அத்தியாயம் 65 (602) சௌதாஸன் கதை
ஒரு மாத காலம் இந்த ஏற்பாடுகள் செய்வதில் கழிந்தது. அதுவரை வழியில் கிடைத்த இடத்தில் தங்கியிருந்து,
சத்ருக்னன் தான் தனியாகப் புறப்பட்டான்.
வால்மீகி ஆசிரமத்தில் இரண்டு இரவுகள் தங்கியிருந்து, அவரை வணங்கி ஆசிகள் பெற்றான்.
பணிவாக அவரிடம் வேண்டினான். ப4கவன், என் குருவான ராமனின் காரியமாக வந்தேன்.
நாளைக் காலை வருணனின் திசையான மேற்கு நோக்கி பிரயாணம் செய்ய நினைக்கிறேன்.
அது வரை இங்கு தங்க அனுமதி வேண்டும் என்றான்.
இதைக் கேட்டு சிரித்த முனிவர், அரச குமாரனே, உனக்கு ஸ்வாகதம், தாராளமாக இரு.
இந்த ஆசிரமம், ரகு குலத்தில் வந்தவர்களுக்கு சொந்த வீடு போல. உரிமையோடு தங்கலாம்.
இதோ பாத்யம். ஆசனத்தில் அமர்ந்து கொள். அர்க்யம் எடுத்துக் கொள்.
பழங்கள், காய்கள் தான் உணவு. இவைகளை எடுத்துக் கொள் என்றார்.
காகுத்ஸனான சத்ருக்னனும், அந்த உணவை சாப்பிட்டு திருப்தி ஆனான். இது என்ன?
கிழக்கு திசையில் இருக்கும் ஆசிரமம் யாருடையது?
வால்மீகி சொன்னார். சத்ருக்னா, உன் முன்னோர்களில், சுதாஸன் என்ற ஒருவர் இருந்தார்.
அந்த அரசனின் மகன் வீர்யவானான வீரசஹன் என்பவன். குழந்தையாக இருந்த பொழுதே வேட்டையாட வந்தான்.
இரண்டு ராக்ஷஸர்கள், சார்தூலம் போல உருவம் எடுத்துக் கொண்டு வந்து ஜீவன்களைத் துன்புறுத்திக் கொண்டும்,
வனத்து மிருகங்களை ஏராளமாக கொன்று குவித்துக் கொண்டிருப்பதையும் கண்டான்.
அப்படியும் திருப்தியடையவில்லை போலும். வனத்து மிருகங்கள் ஒன்று கூட பாக்கியில்லை.
இதையறிந்து ராக்ஷஸர்களுள் ஒருவனை அம்பினால் அடித்துக் கொன்றான்.
ராக்ஷஸன் அழிந்தான் என்று நினைத்தால், மற்றவன் கண்ணில் பட்டான்.
அவன் சௌதாஸனைப் பார்த்து, என் ஸகாவை ஒரு அபராதமும் செய்யாத போது கொன்றாயே,
அதனால் உனக்கும் நான் அதே போல தண்டனை தருகிறேன் என்று சொல்லி மறைந்து விட்டது. காலம் சென்றது.
ராஜாவான குமாரன் யாகம் செய்தான். ஆசிரமத்தில் யாக பசுவை வசிஷ்டர் பாதுகாத்து வந்தார்.
தேவ யக்ஞம் போல அந்த யாகம் பல ஆண்டுகள் விமரிசையாக நடந்தது.
யாக முடிவில், இந்த ராக்ஷஸன், பழைய விரோதத்தை மனதில் வைத்தவனாக,
வசிஷ்டர் போல உருவம் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.
யாகம் தான் முடிந்து விட்டதே, உணவு வேண்டும் என்று அவன் சொன்னதை,
சற்றும் சந்தேகம் இல்லாமல் அரசன் அனுமதித்து விட்டான்.
ஆனால் சமையல்காரர் கவலை கொண்டார். உடனே அந்த ராக்ஷஸன் தன் உருவை
சமையல்காரரைப் போல ஆக்கிக் கொண்டான். அரசனிடம் மாமிசம் கலந்த உணவை பரிவோடு கொடுத்தான்.
ஹவிஸ் கலந்த உணவு என்று அதை எடுத்துக் கொண்டு, தானே பத்னியான மதயந்தியுடன் போய்
வசிஷ்டருக்கும் அரசன் உபசரித்தான். அவரிடம் கொடுத்த உடனேயே வசிஷ்டர் தெரிந்து கொண்டு விட்டார்.
மிகக் கோபத்துடன் அரசனிடம், இது என்ன தைரியம்? நர மாமிசம் கலந்த உணவை எப்படி எனக்குத் தர எண்ணினாய்.
இன்றிலிருந்து இதுவே உன் உணவாகட்டும், என்று சபித்து விட்டார்.
இதைக் கேட்டு அரசனும், பதில் சாபம் கொடுக்க கையில் ஜலத்தை எடுத்தான்.
உடனிருந்த மனைவி, மதயந்தி தடுத்து, வசிஷ்டர் நமது குலகுரு, அவரை எப்படி நீங்கள் சபிக்கலாம், என்றாள்.
அரசனும் புரிந்து கொண்டு கையில் எடுத்த ஜலத்தை தன் காலில் விட்டுக் கொன்டான்.
அந்த சாப ஜலம் அவன் பாதங்களைச் சுருக்கி விட்டது. அதிலிருந்து கல்மாஷ பாதன் என்று அழைக்கப் பட்டான்.
பணிவுடன் வசிஷ்டரை வணங்கி நடந்ததைச் சொன்னான்.
ராக்ஷஸன் தானே வந்து அன்னம் கேட்டதையும், ஹவிஸ் கலந்த உணவு என்று சமையல்காரர் சொன்னதையும் சொன்னான்.
வசிஷ்டர் புரிந்து கொண்டார். இது அந்த ராக்ஷஸனின் வேலை.
அரசனே, இதில் உன் குற்றம் எதுவும் இல்லை. நான் கோபம் கொண்டு உன்னை சபித்து விட்டேனே
அதை மாற்ற முடியாது ஆனால் மற்றொரு வரம் தருகிறேன். பன்னிரண்டு ஆன்டு காலத்தில் சாபம் விலகும்.
கடந்த காலம் உன்னை வருத்தாமல் இருக்கவும் வரம் தருகிறேன்.
அந்த அரசன் சாபத்தை அனுபவித்து சாபம் தீர்ந்து திரும்ப ராஜ்யத்தை அடைந்து ஆண்டான்.
அந்த கல்மாஷ பாதர் ஆசிரமம் தான் அருகில் இருக்கிறது. ஏன் கேட்கிறாய்? என்றார்.
சத்ருக்னனும் கதையைக் கேட்டபின் அவருடன் பர்ணசாலையில் நுழைந்தான்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-