாய்மை நோன்பை நோற்று, மிகக் குறைந்த அளவில் பேசி, எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தன்னை அமைத்துக் கொண்டால் அவன் தன் வாக்குப் புலனைக் கட்டுப்படுத்திக் கொள்வான்.(25)
ஒருவன் உணவை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. அவன் அதிகமாகவும் உண்ணக்கூடாது. அவன் பேராசையைக் கைவிட்டு, எப்போதும் நல்லோரின் தோழமையை நாட வேண்டும். அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். இவ்வழியில் ஒருவன் தன்னை அமைத்துக் கொள்வதால் வயிறு எனும் வாயிலை முறையாகக் கட்டுப்படுத்தவதில் அவன் வெல்கிறான்.(26) ஓ வீரரே, ஒருவன் மணந்து கொண்ட மனைவி இருக்கும்போது மற்றொருவனுடைய மனைவியைக் காமத்துடன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. அவன் ஒரு பெண்ணை அவளது பருவ காலத்திலன்றி ஒருபோதும் படுக்கைக்கு அழைக்கக்கூடாது. அவன் பிற பெண்களுடன் கலவியை நாடாமல் தன் சொந்த மனைவியிடம் மட்டுமே தன்னை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வழியில் தன்னை அமைத்துக் கொள்ளும் ஒருவன், தன் இன்ப உறுப்பை முறையாகக் கட்டுப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.(27) ஞானம் கொண்ட எந்த மனிதன், தன் இன்ப உறுப்பு, வயிறு, இரு கரங்கள் (மற்றும் இரு கால்கள்), வாக்கு உறுப்பு ஆகிய நான்கு வாயில்களில் அனைத்தையும் முறையாகக் கட்டுப்படுத்துகிறானோ, அவனே உண்மையில் ஒரு மறுபிறப்பாளனாவான்.(28) நன்கு கட்டுப்படுத்தப்படாத வாயில்களைக் கொண்ட மனிதன் அனைத்திலும் பயனற்றவனாவான். அத்தகைய மனிதனின் தவங்களால் என்ன செய்ய முடியும்? அவனது வேள்விகள் எதைக் கொண்டுவரும்? அவனது உடலால் எதை அடைய முடியும்?(29) தன் மேலாடையைக் கைவிட்டவன் எவனோ, தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் உறங்குபவன் எவனோ, அமைதிநிறைந்த இதயத்தைக் கொண்டவன் எவனோ, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(30)
தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்த எந்த மனிதன், மணந்து கொண்ட இணையர் அனுபவிக்கும் இன்பம் அனைத்தையும் தனியாகவே அனுபவிக்கிறானோ, பிறரின் இன்ப துன்பங்களில் எவன் தன் கவனத்தைச் செலுத்தவில்லையோ அவனே பிராமணனாக அறியப்பட வேண்டும்[6].(31) எந்த மனிதன் இவை அனைத்திலும் உண்மையில் உள்ளவற்றை உள்ளபடியே அவற்றின் பல வடிவ மாறுதல்களுடன் சரியாகப் புரிந்து கொள்கிறானோ, எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் கதியையும் அறிந்து கொள்கிறானோ, அவனே தேவர்களால் பிராமணனாக அறியப்படுகிறான்[7].(32) எவனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சமில்லையோ, எவனிடம் எந்த உயிரினிமும் அச்சங்கொள்வதில்லையோ, எவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ அவனே பிராமணனாக அறியப்பட வேண்டும்.(33) கொடைகள், வேள்விகள் போன்ற பக்திச் செயல்கள் அனைத்தின் உண்மை விளைவான இதயத் தூய்மையை அடையாத மூட புத்தி கொண்ட மனிதர்கள், ஆசான்களால் விளக்கப்பட்டாலும், ஒரு பிராமணனாவதற்குத் தேவையான ஞானத்தை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டார்கள். இவை யாவற்றின் அறிவும் இல்லாத இந்த மனிதர்கள், சொர்க்கம் மற்றும் அதன் இன்பங்களின் பல்வேறு வகைக் கனிகளையே விரும்புகிறார்கள்.(34)பழங்காலத்தில் இருந்தே தொடர்வதும், நித்தியமானதும், நிச்சயத்தன்மையை இயல்பாகக் கொண்டதும், நமது கடமைகள் அனைத்திலும் ஓர் இழையாக நுழைந்திருப்பதும், அனைத்து வகை வாழ்வுமுறைகளிலும் உள்ள ஞானிகள், எதைக் கொண்டு தங்கள் வகைக்குரிய கடமைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றை அறியாமையையும் உலகத் தீமைகளையும் அழிக்கும் பயங்கர ஆயுதங்களாக மாற்றிக் கொள்வார்களோ, அந்த நன்னடத்தையின் ஒரு சிறுபகுதியைக் கூட நடைமுறையில் பயில இயலாத மூட புத்தி கொண்ட மனிதர்கள், புலப்படும் கனிகளை உண்டாக்குவதும், உயர்ந்த பலம் நிறைந்ததும், மரணமற்றதுமான அந்நிலையை {ஒழுக்கத்தைக்} கனியற்றதாகவும், சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாததாகவும், (முறையான போக்கின்) பிறழ்வாகவும் கருதுகிறார்கள். எனினும் உண்மையில் அவ்வொழுக்கமானது, துயரில் காணப்படுவதற்கு எதிரான நடைமுறைகளைத் தழுவி, விழிப்புணர்வின் சாரமாகவும், காமத்தாலும், கோபத்தாலும், அதே வகையைச் சார்ந்த பிற ஆசைகளாலும் பாதிக்கப்படாததாகவும் இருக்கிறது.(36,37) வேள்விகளைப் பொறுத்தவரையில் அவற்றின் குறிப்புகள் அனைத்தையும் உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கிறது. உறுதி செய்யப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமாக இருக்கிறது. நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை வழிவகுக்கும் கனிகள் நிலையில்லாதவையாக இருக்கின்றன. இதை நன்றாகக் குறித்துக் கொள்வீராக. (இதைக் குறித்துக் கொண்டு, ஞானப்பாதையில் நடப்பீராக” என்றார் {கபிலர்}.(38)ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “வேதங்கள் செயல்களை முகத்தோற்றமாகக் கொள்ளவும் செய்கின்றன, அவற்றைப் புறக்கணிக்கவும் செய்கின்றன. அவற்றின் தீர்மானங்கள் இவ்வாறு ஒன்றோடொன்று முரண்படும்போது அவற்றில் அதிகாரம் எங்கே இருக்கிறது? மேலும் செயல்களைத் துறப்பதும் பெரும் நன்மையை உண்டாக்குகிறது. இந்த இரு பாதைகளும் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஓ! பிராமணரே, இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக” என்றார்.(39)
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “நல்ல பாதையில் (யோகத்தில்) உங்களைச் செலுத்திக் கொண்டு, உங்களது புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் இவ்வாழ்விலேயே அதன் கனிகளை உணர்வீர்களாக. எனினும், (செயல்களைச் செய்யும் மனிதர்களான) நீங்கள் தொடரும் பிற நோக்கங்களில் புலப்படும் விளைவுகள் என்னென்ன?” என்று கேட்டார்.(40)
ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “ஓ! பிராமணரே, என் பெயர் ஸ்யூமரஸ்மி ஆகும். நான் ஞானத்தை அடைவதற்காக இங்கு வந்தேன். எனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பிய நான், சச்சரவு செய்யும் விருப்பத்தால் அல்லாமல், கபடமற்ற வெளிப்படைத்தன்மையுடனேயே இந்த விவாதத்தைத் தொடங்கினேன்.(41) இந்த இருண்ட ஐயம் என் மனத்தைப் பீடித்திருக்கிறது. ஓ! சிறப்புமிக்கவரே, அஃதை எனக்குத் தீர்ப்பீராக. எதைக் கொண்டு பிரம்மம் அடையப்படுமோ, அந்த (யோகம் எனும்) நல்லோரின் பாதையில் நடப்பவர்கள், தங்கள் புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் அதன் கனிகளை உணர்வார்கள் என்று நீர் சொன்னீர். உண்மையில், புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் உணரப்படுவது எது? எதை நீர் பின்தொடர்கிறீர்?(42) சொற்போரை {தர்க்கத்தை} மட்டுமே தங்கள் முதன்மையான நோக்கமாகக் கொண்ட அறிவியல்கள் அனைத்தையும் தவிர்த்து, ஆகமத்தின் உண்மைப் பொருளை முறையாகப் புரிந்து கொள்ளும் வகையில் நான் அதை {ஆகமத்தைப்} படித்திருக்கிறேன். ஆகமத்தின் மூலமே நான் வேதத் தீர்மானங்களைப் புரிந்து கொள்கிறேன். வேதங்களின் உண்மைப் பொருளை வெளிக்கொணரும் நோக்கத்தைக் கொண்ட தர்க்கத்தின் அடிப்படையிலான அறிவியல்களை {ஆகமம் என்ற} அந்தச் சொல்லில் நான் சேர்க்கிறேன்[8].(43) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைத் தவிர்க்காமல், ஆகமத்தில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளையே ஒருவன் பின்தொடர வேண்டும். ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை நோற்பது, ஒருவனுக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டுகிறது. ஆகமத் தீர்மானங்களுடைய நிச்சயத்தன்மையின் விளைவால், அது வழிவகுக்கும் வெற்றியானது, நேரடியான சாட்சியத்தின் மூலம் கிட்டத்தட்ட உணரத்தக்கது என்று சொல்லப்படுகிறது.(44) ஒரு துறைக்குச் செல்ல இருக்கும் படகில் கட்டப்பட்ட மற்றொரு படகால், பயணிகள் அடைய விரும்பும் துறைக்கு இட்டுச் செல்ல முடியாததைப் போலவே, கடந்த கால ஆசைகளின் மூலம் செய்யப்பட்ட எங்கள் செயல்களால் இழுக்கப்படும் நாங்கள், பிறப்பு மற்றும் இறப்பு என்ற முடிவற்ற ஆற்றை ஒருபோதும் கடக்க முடியாதவர்களாக (மேலும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள ஓய்வு மற்றும் அமைதியின் புகலிடத்தையும் அடைய முடியாதவர்களாக) இருக்கிறோம். ஓ! சிறப்புமிக்கவரே, இக்காரியத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக. ஓர் ஆசான் தன் சீடனுக்குப் போதிப்பதைப் போல எனக்குப் போதிப்பீராக.(45)
மனிதர்களுக்கு மத்தியில், உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் முற்றிலும் துறந்தவர், தமக்குள்ளேயே முற்றிலும் நிறைவுடன் இருப்பவர், துயரத்தைக் கடந்தவர், நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டவர், (தம் சொந்த நன்மைக்காக) செயல்படும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர், தோழமையில் முற்றாகச் சுவையிழந்தவர், அனைத்து வகைச் செயல்களையும் முற்றிலும் தவிர்த்தவரென எவரையும் காண முடியவில்லை.(46) உம்மைப் போன்ற மனிதர்களும்கூட எங்களைப் போலவே இன்பத்திற்கு வசப்படுவதும், துயரத்தில் ஈடுபடுவதும் காணப்படுகிறது. உம்மைப் போன்ற மனிதர்களின் புலன்களும், பிற உயிரினங்களைப் போலவே தங்கள் செயல்பாடுகளிலும், நோக்கங்களிலும் ஈடுபடுகின்றன.(47) இன்பம் குறித்த கேள்வியை நாம் ஆராய்ந்தால், விருப்பங்களையும், ஒரே கதியையும் கொண்ட மனிதர்களின் நான்கு வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்}, நான்கு வாழ்வுமுறைகளுக்குமான {ஆசிரமங்களுக்குமான} தூய இன்பநிலை எதனில் இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {ஸ்யூமரஸ்மி}.(48)
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “ஒருவன் எந்தச் சாத்திரத்தின் அடிப்படையில் செயல்களில் ஈடுபட விரும்பினாலும், அந்தச் செயல்களை ஒழுங்குமுறைப்படுத்த அதில் {அந்த சாத்திரத்தில்} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் கனியற்றவையாவதில்லை. எந்தக் கருத்தின்படி ஒருவன் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டாலும், சுயக்கட்டுப்பாடு, அல்லது யோகக் கடமைகளை நோற்பதால் மட்டுமே அவனால் உயர்ந்த கதியை அடையமுடியும்.(49) ஞானத்தைத் தேடும் மனிதனுக்கு,(பிறப்பு மற்றும் இறப்பு என்ற முடிவிலாத ஆற்றைக்) கடந்து செல்ல அந்த ஞானமே துணைபுரிகிறது. எனினும், ஞானத்தின் பாதையில் இருந்து விலகிய பிறகு மனிதர்கள் தேடும் ஒழுக்கமானது, (பிறப்பு மற்றும் இறப்பு என்ற தீமைகளுக்கு உள்ளாக்கி) அவர்களைப் பீடிக்கவே செய்கிறது.(50) நீர் அறிவைக் கொண்டிருக்கிறீர், துன்பத்தை உண்டாக்கும் உலகம் சார்ந்த பொருட்களின் தொடர்பில்லாமல் இருக்கிறீர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களில் எவரேனும், ஒரே அண்ட ஆன்மாவைப் போல அனைத்தையும் காணச்செய்யும் அறிவை அடைவதில் எப்போதாவது வென்றிருக்கிறீர்களா?[9](51)சச்சரவில் மட்டுமே ஈடுபடும் விருப்பத்தில், சாத்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், விருப்புவெறுப்பில் மூழ்குவதன் விளைவால் செருக்குக்கும், ஆணவத்திற்கும் அடிமையாகும் சிலர் இருக்கிறார்கள்.(52) சாத்திரத் தீர்மானங்களின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத இந்தச் சாத்திரக் கள்வர்கள், இந்தப் பிரம்மக் கொள்ளையர்கள், ஆணவம் மற்றும் பிழையின் ஆதிக்கத்தால் அமைதியைத் தேடவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் மறுக்கிறார்கள்[10].(53) இம்மனிதர்கள் அனைத்துப் புறங்களிலும் கனியற்ற நிலையையே காண்கிறார்கள், (ஏதோ வாய்ப்பின் மூலம்) அவர்கள் ஞானப் பலத்தை அடைவதில் வென்றால், பிறரைக் காக்க ஒருபோதும் அவர்களுக்கு அதைச் சொல்லமாட்டார்கள். முற்றிலும் தமஸ் குணத்தாலான அவர்கள், தமஸை மட்டுமே தங்கள் புகலிடமாகக் கொள்கிறார்கள்.(54) ஒருவன் உள்ளீர்த்துக் கொள்ளும் இயல்பின் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவன் வசப்படுகிறான். அதன்படி, ஒருவனுடைய குணங்களே அவனுடைய இயல்பாக எழுகிறது என்பதால், தமஸைத் தன் புகலிடமாகக் கொண்ட ஒருவனிடம், பொறாமை உணர்வுகள் {பகை}, காமம் {விருப்பு}, கோபம் {சினம்}, செருக்கு {டம்பம்}, பொய்மை, போலித்தனம் {மதம்} ஆகியவை தொடர்ந்து வளர்கின்றன.(55) உயர்ந்த கதியை விரும்பும் யதிகள், இவ்வகையிலேயே சிந்தித்து, (ஆசான்களுடைய போதனைகளின் துணையால்) இந்தக் களங்கங்களைக் கண்டு, நன்மை தீமை ஆகிய இரண்டையும் விட்டு யோகத்தில் ஈடபடுகின்றனர்” என்றார் {கபிலர்}.(56)
ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “ஓ! பிராமணரே, (செயல்களின் மெச்சத்தக்க தன்மை, துறவின் முரண் தன்மை ஆகியவற்றைக் குறித்து) நான் சொன்ன அனைத்தும் கண்டிப்பாகச் சாத்திரங்களுக்குப் பொருந்தக் கூடியவையே ஆகும். எனினும், சாத்திரங்களின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒருவன், சாத்திரங்கள் உண்மையில் எதை அறிவிக்கிறதோ அதற்குக் கீழ்ப்படிய விரும்புவதில்லை என்பது நிச்சயம் உண்மையே.(57) நேர்மை நெறிக்கு இணங்கும் எந்த ஒழுக்கமும், சாத்திரங்களுக்கு இணக்கமாகவே இருக்கிறது. இதையே ஸ்ருதியும் தீர்மானிக்கிறது. அதே போல, நேர்மை நெறிக்கு இணங்காத எந்த ஒழுக்கமும், சாத்திரங்களுக்கு இணக்கமாக இருப்பதில்லை. இதுவும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.(58) சாத்திரங்களை மீறுவதன் மூலம் சாத்திரச் செயலெதையும் ஒருவனாலும் செய்ய முடியாது. மேலும் சாத்திரத்திற்குப் புறம்பானது நிச்சயம் வேதங்களுக்கு எதிரானதே. இதை ஸ்ருதி அறிவிக்கிறது[11].(59) புலன்களை எது நேரடியாகக் கவர்கிறதோ, அதை மட்டுமே நம்பும் பல மனிதர்கள், (நம்பிக்கைக்காக {எதிர்பார்ப்புக்காக} சாத்திரங்களில் சொல்லப்பட்டதைக் காணாமல்) இவ்வுலகத்தை மட்டுமே காண்கிறார்கள். சாத்திரங்கள் எவற்றைக் களங்கங்கள் என்று அறிவிக்கிறதோ, அவற்றைக் அவர்கள் காண்பதில்லை. அதன்படியே, எங்களைப் போலவே அவர்களும் துயரத்தின் வசப்படுகிறார்கள். உம்மைப்போன்ற மனிதர்கள் கவலைப்படும் புலன்நுகர் பொருட்களும், பிற உயிரினங்களும் கவலைப்படும் பொருட்களும் ஒன்றே. (இருப்பினும், ஆன்மா குறித்த உமது அறிவாலும், அவற்றின் {பிற உயிரினங்களின்} அறியாமையாலும், உமக்கும் அவற்றுக்கும் இடையில் உள்ள வேறுபாடு எவ்வளவு பெரியது?(60)
நான்கு வகை மனிதர்கள் அனைவரும், நான்கு வகை வாழ்வுமுறைகள் அனைத்தும் எவ்வளவுதான் தங்கள் கடமைகளில் வேறுபட்டிருந்தாலும் அவை அனைத்தும் (பேரின்ப நிலை என்ற) ஒரே கதியையே நாடுகின்றன. கேள்விக்கப்பாற்பட்ட திறன்களையும், ஆற்றல்களையும் நீர் கொண்டிருக்கிறீர். (பல்வேறு கடமைகளுக்கு மத்தியில்) விரும்பும் கதியை நிறைவேற்ற, நன்கு கணிக்கப்பட்ட, குறிப்பிட்ட ஒழுக்க நடைமுறையை உறுதி செய்வதற்காக, முடிவிலியை (பிரம்மத்தைக்) குறித்து எனக்குச் சொன்னதன் மூலம், என் ஆன்மாவை அமைதியால் நீர் நிறைத்துவிட்டீர். எங்களைப் பொறுத்தவரையில், ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாததன் விளைவால், நாங்கள் உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறோம். எங்கள் ஞானம், தாழ்ந்த பொருட்களின் தொடர்புடையதாக இருக்கிறது, நாங்கள் அடர்த்தியான இருளில் மூழ்கியிருக்கிறோம்.(61,62) (எனினும், விடுதலையை அடைய ஒருவனைத் தகுதியாக்குமென நீர் குறிப்பிட்ட ஒழுக்க நடைமுறையைப் பயில மிகக் கடினமாக இருக்கிறது). எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறானோ, எவன் தன் கடமைகள் அனைத்தையும் செய்கிறானோ, எவன் தன் உடலை மட்டுமே சார்ந்து எங்கும் திரிய வல்லவனாக இருக்கிறானோ, எவன் தன் ஆன்மாவை முற்றான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறானோ, எவன் அறநெறிகளின் தேவையைக் கடந்தவனாக இருக்கிறானோ, எவன் மொத்த உலகையும் (அதற்குச் சொந்தமான அனைத்தையும்) அலட்சியம் செய்கிறானோ, அவனால் மட்டுமே செயல்கள் குறித்த வேத தீர்மானங்களை மீறி, விடுதலை {முக்தி} இருக்கிறதென்று சொல்ல முடியும்[12].(63,64)
எனினும், உறவினர்களுக்கு மத்தியில் வாழும் ஒருவனுக்கு, இவ்வொழுக்க நடைமுறையைப் பின்பற்றுவது மிகக் கடினமாக இருக்கும். கொடை, வேதகல்வி, வேள்விகள், சந்ததியைப் பெறுதல், எதையும் கையாள்வதில் எளிமை,(65) ஆகிய இவற்றைப் பயின்றும் ஒருவனால் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்ல முடியவில்லையெனில், அந்த விடுதலையை அடைய முனைபவனுக்கும், வேண்டப்படும் அந்த விடுதலைக்கும் ஐயோ. அஃதை அடைய கொடுக்கப்படும் உழைப்பனைத்தும் கனியற்றதாகவே தெரிகிறது.(66) வேதங்களை அவமதித்து, அவை சொல்லும் செயல்களைச் செய்யாமல் இருக்கும் ஒருவன் நாத்திகனாகக் குற்றஞ்சாட்டத் தகுந்தவனே. ஓ! சிறப்புமிக்கவரே, செயல்களுக்குச் சாதகமான வேத தீர்மானங்களுக்குப் பிறகு வருவதை (விடுதலையை {முக்தியைக்}) குறித்து நான் தாமதமில்லாமல் கேட்க விரும்புகிறேன்.(67) ஓ! பிராமணரே, எனக்கு உண்மையைச் சொல்வீராக. ஒரு சீடனாக நான் உமது காலடியில் அமர்கிறேன். தயவுடன் எனக்குப் போதிப்பீராக. ஓ! கல்விமானே, விடுதலையை {முக்தியைக்} குறித்து நீர் அறிந்த அளவுக்கு நானும் அறிய விரும்புகிறேன்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(68)
பிரம்மம், முக்தி! – சாந்திபர்வம் பகுதி – 270-வர்ணாசிரமங்களால் அடையத்தக்க முக்தி மற்றும் பிரம்மம் குறித்து ஸ்யூமரஸ்மிக்கும் கபிலருக்கும் இடையில் நடந்த உரையாடல்…
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “வேதங்களே அதிகாரம் பெற்றவையாக அனைவராலும் கருதப்படுகிறது. மக்கள் அவற்றை ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை. ஒலியாலான பிரம்மம் {சப்தப்ரம்மம்}, (உணர்ந்தறிய முடியாத) உயர்ந்த பிரம்மம் {பரப்ரம்மம்} என்ற இருவகைப் பிரம்மங்கள் இருக்கின்றன[1].(1) ஒலியாலான பிரம்மத்தை அறிந்தவன், உயர்ந்த பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். கர்ப்பதானச் சடங்கில் தொடங்கி, வேத மந்திரங்களின் துணையுடன் தந்தை உண்டாக்கிய உடல், (பிறப்புக்குப் பிறகு) வேத மந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது.(2) (வேத மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட்ட) தூய்மைச் சடங்குகளால் உடல் தூய்மை ஆகும்போது, (அந்த உடலின்) உரிமையாளன் அதுமுதல் ஒரு பிராமணன் என்று அழைக்கப்பட்டு, பிரம்ம அறிவைப் பெறத் தகுந்த பாத்திரமாகிறான். செயல்களின் வெகுமதியானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் இதயத் தூய்மை என்பதை அறிவீராக. நான் தற்போது அதுகுறித்து உம்மிடம் பேசப் போகிறேன்.(3) (செயல்களைச் செய்வதால்) இதயத் தூய்மையானது அடையப்பட்டதா, அடையப்படவில்லையா என்பது எந்த மனிதன் அஃதை அடைந்தானோ அவனால் அறியப்படும். வேதங்கள் அல்லது உள்ளுணர்வின் துணையால் அஃதை அறியமுடியாது. எந்த எதிர்பார்ப்புகளையும் வளர்க்காதவர்கள், எதிர்காலப் பயன்பாட்டுக்குச் சேர்க்காமல் எந்த வகைச் செல்வங்களையும் துறப்பவர்கள், ஆசையற்றவர்கள், அனைத்து வகை விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்கள், வேள்விகள் செய்வது கடமை என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக அவற்றைச் செய்கிறார்கள். தகுந்தவர்களுக்குக் கொடையளிப்பதே செல்வங்கள் அனைத்தின் (சரியான பயன்பாட்டுக்குரிய) கதியாகும்.(4,5)எந்தக் காலத்திலும் பாவம் நிறைந்த செயல்களுக்கு அடிமையாகாமல், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அந்தச் சடங்குகளை நோற்று, தங்கள் விருப்பங்கள் அனைத்தின் கனியால் மகுடம் சூட வல்லவர்களாக, தூய அறிவின் மூலம் குறிப்பிட்ட தீர்மானங்களை உடையவர்களாக,(6) ஒருபோதும் கோபத்திற்கு வசப்படாதவர்களாக, பொறாமையில் ஒருபோதும் ஈடுபடாதவர்களாக, செருக்கு மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவர்களாக, யோகத்தில் உறுதியுடன் கூடியவர்களாக, களங்கமில்லா பிறவியுடைவர்களாக, களங்கமில்லா ஒழுக்கம் கொண்டவர்களாக, களங்கமில்லா கல்வியைக் கொண்டவர்களாக, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக,(7) இல்லற வாழ்வு வாழ்பவர்களாக, தங்கள் கடமைகளில் முற்றிலும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகப் பழங்காலத்தில் பல மனிதர்கள் இருந்தனர். அதே தகுதிகளைக் கொண்டவர்களாகவும், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், (ஜனகன் முதலியவர்கள் போன்ற) பல மன்னர்களும் இருந்தனர். அதே பண்புகளைக் கொண்ட (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) பிராமணர்கள் பலரும் இருந்தனர்[2].(8) அவர்கள் அனைத்து உயிரினங்களுடனும் சமமாகப் பழகுபவர்களாகவும், முற்றிலும் நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். மனநிறைவு மற்றும் நிச்சய ஞானம் ஆகியவை அவர்களுடையவையாக இருந்தன. அவர்களுடைய அறத்திற்கான வெகுமதிகள் புலப்படுவனவாக இருந்தன, அவர்களது நடத்தையும், இதயமும் தூய்மையானவையாக இருந்தன. அவர்கள் இரு வடிவிலான பிரம்மத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்[3].(9) முதலில் தங்கள் இதயங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளும் அவர்கள், (சிறந்த) நோன்புகள் அனைத்தையும் முறையாக நோற்கிறார்கள். அவர்கள் எதனில் இருந்தும் வீழ்ந்துவிடமால் துயரம் மற்றும் பெருங்கடினமான சந்தர்ப்பங்களிலும் அறக்கடமைகளை நோற்றனர்.(10)அவர்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து தகுதிமிக்கச் செயல்களைச் செய்தனர். இதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியைக் கண்டனர். அவர்கள் ஒருபோதும் பிறழாதவர்களான இருந்ததால், எந்தப் பாவக்கழிப்புகளையும் ஒருபோதும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.(11) அறத்தின் உண்மை வழியைச் சார்ந்திருந்த அவர்கள், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவர்களாகினர். தகுதி ஈட்டும் காரியத்தில் தன் புத்தியை ஒருபோதும் பின்பற்றாமல், அந்தக் கதியை அடைவதற்குச் சாத்திர விதிகளை மட்டுமே பின்பற்றினர். அதன்படி அவர்கள் அறச் செயல்களைச் செய்யும் காரியத்தில் வஞ்சிக்கும் குற்றமுள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை[4].(12) வேறு எதனிலும் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்யாமல் சாத்திரங்களின் மொத்த விதிகளையும் ஒற்றுமையுடன் நோற்பதன் விளைவால், அவர்களுக்குப் பாவக்கழிப்புச் செய்ய வேண்டிய தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.(13) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை நோற்று வாழும் மனிதர்களுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது. பலவீனர்கள், புனித சட்டத்திலுள்ள முழுமையான, உறுதியான விதிகளைப் பின்பற்ற இயலாத மனிதர்களுக்கு மட்டுமே ஸ்ருதி பாவக்கழிப்பை அறிவித்திருக்கிறது.(14) வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, வேதங்களின் ஆழ்ந்த அறிவுள்ளவர்களாக, தூய்மையும், நன்னடத்தையும் கொண்டவர்களாக, புகழ்மிக்கவர்களாகப் பல பிராமணர்கள் பழங்காலத்தில் இருந்தனர்.(15)அவர்கள் எப்போதும் வேள்விகளில் பிரம்மத்தை வழிபட்டு, ஆசையில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர். கல்விமான்களான அவர்கள், வாழ்வின் கட்டுகள் {பற்றுகள்} அனைத்தையும் கடந்தவர்களாக இருந்தனர். இம்மனிதர்களின் வேள்விகள், அவர்களது (அறிவு), விதிகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்களால் செய்யப்பட்ட செயல்கள்,(16) குறிப்பிட்ட நேரங்களில் அவர்களது சாத்திரக் கல்வி, அவர்களுடைய விருப்பங்கள், காமம் கோபத்தில் இருந்து அவர்கள் பெற்றிருந்த விடுதலை, அவர்களது பக்தி நடத்தை, அனைத்துச் சிரமங்களையும் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட அவர்களது செயல்கள்,(17) தங்கள் வகை {வர்ணம்} மற்றும் தங்கள் வாழ்வுமுறை {ஆசிரமங்களின்} கடமைகளைச் செய்வதால் பெறும் புகழ், அவர்களது சொந்த இயல்பின் விளைவால் கிட்டும் ஆன்மத் தூய்மை, மிக நேர்மையான அவர்களது பண்பு, அமைதியில் அவர்கள் கொண்ட அர்ப்பணிப்பு, தங்கள் நடைமுறைகளில் அவர்கள் கொண்ட கவனம்(18) ஆகியவை முடிவிலா பிரம்மத்தைப் போன்றே இருந்தன. இதுவே நித்தியமான ஸ்ருதி என்று நாம் கேள்விப்படுகிறோம்[5]. உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள், செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் கடினமான நடத்தை மற்றும் செயல்களைக் கொண்ட மனிதர்கள்,(19) தங்கள் கடமைகளைக் கறாராக வெளிப்படுத்துவதன் விளைவால் கனிகளால் மகுடம் சூட்டப்பட்ட விருப்பங்களைக் கொண்ட மனிதர்கள் ஆகியோரின் தவங்களே, உலக ஆசைகள் அனைத்தையும் அழிப்பதற்கான விளைவைத் தரவல்ல ஆயுதங்களாகின. அற்புதமானதும், பழங்காலத்திலேயே தோற்றம் காணப்பட்டும், நித்தியமானதும், மாற்றமில்லா பண்புகளைக் கொண்டதும், துன்பகாலங்களில் நல்லோரும் ஈடுபடும் நடைமுறையில் இருந்து வேறுபட்டு, பிற சூழ்நிலைகளில் அவர்கள் {அந்த நல்லோர்கள்} செய்யும் செயல்களைப் பிரதிபலிப்பதும், காமம், கோபம் மற்றும் பிற தீய ஆசைகள் மேம்பட முடியாத நிலையைத் தரும் கவனம் நிறைந்த தன்மையைப் போன்றதும், (ஒருகாலத்தில்) மனிதகுலம் அனைத்திலும் எந்த வரம்புமீறலையும் இல்லாமல் செய்த விளைவுமான அந்த நல்லொழுக்கமே, அதன் கடமைகளின் நுண்விபரங்களையும், அதன் தொகையையும் செயல்படுத்த இயலாத மனிதர்களால், நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} தொடர்பான நான்கு உபபிரிவுகளாகப் பின்னர்ப் பிரிக்கப்பட்டது என்று பிராமணர்கள் சொல்கிறார்கள்[6].(20-22)
நல்லோர், சந்நியாச வாழ்வுமுறையைப் பின்பற்றிய பிறகு, நன்னடத்தையின் அந்தப் போக்கை முறையாக நோற்பதன் மூலம் உயர்ந்த கதியை அடைகிறார்கள். காட்டு வாழ்வு முறையை {வானப்ரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுவோரும் கூட (அவ்வொழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம்.(23) இல்லற வாழ்வு முறையை {கிருஹஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுவோரும் கூட (அதே ஒழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம்; இறுதியாக, பிரம்மச்சரிய வாழ்வு முறையைப் பின்பற்றுவோரும் கூட (அதே ஒழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம். அந்தப் பிராமணர்களே ஆகாயத்தில் சுற்றிலும் நன்மையான ஒளிக்கதிர்களைப் பொழிந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளிக் கோள்களாகக் காணப்படுகிறார்கள்.(24) அந்த எண்ணற்ற பிராமணர்கள், நிலைத்த பாதையில் நிறுவப்பட்ட விண்மீன்களாகவும், நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆனார்கள். மனநிறைவின் (அல்லது துறவின்) விளைவால் அவர்கள் அனைவரும் வேதங்கள் அறிவித்த படியே முடிவிலாத் தன்மையை அடைந்தனர்.(25) அத்தகைய மனிதர்கள் உயிரினங்களின் கருவறைகள் மூலம் உலகிற்குத் திரும்பினால், முந்தைய செயல்களை மூலக்காரணமாகக் கொண்ட வற்றாத எச்சங்களான பாவங்களால் அவர்கள் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(26) பிரம்மச்சரிய வாழ்வை வாழ்ந்து, கடமையுணர்வுடன் தன் ஆசானிடம் காத்திருந்து {பணிவிடை செய்து கொண்டிருந்து}, (ஆன்மா குறித்த) தீர்மானமான முடிவுகளை அடைந்து, அவ்வாறே யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ஒருவனே உண்மையில் பிராமணனாவான். பிராமணன் என்றழைக்கப்பட வேறு எவன் தகுந்தவன்?(27)
எவன் பிராமணன், எவன் அல்ல என்பதைச் செயல்கள் மட்டுமே தீர்மானிக்கும் எனும்போது, (நல்ல அல்லது தீய) செயல்கள் ஒரு மனிதனின் இன்பம் அல்லது துன்பத்தைச் சுட்டிக்காட்டுவனவாக இருக்க வேண்டும். தீய ஆசைகள் அனைத்தையும் வெல்வதன் மூலம் தூய இதயத்தை அடைந்தவர்களைப் பொறுத்தவரையில், (அண்ட ஆன்மாவைக் காண்பதன் மூலம் அவர்கள் அடையும் முடிவிலாத் தன்மை மற்றும் (ஸ்ருதிகளுடைய தீர்மானங்களின் மூலம் அவர்கள் அடைந்த) பிரம்ம அறிவின் விளைவால், அவர்கள் அனைத்தையும் பிரம்மமாகவே காண்கிறார்கள் என்று சொல்லும் நித்தியமான {அழிவற்ற} ஸ்ருதியை நாம் கேள்விப்படுகிறோம்.(28) தூய இதயம் கொண்டவர்களும், ஆசையில் இருந்து விடுபட்டவர்களும், பிரம்ம அறிவை அடைவதற்காக விடுதலை {முக்தி} ஒன்றையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்களுமான மனிதர்களால் பின்பற்றப்படும் (அமைதி, தற்கட்டுப்பாடு, செயல்விலக்கம், துறவு, அர்ப்பணிப்பு {பக்தி}, சமாதியின் முழுமை ஆகியவற்றின்) கடமைகள், நால்வகை மனிதர்களுக்கும், நான்கு வாழ்வுமுறைகளுக்கும் சமமாகவே விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவானது, உண்மையில் தூய இதயங்களையும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களையும் பிராமணர்களால் எப்போதும் அடையப்படுகிறது[7].(29,30) மனநிறைவின் அடிப்படையிலான துறவிற்கான ஆன்மாவைக் கொண்ட ஒருவன், உண்மை ஞானத்தின் புகலிடமாகக் கருதப்படுகிறான். விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் அறிவைக் கொண்டதும், பிராமணர்களுக்கு மிகத் தேவையானதுமான துறவு, (எப்போதும் வழிவழியாக ஆசானிடம் இருந்து சீடனிடம் வந்து சேரும்) நித்தியமான {அழிவற்ற} ஒன்றாகும்.(31) துறவானது, சில வேளைகளில், பிற வாழ்வுமுறையின் கடமைகளுடன் கலந்திருக்கிறது. அந்நிலையில் இருந்தாலும், தனியாகவே இருந்தாலும், ஒருவன் (உலகம் சார்ந்த ஆசையின்மை அளவைச் சார்ந்த) தன் பலத்தின் அளவுக்குத் தக்கவே அதை {துறவை} நடைமுறைப்படுத்துகிறான். அனைத்து வகை மனிதர்களுக்கும் உயர்ந்த நன்மையைச் செய்வதற்கான விளைவே துறவாகும். பலவீனன் மட்டுமே அதைப் பயில்வதில் தவறுகிறான். பிரம்மத்தை அடைய முனையும் தூய இதயமுள்ள மனிதன் (துன்பங்களுடன் கூடிய) உலகில் இருந்து மீட்கப்படுகிறான்” என்றார் {கபிலர்}.(32)ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “(உடைமையை) அனுபவிப்பதைக் கைவிட்டவர்குக்கு மத்தியில், கொடையளிப்பவர்கள், வேள்வி செய்பவர்கள், வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள், செல்வத்தை அடைந்து, அதன் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்த பிறகு துறவு வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஆகியோரில்,(33) {மரணமடைந்து} இவ்வுலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்தில் முதன்மையான இடத்தை யார் அடைவார்? ஓ! பிராமணரே, இதை நான் உம்மிடம் கேட்கிறேன். எனக்கு உண்மையைச் சொல்வீராக” என்று கேட்டார்.(34)
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “இல்லற வாழ்வை வாழ்பவர்களே நிச்சயம் மங்கலமானவர்களாக, அனைத்துவகைச் சிறப்புகளையும் அடைகிறார்கள். எனினும், துறவு தொடர்புடைய பேரின்பத்தை அனுபவிக்க இயலாமல் போகிறார்கள். நீரும் இதைக் காணலாம்” என்றார்.(35)
ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “நீங்கள் (விடுதலையை {முக்தியை}) அடைவதற்கு வழிமுறையாக ஞானத்தையே சார்ந்திருக்கிறீர்கள். இல்லற வாழ்வை வாழ்பவர்களோ செயல்களில் தங்கள் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். எனினும், விடுதலையே {முக்தியே} அனைத்து வாழ்வுமுறைகளின் கதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.(36) எனவே, பலத்தின் மேன்மை அல்லது குறைவில் அவற்றுக்கிடையில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அவ்வாறெனில் உண்மைக் காரியம் எவ்வாறு நிலைபெறும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(37)
கபிலர் {ஸ்யூரஸ்மியிடம்}, “செயல்கள் உடலை மட்டுமே தூய்மைப்படுத்துகின்றன. எனினும், ஞானமோ (எவரும் அடைய முனையும் ஓர்) உயர்ந்த கதியாக இருக்கிறது. இதயத்தின் களங்கங்கள் அனைத்தும் (செயல்களால்) குணமாகும்போதும், பிரம்மத்தின் இன்பநிலை ஞானத்தில் நிறுவப்படும்போதும்,(38) நல்லுணர்வு, மன்னிக்கும் தன்மை, அமைதி, கருணை, வாய்மை, வெளிப்படைத்தன்மை, தீங்கிழையாமை, செருக்கின்மை, பணிவு, துறவு, செயல்விலக்கம் ஆகியவை அடையப்படுகின்றன.(39) இவையே பிரம்மத்திற்கு வழிவகுக்கும் பாதையாக அமைகின்றன. ஒருவன் அவற்றைக் கொண்டு உயர்ந்த நிலையை அடைகிறான். இதயக்களங்கங்கள் அனைத்தும் செயல்களின் விளைவால் குணமாவது இவற்றை {நல்லுணர்வு முதலியவற்றை} அடையும்போதே ஞானிகளுக்கும் புரிகிறது.(40) ஞானத்துடன் கூடியவர்களும், செயல்கள் அனைத்தில் இருந்தும் விலகியவர்களும், தூய்மை மற்றும் ஞானத்தின் நிச்சயத்தன்மை {உறுதியுணர்வு} ஆகியவற்றைக் கொண்ட பிராமணர்களால் அடையப்படுவதே உண்மையில் உயர்ந்த கதியாகக் கருதப்படுகிறது.(41) வேதங்கள், வேதங்களில் சொல்லப்படுபவை (செயல்களில் உள்ள பிரம்மம்) {கர்மப்ரம்மஸ்வரூபம்}, செயல்களின் நுண்விவரங்கள் ஆகியவற்றின் அறிவை அடைவதில் வெல்லும் ஒருவனே வேதங்களை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். வேறு எவனும் கற்றாலான தோல்துருத்தி மட்டுமே ஆவான்[8].(42)வேதங்களில் அனைத்தும் நிறுவப்பட்டிருப்பதால், வேதங்களை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாவான். தற்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன.(43) இவ்வண்டம் இருக்கிறது, இல்லை என்ற ஒரு தீர்மானத்தையே சாத்திரங்கள் அனைத்தில் இருந்தும் உய்த்தறிய முடிகிறது. ஒரு ஞானிக்கு இது (உணரப்படும் அனைத்தும்) சத் மற்றும் அசத் ஆகிய இரண்டாகும். அவனுக்கு இவை அனைத்தும் முடிவும் நடுவுமாக இருக்கிறது.(44) முற்றான துறவு நேர்கையில் ஒருவன் போதுமானதை அடைகிறான் என்ற இந்த உண்மை வேதங்கள் அனைத்தையும் சார்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு பின்தொடரும் மனநிறைவானது, முழுமையானதும், அழிவடையும் மற்றும் அழிவடையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மாவாக இருப்பதும் அண்ட ஆன்மாவாக நன்கறியப்பட்டதும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் உயர்ந்த ஞானப்பொருளும், நிறைவானதும், பேரின்பநிலையும், இரண்டற்றதும், அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானதும், பிரம்மமேயானதும், புலப்படாததும், புலப்படாதது பிறக்கும் இடத்தின் காரணமாக இருப்பதும், எவ்வகைச் சிதைவுமற்றதுமான விடுதலையை {முக்தியைச்} சார்ந்திருக்கிறது[9].(45,46) புலன்களை அடக்கும் திறன், மன்னிக்கும் தன்மை, ஆசையின்மையின் விளைவால் செயல்பாடு தவிர்த்தல் ஆகிய இம்மூன்றும் முற்றான பேரின்ப நிலையின் காரணிகளாகும். அறிவையே தங்கள் கண்களாகக் கொண்ட மனிதர்கள், இந்த மூன்று குணங்களின் துணையுன், படைக்கப்படாததும், அண்டத்தின் முதன்மை காரணமாக இருப்பதும், மாற்றமில்லாததும், அழிவைக் கடந்ததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள். அஃதை அறிந்தவனைப் போன்றதேயான பிரம்மத்தை நான் வணங்குகிறேன்” என்றார் {கபிலர்}[10].(47)
குண்டதாரன்! – சாந்திபர்வம் பகுதி – 271-அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் அறமே உயர்ந்தது என்பதை எடுத்துக் காட்ட குண்டதாரனிடம் பக்தி கொண்ட ஒரு பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்து வேதங்கள் பேசுகின்றன. எனினும், ஓ! பாட்டா, (இவை மூன்றில்) எதை அடைவது மேன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் தன்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்த ஒருவனுக்குக் குண்டதாரன் செய்த நன்மை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2)
ஒரு காலத்தில், செல்வமற்ற ஒரு பிராமணர், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு அறமீட்ட முற்பட்டார்[1]. வேள்விகளைக் கொண்டாடுவதற்குத் தேவைப்படும் செல்வத்தில் அவர் தொடர்ந்து தம் இதயத்தை நிலைநிறுத்தினார். அவர், தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கடுந்தவப்பயிற்சியில் தம்மை நிறுவிக்கொண்டார்.(3) நன் நோக்கத்தைச் சாதிக்கத் தீர்மானித்த அவர் தேவர்களைப் பெரும் அர்ப்பணிப்புடன் வழிபடத் தொடங்கினார். ஆனால் அத்தகைய தேவ வழிபாட்டின் மூலம் அவர் செல்வத்தை அடையத் தவறினார்.(4) அப்போது அவர், “இதுவரை மனிதர்களால் துதிக்கப்படாத எந்தத் தேவன் இருக்கிறான்? தாமதமில்லாமல் எனக்கு உதவக்கூடிய எந்தத் தேவன் இருக்கிறான்?” என்று தமக்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கினார்.(5)பொறுமையான மனத்துடன் இவ்வகையில் சிந்தித்துக் கொண்டிருந்த அவர், தம் முன்பு இருப்பவனும், தேவர்களைத் தக்க வைத்துக் கொள்பவனுமான குண்டதாரன் என்று அழைக்கப்படுபவனைக் கண்டார்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அவனைக் கண்டதும் அந்தப் பிராமணரின் பற்றுணர்வுகள் {பக்தி} தூண்டப்பட்டு, அவர் தமக்குள்ளேயே, “இவன் நிச்சயம் எனக்குச் செல்வத்தை அளிப்பான். உண்மையில் இவனது வடிவமே அதைக் குறிப்பிடுகிறது.(7) இவன் தேவர்களுடன் மிக நெருக்கமாக வாழ்கிறான். மேலும் இவன் இன்னும் பிற மனிதர்களால் துதிக்கப்படவில்லை. இவன் தாமதமில்லாமல் நிச்சயம் அபரிமிதமான செல்வங்களை எனக்கு அளிப்பான்” என்று நினைத்தார்.(8) இவ்வாறு தீர்மானித்துக் கொண்ட அந்தப் பிராமணர், தூபங்கள், நறுமணப்பொருட்கள், மேன்மையான வகையைச் சார்ந்த மலர் மாலைகள் மற்றும் பல்வேறு வகைக் காணிக்கைகளுடன் {குண்டதாரன் என்ற} அந்த மேகத்தை வழிபட்டார்.(9) இவ்வாறு வழிபடப்பட்ட அம்மேகமானவன் {குண்டதாரன்}, தன்னை வழிபட்டவனிடம் மிகவிரைவில் நிறைவடைந்து, அந்தப் பிராமணனுக்கு நன்மை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)
{குண்டதாரன்}, “பிராமணக் கொலை {பிரம்மஹத்தி செய்தவன்}, மதுபானம் பருகல் {ஸுராபானம் செய்தவன்}, களவு செய்தல், தகுதிவாய்ந்த நோன்புகள் அனைத்தையும் புறக்கணித்தல் ஆகிய குற்றங்களுக்கு ஞானிகள் பாவக்கழிப்புகளை விதித்திருக்கின்றனர். எனினும் நன்றிமறந்தவர்களுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(11) எதிர்பார்ப்புக்கு, அநீதி என்ற பெயரைக் கொண்ட ஒரு பிள்ளை உண்டு. மேலும் கோபமானது, பொறாமையின் பிள்ளை என்று கருதப்படுகிறது. பேராசையானது வஞ்சனையின் பிள்ளையாகும். எனினும், நன்றி மறத்தலானது (சந்ததி இல்லாத) தரிசு நிலையாகும்” என்றான்.(12)
இதன்பிறகு, அந்தப் பிராமணர் குசப் புல்லாலான படுக்கையை விரித்து, குண்டதாரனின் சக்தியால் ஊடுருவப்பட்டு, ஒரு கனவில் உயிரினங்கள் அனைத்தையும் கண்டார்.(13) உண்மையில், தூய்மையான ஆன்மாவைக் கொண்டவரும், (உடல்சார்ந்த) இன்பங்கள் அனைத்திலிருந்தும் தனித்திருந்தவருமான அந்தப் பிராமணரிடம், ஆசை, தவங்கள், அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாததன் விளைவால், அவ்விரவில் குண்டதாரனிடம் தாம் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவைக் கண்டார்.(14) உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, அவர் பெரும் ஒளியைக் கொண்ட உயர் ஆன்ம மாணிபத்ரன், தேவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, தன் ஆணைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.(15) அங்கே மனிதர்கள் செய்த நற்செயல்களால் தூண்டப்பட்டு அவர்களுக்கு நாடுகளையும், செல்வங்களையும் அளிக்கவும், நல்லியல்பில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களிடம் இருந்து அவற்றை எடுப்பதிலும் அவர்கள் ஈடுபடுவதாகத் தெரிந்தது.(16) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, பேரொளி கொண்ட குண்டதாரன், யக்ஷர்கள் அனைவரின் முன்னிலையில் தேவர்களுக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.(17)
தேவர்களுடைய ஆணையின் பேரில் அந்த உயர் ஆன்மா மாணிபத்ரன், நெடுஞ்சான் கிடையாகக் கிடந்த குண்டதாரனிடம், “குண்டதாரனுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.(18) அதன் பேரில் குண்டதாரன், “உண்மையில், தேவர்கள் என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால்தான், அங்கே அந்தப் பிராமணர் என்னைப் பெரிதும் மதிக்கிறார். அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஏதாவதொன்றைக் கொடுத்து உதவ வேண்டும் என நான் வேண்டுகிறேன்” என்றான்.(19)
இதைக் கேட்ட மாணிபத்ரன், தேவர்களின் உத்தரவின் பேரில் மீண்டும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட குண்டதாரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(20) “ஓ! குண்டதாரா, எழு, எழுவாயாக. உன் காரியம் வெற்றியடைந்தது. மகிழ்ச்சியடைவாயாக. செல்வத்தில் விருப்பமுள்ள இந்தப் பிராமணன் எவ்வளவு செல்வத்தை விரும்புவானோ, அவ்வளவு அவனுக்குக் கொடுக்கப்படும். தேவர்களின் ஆணையின் பேரில் நான் அவனுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்” என்றான் {மாணிபத்ரன்}.(21,22)
அப்போது குண்டதாரன், மனிதத்தன்மையின் உண்மையற்ற நிலையையும், நிலையில்லாமையையும் சிந்தித்து, அந்தப் பிராமணரை தவங்களை நோக்கிச் செலுத்த தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(23) உண்மையில் குண்டதாரன், “ஓ! செல்வங்களை அளிப்பவரே, நான் இந்தப் பிராமணரின் சார்பாகச் செல்வத்தை வேண்டவில்லை. அவருக்கு மற்றொரு உதவியை அளிக்க விரும்புகிறேன்.(24) என் பக்தருக்காக நான் முத்துக்கள் மற்றும் ரத்தினங்கள் நிறைந்த மலைகளையோ, செல்வங்கள் அனைத்துடன் கூடிய மொத்த பூமியையோ வேண்டவில்லை. எனினும், அவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது இதயம் அறத்தில் இன்பத்தைக் காணட்டும்.(25) அவர் அறத்தைத் தம்முள் கொண்டிருக்கட்டும். அவரிடம் உள்ள பொருட்கள் அனைத்திலும் அறமே முதன்மையானதாக இருக்கட்டும். இந்த உதவியே எனக்கு ஏற்புடையதாகும்” என்றான்.(26)
மாணிபத்ரன் {குண்டதாரனிடம்}, “அரசுரிமையும், பல்வேறு வகை இன்பமும் எப்போதும் அறத்தின் கனிகளாக இருக்கின்றன. இவன் எப்போதும் அனைத்து வகை உடல் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு அக்கனிகளை அனுபவிக்கட்டும்” என்றான் {மாணிபத்ரன்}”.(27)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டும், பெரும்புகழைக் கொண்டவனான குண்டதாரன் மீண்டும் மீண்டும் அந்தப் பிராமணருக்கு அறத்தை மட்டுமே வேண்டினான். இதனால் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்தனர்.(28)
மாணிபத்ரன் {குண்டதாரனிடம்}, “உன்னிடமும், அந்தப் பிராமணனிடமும் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்திருக்கின்றனர். அவன் அறவோனாவான். அவன் தன் மனத்தை அறத்திற்கே அர்ப்பணிப்பான்” என்றான்.(29)
ஓ! யுதிஷ்டிரா, மேகமான அந்தக் குண்டதாரன், தன் விருப்பம் வெற்றியடைந்ததால் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். அவன் பெற்ற அந்த வரம், வேறு எவராலும் அடையப்பட முடியாததாகும்.(30) அப்போது அந்தப் பிராமணர் தம்மைச் சுற்றிலும் நுட்பமான ஆடைகள் {ஸூக்ஷ்மமான மரவுரிகள்} சிதறிக் கிடப்பதைக் கண்டார். (அவை விலைமதிப்புமிக்கவையாக இருந்தாலும்) அவற்றில் மனத்தைச் செலுத்தாத அந்தப் பிராமணர் உலகச் சுவையை இழந்தார்.
அந்தப் பிராமணர், “இவன் {குண்டதாரன்} என் நற்செயல்களில் எந்த மதிப்பையும் கொள்ளவில்லையெனில், வேறு எவன் கொள்வான்? அறவாழ்வை நோற்க நான் கானகம் செல்வதே சிறந்தது” என்றார்”[2].(32)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உலகம் சார்ந்த சுவையின்மை வளர்ந்ததாலும், தேவர்களுடைய அருளின் மூலமும் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் காட்டுக்குள் நுழைந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினார்.(33) ஓ! ஏகாதிபதி, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் கொடுத்த பிறகு எஞ்சிய கனிகள் மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து வந்த அந்த மறுபிறப்பாளரின் மனம் அறத்தில் உறுதியாக நிலைத்தது.(34) அந்தப் பிராமணர் படிப்படியாகக் கனிகளையும், கிழங்குகளையும் கூடத் துறந்து, மரங்களின் இலைகளை மட்டுமே தமது உணவாகக் கொண்டார். பிறகு இலைகளையும் துறந்து, நீரை மட்டுமே தம் உணவாகக் கொண்டார்.(35) அதன் பிறகு அவர் காற்றை மட்டுமே உண்டு பல வருடங்களைக் கழித்தார். எனினும் இக்காலம் முழுவதிலும் அவரது பலம் குன்றவில்லை. இது மிக அற்புதமான ஒன்றாகத் தெரிந்தது.(36) அறத்தில் அர்ப்பணிப்புடன், கடுந்தவங்களைச் செய்வதில் ஈடுபட்ட அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மப் பார்வையைப் பெற்றார்.(37)
பிறகு அவர் {அந்தப் பிராமணர்}, “நான் எவரிடமாவது நிறைவடைந்து செல்வத்தைக் கொடுத்தால், என் பேச்சு ஒருபோதும் பொய்யாகாது” என்று சொல்லித் தமக்குள்ளேயே சிந்தித்தார்[3].(38) புன்னகையால் ஒளிர்ந்த முகத்துடன் அவர் மீண்டும் கடுந்தவங்களில் ஈடுபட்டார்.(39) மீண்டும் (உயர்ந்த) வெற்றியை அடைந்த அவர், தாம் விரும்புவதன் மூலமே மிக உயர்ந்த பொருட்களைத் தம்மால் உண்டாக்க முடியும் என்று நினைத்தார். “நான் எவரிடமாவது நிறைவடைந்து அரசுரிமையைக் கொடுத்தாலும் கூட, என் வார்த்தைகள் பொய்க்காது என்பதால் அவன் உடனே மன்னனாவான்” {என்று நினைத்தார்}.(40)அந்தப் பிராமணர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த போதே, குண்டதாரன், அவரிடம் கொண்ட நட்பாலும், அந்தப் பிராமணர் அடைந்த தவ வெற்றியாலும் தூண்டப்பட்டு, (தன் நண்பரும், பக்தருமான அவரிடம்) தன்னைக் காட்டிக் கொண்டான்.(41) அவனைச் சந்தித்த அந்தப் பிராமணர், நடைமுறை விதிகளின் படி அவனுக்குண்டான வழிபாடுகளைச் செய்தார். எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பிராமணர் சற்றே ஆச்சரியமடையவும் செய்தார்.(42)
அப்போது, குண்டதாரன் அந்தப் பிராமணரிடம், “நீர் இப்போது சிறந்த ஆன்மக் கண்ணை அடைந்திருக்கிறீர். உமக்குக் கிட்டிய இந்தப் பார்வையைக் கொண்டு மன்னர்களால் அடையப்படும் கதியைக் காண்பீராக. அதையும் தவிர்த்து உலகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வீராக” என்றான்.(43) அப்போது அந்தப் பிராமணர், நரகத்தில் மூழ்கிய ஆயிரக்கணக்கான மன்னர்களைத் தமது ஆன்மப் பார்வையால் தொலைவில் இருந்தே கண்டார்.(44)
குண்டதாரன் {பிராமணரிடம்}, “பக்தியுடன் என்னை வழிபட்ட பிறகு, உமது பங்காக நீர் கவலையையே அடைந்தீரென்றால், நான் உமக்குச் செய்த நன்மை என்ன? நான் செய்த உதவியின் மதிப்பென்ன?(45) பாரும், என்ன கதியை அடைவதற்காக மனிதர்கள் உடல்சார்ந்த இன்பங்களில் நிறைவை விரும்புகிறார்கள் என்பதைப் பாரும். சொர்க்கத்தின் கதவு மனிதர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது” என்றான்”.(46)
பீஷ்மர் தொடர்ந்தார், “பிறகு அந்தப் பிராமணர், இவ்வுலகில் காமம், கோபம், பேராசை, அச்சம், செருக்கு, உறக்கம், எதிலும் தாமதம் {மயக்கம்}, செயலின்மை {சோம்பல்} ஆகியவற்றைத் தழுவி வாழும் மனிதர்கள் பலரைக் கண்டார்.(47)
குண்டதாரன், “மனிதர்கள் அனைவரும் இவற்றால் ({காமம் முதலிய} தீய ஒழுக்கங்களால்) கட்டப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களைக் கண்டு தேவர்கள் அஞ்சுகின்றனர். தேவர்களின் ஆணையின் பேரில் இந்தத் தீயொழுக்கங்கள் அனைத்துப் புறங்களிலும் அழித்துக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன[4].(48) தேவர்களின் அனுமதி இல்லாமல் எந்த மனிதனும் அறவோனாவதில்லை. (அவர்களுடைய அனுமதியின் விளைவால்) உமது தவங்களின் மூலம் நீர் நாடுகளையும், செல்வங்களையும் கொடுக்கும் தகுதியை அடைந்திருக்கிறீர்” என்றான்”.(49)பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், அற ஆன்மா கொண்டவருமான அந்தப் பிராமணர், அம்மேகத்திடம் {குண்டதாரனிடம்} தலைவணங்கி, நெடுஞ்சாண்கிடையாகத் தம்மைத் தரையில் கிடத்திக் கொண்டு, “உண்மையில், நீ எனக்குப் பேருதவியைச் செய்திருக்கிறாய்.(50) நீ என்னிடம் கொண்ட பெரும் பற்றை உணராமல், ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தால் நான் உனக்கு நன்மதிப்பைக் காட்டத் தவறிவிட்டேன் {நன்றி மறந்துவிட்டேன்}” என்றார்.(51)
அப்போது குண்டதாரன் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம், “நான் உம்மை மன்னித்தேன்” என்று சொல்லி அவரைத் தன் கரங்களால் ஆரத்தழுவிக் கொண்டு அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(52) பிறகு, குண்டதாரனுடைய அருளின் மூலம் தவ வெற்றியை அடைந்த அந்தப் பிராமணர், உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தார்.(53) அறம் மற்றும் தவங்களின் மூலம் பலத்தை ஈட்டிய ஒருவன், வானத்தில் மிதந்து பயணிக்கும் {கமனம் செய்யும்} தகுதியையும், தன் விருப்பங்கள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தகுதியையும் அடைந்து, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறான்.(54) தேவர்கள், பிராமணர்கள், யக்ஷர்கள், நல்லோர், சாரணர்கள் ஆகியோர் எப்போதும் அறவோரைத் துதிப்பாரேயன்றி, ஒருபோதும் வளமானவரையோ, ஆசைகளில் ஈடுபாடு கொள்பவர்களையோ துதிப்பதில்லை.(55) உன் மனம் அறத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பதால் தேவர்கள் உண்மையில் உனக்குச் சாதகமானவர்களாக இருக்கிறார்கள். செல்வத்தால் சிறு மகிழ்ச்சி ஏற்படலாம், ஆனால் அறத்தால் கிட்டும் இன்பத்தின் அளவு மிகப் பெரியதாகும்” என்றார் {பீஷ்மர்}.(56)
வேள்வியும் பிரம்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 272-வேள்வியில் உயிர்க்கொலை நேர்வதால் அஃது இழிந்ததென்பற்காக நாரதர் சொன்ன உஞ்சவிருத்தி பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(இதயத் தூய்மை, அல்லது தேவ மகிமை என்ற) ஒரே நோக்கத்திற்காக உள்ளவை எனக் கருதப்படும் பல்வேறு வகை வேள்விகளில், ஓ! பாட்டா, எந்த வேள்வியானது, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ அடைவதற்காக அல்லாமல் அறத்திற்காக (அல்லது அறமீட்டுவதற்காக) மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, வேள்விகளைச் செய்வதற்காக உஞ்ச முறையின்படி வாழ்ந்து வந்த ஒரு பிராமணரைக் குறித்து முன்பு நாரதரால் சொல்லப்பட்ட வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)
நாரதர் {பீஷ்மரிடம்}, “அறத்திற்காகத் தனித்தறியப்பட்ட ஒரு முதன்மையான நாட்டில் {விதர்ப்ப நாட்டில்} ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்[1]. தவங்களில் அர்ப்பணிப்புடன், உஞ்ச முறையின் படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர், வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதில் மெய்யுறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்தார்[2].(3) அவர், சியாமாகம் {சாமைத்தானியம்}, ஸூர்யபர்ணி {மாஷபருணி [ஒரு பயறு வகை]}, ஸுவர்ச்சலை {பிராமிசகம் / ஆளிவிதைகள்} மற்றும் கசப்பானவையும், சுவையில் இனிமையற்றவையுமான வேறுவகைக் கீரைகளை {சாகங்களையும்} தம் உணவாகக் கொண்டார். எனினும், அவரது தவத்தின் விளைவாக இவை அனைத்தும் இனிமையாகச் சுவைத்தன.(4) எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், வானப்பிரஸ்த வாழ்வை வாழ்ந்த அவர் தவ வெற்றியை அடைந்தார். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, கிழங்குகளையும், கனிகளையும் கொண்டு அவர், தமக்குச் சொர்க்கத்தை அளிக்கவல்ல வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3].(5)சத்தியர் என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிராமணருக்கு, பஷ்கரதாரிணி {புஷ்கரமாலினி / புஷ்கரசாரினி} என்ற பெயரில் ஒரு மனைவி இருந்தாள். அவள் தூய மனதைக் கொண்டவளாக இருந்தாள், மேலும் அவள் கடும் நோன்புகள் பலவற்றால் தன்னை மெலியச் செய்திருந்தாள். (அவள் நன்மையைத் தரும் மனநிலையில் இருந்தாலும், அவளது கணவர், இவ்வாறு கொடூரமான வேள்விகளுக்கு அடிமையாக இருந்தார்). அவள் தன் தலைவரின் ஒழுக்கத்தை அங்கீகரிக்கவில்லை. எனினும், (வேள்வி செய்வதற்காக) அவரது மனைவியாக அவரருகில் அமர அழைக்கும்போது, அவரது சாபத்திற்கு அஞ்சிய அவள், அவரது நடத்தைக்குத் தக்கவே தன்னைத் தகவமைத்துக் கொண்டாள். அவளது உடலை மறைத்திருந்த ஆடைகள் மயில்களின் (உதிர்ந்த) தோகைகளாலானதாக இருந்தது.(6,7) இதில் அவள் விருப்பமில்லாதவளாக இருந்தாலும், ஹோத்ரியாக {தீக்ஷிதராக} இருந்த தன் தலைவரின் ஆணையின் பேரில் அந்த வேள்வியைச் செய்தாள். அந்தக் காட்டில், அந்தப் பிராமணரின் ஆசிரமத்திற்கருகில், மானின் வடிவத்தை ஏற்றவரும் சுக்ர குலத்தைச் சேர்ந்தவரும், அறம்சார்ந்தவருமான பர்னாதர் என்பவர் வாழ்ந்து வந்தார்[4]. அவர் {பர்னாதர்}, சத்தியர் என்ற பெயர் கொண்ட அந்தப் பிராமணரிடம் வெளிப்படையாகப் பேசும் வகையில், “மந்திரங்கள் மற்றும் சடங்குகளுக்குரிய பிற பொருட்களில் குறைபாடுள்ள இதுபோன்ற வகையில் உமது வேள்வி நிறைவடைந்தால், நீர் மிகவும் முறையற்ற வகையில் செயல்பட்டவராவீர். எனவே, உமது வேள்வி நெருப்புக்கான ஆகுதிகளைச் செய்வதற்காக என்னைக் கொன்று துண்டுகளாக வெட்டுவீராக. இதைச் செய்து, பழியற்றவராகி, சொர்க்கத்திற்கு உயர்வீராக” என்றார்.(8-10)அப்போது சூரிய வட்டிலின் தலைமைத் தேவியான சாவித்திரி உடல் கொண்ட வடிவத்துடன் அந்த வேள்விக்கு வந்து, அந்த மான் செய்யச் சொன்னதை அந்தப் பிராமணர் {சத்தியர்} செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினாள். இவ்வாறு வற்புறுத்திய அந்தத் தேவியிடம் அந்தப் பிராமணர், “நான் வசிக்குமிடத்திற்கு அருகிலேயே வாழும் இந்த மானை நான் கொல்ல மாட்டேன்” என்று மறுமொழி கூறினார்.(11)
இவ்வாறு அந்தப் பிராமணரால் சொல்லப்பட்ட தேவி சாவித்திரி, விலகியவளாக அந்த வேள்வியின் (பிற) குறைகளைக் காண்பதைத் தவிர்க்கவும், பாதாள உலகை ஆய்வு செய்யவும் விரும்பி அந்த வேள்வி நெருப்புக்குள் நுழைந்தாள்.(12) பிறகு அந்த மானானது {கலைமானானது}, (தன்னைத் துண்டுகளாக வெட்டி வேள்வி நெருப்பில் ஊற்றுமாறு) சத்தியரிடம் மன்றாடிக் கேட்டது. எனினும், நட்புடன் அவரை {மானின் வடிவத்தில் இருந்த பர்னாதரை} ஆரத்தழுவி, “செல்வீராக” என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார்.(13) இதனால் அந்த மான் அந்த இடத்தை விட்டுச் செல்வதாகத் தெரிந்தது. ஆனால் எட்டு அடி எடுத்து வைத்ததும் மீண்டும் திரும்பி, “உண்மையில் என்னை நீர் கொல்வீராக. உம்மால் கொல்லப்படும் நான் நியாயமான கதியை நிச்சயம் அடைவேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். நான் உமக்கு (தெய்வீகப்) பார்வைக் கொடுக்கிறேன். தெய்வீக அப்சரஸ்களையும், உயர் ஆன்ம கந்தர்வர்களின் அழகிய வாகனங்களையும் காண்பீராக” என்றது.(15)
ஏக்கத்துடன் கூடிய கண்களால், நீண்ட நேரம் (அந்தக் காட்சியைக்) கண்டும், (வேள்விக்காக வேண்டும்) அந்த மானைக் கண்டும், கொலையால் மட்டுமே சொர்க்கவாசத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையிலும், (அந்த மான் சொன்ன ஆலோசனையை) அவர் அங்கீகரித்தார் {தீர்மானம் கொண்டார்}.(16) தர்மனே மானாகி அந்தக் காட்டில் பல வருடங்கள் மானாக வாழ்ந்து வந்தான். (வாய்ப்பைக் கண்டு மயங்கிய பிராமணரைக் கண்ட) தர்மன், அவரது விடுதலைக்கான ஆலோசனைகளைச் சொல்லும் வகையில், “வேள்வி குறித்த விதிகளுக்கு இஃது (உயிரினங்களைக் கொல்வது) இணக்கமானதில்லை” என்றான்[5].(17)அந்தப் பிராமணரின் மனம் மானைக் கொல்ல விரும்பிய இந்தச் சிந்தனையின் விளைவால், அவர் செய்த பெரிய அளவிலான தவங்கள் மிகவும் குறைந்த நிலையை அடைந்தன. எனவே, உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பது வேள்வியின் எந்தப் பகுதியுமாகாது[6].(18) சிறப்புமிக்கத் தர்மன், (தன் உண்மை வடிவை ஏற்று), அந்தப் பிராமணர் வேள்வி செய்வதற்காகப் புரோஹித அலுவலைச் செய்து துணைபுரிந்தான். அதன் பிறகு, அந்தப் பிராமணர் (புத்துயிர் பெற்ற) தமது தவங்களின் விளைவால், தமது மனைவியின் மனநிலையை அடைந்தார்[7]“.(19) வெகுமதிகளைப் பொறுத்தவரையில் தீங்கிழையாமை என்ற அறமே முழுமையானதாகும். எனினும், கொடுமையைக் கொண்ட அறமானது, (முடிவுடன் கூடிய) சொர்க்கம் என்ற அளவுக்கு மட்டுமே நன்மையைத் தரும். நான் உம்மிடம் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் அறமான வாய்மை அறத்தைக் குறித்துப் பேசிருக்கிறேன்” {என்றார் நாரதர்}.(20)
அறத்தின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 273-ஒருவன் மேன்மையடைவதற்கு அறமே காரணமென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எந்த வழிமுறைகளின் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்தவனாகிறான்? எதன் மூலம் அவன் அறமீட்டுகிறான்? எதன் மூலம் அவன் துறைவை அடைகிறான்? எதன் மூலம் அவன் விடுதலையை {முக்தியை} வென்றெடுக்கிறான்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கடமைகள் அனைத்தையும் அறிவாய். உன் தீர்மானங்களை உறுதி செய்து கொள்வதற்காக மட்டுமே நீ இக்கேள்வியைக் கேட்கிறாய். விடுதலை {முக்தி}, துறவு, பாவம், அறம் ஆகியவற்றை, அவற்றின் வேர் வரை இப்போது கேட்பாயாக.(2) ஐந்து {புலன் நுகர்} பொருட்களை (வடிவம் {ஒளி}, சுவை, மணம், ஒலி, தீண்டல் {ஊறு})[1] உணரும் எவனுடைய விருப்பமும் முதலில் அவற்றின் பின்னால் ஓடுவதிலேயே இருக்கிறது. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, புலன்களின் அகப்பாட்டெல்லைக்குள் அவை வந்ததும், விருப்போ வெறுப்போ எழுகிறது.(3) ஒருவன், அந்தப் பொருளை அடைவதற்காக (விரும்பியதை அடைவதற்காகவும், வெறுப்பதைத் தவிர்ப்பதற்காகவும்) முனைந்து, அதிக உழைப்பைக் கோரும் செயல்களைத் தொடங்குகிறான். அவனுக்கு மிக ஏற்புடையவையாகத் தோன்றும் வடிவங்களையும், மணங்களையும் (எஞ்சிய மூன்று புலன்களுக்குரிய மூன்று பொருட்களையும்) மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காகத் தன்னால் முடிந்த சிறந்த முறையில் முயற்சிக்கிறான்.(4)படிப்படியாக, பற்று {ராகம்}, வெறுப்பு {த்வேஷம்}, பேராசை {லோபம்}, தீர்மானப்பிழை {மோகம்} ஆகியவை எழுகின்றன.(5) பேராசை மற்றும் பிழையில் மூழ்கியதும், பற்று மற்றும் வெறுப்பினால் பாதிப்படைந்ததுமான மனம் ஒருபோதும் அறத்தை நோக்கிச் செல்லாது.(6) உண்மையில், அவன் கபடமான முறையில் அறத்தை அடைய முயற்சிக்கிறான், கபடமான முறையில் செல்வத்தை அடைய விரும்புகிறான். ஓ! குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, கபடத்தால் செல்வத்தை ஈட்டுவதில் ஒருவன் வெல்லும்போது,(7) அத்தகைய ஈட்டலில் முழுமையாகத் தன் இதயத்தை நிறுத்துகிறான். அப்போதுதான் அவன், நலன்விரும்பிகள் மற்றும் விவேகிகளால் நயமாகக் கண்டிக்கப்பட்டாலும், அறிவுக்குச் சரியாகப் பொருந்தக்கூடியவையும், சாத்திரவிதிகளுக்கு இணங்கக்கூடியவையுமான பதில்களை அனைவருக்கும் அளித்து, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யத் தொடங்குகிறான்.(8)
அவன் பாவம் நிறைந்த வகையில் சிந்திப்பதாலும், பாவம் நிறைந்த வகையில் பேசுவதாலும், பாவம் நிறைந்த வகையில் செயல்படுவதாலும், பற்று மற்றும் பிழையில் பிறந்த அவனது மூவகைப் பாவங்கள் மிக வேகமாக அதிகரிக்கின்றன.(9) அவன் பாவ வழியில் நடக்கத் தொடங்கும்போதே, நல்லோர் அவனது தீய தன்மையைக் குறித்துக் கொள்கின்றனர். எனினும், அந்தப் பாவம் நிறைந்த மனிதனுக்கு ஒப்பான மனநிலையுடன் கூடியவர்கள், அவனுடன் நட்பு கொள்கின்றனர்.(10) அவன் இம்மையில் மகிழ்ச்சி அடைவதில் வெல்வதில்லை. அவ்வாறிருக்கையில், மறுமையில் எவ்வாறு மகிழ்ச்சியை அடைவான்? இவ்வாறே ஒருவன் பாவம் நிறைந்தவனாகிறான். அறவோர் குறித்து இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(11) அத்தகைய மனிதன் எந்த அளவுக்குப் பிறரின் நன்மையை நாடுகிறானோ, அந்த அளவுக்குத் தனக்கான நன்மையை அடைவதில் வெல்கிறான். பிற மக்களுக்கான நன்மை நிறைந்த கடமைகளைப் பயில்வதன் மூலம், அவன் மிக உயர்ந்த கதியை இறுதியில் அடைகிறான்.(12)
எவன், தன் ஞானத்தின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட குற்றங்களைக் காண்கிறானோ, எவன் மகிழ்ச்சி எது, துன்பம் எது, அவை ஒவ்வொன்றும் எவ்வாறு அடையப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் திறம் பெற்றவனாக இருக்கிறானோ, எவன் நல்லோரிடம் மதிப்புடன் காத்திருக்கிறானோ {பணிவிடை செய்கிறானோ},(13) அவன் நல்லோருடனான பழக்கம் மற்றும் அத்தகைய தோழமை ஆகிய இரண்டின் விளைவால் அறத்தை ஈட்டுவதில் முன்னேற்றமடைகிறான். அத்தகையவனின் மனமானது, அறத்தில் திளைக்கும், அவன் அறத்தையே தன் ஆதரவாகச் செய்து கொண்டு வாழ்வான்.(14) அவன் செல்வத்தை ஈட்டுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினால், அத்தகைய செல்வத்தை நல்வழிகளில் அடைவதற்கு மட்டுமே அவன் விரும்புவான்.(15) உண்மையில், அவன் தகுதியை {புண்ணியத்தைக்} காணும் பொருட்களின் வேர்களில் மட்டுமே நீரை ஊற்றுவான். இவ்வழியிலேயே ஒருவன் அறவோனாகி, நல்லோரைத் தன் நண்பர்களாக அடைகிறான்.(16)
நண்பர்கள், செல்வம், பிள்ளைகள் ஆகியவற்றை அடைவதன் விளைவால் அவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறான். (இன்பத்தைப் பொறுத்தவரையில்) எந்த உயிரினமும், தான் பெறும் ஒலி, தீண்டல், சுவை, வடிவம் மற்றும் மணம் ஆகியவற்றில் சிறப்பாளுமையை அறத்தின் கனியாக {தர்ம பலமாக} அடைகிறது. இதை நினைவில் கொள்வாயாக. ஓ! யுதிஷ்டிரா, அறத்தின் கனியை {தர்மபலத்தைப்} பெற்ற மனிதன் இன்பத்திற்கு வசப்படுவதில்லை.(17,18) (புலப்படத்தக்க) இத்தகைய அறத்தின் கனிகளில் நிறைவடையாமல், ஞானக்கண்ணால் வழிநடத்தப்படும் அவன் துறவை மேற்கொள்கிறான். அவன் ஞானக்கண்ணை அடையும்போது, சுவை மற்றும் மணம் முதலிய ஆசைகளின் நிறைவில் இன்பங்கொள்வதை நிறுத்துகிறான்.(19) அவன் தன் மனத்தை ஒலி, தீண்டல், வடிவம் முதலியவற்றை நோக்கி ஓட அனுமதிக்காத போதுதான், ஆசையில் இருந்து விடுபடுவதில் வெல்கிறான். எனினும் அவன் அறத்தையோ, அறச்செயல்களையோ ஒருபோதும் கைவிடமாட்டான்.(20)
பிறகு, உலகங்கள் அனைத்தும் அழியத்தக்கனவே என்பதைக் காணும் அவன், (சொர்க்கம் மற்றும் இன்பம் ஆகிய வடிவங்களிலான வெகுமதிகளுடன் கூடிய) அறத்தைக் கைவிட முனைந்து, (நன்கறியப்பட்ட) வழிமுறைகளின் மூலம் விடுதலையை {முக்தியை} அடைய முயற்சிக்கிறான்.(21) பாவம் நிறைந்த அனைத்துச் செயல்களையும் படிப்படியாகக் கைவிடும் அவன், துறவை மேற்கொண்டு, அற ஆன்மாவாகி, இறுதியில் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(22) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, நீ கேட்ட பாவம், அறம், துறவு, விடுதலை {முக்தி} ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொன்னேன்.(23) எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறத்தையே பின்பற்ற வேண்டும். ஓ! குந்தியின் மகனே, அறத்தைப் பின்பற்றும் உனக்கு வெற்றி நித்தியமானதாகும்” என்றார் {பீஷ்மர்}[2].(24)
முக்தி! – சாந்திபர்வம் பகுதி – 274-முக்தி அடைவதற்கான வழிமுறைகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, விடுதலையை {முக்தியை} வழிமுறைகளால் வென்றெடுக்க முடியுமேயன்றி வேறு வகையிலல்ல என்று நீர் சொன்னீர். அவ்வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து நான் முறையாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஞானியே, வழிமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற எப்போதும் முனைபவனாக நீ இருப்பதால், ஓ! பாமற்றவனே, நுட்பமான காரியத்தைக் குறித்து நீ செய்யும் இந்த விசாரணை உண்மையில் உனக்குத் தகுந்ததே ஆகும்.(2) ஒருவன் தன் பயன்பாட்டுக்காக மண் குடத்தைச் செய்யும்போது இருந்த மனநிலை, அந்தக் குடம் {மண்குடத்தைச் செய்யும் அந்தப் பணி} நிறைவடைந்ததும் மறைந்தது போகிறது. அதே வகையிலேயே, எந்தக் காரணம் ஒரு மனிதனை முன்னேற்றத்திற்கும், செழிப்புக்குமான வேராக அறத்தைக் கருதச் செய்யுமோ, அது {அந்தக் காரணம்} விடுதலையை அடைய முனைபவர்களிடம் இல்லாமல் போகிறது[1].(3) கிழக்கத்திப் பெருங்கடலுக்கு வழிவகுக்கும் பாதையின் மூலம் ஒருவன் மேற்கத்திப் பெருங்கடலுக்குச் செல்ல முடியாது. விடுதலைக்கான {முக்திக்கான} வழிவகுக்க ஒரே பாதை மட்டுமே இருக்கிறது. (அடையத்தக்க வேறு எந்தப் பொருளுக்கும் வழிவகுக்கும் எதுவும் அதனோடு ஒப்பிடத்தக்கதல்ல). இது குறித்து விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)பிழைபொறுத்தல் பயில்வது {மன்னிப்பது}, கோபத்தை அழிப்பது, அனைத்து நோக்கங்களையும் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் ஆசையை வேரறுக்க வேண்டும். சத்வ குணத்தைப் பயில்வதன் மூலம்[2] ஒருவன் உறக்கத்தை {சோம்பலை} வெல்ல வேண்டும்.(5) விழிப்புணர்வின் மூலம் ஒருவன் அச்சத்தை விலக்க வேண்டும், ஆன்ம சிந்தனையின் மூலம் ஒருவன் மூச்சை வெல்ல வேண்டும்[3]. பொறுமையின் மூலம் ஒருவன் விருப்பு, வெறுப்பு, காமம் ஆகியவற்றை விலக்க வேண்டும்;(6) பிழை {குற்றம்}, அறியாமை, ஐயம் ஆகியவற்றை உண்மை கல்வியின் மூலம் விலக்க வேண்டும். ஞானத்தைத் தேடுவதன் மூலம் ஒருவன் அக்கறையின்மை மற்றும் விருப்பமில்லாத பொருட்களைக் குறித்த விசாரணை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்[4].(7) மிகக் குறைந்த அளவில் எளிய, செரிக்கத்த உணவின் மூலம் ஒருவன் சீரின்மை மற்றும் நோய்கள் அனைத்தையும் விலக்க வேண்டும். நிறைவின் மூலம் ஒருவன் பேராசை மற்றும் தீர்மான மயக்கம் ஆகியவற்றையும், உண்மை ஞானத்தின் மூலம் உலகம் சார்ந்த அனைத்து காரியங்களையும் தவிர்க்க வேண்டும்[5].(8)நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் ஒருவன் அநீதியை வெல்ல வேண்டும். அனைத்து உயிரினங்களையும் மதிப்பதன் மூலம் ஒருவன் அறத்தை ஈட்ட வேண்டும். எதிர்பார்ப்பு எதிர்காலம் தொடர்புடையது என்பதைச் சிந்திப்பதன் மூலம் ஒருவன் அதைத் தவிர்க்க வேண்டும்; ஆசையைக் கைவிடுவதன் மூலம் அவன் செல்வத்தைக் கைவிட வேண்டும்.(9) (இம்மையில் உள்ள) அனைத்தும் நிலையற்றவை என்பதைச் சிந்திப்பதன் மூலம் நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன் பற்றைக் கைவிட வேண்டும். அவன் யோகம் பயில்வதன் மூலம் பசியை அடக்க வேண்டும். நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் அவன் தன்முக்கியத்துவம் கொண்ட கருத்துகளை அனைத்தையும் விலக்கி, மனநிறைவின் மூலம் அனைத்து வகைத் தீவிர நாட்டங்களையும் விரட்ட வேண்டும்.(10) உழைப்பின் மூலம் ஒருவன் காரிய தாமதத்தையும், உறுதிப்பாட்டின் மூலம் அனைத்து வகை ஐயங்களையும், எண்ணங்களை வெளியிடாததன் மூலம் அளப்பளத்தலையும் {அதிகம் பேசுவதையும்}, துணிவின் மூலம் அனைத்து வகை அச்சங்களையும் அடக்க வேண்டும்[6].(11) புத்தியின் மூலம் வாக்கும், மனமும் அடக்கப்பட வேண்டும். ஞானக்கண்ணின் மூலம் புத்தி அடக்கப்பட வேண்டும். ஆன்ம அறிவின் மூலம் ஞானமும், இறுதியாக ஆன்மாவின் {பரமாத்மாவின்} மூலம் ஆன்மாவும் {அகங்காரம்} கட்டுப்படுத்தப்பட வேண்டும்[7].(12)தூய செயல்களையும், அமைதியான ஆன்மாவையும்[8] கொண்டோர், கல்விமான்களால் சொல்லப்படும் யோகத்தின் ஐந்து தடைகளை அடக்குவதன் மூலம் இந்த இறுதியான நிலையை {ஆன்மாவில் ஆன்மா கலக்கும் நிலையை} அடைகின்றனர்.(13) ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகியவற்றைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் பேச்சைக் கட்டுப்படுத்தி, யோகத்திற்குச் சாதகமான பழக்கங்களான(14) தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, வெளிப்படைத்தன்மை, பிழைபொறுக்கும் {மன்னிக்கும்} தன்மை, இதயத் தூய்மை, உணவுத்தூய்மை, புலனடக்கம் ஆகியவற்றைப் பயில வேண்டும்.(15) இவற்றின் மூலம் ஒருவனுடைய சக்தி பெருகி, பாவங்கள் அகன்று, விருப்பங்கள் கனியால் மகுடம் சூட்டப்பட்டு, (பல்வேறு வகைகளிலான) ஞானம் அடையப்படுகிறது.(16)ஒருவன் தன் பாவங்கள் கழுவப்பட்டு, சக்தி மற்றும் எளிய உணவைக் கொண்டு தன் புலன்களுக்குத் தலைவனாகி, ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் வெல்லும்போது, பிரம்மத்தை அடைய முனைகிறான்.(17) (சாத்திரங்களைக் கேட்பது மற்றும் கற்பதன் மூலம் கிட்டும்) அறியாமை தவிர்ப்பு, (துறவின் விளைவால் உண்டாகும்) பற்றின்மை, (மனநிறைவு மற்றும் பிழைபொறுத்தலைப் பின்பற்றுவதன் மூலம் கிட்டும்) கோபம் மற்றும் ஆசையில் இருந்து விடுதலை {கோபமின்மை மற்றும் ஆசையின்மை}, யோகத்தின் மூலம் வெல்லப்படும் பலம், செருக்கு மற்றும் அலட்சியம் இன்மை, (அனைத்து வகை அச்சத்தையும் அடக்குவதன் மூலம் கிட்டும்) கவலையில் இருந்து விடுதலை {கவலையின்மை} இல்லம் மற்றும் குடும்பம் போன்ற எதனிலும் பற்றின்மை(18) ஆகியவையே விடுதலையின் {முக்தியின்} பாதையாக அமைகின்றன. அந்தப் பாதை இனிமைநிறைந்ததும், களங்கமற்றதும், தூய்மையானதுமாகும். அதேபோல, ஆசையின்மையின் மூலம் செய்யப்படும் வாக்கு, உடல் மற்றும் மனக்கட்டுப்பாடு ஆகியவையும் விடுதலையின் பாதையாக அமைகின்றன” என்றார் {பீஷ்மர்}.(19)
பிறப்பிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 275-யிரினங்களின் பிறப்பு இறப்பு குறித்து நாரதருக்கும் தேவலருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் நாரதருக்கும் அசித-தேவலருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு காலத்தில் நாரதர், நுண்ணறிவு மிக்க மனிதர்களில் முதன்மையானவரும், முதிர்ந்த வயதைக் கொண்டவருமான தேவலர் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரிடம் உயிரினங்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் முறைவு குறித்துக் கேட்டார்.(2)
நாரதர் {அசிதரிடம்}, “ஓ! பிராமணரே, அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து உண்டானது? அனைத்தையும் தழுவும் அழிவானது எப்போது நேர்கிறது? எதனுள் அது கலக்கிறது? கல்விமானான நீர் இது குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(3)
அசிதர் {நாரதரிடம்}, “வேளை நேர்கையில், பல்வேறு வடிவங்களிலான இருப்பை விரும்பிய பரமாத்மாவால், எவற்றில் இருந்து அனைத்து உயிரினங்களும் உண்டாக்கப்பட்டனவோ, அவை ஐந்து பெரும் சாரங்களே {ஐம்பெரும்பூதங்களே} என்று பொருட்களை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(4) (அதன் பிறகு) புத்தியால் தூண்டப்பட்ட காலமானது, அவற்றில் இருந்து (அந்த ஐந்து அடிப்படை சாரங்களில் இருந்து) பிற பொருட்களை உண்டாக்குகிறது. எவன் இவற்றை (ஐந்து அடிப்படை சாரங்கள் {பூதங்கள்}, காலம் மற்றும் புத்தி ஆகியவற்றைத்) தவிர வேறெதனையும் சொல்கிறானோ அவன் உண்மையல்லாததைச் சொல்கிறான்.(5) ஓ! நாரதரே, இவ்வைந்தும் {இந்த ஐந்து பூதங்களும்} நித்தியமானவை, அழிவற்றவை, தொடக்கமும் முடிவும் அற்றவை என்பதை அறிவீராக. காலத்தை ஆறாவதாகக் கொண்ட இந்த ஐந்து அடிப்படை சாரங்களும் {பூதங்களும்} இயல்பாகவே பெருஞ்சக்தியைக் கொண்டிருக்கின்றன.(6) நீர், ஆகாயம், பூமி, காற்று மற்றும் வெப்பம் ஆகியவையே அந்த ஐந்து சாரங்களாகும். (பலத்திலோ, சக்தியிலோ) இவற்றுக்கு உயர்ந்தவையோ, மேன்மையானவையோ வேறெவையும் கிடையாது என்பதில் ஐயமில்லை.(7) ஸ்ருதிகளில் இருந்து அடையப்படும் தீர்மானங்கள் அல்லது அறிவில் இருந்து உண்டாகும் வாதங்களுக்கு ஏற்புடைய வகையில் (இந்த ஐந்தைத் தவிர) வேறெதன் இருப்பையும் எவராலும் உறுதி செய்ய முடியாது. எவராவது வேறெதன் இருப்பையும் உறுதி செய்தால், அவனது உறுதிப்பாடு வீணானதாகும். இந்த ஆறும் சேர்ந்து அனைத்து விளைவுகளையும் உண்டாக்குகின்றன. (நீர் உணரும்) இவை அனைத்தும் அசத் என்று அழைக்கப்படுகின்றன[1].(8)இந்த ஐந்தும், காலமும் (அல்லது ஜீவனும்), முற்பிறவி செயல்களின் ஆற்றலும், அறியாமையும் என்ற இந்த எட்டும் அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் அழிவை உண்டாக்கும் நித்திய சாரங்களாகும்[2].(9) உயிரினங்கள் அழிவடையும்போது இவற்றுக்குள்ளேயே அவை நுழைகின்றன; அவை பிறப்படையும்போது அவற்றில் இருந்தே அவை பிறக்கின்றன. உண்மையில், ஓர் உயிரினம் அழிவுக்குப் பிறகு அந்த ஐந்து அடிப்படை சாரங்களிலேயே {பூதங்களிலேயே} உறுதியடைகிறது.(10) அவனது உடல் பூமியால் ஆகிறது; அவனது காது ஆகாயத்தால் உண்டாகிறது; அவனது கண் ஒளியால் உண்டாகிறது; அவனது உயிர் (அசைவு) காற்றால் உண்டாகிறது; அவனது குருதி நீரால் உண்டாகிறது என்பதில் ஐயமில்லை.(11) இரண்டு கண்கள், மூக்கு, இரண்டு காதுகள், தோல், (ஐந்தாவதாக அமையும்) நாக்கு ஆகியவையே புலன்களாகும். இவை, அதனதனுக்குரிய பொருட்களை உணர்வதற்காக இருக்கின்றன எனக் கல்விமான்கள் அறிகிறார்கள்.(12) பார்வை, கேள்வி, நுகர்வு, தீண்டல், சுவை ஆகியன புலன்களின் செயல்பாடுகளாகும். ஐம்புலன்களும், ஐந்து வழிகளில் ஐந்து பொருட்களோடு தொடர்பு கொள்கின்றன. அறிவின் உள்ளுணர்வால் அவற்றின் குண ஒப்புமையை அறிவீராக[3].(13)வடிவம், மணம், சுவை, தீண்டல் மற்றும் ஒலி ஆகியன ஐந்து வெவ்வேறு வழிகளில் ஐம்புலன்களால் உணரப்படும் ஐந்து குணங்களாகும் {தன்மைகளாகும்}.(14) இந்த ஐந்து தன்மைகளான வடிவம், மணம், சுவை, தீண்டல் மற்றும் ஒலி ஆகியன (புலன்கள் செயலாற்றலற்றவை என்பதால்) உண்மையில் புலன்களால் உணரப்படுவதில்லை, புலன்களின் மூலம் ஆன்மாவை அவற்றை உணர்கின்றன.(15) சித்தம் என்று அழைக்கப்படும் ஒன்று, புலன்கூட்டத்தைவிட {ஐம்புலன்களைவிட} மேன்மையானதாகும். மனமானது சித்தத்தைவிட மேன்மையானதாகும். புத்தியானது மனத்தைவிட மேன்மையானதாகும். க்ஷேத்ரக்ஞன் புத்தியைவிட மேன்மையானதாகும்[4].(16) முதலில் ஓர் உயிரினம் பல்வேறு பொருட்களைப் புலன்களின் மூலம் உணர்கிறது. மனத்தைக் கொண்டு அவற்றைக் குறித்துச் சிந்திக்கிறது. பிறகு புத்தியின் துணை கொண்டு ஓர் உறுதியான அறிவை அடைகிறது. புத்தியுடைய ஒருவன், புலன்களின் மூலம் உணரப்படும் பொருட்களில் உறுதியான தீர்மானங்களை எட்டுகிறான்.(17) ஐம்புலன்கள், சித்தம், மனம், (இப்பட்டியலில் எட்டாவதான) புத்தி ஆகிய இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்களால் அறிவுப்புலன்களாக {ஞானேந்திரிங்களாகக்} கருதப்படுகின்றன.(18) கரங்கள், கால்கள், குதம், பிறப்புறுப்பு, (இப்பட்டியலில் ஐந்தாவதாக அமையும்) வாய் ஆகியவை செயற்புலன்களாக {கர்மேந்திரியங்களாக} இருக்கின்றன.(19)வாயானது, பேச்சு மற்றும் உண்ணும் கருவியைக் கொண்டிருப்பதால் அது செயற்புலன் {கர்மேந்திரயம்} என்றழைக்கப்படுகிறது. கால்கள் இடம்பெயரச் செய்யும் புலனாகவும், கரங்கள் பல்வேறு வகைப் பணிகளைச் செய்யும் புலனாகவும் இருக்கின்றன.(20) குதமும், பிறப்புறுப்பு கழிவுகளை வெளியேற்றும் ஒரே காரியத்திற்கு நீடிக்கும் இரு புலன்களாக இருக்கின்றன. முதலில் இருப்பது {குதம்} மலத்தை வெளியேற்றவும், இரண்டாவது {பிறப்புறுப்பு}, சிறுநீர் கழிக்கவும், ஒருவன் ஆசையின் ஆதிக்கத்தை உணரும்போது உயிர் வித்தைக் கழிக்கவும் இருக்கின்றன. இவற்றைத் தவிர ஆறாவதாக ஒரு செயற்புலன் இருக்கிறது. அது தசை சக்தி என்றழைக்கப்படுகிறது. இக்காரியத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) உடன்பாடுகளின் படி இவையே ஆறு செயற்புலன்களின் பெயர்களாகும். நான் இப்போது ஞானப்புலன்கள், செயற்புலன்கள் மற்றும் ஐந்து (அடிப்படை) சாரங்களின் {பூதங்களின்} அனைத்து குணங்களின் பெயர்களை உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(22) இந்தப் புலன்கள் களைப்படைவதன் விளைவாலும், அதனதனுக்குரிய செயல்பாடுகள் நின்று, அவை இடைநிற்பதன் காரணத்தாலும், அந்தப் புலன்களுக்குரியவன் உறங்குவதாகச் சொல்லப்படுகிறது.(23) இந்தப் புலன்களின் செயல்பாடுகள் இடைநிற்கும்போது, மனத்தின் செயல்பாடு நிற்காமல் அதனுக்குரிய பொருட்களுடன் தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருந்தால், அந்த நனவுநிலையே கனவு என்றழைக்கப்படுகிறது.(24)
விழிப்பு நிலையில், நல்லியல்பு {சத்வ}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருளோடு {தமஸ் குணங்களோடு} தொடர்புடைய மூன்று மனநிலைகள் இருக்கின்றன. கனவிலும் மனமானது அதே மூன்று நிலைகளுடன் தொடர்புகொள்கிறது. அந்த நிலைகளே இன்பத்திற்குரிய செயல்பாடுகளின் தொடர்புடன் கனவில் தோன்றும்போது, அவை மெச்சத்தகுந்ததாகக் கருதப்படுகிறது.(25) மகிழ்ச்சி, வெற்றி, அறிவு, பற்றின்மை ஆகியவை (விழித்த நிலையில் உள்ள மனிதனில் இருக்கும்) நல்லியல்பு {சத்வ} குணத்தின் குறியீடுகளாகும். உயிரினங்களால் அனுபவிக்கப்படும் (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, அல்லது இருள் {தமஸ் குணத்தின்}) எந்த நிலைகளும், அவை விழித்திருக்கும் நேரங்களின் செயல்களின் வெளிப்பட்டு, உறக்கத்தில் கனவு காண்கையில் அவற்றின் நினைவில் மீண்டும் தோன்றுகின்றன. விழிப்பு நிலையில் இருப்பது போலவே கனவில் தோன்றும் நம் கருத்துகளும், கனவு நிலையில் இருப்பது போலவே விழிப்புநிலையில் தோன்றும் கருத்துகளும், கனவுகளற்ற உறக்கம் என்றழைக்கப்படும் நனவுநிலையில் நேரடியாகப் புரிந்து கொள்ளத்தக்கனவாகின்றன. அதுவே நித்தியமானதும், அதுவே விரும்பத்தக்கதுமாகும்[5].(26,27) அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, தசை சக்தி, மனம், புத்தி, சித்தம், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்கள் என இப்பட்டியல் பதினேழு வரை வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்பட்டியலில் பதினெட்டாவதாக உடலுக்குச் சொந்தக்காரன் {தேஹி} வருகிறான். உண்மையில், எவன் அந்த உடலுக்குள் வாழ்கிறானோ அவன் நித்தியமானவனாவான்.(28)உடலுக்குள் வசிக்கும் அந்தப் பதினேழும் (அவித்யை அல்லது அறியாமையுடன் சேர்த்து பதினெட்டும்), உடலுக்கு உரியவனைப் பற்றிக் கொண்டிருக்கின்றன. உடலில் இருந்து அதற்கு உரியவன் மறையும்போது, (அவித்யையுடன் சேர்த்து எண்ணப்படும்) அந்தப் பதினெட்டும், அவ்வுடலில் வசிப்பதை ஒன்றாக நிறுத்துகின்றன.(29) அல்லது, ஐந்து (அடிப்படை) சாரங்களாலான {பூதங்களாலான} இந்த உடலானது (கரைந்து போக வேண்டிய) கலவை மட்டுமே. (அவித்யை உள்ளிட்ட) அந்தப் பதினெட்டுக் குணங்கள், உடலுக்கு உரியவன், இப்பட்டியலில் இருபதாவதாக எண்ணப்படும் குடல் வெப்பம் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்தின் கலவை {பஞ்சபூதவிகாரக் கூட்டம்} என்று அறியப்படும் ஒன்றாக {உடலாக} அமைகின்றன.(30) மஹத் என்றழைக்கப்படும் ஒன்று, (பிராணன் என்றழைக்கப்படும்) காற்றின் {வாயுவின்} துணையுடன், பெயர் செல்லப்பட்ட இந்த இருபதைக் கொண்ட கலவையைத் தாங்கிப் பிடிக்கிறது. அந்த உடல் அழியும் காரியத்தில், (அதற்குக் காரணமெனப் பொதுவாகச் சொல்லப்படும்) காற்றானது {வாயுவானது}, அதே மஹத்தின் கருவியாக மட்டுமே இருக்கிறது.(31) பிறக்கும் எந்த உயிரினமும், தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் தீர்ந்ததும், ஐந்து உறுப்புக்கூறுகளுக்குள் மீண்டும் கரைகிறது, பிறகு அந்த வாழ்வில் செயல்களின் விளைவால் வெல்லப்பட்ட தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளின் மூலம் மீண்டும் மற்றொரு உடலுக்குள் நுழைகிறது.(32) அவித்யை, ஆசை, செயல்கள் ஆகியவற்றில் இருந்தே எப்போதும் விளையும் அவனது வசிப்பிடங்களால் அவன் ஒவ்வொரு உடலையும் கைவிட்டு, காலத்தின் தூண்டுதலின் பேரில், வீடு விட்டு வீடு அடுத்தடுத்து மாறும் மனிதனைப் போல மீண்டும் மீண்டும் வெவ்வேறு உடலுக்குள் மாறுகிறான்.(33)
ஞானமும், உறுதியான அறிவும் கொண்டவர்கள், இதை (இந்த இடப்பெயர்வைக்} கண்டு துயருக்கு வசப்படாமல் இருக்கிறார்கள். அத்தகைய வசிப்பிட மாறுதல்களைக் கண்டு, (உண்மையில் உறவுநிலைகள் ஏதுமில்லாத போது) உறவுகளைப் பிழையாகக் கருதி மூடர்கள் மட்டுமே துயரில் ஈடுபடுகிறார்கள்.(34) இந்த ஜீவன் எவருடைய உறவுமல்ல; மேலும் அவனுக்கு உரியவரென்று சொல்ல எவரும் இல்லை. அவன் எப்போதும் தனியனாகவே இருக்கிறான், அவன் தானே தன்னுடலையும், தனது இன்ப துன்பங்களையும் படைத்துக் கொள்கிறான்.(35) ஜீவன் ஒருபோதும் பிறப்பதுமில்லை, ஒருபோதும் இறப்பதுமில்லை. உடல் பந்தத்திலிருந்து விடுபடும் அவன், சில வேளைகளில் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான்.(36) தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளின் விளைவான உடல்களின் செயல்கள் தீர்ந்து போவதன் மூலம் {உடலில் இருந்து} விடுபட்டு உடலை இழக்கும் ஜீவன், இறுதியாகப் பிரம்மத்தை அடைகிறான்.(37) சாங்கியப் பள்ளியில், தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} தீர ஞானமே காரணமாக விதிக்கப்பட்டிருக்கிறது. (சாத்திரங்களைக் கற்றவர்கள்), தங்கள் தகுதி மற்றும் தகுதியின்மை தீர்ந்து, ஜீவன் பிரம்ம நிலையை அடையும்போது, ஜீவன் உயர்ந்த கதியை அடைவதைக் (சாத்திரங்களின் கண்களைக் கொண்டு) காண்கிறார்கள்” என்றார் {அசித-தேவலர்}”.(38)
பேரின்பம்! – சாந்திபர்வம் பகுதி – 276- ஆசையைக் கைவிடுவதே சுகத்திற்குக் காரணமென மாண்டவ்யரிடம் ஜனகன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஐயோ, கொடூரர்களும், பாவிகளுமான நாங்கள் எங்கள் சகோதரர்கள், தந்தைமார், பேரர்கள், உற்றார், நண்பர் மற்றும் மகன்களைக் கொன்றோம்.(1) ஓ! பாட்டா, செல்வத்திற்கான தாகத்தை எவ்வாறு நாங்கள் தணிக்க வேண்டும்? ஐயோ, அந்தத் தாகத்தால் நாங்கள் பல பாவச் செயல்களை இழைத்துவிட்டோம்” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக விசாரித்த மாண்டவ்யரிடம் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} சொன்னது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(3) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, “(இவ்வுலகில்) எனக்கு ஏதும் இல்லை, இருப்பினும் நான் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். (என் நாடு எனச் சொல்லப்படும்) மொத்த மிதிலையும் எரிந்தாலும், என்னுடையது எதுவும் எரிவதில்லை.(4) எவ்வளவு மதிப்புமிக்கவையாக இருப்பினும் உறுதியான {தொட்டரியக்கூடிய} உடைமைகளே ஞானிகளின் கவலைக்கான ஊற்றுக்கண்ணாக இருக்கும்; அதே வேளையில் சிறு மதிப்பைக் கொண்ட உடமையும் மூடர்களை ஆட்கொள்கிறது[1].(5)இம்மையில் உள்ள மகிழ்ச்சிகள் யாவும், ஆசைகளை நிறைவு செய்வதன் மூலம் அடையத்தக்கன, உயர் மதிப்பைக் கொண்ட தெய்வீக இன்பமேதும் கூட, முற்றான ஆசையின்மையில் கிட்டும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்கிற்கு ஈடாகாது.(6) மாட்டின் வளர்ச்சியுடன் சேர்ந்தே அதன் கொம்புகளும் வளர்வதைப் போல, செல்வம் ஈட்டல் பெருகுவதுடன், செல்வத்திற்கான தாகமும் பெருகுகிறது.(7) ஒருவன் பற்றுக் கொள்ளும் எந்தப் பொருளானாலும், அந்தப் பொருள் தொலையும்போது அதுவே துன்பத்திற்கான ஊற்றுக்கண்ணாகிறது.(8) ஒருவன் ஆசையைப் பேணி வளர்க்கக்கூடாது. ஆசையில் பற்று கவலைக்கே வழிவகுக்கும். செல்வம் ஈட்டப்படும்போது ஒருவன் அதை அறக்காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அவன் ஆசையைக் கைவிடுவான்[2].(9) ஞானியானவன், பிற உயிரினங்களைத் தன்னைப் போலவே எப்போதும் பார்க்கிறான். தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வெற்றியை அடையும் அவன் இம்மையிலேயே அனைத்தையும் கைவிடுகிறான்[3].(10)வாய்மை மற்றும் பொய்மை, துன்பம் மற்றும் இன்பம், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, அச்சமின்மை மற்றும் அச்சம் ஆகிய இரட்டைகளைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் அமைதியை அடைந்து, அனைத்து வகைக் கவலையில் இருந்தும் விடுபடுகிறான்.(11) மூடப்புத்தி கொண்டவர்களுக்குக் கைவிடக் கடினமானதும், உடல் மெலிந்தாலும் குறையாததும், (ஞானிகளால்) மரண நோய் எனக் கருதப்படுவதுமான (உலகம் சார்ந்த பொருட்களுக்கான) அந்தத் தாகத்தை ஒருவன் கைவிட்டால் அவன் நிச்சயம் இன்பத்தைக் காண்பான்.(12) அற ஆன்மா கொண்ட மனிதன், நிலவைப் போலப் பிரகாசமானதும், அனைத்து வகைத் தீமையில் இருந்து விடுபட்டதுமான தன் நடத்தையைக் கண்டு, இம்மையிலும், மறுமையில் பெரும்புகழை மகிழ்ச்சியுடன் அடைவதில் வெல்கிறான்” என்றான் {ஜனகன்}.(13)
மன்னனின் {ஜனகனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிராமணர் மாண்டவ்யர் மகிழ்ச்சியால் நிறைந்தவராகி, தாம் கேட்டவற்றை மெச்சி, விடுதலைக்கான {முக்திக்கான} பாதையில் தம்மைச் செலுத்தினார்” என்றார் {பீஷ்மர்}.(14)
காலத்தின் வேகம்! – சாந்திபர்வம் பகுதி – 277-காலம் வேகமாகக் கடந்து செல்வதால் நற்கதிக்குரிய காரியத்தை உடனே செய்ய வேண்டும் என்று ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் நிறையச் செய்யும் காலம் தன் போக்கில் ஓடுகிறது. ஒருவன் முயற்சிக்க வேண்டிய நன்மைக்கான ஊற்றுக்கண் எது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) ஓ! பிருதையின் மகேன {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் வேத கல்விக்கு மட்டுமே தம்மை அர்ப்பணித்திருந்த ஒரு மறுபிறப்பாளர் மேதாவி என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு புத்திசாலி மகனைக் கொண்டிருந்தார்.(3) விடுதலை அறத்தை அறிந்தவனான அந்த மகன், அறத்தை அறியாதவரும், வேத கட்டளைகளைச் செய்வதில் ஈடுபடுபவருமான தன் தந்தையிடம் ஒரு நாள் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)
மகன் {மேதாவி}, “ஓ! ஐயா, மனிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருப்பின் காலம் மிக வேகமக ஓடுவதை அறிந்த புத்தியுள்ள மனிதன் செய்ய வேண்டியது என்ன? ஓ! தந்தையே, உமது போதனைகளால் வழிநடத்தப்பட்டு, அறமீட்டுவதில் என்னை நான் நிறுவிக் கொள்ளும் வகையில் இஃதை உண்மையாகவும், முறையான வரிசையிலும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)
தந்தை, “ஓ! மகனே {மேதாவியே}, எப்போதும் பிரம்மச்சரிய கடமைகளை நோற்று வேதங்களைக் கற்ற ஒருவன், தன் தந்தையைக் காக்கும் நிமித்தமாகச் சந்ததியில் விருப்பம் கொள்ள வேண்டும். தன் நெருப்பை நிறுவி, தனக்கு விதிக்கப்பட்ட வேள்விகளைச் செய்து, (வானப்பிரஸ்தனாக வாழ) காட்டுக்குள் ஓய்ந்து, (அனைத்தையும் கைவிட்டு, பிரளயத்திற்காக அமைதியாகக் காத்திருப்பதன் மூலம்) முனிவனாக வேண்டும்” என்றார்.(6)
மகன், “உலகம் இவ்வாறு தாக்கப்படும்போது, அனைத்துப் புறங்களிலும் முற்றுகையிடப்படும்போது, அனைத்துத் திசைகளிலும் தடுக்கப்படமுடியாத (வஜ்ரங்கள்) விழுந்து கொண்டிருக்கும்போது, எவ்வாறு உம்மால் இப்படி அமைதியாகப் பேச முடிகிறது?” என்று கேட்டான்.(7)
தந்தை, “உலகம் எவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிறது? எதனால் அது முற்றுகையிடப்படுகிறது? அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து கொண்டிருக்கும் தடுக்கப்படமுடியாத வஜ்ரங்கள் எவை? உன் வார்த்தைகளால் நீ என்னை அச்சுறுத்துகிறாயா?” என்று கேட்டார்.(8)
மகன், “உலகம் காலனால் தாக்கப்படுகிறது. அது முதுமையால் முற்றுகையிடப்படுகிறது. பகல்களும், இரவுகளும் (வஜ்ரங்களைப் போலத்) தொடர்ந்து விழுகின்றன. இவற்றை ஏன் நீர் கவனிக்கவில்லை?(9) காலன் எவருக்காகவும் இங்கே காத்திருப்பதில்லை (ஆனால், திடீரென எந்த அறிவிப்புமின்றிக் கவர்ந்து செல்கிறான்) என்பதை நான் அறியும்போது, (விழிப்புணர்வில்லாமல்) அறியாமையெனும் திரையில் மூழ்கி என் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் என்னால் (அவன் வருகிறான் என்பதை அறிந்தும்) எவ்வாறு காத்திருக்க இயலும்?(10) ஒவ்வொரு இரவும் கடக்கையில், ஒவ்வொருவரின் வாழ்வுக்காலமும் கடந்து போகும்போது, ஆழமற்ற நீரில் இருக்கும் ஒரு மீனைப் போன்ற நிலையில் எவன் மகிழ்ச்சியடையமுடியும்?(11) மலர்களைக் கொய்யும் கவனமற்ற மனிதனைப் போலத் தன் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவன் தனது நோக்கங்களை அடையும் முன்பே காலன் அவனை அடைகிறான்[1].(12) எது நாளை செய்யப்பட வேண்டுமோ, அஃது இன்றே செய்யப்பட வேண்டும்; ஒருவன் பிற்பகலில் செய்ய நினைப்பது முற்பகலிலேயே செய்யப்பட வேண்டும். ஒருவனுடைய பணி முடிந்து விட்டது அல்லது முடிவடையவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(13) உமக்கான நன்மையை (நாளை வரை விட்டு வைக்காமல்) இன்றே செய்வீராக. தடுக்கப்பட முடியாதவனான காலன், (உமது செயல்களை நிறைவேற்றும் முன்பே) உம்மை வெல்லாமல் பார்த்துக் கொள்வீராக. காலன் இன்று வரமாட்டான் என்று எவன் அறிவான்?(14) ஒருவனின் செயல்கள் நிறைவடையுமுன்பே, காலன் அவனை இழுத்துச் செல்வான். எனவே, இவ்வகையில் வாழ்வு உறுதியற்றது என்பதால், (தனது முதிர் வயது வரை காத்திராமல்) ஒருவன் இளமையிலேயே அறம் பயில வேண்டும்.(15)அறமீட்டுவதன் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நித்தியமான மகிழ்ச்சியை நிச்சயம் வெல்வான். மடமையின் ஆதிக்கத்தில் ஒருவன் தன் மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் செயல்படத் தன் இடைக்கச்சையை உயர்த்திக் கொள்கிறான் {உயர்த்திக் கொண்டு செயல்பட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறான்}.(16) குற்றச் செயல்கள் அல்லது நற்செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் இவர்களை (உறவினர்களை) நிறைவு செய்கிறான். மகன்களையும், விலங்குகளையும் கொண்டவனும், அவற்றிடம் பற்றும், அர்ப்பணிப்பும் கொண்ட மனத்துடன் கூடியவனுமான ஒருவனை,(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலக் காலன் பற்றுகிறான்[2]. ஆசைக்குரிய பல்வேறு பொருட்களை வெல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, அனுபவிப்பது தணிவடையாதபோதே,(18) செம்மறியாட்டைக் கைப்பற்றியோடும் பெண் ஓநாயைப் போலக் காலன் அவனைக் கைப்பற்றுகிறான். “இது செய்யப்பட்டது, இது செய்யப்படாமல் எஞ்சியிருக்கிறது, இது பாதிச் செய்யப்பட்டுள்ளது”(19) என்று ஒருவன் தனக்குள் சொல்லலாம்; ஆனால் காலன், நிறைவுறாத செயல்களை முடிக்கும் அவனது ஆசையைக் கவனத்தில் கொள்ளாமல், அவனைக் கைப்பற்றி இழுத்துச் செல்கிறான். செயலோடு தொடர்புடையவற்றில் ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றின் கனியை அடையாமல் இருக்கும் ஒருவன்,(20) களம், கடை அல்லது வீட்டில் மும்முரமாக இருக்கும் ஒருவன் ஆகியோரைக் கைப்பற்றிக் காலன் கொண்டு போகிறான்.பலவீனன், பலவான், ஞானி, துணிவுமிக்கவன், மூடன், கல்விமான்,(21) அல்லது தன் ஆசைகள் எதனிலும் நிறைவுறாத ஒருவன் ஆகியோரையும் கைப்பற்றிக் காலன் கொண்டு போகிறான். மரணம், முதுமை, நோய், கவலை, அதே வகையான பல காரியங்கள் ஆகியவற்றை(22) மனிதர்கள் தவிர்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். உடல் படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, முதுமையும், மரணமும் வந்து அழிவுக்காகவே அவனைப் பற்றுகின்றன.(23) அசைவன, அசையாதன என்ற இருப்பின் இந்த வடிவங்கள் அனைத்தும் இவை இரண்டாலும் (முதுமை மற்றும் மரணத்தால்) பற்றப்படுகின்றன. வாய்மையில் மட்டுமே அழிவின்மை வசிப்பதால், காலனின் படையினரான போர்வீரர்கள் அணிவகுக்கும்போது, வாய்மையின் சக்தி ஒன்றைத் தவிர அவர்களை வேறு எதனாலும் தடுக்க இயலாது. மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் இன்பமே காலனின் வசிப்பிடமாகும்.(24,25)
காடு என்று அழைக்கப்படுவதே தேவர்கள் உண்மையில் கூடுமிடமாகும், அதே வேளையில், மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் இன்பமானது, அப்படி வசிப்பவனை (ஆதரவற்றவனாக்கிக்) கட்டும் பாசம் {கயிறு} போன்றதாகும் என்று ஸ்ருதி அறிவிக்கிறது[3].(26) பாவம் நிறைவந்தவர்கள் அதை வெட்டுவதில் வெல்வதில்லை (அவற்றிலிருந்து விடுதலையும் பெறுவதில்லை). எண்ணம், சொல் மற்றும் செயலில் எவன் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கவில்லையோ,(27) பிறரின் வாழ்வாதாரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் எவன் ஒருபோதும் எவருக்கும் தீங்கிழைக்காமல் இருக்கிறானோ, அவன் எந்த உயிரினத்தினாலும் தீங்கிழைக்கப்படுவதில்லை. இந்தக் காரணங்களினால், ஒருவன் வாய்மை நோன்பைப் பயின்று, வாய்மை நோன்பிற்கு உறுதியான அர்ப்பணிப்புடன்,(28) வாய்மையைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்க வேண்டும். தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, அனைத்து உயிரினங்களையும் சமமான கண்ணுடன் கண்டு, அவன் வாய்மையின் துணையுடன் காலனை வெல்ல வேண்டும். மரணமின்மையும், மரணமும் உடலிலேயே நடப்பட்டிருக்கின்றன {நிறுவப்பட்டிருக்கின்றன}.(29)மடமையினால் மரணம் எதிர்கொள்ளப்படுகிறது, வாய்மையினால் மரணமின்மை வெல்லப்படுகிறது. ஆசை மற்றும் கோபத்தைக் கடந்து, தீங்கிழைப்பதைத் தவிர்த்து என் நன்மையை மகிழ்ச்சியுடன் அடைவதற்காகவும், ஒரு தேவனைப் போல மரணத்தைத் தவிர்ப்பதற்காகவும் நான் வாய்மையைப் பின்பற்றப் போகிறேன். அமைதியால் அமைக்கப்பட்ட வேள்வியில் ஈடுபட்டு, பிரம்ம வேள்வியிலும் ஈடுபட்டு, என் புலன்களை அடக்கி,(30,31) சூரியன் வடபாதையில் திரும்பும்போது, வாக்கு, மனம் மற்றும் செயல்கள் எனும் வேள்விகளை நான் செய்யப் போகிறேன்[4]. என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு கொடுமை நிறைந்த விலங்கு வேள்வியைச் செய்ய முடியும்?(32) ஞானம் கொண்ட என்னைப் போன்ற ஒருவனால், க்ஷத்தியர்களுக்காக விதிக்கப்பட்டதும், நிலையில்லாத வெகுமதிகளைக் கொண்டதும், கொலை வேள்வியும், கொடுமை நிறைந்ததுமான பிசாச வேள்வியைப் போன்ற ஒன்றைச் செய்ய முடியும்? என்னிடம் நானே என்னைப் பெற்றுக் கொண்டேன். ஓ! தந்தையே, சந்ததியை உண்டாக்க நாடாமல் என்னில் நானே ஓயப்போகிறேன். என்னைக் காக்க என் சந்ததி வேண்டாம், நான் தன் வேள்வியைச் செய்யப் போகிறேன்[5]. எவனுடைய வார்த்தைகளும், எண்ணங்களும் எப்போதும் நன்கு கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றனவோ,(34) தவங்களையும், துறவையும், யோகத்தையும் கொண்ட அவன் நிச்சயம் அவற்றின் மூலம் அனைத்தையும் அடைவான். ஞானத்திற்கு இணையான கண்ணேதும் கிடையாது. ஞானத்திற்கு இணையான வெகுமதியேதும் கிடையாது.(35)பற்றுக்கு இணையான கவலையேதும் கிடையாது. துறவுக்கு இணையான மகிழ்ச்சியேதும் கிடையாது.(36) ஒரு பிராமணனுக்குத் தனிமைவாசம், அனைத்துயிரனங்களையும் சமமான மதிப்பது, பேச்சில் வாய்மை, நல்லொழுக்கத்தின் உறுதி {சீலம்}, தண்டத்தை {தண்டனையை} முற்றாகக் கைவிடல், எளிமை, செயல்கள் அனைத்தில் இருந்தும் படிப்படியாக விலகல் ஆகியவற்றைப் போன்ற செல்வங்களேதும் கிடையாது.(37) செல்வத்தைக் கொண்டு உமக்கு என்ன தேவை இருக்கிறது? உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனைவியராலும் என்ன தேவை இருக்கிறது? நீர் ஒரு பிராமணராவீர், காலனை நீர் எதிர்கொள்ள வேண்டும். குகைக்குள் {உடலுக்குள்} மறைந்திருக்கும் சுயத்தைத் தேடுவீராக உமது பாட்டன்மாரும், தந்தையும் எங்கே சென்றார்கள்?” என்று கேட்டான் {மேதாவி}”.(38)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, தமது மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தந்தை, சுட்டிக்காட்டப்பட்ட வழியில் செயல்பட்டார். நீயும் வாய்மை அறத்திற்கு அர்ப்பணிப்புடன் அதே வழியில் செயல்படுவாயாக” என்றார்[6].(39)
சந்நியாச வாழ்வுமுறை! – சாந்திபர்வம் பகுதி – 278-பிரம்மத்தை அடையத்தக்க நடத்தை, செயல்கள் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டிரன்; சந்நியாச வழிமுறையை அவனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பிரகிருதியைக் கடந்ததும், மாற்றமில்லாததுமான பிரம்மத்தின் இடத்தை அடைய ஒரு மனிதன் என்ன நடத்தையை, என்ன செயல்களை, என்ன வகை ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும், அவன் எதனிடம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விடுதலை அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக, எளிய உணவை உண்பவனாகத் தன் புலன்களை ஆள்பவனாக உள்ள ஒருவன் பிரகிருதியைக் கடந்து, உயர்ந்த இடத்தை அடைந்து, மாற்றமடையாதவனாகிறான்[1].(2) ஒருவன் தன் இல்லத்தில் இருந்து ஓய்ந்து, ஈட்டலையும், இழத்தலையும் ஒரே ஒளியில் கண்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆசைக்குரிய பொருட்கள் (அனுபவிக்கத்தகுந்த வகையில் ஆயத்தமாக இருக்கும்போதும் அவை) அனைத்தையும் அலட்சியம் செய்து, துறவு வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.(3) கண்ணாலோ, சொல்லாலோ, எண்ணத்தாலோ அவன் மற்றொருவனை இழிவாகக் கருதக் கூடாது. எந்த மனிதனும் கேட்கும்படியோ, இல்லாமலோ அவனைக் குறித்துத் தீமையாகப் பேசக்கூடாது.(4) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து, ஒழுக்கத்தில் சூரியனின் பாதையைப் பின்பற்ற வேண்டும்[2]. இந்த வாழ்வில் உள்ள ஒருவன் எந்த உயிரினத்திடமும் நட்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது.(5)அவன் கடுமொழிகளை அலட்சியம் செய்து, அகங்காரத்துடன் தன்னை மற்றொருவனைவிட மேன்மையானவனாக மதித்துக் கருதிக்கொள்ளக்கூடாது. மற்றொருவனின் மூலம் கோபம் தூண்டப்படும்போதும், அவன் இனிமையான பேச்சுகளை மட்டுமே உதிர்க்க வேண்டும். தானே பழிக்கப்படும்போதும், அவன் பதிலுக்குப் பழித்துரைக்கக்கூடாது.(6) அவன் மனிதர்களுக்கு மத்தியில் நட்புடனோ, நட்பில்லாமலோ பழகக்கூடாது. அவன் பிச்சையெடுக்கச் செல்லும் ஒரு வலத்தில் பல வீடுகளுக்குச் செல்லக்கூடாது. அதே போல, முன்கூட்டியே (உணவுக்கு) அழைக்கப்பட்டு எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது.(7) (பிறரால்) புழுதி வாரி இறைக்கப்படும்போதும், அவன் தன் கடமைகளில் உறுதியாக இருந்து, அத்தகைய ஏற்பில்லாத பேச்சுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அவன் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் பதிலுக்குப் பழிதீர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அச்சமற்றவனாக இருக்க வேண்டும்; தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்.(8) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட மனிதன், ஓர் இல்லறத்தானின் வசிப்பிடத்தில் புகை எழுவது நின்று, உலக்கையொலி அடங்கி, அடுப்பில் நெருப்பு அணைந்து, அங்கே வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் உணவை முடித்த பிறகு, அல்லது உணவுக்கான நேரம் கடந்ததும் அங்கே ஈகை இரத்தலுக்கு {பிச்சை எடுக்கச்} செல்ல வேண்டும்.(9) அவன் தன் உடலையும், ஆன்மாவையும் ஒன்றாகப் பராமரித்துக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டும் {உணவில்} நிறைவடைய வேண்டும். நிறைவை உண்டாக்கும் அளவுக்கான உணவுக்குக்கூட அவன் ஆசைப்படக்கூடாது. அவன் தன் தேவையை அடையத் தவறும்போது, நிறைவின்மையை வளர்க்கக்கூடாது. மேலும் தன் தேவையை அடையும்போது அவன் மகிழக்கூடாது.(10)
சாதாரண மனிதர்களால் விரும்பப்படும் பொருட்களில் ஒருபோதும் அவன் விரும்பங்கொள்ளக்கூடாது. மரியாதையுடன் அழைக்கப்படும்போதும் அவன் எவனுடைய வீட்டிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவனைப் போன்ற ஒருவன், கௌரவத்துடன் அடையப்படும் அத்தகைய ஆதாயங்களைப் புறக்கணிக்க வேண்டும்[3].(11) அவன் தனக்கு முன்பு வைக்கப்பட்ட உணவில் ஒரு போதும் குறை காணக்கூடாது, மேலும் தகுதிகளையும் பாராட்டக்கூடாது. மனிதர்களின் தேவைகளில் இருந்து விலக்கப்பட்ட படுக்கையையும், ஆசையையும் அவன் விரும்ப வேண்டும்.(12) கைவிடப்பட்ட வீடு, மரத்தடி, காடு, குகை போன்ற இடங்களையே அவன் நாட வேண்டும். தன் நடைமுறைகளைப் பிறர் அறியாவண்ணம், அல்லது பிறரால் (வெறுக்கத்தக்க அல்லது ஒதுக்கத்தக்கவற்றைப்) பின்பற்றுவதன் மூலம் தன் உண்மை இயல்பை மறைத்துக் கொண்டு அவன் தன் சுயத்துக்குள் நுழைய வேண்டும்[4].(13) யோகத் தொடர்பு மற்றும் தோழமை தொடர்பற்றல் ஆகியவற்றின் மூலம் அவன் முற்றிலும் சமமான, உறுதியான, சீரான நிலையை அடைய வேண்டும். அவன் தன் செயல்களின் மூலம் தகுதி, அல்லது தகுதியின்மையை ஈட்டக்கூடாது[5].(14) அவன் மனநிறைவு, நல்ல உள்ளடக்கம், எப்போதும் உற்சாகம் நிறைந்த முகம் மற்றும் புலன்களுடன், அச்சமற்றவனாக, மனத்தில் எப்போதும் புனித மந்திரங்களை உரைப்பவனாக, அமைதிநிறைந்தவனாக, துறவு வாழ்வை மேற்கொள்பவனாக இருக்க வேண்டும்.(15)அடிப்படை சாரங்களின் {ஐம்பூதங்களின்} விளைவால் உண்டாகி அதனிலேயே கரைந்து போகும் புலன்களின் மூலம் தன் உடலின் தோற்றத்தையும் அழிவையும் கண்டும், (பிற) உயிரினங்களின் பிறப்பையும் இறப்பையும் கண்டும், அவன் ஆசையில் இருந்து விடுபட்டு, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத இருவகை உணவுகளையும் உண்டு அனைத்தின் மீதும் சம பார்வையைச் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மிகக் குறைந்த உணவை உண்டு, தன் புலன்களை அடக்கும் அவன் சுயத்தின் மூலம் ஆன்ம அமைதியை அடைகிறான்.(16) ஒருவன், {தனக்குள்} (எழுச்சியடையும்) சொற்கள், மனம், கோபம், பொறாமை, பசி மற்றும் காமம் ஆகிவற்றின் தூண்டல்களை அடக்க வேண்டும். இதயத் தூய்மைக்காகத் தவத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், (பிறரின்) நிந்தனைகள் தன் இதயத்தைப் பீடிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் {பாரபட்சமில்லாத} நடுவுநிலைமையை அடைந்து புகழையும், பழியையும் சமமாகக் கருத வேண்டும். உண்மையில் இதுவே புனிதமான, உயர்ந்த பாதையான சந்நியாச வாழ்வுமுறையாகும்.(18)
உயர்ந்த ஆன்மாவைக் கொண்ட ஒரு சந்நியாசி அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன் புலன்களை விலக்கி, பற்றுகள் அனைத்திலிருந்தும் தனித்திருக்க வேண்டும். அவன் முந்தைய வாழ்வுமுறைகளில் வாழ்ந்த போது அறிந்த மனிதர்களிடம் அல்லது சென்ற இடங்களுக்கு ஒருபோதும் மீண்டும் செல்லக் கூடாது. அவன், அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்புடைய வகையில், ஒரு நிலையான வீடு இல்லாமல் சுயத்தின் தியானத்தில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(19) அவன் இல்லறத்தாருடனோ {கிருஹஸ்தர்களுடனோ}, காட்டுவாசிகளுடனோ {வானப்ரஸ்டர்களுடனோ} ஒருபோதும் கலந்திருக்கக் கூடாது. (முன்பே சிந்திக்கப்படாமல்) முயற்சியில்லாமல் அடையப்படும் உணவையே அவன் உண்ண வேண்டும். மகிழ்ச்சி தன் இதயத்தைப் பீடிக்க அவன் ஒருபோதும் அனுமதிக்ககூடாது.(20) ஞானிகளுக்கு, இத்தகைய துறவு வாழ்க்கையே விடுதலையை அடையும் வழிமுறையாகும். எனினும், மூடர்களுக்கு இந்தக் கடமைகளின் நடைமுறைகள் மிகச் சுமை நிறைந்ததாகவே தெரியும். தவசி ஹாரீதர் இவை அனைத்தையுமே விடுதலையை அடையும் பாதையாக அறிவித்தார்.(21) எவன் தன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழையாமையை உறுதிகூறுவானோ, அவன் முடிவில்லாத, அல்லது நித்தியமான இன்பமயமான பிரகாச உலகங்கள் பலவற்றை அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(22)
அறிவு! – சாந்திபர்வம் பகுதி – 279- இன்ப துன்பங்களுக்குக் காரணமாக இருக்கும் அறிவைக் குறித்துச் சுக்ராச்சாரியருக்கும், விருத்திரனுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த நற்பேற்றை அடைந்தவர்களாக மனிதர்கள் அனைவரும் எங்களைக் குறித்துப் பேசுகின்றனர். எனினும் உண்மையில், எங்களைப் போல அதிகத் துக்கத்தை அடைந்தவர்கள் வேறெவரும் இல்லை.(1) ஓ! குருக்களில் சிறந்தவரே, ஓ! பாட்டா, உலகமனைத்திலும் மதிக்கப்பட்டாலும், தேவர்களால் பெறப்பட்டு மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் பிறந்திருந்தாலும், ஓ! மதிப்பிற்குரிய தலைவரே, எங்கள் பங்காக நாங்கள் பெரும் துன்பத்தையே அடைந்திருக்கும்போது, பிறப்பால் உடலைப் பெறுவது மட்டுமே துன்பம் அனைத்திற்கும் காரணமாகத் தெரிகிறது. ஐயோ, துன்பத்தை அழிக்கும் துறவு வாழ்வை நாங்கள் எப்போதும் பின்பற்றப் போகிறோம்?(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள், (ஐந்து மூச்சுகள், மனம், புத்தி, அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்து என்ற) பதினேழில் இருந்தும், (மனிதனை மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த வாழ்வில் கட்டும்) முக்கியக் காரணங்களாக அமைந்த (ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகிய) யோகக் களங்கங்கள் ஐந்தில் இருந்தும், {ஒலி, தீண்டல், வடிவம், சுவை மற்றும் மணம் ஆகிய} புலன் நுகர் பொருட்கள் ஐந்தும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) குணங்கள் மூன்றும் சேர்ந்த எட்டில் இருந்தும் விடுபட்டு, மீண்டும் ஒருபோதும் மறுபிறப்பை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவரே, நாங்கள் அரசுரிமையைக் கைவிட்டு எப்போது துறவு வாழ்வைப் பின்பற்றப் போகிறோம்?” என்று கேட்டான்.(4,5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஏகாதிபதியே, அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது. அனைத்திற்கும், அதனதனுக்குரிய எல்லைகள் இருக்கின்றன. மறுபிறப்புக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பது நன்கறியப்பட்டிருக்கிறது. இவ்வுலகில் எந்தப் பொருளும் நிலையானதல்ல.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது (உனக்கிருக்கும் செல்வாக்கு) ஒரு களங்கமென நீ நினைக்கிறாய். நமது ஆய்வுக்குரிய இக்காரியத்தில் அஃது அவ்வாறில்லை என்பது உண்மையல்ல {அஃது அவ்வாறென்பது உண்மையே}. எனினும், நீங்கள் அறம் அறிந்தவர்களாகவும், ஆயத்தமானவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, காலத்தில் நீங்கள் உங்கள் துன்பத்திற்கான முடிவை (விடுதலையை) அடையப்போகிறீர்கள்[1].(7) ஓ! மன்னா, உடலுடன் கூடிய ஜீவன், தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகியவற்றுக்கு (அல்லது அவற்றின் கனியாக வரும் இன்பதுன்பங்களுக்கு) உரிமையாளனல்ல. மறுபுறம், அவன் {ஜீவன்}, தகுதி மற்றும் தகுதியின்மையால் பிறக்கும் இருளில் (விருப்பு வெறுப்பைத் தன் சாரமாகக் கொண்ட அறியாமையில்) மூழ்குகிறான்[2].(8) அஞ்சனப்பொடியுடன் கூடிய காற்றானது, மனோசிலையின் தூள்களைப் பற்றி (தானே {காற்று} நிறமற்ற ஒன்றாக இருப்பினும்), தான் பற்றும் பொருட்களின் நிறங்களை ஏற்று, பல்வேறு திசைப்புள்ளிகளில் மாறுதலை ஏற்படுத்துவதைப் போலவே,(9) ஜீவனும், நிறமற்றதாக இருந்தாலும், அறியாமை மற்றும் செயல்களின் கனிகளால் பல நிறங்களை ஏற்று (களங்கமற்ற, நிலையான தன்மை கொண்ட தன் மூதாதையைக் {சித்-ஐ} களங்கமுடையதாக, மாறும் இயல்புள்ளதாகத் தோன்றச் செய்யும் வகையில்) உடலில் இருந்து மற்றொரு உடலுக்குப் பயணிக்கிறான்[3].(10)ஜீவன், அறியாமையின் விளைவால் தன்னைப் பீடித்த இருளை ஞானத்தின் மூலம் விலக்குவதில் வெல்லும்போது, நிலையான பிரம்மமானது (தன் முற்றான மகிமையுடன்) வெளிப்படுத்தப்படுகிறது.(11) நிலையான பிரம்மத்திற்கு முன்னிலை மீள்வது, செயல்களின் மூலம் இயலாது எனத் தவசிகள் சொல்கின்றனர். நீயும், இந்த உலகில் உள்ள பிறரும், தேவர்களும் கூட, விடுதலையை {முக்தியை} அடைந்தவர்களை மதிக்க வேண்டும். பெரும் முனிவர்கள் அனைவரும் பிரம்மப் பண்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகுவதில்லை[4].(12) இது தொடர்பாகப் பழங்காலத்தில் (தைத்தியர்களின் ஆசானால் {சுக்ராச்சாரியரால்}) பாடப்பட்டது குறிப்பிடப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, தைத்தியன் விருத்திரன், தன் செழிப்பனைத்தையும் இழந்தபோது பின்பற்றிய ஒழுக்க நடைமுறையைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(13) ஓ! பாரதா, தன் புத்தியை மட்டுமே சார்ந்திருந்த அவன், தான் வீழ்த்தப்பட்டிருந்தாலும், நண்பர்களற்றவனாக இருந்தாலும், அரசுரிமையை இழந்திருந்தாலும் எதிரிகளுக்கு மத்தியில் கவலையில் ஈடுபடாமல் இருந்தான்.(14) பழங்காலத்தில் விருத்திரன் அரசுரிமையை இழந்திருந்தபோது, (அவனது ஆசானான) உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “ஓ! தானவா, உன் தோல்வியின் விளைவால் நீ துயரமெதையும் வளர்க்கவில்லை என நான் நம்புகிறேன்” என்று கேட்டார்.(15)விருத்திரன் {சுக்கிராச்சாரியாரிடம்}, “வாய்மை மற்றும் தவங்களின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும் மறைவையும் ஐயமில்லாமல் புரிந்து கொண்டு, இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதை நான் நிறுத்திக் கொண்டேன்.(16) காலத்தால் தூண்டப்பட்ட உயிரினங்கள் ஆதரவற்ற நிலையில் நரகத்தில் மூழ்குகின்றன. மேலும் சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன என்று தவசிகள் சொல்கின்றனர். இவை யாவும் தங்கள் காலத்தை அடக்கத்துடன் கழிக்கின்றன.(17) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தைச் சொர்க்கத்திலும், நரகத்திலும் கழிக்கும் அவை, தங்கள் பங்கான தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} (இன்ப துன்பங்களின் மூலம்) தீர்ந்த பிறகு, காலத்தால் தூண்டப்பட்டு மீண்டும் மீண்டும் பிறப்பை எடுக்கின்றன.(18) ஆசை எனும் சங்கிலிகளால் கட்டப்பட்ட உயிரினங்கள், இடைநிலை வாழ்வுகளில் ஆயிரமாயிரம் பிறவிகளைக் கடந்து ஆதரவற்ற நிலையில் நரகத்தில் விழுகின்றன[5].(19) இவ்வாறு உயிரினங்கள் வருவதையும், போவதையும் நான் காண்கிறேன். ஒருவனுடைய செயல்களின் அடிப்படையிலேயே அவன் எதையும் அடைகிறான் என்பது சாத்திரங்களில் உள்ள பாடம்[6].(20)உயிரினங்கள் மனிதர்களாகவோ, இடைநிலை விலங்குகளாகவோ, தேவர்களாகவோ பிறப்பை எடுத்து நரகத்திற்குச் செல்கின்றன. தங்களுக்குத் தகுந்த வகையில் முற்பிறவிகளில் செயல்பட்ட உயிரினங்கள் அனைத்தும், காலனின் விதிகளுக்கு உட்பட்டு, இன்ப துன்பங்களையும், ஏற்புடையவற்றையும், ஏற்பில்லாதவற்றையும் அடைகின்றன. தங்கள் செயல்களின் அளவுக்குத்தக்க இன்ப துன்பங்களை அனுபவிக்கும் உயிரினங்கள், செயல்களின் அலகுகளால் அளக்கப்படும் பழைய பாதையின் மூலம் எப்போதும் மீண்டும் வருகின்றன” என்றான் {விருத்திரன்}.(21,22)
அப்போது சிறப்புமிக்கவரான உசனஸ் {சுக்ராச்சாரியர்}, படைப்பின் உயர்ந்த புகலிடத்தைக் குறித்து இவ்வாறு பேசிக்கொண்டிருந்த அசுரன் விருத்திரனிடம், “ஓ! தைத்திய புத்திமானே, ஓ! குழந்தாய், இத்தகைய மூடக் கற்பனைகளை நீ ஏன் சொல்கிறாய்?” என்று கேட்டார்.(23)
விருத்திரன், “வெற்றியின் மீது கொண்ட பேராசையின் காரணமாக நான் செய்த கடுந்தவங்களையும், நீரும் தவசிகள் பிறரும் அறிவீர்.(24) பிற உயிரினங்கள் இன்புறும் பல்வேறு சுவைகளையும், பல்வேறு மணங்களையும் என் சக்தியால் அபகரித்த நான், மூவுலகங்களையும் பீடித்துக் கொண்டிருந்தேன்.(25) பிரகாசமான பல்லாயிரம் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட நான் (என் தெய்வீகத் தேரில்), எந்த உயிரினத்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாக, எவனுக்கும் அஞ்சாதவனாக வானத்தில் திரிந்திருந்தேன்.(26) என் தவங்களின் மூலம் பெருஞ்செழிப்பை அடைந்தேன், என் செயல்களால் நான் அஃதை இழந்தேன். எனினும், என் மனோவுறுதியைச் சார்ந்திருந்த நான் இந்த மாற்றத்தினால் துயருறவில்லை.(27)
(பழங்காலத்தில்) சொர்க்கங்களின் உயர் ஆன்ம ஆட்சியாளனான பேரிந்திரனுடன் {மஹேந்திரனுடன்} போரிட விரும்பிய நான் அந்தப் போரில் சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், ஹரி {பாவங்கள் அனைத்தையும் அபகரிப்பவன்},(28) வைகுந்தன் {தடையில்லாத சமர்த்தன்}, புருஷன் {பரிபூர்ணன்}, அனந்தன் {முடிவற்றவன்}, சுக்லன் {சுத்தன்}, விஷ்ணு {வியாபகன்}, சநாதனன் {அனாதியானவன் / மிகப் பழமையானவன்}, முஞ்சகேசன் {பழுத்த தர்ப்பை போலப் பொன்னிறமான மயிரைக் கொண்டவன்}, ஹரிஸ்மஸ்ரு {மஞ்சள் நிற மீசையுடையவன் [தாடியுடையவன்]}, அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டன் {பிதாமஹன்} என்றும் எவன் அழைக்கப்பட்டானோ, அந்த நாராயணனைக் கண்டேன்.(29)
அந்தப் பெரும் ஹரியின் காட்சி கிட்டியதற்கான அந்தத் தவத்தோடு கூடிய வெகுமதிகள் (அனுபவிக்கத்தக்க வகையில்) என்னிடம் இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அது தீராமல் எஞ்சியிருப்பன் விளைவாலேயே நான் உம்மிடம் செயல்களின் கனிகளைக் குறித்துக் கேட்கும் விருப்பம் கொண்டேன்[7].(30) (மனிதர்களின்) எந்த வகையில் {வர்ணத்தில்} உயர்ந்த பிரம்ம செழிப்பு நிறுவப்பட்டிருக்கிறது? மேலும் அநத உயர்ந்த செழிப்பு எவ்வகையில் வீழ்ச்சியடையும்?(31) எவனிடம் இருந்து உயிரினங்கள் தோன்றி வாழ்கின்றன? எவன் மூலம் அவை செயல்படுகன்றன? எந்த உயர்ந்த கனியை அடைவதன் மூலம் ஓர் உயிரினம் நித்தியமாகப் பிரம்மத்துடன் வாழ்வதில் வெல்லும்?(32) எந்தச் செயலின் மூலம், அல்லது அந்த அறிவின் மூலம் அந்தக் கனியை அடைய முடியும்? ஓ! கல்விமானான பிராமணரே, இவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {விருத்திரன்}”.(33){பீஷ்மர் தொடர்ந்தார்}, “ஓ! மன்னர்களில் சிங்கமே, ஓ! மனிதர்களில் காளையே, தானவர்களின் இளவரசனால் {விருத்திரனால்} இவ்வாறு கேட்கப்பட்ட பிறகு தவசி உசனஸ் {சுக்கிராச்சாரியர்} என்ன சொன்னார் என்பது என்னால் தொகுத்துரைக்கப்படும்போது உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சிதறாத கவனத்துடன் கேட்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(34)
விஷ்ணுவின் மகிமை – ஸனத்குமாரர்! – சாந்திபர்வம் பகுதி – 280-விஷ்ணுவின் மகிமையையும், பிறப்பின் கணக்கையும், ஜீவன்களின் நிறம் முதலியவற்றையும், சுக்ரருக்கும், விருத்திரனுக்கும் எடுத்துச் சொன்ன ஸனத்குமாரரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “ஆகாயத்துடன் கூடிய இந்தப் பூமியைத் தன் கரங்களில் தாங்கும் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தெய்வீகமானவனை {விஷ்ணுவை} நான் வணங்குகிறேன்.(1) ஓ! தானவர்களில் சிறந்தவனே, (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும்) முடிவிலா இடத்தைத் தலையாகக் கொண்டவனும், அதியனுமான {அனைத்திலும் மேம்பட்டவனான} அந்த விஷ்ணுவின் மகிமையைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {சுக்கிராச்சாரியார்}.(2)
அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஐயங்களை விலக்கும் நோக்கம் கொண்டவரும், அற ஆன்மாவும், பெருந்தவசியுமான ஸனத்குமாரர் அங்கே அவர்களிடம் வந்தார்[1].(3) அசுரர்களின் இளவரசனாலும் {விருத்திரனாலும்}, தவசியான உசனஸாலும் {சுக்கிராச்சாரியராலும்} வழிபடப்பட்ட அந்தத் தவசிகளில் முதன்மையாவன் {ஸனத்குமாரர்}, ஒரு விலைமதிப்புமிக்க இருக்கையில் அமர்ந்தார்.(4)பெரும் ஞானம் கொண்ட குமாரர் {ஸனத்குமாரர்} (சுகமாக) அமர்ந்தபிறகு, அவரிடம் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “அதியனான விஷ்ணுவின் மகிமையை இந்தத் தானவர்களின் தலைவனுக்கு {விருத்திரனுக்கு} உரைப்பீராக” என்றார்.(5)
இவ்வார்த்தைகளைக் கேட்ட ஸனத்குமாரர், புத்திமானான அந்தத் தானவர்களின் தலைவனிடம் {விருத்திரனிடம்}, அதியனான விஷ்ணுவின் மகிமை குறித்தவையும், பெரும் முக்கியத்துவம் நிறைந்தவையுமான பின்வருவனவற்றைச் சொன்னார்.(6)
{ஸனத்குமாரர்}, “ஓ! தைத்தியா {திதியின் மகனே}, விஷ்ணுவின் மகிமை குறித்த அனைத்தையும் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மொத்த அண்டமே விஷ்ணுவைச் சார்ந்திருக்கிறது என்பதை அறிவாயாக.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் அவனே. காலத்தின் போக்கில் அனைத்துப் பொருட்களையும் உள்ளீர்த்துக் கொள்பவனும், காலத்தில் அவற்றை முன்னே விடுபவனும் {உண்டாக்குபவனும்} அவனே.(8) அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் அந்த ஹரியிலேயே கலக்கின்றன, பிறகு அந்தப் பொருட்கள் அனைத்தும் அவனிலிருந்தே உதிக்கின்றன. சாத்திரங்களை அறிந்த மனிதர்களால் அத்தகைய சாத்திரத்தின் மூலம் அவனை அடைய முடியாது. அதேபோல, தவங்கள் மற்றும் வேள்வியின் மூலமும் அவனை அடைய முடியாது. புலன்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் மூலமே அவன் அடையத்தக்கவனாக இருக்கிறான்.(9) அத்தகைய கதியை அடைவதில் சாத்திரங்கள் முற்றிலும் பயனற்றவை என்பதல்ல. புற மற்றும் அகச் செயல்கள் இரண்டையும், தன் மனத்தையும் சார்ந்திருப்பதாலும், தன் புத்தியின் மூலமும் ஒருவனால் (அவற்றை {புலன்களைத்}) தூய்மைப்படுத்த முடியும். அத்தகைய வழிமுறைகளால் அவன் இவ்வுலகில் முடிவின்மையை அனுபவிப்பதில் வெல்வான்[2].(10)பொற்கொல்லன் ஒருவன், பெரும் முயற்சியோடு கூடிய பெருஞ்செய்கையால் உலோகத்தை {தங்கத்தை} மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு அதன கசடுகளைத் தூய்மைப்படுத்துவதைப் போல,(11) ஜீவன் நூறு பிறவிகளை எடுக்கும் தன் போக்கின் மூலம், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறது. ஒரே ஒரு பிறவியில் பெரும் முயற்சிகளோடு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக்கூடிய சிலர் காணப்படுகின்றனர்.(12) ஒருவன் தன் மேனியில் உள்ள கறை அடர்த்தியாவதற்குள் கவனத்துடன் துடைப்பதைப் போலவே, ஒருவன் பெரும் முயற்சிகளைச் செய்து தன் களங்கங்களைக் கழுவிக்கொள்ள வேண்டும்.(13) எள் தானியங்களுடன் சில மலர்களைக் கலப்பதால் மட்டுமே அவை தங்கள் சொந்த மணத்தை விடாது (விட்டுவிட்டு உடனே மணமிக்கவையாக மாறிவிட முடியாது). அதே போலவே, ஒருவன் தன் இதயத்தைச் சிறிது தூய்மைப்படுத்திக் கொள்வதால் மட்டுமே ஆன்மாவைக் காண்பதில் வெல்ல முடியாது.(14) எனினும், அந்தத் தானியங்கள், பெரும் அளவிலான மலர்களுடன் மீண்டும் மீண்டும் மணமூட்டப்படும்போதுதான் அவை தங்கள் சொந்த மணத்தை விட்டு, தங்களுடன் கலந்த மலர்களின் மணத்தை ஏற்கும்.(15)
அதே வகையிலேயே, நமது சூழ்நிலைகளின் மேல் பற்று கொள்வதால் ஏற்படும் களங்கங்கள், பல பிறவிகளின் போக்கில் ஏற்படும் புத்தியின் மூலமும், பெரும் அளவிலான சத்வ குணத்தின் துணை மூலமும், பயிற்சியில் பிறக்கும் முயற்சியெனும் வழிமுறையின் மூலமும் களையப்படுகின்றன[3].(16) ஓ! தானவா, செயல்களில் பற்றுக் கொள்ளும் உயிரினங்களும், அவற்றில் பற்று கொள்ளாதவையும் தங்கள் தங்கள் மனோநிலைகளுக்கு வழிநடத்தப்படும் காரணங்களை {கர்மவிசேஷங்களை} எந்த வழிமுறைகளின் மூலம் அடைகின்றன என்பதைக் கேட்பாயாக[4].(17) ஓ! பலமிக்கத் தானவா, உயிரினங்கள் எவ்வாறு செயல்களைச் செய்கின்றன, எவ்வாறு அவை விடுகின்றன என்பதை முறையான வரிசையில் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(18) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் உயர்ந்த தலைவனே {பரமனே} படைக்கிறான். அவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவனாவான். எவ்வகைக் குணங்களும் அற்றவனான {நிர்க்குண பிரம்மமான} அவன், (படைப்பை உண்டாக்கும்போது) குணங்களை ஏற்கிறான். அவனே அண்டத்தை அழிப்பவனும், அனைத்துப் பொருட்களின் புகலிடமும், விதி சமைக்கும் உயர்ந்தவனும், தூய சித்-ம் ஆவான்[5].(19) அனைத்து உயிரினங்களிலும் மாறக்கூடியவனாகவும் {க்ஷதரதேகமாகவும்}, மாற்றமில்லாதவனுமாக {அக்ஷரஜீவனுமாக} அவனே {ஸ்ரீ ஹரியே} வசிக்கிறான். பதினோரு மாறுபாடுகளை {விகாரங்களைக்} கொண்டவனான அவனே, தன் கதிர்களால் இந்த அண்டத்தைப் பருகுகிறான்[6].(20)பூமி அவனது பாதம் என்பதை அறிவாயாக. அவனது தலையே சொர்க்கமாக இருக்கிறது. ஓ! தைத்தியனே, அவனது கரங்களே பல்வேறு திசைப்புள்ளிகளாக இருக்கின்றன. இடைவெளி {ஆகாயம்} அவனது காதுகளாகும்.(21) அவனது கண்களின் ஒளியே சூரியனாகும், அவனது மனத்தின் ஒளியே சந்திரனாகும். அவனது புத்தி எப்போதும் அறிவிலேயே வசிக்கிறது, அவனது நாவு நீரில் வசிக்கிறது.(22) ஓ! தானவர்களில் சிறந்தவனே, கோள்கள் அவனது புருவமத்தியில் இருக்கின்றன. விண்மீன்களும், நட்சத்திரக்கூட்டங்களும் அவனது கண்களின் ஒளியில் இருந்து வந்தன. ஓ! தானவா, இந்தப் பூமி அவனது பாதத்தில் இருக்கிறது.(23) ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ குணங்கள் அவனிடம் இருந்தே வந்தன என்பதை அறிவாயாக. அவனே அனைத்து வாழ்வுமுறைகளின் கனியாவான் (அல்லது கதியாவான்), (ஜபம் மற்றும் வேள்விகள் முதலிய) செயல்கள் அனைத்தின் கனியாக (வெகுமதியாக) அவனே அறியப்பட வேண்டும்.(24) உயர்ந்தவனும், மாற்றமிலாதவனுமான அவன், செயல்கள் அனைத்தில் இருந்து விலகுவதன் கனியாகவும் இருக்கிறான். சந்தங்கள் அவனது உடலின் முடியாக இருக்கின்றன, அக்ஷரம் (அல்லது பிரணவம்) அவனது சொல்லாக இருக்கிறது.(25)
(மனிதர்களில்) பல்வேறு வகையினரும், வாழ்வு முறைகளும் அவனது புகலிடமாக இருக்கின்றன. அவனது வாய்கள் {முகங்கள்} பலவாகும். கடமை (அல்லது) அறம் அவனது இதயத்தில் நடப்பட்டிருக்கிறது {நிறுவப்பட்டிருக்கிறது}. அவனே பிரம்மமும், உயர்ந்த அறமாகவும், சத்-ஆகவும், அசத்-ஆகவும் இருக்கிறான்.(26) ஸ்ருதி அவனே. சாத்திரங்கள் அவனே. வேள்விப் பாத்திரங்கள் அவனே, பதினாறு ரித்விஜர்கள் அவனே. வேள்விகள் அனைத்தும் அவனே, பெரும்பாட்டன் (பிரம்மன்) அவனே, விஷ்ணு அவனே, அஸ்வினி இரட்டையர்கள் அவனே, புரந்தரன் {இந்திரன்} அவனே.(27) மித்ரன் அவனே, வருணன் அவனே, யமன் அவனே, கருவூலத் தலைவனான குபேரன் அவனே. ரித்விஜர்களால் அவன் தனித் தனியாகக் காணப்பட்டாலும், அவர்களால் அவன் ஒருவனாகவே அறியப்படுகிறான். இந்த மொத்த அண்டமும் அந்த ஒரே தெய்வீமானவனின் கட்டுப்பட்டின் கீழ் இருப்பதை அறிவாயாக.(28) ஓ! தைத்தியர்களின் இளவரசனே, ஆன்மாவில் உள்ள வேதம், பல்வேறு உயிரினங்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்கிறது. ஓர் உயிரினம் இந்த ஒற்றுமையை உணரும்போது, அது பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஒரு படைப்பு நீடிக்க வேண்டிய காலம், அல்லது அழிய வேண்டிய காலமே கல்பம் என்றழைக்கப்படுகிறது. அத்தகைய கோடிக்கணக்கான கல்பங்களில் உயிரினங்கள் நீடித்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட படைப்பானது, (பின்வரும் வழியில்) பல ஆயிரம் தடாகங்களாகக் அளவிடப்படுகிறது.(30)
ஒரு யோஜனை அகலமும், ஒரு குரோசம் ஆழமும், ஐநூறு யோஜனைகள் நீளமும் கொண்ட ஒரு தடாகத்தைப் பார். அத்தகைய பல்லாயிரம் தடாகங்களைக் கற்பனை செய்து பார்.(31) அவற்றில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒற்றை முடியின் நுனியைக் கொண்டு ஒரே ஒருமுறை மட்டும் இறைத்து, அந்தத் தடாகங்களின் நீரை வற்றச் செய்ய முனைந்து பார். அந்தச் செயல்பாட்டில் அந்தத் தடாகங்களை வற்றச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படுமோ, அத்தனை நாட்கள் ஒரு படைப்பின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான காலமாகும்.(32) (அனைத்துப் பொருட்களின்) உயர்ந்த சாட்சியமானது {பிரமாணமானது}, கருப்பு, பழுப்பு {தூம்ரம்}, {நடுத்தரமான} நீலம், {மிகவும் ஸஹிக்கக்கூடிய} சிவப்பு, {சுகமான} மஞ்சள் மற்றும் {மிகச் சுகமான} வெள்ளை என ஆறு நிறங்களை {வர்ணங்களை} உயிரினங்கள் கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இந்த நிறங்கள் ரஜஸ், தமஸ் மற்றும் சத்வம் என்ற முக்குணங்களின் பல்வேறு அளவுகளிலான கலவையில் இருந்து கிடைக்கின்றன. எங்கே தமஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயும், ரஜஸ் அளவோடும் இருக்கிறதோ அங்கே கருப்பு என்றழைக்கப்படும் நிறமே விளைகிறது. முன்பு போலவே, தமஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொல்லப்பட்டதற்கு முரணாகவும் இருந்தால், பழுப்பு என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது, நீலம் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொன்னதற்கு முரண்பட்டுமிருந்தால், சிவப்பு என்றழைக்கப்படும் இடைநிலை நிறம் விளைகிறது. இந்த நிறம் (முன் சொன்ன நிறத்தை விட) ஏற்புடையதாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸ் அளவுக்குக் கீழேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது மஞ்சள் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது மகிழ்ச்சியை உண்டாக்கும் நிறமாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸும், தமஸும் மேற்சொன நிலைக்கு முரண்பட்டதாகவும் இருந்தால், வெள்ளை என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது பேரின்பத்தை உண்டாக்குகிறது[7].(33)வெண்மையே முதன்மையான நிறமாகும். விருப்பு, வெறுப்பில் இருந்து விடுபட்டிருக்கும் விளைவால் அது பாவமற்றதாக இருக்கிறது. அது துன்பமற்றதாகவும், பிரவிருத்தி தொடர்புடைய கடுமையான உழைப்பில் இருந்து விடுபட்டதாகவும் இருக்கிறது. எனவே, ஓ! தானவர்களின் இளவரசே, வெண்மையே வெற்றிக்கு (அல்லது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. ஓ! தைத்தியா, கருவறைமூலமாகப் பல்லாயிரம் பிறவிகளெடுத்த ஜீவன் வெற்றியை அடைகிறது.(34) மங்கல சாத்திரக் கோட்பாடுகள் பலவற்றைப் படித்த பிறகு தெய்வீக இந்திரனால் அறிவிக்கப்பட்டதும், ஆன்ம அறிவைத் தன் சாரமாகக் கொண்டதும், வெற்றியும் ஒரே முடிவுகளைக் கொண்டவையே. உயிரினங்கள் அடையும் கதியானது, அவற்றின் நிறத்தைச் சார்ந்திருக்கிறது, ஓ தைத்தியா, நிறமானது, நேரும் காலத்தின் தன்மையைச் சார்ந்திருக்கிறது.(35) ஓ தைத்தியா, ஜீவன் கடக்க வேண்டிய இருப்பின் நிலைகள் {கதிகள்} அளவற்றவையல்ல. அவை பதினான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் கொண்டவையாகும். அவற்றின் விளைவால் ஜீவனானது, வழக்குக்கேற்றபடி உயரவோ, நிலைக்கவோ, வீழவோ செய்கிறது[8].(36) கரிய நிறம் கொண்ட ஒரு ஜீவன், நரகத்திற்கு வழிவகுக்கவும், நரகத்திலேயே அழுகிப் போகவும் செய்யும் செயல்களுக்கு அடிமையாக இருப்பதால், அதனால் அடையப்படும் கதி மிக இழிந்ததாகும். அந்த ஜீவனுடைய தீமையின் விளைவால், அது பல்லாயிரம் கல்பங்களின் அளவுக்கு (அத்தகைய வடிவில்) தொடர வேண்டியிருக்கும்.(37) அந்நிலையிலே பல லட்சம் வருடங்கள் கடந்ததும் அந்த ஜீவன் (இடைநிலை நிலை பிறவியில்) பழுப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. அந்நிலையிலேயே அது (நீண்ட பல வருடங்கள்) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. இறுதியாக, அதன் பாவங்கள் தீர்ந்ததும், பற்றுகள் அனைத்தையும் கைவிடம் அதன் மனம் துறவை வளர்க்கிறது.(38)ஜீவன், சத்வ குணத்தைப் பெறும்போது, அது தன் புத்தியின் துணியின் மூலம் தமஸோடு தொடர்புடைய அனைத்தையும் விலக்கி (தனக்கான நன்மையை அடைய) முயற்சிக்கிறது. இதன் விளைவாக அந்த ஜீவன் சிவப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. எனினும் சத்வ குணத்தை அடைவது சாத்தியப்படவில்லையெனில், அந்த ஜீவன், நீலம் என்றழைக்கப்படும் நிறத்தை அடைந்து, மறுபிறவிகளில் சுழல வேண்டிய மனிதர்களின் உலகில் பிறக்கிறது.(39) (மனிதன் என்ற) அந்தக் கதியை அடைந்து, தன் செயல்களால் பிறந்த பற்றுகளின் மூலம் ஒரு படைப்பின் காலத்திற்குப் பீடிக்கப்பட்ட அந்த ஜீவன், மஞ்சள் என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது (அல்லது தேவத் தன்மையை அடைகிறது). நூறு படைப்புக் காலங்களுக்கு அந்நிலையில் நீடிக்கும் அந்த ஜீவன் (மீண்டும் மனிதத் தன்மையை அடைவதற்காக) அந்நிறத்தை விடுகிறது.(40) மஞ்சள் நிறத்தை அடைந்த ஜீவன், ஆயிரக்கணக்கான கல்பங்களுக்கு அந்நிலையிலேயே நீடித்து, ஒரு தேவனாக இருக்கிறது. எனினும் (அப்போதும் கூட), கடந்த கல்பங்களில் தான் செய்த செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்து, பத்தாயிரத்து ஒன்பது வழிகளில் திரிந்து விடுதலையை {முக்தி} அடையாமல், நரகத்தையே அடைகிறது. சொர்க்கம் அல்லது தேவத் தன்மையால் அது, (செயல்கள் எனும்) நரகத்தில் இருந்து விடுபடுகிறது என்பதை அறிவாயாக. அதே வகையில், அந்த ஜீவன் (பிற நிறங்களோடு தொடர்பு கொண்டு) பிற பிறவிகளில் இருந்து விடுபடுகிறது.(41,42) ஜீவன் பல நீண்ட கல்பங்கள் தேவர்களின் உலகில் திளைக்கிறது. அங்கிருந்து விழும் அந்த ஜீவன் மீண்டும் மனிதத் தன்மையை அடைகிறது. அதன் பிறகு, நூற்றியெட்டுக் கல்பங்களுக்கு அந்நிலையிலேயே அது நீடிக்கிறது. பிறகு அந்த ஜீவன் மீண்டும் தேவ நிலையை அடைகிறது. (இரண்டாம் முறையாக) மனித நிலையில் இருக்கும்போது, அந்த ஜீவன் (கலியின் வடிவிலான) காலனிடம் (தன் தீய செயல்களின் மூலம்) விழுந்தால், அது கரிய நிறத்திலேயே மூழ்கி, இருப்பின் அனைத்து நிலைகளிலும் மிகத் தாழ்ந்த இழிந்த நிலையை அடைகிறது. இனி, அந்த ஜீவன் எவ்வாறு விடுதலையை {முக்தியை} என்பதை உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)
விடுதலையை விரும்பும் ஜீவன், சத்வ குணத்தைப் பெருந்தொகையாகக் கொண்ட எழுநூறு வகைச் செயல்களைச் சார்ந்து, படிப்படியாகச் சிவப்பு, மஞ்சகள் நிறங்களை அடைந்து, இறுதியாக வெள்ளை நிறத்தை அடைகிறது. அந்நிறத்தை அடைந்ததும் அந்த ஜீவன், இன்ப உலகங்கள் எட்டைத் தங்களுக்குக் கீழே கொண்ட துதிக்கத்தக்க பல்வேறு பகுதிகளை அடைந்து, விடுதலையேயான களங்கங்களற்ற, ஒளிவடிவத்தில் அங்கேயே நீடித்திருக்கிறது[9].(45) (ஏற்கனவே சொல்லப்பட்ட) எட்டும், ஆறாயிரமும் (உட்பிரிவுகளைக் கொண்டதும்), அந்த உயர்ந்த பிரகாசத்திற்கு ஒப்பானதும், (உண்மை நிலை, அல்லது எதனையும் சாராதிருக்கும் எந்த நிலையும் இல்லாமல்) மனத்தின் படைப்புகளாக மட்டுமே இருக்கின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒருவன் அடையத்தக்க உயர்ந்த பொருளானது, விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்த (துரியம் என்றழைக்கப்படும்) நிலையாக இருக்கிறது[10].(46) யோக பலம் கொண்டு வரும் இன்பநிலையைக்கைவிட இயலாத யோகியைப் பொறுத்தவரையில், அந்த ஜீவன் (அதே ஒரே உடலில்) மங்கல நிலையில் {ஜீவன் முக்தனாக} நூறு கல்பங்கள் வசித்திருந்து, அதன் பிறகு (மஹா, ஜன, தப, சத்ய லோகங்கள் என்றழைக்கப்படும்) நான்கு உலகங்களுக்குச் செல்கிறது. பற்றுகள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் கடந்தவனும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாலும் வெற்றியடையாமல் இருப்பவனும், ஆறாவது நிறத்தை அடைந்தவனுமான ஒருவனுக்கு இதுவே உயர்ந்த கதியாகும்.(47) (ஏற்கனவே சொல்லப்பட்டது போல உரிய திறனை அடைந்த பிறகு) யோகப் பயிற்சியில் இருந்து வீழ்ந்த யோகியானவன், தன் முற்பிறவி செயல்களின் எச்சம் தீராமல் நூறு கல்பங்கள் சொர்க்கத்தில் வசித்து, சத்வ குணத்தில் உள்ள முந்தைய மனோநிலையின் விளைவால் (அறிவுப்புலன்கள் ஐந்து, மனம் மற்றும் புத்தி ஆகிய) ஏழைக் கொண்டு களங்கங்கள் அனைத்தையும் அழிக்கிறான். அந்தக் காலம் கடந்ததும், அத்தகைய மனிதன் மீண்டும் மனிதர்களின் உலகில் பிறந்து பெரும் மேன்மையை அடைகிறான்.(48)பிறகு மனிதர்களின் உலகில் இருந்து திரும்பும் அவன், மேல் நோக்கிய அளவில் உயர்ந்து உயர்ந்து செல்லும் இருப்பின் புதிய வடிவங்களை அடைவதற்காக மறைந்து போகிறான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவன் ஏழு முறை ஏழு உலகங்களையும் கடந்து சென்று, சமாதியின் விளைவால் எப்போதும் பலம் பெருகி, அதிலிருந்து விழித்தெழுகிறான்.(49) இறுதி விடுதலையில் {முக்தியில்} விருப்பமுள்ள யோகி, அந்த ஏழையும் யோக அறிவால் அடக்கி, பற்றுகளில் இருந்து விடுபட்டு உலக வாழ்வில் தொடர்ந்து வசித்து, அந்த ஏழையும் கைவிட்ட பிறகு, அழிவற்ற முடிவிலா நிலையை அடைகிறான். சிலர் அதை மஹாதேவனுக்கு உரிய உலகம் என்றும்; சிலர் விஷ்ணுவுக்குரியது என்றும்; சிலர் பிரம்மனுக்குரியது என்றும்; சிலர் சேஷனுக்குரியதென்றும்; சிலர் நரனுக்கு உரியதென்றும்; சிலர் பிரகாசமான சித்-க்கு உரியதென்றும்; சிலர் முழுவதும் பரவியிருப்பவனுக்குரிய உலகமென்றும் சொல்கிறார்கள்[11].(50) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, திரள் உடல், நுட்பவுடல் மற்றும் காரண உடல்களை ஞானத்தின் மூலம் முற்றாக எரிப்பதில் வென்ற மனிதர்கள் பிரம்மத்திற்குள் நுழைகின்றனர். பிரம்மத்தோடு ஒவ்வாதவையும், செயல்களைத் தங்கள் சாரமாகக் கொண்டவையுமான அவர்களது புலன்கள் அனைத்தும் கூட அதனுள்ளேயே கலக்கின்றன.(51) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, தேவ நிலையை அடைந்தவையும், அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீராதவையுமான ஜீவன்கள், அடுத்து வரும் கல்பத்தில் தங்கள் முற்பிறவியில் இருந்த நிலையை அடைகின்றன. அடுத்தடுத்த நேரும் கல்பம் தனக்கு முந்தைய கல்பத்தைப் போன்றே இருப்பதன் மூலம் இது நேர்கிறது.(52)அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீர்ந்த ஜீவன்கள், சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்து, நூறு கல்பங்களானாலும் ஒருவன் செய்த செயல்களை ஞானமில்லாமல் அழிக்க முடியாது என்பதால், அடுத்தக் கல்பத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்கிறது. ஒரே தன்மையிலான சக்திகளையும், ஒரே வடிவங்களையும் கொண்ட மேன்மையான உயிரினங்கள் அனைத்தும், அண்ட அழிவுக்குப் பிறகு நேரும் புதிய படைப்பில் தங்கள் தங்களுக்குரிய விதிகளின்படியே மீண்டு, அழிந்தது போன்றே படைப்பின் போது இருந்த அதே வகையிலேயே உயரவும், தாழவும் செய்கின்றன.(53) மேலும், பிரம்மத்தை அறிந்த மனிதனைப் பொறுத்தவரையில், முந்தைய கல்பங்களில் செய்த செயல்களின் எச்சங்கள் தீராமல், அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்யும்வரை, அனைத்து உயிரினங்களும், களங்கமற்ற அறிவியல்கள் இரண்டும் அவனது உடலிலேயே வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அவனது சித்தம் யோகத்தால் தூய்மையடையும்போதும், சம்யாமத்தை அவன் பயிலும்போதும், புலப்படத்தக்க இந்த அண்டமானது அவனுக்கு ஐவகைப் புலன்களாக மட்டுமே தெரிகிறது[12].(54) தூய்மையான மனத்துடன் விசாரிக்கும் ஜீவன் உயர்ந்த களங்கமற்ற கதியை அடைகிறது. அதன் பிறகு அஃது அழிவற்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து அடைவதற்கரிதான நித்திய பிரம்மத்தை அடைகிறது.(55) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, இவ்வாறே நான் நாராயணனின் மேன்மையைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {ஸனத்குமாரர்}.(56)
விருத்திரன், “உமது இந்த வார்த்தைகளை முற்றிலும் உண்மையாகக் காண்கிறேன். உண்மையில், இஃது இவ்வாறு இருக்கும்போது, நான் கவலைப்பட (காரணம்) ஏதும் இல்லை. ஓ! பெரும் மனோ சக்திகளைக் கொண்டவரே, உமது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, கவலை மற்றும் அனைத்து வகைப் பாவத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்.(57) ஓ! சிறப்புமிக்க முனிவரே, ஓ! புனிதமானவரே, மிகப்பிரகாசமானவனும், முடிவிலியுமான விஷ்ணுவின் பெரும் சக்தி வாய்ந்த இந்தக் காலச்சக்கரம் இயங்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அந்த நித்தியமான இடத்தில் இருந்து அனைத்து வகைப் படைப்பும் எழுகிறது. அந்த விஷ்ணுவே பரமாத்மா ஆவான். அவனே அனைத்திலும் முதன்மையானவன் ஆவான். அவனிலேயே இந்த மொத்த அண்டமும் ஓய்ந்திருக்கிறது {நிலைத்திருக்கிறது}” என்றான் {விருத்திரன்}”.(58)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! குந்தியின் மகனே, இந்த வார்த்தைகளைச் சொன்னதும், விருத்திரன் தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டு, தன் ஆன்மாவை (யோகத்தில் பரமாத்மாவுடன்) ஒன்றிணைத்து, அந்த உயர்ந்த இடத்தை அடைந்தான்” என்றார்.(59)
யுதிஷ்டிரன், “ஓ! பாட்டா, பழங்காலத்தில் விருத்திரனிடம் ஸனத்குமாரர் சொன்ன அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கத் தலைவன் இந்த ஜனார்த்தனனா (கிருஷ்ணனா) என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(60)
பீஷ்மர், “(பலம் முதலிய) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த தெய்வம் வேரில் இருக்கிறது {அனைத்திற்கும் வேராக இருக்கிறது}. அங்கிருந்தே பரமாத்மா இருப்பில் உள்ள பல்வேறு பொருட்களைத் தன் சக்தியின் மூலம் படைக்கிறான்.(61) அழிவில்லாதவனான இந்தக் கேசவன், அவனது எட்டாம் பகுதி ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட இந்தக் கேசவனே (அவனது சக்தியில்) எட்டில் ஒரு பகுதியைக் கொண்டு மூவுலகங்களையும் படைப்பவனாவான்.(62) வேரில் கிடப்பவனுக்கு அடுத்து இருப்பவனும், (இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒப்பிடுகையில்) நித்தியமானவனுமான இந்தக் கேசவன், ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் மாற்றமடைகிறான். எனினும், உயர்ந்த வலிமை மற்றும் பலத்துடன் வேரில் கிடப்பவனோ, அண்டம் அழியும்போது (அனைத்துப் பொருட்களுடைய ஆற்றல்வித்தின் வடிவில்) நீரில் கிடக்கிறான். நித்தியமான உலகங்கள் அனைத்தின் ஊடாகச் செல்லும் தூய ஆன்மாவைப் படைப்பவன் இந்தக் கேசவனே ஆவான்.(63) முடிவற்றவனும், நித்தியமானவனுமான அவன், (தன்னில் உள்ள வெளிப்பாட்டுடன்) வெளியனைத்தையும் {ஆகாயமனைத்தையும்} நிறைத்து, (அண்டத்தில் உள்ள ஒவ்வொரு வடிவத்திலும்) அண்டத்தில் திரிகிறான். குணங்களை உடைமையாக்குவதைக் குறிப்பது போன்ற அனைத்து வகை வரம்புகளில் இருந்தும் விடுபட்ட அவன், அவித்யையால் பீடிக்கப்படுபவனாகவும், நனவுநிலையால் விழிப்பவனாகவும் தன்னை அமைத்துக் கொள்கிறான். பரமாத்மாவான கேசவனே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான். இந்த அற்பத அண்டம் முழுமையும் அவனிலேயே நிறுவப்பட்டிருக்கிறது” என்றார் {பீஷ்மர்}.(64)
யுதிஷ்டிரன், “ஓ! ஞானத்தின் உயர்ந்த பொருளை அறிந்தவரே, விருத்திரன் தனக்காகக் காத்திருந்த சிறந்த கதியை முன்பே கண்டுவிட்டான் என்று நான் நினைக்கிறேன். ஓ! பாட்டா, அதன் காரணமாகவே அவன் (வரப் போகும் மரணத்தை எண்ணி) துயரப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தான்.(65) ஓ! பாவமற்றவரே, {ஆன்மாவில்} வெள்ளை நிறம் கொண்டவனும், தூய்மையான, அல்லது களங்கமற்ற குலத்தில் பிறந்தவனும், சாத்யன் என்கிற நிலையை அடைந்தவனுமான ஒருவன், (மறுபிறவியின் மூலம் இந்த உலகத்திற்குத்) திரும்பி வருவதில்லை. ஓ! பாட்டா, அத்தகைய மனிதன், நரகம் மற்றும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்கும் நிலை ஆகிய இரண்டில் இருந்தும் விடுபடுகிறான்.(66) எனினும், ஓ! மன்னா, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை அடைந்தவர்களும் கூட, சில வேளைகளில் தமஸ் குணத்தில் மூழ்கி இடைநிலை உயிரினங்களின் வகையில் {விலங்குகளாகவும், பறவைகளாகவும்} வீழ்வதும் காணப்படுகிறது.(67) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் பெரிதும் பீடிக்கப்பட்டுள்ளோம். துன்பம், அல்லது அலட்சியம், அல்லது இன்பம் ஆகியவற்றை உண்டாக்கும் பொருட்களில் பற்றுக் கொண்டிருக்கிறோம். ஐயோ, நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன? அது நீலமா? அல்லது நிறங்கள் அனைத்திலும் இழிந்த கருப்பு நிறமா?” என்று கேட்டான்.(68)
பீஷ்மர் தொடர்ந்தார், “பாண்டவர்களே, நீங்கள் களங்கமற்ற குலத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் கடும் நோன்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். தேவர்களின் உலகில் இன்பத்தில் திளைத்திருந்து பிறகு நீங்கள் மீண்டும் மனிதர்களின் உலகத்திற்குத் திரும்பி வருவீர்கள்.(69) இந்தப் படைப்பு நீடிக்கும்வரை மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்து, அடுத்தப் புதிய படைப்பில் நீங்கள் தேவர்களுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து வகை இன்பநிலைகளையும் அனுபவித்து, இறுதியாகச் சித்தர்களாகக் கணக்கிடப்படுவீர்கள். ஒருபோதும் அச்சம் உனதாக வேண்டாம். உற்சாகமாக இருப்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(70)
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply