ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அஸ்வமேத பர்வம்-ஸ்ரீ அநு கீதை உப பர்வம்–

துவாராவதிக்குத் திரும்பிய கிருஷ்ணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 52-ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்ட கிருஷ்ணார்ஜுனர்கள்; கிருஷ்ணனைப் புகழ்ந்து துதித்த அர்ஜுனன்; ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் முதலியோரை வணங்கிய கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் முதலியோரிடம் விடைபெற்றுக் கொண்டு சுபத்திரையை அழைத்துக் கொண்டு துவாரகைக்குப் புறப்பட்ட கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதன்பிறகு கிருஷ்ணன் தாருகனை அழைத்து, “என் தேர் பூட்டப்படட்டும்” என்று ஆணையிட்டான். மிகக் குறுகிய காலத்திற்குள் தாருகன் (தன் தலைவனிடம்), “பூட்டப்பட்டது” என்று சொன்னான்.(1) அப்போது தன் பணியாட்கள் அனைவரையும் அழைத்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, “ஆயத்தமாகி தயாராக இருப்பீராக. நான் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்படப் போகிறோம்” என்றான்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு சொல்லப்பட்ட துருப்பினர், கவங்களைப் பூட்டியவர்களாக, அளவற்ற சக்தி கொண்ட அந்தப் பிருதையின் மைந்தனிடம் {அர்ஜுனனிடம்}, “அனைத்தும் ஆயத்தமாக இருக்கிறது” என்று சொன்னார்கள்.(3) அப்போது, கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய அன்பிற்கினிய நண்பர்கள் இருவரும் தங்கள் தேரில் ஏறி, இனிமை நிறைந்த உரையாடல்களில் ஈடுபட்டபடியே பயணம் செய்தனர்.(4)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேரில் அமர்ந்திருந்த வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, பெருஞ்சக்தி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(5) “ஓ! விருஷ்ணி குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உன் அருளின் மூலமே மன்னர் {யுதிஷ்டிரர்} வெற்றியை அடைந்தார். அவரது பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர், மேலும் அவர் ஒரு முள்ளுமின்றித் தன் நாட்டை மீட்டார்.(6) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பாண்டவர்கள் உன் மூலம் ஒரு பலமிக்கப் பாதுகாவலனை அடைந்தார்கள். உன்னை எங்கள் படகாகக் கொண்டே நாங்கள் குருக்களெனும் {கௌரவப்}பெருங்கடலைக் கடந்தோம்.(7) ஓ! அண்டத்தையே உன் கைவண்ணமாகக் கொண்டவனே {விஷ்வகர்மாவே}, ஓ! அண்டத்தின் ஆன்மாவே {விஷ்வாத்மாவே}, ஓ! அண்டத்தில் உள்ள அனைத்துள்ளும் சிறந்தவனே {விஷ்வஸத்தமனே}, நான் உன்னை வணங்குகிறேன். உன்னால் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு நான் உன்னை அறிவேன்[1].ஓ! மதுசூதனா, ஒவ்வொரு உயிரினத்தின் ஆன்மாவும் எப்போதும் உன் சக்தியில் இருந்தே பிறக்கின்றன. (படைத்தல், காத்தல், அழித்தல் என்ற வடிவிலான) விளையாட்டு {லீலை} உன்னுடையதே. ஓ! தலைவா, பூமி, வானம் ஆகியவை உன் மாயையே .(9) அசையும் மற்றும் அசையாத பொருட்களை உள்ளடக்கிய இந்த மொத்த அண்டமும் உன்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. {ஈன்று பிறப்பவை, முட்டையிட்டுப் பிறப்பவை, கழிவில் இருந்து பிறப்பவை, காய்கறிகள் என்ற) நான்கு வகை உயிரினங்களையும், மாற்றத்தின் மூலம் நீயே படைக்கிறாய்.(10) ஓ! மதுசூதனா, பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றை நீயே படைத்தாய். களங்கமற்ற சந்திர ஒளி உன் புன்னகையாகும். பருவகாலங்கள் உன் புலன்களாகும்.(11) எப்போதும் வீசும் காற்று உன் மூச்சாகும், நித்தியமானதாக இருக்கும் மரணம் உன் கோபமாகும். உன் அருளிலேயே செழிப்பின் தேவி இருக்கிறாள். உண்மையில், ஓ! உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனே, ஸ்ரீ உன்னிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கிறாள்.(12)

(உயிரினங்கள் ஈடுபடும்) விளையாட்டு நீயே; அவற்றின் மனநிறைவு நீயே; அவற்றின் புத்தி நீயே; அவற்றின் பொறுமை நீயே; அவற்றின் விருப்பங்கள் நீயே; அவற்றின் அழகும் நீயே. அசையும், மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட அண்டம் நீயே. ஓ! பாவமற்றவனே, யுக முடிவில் அழிவு என்றழைக்கப்படுபவன் நீயே.(13) நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும் உன் குணங்கள் அனைத்தையும் சொல்லவல்லவனாக நான் இல்லை. ஆத்மாவும், பரமாத்மாவும் நீயே. ஓ! தாமரையை (தாமரை இதழ்களைப்) போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உன்னை வணங்குகிறேன்.(14)

ஓ! தடுக்கப்பட முடியாதவனே, நாரதர், தேவலர், தீவில் பிறந்தவர் (வியாசர்) மற்றும் குருக்களின் பாட்டன் {பீஷ்மர்} ஆகியோரிடம் இருந்து, இவை அனைத்தும் (இந்த அண்டம் அனைத்தும்)(15) உன்னையே சார்ந்திருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கிறேன். உயிரினங்கள் அனைத்தின் ஒரே தலைவன் நீயே. ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா, எனக்கு உன் அருளைக் கொடுக்கும் நிமித்தமாக நீ அறிவித்ததை,(16) ஓ! ஜனார்த்தனா, நான் முழுமையாக நிறைவேற்றுவேன். எங்களுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி பேரற்புதத்தைச் செய்திருக்கிறாய்;(17) போரில் திருதராஷ்டிரர் மகனான கௌரவனுக்கு (இளவரசனுக்கு) {துரியோதனனுக்கு} அழிவை ஏற்படுத்தினாய். (அடுத்தடுத்து) போரில் நான் வீழ்த்திய அந்தப் படை ஏற்கனவே உன்னால் எரிக்கப்பட்டதாகும்.(18) நீ செய்த சாதனையின் விளைவால் வெற்றி எனதானது. உன் புத்தியின் சக்தி மூலமே, போரில் துரியோதனன், கர்ணன், சிந்துக்களின் பாவம் நிறைந்த ஆட்சியாளன் {ஸைந்தவன் / ஜெயத்ரதன்} மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோர் முறையாக அழிக்கப்பட்டனர்.(19,20)

ஓ! தேவகியின் மைந்தா {கிருஷ்ணா}, என்னிடம் நிறைவடைந்து எனக்கு அறிவித்த அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். இதில் எந்த ஐயத்திற்கும் நான் இடமளிக்க மாட்டேன்.(21) ஓ! பாவமற்றவனே, ஓ! அனைத்துக் கடைமைகளையும் அறிந்தவனே, நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரரிடம் சென்று, உனக்கு விடையளிக்குமாறு அவரைத் தூண்டுவேன்.(22) ஓ! தலைவா, நீ துவாரகைக்குப் புறப்படுவதை நானும் ஏற்கிறேன். ஓ! ஜனார்த்தனா, நீ விரைவில் என் தாய் மாமனை {வசுதேவரைக்} காண்பாய்.(23) தடுக்கப்பட முடியாதவரான பலதேவரையும் {பலராமரையும்}, விருஷ்ணி குலத்தின் வேறு தலைவர்களையும் நீ காண்பாய்” என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவ்விருவரும் யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்தனர்.(24)

அப்போது அவர்கள் உற்சாகமிக்க இதயங்களுடன், எந்தக் கவலையுமின்றி, சக்ரனின் மாளிகைக்கு ஒப்பாக இருந்த திருதராஷ்டிரனின் அரண்மனைக்குள் நுழைந்தனர்.(25) பிறகு, ஓ! ஏகாதிபதி, அவன் மன்னன் திருதராஷ்டிரனையும், பெரும் நுண்ணறிவுமிக்க விதுரனையும், மன்னன் யுதிஷ்டிரனையும்,(26) தடுக்கப்பட முடியாதவனான பீமசேனனையும், பாண்டுவின் மூலம் மாத்ரிக்குப் பிறந்த இரு மகன்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்டனர். அமர்ந்திருந்த மன்னன் திருதராஷ்டிரன்; வெல்லப்படாத யுயுத்சு {27); பெரும் ஞானியான காந்தாரி, பிருதை {குந்தி}, அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, மேலும் சுபத்திரை முதலான பாரதப் பெண்மணிகள் பிறரையும் அவர்கள் கண்டனர்.(28)

காந்தாரிக்குப் பணிவிடை செய்யும் பெண்கள் அனைவரையும்கூட அவர்கள் கண்டார்கள். பிறகு, பகைவர்களைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று(29) தங்கள் பெயர்களை அறிவித்து, அவனது பாதங்களைத் தீண்டினர். உண்மையில் அந்த உயர் ஆன்மாக்கள் இருவரும், காந்தாரி மற்றும் பிருதையின் பாதங்களையும்,(30) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் பீமனின் பாதங்களையும் தீண்டினர். விதுரனைத் தழுவி கொண்ட அவர்கள், அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(31) அந்த மனிதர்கள் அனைவரின் துணையுடன் கூடிய அர்ஜுனனும், கிருஷ்ணனும் (மீண்டும்) மன்னன் திருதராஷ்டிரனை அணுகினர். இரவு வந்ததும், பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் திருதராஷ்டிரன் அவரவர் தங்கள் தங்கள் அறைகளில் ஓய்வெடுக்கும் வகையில் குரு குலத்தைத் தழைக்கச் செய்யும் அனைவருக்கும், ஜனார்த்தனனுக்கும் விடைகொடுத்து அனுப்பினான். மன்னனால் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய அறைகளுக்குள் நுழைந்தனர்.(32,33)

பெருஞ்சக்தி கொண்ட கிருஷ்ணன், தனஞ்சனின் {அர்ஜுனனின்} அறைக்குச் சென்றான். முறையாக வழிபடப்பட்டவனாக, அனைத்து வகை வசதி மற்றும் இன்பங்களுடன் கூடியவனாக,(34) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தனஞ்சயனின் துணையுடன் மகிழ்ச்சியாக உறங்கி அந்த இரவைக் கழித்தான். இரவு கடந்து காலை விடிந்ததும் அவ்விரு வீரர்களும்,(35) தங்கள் காலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, முறையாகத் தங்கள் மேனிகளை அலங்கரித்துக் கொண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் மாளிகைக்குச் சென்றனர். அங்கே பெரும் வலிமை கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் தன் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தான்.(36)

நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் நுழைந்த அந்த உயர் ஆன்மாக்கள் இருவரும், தேவர்கள் தலைவனை {இந்திரனைக்} காணும் அஸ்வினி இரட்டையர்களைப் போல நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டனர்.(37) அம்மன்னனைச் சந்தித்த அந்த விருஷ்ணி குலத்தோனும் {கிருஷ்ணனும்}, குரு குல வீரர்களில் முதன்மையானவனும் {அர்ஜுனனும்}, தங்களிடம் பெரும் நிறைவை அடைந்திருந்த யுதிஷ்டிரனின் அனுமதியைப் பெற்று கீழே அமர்ந்தனர்.(38) அப்போது, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த நண்பர்கள் இருவருரையும் கண்டு, அவர்களிடம் பேச விருப்பம் கொண்டான். பேசுபவர்களில் முதன்மையான அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், விரைவில் பின்வரும் சொற்களில் அவர்களிடம் பேசினான்.(39)

யுதிஷ்டிரன், “வீரர்களே, யது மற்றும் குரு குலத்தில் முதன்மையானவர்களே, நீங்கள் இருவரும் என்னிடம் ஏதோ சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. உங்கள் மனத்தில் இருப்பதைச் சொல்வீராக. நான் அதை விரைவில் நிறைவேற்றுவேன். தயங்காதீர்” என்றான்.(40)

இவ்வாறு சொல்லப்பட்டதும், வாக்கை நன்கறிந்தவனான பல்குனன் {அர்ஜுனன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பணிவுடன் அணுகி, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(41) அவன் {அர்ஜுனன்}, “ஓ! மன்னா, பேராற்றலைக் கொண்ட இந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீண்ட நாட்களாக வீட்டில் இல்லாமல் இருக்கிறான். இவன் உமது அனுமதியுடன் தன் தந்தையைக் காண விரும்புகிறான்.(42) உமக்கு விருப்பமிருந்தால் இவனை ஆனர்த்தர்களின் நகரத்திற்குச் செல்ல அனுமதிப்பீராக. ஓ! வீரரே, இவனுக்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்” என்றான்.(43)

யுதிஷ்டிரன், “ஓ! தாமரைக் கண்ணா, நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ! மதுசூதனா, ஓ! பலமிக்கவனே, சூர குலத்தில் முதன்மையானவரை {வசுதேவரைக்} காண இன்றே நீ துவாராவதி நகரத்திற்குச் செல்வாயாக.(44) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, உன் புறப்பாடு என்னால் அனுமதிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக என் தாய் மாமனையும் {வசுதேவரையும்}, தேவகி தேவியையும் காணாமல் இருக்கிறாய்.(45) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, ஓ! பெரும் ஞானியே, என் தாய்மாமனைச் சந்தித்து, பலதேவரிடமும் சென்று, அவர்களுக்குத் தகுந்தவாறு என் வார்த்தைகளால் அவ்விருவரையும் வழிபடுவாயாக[2].(46) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, என்னையும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான பீமனையும், பல்குனனையும் {அர்ஜுனனையும்}, நகுலனையும், சகாதேவனையும் நாள்தோறும் நீ நினைப்பாயாக.(47) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, ஆனர்த்தர்களையும், உன் தந்தையையும், விருஷ்ணிகளையும் கண்ட பிறகு என் குதிரை வேள்விக்கு மீண்டும் திரும்பி வருவாயாக.(48) பிறகு பல்வேறு வகை ரத்தினங்களையும், பல்வேறு வகைச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு நீ செல்வாயாக. ஓ! சாத்வத குல வீரா, நீ விரும்பும் எதையும் நீ எடுத்துச் செல்வாயாக.(49) ஓ! கேசவா, மொத்த பூமியும் எங்கள் ஆட்சிப்பகுதியானதும், எங்கள் பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும் உன் அருளாலேயே நடந்தன” என்றான் {யுதிஷ்டிரன்}.(50)குருகுலத்தின் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு சொன்னபோது, மனிதர்களில் முதன்மையான வாசுதேவன் {கிருஷ்ணன்} (மறுமொழியாக) இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(51)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பொன், ரத்தினங்கள் அனைத்தும், செல்வமனைத்தும், மொத்த பூமியும் உம்முடையவையே, அவை உம்முடையவை மட்டுமே ஆகும். ஓ! தலைவா, என் இல்லத்தில் இருக்கும் செல்வம் எதனுக்கும் நீரே உரிமையாளர் ஆவீர்” என்றான்.(52)

தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அவனிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, பெருஞ்சக்தியுடன் கூடியவனான கதனின் அண்ணனை (கிருஷ்ணனை) முறையாக வழிபட்டான். வாசுதேவன் அப்போது தன் அத்தையிடம் ({தன் தந்தையின் சகோதரியான குந்தியிடம்) சென்றான். முறையாக அவளைக் கௌரவித்த அவன் அவளை வலம் வந்தான்.(53) பிறகு அவளால் பதிலுக்கு முறையாக அணுகப்பட்டான்; பிறகு விதுரனை முதலாகக் கொண்ட பிறர் அனைவரும் அவனை அணுகினர். நான்கு கரங்களைக் கொண்டவனும், கதனின் அண்ணனுமான அவன், அப்போது தன் சிறந்த தேரில் நாகபுரத்தை {ஹஸ்தினாபுரத்தை} விட்டுப் புறப்பாட்டான்[3].(54)வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ஜனார்த்தனன், யுதிஷ்டிரன் மற்றும் தன் அத்தை (குந்தி) ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன் சகோதரியான பெண்மணி சுபத்திரையைத் தன் தேரில் அமர்த்திக் கொண்டு, பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களின் துணையுடன் புறப்பட்டுச் சென்றான். முதன்மையான குரங்கைத் தன் கொடியில் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, சாத்யகி, மாத்ராவதியின் இரு மகன்கள், அளவிலா நுண்ணறிவைக் கொண்ட விதுரன், யானைகளின் இளவரசனுக்கு ஒப்பான நடையைக் கொண்ட பீமன் ஆகியோர் அனைவரும் மாதவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(56) வலிமையும் சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், குரு நாட்டை விரிவுபடுத்து அவர்களை அனைவரையும், விதுரனையும் திரும்பச் செய்து, தாருகன் மற்றும் சாத்யகியிடம், “குதிரைகளை விரைவாகத் தூண்டுவீராக” என்று சொன்னான்.(57) பிறகு, பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனும், பேராற்றல் கொண்டவனுமான ஜனார்த்தனன், சினி குலத்தின் முதன்மையான சாத்யகியின் துணையுடன் தன் பகைவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, சொர்க்கத்திற்குச் செல்லும் நூறு வேளைவியைச் செய்தவனை {இந்திரனைப்} போல ஆனர்த்தர்களின் நகரத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(58)

உதங்கர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 53-துவாரகைக்குச் செல்லும் வழியில் உதங்கரைக் கண்ட கிருஷ்ணன்; கௌரவர்கள் அழிக்கப்பட்டதற்காகச் சபிக்கப் போவதாகச் சொன்ன உதங்கர்; உதங்ருக்கு உண்மையைச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} துவாரகைக்குப் புறப்படும்போது, பகைவர்களைத் தண்டிப்பவனும், பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனும் ஆனவன் {அர்ஜுனன்} அவனைத் தழுவி கொண்டு, தன் பணியாட்களுடன் சேர்ந்து திரும்பினான்.(1) விருஷ்ணி வீரனை மீண்டும் மீண்டும் தழுவிய பல்குனன் {அர்ஜுனன்}, அவன் தன் பார்வையின் வரம்புக்குள் உள்ள வரை மீண்டும் மீண்டும் தன் கண்களை அவனை நோக்கிச் செலுத்தினான்.(2) கோவிந்தன் மேல் விழுந்த தன் பார்வையைப் பெருங்கடினத்துடன் பிருதையின் மகன் {அர்ஜுனன்} விலக்கினான். வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனும் அவ்வாறே செய்தான் (அதையே செய்தான்).(3) அந்த உயர் ஆன்மா புறப்படும்போது வெளிப்பட்ட அறிகுறிகளை {சகுனங்களை} நான் உனக்கு விரிவாகச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(4)

தேருக்கு முன் பெருவேகத்துடன் வீசிய காற்றானது, பாதையில் இருந்து மணற்துகள்கள், புழுதி மற்றும் முட்களை அகற்றியது.(5) வாசவன் {இந்திரன்}, அந்தச் சாரங்கதாரிக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு நறுமணமிக்க தெய்வீக மலர்மாரியைப் பொழிந்தான்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது, நீரில்லாத பாலைவனத்தை அடைந்தான். அங்கே அளவற்ற சக்தி கொண்டவரும், உதங்கர் என்ற பெயரைக் கொண்டவருமான முதன்மையான தவசியைக்[1] கண்டான்.(7) பெரிய கண்களையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} அந்தத் தவசியை வணங்கினான். பதிலுக்கு அந்தத் தவசியாலும் வணங்கப்பட்டான். அப்போது வாசுதேவன் அவரது நலத்தை விசாரித்தான்.(8)பிராமணர்களில் முதன்மையானவரானவரும், மாதவனால் மென்மையாக விசாரிக்கப்பட்டவருமான உதங்கர், முறையாக {பதிலுக்கு} அவனைக் கௌரவித்து, இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(9) அவர் {உதங்கர்}, “ஓ! சௌரியே, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் மாளிகைகளுக்குச் சென்று சகோதரர்களுக்கிடையில் நீடிக்க வேண்டிய நீடித்த புத்தியை நிறுவுவதில் வெற்றி கண்டாயா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(10) ஓ! கேசவா, ஓ! விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனே, உன் உறவினர்களும், உனக்கு எப்போதும் அன்பானவர்களுமான அவர்களை அமைதியடையவும், ஒற்றுமையடையவும் செய்தாயா?(11) ஓ! பகைவர்களை எரிப்பவனே, பாண்டு மகன்கள் ஐவரும், திருதராஷ்டிரன் பிள்ளைகளும் இவ்வுலகில் இன்பமாக உன்னுடன் விளையாடினார்களா?(12) கௌரவர்கள் உன்னால் தணிக்கப்பட்டதன் விளைவால் மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் நாடுகளில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்களா?(13) ஓ! மகனே, நான் உன்னிடம் கொண்ட நம்பிக்கை கௌரவர்களைப் பொறுத்தவரையில் கனி கொடுத்ததா {பயனளித்ததா}?” என்று கேட்டார்.(14)

அருளப்பட்ட அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “கௌரவர்களைப் பொறுத்தவரையில் {அவர்களுக்கு} நல்ல புத்தியைக் கொண்டு வருவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முதலில் நான் முயன்றேன். எவ்வழிமுறையினாலும் அவர்களில் அமைதியை நிறுவச் செய்ய முடியாதபோது,(15) உற்றார் உறவினருடன் கூடிய அவர்கள் அனைவரும் மரணமடைய நேர்ந்தது. புத்தியாலோ, பலத்தாலோ விதியைக் கடப்பது சாத்தியமல்ல.(16) ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, இதுவும் நீர் அறியாததல்ல. என்னைக் குறிப்பிட்டு பீஷ்மர் மற்றும் விதுரர் செய்த ஆலோசனைகள் அனைத்தையும் அவர்கள் (கௌரவர்கள்) மீறினர்[2].(17) ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட அவர்கள் யமனுடைய வசிப்பிடத்திற்கு விருந்தினர்களாகச் சென்றனர். நண்பர்கள் அனைவரும், பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே. பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்” என்றான் {கிருஷ்ணன்}.(18)கிருஷ்ணன் இந்தச் சொற்களைச் சொன்ன போது, உதங்கர் கோபத்தில் நிறைந்தவராக, சினத்தில் கண்களை அகல விரித்தவராக இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(19)

உதங்கர், “ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களும், உனக்கன்பானவர்களுமான குரு குலத்தின் முதன்மையானவர்களைக் காக்க இயன்றவனாக இருந்தும் நீ மீட்கவில்லை என்பதால் நான் நிச்சயம் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(20) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, வலுக்கட்டாயமாகப் பொறுத்துச் செல்லுமாறு அவர்களை நீ வற்புறுத்தாததால் கோபத்தில் நிறைந்திருக்கும் நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(21) ஓ! மாதவா, குருக்களில் முதன்மையான அவர்களைக் காக்க முழுமையாக இயன்றவனாக இருந்தும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, கபடத்தில் மூழ்கி, அவர்களிடம் நீ அக்கறையற்றவனாக இருந்ததால்தான் அவர்கள் அனைவரும் அழிவை அடைந்திருப்பதாகத் தெரிகிறது” என்றார்.(22)

வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, “ஓ! பிருகு குலக் கொழுந்தே, நான் விரிவாகச் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லும் சமாதானங்களையும் நீர் ஏற்பீராக. ஓ! பிருகு குலத்தவரே {பார்க்கவரே} நீர் ஒரு தவசியாவீர்.(23) ஆன்மா தொடர்புடைய என் சொற்களைக் கேட்ட பிறகு நீர் என்னைச் சபிக்கலாம். அற்பமான தவத்தகுதியைக் கொண்டு எந்த மனிதனாலும் என்னை அவமதிக்க முடியாது.(24) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது தவங்கள் அனைத்தும் அழிவடைவதைக் காண நான் விரும்பவில்லை. நீர் பெருமளவில் சுடர்மிக்கத் தவங்களைச் செய்தவராவீர். நீர் உமது ஆசான்களையும், பெரியோர்களையும் நிறைவடையச் செய்துள்ளீர்[3].(25) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர் குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சரிய விதிகளை நோற்று வருவதை நான் அறிவேன். எனவே, பெரும் துன்பத்துடன் தவங்களின் மூலம் நீர் அடைந்தவற்றுக்குக் குறைவு ஏற்படவோ, உமது தவங்கள் அழிவடையவோ நான் விரும்பவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(26)

பரிதாப முறையீடு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 54-தன் மகிமையை உதங்கருக்கு உணர்த்திய கிருஷ்ணன்; தன்னுடைய சொல்லைக் கேட்காததால் கௌரவர்கள் அழிந்தனர் என்று சொன்ன கிருஷ்ணன்…

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா, களங்கமற்ற அத்யாத்மத்தை எனக்குச் சொல்வாயாக. உன் உரையைக் கேட்டப் பிறகு, ஓ! ஜனார்த்தனா உனக்கு நன்மையானதை விதிப்பேன், அல்லது உன்னைச் சபிப்பேன்” என்றார்.(1)

வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, “இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பின் {சத்வ} குணங்கள் மூன்றும் என்னையே தங்கள் புகலிடமாகக் கொண்டு என்னையே சார்ந்திருக்கின்றன என்பதை அறிவீராக. ஓ! மறுபிறப்பாளரே, ருத்திரர்களும், வசுக்களும் என்னிலிருந்தே உண்டாகினர் என்பதை அறிவீராக.(2) என்னில் அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன; அனைத்து உயிரினங்களிலும் நான் இருக்கிறேன்; இதையும் அறிவீராக. இது குறித்து உமது மனத்தில் ஐயமேதும் எழவேண்டாம்.(3) ஓ! மறுபிறப்பாளரே, தைத்தியர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள், நாகர்கள், அப்சரஸ் கூட்டங்கள் அனைவரும் என்னில் இருந்தே உண்டாகினர் என்பதையும் அறிவீராக.(4)

இருப்பு, இல்லாமை, வெளிப்பட்டவை, வெளிப்படாதவை, அழியத்தக்கவை, அழிவில்லாதவை என்று எவையெல்லாம் அழைக்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் என்னையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(5) ஓ! தவசியே, (நான்கு) வாழ்வுமுறைகளுடன் தொடர்புடையதாக அறியப்படும் நான்கு வகைக் கடமைகளும், வேதக் கடமைகள் அனைத்தும் என்னையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(6) அண்டமாக அமைந்திருக்கும் இல்லாதவை, இருந்தும் இல்லாதவை, இருப்பு இல்லாமையைக் கடந்தவை ஆகிய அனைத்தும் என்னில் இருந்தே உண்டானவையாகும். தேவர்களுக்கும் நித்திய தேவனான என்னையும் விட உயர்ந்தது (என்னைக் கடந்திருப்பது) வேறு எதுவும் கிடையாது[1].(7)ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, ஓம்! (என்ற மூல எழுத்துடன்) தொடங்கும் வேதங்கள் அனைத்தும் என்னுடன் அடையாளங்காணப் படுபவை என்பதை அறிவீராக. ஓ! பிருகு குல மைந்தரே, வேள்வித்தம்பம் நானே; (வேள்விகளில் பருகப்படும்) சோமம் நானே; (தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதற்கு வேள்விகளில் சமைக்கப்படும்) சாரு நானே; (செய்யப்படும்) ஹோமம் நானே; தேவர்களை நிறைவடையச் செய்ய வேள்வி செய்பவர்கள் செய்யும் செயல்கள் நானே; வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவன் {ஹோதா} நானே; ஊற்றப்படும் ஹவி அல்லது ஆகுதியும் {ஹவ்யம்} நானே என்பதை அறிவீராக. அத்யர்யு நானே. கல்பகன் நானே; புனிதம் நிறைந்த வேள்வி ஹவியும் நானே. பெரும் வேள்விகளில் உத்காத்ரி {உத்காதா} தன் பாடலொலிகளில் என்னையே பாடுகிறார். ஓ! பிராமணரே, ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பரிகாரச் சடங்குகள் அனைத்திலும் மங்கல மந்திரங்களையும், அமைதி நிறைந்த ஆசிகளையும் சொல்பவர்கள், அண்டத்தின் கைவினைஞனான என் புகழையே பாடுகின்றனர்.(8-10)

ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, ஓ! கல்விமானான பிராமணரே, அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையையே தன் சாரமாகக் கொண்டவனும், என் மனத்தில் இருந்து உதித்தவனுமான தர்மன் என்னுடைய மூத்த மகன் என்பதை அறிவீராக.(11) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் மகனை ஆதரிப்பதற்காக இடையறாமல் என்னை மாற்றிக் கொண்டு, இவ்வுலகில் உள்ள அல்லது இவ்வுலகை விட்டுச்சென்ற மனிதர்களின் துணையுடன் பல்வேறு கருவறைகளில் நான் பிறக்கிறேன் {அவதரிக்கிறேன்}. உண்மையில், அறத்தைப் பாதுகாக்கவும், அதை நிறுவுவதற்காகவுமே நான் இவற்றைச் செய்கிறேன்.(12) ஓ! பிருகு குல மைந்தரே, இந்த நோக்கத்திற்காக நான் ஏற்கும் வடிவங்களில் விஷ்ணு, பிரம்மன் மற்றும் சக்ரன் {இந்திரன்} என்று மூவுலகங்களிலும் அறியப்படுகிறேன்.(13)

இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நானே, அவற்றை அழிப்பவனும் நானே. மாற்றமடையாதவனான நானே பாவம் நிறைந்த தன்மையுடன் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கிறேன்.(14) ஒவ்வொரு யுகத்திலும், என் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் பல்வேறு வகைக் கருவறைகளில் நுழைந்து அறத்தின் பாலத்தைச் செப்பனிடுகிறேன்.(15) ஓ! பிருகு குல மைந்தரே, தேவ வகையில் வாழும்போது உண்மையில் நான் ஒரு தேவனுக்குரிய அனைத்து வழிமுறைகளிலும் செயல்படுவேன்.(16)

ஓ! பிருகு குல மைந்தரே, கந்தர்வ வகையில் வாழும்போது கந்தர்வனுக்குரிய அனைத்து வழிமுறைகளிலும் நான் செயல்படுவேன்.(17) நாகர்களின் வகையில் வாழும்போது நாகனாகச் செயல்படுவேன், யக்ஷர்கள் அல்லது ராட்சசர்களின் வகையில் வாழும்போது அந்தந்த வகைக்குரிய வழியிலேயே நான் செயல்படுவேன்.(18) இப்போது மனித வகையில் பிறந்திருக்கும் நான் மனிதருக்குரிய வழிமுறையிலேயே செயல்பட வேண்டும். நான் அவர்களிடம் (கௌரவர்களிடம்) மிகப் பரிதாபகரமான வகையில் முறையிட்டேன். ஆனால், மூடர்களான அவர்கள் மதி கலங்கியவர்களாக என் சொற்களை ஏற்க மறுத்தனர்.(19)

கோபத்தில் நிறைந்த நான், (என் செய்தியைப் புறக்கணிப்பதன் விளைவால் ஏற்படப்போகும்) பெரும் பயங்கரத்தைச் சொல்லி அவர்களை அச்சுறுத்தினேன். ஆனால் மீண்டும் அவர்களுக்கு என் வழக்கமான (மனித) வடிவையே காட்டினேன்.(20) மறத்திற்கு {அதர்மத்திற்கு} வசப்பட்டவர்களும், காலமெனும் அறத்தால் {தர்மத்தால்} தாக்கப்பட்டவர்களும், போர்க்களத்தில் நியாயமாகக் கொல்லப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தார்கள் என்பதில் ஐயமில்லை.(21) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, பாண்டவர்களும் பெரும்புகழை அடைந்திருக்கிறார்கள். நீர் கேட்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.(22)

பாலைவன நீர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 55-உதங்கருக்கு விஷ்வரூப தரிசனம் அளித்த கிருஷ்ணன்; உதங்கர் பெற்ற வரம்; சண்டாள வடிவில் வந்த இந்திரன் கொடுத்த அமிர்தத்தை மறுத்த உதங்கர்; பாலைவனத்திலும் நீர்கிடைக்கும் வரத்தை உதங்கருக்கு அளித்த கிருஷ்ணன்…

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஜனார்த்தனா, அண்டத்தைப் படைத்தவன் நீ என்பதை நான் அறிவேன். நீ என்னிடம் கொண்ட கருணையின் விளைவே இந்த ஞானம் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, என் மனம் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பதால் உற்சாகம் நிறைந்து அமைதியின் வசப்பட்டதாக இருக்கிறது. ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, இதற்கு மேலும் என் இதயம் உன்னைச் சபிக்க விரும்பவில்லை என்பதை அறிவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, அற்பக் கருணையையாவது உன்னிடம் அடையத்தகுந்தவனாக நான் இருந்தால், உன் இறை வடிவை {விஷ்ணு ரூபத்தை} எனக்கு ஒருமுறை காட்டுவாயாக” என்று கேட்டார்”.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவரிடம் நிறைவடைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} கண்ட நித்தியமான வைஷ்ணவ வடிவை உதங்கருக்குக் காண்பித்தான்.(4) உதங்கர், உயர் ஆன்ம வாசுதேவனை வலிமைமிக்கக் கரங்களுடன் கூடியவனாக அண்ட வடிவில் கண்டார். அந்த வடிவின் பிரகாசம் சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, ஆயிரம் சூரியர்களைப் போன்றோ இருந்தது. அது {அவ்வடிவம்} வெளிமுழுவதையும் நிறைத்தபடி அவரது முன்பு நின்றது. அனைத்துப் பக்கங்களிலும் முகங்களைக் கொண்டிருந்தது.(5) அந்தப் பிராமணர் உதங்கர், உயர்ந்ததும், அற்புதம் நிறைந்ததுமான விஷ்ணுவின் அந்த வைஷ்ணவ வடிவைக் கண்டு, உண்மையில் (அத்தோற்றத்தில்) பரமனையே கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தார்.(6)

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! அண்டத்தையே கைவினையாய் கொண்டவனே, ஓ! அண்டத்தின் ஆன்மாவே, ஓ! அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமே நான் உன்னை வணங்குகிறேன். உன் பாதத்தால் மொத்த பூமியையும் மறைத்தும், தலையால் ஆகாயத்தை நிறைத்தும் இருக்கிறாய்.(7) பூமிக்கும், ஆகாயத்திற்கும் இடையில் இருப்பதை உன் வயிறு நிறைத்திருக்கிறது. திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவை யாவும் நீயே.(8) சிறப்பானதும், அழிவற்றதுமான இந்த வடிவை விலக்குவாயாக. நான் இப்போது உன்னை நித்தியமான (மனித) வடிவில் காண விரும்புகிறேன்” என்றார்”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, நிறைவடைந்த ஆன்மாவைக் கொண்ட கோவிந்தன், அவரிடம் {உதங்கரிடம்}, “வரம் ஏதும் கேட்பீராக” என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

எனினும் உதங்கர்,(10) “ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னுடைய இந்த வடிவைக் கண்டதே எனக்குப் போதுமான வரமாகும்” என்றார்.(11)

எனினும், கிருஷ்ணன் மீண்டும் அவரிடம், “இக்காரியத்தில் தயங்காதீர். இது செய்யப்பட வேண்டும். என் வடிவைக் கண்டது கனியற்றதாகக் கூடாது” என்றான்.(12)

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தலைவா, எது செய்யப்பட வேண்டுமென நீ நினைக்கிறாயோ, அதை நான் நிறைவேற்ற வேண்டும். நான் எங்கெல்லாம் நீரை விரும்புவேனோ அங்கெல்லாம் அஃதை அடைய விரும்புகிறேன். இத்தகைய பாலைவனங்களில் நீர் கிடைப்பது அரிதாகும்” என்றார்.(13)

அந்தச் சக்தியை விலக்கிக் கொண்ட பரமன், அப்போது உதங்கரிடம், “எங்கெல்லாம் உமக்கு நீர் தேவைப்படுகிறதோ, அங்கே என்னை நினைப்பீராக” என்று சொன்னான். இவ்வாறு சொல்லிவிட்டு அவன் துவாரகையை நோக்கிச் சென்றான்.(14)

அதன் பிறகு ஒரு நாள் சிறப்புமிக்கவரான உதங்கர், பாலைவனத்தில் மிகுந்த தாகத்துடன் நீர் வேண்டித் திரிந்தார். அவ்வாறு திரியும்போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நினைத்தார்.(15) அப்போது, அந்த நுண்ணறிவுமிக்க முனிவர் {உதங்கர்}, அந்தப் பாலைவனத்தில், உடல்முழுவதும் புழுதி படர்ந்தவனும், நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டவனுமான, (சண்டாள வகையைச் சேர்ந்த) ஒரு நிர்வாண வேடனை {புலையனைக்}[1] கண்டார்.(16) மிகக் கடுந்தோற்றத்தில் இருந்த அவன், ஒரு வாளையும், வில்லையும், கணைகளையும் தரித்திருந்தான். அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், அந்த வேடனின் சிறுநீர் உறுப்பில் இருந்து {காலருகில் உள்ள தோற்பையில்} அபரிமிதமான நீர் வருவதை {இருப்பதைக்} கண்டார்[2].(17)உதங்கர் கிருஷ்ணனை நினைத்ததும், அந்த வேடன் சிரித்துக் கொண்டே அவரிடம், “ஓ! உதங்கரே, ஓ! பிருகு குலத்தவரே, இந்த நீரை என்னிடம் இருந்து நீர் பெறுவீராக.(18) தாகத்தால் பீடிக்கப்பட்ட உம்மிடம் பெருங்கருணை கொள்கிறேன்” என்றான்.

வேடனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த நீரை ஏற்கும் விருப்பம் எதையும் அந்தத் தவசி வெளிக்காட்டவில்லை.(19) நுண்ணறிவுமிக்க உதங்கர், மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நிந்திக்கவும் தொடங்கினார். எனினும் அந்த வேடன் மீண்டும் மீண்டும் அம்முனிவரிடம் “பருகுவீராக” என்றான்.(20) அந்தத் தவசி, இவ்வாறு அளிக்கப்பட்ட நீரைப் பருக மறுத்தார். மறுபுறம், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்ட அவர் கோபவசப்பட்டார். ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மா முனிவரின் தீர்மானத்தால் அவமதிக்கப்பட்ட அந்த வேடன், தன் நாய் கூட்டத்துடன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். (அற்புதம் நிறைந்த) அந்த மறைதலைக் கண்ட உதங்கர் நாணத்தால் நிறைந்தார்.(22) அவர், பகைவர்களைக் கொல்பவனான கிருஷ்ணனால் (அவன் கொடுத்த வரத்தால்) தாம் வஞ்சிக்கப்பட்டதாகவும் நினைத்தார்.

மிக விரைவில், சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்} அந்த (வேடன் வந்த) வழியிலேயே உதங்கரிடம் வந்தான். கிருஷ்ணனிடம் பேசிய அந்தப் பிராமணர் {உதங்கர்}, “ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! தலைவா, பிராமணர்களில் முதன்மையான ஒருவனுக்கு ஒரு வேடனின் சிறுநீர் வடிவில் {தோற்பையிலுள்ள} நீரை அளிப்பது முற்றிலும் தகாததாகும்” என்றார்[3].பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன், இச்சொற்களைச் சொன்ன உதங்கருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மென்மையான சொற்கள் பலவற்றைச் சொல்லி, “எந்த வடிவில் நீரை உமக்கு அளிப்பது முறையோ அந்த வடிவிலேயே உமக்கு நீர் அளிக்கப்பட்டது. ஐயோ, ஆனால் நீர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உமக்காக வஜ்ரதாரியான புரந்தரன் என்னால் வேண்டிக்கொள்ளப்பட்டான்.(23-27)

பலமிக்க அந்தத் தேவனிடம், “நீரின் வடிவில் உதங்கருக்கு அமுதத்தை அளிப்பாயாக” என்பதே நான் சொன்ன சொற்களாகும். அப்போது தேவர்களின் தலைவன் என்னிடம், “இறக்கக்கூடிய ஒருவன் இறவாதவன் {அமரன்} ஆவது முறையாகாது.(28) உதங்கருக்கு வேறேதும் வரத்தைக் கொடுப்பாயாக” என்றான்.

ஓ! பிருகுவின் மகனே, இச்சொற்களே மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லப்பட்டன. எனினும், “உதங்கருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டும்” என்ற இந்தச் சொற்களால் மீண்டும் சச்சியின் தலைவன் {இந்திரன்} என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டான்.(29)

தேவர்களின் தலைவன், எனக்கு ஆறுதலளிக்கும் வகையில், “ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, அவருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டுமெனில்,(30) நான் ஒரு வேடனின் வடிவை ஏற்று உயர் ஆன்மா கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்துக்கு அதைக் கொடுப்பேன். அவ்வாறே அந்தப் பிருகுவின் மைந்தர் அதை ஏற்றுக் கொள்வாரெனில்,(31) ஓ! தலைவா, நான் அவருக்கு அதைக் கொடுக்கச் செல்வேன். எனினும், அவர் அலட்சியத்தால் என்னைத் திருப்பி அனுப்பினால் எக்காரணத்தினாலும் நான் அவருக்கு அதைக் கொடுக்க மாட்டேன்” என்றான்[4].(32)என்னிடம் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்ட வாசவன் {இந்திரன்}, அமுதத்தைக் கொடுப்பதற்காகவே அந்தத் தோற்றத்தில் உம் முன் தோன்றினான். எனினும், அந்தச் சிறப்புமிக்கவன் சண்டாளத் தோற்றத்தில் இருப்பதைக் கொண்டு நீர் அவனை அலட்சியம் செய்து அனுப்பிவிட்டீர். உமது பிழை பெரியதாகும். உமது விருப்பத்தைப் பொறுத்தவரையில் என் அதிகாரத்திற்கு உட்பட்டு என்னால் செய்ய முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உண்மையில், துன்பம் நிறைந்த உமது தாகத்தைத் தணிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே, நீர் நீரை விரும்பும் நாட்களில்,(33-35) நீருண்ட மேங்கங்கள் இந்தப் பாலைவனத்தில் எழும். ஓ! பிருகு குல மைந்தரே, அந்த மேகங்கள் உமக்குச் சுவைமிக்க நீரை அளிக்கும். உண்மையில், அம்மேகங்கள் உதங்க மேகங்கள் என்று உலகில் அறியப்படும்” என்றான் {கிருஷ்ணன்}.(36)

கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், மகிழ்ச்சியால் நிறைந்தார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த நாள் வரையிலும் வறண்ட பாலைவனங்களில் உதங்க மேகங்கள் (தோன்றி) மழையைப் பொழிகின்றன” {என்றார் வைசம்பாயனர்}.(37)

குருதக்ஷிணை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 56-முதுமையைக் கண்டு வருந்திய உதங்கர்; உதங்கருக்கு இளமையைக் கொடுத்துத் தமது மகளைத் திருமணம் செய்து கொடுத்த கௌதமர்; உதங்கரிடம் அஹல்யை கேட்ட குருதக்ஷிணை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வலிமைகள் அனைத்திற்கும் பிறப்பிடமான விஷ்ணுவையே சபிக்க விரும்பும் அளவுக்கு உயர் ஆன்ம உதங்கர் செய்த தவங்கள் என்ன?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, உதங்கர் கடுந்தவங்களைச் செய்தவராவார். அவர் தமது ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார். பெரும் சக்தி கொண்ட அவர், வேறு எவரையும் வழிபடுவதைத் தவிர்த்தார்.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, உதங்கரின் அர்ப்பணிப்பைப் போலத் தாங்கள் ஆசானிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் பெரியதாக இருக்க வேண்டுமென முனிவர்களின் பிள்ளைகள் அனைவரும் விரும்பினர்.(3) ஓ! ஜனமேஜயா, கௌதமர், தமது எண்ணற்ற சீடர்களுக்கு மத்தியில் உதங்கரிடம் நிறைவும் அன்பும் கொண்டிருந்தார்.(4) உண்மையில், உதங்கரின் தற்கட்டுப்பாடு, தூய ஒழுக்கம், மற்றும் ஆற்றலுக்கேற்ப அவர் ஆற்றிய தொண்டு ஆகியவற்றில் கௌதமர் உயர்வான நிறைவை அடைந்திருந்தார்.(5)

ஒருவர்பின் ஒருவராக ஆயிரக்கணக்கான சீடர்கள், தங்கள் (கல்வியின் காலம் முடிவடைந்து) ஆசானின் அனுமதியைப் பெற்றுத் தங்கள் தங்களுக்குரிய வீடுகளுக்குத் திரும்பினர். எனினும், உதங்கரிடம் கொண்ட பேரன்பால் கௌதமரால் அவரைத் தமது ஆசிரமத்தை விட்டு அனுப்ப இயலவில்லை.(6) ஓ! மகனே, காலப்போக்கில் பெருந்தவசியான உதங்கர் முதுமையை அடைந்தார். எனினும், தமது ஆசானிடம் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் அத்தவசி அதனை உணரவில்லை.(7) ஓ! ஏகாதிபதி, ஒருநாள் அவர் தமது ஆசானுக்காக விறகு கொண்டு வரச் சென்றார். விரைவில் பெருஞ்சுமை கொண்ட விறகை உதங்கர் கொண்டு வந்தார்.(8)

ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, உழைப்பால் களைத்தவரும், பசித்தவரும், தன் தலையில் சுமந்த சுமையால் பீடிக்கப்பட்டவருமான அவர், ஓ! மன்னா, அந்தச் சுமையைப் பூமியில் போட்டார்.(9) அவரது சடாமுடியில் வெள்ளிக்கு ஒப்பாக இருந்த ஒரு மயிர் {சடை} அந்தச் சுமையுடன் சிக்கியிருந்தது. அந்தச் சுமை வீசப்பட்ட போது, அதனுடன் சேர்ந்து அந்தச் சடாமுடியும் பூமியில் விழுந்தது.(10) ஓ! பாரதா, அந்தச் சுமையால் ஒடுக்கப்பட்டவரும், பசியில் மூழ்கியவருமான உதங்கர், முதிய வயதுக்கான அந்த அறிகுறியைக் கண்டு பெரும் துன்பத்துடன் உரக்க அழத் தொடங்கினார்.(11)

அப்போது, கடமைகள் அனைத்தையும் அறிந்தவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், உருண்டு திரண்ட இடை கொண்டவளும், கீழ் நோக்கும் முகத்துடன் கூடியவளுமான அவரது ஆசானின் {கௌதமரின்} மகள், தன் தந்தையின் ஆணையின் பேரில் உதங்கரின் கண்ணீரைத் தன் கைகளில் ஏந்தினாள். அவள் ஏந்திய கண்ணீர்த்துளிகள் அவளது கைகளில் எரிவதாகத் தெரிந்தது. அதற்கு மேலும் அதைத் தாங்க முடியாததால் அவள் அதைப் பூமியில் போடும்படி நேர்ந்தது.(12,13) உதங்கரின் கண்ணீர் துளிகளைப் பூமாதேவியாலேயே தாங்க முடியவில்லை.

நிறைவடைந்த இதயத்துடன் கூடிய கௌதமர், மறுபிறப்பாளரான உதங்கரிடம்,(14) “ஓ! மகனே, உன் மனம் ஏன் இன்று துயரத்தால் இவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கிறது? ஓ! கல்விமானான முனிவா, நான் விரிவாகக் கேட்க விரும்புவதால் என்னிடம் மென்மையாகவும், அமைதியாகவும் சொல்வாயாக” என்றார்.(15)

உதங்கர் {கௌதமரிடம்}, “உம்மிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்ட மனத்துடன், உமக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்யும் விருப்பத்தில், என் இதயப் பக்தியை உம்மிடம் திருப்பி, என் எண்ணங்களை முழுமையாக உம்மில் வசிக்கச் செய்து,(16) முதுமை எனக்கு நேர்வதை (அது நேரும்வரை) முற்றிலும் அறியாது இருந்திருக்கிறேன். இன்பமெதையும் நான் அறிந்தவனில்லை. உம்முடன் நூறு வருட காலம் வசித்திருப்பினும் நான் செல்வதற்கான அனுமதியை நீர் தரவில்லை.(17) எனினும், எனக்கு இளையவர்களான உமது சீடர்கள் பலர் உமது அனுமதியைப் பெற்றுத் திரும்பிவிட்டனர். உண்மையில், ஞானத்துடன் கூடிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முதன்மையான பிராமணர்கள் (உமது ஆசிரமத்தை விட்டுச் செல்வதற்கும், தாங்கள் ஆசானாவதற்கும்) உமது அனுமதியைப் பெற்றனர்” என்றார்.(18)

கௌதமர் {உதங்கரிடம்}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவனே, உன்னிடம் கொண்ட அன்பு மற்றும் பாசத்தாலும், கடமையுணர்வுடன் நீ எனக்குச் செய்த தொண்டின் விளைவாலும் நான் இதை அறிந்து கொள்ளாமலே நீண்ட காலம் கடந்துவிட்டது.(19) எனினும், ஓ! பிருகு குலத்தவனே, இந்த இடத்தைவிட்டுச் செல்ல நீ விரும்பினால், எந்தத் தாமதமுமின்றி என் அனுமதியுடன் செல்வாயாக” என்றார்.(20)

உதங்கர் {கௌதமரிடம்}, “நான் என் ஆசானுக்கு என்ன தர வேண்டும்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இதை எனக்குச் சொல்வீராக. ஓ! தலைவரே, அதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, உமது அனுமதியுடன் நான் இங்கிருந்து செல்வேன்” என்றார்.(21)

கௌதமர் {உதங்கரிடம்}, “ஆசானின் மனநிறைவே இறுதிக் கட்டணம் என நல்லோர் சொல்கின்றனர்[1]. ஓ! மறுபிறப்பாளனே, உன் ஒழுக்கத்தில் நான் நிச்சயம் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன்.(22) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, இதன் காரணமாக நான் மிகவும் மனம் நிறைந்தவனாக இருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நீ இன்று பதினாறு வயது இளைஞனானால்,(23) என் மகளையே உனக்கு மனைவியாகத் தருவேன். உன் சக்தியைப் பொறுக்கும் வல்லமை இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணுக்கும் கிடையாது” என்றார்.(24)கௌதமரின் இந்தச் சொற்களால் உடனடியாக இளைஞனாக மாறிய உதங்கர், அந்தப் புகழ்பெற்ற கன்னிகையைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார். தமது ஆசானின் அனுமதியைப் பெற்ற அவர், தம் ஆசானின் மனைவியிடம் {குருபத்னியிடம்},(25) “என் ஆசிரியையான உமக்கு இறுதிக் கட்டணமாக {குருதக்ஷிணையாக} நான் என்ன கொடுக்க வேண்டும்? எனக்கு ஆணையிடுவீராக. உமக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் செல்வத்தைக் கொண்டோ என் உயிரைக் கொண்டோ நிறைவேற்ற விரும்புகிறேன்.(26) இவ்வுலகில் பெரும் மதிப்பிற்குரியதும், அற்புதம் நிறைந்ததும் எந்த ரத்தினத்தையும் என் தவத்தின் உதவியால் உமக்கு நான் கொண்டு வருவேன். இதில் எனக்கு ஐயமேதுமில்லை” என்றார் {உதங்கர்}.(27)

அஹல்யை, “ஓ! கல்விமானான பிராமணா, ஓ! பாவமற்றவனே, உன் தடங்கலற்ற அர்ப்பணிப்பில் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். இதுவே போதுமானதாகும். நீ அருளப்பட்டிருப்பாயாக. விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக” என்றாள்”.(28)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “எனினும், ஓ! ஏகாதிபதி, உதங்கர் மீண்டும் அவளிடம், “ஓ! தாயே, எனக்கு ஆணையிடுவீராக. உமக்கு ஏற்புடைய ஏதாவதொன்றை நான் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்” என்றார்.(29)

அஹல்யை, “நீ அருளப்பட்டிருப்பாயாக, சௌதாஸனின் மனைவி அணிந்திருக்கும் தெய்வீகக் காது குண்டலங்களை எனக்குக் கொண்டு வருவாயாக. அப்போது, நீ உன் ஆசானுக்குரியதை நன்கு கொடுத்ததாகும்” என்றாள்.(30)

ஓ! ஜனமேஜயா, “அவ்வாறே ஆகட்டும்” என்று அவளிடம் சொன்ன உதங்கர், தமது ஆசானின் மனைவிக்கு ஏற்புடையதைச் செய்வதற்கு அந்தக் காது குண்டலங்களைக் கொண்டுவரத் தீர்மானித்தார்.(31) பிராமணர்களில் முதன்மையானவரான உதங்கர், (வசிஷ்டரின் சாபத்தால்) மனிதவூனுண்ணியாக மாறி இருந்த சௌதாஸனிடம் அந்தக் காதுகுண்டலங்களை வேண்டிப் பெற எந்தத் தாமதமுமின்றிச் சென்றார்[2].(32)அதேவேளையில் கௌதமர், தமது மனைவியிடம், “இன்று உதங்கனைக் காணவில்லையே” என்று கேட்டார். இவ்வாறு கேட்கப்பட்ட அவள் (சௌதாஸனுடைய ராணியின்) காதுகுண்டலங்களைப் பெற அவர் சென்றிருப்பதைக் குறித்து அவரிடம் சொன்னாள்.(33)

இதன்பேரில் கௌதமர், “நீ விவேகத்துடன் செயல்படவில்லை. (வசிஷ்டரால்) சபிக்கப்பட்ட (மனித ஊனுண்ணியாக மாறியுள்ள) அந்த மன்னன் {சௌதாஸன்} நிச்சயம் உதங்கனைக் கொல்லப் போகிறான்” என்றார்.(34)

அஹல்யை, “ஓ! புனிதமானவரே, இதை அறியாமல் நான் இப்பணியில் உதங்கனை ஈடுபடுத்தினேன். எனினும், உமது அருளால் அவன் எந்த ஆபத்துக்கும் உள்ளாக மாட்டான்” என்றாள்.(35)

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமர், “அப்படியே ஆகட்டும்” என்றார். அதே வேளையில் உதங்கர், ஓர் ஆளரவமற்ற காட்டில் மன்னன் ஸௌதாஸனைச் சந்தித்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(36)

காதுகுண்டலங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 57- உதங்கரை உண்ண முயன்ற ஸௌதாஸன்; குருதக்ஷிணை அளித்துவிட்டுத் திரும்ப வருவதாகச் சொல்லி அவனது மனைவியின் குண்டலங்களை வேண்டிய உதங்கர்; குண்டலத்தின் சிறப்பைச் சொல்லி சௌதாசனின் அனுமதியை வேண்டிய ராணி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, பிராமணரான உதங்கர், பயங்கரம் நிறைந்த முகத்தோற்றத்துடனும், மனிதக் குருதியால் நனைந்திருந்த நீண்ட தாடியுடனும் கூடிய மன்னனைக் {ஸௌதாஸனை} கண்டும் கலக்கமடையவில்லை.(1) ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அச்சத்தைத் தூண்டுபவனும் இரண்டாவது யமனைப் போலத் தெரிந்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, எழுந்திருந்து உதங்கரிடம்,(2) “ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் நான் உணவு தேடிக் கொண்டிருக்கும்போது நற்பேற்றினாலேயே நீ என்னிடம் வந்தாய்” என்றான்.(3)

உதங்கர் {ஸௌதாஸனிடம்}, “ஓ! மன்னா, நான் என் ஆசானின் நிமித்தமாகத் திரிந்து கொண்டிருக்கும்போது இங்கே வந்தேன் என்பதை அறிவாயாக. ஒருவன் தன் ஆசானின் நிமித்தமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அவனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்று ஞானிகள் சொல்கின்றனர்” என்றார்.(4)

மன்னன் {ஸௌதாஸன்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் எனக்கான உணவு விதிக்கப்பட்டிருக்கிறது. நான் பசித்திருக்கிறேன். எனவே, இன்று நான் உன்னைத் தப்பவிட இயலாது” என்றான்.(5)

உதங்கர், “ஓ! மன்னா, அவ்வாறே ஆகட்டும். என்னுடன் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வாயாக. என் ஆசானுக்காகத் திரிவதை நான் நிறுத்திய பிறகு, நான் மீண்டும் உன்னிடம் வந்து, என்னை உன் ஆளுகையில் வைப்பேன்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, என் ஆசானுக்காக நான் வேண்டும் பொருள் உன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். எனவே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் அதை உன்னிடம் வேண்டுகிறேன்.(7) நீ மேன்மையான பிராமணர்களுக்கு நாள்தோறும் முதன்மையான ரத்தினங்களைக் கொடையளிக்கிறாய். ஓ! மனிதர்களின் தலைவா, கொடைகளை எவரிடம் இருந்து ஏற்கலாமோ அந்தக் கொடையாளியாக நீ இருக்கிறாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் முன் இருக்கும் நானும் ஈகைக்குத் தகுந்தவனே என்பதை அறிவாயாக.(8) ஓ! மன்னா, உன் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பொருளை என் ஆசானுக்கான கொடையாக ஏற்றுச் சென்று,(9) என் உடன்பாட்டின் விளைவால் மீண்டும் உன்னிடமே வந்து என்னை நான் உன் ஆதிக்கத்தின் கீழ் நிறுத்திக் கொள்வேன். இதை நான் உண்மையாகவே உனக்கு உறுதி கூறுகிறேன். இதில் பொய்ம்மையேதுமில்லை. கேலிக்காகக் கூட நான் இதற்கு முன் எப்போதும் பொய்யேதும் பேசியவனில்லை. அவ்வாறிருக்கையில் பிறந்த சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?” என்றார் {உதங்கர்}.(10)

ஸௌதாஸன், “உன் ஆசானுக்காக நீ வேண்டும் பொருளை என்னால் உன் கரத்தில் வைக்க முடியுமென்றால், கொடையேற்கத் தகுந்தவனாக நீ கருதப்படுகிறாய் என்றால், அந்தப் பொருள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)

உதங்கர், “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! சௌதாஸா, கொடைகளை எவரிடம் இருந்து பெறலாமோ என் கணிப்பின்படி அதற்கு மிகத் தகுந்தவன் நீ. எனவே, நான் (உனது ராணி அணிந்திருக்கும்) காது குண்டலங்களை இரந்து பெற உன்னிடம் வந்திருக்கிறேன்” என்றார்.(12)

ஸௌதாஸன், “ஓ! கல்விமானும், மறுபிறப்பாளனுமான முனிவா, அந்தக் காது குண்டலங்கள் என் மனைவிக்கு உரியவை. அவற்றை அவளிடமே கேட்க வேண்டும். எனவே, நீ என்னிடம் இருந்து வேறு ஏதாவது கேட்பாயாக. ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உனக்கு அதைக் கொடுப்பேன்” என்றான்.(13)

உதங்கர், “நமக்கு ஏதும் அதிகாரம் இருக்குமெனக் கருதப்பட்டால், இந்தச் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்துவாயாக. அந்தக் காது குண்டலங்களை எனக்குக் கொடுப்பாயாக. ஓ! மன்னா, வாக்கில் வாய்மை நிறைந்தவனாக இருப்பாயாக” என்றார்”.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன், மீண்டும் உதங்கரிடம், “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, என் சொல்லின் அடிப்படையில் மதிப்புமிக்க என் ராணியிடம் சென்று,(15) “கொடுப்பாயாக” என அவளிடம் கேட்பாயாக. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, தூய நோன்புகளைக் கொண்டவளான அவள் இவ்வாறு உன்னால் கேட்கப்பட்டால், என் ஆணையின் பேரில் அந்தக் காதுகுண்டலங்களை நிச்சயம் உனக்குக் கொடுப்பாள்” என்றான்.(16)

உதங்கர், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் ராணியை எங்கே சந்திக்க இயலும்? ஏன் நீயே அவளிடம் செல்லாமல் இருக்கிறாய்?” என்று கேட்டார்.(17)

ஸௌதாஸன், “நீ இப்போது அவளை ஒரு காட்டாற்றின் அருகில் காணலாம். நாளின் ஆறாவது காலமாகையால் என்னால் இன்று அவளைக் காண முடியாது” என்றான்”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் அந்த இடத்தை விட்ட அகன்றார். மதயந்தியைக் கண்டு, இக்காரியம் குறித்து அவளுக்குச் சொன்னார்.(19)

சௌதாஸனின் ஆணையைக் கேட்டவளும், அகன்ற கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண்மணி, ஓ! ஜனமேஜயா, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட உதங்கரிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்,(20) “ஓ! மறுபிறப்பாளரே, இஃது இவ்வாறே இருக்கிறது. எனினும், ஓ! பாவமற்றவரே, நீர் பொய் சொல்வதில்லை என்று எனக்கு உறுதிகூற வேண்டும். என் கணவரிடம் இருந்து ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவதே உமக்குத் தகும்.(21) மதிப்புமிக்க ரத்தினங்களால் செய்யப்பட்ட இந்தத் தெய்வீகக் காது குண்டலங்கள், அபகரித்துச் செல்லும் வாய்ப்புக்காகத் தேவர்கள், யக்ஷர்கள் மற்றும் பெரும் முனிவர்களாலும் எப்போதும் கண்காணிக்கப்படுவையாக இருக்கின்றன.(22) இந்த மதிப்புமிக்கப் பொருளை எந்தக் காலத்திலும் கீழே வைத்தால் நாகர்களால் இது களவாடப்படும். உண்பதன் விளைவால் தூய்மையற்றிருக்கும் ஒருவரால் அணியப்பட்டால் அது யக்ஷர்களால் எடுத்துக் கொள்ளப்படும். (இந்த மதிப்புமிக்கக் காதுகுண்டலங்களில் கவனம் இல்லாமல்) இவற்றை அணிந்திருப்பவர் உறங்கினால் தேவர்கள் அபகரித்துச் செல்வர்.(23) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அத்தகைய வாய்ப்புகள் அமையும்போது, விழிப்புணர்வற்றவர்களால் அணியப்பட்டால் தேவர்கள், ராட்சசர்கள் மற்றும் நாகர்களாலும் களவாடப்படக்கூடியவையா இந்தக் காது குண்டலங்கள் இருக்கின்றன.(24)

ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தக் காதுகுண்டலங்கள், இரவும் பகலும் தங்கத்தை உற்பத்தி செய்கின்றன. இறவில் நட்சத்திர மற்றும் விண்மீன் கூட்டங்களின் கதிர்களை ஈர்க்கும் வகையில் அவை பிரகாசமாக ஒளிர்கின்றன.(25) ஓ! புனிதமானவரே, இவற்றை அணிபவர் எவரும், பசி, தாகம் மற்றும் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவர். இந்தக் காது குண்டலங்களை அணிபவர், நஞ்சு, நெருப்பு மற்றும் அனைத்து வகை ஆபத்துகளில் எழும் அச்சங்களில் இருந்தும் விடுபடுவர்.(26) குட்டையான ஒருவர் அணிந்தால் இவை சிறியனவாகும். நெட்டையான ஒருவன் அணிந்தால் இவை அளவில் வளரும்.(27) என்னுடைய இந்தக் காது குண்டலங்கள் இத்தகைய குணங்களைக் கொண்டவையாகும். இவை எங்கும் புகழவும், மதிக்கவும் படுகின்றன. உண்மையில், இவை மூவுலகங்களில் அறியப்பட்டிருக்கின்றன. எனவே, (என் கணவரிடமிருந்து) ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவீராக” என்றாள் {மதயந்தி}.(28)

நாகலோகம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 5-அடையாளம் பெற்று வந்து ராணியிடம் கொடுத்துக் குண்டலங்களைப் பெற்ற உதங்கர்; குண்டலங்களைக் கவர்ந்து சென்ற நாகன்; இந்திரனின் துணையால் நாகலோகம் சென்று அவற்றைப் பெற்றது; அஹல்யையிடம் குண்டலங்களைக் கொடுத்த உதங்கர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}“உதங்கர், தன் நண்பர்களிடம் எப்போதும் நல்ல மனநிலையில் உள்ள மன்னன் சௌதாஸனிடம் திரும்பி, (தாம் உண்மையில் மன்னனிடம் இருந்தே வந்தார் என்று மதயந்தியை நம்பச் செய்ய) ஏதாவதொரு அடையாளத்தைத் தருமாறு வேண்டினார். இக்ஷாகு குலத்தில் முதன்மையான அவன் ஓர் அடையாளத்தை அவரிடம் கொடுத்தான்.(1)

ஸௌதாஸன், “என்னுடைய தற்போதைய நிலை பொறுக்கமுடியாததாகும். வேறெந்த புகலிடத்தையும் நான் காணவில்லை. என் விருப்பம் இதுவென அறிந்து காதுகுண்டலங்களை நீ கொடுப்பாயாக[1]” என்றான்.(2)மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் ராணியிடம் சென்று, அவளுடைய தலைவனின் சொற்களைச் சொன்னார். இந்தச் சொற்களைக் கேட்ட ராணி உதங்கரிடம் தன் காது குண்டலங்களைக் கொடுத்தாள்.(3) காது குண்டலங்களைப் பெற்றுக் கொண்ட உதங்கர் மன்னனிடம் {ஸௌதாஸனிடம்} திரும்ப வந்து அவனிடம், “ஓ! ஏகாதிபதி, ராணிக்கு அடையாளமாக நீ சொல்லி அனுப்பிய அந்தப் புதிரான சொற்களின் பொருளை நான் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(4)

ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “படைப்பின் தொடக்கத்திலிருந்தே க்ஷத்திரியர்கள் பிராமணர்களை மதிப்பது காணப்படுகிறது. எனினும், (க்ஷத்திரியர்களின் பங்கிற்கு) பிராமணர்களிடம் பல குற்றங்களும் எழுகின்றன.(5) என்னைப் பொறுத்தவரையில் நான் எப்போதும் அவர்கள் முன்பு பணிவுடன் இருந்தேன். நான் ஒரு பிராமணரின் மூலமே துன்பத்தில் மூழ்கினேன். மதயந்தியைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை.(6) உண்மையில், ஓ! உயர்ந்த இலக்கைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, சொர்க்கத்தின் வாயில்களை அடைவதற்கோ, இங்கே தொடர்வதற்கோ வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை.(7) பிராமணர்களுடன் பகைமை பாராட்டும் மன்னன் இம்மையில் தொடர்ந்து வாழ்வதும், மறுமையில் இன்பத்தை அடைவதும் சாத்தியமற்றதாகும்.(8) எனவே நான் உன்னால் விரும்பப்படும் காதுகுண்டலங்களை உனக்குக் கொடுத்தேன்[2]. நீ இன்று என்னுடன் செய்து கொண்ட உடன்பாட்டைக் காப்பாயாக” என்றான் {சௌதாசன்}.(9)உதங்கர் {சௌதாசனிடம்}, “ஓ! மன்னா, நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியின்படியே நிச்சயம் நடப்பேன். நான் உண்மையில் திரும்பி வந்து என்னை உன் ஆளுகையின் கீழ் நிறுத்திக் கொள்வேன். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி உண்டு” என்றார்.(10)

ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “ஓ! கல்விமானான பிராமணா, உன் மனத்தில் இருப்பதைச் சொல்வாயாக. உன் சொற்களுக்கு நிச்சயம் நான் மறுமொழி கூறுவேன். உன் மனத்தில் இருக்கும் ஐயம் எதையும் நான் விலக்குவேன். இதில் எனக்குத் தயக்கமேதும் இல்லை” என்றான்.(11)

உதங்கர் {சௌதாசனிடம்}, “கடமைகளின் விதிகளில் திறம்பெற்றோர், பிராமணர்கள் கட்டுப்பாடுடைய வாக்கைக் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். நண்பர்களிடம் தவறாக நடந்து கொள்பவன் கள்வனைப் போன்ற ஒரு தீயவனாகக் கருதப்படுகிறான்[3].(12) ஓ! மன்னா, நீ இன்று என் நண்பனானாய். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனையை எனக்குச் சொல்வாயாக.(13) என்னைப் பொறுத்தவரையில் நான் என் விருப்பங்கள் கனிந்த நிலையை அடைந்துவிட்டேன். நீயோ மனித ஊனுண்ணியாக இருக்கிறாய். நான் உன்னிடம் திரும்பி வருவது முறையா? திரும்பி வராமல் போவது முறையா?” என்று கேட்டார்.(14)ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “ஓ! மேன்மையான பிராமணர்களில் முதன்மையானவனே, நீ கேட்டதை (நான்) முறையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, நீ என்னிடம் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று உனக்குச் சொல்வேன்.(15) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, இவ்வாறு செயல்படுவதன் மூலம், நீ உனக்கு நன்மையானதை அடைவாய். ஓ! கல்விமானான பிராமணா, நீ திரும்பி வந்தால் நிச்சயம் மரணத்தையே அடைவாய்” என்றான்”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நுண்ணறிவுமிக்க மன்னனால் இவ்வாறு தமக்கு நன்மையானது சொல்லப்பட்ட உதங்கர், அந்த ஏகாதிபதியிடம் இருந்து அகன்று அஹல்யையிடம் செல்லப் புறப்பட்டார்.(17) தமது ஆசானின் மனைவிக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய அவர் தம்முடன் காதுகுண்டலங்களை எடுத்துக் கொண்டு கௌதமரின் ஆசிரமத்தை அடைவதற்காகப் பெரும் வேகத்துடன் சென்றார்.(18) மதயந்தி சொன்ன முறையிலேயே அவற்றைக் கருப்பு மான்தோலில் {கிருஷ்ணாஜினத்தில்} மடித்துக் கட்டி {முடிந்துக்} கொண்டு பாதுகாப்புடன் தன் வழியில் சென்றார்.(19) சிறிது தொலைவு சென்றதும் அவர் பசியால் பீடிக்கப்பட்டார். அங்கே (கனிந்த) கனிகளின் எடையால் வளைந்திருந்த ஒரு வில்வ மரத்தை அவர் கண்டார். அவர் அந்த மரத்தில் ஏறினார்.

ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், தன்னுடைய மான்தொலை ஒரு கிளையில் தொங்கவிட்டு, சில கனிகளைப் பறிக்கத் தொடங்கினார்.(21) கனிகளில் கண்களைச் செலுத்தி அவற்றைப் பறிப்பதில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா, அவற்றில் சில அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் கவனமாகக் கட்டி வைக்கப்பட்டதும், காது குண்டலங்களோடு கூடியதுமான அந்த மான்தோல் மீதும் விழுந்தன. அந்தக் கனிகளால் அடிக்கப்பட்டு அதன் முடி தளர்ந்தது.(22,23) திடீரெனக் காதுகுண்டலங்களோடு கூடிய அந்த மான்தோல் கீழே விழுந்தது. முடி அவிழ்ந்து மான்தோல் கீழே விழுந்தபோது, அங்கே இருந்த ஒரு பாம்பு அந்தக் காது குண்டலங்களைக் கண்டது.(24) அந்தப் பாம்பு ஐராவதன் குலத்தைச் சேர்ந்ததாகும். பேராவலுடன் தன் வாயில் காது குண்டலங்களைக் கவ்வி கொண்டு அஃது {பாம்பு}  ஓர் எறும்புப்புற்றுக்குள் நுழைந்தது.

அந்தப் பாம்பால் காது குண்டலங்கள் அபகரிக்கப்பட்டதைக் கண்ட உதங்கர்,(25,26) கோபத்தில் நிறைந்து, மனத்தில் பெருங்கவலையுடன் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். தன் தடியை எடுத்துக் கொண்டு அந்த எறும்புப்புற்றை அவர் துளைக்கத் தொடங்கினார்.(27) கோபத்திலும், பழிவாங்கும் விருப்பத்திலும் எரிந்து கொண்டிருந்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், முப்பத்தைந்து நாட்கள் தம்மை அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.(28) உதங்கருடைய கைத்தடியின் சக்தியைப் பொறுக்க முடியாத பூமாதேவி அதனால் உடல்கிழிந்தவளாக மிகவும் துன்புற்றாள்.(29) நாகர்கள் வசிக்கும் பாதாள லோகத்திற்குப் பாதையை அமைக்கும் விருப்பத்தில் பூமியைத் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருந்த அந்த மறுபிறப்பாள முனிவர் இருந்த இடத்திற்கு,(30) வஜ்ரதாரியான தேவர்களின் தலைவன் {இந்திரன்} பச்சைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் வந்தான். பெரும் சக்தியுடன் கூடிய அவன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரைக் கண்டு அங்கே அமர்ந்தான்”.(31)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உதங்கரின் துன்பத்தால் பீடிக்கப்பட்ட ஒரு பிராமணராக வேடம் தரித்துக் கொண்டு தேவர்களின் தலைவன் அவரிடம், “இது (உமது காரியம்) நிறைவேற்றப்பட இயலாதது.(32) நாகர்களின் உலகம் இவ்விடத்தில் இருந்து ஆயிரம் யோஜனைகளுக்கு அப்பால் இருக்கிறது. உமது கைத்தடியைக் கொண்டு இக்காரியத்தைச் சாதிக்க இயலாதென நான் நினைக்கிறேன்” என்றான்.(33)

உதங்கர், “ஓ! பிராமணரே, ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நாகலோகத்தில் இருந்து என்னால் அந்தக் காதுகுண்டலங்களை மீட்க முடியாமல் போனால் உமது கண்களுக்கு முன்னிலையிலேயே நான் என் உயிர் மூச்சுகளைக் கைவிடுவேன்” என்றார்”.(34)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “வஜ்ரதாரியான இந்திரன், உதங்கரைத் தமது நோக்கத்தில் இருந்து திசைத்திருப்பத்தவறி போது, அவரது கைத்தடியில் வஜ்ரத்தின் சக்தியை இணைத்தான்.(35) அப்போது, ஓ! ஜனமேஜயா, வஜ்ரத்தின் சக்தியுடன் கூடிய அந்தத் தாக்குதலால் திறந்த பூமி, நாகர்கள் வசிக்கும் (பாதாள) உலகங்களுக்குச் செல்ல வழிகொடுத்தது.(36) அந்தப் பாதையின் மூலம் உதங்கர் நாகலோகத்திற்குச் சென்றார். அந்த உலகம் அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான யோஜனைகள் விரிந்திருப்பதை அவர் கண்டார்.(37) உண்மையில், ஓ! அருளப்பட்டவனே, உண்மையில் அது பசும்பொன்னால் அமைக்கப்பட்டவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பல சுவர்களுடன் கூடியதாக இருந்தது.(38)

தூய ஸ்படிகத்தால் அமைக்கப்பட்ட படிகளுடன் கூடிய பல சிறந்த தடாகங்களும், தூய, தெளிந்த நீரைக் கொண்ட பல ஆறுகளும் அங்கே இருந்தன. பல்வேறு வகைப் பறவைகள் அமர்ந்திருக்கும் பல மரங்களையும் அவர் அங்கே கண்டார்.(39) பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரான அவர், முழுமையாக ஐந்து யோஜனைகள் உயரமும், நூறு யோஜனைகள் அகலமும் கொண்ட அந்த உலகத்தின் வாயிலைக் கண்டார்.(40) நாகர்களின் உலகத்தைக் கண்ட உதங்கர் உற்சாகமிழந்தவரானார். உண்மையில், காதுகுண்டலங்களைத் திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர் மனத்தளர்ச்சியடைந்தார்.(41) அப்போது வெள்ளை வால் கொண்ட ஒரு கருப்புக் குதிரை அவர் முன்பு தோன்றியது. ஓ! குரு குலத்தவனே {ஜனமேஜயா}, அதன் முகமும் கண்களும் தாமிர வண்ணத்தில் இருந்தன. அது சக்தியால் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(42)உதங்கரிடம் பேசிய அஃது, “என்னுடலின் அபானக் குழாயில் {குதத்தில்} ஊதுவாயாக. ஓ! கல்விமானான பிராமணா, அப்போது ஐராவத குலத்தின் வழித்தோன்றலால் அபகரிக்கப்பட்ட உன் காதுகுண்டலங்களை நீ மீண்டும் பெறுவாய்.(43) ஓ! மகனே, நான் சொல்வதைச் செய்வதில் வெறுப்படைய வேண்டாம். முற்காலத்தில், கௌதமரின் ஆசிரமத்தில் நீ இதையே அடிக்கடி செய்துவந்தாய்” என்றது.(44)

உதங்கர், “என் ஆசானின் ஆசிரமத்தில் நான் எவ்வாறு உன்னை அறிந்தேன்? உண்மையில், நீ இப்போது செய்யச் சொன்னதை அந்தக் காலத்தில் நான் எவ்வாறு செய்தேன் என்பதைக் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(45)

அந்தக் குதிரை, “ஓ! கல்விமானான பிராமணா, நானே ஜாதவேதஸ் (நெருப்பின் தேவன் {அக்னி}) என்பதால், உன் ஆசானின் ஆசான் நானே என்பதை அறிவாயாக. உன் ஆசானின் நிமித்தமாக நீ அடிக்கடி என்னை வழிபட்டாய்.(46) ஓ! பிருகு குலத்தின் குழந்தாய், தூய இதயம் மற்றும் உடலுடன் முறையாக நீ அதைச் செய்தாய். அந்தக் காரணத்தினாலேயே நான் உனக்கான நன்மையைச் செய்யப் போகிறேன். தாமதமில்லாமல் நான் சொன்னதைச் செய்வாயாக” என்றது.(47)

நெருப்பின் தேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், அவன் சொன்னவாறே செய்தார். அவரிடம் நிறைவடைந்த அந்தத் தேவன் அனைத்தையும் விழுங்குவதற்குச் சுடர்விட்டு எரிந்தான்.(48) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவனது உடலின் துளைகளில் இருந்து, அவனது இயல்பின் விளைவால், நாகலோகத்தையே அச்சுறுத்தும் அடர்த்தியான புகை எழுந்தது.(49) ஓ! பாரதா, பரந்துவிரியும் அந்தப் பெரும் புகையால் அனைத்தும் இருளுக்குள் மூழ்கின. ஓ! மன்னா, நாகலோகத்தில் அதற்கு மேல் எதையும் காணமுடியவில்லை.(50) ஓ! ஜனமேஜயா, ஐராவதர்களின் மாளிகைகள் முழுவதிலும் வாசுகியின் தலைமையிலான நாகர்களின் துன்ப ஓலம் கேட்டது.(51)

ஓ! பாரதா, அந்தப் புகையால் சூழப்பட்ட மாளிகைகளை அதற்கு மேலும் காண முடியவில்லை. அவை அடர்பனியில் மூழ்கியிருந்த காடுகளுக்கும், மலைகளுக்கு ஒப்பாக இருந்தன.(52) நெருப்பின் தேவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்டவர்களும், அந்தப் புகையின் விளைவால் கண்கள் சிவந்தவர்களுமான நாகர்கள், என்ன காரியம் என்பதை உறுதி செய்வதற்காகப் பிருகு குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்ம மைந்தரிடம் வந்தனர்.(53) அளவற்ற சக்தி கொண்ட அந்தத் தவசியிடம் இருந்து காரியத்தைக் கேட்ட நாகர்கள் அனைவரும் தங்கள் கண்களில் அச்சம் தெரிய, உரிய வடிவில் தங்கள் வழிபாட்டை அவருக்குக் காணிக்கையாக்கினர்.(54) உண்மையில், முதியவர்களையும், குழந்தைகளையும் தங்கள் முன் நிறுத்திக் கொண்ட நாகர்கள் அனைவரும் அவருக்குத் தலைவணங்கிக் கூப்பிய கைகளுடன், அவரிடம், “ஓ! புனிதமானவரே, எங்களிடம் நிறைவடைவீராக” என்றனர்.(55) அந்தப் பிராமணரை நிறைவடையச் செய்து, அவரது பாதங்களைக் கழுவி கொள்ள நீர் கொடுத்து, (அவரைக் கௌரவிக்க) அர்க்கிய உட்பொருட்களையும் கொடுத்து, தெய்வீகமானவையும், உயர்ந்த புகழைக் கொண்டதுமான அந்தக் காதுகுண்டலங்களையும் நாகர்கள் அவரிடம் கொடுத்தனர்.(56)பேராற்றல் கொண்ட உதங்கர், அவர்களால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, நெருப்பின் தேவனை வலம் வந்து, தமது ஆசானின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்.(57) உண்மையில், ஓ! மன்னா, கௌதமரின் ஆசிரமத்திற்கு விரைவாகத் திரும்பிய அவர், ஓ! பாவமற்றவனே, தமது ஆசானின் மனைவியிடம் அந்தக் காதுகுண்டலங்களைக் கொடுத்தார்.(58) அந்தப் பிராமணர்களில் சிறந்தவர் வாசுகி மற்றும் பிற நாகர்கள் குறித்தும், முன் நேர்ந்தவை குறித்தும் தமது ஆசானிடம் தெரிவித்தார்.(59) ஓ! ஜனமேஜயா, இவ்வாறே உயர் ஆன்ம உதங்கர் மூவுலகங்களிலும் திரிந்து (தமது ஆசானின் மனைவிக்காக) அந்தக் காது குண்டலங்களைக் கொண்டு வந்தார்.(60) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவசியான உதங்கர் இத்தகைய ஆற்றலைக் கொண்டவராவார். அவ்வளவு கடுமையான தவங்களை அவர் செய்தவராவார். நீ கேட்டதை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}[4].(61)

ரைவதகத் திருவிழா! – அஸ்வமேதபர்வம் பகுதி – 59-ரைவதக மலைக்குச் சென்ற கிருஷ்ணன்; அங்கு நடந்த விளையாட்டுகள்; துவாரகைக்கு வந்து பெற்றோரை வணங்கிய கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உதங்கருக்கு வரமளித்த பிறகு வலிமைமிக்கக் கரங்களையும், பெரும்புகழையும் கொண்ட கோவிந்தன் அடுத்து என்ன செய்தான்?” என்று கேட்டான்.(1)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}“உதங்கருக்கு வரமளித்த கோவிந்தன், சாத்யகியின் துணையுடன், பெரும் வேகம் கொண்ட பெரிய குதிரைகளால் இழுக்கப்பட்ட தன் தேரில் துவாரகைக்குச் சென்றான்.(2) தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் மலைகளைக் கடந்து சென்ற அவன், இறுதியாக இனிமை நிறைந்த துவாராவதி நகரத்தை அடைந்தான்.(3) ஓ! மன்னா, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} தன் தோழனான சாத்யகியுடன் ரைவதகத்திற்கு வந்த நேரத்தில் அங்கே திருவிழா {ரைவதக உற்சவம்} தொடங்கியிருந்தது.(4) ஓ! மன்னா, அந்த ரைவதக மலை பல அழகிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்டும், ரத்தினங்களால் செய்யப்பட்ட பல்வேறு கோஷங்களால் {கவசங்களால்} மறைக்கப்பட்டும் பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(5)

அந்த உயர்ந்த மலை, சிறந்த தங்க மாலைகளாலும், அழகிய மலர்த்தோரணங்களாலும், இந்திரனின் தோட்டத்தில் உள்ள கல்ப மரங்களைப் போலத் தெரிந்த பெரும் மரங்கள் பலவற்றாலும்,(6) பகலும் இரவும் அழகுடன் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்ட தங்கத் தூண்கள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குகைகள் மற்றும் அருவிகள் இருந்த இடங்கள் பகல் நேரத்தைப் போல எப்போதும் பேரொளியுடன் திகழ்ந்தன.(7) அனைத்துப் பக்கங்களிலும் சிறு மணிகளுடன் கூடிய அழகிய கொடிகள் தொடர்ந்து கிங்கிணி ஒலியுடன் காற்றில் பறந்து கொண்டிருந்தன. மொத்த மலையும் ஆண்கள் மற்றும் பெண்களின் மெல்லிசைப் பாடல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) ரைவதகம் அனைத்து ரத்தினங்களுடன் மேரு போன்று மிகக் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. ஓ! பாரதா, மகிழ்ச்சியில் நிறைந்தத் திளைப்பில் இருந்த ஆண்களும், பெண்கள் உரக்கப் பாடினார்கள்.(9) 

அந்த முதன்மையான மலையில் இவ்வாறு எழுந்த இசைப் பெருக்கம் சொர்க்கங்களையே எட்டுவதாகத் தோன்றியது. உற்சாகத்தின் அனைத்து நிலைகளிலும் இருந்த மனிதர்களின் ஒலிகளும், உரத்த குரல்களும் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தன.(10) ஆயிரக்கணக்கான குரல்களின் கொக்கரிப்பு அந்த மலையை இனிமை நிறைந்ததாகவும், அழகானதாகவும் ஆக்கியது. பல்வேறு உணவுப் பொருட்களும், அனுபவிக்கத்தகுந்த பொருட்களும் நிறைந்த பல கடைகள் மற்றும் நிலையங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(11) துணிகள் மற்றும் மாலைகளின் குவியல்களும் ஆங்காங்கே கிடந்தன, வீணைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் இசை எங்கும் கேட்கப்பட்டன. பல்வேறு வகை மதுபானங்கள் {கள் மற்றும் சாராயம்} கலந்த உணவு ஆங்காங்கே தேக்கப்பட்டிருந்தன.(12) 

துன்பமடைந்தவர்கள், குருடர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இடைவிடாமல் கொடைகள் வழங்கப்பட்டன. இவையாவற்றின் விளைவால் அந்த மலையின் திருவிழா மங்கலம் நிறைந்ததாக இருந்தது.(13) ஓ! வீரா, அறச்செயல்கள் செய்யும் மனிதர்கள் பலர் வசிப்பதற்குரிய புனித வசிப்பிடங்கள் பலவும் அந்த மலையின் சாரலில் கட்டப்பட்டிருந்தன. இவ்வாறே ரைவதகத் திருவிழாவில் விருஷ்ணி குல வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.(14) அந்த மாளிகைகளுடன் கூடிய அந்த மலை இரண்டாவது சொர்க்கத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வந்ததும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா,(15) அந்த மலைகளின் இளவரசன் இந்திரனின் அருளப்பட்ட வசிப்பிடத்திற்கு ஒப்பானது.

(தன் உறவினர்களால்) வழிபடப்பட்டவனான கிருஷ்ணன் ஓர் அழகிய மாளிகைக்குள் நுழைந்தான். சாத்யகியும் திளைத்த ஆன்மாவுடன் தன் பகுதிக்குள் நுழைந்தான். தானவப் படைக்கு மத்தியில் வாசவனைப் போலப் பெருங்கடின சாதனைகளை நிறைவேற்றிய கோவிந்தன், நீண்ட காலம் இல்லாத பிறகு தன் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான். போஜ, விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வீரர்கள் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} வரவேற்க முன்னேறும் தேவர்களைப் போல அந்த உயர் ஆன்மாவை {கிருஷ்ணனை} வரவேற்க முன்வந்தனர்.(16-18) 

பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான அவன், பதிலுக்கு அவர்களைக் கௌரவித்து, அவர்களுடைய நலம் குறித்து விசாரித்தான். நிறைவடைந்த இதயத்துடன் கூடிய அவன் {கிருஷ்ணன்} தன் தாயையும் தந்தையையும் வணங்கினான்.(19) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன் அவர்கள் இருவரையும் தழுவிக் கொண்டு (எண்ணற்ற அன்புச் சான்றுகளின் மூலம்) அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் செய்தான். பிறகு அவன், தன்னைச் சூழ்ந்து அமர்ந்திருந்த விருஷ்ணிகளுடன் சேர்ந்து அமர்ந்தான்.(20) தன் கால்களைக் கழுவி களைப்பை விலக்கியவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான கிருஷ்ணன் அங்கே அமர்ந்த போது, தன் தந்தையால் {வசுதேவரால்} தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்தப் பெரும்போரின் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

போர்ச்சுருக்கம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 60- போர் குறித்த விபரம் கேட்ட வசுதேவர்; பதினெட்டு நாட்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரை மிகச் சுருக்கமாகச் சொன்ன கிருஷ்ணன்; வருத்தமடைந்த விருஷ்ணிகள்.

வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, (குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற) அற்புதம் நிறைந்த போரைக் குறித்து மனிதர்கள் பேசுவதை நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.(1) எனினும், ஓ! வலிமைநிறைந்த கரங்களைக் கொண்டவனே, நீ உன் கண்களாலேயே அதைக் கண்டிருக்கிறாய். எனவே, ஓ! பாவமற்றவனே, அந்தப் போரைக் குறித்து விரிவாக நீ விளக்குவாயாக.(2) உண்மையில், (ஒரு தரப்பில் இருந்த) உயர் ஆன்ம பாண்டவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர், சல்லியன் மற்றும் பிறர் ஆகியோருக்கிடையிலும்,(3) உண்மையில் முகத்தோற்றம் மற்றும் ஆடைகளில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற வெவ்வேறு க்ஷத்திரியர்களுக்கிடையிலும் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார் {வசுதேவர்}”.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, தன் தாயாரின் {தேவகியின்} முன்னிலையில், தன் தந்தையால் {வசுதேவரால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், போரில் கௌரவ வீரர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை உரைத்தான்.(5)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களால் அடையப்பட்ட சாதனைகள் உயர்ந்த அற்புதம் நிறைந்தவையாகும். பெரும் எண்ணிக்கையில் இருந்ததன் விளைவால், நூறு வருடங்களானாலும் அவர்களைப் பட்டியலிட இயலாது.(6) எனினும், நான் அவர்களில் முதன்மையானோரைக் குறித்து மட்டுமே சொல்லப் போகிறேன். எனவே, ஓ! தேவரைப் போன்ற காந்தியைக் கொண்டவரே, பூமியின் மன்னர்களால் அடையப்பட்ட அந்தச் சாதனைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(7)

தேவர்ப்படையில் வாசவனைப் போல, குரு குலத்தின் பீஷ்மர், பதினோரு பிரிவுகளாக {அக்ஷௌஹிணிகளாக}[1] இருந்த கௌரவ இளவரசர்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட படைத்தலைவரானார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சிகண்டி, அருள்நிறைந்த அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்டவனாகப் பாண்டு மகன்களின் ஏழு பிரிவுகளுக்கு {அக்ஷௌஹிணிகளுக்குத்} தலைவனானான்.(9) (இந்தத் தலைவர்களின் கீழ்) குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது பத்து நாட்கள் நீடித்தது. அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையானதாக இருந்தது.(10) பிறகு, பெரும்போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} துணையைக் கொண்ட சிகண்டி, துணிவுடன் போரிட்டுக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எண்ணற்ற கணைகளைக் கொண்டு வீழ்த்தினான்.(11) வீரரான பீஷ்மர், தெற்கு நோக்கிய பாதையில் இருந்து சூரியன் வடக்குப் போக்கில் நுழையும் வரை ஒரு தவசியைப் போலக் கணைப்படுக்கையில் காத்திருந்து தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டார்.(12)பிறகு, ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், தைத்தியர்களின் தலைவனுக்குக் காவியரை {சுக்கிராச்சாரியரைப்} போன்றவரும், துரியோதனனின் கீழ் இருந்த மனிதர்களில் பெரியவருமான துரோணர் படைத்தலைவரானார்.(13) போரில் தமதாற்றல் மீது எப்போதும் செருக்கு கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், கௌரவப்படையில் எஞ்சியிருந்த ஒன்பது அக்ஷௌஹிணிகளாலும் ஆதரிக்கப்பட்டு, கிருபர், விருஷன் {கர்ணன்} மற்றும் பிறரால் பாதுகாக்கப்பட்டார்.(14) வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பாண்டவர்களின் தலைவனானான். மித்ரனால் பாதுகாக்கப்பட்ட வருணனைப் போல அவன் பீமரால் பாதுகாக்கப்பட்டான்.(15) தன் பலத்தை எப்போதும் துரோணருடன் அளவிட விரும்பும் அந்த உயர் ஆன்ம வீரன் {திருஷ்டத்யும்னன்}, (எஞ்சியிருந்த) பாண்டவப் படையால் ஆதரிக்கப்பட்டு, தன் தந்தைக்கு (பாஞ்சாலர்களின் மன்னனான துருபதனுக்குத் துரோணரால்) இழைக்கப்பட்ட குற்றங்களை நிறைவு கூர்ந்து, போரில் பெரும் சாதனைகளைச் செய்தான்.(16) துரோணருக்கும், பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலில் பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து அங்கு திரண்டிருந்த மன்னர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டனர்.(17) அந்தக் கடும்போர் ஐந்து நாட்கள் நீடித்தது. அந்தக் காலத்தின் இறுதியில் திருஷ்டத்யும்னனிடம் துரோணர் வீழ்ந்தார்.(18)

அதன்பிறகு, துரியோதனனின் படைக்குக் கர்ணன் படைத்தலைவனானான். கௌரவப் படையில் எஞ்சியிருந்த ஐந்து அக்ஷௌஹிணிகளால் போரில் அவன் ஆதரிக்கப்பட்டான்.(19) பாண்டவர்களிடம் அப்போது மூன்று அக்ஷௌஹிணிகள் இருந்தன. எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனனால் பாதுகாப்பட்ட அவர்கள் போரிட வந்தனர்.(20) சூதனின் மகனான கர்ணன், சீற்றமிகு போர்வீரனாக இருப்பினும், சுடர்மிக்க நெருப்புடன் மோதும் ஒரு பூச்சியைப் போல இரண்டாம் நாளில் தன் முடிவை அடைந்தான்.(21)

கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு உற்சாகத்தை இழந்த கௌரவர்கள் தங்கள் சக்தி அனைத்தையும் இழந்தனர். எண்ணிக்கையில் மூன்று அக்ஷௌஹிணிகளாக இருந்த அவர்கள், மத்ர ஆட்சியாளனை {சல்லியனைச்} சூழ்ந்து திரண்டனர்.(22) தேர்வீரர்கள் பலரையும், யானைகளையும், குதிரைவீரர்களையும் இழந்து எண்ணிக்கையில் ஓர் அக்ஷௌஹிணியாக எஞ்சியிருந்த பாண்டவப் படை உற்சாகத்தை இழந்தவர்களாக (தங்கள் தலைவரான) யுதிஷ்டிரரை ஆதரித்தனர்.(23) குரு மன்னனான யுதிஷ்டிரர், தொடர்ந்து நடந்த போரில் செயற்கரிய சாதனைகளைச் செய்து, அரை நாளுக்கு முன்பே மத்ரர்களின் மன்னனை {சல்லியனைக்} கொன்றார்.(24)

சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட உயர் ஆன்ம சகாதேவன், (பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில்) சச்சரவை உண்டாக்கிய சகுனியைக் கொன்றான்.(25)

சகுனியின் வீழ்ச்சிக்குப் பிறகு, பேரிழப்பை அனுபவித்த படையைக் கொண்டவனும், அதன் காரணமாக உற்சாகத்தை இழந்தவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரரின் அரச மகன் {துரியோதனன்} களத்தைவிட்டுத் தப்பி ஓடினான்.(26) அப்போது பேராற்றலைக் கொண்ட பீமசேனர், கோபத்தால் நிறைந்து அவனைத் தொடர்ந்து சென்று துவைபாயனத் தடாகத்தின் நீருக்கடியில் அவனைக் கண்டுபிடித்தார்.(27) எஞ்சியிருந்த தங்கள் படையுடன் கூடிய பாண்டவர்கள் அந்தத் தடாகத்தைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக நீருக்குள் மறைந்திருந்த துரியோதனனிடன் போரிட்டனர்.(28) அவர்களுடைய சொற்கணைகள் நீருக்குள் ஊடுருவிச் சென்று துரியோதனனைத் துளைத்தன. அந்தத் தடாகத்தில் இருந்து எழுந்த அவன் {துரியோதனன்}, போரிட விரும்பியவனாகக் கதாயுதம் தரித்துப் பாண்டவர்களை அணுகினான்.(29) அப்போது தொடர்ந்து நடந்த பெரும்போரில் பல மன்னர்களின் முன்னிலையில் பேராற்றலை வெளிப்படுத்திய பீமசேனரால் திருதராஷ்டிரரின் அரச மகன் கொல்லப்பட்டான்.(30)

அதன்பிறகு எஞ்சியிருந்த பாண்டவப் படையினர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்தபோது, (திருஷ்டத்யும்னன் கைகளால்) தன் தந்தை கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ளப்பட முடியாத துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} அந்த இரவு நேரத்தில் கொல்லப்பட்டனர்.(31) மகன்கள் கொல்லப்பட்டவர்களும், படைகள் கொல்லப்பட்டவர்கள், நண்பர்கள் கொல்லப்பட்டவர்களுமான பாண்டவர்கள் ஐவரும், நானும், யுயுதானனும் {சாத்யகியும்} மட்டுமே உயிருடன் இருக்கிறோம்.(32) கௌரவப்படையில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்கள், கிருபர், போஜ இளவரசனான கிருதவர்மன்மற்றும்துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}ஆகியோராவர். திருதராஷ்டிரரின் மகனான யுயுத்சுவும் பாண்டவர்களின் தரப்பை ஏற்றதால் கொல்லப்படாமல் தப்பினான்.(33)

கௌரவ மன்னன் (சுயோதனன்) தன் தொண்டர்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்ட பிறகு, விதுரரும், சஞ்சயனும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் முன்னிலைக்கு வந்தனர்.(34) இவ்வாறே, ஓ! தலைவரே, அந்தப் போர் பதினெட்டு நாட்கள் நீடித்தது. பூமியின் மன்னர்கள் பலர் அங்கே கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்” என்றான் {கிருஷ்ணன்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரக் கதையைக் கேட்ட விருஷ்ணிகள், துயரம், சோகம் மற்றும் வருத்தத்தால் நிறைந்தனர்”.(36)

சுபத்திரையின் ஒப்பாரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 61-அபிமன்யு கொல்லப்பட்டதைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட சுபத்திரை; அபிமன்யு வதத்தைக் கேட்டு மயக்கமடைந்த வசுதேவர்; வசுதேவரைத் தேற்றிய கிருஷ்ணன்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பேராற்றல் கொண்ட உயர் ஆன்மாவான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தந்தையின் {வசுதேவரின்} முன்னிலையில் பாரதர்களின் பெரும்போரைச் சொல்லி முடித்த பிறகு, அபிமன்யு கொல்லப்பட்டதை அந்த வீரன் {கிருஷ்ணன்} சொல்லாமல் கடந்து செல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. இனிமையற்ற எதையும் தன் தந்தை கேட்க வேண்டாம் என்பதே அந்த உயர் ஆன்மாவின் நோக்கமாக இருந்தது.(1,2) உண்மையில், தன் தந்தையான வசுதேவர், தமது மகளின் {சுபத்திரையின்} மகனுடைய மரணத்தைச் சொல்லும் பயங்கரச் செய்தியைக் கேட்டு கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்படுவதை நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணன் விரும்பவில்லை.(3)

(அவனது தங்கையான) சுபத்திரை, தன் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்டது சொல்லப்படாததைக் கண்டு தன் அண்ணனிடம், “ஓ! கிருஷ்ணா {அண்ணா}, என் மகன் இறந்ததைச் சொல்” என்று சொல்லி விட்டு (மயங்கி) பூமியில் விழுந்தாள்.(4) வசுதேவர், தம் மகள் பூமியில் விழுவதைக் கண்டார். அதைக் கண்டதும் அவரும், துயரத்தில் மதி மயங்கியவராகக் கீழே விழுந்தார்.(5)

(உணர்வுகள் மீண்ட) வசுதேவர், தமது மகளின் மகனுடைய {தம் பேரனுடைய} இறப்பால் உண்டான துயரத்தால் பீடிக்கப்பட்டவராகக் கிருஷ்ணனிடம்,(6) “ஓ! தாமரைக்கண்ணா, வாக்கில் வாய்மை வாய்ந்தவனாக நீ பூமியில் புகழ்பெற்றிருக்கிறாய். எனினும், ஓ! பகைவரைக் கொல்பவனே, என் மகளின் மகனுடைய மரணத்தைக் குறித்து நீ ஏன் இன்று எனக்குச் சொல்லவில்லை?(7) ஓ! பலமிக்கவனே, உன் தங்கையின் மகன் கொல்லப்பட்டதைக் குறித்து விரிவாக எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உன்னைப் போலவே கண்களைக் கொண்ட அவன் போரில் பகைவர்களால் எவ்வாறு கொல்லப்பட்டான்?(8) ஓ! விருஷ்ணி குலத்தோனே, நூறு துண்டுகளாய்ப் பிளக்காமல் இருப்பதால், வேளை வராத போது மனிதர்களுடன் சேர்ந்து இதயமும் அழிவதில்லை என்று தெரிகிறது.(9) ஓ!… வீழ்ந்த நேரத்தில், தன் தாயைக் குறிப்பிட்டு அவன் சொன்ன சொற்கள் என்னென்ன? ஓ! தாமரைக்கண்ணா, ஓய்வற்ற கண்களைக் கொண்டவனும், என் அன்புக்குரியவனுமான அவன் எனக்குச் சொன்னது என்ன?(10) போரில் புறமுதுகிட்டு ஓடும்போது அவன் பகைவர்களால் கொல்லப்படவில்லை என நான் நம்புகிறேன் {அவன் புறமுதுகிடவில்லையல்லவா?}. ஓ! கோவிந்தா, போரிடும்போது அவனது முகம் உற்சாகத்தை இழக்கவில்லை என நான் நம்புகிறேன் {அவன் உற்சாகம் இழக்கவில்லையல்லவா?}.(11) ஓ! கிருஷ்ணா, வலிமையும், சக்தியும் நிறைந்தவனாக அவன் இருந்தான். பலமிக்க அந்த வீரன், தன் சிறுபிள்ளைத்தனத்தால், என் முன்னிலையில் (தன் ஆற்றலைத்) தற்புகழ்ந்து, (போரில்) தன் திறனைக் குறித்து என்னிடம் பேசுவானே.(12) அந்தப் பிள்ளை, துரோணர், கர்ணன், கிருபர் மற்றும் பிறரால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டுப் பூமியில் கிடக்கவில்லை என நான் நம்புகிறேன் {அவர்களால் வஞ்சகமாகக் கொல்லப்படவில்லையல்லவா?}. இவை யாவற்றையும் எனக்குச் சொல்வாயாக.(13) என் மகளுடைய மகன் {என் பேரனான அபிமன்யு}, போரில் பீஷ்மரையும், வலிமைமிக்கப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கர்ணனையும் எப்போதும் அறைகூவி அழைப்பானே” என்றார் {வசுதேவர்}.(14)

துயரம் மேலிட இத்தகைய புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தன் தந்தையிடம், அவரைவிட அதிகம் பீடிக்கப்பட்டவனான கோவிந்தன் {கிருஷ்ணன்} இந்தச் சொற்களால் பதிலளித்தான்,(15) “போரின் முன்னணியின் நின்று போரிட்ட அவனது முகம் ஒருபோதும் உற்சாகத்தை இழக்கவில்லை. அந்தப் போர் கடுமையானதாக இருந்தாலும் அவன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(16) பூமியின் மன்னர்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று துரோணருக்கும், கர்ணனுக்கும் துயரைக் கொண்டு வந்த அவன் இறுதியில் துச்சாசனன் மகனிடம் வீழ்ந்தான்.(17) ஓ! தலைவா, ஒற்றைக்கு ஒற்றையாக இடைவெளியே இல்லாமல் அவனுடன் போரிட்டிருந்தாலும் வஜ்ரதாரியாலும் {இந்திரனாலும்} போரில் அவனைக் கொல்ல முடியாது.(18)அவனுடைய தந்தையான அர்ஜுனன் (தன்னுடன் தனியாகப் போரிட அறைகூவியழைத்த) சம்சப்தகர்களால் மையப்பகுதியில் இருந்து விலகிச் சென்ற போது, போரில் துரோணரின் தலைமையிலானவர்களும், சீற்றத்துடன் கூடியவர்களுமான கௌரவவீரர்களால் அபிமன்யு சூழப்பட்டான்.(19) ஓ! தந்தையே, பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொன்ற பிறகே உமது மகளின் மகன் {பேரன் அபிமன்யு} இறுதியாகத் துச்சாசனன் மகனிடம் வீழ்ந்தான்[1].(20)அவன் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, உம்முடைய இந்தத் துயரத்தைக் கொல்லும். தெளிவான புத்தி கொண்டவர்கள் துயரமேதும் அடையும்போது ஒருபோதும் அவர்கள் நலிவடைவதில்லை.(21) வலிமையில் இந்திரனுக்கு நிகரான வீரர்களான துரோணரையும், கர்ணனையும், பிற வீரர்களையும் எதிர்த்தவனான அவன், ஏன் சொர்க்கத்திற்கு உயராமல் இருக்கப் போகிறான்?(22) ஓ! தடுக்கப்பட முடியாதவரே, நீர் உம்முடைய இந்தத் துயரத்தைக் கொல்வீராக. கோபத்தின் ஆளுகைக்குள் கிடந்து துன்புறாதீர். பகை நகரங்களை வெல்பவனான அவன், ஆயுத முனையில் அடையும் மரணத்தைச் சார்ந்த புனித இலக்கை அவன் அடைந்துவிட்டான்.(23)

அந்த வீரன் {அபிமன்யு} வீழ்ந்த பிறகு துயரால் பீடிக்கப்பட்ட என்னுடைய தங்கையான இந்தச் சுபத்திரை, குந்தியைக் கண்டபோது பெண் அன்றிலை {குரரிபக்ஷியைப்} போல உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டாள்.(24)

துயரத்தில் இருந்த அவள் திரௌபதியிடம், “ஓ! மதிப்புக்குரிய பெண்ணே {அம்மா}, நம் மகன்கள் அனைவரும் எங்கே? நான் அவர்களைக் காண விரும்புகிறேன்” என்றாள்.(25)

அவளுடைய ஒப்பாரியைக் கேட்ட கௌரவப் பெண்மணிகள் அனைவரும் அவளைத் தழுவிக்கொண்டு அவளைச் சூழ்ந்து அமர்ந்து அழுதனர்.(26)

(தன் மருமகளான) உத்தரையைக் கண்ட அவள், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவன் எங்கே சென்றுவிட்டான்? அவன் திரும்பி வரும்போது, ஒருக்கணமும் தாமதிக்காமல் அது குறித்து எனக்குத் தெரிவிப்பாயாக.(27) ஐயோ, ஓ! விராடன் மகளே {உத்தரையே}, என் குரலைக் கேட்ட உடனேயே ஒரு கணமும் தாமதிக்காமல் தன் அறையில் இருந்து அவன் வெளி வருவான். உன் கணவன் இன்று ஏன் வரவில்லை?(28) ஐயோ, ஓ! அபிமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் தாய்மாமன்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள். போருக்கு ஆயத்தமாக இங்கே நீ வருவதைக் காணும்போதெல்லாம் அவர்கள் உன்னை வாழ்த்தினார்கள்.(29) ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, முன்பு போலவே இன்று போரில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் எனக்குச் சொல்வாயாக. ஓ! இவ்வாறு அழுது புலம்பும் எனக்ககு நீ ஏன் பதிலளிக்காமல் இருக்கிறாய்” என்று சொல்லி அழுதாள் {சுபத்திரை}.(30)

விருஷ்ணி குலமகளின் இந்த ஒப்பாரியைக் கேட்ட பிருதை {குந்தி}, ஆழ்ந்த துயரத்தில் பீடிக்கப்பட்டவளாக அவளிடம் மெதுவாக,(31) “ஓ! சுபத்திரா, வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் தன் தந்தை {அர்ஜுனன்} ஆகியோரால் பாதுகாக்கப்பட்டாலும், இளைஞனான உன் மகன் கொல்லப்பட்டிருக்கிறான். இந்தக் கொலை காலத்தின் ஆதிக்கத்தால் நேர்ந்திருக்கிறது.(32) ஓ! யதுகுல மகளே, உன் மகன் இறவாதவனாக {அமரனாக} இருந்தான். வருந்தாதே. போரில் தடுக்கப்பட முடியாதவனான உன் மகன் உயர்ந்த இலக்கை அடைந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை.(33) உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் உயர் குலத்தில் பிறந்தவள் நீ. ஓ! ஓய்வற்றபார்வை கொண்டவளே, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட பெண்ணே, வருந்தாதே.(34) குழந்தையைக் கருவில் சுமக்கும் உத்தரையின் மேல் உன் விழிகளைச் செலுத்துவாயாக. ஓ! அருளப்பட்ட மங்கையே, துயரத்தின் வசப்படாதே. இந்த மங்கலப் பெண் {உத்தரை}, விரைவில் அந்த வீரனுக்கு {அபிமன்யுவுக்கு} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்” என்றாள் {குந்தி}.(35)

ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே {வசுதேவரே}, ஓ! தடுக்கப்பட முடியாதவரே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான குந்தி, இவ்வழியில் அவளுக்கு ஆறுதலளித்து, தன் துயரத்தைக் கைவிட்டு, ஆற்றலில் யமனுக்கு ஒப்பானவர்களான மன்னர் யுதிஷ்டிரர், பீமர், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்) ஆகியோரின் ஏற்புடன் அபிமன்யுவின் ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தாள். பிராமணர்களுக்குக் கொடையளித்த அவள்,(36,37) ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, அவர்களுக்குப் பல பசுக்களையும் கொடுத்தாள்.

பிறகு அந்த விருஷ்ணி வீரமகள் (குந்தி), சிறு ஆறுதல் அளிக்கும் வகையில் விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(38) “ஓ! விராடனின் குற்றமற்ற மகளே, நீ வருந்தலாகாது. ஓ! உருண்ட இடைகளைக் கொண்டவளே, உன் கணவனுக்காக உன் கருவறையில் உள்ள பிள்ளையைப் பாதுகாப்பாயாக” என்றாள்.(39)

ஓ! பெருங்காந்தி கொண்டவரே, இச்சொற்களைச் சொன்னதுடன் குந்தி நிறுத்திக் கொண்டாள். அவளுடைய {குந்தியின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, சுபத்திரையை இங்கே நான் அழைத்து வந்தேன்.(40) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, இவ்வாறே, உமது மகளின்{சுபத்திரையின்} மகன்{அபிமன்யு} தன் மரணத்தை அடைந்தான். ஓ! தடுக்கப்பட முடியாதவரே, எரியும் துயரைக் களைவீராக. உண்மையில், கவலையில் உமது இதயத்தை நிறுவாதீர்” என்றான் {கிருஷ்ணன்}”.(41)

அஸ்வமேதயாகம் செய்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 62-அபிமன்யுவுக்கு ஸ்ராத்தஞ்செய்த வசுதேவர்; ஹஸ்தினாபுரம் வந்து உத்தரையைத் தேற்றிய வியாசர்; யுதிஷ்டிரனை அஸ்வமேத வேள்வி செய்யத் தூண்டியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தம்மகன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சொற்களைக் கேட்டவரும், நீதிமிக்க ஆன்மா கொண்டவருமான அந்தச் சூர குல வழித்தோன்றல் {வசுதேவர்}, தமது துயரத்தைக் கைவிட்டு (அபிமன்யுவுக்குச்) சிறந்த ஈமக் காணிக்கைகளை அளித்தார் {ஸ்ராத்தஞ்செய்தார்}.(1) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தன் தந்தையின் அன்புக்குரியவனும், தன் மருமகனுமான அவன் {அபிமன்யு} (சொர்க்கத்திற்கு) உயர்வதற்கான அந்தச் சடங்குகளைச் செய்தான்.(2) பெருஞ்சக்தி கொண்டவனான அவன் {கிருஷ்ணன்}, அறுபது லட்சம் பிராமணர்களுக்கு ஏற்புடைய அனைத்துக் குணங்களுடன் கூடிய உணவைப் படைத்தான்.(3) அவர்களுக்குத் துணிமணிகள் பலவற்றைக் கொடுத்த கிருஷ்ணன், அந்தப் பிராமணர்களின் செல்வ தாகத்தைத் தணித்தான். கொடையளிக்கப்பட்ட பொற்குவியல்களும், பசுக்கள், படுக்கைகள், துணிமணிகளின் எண்ணிக்கையும் ஆச்சரியகரமானவையாக இருந்தன. அந்தப் பிராமணர்கள், “(கிருஷ்ணனின் செல்வம்) பெருகட்டும்” என்று உரக்க அறிவித்தார்கள்.(4,5)

பிறகு, தசார்ஹ குலத்தோனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, பலதேவன் {பலராமன்}, சாத்யகி, சத்யகன் ஆகியோர் ஒவ்வொருவரும் அபிமன்யுவுக்கான ஈமச் சடங்குகளை {சிராத்தம்} செய்தனர்.(6) துயரால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர்கள் ஆறுதலேதும் அடையத் தவறினர். யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} பாண்டு மகன்களின் நிலையும் இவ்வாறே இருந்தது.(7) ஓ! ஏகாதிபதி, விராடனின் மகள் {உத்தரை}, தன் கணவனின் இறந்த துயரத்தால் மிகவும் பீடிக்கப்பட்டவளாக மொத்தமாக உணவனைத்தையும் தவிர்த்தாள். இதனால் அவளது உறவினர்கள் அனைவரும் பெருந்துயரத்தில் மூழ்கினர்.(9)

அப்போது தமது ஆன்மப் பார்வையால் அனைவரின் நிலைகளையும் அறிந்த வியாசர் அங்கே வந்தார். உயர்ந்த நுண்ணறிவையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த முனிவர், (அரண்மனைக்கு வந்து), நீண்ட கண்களைக் கொண்ட பிருதையிடம் {குந்தியிடம்} பேசிவிட்டு,(10) உத்தரையிடம், “இத்துயரைக் கைவிடுவாயாக. ஓ! புகழ்பெற்ற பெண்ணே, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பலத்தாலும், என் சொல்லாலும் பெருஞ்சக்தி கொண்ட மகன் ஒருவன் {பரீக்ஷித்} உனக்குப் பிறப்பான். அந்த மகனே பாண்டவர்களுக்குப் பிறகு (அவர்கள் பூமியை விட்டுச் சென்ற பிறகு} பூமியை ஆள்வான்” என்றார்.(12)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அவர் {வியாசர்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கையில், தன் சொற்களால் அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில்,(13) “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் பேரன் ஓர் உயர் ஆன்ம இளவரசனாவான். கடலின் விளிம்பு வரையுள்ள மொத்த பூமியையும் அவன் நீதியுடன் ஆட்சி செய்வான்.(14) எனவே, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவரை வெட்டுபவனே, இத்துயரைக் களைவாயாக. இதில் ஐயங்கொள்ளாதே. உண்மையில் இது நடக்கும்.(15) முன்பு விருஷ்ணி வீரனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்டது நிச்சயம் நடக்கும். வேறு வகையில் நினைக்காதே.(16) அபிமன்யுவைப் பொறுத்தவரையில், அவன் தன் செயல்களால் வென்ற தேவ லோகங்களுக்குச் சென்றிருக்கிறான். அந்த வீரனுக்காக நீயோ, குருக்களில் பிறரோ வருந்தலாகாது” என்றார் {வியாசர்}.(17)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு தன் பாட்டனால் {வியாசரால்} சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் துயரைக் கைவிட்டு, உற்சாகம் நிறைந்தனவாக ஆனான்.(18) ஓ! இளவரசே, ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான உன் தந்தை {பரீக்ஷித்}, வளர்பிறைச் சந்திரனைப் போல {உத்தரையின்} அந்தக் கருவறையில் வளர்ந்தான்.(19) பிறகு வியாசர், தர்மனின் அரச மகனிடம் குதிரை வேள்வி செய்வதற்குத் தூண்டினார்[1]. இவ்வாறு சொன்ன அவர் அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(20) நுண்ணறிவுமிக்கவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வியாசரின் சொற்களைக் கேட்டு, (வேள்விக்கான) செல்வத்தைக் கொண்டு வரும் பயணத்தில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

இமயப்பயணம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 63-வியாசரின் ஆணைப்படி தம்பிமாருடன் ஆலோச்சித்த யுதிஷ்டிரன்; வேள்விக்குத் தேவையான செல்வத்தைக் கொண்டு வர இமய மலைக்குச் சென்றது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, குதிரை வேள்வி குறித்து உயர் ஆன்ம வியாசரால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?(1) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மருத்தன் பூமிக்கடியில் புதைத்து வைத்த செல்வத்தை அடைவதில் மன்னன் வென்றது எவ்வாறு?” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தீவில் பிறந்த தவசியின் {வியாசரின்} சொற்களைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளான அர்ஜுனன், பீமசேனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய அனைவரையும் உரிய நேரதில் அழைத்து, அவர்களிடம் (பின்வரும் சொற்களில்),(3) “வீரர்களே, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவரும், உயர் ஆன்மாவுமான கிருஷ்ணர் {வியாசர்}[1]குருக்களிடம் கொண்ட நட்பின் நிமித்தமும், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பியும் சொன்ன சொற்களைக் கேட்டீர்கள். உண்மையில், அபரிமிதமான தவங்களைச் செய்தவரும், நண்பர்களுக்குச் செழிப்பை வழங்கவல்லவரும்,(4,5) நேர்மையான ஒழுக்கம் கொண்ட ஆசானும், அற்புதச் செயல்களைச் செய்தவருமான அந்தப் பெருந்தவசியால் {வியாசரால்} சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டீர்கள்.பீஷ்மர் சொன்னதையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்} சொன்னதையும் நீங்கள் கேட்டீர்கள்.(6) பாண்டுவின் மகன்களே, அச்சொற்களை நினைவுகூரும் நான் அவற்றுக்கு முறையாகக் கீழ்ப்படிய விரும்புகிறேன். அவர்களுடைய சொற்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்கள் அனைவருக்கும் பேரருள் கிட்டும்.(7) பிரம்மத்தை ஓதுபவர்களால் சொல்லப்படும் சொற்கள் (அந்தச் சொற்களுக்குக் கீழ்ப்படிவது) குறிப்பிடத்தக்க நன்மையை நிச்சயம் கொண்டு வரும். குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்களே, பூமாதேவி செல்வத்தை இழந்தவளாக இருக்கிறாள்.(8) எனவே மன்னர்களே, (பூமிக்குள் புதைந்து கிடக்கும்) மருத்தனின் செல்வத்தைக் குறித்து வியாசர் நமக்குச் சொன்னார். அந்தச் செல்வம் அதிகமானது, அல்லது போதுமானது என நீங்கள் நினைத்தால்,(9) அதை நாம் (நமது தலைநகருக்குக்) கொண்டு வருவது எவ்வாறு? ஓ! பீமா, இது குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, மன்னன் இச்சொற்களைச் சொன்ன போது,(10) பீமசேனன் தன் கரங்களைக் குவித்து, மறுமொழியாக இந்தச் சொற்களில், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வியாசரால் குறிப்பிடப்பட்டச் செல்வத்தைக் கொண்டு வருவது குறித்து நீர் சொன்ன சொற்களை நான் ஏற்கிறேன். ஓ! பலமிக்கவரே, அவிக்ஷித்தின் மகனால் {மருத்தனால்} அங்கே வைக்கப்பட்ட செல்வத்தை அடைவதில் நாம் வென்றால்,(11,12) ஓ! மன்னா, அப்போது நம்மால் கருதப்படும் இந்த வேள்வியை எளிதாக நடத்தலாம். இதையே நான் நினைக்கிறேன். எனவே, நாம் உயர் ஆன்ம கிரீசனுக்கு {சிவனுக்கு} தலைவணங்கி,(13) அந்தத் தேவனுக்கு உரிய காணிக்கையளித்து, அந்தச் செல்வத்தைக் கொண்டுவருவோம். நீர் அருளப்பட்டிருப்பீராக. தேவர்களுக்குத் தேவனையும் {சிவனையும்}, அவனது தோழர்கள் மற்றும் தொண்டர்களையும் {பூதகணங்களையும்}, சொல்லாலும், எண்ணத்தாலும், செயலாலும் நிறைவடையச் செய்து, நிச்சயம் நாம் அந்தச் செல்வத்தை அடையப் போகிறோம். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தப் பெருந்தேவன் {சிவன்} நம்மிடம் நிறைவடைந்தால், அந்தப் புதையலைப் பாதுகாக்கும் பயங்கர முகத்தோற்றம் கொண்ட கின்னரர்களும் நிச்சயம் நம் வசப்படுவார்கள்” என்றான்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, பீமனால் சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்டவனும்,(14-16) தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன் உயர்வான நிறைவை அடைந்தான். அதே நேரத்தில், அர்ஜுனனின் தலைமையிலான பிறரும் {மற்ற தம்பிகளும்}, “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(17)

அந்தச் செல்வத்தைக் கொண்டு வருவது எனத் தீர்மானித்த பாண்டவர்கள், துருவ நட்சத்திரம் மற்றும் அதே பெயரால் {துருவம் என்ற பெயரால்} அழைக்கப்படும் நாளில் தங்கள் படைகளை அணிவகுக்க ஆணையிட்டனர்[2].(18) அந்தப் பாண்டுவின் மகன்கள், பிராமணர்களைத் தங்களுக்கு ஆசிகூற {ஸ்வஸ்திவாசனம் செய்யும்படிச்} செய்து, பெருந்தேவனான மஹேஸ்வரனை முறையாக வழிபட்டு (தங்கள் காரியத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(19) மோதகங்கள், பாயஸம், இறைச்சியால் செய்யப்பட்ட பிண்டங்கள் {மாம்ஸம், ஆபூபங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அந்த உயர் ஆன்ம தேவனை நிறைவடையச் செய்த பாண்டுவின் மகன்கள், உற்சாகமிக்க இதயங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(20)அவர்கள் அவ்வாறு புறப்பட்டுச் சென்றபோது, குடிமக்களும், பிராமணர்களில் முதன்மையானோர் பலரும், உற்சாகமிக்க இதயங்களுடன் (அவர்களுடைய தலைகளில் {கைவைத்து}) மங்கல ஆசிகளைக் கூறினர்.(21) பாண்டவர்கள், தங்கள் தங்கள் நெருப்புகளை நாள்தோறும் வழிபடும் பிராமணர்கள் பலரை வலம் வந்து, அவர்களுக்குத் தலைவணங்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.(22) மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்த மன்னன் திருதராஷ்டிரன், அவனது ராணி (காந்தாரி) மற்றும் நீண்ட கண்களைக் கொண்ட பிருதை {குந்தி} ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு,(23) திருதராஷ்டிரன் மகனான கௌரவ இளவரசன் யுயுத்சுவை தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} நிறுவிய அவர்கள், குடிமக்களாலும், பெரும் ஞானம் கொண்ட பிராமணர்கள் பலராலும் வழிபடப்பட்டுப் புறப்பட்டுச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

இமய முகாம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 64-இமயம் நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள்; இடத்தை அடைந்து முகாமை அமைத்தது; பிராமணர்களின் தொடக்கச் சடங்குகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது அவர்கள் உற்சாகம் நிறைந்த இதயங்களுடனும், இணையான உற்சாகம் நிறைந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் துணையுடனும் {இமயத்தை நோக்கி} புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த பூமியையும் நிறைத்தனர்.(1) துதிபாடிகள், சூதர்கள், மாகதர்கள் மற்றும் வந்திகளால் புகழ்பாடப்படவும், தங்கள் படையின் ஆதரவுடனும் சென்ற அவர்கள் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பல ஆதித்தியர்களைப் போலத் தெரிந்தனர்.(2) தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட வெண்குடையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இரவில் நட்சத்திரங்களின் தலைவன் முழுமையாக இருப்பதை {இரவில் முழுநிலவைப்} போன்ற அழகுடன் ஒளிர்ந்தான்.(3)

மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டு மகன்களில் மூத்தவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் வழியில் செல்லும்போது மகிழ்ச்சி நிறைந்தவர்களான தன் குடிமக்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் உரிய வடிவில் ஏற்றுக் கொண்டான்.(4) மன்னனைப் பின்தொடர்ந்த படைவீரர்களைப் பொறுத்தவரையில், குழப்பமான அவர்களது முணுமுணுப்புகள் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது. அந்தப் படை பல தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் இன்பத்தோட்டங்களைக் கடந்து சென்றது. இறுதியாக அவர்கள் அந்த மலையை {இமய மலையை} அடைந்தனர்.(6)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தச் செல்வம் புதைக்கப்பட்ட பகுதியை அடைந்த அரசன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் கூடிய துருப்புகளுடன் தன் முகாமை அமைத்தான்.(7) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அக்காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி முற்றிலும் சமமானதாகவும், மங்கலமானதாகவும் இருந்தது. ஓ! குரு குலத்தோனே, அங்கே, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தவம், கல்வி மற்றும் தற்கட்டுப்பாட்டுடன் கூடிய பிராமணர்களையும்,(8) வேதங்கள் மற்றும் அதன் கிளைகளை நன்கறிந்தவரான தன் புரோகிதர் ஆக்நிவேஷ்யரையும் {தௌமியரையும்} முன்னிலையில் கொண்டு தன் முகாமை அமைத்தான்[1]. அதன் பிறகு, பாண்டுவின் அரச மகன்களும், (அந்தப் பயணத்தில் உடன் சென்ற) பிற மன்னர்களும், வேள்விச் சடங்குகளில் நன்கு திறம்பெற்றவர்களான பிராமணர்களும், புரோகிதர்களும் முறையாகத் தொடக்கச் சடங்குகளைச் செய்து அந்த இடமெங்கும் பரவியிருந்தார்கள். மன்னனையும், அவனது அமைச்சர்களையும் நடுவில் கொண்டு,(9,10) ஆறு சாலைகள் மற்றும் ஒன்பது பிரிவுகளையும் {கண்டங்களையும்} அமைத்து அங்கே அந்தப் பிராமணர்கள் முகாமை அமைத்தனர்[2]. மன்னன் யுதிஷ்டிரன், தன் படையுடன் கூடிய மதங்கொண்ட யானைகளுக்கென ஒரு தனி முகாமை அமைக்கச் செய்தான்.அனைத்தும் நிறைவடைந்தபோது, அவன் {யுதிஷ்டிரன்}, பிராமணர்களிடம், “முதன்மையான பிராமணர்களே, “நடக்க இருக்கும் காரியத்தைக் கருத்தில் கொண்டு செய்யப்படவேண்டியவை என்று நீங்கள் நினைப்பவற்றைச் செய்வீராக. உண்மையில், ஒரு மங்கல நாளையும், நட்சத்திரத்தையும் அதற்காகத் தேர்ந்தெடுப்பீராக. நாம் இங்கே ஆவலில் தவித்துக் காத்திருக்கும்போது, நீண்ட காலம் கழிந்துவிடக்கூடாது. கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவர்களே, இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, இதன் பிறகு என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்றான்.(11-13)

மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், அங்கிருந்தவர்களில் அறச்சடங்குகள் செய்வதில் திறம்பெற்றவர்களுமான பிராமணர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி,(14) “இன்றே நட்சத்திரமும், நாளும் மங்கலமானவையாக இருக்கின்றன. எனவே, நாங்கள் கருதும் அந்த உயர்ந்த சடங்குகளை நிறைவேற்ற {இன்றே} முனைவோம். ஓ! மன்னா, இன்று நாங்கள் நீரை மட்டுமே பருகி வாழ்வோம். நீங்களும் இன்று உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பீராக” என்றனர்.(15)

அந்த முதன்மையான பிராமணர்களின் சொற்களைக் கேட்ட பாண்டுவின் அரச மகன்கள், உணவனைத்தையும் தவிர்த்து, வேள்வியில் சுடர்விடும் நெருப்பைப் போலக் குசப்புல் படுக்கைகளில் நம்பிக்கையுடன் கிடந்து அவ்விரவைக் கழித்தனர்.(16) கல்விமான்களான (பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய) பிராமணர்களின் உரையாடல்களை அவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோதே இரவு கழிந்தது. மேகமற்ற காலைவேளை உதித்த போது, பிராமணர்களில் முதன்மையான அவர்கள் தர்மனின் அரச மகனிடம் (பின்வருமாறு) பேசினர்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

அகழப்பட்ட புதையல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 65- பூதகணங்களுடன் கூடிய சிவனைக் காணிக்கைகளால் நிறைவடையச் செய்த யுதிஷ்டிரன்;.இமயத்தில் இருந்து செல்வத்தை எடுத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பியது…

பிராமணர்கள், “உயர் ஆன்மாவான முக்கண் மஹாதேவனுக்குக் காணிக்கைகள் அளிக்கப்படட்டும். ஓ! மன்னா, அந்தக் காணிக்கைகளை முறையாக அர்ப்பணித்த பின்னர் நாம் நமது நோக்கத்தை ஈட்ட முனைவோம்” என்றனர்.(1)

அந்தப் பிராமணர்களின் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன், மலைச்சாரலில் கிடக்க விரும்பும் அந்தத் தேவனுக்கு {சிவனுக்கு} காணிக்கைகளை முறையாக அளிக்கச் செய்தான்.(2) விதிப்படி (ஆகுதியான) புனித நெய்யால் (வேள்வி) நெருப்பை நிறைவடையச் செய்த புரோகிதர் (தௌமியர்) மந்திரங்களின் உதவியால் சருவைச் சமைத்து தேவையான சடங்குகளைச் செய்தார்.(3) ஓ! மன்னா, அவர் மலர்கள் பலவற்றை எடுத்து மந்திரங்களால் அவற்றைப் புனிதப்படுத்தினார். மோதகங்கங்கள், பாயஸம் மற்றும் இறைச்சியை அவர் அந்தத் தேவனுக்குக் காணிக்கையளித்தார்.(4) வேதங்களில் நன்கு திறம்பெற்ற தௌமியர், பல்வேறு வகை மலர்கள், மிக மேன்மையான வகைச் சார்ந்த பொரிகள் ஆகியவற்றைக் கொண்டு எஞ்சிய சடங்குகளை {ஸ்விஷ்டகிருத் என்னும் ஹோமத்தை முழுதும் விதிப்படி} செய்தார்.(5)

அடுத்ததாக அவர் மஹாதேவனின் அணிவகுப்பில் அமையும் கிங்கரர்களுக்கு விதிப்படியான காணிக்கைகளை அளித்தார். அடுத்ததாக யக்ஷர்களின் தலைவனான குபேரனுக்கும், மாணிபத்ரனுக்கும் காணிக்கைகள் வழங்கப்பட்டன.(6) அந்தப் புரோஹிதர் {தௌமியர்}, உணவு, கிருஸரம், இறைச்சி மற்றும் எள்ளுடன் கலந்த நிவாபங்கள் {தர்ப்பண நீர்} ஆகியவற்றைப் பல குடங்களில் நிறைத்து, வேறு யக்ஷர்களுக்கும், மஹாதேவனின் தோழர்களான பூதங்களில் முதன்மையாவர்களுக்கும் {பூதபதிகளுக்கும்} முறையான வழிபாட்டைக் காணிக்கையாக்கினார். மன்னன் {யுதிஷ்டிரன்} பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தான்.(7,8)

அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, (மஹாதேவனுடன் வாழும்) இரவுலாவிகளுக்கு {கணங்களுக்கு} உரிய சடங்குகளின்படி காணிக்கைகளை அளிக்கச் செய்தான். தூப மணத்தால் பரவியிருந்ததும், மலர்களின் நறுமணத்தால் நிறைந்திருந்ததும்,(9) தேவர்களின் தேவனுக்குப் புனிதமானதுமான அந்தப் பகுதி இனிமை நிறைந்ததாக ஆனது. ருத்திர வழிபாடு மற்றும் கணங்கள் அனைத்திற்குமான வழிபாடுகளைச் செய்த பிறகு,(10) வியாசரை முன்னிலையில் நிறுத்திய மன்னன் {யுதிஷ்டிரன்}, புதையல் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். பல்வேறு வகை மலர்கள், பிண்டங்கள் மற்றும் கிருஸரம்[1] ஆகியவற்றைக் கொண்ட மதிப்புடனும் அவனை வணங்கி, மீண்டும் கருவூலங்களின் தலைவனை முறையாக வழிபட்டு, சங்கம் மற்றும் நிதி என்ற முதன்மையான ரத்தினங்களையும், ரத்தினங்களின் தலைவர்களான அந்த யக்ஷர்களையும் வழிபட்டு[2],(11,12) பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபட்டு, அவர்களை ஆசி கூற {ஸ்வஸ்திவாசனம் செய்யச்} செய்த பெரும் பலம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களின் சக்தி மற்றும் மங்கல ஆசிகளின் மூலம் வலுவடைந்து,(13) அந்த இடத்தை அகழ {தோண்டச்} செய்தான்.பல்வேறு இனிய வடிவங்களிலான எண்ணற்ற  பாத்திரங்கள்,(14) பிருங்காரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்தமானகங்கள், அழகிய வடிவிலான எண்ணற்ற பாஜனங்கள் {அன்னப்பாத்திரங்கள், சிறிய குடங்கள், கரண்டிகள், குடங்கள், அண்டாக்கள்,  பானைகள்} ஆகியவை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அகழ்ந்து {தோண்டி} எடுக்கப்பட்டன. இவ்வாறு அகழப்பட்ட செல்வங்கள், பாதுகாப்புக்காகப் பெரிய கரபூதங்களில் {மடக்குகளில்} வைக்கப்பட்டன[3].(15,16) அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி, தராசின் இருமுனைகளைப் போன்ற மரக்கூடைகளுடன் கூடிய தடித்த மர நிலுவைகளில் மனிதர்களின் தோள்களில் சுமக்கச் செய்யப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டு மகனின் அந்தச் செல்வத்தைச் சுமந்து செல்வதற்கு வேறு வழிமுறைகளிலான செல்கலன்களும் {விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகளும்} இருந்தன[4].(17) ஓ! ஏகாதிபதி, அங்கே அறுபதாயிரம் ஒட்டகங்களும், ஒருலட்சத்து இருபதாயிரம் குதிரைகளும், ஒரு லட்சம் யானைகளும் இருந்தன.(18) அதே அளவு {ஒரு லட்சம்} தேர்களும், அதே அளவு வண்டிகளும், அதே அளவு பெண் யானைகளும் இருந்தன. கோவேறு கழுதைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை சொல்ல {எண்ண} முடியாததாக இருந்தது.(19)யுதிஷ்டிரனால் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்தச் செல்வம் அவ்வளவு அதிகமானதாக இருந்தது. ஒவ்வொரு ஒட்டகத்தின் முதுகிலும் பதினாறாயிரம்; ஒவ்வொரு தேரிலும் எட்டாயிரம்; ஒவ்வொரு யானையிலும் இருபத்து நான்காயிரம்; (அதேவேளையில், குதிரைகள், கழுதைகளின் முதுகுகளிலும், மனிதர்களின் முதுகுகள், தோள்கள் மற்றும் தலைகளிலும் மேற்கண்ட எண்ணிக்கையின் விகிதாச்சார அளவில்) {பொன்} நாணயங்கள் வைக்கப்பட்டன[5].(20) இந்த வாகனங்களை அந்தச் செல்வத்தால் நிறைத்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பெருந்தேவனான சிவனை வழிபட்ட பிறகு, தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} அனுமதியுடனும், தன் புரோகிதரான தௌமியரை முன்னணியில் விட்டும், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான். மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டுவின் அரச மகனுமான அவன், ஒரு கோயுதத்தால் (4 மைல்கள் {6.5 கி.மீ.}) அளக்கப்படும் குறுகிய பயணங்களையே ஒவ்வொரு நாளும் மேற்கொண்டான்[6].(21,22) ஓ! மன்னா, சுமந்த சுமையால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள் அனைவரின் இதயங்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில், அந்தச் செல்வத்தைச் சுமந்து கொண்டு, தலைநகரம் {ஹஸ்தினாபுரம்} நோக்கித் திரும்பியது” என்றார் {வைசம்பாயனர்}.(23)

கிருஷ்ணனிடம் வேண்டிய குந்தி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 66-சுபத்திரை, பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; இறந்த குழந்தையை உத்தரை ஈன்றது; குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனை வேண்டிய குந்தி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதேவேளையில், விருஷ்ணிகளுடன் கூடிய பெருஞ்சக்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(1) தன் சொந்த நகரமான துவாரகை திரும்புவதற்காக அந்த நகரத்தைவிட்டுச் சென்ற போது, மீண்டும் திரும்பி வருமாறு தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அவன் வேண்டப்பட்டான். எனவே, குதிரை வேள்விக்கெனக் குறிக்கப்பட்ட வேளை வருவதை அறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் (குரு தலைநகரத்திற்குத்) திரும்பி வந்தான்.(2) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, யுயுதானன் {சாத்யகி}, சாருதேஷ்ணன், சாம்பன், கதன், கிருதவர்மன், சாரணன், நிசடன், உன்முகன் ஆகியோருடனும், சுபத்திரையுடனும், அணிவகுப்பின் தலைமையில் பலதேவனுடனும் வாசுதேவன் {கிருஷ்ணன்} வந்தான்.(4)

உண்மையில் திரௌபதி, உத்தரை, பிருதை {குந்தி} மற்றும் தங்கள் பாதுகாவலர்களை இழந்த புகழ்பெற்ற க்ஷத்திரியப் பெண்மணிகளுக்கு ஆறுதலளிப்பதற்காக அந்த வீரன் {கிருஷ்ணன்} வந்தான்.(5) அந்த வீரர்கள் வருவதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரனும் அவர்களை உரிய கௌரவத்துடன் வரவேற்றனர்.(6) மனிதர்களில் முதன்மையானவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான கிருஷ்ணன், விதுரன் மற்றும் யுயுத்சுவால் நன்கு துதிக்கப்பட்டு, குருவின் தலைநகரில் வசித்து வந்தான்.(7) ஓ! ஜனமேஜயா, ஓ! மன்னா, அவ்வாறு விருஷ்ணி வீரர்கள் குருவின் நகரில் வசித்துக் கொண்டிருந்தபோதுதான் உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்தான்.(8)

ஓ! ஏகாதிபதி (அஸ்வத்தாமனின்) பிரம்ம ஆயுதத்தால் பீடிக்கப்பட்ட அரசன் பரிக்ஷித், கருவறையை விட்டு வெளியே வந்தபோது, உயிரற்றவனாக இருந்த காரணத்தால் அசைவற்றுக் கிடந்தான். தனது பிறப்பால் குடிமக்கள் அனைவருக்கும் அவன் மகிழ்ச்சியூட்டியிருந்தாலும் மிகவிரைவில் அவர்களைத் துயரில் ஆழச் செய்தான்.(9) இளவரசன் பிறந்ததைக் கேட்ட குடிமக்கள் சிங்க முழக்கம் செய்தனர். கிட்டத்தட்ட திசைப்புள்ளிகள் ஒவ்வொன்றின் விளிம்புகளையும் அவ்வொலி அடைந்தது. எனினும் விரைவில் (இளவரசன் உயிரற்றவனாக இருப்பதை அறிந்தபோது) அவ்வொலி அடங்கியது.(10) கணிசமான அளவுக்கு உணர்வுகளும், மனமும் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், யுயுதானனுடன் {சாத்யகியுடன்} கூடியவனாக, அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(11) தன் அத்தை (குந்தி) உரக்க அழுதுகொண்ட மீண்டும் மீண்டும் தன்னை {கிருஷ்ணா ஓடிவா என்று} அழைத்துக் கொண்டே வருவதை அவன் கண்டான்.(12) அவளுக்குப் பின்னால், திரௌபதி, புகழ்பெற்ற சுபத்திரை, பாண்டவர்களுடைய உறவினர்களின் மனைவிமார் ஆகியோர் பரிதாபகரமாக அழுது கொண்டிருந்தனர்.(13)

ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, போஜ குல மகளான குந்தி கிருஷ்ணனைச் சந்தித்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனிடம் இந்தச் சொற்களில்,(14) “ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன்னை {கருவறையில்} சுமந்ததன் மூலம் தேவகி சிறந்த தாயாகக் கருதப்படுகிறாள். எங்கள் புகலிடமும், எங்கள் மகிமையும் நீயே. (பாண்டுவின்) இந்தக் குலம் தன் பாதுகாவலனாகக் கொண்ட உன்னையே சார்ந்திருக்கிறது.(15) ஓ! யாதவ வீரா, ஓ! பலமிக்கவனே, உன் தங்கை {சுபத்திரை} மகனுடைய இந்தக் குழந்தை கருவறையில் இருந்து அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டு வெளியே வந்திருக்கிறான்.(16) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! பலமிக்கவனே, அஸ்வத்தாமன், வலிமைமிக்க சக்தி கொண்ட பிரம்மாயுதத்தைப் புல்லில் ஈர்த்தபோது, நீ ஏற்ற உறுதி மொழி இதுவே. ஓ! கேசவா, நீ சொன்ன சொற்கள் இவையே. இந்தக் குழந்தை கருவறையில் இருந்து இறந்து பிறந்தால், நான் அவனை உயிர்ப்பிப்பேன் என்று நீ சொன்னாய்.(17)

ஓ! மகனே, அந்தக் குழந்தை இறந்து பிறந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனைப் பார். ஓ! மாதவா, உத்தரை, சுபத்திரை, திரௌபதி ஆகியோரையும், என்னையும், தர்மனின் மகனையும் (யுதிஷ்டிரனையும்), பீமன், பல்குனன் {அர்ஜுனன்}, நகுலன், தடுக்கப்பட முடியாதவனான சகாதேவன் ஆகியோரையும் நீயே காக்க வேண்டும்.(18,19) பாண்டவர்களின் உயிர்மூசும் மற்றும் என் உயிமூச்சும் இந்தக் குழந்தையிலேயே பிணைந்திருக்கின்றன. ஓ! தாசார்ஹ குலத்தோனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, {என் கணவரான} பாண்டு, என் மாமனார் {விசித்திரவீரியன்} ஆகியோரின் ஈமப்பிண்டமும்,(20) உனக்கு மிகப் பிடித்தவனான உன் அன்புக்குரிய மருமகன் அபிமன்யுவின் ஈமப்பிண்டமும் இவனையே சார்ந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் நன்மையானதை நீ இன்று செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, நான் உன்னை உள்ளார்வத்துடன் தூண்டுகிறேன்.(21)

ஓ! பகைவரைக் கொல்பவனே, உத்தரை தன்னிடம் அபிமன்யு சொன்ன சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஓ! கிருஷ்ணா, அந்தச் சொற்கள் அவளுக்கு நிச்சயம் மிக இனிமையானவை.(22) ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, விராடனின் மகளிடம் {உத்தரையிடம்}, “ஓ! அருளப்பட்ட பெண்ணே {கல்யாணி}, உன் மகன், என் தாய்மாமன்களிடம் செல்லப் போகிறான்.(23) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வசிப்பிடத்திற்குச் செல்லும் அவன், அங்கே ஆயுத அறிவியலையும் {தனுர் வேதத்தையும்}, உண்மையில் அற்புதம் நிறைந்த ஆயுதங்களையும் {விசித்திரமான அஸ்திரங்களையும்}, அரசியல் மற்றும் அறநெறிகள் குறித்த மொத்த அறிவியலையும் {நீதி சாஸ்திரங்களையும்} அடைவான்” என்று சொல்லியிருக்கிறான்.(24)

ஓ! மகனே, பகைவீரர்களைக் கொல்பவனும், தடுக்கப்பட முடியாத வீரனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உத்தரையிடம் கொண்ட அன்பினால் இந்தச் சொற்களை அவளிடம் சொல்லியிருக்கிறான்.(25) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, அபிமன்யுவின் அந்தச் சொற்கள் உண்மையாக நாங்கள் உன்னை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். காலத்தைக் கருத்தில் கொண்டு உயர்ந்த நன்மையை நீ செய்வாயாக” என்றாள் {குந்தி}.(26)

அகன்ற கண்களைக் கொண்ட குந்தி, விருஷ்ணி குல வீரனிடம் {கிருஷ்ணனிடம்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, மற்ற பெண்களுடன் சேர்ந்து தன் இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியவாறு பூமியில் விழுந்தாள்.(27)

கண்ணீரால் கலங்கிய கண்களுடன் கூடிய அவர்கள் {அந்தப் பெண்கள்} அனைவரும், “ஐயோ, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மருமகன் இறந்தே பிறந்தான்” என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(28)

குந்தி இவ்வாறு சொன்னதும், அவளைத் தன் கரங்களில் பற்றி, பூமியில் இருந்து மெல்ல உயர்த்தி, பின்வருமாறு அவளைத் தேற்றினான்” {என்றார் வைசம்பாயனர்}.(29)

கிருஷ்ணனிடம் வேண்டிய சுபத்திரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 67-குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய சுபத்திரை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தி அமர்ந்த பிறகு, தன் தமையனைக் {கிருஷ்ணனைக்} கண்ட சுபத்திரை பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டு உரக்க அழத் தொடங்கி,(1) “ஓ! தாமரைக் கண்ணா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அர்ஜுனரின் பேரனைப் பார். ஐயோ, இளைத்தவனும், இறந்தவனுமான ஒரு குழந்தையால் குரு குலம் நசிந்திருக்கிறது.(2) பீமசேனருக்கு அழிவை ஏற்படுத்த துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} உயர்த்தப்பட்ட (பெருந்திறன் கொண்ட ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருந்த) புல் {இஷீகாஸ்திரம்}உத்தரையின் மீதும், விஜயர் {அர்ஜுனர்} மீதும், என் மீதும் விழுந்தது[1].(3) ஐயோ, ஓ! கேசவா, அந்தப் புல் என் இதயத்தைத் துளைத்த பிறகும், ஓ! தடுக்கப்பட முடியாத வீரா, என் மகனுடன் சேர்த்து இந்தப் பிள்ளையையும் நான் காணாமல் இருப்பதால், அஃது (இன்னும் பிடுங்கப்படாமல்) என்னிலேயே இருக்கிறது.(4)நீதிமானும், அற ஆன்மாவுமான மன்னர் யுதிஷ்டிரர் என்ன சொல்வார்? பீமசேனர், அர்ஜுனர் மற்றும் மத்ராவதியின் இரு மகன்களும் என்ன சொல்வார்கள்?(5) ஓ! விருஷ்ணி குலத்தோனே, அபிமன்யுவின் மகன் பிறந்து இறந்தான் என்பதைப் பாண்டவர்கள் கேட்டால், அஸ்வத்தாமனால் வஞ்சிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுவார்கள்.(6) ஓ! கிருஷ்ணா, அபிமன்யு நிச்சயம் பாண்டவச் சகோதர்கள் அனைவருக்கும் பிடித்தமானவன். துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்தால் வெல்லப்பட்டோம் என்ற செய்தியை அறிந்தால் அந்த வீரர்கள் என்ன சொல்வார்கள்?(7) ஓ! ஜனார்த்தனா, அபிமன்யுவின் மகன் பிறந்து, இறந்தான் என்பதைவிடப் பெரிய துயரம் வேறென்ன இருக்க முடியும்?(8)

ஓ! கிருஷ்ணா, உன்னை நிறைவடையச் செய்ய நான் இன்று உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இங்கே நிற்கும் பிருதை {குந்தி}, திரௌபதி ஆகிய இருவரையும் பார்.(9) ஓ மாதவா, ஓ பகைவரைக் கலங்கடிப்பவனே, பாண்டவர்களுடைய பெண்களின் கருவறைகளில் உள்ள கருக்களையும் அழிக்கத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} முயன்றபோது, நீ கோபத்துடன் அந்தத் துரோணர் மகனிடம் (இந்தச் சொற்களில்),(10) “ஓ! பிராமணர்களில் இழிந்தவரே, ஓ! மனிதர்களில் தீயவரே, உமது விருப்பத்தை நான் நிறைவேறாமல் செய்வேன். நான் கிரீடியின் {அர்ஜுனனின்} மகனுடைய மகனைக் காப்பேன்” என்று சொன்னாய்[2].(11)ஓ! தடுக்கப்பட முடியாத வீரா, உன்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டவளும், உன் பலத்தை நன்கறிந்தவளுமான நான் உன்னை நிறைவடையச் செய்ய முனைகிறேன். அபிமன்யுவின் மகன் உயிர் மீளட்டும்.(12) ஏற்கனவே உறுதிமொழி ஏற்ற நீ மங்கலமான இந்நோன்பை நிறைவேற்றாமல் போனால், ஓ! விருஷ்ணி குலத் தலைவா, நிச்சயம் என் உயிரை நான் விடுவேன் என்பதை அறிவாயாக.(13) ஓ! வீரா, ஓ! தடுக்கப்பட முடியாதவனே, நீ உயிரோடு அருகில் இருக்கும்போது, அபிமன்யுவின் மகனான இவன் {பரிக்ஷித்} உயிர் மீளாமல் போனால், உன்னால் எனக்கு வேறு என்ன பயன் இருக்க முடியும்?(14) எனவே, ஓ! தடுக்கப்பட முடியாதவனே, (களத்தில் உள்ள) உயிரற்ற பயிருக்கு உயிரூட்டும் மழை நிறைந்த மேகத்தைப் போலவே அபிமன்யுவைப் போன்றே கண்களைக் கொண்டவனும், அவனது மகனுமான இவனை நீ மீட்பாயாக.(15) ஓ! கேசவா, அற ஆன்மா கொண்ட நீ, வாய்மை நிறைந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமாவாய். ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, உன் சொற்களை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(16)

மூவுலகங்கள் (மூவுலகங்களில் இருப்போர்) இறந்தாலும், நீ விரும்பினால் உன்னால் உயிர்மீட்க முடியும். எனில், பிறந்தும் இறந்த உன் தங்கை மகனின் அன்புக்குரிய இந்தக் குழந்தையைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(17) ஓ! கிருஷ்ணா, நான் உன் பலத்தை அறிந்தே உன்னை வேண்டுகிறேன். பாண்டவர்களுக்கு நீ இந்தப் பெருஞ்சலுகையைச் செய்து காட்டுவாயாக.(18) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, தன் மகனை இழந்த ஒரு தாய் என்றோ, உன் பாதுகாப்பில் தன்னை நிறுத்திக் கொண்டவள் என்றோ நினைத்து உத்தரைக்கோ, உன் தங்கையான எனக்கோ இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்” என்றாள் {சுபத்திரை}”.(17)

கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 68-குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, (தங்கையாலும், பிறராலும்) இவ்வாறு சொல்லப்பட்டதும், கேசியைக் கொன்றவனான அவன் {கிருஷ்ணன்}, பெருந்துயரில் பீடிக்கப்பட்டவனாக, “அப்படியே ஆகட்டும்” என்றான். போதுமான உரப்புடன் சொல்லப்பட்ட இந்தச் சொற்கள், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(1) பலமிக்கவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், வியர்வையால் பீடிக்கப்பட்டவன் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவதைப் போல இந்தச் சொற்களைச் சொன்னதன் மூலம், அங்கே இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்தான்.(2) பிறகு அவன் {கிருஷ்ணன்}, உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்த அந்தப் பேற்றறைக்குள் {பிரசவ அறைக்குள்} விரைவாக நுழைந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, வெண்மலர் மாலைகள் பலவற்றால்;(3) அனைத்துப் பக்கங்களிலும் முழுவதும் நிறைந்த பல நீர்க்குடங்கள்; ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நெய்யில் ஊறிய திந்துக மரக்கரி மற்றும் கடுகு;(4) அனைத்துப் பக்கங்களிலும் உரிய முறையில் அடுக்கப்பட்ட ஒளிரும் ஆயுதங்கள் மற்றும் பல நெருப்புகள் ஆகியவற்றால் அது {அந்தப் பிரசவ அறை} புனிதப்பட்டிருந்தது. (உன் பாட்டிக்கு {உத்தரைக்குப்} பணிவிடை செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த இனிய மூதன்னைகள் பலர் அங்கே இருந்தனர்.(5)

ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, நன்கு திறம்பெற்ற புத்திசாலி மருத்துவர்களால் அது சூழப்பட்டிருந்தது. பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், ராட்சசர்களை அறிந்த மனிதர்களால் அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உன் தந்தை பிறந்த பேற்றறை இவ்வாறு ஆயத்தமாக இருப்பதைக் கண்ட ரிஷிகேசன், மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நன்று, நன்று” என்று சொன்னான்.(6,7)

விருஷ்ணிகுலத்தோன் இவ்வாறு சொல்லி, மகிழ்ச்சிநிறைந்த தன் முகத்தைக் காட்டிய போது, அங்கே பெரும் வேகத்துடன் வந்த திரௌபதி, விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(8) “ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவனின் தாய்மாமனும், சிந்தனைக்கு எட்டாத ஆன்மா கொண்ட புராதன முனிவனும், வெல்லப்பட முடியாதவனுமான மதுசூதனன் {கிருஷ்ணன்} வந்திருக்கிறான்” என்றாள்.(9)

தன் கண்ணீரை அடக்கிக் கொண்ட விராடன் மகள் {உத்தரை}, துயரால் அடைபட்ட குரலில் இந்தச் சொற்களைச் சொன்னாள். அந்த இளவரசி, முறையாகத் தன்னை மறைத்துக் கொண்டு, கிருஷ்ணனுக்காக மதிப்புடன் காத்திருக்கும் தேவர்களைப் போலவே காத்திருந்தாள்.(10) துயரில் கலங்கிய இதயத்துடன் இருந்த ஆதரவற்றவளான அந்தப் பெண், கோவிந்தன் வருவதைக் கொண்டு இவ்வாறு ஒப்பாரி வைத்தாள்.(11) அவள், “ஓ! தாமரைக் கண்ணரே, பிள்ளையை இழந்த எங்கள் இருவரையும் பாரும். ஓ! ஜனார்த்தனரே, {என் கணவர்} அபிமன்யுவும், நானும் ஒன்றாகக் கொல்லப்பட்டோம்.(12) ஓ! விருஷ்ணிகுலத்தவரே, ஓ! மதுசூதனரே, ஓ! வீரரே, உமக்குத் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். துரோணர் மகனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்ட என்னுடைய இந்தக் குழந்தையை மீட்பீராக.(13)

ஓ! தாமரைக் கண்ணரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரோ, பீமசேனரோ, நீரோ அந்தச் சந்தர்ப்பத்தில்,(14) “(அஸ்வத்தாமனால் பிரம்ம ஆயுதமாக ஈர்க்கப்பட்ட) இந்தப் புல், தன்னினைவற்ற தாயை அழிக்கட்டும்” என்று சொல்லியிருந்தால், ஓ! பலமிக்கவரே, நான் அழிந்திருப்பேன், இந்த (துயர நிகழ்வும்) நடந்திருக்காது.(15)

ஐயோ, துரோணரின் மகன், தன் பிரம்மாயுதத்தால், கருவறையில் உள்ள குழந்தையை அழிக்கும் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ததன் மூலம் அறுவடை செய்த நன்மையென்ன?(16) ஓ! பகைவரைக் கொல்பவரே, அதே தாயான நான் இப்போது தலைவணங்குவதன் மூலம் உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். ஓ! கோவிந்தரே, இந்தக் குழந்தையை மீட்க முடியாமல் போனால் நிச்சயம் நான் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்.(17) ஓ! அறம் சார்ந்தவரே, பல எதிர்பார்ப்புகளை நான் அவனில் வைத்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, துரோணர் மகனால் அவை கெடுக்கப்பட்ட போது, எனக்கு உயிரின் சுமையைச் சுமக்கும் தேவையென்ன இருக்கிறது?(18)

ஓ! கிருஷ்ணரே, ஓ! ஜனார்த்தனரே, மடியில் குழந்தையுடன் நான் உம்மை மதிப்புடன் வணங்குவேன் என்ற நம்பிக்கையை நான் வளர்த்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, அந்த நம்பிக்கை அழிந்தது.(19) ஓ! அனைத்திலும் முதன்மையானவரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யுவின் வாரிசான இவன் இறந்ததும், என் நெஞ்சில் இருந்த நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்தன.(20) ஓ! மதுசூதனரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யும் உமது பெரும் அன்புக்குரியவராக இருந்தார். அவருடைய {அபிமன்யுவினுடைய} மகனான இவன் பிரம்மாயுதத்தால் கொல்லப்பட்டதைப் பாரும்.(21)

பாண்டவர்களின் செழிப்பையும், செல்வாக்கையும் அலட்சியம் செய்து யமலோகம் சென்றதன் மூலம் இந்தக் குழந்தையும் அவனது தந்தையைப் போலவே நன்றியற்றவனாகவும், இதயமற்றவனாகவும் இருக்கிறான்.(22) ஓ! கேசவரே, ஓ! வீரரே, போர்க்களத்தில் அபிமன்யு வீழ்ந்தால், தாமதமில்லாமல் நானும் அவரைப் பின்தொடர்வேன் என்று நான் உறுதிமொழியேற்றிருந்தேன்.(23) எனினும், உயிர் மீது அன்பு கொண்ட கொடுமைக்காரியான நான், என் உறுதிமொழியைக் காக்கவில்லை. இப்போது நான் அந்தப் பல்குனர் மகனிடம் {அர்ஜுனர் மகனான அபிமன்யுவிடம்} சென்றால், உண்மையில் அவர் என்ன சொல்வாரோ?” என்று கேட்டாள் {உத்தரை}”.(24)

குழந்தையை உயிர்ப்பித்த கிருஷ்ணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 69-குழந்தையைப் பார்த்து ஒப்பாரியிட்ட உத்தரை; குழந்தையின் உயிர் மீட்ட கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஆதரவற்றவளான உத்தரை, தன் குழந்தையைத் திரும்பப் பெற விரும்பி, இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டு அறிவற்ற ஓர் உயிரினத்தை {பயித்தியம் பிடித்தவளைப்} போலத் துன்பத்துடன் பூமியில் விழுந்தாள்.(1) தன் மகனை இழந்த அந்த இளவரசி {உத்தரை}, மறைக்கப்படாத உடலுடன் பூமியில் கிடப்பதைக் கண்ட குந்தியும், பாரதப் பெண்மணிகள் (பிறர்) அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் உரக்க அழத் தொடங்கினர்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒப்பாரிக் குரலை எதிரொலித்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் மாளிகை, விரையில் எவரும் இருக்க முடியாத துக்கமாளிகையானது[1].(3)ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகனின் இழப்பால் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்ட விராடனின் மகள் {உத்தரை}, துக்கத்தாலும், மனவாட்டத்தினாலும் மூர்ச்சையடைந்தவளாகத் தெரிந்தாள்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நனவு மீண்ட உத்தரை தன் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு, இந்த வார்த்தைகளில்,(5) “அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரின் {அபிமன்யுவின்} குழந்தை நீ. விருஷ்ணி குலத்தில் முதன்மையானவரான இவரைக் கண்டும் நீ வணங்காமல் இருப்பதால் பாவத்தை இழைக்கிறாய் என்ற உணர்வு உனக்கில்லையா?(6)

ஓ! மகனே {பரீக்ஷிதே}, உன் தந்தையிடம் {அபிமன்யுவிடம்} சென்று, “என் கணவரான உம்மை இழந்தும், இப்போது என் குழந்தையை இழந்தும், மங்கலமான மற்றும் மதிப்புமிக்க ஏதும் இல்லாத நான் சாகாமல் வாழ்ந்திருப்பதால், உயிரினங்கள் தங்கள் வேளை வருவதற்கு முன் இறப்பது கடினமானதே.(7,8) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அனுமதியுடன் நான் ஏதேனும் கடும்நஞ்சை விழுங்கப் போகிறேன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் என்னை விடப்போகிறேன்.(9) ஓ! ஐயா, கணவரையும், குழந்தையையும் இழந்திருந்தாலும் என் இதயம் ஆயிரம் துண்டுகளாகப் பிளக்காமல் இருப்பதால் என் இதயம் அழிவடைவது கடினமே” என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வாயாக.(10)

ஓ! மகனே, எழுவாயாக, உன் பூட்டி {உன் தந்தையின் பாட்டியான குந்தி} துயருறுவதைக் காண்பாயாக. கண்ணீரில் குளித்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவள், பெரும் மனவாட்டம் கொண்டவளாகச் சோகக் கடலில் மூழ்கியிருக்கிறாள்.(11) மதிப்புக்குரிய பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்}, ஆதரவற்ற சாத்வத குல இளவரசியையும் {சுபத்திரையையும்} காண்பாயாக. வேடனால் துளைக்கப்பட்ட மானுக்கு ஒப்பாகத் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்டிருக்கும் என்னைக் காண்பாயாக.(12) ஓ! குழந்தாய், எழுவாயாக, பெரும் ஞானம் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவரும், ஓய்வற்ற பார்வை கொண்ட உன் தந்தைக்கு {அபிமன்யுவுக்கு} ஒப்பானவருமான இந்த உலகங்களின் தலைவருடைய {கிருஷ்ணரின்} முகத்தைக் காண்பாயாக” என்றாள் {உத்தரை}.(13)

இவ்வாறு ஒப்பாரியில் ஈடுபட்டுப் பூமியில் விழுந்த உத்தரையைக் கண்ட அந்தப் பெண்கள் அனைவரும் அவளை உயர்த்தி அமரச் செய்தனர்.(14) மத்யர்களின் மன்னனுடைய {விராடனின்} மகளான அவள், எழுந்து அமர்ந்ததும், பொறுமையை வரவழைத்துக் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} வணங்குவதற்காக, மதிப்புடன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, தன் தலையால் பூமியைத் தீண்டினாள்.(15) இதயம் பிளக்கும் அவளுடைய ஒப்பாரிகளைக் கேட்ட அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்}, நீரைத் தீண்டி {ஆஸமனஞ்செய்து}, அந்தப் பிரம்மாயுதத்தை (அதன் சக்தியை} திரும்பப் பெற்றான் {விலக்கினான் / உபஸம்ஹாரம் செய்தான்}[2].(16)தசார்ஹ குலத்தைச் சேர்ந்த மங்கா மகிமை கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, அந்தக் குழந்தைக்குத் தன் உயிரைக் கொடுப்பதாக உறுதியளித்தான். அதன் பிறகு, தூய ஆன்மா கொண்ட அவன் மொத்த அண்டமே கேட்கும் வகையில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17) {கிருஷ்ணன்}, “ஓ! உத்தரா, ஒருபோதும் நான் பொய் சொல்லேன். என் சொற்கள் உண்மையாகும். அனைத்து உயிரினங்களின் முன்னிலையிலும் நான் இக்குழந்தையின் உயிரை மீட்பேன்.(18) இதற்கு முன் எப்போதும் கேலிக்காகக் கூடப் பொய் பேசியவனல்லன். போரில் ஒருபோதும் புறமுதுகிட்டவனல்லன். (அந்தச் செயல்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம்) இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்.(19) அறம் எனதன்புக்குரியதாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, பிராமணர்கள் பேரன்புக்குரியவர்களாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, இறந்தே பிறந்த இந்த அபிமன்யு மகனின் உயிர் (என்னுடைய அந்த மனநிலையின் தகுதியால் {புண்ணியத்தால்}) மீளட்டும்.(20)

எனக்கும், என் நண்பனான விஜயனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் ஒருபோதும் கருத்துவேறுபாடு எழுந்ததில்லை. இறந்த இக்குழந்தையின் உயிர் அந்த உண்மையின் மூலம் மீளட்டும்.(21) வாய்மையும், அறமும் எப்போதும் என்னில் நிறுவப்பட்டிருப்பதைப் போல {நிறுவப்பட்டிருப்பது உண்மையானால்} அபிமன்யுவின் இந்த இறந்த குழந்தையுடைய உயிர் (அந்தத் தகுதிகளால் {புண்ணியங்களால்}) மீளட்டும்.(22) கம்சனும், கேசியும்  என்னால் அறம்சார்ந்து கொல்லப்பட்டதைப் போல {அறம் சார்ந்து கொல்லப்பட்டது உண்மையானால்}, அந்த உண்மையினால் இன்று இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.(23)

ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இந்தச் சொற்கள் சொல்லப்பட்ட பிறகு, அந்தக் குழந்தை {பரீக்ஷித்} உயிரூட்டம் பெற்றுப் படிப்படியாக {மெல்ல மெல்ல} அசையத் தொடங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}[3].(24)

அபிமன்யுவின் வாரிசு – பரிக்ஷித்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 70-: காரணத்துடன் குழந்தைக்குப் பெயர் சூட்டிய கிருஷ்ணன்; பொற்சுமையுடன் பாண்டவர்கள் வந்து கொண்டிருப்பதைக் கேட்டு வரவேற்கச் சென்ற கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனால் பிரம்மாயுதம் விலக்கப்பட்ட {உபஸம்ஹாரம் செய்யப்பட்ட} அந்த நேரத்தில், உன் தந்தையின் {பரிக்ஷித்தின்} சக்தியால் அந்தப் பேற்றறை {பிரசவ அறை} ஒளி பொருந்திற்று.(1) (அங்கே வந்திருந்த) ராட்சசர்கள் அனைவரும் அந்த அறையைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் {ராட்சசர்களில்} பலர் அழிவையும் அடைந்தனர். ஆகாயத்தில் ஒரு குரல், “நன்று, ஓ! கேசவா, நன்று” என்று சொல்வது கேட்டது.(2) சுடர்மிக்க அந்தப் பிரம்மாயுதம் (உலகங்கள் அனைத்தின்) பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} திரும்பிச் சென்றது. ஓ! மன்னா, உன் தந்தை தன் உயிர்மூச்சைத் திரும்பப் பெற்றான்.(3)

அந்தக் குழந்தை தன் சக்தி மற்றும் வலிமைக்குத் தகுந்தபடி அசைந்தது. பாரதப் பெண்மணிகள் அனைவரும் இன்பத்தால் நிறைந்தனர்.(4) கோவிந்தனுடைய ஆணையின் பேரில், பிராமணர்கள் ஆசிகள் கூறினர் {ஸ்வஸ்திவாசனம் செய்தார்கள்}. இன்பத்தில் நிறைந்திருந்த பெண்கள் அனைவரும் ஜனார்த்தனனைப் புகழ்ந்தனர்.(5) உண்மையில், பாரதச் சிங்கங்களின் மனைவியரான குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை, உத்தரை ஆகியோரும் மற்றும் மனிதர்களில் சிங்கங்களாகத் திழ்ந்தவர்களின் மனைவிமாரும், (உடைந்த கப்பலிலிருந்து) படகை அடைந்து, கரையை எட்டியவர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(6)

அப்போது மல்லர்கள் {மற்போர்புரிபவர்கள்}, நடிகர்கள் {நடர்கள்}, கணிகர்கள் {சோதிடர்கள்}, (இளவரசர்களின்) உறக்கத்தைக் குறித்து விசாரிப்பவர்கள்,(7) சூதர்கள், மாகதர்கள், துதிபாடிகள் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, குரு குலத்தின் புகழால் நிறைந்த நல்லாசிகளைக் கூறியபடியே ஜனார்த்தனனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தனர்.(8) தன் கைகளில் தன் குழந்தையைச் சுமந்தபடி தகுந்த காலத்தில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எழுந்த உத்தரை, யதுகுலத்தைத் திளைக்கச் செய்பவனை {கிருஷ்ணனை} மதிப்புடன் வணங்கினாள்.(9)

பெரிதும் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன், மதிப்புமிக்க ரத்தினங்கள் பலவற்றைக் குழந்தைக்குப் பரிசாக வழங்கினான். விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த வேறு தலைவர்களும் அதையே செய்தனர். அப்போது, ஓ! ஏகாதிபதி, பலமிக்கவனும், வாய்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவனுமான ஜனார்த்தனன், உன் தந்தையான அந்தக் குழந்தைக்கு ஒரு பெயரைச் சூட்டினான். {கிருஷ்ணன்}, “அபிமன்யுவின் குழந்தையான இவன், தன் குலம் கிட்டத்தட்ட அழிந்து போகும் நேரத்தில் பிறந்ததால்,(10,11) இவனது பெயர் பரிக்ஷித் என்றிருக்கட்டும்” என்றான்[1]. இதையே அவன் சொன்னான். பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதா, உன் தந்தை வளரத் தொடங்கி,(12) மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான்.ஓ! வீரா {ஜனமேஜயா}, உன் தந்தை {பரிக்ஷித்} ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது, அபரிமிதமான செல்வத்துடன் பாண்டவர்கள் தங்கள் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பி வந்தனர். பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட விருஷ்ணி குலத்தில் முதன்மையானவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றனர்.(14) குடிமக்கள், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தை {ஹஸ்தினாபுரத்தைப்} பெரும் எண்ணிக்கையிலான மலர்மாலைகளாலும், அழகிய கொடிகளாலும், பல்வேறு வகையான கொடிக்கம்பங்களாலும் அலங்கரித்தனர்.(15)

ஓ! மன்னா, அந்தக் குடிமக்கள் தங்கள்தங்களுக்குரிய மாளிகைகளையும் அலங்கரித்தனர். பாண்டு மகன்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பிய விதுரன், கோவில்களில் நிறுவப்பட்டிருந்த அந்தந்த {கோவில்} தெய்வங்களுக்குப் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்யும்படி ஆணையிட்டான். நகரத்தின் முக்கிய வீதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.(16,17) உண்மையில், தொலைவில் உள்ள கடல் அலைகளின் மென்முழக்கங்களுக்கு ஒப்பான ஆயிரங்குரல்களின் ஹுங்காரத்தால் அந்த நகரம் {ஹஸ்தினாபுரம்} நிறைந்திருந்தது. தங்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆடற்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் குரலுடன் கூடியதாக இருந்த அந்த (குரு) நகரம்},(18) அப்போது வைஸ்ரவணனின் {குபேரனின்} மாளிகைக்கு ஒப்பானதாக இருந்தது[2].ஓ! மன்னா {ஜனமேஜயா}, அழகிய பெண்களுடன் கூடிய வந்திகள் மற்றும் துதிபாடிகள்,(19) அந்த நகரத்தின் பல்வேறு இடங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொடிகள், அடிவானத்தின் தெற்கு மற்றும் வடக்குத் திசைப்புள்ளிகளைக் காண்பிப்பதைப் போல, காற்றால் இனிமையான மிதக்கச் செய்யப்பட்டன. அரசு அலுவலர்கள் அனைவரும், ரத்தினர்கள் மற்றும் பிற மதிப்பு மிக்கப் பொருட்களைக் கொண்டு வரும் பணியில் வெற்றியடைந்ததன் குறியீடாக மொத்த நாட்டுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய நாளாக அது விளங்குவதாக உரக்க அறிவித்தனர் {பறையறிவித்தனர்}” {என்றார் வைசம்பாயனர்}.(20,21)

குரு நீயே! – அஸ்வமேதபர்வம் பகுதி – 71-யுதிஷ்டிரனை எதிர்கொண்டழைத்த கிருஷ்ணன்; அஸ்வமேத யாகம் செய்ய அனுமதித்த வியாசர்; கிருஷ்ணன் செய்யட்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மறுத்து யுதிஷ்டிரனைச் செய்யச் சொன்ன கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பகைவரை அழிப்பவனான வாசுதேவன், பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு, அவர்களைக் காணத் தன் அமைச்சர்களுடன் புறப்பட்டுச் சென்றான்.(1) அப்போது, ஓ! மன்னா, வழக்கமான நடைமுறைகளின்படி விருஷ்ணிகளுடன் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} பாண்டவர்கள் நுழைந்தனர்.(2) குரல்களின் ஹுங்காரம், பெரும்படையின் தேர்களுடைய சடசடப்பொலி ஆகியவற்றுடன் கூடிய பூமி மற்றும் ஆகாயம் என்ற மொத்த வெளியே அவற்றால் {அவ்வொலிகளால்} மொத்தமாக நிறைந்தது.(3) மகிழ்ச்சிகரமான இதயங்களுடன் கூடிய பாண்டவர்கள், தங்கள் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் துணையுடன், செல்வக்கருவூலத்தைத் தங்கள் முன்னணியில் வைத்துக் கொண்டு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்.(4)

வழக்கத்திற்கு ஏற்புடைய வகையில் அவர்கள் முதலில் மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று, தங்களுடைய பெயர்களை அறிவித்துக் கொண்டு, அவனது பாதங்களை வழிபட்டனர்.(5) பிறகு, ஓ! மன்னர்களின் தலைவா, பாரதக் குலத்தில் முதன்மையான அவர்கள், சுபலனின் மகளான காந்தாரிக்கும், குந்திக்கும் தங்கள் மதிப்புமிக்க வணக்கங்களைச் செலுத்தினர்.(6) அடுத்ததாக (தங்கள் சிறிய தந்தையான) விதுரரை வழிபட்டு, திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகனான யுயுத்சுவைச் சந்தித்தனர். அப்போது, ஓ! மன்னா, அவர்கள் பிறரால் வழிபடப்பட்டு அழகுடன் பிரகாசித்தனர்.(7) அதன்பிறகு, ஓ! பாரதா, அந்த வீரர்கள், அற்புதம் நிறைந்தவையும், ஆச்சரிகரமானவையும், மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவையுமான உன் தந்தை {பரிக்ஷித்} குறித்த செய்திகளைக் கேட்டனர்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் சாதனையைக் கேட்ட அவர்கள் அனைவரும், தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவனும், அனைத்து வகை வழிபாட்டிற்கும் தகுந்தவனுமான கிருஷ்ணனை வழிபட்டனர்.(9)

அதன்பிறகு, சிறிது நாள் கழித்து, பெருஞ்சக்தி கொண்டவரும், சத்தியவதியின் மகனுமான வியாசர், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தார்.(10) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள், வழக்கமான நடைமுறையின்படி அந்தப் பெரும் முனிவரை வழிபட்டனர். உண்மையில், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் முதன்மையான இளவரசர்களான அந்த வீரர்கள், தங்கள் துதிகளை அத்தவசிக்குச் செலுத்தினர்.(11) பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய பிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், வியாசரிடம்,(12) “ஓ! புனிதமானவரே, உம் அருளால் இங்கே கொண்டுவரப்பட்ட இந்தப் பொக்கிஷத்தைக் குதிரை வேள்வி {அஸ்வமேதயாகம்} என்ற பெயரால் அழைக்கப்படும் பெரும் வேள்விக்கு அர்ப்பணிக்க நான் விரும்புகிறேன்.(13) ஓ! தவசிகளில் சிறந்தவரே, உமது அனுமதியைப் பெற நான் விரும்புகிறேன். ஓ! முனிவரே, உமக்கும், உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கும் நாங்கள் அனைவரும் வசப்பட்டவர்கள்” என்றான்.(14)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். எது முதலில் செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியைச் செய்வதன் மூலம் நீ முறையாகத் தேவர்களை வழிபடுவாயாக.(15) ஓ! மன்னா, குதிரை வேள்வி அனைத்துப் பாவங்களையும் தூய்மைப்படுத்தும். அந்த வேள்வியின் மூலம்தேவர்களை வழிபடுவதால் அனைத்துப் பாவங்களும் நிச்சயம் தூய்மையடையும் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிட} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, இவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான குரு மன்னன் யுதிஷ்டிரன், குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்குத்} தேவையான ஆயத்தங்களைச் செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(17) பெரும் நாநயமிக்க அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, இவை யாவற்றையும் தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} சொல்லிவிட்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} அணுகி,(18) “ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னால் தேவகிதேவி, தாய்மார்களில் பெரும் பேறு பெற்றவளெனக் கருதப்படுகிறாள். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உனக்குச் சொல்லப் போவதைச் செய்வாயாக.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நாங்கள் அனுபவிக்கும் பல்வேறு இன்பங்கள் யாவும் உன் பலத்தின் மூலமே அடையப்பட்டன. உன் ஆற்றல் மற்றும் புத்தியின் மூலமே மொத்த பூமியும் வெல்லப்பட்டது.(20) எனவே, தொடக்கச் சடங்குகளை நீயே செய்வாயாக {உன்னை தீக்ஷையுள்ளவனாகச் செய்வாயாக}. எங்களது உயர்ந்த ஆசானும், குருவும் நீயே. ஓ! தசார்ஹ குலத்தோனே, இவ்வேள்வியை நீ செய்தால், நான் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவேன்.(21) வேள்வியானவன் நீயே. அழிவற்றவன் நீயே. இவை யாவுமாக இருப்பவன் நீயே. அறம் நீயே. பிரஜாபதி நீயே. அனைத்து உயிரினங்களின் இலக்கும் {கதியும்} நீயே. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்” என்றான்.(22)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, இவ்வாறு சொல்ல {செய்ய} நீரே தகுந்தவர். நீரே அனைத்து உயிரினங்களின் இலக்காயிருக்கிறீர் {அறமெனும் கதியாயிருக்கிறீர்}. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்.(23) குரு குல வீரர்களுக்கு மத்தியில், உமது அறத்தின் விளைவால் நீர் இன்று பெரும் மகிமையில் ஒளிர்கிறீர். ஓ! மன்னா, அவர்கள் யாவரின் மீதும் நீர் உமது நிழலை விழச் செய்தீர். நீரே எங்கள் மன்னன், நீரே எங்களுக்குப் பெரியவர்.(24) தாராளமாக வழங்கப்படும் என் அனுமதியுடன், இவ்வேள்வி பரிந்துரைக்கும் தேவர்களைத் வணங்குவீராக. ஓ! பாரதரே, நீர் விரும்பும் பணிகளில் எங்களை நியமிப்பீராக. உண்மையில், ஓ! பாவமற்றவரே, நிறைவேற்றச் சொல்லி நீர் இடும் ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன்.(25) இவ்வேள்வியை நீர் செய்யும்போதே, பீமசேனர், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் மகன்கள் {நகுல சகாதேவன்} இருவரும் செய்தவர்களாவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”.(26)

யாகக் குதிரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 72-யாகக் குதிரையைச் சுற்றவிடும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; குதிரையைக் காக்க அர்ஜுனனை நியமித்த யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி இச்சொற்களைச் சொன்னான்:(1) “நீர் உண்மையில் அறிந்தவாறு சடங்குக்கு உரிய நேரத்தில் என்னைத் தொடங்கச் செய்வீராக. என்னுடைய இவ்வேள்வி முழுமையாக உம்மைச் சார்ந்தது” {என்றான்}.(2)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, நான், பைலன், யாஜ்ஞவல்கியன் ஆகியோர் ஒவ்வொரு சடங்கையும் அதனதனுக்குரிய நேரத்தில் நிச்சயம் செய்வோம்.(3) {வேள்வியைச் செய்வதற்குரிய} உனக்கான தொடக்கச் சடங்கு, சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} செய்யப்படும்[1]. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, வேள்விக்குத் தேவையான அனைத்தையும் தயாராக இருக்கட்டும்.(4) குதிரை அறிவியலை நன்கறிந்த சூதர்கள், அதை அறிந்த பிராமணர்கள் ஆகியோர், ஆய்வு செய்த பிறகு, உன் வேள்வி நிறைவடைவதற்குரிய தகுந்த குதிரையைத் தேர்வு செய்யட்டும்.(5) ஓ! மன்னா, சாத்திரத் தீர்மானங்களின்படி அவிழ்த்துவிடப்படும் அவ்விலங்கு, சுடர்மிக்க உன் மகிமையை வெளிப்படுத்தும் வகையில் கடல்களையே கச்சையாகக் கொண்ட மொத்த பூமியில் அது சுற்றித் திரியட்டும்” என்றார் {வியாசர்}”.(7)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(அம்முனிவரால்) இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனும், பூமியின் தலைவனுமான யுதிஷ்டிரன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பிரம்மம் ஓதுபவர் சொன்ன அனைத்தையும் செய்தான்.(7) ஓ! மன்னா, வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் முறையாகத் திரட்டப்பட்டன.(8) அளவற்ற ஆன்மா கொண்ட தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தேவையானவை அனைத்தையும் திரட்டிவிட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} அது குறித்துச்ச ஒன்னான்.(9)

அப்போது பெரும் சக்தி கொண்டவரான வியாசர், தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “எங்களைப் பொறுத்தவரையில், வேள்வியின் நோக்கில் உன்னைத் தொடங்கச் செய்ய நாங்கள் அனைவரும் ஆயத்தமாகவுள்ளோம். ஓ! குரு குலத்தோனே, ஸ்பியம் {கத்தி}, கூர்ச்சம் ஆகியனவும், உன் வேள்விக்குத் தேவையான வேறு பொருட்கள் அனைத்தும் பொன்னால் செயப்படட்டும்[2].(11) சாத்திர விதிகளுக்கு ஏற்ப இன்று அந்தக் குதிரை பூமியில் சுற்றித்திரிய அவிழ்த்து விடப்படட்டும். அந்த விலங்கு, முறையாகப் பாதுகாக்கப்பட்டுப் பூமியில் திரியட்டும்” என்றார் {வியாசர்}.(12)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் குதிரையை அதன் விருப்பப்படி பூமியின் மீது அலைந்து திரிவதற்கு ஏதுவாக இதை அவிழ்த்துவிடுவதற்குரிய ஏற்பாடுகள் உம்மால் செய்யப்படட்டும்.(13) ஓ! தவசியே, இந்தக் குதிரை பூமியில் தன் விருப்பப்படி சுதந்திரமாகத் திரியும்போது அதை எவன் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்”.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (மன்னன் யுதிஷ்டிரனால்) இவ்வாறு சொல்லப்பட்ட தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, “பீமசேனனுக்குப் பின் பிறந்தவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும்,(15) ஜிஷ்ணு என்றழைக்கப்படுபவனும், பெரும்பொறுமை கொண்டவனும், தடைகள் அனைத்தையும் கடக்கவல்லவனும் எவனோ, அவனே இந்தக் குதிரையைப் பாதுகாப்பான். நிவாதகவசர்களை அழிந்தவனான அவனே மொத்த பூமியையும் வெல்லத்தகுந்தவன் ஆவான்.(16) தெய்வீக ஆயுதங்கள் அனைத்தும் அவனிடம் உள்ளன. அவனுடைய உடல், தாங்கும் சக்தியில் ஒரு தேவனுடைய உடலைப் போன்றதாகும். அவனுடைய வில்லும், அம்பறாதூணியும் தெய்வீகமானவை. அவனே இந்தக் குதிரையைப் பின்தொடரட்டும்.(17) அறம், பொருள் ஆகிய இரண்டையும் அவன் நன்கறிந்தவன். அறிவியல்கள் அனைத்திலும் அவன் தேர்ச்சிபெற்றவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அவன் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்தக் குதிரையைச் சுதந்திரமாக மேயவும், திரியவும் வைக்கட்டும்.(18) 

கரிய நிறம் மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இந்த இளவரசன் {அர்ஜுனன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனாக இருக்கிறான். அபிமன்யுவின் தந்தையான இந்த வீரன் குதிரையைப் பாதுகாப்பான்.(19) பீமசேனனும் பெருஞ்சக்தி கொண்டவனே. குந்தியின் மைந்தனான அவன் அளவற்ற வலிமையைக் கொண்டவனாவான். ஓ! ஏகாதிபதி, நகுலனின் துணையுடன் அவன் {பீமன்} நாட்டைப் பாதுகாக்கத் தகுந்தவனாவான்.(20) ஓ! குரு குலத்தோனே, பெரும் நுண்ணறிவையும், புகழையும் கொண்ட சகாதேவன், உன் தலைநகருக்கு அழைக்கப்பட்டிருக்கும் உறவினர்கள் அனைவரையும் முறையாகக் கவனிப்பான்” என்றார் {வியாசர்}.(21) அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், ஒவ்வொரு ஆணையையும் முறையாக நிறைவேற்றி, குதிரையைக் கவனிக்கப் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(22)

யுதிஷ்டிரன், “ஓ! அர்ஜுனா, ஓ! வீரா, வருவாயாக, இந்தக் குதிரை உன்னால் பாதுகாக்கப்படட்டும். இதைப் பாதுகாக்க நீ மட்டுமே தகுந்தவன்; வேறு எவனும் அல்ல.(23) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, ஓ! பாவமற்றவனே, உன்னுடன் மோத முன் வரும் மன்னர்களிடம் போரைத் தவிர்க்க உன்னால் முடிந்தவரை முயற்சிப்பாயாக.(24) மேலும் நீ அவர்களை என்னுடைய வேள்விக்கு அழைக்கவும் வேண்டும். உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவர்களுடன் நட்புறவை நிறுவ முயற்சிப்பாயாக[3]” என்றான்”.(25)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியான சவ்யசாச்சினிடம் {அர்ஜுனனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பீமன் மற்றும் நகுலனிடம் நகரத்தைப் பாதுகாக்க ஆணையிட்டான்.(26) மன்னன் திருதராஷ்டிரனின் அனுமதியுடன் அவன், போர்வீரர்களில் முதன்மையான சகாதேவனை, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரையும் கவனிக்கும் காரியத்தில் நிறுவினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

வடக்கிலிருந்து கிழக்கே திரும்பிய குதிரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 73-யாகக் குதிரையைப் பின்தொடர்ந்து வடக்குத் திசைக்குச் சென்று, கிழக்கில் திரும்பிய அர்ஜுனன்; அங்கே எதிர்த்த மன்னர்களை வென்றது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{அவ்வேள்வித்} தொடக்கத்திற்கான வேளை வந்தபோது, குதிரை வேள்வியைக் கருத்தில் கொண்ட பெரும் ரித்விஜர்கள் அனைவரும், மன்னனை {யுதிஷ்டிரனை} முறையாக அதைத் தொடங்கச் செய்தனர் {யுதிஷ்டிரனுக்கு அஸ்வமேத யாகத்திற்கான தீக்ஷையை விதிப்படி செய்வித்தனர்}.(1) பாண்டுவின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேள்வி விலங்குகளைக் கட்டும் சடங்குகளை நிறைவேற்றி {வேள்வியின்} தொடக்கம் {தொடக்கச் சடங்கு} முடிந்தவுடன் ரித்விஜர்களுடன் சேர்ந்து பெரும் காந்தியுடன் ஒளிர்ந்தான்.(2) குதிரை வேள்விக்காகக் கொண்டுவரப்பட்ட குதிரை சாத்திர விதிகளுக்கு ஏற்புடைய வகையில் அளவிலா சக்தி கொண்டவரும், பிரம்மதை ஓதுபவருமான வியாசரால் அவிழ்த்துவிடப்பட்டது.(3) ஓ! ஏகாதிபதி, கழுத்தைச் சுற்றிலும் தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், {வேள்விக்கான} தன் தொடக்கத்திற்குப் பிறகு சுடர்மிக்க நெருப்பைப் போல அழகில் ஒளிர்ந்தான்.(4) கருப்பு மான்தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், கையில் தண்டத்தைக் கொண்டவனும், வெண்பட்டு உடுத்தியவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பிரஜாபதியைப் போல ஒளிர்ந்தான்.(5)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவனது ரித்விஜர்கள் அனைவரும் அதே போன்ற ஆடைகளையே உடுத்தியிருந்தனர். அர்ஜுனன் சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான்.(6) ஓ! மன்னா, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், கருப்பு மானின் நிறத்தில் இருந்த அந்தக் குதிரையைப் பின்தொடர்வதற்கு முறையாகத் தயாரானான்.(7) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, காண்டீவம் என்ற பெயரைக் கொண்ட தன் வில்லை மீண்டும் மீண்டும் இழுத்து, உடும்புத் தோலாலான தன் கையுறையைப் பூட்டி, உற்சாகமிக்க இதயத்துடன் அந்தக் குதிரையைப் பின்தொடர ஆயத்தமானான்.(8) ஓ! மன்னா, குழந்தைகள் உள்ளிட்ட ஹஸ்தினாபுரத்தோர் அனைவரும், குருக்களில் முதன்மையான தனஞ்சயனின் பயணத்தின் தொடக்கத்தில் அவனைக் காண விரும்பி அந்த இடத்திற்கு வந்தனர்.(9) குதிரையையும், அதைப் பின்தொடர்ந்து செல்லப்போகும் இளவரசனையும் {அர்ஜுனனையும்} காண வந்த பார்வையாளர்களின் உடல்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவால் நெருப்புண்டாகிவிடும் எனத் தோன்றும் அளவுக்கு அக்கூட்டம் அடர்த்தியாக இருந்தது.(10)

குந்தியின் மகனான தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காண அங்கே கூடியிருந்த மனிதக் கூட்டத்திலிருந்து எழுந்த உரத்தவொலி, திசைப்புள்ளிகள் அனைத்தையும், மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாக இருந்தது.(11) அவர்கள், “குந்தியின் மகன் அதோ போகிறான், சுடர்மிக்க அழகுடன் கூடிய குதிரை அதோ இருக்கிறது. உண்மையில் அந்த வலிமைமிக்க வீரன் தன் சிறந்த வில்லைத் தரித்துக் கொண்டு அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து செல்கிறான்” என்றனர்.(12) உன்னதமான நுண்ணறிவுடன் கூடிய ஜிஷ்ணு கேட்ட சொற்கள் இவையே. மேலும் அந்தக் குடிமக்கள், “அருள் உனதாகட்டும். ஓ! பாரதா, பாதுகாப்புடன் சென்று திரும்புவாயாக” என்று ஆசி கூறினர்.(13) ஓ! மனிதர்களின் தலைவா, வேறு சிலர், “அர்ஜுனனைக் காண முடியாத அளவுக்கு {கூட்ட} நெருக்கடி அதிகமாக இருக்கிறது. எனினும், அவனது வில் நமக்குத் தெரிகிறது.(14) பயங்கர நாணொலியைக் கொண்டதும் கொண்டாடப்படும் வில்லுமான காண்டீவம் அதுவே. {என்று சொல்லிவிட்டு, அர்ஜுனன் கேட்கும் வகையில்} நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் பாதையில் உள்ள ஆபத்துகள் அனைத்தும் தப்பி ஓடட்டும் {விலகிச் செல்லட்டும்}. எங்கும் உனக்கு அச்சம் ஏற்பட வேண்டாம் {என்று உரக்கச் சொல்லி, மீண்டும் தங்களுக்குள்}.(15) இவன் நிச்சயம் திரும்பிவருவான், அவ்வாறு திரும்பும்போது நான் இவனைக் காணலாம்” என்றனர்.

ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உயர் ஆன்ம அர்ஜுனன், ஆண்களும், பெண்களும் சொல்லும் இதே போன்ற சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டான். வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்தவனும், வேதங்களில் முழுத் தேர்ச்சி பெற்றவனுமான யாஜ்ஞவல்கியரின் சீடன் ஒருவன், பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சாதகமாக மங்கலச் சடங்குகளைச் செய்து கொண்டே அந்த வீரனுடன் {அர்ஜுனனுடன்} சென்றான். ஓ! மன்னா, நீதிமானான யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், வேதங்களை நன்கறிந்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும் அந்த உயர் ஆன்ம வீரனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(16-19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களின் சக்தி மூலம் ஏற்கனவே வென்ற பூமியில் தான் விரும்பிய இடமெல்லாம் அந்தக் குதிரைச் சுற்றித் திரிந்தது.(20)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை அவ்வாறு திரிந்து சென்ற போது, அர்ஜுனனுக்கும், மன்னர்கள் பலருக்கும் இடையில் அற்புதம் நிறைந்த பெரிய போர்கள் பல நேரிட்டன. அவற்றை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(21) ஓ! மன்னா, அந்தக் குதிரை பூமி முழுவதும் சுற்றித் திரிந்தது. ஓ! ஏகாதிபதி, வடக்கிலிருந்து அது கிழக்கி நோக்கித் திரும்பியது என்பதை அறிவாயாக.(22) ஏகாதிபதிகள் பலரின் நாடுகளைக் கலங்கடித்தபடியே அந்தச் சிறந்த குதிரை திரிந்து கொண்டிருந்தது. வெண்குதிரைகளைக் கொண்ட பெருந்தேர்வீரனான அர்ஜுனனால் அது மெதுவாகப் பின்தொடரப்பட்டது.(23) ஓ! ஏகாதிபதி, குருக்ஷேத்திரக் களத்தில் தங்கள் உற்றார் உறவினரை இழந்திருந்தவர்களும், அந்தச் சந்தர்ப்பத்தில் அர்ஜுனனிடம் போரிட்ட {பதினாயிரக்கணக்கில் இருந்த} மன்னர் கூட்டமும், கணக்கற்றவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் விதியைச் சந்தித்தனர்.(24)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, எண்ணற்ற கிராதர்களும், சிறந்த வில்லாளிகளான யவனர்களும், (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே பாண்டவர்களால்) வீழ்த்தப்பட்டவர்களான மிலேச்சர்களின் பல்வேறு இனக்குழுக்களும்,(25) பெரும் வேகம் கொண்ட படைவீரர்களையும், விலங்குகளையும் கொண்டவர்களும், போரில் தடுக்கப்பட முடியாதவர்களான ஆரிய {உன்னதமான} மன்னர்கள் பலரும், அந்தப் பாண்டு மகனுடன் போரிட்டனர்.(26) ஓ! ஏகாதிபதி, இவ்வாறு அர்ஜுனனுக்கும், அவனோடு மோத வந்த பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் எண்ணற்ற போர்கள் நிகழ்ந்தன.(27) ஓ! பாவமற்ற மன்னா, அவன் போரிட்டவற்றுள் பெருஞ்சீற்றத்துடன் நடந்தவையும், முக்கியமான போர்களையும் மட்டுமே நான் உனக்குச் சொல்லப் போகிறேன்” {என்றார் வைசம்பாயனர்}.(28)

காண்டீவம் நழுவியது! – அஸ்வமேதபர்வம் பகுதி – 74-திரிகர்த்தர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் மூண்ட போர்; இளைஞனான திருதவர்மனின் போர்த்திறனைக் கண்டு வியந்த அர்ஜுனன்; காண்டீவம் நுழுவியது; மூர்க்கத்துடன் போரிட்ட அர்ஜுனன்; அடிபணிந்த திரிகர்த்தர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஏற்கனவே பாண்டவர்களுடன் பகை பூண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாக நன்கறியப்பட்டவர்களுமான திரிகர்த்தர்களின் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்தவனுக்கும் (அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு போர் நடந்தது.(1) வேள்விக்காக அனுப்பப்பட்ட முதன்மையான குதிரை தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் வந்ததை அறிந்த அவ்வீரர்கள் {திரிகர்த்தர்கள்}, கவசம்பூண்டவர்களாக அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! மன்னா, நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் ஏறி, தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணியுடன் கூடிய அவர்கள் அந்தக் குதிரையைச் சூழ்ந்து கொண்டு, அதைக் கைப்பற்ற முயற்சித்தனர்.(3) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், அவர்களுடைய முயற்சிகளை எண்ணிப் பார்த்து, சமாதானப் பேச்சுகளின் மூலம் அந்த வீரர்களைத் தடுத்தான்.(4) அர்ஜுனனின் செய்தியை அலட்சியம் செய்த அவர்கள் தங்கள் கணைகளைக் கொண்டு அவனைத் தாக்கினர். கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், இருள் மற்றும் ஆசையின் {தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களின்) ஆதிக்கத்தில் இருந்த அந்தப் போர்வீரர்களைத் தடுத்தான்.(5)

ஜிஷ்ணு {அர்ஜுனன்} புன்னகைத்தபடியே, “அறமற்றவர்களே, விலகுவீராக. உயிரானது (வீசியெறியப்படக்கூடாத) நன்மையான ஒன்றாகும்” என்றான். அவன் புறப்பட்ட வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே உறவினர்கள் கொல்லப்பட்டவர்களான க்ஷத்திரியர்களைக் கொல்ல வேண்டாம் எனத் தடையாணை விதித்திருந்தான்.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய இந்த ஆணைகளை நினைவுகூர்ந்த அர்ஜுனன், திரிகர்த்தர்களைத் திரும்புமாறு கேட்டான். ஆனால் அவர்கள் அர்ஜுனனின் தடையாணையை அலட்சியம் செய்தனர்.(8) அதன்பிறகு அர்ஜுனன், அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே திரிகர்த்த மன்னன் சூரியவர்மன் மீது எண்ணற்ற கணைகளை ஏவி அவனை வென்றான்.(9) எனினும், தேர்கள் மற்றும் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடியே தனஞ்சயனை நோக்கித் திரிகர்த்தப் போர்வீரர்கள் விரைந்தனர்.(10)

அப்போது, பெரும் கரநளினத்தை வெளிப்படுத்திய சூரியவர்மன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, நூற்றுக்கணக்கான நேரான கணைகளால் தனஞ்சயனைத் துளைத்தான்.(11) மன்னனைப் பின்தொடர்ந்து வந்தவர்களும், தனஞ்சயனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பியவர்களுமான பிற பெரிய வில்லாளிகள் அனைவரும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(12) ஓ! மன்னா, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வில்லின் நாணிலிருந்து எண்ணற்ற கணைகளை ஏவி அந்தக் கணைமேகத்தை வெட்டி வீழ்த்தினான்.(13) சூரியவர்மனின் தம்பியும், இளமையின் சீற்றத்தைக் கொண்டவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேதுவர்மன், பெரும் புகழ் கொண்ட பாண்டு மகனை {அர்ஜுனனைத்} தன் அண்ணனுக்காக எதிர்த்தான்.(14) போரில் தன்னை நோக்கி வரும் கேதுவர்மனைக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, கூர்முனை கொண்ட கணைகள் பலவற்றால் அவனைக் {கேதுவர்மனைக்} கொன்றான்.(15)

கேதுவர்மன் வீழ்ந்தபிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான திருதவர்மன், தன் தேரில் ஏறி அர்ஜுனனை நோக்கி வரைந்து சென்று, அவன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(16) இளைஞனான திருதவர்மனின் கரநளினத்தைக் கண்டவனும், வலிமை, சக்தி மற்றும் பேராற்றலைக் கொண்டவனுமான குடாகேசன் {அர்ஜுனன்}, அவனிடம் பெரும் நிறைவையடைந்தான்.(17) அந்த இளம் போர்வீரன் எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது வில்லின் நாணில் அவற்றைப் பொருத்தித் தன் மீது குறி பார்த்தான் என்பதை இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} காண முடியவில்லை. அவன் காற்றில் பறந்து வரும் கணைமாரியை மட்டுமே கண்டான்.(18) குறுகிய காலம் வரை {ஒரு முகூர்த்த காலம்} அர்ஜுனன் தன் எதிரிக்கு மகிழ்ச்சியை அளித்து, அவனுடைய வீரத்தையும் திறனையும் கண்டு வியந்தான்.(19) சிரித்துக் கொண்டே இருந்த அந்தக் குருவீரன் {அர்ஜுனன்}, கோபம்நிறைந்த பாம்புக்கு ஒப்பான அந்த இளைஞனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} திருதவர்மனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்ததால் அவனது உயிரை எடுக்காதிருந்தான்.(20)

எனினும், அளவற்ற சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, திருதவர்மனின் உயிரை எடுக்க விரும்பாது அவனுடன் மென்மையாகப் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் சுடர் மிக்கக் கணையொன்றை அவன் மீது ஏவினான்.(21) அக்கணையால் ஆழத்துளைக்கப்பட்ட விஜயன் {அர்ஜுனன்} திகைப்படைந்தான், அவனது வில்லான காண்டீவம் திடமான பிடியில் இருந்து நழுவி பூமியில் விழுந்தது.(22) ஓ! மன்னா, அர்ஜுனனின் பிடியில் இருந்து விழுந்த போது அந்த வில்லின் வடிவம் (மழைக்குப் பின் ஆகாயத்தில் தோன்றும்} இந்திரனின் வில்லுக்கு {வானவில்லுக்கு} ஒப்பானதாகத் தெரிந்தது.(23) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமானதும், பெரியதுமான அந்த வீல் போரில் கீழே விழுந்தபோது திருதவர்மன் உரக்க நகைத்தான்.(24) இதனால் சினம் தூண்டப்பட்டவனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தன் கரத்தில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டு, மீண்டும் தன் வில்லை எடுத்துக் கொண்டு சரியான கணைமாரியைப் பொழிந்தான்.(25)

அப்போது, தனஞ்சயனின் அந்தச் சாதனையை மெச்சிய பல்வேறு உயிரினங்களின் குழப்பான {கல கலவென்ற} உரத்த ஒலி, ஆகாயத்தை நிறைத்து, சொர்க்கங்களையே தொட்டது.(26) சினத்தில் தூண்டப்பட்டு, யுகத்தின் முடிவில் தோன்றும் யமனைப் போலத் தெரிந்த ஜிஷ்ணுவைக் கண்ட திரிகர்த்த போர்வீரர்கள், திருதவர்மனைக் காக்கும் விருப்பத்தில் தங்கள் நிலைகளில் இருந்து விரைந்த வந்து வேகமாக அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். தன் பகைவர்களால் சூழப்பட்டவனாகத் தன்னைக் கண்ட அர்ஜுனன் முன்பைவிட அதிகக் கோபம் கொண்டான்.(27,28) அவன் விரைவில், பெரும் இந்திரனின் கணைகளுக்கு ஒப்பானவையும், வாரப்பிரும்பாலானவையுமான கணைகள் பலவற்றால் அவர்களில் முதன்மையான போர்வீரர்களான பதினெட்டு பேரை விரைவாகக் கொன்றான்.(29) அப்போது திரிகர்த்தப் போர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர். அவர்கள் பின்வாங்குவதைக் கண்ட தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றைப் பெரு வேகத்துடன் அவர்கள் மீது ஏவி உரக்கச் சிரித்தான்.(30)

தனஞ்சயனின் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், உற்சாகமிழந்த இதயத்துடன் திசைகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(31) அப்போது அவர்கள், (குருக்ஷேத்ரப் போர்க்களத்தில்) சம்சப்தகக் கூட்டத்தைக் கொன்ற அந்த மனிதர்களில் புலியிடம் {அர்ஜுனனிடம்}, “நாங்கள் உமது அடிமைகள். நாங்கள் உமது வசப்படுகிறோம்[1].(32) ஓ! பார்த்தரே, எங்களுக்கு ஆணையிடுவீராக. மிக அடக்கமான உமது பணியாட்களைப் போல நாங்கள் இங்கே காத்திருக்கிறோம் பாரும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நாங்கள் உமது ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்” என்றனர்.(33) அடிபணிவதை வெளிப்படுத்தும் இச்சொற்களைக் கேட்ட தனஞ்சயன், அவர்களிடம், “ஓ! மன்னர்களே, உங்கள் உயிரைக் காத்துக் கொண்டு, என் ஆட்சிப்பகுதியை ஏற்றுக் கொள்வீராக” என்றான்”.(34)

பகதத்தத்தன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 75-பிராக்ஜோதிஷ நாட்டுக்குச் சென்ற குதிரை; குதிரையைக் கைப்பற்றிய வஜ்ரதத்தன்; அர்ஜுனனுக்கும், வஜ்ரதத்தனுக்கும் இடையில் நடந்த போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த முதன்மையான குதிரை பிராக்ஜோதிஷ நாட்டுக்குள் சென்று அங்கே திரியத் தொடங்கியது. போரில் வீரமிக்கவனான பகதத்தனின் மகன் இதைக் கண்டு (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) வெளியே வந்தான்.(1) ஓ! பாரதர்களில் தலைவா, மன்னன் வஜ்ரதத்தன் {யஜ்ஞதத்தன்}, தன் நாட்டுக்குள் வந்த (வேள்விக்) குதிரையைக் கண்டு, (அதைப் பிடிப்பதற்காகப்) போரிட்டான்.(2) பகதத்தனின் அரசமகன், தன் நகரத்தைவிட்டு வெளியே வந்து, அங்கே வந்த குதிரையைப் பீடித்து (அதைக் கைப்பற்றி) தன் இடத்தை {பட்டணத்தை} நோக்கித் திரும்பிச் சென்றான்.(3) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குருகுலத் தலைவன் {அர்ஜுனன்} இதைக் கண்டு, விரைவாகத் தன் காண்டீவத்தை வளைத்துத் திடீரெனத் தன் பகைவனை நோக்கி விரைந்தான்.(4) காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகளால் திகைப்படைந்த பகதத்தனின் வீர மகன் {வஜ்ரதத்தன்}, குதிரையை விட்டுவிட்டுப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடினான்[1].(5)போரில் தடுக்கப்பட முடியாதவனான அந்த முதன்மையான மன்னன் {வஜ்ரதத்தன்}, மீண்டும் தன் தலைநகருக்குள் நுழைந்து, கவசம் பூண்டு, யானைகளின் இளவரசனான தன் யானையில் ஏறி வெளி வந்தான்.(6) அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், தன் தலைக்கு மேல் வெண்குடையைக் கொண்டிருந்தான், அவனுக்குப் பால்போன்ற நிறத்தில் இருந்த வெண்சாமரம் வீசப்பட்டது.(7) சிறுபிள்ளைத்தனம் மற்றும் மூடத்தனத்தால் அவன், பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், போர்க்களத்தில் பயங்கரச் செயல்களுக்காகப் புகழ்பெற்றவனுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போர்புரிய அவனை அறைகூவியழைத்தான்.(8) சினம் தூண்டப்பட்ட அந்த இளவரசன், முழு மலைக்கு ஒப்பானதும், மதப்பெருக்குள்ள கன்னப்பொட்டுகளும், வாயும் கொண்டதுமான தன் யானையை அர்ஜுனனை நோக்கித் தூண்டினான்.(9) உண்மையில் அந்த யானை, மழைபொழியும் பெரும் மேகத்திரளைப் போலத் தன் மதத்தைப் பெருக்கியது. தன் இனத்தைச் சேர்ந்த படையின் சாதனைகளைத் தடுக்க வல்ல அது, (போர் யானைக்குரிய) உடன்பாட்டுவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. போரில் தடுக்கப்படமுடியாததான அது, கட்டுப்பாட்டைக் கடந்த மதங்கொண்டிருந்தது.(10)

இரும்பு அங்குசத்தைக் கொண்டு அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்தப் பெரும் யானை, (பறந்து வரும் மலையைப் போல) ஆகாயத்தையே பிளப்பது போல (முன்னேறிச் செல்வதாகத்) தெரிந்தது. ஓ! மன்னா, ஓ! பாரதா, தன்னை நோக்கி முன்னேறிவரும் அதனைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சினத்தில் நிறைந்தவனாகப் பூமியில் நின்றபடியே, அதன் முதுகில் இருந்த இளவரசனோடு மோதினான்.(12) கோபத்தில் நிறைந்திருந்த வஜ்ரதத்தன், நெருப்பின் சக்தியைக் கொண்டவையும், (காற்றில் செல்லும்போது) வேகமாகப் பறக்கும் வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பானவையுமான பெரும் எண்ணிக்கையிலான தோமரங்களை அர்ஜுனனை நோக்கி ஏவினான்.(13) எனினும், அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு அந்தத் தோமரங்களில் சிலவற்றை இரண்டாகவும், சிலவற்றை மூன்றாகவும் வெட்டினான். ஆகாயத்தில் பறக்கும் தன் கணைகளைக் கொண்டே அவன் அவற்றை ஆகாயத்திலேயே வெட்டினான்.(14) இவ்வாறு தன் தோமரங்கள் வெட்டப்பட்டதைக் கண்ட பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்}, எண்ணற்ற பிற கணைகளைத் தொடர்ச்சரமாக அர்ஜுனனை நோக்கி ஏவினான்.(15)

இதனால் சினம் கொண்ட அர்ஜுனன், தங்கச் சிறகுகளுடன் கூடிய நேராகச் செல்லும் எண்ணற்ற கணைகளைப் பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்} மீது முன்னைவிட வேகமாக ஏவினான்.(16) பெருஞ்சக்தி கொண்ட வஜ்ரதத்தன், சீற்றமிக்க மோதலில் பெரும் பலத்துடன் தாக்கப்பட்டு, அந்தக் கணைகளால் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான். எனினும், நனைவுநிலை அவனைக் கைவிடவில்லை {அவனுக்கு நினைவு தவறவில்லை}.(17) வெற்றியை விரும்பும் பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்}, அந்தப் போருக்கு மத்தியில் மீண்டும் யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது ஏறி, மிக நிதானமாக எண்ணற்ற கணைகளை அர்ஜுனன் மீது ஏவினான்.(18) கோபத்தால் நிறைந்த ஜிஷ்ணு, நெருப்பின் சுடர்மிக்கத் தழல்களைப் போலத் தெரிந்தவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றைப் போலத் தெரிந்தவையுமான எண்ணற்ற கணைகளை அந்த இளவரசன் மீது ஏவினான்.(19) அவற்றால் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க யானை, பெருமளவிலான குருதியைச் சிந்தி, செஞ்சுண்ண நிறத்தில் நீரை வெளியிடும் சிற்றோடைகள் பலவற்றைக் கொண்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தது[2]” {என்றார் வைசம்பாயனர்}.(20)

வீழ்ந்தான் வஜ்ரதத்தன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 76-பகதத்தன் மகனான வஜ்ரதத்தனை வென்ற அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதர்களின் தலைவா, நூறு வேள்வி செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, விருத்திரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அர்ஜுனனுக்கும், அந்த இளவரசனுக்கும் {வஜ்ரதத்தனுக்கும்} இடையில் நடந்த போர் இவ்வாறே மூன்று நாள் நீடித்தது.(1)

நான்காம் நாளில், பெரும் வலிமை கொண்ட வஜ்ரதத்தன் உரக்கச் சிரித்துக் கொண்டே அர்ஜுனனிடம், “ஓ! அர்ஜுனா, நில், நிற்பாயாக. உன்னால் உயிருடன் தப்ப இயலாது. உன்னைக் கொன்று என் தந்தைக்கு {பகதத்தருக்குச்} செய்ய வேண்டிய நீர்ச்சடங்கை {தர்ப்பணத்தை} முறையாக நான் செய்யப் போகிறேன்.(3) உன் தந்தையின் நண்பரும், வயது முதிர்ந்தவருமான என் தந்தை பகதத்தர், அவருடைய முதுமையின் விளைவால் உன்னால் கொல்லப்பட்டார். எனினும், சிறுவனான என்னுடன் நீ போரிடுவாயாக[1]” என்றான்.(4)ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் வஜ்ரதத்தன், சினத்தில் நிறைந்தவனாகப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நோக்கித் தன் யானையைத் தூண்டினான்.(5) பெரும் நுண்ணறிவுமிக்க வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், ஆகாயத்தையே வெட்ட விரும்பி செல்வதைப் போலத் தனஞ்சயனை நோக்கி விரைந்தது.(6) அந்த யானைகளின் இளவரசன், மழையால் ஒரு மலையை நனைக்கும் நீல மேகத் திரளைப் போலத் தன் துதிக்கையின் முனையில் வெளிப்பட்ட நீரைப் பொழிந்து {ஜலத்திவலையால்} அர்ஜுனனை நனைத்தது.(7) உண்மையில் அம்மன்னனால் தூண்டப்பட்ட அந்த யானை, ஒரு மேகத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டே, தன் வாயில் வெளிப்பட்ட ஆழ்ந்த ஒலியுடன் பல்குனனை நோக்கி விரைந்தது.(8)

உண்மையில் வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், வலிமைமிக்கக் குருக்களின் தேர்வீரனை நோக்கி விரைவாக நகர்ந்து, தன் நடையால் மகிழ்ச்சியில் ஆடுவதைப் போலத் தெரிந்தது.(9) வஜ்ரதத்தனின் அந்த விலங்கு தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், பகைவர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான தனஞ்சயன், தன் காண்டீவத்தைச் சார்ந்து, அச்சத்தால் நடுங்காமல் தன் நிலையில் நின்றான்.(10) தன் பணியை நிறைவேற்றத் தடையாக இருக்கும் வஜ்ரதத்தனை நினைத்து, (பாண்டவர்களிடம் பிராக்ஜோதிஷ) வீடு கொண்ட பழைய பகையையும் நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன், கோபத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக அந்த மன்னனை எதிர்த்தான்.(11) சினத்தால் நிறைந்தவனான தனஞ்சயன், பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தன் கணைப்பொழிவின் மூலம் அந்த விலங்கின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(12)

அழுகுடன் கூடிய (வடிவம் கொண்ட) அந்த யானைகளின் இளவரசன், அர்ஜுனனால் இவ்வாறு தடுக்கப்பட்டு, முள் சிலிர்த்த முள்ளம்பன்றியைப் போலப் பல கணைகளால் உடல் துளைக்கப்பட்டுத் தன் முன்னேற்றத்தை நிறுத்தியது.(13) தன் யானையின் முன்னேற்றம் தடைபட்டதைக் கண்ட பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, சினத்தால் மதியிழந்தவனாகக் கூர் முனை கணைகள் பலவற்றை அர்ஜுனன் மீது ஏவினான்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், பகைவரைக் கொல்லும் தன் கணைகள் பலவற்றால் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். இந்த அருஞ்செயல் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(15)

கடுஞ்சினத்தால் தூண்டப்பட்ட பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {வஜ்ரதத்தன்}, ஒரு மலைக்கு ஒப்பான தன் யானையை மீண்டும் அர்ஜுனனுக்கு எதிராக வலுக்கட்டாயமாகத் தூண்டினான்.(16) மீண்டும் தன்னை நோக்கி முன்னேறிவரும் அவ்விலங்கைக் கண்ட அர்ஜுனன், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி கொண்டதுமான ஒரு கணையைப் பெரும்பலத்துடன் ஏவினான்.(17) ஓ! மன்னா, பாண்டுவின் மகனால் முக்கிய அங்கங்கள் ஆழமாகத் தாக்கப்பட்ட அந்த விலங்கு, வஜ்ரத்தால் தளர்ந்த மலைச் சிகரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தது.(18) தனஞ்சயனின் கணையால் தாக்கப்பட்ட அந்த யானை பூமியில் கிடந்த போது, இந்தரின் வஜ்ரத்தால் {இடியால்} தளர்ந்து பூமியில் விழுந்து கிடக்கும் ஒரு பெரும் மலைப் பாறையைப் போலத் தெரிந்தது.(19)

வஜ்ரதத்தனின் யானை பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த போது, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, யானையுடன் சேர்ந்து விழுந்து கிடந்த அந்த மன்னனிடம், “அஞ்சாதே.(20) உண்மையில், வலிமையும், சக்தியும் கொண்ட யுதிஷ்டிரர், என்னை இந்தப் பணியில் நிறுவும்போது இந்தச் சொற்களையே சொன்னார், “ஓ! தனஞ்சயா, (உன்னுடன் போரில் ஈடுபடும்) மன்னர்களை நீ கொல்லாதே.(21) ஓ! மனிதர்களில் புலியே, பகை மன்னர்களை முடக்கிவிட்டாலே உன் பணி நிறைவடைந்ததாக நீ கருத வேண்டும். ஓ! தனஞ்சயா, உன்னுடன் போரிட வரும் அந்த மன்னர்களின் போர்வீரர்களையும் நீ கொல்லாதே.(22) உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருடன் யுதிஷ்டிரனின் குதிரை வேள்விக்கு வருமாறு அவர்களை அழைப்பாயாக” {என்றார்}.(23)

ஓ! மன்னா, என் அண்ணனின் இந்த ஆணைகளைக் கேட்டிருக்கும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். எழுவாயாக; அச்சம் உனதாக வேண்டாம்; ஓ! பூமியின் தலைவா, பாதுகாப்பாகவும், நலமாகவும் உன் நகரத்திற்குத் திரும்புவாயாக.(24) ஓ! பெரும் மன்னா, சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ரா பௌர்ணமியில்} நடைபெறும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அவ்வேள்விக்கு நீ வருவாயாக” என்றான்.(25)

இவ்வாறு அர்ஜுனனால் சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவனுமான அந்தப் பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

மீண்டும் நழுவிய காண்டீவம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 77-சைந்தவர்களுடன் போர்புரிகையில் மீண்டும் காண்டீவம் நழுவியது; தெய்வீக முனிவர்களின் ஜபத்தால் புதிய பலம் பெற்றுக் கடும் போர்புரிந்த அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்) தங்கள் குலம் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கில் எஞ்சி வாழ்ந்த சைந்தவர்களுக்கும், கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நேர்ந்தது[1]. வெண்குதிரைகளைக் கொண்டவன் தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் {சைந்தவர்கள்}, பாண்டுகுலத்தின் முதன்மையான அவனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனை எதிர்த்து வெளியே வந்தனர்.(2) கடும் நஞ்சைப் போன்ற அந்தப் பயங்கரப் போர்வீரர்கள், அந்தக் குதிரையைத் தங்கள் நாட்டுக்குள் கண்டு, பீமசேனனின் தம்பியான பார்த்தனிடம் எந்த அச்சமும் கொள்ளாமல் அதைக் கைப்பற்றினர்.(3) கையில் வில்லுடன் தரையில் நின்று குதிரையைக் காத்துக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} எதிர்த்த அவர்கள் அருகில் சென்று அவனைத் தாக்கினர்.(4)ஏற்கனவே போரில் வீழ்த்தப்பட்டவர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், வெற்றியடையும் ஆசையால் உந்தப்பட்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவனைச் சூழ்ந்து கொண்டனர்.(5) தங்கள் பெயர்கள், குடும்பங்களின் பெயர்கள் மற்றும் பல்வேறு சாதனைகளை அறிவித்துக் கொண்ட அவர்கள், பார்த்தன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(6) பகை யானைகளையும் தடுக்கவல்ல கடுஞ்சக்தி கொண்ட கணைமாரியைப் பொழிந்த அந்த வீரர்கள், குந்தியின் மகனைப் போரில் வெல்ல விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(7) கடுஞ்சாதனைகளைச் செய்த அர்ஜுனன் தரையில் நிற்க, தேரில் அமர்ந்திருந்த அவர்கள் அவனோடு போரிட்டனர்.(8)

நிவாதகவசர்களைக் கொன்றவனும், சம்சப்தகர்களை அழித்தவனும், சிந்துக்களின் மன்னனை {ஜெயத்ரதனைக்} கொன்றவனுமான அந்த வீரனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்கள் தாக்கத் தொடங்கினர்.(9) ஆயிரம் தேர்கள் மற்றும் பத்தாயிரம் குதிரைகளுடன் கூட்டுக்குள் அடைத்ததைப் போல அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.(10) ஓ! குரு குலத்தவனே, போரில் தனஞ்சயனால் ஜெயத்ரதன் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த அவர்கள், கடும் மழை பொழியும் மேகத் திரளைப் போல அந்த வீரன் மீது கடும் கணை மாரியைப் பொழிந்தனர். அந்தக் கணைமாரியில் மறைந்த அர்ஜுனன், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலத் தெரிந்தான்.(11,12)

ஓ! பாரதா, இரும்புக்கூட்டுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பறவைக்கு ஒப்பாக அந்தப் பாண்டுவின் முதன்மையான மகன் {அர்ஜுனன்}, கணை மேகங்களுக்கு மத்தியில் இருந்தான்.(13) குந்தியின் மகன் இவ்வாறு கணைகளால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, ஓ! என்றும் ஐயோ என்றும் கதறல்கள் மூவுலகங்களிலும் கேட்டன, சூரியன் தன் காந்தியை இழந்தான்.(14) அப்போது, ஓ! மன்னா, கடுங்காற்று வீசத் தொடங்கியது, அதே வேளையில் சூரியன், சந்திரன் இருவரையும் ராஹு விழுங்கினான்.(15) எரிகொள்ளிகள் பல சூரிய வட்டிலைத் தாக்கி பல்வேறு திசைகளில் விழுந்தன. மலைகளின் இளவரசனான கைலாஸம் நடுங்கத் தொடங்கிற்று.(16)

ஏழு (தெய்வீக) முனிவர்களும், சொர்க்கத்தின் வேறு முனிவர்களும், அச்சமடைந்தவர்களாக, துன்பம் மற்றும் கவலையால் பீடிக்கப்பட்டு வெப்பப் பெருமூச்சுகளை விட்டனர்.(17) அந்த எரிகொள்ளிகள் ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு சந்திர வட்டிலிலும் விழுந்தன. திசைப்புள்ளிகள் அனைத்தும் புகையால் நிறைந்து விசித்திரமான தன்மையை ஏற்றன.(18) தங்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருந்த மின்னல் கீற்றுகளுடன் கூடியவையும், பக்கத்துக்குப் பக்கம் எல்லையாக இந்திரவில்லைக் கொண்டவையுமான சிவந்த மேகங்கள், திடீரென ஆகாயத்தை மறைத்துக் கொண்டு, பூமியில் இறைச்சியையும், குருதியையும் பொழிந்தன.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, கணைமாரியில் மூழ்கிய போது இயற்கை இத்தன்மையையே அடைந்தது. உண்மையில், பாரதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, இவ்வாறு பீடிக்கப்பட்ட போது இந்த அதிசயங்கள் தோன்றின.(20)

அடர்த்தியான கணை மேகத்தில் மூழ்கிய அர்ஜுனன் திகைப்படைந்தான். அவனது வில்லான காண்டீவம், அவனது உறுதியான பிடியில் இருந்து தளர்ந்து விழுந்தது, அவனது தோலுறையும் நழுவியது.(21) தனஞ்சயன் மயக்கமடைந்தபோது, சைந்தவ வீரர்கள் சற்றும் தாமதிக்காமல், உணர்வற்ற அந்தப் போர்வீரன் மீது எண்ணற்ற வேறு கணைகளை மீண்டும் ஏவினர்.(22) பிருதையின் மகன் {அர்ஜுனன்} நினைவிழந்ததை அறிந்த தேவர்களின் இதயமும் அச்சத்தால் பீடிக்கப்பட்டதால், அவர்கள் பல்வேறு ஆசிகளைக் கூறி அவனது நலத்தை நாடத் தொடங்கினர்.(23) அப்போது தெய்வீகமான ஏழு முனிவர்களும், மறுபிறப்பாள முனிவர்களும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருதையின் மகனுக்கு வெற்றியைக் கொடுக்க விரும்பி அமைதியான ஜபத்தில் ஈடுபட்டனர்.(24)

இறுதியாக, சொர்க்கவாசிகளின் அந்தச் செயல்களின் மூலம் பார்த்தனின் சக்தி சுடர்ந்தெழுந்தபோது, உயர்திறன் தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {அர்ஜுனன்} ஒரு மலையைப் போல அசையாமல் நின்றான்.(25) பிறகு, குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் தன் தெய்வீக வில்லை இழுத்தான். அவன் மீண்டும் மீண்டும் நாண்கயிற்றை இழுத்த போது, அதனைப் பின்தொடர்ந்து எழுந்தவொலி ஏதோவொரு பெரும் இயந்திரத்தின் உரத்த ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது[2].(26) மழையைப் பொழியும் புரந்தரனைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன் தன் வில்லில் இருந்து இடையறாத கணைமாரியைத் தன் பகைவரின் மீது பொழிந்தான்.(27) அக்கணைகளால் துளைக்கப்பட்ட சைந்தவப் போர்வீரர்கள், வெட்டுக்கிளிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போல மறைந்துபோனார்கள்.(28)அவர்கள் காண்டீவத்தின் ஒலியினாலேயே அச்சமடைந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதயத் துயரினால் அவர்க்ள கண்ணீர் உதிர்த்து, பேரொலியுடன் புலம்பினார்கள்.(29) வலிமைமிக்கவனான அந்தப் போர்வீரன், ஒரு நெருப்புச் சக்கரத்தைப் போன்ற வேகத்துடன் பகைவரின் கூட்டத்திற்கு மத்தியில் திரிந்து, எப்போதும் தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களைத் துளைத்தான்.(30) வஜ்ரதாரியான பெரும் இந்திரனைப் போலப் பகைவர்களைக் கொல்பவனான அர்ஜுனன், தன் வில்லில் இருந்து அனைத்துத் திசைகளிலும் ஏவிய கணைமாரியானது (மனித வகையைச் சாராத) மாயக் காட்சிக்கு ஒப்பாக இருந்தது.(31) அந்தக் கௌரவ வீரன், பலமிக்கக் கதிர்களால் மேகங்களை விலக்கும் கூதிர் காலச் சூரியனைப் போல, பிரகாசமாகத் தெரிந்த கணை மாரியால், பகைவரின் கூட்டத்தைத் துளைத்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

ஜெயத்ரதன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 78-மீண்டும் திரண்டு அர்ஜுனனைத தாக்கிய சைந்தவர்கள்; அர்ஜுனன் செய்த பெரும்போர்; அர்ஜுனனைச் சந்தித்த துச்சலை; சமாதானத்துக்கு மன்றாடியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “போரிட்டுக் கொண்டிருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, போர்க்களத்தில் இமயத்தைப் போல அசைக்க முடியாதவனாக நின்றான்.(1) மீண்டும் அணிதிரண்ட சைந்தவப் போர்வீரர்கள், பெரும் கோபத்துடன் மீண்டும் மீண்டும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன், மீண்டும் அணிதிரண்டு வந்திருப்பவர்களும், மரணத்தின் விளிம்பில் நிற்பவர்களுமான தன் பகைவர்களைக் கண்டு சிரித்து, அவர்களிடம் மென்மையான சொற்களில்,(3) “உங்கள் சக்திக்கு முடிந்த அளவில் என்னுடன் போரிட்டு என்னை வெல்ல முயற்சிப்பீர். எனினும், உங்கள் அனைவருக்கும் பேராபத்துக் காத்திருப்பதால், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்துவிடுவீராக.(4) உங்கள் கணை மேகங்கள் அனைத்தையும் கலங்கடித்து நான் உங்கள் அனைவருடன் போரிடுவதைக் காண்பீர். போரில் விருப்பம் உள்ள நீங்கள் சற்றே பொறுப்பீராக. நான் விரைவில் உங்கள் செருக்கைத் தணிப்பேன்” என்றான்.(5)

காண்டீவதாரி {அர்ஜுனன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோபத்தில் இச்சொற்களைச் சொன்னாலும், தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} சொற்களை நினைவுகூர்ந்தான்.(6) அச்சொற்கள், “ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, போரில் உன்னை எதிர்த்து வரும் க்ஷத்திரியர்களை நீ கொல்லாதே. எனினும் அவர்கள் உன்னால் வெல்லப்பட வேண்டும்” என்பனவாகும். மனிதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, பேரான்மாவும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறே சொல்லி அனுப்பப்பட்டான். எனவே அவன் தனக்குள், “என் அண்ணனால் இவ்வாறே நான் சொல்லி அனுப்பப்பட்டேன். என்னை எதிர்த்து வரும் போர்வீரர்களைக் கொல்லக்கூடாது.(7,8) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் சொற்களைப் பொய்யாக்கும் வகையில் நான் செயல்படக்கூடாது” எனச் சிந்திக்கத் தொடங்கினான்.(9)

இத்தீர்மானத்திற்கு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, போரில் சீற்றத்துடன் இருந்த சைந்தவர்கள் அனைவரிடமும், இந்தச் சொற்களில்,(10) “நான் உங்களுக்கு நன்மையானதைச் சொல்லப் போகிறேன். நீங்கள் எனக்கு எதிரில் நின்றாலும், நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. உங்களில் எவன் என்னிடம் என்னால் வெல்லப்பட்டதாகவும், அவன் என்னுடையவன் என்றும் சொல்கிறானோ, அவன் என்னால் விடப்படுவான்.(11) என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டு, உங்கள் நன்மைக்கு எது சிறந்ததோ அவ்வகையில் என்னிடம் செயல்படுவீராக. வேறு வகையில் செயல்படுவதன் மூலம் நீங்கள் உங்களைப் பேராபத்தான நிலையில் நிறுத்திக் கொள்வீர்[1]” என்றான்.(12)அந்தக் குருக்களின் தலைவன் {அர்ஜுனன்}, வீரமிக்கப் போர்வீரர்களிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு, அவர்களுடன் போரிடத் தொடங்கினான். அர்ஜுனன் கோபத்தால் தூண்டப்பட்டான். வெற்றியை விரும்பிய அவனது பகைவர்களும் இணையாகச் சினமூண்டிருந்தார்கள்.(13) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சைந்தவர்கள் காண்டீவதாரியின் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நேர்க்கணைகளைத் தொடுத்தனர்.(14) தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், பயங்கரமான கூர்முனைகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் தன்னிடம் வருவதற்கு முன்பே கூர்த்தீட்டப்பட்ட தன் கணைகளைக் கொண்டு அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(15) கங்க இறகுகளைக் கொண்ட அந்தக் கூரிய கணைகளை வெட்டி வீழ்த்திய அர்ஜுனன், தன்னை எதிர்த்த ஒவ்வொரு வீரனையும் கூர்த்தீட்டப்பட்ட ஒரு கணையால் துளைத்தான்.(16) தனஞ்சயனே {அர்ஜுனனே} தங்கள் மன்னன் ஜயத்ரதனைக் கொன்றான் என்பதை நினைவுகூர்ந்த அந்தச் சைந்தவ க்ஷத்திரியர்கள், அவன் மீது பராஸங்களையும், ஈட்டிகளையும் பெரும் சக்தியுடன் ஏவினர்.(17)

கிரீடம் தரித்தவனும், பெரும் வலிமை கொண்டவனுமான தனஞ்சயன், அந்த ஆயுதங்கள் எவையும் தன்னை அடைவதற்கு முன்பே அவை அனைத்தையும் துண்டித்து அவர்களது நோக்கத்தைக் கலங்கடித்தான். இப்படியே நீண்ட காலமானதில் பாண்டுவின் மகன் பெருங்கோபம் கொண்டான்.(18) வெற்றியடையும் விருப்பத்தில் தன்னை நோக்கி விரைந்து வரும் போர்வீரர்களின் தலைகளை அவன் நாராசங்களாலும், பல்லங்களாலும் வீழ்த்தினான்.(19) பலர் தப்பி ஓடினர், பலர் அர்ஜுனனை நோக்கி விரைந்தனர்; பலர் அசையாமல் இருந்தனர்; எனினும் அவர்கள் அனைவரும் பெருங்கடலின் முழக்கத்திற்கு ஒப்பான பேரொலியுடன் கதறினர்.(20) அளவிலா வலிமைகொண்ட பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} தங்கள் பலத்திற்கும், ஆற்றலுக்கும் தகுந்தபடி போரிட்டுக் கொண்டிருந்த அவர்கள் அவனால் கொல்லப்பட்டனர்.(21) அந்தப் போரில் களைத்துப் போன  விலங்குகள் மேலிருந்த போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளின் மூலம் உணர்விழக்கச் செய்வதில் பார்த்தன் {அர்ஜுனன்} வென்றான்.(22)

அப்போது, அவர்களுடைய {சைந்தவர்களின்} ராணியும், திருதராஷ்டிரன் மகளுமான துச்சலை, அர்ஜுனனால் அவர்கள் உற்சாகமிழப்பதை அறிந்து, தன் கரங்களில் தன் பேரனை எடுத்துக் கொண்டு அர்ஜுனனிடம் வந்தாள்.(23) அந்தக் குழந்தை (ஜெயத்ரதனின் மகனான) சுரதனின் {ஸுரதனின்} மகனாவான். அந்தத் துணிச்சல்மிக்க இளவரசன் {சுரதன்}, சைந்தவப் போர்வீரர்கள் அனைவரின் பாதுகாப்புக்காக, தன் தேரில் தன் தாய்மாமனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான்.(24) தனஞ்சயனிடம் வந்த ராணி {துச்சலை}, கவலையால் அழத் தொடங்கினாள் பலமிக்கவனான தனஞ்சயன் அவளைக் {துச்சலையைக்} கண்டதும் தன் வில்லைக் கீழே போட்டான்[2].(25) தன் வில்லைக் கைவிட்ட பார்த்தன், தன் தங்கையை {துச்சலையை} முறையாக வரவேற்று, தன்னால் அவளுக்கு என்ன செய்ய முடியும் என்பதை விசாரித்தான். அந்த ராணி {துச்சலை} அவனிடம், (26) “ஓ!பாரதர்களின் தலைவா, இந்தக் குழந்தை உன் தங்கை மகனின் மகனாவான். ஓ! பார்த்தா, இவன் உன்னை வணங்குகிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவனைப் பார்ப்பாயாக” என்றாள்.(27)அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட பார்த்தன், தன் மருமகனை {சுரதனைக்} குறித்து விசாரிக்கும் வகையில் “அவன் எங்கே?” என்று கேட்டான்.(28) துச்சலை, “தன் தந்தையின் படுகொலையால் துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், இந்தக் குழந்தையின் வீரத்தந்தையுமான அவன் {சுரதன்} பெரும் இதயத் துயரில் இறந்தான். அவன் எவ்வாறு மரணமடைந்தான் என்பதைக் கேட்பாயாக.(29) ஓ! தனஞ்சயா, ஓ! பாவமற்றவனே, அவனுடைய தந்தையான ஜெயத்ரதர் உன்னால் கொல்லப்பட்டார் என்பதை அவன் ஏற்கனவே கேட்டிருந்தான். இதனால் பெரும் துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவன், வேள்விக் குதிரையைப் பின்தொடர்ந்து, அதைப் பாதுகாப்பவனாக நீ வந்திருப்பதைக் கேட்ட உடனேயே கீழே விழுந்து தன் உயிர்மூச்சை விட்டான். உண்மையில், பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவன், உன் வருகையைக் கேட்டவுடனேயே தன் உயிரை விட்டான். ஓ தலைவா, அவன் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்டு, உன்னிடம் பாதுகாப்பை விரும்பிய நான், அவனுடைய குழந்தையை {சுரதனின் மகனை} அழைத்துக் கொண்டு உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தாள் {துச்சலை}. இந்தச் சொற்களைச் சொன்ன திருதராஷ்டிரன் மகள் பெரும் துன்பத்தால் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.(30-33)

அர்ஜுனன், பெரிதும் உற்சாகமிழந்த இதயத்துடன் அவள் முன்பு நின்றான். உற்சாகமிழந்திருந்த அந்தத் தங்கை {துச்சலை}, உற்சமிழந்திருந்த தன் அண்ணனிடம் {அர்ஜுனனிடம்}, இந்தச் சொற்களில், “உன் தங்கையைப் பார். உன் தங்கை மகனின் குழந்தைப் பார்.(34) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒவ்வொரு கடமையையும் முழுமையாக அறிந்தவனே, குரு இளவரசனையும் (துரியோதனனையும்), தீயவரான ஜெயத்ரதரையும் மறந்து, இந்தக் குழந்தைக்குக் கருணை காட்டுவதே உனக்குத் தகும்.(35) பகைவீரர்களைக் கொல்பவனான பரிக்ஷித் அபிமன்யுவுக்குப் பிறந்திருப்பதைப் போலவே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், என் பேரனுமான இந்தக் குழந்தையும் சுரதனில் இருந்து பிறந்திருக்கிறான்.(36) ஓ! மனிதர்களின் தலைவா, போர்வீரர்கள் அனைவரின் பாதுகாப்பை விரும்பியே இவனை அழைத்துக் கொண்டு நான் உன்னிடம் வந்திருக்கிறேன். நான் சொல்லும் இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(37)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா {அர்ஜுனரே}, தீயவரான உன்னுடைய பகைவருடைய இந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு நான் இப்போது வந்திருக்கிறேன். எனவே, இந்தக் குழந்தையிடம் இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்.(38) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, இந்தக் குழந்தை உனக்குத் தலைவணங்குவதன் மூலம் உன்னை நிறைவடையச் செய்ய விரும்புகிறான். இவன் உன்னிடம் அமைதியை {சமாதானத்தை} வேண்டுகிறான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, அமைதியை ஏற்படுத்துவாயாக.(39) ஓ! ஒவ்வொரு கடமையையும் அறிந்தவனே, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை இழந்தவனும், என்ன நடந்தது என்ற எதையும் அறியாதவனுமான இந்தக் குழந்தையிடம் நிறைவடைவாயாக. கோபவசப்படாதே.(40) உன்னை மிகவும் புண்படுத்தியவரும், அவமதித்தவரும், கொடூரமானவரும், உங்களுக்குப் பெரும் குற்றத்தை இழைத்தவருமான இவனுடைய பாட்டாவை {ஜெயத்ரதரை} மறந்து, இந்தக் குழந்தைக்கு இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்” என்றாள் {துச்சலை}.(41)

ராணி காந்தாரியையும், மன்னன் திருதராஷ்டிரனையும் நினைத்துப் பார்த்துத் துயரில் பீடிக்கப்பட்ட தனஞ்சயன், தன்னிடம் இவ்வாறு சொன்ன துச்சலையிடம் க்ஷத்திரிய நடைமுறைகளை நிந்தித்துக் கொண்டே,(42) “அற்பனும், நாட்டாசை கொண்டவனும், பகட்டு நிறைந்தவனுமான துரியோதனனுக்கு ஐயோ. ஐயோ, அவனுக்காகவே உன் உற்றார் உறவினர் அனைவரும் என்னால் யமனுலகுக்கு அனுப்பப்பட்டனர்” என்றான்.(43) இவ்வாறு சொல்லி தன் தங்கைக்கு ஆறுதலளித்த தனஞ்சயன், அமைதியை ஏற்படுத்திக் கொள்ள இணங்கினான். உற்சாகத்துடன் அவளைத் தழுவி கொண்டு, அவளிடம் அரண்மனைக்குத் திரும்பிச் செல்லுமாறு சொல்லி அவளுக்கு விடை கொடுத்தான்.(44) துச்சலைத் தன் போர்வீரர்கள் அனைவரையும் பெரும்போரில் இருந்து விலக்கி, பார்த்தனை வழிபடச் செய்தாள். அழகிய முகம் கொண்ட அவள், தன் சுவடுகளைப் பின்பற்றித் தன் வசிப்பிடத்திற்குச் சென்றாள்.(45)

இவ்வாறு அந்தச் சைந்தவ வீரர்களை வென்ற தனஞ்சயன், விரும்பியவாறு திரியத் தொடங்கிய குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான்.(46) ஆகாயத்தில் மானை {மானின் வடிவில் தப்பிச் சென்ற வேள்வியைப்} பின்தொடர்ந்த தெய்வீக பினாகபாணியை {சிவனைப்} போலவே வீர அர்ஜுனனும் அந்தக் குதிரையை முறையாகப் பின்தொடர்ந்தான்.(47) அந்தக் குதிரை, அர்ஜுனனின் அருஞ்செயல்களைப் பெருக்கிய வண்ணம், தன் விருப்பப்படி ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு நாடுகளில் திரிந்தது.(48) விருப்பப்படி திரிந்த அந்தக் குதிரை, ஓ! மனிதர்களின் தலைவா, பாண்டு மகனால் பின்தொடரப்பட்டுக் காலப்போக்கில் மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாஹனனின்} ஆட்சிப்பகுதியை அடைந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(49)

வீழ்ந்தான் அர்ஜுனன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 79-மணிபுரம் வந்த அர்ஜுனன்; மதிப்புடன் வரவேற்ற பப்ருவாஹனன்; கோபித்துக் கொண்ட அர்ஜுனன்; உலூபியின் தூண்டலால் கணை ஏவிய பப்ருவாஹனன்; அர்ஜுனன் வீழ்ந்தது; மயங்கி விழுந்த பப்ருவாஹனன்; நடுங்கியவாறு போர்க்களம் வந்த சித்திராங்கதை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மணிப்புரத்தின் ஆட்சியாளனான பப்ருவாஹனன், தன் தந்தையான அர்ஜுனன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் மற்றும் செல்வத்தை முன்னணியில் கொண்டு பணிவுடன் {அர்ஜுனனை வரவேற்பதற்காக} வெளியே புறப்பட்டுச் சென்றான்.(1) எனினும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்வாறு வந்த மணிப்புர ஆட்சியாளனைக் கண்டு, அதை அங்கீகரிக்காமல் இருந்தான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, கோபத்துடன், “இவ்வொழுக்கம் உனக்குத் தகாது. நீ நிச்சயம் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து விழுந்துவிட்டாய்.(3) யுதிஷ்டிரருடைய வேள்விக் குதிரையின் பாதுகாவலனாக நான் இங்கே வந்துள்ளேன். ஓ! மகனே, உன் நாட்டுக்குள் நான் வந்திருப்பதைக் கண்டும் என்னுடன் ஏன் நீ போரிடாமல் இருக்கிறாய்?(4) ஓ! மூடப் புத்தி கொண்டவனே, உனக்கு ஐயோ!, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட உனக்கு ஐயோ!. உன்னுடன் போர்புரிவதற்காக நான் இங்கு வந்திருந்தாலும், அமைதிநிறைந்தவனாக என்னை வரவேற்கும் உனக்கு ஐயோ!(5) இவ்வாறு அமைதிநிறைந்தவனாக வரவேற்பதன் மூலம் நீ ஒரு பெண்ணைப் போலச் செயல்படுகிறாய். ஓ! இழிந்த புத்தி கொண்டவனே, நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு வந்திருந்தால்,(6) ஓ! மனிதர்களில் இழிந்தவனே, அப்போது உன்னுடைய இந்த நடத்தை தகுந்ததாக இருந்திருக்கும்” என்றான்.

பாம்பு மன்னனின் மகளான உலூபி, தன் கணவனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட சொற்களை அறிந்து, அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பூமியைத் துளைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.[1] அவள், தலையைத் தொங்கப்போட்டவாறு, முற்றிலும் உற்சாகம் இழந்தவனாக அங்கே நின்று கொண்டிருக்கும் தன் மகனைக் {பப்ருவாஹனனைக்} கண்டாள்.(7,8) ஓ! ஏகாதிபதி, உண்மையில் அந்த இளவரசன், தன்னுடன் போரிட விரும்பும் தன் தந்தையால் மீண்டும் மீண்டும் நிந்திக்கப்பட்டான். அழகான அங்கங்களைக் கொண்டவளும்,(9) பாம்பின் மகளுமான உலூபி, அறம் மற்றும் கடமையை அறிந்த அந்த இளவரசனிடம், அறம் மற்றும் கடமைகளுக்கு இணக்கமான இச்சொற்களில், “பாம்பின் மகளான நான் உனது அன்னையான உலூபி என்பதை அறிவாயாக.(10) ஓ! மகனே, நான் சொல்வதைச் செய்தால், நீ பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவாய். குரு குலத்தில் முதன்மையானவரும், போரில் தடுக்கப்பட முடியாத வீரருமான உன் தந்தையுடன் போரிடுவாயாக.(11) அப்போது அவன் நிச்சயம் உன்னிடம் நிறைவடைவார்” என்றாள்.-இவ்வாறு மன்னன் பப்ருவாஹனன், தன் (மாற்றந்) தாயால் {உலூபியால்}, தன் தந்தைக்கு எதிராகத் தூண்டப்பட்டான்.(12) இறுதியாக, ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட அவன், தனஞ்சயனுடன் போரிடுவதற்குத் தன் மனத்தைத் தயார் செய்து கொண்டான். பிரகாசமான தன் கவசத்தையும், ஒளிமிக்கத் தன் தலைக்கவசத்தையும் பூட்டிக் கொண்ட அவன்,(13) நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகள் ஆயத்தமாக இருந்த ஒரு சிறந்த தேரில் ஏறினான். அந்தத் தேரானது, போருக்குத் தேவையானவற்றுடனும், மனோவேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டும் இருந்தது.(14) அது சிறந்த சக்கரங்களுடனும், பலமிக்க உபஷ்கரங்களுடனும் இருந்தது. அனைத்து வகைப் பொன்னாபரணங்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அழகிய இளவரசனான பப்ருவாஹனன், பொன்னாலான தங்கச் சின்னம் பொறிக்கப்பட்டதும்[2], மிக அழகிய வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தன் கொடிக்கம்பத்தை உயத்திக் கொண்டு, தன் தந்தையை எதிர்த்துப் போரிடச் சென்றான்.(15)அந்த வீர இளவரசன் {பப்ருவாஹனன்}, பார்த்தனால் பாதுகாக்கப்படும் வேள்விக் குதிரையிடம் வந்து, குதிரை சாத்திரத்தை நன்கறிந்த மனிதர்களால் அதைக் கைப்பற்றச் செய்தான்.(16) குதிரை கைப்பற்றப்பட்டதைக் கண்ட தனஞ்சயன் மகிழ்ச்சியால் நிறைந்தான். பூமியில் நின்று கொண்டிருந்த அந்த வீரன், தேரில் முன்னேறி வரும் தன் மகனைத் தடுக்கத் தொடங்கினான்.(17) அந்த மன்னன் {பப்ருவாகனன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கூர்த்தீட்டப்பட்ட முனைகளைக் கொண்டவையுமான கணைகளை அந்த வீரன் {அர்ஜுனன்} மீது மீண்டும் மீண்டும் மழையாகப் பொழிந்தான்.(18) தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த போர் ஒப்பற்றதாக இருந்தது. பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக அஃது இருந்தது. அவர்களில் ஒவ்வொருவனும், மற்றவனை எதிராளியாக அடைந்ததில் நிறைவடைந்தான்.(19) பப்ருவாஹனன், சிரித்துக் கொண்டே, மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனின் தோளை {தோள்பூட்டில்} நேரான ஒரு கணையால் {பதிவான கணுக்களுள்ள பாணத்தால்} துளைத்தான்.(20)

இறகுகளுடன் கூடிய அந்தக் கணை, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்பைப் போல அர்ஜுனனின் உடலுக்குள் ஊடுருவியது. குந்தியின் மகனைத் {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்ற அக்கணை பூமிக்குள் ஆழமாகச் சென்றது.(21) கடும் வலியை உணர்ந்த நுண்ணறிவுமிக்கத் தனஞ்சயன், தன் சிறந்த வில்லால் தன்னைத் தாங்கிக் கொண்டு சற்றே ஓய்வெடுத்தான். தன் தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி நின்று கொண்டிருந்த அவன், வெளிப்புறத் தோற்றத்தில் உயிரிழந்த ஒருவனைப் போலத் தெரிந்தான்[3].(22) நினைவு மீண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், தன் மகனை உயர்வாகப் புகழ்ந்தான். பெருங்காந்தி கொண்டவனான அந்தச் சக்ரனின் மகன் {அர்ஜுனன்},(23) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நன்று, ஓ! சித்ராங்கதையின் மைந்தனே, நன்று. ஓ! மகனே, உனக்குத் தகுந்த இந்த அருஞ்செயலைக் கண்டு நான் உயர்வான நிறைவடைகிறேன்.(24) ஓ! மகனே, நான் இப்போது உன் மீது இக்கணைகளை ஏவப் போகிறேன். (ஓடாமல்) போரிட நிற்பாயாக” என்றான். பகைவரைக் கொல்பவனான அவன், இச்சொற்களைச் சொல்லிவிட்டு, அந்த இளவரசன் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(25)எனினும், மன்னன் பப்ருவாகனன், {அர்ஜுனனின்} காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், காந்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையுமான அந்த நாராசங்கள் அனைத்தையும் தன் பல்லங்களைக் கொண்டு இரண்டாகவும், மூன்றாகவும் வெட்டி வீழ்த்தினான்.(26) அப்போது தங்கப் பனை மரத்திற்கு ஒப்பாகவும் பொன்மயமாகவும் அந்த மன்னனின் தேரில் இருந்த கொடிமரமானது, சிறந்த கணைகள் சிலவற்றைக் கொண்டு பார்த்தனால் வெட்டி வீழ்த்தப்பட்டது.(27) சிரித்துக் கொண்டே இருந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அடுத்ததாக, பெரிய அளவைக் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான மன்னனின் {பப்ருவாகனனின்} குதிரைகளை கொன்றான்.(28) இதனால் சினத்தால் தூண்டப்பட்ட மன்னன், தன் தேரில் இருந்து இறங்கி, தன் தந்தையுடன் தரையில் நின்று போரிட்டான்.(29) பிருதையின் மகன்களில் முதன்மையானவனும், வஜ்ரதாரியின் மகனுமான அவன் {அர்ஜுனன்}, தன் மகனின் ஆற்றலில் நிறைவடைந்தவனாக அவனைப் பெரிதும் பீடிக்கத் தொடங்கினான்[4].(30)வலிமைமிக்கப் பப்ருவாஹனன், தன் தந்தையால் இதற்கு மேலும் தன்னை எதிர் கொள்ள முடியாது என்று நினைத்துக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றால் அவனை மீண்டும் பீடித்தான்[5].(31) மேலும் அவன், தன் சிறுபிள்ளைத்தனத்தால் கூராக்கப்பட்டதும், சிறந்த சிறகுகளைக் கொண்டதுமான ஒரு கணையைக் கொண்டு தனது தந்தையின் மார்பில் மிகத் திடமாகத் துளைத்தான்.(32) ஓ! மன்னா, பாண்டு மகனின் உடலுக்குள் ஊடுருவிய அந்தக் கணை, அவனது உயிர்நிலையை அடைந்து அவனுக்குப் பெரும் வலியை உண்டாக்கியது. குருக்களைத் திளைக்கச் செய்பவனான தனஞ்சயன், தன் மகனால் ஆழத் துளைக்கப்பட்டு,(33) ஓ மன்னா {ஜனமேஜயா}, மயக்கமடைந்து பூமியில் விழுந்தான்.குருக்களின் சுமைகளைச் சுமப்பவனான அந்த வீரன் {அர்ஜுனன்} விழுந்தபோது, சித்ராங்கதையின் மகனும் {பப்ருவாஹனனும்} தன் உணர்வுகளை இழந்தான். போரில் பெரும் முயற்சிகளைச் செய்ததாலும், தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட துயரத்தாலும் அவன் மயங்கி விழுந்தான்.(34,35) அவனும் அர்ஜுனனின் கணை மேகங்களால் ஆழத் துளைக்கப்பட்டிருந்தான். எனவே, அவன் போரின் முன்னணியில் பூமியைத் தழுவியபடி கீழே விழுந்து கிடந்தான்.(36) கணவன் கொல்லப்பட்டான் என்றும் தன் மகன் பூமியில் விழுந்து கிடக்கிறான் என்பதையும் கேள்விப்பட்ட சித்ராங்கதை, மனத்தில் பெருங்கலக்கத்துடன் போர்க்களத்திற்கு வந்தாள்.(37) கவலையில் எரியும் இதயத்துடன் மிகப் பரிதாபகரமாக அழுது கொண்டும், நடுங்கியவாறும் வந்த மணிப்புர ஆட்சியாளனின் {பப்ருவாகனனின்} அன்னை {சித்ராங்கதை}, தன் கணவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

எழுந்தான் அர்ஜுனன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 80-கணவனும், தனயனும் விழுந்து கிடப்பதைக் கண்டு புலம்பி, மயங்கி விழுந்து, தெளிந்து உலூபியை நிந்தித்த சித்ராங்கதை; நினைவு திரும்பி நொந்து பிராயோபவேசம் செய்த பப்ருவாஹனன்; ஸஞ்சீவன மணியைக் கொண்டு அர்ஜுனனை எழுப்பிய உலூபி; சித்ராங்கதை களத்திற்கு வந்த காரணத்தைக் கேட்ட அர்ஜுனன்; உலூபியைக் கேட்கச் சொன்ன பப்ருவாகனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சித்ராங்கதை}, துயரில் எரிபவளாக ஒப்பாரியில் ஈடுபட்டு, இறுதியாகத் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள்.(1)

தெய்வீக அழகுடைய ராணி சித்ராங்கதை, தன் நினைவு திரும்பியதும், பாம்புத் தலைவனின் மகளான உலூபியைக் கண்டு, அவளிடம் இந்தச் சொற்களில்,(2) “ஓ! உலூபி, எப்போதும் வெற்றியடைபவரான நம் கணவர் {அர்ஜுனர்}, இளம் வயதைக் கொண்ட என் மகனால் {பப்ருவாஹனனால்} உன் மூலம் போரில் கொல்லப்பட்டதைப் பார்.(3) நீ {பெரியோரின தர்மத்தை,} மதிக்கத்தக்க நடைமுறைகளை அறிந்தவளில்லையா? நீ உன் தலைவருக்கு அர்ப்பணிப்புள்ள மனைவியில்லையா {பதிவிரதையில்லையா}? உன் கணவர் {அர்ஜுனர்} உன் செயலாலேயே போரில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்.(4) தனஞ்சயர் {அர்ஜுனர்} எவ்வகையிலாவது உனக்குக் குற்றமிழைத்திருந்தால் இவரை மன்னிப்பாயாக {இவர் உனக்கு என்ன தீங்கு செய்தார்? அப்படி இருந்தால் இவரை மன்னிப்பாயாக}. இந்த வீரரின் உயிரை மீட்குமாறு {ஜீவிக்கும்படி செய் என} நான் உன்னிடம் வேண்டுகிறேன்.(5) ஓ! அறம் சார்ந்த பெண்ணே {தர்மத்தை அறிந்தவளே}, நீ பக்தியை அறிந்தவள். ஓ! அருளப்பட்டவளே, (உன் நற்குணங்களுக்காக) நீ மூவுலகங்களிலும் அறியப்பட்டவள். உன் மகனைக் கொண்டு உன் கணவரைக் கொல்லச் செய்தும் நீ துயரில் ஈடுபடாமல் இருப்பது எவ்வாறு?(6) ஓ! பாம்புத் தலைவனின் மகளே {உலூபியே}, நான் கொல்லப்பட்ட என் கணவனுக்காக வருந்தவில்லை. என் மகனால் இவ்வாறான விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட்ட என் கணவருக்காகவே துன்புறுகிறேன்” என்றாள் {சித்ராங்கதை}.(7)

சிறப்புமிக்கவளான சித்ராங்கதை, பாம்புத் தலைவனின் மகளும், ராணியைப் போன்றவளுமான {தேவியுமான} உலூபியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு, பூமியில் கிடக்கும் தன் கணவனிடம் {அர்ஜுனனிடம்} சென்று, அவனிடம்,(8) “ஓ! அன்புத் தலைவா, எழுவீராக. குரு மன்னரின் (யுதிஷ்டிரரின்) அன்புக்குரியவர்களில் முதன்மையான இடத்தில் நீரே இருக்கிறீர். உமது குதிரை இங்கே இருக்கிறது. அஃது என்னால் சுதந்திரமாக விடப்படுகிறது.(9) உண்மையில், ஓ! பலமிக்கவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் இந்த வேள்விக் குதிரை உம்மால் பின்தொடரப்பட வேண்டுமே. நீர் ஏன் இன்னும் பூமியில் கிடக்கிறீர்?(10) குருக்களைத் திளைக்கச் செய்பவரே, என் உயிர் மூச்சு உம்மையே சார்ந்திருக்கிறது. மற்றவர்களுக்கு உயிரைக் கொடுப்பரான நீர் இன்று என்ன காரணத்தால் உயிரை விட்டீர்?(11)ஓ! உலூபி, தரையில் நெடுஞ்சாண் கிடையாக உன் கணவர் கிடக்கும் காட்சியை நன்றாகப் பார். சொற்களால் தூண்டி உன் மகன் மூலமாக அவரைக் {அர்ஜுனரைக்} கொல்லச் செய்தும் நீ துயருறாமல் இருப்பது எவ்வாறு?(12) இந்தச் சிறுவன் மரணத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கித் தன் தந்தையின் அருகில் தரையில் கிடப்பது தகும். ஓ…! சிவந்த கண்களைக் கொண்ட வீரரும், குடாகேசர் என்று அழைக்கப்படுபவருமான இந்த விஜயர் {அர்ஜுனர்} உயிர் திரும்பட்டும்.(13) ஓ!அருளப்பட்ட பெண்ணே, பல மனைவிகளைக் கொள்வது ஆடவரின் குற்றமில்லை. ஒரு கணவருக்கு மேல் கொள்ளும் பெண்களே குற்றமிழைப்பவர்களாவர். எனவே, (பழி வாங்கும்) இத்தகைய எண்ணங்களுக்கு இடமளிக்காதே.(14) இந்த உறவு {இந்தக் காதல்} விதிசமைக்கும் பரமனால் விதிக்கப்பட்டதாகும். அதைத் தவிர, அது நித்தியமானதும், மாற்றமில்லாததுமாகும். அந்த உறவைக் கவனிப்பாயாக. (தனஞ்சயருடனான) உன் உறவு உண்மையானதாகட்டும்[1].(15) உன் மகனைக் கொண்டு, உன் கணவரைக் கொல்லச் செய்த நீ, இன்று என் கண்களுக்கு முன்பாக இவரைப் பிழைக்கச் செய்யவில்லையெனில், நான் இப்போதே என் உயிர் மூச்சைக் கைவிடுவேன்.(16) ஓ! மதிப்புக்குரிய பெண்ணே {தேவி}, கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரையும் இழந்து துயரடைந்திருக்கும் நான், இன்று நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே இங்கேயே பிராயத்தில் அமர்வேன் {பிராயோபவேசம் செய்யப் போகிறேன்}. இதில் ஐயமில்லை” என்றாள் {சித்ராங்கதை}.(17) {சித்ரவாஹனனின் மகளான} இளவரசி சைத்ரவாஹினி {சித்ராங்கதை}, அர்ஜுனனுடனான {அர்ஜுனனின் மனைவியான} தனக்குச் சக்களத்தியான {ஸபத்னியான} பாம்புத் தலைவனின் மகளிடம் {உலூபியிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பேச்சை அடக்கிப் பிராயத்தில் அமர்ந்தாள்[2]“.(18)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உற்சாகமிழந்த அந்த ராணி {சித்ராங்கதை}, புலம்புவதை நிறுத்தி, தன் கணவனை மடியில் கிடத்திக் கொண்டு, பெருமூச்சு விட்டபடியும், தன் மகனின் உயிரை மீட்க விரும்பியும் அங்கே அமர்ந்திருந்தாள்[3].(19)நினைவு மீண்ட மன்னன் பப்ருவாஹனன், போர்க்களத்தில் அக்கோலத்தில் அமர்ந்திருக்கும் தன் தாயை {சித்ராங்காதையைக்} கண்டு, அவளிடம்,(20) “ஆடம்பரமாக வளர்க்கப்பட்ட என் அன்னை, தரையில் நெடுஞ்சாண் கிடைகாயாகக் கிடக்கும் தன் வீரக் கணவரின் அருகில் வெறுந்தரையில் அமர்ந்திருப்பதைக் காண்பதைவிடத் துன்பம் தரக்கூடிய காட்சி வேறென்ன இருக்க முடியும்?(21) ஐயோ, பகைவர் அனைவரையும் கொல்பவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான இவர் போரில் என்னால் கொல்லப்பட்டார். மனிதர்கள் தங்கள் வேளை வரும் வரை இறப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது[4].(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், அகன்ற மார்பைக் கொண்டவருமான தன் கணவர் இறந்து தரையில் கிடப்பதைக் கண்டும், இந்த இளவரசியின் இதயம் பிளக்காமல் இருப்பதால் அது மிகக் கடினமானதாகத் தெரிகிறது.(23) நானோ, என் தாயோ (இத்தகைய காட்சியைக் கண்ட பிறகும்) உயிரை இழக்காமல் இருப்பதால், ஒருவனுக்கு வேளை வரும் வரை அவன் இறப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.(24)ஐயோ, ஐயோ, மகனான என்னால் தெரிந்தே கொல்லப்பட்டுக் கிடக்கும் இந்த முதன்மையான வீரரின் பொற்கவசம், அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுத் தரையில் கிடக்கிறதே[5].(25) ஐயோ, பிராமணர்களே, மகனால் கொல்லப்பட்டு, வீரர்களின் படுக்கையில் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் என் வீரத்தந்தையைப் பார்ப்பீராக.(26) குரு குலத்தில் முதன்மையானவரும், போரில் என்னால் கொல்லப்பட்டவருமான இவர் குதிரையைப் பின்தொடர்வதில் ஈடுபடுத்தப்பட்ட போது, இந்த வீரரைக் கவனிக்க நியமிக்கப்பட்ட பிராமணர்களால் இவருக்கு என்ன நன்மை நேர்ந்தது?(27) போரில் தன் தந்தையையே கொன்ற இழிந்தவனும், பாவம் நிறைந்தவனும், கொடூரனுமான என்னால் செய்யப்பட வேண்டிய பரிகாரச் சடங்குகளைப் பிராமணர்கள் சொல்லட்டும்.(28) என் தந்தையைக் கொன்ற கொடூரனான நான், அவருடைய தோலால் {அர்ஜுனனின் தோலால்} என்னை மறைத்துக் கொண்டு, அனைத்து வகைத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இந்தப் பூமியில் திரிய வேண்டும்.(29) தந்தையைக் கொன்றதற்கு எனக்குப் பரிகாரமேதும் கிடையாது என்பதால் இன்று என்னிடம் என் தந்தையுடைய தலையின் இரு பகுதிகளைக் கொடுங்கள் (அந்தக் காலம் {பனிரெண்டு ஆண்டுகள்} வரை அதைக் கொண்டு {பிச்சையெடுத்த உணவை அதில் கொண்டு உண்டு} இந்த உலகில் திரிவேன்)[6].(30)ஓ! பாம்புகளில் முதன்மையானவரின் மகளே {உலூபியே}, என்னால் கொல்லப்பட்டுக் கிடக்கும் உன் கணவரைப் பார். உண்மையில், போரில் அர்ஜுனரைக் கொன்றதன் மூலம் உனக்கு ஏற்புடையதையே நான் நிறைவேற்றியிருக்கிறேன்.(31) நான் இன்று என் தந்தை சென்ற பாதையைப் பின்பற்றப் போகிறேன். ஓ! அருளப்பட்டவளே {கல்யாணி}, என்னால் என்னைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை.(32) ஓ! தாயே, நானும், காண்டீவதாரியும் என இருவரும் இன்று மரணத்தைத் தழுவுவதைக் கண்டு நீ மகிழ்ச்சியடைவாயாக. (என் உயிர்மூச்சைக் கைவிடுவேன் என்று) வாய்மையின் மீது ஆணையாக நான் உறுதியேற்கிறேன்” என்றான் {பப்ருவாஹனன்}.(33)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இச்சொற்களைச் சொன்ன மன்னன் {பப்ருவாஹனன்}, துன்பத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, நீரைத் தொட்டுக் கவலையுடன்,(34) “அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் நான் சொல்வதைக் கேட்கட்டும். ஓ! தாயே, நீயும் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! பாம்புகளின் மகள்கள் அனைவரிலும் சிறந்தவளே {உலூபியே}, நான் உண்மையைச் சொல்கிறேன்.(35) மனிதர்களில் சிறந்தவரும், என் தந்தையுமான இந்த ஜயர் {அர்ஜுனன்} எழவில்லையெனில், போர்க்களத்தில் அமர்ந்தவாறே நான் என் உடலை மெலியச் செய்வேன்.(36) தந்தையைக் கொன்றவனான எனக்கு (அந்தக் கொடும் பாவத்தில் இருந்து) தப்பிக்கும் வழியேதும் கிடையாது. தந்தையைக் கொன்ற பாவத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நான், நிச்சயம் நரகத்திலேயே மூழ்குவேன்.(37) வீர க்ஷத்திரியனைக் கொன்ற ஒருவன், நூறு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான். எனினும் தந்தையைக் கொன்றதன் மூலம் உண்டான கொடும்பாவத்தில் இருந்து நான் தப்பித்தல் சாத்தியமேயில்லை.(38) பாண்டுவின் மகனான இந்தத் தனஞ்சயர், வலிமையும், சக்தியும் நிறைந்த ஒரே வீரராவார். அற ஆன்மாவைக் கொண்ட அவரே, என் ஆசிரியருமாவார். அவரைக் கொன்ற என்னை எவ்வாறு காத்துக் கொள்ள இயலும்?” என்றான் {பப்ருவாஹனன்}.(39) இவ்வாறு புலம்பியவனும், தனஞ்சயனின் உயர் ஆன்ம மகனுமான மன்னன் பப்ருவாஹனன், நீரைத் தீண்டி, மரணம் வரை பட்டினி கிடப்பதாக உறுதியேற்று அமைதியடைந்தான்”.(40)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பகைவரைத் தண்டிப்பவனான மணிப்புர மன்னன் {பப்ருவாகனன்}, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாகத் தன் தாயுடன் சேர்ந்து மரணம் வரை பட்டினி இருக்க அமர்ந்த போது,(41) இறந்த மனிதனின் உயிரை மீட்கும் திறன் கொண்ட ஒரு ரத்தினத்தை {ஸஞ்சீவனம் எனும் மணியைக்} குறித்து உலூபி நினைத்தாள். பாம்புகளின பெரும்புகலிடமான அந்த ரத்தினம், இவ்வாறு நினைக்கப்பட்ட உடனேயே அங்கே வந்தது.(42) பாம்புகளின் இளவரசனுடைய மகள் {உலூபி} அதை எடுத்துக் கொண்டு, போர்க்களத்தில் நின்ற போராளிகளுக்கு உயர்ந்த மகிழ்ச்சியை அளிக்கும் இச்சொற்களைச் சொன்னாள்.(43)

{உலூபி}, “ஓ! மகனே {பப்ருவாஹனா}, எழுவாயாக. வருந்தாதே. ஜிஷ்ணு உன்னால் வீழ்த்தப்படவில்லை {கொல்லப்படவில்லை}. இந்த வீரர், மனிதர்களாலும், வாசவனைத் தலைமையில் கொண்ட தேவரகளாலும் வீழ்த்தப்பட முடியாதவராவார்.(44) மனிதர்களில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவருமான உன் தந்தையின் நன்மைக்காக, உன் புலன்களை வஞ்சிக்கும் {மோஹினி எனும்} இந்த மாயையை நான் வெளிக்காட்டினேன்.(45) ஓ! குரு குலத்தோனே, ஓ! மன்னா, பகைவீரர்களைக் கொல்பவரான இவர், தன் மகனான உன்னுடைய ஆற்றலை உறுதிசெய்து கொள்ள விரும்பியே உன்னுடன் போரிட இங்கே வந்தார்.(46) ஓ! மகனே, அதன் காரணமாகவே போரிடும்படி என்னால் நீ தூண்டப்பட்டாய். ஓ! பலமிக்க மன்னா, ஓ! மகனே, இந்த அறைகூவலை ஏற்றதன் மூலம், அணுவளவு பாவத்தையேனும் இழைத்துவிட்டாய் என ஐயுறாதே.(47) அவர் நித்தியமான, அழிவற்ற பெரும் ஆன்மாவைக் கொண்ட ஒரு முனிவராவார். ஓ! அன்பு மகனே, போரில் இவரை வீழ்த்த சக்ரனாலேயே முடியாது.(48) ஓ! மன்னா, இந்தத் தெய்வீக ரத்தினத்தை நான் வரவழைத்திருக்கிறேன். இஃது எப்போதும் பாம்புகள் இறக்க, இறக்கப் பிழைக்கச் செய்கிறது.(49) ஓ! பலமிக்க மன்னா, {ஸஞ்சீவனம் என்ற} இந்த ரத்தினத்தை உன் தந்தையின் மார்பில் வைப்பாயாக. பாண்டுவின் மகன் உயிர்பெறுவதை நீ காண்பாய்” என்றாள் {உலூபி}.(50)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாவமேதும் இழைக்காதவனுமான அந்த இளவரசன், தன் தந்தையின் மீது கொண்ட அன்பினால், அளவிலா சக்தி கொண்ட பிருதையின் மைந்தனுடைய மார்பில் அந்த {ஸஞ்சீவன} ரத்தினத்தை வைத்தான்.(51) மார்பில் ரத்தினம் வைக்கப்பட்டதும், வீரனும், பலமிக்கவனுமான ஜிஷ்ணு உயிர்பெற்றான். நீண்ட காலம் உறங்கிய ஒருவனைப் போலச் சிவந்திருந்த கண்களைத் திறந்து அவன் எழுந்தான்.(52) பெருஞ்சக்தி கொண்ட வீரனான தன் தந்தை நினைவு திரும்பி சுகமாக இருப்பதைக் கண்ட பப்ருவாஹனன் அவனை மதிப்புடன் வழிபட்டான்.(53) ஓ! பலமிக்கவனே, அந்த மனிதர்களில் புலி, வாழ்வின் மங்கலக் குறிகளுடன், மரண உறக்கத்தில் இருந்து எழுந்தபோது, பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} தெய்வீக மலர்களைப் பொழிந்தான்.(54) யாராலும் அடிக்கப்படாமலேயே, துந்துபிகள், மேகங்களைப் போன்ற முழக்கத்துடன் கூடிய ஆழ்ந்த இசையை உண்டாக்கின. “நல்லது, நல்லது” என்ற சொற்கள் அடங்கிய ஒரு பெருமுழக்கம் ஆகாயத்தில் கேட்டது.(55)

நல்ல சுகத்துடன் எழுந்திருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான தனஞ்சயன், பப்ருவாகஹனனைத் தழுவிக் கொண்டு, அவனது தலையை முகர்ந்தான்.(56) துயரால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனின் அன்னை {சித்ராங்கதை}, தன் மகனிடம் இருந்து தொலைவாக உலூபியுடன் அமர்ந்திருப்பதை அவன் கண்டான். தனஞ்சயன்,(57) “போர்க்களத்தில் உள்ள யாவரும், ஏன் துயரம், ஆச்சரியம் மற்றும் இன்பத்தின் குறியீடுகளைச் சுமந்தபடி இருக்கின்றனர்? ஓ! பகைவரைக் கொல்பவனே, காரணத்தை நீ அறிந்திருந்தால், அதை எனக்குச் சொல்வாயாக.(58) போர்க்களத்திற்கு உன் அன்னை ஏன் வந்தாள்? பாம்புகளின் இளவரசருடைய மகளான உலூபியும் ஏன் இங்கே வந்தாள்?(59) என் ஆணையின் பேரில் நீ என்னுடன் போரிட்டாய் என்பதை நான் அறிவேன். பெண்கள இங்கே வந்த காரணம் யாது என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(60)

மணிப்புரத்தின் நுண்ணறிவுமிக்க மன்னன் {பப்ருவாஹனன்}, தனஞ்சயனால் இவ்வாறு கேட்கப்பட்ட போது, மதிப்புடன் தலைவணங்கி அவனை நிறைவடையச் செய்த பிறகு, “உலூபியிடம் கேட்பீராக” என்றான் {பப்ருவாஹனன்}.(61)

அர்ஜுனன் சாபவிமோசனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 81-சித்ராங்கதை போர்க்களத்திற்கு வந்ததற்கும், அர்ஜுனன் தன் மகனிடம் தோற்றதற்கும் காரணம் கூறிய உலூபி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குரு குலத்தின் (மரு)மகளே, உன்னை இங்கே கொண்டு வந்த காரியம் என்ன? மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாகனனுடைய} அன்னை {சித்ராங்கதை} போர்க்களத்திற்கு வருவதற்கான காரணம் என்ன?(1) ஓ! பாம்பின் மகளே {உலூபியே, பன்னக கன்னிகையே}, இந்த மன்னனின் நட்பு நாடி வந்தாயா? ஓ! ஓய்வற்ற பார்வைகளைக் கொண்டவளே, எனது நன்மையை விரும்பி வந்தாயா?(2) ஓ! பருத்த இடை கொண்டவளே {உலூபியே}, ஓ! அழகிய பெண்ணே, நானோ, இங்கே இருக்கும் இந்தப் பப்ருவாஹனனோ தெரியாமல் உனக்கு எத்தீங்கையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்.(3) சித்திரவாஹன குலத்தின் வழித்தோன்றலும், களங்கமற்ற அங்கங்களைக் கொண்டவளுமான சித்ராங்கதை உனக்கு எத்தீங்கையும் இழைத்தாளா?” என்று கேட்டான்.(4)

பாம்புகளுடைய இளவரசனின் மகள் {உலூபி}, அவனிடம் சிரித்துக் கொண்டே, “நீரும் எனக்குக் குற்றம் ஏதும் இழைக்கவில்லை, பப்ருவாஹனனும் எனக்குத் தீங்கேதும் செய்யவில்லை.(5) பணிப்பெண் போல எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்திருக்கும் இந்த இளவரசனின் தாயும் {சித்ராங்கதையும்} எத்தீங்கையும் செய்யவில்லை. இவை யாவற்றையும் எவ்வாறு செய்தேன் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(6) நீர் என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. உண்மையில், மதிப்புடன் தலைவணங்கி நான் உம்மை நிறைவடையச் செய்வதை நாடுகிறேன். ஓ! குரு குலத்தவரே, ஓ! பலமிக்கவரே, இவை அனைத்தையும் உமது நன்மைக்காகவே என்னால் செய்யப்பட்டன.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயரே, நான் செய்தவை அனைத்தையும் கேட்பீராக. பாரத இளவரசர்களின் பெரும்போரில் சந்தனுவின் அரச மகனை {பீஷ்மரை} நீதியற்ற வழிகளில் நீர் கொன்றீர். நான் என்ன செய்தேனோ, அஃது உமது பாவத்துக்குப் பரிகாரமாகிறது. பீஷ்மர் உம்முடன் போரிடும்போது நீர் அவரை வீழ்த்தவில்லை[1].(8-10)அவர் {பீஷ்மர்} சிகண்டியுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். உமக்கு உதவியாக இருந்த அவனைச் சார்ந்தே நீர் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} வீழச் செய்தீர். உமது பாவத்திற்குப் பரிகாரம் செய்யாமல் நீர் இறந்திருந்தால்,(11) நீர் செய்த அந்தப் பாவம் நிறைந்த செயலின் விளைவால் நிச்சயம் நரகத்தில் விழுந்திருப்பீர். உமது மகனிடம் இருந்து அடைந்த நிலை அந்தப் பாவத்திற்கான பரிகாரமாகும்.(12) ஓ! பூமியின் ஆட்சியாளரே, ஓ !பெரும் நுண்ணறிவுமிக்கவரே, கங்கையுடன் வசுக்கள் இருந்தபோது இதைக் கேட்டேன்.(13) சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்த பிறகு, தேவர்களான வசுக்கள், கங்கைக் கரைக்கு வந்து, அந்த நீரில் நீராடி, அந்த ஓடையின் தேவியை அழைத்து, அந்தப் பாகீரதியின் அனுமதியுடன் கூடிய இந்தப் பயங்கரச் சொற்களைச் சொன்னார்கள்.

{வசுக்கள்}, “சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், தனஞ்சயனால் கொல்லப்பட்டான்.(14,15) உண்மையில் ஓ! தேவி, அப்போது பீஷ்மன் {இவனுடன்} போரிடுவதை நிறுத்தி, வேறொருடவனுடனை போரிட்டுக் கொண்டிருந்தான். இந்தக் குற்றத்தின் காரணமாக நாங்கள் இன்று தனஞ்சயனைச் சபிக்கப் போகிறோம்” என்றனர்.(16)

இதைக் கேட்ட கங்கா தேவியும், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி உடனே சம்மதித்தாள். இச்சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்பமடைந்த நான், பாதாள லோகத்திற்கு ஊடுருவிச் சென்று என் தந்தையிடம் அனைத்தையும் சொன்னேன்.(17) அவர் வசுக்களிடம் சென்று உமக்காக வேண்டினார்,(18) தன் சக்திக்கு வாய்த்த அனைத்து வழிகளிலும் அவர்களை மீண்டும் மீண்டும் நிறைவடையச் செய்ய முயன்றார். அப்போது அவர்கள் அவரிடம், “உயர்ந்த அருளைக் கொண்டவனும், மணிப்புரத்தின் ஆட்சியாளனாகவும், இளமையுடன் கூடியவனாகவும் தனஞ்சயனுக்கு ஒரு மகன் இருக்கிறான்.(19) அவன் {பப்ருவாகனன்} போர்க்களத்தில் நின்று தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பூமியில் சாய்ப்பான். ஓ! பாம்புகளின் இளவரசே, இது நடக்கும்போது, அர்ஜுனன் எங்கள் சாபத்திலிருந்து விடுபடுவான்.(20) நீ செல்லலாம்” என்றனர்.

வசுக்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவர் திரும்பி வந்து நடந்தவற்றை எனக்குச் சொன்னார். ஓ! வீரரே, இவை யாவற்றையும் அறிந்த நான், இவ்வழியில் வசுக்களின் சாபத்தில் இருந்து உம்மை விடுவித்தேன்.(21) தேவர்களின் தலைவனாலும் உம்மைப் போரில் வீழ்த்த இயலாது. மகன் என்பவன் உமது சுயமே {தானே மகனாகிறான் என்று கருதப்பட்டிருக்கிறது}. இதன் காரணமாகவே நீர் அவனால் வீழ்த்தப்பட்டீர்.(22) ஓ! பலமிக்கவரே, என் மீது எக்குற்றத்தையும் சுமத்த முடியாது. உண்மையில், என்னை நிந்திக்கத்தகுந்தவளாக எவ்வாறு நீர் கொள்வீர்?” என்று கேட்டாள்.(23)

(உலூபியால்) இவ்வாறு சொல்லப்பட்டதும், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கூடிய விஜயன் {அர்ஜுனன்}, அவளிடம், “ஓ! தேவி {உலூபியே}, நீ செய்த இவை யாவும் எனக்கு மிக இனியவையாகும்” என்றான்.(24) அதன் பிறகு, மணிப்புர ஆட்சியாளனான தன் மகனிடம் பேசிய ஜயன் {அர்ஜுனன்}, குரு குடும்பத்தின் (மரு) மகளான சித்ராங்கதை கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவனிடம்,(25) “வருகின்ற சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} யுதிஷ்டிரரின் குதிரை வேள்வி நடக்க இருக்கிறது. ஓ! மன்னா {பப்ருவாகனா}, உன் அன்னை, உன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அங்கே வருவாயாக” என்றான்[2].(26)பார்த்தனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் பப்ருவாஹனன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன் தந்தையிடம் இச்சொற்களில்,(27) “ஓ! அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உமது ஆணையின் பேரில் நிச்சயம் நான் அந்தப் பெரும் குதிரை வேள்விக்கு வந்து, மறுபிறப்பாளர்களுக்கு உணவு வழங்கும் பணியை ஏற்றுக் கொள்வேன்.(28) எனினும், என்னிடம் இரக்கம் காட்டும் வகையில் உமது மனைவியர் இருவருடனும் நீர் உமது நகருக்குள் {பப்ருவாகனனான எனது தலைநகருக்குள்} வரவேண்டும். ஓ! அனைத்துக் கடமைகளையும் முழுமையாக அறிந்தவரே, இதைப் பொறுத்தவரையில் ஐயுணர்வேதும் உமக்கு வேண்டாம்.(29) ஓ! தலைவா, ஓ! வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையானவரே, உமது மாளிகையில் மகிழ்ச்சியுடன் ஓரிரவு வாழ்ந்துவிட்டு, அதன் பிறகு குதிரையைப் பின்தொடர்ந்து செல்வீராக” என்றான்.(30)

தன் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரங்குக் கொடியோனுமான குந்தியின் மைந்தன், சித்திராங்கதையின் பிள்ளையிடம்,(31) “ஓ! வலிமைமிக்கக் கரத்தோனே, நான் என்ன நோன்பை நோற்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! அகன்ற கண்களைக் கொண்டவனே, நான் நோற்கும் இந்த நோன்பு முடிவடையும் வரை என்னால் உன் நகருக்குள் நுழைய முடியாது.(32) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்த வேள்விக் குதிரை தன் விருப்பப்படி சுற்றித் திரியும். (நான் எப்போதும் அதைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்). அருள் உனதாகட்டும். நான் செல்ல வேண்டும். சிறிது காலம் கூட ஓய்ந்திருக்கக்கூடிய இடம் எனக்கு ஒன்றுமில்லை” என்றான் {அர்ஜுனன்}.(33)

பாகனைத் தண்டிப்பவனின் மகன் {அர்ஜுனன்}, தன் மகனால் முறையாக வழிபடப்பட்டு, தன் மனைவியரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று தன் வழியில் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

ஜராசந்தன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 82-ஜராசந்தன் பேரனும், சகாதேவன் மகனுமான மேகசந்தியை அர்ஜுனன் வென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெருங்கடலால் சூழப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த அந்த (வேள்விக்) குதிரை, நின்று, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கித் தன் முகத்தைத் திருப்பியது. அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற கிரீடம் தரித்த அர்ஜுனனும், குரு தலைநகரத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான். விருப்பப்படி திரும்பிய அந்தக் குதிரை ராஜகிருஹ நகருக்கு வந்தது.(2) ஓ! ஏகாதிபதி, அவன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கண்டவனும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமான சகாதேவன் மகன் {ஜராசந்தனின் பேரனான மேகசந்தி}அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான்.(3) தன் தேரில் ஏறி, வில் மற்றும் கணைகளையும், தோலாலான கையுறையும் தரித்துக் கொண்டு தன் நகரத்தைவிட்டு வெளியே வந்த மேகசந்தி, தரையில் நின்று கொண்டிருந்த தனஞ்சயனை நோக்கி விரைந்தான்.(4)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட மேகசந்தி, தனஞ்சயனை அணுகி, எந்தத் திறனும் இல்லாத சிறுபிள்ளைத்தனத்தின் மூலம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(5) {மேகசந்தி அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதா, உம்முடைய குதிரை பெண்களால் மட்டுமே பாதுகாக்கப்பட்டுச் செல்வதைப் போலத் தெரிகிறது. நான் இந்தக் குதிரையை அபகரித்துச் செல்வேன். அதை விடுவிக்க நீர் முனைவீராக.(6) என் தந்தைமார் உமக்குப் போரில் விருந்தோம்பல் கடமைகளைப் போதிக்க வில்லையெனினும் நான் அவற்றை உமக்குக் கற்பிப்பேன். நான் உம்மைத் தாக்குவேன், நீர் என்னைத் தாக்குவீராக” என்றான்.(7)

இவ்வாறு சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே அவனிடம், “எனக்கு இடையூறு செய்பவனைத் தடுக்க வேண்டும் என்ற நோன்பை என் அண்ணன் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். ஓ! மன்னா, இதை நீ நிச்சயம் அறிவாய். உன் சக்திக்குச் சிறந்த வகையில் என்னைத் தாக்குவாயாக. எனக்குக் கோபமேதும் இல்லை” என்றான்.(8,9)

இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, ஆயிரங்கண் இந்திரன் கனத்த மழையைப் பொழிவதைப் போலத் தன் கணைகளைப் பொழிந்து பாண்டுவின் மகனை முதலில் தாக்கினான்.(10) ஓ! பாரதக் குலத் தலைவா {ஜனமேஜயா}, அப்போது வீரனான காண்டீவதாரி, தன் சிறந்த வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, தன் எதிராளியால் கவனமாக ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(11) இவ்வாறு அந்தக் கணை மேகங்களைக் கலங்கடித்தவனும், குரங்குக் கொடியைக் கொண்டவனுமான அந்த வீரன், நெருப்பு வாயுடன் கூடிய பாம்புகளுக்கு ஒப்பான சுடமிக்கக் கணைகள் எண்ணற்றவற்றைத் தன் எதிரியின் மீது ஏவினான்.(12) அவன் {அர்ஜுனன்} தன் எதிரி மற்றும் அவனது தேரோட்டியின் உடலை மட்டும் விட்டுவிட்டு அவனுடைய கொடி, கொடிக்கம்பம், தேர், துருவங்கள், நுகம் மற்றும் குதிரைகளின் மீது இந்தக் கணைகளை ஏவினான்.(13) இடது கையாலும் (வலது கையாலும்) வில்லைப் பயன்படுத்தவல்ல பார்த்தன், மகத இளவரசனின் உடலைத் துளைக்காமல் விட்டதால், அவன் தன் ஆற்றலின் மூலமே தன் உடல் பாதுகாக்கப்படுவதாகக் கருதி, பார்த்தன் மீது கணைகள் பலவற்றை ஏவினான்.(14)

மகத இளவரசனால் ஆழத் துளைக்கப்பட்ட காண்டீவதாரி, வசந்த காலத்தில் மலரும் பலாசத்தை {புரசு மரத்தைப்} போல ஒளிர்ந்தான்.(15) அர்ஜுனனுக்கு மகத இளவரசனைக் கொல்லும் விருப்பமேதும் இல்லை. அவன் பாண்டுவின் மகனைத் தாக்கினாலும், இதன் காரணமாகவே அந்த முதன்மையான வீரனின் முன்னால் எஞ்சியிருப்பதில் அவனால் வெல்ல முடிந்தது.(16) கோபமடைந்த தனஞ்சயன் பெரும் பலத்துடன் தன் வில்லை வளைத்துத் தன் எதிராளியின் குதிரைகளைக் கொன்று அவனுடைய தேரோட்டியின் தலையையும் கொய்தான்.(17) அவன் ஒரு க்ஷுரத்தைக் கொண்டு, அழகானதும், பெரியதுமான மேகசந்தியின் வில்லையும், அவனுடைய தோல் கையுறையையும் வெட்டி வீழ்த்தினான். அதன் பிறகு அவனது கொடியையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தி, அவற்றை விழச்செய்தான்.(18) பெரிதும் பீடிக்கப்பட்ட அந்த மகத இளவரசன், தன் குதிரைகள், வில் மற்றும் சாரதியை இழந்து, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, குந்தியின் மகனை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(19) அப்போது அர்ஜுனன், பிரகாசமான பொன்னலானதும், முன்னேறிவரும் தன் பகைவனுக்குரியதுமான அந்தக் கதாயுதத்தைக் கழுகின் இறகுகளுடன் கூடிய கணைகள் பலவற்றைக் கொண்டு துண்டுகளாக வெட்டினான்.(20) இவ்வாறு துண்டுகளாக வெட்டப்பட்டதும், ரத்தினப்பூட்டுகள் சிதறியதுமான அந்தக் கதாயுதம், யாரோ ஒருவனால் வீசியெறியப்பட்ட ஆதரவற்ற பெண் பாம்பைப் போலப் பூமியில் விழுந்தது.(21)

தன் பகைவன், தனது தேர், வில், கதாயுதம் ஆகியவற்றை இழந்தபோது, நுண்ணறிவுமிக்கவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன் அவனைத் தாக்க விரும்பவில்லை.(22) குரங்குக் கொடி கொண்ட அந்த வீரன், உற்சாகமிழந்திருந்தவனும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றியவனுமான தன் பகைவனிடம், இந்தச் சொற்களில்,(23) “ஓ! மகனே, க்ஷத்திரியக் கடமைகளில் போதுமான பற்றை நீ வெளிப்படுத்தினாய். இப்போது செல்வாயாக. ஓ! மன்னா, வயதால் மிக இளையவனாக இருப்பினும் போரில் நீ சாதித்த அருஞ்செயல்கள் பெரியனவாகும்.(24) என்னை எதிர்க்கும் மன்னர்கள் கொல்லப்படக்கூடாது என்பது நான் யுதிஷ்டிரரிடம் இருந்து பெற்ற ஆணையாகும். ஓ! ஏகாதிபதி, போரில் நீ எனக்குக் குற்றமிழைத்திருந்தாலும் அதன் காரணமாகவே நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய்” என்றான்.(25)

இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, வெல்லப்பட்டவானகவும், தப்பவிடப்பட்டவனாகவும் தன்னைக் கருதினான். அர்ஜுனனை வழிபடுவது கடமையென நினைத்த அவன், கூப்பிய கரங்களுடன் முறையாக அவனை அணுகி வழிபட்டான். மேலும் அவன், “நான் உன்னால் வெல்லப்பட்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் போரைத் தொடரத் துணியேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக. நீ கேட்பது ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுவாயாக” என்றான்.(27)

அவனை மீண்டும் தேற்றி அர்ஜுனன், மீண்டும் அவனிடம், “சைத்ரமாத முழு நிலவில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னனின் குதிரை வேள்விக்கு நீ வர வேண்டும்” என்றான்.(28) அவனால் இவ்வாறு சொல்லப்பட்ட சகாதேவன் மகன் {ஜராசந்தன் பேரனான மேகசந்தி}, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, அந்தக் குதிரையையும், போர்வீரர்களில் முதன்மையான பல்குனனையும் முறையாக வழிபட்டான்.(29) அழகிய பிடரியுடன் கூடிய அந்த வேள்விக் குதிரை, கடற்கரையோரமாகவே சென்று, வங்கர்கள், புண்ட்ரர்கள் மற்றும் கோசலர்களின் நாட்டுகளுக்குச் சென்றது.(30) அந்த நாடுகளில், தனஞ்சயன் தன் காண்டீவத்தைக் கொண்டு எண்ணற்ற மிலேச்ச படைகளை ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

சிசுபாலன் மற்றும் ஏகலவ்யனின் வாரிசுகள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 83-அர்ஜுனனை வரவேற்ற சிசுபாலனின் மகன் சரபன்; காசி, அந்தகம், கோசலம், கிராதம், தங்கணம் ஆகிய நாடுகளில் வரவேற்பைப் பெற்ற அர்ஜுனன்; தசார்ண மன்னன் சித்ராங்கதனை, நிஷாத மன்னனான ஏகலவ்யன் மகனை வென்றது; திராவிடம், ஆந்திரம், மாஹிஷம் மற்றும் கோல்வ மலை ஆகியவற்றில் அர்ஜுனன் பெற்ற வெற்றி; துவாரகையில் வசுதேவர் மற்றும் உக்ரசேனரால் வரவேற்கப்பட்ட அர்ஜுனன்; பஞ்சநதம் சென்று அங்கிருந்து காந்தாரம் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், “மகத ஆட்சியாளனால் {மேகசந்தியால்} வழிபடப்பட்டவனும், தேரில் வெண்குதிரைகளைப் பூட்டியவனுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்த (வேள்விக்) குதிரையைப் பின்தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றான்.(1) விருப்பப்படி திரிந்து கொண்டிருந்த அது {வேள்விக் குதிரை}, கிளிஞ்சல்களின் {சிப்பியின்} பெயரால் அழைக்கப்படுவதும், சேதிகளுக்கு உரியதுமான அழகிய நகரத்தை {சுக்திமதியை}[1] நோக்கித் திரும்பி வந்தது. பெரும்பலம் கொண்டவனும், சிசுபாலனின் மகனுமான சரபன், முதலில் அர்ஜுனனுடன் போரிட்டு அதன் பிறகு, உரிய மதிப்புடன் அவனை வழிபட்டான்.(3) ஓ! மன்னா, அவனால் வழிபடப்பட்டு அந்தச் சிறந்த குதிரை, அதன் பிறகு, காசிகள், அங்கர்கள், கோசலர்கள், கிராதர்கள் மற்றும் தங்கணர்களின் நாடுகளுக்குச் சென்றது.(4)அந்த நாடுகள் அனைத்திலும் உரிய மதிப்புடன் வரவேற்கப்பட்ட தனஞ்சயன் தன் வழியில் சென்று கொண்டிருந்தான். உண்மையில் அந்தக் குந்தியின் மகன், அடுத்ததாகத் தசார்ணர்களின் நாட்டுக்குச் சென்றான்.(5) பெரும் பலம் கொண்டவனும், பகைவரை நொறுக்குபவனுமான சித்ராங்கதன் அம்மக்களின் ஆட்சியாளனாக இருந்தான். அவனுக்கும், விஜயனுக்கும் இடையில் மிகப் பயங்கரமான போர் ஒன்று நேர்ந்தது.(6) அவனைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், ஏகலவ்யனின் மகனான நிஷாத மன்னனின் நாட்டிற்குச் சென்றான்.(7) ஏகலவ்யன் மகன் போரில் அர்ஜுனனை வரவேற்றான். அந்தக் குரு வீரனுக்கும், நிஷாதர்களுக்கும் இடையில் நடந்த மோதல் மயிர்ச் சிலிர்க்கும் வகையில் சீற்றமிக்கதாக இருந்தது.(8)

போரில் வெல்லப்பட இயலாதவனான குந்தியின் வீரமிக்க மகன், வேள்விக்குத் தடையாக இருந்த அந்த நிஷாத மன்னனை வீழ்த்தினான் ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் மகனை அடக்கி இந்திரனின் மகன், நிஷாதர்களால் முறையாக வழிபடப்பட்டு, தெற்குக் கடலை நோக்கி முன்னேறிச் சென்றான்.(10) அந்தப் பகுதிகளில் திராவிடர்கள், ஆந்திரர்கள், மாஹிஷகர்கள், கோல்வ மலையில் {கோல்லகிரியில்} உள்ள மனிதர்கள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்த வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர்கள் நடைபெற்றன.(11) அருஞ்செயல் ஏதும் செய்யாமல் அந்த இனக்குழுக்களை அடக்கிய அர்ஜுனன், குதிரையால் வழிநடத்தப்பட்டுக் கால்நடையாகவே ஸுராஷ்ட்டிரர்களின் {சௌராஷ்டிரர்களின்} நாட்டுக்குச் சென்றான்.(12)கோகர்ணத்தை அடைந்த அவன், அங்கிருந்து பிரபாஸத்திற்குச் சென்றான். அடுத்ததாக விருஷ்ணிகுல வீரர்களால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரத்திற்குச் சென்றான்.(13) குரு மன்னனின் அழகிய வேள்விக் குதிரை துவாராவதியை அடைந்தபோது, யாதவ இளைஞர்கள் அந்தக் குதிரைக்கு எதிராகத் தங்கள் பலத்தைப் பயன்படுத்தினர்.(14) எனினும், மன்னர் உக்ரசேனர் புறப்பட்டுச் சென்று அக்காரியத்தைச் செய்வதில் இருந்து அந்த இளைஞர்களைத் தடுத்தான். அதன்பிறகு, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் ஆட்சியாளர் {உக்ரசேனர்}, தன் அரண்மனையில் இருந்து வெளியே வந்து,(15) அர்ஜுனனின் தாய்மாமனான வசுதேவரின் துணையுடன் உற்சாகமாக அந்தக் குரு வீரனைச் சந்தித்து, உரிய சடங்குகளுடன் அவனை வரவேற்றார்.(16)

வயது முதிர்ந்தவர்களான அந்தத் தலைவர்கள் இருவரும், அர்ஜுனனை முறையாகக் கௌரவித்தனர். அந்தக் குரு இளவரசன் அவர்களின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தான் பின்பற்றிச் சென்ற குதிரை வகுத்த வழியில் சென்றான்.(17) அந்த வேள்விக் குதிரை மேற்குக் கடலின் கரையோரமாகச் சென்று இறுதியாக ஐந்து நீர்நிலைகளைக் கொண்டதும், மக்கள் தொகையிலும், செழிப்பிலும் பெருகி இருந்ததுமான நாட்டை அடைந்தது.(18) அங்கிருந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை காந்தாரர்களின் நாட்டுக்குச் சென்றது. அங்கே சென்று அது, குந்தியின் மகனால் பின்தொடரப்பட்டு விருப்பப்படி சுற்றித் திரிந்தது.(19) சகுனியின் மகனும், பாண்டவர்களிடம் தன் தந்தை கொண்டிருந்த கடும் வெறுப்பை நினைவில் கொண்டிருந்தவனுமான காந்தார ஆட்சியாளனுக்கும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்}  இடையில் கடும்போர் ஒன்று நேர்ந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(20)

சகுனியின் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 84-அர்ஜுனனுடன் போரிட்ட சகுனியின் மகன்; அவனைத் தடுத்து அறிவுறுத்திய அர்ஜுனன்; தன் மகனைக் காக்க வந்த சகுனியின் மனைவி; சகுனியின் மகனைக் கொல்லாமல் விட்ட அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனியின் வீர மகன்[1], ஒரு பெரும்படையின் துணையுடன் சுருள் முடி கொண்ட குரு வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான். அந்தப் படையில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன. மேலும் அப்படை கொடிகள் மற்றும் பதாகைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(1) தங்கள் மன்னனான சகுனி கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அதற்குப் பழிதீர்க்கும் வஞ்சத்தில் எரிந்து கொண்டிருந்தவர்களும், விற்களுடன் கூடியவர்களுமான அந்தப் போர்வீரர்கள் ஒன்றுசேர்ந்தவர்களாகப் பார்த்தனை நோக்கி விரைந்தனர்.(2) அற ஆன்மா கொண்டவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, அவர்களிடம் அமைதியாகப் பேசினாலும், (அர்ஜுனன் மூலமாகச் சொல்லப்பட்ட) யுதிஷ்டிரனின் நல்ல வார்த்தைகளை அவர்கள் ஏற்க விரும்பவில்லை.(3) இனிய சொற்களைக் கொண்டு பார்த்தனால் தடுக்கப்பட்டாலும், அவர்கள் கோபவசப்பட்டவர்களாக அந்த வேள்விக் குதிரையைச் சூழ்ந்தனர். இதனால் பாண்டுவின் மகன் கோபத்தில் நிறைந்தான்.(4)அப்போது அர்ஜுனன், காந்தியில் சுடர்விடுபவையும், காண்டீவத்தில் இருந்து அலட்சியமாக {அதிக முயற்சியின்றி} ஏவப்பட்டவையும், கத்தியைப் போன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகளால் {க்ஷுரங்களால்} காந்தாரப் போர்வீரர்கள் பலரின் தலைகளைக் கொய்தான்.(5) ஓ! மன்னா, பார்த்தனால் இவ்வாறு காந்தாரர்கள் கொல்லப்பட்ட போது, பெரிதும் துன்பமடைந்த அவர்கள் குதிரையை விடுவித்து விட்டு, அச்சத்தால் போரை விட்டு விலகிச் சென்றனர்.(6) எனினும், அதற்கு மேலும் அனைத்துப் பக்கங்களிலும் தன்னைச் சூழ்ந்திருந்த காந்தாரப் போராளிகளால் தடுக்கப்பட்டாலும், பெரும் சக்தி கொண்டவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவர்களில் பலரின் பெயர்களை முன்பே சொல்லிவிட்டு அவர்களின் தலைகளைக் கொய்தான்.(7) அந்தப் போரில் அவனைச் சுற்றிலும் இருந்த காந்தாரப் போர் வீரர்கள் இவ்வாறு கொல்லப்பட்ட போது, சகுனியின் அரசமகன், அந்தப் பாண்டுவின் மகனைத் தடுக்க முன்வந்தான்.(8)

க்ஷத்திரியக் கடமையால் உந்தப்பட்ட அர்ஜுனன், தன்னுடன் போரிட்டுக் கொண்டிருந்த காந்தார மன்னனிடம், “யுதிஷ்டிரரின் ஆணைகளின் விளைவாக, நான் என்னுடன் போரிடும் மன்னர்களைக் கொல்ல நினைப்பதில்லை. ஓ! வீரா, என்னுடன் போரிடுவதை நிறுத்துவாயாக. தோல்வி உனதாக வேண்டாம்” என்றான்.(9,10) இவ்வாறு சொல்லப்பட்ட சகுனியின் மகன், அறியாமையில் மதிமயங்கி, அந்த ஆலோசனையை அலட்சியம் செய்து, போர்ச்சாதனைகளில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனான அந்தக் குரு வீரனை வேகமாகச் செல்லும் கணைகள் பலவற்றால் மறைத்தான்.(11) அப்போது பார்த்தன், பிறைவடிவக் கணையொன்றால் {ஒரு அர்த்தச்சந்திர பாணத்தால்} தன் பகைவனின் தலைப்பாகையை வெட்டி வீழ்த்தினான். அளவிலா ஆன்மாகக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தான் வெட்டி வீழ்த்திய) ஜெயத்ரதன் தலையைப் போலவே அந்தத் தலைப்பாகையையும் நெடுந்தொலைவு தள்ளி விழச் செய்தான்.(12)

இந்த அருஞ்செயலைக் கண்ட காந்தாரப் போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அர்ஜுனன் தானாகவே தங்கள் மன்னனை உயிருடன் விட்டான் என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டனர்.(13) அப்போது, அந்தக் காந்தாரர்களின் இளவரசன், அச்சமடைந்த மான் கூட்டத்திற்கு ஒப்பான தன் போர்வீரர்கள் அனைவருடன் சேர்ந்து களத்தைவிட்டுத் தப்பி ஓடத் தொடங்கினான்.(14) அச்சத்தால் உணர்விழந்த காந்தாரர்கள், தப்ப இயலாதவர்களாகக் களத்திலேயே திரிந்து கொண்டிருந்தனர். அர்ஜுனன், அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு அவர்களில் பலரின் தலைகளை வெட்டி வீழ்த்தினான்.(15) அர்ஜுனனுடைய கணைகளின் விளைவால் பலர் தங்கள் கைகளை இழந்திருந்தாலும், அந்த உறுப்பை இழந்ததைக் கூட அறியாத வண்ணம் அவர்கள் அச்சத்தால் திகைத்திருந்தனர். உண்மையில், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பார்த்தனின் நெடுங்கணைகளால் அந்தக் காந்தாரப் படை பெரிதும் பீடிக்கப்பட்டது.(16)

அச்சமடைந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைக் கொண்டதும், போர்வீரர்கள் பலரையும் விலங்குகள் பலவற்றையும் இழந்திருந்ததும், கற்கட்டாகக் குறைக்கப்பட்டதும், முறியடிக்கப்பட்டதுமான அந்தப் படை, மீண்டும் மீண்டும் களத்திற்குள்ளேயே சுழன்று திரியத் தொடங்கியது.(17) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் பகைவருக்கு மத்தியில், அருஞ்சாதனைகளுக்காப் புகழ்பெற்றவனான அந்தக் குருவீரனுக்கு எதிரில் எவனும் நிற்பது காணப்படவில்லை. தனஞ்சயனின் ஆற்றலையைத் தாங்கக்கூடிய எவரும் அங்கே காணப்படவில்லை.(18) அப்போது, காந்தாரர்களின் ஆட்சியாளனுடைய தாயானாவள் {சகுனியின் மனைவி}, அச்சத்தால் நிறைந்தவளாக, தன் நாட்டின் முதிர்ந்த அமைச்சருகளுடன் சேர்ந்து, அர்ஜுனனுக்காகச் சிறந்த அர்க்கியத்துடன் தன் நகரத்தைவிட்டு வெளியே வந்தாள்.(19) உறுதியான இதயம் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான தன் மகனை மேலும் போரிடுவதில் இருந்து தடுத்து, உழைப்பால் ஒருபோதும் களைப்படையாதவனான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நிறைவடையச் செய்தாள்.(20)

பலமிக்கவனான பீபத்சு {அர்ஜுனன்}, காந்தாரர்களுக்குக் கருணை காட்ட விரும்பி அவளை வழிபட்டான். சகுனியின் மகனைத் தேற்றும் வகையில் அவன்,(21) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன் இதயத்தில் இவ்வளவு வெறுப்பை நிறுவியிருப்பதன் மூலம் நீ எனக்கு ஏற்புடையதைச் செய்யவில்லை. ஓ! வீரர்களைக் கொல்பவனே, ஓ! பாவமற்றவனே, நீ என் மைத்துனனாவாய்[2].(22) என் தாயான காந்தாரியை நினைத்தும், திருதராஷ்டிரரின் நிமித்தமாகவும் நான் உன் உயிரை எடுக்கவில்லை. ஓ! மன்னா {சகுனியின் மகனே}, அதன் காரணமாகவே நீ இன்னும் உயிருடன் வாழ்கிறாய். எனினும், உன் தொண்டர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(23) இனிமேலும் இவ்வாறு நிகழ வேண்டாம். பகைமைகள் தொடர வேண்டாம். உன் புத்தி மீண்டும் இவ்விதமாகச் செல்ல வேண்டாம். சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னரின் குதிரை வேள்விக்கு நீ நிச்சயம் வர வேண்டும்” என்றான் {அர்ஜுனன்}”.(24)

யாகசாலை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 85-அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து கொண்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த யுதிஷ்டிரன்; பிராமணர்களை வரச்செய்து பீமனை யாகசாலை அமைக்கச் செய்தது; பல நாடுகளில் இருந்து வந்த மன்னர்களும், மக்களும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்தச் சொற்களைச் சொன்ன பார்த்தன் {அர்ஜுனன்}, விருப்பப்படி திரியும் அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான். அந்த வேள்விக் குதிரை, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கிச் செல்லும் சாலையில் திரும்பியது.(1) குதிரை திரும்பியதைச் செய்தி சுமப்பவர்களின் {தன் சாரர்களின் / ஒற்றர்களின்} மூலம் யுதிஷ்டிரன் கேள்விப்பட்டான். அர்ஜுனன் நலமாகவும், உற்சாகத்துடனும் இருப்பதையும் கேட்டு அவன் மகிழ்ச்சியால் நிறைந்தான்[1].(2) காந்தாரர்களின் நாட்டிலும், பிற நாடுகளிலும் விஜயனால் செய்யப்பட்ட அருஞ்செயல்களைக் கேட்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(3) அதே வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், மாக மாதத்தின் வளர்பிறை பனிரெண்டாம் நாள் வந்ததைக் கண்டு, சாதகமான நட்சத்திரமும் {மாகமாஸத்திய [மாசி மாதத்து] துவாதசியும், புஷ்ய [பூசம்] நக்ஷத்திரமும் கூடிய தினம்} இருப்பதைக் கண்டு,(4) பீமன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய தன் சகோதர்கள் அனைவரையும் அழைத்தான்.ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்டவனும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மன்னன் {யுதிஷ்டிரன்} இந்தச் சொற்களை உரிய காலத்தில் சொன்னான். உண்மையில், பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தாக்குபவர்கள் அனைவரிலும் முதல்வனான பீமனிடம்,(5,6) “ஓ! பீமசேனா, உன் தம்பி (அர்ஜுனன்) குதிரையுடன் திரும்பி வருகிறான். அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்ற மனிதர்களிடம் இருந்து இதை நான் அறிந்தேன்.(7) (வேள்விக்கான) காலம் வந்துவிட்டது. வேள்விக் குதிரையும் அருகில் வந்துவிட்டது. மாக மாதத்து முழு நிலவு நாள் நடந்து கொண்டிருக்கிறது. ஓ! விருகோதரா, இம்மாதம் கடக்க இருக்கிறது {இன்னும் ஒரு மாதகாலம்தான் இருக்கிறது}.(8) எனவே, கல்விமான்களும், வேதங்களை அறிந்தவர்களுமான பிராமணர்கள், குதிரை வேள்வியை வெற்றிகரமாக நிறைவேற்ற தகுந்த இடத்தைப் பார்க்கட்டும்” என்றான்.(9)

இவ்வாறு சொல்லப்பட்ட பீமன் அந்த அரச ஆணைக்குக் கீழ்ப்படிந்தான். சுருள் முடி கொண்ட அர்ஜுனன் திரும்பி வருவதைக் கேட்டு அகமகிழ்ந்தான்.(10) பிறகு பீமன், வேள்விச்சாலைகள் வகுப்பதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும் உரிய விதிகளை நன்கறிந்த எண்ணற்ற மனிதர்களுடன் வெளியே புறப்பட்டுச் சென்றான். அவன் தன்னுடன், வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்த பிராமணர்கள் பலரை உடன் அழைத்துச் சென்றான்.(11) ஓர் அழகிய இடத்தைத் தேர்ந்தெடுத்த பீமன், வேள்விச்சாலைக்கான மதில்களை அமைப்பதற்காக அதை முறையாக அளந்தான். அதில் எண்ணற்ற வீடுகளும், மாளிகைகளும் கட்டப்பட்டன, அகலமான நெடுஞ்சாலைகளும் அதில் அமைக்கப்பட்டன.(12) அந்தக் கௌரவ வீரன் மிக விரைவில் அந்தச் சாலையை நுற்றுக்கணக்கான சிறந்த மாளிகைகளால் நிரம்பியதாக்கினான். அதன் பரப்பு சமன்படுத்தப்பட்டு, தங்கம் மற்றும் ரத்தினங்களால் பளபளப்பாக்கப்பட்டு, பொன்னாலான பல்வேறு அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டது.(13)

பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், உயர்ந்தவையுமான தூண்களும், அகலமான வெற்றி வளைவுகளும் அந்த வேள்விச்சாலைக்குள் கட்டப்பட்டன. இவையாவும் பசும்பொன்னால் செய்யப்பட்டன.(14) அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனான அந்த இளவரசன் {பீமன்}, பெண்கள் தங்குவதற்கும், பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்களும், தங்கள் இருப்பால் வேள்வியைச் சிறப்பிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களுமான எண்ணற்ற மன்னர்கள் தங்குவதற்கும், உரிய அறைகளைச் செய்தான்.(15) அந்தக் குந்தியின் மகன், பல்வேறு நாடுகளில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் பிராமணர்களுக்கும் உரிய மாளிகைகள் பலவற்றையும் கட்டினான்.(16)

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், மன்னனின் ஆணையின் பேரில், பூமியின் பெரும் மன்னர்களிடம் தூதர்களை அனுப்பினான்.(17) அந்தச் சிறப்புமிக்க மன்னர்களும், குரு ஏகாதிபதிக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக அவனுடைய குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்கு} வந்தனர். மேலும் அவர்கள் தங்களுடன் ரத்தினங்களையும், பெண் பணியாட்கள் பலரையும், குதிரைகள் மற்றும் ஆயுதங்கள் பலவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.(18) அந்த அரங்கிற்குள் வசித்த உயர் ஆன்ம மன்னர்கள் எழுப்பியச் சொர்க்கத்தையே எட்டிய ஒலிகள், முழங்கும் பெருங்கடலால் உண்டாக்கப்படும் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தன.(19) குருக்களைத் திளைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்விக்கு வந்திருந்த ஏகாதிபதிகளுக்கு உரிய பல்வேறு உணவு மற்றும் பான வகைகளையும், தெய்வீக அழகுடைய படுக்கைகளையும் ஒதுக்கினான்.(20)

பாரதர்களின் தலைவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பல்வேறு வகைப் பயிர்கள், கரும்பு மற்றும் பால் ஆகியவற்றுடன் நன்கு நிரம்பிய பல்வேறு கொட்டகைகளை (விருந்தினர்களுடன் வரும்) விலங்குகளுக்கென ஒதுக்கினான்.(21) உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய அந்தப் பெரும் வேள்விக்குப் பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தனர்.(22) உண்மையில், ஓ! பூமியின் தலைவா, அப்போது வாழ்ந்து வந்தவர்களில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் தங்கள் சீடர்களுடன் அந்த வேள்விக்கு வந்தனர். குரு மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்கள் அனைவரையும் வரவேற்றான்.(23) பெரும் சக்தி கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், செருக்கனைத்தையும் கைவிட்டு, தன் விருந்தினர்கள் அனைவரையும் பின்தொடர்ந்து அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அரங்குகளுக்குச் சென்றான்.(24) அப்போது வேள்விக்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவேற்றிய கைவினைஞர்களும் {ஸ்தபதிகளும்}, பொறியாளர்களும் {சிற்பிகளும்} அது குறித்து மன்னன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தனர்.(25) அனைத்தும் ஆயத்தமாக இருப்பதைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விழிப்பும், கவனமும் நிறைந்தவனாகத் தன்னை முறையாக மத்திக்கும் தன் தம்பிகள் அனைவருடன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்”.(26)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “யுதிஷ்டிரனுடைய அந்தப் பெரும் வேள்வி தொடங்கிய போது, நாநயமிக்கச் சொல்லேர் உழவர்கள் {வித்வான்கள்} பலர், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, பல்வேறு முன்மொழிவுகளைத் தொடங்கி வைத்து, அவற்றில் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்[2].(27) ஓ! பாரதா, (அங்கே அழைக்கப்பட்டிருந்த) மன்னர்கள், தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} வேள்விக்கே ஒப்பானதும், பீமனால் செய்யப்பட்டதுமான அந்த வேள்விக்கான சிறந்த ஏற்பாடுகளைக் கண்டனர்.(28)அவர்கள், பொன்னாலான வெற்றி வளைவுகள் {வாயில்கள்} பலவற்றையும், அனுபவிக்கத்தகுந்த ஆடம்பரப் படுக்கைகள், இருக்கைகள் மற்றும் பிற பொருட்கள் பலவற்றையும், பல்வேறு இடங்களில் இருந்து அங்கே திரண்டிருந்த மனிதக்கூட்டத்தையும் அங்கே கண்டனர்.(29) அங்கே அவர்கள், கொள்கலன்கள், பாத்திரங்கள், கொப்பரைகள், நீர்க்கலன்கள், மூடிகள் மற்றும் விரிப்புகள் {குடங்கள், பாத்திரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்த்தமானங்கள்} ஆகியவற்றைக் கண்டனர். அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்கள் பொன்னாலாகாத எதையும் அங்கே காணவில்லை.(30) சாத்திர வழிகாட்டுதலின் படி மரத்தாலும், பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட வேள்வித்தம்பங்கள் {யூபங்கள்} பலவும் அமைக்கப்பட்டன. பெரும் பிரகாசத்துடன் கூடிய அவை, (சாத்திர மந்திரங்களால்) அர்ப்பணிக்கப்பட்டு முறையாக நிறுவப்பட்டன.(31) மண்ணுக்குரிய விலங்குகள் அனைத்தும், நீருக்குரியவை அனைத்தும் அச்சந்தர்ப்பத்தில் அங்கே திரட்டப்பட்டிருப்பதை அம்மன்னர்கள் கண்டனர்.(32)

பசுக்கள் பலவும், எருமைகள் பலவும், வயது முதிர்ந்த பெண்கள் பலரும், நீர்வாழ் விலங்குகள் பலவும், இரை தேடும் விலங்குகள் பலவும், பறவை இனங்கள் பலவும். ஈன்று பெறும் உயிரினங்கள், முட்டையிட்டு குஞ்சு பெறும் உயிரினங்கள், அழுக்கு மற்றும் கழிவில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் பலவும், தாவர வகைப் பலவும் மலைகளில் வளரும் விலங்குகள் மற்றும் செடிகள் பலவும் அங்கே இருப்பதை அவர்கள் கண்டனர்.(33,34) பாகிலிடப்பட்ட விலைமதிப்புமிக்க இன்பண்டங்கள் பிராமணர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய இருவருக்காகவும் குவியல் குவியல்களாக அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்தன. நூறாயிரம் {ஒரு லட்சம்} பிராமணர்கள் உண்டதும், துந்துபிகளும், கைத்தாளங்களும் ஒலிக்கப்பட்டன.(36) துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலிகள் அடிக்கடி கேட்கும் வண்ணம் அங்கே உணவு உண்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தது. உண்மையில், நாளுக்கு, நாள் அவ்வொலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.(37)

பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வி இவ்வாறே நடந்து கொண்டிருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அச்சந்தர்ப்பத்தில் உணவு மலைகள் அர்ப்பணிக்கப்பட்டன. தயிர் மற்றும் நெய்யாலான பெரிய குளங்களும், தடாகங்களும் அங்கே காணப்பட்டன.(38) ஓ! ஏகாதிபதி, ஜம்புத்வீபத்தில் உள்ள நாடுகள் மற்றும் மாகாணங்களில் இருந்த மொத்த மக்கள் தொகையும் ஒன்றுதிரண்டு வந்த அந்தப் பெரும் வேள்வியில் இருப்பதாகத் தெரிந்தது.(39) ஆயிரக்கணக்கான நாட்டைச் சேர்ந்தவர்களும், இனங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தனர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பொன்னாலான பிரகாசமான காது வளையங்களை அணிந்தவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் தங்கள் கரங்களின் எண்ணற்ற பாத்திரங்களை ஏந்தி, மறுபிறப்பாள வகையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவைப் பரிமாறினர்.(40,41) மன்னர்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உகந்த மிக மதிப்புமிக்கப் பல்வேறு வகை உணவு மற்றும் பானங்களைப் பாண்டவர்களின் பணியாட்கள் பிராமணர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(42)

அர்ஜுனனின் சொல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 86-பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணன்; அர்ஜுனனின் சொற்களை யுதிஷ்டிரனிடம் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பூமியின் தலைவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான மன்னர்கள் வந்ததைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், பீமனிடம்,(1) “ஓ! மனிதர்களின் தலைவா, மனிதர்களில் முதன்மையானவர்களான இந்த மன்னர்கள் அனைவரும் உயர்ந்த மதிப்புக்குரியவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய முறையான கௌரவங்கள் அளிக்கப்படட்டும்” என்றான்.(2) பெரும் புகழைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன், இரட்டையர்களின் {நகுல சகாதேவனின்} துணையுடன் அவ்வாறே செயல்பட்டான்.(3)

மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தன் முன்னணியில் பலதேவனுடனும், விருஷ்ணிகள் துணையுடனும் அங்கே வந்தான்.(4) அவனுடன் யுயுதானன் {சாத்யகி}, பிரத்யும்னன், கதன், நிசடன், ஸாம்பன், கிருதவர்மன் ஆகியோரும் வந்தனர்.(5) வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன் அவர்களுக்கு மதிப்புமிக்க வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். அதன் பிறகு அந்த இளவரசர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அரண்மனைகளுக்குள் நுழைந்தனர்.(6)

மதுசூதனன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடனான உரையாடலின் இறுதியில், பல போர்களின் விளைவால் அர்ஜுனன் மெலிந்திருப்பதைக் குறிப்பிட்டான்.(7) குந்தியின் மைந்தன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனனைக் குறித்துப் பகைவரைத் தண்டிப்பவனான கிருஷ்ணனிடம் மீண்டும் மீண்டும் கேட்டான். அண்டத்தின் தலைவன் {கிருஷ்ணன்}, தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, சக்ரனின் மகனான ஜிஷ்ணு குறித்துப் பேசத் தொடங்கினான்.(8) {கிருஷ்ணன்}, “ஓ! மன்னா, துவாரகையில் வசிப்பவனும், நம்பிக்கைக்குரியவனுமான என்னுடைய மனிதன் {ஒற்றனாக இருக்கலாம்} ஒருவன், என்னிடம் வந்தான். அவன் பாண்டு மகன்களில் முதன்மையான அர்ஜுனனைக் கண்டு வந்திருந்தான். உண்மையில், பல போர்களினால் களைத்திருக்கும் பின்னவன் {அர்ஜுனன்} மிகவும் மெலிந்திருக்கிறான் {என்றும்}.(9) ஓ! பலமிக்க ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கவன் {அர்ஜுனன்} நமக்கு மிக அருகில் இருக்கிறான் என்றும் என்னுடைய மனிதன் எனக்குத் தெரிவித்தான். உமது குதிரை வேள்வியை நிறைவேற்றுவதில் உம்மை நிறுவிக் கொள்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(10)

அவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, நற்பேற்றினாலேயே அர்ஜுனன் பாதுகாப்பாகத் திரும்பி வருகிறான்.(11) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, பாண்டு மகன்களில் வலிமைமிக்க வீரனான அவன் இக்காரியம் குறித்து என்ன சொல்லி அனுப்பியிருக்கிறான் என்பதை உன்னிடம் உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றான்.(12)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் தலைவனுமான அவன் {கிருஷ்ணன்}, அற ஆன்மா கொண்ட அந்த ஏகாதிபதியிடம் இச்சொற்களைச் சொன்னான்,(13) {கிருஷ்ணன்}, “ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, என்னுடையவனான அந்த மனிதன், பார்த்தனின் சொற்களை நினைவுகூர்ந்து, “ஓ! கிருஷ்ணா, வேளை வரும்போது என்னுடைய இந்தச் சொற்களை யுதிஷ்டிரரிடம் சொல்வாயாக” என்று சொன்னான்.(14) {யுதிஷ்டிரிடம்} ஓ! கௌரவர்களின் தலைவா, (உமது வேள்விக்கு) மன்னர்கள் பலர் வருவார்கள். அவர்கள் வரும்போது அவர்கள் உயர்வாகக் கௌரவிக்கப்பட வேண்டும். உண்மையில், அதுவே நமக்குத் தகும் {என்ற தன் சொற்களைச் சொல்லுமாறு அர்ஜுனன் சொல்லி அனுப்பியிருக்கிறான்}.(15)

{மேலும், என்னுடைய [கிருஷ்ணனின்] மனிதனிடம் அர்ஜுனன்}, “ஓ!கௌரவங்களை அளிப்பவனே, (ராஜசூய வேள்வி நடந்தபோது) அர்க்கியம் அளிக்கும் நேரத்தில் நடந்ததற்கு ஒப்பான இடரேதும் நிகழாமல் தவிர்ப்பதற்குரிய தகுந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் மன்னரிடம் {யுதிஷ்டிரரிடம்} தெரிவிப்பாயாக. கிருஷ்ணனும் இஃதை அங்கீகரிக்கட்டும்” {என்றும் அர்ஜுனன் சொல்லி அனுப்பியிருக்கிறான்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} மன்னர்களின் பகையுணர்வுகளால் மக்கள் கொல்லப்படாதிருக்கட்டும்.(16,17) என்னுடையவனான அந்த மனிதன், தனஞ்சயனின் சொற்களை மேலும் சொன்னான். அவற்றை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பீராக.(18)

{அர்ஜுனனின் சொற்களில்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மணிப்புர ஆட்சியாளனான என் அன்புக்குரிய மகன் பப்ருவாஹனன், வேள்விக்கு வருவான்.(19) எனக்காக நீர் அவனைக் கௌரவிப்பீராக. ஓ! பலமிக்கவரே, அவன் எப்போதும் என்னிடம் பற்று கொண்டவனாகவும், ஆழமான அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருக்கிறான்” {என்று அர்ஜுனன் தன் மனிதனிடம் சொல்லியனுப்பி இருப்பதாகக் கிருஷ்ணன் சொன்னான்}.(20) இச்சொற்களைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் அவற்றை அங்கீகரித்துப் பின்வருமாறு சொன்னான்”.(21)

லக்ஷணக் குறை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 87-பாண்டவர்களில் மற்ற நால்வரைவிட அர்ஜுனனுக்குப் பெரும் அலைச்சல் நேரிடும் வகையில் அவன் உடலில் உள்ள லக்ஷணக் குறை எதுவெனக் கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அதைக் கூறிய கிருஷ்ணன்; குதிரையுடன் திரும்பி வந்த அர்ஜுனன்…

யுதிஷ்டிரன், “ஓ! கிருஷ்ணா, உன்னுடைய இனிமையான சொற்களை நான் கேட்டேன். அவை உன்னால் பேசத் தகுந்தனவாக இருந்தன. அவை மகிழ்ச்சி நிறைந்தவையாகவும், அமுதத்தைப் போல இனிமையாகவும் இருந்தன. உண்மையில், ஓ! பலமிக்கவனே, அவை என் இதயத்தைப் பேரின்பத்தால் நிறைத்தன.(1) ஓ! ரிஷிகேசா, பூமியின் மன்னர்களுடன் விஜயனுக்கு நேர்ந்திருக்கும் போர்கள் எண்ணற்றவையென நான் கேட்டிருக்கிறேன்.(2) சுகத்தில் {வசதி வாய்ப்புகளில்} இருந்து எப்போதும் தொடர்பறுந்தவனாகப் பார்த்தன் இருப்பதன் காரணம் யாது? விஜயன் பெரும் நுண்ணறிவு பெற்றவனாக இருக்கிறான். எனவே, இஃது என் இதயத்திற்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது.(3) ஓ! ஜனார்த்தனா, தொழிலில் இருந்து விலகியிருக்கும்போதெல்லாம் நான் குந்தியின் மகனான ஜிஷ்ணுவையே {அர்ஜுனனையே} நினைக்கிறேன். பாண்டுக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவனான அவன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.(4) அவனுடைய உடலில் அனைத்து மங்கலக் குறிகளும் இருக்கின்றன. எனினும், ஓ! கிருஷ்ணா, அவன் {அர்ஜுனன்} எப்போதும் துன்பத்தையும், வசதியின்மையையும் அனுபவிக்கக் காரணமான அந்தக் குறியீடு யாது?(5) குந்தியின் மகனான அவனே, துன்பத்தில் பெரும்பகுதியைச் சுமக்கிறான். அவன் உடலில் நிந்திக்கத்தக்க குறியீடு {கெட்ட லக்ஷணம்} எதையும் நான் காணவில்லை. இதைக் கேட்க நான் தகுந்தவனெனில் எனக்கு அதை விளக்கிச் சொல்வாயாக” என்று கேட்டான்.(6)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், போஜ இளவரசர்களின் மகிமையை அதிகரிப்பவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, பின்வருமாறு பதிலளித்தான்:(7) “மனிதர்களில் சிங்கமான இவனது தாடையெலும்புகள் சற்றே உயர்ந்திருப்பதைத் தவிர நிந்திக்கத்தக்க இயல்பு வேறு எதையும் நான் காணவில்லை.(8) இதன் விளைவாகவே மனிதர்களில் முதன்மையான இவன் எப்போதும் சாலைகளிலேயே இருக்கிறான். இவன் மகிழ்ச்சியற்றவனாக இருப்பதற்கு வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை[1]” என்றான்.(9)பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மனிதர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், அந்த விருஷ்ணிகளின் தலைவனிடம் அவ்வாறே இருப்பதாகச் சொன்னான்.(10) எனினும், (அர்ஜுனனுக்கு களங்கமேதும் கற்பிக்கப்படுதைப் பொறுத்துக் கொள்ள முடியாத) இளவரசி திரௌபதி, கிருஷ்ணனை நோக்கி கோபத்துடன் சாய்வாகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவனான ரிஷிகேசன், தன் நண்பரான பாஞ்சால இளவரசி (தன் நண்பனிடம் {அர்ஜுனனிடம்}) வெளிப்படுத்திய அன்பின் {காதலின்} குறியீட்டை அங்கீகரித்தான்[2].(11)குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற அர்ஜுனனின் இனிமையான வெற்றிகளைக் கேட்ட பீமசேனனும், வேள்விப் புரோகிதர்கள் உள்ளிட்ட பிற குருக்களும் {கௌரவர்களும்} உயர்வான மகிழ்ச்சியை அடைந்தனர்.(12) அவர்கள் அர்ஜுனனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த உயர்ஆன்ம வீரனிடம் இருந்து ஒரு தூதன் செய்தியைச் சுமந்து வந்தான்.(13) அந்தப் புத்திசாலியான தூதன், குரு மன்னனின் முன்னிலைக்கு வந்து, மதிப்புடன் தலை வணங்கி, மனிதர்களில் முதன்மையான பல்குனனின் வரவைத் தெரிவித்தான்.(14) அந்தச் செய்தியைப் பெற்றதும், மகிழ்ச்சிக் கண்ணீர் மன்னனின் கண்களை மறைந்தது. தூதன் கொண்டு வந்த இனிய செய்திக்காக அவனுக்குப் பெருங்கொடைகள் வழங்கப்பட்டன.(15)

அன்றிலிருந்து இரண்டாவது நாள், மனிதர்களில் முதன்மையான அந்தக் குருக்களின் தலைவன் வந்த போது பேராரவாரம் கேட்டது.(16) அர்ஜுனனுக்கு அருகில் நடந்து வந்த அந்தக் குதிரையின் குளம்படிகளில் இருந்து எழுந்த புழுதியானது, தெய்வீகக் குதிரையான உச்சைஸ்ரவத்தால் எழுப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(17)

அர்ஜுனன் முன்னேறி வந்தபோது, குடிமக்களால் சொல்லப்படும் மகிழ்ச்சி நிறைந்த சொற்கள் பலவற்றைக் கேட்டான். {அவர்கள்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நற்பேற்றினாலேயே நீ ஆபத்துகளில் இருந்து விடுபட்டாய். மன்னன் யுதிஷ்டிரனுக்குப் புகழுண்டாகட்டும்.(18) உலகம் முழுவதும் குதிரையைச் சுற்றித் திரியவிட்டு, போரில் மன்னர்க்ள அனைவரையும் வென்று திரும்ப அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(19) சகரனாலும், பழங்காலத்தின் உயர் ஆன்ம மன்னர்களாலும் இத்தகைய அருஞ்செயல் செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(20) ஓ! குருத்தில் முதன்மையானவனே, நீ அடைந்த இந்தச் சாதனையை எதிர்கால மன்னர்களாலும் ஒருபோதும் அடைய முடியாது” {என்றனர்}.(21)

குடிமக்கள் சொன்ன காதுக்கினிய இத்தகைய சொற்களைக் கேட்டபடியே உயர் ஆன்ம பல்குனன் {அர்ஜுனன்}, வேள்விச்சாலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது மன்னன் யுதிஷ்டிரனும், அவனுடைய அமைச்சர்கள் அனைவரும், யதுக்களைத் திளைக்கச் செய்பவனான கிருஷ்ணனும், திருதராஷ்டிரனைத் தங்கள் முன்னணியில் கொண்டு, தனஞ்சயனை வரவேற்க வெளியே சென்றனர்.(23) அவன், தன் தந்தையின் (திருதராஷ்டிரனின்) பாதங்களையும், பெரும் ஞானியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களையும் வணங்கி விட்டு, பீமனையும், பிறரையும் வழிபட்டு, கேசவனை {கிருஷ்ணனை} ஆரத் தழுவிக் கொண்டான்.(24)

அவர்கள் அனைவரால் வழிபடப்பட்டு, உரிய சடங்குகளின்படி அவர்களை வழிபட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, உடைந்த கப்பலில் இருந்த மனிதன் அலைகளால் அலைக்களிக்கப்பட்டுக் கரையை அடைந்து ஓய்ந்ததைப் போல அந்த இளவரசர்களின் துணையுடன் ஓய்ந்திருந்தான்.(25) அதே வேளையில் பெரும் ஞானம் கொண்ட பப்ருவாஹனன், தன் அன்னையரின் (சித்ராங்கதை மற்றும் உலூபியின்} துணையுடன் குருவின் தலை நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த இளவரசன், குரு குலத்தின் பெரியோர் அனைவரையும், அங்கே இருந்த பிற மன்னர்களையும் முறையாக வணங்கி அவர்கள் அனைவராலும் பதிலுக்குக் கௌரவிக்கப்பட்டான். அதன் பிறகு அவன், தன் பாட்டியான {பிதாமஹியான} குந்தியின் சிறந்த வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

பஹுஸுவர்ணகம்-அஸ்வமேதயாகம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 88-வியாசரின் ஆணையின் பேரில் அஸ்வமேத யாகத்தைத் தொடங்கிய யுதிஷ்டிரன்; யாகத்தில் செய்யப்பட்ட சில சடங்குள்; யூபங்களில் கட்டப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை; யாகத்தை ஒட்டிய அழகிய சூழ்நிலை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களின் அரண்மனைக்குள் நுழைந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இளவரசன் {பப்ருவாஹனன்}, ஆறுதல் தரும் இனிய சொற்களால் தன் பாட்டியை {பிதாமஹியை} வணங்கினான்.(1) அப்போது, ராணி சித்ராங்கதை, கௌரவ்யன் (என்ற பாம்பின்) மகள் (உலூபி) ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பிருதையையும் {குந்தியையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} பணிவோடு அணுகினர். அதன் பிறகு அவர்கள் உரிய வழக்கத்தின்படி சுபத்திரையையும், குரு குலத்தின் பிற பெண்மணிகளையும் சந்தித்தனர்.(2) குந்தி அவர்களுக்கு ரத்தினங்கள் பலவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்தாள். திரௌபதி, சுபத்திரை மற்றும் குரு குலத்தின் பிற பெண்மணிகள் ஆகியோர் அனைவரும் அவர்களுக்குப் பரிசுகளை அளித்தனர்.(3) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதைச செய்யும் விருப்பத்துடன் கூடிய குந்தியால் அன்புடனும், மதிப்புடனும் நடத்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும், மதிப்புமிக்கப் படுக்கைகளுடனும், இருக்கைகளுடனும் அங்கேயே வசித்தனர்.(4)

(குந்தியால்) முறையாகக் கௌரவிக்கப்பட்டவனும், பெரும் சக்திமிக்கவனுமான மன்னன் பப்ருவாஹனன், உரிய சடங்குகளின்படி திருதராஷ்டிரனைச் சந்தித்தான்.(5) அதன் பிறகு மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றுப் பிற பாண்டவர்களிடம் சென்றவனும், வலிமைமிக்கவனுமான அந்த மணிப்புர இளவரசன் அவர்கள் அனைவரையும் பணிவுடன் வணங்கினான்.(6) அவர்கள் அனைவரும் அவனைப் பேரன்புடன் தழுவிக் கொண்டு முறையான மதிப்பை அளித்தனர். அவனிடம் பெரும் நிறைவடைந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அவனுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்தனர்.(7) அதன் பிறகு, அந்த மணிப்புர மன்னன், தந்தையை அணுகும் இரண்டாம் பிரத்யும்னனைப் போலச் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்த வீரனான கிருஷ்ணனைப் பணிவுடன் அணுகினான்.(8) கிருஷ்ணன் அந்த மன்னனுக்கு {பப்ருவாஹனனுக்குப்} பெரும் மதிப்புமிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதுமான சிறந்த தேரைக் கொடுத்தான்.(9) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், பல்குனன், இரட்டையர்கள் ஆகியோரும் தனித்தனியாக அவனைக் கௌரவித்து விலைமதிப்புமிக்கப் பரிசுப்பொருட்களை அளித்தனர்.(10)

மூன்றாம் நாளில், நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்யவதியின் மகனுமான வியாசர், யுதிஷ்டிரனை அணுகி,(11) “ஓ! குந்தியின் மகனே, இந்நாளில் இருந்து உன் வேள்வி தொடங்கட்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. தொடங்குவதற்கான கணம் அருகில் இருக்கிறது. புரோஹிதர்கள் உன்னைத் தூண்டுகிறார்கள்.(12) எந்த அங்கமும் பழுதுபடாதவண்ணம் இந்த வேள்வி செய்யப்படட்டும். இந்த வேள்விக்குப் பெரும் அளவிலான தங்கம் தேவைப்படுவதன் விளைவால், அபரிமிதமான தங்க வேள்வி {பஹுஸுவர்ணகம்} என்று இஃது அழைக்கப்படுகிறது[1].(13) ஓ! பெரும் மன்னா, இந்த வேள்விக்கு ஆணையிட்ட தக்ஷிணையைவிட மூன்று மடங்கு கொடுப்பாயாக. பிராமணர்கள் இக்காரியத்தில் திறம்பெற்றவர்களாவர்[2].(14) ஓ! மன்னா, அபரிமிதமான கொடைகளுடன் கூடிய மூன்று குதிரை வேள்விகளைச் செய்த பலன்களை அடைவதன் மூலம் நீ உன் உற்றார் உறவினரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபடுவாய்.(15) ஓ! ஏகாதிபதி, குதிரைவேள்வியின் நிறைவில் ஒருவன் செய்யும் நீராடல் உயர்ந்த தூய்மையை அளிப்பதும், உயர்ந்த புண்ணியத்தை உண்டாக்குவதுமாகும். ஓ! குரு குலத்து மன்னா, அந்தப் பலன் {புண்ணியம்} உன்னுடையதாகும்” என்றார் {வியாசர்}.(16)அளவிலா நுண்ணறிவைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நீதி மிக்க ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட யுதிஷ்டிரன், குதிரைவேள்வி செய்வதற்கான தீக்ஷைக்கு உட்பட்டான்[3].(17) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அபரிமிதமான கொடைகளுடனும், உணவுக் கொடையுடனும் கூடியதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை எட்டச் செய்வதும், அனைத்துப் புண்ணியங்களையும் உண்டாக்கக்கூடியதுமான பெரும் குதிரை வேள்வியைச் செய்தான்.(18) வேதங்களை நன்கறிந்தவர்களான புரோகிதர்கள், முறையாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டே அனைத்து சடங்குகளைச் செய்தனர். அவர்கள் அனைவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(19) அங்கே விதிப்பிறழ்வுகள் ஏதும் நடக்கவில்லை, முறையற்ற வகையில் ஏதும் செய்யப்படவில்லை. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவர்கள், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, எந்த {சாத்திரப்} பரிந்துரையும் இல்லாத இடங்களில் எவ்வாறு செய்ய வேண்டுமோ அவ்வாறே செய்தனர்[4].(20)ஓ! மன்னா {ஜனமேஜயா}, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான அவர்கள், தர்மம் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுவதும், பிரவர்க்யம் என்றும் அழைக்கப்படுவதுமான சடங்கை முதலில் செய்து, அதன் பிறகு அபிஷவம் எனும் சடங்கையும் முறையாகச் செய்தனர்[5].(21) சோமத்தைப் பருகுபவர்களின் முதன்மையான அவர்கள், ஓ! ஏகாதிபதி, சோமச்சாற்றைப் பிரித்தெடுத்த பிறகு, சாத்திரங்களின் ஆணைகளைப் பின்பற்றி ஸவனச் சடங்கைச்[6] செய்தனர்.(22) அந்த வேள்விக்கு வந்தோரின் மத்தியில் உற்சாகமற்ற எவரையும், வறுமையில் உள்ள எவரையும், பசியில் உள்ள எவரையும், துயரில் மூழ்கிய எவரையும், மோசமாகத் தெரிபவர் எவரையும் காணமுடியவில்லை.(23) மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையின் பேரில், வலிமையும், சக்தியுமிக்கப் பீமசேனன், உண்ண விரும்புவோருக்கு மத்தியில் இடையறாமல் உணவைப் பரிமாறச் செய்தான்.(24) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், அனைத்து வகை வேள்விச் சடங்குகளையும் நன்கறிந்தவர்களுமான புரோஹிதர்கள், ஒவ்வொரு நாளும் அந்தப் பெரும் வேள்வி நிறைவடைவதற்குத் தேவையான செயல்களை அனைத்தையும் செய்தனர்.(25)பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுடைய சத்யஸ்களுக்கு மத்தியில், (வேத) கல்வியின் ஆறு கிளைகளை நன்கறியாத எவரும் இல்லை. அவர்களுக்கு மத்தியில், நோன்புகளை நோற்காத எவரும், உபாத்யாயராக இல்லாத எவரும், இயங்கியல் சர்ச்சைகளை நன்கறியாத எவரும் இல்லை.(26) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வேள்வித் தூணை {யூபத்தை} நிறுவதற்கான வேளை வந்தபோது, வில்வத்தாலான {பில்வத்தாலான} ஆறு வேள்வித் தூண்களும், காதிரத்தாலான {செங்கருங்காலியாலான} ஆறும், சர்வவர்ணினாலான {பலாசத்தாலான / புரசாலான} ஆறும் அமைக்கப்பட்டன.(27) குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} அந்த வேள்வியில் தேவதாருவாலான இரண்டு வேள்வித்தூண்களும் {யூபங்களும்}, சிலேஷ்மாதகத்தாலான {இலுப்பையாலான} ஒன்றும் புரோகிதர்களால் அமைக்கப்பட்டன.(28) மன்னனின் ஆணையின் பேரில், தங்கத்தாலான வேள்வித்தூண்கள் சில அழகின் நிமித்தமாக மட்டுமே பீமனால் அமைக்கப்பட்டன.(29) அந்த அரசமுனியால் கொடுக்கப்பட்ட அழகிய துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த வேள்வித் தூண்கள் ஒவ்வொன்றும், தேவர்களும், தெய்வீக முனிவர்கள் எழுவரும் சூழ்ந்த நிற்க சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்திரனைப் போலிருந்தன.(30)

அங்கே சயனத்தைக் கட்டுவதற்காக எண்ணற்ற தங்கக் கற்கள் உண்டாக்கப்பட்டன. அந்தச் சயனமும் உயிரினங்களின் தலைவனான தக்ஷனுக்காக (அவன் தன் பெரு வேள்வியைச் செய்து கொண்டிருந்த போது) அமைக்கப்பட்ட சயனத்திற்கு ஒப்பான அழகுடன் திகழ்ந்தது.(31) பதினெட்டு முழம் அளவு கொண்ட அந்தச் சயனம் நான்கு அறைகள் அல்லது குகைகளைக் கொண்டிருந்தது. அப்போது {அந்த அறைகளில்} முக்கோணங்களில் கருடனின் வடிவிலான தங்கப் பறவை ஒன்று அமைக்கப்பட்டது[7].(32) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், பெரும் கல்வியாளர்களுமான புரோகிதர்கள், அந்த {இருபத்தோரு} வேள்வித்தூண்களில் {யூபங்களில்} விலங்குகள் மற்றும் பறவைகளைக் கட்டி அவற்றில் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட தேவனுக்கென ஒதுக்கினர்[8].(33) வேள்வி நெருப்புத் தொடர்பான சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட காளைகளும், நீர்வாழ் விலங்கினங்களும் அந்த வேள்வித்தூண்களில் {யூபங்களில்} முறையாகக் கட்டப்பட்டன.(34) உயர் ஆன்மக் குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனின்} வேள்வியில், அந்த முதன்மையான குதிரை {வேள்விக் குதிரை} உட்பட முன்னூறு விலங்குகள் அந்த வேள்வித்தூண்களில் கட்டப்பட்டன[9].(35)தெய்வீக முனிவர்களுடனும், பாடிக்கொண்டிருக்கும் கந்தர்வர்கள் மற்றும் இன்பத்தில் ஆடிக் கொண்டிக்கும் அப்ரசரஸ்களின் பல்வேறு இனக்குழுவினருடனும் இருப்பது போல அந்த வேள்வி மிக அழகானதாகத் தெரிந்தது.(36) அங்கே கிம்புருஷர்களும் நிறைந்திருந்தனர், கின்னரர்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை {அந்த வேள்விச் சாலையைச்} சுற்றிலும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் வசிப்பிடங்கள் இருந்தன.(37) மறுபிறப்பார்களில் முதன்மையானவர்களும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் தொகுப்பவர்களும், வேள்விச் சடங்குகளை நன்கு அறிந்தவர்களுமான வியாசரின் சீடர்கள் அங்கே தினமும் காணப்பட்டனர்.(38) அங்கே நாரதரும், பெருங்காந்தி கொண்ட தும்புருவும் இருந்தனர். இசையில் திறம்பெற்றவர்களான விஸ்வாவசு, சித்திரசேனன் மற்றும் பிறரும் அங்கே இருந்தனர்.(39) வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், இசையில் திறம் பெற்றவர்களும், நடனத்தை நன்கறிந்தவரகளுமான அந்தக் கந்தர்வர்கள், வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களுக்கு மகிழ்வூட்டினர்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

செல்வப்பகிர்வு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 89-யாகம் முடிந்த பின் மன்னர்களைக் கௌரவித்து ஊருக்கனுப்பிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முறையான சடங்குகளின் படி பலிகொடுக்கப்பட்ட வேறு சிறந்த விலங்குகளைச் சமைத்தபிறகு {பசனம் [சமையல் வழிபாடு] செய்த பிறகு}, (உலகம் முழுவதும் திரிந்து வந்த) அந்தக் குதிரையைப் புரோகிதர்கள் பலி கொடுத்தனர்.(1) அவர்கள், சாத்திர வழிகாட்டலுக்கு இணக்கமாக அந்தக் குதிரையைத் துண்டுகளாக வெட்டிய பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், மந்திரங்கள், பொருட்கள், அர்ப்பணிப்பு என்ற மூன்று கலைகளைக் கொண்டவளுமான திரௌபதியைப் பகுக்கப்பட்ட அந்த விலங்கின் அருகில் அமரச் செய்தனர்,(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தண்மனங்களைக் கொண்ட பிராமணர்கள், அந்தக் குதிரையின் மஜ்ஜையை {வபையை} எடுத்து, அதை முறையாகச் சமைத்தனர்.(3) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் இவ்வாறு சமைக்கப்பட்ட மஜ்ஜையிலிருந்து எழுவதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்கவல்லதுமான அந்தப் புகையை முகர்ந்தான்.(4) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரையின் எஞ்சிய உறுப்புகள், பெரும் ஞானத்தைக் கொண்ட பதினாறு வேள்விப் புரோகிதர்களால் நெருப்பில் ஊற்றப்பட்டன {அவற்றை அவர்கள் அக்னியில் ஹோமம் செய்தார்கள்}[1].(5)சக்ரனின் சக்தியுடன் கூடிய அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} வேள்வியை இவ்வாறு நிறைவடையச் செய்தவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தமது சீடர்களுடன் சேர்ந்து அந்த மன்னனைப் பெரிதும் புகழ்ந்தார்.(6) அப்போது யுதிஷ்டிரன், பிராமணர்களுக்கு {ஸதஸ்யர்களுக்கு} ஆயிரங்கோடி பொன் நிஷ்கங்களையும், வியாசருக்கு மொத்த பூமியையும் கொடையாக அளித்தான்[2].(7) சத்யவதியின் மகனான வியாசர், பூமியை ஏற்றுக் கொண்ட பிறகு, பாரதக் குலத்தவரில் முதன்மையானவனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(8) “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ எனக்குக் கொடுத்த பூமியை, நான் உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன். (பூமியால் பயனில்லாதவர்களும்) செல்வத்தை விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பதற்காக, இதை {இந்தப் பூமியை} வாங்குவதற்குரிய விலையை எனக்குக் கொடுப்பாயாக” என்று கேட்டார்.(9)பெரும் நுண்ணறிவைக் கொண்டனும் உயர் ஆன்மாவுமான யுதிஷ்டிரன், வேள்விக்கு அழைக்கப்பட்ட மன்னர்களுக்கு மத்தியில் தன் தம்பிகளுடன் இருந்து கொண்டு, அந்தப் பிராமணர்களிடம்,(10) “பெரும் குதிரை வேள்வியைச் செய்வதற்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தக்ஷிணை பூமியே ஆகும். எனவே, இந்த வேள்விப்புரோகிதர்களுக்கு அர்ஜுனனால் வெல்லப்பட்ட பூமியை நான் கொடுத்தேன்.(11) பிராமணர்களில் முதன்மையானவர்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். நீங்கள் இந்தப் பூமியை உங்களுக்குள் பகிர்ந்து கொள்வீர்களாக. உண்மையில், சதுர்ஹோத்ர வேள்வியில் செய்வது போலப் பூமியை உங்களுக்குள் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்வீராக.(12) மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களே, இப்போது பிராமணர்களுக்கு உரியவையாக இருப்பவற்றை நான் அபகரிக்க விரும்பவில்லை.(13) கல்விமான்களான பிராமணர்களே, என்னாலும், என் தம்பிகளாலும் எப்போதும் பேணி வளர்க்கப்படும் கருத்து இதுவேயாகும்” என்றான். மன்னன் இச்சொற்களைச் சொன்னபோது, அவனுடைய தம்பிகளும், திரௌபதியும், “ஆம். இதுவேதான்” என்றனர். இந்த அறிவிப்பால் உண்டான உணர்வுக் கிளர்ச்சி பெரியதாக இருந்தது.(14)

அப்போது, ஓ! பாரதா, ஆகாயத்தில் வடிவமற்ற ஒரு குரல், “நன்று, நன்று” என்று சொல்வது கேட்டது. பேசிக்கொண்டிருந்த பிராமணக் கூட்டத்தில் அவ்வாறே முணுமுணுப்புகளும் எழுந்தன.(15) தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அவனை உயர்வாகப் புகழ்ந்து, பிராமணர்களின் முன்னிலையில் யுதிஷ்டிரனிடம் மீண்டும்,(16) “பூமியானவள் உன்னால் என்னிடம் கொடுக்கப்பட்டாள். எனினும், நான் உன்னிடம் அவளைத் திருப்பித் தருகிறேன். நீ இந்தப் பிராமணர்களுக்குப் பொன்னைக் கொடுப்பாயாக. பூமி உனதாகட்டும்” என்றார்.(17)

அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், “சிறப்புமிக்க வியாசர் சொல்வது போலச் செய்வதே உமக்குத் தகும்” என்றான்.(18)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தில் முதன்மையானவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் அனைவருடனும் சேர்ந்து ஆன்ம மகிழ்ச்சியடைந்து, குதிரை வேள்விக்கென விதிக்கப்பட்ட தக்ஷிணையில் மூன்று மடங்கான கோடிக்கணக்கான பொன் நாணயங்களைக் கொடையளித்தான்.(19) மருத்தனுக்குப் பிறகு அந்த சந்தர்ப்பத்தில் குரு மன்னனால் நிறைவேற்றப்பட்டதை வேறு எந்த மன்னனாலும் நிறைவேற்ற முடியாது.(20) தீவில் பிறந்த தவசியும், பெரும் கல்விமானுமான கிருஷ்ணர் {வியாசர்}, அந்தச் செல்வத்தை ஏற்றுக் கொண்டு, அதை நான்கு பகுதிகளாக்கி, வேள்விப் புரோகிதர்களுக்குக் கொடுத்தார்.(21) பூமிக்கான விலையாக அந்தச் செல்வத்தைக் கொடுத்தவனும், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், சொர்க்கத்தை உறுதி செய்து கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் மகிழ்ந்திருந்தான்.(22) அளவற்ற செல்வத்தை அடைந்த அந்த வேள்விப் புரோகிதர்கள், பெறுபவரின் விருப்பத்திற்கேற்ப அதைப் பிராமணர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாகப் பகிர்ந்தளித்தனர்.(23) அந்தப் பிராமணர்கள், வேள்விச்சாலைக்குள் இருந்த வெற்றி வளைவுகள், வேள்வித் தண்டுகள், குடுவைகள் மற்றும் பல்வேறு வகைப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தங்க ஆபரணங்களையும் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடைய வகையில் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.(24)

பிராமணர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்ட பிறகு எஞ்சிய செல்வமானது, க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் மிலேச்சர்களில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.(25) இவ்வாறு பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனால் கொடுக்கப்பட்ட கொடையால் நிறைவடைந்த பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி சென்றனர்.(26) புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தனக்குரிய பெரிய அளவிலான பங்காக வந்த தங்கத்தைக் குந்தியிடம் மதிப்புடன் கொடுத்தார்.(27) தன் மாமனாரிடம் {வியாசரிடம்} இருந்து அந்தக் கொடையை அன்புடன் பெற்றுக் கொண்ட பிருதை, இதய மகிழ்ச்சி கொண்டவளாகப் பல்வேறு புனிதச் செயல்களைச் செய்வதற்கு அதை அர்ப்பணித்தாள்.(28)

மன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்வியின் நிறைவில் நீராடிவிட்டு, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாகச் சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் உள்ள தேவர்களின் தலைவனைப் போலத் தன் தம்பிகளுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(29) அங்கே கூடியிருந்த மன்னர்களால் சூழப்பட்ட பாண்டுவின் மகன்கள், ஓ! மன்னா, நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள கோள்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(30) அவர்கள் அந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்கள், தங்கங்கள், யானைகள், குதிரைகள், தங்க ஆபரணங்கள், பெண் பணியாட்கள், துணிகள், பெருமளவிலான தங்கம் ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.(31) உண்மையில், ஓ! மன்னா, அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைப் பகிர்ந்தளித்த பிருதையின் மகன், கருவூலத் தலைவனான வைஸ்ரவணனை {குபேரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32) அடுத்ததாக வீர மன்னன் பப்ருவாஹனனை அழைத்த யுதிஷ்டிரன், பல்வேறு வகையான அபரிமிதமான செல்வத்தைக் கொடுத்து, அவன் தன் இல்லம் திரும்பிச் செல்வதற்கு அனுமதி அளித்தான்.(33)

அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தங்கையான துச்சலையை நிறைவடையச் செய்வதற்காக, அவளுடைய பேரனை, அவனுடைய தந்தை வழி நாட்டில் {மன்னனாக} நிறுவினான்.(34) தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், அங்கே கூடியிருந்தவர்களும், முறையாக வகுக்கப்பட்டவர்களும்[3], தன்னால் கௌரவிக்கப்பட்டவர்களுமான மன்னர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.(35) பகைவரைத் தண்டிப்பவனும், சிறப்புமிக்கவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, உயர் ஆன்ம கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பெரும் வலிமை கொண்ட பலதேவனையும் {பலராமனையும்}, பிரத்யும்னனை முதல்வனாகக் கொண்ட வேறு விருஷ்ணி வீரர்கள் ஆயிரக்கணக்காணோரையும் முறையாக வழிபட்டான். தன் தம்பிகளிடன் துணையுட்ன கூடிய அவன் அவர்கள் துவாரகை திரும்புவதற்கு விடை கொடுத்தனுப்பினான்.(36,37)அபரிமிதமான உணவு, செல்வம், ரத்தினங்கள், மற்றும் பல்வேறு வகையான {ஸுரை [கள்] மற்றும் [மரத்தில் இருந்து உண்டாகும்] மைரேயம் போன்ற} மது வகைகளின் பெருங்கடல்கள் ஆகியற்றுடன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் அந்த வேள்வி இவ்வாறே கொண்டாடப்பட்டது.(38) நெய்யையே சகதியாகவும், உணவையே மலைகளாகவும் கொண்ட தடாகங்கள் அங்கிருந்தன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஆறு வகைச் சுவைகளைக் கொண்ட பானங்களெனும் சேறுகளுடைய ஆறுகளும் அங்கிருந்தன.(39) காண்டவராகங்கள் என்றழைக்கப்படும் பாகிலிடப்பட்ட இன்பண்டங்களைச் செய்வதிலும் உண்பதிலும் ஈடுபட்ட மனிதர்கள் முடிவற்றவர்களாகவும், உணவுக்காகக் கொல்லப்பட்ட விலங்குகள் முடிவற்றவையாகவும் இருந்தன[4].(40) மதுவெறி கொண்ட மனிதர்களால் நிறைந்ததும், இன்பத்தில் நிறைந்த இளம்பெண்களுடன் கூடியதுமான அந்தப் பரந்த வெளி இருந்தது. மிருதங்க ஒலிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்கள் ஆகியவற்றை அந்தப் பரந்த சாலை எதிரொலித்துக் கொண்டிருந்தது. இவை யாவற்றுடன் அந்த வேள்வி மிக மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.(41)‘இனிய பொருட்கள் கொடுக்கப்படட்டும்”, ’இனிய உணவு உண்ணப்படட்டும்’ என்ற ஒலிகளே அந்த வேள்வியில் பகலும், இரவும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தன. மகிழ்ச்சி நிறைந்தவர்களும், மன நிறைவு கொண்டவர்களுமான மனிதர்கள் நிறைந்த ஒரு பெரும் விழாவாக அது தெரிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த வேள்வியைக் குறித்து இந்த நாள் வரை {பாண்டவர்களுக்குப் பின் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு வந்த ஜனமேஜயனின் காலம் வரை} பேசிக் கொண்டிருக்கின்றனர்.(42) செல்வத்தையும், ஆசைக்குரிய பல்வேறு பொருட்களையும், ரத்தினங்களையும், பல்வேறு வகைப் பானங்களையும் தாரைகளாகப் பொழிந்த பிறகு, பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, தன் நோக்கம் நிறைவேறியவனாகத் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(43)

பொன்மயமான கீரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 90-உடலின் ஒரு பக்கத்தை பொன் நிறமாகக் கொண்ட ஒரு கீரி வந்தது; வேள்வியை அவமதித்து உஞ்சவ்ருத்தி பிராமணர் ஒருவர் தர்மதேவதைக்கு ஒரு படி மாவைக் கொடுத்த மகிமையைச் சொல்லி மறைந்த கீரி …

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“என் பாட்டன்களின் வேள்வியில் நடந்த அற்புத நிகழ்ச்சி எதனையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களின் தலைவா, ஓ! பலமிக்க ஏகாதிபதி, அந்தப் பெரும் குதிரை வேள்வியின் {அஸ்வமேத யாகத்தின்} நிறைவில் நேர்ந்த அற்புதமிக்க நிகழ்வொன்றைக் கேட்பாயாக.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்களில் முதன்மையானோரும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும், ஏழைகள், குருடர்கள், ஆதரவற்றோர் அனைவரும் நிறைவடைந்த பின்னர்,(3) அபரிமிதமாகக் கொடுக்கப்பட்ட கொடைகளைக் குறித்து அனைத்துப் பக்கங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, உண்மையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலையில் மலர்மாரி பொழிந்து கொண்டிருந்தபோது,(4) ஓ! பாவமற்றவனே, உடலின் ஒரு பக்கம் தங்கமாக மாறியிருந்த நீலக்கண் கீரியொன்று அங்கே வந்து, இடியைப் போன்ற ஆழமான உரத்த குரலில் பேசியது.(5)

மீண்டும் மீண்டும் இத்தகைய ஆழ்ந்த ஒலிகளால் விலங்குகள் மற்றும் பறவைகளை அச்சுறுத்தியதும், பொந்துக்குள் வசிப்பதும், செருக்குடன் கூடியதும், பேருடல் படைத்ததுமான அது {கீரி}, மனிதக் குரலில்,(6) “மன்னர்களே, இந்தப் பெரும் வேள்வியானது, குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்தவரும், உஞ்ச நோன்பை நோற்றுக் கொண்டிருந்தவரும், தாராளமானவருமான பிராமணர் கொடையாக அளித்த ஒரு பிரஸ்த {ஒரு படி} வாற்கோதுமை {யவம்} மாவுக்கு ஈடாகாது” என்றது.(7)

ஓ! மன்னா, அந்தக் கீரியின் சொற்களைக் கேட்ட முதன்மையான பிராமணர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(8) அந்தக் கீரியை அணுகி, அதனிடம் அவர்கள், “நல்லோரும் பக்திமான்களும் நிரம்பிய இந்த வேள்விச் சாலைக்கு நீ எங்கிருந்து வந்தாய்?(9) உன் வலிமையின் அளவென்ன? உன் கல்வி என்ன? உன் புகலிடமெது? எங்கள் வேள்வியை இவ்வாறு நிந்திக்கும் உன்னை நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?(10) சாத்திரங்களின் எந்தப் பகுதியையும் அலட்சியம் செய்யாமல், சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையிலும், அறிவுக்கு ஏற்புடைய வகையிலும் பல்வேறு வேள்விச் சடங்குகளின் துணையுடன் செய்யப்பட வேண்டிய அனைத்தும் இங்கே செய்யப்பட்டன.(11) சாத்திரங்கள் சுட்டிக்காட்டும் வழியில் வழிபடத்தகுந்தவர்கள் இங்கே முறையாக வழிபடப்பட்டனர். உரிய மந்திரங்களின் துணையுடன் புனித நெருப்புக்குள் ஆகுதிகள் ஊற்றப்பட்டன. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதுவும் செருக்கில்லாமல் கொடுக்கப்பட்டது.(12) மறுபிறப்பாள வகையினர் பல்வேறு வகைக் கொடைகளின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். க்ஷத்திரியர்கள் நியாயமான முறைகளில் செய்யப்பட்ட போர்களின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். பாட்டன்கள், சிராத்தங்களின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர்.(13)

வைசியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். முதன்மையான பெண்டிர் பலர், அவர்களது ஆசைகளை நிறைவேற்றியதன் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். சூத்திரர்கள், அன்பான பேச்சுகளின் மூலமும், பிறர் இங்கே திரட்டப்பட்ட அபரிமிதமான செல்வத்தில் எஞ்சியவற்றின் மூலமும் நிறைவடையச் செய்யப்பட்டனர்[1].(14) உற்றார் உறவினர், எங்கள் மன்னன் வெளிப்படுத்திய தூய நடத்தையின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். தேவர்கள், தெளிந்த நெய்யாலான ஆகுதிகளின் மூலமும், புண்ணியச் செயல்களின் மூலமும், சார்ந்திருப்பவர்கள் மூலமும், பாதுகாப்பைப் பின்தொடர்பவர்கள் மூலமும் நிறைவடையச் செய்யப்பட்டனர்.(15) எனவே, எது உண்மையோ அதை இந்தப் பிராமணர்களுக்கு உண்மையாக அறிவிப்பாயாக. உண்மையில், அறிந்து கொள்வதில் ஆவலாக இருக்கும் இந்தப் பிராமணர்களால் கேட்கப்பட்டு, சாத்திரங்களுக்கும், உண்மை அனுபவத்திற்கும் ஏற்புடைய வகையில் நீ அறிவிப்பாயாக.(16) உன் சொற்கள் நம்பத்தகுந்தவையாகத் தெரிகின்றன. நீ ஞானியாக இருக்கிறாய். நீ தெய்வீக வடிவத்தைக் கொண்டிருக்கிறாய். நீ கல்விமான்களான பிராமணர்களுக்கு மத்தியில் வந்திருக்கிறாய். நீ சொல்வதை விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்” என்றனர் {பிராமணர்கள்}.(17)அந்த மறுபிறப்பாள மனிதர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட கீரியானது, சிரித்தபடியே பின்வருமாறு பதிலளித்தது. அது {கீரி}, “மறுபிறப்பாளர்களே, நான் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல. மேலும் நான் செருக்கிலும் பேசவில்லை.(18) நான் சொன்னதை நீங்கள் அனைவரும் கேட்டிருக்கக்கூடும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஒரு பிரஸ்த {ஒரு படி} வாற்கோதுமை மாவைக் கொடையளித்த புண்ணியத்திற்கு இந்த வேள்வி ஈடாகாது.(19) பிராமணர்களில் முதன்மையானவர்களே, இதை நான் ஐயமறச் சொல்ல வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் சொல்கிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பீராக.(20) அற்புதம் நிறைந்த சிறந்த நிகழ்வாக அது நேர்ந்தது. அந்த நிகழ்வு, குருக்ஷேத்திரத்தில் வசிப்பவரும், உஞ்ச நோன்பு நோற்பவரும், தாராளமானவருமான ஒரு பிராமணரின் தொடர்புடையதாகும்.(21) மறுபிறப்பாளர்களே, அந்நிகழ்வின் விளைவால் அவர், தமது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சொர்க்கத்தை அடைந்தார். அப்போது நடந்த நிகழ்வின் விளைவாக என் உடலின் பாதி அளவு பகுதி பொன்னாக மாறியது”.(22)

கீரி தொடர்ந்தது, “மறுபிறப்பாளர்களே, நான் இப்போது நியாயமான முறையில் அடையப்பட்டதும், மிகக் குறைந்த அளவைக் கொண்டதும், அந்தப் பிராமணரால் வழங்கப்பட்டதுமான அந்தக் கொடையின் {கொடையாக வழங்கப்பட்ட மாவின்} சிறந்த கனியை {பலன் என்ன என்பதை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(23) அறம் சார்ந்தோர் பலர் வசிப்பதும், குருக்ஷேத்திரம் என்ற பெயரில் அறியப்படுவதுமான அறம்சார்ந்த இடத்தில், உஞ்சம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்கும் பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த வாழ்வுமுறையானது ஒரு புறாவைப் போன்றதாகும்[2].(24) அவர் அங்கே தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து தவம் செய்து வந்தார். அற ஆன்மாவும், முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் கூடியவருமான அவர் ஒரு கிளியால் பின்பற்றப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்றினார்.(25) அற்புத நோன்புகளைக் கொண்ட அவர், ஒவ்வொரு நாளும் ஆறாம் காலத்தில் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3]. நாளின் ஆறாம் காலத்தில் உண்பதற்கு ஏதும் கிடைக்கவில்லையெனில் அந்தச் சிறந்த பிராமணர், அந்த நாளில் உண்ணா நோன்பிருந்து அடுத்த நாளின் ஆறாம் காலத்தில் உண்பார். பிராமணர்களே ஒரு சந்தர்ப்பத்தில், அந்த நிலத்தில் பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் அறம்சார்ந்த அந்தப் பிராமணரின் வசிப்பிடத்தில் எதுவும் சேமித்து வைக்கப்படவில்லை. செடிகொடிகள் அனைத்தும் காய்ந்து மொத்த நாடும் உணவுப் பொருட்கள் ஏதுமற்றதாக இருந்தது.(26-28)உண்பதற்கான வழக்கமான காலம் வந்தபோது, அந்தப் பிராமணர் உண்பதற்கு ஏதுமில்லை. நாளுக்கு நாள் இதுவே நேர்ந்தது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியால் பீடிக்கப்பட்டனர், ஆனால் தங்களால் முடிந்தவரை நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(29) ஜெய்ஷ்ட மாதத்தில் {ஆனி மாதத்தில்} ஒரு நாள், சூரியன் உச்சிப் பொழுதை அடைந்திருந்தபோது, அந்தப் பிராமணர் தானியங்களைப் பொறுக்கச் சென்றார். சூட்டாலும், பசியாலும் பீடிக்கப்பட்ட அவர் இந்தத் தவத்தையே செய்து கொண்டிருந்தார்.(30) தானியங்களை அடைய முடியாத அவர், பசியாலும், உழைப்பாலும் களைத்தார். உண்மையில், அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உண்ண உணவேதும் கிட்டவில்லை.(31) அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், தன் நாட்களைப் பெரும் துன்பத்தில் கழித்தார். ஒருநாள், ஆறாம் காலம் வந்த பிறகு, அவர் ஒரு பிரஸ்தம் வாற்கோதுமையை {ஒரு படி யவதான்யத்தை} அடைவதில் வென்றார்.(32) ஸக்து என்றழைக்கப்படும் ஒன்றைச் செய்வதற்காக அந்த வாற்கோதுமையானது {யவதானியமானது} அந்தத் தவசிகளால் {பிராமணர் மற்றும் அவரது குடும்பத்தாரால்} மாவாகப் பொடி செய்யப்பட்டிருந்தது. அந்தத் தவசிகள், அமைதியான ஜபங்களையும், நாள்தோறும் செய்யும் பிற சடங்குகளையும் செய்த பிறகு, புனித நெருப்புக்கு முறையாக ஆகுதிகளை ஊற்றிய பிறகு,(33) சிறிதளவே இருந்த அந்த வாற்கோதுமை மாவை ஒரு குடவம் அளவுக்குத் தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பிரித்துக் கொண்டனர்[4]. அவர்கள் உண்பதற்காக அமரப் போகும்போது, அங்கே அவர்களது வசிப்பிடத்திற்கு ஒரு விருந்தினர் வந்தார்.(34)விருந்தினராக வந்த மனிதரைக் கண்ட அவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையில், அவரை வணங்கிய அவர்கள், அவரது உடல்நலம் குறித்த வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(35) அவர்கள் தூய மனங்களையும், தற்கட்டுப்பாட்டையும், நம்பிக்கையையும் கொண்டவர்களாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். வன்மத்தில் இருந்து விடுபட்டவர்களான அவர்கள், கோபத்தை வென்றவர்களாக இருந்தனர். பக்தி நிறைந்த அவர்கள், அடுத்தவரின் மகிழ்ச்சியைக் கண்டு ஒருபோதும் துன்புறாதவர்களாக இருந்தனர்.(36) அவர்கள் செருக்கையும், அகந்தையையும், கோபத்தையும் கைவிட்டவர்களாக இருந்தனர். மறுபிறப்பாளர்களே, உண்மையில் அவர்கள், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் விருந்தினரிடம் தங்கள் தவங்கள், தாங்கள் சேர்ந்த குலம் மற்றும் குடும்பத்தைச் சொல்லி, பதிலுக்கு அவரிடம் இருந்தும் குறிப்புகளைப் பெற்று, பசித்து வந்த தங்கள் விருந்தினரைத் தங்கள் குடிலுக்குள் அழைத்துச் சென்றனர்.அவர்கள் அவரிடம், “இதுவே உமக்கான அர்க்கியம். இந்த நீர் உமது கால்களைக் கழுவிக் கொள்வதற்கானது. ஓ! பாவமற்றவரே, நீர் அமர்வதற்கான இருக்கையாகக் குச {தர்ப்பைப்} புற்கள் இருக்கின்றன.(37,38) ஓ! பலமிக்கவரே, நியாயமான முறையில் அடையப்பட்டதும், தூய்மையானதுமான ஸக்து {வாற்கோதுமை மாவு} இங்கே சிறிதளவு இருக்கிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, எங்களால் கொடுக்கப்படும் இஃதை ஏற்றுக் கொள்வீராக” என்றனர்.(39)

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு குடவம் வாற்கோதுமை மாவை முழுமையாக உண்டார். ஆனால், ஓ! மன்னா, அவர் உண்டதைக் கொண்டு அவரால் தன் பசியைத் தணித்துக் கொள்ள முடியவில்லை.(40) தன் விருந்தினரின் பசி தணியாததைக் கண்டவரும், உஞ்ச நோன்பை நோற்பவருமான அந்தப் பிராமணர், அவரை நிறைவடையச் செய்வதற்கு வேறு எந்த உணவைக் கொடுக்கலாம் என நினைக்கத் தொடங்கினார்.(41)

அப்போது அவரது மனைவி, “என் பங்கு அவருக்குக் கொடுக்கப்படட்டும். மறுபிறப்பாளர்களில் முதன்மையான இவர் நிறைவடைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்” என்றாள்.(42)

கற்புடையவளான தன் மனைவியும் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவரால், அவளுடைய பங்கான வாற்கோதுமை மாவை விருந்தினருக்குக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை.(43) உண்மையில், கல்விமானான அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், வயது முதிர்ந்த, உழைப்பால் களைத்த, உற்சாகமற்ற தன் நிலையில் இருந்து(44) ஆதரவற்ற தன் மனைவியின் பசிப்பிணியை அறிந்து கொண்டு, எலும்பும் தோலுமாக மெலிந்து நடுங்கிக் கொண்டிருந்த அவளிடம், “ஓ! அழகியவளே, விலங்குகள், புழுக்கள் மற்றும் பூச்சிகளில் கூட,(45) மனைவிகள் உணவூட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே, நீ இவ்வாறு சொல்வது உனக்குத் தகாது. ஒரு மனைவி தன் கணவனை அன்புடன் நடத்தி, அவனுக்கு உணவூட்டி, அவனைப் பாதுகாக்கிறாள்.(46) அறம், இன்பம் மற்றும் பொருள் தொடர்புடைய அனைத்தும், குலத்தைத் தழைக்கச் செய்யச் சந்ததியை உண்டாக்கிக் கவனமாக வளர்ப்பதும் என அனைத்தும் மனைவியைச் சார்ந்ததே. உண்மையில், ஒரு மனிதனின் புண்ணியங்களும், இறந்து போன அவனுடைய மூதாதையர்களும் அவளையே சார்ந்திருக்கின்றனர்.(47) ஒரு மனைவி தன் தலைவனை, அவனது செயல்களால் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில், தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறும் மனிதன், இம்மையில் பெரும் புகழ்க்கேட்டை ஈட்டி, மறுமையில் நரகிற்குச் செல்கிறான். அத்தகைய மனிதன் பெரும் புகழ்பெற்ற நிலையில் இருந்தாலும், மறுமையில் இன்பலோகங்களை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்” என்றார்.(48)

இவ்வாறு சொல்லப்பட்ட அவள், அவருக்குப் பதிலளிக்கும் வகையில், “ஓ! மறுபிறப்பாளரே, நமது {நம்மிருவரின்} அறச்செயல்களும், செல்வமும் ஒன்றே. இந்த வாற்கோதுமையில் நான்கில் ஒரு பங்கை நீர் எடுத்துக் கொள்வீராக. உண்மையில், என்னிடம் நிறைவடைவீராக.(49) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நற்குணங்களின் மூலம் பெண்களால் அடையத்தக்க வாய்மை, இன்பம், அறச் செயல், சொர்க்கம் முதலியவையும், அவர்களுடைய ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தும் கணவரையே சார்ந்திருக்கின்றன.(50) சந்ததியை உண்டாக்குவதில் தாயானவள் தன் குருதியைக் காணிக்கையாக்குகிறாள். தந்தையானவர் தன் வித்தைக் காணிக்கையாக்குகிறார். கணவரே மனைவியின் உயர்ந்த தேவனாவார் {கணவனே கண்கண்ட தெய்வம்}[5]. கணவரின் அருளின் மூலம் பெண்கள் இன்பம் மற்றும் சந்ததி ஆகிய இரண்டையும் வெகுமதிகளாக அடைகின்றனர்.(51) நீர் எனக்கு அளிக்கும் பாதுகாப்பால், எனது பதி {தலைவர்} ஆகிறீர். நீர் எனக்கு அளிக்கும் வாழ்வாதாரத்தால் எனது பர்த்ரி {பர்த்தாவாக} ஆகிறீர். மேலும் எனக்கு மகனை அளிப்பதன் விளைவால் வரமளிப்பவரும் ஆகிறீர். எனவே, (இவ்வளவு உதவிகளுக்குச் செய்யும் பதில் உதவியாக} இந்த வாற்கோதுமையில் என் பங்கை எடுத்து இந்த விருந்தினருக்குக் கொடுப்பீராக.(52) முதுமையில் மூழ்கியிருக்கும் நீர் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறீர். பசியால் பீடிக்கப்பட்டு மிகப் பலவீனமாகவும் இருக்கிறீர். உண்ணாநோன்புகளால் அயர்ந்து மிக மெலிந்திருக்கிறீர். (நீரே உமது பங்கைக் கொடுக்கும்போது, நான் ஏன் என் பங்கைக் கொடுக்கக்கூடாது?)” என்று கேட்டாள்.(53)இவ்வாறு சொல்லப்பட்ட அவர், அவளுடைய பங்கான வாற்கோதுமை மாவை எடுத்து, தன் விருந்தினரிடம், “ஓ! மறுபிறப்பாளரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இந்த வாற்கோதுமை மாவையும் ஏற்பீராக” என்றார்.(54)

அந்த அளவு மாவை ஏற்றுக் கொண்டு உடனே அதை உண்டாலும், அவரது பசி தணியவில்லை. உஞ்ச நோன்பு நோற்று வந்த அந்தப் பிராமணர் அவர் நிறைவடையாததைக் கண்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.(55)

அப்போது அவருடைய மகன், “ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் பங்கான வாற்கோதுமை மாவை விருந்தினருக்குக் கொடுப்பீராக. என்னுடைய இந்தச் செயல் பெரும் புண்ணியம் கொண்டது என்று கருதுகிறேன். எனவே, இதை நான் செய்கிறேன்.(56) உம்மை நான் பெருங்கவனத்துடன் பராமரித்துக் கொள்ள வேண்டும். தந்தையைப் பராமரிப்பதே நல்லோரால் விரும்பப்படும் கடமையாகும்.(57) தந்தையை அவரது முதுமையில் பராமரிப்பது மகனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமையாகும். ஓ! கல்விமானான முனிவரே, மூவுலகிலும் நடைமுறையில் உள்ள நித்திய ஸ்ருதி (திறன்காணல்) இதுவே ஆகும்.(58) வெறுமனே உயிர்வாழ்வதன் மூலமே நீர் தவம் செய்ய வல்லவராவீர். உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் வசிக்கும் பெருந்தேவன் உயிர் மூச்சே ஆகும்[6]” என்றான்.(59)அதற்கு அந்தத் தந்தை, “நீ ஆயிரம் வருட வயதை எட்டினாலும், எனக்குச் சிறு பிள்ளையாக மட்டுமே தெரிவாய். ஒரு மகனைப் பெற்றதன் மூலம் அந்தத் தந்தை அவன் மூலம் வெற்றியை அடைகிறான் {கிருதகிருத்யனாகிறான்}.(60) ஓ! பலமிக்கவனே, குழந்தைகளுக்குப் பசி மிக அதிகம் என்பது எனக்குத் தெரியும். நான் வயது முதிர்ந்தவன். நான் எவ்வாறேனும் என் உயிர் மூச்சைப் பிடித்துக் கொள்வேன். ஓ! மகனே, (உன் பங்கான உணவை உண்டு) பலமடைவாயாக.(61) ஓ! மகனே, வயதும், முதுமையும் அடைந்த என்னைப் பசி அரிதாகவே பீடிக்கும். மேலும் நான் பல வருடங்களாகத் தவம் பயில்கிறேன். எனக்கு மரணத்தில் அச்சமில்லை” என்றார்.(62)

மகன், “நான் உமது குழந்தையாவேன். ஒருவனுடைய குழந்தை, அவனைக் காப்பதனால் புத்ரன் என்று அழைக்கப்படுகிறான் என ஸ்ருதி அறிவிக்கிறது. மேலும், ஒருவனுடைய சுயமே, அவனுடைய மகனாகப் பிறப்பெடுக்கிறது {ஒருவன் தானே மகனாகப் பிறப்பதாகக் கருதப்படுகிறான்}. எனவே, (உமது மகனின் வடிவில் இருக்கும்) உம்மைக் கொண்டு உம்மைப் பாதுகாத்துக் கொள்வீராக” என்றான்.(63)

தந்தையானவர், “வடிவத்தில் நீ என்னைப் போன்றவனே. ஒழுக்கத்திலும், தற்கட்டுப்பாட்டிலும் நீ என்னைப் போன்றவனே. பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் உன்னைச் சோதித்திருக்கிறேன். எனவே, ஓ! மகனே, நான் உன் பங்கான இந்த வாற்கோதுமையை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.(64)

மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர் இதைச் சொல்லிவிட்டு, மிக உற்சாகமாகத் தன் மகனின் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு, புன்னகையுடன் அதைத் தன் மறுபிறப்பாள விருந்தினருக்கு அளித்தார்.(65) அந்த வாற்கோதுமையை உண்டும், அந்த விருந்தினரின் பசி அடங்கவில்லை. உஞ்ச நோன்பை நோற்பவரும், அற ஆன்மா கொண்டவரும், விருந்தோம்பல் செய்பவருமான அவர் (மேலும் கொடுக்கத் தன்னிடம் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தால்) வெட்கமடைந்தார்.(66)

அவருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய அவருடைய மருமகள், அப்போது தன் பங்கான வாற்கோதுமையைக் கொண்டு வந்து அவரை அணுகி,(67) “ஓ! கல்விமானான பிராமணரே, உமது மகனின் மூலம் நான் ஒரு மகனைப் பெறுவேன். எனவே, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்து இந்த விருந்தினருக்குக் கொடுப்பீராக.(68) உமது அருளால், எண்ணற்ற இன்பலோகங்கள் நித்தியமாக எனதாகும். ஒரு பேரனின் மூலம் ஒருவன் எவ்வகைத் துன்பமும் இல்லாத உலகங்களை அடைகிறான்.(69) அறம் முதலிய முத்தொகை, அல்லது புனித நெருப்பின் முத்தொகையைப் போல எப்போதுமிருக்கும் சொர்க்கங்களின் முத்தொகையானது, மகன், பேரன் மற்றும் கொள்ளுப்பேரன் ஆகியோரைச் சார்ந்திருக்கிறது.(70) மகன், தன் தந்தையைக் கடனிலிருந்து விடுவிப்பதால் புத்ரன் என்றழைக்கப்படுகிறான். ஒருவன், தன் மகன்கள் மற்றும் பேரன்களின் மூலம், பக்திமான்கள் மற்றும் நல்லோருக்கு ஒதுக்கப்படும் உலகங்களின் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறான்” என்றாள்.(71)

{அதற்கு அவளது} மாமனார், “ஓ! சிறந்த நோன்புகளையும், ஒழுக்கத்தையும் கொண்டவளே, காற்றாலும், சூரியனாலும் சிதைக்கப்பட்டு, நிறத்தை இழந்தவளாக, மெலிந்தவளாக, பசியின் மூலம் கிட்டத்தட்ட நினைவிழந்தவளாகக் காணப்படும் உன்னைக் கண்டும், உன் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு, அற விதிகளை மீறுபவனாக நான் எவ்வாறு நடந்து கொள்வேன்? ஓ! மங்கலக் காரிகையே {கல்யாணி}, ஒவ்வொரு குடும்பமும் எட்ட வேண்டிய மங்கல விளைவுகளுக்காக இவ்வாறு நீ சொல்வது தகாது[7].(72,73) ஓ! மங்கலக் காரிகையே {கல்யாணி}, நாளின் இந்த ஆறாம் காலத்திலும் உணவைத் தவிர்த்து நோன்பு நோற்கும் உன்னை நான் எவ்வாறு காண்பேன்? தூய்மையும், நல்லொழுக்கமும், தவங்களும் கொண்டவள் நீ. ஐயோ, நீயும் இவ்வளவு துன்பங்களுடன் உன் நாட்களைக் கடத்த வேண்டி வந்ததே. பசியால் பீடிக்கப்பட்டவளும், மென்மையான பாலினத்தைச் சேர்ந்தவளுமான நீ ஒரு சிறுமி ஆவாய். நீ எப்போதும் என்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஐயோ, ஓ! உன் உற்றாரைத் திளைக்கச் செய்பவளே, உண்ணாமல் களைத்துப் போனவளாக நான் உன்னைக் காண வேண்டியுள்ளதே” என்றார்.(75)மருமகள், “நீர் என் தெய்வத்துக்கு தெய்வமாகவும், மூத்தவர்களுக்கும் மூத்தவராகவுமிருக்கிறீர். நீர் நிச்சயம் என் தேவருக்கும் தேவராவீர். எனவே, ஓ! பலமிக்கவரே, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்துக் கொள்வீராக.(76) என் உடல், உயிர்மூச்சுகள், அறச் சடங்குகள் ஆகிய அனைத்தும் எனக்கு மூத்தோருக்குத் தொண்டாற்றும் ஒரு காரியத்திலேயே அடங்கியிருக்கிறது. ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளால் நான் மறுமையில் இன்பலோகங்கள் பலவற்றை அடைவேன்.(77) நான் உம்மால் பார்த்துக் கொள்ளப்படத் தகுந்தவள். ஓ! மறுபிறப்பாளரே, நான் உம்மிடம் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டவள் என்பதை அறிவீராக. என் மகிழ்ச்சியே உமது கவலை என்ற இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்துக் கொள்வதே உமக்குத் தகும்” என்றாள்.(78)

மாமனார், “ஓ! கற்புடைய பெண்ணே, நோன்புகள் நோற்பவளாகவும், அறச் சடங்குகளில் உறுதியுள்ளவளாகவும், பெரியோரிடம் நோற்கப்பட வேண்டிய ஒழுக்கத்திலேயே எப்போதும் கண்கள் கொண்டவளாகவும் இருக்கும் உன்னுடைய இத்தகைய ஒழுக்கத்தின் விளைவால் நீ எப்போதும் மகிமையில் ஒளிர்ந்து கொண்டிருப்பாய்.(79) எனவே, ஓ! மருமகளே, நான் உன் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொள்கிறேன். உன்னுடைய நற்குணங்கள் அனைத்தையும் சொல்லி என்னால் வஞ்சிக்கத்தகாதவள் நீ. ஓ! அருளப்பட்ட காரிகையே, உண்மையில், அறக்கடமைகளை நோற்கும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவள் நீயே” என்றார்.(80)

அவளிடம் இவ்வாறு சொன்ன அந்தப் பிராமணர் அவளுடைய பங்கான வாற்கோதுமையை எடுத்து தன் விருந்தினருக்குக் கொடுத்தார். இப்போது அந்த விருந்தினர், பெரும் பக்தி கொண்ட அந்த உயர் ஆன்ம பிராமணரிடம் நிறைவடைந்தார்.(81) பெரும் நாநயம் மிக்கவரும், மனித வடிவில் வந்த அறத்தெய்வமுமான {தர்மதேவனுமான} அந்த முதன்மையான மறுபிறப்பாளர், நிறைவடைந்த ஆன்மாவுடன், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரிடம்,(82) “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நியாயமான வழிமுறைகளின் மூலம் அடையப்பட்டதும், அறவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் கொடுக்கப்பட்டதும், தூய்மையானதுமான உம்முடைய இந்தக் கொடையால் நான் பெரிதும் நிறைவடைந்திருக்கிறேன்.(83) உண்மையில், உம்முடைய இந்தக் கொடை சொர்க்கத்தின் இன்பலோகவாசிகளால் உரக்கப் புகழப்படுகிறது. ஆகாயத்தில் இருந்து பூமியில் பொழியப்படும் மலர்களைக் காண்பீராக.(84) தெய்வீக முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், தேவர்களுக்கு முன் நடப்பவர்கள், தேவதூதர்கள் ஆகியோர் அனைவரும் உமது கொடையால் ஆச்சரியமடைந்து உம்மைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.(85)

பிரம்மலோகத்தில் வசிக்கும் மறுபிறப்பாள முனிவர்கள், தங்கள் தேர்களில் அமர்ந்தவாறு உமது காட்சி கிட்டுவதற்காக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, சொர்க்கத்திற்குச் செல்வீராக.(86) பித்ரு லோகத்தில் வசிக்கும் உமது பித்ருக்கள் அனைவரும் அவர்களால் காக்கப்பட்டனர். பித்ருக்கள் என்ற நிலையை அடையாத பிறரும் எண்ணற்ற யுகங்களுக்கு உம்மால் காக்கப்பட்டிருக்கின்றனர்.(87) உமது பிரம்மச்சரியம், உமது கொடைகள், உமது வேள்விகள், உமது தவங்கள், தூய இதயத்துடன் உம்மால் செய்யப்பட்ட நற்செயல்கள் ஆகியவற்றின் மூலம் நீர் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறீர்.(88) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, நீர் பேரர்ப்பணிப்புடன் தவங்களைப் பயின்றீர். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது கொடைகளால் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்திருக்கின்றனர்.(89) பெருங்கடின காலத்தில், தூய இதயத்துடன் இந்தக் கொடையை அளித்திருக்கும் உம்முடைய இந்தச் செயலின் மூலம் நீர் சொர்க்கத்தை வென்றுவிட்டீர்.(90)

பசியானது, ஒருவனுடைய ஞானத்தை அழித்து, அவனது அறம்சார்ந்த புத்தியைப் பிறழச் செய்யும். பசியால் வெல்லப்பட்ட புத்தியைக் கொண்டவன் தன் மனவுரம் அனைத்தையும் கைவிடுகிறான்.(91) எனவே, எவன் பசியை வெல்வானோ அவன் நிச்சயம் சொர்க்கத்தை வெல்வான். ஒருவன் கொடைகளை அளிக்கும் விருப்பத்தை வளர்க்கும் வரை, அவனது அறம் ஒருபோதும் அழிவடையாது.(92) மகனிடம் கொண்ட அன்பை அலட்சியம் செய்து, தன் மனைவியிடம் கொண்ட அன்பை அலட்சியம் செய்து, அறத்தையே முதன்மையானதாக அறிந்த நீர் இயற்கையான ஏக்கங்களில் {ஆசைகளில்} ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.(93) செல்வத்தை அடைவது அற்ப தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும். தகுந்த மனிதனுக்கு அளிக்கும் கொடையே பெருந்தகுதியை {பெரும் புண்ணியத்தைக்} கொண்டதாகும். (உரிய சரியான) காலத்தில் கொடையளிப்பது இன்னும் பெரிய தகுதியைக் கொண்டதாகும். இறுதியாக (கொடையளிப்பதில்) அர்ப்பணிப்புக் கொள்வது மிக உயர்ந்த தகுதியாகும்.(94) சொர்க்கத்தின் வாயிலைக் காண்பது மிக அரிது. அக்கறையின்மையால் மனிதர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். சொர்க்கத்தின் வாயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தடையானது, பேராசையைத் தன் வித்தாகக் கொண்டதாகும். அந்தத் தடையானது, ஆசை மற்றும் பற்றால் கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் சொர்க்கத்தின் வாயில் அணுகப்பட முடியாததாகும்.(95)

கோபத்தை அடக்கி, தங்கள் ஆசையை வென்ற மனிதர்களும், தவங்களுடன் கூடிய பிராமணர்களும், தங்களால் இயன்ற அளவு கொடை அளிப்பவர்களும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(96) ஆயிரம் இருந்து நூறு கொடுப்பவனும், நூறு இருந்து பத்து கொடுப்பவனும், செல்வம் ஏதும் இல்லாதிருந்தும் கைநிறைய நீரைக் கொடுப்பவனும் என இவர்கள் அனைவரும் நிகரான தகுதியை ஈட்டுகின்றனர்.(97) மன்னன் ரந்திதேவன், தன் செல்வம் அனைத்தையும் இழந்திருந்தபோதும், தூய இதயத்துடன் சிறிதளவு நீரைக் கொடையளித்தான். ஓ! கல்விமானான பிராமணரே, இந்தக் கொடையின் மூலம் அவன் சொர்க்கத்திற்குச் சென்றான்.(98) அறத்தேவன், மதிப்பற்றதும், நியாயமான முறையில் அடையப்பட்டதும், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் அளிக்கப்பட்டதுமான கொடைகளில் நிறைவடைவதைப் போல, விலை மதிப்புமிக்கப் பெரிய கொடைகளாலும் நிறைவடைவதில்லை.(99) மன்னன் நிருகன் மறுபிறப்பாள வகையினருக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையாக அளித்தான். தனக்கு உரிமையில்லாத ஒரே ஒரு பசுவைக் கொடுத்ததன் மூலம் அவன் நரகில் வீழ்ந்தான்.(100)

சிறந்த நோன்புகளைக் கொண்டவனும், உசீநரன் மகனுமான சிபி, தன் உடலின் தசையைக் கொடையளித்ததன் மூலம் அறலோகங்களை அடைந்து சொர்க்கத்தில் இன்புற்றிருக்கிறான்.(101) செல்வம் மட்டுமே தகுதியாகி {புண்ணியமாகி} விடாது. நல்ல மனிதர்கள், தங்கள் சிறந்த சக்தியைப் பயன்படுத்தி நல்ல வழிமுறைகளின் துணையுடன் முயன்று, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகின்றனர். நியாயமாக ஈட்டப்பட்ட சொற்ப அளவு செல்வத்தைக் கொண்டு ஈட்டப்படும் தகுதியைப் போல ஒருவனால் பல்வேறு வேள்விகளைச் செய்வதன் மூலம் கூட ஈட்ட முடியாது.(102) கொடைகளின் கனிகள் {பயன்கள்} கோபத்தின் மூலம் அழிவடைகின்றன. ஒருவன் பேராசையின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்வதில் தவறுகிறான். கொடையின் தகுதிகளை அறிந்தவனும், நியாயமான ஒழுக்க நடைமுறையைப் பின்பற்றுபவனுமான ஒருவன், தவங்களின் மூலம் சொர்க்கத்தை அனுபவிப்பதில் வெல்கிறான்.(103) ஓ! பிராமணரே, உம்மால் அளிக்கப்பட்ட இந்தக் கொடையின் (ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவின்) கனியானது {பயனானது}, அபரிமிதமான கொடைகளுடன் ராஜசூய வேள்விகள் பலவற்றையோ, குதிரை வேள்விகள் பலவற்றையோ செய்ததன் மூலம் ஒருவன் ஈட்டுவதை {ஈட்டும் பலனை} விட மிகப் பெரியதாகும்.(104)

வாற்கோதுமை மாவின் இந்த ஒரு பிரஸ்தத்தை {ஒரு படியைக்} கொண்டு நீர் நித்தியமான பிரம்மலோகத்தை வென்றுவிட்டீர். ஓ! கல்விமானான பிராமணரே, இருளின் களங்கமற்ற பிரம்மலோகத்திற்கு நீர் மகிழ்ச்சியுடன் செல்வீராக.(105) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உங்கள் அனைவருக்காக ஒரு தெய்வீகத் தேர் {விமானம்} இங்கே வந்திருக்கிறது. உங்கள் விருப்பப்படி அதில் ஏறுவீராக. ஓ! பிராமணரே, நானே அறத்தேவனாவேன் {தர்மதேவனாவேன்}. என்னைப் பார்ப்பீராக.(106) நீர் உமது உடலைப் பாதுகாத்தீர். உமது சாதனையின் புகழ் இந்த உலகம் உள்ள வரை நீடித்திருக்கும். உமது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் சேர்ந்து நீர் சொர்க்கத்திற்குச் செல்வீராக” என்றார் {பிராமண விருந்தினராகத் தர்ம தேவன்}. அறத்தேவன் இந்தச் சொற்களைச் சொன்னதும், அந்தப் பிராமணர், தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(108)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், கல்விமானுமான அந்தப் பிராமணர் இவ்வாறு தன் மகன், மருமகள் மற்றும் நான்காவதாகத் தன் மனைவியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்த பிறகு, நான் என் பொந்துக்குள் இருந்து வெளியே வந்தேன்.(109) அங்கே அந்த வாற்கோதுமை மாவின் மணத்துடன், (அந்தப் பிராமணர் தன் விருந்தினருக்குக் கொடுத்த) நீரினால் உண்டான சகதியுடன், அங்கே பொழிந்திருந்த தெய்வீக மலர்களுடன், அந்த நல்ல மனிதன் கொடுத்த வாற்கோதுமை மாவின் துகள்களுடன் (என் உடல்) கொண்ட தொடர்பாலும்,(110) அந்தப் பிராமணரின் தவத்தாலும் என் தலை பொன்னாக மாறியது. வாய்மையிலும், தவங்களிலும் உறுதியாக இருந்த அந்தப் பிராமணருடைய கொடையின் விளைவால் என்னுடைய உடலில் பாதிக்கும் அதிகமான பகுதி பொன்மயமானதைக் காண்பீராக.(111,112)

மறுபிறப்பாளர்களே, அப்போது முதல் என் உடலில் எஞ்சியிருக்கும் பகுதியையும் பொன்னாக மாற்றிக் கொள்வதற்காக, தவசிகளின் ஆசிரமங்களுக்கும், மன்னர்களால் செய்யப்படும் வேள்விகளுக்கும் உற்சாகமிக்க இதயத்துடன் நான் மீண்டும் மீண்டும் செல்கிறேன்.(113) பெரும் ஞானியான குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்த வேள்வியைக் குறித்துக் கேள்விப்பட்டு, பெரும் நம்பிக்கையுடன் நான் இங்கே வந்தேன். எனினும் நான் பொன்மயமாகவில்லை.(114) பிராமணர்களில் முதன்மையானவர்களே, அந்த ஒரு பிரஸ்த வாற்கோதுமை மாவோடு {கொடையாகக் கொடுக்கப்பட்ட அந்த ஒருபடி மாவோடு} இந்த வேள்வியை எவ்வழியிலும் ஒப்பிடமுடியாது என்ற சொற்களை இதற்காகவே சொன்னேன்.(115) ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவின் தூளால் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் பொன்மயமாக மாற்றப்பட்டேன். எனினும், இந்தப் பெரும் வேள்வி அந்தத் தூளுக்கு நிகராகாது. இதுவே என் கருத்தாகும்” என்றது {அந்தக் கீரி}.(116)

பிராமணர்களில் முதன்மையான அவர்கள் அனைவரிடமும் அந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு அந்தக் கீரி அவர்களின் பார்வையில் இருந்து மறைந்து போனது. பிறகு அந்தப் பிராமணர்கள் தங்கள் தங்களுக்குரிய இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்”.(117)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகை நகரங்களை வெல்பவனே, அந்தப் பெரும் வேள்வியில் நிகழ்ந்த அற்புத நிகழ்வு குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(118) ஓ! மன்னா, நீ வேள்வி குறித்து உயர்வாக நினைக்கக்கூடாது. கோடிக்கணக்கான முனிவர்கள் தங்கள் தவங்களின் துணையால் மட்டுமே சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(119) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, மனநிறைவு, ஒழுக்கம், நேர்மை, தவம், தற்கட்டுப்பாடு, வாய்மை, கொடை ஆகியன ஒவ்வொன்றும் வேள்வித்தகுதிக்கு நிகரானவையாகும்” {என்றார் வைசம்பாயனர்}.(120)

யாகம், தானம், தவம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 91-தானம் மற்றும் தவங்களால் ஸ்வர்க்கம் முதலியன கிட்டுமென்றும், ஜீவ ஹிம்ஸைக்குக் காரணமான யாகம் சிறந்ததல்ல என்றும் சொன்ன வைசம்பாயனர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பலமிக்க முனிவரே, மன்னர்கள் வேள்விகளில் பற்றுள்ளவர்கள். பெரும் முனிவர்கள் தவங்களில் பற்றுள்ளவர்கள். கல்விமான்களான பிராமணர்கள், மன அமைதி, அமைதியான நடத்தை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயில்கின்றனர்.(1) எனவே, வேள்விகளின் கனிகளுடன் ஒப்பிடத்தக்க வகையில் இவ்வுலகில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதுவே என் தீர்மானமாகும். மேலும் அந்தத் தீர்மானமும், ஐயமின்றிச் சரியானதாகத் தெரிகிறது.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, எண்ணற்ற மன்னர்கள், வேள்விகளில் தேவர்களை வழிபட்டு இம்மையில் உயர்ந்த புகழையும், மறுமையில் சொர்க்கத்தையும் அடைந்தனர்.(3) பெரும் சக்தியையும், ஆயிரம் கண்களையும் கொண்டவனும், தேவர்களின் பலமிக்கத் தலைவனுமான இந்திரன், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தே தேவர்களின் மீதான அரசுரிமையை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைந்தான்.(4) மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடியவராக, செழிப்பிலும், ஆற்றலிலும் தேவர்களின் தலைவனுக்கு ஒப்பானவனாக இருக்கும்போது,(5) அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் பெரும் குதிரை வேள்வியை அந்தக் கீரி ஏன் சிறுமைப்படுத்தியது?” என்று கேட்டான்.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, ஓ! பாரதா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, வேள்வி தொடர்பான சிறந்த விதிகளையும், வேள்வி விளைவிக்கும் கனிகளையும் {பலன்களையும்} நான் உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(7) முன்பொரு காலத்தில் சக்ரன் {இந்திரன்} ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்தான். அந்த வேள்வியின் அங்கங்கள் திரட்டப்பட்ட போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு சடங்குகளைச் செய்வதில் {விஸ்தாரமான யாககர்மாவில்} ரித்விஜர்கள் மும்முரமடைந்தனர்.(8) அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரான ஆகுதிகளை ஊறுப்பவர் {ஹோதா}, தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றுவதில் ஈடுபட்டார். பெரும் முனிவர்கள் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். பெரும் கல்விமான்களும், மனநிறைவடைந்தவர்களுமான பிராமணர்கள், சாத்திர மந்திரங்களை இனி குரல்களில் சொல்லி தேவர்களை ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் செய்து கொண்டிருந்த காரியத்தில் களைப்படையாதவர்களான அத்வர்யுக்களில் முதன்மையானவர்கள், யஜுர் வேத மந்திரங்களை மெல்லிய குரல்களில் ஓதிக் கொண்டிருந்தனர்.(9,10)

விலங்குகளைக் கொல்வதற்கான காலம் வந்தது. ஓ! மன்னா, வேள்விக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகள் பிடிக்கப்பட்ட போது, அவற்றிடம் பெரும் முனிவர்கள் கருணை கொண்டனர்.(11) அந்த விலங்குகள் அனைத்தும் உற்சாகமிழந்ததைக் கண்டவர்களும், தவங்களையே செல்வமாகக் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள், சக்ரனை அணுகி, அவனிடம், “வேள்வியின் இந்த நடைமுறை மலங்கமானதல்ல.(12) பெருந்தகுதிகளை அடைய விரும்பும் உனக்கு வேள்வியுடன் எந்த அறிமுகமுமில்லை என்பதற்கான குறியீடு இது[1]. ஓ! புரந்தரா, வேள்விகளில் கொல்லப்படுவதற்காக விலங்குகள் விதிக்கப்படவில்லை.(13) ஓ! பலமிக்கவனே, நீ செய்யும் இந்த ஆயத்தங்கள் தகுதியை {புண்ணியத்தை} அழிப்பதற்குரியவை ஆகும். இந்த வேள்வி அறத்திற்கு இணக்கமானதல்ல. உயிரினங்களை அழிப்பதை ஒருபோதும் அறச்செயலெனச் சொல்ல முடியாது.(14) நீ இதை விரும்பினால், உன் புரோகிதர்கள், ஆகமத்தின்படி உன் வேள்வியைச் செய்யட்டும். ஒரு வேள்வியைச் சாத்திர விதிகளின் (உண்மையான கருத்தின்) படி செய்வதன் மூலம் உன்னால் அடையப்படும் தகுதி பெரியதாக இருக்கும்.(15) ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, மூன்று வருடங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தானிய வித்துகளைக் கொண்டு வேள்வியைச் செய்வாயாக. ஓ! சக்ரா, இதுவே பேரறம் நிறைந்ததாகவும், உயர்ந்த செயல்திறனைக் கொண்ட கனிகளை விளைவிப்பதாகவும் இருக்கும்” என்றனர்.(16)எனினும், செருக்கின் ஆதிக்கத்தில் இருந்தவனும், மூடத்தனத்தில் மூழ்கியவனுமான நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, அந்த முனிவர்களின் இந்தச் சொற்களை ஏற்கவில்லை.(17) ஓ! பாரதா, அப்போது, சக்ரனின் அந்த வேள்வியில், அசையும் உயிரினங்களைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டுமா? அசையாத பொருட்களைக் கொண்டு அவை செய்யப்பட வேண்டுமா? அவை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்துத் தவசிகளுக்கிடையில் ஒரு பெருஞ்சர்ச்சை எழுந்தது.(18) அந்தச் சர்ச்சையில் அவர்கள் அனைவரும் களைப்பை அடைந்தனர். அப்போது, உண்மையைக் காண்பவர்களான முனிவர்கள், (நடுவராக இருக்கும் காரியத்தைக் குறித்து) சக்ரனுடன் ஒரு புரிந்துணர்வைச் செய்து கொண்டு மன்னன் வசுவிடம்,(19) “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, வேள்விகள் குறித்த வேத தீர்மானமென்ன? விலங்குகளைக் கொண்டு வேள்விகளைச் செய்வது விரும்பத்தக்கதா? வித்துகள் மற்றும் சாறுகளைக் கொண்டு செய்வது விரும்பத்தக்கதா?” என்று கேட்டனர்[2].(20)அந்தக் கேள்வியைக் கேட்ட மன்னன் வசு, இரு தரப்பின் வாதங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களைத் தீர்மானிக்காமலேயே, “இருவகைகளில் எது ஆயத்தமாக இருக்கிறதோ அதைக் கொண்டு வேள்விகள் செய்யப்படலாம்” என்றான்.(21) அந்தக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துவிட்டு அவன் பாதாள லோகத்திற்குச் சென்றான். உண்மையில் பலமிக்கவனான அந்தச் சேதிகளின் ஆட்சியாளன் {உபரிசர வசு}, பொய் சொன்னதன் காரணமாகத் துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருந்தது.(22) எனவே, ஓர் ஐயம் எழும்போது, எந்த மனிதனும், அவன் எவ்வளவு ஞானம் கொண்டவனாக இருப்பினும், பலமிக்கவனும், சுயம்புவுமான உயிரினங்களின் தலைவனாக அவன் இல்லாவிட்டால், அக்காரியத்தில் எதையும் தனியாகத் தீர்மானிக்கக்கூடாது.(23) தூய்மையற்ற புத்தியைக் கொண்ட ஒரு பாவியால் அளிக்கப்படும் கொடைகள் எவ்வளவு பெரியனவாக இருப்பினும் தொலைந்தே போகும். அத்தகைய கொடைகளால் ஆவதொன்றும் இல்லை.(24)

நியாயமற்ற ஒழுக்கம் கொண்டவனும், பாவம் நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனும், அழிவைச் செய்பவனுமான ஒரு மனிதனால் அளிக்கப்படும் கொடைகளின் மூலம் இம்மையிலோ, மறுமையிலோ நியாயமான புகழை ஒருபோதும் அடைய முடியாது.(25) தகுதியை ஈட்டும் விருப்பத்தின் மூலம், நியாயமற்ற வழிகளில் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்யும் அற்ப புத்தி கொண்ட மனிதன், தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் ஒருபோதும் வெல்வதில்லை.(26) பாவம் நிறைந்த ஆன்மாவைக் கொண்ட அந்த இழிந்த பாவி, பாசாங்குத்தனத்துடன் அறவோனின் வேடத்தை ஏற்றுப் பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் (உண்மையில் தகுதி எதனையும் ஈட்டாமல்) தன் சொந்த அறத்தைக் குறித்து மனிதர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை மட்டுமே உண்டாக்குவான்.(27) ஆசை மற்றும் அறியாமையில் மூழ்கி பாவம் நிறைந்த செயல்களின் மூலம் செல்வத்தை ஈட்டும் கட்டுப்பாடற்ற ஒழுக்கம் கொண்ட பிராமணன், இறுதியில் பாவம் நிறைந்தவர்களின் இலக்கையே {கதியையே} அடைகிறான்.(28)

பேராசை மற்றும் மூடத்தனத்தில் மூழ்கும் ஒருவன், செல்வத்தைச் சேமிக்க விரும்புகிறான். பாவம் நிறைந்த, தூய்மையற்ற புத்தியினால் தூண்டப்பட்ட அவன் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கிறான்.(29) அத்தகைய வழிமுறைகளின் {தீங்கிழைப்பதன்} மூலம் செல்வமீட்டிய ஒருவன், அதைக் கொண்டு கொடைகளை அளித்தாலோ, வேள்விகளைச் செய்தாலோ, நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் அச்செல்வத்தினை ஈட்டியதன் விளைவால் அவன் மறுமையில் அந்தக் கொடைகள், அல்லது வேள்விகளின் கனிகளை ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(30) தவங்கள் எனும் செல்வத்துடன் கூடிய மனிதர்கள், தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, களங்களில் {வயல்களில்} இருந்து திரட்டப்பட்ட தானியங்கள், அல்லது கிழங்குகள், அல்லது கனிகள், அல்லது கீரைகள், அல்லது நீர், அல்லது இலைகள் ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டி, சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்.(31) இத்தகைய கொடைகளே அறம் நிறைந்தவையாகவும், உயர்ந்த தவங்களுக்கு நிகரானவையாகவும் ஆகின்றன. அத்தகைய கொடைகளும், உயிரினங்கள் அனைத்திடம் கொள்ளும் கருணையும், பிரம்மச்சரியமும், பேச்சில் வாய்மையும், அன்புடைமையும், உளவலிமையும், மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்},(32) அழிவற்ற அறத்தின் நித்திய அடித்தளங்களாக அமைகின்றன.

விஷ்வாமித்ரர் மற்றும் பழங்கால மன்னர்கள் பிறரைக் குறித்தும் நாம் கேள்விப்படுகிறோம்.(33) விஷ்வாமித்ரர், அசிதர், மன்னர் ஜனகர், கக்ஷஸேநர், ஆர்ஷ்டிஷேணர், மன்னர் ஸிந்துத்வீபர் ஆகிய இவர்களும்,(34) தவங்களையே செல்வமாகக் கொண்ட இன்னும் பல மன்னர்களும், நியாயமாக ஈட்டிய பொருட்களைக் கொடையாகக் கொடுத்து உயர்ந்த வெற்றியை அடைந்தனர்.(35) ஓ! பாரதா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களில் தவங்களைச் செய்பவர்களும், கொடைகள் மற்றும் பிற அறச் செயல்களின் மூலம் தங்களைத் தூய்மை செய்து கொள்பவர்களும் சொர்க்கத்தை அடைகிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(36)

கீரியின் வரலாறு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 92-தியானம் மற்றும் தவம் மூலம் யாக பலன் கிட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அகஸ்தியர் யாகம் செய்த கதையைச் சொன்னது; கீரியின் வரலாறு…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, சொர்க்கமானது நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட செல்வத்தின் கனியெனில் அது குறித்து முழுமையாக எனக்குச் சொல்வீராக. இக்காரியத்தை நீர் நன்கறிந்தவரெனவே, அதை விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! மறுபிறப்பாளரே, உஞ்ச வாழ்வுமுறையின்படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர் வாற்கோதுமை மாவைக் கொடையளித்ததன் மூலம் அடைந்த உயர்ந்த கனியென்ன என்பதை எனக்குச் சொல்லியிருக்கிறீர். நிச்சயம் நீர் சொன்னவை அனைத்தும் உண்மையே.(2) எனினும், வேள்விகள் அனைத்தையும் காட்டிலும் அந்தக் கதியை அடைந்தது உயர்ந்ததென எவ்வகையில் கொள்ளப்படுகிறது? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விளக்கங்கள் அனைத்துடன் இதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, முற்காலத்தில் அகஸ்தியரின் பெரும் வேள்வியில் என்ன நடந்தது என்பது குறித்த இந்தப் பழங்கதையில் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(4) ஓ! மன்னா, பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்டவரும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவருமான அகஸ்தியர், பனிரெண்டு வருடங்கள் நீண்ட தீக்ஷைக்குள் நுழைந்தார்[1].(5) உயர் ஆன்ம முனிவருடைய அந்த வேள்வியில் சுடர்மிக்க நெருப்புகளுக்கு ஒப்பான காந்தியைத் தங்கள் உடல்களில் கொண்ட ஹோத்ரிகள் {ஹோதாக்கள்} பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் கிழங்குகளையோ, கனிகளையோ உண்டு வாழ்பவர்களும், தங்கள் தானியங்களை இரண்டு கற்களை மட்டுமே நசுக்கி உண்பவர்களும் {அஸ்மகுட்டர்களும்}, (சந்திரக்) கதிர்களை மட்டுமே உண்டு வாழ்பவர்களும் {மரீசிபர்களும்} இருந்தனர்.(6) அவர்களில், உண்ணுமாறு பிறரால் வேண்டப்பட்டுத் தங்கள் முன் வைக்கப்படுவதைத் தவிர வேறு உணவேதும் உண்ணாதவர்களும் {பரிப்ருஷ்டிகர்களும்}, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு முதலில் படைக்காமல் எதையும் உண்ணாதவர்களும் {வைகஸிகர்களும்}, தாங்கள் உண்ட உணவைக் கழுவாதவர்களும் {வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்பவர்களான ப்ரஸங்கியனர்களும்} இருந்தனர். ஓ! மன்னா, அவர்களுக்கு மத்தியில் யதிகளும், பிக்ஷுக்களும் கூட இருந்தனர்[2].(7)அவர்கள் அனைவரும் அறத் தேவனின் உடல் வடிவத்தைக் கண்டவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கோபத்தை அடக்கியவர்களாகவும், தங்கள் புலன்களின் மீது முழுக் கட்டுப்பாட்டை அடைந்தவர்களாகவும் இருந்தனர். தற்கட்டுப்பாட்டைப் பயின்று வாழ்ந்த அவர்கள், செருக்கில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களாக இருந்தனர்.(8) அவர்கள் எப்போதும் தூய ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்களாகவும், (தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில்) தங்கள் புலன்களால் ஒருபோதும் தடுக்கப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அந்த வேள்விக்கு வந்திருந்த அந்தப் பெரும் முனிவர்கள் அதற்குரிய பல்வேறு சடங்குகளை நிறைவேற்றினர்.(9) அந்தச் சிறப்புமிக்க முனிவர் (அகஸ்தியர்), அந்த வேள்விக்குத் திரட்டப்பட வேண்டிய உணவைத் தன் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, நியாயமான முறையில் போதுமான அளவுக்கு அடைந்தார்.(10) அதே காலத்தில் வேறு எண்ணற்ற முனிவர்களும் பெரும் வேள்விகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், அகஸ்தியர் தமது வேள்வியில் ஈடுபட்ட போது,(11) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஆயிரங்கண் இந்திரன், (பூமியில்) மழை பொழிவதை நிறுத்தினான்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களுக்கு மத்தியில் உயர் ஆன்ம அகஸ்தியர் குறித்த இந்தப் பேச்சு எழுந்தது, {அவர்கள்}, “வேள்வியில் ஈடுபடும் இந்த அகஸ்தியர், செருக்கும், பகட்டும் இன்றி {மாத்ஸர்யமின்றி} உணவுக் கொடைகளை அளித்து வருகிறார்.(12,13) எனினும், மேகங்களின் தேவன் {பர்ஜன்யன் / இந்திரன்}, மழை பொழிவதை நிறுத்திவிட்டான். உண்மையில் உணவு எவ்வாறு வளரும்? பிராமணர்களே, அந்த முனிவரின் இவ்வேள்வி பனிரெண்டு வருடங்கள் நீளும் பெரிய வேள்வியாகும்.(14) அந்தத் தேவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழை பொழிய மாட்டான். இதைச் சிந்தித்துப் பார்த்து, கடுந்தவங்களுடன் கூடியவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான இந்த முனிவருக்கு ஏதாவது உதவியைச் செய்வதே உங்களுக்குத் தகும்” என்றனர்.

இச்சொற்கள் சொல்லப்பட்ட போது, பேராற்றல் கொண்ட அகஸ்தியர்,(15,16) தலைவணங்கியவராக அந்தத் தவசிகள் அனைவரையும் நிறைவடையச் செய்து, “வாசவன் அந்தப் பனிரெண்டு வருடங்களும் மழை பொழியவில்லையெனில்,(17) நான் மனோ வேள்வியைச் செய்வேன். இதுவே நித்ய விதியாகும். வாசவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழைபொழியவில்லையெனில்,(18) நான் ஊறு வேள்வியைச் செய்வேன். இதுவே நித்திய வேள்வியாகும். வாசவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழையைப் பொழிவில்லையெனில்,(19) நான் என் உழைப்பனைத்தையும் செலுத்தி, மிகக் கடுமையானவையும், கடும் நோன்புகளைக் கொண்டவையுமான வேறு வேள்விகளைச் செய்வதற்கு ஆயத்தமாவேன். வித்துகளை {விதைகளைக்} கொண்டு செய்யப்படும் என்னுடைய இந்த வேள்வி, பல வருடங்கள் நீளும் உழைப்புடன் கூடியதாக என்னால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது[3].(20) வித்துகளைக் கொண்டே நான் அதிக நன்மையைச் செய்வேன். இடையூறேதும் எழாது. என்னுடைய இந்த வேள்வி கலங்கடிக்கப்பட முடியாததாகும்.(21)அந்தத் தேவன் {இந்திரன்} மழையைப் பொழிவதோ, பொழியாமல் இருப்பதோ இதில் அதிக முக்கியமற்றதாகும். உண்மையில், இந்திரன் தன் விருப்பப்படியே எனக்கு மதிப்பேதும் அளிக்கவில்லையெனில்,(22) நானே இந்திரனாக மாறி அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்வேன். ஒவ்வொரு உயிரினமும், முன்பு போலவே தான் எப்போதும் உண்டு வளரும் உணவையே உண்டு வளரும்.(23) பல்வேறு வகைப் பொருட்களையும் நான் மீண்டும் மீண்டும் உண்டாக்குவேன். தங்கமும், இன்னும் என்னவெல்லாம் செல்வமுண்டோ அவை அனைத்தும் இந்த இடத்திற்கு இன்று வந்து சேரட்டும்.(24) மூன்று உலகங்களிலும் உள்ள செல்வம் அனைத்தும் இன்று தாமே இங்கு வந்து சேரட்டும். அப்சரஸ்களின் தெய்வீக இனக்குழுக்கள், கின்னரர்களோடு கூடிய கந்தர்வர்கள்,(25) விஸ்வாவசு மற்றும (அவ்வகையைச்) சார்ந்த பிறரும் என்னுடைய இந்த வேள்விக்கு வந்து சேரட்டும். வட குருக்களுக்கு மத்தியில் இருக்கும் செல்வமனைத்தும்,(26) இந்த வேள்விகளுக்குத் தாமே வந்து சேரட்டும். சொர்க்கமும், சொர்க்கத்தைத் தங்கள் இல்லமாகக் கொண்ட அனைவரும், தர்மனும் இங்கே வந்து சேரட்டும்” என்றார் {அகஸ்தியர்}.(27)

சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான மனத்தைக் கொண்டவரும், இயல்புக்கு மீறிய சக்தியைக் கொண்ட தவசியுமான அகஸ்தியர் இந்தச் சொற்களைச் சொன்னதும், அவரது தவங்களின் விளைவால் அவர் விரும்பியது அனைத்தும் நடந்தன.(28) அங்கே இருந்த முனிவர்கள், தவத்தின் சக்தியைக் கண்டு இதயம் மகிழ்ந்தனர். ஆச்சரியத்தில் நிறைந்த அவர்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(29) அந்த முனிவர்கள், “நீர் சொன்ன சொற்களால் நாங்கள் பெரிதும் நிறைவடைந்தோம். எனினும், உமது தவத்திற்கு எந்தக் குறையும் நேரக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். நியாயமான வழிமுறைகளின் மூலம் செய்யப்படும் இந்த வேள்விகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம்[4].(30) நியாயமான வழிமுறைகளில் எங்கள் உணவை ஈட்டி, எங்களுக்குரிய கடமைகளை நோற்று வேள்விக்கான தொடக்கங்களில் ஈடுபட்டு, நாங்கள் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி பிற அறச்சடங்குகளையும் செய்யப் போகிறோம்.(31) நியாயமான வழிமுறைகளின் மூலம் பிரம்மச்சரியம் பயின்று நாங்கள் தேவர்களைத் துதிக்கப் போகிறோம். பிரம்மச்சரிய காலத்தை நிறைவேற்றி, நியாயமான வழிமுறைகளை நோற்று எங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியே வரப் போகிறோம். பிறருக்கு எவ்வகையிலும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்து விடுபட்ட புத்தியையே நாங்கள் அங்கீகரிக்கிறோம்.(32,33) ஓ! பலமிக்கவரே, வேள்விகள் அனைத்திலும் தீங்கிழையாமையை நீர் எப்போதும் பாராட்ட வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அப்போது நாங்கள் உயர்வான நிறைவை அடைவோம். உமது வேள்வி நிறைவடைந்த பின்னர், உம்மால் விடைகொடுத்து அனுப்பப்படும்போது நாங்கள் {இந்த ஸத்ரத்திலிருந்து} இந்த இடத்தை விட்டுச் செல்வோம்” என்றானர்.(34)அவர்கள் இந்தச் சொற்களைச் சொல்லிக் கொண்டிஉரக்கும்போது, தேவர்களின் தலைவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான புரந்தரன், அகஸ்தியருடைய தவங்களின் சக்தியைக் கண்டு மழையைப் பொழிந்தான்.(35) உண்மையில், ஓ! ஜனமேஜயா, அளவிலா ஆற்றல் கொண்ட அந்த முனிவரின் வேள்வி முடியும் வரை, மழையின் தேவனான அவன் மழையைப் பொழிந்து, அளவிலும், காலத்திலும் மனிதர்களின் விரும்பங்களை நிறைவேற்றினான்.(36) ஓ! அரச முனியே, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பிருஹஸ்பதியைத் தன் முன் கொண்டு அங்கே வந்து, அகஸ்திய முனிவரை நிறைவடையச் செய்தான்.(37) அகஸ்தியர் அந்த வேள்வியின் முடிவில் மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரையும் முறையாக வழிபட்டு, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினார்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பொன் தலை கொண்டதும், மனிதக் குரலில் அந்தச் சொற்கள் அனைத்தையும் பேசியதுமான அந்தக் கீரி {கீரியின் வடிவில் இருந்தது} யார்? என்னால் கேட்கப்படும் இதை எனக்கு நீர் சொல்வீராக” என்றான்.(39)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நீ முன்பே என்னைக் கேட்காததால் நான் அதை உனக்குச் சொல்லவில்லை. அந்தக் கீரி யார் என்பதையும், அதனால் மனிதக் குரலை எவ்வாறு ஏற்க முடிந்தது என்பதையும் சொல்கிறேன் நீ கேட்பாயாக.(40) முன்பொரு காலத்தில், ஜமதக்னி முனிவர் ஒரு சிராத்தத்தைச் செய்யக் கருதினார். அவரது ஹோமப் பசு அவரிடம் வந்தாள், அந்த முனிவர் அவளிடம் பாலைக் கறந்தார்.(41) அவர் புதியதும், உறுதியானதும், தூய்மையானதுமான ஒரு பாத்திரத்தில் அந்தப் பாலை வைத்தார். தர்மதேவன், கோபத்தின் வடிவை ஏற்று அந்தப் பால் பாத்திரத்திற்குள் நுழைந்தான்.(42) உண்மையில் தர்மன், அந்த முனிவர்களில் முதன்மையானவர் தமக்குத் தீங்கு நேர்வதைக கண்டு என்ன செய்வார் என்பதைக் காண விரும்பினான்.(43) தமது பாலைக் கெடுத்தது கோபமே என்பதை அறிந்த தவசி, அவனிடம் சினமேதும் அடையவில்லை. பிறகு கோபமானவன், ஒரு பிராமணப் பெண்ணின் வடிவத்தை ஏற்றுத் தன்னை அந்த முனிவரிடம் வெளிப்படுத்திக் கொண்டான்.(44)

உண்மையில் கோபமானவன், பிருகு குலத்தில் முதன்மையான அவர் {ஜமதக்னி} தன்னை வென்றுவிட்டதைக் கண்டு, அவரிடம், “ஓ! பிருகு குலத் தலைவரே, நான் உம்மால் வெல்லப்பட்டேன். பிருகுக்கள் பெரும் கோபக்காரர்கள் என்ற சொல் மனிதர்களுக்கு மத்தியில் உண்டு. நான் உம்மால் அடக்கப்பட்டதால், அச்சொல் பொய்யென்பதை நான் இப்போது கண்டுகொண்டேன்.(45) பேரான்மா கொண்டவர் நீர். மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடிவர் நீர். நான் இன்று உமது ஆளுகையின் கீழ் இங்கே நிற்கிறேன். ஓ! அறம் சார்ந்தவரே, நாம் உமது தவங்களுக்கு அஞ்சுகிறேன். ஓ! பலமிக்க முனிவரே, நீர் எனக்குக் கருணை காட்டுவீராக” என்றான் {பிராமணப் பெண் வடிவில் வந்த கோபமான தர்மன்}.(46)

ஜமதக்னி, “ஓ! கோபமே, உடல் வடிவத்துடன் கூடிய உன்னை நான் கண்டிருக்கிறேன். எந்தக் கவலையுமின்றி நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. நீ எனக்கு இன்று எந்தத் தீங்கையும் இழைக்கவில்லை. உனக்கெதிரான மனவெறுப்பு ஏதும் என்னிடம் இல்லை.(47) யாருக்கு நான் இந்தப் பாலை வைத்திருந்தேனோ அந்தப் பித்ருக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாவர். நீ அவர்களிடம் சென்று {உன் கருத்தை அவர்களிடம் சொல்லி} அவர்களது கருத்துகளை {அச்சம் என்றால் என்ன என்பதை} உறுதி செய்து கொள்வாயாக[5]” என்றார்.(48)இவ்வாறு சொல்லப்பட்டதும், அச்சமடைந்த கோபமானவன் {தர்மன்}, அந்த முனிவரின் பார்வையில் இருந்து மறைந்து போனான். அந்தப் பித்ருக்களின் சாபம் மூலம் அவன் {தர்மன்} ஒரு கீரியானான்.(49) பிறகு அவன், தனக்கேற்பட்ட சாபத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வர பித்ருக்களை நிறைவடையச் செய்யத் தொடங்கினான். அவனிடம் அவர்கள், “தர்மத்தை {தர்மனை} அவமதித்துப் பேசுவதன் மூலம் நீ அடைந்திருக்கும் சாபத்தின் முடிவை அடைவாய்” என்றனர்.(50)

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அது, பெரும் வேள்விகளை நிந்தித்தவாறு, வேள்விகளைச் செய்யும் இடங்களிலும், புனித இடங்களிலும் திரிந்து கொண்டிருந்தது. அந்தக் கீரியே மன்னன் யுதிஷ்டிரனின் பெரும் வேள்விக்கு வந்தது.(51) ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவைக் குறிப்பிட்டதன் மூலம் தர்மனின் மகனை இகழ்ந்த அந்தக் கோபமானது {கீரியானது}, யுதிஷ்டிரன் தர்மனின் சுயம் (தர்மனின் மகன்) என்பதால் தன் சாபத்தில் இருந்து விடுபட்டது.(52) அந்த உயர் ஆன்ம மன்னனின் வேள்வியில் நடந்தது இதுவே. அந்தக் கீரி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கேயே அப்போதே மறைந்து போனது” {என்றார் வைசம்பாயனர்}.(53)

 அநுகீதா உப பர்வம் முற்றும்

அஸ்வமேத பர்வம் முற்றிற்று 

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading