க்ஷத்ரபந்துவும், சண்டாளனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 101-பிராமணர்களின் பொருளைக் கவர்வதனால் உண்டாகும் பாவத்தைக் குறித்து க்ஷத்ரபந்துவுக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களின் தலைவரே, பிராமணர்களுக்குச் சொந்தமான பொருட்களைக் களவாடவோ, அபகரிக்கவோ செய்யும் மூடர்களும், அற்பர்களும், பாவம் நிறைந்தவர்களுமான மானிடர்கள் எங்கே செல்கிறார்கள்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக ஒரு சண்டாளனுக்கும், ஓர் இழிந்த க்ஷத்திரியனுக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் குறிப்பிடப்படுகிறது[1].(2)அரச வகையைச் சார்ந்த அம்மனிதன் {க்ஷத்ரபந்து}, “ஓ! சண்டாளா, நீ வயதில் முதிர்ந்தவனாகத் தெரிந்தாலும், நடத்தையில் சிறுவனாகவே தெரிகிறாய். நாய்கள் மற்றும் கழுதைகளால் எழுப்பப்பட்ட புழுதியால் உன் உடல் பூசப்பட்டிருந்தாலும், அப்புழுதியைக் கவனத்தில் கொள்ளாமல், உன் உடலில் விழுந்த நோய்தடுக்கும் பாலின் சிறு துளிகளைக் குறித்துக் கவலைப் படுகிறாய்.(3) சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இத்தகைய செயல்கள் அறவோரால் நிந்திக்கப்படுக்கின்றன என்பது வெளிப்படை. உண்மையில், உன் உடலில் இருந்து பால்துளிகளை நீ ஏன் கழுவ முயல்கிறாய்?” என்று கேட்டான்[2].(4)சண்டாளன் {க்ஷத்ரபந்துவிடம்}, “ஓ! மன்னா, முன்பொரு காலத்தில் ஒரு பிராமணருடைய குறிப்பிட்ட பசுக்கள் களவாடப்பட்டன. அவ்வாறு அவை அபகரிக்கப்படும் போது, அவற்றின் மடியில் இருந்து சிந்திய பால் சாலையோரத்தில் வளர்ந்த சில சோமக் கொடிகளில் விழுந்தது. பால்படிந்த அந்தச் செடிகளின் சாற்றைக் குடித்த பிராமணர்களும்,(5) அந்தச் சோமம் பருகப்பட்ட வேள்வியைச் செய்த மன்னனும் நரகில் மூழ்கினார்கள். உண்மையில், ஒரு பிராமணனுக்கு உரிய ஏதோவொன்றை அபகரித்தால் மன்னனும், அவனுக்குத் துணைபுரிந்த பிராமணர்கள் அனைவரும் நரகிற்குச் செல்ல வேண்டும்.(6) பிராமணனின் பசுக்களைக் களவு செய்த அரண்மனையில் உள்ள பால், நெய், தயிர் ஆகியவற்றைப் பருகிய மனிதர்க்ள அனைவரும், நரகத்தில் வீழ்வார்கள்.(7) களவு செய்யப்பட்ட பசுக்களும், தாங்கள் பெருங்கவனத்துடன் கவனிக்கப்பட்டாலும் தங்கள் உடல்களை அசைத்து, தங்களைக் களவு செய்தோரின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளையும், மன்னன் மற்றும் ராணியையும் தங்கள் பாலால் கொன்றுவிடுகின்றன.(8) ஓ! மன்னா, என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்வாறு களவு செய்யப்பட்ட பசுக்களை வைத்திருந்த இடத்தில் பிரம்மச்சரிய நோன்பை நோன்று வாழ்ந்து வந்தேன். நான் இரந்து பெற்ற உணவில் அந்தப் பசுக்களின் பால் தெளிக்கப்பட்டது.(9) ஓ! அரச வகையைச் சார்ந்தவனே, அந்த உணவை உண்டதால் நான் இப்பிறவியில் சண்டாளனானேன். ஒரு பிராமணனின் பசுக்களைக் களவு செய்த மன்னனும் புகழ்க்கேட்டுக்குரிய கதியையே அடைந்தான்.(10)
எனவே, எவனும் பிராமணனுக்குச் சொந்தமான எதையும் களவிடவோ, அபகரிக்கவோ கூடாது. ஒரு பிராமணனுக்குச் சொந்தமான பால் தெளிக்கப்பட்ட உணவை உண்டதன் விளைவால் நான் என்ன நிலையை அடைந்திருக்கிறேன் என்பதைக் காண்பாயாக.(11) இதன் காரணமாகவே ஞானம் கொண்ட மனிதனால் சோமக் கொடிகள் {சோமலதை} விற்கப்படக்கூடாது. சோமச்செடியை {சோமலதை} விற்பவனை ஞானிகள் நிந்திக்கிறார்கள்.(12) உண்மையில், ஓ! மகனே, சோமத்தை விற்பனை செய்பவன், வாங்குபவன் ஆகிய இருவரும் இவ்வுலகத்தில் இருந்து அகன்று யமலோகம் செல்லும்போது, ரௌரவன் என்றழைக்கப்படும் நரகில் மூழ்குகிறார்கள்.(13) வேதஞானம் கொண்ட மனிதன், சோமத்தை முறையாக விற்றால் தன் அடுத்தப் பிறவியில் வட்டிக்கு விடுபவனாகப் பிறந்து விரைவில் அழிவைச் சந்திக்கிறான்.(14) முன்னூறு முறை நரகில் மூழ்கும் அவன், மனிதக் கழிவை உண்டு வாழும் ஒரு விலங்காகிறான். தாழ்ந்த, இழிந்த மனிதருக்குத் தொண்டாற்றுபவன், செருக்குடையவன், நண்பனின் மனைவியைக் கற்பழிப்பவன் ஆகியோர்(15) ஒரே தராசில் எதிரெதிராக எடை பார்க்கப்பட்டால், அது கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்த செருக்கே கனமானதாக இருப்பதைக் காட்டும். பாவம் நிறைந்ததும், ஏற்பில்லாத நிறமும் கொண்டதும், மெலிந்திருப்பதுமான இந்த நாயைப் பார்ப்பாயாக.(16) (இது முந்தைய வாழ்வில் மனிதனாக இருந்தது). செருக்கின் மூலமே உயிரினங்கள் இத்தகைய பரிதாபகரமான கதியை அடைகின்றன. என்னைப் பொறுத்தவரையில், எனது முற்பிறவி ஒன்றில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து,(17) அறிவின் அனைத்துக் கிளைகளிலும், அறிவியல்கள் அனைத்திலும் தேர்ச்சியடைந்தவனாக இருந்தேன். இக்குற்றங்களின் ஆழத்தை அறிந்தவனாக இருந்தாலும், செருக்கின் வசப்பட்ட நான்,(18) குருட்டுத் தன்மையை அடைந்து, விலங்குகளின் முதுகெலும்பைப் பற்றியிருக்கும் இறைச்சியை உண்டேன். அத்தகைய நடத்தை மற்றும் அத்தகைய உணவின் விளைவால்,(19) நான் இந்நிலையை அடைந்தேன். காலம் கொண்டு வரும் நேர்மாறு நிலைகளைக் காண்பாயாக. ஆடையின் ஒரு முனையில் நெருப்புப் பற்றப்பட்ட மனிதனைப் போலவோ, வண்டுகளால் தொடரப்படுபவனைப் போலவோ,(20) புழுதி பூசப்பட்டு அச்சத்தால் நான் ஓடுவதைப் பார்.
இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள், வேத கல்வியின் மூலமும், ஞானிகளால் அறிவிக்கப்பட்ட பிற வகைக் கொடைகளின் மூலமும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுகிறார்கள். ஓ! அரச வகையைச் சார்ந்தவனே {க்ஷத்ரபந்துவே}, பாவம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு பிராமணன், அனைத்து வகைப் பற்றுகளையும் துறந்து, காட்டு வாழ்வுமுறையை {வானப்பிரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றினால் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுவான். ஓ க்ஷத்திரியர்களின் தலைவா, நான் இப்பிறவியில் பாவம் நிறைந்த வகையில் பிறந்திருக்கிறேன்.(21-23) அனைத்துப் பாவங்களில் இருந்தும் என்னைத் தூய்மையாக்கிக் கொள்வதில் எவ்வாறு வெல்லப்போகிறேன் என்பதை நான் தெளிவாகக் காணத் தவறுகிறேன். முற்பிறவியில் செய்த ஏதோவொரு தகுதிமிக்கச் செயலின் விளைவால், முற்பிறவிகளின் நினைவை நான் இழக்காமல் இருக்கிறேன்.(24) ஓ! மன்னா, உன் கருணைக்கே நான் என்னை விடுகிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். என் ஐயத்தை நீ தீர்ப்பாயாக. எந்த மங்கல ஒழுக்க வழிமுறையின் மூலம் நான் என் விடுதலையை {முக்தியை} அடைய விரும்ப வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, எந்த வழிமுறைகளின் மூலம் நான் சண்டாளன் என்ற என் நிலையைக் கைவிடுவதில் வெல்வேன்?” என்று கேட்டான்.(25)
அதற்கு அந்த அரச வகையினன், “ஓ! சண்டாளா, நீ விடுதலையை {முக்தியை} அடையக்கூடிய வழிமுறையை அறிவாயாக. ஒரு பிராமணனுக்காக உன் உயிர்மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விரும்பத்தக்க கதியை அடையலாம்.(26) ஒரு பிராமணனின் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் ஆகுதியாக, விலங்குகள் மற்றும் பறவைகளின் இரையாக உன் உடலை வீசுவதன் மூலம், உண்மையில் இவ்வாறு உயிர் மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விடுதலையை {முக்தியை} அடையலாம். வேறு எந்த வழிமுறையின் மூலமும் உன்னால் அதை அடைவதில் வெல்லமுடியாது” என்றான்”.(27)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகைவர்களைச் சுடுபவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சண்டாளன், ஒரு பிராமணனின் செல்வத்தைக் காக்கும் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் தன் உயிர் மூச்சை ஆகுதியாக ஊற்றியதன் விளைவாக மிக விரும்பத்தக்க கதியை அடைந்தான்.(28) எனவே, ஓ! மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ நித்திய இன்பத்தையே கதியா அடைய விரும்பினால் பிராமணர்களின் உடைமைகளை நீ எப்போதும் பாதுகாக்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(29)
புண்யலோகங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 102-புண்ணிய உலகங்கள் அனைத்தையும் குறித்து கௌதமருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அறவோர் அனைவரும் மரணத்திற்குப் பிறகு ஒரே உலகத்தையே அடைவதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதரே, அவர்களுக்கிடையிலான நிலையில் உண்மையில் வேறு இருக்கிறதா?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “ஓ! பிருதையின் மகனே, பல்வேறு செயல்களின் மூலம் மனிதர்கள் பல்வேறு உலகங்களை அடைகின்றனர். அறவொழுக்கம் கொண்டவர்கள் இன்பலோகங்களை அடைகின்றனர், அதே வேளையில் பாவம் நிறைந்தவர்கள், துன்பம் நிறைந்த உலகங்களை அடைகின்றனர்.(2) ஓ! மகனே, இதுதொடர்பாகத் தவசியான கௌதமருக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) கௌதமர் என்ற பெயரையுடையவரும், மென்மையானவனும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவரும், புலன்கள் அனைத்தையும் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவருமான குறிப்பிட்ட பிராமணர், தாயை இழந்து உற்சாகமற்ற நிலையில் இருந்த ஒரு யானைக்குட்டியைக் கண்டார்.(4) கருணை நிறைந்தவரும், நோன்புகள் நோற்பதில் உறுதியானவருமான அந்தத் தவசி அந்த யானைக் குட்டியை வளர்த்தார். நீண்ட காலம் கழித்து அந்தச் சிறு விலங்கு பெரிய, வலிமைமிக்க யானையாக வளர்ந்தது.(5)
ஒருநாள், இந்திரன், மன்னன் திருதராஷ்டிரனின் வடிவை ஏற்றுக் கொண்டு, மலையைப் போன்று பெரிதாக இருந்ததும், மதநீர் பெருகி வழிந்ததுமான அந்த வலிமைமிக்க யானையை அபகரித்தான்.(6) இழுத்துச் செல்லப்படும் யானைக் கண்டவரும், கடும் நோன்புகள் நோற்பவருமான பெரும்பதவசி கௌதமர், மன்னன் திருதராஷ்டிரனிடம்,(7) “ஓ! நன்றிகெட்ட திருதராஷ்டிரா, என் யானைக் களவாடாதே. பெரும் துன்பத்துடன் நான் அஃதை என் மகனைப் போலவே வளர்த்து வந்தேன். அறவோருக்கிடையில் ஏழு சொற்கள் பரிமாறப்படுவதிலேயே நட்பு உதிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, ஒரு நண்பனுக்குத் தீங்கிழைக்கும் பாவம் உன்னை அண்டாது பார்த்துக் கொள்வாயாக.(8) ஓ! மன்னா, எனக்காக விறகும், நீரும் கொண்டு வருவதும், நான் வெளியே சென்றிருக்கும்போது ஆசிரமத்தைப் பாதுகாப்பதும், கற்றுக் கொடுப்பவருக்குக் கீழ்ப்படிவதும், அடக்கமானதும், ஆசானின் ஆணைகளைச் செய்வதில் கவனமுள்ளதும், மென்மையானதும், நன்கு பயிற்சி பெற்றதும், நன்றிநிறைந்ததும், எனக்கு மிகவும் அன்பானதுமான இந்த யானையைக் கொண்டு போகாதே. என்னுடைய எதிர்ப்பையும், கதறல்களையும் அலட்சியம் செய்து அதைக் கொண்டுபோகாதே” என்றார்.(9,10)
திருதராஷ்டிரன் {கௌதமரிடம்}, “நான் உமக்கு ஓராயிரம் பசுக்களையும், நூறு பணிப்பெண்களையும், ஐநூறு தங்க நாணயங்களையும் தருகிறேன். மேலும், ஓ! பெரும் முனிவரே, பல்வேறு வகைச் செல்வங்களையும் உமக்குத் தருகிறேன். யானைகளைக் கொண்டு பிராமணர்களுக்கு என்ன பயன் ஏற்படப்போகிறது?” என்று கேட்டான்.(11)
கௌதமர் {திருதராஷ்டிரனான இந்திரனிடம்}, “ஓ! மன்னா, உன் பசுக்கள், பணிப்பெண்கள், தங்கநாணயங்கள், பல்வேறு ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகைச் செல்வங்களையும் நீயே வைத்துக் கொள்வாயாக. ஓ! ஏகாதிபதி, செல்வத்தைக் கொண்டு பிராமணர்களுக்கு ஆவதென்ன?” என்று கேட்டார்.(12)
திருதராஷ்டிரன், “யானைகளைக் கொண்டு பிராமணர்களுக்குப் பயனேதுமில்லை. ஓ! கல்விமானான பிராமணரே உண்மையில் யானைகள் அரச வகையினருக்கானவையே. யானைகளில் முதன்மையான இந்த விலங்கை என் வாகனப் பயன்பாட்டுக்காகக் கொண்டு செல்வதால் நான் எந்தப் பாவத்தையும் இழைத்ததாகக் கருதமுடியாது. ஓ! கௌதமரே, நீர் இவ்வாறு என்னைத் தடுக்காதீர்” என்றான்.(13)
கௌதமர், “ஓ! சிறப்புமிக்க மன்னா, அறவோர் இன்பமாகவும், பாவிகள் துன்பத்துடனும் வாழும் யமலோகத்திற்குச் சென்றாவது நான் என் யானையை உன்னிடம் இருந்து பெறுவேன்” என்றார்.(14)
திருதராஷ்டிரன், “(அறச்) செயலேதும் செய்யாதவர்கள், நம்பிக்கையற்றவர்கள், நாத்திகர்கள், பாவம் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்கள், எப்போதும் புலன்களை நிறைவடையச் செய்பவர்கள் ஆகியோர் மட்டுமே யமலோகம் சென்று துன்பத்தை அனுபவிப்பார்கள். திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான், உயர்ந்த உலகத்திற்கே செல்வான்” என்றான்.(15)
கௌதமர், “யமலோகத்தில் மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அங்கே பொய்யேதும் சொல்ல முடியாது. அவ்விடத்தில் உண்மை மட்டுமே நிலைத்திருக்கும். அங்கே வலியோரை பலவீனர் தண்டிக்கிறார்கள். அங்கே {ஸம்யமினி எனும் அந்த யமபட்டணத்திற்குச்} சென்று நான் உன்னிடம் இருந்து இந்த யானையைப் பலவந்தமாகப் பெறுவேன்” என்றார்.(16)
திருதராஷ்டிரன், “ஓ! பெருந்தவசியே செருக்கால் போதையுண்டிருக்கும் மனிதர்களும், தமக்கை, தந்தை, தாய் ஆகியோரிடம், பகைவரிடம் நடந்து கொள்வது போல நடப்பவர்களும்தான் அத்தகைய உலகத்திற்குச் செல்வார்கள். உண்மையில், நான் அங்கே செல்லப் போவதில்லை உயர்ந்த உலகத்திற்கே செல்வேன்” என்றான்.(17)
கௌதமர், “அனைத்து வகை இன்பங்களுக்கும், வசதிகளுக்கும் தகுந்த உயர்ந்த அருளைக் கொண்ட மனிதர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் மன்னன் வைஸ்வரணனுடைய {குபேரனுடைய} உலகத்தை அடைகிறார்கள். (அங்கே வசிப்பவர்களுக்குத் தங்கள் ஆடல் பாடல்களால் மகிழ்வூட்டிக் கொண்டு) கந்தர்வர்களும், யக்ஷர்களும், அப்சரஸ்களும் அங்கே வாழ்கிறார்கள். ஓ! மன்னா, அங்கேயும் சென்று என் யானையைத் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(18)
திருதராஷ்டிரன், “விருந்தினருக்கான விருந்தோம்பலை நோன்பாகக் கருதுவோரும், (வேறு நோக்கங்களைக் கொண்ட) நல்ல நோன்புகளை நோற்போரும், பிராமணர்களுக்கு உறைவிடமளிப்பவர்களும், தங்களைச் சார்ந்திருப்போர் அனைவருக்கும் பகிர்ந்தளித்தபிறகு எஞ்சியிருப்பதை உண்பவர்களும், குபேரனின் மந்தாகினி என்றழைக்கப்படும் உலகத்தை அலங்கரிப்பார்கள். (எனக்கு) ஓர் உயர்ந்த உலகம் ஒதுக்கப்பட்டிருப்பதால் நான் அங்கே செல்ல மாட்டேன்” என்றான்.(19)
கௌதமர், “கின்னரர்களின் இனிய குரலை எதிரொலிப்பதும், பரந்து விரிந்த கிளைகளைக் கொண்ட {ஸுதர்சனை என்றழைக்கப்படும்} அழகிய ஜம்பு {நாவல்} மரங்களால் அருளப்பட்டதும், மலர்கள் நிறைந்ததுமான மேருவின் {மேரு மலையில்} சிகரத்திலுள்ள இனிமைநிறைந்த காடுகளுக்கு நீ சென்றால், நான் அங்கேயும் வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன் ” என்றார்.(20)
திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, மென்மையான இயல்புகளைக் கொண்டவர்களும், வாய்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், சாத்திரப் பெருங்கல்வி கற்றவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களும், வரலாறுகள் அனைத்துடன் கூடிய புராணங்களைப் படிப்பவர்களும், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், பிராமணர்களுக்குத் தேனைக் கொடையளிப்பவர்களுமான பிராமணர்களே அத்தகை உலகங்களுக்குச் செல்வார்கள். நான் உயர்ந்த உலகத்திற்கே செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்ல மாட்டான். வேறு இன்பலோகம் எதையும் நீர் நன்கறிந்திருந்தால் அது குறித்து எனக்குச் சொல்வீராக, {இவ்வளவு வேகமாகச் செல்லும்} நான் அங்கேயும் செல்லலாம்” என்றான்.(21,22)
கௌதமர், “நாரதருக்குரியதும், அவரால் மிகவும் விரும்பப்படுவதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும், கின்னர இளவரசனின் மெல்லிசைப் பாடல்களின் எதிரொலியுடன் கூடியதும், கந்தர்வர்களுக்கும் அப்சரஸ்களுக்கும் நித்திய வசிப்பிடமாக இருப்பதுமான காட்டுக்கு நீ சென்றால், நான் அங்கேயும் உன்னைப் பின்தொடர்ந்து வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்குக் கட்டாயப்படுத்துவேன் ” என்றார்.(23)
திருதராஷ்டிரன், “ஒருபோதும் பிச்சை கேட்காதவர்களும், இசையையும், நடனத்தையும் விளைவிப்பவர்களும், இன்பமாகத் திரிபவர்களுமாக இருப்பவர்கள் அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். ஓ! பெரும் முனிவரே, நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில், திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(24)
கௌதமர், “ஓ! மன்னா, எங்கே உத்தரக் குருக்கள் அழகுடன் சுடர்விட்ட படியே தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்துகிறார்களோ, எங்கே நெருப்பில் பிறந்தவர்களும், நீரில் பிறந்தவர்களும், மலைகளில் பிறந்தவர்களும் மகிழ்ச்சியாக வசிக்கிறார்களோ,(25) எங்கே அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையைச் சக்ரன் பொழிகிறானோ, எங்கே பெண்கள் போக்குவரத்து மற்றும் ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தும் எவ்வகை விதிகளாலும் கட்டுப்படுத்தப்படாமல் முற்றான சுதந்தரத்துடன் வாழ்கிறார்களோ, எங்கே இரு பாலினத்தவர்களிடமும் பொறாமையுணர்வு இல்லையோ அங்கே நீ சென்றால், நான் அங்கேயும் வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(26)
திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, இன்பநுகர் பொருட்கள் அனைத்திலும் உள்ள ஆசைகளில் இருந்து விடுபட்டவர்களும், இறைச்சியைத் தவிர்த்தவர்களும், தண்டக்கோலை ஒருபோதும் எடுக்காதவர்களும் {தண்டிப்பதைக் கைவிட்டவர்களும்}, அசைவன மற்றும் அசையாதனவற்றுக்கும் ஒருபோதும் துன்பம் செய்யாதவர்களும், உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாவாகத் தம்மை நினைப்பவர்களும்,(27) ஓ! பெரும் முனிவரே, எவருக்கும் ஆசி கூறுவதன் மூலம் பிறரை ஒருபோதும் அழைக்காதவர்களும், ஆணவம் என்ற கருத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர்களும், அனைத்து வகைப் பற்றுகளையும் கைவிட்டவர்களும், ஈட்டல் இழப்புகளையும், இகழ்ச்சி புகழ்ச்சிகளையும் இணையாக நினைப்பவர்களுமான மனிதர்களால் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்ல முடியும். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(28)
கௌதமர், “இவற்றுக்கு அடுத்ததாக, சிறந்த நறுமணங்களால் மணங்கமழ்பவையும், அனைத்து வகை ஆசைகள் மற்றும் கவலையிகளில் இருந்து விடுபட்டவையும், அழகியவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. அவை உயர்ஆன்ம மன்னன் சோமனின் வசிப்பிடங்களாக இருக்கின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் நான் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(29)
திருதராஷ்டிரன், “எக்கொடையும் பெறாமல் எப்போதும் கொடையளிப்பவர்களும், பிறரிடம் இருந்து எத்தொண்டையும் ஒருபோதும் ஏற்காதவர்களும், தகுந்த மனிதருக்குக் கொடுக்க முடியாத எந்தப் பொருளையும் கொள்ளாதவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவர்களும், அனைவருக்கும் கருணை காட்டுபவர்களும்,(30) மன்னிக்கும் இயல்புகளைக் கொண்டவர்களும், பிறரைக் குறித்துத் தீங்கு பேசாதவர்களும், கருணை காப்புறை வீசி அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பவர்களும், எப்போதும் நடத்தையில் அறம்சார்ந்தவர்களுமான மனிதர்களால் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்ல முடியும். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(31)
கௌதமர், “இவற்றுக்கு அடுத்ததாக, ஆசை, இருள் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவையும், உயர் ஆன்ம சூரிய தேவனின் காலடியில் கிடப்பவையும், அழகில் சுடர்விடுபவையும், நித்திமானவையுமான வேறு உலகங்கள் இருக்கின்றன. நீங்க அங்கே சென்றால், அங்கேயும் நான் வந்து, இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(32)
திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, வேத கல்வியில் கவனமாக இருப்பவர்கள், ஆசான்களின் தொண்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தவங்கள் மற்றும் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள், வாய்மையில் உறுதியானவர்கள், கீழ்ப்படியாமை, அல்லது ஆசான்களிடம் பகை என்ற மணம் கொண்ட எதையும் ஒருபோதும் சொல்லாதவர்கள், எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள், பெரியோர்கள் மற்றும் ஆசான்களுக்குத் தொண்டு செய்ய எப்போதும் ஆயத்தமாக இருப்பவர்கள், (மனத்திலும், உடலிலும்) தூய்மையாக இருப்பவர்கள், ஆன்மத் தூய்மை கொண்டவர்கள், வாக்கை அடக்கியவர்கள், வாய்மையில் உறுதியாக இருப்பவர்கள், வேதங்களை நன்கறிந்தவர்கள் ஆகியோர் அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(33,34)
கௌதமர், “அதற்குமடுத்து, அழகில் சுடர்விடுபவையும், சிறந்த நறுமணங்களால் மணங்கமழ்பவையும், ஆசையில் இருந்து விடுபட்டவையும், கவலைகள் ஏதும் அற்றவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. அவை உயர் ஆன்ம மன்னன் வருணனின் வசிப்பிடமாக இருக்கின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து, இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(35)
திருதராஷ்டிரன், “சாதுர்மாஸ்யம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்றுத் தேவர்களை வழிபடுபவர்களும், நூற்றுப்பத்து வேள்விகளைச் செய்பவர்களும், வேதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடைய வகையில் மூன்று வருடங்கள் நாள்தோறும் அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும்,(36) அனைத்துக் கடமைகளின் சுமையைவிட்டு விலகாமல் சுமப்பவர்களும், அறவோரால் நடக்கப்பட்ட பாதையில் உறுதியாக நடப்பவர்களும், அற ஆன்மா கொண்டோரால் பின்பற்றபட்ட ஒழுக்க நடைமுறைகளை உறுதியாகப் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(37)
கௌதமர், “அவற்றுக்கும் மேல், ஆசை மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவையும், அடைதற்கரியவையும், அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படுபவையுமான இந்திரனின் உலகங்கள் இருக்கின்றன. ஓ! மன்னா, வலிமையும், சக்தியும் கொண்ட இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாவது எனக்கு இந்த யானையைத் தருமாறு உன்னைக் கட்டையாப்படுத்துவேன்” என்றார்.(38)
திருதராஷ்டிரன், “நூறு வருடங்கள் வாழ்பவர்களும், வீரம் நிறைந்தவர்களும், வேதங்கற்றவர்களும், பக்தியுடன் வேள்விகளைச் செய்பவர்களுமான மனிதர்களே சக்ரனின் உலகத்திற்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில், திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(39)
கௌதமர், “சொர்க்கங்களுக்கு மேலே, மேன்மையான இன்பத்தைக் கொண்டவையும், அனைத்து வகை மகிழ்ச்சியாலும் நிறைந்தவையும், கவலை இல்லாதவையுமான பிரஜாபதிகளின் உலகங்கள் இருக்கின்றன. எவரிடம் இருந்து படைப்பு உண்டானதோ அந்தப் பலமிக்கவர்களுக்குச் சொந்தமான அவை அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படுகின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(40)
திருதராஷ்டிரன், “ராஜசூய வேள்வியின் நிறைவில் நீராடியவர்களும், அற ஆன்மா கொண்டவர்களும், தங்கள் குடிமக்களை உரிய முறையில் பாதுகாத்தவர்களும், குதிரை வேள்வியின் நிறைவில் புனித நீரால் தங்கள் அங்கங்களைக் கழுவியவர்களுமான மன்னர்களே அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(41)
கௌதமர், “அவற்றுக்கு அடுத்து, இனிய நறுமணங்களால் மணங்கமழ்பவையும், ஆசையிலிருந்து விடுபட்டவையும், கவலைகள் அனைத்தையும் கடந்தவையும், அழகில் சுடர்விடுபவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. ஒடுக்குமுறைகளே ஒருபோதும் இல்லாதவையும், அடைவதற்கரியவையுமான அவை கோலோகங்களாகும் {கோ=பசு_க்களின் உலகம்}. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னை நான் வற்புறுத்துவேன்” என்றார்.(42)
திருதராஷ்டிரன், “ஆயிரம் பசுக்களைக் கொண்டவனும், ஒவ்வொரு வருடமும் நூறு பசுக்களைக் கொடையளிப்பவனும், அல்லது நூறு பசுக்களைச் சொந்தமாகக் கொண்டு தன் சக்திக்குத் தக்கபடி வருடத்திற்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பவனும், அல்லது பத்தோ, ஐந்தோ பசுக்களை மட்டுமே சொந்தமாகக்கொண்டு, அவற்றில் இருந்து ஒன்றைக் கொடையளிப்பவனும்,(43) நாள்தோறும் பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று முதிய வயதை அடைந்தவர்களும், வேத அறிவிப்புகளுக்குக் கீழ்ப்படிபவர்களும், மனோசக்தி கொண்டவர்களும், புனித நீர்நிலைகள் மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்பவர்களும் இன்பத்துடன் கோலோகத்தில் வசிக்கிறார்கள்.(44) பிரபாஸம், மானஸம் {மானஸஸரோவரம்}, புஷ்கரத் தடாகங்கள், மகாஸரஸ் என்றழைக்கப்படும் பெருந்தடாகம், நைமிசமெனும் புனிதக்காடுகள், பாஹுதை, கரதோயை,(45) கங்கை, கயசிரஸ், விபாசை, ஸ்தூலபாலுகை, கிருஷ்ணா, (பஞ்சாபின்) ஐந்து ஆறுகள், {தூஷ்ணீங்கங்கை, சனைர்க்கங்கை}, மஹாஹ்ரதம் என்றழைக்கப்படும் பெரிய தடாகம்,(46) கோமதி, கௌசிகி, சம்பை, ஸரஸ்வதி, திரஷத்வதி, யமுனை ஆகியவற்றுக்குச் செல்லும் சிறப்புமிக்கவர்களும், நோன்புகளை உறுதியாக நோற்பவர்களும், இந்தப் புனித நீர்நிலைகளுக்குப் பயணிப்பவர்களுமான பிராமணர்கள் நீர் சொன்ன உலகங்களுக்குச் செல்வார்கள். தெய்வீக உடல்களுடன் கூடியவர்களும், தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் எப்போதும் இனிய நறுமணங்களை வெளிப்படுத்தியபடியே இன்பத்திலும், மகிழ்ச்சியிலும் அவ்வுலகங்களுக்குச் செல்வார்கள். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(47,48)
கௌதமர், “அவற்றுக்கு அடுத்ததாக, குளிருக்கோ சிறிதும் அச்சமில்லாதவையும், வெப்பமோ, பசியோ, தாகமோ, துன்பமோ, கவலையோ, இன்பமோ இல்லாதவையும்,(49) ஏற்புடைய, ஏற்பில்லாத எவரும் இல்லாதவையும், நண்பனோ, பகைவனோ அற்றவையும், முதுமையோ, மரணமோ இல்லாதவையும், அறமோ, பாவமோ இல்லாதவையுமான உலகங்கள் இருக்கின்றன. ஆசையில் இருந்து விடுபட்டதும், ஒரே மாதிரியான மகிழ்ச்சி நிறைந்ததும், ஞானம் உள்ளதும், சத்வ குணம் கொண்டதுமான சுயம்புபிரம்மனின் புனித வசிப்பிடத்திற்கே சென்றாலும், இந்த யானையை எனக்குத் தருமாறு நான் உன்னை வலியுறுத்துவேன்” என்றார்.(50,51)
திருதாரஷ்டிரன், “பற்றுகளில் இருந்து விடுபட்டோரும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், முதன்மையான நோன்புகளை நோற்பதில் உறுதியானவர்களும், மன அமைதி சார்ந்த யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், (இப்பிறவியிலேயே) சொர்க்கத்தின் மகிழ்ச்சியை அடைந்தவர்களும், சத்வ குணம் கொண்டவர்களுமான மனிதர்கள் புனிதமான பிரம்மலோகத்தை அடைகிறார்கள். ஓ! பெருந்தவசியே, உம்மால் திருதராஷ்டிரனை அங்கே காண இயலாது” என்றான்.(52,53)
கௌதமர், “எங்கே முதன்மையான ரதந்தரங்கள் பாடப்படுகின்றவோ, எங்கே பௌண்டரீக வேள்விகளைச் செய்வதற்காகப் புனிதக் குசப் புற்கள் விரவிய பீடங்கள் இருக்கின்றனவோ, சோமம் பருகும் பிராமணர்கள் எங்கே சிறந்த வாகனங்களில் பயணிக்கிறார்களோ, அங்கே சென்றாலும், இந்த யானையைத் தருமாறு நான் உன்னை வற்புறுத்துவேன்.(54) அண்டத்திலுள்ள உலகங்கள் அனைத்தின் ஊடாக உலவும் நீ, நூறு வேள்விகளைச் செய்தவனும், விருத்திரனைக் கொன்றவனுமான தேவன் {இந்திரன்} என்று நினைக்கிறேன். நான் மனோபலவீனத்துடன் உன்னிடம் பேசிய சொற்களினால் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்” என்றார்.(55)
நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, “ஆம், நான் மகவத்தே {மகவானே}. நான் இந்த யானையைப் பிடிப்பதற்காக மனிதர்களின் உலகத்திற்கு வந்தேன். நான் உம்மை வணங்குகிறேன். எனக்கு ஆணையிடுவீராக. நீர், சொல்ல விரும்புபவை அனைத்தையும் நான் நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(56)
கௌதமர், “ஓ! தேவர்களின் தலைவா, வெண்ணிறம் கொண்டதும், பத்து வயதே கொண்ட குட்டியுமான இந்த யானையை எனக்குக் கொடுப்பாயாக. நான் இஃதை என் பிள்ளையாகவே வளர்த்தேன். இந்தக் காடுகளில் வசித்து என் கண் முன்னே வளர்ந்த இஃது என் அன்புக்குரிய தோழனாயிருக்கிறது. நீ பிடித்து இழுத்துச் செல்ல விரும்பும் என் பிள்ளையை விடுவிப்பாயாக” என்றார்.(57)
நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது மகனாக இருக்கும் இந்த யானை, விருப்பத்துடன் உம்மைக் கண்டு உம்மிடம் வருகிறது. தன் துதிக்கையினால் உமது பாதத்தை நுகர்கிறது பார்ப்பீராக. உமக்கு என் வணக்கம். என் நன்மைக்கு வேண்டுவீராக” என்றான்.(58)
கௌதமர், “ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன் நன்மையையே நினைக்கிறேன். நான் எப்போதும் உன்னை வழிபடுகிறேன். ஓ! சக்ரா, நீயும் எனக்கு உன் அருளை வழங்குவாயாக. உன்னால் கொடுக்கப்படும் இந்த யானையை நான் ஏற்கிறேன்” என்றார்.(59)
நூறு வேள்விகளைச் செய்த தேவன், “உயர் ஆன்மாவைக் கொண்டவர்களும், வாய்மையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பவர்களும், தங்கள் இதயங்களில் வேதங்கள் நடப்பட்டவர்களுமான முதன்மையான முனிவர்கள் அனைவருக்கும் மத்தியில் உம்மால் மட்டுமே என்னை அடையாளம் காண முடிந்தது. இந்தக் காரணத்திற்காக நான் உம்மிடம் பெரும் நிறைவுடன் இருக்கிறேன்.(60) எனவே, ஓ! பிராமணரே, உமது மகனின் துணையுடன் நீர் விரைவில் என்னிடம் வருவீராக. பேரின்பம் கொண்ட பல்வேறு உலகங்களை எந்தத் தாமதமும் இல்லாமல் ஒரே நாளில் அடைவதற்கு நீர் தகுந்தவராவீர்” என்றான்”.(61)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்தச் சொற்களைச் சொன்ன வஜ்ரதாரி {இந்திரன்}, கௌதமரையும், அவருடன் அவரது மகனான யானையையும் முன்னிட்டு அழைத்துக் கொண்டு தன்னுடன் அறவோராலும் அடைதற்கரிதான சொர்க்கத்திற்குச் சென்றான்.(62) இந்த வரலாற்றை ஒவ்வொரு நாளும் புலனடக்கத்துடன் கேட்பவன், அல்லது உரைப்பவன், (தன் மரணத்திற்குப் பிறகு) கௌதமரைப் போலவே பிரம்மலோகத்தை அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(63)
உபவாஸ மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 103-உபவாஸத்தின் சிறப்பு மற்றும் பிராமண வாக்கின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்துப் பிரம்மனுக்கும் பகீரதனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பல்வேறு வகைக் கொடைகள், ஆன்ம அமைதி, வாய்மை, கருணை, ஒருவன் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவடைவது, கொடையின் பலன்கள் ஆகியவற்றைக் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, தவங்களைவிட யாருடைய பலமும் மேன்மையானதல்ல என்பதை நீர் அறிவீர். உயர்ந்த தவமாக அமைவது எது என்பதைக் குறித்து எங்களுக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் நோற்கும் தவ வகையானது அவன் அடையும் இன்பலோகத்திற்குத் தொடர்புடையதாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே, உணவைத் தவிர்ப்பதைவிட மேன்மையான தவம் வேறேதும் இல்லை என்றே நான் கொள்கிறேன்.(3) இது தொடர்பாகப் பகீரதனுக்கும், சிறப்புமிக்க (படைப்பின் பெரும்பாட்டனான) பிரம்மனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை சொல்லப்படுகிறது.(4) ஓ! பாரதா, பகீரதன், தேவலோகம், கோலோகம், முனிவர்களின் உலகம் {ரிஷிலோகம்} ஆகியவற்றையும் கடந்த உலகத்தை அடைந்ததாக நாம் கேள்விப்படுகிறோம்.(5)
ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட பெரும்பாட்டன் பிரம்மன், பகீரதனிடம், “ஓ! பகீரதா, அடைவதற்கரிதான இந்த லோகத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?(6) ஓ !பகீரதா, கடுந்தவங்களைப் பயிலாமல் தேவர்களோ, கந்தர்வர்களோ, மனிதர்களோ இங்கே வருவதில் வெல்வதில்லை. உண்மையில் இவ்வுலகத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?” என்று கேட்டான்.(7)
பகீரதன் {பிரம்மனிடம்}, “எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் பிராமணர்களுக்கு நான் நூறாயிரம் பொற்காசுகளைக் கொடையாக அளித்தேன். ஓ! கல்விமானே, அந்தக் கொடைகளின் பலனாக நான் இவ்வுலகை அடையவில்லை.(8) நான் ஏகராத்ரி வேள்வியைப் பத்துமுறையும், பஞ்சராத்ரி வேள்வியைப் பல முறையும் செய்திருக்கிறேன். ஏகாதசராத்ரி வேள்வியைப் பதினோரு முறை செய்திருக்கிறேன். ஜோதிஷ்டோமம் என்னால் நூறு முறை செய்யப்பட்டிருக்கிறது. எனினும், அவ்வேள்விகளின் பலன்களால் நான் இந்த இன்பலோகத்தை அடையவில்லை[1].(9) கடுந்தவங்களைப் பயின்றவாறு புனிதமான ஜானவியின் {கங்கையின்} அருகில் நூறு ஆண்டுக் காலம் தொடர்ந்து வாழ்ந்து வந்தேன். அங்கே ஆயிரம் ஆண்களையும் மற்றும் எண்ணற்ற பெண் அடிமைகளையும் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன்[2].(10) புஷ்கரத் தடாகத்தின் அருகில் நூறாயிரம் முறை நூறாயிரம் குதிரைகளையும், இருநூறாயிரம் பசுக்களையும் பிராமணர்களுக்குக் கொடையளித்திருக்கிறேன்.(11) பேரழகுடையவர்களும், தங்க நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் காரிகையரையும், பசும்பொன்னாலாய ஆபரணங்களுடன் கூடிய இன்னும் அறுபதாயிரம் பேரையும் நான் கொடையளித்திருக்கிறேன். எனினும், இந்தச் செயல்களின் பலன்களால் நான் இவ்வுலகத்தை அடைவதில் வெல்லவில்லை[3].(12)ஓ! அண்டத்தில் தலைவா, கோஸவம் என்ற பெயரில் அறியப்படும் வேள்விகளைச் செய்து, தங்கள் கன்றுடன் கூடியவையும், காலத்தில் பால் தரவல்லவையும், தங்கப்பாத்திரத்துடன் கூடியவையும், பால் கறப்பதற்கான வெண்கலப்பாத்திரம் ஒன்றுடன் கூடியவையுமான பத்துப் பசுக்களை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுப்பது என்ற வீதத்தில் பத்து அற்புதங்கள் அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்தேன்.(13) சோமவேள்விகள் பலவற்றைச் செய்து, பால் தரவல்லவையும், முதல்கன்றை ஈன்றவையுமான பத்துப் பசுக்களை ஒவ்வொரு பிராமணர்களுக்கும் கொடுத்து, ரோஹிணி என்ற பெயரில் அறியப்படும் வகையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பசுக்களையும் அவர்களுக்குக் கொடையளித்தேன்.(14) மேலும் பால் தரும் பசுக்களை இருபது பிரயுதங்கள் அளவுக்குப் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். ஓ! பிரம்மா, அந்தக் கொடைகளின் பலனால் நான் இந்த இன்பலோகத்தை அடைவதில் வெல்லவில்லை.(15) வெண்ணிறம் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பால்ஹீக இனத்தைச் சேர்ந்தவையுமான நூறாயிரம் குதிரைகளையும் நான் கொடையளித்தேன். எனினும், அச்செயல்களுக்கான பலன்களின் மூலம் நான் இந்த உலகத்தை அடையவல்லை.(16) ஓ! பிரம்மா, எட்டு கோடி தங்கநாணயங்களை மேலும் மற்றொரு பத்து கோடியையும் நான் செய்த ஒவ்வொரு வேள்வியிலும் கொடுத்திருக்கிறேன். எனினும், அந்தக் கொடைகளின் பலனால் நான் இந்த இன்பலோகத்தை அடையவில்லை.(17)
ஓ! பெரும்பாட்டனே, மேலும் நான் பச்சை நிறம் கொண்டவையும், கருப்பு காதுகளைக் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான பதினேழு கோடி {17,00,00,000} குதிரைகளைக் கொடையளித்திருக்கிறேன்.(18) மேலும், பேரளவு கொண்டவையும், உழுமுனையை {கொழுவைப்} போன்ற பெரும்பற்களைக் கொண்டவையும், பத்மங்கள் என்றழைக்கப்படும் சுழிகளைத் தன் உடலில் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான பதினேழாயிரம் {17,000} யானைகளையும் கொடையளித்திருக்கிறேன்.(19) ஓ! பெரும்பாட்டா, தங்கத்தாலான அங்கங்களைக் கொண்டவையும், பல்வேறு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பத்தாயிரம் {10,000} தேர்களையும் நான் கொடையளித்திருக்கிறேன்.(20) குதிரைகள் பூட்டப்பட்ட வேறு தேர்கள் ஏழாயிரமும் {7,000} நான் கொடையளித்திருக்கிறேன். அவற்றில் பூட்டப்பட்ட குதிரைகள் யாவும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் வேள்வி தக்ஷிணைகளாகவும், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதே வகையைச் சார்ந்தவையாகவும் இருந்தன.(21) ஆற்றல் மற்றும் செய்த வேள்விகளால் தீர்மானிக்கப்படுபவர்களும், இந்திரனின் பலத்தைக் கொண்டவர்களுமான ஓராயிரம் வீரர்களை நான் செய்த பத்து பெரும் வாஜபேய வேள்விகளில் கொடையளித்திருக்கிறேன்.(22) ஓ! பெரும்பாட்டனே, பெருமளவில் பணத்தைச் செலவு செய்து எட்டு ராஜசூய வேள்விகளைச் செய்து, (அவற்றைச் செய்து கொடுத்த பிராமணர்களுக்கு) போரில் வெல்லப்பட்டவர்களும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தைக் கொண்டவர்களுமான ஆயிரம் மன்னர்களைக் கொடையளித்தேன்[4]. எனினும், அச்செயல்களால் கிட்டிய பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(23,24)ஓ! அண்டத்தின் தலைவா, அந்த வேள்விகளில் நான் கொடுத்த கொடைகள் கங்கையின் ஓடையைப் போல அபரிமிதமாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டாயிரம் யானைகளையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அதே அளவு குதிரைகளையும், சிறந்த வகையிலான நூறு கிராமங்களையும் நான் ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுத்தேன்.(25) உண்மையில், நான் இவற்றை அடுத்தடுத்து மூன்று முறை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுத்தேன். இமயச் சாரலில் தடுக்கப்பட முடியாத ஓடையாக (சொர்க்கத்தில் இருந்து பாய்ந்து) மஹாதேவனின் தலையில் தாங்கப்பட்ட கங்கையின் அருகில் தவம் செய்து கொண்டும், அமைதியான ஆன்மாவைப் பின்பற்றியும், பேச்சைக் கட்டுப்படுத்தியவாறும், முறைப்படுத்தப்பட்ட உணவுமுறையில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தேன். ஓ! பெரும்பாட்டனே, இந்தச் செயல்களின் பலன் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(27) சமியை {சமியென்று சொல்லப்படும் வன்னிமரக் கட்டைகளை வீசி), பௌண்டரீகம் தவிர, ஒரே நாளில் நிறைவடையக்கூடிய, பனிரெண்டு நாட்களில் மற்றும் பதிமூன்று நாட்களில் முடிவடைக்கூடிய {திரயோதசாஹம், துவாதசாஹாம்} வேள்விக்கூட்டங்களைச் செய்து நான் தேவர்களைத் துதித்தேன். அந்த வேள்விகளில் எவற்றின் பலனினாலும் நான் இவ்வுகலை அடையவில்லை[5].(28)வெண்ணிறம் கொண்டவையும், அழகிய திமில்களைக் கொண்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையுமான எட்டாயிரம் {8,000} காளைகளை நான் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். அவற்றும் கழுத்து நிறையத் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மனைவிகளையும் {பசுக்களைக்} கொடுத்தேன்[6].(29) மேலும் நான் பொற்குவியல்களையும், பிறவகைச் செல்வங்களையும் கொடையளித்தேன். உண்மையில், நான் ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்புமிக்கக் கற்களின் மலைகளைக் கொடையளித்தேன். செல்வங்களும், தானியங்களும் நிறைந்தவையான ஆயிரக்கணக்கான கிராமங்கள் என்னால் கொடையளிக்கப்பட்டன.(30) நான் செய்த பெரும் வேள்விகள் பலவற்றில், முதல் கன்றை ஈன்றவையான நூறாயிரம் பசுக்களை என் தன்நினைவுடன் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். எனினும், அச்செயல்களினால் கிட்டிய பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(31) பதினோரு நாட்களில் நிறைவடையும் வேள்வி {ஏகாதசாஹம்} ஒன்றில் நான் தேவர்களைத் துதித்தேன். பனிரெண்டு நாட்களில் முடிவடையும் வேள்விகளில் {த்விர்த்வாதசாஹம்} இருமுறை நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். பல முறை நடைபெற்ற குதிரைவேள்விகளிலும் நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். ஆர்காயண வேள்வியை நான் பதினாறு முறை செய்திருக்கிறேன். அச்செயல்களின் பலன்கள் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(32)ஒரு யோஜனை நீள அகலம் கொண்டதும், ரத்தினங்களாலும் பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட காஞ்சன மரங்களைக் கொண்டதுமான காட்டை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடையளித்தேன். அந்தச் செயலின் பலனால் நான் இவ்வுலகை அடையவில்லை.(33) மேன்மையான தகுதியைக் கொண்ட துராயண நோன்பை முப்பது வருடங்கள் நோற்றுக் கோபத்தில் இருந்து முற்றிலும் விடுபட்ட நான், ஒவ்வொரு நாளும் தொள்ளாயிரம் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன்.(34) உண்மையில், ஓ! அண்டத்தின் தலைவா, நான் கொடுத்த அந்தப் பசுக்கள் ஒவ்வொன்றும் ரோகிணி இனத்தைச் சார்ந்தவையும், அந்த நேரத்தில் பால் தருபவையாகவும் இருந்தன. ஓ! தேவர்களின் தலைவா, அந்தச் செயல்களின் பலன்கள் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(35) ஓ! பிரம்மாவே, நான் ஒவ்வொரு நாளும் முப்பது நெருப்புகளை வழிபட்டேன். விலங்குகள் அனைத்தின் கொழுப்பும் நெருப்பில் ஊற்றப்பட்ட எட்டு வேள்விகளில் {ஸர்வமேதயாகங்களில்} நான் தேவர்களைத் துதித்திருக்கிறேன். மனிதக்கொழுப்பை நெருப்பில் ஊற்றிச் செய்யப்பட்ட ஏழு வேள்விகளில் {நரமேதயாகங்களில்} நான் அவர்களைத் துதித்திருக்கிறேன்.(36) ஆயிரத்து இருபத்தெட்டு விஸ்வஜித் வேள்விகளிலும் நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவரே, அந்த வேள்விகளின் பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(37) சரயூ, பாஹுதை, கங்கை ஆகியவற்றின் கரைகளிலும், நைமிசக் காடுகளிலும் நான் கோடிக்கணக்கான பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்திருக்கிறேன்.(38)
உண்ணா நோன்பெனும் விரதம் இந்திரனால் அறியப்பட்டிருந்தது. எனினும் அவன் அதை ரகசியமாக வைத்திருந்தான். பிருகுவின் வழித்தோன்றலான சுகரன், தவங்களினால் அடைந்த ஆன்மப் பார்வையின் மூலம் அந்த அறிவை அடைந்தார். சுடர்மிக்க சக்தியைக் கொண்ட உசானஸே இது குறித்து அண்டத்திற்கு அறிவித்தார். ஓ! வரமளிக்கும் தேவா, நான் அந்நோன்பை நோற்றிருக்கிறேன்.(39) நான் மிக மேன்மையான அந்நோன்பை நிறைவேற்றிய போது பிராமணர்கள் அனைவரும் என்னிடம் நிறைவடைந்தார்கள். ஓராயிரம் முனிவர்கள் அங்கே வந்தனர்.(40) ஓ! பலமிக்கத் தலைவா, அந்தப் பிராமணர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் என்னிடம் நிறைவடைந்தவர்களாக, “நீ பிரம்ம லோகத்திற்குச் செல்வாயாக” என்றனர். அந்நோன்பு பலனின் விளைவாலேயே நான் மிக மேன்மையான இன்பத்தைக் கொண்ட இந்த உலகை அடைவதில் வென்றேன். இதில் எந்த ஐயமும் இல்லை.(41) அனைத்துப் பொருட்களின் பரம ஆணையாளனால் காட்கப்பட்டு உண்ணாவிரதத்தின் பலன்களை முறையாக நான் விளக்கிச் சொன்னேன். என் கருத்தின்படி, உண்ணா நோன்பை {உபவாஸத்தை} விட உயர்ந்த தவம் ஏதும் கிடையாது. ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, நான் உம்மை வணங்குகிறேன். என்னிடம் நிறைவடைவீராக” என்றான் {பகீரதன்}”.(42)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், இவ்வாறு சொன்னவனும், மதிப்பனைத்திற்கும் தகுந்தவனுமான மன்னன் பகீரதன் தன் பேச்சை முடித்த போது அக்காரியத்திற்காக விதிக்கப்பட்ட சடங்குகளின் படி பிரம்மனால் அவன் கௌரவிக்கப்பட்டான்.(43) எனவே, ஓ! யுதிஷ்டிரா, உண்ணாநோன்பை நோற்று ஒவ்வொரு நாளும் பிராமணர்களை வழிபடுவாயாக. பிராமணர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் இம்மையிலும், மறுமையிலும் அனைத்தையும் நிறைவேற்றும்.(44) உண்மையில், ஆடைகள், உணவு, வெண்ணிற பசுக்கள், வசிப்பதற்கு நல்ல வீடுகள் மற்றும் மாளிகைகளைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் நிறைவடையச் செய்யப்பட வேண்டும். பேராசையில் இருந்து விடுபட்டு, அனைவராலும் அறியப்பட்ட மிக மேன்மையான இந்த நோன்பை நீ பயில்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(45)
ஆசாரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 104-ஆயுள் குறைபாடு அல்லது நீண்ட ஆயுளுக்கான காரணங்கள்; செய்யப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்; நன்மைகளுக்குக் காரணமான ஆசாரங்கள், அதாவது ஒழுக்கவிதிகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனிதன் நூறு வருடங்கள் நீளும் வாழ்வுக்காலத்தையும், சக்தியையும், கருத்தில் கொள்ளத்தக்க அளவு வலிமையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பாட்டா, அப்படியிருக்கையில் ஏன் மனிதர்கள் மிக இளமைக் காலத்திலேயே {சிறு வயதிலேயே} இறக்கிறார்கள்?(1) எதன் மூலம் ஒரு மனிதன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்? எதன் மூலம் குறைந்த வாழ்நாளைப் பெறுகிறான்? எதன் மூலம் ஒரு மனிதன் பெருஞ்சாதனைகளைச் சார்ந்திருக்கும் புகழை அடைகிறான். எதன் மூலம் அவன் செல்வத்தையும், செழிப்பையும் அடைகிறான்?(2) தவங்கள், பிரம்மச்சரியம், அமைதியாகப் புனித மந்திரங்களை உரைத்தல், மருந்து ஆகியவற்றில் எதன் மூலம் இது நேர்கிறது? செயல்கள், மனம், அல்லது வாக்கில் எது அதற்குக் காரமாகிறது ஓ! பாட்டா இதை எனக்கு விளக்குவீராக” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கேட்பதை நான் சொல்லப் போகிறேன். உண்மையில், ஒருவன் குறுகிய காலம் வாழ்வதற்கும், நெடுங்காலம் வாழ்வதற்கும் உரிய காரணத்தைச் சொல்லப் போகிறேன்.(4) பெருஞ்சாதனைகளினால் உண்டாகும் புகழை அடைவதில் ஒருவன் வெல்லும் காரணத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் அடையும் காரணத்தையும் சொல்லப் போகிறேன். உண்மையில், ஒருவன் நன்மையை அடைய வேண்டி வாழ வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(5) ஒழுக்கத்தின் மூலமே ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான், மேலும் ஒழுக்கத்தின் மூலமே அவன் செல்வத்தையும், செழிப்பையும் அடைகிறான். உண்மையில், ஒழுக்கத்தின் மூலமே அவன் பெருஞ்சாதனைகளைச் சார்ந்திருக்கும் புகழை இம்மையிலும், மறுமையிலும் அடைகிறான்.(6) முறையற்ற, அல்லது தீய ஒழுக்கத்தைக்கொண்ட மனிதன் ஒருபோதும் நீண்ட வாழ்நாளை அடைவதில்லை. அத்தகைய மனிதனை அனைத்து உயிரினங்களும் அஞ்சுகின்றன, அவனால் ஒடுக்கப்படுகின்றன.(7) எனவே, ஒருவன் முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பினால், அவன் முறையான நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மங்கலமற்ற நிலையையும், பாவம் நிறைந்த ஒருவனின் துன்பத்தையும் அகற்ற வல்லது நல்லொழுக்கம்[1].(8)அறமானது தன் குறியீடாக ஒழுக்கத்தையே கொண்டிருக்கிறது {ஒழுக்கத்தினால் அறியப்படுவது அறம்}. நல்லவர்களாகவும், அறம்சார்ந்தவர்களாகவும் இருப்பவர்கள், தாங்கள் பின்பற்றும் ஒழுக்கதின் விளைவாலேயே அவ்வாறிருக்கிறார்கள். மேலும், நல்லொழுக்கத்தின் குறியீடுகள் நல்லோர் அல்லது அறவோரின் செயல்களின் மூலமே விளைகின்றன.(9) நியாயமாகச் செயல்படுபவனும், நற்செயல்களைச் செய்பவனுமான மனிதனை மக்கள் காணவில்லையென்றாலும், {அவனைக் குறித்துக்} கேள்விப்படுவதால் மட்டுமே கூட அவனை மதிப்பார்கள்.(10)
நாத்திகர்களாக இருப்பவர்கள், செயல்கள் ஏதும் அற்றவர்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள், சாத்திர ஆணைகளை மீறுபவர்கள், கடமைகளைக் குறித்து அறியாதவர்கள், அவற்றை நோற்காதவர்கள், தீய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் குறுகிய வாழ்நாளை வாழ்வார்கள்.(11) முறையற்ற நடத்தை கொண்டவர்கள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவர்கள், பாலினக் கலவியில் பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள் ஆகியோர் குறுகிய வாழ்நாளே வாழ்ந்து மறுமையில் நரகிற்குச் செல்வார்கள்.(12) எந்தச் சாதனையுமற்றவர்களாக இருந்தாலும் நம்பிக்கையுள்ளவர்களாகவும், வன்மத்திலிருந்து விடுபட்டவர்களுமாகி ஒழுங்குமுறையையும், அறவொழுக்கத்தையும் பின்பற்றும் மனிதர்கள் நூறு வருடங்கள் வாழ்வார்கள்.(13) கோபத்தில் இருந்து விடுபட்டவனும், வாக்கில் வாய்மை நிறைந்தவனும், அண்டத்திலுள்ள எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தீங்கிழைக்காதவனும், வன்மமற்றவனும், நெறியுள்ளவனும், நேர்மையாளனுமான ஒருவன் நூறு வருடங்கள் வாழ்வதில் வெல்கிறான்.(14) எப்போதும் மண் ஓடுகளை உடைப்பவன், காலுக்கடியில் வளரும் துரும்பைக் கிள்ளுபவன், நகங்களைக் கடிப்பவன், எப்போதும் தூய்மையற்றிருப்பவன், மனத்தடுமாற்றம் கொண்டவன் ஆகியோர் ஒருபோதும் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்லமாட்டார்கள்.(15)
ஒருவன், பிரம்மமுகூர்த்தம் என்றறியப்படும் நேரத்தில் உறக்கத்தில் இருந்து விழித்து, அறம் மற்றும் பொருள் குறித்துச் சிந்திக்க வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் அவன் தன் முகத்தையும், வாயையும் கழுவிய பிறகு, மதிப்புமிக்க மனநிலையுடன் தனது கரங்களைக்கூப்பிக் காலை வேண்டுதல்களை {துதிகளைச்} சொல்ல வேண்டும்[2].(16) இதே வழியில் மாலைவேளை வரும்போதும் அவன் (வேறு மக்களிடம்) பேச்சைத் தவிர்த்து மாலை வேண்டுதல்களைச் சொல்ல வேண்டும். ஒருவன் உதிக்கும் சூரியனையோ, மறையும் சூரியனையோ பார்க்கக்கூடாது[3].(17) கிரகணக் காலத்திலோ, நீரின் பிம்பத்திலோ, நடுப்பகலில் நடுவானிலோ உள்ள சூரியனையும் அவன் ஒருபோதும் பார்க்கக்கூடாது. முனிவர்கள், பெரும் முறைமையுடன் இரு சந்திப்பொழுதுகளிலும் துதிப்பதன் விளைவால் அவர்கள் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறார்கள்.(18) எனவே, ஒருவன் பேச்சைத் தவிர்த்து, இரு சந்திப்பொழுதுகளிலும் முறையாகத் தன் வேண்டுதல்களைச் சொல்ல வேண்டும் {துதிக்க வேண்டும்}. இரு சந்திப்பொழுதுகளிலும் தங்கள் வேண்டுதல்களைச் சொல்லாத பிராமணர்களைப் பொறுத்தவரையில், ஓர் அறம்சார்ந்த மன்னன் சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வதில் அவர்களை நிறுவ வேண்டும். அனைத்து வகையை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களும் அடுத்தவர் மனைவிகளுடன் ஒருபோதும் பாலினக் கலவி கொள்ளக்கூடாது.(19,20)அடுத்தவர் மனைவிகளுடன் பாலினக்கலவி புரிவதைவிட வாழ்நாளை மிகத் தீவிரமாகக் குறைப்பது வேறேதும் இல்லை.(21) பிறன்மனைநயப்பவன், தான் குற்றமிழைத்த பெண்களின் உடல்களில் உள்ள வியர்வைத்துளைகளின் எண்ணிக்கை அளவுக்குப் பல்லாயிரம் வருடங்கள் நரகில் வாழ்வான்.(22) ஒருவன் பிற்பகலில், தன் மயிரைச் சீர்படுத்தி, தன் கண்களுக்கு அஞ்சனந்தீட்டி, பற்களைக் கழுவியபிறகு தேவர்களை வழிபடவும் வேண்டும்.(23) ஒருவன் சிறுநீரையோ, மலத்தையோ பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது, அல்லது அதில் நடக்கக்கூடாது, அல்லது தன் பாதத்தால் தீண்டக்கூடாது. ஒருவன் விடியற்காலையிலோ, நடுப்பகலிலோ, மாலை சந்தி காலத்திலோ,(24) அறியாத தோழனுடனோ, ஒரு சூத்திரனுடனோ, தனியாகவோ பயணம் புறப்படக்கூடாது. ஒருவன் சாலையில் நடந்து செல்லும்போது, {எதிர்ப்படும்} பிராமணன், பசுக்கள், மன்னர்கள்,(25) முதியவர், சுமை தூக்கி வருபவர், கருவுற்றிருக்கும், பெண் மற்றும் பலவீனர் ஆகியோருக்கு எப்போதும் வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்.
ஒருவன் அறியப்பட்ட ஒரு பெரிய மரத்தைக் காணும்போது அதை வலம் வர வேண்டும். ஒருவன் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு வரும்போது, தனது பயணத்தைத் தொடரும் முன்பு அதை வலம் வர வேண்டும். நடுப்பகலிலோ, நள்ளிரவிலோ, பொதுவாக இரவிலோ,(26) இரு சந்திப் பொழுதுகளிலோ நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களுக்கு ஒருவன் செல்லக்கூடாது. ஒருவன் மற்றொருவரால் அணியப்பட்ட காலணிகளையோ, ஆடைகளையோ ஒருபோதும் அணியக்கூடாது.(27) ஒருவன் எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்க வேண்டும், தன் கால்களை ஒருபோதும் பின்னிக் கொள்ளக்கூடாது. ஒருவன் புது நிலவு {அமாவாசை} நாளிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாளிலும், இரு பிறை அரைமாதங்களிலும் {வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில்} வரும் எட்டாவது சந்திர நாளிலும் {அஷ்டமியிலும்} பிரம்மச்சரிய நோன்பை நோற்கவேண்டும். ஒருவன் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது. ஒருவன் ஒரு விலங்கின் முதுகில் உள்ள இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது. ஒருவன் பிறரை நிந்திப்பதையும், பிறரைக் குறித்து அவதூறு பேசுவதையும், அனைத்து வகை வஞ்சக நடத்தைகளையும் தவிர்க்க வேண்டும்[4].(28-30)ஒருவன் மற்றொருவரை சொற்கணைகளால் துளைக்கக்கூடாது. உண்மையில், ஒருவன் எந்தவிதமான கொடூரப் பேச்சையும் பேசக்கூடாது. தாழ்ந்த மற்றும் இழிந்த மனிதனிடம் இருந்து ஒருபோதும் கொடைபெறக்கூடாது. வேறு மக்களுக்குத் தொல்லையைக் கொடுக்கத் தகுந்தவையோ, மங்கலமற்றவையோ, பாவம்நிறைந்தவையோவான சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது.(31) சொற்கணைகள் வாயில் இருந்து பாய்கின்றன. அவற்றால் துளைக்கப்பட்டவன் பகலும், இரவும் வருந்துகிறான். ஞானமுள்ள மனிதன், வேறு மக்களின் முக்கிய அங்கங்களைத் துளைப்பதற்காக ஒருபோதும் அவற்றை ஏவக்கூடாது.(32) கணைகளால் துளைக்கப்பட்ட, அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும்வளரும். எனினும், விவேகமில்லாமல் பேசப்படும் சொற்களால் துளைக்கப்பட்ட மனிதன், மரணத்திற்கு வழிவகுக்கும் சீழ் பிடித்த புண்ணுக்குப் பலியாகிறான்.(33) கர்ணிகள், நாளீகங்கள், நாராசங்கள் ஆகியவற்றை உடலில் இருந்து பிடுங்கிவிட வல்லவையாகும். எனினும், சொற்கணைகள் இதயத்திலேயே பதிந்து கிடப்பதால் அவற்றை ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது.(34) அங்க குறையுள்ளவனையோ, அங்கம் அதிகமுள்ளவனையோ, கல்வியற்றவனையோ, துன்பத்திலிருப்பவனையோ, கோரமானவனையோ {அழகற்றவனையோ}, பலமற்றவனையோ ஒருவன் குற்றங்கூற {பரிகசிக்கக்} கூடாது.(35)
நாத்திகம், வேதங்களை அவதூறு செய்வது, தேவர்களை நிந்திப்பது, வன்மம், செருக்கு, ஆணவம், கடுமை ஆகியவற்றை ஒருவன் தவிர்க்க வேண்டும்.(36) ஒருவன் கோபத்தினால் பிறரைத் தாக்க தண்டக்கோலை {தடியை} எடுக்கக்கூடாது. கற்பித்தல் நோக்கத்தில் மகன், அல்லது சீடனை மட்டுமே மென்மையாகத் தண்டிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.(37) ஒருவன் பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசக்கூடாது; அதேபோல நட்சத்திரங்களை விரல் நீட்டிச் சுட்டிக் காட்டக்கூடாது. கேட்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாளின் சந்திர நாளை {பக்ஷத்தின் திதியை} ஒருவன் சொல்லக் கூடாது. அதைச் சொல்வதன் மூலம் ஒருவனுடைய வாழ்நாள் குறுகுகிறது.(38) இயற்கை அழைப்புகளுக்குப் பதிலளித்த பிறகோ, சாலையில் நடந்து வந்த பிறகோ ஒருவன் தன் பாதங்களைக் கழுவ {அலம்ப} வேண்டும். வேதங்கள் உரைக்க அமர்வதற்கோ, உணவை உண்பதற்கோ முன்பு ஒருவன் தன் பாதங்களைக் கழுவ வேண்டும்.(39) அறியப்படாததும் {பிறரால் பார்க்கப்படாததும்}, நீரினால் கழுவப்பட்டதும், நன்றாகப் பேசப்பட்டதுமான {வாக்கினால் புகழப்பட்டதுமான} இம்மூன்று மாசுகளும் தூய்மையானவை, புனிதமானவை, பிராமணர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவை எனத் தேவர்கள் கருதுகின்றனர்.(40)
ஸம்யாவம் {அரிசிச் சோறு}, கிருஸரம், இறைச்சி, சஸ்குலீ {முறுக்கு}, பாயஸம் ஆகியவற்றை ஒருவன் ஒருபோதும் தனக்காகச் சமைத்துக் கொள்ளக்கூடாது. இவை எப்போது சமைக்கப்பட்டாலும், தேவர்களுக்கே காணிக்கை அளிக்கப்பட வேண்டும்[5].(41) ஒருவன் ஒவ்வொரு நாளும் தன் நெருப்பைக் கவனிக்க {அக்னிஹோத்ரம் செய்ய} வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் பிச்சையிட வேண்டும். அவன், பேச்சைக் கட்டுப்படுத்திப் பற்குச்சியினால் பற்களைத் தூய்மை செய்ய வேண்டும்.(42) ஒருவன் சூரியன் எழுந்த பிறகும் ஒருபோதும் படுக்கையில் கிடக்கக்கூடாது. எந்த நாளிலாவது அவன் சூரியனுக்கு முன் எழத் தவறினால், அவன் பாவக்கழிப்பைச் செய்ய வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் அவன் முதலில் தன் பெற்றோரையும், ஆசான்களையும், மதிக்கத்தகுந்த பெரியோரையும் வணங்க வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான். பற்குச்சியின் வேலை முடிந்ததும் அதைக் கைவிட்டு ஒவ்வொரு நாளும் புதியதையே பயன்படுத்த வேண்டும்.(43,44) ஒருவன் புதுநிலவு {அமாவாசை} மற்றும் முழு நிலவு {பௌர்ணமி} நாட்களில் அனைத்து வகை உணவையும் கைவிட்டு, {மற்ற நாட்களில்} சாத்திரங்களால் விலக்கப்படாத உணவையே உண்ண வேண்டும். அவன் தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இயற்கையின் அழைப்புகளுக்கு வடக்கு நோக்கிப் பதிலளிக்க {சிறுநீர், மலம் கழிக்க} வேண்டும்[6].(45)ஒருவன் முதலில் தன் பற்களைக் கழுவாமல் தேவர்களை வழிபடக்கூடாது. மேலும் முதலில் தேவர்களை வழிபடாமல், தன் ஆசானையோ, வயதில் முதிர்ந்த ஒருவரையோ, ஓர் அறவோரையோ, ஞானம் கொண்டவரையோ தவிர்த்து வேறு யாரிடமும் செல்லக்கூடாது. ஞானமுள்ளவர்கள், பளபளப்பாக்கப்படாத, மாசுள்ள கண்ணாடியில் ஒருபோதும் தங்களைக் காணமாட்டார்கள்.(46,47) ஒருவன் தான் அறியாத பெண்ணுடனோ, கருவுற்றிருக்கும் பெண்ணுடனோ பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.(48) ஒருவன் வடக்கிலோ, மேற்கிலோ தலைவைத்து ஒருபோதும் உறங்கக்கூடாது. அவன் உடைந்ததும், தளர்ந்ததுமான படுக்கையில் படுக்கக்கூடாது.(49) ஒருவன் விளக்கின் உதவியுடன் முதலில் படுக்கையைச் சோதிக்காமல் அதில் படுக்கக்கூடாது. மேலும் தன் அருகில் (மனைவி போன்ற) மற்றொருவருடன் சேர்ந்து படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் குறுக்குத் திசையில் படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் நாத்திகர்களுக்கு அடங்கியிருக்கக்கூடாது, அல்லது அவர்களுக்கு இணக்கமான எதையும் செய்யக்கூடாது[7].(50)ஒருவன் ஓர் இருக்கையைத் தன் காலால் இழுத்து அதில் அமரக்கூடாது. ஒருவன் நிர்வாண நிலையிலோ, இரவிலோ ஒருபோதும் நீராடக்கூடாது.(51) புத்தியுள்ள ஒருவன் நீராடிய பிறகு தன் உறுப்புகளைத் தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது. முதலில் நீராடாமல் ஒருபோதும் {சந்தனம் போன்ற} களிம்புகளைத் தன் உடலில் பூசக்கூடாது. நீராடிய பிறகு அவன் ஒருபோதும் தன் ஆடையை (காய வைக்கும் நோக்கில்) காற்றில் அசைக்கக்கூடாது.(52) ஒருவன் ஒவ்வொரு நாளும் ஈரமான ஆடைகளை உடுத்தக்கூடாது. அவன் தான் அணியும் மலர்மாலைகளை எடுக்கக்கூடாது. அதேபோல வெளிப்புற ஆடைகளுக்கு மேல் அத்தகைய மாலைகளை ஒருபோதும் அணியக்கூடாது.(53) ஒருவன் பெண்ணுக்கான இயக்க மாறுபாட்டு {வீட்டுக்கு விலக்கான} காலத்தில் அவளுடன் பேசவும் கூடாது. அவன் இயற்கையின் அழைப்புகளுக்கு (பயிர் விளையும்) களத்திலோ {வயலிலோ}, மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அருகிலோ பதிலளிக்கக்கூடாது {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடாது}[8].(54) ஒருவன் நீர்வெளியில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. ஒருவன் எந்த உணவையும் உண்ணும் முன்பு மூன்று முறைகள் தன் வாயைக் கழுவ வேண்டும்.(55)உணவு உண்டு முடித்த பிறகு அவன் மூன்று முறையும், மீண்டும் இரண்டு முறையும் {ஆக மொத்தம் ஐந்து முறைகள்} தன் வாயையைக் கழுவ வேண்டும். ஒருவன் பேச்சைக்கட்டுப்படுத்திக் கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ணும் உணவை நிந்திக்காமல் உண்ண வேண்டும்.(56) ஒருவன் தான் உண்பதற்காகத் தனக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் உணவில் எப்போதும் மிச்சம் வைக்க வேண்டும். தன் உணவை உண்டு முடித்ததும் ஒருவன் நெருப்பை மனத்தால் தீண்ட வேண்டும்[9]. ஒருவன் கிழக்குத் திசை நோக்கி உண்டால் அவன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாவான். தெற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெரும் புகழை அடைவான்.(57) மேற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செல்வத்தை அடைகிறான். வடக்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பேச்சில் வாய்மை நிறைந்தவனாகிறான். ஒருவன் தன் உணவை உண்ட பிறகு மேலுடலின் துளைகள் அனைத்தையும் நீரால் துடைக்க வேண்டும்.(58) அதே போல அனைத்து அங்கங்களையும், உந்தியையும், உள்ளங்கைகளையும் நீரால் கழுவ வேண்டும். ஒருவன் உமியின் மீதோ, மயிரின் மீதோ, சாம்பலின் மீதோ, எலும்புகளின் மீதோ ஒருபோதும் அமரக்கூடாது.(59) ஒருவன், மற்றொருவன் நீராடிய, பயன்படுத்தி நீரை எக்காரணத்தினாலும் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் தேவர்களைத் தணிவைடையச் செய்வதற்கு ஹோமத்தை எப்போதும் செய்து, சாவித்திரி மந்திரங்களையும் உரைக்க வேண்டும்.(60)ஒருவன் எப்போதும் அமர்ந்தே உண்ண வேண்டும். ஒருபோதும் நடந்து கொண்டே உண்ணக்கூடாது. ஒருவன் நின்ற நிலையில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. சாம்பலிலோ, மாட்டுக் கொட்டிலிலோ அவன் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது.(61) ஒருவன் உண்ண அமர்வதன் முன்னர்த் தன் பாதங்களைக் கழுவ வேண்டும். ஒருவன் ஈரக்கால்களுடன் ஒருபோதும் அமரவோ, உறங்குவதற்காகப் படுக்கவோ கூடாது. கால் கழுவிய பிறகு அமர்ந்து உண்ணும் ஒருவன் நூறு வருடங்கள் வாழ்கிறான்.(62) ஒருவன் தூய்மையற்ற நிலையில் இருக்கும்போது, பெருஞ்சக்தி கொண்ட நெருப்பு, பசு மற்றும் பிராமணன் என்ற மூவரையும் ஒருபோதும் தீண்டக்கூடாது. இந்த விதியைக் கடைப்பிடிப்பதால் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்.(63) மாசுள்ள நிலையில் இருக்கும்போது பெருஞ்சக்தி கொண்ட சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் மூன்றிலும் கண்களைச் செலுத்தக்கூடாது.(64) ஓர் இளைஞனின் வீட்டிற்கு, மதிக்கத்தகுந்த ஒரு முதியவர் வந்தால், அவனுடைய {அந்த இளைஞனின்} உயர் மூச்சுகள் மேல்நோக்கிச் செல்கின்றன. அவன் எழுந்து நின்று, தன் விருந்தினரை முறையாக வணங்கும்போதே அதைத் திரும்பப் பெறுகிறான்.(65)
முதியவர்கள் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் அவர்களைக் கண்டதும் தன் கரத்தால் இருக்கை அளிக்க வேண்டும். அந்த முதியவர் அமர்ந்த பிறகு, தானும் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் இருக்க வேண்டும். ஒரு பெரியவர் சாலையில் செல்லும்போது அவன் அவரைப் பின்தொடர வேண்டுமேயன்றி அவருக்கு முன் நடக்கக்கூடாது.(66) ஒருவன் கிழிந்த, அல்லது உடைந்த இருக்கையில் அமரக்கூடாது. அவன் உடைந்த வெண்கலப் பாத்திரத்தை மீண்டும் பயன்படுத்தாமல் அதைக் கைவிட வேண்டும். ஒருவன் மேலாடை அணிந்து தன் உடலை மூடாமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவன் நிர்வாண நிலையில் ஒருபோதும் நீராடக் கூடாது. நிர்வாண நிலையில் ஒருபோதும் உறங்கக்கூடாது[10].(67) அடுத்தவர் உணவில் எஞ்சியவற்றையும், தட்டுகளையும் ஒருவன் ஒருபோதும் தீண்டக்கூடாது. உயிர் மூச்சுகள் அனைத்தும் தலையிலியே குவிந்திருப்பதாகச் சாத்திரங்களில் சொல்லப்படுவதால், ஒருவன் தான் தூய்மையற்ற {மாசுள்ள} நிலையில் இருக்கும்போது ஒருபோதும் மற்றொருவனின் தலையைத் தீண்டக்கூடாது.(68) ஒருவன் ஒருபோதும் மற்றொருவரின் தலையைத் தாக்கவோ, மற்றொருவனின் மயிரைப் பற்றவோ கூடாது. இரண்டு கைகளையும் சேர்த்து ஒருவன் தன் தலையைச் சொறியக்கூடாது.(69) ஒருவன் நீராடும்போது, மீண்டும் மீண்டும் தன் தலையை நீரில் மூழ்கச் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது ஒருவனுடைய வாழ்நாளைக் குறைக்கும். நீரில் தலை மூழ்கி நீராடியவன் அதன் பிறகு தன்னுடலின் எந்தப் பகுதியிலும் எண்ணெய் பூசக் கூடாது.(70)ஒருவன் சிறிதளவு எள்ளை உண்ணாமல் ஒருபோதும் உணவு உண்ணக்கூடாது[11]. ஒருவன் தூய்மையற்றிருக்கும் காலத்தில் ஒருபோதும் (வேதங்களையோ, வேறு சாத்திரங்களையோ) கற்பிக்கக்கூடாது. அதேபோலத் தூய்மையற்றிருக்கும்போது ஒருவன் கற்கவும் கூடாது.(71) புயல் எழும்போது, சுற்றுச்சூழலில் கெட்ட வாடை ஊட்புகும்போதோ ஒருவன் வேதங்களைக் குறித்து நினைக்கக்கூடாது. பழைய வரலாற்றை அறிந்தவர்கள் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட காதையை உரைக்கிறார்கள். தூய்மையற்றவனாயிருக்கையில் ஓடுபவனோ, அத்தகைய சூழ்நிலையில் வேதங்கற்பவனோ, உண்மையில் மறுபிறப்பாள பிராமணனே ஆனாலும் தகாத காலங்களில் வேதம்படிப்பவன் தன் வேதத்தை இழந்து தன் வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான்.(72-74) எனவே, தடைசெய்யப்பட்ட காலங்களில் குவிந்த கவனத்துடன் ஒருவன் ஒருபோதும் வேதங்கற்கக்கூடாது.சூரியனை நோக்கியோ, சுடர்மிக்க நெருப்பை நோக்கியோ, பசுவை நோக்கியோ, ஒரு மறுபிறப்பாள மனிதனை நோக்கியோ, சாலையிலோ இயற்கையில் அழைப்புக்குப் பதில் சொல்பவன் குறைந்த காலமே வாழ்கிறான். பகல் வேளையில் இயற்கையின் அழைப்புகள் இரண்டுக்கும் வடக்கு நோக்கி பதிலளிக்க வேண்டும் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டும்}.(75,76) இரவில் அவ்வழைப்புகளுக்குத் தெற்கு நோக்கி பதிலளிக்கலாம். இவ்வாறு செய்வதால் ஒருவன் தன் வாழ்நாளைக் குறைத்துக் கொள்வதில்லை. நீண்ட நாள் வாழ விரும்பும் ஒருவன், பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் பாம்பு ஆகிய மூன்றும் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் ஒருபோதும் அலட்சியம் செய்யவோ, அவமதிக்கவோ கூடாது. இம்மூன்றும் கடும் நஞ்சுமிக்கவையாகும். பாம்பு கோபமடைந்தால் தனக்குக் குற்றமிழைத்தவனைத் தன்னுடைய ஒரே ஒரு பார்வையால் மட்டுமே கூட எரித்துவிடும்.(77,78) க்ஷத்திரியன் கோபப்பட்டாலும் தன் கோபத்துக்குத் தகுந்த பொருளாக இருப்பவனைக் கண்டவுடன் தன் சக்தியால் எரித்துவிடுவான். இவ்விருவரை விடப் பலவானான பிராமணன், தன் கோபத்திற்குரிய பொருளாக இருப்பவனை மட்டுமல்லாமல் அவனுடைய மொத்த குலத்தையும், பார்வையால் மட்டுமல்லாமல் எண்ணத்தாலேயே அழித்து விடுவான்.(79) எனவே, ஞானம் கொண்ட ஒருவன், இம்மூவரிடமும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஒருவன் தன் ஆசானிடம் ஒருபோதும் எந்தச் சச்சரவிலும் ஈடுபடக்கூடாது. ஓ! யுதிஷ்டிரா, ஆசான் கோபமடைந்தால் உரிய கௌரவங்களுடன் அவர் தணிவடையச் செய்யப்பட வேண்டும். ஆசான் சொல்வது மொத்தமும் தவறாக இருந்தாலும், ஒருவன் அவரைப் பின்பற்றிக் கௌரவிக்கவே வேண்டும்.(81) ஆசானுக்கு எதிராக அவதூறு பரப்புவது அவ்வாறு செய்பவர்களின் வாழ்வை ஐயமில்லாமல் எரிக்கும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவாகச் சென்று இயற்கையின் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே தன் கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்.(82) ஒருவன் தன் உணவில் எஞ்சியவற்றையும், பாத்திரங்களையும் {இலைகளையும்} தன் வசிப்பிடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் வீச வேண்டும். உண்மையில் தன் நன்மையில் விருப்பம் உள்ளவன் இவை யாவற்றையும் செய்ய வேண்டும். ஒருவன் சிவப்பு மலர்களாலான மாலைகளை அணியக்கூடாது. உண்மையில் ஞானம் கொண்ட வருவன் வெள்ளை நிற மலர்களாலான மாலைகளையே அணிய வேண்டும்.(83) ஓ! பெரும் வலிமையுள்ளவனே, தாமரையையும், அல்லியையும் புறக்கணித்தாலும், நீரியில் விளைவதாக இருந்தால் ஒருவன் தன் தலையில் சிவப்பு மலரையும் சூடலாம்[12].(84) தங்கத்தாலான மாலை எந்தச் சூழ்நிலையிலும் தூய்மையற்றதாகாது. ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு நீரில் கலந்த நறுமணப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.(85)ஒருவன் அடி உறுப்புகளை மறைப்பதற்கு மேலாடையையும், மேல் உறுப்புகளை மறைப்பதற்குக் கீழாடைகளையும் ஒருபோதும் அணியக்கூடாது. அதே போலப் பிறர் உடுத்திய ஆடைகளையும் ஒருபோதும் அவன் அணியக்கூடாது. மேலும், பக்கவாட்டில் இரு விளிம்புகள் இல்லாத ஆடைகளை ஒருவன் உடுத்தக்கூடாது.(86) ஓ! மன்னா, ஒருவன் படுக்கைக்குச் செல்லும்போது வேறு உடையை உடுத்த வேண்டும். சாலையில் பயணிக்கும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும். அதே போலத் தேவர்களை வழிபடும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும்.(87) புத்தியுள்ள மனிதன் தன் அங்கங்களில் பிரியங்கு {தினை}, சந்தனம், வில்வம் {வில்வக்காய்}, தகரம் {ஒரு நறுமணப்பொருள் / நந்தியார்வட்டை}, கேஸரம் {கரிசலாங்கண்ணி} ஆகியவற்றாலான களிம்புகளைப் பூச வேண்டும்.(88) உண்ணாவிரதம் நோற்கும் ஒருவன், நீராடுவதன் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஆபரணங்கள் மற்றும் களிம்புகளால் தன் மேனியை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் எப்போதும் பாலினக்கலவியைத் தவிர்க்க வேண்டும்.(89) ஓ! ஏகாதிபதி, ஒருவன் தன் சொந்தக்காரனாகவே இருந்தாலும், ஒரே பதவி கொண்டவனாகவே இருந்தாலும் ஒரே தட்டில் ஒருபோதும் உண்ணக்கூடாது. விலக்கப்பட்ட காலத்தில் உள்ள பெண்ணால் தயாரிக்கப்பட்ட உணவையும் ஒருபோதும் உண்ணக்கூடாது.(90)
ஒருவன் சாறு எடுக்கப்பட்ட எந்த உணவையும் உண்ணவோ, அப்படிப்பட்ட பானத்தைப் பருகவோ கூடாது. அதே போல, ஒருவன் உண்ணும் உணவை விருப்பத்துடன் பார்க்கும் மனிதர்களுக்கு ஒரு பகுதியைக் கொடுக்காமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தூய்மையற்ற ஒருவனுடைய அருகில் அமரக்கூடாது. அதே போல அறத்தில் முதன்மையானவர்கள் அருகிலும் அவன் அமரக்கூடாது.(91) அறச்செயல்களில் தடை செய்யப்பட்டிருக்கும் உணவுகள் அனைத்தையும் வேறு சந்தர்ப்பங்களிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், அரசமரக் கனி மற்றும் ஆலங்கனிகளையும், சணல் இலைகளையும் மற்றும் அத்திக்கனிகளையும் ஒருபோதும் உண்ணக்கூடாது. வெள்ளாடுகள், பசுக்கள் மற்றும் மயிலின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது.(92,93) உலர்ந்த இறைச்சியையும், பழைய இறைச்சியையும் ஒருவன் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் எவனும் உப்பைத் தன் கையில் எடுத்து ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போல, இரவில் தயிர் மற்றும் கரைத்தமாவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருவன் தவிர்க்க வேண்டும். ஒருவன் காலையில் ஒரு முறையும், மாலையில் ஒருமுறையும் தவிர உள்ள இடைவெளியில் உணவனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(94,95)
மயிர் காணப்படும் எந்த உணவையும் ஒருவன் ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போலப் பகைவனின் சிராத்தத்திலும் ஒருவன் உண்ணக்கூடாது. ஒருவன் அமைதியாக உண்ண வேண்டும்; மேலாடையால் தன் மேனியை மறைத்துக் கொள்ளாமல், அமராமல் ஒருபோதும் உண்ணக்கூடாது.(96) எந்த உணவையும் வெறுந்தரையில் இட்டு உண்ணக்கூடாது. அமர்ந்த நிலை தவிர வேறு எந்த நிலையிலும் ஒருபோது உண்ணக்கூடாது. ஒருவன் உண்ணும்போது எந்த ஒலியையும் உண்டாக்கக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தன் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு முதலில் நீரையும், உணவையும் காணிக்கை அளித்து, இவ்வாறு விருந்தினருக்குத் தொண்டாற்றிய பிறகே தான் உண்ண அமர வேண்டும். நண்பர்களுடன் வரிசையில் அமர்ந்து, நண்பர்களுக்குக் கொடுக்காமல் எந்த உணவையும் உண்பவன் கடும் நஞ்சை உண்பதாகச் சொல்லப்படுகிறது. நீர், பாயஸம், மாவு, தயிர், நெய், தேன் ஆகியவற்றைப் பொறுத்தவரையில்,(97-99) ஒருவன் பருகிய பிறகு, அல்லது உண்டபிறகு எஞ்சியவற்றை ஒருபோதும் பிறருக்குக் கொடுக்கக்கூடாது. ஓ! மனிதர்களின் தலைவா, ஒருவன் எந்த உணவையும் ஐயத்துடனே உண்ணக்கூடாது[13].(100)நன்மையை விரும்பும் ஒருவன், உணவை நிறைவு செய்த பிறகு ஒருபோதும் தயிரைக் குடிக்கக்கூடாது. உணவு உண்ட பிறகு ஒருவன் தன் வாயையும் முகத்தையும் தன் (வலக்) கரத்தால் மட்டுமே கழுவிக் கொண்டு, சிறிதளவு நீரை எடுத்து வலக்காலின் பெருவிரலை அதில் மூழ்கச் செய்ய வேண்டும்.(101) கழுவிய பிறகு, உச்சந்தலையைத் தன் (வலக்) கரத்தால் தீண்ட வேண்டும். அடுத்ததாகக் குவிந்த கவனத்துடன் நெருப்பைத் தீண்ட வேண்டும்.(102) இந்த விதிமுறைகள் அனைத்தையும் நோற்பது எவ்வாறு என்பதை அறிந்த மனிதன், தன் உற்றார் உறவினரில் முதன்மையான இடத்தை அடைவதில் வெல்கிறான். உணவை உண்டு முடித்த ஒருவன், தன் மூக்கு, கண்கள், காதுகள், உந்தி மற்றும் தன் இரு கரங்களையும் நீரால் கழுவ வேண்டும்.(103) எனினும், அவன் தன் கரங்களை ஈரமாக வைத்துக் கொள்ளக்கூடாது. கட்டைவிரலின் நுனியில் இருக்கு அடிவரை உள்ள இடத்தில் பிரம்மம் என்றறியப்படும் புனிதமான தீர்த்தம் இருக்கிறது.(104) சுண்டு விரலின் {கட்டைவிரலில் இருந்து ஐந்தாம் விரலின்} பின்பகுதியில் தேவ தீர்த்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதா, கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் {ஆட்காட்டி விரல்}ஆகியவற்றுக்கிடையில் உள்ள இடைவெளியானது, விதிப்படி நீரைத் தீண்டிய பிறகு பித்ரு சடங்குகளைச் செய்வதில் பயன்படுத்தப்பட வேண்டும்[14]. ஒருவன் பிறரை அவதூறு செய்வதில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. அதேபோல ஏற்பில்லா {இனிமையற்ற} எதையும் சொல்லக் கூடாது.(105, 106)தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், பிறரின் கோபத்தைத் தூண்ட ஒருபோதும் முனையக்கூடாது. ஒருவன், தன் வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட ஒருவனிடம் உரையாட முனையக்கூடாது. அத்தகைய மனிதனைப் பார்ப்பதே தவிர்க்கப்பட வேண்டும்.(107) ஒருவன் வீழ்ந்துவிட்ட மனிதனிடம் ஒருபோதும் தொடர்பு கொள்ளக்கூடாது. அத்தகைய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் அவன் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறான். ஒருவன் பகல் வேளையில் பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. கன்னிகை, வேசி அல்லது மலடியுடன் ஒருபோதும் கலவி கொள்ளக்கூடாது.(108) விலக்குக் காலம் முடிந்து நீராடாத ஒரு பெண்ணுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடக்கூடாது. அறச்செயல்களின் நோக்கில் பல்வேறு அங்கங்களைக் கழுவிய பின்னர் ஒருவன் தன் உதடுகளை மும்முறையும், மீண்டும் இருமுறையும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அவன் தூய்மையடைந்து அறச்சடங்குகளுக்குத் தகுந்தவனாகிறான். பல்வேறு புலனுறுப்புகளையும் ஒருமுறை கழுவி விட்டு, மொத்த உடலிலும் நீர் தெளிக்கப்பட வேண்டும்.(110) இதைச் செய்த பிறகு ஒருவன் வேத விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும்.
ஓ! குரு குலத்தவனே, ஒரு பிராமணனுக்குரிய நன்மைக்கும், தூய்மைக்குமான துப்புரவு செயல்கள் எவை என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்பதற்கு முன்பும், பின்பும், தூய்மை தேவைப்படும் அனைத்துச் செயல்களிலும் ஒரு பிராமணன், பிரம்ம தீர்த்தம் என்றைழைக்கப்படும் பகுதியில் நீரை வைத்து ஆசமனம் செய வேண்டும்[15].(112) தொண்டையில் இருந்து ஒரு துகளை வெளியேற்றினாலோ, உமிழ்ந்தாலோ ஒருவன் வாயைக் கழுவினால்தான் தூய்மையடைவான். ஒருவன் முதிர்ந்தவராக உள்ள உறவினரையோ, ஏழையாக உள்ள நண்பனையோ தன் வீட்டில் நிறுவி, அவரும் தன் குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு அவரை ஆதரிக்க வேண்டும்[16]. இதைச் செய்வதன் மூலம் ஒருவன் புகழையும், நீண்ட வாழ்நாளையும் பெறுவதில் வெல்கிறான். ஒருவனுடைய வீட்டில் புறாக்கள் {பாராவதங்கள் / மாடப்புறாக்கள்} மற்றும் ஆண், பெண் கிளிகள் நிறுவப்படும்போது அஃது {அவ்வீடு} அருள் நிலையால் நிறையும்.(114) ஒருவனுடைய வீட்டில் இருந்தால், துயரை விலக்குவதில் இவை வெல்லும். கரப்பான்பூச்சிகளும் அதையே செய்யும். மின்மினிப்பூச்சிகள், பினந்தின்னிக் கழுகுகள், காட்டுப்புறாக்கள் {கபோதங்கள்}, வண்டுகள் ஆகியன(115) ஒருவனுடைய வீட்டுக்குள் நுழையவோ அங்கு வசிக்கவோ முனைந்தால், தேவர்களைத் தணிவடையச் செய்யும் செயல்கள் செய்யப்பட வேண்டும். அவையும், மீன்கொத்திகளும் தீய சகுனங்களைக் காட்டும் உயிரினங்களாகும்.(116)ஒருவன் உயர் ஆன்ம மனிதர்களின் ரகசியங்களை வெளியிடக்கூடாது; அவன் தடைசெய்யப்பட்ட பெண்களுடன் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது. மேலும் மன்னனின் மனைவியிடமோ, ராணியின் நண்பர்களுடனோ அத்தகைய கலவியில் ஈடுபடக்கூடாது.(117) ஓ! யுதிஷ்டிரா, மருத்துவர்கள், பிள்ளைகள், முதிர்ந்தவர்கள், பணியாட்கள் ஆகியோரிடம் ஒருபோதும் நெருக்கம் பாராட்டக்கூடாது. நண்பர்கள், பிராமணர்கள் மற்றும் தன்னிடம் பாதுகாப்பு நாடுபவர்கள் ஆகியோரை எப்போதும்அவன் ஆதரிக்க வேண்டும். ஓ! மன்னா, இதைச் செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஞானம் கொண்ட ஒருவன் தன் நன்மையில் விருப்பம் கொண்டவனாக இருந்தால், ஒரு பிராமணர்கள் மற்றும் தொழிலில் திறன்மிக்க ஒரு பொறியாளர் {சிற்பி} ஆகியோரின் துணையுடன் கட்டப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும்[17]. ஓ! மன்னா, மாலை சந்திப் பொழுதில் ஒருவன் உறங்கக்கூடாது. அத்தகைய காலத்தில் ஒருவன் எத்துறையின் ஞானத்தையும் அடையப் படிப்பதிலும் ஈடுபடக்கூடாது.(118-120) புத்திமானான ஒருவன் அத்தகைய நேரத்தில் ஒருபோதும் உண்ணக்கூடாது. இவ்வழியில் செயல்படுவதால் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஒருவன் பித்ருக்களைக் கௌரவிக்கும் எந்தச் சடங்கையும் ஒருபோதும் இரவில் செய்யக்கூடாது. ஒருவன் உணவு உண்ட பிறகு தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.(121) தன் முன்னேற்றத்தில் விருப்பமுள்ள ஒருவன் இரவில் நீராடக்கூடாது. ஓ! பாரதா, இரவில் மாவை உண்பதையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(122)உணவு மற்றும் பானங்களில் எஞ்சியவையும், தேவர்களுக்கு வழிபாடு செய்யப் பயன்படுத்திய மலர்களையும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இரவில் விருந்தினரை அழைத்து, நிறைவடையும் அளவுக்கு உண்ணச் சொல்லி அதீத மதிப்புடன் அவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது. அதே போல, தானும் நிறைவடையும் அளவுக்கு இரவில் உண்ணக்கூடாது.(123) ஒருவன் ஒரு பறவைக்கு உணவூட்டிய பிறகு (அதை உண்பதற்காகக்) கொல்லக்கூடாது. ஞானம் கொண்ட ஒருவன், ஓ! பாரதா, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவளும், மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், சரியான வயதைக் கொண்டவளுமான ஒரு கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும். அவளிடம் பிள்ளைகளைப் பெற்று, அந்த வழிமுறையின் மூலம் தன் குலத்தைத் தழைக்கச் செய்து,(124,125) ஓ! ஏகாதிபதி, தன் மகன்கள் பொது அறிவையும், குடும்பப் பழக்க வழக்கங்களின் அறிவையும் அடைவதற்காக அவர்களை ஒரு நல்ல ஆசானிடம் அனுப்பி வைக்க வேண்டும். ஒருவன் பெறும் மகள்களை, மதிப்பிற்குரிய குடும்பங்களைச் சார்ந்தவர்களும், புத்தி கொண்டவர்களுமான இளைஞர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.(126) ஓ! பாரதா, குடும்ப மரபுரிமைகளில் ஒரு பகுதியை மகன்களுக்கான வாழ்வாதாரமாகக் கொடுத்து அவர்களை அவற்றில் நிறுவ வேண்டும். பித்ருக்கள் அல்லது தேவர்களைக் கௌரவிக்கும் எந்தச் செயலில் ஈடுபடும் முன்பும் ஒருவன் தன் தலையை நீரில் மூழ்கச் செய்து நீராட வேண்டும்.(127)
ஒருவன் தன் சொந்த திதியில் {தான் பிறந்த அதே திதியில்} ஒருபோதும் சிராத்தம் செய்யக்கூடாது. ஓ! பாரதா, (முந்தைய அல்லது பிந்தைய) பாத்ரபதங்கள் {பூரட்டாதி, உத்தரட்டாதி ஆகிய} இரண்டிலும், கிருத்திகை நட்சத்திரத்திலும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது.(128) கடுமையானவையாகக் கருதத்தக்க (அஷ்லேஷம் {ஆயில்யம்} முதலிய) நட்சத்திரங்களிலும், கணக்கீட்டில் பகையாகத் தெரிபவை எதனிலும் ஒருபோதும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது. உண்மையில் இவ்வகையில் கணிய {ஜோதிட} சாத்திரங்களில் தடை செய்யப்பட்ட இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் {சிராத்தம் செய்வதற்குத்} தவிர்க்கப்பட வேண்டும்.(129) ஒருவன் நாவிதர் முடி மழிக்கும்போது கிழக்கையோ, வடக்கையோ நோக்கி இருக்க வேண்டும். ஓ! பெரும் மன்னா, அவ்வாறு செய்வதால் நீண்ட வாழ்நாளை அடைவதில் அவன் வெல்கிறான்.(130) ஓ! பாரதர்களின் தலைவா, ஒருவன், பிறரைக் குறித்த அவதூறு பேசுவது, தன்வெறுப்பில் தன்னைத் தானே கடிந்து கொள்வது ஆகியவற்றில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறரை அவதூறு செய்வதும், தன்னையே தூற்றிக் கொள்வதும் பாவம் நிறைந்த செயல்களாகும்.(131) அங்கக் குறைபாடு உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஒரு கன்னிகையே இருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரே பிரவரங்களைக் கொண்ட {ஒரே கோத்திரத்தில் பிறந்த} பெண் தவிர்க்கப்பட வேண்டும்; ஒழுங்கற்ற உறுப்புகளைக் கொண்ட பெண்ணும், தன் தாய் சார்ந்த குலத்தில் பிறந்த பெண்ணும் தவிர்க்கப்பட வேண்டும்.(132)
ஞானம் கொண்ட ஒருவன், முதிய பெண், காட்டு வாழ்க்கை வாழ இல்லற வாழ்வுமுறையைக் கைவிட்டவள், கணவனுக்கு உண்மையுள்ள பெண், நலமற்ற பிறப்புறுப்புகளைக் கொண்டவள் ஆகியோரிடம் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது.(133) மஞ்சள் நிறம் கொண்டவள், தொழுநோயால் பீடிக்கப்பட்டவள், வலிப்புநோய் உள்ள குடும்பத்தில் பிறந்தவள், பிறப்பு மற்றும் பழக்க வழக்கங்களில் தாழ்ந்தவள்,(134) சிவித்ரி (தொழுநோய்} என்றழைக்கப்படும் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள், விரைவில் மரணம் நேரும் குலத்தில் பிறந்தவள் ஆகியோரையும் திருமணம் செய்து கொள்வது தகாது. மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், பல்வேறு வகைத் தகுதிகளை நிறைவு செய்பவளும்,(135) ஏற்புடையவளும் {இனிமையானவளும்}, அழகானவளுமான ஒரு கன்னிகையே திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தன்னை விட உயர்ந்த குடும்பம் அல்லது குறைந்தது சமமான குடும்பத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.(136) தன் செழிப்பை விரும்பும் ஒருவன், தாழ்ந்த வகை {வர்ணப்} பெண்ணையோ, தான் பிறந்த வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட பெண்ணையோ ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. கவனமாக நெருப்பை மூட்டும் ஒருவன், வேதங்கள் அறிவித்திருக்கும், அல்லது பிராமணங்கள் {வேதசடங்குகள்} விதித்திருக்கும் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்ற வேண்டும். ஒருவன் ஒருபோதும் பெண்களுக்குத் தீங்கிழைக்க முனையக்கூடாது. மனைவிகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.(137,138)
வன்மம் எப்போதும் வாழ்வைக் குறுக்கும். எனவே, ஒருவன் வன்மம் வளர்ப்பதை எப்போதும் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதில் உறக்கம் வாழ்வைக் குறுக்குகிறது. சூரியன் எழுந்த பிறகும் உறங்குவது வாழ்வை குறுக்குகிறது.(139) சந்திப் பொழுதுகள், இரவின் தொடக்கத்திலும் உறங்குபவன், தூய்மையற்ற நிலையில் உறங்கச் செல்பவன் ஆகியோர் தங்கள் வாழ்வைக் குறைத்துக் கொள்கின்றனர். பிறன்மனைநயத்தல் எப்போதும் வாழ்வைக் குறுக்குகிறது. ஒருவன் சவரம் செய்த பிறகு தூய்மையற்ற நிலையில் இருக்கக்கூடாது[18].(140) ஓ! பாரதா, மாலைப்பொழுதில் ஒருவன் படிப்பதையோ, வேதம் உரைப்பதையோ, உண்பதையோ, நீராடுவதையோ கவனமாகத் தவிர்க்க வேண்டும்.(141) மாலை சந்தி வரும்போது ஒருவன் எச்செயலையும் செய்யாமல் தியானத்திற்காகத் தனது புலன்கள் அனைத்தையும் திரட்ட வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு பிராமணர்களை வணங்க வேண்டும்.(142)உண்மையில் ஒருவன் தேவர்களை வழிபடுவதற்கு முன்னரும், ஆசானை மரியாதையாக வணங்குவதற்கு முன்னரும் நீராட வேண்டும். ஒருவன் அழைக்கப்படாமல் ஒருபோதும் வேள்விக்குச் செல்லக்கூடாது. உண்மையில், ஒருவன் வேள்வி எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் காண்பதற்கு மட்டுமே விரும்பினால் அவன் அழைப்பில்லாமலேயே அங்கே செல்லலாம். ஒருவன் (ஏதோ ஓர் காரணத்திற்காக) அழைப்பில்லாமல் ஒரு வேள்விக்குச் சென்றாலும், அவ்வகையில் வேள்வி செய்பவனிடம் இருந்து அவன் உரிய வழிபாட்டைப் பெறவில்லையெனில் அவனுடைய வாழ்வுக் காலம் குறைகிறது. அந்நியர் பகுதிகளுக்கு ஒருவன் தனித்துப் பயணம் செல்லக்கூடாது. அதே போல இரவில் எந்த இடத்திற்கும் தனித்துச் செல்லக்கூடாது.(143,144) மாலை வருவதற்கு முன்பே ஒருவன் தன் வீட்டிற்குத் திரும்பி அதற்குள்ளேயே இருக்க வேண்டும். ஒருவன் தனது தாய், தந்தை மற்றும் ஆசானின் ஆணைகள் நன்மை விளைவிக்குமா, இல்லையா என்று தீர்மானிக்காமலேயே அவற்றுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் பெருங்கவனத்துடன் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் கவனிக்க வேண்டும்.(145,146) ஓ! மன்னா, யானை, குதிரை மற்றும் தேர் ஏற்றப் பயிற்சிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். இவற்றைக் கவனமாகக் கவனிக்கும் மனிதன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(147)
அத்தகைய மன்னன் பகைவர்களால் வெல்லப்படமுடியாதவனாகி தன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரில் தன்னைவிடச் சிறந்தவன் யாருமின்றி அவர்களை ஆள்வதில் வெல்கிறான். அத்தகைய நிலைய அடைபவனும், குடிமக்களைக் காக்கும் கடமையைக் கவனமாகச் செய்பவனுமான மன்னன் ஒருபோதும் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டான்.(148) ஓ! மன்னா, காரண அறிவியல், சொல்லறிவியல், கந்தர்வர்களின் அறிவியல், கலை என்ற பெயரில் அறியப்படும் அறிவின் அறுபத்துநான்கு கிளைகளையும் {கலைகளையும்} நீ அடைய வேண்டும்.(149) ஒருவன் நாள்தோறும் புராணங்கள், இதிகாசங்கள், மற்றும் உயர் ஆன்மா மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள் ஆகியவற்றை மனத்தில் கொள்ள வேண்டும்.(150) ஒருவனுடைய மனைவி விலக்கப்பட்ட காலத்தைக் கடக்கும்போது ஒருவன் அவளுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடாமல், உரையாடுவதற்கு அவளை அழைக்காமலும் இருக்க வேண்டும். ஞானம் கொண்ட மனிதன், நான்காம் நாளில் தூய்மைக்காக நீராடிய பிறகே அவளுடைய தோழமையை ஏற்க வேண்டும்.(151) விலக்குக் காலம் முதலில் தோன்றியதில் இருந்து ஐந்தாம் நாளில் ஒருவன் கலவியில் ஈடுபட்டால் அவன் மகளைப் பெறுகிறான். ஆறாம் நாளில் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் மகனை அடைகிறான். ஞானம் கொண்ட மனிதன், கலவி காரியத்தில் (ஒற்றைப்படை, இரட்டைப்படை என்ற) இவ்விதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.(152)
திருமணத்தின் மூலமாக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். ஒருவன் தன் சிறந்த சக்தியின்படி வேள்விகளில் தேவர்களைத் துதித்து, பல்வேறு வகைப் பொருட்களை வேள்வி தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(153) ஓ! மன்னா, இல்லற வாழ்வுமுறைக்காக {கிருஹஸ்தாஸ்ரமத்திற்காக} விதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ஒருவன் காட்டுத்துறவியின் {வானப்ரஸ்தாஸ்ரம} வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். நீண்ட காலம் வாழ்வதில் வெல்லும் மனிதர்களின் குறியீடுக்ள அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்.(154) ஓ! யுதிஷ்டிரா, என்னிடம் இருந்து கேட்கப்படாமல் எஞ்சியிருப்பதை நீ மூன்றுவேதங்களையும் நன்கறிந்த மனிதர்களின் வாய்களில் இருந்து கேட்க வேண்டும். ஒழுக்கமே செழிப்பின் வேர் என்பதை நீ அறிய வேண்டும். ஒழுக்கமே புகழை அதிகரிக்கிறது.(155) ஒழுக்கமே வாழ்நாளையும் நீட்டிக்கிறது. ஒழுக்கமே தீமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் அழிக்கிறது. ஒழுக்கமே அனைத்து வகை ஞானங்களுக்கும் மேன்மையானது எனச் சொல்லப்படுகிறது.(156) ஒழுக்கமே அறத்தை உண்டாக்குகிறது, அறமே வாழ்வை நீட்டிக்கிறது. ஒழுக்கமே புகழையும், நீண்ட வாழ்நாளையும், சொர்க்கத்தையும் விளைவிக்கிறது. ஒழுக்கமே (அனைத்து வகை நன்மைகளையும் கொண்டு வருவதற்குத்) தேவர்களைத் தணிவடையச் செய்யும் பெருந் திறன்மிக்கச் சடங்காகும். சுயம்புவான பிரம்மனே ஒருவன் அனைத்து வகை மனிதரிடமும் கருணை காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(157)
ஜியேஷ்டகனிஷ்டர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 105-அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் நடந்து கொள்ளும் முறை; தந்தைக்குரிய மதிப்பு; தாயின் மகிமை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அண்ணன் தன் தம்பியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தம்பிகள் தங்கள் அண்ணனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, நீ எப்போதும் உன் தம்பிகளிடம் அண்ணனுக்குரிய முறையில் நடந்து கொள்வாயாக. இந்தச் சகோதரர்களுக்கிடையில் நீயே எப்போதும் மூத்தவனாக இருக்கிறாய். ஓர் ஆசான் தன் சீடர்களிடம் எப்போதும் பின்பற்ற வேண்டிய உயர்ந்த ஒழுக்கத்தையே நீ உன் தம்பிகளிடம் பின்பற்றுவாயாக.(2) ஓர் ஆசான் ஞானமில்லாதவராக இருந்தால், சீடன் மதிப்புமிக்க வகையிலோ, முறையான வழியிலோ அவரிடம் நடந்து கொள்ள மாட்டான். ஓ! பாரதா, அந்த ஆசான் தூய்மையையும், உயர்ந்த ஒழுக்கத்தையும் கொண்டவராக இருந்தால், அந்தச் சீடனும் அதே வகை ஒழுக்கத்தை அடைவதில் வெல்வான்.(3) மூத்த சகோதரன் சில வேளைகளில் தன் தம்பிகள் செய்யும் செயல்களைக் கண்டு குருடனாகவும், தான் ஞானம் கொண்டவனாக இருப்பினும் சில வேளைகளில் அவர்கள் செய்யும் செயல்களைப் புரிந்து கொள்ளாதவன் போலவும் இருக்க வேண்டும். தம்பிகள் வரம்புமீறி குற்றம் புரிந்தால் அண்ணன் மறைமுக வழிமுறைகளில் அவர்களைத் திருத்த வேண்டும்.(4) சகோதரர்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து, அண்ணன் நேரடியாகவோ, வெளிப்படையான வழிமுறைகளிலோ தன் தம்பியைத் திருத்தினால், ஓ! குந்தியின் மகனே, அத்தகைய நல்ல புரிந்துணர்வைக் காண்பதால் கவலையில் பீடிக்கப்படும் பகைவர்கள், அவர்களுக்குள் வேற்றுமையை விளைவித்து, சகோதரர்களைப் பிரிப்பதில் தங்களை நிறுவிக் கொண்டு, அவர்களுக்கு ஒற்றுமையின்மை உண்டாக்க எப்போதும் முனைவார்கள்.(5)
ஓர் அண்ணனே, குடும்பத்தின் செழிப்பை அதிகரிக்கவோ, முற்றிலும் அழிக்கவோ செய்வான். அண்ணன் அறிவில்லாதவனாகவும், தீய நடத்தை கொண்டவனாகவும் இருந்தால், அவன் மொத்த குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டு வருவான்.(6) தம்பிகளுக்குத் தீங்கு செய்யும் அண்ணன் மூத்தவனாகக் கருதப்படாமல், தன் குடும்ப உடைமையில் உள்ள தன் பங்கை இழந்து, மன்னனால் அடக்கப்படத் தகுந்தவனாகிறான்.(7) வஞ்சகமாகச் செயல்படும் மனிதன், துன்பமும், அனைத்து வகைத் தீமைகளும் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதனின் பிறப்பு, பிரம்பு மலர்களைப் போலவே எந்தப் பயனுமில்லாததாகும்[1].(8) பாவம் நிறைந்த மனிதன் பிறக்கும் குடும்பமானது அனைத்து வகைத் தீமைகளுக்கும் ஆட்படுகிறது. அத்தகைய மனிதன் புகழ்க்கேட்டைக் கொண்டு வருகிறான், மேலும் அந்தக் குடும்பத்தின் நற்செயல்கள் அனைத்தும் மறைந்து போகும்.(9) தீச்செயல்களில் ஈடுபடும் சகோதரர்கள் குடும்ப உடைமையில் உள்ள தங்கள் பங்குகளை இழக்கிறார்கள். அத்தகைய வழக்கில், அண்ணனானவன் யௌதுக {தன் மனைவி குடும்பத்தின் மூலம் வந்த சீதன} உடைமையில் எந்தப் பங்கையும் தன் தம்பிகளுக்குக் கொடுக்காமல் மொத்தத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(10)தந்தைவழி உடைமைகளைப் பயன்படுத்தாமல் ஓர் அண்ணன் தொலைவான இடத்திற்குச் செல்வதன் மூலம் எந்த உடைமையையும் ஈட்டினால் அவன் அத்தகைய உடைமைகளில் தன் தம்பிகளுக்கு எந்தப் பங்கையும் கொடுக்காமல் அவற்றைத் தன் சொந்த பயன்பாட்டுக்கே கொள்ளலாம்.(11) பிரியாத சகோதரர்கள், (தங்கள் தந்தையின் வாழ்நாள் காலத்திலேயே) குடும்ப உடைமைகளைப் பிரித்துக் கொள்ள விரும்பினால், தந்தையானவன் தன் மகன்கள் அனைவருக்கும் அவற்றைச் சமப் பங்குகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.(12) அண்ணன், பாவச்செயல்களைச் செய்பவனாகவும், எந்தச் சாதனைக்காகவும் பிரித்தறியப்பட முடியாதவனாகவும் இருந்தால் அவன் தன் தம்பிகளால் அவமதிக்கப்படுவான். மனைவியோ, தம்பியோ பாவம் நிறைந்தவர்களாக இருந்தாலும் அப்போதும் அவள் அல்லது அவனின் நலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.(13) அறத்தின் உச்சவினையை {பலாபலன்களை} அறிந்த மனிதர்கள் அறமே உயர்ந்த நன்மை என்று சொல்கிறார்கள். ஓர் உபாத்யாயர் {தலைமை ஆசிரியர்} பத்து ஆச்சார்யர்களைவிட {ஆசிரியர்களைவிட} உயர்ந்தவர். தந்தையானவர் பத்து உபாத்யாயர்களுக்கு இணையானவர்.(14) ஒரு தாயானவள், பத்து தந்தைக்கோ, மொத்த பூமிக்கோ இணையானவள். தாயினும் பெரியோர் யாருமில்லை. உண்மையில் அவள் தனக்கு உரிய மதிப்புகள் அனைத்தையும் கடந்திருப்பவள்[2].(15)இதன் காரணமாகவே மக்கள் ஒரு தாயை அதிக மதிப்புக்குத் தகுந்தவளாகக் கருதுகிறார்கள். ஓ! பாரதா, தந்தை மூச்சை நிறுத்தியதும் அண்ணனே தந்தையாகக் கருதப்பட வேண்டும்.(16) அண்ணனே அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து, அவர்களைப் பாதுகாக்கவும், பேணி வளர்க்கவும் வேண்டும். தம்பிகள் அனைவரும் அவனை வணங்கி அவனது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.(17) உண்மையில் அவர்கள், தங்கள் தந்தை உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தார்களோ அப்படியே அவனை {அண்ணனைச்} சார்ந்து வாழ வேண்டும். ஓ! பாரதா, தந்தையும், தாயுமே உடலைப் படைக்கின்றனர்.(18) எனினும், ஆச்சாரியார் விதிக்கும் பிறவியே உண்மையில் மங்காததாகவும், அழிவில்லாததாகவும், உண்மையான பிறவியாகவும் கருதப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அக்காள் {தமக்கை} ஒரு தாயைப் போன்றவளாவாள். குழந்தைப் பருவத்தில் பாலூட்ட {உணவூட்டக்} கூடியவளானதால் அண்ணனின் மனைவியும் {அண்ணியும்} ஒரு தம்பிக்குத் தாயைப் போன்றவளே ஆவாள்[3]” என்றார் {பீஷ்மர்}.(19)
உபவாஸ பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 106-உபவாஸங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து அங்கிரஸ் சொன்னது; வேள்விகளுக்கு இணையான பலன்களை அளிக்கக்கூடிய குறிப்பிட்ட உபவாஸங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அனைத்து வகை {வர்ண} மனிதர்களும், மிலேச்சர்களும் நோன்புகள் நோற்கும் இயல்பினராகத் தெரிகிறார்கள். எனினும், இதன் காரணத்தை நாம் அறிந்ததில்லை.(1) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் மட்டுமே நோன்புகள் {விரதங்கள்} நோற்க வேண்டும் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஓ! பாட்டா, உண்ணாநோன்புகளை {உபவாஸங்களை{ நோன்பதன் மூலம் பிற வகை {வர்ண} மக்கள் எவ்வாறு பலனை ஈட்டுவார்கள்?(2) ஓ! மன்னா, நோன்புகளும் {விரதங்களும்}, உண்ணாநோன்புகளும் {உபவாஸங்களும்} அனைத்து வகை {வர்ண} மக்களும் எவ்வாறு நோற்கிறார்கள்? உண்ணாநோன்பு நோற்பதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் அடையும் கதி என்ன?(3) உண்ணாவிரதங்கள் பெரும்புகலிடங்களாக இருப்பவை, உயர்ந்த பலன்களைத் தரவல்லவை என்று சொல்லப்படுகிறது. ஓ! மனிதர்களின் இளவரசே, நோன்புகள் நோற்கும் மனிதனால் இவ்வுலகில் ஈட்டப்படும் கனியென்ன? ஒருவன் அறமீட்டும் வழிமுறைகள் என்னென்ன? ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஒருவன் சொர்க்கத்தையும், பலன்களையும் அடைவதில் வெல்லும் வழிமுறைகள் என்னென்ன?(5) ஓ! மன்னா, உண்ணாநோன்பு நோற்ற பிறகு ஒருவன் ஏன் கொடையளிக்க வேண்டும்? இன்பத்துக்கு வழிவகுக்கும் நோக்கங்களை அடைவதில் வெல்ல ஒருவன் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன?” என்று கேட்டான்”.(6)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “தர்மதேவனால் உண்டானவனும் {யுதிஷ்டிரன்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், தம்மிடம் இவ்வாறு சொன்னவனுமான குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், சாந்தனுவின் மகனுமான பீஷ்மர் பின்வரும் சொற்களில் பதிலளித்தார்.(7)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, விதிப்படி நோன்புகள் {விரதங்கள்} நோற்பதால் உண்டாகும் உயர்ந்த பலன்களை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(8) ஓ! பாரதா, நீ இன்று கேட்ட இதே கேள்விகளை நான் உயர்ந்த தவத் தகுதியைக் கொண்ட முனிவர் அங்கிரசிடம் கேட்டிருக்கிறேன்.(9) இவ்வாறு என்னால் கேட்கப்பட்டவரும், வேள்வித்தீயில் உண்டானவருமான அந்தச் சிறப்புமிக்க முனிவர், விதிப்படி செய்யும் உண்ணாநோன்புகளை நோற்பது குறித்து இவ்வாறு என்னிடம் சொன்னார்.(10)
அங்கிரஸ் {பீஷ்மரிடம்}, “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் பொறுத்தவரையில் ஒரே சீராக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பது {உபவாஸம் இருப்பது} அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், ஓ! மனிதர்களின் தலைவா, ஓரிரவு உண்ணா நோன்பு {உபவாஸம்}, ஈரிரவு, மூவிரவு உண்ணா நோன்புகளே அவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. (மூன்று இரவுகளைக் கடந்து அவர்கள் {பிராமணர்களும், க்ஷத்திரியகளும்} உண்ணாவிரதமிருக்கக்கூடாது).(11) வைசியர்களையும், சூத்திரர்களையும் பொறுத்தவரையில் உண்ணாநோன்புக்கான அவர்களது கால அளவு ஓரிரவே ஆகும். மடமையினால் {அறியாமையினால்} அவர்கள் ஈரிரவு அல்லது மூவிரவு உண்ணாநோன்புகளை நோற்றால், அத்தகைய உண்ணா நோன்புகள் அவர்களது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.(12) உண்மையில், (குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்) அவர்களுக்கு ஈரிரவு உண்ணாநோன்புகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், கடமைகளை அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அவர்களுக்கு மூவிரவு உண்ணாநோன்புகள் விதிக்கப்படவில்லை[1].(13) ஓ! பாரதா, ஞானம் கொண்ட மனிதன், தன் புலன்களையும், ஆன்மாவையும் அடக்கி, ஐந்தாம் சந்திர நாள் {பஞ்சமி}, ஆறாம் சந்திரநாள் {சஷ்டி} மற்றும் முழு நிலவு {பௌர்ணமி} நாள் ஆகியவற்றில் இரண்டு வேளை உணவில் ஒன்றைத் தவிர்த்து உண்ணா நோன்பிருந்தால் அவன் மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும் {பொறுமையுள்ளவனாகவும்}, மேனியழகு கொண்டவனாகவும், சாத்திரங்களை அறிந்தவனாகவும் ஆகிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் பிள்ளையற்றவனாகவோ, ஏழையாகவோ ஆவதில்லை.(14,15)
ஐந்து மற்றும் ஆறாம் சந்திர நாட்களில் {பஞ்சமி, சஷ்டிகளில்} தேவர்களைத் துதித்து வேள்விகளைச் செய்பவன், தன் குடும்பத்தினர் அனைவரையும் கடந்து, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு உணவூட்டுவதில் வெல்கிறான். தேய்பிறையின் எட்டாம் மற்றும் பதினான்காம் சந்திரநாட்களில் {அஷ்டமி மற்றும் சதுர்த்தசியில்} உண்ணாநோன்புகளை {உபவாசம்}[2] நோற்பவன் அனைத்து வகைப் பிணிகளில் இருந்தும் விடுபட்டுப் பெரும் சக்தியை அடைகிறான். மார்கசீரிஷம் என்றழைக்கப்படும் மாதம் {மார்கழி மாதம்} முழுவதையும் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவைத்தவிர்த்துக் கழிப்பவன்,(16,17) மதிப்புடனும், அர்ப்பணிப்புடனும் பிராமணர்களுக்கு உணவூட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். அத்தகைய மனிதன் செழிப்புடன் கூடியவனாகிறான், அனைத்து வகைத் தானியங்களும் அவனுடையதாகின்றன.(18) அவன் சக்தியுடன் கூடியவனாகிறான். உண்மையில், அத்தகைய மனிதன், தன் களங்களில் {வயல்களில்} இருந்து அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்து, பெருஞ்செல்வத்தையும், அதிகத் தானியங்களையும் அடைகிறான்.(19) ஓ! குந்தியின் மகனே, ஒவ்வொரு நாளும் இரு வேளை உணவுகளில் ஒன்றைத் தவிர்த்து பௌஷ மாதம் {தை மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், பெரும் நற்பேற்றுடன் கூடியவனாகி, ஏற்புடைய பண்புகளையும், பெரும்புகழையும் அடைகிறான்.(20)ஒவ்வொரு நாளும் இரு வேளை உணவில் ஒன்றைத் தவிர்த்து மாக மாதம் {மாசி மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பை அடைந்து, தன் சுற்றத்தாருக்கு மத்தியில் திறன்மிக்க நிலையை அடைகிறான்.(21) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு பகதைவத மாதம் {பங்குனி மாதம்} முழுவதையும் கழிப்பவன், பெண்களுக்குப் பிடித்தமானவனாகி, அவர்களை உடனடியாகத் தன் வசப்படுத்துவான்.(22) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு சைத்ர மாதம் {சித்திரை மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பை அடைந்து, பொன், ரத்தினங்கள் மற்றும் முத்துக்களின் வளம்பெறுபவனாகிறான்.(23) புலனடக்கத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு வைசாக மாதம் {வைகாசி மாதம்} முழுவதையும் கழிப்பது, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தன் சுற்றத்தாருக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(24) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு ஜய்ஷ்ட மாதம் {ஆனி மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த நிலையையும், பெருஞ்செல்வத்தையும் அடைவதில் வெல்கிறான். அது {இவ்வாறு நோற்பது ஒரு} பெண்ணாக இருந்தால், அவளும் அதே வெகுமதியையே அறுவடை செய்கிறாள்.(25)
ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு ஆஷாத மாதம் {ஆடி மாதம்} முழுவதையும் கழிப்பவன், அதிகத் தானியங்களையும், பெருஞ்செல்வத்தையும், பெரும் சந்ததியையும் அடைகிறான்.(26) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு சிரவண மாதம் {ஆவணி மாதம்} முழுவதையும் கழிப்பவன், எங்கே வசிக்க நேர்ந்தாலும் அபிஷேக கௌரவங்களைப் பெற்று, தான் ஆதரிக்கும் உற்றார் உறவினருக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைவான்.(27) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு பிரோஷ்தபத மாதம் {புரட்டாசி மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், பெரும் செல்வத்துடன் கூடியவனாகி, நிலைத்துப் பெருகும் செல்வாக்கையும் அடைவான்.(28) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு அஷ்வின் மாதம் {ஐப்பசி மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், ஆன்ம மற்றும் உடல் தூய்மையை அடைந்து, விலங்குகளையும், அபரிமிதமான வாகனவகைகளையும், பெரிய சந்ததியையும் பெறுவான்.(29) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு கார்த்திகா மாதம் {கார்த்திகை மாதம்} முழுவதையும் கழிப்பவன், பெரும் வீரத்தையும், பல மனைவிகளையும், பெரும்புகழையும் அடைவான்.(30)
ஓ! மனிதர்களின் தலைவா, நான் இப்போது பனிரெண்டு மாதங்களில் நோன்புகள் நோன்பதன் மூலம் மனிதர்கள் என்னென்ன பலன்களை அடைவார்கள் என்பதை விவரமாகச் சொன்னேன். ஓ! மன்னா, இனி, ஒவ்வொரு சந்திர நாளுக்கும் உரிய விதிகள் என்ன என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(31) ஒவ்வொரு நாளும் அரிசியைத் தவிர்த்து, ஒவ்வொரு அரைத்திங்களின் {பக்ஷத்தின்} முடிவிலும் அதை {அரிசியை} உட்கொண்டால் அவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களையும், பெரும் சந்ததியையும், நீண்ட வாழ்நாளையும் அடைவான்.(32) ஒவ்வொரு மாதமும் மூன்று இரவுகள் எனப் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து உண்ணாநோன்பை நோற்பவன், போட்டிக்கு எதிரி இல்லாமல், ஒரே உயரத்திற்கு வளர முயற்சிக்கும் வேறு எவராலும் எந்தக் கவலையும் உண்டாகாமல் தன் உற்றார் உறவினர் மற்றும் துணைவர்களுக்கு மத்தியில் மேன்மையான நிலையை அடைவான்.(33) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் சொல்லும் இந்த விதிகள் பனிரெண்டு வருடங்களுக்குப் பின்பற்றப்பட வேண்டியவையாகும். உன் சார்பு அதை நோக்கி வெளிப்படட்டும்.(34)
முற்பகலில் ஒரு முறையும், மாலைக்குப் பிறகு ஒருமுறையும் உண்டு, இடைவெளியில் பருகுவதை (அல்லது எதையும் உண்பதைத்) தவிர்த்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணையை நோற்று, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் தெளிந்த நெய்யை ஆகுதியாக ஊற்றும் மனிதன்(35) ஆறுவருடங்களில் நிச்சயமான வெற்றியை அடைகிறான். இதில் ஐயமேதும் கிடையாது. அத்தகைய மனிதன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை ஈட்டுகிறான்.(36) பலன்களுடன் கூடியவனாக அனைத்துக் களங்கங்களிலிருந்தும் விடுபடும் அவன், ஆடல் மற்றும் பாடல் ஒலிகளை எதிரொலிக்கும் அப்ஸரஸ்களின் உலகத்தை அடைந்து, பேரழகுடன் கூடிய ஆயிரம் காரிகையரின் துணையுடன் தன் நாட்களைக் கடத்துவான்.(37) உருக்கப்பட்ட பொன்னின் நிறத்தாலான தேரைச் செலுத்திச் செல்லும் அவன் பிரம்மலோகத்தில் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான். அந்தப் பலன் தீர்ந்ததும் பூமிக்குத் திரும்பும் அத்தகைய மனிதன் மேன்மையான நிலையை அடைகிறான்.
ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு வேளை உணவுக்கு மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு {அவ்வாறே} தொடர்ந்து ஒரு வருடத்தைக் கழிக்கும் மனிதன்(39) அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான். இறந்த பிறகு சொர்க்கத்திற்கு உயரும் அவன் அங்கே பெரும் கௌரவங்களைப் பெறுகிறான்.(40) அந்தப் பலன் {புண்ணியம்} தீர்ந்ததும் பூமிக்கும் திரும்பு அவன் மேன்மையான நிலையை அடைகிறான்.
தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஒவ்வொரு நான்காம் நாளிலும் உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தி,(41) அனைத்து வகையிலும் தீங்கிழைக்காதவனாக இருந்து, பேச்சில் வாய்மையில் பற்றுக் கொண்டு, தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.(42) இறப்புக்குப் பிறகு சொர்க்கத்திற்கு உயரும் அத்தகைய மனிதன் அங்கே உயர்ந்த வெகுமதிகளை அடைகிறான்.
ஓ! குந்தியின் மகனே, தொடர்ந்து ஐந்து நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஆறாம் நாளில் மட்டுமே உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தும் மனிதன்,(43) குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது சக்கரவாகங்கால் இழுக்கப்படும்.(44) அத்தகைய மனிதன் முழுமையாக நாற்பதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.
தொடர்ந்து ஏழு நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஒவ்வொரு எட்டாம் நாளிலும் உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தும் ஒருவன்,(45) கவாமய வேள்வி செய்த பலனை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது, அன்னங்களாலும், நாரைகளாலும் இழுக்கப்படும்.(46) அத்தகைய மனிதன் ஐம்பதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.
ஓ! மன்னா, ஒவ்வொரு அரைத்திங்கள் {பக்ஷகாலம்} இடைவெளிகளில் மட்டுமே உண்டு ஒரு வருடத்தைக் கடத்தும் ஒருவன்,(47) ஆறு மாதங்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருந்ததன் பலனை அடைகிறான். இது சிறப்பு மிக்க அங்கிரஸால் சொல்லப்பட்டதாகும். அத்தகைய மனிதன் அறுபதாயிரம் வருட காலம் சொர்க்கத்தில் வசிப்பான்.(48) ஓ! மன்னா அவன் ஒவ்வொரு காலையிலும் வீணைகள், வல்லகிகள் மற்றும் புல்லாங்குழல்களின் {வேணுவின்} இனிய இசையால் படுக்கையில் இருந்து எழுப்பப்படுவான்.(49)
ஓ! ஏகாதிபதி, ஒவ்வொரு மாதம் முடியும்போதும் சிறிதளவு நீரை மட்டுமே பருகி ஒரு வருடத்தைக் கடத்தும் ஒருவன் விஷ்வஜித் வேள்வி செய்ததன் பலனை அடைவான்.(50) அத்தகைய மனிதன் சிங்கங்கள் மற்றும் புலிகளால் இழுக்கப்படும் தேரைச் செலுத்துவான். அவன் எழுபதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.(51) ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு மாதத்திற்கும் அதிகமாக எந்த உண்ணாநோன்பும் விதிக்கப்படவில்லை. ஓ! பிருதையின் மகனே, கடமைகளை அறிந்தவர்களான தவசிகளால் அறிவிக்கப்பட்ட உண்ணாநோன்பின் விதி இதுவே ஆகும்.(52) ஒவ்வொரு பிணியில் இருந்தும் விடுபட்டு நோயால் பீடிக்கப்படாமல் ஓர் உண்ணாநோன்பை நோற்கும் மனிதன், உண்மையில் ஒவ்வொரு நோன்பினாலும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(53) அத்தகைய மனிதன் அன்னங்களால் இழுக்கப்படும் தேரில் சொர்க்கத்திற்கு உயர்கிறான். பலத்துடன் கூடிய அவன், நூறாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புறுகிறான்.(54) அழகிய குணங்களைக் கொண்ட நூறு அப்சரஸ்கள் அவனுக்குப் பணிவிடை செய்து அவனோடு விளையாடுவார்கள்.(55) அந்தக் காரிகையரின் காஞ்சிகள் {மேகலைகள்} மற்றும் நுபுரங்களின் {சிலம்புகளின்} ஒலியால் அவன் ஒவ்வொரு காலையிலும் படுக்கையில் இருந்து எழுப்பப்படுவான்.(56) அத்தகைய மனிதன் ஆயிரம் அன்னங்களால் இழுக்கப்படும் தேரைச் செலுத்திச் செல்வான். நூற்றுக்கணக்கான அழகிய காரிகைகள் நிறைந்த உலகத்தில் வசித்துப் பெரும் மகிழ்ச்சியில் அவன் நேரத்தைக் கடத்துவான்.(57)
சொர்க்கத்தை விரும்பும் மனிதன், பலவீனத்தை அடையும்போது பலமடையவோ, காயம்படும்போதும், காயம் ஆறவோ, நோய்வாய்ப்படும்போது குணப்படுத்தும் மருந்துகளையோ, கோபத்திலிருக்கும் போது பிறரின் ஆறுதல்களையோ, செல்வம் செலவழிந்ததன் மூலம் வறுமையால் உண்டாகும் கவலைகளைத் தணிக்கவோ விரும்புவதில்லை.(58,59) அனைத்து வகைப் பண்புகளை இழந்து இவ்வுலகை விட்டுச் செல்லும் அவன், சொர்க்கத்திற்குச் சென்று, அனைத்து வகை ஆபரணங்களாலும் தன் மேனி பளபளக்க, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்களைச் செலுத்துகிறான். அங்கே, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்து, நூற்றுக்கணக்கான அழகிய காரிகையருக்கு மத்தியில் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கிறான்(60)
உண்மையில், உணவையும் இவ்வுலக இன்பங்களையும் தவிர்க்கும் அவன் இவ்வுடலைவிட்டு அங்கன்று, தவங்களின் கனியாகச் சொர்க்கத்திற்கு உயர்கிறான். அங்கே தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நலமும், மகிழ்ச்சியும் அடைந்து, தன் மனத்தில் எழும் விருப்பம் எதுவும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படுகிறான்.(61) அத்தகைய மனிதன் தங்கநிறம் கொண்டதும், காலை சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும் முத்துக்கள் மற்றும் வைடூரியங்கள் பதிக்கப்பட்டதும், வீணைகள் மற்றும் முரஜங்களின {முரசுகளின்} இசையை எதிரொலிப்பதும், கொடிகள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக மணிகளின் கிங்கிணிகளை எதிரொலிப்பதுமான ஒரு தெய்வீகத் தேரைச் செலுத்திச் செல்வான்.(62,63) அத்தகைய மனிதன், தன் உடலில் உள்ள வியர்வைத் துளைகளின் எண்ணிக்கை அளவு வருட காலம் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் பெற்று இன்புற்றிருப்பான்.(64)
வேதத்தைவிட மேன்மையான சாத்திரமேதும் இல்லை. தாயைவிட மதிக்கத் தகுந்த மனிதர் வேறு யாரும் இல்லை. அறத்தைவிட மேன்மையான உடைமை {லாபம்} வேறேதும் இல்லை. உண்ணாநோன்பை விட மேன்மையான தவம் ஏதும் இல்லை.(65) பிராமணர்களை விடப் புனிதமானதெனச் சொர்க்கத்திலோ, பூமியிலோ வேறேதும் இல்லை. அதே வகையில் உண்ணாநோன்புகள் நோற்பதைவிட மேன்மையான வேறு தவம் ஏதுமில்லை.(66) உண்ணாநோன்புகளின் மூலமே தேவர்கள் சொர்க்கவாசிகளாவதில் வென்றனர். உண்ணா நோன்புகளின் மூலமே முனிவர்கள் உயர்ந்த வெற்றியை அடைந்தனர்.(67)
விஷ்வாமித்திரர், ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு முறை உணவில் மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு ஆயிரம் தேவ வருடங்களைக் கழித்ததன் விளைவாகவே அவர் பிராமண நிலையை அடைந்தார்.(68) மன்னிக்கும் பண்பைக் கொண்ட சியவனர், ஜமதக்னி, வசிஷ்டர், கௌதமர், பிருகு ஆகிய பெரும் முனிவர்கள் அனைவரும் உண்ணாநோன்புகள் நோற்றன் மூலமே சொர்க்கத்தை அடைந்தனர்.(69) பழங்காலத்தில் அங்கிரஸ் இவ்வாறே பெரும் முனிவர்களுகுக அறிவித்தார். உண்ணாநோன்புகளின் பலனை மற்றொருவனுக்குக் கற்பிக்கும் மனிதன் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க மாட்டான்.(70) ஓ! குந்தியின் மகனே, உண்ணா நோன்புகள் குறித்த விதிகள் பெரும் முனிவரான அங்கிரசிடம் இருந்தே முறையான வரிசையில் உண்டாகின. இவ்விதிகளை நாள் தோறும் படிப்பவன் அல்லது அவற்றைப் படிக்கக் கேட்பவன் அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.(71) அத்தகைய மனிதன் ஒவ்வொரு துன்பத்தில் இருந்து மட்டும் விடுபடுவதோடல்லாமல் அவனுடைய மனமானது எவ்வகைக் களங்கத்தாலும் தீண்டப்பட முடியாததாகிறது. அத்தகைய மனிதன், மனிதர்களையும் தவிர அனைத்து உயிரினங்களின் ஒலிகளையும் புரிந்து கொள்வதில்வென்று, நித்திய புகழை அடைந்து, தன் வகையில் முதன்மையானவனாகிறான்” என்றார் {பீஷ்மர்}.(72)
உபவாஸ யாக பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 107-யாகம் செய்ய இயலாதவர்கள் உபவாஸங்களின் மூலமே யாக பலனை அடைவது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! உயர் ஆன்ம பாட்டா, வேள்விகள் குறித்தும், இம்மையிலும், மறுமையிலும் அவை அளிக்கும் பலன்கள் குறித்தும் விவரமாக எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, வேள்விகளில் பல்வேறு வகையான பொருட்களைப் பெரிய அளவில் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவற்றை ஏழை மக்களால் செய்ய முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.(2) ஓ! பாட்டா, வேள்விகளால் உண்டாகும் பலன்களை மன்னர்கள் மற்றும் இளவரசர்களால் மட்டுமே அடைய முடியும். செல்வமும், திறனுமற்றுத் தனியாக, ஆதரவற்றவர்களாக வாழும் மக்களால் அந்தப் பலன்களை அடைய இயலாது.(3) ஓ! பாட்டா, வேள்விகள் செய்வதால் உண்டாகும் பலன்களைக் கொண்டவையும், வழிமுறையற்றவர்களாலும் செய்யக்கூடியவையுமான செயல்களைப் பொறுத்தவரையில் விதிகள் என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, கேட்பாயாக. முனிவர் அங்கிரஸால் முதலில் வெளியிடப்பட்டதும், ஆன்மாவுக்குப் பலன்மிக்க உண்ணாநோன்புகள் தொடர்புடையதுமான நான் சொன்ன விதிமுறைகள் (இம்மையிலும், மறுமையிலும் அவை கொண்டு வரும் கனிகளைப் பொறுத்தவரையில்) வேள்விக்குச் சமமானதாகவே கருதப்படுகின்றன.(5) முற்பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் உணவுண்டு, அதன் இடைவெளியில் எந்த உணவையோ, பானத்தையோ உட்கொள்ளாமல், தொடர்ந்து ஆறு வருடங்கள் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றும் மனிதன் ஐயமில்லாமல் வெற்றியை அடைகிறான். அத்தகைய மனிதன், மறுமையில் உருக்கிய தங்கத்தின் நிறத்திலான தேரையும், ஒரு வசிப்பிடத்தையும் அடைந்து, பிரஜாபதியின் உலகத்தில் பத்து லட்சம் வருடங்கள் தெய்வீக காரிகையரின் துணையுடனும், ஆடல் மற்றும் பாடலொலிகள் எதிரொலிக்க, நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசிப்பான்.(6-8)
ஒவ்வொரு நாளும் ஒரேயொரு வேளை உணவில் தன்னை அடக்கிக் கொண்டு, தான் மணந்த மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் கலவியை எப்போதும் தவிர்த்து மூன்று வருடங்களைக் கடத்துபவன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9) அத்தகைய மனிதன், வாசவனுக்கு {இந்திரனுக்குப்} பிடித்தமானதும், அபரிமிதமான பொற்கொடை அளிக்கப்பட்டதுமான ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். வாக்கில் வாய்மை பயின்று, கொடைகள் அளித்து, பிராமணர்களை மதித்து, வன்மத்தைத் தவிர்த்து,(10) மன்னிக்கும் குணத்தை அடைந்து, தற்கட்டுப்பாட்டுடன் கோபத்தை வெல்லும் மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான். மேகம் போன்ற வெண்ணிறம் கொண்டதும், அன்னங்களால் இழுக்கப்படுவதுமான தேரைச் செலுத்திக் கொண்டு, அப்சரஸ்களின் துணையுடன் லட்சோபலட்சம் ஆண்டுகள் வாழ்கிறான்.ஒரு முழு நாள் உண்ணாநோன்பிருந்து, இரண்டாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு,(11,12) மொத்த வருட காலமும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், உண்மையில், அத்தகைய நோன்பை நோற்று, ஒவ்வொரு நாளும் சூரியன் எழுவதற்கு முன்பு படுக்கையில் இருந்து எழுந்து, ஒவ்வொரு நாளும் தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்(13) அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தகைய மனிதன் அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்பட்ட தேரை அடைகிறான்.(14) அவன், மிக அழகிய காரிகைகள் சூழ இந்திரலோகத்தில் வசிக்கிறான்.
{இரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து,} மூன்று நாளைக்கொரு முறை மட்டுமே உணவை உண்டு,(15) மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன், உண்மையில் இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலையிலும் சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்து தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்,(16) அதிராத்ர வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் மயில்கள், அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் தேரை அடைகிறான்.(17) (தெய்வீக) முனிவர்கள் எழுவரின் உலகங்களுக்குச் செல்லும் அவன், பேரழகுடைய அப்சரஸ்கள் சூழ அங்கேயே தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்கிறான். அத்தகைய வாசம் முழுமையாக மூன்று பத்ம வருடங்கள் நீடித்திருப்பதாக நன்கு அறியப்பட்டுள்ளது[1].(18)தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாநோன்பிருந்து, நான்காம் நாளில் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, தன் புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றுபவன்,(19) வாஜபேய வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் அடையும் தேரானது, இந்திரனைத் தங்கள் தந்தையாகக் கொண்டவர்களும், பேரழகுடன் கூடியவர்களுமான தெய்வீக காரிகையரால் நிறைந்திருக்கும்.(20) அவன் லட்சோபலட்சம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் வசித்திருந்து, தேவர்களின் தலைவனுடைய விளையாட்டுகளைக் கண்டு பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பான்.(21)
தொடர்ந்து நான்கு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஐந்தாம் நாளில் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(22) பேராசையின்றி, வாய்மை பேசி, பிராமணர்களை மதித்து, அனைத்து வகைத் தீங்குகளை விட்டும் விலகி, பாவம் மற்றும் வன்மத்தைத் தவிர்த்து வாழ்பவன், வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.(23) அவன், தங்கத்தால் அமைக்கப்பட்டதும், அன்னங்களால் இழுக்கப்படுவதும், பல சூரியன்கள் ஒன்றாக எழுந்தால் உண்டாகும் பிரகாசத்துடன் கூடியதுமான தேரைச் செலுத்துகிறான். அதுதவிர, தூய வெண்ணிறத்தாலான மாடமாளிகை ஒன்றையும் அடைகிறான். அங்கே அவன் முழுமையாக ஐம்பத்தோரு பத்ம வருடங்கள் பெரும் மகிழ்ச்சியோடு வாழ்கிறான்[2].(25)ஐந்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஆறாம் நாளில் மட்டுமே உணவு உண்டு, மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(26) தன்னைத் தூய்மை செய்து கொள்ள ஒரு நாளைக்கு மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து, தன் வேண்டுதல்களைச் சொல்லி வழிபட்டு, தன்னொழுக்கத்தில் வன்மம் இல்லாமல் பிரம்மச்சரிய வாழ்வை வாழும் ஒருவன் கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(27) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்க நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதும், அன்னங்கள் மற்றும் மயில்களால் இழுக்கப்பட்டதுமான ஒரு சிறந்த தேரை அவன் அடைகிறான்.(28) அப்சரஸ்களின் மடியில் உறங்கும் அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் காஞ்சிகள் {மேகலைகள்} மற்றும் நுபுரங்களின் {சிலம்புகளின்} இனிய கிங்கிணியால் விழிப்படையச் செய்யப்படுகிறான்.(29) அவன் பதினெட்டுப் பத்மங்கள் மற்றும் இரண்டு பதாகங்கள் தவிர ஆயிரத்து முன்னேறு கோடி வருடங்கள் அத்தகைய மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வான்.(30) அத்தகைய மனிதன் ஐயாயிரம் கரடிகளின் உடல்களில் உள்ள மயிர்களின் எண்ணிகை அளவுக்கான வருடங்கள் பிரம்மலோகத்தில் அனைவராலும் கௌரவிக்கப்பட்டு வசித்து வருவான்[3].(31)ஆறு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஒவ்வொரு ஏழாம் நாளிலும் ஒரு வேளை மட்டுமே உண்டு, முழுமையாக ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு நாளும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(32) பேச்சை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பை நோற்று, மலர்கள், களிம்புகள், தேன் மற்றும் இறைச்சிப் பயன்பாட்டைத் தவிர்த்து இருப்பவன்,(33) மருத்துகள் மற்றும் இந்திரனின் உலகங்களை அடைகிறான். அவன் தன் மனத்தில் எழும் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு, தெய்வீகக் காரிகையரால் பணிசெய்யப்பட்டு, துதிக்கப்படுகிறான்.(34) அபரிமிதமான தங்கத்தைக் கொடையளிக்கும் ஒரு வேள்வி செய்த பலனை அவன் அடைகிறான். மேற்சொன்ன உலகங்களுக்குச் செல்லும் அவன் அங்கே எண்ணற்ற வருடங்கள் பெரும் மகிழ்ச்சியில் வாழ்கிறான்.(35)
அனைவரிடமும் பொறுமை காத்து, ஏழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, மொத்த வருடதில் ஒவ்வொரு எட்டு நாளும் உண்டு, புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றி, தேவர்களை முறையாக வழிபடுபவன்,(36) பௌண்டரீக வேள்வி செய்த உயர்ந்த பலன்களை அடைகிறான். அவன் தாமரையின் நிறம் கொண்ட தேரைச் செலுத்துவான்.(37) அத்தகைய மனிதன், இளமையும் அழகும் கொண்டவர்களும், மிக ஏற்கத்தக்க வகையிலான குணங்களையும், பார்வைகளையும் கொண்டவர்களும் கரிய நிறம் கொண்ட சிலரும், தங்க போன்ற நிறம் கொண்ட சிறரும், சியாமைகள் சிலரும் எனப் பெரும் எண்ணிக்கையிலான காரிகையரை அடைகிறான்[4].(38)எட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு ஒன்பதாம் நாளிலும் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு, நாள்தோறும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன்,(39) ஆயிரம் குதிரைவேள்விகள் செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் சொர்க்கத்தில் செலுத்தும் தேரானது ஒரு தாமரையைப் போன்ற அழகுடையதாக இருக்கும்.(40) எப்போதும் அவன், தெய்வீக மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், நடுப்பகல் சூரியன் அல்லது சுடர்மிக்க நெருப்பின் தழல்களுடைய பிரகாசத்துடன் கூடியவர்களுமான ருத்ரனுடைய பெண்களின் துணையுடன் தேர்களில் பயணம் செய்வான்.(41) ருத்ரனின் உலகங்களை அடைந்து அங்கே அவன் எண்ணற்ற வருடங்கள் பெரும் மகழ்ச்சியில் வாழ்வான்.(42)
ஒன்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு பத்தாவது நாளும் ஒரேயொரு வேளை உணவை உண்டு, நாள்தோறும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன்,(43) ஆயிரம் குதிரை வேள்விகள் செய்த உயர்ந்த பலனைப் பெற்று, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கவரவல்ல அழகுடன் கூடிய பிரம்மனின் மகன்களுடைய துணையையும் அடைகிறான்.(44) இத்தகைய அழகுடன் கூடிய இந்தக் காரிகையரில் தாமரையைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிலரும், அதே மலரின் நீல வகையிலான நிறத்தைக் கொண்ட சிலரும் எப்போதும் அவனை இன்பத்துடன் வைத்திருக்கிறார்கள்.(45) அழகாக வலம் வருவதும், ஆவர்த்தம் என்றழைக்கப்படும் அடர்த்தியான மேகம் போலத் தெரிவதும், பெருங்கடலின் அலைக்கு ஒப்பாகச் சொல்லப்படுவதுமான ஓர் அழகிய தேரை அவன் அடைவான்.(46) முத்து மற்றும் ரத்தினச்சரங்களின் கிங்கிணியையும், சங்கின் இனிய முழக்கங்களையும் எப்போதும் எதிரொலிக்கும் அந்த வாகனம், படிகம் மற்றும், வைரங்களால் அமைக்கப்பட்ட தூண்களாலும், அதே பொருட்களால் கட்டப்பட்ட பீடத்துடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.(47) அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் அத்தகைய தேரில் பயணம் செய்யும் அவன் சொர்க்கத்தில் கோடானகோடி வருடங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.(48)
பத்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு பதினோராம் நாளிலும் நெய்யை மட்டுமே உண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(49) சொல்லாலோ, எண்ணத்தாலோ அடுத்தவரின் மனைவிகளின் மேல் ஒருபோதும் ஆசை கொள்ளாதவனும், தன் தாய்க்காகவும், தந்தைக்காகவும் கூட ஒருபோதும் பொய் பேசாதவனுமான ஒருவன்,(50) பெரும்பலம் கொண்ட மஹாதேவன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் காண்பதில் வெல்வான். அத்தகைய மனிதன் ஓராயிரம் குதிரை வேள்விகள் செய்த உயர்ந்த பலனை அடைகிறான்.(51) அவன் சுயம்புவான பிரம்மனின் தேர் தன்னை அழைத்துச் செல்ல வருவதைக் காண்பான். பசும்பொன் மோன்ற பிரகாசத்துடனும், பேரழகுடனும் கூடிய தெய்வீகக் காரிகையரின் துணையுடன் அவன் அதை {அந்தத் தேரைச்} செலுத்துவான்.(52) யுகநெருப்பின் காந்தியுடன் சுடர்விடும் அவன் சொர்க்கத்தின் தெய்வீக மாளிகையில் முழுமையான மகிழ்ச்சியுடன் எண்ணற்ற வருடங்கள் வாழ்வான்.(53) அந்த எண்ணற்ற வருடங்களும் அவன், தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படும் ருத்திரனுக்குத் தலைவணங்கி இன்பமாக வாழ்வான்.(54) அத்தகைய மனிதன் ஒவ்வொரு நாளும் அந்தத் தேவனைக் காண்பான்.
பதினோரு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பனிரெண்டாம் நாளில் மட்டும் சிறிதளவு நெய்யை மட்டுமே உண்டு,(55) மொத்த வருடமும் இவ்வொழுக்கத்தை நோற்கும் மனிதன், அனைத்து வேள்விகளையும் செய்த பலன்களை அடைவதில் வெல்வான். அவன் செலுத்தும் தேர் பனிரெண்டு சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக இருக்கும்.(56) பெரும் மதிப்புமிக்க ரத்தினங்கள், முத்துகள் மற்றும் பவளங்களால் அலங்கரிக்கப்பட்டதும், இன்னிசை முழங்கும் அன்னங்கள், பாம்புகள், மயில்கள் மற்றும் சக்கரவாகங்களால் செறிவூட்டப்பட்டதும், பெரிய குவிமுக மாடங்களால் அழகூட்டப்பட்டதுமான பிரம்மலோகத்தை அடைந்து அங்கே வசிக்கிறான்.(57,58) ஓ! மன்னா, அந்த வசிப்பிடம் (பணிவிடை செய்யக் காத்திருக்கும்) ஆண்கள் மற்றும் பெண்களால் எப்போதும் நிறைந்திருப்பதாகும். அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான முனிவர் அங்கிரஸ் (இத்தகைய நோன்பிற்கான கனிகளாக) இதையே சொல்லியிருக்கிறார்.(59)
பனிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதிமூன்றாம் நாளில் சிறிதளவு நெய்யுண்டு, மொத்த வருடமும் இவ்வழியிலேயே தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், தெய்வீக வேள்வி {தேவஸத்ர வேள்வி} செய்த பலனை அடைவதில் வெல்கிறான்.(60) அத்தகைய மனிதன், புதிதாய் மலர்ந்த தாமரையின் நிறத்தைக் கொண்டதும், பசும்பொன்னாலும், ரத்தினக்குவியல்களாலும் அலங்கரிக்கப்பட்ட {ரக்தபத்மோதயம் என்றழைக்கப்படும்} ஒரு தேரை அடைகிறான்.(61) அவன், தெய்வீகக் காரியர்களால் நிறைந்ததும், அனைத்து வகைத் தேவ ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக நறுமணங்கள் கமழ்வதும், அனைத்து வகை இன்பங்களையும் கொண்டதான மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(62) அவன் அந்த மகிழ்ச்சிகரமான உலகத்தில் வசிக்கும் வருடங்களின் எண்ணிக்கை எண்ணற்றதாகும்[5].(63) கந்தர்வர்களின் இனிய குரல், இசையொலி, பணவங்கள் ஆகியவற்றால் ஆறுதலடையும் அவன் பேரழகுடன் கூடிய காரிகைகளால் தொடர்ந்து மகிழ்ச்சியூட்டப்படுவான்.(64)பதிமூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து பதினான்காம் நாளில் சிறிதளவு நெய்யும் உண்டு, முழு வருடமும் இவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன் மஹாமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்[6].(65) விவரிக்கமுடியாத அழகைக் கொண்டவர்களும், தோற்றத்தில் இளமையாகவே இருப்பதால் வயதை ஊகித்தறிய முடியாதவர்களும், அனைத்து ஆபரணங்கள் மற்றும் சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தெய்வீகக் காரிகையர், அவனது பயணங்களில் அவனைப் பின் தொடரத் தேர்கள் பலவற்றில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.(66) ஒவ்வொரு காலையிலும், அன்னங்களின் மெல்லிய குரல், நுபுரங்களின் {சிலம்புகளின்} கிங்கிணி, காஞ்சிகளின் {மேகலைகளின்} இனிய ஒலி ஆகியவற்றால் படுக்கையில் இருந்து அவன் எழுப்பப்படுவான். உண்மையில், கங்கையின் கரைகளில் உள்ள மணலின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் அத்தக தெய்வீகக் காரிகையர் பணிவிடை செய்யும் மேன்மையான வசிப்பிடத்தில் அவன் வசித்திருப்பான்.(67)புலன்களை அடக்கி, ஓர் அரைத்திங்கள் {ஒரு பக்ஷ காலம்} உண்ணா நோன்பிருந்து, பதினாறாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உட்கொண்டு, இவ்வழியில் மொத்த வருடமும் தன்னைத் தாங்கிக் கொண்டு, நாள்தோறும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(68,69) ஓராயிரம் ராஜசூய வேள்விகள் செய்த உயர்ந்த பலன்களை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது பேரழகுடன் கூடியதாகவும், அன்னங்கள் மற்றும் மயில்களால் இழுக்கபடுவதாகவும் இருக்கும். முத்துமாலை மற்றும் பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், அனைத்து வகை ஆபரணங்களும் பூண்ட தெய்வீகக் காரிகையரின் கூட்டத்தால் நிறைந்ததும்,(71) ஒற்றைத் தூணையும், நான்கு வளைவுகளையும், மிக மங்கலமான ஏழு பீடங்களையும் கொண்டதும், ஆயிரம் கொடிகளுடன் கூடியதும், இசையொலியை எதிரொலிப்பதும்,(72) தெய்வீக குணங்களையும், தேவர்களின் குணங்களையும் கொண்டதும், ரத்தினங்கள், முத்துகள், பவளங்கள் ஆகியவை நிறைந்ததும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு தேரைச் செலுத்தும் அத்தகைய மனிதன், அவ்வாகனத்தை இழுக்க யானைகளையும், காண்டாமிருகங்களையும் கொண்டு ஆயிரம் யுகங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்திருப்பான்.(73)
பதினைந்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதினாறாம் நாளில் ஒரு வேளை உணவை உண்டு, இவழியில் மொத்த ஆண்டும் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், சோம வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(74) சொர்க்கத்திற்குச் செல்லும் அவன் சோமனுடைய மகள்களின் துணையுடன் வாழ்கிறான். சோமனைப் போலவே இனிய நறுமணக் களிம்புகளால் அவனது உடலில் நறுமணம் கமழும் அவன் தான் விரும்பும் இடத்திற்கு உடனே செல்லும் சக்தியையும் அடைகிறான்.(75) மிக அழகிய குணங்களையும், ஏற்புடைய நடத்தையுயும் கொண்ட காரிகையர் பணிசெய்ய, அனைத்து வகை இன்பங்களுடன் கூடியவனாகத் தேரில் அமர்ந்திருப்பான்.(76) அவன் இத்தகைய இன்பங்களைக் கணக்கில்லாத ஆண்டுகள் அனுபவிப்பான்[7].(77)பதினாறு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, பதினேழாம் நாளில் சிறிதளவு நெய்யை உண்டு, ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு. ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(78) வருண, இந்திர, ருத்திர, மருத்து, உசானஸ, பிரம்ம லோகங்களுக்குச் செல்கிறான்.(79) அங்கே அவன் தெய்வீகக் காரிகையரால் பணிவிடை செய்யப்பட்டு, புர்புவன் என்றழைக்கப்படும் தெய்வீக முனிவரின் காட்சியைப் பெற்று மொத்த அண்டத்தையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவில்) அடக்குகிறான்.(80) தேவர்களின் தேவனுடைய {பிரம்மனின்} மகள்கள் அங்கே அவனுக்கு மகிழ்ச்சியூட்டுகிறார்கள். ஏற்புடைய {இனிய} நடத்தை கொண்டவர்களும், அனைத்து ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்தக் காரிகையர் முப்பத்திரண்டு வடிவங்களை ஏற்கவல்லவர்களாவர்.(81) ஆகாயத்தில் சூரியனும், சந்திரனும் நகரும் வரை, ஞானம் கொண்ட அந்த மனிதனும் அமுதத்தைப் பருகியபடியே அந்த இன்ப உலகத்தில் வசித்திருப்பான்[8].(82)பதினேழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதினெட்டாம் நாளில் ஒரேயொரு வேளை மட்டும் உணவை உண்டு, அவ்வழியிலேயே மொத்த ஆண்டும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் அண்டத்திலுள்ள ஏழு உலகங்களையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவிற்குள்} அடக்கிவிடுவான்.(83) அவன் தன் தேரில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஏற்புடைய சடசடப்பொலியைக் கொண்டவையும், ஆபரணங்களாலும், அழகாலும் சுடர்விடும் தெய்வீகக் காரிகைகளால் செலுத்தப்படுபவையுமான தேர்க்கூட்டங்களால் எப்போதும் பின்தொடரப்படுவான்.(84) தெய்வீகமானதும், பேரழகுடன் கூடியதுமான தன் வாகனத்தைப் பெரும் மகிழ்ச்சியில் இன்புற்றவாறே அவன் செலுத்திக் கொண்டிருப்பான். அது சிங்கங்களாலும், புலிகளாலும் இழுக்கப்பட்டு மேகவொலியைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்கும்.(85) அவன் அத்தகைய இன்ப உலகத்தில், அமுதம் போன்ற இனிய சுவையுள்ளவற்றை உண்டு ஆயிரம் கல்பங்கள் வாழ்வான்.(86)
பதினெட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பத்தொன்பதாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு ஒரு முழுமையான வருடம் இதே வழியில் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், இந்த அண்டத்திலுள்ள ஏழு உலகங்களையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவிற்குள்} அடக்கிவிடுவான்.(87) அவன் அடையும் உலகத்தில் அப்சரஸ்களின் எண்ணற்ற இனக்குழுக்கள் வசிக்கின்றன, அது கந்தர்வர்களின் இனிய குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவன் செலுத்தும் தேர், சூரியப் பிரகாசத்தைக் கொண்டதாகும்.(88) அனைத்துக் கவலையில் இருந்தும் விடுபட்ட இதயத்துடன் கூடிய அவனிடம் தெய்வீகக் காரிகையரில் முதன்மையானோர் பணி செய்வார்கள். தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், அழகிய வடிவைக் கொண்டவனாகவும் அவன் கோடானுகோடி ஆண்டுகள் அத்தகைய இன்பத்தில் வாழ்ந்திருப்பான்.(89)
பத்தொன்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு இருபதாம் நாளில் மட்டும் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடமும் இவ்வழியிலேயே தன்னைத் தாங்கிக் கொண்டு, எப்போதும் பேச்சில் வாய்மையைப் பின்பற்றி, வேறு (சிறந்த) சடங்குகளையும் பின்பற்றி,(90) இறைச்சியைத் தவிர்த்து, பிரம்மச்சரிய வாழ்வை நோற்று, அனைத்து உயிரினங்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்து வாழும் மனிதன், பரந்து விரிந்தவையும், பெரும் மகிழ்ச்சியைக் கொண்டவையுமான ஆதித்தியர்களின் உலகங்களை அடைகிறார்கள்.(91) அவன் தன் தேரில் பயணம் மேற்கொள்ளும்போது, தெய்வீக மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்ட கந்தர்வகள் மற்றும் அப்சரஸ்களால் செலுத்தப்படும் தேர்க்கூட்டங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.(92)
இருபது நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தோராம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு, தன் புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றுபவன்,(93) உசானஸ், சக்ரன், அஸ்வினிகள் மற்றும் மருத்துகளின் உலகங்களை அடைந்து, பெருமளவிலான தடங்கலில்லா மகிழ்ச்சியுடன் அங்கே வாழ்கிறான்.(94) எந்த வகைக் கவலையையும் அறியாத அவன், தன் பயணங்களில் முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தெய்வீகக் காரிகையரில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்டு, பலத்துடன் கூடியவனாக ஒரு தேவனைப் போலவே அங்கே விளையாடிக் கொண்டிருப்பான்.(95)
இருபத்தோரு நாட்கள் உண்ணாநோன்பிருந்து இருபத்திரண்டாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை உற்றி,(96) எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்வதைத் தவிர்த்து, பேச்சில் வாய்மையில் பற்றுக் கொண்டு, வன்மத்தில் இருந்து விடுபட்டு வாழும் மனிதன் வசுக்களின் உலகை அடைந்து, சூரியப் பிரகாசம் கொண்டவனாகிறான்.(97) விரும்பிய இடம் எங்கும் செல்லும் சக்தியைக் கொண்டவனாக அமுதத்தைப் பருகி, முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்களை அணிந்து கொண்டு, தெய்வீகக் காரிகையரின் துணையுடன் இன்பத்தில் அவன் விளையாடிக் கொண்டிருப்பான்.(98)
இருபத்திரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்துமூன்றாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடம் இவ்வழியில் தன்னைத் தாங்கிக் கொண்டு, இவ்வாறே தன் உணவுமுறையை வகைமை செய்து கொண்டு, தன் புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் மனிதன்,(99) காற்றுதேவன் {வாயு}, உசானஸ் மற்றும் ருத்திரனின் உலகங்களை அடைகிறான். விரும்பிய எந்த இடத்திற்கும் செல்லவல்லவனாகத் திரியும் அவன் அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் வழிபடப்படுகிறான்.(100) முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தன் மேனியை தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்ளும் அவன், அந்தப் பேரின்ப நிலையில் தெய்வீகக் காரிகையரின் துணையுடன் எண்ணற்ற வருடங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(101)
இருபத்துமூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இருபத்துநான்காம் நாளில் சிறிதளவு நெய்யையுண்டு, இவ்வழியில் ஒரு முழு வருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொண்டு, தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(102) மேனியில் தெய்வீக ஆடைகளையும், மாலைகளையும் பூண்டு, தெய்வீக நறுமணங்களையும், களிம்புகளையும் பூசிக் கொண்டு, பெரும் மகிழ்ச்சியுடன் ஆதித்தியர்களின் உலகங்களில் எண்ணற வருடங்கள் வசிக்கிறான்.(103) தங்கத்தால் அமைந்ததும், பேரழகுடன் கூடியதும், அன்னங்களால் இழுக்கப்படுவதுமான சிறந்த தேரைச் செலுத்தும் அவன், ஆயிரமாயிரம் தெய்வீகக் காரியரின் துணையுடன் இன்பத்தில் திளைத்திருக்கிறான்.(104)
இருபத்து நான்கு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இருபத்தைந்தாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வாறு ஒரு முழுவருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், முதன்மையான வகையைச் சார்ந்ததும், அனைத்து வகை இன்பங்கள் நிறைந்ததுமான ஒரு தேரை அடைவதில் வெல்கிறான்.(105) அவனுடைய பயணங்களில், சிங்கங்கள் மற்றும் புலிகளால் இழுக்கப்படுபவையும், மேகமுழக்கம் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்குபவையும், தெய்வீகக் காரிகையரால் செலுத்தப்படுபவையும், பசும்பொன்னால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையுமான தேர்க்கூட்டங்களால் அவன் பின் தொடரப்படுவான். பேரழகுடன் கூடிய ஒரு சிறந்த தெய்வீகத் தேரைச் செலுத்தும் அவன்,(106,107) நூற்றக்கணக்கான தெய்வீகக் கன்னிகையரின் துணையுடன், அமுதம் போன்ற இனிமையான சுவைமிக்கவற்றை உண்டு ஓராயிரம் கல்பங்கள் அவ்வுலகங்களில் வசித்திருப்பான்.(108)
இருபத்தைந்து நாட்கள் உண்ணா நோன்பிருந்து இருபத்தாறாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு, இத்தகைய உணவு நடைமுறையை நோற்று ஒரு முழு வருடமும் இவ்வாறு தன்னைத் தாங்கிக் கொண்டு,(109) (உலகப் பொருட்களின்) பற்றுகளில் இருந்து விடுபட்டு, தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்து, நாள்தோறும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் அருள்நிறைந்த மனிதன், அப்சரஸ்களால் வழிபடப்பட்டு, ஏழு மருத்துகள் மற்றும் வசுக்களின் உலகங்களை அடைவான்.(110) அவன் பயணம் மேற்கொள்ளும்போது, சிறந்த படிகங்களால் ஆனவையும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அவனுக்கு அனைத்து வகை மதிப்புகளை அளிக்கும் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களால் செலுத்தப்படும் தேர்க்கூட்டங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும். இத்தகைய இன்பநிலையில், தெய்வீக சக்தியுடன் கூடியவனாக இரண்டாயிரம் யுகங்கள் அந்த உலகங்களில் வசிக்கிறான்.(111,112)
இருபத்தாறு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தேழாம் நாள் ஒரேயொரு வேளை உணவுண்டு, இவ்வழியில் ஒரு முழு வருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(113) பெரும் பலனை ஈட்டி, தேவர்களிடம் இருந்து பெரும் கௌரவங்களைப் பெற்றுச் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அங்கே வசிக்கும் அவன் அமுதம் உண்டு, அனைத்து வகைத் தாகங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்து வகை இன்பங்களை அனுபவிப்பான்.(114) ஓ! மன்னா, அனைத்துக் களங்கங்களில் இருந்து தூய்மையடைந்த ஆன்மாவுடன், பேரழகுடன் கூடிய தெய்வீகத் தேரில் பயணம் மேற்கொள்ளும் அவன், தெய்வீக முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் வகையில் அங்கே தன்னைத் தாங்கிக் கொள்வான்.(115) பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், உயர்ந்த ஏற்புடைய நடத்தையுடன் கூடிய தெய்வீகக் காரிகையரின் துணையுடன் மூவாயிரம் யுகங்கள் மற்றும் கல்பங்களுக்கு அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருக்கிறான்.(116)
இருபத்தேழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தெட்டாம் நாள் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, இவ்வழியில் ஒரு வருடம் முழுவதும் புலன்கள் மற்றும் ஆன்மாவை நன்கு கட்டுப்படுத்தித் தன்னைத் தாங்கிக் கொள்பவன்,(117) தெய்வீக முனிவர்கள் அடைவதற்கு இணையான மிகப்பெரும் பலனை அடைவான். இன்பத்திற்குரிய அனைத்து வகைப் பொருட்களுடன் பெரும் சக்தியையும் கொண்டு அவன் நடுப்பகல் சூரியனைப் போலப் பிரகாசிக்கிறான்.(118) மிக மென்மையான குணங்களைக் கொண்டவர்களும், பிரகாசமான நிறத்தையும், பருத்த கொங்கைகளையும், சிறுத்த இடையையும், {வாழைபோன்ற} வழவழப்பான தொடைகளையும் கொண்டவர்களும், தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான விளையாட்டுக் காரிகைகள்,(119) அனைத்து வகை இன்பப் பொருட்களுடன் கூடியதும், சூரியப் பிரகாசம் கொண்டதும், இனிமை நிறைந்ததுமான சிறந்த தேரை அவன் செலுத்திக் கொண்டிருக்கும்போது, ஆயிரமாயிரம் கல்பங்கள் அவனுக்கு மகிழ்வூட்டுகின்றனர்.(120)
இருபத்தெட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தொன்பதாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடமும் இவ்வழியில் தன்னைத் தாங்கிக் கொண்டு, பேச்சில் வாய்மையுடன் இருக்கும் மனிதன்,(121) தெய்வீக முனிவர்களாலும், அரசமுனிகளாலும் வழிபடப்படுபவையும், பெரும் மகிழ்ச்சி நிறைந்தவையுமான மங்கல உலகங்களை அடைகிறான். சூரியன் மற்றும் சந்திரனின் பிரகாசத்துடன் கூடியதும், பசும்பொன்னாலானதும், அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், மெல்லிசை பாடும் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்களால் செலுத்தப்படுவதுமான தேரை அடைகிறான்.(122,123) அங்கே அவன் அனைத்து வகைத் தெய்வீக ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மங்கலக் காரிகைகளால் பணிவிடை செய்யப்படுகிறான். இனிய இயல்புகளையும், ஏற்புடைய குணங்களையும் கொண்டவர்களும், பெரும் சக்தியுடன் கூடியவர்களுமான இவர்கள் தங்கள் துணையால் அவனுக்கு மகிழ்வூட்டுகிறார்கள்.(124) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும், பெரும்சக்தியையும், சுடர்மிக்க நெருப்பின் காந்தியையும் கொண்ட அவன், தேவனைப் போல ஒளிர்ந்து, சிறப்புகள் அனைத்தையும் கொண்ட தேவ வடிவை அடைகிறான்.(125) அவன் வசுக்கள், மருத்துகள், சாத்யஸ்கள், அஸ்வினிகள், ருத்திரர்கள் மற்றும் பிரம்மலோகங்களை அடைகிறான்.(126)
ஒரு முழு மாதம் உண்ணாநோன்பிருந்து, பின்தொடரும் மாதத்தின் முதல்நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு வருடம் முழுவதும் தன்னைத் தாங்கிக் கொண்டு, அனைத்தையும் சம பார்வையுடன் பார்த்து வரும் மனிதன், பிரம்மலோகத்தையே அடைகிறான்.(127) அங்கே அவன் அமுதம் பருகி வாழ்கிறான். பேரழகுடன் கூடியவனாகவும், அனைவருக்கும் ஏற்புடையவனாகவும் இருக்கும் அவன், ஆயிரங்கதிர் கொண்ட சூரியனைப் போலவே சக்தியிலும், செழிப்பிலும் ஒளிர்கிறான்.(128) யோகத்தில் அர்ப்பணிப்புடன், தெய்வீக ஆடைகள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக நறுமணப் பொருட்கைளயும், களிம்புகளையும் பூசிக் கொண்டு, சிறு துன்பத்தையும் அறியாமல் தன் நேரத்தைப் பெரும் மகிழ்ச்சியுடன் கடத்துகிறான். பிரகாசத்தில் சுடர்விடும் காரிகையரின் பணியை ஏற்றுத் தன்னுடைய தேரில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(129) தெய்வீக முனிவர்கள் மற்றும் ருத்திரர்களின் மகள்களான அந்தக் காரிகையர், மதிப்புடன் அவனைத் துதிப்பார்கள்.(130) மிக இனிமையான, மிக ஏற்புடைய பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், பல்வேறு வகை இனிய பேச்சுகளைக் கொண்டவர்களுமான அவர்கள், பல்வேறு வகைகளிலும், வழிகளிலும் பணிவிடை செய்து மகிழ்வூட்டுவார்கள்.(131) அவன் பயணங்கள் மேற்கொள்ளும்போது, (நுட்பமாக அமைந்திருக்கும் பொருட்களால்) ஆகாயத்தின் நிறத்தில் தெரியும் தேரைச் செலுத்திச் செல்கிறான். அவனுக்குப் பின்னால், சந்திரனைப் போலத் தெரியும்தேர்களும், அவனுக்கு முன்னால் மேகங்களுக்கு ஒப்பான தேர்களும்ம், வலப்புறத்தில் சிவப்பு வண்ணத் தேர்களும், அவனுக்குக் கீழே நீல நிறத் தேர்களும், அவனுக்கு மேலே பல்வேறு வண்ணங்களிலான தேர்களும் பின்தொடர்கின்றன[9]. அவன் எப்போதும் தனக்குப் பணிவிடை செய்பவர்களால் துதிக்கப்படுகிறான்.(132,133). பெரும் ஞானம் கொண்ட அவன், பூமியில் ஜம்புத்வீபம் என்றழைக்கப்படும் பகுதியில் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் பொழியும் மழைத்துளிகளின் அளவுக்கான வருடங்கள் பிரம்மலோகத்தில் வாழ்வான்.(134) உண்மையில், ஒரு தேவனின் பிரகாசத்தைக் கொண்ட அவன், மழைக்காலங்களில் பூமியில் விழும் மழைத்துளிகளின் அளவுக்கான வருடங்கள் கலப்பற்ற இன்ப நிலையைக் கொண்ட அந்த உலகத்தில் வாழ்வான்.(135)ஒரு மாதம் முழுவதும் உண்ணாநோன்பிருந்து, பின்வரும் மாதத்தின் முதல்நாளில் உண்டு, இவ்வழியில் பத்து வருடங்கள் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன் பெரும் முனிவன் என்ற தகுதியை அடைகிறான். அவன் இப்பிறவியில் செய்த செயல்களின் வெகுமதியாகச் சொர்க்கத்திற்குச் செல்லும்போது வடிவத்தில் எந்த மாற்றத்திற்கும் உட்பட வேண்டியதில்லை.(136) உண்மையில், பேச்சைத் தவிர்த்து, தன்மறுப்பைப் பயின்று, கோபத்தையும், பாலியல் பசியையும், உண்ணும் ஆசையையும் அடக்கி, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்று, இரு சந்திப் பொழுதுகளிலும் முறையாகத் துதிப்பதன் மூலம் ஒருவன் இந்நிலையை அடைகிறான்.(137) இவற்றையும், இதுபோன்ற நோன்புகளையும் நோற்று இவ்வழியில் உண்பதன் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் மனிதன், ஆகாயம் போன்ற களங்கமற்றவனாகி, சூரியனைப் போலப் பிரகாசிக்கிறான்.(138) ஓ! மன்னா, அத்தகைய மனிதன், தன் சொந்த உடல் வடிவத்துடனேயே சொர்க்கத்திற்குச் சென்று, தேவனைப் போல விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.(139)
ஓ! பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறே நான் உண்ணாநோன்புகளின் கனிகளை {பயன்களைச்} சார்ந்த வேள்விகளின் சிறந்த விதிகளை ஒன்றன்பின் ஒன்றாக உனக்குச் சொன்னேன்[10].(140) ஓ! பிருதையின் மகனே, (வேள்விகளைச் செய்ய இயலாத) ஏழை மக்கள், இவற்றின் மூலம் (உண்ணா நோன்புகளை நோற்பதன் மூலம்) {வேள்வி செய்த} கனிகளை அடைவார்கள். உண்மையில், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓர் ஏழை மனிதனும் தேவர்களையும், பிராமணர்களையும் வழிபட்டுவரும் அதே வேளையில், இந்த உண்ணா நோன்புகளை நோற்பதன் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றனர். இவ்வாறே உண்ணாநோன்புகள் குறித்த விதிகளை விரிவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(141,142) நோன்புகளை நோற்பவர்கள், விழிப்புணர்வு நிறைந்தவர்கள், தூயவர்கள், உயர் ஆன்மாக்கள், செருக்கில் இருந்தும், அனைத்து வகைக் கருத்து முடிவுகளில் இருந்தும் விடுபட்டவர்கள், அர்ப்பணிப்புள்ள புத்திமான்கள், பாதையில் இருந்து வழுவாமல் நோக்கத்தில் நிலைத்திருந்து தங்கள் முடிவை உறுதியுடன் பின்பற்றுபவர்கள் ஆகியோரிடம் ஒருபோதும் ஐயங்கொள்ளலாகாது” என்றார் {பீஷ்மர்}.(143)
சரீரத்தீர்த்தங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 108-தீர்த்தங்களும், தூய்மைகளும் எவை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தீர்த்தங்கள் அனைத்திலும் எது முதன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், எந்தத் தீர்த்தத்தால் பெருந்தூய்மை உண்டாகிறது என்பதையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்துத் தீர்த்தங்களும் பலன்கொண்டவையே என்பதில் ஐயமில்லை. எனினும், ஞானம் கொண்ட மனிதர்களுக்குத் தீர்த்தமும், தூய்மையும் எது என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) நித்திய வாய்மையைப் பின்பற்றும் ஒருவன், ஆழங்காண முடியாததும், களங்கமற்றதும், தூய்மையானதும், வாய்மையையே நீராகக் கொண்டதும், புத்தியையே தடாகமாகக் கொண்டதுமான மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராட வேண்டும்[2].(3) ஒருவன் இத்தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் தூய்மையின் வடிவில் அடையப்படும் கனிகளே {பயன்களே}, பேராசையிலிருந்து விடுதலை, நேர்மை, வாய்மை, (நடத்தையில்) மென்மை, கருணை, எந்த உயிரினத்துக்கும் தீங்கிழையாமை, தற்கட்டுப்பாடு மற்றும் அமைதி {மன அடக்கம்} ஆகியவையாகும்.(4) பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள், செருக்கற்றவர்கள், (இன்பதுன்பம், புகழ்பழி, வெப்பம்குளிர் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவர்கள், மனைவி, பிள்ளைகள், வீடுகள், தோட்டங்கள் முதலியவை இல்லாதவர்கள், தூய்மையுடன் கூடியவர்கள், பிறரால் கொடுக்கப்படும் பிச்சையில் மட்டுமே வாழ்பவர்கள் ஆகியோர் தீர்த்தங்களாகக் கருதப்படுகிறார்கள்.(5)அனைத்துப் பொருட்களின் உண்மையை அறிந்தவனும், நான், எனது என்ற {அகங்காரக்} கருத்தில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் உயர்ந்த தீர்த்தமாகச் சொல்லப்படுகிறான்[3]. தூய்மைக்கான குறியீடுகளைத் தேடும்போது உன் பார்வை இந்தக் குணங்களில் (அஃதாவது இந்தக் குணங்கள் இருக்கும் இடத்தில் தூய்மை இருக்கும், இல்லாத இடத்தில் தூய்மை இல்லை என்று கொள்வதற்காக) எப்போதும் செலுத்தப்பட வேண்டும்.(6) சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்கள் கழுவப்பட்ட ஆன்மாவைக் கொண்டோர், (புறத்) தூய்மை மற்றும் தூய்மையின்மைகளைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுக்கு முன்மொழிந்து கொண்ட முடிவுகளைப் பின்தொடர்பவர்கள்,(7) அனைத்தையும் துறந்தவர்கள், அனைத்தையும் அறிந்தவர்கள், அண்டப் பார்வை கொண்டவர்கள், தூய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் தூய்மை செய்யும் சக்தி படைத்த தீர்த்தங்களாகக் கருதப்படுகின்றனர்.(8) அங்கங்கள் நீரில் நனைந்ததால் மட்டுமே ஒரு மனிதன் கழுவப்பட்டவனாகக் கருதப்படமாட்டான். மறுபறம் அவன் தன்மறுப்பால் தன்னைக் கழுவிக் கொண்டால் அவன் கழுவப்பட்டவனாகக் கருதப்படுவான். அத்தகைய மனிதனே அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(9) கடந்த காலத்தைக் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளாதவர்கள், உண்மையில், ஆசையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் உயர்ந்த தூய்மையைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(10)அறிவே தனிச்சிறப்புள்ள உடல்தூய்மையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. அதே போல ஆசையில் இருந்து விடுதலையும் மன உற்சாகமும் அவ்வாறே சொல்லப்படுகிறது.(11) ஒழுக்கத்தூய்மையானது, மனத்தூய்மையில் அடங்கியிருக்கிறது. புனித நீர்நிலைகளில் செய்யப்படும் தூய்மைச் சடங்குகளால் ஒருவன் அடையும் தூய்மை தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.(12) சுடர்மிக்க மனத்துடன், பிரம்ம அறிவு என்ற நீரில், மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் ஒருவனால் செய்யப்படும் தூய்மைச்சடங்குகளே வாய்மையறிந்தோருக்கு உண்மையான தூய்மைச்சடங்குகளாகும்.(13) உண்மையான ஒழுக்கத்தூய்மை கொண்டவனும், அனைவரிடமும் முறையான அணுகுமைறையைப் பாதுகாப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவுனும், உண்மையில் (தூய) குணங்களும் தகுதியும் கொண்டவனுமான மனிதனே உண்மையில் தூய்மையானவனாகக் கருதப்படுகிறான்.(14) நான் சொன்ன இவையே உடலில் உள்ள தீர்த்தங்களாகச் சொல்லப்படுகின்றன. பூமியில் அமைந்திருக்கும் புனிதத் தீர்த்தங்களையும் சொல்கிறேன் கேட்பாயாக.(15)
உடலின் தனிச்சிறப்புள்ள குணங்கள் புனிதமானவையாகச் சொல்லப்படுவதைப் போலவே, பூமியில் உள்ள குறிப்பிட்ட இடங்களும், குறிப்பிட்ட நீர்நிலைகளும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(16) தீர்த்தங்களின் பெயர்களைச் சொல்வதன் மூலமும், அங்கே தூய்மைச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், அவ்விடங்களில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிப்பதன் மூலமும் ஒருவனுடைய பாவங்கள் கழுவப்படுகின்றன.. உண்மையில், இவ்வாறு பாவங்கள் கழுவப்பட்ட மனிதன், இவ்வுலகை விட்டுச் செல்லும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17) அறவோரின் தொடர்புடையதன் விளைவாகவும், அந்த இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நீர்நிலைகளில் உள்ள பூமியின் சிறப்புத்திறன்களின் மூலமும், பூமியில் குறிப்பிட்ட பகுதிகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(18) மனோதீர்த்தங்கள் பூமியில் உள்ளவற்றைக் காட்டிலும் தனியானவையும், வேறுபட்டவையுமாகும். இரண்டிலும் நீராடும் மனிதன் தாமதமில்லாமல் வெற்றியை அடைகிறான்.(19) முயற்சியில்லாத பலம், அல்லது பலமில்லாத முயற்சி ஆகியவற்றால் தனியாக எதையும் நிறைவேற்ற முடியாமல், இவை சேர்ந்திருக்கும்போதே அனைத்தையும் நிறைவேற்ற முடிவதைப் போலவே,(20) உடலில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதும், பூமியில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதுமான தூய்மையுடன் கூடிய ஒருவன் உண்மையில் தூய்மையடைந்து வெற்றியை அடைகிறான். இரண்டு மூலங்களில் இருந்தும் பெறப்படும் தூய்மையே சிறந்ததாகும்” என்றார் {பீஷ்மர்}.(21)
விஷ்ணுவும், உபவாஸமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 109-பனிரெண்டு மாதங்களில், பனிரெண்டு பெயர்களால் விஷ்ணுவைத் துதிப்பதன் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, இவ்வுலகில் அனைத்து வகை உண்ணா நோன்புகளிலும் உயர்ந்ததும், நன்மையானதும், குறிப்பிடத்தக்கதுமான பலன் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒருவன் எதைச் செய்வதன் மூலம் ஐயமில்லாமல் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான் என்பதைச் சுயம்புவே பாடியிருக்கிறான் கேட்பாயாக.(2)
மார்கசீரிஷம் {மார்கழி} என்றழைக்கப்படும் மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனைக், கேசவனாக {கேசவன் என்று சொல்லி} வழிபடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து கழுவப்பட்டு, ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(3)
அதே வகையில், பௌஷ {தை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை நாராயணனாக வழிபடும் மனிதன், உயர்ந்த வெற்றியை அடைந்து, வாஜபேய வேள்வியைச் செயத பலனை அடைகிறான்.(4)
மாக {மாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மாதவனாக வழிபடும் மனிதன், தன் குலத்தை (துன்பத்தில் இருந்து) மீட்டு, ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான்[1].(5)பால்குன {பங்குனி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை கோவிந்தனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகத்திற்குச் சென்று அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான்.(6)
சைத்ர {சித்திரை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை விஷ்ணுவாக வழிபடும் மனிதன், தேவர்களின் உலகிற்குச் சென்று, பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைகிறான்.(7)
வைசாக {வைகாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} அதேபோன்ற உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மதுசூதனனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகிற்குச் சென்று அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(8)
ஜய்ஷ்ட (ஆனி) மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (பலியின் வேள்வியில்) அண்டத்தையே தன் மூன்று அடிகளால் மறைத்தவனாக {திரிவிக்கிரமனாக} வழிபடும் மனிதன், பெரும் மகிழ்ச்சியுடன் அப்சரஸ்களுடன் விளையாடிக் கொண்டு கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9)
ஆஷாத {ஆடி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (அசுர மன்னன் பலியியை வஞ்சித்த) வாமனனாக வழிபடும் ஒருவன், அப்சரஸ்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டே, நரமேத வேள்வியின் பலன்களை அடைகிறான்[2].(10)சிரவண {ஆவணி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ஸ்ரீதரனாக வழிபடும் ஒருவன், தான் இன்பத்தில் விளையாடும் சொர்க்கத்தில் ஓர் அழகிய தேரை அடைந்து, பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(11)
பாத்ரபத {புரட்டாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ரிஷிகேசனாக {ஹ்ருஷீகேசனாக} வழிபடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்து, சௌத்ராமணி வேள்வி செய்த பலன்களை அடைவான்.(12)
அஸ்வினி {ஐப்பசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனைப் பத்மநாபனாக வழிபடும் ஒருவன், ஆயிரம் பசுக்கள் கொடையளிக்கப்பட்டும் செய்யப்பட்ட வேள்வியின் பலன்களை ஐயமில்லாமல் கொடுக்கும்.(13)
கார்த்திகா {கார்த்திகை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனை தாமோதரனாக வழிபடும் ஒருவன், அனைத்து வேள்விகளையும் செய்த மொத்த பலன்களையும் ஐயமில்லாமல் அடைகிறான்.(14)
இவ்வழியில் மொத்த வருடமும் கிருஷ்ணனை புண்டரீகாக்ஷனாகத் துதிப்பவன் பெரும் அளவினால தங்கத்தை அடைந்து, தன் முற்பிறவிகளின் சம்பவங்களை நினைவுகூரும் சக்தியை அடைகிறான்.(15)
அதேபோல, ஒவ்வொரு நாளும் கிருஷ்ணனை உபேந்திரனாக வழிபடும் ஒருவன் அவனோடு அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான். இவ்வழியில் கிருஷ்ணனை வழிபட்ட பிறகு, ஒருவன் தன் நோன்பை முடிவுக்குக் கொண்டு வந்து, எண்ணற்ற பிராமணர்களுக்கு உணவூட்டி, நெய்யாலான கொடைகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(16)
புராதனமானவனும், சிறப்புமிக்கவனுமான விஷ்ணுவே, இவ்வகை உண்ணாநோன்புடன் தொடர்புடைய மேன்மையான பலன்களைக் கொண்ட வேறு உண்ணாநோன்பு ஏதுமில்லை என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}”.(17
சந்திரவிரதம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 110-ழகு செல்வம் முதலியவற்றை அடைவதற்குச் செய்ய வேண்டிய சந்திர நோன்பு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருகுலப் பாட்டனும், வயதில் முதிர்ந்தவரும், அப்போது கணைப்படுக்கையில் கிடந்தவருமான பீஷ்மரிடம் சென்ற பெரும் ஞானம் கொண்ட யுதிஷ்டிரன் பின்வரும் கேள்வியைக் கேட்டான்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வடிவ அழகு, செழிப்பு, ஏற்புடைய இயல்பு ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு அடைகிறான்? உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு ஈட்டுகிறான்? ஒருவன் எவ்வாறு மகிழ்ச்சியுடன் கூடியவனாகிறான்?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மார்கசீரிஷ {மார்கழி} மாதத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் கூடியிருக்கும் நாளில் அதே நட்சத்திரத்தை {மூல நட்சத்திரத்தையே} பாதங்களாகவும், ரோகிணியைக் கணுக்கால்களாகவும்,(3) அசுவினியை முழங்கால்களாகவும், இரண்டு ஆஷாதங்களை {பூராட உத்தராடங்களைத்} தொடைகளாகவும், பால்குனிகள் {பூரம் உத்தரங்களைக்} குதமாகவும், கிருத்திகையை இடுப்பாகவும்,(4) பாத்ரபதங்களை {பூரட்டாதி உத்தரட்டாதிகளை} உந்தியாகவும், ரேவதியை வயிற்றுப் பகுதியாகவும், தனிஷ்டையை {அவிட்டத்தை} முதுகாகவும், அனுராதாவை {அனுஷத்தை} வயிறாகவும்,(5) விசாகத்தை இரு தோள்களாகவும், ஹஸ்தத்தை இரு கைகளாகவும், புனர்வசுவை {புனர்பூசத்தை} விரல்களாகவும், அஸ்லேஷத்தை {ஆயில்யத்தை} நகங்களாகவும்,(6) ஜியேஷ்டையை {கேட்டையைக்} கழுத்தாகவும், சிரவணத்தை {திருவோணத்தைக்} காதுகளாகவும், புஷ்யத்தை {பூசத்தை} வாயாகவும், ஸ்வாதியைப் பற்கள் மற்றும் உதடுகளாகவும்,(7) சதாபிஷத்தை {சதயத்தைச்} புன்னகையாகவும், மகத்தை மூக்காகவும், மிருகசீர்ஷத்தைக் கண்களாகவும், சித்திரையை நெற்றியாகவும்,(8) பரணியைத் தலையாகவும், ஆர்த்திராவை {திருவாதிரையை} மயிராகவும் {கேசமாகவும்} கொண்டிருக்கும் {நிலவுக்கான} சந்திர விரதம் தொடங்கப்பட வேண்டும் {தியானம் செய்ய வேண்டும்}. அந்த நோன்பின் முடிவில், வேதமறிந்த பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்கப்பட வேண்டும்.(9)
அந்நோன்பின் கனியாக ஒருவன், செழிப்பு, மேனி அழகு, அறிவைத் தரும் நற்பேறு ஆகியவற்றைக் கொண்டவனாகிறான். உண்மையில், அத்தகைய நோன்பின் விளைவாக முழு நிலவைப் போலவே அவன் (அனைத்து வகை நற்குணங்களும்) நிறைந்தவனாகிறான்” என்றார் {பீஷ்மர்}.(10)
பாவப்பிறவிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 111-அறம் எவ்வாறு ஒருவனைப் பின்தொடர்கிறது; உயிர்வித்து எவ்வாறு உண்டாகிறது; ஜீவன் எவ்வாறு பிறந்து வளர்கிறது; உடலைக் கைவிடும்போது, ஜீவன் எவ்வாறு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது; பல்வேறு செயல்களின் விளைவால் ஜீவன் அடையும் பல்வேறு வடிவங்களிலான பிறவிகள் குறித்து யுதிஷ்டிரனுக்கும் பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்து பெரும் ஞானம் கொண்டவரே, எவற்றின் விளைவாக மனித உயிரினங்கள் மறுபிறவி எனும் பயணத்தில் சுழல்கின்றனவோ அந்தச் சிறந்த விதிகளை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! மன்னா, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் மனிதர்கள் உயர்ந்த சொர்க்கத்தை அடைகின்றனர்? எவ்வொழுக்கத்தைப் பின்பற்றினால் ஒருவன் நரகில் மூழ்குகிறான்?(2) மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற செயலற்ற இறந்த உடலைக் கைவிட்டு, மக்கள் மறுஉலகத்திற்குச் செல்லும்போது, அவர்களைப் பின்தொடர்பவை எவை?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும் சிறப்புமிக்கவருமான பிருஹஸ்பதி அதோ வருகிறார். நீ அவரிடமே இதைக் கேட்பாயாக. இக்காரியம் ஒரு நித்திய புதிராகும்.(4) இக்காரியத்தை வேறு யாராலும் விளக்க முடியாது. பிருஹஸ்பதியைப் போன்ற பேச்சாளர் வேறு எவரும் இல்லை” என்றார்”.(5)வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், “பிருதையின் மகனும் {யுதிஷ்டிரனும்}, கங்கையின் மகனும் {பீஷ்மரும்} இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தபோது, தூய்மையான ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவருமான பிருஹஸ்பதி ஆகாய வழியில் அவ்விடத்திற்கு வந்தார்.(6) திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனும், வேறு அனைவரும் எழுந்து நின்று, உரிய கௌரவங்களுடன் பிருஹஸ்பதியை வரவேற்றனர். உண்மையில், அவர்கள் தேவர்களின் ஆசானுக்கு {பிருஹஸ்பதிக்கு} அளித்த வழிபாடு சிறப்புமிக்கதாக இருந்தது.(7) பிறகு தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரன், சிறப்புமிக்கவரான பிருஹஸ்பதியை அணுகி, உண்மையை அறிய விரும்பி உரிய வடிவில் கேள்வியைக் கேட்டான்.(8)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, நீர் கடமைகளை மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவராவீர். உண்மையில மனித உயிரினங்களின் நண்பன் யார் என்பதை எனக்குச் சொல்வீராக.(9) தந்தை, தாய், மகன், ஆசான், உற்றார் உறவினர், நண்பர்கள் என்றழைக்கப்படுபவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உண்மையில் ஒரு மனித உயிரினத்தின் நண்பனாக {துணையாக} இருப்பது யார்? ஒருவன் மரக்கட்டையையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற தன் இறந்த உடலைக் கைவிட்டு அடுத்த உலகிற்குச் செல்கிறான். அங்கே அவனைப் பின்தொடர்ந்து செல்வது யார்?” என்று கேட்டான்.(10)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒருவன் தனியாகவே பிறக்கிறான்; தனியாகவே இறக்கிறான்; தான் சந்திக்கும் சிரமங்கள் அனைத்தையும் அவன் தனியாகவே கடக்கிறான்; தனக்கு ஏற்படும் எந்தத் துன்பத்தையும் அவன் தனியாகவே அனுபவிக்கிறான்.(11) இச்செயல்களில் உண்மையில் ஒருவனுக்கு எவனும் துணைவனல்ல. தந்தை, தாய், சகோதரன், மகன், ஆசான், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்,(12) ஒரு கணம் மட்டுமே துக்கமடைந்து, இறந்த உடலை மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்று கைவிட்டு, தங்கள் சொந்த காரியங்களைப் பார்க்க வேறு முகமாகச் செல்வார்கள்.(13) அவர்கள் அனைவராலும் இவ்வாறு கைவிடப்பட்ட உடலை அறம் மட்டுமே பின்தொடர்கிறது. எனவே, அறம் மட்டுமே ஒருவனுடைய நண்பன், அறம் மட்டுமே அனைவராலும் நாடப்பட வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(14) அறத்துடன் கூடியவன் சொர்க்கத்தால் அமைந்த உயர்ந்த கதியை அடைகிறான். அவன் அறமற்றவனாக இருந்தால் நரகை அடைகிறான்.(15) எனவே, புத்தியுள்ள மனிதன் நீதிமிக்க வழிமுறைகளில் வெல்லப்பட்ட செல்வத்தைக் கொண்டு அறமீட்டுவதற்கு எப்போதும் முயல வேண்டும். மறுமையில் உயிரினங்களுக்கு ஒரே உற்ற நண்பன் அறம் மட்டுமே ஆகும்.(16) அதிக அறிவில்லாதவனும், ஆசையால் மதிமயங்கியவனுமான ஒரு மனிதன், பேராசை, மயக்கம் {அறியாமை}, கருணை, அச்சம் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு வேறொருவருக்காகவாவது முறையற்ற செயல்களில் ஈடுபடுவது காணப்படுகிறது.(17) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றுமே வாழ்வின் கனியாகின்றன. ஒருவன் ஒழுங்கற்றவற்றிலும், பாவத்திலிம் இருந்து விடுபடுவதன் மூலம் இம்மூன்றையும் அடைய வேண்டும்” என்றார்.(18)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “சிறப்புமிக்க உம்மால் பேசப்பட்டதும், உயர்ந்த நன்மையைத் தருவதும், அறம் நிறைந்ததுமான சொற்களைக் கவனமாகக் கேட்டேன். நான் இப்போது (மரணத்திற்குப் பிறகான) உடலின் இருப்பு குறித்து அறிய விரும்புகிறேன்.(19) ஒரு மனிதனின் சடலம் நுட்பமானதாகவும், வெளிப்படா {புலப்படாத்} தன்மை கொண்டதாகவும் ஆகிறது. அறத்தால் எவ்வாறு அதைப் பின்தொடர முடியும்?” என்று கேட்டான்.(20)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “பூமி {நிலம்}, காற்று, ஆகாயம், நீர், ஒளி, மனம், யமன் (இறந்தோரின் மன்னன்), புத்தி, ஆன்மா, பகல், இரவு ஆகிய அனைத்தும் சேர்ந்து வாழும் உயிரினங்கள் செய்யும் நன்மைகள் (மற்றும் தீமைகளை) சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. (இறக்கும்போது) இவற்றைக் கொண்ட அறமானது அந்த உயிரினத்தைப் பின்தொடர்கிறது.(21,22) ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, உயிர், தோல், எலும்புகள், இறைச்சி, உயிர்வித்து, குருதி ஆகியவற்றை உடல் இழக்கும் அதே நேரத்தில் அவையும் அதை விட்டு அகல்கின்றன.(23) தகுதியுடன் (மற்றும் குறையுடனும்) கூடிய ஜீவன், (இந்த உடல் அழிந்த பிறகு) மற்றொன்றை அடைகிறது. ஜீவன் அந்த உடலை அடைந்ததும், ஐம்பூதங்களின் தலைமைத் தேவர்கள் அவனது நற்செயல்களையும், தீச்செயல்களையும் சாட்சியாகக் காண்கின்றனர்.(24) நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்? அறத்துடன் கூடியதாக இருந்தால் ஜீவன் மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்மை மற்றும் மறுமை குறித்து வேறென்ன நான் உரையாட வேண்டும்?” என்று கேட்டார்.(25)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “சிறப்புமிக்க நீர் அறம் எவ்வாறு ஜீவனைத் தொடர்கிறது என்று சொன்னீர். உயிர்வித்து எவ்வாறு தோன்றுகிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(26)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உடலில் வசிக்கும், பூமி, காற்று, ஆகாயம், நீர், ஒளி, மனம் ஆகிய தேவர்கள் உண்ணும் உணவு அவர்களை நிறைவடையச் செய்கிறது. ஓ! ஏகாதிபதி, ஓ! தூய ஆன்மாவே, ஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐம்பூதங்களும் நிறைவடையும்போது, அவர்களுடைய உயிர்வித்து உண்டாகிறது.(28) ஆண் மற்றும் பெண்ணுக்கிடையில் ஒரு கலவிச் செயல் நடைபெறும்போது, வெளியே பாயும் உயிர்வித்துக் கருவை உண்டாக்குகிறது. இவ்வாறு நீ கேட்டதற்கு நான் விளக்கமளித்தேன். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார்.(29)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, கருத்தரித்தல் எவ்வாறு நடைபெறுகிறது. பிறவி எடுக்கும் ஜீவன் (உடலைப் பெறுவதன் மூலம்) எவ்வாறு வளர்கிறது என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(30)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஜீவன் உயிர்வித்துக்குள் நுழைந்த உடனேயே, அவன் ஏற்கனவே சொல்லப்பட்ட பூதங்களால் நிறைகிறான். ஜீவன் அவற்றில் இருந்து பிரியும் போது மறுகதி (மரணம்) அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(31) அந்தப் பூதங்கள் அனைத்துடன் சேரும் ஜீவன் அதன் விளைவாக உடலைப் பெறுகிறான். அந்தப் பூதங்களின் தலைமைத் தேவர்கள், அவனுடைய நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் சாட்சியாகக் காண்கிறார்கள். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார்.(32)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, தோல், எலும்பு, மற்றும் இறைச்சியைக் கைவிட்டு அந்தப் பூதங்கள் அனைத்துமற்ற ஜீவன், இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் எதில் வசிக்கிறது?” என்று கேட்டான்.(33)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, தன் செயல்கள் {கர்மங்கள்} அனைத்துடன் கூடிய ஜீவன் விரைவாக உயிர்வித்துக்குள் நுழைந்து, பெண்களின் பருவநீரைப் பெற்றுக் காலத்தில் பிறப்பை அடைகிறான்.(34) பிறந்த பிறகு, ஜீவனானவன் யமனின் தூதுவர்களிடம் இருந்து துன்பத்தையும் மரணத்தையும் பெறுகிறான். உண்மையில், துன்பதுயரம் நிறைந்த மறுபிறவிச் சுழல் அவனுடைய மரபுரிமையாகும்.(35) ஓ! மன்னா, உயிருடன் கூடிய ஜீவன் இவ்வுலகில் தான் பிறந்த கணம் முதல் (முற்பிறவி சார்ந்த) தன் சொந்த செயல்களின் அறம் (மற்றும் அதற்கு முரணானவற்றைச்) சார்ந்து இன்புறவும், துன்புறவும் செய்கிறான்.(36) ஒரு ஜீவன், தான் பிறந்த நாள் முதல் தன் சக்திக்குத் தகுந்தபடி அறத்தையே பின்பற்றினால், அவன் மறுபிறவி எடுக்கும்போது தடங்கலில்லாத மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(37) மறுபுறம், தடங்கலில்லாமல் அறத்தைப் பின்பற்றாமல் அவன் பாவம்நிறைந்து செயல்பட்டால், மறுபிறவியில் அவன் முதலில் தன் அறத்தின் வெகுமதியாக மகிழ்ச்சியை அறுவடை செய்து, அதன் பிறகு துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறான்.(38) மறத்துடன் கூடிய ஜீவன், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குச் சென்று அங்கே பெருந்துன்பத்தை அனுபவித்து, பிறகு இடைநிலை உயிரின வகையில் தன் பிறப்பை எடுக்கிறான்.(39) ஜீவன் மடமையில் மயக்கமடைந்து செய்யும் பல்வேறு செயல்களால் எவ்வாறு பல்வேறு வகை உயிரினங்களாகப் பிறப்பை அடைகின்றனர் என்று வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் (புனித) வரலாறுகளில் அறிவிக்கப்பட்டுள்ளதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(40)
மானிடர்கள் பயங்கரமான யமலோகத்தை அடைகின்றனர். ஓ! மன்னா, அவ்வுலகத்தில் அனைத்துத் தகுதிகள் நிறைந்வையும், தேவர்களின் வசிப்பிடமாக இருப்பதற்குத் தகுந்தவையுமான இடங்கள் இருக்கின்றன.(41) மேலும் அவ்வுலகத்தில், விலங்குகள் மற்றும் பறவைகள் வசிக்கும் பகுதிகளைவிட இழிந்த இடங்களும் இருக்கின்றன. உண்மையில், (மகிழ்ச்சியைப் பொறுத்தவரையில்) பிரம்மலோகத்திற்கு இணையான தகுதிகளைக் கொண்ட இடங்களும் யமலோகத்தில் இருக்கின்றன.(42) உயிரினங்கள், தங்கள் செயல்களால் கட்டப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றன. இதன் பிறகு, பெரும் துன்பமும், பயங்கரமும் நிறைந்த கதியை ஒரு மனிதன் எவற்றின் விளைவால் அடைவானோ அந்தச் செயல்களையும், இயல்புகளைம் நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)
நான்கு வேதங்களையும் கற்ற ஒரு மறுபிறப்பாளன், அறியாமையில் மயக்கமடைந்து, வீழ்ந்துவிட்ட மனிதனிடம் இருந்து கொடையை ஏற்றால் அவன் கழுதையாகப் பிறப்பை அடைகிறான்.(45) அவன் ஒரு கழுதையாகப் பதினைந்து வருடங்கள் வாழ்வான். பிறகு அந்தக் கழுதை வடிவத்தைக் கைவிட்டு, அவன் ஓர் எருதாகப் பிறந்து ஏழு வருடங்கள் வாழ்வான்.(46) பிறகு மாட்டு வடிவத்தையும் கைவிட்டு அவன் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசனாக {பிரம்மராட்சசனாகப்} பிறப்பை எடுக்கிறான். மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசனாக {பிரம்ம ராட்சசனாக} மூன்று மாதங்கள் வாழும் அவன் (தன் அடுத்தப் பிறவியில்) தன் பிராமண நிலையை மீட்கிறான்.(47)
வீழ்ந்துவிட்ட மனிதனின் வேள்வியைச் செய்து கொடுக்கும் ஒரு பிராமணன், இழிந்த புழுவாகப் பிறப்பான். ஓ! பாரதா, அவன் இவ்வடிவில் பதினைந்து வருடங்கள் வாழ்வான்.(48) புழுவின் நிலையில் இருந்து விடுபடும் அவன் அடுத்ததாக ஒரு கழுதையாகப் பிறக்கிறான். கழுதையாகப் பதினைந்து வருடங்கள் வாழும் அவன், அடுத்ததாக அதே அளவு காலம் ஒரு காட்டுப்பன்றியாக வாழ்கிறான்.(49) அதன் பிறகு ஒரு சேவலாகப் பிறந்து, அவ்வடிவிலேயே ஐந்து வருடங்கள் வாழ்ந்த பிறகு அதே அளவு வாழ்நாள் காலம் கொண்ட ஓநாயின் பிறப்பை அடைக்கிறான். அடுத்ததாக ஒரு நாயாகப் பிறந்து, ஒரு வருட காலம் அவ்வாறு வாழ்ந்த பிறகு அவன் மனித நிலையை மீட்டெடுக்கிறான்.(50)
ஆசானுக்குத் தீங்கிழைக்கும் குற்றம்புரிந்த மூடச் சீடன், இவ்வுலகில் மூன்று மாற்றங்களுக்கு நிச்சயம் உட்பட வேண்டும்.(51) ஓ! ஏகாதிபதி, அத்தகையவன் முதலில் ஒரு நாயாகிறான். அதன் பிறகு இரைதேடும் விலங்காகி அதன் பிறகு அவன் ஒரு கழுதையாகிறான். கழுதை வடிவில் வாழும்போது அவன் ஒரு பிசாசைப் போலப் பெருந்துன்பத்துடன் சில காலம் திரிய வேண்டும். அந்தக் காலம் முடிந்ததும் அவன் ஒரு பிராமணனாகப் பிறப்பை அடைவான்.(52)
ஆசானின் மனைவியுடன் கூடா உறவுகொள்ள நினைக்கும் பாவம் நிறைந்த சீடன், அத்தகைய பாவம் நிறைந்த இதயத்தின் விளைவாக இவ்வுலகில் பல கடும் வடிவங்களை எடுக்க வேண்டும்.(53) முதலில் நாயாகப் பிறந்து மூன்று வருடம் வாழ வேண்டும். பிறகு மரணம் வரும்போது நாயின் வடிவத்தைத் கைவிட்டு ஓர் இழிந்த புழுவாகப் பிறக்க வேண்டும்.(54) இவ்வடிவில் ஒருவன் ஒரு வருடம் வாழ வேண்டும். அந்த வடிவத்தை விட்டதும் அவன் மறுபிறப்பாள மனிதனாகத் தன் நிலையை மீட்பதில் வெல்வான்.(55)
ஓர் ஆசான், தன் மகனைக் போன்றவனான சீடனைக் காரணமே இல்லாமல் கொன்றுவிட்டால், தன் பங்குக்கான வேண்டுமென்றே செய்யப்பட்ட அத்தகைய பாவச் செயலால் அவர் இரை தேடும் விலங்காகப் பிறக்க வேண்டும்.(56)
ஓ! மன்னா, தந்தை மற்றும் தாயை அவமதிக்கும் மகன், தன் மனித வடிவை விட்டகலும்போது, கழுதை வகையிலான ஒரு விலங்கின் வடிவில் பிறக்கிறான்.(57) அந்தக் கழுதை வடிவில் அவன் பத்து வருட காலம் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் முதலையாகப் பிறந்து ஒரு வருடம் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் மனித வடிவை அடைவான்.(58)
எந்த மகனிடம் பெற்றோர் கோபமடைவார்களோ, அவன் அவர்களிடம் தான் கொண்டுள்ள தீய எண்ணங்களின் விளைவால் ஒரு கழுதையாகப் பிறப்பான்.(59) அவன் கழுதையாகப் பத்து மாதங்கள் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் நாயாகப் பிறந்து பதினான்கு மாதங்கள் அவ்வாறு வாழ வேண்டும். அதன் பிறகு ஒரு பூனையாகப் பிறந்த அவ்வடிவில் ஏழுமாதங்கள் வாழ்ந்து அதன் பிறகு தன் மனித நிலையை அவன் மீட்பான்.(60)
பெற்றோரைப் பழித்துப் பேசுபவன் ஒரு சாரிகமாக {ஆமையாகப்} பிறக்க வேண்டும். ஓ! மன்னா அவர்களை அடிக்கும் ஒருவன் ஓர் ஆமையாகப் பிறப்பான்.(61) ஆமையாகப் பத்து வருடம் வாழும் அவன் அதன் பிறகு ஒரு முள்ளம்பன்றியாகப் பிறப்பான். அதன்பிறகு ஒரு பாம்பாகப் பிறந்து அவ்வடிவிலேயே ஆறு மாதங்கள் வாழ்ந்து பிறகு தன் மனித நிலையை அவன் மீட்பான்.(62)
அரசத் தலைவன் தரும் உணவை உண்டு, தன் தலைவனின் விருப்பங்களுக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்யும் மனிதன் இவ்வாறான மடமையில் {அறியாமையில்} மயங்கி தன் மரணத்திற்குப் பிறகு ஒரு குரங்காகப் பிறக்கிறான்.(63) பத்து வருடங்கள் குரங்காக வாழ்ந்து அதன் பிறகு ஐந்து வருடங்கள் எலியாக வாழ்கிறான். அதன் பிறகு ஒரு நாயாகி அவ்வடிவத்தில் ஆறுமாத காலம் வாழ்ந்த பிறகே அவன் தன் மனித நிலையை மீட்பதில் வெல்கிறான்.(64)
தன்னிடம் நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டவற்றைக் கையாடல் செய்யும் மனிதன், நூறு வடிவமாற்றங்களுக்கு {நூறு பிறவிகளுக்கு} உட்பட வேண்டும். இறுதியாக அவன் ஓர் இழிந்த புழுவாகப் பிறப்பான்.(65) ஓ! பாரதா, அவ்வகையில் {புழுவாகவே} அவன் பதினைந்து வருடங்கள் வாழ வேண்டும். இவ்வழியில் தன் பெரும்பாவம் தீர்ந்ததும் அவன் தன் மனித நிலையை மீட்பதில் வெல்வான்.(66)
பிறருக்கு எதிராக வன்மத்துடன் இருக்கும் மனிதன் தன் மரணத்திற்குப் பிறகு சார்ங்ககனாகப் பிறக்கிறான்[1]. நம்பிக்கை துரோகம் செய்த தீய புத்தி கொண்ட மனிதன் ஒரு மீனாகப் பிறக்கிறான்.(67) ஓ! பாரதா, எட்டு வருடங்கள் மீனாக வாழ்ந்த பிறகு மானாகப் பிறவி எடுக்கிறான். மானாக நான்கு மாதங்கள் வாழ்ந்த பிறகு அவன் வெள்ளாடாகப் பிறவி எடுக்கிறான்.(68) ஒரு முழு வருடம் கழிந்ததும் அவன் தன் ஆட்டுடலைக் கைவிட்டு ஒரு புழுவாகப் பிறக்கிறான். அதன் பிறகு அவன் மனித நிலையை அடைவதில் வெல்கிறான்.(69)நெல், யவம், எள், உழுந்து, கொள்ளு, கடுகு, கடலை, கலாயம், பச்சைப்பயறு, கோதுமை, அதசி (காயா) மற்றும் வேறு வகைத் தானியங்களையும் ஆசையினால் களவாடும் அறிவுகெட்ட, வெட்கங்கெட்ட மனிதன் பெருச்சாளியாகப் பிறக்கிறான்.(70,71) சில காலம் அப்பிறவியில் வாழ்ந்து பிறகு ஒரு காட்டுப் பன்றியாகப் பிறவியடைகிறான். காட்டுப்பன்றியாகப் பிறவியெடுக்கும் அவன் உடனடியாக நோயால் இறக்கிறான்.(72) ஓ! மன்னா, தன் பாவத்தின் விளைவால் அந்த மூட மனிதன் அடுத்ததாக ஒரு நாயாகப் பிறக்கிறான். ஐந்து வருடங்கள் நாயாக வாழும் அவன் மனித நிலையை மீண்டும் அடைகிறான்.(73)
மற்றொரு மனிதனின் மனைவியுடன் கூடாவுறவு கொண்ட ஒருவன் ஓநாயாகப் பிறவிஎடுக்கிறான். அடுத்தடுத்து அவன் நாய், நரி மற்றும் கழுகின் வடிவங்களை ஏற்கிறான். அடுத்ததாகப் பாம்பு, கங்கம் மற்றும் நாரையின் வடிவை ஏற்கிறான்.(74) ஓ! மன்னா, அறியாமையால் மயக்கப்பட்டு, சகோதரனுடைய மனைவியுடன் பாலினக் கலவி புரிந்த பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட மனிதன், ஆண் குயிலாகப் பிறந்து அவ்வடிவத்திலேயே ஓர் ஆண்டு முழுவதும் வாழ வேண்டும்.(75) காமத்தினால் நண்பனின் மனைவி, அல்லது ஆசானின் மனைவி, அல்லது மன்னனின் மனைவியுடன் பாலினக் கலவி புரிபவன், தனது மரணத்திற்குப் பிறகு காட்டுப்பன்றியாகப் பிறக்கிறான்.(76) அதன்பிறகு அவன் ஐந்து வருடங்கள் முள்ளம்பன்றியாகவும், பத்து வருடங்கள் ஓநாயாகவும் வடிவங்களை ஏற்கிறான். அடைத்த ஐந்து வருடங்கள் பூனையாகவும், அடுத்தப் பத்து வருடங்கள் சேவலாகவும் பிறக்கிறான். மூன்று மாதங்கள் எறும்பாகவும், ஒரு மாதம் புழுவாகவும் பிறந்து வாழ்கிறான். இந்த வடிவமாற்றங்களை அடைந்து அடுத்ததாக அவன் பதினான்கு வருடங்கள் இழிந்த புழுவாக வாழ்கிறான்.(78) அத்தகைய தண்டனையின் மூலம் அவனது பாவம் தீர்ந்ததும் மீண்டும் அவன் மனித நிலையை அடைகிறான்.(79)
ஓ! பெரும்பலம் கொண்டவனே, ஒரு திருமணமோ, ஒரு வேள்வியோ, கொடைச்செயல்களோ நடைபெறும்போது அதற்குத் தடையேதும் ஏற்படுத்தும் மனிதன் தன் அடுத்தப் பிறவியில் இழிந்த புழுவாகப் பிறக்கிறான்.(80) ஓ! பாரதா, அவ்வடிவத்திலேயே அவன் பதினைந்து வருடங்கள் வாழ்கிறான். அத்தகைய துன்பத்தின் மூலம் அவனது பாவம் கழிந்ததும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(81)
ஓ! மன்னா, முதலில் ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு, பிறகு இரண்டாம் கணவனுக்கும் கொடுப்பவன் இழிந்த புழுக்களுக்கு மத்தியில் பிறப்பான்.(82) ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய வடிவத்தை ஏற்று அவன் பதிமூன்று வருட காலம் வாழ்கிறான். அத்தகைய துன்பத்தின் மூலம் தன் பாவம் தீரும் அவன், மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(83)
தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ சடங்குகளைச் செய்யாமல் அல்லது முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் நீர்க்காணிக்கையளிக்காமல் உண்ணும் மனிதன் ஒரு காகமாகப் பிறக்கிறான்.(84) நூறு வருடங்கள் காகமாக வாழும் அவன் அடுத்ததாகச் சேவலின் வடிவை ஏற்கிறான். அதற்குப் பிறகு ஒரு மாதம் அவன் பாம்பாக வடிவ மாற்றம் கொள்கிறான். அதன் பிறகே அவன் மனித நிலையை மீண்டும் அடைகிறான்.(85)
தந்தையைப் போன்றவனான அண்ணனை அவமதிப்பவன், தன் மரணத்திற்குப் பிறகு நாரை வகைகளில் பிறக்கிறான்.(86) அவ்வடிவத்தில் அவன் இரண்டு வருடங்கள் வாழ்கிறான். காலத்தின் முடிவில் அந்த வடிவத்தைக் கைவிடும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(87)
ஒரு பிராமணிப் பெண்ணுடன் பாலினக் கலவி வைத்துக் கொள்ளும் சூத்திரன், தன் மரணத்திற்குப் பிறகு ஒரு காட்டுப் பன்றியாகப் பிறப்பை அடைகிறான்.(88) ஓ! மன்னா, அப்பிறவியை அடைந்தவுடனேயே அவன் நோயால் இறக்கிறான். அந்த இழிந்தவன் அடுத்ததாகத் தன் கொடும்பாவத்தின் விளைவால் ஒரு நாயாகப் பிறக்கிறான்.(89) தன் பாவம் தீர்ந்தமும் நாயின் வடிவைக் கைவிடும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான். பிராமணிப் பெண்ணிடம் சந்ததியை உண்டாக்கும் சூத்திரன் தன் மனித வடிவை விட்டதும் பெருச்சாளியாக மறுபிறவியை அடைகிறான்.(90)
ஓ! மன்னா, செய் நன்றி மறந்த குற்றவாளியான மனிதன், யமலோகத்திற்குச் சென்று, இறந்தோரின் கடும் மன்னனின் {யமனின்} சீற்றத்தால் தூண்டப்படும் {யம}தூதுவர்களின் கைகளில் வலிநிறைந்த கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறான்.(91) கனமான சுத்தியல்களுடன் கூடிய தடிகள், உலக்கைகள், கூர்முனை சூலங்கள், கொடிய தீக்குடம், கத்திகளை இலைகளாகக் கொண்ட பயங்கரக் காடு, கொதிக்கும் மணல், இரும்பு முட்கள்(92) ஆகியவையும், ஓ! பாரதா, இன்னும் அதிகமான கருவிகளையும் அத்தகைய மனிதன் யமலோகத்தில் தாங்க வேண்டியிருக்கும்.(93) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இறந்தோரின் கொடும் மன்னனின் உலகத்தில் இத்தகைய பயங்கரத் தண்டனைகளை அடையும் நன்றிகெட்ட மனிதன் இழிந்த ஒட்டுண்ணியாக மீண்டும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஓ! பாரதா, அதன்பிறகு அவன் அருவருக்கத்தக்க ஒட்டுண்ணியாக ஐந்து வருடங்கள் வாழ்கிறான். அதன் பிறகு கருவறைக்குள் நுழைந்து பிறப்பிற்கு முன்பே முன்முதிர்ந்து இறக்கிறான்.(95) அதன் பிறகு அவன் நூறு முறை அடுத்தடுத்து கருவறைக்குள் நுழைகிறான். உண்மையில் நூறு மறுபிறவிகளுக்குப் பிறகு அவன் மனிதனுக்கும், உயிரற்ற இயற்கைக்கும் இடைப்பட்ட இடைநிலை வகை உயிரினமாகப் பிறக்கிறான்.(96) பல வருடங்கள் பெருந்து துன்பத்தை அனுபவிக்கும் அவன் பிறகு முடியற்ற ஆமையாகப் பிறக்கிறான்.(97)
தயிரைத் திருடும் மனிதன் நாரையாகப் பிறக்கிறான். மீனைக் களவு செய்பவன் குரங்காகப் பிறக்கிறான். தேனைக் களவு செய்யும் புத்தியுள்ள மனிதன் ஒரு பூச்சியாகப் பிறக்கிறான்.(98) கனிகள், கிழங்குகள் மற்றும் பண்டங்களைக் களவு செய்பவன் எறும்பாகிறான். மொச்சைக் கொட்டையைக் களவு செய்பவன் ஹலகோலகமாக {நீண்ட வாலுள்ள புழுவாக} மாறுகிறான்.(99) பாயஸம் களவும் செய்தவன் அடுத்தப் பிறவியில் தித்திரி பறவையாக {ஊர்க்குருவியாகப்} பிறக்கிறான். மாவுப் பண்டத்தைக் களவு செய்பவன் {கும்போலூகம் என்றழைக்கப்படும்} மலைக்கோட்டானாகப் பிறக்கிறான்.(100) இரும்பைக் களவு செய்யும் சிறுமதி கொண்ட மனிதன் ஒரு பசுவாகப் பிறக்கிறான். வெண்கலத்தைக் களவு செய்யும் சிறு மதிகொண்ட மனிதன் ஹாரீத இனப் பறவையாக {பச்சைக் குருவியாகப்} பிறக்கிறான்.(101) வெள்ளிப்பாத்திரம் களவு செய்தவன் புறாவாகப் பிறக்கிறான். பொற்பாத்திரம் களவு செய்வதன் மூலம் அவன் இழிந்த புழுவாகப் பிறக்கிறான்.(102) பட்டுத்துணியைக் களவு செய்தவன் கிருகரமாக {கிருகலமெனும் உயிரினமாகப்} பிறக்கிறான். சிவப்புப்பட்டாலான துணியைக் களவு செய்தவன் வர்த்தகையாக {வர்த்திகை எனும் பறவையாக} மாறுகிறான்.(103)
நூலாடைகளைக் களவு செய்பவன் கிளியாகப் பிறக்கிறான். நுண்ணிழைத்துணியைக் களவு செய்பவன் தன் உடலைக் கைவிட்டதும் ஒரு வாத்தாகப் பிறக்கிறான்.(104) பஞ்சுத் துணியைக் களவு செய்பவன் நாரையாகப் பிறக்கிறான். சணலாலான ஆடைகளைக் களவு செய்பவன் தன் அடுத்தப் பிறவியில் செம்மறியாடாகப் பிறக்கிறான்.(105) நார்மடித்துணியைக் களவு செய்பவன் முயலாகப் பிறக்கிறான். பல்வேறு வகை வண்ணப் பொருட்களைக் களவு செய்பவன் மயிலாகப் பிறக்கிறான்.(106) சிவப்பு ஆடைகளைக் களவு செய்பவன் ஜீவஜிவக {சகோரப்} பறவையாகப் பிறக்கிறான். இவ்வுலகில் உள்ள (சந்தனம் முதலிய) களிம்புகளையும், நறுமணப் பொருட்களையும் பேராசையால் களவு செய்யும் மனிதன் மூஞ்சூறாகப் பிறக்கிறான். மூஞ்சூறின் வடிவை ஏற்றுப் பதினைந்து வருடங்கள் வாழ்கிறான்.(107,108) அதன் பிறகு தன் பாவத்தைக் கழித்த பிறகு அவன் மனிதனாகப் பிறக்கிறான். பாலைக் களவு செய்பவன் நாரையாகப் பிறக்கிறான்.(109) ஓ! மன்னா, மதிகெட்டுப்போய் எண்ணெயைக் களவும் செய்யும் மனிதன் எண்ணெயை உண்டு வாழும் விலங்கின் வடிவில் {தைலபாயி எனும் உயிரினமாக [வௌவாலாக / கறப்பான்பூச்சியாகப்]} பிறக்கிறான்.(110)
தான் நன்கு ஆயுதம் தரித்தவனாக, ஆயுதந்தரிக்காதவனான மற்றொருவனை, அவனுடைய செல்வத்தை அடைவதற்காகவோ, அவனிடம் கொண்ட பகையுணர்ச்சியாலோ கொல்லும் இழிந்தவன், தன் மனித உடலைக் கைவிட்ட பிறகு ஒரு கழுதையாகப் பிறக்கிறான்.(111) கழுதை வடிவை ஏற்று இரண்டு வருட காலம் வாழ்ந்து ஆயுத முனையால் அவன் இறப்பைச் சந்திக்கிறான். இவ்வழியில் தன் கழுதை உடலைக் கைவிடும் அவன் அடுத்தப் பிறவியில் (பகைவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்ட) கவலை நிறைந்த மானாகப் பிறக்கிறான்.(112) மானாகப் பிறந்து ஒரு வருடம் கழிந்ததும் அவன் ஆயுத முனையில் தன் உயிரை விடுவான். இவ்வாறு மானின் வடிவைக் கைவிடும் அவன் அடுத்ததாக மீனாகப் பிறந்து, நான்கு மாதம் கழிந்ததும் வலையால் இழுக்கப்படுவதன் விளைவால் இறப்பான். அடுத்தப் பிறவியில் இரைதேடும் விலங்காக அவன் பிறப்பான். பத்து வருடங்கள் அவ்வடிவில் வாழும் அவன், பிறகு சிறுத்தையாகப் பிறந்து ஐந்து வருடகாலம் வாழ்கிறான்.(114) காலம் கொண்டுவரும் மாற்றத்தால் தூண்டப்படும் அவன் அந்த வடிவத்தையும் கைவிட்டு, பாவம் தீர்ந்ததும், மீண்டும் மனித வடிவைப் பெறுகிறான்.(115)
பெண்ணைக் கொல்லும் சிறுமதி கொண்ட மனிதன் யமலோகத்திற்குச் சென்று பல்வேறு வகைத் துன்ப துயரங்களை அனுபவிப்பான். பிறகு முழுமையாக அவன் இருபத்தோரு வடிவ மாற்றங்களைப் பெறுவான்.(116) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அவன் அருவருக்கத்தக்க ஓர் ஓட்டுண்ணியாகப் பிறப்பான். ஒட்டுண்ணியாக இருபது வருடங்கள் வாழ்ந்த பிறகு அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(117)
உணவைக் களவு செய்வதன் மூலம் ஒருவன் வண்டாகப் பிறப்படைகிறான். வேறு வண்டுகளின் துணையுடன் பல மாதங்கள் வாழும் அவன் தன் பாவம் தீர்ந்ததும் மீண்டும் மனித நிலையை அடைகிறான். நெல்லைத் திருடுவதன் மூலம் ஒருவன் பூனையாகிறான்.(118,119) எள் கலந்த உணவைத் திருடும் மனிதன் தான் திருடிய உணவின் அளவுக்குத் தகுந்தபடி பெரிய அல்லது சிறிய எலியாகிறான்.(120) அவன் தினமும் மனிதர்களைக் கடிக்கிறான், அதன் விளைவாக அவன் பாவம் நிறைந்தவனாகப் பல்வேறு மறுபிறவிகளின் சுழலில் பயணிக்கிறான். நெய்யைத் திருடும் மதிகெட்ட மூடன் ஈயாகப் பிறக்கிறான்.(121) மீனைக் களவு செய்யும் இழிந்தவன், காக்கையாகப் பிறக்கிறான். உப்பைக் களவு செய்யும் ஒருவன், பேசும் கிளியாகப் பிறக்கிறான்.(122) நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டவற்றை அபகரிக்கும் மினதன், வாழ்வுக்காலம் குறைந்தவனாக இறந்து மீன்களுக்கு மத்தியில் பிறக்கிறான்.(123) சில காலம் மீனாக வாழும் அவன் இறந்ததும் மீண்டும் மனித வடிவை அடைகிறான். மனித நிலையை அடைந்தாலும் அவன் குறுகிய வாழ்நாளையே பெறுகிறான்.(124) ஓ! பாரதா, உண்மையில் பாவங்களை இழைக்கும் ஒருவன், மனிதர்களுக்கும், காய்கறிகளுக்கும் இடைப்பட்ட நிலையான இடைநிலை வகையில் தன் பிறப்பை அடைகிறான். தங்கள் இதயத்தையே அதிகாரமாகக் கொண்ட மக்கள் முற்றாக அறமறியாதவர்களாக இருக்கிறார்கள்(125)
பல்வேறு பாவச்செயல்களைச் செய்து தொடர்ந்த நோன்புகள் மற்றும் பக்திச் செயல்பாடுகள் மூலம் அவற்றைத் தணிக்க முயலும் மனிதர்கள், இன்பதுன்பங்களை அடைந்து இதயத்தில் பெரும் கவலையுடன் வாழ்கிறார்கள்.(126) பாவம் நிறைந்த ஒழுக்கம் கொண்டவர்களும், பேராசை மற்றும் அறியாமைக்கு வசப்படுகிறவர்களும், தொடர்பு கொள்ளத்தகாத மிலேச்சர்களாகப் பிறக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(127) மறுபுறம், தங்கள் பிறவிகள் தோறும் பாவங்களைத் தவிர்க்கும் மனிதர்கள், அனைத்து வகைப் பிணியில் இருந்து விடுபட்டு, வடிவ அழகுடன் கூடியவர்களாகச் செல்வத்தை அடைகிறார்கள்.(128)
மேற்குறிப்பிட்ட வழியில் செயல்படும் பெண்களும் அதே வகையிலேயே பிறப்பை அடைவார்கள். உண்மையில் அவர்கள் நான் குறிப்பிட்ட விலங்குகளின் துணைகளாகப் பிறப்பை அடைகின்றனர்.(129)
ஓ! பாவமற்றவனே, பிறரின உடைமைகளை அபகரிப்பதில் தொடர்புடைய குற்றங்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இக்காரியம் குறித்து நான் உனக்கு மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.(130) ஓ! பாரதா, வேறு காரியம் குறித்த குற்றங்களைக் குறித்து மற்றொருமுறை கேட்பாயாக. ஓ! மன்னா, நான் இவற்றைப் பிரம்மனிடம் இருந்து கேட்டிருக்கிறேன்.(131) அவர் தேவர்களுக்கு மத்தியில் இது குறித்து உரையாடியபோது இவையனைத்தையும் மகிழ்வூட்டும் வகையில் கேட்டேன். உண்மையில் நீ கேட்டது அனைத்தையும் விரிவாகச் சொல்லிவிட்டேன்.(132) ஓ! ஏகாதிபதி, இவை யாவற்றையும் கேட்டு நீ உன் இதயத்தை எப்போதும் அறத்தில் நிலைநிறுத்துவாயாக” என்றார் {பிருஹஸ்பதி}.(133)
அன்னதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 112-பாவத்தைப் போக்கும் வழிமுறைகள்; அறத்தின் துணையுடன் அடையப்படும் கதிகள்; அன்னதானத்தின் சிறப்பு; அறத்தின் ஆறு வாயில்கள் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்..
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, மறம் அல்லது பாவத்தின் கதியென்ன? என எனக்குச் சொன்னீர். ஓ! பேசுபவர்களின் முதன்மையானவரே, அறத்தின் கதியென்ன? என இப்போது கேட்க விரும்புகிறேன்.(1) பல்வேறு பாவச் செயல்களைச் செய்தபின் எந்தச் செயல்களின் மூலம் மக்கள் இவ்வுலகில் {இம்மையில்} மங்கல கதியை அடைகிறார்கள்? எந்தச் செயல்களின் மூலம் மக்கள் சொர்க்கத்திலும் {மறுமையிலும்} மங்கல கதியை அடைகிறார்கள்?” என்று கேட்டான்.(2)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “பிறழ்மனத்துடன் பாவம்நிறைந்த செயல்களைச் செய்த ஒருவன் மறத்தின் ஆளுகைக்கு வசப்பட்டு அதன் விளைவாக நரகத்திற்குச் செல்கிறான்.(3) மனத்தின் அறியாமையால் பாவச்செயல்களைச் செய்த மனிதன், மனந்திருந்தி வேதனையடைந்து தன் இதயத்தை (தேவர்களை) தியானிப்பதில் நிறுவினால், அவன் தன் பாவங்களின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதில்லை.(4) ஒருவன் எந்த அளவுக்கு {தான் செய்த பாவத்தைக் குறித்து நினைத்து} வருந்துகிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(5) ஓ! மன்னா, பாவத்தை இழைத்த மனிதன், கடமைகளை அறிந்த பிராமணர்களின் முன்னால் அவற்றை அறிவித்தால் அந்தப் பாவங்களில் இருந்து எழும் அவதூறுகளிலிருந்து உடனே அவன் தூய்மையடைகிறான்.(6) இதன்படி ஒருவன் முழுமையாகவோ, வேறு வகையிலோ தன் பாவங்களைக் குவிந்த மனத்துடன் அறிக்கையிட்டால் அவன் பழைய சட்டையில் இருந்து விடுபெறும் பாம்பைப் போல அந்தப் பாவத்தில் இருந்து முழுமையாகவோ, வேறுவகையிலோ விடுபடுகிறான்.(7) குவிந்த மனத்துடன் ஒரு பிராமணனுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை அளித்து, (தேவனிடம்) மனதைக் குவிப்பதன் மூலம் ஒருவன் மங்கல கதியை அடைகிறான்.(8)
ஓ! யுதிஷ்டிரா, பாவச்செயல்களை இழைத்த குற்றவாளியாகவே இருந்தாலும் எக்கொடைகளை அளித்தால் அவன் பலன் கொண்டவனாகிறான் என்பதைச் சொல்லப் போகிறேன்.(9) கொடைகள் அனைத்திலும் உணவுக்கொடையே {அன்னதானமே} சிறந்ததெனக் கருதப்படுகிறது. பலனை அடைய விரும்பும் ஒருவன் நேர்மையான இதயத்துடன் உணவுக்கொடையளிக்க வேண்டும்.(10) உணவே மனிதர்களுக்கு உயிர் மூச்சுகளை அளிக்கிறது. அதிலிருந்துதான் உயிரினங்கள் பிறக்கின்றன. உயிரினங்களைக் கொண்ட உலகங்கள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன. எனவே உணவு மெச்சப்படுகிறது.(11) தேவர்கள், முனிவர்கள், பித்ருகள் மற்றும் மனிதர்கள் அனைவரும் உணவைப் புகழ்கின்றனர். பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததற்காகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(12)
நியாயமாக அடையப்பட்ட நல்ல உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கொடுக்க வேண்டும்.(13) ஓராயிரம் பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் உணவைக் கொடையளித்த மனிதன் இடைநிலை வகையில் {விலங்கு, பறவை, பூச்சிகளாக} ஒருபோதும் பிறக்க மாட்டான்.(14) ஓ! மனிதர்களின் தலைவா, பத்தாயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டிய ஒருவன், மறத்தில் {அதர்மத்தில்} இருந்து தூய்மையடைந்து யோக நடைமுறைகளில் அர்ப்பணிப்புள்ளவன் ஆகிறான்.(15)
வேதங்களை அறிந்த ஒரு பிராமணன், பிச்சையில் தனக்குக் கிடைத்த உணவை வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒரு பிராமணனுக்குக் கொடையளித்தால் இம்மையில் {இவ்வுலகில்} மகிழ்ச்சியடைவதில் வெல்கிறான்.(16)
ஒரு க்ஷத்திரியன், எந்தப் பிராமணனின் உடைமைகளையும் அபகரிக்காமல், தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பலத்தைப் பயன்படுத்தி அடைந்த உணவை வேத அறிவு கொண்ட முதன்மையான பிராமணர்களுக்குக் கொடையளித்தால், ஓ! பாண்டுவின் மகனே, ஓ! அற ஆன்மாவே, அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் அவன் தான் செய்த பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17,18)
ஒரு வைசியன், தன் களத்தின் {வயலின்} விளைச்சலை ஆறு சமமான பங்குகளாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை பிராமணர்களுக்குக் கொடுத்தால், அவன் அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(19)
ஒரு சூத்திரன், கடும் உழைப்பாலும், உயிரைப் பணயம் வைத்தும் ஈட்டப்பட்ட உணவைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(20)
உடல் பலத்தைப் பயன்படுத்தி, எந்த உயிரினத்திற்கும் எத்தீங்கையும் செய்யாமல் ஈட்டிய உணவை பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் தனக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதில் வெல்கிறான்.(21) நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகமாகக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) அறத்தின் பாதையில் நடப்பதன் மூலம் ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். பெருஞ்சக்தியைக் கொடுக்க வல்ல உணவைக் கொடையளிப்பவன் பெருஞ்சக்தி கொண்டவனாகிறான்.(23) ஈகையாளர்களால் அமைக்கப்பட்ட பாதையிலேயே ஞானம் கொண்டவர்கள் எப்போதும் நடக்கிறார்கள். உணவு கொடையளிப்பவர்கள் உயிரைக் கொடையளிப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அத்தகைய கொடையின் மூலம் அவர்கள் அடையும் பலன் நித்தியமானதாகும்.(24) எனவே ஒருவன் அனைத்துச் சூழ்நிலைகளிலும், நியாயமான முறைகளில் உணவை ஈட்ட முனைந்து, அவ்வாறு ஈட்டப்பட்டவற்றைத் தகுந்த மனிதர்களுக்கு எப்போதும் கொடையளிக்க வேண்டும். உயிரினங்களின் உலகிற்கு உணவே பெரும்புகலிடமாகும்.(25)
உணவுக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் ஒருபோதும் நரகத்திற்குப் போக மாட்டான். எனவே, ஒருவன் நியாயமான வழிமுறைகளில் ஈட்டப்பட்ட உணவை எப்போதும் கொடையளிக்க வேண்டும்.(26) ஓர் இல்லறத்தான் ஒரு பிராமணனுக்கு உணவுக் கொடையளித்தபிறகே எப்போதும் உண்ண வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உணவுக் கொடையளிப்பதன் மூலம் அந்த நாளை கனிநிறைந்ததாக்க வேண்டும்.(27) ஓ! மன்னா, கடமைகள் {தர்மங்கள்}, சாத்திரங்கள் மற்றும் புனித வரலாறுகளை அறிந்தவர்களான ஆயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டும் மனிதன்,(28) நரகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை, இவ்வுலகில் மீண்டும் திரும்பும் வகையில் மறுபிறவியை அடைவதுமில்லை. அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அடையும் அவன் மறுமையில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(29) அக்கதைய பலனை அடையும் அவன், கவலையில் இருந்து விடுபட்டு, வடிவ அழகு, பெரும்புகழ் மற்றும் செல்வத்தை அடைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(30) இவ்வாறு உணவுக் கொடையின் உயர்ந்த பலன்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். {வேற எந்த} அறம், பலன்கள் மற்றும் கொடைகள் அனைத்தின் வேராகவும் இதுவே இருக்கிறது” என்றார் {பிருஹஸ்பதி}.(31)
அஹிம்ஸை! – அநுசாஸனபர்வம் பகுதி – 113-அறத்தின் ஆறு வாயில்கள் மற்றும் அஹிம்ஸை குறித்து பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “தீங்கிழையாமை {கொல்லாமை}, வேத சடங்குகளைச் செய்தல், தியானம், புலனடக்கம், தவங்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து தொண்டாற்றல் ஆகியவற்றில் ஒருவனுக்குப் பெரும் பலனைத் தரக்கூடியது எது?” எனக் கேட்டான்.
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “இந்த ஆறும் பலன்நிறைந்தவையே ஆகும். இவை அறத்தின் வெவ்வேறு வாயில்களாகும். நான் அது குறித்து இப்போது சொல்லப் போகிறேன். ஓ! பாரதர்களின் தலைவா, அவற்றைக் கேட்பாயாக.(2) மனிதர்களுக்கான உயர்ந்த நன்மை எது என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன். அண்டம் சார்ந்த கருணை அறத்தை {கொல்லாமையைப்} பயிலும் மனிதன் உயர்ந்த நன்மையை அடைகிறான்.(3) காமம், கோபம், பேராசை ஆகிய மூன்று குற்றங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் மனிதன் (கருணை அறத்தைப் பயின்று) வெற்றியை அடைகிறான்[1].(4)தன் மகிழ்ச்சிக்கான நோக்கில் தீங்கற்ற பிற உயிரினங்களைத் தண்டக் கோல் கொண்டு கொல்பவன், ஒருபோதும் மறுமையில் மகிழ்ச்சியை அடைய மாட்டான்.(5) அனைத்து உயிரினங்களையும் தானாகவே கருதி, தன்னைப் போலவே அவற்றிடம் நடந்து கொள்ளும் மனிதன், தண்டக்கோலை வைத்து, முற்றிலும் தன் கோபத்தை அடக்கி மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொண்டு, அவை அனைத்தையும் தானாகவே பார்ப்பவன், தன் பின்னே சுவடுகளை விடாததால் நிலையான வசிப்பிடத்தை விரும்பும் தேவர்களும் அவனது பாதையை உறுதி செய்வதில் மயக்கமடைகிறார்கள்[2].(7) ஒருவன் தனக்குத் தீங்கு எனக் கருதுவதை மற்றவனுக்கு ஒருபோதும் செய்யக்கூடாது. இதுவே அறத்தின் சுருக்கமான விதியாகும். வேறு வழியில் செயல்படும் ஒருவன் ஆசைக்கு வசப்படுவதன் மூலம் அறமற்ற {அதர்மம் செய்யும்} குற்றவாளியாகிறான்.(8)கொடை மறுத்தல் மற்றும் பெறல், இன்பம் மற்றும் துன்பம், ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை ஆகியவற்றில் ஒருவன் தன்னையே உவமையாகக் கொண்டு அவற்றின் விளைவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.(9) ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைக்கும்போது, தீங்குக்குள்ளானவன் திரும்பி தீங்கிழைத்துவனுக்குத் தீங்கிழைக்கிறான். அதே போலவே, ஒருவன் மற்றொருவனைப் பேணி வளர்க்கும்போது, அவ்வாறு வளர்ப்பவனைப் பிறர் பேணி வளர்ப்பார்கள். ஒருவன் தனக்கான ஒழுக்க விதியை இதன்படியே கட்டமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நுட்பமான வழியில் நான் அறம் என்றால் என்ன என்பதை உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}”.(10)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இதைச் சொல்லிவிட்டு, எங்கள் கண் முன்பே சொர்க்கத்திற்குச் செல்ல மேல்நோக்கி உயர்ந்தார்”.(11)
புலால்மறுத்தல்! – அநுசாஸனபர்வம் பகுதி – 114-நான்கு வகை அஹிம்ஸை; புலால் மறுத்தல் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு, பெரும் சக்தி கொண்டவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், கணைப்படுக்கையில் கிடக்கும் பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, வேதங்களின் அதிகாரத்தினால் வழிநடத்தப்படும் முனிவர்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் அனைவரும் கருணையையே தன் குறியீடாகக் கொண்ட அறத்தை மெச்சுகிறார்கள்.(2) ஆனால், ஓ! மன்னா, நாம் உம்மிடம் கேட்பது என்னவென்றால்: சொல், எண்ணம், செயல் ஆகியவற்றில் பிறருக்குத் தீங்கிழைத்த மனிதன், துன்பத்தில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் எவ்வாறு வெல்கிறான்?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிரம்மத்தை ஓதுபவர்கள், கருணை, அல்லது தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை} நான்கு வகையானது என்று சொல்லியிருக்கின்றனர். இந்த நான்கு வகைகளில் ஒன்று நோற்கப்படாவிட்டாலும் கருணையறம் {அஹிம்ஸை} நோற்கப்பட்டதாகாது என்று சொல்லப்படுகிறது.(4) நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் யாவும் மூன்று கால்களில் நிற்க இயலாததைப் போலவே கருணையறத்தாலும் நான்கு வகைகளில் ஒன்றில்லாவிட்டாலும் நிற்க இயலாது.(5) பிற உயிரினங்களின் காலடித்தடங்கள் அனைத்தையும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதைப் போலவே வேறு அறங்கள் அனைத்தும் கருணையறத்தில் {அஹிம்ஸையில்} உள்ளடங்கிவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. செயல்கள், சொற்கள் மற்றும் எண்ணங்களின் மூலமாக ஒருவன் தீங்கிழைக்கும் குற்றவாளியாகிறான்[1].(6,7)தொடக்கத்திலேயே அதை மனத்தில் இருந்து அகற்றும் ஒருவன் அடுத்ததாக அதைச் சொல் மற்றும் எண்ணத்தில் இருந்தும் விலக்க வேண்டும். இவ்விதியின்படி இறைச்சியுண்பதைத் தவிர்க்கும் ஒருவன் மூன்று வழிகளில் {எண்ணம், சொல் மற்றும் செயல் வழிகளில்} தூய்மையடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(8) பிரம்மம் ஓதுபவர்கள் (இறைச்சியுண்ணும் பாவத்திற்கான) மூன்று காரணங்களைக் குறிப்பிடுவதாகக் கேள்விப்படுகிறோம். அந்தப் பாவம் மனம், சொற்கள் மற்றும் செயல்களில் பற்றியிருக்கலாம்.(9) இந்தக் காரணத்தினாலேயே தவங்களுடன் கூடிய ஞானம் கொண்ட மனிதர்கள் இறைச்சி உண்பதைத் தவிர்க்கிறார்கள். ஓ! மன்னா, இறைச்சியுண்பதால் ஏற்படும் குற்றங்களை {தோஷங்களை} உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(10)
பிற விலங்குகளின் இறைச்சியானது ஒருவனுடைய மகனின் சதையைப் போன்றதாகும். அறியாமையில் மயங்கி இறைச்சியுண்ணும் மூடன், மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான்.(11) தந்தையும், தாயும் இணைவதால் சந்ததி உண்டாகிறது. அதே வகையிலேயே ஓர் ஆதரவற்ற, பாவம் நிறைந்த இழிந்தவன் இழைக்கும் கொடுமையே, பெரும் துன்பம் நிறைந்த மறுபிறவிகளைக் கொண்ட சந்ததியை மீண்டும் மீண்டும் உண்டாக்குகிறது.(12) சுவையுணர்வு அல்லது சுவையின் அறிவுக்குக் காரணமாக நாக்கு இருப்பதைப் போலவே, பற்றானது சுவையிலிருந்தே உண்டாகிறது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன[2].(13) நன்கு தோல்நீக்கப்பட்டு, உப்புடனோ, உப்பில்லாமலோ சமைக்கப்படும் இறைச்சியை ஒருவன் எவ்வடிவில் உண்டாலும், அது படிப்படியாக மனத்தை ஈர்த்து, அதற்கு அவனை அடிமையாக்குகிறது.(14)இறைச்சியுண்டு வாழும் மூட மனிதர்களால் (தெய்வீகப்) பேரிகைகள், மிருதங்கங்கள், யாழ் மற்றும் தந்திக்கருவிகளின் இனிய இசையைக் கேட்பதில் எவ்வாறு வெல்ல முடியும்?(15) உணரப்பட முடியாதது, விவரிக்க முடியாதது, கற்பனை செய்ய முடியாதது என இறைச்சி குறித்து {இல்லாததைச்} சொல்லும் ஊனுண்பவர்கள் அதன் சுவையில் மயக்கமடைந்து அதை உயர்வாக மெச்சுகிறார்கள்.(16) இவ்வாறு இறைச்சியைப் புகழ்வதும் பாவம் நிறைந்ததாகும். பழங்காலத்தில், அறவோர் பலர், தங்கள் உடலின் சதையைக் கொடுத்து, பிற உயிரினங்களின் சதையைக் காத்தார்கள். பலன்தரும் அத்தகைய செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்கள்.(17) ஓ! ஏகாதிபதி, இவ்வழியில் கருணையறமானது, நான்கு கருத்துகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்ட கருணையறத்தைச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}[3].(18)
கொல்லாமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 116-இறைச்சி உண்பதால் கிட்டும் பலன்கள்; உயிரின் மதிப்பு; இறைச்சியுண்பதால் நேரும் பாவம்; கொல்லாமையின் சிறப்புகள் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஐயோ, பல்வேறு வகை உணவுகளைக் கைவிட்டு இறைச்சியை மட்டுமே உண்ணும் கொடூர மனிதர்கள், உண்மையில் பெரும் ராட்சசர்களைப் போன்றோரே.(1) ஐயோ, அவர்கள் இறைச்சியை {துய்த்து மகிழ்வதைப்} போலப் பல்வேறு வகைப் பண்டங்களையும், பல்வேறு வகைக் கீரைகளையும், சுவைமிக்கச் சாறுகளுடன் கூடிய பல்வேறு வகைக் கண்டங்களையும் துய்த்து மகிழ்வதில்லை.(2) இந்தக் காரணத்தினால் இக்காரியத்தில் என் புத்தி மயங்குகிறது. சுவையைப் பொறுத்தவரையில் இறைச்சியோடு ஒப்பிடத்தக்கது வேறேதும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.(3) எனவே, ஓ! பலமிக்கவரே, ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இறைச்சியைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன, இறைச்சியை உண்பதால் உண்டாகும் குற்றங்கள் என்ன என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(4) நீர் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர். கடமைகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இது குறித்து நீர் எனக்கு முழுமையாகச் சொல்வீராக. உண்மையில், எது உண்ணத்தக்கது, எது உண்ணத்தக்கதல்ல என்பதை எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, இறைச்சி என்பது என்ன, அஃது என்ன சாரத்தாலானது, அதைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்கள் மற்றும் இறைச்சியை உண்பதால் ஏற்படும் குற்றங்கள் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக” என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. சுவையின் நோக்கில் இறைச்சிக்கு மேன்மையானது இந்தப் பூமியில் ஏதும் கிடையாது. மெலிந்தவருக்கோ, பலவீனருக்கோ, நோயால் பீடிக்கப்பட்டவருக்கோ, பாலினக்கலவிக்கு அடிமையாயிருப்பவருக்கோ, பயணத்தால் களைப்படைந்தவருக்கோ இறைச்சியைவிட மிக நன்மையானது வேறேதும் இல்லை.(8) இறைச்சி மிக விரைவாகப் பலத்தை அதிகரிக்கச் செய்கிறது. அது பெரும் வளர்ச்சியை விதிக்கிறது. ஓ! பகைவர்களை எரிப்பவனே, இறைச்சியைவிட மேன்மையான உணவேதும் கிடையாது.(9) ஆனால், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அதைத் தவிர்க்கும் மனிதர்களுக்குக் கிட்டும் பலன்கள் பெரியனவாகும். நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(10)
மற்றொரு உயிரினத்தின் இறைச்சியைக் கொண்டு தன் சதையைப் பெருக்க விரும்பும் மனிதனைவிட அற்பனும், கொடூரனும் வேறெவனும் இல்லை.(11) இவ்வுலகில் தன் உயிரைவிட அன்புக்குரியது ஓர் உயிரினத்திற்கு வேறேதும் இல்லை. எனவே, (மதிப்புமிக்க அந்த உடைமையை எடுக்காமல்) ஒருவன் தன் உயிரைப் போலவே பிறரின் உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும்.(12) ஓ! மகனே, சதையே உயிர்வித்தின் தோற்றுவாய் என்பதில் ஐயமேதும் இல்லை. அதை உண்பதில் பெரும் குற்றமும், அதைத் தவிர்ப்பதில் நன்மையும் இருக்கின்றன.(13) எனினும், வேத விதிகளின் படி புனிதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதன் மூலம் எக்குற்றமும் இழைக்கப்படுவதில்லை. வேள்விகளுக்காகவே விலங்குகள் உண்டாக்கப்பட்டன என்று கேள்விப்படுகிறோம். வேறு எந்த வழியிலும் இறைச்சியை உண்பவர்கள் ராட்சச நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(14) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஆற்றலைப் பயன்படுத்தி அடையப்பட்ட இறைச்சியை உண்பதில் அவர்கள் எக்குற்றத்தையும் இழைப்பதில்லை.(15)
ஓ! மன்னா, பழங்காலத்தில் காட்டின் மான்கள் அனைத்தும் அகஸ்தியரால் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டன. எனவே, மானை வேட்டையாடுவது நிந்திக்கப்படுவதில்லை.(16) ஒருவன் தன் உயிரைப் பணயம் வைக்காமல் எந்த வேட்டையையும் செய்ய முடியாது. அங்கே விலங்கு கொல்லப்படுகிறது, அல்லது வேட்டைக்காரன் கொல்லப்படுகிறான்.(17) எனவே, ஓ! பாரதா, அரசமுனிகளே கூட வேட்டையாடினர். அத்தகைய ஒழுக்கத்தால் அவர்கள் பாவமேதும் இழைப்பதில்லை. உண்மையில் அந்த நடைமுறை பாவம் நிறைந்ததாகக் கருதப்படுவதில்லை.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டும் நடைமுறையில் உண்டாகும் பலனுக்கு இணையாக இம்மையிலோ, மறுமையிலோ வேறேதும் இல்லை.(19) கருணைகொண்ட மனிதனுக்கு எந்த அச்சமும் கிடையாது. கருணையுடன் கூடிய தீங்கற்ற மனிதர்களே இம்மையையும், மறுமையையும் அடைகிறார்கள்.(20)
கடமைகளை அறிந்த மனிதர்கள், கொடூரம் தவிர்ப்பதைக் குறியீடாகக் கொண்ட அறமே அறமென அழைக்கத்தகுந்தது எனச் சொல்கிறார்கள். தூய ஆன்மா கொண்ட மனிதன், தன் ஆன்மா கருணை கொள்ளும் செயல்களை மட்டுமே செய்வான்.(21) தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் இறைச்சி ஹவி {ஹவிஸ்} (உண்ணத்தக்கது) என்று அழைக்கப்படுகிறது. கருணையில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறரிடம் கருணையாக நடந்து கொள்பவனுமான மனிதனுக்கு எவ்வுயிரினத்திடமிருந்தும் அச்சமேதும் கிடையாது {உண்டாகாது}.(22) உயிரினங்கள் அனைத்தும் {பின்வரும்} இத்தகைய ஓர் உயிரினத்திற்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று நான் கேள்விப்படுகிறோம். ஒருவன் காயமடைந்தாலோ, வீழ்ந்துவிட்டாலோ, நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தாலோ, பலவீனமடைந்திருந்தாலோ, அடிபட்டிருந்தாலோ அவன் எந்நிலையில் இருந்தாலும், அனைத்து உயிரினங்களும் அவனைப் பாதுகாக்கவே செய்யும். உண்மையில், அவன் சமமான தரையில் இருந்தாலும், சமமற்றதரையில் திருந்தாலும் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவை இவ்வாறே செயல்படுகின்றன. பாம்புகளோ, காட்டு விலங்குகளோ, பிசாசங்களோ, ராட்சசர்களோ அவனை ஒருபோதும் கொல்வதில்லை[1].(23,24) பிறரை அச்சத்தில் இருந்து விடுவித்தவன் அஞ்சுவதற்கான சூழ்நிலைகள் எழும்போது அவன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான். உயிர்க்கொடையைவிட மேன்மையான எக்கொடையும் இதற்கும் முன்பும் இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதுமில்லை.(25)ஒருவனுக்குத் தன் உயிரைவிட அன்புக்குரியது வேறேதும் இல்லை என்பது நிச்சயமான ஒன்றாகும். ஓ! பாரதா, மரணமானது அனைத்து உயிரினங்களுக்கும் துன்பமாகவோ, தீமையாகவோ ஆகிறது.(26) மரணத்திற்கான காலம் வரும்போது, அனைத்து உயிரினங்களின் மொத்த சட்டகமும் நடுங்குவதே காணப்படுகிறது. இந்த உலகப்பெருங்கடலில், கருப்பையில் பிறக்கும் போதும், மூப்பின்போதும் பல்வேறு வகைப் பிணிகளைத் தாங்கிக் கொண்டு,(27) உயிரினங்கள் தொடர்ந்து போவதும் வருவதும் காணப்படுகிறது. ஒவ்வொரு உயிரினமும் மரணத்தால் பீடிக்கப்படுகிறது. கருப்பையில் வசித்திருக்கும்போது அனைத்து உயிரினங்களும் சிறுநீர், சளி {வியர்வை}, மலம் ஆகியவற்றின் காரமான, புளிப்பான, கசப்பான, வலிநிறைந்த உணர்வுகளை உண்டாக்கக்கூடிய, தாங்கிக் கொள்வதற்குக் கடினமான நீர்மச்சாறுகளில் {ரசங்களில்} சமைக்கப்படுகின்றன {வேகின்றன}. அங்கே அவை கருப்பையில் ஆதரவற்ற நிலையில் வசித்து, மீண்டும் மீண்டும் கிழிக்கப்படவும், துளைக்கப்படவும் செய்கின்றன(28,29). இறைச்சியில் பேராசை கொண்டவர்கள், அத்தகைய ஆதரவற்ற நிலையில் மீண்டும் மீண்டும் கருப்பையில் சமைக்கப்படுவது காணப்படுகிறது. பல்வேறு வகைப் பிறவிகளை அடையும் அவை, கும்பீபாகம் என்றழைக்கப்படும் நரகத்தில் சமைக்கப்படுகின்றன.(30)
அவை அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு இவ்வழியில் மீண்டும் மீண்டும் பயணம் செய்கின்றன. ஒருவன் இவ்வுலகத்திற்கு வரும்போது அவனுடைய உயிரைவிட மிக அன்புக்குரியது வேறேதும் இல்லை.(31) எனவே தூய ஆன்மா கொண்ட ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். ஓ! மன்னா, தான் பிறந்ததிலிருந்து அனைத்து வகை இறைச்சியையும் தவிர்க்கும் மனிதன்,(32) சொர்க்கதில் பெரும் அளவிலான இடத்தை அடைவான் என்பதில் ஐயமில்லை. உயிரில் விருப்பமுள்ளவர்களாக இருந்தாலும், விலங்குகளின் இறைச்சியை உண்பவர்கள்,(33) தாங்கள் உண்ணும் விலங்குகளாலேயே உண்ணப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. இதுவே என் கருத்தாகும். ஓ! பாரதா, “என்னை உண்டவனை நான் பதிலுக்கு உண்ணப்போகிறேன்” என்பதே மாம்ஸம் என்ற குணமாகிறது[2]. கொலைகாரன் எப்போதும் கொல்லப்படுவான். அவனுக்குப் பிறகு {கொல்லப்பட்டதை} உண்பவனும் அதே விதியைச் சந்திக்கிறான்.(35)(இப்பிறவியில்) மற்றொருவனிடம் பகையுடன் செயல்படுபவன், மற்றொருவனால் செய்யப்படும் அதே போன்ற செயல்களுக்குப் பலியாகிறான். எந்த உடலிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயல்களினாலும்(36) அவன் அவ்வுடல்களில் எழும் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்[3]. கொடூரந்தவிர்த்தலே {கொல்லாமையே} உயர்ந்த அறமாகும்.(37) கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த கொடையாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த தவமாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த வேள்வியாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த பலமாகும்.(38) கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த நண்பனாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த மகிழ்ச்சியாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த உண்மையாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த ஸ்ருதியாகும்.(39)அனைத்து வேள்விகளிலும் அளிக்கப்படும் கொடைகள், புனித நீர்நிலைகள் அனைத்திலும் செய்யப்படும் தூய்மைச் சடங்குகள், சாத்திரங்களில் குறிப்பிடப்பட்ட அனைத்து வகைக் கொடைகள் ஆகிய இவை அனைத்தையும் செய்வதனால் ஒருவன் அடையும் பலனையும் கொடூரந்தவிர்த்தல் {கொல்லாமை} (மேற்சொன்ன அனைத்தின் பலன்களையும்) அளிக்கிறது.(40) கொடூரந்தவிர்க்கும் மனிதன் செய்யும் தவங்கள் வற்றாதனவாகின்றன. கொடூரந்தவிர்க்கும் மனிதன் எப்போதும் வேள்விகளைச் செய்பவனாகக் கருதப்படுகிறான். கொடூரந்தவிர்க்கும் மனிதன் அனைத்து உயிருக்கும் தந்தையும், தாயும் போன்றவனாவான்.(41) ஓ! குரு குலத்தின் தலைவா, இவையே கொடூரந்தவிர்ப்பதால் {அஹிம்ஸையால்} உண்டாகும் சில பலன்களாகும். ஒருவன் நூறுவருடங்கள் சேர்ந்தாற்போலப் பேசினாலும் அதைச் செய்வதால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது” என்றார் {பீஷ்மர்}.(42)
சூத்திரச் செல்வந்தன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 117-ஒரு புழுவைக் கண்ட வியாசர்; புழுவின் முற்பிறவிக் கதை; முற்பிறவியில் பெருந்தனம் படைத்த சூத்திரனாய் இருந்தது; அந்தப் புழுவுக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இறக்க விரும்பியோ, வாழ விரும்பியோ பல மனிதர்கள் தங்கள் உயிர்களை (போர் எனும்) பெரும் வேள்வியில் விடுகின்றனர். ஓ! பாட்டா, அவர்கள் அடையும் கதியென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) போரில் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கவலை நிறைந்த ஒன்றாகும். ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, செழிப்பாக இருந்தாலும், வறுமையில் இருந்தாலும், இன்பமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கடினமானது என்பதை நீர் அறிவீர். நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பது என் கருத்தாகும். இதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்றான்.(2,3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, செழிப்பிலோ, வறுமையிலோ, மகிழ்ச்சியிலோ, துக்கத்திலோ இவ்வுலகிற்கு வரும் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கேற்றபடியே வாழ்கின்றன[1].(4) அதன் காரணத்தைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி சிறப்பானதாகும்.(5) ஓ! மன்னா, இது தொடர்பாகத் தீவில் பிறந்த முனிவருக்கும் {வியாசருக்கும்}, தவழும் புழுவுக்கும் இடையில் முற்காலத்தில் நடந்த ஒரு பழைய உரையாடலை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(6) பழங்காலத்தில் கல்விமானான பிராமணரும், தீவில் பிறந்தவரும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவருமான கிருஷ்ணர் {வியாசர்} உலகில் திரிந்து கொண்டிருந்த போது, தேர்கள் கடந்து செல்லும் சாலையில் ஒரு புழு வேகமாகச் செல்வதைக் கண்டார்.(7) அந்த முனிவர் ஒவ்வொரு உயிரினத்தின் நடைமுறையையும், ஒவ்வொரு விலங்கின் மொழியையும் அறிந்தவராவார். அனைத்தையும் அறிந்த அவர் அந்தப் புழுவின் இச்சொற்களைச் சொன்னார்.(8)வியாசர், “ஓ! புழுவே, பேரச்சத்துடன் நீ மிக விரைவாகச் செல்வதாகத் தெரிகிறது. நீ எங்கே ஓடுகிறாய், எதைக் கண்டு அஞ்சுகிறாய் என்பதை எனக்குச் சொல்” என்றார்.(9)
அந்தப் புழு {வியாசரிடம்}, “பெருந்தேர் ஒன்றின் சடசடப்பொலியைக் கேட்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அதன் முழக்கம் கடுமையாக இருக்கிறது. அது கிட்டத்தட்ட {அருகில்} வந்துவிட்டது. ஒலி கேட்கிறது. அஃது என்னைக் கொல்லாதா? இதற்காகவே நான் தப்பி ஓடுகிறேன். காளைகளின் ஒலியை மிக அருகில் கேட்கிறேன். அவை சாரதியின் சாட்டையின் கீழ் கடும் மூச்சு விட்டுக் கொண்டே கடும் சுமையைச் சுமந்து வருகின்றன. அந்தக் காளைகளைச் செலுத்தும் மனிதர்கள் வெளியிடும் பல்வேறு ஒலிகளையும் நான் கேட்கிறேன்.(12) புழு வகையில் பிறந்திருக்கும் எங்களைப் போன்ற உயிரினங்களால் அவ்வொலிகள் கேட்கத்தகாதனவாகும். இதன் காரணமாகவே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்தச் சூழ்நிலையில் இருந்து நான் தப்பிச் செல்கிறேன்.(13) அனைத்து உயிரினங்களும் வலிநிறைந்த மரணத்தை உணர்கின்றன. வாழ்வு என்பது அடைதற்கரிய உடைமையாகும். எனவே, மகிழ்ச்சியான நிலையில் இருந்து துன்ப நிலைக்குச் செல்ல நான் விரும்பவில்லை. எனவே நான் அச்சத்தால் தப்பி ஓடுகிறேன்” என்றது”.(14)
பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டதும், தீவில் பிறந்தவரான வியாசர், “ஓ! புழுவே, நீ எங்கே மகிழ்ச்சியாக இருப்பாய்? நீ இடைநிலை வகையைச் சார்ந்த உயிரினமாக இருக்கிறாய். மரணம் உனக்கு மகிழ்ச்சி நிறைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(15) ஓ! புழுவே, ஒலி, தீண்டல், சுவை, மணம், மற்றும் பல்வேறு வகையான சிறந்த இன்பங்களை நீ அறியமாட்டாய். மரணம் உனக்கு நன்மையானது என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.(16)
புழு {வியாசரிடம்}, “ஓர் உயிரினம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அதில் பற்றுக் கொள்கிறது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, இந்த வகைப் பிறப்பிலும் நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதற்காகவே நான் வாழ விரும்புகிறேன்.(17) இந்தச் சூழ்நிலையிலும் என் உடல் தேவைகளுக்கு ஏற்ற இன்பங்கள் இருக்கின்றன. மனிதர்களும், அசைவற்ற {உயிரற்ற} பொருட்களில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் வெவ்வேறு இன்பங்களைக் கொண்டிருக்கின்றனர்.(18) என் முந்தைய பிறவியில் நான் மனிதனாக இருந்தேன். ஓ! பலமிக்கவரே, நான் செல்வம் நிறைந்த ஒரு சூத்திரனாக இருந்தேன். நான் பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இல்லை. நான் கொடூரனாகவும், ஒழுக்கத்தில் இழிந்தவனாகவும், அநியாய வட்டிக்குப் பணம் தருபவனாகவும் இருந்தேன்.(19) நான் பேச்சில் கடுமை மிகுந்தவனாகவும் இருந்தேன். வஞ்சிப்பதையே ஞானமாகக் கருதினேன். அனைத்து உயிரினங்களையும் நான் வெறுத்தேன். எனக்கும் பிறருக்கும் இடையில் உண்டான உடன்படிக்கைகளில் உள்ள சாக்குபோக்குகளைப் பயன்படுத்திப் பிறருக்குச் சொந்தமானவற்றை எப்போதும் அபகரித்து வந்தேன்.(20)
கொடியவனான நான், பசித்ததும் என் வயிற்றை நிறைத்துக் கொண்டு, பணியாட்களுக்கும், என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.(21) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நம்பிக்கையுடனும், மதிப்புடனும் அவர்களுக்கு எந்த உணவையும் ஒருபோதும் அர்ப்பணிக்காத பேராசைக்காரனாக நான் இருந்தேன்.(22) பாதுகாப்பை நாடி அச்சத்துடன் என்னிடம் வந்த மனிதர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்காமல் திசைமாற்றிச் செல்ல வைத்தேன். தங்கள் அச்சத்தை விலக்க வேண்டி என்னிடம் வந்தவர்களுக்கு நான் எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை.(23) வேறு மக்களுக்குச் சொந்தமான செல்வம், தானியங்கள், மனைவிகள், அவர்களது அன்புக்குரியவை, பருகும் பானங்கள், நல்ல மாளிகைகள் ஆகியவற்றைக் கண்டு காரணமேயில்லாமல் அவர்களிடம் பொறாமை கொள்வேன்.(24) அவர்களுக்கு வறுமையையே நான் விரும்பினேன். என் ஆசைகளைக் கனியும் நிலையால் மகுடம் சூட்ட உறுதி அளித்த அந்த ஒழுக்கத்தையே பின்பற்றி, மற்றவர்களின் அறம், பொருள் மற்றும் இன்பங்களை அழிக்க முனைந்தேன்.(25)
என்னுடைய அந்த முற்பிறவியில் பெரிய கொடுமைகளையும், அதே போன்ற ஆசைகளை நிறைவேற்றும் செயல்களையும் செய்தேன். அந்தச் செயல்களை நினைவுகூரும் நான் அன்புக்குரிய மகனை இழந்து துயரப்படும் ஒருவனைப் போல வருத்தத்திற்கும் துன்பத்திலும் நிறைகிறேன்.(26) என்னுடைய இந்தச் செயல்பாடுகளின் விளைவால் நற்செயல்கள் என்ன கனிகளைத் தரும் என்பதை அறிந்தவனாக நான் இல்லை. எனினும், நான் வயது முதிர்ந்த என் தாயை வழிபட்டு வந்தேன், ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிராமணரையும் வழிபட்டேன்.(27) {நல்ல} பிறவியையும், சாதனைகளையும் கொண்ட அந்தப் பிராமணர், ஒருமுறை தமது பயணங்களின் போது என் வீட்டிற்கு விருந்தினராக வந்தார். நான் அவரை மதிப்புடனும், விருந்தோம்பலுடனும் வரவேற்றேன். அந்தச் செயலுக்கான பலனின் விளைவால் என் நினைவு என்னைக் கைவிடாதிருக்கிறது.(28) என்னுடைய அந்தச் செயலின் விளைவால் மீண்டும் நான் மகிழ்ச்சியை மீட்டெடுப்பேன் என நினைக்கிறேன். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். என் நன்மைக்கானது என்ன என்பதை அன்புடன் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டது.(29)
ஜென்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 118-புழுவானது அடுத்தடுத்து வெவ்வேறு பிறவிகள் அடைந்ததைக் கண்ட வியாசர்…
வியாசர், “ஓ! புழுவே, ஒரு புண்ணியச் செயலின் விளைவாலேயே இடைநிலை உயிரின வகையில் பிறந்திருந்தாலும் நீ மதிமயங்காமலிருக்கிறாய். ஓ! புழுவே, நான் செய்த அந்தச் செயலின் விளைவாலேயே நீ மதிமயங்காமலிருக்கிறாய்[1].(1) என் தவ வலிமையின் விளைவாலேயே நானும் குற்றமுள்ள ஓர் உயிரினத்திற்கு என்னைக் காணச் செய்து அதைக் காக்க இயன்றவனாயிருக்கிறேன். தவ வலிமையைவிடப் பலமிக்க வலிமை வேறேதும் இல்லை.(2) ஓ! புழுவே, நீ உன் முற்பிறவியில் செய்த தீச்செயல்களின் மூலமே புழுக்களின் வகையில் பிறப்பெடுத்திருக்கிறாய் என்பதை அறிவேன். எனினும், நீ அறத்தையும், தகுதியையும் ஈட்ட நினைத்தால் உன்னால் அவற்றை அடைய முடியும்.(3) தேவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், இந்தச் செயற்களத்தில் தங்களால் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே இன்பத்தையும், துன்பத்தையும் அடைகிறார்கள். மனிதர்களுக்கு மத்தியிலும் அறச்செயல்கள் செய்யப்படும்போது கனியின் மேல் உள்ள விருப்பத்தாலேயே அவை செய்யப்படுகின்றன (கனியை விரும்பாமலல்ல). ஒருவன் அடைய நினைக்கும் சாதனையானது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்ற விருப்பத்தாலேயே வேண்டப்படுகிறது.(4)(முற்பிறவியில்) கல்விமானாகவோ, அறியாமையுடன் கூடிய உயிரினமாகவோ, பேச்சும், புத்தியும், கைகளும், கால்களும் அற்றிருப்பது உண்மையில் அனைத்துமற்றிருப்பதே ஆகும்.(5) ஒரு மேன்மையான பிராமணன் ஆகிறவன், வாழும்போது புனித மந்திரங்களைச் சொல்லி சூரியன் மற்றும் சந்திர தேவர்களைத் துதிக்கிறான். ஓ! புழுவே, நீ அந்த நிலையை அடைவாய்.(6) அந்த நிலையை அடைந்ததும் நீ இன்ப நுகர்பொருட்களாக மாற்றப்பட்ட பூதங்கள் அனைத்தையும் அனுபவிப்பாய். நீ அந்த நிலையை அடையும்போது நான் உனக்குப் பிரம்மத்தைப் போதிப்பேன். அல்லது, நீ விரும்பினால் உனக்கு வேறெந்த நிலையையும் நான் அளிப்பேன்” என்றார் {வியாசர்}.(7)
வியாசரின் சொற்களை ஏற்றுக் கொண்ட அந்தப் புழு சாலையை விட்டு அகலாமல் அங்கேயே இருந்தது. அதே வேளையில், அந்தத் திசையில் வந்து கொண்டிருந்த பெரிய வாகனம் அந்த இடத்திற்கு வந்தது.(8) அந்தப் புழு, சக்கரங்களின் தாக்குதலில் துண்டுகளாகக் கிழிந்து தன் உயிர்மூச்சை விட்டது. இறுதியாக அளவிலா பலம் கொண்ட வியாசரின் அருள் மூலம் க்ஷத்திரிய வகையில் பிறந்த அது {அந்தப் புழு}(9) அந்தப் பெரும் முனிவரைக் காணச் சென்றது. அது க்ஷத்திரியனாவதற்கு முன், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான், பறவை,(10) சண்டாளன், சூத்திரன் மற்றும் வைசியன் என்ற பல்வேறு வகைகளில் பிறந்திருந்தது. உண்மையைச் சொல்லும் முனிவரிடம் தன் பல்வேறு வடிவமாற்றங்களைக் குறித்துச் சொல்லி, முனிவர் தன்னிடம் காட்டிய கருணையை நினைவுகூர்ந்த அந்தப் புழு (இப்போது க்ஷத்திரியனாக மாறியிருப்பது) தன் கரங்களைக் கூப்பி அந்த முனிவரின் கால்களில் விழுந்து தன் தலையால் அவற்றைத் தீண்டியது {அந்த க்ஷத்திரியன் தன் தலையால் அம்முனிவரின் பாதங்களைத் தீண்டினான்}.(11)
அந்தப் புழு, “அனைவராலும் விரும்பப்படுவதும், நன்கறியப்பட்ட பத்துக் குணங்களைக் கொண்டிருந்தால் அடையக்கூடியதுமான உயர்ந்த நிலையில் இப்போது நான் இருக்கிறேன்[2]. உண்மையில், முன்பு ஒரு புழுவாக இருந்த நான் இவ்வாறே ஒரு இளவரசனின் நிலையை அடைந்திருக்கிறேன்.(12) பெரும்பலம் கொண்டவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் என்னைத் தங்கள் முதுகுகளில் சுமந்து செல்கின்றன. என் தேர்களில் உயர்ந்த வகையைச் சார்ந்த காம்போஜ குதிரைகள் பூட்டப்படுகின்றன.(13) ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட எண்ணற்ற வாகனங்களும் என்னைச் சுமக்கின்றன. நான் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் இறைச்சியுடன் கூடிய உணவை உண்கிறேன்.(14) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, அனைவராலும் வழிபடப்படும் நான் இனிமையற்ற காற்று வீச முடியாத இனிமை நிறைந்த அறைகளில் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் நான் உறங்குகிறேன்.(15) ஒவ்வொரு இரவிலும் கொஞ்ச நேரம், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தேவர்கள் தங்கள் தலைவனான இந்திரனை இனிமையாகப் புகழ்வதைப் போலவே என்னைப் புகழ்கிறார்கள்.(16) முன்பு புழுவாக இருந்த நான், வாய்மையில் உறுதியுள்ளவரும், அளவிலா சக்தி கொண்டவருமான உமது அருளின் மூலம் இப்போது அரச வகையில் பிறந்திருக்கிறேன்.(17) ஓ! பெரும் ஞானியே, நான் உமக்குத் தலைவணங்குகிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு ஆணையிடுவீராக. உமது தவப் பலத்தின் மூலம் விதிக்கப்பட்டே இந்த மகிழ்ச்சியான நிலை இப்போது எனதாகியிருக்கிறது” என்றது {க்ஷத்திரியனாக மாறியிருந்த அந்தப் புழு}.(18)வியாசர், “ஓ! மன்னா, மதிப்பை வெளிப்படுத்தும் பல்வேறு சொற்களால் நீ இன்று என்னை வழிபட்டாய். புழுவாக மாறியிருந்த உன் நினைவு மறைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவே இப்போது தோன்றியிருக்கிறது[2].(19) நீ முற்பிறவியில் ஈட்டிய பாவம் இன்னும் அழிக்கப்படவில்லை. முற்பிறவியில் சூத்திரனாக இருந்தபோது செல்வத்தில் பேராசை கொண்டவனும், நடத்தையில் கொடூரனும், பிராமணர்களுக்குப் பகைவனுமாக இருந்து அந்தப் பாவங்களை ஈட்டினாய்.(20) உன்னால் என்னைப் பார்க்க முடிந்தது. அது நீ புழுவாக இருந்தபோது செய்த செயலுக்கான பலனே ஆகும். என்னை வணங்கி வழிபட்டதன் விளைவாக, பசுக்களுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போர்க்களத்தில் உன் உயிர்மூச்சைவிட்டு, நீ மேலும் உயர்ந்தெழுந்து க்ஷத்ததிரிய வகையில் இருந்து பிராமண நிலையை அடைவாய்.(21,22) ஓ! இளவரசே, அதிக இன்பத்தை அனுபவித்தும், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தும் சொர்க்கத்தை அடைந்து, நித்திய பிரம்மம் ஆவாய். அந்த முற்றான இன்ப நிலையே உனதாகும்.(23) இடைநிலை வகைகளில் (விலங்குகளாகப்) பிறப்பவர்கள் (எழும்போது) சூத்திரர்களாகிறார்கள். சூத்திரன் வைசியன் என்ற நிலைக்கு உயர்ந்தெழுகிறான்; வைசிய் க்ஷத்திரியனாகிறான். தன் வகைக்கான கடமைகளை வெளிப்படுத்துவதில் செருக்கு கொள்ளும் க்ஷத்திரியன், பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான். அறவொழுக்கத்தைப் பின்பற்றும் பிராமணன், பேரின்பம் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்” என்றார் {வியாசர்}”.(24)
நற்கதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 119-வியாசரால் நற்கதியடைந்த புழுவைப் போலவே, குருக்ஷேத்திரத்தில் மடிந்த க்ஷத்திரியர்க்ள அனைவரும் நற்கதியையே அடைந்ததாக யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, புழு நிலையைக் கைவிட்டு பெருஞ்சக்தியைக் கொண்ட க்ஷத்திரியனாகப் பிறந்த மனிதன், தன் முந்தைய வடிவ மாற்றங்களை நினைவு கூர்ந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(1) அறம் மற்றும் செல்வத்தை நன்கறிந்த க்ஷத்திரியன் செய்த கடுந்தவங்களைக் கண்டவரும், தீவில் பிறந்தவரும், பிராமணர்களில் முதன்மையானவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் சென்றார்.(2)
வியாசர், “ஓ! புழுவே, க்ஷத்திரிய வகைக்கான தவம் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதாகும். க்ஷத்திரிய வகையின் இந்தக் கடமைகளையே உனக்கு விதிக்கப்பட்ட தவமாக நீ கருதுவாயாக. அதன்பிறகு நீ பிராமண நிலையை அடைவாய்.(3) எது சரி, எது தவறு என்பதை உறுதி செய்து, உன் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டு, அனைத்து உயிரினங்களையும் முறையாகப் பேணி வளர்த்துப் பாதுகாத்து, நல்ல ஆசைகள் அனைத்தையும் நியாயமாக நிறைவேற்றி, புனிதமற்ற அனைத்தையும் திருத்துவாயாக.(4) தூய்மையடைந்த ஆன்மாவாகவும், மனநிறைவுள்ளவனாகவும் இருந்து கொண்டு அறப் பயிற்சியில் அர்ப்பணிப்புடன் இருப்பாயாக. இவ்வழியில் உன் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் நீ உன் உயிர் மூச்சை விடும்போது ஒரு பிராமணனாவாய்” என்றார்”.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அவன் காடுகளுக்குச் சென்று ஓய்ந்திருந்தாலும், பெரும் முனிவரின் சொற்களைக் கேட்ட பிறகு தன் குடிமக்களை அறம்சார்ந்து பேணி வளர்க்கவும், பாதுகாக்கவும் தொடங்கினான்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிறகு அந்தப் புழுவானவன், தன் குடிமக்களைப் பாதுகாத்தக் கடமையின் விளைவாக க்ஷத்திரிய உடலைக் கைவிட்டு ஒரு பிராமணனானான்.(7) அவன் பிராமணனானதைக் கண்டவரும், கொண்டாடப்பட்ட முனிவரும், பெரும் ஞானம் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் வந்தார்.(8)
வியாசர் {புழுவானவனிடம்}, “ஓ! பிராமணர்களின் தலைவா, ஓ! அருளப்பட்டவனே, (மரணத்தில் உள்ள அச்சத்தால்) வருந்தாதே. அறம்சார்ந்து செயல்படுபவன் மதிப்புமிக்கப் பிறவியை அடைகிறான். மறுபுறம் நியாயமில்லாமல் செயல்படுபவன் தாழ்ந்த மற்றும் இழிந்த பிறவியை அடைகிறான். ஓ! அறமறிந்தவனே, ஒருவன் செய்யும் பாவத்தின் அளவுக்குத் தகுந்த துன்பத்தையே ஒருவன் அடைகிறான்.(9) எனவே, ஓ! புழுவானவனே, மரணத்தில் உள்ள அச்சத்தினால் வருந்தாதே. அறம் இழப்பு குறித்தது மட்டுமே நீ அஞ்ச வேண்டிய ஒன்றாகும். எனவே நீ அறம் பயில்வதைத் தொடர்வாயாக” என்றார்.(10)
புழுவானவன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, உமது அருளால் நான் மகிழ்ச்சிக்கு மேலான இன்பநிலைகளை அடைந்தேன். அறத்தில் தன் வேர்களைக் கொண்ட செழிப்பை நான் அடைந்திருப்பதால் என் பாவங்கள் ஒழிந்து விட்டதாக நினைக்கிறேன்” என்றான்”.(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தப் புனித முனிவரின் ஆணையின் பேரில் அடைதற்கரிய பிராமண நிலையை அடைந்த அந்தப் புழுவானவன், ஆயிரம் வேள்வித்தூண்களால் {யாகஸ்தம்பங்களால்} பூமியில் சுவடுகளை உண்டாக்கினான்(12) பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன், பிரம்மலோகத்திலேயே தன் வசிப்பிடத்தை அடைந்தான். உண்மையில், ஓ! பிருதையின் மகனே, அந்தப் புழுவானவன், வியாசரின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் செயல்களின் விளைவால் உயர்ந்த நிலையான நித்திய பிரம்மத்தையே அடைந்தான்.(13) சக்தியுடன் முயன்று, (குருக்ஷேத்திரக் களத்தில்) தங்கள் உயிர்மூச்சுகளை விட்ட க்ஷத்திரியக் காளைகள் அனைவரும் பலன்மிக்க {புண்ணியமான} கதிகளையே அடைந்தனர். எனவே, ஓ! மன்னா, நீ அவர்களுக்காக வருந்தாதே” என்றார் {பீஷ்மர்}.(14)
தானத்தின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 120-ஞானம், தவம், தானம் ஆகியவற்றின் சிறப்பைக் குறித்து மைத்ரேயருக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஞானம், தவங்கள் மற்றும் கொடைகள் என்ற மூன்றில் எது மேன்மையானது? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக மைத்ரேயருக்கும், தீவில் பிறந்தவரான கிருஷ்ணருக்கும் {வியாசருக்கும்} இடையில் நடந்த உரையால் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! மன்னா, ஒரு காலத்தில் தீவில் பிறந்தவரான கிருஷ்ணன் {வியாசர்}, யாருக்கும் தெரியாமல் உலகில் திரிந்து கொண்டிருந்த போது, வாராணசிக்கு {காசிக்குச்} சென்று முனிவர்களின் குலத்தில் பிறந்தவரான மைத்ரேயரிடம் பணி செய்தார்.(3) முனிவர்களில் முதன்மையான மைத்ரேயர், வியாசர் வருவதைக் கண்டு, அவரை முறையான சடங்குகளுடன் வழிபட்டபிறகு, அவருக்கு ஓர் இருக்கையை அளித்து, சிறந்த உணவையும் அவருக்கு உண்ணக் கொடுத்தார்.(4) உயர் ஆன்மக் கிருஷ்ணர் {வியாசர்}, உடலுக்கு நலந்தருவதும், அனைத்து வகை நிறைவையும் உண்டாக்குவதுமான அந்த நல்ல உணவை உண்ட பிறகு அங்கே அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக உரக்கச் சிரித்தார்.(5)
கிருஷ்ணர் {வியாசர்} சிரிப்பதைக் கண்ட மைத்ரேயர், “ஓ! அற ஆன்மாவே, உமது சிரிப்புக்கான காரணம் என்ன? நீர் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய தவசியாவீர். நீர் பெருமகிழ்ச்சியில் இருப்பவராகத் தெரிகிறீர்.(6) உம்மைத் தலைவணங்கி வழிபட்டுக் கேட்கிறேன் என் தவ வலிமை என்ன? உமது உயர்ந்த அருள் என்ன?(7) நான் செய்யும் செயல்கள் நீர் செய்வதில் இருந்து வேறுபட்டனவாகும். நீர் உயிர் மூச்சைக் கொண்டிருந்தாலும் ஏற்கனவே முக்தியடைந்தவராவீர். எனினும், நான் இன்னும் விடுதலை அடையவில்லை. இவ்வளவு இருந்தாலும் எனக்கும் உமக்கும் பெரும் வேறுபாடு இல்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் பிறப்பாலும் வேறுபடுகிறேன்” என்றார்[1].(8)வியாசர் {மைத்ரேயரிடம்}, “என்னை நிறைத்திருக்கும் இந்த ஆச்சரியம், மிகைப்படச் சொல்வது போலத் தெரியும் ஒரு விதியில் இருந்தும், மக்கள் புரிந்து கொள்ளும் முரண்பட்ட கூற்றிலிருந்தும் எழுகிறது. வேதங்களின் அறிக்கை உண்மையில்லை என்பது போலத் தெரிகிறது. ஆனால் வேதங்கள் ஏன் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்?[2](9) மனிதனுக்கான சிறந்த நோன்புகளாக அமையும் மூன்று தடங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஒருவன் ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது; அவன் எப்போதும் வாய்மையே பேச வேண்டும்; அவன் கொடையளிக்க வேண்டும்.(10) வேத அறிவிப்புகளைப் பின்பற்றிப் பழங்காலத்து முனிவர்கள் இதை அறிவித்தனர். பழங்காலத்தில் இருந்தது போலவே இந்தத் தடையாணைகளைக் கேட்டு நம் காலத்திலும் அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும்.(11) விதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் செய்யப்படும் சிறு கொடையும் பெரும் கனிகளை விளைவிக்கும். தாகம் நிறைந்த மனிதனுக்கு நேர்மையான இதயத்துடன் நீ சிறிதளவு நீரைக் கொடுத்திருக்கிறாய்.(12) ஓ! பலமிக்கவனே, தாகத்திலும், பசியிலும் இருந்த நீ இத்தகைய உணவை எனக்குக் கொடுத்ததன் மூலம் பல வேள்விகளைச் செய்த ஒருவனைப் போல உயர்ந்த இன்ப லோகங்களை வென்றிருக்கிறாய்.(13) உனது புனிதக் கொடையாலும், உனது தவங்களாலும் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அறமே உனது பலம். அறமே உனது தோற்றம்.(14) அறமே நீ வெளியிடும் நறுமணமாக இருக்கிறது. உனது செயல்கள் அனைத்தும் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன். ஓ! மகனே, கொடையானது, புனித நீர்நிலைகளில் தூய்மைச் சடங்குகளைச் செய்வதையும், அனைத்து வேத நோன்புகளை நிறைவேற்றுவதையும் விட மேன்மையானதாகும்.(15)உண்மையில், ஓ! பிராமணா {மைத்ரேயா}, கொடையானது, புனிதச் செயல்கள் அனைத்திலும் மங்கலமிக்கதாகும். அனைத்துப் புனிதச் செயல்களையும் விட அது பலன்மிக்கதாக இல்லாதிருந்தால், அதன் மேன்மை குறித்த கேள்வியே இருந்திருக்க முடியாது.(16) நீ மெச்சும் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தும் கொடைக்கருகில் நிற்காது. கொடையானது ஐயமில்லாமல் உயர்ந்த பலன் நிறைந்தது என நான் கருதுகிறேன்.(17) கொடையளிக்கும் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பாதையே ஞானிகள் நடக்கும் பாதையாக இருக்கிறது. கொடையளிப்பவர்கள் உயிர்மூச்சையே கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அறமாக அமையும் கடமைகள் அவற்றிலேயே {கொடைகளிலேயே} நிறுவப்பட்டுள்ளன.(18) வேதங்களை நன்கு கற்பதும், புலன்களை அடக்குவதும், அண்டந்தழுவிய துறவறம் கொள்வதும் போலவே கொடையும் மிக மேன்மையான பலனைக் கொண்டதாகும்.(19) ஓ! மகனே, கொடையளிக்கும் கடமையை நீ செய்ததன் விளைவால் மகிழ்ச்சியில் இருந்து பெரும் மகிழ்ச்சியை அடைவாய். (இந்தக் கடமையைப் பயிலும்) புத்தியுள்ள மனிதன் நிச்சயம் மகிழ்ச்சியில் இருந்து உயர்ந்து பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(20)
நாம் இது போன்ற நேரடி நிகழ்வுகள் பலவற்றைச் சந்தித்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. செழிப்புடன் கூடிய மனிதர்கள் செல்வத்தை அடைவதிலும், கொடைகளை அளிப்பதிலும், வேள்விகளைச் செய்வதிலும் அதன் மூலம் விளையும் மகிழ்ச்சியை ஈட்டுவதிலும் வெல்கின்றனர்.(21) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இன்பத்தைத் தொடர்ந்து துன்பமும், துன்பத்தைத் தொடர்ந்து இன்பமும் இயற்கையாக நடைபெறுவதே எப்போதும் காணப்படுகிறது[3].(22) ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் மனிதர்களுக்கு மூன்றுவகை ஒழுக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கின்றனர். சிலர் அறவோராகவும்; சிலர் பாவம் நிறைந்தவர்களாகவும்; சிலர் அறவோராகவும் அல்லாமல், பாவிகளாகவும் அல்லாமல் இருக்கின்றனர்.(23) பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள மனிதனின் ஒழுக்கம் இரண்டாகவும் கருதப்படுவதில்லை. அவனது பாவங்கள் பாவங்களாகவே கருதப்படுவதில்லை. தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதனும் (அந்தக் கடமைகளை நோற்பதால்) அறவோனாகவோ, பாவியாகவோ கருதப்படுவதில்லை.(24)வேள்விகள், கொடைகள், தவங்கள் ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களே அறவோராகக் கருதப்படுகின்றனர். எனினும், இவர்களில் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பவர்களும், அவற்றுடன் நட்பற்றவர்களும் பாவிகளாகவே கருதப்படுகின்றனர்.(25) சில மனிதர்கள் பிறர் உடைமைகளை அபகரிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் நரகில் விழுந்து, துன்பத்தைச் சந்திப்பார்கள். ஈடுபாடில்லாமல் {அக்கறையில்லாமல்} மனிதர்கள் செய்யும் பிற செயல்கள் அனைத்தும் அறமாகவோ, பாவமாகவோ கருதப்படுவதில்லை.(26) நீ விளையாடுவாயாக, வளர்வாயாக, உற்சாகமாயிருப்பாயாக, கொடையளிப்பாயாக, வேள்விகளைச் செய்வாயாக. ஞானிகளோ, தவசிகளோ உன்னைவிடச் சிறந்தவராகமாட்டார்” என்றார் {வியாசர்}.(27)
பெறுபவர் அடையும் பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 121-பிராமணர்களின் பெருமை; தகாதோருக்குக் கொடுக்கப்படும் உணவுக் கொடை கொடுத்தவனையும், பெறுபவனையும், உணவையும் கெடுப்பது ஆகியவற்றை வியாசருக்குச் சொன்ன மைத்ரேயர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், செயல்களை வழிபடுபவரும், பெருஞ்செழிப்புடைய குலத்தில் பிறந்தவரும், பெருங்கல்வி கொண்டவரும், ஞானியுமான மைத்ரேயர் இந்தச் சொற்களை அவரிடம் சொன்னார்.(1)
மைத்ரேயர் {வியாசரிடம்}, “ஓ! பெரும் ஞானியே, நீர் சொன்னதில் எந்த ஐயமுமில்லை. ஓ! பலமிக்கவரே, உமது அனுமதியுடன் நான் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.(2)
வியாசர் {மைத்ரேயரிடம்}, “ஓ! மைத்ரேயா, ஓ! பெரும் ஞானியே, நீ என்ன சொல்ல வேண்டுமோ, என்ன வழியில் சொல்ல வேண்டுமோ அதைச் சொல், நான் அதைக் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(3)
மைத்ரேயர் {வியாசரிடம்}, “கொடை குறித்து நீர் சொன்ன சொற்கள் குற்றமில்லாதவையும், தூய்மையுடையவையுமாகும். உமது ஆன்மா ஞானத்தாலும், தவத்தாலும் தூய்மையடைந்தது என்பதில் ஐயமில்லை.(4) உமது ஆன்மா தூய்மை அடைந்ததன் விளைவால் நான் அறுவடை செய்யும் பெரும் நன்மை இதுவே. என் புத்தியின் துணையால் உயர்ந்த தவங்களுடன் கூடியவராகவே நான் உம்மைக் காண்கிறேன்.(5) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் உம்மைப் போன்ற மனிதர்களைக் காண்பதன் மூலம் மட்டுமே செழிப்பை அடைகிறோம். உமது அருளாலும், நான் செய்த செயல்களின் இயல்பாலும் அது {செழிப்பு} உண்டாகிறது என்று நான் நினைக்கிறேன்.(6) தவங்கள், வேதஞானம், தூய குலத்தில் பிறப்பு ஆகிய காரணங்களாலேயே ஒருவன் பிராமணனாகிறான். ஒருவன் இந்த மூன்று குணங்களையும் வெளிப்படுத்தும்போதே அவன் மறுபிறப்பாளனாக அழைக்கப்படுகிறான்.(7)
பிராமணர்கள் நிறைவடைந்தால், பித்ருக்களும், தேவர்களும் நிறைவடைகின்றனர். வேதமறிந்த பிராமணனை விட உயர்ந்தது வேறேதும் இல்லை.(8) பிராமணன் இல்லாவிட்டால் மொத்தமும் இருளாகவே இருக்கும். எதையும் அறிய முடியாது. நான்கு வகையும் {வர்ணங்களும்} நீடித்திருக்காது. அறம் மறம், வாய்மை பொய்மை, ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு மறைந்து போகும்.(9) நன்கு உழப்பட்ட நிலத்தை {பண்பட்ட நிலத்தை} மனிதர்கள் காணும்போது அவர்கள் அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். அதேபோல, பெருங்கல்வி படைத்த பிராமணனுக்குக் கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்பலனை அறுவடை செய்கிறான்.(10) கொடைகளை ஏற்க வேத அறிவும், நல்லொழுக்கமும் கொண்ட பிராமணன் இல்லாவிட்டால் செல்வந்தர்கள் கொண்ட செல்வத்திற்குப் பயனேதும் இல்லை.(11)
அறியாமை கொண்ட பிராமணன், தனக்கு அளிக்கப்பட்ட உணவை உண்பதன் மூலம், (கொடுத்தவனுக்கு எந்தப் பலனையும் உண்டாக்காததால்) தான் உண்டதை அழிக்கிறான். உண்ணப்பட்ட உணவானது (உண்பவன் தனக்கு அளிக்கப்பட்டதை உண்டதன் மூலம் பாவத்தை ஈட்டுவதால்) உண்டவனை அழிக்கிறது. தகுந்த மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதே உண்ணத்தகுந்தது என்று முறையாக அழைக்கப்படும், மற்ற வழக்குகள் அனைத்திலும், அதைப் பெறுபவன் கொடையாளியின் கொடையைக் கெடுத்து, முறையில்லாமல் உண்பதன் மூலம் தானே அழிவையும் அடைகிறான்[1].(12)கல்விமானான பிராமணன் தான் உண்ணும் உணவை வசப்படுத்துபவன் ஆகிறான் {செரிக்கிறான்}. அதை உண்ட பிறகு அவனே வேறு உணவைத் தோற்றுவிக்கிறான் {உணவைப் பெருகச் செய்கிறான்}. எவனுடைய உணவு, பிள்ளைகளின் பெற்றோர்களை அவர்களை ஈன்றெடுக்க இயன்றவர்களாக்கியதோ அவனே அவர்களுக்குரியவன் {அந்தப் பிள்ளைகளுக்குரியவன்} என்பதால் அறியாமை கொண்டவன் தனக்கு அளிக்கப்படும் உணவை உண்பதன் மூலம் தான் ஈன்றெடுக்கும் பிள்ளைகளிடம் உள்ள தன் உரிமையை இழக்கிறான். அடுத்தவரின் உணவை உண்பவர்கள், அந்த உணவை வெல்லும் பலமற்றவர்களாகும்போது இந்த நுட்பமான களங்கம் ஏற்படுகிறது[2].(13) கொடையளிப்பதன் மூலம் ஒரு கொடையாளி அடையும் பலனானது, உணவை ஏற்பதன் மூலம் அதைப் பெற்றுக் கொள்பவன் அடையும் பலனுக்கு ஈடானதாகும். கொடையாளியும், ஏற்பவனும் இணையான அளவில் ஒருவரையொருவர் சாந்தவர்களாக இருக்கிறார்கள். இதையே முனிவர்களும் சொல்லியிருக்கின்றனர்.(14)வேத அறிவும், ஒழுக்கமும் கொண்ட பிராமணர்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே இருக்கும் மக்கள் கொடைகளின் புனிதக் கனிகளை ஈட்ட இயன்றவர்களாகவும், இம்மையிலும், மறுமையிலும் அவற்றை அனுபவிக்கத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(15) தூய குலத்தில் பிறந்தவர்களும், தவங்களில் பேரர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், கொடையளிப்பவர்களும், வேதங்கற்பவர்களுமான மனிதர்கள் பெரும் மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.(16) அந்த நல்லோரே ஒருவன் மயங்காமல் நடக்கக்கூடிய பாதையை அமைத்தவர்கள் ஆவர். அந்த மனிதர்களே பிறரைச் சொர்க்கத்திற்கு வழிநடத்தக்கூடியவர்களாவர். வேள்விச் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு நித்தியமாக வாழ்ந்து வருபவர்கள் அம்மனிதர்களே” என்றார் {மைத்ரேயர்}”.(17)
தவத்தின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 122-வத்தின் சிறப்பு மற்றும் இல்லறக் கடமைகளை நோற்பதன் அவசியம் ஆகியவற்றை மைத்ரேயருக்குச் சொன்ன வியாசர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்தப் புனிதமானவர் {வியாசர்}, மைத்ரேயருக்குப் பதிலளிக்கும் வகையில், “நீ ஞானத்துடன் இருப்பது நற்பேறே. உன் புத்தி இவ்வகையில் இருப்பதும் நற்பேறே.(1) நல்லோர் எப்போதும் அறம் சார்ந்த குணங்கள் அனைத்தையும் உயர்வாகவே மெச்சுகின்றனர். தனிப்பட்ட அழகு, இளமை மற்றும் செழிப்பு ஆகியவை உன் நற்பேறின் காரணமாகவே உன்னை மூழ்கடிக்காமல் இருக்கின்றன.(2) தேவர்கள் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக இதை உனக்குச் செய்திருக்கின்றனர். கொடையை விட (திறனில்) மேன்மையானதைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இருக்கும் சாத்திரங்கள் மற்றும் அறம் சார்ந்த உடன்படிக்கைகள் எதுவும், உலகில் காணப்படும் (அற) நாட்டங்கள் எதுவும் வேதங்களின் வழிகாட்டலுக்கு இணங்க முறையான வரிசைப்படி உண்டாகின்றன.(4)
அவற்றைப் பின்பற்றியே நான் கொடையை {தானத்தை} மெச்சுகிறேன். நீயோ தவங்களையும், வேத ஞானத்தையும் புகழ்கிறாய். தவங்கள் புனிதமானவையே. ஒருவன் வேதங்களையும், சொர்க்கத்தையும் அடையும் வழிமுறைகளாகத் தவங்கள் இருக்கின்றன.(5) தவம் மற்றும் அறிவின் துணையுடன் ஒருவன் நாம் கேள்விப்பட்டிருக்கும் உயர்ந்த கனிகளை அடைகிறான். தவங்களின் மூலமே ஒருவன் தன் பாவங்களையும், தீமைகள் அனைத்தையும் அழிக்கிறான்.(6) எந்த நோக்கத்துடன் ஒருவன் தவம் செய்தாலும் அவன் தவங்களின் விளைவால் அதற்கான கனியை அடைகிறான் என நாம் கேள்விப்படுகிறோம்.(7) நிறைவேற்றக் கடினமான எதையும், வெல்லக் கடினமான எதையும், அடைவதற்கு அரிதான எதையும், கடப்பதற்கு அரிதான எதையும் தவங்களின் உதவியுடன் அடையலாம். அனைத்திலும் தவங்களே மிக மேன்மையான வலிமையைக் கொண்டிருக்கின்றன.(8)
மது அருந்துபவனோ, பிறரின் உடைமைகளை வலுக்கட்டாயமாக அபகரிப்பவனோ, கருவைக் கொன்ற குற்றவாளியோ, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவனோ எவனும் தவத்தின் உதவியால் அவற்றைக் கடப்பதில் வெல்கிறான். உண்மையில் ஒருவன் தவங்களின் மூலம் இந்தப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(9) ஞானங்கள் அனைத்துடன் கூடிய உண்மையான பார்வையைக் கொண்டவன் ஒருவனும், எவ்வகையைச் சார்ந்த தவசி ஒருவரும் நிகரானவரே. ஒருவன் இவர்கள் இருவரையும் எப்போதும் வணங்க வேண்டும்.(10) வேதங்களையே தங்கள் செல்வமாகக் கொண்ட மனிதர்கள் அனைவரும் வழிபடப்பட வேண்டும். அதே போலத் தவங்களுடன் கூடிய மனிதர்கள் அனைவரும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. கொடையாளிப்பவர்கள் மறுமையில் மகிழ்ச்சியையும், இம்மையில் பெருஞ்செழிப்பையும் அடைகின்றனர்.(11) இவ்வுலகின் அறவோர், உணவுக் கொடை அளிப்பதன் மூலம் இவ்வுலகையும், மேன்மையான இன்ப நிலைகளைக் கொண்ட பிரம்மலோகம் முதலிய பிற உலகங்களையும் அடைகிறான்.(12)
அனைவராலும் துதிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைத் துதிக்கின்றனர். எங்கும் கௌரவிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைக் கௌரவிக்கின்றனர். கொடையாளி எங்குச் சென்றாலும் புகழப்படுகிறான்.(13) செயல்களைச் செய்பவனும், அவற்றைத் தவிர்ப்பவனும், செய்யும் செயல்களுக்கும், செய்யாதவற்றுக்கும் தகுந்த அளவில் பலனை அடைகிறார்கள். ஒருவன் மேலுலகத்தில் வசித்தாலும், பாதாள லோகத்தில் வசித்தாலும் அவன் எப்போதும் தன் செயல்களுக்குத் தகுந்த இடங்களையே அடைகிறான்.(14) உன்னைப் பொறுத்தவரையில், நீ புத்தி, நற்பிறப்பு, வேத ஞானம் மற்றும் கருணை கொண்டவனாக இருப்பதால் நீ விரும்பும் உணவு மற்றும் பானம் எதையும் நிச்சயம் அடைவாய்.(15) ஓ! மைத்ரேயா, நீ இளைஞனாக இருக்கிறாய். நோன்புகளை நோற்கிறாய். அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய். நீ முதலில் இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை என்னிடம் இருந்து அறிந்து கொள்வாயாக.(16)
தான் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவாக இருக்கும் கணவனைக் கொண்டதும், தன் கணவனிடம் நிறைவாக உள்ள மனைவியைக் கொண்டதுமான வீட்டில் எல்லா மங்கல விளைவுகளும் உண்டாகும்.(17) உடலில் உள்ள புழுதி நீரால் கழுவப்படுவதைப் போலவே நெருப்பின் காந்தியால் இருள் விலகுவதைப் போலவே, கொடைகள் மற்றும் தவங்களால் பாவம் கழுவப்படுகிறது.(18) ஓ! மைத்ரேயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. இங்கிருந்து அமைதியுடன் செல்வாயாக. நான் சொன்னதை உன் மனத்தில் கொள்வாயாக. அப்போது நீ பலன்கள் பலவற்றை அறுவடை செய்வாய்” என்றார் {வியாசர்}.(19)
அப்போது மைத்ரேயர் சிறப்புமிக்கவரான தமது விருந்தினரை {வியாசரை} வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி, தன் கரங்களை மதிப்புடன் கூப்பி, “ஓ! புனிதமானவரே, நீரும் அருளப்பட்டிருப்பீராக” என்றார்”.(20)
ஸ்திரீ தர்மம் – சுமனையும் சாண்டிலியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 123-கற்புடைய நல்ல பெண்களின் நடத்தை மற்றும் பெண்கள் பின்பற்ற வேண்டிய அறம் குறித்து ஸுமனை மற்றும் சாண்டிலிக்கிடையில் நடைபெற்ற உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவரே, கற்புடைய நல்ல பெண்களுக்குரிய சிறந்த நடத்தை எது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு காலத்தில், தேவலோகத்தில் கேகய குலத்தைச் சாரந்தவளும், சுமனை {ஸுமனை} என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு பெண், பெரும் சக்தி கொண்டளும், அனைத்தையும், அனைத்தின் உண்மைகளையும் அறிந்தவளுமான சாண்டிலியிடம்,(2) “ஓ!மங்கலமான பெண்ணே, எந்த ஒழுக்கத்தின் மூலம், என்ன வகையான செயல்முறையின் மூலம் அனைத்துப் பாவங்களையும் அழித்துச் சொர்க்கம் அடைவதில் நீ வென்றாய்?(3) நீ நெருப்பின் தழலைப் போலத் தன்சக்தியில் சுடர்விடுகிறாய். தன்பிரகாசத்துடன் சொர்க்கத்திற்கு வந்திருக்கும் நட்சத்திரங்களின் தலைவனுடைய {சந்திரனுடைய} மகளைப் போலத் தெரிகிறாய்.(4) தூய வெள்ளுடை உடுத்தியிருக்கும் நீ உற்சாகம் நிறைந்தவளாகவும், சுகமாகவும் இருக்கிறாய். ஓ! மங்கலச் சீமாட்டியே, தெய்வீகத் தேரில் அமர்ந்திருக்கும் நீ பல்லாயிரம் மடங்கு சக்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்.(5) சிறிய அளவிலான தவங்கள், கொடைகள் மற்றும் நோன்புகளின் மூலம் நீ இந்த இன்பலோகத்தை அடைந்திருப்பதாக நான் கருதவில்லை. நீ உண்மையைச் சொல்வாயாக” என்று கேட்டாள்.(6)
இவ்வாறு சுமனையால் இனிமையாகக் கேட்கப்பட்டவளும், இனிய புன்னகையைக் கொண்டவளுமான சாண்டிலி, தன்னிடம் கேள்வி கேட்ட அழகியிடம், பிறரும் கேட்கும் வகையில்,(7) “நான் மஞ்சள் ஆடை {காஷாயம்} உடுத்தவில்லை; மரவுரியும் தரிக்கவில்லை. என் தலையை மழிக்கவில்லை; தலையில் சடாமுடியுந்தரிக்கவில்லை. இந்தச் செயல்களின் விளைவால் நான் தெய்வீக நிலையை அடையவில்லை.(8) நான் ஒருபோதும் விழிப்புணர்வின்றி ஏற்பில்லாத, தீய பேச்சு எதையும் என் கணவரிடம் பேசியதில்லை.(9) நான் எப்போதும் தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருந்தேன். எப்போதும் விழிப்புடன் நான் என் மாமியார் மற்றும் மாமனாருக்குத் தொண்டாற்றினேன்.(10) வஞ்சகமாக ஒருபோதும் நடக்கக்கூடாது என்பது என் தீர்மானமாக இருந்தது. நான் ஒருபோதும் வீட்டைவிட்டு வெளியே தங்கியதோ, வேறு எவருடனும் நீண்ட நேரம் பேசியதோ கிடையாது {நிற்கத்தகாத இடங்களில் நிற்பதுமில்லை. வெகுநேரம் பேசுவதுமில்லை}.(11) நான் ஒருபோதும் தீச்செயலேதும் செய்ததில்லை; நான் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை; நான் ஒருபோதும் தீங்கேதும் செய்ததில்லை. நான் ரகசியம் எதையும் ஒருபோதும் வெளியிட்டதில்லை. இவ்வாறே நான் என்னைத் தாங்கிக் கொண்டேன்.(12)
எந்தக் காரியத்திற்காகவும் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பும்போது, நான் எப்போதும் அவருக்கு இருக்கையளித்துத் தொண்டாற்றி மதிப்புடன் வழிபட்டேன்.(13) என் கணவர் அறியாத, என் கணவருக்குப் பிடிக்காத எவ்வகை உணவையும் நான் ஒருபோதும் உண்டதில்லை.(14) விடியும் முன்பு எழுந்து, உற்றார் உறவினர்களுக்காகச் செய்ய வேண்டியதை, செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை நிறைவேற்றினேன்.(15) என் கணவர் ஏதோ ஒரு காரியத்திற்காக வீட்டைவிட்டுத் தொலைவான இடத்திற்குச் சென்றால், நான் வீட்டில் இருந்து அவரது காரியம் நிறைவேற பல்வேறு மங்கலச் செயல்களைச் செய்வதில் ஈடுபடுவேன்.(16) உண்மையில் என் கணவர் இல்லாத போது நான் மையையோ, ஆபரணங்களையோ பயன்படுத்துவதில்லை; நான் என்னை முறையாகக் கழுவிக் கொள்வதில்லை; மாலைகளையும், நறுமணப்பொருட்களையும் பயன்படுத்துவதில்லை; என்பாதத்தை அரக்கு சாயத்தாலோ, என் மேனியை ஆபரணங்களாலோ அலங்கரித்துக் கொள்வதில்லை.(17)
என் கணவர் அமைதியாக உறங்கும்போது, முக்கியமான காரியத்தில் அவரது கவனம் தேவைப்பட்டாலும் நான் ஒருபோதும் அவரை எழுப்பியதில்லை. உறங்கிக் கிடக்கும் அவருக்கு அருகில் அமர்ந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.(18) என் கணவர் தன் குடும்பத்தையும் உறவினர்களையும் தாங்கிக் கொள்வதற்காக இன்னும் அதிகச் சக்தியோடு செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஒருபோதும் நான் அவரைத் தூண்டியதில்லை. நான் எப்போதும் ரகசியங்களைப் பிறருக்கு வெளியிடாமல் இருந்தேன். நான் எங்கள் வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருந்தேன்.(19) கடமையின் இந்தப் பாதையைக் குவிந்த கவனத்துடன் பின்பற்றும் ஒரு பெண்மணி, சொர்க்கத்தில் போதுமான கௌரவங்களைப் பெற்று இரண்டாவது அருந்ததியாகிறாள்” என்றாள் {சாண்டிலி}”.(20)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்கவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும் அறவொழுக்கம் ஒழுகுபவளுமான சாண்டிலி, தன் கணவனுக்குப் பெண்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துச் சுமனையிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, அங்கேயே அப்போதே மறைந்து போனாள்.(21) ஓ! பாண்டுவின் மகனே, ஒவ்வொரு முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவுகள் {அமாவாசைகள்} அன்றும் இதைப் படிக்கும் மனிதன், சொர்க்கத்தை அடைவதில் வென்று நந்தனக் காடுகளில் பேரின்பத்தை அனுபவிப்பான்” {என்றார் பீஷ்மர்}.(22)
சாமச்சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 124-இன்சொல்லின் சிறப்புக் குறித்து ஒரு ராட்சசனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இன்சொல் {சாமம்}, அல்லது கொடை {தானம்} ஆகியவற்றில் எது மேன்மையான திறனைக் கொண்டது? ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இவை இரண்டில் மேன்மையான திறன் கொண்டது எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சிலர் இன்சொல்லில் {சாமத்தில்} நிறைவடைகின்றனர், வேறு சிலர் கொடைகளால் நிறைவடைகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பின்படி இவை ஒன்றாலோ, அடுத்ததாலோ நிறைவடைகிறான்.(2) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மிகக் கொடூரமான உயிரினங்களும் தணிவை அடையும் இன்சொல்லின் {சாமத்தின்} பலன்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இது தொடர்பாகக் காட்டில் ஒரு ராட்சசனால் கைப்பற்றப்பட்ட ஒரு பிராமணன், (இன்சொல்லின் உதவியால்) விடுதலையடைந்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4)
நாநயமும், புத்தியும் கொண்ட ஒரு குறிப்பிட்ட பிராமணன், தனியாகக் காட்டில் சென்ற போது, அவனை உண்ண நினைத்த ஒரு ராட்சசனால் பிடிக்கப்பட்டுத் துன்பத்தில் விழுந்தான்.(5) புத்தியும், கல்வியும் கொண்ட அந்தப் பிராமணன் கலக்கமடையாமல் இருந்தான். பயங்கரமான அந்த மனிதவூனுண்ணியைக் கண்டதும் கலங்காமல், இன்சொல்லைப் பயன்படுத்தி அதன் விளைவுகளை அந்த ராட்சசனிடம் காணத் தீர்மானித்தான்.(6)
அது வரை சொல்லப்பட்ட {இனிய}சொற்களுக்காக அந்தப் பிராமணனை மதிப்புடன் வணங்கிய அந்த ராட்சசன் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டான்: “நீர் தப்பிக்கலாம், ஆனால் நான் ஏன் வெளுத்தும், இளைத்தும் இருக்கிறேன் என்பதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(7) சிறிது நேரம் இது குறித்துச் சிந்தித்த அந்தப் பிராமணன், அந்த ராட்சசனின் கேள்வியை ஏற்று, நன்கு பேசப்பட்ட பின்வரும் சொற்களால் பதில் கூறினான்.(8)
அந்தப் பிராமணன் {ராட்சசனிடம்}, “உன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்தில் வசித்து, உனக்குச் சொந்தமில்லாத பகுதியில் திரிந்து, உன் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் தோழமை இல்லாமல் நீ பெரும் செல்வத்தை அனுபவித்து வருகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(9) ஓ! ராட்சசா, உண்மையில் உன் நண்பர்கள் உன்னால் நன்றாக நடத்தப்பட்டாலும், உன் தீய இயல்பின் விளைவால் உன்னிடம் நல்ல மனம் கொண்டவர்களாக இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(10) நீ பலனும் {புண்ணியமும்}, ஞானமும் நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டவனாக இருக்கிறாய். இருப்பினும், பலனும், ஞானமும் இல்லாதவர்கள் உன்னைவிட அதிக முன்னுரிமை பெற்று கௌரவிக்கப்படுவதை நீ பார்க்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(11) உன்னைவிட மிக அதிகமான செல்வமும் செல்வாக்கும் கொண்டிருந்தாலும், சாதனைகளில் உன்னைவிடத் தாழ்ந்தவர்களாக இருக்கும் மனிதர்களால் நீ அவமதிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(12)
வாழ்வாதாரங்கள் இல்லாமல் துன்புற்றிருந்தாலும், உயர்ந்த நிலையில் இருக்கும் உன் ஆன்மாவால் வழிநடத்தப்பட்டு, உன் வாழ்வாதாரங்களை ஈர்ப்பதில் வெளிப்படையாகத் தெரியும் வழிமுறைகளை அலட்சியம் செய்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(13) அறத்தின் விளைவால் பிறருக்கு நன்மை செய்து உன்னை நீயே களங்கம் செய்திருக்கிறாய். ஓ! அறம் சார்ந்த ராட்சசா, இருப்பினும் மற்றவன் நீ அவனை வஞ்சித்துவிட்டதாகவும், அடக்கிவிட்டதாகவும் நினைக்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(14) காமம் மற்றும் கோபத்தில் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டோர் இவ்வுலகில் படும் துன்பத்திற்காக நீ வருந்துகிறாய் என நினைக்கிறேன். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(15) ஞானம் கொண்டவனாக இருந்தாலும், அது முற்றிலும் இல்லாதவனைப் போல நீ பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் தீய ஒழுக்கம் கொண்ட மனிதர்கள் உன்னை நிந்திக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(16)
நட்பின் நாவைக் கொண்ட உன் பகைவன் எவனோ ஒருவன், முதலில் அறம்சார்ந்த ஒருவனைப் போல உன்னிடம் நடந்து கொண்டு, பிறகு கபடன் போல உன்னை வசிந்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(17) உலக நடைமுறைகளை நீ நன்கறிந்திருக்கிறாய். புதிர்கள் அனைத்திலும் நீ நல்ல திறம்பெற்றவனாக இருக்கிறாய். நீ தகுதியுடன் கூடியவனாக இருக்கிறாய். இத்தகையவனாக உன்னை அறிந்தவர்கள் உன்னை மதிப்பதும், புகழ்வதும் இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(18) ஏதோ காரியத்தில் ஈடுபட்டிருக்கும் தீய மனிதர்களுக்கு மத்தியில் உள்ள நீ அவர்களுடன் பேசி அவர்களுடைய ஐயங்களைக் களைந்திருப்பாய். இவை யாவும் செய்தாலும் அவர்கள் உன் மேன்மையான தகுதிகளை ஏற்றுக் கொள்ளதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(19) உண்மையில், செல்வமும், புத்தியும், வேத ஞானமும் இல்லாதிருந்தாலும் நீ உன் சக்தியால் மட்டுமே ஏதோ பெரிதான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(20)
காட்டுச் சென்று கடுந்தவம் செய்யத் தீர்மானத்திருந்தாலும், உன் திட்டத்தை உற்றார் உறவினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(21) பெருஞ்செல்வமும், இளமையும், அழகிய குணங்களும் கொண்ட உன் அண்டைவீட்டுக்காரன் உன் அன்புக்குரிய மனைவியின் மேலம் ஆசை கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(22) செல்வந்தர்களுக்கு முன் உன்னால் சொல்லப்பட்ட சொற்கள் சிறப்புடையவையாக இருப்பினும், ஞானமுள்ளவையாகவோ, சரியான நேரத்தில் சொல்லப்பட்டவையாகவோ கருதப்படவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(23) உன் அன்புக்குரிய உறவினனும், புத்தியற்றவனுமான ஒருவன், சாத்திரக் கல்வியை மீண்டும் மீண்டும் புகட்டினாலும், கோபக்காரனாகவே இருக்கிறான். நீ அவனைத் தணிப்பதில் வெல்லவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(24)
உண்மையில், ஏதோ ஒரு விரும்பத்தக்க காரியத்தில் உன்னை நிறுவிய ஒருவர் இப்போது அதன் கனியை உன்னிடம் இருந்து இப்போது பறிக்க முயலக்கூடும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(25) சிறந்த சாதனைகளைக் கொண்டவனாகவும், அதன் காரணமாக அனைவராலும் வழிபடப்படுபவனாகவும் இருந்தாலும், உன் உறவினர்கள் உனக்காக அல்லாமல் தங்களுக்காகவே நீ வழிபடப்படுவதாகக் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(26) உண்மையில், தவிர்க்க முடியாத தாமதத்தால் உன் இதயத்தில் உள்ள ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்ற முடியாததால் வெட்கத்தினால் நீ அதைக் கைவிட முடியாதவனாக இருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(27) உண்மையில், பல்வேறு வகைப் புத்தி மற்றும் விருப்பங்களுடன் உள்ள மனிதர்களை உன் புத்தியின் துணையுடன் உன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நீ விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[1].(28)கல்வியற்றவனும், துணிவில்லாதவனும், அதிகச் செல்வமில்லாதவனுமான நீ, அறிவு, ஆற்றல் மற்றும் கொடைகளால் வெல்லப்பட்ட புகழைப் பெற முனைகிறாய். உண்மையில், இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(29) உன் இதயத்தில் நீண்ட காலம் உள்ள ஏதோ ஒன்றை அடைய முடியாமல் இருக்கிறாய். அல்லது, நீ அடைய முனையும் ஒன்று வேறு எவராலோ தடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(30) உண்மையில், உன் தரப்பில் எந்தக் களங்கமும் இன்றி நீ வேறு எவராலோ சபிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[2].(31) செல்வமும், சாதனைகளும் இல்லாத நீ, உன் நண்பர்களின் துயரத்தையும், கவலையில் இருக்கும் மனிதர்களின் கவலையையும் விலக்க வீணாக முயல்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(32) அறவோர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதையும், அறமற்றோர் காட்டு வாழ்வுமுறைப்படி {வானப்ரஸ்தாஸ்ரமப்படி} வாழ்வதையும், துறவிகள் இல்லத்தாராகவும், நிலைத்த வசிப்பிடங்களில் வாழ்வதையும் கண்டதால் நீ வெளுத்தும், இளைத்துமிருக்கிறாய்.(33)அறம், பொருள் மற்றும் இன்பத்தோடு தொடர்புடைய உன் செயல்களும், சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சொற்களும் உனக்குக் கனி {பலன்} கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(34)
ஞானம் கொண்டவனாக இருந்தாலும், வாழும் விருப்பத்தினால் உந்தப்பட்டு, தீய நடத்தை கொண்ட ஒருவனால் கொடுக்கப்பட்ட கொடையைப் பெற்றுக் கொண்டு செல்வத்துடன் வாழ்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(35)
அனைத்துப்புறங்களிலும் மறம் {அறமற்ற நிலை} பெருகுவதையும், அறம் நலிவுறுவதையும் கண்டு நீ துன்பத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(36)
ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு அனைத்துப் புறங்களிலும் சச்சரவு செய்து கொண்டிருந்தாலும், நண்பர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ய அவர்களால் தூண்டப்படுகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(37) வேத ஞானம் கொண்டோர் முறையற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், கல்விமான்கள் தங்கள் புலன்களை அடக்காததையும் கண்டு நீ துயரத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்” என்றான்.(38)
இவ்வாறு புகழப்பட்ட அந்த ராட்சசன், கல்விமனான அந்தப் பிராமணனைப் பதிலுக்கு வழிபட்டு, அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டு, போதுமான செல்வத்தையும் அவனுக்குக் கொடையாகக் கொடுத்து (அவனை விழுங்காமல்) விடுவித்தான்” என்றார் {பீஷ்மர்}.(39)
சாத்திர விதிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 125-உயர்ந்த கதியை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்; சிராத்தங்கள்; உயிர்க்கொலையில் உள்ள பாவம் ஆகியவற்றைக் குறித்து தேவதேதூதன், இந்திரன், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒரு வறிய மனிதன், அடைதற்கரிதான செயல்களின் உலகத்திற்குள் மனித நிலையை அடைந்து {கர்மங்கள் பலிக்கும் பூமியில், கிடைத்தற்கரிதான மானிட ஜன்மத்தை அடைந்து} எவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(1) கொடைகள் அனைத்திலும் சிறந்தது எது? எந்தெந்தச் சூழ்நிலைகளில் எவையெவை கொடுக்கப்பட வேண்டும் என்பன குறித்தும் எனக்குச் சொல்வீராக. ஓ! கங்கையின் மகனே, கௌரவிப்பதற்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவர்கள் யார் என்பதை எனக்குச் சொல்வீராக. இந்தப் புதிர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்”.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “புகழ்பெற்ற ஏகாதிபதியான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு கேள்வி கேட்டதும், கடமை தொடர்புடைய இந்த உயர்ந்த புதிர்களைப் பீஷ்மர் (இந்தச் சொற்களில்) விளக்கிச் சொன்னார்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதா, பழங்காலத்தில் புனிதமான வியாசர் சொன்னது போலவே கடமைகள் தொடர்பான இந்தப் புதிர்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(4) ஓ! ஏகாதிபதி, இது தேவர்களுக்கும் புதிரானதாகும். களங்கமற்ற செயல்களைக் கொண்ட யமன், நன்கு நோற்கப்பட்ட நோன்புகள் மற்றும் தியான யோகத்தின் உதவியுடனும், தன் தவங்களின் உயர்ந்த கனிகளாகவும் இந்தப் புதிர்களின் ஞானத்தை அடைந்தான்.(5) எந்தெந்த தேவர்களுக்கு எவையெவை நிறைவைத் தரும், பித்ருக்கள், முனிவர்கள், (மஹாதேவனின் துணைவர்களான) பிரமாதர்கள், ஸ்ரீதேவி, (யமனின் உதவியாளரான) சித்திரகுப்தன், திசைகளின் முக்கியப்புள்ளிகளை ஆளும் வலிமைமிக்க யானைகள் ஆகியோருக்கு எது நிறைவைத் தரும்.(6) பல புதிர்களைக் கொண்டதும், பெருங்கொடைகள் என்றழைக்கப்படும் பலன்களான உயர்ந்த கனிகளை உண்டாக்கவல்லதும், வேள்விகள் அனைத்துக்குமான பலனைக் கொண்டதுமான முனிவர்களின் அறமாக எது அமைகிறது?(7) ஓ! பாவமற்றவனே, இவற்றை அறிந்தவனும், தன் அறிவின் படி செயல்களை அறிந்து கொண்டவனுமான ஒருவன், களங்கம் கொண்டவனாக இருந்தால் அக்களங்களில் இருந்து விடுபட்டுக் குறிப்பிடப்பட்ட பலன்களை அடைவான்.(8)
எண்ணை உற்பத்தியாளன் ஒருவன் பத்து கசாப்புக்காரர்களுக்கு இணையானவன். மது அருந்தும் ஒருவன் பத்து எண்ணைக்காரர்களுக்கு இணையானவன். ஒரு விலைமகள் பத்து குடிகாரர்களுக்கு இணையானவள். (ஆட்சி எல்லைக்குட்பட்ட) ஒரு தலைவன் பத்து விலைமகள்களுக்கு இணையானவன்[1].(9) ஒரு பெரும் மன்னன் இவர்களில் பாதி என்று சொல்லப்படுகிறான். மறுபுறம் ஒருவன், புனிதமானதும், அறத்தையே தன் குறியீடாகக் கொண்டதுமான (அறம், பொருள் மற்றும் இன்பம் அடங்கிய) முத்தொகை அறிவியலைக் கவனத்தில் கொள்ள {கவனிக்க} வேண்டும். இவற்றில் செல்வமும், இன்பமும் இயல்பான ஈர்ப்பைக் கொண்டவையாகும். அறப்புதிர்களைக் குறித்துக் கேட்பது பெருங்கனிகளை {பெரும்பலன்களைக்} கொண்டது என்பதால், ஒருவன் (குறிப்பாக) அறம் தொடர்பான புனிதமான விரிவுரைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்க வேண்டும். அவன் தேவர்களால் விதிக்கப்பட்ட அறம் தொடர்பான அனைத்தையும் கேட்க வேண்டும்.(10,11) அவற்றிலேயே பித்ருக்கள் தொடர்பான புதிர்கள் அடங்கிய சிராத்தச் சடங்கு அறவிக்கப்பட்டிருக்கிறது. தேவர்கள் அனைவர் தொடர்பான புதிர்களும் அவற்றில் விளக்கப்பட்டுள்ளன.(12) முனிவர்கள் தொடர்பான புதிர்களுடன் சேர்த்து, பெரும் பலன்களை உண்டாக்கவல்ல கடமைகள், நடைமுறைகள் ஆகியனவும் அவற்றிலேயே அறியப்படுகின்றன. பெரும் வேள்விகள் மற்றும் அனைத்து வகையான கொடைகள் தொடர்பான பலன்களையும் அவையே கொண்டிருக்கின்றன.(13)
இவை குறித்த சாத்திரங்களை எப்போதும் படிப்பவர்களும், தங்கள் மனங்களில் அவற்றை முறையாகத் தாங்கிக் கொள்வோரும், அவற்றைக் கேட்ட பிறகு நடைமுறையில் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் அனைவரும் பலமிக்க நாராயணனையே போன்ற புனிதமானவர்களாகவும், பாவமற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(14) பசுக்கொடை அளிப்பது, நீர்நிலைகளில் நீராடுவது, வேள்விகளைச் செய்வது ஆகியவற்றால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும், வீட்டுக்கு வரும் விருந்தினரை மதிப்புடன் நடத்தும் மனிதன் அடைகிறான்.(15) இந்தச் சாத்திரங்களைக் கேட்பவர்களும், நம்பிக்கையுடன் இருப்பவர்களும், தூய இதயம் படைத்தவர்களும் மகிழ்ச்சியான உலகங்களை வெல்வதாக நன்கு அறியப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் கூடிய அறவோர்,(16) அனைத்துக் களங்கங்களிலிருந்து விடுபட்டு, பாவம் அண்டமுடியாதவர்களாக ஆகிறார்கள். அத்தகைய மனிதர்கள் எப்போதும் அறத்தைப் பெருக்கி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17)
ஒரு காலத்தில் இந்திரனின் அவைக்கு வந்தும் புலப்படாமல் தொடர்ந்த தேவதூதன் ஒருவன் தேவர்களின் தலைவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(18) “மருத்துவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களும், இனிய குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களுமான தேவர்கள் இருவரின் {அஸ்வினி இரட்டையரின்} ஆணையின் பேரில் இந்த இடத்திற்கு வந்த நான், இங்கே மனிதர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்கள் கூடியிருப்பதைக் காண்கிறேன்.(19) உண்மையில், சிராத்தம் செய்தவன் மற்றும் (குறிப்பிட்ட நாளில்) சிராத்தத்தில் உண்டவன் ஆகியோருக்கு பாலினக் கலவி ஏன் தடைசெய்யப்பட்டிருக்கிறது? சிராத்தங்களில் ஏன் மூன்று அரிசிப்பிண்டங்கள் காணிக்கையளிக்கப்படுகின்றன?(20) அவற்றில் முதற்பிண்டத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும்? இரண்டாவதை யாருக்குக் கொடுக்க வேண்டும்? எஞ்சியிருக்கும் மூன்றாவதை யாருக்குக் கொடுக்க வேண்டும்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்” {என்றான் தேவ தூதன்}.(21)
அறம் மற்றும் கடமை தொடர்புடைய இந்தச் சொற்களைத் தேவ தூதன் சொன்னதும், கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த தேவர்களும், பித்ருக்கும் அந்த வானுலாவியைப் பின்வருமாறு மெச்சத் தொடங்கினர்.(22)
பித்ருக்கள், “உனக்கு நல்வரவு, அருளப்பட்டிருப்பாயாக. ஓ! வானுலாவிகளில் சிறந்தவனே, கேட்பாயாக. நீ கேட்டது ஆழம் நிறந்த பொருளைக் கொண்ட உயர்ந்த கேள்வியாகும்.(23) தான் செய்யும் சிராத்த நாளன்று, அல்லது தான் உண்ட சிராத்த நாளன்று பாலியல்கலவியில் ஈடுபடும் மனிதனுடைய பித்ருக்கள், ஒரு மாதகாலம் முழுவதும் அவனது உயிர் வித்திலேயே கிடப்பார்கள்.(24) சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் அரிசிப்பிண்டங்களைக் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை ஒன்றன்பின் ஒன்றாக நாங்கள் விளக்கிச் சொல்லப் போகிறோம். முதல் அரசிப்பிண்டம் நீரில் வீசப்பட வேண்டும்.(25) இரண்டாவது பிண்டம் ஒருவனுடைய மனைவியருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். மூன்றாவது பிண்டம் சுடர்மிக்க நெருப்பில் வீசப்பட வேண்டும்.(26) சிராத்தத்தைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் விதி இதுவே. அறச்சடங்குகளின் படி நடைமுறையில் பின்பற்றப்படும் விதியும் இதுவேதான். இந்த விதிப்படி செயல்படும் மனிதனின் பித்ருக்கள் நிறைவடைந்து, எப்போதும் உற்சாகமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.(27) அத்தகைய மனிதனின் சந்ததி பெரும், வற்றாத செல்வம் எப்போதும் அவனது ஆணையின் கீழ் எஞ்சியிருக்கும்” என்றர்.(28)
தேவ தூதன், “அரிசிப் பிண்டங்கள் பகுக்கப்படுவதையும், ஒன்றன் பின் ஒன்றாக அவை மூன்று நிலைகளுக்கு (நீர், மனைவி மற்றும் சுடர்மிக்க நெருப்பு ஆகிய நிலைகளுக்கு) அனுப்பப்படுவதையும் அதன் காரணங்களுடன் விளக்கினீர்கள்[2].(29) நீரில் அனுப்பப்படும் அரிசிப்பிண்டம் யாரை அடைகிறது? தேவர்களை நிறைவடையச் செய்ய எப்படி இவ்வாறு அனுப்பப்படுகிறது? அஃது எவ்வாறு பித்ருக்களைக் காக்கிறது?(30) இரண்டாம் பிண்டம் மனைவியால் உண்ணப்படுகிறது. அது விதியில் விதிக்கப்பட்டிருக்கிறது. (எவனுடைய மனைவி அந்தப் பிண்டத்தை உண்பாளோ) அந்த மனிதனின் பித்ருக்கள் எவ்வாறு அதை உண்டவர்களாகிறார்கள்?(31) இறுதிப் பிண்டம் சுடர்மிக்க நெருப்புக்குள் செல்கிறது. இந்தப் பிண்டம் உங்களிடம் வருவதற்கான வழியைக் கண்டடைவதில் எவ்வாறு வெல்கிறது? அல்லது யாரிடம் அது செல்கிறது?(32) சிராத்தங்களில் நீரில் விடப்பட்டும், மனைவிக்குக் கொடுக்கப்பட்டும், சுடர்மிக்க நெருப்பில் வீசப்பட்டும் காணிக்கையளிக்கப்படும் அரிசிப் பண்டங்கள் அடையும் கதியைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(33)
பித்ருக்கள் {தேவதூதனிடம்}, “நீ கேட்டிருக்கும் இந்தக் கேள்வி மிகப் பெரியதாகும். இது புதிரும், ஆச்சரியமும் நிறைந்ததாகும். ஓ! வானுலாவியே, நாங்கள் உன்னிடம் பெரும் நிறைவை அடைகிறோம்.(34) தேவர்களும், முனிவர்களும் பித்ருக்களுக்காகச் செய்யப்படும் செயல்களை மெச்சுகிறார்கள். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் செயல்களுக்குண்டான விதிகளின் நிச்சயத் தீர்மானத்தை அவர்களே அறிய மாட்டார்கள்.(35) உயர் ஆன்மா கொண்டவரும், இறப்பற்றவரும், சிறந்தவரும், பெரும் புகழைக் கொண்ட கல்விமானும், பித்ருக்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புமிக்கவருமான மார்க்கண்டேயரைத் தவிரப் பித்ருக்களின் விதிகளில் அமைந்துள்ள புதிர்களை அறிந்தவர்கள் வேறு யாருமில்லை” என்றனர்.(36)
{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் மூன்று அரிசிப்பிண்டங்களின் கதியைக் குறித்துப் புனிதரான வியாசரிடம் கேட்டதையும், தேவ தூதன் கேள்விக்கு மறுமொழியாகப் பித்ருக்கள் சொன்னதையும், நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். ஓ! ஏகாதிபதி, சிராத்தவிதிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட தீர்மானங்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(37) ஓ! பாரதா, மூன்று அரிசிப்பிண்டங்களின் கதி என்ன என்பதை விளக்கிச் சொல்கிறேன், கவனமாகக் கேட்பாயாக. {பித்ருக்கள் தேவதூதனிடம் சொன்னார்கள்}, “நீருக்குள் செல்லும் அரிசிப்பிண்டம் சந்திர தேவனை நிறைவடையச் செய்வதாகக் கருதப்பட வேண்டும்.(38) ஓ! பெரும் நுண்ணறிவு கொண்டவனே, அந்தத் தேவன் நிறைவடைந்ததும், அவன் பிற தேவர்களையும், அவர்களோடு சேர்த்து பித்ருக்களையும் நிறைவடையச் செய்கிறான். இரண்டாவது அரிசிப்பிண்டம் (சிராத்தம் செய்யும் மனிதனின்) மனைவியால் உணப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(39) சந்ததியை எப்போதும் விரும்பும் பித்ருக்கள் அந்த வீட்டின் பெண்ணுக்கு பிள்ளைகளைக் கொடுப்பார்கள். சுடர்மிக்க நெருப்புக்குள் வீசப்படும் அரிசிப்பிண்டம் என்ன ஆகிறது என்பதைக் குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(40)
அந்தப் பிண்டத்தால் நிறைவடையும் பித்ருக்கள், அதன் விளைவாக அதைக் காணிக்கையளித்த மனிதனின் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அவனுக்கு அருள்வார்கள். இவ்வாறு சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் மூன்று அரிசிப்பிண்டங்களின் கதியையும், அவை செல்லும் (நீர், மனைவி மற்றும் நெருப்பு என்ற) மூன்றையும் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(41) சிராத்தத்தில் ரித்விக்காகும் பிராமணனே அந்தச் செயலின் மூலம் அந்தச் சிராத்தத்தைச் செய்பவனின் பித்ருவாக அமைகிறான். எனவே, அவன் தன் சொந்த மனைவியுடன் கூட அந்த நாளில் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும்[3].(42) ஓ! வானுலாவிகள் அனைவரிலும் சிறந்தவனே, சிராத்தத்தில் உண்ணும் மனிதன் அந்த நாள் முழுவதும் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வேறு வகையில் செயல்படுவதால் அவன் நிச்சயம் மேற்குறிப்பிட்ட களங்கங்களை இழைத்தவனாகிறான். இது வேறு வகையிலாகாது.(43) எனவே, காணிக்கைகளை உண்ண சிராத்தத்திற்கு அழைக்கப்பட்ட பிராமணன், நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்த பிறகு அதை உண்டு, அந்த நாள் முழுவதும் அனைத்து வாகை தீங்கு அல்லது தீமைகளையும் தவிர்த்து அறம் சார்ந்தவனாக இருக்க வேண்டும். அத்தகைய மனிதனின் சந்ததி பெருகுகிறது, அவனுக்கு உணவைக் கொடுப்பவனும் அதே வெகுமதியை அறுவடை செய்கிறான்” என்றனர் {பித்ருக்கள்}”.(44)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பித்ருக்கள் இவ்வாறு சொன்ன பிறகு, கடுந்தவங்களைக் கொண்டவரும், சூரியனைப் போன்ற காந்தியுடன் ஒளிர்ந்தவருமான வித்யுத்பிரபர் என்ற முனிவர் பேசினார்.(45) பித்ருக்களால் விளக்கப்பட்ட அறப்புதிர்களைக் கேட்ட அவர் சக்ரனிடம், “மடமையில் {அறியாமையில்} மயங்கி மனிதர்கள் இடைநிலை வகையில் பிறந்த எண்ணற்ற உயிரினங்களைக் கொல்கின்றனர்.(46) அவை புழுக்கள், எறும்புகள், பாம்புகள், செம்மறியாடு, மான்கள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களாகும். இச்செயல்களால் அவர்கள் அளவிலும், கனத்திலும் மிகப் பெரிய பாவத்தை இழைக்கின்றனர். எனினும் இதற்குத் தீர்வு என்ன?” என்று கேட்டார்.(47) இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது, தேவர்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள் மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தவசியை மெச்சினார்கள்.(48)
சக்ரன் {இந்திரன்}, “குருக்ஷேத்திரம், கயை, கங்கை, பிராபாஸம், புஷ்கரத்தடாகங்கள் ஆகியவற்றை மனத்தில் நினைத்துக் கொண்டு வருவன் நீரில் தன் தலையை மூழ்கச் செய்ய வேண்டும்.(49) இவ்வாறு செய்வதால் ஒருவன் ராகுவிடம் இருந்து விடுபடும் சந்திரமாஸை {சந்திரனைப்} போலத் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். இவ்வாறு அடுத்தடுத்து மூன்று நாட்கள் நீராடும் ஒருவன், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(50) அதையும் தவிர அவன் (நீராடிய பிறகு) பசுவின் குதத்தைத் தீண்டி, அவளது வாலுக்குத் தலைவணங்க வேண்டும்” என்றான்.
வித்யுத்பிரபர் மீண்டும் வாசவனிடம் {இந்திரனிடம்}, “நான் மிக நுட்பமான ஒரு சடங்கை அறிவிக்கப் போகிறேன். ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(51) ஆலமரத்தில் தொங்கும் விழுதுகளின் துவர்ப்பான பொடியால் {கஷாயத்தால்} உடம்பைத் தேய்த்து கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து நீராடிய பிறகு, சாஷ்டிக {அறுபதாம் குறுவை} நெல்லுடன் பாலைக் கலந்து உண்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவான்[4].(52) பலர் அறியாததும், முனிவர்களால் தியானத்தின் உதவியுடன் கண்டடையப்பட்டதுமான மற்றொரு புதிரை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக. மஹாதேவனின் முன்னிலையில் பிருஹஸ்பதி சொல்லிக் கொண்டிருந்தபோது இதை நான் கேட்டேன்.(53) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, நீயும் ருத்ரனின் துணையுடன் இதைக் கேட்பாயாக. ஒரு மனிதன் மலையில் ஏறி கரங்களை உயர்த்திக் கூப்பியபடி அங்கே ஒற்றைக் காலில் நின்று, உணவனைத்தையும் தவிர்த்து சுடர்மிக்க நெருப்பைக் கண்டால் அவன் கடுந்தவங்கள் செய்த பலன்களை அடைந்து, உண்ணா நோன்பு தொடர்பான வெகுமதிகளையும் அடைகிறான்.(54,55) சூரியனின் கதிர்களால் சுடப்படும் அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். கோடைக் காலத்திலும், குளிர் காலத்திலும் இவ்வழியில் செயல்படும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.(56) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடையும் ஒருவன், எப்போதும் காந்தி மிக்கத் தோல் நிறத்தை அடைவான். அத்தகைய மனிதன் சூரியனைப் போன்ற சக்தியுடன் சுடர்விடவோ, சந்திரனின் அழகுடன் ஒளிரவோ செய்கிறான்” என்றார் {வித்யுத்பிரபர்}.(57)
தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவனும், நூறு வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன், இதன் பிறகு பிருஹஸ்பதியிடம் இந்தச் சிறந்த சொற்களைச் சொல்லிப் பேசினான்:(58) “ஓ! புனிதமானவரே, மனிதர்களுக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய அறப்புதிர்கள் குறித்தும், அவர்கள் செய்யும் குற்றங்களுடன் தொடர்புடைய புதிர்கள் குறித்தும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(59)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சூரியனைப் பார்த்து சிறுநீர் கழிப்பவர்கள், காற்றை {வாயுவை} மதிக்காதவர்கள், சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றாதவர்கள்,(60) மிக இளவயது கன்றைக் கொண்ட பசுவிடம் இருந்து அதிக அளவு பாலை அடைவதற்காகக் கறப்பவர்கள் ஆகியோர் பல களங்கங்களை {பாவங்களை} இழைக்கின்றனர். ஓ! சச்சியின் தலைவா, அந்தக் குற்றங்கள் என்ன என்பதை நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(61) ஓ! வாசவா, ஓ! சக்ரா, சூரியன், காற்று, வேள்வி ஆகுதிகளைச் சுமப்பவன் {நெருப்பு / அக்னி}, அனைத்து உயிரினங்களின் தாய்மாரான பசுக்கள் ஆகியோர் உலகங்களைப் பாதுகாப்பதற்காகச் சுயம்புவால் படைக்கப்பட்டனர். இவர்களே மனிதர்களின் தேவர்களாவர். அறத் தீர்மானங்களை நீங்கள் அனைவரும் கேட்பிராக.(62,63) சூரியனைப் பார்த்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் தீய ஆண்களும், தீய பெண்களும் எண்பத்தாறு ஆண்டுகள் பெரும் புகழ்க்கேட்டில் வாழ்வார்கள்.(64) ஓ! சக்ரா, காற்றிடம் எந்த மதிப்பையம் வளர்க்காதவன், தன் மனைவியின் கருப்பையிலிருந்து காலம் கனிவதற்கு முன்பே விழும் பிள்ளைகளைப் பெறுகிறான். சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றாத மனிதர்கள், அத்தகைய சடங்குகளைச் செய்ய நெருப்பை மூட்டும்போது அது தங்கள் ஆகுதிகளை உண்ண மறுப்பதைக் காண்பார்கள்.(65) மிக இளவயது கன்றைக் கொண்ட பசுவின் பாலைக் குடிப்பவர்கள், தங்கள் குலத்தைத் தழைக்கச் செய்ய ஒருபோதும் பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்.(66) அத்தகைய மனிதர்கள் தங்கள் பிள்ளைகள் இறப்பதையும், தங்கள் குலம் சுருங்குவதையும் காண்பார்கள். மதிப்பிற்குரிய குலங்களில் உள்ள வயதில் முதிர்ந்த மறுபிறப்பாளர்களால் காணப்படும் குறிப்பிடப்பட்ட செயல்களின் விளைவுகள் இவையே.(67) எனவே, ஒருவன் செழிப்படைய விரும்பினால் அவன் தடைசெய்யப்பட்டதை எப்போதும் தவிர்த்து, அறிவுறுத்தப்பட்டதை மட்டுமே எப்போதும் செய்ய வேண்டும். நான் உனக்குச் சொன்ன இது பெரும் உண்மையாகும்” என்றார் {பிருஹஸ்பதி}.(68)
தேவ ஆசான் இவ்வாறு சொன்ன பிறகு உயர்ந்த அருளைக் கொண்ட தேவர்கள், மருத்துகள் மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் ஆகியோர் பித்ருக்களிடம் கேள்வி கேட்கும் வகையில்,(69) “பித்ருக்களே, பொதுவாகவே சிறுமதி கொண்ட மனிதர்கள் செய்யும் எந்தச் செயல்களால் நீங்கள் நிறைவடைகிறீர்கள்? அத்தகைய சடங்குகளில் அளிக்கப்படும் எந்தக் கொடைகளால், இவ்வுலகில் இறந்து போன மனிதர்களின் நிலையை உயர்த்தி, அவர்களை வற்றாத திறன் கொண்டவர்களாக்கும்?(70) எந்தச் செயல்களைச் செய்வதால் மனிதர்கள் பித்ருக்களுக்குத் தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுவார்கள்? இதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நாங்கள் உணரும் ஆவல் பெரிதாக இருக்கிறது” என்றனர்.(71)
பித்ருக்கள், “உயர்ந்த அருளைக் கொண்டவர்களே, உங்கள் மனங்களில் உள்ள ஐயங்கள் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. அறவோர் செய்யும் எந்தச் செயல்களால் நாங்கள் நிறைவடைகிறோம் என்பதை அறிவிக்கப் போகிறோம் கேட்பீராக.(72) நீல நிறத்துடன் {கரிய நிறத்துடன்} கூடிய காளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும். புது நிலவு {அமாவாசை} நாளில் எங்களுக்கு எள்ளையும், நீரையும் கொடையளிக்க வேண்டும். மழைக்காலங்களில் விளக்குகள் கொடையளிக்கப்பட வேண்டும். மனிதர்கள் செய்யும் இந்தச் செயல்களால் அவர்கள் பித்ருக்களுக்குத் தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறார்கள்.(73) அத்தகைய கொடைகள் ஒருபோதும் வீண்போவதில்லை. மறுபுறம், அவை வற்றாதவையாகி உயர்ந்த கனிகளை விளைவிக்கின்றன. அவற்றில் இருந்து நாங்கள் அடையும் நிறைவு வற்றாததாகக் கருதப்பட வேண்டும்.(74) நம்பிக்கையுடன் கூடிய மனிதர்கள் சந்ததியைப் பெற்று இறந்து போன தங்கள் மூதாதையரைத் துன்பகரமான நரகில் இருந்து மீட்கிறார்கள்” என்றனர் {பித்ருக்கள்}.(75)
பித்ருக்களின் இச்சொற்களைக் கேட்டவரும், தவச் செல்வத்தையும், உயர்ந்த சக்தியையும் கொண்ட விருத்தகார்க்கியர், உடலில் மயிர்ச்சிலிர்ப்புடன் ஆச்சரியத்தால் நிறைந்தார். அவர்களிடம் பேசிய அவர்,(76) “தவச் செல்வத்தைக் கொண்டவர்களே, நீல நிறக் காளைகளை விடுதலை செய்வதால் உண்டாகும் பலன்களை எங்களுக்குச் சொல்லுங்கள். மேலும், மழைக்காலங்களில் விளக்கு கொடையும், எள்ளுடன் சேர்ந்து நீரையும் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன?” என்று கேட்டார்.(77)
பித்ருக்கள், “நீல {கருப்பு} நிறம் கொண்ட ஒரு காளையை விடுதலை செய்யும்போது அதன் வாலைக் கொண்டு (சிறிதளவு) நீரை எடுத்து இறைத்தால், (காளையை விடுவித்த மனிதனின்) பித்ருக்கள் முழுமையாக அறுபதாயிரம் வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(78) அத்தகைய காளை, (ஆறு, அல்லது தடாகக்) கரையில் இருந்து தன் கொம்புகளால் எழுப்பும் மணலானது, பித்ருக்களைச் சோமலோகத்திற்கு அனுப்புவதில் வெல்கிறது.(79) மழைக்காலங்களில் விளக்குகளைக் கொடையளிப்பதால் ஒருவன் சோமனைப் போலவே பிரகாசமாக ஒளிர்கிறான். விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் இருள் குணத்திற்கு {தமோ குணத்திற்கு) ஆட்படுவதில்லை.(80) புது நிலவு {அமாவாசை} நாளில், தாமிரப் பாத்திரத்தைப் பயன்படுத்தித் தேனில் கலந்த எள்ளும் நீரும் கொடையளிக்கும் மனிதர்கள்,(81) ஓ! தவச் செல்வத்தைக் கொண்டவனே, புதிர்கள் அனைத்துடன் கூடிய சிராத்தத்தை முறையாகச் செய்ததாகக் கருதப்படுகிறார்கள். இந்த மனிதர்கள் நல்ல உடல்நலத்தையும், உற்சாகமிக்க மனங்களையும் பெறுகின்றனர்” {என்றனர் பித்ருக்கள்}.(82)
{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, (பித்ருக்களுக்கு) பிண்டம் கொடுப்பவன் அடையும் பலன், அவனது குலத்தின் வளர்ச்சி என்ற வடிவத்தை எடுக்கும். உண்மையில், இச்செயல்களை நம்பிக்கையுடன் செய்பவன், பித்ருக்களுக்குத் தான் பட்ட கடனிலிருந்தும் விடுபடுகிறான்.(83) இவ்வாறு சிராத்தம் செய்வதற்குரிய முறையான காலம், நோற்கப்பட வேண்டிய சடங்குகளின் விதிகள், சிராத்தத்தில் உணவூட்டபட வேண்டிய முறையான மனிதன், அவற்றோடு தொடர்புடைய பலன்கள் ஆகியன விதிக்கப்பட்டிருக்கின்றன. நான் அனைத்தையும் உரிய வரிசையில் உனக்குச் சொல்லியிருக்கிறேன்” {என்றார் பீஷ்மர்}”.(84)
பரமரகசியங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 126-ஸ்ரீ ஹரியை நிறைவடையச் செய்யும் செயல்கள்; ஏழைகளும் வேள்வி செய்த பலன்களை அடைய செய்ய வேண்டிய செயல்கள்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பித்ருக்கள் பேசுவதை நிறுத்தியதும், தேவர்களின் தலைவனான இந்திரன், பலமிக்க ஹரியிடம், “ஓ! தலைவா, எந்தச் செயல்களின் மூலம் நீ நிறைவடைகிறாய். உண்மையில், மனிதர்கள் உன்னை நிறைவடையச் செய்வதில் எவ்வாறு வெல்கிறார்கள்” என்று கேட்டான்.(1)
விஷ்ணு {இந்திரனிடம்}, “பிராமணர்களை இழிவு செய்வது, நான் பெரிதும் வெறுக்கும் ஒன்றாகும். பிராமணர்களை வழிபட்டால் என்னை வழிபட்டதாகவே நான் கருதுகிறேன். இதில் ஐயமில்லை.(2) மேன்மையான பிராமணர்கள் அனைவருக்கும் விருந்தோம்பலுடன் உணவு அளித்த பிறகு, அவர்கள் மதிப்புடன் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் (மாலை வேளையில்) தன் {என்} பாதத்தை வணங்க வேண்டும். இவ்வழியில் செயல்படுபவர்கள், (பசுவில் இருந்து முதலில் விழும்) பசுஞ்சாணத்தில் தெரியும் சுழியை {என்னுடைய சக்கராயுதத்தை} வணங்கி அவற்றுக்குக் காணிக்கை அளிப்பவர்கள் ஆகிய மனிதர்களிடம் நான் நிறைவடைகிறேன்[1].(3) குள்ள வடிவில் இருக்கும் ஒரு பிராமணனைக் காண்பவர்கள், அல்லது கரையில் இருந்து சிறிதளவு மண்ணைத் தலையில் சுமந்து நீரில் இருந்து எழும் பன்றியைக் காண்பவர்கள் ஒருபோதும் எந்தத் தீமையையும் சந்திக்கமாட்டார்கள். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். ஒவ்வொரு நாளும், அஸ்வதம் {அரசமரம்}, கோரோசனை என்றழைக்கப்படும் பண்டம், பசு ஆகியவற்றை வழிபடும் மனிதன்,(5) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். இவற்றுக்குள் இருந்து, இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாட்டை என் சொந்த வடிவில் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(6) இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாடு எனக்கே அழிக்கப்பட்ட வழிபாடாகும். இஃது உலகம் தொடங்கிய காலம் முதல் இருக்கிறது. வேறு வகை வழிபாட்டை நான் ஏற்பதில்லை என்பதால் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் வீணாகவே அவ்வழியில் என்னை வழிபடுகிறார்கள். உண்மையில், வேறு வகையில் என்னை வழிபடுவது என்னை நிறைவடையச் செய்வதில்லை” என்றான் {விஷ்ணு}.(7)
இந்திரன் {விஷ்ணுவிடம்}, “பசுஞ்சாணத்தில் உள்ள சுழிகளையும், பாதத்தையும், பன்றியையும், குள்ள பிராமணனையும், நிலத்தில் இருந்து உயர்த்தப்பட்ட மண்ணையும் நீ ஏன் மெச்சுகிறாய்?(8) நீயே அனைத்து உயிரினங்களையும் படைத்தாய், நீயே அவற்றை அழிக்கவும் செய்கிறாய். அழியக்கூடிய அல்லது நிலையற்ற பொருட்கள் அனைத்தின் நித்திய இயற்கையாக நீயே இருக்கிறாய்” என்றான்”.(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் இச்சொற்களைக் கேட்ட விஷ்ணு, சற்றே புன்னகைத்து, “என்னுடைய சக்கரத்தின் மூலம் தான் தைத்தியர்கள் கொல்லப்பட்டனர். என் பாதங்கள் இரண்டினால் இவ்வுலகம் மறைக்கப்பட்டது.(10) பன்றியின் வடிவத்தை ஏற்றே நான் ஹிரண்யாக்ஷனைக் கொன்றேன். குள்ளனின் வடிவை ஏற்றே நான் (அசுர) மன்னன் பலியை வென்றேன்.(11) இவற்றை வழிபடும் உயர் ஆன்ம மனிதர்கள் என்னை நிறைவடையச் செய்கின்றனர். உண்மையில், என்னை இவ்வடிவங்களில் வழிபடுபவர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடைவதில்லை.(12) ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும் ஒரு பிராமணர் தன் வீட்டுக்கு வருவதைக் கண்டு, பிராமணனுக்கு உரிமையுள்ள தன் உணவின் முதல் பகுதியை அவனுக்குக் கொடுத்து, அதன் பிறகு எஞ்சியிருப்பதை உண்பவர் அமுதத்தை உண்டதாகக் கருதப்படுகிறான்.(13) காலை சந்தி வேளையைத் துதித்து, சூரியனை நோக்கிய முகத்துடன் நின்று கொண்டிருப்பவன், தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பலனை அறுவடை செய்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(14) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, ஒரு பெரும்புதிரை நான் உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். நான் உங்களுக்கு வேறென்ன சொல்ல வேண்டும்? உங்கள் ஐயங்களை எனக்குச் சொல்வீராக” என்றான் {விஷ்ணு}.(15)
பலதேவன், “மனிதர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் மற்றொரு பெரும்புதிரைக் கேட்பாயாக. இதை அறியாத அறிவற்ற மக்களே பிற உயிரினங்களின் கரங்களில் பெருந்துன்பத்தைச் சந்திக்கிறார்கள்.(16) விடிவதற்கு முன்பு எழுந்து, பசு, நெய், தயிர், கடுகு, தினை ஆகியவற்றைத் தீண்டும் மனிதன், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள், சிராத்தம் செய்யும்போது, முன்பும் பின்பும் அனைத்து உயிரினங்களையும், தூய்மையற்ற அனைத்தையும் எப்போதும் தவிர்க்கிறார்கள்” என்றான்[2].(18)தேவர்கள், “ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்து, அதை நீரால் நிறைத்து, கிழக்கு நோக்கி உண்ணா நோன்பையோ, ஒரு குறிப்பிட்ட நோன்பையோ நோற்கும் மனிதனிடம்,(19) தேவர்கள் அனைவரும் நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் வெற்றியால் மகுடம் சூட்ட வைக்கின்றனர். வேறு வழியில் உண்ணா நோன்பையோ, வேறு எந்த நோன்பையோ நோற்கும் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் எதையும் ஈட்டுவதில்லை[3].(20) உண்ணா நோன்புகள் நோற்பது குறித்தும், தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதும் குறித்தும் தீர்மானங்களைச் சொல்லும்போது தாமிரப்பாத்திரமே பயன்படுத்த உகந்ததாகும். தேவர்களுக்குக் காணிக்கை அளிக்கும் காரியத்தில், பிச்சை (இடும் அல்லது ஏற்கும்) காரியத்தில், அர்க்கியத்திற்குத் தேவையான உட்பொருட்களை அளிப்பதில், பித்ருக்களுக்கு எள்ளுடன் கலந்த நீரைக் காணிக்கையளிக்கும் காரியத்தில்,(21) தாமிரப்பாத்திரங்களே பயன்படுத்தப்பட வேண்டும்[4]. வேறு வகையில் இச்செயல்களைச் செய்வதன் மூலம் சிறிதளவே பலன் கிட்டும். தேவர்கள் எவ்வாறு நிறைவடைகிறார்கள் என்பது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிர்கள் இவையே” என்றனர் {தேவர்கள்}.(22)ர்மன், “மன்னனிடம் பணி செய்பவனாகவோ, {காலத்தைத் தெரிவிக்கும்} மணி அடிப்பவனாகவோ, வழிபாடுகள், அல்லது சிராத்தங்களில் உடனுதவி கடமைகளைக் கவனிப்பவனாகவோ {பரிசாரகனாகவோ}, பசு வளர்ப்பவனாகவோ {ஆ மேய்ப்பவனாகவோ}, வணிகம் செய்பவனாகவோ {வர்த்தகனாகவோ}, ஏதோ ஒரு கலையைத் தொழிலாகச் செய்பவனாகவோ, நடிகனாகவோ, நண்பர்களுடன் சச்சரவு செய்பவனாகவோ, வேத கல்வி இல்லாதவனாகவோ, ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்டவனாகவோ இருக்கும் பிராமணனுக்குத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ செய்யப்படும் சடங்குகள் அனைத்திலும் அளிக்கப்படும் காணிக்கைகளை ஒரு போதும் கொடுக்கக்கூடாது.(23,24) சிராத்தம் செய்பவன் அத்தகைய காணிக்கைகளை இத்தகைய பிராமணனுக்கு அளித்தால் அவன் தன் குலத்தைப் பெருகச் செய்யாமல் செழிப்பில் இருந்து வீழ்ச்சியடைகிறான். மேலும் அவன் செய்யும் அத்தகைய செயலால் பித்ருக்களை நிறைவடையச் செய்வதிலும் தவறுகிறான்.(25) எந்த வீட்டில் இருந்து ஒரு விருந்தினன் நிறைவடையாமல் திரும்புகிறானோ, அந்த வீட்டில் இருந்து பித்ருக்கள், தேவர்கள், புனித நெருப்புகள் ஆகியோர் அனைவரும் ஒரு விருந்தினர் இவ்வாறு நடத்தப்பட்டதன் விளைவால் ஏமாற்றம் அடைந்து வெளியேறுகின்றனர்.(26) தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினரிடம் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தாத மனிதன், பெண்களையும், பசுக்களையும் கொன்றவர்கள், நன்மை செய்தவர்களிடம் நன்றி மறந்தவர்கள், பிராமணக் கொலை செய்தவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கைகளைக் களங்கப்படுத்தியவர்கள் ஆகியோருக்கு இணையான பாவம் நிறைந்தவனாகக் கருதப்படுகிறான்” என்றான்.(27)
அக்னி, “குவிந்த கவனத்துடன் கேளுங்கள். பசுவையோ, உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ மிதிப்பதற்காகக் காலை உயர்த்தும் தீய புத்தி கொண்ட மனிதன் அடையும் கெடுபலன்களைச் சொல்லப் போகிறேன். அத்தகைய மனிதனின் புகழ்க்கேடு உலகம் முழுவதும் பரவி, சொர்க்கத்தின் எல்லைகளையே தொடுகிறது. அவனுடைய பித்ருக்கள் அச்சத்தால் நிறைகிறார்கள். அவன் காரியத்தில் தேவர்களும் பெரிதும் நிறைவற்றவர்களாகிறார்கள். பெரும் சக்தியுடன் கூடிய நெருப்பு, அவனால் ஊற்றப்படும் ஆகுதிகளை ஏற்க மறுக்கும்.(28-30) நூறு பிறவிகள் அவன் நரகில் கிடந்து அழுகுவான். அவன் ஒருபோதும் எக்காலத்திலும் மீட்கப்படுவதில்லை.(31) எனவே, தன் நன்மையை விரும்பி நம்பிக்கையோடு இருக்கும் ஒருவன், ஒரு பசுவையோ, உயர்ந்த சக்தியுடன் கூடிய பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ தன் காலால் ஒருபோதும் தீண்டக்கூடாது. இவையே இவை மூன்றுக்கு எதிராகக் கால்களை உயர்த்துபவன் அடையும் கெடுபலன்களென நான் அறிவிக்கிறேன்” என்றான்.(32,33)
விஷ்வாமித்திரர், “அறம் தொடர்பாகப் பொதுவாக மனிதர்களுக்கு மத்தியில் அறியப்படாத உயர்ந்த புதிரைக் கேட்பீராக. இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியை {பாயஸான்னத்தைப்} பித்ருக்களுக்குக் கொடுப்பதற்கு,(34) பாத்ரபத {புரட்டாசி} மாத {கிருஷ்ண பக்ஷ / தேய்பிறை} மக நட்சத்திரத்தின், நடுப்பகலில் தெற்குத் திசை நோக்கி ஒரு யானையினால் உடலால் உண்டான நிழலில் {கஜசாயையில்} அமர்ந்து காணிக்கையளிப்பவன்,(35) பெரும் பலன்கள் அடைகிறான். அந்தப் பலன்கள் என்னென்ன என்பதைக் கேட்பீராக[5]. இத்தகைய சூழ்நிலைகளில் பித்ருக்களுக்கு இத்தகைய காணிக்கையளிக்கும் மனிதன், அடுத்தடுத்து பதிமூன்று வருடங்களில் ஒவ்வொரு வருடமும் பெரும் சிராத்தத்தைச் செய்தவனாகக் கருதப்படுவான்” என்றார்.(36)பசுக்கள், “எந்த மனிதன், “ஓ! வாகுலையே {அனைத்தும் நிறைந்தவளே}, ஓ! சமங்கையே {பருத்த அங்கங்களைக் கொண்டவளே}, ஓ! எங்கும் அச்சமற்றவளே, ஓ! எப்போதும் பொறுமையாகவும், மங்கலம் நிரம்பியும் இருப்பவளே {நலமாயிருப்பவளே}, ஓ! நட்பே, ஓ! எண் போல் பெருகுபவளே, பழங்காலத்தில் பிரம்ம லோகத்தில் வஜ்ரதாரியான இந்திரனின் வேள்வியில் கன்றுடன் இருந்தவள் நீயே. ஆகாயத்திலும், அக்னியின் பாதையிலும் உன் நிலையைக் கொண்டவள் நீயே. தேவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள நாரதருடன் சேர்ந்து சர்வம்ஸஹை {ஸர்வஸஹை / அனைத்தையும் பொறுப்பவள்} என்று உன்னை அழைத்துத் துதிக்கின்றனர்” என்ற இந்த மந்திரங்களைச் சொல்லி ஒரு பசுவைத் துதிப்பானோ, அவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய மனிதன், புரந்தரனின் உலகை அடைகிறான். அதையும் தவிர அவன், பசுக்கள் மற்றும் சந்திரமாஸுடன் {சந்திரனுடன்} தொடர்புடைய பலன்களையும் அடைகிறான்.(37-39) அத்தகைய மனிதன், தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும், தான் கொண்ட ஒவ்வொரு அச்சத்தில் இருந்தும், ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் விடுபடுகிறான். இறுதியாக அவன் ஆயிரங்கண் இந்திரனின் மகிழ்ச்சி மிக்க உலகத்தில் வசிப்பிடத்தை அடைகிறான்” என்றன”.(40)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதன்பிறகு உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், கொண்டாடப்பட்டவர்களுமான ஏழு முனிவர்கள், வசிஷ்டரைத் தங்கள் தலைமையில் கொண்டு எழுந்து தாமரையில் பிறந்த பிரம்மனை வலம்வந்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி அவனைச் சூழ்ந்து நின்றனர்.(41) பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் அவர்களுடைய பேச்சாளராகி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் நன்மையைத் தருவதும், குறிப்பாகப் பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் நன்மையைத் தருவதுமான இந்தக் கேள்வியைக் கேட்டனர்.(42)
{வசிஷ்டரின் தலைமையிலான சப்தரிஷிகள்}, “அறவொழுக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், இவ்வுலக நன்மைகள் இல்லாதவர்களான மனிதர்கள் எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் வேள்விகள் தொடர்பான பலன்களை அடைவதில் வெல்கிறார்கள்?” என்று கேட்டனர்.(43) அவர்களது இந்தக் கேள்வியைக் கேட்ட பெரும்பாட்டன் பிரம்மன் பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.(44)
பிரம்மன், “உயர்வாக அருளப்பட்டவர்களே, இது சிறப்பான கேள்வியாகும். இது மங்கலமானதும், உயர்ந்ததும், புதிர் நிறைந்ததுமாகும். நீங்கள் முன்வைக்கும் கேள்வியானது நுட்பமானதும், மனித குலத்திற்குப் பெரும் நன்மை நிறைந்ததும் ஆகும்.(45) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நான் அனைத்தையும் விரிவாக உங்களுக்குச் சொல்கிறேன். (வறுமையின் மூலம் வேள்விகளைச் செய்ய இயலாதவர்களாக இருப்பினும்) வேள்விகளுக்கான பலன்களை மனிதர்கள் எவ்வாறு அடைகிறார்கள் என்பதைச் சொல்கிறேன் கவனமாகக் கேட்பீராக.(46) பௌச {தை} மாதத்தின் வளர்பிறை ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வானத்தையே கூரையாகக் கொண்டு {மேலே மூடாத இடத்தில்}, ஒற்றையாடை உடுத்தி,(47) நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும், நிலவின் கதிர்களைப் பருகும் {நிலவின் ஒளியில் படுத்து உறங்கும்} ஒருவன், பெரும் வேள்விகள் செய்த பலன்களை அடைகிறான்.(48) மறுபிறப்பாளர்களில் முதன்மையாவர்களே, அனைத்துக் காரியங்களின் நுட்பமான உண்மைகளில் உட்பார்வை கொண்டவர்களே, உங்கள் கேள்விக்கான பதிலாக நான் பெரும்புதிரை {பெரும் ரகசியத்தை} அறிவித்திருக்கிறேன்” என்றான் {பிரம்மன்}.(49)
ஹிருதயத்தூய்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 127-சூரியன், ஸ்ரீதேவி, கார்க்யர், தௌம்யர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் வெளியிட்ட பரமரகசியங்கள்…
{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்},
“விபாவசு (சூரியன் என்றும் அழைக்கப்படுபவன்), “இரு காணிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கைநிறைய நீரையும், மற்றொன்று நெய் கலந்த அரிசி தானியங்கள் அடங்கிய அக்ஷதையையும் கொண்டவையாகும். ஒருவன் ஒரு முழு நிலவு {பௌர்ணமி} நாளில், அந்தப் பிரகாசமான கோளத்தை {சந்திரனை} நோக்கி நின்று கொண்டு கை நிறைய நீர் மற்றும் அக்ஷதை என்றழைக்கக்கூடிய நெய்கலந்த அரசிதானியங்கள் என்ற குறிப்பிட்ட இரு காணிக்கைகளையும் அளிக்க வேண்டும். இந்தக் காணிக்கைகளை அளிக்கும் மனிதன் தன்னுடைய புனித நெருப்பைத் துதிப்பவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், அவன் (அடிப்படையான) மூன்று நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றியவனாகக் கருதப்படுகிறான்.(1,2) ஒரு புது நிலவு {அமாவாசை} நாளில் பெரும் மரத்தை வெட்டும் அற்ப புத்தி கொண்டவன், பிராமணக் கொலை செய்த பாவத்தால் {பிரம்மஹத்தி தோஷத்தால்} களங்கப்படுகிறான்.(3) புது நிலவு {அமாவாசை} நாளில் பற்குச்சியை மெல்லும் மூட மனிதன் அத்தகைய செயலின் மூலம் சந்திர தேவனுக்குத் தீங்கிழைத்தவனாகக் கருதப்படுகிறான்.(4) முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அத்தகைய மனிதனால் ஊற்றப்படும் ஆகுதிகளைத் தேவர்கள் ஏற்பதில்லை. அவனது பித்ருக்கள் அவனிடம் சினம் கொள்கின்றனர், அவனது குலமும், குடும்பமும் ஒழிந்து போகின்றன” என்றான் {சூரியன்}.(5)
ஸ்ரீ {லட்சுமி}, “எந்த வீட்டில் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய பாத்திரங்கள், இருக்கைகள், படுக்கைகள் ஆகியன சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கே பெண் அடிக்கப்படுகிறாளோ,(6) அந்த வீட்டில் இருந்து தேவர்களும், பித்ருக்களும் அருவருப்புடன் வெளியேறுகின்றனர். உண்மையில், அத்தகை வீடுகளின் உரிமையாளர்களால் அளிக்கப்படும் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் தேவர்களும், பித்ருக்களும் அத்தகைய பாவம் நிறைந்த வசிப்பிடத்தில் இருந்து விலகி ஓடுகின்றனர்” என்றாள்.(7)
அங்கிரஸ், “ஓர் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு இரவிலும் ஏற்றுவதற்கு ஒரு விளக்குடன் கரஞ்சக {புங்கை} மரத்தின் அடியில் நின்று கொண்டும், தன் கைகளில் ஸுவர்ச்சலைக் கொடியின் வேரை வைத்துக் கொண்டும் இருப்பவனுடைய சந்ததி பெருகும்” என்றார்[1].(8)
கார்க்யர், “ஒருவன் தன் விருந்தினர்களுக்கான விருந்தோம்பல் கடமைகளை எப்போதும் செய்ய வேண்டும். வேள்வி நடைபெறும் கூடம், அல்லது கொட்டகையில் அவன் விளக்குகளை அளிக்க வேண்டும். பகலில் உறங்குவதை அவன் தவிர்க்க வேண்டும். அனைத்து வகை இறைச்சியை, அல்லது இறைச்சியுணவைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் ஒருபோதும் தீங்கைச் செய்யக்கூடாது. அவன் எப்போதும் புஷ்கரை தடாகங்கள் மற்றும் பிற புனித நீர்நிலைகளின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தகைய கடமை நடைமுறையே முதன்மையானதாகும். இதுவே புதிர்களுடன் கூடிய உயர்ந்த அறமாகும். நடைமுறையில் பின்பற்றப்பட்டால் அது நிச்சயம் பெரும் விளைவுகளை உண்டாக்கும்.(10) ஒருவன் நூறு வேள்விகளைச் செய்தாலும், அவற்றில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் உண்டான பலன் தீர்ந்து போவதை காணும் நிலையை அடைகிறான். எனினும் நான் சொன்ன கடமைகளை நம்பிக்கையுடன் செய்வதால் அவற்றின் பலன் வற்றாதனவாகின்றன.(11)
பலரின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் மற்றொருமொரு உயர்ந்த புதிரை {பெரும் ரகசியத்தைக்} கேட்பீராக. சிராத்தங்கள், தேவர்களைக் கௌரவிக்கும் சடங்குகள், சாதாரண நாடகளில் செய்யப்படும் சடங்குகள், குறிப்பாகப் புனிதமான முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} நாட்களில் செய்யப்படும் சடங்குகள் ஆகியவற்றின் போது, மாதவிலக்கான பெண்ணையோ, தொழுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளையோ தேவர்கள் பார்த்துவிட்டால் அச்சந்தர்ப்பங்களில் (நெருப்பில் ஊற்றப்படும்) ஆகுதிகளை அவர்கள் உண்பதில்லை.(12,13) தன்னால் செய்யப்பட்ட சிராத்தம் நடைபெறும் இடத்தின் அருகில் இத்தகைய பெண்ணை அனுமதித்த மனிதனுடைய பித்ருக்கள், பதிமூன்று வருடங்கள் அவனிடம் நிறைவடையாமல் இருப்பார்கள்.(14) ஒருவன், வெள்ளுடை உடுத்தி, மனமும், உடலும் தூய்மையடைந்து, பிராமணர்களை அழைத்து, (தான் செய்யும் சிராத்தத்தின் போது) அவர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அத்தகைய தருணங்களில் ஒருவன் பாரதத்தைப் படிக்க வேண்டும். சிராத்தங்களில் இவை அனைத்தையும் பின்பற்றினால் அங்கே அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றாதனவாகின்றன” என்றார் {கார்க்யர்}.(15)
தௌம்யர், “உடைந்த பாத்திரங்கள், உடைந்த கட்டில்கள், சேவல்கள், நாய்கள், வசிக்கும் வீட்டிற்குள் வளரும் மரங்கள் ஆகியவை அனைத்தும் மங்கலமற்ற பொருட்களாகும். உடைந்த பாத்திரத்தில் கலியே இருக்கிறான் {எனவே, கலகம் உண்டாகும்}, அதே வேளையில், உடைந்த கட்டிலால் செல்வத்தின் இழப்பு ஏற்படும். சேவலோ, நாயோ காணப்படும்போது, தேவர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்ணமாட்டர்கள். மரத்தின் வேருக்கடியில் தேள்களும், பாம்புகளும் நிச்சயம் உறைவிடத்தைக் காண்கின்றன. எனவே, ஒருவன் தன் வசிப்பிடத்திற்குள் மரத்தை ஒருபோதும் நடக்கூடாது” என்றார்.(17)
ஜனதக்னி, “தூய்மையற்ற இதயத்தைக் கொண்ட மனிதன், குதிரை வேள்வியிலோ, நூறு வாஜபேய வேள்விகளிலோ, தலைவணங்கிக் கடுந்தவம் இருந்தோ தேவர்களைத் துதித்திருந்தாலும் நிச்சயம் நரகத்திற்குச் செல்வான். இதயத் தூய்மை வேள்விகளுக்கும், வாய்மைக்கும் இணையானதாகக் கருதப்படுகிறது.(18,19) ஓர் ஏழை பிராமணன், மற்றொரு பிராமணனுக்கு மாவாலான பிரசாதத்தை {ஒரு படி மாவை} மட்டுமே கொடுப்பதன் மூலம் பிரம்ம லோகத்தை அடைகிறான். (இதயத் தூய்மையின் முக்கியத்துவத்திற்கு) இது போதுமான சான்றாகும்” என்றார்.(20)
வாயு சொன்ன பரமரகசியம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 128-வாயுதேவன் வெளியிட்ட பரமரகசியம்; விதிமீறல்களைச் சமன் செய்யும் பரிகாரங்கள்…
வாயு, “நோற்றால் மனித குலத்தை மகிழ்ச்சியில் நிறைக்கும் சில கடமைகளை நான் சொல்லப் போகிறேன். சில ரகசிய காரணங்களைச் சார்ந்திருக்கும் குறிப்பிட்ட விதிமீறல்களைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(1)
மழைக்காலத்தின் நான்கு மாதங்களில் (பித்ருக்களுக்கு) எள்ளையும் நீரையும், கடமைகளை அறிந்த பிராமணர்களுக்குத் தன் சக்திக்குத்தகுந்தபடி உணவையும் காணிக்கையளித்து,(2) புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியைக் காணிக்கையளித்து, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் எள் மற்றும் நீருடன் சேர்த்து விளக்குகளையும் கொடையளிப்பவனும்,(3) உண்மையில் இவை அனைத்தையும் நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும் செய்பவனுமான மனிதன், தேவர்களுக்கு விலங்குகளைக் காணிக்கையளிக்கும் நூறு வேள்விகள் செய்வதால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும் அடைகிறான்.(4)
அனைவரும் அறியாத மற்றொரு உயர்ந்த புதிரைக் கேட்பீராக. தான் ஆகுதிகளை ஊற்றும் நெருப்பை ஒரு சூத்திரன் மூட்டும்போது அனைத்தும் சரி என்று நினைப்பவனும், சிராத்தங்களிலும், வேறு சடங்குகளிலும் துணை செய்யத் தகாத பெண்கள் அவற்றில் உதவி செய்ய அனுமதிக்கப்படும்போது எந்தக் குற்றத்தையும் காணாதவனுமான மனிதன் நிச்சயம் பாவத்தால் களங்கமடைகிறான்.(5) வேள்வி நெருப்புகள் மூன்றும் அத்தகைய மனிதனிடம் சினம் கொள்கின்றன. அவன் அடுத்தப் பிறவியில் ஒரு சூத்திரனாகப் பிறப்பான். அவனுடைய பித்ருக்களும் தேவர்களும் அவனிடம் ஒருபோதும் நிறைவடைய மாட்டார்கள்.(6)
அத்தகைய பாவங்களில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள ஒருவன் செய்ய வேண்டிய பாவக்கழிப்புகளை {பரிகாரங்களை} இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீராக. அந்தப் பரிகாரச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் பிணியில இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியை அடைகிறான்.(7) அவன் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து குவிந்த கவனத்துடன் பசுவின் சிறுநீர், சாணம், பால், நெய் ஆகியவற்றைப் புனித நெருப்பில் ஆகுதிகளாக ஊற்ற வேண்டும்.(8)
ஒரு வருடம் முழுமையாகத் தீர்ந்ததும் அத்தகைய மனிதனின் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அவனுடைய பித்ருக்களும் சிராத்தம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, அவனிடம் நிறைவை அடைகின்றனர்.(9)
சொர்க்கத்தை அடைய விரும்பும் மனிதர்களைப் பொறுத்தவரையில் எது அறம், எது மறம் {அறமற்றது} என்பனவற்றை அறியப்படாத விபரங்களுடன் நான் உரைத்திருகிறேன். உண்மையில் இந்த விதிமீறல்களைத் தவிர்ப்பவர்களும், அவற்றை இழைத்தாலும் குறிப்பிட்ட பரிகாரச் சடங்குகளைச் செய்பவர்களுமான மனிதர்கள், இவ்வுலகத்தைவிட்டு அகலும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்” என்றான் {வாயு}.(10)
லோமசர் சொன்ன ரகசியங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 129-லோமசர் வெளியிட்ட சொன்ன பரமரகசியங்கள்…
லோமசர், “தனக்காக மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளாமல், அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்தும் மனிதர்களின் பித்ருக்கள் சிராத்தத்திற்கான நேரம் வரும் போது ஏமாற்றம் அடைகின்றனர்.(1) அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்துபவன், மலட்டுப் பெண்ணிடம் பாலியல் கலவியில் ஈடுபடுபவன், ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பவன் ஆகியோர் இணையான பாவம் நிறைந்தவர்களே.(2)
அத்தகையோரின் பித்ருக்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பாமல் அவர்களிடம் இருந்து தங்களை அறுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அளிக்கும் காணிக்கைகள் தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்வதில் தவறுகின்றன.(3) எனவே, பிறர் மணந்து கொண்ட பெண்களுடனும், மலட்டுப் பெண்களுடனும் ஒருவன் எப்போதும் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும். தன் நன்மையை விரும்பும் மனிதன் ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க மாட்டான்.(4)
அறத்தைப் பொறுத்தவரையில் அனைவராலும் அறியப்படாத மற்றொரு புதிரை இப்போது சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் எப்போதும் தனது ஆசான் மற்றும் வேறு பெரியோர்களின் ஆணைகளைச் செய்ய வேண்டும்.(5) ஒவ்வொரு மாதமும், பனிரெண்டாம் சந்திர நாளிலும் {துவாதசியிலும்}, முழு நிலவு {அமாவாசை} நாளிலும் ஒருவன் நெய்யையும், அக்ஷதையால் அமைந்த காணிக்கைகளையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளிக்க வேண்டும். அத்தகைய மனிதன் அடையும் பலனின் அளவை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)
அத்தகைய செயலால் ஒருவன் சோமத்தையும், பெருங்கடலையும் பெருகச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களின் தலைவனான வாசவன் {இந்திரன்}, அவனுக்குக் குதிரை வேள்வி செய்த பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அளிக்கிறான்.(7) அத்தகைய கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒரு மனிதன் பெரும் சக்தியையும், ஆற்றலையும் அடைகிறான். தெய்வீகமான சோமன் அவனிடம் நன்கு நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் கனியும் நிலையை அருள்கிறான்.(8)
பெரும் பலனை உண்டாக்கவல்லதும், கடமை நிலைத்திருக்கும் அடித்தளமுமான மற்றுமொரு கடமை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. கலியுகத்தில் அந்தக் கடமை செய்யப்பட்டால் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.(9) விடிவதற்கு முன்பு எழுந்து, நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வெள்ளுடைகளை உடுத்திக் கொண்டு, குவிந்த கவனத்துடன் பாத்திரங்கள் நிறைந்த எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பவனும்,(10) பித்ருக்களுக்கு எள்ளும் தேனும், நீரும் கொடுப்பவனும், கிருச்ரம் என்றழைக்கப்படும் உணவையும், விளக்குகளையும் கொடுப்பவனுமான மனிதன், அடுத்தடுத்து நல்ல பலன்களையே அடைகிறான். அந்தப் பலன்கள் யாவை எனச் சொல்கிறேன் கேட்பீராக(11)
தெய்வீக தண்டனை அளிப்பவனான பாகன் {இந்திரன், தாமிரப் பாத்திரங்களையும், எள் நிறைந்த வெண்கலப் பாத்திரங்களையும் கொடையளிப்பதன் பலன்களைக் குறிப்பிட்டிருக்கிறான். பசுக்கொடை, நித்திய பலனை விளைவிக்கவல்ல நிலக்கொடை ஆகியவற்றை அளிப்பவன்,(12) தக்ஷிணையின் வடிவில் பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவன் ஆகியோர் அனைவரும் எள் நிறைந்த பாத்திரங்களைக் கொடையளிப்பதன் மூலம் அடைவதற்கு இணையான பலன்களை அடைந்தவனாகத் தேவர்கள் அனைவராலும் கருதப்படுகிறான்.(13)
நீருடன் சேர்த்து எள் காணிக்கையளிக்கப்படும் கொடைகள் நித்தியமான நிறைவை அளிப்பவையாகப் பித்ருக்களால் கருதப்படுகின்றன. விளக்குக் கொடை மற்றும் கிருசரக் கொடைகளில் பாட்டன்கள் {மூதாதையர்} அனைவரும் உயர்ந்த நிறைவை அடைகிறார்கள்.(14) இவ்வாறு பித்ருக்கள் மற்றும் தேவர்களால் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் உயர்வாக மெச்சப்பட்டதும், முனிவர்களால் விதிக்கப்பட்டதுமான பழைமையான விதியைச் சொன்னேன்” என்றார் {லோமசர்}”.(15)
புறக்கணிக்கத்தக்க ஐவர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 130- அருந்ததி, சூரியன் மற்றும் யமன் ஆகியோர் சொன்ன பரமரகசியங்கள்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது, அங்கே கூடியிருந்த பல்வேறு முனிவர்களும், பித்ருக்களும், தேவர்களும், பெரும் தவத்தகுதியைக் கொண்டிருந்த (வசிஷ்டரின் மனைவியான) அருந்ததியிடம் குவிந்த கவனத்தோடு கேள்வி கேட்டனர்.(1) தவச் செல்வத்தை அபரிமிதமாகக் கொண்டவளும், நோன்புகள் மற்றும் ஒழுக்கத்தில் தன் கணவரும், உயர் ஆன்ம கொண்டவருமான வசிஷ்டருக்கு இணையானவளாதலால் சக்தியிலும் அவள் அவருக்கு இணையானவளாக இருந்தாள்.(2) அவர்கள் அவளிடம், “அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களை நாங்கள் உன்னிடம் கேட்க விரும்புகிறோம். ஓ! இனிமை நிறைந்த பெண்மணியே, உயர்ந்த புதிராக {ரகசியமாக} நீ எதைக் கருதுகிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர்.(3)
அருந்ததி, “ஏழையான என்னை இவ்வாறு நீங்கள் கருத்துடன் நினைவுகூர்வதாலேயே என்னால் தவங்களில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடிந்தது. அருள் நிறைந்த உங்கள் அனுமதியுடன் நான் இப்போது நித்தியமான கடமைகள் மற்றும் உயர்ந்த புதிர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அவை சார்ந்திருக்கும் காரணங்களுடன் சேர்த்து நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையும், தூய இதயத்தையும் கொண்டவருக்கு மட்டுமே இந்த ஞானம் சொல்லப்பட வேண்டும்.(4,5) நம்பிக்கையற்றவன், செருக்கு நிறைந்தவன், பிராமணக்கொலை செய்த {பிரம்மஹத்தி தோஷம் கொண்ட} குற்றவாளி, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவன் ஆகியோருடன் ஒருபோதும் இது குறித்துப் பேசக் கூடாது. அவர்களுக்கு ஒருபோதும் அறமும், கடமையும் சொல்லப்படக்கூடாது.(6) பனிரெண்டு வருட காலம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிக்கும் மனிதன், அல்லது, ஒவ்வொரு மாதமும் ஒரு வேள்வியில் தேவர்களைத் துதிப்பவன், அல்லது பெரும் புஷ்கரையில், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளிப்பவன் ஆகியோர் அடையும் பலன்கள் விருந்தினரை நிறைவடையச் செய்வதன் மூலம் கிட்டும் பலன்களுக்கு ஒருபோதும் ஈடாகாது.(7,8)
மனித குலத்தை மகிழ்ச்சியால் நிறைக்கும் மற்றொரு கடமையைச் சொல்லப் போகிறேன் கேட்பீராக. அது நம்பிக்கையுடன் கூடிய மனிதனால் ரகசிய சடங்காகச் செய்யப்பட வேண்டும். அதன் பலன்கள் நிச்சயம் உயர்ந்தவையாகும். அவை என்னென்ன என்பதைக் கேட்பீராக. விடிவதற்கு முன் எழுந்து, குறிப்பிட்ட அளவு நீரையும், சில குசப் புற்களையும் {தர்ப்பைகளையும்} எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டகைக்குச் சென்று, கொண்டு சென்ற நீரைக் குசப்புற்களைக் கொண்டு தெளிப்பதன் மூலம் மாடுகளின் கொம்புகளைக் கழுவியபிறகு தன் தலையில் நீரை வடியச் செய்பவன், அத்தகைய நீராடலின் விளைவால் சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி செல்பவையும், மதிப்புமிக்கவையும், மூவுலகங்களிலும் உள்ளவையுமான அனைத்து நீர்நிலைகளிலும் நீராடியவனாகக் கருதப்படுகிறான்” என்று சொன்னாள்.(10-12) அருந்ததி இந்தச் சொற்களைச் சொன்னதும் தேவர்கள் மற்றும் பித்ருக்கள் அனைவரும் “நன்று, நன்று” என்று சொல்லி அவர்களை மெச்சினார்கள். உண்மையில், அங்கே இருந்த உயிரினங்கள் அனைத்தும் உயர்வான நிறைவை அடைந்து அருந்ததியை வழிபட்டன.(13)
பிரம்மன், “ஓ! உயர்வாக அருளப்பட்டவளே, ரகசிய சடங்குடன் சேர்த்து நீ சொன்ன கடமை சிறப்பானதாகும். புகழ் உனதாகட்டும். உன் தவங்கள் தொடர்ந்து பெருகும் வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றான்.(14)
யமன், “நான் உங்களிடம் இருந்து இனிமையான, சிறப்பான உரையைக் கேட்டேன். எனக்கு ஏற்புடைய வகையில் சித்திரகுப்தன் சொன்னதை இப்போது கேட்பீராக.(15) அச்சொற்கள் ரகசிய சடங்குடன் கூடிய கடமை தொடர்பானதாகவும், பெரும் முனிவர்களாலும், நம்பிக்கையுடன் கூடியவர்களாலும், தன் நன்மையை விரும்புபவர்களாலும் கேட்கத்தகுந்ததாகவும் இருக்கின்றன.(16) உயிரினங்களால் இழைக்கப்படும் அறமோ, பாவமோ ஏதும் அழிவதில்லை. முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அச்செயல்கள் அவை சார்ந்திருக்கும் சூரியனிடம் அறிவிக்கப்படுகின்றன.(17) ஒரு மனிதன் இறந்தோரின் உலகத்திற்குள் செல்லும்போது, சூரிய தேவன் அவனுடைய செயல்கள் அனைத்துக்குமான சாட்சியாக இருக்கிறான். அறவோனாகிருப்பவன் அங்கே தன் அறத்திற்கான கனிகளை அடைகிறான்.(18) சித்திரகுப்தனால் அங்கீகரிக்கப்பட்ட சில மங்கலக் கடமைகளை இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். குடிப்பதற்கான நீர், இருளை அகற்றும் விளக்குகள் ஆகியவை எப்போதும் கொடையளிக்கப்பட வேண்டும்.(19) காலணிகள், கொடைகள், கபிலைப்பசுக்கள் ஆகியவையும் உரிய சடங்குகளுடன் கொடையளிக்கப்பட வேண்டும். புஷ்கரையில் குறிப்பாக ஒருவன் வேதமறிந்த ஒரு பிராமணனுக்கு ஒரு கபிலைப் பசுவைக் கொடையாக அளிக்க வேண்டும்.(20)
அவன் எப்போதும் தன் அக்னிஹோத்ரத்தைப் பெருங்கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இங்கே சித்திரகுப்தனால் மற்றொரு கடமையும் அறிவிக்கப்படுகிறது.(21) உயிரினங்களில் சிறந்தவை, அந்தக் கடமையின் பலன்களைத் தனித்தனியாகக் கேட்பது தகுந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு உயிரினமும் அழிவடையவே விதிக்கப்பட்டிருக்கிறது.(22) அற்ப புத்தி கொண்டோர், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு இறந்தோரின் உலகில் பெரும் துன்பத்தைச் சந்திக்கின்றனர். அத்தகைய துன்பத்தில் இருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.(23) அவர்கள் காரிருளுக்குள் நுழைய வேண்டும். அத்தகைய துன்பத்தைக் கடப்பதில் வெல்ல ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன்.(24) அந்தக் கடமைகளைச் செய்வதற்கு ஆகும் செலவு குறைவே ஆனால் அவை பெரும் பலன் நிறைந்தவையா இருக்கின்றன. உண்மையில் அத்தகைய செயல்பாடு மறுமையில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். குடிப்பதற்கான நீரைக் கொடையாக அளிப்பதில் உண்டாகும் பலன்கள் சிறந்தவையாகும். குறிப்பாக மறுமையில் உயர்ந்த பலன்களை அளிக்கும்.(25)
குடிப்பதற்கான நீரைக் கொடையளிப்பவர்களுக்காக மறுமையில் சிறந்த நீர் நிறைந்த ஒரு பேராறு விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த ஆற்றில் உள்ள நீர் வற்றாததாகவும், குளுமையானதாகவும், அமுதம் போன்ற இனிமை கொண்டதாகவும் இருக்கிறது.(26) இவ்வுலகில் நீர்க்கொடை அளிப்பவன் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, மறுமையில் அந்த ஆற்றில் இருந்தே நீரைக் குடிக்கிறான். விளக்குகளை {தீபங்களைக்} கொடையளிப்பதால் கிட்டும் அபரிமிதமான பலன்களை இப்போது கேட்பீராக.(27) இவ்வுலகில் விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் (நரகத்தின்) காரிருளைக் காண வேண்டியதில்லை. அவன் வேறு உலகத்திற்குச் செல்லும்போது, சோமன், சூரியன், நெருப்பு தேவன் ஆகியோர் தங்கள் ஒளியை அவனுக்கு அளிக்கின்றனர்.(28) அத்தகைய மனிதனின் அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க ஒளி இருக்கத் தேவர்கள் விதிக்கின்றனர். உண்மையில், விளக்குகளை {தீபங்களைக்} கொடையளிப்பவன் இறந்தோரின் உலகத்திற்குச் செல்லும்போது அவன் இரண்டாவது சூரியனைப் போலத் தூயப் பிரகாசத்துடன் சுடர்விடுகிறான்.(29) எனவே ஒருவன் இம்மையில் குறிப்பாக விளக்குகளையும், குறிப்பாக நீர்க்கொடையையும் அளிக்க வேண்டும். வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குக் கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம், குறிப்பாகப் புஷ்கரையில் அக்கொடை அளிக்கப்படும்போது ஒருவன் அடையும் பலன்களைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(30)
அத்தகைய மனிதன் நித்திய பலனை உண்டாக்கவல்ல கொடையான காளையுடன் சேர்த்து நூறு பசுக்களைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(31) ஒரேயொரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பது நூறு பசுக்களைக் கொடையளித்த பலனைக் கொடுக்கவல்லதாகக் கருதப்படுவதால் கொடையாளி எந்தப் பாவத்தைச் செய்த குற்றவாளியாக இருந்தாலும், அதிலும் பாவங்களில் பெரிய பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக இருந்தாலும் {பிரம்மஹத்தி தோஷம் கொண்டவனாக இருந்தாலும்} அவன் கொடையளிக்கும் ஒரேயொரு கபிலைப்பசு அவற்றைத் தூய்மைப்படுத்தவல்லதாகும்.(32) எனவே, ஒருவன் கார்த்திகை மாத முழு நிலவு {பௌர்ணமி} நாளில் (புஷ்கரை என்ற பெயரில் அறியப்பட்ட இரு தீர்த்தங்களில்) பெரியதாகக் கருதப்படும் புஷ்கரையில் ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிக்க வேண்டும். அத்தகைய கொடையை அளிப்பதில் வெல்லும் மனிதர்கள் எவ்வகைத் துன்பத்தையும், கவலையையும், வலிதரும் முட்களையும் சந்திக்க வேண்டியதில்லை.(33) கொடைக்குத் தகுந்த ஒரு மேன்மையான பிராமணனுக்கு ஒரு ஜோடிக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன் அதே போன்ற பலன்களை அடைகிறான். ஒரு குடையைக் கொடையளிப்பதன் மூலம் அம்மனிதன் மறுமையில் வசதியான நிழலை அடைகிறான் (அவன் சூரியனுக்கு வெளிப்பட்டிருக்க மாட்டான்).(34) தகுந்தவர்களுக்கு அளிக்கப்படும் கொடை ஒருபோதும் வீணாவதில்லை. அது நிச்சயம் கொடையாளிக்கு ஏற்புடைய விளைவுகளை உண்டாக்கும்” என்று {சித்திரகுப்தன் சொன்னதாக யமன்} சொன்னான். சித்திரகுப்தனின் இந்தக் கருத்துகளைக் கேட்ட சூரியனுக்கு மயிர்ச்சிலிர்ப்பு உண்டானது.(35)
பெருங்காந்தியுடன் கூடிய அவன் {சூரியன்}, “உயர் ஆன்ம சித்திரகுப்தனால் எடுத்துரைக்கப்பட்ட கடமை தொடர்பான புதிர்களைக் கேட்டீர்கள்.(36) நம்பிக்கையுடன் கூடிய மனிதர்கள் உயர் ஆன்ம பிராமணர்களுக்கு இக்கொடைகளை அளிப்பதன் மூலம் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.(37) தீச்செயல்களால் களங்கமடைந்த இந்த ஐவகை மனிதர்களால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. உண்மையில் பாவம் நிறைந்த நடத்தை கொண்டவர்களும், மனிதர்களில் இழிந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான அவர்களிடம் ஒருபோதும் பேசக்கூடாது. உண்மையில் அவர்கள் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும்.(38) பிராமணனைக் கொன்றவன் {பிரம்மஹத்தி செய்தவன்}, பசுவைக் கொன்றவன் {கோஹத்தி செய்தவன்}, பிறர் மனைவிகளுடன் சேரும் பாலியல் கலவிக்கு அடிமையானவன், (வேதங்களில்) நம்பிக்கையில்லாதவன், மனைவியைக் கொண்டு பிழைப்பவன் ஆகியோரே அந்த ஐவராவர்.(39) பாவம் நிறைந்த நடத்தை கொண்ட இந்த மனிதர்கள், இறந்தோரின் உலகத்திற்குச் செல்லும்போது, சீழ் மற்றும் குருதியில் வாழும் புழுக்களைப் போல நரகத்தில் அழுகுகின்றனர்.(40) பித்ருக்கள், தேவர்கள், ஸ்நாதகப் பிராமணர்கள் மற்றும் தவப்பயிற்சிகளுக்குத் தங்களை அர்ப்பணித்த வேறு மறுபிறப்பாளர்கள் ஆகியோரால் இந்த ஐவரும் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்றான் {சூரியன்}”.(41)
பிரமதர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 131-பிரமதர்கள் யாரைப் பீடிப்பார்கள் என்று தேவர்களிடம் சொன்னது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது உயர்வாக அருளப்பட்டவர்களான தேவர்கள், பித்ருக்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் பிரமதர்களிடம்[1],(1) “நீங்கள் அனைவரும் உயர்வாக அருளப்பட்டவர்கள். நீங்கள் இரவில் புலப்படா வகையில் திரிபவர்கள். இழிந்தவர்களும், தூய்மையற்றவர்களும், களங்கமுள்ளவர்களுமான மனிதர்களை நீங்கள் ஏன் பீடிக்கிறீர்கள்?(2) உங்கள் அதிகாரத்திற்குத் தடையாக எச்செயல்கள் கருதப்படுகின்றன? உண்மையில் எந்தச் செயல்களைச் செய்வதன் விளைவால் நீங்கள் மனிதர்களைப் பீடிக்க முடியாதவர்கள் ஆகிறீர்கள்? ராட்சசர்களை அழித்து, மனிதர்களின் வசிப்பிடங்களில் உங்கள் அதிகாரத்தை உறுதிபடுத்துவைத் தடுக்கும் செயல்கள் எவை? இரவுலாவிகளே, இவை அனைத்தையும் நாங்கள் உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறோம்” என்றனர்.(4)பிரமதர்கள், “பாலியல் கலவிச் செயல்களால் மனிதர்கள் தூய்மையற்றவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய செயல்களுக்குப் பின்பு தங்களைத் தூய்மை படுத்திக் கொள்ளாதவர்கள், பெரியோர்களை அவமதிப்பவர்கள், அறியாமையால் பல்வேறு வகை இறைச்சிகளை உண்பவர்கள், மரத்தினடியில் உறங்கும் மனிதன்,(5) உறங்கப் சென்று தன் படுக்கையின் தலையணைக்கடியில் இறைச்சியை வைத்திருப்பவன், கால் வைக்க வேண்டிய இடத்தில் தலையையோ, தலை வைக்க வேண்டிய இடத்தில் காலையோ வைத்து படுப்பவன் ஆகியோர் தூய்மையற்ற மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில் இம்மனிதர்கள் {நாங்கள் நுழையத்தக்க} பல துளைகளைகளைக் கொண்டிருக்கின்றனர்.(6)
நீருக்குள் சளி மற்றும் தூய்மையற்ற {சிறுநீர், மலம் போன்ற} கழிவுகளை வீசுபவர்களும் அதே வகையில் எண்ணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் எங்களால் கொல்லப்படவும், உண்ணப்படவும் தகுந்தவர்களாவர் என்பதில் ஐயமில்லை.(7) உண்மையில், இத்தகைய ஒழுக்கம் கொண்ட மனிதர்களையே நாங்கள் பீடிக்கிறோம். மாற்று மருந்தாகக் கருதப்படுபவையும், மனிதர்களுக்கு எத்தீங்கையும் விளைவிப்பதில் எங்களைத் தவறச் செய்பவையுமான செயல்களை இப்போது கேட்பீராக.(8)
கோரோசனையை மேனியில் பூசிக்கொண்டவர்களையோ, கரங்களில் வசம்பை வைத்திருப்பவர்களையோ, அக்ஷதை என்ற பெயரில் உள்ள உட்பொருட்களுடன் நெய்யைக் கொடையளிப்பவர்களையோ, நெய்யையும், அக்ஷதையையும் தங்கள் தலைகளில் வைத்துக் கொள்பவர்களையோ,(9) இறைச்சியைத் தவிர்ப்பவர்களையோ எங்களால் பீடிக்க இயலாது. எந்த மனிதனின் வீட்டில் அணையாமல் பகலும் இரவும் புனித நெருப்பு எரிகின்றதோ,(10) எவன் தன் வசிப்பிடத்தில் ஓநாயின் தோலையோ, பற்களையோ, மலை ஆமையையோ வைத்துக் கொள்வானோ, எவனுடைய வீட்டில் இருந்து வேள்விப்புகை மேல்நோக்கிச் சுழன்று செல்கிறது, பழுப்பு, அல்லது எவன் கருப்பு வண்ணத்திலான பூனை அல்லது ஆட்டை வளர்ப்பானோ அவன் எங்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டவன் ஆவான்[2].(11)உண்மையில், இவற்றைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளும் இல்லறத்தார் அழுகிய பிணங்களை உண்டு வாழும் கடும் பூதங்களாலும் ஊடுருவ இயலாதவையாக அவை {தங்கள் வீடுகள்} இருப்பதைக் காண்பார்கள்.(12) இன்பங்களைத் தேடி பல்வேறு உலகங்களில் திரியும் எங்களைப் போன்றவையாலும் {பூதங்களாலும்} இத்தகைய வீடுகளுக்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. எனவே, தேவர்களே, ராட்சசர்களுக்கு (ராட்சசர்களுக்கும் வேறு வகையைச் சார்ந்த பிசாசுகளுக்கும்) அழிவைத் தரும் இத்தகைய பொருட்கள் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவர்களான நீங்கள் கொண்டிருந்த பெரும் ஐயங்கள் குறித்த அனைத்தையும் நாங்கள் சொல்லிவிட்டோம்” என்றனர் {பிரமதர்கள்}.(13)
நாக பலி காணிக்கை! – அநுசாஸனபர்வம் பகுதி – 132-நாகபலி காணிக்கையளிக்கும் முறைகளை ரேணுகன் என்ற யானைக்குச் சொன்ன திக்கஜங்கள்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆதி தாமரையில் உதித்தவனும், (இனிமையிலும், நறுமணத்திலும்) தாமரைக்கே ஒப்பானவனுமான பெரும்பாட்டன் பிரம்மன், சச்சியின் தலைவனான வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களிடம்,(1) “அதோ பாதாள லோகத்தில் வசிப்பவனான வலிமைமிக்க {யானையான} நாகன் அமர்ந்திருக்கிறான். பெரும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் கொண்ட அவனது பெயர் ரேணுகன் ஆகும். நிச்சயம் அவன் பெரியவன் ஆவான்.(2) பெரும் சக்தியும், பலமும் கொண்டவையும், மலைகள், நீர்நிலைகள் மற்றும் தடாகங்களுடன் கூடிய மொத்த பூமியையும் தாங்கிக் கொண்டிருப்பவையும் வலிமைமிக்க யானைகளை {திக்கஜங்களை} உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த ரேணுகன் பேட்டி காணட்டும். ரேணுகன் அவற்றிடம் சென்று அறம் அல்லது கடமையின் புதிர்களைக் குறித்து அவற்றிடம் கேட்கட்டும்” என்றான்.(3,4) பெரும்பாட்டனின் இச்சொற்களைக் கேட்ட தேவர்கள், தங்கள் மனங்களில் நிறைவடைந்தவர்களாக (யானையான) ரேணுகனை, அந்த உலகைத் தாங்கிப் பிடிப்பவையிடம் {திக் கஜங்களிடம்} அனுப்பினர்.(5)
அந்த யானைகள் இருந்த இடத்திற்குச் சென்ற ரேணுகன் அவற்றிடம் {யானைகளிடம்}, “வலிமைமிக்க உயிரினங்களே, அறம் மற்றும் கடமையின் புதிர்களைக் குறித்து உங்களிடம் கேட்குமாறு தேவர்கள் மற்றும் பித்ருகள் எனக்கு ஆணையிட்டுள்ளனர். நீங்கள் அவை குறித்து விரிவாகப் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, உங்கள் ஞானத்தின் ஆணைப்படி இக்காரியத்தைக் குறித்து நீங்கள் பேசுவீராக” என்றான் {நாகனான ரேணுகன் என்ற யானை}.(6)
எட்டுத் திக்குகளில் நிற்கும் (எட்டு) யானைகள், “கார்த்திகை மாதத் தேய்பிறையின் மங்கலமான எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அஸ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் ஒருவன் பாகு மற்றும் அரிசி கொடைகளை அளிக்க வேண்டும்.(7) கோபத்தை அடக்கி, முறையான உணவுத்திட்டத்திற்கு ஒழுங்கமைந்து வாழும் ஒருவன் ஒரு சிராத்தத்தில் பின்வரும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே இந்தக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். “பெரும் பலத்தைக் கொண்ட பலதேவனும் பிற நாகர்களும்,(8) அழிவற்ற, நித்தியமான பேருடல்படைத்த வலிமைமிக்கப் பாம்புகள் பிறவும், குலங்களில் பிறந்திருக்கும் வேறு பெரும் பாம்புகள் அனைத்தும்,(9) என் பலமும், சக்தியும் பெருகுவதற்காக எனக்குப் பலி காணிக்கைகளை அளிக்கட்டும். உண்மையில், என் பலமானது, மூழ்கிய பூமியை உயர்த்திய அருளப்பட்ட நாராயணனைப் போலப் பெரும்பலமாக அமையட்டும்” {என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே பாகு மற்றும் அரசிக் கொடைகளை அளிக்க வேண்டும்}.(10)
இந்த மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே அவன் ஓர் எறும்புப்புற்றில் பலி காணிக்கைகளை இட வேண்டும். நாள் சமைப்பவன் {சூரியன்}, மேற்கில் உள்ள தன் அறைகளுக்குள் ஓயச் செல்லும்போது அரிசி மற்றும் கச்சா சர்க்கரை {வெல்லமாக இருக்க வேண்டும்} ஆகியவற்றாலான காணிக்கைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட எறும்புப் புற்றுகளில் வைக்க வேண்டும்.(11) அதற்கு முன்பே அந்த எறும்புப்புற்றில் கஜேந்திர மலர்களைத் தூவ வேண்டும். நீலத் துணிகள் மற்றும் நறுமணக் களிம்புகளும் காணிக்கையளிக்கப்பட வேண்டும்.(12) இவ்வகையில் காணிக்கைகள் அளிக்கப்பட்டால் பாதாள லோகத்தில் வாழ்வோரும் {நாகர்களும்}[1], மேலுலகங்களின் கனத்தைத் தங்கள் தலைகளிலும், தோள்களிலும் தாங்கி நன்கு நிறைவடைகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இத்தகைய காணிக்கைகள் எங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் பூமியைத் தாங்குவதில் எந்தக் களைப்பையும் அடையவில்லை.(13)சுமக்கும் சுமையால் பீடிக்கப்படும் நாங்கள், தன்னல நோக்கங்கள் கிஞ்சிற்றும் இன்றி (மனிதர்களின் நன்மைக்காக) இதையே சிந்திக்கிறோம். இந்த விதியை நோற்று ஒரு முழு வருடம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்ணா நோன்பிருக்கும் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள், அத்தகைய கொடைகளின் மூலம் பெரும்பலன்களை அடைகிறார்கள்.(14) எறும்புப் புற்றில் இத்தகைய பலி காணிக்கைகளை அளிப்பது உண்மையில் மேன்மையான பலன்கள் நிறைந்தது என்று நாங்கள் நினைக்கிறோம்.(15) இத்தகைய காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன், மூவுலகங்களில் உள்ள வலிமைமிக்க யானைகள் அனைத்திற்கும் நூறு வருடகாலம் விருந்தோம்பல் கடமைகளைச் செய்தவனாகக் கருதப்படுவான்” என்றன {திக்கஜங்கள்}.(16)
அந்த வலிமைமிக்க யானைகள் {திக்கஜங்கள்} சொன்ன இந்தச் சொற்களைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும், உயர்வாக அருளப்பட்டவர்களான முனிவர்கள் அனைவரும் ரேணுகனை மெச்சினார்கள்” {என்றார் பீஷமர்}.(17)
பசுக்களின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 133-பசுக்களுக்கு உணவளிப்பதன் சிறப்பைச் சொன்ன மஹேஸ்வரன்…
மஹேஸ்வரன், “உங்கள் நினைவுகளைத் தேடி நீங்கள் அனைவரும் சொன்ன கடமைகள் யாவும் சிறப்பானவையாகும். அறம் மற்றும் கடமை தொடர்பான சில புதிர்களை நான் அறிவிக்கப் போகிறேன். நான் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்பீராக.(1) அறத்தில் நிறுவப்பட்ட புத்தியைக் கொண்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான மனிதர்களுக்கு மட்டுமே உயர்ந்த பலன்கள் நிறைந்த அறம் மற்றும் கடமைப் புதிர்கள் போதிக்கப்பட வேண்டும்.(2)
கவலையில் இருந்து விடுதலை அடைந்த இதயத்துடன் ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் பசுக்களுக்கு உணவைக் கொடுத்து, அத்தகைய காலம் முழுவதும் ஒரே ஒரு வேளை உணவை மட்டுமே உண்பவன் அடையும் பலன்களைக் கேட்பீராக.(3) பசுக்கள் உயர்வாக அருளப்பட்டவையாகும். புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவையாக அவை கருதப்படுகின்றன. உண்மையில், அவையே தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூவுலங்கங்களையும் தாங்கிப் பிடிப்பவையாகும்.(4)
அவற்றுக்கு அளிக்கப்படும் மதிப்புமிக்கத் தொண்டுகள் உயர்ந்த பலன்கள் மற்றும் முக்கிய விளைவுகள் நிறைந்தவையாகும். ஒவ்வொரு நாளும் பசுக்களுக்கு உணவை அளிக்கும் மனிதன் ஒவ்வொரு நாளும் அறத்தகுதியில் முன்னேறுகிறான்.(5) முற்காலத்தில், கிருத யுகத்தில் இந்த விலங்குகளிடம் என் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினேன். அதன் பிறகே, ஆதி தாமரையில் பிறந்த பிரம்மன் (பசுக்களிடம் கருணை காட்டுமாறு) என்னிடம் வேண்டினான்[1].(6)இந்தக் காரணத்தினாலேயே ஒரு காளையானது இந்த நாள் வரை என் தலைக்கு மேலே என் கொடிக்கம்பத்தில் சின்னமாக அமைந்து நிற்கிறது. நான் எப்போதும் பசுக்களுடன் விளையாடுகிறேன். எனவே அனைவராலும் பசுக்கள் வழிபடப்பட வேண்டும்.(7) பசுக்கள் பெரும் சக்தியைக் கொண்டவையாகும். அவை வரங்களையும் அளிக்கவல்லவையாகும். வழிபடப்பட்டால் அவை வரங்களை அளிக்கும். பசுக்களுக்கு ஒரேயொரு நாள் உணவைக் கொடுத்தாலும், அம்மனிதன், வாழ்வில் தன் நற்செயல்கள் அனைத்திற்கும் கிட்டும் பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அந்த நல்ல உயிரினங்களிடம் இருந்து பெறுகிறான்” என்றான் {மஹேஸ்வரன்}.(8)
ரகசிய தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 134-ஸ்கந்தன்; அறங்கள் அனைத்தையும் புகழ்ந்த விஷ்ணு…
ஸ்கந்தன், “என்னால்அங்கீகரிக்கப்பட்ட கடமையை இப்போது அறிவிக்கப் போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பீராக. நீல {கறுப்பு} நிறக் காளையின் கொம்புகளில் இருந்து சிறிதளவு மண்ணை எடுத்து தன் மேனியில் மூன்று நாட்கள் பூசிக்கொண்டு அதன் பிறகு நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைகிறான். அந்தப் பலன்கள் எவை என்பதைக் கேட்பீராக. அத்தகைய செயலின் மூலம் ஒருவன் ஒவ்வொரு களங்கத்தையும், தீமையையும் கழுவிக் கொண்டு, மறுமையில் அரசுரிமையை அடைந்து ஆள்கிறான்.(2) எத்தனை முறை அவன் இவ்வுலகில் பிறக்கிறானோ, அவ்வளவு முறை அவன் தனது வீரத்திற்காகக் கொண்டாடப்படுகிறான். யாரும் அறியாத மற்றொரு புதிரை இப்போது கேட்பீராக.(3)
ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, சமைக்கப்பட்ட உணவை தேன் கலந்து அதிலிட்டு, நிலவு முழுமையாக இருக்கும் {அமாவாசை} நாளின் மாலை வேளையில், உதிக்கும் சந்திரனுக்கு அதைப் பலியாகக் கொடுக்க வேண்டும்.(4) இவ்வழியில் செயல்படும் மனிதன் அடையும் பலன்களை நம்பிக்கையுடன் அறிவீராக. சாத்தியர்கள், ருத்திரர்கள், ஆதித்யர்கள், விஷ்வேதேவர்கள், அசுவின இரட்டையர்கள்,(5) மருத்துகள், வசுக்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் காணிக்கையை ஏற்கின்றனர். அத்தகைய காணிக்கையின் மூலம் சோமமும், நீர்க்கொள்ளிடமான பெருங்கடலும் வளர்கின்றன. என்னால் அறிவிக்கப்பட்டதும், பெரும்பாலும் யாராலும் அறியப்படாததுமான இக்கடமையானது செய்யப்பட்டால் நிச்சயம் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றான் {ஸ்கந்தன்{.(6)
விஷ்ணு, “உயர் ஆன்ம தேவர்களாலும், முனிவர்களாலும் பாதுகாக்கப்படும் அறம் மற்றும் கடமை சார்ந்த புதிர்களைக் குவிந்த கவனத்துடனும், வன்மத்தில் இருந்து விடுபட்டு நம்பிக்கையுடனும் ஒவ்வொரு நாளும் கேட்கும் மனிதன், ஒரு போதும் தீமைக்கு அடிபணியவேண்டியதில்லை. அத்தகைய மனிதன் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(7,8) புலன்களை முழுமையாக அடக்கி, (முன்பு பேசிய அனைவராலும்) அறிவிக்கப்பட்ட மங்கலமான பலன்மிக்கக் கடமைகள் அடங்கிய இந்தப் பகுதிகளை அவற்றின் புதிர்களுடன் சேர்த்துப் படிப்பவன், அவர்களுடைய செல்பாட்டுக்குரிய அனைத்துப் பலன்களையும் அடைகிறான்.(9) பாவத்தால் ஒருபோதும் அவனை வெல்லமுடியாது. உண்மையில் அத்தகைய மனிதன் எவ்வகைக் களங்கங்களாலும் கறைபடமாட்டான். உண்மையில், அவன் இந்தப் புதிர்களைப் படிப்பதன் மூலமோ, பிறருக்கு அறிவிப்பதன் மூலமோ, அவற்றைக் கேட்பதன் மூலமோ (அறிவிக்கப்பட்டிருக்கும்) பலன்களை அபரிமிதமாக வெல்கிறான்.(10)
அத்தகைய உயிரினத்தால் அளிக்கப்படும் ஹவ்யகவ்யங்களைத் தேவர்களும், பித்ருக்களும் எப்போதும் உண்கின்றனர். காணிக்கை அளிப்பவனின் ஒழுக்கத்தின் விளைவால் இவை இரண்டும் வற்றாதனவாகின்றன. முழு நிலவு நாளிலோ, புது நிலவு நாளிலோ முதன்மையான பிராமணர்களுக்கு இந்தப் புதிர்களைக் குவிந்த கவனத்துடன் உரைப்பவனும் இத்தகைய பலன்களையே அடைகிறான்.(11) இத்தகைய மனிதன், அத்தகைய செயலின் விளைவால், அனைத்துக் கடமைகளையும் உறுதியாக நோற்பவனாகிறான். அதையுந்தவிர, அவன் முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு எப்போதும் பிடித்தமானவன் ஆகிறான்.(12) கொடூரமானவையாக வகைப்படுத்தப்படும் பயங்கரப் பாவங்களைச் செய்த மனிதனும், அறம் மற்றும் கடமை குறித்த இந்தப் புதிர்கள் சொல்லப்படும்போது கேட்பதால் மட்டுமே அவை அனைத்திலும் இருந்து தூய்மையடைந்துவிடுகிறான்” என்றான்”.(13)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களின் மன்னா, தேவர்களின் நெஞ்சகங்களில் அறம் மற்றும் கடமை குறித்த இந்தப் புதிர்களே வசிக்கின்றன. தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டவையும், வியாசரால் அறிவிக்கப்பட்டவையுமான அவற்றை உன்நன்மைக்காக நான் இப்போது அறிவித்திருக்கிறேன். அறம் மற்றும் கடமையை அறிந்த ஒருவன், மொத்த பூமியில் நிறைந்திருக்கும் வளங்கள் மற்றும் செல்வங்களை விட இந்தச் சிறந்த ஞானம் (மதிப்பின் அளவில்) மேன்மையானது என்று நினைக்கிறான்.(14,15) நம்பிக்கையற்ற ஒருவனுக்கோ, நாத்திகனுக்கோ, தன் வகைக்கான கடமைகளில் இருந்து வீழ்த்துவிட்டவனுக்கோ, கருணையற்றவனுக்கோ, வெற்று சச்சரவுகளைக் கொண்ட அறிவியலில் அர்ப்பணிப்புள்ளவனுக்கோ, தன் ஆசானிடம் பகைமை கொண்டிருப்பவனுக்கோ, அனைத்து உயிரினங்களும் தன்னில் இருந்து வேறுபட்டவை என்று கருதுபவனுக்கோ இந்த ஞானத்தை ஒருபோதும் போதிக்கக்கூடாது” {என்றார் பீஷ்மர்}.(16)
உணவு ஏற்றலும் தவிர்த்தலும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 135-உணவை எவரிடம் இருந்து ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பன உள்ளிட்டவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதா, இவ்வுலகில் ஒரு பிராமணன் தான் உண்ணும் உணவை யாரிடம் இருந்து ஏற்கலாம்? க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகியோரும் முறையே யாரிடம் இருந்து தங்கள் உணவை ஏற்கலாம்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பிராமணன், மற்றொரு பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியன் அல்லது வைசியனிடமிருந்தோ தன் உணவை ஏற்கலாமேயன்றி ஒருபோதும் ஒரு சூத்திரனிடமிருந்து உணவை ஏற்கக்கூடாது.(2)
ஒரு க்ஷத்திரியன் தன் உணவை, பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் வைசியரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எனினும், அவன் தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவர்களும், எந்த ஐயமுமின்றி அனைத்துவகை உணவுகளை உண்பவர்களுமான சூத்திரர்களால் கொடுக்கப்படும் உணவைத் தவிர்க்க வேண்டும்.(3)
ஒவ்வொரு நாளும் தங்கள் புனித நெருப்பை மூட்டுபவர்களும், குணத்தில் களங்கமில்லாதவர்களும், சாதுர்மாஸ்ய நோன்பைச் செய்பவர்களுமான வைசியர்களால் கொடுக்கப்படும் உணவைப் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் உண்ணலாம்.(4) ஆனால், ஒரு சூத்திரனிடம் இருந்து உணவை உண்ணும் மனிதன், பூமியின் மலத்தை உண்கிறான், மனித உடலின் கழிவுகளைப் பருகுகிறான், உலகம் அனைத்தின் மாசுகளை உண்கிறான்.(5)
ஒரு சூத்திரனிடம் இருந்து பெற்ற உணவை உண்பவன் பூமியின் மாசுகளையே உண்கிறான். உண்மையில், சூத்திரனிடம் இருந்து தங்கள் உணவைப் பெறும் பிராமணர்கள் பூமியின்அழுக்கையே உண்கிறார்கள்.(6)
ஒருவன் சூத்திரனுக்குத் தொண்டு செய்பவனாக இருப்பானேயானால், தன் வகைக்கான அனைத்துச் சடங்குகளையும் முறையாகச் செய்பவனாக இருந்தாலும், அவன் நரகத்தில் விழுவான். பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ இவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் அறச் சடங்களுகளை முறையாகச் செய்பவர்களாக இருந்தாலும் இழிவடைவார்கள்.(7)
வேதங்களைக் கற்பது, மனித குலத்தின் நன்மையை நாடுவது ஆகியன பிராமணனின் கடமை; மனிதர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனின் கடமை; தங்கள் பொருள் செழிப்பை ஊக்கப்படுத்துவதாகும் எனச் சொல்லப்படுகிறது.(8) ஒரு வைசியன், தன் செயல்கள் மற்றும் உழவின் கனிகளைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் வாழ்கிறான். பசுக்களை வளர்த்தல் மற்றும் வணிகமும் நிந்தனையில்லாமல் ஒரு வைசியன் செய்யக்கூடிய நியாயமான பணிகளாகும்.(9)
தனக்குரிய தொழிலைக் கைவிட்டு, சூத்திரனின் தொழிலை எடுத்துக் கொள்ளும் மனிதன், சூத்திரனாகவே கருதப்பட்டு, அவனிடம் இருந்து ஒருபோதும் உணவை ஏற்கக்கூடாது.(10) மருத்துவன், கூலிப்படையினர், வீட்டைப் பாதுகாப்பவனாகச் செயல்படும் புரோகிதன், முழுமையாக ஒரு வருடம் வேதம் ஓதியும் பயன்படாதவன் ஆகியோர் அனைவரும் சூத்திரர்களாகக் கருதப்பட வேண்டும்.(11) சூத்திரனின் வீட்டில் நடைபெறும் விழாக்களில் அளிக்கப்படும் உணவை ஆணவமாக உண்பவன் பயங்கரத் துன்பத்தால் பீடிக்கப்படுவான். தடைசெய்யப்பட்ட உணவை உண்பதன் விளைவால் அவன் தன் குடும்பத்தையும், பலத்தையும், சக்தியையும் இழந்து, இழிந்த விலங்குகளின் நிலையை அடைந்து, அறந்தவறி, அற நோன்புகள் அனைத்தும் அற்றவனாக நாயின் நிலைக்கு இழிந்தவனாகிறான்.(12,13)
ஒரு மருத்துவனிடம் உண்ணும் உணவு மலத்தைப் போன்றதாகும்; விலைமகளிடம் உண்ணும் உணவு சிறுநீரைப் போன்றதாகும்; திறம்பெற்ற இயந்திரக் கைவினைஞரின் {சிற்பிகளின்} உணவு குருதியைப் போன்றதாகும்.(14)
நல்லோரால் அங்கீகரிக்கப்பட்ட பிராமணன் ஒருவன், கல்வியின் மூலம் வாழும் ஒருவனிடம் உணவு உண்டால் அவன் சூத்திரனிடம் இருந்து உணவைப் பெற்றவனாகக் கருதப்படுகிறான். நல்லோர் அனைவரும் அத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.(15) அனைவராலும் நிந்திக்கப்படும் மனிதனின் உணவானது, குருதிக்குளத்தில் இருந்து பெறப்பட்ட உணவாகச் சொல்லப்படுகிறது. தீய மனிதனிடம் இருந்து உணவை ஏற்பவன், பிராமணனைக் கொன்றவனைப் போல நிந்திக்கத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(16)
ஒருவன் கொடையாளியால் முறையாக வரவேற்கப்படாமல் ஆதரிக்கப்படாமல் இருந்தால் அவனுடைய உணவை ஏற்கக்கூடாது. இவ்வாறு செய்யும் பிராமணன் நோயால் பீடிக்கப்படுகிறான், அவனது குலம் அழிகிறது.(17) நகரக் காவலாளியிடம் இருந்து உணவை ஏற்பதன் மூலம் ஒருவன் தள்ளிவைக்கப்பட்ட இழிந்தி நிலைக்குத் தாழ்கிறான்.(18)
பசு அல்லது பிராமணனைக் கொன்ற குற்றம் புரிந்தவன், ஆசானின் மனைவியுடன் கூடாவுறவு கொண்டவன், குடிகாரன் ஆகியோரிடம் இருந்து உணவை ஏற்கும் பிராமணன், ராட்சசர்களின் குலத்தை ஊக்குவிக்கிறான்.(19) ஓர் அலியிடம் இருந்தும், நன்றிமறந்த மனிதனிடமிருந்தும், தன்னிடம்கொடுக்கப்பட்ட செல்வத்தை அபகரித்தவனிடம் இருந்தும் உணவை ஏற்பவன், நடு நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் அமைந்திருக்கும் சவரர்களின் நாட்டில் பிறப்பான்.(20) எவரிடம் இருந்து உணவை ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பதை நான் முறையாகச் சொல்லிவிட்டேன். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இன்று இன்னமும் நீ கேட்க விரும்புவதென்ன?” என்று கேட்டார் {பீஷ்மர்}.(21)
பரிகாரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 136-கொடை பெறுவதாலும், உணவை உண்பதாலும் அடையும் பாவத்தைக் கழிப்பதற்குரிய பரிகாரணங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “யாரிடம் உணவை ஏற்கலாம், யாரிடம் கூடாது என்பதை எனக்கு நீர் முழுமையாகச் சொன்னீர்.(1) ஆனால் எனக்கு ஒன்றில் பெரும் ஐயம் நிலவுகிறது. ஓ! ஐயா, ஒரு பிராமணன் பல்வேறு வகை உணவுகளை, அதிலும் குறிப்பாகத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் படைக்கப்படும்போதும், இறந்து போன மூதாதையருக்குப் பலியுணவு படைக்கப்படும்போதும் ஏற்றுக் கொள்ளும்போது, (அவன் ஈட்டும் பாவத்திற்கு) என்ன பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லி தெளிவுபடுத்துவீராக” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இளவரசே, உயர் ஆன்ம பிராமணர்கள், பிறரிடம் இருந்து உணவை ஏற்பதால் இழைக்கப்படும் பாவத்தை எவ்வாறு கழிப்பது என்பதை உனக்குச் சொல்வேன்.(3) தெளிந்த நெய்யை ஏற்கும்போது, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது பரிகாரமாகிறது. ஓ! யுதிஷ்டிரா, எள்ளை ஏற்கும்போதும் அதே பரிகாரம் செய்யப்பட வேண்டும்.(4) இறைச்சியையோ, தேனையோ, உப்பையோ ஏற்றுக் கொள்ளும் பிராமணன், சூரியன் எழும்வரை நின்று கொண்டிருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(5) ஒரு பிராமணன் எவரிடம் இருந்தாவது தங்கத்தை ஏற்றுக் கொண்டால், பொதுமக்கள் முன்னிலையில் தன் கரத்தில் இரும்புத் துண்டை {இரும்புப் பாத்திரத்தைப்} பிடித்துக் கொண்டு வேத (காயத்ரி) துதியை அமைதியாகச் சொல்வதன் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். பணம், துணிமணிகள், பெண்கள் அல்லது தங்கத்தை ஏற்கும்போது முன்சொன்னது போலவே செய்து தூய்மையடைய வேண்டும்.(6,7)
உணவு, அல்லது பால் மற்றும் சர்க்கரையுடன் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயஸம்}, {வெல்லம், சர்க்கரை}, கரும்பு, எண்ணெய், வேறு புனித பொருட்களை ஏற்கும் ஒருவன், காலை, நடுப்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளில் நீராடுவதன் மூலம் தூய்மையடைகிறான்.(8) நெல், மலர்கள், கனிகள், நீர், மாப்பண்டம், பால், தயிர், அல்லது வேறு உணவையோ, மாவுகளையோ ஏற்றக் கொண்டால், நூறு முறை காயத்ரி துதியைச் சொல்வதே பரிகாரமாகும்.(9) ஈமச்சடங்குகளில் கொடுக்கப்படும் காலணிகள் மற்றும் உடைகளை ஏற்றால், அதே {காயத்திரி} மந்திரத்தை பக்தியுடன் நூறு முறை சொல்வது பாவத்தை அழிக்கும்.(10) கிரகணக் காலத்திலோ, தூய்மையற்ற காலத்திலோ நிலக்கொடை பெற்றால், அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருத்தல் பரிகாரமாகும்.(11) இறந்து போன மூதாதையருக்குக் காணிக்கையளிக்கப்படும் பலியுணவுகளை உண்ணும் பிராமணன், தேய்பிறை காலம் முழுவதும் பகலும், இரவும் முழுமையாக உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(12)
ஒரு பிராமணன், தூய்மைச் சடங்குகளைச் செய்யாமல் மாலை வேளை துதிகளைச் சொல்லவோ, அறம் சார்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ, இரண்டாம் முறை உணவை உண்ணவோ கூடாது. அவ்வாறு செயல்படுவதால் அவன் தூய்மையடைகிறான்.(13) இந்தக் காரணத்திற்காகவே, சிராத்தமானது பிற்பகல்வேளையில் விதிக்கப்படுகிறது, இதன் காரணமாகவே சிராத்தத்திற்கு அழைக்கப்படும் பிராமணனும் முன் கூட்டியே உணவருந்தச் செய்யப்படுகிறான்.(14) மரணம் நேர்ந்ததற்கு மூன்றாம் நாளில் இறந்த மனிதனின் வீட்டில் உணவை உண்ணும் பிராமணன், பனிரெண்டு நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை நீராடுவதால் தூய்மையடைகிறான்.(15) பனிரெண்டு நாட்கள் முடிவடைந்ததும், முறையான தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யைக் கொடுப்பதன் மூலம் அந்தப் பாவம் அழிவை அடைகிறது.(16)
ஒரு மனிதன் இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு அவனது வீட்டில் எந்த உணவையும் உண்டால், அவன் முன்பு சொல்லப்பட்டுள்ள அனைத்துப் பரிகாரங்களையும் செய்து, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லி பாவத்தை அழிக்கும் இஷ்டி மற்றும் கஷ்மாண்ட தவங்களைச் செய்ய வேண்டும்[1].(17) இறந்தவனின் வீட்டில் மூன்று இரவுகள் உணவை உண்ணும் பிராமணன், ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளும் மும்மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து தூய்மையடைந்து, அதன் மூலம் தன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, ஒரு போதும் ஆபத்துகளில் சிக்காதவனாக இருப்பான்.(18,19) சூத்திரர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், முறையாகத் தூய்மைச் சடங்குகளை நோற்பதன் மூலம் மாசுகள் அனைத்தையும் அழிக்கிறான்.(20) வைசியர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், அடுத்தடுத்து மூன்று இரவுகள் பிச்சையெடுத்து வாழ்வதன் மூலம் தன் பாவத்தைக் கழிக்கிறான்.(21) க்ஷத்திரியர்களுடன் சேர்ந்து தன் உணவை உண்ணும் பிராமணன், தான் உடுத்திய உடையுடனே நீராடுவதன் மூலம் பரிகாரத்தைச் செய்தவனாவான்.(22){தகாதவனான} ஒரு சூத்திரனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு சூத்திரன் தன் குடும்ப மதிப்பை இழக்கிறான்; {தகாதவனான} ஒரு வைசியனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு வைசியன் தன் கால்நடைகளையும் {பசுக்களையும்}, நண்பர்களையும் இழக்கிறான். ஒரு க்ஷத்திரியன் தன் செழிப்பையும், ஒரு பிராமணன் தன் காந்தி மற்றும் சக்தியையும் {பிரம்மதேஜஸை} இழக்கின்றனர்.(23) இத்தகைய வழக்குகளில், பரிகாரங்களும் தணிவடையச் செய்யும் சடங்குகளும் செய்யப்பட்டு, தேவர்களுக்குப் பலியுணவுகள் காணிக்கையளிக்கப்பட வேண்டும். பாவத்தை அழிக்கும் நோக்கில் சாவித்திரி மந்திரம் உரைக்கப்பட வேண்டும், ரேவதி சடங்குகளும், கஷ்மாண்ட தவங்களும் செய்யப்பட வேண்டும்.(24) மேற்கண்ட நான்கு வகையினரில் எவரும், வேறு வகை மனிதனால் உண்ணப்பட்ட உணவை உண்டால், நிச்சயம் கோரோசனை, அறுகம்புல், மஞ்சள், சந்தனம் முதலிய மங்கலப் பொருட்களை உடல் முழுவதும் பூசிக் கொள்வதே பரிகாரம்” என்றார் {பீஷ்மர்}.(25)
மேலகம் அடைந்தவர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 137-தவங்கள், கொடைகள், வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தையும், பிற மேன்மையான உலகங்களையும் அடைந்தவர்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, இவ்வுலகில் ஈகை {தானம்} மற்றும் அர்ப்பணிப்பு {தவம்} ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பதை எனக்குச் சொல்ல வேண்டும். இதன் மூலம் என் மனத்தில் உள்ள பெரும் ஐயத்தை நீர் நீக்க வேண்டும்” என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்திற்கு அர்ப்பணிப்புடன், தவங்களால் தங்கள் இதயங்களைத் தூய்மை செய்து கொண்டு, கொடைகளையும் பிற அறச் செயல்களையும் செய்து, வெவ்வேறு தெய்வீக உலகங்களை அடைந்த இளவரசர்களின் பெயர்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) ஓ! ஏகாதிபதி, அனைவராலும் கொண்டாடப்படும் முனிவர் ஆத்ரேயர், தமது சீடர்களுக்குத் தடையற்ற பரம்பொருளின் {நிர்க்குண பிரம்மத்தின்} அறிவைப் போதித்துச் சிறந்த தெய்வீக உலகங்களை அடைந்தார்.(3) உசீனரனின் மகனான மன்னன் சிபி, ஒரு பிராமணனின் நன்மைக்காகத் தன் அன்புக்குரிய மகனின் உயிரைக் காணிக்கையளித்து இவ்வுலகில் இருந்து மறுவுலகதிதற்குச் சென்றான்.(4) காசியின் மன்னனான பிரதர்த்தனன் ஒரு பிராமணருக்குத் தன் மகனைக் கொடுத்ததன் மூலம் இவ்வுலகிலும், மறுவுலகிலும் தனக்கெனத் தனிப்பட்ட இறவாப்புகழை அடைந்தான்.(5) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு முறையாகக் கொடைகளை அளித்து உயர்ந்த சொர்க்கத்தை அடைந்தான்.(6) தேவவிரதன், ஒரு வேள்வியில் நூறு விலாக்கள் கொண்ட சிறந்த தங்கக் குடை ஒன்றை ஒரு பிராமணனுக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(7) வழிபடத்தகுந்த அம்பரீஷனும், பெருஞ்சக்தியைக் கொண்ட ஒரு பிராமணனுக்குத் தன் நாடு முழுவதையும் கொடையாக அளித்துத் தேவர்களின் உலகை அடைந்தான்.(8)
சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னன் ஜனமேஜயன் பிராமணர்களுக்குக் காது குண்டலங்களையும், சிறந்த வாகனங்களையும், பசுக்களையும் கொடையளித்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(9) அரச முனியான விருஷாதர்ப்பி, பிராமணர்களுக்குப் பல்வேறு நகை ஆபரணங்களையும், அழகிய வீடுகளையும் கொடையளித்துச் சொர்க்கதிதற்குச் சென்றான்.(10) விதர்ப்பத்தைச் சேர்ந்த மன்னன் நிமி, உயர் ஆன்ம அகஸ்தியருக்குத் தன் மகளையும், நாட்டையும் கொடையாள அளித்துத் தன் மகன்கள், நண்பர்கள் மற்றும் பசுக்களுடன் சொர்க்கத்தை அடைந்தான்.(11) பெரும்புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனுமான ராமர், பிராமணர்களுக்கு நிலக்கொடைகளை அளித்து, எதிர்பார்ப்பைக் கடந்த நித்திய உலகங்களை அடைந்தார்.(12)
பிராமணர்களின் இளவரசரான வசிஷ்டர், பர்ஜன்ய தேவன் பூமியில் தன் அருள் மழையைப் பொழியாமல் இருந்த போது நேர்ந்த பெரும்பஞ்சத்தில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, அந்தச் செயலின் மூலம் நித்திய அருளை தாமே அடைந்தார்.(13) இவ்வுலகில் மிக உயர்ந்த புகழைக் கொண்டவனும், தசரதனின் மகனுமான ராமன், வேள்விகளில் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்து நித்திய உலகங்களை அடைந்தான்.(14) பெரும் புகழைக் கொண்டவனும், அரசமுனியுமான கக்ஷஸேனன், முறையாக உயர் ஆன்ம வசிஷ்டருக்குச் செல்வத்தைக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15) அவிக்ஷித்தின் மகனும், கரந்தமனின் பேரனுமான மருத்தன், அங்கிரசுக்குத் தன் மகளைக் கொடுத்ததன் மூலம் உடனே சொர்க்கத்திற்குச் சென்றான்.(16)
உயர்ந்த பக்தியைக் கொண்ட பாஞ்சால மன்னன் பிரம்மதத்தன், விலைமதிப்புமிக்கச் சங்கு ஒன்றைக் கொடையளித்ததன் மூலம் அருள்வழியை அடைந்தான்.(17) மன்னன் மித்ரஸஹன், தனக்குப் பிடித்த மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(18)
மனுவின் மகனான ஸுத்யும்னன், உயர் ஆன்ம லிகிதருக்கு உரிய தண்டையைக் கொடுத்ததன் மூலம் பேரருள் நிறைந்த உலகங்களை அடைந்தான்.(19) கொண்டாடப்பட்ட அரசமுனியான சஹஸ்ரசித்தன், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே தியாகம் செய்ததன் மூலம் அருள் உலகங்களுக்குச் சென்றான்.(20)
மன்னன் சதத்யும்னன், பெரும் அளவிலான இன்பப் பொருட்கள் அனைத்துடன் கூடிய ஒரு பொன்மாளிகையை மௌத்கலருக்கு {மொத்கல்யருக்குக்} கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) பழங்காலத்தில் மன்னன் சுமன்யு, மலை போல் தெரிந்த உணவுக் குவியல்களைச் சாண்டில்யருக்குக் கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(22) பெருங்காந்தியைக் கொண்ட சால்வ இளவரசன் தியுமத் {தியுமான்} தன் நாட்டை ரிசீகருக்குக் கொடுத்து உயர்ந்த உலகங்களை அடைந்தான்.(23)
அரச முனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்ததன் மூலம் தேவர்களின் உலகத்திற்குச் சென்றார்.(24)
தலைமைத்துவம் கொண்ட லோமபாதன், தன் மகளான சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து, தன் ஆசைக்குகந்த அனைத்துப் பொருட்களையும் பெருமளவில் பெற்றான்.(25)
அரச முனியான பகீரதன், ஹம்ஸி என்ற தன் புகழ்பெற்ற மகளைக் கௌஸ்தருக்குக் கொடுத்து நித்திய உலகங்களுக்குச் சென்றான்.(26) மன்னன் பகீரதன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பசுக்களைக் கன்றுகளுடன் சேர்த்துக் கோகலருக்குக் கொடுத்து அருள்மிகுந்த உலகங்களை அடைந்தான்.(27)
ஓ! யுதிஷ்டிரா, இவர்களும், இன்னும் பல மனிதர்களும் தாங்கள் செய்த ஈகை, தவங்கள் ஆகியவற்றால் சொர்க்கத்தை அடைந்து, அங்கிருந்து மீண்டும் மீண்டும் திரும்புகின்றனர்.(28) அவர்களுடைய புகழ் இந்த உலகங்கள் உள்ளளவும் நீடித்திருக்கும். ஓ! யுதிஷ்டிரா, ஈகை மற்று தவங்களின் மூலம் நித்திய உலகங்களை அடைந்த நல்ல இல்லறத்தோரின் கதையை நான் உனக்குச் சொன்னேன்.(29) தங்கள் ஈகையின் மூலமும், தாங்கள் செய்த வேள்விகளின் மூலமும், சந்ததியை உண்டாக்கியதன் மூலமும் இந்த மக்கள் சொர்க்கலோகங்களை அடைந்தனர்.(30) ஓ! குரு குலக்கொழுந்துகளில் முதன்மையானவனே, ஈகைச்செயல்களை எப்போதும் செய்வதன் மூலம் இம்மனிதர்கள் தங்கள் அறம் சார்ந்த புத்தியை வேள்விகள் செய்வதிலும், கொடையளிப்பதிலும் செலுத்தினர்.(31) ஓ வலிமைமிக்க இளவரசே, இரவு வருகிறது, உன் மனத்தில் எழும் எந்த ஐயத்திற்கும் காலையில் நான் விளக்கமளிப்பேன்” என்றார் {பீஷ்மர்}.(32)
ஐவகை தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 138-ஐந்து வகை தானங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஓ! கொடையறத்தைப் பின்பற்றி வாய்மை நோன்பை நோற்பதில் பெரும் சக்தி கொண்டவரே, சொர்க்கத்திற்கு உயர்ந்த மன்னர்களின் பெயர்களை நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(1) கொடைக்களிக்கப்பட வேண்டிய கொடைகளில் எத்தனை வகை உள்ளன? பல்வேறு வகையான அந்தக் கொடைகளின் கனிகள் முறையே என்னென்ன?(2) என்ன காரணங்களுக்காக, எந்த மனிதர்களுக்குக் கொடுக்கப்படும், என்ன வகைக் கொடைகள் பலன்களை உண்டாக்குகின்றன? என்ன காரணங்களுக்காக எத்தனை வகைக் கொடைகள் அளிக்கப்படுகின்றன? இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, ஓ! பாவமற்றவனே, கொடைகள் குறித்துச் சொல்கிறேன் விரிவாகக் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாரதா, அனைத்து வகை மனிதர்களுக்கும் கொடைகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) ஓ! பாரதா, பலன் {அறம்} விரும்பியும், லாபம் {பொருள்} விரும்பியும், அச்சத்தின் மூலமும், சுதந்திரத் தேர்வு {ஆசை} மூலமும், கருணை மூலமும் கொடைகள் அளிக்கப்படுகின்றன. எனவே, கொடைகள் ஐவகையானவை என்று அறியப்பட வேண்டும். கொடைகள் இவ்வாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுவதற்கான காரணங்களை இப்போது கேட்பாயாக.(5)
ஒருவன் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையிலும் பேரின்பத்தையும் அடைவான் என்பதால் வன்மத்தில் இருந்து விடுபட்ட மனத்துடன் அவன் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். (அத்தகைய கொடைகள் பலன் விரும்பி அளிக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(6)
அவன் கொடையளிப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறான்; அல்லது அவன் கொடையளிப்பான்; அல்லது அவன் ஏற்கனவே எனக்குக் கொடையளித்திருக்கிறான். வேண்டுபவர்களின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு, வேண்டுவோரில் குறிப்பிட்டவனுக்கு ஒருவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொடுக்கிறான். (இத்தகைய கொடைகள் லாபம் விரும்பி அளிக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன).(7)
நான் அவனுடையவனல்ல; அதேபோல அவனும் என்னுடையவனல்ல. அலட்சியப்படுத்தப்பட்டால் அவன் எனக்குத் தீங்கிழைக்கக்கூடும். இத்தகைய அச்ச நோக்கங்களில் கல்வியும், ஞானமும் கொண்ட ஒரு மனிதன் கூட, ஓர் இழிந்த மூடனுக்குக் கொடைகளை அளிக்கக்கூடும். (இத்தகைய கொடைகள் அச்சத்தால் கொடுக்கப்படுபவை எனக் கருதப்படுகின்றன).(8)
இவன் எனது அன்புக்குரியவன். நானும் அவனது அன்புக்குரியவன். இத்தகைய கருத்துகளின் ஆதிக்கத்தில் புத்தியுள்ள ஒருவன், சுதந்திரமாகவும், சுறுசுறுப்புடனும் ஒரு நண்பனுக்குக் கொடையளிக்கிறான். (இத்தகைய கொடைகள் சுதந்திரத் தேர்வின் மூலம் கொடுக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(9)
என்னை வேண்டிக் கேட்பவன் ஓர் ஏழை. மேலும் அவன் சிறிதளவிலேயே நிறைவடைகிறான். இத்தகைய கருத்துகளின் மூலம் ஒருவன் எப்போதும் கருணையால் உந்தப்பட்டு ஓர் ஏழைக்குக் கொடைகளை அளிக்க வேண்டும். (இத்தகைய கருத்துகளின் மூலம் கொடுக்கப்படும் கொடைகள் கருணையால் கொடுக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(10)
இவையே ஐவகைக் கொடைகளாகும். இவை கொடையாளின் பலனையும், புகழையும் பெருக்குகின்றன. அனைத்து உயிரினங்களின் தலைவனை (பிரம்மனே), ஒருவன் தன் சக்திக்கேற்றபடி எப்போதும் கொடைகளையளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(11)
வாசுதேவதவம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 139-முகத்திலுண்டான நெருப்பால் மலையை எரித்த கிருஷ்ணன்; அம்மலையைச் செழிக்கச் செய்தது; அதன் காரணத்தை முனிவர்களுக்குச் சொன்னது; தவசிகளை நல்லுரை வழங்கும்படி கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்; தவசிகள் அப்பணிக்கு நாரதரைத் தேர்ந்தெடுத்தது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீர் பெரும் ஞானத்தைக் கொண்டிருக்கிறீர். உண்மையில், கல்வியின் அனைத்து வகைகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். நமது பெருங்குலத்தில் நீர் மட்டுமே அனைத்து அறிவியல்களுடனும் பெருகியிருக்கிறீர்.(1) அறம் மற்றும் பொருள் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்ததும், மறுமையில் இன்பத்திற்கு வழிவகுப்பதும், அனைத்து உயிரினங்களுக்கும் ஆச்சரியம் நிறைந்ததுமான உரையை உம்மிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன்.(2) வந்திருக்கும் காலமானது துன்பம் நிறைந்ததாகும். நமக்குச் சுற்றத்தாரும், நண்பரும் இருப்பதை அது விரும்பவில்லை. உண்மையில், ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நம்மிடம் உம்மைத் தவிரப் போதகராக இருக்கத்தகுந்த வேறு எவரும் இல்லை.(3) ஓ! பாவமற்றவரே, நானும், என் தம்பிகளும் உமது உதவியைப் பெறத் தகுந்தவர்களாக இருந்தால், நான் உம்மைக் கேட்க விரும்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதே உமக்குத் தகும்.(4) இவன் அனைத்து வகைச் செழிப்பைக் கொண்டவனும், மன்னர்கள் அனைவராலும் கௌரவிக்கப்படுபவனுமான நாராயணன் ஆவான். இவனும் உம்மைப் பெரிதும் மதித்து, உமக்காகக் காத்திருக்கிறான்.(5) வாசுதேவன் மற்றும் இந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் எனக்கும் என் தம்பிகளுக்குமான நன்மைக்காக நீர் அன்புடன் என்னோடு உரையாடுவதே உமக்குத் தகும்” என்றான்”.(6)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் யுதிஷ்டிரனின் இச்சொற்களைக் கேட்டவரும், பகீரதனின் பெயரால் அழைக்கப்பட்ட ஆற்றின் மகனுமான பீஷ்மர், அந்த ஏகாதிபதியிடமும், அவனது தம்பிகளிடமும் கொண்ட அன்பின் விளைவால் மகிழ்ச்சியால் நிறைந்து பின் வருவனவற்றைச் சொன்னார்[1].(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இனிமை நிறைந்ததும், பழங்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டதுமான இந்த விஷ்ணுவின் மகிமை குறித்து (நான் என் ஆசான்களிடம் இருந்து) கேட்டவாறு நிச்சயம் உனக்குச் சொல்வேன். மேலும், காளைமாட்டைத் தன் அடையாளமாகக் கொண்ட பெருந்தேவனின் பலத்தையும் {மகிமையையும்} நான் விளக்கிச் சொல்வேன் கேட்பாயாக. ருத்திரன் மற்றும் ருத்திரனுடைய மனைவியின் மனங்களில் நிறைந்திருந்த ஐயத்தையும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9)
அற ஆன்மா கொண்டவனான கிருஷ்ணன், ஒரு காலத்தில் பனிரெண்டு வருடங்கள் நீண்ட ஒரு நோன்பை நோற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பெரும் நோன்பை நோற்பதற்கான தொடக்கச் சடங்குகளைச் செய்திருந்த அவனைக் காண[2] நாரதர், பர்வதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அமைதியாகப் பேசுபவர்களில் முதன்மையான தௌம்யர், தேவலர், காஸ்யபர், ஹஸ்திகாஸ்யபர் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்தனர்.(10,11) தீக்ஷையுடன் கூடியவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களுமான பிற முனிவர்கள், தங்கள் சீடர்களால் பின்தொடரப்பட்டும், பல சித்தர்கள் மற்றும் பெருந்தகுதியைக் கொண்ட தவசிகள் பலரின் துணையுடனும் அங்கே வந்தனர்.(12) தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, உயர்ந்த புகழுக்குத் தகுந்ததும், தேவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதுமான விருந்தோம்பல் கௌரவங்களை அவர்களுக்கு அளித்தான்.(13) பச்சை நிறத்தில் இருந்தவையும், தங்க நிறத்தில் இருந்தவையும், மயிலின் தோக வண்ணத்தில் இருந்தவையும், முற்றிலும் புதியவையாக இருந்தவையுமான இருக்கைகளில் அந்தப் பெரும் முனிவர்கள் அமர்ந்தனர்.(14) இவ்வாறு அமர்ந்த அவர்கள் அறம் மற்றும் கடமை தொடர்பான காரியங்களைக் குறித்து அரச முனிகள் பலருடனும், தேவர்களுடனும் சேர்ந்து இனிமையாக உரையாடத் தொடங்கினர்.(15)அந்நேரத்தில், கடும் நோன்புகளெனும் விறகில் எழுந்த நெருப்பின் வடிவிலான நாராயணனின் சக்தியானது, அற்புதச் சாதனைகள் கொண்ட கிருஷ்ணனின் வாயிலிருந்து வெளிப்பட்டது.(16) மரங்கள், செடிகொடிகள், பறவைகள், மான்கள், இரைதேடும் விலங்குகள், ஊர்வன ஆகியவற்றுடன் கூடிய மலைகளை அந்நெருப்பு எரிக்கத் தொடங்கியது.(17) விரைவிலேயே அந்த மலையின் சிகரம் துன்பம் நிறைந்த பரிதாபகரமான தோற்றத்தை அளித்தது. அந்தச் சிகரத்தில் வசித்து வந்த பல்வேறு வகை விலங்குகள் துன்பத்தால் அலறி ஓலமிட்டன. விரைவில் அச்சிகரம் அனைத்து உயிரினங்களும் இல்லாததானது.(18) வலிமைமிக்கத் தழல்களைக் கொண்ட அந்நெருப்பு எஞ்ச ஏதுமில்லாமல் அனைத்தையும் எரித்துவிட்டு இறுதியாகப் பணிவான சீடனைப் போல விஷ்ணுவிடம் திரும்பி வந்து, அவனது பாதங்களைத தீண்டியது.(19) பகைவர்களை நொறுக்குபவனான கிருஷ்ணன், அம்மலை எரிந்ததைக் கண்டு நலம்பயக்கும் அருள்பார்வையை அதில் செலுத்தி, மீண்டும் அதைப் பழைய நிலைக்கே கொண்டு வந்தான்.(20) அதன் பேரில், அந்த மலையானது, மலர்ந்திருக்கும் மரஞ்செடிகொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் பறவைகள், மான்கள், இரைதேடும் விலங்குகள் மற்றும் ஊர்வனவற்றின் இனிய ஒலிகள் மற்றும் முழக்கங்களை எதிரொலித்தது.(21) நினைத்தற்கரிய, அற்புதம் நிறைந்த அந்தக் காட்சியைக் கண்ட தவசிகள் அனைவரும் வியப்படைந்தனர். பார்வை கண்ணீரால் தடைபட்டு, மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர்.(22)
பேசுபவர்களில் முதன்மையான நாராயணன், இவ்வாறு ஆச்சரியத்தில் நிறைந்த முனிவர்களைக் கண்டு புத்துணர்ச்சியை அளிக்கும் இந்த இனிய சொற்களைச் சொன்னான்:(23) “உண்மையில், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவர்களும், மமதையற்றவர்களும், புனித அறிவியல் அனைத்தையும் முழுமையாக அறிந்தவர்களுமான இந்தத் தவசிகளும், முனிவர்க்கூட்டங்களும் ஏன் இதயம் நிறைந்த ஆச்சரியத்துடன் இருக்கிறார்கள்?(24) தவங்களைச் செல்வமாகக் கொண்டவர்களும், அனைத்து வகைக் களங்கங்களிருந்தும் விடுபட்டவர்களுமான இந்த முனிவர்கள், என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்திற்கு உண்மையில் விளக்கம் அளிப்பதே தகும்” என்றான்.(25)
முனிவர்கள், “உலகங்கள் அனைத்தையும் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. குளிர் காலமாகவும், கோடைக்காலமாகவும், மழைக்காலமாகவும் இருப்பவன் நீயே.(26) உலகில் தோன்றும் அசைவன, அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்திற்கும், தந்தையும், தாயும், ஆசானும், தோற்றமும் நீயே.(27) ஓ! மதுசூதனா, எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதும், ஐயங்கொள்ள வைப்பதும் இதுவே. ஓ! மங்கலங்கள் அனைத்தின் பிறப்பிடமே, உன் வாயில் வெளிப்பட்ட நெருப்பு குறித்த எங்கள் ஐயத்தை விலகச் செய்வதே உனக்குத் தகும்.(28) ஓ! ஹரியே, எங்கள் அச்சம் விலகியதும் நாங்கள் கேட்டதையும் கண்டதையும் உனக்கு உரைக்கின்றோம்” என்றனர்.(29)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “காந்தியில் அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்புக்கு ஒப்பானதும், இந்த மலையை நொறுக்கி, எரித்ததும், என் வாயில் இருந்து வெளிப்பட்டதுமான அந்த நெருப்பு விஷ்ணுவின் சக்தியேயன்றி வேறேதுமில்லை.(30) முனிவர்களே, நீங்கள் கோபத்தை அடக்கியவர்களும், புலன்களை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவந்தவர்களும், தவமென்ற செல்வத்துடன் கூடியவர்களும், தேவ பலம் கொண்டவர்களாக இருப்பவர்களாவீர். இருப்பினும் நீங்கள் கலக்கத்தையும், துன்பத்தையும் அனுபவத்திருக்கிறீர்கள்.(31) நான் இப்போது ஒரு கடும் நோன்பு தொடர்பான நியமங்களில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். உண்மையில் ஒரு தவசியின் நோன்புகளை நான் நோற்பதன் விளைவாலேயே நெருப்பானது என் வாயில் இருந்து வெளிப்பட்டது. இதற்காக நீங்கள் கலங்குவது உங்களுக்குத் தகாது.(32) கடும் நோன்பை நோற்கவே இனிமைநிறைந்த இந்த மங்கலமான மலைக்கு நான் வந்தேன். தவத்தின் உதவியால் சக்தியில் எனக்கு இணையான ஒரு மகனைப் பெறும் நோக்கமே என்னை இங்கே கொண்டு வந்தது.(33) என் தவங்களின் விளைவால், என் உடலில் உள்ள ஆன்மாவானது நெருப்பாக மாறி என் வாயில் வெளிப்பட்டது. அந்த நெருப்பானது, வரமளிப்பவரான அண்டமனைத்திற்கும் பெரும்பாட்டனை {பிரம்மனைக்} காணச் சென்றது.(34)
தவசிகளில் முதன்மையானவர்களே, பெரும்பாட்டன் என் ஆன்மாவிடம், காளையைக் கொடியில் கொண்ட பெருந்தேவனின் சக்தியில் பாதியைக் கொண்ட மகன் எனக்குப் பிறப்பான என்று சொன்னார்[3].(35) தன் காரியத்தை முடித்துத் திரும்பிய அந்த நெருப்பானது, என்னிடம் வந்து, கடமையுணர்வுமிக்க ஒரு சீடனைப் போல என் பாதங்களை அணுகியிருக்கிறது. உண்மையில் தன் சீற்றத்தைக் கைவிட்டு தனக்குரிய இயல்புடனேயே அது திரும்பியிருக்கிறது.(36) தாமரையையே தன் பிறப்பிடமாகவும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவர் தொடர்பான ஒரு புதிரை உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நீங்கள் அச்சத்தின் வசப்படக்கூடாது.(37) தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் நீங்கள். எத்தடையுமின்றி எந்த இடத்திற்கும் செல்பவர்கள் நீங்கள். தவசிகளால் நோற்கப்படும் நோன்புகளால் சுடர்விடும் நீங்கள் ஞானத்தாலும், அறிவியலாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.(38) பூமியிலோ, சொர்க்கத்திலோ நீங்கள் கேட்ட அல்லது கண்ட அற்புதம் நிறைந்த காரியங்களை எனக்குச் சொல்ல வேண்டுமென உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.(39) உங்கள் உதடுகள் சிந்தும் உரையெனும் தேன்துளியைச் சுவைக்க ஆவலுடன் இருக்கிறேன். அமுதத் தாரை போல அந்தத் தேன் நிச்சயம் இனிமையாகவே இருக்கும்.(40)தேவர்களைப் போலத் தெரியும் முனிவர்களே, நீங்கள் அறியாததும், இனிமை நிறைந்ததும், அற்புதம் நிறைந்ததுமான தன்மை எதையும் பூமியிலோ, சொர்க்கத்திலோ நான் கண்டிருந்தால், எதனாலும் தடுக்கப்பட இயலாத என் உயர்ந்த இயல்பின் விளைவாக அஃது இருக்கும் என நான் சொல்லிக் கொள்கிறேன். அற்புதம் நிறைந்த ஞானம் ஏதும் என்னிடம் இருந்தாலோ, என் மனவெழுச்சியினால் அடையப்பட்டிருந்தாலோ அஃது எனக்கு அற்புதம் நிறைந்ததாகவே தெரிவதில்லை.(41,42) எனினும், பக்திமான்களால் உரைக்கப்படுவதும், நல்லோரிடம் கேட்கப்படுவதுமான எதுவும் மதிப்புடனும், நம்பிக்கையுடனும் ஏற்றக்கொள்ளத் தகுந்ததாகும். பூமியில் அத்தகைய உரைகள் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துகளாக நீண்ட காலம் நீடித்து நிலைத்து இருக்கின்றன.(43) எனவே, நம்முடைய இந்தச் சந்திப்பில், நல்லோரும், நல்லோரை உண்டாக்கத் தவறாதவர்களுமான மனிதர்களின் உதடுகள் சிந்தும் எதையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான் வாசுதேவன் {கிருஷ்ணன்}.(44)
கிருஷ்ணனின் இந்தச் சொற்களைக் கேட்ட தவசிகள் அனைவரும் வியப்பால் நிறைந்தனர். அவர்கள், தாமரை இதழ்களைப் போன்ற நீண்டவையும், அழகியவையுமான தங்கள் கண்களைக் கொண்டு ஜனார்த்தனனைப் பார்க்கத் தொடங்கினர்[4].(45) சிலர் அவனைப் புகழத் தொடங்கினர், சிலர் அவனை மதிப்புடன் வழிபடத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அனைவரும் நித்தியமான ரிக்குகளில் அலங்கரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்ட சொற்களால் மதுசூதனனைப் புகழ்ந்து பாடினர்.(46) பிறகு அந்தத் தவசிகள் அனைவரும் பேச்சை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நாரதரை, வாசுதேவனின் வேண்டுகோளை நிறைவடையச் செய்ய நியமித்தனர்.(47)தவசிகள், “ஓ! நாரதரே, ஓ! பலமிக்கவரே, ஓ! தவசியே, நாம் புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் {தீர்த்தயாத்திரை} செல்லும்போது இமய மலைகளில் நாம் கண்ட ஆச்சரியம் நிறைந்த, நினைத்தற்கரிய நிகழ்வை, ரிஷிகேசனுக்குத் தொடக்கம் முதல் விரிவாக முழுமையாகச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில், இங்கே கூடியிருக்கும் முனிவர்கள் அனைவரின் நன்மைக்காகவும் அந்த நிகழ்வை உரைப்பதே உமக்குத் தகும்” என்றனர்.(48,49) இவ்வாறு அத்தவசிகளால் சொல்லப்பட்டதும், தேவ முனிவரான தெய்வீக நாரதர், சில காலத்திற்கு முன் நிகழ்ந்த பின் வரும் கதையை உரைத்தார்” என்றார் {பீஷ்மர்}.(50)
ஐயனின் கண்மறைத்த அம்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 140-மஹேஸ்வரனின் கண்களை உமாதேவி மூடியதால் உண்டான மூன்றாவது கண்; இமய மலை எரிக்கப்பட்டு மீட்கப்பட்டது; காரணங்களைச் சொன்ன மஹேஸ்வரன்; நான்கு தலைகளின் தன்மைகளைக் குறித்துக் கேட்ட உமாதேவி…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது, புனிதமான முனிவரும், நாராயணனின் நண்பருமான நாரதர், சங்கரனுக்கும், அவனது மனைவியான உமைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பின்வரும் கதையைச் சொன்னார்.(1)
நாரதர், “ஒரு காலத்தில், தேவர்கள் அனைவரிலும் அற ஆன்மா கொண்டவனும், காளையைத் தன் கொடியில் கொண்டவனுமான மஹாதேவன், சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி சென்று வரும் புனிதமான இமய மலைகளில் கடுந்தவம் செய்து வந்தான்.(2) இனிமை நிறைந்த அம்மலைகள், பல்வேறு வகை மூலிகைகள் அதிகமாக வளர்ந்திருப்பவையும், பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையுமாக இருந்தன. இந்த நேரத்தில் அவை பல்வேறு இனக்கூட்டங்களைச் சேர்ந்த அப்சரஸ்களாலும், பூத கணங்களாலும் நிறைந்திருந்தன.(3) மகிழ்ச்சியால் நிறைந்தவனாக, பார்ப்பவர்களின் கண்களுக்குப் பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பூதகணங்களால் சூழப்பட்டவனாக அங்கே அந்தப் பெருந்தேவன் அமர்ந்திருந்தான். அவர்களில் சிலர் கோரமாகவும், அருவருக்கத்தகுந்தவர்களாகவும் இருந்தனர், சிலர் மிக அழகிய குணங்களைப் பெற்றிருந்தனர், வேறு சிலர் மிக அற்புதமான தோற்றங்களில் இருந்தன.(4) அவர்களில் சிலருடைய முகங்கள் சிங்கம் போன்றவையாகவும், சிலருக்கு புலியைப் போன்றவையாகவும், சிலருக்கு யானையைப் போன்றவையாகவும் இருந்தன. உண்மையில், அந்தப் பூத கணங்களின் முகங்கள் பல்வேறு வகை விலங்குகளின் முகங்களைப் போல இருந்தன. சிலருக்கு நரிக்கு ஒப்பான முகமும், சிலருக்கு சிறுத்தையின் முகமும், சிலருக்கு குரங்கின் முகமும், சிலருக்கு காளையின் முகமும் இருந்தன.(5) சிலருடைய முகங்கள் ஆந்தைகளைப் போலவும், சிலருக்கு பருந்துகளைப் போலவும், சிலருக்கு பல்வேறு வகை மான்களின் முகங்களைப் போலவும் இருந்தன.(6)
அந்தப் பெருந்தேவன், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் மற்றும் பல்வேறு வகைப் பூதங்கள் சூழ இருந்தான். மஹாதேவன் இருந்த வனம், தெய்வீக மலர்கள் நிறைந்ததாகவும், தெய்வீக ஒளிக்கதிர்களால் சுடர்விடுவதாகவும் இருந்தது.(7) அது தெய்வீக சந்தனத்தின் நறுமணத்துடன் இருந்தது, அனைத்துப் புறங்களிலும் தெய்வீக சாம்பிராணி எரிக்கப்பட்டது. மேலும் அது தெய்வீக இசைக்கருவிகளின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) உண்மையில், மிருதங்கங்கள், பணவங்கள் {முரசுகள்}, சங்கங்கள், மற்றும் பேரிகைகளின் ஒலிகள் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன. அங்கே பல்வேறு வகைப் பூதகணங்கள், தோகை விரிந்த மயில்களுடன் மகிழ்ச்சிக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர்.(9) இவ்வாறு அமைந்திருந்த தெய்வீக முனிவர்களுடைய அந்த வனத்தில், அப்சரஸ்கள் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தனர். அந்த இடமானது பார்வைக்கு இனிமை நிறைந்ததாக இருந்தது. சொர்க்கத்திற்கு ஒப்பான அது பேரழகுடன் திகழ்ந்தது. உண்மையில் அங்கே மொத்த சூழலும் அற்புதம் நிறைந்ததாகவும், விவரிக்க இயலாத அழகும், இனிமையும் கொண்டதாவும் இருந்தது.(10)
மலைச்சாரல்களில் உறங்கும் அந்தப் பெருந்தேவனின் தவங்களால் அந்த மலைகளின் இளவரசன் {இமவான் / இமய மலை} பேரெழிலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். வேதமோதுவதில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களால் ஓதப்படும் வேதங்கள் அங்கே முழங்கிக் கொண்டிருந்தன. ஓ! மாதவா, வண்டுகளின் ரீங்காரத்தை எதிரொலித்துக் கொண்டிருந்த அம்மலை ஒப்பற்ற அழகுடையதாகத் திகழ்ந்தது.(11) ஓ! ஜனார்த்தனா, பெருவிழாவைப் போலத் தெரிந்தவனும் கடும் வடிவம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனைக் கண்ட தவசிகள் பேரின்பத்தால் நிறைந்தனர்.(12) உயர்வாக அருளப்பட்ட தவசிகள், உயிர்வித்தை உள்ளிழுத்தவர்களான சித்தர்கள், மருத்துகள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், வாசவன் {இந்திரன்},(13) யக்ஷர்கள், நாகர்கள், பிசாசங்கள், லோகபாலர்கள், பல்வேறு புனித நெருப்புகள், காற்றுகள் மற்றும் பெரும்பூதங்கள் அனைவரும் யோகத்தில் குவிந்த மனங்களுடன் அந்த மலையில் வசித்து வந்தனர்.(14) பருவ காலங்கள் அனைத்தும் அங்கே இருந்தன, அவை அங்கே பல்வேறு வகைச் சிறந்த மலர்களைச் சிதறிக் கிடக்கச் செய்தன. பல்வேறு வகைச் சுடர்மிக்க மூலிகைகள் {ஜோதிலதைகள்} அந்த மலையில் இருந்த வனங்களுக்கும், காடுகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.(15)
மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பல்வேறு வகைப் பறவைகள், இனிமைநிறைந்த அந்த மலைச்சாரலில் தத்தி நடந்த படியே இன்பமாகப் பாடிக் கொண்டிருந்தன. அவை வெளியிட்டுக் கொண்டிருந்த இசையொலியின் விளைவால் அந்தப் பறவைகள் மிகவும் விரும்பத்தக்கனவாக இருந்தன.(16) சிறந்த படுக்கையாகச் செயல்படுவதைப் போன்றிருந்ததும், சிறந்த தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சிகரங்களில் ஒன்றில் உயர் ஆன்ம மஹாதேவன் அமர்ந்திருந்தான்.(17) இடையைச் சுற்றிலும் புலித்தோலையும், மேலாடையாகச் சிங்கத் தோலையும் அவன் உடுத்தியிருந்தான். ஒரு பாம்பு அவனது புனித நூலாக {பூணூலாக} இருந்தது. அவனுடைய தோள்கள் சிவப்பு அங்கதங்கள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) அவனுடைய தாடி பச்சை நிறத்தில் இருந்தது. அவன் தலையில் சடாமுடி தரித்திருந்தான்[1]. பயங்கரமானவனாக இருந்த அவன், தேவர்களின் பகைவர்கள் அனைவரின் இதயங்களையும் அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அவனே அனைத்து உயிரினங்களின் அச்சங்களைப் போக்குபவனாகவும் இருக்கிறான். காளைமாட்டைக் கொடியில் கொண்ட தேவனாக அவனை வழிபடுபவர்கள் துதிக்கிறார்கள்.(19) மஹாதேவனைக் கண்ட பெரும் முனிவர்கள், தங்கள் தலைகளால் தரையைத் தொட்டு அவனை வணங்கினார்கள். மன்னிக்கும் ஆன்மாக்களைக் கொண்ட அவர்கள் அனைவரும் (அந்தப் பெருந்தேவனைக் கண்டதன் விளைவால்) பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முற்றிலும் தூய்மையடைந்தார்கள்.(20)அனைத்து உயிரினங்களின் தலைவனுடைய {சிவனின்} வனம், பயங்கர வடிவங்கள் பலவற்றால் நிறைந்து வினோதமான அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பெரும்பாம்புகள் பலவற்றால் நிறைந்திருந்த அஃது அணுகத்தகாததாகவும், (சாதாரண உயிரினங்களால்) தாங்கிக் கொள்ள முடியாததாகவும் இருந்தது.(21) ஓ! மதுசூதனா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்த அனைத்தும் அற்புதம் நிறைந்தவையாகின. உண்மையில், காளைமாட்டைத் தன் கொடியாகக் கொண்ட பெருந்தேவன் பயங்கர அழகுடன் சுடர்விடத் தொடங்கினான்.(22) அங்கே அமர்ந்திருந்த மஹாதேவனிடம், அவனது மனைவியான இமவானின் மகள் {உமை}, அந்தப் பெருந்தேவனின் துணைவர்களான பூதகணங்களுடைய மனைவிமார் சூழ வந்தாள். அவளது ஆடைகள் அவளுடைய தலைவனுடையவை போலவே இருந்தன, அவள் நோற்ற நோன்புகளும் அவனுடையவை போலவே இருந்தன.(23) அவள், அனைத்து தீர்த்தங்களின் நீரால் நிறைந்திருந்த ஒரு குடத்தை தன் இடையில் வைத்திருந்தாள், அவளுடன் மலையோடைகளுக்குத் தலைமை தாங்கும் தேவியரும் வந்தனர். அந்த மங்கலப் பெண்கள் அவளுக்குப் பின்னால் அணிவகுத்தனர்.(24) அந்தத் தேவி, அனைத்துப் புறங்களிலும் மலர் மாரி பொழிய, பல்வேறு வகை இனிய நறுமணங்களுடன் கூடியவளாக நடந்து வந்தாள். இமயச் சாரலில் வசிக்கப் பிடித்த அவள், இந்தக் கோலத்தில் அந்தப் பெருந்தேவனிடம் சென்றாள்.(25)அழகிய உமை, இதழ்களில் புன்னகையுடனும், கேலி செய்து விளையாடும் விருப்பத்துடனும், தன் அழகிய கரங்கள் இரண்டாலும் மஹாதேவனின் கண்களைப் பின்னால் இருந்து மறைத்தாள்.(26) மஹாதேவனின் கண்கள் இவ்வாறு மறைக்கப்பட்ட உடனேயே, அனைத்து உலகங்களிலும் இருள் சூழ்ந்தது, அண்டத்தில் எங்கும் உயிரற்றுப் போனதாகத் தெரிந்தது. ஹோமச் சடங்குகள் நின்றுபோயின. புனித வஷத்துகள் திடீரென இல்லாமல் ஆகின.(27) உயிரினங்கள் அனைத்தும் உற்சாகம் இழந்து, அச்சத்தால் நிறைந்தன. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய கண்கள் இவ்வாறு மூடப்பட்ட போது, மொத்த அண்டமும் சூரியனற்றுப் போனதாகத் தெரிந்தது.(28) எனினும், அதிகம் பரவியிருந்த இருள் விரைவில் மறைந்து போனது. வலிமைமிக்கச் சுடர்மிக்க நெருப்புத் தழல் மஹாதேவனின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டது.(29) மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்த மூன்றாம் கண் (அதில் {நெற்றியில்}) தோன்றியது. அந்தக் கண் யுக நெருப்பைப் போலச் சுடர்விட்டு எரிந்து அந்த மலையை எரிக்கத் தொடங்கியது.(30)
நீண்ட கண்களைக் கொண்ட இமவானின் மகள் {உமை} நேர்ந்ததைக் கண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்கு ஒப்பான மூன்றாவது கண்ணுடன் கூடிய மஹாதேவனுக்குத் தலைவணங்கினாள். அவள் தன் தலைவனின் மீது நிலைத்த பார்வையுடன் அங்கே நின்றாள்.(31) சாலமரங்கள் மற்றும் நீண்ட தண்டுகளுடன் கூறிய பிற மரங்கள், இனிமைமிக்கச் சந்தன மரங்கள், பல்வேறு வகையிலான சிறந்த மூலிகைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் மலைக்காடுகள் எரிந்த போது,(32) அச்சத்தால் நிறைந்த மான் கூட்டங்களும், பிற விலங்குகளும் ஹரன் அமர்ந்திருந்த இடத்திற்குப் பெருவேகத்துடன் வந்து, அவனது பாதுகாப்பை நாடின. அவ்விலங்களால் கிட்டத்தட்ட நிறைந்திருந்த அந்தப் பெருந்தேவனின் வனம், ஒருவகை வினோதமான அழகுடன் சுடர்விட்டது.(33) அதே வேளையில், மூர்க்கமாகப் பெருகி சொர்க்கத்தையே எட்டியதும், நிலையற்ற மின்னலைப் போன்ற காந்தியுடன் கூடியதும், வலிமையும், பிரகாசமும் மிக்கப் பனிரெண்டு சூரியர்களைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தீ, அனைத்தையும் அழிக்கும் யுகநெருப்பைப் போல அனைத்துப் புறங்களையும் மறைத்தது.(34) ஒரு கணத்தில், தாதுகள், சிகரங்கள் மற்றும் சுடர்மிக்க மூலிகைகளுடன் கூடிய அந்த இமய மலைகள் எரிந்தன.(35)
இமவான் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டதைக் கண்ட மலை இளவரசனின் {இமவானின்} மகள், அந்தப் பெருந்தேவனின் முன்பு மதிப்புடன் கரங்களைக் கூப்பி நின்று அவனது பாதுகாப்பை நாடினாள்.(36) அப்போது சர்வன் {சிவன்}, பெண்மையின் மென்மையால் வெல்லப்பட்ட உமை, தன் தந்தையான இமவான் அத்தகைய பரிதாபகரமான நிலைக்குக் குறைக்கப்பட்டதைக் காண விரும்பாமல் இருப்பதைக் கண்டு, அந்த மலையின் மீது தன் அருள் பார்வையைச் செலுத்தினான்.(37) ஒரு கணத்தில் மொத்த இமயமும் முந்தைய நிலைக்கு மீட்கப்பட்டு, எப்போதும் போன்ற அழகை அடைந்தது. உண்மையில் அந்த மலை உற்சாகம் நிறைந்த தன்மையை வெளிப்படுத்தியது. அதன் மரங்கள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(38) இமவான் மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்ததைக் கண்டவளும், களங்கமேதும் இல்லாதவளுமான உமா தேவி, உயிரினங்கள் அனைத்தின் ஆசானான தன் தலைவனிடம், இச்சொற்களைச் சொன்னாள்.(39)
உமை {மஹாதேவனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, ஓ! திரிசூலந்தரிக்கும் தேவா, ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, என் மனத்தைப் பெரும் ஐயம் ஒன்று நிறைக்கிறது. என் ஐயத்தைத் தீர்ப்பதே உமக்குத் தகும்.(40) உமது நெற்றியில் இந்த மூன்றாம் கண் தோன்றியதற்கான காரணங்கள் என்ன? காடுகளும், உரிய அனைத்தும் சேர்ந்து அந்த மலை எரிக்கப்பட்டது ஏன்?(41) ஓ! சிறப்புமிக்கத் தேவா, இந்த மலை மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தது ஏன்? உண்மையில், ஒரு முறை அஃதை எரித்தபிறகு, மீண்டும் ஏன் மரங்களால் அதை மறைத்தீர்?” என்று கேட்டாள்.(42)
மஹேஸ்வரன் {உமையிடம்}, “ஓ! களங்கமற்ற தேவி, ஆராயாமல் நீ செய்த செயலின் மூலம் நீ என் கண்களை மறைத்தன் விளைவால் ஒரு கணத்தில் அண்டம் ஒளியற்றுப் போனது.(43) ஓ! மலைகளின் இளவரசனுடைய மகளே, அண்டமே சூரியனற்று அனைத்தும் இருளாகிப் போனதால், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க விரும்பி நான் என் மூன்றாவது கண்ணை உண்டாக்கினேன்.(44) இந்தக் கண்ணின் உயர்ந்த சக்தியானது அந்த மலையை நொறுக்கி எரித்தது. எனினும், ஓ! தேவி, உன்னை நிறைவடையச் செய்யவே இமவானின் பழுதை நீக்கி மீண்டும் முன்பு போல அமைத்தேன்” என்றான்.(45)
உமை {மஹாதேவனிடம்}, “ஓ! புனிதமானவரே, கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகியவற்றில் உள்ள உமது முகங்கள் சந்திரனைப் போன்ற இனிமையுடனும், அழகாகவும் இருப்பது ஏன்?(46) தெற்கில் இருக்கும் உமது முகம் பயங்கரமாக இருப்பது ஏன்? உமது சடா முடி பழுப்பாக, செங்குத்தாக நிமிர்ந்தும் நிற்பது ஏன்?[2] உமது தொண்டை மயில்தோகை போல நீலமாக இருப்பது ஏன்?(47) ஓ! சிறப்புமிக்கத் தேவா, உமது கரங்களில் எப்போதும் பினாகை இருப்பது ஏன்? எப்போதும் சடைமுடி தரித்த பிரம்மச்சாரியாக நீர் இருப்பது ஏன்?(48) ஓ!தலைவா, இவை அனைத்தையும் எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். உம்முடன் சேர்ந்து ஒரே கடமைகளைப் பின்பற்ற முயலும் உமது மனைவி நான். மேலும், ஓ! காளையை உமது அடையாளமாகக் கொண்ட தேவா, நான் பக்தியுடன் உம்மை வழிபடுபவளும் ஆவேன்” என்றாள்”.(49)நாரதர் தொடர்ந்தார் “மலைகளின் இளவரசனுடைய மகள் இவ்வாறு சொன்னதும், சிறப்புமிக்கப் பினாகைதாரியான அந்தப் பலமிக்க மஹாதேவன், அவளிடம் உயர்வான நிறைவையடைந்தான்.(50)
அந்தப் பெருந்தேவன் அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, என் வடிவங்கள் அப்படி இருப்பதற்கான காரணங்களை நான் விளக்கிச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக” என்றான்.(51)
வர்ணாசிரம தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 141-நான்கு முகங்களைக் கொண்ட காரணம்; காளைமாட்டு வாகனம் அடைந்த வகை; சுடலையில் வசிக்கும் காரணம்; அறம் அல்லது கடமையின் குறியீடுகள்; வர்ணதர்மங்கள்; ஆசிரம தர்மங்கள்; முனி தர்மங்கள் ஆகியவற்றைக் குறித்து உமையிடம் உரையாடிய மஹேஸ்வரன்…
அருள் நிறைந்த புனிதமானவன் {மஹேஸ்வரன் உமையிடம்}, “பழங்காலத்தில், அண்டத்திலுள்ள ஒவ்வொரு அழகிய பொருளிலிருந்தும் அழகு தானியங்களை வெட்டியெடுத்து அருள் நிறைந்தவளான திலோத்தமை என்றழைக்கப்படும் பெண்களில் முதன்மையானவளை பிரம்மன் படைத்தான்.(1) ஒரு நாள், அழகிய முகம் கொண்டவளும், வடிவ அழகில் அண்டத்தில் ஒப்பற்றவளுமான அந்தப் பெண், என்னை மயக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு என்னை வலம் வந்தாள்.(2) அழகிய பற்களைக் கொண்ட அந்தப் பெண் சென்ற திசையங்கும் (நான் அவளைக் காணும் ஆவல் கொண்டிருந்ததால்) உடனுக்குடனே எனக்கொரு புதிய முகம் தோன்றியது. அந்த முகங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு இனிமையாக இருந்தன.(3) இவ்வாறு அவளைக் காணும் விருப்பத்தின் விளைவாலும், யோகபலத்தின் மூலமும் நான் நான்கு முகம் படைத்தவனானேன். இவ்வாறு நான்கு முகம் கொண்டதில் நான் என் உயர்ந்த யோக சக்தியை வெளிப்படுத்தினேன்.(4)
கிழக்கு நோக்கித் திரும்பிய முகத்தைக் கொண்டு நான் அண்டத்தை ஆள்கிறேன். ஓ! களங்கமற்ற குணங்களைக் கொண்டவளே {உமையே}, வடக்கு நோக்கித் திரும்பிய முகத்தைக் கொண்டு நான் உன்னோடு விளையாடுகிறேன்.(5) மேற்கு நோக்கித் திரும்பிய என் முகம் ஏற்புடையதாகவும், மங்கலமானதாகவும் இருக்கிறது. நான் அதைக் கொண்டு அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை விதிக்கிறேன். தெற்கு நோக்கித் திரும்பியிருக்கும் என் முகம் பயங்கரமானதாகும். நான் அதைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறேன்.(6) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டு நான் தலையில் சடாமுடி தரித்த பிரம்மச்சாரியாக வாழ்கிறேன். தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பினாகை வில் எப்போதும் என் கரங்களில் இருக்கிறது.(7) பழங்காலத்தில் என் செழிப்பை அடைய விரும்பிய இந்திரன், தன் வஜ்ராயுதத்தை என் மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் என் தொண்டை எரிக்கப்பட்டது. அந்தக் காரணத்தினாலேயே என் தொண்டை நீலமானது[1]” என்றான்.(8)உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவரே, பேரழகுடன் கூடிய சிறந்த வாகனங்கள் பலவிருக்க, ஒரு காளைமாட்டை உமது வாகனமாக நீர் தேர்ந்தெடுத்தது ஏன்?” என்று கேட்டாள்.(9)
மஹேஸ்வரன் {உமையிடம்}, “பழங்காலத்தில் பெரும்பாட்டனான பிரம்மன், அபரிமிதமான பாலைத் தரும் தெய்வீகப் பசுவான சுரபியைப் படைத்தான். அவள் படைக்கப்பட்ட பிறகு, அமுதம் போன்று இனிமையான பாலை அபரிமிதமான அளவுகளில் தரும் பெரும் எண்ணிக்கையிலான பசுக்கள் உண்டாகின.(10) ஒரு காலத்தில் அவளது கன்றுகளின் வாயிலிருந்து ஓரளவு நுரையானது என் உடலில் விழுந்தது. இதனால் நான் கோபமடைந்தேன், என் கோபத்தால் எரிக்கப்பட்ட பசுக்கள் அனைத்தும் பல்வேறு நிறங்களைக் கொண்டவையாகின.(11) பிறகு, அனைத்தையும் அறிந்தவனும், உலங்கள் அனைத்தின் ஆசானுமான பிரம்மன் என்னைத் தணிவடையச் செய்தான். அவனே என்னைச் சுமக்கும் வாகனமாகவும், என் கொடியிலுள்ள சின்னமாகவும் இந்தக் காளையை எனக்குக் கொடுத்தான்[2]” என்றான்.(12)உமை {மஹேஸ்வரனிடம்}, “பல்வேறு வடிவங்களையும், அனைத்து வசதிகளையும், ஆடம்பரங்களையும் கொண்ட பல வசிப்பிடங்கள் உமக்குச் சொர்க்கத்தில் இருக்கின்றன. ஓ! புனிதமானவரே, அந்த இனிமை நிறைந்த மாளிகைகள் அனைத்தையும் கைவிட்டு நீர் சுடலையில் வசிப்பது ஏன்? சுடலையானது, (இறந்தோரின்) மயிரும், எலும்புகளும் நிறைந்ததாகவும், கழுகுகளும், நரிகளும் நிறைந்ததாகவும், நூற்றுக்கணக்கான ஈமச்சிதைகள் விரவிக்கிடப்பதாகவும் இருக்கிறது.(14) அழுகும் பிணங்கள் நிறைந்ததும், கொழுப்பு மற்றும் குருதியால் சேறாக இருப்பதும், அதன் மேல் குடல்களும் எலும்புகளும் விரவிக் கிடப்பதும், நரிகளின் ஊளைகளை எப்போதும் எதிரொலிப்பதுமான அது நிச்சயம் ஒரு தூய்மையற்ற இடமாகும்” என்றாள்.(15)
மஹேஸ்வரன் {உமையிடம்}, “நான் எப்போதும் புனித இடத்தைத் தேடி பூமி முழுவதும் சுற்றித் திரிகிறேன். எனினும், சுடலையைவிடப் புனிதமிக்க வேறு இடமெதையும் என்னால் காண முடியவில்லை.(16) எனவே, அனைத்து வசிப்பிடங்களைக் காட்டிலும், ஆலமரக்கிளைகளின் நிழலைக் கொண்டதும், கிழிந்த மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான சுடலையே என் இதயத்திற்கு அதிக விருப்பமுள்ளதாக இருக்கிறது.(17) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, என் துணைவர்களான பூதகணங்கள் இத்தகைய இடங்களில் வசிக்கவே விரும்புகின்றனர். ஓ! தேவி, அந்தப் பூதகணங்கள் என்னுடன் இல்லாமல் நான் எங்கும் வசிக்க விரும்புவதில்லை.(18) எனவே, சுடலையே என் புனித வசிப்பிடமாகும். உண்மையில், ஓ! மங்கலப் பெண்ணே, அதுவே எனக்குச் சொர்க்கமாகத் தெரிகிறது. உயர்ந்த புனிதம் நிறந்ததும், பெரும் பலனைத் தரவல்லதுமான சுடலையே, புனித வசிப்பிடங்களை விரும்பும் மனிதர்களால் அதிகம் மெச்சப்படுகிறது” என்றான்.(19)
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, ஓ! கடமைகள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்தையும் நோற்பவர்களில் முதன்மையானவரே, ஓ! பினாகைபாணியே, ஓ! வரங்களை அளிப்பவரே, எனக்கு ஒரு பெரும் ஐயம் உள்ளது. இவ்வுலகில் பல்வேறு வடிவங்களிலும், பல்வேறுவகை உடைகளை உடுத்திக் கொண்டும் எங்கும் திரியும் தவசிகள் காணப்படுகிறார்கள்.(21) ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவரே, இந்தப் பெரும் முனிவர் கூட்டத்திற்கு நன்மை செய்வதற்காக என்னுடைய இந்த ஐயத்தை அன்புகூர்ந்து தீர்ப்பீராக.(22) அறம் அல்லது கடமையானது என்னென்ன குறியீடுகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது? உண்மையில், அறம் அல்லது கடமையின் விவரங்களை அறியாத மனிதர்கள் அவற்றை நோற்பதில் எவ்வாறு வெல்கிறார்கள்? ஓ! பலமிக்கத் தலைவா, ஓ! அறமறிந்தவரே, இதை எனக்குச் சொல்வீராக” என்றாள்”.(23)
நாரதர் தொடர்ந்தார், “இமவானின் மகள் இந்தக் கேள்வியைக் கேட்ட போது, அங்கே இருந்த முனிவர்களின் கூட்டம் அந்தத் தேவியை வழிபட்டு ரிக்குகளாலும், ஆழ்ந்த பொருள் கொண்ட மந்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு அவளைத் துதித்தனர்.(24)
மஹேஸ்வரன் {உமையிடம்}, “தீங்கிழையாமை, வாக்கில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, ஆன்ம அமைதி, சக்திக்குத்தக்க கொடை ஆகியவை இல்லறத்தானின் முதன்மையான கடமைகளாகும்.(25) பிறர் மனைவியுடன் பாலியல் கலவி தவிர்த்தல், தன் பொறுப்பில் உள்ள செல்வத்தையும், பெண்களையும் பாதுகாத்தல், தனக்குக் கொடுக்கப்படாததை அபகரிக்க விரும்பாமை, தேன் மற்றும் இறைச்சி தவிர்த்தல் ஆகிய இவையே ஐந்து தலைமையான கடமைகளாகும்.(26) உண்மையில், அறம், அல்லது கடமையானது மகிழ்ச்சி நிறைந்த பல கிளைகளைக் கொண்டதாகும். கடமையையே மேன்மையானதாகக் கருதும் உடல் படைத்த உயிரினங்கள் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைகள் இவையே. தகுதியின் ஆதாரங்கள் இவையே” என்றான்.(27)
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, பெரும் ஐயங்கள் கொண்ட மற்றொரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். அதற்குப் பதிலளித்து என் ஐயங்களை விலக்குவதே உமக்குத் தகும். நான்கு வகையினர் செய்யக்கூடிய பலன்மிக்கக் கடமைகள் என்னென்ன? பிராமணன் தொடர்புடைய கடமைகள் என்னென்ன? க்ஷத்திரியனுக்கு என்னென்ன? வைசியன் தொடர்பான கடமைகளின் குறியீடுகள் என்னென்ன? சூத்திரன் தொடர்புடைய கடமைவகைகள் என்னென்ன?” என்று கேட்டாள்.(29)
அந்தப் புனிதமானவன், “ஓ! உயர்வாக அருளப்பட்ட பெண்ணே, நீ கேட்ட கேள்வி மிகச்சரியானதாகும். உண்மையில், மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவர்கள் உயர்வாக அருளப்பட்டவர்களாகவும், பூமியில் தேவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(30) உண்ணா நோன்புகள் நோற்பதே (புலனடக்கமே) எப்போதும் பிராமணனின் கடமையாகும். ஒரு பிராமணன் தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்வதில் வெல்லும்போது அவன் பிராமணன் என்ற அடையாளத்தைப் பெறுகிறான்[3].(31) ஓ! தேவி, பிரம்மச்சரிய கடமைகளை முறையாக நோற்பது அவன் செய்ய வேண்டிய சடங்காகும். நோன்புகள் நோற்பதும், புனித நூல் {பூணூல்} தரித்தல் ஆகியவை அவனது பிற கடமைகளாகும். இவற்றின் மூலமே அவன் மறுபிறப்பாளனாகிறான்.(3) அவன் தன் ஆசான்களையும், பெரியோர்களையும், தேவர்களையும் வழிபடுவதால் ஒரு பிராமணனாகிறான். வேத கல்வியை ஆன்மாவாகக் கொண்ட அறமே நீதியின் ஆதாரமாகும். நீதி மற்றும் கடமைக்கு அர்ப்பணிப்புடன் உள்ள உடல் படைத்த உயிரினங்களுக்கு அதுவே பின்பற்றவேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய அறமாகும்” என்றான்.(33)உமை, “ஓ புனிதமானவரே, என் ஐயங்கள் விலகவில்லை. மனிதர்களில் நான்கு வகையினரின் கடமைகளை விரிவாக விளக்குவதே உமக்குத் தகும்” என்றாள்.(34)
மஹேஸ்வரன், “அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களைக் கேட்டு, வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்று, புனித நெருப்பில் கவனத்துடன், ஆசானின் காரியத்தை நிறைவேற்றி,(35) ஒரு துறவியின் வாழ்வை வாழ்ந்து, எப்போதும் புனித நூலை {பூணூலைத்} தரித்து, தொடர்ந்து வேதமோதி, பிரம்மச்சரியக்கடமைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதே பிராமணனின் கடமைகளாகும்.(36) கல்விக்கான காலம் நிறைவடைந்ததும், ஒரு பிராமணன் தன் ஆசானிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன் ஆசானின் வசிப்பிடத்தை விட்டகன்று தன் தந்தையின் இல்லத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பியதும் அவன் தனக்குத் தகுந்த மனைவியை முறைப்படி மணந்து கொள்ள வேண்டும்.(37) சூத்திரனால் செய்யப்பட்ட உணவைத் தவிர்ப்பதும் பிராமணனின் கடமையாகும். அறத்தின் பாதையில் நடந்தவாறே, உண்ணா நோன்புகளை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைப் பயில்வது அவனது பிற கடமைகளாகும்[4].(38) ஓர் இல்லறத்தான் நாளுக்கு நாள் செய்யும் வழிபாட்டிற்காகத் தன் இல்லத்தில் இல்லற நெருப்பைப் பராமரிக்க வேண்டும். அவன் தன் புலன்களை உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும். அவன், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் தன்னைச் சார்ந்திருக்கும் அனைவரையும் கவனித்தபிறகு எஞ்சியிருப்பதையே உண்ண வேண்டும். அவள் எளிய உணவை உண்பவனாக, வாக்கில் வாய்மையுள்ளவனாக, அகத்திலும் புறத்திலும் தூய்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(39) விருந்தினர்களைக் கவனிப்பதும், மூன்று வேள்வி நெருப்புகளைப்[5] பராமரிப்பதும் அவனுடைய வேறு கடமைகளாகும். இஷ்டி என்ற பெயரில் சொல்லப்படும் சாதாரண வேள்விகளையும் அவன் கவனிக்க வேண்டும். மேலும் விதிப்படி தேவர்களுக்கு விலங்குகளை அர்ப்பணிக்கவும் {பசுபந்தனங்கள் செய்யவும்} வேண்டும்.(40)உண்மையில், வேள்விகளைச் செய்வதும், அனைத்து உயிரினங்களுக்கும் முழுமையாகத் தீங்கிழைக்காமல் இருப்பதும் அவனுக்கான உயர்ந்த கடமைகளாகும். தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் உண்ணும் முன்பு ஒருபோதும் தான் உண்ணாமல் இருப்பதும் ஓர் இல்லறத்தானின் கடமையாகும். தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோரைக் கவனித்த பிறகு எஞ்சியிருக்கும் உணவு விகஸம் என்றழைக்கப்படுகிறது. ஓர் இல்லறத்தான் விகஸம் உண்ண வேண்டும்.(41) உண்மையில், ஒரு மறுபிறப்பாள வகையைச் சார்ந்த இல்லறத்தான் ஒருவன், வேதங்களை அறிந்து கொள்வதைத் தவிர்த்து, பணியாட்கள் மற்றும் சார்ந்திருப்போர் பிறர் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் பிறகு உண்பது அவனுக்கான சிறப்புக் கடமையாகக் கருதப்படுகிறது.(42) இல்லறவாசிகளின் வழக்கில் கணவன் மற்றும் மனைவியின் ஒழுக்கம் நிகராக இருக்க வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் வீட்டின் தலைமை தேவர்களுக்கு மலர்களையும், பிற பொருட்களையும் காணிக்கை அளிக்க வேண்டும்.(43) ஓர் இல்லறத்தான் ஒவ்வொரு நாளும் தன் வீடு (பசுஞ்சாணம் மற்றும் நீர் கொண்டு) முறையாகக் கழுவப்படுவதைக் கவனத்துடன் செய்ய வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் உண்ணோநோன்புகளை நோற்க வேண்டும். நன்கு கழுவப்பட்டு, தூய்மைப்படுத்தப்படும் அவனது வீட்டில் ஒவ்வொரு நாளும் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவித்து வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யால் உண்டாகும் புகையால் தூமமூட்ட வேண்டும்.(44) ஒரு மறுப்பிறப்பாளன் வாழும் இல்லற வாழ்வு தொடர்புடைய கடமைகள் இவையே ஆகும். இந்தக் கடமைகளே உண்மையில் உலகத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. உண்மையில், இந்தக் கடமைகள் இல்லற வாழ்வை வாழும் பிராமணர்களுக்கு மத்தியில் உள்ள அறம் சார்ந்த மனிதர்களிடம் இருந்து எப்போதும், நித்தியமாக உண்டாகிறது.(45)
ஓ! தேவி, நீ என்னிடம் கேட்ட க்ஷத்திரியக் கடமைகளைச் சொல்லப் போகிறேன் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(46) ஒரு க்ஷத்திரியனின் கடமை அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதே என்பது தொடக்கம் முதல் சொல்லப்படுகிறது. ஒரு மன்னன் தன் குடிமக்கள் ஈட்டும் பலன்களில் ஒரு நிலையான பங்கைப் பெறுபவனாவான். அந்த வழிமுறையின் மூலம் அம்மன்னன் அறவோனாகிறான்.(47) தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுப் பாதுகாக்கும் மனிதர்களின் ஆட்சியாளன், பிறருக்குப் பாதுகாப்பளிக்கும் நல்லியல்பின் மூலம் மறுமையில் பல இன்ப உலகங்களை அடைகிறான்.(48) தற்கட்டுப்பாடு, வேத கல்வி, புனி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது, கொடையளிப்பது, கல்வி,(49) புனித நூல் {பூணூல்} தரிப்பது, அறச்சடங்குகளைச் செய்வது, பணியாட்களையும், சார்ந்திருப்போரையும் ஆதரிப்பது, தொடங்கப்பட்ட செயல்களில் விடாமுயற்சியுடன் செயல்படுவது ஆகியவை அரச வகையினரின் வேறு கடமைகளாகும்.(50)
இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஏற்புடைய தண்டனைகளை அளிப்பதும் அவனுடைய மற்றொரு கடமையாகும். வேள்விகளைச் செய்வது, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படியான அறச்சடங்குகளைச் செய்வது ஆகியவையும் அவனது கடமைகளே. தன் முன்பு வழக்காடுபவர்களின் சச்சரவுகளைச் சரியாகத் தீர்க்கும் நடைமுறையைப் பின்பற்றுவது, வாக்கில் வாய்மை நிறைந்திருப்பதில் அர்ப்பணிப்பு,(51) துன்பத்தில் இருப்போருக்கு உதவி செய்வது ஆகியவற்றையும் மற்றும் வேறு கடமைகளையும் வெளிப்படுத்தும் மன்னன் இம்மையிலும் மறுமையிலும் பெரும் மகிமையை அடைகிறான். பசுக்கள் மற்றும் பிராமணர்களின் சார்பில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தி, போர்க்களத்தில் அவன் {மன்னன்} உயிரை விட வேண்டும்.(52) அத்தகைய மன்னன், குதிரை வேள்விகளைச் செய்வதால் வெல்லப்படும் இன்ப உலகங்களைச் சொர்க்கதில் அடைவான்.(53)
கால்நடைகளைப் பராமரித்தல், உழவு, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுதல், கொடையளித்தல், கல்வி ஆகியன வைசியனின் கடமைகளாகும்.(54) வணிகம், அறப்பாதையில் நடத்தல், விருந்தோம்பல், அமைதி, தற்கட்டுப்பாடு, பிராமணர்களை வரவேற்றல், (பிராமணர்களுக்காக) பொருட்களைத் துறத்தல் ஆகியனவும் வைசியனின் நித்திய கடமைகளாகும்.(55) வணிகத்தில் ஈடுபட்டு, அறப்பாதையில் நடக்கும் வைசியன், எள், நறுமணப் பொருட்கள், சாறுகள் அல்லது நீர்மை சார்ந்த பொருட்களை ஒருபோதும் விற்பனை செய்யக் கூடாது. அவன் அனவருக்கும் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்த வேண்டும்.(56) அவன் தன் வழிமுறைகளின் படியும், நீதியின் படியும் சுதந்திரமாக அறம், பொருள் மற்றும் இன்பத்தை அடைய வேண்டும்.
மூன்று மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவதே ஒரு சூத்திரனின் உயர்ந்த கடமையாகிறது[6].(57) வாக்கில் வாய்மை நிறைந்தவனும், புலனடக்கம் கொண்டவனுமான சூத்திரன் தவங்களின் பலன்களை அடைந்தவனாகக் கருதப்படுகிறான். உண்மையில், வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தும் சூத்திரன், உயர்ந்த தவங்களின் பலனை அடைந்ததாகக் கருதப்படுகிறான்.(58) அறம் சார்ந்த ஒழுக்கம் கொண்டவனும், தேவர்களையும், பிராமணர்களையும் வழிபடுபவனும், புத்திமானுமான சூத்திரன், விரும்பத்தகுந்த அற வெகுமதிகளை அடைந்தவனாகிறான்.(59) ஓ! அழகிய மங்கையே, நான் நான்கு வகையினருக்கான கடமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், ஓ! அருள்நிறந்த மங்கையே, அவர்களுக்குரிய கடமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டான் {சிவன்}.(60)உமை, “நான்கு வகையினருக்குரியவையும், அவர்களுக்கு நன்மை தரக்கூடியவையும், மங்கலமானவையுமான கடமைகளைச் சொன்னீர். ஓ! புனிதமானவரே, அனைத்து வகையினருக்குமான பொதுக்கடமைகளை இப்போது சொல்வீராக” என்று கேட்டாள்.(61)
மஹேஸ்வரன், “அண்டத்தில் உள்ள அனைத்திலும் முதன்மையானவனும், எப்போதும் அற சாதனைகளை விரும்புபவனும், படைப்பாளனுமான பிரம்மன், உலகங்கள் அனைத்தையும் காக்கும்பொருட்டுப் பிராமணர்களைப் படைத்தான். படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்திலும் அவர்களே பூமிதேவர்களாவர் {பூமியில் உள்ள தேவர்கள் என்று சொல்லப்படுகின்றனர்}.(62) அவர்கள் செய்ய வேண்டிய அறச்சடங்குகள் என்ன என்றும், அவற்றின் மூலம் அவர்கள் அடையும் வெகுமதிகளையும் தொடக்கத்தில் சொல்கிறேன். பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அறமே அறங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(63) உலகத்தில் நீதி நிலவ, சுயம்புவால் மூன்று அறங்கள் உண்டாக்கப்பட்டன. உலகம் படைக்கப்படும்போதெல்லாம் அவ்வறங்கள் பெரும்பாட்டனால் படைக்கப்படுகின்றன. அதைக் கேட்பாயாக. அவையே மூன்று நித்தியமான அறங்களாகும். அதைக் கேட்பாயாக.(64) அந்த மூன்று அறங்கள் இவையே. வேதங்களில் விளக்கப்படும் அறமே உயர்ந்தது; முக்கியத்துவம் வாய்ந்ததில் அடுத்ததாக ஸ்மிருதிகளில் விளக்கப்படுவது {விளகப்படும் அறம்} இருக்கிறது; மூன்றாவதாக முக்கியத்துவம் வாய்ந்தது அறவோராகக் கருதப்படுவோரால் நடைமுறையில் செய்யப்படும் செயல்கள் சொல்லப்படுகின்றன.(65)
கல்விமானான பிராமணன், மூன்று வேதங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவன் வேத கல்வியை (அல்லது சாத்தங்களை உரைப்பதை) தான் வாழ்வதற்கான வழிமுறையாக ஒருபோதும் கொள்ளக்கூடாது[7]. அவன் நன்கறியப்பட்ட மூன்று செயல்களுக்கு (கொடையளிப்பது, வேதங்கற்பது மற்றும் வேள்விகள் செய்வது ஆகியவற்றுக்குத்) தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவன் (காமம், கோபம் மற்றும் பேராசையை என்ற) மூன்றைக் கடக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும். இந்தக்குணங்களைக் கொண்டவனே பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(66) அண்டத்தின் தலைவன் பிராமணர்கள் நோற்பதற்கென இந்த ஆறு செயல்களை அறிவித்திருக்கிறான். அந்த நித்திய கடமைகளைக் கேட்பாயாக.(67) வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்தித் தருவது, கொடைகள் அளிப்பது, கொடைகள் ஏற்பது, கற்பிப்பது, கற்பது ஆகிய ஆறு செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் அறத்தகுதியை வெல்கிறான்[8].(68) உண்மையில் ஒவ்வொரு நாளும் வேதங்களைக் கற்பது ஒரு கடமையாகும். வேள்வியானது (மற்றொரு) நித்திய கடமையாகும். தன் சக்திக்குத் தக்கபடியும், விதிக்கு ஏற்புள்ளபடியும் கொடைகளை அளிப்பது அவனுடைய வழக்கில் அதிகம் மெச்சப்படுகிறது.(69) மனோ அமைதியானது அறவோருக்கு மத்தியில் எப்போதும் உயர்ந்த கடமையாகவே நிலவுகிறது. தூய மனம் கொண்ட இல்லறத்தார் மிகப்பெரும் பலன்களை ஈட்டவல்லவர்களாவர்.(70)உண்மையில், ஐந்து வேள்விகளைச் செய்வதன் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துபவன், வாக்கில் வாய்மை நிறைந்தவன், வன்மத்தில் இருந்து விடுபட்டவன், கொடைகளை அளிப்பவன், மறுபிறப்பாள விருந்தினர்கள் அனைவரையும் மதித்து விருந்தோம்பலுடன் நடத்துபவன், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட வசிப்பிடங்களில் வாழ்பவன்,(71) செருக்கற்றவன், தன் காரியங்களில் எப்போதும் நேர்மையாக இருப்பவன், பிறரிடம் இனிமையான நம்பிக்கை தரும் சொற்களைப் பயன்படுத்துபவன், விருந்தினர்களுக்கும், தன் வசிப்பிடத்திற்கு வருவோருக்கும் தொண்டாற்றுவதில் இன்பமடைபவன், குடும்ப உறுப்பினர்கள், தன்னைச் சார்ந்திருப்பவர்கள் ஆகியோரின் தேவைகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சியிருக்கும் உணவை உண்பவன் ஆகியோர் பெரும் பலன்களை வெல்கிறார்கள்.(72) தன் விருந்தினர்கள் கைகால்களைக் கழுவிக் கொள்ள நீர் தருபவனும், பெறுபவரைக் கௌரவிக்கும் வகையில் அர்க்கியம் கொடுப்பவனும், தன் வசிப்பிடத்திற்கு வருவோருக்கு இருக்கைகள், படுக்கைகள், இருளை விலக்கும் விளக்குகள், உறைவிடம் ஆகியவற்றை முறையாகக் கொடுப்பவனுமான மனிதன் உயர்ந்த அறவோனாகக் கருதப்படுகிறான்.(73) விடியலில் எழுந்து, தன் வாயையும், முகத்தையும் கழுவிக் கொண்டு, தன் விருந்தினர்களுக்கு உணவளித்து, அவர்களைக் கௌரவித்து முறையாகத் தன் வசிப்பிடத்தில் இருந்து அனுப்பி, (மதிப்பின் வெளிப்பாடாக) சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் இல்லறத்தான் நித்திய தகுதியை அடைகிறான்.(74) அனைவருக்கும் விருந்தோம்பலும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகை தேடலும் இல்லறத்தானின் கடமைகளாகும்.(75)
ஓர் இல்லறத்தானுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அறம் தன் முக்கியக் குறியீடாகப் பிரவிருத்தியைக் கொண்டதாகும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து உயிரினங்களுக்கும் மங்கலமானதையும், நன்மை மிகுந்ததையும் உனக்கு நான் விளக்கிச் சொல்கிறேன்.(76) ஓர் இல்லறத்தான் தன் சக்திக்குத் தகுந்த வகையில் கொடைகளை அளிக்க வேண்டும். அவன் அதே வகையிலேயே அடிக்கடி வேள்விகளையும் செய்ய வேண்டும். உண்மையில், தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒருவன் எப்போதும் பலன்மிக்கச் செயல்களைச் செய்ய வேண்டும்.(77) ஓர் இல்லறத்தான் நியாயமான வழிமுறைகளின் மூலம் செல்வத்தை ஈட்ட வேண்டும். இவ்வாறு அடையப்பபட்ட செல்வத்தை அற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, மூன்று பங்குகளாகக் கவனமாகப் பிரிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் ஒன்றைக் கொண்டு அவன் அறச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மற்றொன்றைக் கொண்டு இன்பத்திற்கான தன் ஏக்கங்களை நிறைவடையச் செய்ய முயல வேண்டும். மூன்றாவது பங்கைக் கொண்டு அதை {செல்வத்தை} மேலும் பெருக்க வேண்டும்.(79) நிவிருத்தி அறம் வேறுவகையானதாகும். அது (மறுபிறவியில் இருந்து பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படும்) விடுதலை நிலைக்காக {முக்திக்காக} இருக்கிறது. அஃதை அமைக்கும் ஒழுக்கம் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! தேவி, விரிவாக என்னிடம் இருந்து கேட்டுக் கொள்வாயாக.(80)
அவ்வறத்தால் மனத்தில் ஆழப்பதிய வைக்கப்படும் கடமைகளில் ஒன்று, அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையாகும். அதைப் பின்பற்றும் மனிதன், ஒரு நாளைக்கும் அதிகமாக ஓர் இடத்தில் வசிக்கக்கூடாது. இவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், விடுதலையை {முக்தியை} அடைய விரும்பி நம்பிக்கையுடன் (அல்லது ஆசையுடன்) கூடிய பற்றுகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.(81) தங்கள் வசிப்பிடம், நீருக்காகத் தாங்கள் சுமக்கும் கமண்டலம், தங்கள் மடியை மறைக்கும் ஆடைகள், அவர்கள் அமரும் இருக்கை, தங்கள் கரங்களில் சுமக்கும் திரிதண்டம், தாங்கள் படுக்கும் படுக்கை, தங்களுக்கு வேண்டிய நெருப்பு, தாங்கள் தங்கும் அறை ஆகியவற்றில் அவர்கள் பற்றேதும் கொள்ளக்கூடாது.(82) இவ்வறத்தைப் பின்பற்றுபவன் தன் இதயத்தைத் தன் ஆன்மாவின் இயக்கத்தில் நிறுவுகிறான். அவனது மனம் பரப்பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. அவன் பிரம்மத்தை அடையும் கருத்தால் நிறைந்திருக்கிறான். அவன் யோகம் மற்றும் சாங்கிய தத்துவத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(83) அவன் மரத்தடியைத் தவிர வேறு உறைவிடமெதையும் விரும்புவதில்லை. மனிதர்களின் வெற்று வசிப்பிடங்களிலேயே அவன் தங்குகிறான். அவன் ஆற்றங்கரைகளில் உறங்குகிறான். அவன் அத்தகைய கரைகளில் தங்குவதை இன்பமாகக் கருதுகிறான்.(84) அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும், பிணைப்புகள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான். அவன் தன் சொந்த ஆன்மாவின் இருப்பைப் பரமாத்மாவுடன் கலக்கிறான்.(85)
மரக்கட்டையைப் போல நின்று, உணவனைத்தையும் தவிர்க்கும் அவன் விடுதலைக்கான {முக்திக்கான} செயல்களில் மட்டுமே ஈடுபடுகிறான். அல்லது அவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் திரிந்து கொண்டிருப்பான். நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுபவரின் நித்திய கடமைகள் இவையே.(86) அவன் தன் இனத்தில் இருந்து பிரிந்து தனியே வாழ்கிறான். அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். அவன் ஒரே இடத்தில் ஒரு நாளைக்கு மேல் வசிப்பதில்லை. அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபட்டு அவன் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருக்கிறான். பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்த அவன் ஒரே ஆற்றங்கரையில் கூட ஒரு நாளைக்கு மேல் ஒருபோதும் உறங்க மாட்டான்.(87) வேதங்களில் அறிவித்துள்ள படி விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதர்களின் அறம் இதுவே ஆகும். இதுவே அறவோரால் நடத்தப்படும் அறப்பாதையாகும். இந்தப் பாதையைப் பின்பற்றுபவன், எந்த அடிச்சுவட்டையும் விட்டுச் செல்வதில்லை.(88)
பிக்ஷுக்கள் (விடுதலை அறத்தைப் பின்பற்றுபவர்கள்) நான்கு வகையினராவர். அவர்கள், குடீசகர்கள், பஹூதகர்கள் ஹம்ஸர்கள், பரமஹம்ஸர்கள் ஆவர். இரண்டாமவர் முதலாமவரைவிடவும் மேன்மையானவர் ஆவார், மூன்றாமவர் இரண்டாமவரை விடவும், நான்காமவர் மூன்றாவரைவிடவும் மேன்மையானவர்கள் ஆவர்.(89) பரமஹம்ஸ நிலையைவிடப் மேன்மையானது ஏதுமில்லை; அதைவிடத் தாழ்ந்தது ஏதுமில்லை, அதைவிட முன்போ பின்போ ஏதுமில்லை. அது மகிழ்ச்சியும் துக்கமுமற்ற ஒரு நிலையாகும்; அது மங்கலமானதும், முதுமை மற்றும் மரணத்தில்இருந்து விடுபட்டதும், மாற்றமேதும் அடையாததுமான நிலையாகும்” என்றான் {மஹேஸ்வரன்}.(90)
உமை {மஹேஸ்வரனிடம்}, “இல்லறத்தார் மற்றும் முக்தி அறத்தைக்குறித்தும், அறவோரால் பின்பற்றப்படும் அறங்கள் குறித்தும் சொன்னீர். இவை உலகில் வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த நன்மையைப் பயக்கும் உயர்ந்த பாதைகளாகும்.(91) ஓ! அறங்கள் அனைத்தையும் அறிந்தவரே, நான் முனிவர்களின் உயர்ந்த அறத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஆசிரமங்களில் வசிக்கும் தவசிகளை நான் எப்போதும் விரும்புகிறேன்.(92) புனித நெருப்பில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளின் புகை வெளியிடும் நறுமணம் மொத்த ஆசிரமங்களிலும் நீக்கமற நிறைந்து அவற்றை இனிமைநிறைந்தவைகளாக ஆக்குகிறது. ஓ! பெரும் தேவா, இதைக் கண்டு என் இதயம் எப்போதும் மகிழ்ச்சியில் நிறைகிறது.(93) ஓ! பலமிக்கத் தேவா, தவசிகள் அறம் குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. அனைத்து அறங்களையும் அறிந்தவர் நீரே. ஓ தேவர்களின் தேவா, ஓ! பெரும் தேவா, நான் உம்மிடம் கேட்ட இக்காரியங்கள் குறித்து உண்மையில் விரிவாகச் சொல்லி என்னைத் தெளிவடையச் செய்வீராக” என்று கேட்டாள்.(94,95)
அருள் நிறைந்த அந்தப் புனிதமானவன் {மஹேஸ்வரன் உமையிடம்}, “சரி. உயர்ந்ததும், சிறந்ததுமான தவசிகளின் அறம் குறித்து உனக்கு நான் சொல்லப் போகிறேன். ஓ! மங்கலப் பெண்ணே, இந்த அறத்தின் ஆணைகளைப் பின்பற்றும் தவசிகள், தாங்கள் பயிலும் கடுந்தவங்களின் மூலம் வெற்றியை அடைகின்றனர்.(96) ஓ! உயர்வாக அருளப்பட்டவளே, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களும், பேநபர்கள் {நுரையை உண்பவர்கள்} என்ற பெயரில் அறியப்பட்டவர்களுமான அறம்சார்ந்த முனிவர்களின் கடமைகள் என்னென்ன என்பதைத் தொடக்கம் முதல் நீ கேட்பாயாக.(97) பெரும்பாட்டனான பிரம்மன் (தவங்களைப் பயிலும் நாட்களின் போது நீரின் வடிவிலான) அமுதத்தைப் பருகினான். அந்த நீரானது ஒரு பெரும் வேள்வியில் இருந்து சொர்க்கத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.(98) அந்த நீரின் நுரை (பிரம்மன் குடித்ததன் விளைவால்) தன் இயல்பின்படியே உயர்ந்த மங்கலத்தைக் கொண்டதாக இருந்தது. (குறிப்பிடப்பட்ட அந்த நீரில் இருந்து) இவ்வாறு வெளி வந்த நுரையை உண்டு வாழ்ந்த அந்த முனிவர்கள் பேநபர்கள் (நுரையை உண்பவர்கள்) என்றழைக்கப்பட்டார்கள். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்ட மங்கையே, தூய ஆன்மா கொண்ட முனிவர்களின் ஒழுக்கம் இதுவே. வாலகில்யர்களைக் குறித்து நான் விளக்கப் போகிறேன் கேட்பாயாக.(99) வாலகில்யர்கள் தங்கள் தவங்களால் வெற்றியை அடைந்த தவசிகளாவர். அவர்கள் சூரிய வட்டிலில் வசிக்கிறார்கள். பறவைகளால் பின்பற்றப்படும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்திருப்பவர்களும், அறக் கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான அந்த முனிவர்கள், உஞ்ச முறையின்படி வாழ்கிறார்கள்.(100)
அவர்கள் மான் தோல்களையோ, மரப்பட்டைகளையோ {மரவுரிகளையோ} உடுத்துகிறார்கள். முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்து விடுபட்டவர்களும், தவங்களையே செல்வமாகக் கொண்டவர்களுமான இந்த வாலகில்யர்கள் இந்த அறப்பாதையிலேயே நடக்கிறார்கள்.(101) அவர்கள் {வாலகில்யர்கள்} கட்டைவிரல் அளவுள்ளவர்களே. வகைகளாப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வகையும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தவங்களை மட்டுமே பயில்கிறார்கள். அவர்க்ள தங்கள் அறவொழுக்கத்தால் வெல்லும் பலன்கள் மிக உயர்ந்தவையாகும்.(102) அவர்கள் தேவர்களுக்குச் சரிநிகர் நிலையை அடைந்தவர்கள் என்றும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவே இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களால் தங்கள் பாவங்கள் அனைத்தையும் அழித்த அவர்கள், பிராகசத்தில் சுடர்விட்ட படியே திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுகிறார்கள்.(103)
தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், கருணையைப் பயில்வதில் தங்களை அர்ப்பணித்தவர்களுமான வேறு சிலர் சக்ரசரர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அறவொழுக்கம் ஒழுகுபவர்களும், பெரும் புனித நிலையைக் கொண்டவர்களுமான அவர்கள் சோமனின் உலகத்தில் வாழ்கிறார்கள்.(104) இவ்வாறு பித்ருக்களின் உலகதிற்கு மிக அருகில் வசிக்கும் அவர்கள் சோமனின் கதிர்களைப் பருகி வாழ்கிறார்கள். ஸம்ப்ரக்ஷாலர்கள், ஆஷ்மகுட்டர்கள் மற்றும் தந்தோலூகலர்கள் என்றழைக்கப்படும் வேறு சிலரும் இருக்கிறார்கள்[9].(105)இவர்கள் சோமம் பருகும் தேவர்கள் மற்றும் நெருப்பின் தழல்களைப் பருகும் வேறு சிலருக்கு அருகில் வாழ்கிறார்கள். தாங்கள் மணந்து கொண்ட மனைவிகளுடன், தங்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, சோமனின் கதிர்களைப் பருகி அவர்கள் வாழ்கிறார்கள்.(106) அவர்கள் புனித நெருப்பில் தெளிந்த நெய் ஆகுதிகளை ஊற்றி பித்ருக்களை உரிய வடிவங்களில் துதிக்கிறார்கள். மேலும் அவர்கள் நன்கறியப்பட்ட வேள்விகளையும் செய்கிறார்கள். இதுவே அவர்களது அறமெனச் சொல்லப்படுகிறது.(107) ஓ! தேவி, இந்த முனிவர்களின் அறமானது, வீடற்றோர் மற்றும் தேவலோகம் உட்பட எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக உலவுபவர்கள் ஆகியோரால் எப்போதும் நோற்கப்படுகிறது. மேலும் உள்ள வேறு வகையினர் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(108) முனிவர்களின் வெவ்வேறு அறங்களைப் பின்பற்றுவோர் தங்கள் ஆசைகளை அடக்கித் தங்கள் ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உண்மையில், காமம், கோபம் ஆகியவற்றில் முற்றிலும் வெல்ல வேண்டும் என்பது என் கருத்தாகும்.(109) உஞ்ச வாழ்வு முறை மூலம் அடையப்பட்ட (செல்வம்) தானியத்தைக் கொண்டு அவர்கள், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுதல், தர்மராத்ரி என்றழைக்கப்படும் வேள்வியின் நிலையான இருக்கையில் எப்போதும் அமர்வது, சோம வேள்வியைச் செய்வது, சிறப்பறிவை அடைவது, பட்டியலில் ஐந்தாவதாக வேள்விக் கொடைகளை அளிப்பது, நாள்தோறும் செய்யும் வேள்விகள், பித்ரு மற்றும் தேவ வழிபாட்டில் அர்ப்பணிப்பு மற்றும் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடத்தல் உள்ளிட்ட கடமைகளை வெளிப்படுத்த வேண்டும்.(110,111)
பசுவின் பாலில் தயாரிக்கப்படும் ஆடம்பர உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்தல், இதய அமைதியில் இன்பங்கொள்ளல், வெறும்பாறைகள் அல்லது வெறும் நிலத்தில் கிடத்தல், யோகத்தில் அர்ப்பணிப்பு, கீரைகள் மற்றும் மரங்களின் இலைகளை உண்பது,(112) கனிகள், கிழங்குகள், காற்று, நீர், பாசி ஆகியவற்றை உண்டு வாழ்தல் உள்ளிட்டவை, (உலகத்தால்) வெல்லப்பட முடியாத மனிதர்களுக்குடைய கதியை அடைவதற்கு முனிவர்களால் பயிலப்படும் சில நடைமுறைகளாகும்.(113) ஒரு வீட்டில் இருந்து மேல்நோக்கி செல்லும் புகை {சமையலறை புகை} இல்லாமல் போகும்போது, உமி நீக்கும்கருவி இயங்காமல் நிற்கும்போது, இதய நெருப்பு அணைந்த போது, வீட்டில் இருப்பவர்க்ள அனைவரும் தங்கள் உணவை உண்ட பிறகு, உணவு வகைகள் அறைக்கு அறை எடுத்துச் செல்லப்படாதபோது, பிச்சைக்காரர்கள் சாலைகில் நடக்காத போது,(114) வாய்மை அறம் மற்றும் மனோ அமைதியில் அர்ப்பணிப்புடைய மனிதன், ஒரு விருந்தினரை அடைய விரும்பி (தன் ஆசை நிறைவடையாமல்) இருந்தால், அப்போது அவன் தன் வீட்டில் எஞ்சியிருக்கும் உணவை உண்ணலாம். இவ்வழியில் செயல்படுவதால் அவன் முனிவர்களின் அறத்தைப் பயில்பவனாகிறான்.(115) ஒருவன் ஆணவம் கொள்ளக்கூடாது; செருக்கடையக்கூடாது; உற்சாகமில்லாதவனாக, நிறைவில்லாதவனாக, எதற்கும் வியப்படைபவனாக இருக்கக்கூடாது. ஒருவன் நண்பர்களுக்கும், பகைவர்களுக்கும் இடையில் சரிநிகராகவே நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன் அனைத்து உயிரினங்களுடனும் நட்புடன் பழக வேண்டும்” என்றான் {சிவன்}.(116)
வானப்பிரஸ்தம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 142-வானப்பிரஸ்தர்களின் கடமைகள்; வானப்பிரஸ்தர்களில் இருவகையினரின் கடமைகள்; துறவிகளின் கடமைகள் ஆகியவற்றை உமைக்குச் சொன்ன சிவன்…
உமை {மஹேஸ்வரனிடம்}, “காட்டுத்துறவிகள் {வானப்பிரஸ்தர்கள்}, இனிமை நிறைந்த பகுதிகளிலும், ஆறுகளின் ஓடைகள் மற்றும் நீரூற்றுகளின் மத்தியிலும், ஓடைகள் மற்றும் மற்றும் சிற்றோடைகள், குன்றுகள், மலைகள், வனங்கள் மற்றும் காடுகளில் அருகில் உள்ள கொடிப்பந்தல்களிலும், கனிகள் மற்றும் கிழங்குகள் நிறைந்த புனிதத்தலங்களிலும் வசிக்கிறார்கள்.(1) குவிந்த கவனத்துடனும், நோன்புகள் மற்றும் விதிகளைப் பின்பற்றியபடியும் அவர்கள் அத்தகைய இடங்களில் வசிக்கிறார்கள்.(2) ஓ! சங்கரரே, அவர்கள் பின்பற்றக்கூடிய புனித விதிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ! தேவர்கள் அனைவரின் தேவா, இந்தத் துறவிகள் தங்கள் உடல்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களைத் தாங்களே சார்ந்திருக்கிறார்கள்” என்றாள்.(3)
மஹேஸ்வரன் {உமையிடம்}, “காட்டுத்துறவிகளின் {வானப்பிரஸ்தர்களின்} கடமைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. ஓ! தேவி, ஒரு மனத்துடன் அதைக் கேட்டு, அறத்தை உன் இதயத்தில் நிலைநிறுத்துவாயாக.(4) கடும் நோன்புகளையும், விதிகளையும் பின்பற்றி, வனங்களிலும், காடுகளிலும் வசிக்கும் அறம் சார்ந்த துறவிகளால் செய்யப்பட்டும் எந்தச் செயல்களால் அவர்கள் வெற்றியை அடைகிறார்கள் என்பதைக் கேட்பாயாக.(5) ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடி, பித்ருகள் மற்றும் தேவர்களை வழிபட்டு, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, இஷ்டி ஹோமம் என்ற பெயரிலான சடங்குகளைச் செய்து,(6) நீவார நெல்லை எடுத்து வந்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, இங்குதை மற்றும் ஆமணக்கு வித்துகளை நசுக்குச் செய்யப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவது அவர்களது கடமைகளாகும்.(7) யோக நடைமுறைகளைச் செய்வதன் மூலம் (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, காமம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபடும் அவர்கள் வீராசனம்[1] என்றழைக்கப்படும் மனோநிலையில் தங்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். உண்மையில், கோழைகளால் அடைய முடியாத இடங்களில் அவர்கள் வசிக்க வேண்டும்.(8)யோகம் தொடர்பான சிறந்த விதிகளைப் பின்பற்றி, கோடைக்காலத்தில் நான்கு புறமும் நான்கு நெருப்புகளுக்கு மத்தியிலும், தலைக்கு மேலே சூரியனுடனும் மண்டூகம் என்றழைக்கப்படும் யோகத்தை முறையாகப் பயின்று,(9) வீராசனம் என்றழைக்கப்படும் மனோநிலையில் எப்போதும் அமர்ந்து, வெறும் பாறைகள் அல்லது வெறுந்தரையில் கிடந்து, அறத்தில் இதயத்தை நிலைநிறுத்தி, குளிர், நீர், நெருப்பு ஆகியனவற்றுக்கு அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.(10) அவர்கள் நீர், அல்லது காற்று, அல்லது பாசி ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும். அவர்கள் தங்கள் தானியங்களின் உமி நீக்க இரு கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களில் சிலர் அக்காரியத்திற்குத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். (வருங்காலத்திற்கு எதையும் சேமிக்காமல் இருப்பதற்காக) அவர்கள் எவ்வகைப் பாத்திரங்களையும் வைத்துக் கொள்வதில்லை.(11) சிலர் கந்தலாடைகளையோ, மரவுரிகளையோ, மான் தோல்களையோ உடுத்துகின்றனர். இவ்வாறே அவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கால அளவில் (சாத்திரங்களால் நிறுவப்பட்ட) விதிகளின் படி தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.(12) காடுகளில் இருக்கும் அவர்கள், காடுகளுக்குள்ளேயே திரிந்து, அவற்றுக்குள்ளேயே வாழ்ந்து, அவற்றுக்குள்ளேயே காணப்பட வேண்டும். உண்மையில் இந்தக் காட்டுத் துறவிகள் ஓர் ஆசானை அடைந்து அவர்களுடனே சீடனாக வாழ்கிறார்கள்.(13)
ஹோமச் சடங்குகளைச் செய்வதும், ஐந்து வேள்விகளைச் செய்வதும் அவர்களது கடமையாகும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி ஐந்து வேள்விகளை (குறித்த நேரத்தில்) பிரித்து முறையாகச் செய்து,(14) வேறு வேள்விகளிலும் அர்ப்பணிப்புடன், எட்டாவதாகச் சாதுர்மாஸ்யத்தைப் பின்பற்றி, பௌர்ணமாஸ்யம் மற்றும் பிற வேள்விகளையும் செய்து, நாள்தோறும் செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து வாழ்வதே(15) மனைவிகளிடம் இருந்து பிரிந்து, அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்த மனிதர்களின் கடமையாகும். உண்மையில் அவர்கள் இவ்வாறு காட்டில் வாழ வேண்டும்.(16) வேள்விக்கரண்டியும், நீர்க்கலனும் அவர்களுடைய முக்கியச் செல்வங்களாகும். அவர்கள் எப்போதும் மூன்று நெருப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அறவொழுக்கம் ஒழுகி, அறப்பாத்தையைப் பின்பற்றும் அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(17) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், வாய்மை அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான இம்முனிவர்கள், புனிதம் நிறைந்த பிரம்மலோகத்தையோ, நித்தியமான சோமலோகத்தையோ அடைகின்றனர்.(18) ஓ! மங்கலமான தேவி, காட்டுத் துறவிகளால் {வானப்பிரஸ்தர்களால்} பின்பற்றபடும் அறத்தின் வரையறைகளைச் சுருக்கமாகவும், அவற்றின் பல்வேறு நடைமுறைகளை விரிவாகவும் சொன்னேன்” என்றான்.(19)
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, ஓ! அனைவராலும் வழிபடப்படுபவரே, தவ வெற்றியை அடைய சாத்திரங்களைப் பின்பற்றும் முனிவர்க்கூட்டங்களின் அறம் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அதை எனக்குச் சொல்வீராக.(20) காடுகளில் வசித்து, வெற்றியைத் தரும் சாத்திரங்களை நல்ல திறனுள்ளவர்களாக இருக்கும் அவர்களில் சிலர் தாங்கள் விரும்பியபடி வாழ்ந்து, குறிப்பிட்ட நடைமுறைகளில் சுருங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர்; வேறு சிலர் மனைவிகளையும் கொள்கின்றனர். உண்மையில் அவர்களுக்கான நடைமுறைகள் எவ்வாறு விதிக்கப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டாள்.(21)
மஹாதேவன் {உமையிடம்}, “ஓ! தேவி, தலையை மழித்து, பழுப்பு {காவி} உடை தரித்தல் சுதந்திரமாகத் திரியும் துறவிகளின் குறியீடுகளாகும்; மணந்து கொண்ட மனைவிகளுடன் விளையாடுவோரின் குறியீடுகள் தங்கள் இரவுகளை இல்லங்களில் கழிப்பதில் அடங்குகின்றன.(22) ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடுவது இருவகையினருக்கும் கடமையாகும். பொதுவாக முனிவர்களால் செய்யப்படுவதைப் போலவே நீர் மற்றும் காட்டில் கிடைக்கும் கனிகள் ஆகியவற்றுடன் ஹோமம் செய்வது, திருமணம் செய்து கொண்ட துறவிகளுக்குப் பொருந்தும். தியான யோகத்திற்குள் ஈர்க்கப்படுவது, அறக்கடமைகளையும் (சாத்திரங்கள் மற்றும் வேதங்களில்) விதிக்கப்பட்டுள்ளவற்றையும் கடைப்பிடிப்பது, அவர்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட வேறு சில கடமைகளாகும்.(23) காட்டில் வசிக்கும் துறவிகள் தொடர்பாக முன்பு நான் சொன்ன கடமைகள் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். உண்மையில், அந்தக் கடமைகளைச் செய்தால், அவற்றைச் செய்பவர்கள் கடுந்தவங்களுக்குரிய வெகுமதிகளை அடைவார்கள்.(24) திருமண வாழ்வை வாழும் காட்டுத் துறவிகள் தங்கள் புலன்களின் நிறைவைத் தாங்கள் மணந்து கொண்ட மனைவியருடன் அடக்கிக் கொள்ள வேண்டும். மனைவிகளுக்குரிய பருவ காலங்களில் மட்டுமே அவர்களுடன் கலவியில் ஈடுபட்டு அவர்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும்.(25)
இந்த அறவோர் பின்பற்றும் அறமானது, முனிவர்களால் விதிக்கப்பட்டு அவர்களாலேயே பின்பற்றப்படுகிறது. அறம் ஈட்டுவதில் தங்கள் கண்களை நிலைக்கச் செய்யும் அவர்கள், கட்டுப்பாடற்ற பேராசையில் இன்ப நுகர் பொருட்கள் எதனையும் பின்தொடரக்கூடாது.(26) முற்றிலும் தீங்கற்ற தன்மையை உறுதிகூறும் கொடையை அனைத்து உயிரினங்களுக்குக் கொடுக்கும் மனிதனின் ஆன்மாவானது வன்மத்தில் இருந்தும் தீங்கிலிருந்தும் விடுபடுவதால் அவன் அறவோனாகிறான்.(27) உண்மையில், அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுபவனும், அனைத்து உயிரினங்களிடமும் முற்றிலும் நேர்மையாக நடந்து கொள்ளும் நோன்பைப் பின்பற்றுபவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்பவனுமான மனிதன் அறவோனாகிறான்.(28) வேதங்கள் அனைத்திலும் நீராடுபவன், அனைத்து உயிரினங்களுடனும் நேர்மையாக நடந்து கொள்பவன் ஆகிய இருவரும் பலனின் அளவில் சரிநிகராகவே பார்க்கப்படுகிறார்கள். ஒருவேளை பின்னவன் பலனின் அளவில் சிறிதளவு மேம்பட்டிருக்கக்கூடும்.(29)
நேர்மை அறமெனச் சொல்லப்படுகிறது; நேன்மையின்மை அல்லது கோணல்புத்தி மாறாக {மறமாகச்} சொல்லப்படுகிறது. நேர்மையாக நடந்து கொள்ளும் மனிதன் அறத்துடன் கூடியவனாகிறான் {அறவோனாகிறான்}.(30) நேர்மையான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதன், தேவர்களுக்கு மத்தியில் வசிப்பிடத்தை அடைவதில் வெற்றியடைகிறான். எனவே, அறப்பலனை அடைய விரும்பும் மனிதன் நேர்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.(31) மன்னிக்கும் இயல்பு, தற்கட்டுப்பாடு, முற்றாக அடக்கப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் கூடிய ஒருவன் வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகத் தன்னை அறத்தின் உடல்வடிவமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அத்தகைய மனிதன், அறக்கடமைகளை வெளிப்படுத்துவதைத் தவிர அறப்பலனையும் கொண்டவனாகிறான்.(32) தூக்கக்கலக்கம், தாமதம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், தன் சக்திக்குத் தக்க அறப்பாதையைப் பின்பற்றுபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதன், ஒழுக்கத்தூய்மை அடைந்து, வயதில் முதிர்ந்ததும் பிரம்மத்திற்கு இணையானவனாகக் கருதப்படுகிறான்” என்றான்.(33)
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! தேவா, தங்கள் ஆசிரமங்களில் பற்றுடையவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களுமான தவசிகள் கடமைகளின் எந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் பெருங்காந்தியை அடைவதில் வெல்கிறார்கள்?(34) மேலும் பெருஞ்செல்வத்தைக் கொண்ட மன்னர்களும், இளவரசர்களும், செல்வமில்லாத பிறரும் என்ன செயல்களைச் செய்வதன் மூலம் உயர்ந்த வெகுமதிகளை அடைவதில் வெல்கிறார்கள்?(35) ஓ! தேவா, காட்டில் வசிப்பவர்கள் என்ன செயல்களைச் செய்வதன் மூலம் நித்தியமான இடத்தை அடைவதிலும், தங்கள் மேனியில் தெய்வீக சந்தனத்தைப் பூசி அலங்கரித்துக் கொள்வதிலும் வெல்கிறார்கள்?(36) ஓ! முக்கண்களைக் கொண்ட சிறப்புமிக்கத் தேவா, ஓ! முந்நகரங்களை அழித்தவரே, தவங்களைச் செய்வது குறித்த மங்கல காரியம் குறித்த அனைத்தையும் விரிவாகச் சொல்வதன் மூலம் என் ஐயத்தை விலக்குவீராக” என்று கேட்டாள்.(37)
அந்தச் சிறப்புமிக்கத் தேவன், “புலனடக்கத்துடன் உண்ணாநோன்புகள் தொடர்பான நோன்புகளை நோற்பவர்கள், எந்த உயிரினத்திற்கு எவ்வகைத் தீங்கையும் இழைக்காதவர்கள், வாக்கில் வாய்மை பயில்பவர்கள் ஆகியோர் வெற்றியை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்ந்து, அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டு, கந்தர்வர்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பார்கள்.(38) மண்டூக யோகம் தொடர்புடைய மனோநிலையுடன் கிடப்பவனும், முறையான விதிகளின்படி பலன்மிக்கச் செயல்களைச் செய்து தீக்ஷை எடுத்தவனுமான அறவோன், மறுமையில் நாகர்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பார்கள்.(39) மான்களின் துணையுடன், அவற்றின் வாய்களில் இருந்து விழும் புற்களையும், காய்கறிகளையும் உண்டு தீக்ஷை எடுத்துக் கொண்டு அவை தொடர்பான கடமைகளைக் கவனிப்பவர்கள் அமராவதியை (இந்திரனின் மாளிகைகளை) அடைவதில் வெல்கிறார்கள்.(40)
பாசிகளைத் திரட்டி, மரங்களின் உதிர்ந்த இலைகளை எடுத்து அவற்றை உண்டு வாழ்ந்து, குளிரின் கடுமைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன் மிக உயர்ந்த இடத்தை அடைவான்.(41) காற்றையோ, நீரையோ, கனிகளையோ, கிழங்குகளையோ உண்டு வாழும் மனிதன், மறுமையில் யக்ஷர்களின் செழிப்பை அடைந்து, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த அப்சரஸ்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பான்.(42) விதிகளில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி பனிரெண்டு ஆண்டுகள் கோடைக்காலத்தில் ஐந்து நெருப்புகளைத் தாங்கும் நோன்பைப் பயிலும் ஒருவன் தன் மறுபிறவியில் ஒரு மன்னனாகப் பிறக்கிறான்.(43) உணவு குறித்த நோன்புகளை நோற்று, பனிரெண்டு வருடங்கள் தவம்பயின்று, தடையெச்சப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களையும் முறையாகக் கடைபிடித்து வாழ்பவன் தன் மறுபிறவியில் பூமியின் ஆட்சியாளனாவான்.(44) ஆகாயத்தையே மேற்கூரையாகக் கொண்ட உறைவிடத்தில் வெறுந்தரையில் அமர்ந்து, கிடப்பவன், அனைத்து உணவையும் தவிர்த்து தன் உடலைக் கைவிடும்போது சொர்க்கத்தின் பேரின்பத்தை அடைகிறான்.(45)
ஓ! மங்கையே, (வானத்தை {மேற்கூரையாகக் கொண்ட இடத்தை} மட்டுமே தன் உறைவிடமாகக் கொண்டு) வெறுந்தரையில் அமர்ந்து, கிடப்பவன், சிறந்த வாகனங்கள், படுக்கைகள், சந்திரப்பிரகாசத்துடன் கூடிய விலைமதிப்புமிக்க மாளிகைகள் ஆகியவற்றை வெகுமதிகளாக அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எளிய உணவை உண்டு, பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்று தன்னைச் சார்ந்தே வாழும் மனிதன், உணவனைத்தையும் கைவிட்டு தன் உடலைக் கைவிடும்போது, சொர்க்கத்திற்கு உயர்வதில் வென்று, அதன் இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான். தன்னை மட்டுமே முழுமையாகச் சார்ந்து வாழ்ந்த மனிதன், தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைப் பனிரெண்டு வருடங்கள் பயின்று, இறுதியாகப் பெருங்கடலில் தன்னுடலைக் கைவிட்டால், அவன் தன் மரணத்திற்குப் பிறகு வருணலோகத்தை அடைகிறான். முற்றிலும் தன்னை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, பனிரெண்டு வருட தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைச் செய்து,(46-49) கூரிய கல்லால் தன் பாதத்தையே துளைத்துக் கொள்ளும் மனிதன் குஹ்யலோகத்தின் இன்பத்தை அடைவதில் வெல்கிறான். சுயத்தின் துணையுடன் சுயத்தை விளைவிப்பவனும், (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும்,(50) தீக்ஷைக்குப் பிறகு பனிரெண்டு ஆண்டு ஒழுக்கமாக மனத்தில் இவற்றை நோற்பவன், சொர்க்கத்தை அடைந்து, தேவர்களைத் துணையாக அடைந்து இன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பான்.(51)
முற்றிலும் தன்னையே சார்ந்திருந்து, தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைப் பனிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி, இறுதியாகத் தேவர்களுக்குக் காணிக்கையாகத் தன்னுடலை நெருப்பில் கைவிடுபவன், பிரம்மலோகத்தை அடைந்து அங்கே உயர்வாக மதிக்கப்படுகிறான்.(52) ஓ! தேவி, பனிரெண்டு வருடங்கள் தீக்ஷை கடமைகளைப் பின்பற்றி, தன் புனித நெருப்பை ஒரு மரத்தில் வைத்துவிட்டு, உரிய தீக்ஷை பெற்றவனும், புலனடக்கத்துடன் கூடியவனுமான ஒரு மறுபிறப்பாளன், சுயத்தைச் சுயத்தில் வைத்து மமதையில் இருந்து விடுபட்டு, அறம் ஈட்ட விரும்பி, தன் உடலை மறைக்காமல் புறப்பட்டு, வீரர்கள் செல்லும் பாதையில் நடந்து (கிடப்பதற்குரிய காலம் வரும்போது) வீரர்களின் இயல்புக்கேற்றபடி கிடந்து, வீரர்களின் ஒழுக்கப்படியே வாழ்ந்தால், அவன் நிச்சயம் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட கதியை அடைவான்[2].(53-55) அத்தகைய மனிதன் சக்ரனின் {இந்திரனின்} நித்திய உலகத்திற்குச் சென்று தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையைப் பெற்று, தெய்வீக மலர்மாலைகளையும், தெய்வீக நறுமணப்பொருட்களையும் தரித்துக் கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(56)உண்மையில், அறம் சார்ந்த ஆன்மா கொண்ட மனிதன், தேவர்களைத் தன் துணைவர்களாக அடைந்து, சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறான். வீரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றும் வீரனும், வீரர்களுக்குரிய யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவனும்,(57) அனைத்தையும் துறந்து, நல்லியல்பின் நடைமுறைகளைப் பயின்று வாழ்பவனும், புலனடக்கத்துடன் கூடியவனாகத் தீக்ஷை பெற்று உடலிலும், மனத்திலும் தூய்மையை அடைந்தவனுமான ஒருவன், வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையை நிச்சயம் அடைவான். நித்தியமான இன்பலோகங்கள் அவனுடையவையாகும்.(58) சாரதியின் விருப்பப்படி செல்லும் தேரைச் செலுத்திக் கொண்டு இன்பலோகங்கள் அனைத்திலும் அவன் தன் விருப்பப்படி திரிந்து வருவான். உண்மையில் அருளப்பட்ட மனிதன், சக்ரனின் உலகங்களில் வசித்து, துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு எப்போதும் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருப்பான்” என்றான் {சிவன்}.(59)
பிராமணத்தன்மை கொண்ட சூத்திரன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 143-ஒருவன் தன் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு மேன்மையுறவோ, தாழ்ந்த நிலைக்கு வீழ்வதோ நேரும் சூழ்நிலைகளை உமைக்குச் சொன்ன சிவன்…
கர்மபலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 144-கர்மபலன்கள் வெளிப்படும் போக்கு மற்றும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவதற்கான வழிகள் ஆகியவற்றைக் குறித்து உமைக்குச் சொன்ன சிவன்…
தர்மப் பாதை! – அநுசாஸனபர்வம் பகுதி – 145-சொர்க்கத்தை வெல்லும் மனோநிலை, ஒழுக்கம், செயல்கள் மற்றும் கொடைகள்; ஞானத்தை அடையச் செய்யும் செயல்கள்; நன்மைக்கு வழிவகுக்கும் செயல்கள்; பல்வேறு இயல்புகளை உண்டாக்கும் செயல்கள் ஆகியவை குறித்த உமையின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிவன்…
ஸ்திரீ தர்மம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 146-உமையிடம் பெண்களின் அறம் குறித்துக் கேட்ட சிவன்; ஆறுகளிடம் ஆலோசனை கேட்ட உமை; உமையை உரைக்கும்படி கங்கை கோரியது; பெண்களின் அறம் குறித்து சிவனுக்குச் சொன்ன உமை…
பிரம்மனின் பத்தினி {கற்புடை மனைவி} சாவித்திரி ஆவாள்.
இந்திரனின் பத்தினி சச்சி ஆவாள்.
மார்க்கண்டேயரின் மனைவி தூமோர்ணை ஆவாள்.
(மன்னன்) வைஸ்ரவணனின் {குபேரனின்} மனைவி ருத்தி ஆவாள்.(4)
வருணனின் மனைவி கௌரி ஆவாள்.
சூரியனின் மனைவி ஸுவர்ச்சலை ஆவாள்.
சசியின் {சந்திரனின்} மனைவி ரோஹிணி ஆவாள்.
விபாவசுவின் {அக்னியின்} மனைவி ஸ்வாஹாதேவி ஆவாள்.(5)
கசியபரின் மனைவி அதிதி ஆவாள்.
இவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கணவர்களையே தங்கள் தேவர்களாகக் கருதுகிறார்கள். ஓ! தேவி, நீ நாள்தோறும் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறாய்.(6)
வாசுதேவ மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 147-வாசுதேவனின் மகிமையையும், பலராமனின் பெருமையையும் முனிவர்களுக்குச் சொன்ன சிவன்…
நரநாராயணர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 148-கிருஷ்ணனின் மகிமையையும், அர்ஜுனனின் திறமையையும் சொல்லி துரியோதனனுக்காக வருந்திய பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அதன்பிறகு, தேவர்களுக்குத் தேவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த யது குலக் கொழுந்துக்கு அந்தப் பெரும் முனிவர்கள் தலைவணங்கினர். பிறகு அவனை வலம் வந்த அவர்கள், அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.(18) செழிப்பையும், சுடர்மிக்கப் பிரகாசத்தையும் கொண்ட நாராயணன், தன் நோன்பை முறையாக நோற்று துவாரகைக்குத் திரும்பினான்.(19) கருவுற்ற அவனுடைய மனைவி ருக்மிணிக்கு, பத்தாம் மாதம் முடிந்ததும், பெரும் வீரத்தையும், அற்பத சாதனைகளுக்காக அனைவரும் தரும் மதிப்பையும் கொண்ட ஒரு மகன் பிறந்தான்.(20) அவன், ஒவ்வொரு உயிரினத்திலும் இருப்பதும், இருப்பிலுள்ள ஒவ்வொரு நிலையையும் ஊடுருவவல்லதுமான காமத்துடன் (ஆசையுடன் / காமனுடன் / மன்மதனுடன்) அடையாளம் காணப்படுபவனாக இருந்தான். உண்மையில் அவன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களில் உலவிக் கொண்டிருக்கிறான்.(21)
இந்தக் கிருஷ்ணனே அனைவரிலும் முதன்மையானவன். மேகவண்ணம் கொண்ட இவனே நான்கு கரங்களைக் கொண்ட வாசுதேவனாவான். அன்பின் மூலம் அவன் பாண்டவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான். பாண்டவர்களான நீங்களும் அவ்வாறே அவனுடன் இணைந்தீர்கள்.(22) சாதனைகள், செழிப்பு, புத்தி, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதை ஆகிய அனைத்தும், மூன்று அடிகளை வைத்த சிறப்புமிக்க விஷ்ணுவான இவன் இருக்கும் இடங்களில் இருக்கும்.(23) இந்திரனைத் தலைமையில் கொண்ட முப்பத்துமூன்று தேவர்கள் இவனே. இதில் ஐயமேதும் இல்லை. இவன் ஒரு புராதன தேவனாவான். இவன் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். இவன் அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாவான்.(24) இவன் தொடக்கமும், அழிவும் இல்லாதவனாவான். இவன் வெளிப்படாதவனாவான் {அறிவுக்கு எட்டாதவன் ஆவான்}. இவனே உயர் ஆன்ம மதுசூதனனாவான். வலிமையும், சக்தியும் கொண்ட இவன், தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுவதற்காக (மனிதர்களின் மத்தியில்) பிறந்திருக்கிறான்.(25)
உண்மையில் இந்த மாதவன், செல்வம் தொடர்புடைய மிகக் கடினமான உண்மைகளை விளக்குபவனும், அஃதை அடைபவனுமாவான். ஓ!பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரனே}, நீ உன் பகைவர்களிடம் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பற்றவையாக இருக்கும் உன் சாதனைகள்,(26) மொத்த பூமியிலும் நீ அடைந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் ஆகிய அனைத்தும் நாராயணன் உன் தரப்பை அடைந்ததாலேயே கிடைத்தன.(27) எண்ணிப்பார்க்கமுடியாத நாராயணனையே உன் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் அடைந்தாயே, போரெனும் சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளாகப் பெரும் மன்னர்கள் கூட்டத்தை ஊற்றும் அதர்யுவாக உன்னால் இயன்றது. இந்தக் கிருஷ்ணனே, யுகத்தின் முடிவில் தோற்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்புக்கு ஒப்பான பெரும் வேள்விக் கரண்டியானான்.(28) கோபத்தால் தூண்டப்பட்டு ஹரியுடனும், காண்டீவதாரியுடனும் போர் செய்த துரியோதனன், அவனுடைய மகன்கள், அவனது சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர் ஆகியோர் பரிதாபத்திற்குரியவர்களே.(29) பேருடல் படைத்தவர்களும், பெரும்பலம் கொண்டவர்களுமான திதியின் மகன்கள் பலரும், தானவர்களில் முதன்மையானோர் பலரும், காட்டு நெருப்பில் பூச்சிகளைப் போலக் கிருஷ்ணனின் சக்கர {சக்ராயுத} நெருப்பில் அழிந்து போனார்கள்.(30) ஓ! மனிதர்களில் புலியே, பலமும், வலிமையுமற்ற மனிதர்கள் கிருஷ்ணனை எதிர்த்துப் போரிட எவ்வளவு இயதாவர்களாக இருந்திருக்க வேண்டும்.(31)
ஜெயனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரையில் அவன் சக்தியில் அனைத்தையும் அழிக்கும் யுக நெருப்புக்கு ஒப்பான விலிமைமிக்க யோகியாவான். இரு கரத்தாலும் வில்லை இழுக்க வல்ல அவன் படையின் முன்னணியிலேயே எப்போதும் இருந்தான். ஓ! மன்னா, அவனது சக்தியாலேயே, சுயோதனனின் துருப்பினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.(32) கொடி மரச் சின்னத்தில் காளைமாட்டைக் கொண்ட மஹாதேவன் {விருஷபத்வஜன்} இமயச் சாரலில் உள்ள தவசிகளுக்குச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அவன் சொன்னதே ஒரு புராணமாகும்.(33) அர்ஜுனனில் உள்ள முன்னேற்றம், பெருமை, சக்தி, பலம், ஆற்றல், வலிமை, பணிவு, குலம் ஆகியன கிருஷ்ணனிடம் வசிக்கும் அக்குணங்களில் மூன்றில் ஒரு பகுதியின் அளவை எட்டும்.(34) கிருஷ்ணனின் இக்குணங்களைக் கடக்க யாரால் முடியும்? அது சாத்தியமா இல்லையா என்பதைக் கேட்பாயாக (கேட்ட பிறகு தீர்மானிப்பாயாக). எங்கே கிருஷ்ணன் இருப்பானோ அங்கே ஒப்பற்ற சிறப்புகள் {பெருமைகள்} இருக்கும்.(35)
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அற்ப புத்தி கொண்ட மனிதர்களாக இருந்தோம். பிறரின் விருப்பங்களைச் சார்ந்திருந்த நாங்கள் பெருங்கெடுபேற்றைப் பெற்றிருந்தோம். அறிந்தே நாங்கள் நித்தியமான மரணப் பாதையில் நடந்தோம்.(36) எனினும் நீ நேர்மையான ஒழுக்கத்தில் அர்ப்பணிப்புடன் இருந்தாய். உன் நாட்டை ஏற்பதற்கு எதிராக உறுமொழியேற்ற நீ உன் உறுதிமொழியைக் காக்க விரும்பி அதை எடுக்காமலேயே இருந்தாய்[3].(37) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ போர்க்களத்தில் உன் உற்றார் உறவினரையும், நண்பர்களையும் அதிகமாகக் கொன்றுவிட்டாய் என நினைக்கிறாய் (அவ்வாறு நீ நம்புகிறாய்). எனினும், ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, உறுதிமொழியை மீறுவது தகாதது என்பதை நீ நினைவுகூர வேண்டும்[4].(38) போர்க்களத்தில் வீழ்ந்தவர் அனைவரும் காலத்தாலேயே உண்மையில் கொல்லப்பட்டனர். காலமே உண்மையில் அனைத்திலும் பலமிக்கதாகும்.(39) காலத்தின் வலிமையை நீ முழுமையாக அறிவாய். காலத்தினால் பீடிக்கப்பட்டிருப்பதால் வருந்துவது உனக்குத் தகாது. ஹரி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படும் இந்தக் கிருஷ்ணனே, குருதிச் சிவப்பான கண்களுடனும், கையில் தண்டத்துடனும் கூடிய காலமாக இருக்கிறான் என்பதை அறிவாயாக.(40)
ஓ! குந்தியின் மகனே, இந்தக் காரணங்களினால் நீ உன் (உன்னால் கொல்லப்பட்ட) உறவினர்களுக்காக வருந்துதல் தகாது. ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீ எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டிருப்பாயாக.(41) நீ மாதவனின் மகிமையையும், பெருமையையும் என்னால் உரைக்கப்பட்டபடியே கேட்டாய். ஒரு நல்ல மனிதன் அவனைப் புரிந்து கொள்ள இயல இது போதுமானதாகும்.(42) வியாசர் மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாரதரின் சொற்களையும் கேட்டு கிருஷ்ணனின் துதிக்கத்தக்க தன்மையை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். நானும் என் ஞானத்திலிருந்து சிலவற்றை அந்த உரையில் சேர்த்திருக்கிறேன்.(43) உண்மையில் நான் (இமயச் சாரலில்) முனிவர்களின் கூட்டத்திடம் மஹாதேவன் உரைத்த கிருஷ்ணனின் அளவு கடந்த மகிமையையும் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ! பாரதா, மஹேஸ்வரனுக்கும், இமயவான் மகளுக்கும் இடையில் நடந்த உரையாடலும் என்னால் உனக்குச் சொல்லப்பட்டது.(44)
ஒரு முதன்மையான மனிதனிடம் இருந்து வெளிவரும் அந்த உரையாடலை மனத்தில் தாங்கிக் கொள்பவனும், அதைக் கேட்பவனும், (வேறு மக்கள் கேட்பதற்கு) அதை மீண்டும் உரைப்பவனும், உயர்ந்த நன்மைகளை வெல்வது உறுதி.(45) அம்மனிதன் தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைவதைக் காண்பான். இந்த உலகத்தில் இருந்து செல்லும் அவன் சொர்க்கத்திற்கு உயர்வான். இதில் ஐயமேதும் இல்லை.(46) தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன் தன்னை ஜனார்த்தனனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.(47) ஓ! குருக்களின் மன்னா, கடமை மற்றும் அறம் குறித்து மஹேஸ்வரனால் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகளை நீ எப்போதும் மனத்தில் கொள்வாயாக.(48) இந்தப் பணிப்பாணைகளின் படி நீ உன்னை ஒழுங்கமைத்துக் கொண்டால், நீ முறையாகத் தண்டக் கோலைத் தாங்கினால், முறையாக உன் குடிமக்களைப் பாதுகாத்தால் நிச்சயம் நீ சொர்க்கத்தை அடைவாய்.(49) ஓ! மன்னா, அறத்தின் அணைகளின் படி எப்போதும் குடிமக்களைப் பாதுகாப்பதே உனக்குத் தகும். மன்னன் தாங்கும் தண்டனைக்குரிய பருத்த கோல் {தண்டக்கோல்} அறம் அல்லது பலனின் உடல்வடிவமாகச் சொல்லப்படுகிறது[5].(50)சங்கரன் மற்றும் உமைக்கிடையிலான அறம் நிறைந்ததும், அறம்சார்ந்த கூட்டத்திற்கு முன்பு நான் உரைத்ததுமான இந்த உரையாடலைக் கேட்கும் ஒருவன், கொடியில் காளைமாட்டைத் தன் சின்னமாகக் கொண்ட தேவனை மதிப்புடன் வணங்க வேண்டும்.(51) அந்த உரையாடலைக் கேட்க விரும்பும் ஒருவனும் மதிப்புடன் மஹாதேவனை வணங்க வேண்டும். உண்மையில், தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், தூய இதயத்துடன் மஹாதேவனைத் துதிக்க வேண்டும்.(52) இதுவே களங்கமற்றவரும், உயர் ஆன்மா கொண்டவருமான நாரதரின் ஆணையாகும். அவரும் பெருந்தேவனை வழிபடுவது குறித்து ஆணையிட்டிருக்கிறார். ஓ! பாண்டுவின் மகனே, நாரதரின் ஆணைக்குக் கீழ்ப்படிவாயாக.(53) ஓ!பலமிக்க மன்னா, ஓ! குந்தியின் மகனே, புனிதமான இமயச் சாரலில் வாசுதேவனுக்கும், ஸ்தாணுவுக்கும் இடையில் நடந்த அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் இவையே ஆகும். அந்த நிகழ்வுகள் அந்த உயர் ஆன்ம தேவர்களின் இயல்பிலிருந்தே உண்டாகின.(54) காண்டீவதாரியுடன் கூடிய வாசுதேவன் பதரி ஆசிரமத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் நித்திய தவங்களைப் பயின்று வந்தான்[6].(55)உண்மையில், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட வாசுதேவன் மற்றும் தனஞ்செயன் ஆகிய இருவரும் மொத்தமாக மூன்று யுகங்கள் கடுந்தவமிருந்தனர். ஓ! மன்னா, நான் இதை நாரதர் மற்றும் வியாசரிடம் இருந்து அறிந்து கொண்டேன்.(56) தாமரைக் கண்ணனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான வாசுதேவன், (மனித வடிவில்) பிள்ளையாக இருக்கும்போதே தன் உறவினர்களின் விடுதலைக்காகக் கம்சனைக் கொன்ற பெருஞ்சாதனையைச் செய்திருக்கிறான்.(57) ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, புராதனமானவனும், நித்தியமானவனுமான இவனது சாதனைகளைப் பட்டியலிட நான் துணியேன்.(58) ஓ! மகனே, அனைவரிலும் முதன்மையான வாசுதேவனை உற்ற நண்பனாகக் கொண்டிருக்கும் நீ, நிச்சயம் உயர்ந்த பெரிய நன்மைகளை அறுவடை செய்வாய்.(59) தீயவனான துரியோதனன் சென்றிருக்கும் அடுத்த உலகத்தைப் பொறுத்தவரையிலும் கூட (அவன் அடைந்த மறுமையிலும்) அவனுக்காக நான் வருத்தமே அடைகிறேன். அவனுக்காகவே இந்த மொத்த பூமியும், குதிரைகளும், யானைகளுமற்றதானது.(60) உண்மையில், துரியோதனன், கர்ணன், சகுனி, நான்காவதாகத் துச்சாசனன் ஆகியோரின் குற்றத்தாலேயே குருக்கள் அழிந்தனர்” {என்றார் பீஷ்மர்}”.(61)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மனிதர்களில் முதன்மையானவரான கங்கையின் மைந்தர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, (பீஷ்மரின் உரையாடல்களைக் கேட்பதற்காகக் கூடியிருந்த) உயர் ஆன்ம மனிதர்களின் மத்தியில் குரு மன்னன் (யுதிஷ்டிரன்) முற்றான அமைதியுடன் இருந்தான்.(62) திருதராஷ்டிரனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருந்த மன்னர்கள் அனைவரும், குரு பாட்டனின் {பீஷ்மரின்} சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் தங்கள் மனங்களில் கிருஷ்ணனை வழிபட்டு, மதிப்புடன் கரங்களைக் கூப்பியபடி அவனை நோக்கித் திரும்பினர்.(63) நாரதரைத் தங்கள் தலைமையில் கொண்டிருந்த முனிவர்களும் பீஷ்மரின் சொற்களை ஏற்று, மெச்சி, மகிழ்ச்சியுடன் அவற்றை அங்கீகரித்தனர்.(64) பாண்டுவின் மகனும் (யுதிஷ்டிரனும்), அவனுடைய தம்பிகள் அனைவரும் இன்பமாகக் கேட்ட பீஷ்மரின் அற்புத உரையாடல்கள் இவையே.(65) சிறிது நேரம் கழித்து, தாம் செய்த வேள்விகளில் பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வக் கொடைகளை அளித்த கங்கையின் மைந்தன் ஓய்வெடுத்து, புத்துணர்ச்சி அடைந்திருப்பதை மன்னன் யுதிஷ்டிரன் கண்டபோது, அந்தப் புத்திசாலி மன்னன் மீண்டும் அவரிடம் பின்வருவனவற்றைக் கேட்டான்”.(66)
ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ரநாமம் – விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 149-விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்{ அந்தப் பெயர்களைச் சொல்வதாலோ, கேட்பதாலோ கிட்டும் பலன்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடமைகள் அனைத்தையும், புனிதச் செயல்கள் அனைத்தையும், மனிதர்களின் பாவங்களைத் தூய்மையாக்கும் பொருட்களையும் முழுமையாகக் கேட்ட யுதிஷ்டிரன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} மீண்டும் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம்? நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம்? எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்?(2) உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது? எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தளர்வனைத்தையும் வீசியெறிந்துவிட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லையற்றவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3) மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும், அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும், தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6) உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும், அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும், அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7) என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும் அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)
உயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9) புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே. தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10) தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின. யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11) ஓ! மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக, அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12) முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்[2][3].(13)
அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்}, அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு}, வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்}, கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்}, அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்}, அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா}, அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்}<1-9>;(14)
தூய ஆன்மா கொண்டவன் {பூதாத்மா}, உச்சமான உயர்ந்த ஆன்மா {பரமாத்மா}, விடுதலையடைந்த {முக்தியடைந்த} மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக இருப்பவன் {முக்தாநாம்பரமாகதி}, மாற்றமற்றவன் {அவ்யயன்}, உறைக்குள் மறைந்து கிடப்பவன் {புருஷன்}, சான்றாளன் {ஸாக்ஷீ}, தான் வசிக்கும் உடல் உறையை அறிந்தவன் {க்ஷேத்ரஜ்ஞன்}, அழிவற்றவன் {அக்ஷரன்}<10-17>;(15)
யோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்}, யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா}, பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்}, சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு}, அழகிய சிறப்புக்கூறுகளையும், செய்கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அழகுமயிர் படைத்தவன்{கேசவன்}, புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்}<18-24>;(16)
அனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்}, அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்}, சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்}, அசைவற்றவன் {ஸ்தாணு}, அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி}, அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்}, மாற்றமில்லாதவன் {ஸம்பவன்}, விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்) கனியச் செய்பவன் {பர்த்தா}, அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு}, அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்}<25-37>;(17)
தானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ}, தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு}, சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்}, தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்}, உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்}, தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்}, (அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா}, பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்}<38-46>;(18)
அளவற்றவன் {அப்ரமேயன்}, புலன்களின் தலைவன் (அல்லது சுருள் மயிர்க் கொண்டவன்) {ஹ்ருஷீகேசன்}, தொடக்கக் காலத் தாமரை உதித்த உந்தி கொண்டவன் {பத்மநாபன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {அமரப்ரபு}, அண்டத் தச்சன் {விஸ்வகர்மா}, மந்திரமாக இருப்பவன் {மநு}, அனைத்துப் பொருட்களையும் பலவீனப்படுத்துபவன், அல்லது மெலியச் செய்பவன் {த்வஷ்டா}, மிகப் பெரியவன் {ஸ்தவிஷ்டன்}, புராதனமானவன் {ஸ்தவிரன்}, தாங்கி நிலைத்திருப்பவன் {த்ருவன்/துருவன்} <47-56>;(19)
(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்}, நித்தியமானவன் {சாஸ்வதன்}, கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்}, அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்}, அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்}, ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா}, தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்}, மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்}<57-64>;(20)
அனைத்து உயிரினங்களையும் அனைத்துச் செயல்களையும் செய்யத் தூண்டுபவன் {ஈசாநன்}, செயல்படுவதற்கான உயிர்மூச்சை உண்டாக்குபவன் {{ப்ராணதப்ராணன்}, அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்பவன் {ஜ்யேஷ்டன்}, மூத்தவன் {ஸ்ரேஷ்டன்}, உயிரினங்களின் தலைவர்களாகக் கருதப்படுவோர் அனைவரிலும் முதன்மையானவன் {ப்ரஜாபதி}, பொன்னையே தன் வயிறாகக் கொண்டவன் {ஹிரண்யகர்ப்பன்}, பூமியை வயிறாக் கொண்டவன் {பூகர்ப்பன்}, ஸ்ரீ அல்லது லட்சுமியின் தலைவன் {மாதவன்}, மதுவைக் கொன்றவன் {மதுஸூதநன்}<65-73>;(21)
எல்லாம் வல்லவன்{ஈஸ்வரன்}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, வில் தரித்தவன் {தந்வீ}, ஆய்வுகள் அனைத்தின் உள்ளடக்கத்தையும் மனத்தில் கொள்ளவல்லவன் {மேதாவீ}, கருடனைச் செலுத்திக் கொண்டு அண்டத்தில் திரிபவன் {விக்ரமன்}, தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளுக்குத் தகுந்தவனாகவும் அவற்றை முறையாக அனுபவிக்கும் சக்தி கொண்டவனாகவும் இருப்பவன் {க்ரமன்}, ஒப்பற்றவன் {அநுத்தமன்}, குழப்பமடையாதவன் {துராதர்ஷன்}, செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, அனைத்துச் செயல்களுடன் அடையாளங்காணப் படுபவன் {க்ருதி}, தன் உண்மையான சுயத்தையே சார்ந்திருப்பவன் {ஆத்மவாந்}<74-84>;(22)
தேவர்கள் அனைவரின் தலைவன் {ஸுரேசன்}, அனைத்தின் புகலிடமாக இருப்பவன் {சரணன்}, உயர்ந்த இன்பத்தின் உடல் வடிவம் {சர்ம}, அண்டத்தின் வித்தாக இருப்பவன் {விஸ்வரேதஸ்}, அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமாக இருப்பவன் {ப்ரஜாபவன்}, (அறியாமை உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவனை விழிப்படையச் செய்பவனாக இருக்கும் விளைவால்) பகலாக இருப்பவன் {அஹஸ்}, ஆண்டாக இருப்பவன் {ஸவம்த்ஸரன்}, (பிடிக்கப்பட முடியாதவனாக இருப்பதால்) பாம்பாக இருப்பவன் {வியாளன்}, திட நம்பிக்கையின் உடல்வடிவமாக இருப்பவன் {ப்ரத்யயன்}, அனைத்தையும் காண்பவன் {ஸர்வதர்சநன்}<85-94>;(23)
பிறப்பற்றவன் {அஜன்}, அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஸ்வரன்}, வெற்றி அடைந்தவன் {ஸித்தன்}, வெற்றி {ஸித்தி}, (அனைத்துப் பொருட்களுக்கும் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களின் தொடக்கமாக இருப்பவன் {ஸர்வாதி}, சிதைவைக் கடந்தவன் {அச்யுதன்}, மூழ்கிய பூமியை உயர்த்திய பெரும்பன்றி மற்றும் காளைமாட்டின் வடிவில் அறமாக இருப்பவன் {வ்ருஷாகபி}, அளவற்ற ஆன்மா கொண்டவன் {அமேயாத்மா}, அனைத்து வகைக் கலவிகளில் இருந்தும் தனித்து நிற்பவன்{ஸர்வயோகவிநிஸ்ருதன்}<95-103>;(24)
வசுக்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு மத்தியில் பாவகனாக இருப்பவன் (அல்லது தன்னை வழிபடுபவர்களிடம் வசிப்பவன்) {வஸு}, கோபம், வெறுப்பு, செருக்கு மற்றும் பிற தீய உணர்வுகளில் இருந்து விடுபட்டிருக்கும் தயாள ஆன்மா கொண்டவன் {வஸுமநஸ்}, வாய்மையாக இருப்பவன் {ஸத்யன்}, தன்னை வழிபடுபவர்களால் அளக்கப்படுபவன் {ஸமாத்மா}, தன் நடுநிலையின் விளைவால் ஒரே தன்மையிலான ஆன்மாவைக் கொண்டவன் {ஸம்மிதன்}, மாற்றம் அல்லது சீர்திருத்தங்கள் அனைத்தையும் கடந்து எப்போதும் சமமாக இருப்பவன் {ஸமன்}, தன்னை வழிபடுபவர்களின் விருப்பங்களை அருள ஒருபோதும் மறுக்காதவன் {அமோகன்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {புண்டரீகாக்ஷன்}, அறத்தின் மூலம் எப்போதும் தனிச்சிறப்புடன் கூடிய செயல்களைச் செய்பவன் {விருஷகர்மா}, அறத்தின் வடிவமாக இருப்பவன் {வ்ருஷாக்ருதி}<104-113>;(25)
அனைத்து உயிரினங்களையும் (அல்லது அவற்றின் துன்பங்களை) அழிப்பவன் {ருத்ரன்}, பல தலைகளைக் கொண்டவன் {பஹுசிரஸ்}, அண்டத்தைத் தாங்குபவன் {பப்ரு}, அண்டத்தின் பிறப்பிடமாக இருப்பவன் {விஸ்வயோநி}, தூய அல்லது களங்கமற்ற புகழைக் கொண்டவன் {சுசிஸ்ரவஸ்}, அழிவற்றவன் {அம்ருதன்}, நித்யமாக நிலைத்திருப்பவன் {சாஸ்வதஸ்தாணு}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் (அல்லது சிறந்த செயல்களைச் செய்பவர்களுக்கு எழுச்சி தருபவன்) {வராரோஹன்}, அண்டத்தில் உண்டாகி வெளிவரும் பிருக்ருதியைக் கலங்கடிக்க இயன்ற குறியீடுகளைக் கொண்ட தவங்களின் அறிவைக் கொண்டவன் {மஹாதபஸ்}<114-122>;(26)
எங்கும் செல்பவன் (அனைத்துப் பொருட்களின் காரணியாக அவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவன்) {ஸர்வகன்}, அனைத்தும் அறிந்தவன் {ஸர்வவித்}, மாற்றமற்ற ஒளியாகச் சுடர்விடுபவன் {பாநு}, (பக்தர்களின் வடிவில்) எங்கும் தன் துருப்பினரைக் கொண்டவன் (அல்லது எவனைக் கண்டால் தானவத் துருப்புகள் அனைத்துத் திசைகளிலும் சிதறுமோ அவன்) {விஷ்வக்ஸேநன்}, அனைவராலும் விரும்பப்படுபவன் (அல்லது வேண்டப்படுபவன்) (அல்லது தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன்) {ஜநார்த்தநன்}, வேதமாக இருப்பவன் {வேதன்}, வேதங்களை அறிந்தவன் {வேதவித்}, வேதங்களின் அங்கங்கள் (அல்லது கிளைகள்) அனைத்தையும் அறிந்தவன் {அவ்யங்கன்}, வேதங்களின் அங்கங்களை (துணை அறிவியல்கள் அனைத்தையும்) பிரதிபலிப்பவன் {வேதாங்கன்}, வேத விளக்கங்களைத் தீர்மானிப்பவன் {வேதவித்}, ஞானத்தில் தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவன் {கவி}<123-133>;(27)
உலகங்கள் அனைத்திலும் ஆளுமை கொண்டவன் {லோகாத்யக்ஷன்}, தேவர்களிடம் ஆளுமை கொண்டவன் {ஸுராத்யக்ஷன்}, (ஒன்றையோ, மற்றொன்றையோ நாடுபவர்களுக்கான கனிகளைக் கொடுப்பதற்கு) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கண்காணிப்பவன் {தர்மாத்யக்ஷன்}, விளைவாகவும் {காரியமாகவும்}, காரணமாகவும் இருப்பவன் (அல்லது பிரகிருதியைக் கடந்திருக்கும் விளைவால் முன்நிகழ்வுகளில் செய்யப்பட்ட எந்தச் செயல்களாலும் தன் வாழ்வு தீர்மானிக்கப்படாதவன்) {க்ருதாக்ருதன்}, (அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன், வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டதன் விளைவால்) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, (மேற்கண்ட) நான்கு வடிவங்களில் அறியப்படுபவன் {சதுர்வ்யூஹன்}, (அசுரத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையுடன் கூடிய மனித வடிவத்தை அவன் ஏற்ற போது தோன்றிய) நான்கு கொம்புகளைக் கொண்டவன் {சதுர்த்தம்ஷ்ட்ரன்}, (சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்வதற்கான) நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்புஜன்}<134-141>;(28)
பிரகாசத்தால் சுடர்விடுபவன் {ப்ராஜிஷ்ணு}, உணவுக்கொடையாளி {போஜநன்}, நல்லோரைப் பேணிவளர்ப்பவன் {போக்தா}, தீயோரைப் பொறுத்துக் கொள்ளாதவன் (அல்லது தன் பக்தர்கள் அவ்வப்போது செய்யும் மீறல்களைப் பொறுத்துக் கொள்பவன்) {ஸஹிஷ்ணு}, அண்டம் உயிர் பெறும் முன்பே இருப்பவன் {ஜகதாதிஜன்}, எப்போதும் வெற்றி பெறுபவன்{அனகோவிஜயன்}, தேவர்களையே வெற்றி கொள்பவன் {ஜேதா}, அண்டத்தின் பொருட்காரணமாக இருப்பவன் {விஸ்வயோநி}, பொருட் காரணங்களில் மீண்டும் மீண்டும் {உடல்களை எடுத்து அவற்றில்} வசிப்பவன் {புநர்வஸு}<142-150>;(29)
இந்திரனின் தம்பி (அல்லது சாதனைகளிலும், குணங்களிலும் இந்திரனைக் கடந்தவன்) {உபேந்த்ரன்}, (மூவுலகங்களின் ஆட்சி உரிமையில் இருந்து அசுர மன்னன் பலியை வஞ்சித்து, அதையே இந்திரனுக்குக் கொடுப்பதற்காகக் கசியபரின் மனைவியான அதிதியிடம்) குள்ளனாகப் பிறந்தவன் {வாமநன்}, நெடியவன் (பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் சொர்க்கம் பூமி மற்றும் பாதாள லோகங்களை மறைப்பதற்குப் பெரும் அண்ட வடிவம்) {ப்ராம்சு}, வீணாகும் {பயனற்ற} செயலேதும் செய்யாதவன் {அமோகன்}, (தன்னை வழிபடுபவர்கள், தன்னைக் கேட்பவர்கள், தன்னை நினைப்பவர்கள் ஆகியோரைத்) தூய்மை செய்பவன் {சுசி}, புகழ்வாய்ந்த சக்தியும் பலமும் கொண்டவன் {ஊர்ஜிதன்}, குணங்கள் அனைத்திலும் இந்திரனைக் கடந்தவன் {அதீந்த்ரன்}, தன்னை வழிபடுபவர்க்ள அனைவரையும் ஏற்பவன் {ஸங்க்ரஹன்}, படைப்பின் காரணனாக இருப்பதன் விளைவால் அந்தப் படைப்பாகவே இருப்பவன் {ஸர்க்கன்}, பிறவி, வளர்ச்சி, மரணம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் ஒரே வடிவில் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் {த்ருதாத்மா}, அண்டத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அதனதன் செயல்பாடுகளில் நிறுவுபவன் {நியமன்}, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கட்டுப்படுத்துபவன் {யமன்}<151-162>;(30)
தங்கள் உயர்ந்த நன்மையை அடைய விரும்பவர்களால் அறியத்தகுந்தவன் {வேத்யன்}, தன்வந்திரியின் வடிவில் தெய்வீக மருத்துவனாக இருப்பவன் (அல்லது, உலகில் ஒருவனைக் கட்டிப்போடும் பந்தங்களெனும் முன்மையான நோயைக் குணப்படுத்துபவன்) {வைத்யன்}, எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவன் {ஸதாயோகீ}, அறத்தை நிறுவ பேரசுரர்களைக் கொல்பவன் {வீரஹா}, தேவாசுரர்களால் கடையப்பட்டபோது பெருங்கடலில் இருந்து உதித்த லக்ஷ்மியின் தலைவன் (அல்லது, செழிப்பு மற்றும் கல்விக்குரிய தேவிகள் இருவரையும் பேணி வளர்ப்பவன்) {மாதவன்}, (தன்னைச் சுவைப்பதில் வெல்பவர்களுக்கு அவன் கொடுக்கும் இன்பத்தின் விளைவால்) தேனாக இருப்பவன் {மது}, புலன்களைக் கடந்தவன் (அல்லது, தன்னை நோக்கித் திரும்பாதவர்களுக்குத் தெரியாதவன்) {அதீந்த்ரியன்}, (மஹாதேவனையும், தேவர்களையும் பல நிகழ்வுகளில் வஞ்சித்ததன் விளைவால்) பெரும் மாய சக்திகளைக் கொண்டவன் {மஹாமாயன்}, (வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்வதில்) பெரும் சக்தியை வெளிப்படுத்துபவன் {மஹோத்ஸாஹன்}, பலத்தில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபலன்}<163-172>;(31)
புத்தியில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபுத்தி}, வலிமையில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாவீர்யன்}, திறனில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாசக்தி}, தன் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்தின் மூலம் அண்டத்தைக் காண்பவன் {மஹாத்யுதி}, கண்களால் (அல்லது வேறு எந்தப் புலனாலோ, அறிவுப்புலனாலோ) உறுதிப்படுத்த இயலாத உடலைக் கொண்டவன்{அநிர்த்தேஸ்யவபு}, அழகுகள் அனைத்தையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, தேவர்களாலோ, மனிதர்களாலோ புரிந்து கொள்ள முடியாத ஆத்மாவைக் கொண்டவன் {அமேயாத்மா}, பெருங்கடலில் மறைந்திருக்கும் மதிப்புமிக்கப் பொருட்களை அடைவதற்காகத் தேவர்களும், அசுரர்களும் பெருங்கடலைக் கடைவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது, பெரும் ஆமையின் வடிவில் பெரும் மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கியவன் (அல்லது, அனைத்தையும் மூழ்கடித்துவிடும் நோக்கத்துடன் பல நாட்கள் இடையறாமல் மழையைப் பொழிந்த இந்திரனின் கோபத்தில் இருந்து பிருந்தாவனம் என்ற இனிய இடத்தில் வசித்தோரைப் பாதுகாக்க கோவர்த்தன மலையை உயரத் தூக்கியவன்) {மஹாத்ரித்ருத்}<173-180>;(32)
அனைத்து வகைத் தடைகளையும் துளைக்கும் வகையில் பெரும் தொலைவுக்குத் தன் கணைகளை ஏவவல்லவன் {மஹேஷ்வாஸன்}, மூழ்கியிருந்த பூமியை வலிமைமிக்கப் பன்றியின் வடிவத்தை ஏற்று உயர்த்தியவன் {மஹீபர்த்தா}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் வசிக்கச் செய்தவன் (ரதியின் கணவனான காமனோடு அடையாளங்காணத் தக்கவன்) {ஸ்ரீநிவாஸன்}, அறவோரின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, முழு அர்ப்பணிப்பில்லாமல் வெல்லப்பட முடியாதவன் (அல்லது, சக்திகளைப் பயன்படுத்தும் எவனையும் தடுக்க வல்லவன்) {அநிருத்தன்}, தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்பவன் (அல்லது, நிறைவான இன்பத்தின் உடல்வடிவமாக இருப்பவன்) {ஸுராநந்தன்}, மூழ்கிய பூமியை மீட்டவன் (அல்லது, தன்னை நோக்கி பக்தர்களால் பாடப்படும் மந்திரங்களைப் புரிந்து கொள்பவன்) {கோவிந்தன்}, நாநயமிக்க மனிதர்கள் அனைவரையும்விடத் திறம்பெற்றவன் (தன்னை அறிந்தவர்கள் அனைவரின் துன்பங்களையும் போக்குபவன்) {கோவிதாம்பதி}<181-188>;(33)
சுடர்மிக்கப் பிரகாசம் நிறைந்தவன் {மரீசி}, தன்னைத் துதிப்போரின் துன்பங்களை அடக்குபவன் (அல்லது, தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட மனிதர்கள் அனைவரையும் தண்டிப்பதற்காக அண்டத்தை அழிக்கும் யமனின் வடிவத்தை ஏற்பவன்) {தமநன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச்சொல்வதற்காக அன்னப்பறவையின் வடிவை ஏற்றவன் (அல்லது, அனைவரின் உடல்களுக்குள்ளும் நுழைபவன்) {ஹம்ஸன்}, இறகு படைத்த ஆகாயவாசிகளின் இளரவசனான கருடனையே தன் வாகனமாகக் கொண்டவன் {ஸுபர்ணன்}, பரந்த பூமியைத் தலையில் தாங்கும் சேஷன் அல்லது அனந்தனுடன் அடையாளங்காணப் படுவதன் விளைவால் பாம்புகளில் முதன்மையானவனாக இருப்பவன் (அல்லது, அண்ட அழிவுக்குப் பிறகு பரந்த நீர்ப்பரப்பில் உறங்குவதற்காகப் பாம்புகளின் இளவரசனுடைய தலையைப் படுக்கையாகக் கொள்பவன்) {புஜகோத்தமன்}, தங்கம் போன்ற அழகிய உந்தியைக் கொண்டவன் {ஹிரண்யநாபன்}, இமயமலைச் சாரலில் உள்ள பதரியில் நாராயணனின் வடிவில் கடுந்தவங்களைப் பயின்றவன் {ஸுதபஸ்}, தாமரைக்கு ஒப்பான உந்தியைக் கொண்டவன் (அல்லது பெரும்பாட்டனான பிரம்மன் பிறந்த ஆதி தாமரையைத் தன் உந்தியில் கொண்டவன்) {பத்மநாபன்}, அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருப்பவன் {ப்ரஜாபதி}<189-197>;(34)
மரணத்தைக் கடந்தவன் (அல்லது, தன்னிடம் பக்தி கொண்டோரின் மரணத்தை விலக்குபவன்) {அம்ருத்யு}, தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் கருணைக் கண்களைச் செலுத்துபவன் (அல்லது, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவன்) {ஸர்வத்ருக்}, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவன் (அல்லது, பக்தியுடன் ஒருமனத்தோடு தன்னை வழிபடுவோர் அனைவரையும் அமுதத்தால் நனைப்பவன்) {ஸிம்மன்}, விதிப்பவர்கள் அனைவருக்கும் விதியாக இருப்பவன் (அல்லது, மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பவன்) {ஸந்தாதா}, செயல்கள் அனைத்தின் கனிகளைத் தானே இன்புறவும், பொறுக்கவும் செய்பவன் (அல்லது, தன் தந்தையின் ஆணையின் பேரில் நாடு கடந்து சென்று, இலங்கையில் உள்ள தன் தீவுக்கு ராட்சசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்தவனும், குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனது அண்ணனின் பிடியில் இருந்து அவனது நாட்டை மீட்டுத் தருமாறு ஒப்பந்தமிட்டவனும், தசரதனின் மகனுமான ராமன்) {ஸந்திமாந்}, எப்போதும் ஒரே வடிவில் இருப்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களிடம் பேரன்புடன் இருப்பவன்) {ஸ்திரன்}, எப்போதும் இயங்குபவன் (அல்லது, அனைத்து உயிரினங்களின் இதயத்துக்குள்ளும் உதிக்கும் காமனின் வடிவை ஏற்பவன்) {அஜன்}, தானவர்களாலோ, அசுரர்களாலோ தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் (ராவணனைக் கொன்று, தன் மனைவியான சீதையை மீட்டவன், அல்லது சிருங்கவேரபுரம் என்ற பெயரில் அறியப்படும் நாட்டில் வசிக்கும் சண்டாளர்களின் தலைவன் குஹகனிடம் நட்பைக் கொண்ட ராமனின் வடிவத்தைக் குறிப்பிடும் வகையில் தாழ்ந்த வகுப்பனிடமும், சண்டாளர்களிடமும் கருணை காட்டுபவன்) {துர்மர்ஷணன்}, தீயோரைத் தண்டிபவன் (அல்லது, (அல்லது, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளின் படி அனைத்து மனிதர்களின் ஒழுங்கையும் முறைப்படுத்துபவன்) {சாஸ்தா}, உண்மை ஞானத்தையே தன் அடையாளமாகக் கொண்ட ஆன்மா (அல்லது கருணையும், பிற இனிய குணங்களையும் கொண்ட ராமனின் வடிவை ஏற்றுத் தேவர்களின் பகைவனான ராவணனை அழித்தவன்) {விஸ்ருதாத்மா}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் (அல்லது, தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவர்களைத் தவிர்ப்பவனோ, கொடை கொடுப்பதைத் தடுப்பவனைக் கொல்பவனோ) {ஸுராரிஹா}<198-208);(35)
அறிவியல்கள் அனைத்தையும் போதிப்பவனும், அனைத்துக்கும் தந்தையுமானவன் {குரு}, பெரும்பாட்டனான பிரம்மனுக்குப் போதிப்பவன் {குருதமன்}, அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாகவோ, ஓய்விடமாகவோ இருப்பவன் {தாம}, பொய்மை எனும் களங்கத்திலிருந்து விடுபட்ட நல்லவர்களுக்கு நன்மை செய்பவன் {ஸத்யன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றலைக் கொண்டவன் {ஸத்யபராக்ரமன்}, சாத்திரங்களினால் அங்கீகரிக்கப்படாத, அல்லது அனுமதிக்கப்படாத செயல்களில் தன் கண்களை ஒருபோதும் செலுத்தாதவன் {நிமிஷன்}, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட செயல்களில் தன் கண்களைச் செலுத்துபவன்{அநிமிஷன்}, வைஜயந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் மங்காத வெற்றி மாலையைச் சூடுபவன் {ஸ்ரக்வீ}, வாக்கின் தலைவன் {வாசஸ்பதி}, தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவருக்கும், இழிந்தவர்களிலும் இழிந்தவர்களுக்கும் தன் அருளை வழங்கி மீட்ட பெரும் தயாளனுமான ஒருவன் {உதாரதீ}<209-218>;(36)
முக்தியடைய விரும்பும் மனிதர்களை முதன்மையான நிலையான முக்தி நிலைக்கு வழிநடத்துபவன் (அல்லது, வலிமைமிக்கப் பெரிய மீனின் வடிவை ஏற்று, அண்ட அழிவின் போது, பூமியை மறைத்த நீர் வெளியில் நீந்தி, தன் கொம்புகளில் கட்டப்பட்ட படகில் மநுவையும், பிறரையும் பாதுகாப்பாக வழிநடத்தியவன்) {அக்ரணீ}, அனைத்து உயிரினங்களின் தலைவன் (அல்லது, அண்ட அழிவின் போது அனைத்தையும் மூழ்கடிக்கும் நீர்வெளியில் விளையாடுபவன்) {க்ராமணீ}, வேதங்களையே வார்த்தைகளாகக் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அண்ட அழிவின் போது நீருக்குள் மூழ்கிய வேதங்களை மீட்டவன் {ந்யாயன்}, அண்டத்தின் இயக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {நேதா}, உயிரினங்கள் அனைத்தையும் செயல்படச் செய்ய, அல்லது முயற்சிக்கச் செய்யக் காற்றின் {வாயுவின்} வடிவை ஏற்றவன் (அல்லது, எப்போதும் அழகிய அசைவுகளைக் கொண்டவன், அல்லது தான் உண்டாக்கிய உயிரினங்கள் தன்னைத் துதிக்க வேண்டும் என விரும்புபவன்) {ஸமீரணன்}, ஆயிரம் தலைகளைக் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தா}, அண்டத்தின் ஆத்மாவாக இருந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விஸ்வாத்மா}, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்}<219-226>;(37)
ஆயிரம் கால்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாத்}, அண்டச் சக்கரத்தைத் தன் விருப்பப்படி சுழலச் செய்பவன் {ஆவர்த்தநன்}, ஆசையில் இருந்து விடுபட்டவனும், ஜீவனையும், ஜீவன் சார்ந்தவற்றையும் நிறுவும் சூழ்நிலைகளைக் கடந்தவனுமான ஒருவன் {நிவ்ருத்தாத்மா}, உலகப் பந்தம் கொண்ட மனிதர்கள் அனைவரின் பார்வையில் இருந்து மறைந்திருப்பவன் (அல்லது அறியாமை எனும் கட்டைக் கொண்டு மனிதர்கள் அனைவரின் கண்களையும் மறைத்தவன்) {ஸம்வ்ருதன்}, தன்னிடம் இருந்து விலகியவர்களக் கலங்கடிப்பவன் {ஸம்ப்ரமர்த்தநன்}, சூரியனோடு அடையாளங்காணப்படுபவனாக இருப்பதன் விளைவால் நாளைத் தொடங்கி வைப்பவனும், அனைத்தையும் அழிக்கும் காலனையே அழிப்பவனுமாக இருப்பவன் {அஹஸ்ஸம்வர்த்தகன்},, தொடக்கமில்லாதவன் (அல்லது நிலையான வசிப்பிடம் இல்லாதவன்) {வஹ்நி}, புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளைக் குறிப்பிட்டோருக்கு அளிப்பவன் (அல்லது, தன்னுடைய உடலின் சிறு பகுதியில் மட்டுமே வைத்து அண்டத்தைத் தாங்குபவன்) {அநிலன்}, (சேஷனின் வடிவிலோ, பூமியைக் காத்த பெரும் பன்றியின் வடிவத்திலோ, பூமியை ஆதரித்து நுட்பமாக ஊடுருபவனாகவோ)ஆகாயத்தில் பூமியைத் தாங்கிப் பிடிப்பவன் {தரணீதரன்}<227-235>;(38)
சிசுபாலனைப் போலப் பகைவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துப் பேரருள் புரிபவன் {ஸுப்ரஸாதன்}, ரஜஸ் (ஆசை) மற்றும் தமோ (இருள்) குணங்களிலிருந்து விடுபட்டு களங்கமற்ற சத்வ குணத்துடன் தூய நிலையில் இருப்பவன் (அல்லது, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்தவன்) {ப்ரஸந்நாத்மா}, அண்டத்தை ஆதரிப்பவன் {விஸ்வஸ்ருக்}, அண்டத்திற்கு உணவளிப்பவன் (அல்லது அஃதை அனுபவிப்பவன்) {விஸ்வபுக்விபு}, எல்லையில்லா பலத்தை வெளிப்படுத்துபவன் {ஸத்கர்த்தா}, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தன்ன வழிபடுபவர்களைக் கௌரவிப்பவன் {ஸத்க்ருதன்}, பிறரால் கௌரவிக்கப்பட்ட, அல்லது துதிக்கப்பட்டவர்களால் கௌரவிக்கப்படவோ, துதிக்கப்படவோ நேர்பவன் (நீடித்த சகிப்புடன் கூடிய அழகிய செயல்களைக் கொண்டவன்) {ஸாது}, பிறரின் காரியங்களை நிறைவேற்றுபவன் (அல்லது பிறருக்கு நன்மை செய்பவன்) {ஜஹ்நு}, அண்ட அழிவின் போது தனக்குள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவன் (அல்லது, தேவர்களுக்கோ, தன்னை வழிபடுபவர்களுக்கோ எதிராக இருப்பவர்களை அழிப்பவன்) {நாராயணன்}, நீரையே தன் இல்லமாகக் கொண்டவன் (அல்லது, அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவன், அல்லது அனைத்து உயிரினங்களின் அறியாமையை அழிப்பவன்) {நரன்}<236-246>;(39)
வேறுபாடுகளைக் களைந்தவன் {அஸங்க்யேயன்}, அளவற்ற பொருட்களின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் {அப்ரமேயாத்மா}, அனைவருக்கும் மேலான புகழைப் பெற்றவன், அறவோரைப் பேணி வளர்ப்பவன் {சிஷ்டக்ருத்}, உலகங்கள் அனைத்தையும் தூய்மையாக்குபவன் {சுசி}, அனைத்து உயிரினங்களின் விருப்பங்களையும் கனியும் நிலையால் மகுடம் சூட்டச் செய்பவன் {ஸித்தார்த்தன்}, தன் விருப்பங்கள் எப்போதும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தஸங்கல்பன்}, அனைவருக்கும் வெற்றியை அளிப்பவன் {ஸித்திதன்}, வேண்டுவோருக்கு வெற்றியை அளிப்பவன் {ஸித்திஸாதநன்}<247-256>;(40)
புனிதநாட்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் (அல்லது, தன் சிறந்த குணங்களால் இந்திரனையே மறைப்பவன்) {வ்ருஷாஹீ}, விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்குப் பொழிபவன் {வ்ருஷபன்}, அண்டம் முழுவதும் நடப்பவன் {விஷ்ணு}, (உயர்ந்த இடத்திற்கு ஏற விரும்புகிறவர்களுக்கு) அறத்தால் அமைந்த சிறந்த படிக்கட்டுகளை அளிப்பவன் {வ்ருஷபர்வா}, வயிற்றில் அறத்தைக் கொண்டவன் (அல்லது, கருவரையில் பிள்ளையைப் பாதுகாக்கம் தாயைப் போல இந்திரனைப் பாதுகாப்பவன்) {வ்ருஷோதரன்}, (தன்னை வழிபடுபவர்களைப்) பெருக்குபவன் {வர்த்தநன்}, பெரும் அண்டமாகப் பரவத் தன்னைப் பரப்பிக் கொள்பவன் {வர்த்தமாநன்}, அனைத்திலிருந்தும் (அவற்றில் ஊடுருவாமல்) தனித்து இருப்பவன் {விவிக்தன்}, ஸ்ருதிகளெனும் பெருங்கடலின் கொள்ளிடமாக இருப்பவன் {ஸ்ருதிஸாகரன்}<257-264>;(41)
(அண்டத்தையே தாங்க வல்ல) சிறந்த கரங்களைக் கொண்டவன் {ஸுபுஜன்}, எந்த உயிரினத்தாலும் சுமக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, பிரம்மன் என்றழைக்கப்படும் ஒலிகள் பாய்ந்த இடமாக இருப்பவன் (அல்லது வேதமாக இருப்பவன்) {வாக்மீ}, அண்டத்தலைவர்கள் அனைவரின் தலைவன் {மஹேந்த்ரன்}, செல்வத்தைக் கொடுப்பவன் {வஸுதன்}, தன் பலத்தில் தானே வசிப்பவன் {வஸு}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {நைகரூபன்}, பெரும் வடிவம் படைத்தவன் {ப்ருஹத்ரூபன்}, விலங்குகள் அனைத்திலும் வேள்வியின் வடிவில் வசிப்பவன் {சிபிவிஷ்டன்}, அனைத்துப் பொருளும் வெளிப்படும் காரணன் {ப்ரகாசநன்}<265-274>;(42)
பெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன் {ஓஜஸ்தேஜோத்யுதிதரன்}, தன்னை வழிபடுபவர்களுக்குக் காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் {ப்ரகாசாத்மா}, எரியும் சக்தியால் அறமற்றவர்களை எரிப்பவன் {ப்ரதாபநன்}, (வளம் முதலிய) ஆறு வகைக் குணங்களின் வளம் கொண்டவன் {ருத்தன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன் {ஸ்பஷ்டாக்ஷரன்}, சாம, ரிக் மற்றும் யஜூஸ் (வேதங்களின்) வடிவில் இருப்பவன் {மந்த்ரன்}, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் குளுமைப்படுத்தும் சந்திரனின் கதிர்களைப் போல உலகத் துன்பங்களில் எரிந்து கொண்டிருக்கும் தன் வழிபாட்டாளர்களுக்கு ஆறுதலளிப்பவன் {சந்த்ராம்சு}, சூரியனைப்போன்ற சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடியவன் {பாஸ்கரத்யுதி}<275-282>;(43)
எவன் மனத்திலிருந்து சந்திரன் உதித்தானோ அவன் {அம்ருதாம்சூத்பவன்}, தன்னொளியில் தானே சுடர்விடுபவன் {பாநு}, முயலால் குறிப்பிடப்படும் ஒளிக்கோளைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஊட்டுபவன் {சசபிந்து}, தேவர்களில் திறம் பெற்றவன் {ஸுரேஸ்வரன்}, உலகப்பற்றெனும் நோய்க்குப் பெரும் மருந்தாக இருப்பவன் {ஒளஷதம்}, அண்டத்தின் பெரும் பாலமாக இருப்பவன் {ஜகதஸ்ஸேது}, வீண்போகாத அறிவும் மற்றும் பிற குணங்களுடனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலுடனும் இருப்பவன் {ஸத்யதர்மபராக்ரமன்}<283-289>;(44)
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென அனைத்துக் காலங்களிலும் உயிரினங்கள் அனைத்தாலும் வேண்டப்படுபவன் {பூதபவ்யபவந்நாதன்}, தன்னை வழிபடுபவர்களிடம் கருணைப் பார்வையைச் செலுத்தி அவர்களை மீட்பவன் {பவன்}, புனிதமானவர்களை மேலும் புனிதப்படுத்துபவன் {பாவநன்}, ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன் (அல்லது, விடுதலையடைந்தவர்களையும் {முக்தி பெற்றவர்களையும்}, விடுதலையடையாதவர்களையும் பல்வேறு வடிவங்களை ஏற்றுக் காப்பவன்) {அநலன்}, விடுதலையடைந்தோரின் {முக்தி அடைந்தோரின்} ஆசைகளைக் கொல்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் மனங்களில் தீய ஆசைகள் எழாமல் தடுப்பவன்) {காமஹா}, காமனின் தந்தை (ஆசை அல்லது காமத்தின் கோட்பாடு) {காமக்ருத்}, மிக இனிமையானவன் {காந்தன்}, அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுபவன் {காமன்}, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன் {காமப்ரதன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன் {ப்ரபு}<290-299>;(45)
நான்கு யுகங்களையும் நடைமுறையில் தொடங்கச் செய்பவன் {யுகாதிக்ருத்}, யுகங்களைத் தொடர்ச்சியாகச் சக்கரமாகச் சுழலச் செய்பவன் {யுகாவர்த்தன்}, பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன் (அதன் மூலம், பல்வேறு யுகங்களைப் பல்வேறு வகைச் செயல்களின் மூலம் வேறுபடுத்திக் காட்டும் காரணமாக இருப்பவன்) {நைகமாயன்}, (ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அனைத்தையும் விழுங்குவதன் விளைவால்) உண்பவர்களில் பெரியவன் {மஹாசநன்}, (பக்தர்கள் அல்லாதோருக்குப்) பிடிபட இயலாதவன் {அத்ருஸ்யன்}, (மிகப்பெரிய) வெளிப்படு வடிவத்துடன் கூடியவன் {வ்யக்தரூபன்}, (தேவர்களின்) ஆயிரம் பகைவர்களை அடக்கியவன் {ஸஹஸ்ரஜித்}, எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன் {அநந்தஜித்}<300-308>;(46)
(பெரும்பாட்டன் மற்றும் ருத்திரனாலும்) விரும்பப்படுபவன் (அல்லது வேள்விகளில் துதிக்கப்படுபவன்) {இஷ்டோவிசிஷ்டன்}, அனைத்திற்கும் மேலான புகழ்பெற்றவன், ஞானிகள் மற்றும் அறவோரால் விரும்பப்படுபவன் {சிஷ்டேஷ்டன்}, தலைப்பாகையில் (மயில்) இறகுகளுடன் கூடிய ஆபரணத்தைக் கொண்டவன் {சிகண்டீ}, அனைத்து உயிரினங்களையும் தன் மாயையால் கலங்கடிப்பவன் {நஹுஷன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் தன் அருளைப் பொழிபவன் {வ்ருஷன்}, அறவோரின் கோபத்தைக் கொல்பவன் {க்ரோதஹா}, அறமற்றவர்களைக் கோபத்தால் நிறைப்பவன் {க்ரோதக்ருத்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுபவன் {கர்த்தா}, அண்டத்தையே தன் கரங்களில் தாங்குபவன் {விஸ்வபாஹு}, பூமியை நிலைநிறுத்துபவன் {மஹீதரன்}<309-318>;(47)
(தொடக்கம், பிறவி அல்லது தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி, அழிவு என்ற) நன்கு அறியப்பட்ட ஆறு மாறுபாடுகளைக் கடந்தவன் {அச்யுதன்}, (தன் சாதனைகளின் விளைவால்) பெரும் புகழைக் கொண்டவன் {ப்ரதிதன்}, (நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) உயிரினங்கள் அனைத்தையும் {உயிரோடு} வாழச் செய்பவன் {ப்ராணன்}, உயிரைக் கொடுப்பவன் {ப்ராணதன்}, (உபேந்திரனின் வடிவத்தில் அல்லது குள்ள வடிவத்தில் உள்ள) வாசவனின் தம்பி {வாஸவாநுஜன்}, அண்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அபாம்நிதி}, (அனைத்திலும் பொருள் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்து உயிரினங்களையும் மறைப்பவன் {அதிஷ்டாநன்}, (எப்போதும் பிழை கடந்தவனாகவும்) எப்போதும் விழிப்புடன் இருப்பவன் {அப்ரமத்தன்}, தன் மகிமையில் நிறுவப்பட்டவன் {ப்ரதிஷ்டிதன்}<319-327>;(48)
அமுத வடிவில் பாய்பவன் (அல்லது, அனைத்தையும் வற்றச் செய்பவன்) {ஸ்கந்தன்}, அறப்பாதையை நிலைநிறுத்துபவன் {ஸ்கந்ததரன்}, அண்டத்தின் சுமையைச் சுமப்பவன் {துர்யன்}, வேண்டுவோர் விரும்பும் வரங்களைக் கொடுப்பவன் {வரதன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}, வசுதேவரின் மகன் (அல்லது, அண்டத்தைத் தன் மாயைகளில் மறைத்து, அதன் மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பவன்) {வாஸுதேவன்}, இயல்புக்குமீறிய வகையில் ஒளிர்பவன் {ப்ருஹத்பாநு}, தேவர்கள் தோன்றக் காரணமானாவன் {ஆதிதேவன்}, பகைவரின் நகரங்கள் அனைத்தையும் துளைப்பவன் {புரந்தரன்}<328-336>;(49)
துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் கடந்தவன் {அசோகன்}, உலக வாழ்வெனும் பெருங்கடலைப் பாதுகாப்பாகக் கடக்க நம்மை வழிநடத்துபவன் {தாரணன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்தும் மறுபிறவி குறித்த அச்சத்தை விலக்குபவன் {தாரன்}, எல்லையற்ற துணிவும் ஆற்றலும் கொண்டவன் {சூரன்}, சூர குலத்தில் பிறந்தவன் {செளரி}, அனைத்து உயிரினங்களையும் ஆள்பவன் {ஜநேஸ்வரன்}, அனைவருக்கும் அருள்தரவிரும்புபவன் {அநுகூலன்}, (நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிறுவுவதற்காகப்) பூமிக்கு நூறு முறை வருபவன் {சதாவர்த்தன்}, தன் கரங்களில் ஒன்றில் தாமரையைக் கொண்டவன் {பத்மீ}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {பத்மநிபேஷணன்}<337-346>;(50)
உந்தியில் தொடக்ககாலத் தாமரையைக் கொண்டவன் (அல்லது, தாமரையில் அமர்ந்திருப்பவன்) {பத்மநாபன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {அரவிந்தாக்ஷன்}, தன்னை வழிபடுபவர்களால் இதயத்தாமரையில் அமர்ந்திருப்பவனாகத் துதிக்கப்படுபவன் {பத்மகர்ப்பன்}, (தன் மாயையின் மூலம்) ஜீவனின் உடல்வடிவத்தை ஏற்பவன் {சரீரப்ருத்}, அனைத்து வகைப் பலங்களையும் கொண்டவன் {மஹர்த்தி}, ஐந்து அடிப்படை பூதங்களின் வடிவில் வளர்பவன் {ருத்தன்}, புராதன ஆன்மா {வ்ருத்தாத்மா}, பெரிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்}, தேரின் கொடிக்கம்பத்தில் கருடன் அமர்ந்திருக்கப் பெற்றவன் {கருடத்வஜன்}<347-355>;(51)
ஒப்பற்றவன் {அதுலன்}, (சிங்கத்தைக் கொல்லும் விலங்கான} சரபன், தீயோரைப் பயங்கரமாகத் தாக்குபவன் {பீமன்}, காலத்தில் நேர்ந்தவை அனைத்தையும் அறிந்தவன் {ஸமயஜ்ஞன்}, வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக இருப்பவன் {ஹவிஸ்}, அவ்வாறு ஊற்றப்படும் நெய்யை தேவர்களின் வடிவில் ஏற்பவன் {ஹரி}, அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன் {ஸர்வலக்ஷணலக்ஷண்யன்}, எப்போதும் செழிப்பு அமர்ந்திருக்கும் மார்பைக் கொண்டவன் {லக்ஷமீவாந்}, போர்கள் அனைத்திலும் வெல்பவன் {ஸமிதிஞ்சயன்}<356-364>;(52)
அழிவைக் கடந்தவன் {விக்ஷரன்}, செவ்வண்ணம் ஏற்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் எதிரிகளிடம் கோபம் நிறைந்தவன்) {ரோஹிதன்}, அறவோர் தேடும் பொருளாக இருப்பவன் {மார்க்கன்}, அனைத்துக்கும் வேராக இருப்பவன் {ஹேது}, (குழந்தையாக இருக்கும்போது யசோதனையால் கட்டப்பட்டதால்) வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன் {தாமோதரன்}, தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன் அல்லது தாங்கிக் கொள்பவன் {ஸஹன்}, மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன் {மஹீதரன்}, வழிபடத்தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன் {மஹாபாகன்}, பெரும் வேகம் கொண்டவன் {வேகவாந்}, பெரும் அளவிலான உணவை விழுங்குபவன் {அமிதாசநன்}<365-374>;(53)
படைப்பை உண்டாக்கி இயங்கச் செய்தவன் {உத்பவன்}, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் எப்போதும் கலங்கடிப்பவன் {க்ஷோபணன்}, பிரகாசமாக ஒளிர்பவன் (அல்லது, இன்பத்தில் திளைப்பவன்) {தேவன்}, வயிற்றில் பலம் கொண்டவன் {ஸ்ரீகர்ப்பன்}, அனைத்தையும் ஆளும் பரமன் {பரமேஸ்வரன்}, அண்டம் உண்டான பொருளாக இருப்பவன் {கரணம்}, அண்டத்தை உண்டாக்கிய காரணப்பொருளானவன் {காரணன்}, அனைத்துப் பொருள்களையும் சாராதிருப்பவன் {கர்த்தா}, அண்டத்தில் பன்முகத்தன்மையை விதிப்பவன் {விகர்த்தா}, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {கஹநன்}, மாயத்திரை மூலம் தன்னை மறைத்துக் கொள்பவன்{குஹன்}<375-385>;(54)
குணங்கள் ஏதும் அற்ற சித் ஆக இருப்பவன் {வ்யவஸாயன்}, அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {வ்யவஸ்தாநன்}, அண்டப் பேரழிவின் போது அனைத்துப் பொருட்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்ஸ்தாநன்}, தன்னை வழிபடுபவனுக்கு முதன்மையான இடத்தை ஒதுக்குபவன் {ஸ்தாநதன்}, நீடித்து நிலைத்திருப்பவன் {த்ருவன்}, உயர்ந்த பலத்தைக் கொண்டவன் {பரர்த்தி}, வேதங்களில் மகிமைப்படுத்தப்படுபவன் {பரமஸ்பஷ்டன்}, நிறைவுடன் இருப்பவன் {துஷ்டன்}, எப்போதும் முழுமையாக இருப்பவன்{புஷ்டன்}, மங்கலப் பார்வை கொண்டவன் {சுபேக்ஷணன்}<386-395>;(55)
யோகிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {ராமன்}, (அண்ட அழிவின் போது அனைத்தும் அவனிடமே கலப்பதால்) அனைத்து உயிரினங்களின் கதியாக இருப்பவன் {விராமன்}, {விரதன்}, குறையற்ற பாதையாக இருப்பவன் {மார்க்கன்}, ஜீவனின் வடிவில் இருந்து கொண்டு முக்திக்கு வழிநடத்துபவன் {நேயன்}, (ஜீவனிலிருந்து முக்திக்கு) வழிநடத்துபவன் {நயன்}, வழிநடத்த எவனும் இல்லாதவன் {அநயன்}, பெரும் வலிமை கொண்டவன் {வீரன்}, வலிமை நிறைந்த அனைத்திலும் முதன்மையானவன் {சக்திமதாம்ஸ்ரேஷ்டன்}, நிலைநிறுத்துபவன் {தர்மம்}, கடமை மற்றும் அறம் அறிந்த அனைவரிலும் முதன்மையானவன் {தர்மவிதுத்தமன்}<396-404>;(56)
படைப்புக் காலத்தில் பொருட்கள் அனைத்தையும் அமைப்பதற்காகப் பிரிந்து கிடக்கும் பூதங்களை ஒன்றாகச் சேர்ப்பவன் {வைகுண்டன்}, அனைத்து உடல்களிலும் வசிப்பவன் {புருஷன்}, க்ஷேத்ரஜ்ஞனின் வடிவில் இருந்து கொண்டு அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்பவன் {ப்ராணன்}, அண்டப் பேரழிவின் போது அழித்த உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் {ப்ராணதன்}, அனைவராலும் மதிப்புடன் வணங்கப்படுபவன் {ப்ரணமன்}, மொத்த அண்டத்திலும் விரிந்திருப்பவன் {ப்ருது}, ஆதி பொன்முட்டையைத் தன் வயிறாகக் கொண்டு அனைத்தையும் உண்டாக்குபவன் {ஹிரண்யகர்ப்பன்}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் {சத்ருக்நன்}, (பொருள் காரணமாக இருக்கும் தன்னில் இருந்து உதித்த) அனைத்திலும் படர்ந்திருப்பவன் {வ்யாப்தன்}, இனிய நறுமணங்களைப் பரவச் செய்பவன் {வாயு}, புலன் இன்பங்களை அலட்சியம் செய்பவன் {அதோக்ஷஜன்}<405-415>;(57)
பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் {ருது}, தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன் {ஸுதர்சநன்}, அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன் {காலன்}, தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் {பரமேஷ்டீ}, (எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன் {பரிக்ரஹன்}, அனைவரையும் அச்சங்கொள்ளச் செய்பவன் {உக்ரன்}, அனைத்து உயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்வத்ஸரன்}, {தக்ஷன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறமை கொண்டவன் {விஸ்ராமன்}, பிறரைவிட அதிகத் திறன் கொண்டவன் {விஸ்வதக்ஷிணன்}<416-425>;(58)
மொத்த அண்டமும் படர்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {விஸ்தாரன்}, அனைத்துப் பொருட்களும் எப்போதும் சார்ந்திருப்பவனாகவும், அசைவில்லாதவனாகவும் இருப்பவன் {ஸ்தாவரஸ்தாணு}, சான்றுப் பொருளாக இருப்பவன் {ப்ரமாணன்}, அழிவில்லாத, மாற்றமில்லாத வித்தாக இருப்பவன் {பீஜமவ்யயம்}, (மகிழ்ச்சியாக இருப்பதன் விளைவால்) அனைவராலும் வேண்டப்படுபவன் {அர்த்தன்}, (விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைந்ததன் விளைவால்) ஆசையற்றவன் {அநர்த்தன்}, (அண்டத்தை மறைக்கும்) பெரும் உறையாக இருப்பவன் {மஹாகோசன்}, அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைப் பொருட்களையும் கொண்டவன் {மஹாபோகன்}, (விருப்பத்திற்குரிய பொருட்களனைத்தையும் அடையவதற்குரிய) பெருஞ்செல்வம் கொண்டவன் {மஹாதனன்}<426-434>;(59)
மனத்தளர்ச்சிக்கு அப்பாற்பட்டவன் {அநிர்விண்ணன்}, துறவின் வடிவில் இருப்பவன் {ஸ்தவிஷ்டன்}, பிறப்பற்றவன் {பூ}, அறம் கட்டப்படும் தூணாக இருப்பவன் {தர்மயூபன்}, வேள்வியின் பெரும் உடல்வடிவம் {மஹாமகன்}, ஆகாயத்தில் சுழலும் நட்சத்திர சக்கரத்தின் நடுப்பகுதியாக {மையமாக} இருப்பவன் {நக்ஷத்ரநேமி}, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் நிலவாக இருப்பவன் {நக்ஷத்ரீ}, அனைத்துச் சாதனைகளையும் செய்யவல்லவன் {க்ஷமன்}, அனைத்துப் பொருட்களும் மறையும்போது தன் ஆன்மாவில் இருப்பவன் {க்ஷாமன்}, படைக்கும் விருப்பத்தைப் பேணி வளர்ப்பவன் {ஸமீஹநன்}<435-444>;(60)
அனைத்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன் {யஜ்ஞன்}, வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளில் துதிக்கப்படுபவன் {இஜ்யன்}, மனிதர்கள் செய்யும் வேள்விகளில் இருக்கும் தேவர்கள் அனைவரிலும் மிகவும் துதிக்கப்படத்தகுந்தவன் {மஹேஜ்யன்}, விதிப்படி விலங்குகள் காணிக்கையளிக்கப்படும் வேள்விகள் அனைத்தின் உடல்வடிவமாக இருப்பவன் {க்ரது}, எந்த உணவையும் உட்கொள்ளும் முன்னர் மனிதர்களால் துதிக்கப்படுபவன் {ஸத்ரம்}, முக்தி நாடுபவர்களின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, அனைத்து உயிரினங்களும் செய்யும் மற்றும் செய்யத்தவறும் செயல்களைக் காண்பவன் {ஸர்வதர்சீ}, குணங்கள் அனைத்தையும் கடந்த ஆன்மாவைக் கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, அடையப்பட முடியாததும், எல்லையற்றதும், அனைத்தையும் நிறைவேற்றவல்லதுமான ஞானத்திற்கு ஒப்பானவன் {ஜ்ஞானமுத்தமம்}<445-454>;(61)
(வேண்டுபவனுக்குத் தூய இதயத்துடன் அருள்வழங்க வல்ல) சிறந்த நோன்புகளை நோற்பவன் {ஸுவ்ரதன்}, எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்}, நுட்பமிக்கவன் {ஸூக்ஷ்மன்}, (வேதத்தின் வடிவிலோ, குழல் இசைக்கும் கிருஷ்ணனாகவோ) இனிமைமிக்க ஒலிகளை வெளியிடுபவன் {ஸுகோஷன்}, (தன்னை வழிபடுபவர்கள் அனைவருக்கும்) மகிழ்ச்சியைக் கொடுப்பவன் {ஸுகதன்}, மறுவுதவியேதும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருத்}, அனைத்து உயிரினங்களையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {மனோஹரன்}, கோபத்தை வென்றவன் {ஜிதக்ரோதன்}, (பெரும் வலிமைமிக்க அசுரர்களைக் கொல்லும் வகையிலான) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {வீரபாஹு}, அறமற்றோரைக் கிழித்தெறிபவன் {விதாரணன்}<455-464>;(62)
ஆன்ம அறிவற்றவர்களைத் தன் மாயையால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கச் செய்பவன் {ஸ்வாபநன்}, (அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகத்) தன்னைத்தானே சார்ந்திருப்பவன் {ஸ்வவசன்}, மொத்த அண்டத்திலும் முற்றாகப் பரவியிருப்பவன் {வ்யாபீ}, முடிவிலா வடிவங்களில் இருப்பவன் {நைகாத்மா}, முடிவிலா எண்ணிக்கையிலான தொழில்களில் ஈடுபடுபவன் {நைககர்மக்ருத்}, அனைத்திலும் வாழ்பவன் {வத்ஸரன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் முழு அன்பைக் கொண்டவன் {வத்ஸலன்}, (அனைத்து உயிரினங்களும் அவனிடம் இருந்து உண்டான கன்றுகளாக இருப்பதன் விளைவால்) அண்டத்தின் தந்தையாக இருப்பவன் {வத்ஸீ}, பரந்திருக்கும் பெருங்கடலின் வடிவில் தன் வயிற்றில் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவன் {ரத்நகர்ப்பன்}, கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {தநேஸ்வரன்}<465-474>;(63)
அறத்தைப் பாதுகாப்பவன் {தர்மகுப்}, அறக்கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தர்மக்ருத்}, அறத்தின் ஆதாரமாக இருப்பவன் {தர்மீ}, எப்போதும் இருப்பவன் {ஸத்}, (வெளிப்படும் அண்டம் மாயையின் விளைவாக இருப்பதால் அண்டத்தின் வடிவில்) இல்லாதவன் {அஸத்}, (வெளிப்படும் அண்டத்தின் வடிவில்) அழியத்தக்கவன் {க்ஷரம்}, அழிவற்ற சித் ஆக இருப்பவன் {அக்ஷரன்}, உண்மை அறிவற்ற ஜீவனின் வடிவில் இருப்பவன் {அவிஜ்ஞாதா}, சூரியனின் வடிவில் ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராம்சு}, (சேஷன், கருடன் முதலிய வலிமைமிக்கப் பெரும் உயிரினங்களை) விதிப்பவன் {விதாதா}, சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தவன் {க்ருதலக்ஷணன்}<475-485>;(64)
எண்ணற்ற ஒளிக்கதிர்களின் நடுவில் சூரியனின் வடிவில் இருப்பவன் {கபஸ்திநேமி}, அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவன் {ஸத்வஸ்தன்}, பேராற்றல் கொண்டவன் {ஸிம்மன்}, யமன் மற்றும் அதே பலத்தைக் கொண்ட பிறரை ஆள்பவன் {பூதமஹேஸ்வரன்}, (தொடக்கத்தில் இருந்தே இருப்பனாதலால்) தேவர்களில் பழைமையானவன் {ஆதிதேவன்}, அனைத்து நிலைகளையும் கைவிட்டு தன் மகிமையில் தானே இருப்பவன் {மஹாதேவன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {தேவேசன்}, தேவர்களை நிலைநிறுத்தபவனையும் (இந்திரனையும்) ஆள்பவன் {தேவப்ருத்குரு}<486-493>;(65)
பிறப்பையும், அழிவையும் கடந்தவன் {உத்தரன்}, (கிருஷ்ணனின் வடிவில்) பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன் {கோபதி}, அனைத்து உயிரினங்களையும் ஊட்டி வளர்ப்பவன் {கோப்தா}, அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன் {ஜ்ஞானகம்யன்}, பழைமையானவன் {புராதநன்}, உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன் {சரீரபூதப்ருத்}, (ஜீவனின் வடிவில் இன்ப துன்பங்களை) அனுபவிப்பவன் {போக்தா}, பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன் (அல்லது, ராமனின் வடிவில் இருந்த போது பெரும் குரங்குக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன்) {கபீந்த்ரன்}, தன்னால் செய்யப்பட்ட மகத்தான வேள்வியில் அபரிமிதமான கொடைகளை அனைவருக்கும் வழங்கியவன் {பூரிதக்ஷிணன்}<494-502>;(66)
ஒவ்வொரு வேள்வியிலும் சோமத்தைப் பருகுபவன் {ஸோமபன்}, அமுதம் பருகுபவன் {அம்ருதபன்}, சோமனின் (சந்திரமாஸின்) வடிவில் மூலிகை, செடி, கொடிகளை ஊட்டி வளர்ப்பவன் {ஸோமன்}, முடிவிலா எண்ணிக்கையில் பகைவர்கள் இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் அவர்களை வெல்பவன் {புருஜித்}, இருப்பிலுள்ளவை அனைத்திலும் முதன்மையான அண்ட வடிவைக் கொண்டவன் {புருஸத்தமன்}, தண்டிப்பவன் {விநயன்}, அனைவரையும் வெல்பவன் {ஜயன்}, கலங்கடிக்க இயலாத நோக்கங்களைக் கொண்டவன் {ஸத்யஸந்தன்}, கொடைகளுக்குத் தகுந்தவன் {தாசார்ஹன்}, உயிரினங்களிடம் இல்லாதவற்றைக் கொடுப்பவனும், அவற்றைப் பாதுகாப்பவனுமாக இருப்பவன் {ஸாத்வதாம்பதி}<503-512>;(67)
உயிர்மூச்சைத் தாங்குபவன் {ஜீவன்}, தன் உயிரினங்கள் அனைத்தையும் நேரடி பார்வையில் உள்ள பொருட்களாகக் காண்பவன் {விநயிதா}, சுயத்தைத்தவிர வேறெதையும் ஒருபோதும் காணாதவன் {ஸாக்ஷீ}, முக்தியை அளிப்பவன் {முகுந்தன்}, சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகியவற்றை தன் காலடிகளால் (எண்ணிக்கையில் மூன்று) மறைத்தவன் {அமிதவிக்ரமன்}, நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அம்போநிதி}, வெளி, காலம் மற்றும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் {அநந்தாத்மா}, அண்டப் பேரழிவின் போது, பெரும் நீர்ப்பரப்பில் கிடப்பவன் {மஹோததிசயன்}, அனைத்தையும் அழிப்பவன் {அந்தகன்}<513-521>;(68)
பிறப்பற்றவன் {அஜன்}, அதிகம் துதிக்கப்படுபவன் {மஹார்ஹன்}, தன் இயல்பில் தோன்றுபவன் {ஸ்வாபாவ்யன்}, (கோபம் மற்றும் தீய ஆசைகளின் வடிவில் உள்ள) பகைவர்கள் அனைவரையும் வெல்பவன் {ஜிதாமித்ரன்}, தன்னைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {ப்ரமோதன்}, இன்ப வடிவம் {ஆநந்தன்}, பிறரை மகிழ்ச்சியில் நிறைப்பவன் {நந்தநன்}, மகிழ்க்கான காரணங்கள் அனைத்துடன் பெருகுபவன் {நந்தன்}, வாய்மையையும், பிற அறங்களையும் தன் குறியீடுகளாகக் கொண்டவன் {ஸத்யதர்மா}, மூவுலகங்களையும் தன் காலடிகளில் கொண்டவன் {த்ரிவிக்ரமன்}<522-530>;(69)
(வேதங்களை மொத்தமாக அறிந்து வைத்திருக்கும்) முனிவர்களில் முதல்வன் {மஹர்ஷி}, ஆசான் கபிலராக இருப்பவன் {கபிலாசார்யன்}, அண்டத்தை அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, பூமியை ஆள்பவன் {மேதிநீபதி}, மூன்று பாதங்களைக் கொண்டவன் {த்ரிபதன்}, தேவர்களைப் பாதுகாப்பவன் {த்ரிதசாத்யக்ஷன்}, (அண்டப் பேரழிவின் போது, மனுவின் படகைத் தன் கொம்புகளில் கட்டி இழுத்துச்சென்ற மீன் வடிவில் இருந்த போது) பெரும் கொம்புகளைக் கொண்டவன் {மஹாஸ்ருங்கன்}, செயல்பட்டவர்களை இன்பத்தை அனுபவிக்கவோ, துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவோ செய்து செயல்களைத் தீர்ப்பவன் {க்ருதாந்தக்ருத்}<531-538>;(70)
பெரும்பன்றியானவன் {மஹாவராஹன்}, வேதாந்தத்தின் துணையுடன் புரிந்துகொள்ளப்படுபவன் {கோவிந்தன்}, (தன்னை வழிபடுபவர்களின் வடிவில்) அழகிய துருப்புகளைக் கொண்டவன் {ஸுஷேணன்}, பொன்கங்கணங்கள் கொண்டவன் {கநகாங்கதீ}, (உபநிஷத்துகளின் துணையுடன் மட்டுமே அறியப்படும் வகையில்) மறைந்திருப்பவன் {குஹ்யன்}, (அறிவு மற்றும் பலத்தில்) ஆழம் நிறைந்தவன் {கபீரன்}, அடைதற்கரியவன் {கஹநன்}, சொல்லையும், எண்ணத்தையும் கடந்தவன் {குப்தன்}, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவன் {சக்ரகதாதரன்}<539-547>;(71)
விதி விதிப்பவன் {வேதஸ்}, (உதவியாளன் வடிவில் இருக்கும்) அண்டத்தின் காரணன் {ஸ்வாங்கன்}, ஒருபோதும் வெல்லப்பட முடியாதவன் {அஜிதன்}, தீவில் பிறந்த கிருஷ்ணராக {வியாசராக} இருப்பவன் {க்ருஷ்ணன்}, (சிதைவைக் கடந்திருப்பதன் விளைவால்) நீடித்திருப்பவன் {த்ருடன்}, அனைத்தையும் செதுக்குபவன் {ஸங்கர்ஷணன்}, சிதைவுக்கு அப்பாற்பட்டவன் {அச்யுதன்}, வருணன், (வசிஷ்டர் அல்லது அகஸ்தியரின் வடிவில்) வருணனின் மகனாக இருப்பவன் {வாருணன்}, அசையாத மரமாக இருப்பவன் {வ்ருக்ஷன்}, இதயத்தாமரையில் தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துபவன் {புஷ்கராக்ஷன்}, மனச்சாதனையின் மூலமே படைத்து, காத்து, அழிப்பவன் {மஹாமநஸ்}<548-558>;(72)
(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்}, (அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா}, (அனைத்து வகைச் செழிப்பிலும் பெருகுபவனாக இருக்கும் விளைவால்) இன்பநிலையாக இருப்பவன் {நந்தீ}, {வைஜயந்தம் என்றழைக்கப்படும்) வெற்றிமாலையால் அலங்கரிக்கப்படுபவன் {வநமாலி}, (பலதேவன் அவதாரத்தில்) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன் {ஹலாயுதன்}, (பலியை வஞ்சித்த குள்ளனின் வடிவில்) அதிதியின் கருவறையில் பிறந்தவன் {ஆதித்யன்}, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {ஜ்யோதிராதித்யன்}, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகளைத் தாங்கிக் கொள்பவன் {ஸஹிஷ்ணு}, அனைத்துப் பொருட்களின் முதன்மையான புகலிடமாக இருப்பவன் {கதிஸத்தமன்}<559-567>;(73)
(சாரங்கம் என்றழைக்கப்படும்) முதன்மையான வில்லை ஆயுதமாகக் கொண்டவன் {ஸுதந்வா}, (பிருகு குல ராமராய் {பரசுராமராய்} இருந்து) தன் கோடரியை இழந்தவன் {கண்டபரசு}, கடுமைமிக்கவன் {தாருணன்}, விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடுப்பவன் {த்ரவிணப்ரதன்}, சொர்க்கத்தையே (பலியின் வேள்வியில் தான் ஏற்று வந்த வடிவத்துடன்) தன் தலையால் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு நெடிதுயர்ந்தவன் {திவிஸ்ப்ருக்}, அண்டம் முழுவதும் பார்வை கொண்டவன் {ஸர்வத்ருக்}, (வேதங்களைப் பகுத்தவன்) வியாசன் {வ்யாஸன்}, வாக்கு அல்லது கல்வியை ஆள்பவன் {வாசஸ்பதி}, பிறப்புறுப்புகளின் தலையீடின்றி இருப்புக்குள் எழுந்தவன் {அயோநிஜன்}<568-576>;(74)
மூன்று (முதன்மையான) சாமங்களில் பாடப்படுபவன் {த்ரிஸாமா}, சாமங்களைப் பாடுபவன் {ஸாமகன்}, சாமங்களாக இருப்பவன் {ஸாம}, (துறவின் உடல்வடிவமாக இருப்பதன் விளைவால்) உலகபந்தங்களுக்கு அழிவைத் தருபவன் {நிர்வாணம்}, (நோயைச் சீராக்கப் பயன்படும்) மருந்தாக இருப்பவன் {பேஷஜம்}, (மருந்தைப் பயன்படுத்தும்) மருத்துவன் {பிஷக்}, (உயிரினங்கள் முக்தி அடைவதற்குத் தகுந்தவையாக) துறவறம் என்றழைக்கப்படும் நான்காவது வாழ்வு முறையை விதித்தவன் {ஸந்யாஸக்ருத்}, தன்னை வழிபடுபவர்களைப் பொறுத்தவரையில் (ஆன்ம அமைதியைக் கொடுக்கும் நோக்கில்) அவர்களின் ஆசைகளைத் தணிவடையச் செய்பவன் {சமன்}, (உலகப் பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் தொடர்பறுத்ததன் விளைவால்) நிறைவாய் இருப்பவன் {சாந்தன்}, பக்தி மற்றும் ஆன்ம அமைதிக்கான புகலிடமாக இருப்பவன் {நிஷ்டாசாந்திபராயணன்}<577-585>;(75)
அழகிய அங்கங்களைப் பெற்றவன் {சுபாங்கன்}, ஆன்ம அமைதியைத் தருபவன் {சாந்திதன்}, படைத்தவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் மார்பில் இன்பத்தில் திளைப்பவன் {குமுதன்}, அண்டப் பேரழிவுக்குப் பின்னர்ப் பாம்புகளின் இளவரசனான சேஷனின் உடலில் (யோக) உறக்கத்தில் கிடப்பவன் {குவலேசயன்}, பசுக்களுக்கு நன்மை செய்பவன் (அல்லது, மக்கள் தொகையில் அவதியுறும் பூமியின் கனத்தைக் குறைக்க மனிதனின் வடிவில் பிறந்தவன்) {கோஹிதன்}, அண்டத்தை ஆள்பவன் {கோபதி}, அண்டத்தைப் பாதுகாப்பவன் {கோப்தா}, காளையைப் போன்ற கண்களைக் கொண்டவன் {வ்ருஷபாக்ஷன்}, அன்புடன் அறத்தைப் பேணி வளர்ப்பவன் {வ்ருஷப்ரியன்}<586-595>;(76)
புறமுதுகிடாத வீரன் {அநிவர்த்தீ}, பற்றுகள் அனைத்தில் இருந்தும் விலகிய ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அண்டப் பேரழிவின் காலத்தில் அண்டத்தை நுட்பமான வடிவில் குறைப்பவன் {ஸம்க்ஷேப்தா}, துன்புறும் தன் வழிபாட்டாளர்களுக்கு நன்மை செய்பவன் {க்ஷேமக்ருத்}, கேட்டதும் கேட்டவனின் பாவம் அனைத்தும் தூய்மையடையும் பெயரைக் கொண்டவன் {சிவன்}, தன் மார்பில் மங்கலச் சுழியைக் கொண்டவன் {ஸ்ரீவத்ஸவக்ஷஸ்}, செழிப்பின் தேவி எப்போதும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸ்ரீவாஸன்}, (செழிப்பின் தேவியான) லட்சுமியால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் {ஸ்ரீபதி}, செழிப்புடன் கூடியவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸ்ரீமதாம்வரன்}<596-604>;(77)
தன்னை வழிபடுபவர்களுக்குச் செழிப்பைத் தருபவன் {ஸ்ரீதர்}, செழிப்பை ஆள்பவன் {ஸ்ரீசன்}, செழிப்புடையவர்களுடன் எப்போதும் வாழ்பவன் {ஸ்ரீநிவாஸன்}, அனைத்து வகைச் செல்வங்களின் கொள்ளிடம் {ஸ்ரீநிதி}, அறத்தை அளவாகக் கொள்ளும் அடிப்படையில் அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவருக்கும் செழிப்பைக் கொடுப்பவன் {ஸ்ரீவிபாவநன்}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் கொண்டவன் {ஸ்ரீதரன்}, தன்னைக் குறித்துக் கேட்பவர்கள், தன்னைப் புகழ்பவர்கள், தன்னைத் தியானிப்பவர்கள் ஆகியோருக்குச் செழிப்பை அளிப்பவன் {ஸ்ரீகரன்}, அடைதற்கரிய மகிழ்ச்சியை அடையும் நிலையின் உடல்வடிவமாக இருப்பவன் {ஸ்ரேயஸ்}, அனைத்து வகை அழகையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, மூவுலகங்களின் புகலிடமாக இருப்பவன் {லோகத்ரயாஸ்ரயன்}<605-614>;(78)
அழகிய கண்களைக் கொண்டவன் {ஸ்வக்ஷன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {ஸ்வங்கன்}, மகிழ்ச்சிக்கான நூறு தோற்றுவாய்களைக் கொண்டவன் {சதாநந்தன்}, உயர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பவன் {நந்தி}, (ஆகாயத்து ஒளிக்கோள்களின் இடங்களையும், பாதைகளையும் பராமரிப்பவனாக இருப்பதால்) ஆகாயத்து ஒளிக்கோள்கள் அனைத்தையும் ஆள்பவன் {ஜ்யோதிர்க்கணேஸ்வரன்}, ஆன்மாவை வென்றவன் {விஜிதாத்மா}, மேன்மையான வேறு எவனாலும் ஆளப்படாத ஆன்மா கொண்டவன் {விதேயாத்மா}, எப்போதும் அழகிய செயல்களைச் செய்பவன் {ஸத்கீர்த்தி}, (உள்ளங்கை நெல்லிக்கனி போல மொத்த அண்டத்தையும் காண்பவனாக அவன் சொல்லப்படுகிறான், எனவே) ஐயங்கள் அனைத்தும் விலகப் பெற்றவன் {சிந்நஸம்சயன்}<615-623>;(79)
அனைத்து உயிரினங்களையும் கடந்தவன் {உதீர்ணன்}, திசைகள் அனைத்திலும் பரந்த பார்வை கொண்டவன் {ஸர்வதர்க்ஷு}, தலைவனற்றவன் {அநீசன்}, எக்காலத்திலும் நேரும் மாற்றங்கள் அனைத்தையும் கடந்திருப்பவன் {சாஸ்வதஸ்திரன்}, (ராமனின் வடிவில்) வெறுந்தரையில் கிடந்தவன் {பூசயன்}, (தன் அவதாரங்களின் மூலம்) பூமியை அலங்கரிப்பவன் {பூஷணன்}, பலத்தின் சுயமாக இருப்பவன் {பூதி}, துன்பங்கள் அனைத்தையும் கடந்தவன் {விசோகன்)}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரும் தன்னை நினைத்ததும் அவர்களின் துன்பங்களைக் களைபவன் {சோகநாசநன்}<624-632>;(80)
பிரகாசம் கொண்டவன் {அர்ச்சிஷ்மாந்}, அனைவராலும் வழிபடப்படுபவன் {அர்ச்சிதன்}, (அனைத்தும் தன்னுள் வசிப்பதைப் போன்ற) நீர்க்குடமாக இருப்பவன் {கும்பன்}, தூய ஆன்மா கொண்டவன் {விசுத்தாத்மா}, தன்னைக் குறித்துக் கேட்பவர் அனைவரையும் தூய்மையடையச் செய்பவன் {விசோதநன்}, கட்டற்ற சுதந்திரம் கொண்டவன் {அநிருத்தன்}, போர்க்களங்களில் இருந்து ஒருபோதும் திரும்பாத தேரைக் கொண்டவன் {அப்ரதிரதன்}, பெருஞ்செல்வம் கொண்டவன் {ப்ரத்யும்நன்}, அளவற்ற ஆற்றல் கொண்டவன் {அமிதவிக்ரமன்}<633-641>;(81)
காலநேமி என்ற பெயரைக் கொண்ட அசுரனைக் கொன்றவன் {காலநேமிநிஹா}, சூரன் குலத்தில் பிறந்தவன் {செளரி}, வீரன் {சூரன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {சூரஜநேஸ்வரன்}, மூவுலகங்களின் ஆன்மாவாக இருப்பவன் {த்ரிலோகாத்மா}, மூவுலகங்களையும் ஆள்பவன் {த்ரிலோகேசன்}, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களையே தன் மயிராகக் கொண்டவன் {கேசவன்}, கேசியைக் கொன்றவன் {கேசிஹா}, (அண்டப் பேரழிவின் போது) அனைத்தையும் அழிப்பவன் {ஹரி}<642-650>;(82)
வேண்டப்படும் விருப்பங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தேவன் {காமதேவன்}, அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமபாலன்}, விரும்புபவன் {காமீ}, அழகிய வடிவம் கொண்டவன் {காந்தன்}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் முற்றான ஞானம் கொண்டவன் {க்ருதாகமன்}, குணங்களின் மூலம் விவரிக்க இயலாத வடிவம் கொண்டவன் {அநிர்த்தேஸ்யவபு}, பிரகாசக் கதிர்களால் சொர்க்கத்தை நிறையச் செய்பவன் {விஷ்ணு}, {வீரன்}, எல்லையற்றவன் {அநந்தன்}, (அர்ஜுனன் அல்லது நரனின் வடிவில்) படையெடுப்பின் மூலம் திரண்ட செல்வத்தை அடைந்தவன் {தநஞ்சயன்}<651-660>;(83)
மந்திரங்கள், வேள்விகள், வேதங்கள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்திலும் முதன்மையானவன் {ப்ரம்மண்யன்}, தவங்களைப் படைத்தவனும், தவமுமாக இருப்பவன் {ப்ரம்மக்ருத்ப்ரம்மா}, (பெரும்பாட்டன்) பிரம்மனின் வடிவத்தில் இருப்பவன் {ப்ரம்ம}, தவங்களைப் பெருகச் செய்பவன் {ப்ரம்மவிவர்த்தநன்}, பிரம்மத்தை அறிந்தவன் {ப்ரம்மவித்}, பிராமண வடிவத்தில் இருப்பவன் {ப்ராம்மணன்}, பிரம்மம் என்றழைக்கப்படுபவன் {ப்ரம்மீ}, வேதங்கள் அனைத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவன் {ப்ரம்மஜ்ஞன்}, பிராமணர்களைப் பிடித்தவனாகவும் பிராமணர்களுக்குப் பிடித்தமானவனாகவும் எப்போதும் இருப்பவன் {ப்ராம்மணப்ரியன்}<661-670>;(84)
பெரும்பகுதிகளை மறைக்கவல்ல காலடித்தடங்களைக் கொண்டவன் {மஹாக்ரமன்}, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மா}, பெருஞ்சக்தி கொண்டவன் {மஹாதேஜஸ்}, பாம்புகளின் மன்னான வாசுகியுடன் அடையாளங்காணப்படுபவன் {மஹோரகன்}, வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாக்ரது}, வேள்வி செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {மஹாயஜ்வா}, வேள்விகளில் முதன்மையான ஜபமாக இருப்பவன்{மஹாயஜ்ஞன்}, வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாஹவிஸ்}<671-678>;(85)
அனைவராலும் பாடப்படுபவன் {ஸ்தவ்யன்}, (தன்னை வழிபடுபவர்களால்) பாடப்பட விரும்புபவன் {ஸ்தவப்ரியன்}, தன்னை வழிபடுபவர்களால் சொல்லப்படும் துதிகளாக இருப்பவன் {ஸ்தோத்ரம்}, துதிக்கும் செயலே ஆனவன்{ஸ்துதன்}, துதிகளைப் பாடுபவன் {ஸ்தோதா}, (தீமையான அனைத்துடனும்) போரிட விரும்புபவன் {ரணப்ரியன்}, அனைத்து வகையிலும் முழுமையானவன் {பூர்ணன்}, அனைத்து வகைச் செழிப்பாலும் பிறரை நிறைப்பவன் {பூரயிதா}, நினைவுகூரப்பட்ட உடனேயே பாவங்கள் அனைத்தையும் அழிப்பவன் {புண்யன்}, செய்யும் அனைத்தையும் அறச்செயல்களாகச் செய்பவன் {புண்யகீர்த்தி}, அனைத்து வகை நோய்களையும் கடந்தவன் {அநாமயன்}<679-689>;(86)
மனோ வேகம் கொண்டவன் {மநோஜவன்}, அனைத்து வகைக் கல்விகளையும் படைத்து அவற்றை அறிவிப்பவன் {தீர்த்தகரன்}, பொன்னையே உயிர்வித்தாகக் கொண்டவன் {வஸுரேதஸ்}, (கருவூலத் தலைவனான குபேரனாக) செல்வத்தை வழங்குபவன் {வஸுப்ரதன்}, அசுரர்களின் செல்வத்தை அழிப்பவன் {வஸுப்ரதன்}, வசுதேவரின் மகன் {வாஸுதேவன்}, அனைத்துயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {வஸு}, அனைத்துப் பொருட்களிலும் வசிக்கும் மனத்தைக் கொண்டவன் {வஸுமநஸ்}, தன்னிடம் புகலிடம் நாடுவோர் அனைவரின் பாவங்களையும் எடுப்பவன் {ஹவிஸ்}<690-698>;(87)
அறவோரால் அடையப்படுபவன் {ஸத்கதி}, எப்போதும் நற்செயல்களைச் செய்பவன் {ஸத்க்ருதி}, அண்டத்தின் ஒரே உட்பொருளாக இருப்பவன் {ஸத்தா}, பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துபவன் {ஸத்பூதி}, உண்மை அறிந்தோர் அனைவரின் புகலிடமாக இருப்பவன் {ஸத்பராயணன்}, பெரும் வீரர்களைத் தன் துருப்பினராகக் கொண்டவன் {சூரஸேநன்}, யாதவர்களில் முதன்மையானவன் {யதுரேஷ்டன்}, அறவோரின் வசிப்பிடமாக இருப்பவன் {ஸந்நிவாஸன்}, யமுனையின் கரைகளில் (பிருந்தாவனத்தில்) இன்பமாக விளையாடுபவன் {ஸுயாமுநன்}<699-707>;(88)
படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பூதாவாஸன்}, அண்டத்தைத் தன் மாயையால் நிறைக்கும் தேவன் {வாஸுதேவன்}, முதன்மையானவை அனைத்தும் (முக்தியடையும்போது அவற்றோடு) கலந்திருப்பவன் {ஸர்வாஸுநிலயன்}, ஒருபோதும் நிறைவடையாத பசி கொண்டவன் {அநலன்}, அனைவரின் செருக்கையும் அடக்குபவன் {தர்ப்பஹா}, நியாயமான செருக்குடன் அறவோரை நிறைப்பவன் {தர்ப்பதன்}, மகிழ்ச்சியில் பெருகுபவன் {அத்ருப்தன்}, பிடிக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, ஒருபோதும் வெல்லப்படமுடியாதவன் {அபராஜிதன்}<708-716>;(89)
அண்டவடிவம் கொண்டவன் {விஸ்வமூர்த்தி}, பெருவடிவம் கொண்டவன் {மஹாமூர்த்தி}, சக்தியிலும், பிராகசத்திலும் சுடர்விடும் வடிவம் கொண்டவன் {தீப்தமூர்த்தி}, (செயல்களால் தீர்மானிக்கப்படுவது போன்ற) வடிவமற்றவன் {அமூர்த்திமாந்}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {அநேகமூர்த்தி}, வெளிப்படாதவன் {அவ்யக்தன்}, நூறு வடிவங்கள் கொண்டவன் {சதமூர்த்தி}, நூறு முகங்களைக் கொண்டவன் {சதாநநன்}<717-724>;(90)
தனியொருவன் {ஏகன்}, (மாயையால்) பலராகத் தெரிபவன் {நைகன்}, {அனைத்தையும் தன்னுள் கொண்டவன்} {ஸவ}, இன்பம் நிறைந்தவன் {க}, விசாரிக்கத்தகுந்த மகத்தான காரிய வடிவம் கொண்டவன் {கிம்}, இவை அனைத்துமானவன் {யத்}, அஃது என்றழைக்கப்படுபவன் {தத்}, உயர்ந்த புகலிடம் {பதமநுத்தமம்}, பொருட்காரணங்களுக்குள் ஜீவனை அடைப்பவன் {லோகபந்து}, அனைவராலும் விரும்பப்படுபவன் {லோகநாதன்}, மது குலத்தில் பிறந்தவன் {மாதவன்}, தன்னை வழிபடுபவர்களிடம் அதிக அன்பு கொண்டவன் {பக்தவத்ஸலன்}<725-735>;(91)
பொன்வண்ணன் {ஸுவர்ணவர்ணன்}, பொன் போன்ற (வண்ணத்தில்) அங்கங்கள் கொண்டவன் {ஹேமாங்கன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {வராங்கன்}, சந்தனத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {சந்தநாங்கதீ}, வீரர்களைக் கொல்பவன் {வீரஹா}, இணையற்றவன் {விஷமன்}, (குணமற்ற விளைவால்) சுழியத்தைப் போன்றவன் {சூந்யன்}, (தான் கொண்ட முழுமையின் விளைவால்) எந்த அருளும் தேவைப்படாதவன் {க்ருதாசிஸ்}, சொந்த இயல்பு, பலம் மற்றும் ஞானத்தில் ஒருபோதும் பிறழாதவன் {அசலன்}, காற்றின் வடிவில் அசைபவன் {சலன்}<736-745>;(92)
ஆன்மா இல்லாத எதனுடனும் தன்னை ஒருபோதும் அடையாளம் காணாதவன் {அமாநீ}, தன்னை வழிபடுபவர்களுக்குக் கௌரவங்களை அளிப்பவன் {மாந்தன்}, அனைவராலும் மதிக்கப்படுபவன் {மாந்யன்}, மூவுலகங்களின் தலைவன் {லோகஸ்வாமீ}, மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துபவன் {த்ரிலோகக்ருக்}, உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தன் மனத்தில் தாங்க வல்ல நினைவுடன் கூடிய புத்தி கொண்டவன் {ஸுமேதஸ்}, வேள்வியில் பிறந்தவன் {மேதஜன்}, பெரும்புகழுக்குத் தகுந்தவன் {தந்யன்}, புத்தியும் நினைவும் ஒருபோதும் தவறாதவன் {ஸத்யமேதஸ்}, பூமியை நிறைநிறுத்துபவன் {தராதரன்}<746-755>;(93)
சூரியனின் வடிவில் வெப்பத்தை வெளியிடுபவன் {தேஜோவ்ருஷன்}, அழகிய அங்கங்களைச் சுமப்பவன் {த்யுதிதரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸர்வசஸ்த்ரப்ருதாம்வரன்}, தன்னை வழிபடுபவர்களால் அளிக்கப்படும் மலர் மற்றும் இலை காணிக்கைகளை ஏற்பவன் {ப்ரக்ரஹன்}, ஆசைகள் அனைத்தையும் அடக்கி தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன் {நிக்ரஹன்}, தனக்கு முன்பு நடக்க யாருமில்லாதவன் {வ்யக்ரன்}, நான்கு கொம்புகளைக் கொண்டவன் {நைகஸ்ருங்கன்}, கதனின் அண்ணன் {கதாக்ரஜன்}<756-764>;(94)
நான்கு வடிவங்களைக் கொண்டவன் {சதுர்மூர்த்தி}, நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்பாஹு}, தன்னில் இருந்து நான்கு புருஷர்களை உதிக்கச் செய்தவன் {சதுர்வ்யூஹன்}, நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, நான்கு வகைகளையும் {வர்ணங்களையும்} சார்ந்த மனிதர்களுக்குப் புகலிடமாக இருப்பவன் {சதுர்க்கதி}, (மனம், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, நினைவு ஆகிய) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு நோக்ககளின் பிறப்பிடமாக இருப்பவன் {சதுர்ப்பாவன்}, நான்கு வேதங்களை அறிந்தவன் {சதுர்வேதவித்}, தன் பலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியவன் {ஏகபாத்}<765-772>;(95)
உலகச் சக்கரத்தை வட்டமாகச் சுழலச் செய்பவன் {ஸமாவர்த்தன்}, உலகப் பற்றுகள் அனைத்திலும் இருந்து தொடர்பறுந்த ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, வெல்லப்பட இயலாதவன் {துர்ஜயன்}, கடக்கப்பட இயலாதவன் {துரதிக்ரமன்}, அடைதற்கு மிக அரியவன் {துர்லபன்}, அணுகுதற்கரியவன் {துர்க்கமன்}, நுழைவதற்கு அரிதானவன் {துர்க்கன்}, (யோகியராலும்) இதயத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கு அரியவன் {துராவாஸன்}, (தானவர்களுக்கு மத்தியில் உள்ள) பெரும்பலமிக்கப் பகைவர்களைக் கொல்பவன் {துராரிஹா}<773-781>;(96)
அழகிய அங்கங்களைக் கொண்டவன் {சுபாங்கன்}, அண்டத்தில் உள்ள அனைத்தின் சாரமாக இருப்பவன் {லோகஸாரங்கன்}, (அண்டமெனும் துணியை நெய்வதற்குரிய) மிக அழகிய கயிறுகள் மற்றும் இழைகளைக் கொண்டவன் {ஸுதந்து}, எப்போதும் நீண்டு கொண்டிருக்கும் கயிறுகளையும், இழைகளையும் கொண்டவன் {தந்துவர்த்தகன்}, இந்திரனால் செய்யப்படும் செயல்களைச் செய்பவன் {இந்த்ரகர்மா}, பெருஞ்செயல் புரிபவன் {மஹாகர்மா}, செய்யத்தவறிய செயல்களற்றவன் {க்ருதகர்மா}, வேதங்கள் மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் தொகுத்தவன் {க்ருதாகமன்}<782-789>;(97)
உயர்ந்த பிறப்பைக் கொண்டவன் {உத்பவன்}, பேரழகன் {ஸுந்தரன்}, இதயம் முழுவதும் பரிவிரக்கத்தால் நிறைந்தவன் {ஸுந்தர்}, உந்தியில் விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்டவன் {ரத்நநாபன்}, சிறந்த ஞானத்தையே கண்ணாகக் கொண்டவன் {ஸுலோசநன்}, பிரம்மனாலும், அண்டத்தில் உள்ள முதன்மையானோர் பிறராலும் வழிபடத்தகுந்தவன் {அர்க்கன்}, உணவுக் கொடையாளி {வாஜஸநி}, அண்டப் பேரழிவின் போது கொம்புகளை ஏற்றவன் {ஸ்ருங்கீ}, தன் பகைவர்களை எப்போதும் மிக அற்புதமாக வெல்பவன் {ஜயந்தன்}, அனைத்தையும் அறிந்தவன், தடுக்கப்பட முடியாத ஆற்றலுடன் கூடியோரை எப்போதும் வெல்பவன் {ஸர்வவிஜ்ஜயீ}<790-799>;(98)
பொன் போன்ற அங்கங்களைக் கொண்டவன் {ஸுவர்ணபிந்து}, (கோபம், வெறுப்பு, அல்லது வேறு ஆசைகளால்) கலங்கடிக்கப்பட முடியாதவன் {அக்ஷோப்யன்}, வாக்குகள் அனைத்தையும் ஆள்வர்கள் அனைவரையும் ஆள்பவன் {ஸர்வவாகீஸ்வரேஸ்வரன்}, ஆழமான தடாகமாக இருப்பவன் {மஹாஹ்ரதன்}, ஆழ்ந்த படுகுழியாக இருப்பவன் {மஹாகர்த்தன்}, காலத்தின் ஆதிக்கத்தைக் கடந்தவன் {மஹாபூதன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தையும் தனக்குள் நிறுவிக் கொண்டவன் {மஹாநிதி}<800-806>;(99)
பூமியை மகிழச் செய்பவன் {குமுதன்}, குந்த மலர்களைப் போன்ற ஏற்புடைய கனிகளை அருள்பவன் {குந்தரன்}, (ராம அவதாரத்தில்) கசியபருக்கு பூமியைக் கொடையாக அளித்தவன் {குந்தன்}, பூமியின் வெப்பத்தைத் தன் மழைப்பொழிவால் தணிக்கும் மழை நிறைந்த மேகத்தைப் போல (சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) மூன்றுவகைத் துன்பங்களை அழிப்பவன் {பர்ஜந்யன்}, அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்பவன் {பவநன்}, தன்னைத் தூண்ட எவரும் இல்லாதவன் {அநிலன்}, அமுதம் பருகியவன் {அமிதாசன்}, சாகாவுடல் படைத்தவன் {அம்ருதவபு}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, ஒவ்வொரு திசையிலும் முகமும் கண்களும் திரும்பப்பெற்றவன் {ஸர்வதோமுகன்}<807-816>;(100)
(மலர்கள் மற்றும் இலைகள் போன்ற காணிக்கைகளுடன்) எளிதில் வெல்லபடக்கூடியவன் {ஸுலபன்}, சிறந்த நோன்புகளைச் செய்தவன் {ஸுவ்ரதன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தன்}, பகைவர் அனைவரையும் வெல்பவன் {சத்ருஜித்}, பகைவர் அனைவரையும் எரிப்பவன் {சத்ருதாபநன்}, பிற மரங்களுக்கு மேலாக எப்போதும் வளரும் நெடிய ஆல மரமாக இருப்பவன் {ந்யக்ரோதன்}, புனிதமான அத்திமரமாக இருப்பவன் {உதும்பரன்}, அரச மரமாக இருப்பவன் (அல்லது, அழியாத வடிவங்களில் இருப்பது போலவே அண்டத்தில் அழியும் வடிவங்களிலும் இருப்பதன் விளைவால் நீடித்து நிற்காதவன்) {அஸ்வத்தன்}, ஆந்திர நாட்டின் சாணூரனைக் கொன்றவன் {சாணூராந்த்ரநிஷூதநன்}<817-825>;(101)
ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரார்ச்சிஸ்}, (காளி, கராளி முதலிய வடிவங்களில்) ஏழு நாவுகளைக் கொண்டவன் {ஸப்தஜிஹ்வன்}, (நெருப்பின் தேவனுடன் அடையாளம் காணப்படும் விளைவால்) ஏழு தழல்களைக் கொண்டவன் {ஸப்தைதஸ்}, தன் வாகனத்தை இழுக்க ஏழு குதிரைகளைக் கொண்டவன் (அல்லது, சப்தம் என்றழைக்கப்படும் குதிரையைக் கொண்டவன்) {ஸப்தவாஹநன்}, வடிவமற்றவன் {அமூர்த்தி}, பாவமற்றவன் {அநகன்}, நினைத்தற்கரியவன் {அசிந்த்யன்}, அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவன் {பயக்ருத்}, அச்சங்கள் அனைத்தையும் அழிப்பவன் {பயநாசநன்}<826-834>;(102)
மிகச் சிறியவன் {அணு}, மிகப் பெரியவன் {ப்ருஹத்}, மெலிந்தவன் {க்ருசன்}, பருத்தவன் {ஸ்தூலன்}, குணங்களுடன் கூடியவன் {குணப்ருத்}, குணங்களைக் கடந்தவன் {நிர்க்குணன்}, மிகச்சிறந்தவன் {மஹாந்}, கைப்பற்றப்பட முடியாதவன் {அத்ருதன்}, (தன்னை வழிபடுபவர்களால்) எளிதில் கைப்பற்றப்படுபவன் {ஸ்வத்ருதன்}, சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸ்வாஸ்யன்}, தற்செயலான உலகங்களைச் சார்ந்த மக்களைத் தன் வழித்தோன்றல்களாகக் கொண்டவன் {ப்ராக்வம்சன்}, ஐந்து அடிப்படை பூதங்கள் உள்ளடங்கிய படைப்பைச் செய்பவன் {வம்சவர்த்தநன்}<835-846>;(103)
(ஆனந்தனின் வடிவில்) கனமான சுமைகளைச் சுமப்பவன் {பாரப்ருத்}, வேதங்களில் அறிவிக்கப்பட்டவன் {கதிதன்}, யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவன் {யோகீ}, யோகியர் அனைவரின் தலைவன் {யோகீசன்}, அனைத்து ஆசைகளையும் கொடுப்பவன் {ஸர்வகாமதன்}, நாடுவோருக்கு ஆசிரமம் அளிப்பவன் {ஆஸ்ரமன்}, சொர்க்கத்தின் இன்ப வாழ்வு நிறைவடைந்து மீண்டும் இவ்வாழ்வுக்குத் திரும்பும் யோகியரை புதிதாக யோகத்தைச் செய்யச் செய்பவன் {ஸ்ரமணன்}, யோகியரின் பலன்கள் தீர்ந்தும் கூட அவர்களில் பலத்தை நிறுவுபவன் {க்ஷாமன்}, (உலக மரமாக இருந்து வேதங்களில் சந்தங்களின் வடிவில்) நல்ல இலைகளாக இருப்பவன் {ஸுபர்ணன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}<847-856>;(104)
(ராமனின் வடிவில்) வில் தரித்தவன் {தநுர்த்தரன்}, ஆயுத அறிவியல் அறிந்தவன் {தநுர்வேதன்}, தண்டக் கோலாக இருப்பவன் {தண்டன்}, தண்டிப்பவன் {தமயிதா}, தண்டனைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {அதமன்}, வெல்லப்பட முடியாதவன் {அபராஜிதன்}, அனைத்துச் செயல்களையும் செய்யத்தகுந்தவன் {ஸர்வஸஹன்}, மனிதர்கள் அனைவரையும் அவரவர் கடமைகளில் நிறுவுபவன் {நியந்தா}, தன்னைப் பணியில் நிறுவ எவரும் இல்லாதவன் {நியமன்}, தன்னைக் கொல்ல யமன் எவனும் இல்லாதவன் {யமன்}<857-866>;(105)
வீரமும் ஆற்றலும் கொண்டவன் {ஸத்வவாந்}, சத்வ (நல்லியல்பின்) குணம் கொண்டவன் {ஸாத்விகன்}, வாய்மையுடன் அடையாளங்காணப் படுபவன் {ஸத்யன்}, வாய்மையிலும், அறத்திலும் அர்ப்பணிப்புள்ளவன் {ஸத்யதர்மபராயணன்}, முக்தி அடையத் தீர்மானித்தவர்களால் விரும்பப்படுபவன் (அல்லது, பேரழிவு நேரும்போது இந்த அண்டம் எவனிடம் செல்லுமோ அவன்) {அபிப்ராயன்}, தன்னை வழிபடுபவர்கள் அளிக்கும் அனைத்து வகைப் பொருட்களுக்கும் தகுந்தவன் {ப்ரியார்ஹன்}, (மந்திரங்கள், மலர்கள் மற்றும் வேறு மதிப்புமிக்கக் காணிக்கைகளால்) துதிக்கத்தகுந்தவன் {அர்ஹன்}, அனைவருக்கும் நல்லது செய்பவன் {ப்ரியக்ருத்}, அனைவரின் மகிழ்ச்சியையும் பெருக்குபவன் {ப்ரீதிவர்த்தநன்}<867-875>;(106)
ஆகாயப்பாதை கொண்டவன் {விஹாயஸகதி}, சுயப்பிரகாசத்தில் ஒளிர்பவன் {ஜ்யோதி}, பேரழகுடன் கூடியவன் {ஸுருசி}, வேள்வி நெருப்பில் இடப்படும் காணிக்கைகளை உண்பவன் {ஹுதபுக்விபு}, எங்கும் வசிப்பவன் {ரவி}, பெரும்பலம் கொண்டவன் {விரோசநன்}, சூரியனின் வடிவில் பூமியின் ஈரத்தை உறிஞ்சுபவன் {ஸூர்யன்}, பல்வேறு ஆசைகளைக் கொண்டவன், அனைத்தையும் பெறுவபன், அண்டத்தைப் பெற்றவன் {ஸவிதா}, சூரியனை கண்ணாகக் கொண்டவன் {ரவிலோசநன்}<876-885>;(107)
எல்லையற்றவன் {அநந்த}, வேள்விக் காணிக்கைகள் அனைத்தையும் ஏற்பவன் {ஹுதபுக்}, மனத்தின் வடிவில் பிரகிருதியை அனுபவிப்பவன் {போக்தா}, இன்பத்தை அளிப்பவன் {ஸுகதன்}, (அறத்திற்காகவும், அறத்தைப் பாதுகாக்கவும்) மீண்டும் மீண்டும் பிறப்பவன் {நைகதன்}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் முதலில் பிறந்தவன் {அக்ரஜன்}, (விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதன் விளைவால்) மனத்தளர்வைக் கடந்தவன் {அநிர்விண்ணன்}, அறவோர் வழுவும்போது மன்னிப்பவன் {ஸதாமர்ஷீ}, அண்டம் நிலைக்கும் அடித்தளமாக இருப்பவன் {லோகாதிஷ்டாநன்}, மிக அற்புதமானவன் {அத்புதன்}<886-895>;(108)
தொடக்கக் காலம் முதல் இருப்பவன் {ஸநாத்}, பெரும்பாட்டன் முதலியோர் பிறப்பதற்கு முன்பே இருப்பவன் {ஸநாதந்தமன்}, பழுப்பு நிறம் கொண்டவன் (அல்லது கண்டடைபவன், அல்லது இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் தன் கதிர்களால் ஒளியூட்டுபவன்) {கபிலன்}, பெரும் பன்றியின் வடிவமேற்றவன், அனைத்தும் அழிந்த பிறகும் இருப்பவன் {கபிரவ்யயன்}, அனைத்து அருள்களையும் வழங்குபவன் {ஸ்வஸ்திதன்}, அருள்களைப் படைப்பவன் {ஸ்வஸ்திக்ருத்}, அருள்கள் அனைத்துடன் அடையாளம் காணப்படுபவன் {ஸ்வஸ்தி}, அருள்களை அனுபவிப்பவன் {ஸ்வஸ்திபுக்}, அருள்களைப் பொழிபவன் {ஸ்வஸ்திதக்ஷிணன்}<896-905>;(109)
கோபமற்றவன் {அரெளத்ரன்}, பாம்பான சேஷனின் வடிவில் மடங்கிச் சுருண்டு கிடப்பவன் {குண்டலீ}, சக்கரந்தரித்தவன் {சக்ரீ}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் உயர்ந்த ஆணைகளால் முறைப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டவன் {ஊர்ஜிதசாஸநன்}, வாக்கின் துணையால் விவரிக்கப்பட இயலாதவன் {சப்தாதிகன்}, வாக்கின் உதவியால் வேதாங்கங்களில் சொல்லப்பட்டவன் {சப்தஸ்ஹன்}, மூவகைத் துன்பங்களால் பீடிக்கப்பட்டவர்களைக் குளிர்விக்கும் பனித்துளியாய் இருப்பவன் {சிசிரன்}, இருளை விலக்கும் வல்லமுடையுடன் அனைத்து உடல்களிலும் வாழ்பவன் {சர்வரீகரன்}<906-914>;(110)
கோபமற்றவன் {அக்ரூரன்}, எண்ணம், சொல் மற்றும் செயலின் மூலம் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவதில் திறன் படைத்தவன் {பேசலன்}, குறுகிய காலத்திற்குள் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவன் {தக்ஷன்}, தீயோரை அழிப்பவன் {தக்ஷிணன்}, மன்னிக்கும் தன்மை கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் {க்ஷமிணாம்வரன்}, ஞானியர் அனைவரிலும் முதன்மையானவன் {வித்வத்தமன்}, அச்சமனைத்தையும் கடந்தவன் {வீதபயன்}, எவனுடைய பெயர்களும், சாதனைகளும் கேட்கப்படுமோ, உரைக்கப்படுமோ, அறத்திற்கு வழிவகுக்குமோ அவன் {புண்யஸ்ரவணகீர்த்தநர்}<915-922>;(111)
மயக்கம் நிறைந்த உலகப் பெருங்கடலில் இருந்து அறத்தைப் பாதகாப்பவன் {உத்தாரணன்}, தீயோரை அழிப்பவன் {துஷ்க்ருதிஹா}, அறமே ஆனவன் {புண்யன்}, தீய கனவுகள் அனைத்தையும் விலக்குபவன் {துஸ்வப்நநாசநன்}, தன்னை வழிபடுபவர்களை விடுதலைக்கான {முக்திக்கான} நல்ல பாதையில் செலுத்துவதற்காகத் தீய பாதைகள் அனைத்தையும் அழிப்பவன் {வீரஹா}, சத்வ குணத்தில் இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் {ரக்ஷணன்}, நற்பாதையில் நடப்பவன் {ஸந்தன்}, வாழ்வே ஆனவன் {ஜீவநன்}, அண்டம் முழுவதும் பரவியிருப்பவன் {பர்யவஸ்திதன்}<923-931>;(112)
எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவன் {அநந்தரூபன்}, எல்லையற்ற செல்வத்தைக் கொண்டவன் {அநந்தஸ்ரீ}, கோபத்தை அடக்கியவன் {ஜிதமந்யு}, அறவோரின் அச்சங்களை அழிப்பவன் {பயாபஹன்}, எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தன்னுணர்வு உள்ளவர்களுக்கு அனைத்துப் புறங்களிலும் நீதிக்கனிகளைக் கொடுப்பவன் {சதுரஸ்ரன்}, அளவிலா ஆன்மா கொண்டவன் {கபீராத்மா}, பல்வேறு வகையில் தகுந்த செயல்களைச் செய்தோருக்கு பல்வேறு வகையான கனிகளை அளிப்பவன் {விதிசன்}, (தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு) பல்வேறு வகையில் ஆணைகளை நிறுவுபவன் {வ்யாதிசன்}, சரியான கனியுடன் கூடிய ஒவ்வொரு செயலிலும் பற்று கொண்டவன் {திசன்}<932-940>;(113)
தொடக்கமற்றவன் {அநாதி}, பூமி மற்றும் காரணங்கள் அனைத்தின் கொள்ளிடம் {பூர்ப்புவன்}, செழிப்பின் தேவியை எப்போதும் தன் புறத்தில் கொண்டவன் {லக்ஷ்மீ}, வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸுவீரன்}, அழகிய கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {ருசிராங்கதன்}, உயிரினங்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஜநநன்}, உயிரினங்கள் அனைத்தும் பிறப்பதற்கான மூலக் காரணன் {ஜநஜந்மாதி}, தீய அசுரர்கள் அனைவரையும் அச்சுறுத்துபவன் {பீமன்}, பயங்கர ஆற்றலைக் கொண்டவன் {பீமபராக்ரமன்}<941-949>;(114)
அடிப்படையான ஐந்து பூதங்களின் வசிப்பிடமாகவும் கொள்ளிடமாகவும் இருப்பவன் {ஆதாரநிலயன்}, அண்டப் பேரழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் தன் தொண்டையில் விழுங்குபவன் {தாதா}, மலரைக் காண்பதைப் போல ஏற்புடைய இனிய புன்னகை கொண்டவன் (அல்லது, மலர்களின் வடிவில் புன்னகைப்பவன்) {புஷ்பஹாஸன்}, எப்போதும் விழிப்புநிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஜாகரன்}, உயிரினங்கள் அனைத்துக்கும் தலைமையாக நிற்பவன் {ஊர்த்வகன்}, அறவோர் செய்யும் செயல்களுடன் கூடிய ஒழுக்கம் கொண்டவன் {ஸத்பதாசாரன்}, [பரீக்ஷித் மற்றும் பிறரின் வழக்கில் நேர்ந்தது போல்] இறந்தோரை மீட்பவன்{ப்ராணதன்}, தொடக்க அசையான ஓம் ஆக இருப்பவன் {ப்ரணவன்}, அறச்செயல்கள் அனைத்தையும் விதித்தவன் {பணன்}<950-958>;(115)
பரமாத்மாவைக் குறித்த உண்மையை வெளிப்படுத்துபவன் {ப்ரமாணன்}, ஐந்து மூச்சுக்காற்றுகள் மற்றும் ஐம்புலன்களின் வசிப்பிடமாக இருப்பவன் {ப்ராணநிலயன்}, உயிரினங்களின் வாழ்வை ஆதரிக்கும் உணவாக இருப்பவன் {ப்ராணத்ருத்}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர் மூச்சின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தையும் வாழச் செய்பவன் {ப்ராணஜீவநன்}, தத்துவ அமைப்புகள் அனைத்திலும் சிறந்த தத்துவமாக இருப்பவன் {தத்வம்தத்வவித்}, அண்டத்தின் ஒரே ஆன்மாவாக இருப்பவன் {ஏகாத்மா}, பிறப்பு, முதுமை மற்றும் மரணத்தைக் கடந்தவன் {ஜந்மம்ருத்யுஜராதிகன்}<959-965>;(116)
பூ, புவ, ஸ்வ மற்றும் செய்யப்படும் பிற ஹோம காணிக்கைகளின் புனித அசைகளின் விளைவால் அண்டத்தைக் காப்பவன் {பூர்ப்புவஸ்வஸ்தரு}, பெரும்பாதுகாவலன் {தாரன்}, அனைவரின் தந்தையாக இருப்பவன் {ஸவிதா}, பெரும்பாட்டனுக்கே (பிரம்மனுக்கே) தந்தையாக இருப்பவன் {ப்ரபிதாமஹன்}, வேள்வியின் வடிவில் இருப்பவன் {யஜ்ஞன்}, (வேள்விகளில் துதிக்கப்படும் பெருந்தேவனாக அவனே இருப்பதால்) வேள்விகள் அனைத்தின் தலைவன் {யஜ்ஞபதி}, வேள்வி செய்பவன் {யஜ்வா}, வேள்விகளையே தன் அங்கங்களாகக் கொண்டவன் {யஜ்ஞாங்கன்}, வேள்விகள் அனைத்தையும் நிலைநிறுத்துபவன் {யஜ்ஞவாஹநன்}<966-975>;(117)
வேள்விகளைப் பாதுகாப்பவன் {யஜ்ஞப்ருத்}, வேள்விகளைப் படைத்தவன் {யஜ்ஞக்ருத்}, வேள்விகள் செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {யஜ்ஞீ}, வேள்விகள் அனைத்தின் வெகுமதிகளையும் அனுமதிப்பவன் {யஜ்ஞபுக்}, வேள்விகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவன் {யஜ்ஞஸாதநன்}, வேள்விகளின் இறுதியில் ஆகுதிகள் முழுமையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை அனைத்தையும் நிறைவடையச் செய்பவன் {யஜ்ஞாந்தக்ருத்}, பலனில் விருப்பமின்றிச் செய்யப்படும் வேள்விகளோடு அடையாளங்காணப் படுபவன் {யஜ்ஞகுஹ்யன்}, அனைத்து உயிரினங்களையும் நீடிக்கச் செய்யும் உணவாக இருப்பவன் {அந்நம்}, அந்த உணவை உண்பவன் {அந்நாதன்}<976-984>;(118)
இருப்பின் காரணன் {ஆத்மயோநி}, தானாகத் தோன்றியவன் {ஸ்வயஞ்சாதன்}, திடமான பூமியைத் துளைத்துச் சென்றவன் (சென்று பாதாள லோகத்தில் ஹிரண்யாக்ஷன் மற்றும் பிறரைக் கொன்றவன்) {வைகாநன்}, சாமங்கள் பாடுபவன் {ஸாமகாயநன்}, தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவன் {தேவகீநந்தநன்}, அனைத்தையும் படைப்பவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் தலைவன் {க்ஷிதீசன்}, தன்னை வழிபடுபவர்களின் பாவங்களை அழிப்பவன் {பாபநாசநன்}<985-992>;(119)
(பாஞ்சஜன்யம் என்ற) சங்கைத் தன் கையில் சுமப்பவன் {சங்கப்ருத்}, ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவன் {நந்தகீ}, இடையறாமல் யுகச்சக்கரத்தைச் சுழலச் செய்பவன் {சக்ரீ}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புலன்களில் தன்னைச் செலுத்திக் கொள்பவன் {சார்ங்கதந்வா}, மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவன் {கதாதரன்}, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் {ரஇவ்வாறே எப்போதும் பாடப்பட வேண்டிய, மகிமை பொருந்திய உயர் ஆன்ம கேசவனின் சிறப்பான ஆயிரம் பெயர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி உனக்கு உரைத்தேன்.(121) ஒவ்வொரு நாளும் இந்தப் பெயர்களைக் கேட்பவனோ, உரைப்பவனோ இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் எந்தத் தீங்கையும் சந்திக்க மாட்டான்.(122) இஃதை ஒரு பிராமணன் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் செய்தால் அவன் எப்போதும் போர்க்களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் செய்தால் அவன் செழிப்படைவான். அதே வேளையில் ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(123) ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் (இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ) அஃதை ஈட்டுவதில் வெல்கிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் (இவ்வழியில் செயல்பட்டு) செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் கூட, ஆனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் (இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்) சந்ததியை அடைகிறான்.(124)
எந்த மனிதன், அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாசுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ(125) அவன் பெரும்புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன்மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.(126) அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும் பெரும் சக்தியையும் கொண்டிருப்பான். நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது; நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள் ஆகியன அவனுடையவையாகின்றன.(127) நோயாளி சுகம்பெறுவான்; துன்பங்களில் பீடிக்கப்படுபவன் அவற்றில் இருந்து விடுபடுவான், பேரிடரில் மூழ்கியவன் அதனிலிருந்து விடுபடுவான்.(128) அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன், சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.(129) வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.(130)
வாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.(131) பக்தியுடனும், நம்பிக்கையுடனும் (வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய) இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் ஒரு மனிதன் ஆன்ம இன்பம், மன்னிக்கும் இயல்பு, செழிப்பு, புத்தி, நினைவு மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(132) அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒருபோதும் தோன்றாது.(133)
சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் வானம், திசைப்புள்ளிகள், பூமி, பெருங்கடல் ஆகியவற்றுடன் கூடிய வெளியானது உயர் ஆன்ம வாசுதேவனின் ஆற்றலாலேயே ஆதரவடைந்து நிலைநிறுத்தப்படுகிறது.(134) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.(135) புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(136) சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) ஒழுக்கமே முதன்மையானது எனச் சொல்லப்படுகிறது. அறம் ஒழுக்கத்தையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் அறத்தின் தலைவனாகச் சொல்லப்படுகிறான்.(137)
முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.(138) யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள் என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.(139) விஷ்ணு, பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கும் ஒரே பெரும்பொருளாக இருக்கிறான். மூவுலகங்களையும் மறைப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவுமான அவன் அவை அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனது மகிமை குறைவறியாதது, அவன் (அண்டத்தின் உயர்ந்த தலைவனாக) அதை அனுபவிக்கிறான்.(140) சிறப்புமிக்க விஷ்ணுவைப் புகழ்வதும், வியாசரால் தொகுக்கப்பட்டதுமான இந்தப் பாடல், உயர்ந்த மகிழ்ச்சியையும், உயர்ந்த நன்மையையும் (முக்தியையும்) அடைய விரும்பும் மனிதனால் பாடப்பட வேண்டும்.(141) பிறப்பற்ற தேவனும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவனும், அண்டத்திற்கு மூலமாகவோ, காரணமாகவோ இருப்பவனும், சிதைவறியாதவனும், பெரியவையும், தாமரை இதழ்களைப் போன்றவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த அண்டத் தலைவனை வழிபட்டுத் துதிப்பவர்கள் எந்த ஏமாற்றத்தையும் ஒருபோதும் சந்திப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(142)தாங்கபாணி}, கலங்கடிக்கப்பட முடியாதவன் {அஷோப்யன்}, அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவன் {ஸர்வப்ரஹரணாயுதன்}<993-1000>[1].(120) ஓம், அவனை வணங்குகிறேன்[2].
சாவித்ரி மந்திரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 150-தேவர்கள், முனிவர்கள், மன்னர்கள் மற்றும் பலரின் பெயர்கள் அடங்கிய சாவித்திரி மந்திரத்தை {காயத்ரியை} யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும்ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் ஒருவன் பெருமளவு அறத்தகுதிக்குரிய பலன்களை ஈட்டச் செய்யும் மந்திரம் எது?(1) பயணம் புறப்படும்போதோ, புதிய கட்டடத்திற்குள் நுழையும்போதோ, எந்தச் செயலையும் செய்யும்போதோ, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளின் போதோ சொன்னால் வெற்றியை உண்டாகும் மந்திரம் எது?(2) உண்மையில் வேதங்களுக்கு இணக்கமாக, தீய ஆதிக்கங்கள் அனைத்தையும் தணிக்கவோ, செழிப்பு, அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவோ, தீமையிலிருந்து பாதுகாக்கவோ, பகைவர்களை அழிக்கவோ, அச்சங்களை விலக்கவோ உரிய மந்திரம் எது?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, வியாசரால் அறிவிக்கப்பட்ட அந்த மந்திரத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சாவித்ரியால் {சூரியனால்} விதிக்கப்பட்டிருக்கும் அது பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகும். அஃது ஒரு மனிதனிடம் இருக்கும் பாவங்கள் அனைத்தையும் உடனே தூய்மையாக்கவல்லதாகும்.(4) ஓ! பாவமற்றவனே, அந்த மந்திரத்தின் விதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாண்டு மகன்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த விதிகளைக் கேட்பதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைகிறான்.(5) அம்மந்திரத்தைப் பகலும், இரவும் உரைப்பவன் பாவத்தால் ஒருபோதும் களங்கமடையமாட்டான். அந்த மந்திரத்தை உனக்கு இப்போது உரைக்கப்போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6) உண்மையில், ஓ! இளவரசே, இதைக் கேட்கும் மனிதன் நீண்ட வாழ்நாளை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தில் திளைப்பான்.(7) ஓ! மன்னா, க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மை நோன்பை {சத்திய விரதத்தை} நிலையாக நோற்றவர்களுமான அரசமுனிகளில் முதன்மையானவர்களால் ஒவ்வொரு நாளும் இம்மந்திரம் உரைக்கப்பட்டது.(8) உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, புலனடக்கத்துடனும், ஆன்ம அமைதியுடனும் ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தைச் சொல்லும் ஏகாதிபதிகள் ஒப்பற்ற செழிப்பை அடைவதில் வெல்வார்கள்.(9)
உயர்ந்த நோன்புகளைக் கொண்ட வசிஷ்டரையும், வேதப்பெருங்கடலான பராசரரையும் மதிப்புடன் வணங்குகிறேன். பெரும் நாகனான அனந்தனை வணங்குகிறேன். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் மற்றும் மங்கா மகிமை கொண்ட அனைவரையும் வணங்குகிறேன்.(10) முனிவர்களையும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், முதன்மையானோர் அனைவருக்கும் வரங்களை அளிப்பவனுமான தேவதேவனை வணங்குகிறேன். ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், மங்கலமிக்கவனும், ஆயிரம் பெயர்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை வணங்குகிறேன்.(11)
அஜன் ஏகபாத் {அஜைகபாத்}, அஹிர்ப்புத்நியன், வெல்லப்பட இயலாத பிநாகி, ருதன், பித்ருரூபன், திரியம்பகன், மஹேஸ்வரன்,(12) விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஸ்வரன் என எண்ணிக்கையில் பதினொருவராக {11} உள்ள இவர்கள் உலகங்கள் அனைத்தின் தலைவர்களாகக் கொண்டாடப்படும் ருத்திரர்களாவர்.(13) இந்தப் பதினோரு உயர் ஆன்மாக்களே (வேதங்களின்) சதருத்ரத்தில் நூற்றுவராகக் குறிப்பிடப்படுகின்றனர்.
அம்சன், பகன், மித்ரன், வருணன், தாதா, அர்யமா, ஜயந்தன், பாஸ்கரன்,(14) த்வஷ்டா, பூஷா, இந்திரன், விஷ்ணு ஆகியோர் பன்னிருவராவர். ஸ்ருதி அறிவிப்பது போலக் கசியபரின் மகன்களான இந்தப் பன்னிருவரும் {12} ஆதித்யர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.(15)
தரன், துருவன், ஸோமன், ஸாவித்ரன், அநிலன், அநலன், பிரத்யூஷன், பிரபாஸன் ஆகியோர் சாத்திரங்களில் சொல்லப்படும் எட்டு {8} வசுக்களாவர் {அஷ்டவசுக்களாவர்}.(16)
நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினி இரட்டையராகச் {2} சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மார்த்தாண்டனின் {சூரியனின்} மகன்களாவர், அவனது மனைவியான ஸம்ஜ்ஞாதேவியின் மூக்கில் இருந்து இவர்கள் வெளிவந்தனர்.(17)
இனி இவ்வுலகில் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சிகளாக இருப்போரின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன்.(18) தேவர்களில் தலைவர்களான அவர்கள் புலப்படாத நிலையில் இருந்தாலும் அனைத்தையும் காண்கின்றனர். உண்மையில், அவர்கள் அனைத்து உயிரினங்களும் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் காண்கின்றனர். அவர்கள் மிருத்யு, காலன்,(19) விஷ்வேதேவர்கள், வடிவங்களுடன் கூடிய பித்ருக்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட பெரும் முனிவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்கள், மற்றும் தவங்கள், முக்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோராவர்.(20) இவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லும் மனிதர்களுக்குப் பல்வேறு வகை நன்மைகளைச் செய்கின்றனர். உண்மையில் தெய்வீக சக்தி கொண்ட அவர்கள், பெரும்பாட்டனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு இன்ப உலகங்களை அத்தகைய மனிதர்களுக்கு அளிக்கிறார்கள்.(21) அனைத்து உலகங்களிலும் வசித்திருக்கும் அவர்கள், அங்கு நடைபெறும் செயல்களைக் கவனமாகக் குறித்துக் கொள்கின்றனர். உயிரினங்கள் அனைத்தின் தலைவர்களான அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அபரிமிதமான அளவில் ஈட்டுபவனாகிறான்.(22) அவன் மறுமையில் அண்டத்தின் தலைவனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு மங்கல, இன்ப உலகங்களை அடைகிறான்.(23)
அனைத்து உயிரினங்களின் தலைவர்களான இந்த முப்பத்துமூவர்[1], பேருடல் படைத்த நந்தீஸ்வரன், காளையைத் தன் கொடிச் சின்னமாகக் கொண்ட உயர்ந்தவன், கணேஸ்வரன் என்றழைக்கப்படுபவனின் தொண்டர்கள் மற்றும் துணைவர்களாக இருக்கும் உலக ஆட்சியாளர்கள் அனைவர், சௌமியர்கள், ரௌத்திரர்கள், யோகிகள் என்றழைக்கப்படுபவர்கள், பூதங்கள் என்றறியப்படுபவர்கள்,(24,25) ஆகாயத்து ஒளிக்கோள்கள், ஆறுகள், வானம், பறவைகளின் இளவரசன் (கருடன்), தவங்களின் விளைவால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அசையும் மற்றும் அசையாத வடிவம் கொண்டிருப்பவர்கள்,(26) இமவான் {இமய மலை}, அனைத்து மலைகள், நான்கு பெருங்கடல்கள், பவனின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட அவனது தொண்டர்கள்,(27) எப்போதும் வெற்றியாளனாக இருக்கும் சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கந்தன், அம்பிகை ஆகிய இந்தப் பெரும் ஆன்மாக்களின் பெயர்களைப் புலனடக்கத்துடன் சொல்லும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(28)இனி மானவர்கள் என்றறியப்படும் முதன்மையான முனிவர்களின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு;(29) ஔஷிஜர், கக்ஷீவான், அங்கிரஸின் மகனான பலர் {பலன்} ஆகியோராவர். பிறகு, மேதாதியின் மகனான கண்வரும், பரிஷதரும் வருகின்றனர்.(30) பிரம்ம சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் அண்டத்தைப் படைத்தவர்களாக (சாத்திரங்களில்) சொல்லப்படுகின்றனர். ருத்திரன், அநலன் மற்றும் வசுக்களில் இருந்து இவர்கள் உண்டானார்கள். இவர்களின் பெயர்களைச் சொல்வதால் மக்கள் பெரும் நன்மைகளை அடைகிறார்கள்.(31) உண்மையில், பூமியில் நற்செயல்களைச் செய்யும் மக்கள், தேவர்களுடன் சொர்க்கத்தில் இன்புற்றுத் திளைக்கிறார்கள். இம்முனிவர்களே இந்திரனின் புரோகிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் வாழ்கிறார்கள்.(32) குவிந்த கவனத்துடன் இம்முனிவர்களின் பெயர்களைச் சொல்லும் மனிதன், இந்திரலோகத்திற்கு உயர்வதிலும், அங்கே பெரும் கௌரவங்களை அடைவதிலும் வெல்கிறான்.(33)
உன்முசு, பிரமுசு, பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்தியாத்ரேயர், திருடவ்யர், ஊர்த்தவபாஹு, திரணஸோமாங்கிரஸ்,(34) மித்ராவருணனின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான அகஸ்தியர் ஆகிய எழுவரும் இறந்தோரின் மன்னனான யமனின் ரித்விஜர்களாகத் தென் பகுதியில் வசிக்கின்றனர்.(35)
திருடேயு, ருதேயு, பெரும்புகழ் கொண்ட பரிவ்யாதர், சூரியனின் காந்தியுடன் கூடியவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர்,(36) அறம் சார்ந்த அத்ரியின் மகனான ஸாரஸ்வதர் ஆகிய எழுவரும் வருணனின் பெரும் வேள்வியில் ரித்விஜர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குப் பகுதியில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர்.(37)
அத்ரி, சிறப்புமிக்க வசிஷ்டர், பெரும் முனிவர் கசியபர், கோதமர், பரத்வாஜர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர்,(38) பெரும் சக்தி கொண்டவரும், கடுமை நிறைந்தவரும், ரிசீகரின் மகனுமான ஜமதக்னி ஆகிய இவர்கள் எழுவரும், கருவூலத்தலைவனின் {குபேரனின்} ரித்விஜர்களாக வடக்குப்பகுதியில் வசிக்கின்றனர்.(39)
எத்திசையிலும் அடைபடாமல் அனைத்துத் திசைகளிலும் வாழும் வேறு முனிவர்கள் எழுவர் இருக்கின்றனர். மனிதர்களுக்குப் புகழையும் அவர்களுக்கான நன்மைகள் யாவையும் கொடுக்கும் அவர்கள், உலகங்களைப் படைத்தவர்களாகப் பாடப்படுகின்றனர்.(40)
தர்மன், காமன், காலன், வஸு, வாஸுகி, அனந்தன், கபிலன் ஆகிய இவ்வேழு பேரும் {நாகர்களும்} உலகத்தைத் தாங்குபவர்களாக இருக்கின்றனர்.(41) ராமர் {பரசுராமர்}, வியாசர், துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரே (முதன்மையானவர்களாகக் கருதப்படும்) வேறு முனிவர்களாவர். இந்தப் பெரும் முனிவர்களே ஒவ்வொன்றிலும் ஏழேழு பேரைக் கொண்ட ஏழு கூட்டங்களாகப் பிரிந்திருக்கின்றனர்[2].(42) மனிதர்கள் அனுபவிக்கும் அமைதியையும் நன்மையையும் உண்டாக்குபவர்கள் பல்வேறு திசைப்புள்ளிகளின் ஆட்சியாளர்களாக {திக்பாலர்களாகச்} சொல்லப்படுகின்றனர். இம்முனிவர்கள் எந்தெந்தெந்த திசையில் இருக்கின்றனரோ அந்த அந்தத் திசையை நோக்கி ஒருவன் வழிபட வேண்டும்.(43)உயிரினங்களைப் படைத்தவர்களான அம்முனிவர்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவர்களாகக் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களைச் செய்தவர்களும், பெரும் தற்கட்டுப்பாடுடையவர்களுமான ஸம்வர்த்தர், மேருஸாவர்ணர், அறம்சார்ந்தவரான மார்க்கண்டேயர், ஸாங்கியர், யோகர், நாரதர், துர்வாஸர் ஆகியோர் மூவுலகங்களிலும் கொண்டாடப்படுபவர்களாக இருக்கிறார்கள்.(45) ருத்திரனுக்கு இணையான வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்கள் பிரம்ம லோகத்தில் வாழ்கின்றனர். அவர்களின் பெயர்களை மதிப்புடன் சொல்லும் மகனற்ற மனிதன் மகனை அடைகிறான், ஓர் ஏழை செல்வத்தை அடைகிறான்.(46) உண்மையில் அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(47)
பூமி முழுவதும் ஆட்சி செய்த பேரரசனும், ஏகாதிபதிகளில் முதன்மையான பிராஜபதிக்கு இணையானவனும், வேனனின் மகனும், கொண்டாடப்பட்ட மன்னனுமான பிருவின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். (அன்பினாலும், பாசத்தினாலும்) பூமி {பூமாதேவி} அவனது மகளானாள் {எனவே, அவள் பிருத்வி என்றழைக்கப்பட்டாள்}. சூரிய குலத்தைச் சேர்ந்தவனும், ஆற்றலில் மஹேந்திரனுக்கு இணையானவனுமான புரூரவனின் பெயரும் ஒருவனால் சொல்லப்பட வேண்டும்.(48) இளையின் மகனான அவன் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவனாக இருந்தான். உண்மையில், புதனின் அன்புக்குரிய மகனான அவனின் {புரூரவனின்} பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(49) மூவுலகங்களில் கொண்டாடப்படும் வீரனான பரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். கிருத யுகத்தில் மகத்தான கோமேத வேள்வியில் {கவாமயனயாகம்} தேவர்களைத் துதித்து, மஹாதேவனுக்கு இணையானவனாக இருந்த பெரும் காந்தி கொண்ட ரந்திதேவனின் பெயரும் சொல்லப்பட வேண்டும். தவங்களுடன் கூடியவனும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவனும், உலகின் அனைத்து வகை நன்மைகளுக்கும் தோற்றுவாயாக இருந்தவனுமான அவன் அண்டத்தை வென்றவனாக இருந்தான்.(51)
பெரும்புகழைக் கொண்ட அரச முனி ஸ்வேதனின்[3] பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். மஹாதேவனை நிறைவடையச் செய்த அவனுக்காகவே அந்தகன் கொல்லப்பட்டான்.(52) சொர்க்கத்தில் பாய்ந்த புனித ஆற்றை {கங்கை ஆற்றை} மஹாதேவனுடைய அருளின் மூலம் (மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க பூமியில் பாயச்செய்ய {அவ்வாற்றைப்}) கீழே கொண்டு வந்தவனும், பெரும்புகழுடைய அரசமுனியுமான பகீரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(53) பகீரதனே, சகரனின் அறுபதாயிரம் மகன்களின் சாம்பலைக் கங்கையின் புனித நீரில் நனையச் செய்து, அவர்களைப் பாவத்தில் இருந்து மீட்டவனாவான். உண்மையில், நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், பேரெழில்வாய்ந்தவர்களும், உயர்ந்த சக்தியைக் கொண்டவர்களுமான இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(54) அவர்களில் சிலர் அச்சந்தரும் வடிவங்களைக் கொண்டவர்களாகவும், பெரும்வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். உண்மையில், ஒருவன் புகழைப் பெருக்கவல்லவர்களான தேவர்கள், முனிவர்கள், மற்றும் அண்டத்தின் தலைவர்களான மன்னர்கள் ஆகியோரின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(55) சாங்கியம், உயர்ந்ததில் உயர்வான யோகம், ஹவ்யம், கவ்யம், ஸ்ருதிகள் அனைத்தின் புகலிடமான பரப்பிரம்மம் ஆகியவை,(56) அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் நன்மைகளைச் செய்யவல்ல ஊற்றுக்கண்களாகச் சொல்லப்பட்டுள்ளன. புனிதமானவையும், பாவத்தைத் தூய்மை செய்பவையுமான இவை மிக உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளன. நோய்கள் அனைத்தையும் சீராக்கும் மருந்துகளாகவும், அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தருபவையாகவும் இவையே இருக்கின்றன[4].(57)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் புலனடக்கத்துடன் காலையும், மாலையும் இப்பெயர்களைச் சொல்ல வேண்டும். இவர்களே பாதுகாப்பவர்கள். இவர்களே மழையைப் பொழியச் செய்கிறார்கள். இவர்களே ஒளிர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருகிறார்கள். இவர்களே {காற்றை} வீசச் செய்கிறார்கள் . இவர்களே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறார்கள்.(58) இவர்களே அண்டத்தின் தலைவர்களாகவும், அனைத்தையும் சாதிப்பதில் உயர்ந்த புத்தியைக் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவர்களாகவும், புலன்களை முற்றாக ஆள்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உண்மையில் இவர்களே மனிதர்களுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் அகற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது.(59) நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த உயர் ஆன்மாக்களே. ஒருவன் தனக்கான நன்மைகள் அனைத்தையும் நிச்சயம் அடைய முடியும் என்பதால் அவன் காலையில் எழுந்ததும் இவர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(60)
இவர்களின் பெயர்களைச் சொல்பவன் நெருப்பு மற்றும் கள்வர்களிடம் உள்ள அச்சங்களில் இருந்து விடுபடுவான். அத்தகைய மனிதன் எத்தடையாலும் தடுக்கப்படமாட்டான். இந்த உயர் ஆன்மாக்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அனைத்து வகைத் தீய கனவுகளில் இருந்தும் விடுபடுவான்.(61) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதர்கள் மங்கலமான குடும்பங்களில் பிறக்கிறார்கள். புலனடக்கத்துடன் கூடிய மறுபிறப்பாளன், வேள்விகளின் தொடக்கச் சடங்குகள் செய்யப்படும்போது இந்தப் பெயர்களைச் சொல்வதன் விளைவால்,(62) அறவோனாகவும், ஆன்ம கல்வியில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், மன்னிக்கும் தன்மை {பொறுமை}}, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகவும் ஆகிறான். நோயால் பீடிக்கப்பட்ட மனிதன் இவற்றைச் சொன்னால், நோயின் வடிவத்தில் இருக்கும் தன் பாவத்தில் இருந்து அவன் விடுபடுகிறான்.(63) ஒரு வீட்டிற்குள் இவற்றைச் சொல்வதன் மூலம், அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபடுவார்கள். வயலில் இவற்றைச் சொல்வதன் மூலம், அனைத்து வகைப் பயிர்களும் செழித்து வளரும்.(64)
பயணத்திற்குப் புறப்படும் சமயத்திலோ, ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியே இருக்கும் போதோ அவற்றை உரைத்தால் அவன் நற்பேற்றை அடைவான். இந்தப் பெயர்கள் ஒருவனுடைய சுயத்திற்கும், தன் பிள்ளைகள் மனைவிகள், செல்வம்,(65) அவனுடைய வித்துகள் மற்றும் செடிகளுக்கும் பாதுகாப்பைத் தரும். போரிடும் சமயத்தில் இப்பெயர்களை உரைக்கும் க்ஷத்திரியன் தன் பகைவர்கள் அழிவடைவதையும், தானும், தன் தரப்பும் நற்பேற்றால் மகுடம் சூடப்படுவதையும் காண்பான். தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் சடங்குகளைச் செய்யும்போது இந்தப் பெயர்களை உரைக்கும் மனிதன், வேள்வியின் ஹவ்யம் மற்றும் கவ்யத்தைப் பித்ருக்களும், தேவர்களும் உண்பதற்கு உதவி செய்தவனாவான். இவற்றை உரைக்கும் மனிதன், நோய்கள், இரைதேடும் விலங்குகள், யானைகள் மற்றும் கள்வர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(66-68) அவனுடைய துன்பச் சுமை குறைந்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலையடைகிறான்.
சிறப்புவாய்ந்த இந்த சாவித்ரி மந்திரத்தை {காயத்ரி மந்திரத்தை} ஓடத்திலோ, வாகனத்திலோ, மன்னர்களின் சபைகளிலோ சொல்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த வெற்றியை அடைகிறான். எங்கே இந்த மந்திரஙகள் உரைக்கபடுகின்றனவோ, அங்கே நெருப்பும் மரத்தை எரிக்காது.(69,70) அங்கே பிள்ளைகள் இறக்கமாட்டார்கள், பாம்புகள் வசிக்காது. உண்மையில், அத்தகைய இடங்களில் மன்னன், பிசாசங்கள், அல்லது ராட்சசர்களிடம் இருந்து எந்த அச்சமும் நேராது[5].(71) உண்மையில் இந்த மந்திரங்களைச் சொல்லும் மனிதனுக்கு, நெருப்பிடமோ, நீரிடமோ, காற்றிடமோ, இரைதேடும் விலங்குகளிடமோ எந்த அச்சமும் நேராது.(72) முறையாக உரைக்கப்படும் இந்த சாவித்திரி மந்திரங்கள் அமைதியை அளித்து, நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையைச் செய்யும். மதிப்புடன் அவற்றை உரைக்கும் மனிதர்கள் அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(73) பிரம்மத்தின் வடிவிலான இந்த சாவித்திரி மந்திரங்களை உரைப்பதன் மூலம் அடையப்படும் விளைவுகள் இவையே. பசுக்களின் மத்தியில் வைத்து இந்த மந்திரங்களை உரைக்கும் மனிதன், அந்தப் பசுக்கள் கனிநிறைந்தவையாக இருப்பதைக் காண்பான்.(74) பயணம் புறப்பட்டாலோ, பயணத்தில் இருந்து வீடு திரும்பினாலோ ஒருவன் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(75)முனிவர்கள் கொண்டுள்ள பெரும் புதிரை {ரகசியத்தை} உள்ளடக்கிய இந்த மந்திரங்கள், அமைதியாக உரைக்கப்படும்போது மிக உயர்ந்தவையாகின்றன. வேள்வித்தீயில் ஆகுதி ஊற்றி முறையாக உரைப்போருக்கு இந்த மந்திரங்கள் இவ்வாறே அமைகின்றன[6].(76) நான் உனக்குச் சொன்னவை பராசரருடைய சிறந்த கருத்துகளாகும். இவை முற்காலத்தில் சக்ரனிடம் சொல்லப்பட்டன. வாய்மை, அல்லது நித்திய பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் அதனை நான் உனக்கு முழுமையாக உரைத்திருக்கிறேன்.(77) அனைத்து உயிரினங்களின் இதயமாக அமைந்திருக்கும் இஃது உயர்ந்த ஸ்ருதியாக இருக்கிறது. சோம குல, சூரிய குல இளவரசர்களான ராகவர்கள் மற்றும் குரவர்கள் {குரு வம்சத்துக் கௌரவர்கள்} அனைவரும்,(78) தங்களைத் தூய்மை செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த மந்திரங்களைச் சொல்கிறார்கள்.இவையே மனித இனத்தின் உயர்ந்த கதியாக அமைகிறது. தேவர்கள், ஏழு முனிவர்கள் மற்றும் துருவனின் பெயர்களை ஒவ்வொரு நாளும் உரைப்பதால் அனைத்து தொல்லைகளிலிருந்தும், துன்பங்களில் இருந்தும் தப்பிக்கும் வழி ஏற்படுகிறது. உண்மையில், இவ்வாறு உரைப்பது ஒருவனைத் துன்பத்தில் இருந்து விரைவாக மீட்கிறது.(79)பழங்காலத்து தவசிகளான கசியபர், கோதமர், பிருகு, அங்கிரஸ், அத்ரி, சுக்ரர், அகஸ்தியர், பிருஹஸ்பதி ஆகியோரும், மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் இந்த மந்திரங்களைத் துதித்தனர். பரத்வாஜரின் மகனால் அங்கீகரிக்கப்பட்ட இம்மந்திரங்கள் ரிசீகரின் மகன்களால் அடையப்பட்டன. உண்மையில் அவற்றை வசிஷ்டரிடம் இருந்து மீண்டும் அடைந்த சக்ரனும், வசுக்களும் தானவர்களிடம் போரிடச் சென்று அவர்களை அடக்கினர்.(80) பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கல்விமானும், வேதங்களை நன்கறிந்தவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதனும், ஒவ்வொரு நாளும் பாரதக் கதையைத் தன் வீட்டில் உரைக்கச் செய்யும் மனிதனும் ஒரே பலன்களை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(81) பிருகுவின் பெயரைச் சொல்வதன் மூலம் ஒருவனிடம் அறம் பெருகுகிறது. வசிஷ்டரை வணங்குவதன் மூலம் அவனது சக்தி பெருகுகிறது. ரகுவை வணங்குவதன் மூலம் அவன் போர்க்களங்களில் வெற்றிவாகை சூடுகிறான். அசுவினிகளின் புகழைச் சொல்வதன் மூலம் ஒருவன் நோய்களில் இருந்து விடுபடுகிறான்.(82) ஓ! மன்னா, இவ்வாறு நித்திய பிரம்மத்திற்கு ஒப்பான சாவித்திரி மந்திரங்களை நான் உனக்குச் சொன்னேன். வேறேதும் என்னிடம் கேட்ட விரும்பினால், நீ அவ்வாறே செய்வாயாக. ஓ! பாரதா நான் உனக்குப் பதிலளிப்பேன்” என்றார் {பீஷ்மர்}.(83)
பிராமண மேன்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 151-பிராமணர்களின் மேன்மையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வழிபடத்தகுந்தவர் எவர்? நாம் வணங்க வேண்டியவர் எவர்? உண்மையில், எவரிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, எந்தெந்த வகையினரிடம் எந்தெந்த ஒழுங்கு நடைமுறை களங்கமற்றதாகக் கருதப்படுகிறது?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர்களை அவமதிப்பது, தேவர்களையே அவமதிப்பதாகும். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்களை வணங்குவதன் மூலம் ஒருவன் எந்தக் களங்கத்தையும் இழைப்பதில்லை.(2) உண்மையில் அவர்கள் வழிபடத்தகுந்தவர்களாவர். அவர்கள் நாம் வணங்கத்தகுந்தவர்கள் ஆவர். உன் மகன்களிடம் நடந்து கொள்வதைப் போல நீ அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், பெரும் ஞானம் கொண்ட அம்மனிதர்களே உலகங்கள் அனைத்தையும் தாங்குகிறார்கள்.(3) அனைத்து உலகங்களிலும் அறத்தின் பெரும்பாலங்களாக இருப்போர் பிராமணர்களே. அனைத்து வகைச் செல்வங்களையும் துறப்பதிலேயே அவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. வாக்கைக் கட்டுப்படுத்தும் நோன்புக்கு அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆவர்.(4) உயிரினங்கள் அனைத்திற்கும் இனிமையான அவர்கள் பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்பவர்களாவர். அவர்கள் இந்த அண்டத்தின் உயிரினங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவர்கள். உலகங்களை ஆளும் விதிமுறைகள் அனைத்தின் ஆசிரியர்கள் அவர்கள். பெரும் புகழைக் கொண்டவர்கள் அவர்கள்.(5)
தவங்களே எப்போதும் அவர்களின் பெருஞ்செல்வமாக இருக்கின்றன. வாக்கே அவர்களது பலமாக இருக்கிறது. அவர்கள் நோற்கும் கடமைகளிலிருந்தே அவர்களது சக்தி பாய்கிறது. அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களான அவர்கள், நுட்பமான கருத்துகளையும் அறியும் நுண்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(6) அவர்கள் நியாயமான ஆசைகளைக் கொண்டவர்கள். கடமைகளை நன்கு செய்து வாழ்பவர்கள் அவர்கள். அறத்தின் பெரும்பாலங்கள் அவர்கள். இருப்பில் இருக்கும் நால்வகை உயிரினங்களும் அவர்களையே தங்கள் புகலிடங்களாகச் சார்ந்திருக்கின்றன.(7) அவர்களே அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகவோ, சாலையாகவோ இருக்கின்றனர். அவர்களே அனைவரின் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். அவர்களே வேள்விகள் அனைத்தையும் எப்போதும் தாங்குபவர்கள். அவர்கள் தங்கள் தந்தைமார் மற்றும் பாட்டன்களின் கனமான சுமைகளை எப்போதும் சுமப்பவர்கள்.(8) வலிமைமிக்க மாடுகளைப் போலக் கடினமான சாலைகளைக் கடக்கும்போதும் தங்கள் கனமான சுமைகளால் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை. பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களின் தேவைகளில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஹவ்யம் மற்றும் கவ்யத்தின் முதல் பங்கை உண்ணும் உரிமை அவர்களுக்கு உண்டு.(9) அவர்கள் உண்ணும் உணவின்மூலமே மூன்று உலகங்களையும் பேரச்சத்தில் இருந்து விடுவிக்கிறார்கள். அனைத்து உலகங்களுக்குமான தீவாக (புகலிடமாக) அவர்கள் இருக்கிறார்கள். பார்வை கொண்ட மனிதர்கள் அனைவரின் கண்களாக அவர்களே இருக்கின்றனர்.(10)
சிக்ஷை என்ற பெயரில் அறியப்படும் ஞானத்தின் அனைத்துக் கிளைகளும், ஸ்ருதிகள் அனைத்தும் அவர்களின் செல்வமாகின்றன. பெருந்திறனுடன் கூடிய அவர்கள் பொருட்களின் மிகநுட்பமான உறவுகளை அறிந்தவர்களாக இருக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் கதியை நன்கறிந்தவர்களாக இருக்கும் அவர்களது எண்ணங்கள் எப்போதும் ஆன்ம அறிவியலிலேயே ஈடுபட்டிருக்கின்றன.(11) அனைத்துப் பொருட்களின் தொடக்கம், நடு மற்றும் முடிவு ஆகியவற்றின் அறிவுடன் கூடியவர்களாகவும், தாங்கள் கொண்ட ஞானத்தில் உள்ள உறுதியுணர்வின் விளைவால் எந்த ஐயமும் இல்லாதவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பதற்கிடையிலான வேறுபாடுகளில் முழு விழிப்புணர்வுடன் இருக்கும் அவர்களே உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(12) அவர்கள் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, உலகப் பொருட்கள் யாவற்றிலும் தொடர்பறுந்தவர்களாக இருக்கிறார்கள். மதிக்கத்தகுந்த அவர்கள், ஞானமும், உயர்ந்த ஆன்மாக்களையும் கொண்ட மனிதர்களால் எப்போதும் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.(13) சந்தனம், அழுக்கான சேறு ஆகியவற்றிலும், எது உணவு, எது உணவில்லை என்பதிலும் அவர்கள் சமமான பார்வையைச் செலுத்துவார்கள். மெல்லிய காவி ஆடைகள், நார்மடி பட்டாடைகள், விலங்கின் தோல் ஆகியவற்றில் தங்கள் கண்களைச் சமமாகச் செலுத்துகிறார்கள்.(14) அவர்கள், எந்த உணவையும் பல நாட்கள் உண்ணாமல், வாழ்வதாரங்களை விலக்குவதன் மூலம் தங்கள் அங்கங்களை வற்ற செய்து வாழ்பவர்கள். வேத கல்வி மற்றும் புலனடக்கத்தில் அவர்கள் உள்ளார்வத்துடன் தங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(15)
அவர்கள் தேவர்களல்லாதவர்களை தேவர்களாகவும், தேவர்களை தேவர்களல்லாதவர்களாகவும் ஆக்குபவர்கள். சினமடைந்தால் அவர்களால் வேறு உலகங்களையும், இருப்பவர்களைத் தவிர்த்து வேறு லோகபாலர்களையும் உண்டாக்க முடியும்.(16) அந்த உயர் ஆன்மாக்களுடைய சாபத்தின் மூலமே பெருங்கடலானது குடிக்க முடியாத வகையில் உப்பானது. அவர்களுடைய கோபமெனும் நெருப்பு காலத்தால் தணிவடையாமல் இன்னும் தண்டகக் காட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.(17) அவர்கள் தேவர்களின் தேவர்களாகவும், காரணங்கள் அனைத்தின் காரணங்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அதிகாரங்கள் அனைத்தின் அதிகாரமாக இருக்கின்றனர். புத்தியும் ஞானமும் கொண்ட எந்த மனிதன் அவர்களை அவமதிக்க முயல்வான்?(18) அவர்களில் இளையோரும், முதியோரும் கௌரவங்களுக்குத் தகுந்தவர்களே. அவர்கள் தங்கள் (வயதின் விளைவால் அல்லாமல்) தவங்கள் மற்றும் ஞானத்தில் உள்ள தனிச்சிறப்புகளின் விளைவால் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள்.(19)
ஞானமற்ற பிராமணனும் தேவனாவான், பிறரைத் தூய்மைப்படுத்தும் உயர்ந்த கருவியாவான். அவர்களுக்கு மத்தியில் அறிவைப் படைத்தவன் உயர்ந்த தேவனும், முற்றாக நிறைந்த பெருங்கடலைப் போன்றவனும் ஆவான்.(20) கல்விமானாகவோ, கல்லாதவனாகவோ இருந்தாலும் பிராமணன் எப்போதும் உயர்ந்த தேவனே. (மந்திரங்களின் துணையால்) புனிதமாகவோ, புனிதமற்றோ இருந்தாலும் நெருப்பு {அக்னி} எப்போதும் பெருந்தேவனே.(21) சுடர்மிக்க நெருப்பானது சுடலையில் எரிந்தபோதும், அஃது எரியும் இடத்தினுடைய தன்மையின் விளைவால் களங்கமடைந்ததாக ஒருபோதும் கருதப்படுவதில்லை. வேள்விப்பீடத்தில் இருந்தாலும், அறையில் இருந்தாலும் தெளிந்த நெய் எப்போதும் அழகாகவே தெரியும்.(22) எனவே, ஒரு பிராமணன் எப்போதும் தீச்செயல்களில் ஈடுபடுபவனாக இருப்பினும் அவன் மதிக்கத்தகுந்தவனாகவே கருதப்பட வேண்டும். உண்மையில், பிராமணனே எப்போதும் உயர்ந்த தேவன் என்பதை அறிவாயாக” என்றார் {பீஷ்மர்}.(23)
எவ்வகை உயிரினம்? – அநுசாஸனபர்வம் பகுதி – 152-தத்தாத்ரேயரிடம் இருந்து நான்கு வரங்களை அடைந்த கார்த்தவீரியார்ஜுனன்; பிராமண மகிமை குறித்து வாயு தேவனுக்கும் கார்த்தவீரியார்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, ஓ! மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெகுமதியைக் கண்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்? உண்மையில், பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெற்றியால் வழிநடத்தப்பட்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பவனனுக்கும், அர்ஜுனனுக்கும் {கார்த்தவீரியார்ஜுனகுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஆயிரங்கரங்களைக் கொண்டவனும், பேரெழில்வாய்ந்தவனுமான வலிமைமிக்கக் கார்த்தவீரியன் பழங்கலாத்தில் உலகம் அனைத்திற்குமான தலைவனானான். மாஹிஷ்மதி நகரம் அவனுடைய தலைநகரமாக இருந்தது.(3) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த க்ஷத்திரிய குல ஹைஹய {ஹேஹயத்} தலைவன், கடல்களைத் தன் கச்சையாகக் கொண்டவளும், தீவுகள், தங்கச்சுரங்கங்கள் மற்றும் மதிப்புமிக்க ரத்தினச் சுரங்கங்கள் அனைத்துடன் கூடியவளுமான மொத்த பூமியையும் ஆண்டு வந்தான்.(4) க்ஷத்திரிய வகைக்கான கடமைகளைத் தன் முன் கொண்டவனும், பணிவுடனும், வேத அறிவுடனும் கூடிய அம்மன்னன், தத்தாத்ரேய முனிவருக்குப் பெரும் செல்வக்கொடையை அளித்தான்.(5) உண்மையில், கிருதவீரியனின் மகனால் இவ்வாறு துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தவசி, அவனிடம் நிறைவடைந்தவராக, தம்மிடம் மூன்று வரங்களைக் கேட்குமாறு அவனைக் கேட்டுக் கொண்டார்.(6)
வரங்கள் குறித்து அம்முனிவரால் இவ்வாறு வேண்டப்பட்ட அம்மன்னன், அவரிடம், “நான் என் துருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் போது ஆயிரம் கரங்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும். எனினும், வீட்டில் இருக்கும் போது, வழக்கம் போலவே இரு கரங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.(7) உண்மையில் போரில் ஈடுபடும்போது, ஆயிரம் கரங்களைப் படைத்தவனாகப் போராளிகள் என்னைக் காண வேண்டும். உயர்ந்த நோன்புகளை நோற்றவனான நான், என் ஆற்றலின் துணையுடன் மொத்த பூமியையும் அடக்குவதில் வெல்ல வேண்டும்.(8) அறம் சார்ந்து பூமியை அடைந்த பிறகு அவளை நான் விழிப்புடன் ஆள வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான்காவது வரத்தையும் நீர் அருள நான் வேண்டுகிறேன்.(9) ஓ! களங்கமற்றவரே, எனக்கு உதவும் மனோநிலையில் நீர் இருப்பதன் விளைவால், எனக்கு அஃதை அருள்வதே உமக்குத் தகும். நான் உம்மையே சார்ந்திருக்கிறேன். தான் தவற நேரும்போதெல்லாம் அறவோர் என்னைத் திருத்தி நிலைபெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டான்.(10)இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், அந்த மன்னனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட அந்த மன்னனால் அந்த வரங்கள் இவ்வாறே அடையப்பட்டன.(11) நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் கூடிய தன் தேரைச் செலுத்திக் கொண்டிருந்த அந்த ஏகாதிபதி, தன்னுடைய பேராற்றலால் குருடாகி, “பொறுமை, சக்தி, புகழ், வீரம், ஆற்றல் மற்றும் பலம் ஆகியவற்றில் எனக்கு நிகராகக் கருதத்தகுந்தவன் எவன்?” என்றான். அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஆகாயத்தில் இருந்து ஒரு புலப்படாத குரல்,(13) “ஓ! இழிந்த மூடா, க்ஷத்திரியனைவிடப் பிராமணன் உயர்ந்தவன் என்பதை நீ அறியமாட்டாயா? பிராமணனால் உதவப்படும் க்ஷத்திரியனே அனைத்து உயிரினங்களையும் ஆள்கிறான்” என்றது.(14)
{கார்த்தவீரிய} அர்ஜுனன், “நான் நிறைவடையும்போது, உயிரினங்களைப் படைக்கவல்லவனாக இருக்கிறேன். நான் கோபமாக இருக்கும்போது, அனைத்தையும் அழிக்கவல்லவனாக இருக்கிறேன். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நானே முதன்மையானவனாக இருக்கிறேன். நிச்சயம் பிராமணன் என்னைவிட உயர்ந்தவனல்ல.(15) பிராமணன் க்ஷத்திரியனைவிட மேன்மையானவன் என்பது முதல் கருத்து. க்ஷத்திரியனே மேன்மையானவன் என்பது எதிர் கருத்து. (ஓ! புலப்படாதவளே, அடிப்படையில் க்ஷத்திரிய மேன்மை வேண்டப்படும் செயலில்) இருவரும் ஒன்று சேர்வதாக நீ சொல்கிறாய். எனினும், இதில் ஒரு வேறுபாடு காணக்கிடைக்கிறது.(16) பிராமணர்கள், க்ஷத்திரியர்களைப் புகலிடமாகக் கொள்வது காணப்படுகிறது. உண்மையில், பூமி முழுவதிலும், வேதங்களைக் கற்பிக்கும் தோரணையில் அத்தகைய புகலிடத்தை ஏற்கும் அவர்கள் {பிராமணர்கள்}, க்ஷத்திரியர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈர்க்கிறார்கள்.(17) உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் கடமை க்ஷத்திரியர்களுக்குரியது. க்ஷத்திரியர்களிடம் இருந்தே பிராமணர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடைகின்றனர்[1]. அவ்வாறிருக்கையில் பிராமணன் எவ்வாறு க்ஷத்திரியர்களைவிட மேன்மையானவனாக இருக்க முடியும்?(18) நன்று, உயிரினங்கள் அனைத்தையும் விட மேன்மையாக இருந்தாலும் பிச்சையெடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களும், தற்பெருமை கொண்டவர்களுமான உங்கள் பிராமணர்களை இன்று முதல் என் ஆளுகைக்குள் கொண்டு வருகிறேன்.(19) ஆகாயத்தில் இருந்து கன்னி காயத்ரி சொல்வது உண்மையல்ல. தோலாடை உடுத்திய பிராமணர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர். சுதந்திரமாக இருக்கும் அவர்களை என் ஆளுகைக்குள் கொண்டவரப் போகிறேன்.(20) தேவனோ, மனிதனோ, நான் அனுபவிக்கும் இந்த அரசுரிமையில் இருந்து என்னைத் தூக்கி வீச மூவுலகங்களிலும் யாருமில்லை. எனவே, நான் நிச்சயம் பிராமணர்களைவிட மேன்மையானவனே.(21) பிராமணர்களையே முதன்மைவாசிகளாகக் கருதப்படும் இவ்வுலகில், க்ஷத்திரியர்களே முதன்மையானவர்கள் என்பது நிறுவப்படும். போரில் என் வலிமையைப் பொறுத்துக்கொள்ளவல்லவன் எவனுமில்லை” என்றான்[2].(22)அப்போது, வானத்தில் இருந்து அம்மன்னனிடம் பேசிய காற்றின் தேவன் {வாயு}, “பாவம் நிறைந்த இந்த மனோநிலையைக் கைவிடுவாயாக. பிராமணர்களை வணங்குவாயாக. அவர்களுக்குத் தீங்கிழைப்பதன் மூலம் நீ உன் நாட்டுக்குத் தொல்லைகளைக் கொண்டு வரப் போகிறாய்.(24) மன்னனாக இருக்கும் உன்னைப் பிராமணர்கள் கொன்றுவிடுவார்கள், அல்லது பெரும் வலிமை கொண்ட அவர்கள் உன் சக்தியைக் கெடுத்து உன்னை உன் நாட்டில் இருந்து விரட்டிவிடுவார்கள்” என்றான்.(25)
இந்தப் பேச்சைக் கேட்ட மன்னன், அவ்வாறு பேசியவனிடம், “உண்மையில், நீ யார்?” என்று கேட்டான். காற்றின் தேவன், “நான் காற்றின் தேவன் மற்றும் தேவர்களின் தூதுவன். உனக்கான நன்மையே நான் உனக்குச் சொன்னேன்” என்றான்.(26)
{கார்த்தவீரிய} அர்ஜுனன், “ஓ! நீ இன்று பிராமணர்களிடம் கொண்ட உன் பக்தியையும், பற்றையும் காட்டிவிட்டாய். பிராமணன் பூமி சார்ந்த என்ன வகை உயிரினம் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக.(27) ஒரு மேன்மையான பிராமணன் எந்த வகையிலாவது காற்றுக்கு ஒப்பானவனா என்பதை எனக்குச் சொல்வாயாக. அல்லது, அவன் நீரையோ, நெருப்பையோ, சூரியனையோ, ஆகாயத்தையோ போன்றவனா?” என்று கேட்டான்.(28)
வெட்டவெளிமெய்! – அநுசாஸனபர்வம் பகுதி – 153-பிராமணர்களின் மேன்மையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…
காற்றின் தேவன் {வாயு தேவன் கார்த்தவீரியனிடம்}, “ஓ! மூடா, உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களான பிராமணர்கள் அனைவரின் குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, நீ சொன்ன அனைத்தையும்விடப் பிராமணன் மேன்மையானவன்.(1) பழங்காலத்தில் பூமாதேவியானவள், அங்கர்களின் மன்னனிடம் பகை பாராட்டி பூமியென்ற தன் தன்மையைக் கைவிட்டாள். மறுபிறப்பாளரான கஸ்யபர், அவளை {பூமா தேவியை} முடக்கி, அழிவடையச் செய்தார்[1].(2) ஓ! மன்னா, பிராமணர்களைப் பூமியில் உள்ளதைப் போலவே எப்போதும் சொர்க்கத்திலும் வெல்லப்படமுடியாதவர்கள். பழங்காலத்தில், பெரும் முனிவரான அங்கிரஸ், தன் சக்தியின் மூலம் நீரனைத்தையும் பருகினார்.(3) அந்த உயர் ஆன்ம முனிவர், பாலைக் குடிப்பது போல நீரனைத்தையும் குடித்தும், தன் தாகம் தணிந்தவராக உணரவில்லை. எனவே, அவர் பேரலைகள் எழும்பும் நீர் நிறைந்ததாகப் பூமியை மீண்டும் செய்தார்.(4) மற்றொரு சந்தர்ப்பத்தில், அங்கிரஸ் என்னிடம் கோபமடைந்த போது, நான் உலகத்தைவிட்டுத் தப்பிச் சென்று, அந்த முனிவரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, ஒரு பிராமணரின் {உதத்தியரின் / உசத்தியரின்} அக்னிஹோத்ரத்தில் நெடுங்காலம் ஒளிந்திருந்தேன்.(5)சிறப்புமிக்கப் புரந்தரன், அஹல்யையின் உடலில் ஆசை கொண்டதன் விளைவால், கௌதமரால் சபிக்கப்பட்டாலும், அறம் மற்றும் செல்வத்தின் நிமித்தமாக அந்தத் தேவர்களின் தலைவனை அம்முனிவர் முற்றாக அழிக்கவில்லை.(6) ஓ! மன்னா, முற்காலத்தில் தெளிந்த நீரால் நிறைந்திருந்த பெருங்கடல், பிராமணர்களால் சபிக்கப்பட்டு உப்பு நீரின் சுவையை அடைந்தது.(7) பொன்னிறம் கொண்டவனும், புகையற்றிருக்கும்போது, பிரகாசமாகச் சுடர்விடுபவனும், ஒன்றுசேர்ந்து மேலெழும் தழல்களைக் கொண்டவனுமான அக்னியும் கூட, கோபமடைந்த அங்கிரஸால் சபிக்கப்பட்ட போது, இந்தக் குணங்கள் அனைத்தையும் இழந்தான்[2].(8) பெருங்கடலைத் துதிக்க வந்தவர்களும், சகரனின் மகன்களுமான அறுபதினாயிரம் பேரும் பொன்னிறம் கொண்ட பிராமணரான கபிலரின் மூலம் பொடியாக்கப்பட்டதைப் பார்.(9) நீ பிராமணர்களுக்கு நிகரானவனில்லை. ஓ! மன்னா, உன் நன்மையை நாடுவாயாக. பெரும் பலம் கொண்ட க்ஷத்திரியனும், தாயின் கருவறையில் உள்ள பிராமணப் பிள்ளைகளைக்கூட வணங்குகிறான்.(10)தண்டகர்களின் பெரும் நாடு ஒரு பிராமணனால் அழிக்கப்பட்டது. வலிமைமிக்க க்ஷத்திரியனான தாலஜங்கன், ஔர்வர் என்ற ஒற்றைப் பிராமணரால் அழிக்கப்பட்டான்.(11) நீயும் கூட, தத்தாத்ரேயரின் அருளின் மூலம், பெரும் நாட்டையும், அடைதற்கரிதானவையான பெரும் வலிமை, அறத்தகுதி, கல்வி ஆகியவற்றை அடைந்திருக்கிறாய்.(12) ஓ! அர்ஜுனா, பிராமணனான அக்னியை நீ ஏன் ஒவ்வொரு நாளும் வணங்குகிறாய்? அண்டத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வேள்விக் காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் அவனே. இதை நீ அறிந்தாயில்லையா?(13) உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் ஒரு மேன்மையான பிராமணனே உண்மையில், வாழும் உலகைப் படைத்தவன் என்பதை நீ அறியாமலில்லை எனும்போது, ஏன் இந்த மூடத்தனத்தில் அவதியுறுகிறாய்?(14) புலப்படாதவனும், பலங்கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடன் கூடிய எல்லையற்ற அண்டத்தையும் படைத்தவன் அனைத்து உயிரினங்களின் தலைவனான பிரம்மனாவான் (அவனும் ஒரு பிராமணனாவான்).(15)
ஞானமற்ற சிலர், பிரம்மன் ஒரு முட்டையில் இருந்து பிறந்தான் என்று சொல்கின்றனர். மூலமுட்டை வெடித்தபோது, மலைகளும், திசைப்புள்ளிகளும், நீரும், பூமியும், சொர்க்கங்கள் அனைத்தும் இருப்புக்குள் எழுந்தன.(16) அந்தப் படைப்பின் பிறப்பை யாரும் காணவில்லை. அவ்வாறிருக்கையில் பிறப்பில்லாதவனாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரம்மன், மூல முட்டையில் இருந்து பிறந்தான் என்று எவ்வாறு சொல்லப்படுகிறது? படைக்கப்படாத வெளியே மூல முட்டையெனச் சொல்லப்படுகிறது. படைக்கப்படாத வெளியில் (அல்லது பரமாத்மாவில்) இருந்தே பெரும்பாட்டான் {பிரம்மன்} பிறந்தான்[3].(17) “படைக்கப்படாத வெளியில் இருந்து பெரும்பாட்டன் பிறந்த பிறகு, வேறொன்றும் இருந்திருக்காதே அவன் எங்கே நின்றான்?” என்று நீ கேட்டால், பின்வரும் சொற்களில் பதில் அமையக் கூடும். நினைவு {அகங்காரம்} என்ற பெயரில் ஓர் இருப்பு உள்ளது. வலிமைமிக்க அந்த இருப்பு பெருஞ்சக்தி கொண்டதாகும்.(18) {அப்போது} முட்டை என்று ஏதுமில்லை. எனினும், பிரம்மன் இருந்தான். அவன் அண்டத்தைப் படைத்தவன், அவனே அதன் மன்னன்[4]” என்றான் {வாயு தேவன்}.காற்றின் தேவனால் {வாயுவால்} இவ்வாறு சொல்லப்பட்டதும் மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான்”.(19)
உதத்தியரும் வருணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 154-பிராமணர்களின் மேன்மையை விவரிக்க கசியபர் மற்றும் உதத்தியரின் கதையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…
காற்றின் தேவன் {வாயு கார்த்தவீரியார்ஜுனனிடம்}, “ஓ! மன்னா, ஒரு காலத்தில், அங்கன் என்ற பெயரைக் கொண்ட ஓர் ஆட்சியாளன், மொத்த பூமியையும் பிராமணர்களுக்கு வேள்விக் கொடையாக அளிக்க விரும்பினான். இதனால் பூமி கவலையில் நிறைந்தாள்.(1)
அவள் {பூமி}, “நான் பிரம்மனின் மகளாவேன். அனைத்து உயிரினங்களையும் நான் தாங்குகிறேன். ஐயோ, என்னை அடைந்த பிறகும் மன்னர்களில் முதன்மையான இவன் ஏன் பிராமணர்களுக்கு என்னைக் கொடுக்க விரும்புகிறான்?(2) இந்த நிலத் தன்மையைக் கைவிட்டு நான் என் தந்தையிடம் செல்லப் போகிறேன். இந்த மன்னன் தன் நாடு மற்றும் அனைத்துடன் அழிவையடையட்டும்” என்று நினைத்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்ததும் அவள் பிரம்மலோகத்திற்குச் சென்றாள்.(3) இவ்வாறு {தன் உடல்வடிவமான பூமியைவிட்டுச்} செல்லும் பூமாதேவியைக் கண்ட முனிவர் கசியபர், யோகத்தின் உதவியால் தன் உடலைக் கைவிட்டு அந்தத் தேவியின் புலப்படத்தக்க உடல்வடிவத்திற்குள் {பூமிக்குள்} உடனே நுழைந்தார்.(4) கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட பூமியானது, செழிப்பில் வளர்ந்து அனைத்து வகைப் பயிர்களின் விளைச்சலும் நிறைந்ததாக இருந்தது. உண்மையில், ஓ! மன்னா, பூமிக்குள் கசியபர் நுழைந்த நேரத்தில் இருந்து, எங்கும் அறமே முதன்மையானது, அனைத்து அச்சங்களும் இல்லாமற்போயின.(5)
இவ்வழியில், ஓ! மன்னா, பூமியானது, முப்பதாயிரம் தேவ வருடங்கள் கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட நிலையிலேயே இருந்தது. பிரம்மனின் மகளுடைய ஆன்மா ஊடுருவியிருந்தபோது இருந்த செயல்பாடுகள் அனைத்துடனும் சேர்ந்து முழுமையான உயிர்ப்புடன் இருந்தது.(6) இந்தக் காலம் முடிந்ததும் அந்தத் தேவி {பூமா தேவி} பிரம்மலோகத்தில் இருந்து திரும்பி வந்து, கசியபரை வணங்கி நின்று, அதுமுதல் அந்த முனிவரின் மகளானாள் {காசியபி ஆனாள்}.(7) கசியபர் ஒரு பிராமணராவார். ஓ! மன்னா, இஃது அவர் செய்த சாதனையாகும். அந்தக் கசியபரை விட மேன்மையானவன் என்று சொல்லத்தக்க ஒரு க்ஷத்திரியனின் பெயரை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(8)
இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். அவனிடம் மீண்டும் காற்றின் தேவன் {வாயு}, “ஓ! மன்னா, அங்கிரஸ் குலத்தில் பிறந்த உதத்தியரின் {உசத்தியரின்} கதையை இப்போது கேட்பாயாக.(9) பத்ரை என்ற பெயரைக் கொண்ட சோமனின் மகள் ஒப்பற்ற அழகுடன் கூடியவளாகக் கருதப்பட்டாள். அவளது தந்தையான சோமன் உதத்தியரை அவளுக்குத் தகுந்த கணவனாகக் கருதினான்.(10) புகழ்பெற்றவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், குற்றமில்லா அங்கங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, பல்வேறு நோன்புகளை நோற்றபடியே, உதத்தியரைத் தன் தலைவனாக அடைய விரும்பிக் கடுந்தவங்களைச் செய்தாள்.(11) சிறிது காலம் கழித்து, சோமனின் தந்தையான அத்ரி, உதத்தியரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் புகழ்பெற்ற அந்தக் கன்னிகையை அவருக்கு அளித்தார். அபரிமிதமான அளவில் வேள்விக் கொடைகளைக் கொடுப்பவரான உதத்தியர், அந்தப் பெண்ணைத் தம் மனைவியாக முறைப்படி ஏற்றுக் கொண்டார்.(12)
எனினும், அழகிய வருணன் நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணின் மீது ஆசை கொண்டிருந்தான். உதத்தியர் வசித்து வந்த வனத்திற்கு வந்த அவன், நீராடுவதற்காக யமுனையில் மூழ்கிய அந்தப் பெண்ணை அபகரித்துச் சென்றான்.(13) அந்த நீர்நிலைகளின் தலைவன், இவ்வாறு அவளை அபகரித்துத் தன் வசிப்பிடத்திற்குக் கொண்டு சென்றான். அந்த மாளிகை அற்புதம் நிறைந்த தன்மையுடன் இருந்தது. அஃது அறுநூறாயிரம் தடாகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(14) வருணனின் அரண்மனையைவிட மிக அழகானதாக வேறு எந்த மாளிகையும் கருதப்பட்டதில்லை. பல்வேறு அரண்மனைகளாலும், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் இன்பத்திற்கான பல்வேறு பொருட்களின் இருப்பாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(15) அங்கே, ஓ! மன்னா, நீர்நிலைகளின் தலைவன் அந்த அரண்மனைக்குள் அந்தக் காரிகையுடன் விளையாடினான். சிறிது காலம் கழித்து உதத்தியரிடம் அவரது மனைவி கெடுக்கப்பட்டது சொல்லப்பட்டது.
உண்மையில், செய்திகள் அனைத்தையும் நாரதரிடம் இருந்து கேட்ட உதத்தியர், அந்தத் தெய்வீக முனிவரிடம்,(16) “ஓ! நாரதரே, வருணனிடம் சென்று கடுமையாக நீர் பேச வேண்டும். அவன் ஏன் என் மனைவியை அபகரித்தான் என்றும், என் பெயரை அவனிடம் சொல்லி அவளைத் தர வேண்டும் என்றும் கேட்பீராக.(17) மேலும் அவனிடம், “ஓ! வருணா, நீ உலகங்களைக் காப்பவனன்றி அழிப்பவனல்ல. அவ்வாறிருக்கையில், சோமனால் எனக்கு அளிக்கப்பட்ட என் மனைவியை நீ ஏன் அபகரித்தாய்?” என்றும் கேட்பீராக” என்று சொன்னார் {உதத்தியர்}.(18)
தெய்வீக முனிவரான நாரதர், உதத்தியரால் இவ்வாறு வேண்டப்பட்டதும், வருணன் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவனிடம், “உதத்தியரின் மனைவியை விடுவிப்பாயாக. உண்மையில் நீ ஏன் அவளை அபகரித்தாய்?” என்று கேட்டார்.(19)
நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன், அவரிடம், “மருட்சியுடைய இந்தப் பெண் எனது பேரன்புக்குரியவள். நான் அவளை அனுப்பத் துணியேன்” என்றான்.(20)
இந்த மறுமொழியைக் கேட்ட நாரதர், உதத்தியரிடம் சென்று, உற்சாகமில்லாமல் அவரிடம்,(21) “ஓ! பெருந்தவசியே, வருணன் என் தொண்டையைப் பிடித்து {கழுத்தைப் பிடித்து} அவனது வீட்டில் இருந்து என்னை விரட்டிவிட்டான். அவன் உமது மனைவியைத் திருப்பி அனுப்ப விரும்பவில்லை. நீர் விரும்பியவண்ணம் செயல்படுவீராக” என்றார்[1].(22)நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அங்கிரஸ் {உதத்தியர்}, கோபத்தில் எரிந்தார். தவச் செல்வம் கொண்ட அவர், நீர் நிலைகளைத் திடமாக்கி, தன் சக்தியால் அவற்றைக் குடித்தார்.(23) இவ்வாறு நீரனைத்துப் பருகப்பட்டதும் நீரின் தேவன், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து உற்சாகமிழந்தான். இவ்வளவு நடந்தும் அவன் உதத்தியரின் மனைவியைக் கொடுத்தானில்லை.(24)
பிறகு மறுபிறப்பாளர்களில் முதன்மையான உதத்தியர், கோபத்தில் நிறைந்தவராகப் பூமியிடம், “ஓ! இனியவளே, அறுநூறாயிரம் தடாகங்கள் உள்ள நிலத்தை எனக்குக் காட்டுவாயாக” என்றார்.(25)
முனிவரின் இந்த வார்த்தைகளில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பெருங்கடல் பின்வாங்கியதும், விளைச்சலே இல்லாத நிலம் தோன்றியது. அந்தப் பகுதியின் வழியாகப் பாய்ந்த ஆற்றிடம், உதத்தியர்,(26) “ஓ! சரஸ்வதி, இங்கே புலப்படாதவளாவாயாக. உண்மையில், ஓ! மருண்ட மங்கையே, இந்தப்பகுதியை விட்டுப் பாலைவனத்திற்குச் செல்வாயாக. ஓ! மங்கல தேவி, நீ இல்லாமல் இந்தப் பகுதி புனிதமற்றதாகட்டும்” என்றார்.(27)
(நீரின் தலைவன் வசித்த) அந்தப் பகுதி வறண்டதும், அவன் உதத்தியரின் மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிரஸிடம் சென்று அவளை அவரிடம் கொடுத்தான்.(28) தம் மனைவியைத் திரும்பப் பெற்ற உதத்தியர் உற்சாகம் நிறைந்தவரானார். ஓ! ஹைஹய குலத் தலைவா, அப்போது அந்தப் பெரும்பிராமணர், இந்த அண்டத்தையும், நீரின் தேவனையும் {வாயுவையும்} தாம் கொடுத்துவந்த துன்பத்தில் இருந்து மீட்டார்.(29) ஓ! மன்னா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் உதத்யர், தம் மனைவியைத் திரும்பப் பெற்றதும், வருணனிடம்,(30) “நீரின் தலைவா {ஜலாதிபதியே}, என் தவங்களின் துணையுடன் உனக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்து வேதனையில் உரக்க அழ வைத்த பிறகே நான் என் மனைவியை மீட்டுக் கொண்டேன்” என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, தம் மனைவியுடன் அவர் தமதில்லத்திற்குச் சென்றார்.(31) ஓ! மன்னா, பிராமணர்களில் முதன்மையான உதத்தியர் இவ்வாறே இருந்தார். நான் இன்னும் சொல்லட்டுமா? அல்லது, நீ உன் கருத்தில் இன்னும் பிடிவாதமாக இருக்கப் போகிறாயா? உதத்தியருக்கும் மேன்மையான எந்த க்ஷத்திரியன் இருக்கிறான்?” என்று கேட்டான் {வாயு}”.(32)
அகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 155- பிராமணர்களான அகஸ்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம் பேசினான், “ஓ! மன்னா, பிராமணரான அகஸ்தியரின் பெருமையைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் தேவர்கள் அசுரர்களால் அடக்கப்பட்டதால் அவர்கள் உற்சாகமிழந்தவர்களாக இருந்தனர். தேவர்களுக்கான வேள்விகள் அனைத்தும் கொள்ளையடிக்கபட்டன, பித்ருக்களின் ஸ்வதாவும் அபகரிக்கப்பட்டது.(2) உண்மையில், ஓ! ஹைஹயர்களின் தலைவா, மனிதர்கள் செய்யும் அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் தானவர்களால் தடுக்கப்பட்டன. தேவர்கள் செழிப்பிழந்து பூமியில் திரிந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு நாள் அவ்வாறு அவர்கள் திரிந்து வருகையில் உயர்ந்த நோன்புகளையும் பெருஞ்சக்தியையும், சூரியனைப் போன்ற சுடர்மிக்கக் காந்தியையும் கொண்ட பிராமணரான அகஸ்தியரைக் கண்டனர்.(4)
அவரை முறையாக வணங்கிய தேவர்கள், மதிப்புக்குரிய வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மாவிடம் {அகஸ்தியரிடம்},(5) “நாங்கள் போரில் தானவர்களால் வீழ்த்ததால் செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, பேரச்சந்தரும் இந்நிலையில் இருந்து நீர் எங்களை மீட்பீராக” என்று வேண்டினர்.(6)
தேவர்களின் அவலநிலையை இவ்வாறு அறிந்த அகஸ்தியர் (தானவர்களிடம்) பெருங்கோபம் கொண்டார். பெருஞ்சக்தி கொண்ட அவர், அண்டப் பேரழிவின் போது தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல உடனே சுடர்விடத் தொடங்கினார்.(7) அம்முனிவரிடம் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கக் கதிர்களில் தானவர்கள் எரியத் தொடங்கினர். உண்மையில், ஓ! மன்னா, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஆகாயத்திலிருந்து விழத் தொடங்கினர்.(8) அகஸ்தியரின் சக்தியில் எரிந்த தானவர்கள், சொர்க்கத்தையும், பூமியையும் கைவிட்டு, தெற்குத் திசை நோக்கித் தப்பி ஓடினர்.(9)
அந்நேரத்தில் தானவ மன்னன் பலி, பாதாளலோகத்தில் ஒரு குதிரை வேள்வியைச் செய்து கொண்டிருந்தான். பூமியின் குடல்களுக்குள் இருந்த அந்தப் பகுதியில் அவனோடு வசித்து வந்த பேரசுரர்கள் எரியாமல் இருந்தனர்.(10) தேவர்கள், தங்கள் பகைவர்கள் அழிந்ததும், முற்றிலும் அச்சம் விலகியவர்களாகத் தங்கள் உலகங்களை மீட்டனர். அவர்களுக்காக அவர் சாதித்த காரியத்தின் மூலம் ஊக்கமடைந்த அவர்கள், பூமியின் குடல்களுக்குள் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்த அசுரர்களை அழிக்குமாறு அம்முனிவரை வேண்டினர்.(11)
தேவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அகஸ்தியர், அவர்களிடம், “ஆம், பூமிக்கடியில் வசிக்கும் அசுரர்களையும் எரிக்க நான் முழுத் தகுதி கொண்டவனாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்தால் என் தவங்கள் பழுதடையும். எனவே, நான் என் சக்தியைப் பயன்படுத்தமாட்டேன்” என்றார்.(12)
ஓ! மன்னா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்க முனிவரின் சக்தியால் தானவர்கள் எரிக்கப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, இவ்வாறே தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அகஸ்தியர், தம் தவங்களின் துணையுடன் அக்காரியத்தைச் சாதித்தார்.(13) ஓ! பாவமற்றவனே, என்னால் விவரிக்கப்பட்டவாறே அகஸ்தியர் இருந்தார். நான் தொடரலாமா? அல்லது, நீ மறுமொழியேதும் கூறப் போகிறாயா? அகஸ்தியரைவிடப் பெரியவனாக எந்த க்ஷத்திரியனும் இருக்கிறானா?” என்று கேட்டான் {வாயு}”.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் {வாயு} மீண்டும், “ஓ! மன்னா, சிறப்புமிக்க வசிஷ்டரின் பெருஞ்சாதனைகளைக் கேட்பாயாக.(15) ஒரு காலத்தில் தேவர்கள், {கங்கையில்} வைகானஸத் தடாகக் கரைகளில் ஒரு வேள்வி செய்வதில் ஈடுப்பட்டிருந்தனர். வேள்வி செய்து வந்த தேவர்கள், வசிஷ்டரின் பலத்தை அறிந்து அவரையே தங்கள் புரோகிதராகத் தங்கள் மனத்தில் நிறுவினர்.(16) அதேவேளையில், மலைகளுக்கொப்பான வடிவங்களைக் கொண்டவர்களும் கலினர்கள் {பலிகள்} என்ற பெயர்படைத்தவர்களுமான தானவ குலத்தினர், தேவர்கள் தங்களின் தீக்ஷையின் விளைவால், மெலிந்து குறைந்திருப்பதைக் கண்டு அவர்களைக் கொல்ல விரும்பினர்.(17)
அந்தப் போரில் தானவர்களில் அங்கம் பழுதுபட்டவர்களும், கொல்லப்பட்டவர்களும் மானஸத் தடாக நீரில் மூழ்கச் செய்யப்பட்டு, பெரும்பாட்டனின் வரத்தின் விளைவால் உடனே உயிரையும், வன்மையையும் பெற்றனர்.(18) பெரியவையும், பயங்கரமானவையுமான மலைச்சிகரங்களையும், பரிகங்களையும், மரங்களையும் எடுத்துக் கொண்டு தடாகத்தின் நீரைக் கலக்கி, நூறு யோஜனை உயரத்திற்கு அவற்றைப் பெருகச் செய்தனர்.(19) பிறகு அவர்கள் எண்ணிக்கையில் பத்தாயிரமான இருந்த தேவர்களை எதிர்த்து ஓடினர். தானவர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள், தங்கள் தலைவனான வாசவனின் பாதுகாப்பை நாடினார்கள்.(20) எனினும், சக்ரனும் அவர்களால் விரைவில் பீடிக்கப்பட்டான். அவன் மனத்தளர்வுடன் வசிஷ்டரின் பாதுகாப்பை நாடினான். இதன்பேரில் புனித முனிவரான வசிஷ்டர் தேவர்களின் அச்சங்களை விலக்குவதாக உறுதியளித்தார்.(21)
தேவர்கள் பெரிதும் உற்சாகமிழந்திருப்பதைப் புரிந்து கொண்ட அந்தத் தவசி {வசிஷ்டர்}, தமது கருணையின் மூலம் இதைச் செய்தார். அவர் தமது சக்தியை வெளிப்படுத்தி, கலினர்கள் {பலிகள்} என்றழைக்கப்பட்ட அந்தத் தானவர்களை எந்த முயற்சியுமின்றி எரித்தார்.(22) தவங்களையே செல்வமாகக் கொண்ட அம்முனிவர், கைலாசத்திற்குச் சென்றிருந்த கங்கையை அந்த இடத்திற்கு வரச் செய்தார். உண்மையில் கங்கையானவள், அந்தத் தடாகத்தின் நீரைத் துளைத்தபடி தோன்றினாள்.(23) தடாகமானது அந்த ஆற்றால் துளைக்கப்பட்டது {உடைக்கப்பட்டது}. அந்தத் தெய்வீக ஓடையானவள், அத்தடாகத்தின் நீரைத் துளைத்துத் தோன்றி, சரயு என்ற பெயரில் பாய்ந்தாள். அந்தத் தானவர்கள் வீழ்ந்த இடம் அவர்களின் பெயராலேயே {கலினம் / பலினம் என்று} அழைக்கப்படலாயிற்று.(24)
இவ்வாறே, இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள், வசிஷ்டரின் மூலம் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்பட்டனர். இவ்வாறே, பிரம்மனிடம் வரம்பெற்றவர்களான அந்தத் தானவர்கள், அந்த உயர் ஆன்ம முனிவரால் கொல்லப்பட்டனர்.(25) ஓ! பாவமற்றவனே, வசிஷ்டர் செய்த சாதனையை நான் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? பிராமணரான வசிஷ்டரை விஞ்சியவன் என்று எந்த க்ஷத்திரியனையாவது சொல்ல முடியுமா?” என்று கேட்டான் {வாயு}”.(26)
அத்ரி மற்றும் சியவனர் பெருமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 156-பிராமணர்களான அத்ரி மற்றும் சியவனரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “ஓ! ஹைஹயர்களில் முதன்மையானவனே, உயர் ஆன்ம அத்ரியின் சாதனையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில், இருளில் தேவர்களும், தானவர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டபோது, சூரியன் மற்றும் சோமன் {சந்திரன்} ஆகிய இருவரையும் ராகு {ஸ்வர்ப்பானு} தன் கணைகளால் துளைத்தான்.(2) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இருளில் மூழ்கிய தேவர்கள் வலிமைமிக்கத் தானவர்களின் முன்பு வீழத் தொடங்கினர்.(3) அசுரர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சொர்க்கவாசிகள், தங்கள் பலத்தை இழக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும் கல்விமானுமான பிராமணர் அத்ரி கடுந்தவத்தில் இருப்பதைக் கண்டனர்.(4)
புலன்கள் அனைத்தையும் வென்றவரும், கோபமில்லாதவருமான அந்த முனிவரிடம் {அத்ரியிடம்} அவர்கள், “ஓ! முனிவரே, அசுரர்களின் கணைகாளல் துளைக்கப்பட்டிருக்கும் இந்தச் சோமன் மற்றும் சூரியன் ஆகிய இருவரையும் காண்பீராக.(5) இதன் விளைவால் நாங்கள் இருளில் மூழ்கியிருக்கிறோம், பகைவர்களால் நாங்கள் வீழ்த்தப்படுகிறோம். எங்கள் தொல்லைகளுக்கான ஒரு முடிவை நாங்கள் காணவில்லை. ஓ! பெரும்பலத்தில் தலைவரே, இந்தப் பேரச்சத்தில் இருந்து எங்களை மீட்பீராக” என்றனர்.(6)
அதற்கு முனிவர், “உண்மையில், எவ்வாறு நான் உங்களைப் பாதுகாக்க வேண்டும்?” என்றார். அவர்கள், “நீரே சந்திரமாஸாவீராக. நீரே சூரியனாகி, இந்தக் கள்வர்களைக் கொல்வீராக” என்றனர்.(7)
அவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அத்ரி, இருளை அழிக்கும் சோமனின் வடிவை ஏற்றார். உண்மையில் தமது ஏற்புடைய இயல்பின் விளைவால் அவர் சோமனைப் போன்றே அழகானவராகவும் ஒளி நிறைந்தவராகவும் காணப்படத் தொடங்கினார்.(8) இதைக் கண்டவர்களான உண்மையான சோமனும், உண்மையான சூரியனும் பகைவரின் கணைகளால் இருளடைந்தனர். இந்த ஒளிக்கோள்களின் வடிவங்களை ஏற்ற அத்ரி, தமது தவப் பலத்தின் துணையுடன் போர்க்களத்தின் மீது காந்தியுடன் ஒளிரத் தொடங்கினார்.(9) உண்மையில் அத்ரி, இருள் அனைத்தையும் விலக்கி அண்டத்தை ஒளியில் சுடர்விடச் செய்தார். மேலும் தம் பலத்தை வெளிப்படுத்திய அவர், தேவர்களுடைய பகைவர்களின் கூட்டத்தையும் அடக்கினார்.(10)
அத்ரியினால் எரிக்கப்படும் அந்தப் பேரசுரர்களைக் கண்ட தேவர்களும், அத்ரியின் சக்தியால் பாதுகாக்கப்பட்டவர்களாக, அவர்களை {தானவர்களை} விரைவில் அகற்றத் தொடங்கினர்.(11) தமது சக்தி அனைத்தையும் திரட்டி, தம் ஆற்றலை வெளிப்படுத்திய அத்ரி இவ்வழியிலேயே நாளின் தேவனுக்கு ஒளியூட்டி, தேவர்களை மீட்டு, அசுரர்களைக் கொன்றார்.(12) புனித நெருப்பைத் துணையாகக் கொண்டவரும், அமைதியாக மந்திரங்களை ஓதுபவரும், மான் தோல் உடுத்தியவருமான அந்த மறுபிறப்பாளரால் செய்யப்பட்ட சாதனை இதுவே. ஓ! அரசமுனியே, கனிகளைமட்டுமே உண்டு வாழ்ந்த அந்த முனிவர் செய்த சாதனையைக் காண்பாயாக.(13) உயர் ஆன்ம அத்ரியின் சாதனையை நான் விரிவாக உனக்கு உரைத்தேன். நான் தொடரலாமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? இந்த மறுபிறப்பாள முனிவரைவிட மேன்மையான க்ஷத்திரியன் யாரேனும் உண்டா?” என்று கேட்டான் {வாயு}.(14)
இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “ஓ! மன்னா, (பழங்காலத்தில்) உயர் ஆன்ம சியவனரால் செய்யப்பட்ட சாதனையைக் கேட்பாயாக.(15) அஸ்வினி இரட்டையர்களுக்கு உறுதி மொழி அளித்த சியவனர், பாகனைத் தண்டித்தவனிடம் {இந்திரனிடம்}, “வேறு தேவர்கள் அனைவருடன் சேர்ந்து அஸ்வினிகளையும் சோமம் பருகுபவர்களாகச் செய்வாயாக” என்றார்.(16)
இந்திரன் {சியவனரிடம்}, “அஸ்வினிகள் எங்களால் கைவிடப்பட்டவர்கள். அவர்களைப் பிறரோடு சேர்ந்து சோமம் பருக வேள்வி வட்டத்திற்குள் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அவர்கள் தேவர்களோடு கணக்கிடப்படுவதில்லை. எனவே, எங்களிடம் அவ்வாறு சொல்லாதீர்.(17) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவரே, அஸ்வினிகளுடன் சேர்ந்து நாங்கள் சோமம் பருக விரும்பவில்லை. ஓ! கல்விமானான பிராமணரே, நீர் சொல்லும் வேறு எதையும் நாங்கள் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்” என்றான்.(18)
சியவனர், “அஸ்வினி இரட்டையர்களும் உங்கள் அனைவருடன் சேர்ந்து சோமம் பருக வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா, அவ்விருவரும் சூரியனுடைய மகன்களாக இருப்பதால் அவர்களும் தேவர்களே.(19) நான் சொன்னதைத் தேவர்கள் செய்ய வேண்டும். அந்த வார்த்தைகளின்படி செயல்படும்போது, தேவர்கள் பெரும் நன்மையை அறுவடை செய்வார்கள். வேறு வகையில் செய்பட்டால் தீமையே அவர்களை மூழ்கடிக்கும்” என்றார்.(20)
இந்திரன், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் அஸ்வினிகளுடன் சேர்ந்து சோமம் பருக மாட்டேன். மற்றவர்கள் விரும்பினால் அவர்களோடு பருகட்டும். என்னைப் பொறுத்தவரையில், நான் அதைச் செய்யத் துணியேன்” என்றான்.(21)
சியவனர், “ஓ! பலனைக் கொன்றவனே, என் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாவிட்டால், இந்த நாளிலேயே என்னால் வற்புறுத்தப்பட்டு வேள்வியில் அவர்களோடு சோமம் பருகுவாய்” என்றார்”.(22)
காற்றின் தேவன் {தொடர்ந்தான்}, “பிறகு, தம்மோடு அஸ்வினிகளை அழைத்துச் சென்ற சியவனர், அவர்களின் நன்மைக்காக ஒரு பேரறச் சடங்கைத் தொடங்கினார். மந்திரங்களின் துணையுடன் சியவனரால் தேவர்கள் அனைவரும் கலங்கடிக்கப்பட்டனர்.(23) சியவனரால் தொடங்கப்பட்ட காரியத்தைக் கண்ட இந்திரன், கோபத்தால் தூண்டப்பட்டான். ஒரு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டு அவன் {இந்திரன்} அந்த முனிவரை எதிர்த்து ஓடினான்.(24) தேவர்களின் தலைவன் வஜ்ரமும் தரித்திருந்தான். அப்போது, தவங்களுடன் கூடிய சியவனர், அவ்வாறு முன்னேறி வரும் இந்திரனின் மீதும் தம் கோபப் பார்வையைச் செலுத்தினார்.(25) சிறிதளவு நீரைத் தெளித்த அவர் தேவர்களின் தலைவனை அவனது வஜ்ரத்தோடும் மலையோடும் சேர்த்து முடக்கினார். அவரால் தொடங்கப்பட்ட அந்த அறச்சடங்கின் விளைவால் அவர் இந்திரனுக்குப் பகையான ஒரு பயங்கர அசுரனை உண்டாக்கினார்.(26) வேள்வித் தீயில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் அமைந்தவனும், அகன்று விரிந்த வாயைக் கொண்டவனுமான அந்த அசுரன் மதன் என்றழைக்கப்பட்டான். மந்திரங்களின் துணையுடன் அந்தப் பெருந்தவசியால் உண்டாக்கப்பட்ட அந்த அசுரன் இவ்வாறே இருந்தான். அவனது வாயில் நூறு யோஜனைகள் தொலைவுக்கு நீளும் ஆயிரம் பற்கள் இருந்தன.(27) பயங்கர முகத் தோற்றத்தைக் கொண்டிருந்த அவனுடைய கோரப் பற்கள் இருநூறு யோஜனைகள் நீளம் இருந்தன. அவனுடைய கன்னங்களில் ஒன்று பூமியில் இருந்தது, மற்றொன்று சொர்க்கங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.(28) உண்மையில், வாசவனுடன் கூடிய தேவர்கள் அனைவரும், லேவியாதனத்தின் {பெரிய மீன் ஒன்றின்} அகன்று திறந்திருக்கும் வாய்க்குள் நுழையப் போகும் மீன்களைப் போல அந்தப் பேரசுரனின் நாவின் அடிப்பாகத்தில் {தொண்டையில்} நின்று கொண்டிருந்தனர்.(29)
தேவர்கள், மதனின் வாய்க்குள் நின்று கொண்டிருந்தபோது, அவர்களுள் அவசர ஆசலோசனை செய்து இந்திரனிடம், “இந்த மறுபிறப்பாளரிடம் மதிப்புடன் தலைவணங்குவாயாக.(30) அனைத்து ஐயங்களில் இருந்து விடுபட்டு, அஸ்வினிகளின் துணையுடன் நாங்கள் சோமத்தைப் பருகுவோம்” என்றனர். அதன் பிறகு, சக்ரன் சியவனரிடம் தலைவணங்கி அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்தான்.(31) இவ்வாறே சியவனர், அஸ்வினிகளைப் பிற தேவர்களுடன் சேர்ந்து சோமம் பருகுபவர்களாக்கினார். மதனைத் திருப்பி அழைத்துக் கொண்ட அந்த முனிவர், அவன் செய்ய வேண்டிய செயல்களை அவனுக்கு ஒதுக்கினார்.(32) அந்த மதன், பகடையிலும், வேட்டையிலும், குடியிலும், பெண்களிடத்திலும் வசிக்குமாறு பணிக்கப்பட்டான். எனவே, ஓ! மன்னா, இவற்றில் ஈடுபடும் மனிதர்கள் ஐயமில்லாமல் அழிவையே அடைவார்கள்.(33) எனவே, ஒருவன் இந்தக் களங்கங்களை எப்போதும் நெடுந்தொலைவுக்குக் களைய வேண்டும். இவ்வாறே, ஓ! மன்னா, சியவனர் செய்த சாதனையை நான் உனக்குச் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ மறுமொழியேதும் சொல்லப் போகிறாயா? பிராமணரான சியவனரைவிட உயர்ந்த க்ஷத்திரியன் எவனும் இருக்கிறானா?” என்று கேட்டான் {வாயு}[1]“.(34,35)
கபர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 157-பூமியும், சொர்க்கமும் கபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது; தேவர்கள் பிராமணர்களால் அவற்றைத் திரும்பப் பெற்றது; கார்த்தவீரியார்ஜுனனுக்குப் பிராமணர்களால் ஏற்படப்போகும் அச்சம் ஆகியவற்றைக் குறித்து கார்த்தவீரியார்ஜுனனுக்குச் சொன்ன வாயு தேவன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “காற்றின் தேவனுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட {கார்த்தவீரிய} ஆர்ஜுனன் அமைதியாக இருந்தான். இதன்பேரில் காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள் அசுரன் மதனின் வாய்க்குள் தங்களைக் கண்டபோது, சியவனர் அவர்களிடம் இருந்து பூமியை அடைந்தார்.(1,2) ஏற்கனவே சொர்க்கத்தை இழந்தவர்களும், இப்போது பூமியை இழந்தவர்களுமான தேவர்க்ள உற்சாகமிழந்தனர். உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டு, பெரும்பாட்டனின் பாதுகாப்பின் கீழ் தங்களை நிறுத்திக் கொண்டனர் {பிரம்மனைத் தஞ்சமடைந்தனர்}.(3)
தேவர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவரே, பூமியானது எங்களிடமிருந்து சியவனரால் எடுத்துக் கொள்ளப்பட்டது, ஓ! பலமிக்கவனே, அதே வேளையில் சொர்க்கமும் கபர்களால் அபகரிக்கப்பட்டது.(4)
பிரம்மன், “சொர்க்கவாசிகளே, இந்திரனின் தலைமையில் விரைவாகச் சென்று பிராமணர்களின் பாதுகாப்பை நாடுவீராக. அவர்களை நிறைவடையச் செய்வதன் மூலம் நீங்கள் முன்பு போலவே இரண்டு உலகங்களையும் பெறுவீர்கள்” என்றான்.(5)
பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவர்கள், பிராமணர்களிடம் சென்று, அவர்களது பாதுகாப்பை அடைய வேண்டினார்கள். பிராமணர்கள் மறுமொழியாக, “நாங்கள் யாரை வசப்படுத்த வேண்டும்?” என்று கேட்டனர். இவ்வாறு கேட்கப்பட்ட தேவர்கள், அவர்களிடம், “கபர்களை அடக்குவீராக” என்றனர்.(6)
பிராமணர்கள், “முதலில் அவர்களைப் பூமிக்குக் கொண்டு வந்து, அதன் பிறகு அவர்களை விரைவில் அடக்குகிறோம்” என்றனர். அதன் பிறகு, கபர்களின் அழிவை நோக்கமாகக் கொண்ட ஒரு சடங்கை அந்தப் பிராமணர்கள் தொடங்கினர். இதைக் கேட்ட உடனேயே கபர்கள், தனி என்ற பெயர் கொண்டவனைத் தங்கள் தூதுவனாக அந்தப் பிராமணர்களிடம் அனுப்பி வைத்தனர்.(7)
தனி, அவர்களிடம் வந்து பூமியில் அமர்ந்து, கபர்களால் சொல்லப்பட்ட செய்தியை இவ்வாறு சொன்னான், “கபர்களும் உங்கள் அனைவரையும் போன்றோரே. (அவர்கள் உங்களில் எவரையும் காட்டிலும் தாழ்ந்தவர்களல்ல). எனவே, நீங்கள் நிறைவேற்றப் பார்க்கும் சடங்குகள் என்ன விளைவை ஏற்படுத்தப் போகின்றன?(8) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வேள்விகளில் கவனம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாய்மையைத் தங்கள் நோன்பாகவும் கொண்டிருப்பதால் பெரும் முனிவர்களுக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(9) செழிப்பின் தேவி அவர்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவர்களும் பதிலுக்கு அவளை மதிப்புடன் ஆதரிக்கின்றனர். அவர்கள் கனியற்ற கலவிகளுக்காகத் தங்கள் மனைவியரை நாடுவதில்லை, மேலும், அவர்கள் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்பதில்லை.(10) அவர்கள் (ஒவ்வொருநாளும்) சுடர்மிக்க வேள்வித்தீயில் ஆகுதிகள் ஊற்றி, தங்கள் ஆசான்கள் மற்றும் பெரியோரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் ஆன்மாக்களை முற்றிலும் கட்டுப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முறையாகப் பகர்ந்து கொடுக்காமல் ஒருபோதும் எந்த உணவையும் உட்கொள்வதில்லை.(11) அவர்கள் எப்போதும் தேர்களிலும், பிற வாகனங்களிலும் ஒன்றாகச் சேர்ந்தே செல்கிறார்கள் (அவர்களில் எவரும், பிறர் கால்நடையாகச் செல்லும்போது வாகனம் செலுத்திச் செல்வதில்லை). அவர்கள் தங்கள் மனைவியர் மாத விலக்குக் காலத்தில் இருக்கும்போது அவர்களிடம் ஒருபோதும் கலவியில் ஈடுபடுவதில்லை. மறுமையில் இன்பலோகங்களை அடையும் வழியிலேயே அவர்கள் அனைவரும் செயல்படுகின்றனர்.(12) பெண்கள் கருவுற்றிருக்கும்போதோ, முதியோர் உண்ணாதிருக்கும்போதோ, அவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. அவர்கள் முற்பகலில் எவ்வகை விளையாட்டுகளிலும் ஈடுபடுவதில்லை. ஒருபோதும் அவர்கள் பகலில் உறங்குவதில்லை.(13) கபர்களிடம் இவையும், இன்னும் பிற நல்லொழுக்கங்ளும், சாதனைகளும் இருக்கும்போது, ஏன் நீங்கள் அவர்களை அடக்க முயல்கிறீர்கள்? இம்முயற்சியை நீங்கள் தவிர்க்க வேண்டும். உண்மையில், அவ்வாறு தவிர்ப்பதன் மூலம் நீங்கள் நன்மையை அடைவீர்கள்” என்றான்.(14)
பிராமணர்கள், “ஓ, நாங்கள் கபர்களை அடக்கவே போகிறோம். இக்காரியத்தில் நாங்களும் தேவரும் ஒருவரே. எனவே, கபர்கள் எங்கள் கரங்களால் கொல்லப்படுவார்கள். தனியைப் பொறுத்தவரையில் {தனி என்ற உன்னைப் பொறுத்தவரையில்} அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்ப வேண்டும்” என்றனர்.(15)
இதன் பிறகு, கபர்களிடம் திரும்பிய தனி, அவர்களிடம், “பிராமணர்கள் உங்களுக்கு எந்த நன்மையும் செய்பவர்களாக இல்லை” என்றான். இதைக் கேட்ட கபர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பிராமணர்களை நோக்கிச் சென்றனர்.(16) தேரின் கொடிமரங்கள் உயர்த்தப்பட்டு, தங்களை எதிர்த்து வரும் கபர்களைக் கண்ட பிராமணர்கள், கபர்களின் உயிர் மூச்சுகளுக்கு அழிவை உண்டாக்குவதற்காகக் குறிப்பிட்ட சுடர்மிக்க நெருப்புகளை உண்டாக்கினர்.(17) வேத மந்திரங்களின் துணையுடன் உண்டாக்கப்பட்ட அந்த நித்திய நெருப்புகள், கபர்களை அழித்து, (பொன்) மேகங்கள் பலவற்றைப் போல ஆகாயத்தில் ஒளிரத் தொடங்கின.(18) போரில் ஒன்றுகூடிய தேவர்கள், பல தானவர்களைக் கொன்றனர். பிராமணர்களே அவர்களுக்கு அழிவை உண்டாக்குகிறார்கள் என்பதை அந்நேரத்தில் அவர்கள் அறியவில்லை.(19)
ஓ! மன்னா, பெரும் சக்தி கொண்ட நாரதர் அங்கே வந்து, (தேவர்களால் அல்லாமல்) பிராமணர்களின் வலிய சக்தியின் மூலம் தங்கள் பகைவர்களான கபர்கள் எவ்வாறு உண்மையில் கொல்லப்பட்டனர் என்பதைத் தேவர்களுக்குச் சொன்னார்.(20) தேவர்களின் சொற்களைக் கேட்ட சொர்க்கவாசிகள் பெரும் நிறைவை அடைந்தனர். அவர்கள் பெரும்புகழைக் கொண்ட தங்கள் மறுபிறப்பாளக் கூட்டாளிகளை மெச்சினார்கள்.(21) பிறகு, தேவர்களின் சக்தியும் ஆற்றலும் பெருகத் தொடங்கின, அவர்கள் உலகங்கள் அனைத்திலும் வழிபடப்பட்டார்கள், அழிவின்மை என்ற வரத்தையும் அவர்கள் அடைந்தார்கள்” என்றான் {வாயு}.(22)
காற்றின் தேவன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவனை முறையாக வழிபட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அவனிடம் இந்த வார்த்தைகளில் பதிலளித்தான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி, {கார்த்தவீரிய} அர்ஜுனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பாயாக.(23)
{கார்த்தவீரிய} அர்ஜுனன் {வாயு தேவனிடம்}, “ஓ! பலமிக்கத் தேவா {வாயுவே}, எப்போதும், அனைத்து வழிமுறைகளிலும் நான் பிராமணர்களுக்காகவே வாழ்கிறேன். அவர்களிடம் அர்ப்பணிப்புள்ள நான் எப்போதும் அவர்களை வழிபட்டு வருகிறேன்.(24) தத்தாத்ரேயரின் அருளின் மூலம் நான் என்னுடைய இந்த வலிமையை அடைந்திருக்கிறேன். அவருடைய அருளின் மூலமே உலகில் பெருஞ்சாதனைகளைச் செய்தேன், உயர்ந்த பலன்களையும் அடைந்தேன்.(25) ஓ! காற்றின் தேவா, உன்னால் விரிவாகவும், கவனத்தைக் கவரும் வகையிலும் சொல்லப்பட்ட பிராமணர்களின் சாதனைகளை நான் கவனத்துடன் கேட்டேன்” என்றான்.(26)
காற்றின் தேவன், “பிறப்பால் உனதான க்ஷத்திரியக் கடமைகளை நீ செய்யும்போது, பிராமணர்களைப் பாதுகாத்து, அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. உன் புலன்களைக் காப்பது போலவே நீ அவர்களைக் காப்பாயாக. பிருகுவின் குலத்தில் இருந்து உனக்கு ஆபத்து இருக்கிறது. எனினும், நெடுங்காலம் கழித்தே அவை அனைத்தும் நடந்தேறும்” என்றான் {வாயு}”.(27)
கிருஷ்ணன் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 158-கிருஷ்ணனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட பிராமணர்களை எப்போதும் நீர் வழிபடுகிறீர். எனினும், ஓ! மன்னா, அவர்களை வழிபடுவதால் நீர் காணும் கனியென்ன?(1) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிடைக்கும் எந்தச் செழிப்பால் நீர் அவர்களை வழிபடுகிறீர்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணன் இங்கே இருக்கிறான். அவன் உனக்கு அனைத்தையும் சொல்வான். உயர்ந்த நோன்புகளையும், செழிப்பையும் கொண்ட அவன், பிராமண வழிபாட்டுடன் தொடர்புடைய செழிப்பைக் குறித்து உனக்குச் சொல்வான்.(3) என் பலம், காதுகள், வாக்கு, மனம், கண்கள், புத்தி ஆகியன (இன்று குழம்புவதால்) தெளிவாக இல்லை. என் உடலைக் கைவிடுவதற்கான நேரம் தொலைவிலில்லை என நினைக்கிறேன். சூரியன் வெகு மெதுவாகச் செல்வதாக எனக்குத் தெரிகிறது[1].(4) ஓ! மன்னா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களால் பின்பற்றப்படுபவையும், புராணங்களில் குறிப்பிடப்படுபவையுமான உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, அவ்வகையில் கொஞ்சம் எஞ்சி இருப்பதைக் கிருஷ்ணனிடம் இருந்து அறிவாயாக.(5)நான் கிருஷ்ணனை உண்மையில் அறிவேன். அவன் யார் என்பதையும், அவனது புராதன வலிமை என்ன என்பதையும் நான் அறிவேன். ஓ! கௌரவர்களின் தலைவா, கேசவன் அளக்க இயலாத ஆன்மா கொண்டவன். ஐயங்கள் எழும்போது அறத்தை நிலைநிறுத்துபவன் அவனே.(6) பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றைப் படைத்தவன் கிருஷ்ணனே. உண்மையில், பூமியானது கிருஷ்ணனின் உடலில் இருந்தே எழுந்தது. பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், தொடக்கக் காலத்தில் இருந்தே இருப்பவனுமான கிருஷ்ணனே வலிமைமிக்கப் பன்றியாகி மூழ்கிப் போன பூமியை உயர்த்தியவன். திசைப்புள்ளிகளையும், மலைகளையும் படைத்தவன் அவனே.(7) ஆகாயம், சொர்க்கம், திசைப்புள்ளிகள் நான்கு, திசைகளின் துணைப்புள்ளிகள் நான்கு ஆகியன அவனுக்குக் கீழேயே இருக்கின்றன. அவனிடம் இருந்தே மொத்த படைப்பும் உண்டானது. பழைமையான அண்டத்தைப் படைத்தவன் அவனே.(8) அவனது உந்தியில் ஒரு தாமரை தோன்றியது. அந்தத் தாமரைக்குள் அளவிலா சக்தி கொண்ட பிரம்மன் எழுந்தான். ஓ! பிருதையின் மகனே, (ஆழத்திலும், அகலத்திலும்) கடலையே கடந்திருக்கும் {விஞ்சியிருக்கும்} இருளைப் போக்கியவன் பிரம்மனே.(9)
ஓ! பார்த்தா, கிருத யுகத்தில் கிருஷ்ணன் அறத்தின் {தர்மத்தின்} வடிவில் (பூமியில்) இருந்தான். திரேதா யுகத்தில் அறிவின் வடிவில் இருந்தான். துவாபர யுகத்தில் வலிமையின் வடிவில் இருந்தான். கலி யுகத்தில் அவன் மறத்தின் {அதர்மத்தின்} வடிவில் பூமிக்கு வந்தான்[1].(10) பழங்காலத்தில் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. புராதன தேவன் அவனே. அசுரப் பேரரசனின் (பலியின்) வடிவில் அசுரர்களை ஆண்டவன் அவனே. அனைத்தையும் படைத்தவன் அவனே. அனைத்து உயிரினங்களின் எதிர்காலமாக இருப்பவனும் அவனே. அழிவின் வித்துகள் நிறைந்த இந்த அண்டத்தைப் பாதுகாப்பவனும் அவனே.(11) அறம் குன்றும்போது, தேவகுலத்திலோ, மனித குலத்திலோ பிறப்பவன் இந்தக் கிருஷ்ணனே. (அத்தகைய சந்தர்ப்பங்களில்) மேல் மற்றும் கீழ் உலகங்கள் இரண்டையும் பாதுகாப்பவன் அறத்தில் நிலைத்திருக்கும் தூய ஆன்மா கொண்ட இந்தக் கிருஷ்ணனே.(12) ஓ! பார்த்தா, அசுரர்களில் விடத் தகுந்தவர்களை விட்டு, அவர்களைக் கொல்வதில் தன்னை நிறுவி கொள்கிறான். முறையான மற்றும் முறையற்ற செயல்கள் அனைத்தாகவும், அவற்றின் காரணமாகவும் இருப்பவன் அவனே. செய்யப்பட்ட செயலும், செய்யப்பட வேண்டிய செயலும், செய்துவரும் செயலும் கிருஷ்ணனே ஆவான். ராகு, சோமன் மற்றும் சக்ரன் ஆகியோரும் இந்தச் சிறப்புமிக்கவனே என்பதை அறிவாயாக.(13) விஷ்வகர்மன் அவனே. அண்டவடிவில் இருப்பவன் அவனே. அண்டத்தை அழிப்பவனும், படைப்பவனும் அவனே. சூலபாணி அவனே, மனித வடிவம் அவனே, பயங்கர வடிவம் அவனே. செயல்களால் அறியப்படுபவனாக இருப்பதால் உயிரினங்கள் அனைத்தும் அவனது புகழையே பாடுகின்றன.(14)நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரஸ்களும், தேவர்களும் எப்போதும் அவனுடன் இருக்கின்றனர். ராட்சசர்களும் கூட அவனது புகழைப் பாடுகின்றனர். செல்வத்தைப் பெருக்குபவன் அவனே; அண்டத்தின் ஒரே வெற்றியாளன் அவனே.(15) நாநயமிக்க மனிதர்கள் வேள்விகளில் அவனது புகழையே பாடுகிறார்கள். சாமங்களைப் பாடுபவர்கள் ரதந்தரங்களைச் சொல்லி அவனைப் புகழ்கின்றனர். பிராமணர்க்ள வேத மந்திரங்களில் அவனையே புகழ்கின்றனர். வேள்விப் புரோகிதர்கள் அவனிடமே தங்கள் ஆகுதிகளை ஊற்றுகின்றனர்.(16) சினத்தில் இந்திரன் பொழிந்த மழையில் இருந்து பிருந்தாவனத்தின் மாட்டிடையர்களைப் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தன மலைகளை அவன் {கிருஷ்ணன்} உயர்த்திய போது இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அவனது புகழைப் பாடினர். ஓ!பாரதா, அனைத்து உயிரினங்களுக்குமான ஒரே பேறு அவனே. ஓ! பாரதா, அவன் பழைய பிரம்மக் குகைக்குள் நுழைந்து, அவ்விடத்தில் இருந்து, உலகத்தை மறைத்த ஆதி தொடக்கத்தைக் கண்டவன்[2].(17)முதன்மையான சாதனைகளைக் கொண்ட இந்தக் கிருஷ்ணனே தானவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரையும் கலங்கடித்து, பூமியை மீட்டான். மக்கள் அவனுக்கே பல்வேறு வகை உணவுகளை அர்ப்பணிக்கிறார்கள். போர் நேரும் சமயத்தில் போர்வீரர்கள் அனைவரும் அவனுக்கே தங்கள் வாகனங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(18) அவன் நித்தியமானவன், சிறப்புமிக்க அவனுக்குக் கீழ்தான் பூமி, சொர்க்கம் மற்றும் இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. மித்ரன் மற்றும் வருணன் ஆகிய தேவர்களின் உயிர் வித்துகளைக் குடுவைக்குள் விழச் செய்து, வசிஷ்டர் என்ற பெயரில் அறியப்பட்ட முனிவரை உண்டாக்கியவன் அவனே.(19) கிருஷ்ணனே காற்றின் தேவனாக {வாயுவாக} இருக்கிறான்; அவனே பலமிக்க அஸ்வினிகளாக இருக்கிறான்; அவனே தேவர்களில் முதல்வனும், ஆயிரங்கதிர்களைக் கொண்டவனுமான சூரியனாக இருக்கிறான். அவனாலேயே அசுரர்கள் அடக்கப்பட்டார்கள். அவனே தன் மூன்று அடிகளால் மூவுலகங்களையும் மறைத்தான்.(20) தேவர்கள், மனிதர்கள் மற்றும் பித்ருகளின் ஆன்மாவாக இருப்பவன் அவனே. வேள்விச் சடங்குகளை அறிந்தோரால் செய்யப்படும் வேள்வி அவனே. ஒவ்வொரு நாளும் (சூரியனின் வடிவில்) ஆகாயத்தில் எழுந்து பகல் மற்றும் இரவாகக் காலத்தைப் பகுத்து, அரைவருடம் வடக்கு நோக்கியும், அரைவருடம் தெற்கு நோக்கியும் செல்பவன் அவனே.(21)
மேல்நோக்கியும், கீழ்நோக்கியும், பக்கவாட்டிலும் அவனிடமிருந்து எழும் எண்ணற்ற ஒளிக்கதிர்கள் உலகத்திற்கு ஒளியூட்டுகின்றன. வேதமறிந்த பிராமணர்கள் அவனைத் துதிக்கின்றனர். அவனுடைய கதிர்களில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டே சூரியன் ஆகாயத்தில் ஒளிர்கிறான்.(22) மாதாமாதம் வேள்வி செய்பவன் அவனை வேள்வியாகவே விதிக்கிறான். வேதங்களை அறிந்த மறுபிறப்பாளர்கள் அனைத்து வகை வேள்விகளிலும் அவனது புகழையே பாடுகின்றனர். மூன்று அச்சுகளைக் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான ஆண்டுச் சக்கரமாக இருப்பவன் அவனே. இவ்வழியில் (பருவகாலங்கள் என்ற) மூன்று மாளிகைகளை ஆதரிப்பவன் அவனே.(23) பெருஞ்சக்தி கொண்டவனும், அனைத்திலும் நிறைந்திருப்பவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான கிருஷ்ணனே உலகங்கள் அனைத்தையும் நிலைநிறுத்துகிறான். இருள் அனைத்தையும் விலக்கும் சூரியன் அவனே. அனைத்தையும் படைத்தவன் அவனே. ஓ! வீரா, நீ கிருஷ்ணனை அணுகுவாயாக.(24)
உயர் ஆன்மாவும் பலமும் கொண்டவனான கிருஷ்ணன் ஒரு காலத்தில் காண்டவ வனத்தின் புல்லில் அக்னியின் வடிவில் வசித்திருந்தான். (அந்தக் காட்டில் இருந்த மூலிகைகள் அனைத்தையும் எரித்ததால்) விரைவில் அவன் நிறைவடைந்தான். விரும்பிய எங்கும் செல்லவல்லவனான கிருஷ்ணன், ராட்சசர்கள் மற்றும் உரகர்களை அடக்கிவிட்டு, சுடர்மிக்க நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றினான்.(25) அர்ஜுனனுக்கு எண்ணற்ற வெண்குதிரைகளைக் கொடுத்தவன் கிருஷ்ணன். குதிரைகள் அனைத்தையும் படைத்தவன் அவனே. இந்த உலகம் (அல்லது மானுட வாழ்வு) அவனது தேராக இருக்கிறது. அந்தத் தேருக்கு (சத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாலான) மூன்று சக்கரங்கள் இருக்கின்றன.(26) அது (செயல்களால் கொண்டுவரப்படும் மேன்மையான, தாழ்ந்த, இடைநிலை பிறவிகளைக் குறிக்கும் மேல்நோக்கு, கீழ்நோக்கு, குறுக்கு என) மூவகை நகர்வியக்கங்களைக் கொண்டிருக்கிறது. அதில் (காலம், முன்வினை, தேவர்கள் விருப்பம் மற்றும் சுய விருப்பம் என்ற) நான்கு குதிரைகளைப் பூட்டப்பட்டுள்ளன. அது (நற்செயல்கள், தீச்செயல்கள் மற்றும் கலப்புத்தன்மையுள்ள செயல்களைக் குறிக்கும் வகையில் வெள்ளை, கருப்பு மற்றம் கலந்த வண்ணங்களில்) மூன்று அச்சுகளைக் கொண்டிருக்கிறது.(27) வானத்துடன் சேர்ந்த ஐம்பூதங்களுக்கும் புகலிடமாக இருப்பவன் இந்தக் கிருஷ்ணனே. பூமியையும், சொர்க்கத்தையும் இடையில் உள்ள வெளியையும் படைத்தவன் அவனே. உண்மையில், காடுகளையும், மலைகளையும் படைத்தவன் அளவிலா சுடர்மிக்க சக்தி கொண்ட இந்தக் கிருஷ்ணனே. தன் மீது வஜ்ரத்தை ஏவ இருந்த சக்ரனைத் தண்டிக்க விரும்பி, ஆறுகளைக் கடந்து அவனை உடனே முடக்கியவன் இந்தக் கிருஷ்ணனே. பழைமையான ஆயிரம் ரிக்குகளின் துணையால் பெரும் வேள்விகளில் பிராமணர்களால் துதிக்கப்படுபவன் இந்தக் கிருஷ்ணனே.(28) ஓ! மன்னா, வீட்டிற்கு விருந்தினராக வந்தவரும், புராதன முனிவர்களில் ஒருவராகச் சொல்லப்படுபவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் துர்வாசரைப் பராமரிக்க இந்தக் கிருஷ்ணனால் மட்டுமே முடிந்தது. அண்டத்தைப் படைத்தவன் அவனே. உண்மையில் அவன் தன் சொந்த இயல்பில் இருந்தே அனைத்தையும் படைக்கிறான்.(29) தேவர்கள் அனைவரையும் விட மேன்மையான அவனே தேவர்கள் அனைவருக்கும் கற்பிக்கிறான். பழைமையான விதிகள் அனைத்தையும் பிழையில்லாமல் பின்பற்றுபவன் அவனே. ஓ! மன்னா, இன்பம் தொடர்புடைய அனைத்துச் செயல்கள், வேதங்களில் காணப்படும் அனைத்துச் செயல்கள், உலகம் தொடர்புடைய அனைத்துச் செயல்களின் கனியாக இருப்பவன் விஷ்வக்ஸேனன் என்றழைக்கப்பபடும் இந்தக் கிருஷ்ணனே. (30)
உலகங்கள் அனைத்திலும் காணப்படும் ஒளியின் வெண்கதிர்கள் அவனே. மூவுலகங்கள் அவனே. உலகங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் மூவர் {மும்மூர்த்திகள்} அவனே. வேள்வி நெருப்புகள் மூன்றிலும் இருப்பவன் அவனே. {பூ: புவ: ஸ்வ: எனும்} வியாஹ்ருதிகள் மூன்றும் அவனே. உண்மையில் அனைத்து தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தவன் இந்தத் தேவகியின் மைந்தனே.(31) ஆண்டு அவனே; பருவகாலங்கள் அவனே; பக்ஷங்கள் அவனே, பகலும், இரவும் அவனே; கலைகள், காஷ்டைகள், மாத்திரைகள், முகூர்த்தங்கள், லவங்கள், க்ஷணங்கள் என்றழைக்கப்படும் காலப்பிரிவுகள் அவனே. இவை யாவும் இந்த விஷ்வக்ஸேனனே என்பதை அறிவாயாக.(32) சந்திரன், சூரியன், கோள்கள், நட்சத்திரக்கூட்டங்கள், விண்மீன்கள், முழு நிலவு {பௌர்ணமி} நாள் உள்ளிட்ட பர்வ நாட்கள் அனைத்தும், நட்சத்திரக் கூடுகைகள் மற்றும் பருவகாலங்கள் ஆகியன விஷ்வக்ஸேனனான இந்தக் கிருஷ்ணனிடம் இருந்தே பாய்கின்றன.(33) ருத்திரர்கள், ஆதித்தயர்கள், வசுக்கள், அஸ்வினிகள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், பல்வேறு மருத்துக்கள், பிரஜாபதி, தேவர்களின் தாயான அதிதி, முனிவரெழுவர் {சப்தரிஷிகள்} ஆகியோரனைவரும் கிருஷ்ணனில் இருந்தே எழுந்தனர்.(34)
காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு அவன் அண்டத்தைச் சிதறடிக்கிறான். அண்ட வடிவிலான அவன் அனைத்தையும் எரிக்கும் நெருப்பாகிறான். நீராக மாறி அனைத்தையும் நனைத்து மூழ்கடிக்கிறான், பிரம்மனின் வடிவை ஏற்று உயிருள்ள மற்றும் உயிரற்ற பல்வேறு இனங்களைப் படைக்கிறான்.(35) தானே வேதமாக இருந்தாலும், வேதங்கள் அனைத்தையும் கற்கிறான். விதிகள் அனைத்துமாக இருந்தாலும், அறம் தொடர்பாகக் காரியங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும், வேதங்களையும், அண்டத்தை ஆளும் சக்தியையும் பின்பற்றுகிறான். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, அசையும் மற்றும் அசையாத அண்டமனைத்தும் இந்தக் கேசவனே என்பதை அறிவாயாக. மிகப் பிரகாசமான ஒளியின் வடிவில் இருப்பவன் அவனே. அண்டவடிவம் கொண்ட இந்தக் கிருஷ்ணன், அந்தச் சுடர்மிக்கப் பிரகாசத்தில் வெளிப்படுகிறான். இருப்பிலுள்ள அனைத்து உயிரின ஆன்மாக்களின் உண்மை காரணமாக இருக்கும் அவன் முதலில் நீரையே படைத்தான். அதன் பிறகு இந்த அண்டத்தை அவன் படைத்தான்.(37) இந்தக் கிருஷ்ணனே விஷ்ணு என்பதை அறிவாயாக. அண்டமனைத்தின் ஆன்மா அவனே என்பதை அறிவாயாக. பருவகாலங்கள் அனைத்தும் அவனே என்பதை அறிவாயாக. இயற்கையில் நாம் காணும் பல்வேறு அற்புதங்கள் அவனே. மழைபொழியும் மேகங்களும், வானத்தில் மின்னும் மின்னல்களும் அவனே. யானை ஐராவதன் அவனே. உண்மையில், அசையும், அசையாத அண்டமனைத்தும் அவனே.(38)
அண்டத்தின் வசிப்பிடமாகவும், குணங்கள் அனைத்தையும் கடந்தவனாகவும் இருக்கும் இந்தக் கிருஷ்ணனே வாசுதேவன். அவன் ஜீவன் ஆகும்போது சங்கர்ஷணன் என்றழைக்கப்படுகிறான். அடுத்ததாக அவன் பிரத்யும்னனாகவும், அநிருத்தனாகவும் ஆகிறான். இவ்வழியில் தெய்வப் பிறவியான உயர் ஆன்ம கிருஷ்ணன், நான்கு வகை வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.(39) ஐம்பூதங்களாலான இந்த அண்டத்தை உண்டாக்க விரும்பிய அவன், தன்னை அப்பணியில் நிறுவி கொண்டு, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்ற உயிருள்ள ஐந்து இருப்புகளில் அண்டத்தை இயங்கச் செய்கிறான். ஓ! பிருதையின் மகனே, பூமி {நிலம்}, காற்று, வானம், ஒளி, நீர் ஆகியற்றைப் படைத்தவன் அவனே. அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டத்தைப் படைத்து, அவற்றை (ஈன்றுபெறும் இனம், முட்டையிட்டுப் பெறும் இனம், தாவரங்கள் மற்றும் கழிவில் பிறப்பவை என்ற) நால்வகையாகப் பிரித்த பிறகு, பூமியை {ஆகாயம், நிலம், நெருப்பு, நீர், காற்று என்ற) ஐந்துவகை வித்துகளுடன்[3] கூடியவளாகப் படைத்தான். பிறகு, பூமியில் நீரை அபரிமிதமாகப் பொழிவதற்காக ஆகாயத்தை உண்டாக்கினான்.(41)ஓ! மன்னா, இந்த அண்டத்தை உண்டாக்கியவன் இந்தக் கிருஷ்ணனே என்பதில் ஐயமில்லை. அவன் தானே தோன்றியவன் ஆவான். அவன் தன் பலத்தால் அனைத்துப் பொருட்களையும் இருப்பில் இருக்கச் செய்கிறான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், உலகங்கள், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அவனே. அனைத்து உயிரினங்களின் தலைவன், படைக்க விரும்பியவனாக உயிருள்ள மொத்த அண்டத்தையும் முறையாகப் படைத்தான். நன்மை மற்றும் தீமை, அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தும் விஷ்வக்ஸேனனான இவனிடம் இருந்தே பாய்கின்றன. இருப்பில் உள்ள எதுவும், இருப்பில் உதிக்கும் எதுவும், அனைத்தும் கேசவனே. உயிரினங்களுக்கு முடிவு ஏற்படுகையில் மரணமாக வருபவனும் இந்தக் கிருஷ்ணனே. அவன் நித்தியமானவன், அறக் காரணங்களை நிலைநிறுத்துபவன். கடந்த காலத்தில் இருந்த எதுவும், நாம் அறிந்த எதுவும், உண்மையில் அனைத்தும் இந்த விஷ்வக்ஸேனனே.(42-44) அண்டத்தில் உன்னதமானவையும், பலன்மிக்கவையுமான எவையும், நன்மை, தீமை என்று இருக்கும் எவையும், அனைத்தும் நினைத்தக்கரியவனான இந்தக் கேசவனே. எனவே கேசவனைவிட மேன்மையானது என எதையும் நினைப்பதே பொருளற்றதாகும்.(45) கேசவன் அத்தகையவனே. இதையும்விடப் பெரியவனே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், மாற்றமில்லாதவனும், மங்காதவனுமான நாராயணன் அவனே. அசைவன மற்றும் அசையாதனவற்றுடன் கூடியதும், தொடக்கம், நடு மற்றும் முடிவுடன் கூடியதுமான மொத்த அண்டத்திற்கும், ஆசைகளைப் பின்தொடர்ந்து பிறக்கும் உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமற்ற நித்திய காரணன் அவனே” என்றார் {பீஷ்மர்}.(46)
துர்வாஸர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 159-பிராமண வழிபாட்டின் சிறப்பையும், துர்வாஸ முனிவரை வழிபட்டதனால் தனக்குக் கிடைத்த மேன்மையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்..
யுதிஷ்டிரன் {கிருஷ்ணரிடம்}, “ஓ! மதுசூதனா, பிராமண வழிபாட்டினால் உண்டாகும் செழிப்பென்ன என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. இக்காரியம் குறித்து நன்கறிந்தவன் நீயே. உண்மையில் நம் பாட்டன் {பீஷ்மர்} உன்னை அறிந்திருக்கிறார்” என்றான்.(1)
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, வாய்மைக்கு இணக்கமனான வகையில் பிராமணர்களை வழிபடுவதால் கிட்டும் பலன்களை உமக்குச் சொல்கிறேன், குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(2) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, ஒரு காலத்தில் நான் துவாராவதியில் அமர்ந்திருந்த போது, குறிப்பிட்ட பிராமணர்களிடம் சினம் அடைந்திருந்த என் மகன் பிரத்யும்னன் என்னிடம் வந்து,(3) “ஓ! மதுசூதனரே, பிராமண வழிப்பாட்டில் கிட்டும் பலனென்ன? இம்மையிலும், மறுமையிலும் அவர்களின் தலைமைத்துவம் எவ்வாறு உண்டானது?(4) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, பிராமணர்களைத் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் வெல்லப்படும் வெகுமதிகள் என்ன? இக்காரியத்தில் என் மனம் ஐயங்களால் குழப்பமடைவதால் இஃதை அன்புடன் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)
பிரத்யும்னனால் என்னிடம் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டதும், நான் அவனுக்குப் பின்வருமாறு பதிலளித்தேன். ஓ! மன்னா, அந்த வார்த்தைகளைச் சொல்கிறேன் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(6) {நான் அவனிடம்}, “ஓ! ருக்மிணியின் பிள்ளாய், பிராமண வழிபாட்டின் மூலம் வெல்லப்படும் செழிப்பென்ன என்பதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஒருவன், (அறம், பொருள், இன்பம் என்று) நன்கறியப்படும் முத்தொகையை அடைவதிலோ, முக்தியை அடைவதிலோ, புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றை அடைவதிலோ, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் வழிப்பாட்டிலோ தன்னை நிறுவிக் கொள்ளும்போது, அவன் மறுபிறப்பாளர்களை நிறைவடையச் செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் (ஆகாயத்தில் இனிய ஒளியைப் பொழியும்) சோம மன்னன் {சந்திரன்} ஆவர். அவர்கள் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் ஆள்பவர்கள்.(7,8) ஒரு ருக்மிணியின் பிள்ளாய், ஓ! மகனே, இம்மையிலோ, மறுமையிலோ ஏற்புடைய அனைத்தும் பிராமணர்களைத் தோற்றுவாயாகக் கொண்டவையே. இதில் எனக்கு ஐயமேதும் இல்லை.(9) பிராமண வழிபாட்டில் இருந்தே பெருஞ்சாதனைகளும், புகழும், பலமும் பாய்கின்றன. உலகங்கள் அனைத்திலும் வசிப்பவர்களும், லோகபாலர்கள் அனைவரும் பிராமணர்களை வழிபடுபவர்களே.(10) இவ்வாறிருக்கையில், ஓ! மகனே, நாமே பூமியின் தலைவர்கள் என்ற கருத்தால் நிறைந்து எவ்வாறு அவர்களை நாம் அவமதிக்கலாம்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன் கோபம், தனக்கான பொருளாகப் பிராமணர்களைத் தழுவ வேண்டாம்.(11) இம்மையிலும், மறுமையிலும் பிராமணர்கள் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்தையும் குறித்த நேரடி அறிவு பெற்றவர்கள் அவர்கள். உண்மையில் அவர்கள் கோபமடைந்தால் அனைத்தையும் சாம்பலாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.(12)
அவர்கள் (இருப்பில் உள்ளவற்றைத் தவிர) வேறு உலகங்களையும், வேறு லோகபாலர்களையும் படைக்கவல்லவர்கள். அவ்வாறிருக்கையில், சக்தியும், சரியான அறிவும் படைத்த மனிதர்கள் ஏன் அவர்களிடம் மதிப்புடன் நடந்துகொண்டு, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கக் கூடாது?(13) ஓ! மகனே, பச்சை மற்றும் பழுப்பு {பசும்பொன்} நிறம் கொண்ட பிராமணரான துர்வாசர் முன்பொரு சமயம் என் வீட்டில் வசித்திருந்தார். மரவுரியுடுத்திய அவர், வில்வ மரத்தாலான தண்டத்தைக் கொண்டிருந்தார். நீண்ட தாடியுடன் கூடிய அவர் மிகவும் மெலிந்தவராகவும் இருந்தார்.(14) பூமியில் உள்ள நெடிய மனிதனைவிட உயரத்தில் நெடியவராக இருந்தார். மனிதர்களுக்குரிய உலகங்கள், தேவலோகங்கள் மற்றும் வேறு மேன்மையானோருக்குரிய உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்த அவர், சபைகளிலும், பொதுவெளிகளிலும் எப்போதும் இந்த ஸ்லோகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். {துர்வாஸர்} “பிராமணனான இந்தத் துர்வாசனை, விருந்தோம்பல் கடமைகளுடன் தன் வீட்டில் வசிக்கச் செய்பவன் எவன்?(16) அனைவரிடமும் சிறு மீறலையும் கண்டு கோபங்கொள்பவன் இவன். என் இயல்பைக் கேட்டும் இங்கே எனக்குப் புகலிடமளிப்பவன் எவன்?(17) உண்மையில், ஒரு விருந்தினனாக எனக்கு உறைவிடமளிக்கும் ஒருவன், என்னைக் கோபமடையச் செய்யும் எதையும் செய்யக்கூடாது” {என்ற வரிகளைப் பாடுவார்}.
எவரும் தம் வீட்டில் அவருக்கு உறைவிடமளிக்கத் துணியவில்லை என்பதை நான் கண்டபோது, அவரை அழைத்து என் வசிப்பிடத்தில் வசிக்கச் செய்தேன்.(18) ஆயிரக்கணக்கானோர் உண்ணப் போதுமான உணவை குறிப்பிட்ட நாட்களில் அவர் ஒருவரே உண்பார். வேறு குறிப்பிட்ட நாட்களில் மிகக் குறைவாகவே உண்பார். சில நாட்களில் என் வீட்டை விட்டு வெளியே செல்லும் அவர் திரும்பி வரமாட்டார்.(19) சில வேளைகளில் வெளிப்படையான காரணமேதுமின்றிச் சிரிப்பார். சில வேளைகளில் காரணமில்லாமல் அழுவார். அந்த நேரத்தில் பூமியில் அவருக்கு நிகரான வயதைக் கொண்டவர்கள் எவரும் இல்லை.(20) ஒரு நாள், தமக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து அங்கே இருந்த படுக்கைகள், விரிப்புகளையும், அவருக்குத் தொண்டாற்றியவர்களும், நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களுமான காரிகையரையும் எரித்துவிட்டுச் சென்றுவிட்டார்[1].(21)உயர்வாகப் புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட அவர், இது நடந்த பிறகு என்னிடம், “ஓ! கிருஷ்ணா, தாமதமேதும் இல்லாமல் பாயஸம் உண்ண விரும்புகிறேன்” என்றார்.(22) அவரது மனத்தை முன்பே புரிந்து வைத்திருந்த நான் அனைத்து வகை உணவு மற்றும் பானங்களைத் தயாரிக்கும் வகையில் பணியாட்களை நிறுவியிருந்தேன்.(23) உண்மையில், சிறந்த உணவுப்பொருட்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. என்னிடம் பாயஸம் கேட்கப்பட்ட உடனே, நான் அதைக் கொண்டு வந்து அந்தத் தவசிக்கு அளித்தேன்.(24) சிறிதளவு உண்ட அவர், என்னிடம், “ஓ! கிருஷ்ணா, இந்தப் பாயஸத்தை எடுத்து உன் அங்கமெங்கும் பூசிக் கொள்வயாக” என்றான்.(25) எந்தத் தயக்கமுமின்றி அவர் சொன்னவாறே நான் செய்தேன். உண்மையில் எஞ்சியிருந்த பாயஸத்தை என் உடலிலும், தலையிலும் பூசிக் கொண்டேன்.(26)
அந்த நேரத்தில் அத்தவசி, இனிய முகம் படைத்த உன் அன்னை {ருக்மிணி} அருகில் நிற்பதைக் கண்டார். சிரித்துக் கொண்டே அந்தப் பாயஸத்தை அவள் மீதும் அவர் பூசினார்.(27) பாயஸம் பூசப்பட்ட உடலுடன் கூடிய உன் அன்னையைத் தாமதமேதும் இல்லாமல் ஒரு தேரில் பூட்டினார். அந்தத் தேரில் ஏறி அவர் என் வீட்டில் இருந்து புறப்பட்டார்.(28) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், நெருப்பைப் போன்று சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அந்தத் தவசி, மனிதர்களின் தேரை இழுக்கும் விலங்கைப் போல இளமையுடன் கூடிய என் ருக்மிணியை என் முன்னிலையிலேயே அடித்தார்.(29) இதைக் கண்டும், வன்மத்தில் பிறந்த சிறு துன்பத்தையும் நான் உணரவில்லை, அந்த முனிவரைக் காயப்படுத்தவும் விரும்பவில்லை. உண்மையில், தேரில் ருக்மிணியைப் பூட்டிய அந்த முனிவர், நகரத்தின் சாலைவழியே செல்ல விரும்பிப் புறப்பட்டார்.(30)
இயல்புக்குமீறிய இக்காட்சியைக் கண்ட தாசார்ஹர்களில் சிலர், கோபத்தால் நிறைந்து, ஒருவருக்கொருவர் இவ்வகையில் பேசத் தொடங்கினர், {அவர்கள் தங்களுக்குள்}{31) “ருக்மிணியைத் தேரில் பூட்டிய பிறகும் மூச்சை இழுக்க {சுவாசிக்கக்} கூடியவன் இந்தப் பூமியில் வேறு எவன் இருக்கிறான்? உண்மையில் இந்த உலகம் பிராமணர்களால் நிறையட்டும். வேறு வகையினர் எவரும் இங்கே பிறக்க வேண்டாம்.(32) நஞ்சுமிக்கப் பாம்பின் நஞ்சானது மிகக் கொடியதாகும். ஒரு பிராமணன் அதைவிடக் கொடிய நஞ்சாவான். நஞ்சுமிக்கப் பாம்பான ஒரு பிராமணனால் கடிபட்ட, அல்லது எரிக்கப்பட்ட ஒரு மனிதருக்கு மருத்துவன் எவனும் இல்லை” என்றனர்.(33)
தடுக்கப்பட முடியாதவரான துர்வாசர் அவ்வாறு தேரில் சென்ற போது, ருக்மிணி சாலையில் நிலைதடுமாறி நடந்து அடிக்கடி விழுந்தாள். இதனால் கோபமடைந்த அந்த மறுபிறப்பாள முனிவர், சாட்டையால் ருக்மிணியை அடித்து ருக்மிணியைத் தூண்டினார்.(34) இறுதியாக, பேரார்வத்தில் நிறைந்திருந்த அவர் தேரில் இருந்து குதித்து, வழியற்ற நிலத்தில் கால்நடையாகவே தென்திசையை நோக்கி ஓடினார்.(35) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் பாதையற்ற நிலத்தில் ஓடுவதைக் கண்ட நாங்கள், உடலில் பாயஸம் பூசப்பட்டவர்களாக இருந்தாலும், அவரைப் பின்தொடர்ந்து சென்று, “ஓ! புனிதமானவரே, எங்களிடம் நிறைவடைவீராக” என்றோம்.(36)
பெரும் சக்தி கொண்ட அந்தப் பிராமணர் {துர்வாஸர்}, என்னைக் கண்டு, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, உன் இயல்பின் பலத்தால் உன் கோபத்தை அடக்கிக் கொண்டாய். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உன்னிடம் சிறு குற்றத்தையும் காணவில்லை. ஓ! கோவிந்தா, நான் உன்னிடம் உயர்ந்த நிறைவையடைகிறேன். நீ விரும்பும் ஆசைகள் கனியும் நிலையை வேண்டுவாயாக.(38) ஓ! மகனே, நான் எவரிடமாவது நிறைவடையும்போது, என்னுடைய பலம் என்ன என்பதைக் காண்பாயாக. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் உணவை விரும்புவதைத் தொடரும் வரையில் அவர்களில் ஒவ்வொருவரும் உணவில் கொள்வது போலவே உன்னையும் விரும்புவார்கள். பல்வேறு உலகங்களில் அறம் இருக்கும் வரை நீ செய்த சாதனைகளின் புகழ் நீடித்திருக்கும்(39,40) உண்மையில் உன் புகழ் மூவுலகங்கள் உள்ள வரை நீடித்திருக்கும். ஓ! ஜனார்த்தனா, நீ அனைவருக்கும் ஏற்புடையவனாக இருப்பாய்.(41) உன் பொருட்களில் உடைக்கப்பட்டவையோ, எரிக்கப்பட்டவையோ வேறுவகையில் (என்னால்) அழிக்கப்பட்டவையோ, அவை அனைத்தும் முன்போலவே, அல்லது முன்னிலும் சிறந்த வடிவில் மீளும்.(42) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, நீ வாழ விரும்பும் வரை, நான் கொடுத்த பாயஸந்தடவிய உடல் பகுதிகளில் தாக்கப்பட்டு மரணம் நேரும் அச்சமேதும் உனக்கு இருக்காது.(43) ஓ! மகனே, உள்ளங்கால்களிலும் அந்தப் பாயஸத்தை நீ ஏன் பூசவில்லை? அதைச் செய்யாததால், என்னால் அங்கீகரிக்கப்படாத வழியில் நீ செயல்பட்டிருக்கிறாய்” என்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் என்னிடம் நிறைவடைந்து அவர் சொன்ன வார்த்தைகள் இவையே. அவர் பேசுவதை நிறுத்திய பிறகு, என் உடல் பேரெழிலுடனும், காந்தியுடனும் கூடியதை நான் கண்டேன்.(44)
ருக்மிணியிடமும் நிறைவடைந்த அம்முனிவர் அவளிடம், “ஓ! அழகிய பெண்ணே, புகழடைவதில் பெண்களில் முதன்மையானவளாக இருப்பாய், பெரும் மகிமையும், சாதனைகளும் உனதாகும். முதுமை, நோய் அல்லது மேனிவண்ணம் குறைதல் ஆகியவை உனக்கு எப்போதும் ஏற்படாது.(45) எப்போதும் உன்னுடன் இருக்கும் நறுமணத்துடன் கிருஷ்ணனுக்கு நீ எப்போதும் பணிவிடை செய்வதை அனைவரும் காண்பார்கள்.(46) கேசவனின் பதினாறாயிரம் {16,000} மனைவியரில் நீ முதன்மையானவளாக இருப்பாய். இறுதியாக, இவ்வுலகில் இருந்து செல்லும் காலம் வரும்போது, மறுமையில் கிருஷ்ணனின் பிரியா துணையை அடைவாய்” என்றார்.(47)
உன் அன்னையிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அம்முனிவர் மீண்டும் என்னிடம் பின்வரும் சொற்களைச் சொல்லிவிட்டு இடத்தை விட்டு அகன்றார். உண்மையில், சுடர்மிக்க நெருப்பைப் போன்ற முனிவர் துர்வாசர்,(48) “ஓ! கேசவா, பிராமணர்களிடம் எப்போதும் உன் புத்தி இவ்வாறே இருக்கட்டும்” என்றார். உண்மையில் இச்சொற்களைச் சொன்ன அந்தப் பிராமணர், என் கண் முன்பாகவே அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(49) அவர் மறைந்த பிறகு, யாரும் கேட்காத வகையில் அமைதியாகச் சில மந்திரங்களைச் சொல்லும் நோன்பை நோற்றேன். உண்மையில், அந்த நாளில் இருந்து பிராமணர்களிடம் நான் பெறும் ஆணைகளை நிறைவேற்றத் தீர்மானித்தேன்.(50) ஓ மகனே, நானும் உன் அன்னையும் இந்நோன்பைப் பின்பற்றி இன்பத்தில் நிறைந்த இதயங்களுடன் எங்கள் அரண்மனைக்குள் மீண்டும் நுழைந்தோம்.(51) வீட்டிற்குள் நுழைந்ததும், அம்முனிவரால் உடைக்கப்பட்ட, அல்லது எரிக்கப்பட்ட அனைத்தும் புதிதாக இருப்பதைக் கண்டேன்.(52) மேலும் நீடித்திருக்கும் தன்மையுடன் கூடிய அந்தப் புதிய பொருட்களைக் கண்டு நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். உண்மையில், ஓ! ருக்மிணியின் மகனே, அந்நாளில் இருந்தே நான் பிராமணர்களை எப்போதும் மனத்தால் வழிபடுகிறேன்” என்றேன்.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, “தங்கள் வகையில் {வர்ணத்தில்} முதன்மையானவர்களான பிராமணர்களின் பெருமை குறித்து அந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொன்னது இதுவே.(54) ஓ! குந்தியின் மகனே, ஓ பலமிக்கவரே, நீரும் செல்வம் மற்றும் பசுக்களைக் கொடைகளாக அளித்து உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்களை வழிபடுவீராக.(55) இவ்வழியிலேயே பிராமணர்களின் அருள் மூலம் பிறந்த செழிப்பை நான் அனுபவிக்கிறேன். மேலும், ஓ! பாரதர்களின் தலைவா, பீஷ்மர் என்னைக் குறித்துச் சொன்னது அனைத்தும் உண்மையே” என்றான் {கிருஷ்ணன்}.(56)
சங்கரன் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 160-சிவனின் பெருமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா, துர்வாஸரின் அருள்மூலம் நீ அடைந்த அறிவை எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்.(1) ஓ! நுண்ணறிவுமிக்கவர் அனைவரிலும் முன்மையானவனே, அந்த உயர்ந்த அருள், அந்த உயர் ஆன்மாவின் பெயர்கள் அனைத்தையும் விளக்கமாக நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்[1].(2)வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த உயர் ஆன்மாவின் அருள் மூலம் நான் வென்ற புகழ் மற்றும் அடைந்த நன்மைகளை உமக்குச் சொல்கிறேன். உண்மையில், கபர்தினை வணங்கிய பிறகு இது குறித்து நான் உமக்குச் சொல்கிறேன்.(3) ஓ! மன்னா, ஒவ்வொரு நாள் படுக்கையில் இருந்து எழுந்ததும் நான் சொல்லும் சதருத்ரீயத்தை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(4) அனைத்து உயிரினங்களின் பெருந்தலைவனும், தவங்களையே செல்வமாகக் கொண்டவனுமான பிரம்மனே, சில காலம் சிறப்புத் தவங்களைச் செய்து இந்த மந்திரங்களைத் தொகுத்தான். ஓ! ஐயா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய இந்த அண்டத்தைச் சங்கரனே படைத்தான்.(5) ஓ! ஏகாதிபதி, மஹாதேவனை விட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உண்மையில், மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் உயர்ந்தவன் அவனே.(6) அந்த உயர் ஆன்மாவின் எதிரே நிற்கவல்லவர்கள் வேறு எவரும் இல்லை. உண்மையில், அவனுக்கு நிகராக மூவுலகங்களிலும் ஒருவனும் இல்லை.(7)
போர்க்களத்தில் சினத்தால் நிறைந்தவனாக அவன் நிற்கும்போது, அவனது மேனி மணமே பகைவர்கள் அனைவரின் நினைவையும் இழக்கச் செய்யும். கொல்லப்படாதவர்கள் நடுங்கிக் கீழே விழுவார்கள்.(8) அவனது முழக்கங்கள் மேகங்களுக்கு ஒப்பான பயங்கரமானவை. போர்க்களத்தில் அவனது முழக்கங்களைக் கேட்கும் தேவர்களின் இதயங்களே கூட இரண்டாகப் பிளக்கும்.(9) பினாகைதாரி கோபமடைந்து பயங்கர வடிவை ஏற்று, தேவர்கள், அசுரர், கந்தர்வர், அல்லது பாம்பின் மீது வெறுமனே தன் பார்வையைச் செலுத்தினாலும், அவனுக்கு மலைக்குகையில் உறைவிடம் அமைந்தாலும் மனோ அமைதியை அடையத் தவறுவான். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷன் வேள்வி செய்ய விரும்பி, தன் வேள்வியைப் பரப்பியபோது,(10,11) அச்சமற்ற பவன், (தக்ஷனைக் கண்டு) கோபமடைந்து, (உடல்படைத்த) வேள்வியைத் துளைத்தான். தன்னுடைய பயங்கர வில்லில் இருந்து கணையை ஏவி உரக்க முழங்கினான்.(12) உண்மையில் மஹாதேவன் கோபமடைந்து உடல்வடிவம் கொண்ட வேள்வியைத் தன் கணையால் திடீரெனத் துளைத்தபோது, தேவர்கள் மகிழ்ச்சியையும், இதய அமைதியையும் இழந்து துன்பத்தில் நிறைந்தனர்.(13)
அவனது வில்லின் நாண்கயிற்றில் உண்டான நாணொலியின் விளைவால் மொத்த அண்டமும் கலக்கமடைந்தது. ஓ! பிருதையின் மகனே, தேவர்களும், அசுரர்களும், உற்சாகத்தை இழந்து கலக்கமடைந்தனர்.(14) பெருங்கடல் கலங்கியது, பூமியானவள் மையம் வரை நடுங்கினாள். மலைகளும், குன்றுகளும் தங்கள் அடித்தளத்தைவிட்டு நகரத் தொடங்கி, அனைத்துப் புறங்களிலும் ஓடின. ஆகாய வெளி உடைந்தது.(15) உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. எதையும் காண முடியவில்லை. ஓ! பாரதா, சூரியனுடன் சேர்த்து, ஒளிக்கோள்கள் அனைத்தின் ஒளியும் இருளடைந்தது.(16) அச்சமடைந்த பெரும் முனிவர்கள், தங்களுக்கும், அண்டத்திற்கும் நன்மை செய்ய விரும்பி, அமைதிக்கான வழக்கமான பரிகாரச் சடங்குகளைச் செய்தனர்.(17) அதே வேளையில், பயங்கர ஆற்றலைக்கொண்ட ருத்திரன் தேவர்களை எதிர்த்து விரைந்தான். சினத்தால் நிறைந்த அவன், பகனின் {பக தேவனின்} கண்களைக் கிழித்தெறிந்தான்.(18) சினத்தால் தூண்டப்பட்ட அவன், தன் காலால் பூஷனை {சூரியனைத்} தாக்கினான். (புரோடாசம் என்றழைக்கப்படும்) பெரிய வேள்விப்பிண்டத்தை அமர்ந்து உண்ட போது, அந்தத் தேவனின் {சூரியனின்} பற்கள் அவனால் {ருத்திரனால்} கிழித்தெறியப்பட்டன.(19)
அச்சத்தால் நடுங்கிய தேவர்கள் சங்கரனுக்குத் தலைவணங்கினர். தணிவடையாத ருத்திரன் மீண்டும் தன் வில்லின் நாணில் சுடர்மிக்கக் கூரிய கணையொன்றைப் பொருத்தினான்.(20) அவனது ஆற்றலைக் கண்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். முதன்மையான தேவர்களான அவர்கள் அவனைத் தணிவடையச் செய்யத் தொடங்கினர்.(21) மதிப்புடன் தங்கள் கரங்களைக் கூப்பிக் கொண்ட அவர்கள், சதருத்ரீய மந்திரங்களைச் சொல்லத் தொடங்கினர். இறுதியாக, இவ்வாறு தேவர்களால் புகழப்பட்ட மஹேஸ்வரன் நிறைவடைந்தான்.(22) பிறகு தேவர்கள் (வேள்விக்காணிக்கைகளில்) ஒரு பெரும் பங்கை அவனுக்கு ஒதுக்கினார்கள். ஓ! மன்னா, அச்சத்தில் நடுங்கிய அவர்கள் அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(23) இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்த வேள்வியின் உடல் வடிவமானது ருத்திரன் நிறைவடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்தது. மஹாதேவனின் கணைகளால் எந்த அங்கங்கள் அழிக்கப்பட்டனவோ அவை மீண்டும் முழுமையாக நலமாகத் திரும்பியது.(24)
பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்ட அசுரர்கள் ஆகாயத்தில் முந்நகரங்களை {திரிபுரத்தைக்} கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்று இரும்பாலானது; ஒன்று வெள்ளியாலானது; மற்றொன்று பொன்னாலானது.(25) மகவத்தால், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தாலும் அந்த நகரங்களைத் துளைக்க இயலவில்லை. அசுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் அப்போது பெரும் ருத்திரனின் பாதுகாப்பை நாடினார்கள். உயர் ஆன்ம தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவனிடம் {ருத்திரனிடம்}, “ஓ! ருத்ரா, அசுரர்கள் தங்கள் செயல்கள் அனைத்திலும் அழிவாதிக்கத்தைச் செய்ய அச்சுறுத்துகின்றனர்.(27) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மூவுலகங்களையும் பாதுகாப்பதற்க்காக அந்தத் தைத்தியர்களைக் கொன்று அவர்களது நகரத்தையும் அழிப்பாயாக” என்று கேட்டனர். அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, விஷ்ணுவைத் தன் கணையின் சிறந்த தலையாக அமைத்தான்.(28) நெருப்பின் தேவனைக் கணை முனையாகவும், சூரியனின் மகனான யமனை அந்தக் கணையின் சிறகுகளாகவும் அமைத்தான். வேதங்களைத் தன் வில்லாகவும், சாவித்ரி தேவியைத் தன் வில்லின் சிறந்த நாணாகவும் கொண்டான்.(29) பெரும்பாட்டன் பிரம்மனையே தன் தேரோட்டி ஆக்கிக் கொண்டான். இவை அனைத்தையும் பயன்படுத்தி, மூன்று பர்வங்கள் மற்றும் மூன்று சல்லியங்களைக் கொண்ட தன் கணையால் அசுரர்களின் முந்நகரத்தைத் துளைத்தான்[2].(30) உண்மையில், ஓ! பாரதா, யுக முடிவில் அனைத்துப் பொருட்களையும் எரிக்கத் தோன்றும் நெருப்பின் சக்தியுடன் கூடியவனும் சூரியனைப் போன்ற வெண்ணிறத்தவனுமான ருத்திரனின் கணையால் அசுரர்களும், அவர்களது நகரங்களும் எரிக்கப்பட்டன.(31)ஐந்து சடைகளைக் கொண்ட ஒரு குழந்தையாக மாறி பார்வதியின் மடியில் கிடக்கும் மஹாதேவனைக் கண்டு, தேவர்களிடம் அவள் {பார்வதி}, {குழந்தையின் வடிவில் இருக்கும்} அவன் யார் என்று கேட்டாள்.(32) அந்தக் குழந்தையைக் கண்ட சக்ரன், திடீரெனப் கோபம் மற்றும் பொறாமையால் நிறைந்து தன் வஜ்ரத்தைக் கொண்டு அவனைக் கொல்லத் தீர்மானித்தான். எனினும், அக்குழந்தை இரும்புத் தடியைப் போன்ற இந்திரனின் கரத்தையும், அதனுடன் கூடிய வஜ்ரத்தையும் சேர்த்து முடக்கினான்.(33) தேவர்கள் அனைவரும் கலக்கமடைந்தனர், அந்தப் பிள்ளைதான் அண்டத்தின் தலைவன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில், அவர்கள் அனைவரும், லோகபாலர்களும் அந்தக் குழந்தையின் காரியத்தில் மதி கலங்கியவர்களாகினர்.(34)
அப்போது சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் பிரம்மன், தன் தவங்களின் உதவியால் நினைவுகூர்ந்து, அனைத்திலும் முதன்மையானவனும், உமையின் தலைவனும், அளவிலா ஆற்றல் கொண்டவனுமான மஹாதேவன் அந்தக் குழந்தையே என்பதைக் கண்டறிந்தான். பிறகு அந்தத் தலைவனை அவன் புகழ்ந்தான்.(35) தேவர்களும், உமை மற்றும் ருத்திரன் ஆகிய இருவரின் புகழையும் துதிக்கத் தொடங்கினர். பலனைக் கொன்றவனுடைய {சக்ரனுடைய} (முடக்கப்பட்ட) கரம் மீண்டும் பழைய நிலைமையை அடைந்தது.(36) பெரும் சக்தி கொண்ட பிராமணரான துர்வாசராகப் பிறந்த மஹாதேவன், என் வீட்டில் நெடுங்காலம் வசித்திருந்தான்.(37) என் வசிப்பிடத்தில் வசித்திருந்தபோது அவன் பல்வேறு குறும்புகளைச் செய்தான். பொறுத்துக் கொள்ளக் கடினமாக இருந்தாலும், {அவன் அளித்த} இதயப் பெருந்தன்மையால் அவற்றை நான் பொறுத்துக் கொண்டேன்.(38)
ருத்திரன் அவனே; சிவன் அவனே; அக்னி அவனே; சர்வன் அவனே; அனைவரையும் வெல்பவன் அவனே; இந்திரன் அவனே, வாயுவும், அஸ்வினிகளும், மின்னலின் தேவனும் அவனே.(39) சந்திரமாஸ் அவனே; ஈசானன் அவனே; சூரியன் அவனே; வருணன் அவனே; காலம் அவனே; அழிப்பவன் {மிருத்யு} அவனே; மரணம் {யமன்} அவனே; பகலும், இரவும் அவனே;(40) பக்ஷம் அவனே; பருவகாலங்கள் {ருது} அவனே; {காலை, மாலை என்ற} இரு சந்திப் பொழுதுகள் அவனே; வருடம் அவனே. தாத்ரி அவனே; விதாத்ரி அவனே; விஷ்வகர்மன் அவனே; அனைத்தையும் அறிந்தவன் அவனே.(41) திசைகளின் முக்கிய மற்றும் துணைப்புள்ளிகள் அவனே. அண்ட வடிவில் இருக்கும் அவன் அளவிலா ஆன்மா கொண்டவனாவான். புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான துர்வாசர் தெய்வீக நிறம் கொண்டவராவார்.(42) சில வேளைகளில் தனியாகவும்; சில வேளைகளில் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டும்; சில வேளைகளில் பலவாகவும், நூறாகவும், ஆயிரமாகவும், நூறாயிரமாகவும் வெளிப்படுகின்றான்.(43) மஹாதேவன் இவ்வாறானவனே. மேலும், அவன் பிறப்பற்றவன் ஆவான். நூறு வருடங்கள் ஆனாலும் ஒருவனால் அவனது {மஹாதேவனது} குணங்களைச் சொல்லித் தீர்க்க முடியாது” என்றான் {கிருஷ்ணன்}.(44)
ஸதருத்ரீயம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 161-சதருத்ரீயம் மற்றும் சிவலிங்கப் பெருமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே, ருத்திரனின் பல்வேறு பெயர்களையும், அந்த உயர் ஆன்மாவின் உயர்ந்த அருள்நிலையையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) முனிவர்கள் மஹாதேவனை அக்னி என்றும், ஸ்தாணு என்றும், மஹேஸ்வரன் என்றும், ஒற்றைக் கண்ணன் என்றும், அண்ட வடிவம் கொண்ட முக்கண்ணன் என்றும், சிவன் அல்லது மங்கலமானவன் என்றும் சொல்கிறார்கள்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அந்தத் தேவன் என்று சொல்கின்றனர். ஒன்று பயங்கரமானதும், மற்றொன்று மங்கலமான மென்மை நிறைந்ததுமாகும். அவ்விரு வடிவங்களும் இன்னும் பல வடிவங்களாகப் பகுக்கப்படுகின்றன.(3) கடுமையான பயங்கர வடிவம், அக்னி, மின்னல் மற்றும் சூரியனோடு ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் அறம், நீர் மற்றும் சந்திரனோடு ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.(4)
மேலும் அவனது பாதி உடல் நெருப்பெனவும், பாதி உடல் சோமன் (அல்லது சந்திரன்) எனவும் சொல்லப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் பிரம்மச்சரிய நோன்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.(5) மிகப் பயங்கரமான மற்றொரு வடிவம் அண்டத்தை அழிக்கும் அனைத்து இயக்கங்களிலும் ஈடுபடுகிறது. அவனே பெரியவன் (மகத்), அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த தலைவன் (ஈஸ்வரன்) என்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(6) அவன் எரிக்கிறான், ஒடுக்குகிறான், கடுமையாக இருக்கிறான், பெருஞ்சக்தியுடன் கூடியவனாக இருக்கிறான், சதை, குருதி, மஜ்ஜை ஆகியவற்றை உண்பவனாகவும் இருக்கிறான் என்பதாலேயே அவன் ருத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருப்பதாலும், அவனுடைய ஆட்சிப் பகுதியும், செல்வங்களும் மிகப் பெரியவையாக இருப்பதாலும், அவன் பாதுகாக்கும் அண்டம் மிகப் பெரியதாக இருப்பதாலும் அவன் மஹாதேவன் என்றழைக்கப்படுகிறான்.(8)
புகையின் வடிவம் அல்லது நிறத்தில் அவன் இருப்பதன் காரணத்தால் அவன் தூர்ஜடி {தூர்ஜடை} என்றழைக்கப்படுகிறான். தன் செயல்கள் அனைத்தாலும் அனைவருக்குமான வேள்விகளைச் செய்வதாலும்,(9) அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுவதாலும் அவன் சிவன் அல்லது மங்கலமானவன் என்றழைக்கப்படுகிறான். (ஆகாயத்தில்) நின்று கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிப்பதையும் தவிர அவன் வழுவாத குறிப்பிட்ட ஒரு பாதையில் நிலைத்திருக்கிறான்.(10) அவனுடைய சின்னம் {லிங்கம்} நிலையானது, எக்காலத்திலும் அழிவற்றது. இந்தக் காரணங்களினால் அவன் ஸ்தாணு என்றழைக்கப்படுகிறான். அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே.(11) அசைவனவும், அசையாதனவும் அவனே. இதன் காரணமாக அவன் பஹுரூபன் என்றழைக்கப்படுகிறான். விஷ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்க்ள அவனது உடலில் வசிக்கிறார்கள். இதன் காரணமாக அவன் (அண்ட வடிவம் கொண்ட) விஷ்வரூபன் என்றழைக்கப்படுகிறான்.(12)
ஆயிரம் கண் கொண்டவன்; அல்லது எல்லையற்ற கண்களைக் கொண்டவன்; அல்லது எங்கும், தன் உடலெங்கும் கண் கொண்டவன். அவனது சக்தி அவனது கண்களின் மூலம் வெளிப்படுகிறது. அவனது கண்களுக்கு ஓர் எல்லையில்லை {அவன் ஸர்வதஸ்சக்ஷு என்றழைக்கப்படுகிறான்}.(13) உயிரினங்கள் {பசுக்கள்} அனைத்திற்கும் உணவூட்டி வளர்ப்பவனாகவும், அவற்றுடன் விளையாடுபவனாகவும் இருப்பதாலும், அவற்றின் தலைவனாகவோ, அவற்றை ஆள்பவனாகவோ இருப்பதனால் அவன் பசுபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றழைக்கப்படுகிறான்.(14) அவனுடைய சின்னம் {லிங்கம்} எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்பதால் உலகங்கள் அனைத்தும் அதை முறைப்படி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டுச் செயல் அவனுக்குப் பெரும் நிறைவைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.(15) சிலையை உண்டாக்கி அவனை ஒருவன் வழிபட்டாலும், மற்றொருவன் அவனது சின்னத்தை {லிங்கத்தை} வழிபட்டாலும், பின்னவனே {லிங்கத்தை வழிபட்டவனே} எப்போதும் பெருஞ்செழிப்பை அடைவான்[1].(16)முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் எப்போதும் நிமிர்ந்து உயர்ந்திருக்கும் அவனது சின்னத்தையே {லிங்கத்தையே} வழிபடுகின்றனர்.(17) தன் சின்னம் {லிங்கம்} வழிபடப்பட்டால், அந்த வழிபாட்டைச் செய்பவனிடம் மஹேஸ்வரன் உயர்ந்த நிறைவை அடைகிறான். தன் பக்தர்களிடம் அன்பு கொண்ட அவன், உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான்.(18) அந்தப் பெருந்தேவன் சுடலையில் வசிக்க விரும்புகிறான், அங்கே அவன் சடலங்கள் அனைத்தையும் எரிக்கிறான். அத்தகைய இடங்களில் {சுடலைகளில்} வேள்விகளைச் செய்யும் மனிதர்கள், வீரர்களுக்கெனத் தனியே ஒதுக்கப்பட்ட உலகங்களை இறுதியில் அடைவார்கள்[2].(19) நியாயமாகச் செயல்படுவதில் ஈடுபடும் அவனே உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் மரணமாக {மிருத்யுவாகக்} கருதப்படுகிறான். மேலும் அவன், பிராணன், அபானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளாக உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் இருக்கிறான்.(20)அவன் சுடர்மிக்கப் பல்வேறு பயங்கர வடிவங்களைக் கொண்டவனாவான். இவ்வுலகத்தில் வழிபடப்படும் அந்த வடிவங்கள் அனைத்தையும், ஞானம் கொண்ட பிராமணர்கள் அறிந்திருக்கிறார்கள்.(21) தேவர்களுக்கு மத்தியில் பெரும் முக்கியத்தவம் வாய்ந்த பல பெயர்களை அவன் கொண்டிருக்கிறான். அந்தப் பெயர்களின் பொருள்கள் அவனது பெருமையில் இருந்தோ, சாதனைகளில் இருந்தோ, ஒழுக்கத்தில் இருந்தோ எடுக்கப்படுகின்றன.(22) வியாசரால் தொகுக்கப்பட்ட வேதங்களில் தோன்றும் சிறந்த சதருத்ரீயத்தை அவனைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்கள் எப்போதும் உரைக்கிறார்கள்.(23) உண்மையில், பிராமணர்களும், முனிவர்களும் அனைத்து உயிரினங்களுக்கும் மூத்தவன் என்று அவனை அழைக்கின்றனர்.(24)
தேவர்கள் அனைவரிலும் முதல்வன் அவன், அவனது வாயில் இருந்தே அக்னி உண்டானான். அற ஆன்மா கொண்டவனும், எப்போதும் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்க விரும்புபவனுமான அந்தத் தேவன், தன்னிடம் பணிவோரை ஒருபோதும் கைவிடாதவன்.(25) அதைவிட அவன் தன் உயிர் மூச்சையே கைவிட்டு, சாத்தியப்படும் துன்பங்கள் அனைத்தையும் தானே ஈட்டிக் கொள்வான். நீண்ட வாழ்வுக்காலம், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, செல்வாக்கு, செல்வம் பல்வேறு வகை இன்பங்கள் ஆகியனவற்றை(26) அளிப்பவனும், பறிப்பவனும் அவனே[3]. சக்ரன் மற்றும் பிற தேவர்களிடம் ஒருவன் காணும் தலைமைத்துவம் மற்றும் செல்வாக்கு ஆகியவை உண்மையில் அவனுடையவையே.(27)மூவுலகங்களிலும் நேரும் நன்மை, தீமைகள் அனைத்திலும் ஈடுபடுபவன் அவனே. அனுபவிக்கத் தகுந்த பொருட்கள் அனைத்தையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் விளைவால் அவன் ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன், அல்லது உயர்ந்த பொருள்) என்று அழைக்கப்படுகிறான்.(28) மேலும், பரந்த அண்டத்தை ஆள்பவனாக இருப்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான். மொத்த அண்டமும் பல்வேறு வடிவங்களின் மூலம் அவனால் நிறைந்திருக்கிறது. பெரும் பெண்குதிரைத்தலையின் வடிவில் கடலின் நீரை {வடவாமுகாக்னியாக} எரிப்பவனும், முழக்கங்களை இடுபவனும் அந்தத் தேவனே ” என்றான் {கிருஷ்ணன்}”.(29)
அறம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 162-அறத்தைத் தீர்மானிப்பதில் ஐயம் நேரும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும், அறப்பலன்களையும், பல அறங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தேவகியின் மகனான கிருஷ்ணன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, யுதிஷ்டிரன் மீண்டும் சந்தனுவின் மகனான பீஷ்மரிடம்,(1) “ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, ஓ! கடமைகளை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு, நேரடியாகக்கண்டுணர்தல் மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டில் அதிகாரமிக்கதாகக் கருதப்பட வேண்டியது எது?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதில் எந்த ஐயமும் கிடையாது என நினைக்கிறேன். ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. நீ என்னிடம் கேட்டிருக்கும் கேள்வி நிச்சயம் சரியானதே. ஐயம் வளர்ப்பது எளிதே. ஆனால், அந்த ஐயத்திற்கான தீர்வை அடைவது கடினம்.(3) நேரடியாகக் கண்டுணர்தல், திறன் தேர்வு (அல்லது சாத்திரங்கள்) ஆகிய இரண்டிலும் ஐயங்கள் எழும் சந்தர்ப்பங்கள் எண்ணற்றவையாகும். தர்க்கவியலாளர் {பண்டிதர்கள்} என்ற பெயரில் திளைக்கும் சில மனிதர்கள், மேன்மையான அறிவைக் கொண்டவர்கள் தாங்கள் என்று கற்பனை செய்து கொண்டு, நேரடி கண்டுணர்தல் மட்டுமே அதிகாரமிக்கது என்று உறுதிகூறுகிறார்கள்.(4) இஃது உண்மையாக இருந்தாலும், நேரடியாகக் கண்டுணர முடியாத ஏதும் இருப்பில் இல்லை என்று அவர்கள் உறுதியடைகிறார்கள்; அல்லது அந்தப் பொருட்களின் இருப்பில் அவர்கள் ஐயுறுகிறார்கள். உண்மையில் அத்தகைய கூற்றுகள் பற்றாக்குறையுடன் கூடியவையாகும்; கல்வியில் எவ்வளவு செருக்குள்ளவர்களாக இருப்பினும் அவற்றைச் சொல்பவர்கள் மூட புத்தி கொண்டவர்களே.(5)
மறுபுறம், ஒன்று (பகுபடா பிரம்மம்) எவ்வாறு காரணமாக இருக்க முடியும் என நீ ஐயுறுகிறாயெனில், நீண்ட வருட காலம், சோம்பலில்லாமல், யோகத்தின் துணையின் மூலமே ஒருவனால் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பது என் மறுமொழியாக இருக்கும்.(6) உண்மையில், ஓ! பாரதா, (அந்த அல்லது இந்த நிலையான வாழ்வுமுறைகளில் பற்றுக் கொள்ளாமல்) தனக்கு நேரும் வழிமுறைகளின்படி வாழ்பவன் மற்றும் (கேள்விக்கான விடை தேடுவதில்) அர்ப்பணிப்புள்ள ஒருவனால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள இயலும். உண்மையில் வேறு எவராலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது.(7) காரணங்களின் எல்லையை (பகுத்தறிவு செயல்முறையை} ஒருவன் அடையும்போது, அவன் சிறந்ததும், அனைத்தையும் புரிந்து கொள்ளக் கூடியதும், (பிரம்மம் என்றழைக்கப்படும்) அண்டத்திற்கு ஒளியூட்டும் பிரகாசப் பெருந்திரளாக இருப்பதுமான அறிவை அடைகிறான்.(8) ஓ! மன்னா, காரணத்தில் (அல்லது அனுமானத்தில்) இருந்து பெறப்படும் அறிவை அறிவென்று சொல்வது அரிதே. அத்தகை அறிவு மறுக்கப்பட வேண்டும். இது சொல்லால் வரையறுக்கப்படவில்லை, அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அது மறுக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}[1].(9)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நேரடியாகக் கண்டுணர்தல், கவனித்து அனுமானம் செய்தல், ஆகம அறிவியல், அல்லது சாத்திரங்கள் மற்றும், நல்லவற்றை வேறுபடுத்திக் காட்டும் பல்வேறுவகை நடைமுறைகள் ஆகிய இவற்றில் (நான்கில்) அதிகாரமிக்கது எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(10)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் வலிமை கொண்ட தீய மனிதர்களால் அறம் அழிக்கப்படும்போது, நல்லோர் கவனத்துடனும், ஊக்கத்துடனும் செயல்படுவதன் மூலம் அப்போதைக்கு அதை {அறத்தைப்} பாதுகாக்க முடியும். எனினும், முடிவில் அறம் அழிவடையும் என்பதால் அத்தகைய பாதுகாப்பு நீண்ட காலம் நீடிக்காது.(11) மேலும், ஆழமான குழியைப் பார்வையில் இருந்து மறைத்து, அதன் {அந்தக் குழியின்} வாயை மூடியிருக்கும் புல்லைப் போல, அறமானது சில வேளைகளில் மறத்திற்கான {அதர்மத்திற்கான} முகமூடியாக இருக்கிறது. ஓ! யுதிஷ்டிரா, மேலும் கேட்பாயாக. இதன் விளைவால், நல்லோரின் நடைமுறைகளைத் தீயோர் குறுக்கிட்டு அழிக்கின்றனர்.(12) தீய நடத்தை கொண்டோரும், ஸ்ருதிகளைப் புறக்கணிப்பவர்களும், அறத்தை வெறுப்பவர்களும் தீயோருமான இழிந்தவர்கள், (நிலையாக நிறுவப்பட வேண்டிய) நல்லொழுக்கத்துடன் கூடிய நடைமுறைகளை அழிக்கின்றனர். எனவே, நேரடியாகக் கண்டுணர்வது, அனுமானம் மற்றும் நன்னடத்தை ஆகியவற்றில் ஐயங்கள் தோன்றுகின்றன[2].(13)எனவே, நல்லோருக்கு மத்தியில், சாத்திரங்களில் பிறந்த (அல்லது தூய்மையடைந்த) புத்தியைக் கொண்டவர்களும், எப்போதும் நிறைவான மனம் கொண்டவர்களும் முதன்மையானவர்களாகக் கருதப்பட வேண்டும். கவலைநிறைந்தவர்களாக, ஆன்ம அமைதி இல்லாதவர்களாக இருப்பவர்கள், இவர்களையே அணுகட்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, உன் ஐயங்களுக்கான தீர்மானங்களை அடைய நீ அவர்களையே நாடுவாயாக.[3](14) இன்பத்தையும், பேராசையைத் தொடர்ந்துவரும் செல்வத்தையும் அலட்சியம் செய்து, அறம் மட்டுமே நாடப்பட வேண்டிய ஒன்று என்ற நம்பிக்கையில் விழிப்படைந்த மனிதர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்களிடம் (உனக்கு ஞானமளிக்குமாறு) கேட்பாயாக.(15) அத்தகைய மனிதர்களின் ஒழுக்கம் ஒருபோதும் தவறவோ, அழியவோ செய்யாது. அதே போல அவர்களது வேள்விகளும், வேத கல்வியும், சடங்குகளும் அழிவடையாது. உண்மையில் வெளிப்படையான செயல்களை உள்ளடக்கிய ஒழுக்கம், (மனத்) தூய்மையுடன் கூடிய நடத்தை, வேதங்கள் ஆகியவை சேர்ந்ததே அறம் ஆகும்” என்றார் {பீஷ்மர்}.(16)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, என் புத்தி மீண்டும் ஐயத்தால் கலங்குகிறது. நான் பெருங்கடலின் இந்தப் பக்கத்தில், அதைக் கடப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனினும் அக்கடலின் மறுகரையை என்னால் காண முடியவில்லை.(17) வேதங்கள், நேரடியாகக்கண்டுணர்தல், நடத்தை (அல்லது மனத்தூய்மை) ஆகிய இம்மூன்றும் சேர்ந்ததே அதிகாரமிக்கது எனக் கருதப்படுமானால், அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன என்று பிழைகூறலாம். அவ்வாறெனில் அறமானது பகுபடாத ஒன்றாக இருப்பினும், உண்மையில் மூன்று வகையாகிறதே” என்றான்.(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சில வேளைகளில், பெருஞ்சக்தி கொண்ட தீயோரால் அறம் அழிக்கப்படுவது காணப்படுகிறது. அறம் உண்மையில் மூன்றுவகையானது என நீ கருதினால், உன் தீர்மானம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்று நான் சொல்வேன்.(19) உண்மையென்னவென்றால், அறமானது மூன்று வெவ்வேறு புள்ளிகளில் இருந்து பார்க்கக்கூடியதாக இருப்பினும், அஃது ஒன்றாகவும், பகுக்கப்பட முடியாததாகவும் இருக்கிறது.(20) அறத்தின் அடித்தளமாக இருக்கும் இம்மூன்று பாதைகள் (குறியீடுகள்) ஒவ்வொன்றுக்கும் விதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. விதிக்கப்பட்ட அறிவுரைகளின்படி நீ செயல்படுவாயாக. நீ அறம் குறித்து ஒருபோதும் சச்சரவு செய்யாமல், அந்த ஐயங்களைத் தீர்க்க முனைந்தால் நீ அவற்றை அடைவாய்.(21) ஓ! பாரதர்களின் தலைவா, இதுபோன்ற ஐயங்கள் ஒருபோதும் உன் மனத்தைப் பீடிக்காதவாறு செய்வாயாக. எவ்வகைத் தயக்கமுமின்றி நான் சொல்வதற்குக் கீழ்ப்படிவாயாக. ஒரு குருடனைப் போலவோ, வேறொருவனைச் சார்ந்திருக்கும் புலனற்றவனைப் போலவோ என்னைப் பின்பற்றுவாயாக.(22)
ஓ! பகைவர் எவனும் இல்லாத மன்னா, தீங்கிழையாமை, வாய்மை, கோபமின்மை (அல்லது மன்னிக்கும்தன்மை), ஈகை அல்லது கொடைகள் ஆகிய நான்கும் நித்திய அறமாக அமைவதால் இவை நான்கையும் நீ பயில்வாயாக.(23) ஓ! வலிய கரங்கொண்ட இளவரசே, உன் தந்தைமார் மற்றும் பாட்டன்களிடம் நீ நடந்து கொள்வது போலவே, பிராமணர்களிடம் உன் நடத்தை இருக்கட்டும். இவையே அறத்தின் முக்கியக் குறியீடுகளாகும்.(24) எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும் தரத்தை மறுப்பதன் மூலம் அதிகாரத்தின் கனத்தை அழிக்கும் சிறு மதி கொண்ட மனிதன், மனிதர்களுக்கு மத்தியில் அதிகாரமிக்கவனாவதில் தவறுவான். அத்தகைய மனிதன் உலகத்தில் துன்பம் அதிகரிப்பதற்கான காரணமாவான்.(25) நீ பிராமணர்களை மதித்து, அவர்களை விருந்தோம்பலுடன் கவனிப்பாயாக. நீ எப்போதும் அவர்களுக்கு இவ்வாறே தொண்டாற்றுவாயாக. இந்த அண்டமே அவர்களைச் சார்ந்திருக்கிறது. நீயும் அவ்வாறே அவர்களைப் புரிந்து கொள்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(26)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அறத்தை வெறுப்போர் மற்றும் அதைத் துதித்து நோற்போர் ஆகியோர் அடையும் கதிகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(27)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்தை வெறுக்கும் மனிதர்கள், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களில் மூழ்கிய இதயம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அத்தகைய மனிதர்கள் எப்போதும் நரகத்திற்கே செல்வார்கள்.(28) மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அறத்தைத் துதித்து நோற்போரும், வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளோருமான மனிதர்களே, நல்லோர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எப்போதும் சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கிறார்கள்.(29) ஆசான்களிடம் மதிப்புடன் காத்திருப்பதன் விளைவால் அவர்களின் இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கித் திரும்புகின்றன. உண்மையில் அறத்தைத் துதிப்போர் தேவலோகங்களை அடைகின்றனர்.(30) மனிதர்களாக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும், பேராசை மற்றும் வன்மத்தைத் தவிர்த்து, தவங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் உடல்களை மெலியச் செய்யும் மனிதர்கள், தங்களுடையதாகும் அறத்தின் விளைவால் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(31) பிரம்மனின் மூத்த மகன்களான பிராமணர்கள் அறத்தைப் பிரதிபலிப்பவர்களாவர் என்று ஞானத்தைக் கொடையாகப் பெற்றவர்கள் சொல்கின்றனர். அறவோர் எப்போதும் அவர்களை வழிபடுகின்றனர், அவர்களது இதயங்கள், பசித்த மனிதனின் வயிறு கனிந்த இனிய கனிகளை விரும்புவதைப் போலவே அவர்களிடம் அன்பும் பாசமும் கொள்ளும்” என்றார் {பீஷ்மர்}.(32)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தீயோர் வெளிப்படுத்தும் தோற்றமென்ன? நல்லோர் என்றழைக்கப்படுவோர் செய்யும் செயல்களென்ன? ஓ! புனிதமானவரே, எனக்கு இதை விளக்குவீராக. உண்மையில், நல்லோர் மற்றும் தீயோருக்குண்டான குறியீடுகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(33)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீச்செயல் செய்பவர்கள், அடக்க முடியாதவர்கள், அல்லது விதிகளெனும் கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட முடியாதவர்கள், கெட்ட வாக்கு கொண்டோர் ஆகியோர் தீயோராவர். மறுபுறம், எப்போதும் நற்செயல்களைச் செய்பவர்கள் நல்லோராவர். உண்மையில், இந்த மனிதர்களே நல்லொழுக்க நடைமுறையின் குறியீடுகளாகக் கருதப்படுகிறார்கள்.(34) ஓ! ஏகாதிபதி, நல்லோர் அல்லது அறவோர், இயற்கையின் அழைப்புகளுக்குப் பொதுச் சாலையிலோ, மாட்டுக் கொட்டகையின் மத்தியிலோ, நெற்களத்திலோ {வயலிலோ} பதிலளிக்க மாட்டர்கள் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கமாட்டார்கள்}.(35) ஐவருக்கு உணவூட்டிய பிறகே தாங்கள் உணவை உண்பார்கள்[4]. உண்ணும் போது அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள், ஈரக் கரங்களுடன் ஒருபோதும் உறங்கச் செல்லமாட்டார்கள்.(36) சுடர்மிக்க நெருப்பு, காளை, ஒரு தேவனின் வடிவம் {சிலை}, மாட்டுக் கொட்டகை, நாற்சந்திகள், முதிர்ந்தவரும், அறம் சார்ந்தவருமான ஒரு பிராமணர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, ஒருவரையோ கண்டாலும், தங்கள் மதிப்பை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் அவற்றை வலம் வருவார்கள்.(37) முதியவர்கள், சுமை சுமப்போர், பெண்கள், கிராம மற்றும் நகர நிர்வாகிகள், பிராமணர்கள், பசுக்கள், மன்னர்கள் ஆகியோர் எதிரில் வந்தால் அவர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள்.(38)விருந்தினர்கள், பணியாட்கள், தன்னைச் சார்ந்திருப்போர், உறவினர்கள் மற்றும் தன் பாதுகாப்பை நாடுவோர் அனைவரையும் நல்லோர், அல்லது அறவோர் பாதுகாப்பார்கள். அத்தகைய மனிதன் எப்போதும் அவர்களை மதிப்புடன் விசாரிப்பான்.(39) காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகள் மனிதர்கள் தங்கள் உணவை உண்பதற்கான நேரமாகத் தேவர்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இடைவேளைகளில் அவன் எதையும் உண்ணக்கூடாது. இந்த விதியைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் உண்ணா நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான்.(40) ஆகுதிகள் பெறுவதற்காக ஹோம நேரம் வரும் வரைக் காத்திருக்கும் புனித நெருப்பைப் போலவே, ஒரு பெண்ணானவள், தன் மாதவிலக்குக் காலம் முடிந்ததும், கணவனுடன் கலவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.(41) மாதவிலக்கு முடிந்த காலத்திற்குப் பிறகு உள்ள காலத்தைத் தவிர வேறு காலத்தில் {மாதவிலக்கு காலத்தில்} தன் மனைவியை ஒருபோதும் அணுகாதவன் பிரம்மச்சரிய நோன்பைப் பின்பற்றுபவனாகச் சொல்லப்படுகிறான். அமிர்தம் (அமுதம்), பிராமணர்கள், பசுக்கள் ஆகிய மூன்றும் நிகரானவையாகக் கருதப்படுகின்றன.(42) எனவே, ஒருவன் பிராமணர்களையும், பசுக்களையும் உரிய சடங்குகளுடன் எப்போதும் வழிபட வேண்டும். யஜுர் வேத மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலம் ஒருவன் எந்தக் குற்றத்தையும், அல்லது களங்கத்தையும் {பாவத்தையும்} ஈட்டுவதில்லை.(43) ஒருவன் தன் மகனின் இறைச்சியைத் தவிர்ப்பதைப் போலவே முதுகெலும்பைச் சேர்ந்தவையும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளைச் சேர்ந்தவையுமான இறைச்சியும் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவன் தன் நாட்டில் வசித்தாலும், அயல்நாட்டில் வசித்தாலும் தன் விருந்தினருக்கு உணவளிக்காமல் அனுப்பக்கூடாது.(44)
கல்வி நிறைவடைந்ததும் ஒருவன் தன் ஆசானுக்குத் தக்ஷிணை அளிக்க வேண்டும். அவன் தன் ஆசானைக் காணும்போது, அவரை மதிப்புடன் வணங்கி, ஓர் இருக்கையை அளித்து அவரை வழிபட வேண்டும்.(45) தன் ஆசானை வழிபடுவதன் மூலம் ஒருவன் தான் வாழும் காலத்தையும், புகழையும், செழிப்பையும் பெருக்கிக் கொள்கிறான். முதியோரை ஒருபோதும் நிந்திக்கக்கூடாது, மேலும் அவர்களை எக்காரியத்திலும் ஈடுபடுத்தக் கூடாது[5].(46) முதியவர் ஒருவர் நிற்கும்போது ஒருவன் ஒருபோதும் அமரக்கூடாது. இவ்வாறு செயல்படுவதன் மூலம் ஒருவன் தன் வாழ்நாள் காலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறான். ஒருவன் நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண், அல்லது ஆணின் மீது தன் கண்களை ஒருபோதும் செலுத்தக்கூடாது.(47) தனிமையிலன்றி வேறு இடங்களில் ஒருவன் பாலியல்கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறர் பார்க்க ஒருவன் உண்ணக்கூடாது. ஆசான்களே முதன்மையான தீர்த்தங்களாவர்; புனிதமான பொருட்கள் அனைத்திலும் இதயமே முதன்மையானதாகும்;(48) தேடத்தகுந்தவற்றுள் ஞானமே முதன்மையானதாகும்; இன்பங்கள் அனைத்திலும் மனநிறைவே முதன்மையானதாகும். காலையும், மாலையும் ஒருவன் முதியோரின் முக்கிய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். வயதால் மதிக்கத் தகுந்தவர்களிடம் தொடர்ந்து காத்திருப்பதன் மூலம் ஒருவன் ஞானத்தை அடைகிறான். வேதங்களைப் படிக்கும்போதும், உண்ணும் போதும் ஒருவன் தன் வலக்கரத்தையே பயன்படுத்த வேண்டும்.(50)ஒருவன் தன் வாக்கு, மனம் மற்றும் புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு சமைக்கப்பட்ட பாயஸம், யாவகம், கிருசரம், ஹவி (தெளிந்த நெய்)) ஆகியவற்றுடன்(51) ஒருவன் அஷ்டகை என்றழைக்கப்படும் சிராத்தத்தில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும். கோள்களை வழிபடுவதிலும் அவற்றையே பயன்படுத்த வேண்டும். ஒருவருடைய ஆசி பெறாமல் சிரைத்துக் கொள்வது {சவரம் செய்தல்} கூடாது. ஒருவன் தும்மினால், அங்கே இருப்பவர்கள் அவனுக்கு ஆசி கூற வேண்டும்[6]. உடல் நலமில்லாதவர்கள், அல்லது நோயால் பீடிக்கப்பட்டவர்களனைவருக்கும் ஆசி கூற வேண்டும். அவர்களுடைய வாழ்நாள் நீட்டிப்பு வேண்டப்பட வேண்டும்.(52) உயர்ந்த மனிதர்களை ஒருபோதும் (நீ என்ற சொல்லைப் பயன்படுத்தி) வழக்கான சொற்களால் அழைக்கக்கூடாது. பெரும் இக்கட்டுகளிலும் ஒருவன் ஒருபோதும் அதைச் செய்யக்கூடாது. அத்தகைய மனிதனை, நீ என்று அழைப்பது அவனைக் கொல்வதற்கு இணையானதாகும். கல்விமான்கள் இவ்வாறு அழைக்கப்படுவதால் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.(53) தாழ்ந்தவர்கள், இணையானவர்கள், அல்லது சீடர்களிடம் இத்தகைய சொல் பயன்படுத்தப்படலாம். பாவம் நிறைந்த மனிதனின் இதயம் எப்போதும் தான் செய்த பாவங்களை அறிவித்துக் கொண்டே இருக்கும்.(54)வேண்டுமென்றே பாவங்களைச் செய்துவிட்டு, நல்லோரிடம் அவற்றை மறைக்க முயலும் மனிதர்கள் அழிவை அடைவார்கள். உண்மையில், நிச்சயமான பாவிகள் தங்கள் பாவச் செயல்களைப் பிறரிடம் இருந்து மறைக்கவே முனைவார்கள்[7].(55) அத்தகைய மனிதர்கள் தங்கள் பாவங்களை வேறு மனிதர்களோ, தேவர்களோ பார்ப்பதில்லை என்று நினைக்கிறார்கள். பாவங்களில் மூழ்கி பாவியாக இருக்கும் மனிதன், {தன் அடுத்தப் பிறவியில்} அவலம் நிறைந்த உயிரினமாகப் பிறப்பான்.(56) அத்தகைய மனிதனின் பாவங்கள், (கடன் வழங்கும்) ஈட்டிக்காரனின் வட்டியைப் போலவே நாளுக்கு நாள் பெருகுகிறது. ஒரு பாவத்தைச் செய்த மனிதன் அதை அறத்தின் மூலம் மறைக்க முனைந்தால், அந்தப் பாவம் அழிவை அடைந்து, வேறு பாவங்களுக்கு வழிவகுப்பதற்குப் பதில் அறத்திற்கு வழிவகுக்கிறது[8].(57) உப்பின் மீது நீரை ஊற்றினால் அஃது உடனே கரைந்து போகும். அதைப் போலவே, பரிகாரம் செய்யப்படும்போது பாவமும் கரைந்து போகிறது.(58) இந்தக் காரணங்களினால் ஒருவன் ஒருபோதும் பாவத்தை மறைக்கக்கூடாது. மறைக்கப்பட்டால், அது நிச்சயம் வளரும். பாவமிழைக்கப்பட்டால் ஒருவன் அதை நல்லோரின் முன்பு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது அவை {பாவங்கள்} உடனே அழிந்து போகும்.(59)நம்பிக்கையுடன் சேகரிக்கப்பட்டவற்றை ஒருவன் சரியான நேரத்தில் அனுபவிக்காவிட்டால், சேகரிக்கப்பட்ட அந்தச் செல்வம் அவனது மரணத்திற்குப் பின் வேறோர் உரிமையாளரைக் கண்டடையும்.(60) ஒவ்வொரு உயிரினத்தின் மனமும், உண்மையான அறச்சோதனையைச் செய்யும் என்று ஞானிகள் சொல்கின்றனர். எனவேதான், உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அறத்தை அடைவதை உள்ளார்ந்த போக்காகக் கொண்டிருக்கின்றன.(61) ஒருவன் அறத்தைத் தனியாகவே அடைய வேண்டும். உண்மையில் அவன் தன்னை அறவோனாக அறிவித்துக் கொள்ளக்கூடாது, மேலும், {தன்னை அறவோனாக} வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அறக்கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடக்கவும் கூடாது. அறம் கொண்டுவரும் கனிகளை அனுபவிக்க அதைப் பின்பற்றுபவர்கள் அறவணிகர்களாவர்.(62) செருக்கெண்ணங்களைக் கைவிட்டு ஒருவன் தேவர்களைத் துதிக்க வேண்டும். அதே போல, அவன் தன் ஆசானுக்கு வஞ்சனையில்லாமல் தொண்டாற்ற வேண்டும். இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக் கொடையளிப்பதால், மறுமையில் கிட்டும் விலைமதிப்புமிக்கச் செல்வத்தை ஈட்டும் ஏற்பாட்டை ஒருவன் செய்து கொள்ள வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(63)
மெய்வருத்தக்கூலி! – அநுசாஸனபர்வம் பகுதி – 163-விதி மற்றும் முயற்சிக்கிடையிலான வேறுபாட்டை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மனிதன் கெடுபேறு கொண்டவனாக இருந்தால் அவன் எவ்வளவு பலம் கொண்டவனாக இருந்தாலும் செல்வமீட்டத் தவறுவது காணப்படுகிறது. மறுபுறம் நற்பேறு பெற்ற ஒருவன் பலவீனனாகவோ, மூடனாகவோ இருந்தாலும் செல்வத்தை அடைகிறான்.(1) மேலும், அடைவதற்கான காலமாக இல்லாதபோது, ஒருவன் சிறப்பாக முயற்சி செய்தாலும் ஒன்றையும் அவனால் அடைய முடிவதில்லை. எனினும், அடைவதற்கான காலம் வரும்போது, எந்த முயற்சியும் இல்லாமலே ஒருவன் பெருஞ்செல்வத்தை வெல்கிறான்.(2) சிறப்பாக முயற்சி செய்தும் விளைவேதும் அடையாத நூற்றுக்கணக்கான மனிதர்கள் காணப்படுகின்றர். மேலும், எம்முயற்சியுமின்றிச் செல்வீட்டும் பலரும் காணப்படுகின்றனர்.(3)
முயற்சியின் விளைவே செல்வம் என்றால், ஒருவன் முயற்சி செய்த உடனேயே அஃதை அடைய வேண்டும். உண்மையில் அவ்வாறிருந்தால், கல்வி கற்ற எந்த மனிதனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனிடம் பாதுகாப்பை அடைவது காணப்படாது.(4) ஓ! பாரதர்களின் தலைவரே, மனிதர்களுக்கு மத்தியில் அடையக்கூடாது என்பது (என விதிக்கப்பட்ட எதுவும்) ஒருபோதும் அடையப்படுவதில்லை. சிறந்த முயற்சிகளின் துணையுடன் கூட மனிதர்கள் விளைவுகளை அடைவதில் தவறுவது காணப்படுகிறது.(5)
ஒருவன் நூறு வழிமுறைகளின் மூலம் செல்வத்தைத் தேடுவது (தேடினாலும் அஃதை அடையத்தவறுவது) காணப்படுகிறது; அதே வேளையில் மற்றொருவன் தேடவே செய்யாமல் அஃதை {செல்வத்தை} அடைந்து மகிழ்ச்சி அடைகிறான். மனிதர்கள் (செல்வத்துக்காகத்) தொடர்ந்து தீச்செயல்களைச் செய்து, அதை அடையத் தவறுவது காணப்படுகிறது.(6) எந்த வகைத் தீச்செயலும் செய்யாமல் செல்வத்தை அனுபவிக்கும் பிறரும் இருக்கின்றனர். மேலும், சாத்திரங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்தும் செல்வமில்லாத பிறரும் இருக்கின்றனர். ஒருவன் நெறிகள் மற்றும் கொள்கை அறிவியலைச் சார்ந்த ஆய்வுகள் அனைத்தையும் கற்றும் அவற்றைக் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பது காணப்படுகிறது.(7) மேலும், நெறிகள் மற்றும் கொள்கை அறிவியல் எதையும் கற்காமலேயே ஒருவன் மன்னனின் முதன்மை அமைச்சராக நியமிக்கப்படுவதும் காணப்படுகிறது. கல்விமான் ஒருவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. கல்லாதவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. இரு வகை மனிதர்களும் முற்றிலும் செல்வம் இல்லாதவர்களாக இருப்பதும் காணப்படுகிறது.(8)
ஒருவன் கல்வியை அடைவதன் மூலம் செல்வத்தின் மகிழ்ச்சியை அடையலாம் என்றால், கல்விமான் எவனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனின் பாதுகாப்பில் இருப்பது ஒருபோதும் காணப்படாது.(9) உண்மையில், கல்வியை அடைவதனால் ஒருவன் நீரை அடைந்து தாகம் தணிப்பவனைப் போல விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கலாம் என்றால், கல்வியை அடைவதில் இவ்வுலகில் எவரும் சோம்பியிருக்க மாட்டார்கள்.(10) ஒருவனுக்கான காலம் வராவிட்டால், அவன் நூறு கணைகளால் துளைக்கப்பட்டாலும் மாளமாட்டான். மறுபுறம், வேளை வந்தவுடனேயே, புல்லால் தாக்கப்பட்டவனும் தன் உயிரைவிடுவான்” என்றான்.(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வதில் ஒருவன் தன்னை நிறுவிக் கொண்டும் செல்வமீட்டத் தவறினால் அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். விதைகள் விதைக்கப்படாமல் பயிர்கள் தோன்றுவதில்லை.(12) வயதால் மதிப்பிற்குரியோரிடம் பணி செய்வதன் மூலம் ஒருவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் அடைவதைப் போலவே, (இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக்) கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் (மறுமையில்) இன்பத்திற்குரிய எண்ணற்ற பொருட்களை அடைகிறான். உயிரினங்கள் அனைத்துக்கும் கொடுமை செய்யாமல் இருக்கும் கடமையைச் செய்வதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(13) எனவே, ஒருவன் கொடைகளை அளிக்க வேண்டுமேயன்றி வேண்டக் கூடாது (அல்லது பிறரால் கொடுக்கப்படும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும்). ஒருவன் அறவோரை வழிபட வேண்டும். உண்மையில், அவன் இனிய பேச்சுக் கொண்ட அனைவருக்கும், பிறருக்கும் ஏற்புடையதையே எப்போதும் செய்ய வேண்டும். ஒருவன் (மனம் மற்றும் புறத்) தூய்மையை அடைய முனைய வேண்டும். உண்மையில், அவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.(14) ஓ! யுதிஷ்டிரா, பூச்சிகளும், எறும்புகளும் கூட, (இப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் செய்த) தங்கள் செயல்கள் மற்றும் இயல்பின் விளைவாக இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றன. நீ அமைதியடைவாயாக” என்றார் {பீஷ்மர்}[1].(15)
நடைமுறை அறம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 164-அறத்தைப் பின்பற்றும் முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தானே நல்லது செய்யும்போதும், அல்லது பிறரைச் செய்ய வைக்கும்போதும், அவன் அறத்தகுதிகளை அடைவதை எதிர்பார்க்கலாம். அதேபோல, ஒருவன் தானே தீமை செய்தாலும், பிறரைச் செய்ய வைத்தாலும், அறத்தகுதிகளை அடைவதை அவன் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.(1) எல்லா நேரங்களிலும், காலமே உயிரினங்கள் அனைத்தின் புத்தியிலும் நுழைந்து, அவற்றை அறச்செயல்களையோ, மறச் செயல்களையோ செய்வதில் நிறுவி, அதன் பின் அவற்றுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ அளிக்கிறது.(2)
ஒரு மனிதன் அறத்தின் கனிகளைக் கண்டு, அறமே மேன்மையானது என்பதைக் காணும்போதுதான், அவன் அறத்தில் நம்பிக்கை கொண்டு அதைப் பின்பற்றுகிறான். எனினும், உறுதியற்ற புரிதல் கொண்டவன் அதில் நம்பிக்கை வைக்கத் தவறுகிறான்.(3) அறத்தில் நம்பிக்கை என்பது இதுதான் (வேறேதுமல்ல). அறத்தில் நம்பிக்கை கொள்தல் என்பது மனிதர்கள் அனைவருக்கும் ஞானத்தின் குறியீடாகும். (எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற) இரண்டையும் அறிந்த ஒருவன், வாய்ப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்தோடும், கவனம் மற்றும் அர்ப்பணிப்புடனும் சரியானதைச் செய்ய வேண்டும்.(4) இப்பிறவியில் செல்வாக்குடன் அருளப்பட்ட அறவோர், மறுபிறவியில் ஆசை குணம் {ரஜோகுணம்) தலைதூக்கும் பிறவியை அடையாமல் தவிர்க்க தங்கள் இயல்பின்படியே செயல்பட்டு, தங்கள் ஆன்மாக்களில் குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும்.(5)
(அனைத்தையும் அகற்றவல்ல) காலத்தால் அறத்தைத் துன்பத்திற்கான காரணமாக ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே, அறம் சார்ந்த ஆன்மா நிச்சயம் தூய்மையானது (தீமை மற்றும் துயரத்தில் இருந்து விடுபட்டு இருப்பது) என்பதை ஒருவன் அறிய வேண்டும்.(6) மறத்தை {அதர்மத்தைப்} பொறுத்தவரையில், அது பெருமளவில் இருந்தபோதிலும் கூட, காலத்தால் எப்போதும் பாதுகாக்கப்படுவதும், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்வதுமான அறத்தைத் தீண்ட முடியாது.(7)
களங்கமில்லா ஆன்மா, மறத்தால் {அதர்மத்தால்} தீண்டப்படாத ஏற்பில்லாமை ஆகிய இரண்டு விளைவுகளும் அறத்தால் அடையப்படுகின்றன. உண்மையில், அறமே வெற்றியைத் தரும். மூவுலகங்களுக்கும் ஒளியூட்டும் அளவிற்கு அது பெரும் பிரகாசம் கொண்டது.(8) ஒரு பாவியைப் பிடித்து அறவோனாக்குதல் ஞானியாலும் முடியாது. அறச்செயல் செய்ய வலுக்கட்டாயமாகத் தூண்டப்படும்போது பாவிகள் அச்சத்தால் தூண்டப்பட்டவர்களாக {உள்ளொன்றும் புறமொன்றாகவும்} கபடமாகவே செயல்படுவார்கள்.(9) சூத்திரர்களில் அறவோர், பரிந்துரைக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} எதையும் பின்பற்றி வாழ சூத்திர வகையினர் அனுமதிக்கப்படவில்லை என்ற முறையீட்டின் மூலம் ஒருபோதும் போலியாக நடந்து கொள்ள மாட்டார்கள்.(10)
நான்கு வகையினருக்கான {வர்ணத்தினருக்கான} உண்மையான கடமைகள் என்னென்ன என்பதை நான் உனக்குக் குறிப்பாகச் சொல்கிறேன். நான்கு வகையை {வர்ணங்களைச்} சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்ளும் உடல்களைப் பொறுத்தவரையில் ஐம்பூதங்களே அவற்றின் {அவ்வுடல்களின்} உட்பொருட்களாக அமைகின்றன. உண்மையில், அவை அனைத்தும் ஒரே பொருளைச் சார்ந்தவையே.(11) இவ்வாறிருப்பினும் அவற்றுக்கிடையில், வாழ்வு அல்லது உலக நடைமுறைகள் மற்றும் அறக்கடமைகள் ஆகிய இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவருக்குள்ளும் ஒரு சமநிலையை எட்டக்கூடிய வகையில் செயல்பாடுகளில் போதுமான சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.(12)
அறத்தின் விளைவுகள் அல்லது வெகுமதிகளாக இருக்கும் இன்ப உலகங்களுக்கும் ஒரு முடிவுண்டு என்பதால் அவை நித்தியமானவையல்ல. எனினும், அறம் நித்தியமானது. காரணம் நித்தியமானதாக இருக்கையில், விளைவு {காரியம்} ஏன் அவ்வாறில்லை?[1] அதற்கான பதில் பின்வருமாறு அமையும். கனி அல்லது வெகுமதியில் உள்ள ஆசையால் தூண்டப்படாமல் செய்யப்படும் அறமே நித்தியமானதாகும். (எனினும், வெகுமதி மீது கொண்ட ஆசையால் செய்யப்படும் அறமானது நித்தியமானதல்ல. எனவே, வெகுமதி விரும்பப்படவில்லை என்றாலும், முதல் வகை அறத்தோடு தொடர்புடைய {வெகுமதியான} பிரம்மத்தை அடைதல் என்பது நித்தியமானதாகும். எனினும், கனியில் உள்ள ஆசையால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் அறத்துடன் தொடர்புடைய வெகுமதியான சொர்க்கம் நித்தியமானதல்ல)[2].(13)உடலுயிரைப் பொறுத்தவரையில் அனைத்து மனிதர்களும் நிகரானவர்களே. மேலும், அவர்கள் அனைவரும் தங்கள் இயல்பின்படியே நிகரான ஆன்மாக்களைக் கொண்டவர்களே. அண்டம் அழியும்போது அனைத்தும் கரைந்துவிடுகின்றன. அறத்தை அடைவதற்கான செயலற்ற விருப்பம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. உண்மையில் அதுவே (மறுபிறவியில்) மீண்டும் தன்னைத் தோற்றுவித்துக் கொள்ளும்.(14) விளைவு இத்தகையதாயிருக்கையில் (வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகளாக இருப்பதால்), மனிதர்களுக்கிடையில் காணப்படக்கூடிய சமமின்மைகளை எந்த வகையிலும் முரண்பட்டவையாகக் கருதமுடியாது. அதே போலவே, இருப்பில் உள்ள இடைநிலை உயிரினங்களின் செயல்கள் இந்த உதாரணத்தின்படி சமமாக இருப்பதும் காணப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}”.(15)
நாமாவளி! – அநுசாஸனபர்வம் பகுதி – 165-பாவங்களை அகற்றவல்ல தேவர்கள், முனிவர்கள் மற்றும் அரசமுனிகளின் துதிக்கத்தக்க பெயர்ப்பட்டியலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரன், பாவங்களை அழிக்கும் நன்மையை அடைய விரும்பி, கணைப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மரிடம் (பின்வரும் வார்த்தைகளால்) கேள்வி கேட்டான்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு நன்மையானதென்ன? எதைச் செய்வதன் மூலம் ஒருவன் மகிழ்ச்சியை ஈட்டுகிறான்? எதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்? உண்மையில் பாவங்களை அழிக்கத்தக்கது எது?” என்று கேட்டான்”.(2)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இது தொடர்பாகக் கேட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம் சந்தனுவின் அரச மகன் {பீஷ்மர்} தேவர்களின் பெயர்களை முறையாக உரைத்தார்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தேவர்கள் மற்றும் முனிவர்களின் பின்வரும் பெயர்களைக் காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும் முறையாக உரைத்தால், அவை அனைத்துப் பாவங்களையும் திறம்படத் தூய்மையாக்குகின்றன.(4) ஒருவன் (அறிவு மற்றும் செயல்) புலன்களின் {ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின்} துணையுடன் செயல்படுவதால் பகலிலோ, இரவிலோ, இரு சந்திப் பொழுதுகளிலோ, தெரிந்தோ தெரியாமலோ செய்த எந்தப் பாவமும் இந்தப் பெயர்களை உரைப்பதன் மூலம் தூய்மையடைந்து, அவன் முற்றிலும் தூயவனாகிறான். இந்தப் பெயர்களைச் சொல்லும் ஒருவன் ஒருபோதும் குருடனாகவோ, செவிடனாகவோ ஆவதில்லை; உண்மையில் இப்பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் நன்மையானதை அடைவதில் வெல்கிறான்.(5,6) அத்தகைய மனிதன் ஒருபோதும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்காமல், ஒருபோதும் நரகத்திற்குச் செல்லாமல், மனிதர்களில் ஒருபோதும் கலப்புச் சாதியில் பிறக்காமல் இருக்கிறான். எந்தத் துயரையும் அடைவது குறித்த அச்சமேதும் அவனுக்கு ஏற்படாது. மரணம் நேரும் போது அவன் ஒருபோதும் கலங்குவதில்லை.(7)
தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரையும் ஆள்பவனும், பிரகாசத்துடன் ஒளிர்பவனும், அனைத்து உயிரினங்களாலும் வழிபடப்படுபவனும், நினைத்தற்கரியவனும், விவரிக்கப்படமுடியாதவனும், அனைத்து உயிரினங்களுக்கும் உயிரைத் தருபவனும், பிறப்பில்லாதவனும்,(8) அண்டத்தின் தலைவனும், பெரும்பாட்டனுமாக இருப்பவன் பிரம்மன். அவனுடைய பத்தினி சாவித்ரி. அதன் பிறகு வருபவன், வேதங்களின் பிறப்பிடமும், படைப்பாளனும், அளவிலா பலம் கொண்ட நாராயணன் என்று அழைக்கப்படுபவனுமான விஷ்ணு.(9) அதன் பிறகு வருபவன் முக்கண்ணனான உமையின் தலைவன். அதன் பிறகு தேவர்ப்படைத்தலைவன் ஸ்கந்தன்; அதன் பிறகு விசாகன்; பிறகு வேள்வி ஆகுதிகளை உண்பவனான அக்னி: பிறகு காற்றின் தேவனான வாயு; பிறகு சந்திரமாஸ்; பிறகு, பிரகாசத்துடன் கூடிய சூரிய தேவன் ஆதித்யன்.(10)
பிறகு, சச்சியின் தலைவனான சிறப்புமிக்கச் சக்ரன், தூமோர்ணையென்ற மனைவியுடன் கூடிய யமன்; கௌரியுடன் கூடிய வருணன்; ருத்தியெனும் மனைவியுடன் கூடிய கருவூலத் தலைவன் {குபேரன்};(11) இனிமையானவளும், சிறப்பானவளுமான சுரபி எனும் பசு {காமதேனு}, பெரும் முனிவர் விஸ்ரவஸ்; ஸங்கல்பன் {காமன்}; பெருங்கடல் {சமுத்திரன்}; கங்கை; வேறு புனித ஆறுகள்; பல்வேறு {ஏழு} மருத்துகள்;(12) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான வாலகில்யர்கள்; தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}; நாரதர்; பர்வதர்; விஸ்வாவஸு; ஹாஹாக்கள்; ஹூஹூக்கள்;(13) தும்புரு; சித்ரஸேனன்; பரந்த புகழ் கொண்ட தேவ தூதன் {விஸ்ருதன்}; உயர்ந்த அருளைப் பெற்ற தேவக்கன்னிகையர் மற்றும் தெய்வீக அப்சரஸ்கள்;(14) ஊர்வசி; மேனகை; ரம்பை; மிஸ்ரகேசி; அலம்புஷை; விஸ்வாசி; கிருதாசி; பஞ்சசூடை; திலோத்தமை;(15)
ஆதித்யர்கள்; வஸுக்கள்; {ருத்ரர்கள்;} அஸ்வினிகள்; பித்ருக்கள்; தர்மம் (அறம்); வேதகல்வி; தவங்கள்; தீக்ஷை; (அறச்செயல்களில்) விடாமுயற்சி; பெரும்பாட்டன்;(16) இரவு; பகல்; மரீசியின் மகனான கசியபர்; சுக்ரர்; பிருஹஸ்பதி; பூமியின் மகனா மங்கலன் {செவ்வாய் / குஜன்}; புதன்; ராஹு; சனீஸ்வரன்;(17) நட்சத்திரக் கூட்டங்கள்; பருவகாலங்கள் {ருதுக்கள்}; மாதங்கள்; பக்ஷங்கள்; வருடம்; வினதையின் மகன் கருடன்; பல்வேறு கடல்கள்; கத்ருவின் மகன்களான பாம்புகள்;(18) சதத்ரு; விபாசை; சந்திரபாகை; ஸரஸ்வதி; ஸிந்து; தேவிகை; பிரபாஸம்; புஷ்கரைத் தடாகங்கள்;(19) கங்கை; மகாநதி; வேணை; காவேரி; நர்மதை; குலம்புனை; விசல்யை; கரதோயை; அம்புவாஹினி;(20)
ஸரயு; கண்டகி; பேராறான லோஹிதம்; தாம்ரம்; ஆருணை; {தாமிரபரணி;} வேத்ரவதி; பர்ணாசை; கௌதமி;(21) கோதாவரி; வேணை; கிருஷ்ணவேணை; திவிஜை {அத்ரிஜை}; திருஷத்வதி; காவேரி; பங்கு {சக்ஷு}; மந்தாகினி;(22) பிரயாகை; பிரபாஸம்; புனித நைமிசம் {நைமிசாரண்யம்}; விஷ்வேஸ்வரன் அல்லது மஹாதேவனுக்குப் புனித இடமாகவும், தெளிந்த நீரைக் கொண்ட தடாகமாகவும் திகழும் காசி;(23) புனித நீர்நிலைகள் பலவற்றால் நிறைந்த குருக்ஷேத்திரம்; பெருங்கடல்களில் முதன்மையான கடல் (பாற்கடல்) {ஸிந்தூத்தமம்}; தவங்கள், கொடைகள் {தபோதானம்;} ஜம்புமார்க்கம்;(24) ஹிரண்யவதி; விதஸ்தை; பிலக்ஷவதி ஆறு; வேதஸ்மிருதி; வேதவதி; மாலவை; அஸ்வவதி;(25)
பூமியில் உள்ள புண்ணியத்தலங்கள்; கங்காத்வாரம்; {ஸிந்து ஆற்றைச் சேரும்} புனிதமான ரிஷிகுல்யைகள்; சித்திரபாகை;(26) சர்மண்வதி; புனித ஆறான கௌசிகி; யமுனை; பீமரதி ஆறு; பேராறான பாஹுதை;(27) மாஹேந்திரவாணி; திரிதிவை; நீலிகை; ஸரஸ்வதி; நந்தை; அபரநந்தை; புனிதமான பெருந்தடாகம் {தீர்த்தமகஹ்ரதம்};(28) கயை; பல்குனீ தீர்த்தம்; தேவர்கள் நிறைந்த (புனிதக் காடான) தர்மாரண்யம்; தேவநதி;(29) பெரும்பாட்டன் பிரம்மனால் படைக்கப்பட்டதும், புனிதமானதும், மூவுலகங்களிலும் கொண்டாடப்படுவதும், மங்கலமானதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க வல்லதுமான தடாகம் {மானஸஸரஸ்};(29) சிறந்த மூலிகைகளுடன் கூடிய இமய மலை;(30)
பல்வேறு வகை உலகங்களும், தீர்த்தங்கள் மற்றும் மருத்துவமூலிகைகள் நிறைந்த விந்திய மலை; மேரு; மஹேந்திரம்; மலயம்; வெள்ளியுடன் கூடிய ஸ்வேதம்;(31) ஸ்ருங்கவான்; மந்தரம்; நீலம்; நிஷதம்; தர்த்துரம்; சித்ரகூடம்; அஞ்சனாபம்; கந்தமாதன மலைகள்;(32) புனிதமான ஸோமகிரி; வேறு பல்வேறு மலைகள்; திசைகள்; மூலைகள்; பூமி; மரங்கள்;(33) விஸ்வேதேவர்கள்; ஆகாயம்; நக்ஷத்திரக் கூட்டங்கள்; கோள்கள் {கிரகங்கள்} மற்றும் தேவர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்ட, குறிப்பிடப்படாத இவை அனைத்தும் நம்மை மீட்டுத் தூய்மையடையச் செய்யட்டும்.(34) இந்தப் பெயர்களைச் சொல்லும் மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். இவர்களைப் புகழ்ந்து நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறான்.(35) உண்மையில், தேவர்களின் புகழைப் பாடுவதில் திளைக்கும் மனிதன், தூய்மையற்ற வகைகளில் பிறப்பதற்கு வழிவகுக்கும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(36)
தேவர்களின் பெயர்களைச் சொன்ன பிறகு, தவத்தகுதி மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், ஒருவன் செய்த அனைத்துப் பாவங்களையும் தூய்மையாக்கவல்லவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், {உசிக்கின் மகனான} கக்ஷீவான், ஔஷிஜன்,(37) பிருகு, அங்கிரஸ், கண்வர், பலமிக்க மேதாதி, அனைத்து சாதனைகளையும் கொண்ட பர்ஹி ஆகியோராவர். அவர்கள் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.(38) உயர்ந்த அருளைக் கொண்டவர்களான உன்முசு {உல்முசு}, பிரமுசு, முமுசு ஆகியோர், பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்த்யாத்ரேயர்;(39) மித்ரனுக்கும், வருணனுக்கும் மகனும், பேராற்றல் கொண்டவருமான அகஸ்தியர்; முனிவர்களில் கொண்டாடப்படும் முதன்மையான இருவரான திருடாயு, ஊர்த்வபாஹு ஆகியோர் அனைவரும் தெற்குப் பகுதியில் வாழ்கின்றனர்.(40) மேற்குப் பகுதியில் வசிக்கும் முனிவர்களின் பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன். அவர்கள் உடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய உஷங்கு, பெருஞ்சக்தி கொண்ட பரிவ்யாதர்,(41) தீர்க்கதமஸ், கௌதமர், காசியபர், ஏகதர், திவிதர், திரிதர்,(42) அத்ரியின் அற ஆன்மா கொண்ட மகன் (துர்வாஸர்), பலமிக்க ஸாரஸ்வதர் ஆகியோராவர். வடக்குப் பகுதியில் வசித்து, வேள்விகளில் தேவர்களை வழிபடும் முனிவர்களின் பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன்.(43) அவர்கள் அத்ரி, வசிஷ்டர், சக்திரி, பராசரரின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், விஷ்வாமித்ரர், பரத்வாஜர், ஜமதக்நி,(44) ரிசீகரின் மகன் {பரசுராமர்}, {உத்தாலகர் மகன்} ஔத்தாலகர், ஸ்வேதகேது, கோஹலர், விபுலர், தேவலர்,(45) தேவசர்மன், தௌமியர், ஹஸ்திகாசியபர், லோமசர், நாசிகேதர், லோமஹர்ஷணர்,(46) உக்ரஸ்ரவஸ், பிருகுவின் மகனான சியவனர் ஆகியோராவர். இது வேதகல்வி கொண்ட முனிவர்களின் பட்டியலாகும்.(47) ஓ! மன்னா, பெயர்கள் சொல்லப்பட்டால் ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல ஆதி முனிவர்கள் இவர்கள்.
இதன் பிறகு நான் முக்கியமான மன்னர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(48) அவர்கள் நிருகன், யயாதி, நகுஷன், யது, பெருஞ்சக்தி கொண்ட பூரு, ஸகரன், துந்துமாரன், பேராற்றல் கொண்ட திலீபன், கிருசாஸ்வன், யௌவனாஸ்வன், சித்ராஸ்வன், ஸத்யவான்,(49) துஷ்மந்தன் {துஷ்யந்தன்}, பல மன்னர்களுக்கும் மேலான சிறப்புமிக்கப் பேரரசனாக இருந்த பரதன், யவனன், ஜநகன், திருஷ்டரதன்,(50) ரகு, மன்னர்களில் முதன்மையான தசரதன், ராட்சசர்களைக் கொன்ற வீரனான ராமன், சசபிந்து, பகீரதன்,(51) ஹரிச்சந்திரன், மருத்தன், திருடரதன், பெரும் நற்பேறு பெற்றவனான அலர்க்கன், ஐலன் {புரூரவன்},(52) கரந்தமன், மனிதர்களில் முதன்மையான காஷ்மீரன், தக்ஷன், அம்பரீஷன், குகுரன், பெரும் புகழைக் கொண்ட ரைவதன், குரு, ஸம்வரணன், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட மாந்தாத்ரி {மாந்தாதா},(53) அரசமுனியான முசுகுந்தன், ஜாந்நவியால் (கங்கையால்) மிகவும் விரும்பப்பட்ட ஜஹ்நு, ஒரு காலத்தில் மன்னர்கள் அனைவரிலும் முதல்வனும், வேனனின் மகனுமான பிருது, மித்ரபானு, பிரியங்கரன்,(54) திரஸத்தஸ்யு, அரசமுனிகளில் முதன்மையான ஸ்வேதன், கொண்டாடப்பட்ட மகாபீஷன், நிமி, அஷ்டகன்,(55) ஆயு, அரச முனியான க்ஷுபன், கக்ஷேயு, பிரதர்த்தனன், திவோதாஸன், ஸுதாஸன், கோசலேஸ்வரன்,(56) ஐலன், அரச முனியான நளன், அனைத்து உயிரினங்களின் தலைவனான மனு, ஹவித்ரன், பிருஷத்ரன், பிரதீபன், சந்தனு,(57) அஜன், மூத்தவனான பர்ஹி {பினராசீபர்ஹி}, பெரும்புகழைக் கொண்ட இக்ஷ்வாகு, அநரண்யன், ஜானுஜங்கன், அரச முனியான கக்ஷஸேனன், மற்றும் (வரலாற்றில் உள்ள) பெயர் சொல்லப்படாத பலர் ஆகியோராவர்.(58)
விடியும் முன்பு எழுந்து, சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் எழும் இரு சந்தி வேளைகளிலும் இந்த மன்னர்களின் பெயர்களைத் தூய்மையான உடல் மற்றும் மனத்துடனும், கவனம் சிதறாமலும் சொல்லும் மனிதன் பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஒருவன், தேவர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் புகழைப் பாடி, “படைப்பின் தலைவர்களான இவர்கள் எனக்கு வளர்ச்சியையும், நீண்ட வாழ்நாளையும், புகழையும் விதிக்கட்டும். எத்துயரும் எனதாக வேண்டாம், எந்தப் பாவமும் எனதாக வேண்டாம், எதிர்ப்பவர்கள், அல்லது பகைவர்கள் யாரும் எனக்கு வேண்டாம். வெற்றி எப்போதும் எனதாகும், மறுமையில் மங்கல கதியும் எனதாகும். இதில் ஐயமில்லை” என்று சொல்ல வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(60,61)
விடைகொடுத்த பீஷமர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 166-பீஷ்மரிடம் அனுமதி கேட்ட வியாசர்; யுதிஷ்டிரனின் ஐயங்களைத் தீர்த்த மனநிறைவுடன் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிய பீஷ்மர்…
ஜனமேஜயன் {வைசம்பாயணரிடம்}, “கௌரவர்களில் முதன்மையான மனிதரான பீஷ்மர், வீரர்களால் எப்போதும் விரும்பப்படும் கணைப்படுக்கையில் கிடந்த போது, அவரைச் சுற்றிலும் பாண்டவர்கள் அமர்ந்திருந்தபோது,(1) என் பாட்டனும், பெரும் ஞானியுமான யுதிஷ்டிரன், கடமை குறித்த புதிர்களுக்கு விளக்கங்களைக் கேட்டு தன் ஐயங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டான்.(2) கொடைகளின் காரியத்தில் பயன்படும் விதிகளையும் கேட்ட அவன், அறம் மற்றும் செல்வம் குறித்த காரியங்களில் தன் ஐயங்கள் அனைத்தும் அகலப்பெற்றான். ஓ! கல்விமானான பிராமணரே {வைசம்பாயணரே}, அந்தப் பெரும் பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்} அதன் பிறகு என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்[1].(3)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பீஷ்மர் அமைதியடைந்தபோது, (சுற்றிலும் அமர்ந்திருந்த) மன்னர் குழாம் முற்றிலும் அமைதியடைந்தது. உண்மையில், அவர்கள் அனைவரும் படத்தில் எழுதிய ஓவியத் தோற்றங்களைப் போல அசைவற்றவர்களாக அமர்ந்திருந்தனர்.(4)
அப்போது, சத்தியவதியின் மகனான வியாசர், ஒருகணம் சிந்தித்து, கங்கையின் அரசமகனிடம்,(5) “ஓ! மன்னா, தன் தம்பிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் கூடிய குருக்களின் தலைவனான யுதிஷ்டிரன் தன் சொந்த இயல்பை அடைந்துவிட்டான்.(6) தன்னருகே பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணனுடன் இருக்கும் அவன், உமக்கு மதிப்புடன் தலைவணங்குகிறான். அவன் நகரம் திரும்ப நீர் அவனுக்கு விடைகொடுப்பதே உமக்குத் தகும்” என்றார்.(7)
புனிதரான வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் அரச மகனுமானவர் {பீஷ்மர்}, யுதிஷ்டிரனுக்கும், அவனது அமைச்சர்களுக்கும் விடைகொடுத்தனுப்பினார்.(8)சந்தனுவின் அரசமகன் {பீஷ்மர்}, இனிய குரலில் தமது பேரனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நீ நகரம் திரும்புவாயாக. உன் இதயத்தில் உள்ள நோய் அகலட்டும்.(9) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பக்தியும், தற்கட்டுப்பாடும் கொண்ட யயாதியைப் போலவே, பெரும் அளவிலான உணவு மற்றும் செல்வக் கொடைகளுக்காகப் புகழ்பெறும் பல்வேறு வேள்விகளில் நீ தேவர்களைத் துதிப்பாயாக.(10) ஓ! பிருதையின் மகனே, க்ஷத்திரிய நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் நீ பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்வாயாக. அப்போது நீ பெரும் பயன்களை ஈட்டுவாய். உண்மையில், உன் இதய நோய் அகலட்டும்.(11) நீ உன் குடிமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வாயாக. அவர்களுக்கு உறுதியளிக்கும் நீ அனைவருக்கும் மத்தியில் அமைதியை நிறுவுவாயாக. உனது நலத்தை விரும்புபவர்கள் அனைவருக்கும் தகுந்த வெகுமதிகளை அளித்து அவர்களைக் கௌரவிப்பாயாக.(12) புனிதமான ஓர் இடத்தில் நிற்பதும், முற்றும் வளர்ந்து கனிகள் நிறைந்திருப்பதுமான ஒரு மரத்தைத் தங்கள் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கும் பறவைகளைப் போலவே உன் நண்பர்கள் மற்றும் உனது நலம் விரும்பிகள் அனைவரும், தங்கள் வாழ்வாதாரங்களுக்காக உன்னைச் சார்ந்து வாழட்டும்.(13) ஓ! மன்னா, இவ்வுலகில் இருந்து நான் செல்ல வேண்டிய காலம் வரும்போது நீ இங்கே வருவாயாக. சூரியன் தெற்கு நோக்கிய தன் போக்கை நிறுத்தி, வடக்கு நோக்கித் திரும்பத் தொடங்கும் காலமே நான் என் உடலைவிட்டு விடைபெறும் காலமாகும்” என்றார் {பீஷமர்}.(14)தன் பாட்டனை மதிப்புடன் வணங்கி, அங்கிருந்து தன் உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான்.(15) திருதராஷ்டிரனையும், தன் தலைவனிடம் பெரும்பக்தி கொண்ட காந்தாரியையும் தலைமையில் நிறுத்திக் கொண்டும், முனிவர்கள் மற்றும் கேசவனின் துணையுடனும்,(16) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குரு குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் குடிமக்கள், தன் நாட்டில் வசிப்போர் மற்றும் தன் அமைச்சர்களுடனும் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)
அநுசாஸனிக உப பர்வம் {தான தர்ம உப பர்வம்} முற்றும்*
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply