அத்தியாயம் 62 (599) சத்ருக்ன பிரார்த்தனா. (சத்ருக்னனின் வேண்டுதல்)
இப்படி ரிஷிகள் சொன்னதைக் கேட்டு ராமர் வினவினார். அந்த லவணன் எப்படி இருப்பான்.
எங்கு இருக்கிறான்? அவன் ஆகாரம் என்ன? நடவடிக்கைகள் என்ன?
எல்லா ரிஷிகளும் ஒரே குரலில் லவணன், குழந்தையாயிருந்தது முதல், வளர்ந்து பெரியவனான வரை விவரித்தனர்.
ஆகாரமா? உயிருள்ள ஜீவன் எல்லாமே அவனுக்கு ஆகாரம் தான்.
தவம் செய்யும் முனிவர்கள் தான் பிடித்தமான பக்ஷணம். கொடுங்கோலன். துஷ்டன். மது வனத்தில் வசிக்கிறான்.
சிங்கம், புலி போன்ற மிருகங்களோடு பிராம்மணர்களையும் கொன்று குவிப்பான். இது தான் பொழுது போக்கு.
மனிதர்களையே தினசரி போஜனமாக வைத்துக் கொண்டு விட்டான். கொல்லுவது என்று ஆரம்பித்து விட்டால்,
இடை விடாது கை சளைக்கும் வரை கொன்று குவிப்பான். காலனே தான்.
உடனே ராமர், கவலைப் படாதீர்கள், நான் கவனித்துக் கொள்ளுகிறேன், வதம் செய்கிறேன் என்றார்.
ரிஷிகளுக்கு அபயம் அளித்து விட்டு தன் சகோதரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
யார் லவணனைக் கொல்ல தயாராக இருக்கிறீர்கள். யாரை இந்த செயலில் ஈடுபடச் செய்யலாம்? பரதா, சத்ருக்னா, என்று கேட்டார்.
பரதனும் முன் வந்தான். சத்ருக்னனும் வந்தான்.
பரதனைப் பார்த்து, நீங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டீர்கள்.
நந்தி கிராமத்தில், அண்ணலின் வரவை எதிர்பார்த்தபடி, வசதியில்லாத படுக்கையில் படுத்து,
ராமரைப் போலவே ஜடா முடி தரித்து, பழம் காய் கறிகளையே உண்டு விரதம் காத்தீர்கள்.
தாங்கள் திரும்பவும் கஷ்டப்பட வேண்டாம். என்னை அனுப்புவதில் என்ன சிரமம்?
இதைக் கேட்டு காகுத்ஸன், சரி அப்படியே ஆகட்டும்,
மதுவின் சுபமான நகரத்தில் உன்னை அபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றார்.
தேவையானால், பரதனையும் கூட்டிக் கொள். நீயே கற்றுத் தேர்ந்தவன். சூரன். ஆற்றல் மிகுந்தவன்.
அரச குலத்தில் பிறந்தவன். சத்ருவை நாசம் செய்து குலப் பெருமையை நிலை நிறுத்து.
அரச குலத்தில் பிறந்தவன் இப்படிச் செய்து தன் கடமையை செய்யாதவன் நரகத்துக்குத் தான் போவான்.
பாப புத்தியுள்ள லவணனை வதம் செய்ய நீ ஏற்றவனே. இனி எதுவும் யோசிக்க வேண்டாம்.
என் கட்டளை என்று கிளம்பு. லவணாசுரனை வதைத்து அவன் ராஜ்யத்திற்கு நீ அதிபதியாவாய் என்றார்.
வெற்றியோடு திரும்பி வா.
வந்த பின் வசிஷ்டர் முதலான பெரியவர்களைக் கொண்டு முறைப்படி அபிஷேகம் செய்து வைக்கிறேன்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply