துன்பம், பயம், மிடி, நோய், பகை, சோரம், கொலை, எய்தாது;
இன்பம், பொருள், அறன், யாவையும் இயல்பு ஆதலின் எய்தி;
தன் பைங் குடை நிழல் மன்பதை, தரியார் முனை மதியா
வன்பன், தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒருநாள்–தருமபுத்திரனது நீதிதவறாத அரசாட்சி.
இதுவும் அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) தரியார் முனை மதியா வன்பன் – பகைவர்களுடைய
போர்த்திறத்தைப் பொருள்செய்யாத வலிமையையுடையவனான தருமபுத்திரன்,-தன்
பைங் குடை நிழல் – தனது குளிர்ந்த குடை நிழலின்கீழுள்ள, மன்பதை-சனங்கள்,
துன்பம் பயம் மிடி நோய் பகை சோரம் கொலை எய்தாது-துன்பம் அச்சம் வறுமை
வியாதி பகை களவு கொலை ஆகிய இத்தீங்குகளை அடையாமல், இன்பம் பொருள்
அறன் யாவைஉம் இயல்பு ஆதலின் எய்தி-இன்பம் செல்வம் தருமம் ஆகிய
இவையனைத்தையும் இயல்பாக அடைந்து, தனை நிகர் வாழ்வு உற-தன்னையொத்த
இனியவாழ்க்கையையடையும்படி, வரும்-அரசுசெய்துவருகிற, நாள்களில் –
தினங்களுள், ஒரு நாள் -ஒருதினத்தில்,-(எ-று.)- “திருவாயின்மருங்கே***
ஒருவைதிகமுனி வந்து புகுந்தான்” என் அடுத்த கவியோடுமுடியும்.
நீதிதவறாத ஆளுகையைக் குடைநிழ லென்றல் மரபு: தனை
நிகர்வாழ்வுஎன்பது – அரசனாகிய தருமனது வாழ்க்கையையொத்த
வாழ்க்கை யென்றும், வேறு ஒப்புமையில்லாமையால் தன்னைத் தானே யொத்த
வாழ்க்கை யென்றும்பொருள்படும்.
இனி இருபது கவிகள்-பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றவைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.
அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும்
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே,
இறையோடு உயர் இரு கையும் எடுத்து, எண்ணுற, ‘முறையோ,
முறையோ!’ என, ஒரு வைதிக முனி வந்து புகுந்தான்-தருமனது அரண்மனைவாயிலில் ஓர் அந்தணன்வந்து
முறையிடல்.
அறை – ஒலிக்கின்ற, ஓதம் – அலைகளையுடைய, வனம்- (கடலின்)
நீரினால், சூழ் – சூழப்பட்ட, புவி-பூமியில், அரசு ஆன அனைத்துஉம் –
அரசர்களாகவுள்ள எல்லோரும், திறையோடு – (தாம்-தாம் செலுத்தவேண்டிய)
திறைப்பொருள்களுடனே, இடம் அற நிற்பது – வெற்றிடமில்லாதபடி
[இடம்போதாதபடி] (நெருங்கி) நிற்கப்பெற்ற, ஒர்-ஒப்பற்ற, திரு வாயில்மருங்குஏ-
சிறந்த அரண்மனைவாயிலின் புறத்தே, – ஒரு வைதிக முனி-
வேதவொழுக்கத்தையுடையவனான ஓர் அந்தணன், இறையோடு-
வருத்தத்துடனே, உயர் இரு கைஉம் எடுத்து -இரண்டுகைகளையும் உயர எடுத்து,
எண் உற – (காண்பவர் இது என்னகாரணம் பற்றியதோ? என்று)
ஆலோசிக்கும்படி, முறையோ முறையோ என- ‘இது முறையோ’ என்று
குறைகூறி முறையிட்டுக்கொண்டு, வந்து புகுந்தான்- வந்துசேர்ந்தான்; (எ-று.)
‘இறையோடுயரிருகையுமெடுத்து’ என்பதற்கு-தலைமேற் கை தூக்கிக்கொண்டு
என்றும் உரைக்கலாம்; இறை-தலை. இறையோடுயர் என்பதற்கு-
கைரேகையாற்சிறந்த என்றாருமுளர். முறையோ முறையோ, அடுக்கு-
அவலம்பற்றியது. வேதவிதிப்படிஒழுகுபவன்- வைதிகன்.
கடை காவலர் குறை கூறலும், விசயன், கடிதில், தன்
புடை காவலர் தொழ வந்து, புவித்தேவனை, ‘மறையின்
தொடை காவல! இது என்?’ என, அவனும், ‘தொடு கழலோய்!
விடை காவலர் நிரை கொண்டனர், வில் வேடுவர்’ என்றான்.-அருச்சுனன் வந்து வினாவ, அந்தணன் செய்திகூறுல்.
கடைகாவலர் – அரண்மனை வாயில்காவலாளர்கள், குறை கூறலும்-
(அந்த அந்தணனது) முறைப்பாட்டை (அரண்மனையினுட்சென்று) சொன்னவுடனே,
விசயன்-அருச்சுனன், கடிதின்- விரைவாக, தன் புடை காவலர் தொழ வந்து –
தனதுபக்கங்களில் அரசர்கள் வணங்க வந்து, புவிதேவனை-
பூதேவனாகியபிராமணனை, (நோக்கி), மறையின் தொடை காவல இதுஎன் என-
‘வேதங்களின் தொடர்ச்சியைப் பாதுகாத்தலில்வல்லவனே! நீ இங்ஙனம்முறையிடுவது
என்னகாரணத்தால்?’ என்றுவினாவ, அவன்உம்-அந்த அந்தணனும், விடை –
(அவ்வினாவிற்கு) விடையாக, ‘தொடு கழலோய்- அணிந்தவீரக்கழலையுடையவனே!
வில் வேடுவர் நிரை காவலர் கொண்டனர்-வில்லின் திறத்தையுடைய வேடர்கள்
(எனது) பசுக் கூட்டங்களை (அவற்றை)க் காக்கின்ற இடையர்களிடத்தினின்று
கொள்ளைகொண்டார்கள்.’ என்றான்-என்றுசொன்னான்; (எ-று.)
விடைஎன்றான்-என்றுவிடைகூறினா னென்க. என்றான் என்பது-என்று
சொன்னானென்றுபொருள்படுதலால், சொல்லெச்சம். எதிர்த்த இடையர்களைப்
பொருது வென்றகருவியை யுடைமை தோன்ற, ‘வில்வேடுவர்’ என்றான்.
விடைகாவலர்- இடையர்என்றாரு முண்டு. தொடை – ஒழுக்கமெனினுமாம்.
அஞ்சாது ஒழி, முனி! நீ; உனது ஆனின் கணம் இன்றே
எஞ்சாவகை தருவேன்’ என, ஏவுக்கு ஒரு திலகன்,
வெஞ் சாபம் எடுப்பான் வரு விசயன், தருமனுடன்
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான்-அருச்சுனன் அந்தணனுக்கு அபயமளித்துவில்லெடுக்கச்
சென்றவிடத்துத் தருமனுடனே திரௌபதியைக் காணுதல்.
முனி -முனிவனே! நீ-, அஞ்சாதுஒழி – அஞ்ச வேண்டா; உனது
ஆனின் கணம் – உன்னுடைய பசுக்கூட்டத்தை, இன்றுஏ- இப்பொழுதே, எஞ்சா
வகைதருவேன்-(ஒன்றுங்) குறையாதபடி(யான்மீட்டுக் கொணர்ந்து) கொடுப்பேன்,’
என- என்று (அந்தணனுக்கு அபயமளித்து) உறுதிமொழிகூறி, வெம் சாபம்
எடுப்பான்வரு – கொடிய (தனது) வில்லையெடுத்தற்கு (ஆயுதசாலையில்) வந்த,
ஏவுக்கு ஒருதிலகன் விசயன் – பாணப் பிரயோகவித்தைக்கு ஒரு திலகம்போல
அழகுசெய்பவனான அருச்சுனன், தருமனுடன் மஞ்சு ஆர்பொழில் விளையாடிடு
மயில் சிறுஅடிகண்டான் – தருமபுத்திரனுடனே மேகம்படிந்த [உயர்ந்த]
சோலையில்விளையாடுகிற மயில்போன்றதிரௌபதியினுடைய சிறிய பாதங்களை
அங்குப் பார்த்தான்; (எ-று.)
“நுதலடிநுசுப்பென மூவழிச் சிறுகி” என்றபடி மகளிர்க்குக் கால்சிறுத்திருத்தல்
உத்தமவிலக்கணம். மஞ்சார் பொழில் விளையாடிடு மயில் – அடையடுத்த
உவமையாகுபெயர்.
காணா, மெய்ந் நடுங்கா, ஒளி கருகா, மனம் மிகவும்
நாணா, விரைவொடு சாயக நாண் வெஞ் சிலை கொள்ளா,
சேணாம் நெறி செல்லா, நனி சீறா, அமர் வெல்லா,
மாண் ஆநிரை மீளா, ஒர் இமைப்போதினில் வந்தான்.-அருச்சுனன் வேடர்களைவென்று நிரைமீட்டல்.
காணா – (தருமனுடன் திரௌபதியைக்)கண்டு, மெய் நடுங்கா-
(அந்தத்தோஷத்தால்) உடம்புநடுங்கி, ஒளிகருகா- முகத்தில் ஒளிகுன்றி, மனம்
மிகவும்நாணா- மனத்தில் மிகவும்வெட்கங் கொண்டு, சாயகம் நாண் வெம்சிலை
விரைவொடுகொள்ளா – அம்புகளையும் நாணியையுடைய கொடியவில்லையும்
விரைவாகஎடுத்துக் கொண்டு, சேண் ஆம் நெறி செல்லா – நெடுந்தூரமாகியவழியிற்
போய்,நனி சீறாஅமர்வெல்லா-மிக்ககோபங்கொண்டு போர்செய்து(வேடர்களை)
வென்று,மாண் ஆ நிரை மீளா – மாட்சிமைப்பட்ட பசுக்கூட்டங்களை மீட்டு, ஒர்
இமைபோதினில் வந்தான் – ஒருமாத்திரைப்பொழுதிலே மீண்டு வந்து சேர்ந்தான்;
(எ-று.)
பசுக்களுக்கு மாட்சி- ஓமத்துக்கு வேண்டிய பால் தயிர் நெய் முதலியவற்றை
அளித்தல் முதலியன. மிகவும், உம்மை – சிறப்பு. ஸாயகம் – வடசொல்.
‘விரைவொடுசாலையினாண்’ என்றும் பாடம்.
தொறுக் கொண்டவர் உயிரும், தொறு நிரையும், கவர் சூரன்,
மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி,
பொறுக்கும் தவ முனி சொல்படி, புனிதப் புனல் படிவான்,
நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு, பணிந்தான்.-அருச்சுனன் தீர்த்தயாத்திரைக்குத் தருமனிடம் விடைபெறுதல்.
தொறு கொண்டவர் உயிர்உம் – பசுக்கூட்டங்களைக் கவர்ந்து
கொண்டுசென்ற வேடர்களுடைய உயிரையும், தொறு நிரைஉம்-பசுக்கூட்டத்தையும்,
கவர்-கவர்ந்துகொண்டுவந்த,சூரன்- வீரனாகிய அருச்சுனன்,-மறுக்கம் படு
மறையோன் மனம் மகிழும் படி நல்கி – கலக்கமடைந்த அந்த முனிவனது மனம்
மகிழும்படி (பசுக்கூட்டத்தை அவனுக்குக்) கொடுத்து, (உடனே), பொறுக்கும் தவம்
முனி சொல் படி புனிதம் புனல்படிவான் – தாங்கியதவத்தை யுடைய நாரதமுனிவனது
சொல்லின்படி புண்ணியதீர்த்தங்களில் ஸ்நாநஞ் செய்தற்பொருட்டு [தான்
தீர்த்தயாத்திரை செல்லும் பொருட்டு விடைபெறுதற்காக], நிறுக்கும் துலை நிகர்
தம்முனை நிகழ்வோடு பணிந்தான்-(பொருள்களை) நிறுத்து வடையறுக்கின்ற
துலாக்கோலை யொத்த [நடுவுநிலைமைதவறாத] தமையனான தருமனைப் பி
யாணசந்நாகத்தோடு வணங்கினான்;(எ-று.)
அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்யும்படி தருமனைவணங்கி
விடைபெற்றுக்கொண்டா னென்றபடி. நிரை கவர்தல்-பொருளிலக்கணத்தில்
வெட்சியென்னுந் திணையும், நிரைமீட்டல்- கரந்தை யென்னுந் திணையுமாம்.
புனிதம்=பூதம்:வடசொல். நிறுக்குந்துலை நிகர் தம்முன்-தனதுநாட்டுக்குடிகளை
முறைதவறாது நடத்தல்போலவே தாங்களும் நடக்கும்படி நிஷ்பக்ஷபாதமாக நீதி
செய்பவ னென்க. ‘நினைவோடு பணிந்தான்’ என்றும் பாடம்.
ஆடம்பர மன் வேடம் அகற்றி, தொழுதகு தொல்
வேடம் பெறு மறையோருடன் விசயன், புரவிசயன்
சூடம் தரு பாகீரதி தோய் காலையில், அவணே,
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார்.-இதுமுதல் அருச்சுனனது தீர்த்தயாத்திரை.7.- அருச்சுனன் கங்கையில் நீராடுகையில், நாககன்னியரும் நீராடவருதல்.
ஓடும் கயல் விழியாரில் உலூபிப் பெயரவளோடு,
ஆடும் புனலிடை நின்றவன், அநுராகம் மிகுந்தே,
நாடும் பில வழியே அவள் பின் சென்று, நலத்தால்
நீடும் கொடி மணம் எய்தினன், முகில் போலும் நிறத்தான்.-அருச்சுனன் உலூபியை மணஞ்செய்து கொள்ளல்.
முகில் போலும் நிறத்தான்-மேகம் போலுங் கருநிற முடையவனாகிய,
ஆடும் புனலிடை நின்றவன் – ஸ்நானஞ்செய்கிற அக்கங்கைநீரில் நின்றவனான.
அருச்சுனன், ஓடும்கயல்விழியாரில் – (அங்குநீராட வந்த காதளவும்) ஓடுகிற
கயல்மீன்போன்றகண்களை யுடையவர்களான நாககன்னிகைகளுள், உலூபி
பெயரவளோடு- உலூபியென்னும் பெயரையுடையவளுடனே, அநுராகம் மிகுந்து-
காதல்மிகுந்து, நாடும் பிலம் வழியே அவள் பின்சென்று – ஆராய்ந்து செல்லத்தக்க
பிலத்துவாரவழியாக அவள்பின்னேசென்று, (பாதாளஞ்சேர்ந்து அங்கு), நலத்தால்
நீடும் கொடி மணம் எய்தினன்- அழகினால் மிக்க பூங்கொடி போன்ற அவளை
மணந்தான்; (எ-று.)
நீராடும்போது அந்நீரினிடையே உலூபியை அருச்சுனன் கண்டானாக,
காதல்கொண்ட அன்னாள், பிலவழியே நாகலோகத்துத் தன்மாளிகைக்கு அவனை
அழைத்துக்கொண்டு போயினாளென்று பாரதங்கள் கூறும். அநுராகம்- வடசொல்.
புதிதாகச்செல்லும் மனிதருக்குப் பிலவழி இயங்குதற்கு அரிய நெறியென்பது
தோன்ற, ‘நாடும்பிலவழி’ எனப்பட்டது. ‘முகில்போலு நிறத்தான்’ என்று
அருச்சுனனது கறுப்பிலழகை விளக்கியவாறு.
இம்மென்று அளி முரல் பாயலில் இன்பத்தை வளர்த்தும்,
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும்,
செம் மென் கனி இதழாளொடு சில்நாள் நலம் உற்றான்;
அம் மென்கொடி அனையாளும் இராவானை அளித்தாள்.-அருச்சுனன் நாகலோகத்திற் சிலநாள் இருந்து,
இராவானைப் பெறுதல்.
(அவ்வருச்சுனன்),- இம் என்ற அளி முரல் பாயலில் –
இம்மென்னும்ஒலிபடவண்டுகள் ஒலிக்கின்ற மலர்ப்படுக்கையில், இன்பத்தை
வளர்த்துஉம் – (அவளோடு) சுகத்தை மிகுதியாகப்பெற்றும்,-பொம்மென் பரிபுரம்
நாள் மலர் – பொம்மென்று ஒலிக்கிற சிலம்பென்னும் அணியை யணிந்த
அன்றுபூத்ததாமரை மலர்போன்ற அவளுடைய பாதங்களை,
பொன்சென்னியில்வைத்து உம் – அழகிய தனது சிரசின்மீது கொண்டும்,-
செம் மெல்கனி இதழாளொடு – சிவந்த மென்மையான கொவ்வைப்பழம்போன்ற
அதரத்தையுடைய அவளுடனே, சில் நாள் நலம்உற்றான்-சிலநாள் இன்பத்தை
அனுபவித்தான்; (பின்பு), அம் மெல்கொடி அனையாள் உம்- அழகிய
மென்மையானபூங்கொடியைப் போன்ற அவ்வுலூபியும், இராவானை அளித்தாள்-
இராவானென்றபுதல்வனைப்பெற்றாள்;
இம்மெனல், பொம்மெனல்-ஓசை யநுகரணம். அருச்சுனன் அவளுடைய
பாதத்தைச் சிரமேற்சூடுதல், அவள் ஊடல்கொண்ட காலத்தில் அதனைத்
தணிவித்தற்குஎன்க: ஊடலாவது- ஆடவரும் மகளிரும் இன்பநிலையில்
அவ்வின்பத்தைமிகுவிக்கும்பொருட்டு ஒருவரோடொருவர் சிறிது கொள்ளும்
பிணக்கம்: புலவியென்றுகூறப்படும். இராவாந்-வடமொழிப் பெயர்; அராவானெனப்
பெயர் குறித்தல்வடநூலுக்கு முரணாம். ‘இம் மென்றளிமுரல்’ என்ற
அடைமொழியால், பாயல் -மலர்ப்பள்ளியாயிற்று.
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு, மகிழ்ந்து,
நாகாதிபன் மகன், மீளவும், நதியின் வழி வந்து,
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து,
நாகாதிபன் விடும் மும் மதம் நாறும் திசை புக்கான்.-அருச்சுனன், நாகலோகத்தினின்று மீண்டு கிழக்கு நோக்கிச் செல்லுதல்.
நாக அதிபன் மகன் -சுவர்க்கலோகத்துக்குத் தலைவனான
இந்திரனதுமகனாகிய அருச்சுனன், நாக அதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு
மகிழ்ந்து-ஒருநாகராசனது மகளான உலூபியிடத்துத் தோன்றிய அந்தப்புத்திரனது
அழகைக் கண்டுசந்தோஷித்து, மீளஉம் நதியின் வழி வந்து- மீண்டு பிலவழியாய்க்
கங்காநதிக்குவந்து, நாக அதிபன் வண் சாரலின் நல்நீர்கள் படிந்து-மலையரசனாகிய
இமயமலையினது அழகிய சாரலிலுள்ள சிறந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,
(அவ்வடதிசையினின்று), நாக அதிபன் விடு மும்மதம் நாறும் திசை புக்கான் –
யானைகளுக்குத் தலைவனான ஐராவதமென்னும்யானை சொரிகிற மூன்றுவகை
மதஜலங்கள் மணம்வீசப்பெற்ற கிழக்குத்திசையையடைந்தான்;
கிழக்குத்திசையென்ற பொருளை ‘நாகாதிபன்விடுமும்மத நாறுந்திசை’
எனவேறுவகையாற் கூறினது – பிறதினவிற்சியென்னும் பொருளணி; இச்செய்யுளின்
அடிதோறும் ‘நாக’ என்ற சொல் வெவ்வேறுபொருளில்வந்தது – யமகமென்னுஞ்
சொல்லணி. நாக மென்ற வடச்சொல் – மலையென்ற பொருளில் சலியாதது என்றும்,
யானை யென்ற பொருளில் நகத்தில் [மலையில்] வாழ்வது என்றுங்
காரணப்பொருள்படும்.
நெளிந்து ஆடு அரவு-அணை ஐயன் நிறம் போல நிறக்கும்
களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும்,
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி, முக் கோலினர் ஆகித்
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று, ஆடினன் அன்றே.-யமுனை முதலிய தீர்த்தங்களில் நீராடுதல்.
முக்கோலினர் ஆகி – திரிதண்டத்தை யேந்தியவர்களாய்,
தெளிந்து-(தத்துவஞானத்தால்) மனந்தெளிந்து, ஆறிய- (சாந்தகுணத்தால்)
அடங்கியிருக்கிற, பெரியேரொடு- சிறந்த முனிவர்களுடனே, முளிந்து ஆர் அழல்
எழு கான் நெறி சென்று – கொதித்துவளர்கிற நெருப்பு ஓங்கியெரியப்பெற்ற
[கொடிய]காட்டு வழியிலே போய், நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம்
போல நிறக்கும்- உடல்நெளிந்து படமெடுத்தாடுந் தன்மையுள்ள ஆதிசேஷனைச்
சயனமாகக்கொண்ட திருமாலினது திருநிறம்போலக் கருநிறங்கொண்டுள்ள, களிந்தா
நதி முதல் ஆகிய-யமுனாநதி முதலிய, கடவுள் நதி பலஉம் – தெய்வத்தன்மையுள்ள
நதிகள் பலவற்றிலும், ஆடினன்- நீராடினான்; (எ-று.)
யமுனை, களிந்த மென்னும் மலையினின்றுந் தோன்றிக் காளிந்தி யென
ஒருபெயர் பெறுதலால், ‘களிந்தாநதி’ எனப்பட்டது. ‘முளிந்தாரழல்’ என்றது-
காட்டுத்தீயை; இதனால், அக்காட்டின் செல்லுதற்கு அருமை கூறியவாறு.
திரிதண்டம்-மூன்றுகோல் ஒன்றாகச் சேர்த்துக்கட்டப்பட்டது, இதுமுதல் 35-ஆம்
பாடல்வரையிலுள்ள தலங்கள் பாலபாரதத்துக் கூறப்படவில்லை, அன்றே=ஈற்றசை.
பத்திக்கு வரம்பாகிய பார்த்தன், பல தீர்த்தம்
அத் திக்கினும் எத் திக்கினும் ஆம் என்றவை ஆடி,
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி,
தத்திச் சொரி அருவித் தட அரவக்கிரி சார்ந்தான்.-தென்றிசைநோக்கிவந்து திருவேங்கடமலை சேர்தல்.
பத்திக்கு வரம்பு ஆகிய – பக்திக்கு ஓர் எல்லையாகவுள்ள,
பார்த்தன்-அருச்சுனன், – அ திக்கின்உம் – அந்தக் கீழ்த் திசையிலும், எ
திக்கின்உம் -பலவிடங்களிலுமுள்ள, ஆம் என்றவை- விசேஷமுடையனவாமென்று
சொல்லப்பட்டவையான, பல தீர்த்தம் – அநேக தீர்த்தங்களில், ஆடி – நீராடி,-
(பின்பு),-சித்திக்கு ஒரு விதை ஆகிய -கருதியபயன் கைகூடுதற்கு ஒப்பற்ற
மூலமாயுள்ள, தென்நாட்டினை – தட்சிணபூமியை, அணுகி – அடைந்து, தத்தி
சொரிஅருவி தட அரவக்கிரி-குதித்துப்பாய்கின்ற அருவிகளையுடைய
பெரியதிருவேங்கடமலையை, சார்ந்தான்-;
தென்திசையிலே சோளதேசத்தைக்கடந்து பாண்டியனது *மணலூருபுரத்தில்
வனச்சோலையிலே சித்திராங்கதையைக்கண்டு மணந்து இன்புற்றுச் சேதுவைக்
கண்டுமீண்டு கருக்கொண்டிருந்த அந்தச் சித்திராங்கதையையடைந்து அவள்
கருவுயிர்த்தஆண்மகவை மாமனாரின்விருப்பின்படி அவற்குத்தத்துக்கொடுத்து
அவனுடையமகவில்லாக்குறையை நீக்கி மேலைத்திசையில் தீர்த்தங்களைச்
சேவித்துவிட்டுக்கோகர்ணக்ஷேத்ர மடைந்தான் என்ற இவ்வளவே
பாலபாரதத்திலுள்ளது.பரதகண்டத்திலே தக்ஷிண தேசமாகிய தமிழ்நாடு,
திருவேங்கடம் திருவரங்கம்அத்திகிரி முதலிய பல விஷ்ணுஸ்தலங்களுக்கும்,
சிதம்பரம் காஞ்சீபுரம் முதலியபலசிவஸ் தலங்களுக்கும் இடமாய்,
அடியார்கட்குக்கருதிய பயன் கைகூடுதற்குஉரியதானமாக இருத்தலால், ‘சித்திக்
கொரு விதையாகிய தென்னாடு’ எனப்பட்டது. தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும்
இடையெல்லை திருவேங்கட மென்பது தோன்ற, ‘தென்னாட்டினை யணுகி
அரவக்கிரி சார்ந்தான்’ என்றார். (அரவம் – பாம்பு; இங்கே, ஆதிசேஷன்)
திருவேங்கடமலை சேஷகிரி யென்று ஒரு பெயர் பெறுதலால், ‘அரவக்கிரி’
எனப்பட்டது. பரமபதநாதனது ஆஜ்ஞையின்படி ஆதிசேஷனேமலையுருவ
மானதனாலும், மேரு மலையிலிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினாற்
கொணரப்பட்டதனாலும், இதற்கு இப்பெயர் வாய்த்தது: இது- திருமாலினது
திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும், வடநாட்டுத்திருப்பதிகள்
பன்னிரண்டில்முதலதுமாகிய தலம். ‘தத்திச் சொரி யருவி’ என்ற அடைமொழியால்,
அத்திருமலையில் ஆகாசகங்கை, பாபவிநாசம், பாண்டவதீர்த்தம், குமாரதாரை,
தும்புருதீர்த்தம், கோனேரி, – ஆழ்வார்தீர்த்தம் முதலிய பல புண்ணியதீர்த்தங்கள்
இருத்தல் தோன்றும்.
இச்சைப்படி தன் பேர் அறம் எண்-நான்கும் வளர்க்கும்
பச்சைக்கொடி, விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள்,
செச்சைத் தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும்
கச்சைப் பொரு முலையாள், உறை கச்சிப் பதி கண்டான்-காஞ்சீபுரத்தை யடைதல்.
தன் இச்சைப்படி – தனது விருப்பத்தின்படியே, பேர் அறம்
எண்ணான்குஉம் – சிறந்த முப்பத்திரண்டு தருமங்களையும், வளர்க்கும் –
வளர்க்கின்ற, பச்சை கொடி – பசியநிறமுள்ள கொடி போன்றவளும், விடையோன்
ஒருபாகம் திறைகொண்டாள் – விருஷபவாகனனாகிய சிவபிரானது (திருவுருவத்தில்)
வாமபாகத்தைத் (தனக்குஉரிய) திறைப்பொருளாக [தங்குமிடமாக]க்கொண்டவளும்,
செச்சை தொடை – வெட்சிப்பூமாலையையுடைய, இளையோன் –
இளையகுமாரனானமுருகக்கடவுள், நுகர் – அமுதுசெய்த [உண்ட], தீம்பால்-இனிய
பாலினது, மணம் -வாசனை, நாறும் – பரிமளிக்கின்ற, கச்சை பொரு முலையாள் –
(அணிந்த) கச்சினைமோதுகின்ற [பருத்த] தனங்களை யுடையவளுமான
காமாட்சியம்மை, உறை -எழுந்தருளியிருக்குமிடமான, கச்சிபதி – காஞ்சீபுரியை,
கண்டான் – அடைந்தான்;(எ-று.)
கச்சிப்பதி – தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று: இது, முத்திதரும்
நகரம்ஏழனுள் ஒன்றாம்; (மற்றவை – அயோத்தி, மதுரை, மாயை, காசி, அவந்தி,
துவாரகை என்பன.) கச்சி – காஞ்சி என்ற வடசொல்லின்சிதைவு. ஒருகாலத்தில்
திருக்கைலாசத்திலே உத்தியானவனத்தில் உமாதேவி பரமசிவனது
பின்னேவந்துவிளையாட்டாக அப்பிரானுடைய திருக்கண்களைத் தனதுஇரண்டு
திருக்கைகளாலும் ஒருகணப்பொழுது மறைக்க, அம்மாத்திரத்தில்
சந்திரசூரியராதியர்அனைவருடையஒளிகளும் ஒழிந்துஎங்கும் இருள் மூடி
யுகங்கள் பலகழிந்துமன்னுயிர்மிகவருந்த, அவ்வருத்தத்தை நெற்றிக்கண்ணின்
ஒளியால் நீக்கியசிவபெருமான், பின்பு உமாதேவியை நோக்கி ‘நீ செய்தஇக்குற்றந்
தீரக் காஞ்சீபுரியிற்சென்று தவம்புரிந்து புனிதையாவாய்’ என்று கட்டளையிட,
அங்ஙனமேகன்னிகைவடிவமாய்க் காஞ்சீபுரத்திற்கு வந்த காமாட்சியம்மை, அங்கு
முப்பத்திரண்டுதருமங்களையும் வளர்த்தன ளென்றும், அதற்காகச் சிவபிரான்
அக்ஷயபாண்டம்ஒன்றையும், இரண்டு சராவங்களையும், இருநாழிநெல்லையும்
அவட்குக்கொடுத்தருளின னென்றும் வரலாறு அறிக. முப்பத்திரண்டு தருமங்க
ளாவன-கோதானம், பூமிதானம், கன்னிகாதானம், சத்திரங்கட்டுதல்,
குளம்வெட்டுதல்,சாலையமைத்தல், தண்ணீர்ப்பந்தல்வைத்தல், ஆவுரிஞ்சுதறி
நாட்டல், மட்டங்கட்டுதல்,வீடுகட்டிக்கொடுத்தல்,பசுவுக்குப்புல்லிடுதல், விலங்குகட்டு
இரைகொடுத்தல்,பறவைகட்கு இரையளித்தல், மகப்பெறுவித்தல், மகவளர்த்தல்,
மகவுக்கு பாலளித்தல்,மகவுக்குச்சோறளித்தல், ஓதுவார்க்குஉணவு அளித்தல்,
ஏழைகட்கு அன்னமிடுதல்,நோய்க்குமருந்துதருதல், விலைகொடுத்து உயிர்காத்தல்,
ஆடையழுக்ககற்றவண்ணாரைவைத்தல், கௌரத்திற்குநாவி தரை வைத்தல்,
தாம்பூலந்தருதல், அணிகலன் அளித்தல், தலைக்கு எண்ணெய்தருதல், பிறர்கடன்
தீர்த்தல், பிச்சையிடுதல், அகதிப் பிணஞ்சுடுதல், ஆடையளித்தல்,
திண்பண்டம்நல்கல்,துயல் தீர்த்தல் என்பன; இவற்றிற்சில, வேறுவேறாகவுங்
கூறப்படும். செச்சை யென்பது – வெட்சியென்னும்பொருள தாதலையும்,
அம்மலர்மாலை முருகனுக்கு உரிய தாதலையும், “செச்சைக்கண்ணியன்” எனத்
திருமுருகாற்றுப்படையிலுங் காண்க. மூத்தகுமாரனாகிய விநாயகனைவிலக்குதற்கு
‘இளையோன்’ என்றும், சரவணப்பொய்கையில் தோன்றிய
இளங்குழந்தைவடிவானகுமாரக்கடவுளுக்குச் சிவபிரான் கட்டளைப்படி உமாதேவி
முலைப்பால் கொடுத்தமைபற்றி ‘இளையோனுகர்தீம்பான்மணநாறு முலை’ என்றும்,
காஞ்சீபுரத்தில் காமாட்சியம்மைக்கு உள்ளதலைமைதோன்ற ‘அவளுறையுங்
கச்சிப்பதி’ என்றுங் கூறினார்.
அயனார் புரி மக சாலையும், அணி அத்திகிரிக்கே
மயனார் செய் திருக் கோயிலும், மா நீழலின் வைகு எண்
புயனார் உறை மெய்க் கோலமும், உள் அன்பொடு போற்றி,
பயன் ஆர் புனல் நதி ஏழும், அந் நகரூடு படிந்தான்.-அந்நகரிலுள்ள திருமாலையும்சிவபிரானையும்வணங்கல்.
இச்செய்யுளின் இடையிரண்டடிகள், பலஏட்டுப்பிரதிகளில்
“மயனார்செய்திருக்கோயிலுமாமின்னினொடமரும்
புயனாரணர்மெய்க்கோலமுமுள்ளன்பொடுபோற்றி”
அயனார் புரி மகசாலை உம் (அங்குப்) பிரமதேவர் செய்த
யாகசாலையையும், அணி அத்திகிரிக்குஏ மயனார் செய் திருகோயில்உம்-அழகிய
அத்திகிரியிலே மயன் செய்த திருக்கோயிலையும், மா நீழலின் வைகு எண் புயனார்
உறை மெய் கோலம்உம் – மாமரத்தின் நிழலிலே வீற்றிருக்கின்ற
எட்டுத்தோள்களையுடைய சிவபிரான் காட்சிகொடுக்கிற திருமேனிக் கோலத்தையும்,
உள் அன்பொடு போற்றி- மெய்யன்போடு வணங்கி, அ நகரூடு – அந்த
நகரத்திலுள்ள, பயன் ஆர் புனல் நதி ஏழுஉம் – (தம்மில்மூழ்குவார்க்கு)
நற்பயன்மிகும்படியான புண்ணியதீர்த்தத்தையுடையஏழு நதிகளிழும், படிந்தான் –
நீராடினான்; (எ-று.)- இதிற்குறித்த திருமால்திருநாமம் – வரதராசர்; தாயார்
திருநாமம்- பெருந்தேவி; சிவபிரான் திருநாமம் – ஏகாமிரநாதர்; அம்பிகை
திருநாமம் -காமாட்சியம்மை.
நெடுநாள் தவஞ்செய்தும் மனத்தூய்மைபெறாத பிரமதேவன்
ஆகாயவாணிகூறியபடி பூலோகத்தில் புண்ணியக்ஷேத்திரங்களெல்லாவற்றுள்ளும்
உத்தமமானதும்ஒன்று ஆயிரமாகப்பயன் தருவதுமாகிய சத்தியவிரதக்ஷேத்திரத்தை
யடைந்து அங்கு அநந்தசரசின் கரையிலுள்ள அஸ்திகிரியை உத்தரவேதியாகக்
கொண்டு யாகசாலையமைப்பித்து அசுவமேதயாகஞ்செய்து அதனால்
ஸ்ரீமந்நாராயணனை ஆராதிக்க, அந்த யாகாக்கினியிலிருந்து எழுந்த என்றுகாணப்படுகின்றன. மா மின்னினொடு அமரும் புயல்நாரணர் மெய்கோலம்
என்பதற்கு – திருமகளாகிய மின்னலினுடனே பொருந்திய மேகம்போன்ற
திருமாலினது திருமேனிக்காட்சி யென்று பொருள். புண்ணியகோடி விமானத்தில்
தேவராசனான திருமால் பிரசன்னனாயின னென்றும்,தெய்வத்தச்சரில் ஒருவனான
மயன் பிரமன் கட்டளையால் அங்கு எம்பெருமானுக்குத்திருக்கோயில்
கட்டியமைத்தன னென்றும் அறிக. அயன் – அஜன்என்றவடசொல்லின்திரிபு.
ஹஸ்திகிரி – வடசொற்கள். இந்திரனது யானையாகியஐராவதம் நெடுநாள்
தவஞ்செய்து மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத்தரித்தலால்அம்மலைக்கு
‘ஹஸ்திகிரி’ என்று பெயராயிற்றென்றும், கசேந்திராழ்வான்
பூசித்துப்பேறுபெற்றமலையாதலால் அப்பெயர் நிகழ்ந்ததென்றுங் காரணங் கூறுவர்;
ஹஸ்தி -யானை.
மாநீழலின்வைகெண்புயனார் – ஏகாம்ரநாதஸ்வாமி. காஞ்சீபுரத்தில்
வேதவடிவமான ஒருமாமரத்தின்கீழ்ச் சிவபிரான் சிவலிங்கவடிவமாய் எழுந்தருளி
யிருக்கின்றன னென்க. இது, பஞ்ச சிவலிங்க ஸ்தானங்களுள் பிருதிவிலிங்க
ஸ்தாந்ம்.நதியேழ்- கம்பை, பம்பை, மஞ்சனி, பிச்சி, கலிச்சி, மண்ணி, வெஃகா
என்பன.
பெற்றாள் சகத் அண்டங்கள் அனைத்தும், அவை பெற்றும்
முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும்
பற்றாம் என, மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும், உண்மை
கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கை தொழுதான்-திருவண்ணாமலையைத் தொழுதல்.
சகத் அண்டங்கள் அனைத்துஉம் பெற்றாள் – உலக வுருண்டைக
ளெல்லாவற்றையும் பெற்றவளும், அவை பெற்று உம் முற்றா முகிழ் முலையாளொடு
– அவற்றையெல்லாம் பெற்றும் முதிராத அரும்புபோன்ற [இளமை மாறாத]
தனங்களையுடைய மங்கையுமாகிய உமாதேவியுடனே, முக்கண்ணர் –
மூன்றுதிருக்கண்களையுடையவரான சிவபிரான், விரும்பும் – திருவுள்ளமுவந்து
எழுந்தருளியிருக்கிற, பற்று ஆம் – ஸ்தலமாகும் (இது), என – என்ற காரணத்தால்,
உண்மை கற்றார் – மெய்ப்பொருளறிந்த ஞானிகள், மிக்கோர் இகழ் பற்று
ஒன்றின்உம்- (தக்கதன்றென்று) மேலோர் இகழ்கிற இவ்வுலகப்பற்று
பொருந்தியகாலத்திலும்,தொழும் – வணங்கப்பெற்ற, அருணாசலம் –
திருவண்ணாமலையை, அன்போடுகைதொழுதான் – பக்தியுடன் கைகூப்பி
வணங்கினான்; (எ-று.)- இத்தலத்துச்சிவபிரான் திருநாமம் – அருணாசலேசுவரர்;
அம்பிகை திருநாமம் -உண்ணாமுலையம்மை.
ஜகதண்டம் – அண்டகோளம். சிவபிரான் தன்னுடைய பராசக்தியான
அம்பிகையினது உதவியைக்கொண்டே பிரபஞ்சங்களைப் படைத்தருளுதலாலும்,
இச்சாமாத்திரத்தால் அவையனைத்தும் உண்டாதல் பற்றி அவற்றைப் பெற்றதனாற்
கன்னித்தன்மை அம்பிகைக்கு மாறாததனாலும், ‘பெற்றாள்சக தண்டங்களனைத்தும்
அவை பெற்றும் முற்றாமுகிழ் முலையாள்’ என்றார்; இது முரண்விளைந்தழிவணி.
‘முக்கண்ணன்’ என்றும் பாடம்.
உலகப்பொருட்பற்று முத்திபெறுதற்குத் தடையாதல்பற்றி
ஒழிக்கத்தக்கதாதலால் ‘மிக்கோரிகழ்பற்று’ எனப்பட்டது. பற்று ஒன்றினுந்
தொழுதலாவது – பிரபஞ்சசம்பந்தமான உண்ணல், உடுத்தல், உறங்கல் முதலிய
தொழில்களைச்செய்யும் பொழுதும் இடைவிடாது சிந்தித்தல். இது தன்னை
நினைத்தமாத்திரத்தில் முத்தியளிக்குந் தலமாதலால், அவ்வுண்மையுணர்ந்தோரால்,
பற்றற்றே தொழவேண்டு மென்ற நியதி யில்லாமல், பற்று அறாத பொழுதும்
தொழப்படு மென்க. தாம்தாம் கடவுளென்னுங் கருத்துக்கொண்டு ஒருவர்க்கொருவர்
பகைமைபூண்டு போர்தொடங்கிய பிரம விஷ்ணுக்களின்மாறுபாட்டை
ஒழிக்கும்பொருட்டுப் பரமசிவன் அவ்விருவருக்கும் நடுவில் ஒரு பெரிய
சோதிமலைவடிவமாய்த் தோன்றி நின்றன னென்றும், பின்பு சுருங்கிய அந்த
அக்கினிமலையே திருவண்ணாமலை யென்றும், அது அழல்வண்ணமாய்ச்
சிவந்திருத்தலால் ‘அருணகிரி’ எனப் பெயர் பெற்றதென்றும் சைவநூற்கொள்கை.
அருணாசலம் -அருண + அசலம்: தீர்க்க சந்திபெற்ற வடமொழித்தொடர். அசலம்
– சலியாதது: மலை.
உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்துப்
பெருகும் துறை ஏழ் ஏழு பிறப்பும் கெட மூழ்கி,
கருகும் கரு முகில் மேனியர், கவி ஞானியர் கண்ணில்
பருகும் சுவை அமுது ஆனவர், பாதம் தலை வைத்தான்-பெண்ணையாற்றில் நீராடி, திருக்கோவலூர்ப் பெருமானைத் தொழுதல்.
உருகும் – உருகுகிற, கமழ் – நறுமணம் வீசுகிற நெய் – நெய்யும்,
பால்- பாலும், இரு பால்உம் – இரண்டுபக்கங்களிலும், கரை ஒத்து பெருகும் –
கரையினளவுக்குச்சரியாகப் பெருகப்பெற்ற, துறை – (பெண்ணையாற்றின்) துறையிலே,
ஏழ் ஏழு பிறப்புஉம் கெட மூழ்கி- எழுமையையுடைய எழுவகைப்பிறப்பும்
ஒழியும்படிநீராடி,-கருகும் கரு முகில் மேனியர் – மிகக்கறுத்த காளமேகம் போன்ற
திருமேனிநிறத்தை யுடையவரும், கவி ஞானியர் கண்ணின் பருகும் சுவை அமுது
ஆனவர் – கவிபாடவல்லவர்களும் தத்துவஞானமுடையவர்களுமான முதலாழ்வார்
மூவரும் தம்கண்களால் பிரதியக்ஷமாகக் கண்டு நுகர்ந்த இன்சுவையுடைய
அமிருதம்போன்றவருமான திருக்கோவலூ ரெம்பெருமானுடைய, பாதம் –
திருவடிகளை,தலைவைத்தான்-(தனது) முடியின் மேற்கொண்டு வணங்கினான்;
(எ-று.)
திருக்கோவலூரென்பது – நடுநாட்டிலுள்ள திருமாலின் திருப்பதி இரண்டனுள்
ஒன்றும், தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளதுமாகிய திவ்வியதேசம்.
இங்குப்பெருமாள் திருநாமம் – தேகளீசன், திரிவிக்கிரமன், ஆயனார்; தாயார்
திருநாமம்-பூங்கோவல் நாச்சியார், பூங்கோயிலாள். ஏழேழுபிறப்பு- “எழுமையெழு
பிறப்பு” என்றார், திருக்குறளில்: ஒருபிறப்பிற் செய்த வினையின் பயன்
ஏழுபிறப்புவரையிலும்தொடருமென்பது நூற்கொள்கை. வினைவசத்தால்
உயிர்கட்கு நேரக்கூடியஏழுவகைப்பிறப்பு-தேவர், மனிதர், மிருகம், பறவை,ஊர்வன,
நீர்வாழ்வன, தாவரம்என்பன. ‘ஏழேழுபிறப்புங்கெட’ என்றது- இனி
எந்தப்பிறப்பிலும் ஒருகாலும் பிறந்து வருந்தாதபடி என்றவாறு. கண்ணிற்பருகும் –
நாவின்வினையைக் கண்ணின் மேல் ஏற்றியது, ஒருவகையுபசாரவழக்கு; தாகங்
கொண்டவன் ஆதரத்தோடு நீர்பருகுவதுபோல மிக்க அன்போடு கண்களாற்
காணும் என்க. பால் என்ற சொல் வெவ்வேறு பொருளில் அடுத்துவந்தது-மடக்கு
என்னுஞ் சொல்லணி.
ஒளவையார் திருக்கோவலூர்க்குச் செல்லும்பொழுது, அங்குப்
பெண்ணையாற்றங்கரையிலுள்ள பாரி யென்னும் இடையனது குடிசைக்குள் நுழைய,
மழையில் நனைந்து குளிர்நடுக்கங்கொண்டு வந்த அந்த ஒளவையார்க்கு,
அக்குடிசையிலிருந்த அவன்பெண்களான அங்கவை சங்கவை யென்றமங்கையர்
இருவரும் அன்போடு ஆடையும் உணவும் கொடுத்து உபசரிக்க, அதனால்
மகிழ்ச்சிகொண்ட ஒளவையார் அவர்கட்குச்செல்வம் பெருகும்படி கவிபாடியதோடு,
அக்கன்னிகைகளைத் தக்கவரனுக்கு மணம்புரிவிக்க விரும்பி, தெய்விகனென்னும்
அரசனுக்குக் கொடுப்பதாக நிச்சயித்துச் சேரசோழ பாண்டியர்களைச்
சீட்டுக்கவியெழுதி யனுப்பி வருவித்து, விவாகத்திற்குவேண்டியன வெல்லாஞ்சித்தஞ்
செய்து மணத்தைச் சிறப்பாக நடத்தும்பொழுது பெண்ணைநதியை நோக்கி, இம்
மணவிருந்துக்கு வேண்டிய பால் நெய்யாகப் பெருகிவரும்படி “முத்தெறியும்
பெண்ணை முது நீரதுதவிர்ந்து, தத்திய நெய்பால் தலைப்பெய்து -குத்திச்,
செருமலைதெய்வீகன்றிருக்கோவ லூர்க்கு, வருமளவிற் கொண்டோடி வா” என்ற
ஒருவெண்பாப்பாட, அத்தெய்விகவாக்கின்படி அந்நதி நிறைய நெய்யும் பாலும்
பெருகியதென்பது. இங்கு குறித்த கதை.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார் மூவரும்,
ஓடித்திரியும் யோகியர்களாய், செஞ்சொற்கவிகளுமாகி, தம்மில் ஒருவரையொருவர்
அறியாமல் தனித்தனியே பலவிடத்தும் சஞ்சரித்து வருகையில், ஒருநாள்
சூரியாஸ்தமன மானபின் பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து, அங்கு
மிருகண்டு முனிவரது திருமாளிகையிற் சென்று அதனது இடைகழியிற்
சயனித்துக்கொண்டிருந்தார். பின்னர்ப் பூதத்தாழ்வாரும் அவ்விடத்திலே சென்று
சேர,பொய்கையாழ்வார், ‘இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்’
என்றுசொன்னபின், அவ்வாறே அவ்விருவரும் அங்கு இருந்தனர். அதன்பிறகு
பேயாழ்வாரும் அவ்விடத்தை அடைந்திட, முன்னையரிருவரும் ‘இவ்விடம்
ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்’ என்று கூற, அங்ஙனமே
அம்மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு எம்பெருமானுடைய
திருக்கலியாணகுணங்களை ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டும்
கேட்டுக்கொண்டும் மகிழ்ந்திருந்தனர். அவர்களை ஆட்கொண்டு அவர்களால்
உலகத்தை உய்விக்கவேண்டுமென்று நினைத்து அம்மூவரையும் ஓரிடத்திற் சேர்த்த
திரிவிக்கிரமமூர்த்தி அவர்களை அநுக்கிரகிக்கும் பொருட்டு அப்பொழுது
பேரிருளையும் பெருமழையையும் உண்டாக்கிப் பெரியவடிவத்தோடு
அவர்களுடன்சென்று நின்று பொறுக்கவொண்ணாத அதிக நெருக்கத்தைச்
செய்தருளினான். அவர்கள் ‘முன் இல்லாத நெருக்கம் இப்பொழுது உண்டானது
என்ன? பிறர் எவரேனும் இந்த இடைகழியிற் புகுந்தவர் உண்டோ?’ என்று
சங்கிக்கையில், பொய்கையாழ்வார், பூமியாகிய தகழியில் கடல்நீரையே
நெய்யாகக்கொண்டு சூரியனைவிளக்காக ஏற்ற, பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில்
ஆர்வத்தைநெய்யாகவும்சிந்தையைத் திரியாகவுங் கொண்டு ஞான தீபத்தை ஏற்ற,
இவ்விரண்டின் ஒளியாலும்இருள் அற்றதனால், பேயாழ்வார் பெருமானைத் தாம்
கண்டமை கூறியவளவிலே,மூவரும் எம்பெருமானுடைய சொரூபத்தைக்
கண்ணாரக்கண்டு சேவித்து அனுபவித்துஆனந்தமடைந்து, அப்பெருங்களிப்பு
உள்ளடங்காமையால் அதனைப் பிரபந்தமுகமாக வெளியிட்டு உலகத்தாரை
வாழ்விக்கக்கருதி, பொய்கையாழ்வார் “வையந்தகளியா” என்று தோடங்கி
முதல்திருவந்தாதியைப் பாடியருள, பூதத்தாழ்வார் “அன்பே தகளியா” என்று
தொடங்கி இரண்டாந்திருவந்தாதியை அருளிச் செய்ய,பேயாழ்வார்
“திருக்கண்டேன்” என்று தொடங்கி மூன்றாந்திருவந்தாதியைத்
திருவாய்மலர்ந்தருளினார் என்பது பின்னிரண்டடியிற் குறித்த கதை
ஐஆனனன் இயல் வாணனை அடிமைக் கொள, மெய்யே
பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா,
மெய் ஆகம அதிகைத் திரு வீரட்டமும், நேமிக்
கையாளன் அகீந்திரபுரமும் கண்டு, கை தொழுதான்.-திருவெண்ணெய்நல்லூரையும், திருவதிகையையும்
திருவயிந்திரபுரத்தையும் தரிசித்தல்.
ஐ ஆனனன் – ஐந்து திருமுகங்களை யுடையவனான சிவபிரான்,
இயல்வாணனை – இயற்றமிழ்ப்புலவரான சுந்தரமூர்த்தி நாயனாரை,- அடிமை
கொள -ஆட்கொள்ளும்பொருட்டு, பொய் ஆவணம் – பொய்யாகிய
அடிமையோலையை,மெய் ஏ எழுதும் – மெய்போலவே எழுதிய, பதி – தலத்தை
[திருவெண்ணெய்நல்லூரை], பொற்போடு வணங்கா – அழகா வணங்கி,- மெய்
ஆகமம் அதிகை திரு வீரட்டம்உம் – உண்மையான ஆகமங்களிற் கூறப்பட்ட
விதிப்படி அர்ச்சிக்கப்படுகிற திருவதிகை வீரட்டானத்தையும், நேமி கை ஆளன்
அகீந்திரபுரம்உம் – சக்கராயுதத்தையேந்திய திருக்கையை யுடையவனான
திருமாலினது திருவகீந்திரபுரத்தையும், கண்டு – தரிசித்து, கை தொழுதான் –
கைகூப்பி வணங்கினான்; (எ-று.)
திருவெண்ணெய்நல்லூர்ச் சிவபிரான் திருநாமம் – தடுத்தாட் கொண்ட
ஈசுவரர்;அம்பிகை-வேற்கண்மங்கையம்மை. திருவதிகைச் சிவபிரான் திருநாமம்
வீரட்டானேசுவரர்; அம்பிகை – திருவதிகை நாயகி; திருவகீந்திரபுரத்துத் திருமால்
-தேவநாதன்; தாயார் – ஹேமாப்ஜவல்லி.
திருப்பதிகளைக் கூறினும், திருப்பதிகளிலுள்ள பெருமான்களை
வணங்கினதாகவே கருத்து. இத் தலங்கள் – நடுநாட்டிலுள்ளவை.
ஆவணம் – உரிமைப்பத்திரம். ஆகமம் -ஆதிகாலத்தில் சிவபிரானது ஐந்து
திருமுகங்களினின்று தோன்றியவையும், அச்சிவபிரானைப்பூசித்தல் முதலியவைகளை
விவரமாகக்கூறுபவையுமான காமிகம் முதலிய இருபத்தெட்டு நூல்கள். சிவபிரானது
பராக்கிரமம் விளங்கும் இடமான எட்டுத் தலங்கள் அட்டவீரட்ட மென்றும்,
அட்டவீரட்டான மென்றும் பெயர் பெறும். வீரட்டம், வீரட்டானம்=வீரஸ்தாநம்.
அவற்றில் திருவதிகை திரிபுரத்தையெரித்த தலம்; (திருநாவுக்கரசு நாயனாரைச்
சூலைநோய் தவிர்த்து ஆட்கொண்ட தலம் இதுவே.) “பூமன்சிரங் கண்டியந்தகன்
கோவல் புரமதிகை, மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மா வழுவூர், காமன்
குறுக்கையமன்கடவூர் இந்தக்காசினியில், தேமன்னுகொன்றையுந் திங்களுஞ் சூடி
தன்சேவகமே” என்றதனால் அட்டவீரட்டத்தின் தன்மை யறிக. ஆகமம், நேமி,
அஹீந்த்ரபுரம் – வடசொற்கள். அஹி-நாகங்களுக்கு, இந்திரன் – தலைவனான
ஆதிசேடன்: ஆதியில் ஆதிசேடனால் நிருமிக்கப்பட்டதால், இவ்வூர்க்கு
அகீந்திரபுரமென்று பெயர்; இது, கருடநதியின் கரையது; விஷ்ணுதலம்.
சுந்தரமூர்த்திநாயனாரென்ற நம்பியாரூரர், புத்தூரிலிருக்கிற சடங்கவி
சிவாசாரியருடைய புத்திரியை விவாகஞ்செய்து கொள்ளுஞ் சமயத்தில், சிவபிரான்
அவரைப் பிரபஞ்சவாழ்க்கையில்மயங்க விடாமல் தடுத்து ஆட்கொள்ளும்
பொருட்டுஅவர் தமக்குப் பரம்பரையாக அடிமையென ஓர் அடிமையோலையைக்
கற்பித்துக்கொண்டு ஒருகிழப்பிராமணவடிவத்தோடு அவ்விடத்தில் எழுந்தருளி
விவாகத்தைத்தடுத்து ‘இந்த நம்பியாரூரன் எனக்கு அடியவன்’ என்று வழக்குக்
கூறிஅதற்கு ஆதாரமாக நம்யாரூரருடைய பாட்டனார் தமக்கு எழுதித்தந்த
அடிமையோலையின்படி எழுதிய பிரதியோலையென்று ஓர் ஓலையை
அவ்விவாகசபையார் முன்னிலையிற்காட்டி மெய்ப்பிக்கத் தொடங்கும்போது,
அவ்வோலையை அந்த ஆரூரர் பறித்துக் கிழித்துவிட, பின்பு சிவவேதியர்
வாதிட்டுஆதியிலெழுதிய மூலவோலையைக் காட்டிச் சாதிப்பதாகச்சொல்லி
அவரைத்திருவெண்ணெய்நல்லூர்க்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு உள்ள
அந்தணர்சபைமுன் மூல வோலையைக் காட்ட, அதில், ‘திருநாவலூரிலிருக்கின்ற
ஆதிசைவனாகிய ஆரூரனென்கிற நான், ‘திருவெண்ணெய்நல்லூரிலிருக்கிற
பித்தனுக்குப்பரம்பரைத்தொண்டு செய்வதற்கு உள்ளும்புறமும் ஒப்ப உடன்பட்டு
எழுதிக் கொடுத்தேன்: இப்படிக்கு ஆரூரன்’ என்று எழுதியிருந்ததை வாசித்துப்
பார்த்த அவ்வந்தணர்கள், அதில் இட்ட கையெழுத்து அவர் பாட்டனாரின்
கையெழுத்தே யென்றும் அதிலிருந்த சாட்சிகளின் கையெழுத்துக்களும்
சரியானவையேயென்றும் நிச்சயித்து, ‘இப்பித்தனுக்கு இவ்வாரூரன்
அடிமைசெய்வதேகடமை ‘ என்றுமுடிவு செய்தபின், கிழவந்தணரை நோக்கி
‘இவ்வூரில் உமது இருப்பு எங்கே? ‘ என்று வினாவ, பிராமணவடிவங்கொண்ட
கடவுள் ‘காட்டுகிறேன, வாருங்கள்’ என்று சொல்லி, சுந்தரமூர்த்தியும்
அந்தணர்களும்பின்னே வர, தாம் அவ்வூரிலிருக்கின்ற திருவருட்டுறை யென்னும்
திருக்கோயிலுட்புக்கு மறைந்தருள, அனைவரும் அதிசயிக்க,
சிவபிரானதுகட்டளைப்படி சுந்தரமூர்த்தி அவர்க்கு அடியவராய்
வன்தொண்டரென்று பெயர்பூண்டு விவாகந்தவிர்ந்து திருப்பதிகங்கள்
பாடுவாராயினரென்பது, தடுத்தாட்கொண்டவரலாறு.
இன்னம் பல பல யோனியில் எய்தா நெறி பெறவே,
முன்னம், பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா,
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும்,
பொன் அம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்.-சிதம்பரஞ்சேர்ந்து நடராசப்பெருமானைத் தரிசித்தல்.
முன்னம் – முற்காலத்தில், பலர் – பல தேவர்கள் அடி தேடஉம்
முடிதேடஉம் – திருவடியைத் தேடவும் திருமுடியைத் தேடவும், எட்டா –
(அவர்கட்கு)எட்டாமல் பெருவடிவங் கொண்டிருந்தவரும், அன்னம் பல பயில்
வார் புனல் அணிதில்லையுள் ஆடும் பொன் அம்பலம் நாதன் – அன்னப்
பறவைகள் பல தங்கப்பெற்றமிக்க நீர்வளத்தையுடைய அழகிய சிதம்பர தலத்திலே
திருநடனஞ்செய்கின்றகனகசபைக்குத் தலைவருமான சிவபிரானுடைய, கழல் –
திருவடிகளை, (அருச்சுனன்), இன்னம் பல பல யோனியில் எய்தா நெறி பெறஏ –
தான் மீண்டும் பற்பலவகைப்பட்டபிறப்புக்களிற் பிறவாத தன்மையை அடையும்படி
[முத்திபெறும்படி], பொற்போடு பணிந்தான் – அழகிதாக வணங்கினான்; (எ-று.)-
இங்குச் சிவபிரான் திருநாமம் – சபாநாயகர்; அம்பிகை-சிவகாமியம்மை.
தில்லை யென்ற தலம் -எல்லாச் சிவதலங்களுள்ளும் தலைமையானது;
கோயிலென்னும் மறுபெயருடையது: சோழநாட்டில் காவேரிக்கு வடக்கில் உள்ளது;
இச்சிதம்பரதலமுள்ள இடம், ஆதியில் தில்லையென்னும் மரம் அடர்ந்த
காடாயிருந்ததனால், ‘தில்லை ‘ என்று பெயர்பெறும். பிரமன் அன்னப்
பறவைவடிவமாய் முடியைக்காண விண்பறந்தும், விஷ்ணு பன்றியுருவமாய்
அடியைக்காண மண்ணிடத்துஞ் சென்று பலகாலம் தேடியும் முடியடிகளைக்
காணாமற்போயின ரென்ற கதையை உட்கொண்டு இரண்டாமடி வந்தது. இங்கு
இவர்களை ‘பலர்’ என்றது, தமிழ்முறையால். இச்செய்யுளின் இரண்டாமடி
“முன்னம்பலர்நறுமாமலர் முறைதூய் மகிழ்வெய்த” என்று ஏடுகளிற்
காணப்படுகிறது.பொன்னம்பலம் – பொன்மயமான சபை; இது, பஞ்சசபைகளுள்
ஒன்று: அவையாவன- கனகசபை சிதம்பரத்திலும், இரசதசபை மதுரையிலும்,
தாமிரசபைதிருநெல்வேலியிலும், இரத்தினசபை திருவாலங்காட்டிலும், சித்திரசபை
திருக்குற்றாலத்திலு மெனக் காண்க.
இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க,
துலங்கு ஆடு அரவு-அணைமேல் அறி துயில்
கொண்டவர் பொன்-தாள்,
பொலம் காவிரி இருபாலும் வர, பூதல மங்கைக்கு
அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை, தொழுதான்.-திருவரங்கஞ் சேர்ந்து, நம்பெருமாளைத் திருவடி தொழுதல்.
இலங்காபுரி முன் செற்றவன் -இலங்கை நகரத்தை முன்பு
அழித்தவனான இராமபிரான், இருபோதுஉம் – (காலைமாலை யென்னும்)
இரண்டுசந்தியாகாலங்களிலும், வணங்க – சேவிக்க, துலங்கு ஆடு அரவு
அணைமேல்அறிதுயில் கொண்டவர் – விளங்குகிற படமெடுத்தாடுந்தன்மையுள்ள
ஆதிசேஷனாகிய சயனத்தின்மேல் யோகநித்திரை செய்தருளுகிற
எம்பெருமானுடைய, பொன்தாள் – அழகிய திருவடிகளை,- பொலம் காவிரி
இருபால்உம் வர – அழகியகாவேரிநதி இரண்டுபக்கங்களிலும் பிரிந்து பெருகிவர,
பூதலம் மங்கைக்கு அலங்காரம் அளிக்கும் – பூமிதேவிக்கு அழகைச் செய்கின்ற,
தென் அரங்கத்திடை – அழகிய ஸ்ரீரங்கத்தில், தொழுதான் – வணங்கினான்;
(எ-று.)இங்குப்பெருமாள் திருநாமம்-ஸ்ரீரங்கநாதன்; பிராட்டி-ஸ்ரீரங்கநாயகி.
திருவரங்கம் – நூற்றெட்டுத் திருமால்திருப்பதிகளுள் தலைமை பூண்டது;
சோழநாட்டில் உபயகாவேரிமத்தியில் உள்ளது: கோயிலென்றும்,
பெரியகோயிலென்றும் மறுபெயருடையது: பூலோக வைகுண்ட மெனப்படுகிற
மகிமையையுடையது. (ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் யோகியரது உள்ளக்கமலம்
என்னும் இவையனைத்தினும் பிரியமான தென்று திருமால்) திருவுள்ளமுவந்து
எழுந்தருளியிருக்கும் இடமாதல்பற்றி, ‘ரங்கம்’ என்று அவ்விமானத்துக்குப் பெயர்:
அது, அரங்கமென வந்தது.
இலங்காபுரியை யழித்தவன் என்றதன் பொருள் – தென்கடலிடையிலுள்ள
அவ்விலங்கைத்தீவைத் தனக்கு இராசதானியாகக் கொண்டு அதனை அரசாண்ட
இராட்சசராசனான இராவணன் முதலிய அரக்கர்களை வேரொடு
அழித்தவனென்பது;இவ்வரலாறு இராமாயணத்திற் பிரசித்தம். அறிதுயில் –
எல்லாவற்றையும்அறிந்துகொண்டே செய்யும் நித்திரை
வளவன் பதி முதலாக வயங்கும் பதிதோறும்
துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்தே,
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ்,
தளவம் கமழ் புறவம் செறி, தண் கூடல் புகுந்தான்.-பல தீர்த்தங்களில் நீராடி மதுரை சேர்தல்.
வளவன் பதி முதல் ஆக – சோழனது இராசதானியான உறையூர்
முதலாக, வயங்கும் – சிறப்புப்பெற்றுவிளங்குகிற, பதி தோறுஉம் –
விஷ்ணுஸ்தலங்களிலெல்லாம், துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்துஏ –
(அத்திருமாலுக்குஉரிய) திருத்துழாயின் திருமணம் வீசப்பெற்ற மிகக்குளிர்ச்சியான
தீர்த்தங்களில் நீராடிக்கொண்டே,- இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய
துறை சூழ்- இளமையையும் வண்மையையுமுடையதமிழ்ப் பாஷை எழுதப்பெற்ற ஏடு
முன்பு கரையெதிர்த்துச்சென்ற (வையையாற்றின்) துறையை யடுத்ததும், தளவம் கமழ்
புறவம் செறி – முல்லைமலர் மணம்வீசப்பெற்ற வனம் சார்ந்ததுமான, தண்கூடல் –
குளிர்ந்த மதுரையினுள், புகுந்தான்- சென்று சேர்ந்தான்; (எ-று.)– உறையூரில்
எழுந்தருளியிருக்கிற பெருமாள் திருநாமம் – அழகியமணவாளன்; பிராட்டி –
உறையூர்நாச்சியார்.
சோழராசர்களுக்குஉரிய இராசதானிகள் *ஐந்தனுள் உறையூர் ஒன்றாதலாலும்,
அது திருவரங்கத்தையடுத்த திருமால் திருப்பதி யாதலாலும் ‘வளவன்பதி’
என்றதற்கு- உறையூரென்று பொருள்கொள்ளப்பட்டது. ‘வளவன்பதி முதலாக
வயங்கும்’ என்றதையும், ‘துளவங்கமழதிசீதள தோயங்கள் படிந்தே’ என்பதையும்
நோக்கி, ‘பதிதோறும்’ என்பதற்கு – விஷ்ணுஸ்தலங்களிலெல்லாமென்றே
பொருள்கொள்ளவேண்டியதாயிற்று. எம்பெருமானது திருமஞ்சன திவ்விய
தீர்த்தத்தின்சம்பந்தம் பெறுதல் தோன்ற ‘துளவங்கமழ்தோயம்’ எனப்பட்டது.
நிலவளம் முதலிய பலவளங்களுக்குங்காரணமாகி நீர்வளம் மாறாமைக்குங்
காரணமான காவிரிநதி பாயும் நாடுடையனாய்ச் செல்வவளத்திற் சிறத்தலால்,
வளவனென்று சோழனுக்கு ஒருபெயர். ‘முதலாக’ என்றது-திருக்கரம்பனூர்,
திருவெள்ளறை முதலியவற்றை.
மூன்றாமடியிற் குறித்த கதை.- திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்
சமணர்களைவென்று சைவமதத்தை நிலைநிறுத்தும்பொருட்டுப் பாண்டிய
நாட்டுக்குச்சென்றபொழுது சமணர்கள் அரசன் முன்னிலையில் ‘நாம் இரு
திறத்தேமும் நமதுசமயசித்தாந்தத்தை யெழுதிய ஏட்டை ஓடுகின்ற வையை
யாற்றிலே இடுவோம்;அவற்றில் எதிர்ந்துசெல்லும் ஏடே மெய்ப்பொருளை
யுடையது’ என்றுசொல்ல, அதற்கு நாயனார் உடன்பட்டபின், சமணர்கள் “அஸ்தி,
நாஸ்தி” என்னுந்தங்கள்மதக்கோட்பாட்டை எழுதிய ஏட்டை நதிப்பெருக்கில்
இடுதலும், அதனைஅப்பெருக்கு அடித்துக்கொண்டுபோய்விட்டவுடனே, நாயனார்
“வாழ்கவந்தணர்” என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடி ஏட்டிலெழுதி அதே
ஏட்டைத் தமதுகையினால் வைகைநதியில் இட, அவ்வேடு நதியிலே எதிர்ந்து
நீரைக்கிழித்துக்கொண்டு சென்ற தென்பதாம்; நாலடியாரைப்பற்றிய கதையைக்
கொள்வாருமுளர்.
தமிழுக்கு இளமை – நாள்தோறும் வளர்ச்சிபெறும் நிலைமை; “கன்னித்தமிழ்”
என்பதுங் காண்க. அதற்கு வண்மை-வேண்டின சொற்பொருட்
கருத்துக்களையெல்லாம் குறைவறத் தன்னிற் கொண்டிருத்தலோடு, வேறுபல
பாஷைகள் தன்னினின்று உற்பவித்தற்கு இடமாயிருத்தல். தமிழ் – இங்குத்
தமிழ்பாட்டுக்கு ஆகுபெயர். புறவம் – கொல்லை; முல்லைநிலம்; காடும், காடு
சார்ந்தஇடமும். ஒரு காலத்தில் வருணன் சோமசுந்தரக் கடவுளோடு மாறுபட்டு
ஏழுமேகங்களையும் அளவின்றி மழைபொழிந்து மதுரையை யழிக்கும்படி ஏவ.
அங்ஙனமே வந்த ஏழுமேகங்களையும். தடுக்கும்பொருட்டு அக்கடவுள்
கட்டளையால் அவரது சடையிலுள்ள நான்குமேகங்களும்மேலுயர்ந்து நான்கு
மாடமாகக் கூடப் பெற்றதனால், மதுரை, நான்மாடக்கூடல்என்றும், கூடலென்றும்
பெயர்பெறும்; கன்னி கரியமால் காளி ஆலவாய் என்பவரின் மாடங்கள்
கூடியதனால்வந்த பெயருமாம். (651)
* இச்செய்யுளின் பின், அடியில் வருகிற செய்யுள் சிலபிரதிகளிற் காணப்படுகிறது:-
“ஆங்கப்பணவத்துட்பொருளரி தாளிணைதொழுது
பாங்கர்ப்புதுவெயில்வீசுபல்பருமாமணி குயிலா
வோங்கிக்கிளர்பொலன்மண்டபமொருதன்பெயராலத்
தூங்கற்கரிநடையிந்திரசுதனொன்றுபடைத்தான்.”
(ஸ்ரீரங்கத்தில் அம்மண்டபம், அருச்சுனமண்டபமென்று வழங்கும்.)
*சோழர்கட்கு உரிய இராசதானிகள் – காவிரிப்பூம்பட்டினம், கருவூர்,
திருவாரூர்,உறையூர், திருச்சேய்ஞலூர் என ஐந்து.
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த
திருக் கொன்றை நாற,
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழுஞ் சாந்தின் மணம்
நாறும் செல்வ வீதி,
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக் கூடல் வள
நகரி ஆளும்,
வென்றி புனை வடி சுடர் வேல், மீனவனை வானவர்
கோன் மதலை கண்டான்.-அருச்சுனன் மதுரையிற் பாண்டியராசனைக் காணுதல்.
குன்றில் – கைலாசகிரியிலிருந்து, இள வாடை வரும் பொழுது
எல்லாம்- இளமையான வடதிசைக்காற்று வரும்பொழுதெல்லாம், மலர்ந்த திரு
கொன்றை நாற- மலர்ந்த சிறந்த கொன்றை மலர் வாசனைவீச, தென்றல் வரும்
பொழுது எல்லாம் -(பொதிய மலையிலிருந்து) தென்றற் காற்று வரும்பொழு
தெல்லாம், செழுஞ் சாந்தின்மணம் நாறும் – செழிப்பான சந்தனத்தின் வாசனை
வீசப் பெற்ற, செல்வம் வீதி -செல்வவள மமைந்த வீதிகளை யுடைய, நன்று
அறிவார் வீற்றிருக்கும்நான்மாடக்கூடல் வளம் நகரி – நன்மையையறியும்
மேன்மக்கள் வீற்றிருக்கப்பெற்றநான்மாடக்கூடலென்னும் ஒருபெயரையுடைய சிறந்த
மதுராபுரியை, ஆளும் -அரசாளுகிற, வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை-
வெற்றிபொருந்தியதும்கூர்நுனியுள்ளதும் ஒளியையுடையதுமான வேலாயுதத்தை
யேந்திய பாண்டியராசனை,வானவர் கோன் மதலை – தேவராசனான இந்திரனது
குமாரனாகிய அருச்சுனன்,கண்டான் – பார்த்தான்;
மீனவன் – மீன்வடிவமெழுதிய கொடியை யுடையவன். அப்பொழுது
அரசாண்ட பாண்டியராசனது பெயர், சித்திரவாகநனென்பது. “விடையா
வடந்தைசெய்வெள்ளியம் பொருப்பினும்” என்று பிறரும் வாடைக்காற்றைக்
கைலாசத்தினின்றுவருவதெனக் கூறினமை காண்க. சங்கப்புலவர்கள் போன்றவரை
யுடைமைதோன்ற,”நன்றறிவார்வீற்றிருக்கும்” எனப்பட்டது.
இதுமுதல் இருபத்தொரு கவிகள் – பெரும்பாலும் முதல் நான்கு சீரும்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்க
அந் நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன்
அவனுக்கு ஆசி கூற,
‘எந் நிலத்தீர்? எப் பதியீர்? எத் திசைக்குப் போகின்றீர்?’
என்று போற்றி,
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல்
கால் செழியன் கேட்ப,
‘கன்னியைக் கண்ணுற்று, ஆட வந்தனம்’ என்றனன்,
மெய்ம்மைக் கடவுள் போல்வான்.-அருச்சுனனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த சம்பாஷணை.
இவன் – இந்த அருச்சுனனானவன், அ நிலத்தினவர் அல்லா
அந்தணரோடு – அப்பாண்டியநாட்டவரல்லாத [தன்னுடன் வந்த
வெவ்வேறுநாட்டினரான] அந்தணர்களுடன் (சென்று), அவனுக்கு ஆசி கூற –
அந்தப்பாண்டியனுக்கு வாழ்த்துச்சொல்ல,- சென்னியர்க்குஉம் வில்லவர்க்குஉம்
மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன்-சோழராசர்களுக்கும்
சேரரராசர்களுக்கும்(முடிமேற்கொள்ளும்) இரத்தினகீரிடம் போன்ற ஒலிக்கின்ற
வீரக்கழலையணிந்தபாதங்களையுடைய பாண்டியராசன், போற்றி-(அவ்வருச்சுனனை)
வணங்கித் துதித்து,எந்நிலத்தீர் எப்பதியீர் எத்திசைக்கு போகின்றீர் என்று கேட்ப- ‘(நீவிர்)எத்தேயத்தீர்?’ என்று (மரியாதையாக) வினாவ,- மெய்ம்மை கடவுள்
போல்வான் – சத்தியத்து உரியஅதிதேவதைபோல்பவனான அருச்சுனன்,
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம்என்றனன் – ‘கன்னியைப் பார்த்து ஆடுதற்கு
வந்தோம்’ என்று சொன்னான்; (எ-று.)
வைதிகமுனிவேஷம் பூண்டு சென்றன னாதலால் அந்தவேஷத்திற்கு ஏற்ப
க்ஷத்திரியனான பாண்டியனுக்கு ஆசீர்வாதஞ்செய்து அவன் தன்மை
வணங்கப்பெற்றன னென்க. சென்னியர் – தலைமை பெற்றவர்; சென்னி- தலை.
வில்லவர் – வில்வடிவமெழுதிய கொடியையுடையோர். செழியன் –
செழுமையையுடையவன். ‘கன்னியைக்கண்ணுற்று ஆடவந்தனம்’ என்பது –
குமரியெனப்படும் நதியைத் தரிசித்து அதில் நீராடுதற்கு வந்தோம் என்று
வெளிப்படைப் பொருள் பாடுவதோடு, உனதுமகளான கன்னிகையைப் பார்த்து
அவளோடு லீலை செய்ய வந்தோம் என்று உள்ளுறைபொருளும் படுதல் காண்க.
இங்ஙனம் மனத்திலுள்ள கருத்து அமைய உண்மையாகப் பேசுஞ் சொற்சாதுரிய
முடைமையால், ‘மெய்ம்மைக் கடவுள் போல்வான்’ என்றார். சீவகசிந்தாமணியில்
சீவகனுக்கும் சுரமஞ்சரிக்கும் நடந்தசம்பாஷணையைக் கூறுமிடத்து
“வந்தவரவென்னை யென வாட்கண்மடவாய்கேள், சிந்தைநலிகின்ற
திருநீர்க்குமரியாட, அந்திலதனாய பயனென்னைமொழிகென்றாள், முந்திநலிகின்ற
முதுமூப்பொழியு மென்றான்” என்றது, இங்கு நோக்கத்தக்கது, மற்றும்,
கந்தபுராணத்து “ஈண்டு நும்வரைக்குமரியெய்தியினிதாட, வேண்டிவருகின்றனன்”
என்றதும்நோக்குக. குமரியென ஓர் நதியா யிருந்தது பிற்காலத்தில் கடல்
கொள்ளப்பட்டுக்கன்னியாகுமரி யென்னும் முனையாகியது.
வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து, மீண்ட நாள்,
விண்ணின் மாதர்
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி
கொண்டு போந்து,
மை தவழ் தன் தடங் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு
வைத்த காவில்,
கைதவர் கோன், மற்று அவர்க்குப் போனகம் செய்து,
அருந்தும் இடம் கற்பித்தானே.-அருச்சுனன் முதலியோர்க்குச் சோலையில் பாண்டியன்
விருந்துசெய்தல்.
வெய்தின் – விரைவாக [அல்லது கடுமையாக], மகபதி முடியில்
வளைஎறிந்து – (உக்கிரகுமாரபாண்டியன்) இந்திரனுடைய முடியிலே வளை
யென்னும்ஆயுதத்தை வீசி, (அதனால் அவனை மகுடபங்கப்படுத்து வென்றது),
மீண்ட நாள்-(தனது நகரத்துக்குத்) திரும்பியகாலத்தில், விண்ணின் மாதர் கொய்து
மலர்தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து-தேவ மகளிர்
(பூக்களைக்) கொய்தும் பூக்கள் குறைவுபடாத [மேன்மேற் பூக்கும் மிக்கமலர்களை
யுடைய] குளிர்ந்த (கற்பகம் முதலிய) மிகப் பல தேவதருக்களை (ச்
சுவர்க்கலோகத்திலிருந்து) பெயர்த்துக் கொண்டுவந்து, மை தவழ் தன் தட
கோயில்அவரோதம் மனை படப்பை வைத்த – (மிக்க உயர்ச்சியால்) மேகங்கள்
தவழப்பெற்றதனது பெரிய அரண்மனையின் அந்தப்புரத்துத்தோட்டக்கூறாக
வைக்கப்பெற்றதான,காவில்-சோலையிலே, கைதவர் கோன் – பாண்டியர்
தலைவனான சித்திரவாகனன், அவர்க்கு – அந்த அருச்சுனன் முதலானவர்க்கு,
போனகம் செய்து அருந்தும் இடம்கற்பித்தான் – உணவுசித்தஞ்செய்து
உண்ணுமிடத்தை நியமித்தான்; (எ-று.)
மலயத்துவசபாண்டியனது மகளாகிய தடாதகைப்பிராட்டியைச்
சுந்தரபாண்டியவடிவாகி மணம்புரிந்துகொண்ட சிவபெருமான் அவளிடந் தனக்குப்
பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு முடிசூட்டி அவனுக்குப் பகையாகும்
கடலையும் இந்திரனையும் மேருமலையையும் முறையே வெல்லுமாறு அவனுக்கு
வேலும் வளையும் செண்டும் அளித்துப்போயினன்; பின்பு
உக்கிரபாண்டியன்ஒருகாலத்தில்தன் நாட்டில்மழை பொழியவில்லையென்ற
காரணத்தாற்கோபங் கொண்டு, பொதியமலையில் மேய்ந்திருந்த மேகங்களைப்
பிடித்துத்தளைசெய்து சிறையி லிட, அதனையறிந்த இந்திரன் எதிர்த்து வந்து
கொடும்போர்புரிய, அப்போரிற்பாண்டியன் தன்கையிலிருந்த வளையைச் சுழற்றி
இந்திரன்மேல்வீச, அது இந்திரனுடைய வச்சிராயுதத்தை வீழ்த்தி அவனது
கீரிடத்தைக்கீழேதள்ளிச் சிதைக்க இந்திரன் அஞ்சித் தோற்றோடினனென்பது,
இங்குக்குறித்தகதை. அங்ஙனம் அவன் இந்திரனைவென்ற நாளில் இந்திரனது
செல்வமானகற்பகம் முதலிய தேவதருக்களைத் தேவலோகத்தினின்று
வலியக்கவர்ந்து தனதுநகரத்து அரண்மனையைச்சார்ந்த பூஞ்சோலையில்
நாட்டினனென்பதை, கண்ணன் இந்திரனைவென்றுபாரிசாத தருவைச்
சுவர்க்கத்தினின்றுவலியக்கொணர்ந்து துவாரகையிற்சத்தியபாமை
வீட்டுப்புறங்கடைத் தோட்டத்தில்நாட்டினமைபோலக்கொள்க.
மகபதி -வடசொல்: யாகங்கட்குத் தலைவன்; (நூறு அசுவமேத) யாகஞ்
செய்துஇந்திரபதவிபெற்றவன். ‘கோயில்வரூத மதனொருமருங்கு’ எனவும் பாடம்:
வரூதம் -தங்குமிடம். கை தவர் – பாண்டியர். மற்று, ஏ – அசைகள்
வேதியரோடு அக் காவில் இளைப்பாறி இருந்த அளவில்
மின் குழாம்போல்
தாதியரும் சேடியரும் தற் சூழ, சிலை மதனன் தனி சேவிக்க,
சோதி அரிச் சிலம்பு அரற்ற, துணைநெடுங் கண் செவி
அளப்ப, தொடித் தோள் வீசி,
ஆதி அரவிந்தை என, நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள்.-பாண்டியனது மகள் அச்சோலையில் விளையாடவருதல்.
வேதியரொடு அ காவில் இளைப்பு ஆறி இருந்த அளவில்-
(விருந்துண்ட அருச்சுனன்) பிராமணர்களுடன் அந்தச்சோலையில் இளைப்புத்
தணிந்துகொண்டிருந்த சமயத்தில்,- நிருபன் மகள் – பாண்டியராசனுடையபெண்,
மின்குழாம்போல் தாதியர் உம் சேடியர்உம் தன்சூழ – மின்னற்கூட்டம்போல
அடிமைப்பெண்களும் தோழிப்பெண்களும் தன்னைச் சூழ்ந்து வரவும், சிலைமதனன்
தனி சேவிக்க-(கரும்பு) வில்லையுடைய மன்மதன் தனியே வழிபடவும், சோதி அரி
சிலம்பு அரற்ற – ஒளியையும் பரலையுமுடையசிலம் பென்னுங்காலணிகள் ஒலிக்கவும்,
துணைநெடுங்கண்செவி அளப்ப – (வேறுஒப்புமைஇல்லாமல்) ஒன்றோடொன்றுஒத்த
நீண்டகண்கள் காதுகளை யளாவவும், தொடி தோள் வீசி –
தொடியென்னும்வளையலை யணிந்த கைகளை வீசிக்கொண்டு, ஆதி அரவிந்தை
என- மேன்மையையுடைய திருமகள்போல, விளையாடற்கு ஆங்குவந்தாள் –
விளையாடும்பொருட்டு அவ்விடத்திற்கு வந்தாள்; (எ-று.)
மிக்க அழகும் உரிய பருவமும்பெற்றுக் கண்டவர்கண்கவர்ந்து அவர்கட்குக்
காதல்விளைக்குந் தன்மையிற் சிறத்தலால், அவளைக் காமக்கடவுள் வழிபடுவ
னென்க. அரி – சிலம்பின் பருக்கைக்கல். அரிச்சிலம்பு – தவளையினொலிபோன்ற
ஒலியையுடைய சிலம்பு எனினுமாம். சீவகசிந்தாமணியில் “வஞ்சியிடைநுடங்க மயில்
கைவீசி நடந்ததே” என்றாற்போல ‘தொடித்தோள் வீசி வந்தாள்’ என்றார்;
அங்குநச்சினார்க்கினியர் ‘கைவீசியென்று வருந்தாமைகூறினார்’ என்றதை உணர்க.
அரவிந்தம் – தாமரை: அரவிந்தை – தாமரை மலரில் வாழ்பவள். சிந்தாமணியில்
“தாமரைத்திருமகளிவளென” என்றவிடத்துநச்சினார்க்கினியர் ‘திருஉவமம்-வடிவிற்கும்,
நல்வினையுடையோனிடத்து ஏகுந் துணையும் பொதுவாயிருத்தற்கும்’ என்றார்.
பாண்டியன்மகள்பெயர், சித்திராங்கதை யென்பது.
பச்சென்ற திரு நிறமும், சேயிதழும், வெண் நகையும்,
பார்வை என்னும்
நச்சு அம்பும், அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும்,
நாணும், பூணும்,
கச்சின்கண் அடங்காத கன தனமும், நுண் இடையும்,
கண்டு சோர்ந்து,
பிச்சன்போல் ஆயினன்-அப் பெண்கொடி மெய்ந்நலம்
முழுதும் பெறுவான் நின்றான்.–அருச்சுனன் அவளைக்கண்டு பெருங்காதல் கொள்ளுதல்.
அ பெண் கொடி மெய் நலம் முழுதுஉம் பெறுவான் நின்றான் –
அந்தப்பூங்கொடிபோன்ற பெண்ணினது உடம்பைத் தழுவுதலாலாகும் இன்பம்
முழுவதையும் இனிப் பெறுபவனாய் நின்றவனான அருச்சுனனானவன்,-
(அவளுடைய), பச்சென்ற திரு நிறம்உம் – பசுமையான அழகிய நிறத்தையும், சேய்
இதழ் உம்-செந்நிறமான அதரத்ததையும், வெள் நகைஉம் – வெண்ணிறமான
பற்களையும், பார்வை என்னும் நஞ்சு அம்புஉம் – கண்ணின்பார்வை யென்கிற
விஷந்தீற்றிய அம்பையும், அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழிஉம் –
அமிருதம்போன்ற மிக்க இனிமை மேல்மேலுண்டாகப் பேசுகின்ற அழகிய
பேச்சுக்களையும், நாண்உம்- நாணமென்னுங் குணத்தையும், பூணும்கச்சின்கண்
அடங்காத கன(ம்) தனம்உம் – தரிக்கிற கச்சுக்கு அடங்காத பருத்த தனங்களையும்,
நுண் இடைஉம்- நுண்ணியஇடையையும், கண்டு- பார்த்து, சோர்ந்து- மனந்தளர்ந்து,
பிச்சன் போல் ஆயினன் – பித்துக்கொண்டவன் போலாயினான்; (எ-று.)
தன்வசந்தப்பிக் காமவசத்தனாயினனென்பது, ‘பிச்சன்போலாயினன்’ என்பதன்
கருத்து. ‘சுருங்கச்சொல்லல்’ என்னும் அழகு பற்றி ‘கண்டு’ எனப் பொதுப்படக்
கூறினாராயினும், ‘ஏற்புழிக் கோடல்’ என்னும் உத்தியால், மொழிகண்டு –
பேச்சைகேட்டு எனக்கொள்க. பார்வையின் கொடுமையும் கூர்மையும் பற்றி,
நச்சம்பென்றார்; அன்றியும், கரிய மை யிட்ட கூரிய கண்ணுக்குக் கரியநஞ்சுதீற்றிய
கூரிய அம்பு உவமையாம்
புத்திரர் வேறு இல்லாது, புரிவு அரிய தவம் புரிந்து, பூழி வேந்தன்,
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செஞ் சொல் வஞ்சி
பத்திரமும், நறு மலரும், அவயவம்போல் விளங்குவன
பலவும் கொய்து,
மித்திர மா மகளிருடன் விரவி, ஒரு செய்குன்றில் மேவினாளே.-சித்திராங்கதை பூக்கொய்து ஒருசெய்குன்றிற் சேர்தல்.
பூழிவேந்தன் சித்திரவாகனன் – பாண்டியகுலத்துக்குத் தலைவனான
சித்திரவாகன னென்னும் அரசன், புரிவு அரிய தவம்புரிந்து-செய்தற்கு அருமையான
தவத்தைச்செய்து, புத்திரர் வேறு இல்லாது பயந்த-வேறுபுதல்வரில்லாமற்
பெற்ற[தனிமகளான], சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி- சித்திராங்கதை
யென்னும் பெயருள்ள இனிய சொற்களையுடைய வஞ்சிக் கொடிபோன்ற
பெண்ணானவள்,-அவயவம் போல் விளங்குவன பத்திரம்உம் நறுமலர்உம் பலஉம்
கொய்து – (தனது) உறுப்புக்கள் போல விளங்குவனவான தளிர்களும்நறுமணமுள்ள
பூக்களுமாகிய பலவற்றையும் பறித்துக்கொண்டு, மா மித்திரம் மகளிருடன் விரவி –
சிறந்த தோழிப்பெண்களுடன் கூடி, ஒருசெய்குன்றில் மேவினாள்- ஒரு செய்குன்றிற்
போய்ச்சேர்ந்தாள்; (எ-று.)
பூழியர்-பாண்டியர். சித்ரவாஹநன்என்ற வடமொழிப்பெயர் –
அழகியவாகனத்தை யுடையவ னென்றும், சித்ராங்கதா என்ற வடமொழிப்பெயர் –
அழகிய தோள்வளைய யுடையவ ளென்றும் பொருள்படும். செய்குன்று –
இயற்கையாக அமைந்த மலையன்றிப் பிற்காலத்தில்விளையாட்டுக்காக மலைபோல்
அமைக்கப்பட்ட இடம்.
முன் உருவம்தனை மாற்றி, முகில் வாகன் திரு மதலை
மோகி ஆகி,
தன் உருவம்தனைக் கொண்டு, சாமனிலும் காமனிலும்
தயங்கும் மெய்யோன்,
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின்
பூந் தண் நீழல்,
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி
நின்றான், வீரர் ஏறே.-அருச்சுனன் அவளெதிரில் தனியே சென்று நிற்றல்.
முகில் வாகன் திரு மதலை – மேகத்தை வாகனமாகவுடையவனான
இந்திரனுடைய சிறந்தகுமாரனும், வீரர் ஏறு – வீரர்கட்குச் சிங்கம் போன்றவனுமான
அருச்சுனன், மோகி ஆகி-(அச்சித்திராங்கதையினிடம்) மோகங்கொண்டவனாய்,
முன்உருவம்தனை மாற்றி- முன்பு தான் கொண்டுள்ள தவவேடத்தையொழித்து,
தன்உருவம்தனை கொண்டு – தனது நிஜவடிவத்தைக்கொண்டு, சாமனில்உம்
காமனில்உம் தயங்கும் மெய்யோன்-சாமனைக்காட்டிலும் (அவனது தமையனான)
மன்மதனைக் காட்டிலும் அழகியதாய் விளங்குகிற வடிவத்தை யுடையவனாய்,
பொன்உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூ தண்நீழல்-
பொன்னின்வடிவம்போல மலர்ந்துவிளங்குகிற ஒருசண்பகமரத்தினது அழகிய
குளிர்ந்த நிழலில், மின் உருவம் நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் –
மின்னலின்வடிவம்போன்ற நுண்ணிய இடையை யுடையவளான அவள்
(தன்னைக்கண்டு) கண்கள் களிக்கும்படி நின்றான்;
மோஹம் – ஆசைமயக்கம்; அதனையுடையவன், மோஹீ: வடசொல்.
சிந்தாமணியில் “காமனுஞ் சாமனு மென்னுங் காட்சியே” என்றவிடத்து
நச்சினார்க்கினியர் ‘சாமான், காமன் தம்பி’ என்றதை உணர்க.
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட,
மயில்கள் ஆட,
தண் தார் மெய்க் கிளிக் கூட்டம் சான்றோர்கள் உரை
பயிற்ற, தமிழ்கள் மூன்றும்
கொண்டாடி, இளம் பூவைக் குழாம் தலை சாய்த்து,
உளம் உருகும் குன்றின் ஆங்கண்,
கண்டாள் அக் குமரனை, தம் கொடிக் கயலைப் புறம்
காணும் கண்ணினாளே.-சித்திராங்கதை தனிப்பட்டு அருச்சுனனைக் காணுதல்.
வண்டானம் திரி தடத்து-வண்டானமென்னும் ஒரு சாதி நாரைகள்
(நீர்வள மிகுதியால்) திரியப்பெற்றபக்கங்களில், வரி வண்டின் இனம்பாட-
உடற்புள்ளிகளையுடைய வண்டுகளின் கூட்டம் பாட, மயில்கள் ஆட-மயில்கள்
கூத்தாட, தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற –
குளிர்ச்சியான[கண்ணுக்குஇனிய] ஆரம்போன்றகழுத்தினிரேகையுள்ள
உடம்பையுடைய கிளிகளின்கூட்டம் தண் தமிழ்ச் சான்றோர்களான சங்கப்
புலவர் முதலியோருடையசொற்களைப் பழகிச்சொல்ல, இளம் பூவை குழாம்
தமிழ்கள்மூன்றுஉம்கொண்டாடிதலை சாய்த்துஉளம் உருகும் – இளமையான
நாகணவாய்ப்பறவைகளின் கூட்டம் அந்த மூவகைத்தமிழையுங்
கொண்டாடித்தலையைச்சாய்த்துமனமுருகப் பெற்ற, குன்றின் – அந்தச்செய்குன்றில்,
ஆங்கண் – அவ்விடத்தில் [சண்பகநிழலில்], தம்கொடி கயலை புறங்காணும்
கண்ணினாள்-தங்கள்கொடியாகியகயல்மீனைவென்று முதுகுகாணுங்கண்களையுடைய
அச்சித்திராங்கதை, அ குமரனைகண்டாள்-இளவீரனான அவ்வருச்சுனனைக்
கண்டான்; (எ-று.)
தடம் – மலைப்பக்கம், வரிவண்டு – இசைப்பாட்டையுடைய வண்டுமாம்.
தமிழ்கள் மூன்று – இயல், இசை, நாடகம் என்பன. பாண்டியர் மீன்வடிவ
மெழுதியதுவசமுடைய ராதலால், ‘தம் கொடிக்கயல்’ எனப்பட்டது
செந்திருவை அனையாளும், திருமாலை அனையானும், சிந்தை ஒன்றாய்,
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி,
மகிழ்ச்சி கூர்ந்து,
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன்
மேவுமாபோல்,
கந்தருவ முறைமையினால், கடவுளர்க்கும் கிடையாத
காமம் துய்த்தார்.-அருச்சுனனும் சித்திராங்கதையும் கந்தருவமுறையாற் கூடி
இன்பம்நுகர்தல்.
செந் திருவை அனையாள்உம் – அழகிய இலக்குமியையொத்த
சித்திராங்கதையும், திருமாலை அனையான்உம் – புருஷோத்தமனான
விஷ்ணுவையொத்த அருச்சுனனும், (ஆகிய இருவரும்),- சிந்தை ஒன்று
ஆய்வந்து-(தம்) மனம் ஒன்றிவரப்பெற்று, இருவர் விலோசனம்உம் தடைஇன்றி
உறவு ஆடி -அவ்விருவரின் கண்களும் தடையில்லாமல் உறவு ஆடப்பெற்று,
மகிழ்ச்சிகூர்ந்து-மகிழ்ச்சிமிக்கு,- உருவம் வெந்து இழந்த மதன்மீளஉம்வந்து
இரதியுடன் மேவும் ஆபோல் – (தன்னுடைய) சரீரம் (சிவபெருமானுடைய
நெற்றிக்கண்ணினால்)வெந்ததனால்ஒழியப்பெற்றமன்மதன்மீண்டும் (அச்சரீரம்)
வரப்பெற்று இரதிதேவியுடன்சேர்ந்திருக்கும் விதம் போல, கந்தருவ
முறைமையினால் கடவுளர்க்குஉம் கிடையாதகாமம் துய்த்தார் – கந்தருவ
முறைமையினால் (தம்மிற்கூடித்) தேவர்கட்கும்கிடைக்காத காமவின்பநுகர்ச்சியை
நுகரலானார்கள்; (எ-று.)
கந்தருவமார்க்கத்தாற் கூடிய அருச்சுனனும் சித்திராங்கதையும்,
இன்பநுகர்ச்சிக்கேயுரியதேவர்களினும்மிகஇன்பம் நுகர்ந்தன ரென்பதாம். சிந்தை
யொன்றாய் என்பதனால் – மனவொற்றுமை [மநஸ்ஸங்கதி]யும், இருவர்
விலோசனமும்உறவாடி என்றதனால் – கண்ணிணையின்நோக்கு ஒத்தலும்
[சக்ஷு ஷ்ப்ரீதியும்]கூறப்பட்டன. மணலூரில் அருச்சுனன் சென்றபோது ஆங்குத்
தன் விருப்பின்படிசெல்லும் சித்திரவாகனன்மகளைக்கண்டு காதல் கொண்டவனாய்
அவள்தந்தையைக்கண்டு தன்விருப்பத்தைத்தெரிவிக்க, அவனும் தன்மகளைக்
காதலிப்பவன்அருச்சுனனென்று அறிந்து உவந்து, தன்மகளுக்குப் பிறக்கும்
புத்திரனைத்தனக்குத்தத்த குமாரனாகத்தரும்ஏற்பாட்டுடன்
மணஞ்செய்துகொடுத்தானென்றுவியாசபாரதத்திலுள்ளது. மணலூருபுரத்தில்
வனமத்தியில்முகூர்த்தகாலத்தில்மணந்துகொண்ட மலயத்துவசபாண்டிய
புத்திரியான சித்திராங்கதையோடு வெகுகாலம்மகிழ்ந்திருந்தானென்றது,
பாலபாரதம். புத்திரனைப் பாண்டியனுக்குத்தத்துக்கொடுத்தது எல்லாவற்றிலும்
ஒருபடிப்பட உள்ளது.
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததற்பின்,
குறித்த தூநீர்
ஆடிய வந்ததும், தன்னை அருச்சுனன் என்பதும்,
இளமான் அறியக் கூறி,
‘ ‘நீடியது’ என்று ஐயுறுவர்; நீ இனி ஏகு’ என உரைப்ப,
நெடுங்கண்ணாள் போய்,
சேடியருக்கு, அஞ் ஞான்று நிகழ்ந்த எலாம், மகிழ்ந்து
உருகிச் செப்பினாளே-பின்பு சித்திராங்கதை அச்செய்தியைத் தன்தோழியர்க்குச் சொல்லுதல்.
இருவர்உம் ஒருவர் என கூடி இதயம் கலந்ததன் பின் –
(அக்குமாரனும்குமாரியுமாகிய) இரண்டுபேரும் ஒருவர்போலத் தம்மிற் கூடி
மனங்கலந்த பின்பு, (குமாரன்), குறித்த தூநீர் ஆடிய வந்ததுஉம் – நியமிக்கப்பட்ட
பரிசுத்தமான தீர்த்தயாத்திரைசெய்தற்கு (த் தான்) வந்ததையும், தன்னை அருச்சுனன்
என்பதுஉம்- தான் அருச்சுனன் என்பதையும், இள மான் அறியகூறி- இளமையான
மான்போன்ற அச்சித்திராங்கதை அறியும்படி சொல்லி, நீடியது என்று ஐயுறுவர் நீ
இனி ஏகு என உரைப்ப- ‘(இங்குப்)பொழுது நீட்டித்ததென்று (உன்னைச்சேர்ந்தவர்)
சங்கைகொள்வார்: நீ இனிப்போ’ என்று சொல்ல,-நெடுங் கண்ணாள்-
நீண்டகண்களையுடையவளான அவள், போய்-, அஞ்ஞான்றுநிகழ்ந்த எலாம்
சேடியருக்கு மகிழ்ந்து உருகிசெப்பினாள் – அப்பொழுதுநேர்ந்தசெயல்கள்
முழுவதையும் தோழியர்களுக்கு மனமகிழ்ந்து உருகிச்சொன்னாள்;
இருவரும் ஒருவரெனக் கூடி–“எரிமாமணி மார்பனும் ஏந்திழையும்,
அருமாமணி நாகரி னாயினரே” என்றாற்போலக் கொள்க. தனக்கு நேர்ந்த
இன்பத்தைநினைக்குந்தோறும் மகிழ்ந்தமை தோன்ற, ‘மகிழ்ந்துருகி’ யென்றார்
கவுரியர் கோன் திருமகளைக் கண் அனையார்
கொண்டுபோய், கன்னிமாடத்து
அவிரும் மணிப் பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின்,
அனங்கன் போரால்,
நவிருடை மா மயல் உழந்து, நயனங்கள் பொருந்தாமல்,
நாண் உறாமல்,
‘தவிர்க!’ எனவும் தவிராமல், தன் விரகம் கரை அழிந்து,
தளர்ந்தாள் மன்னோ.-இரண்டு கவிகள்-சித்திராங்கதையின் விரகதாபம் கூறும்.
கவுரியர் கோன் திரு மகளை – பாண்டியர் தலைவனான
சித்திரவாகனனுடைய அழகியபெண்ணான அவளை, கண் அனையார் –
அவள்கண்போன்றவர்களான தோழியர்கள், கொண்டு போய் – கொண்டு சென்று,
கன்னிமாடத்து – கன்னிமாடத்தில், அவிரும் மணி பரியங்கத்து – விளங்குகிற
இரத்திரனங்கள்பதித்தகட்டிலில், ஐ அமளி – பஞ்சசயனத்தில், ஏற்றிய பின் –
ஏற்றினபின்பு,(அவள்), அனங்கன் போரால்-மன்மதனுடைய போரினால்
[காமவேதனையினால்], நவிர் உடை மா மயல்உழந்து -புன்மையையுடைய மிக்க
மோகத்தை யடைந்து, நயனங்கள் பொருந்தாமல்-கண்கள் இமைமூடித்
துயில்கொள்ளாமலும், நாண் உறாமல் – நாணமில்லாமலும், தவிர்க எனஉம்
தவிராமல்- ‘(இத்துன்பம்) ஒழிக’ என்று (தோழியர் தனிவு) கூறவும் ஒழியாமலும்,
தன் விரகம்கரைஅழிந்து தளர்ந்தாள்- தனதுகாதல் நோயினால் எல்லைகடந்து
வருந்தினாள்;(எ-று.)-மன், ஓ-ஈற்றசை.
கவுரியர்=கௌரியர்; பாண்டியர்; முதற்போலி. கன்னிமாடம்- அரண்மனை
யந்தப்புரத்தில் கலியாணமாகாத பெண்கள் வசிக்குமிடம். ஐ அமளி-
இலவம்பஞ்சு,செம்பஞ்சு,வெண்பஞ்சு,கம்பளமயிர், அன்னத்தூவி என்னும்
இவ்வைந்துபொருள்களைத் தனித்தனி கொண்டு அமைத்துச்செய்த ஐவகைமெத்தை;
இனி, வேறுவகையும் கூறுப: இவற்றை ஒன்றன்மேலொன்றாக அடுக்கி அமைத்தல்,
மரபு. தவிர்கென-தொகுத்தல். விரஹம்- பிரிவு.
தங்கள் மலைச் சந்தனத்தை, ‘தழல் குழம்போ, இது!’
என்னும்; தாபம் தோன்ற,
தங்கள் கடல் தண் முத்தைக் கண் முத்தால் நீறு
ஆக்கும்; தக்கோர் ஆய்ந்த
தங்கள் தமிழ்க் குழல் இசையைத் தன் செவிக்கு, ‘விடம்!’
என்னும்; தபனன் ஏக,
தங்கள் குலக் கலை மதியை, ‘தபனன்’ எனும்; என்
பட்டாள் தனி பொறாதாள்!
(சித்திராங்கதை),-தாபம் தோன்ற- (தாபபரிகாரம் எது செய்தாலும்
அதனால் தனது) விரகதாபம் (சிறிதுந்தணியாமல் மேல் மேல்) உண்டாக,- தங்கள்
மலை சந்தனத்தை தழல் குழம்புஓ இதுஎன்னும் – தங்கள் பொதியமலையிலுள்ள
சந்தனத்தின் குழம்பை ‘இது அக்கினிக்குழம்போ!’ என்று சொல்வாள்; தங்கள்
கடல்தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் – தங்கள் கடலிலுண்டாகிய
குளிர்ந்தமுத்தை முத்துப்போன்ற (தனது) கண்ணீர்த்துளியினாற் சாம்பராம்படி
செய்திடுவாள்;தக்கோர் ஆய்ந்த தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு
விடம் என்னும் -(சங்கப்புலவர்கள் முதலிய) பெரியோர்கள் ஆராய்ந்த தங்கட்கு
உரிய தமிழ் நூலின்முறைமைப்படி பாடிய புள்ளாங்குழலின் கீதத்தைத் தனது
காதுக்கு விஷமென்றுசொல்வாள்; தபனன் ஏக தங்கள் குலம் கலை மதியை
தபனன் எனும்-தபிக்குந்தன்மையனான சூரியன் அஸ்தமித்தபின்பு (தோன்றிய)
தங்கள் குலத்துக்குஆதிபுருஷனான கலைகள்நிறைந்த பூர்ணசந்திரனை ‘இது
சூரியன்’ என்பாள்; தனிபொறாதாள் என்பட்டாள்- தனிமையைப் பொறாதவளாய்
(அவள்) என்னபாடுபட்டாள்! [மிகத் தவித்தா ளென்றபடி]; (எ-று.)
இயல்பிற் குளிர்ச்சியையுந் இனிமையையுஞ் செய்கிற சந்தனக் குழம்பு,
முத்துமாலை, வேய்ங்குழலிசை, சந்திரன் என்பன பிரிவுத் துன்பமுடையார்க்கு
அத்தாபந்தீர்த்துக் குளிர்ச்சியையும் இனிமையையுஞ் செய்யமாட்டாமையோடு
காமோத்தீ்பகமாய் அத்தாபத்தை மிகுவிப்பனவு மாதலால், அவற்றை விரகிகள்
வெறுக்குந்தன்மை இங்கு உணரத்தக்கது. பாண்டியநாட்டைச்சார்ந்த கடலில்
முத்துக்கள் மிகுதியாக உண்டாவது, பிரசித்தம். தமிழ்பாஷைபாண்டியராசர்களாற்
போற்றிவளர்க்கப்பட்டமைபற்றி, ‘தங்கள் தமிழ்’ என்றார். ‘கண்முத்து’ என்றவிடத்து,
‘முத்து’ என்றது – நீர்த்துளிக்கு உவமையாகுபெயர். விரகிகளுடையகண்ணீர்த்துளி
அத்தாபத்தால் மிக வெவ்விதாயிருத்தலால் ‘தண்முத்தைக் கண்முத்தால் நீறாக்கும்’
என்றார்.
அங்கு உயிர்போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து,
ஆற்ற ஆற்ற,
கங்குல் எனும் பெருங் கடலைக் கரை கண்டாள்; கடல்புறத்தே
கதிரும் கண்டாள்;
இங்கு இவள் போய், மலர்க் காவின், எழில் விசயற்கு ஈடு
அழிந்த இன்னல் எல்லாம்,
சங்கு எறியும் தடம் பொருநைத் துறைவனுக்குச்
செவிலியராம் தாயர் சொன்னார்.-அச்செய்தியைச் செவிலித்தாயர் அரசனிடஞ் சொல்லுதல்.
அங்கு- அவ்விடத்தில், உயிர்போல்-, இரு மருங்கு உம் –
இரண்டுபக்கத்திலும், ஆயம் மட மகளிர்- தோழியராகிய இளம் பெண்கள்,
இருந்து-,ஆற்றஆற்ற- (தங்கள்செய்யும்சைத்திய உபசாரங்களினால் தாபத்தைத்)
தணிக்கத்தணிக்க, (சித்திராங்கதை), கங்குல் எனும் பெருங் கடலை கரை
கண்டாள் – இராத்திரிகாலமாகிய பெரியகடலைக் கரைகண்டவளாய் [இரவை
அரிதிற் கழித்து], கடல்புறத்தே கதிர்உம் கண்டாள் – கீழ் கடலின். மீதே
சூரியனையும் (உதிக்கக்) கண்டாள்:இங்கு-இவ்வாறு, இவள் – இச்சித்திராங்கதை,
போய்-, மலர் காவின் -பூஞ்சோலையிலே, எழில் விசயற்கு – அழகிய
அருச்சுனனுக்கு, ஈடு அழிந்த -மனவலிமை யழிந்த, இன்னல் எல்லாம் – துன்பம்
முழுவதையும், சங்கு எறியும் தடபொருநை துறைவனுக்கு – சங்குகளை வீசுகிற
பெரிய பொருநையாற்றின்துறையையுடையவனான அப்பாண்டியராசனுக்கு,
செவிலியர் ஆம் தாயர்-(அச்சித்திராங்கதையினது) செவிலித்தாய்மார், சொன்னார்-
சொன்னார்கள்; (எ-று.)
விரகிகளுக்கு இராப்பொழுது நீட்டித்ததாய்த்தோன்றிக் கழித்தற்கு
அரிதாதல்பற்றி, ‘கங்குலெனும் பெருங்கடல்’ எனப்பட்டது. பெருநை –
தாமிரபரணி.கண்டாள் என்ற சொல் இரண்டில்முந்தினது முற்றெச்சம்.
செவிலியர்-வளர்த்த தாயர். ஆயம் – தோழியர் கூட்டம்.
ஐந் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி,
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான்
அந்த உரை செவிப்படலும், ‘அதி தூரம் விழைவுடன் சென்று
ஆடு தீர்த்தம்
வந்தது, நம் தவப் பயன்’ என்று உட்கொண்டான், மகோததியும்
வணங்கும் தாளான்.-அருச்சுனனது வரவையறிந்து பாண்டியன் மகிழ்தல்.
ஐந் தருவின் – பஞ்சகற்பக தருக்களின், நீழலின் – நிழலில், வாழ் –
வாழ்கின்ற, அரியுடனே-இந்திரனுடனே, ஓர் அரி ஆசனத்தில்வைகி –
ஒருசிங்காதனத்திலே உடன்வீற்றிருந்து, முன் ஒருவர்உம் பூணாத மணி ஆரம்
புந்திஉற பூண்ட – முன்பு ஒருவரும் அணிந்திராத இரத்தினவாரத்தை
மனம்மகிழஅணிந்துகொண்ட, கோமான்-தலைவனும், மகா உத்திஉம் வணங்கும்
தாளான்-பெருங் கடலும் வணங்கும் பாதங்களை யுடையவனுமான
அப்பாண்டியராசன்,- அந்தஉரைசெவி படலும்-(செவிலித்தாயர் சொன்ன)
அவ்வார்த்தை (தன்) காதிற்பட்டவுடனே, அதிதூரம் விழைவுடன் சென்று ஆடு
தீர்த்தம் வந்தது நம் தவம்பயன்என்று உள்கொண்டான் –
வெகுதூரம்விருப்பத்தோடுசென்றுஸ்நானஞ்செய்யுந் தீர்த்த யாத்திரையைக் கருதி
(அருச்சுனன் இங்கு) வந்தது நமது தவத்தின்பயனே என்று எண்ணி மகிழ்ந்தான்;
(எ-று.)
ஐந்தரு-ஸந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தநம் என்பன.
அதிதூரம், மஹோததி – வடமொழித்தொடர்கள்.
முருகக்கடவுளின் அமிசமான உக்கிரகுமாரபாண்டியன் அரசாளும் நாளில்,
தமிழ்நாடுமுழுவதும் பன்னீராண்டு மழைபொழியாது ஒழியப் பஞ்சமுற்று வருந்துதல்
கண்டு, சேரசோழபாண்டியரென்னும் அரசர் மூவரும்பொதியமலையிற்சென்று
அகஸ்தியமுனிவரைக் அவரருளியபடி நோன்புநோற்றுஆகாயமார்க்கமாகச் செல்லுந்
திறம் பெற்று, மழைபெய்விப்பவனான இந்திரனதுசுவர்க்கலோகத்திற் சென்று சேர,
இவர்கள்வரவையறிந்து இந்திரன் இவர்களிருக்கும்பொருட்டுத் தன்ஆசனத்தில்
தாழத் தனியே மூன்றுசிங்காதனம் இடுவித்தான்; இவர்களுட் சேரனும் சோழனும்
இந்திரன் காட்டிய அவ்வாசனங்களில் வீற்றிருக்க, உக்கிரபாண்டியினோ
அங்ஙனமின்றி இந்திரனுடைய சிங்காசனத்தில் ஏறி அர்த்தாசனத்திற்
சமமாகவீற்றிருந்தான்; அதுகண்டு பொறாமைகொண்ட தேவராஜன்,
மற்றையிருவரையும் வந்த காரியம் விசாரித்து, உடனே அவர்கள்நாடுகளில்
மழைபொழியுமாறு வரங்கொடுத்து, அவர்கட்குப் பலசிறப்புகள் செய்து அனுப்பிய
பின்பு, பாண்டியனைச் செருக்கடக்குமாறு கருதி ஒருசூழ்ச்சிசெய்து அவனுக்கு
மிகஉயர்வாகிய வரிசைசெய்வான்போல, எண்ணிறந்த பலர் தாங்கி மிகமெலிந்து
வருந்தும்படியான மிக்கபாரமுள்ளதொரு பெரிய ஆரத்தை அவனுக்குக் கொடுக்க,
உடனே அவன் அதனைத் தனது திறமையால் எளிதில்வாங்கிப் பூமாலைப்போல்
தன்கழுத்திலே தரித்துக்கொள்ள, இந்திரன் அதுகண்டு அதிசயங்கொண்டு,
‘இன்றுதொட்டுஉன்னை ஆரந்தாங்குபாண்டியனென்று உலகமெல்லாம்
நன்குமதிக்கக்கடவது’ என்றுசொல்ல, பாண்டியன் மதுரைக்கு மீண்டனன் என்பது,
முன்னிரண்டடியிற் குறித்தகதை. ‘மகோததியும் வணங்குத் தாளான்’ என்ற
விவரம் – உக்கிரபாண்டியன் அநேகஅசுவமேதயாகங்கள் செய்ததுகண்டு
பொறாமைகொண்ட இந்திரன், கடலரசனானவருணனை யழைத்து ‘நீ சென்று
மதுரையை யழிப்பாய்’ என்ன, அங்ஙனமேநடுநிசியிற் கடல் பொங்கி மதுரையைச்
சமீபித்தபோது, பாண்டியன்,தனதுதந்தையினால் முன்பு தனக்குக் கொடுக்கப்பட்ட
வேற்படையை எறிய, அதுபட்டவுடனே கடல் வறண்டு வலிமைகெட்டு, தோற்ற
பகைவர் வென்றவன்காலில்விழுந்து வணங்குதல் போலப் பாண்டியனது காலின்
மட்ட மாயிற்று என்பது.இக்குலத்துமுன்னோனான உக்கிரபாண்டியனது வரலாற்றை
இவன்மே லேற்றிக்கூறினார்; இங்ஙனங் கூறுதல், ஒருவகைக் கவிமரபு.
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால், வடிவமும்
தன் மனமும் வேறா,
பொழுது விடிவளவும், மதன் பூசலிலே கருத்து அழிந்து,
பூவாம் வாளி
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்தெனத்
தென்றல் ஊர ஊர,
விழி துயிலா விசயனும், அவ் விபுதருடன் துயிலுணர்ந்து,
விதியும் செய்தான்.-சித்திராங்கதைசென்றபின் அருச்சுனன் மனவேதனையில் இரவு
கழித்து அந்தணருடன் துயிலுணர்ந்து காலைக் கடனைச் செய்தல்.
வழுதி திருமகள் – பாண்டியன் குமாரியான சித்திராங்கதை,
கொடுத்த -உண்டாக்கிய, மையலினால் – காமமயக்கத்தினால், தன் வடிவம்உம்
மனம்உம்வேறுஆ-தன்மேனியும் மனமும் மாறுபட்டு, பொழுதுவிடிவுஅளவும்-, மதன்
பூசலில்ஏ- மன் மதன் செய்யும்போரிலே, கருத்து அழிந்து -மனம்வருந்தி, பூ ஆம்
வாளி உழுத- (அந்தமன்மதனுடைய) புஷ்பபாணம் (தன்னுடம்பிலே) இடைவிடாது
பாய்தலாலான, கொடும் புண்வழிஏ-கொடிய புண்ணிருந்த இடத்திலே, ஊசி
நுழைந்துஎன- ஊசிநுழைந்தாற் போல, தென்றல் ஊர ஊர- தென்றற்காற்று மிகவும்
உட்புக, (இங்ஙன்மதனவேதனையினால்), விழி துயிலா விசயன்உம்- (அந்தச்
சித்திராங்கதையைக்கூடிப்பிரிந்த அந்தநாளிரவில்) கண்துயிலாத [உறக்கம்பிடிக்காத]
அருச்சுனனும், அவிபுதருடன் – அந்த அந்தணருடனே, துயில்உணர்ந்து –
கண்விழித்தான்போன்று,விதிஉம் செய்தான் – காலைக்கடனையுஞ் செய்திட்டான்;
(எ-று.)
வடிவம் வேறாதல் – மேனிநிறம்மாறுதல். மனம்வேறாதல் – மகிழ்ந்திருந்த
தன்மை நீங்கிப் பிரிவுத்துயரையுடையதாதல். பூதேவராதலால், அந்தணரை ‘விபுதர்’
என்றார்.
பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் பேரவை
எய்திப்பஞ்ச பாண,
வஞ்சகன்செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழிஅம்
மதுரை வேந்தன்,
சஞ்சரிக நறுமலர்த்தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇக்
கொண்டு ஆங்கண்,
அஞ்சல் இனி உனக்குரியள் யான் பயந்த கடற்பிறவா அமுதம்
என்றான்.-பாண்டியன் அருச்சுனனை நோக்கி ‘என்மகளை உனக்கு மணஞ்
செய்விப்பேன்’ என்றல்.
பஞ்சவரில் நடு பிறந்தோன் – பஞ்ச பாண்டவர்களுள்
(மூன்றாமவனாய்) நடுவிற் பிறந்தவனான அருச்சுனன், பஞ்சவன்பேர் அவை
எய்தி -பாண்டியனுடைய பெரியசபையை அடைந்து, பஞ்ச பாண வஞ்சகன் செய்
வஞ்சனையால் மதி மயங்கி இருந்த உழி- ஐந்து அம்புகளையுடையவனாய்
(அனைவரையும்) மயக்கித் தன்வசப்படுத்துகிறவனான மன்மதன் செய்த மோகத்தால்
அறிவுமயங்கி இருந்தபொழுது, அ மதுரை வேந்தன் – (பாண்டியநாட்டு
ராஜதானியாகிய) மதுரைக்குத் தலைவனான அப்பாண்டியராஜன்,- ஆங்கண் –
அவ்விடத்தில், சஞ்சரிகம் நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து
தழீஇக்கொண்டு – (அவனை) வண்டுகள் மொய்க்கிற வாசனை வீசும்
மலர்மாலையையுடைய அருச்சுனனென்று அறிந்து எழுந்து தழுவியுபசரித்து,
‘அஞ்சல்- அஞ்ச வேண்டா: யான் பயந்த கடல் பிறவா அமுதம் – யான் பெற்ற
மகளும்பாற்கடலினின்று தோன்றாததோர் அமிருதம் போன்றவளுமான
சித்திராங்கதை, இனிஉனக்கு உரியள் – இனி உனக்கு உரியவள்,’ என்றான்- என்று
சொன்னான்; (எ-று.)
பஞ்சவர்-ஐவர்; ஐந்து என்னும் பொருள்தரும் ‘பஞ்ச’ என்னும் வடமொழி
யெண்ணுப்பெயரினடியாப்பிறந்த பெயர்: இங்கே, தொகைக்குறிப்பு. மன்மதனது
பஞ்சபாணம் தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர், நீலோற்பலமலர்
என்பன. அவ்வம்புகளை மறைந்துநின்று மனத்திலெய்து அதனையு முட்பட
வருத்தலால், மன்மதனை ‘வஞ்சகன்’ என்றார். சஞ்ரீகம் என்ற வடமொழிப்பெயர் –
எப்பொழுதுந் திரிவது என்று பொருள்படும். தீர்த்தயாத்திரைக்குவந்த
தவவேடமுடையானொருவனுக்கு அரசன் தன்மகளைக் கொடுக்க இசைவனோ
என்றும், தந்தையின் உடன்பாடின்றி மகளைத் தன்வசப்படுத்திக்கொண்டமை
தெரிந்துஅத்தந்தை என்ன மாறுபாடுகொள்வனோ என்றும் அஞ்சவேண்டா
வென்பான், ‘அஞ்சல்’ என்றான்.
கேண்மதி, ஓர் மொழி: முன்னம் கேண்மையின் நம் குலத்து
ஒருவன் கிரீசன் தன்னைத்
தாள் மலர் அன்புறப் பணிந்து தவம் புரிந்தான், மகப்
பொருட்டால்; தரித்த கொன்றை
நாள்மலரோன் வெளி நின்று, அந் நரபதிக்கு, ‘நின் குலத்து
நரேசர் யார்க்கும்,
வாள் மருவும் கரதலத்தோய்! ஓர் ஒரு மா மகவு’ என்று
வரமும் ஈந்தான்.-இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்: பாண்டியன்
அருச்சுனனிடம் ஒருவரம் வேண்டிப் பெறுதல்.
ஓர் மொழி கேள்மதி -(யான் சொல்லும்) ஒருவார்த்தையைக்
கேட்பாயாக:- முன்னம் – முற்காலத்தில், நம் குலத்து ஒருவன்-நமது குலத்துத்
தோன்றியிருந்த ஓரரசன், மகப்பொருட்டால்-புத்திரபாக்கியத்தின்பொருட்டு, கிரீசன்
தன்னை-சிவபிரானை, கேண்மையின் – உரிமையோடு, அன்பு உற – அன்பு மிக,
தாள் மலர் பணிந்து – திருவடித்தாமரைகளில் வணங்கி, தவம் புரிந்தான் – தவஞ்
செய்தான்: தரித்த கொன்றை நாள் மலரோன் – அன்று மலர்ந்த [புதிய]
கொன்றைமலர்களைத் தரித்தவனான அச்சிவபிரான், வெளி நின்று – வெளிப்பட்டுத்
தரிசனந் தந்துநின்று, ‘வாள் மருவும் கரதலத்தோய் – வாளாயுதம்பொருந்திய
கையையுடையவனே! நின் குலத்து நரேசர் யார்க்குஉம் ஓர் ஒரு மா மகவு –
உனதுகுலத்திலரசரெல்லார்க்கும் ஒவ்வொரு சிறந்தகுழந்தையே (தவறாமல்)
உண்டாகுக,’ என்று-, அ நரபதிக்கு – அந்த அரசனுக்கு, வரம்உம் ஈந்தான் –
வரத்தையுங் கொடுத்தான்; (எ-று.)
வரம்பெற்ற பாண்டியனதுபெயர் பிரபஞ்சநனென்று வியாசபாரதத்தினால்
விளங்குகின்றது. சிவபிரான் சுந்தரபாண்டியனாகி இக்குலத்தைப் பெருமைப்படுத்தி
இதனிடத்து அன்புகொண்ட உரிமைபற்றி, ‘கேண்மையின்’ என்றார்.
‘எங்குலத்தொருவன்’ என்றும் பாடமுண்டு.
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு
அளித்தார், ஒன்று ஒன்று;
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ; ஒரு மகவும் பெண் மகவாய்
உதித்தது, என்பால்;
நன்று உரைக்கும் மொழியாய்! என் நவ்வி பெறும் மகவு எனக்கே
நல்க வேண்டும்’
என்று உரைத்தான்; மன்றல் பெற இருந்தோனும், மாமன் உரைக்கு
இசைந்தான் அன்றே.
அன்று உரைத்த வரத்தின் வழி – அந்நாளிற் (சிவபிரான்)
சொல்லியருளிய வரத்தின்படியே, அவனிபர் அநேகர் உம் – (எம்குலத்து)
அரசரெல்லோரும், மகவு ஒன்று ஒன்று அளித்தால் – பிள்ளைஒவ்வொன்றைப்
பெற்றார்கள்; என்பால் – என்னிடத்தில், ஒரு மகவுஉம் – அவ்வொருகுழந்தைதானும்,
பெண் மகவு ஆய் உதித்தது – பெண்குழந்தையாய்ப் பிறந்தது; நன்று உரைக்கும்
மொழியாய் – நல்லனவாகவே பேசும் பேச்சுக்களை யுடையவனே! ஒன்று உரைக்க
நீமறாதொழி- (யான்) ஒருவேண்டுகோளைச் சொல்ல (அதனை) நீ மறுக்காம
லிருப்பாய்; (அவ்வேண்டுகோள் யாதெனின்),- என் நவ்வி பெறும் மகவு எனக்குஏ
நல்கவேண்டும்- மான்போன்ற எனதுமகள் பெறும் ஒற்றைப்பிள்ளையை எனக்கே
(எனதுசந்ததிவிருத்தியின்பொருட்டு அபிமான புத்திரனாகக்) கொடுக்கவேண்டும்,
என்றுஉரைத்தான்-என்று (சித்திரவாகநபாண்டியன்) சொன்னான்; மன்றல் பெற
இருந்தோன்உம் -(சித்திராங்கதையின்) விவாகத்தைப் பெற இருந்தவனான
அருச்சுனனும், மாமன் உரைக்கு இசைந்தான் – (தனக்கு) மாமனாராகும்
அவ்வரசனுடைய அச்சொல்லுக்கு இணங்கினான்; (எ-று.)- அன்றே – ஈற்றசை;
அப்பொழுதேயெனினுமாம்.அவனிபர் – வடசொல்; பூமியைக்காப்பவர்
தெண்திரை கை தொழு கழலோன் திருமகட்கு வதுவை என,
சேர சோழர்,
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர்
எவரும் ஈண்ட,
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம்
அனைத்தும் செய்து,
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணிப்
பலகையின்மேல் வைத்தார் அன்றே–இதுமுதல் மூன்றுகவிகள்-அருச்சுனனுக்கும், சித்திராங்கதைக்கும்
நடந்தவிவாகத்தைக் கூறும்.
தெள் திரை கை தொழு கழலோன் – தெளிவான
அலைகளையுடையதான கடலரசனாற் கைகூப்பிவணங்கப்பட்டபாதங்
களையுடையவனான பாண்டியராசன், திருமகட்கு வதுவை என – (தனது)
சிறந்தபெண்ணுக்கு விவாகமென்று எங்குஞ் செய்தி தெரிவிக்க,- சேர சோழர் –
சேரநாட்டரசனும் சோழநாட்டரசனும், எண் திசையின் முடிவேந்தர் எல்லோர்உம் –
எட்டுத்திக்குகளிலுமுள்ள கிரீடாதிபதிகளான மற்றும் அரசர்களனைவரும், முனி
(அவ்விவாகத்தின் பொருட்டு மதுரைக்கு வந்துசேர்ந்து) நெருங்க, -அண்டர்பிரான்
அளித்த சிலை ஆண் தகையை – தேவராஜனான இந்திரன் பெற்ற வில்வீரனான
அருச்சுனனை, அலங்காரம் அனைத்து உம் செய்து – எல்லா அலங்காரங்களையுஞ்
செய்து, மண்டபம் ஒன்றினில் – ஒருமண்டபத்தில், அறுகால் வண்ணம் மணி
பலகையின்மேல்- ஆறுகால்களையுடைய அழகிய இரத்தினமயமான பீடத்தின்மேல்,
வைத்தார் – இருக்கச்செய்தார்கள்; (எ-று.)
‘வைத்தார்’ என்ற முற்றுக்குஉரிய எழுவாய், ‘புரோகிதன் முதலியோர்’ என
வருவிக்க. தெண்டிரை – பண்புத்தொகை யன்மொழி. உக்கிரபாண்டியன் கடல்சுவற
வேல்விட்டபோது வற்றிய சமுத்திரராசனான வருணன் தோற்று, அவனை
வணங்கினனென்க அன்றே – ஈற்றசை.
கோ மடந்தை களி கூர, புகழ் மடந்தை களி கூர,
கொற்ற விந்தை
மா மடந்தை களி கூர, மண வினை ஒப்பனைக்கு
உரிய மடந்தைமார்கள்
பூ மடந்தை அனையாளைப் பூட்டிய வெண் தரள
மணிப் பூண்களாலே
நா மடந்தை நிகர் ஆக்கி, நாயகன்தன் வலப் பாகம்
நண்ணுவித்தார்.
கோ மடந்தை களி கூர – ராஜலக்ஷ்மி களிப்பு மிகவும், புகழ்
மடந்தைகளிகூர – கீர்த்திலக்ஷ்மி களிப்புமிகவும், கொற்றம் விந்தை மா மடந்தை
களி கூர -வெற்றியையுடைய வீரலக்ஷ்மியாகிய சிறந்தபெண் களிப்பு மிகவும், மணம்
வினைஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள்-கலியாணத்துக்குஏற்ற அலங்காரங்களைச்
செய்தற்கு உரியவர்களான மாதர்கள், பூமடந்தை அனையாளை-(செந்நிறமுடைய)
லக்ஷ்மிபோன்றவளான அச்சித்திராங்கதையை, பூட்டிய வெள் தரளம்மணிபூண்களால்-
(அவளுக்குத்தாங்கள்) அணிவித்த வெண்ணிறமான முத்துக்களாலும் வேறு
இரத்தினங்களினாலுமாகிய ஆபரணங்களினால், நாமடந்தை நிகர் ஆக்கி –
சரசுவதிக்குச் சமானமாம்படி யலங்கரித்து, நாயகன் தன்வலம்பாகம் நண்ணுவித்தார்-
கணவனான அருச்சுனனுடைய வலப்பக்கத்தில் இருக்கவைத்தார்கள்; (எ-று.)
வெண்ணிறமான ஆடையாபரணங்களைத் தரித்த வெண்ணிறமுள்ள
சரஸ்வதிபோலாம்படி, சித்திராங்கதையை, பூட்டிய வெண்தரளமணிப்பூண்களாற்
செய்தன ரென்க. உத்தமவிலக்கணம் நிறைந்தவளான இவள் தன்னை
மணஞ்செய்துகொண்டவனுக்கு அரசும் புகழும் வெற்றிவீரமும் சிறக்கும்படியான
பாக்கியத்தை யுடையளாதலால், இவளை அருச்சுனனது பக்கத்தில் விவாகத்தின்
பொருட்டு இருத்துகையில் கோமடந்தையும் புகழ்மடந்தையும் விந்தைமடந்தையும்
களிகூரலாயின ரென்க
இந்திரனும் சசியும் என, இறையோனும் உமையும் என,
எம்பிரானும்
செந் திருவும் என, காமதேவும் இரதியும் என,
வெஞ் சிலைவலோனும்
சந்து அணி பூண் முலையாளும், சதுர் மறையோர் சடங்கு
இயற்ற, தழல் சான்று ஆக,
துந்துபியின் குலம் முழங்க, சுரிசங்கின் குழாம் தழங்க,
துலங்க வேட்டார்.
துந்துபியின் குலம் முழங்க – பேரிகையின் கூட்டங்கள் ஒலிக்கவும்,
சுரிசங்கின் குழாம் தழங்க – வளைவுள்ள சங்கின் கூட்டம் ஒலிக்கவும்,-
இந்திரன்உம்சசிஉம் என – இந்திரனும் இந்திராணியும் போலவும், இறையோன்உம்
உமைஉம் என- சிவபெருமானும் பார்வதியும்போலவும், எம்பிரான்உம் செந்திருஉம்
என -திருமாலும் அழகிய இலக்குமியும்போலவும், காமதேஉம் இரதிஉம் என –
மன்மதனும்இரதீதேவியும்போலவும், வெம் சிலை வலோன்உம் சந்து அணி பூண்
முலையாள்உம்- கொடிய வில் தொழிலில் வல்லவனான அருச்சுனனும்
சந்தனத்தையணிந்துஆபரணங்களைப்பூண்ட முலையை யுடையவளான
சித்திராங்கதையும்,சதுர்மறையோர் சடங்கு இயற்ற – நான்குவேதங்களில்
வல்லவர்களான அந்தணர்கள்(நூன்முறைப்படி) விவாகச்சடங்கைச்செய்விக்க,
தழல் சான்றுஆக -அக்கினிசாட்சியாக, துலங்க – விளக்கமுற [சிறப்பாக],
வேட்டார் – விவாகஞ்செய்துகொண்டார்கள்.
நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி, நுண்ணிய மென்
புலவியிலே நொந்து நொந்து,
தேக்கிய செங் கனி இதழ் ஆர் அமுது உண்டு உண்டு,
சேர்த்திய கைந் நெகிழாமல் சேர்ந்து சேர்ந்து,
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர,
அரும் பெரும் போகம் துய்த்தார்; முன்னைப்
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால், பாயல்
நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே?-இருவரும் கூடி இன்ப மனுபவித்தல்.
நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி-பார்த்த கண்
இமையாதபடி (ஒருவரையொருவர்) இடைவிடாதுபார்த்துப் பார்த்தும், நுண்ணிய
மெல்புலவியிலே நொந்து நொந்து – நுட்பமான மெல்லிய ஊடலிலே
இடையிடையேவருந்திவருந்தியும், தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது
உண்டுஉண்டு -(ரசம்)நிறைந்தசிவந்தபழம்போன்ற அதரத்திற் பொருந்திய
அமிருதத்தைஅடுத்தடுத்துப்பருகியும், சேர்த்திய கை நெகிழாமல்சேர்ந்து
சேர்ந்து – அணைத்த கைநெகிழாதபடி பன்முறை இறுகத்தழுவியும், பொன்
தூக்கிய துலையின் அநுராகம் மேல்மேல் தொடர – பொன்னைநிறுக்கின்ற
தராசுகோல்போல (இருதலையிலுஞ்சமமாக)ஆசை மேலும்மேலும் இடைவிடாது
அமைய, அரும்பெரும்போகம் துய்த்தார் -அருமையான சிறந்த கலவியின்பத்தை
அனுபவித்தார்கள்; முன்னை பாக்கியம் வந்துஇருவருக்குஉம் பலித்தது அல்லால்-
(மிக்கநன்மைக்குஏதுவான) முற்பிறப்பிற் செய்தநல்வினை (இங்ஙனம்) வந்து
இவ்விருவருக்கும் வாய்த்ததேயல்லாமல், பாயல் நலத்துஇப்படி யார் பயன்
பெற்றார் – படுக்கையிலடையுஞ்சிற்றின்பத்தில் இவ்வாறுமேம்பட்ட பயன் பெற்றவர்
வேறு யார் உளர்?
அடுக்குக்கள் – பன்முறைப்பொருளன. தலைமகனும் தலைமகளும் ஒரு
சயனத்திற்கூடி யிருக்கையில் அவனிடத்துப் புலவி கொள்ளுதற்குக் காரணமான
குற்றம் யாதும் இல்லையாகவும் ஆசை விஞ்சுதலால் நுண்ணியதோர் காரணம்
உள்ளதாக உட்கொண்டு அதனை அவன்மேல் ஏற்றி அவள் புலவிகொள்ளுத
புலவி’ என்றார். மென்புலவி – இன்பஞ்செய்தற்கு வேண்டுமளவினதாகக் கொண்டு
அவ்வளவோடு தணியும் புலவி யென்றபடி; “நினைத்திருந்து நோக்கினுங்காயும்
அனைத்தும் நீர், யாருள்ளிநோக்கினீ ரென்று” என்றபடி தனது ஒப்பில்லாத அழகை
நினைந்து தன்னையே நாயகன் இமையாது நோக்கும்போதும் ‘நும்மாற்
காதலிக்கப்படாருள் யாரை யொப்பே னென்று என்னை நோக்கினீர்?’ என நாயகி
புலவி நுணுக்கங்கொள்ளும் இயல்பு தோன்ற, ‘நோக்கியகண் இமையாமல்
நோக்கிநோக்கி’ என்றதை யடுத்து ‘நுண்ணிய மென்புலவியிலே நொந்துநொந்து’
என்றார்.
இதுமுதற் பதினாறுகவிகள் – திரௌபதி மாலையிட்ட சருக்கத்தின் 48-ஆம்
கவிபோன்ற எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர், பப்புருவாகனன்
என்னும் பைதல்-திங்கள்
அன்னானை அவள் பயந்தாள்; பயந்த போதே, அம் மகவை
உவகையுடன் அவனும் ஈந்தான்;
தென்னா என்று அளி முரல, வேம்பின் தண் தார்த் தேம் பரிசில்
வழங்கு புயத் தென்னர் கோவும்,
‘நின்னால் என் மரபு நிலை பெற்றது!’ என்று, நேயமுடன் கவர்ந்து,
துயர் நீங்கினானே.-அருச்சுனன் சித்திராங்கதையினிடமாகப் பெற்ற
புதல்வனைச் சித்திரவாகனனுக்குக் கொடுத்தல்
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் – (இவ்வாறு)
பலநாள்பெரியஇன்பத்தை (இருவரும்) அனுபவித்தபின்பு அவள்-அச்சித்திராங்கதை,
பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள் அன்னானை பயந்தாள் – பப்புருவாகன
னெனப் பெயர் பெறும் இளம்பிறைச்சந்திரன்போன்ற புத்திரனைப் பெற்றாள்;
பயந்தபோதே- பெற்றபொழுதே, அவன்உம் உவகையுடன் அ மகவை ஈந்தான் –
அவ்வருச்சுனனும் மகிழ்ச்சியோடு அப்பிள்ளையை (முன்புகுறித்தபடி சித்திரவாகன
பாண்டியனுக்கு)க் கொடுத்தான்; தென்னா என்று அளிமுரல- ‘தென்னா ‘ என்று
வண்டுகள் ஒலித்து இசைக்க, வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு –
(தானணிந்த) குளிர்ந்த வேப்பம்பூமாலையிலுள்ளதேனை (அவ்வண்டுகளுக்கு)
வெகுமதியாகக் கொடுக்கின்ற, புயம் – தோள்களையுடைய, தென்னர் கோஉம் –
பாண்டியர்தலைவனான சித்திரவாகனனும், நின்னால் என் மரபு நிலைபெற்றது
என்று- ‘உன்னால் எனதுசந்ததி அழிவின்றி நிலைத்தது’ என்று (அருச்சுனனைநோக்கி
உபசாரவார்த்தை) சொல்லி, நேயமுடன் கவர்ந்து-அன்போடு (அப்பிள்ளையை)
வாங்கிக்கொண்டு, துயர் நீங்கினான்-(புத்திரசந்ததியில்லா திருந்ததனாலாகிய தனது)
துன்பம் ஒழியப்பெற்றான்;(எ-று.)
வண்டுகள் தென்னாவென்று ஒலிக்கும் இசைக்குறிப்புவாய்பாடும், ‘தென்னன்’
என்பது ஈறுதிரிந்து ஈற்றயல்நீண்ட விளியாய்த் தென்னனே யென்று பொருள்படும்
ஆடுஉமுன்னிலையுமாக இருபொருள் இரட்டுறமொழித லென்னும் உத்தியால்
ஒருங்கே யமைய ‘தென்னாவென்று அளிமுரல’ என்றார்: ‘தென்னா’ என்று
பாண்டியனை விளித்து முன்னிலைப்படுத்தி இசைபாடிவரும் பாணர்களுக்கு
அவர்கள்வேண்டிய இன்னுணவுமுதலிய பரிசுகளை இருகையாலும்வழங்கும்
பாண்டியரியல்பின்படி, ‘தென்னா’ என்று இசை பாடி வந்தவண்டுகளுக்குப்பிரியமான
தேனைத் தோள்களில் தரித்த வேப்பம்பூமாலையினின்றுவழங்கும் பாண்டிய னென்று
பொருள்படுமாறு ‘தென்னா வென்றளிமுரல வேம்பின்றண்டார்த் தேம்பரிசில் வழங்கு
புயத்தென்னர்கோ’ என்றார்: ஆறறிவுடைய மக்கட்குப்போலவே
அவ்வறிவிற்குறைபாடுடையஉயிர்கட்கும் தன்னைச்சார்ந்தவிடத்துப் பரிசுகொடுக்கும்
பெருங்கொடையாளனென்பது விளங்கும். பாணர்க்கு வண்டு உவமமாதலை, சிலப்.
காதை-5, வரி 200-203-இலும் காணலாம். தென்னர் -பரதகண்டத்தின்
தென்னாடாகியபாண்டிய நாட்டை யாள்பவர். பப்ருவாஹநன் என்றவட
மொழிப்பெயர் -பிங்கலவர்ணமான குதிரைகளை யுடையவ னென்று
பொருள்படும்
பார்த்தன், அருச்சுனன், கரியோன், விசயன், பாகசாதனி,
சவ்வியசாசி, பற்குனன், பார்
ஏத்து தனஞ்சயன், கிரீடி, சுவேத வாகன், எனும் நாமம்
படைத்த பிரான், யாழோர் இன்பம்
வாய்த்த இதழ் அமுத மொழிப் பேதை தாதை மனை இருக்க,
திரு வழுதி வள நாட்டு உள்ள
தீர்த்தம் முழுவதும் ஆடி, அன்பால் தென்பால் திருமலையும்
கை தொழுது சிந்தித்தானே.-அருச்சுனன் பிராயணப்பட்டுத் திருமாலிருஞ்சோலை மலையைத்
தரிசித்தல்.
பார்த்தன்-, அருச்சுனன்-, கரியோன் – கருநிறமுடையவன்
[கிருஷ்ணன்], விசயன்-, பாகசாதனி – பாகசாஸநி, சவ்வியசாசி – ஸவ்யஸாசீ,
பற்குனன்-பல்குநன்,பார் ஏத்து தனஞ்சயன் – உலகத்தவர் புகழும் தநஞ்சயன்,
கிரீடி -கிரீடி, சுவேதவாகன்-, எனும் நாமம் – என்கிற (பத்துப்) பெயர்களையும்,
படைத்த -பெற்ற, பிரான் – அரசனான அருச்சுனனானவன்,- யாழோர் இன்பம்
வாய்ந்த(அமுதம்) இதழ் அமுதம் மொழிபேதை தாதை மனை இருக்க –
காந்தர்வவிவாகம்பெற்ற அமிருதம்போன்ற அதரத்தையும் அமிருதம்போன்ற
இன்சொற்களையுமுடையஇளம் பெண்ணான சித்திராங்கதை (தனது)
தந்தையின்வீட்டிலேயிருக்க [அவளை அங்குஇருத்தி], திருவழுதி வளம் நாடு
உள்ளதீர்த்தம் முழுவதுஉம் ஆடி- சிறந்தவளப்பமுடைய பாண்டியநாட்டிலுள்ள
புண்ணியதீர்த்தங்களெல்லாவற்றிலும் தான் ஸ்நாநஞ் செய்பவனாய் (ப் புறப்பட்டு),
அன்பால் – அன்போடு, தென்பால் திருமலைஉம் கைதொழுது சிந்தித்தான் –
தென்திசையிலுள்ள அழகர்திருமலையையுங் கைகூப்பி வணங்கித் தியானித்தான்;
(எ-று.)
இத்தலத்திலுள்ள பெருமாள் திருநாமம் – அழகர். பிராட்டிமார் –
சுந்தரவல்லி,பூதேவி. பாகஸாஸநன் – இந்திரன்; அவனது மகன்,
பாகஸாஸநிஎனத்தத்திதாந்தநாமம். ஸவ்யஸாசீ – வலக்கையினால்
மாத்திரமன்றிஇடக்கையினாலும் அம்புதொடுப்பவன். கிரீடி – பாசுபதம்பெற்றபின்பு
இந்திரலோகத்துக்குச் செல்லும்போது அவ்விந்திரனாற் சுவர்க்கத்தில் இளவரசு
முடிசூட்டப் பெறுபவன். ஸ்வேதவாஹன் – வெண்ணிறமானகுதிரைகளையுடையவன்:
காண்டவதகனஞ்செய்யுமாறு அநுமதி தரும்போது அக்கினிபகவானாற்
கொடுக்கப்படும் நான்குவெள்ளைக்குதிரைகளைப் பூண்ட தேரைப் பெறுதலால்,
இவனுக்கு இப்பெயர்.
கன்றிய வெங் கரன் முதலோர் களத்தில் வீழ, கவி குல
நாயகன் இதயம் கலங்கி வீழ,
ஒன்று பட மரம் ஏழும், உததி ஏழும், ஊடுருவச் சரம்
தொடுத்த ஒரு வில் வீரன்,
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத,
வாய்த்த திருத் துணைவனோடும்
சென்ற வழி, இன்று அளவும் துளவம் நாறும் சேது, தரிசனம்
செய்தான், திறல் வல்லோனே..-அருச்சுனன் அப்பாற்சென்று சேதுதரிசனஞ் செய்தல்.
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ – கோபித்த கொடிய
கரன்முதலான இராக்கதர்கள் போர்க்களத்தில் இறந்துவிழவும், கவி குலம் நாயகன்
இதயம் கலங்கி வீழ – குரங்குக் கூட்டத்துக்குத் தலைவனான வாலி மனங்கலங்கி
விழவும், மரம் ஏழ் உம் உததிஏழ்உம் ஒன்றுபடஊடுருவ – ஏழுமராமரங்களும்
ஏழுகடல்களும் ஒருசேர ஊறுபடவும், சரம் தொடுத்த – அம்பைச் செலுத்திய, ஒரு
வில் வீரன் – ஒப்பற்ற வில்வீரனான ஸ்ரீராமபிரான், எழுபது வெள்ளம் குரங்கின்
சேனை துன்றி சூழ் போத- எழுபது வெள்ளமென்னுந் தொகையுள்ளவானர
சேனைநெருங்கி (த்தன்னைச்) சூழ்ந்து வர, வாய்த்த திரு துணைவனோடுஉம் –
(தனக்கு) இயைந்த சிறந்த தம்பியான இலக்குமணனுடனே, சென்ற – கால்களால்
நடந்து போன, வழி – வழியாதலால், இன்று அளவும் துளவம் நாறும் –
(அவ்விராமபிரானது திருவடிகளில் அன்பர்கள் அர்ச்சித்த) திருத்துழாயின்வாசனை
இன்றைவரையிலும் வீசப்பெற்ற, சேது- சேதுவை, திறல் வல்லோன் –
போர்த்திறத்தில் வல்லவனான அருச்சுனன், தரிசனம்செய்தான் – பார்த்தான்; (எ-று.)
சேது தன்னைத் தரிசித்தமாத்திரத்திலே எல்லாப்பாவங்களையும் போக்கி
எல்லாநன்மைகளையும் தருந் தன்மைய தாதலால், ‘சேது தரிசனஞ்செய்தான்’
என்றார்.சேது – இராமபிரான் வாநர சேனையுடன் இலங்கைசேருரம் பொருட்டு
இடையிலுள்ளதென் கடலைக் கடத்தற்காக அதில் வானரர்களைக் கொண்டு
மலைகளைக்கொணர்வித்து அவற்றாற் கட்டுவித்த அணை. இராமபிரான்
அன்பர்களிட்டதிருத்துழாயின் நறுமணம் நீங்காத திருவடிகளால் மிதித்து நடந்து
சென்றதனால்,அத்துழாயின்நறுமணம் இப்பொழுதும் ஒழியாது அங்குச்
செறிந்திருக்கு மென்றார்.திருத்துழாய் திருமாலுக்கு உரியது.
கரன் என்ற வடமொழிப்பெயர் – கொடியவனென்று பொருள்படும்; இவன்-
இராவணனுக்குத் தம்பிமுறையாகும் ஓர் அரக்கன்: தண்டகாரணியத்திலே
இராவணன்தங்கையான சூர்ப்பணகை வசித்தற்கென்று அவ்விராவணன் குறித்த
ஜநஸ்தாநமென்னுமிடத்தில் அவளுக்குப் பாதுகாவலாக அவனால்
நியமித்துவைக்கப்பட்டபெரியஅரக்கர்சேனைக்கு முதல் தலைவன். சூர்ப்பணகை
தனது சில உறுப்புக்களையறுத்திட்ட இராமலக்ஷ்மணர்மீது கறுக்கொண்டு சென்று
கரன்காலில்விழுந்துமுறையிட, அவன் மிகப்பெரியசேனையோடும் அறுபதுலக்ஷம்
படைவீரரோடும் சேனைத்தலைவர் பதினால்வரோடும் தூஷணன் திரிசிரா என்னும்
முக்கியசேனாதிபதிகளோடும் புறப்பட்டுவந்து போர்தொடங்குகையில், இராமன்
லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாகப் பர்ணசாலையில் நிறுத்தித் தான் தனியே
சென்று எதிர்த்துப் பெரும்போர்செய்து பலரையும் அழித்து முடிவிற் கரனையுந்
துணித்து வெற்றிகொண்டனன்.
வாலி – இந்திரன்மகன்; சுக்கிரீவனது தமையன். சீதையைத்
தேடிக்கொண்டுவந்த இராமலக்ஷ்மணர்களோடு அநுமான் மூலமாக நண்புகொண்ட
சுக்கிரீவன் தனக்குப் பல இடையூறியற்றிய தன் தமையனான வாலியைக்கொன்று
உதவிபுரியுமாறு இராமனைவேண்ட, அதற்கு இரங்கிய பெருமான், சுக்கிரீவனை
வாலியோடு வலியப்போர் செய்யச்சொல்லி, அங்ஙனம் அவ்விருவரும் பொரு
கையில் மறைவிலிருந்து அம்புதொடுத்து வாலியை வதைத்தனன்.
இராமலக்ஷ்மணரை அநுமான் மூலமாகச்சுக்கிரீவன் சிநேகித்த பிறகு,
தனதுபகைவனான வாலியைக் கொல்லும் வல்லமை இராமனுக்கு உண்டோ
இல்லையோ என்று ஐயமுற்றுத் தன்சந்தேகந் தீரும்படி ‘எதிரிலிருந்த
ஏழுமராமரங்களையும் ஏககாலத்தில்தொளைபடும்படி எய்யவேண்டும்’ என்று
சொல்ல, உடனே இராமபிரான் ஒரே அம்புதொடுத்து அம்மரங்களேழையும்
தொளைப்படுத்தினன்.
இராவணனாற் கவரப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கிற செய்தியை
அநுமான் சென்று அறிந்துவந்து சொன்னபின்பு இராமபிரான் வாநரசேனையுடனே
புறப்பட்டுச் சென்று கடற்கரையையடைந்து, கடலைக்கடக்கஉபாயஞ்சொல்ல
வேண்டுமென்று அக்கடலரசனாகிய வருணனைப் பிரார்த்தித்துஅங்குத்
தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாளளவும் பிராயோபவேசமாகக் கிடக்க,
சமுத்திரராஜன் அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க,
ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு, அனைவரும் நடந்துசெல்லும்படி கடலை
வற்றச்செய்யவேனென்று ஆக்நேயாஸ்திரத்தைத்தொடுக்கத் தொடங்கியவளவிலே,
அதன்உக்கிரத்தால் வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து அப்பெருமானைச்
சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி
நிற்க, பின்பு இராமமூர்த்தி, வாநரங்களைக்கொண்டு மலைகளாற் சேதுபந்தனஞ்
செய்தனன்.
வன் திரை வெங் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல்
இடும் கணையமரனே போலும்;
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான், மேருத் தாழ் கடலில்
நீட்டியது ஓர் தடக் கை போலும்;
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக, அகத்தியன் வாழ்
குன்றினையும், அணி முக்கோணக்
குன்றினையும், சீர்தூக்கி நிறுப்பதாக, கோகனதன் அமைத்த
துலைக் கோலும் போலும்.-சேதுவின் வருணனை.
(அந்தச்சேதுவானது) வல் திரை – பெரிய அலைகளாகிய, வெம்
களிறுஇனங்கள் – வெவ்வியமதயானைகள், இரண்டு பால்உம் மலையாமல் –
இரண்டுபக்கத்திலும் (ஒன்றோடொன்று) போர்செய்யாதபடி, இடும் – (இரண்டுக்கும்
நடுவிலே) இட்ட, கணையம் மரன்ஏ -கணையமரத்தையே, போலும் – ஒக்கும்;
(மற்றும்), மேரு – மகாமேருமலை, தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் –
(வாயுவினாற் பறித்தெறியப்பட்ட) தனது சிகரங்கள் அமிழாமல் (அவற்றை)
எடுத்தற்கு,தாழ் கடலில் நீட்டியது- ஆழமான கடலில் நீட்டியதான, ஓர் தட கை –
ஒருபெரியகையை, போலும் – ஒக்கும்; அன்றி – இவைகளல்லாமல், இரு
பூதலம்உம் இருதட்டு ஆக – (ஜம்பூத்வீபமும் இலங்காத்வீபமும் என்னும்) இரண்டு
பூமியினிடங்களும்இரண்டு தட்டுக்களாக அமைய, (அவற்றின்மேல் வைத்து),
அகத்தியன் வாழ்குன்றினைஉம் அணி முக்கோணம் குன்றினைஉம் சீர்தூக்கி
நிறுப்பதுஆக -அகஸ்தியமுனிவன் வாழிடமான பொதிய மலையையும் அழகிய
திரிகோணமலையையும் (இவற்றில் எது கனம் பொருந்திய தென்று) நிறுத்து
வரையறை செய்யுமாறு, கோகநதன் அமைத்த – பிரமன் நாட்டிய, துலை கோல்உம்
– தராசுகோலையும், போலும் – ஒக்கும்; (எ-று.)
தற்குறிப்பேற்றவணி. இரண்டுபக்கத்தும் அலைபிரிந்து மோத இடையிலே
பொருந்திய நீண்ட சேது, இருதிறத்துயானைகள் ஒன்றோடொன்று மோதாதபடி
அவற்றினிடையிலிட்ட காவல்தடை மரம்போலுமென்க. பாலபாரதத்திலும்
“உபயோரபிபாகயோர ஜஸ்ரம் – மிலதாம் அர்க்களம் ஊர்மிகுஞ்ஜராணாம்
லவணாம்புநிதௌ விலோக்யஸேதும்” என்று இங்கு முதலடியிற்குறித்த உவமை
வந்துள்ளது. வாயுதேவன் பெயர்த்துத் தள்ளிய மேருமலையின் மூன்று சிகரங்களே
இலங்கைநகர்க்கு இருப்பிடமான திரிகூடமென்பது இரண்டாமடியில் அறிதற்குரியது.
முக்கோணக்குன்று – திரிகோணாசலம்; இது – இலங்கைத்தீவிலுள்ள தேவாரம்
பெற்ற சிவதலமிரண்டில் ஒன்று. அகஸ்தியமகாமுனிவன் சிவபிரானோடொத்த
மகிமையுடையவனாதலால், அவனிருக்கிற பொதியமலையும் சிவபிரானிருக்கிற
கைலாசகிரியின் கொடு முடியான திரிகோணமலையும் தம்மிலொத்தனவாய்ச்
சீர்தூக்குதற்கு ஏற்றன வென்க. கோகநதம் – தாமரை; இவ்வடசொல் கோகம் –
சக்கரவாகப்பறவைகள், நதம் – கூவியொலித்தற்கு இடமானது என்று பொருள்படும்.
கோகநதன் – தாமரையில் வாழ்பவன்
அண்டர், ‘தம கங்கையினும் வரன் உண்டு’ என்று என்று,
அரம்பையரோடு அவனியில் வந்து, ஆடும் கன்னித்
தண் துறையும், தண் பொருநைப் பாவ நாசத் தடந் துறையும்
படிந்து, நதித் தடமே போந்து,
பண்டு மழுப் படையோன் அம் மழுவால் கொண்ட பாக்கிய
பூமியும், சேரன் பதிகள் யாவும்,
கண்டு, மனம் களி கூரச் சென்று, மேலைக் கடல் கண்டான்,
உரகதலம் கண்டு மீண்டான்.-அருச்சுனன் சிலதீர்த்தங்களில் நீராடி மேல்கடல் சேர்தல்.
உரக தலம் கண்டு மீண்டான் – நாகலோகத்துக்குச் சென்று
அதனைக்கண்டு திரும்பிவந்தவனான அருச்சுனனானவன்,- அண்டர் –
தேவர்கள்,தம கங்கையின்உம் வரன் உண்டு என்று என்று –
தங்களுடையகங்காநதியைக்காட்டிலும் மேன்மையுள்ள தென்று எண்ணியும்
சொல்லியும், அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும்-தேவமாதர்களுடனே
பூமியில் வந்து ஸ்நாநஞ்செய்யப்பெற்ற, கன்னி தன் துறைஉம்-
கன்னியாகுமரியென்னும் நதியினது குளர்ச்சியான துறையிலும், தண் பொருநை
பாவநாசம் தட துறை உம் – குளிர்ச்சியான பொருநையாற்றினது பாவநாசமென்கிற
பெரிய துறையிலும், படிந்து – நீராடி, நதி தடம்ஏ போந்து – அந்நதியின்கரை
வழியாய்ச் சென்று, பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கியம்
பூமிஉம்-முற்காலத்தில் பரசுராமன் (தனது) பரசு என்னும் ஆயுதத்தாற் கொண்ட
சிறந்தபூமியையும், சேரன் பதிகள் யாஉம்- மற்றும் சேரராசனுடைய
ஊர்களெல்லாவற்றையும், கண்டு – பார்த்து, மனம் களி கூர – மனத்திற் களிப்பு
மிக, சென்று -(பூமிப்பிரதக்ஷிணமாக அப்பால்) நடந்து, மேலை கடல்கண்டான் –
மேற்குத்திக்கிலுள்ள கடலைப் பார்த்தான்; (எ-று.)
கன்னி – குமரிதீர்த்தம்; இது, பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்ட தென்ப.
மழுப்படையோன் – மழுவாகிய ஆயுதத்தை யுடையவன்; பரசுராமன். இவன்,
இருபத்தொருதலைமுறை அரசர்களைப் பொருதழித்துத் தன்வசப்படுத்திய
பூமிமுழுவதையும் காசியப முனிவனுக்குத் தானஞ்செய்தபின்னர், அம்முனிவன் ‘நீ
எனக்குக் கொடுத்துவிட்டதான பூமியில் வசித்தல் தகுதி யன்று’ என்ன,
இப்பரசுராமன் ‘அங்ஙனமே யாகுக’ என்று கடற்கரைசேர்ந்து தனக்கு
இடங்கொடுக்கும்படிஅக்கடலை வேண்டி, அதன் அனுமதிப்படி அதில் தனது
கோடாலிப்படையைவீசியெறிய, அது சென்று விழுந்த பன்னிரண்டுயோசனைதூரம்
கடல் விலகி விட,அப்பூமியில் அப்பெருமான் வசித்தனன்; அவ்விடம் பரசுராம
க்ஷேத்திர மென்றுபெயர்பெறும்: அது, மலைநாட்டின் முக்கியமான பாகமாம்.
அருச்சுனன்உரகதலம்கண்டு மீண்டமை, உலூபியை மணஞ்செய்தபொழுது
அந்த நெடுந் திசைப் புனல்கள் ஆடும் நாளில், ஐந்து தடத்து
அரம்பையர் ஓர் ஐவர் சேர,
இந்திரன் வெஞ் சாபத்தால், இடங்கர் ஆகி, இடர் உழந்தோர்
பழைய வடிவு எய்த நல்கி,
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து, திங்களுடன் அரவு
உறவு செய்யும் வேணிக்
கொந்து அவிழும் மலர் இதழித் தொடையோன் வைகும் கொடி
மதில் சூழ் கோகன்னம் குறுகினானே.-ந்துதேவமாதர்களின் சாபத்தை நீக்கிக் கோகர்ணஞ் சேர்தல்.
அந்த நெடுந் திசை புனல்கள் ஆடும் நாளில் – அந்தப் பெரிய
மேற்குத்திக்கிலுள்ள தீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்கிற காலத்தில்,- இந்திரன் வெம்
சாபத்தால் – இந்திரன்காரணமாக வந்த கொடியசாபத்தினால், ஐந்து தடத்து – ஐந்து
தடாகங்களில், சேர – ஒருசேர, இடங்கர் ஆகி இடர் உழந்தோர் – முதலைகளாகித்
துன்பமனுபவித்துவருகிறவர்களான, அரம்பையர் ஓர் ஐவர் – ஐந்து தேவமாதர்கள்,
பழைய வடிவு எய்த – (சாபத்தினாலாகிய முதலைவடிவம்நீங்கிப்) பழமையான
தங்கள்நிஜவடிவத்தை யடையும்படி, நல்கி – அருள்செய்து,- சிந்து திரை நதி
பலஉம் சென்றுதோய்ந்து – வீசுகிற அலைகளையுடைய நதிகள்பலவற்றிலும்
போய்த் தீர்த்தமாடி,-திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – சந்திரனுடனே
பாம்பு நண்பாகஒருங்குவசிக்கப்பெற்ற சடைமுடியிலே, கொந்து அவிழும் இதழி
மலர் தொடையோன்- கொத்துக்கொத்தாக மலருங் கொன்றைப்பூமாலையை
யணிந்தவனான சிவபிரான்,வைகும் – வீற்றிருக்கின்ற, கொடி மதில் சூழ்
கோகன்னம்- துவசங்களை நாட்டியமதில்கள் சூழ்ந்த திருக்கோகர்ணமென்ற
தலத்தை, குறுகினான் – போய்ச் சேர்ந்தான்;(எ-று.)
அருச்சுனன், தீர்த்தயாத்திரைசெய்கையில் ஸௌபத்ரதீர்த்தம்,
பௌலோமதீர்த்தம், காரந்தமதீர்த்தம், அசுவமேதபலதீர்த்தம், பாரத்வாஜதீர்த்தம்
என்னும் ஐந்துபுண்ணிய தீர்த்ததங்களைக் கண்டு, அவற்றில் ஐந்து முதலைகள்
இருந்து இறங்குபவரையெல்லாங் கவர்தலால் அவை எவராலும் நீராடாது
விடப்படுகின்றன என்று அறிந்து அம்முதலைகளைத் தொலைக்கக் கருதி,
மிக்கதைரியத்தோடு அவற்றில் அகஸ்தியதீர்த்தமான ஸௌபத்திரத்தில் இறங்கி
நீராட,அதிலிருந்த பெரியமுதலை அருச்சுனனைப் பற்றிக் கொண்டது; அவன்
அதனைவிடாமல் தனதுவலிமையினால் இழுத்துக் கரையிற் சேர்த்தவளவில்,
அம்முதலை,திவ்வியசௌந்தரியமுடைய ஒரு தேவமாதாக மாறிற்று; அதுகண்டு
வியந்தஅருச்சுனன் ‘நீ யார்? உன் வரலாறு என்ன?’ என்றுவினாவ, அவள்
கூறுவாள்:-குபேரனுக்குப் பிரியமானவளான வர்க்கையென்னும் அப்சரப் பெண்
யான்.ஸௌரபேயீ, ஸமீசீ, புத்புதா, லதா என்ற எனது தோழியர் நால்வருடன்
யான்செல்லுகையில் மிக்க அழகுள்ள ஒரு முனிவன் பெருந்தவஞ்செய்தல் கண்டு
அத்தவத்துக்கு இடையூறு செய்யக் கருதி. நாங்களைவரும் ஆடல் பாடல் முதலிய
விநோதங்களால் அவன் மனத்தைக் கலக்கத்தொடங்கியபோது, நிலைகலங்காத
அவன் எங்களை முதலைக ளாகும்படி சபித்தான். உடனே நாங்கள் அவனையே
சரணமடைந்து எங்கள்பிழையைப் பொறுத்தருளுமாறு பிரார்த்திக்க, ‘நூறுவருஷம்
கழிந்தவளவில் உங்களை ஓர் உத்தமபுருஷன் நீரினின்று கரையேற்றுவன்:
அப்பொழுது உங்கட்கு இச்சாபவடிவம் ஒழியும்’ என்று சாபவிடை கூறியருளினான்:
அதுமுதல் நாங்கள் முதலைகளாய் இந்தஐந்து தீர்த்தங்களிலும் வசிக்கிறோம்.
என்னைப்போலவே மற்றைநால்வரையும் நீ சாபந்தவிர்த்தருளுக’ என்றுகூற,
அருச்சுனன் அங்ஙனமே மற்றையதீர்த்தங்களிலும் இறங்கி அம்முதலைகளையும்
இழுத்து வெளியேவிட, அவையும் தேவமாதர்களாய்ச் சென்றன. பின்பு அனைவரும்
அச்சமின்றி அத்தீர்த்தங்களில் இறங்கி நீராடலாயினர் என்றவரலாற்றின் விவரத்தை
முதனூலால் அறிக. இந்தவரலாற்றுவிஷயம் பாலபாரதத்திற் குறிக்கப்பட்டிலது.
தவவேள்விகள்செய்வார்க்குப் பெரும்பாலும் இடையூறுசெய்விப்பவன்
இந்திரனாதலால், அவன் கட்டளையால் அவர்கள் அம்முனிவனது தவத்துக்கு
இடையூறுசெய்கையிற்சாபம்நேர்ந்த தென்றுகொண்டு, ‘இந்திரன்வெஞ் சாபம்’
எனப்பட்ட தென்க. அன்றி,இந்திரனென்பது தலைவனென்றபொருளில்வருதலால்,
இங்கு முநீந்திரன் அதாவதுமுனிவர்தலைவன் என்றுகொள்ளுதல் பொருந்தும்.
சந்திரனுக்கும் இராகுகேதுக்களாகிய பாம்புகளுக்கும்பகைமை யுள்ளதனால்,
அப்படிப்பட்ட பகைமை இங்கு இல்லையென்பது தோன்ற, ‘திங்களுடன் அரவு
உறவுசெய்யும் வேணி‘ என்றார். கொந்து=கொத்து:மெலித்தல். கோகர்ணம் –
துளுவநாட்டிலுள்ள சிவதலம். இராவணன் தவஞ்செய்து தனது இலங்கை அழியா
திருத்தற்பொருட்டு அங்குத் தாபித்துப் பூசித்தற்காகப் பெற்றுச் சென்றசிவலிங்கம்,
விநாயகமூர்த்தியைக்கொண்டு தேவர்கள்செய்த சூழ்ச்சியால் இடையில் தங்கி,
இராவணன் இருபதுகைகளாலும் பற்றியிழுக்கவும் பசுவின்காதுபோலக் குழைந்து
காட்டியதால், இது கோகர்ணமெனப்படும்; கோகர்ணம் – பசுவின் காது
ஆகன்னம் உறச் செம் பொன் வரை வில் வாங்கி, அவுணர்
புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து,
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்தமை
இருத்தி, கோட்டுக் கோட்டு
நாகு அன்னப் பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண்
துவரை நண்ணி, ஆங்கண்,
பாகு அன்ன மொழிக் கனிவாய் முத்த மூரல் பாவை நலம் பெற
முக் கோல் பகவன் ஆனான்.-அருச்சுனன் துவாரகைசார்ந்து சந்நியாசிவேஷங் கொள்ளல்.
ஆகன்னம் உற – காதளவும்பொருந்த, செம் பொன் வரை வில்
வாங்கி-சிவந்த பொன்மயமான மேருமலையாகிய வில்லை வளைத்து
(ஆதிசேஷனாகிய நாணியை இழுத்து விஷ்ணுவாகிய அம்பைத் தொடுத்து),
அவுணர்புரம் கட்டு அழித்தோன் – அசுரர்கள்வசித்த திரிபுரத்தை முற்றும்
அழித்தவனான சிவபிரானது. அடியில் – திருவடிகளில், வீழ்ந்து – விழுந்து
[சாஷ்டாங்கமாகநமஸ்கரித்து], (அருச்சுனன்), கோகன்னம் வளம் பதியில் –
வளப்பமுடைய அந்தக் கோகர்ணமென்ற திருப்பதியிலே, தன் பின் வந்த குலம்
முனிவர் தமை இருத்தி – தன்னைத்தொடர்ந்துவந்த சிறந்தமுனிவர்களை
இருக்கச்செய்து,- கோடு- நீர்க்கரைகளிலுள்ள, கோடு நாகு – சங்கின்
பேடைகள், அன்னம் பெடையுடனே ஆடும்-அன்னப் பேடைகளுடனே
விளையாடப்பெற்ற, கஞ்சம் நறை வாவி – தாமரை மலர்களின்
நறுமணத்தையுடைய தடாகங்கள் பொருந்திய, வள்துவரை – வளப்பமுள்ள
துவாரகாபுரியை, நண்ணி – சார்ந்து, ஆங்கண்- அவ்விடத்தில், பாகு அன்ன
மொழிகனி வாய் முத்தம் மூரல் பாவை நலம் பெற – கருப்பஞ்சாற்றின்
பாகைப்போன்ற[இனிய] சொற்களையும் கொவ்வைப்பழம் போலச் சிவந்த வாயை
போலஅழகியவளான சுபத்திரையினது இன்பத்தைப் பெற, (விரும்பி
அதைக்குறித்து),முக்கோல் பகவன் ஆனான் – திரி தண்டத்தையுடைய
சன்னியாசியாயினான்; (எ-று.)
கோகர்ணத்துச் சிவபிரான் திருநாமம் – மகாபலேசுவரர். அம்பிகை –
பெரியநாயகியம்மை. ஆகன்னம்=ஆகர்ணம்:வடசொற்றொடர் விகாரப் பட்டது.
நீர்வாழ்வனவான சங்கும் அன்னமும் உடன் விளையாடு மென்க. கஞ்ஜம்-வடசொல்;
நீரில்தோன்றுவது; (கம்-நீர்.) கோகர்ணத்திலிருந்து பிரபாசகட்டத்தை அடைந்து
அருச்சுனன் உடன்வந்தோரை அங்குவிட்டு, சுபத்திரையைப் பெறத் துறவிவேடம்
பூண்டு க்ருஷ்ணபகவானை நினைக்க, அப்பிரான்வந்து இவ்வருச்சுனனை
ரைவதககிரியிலிருத்தித் துவாரகை சேர்ந்தா னென்று பாலபாரதத்தி லுள்ளது
வெங் கதிர் போய்க் குட திசையில் வீழ்ந்த பின்னர், வீழாமல்
மாலையின்வாய் மீண்டும் அந்தச்
செங் கதிர் வந்து எழுந்தது என, மீது போர்த்த செய்ய
ஆடையும் தானும், தீர்த்த வாரிச்
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடஞ் சாரல்
இரைவதக சயிலம் நண்ணி,
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய்,
ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான்.-அருச்சுனன் ரைவதககிரியில் ஓர் ஆலமரத்தினடியிற்
சேர்தல்.
வெம் கதிர் உஷ்ணமான கிரணங்களையுடையவனாகியசூரியன்,
போய்-,குடதிசையில் வீழ்ந்த பின்னர் – மேற்குத் திக்கில் விழுந்து மறைந்தபின்பு
[சூரியாஸ்தமனமானபின்பு]-அந்த செங் கதிர்- சிவந்தகிரணங்களையுடையனான
அச்சூரியன் தானே, வீழாமல் மாலையின்வாய் மீண்டும் வந்து எழுந்தது என-
அஸ்தமித்தொழியாமல் மாலைக்காலத்தில் திரும்பவும் வந்து உதித்தது போல, மீது
போர்த்த செய்ய ஆடைஉம் தான்உம்-உடம்பின்மேல்
தரித்தசெந்நிறமானகாஷாயவஸ்திரமும் தானுமாக, (அருச்சுனன்), தீர்த்தம் வாரி
சங்குஅதிரும் அணி வீதி நகரி சூழ்ந்த தட சாரல் இரைவதக சைலம் நண்ணி –
கடல்நீரிலுள்ள சங்குகள் ஒலிக்கும் அழகியவீதிகளையுடைய துவாரகாபுரியைச்
சார்ந்தவிசாலமான சாரல்களையுடைய ரைவதகமென்னும்மலையை அடைந்து,
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் – பொலிவு பெற்று
ஆரவாரிக்கிற காளமேகங்கள் மேலெழுந்து மழைபொழிகின்ற இராக்காலத்திலே
போய், ஒரு நீள் வடதருவின் பொதும்பர் சேர்ந்தான்- உணர்ந்ததோர்
ஆலமரத்தினது செறிவை அடைந்தான்;
செந்நிறவாடைபோர்த்துமேற்றிசையில் தோன்றும் அருச்சுனனுக்கு
மேற்றிசையிலுதித்த சூரியனை உவமைகூறினார். செய்ய ஆடை – காவி
தோய்ந்தஉடை. ‘தீர்த்தவாரிச்சங்கதிருமணிவீதி’ என்ற தொடர் – வெற்றிச்சங்கு
மங்கலச்சங்கு கொடைச்சங்கு என்ற சங்கவாத்தியங்கள் அந்நகரத்து
வீதிகளில் எங்கும் எப்பொழுதும் முழங்குதலையும், அந்நகரம்
கடல்சூழ்ந்ததாதலாற்கடல்வாழுயிரான சங்குகள் தவழ்ந்து சென்று
அந்நகர்வீதிகளிலுலாவுதலையுங் குறிக்கும்
இந்திரற்குத் திருமதலை மன்றல் எண்ணி, யாதவர்கோன் வளம்
பதியில் எய்தினான்’ என்று,
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி, அண்டம் உற இடி
முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப,
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம்
நாட்டி, வயங்கும் மின்னால்
முந்துறத் தீபமும் எடுத்து, தாரை முத்தால், முழுப் பொரி சிந்தின,
கால முகில்கள் அம்மா.--இரண்டுகவிகள் – மழைக்காலவருணனை.
காலம்முகில்கள்-கார்காலத்து மேகங்களானவை,- இந்திரற்கு
திருமதலைமன்றல் எண்ணி யாதவர் கோன் வளம் பதியில் எய்யினான்என்று-
(தங்களைவாகனமாகக்கொண்டு செலுத்துந் தலைவனான)
இந்திரனுடையசிறந்தகுமாரனானஅருச்சுனன்விவாகத்தைக் குறித்து
யதுகுலத்தார்க்குத்தலைவனானகண்ணபிரானுடையவளப்பம்பொருந்தியநகரத்திற்கு
வந்தானென்னு அறிந்து, (அவ்விவாகத்தின் பொருட்டு), அந்தரத்தை நீலத்தால்
விதானம் ஆக்கி – ஆகாயத்தை நீலநிறமுள்ள பட்டினால் மேற்கட்டி யமைத்து
அலங்கரித்து, இடி முரசம் அண்டம்உற ஆர்ப்ப ஆர்ப்ப – இடிகளாகிய
பேரிகைவாத்தியங்கள் ஆகாயத்தையளாவ மிகுதியாக ஒலிக்க, வந்து-, இரட்டை
வரி சிலையால் பஞ்சவண்ணம் மகரதோரணம் நாட்டி – இரட்டையாகவிளங்குகிற
நீண்ட இந்திரவில்லின்தோற்றத்தால் ஐவகை நிறங்களையுடையமகர
தோரணங்களைக்கட்டி நிறுத்தி, வயங்கும் மின்னால் முந்துற தீபம்உம் எடுத்து –
விளங்குகிற மின்னல்களினால் முற்பட விளக்குகளையும் ஏந்தி, தாரை
முத்தால்முழுபொரி சிந்தின – தாரையாகச்சொரியும் மழைத்துளிகளினால்
முழுப்பொரிகளையுஞ்சிந்தின; அம்மா – ஆச்சரியம்! (எ-று.)
நீலநிறமான மேகங்கள் வானத்தில் இடைவிடாதுபரவி அவ்விடத்தை
மறைத்ததையே ‘நீலத்தால் விதானமாக்கி’ என்றார். பஞ்சவர்ணம் – வெண்மை,
கருமை,செம்மை, பொன்மை, பசுமை என்பன. மகரதோரணம் –
சுறாமீன்வடிவமையத்தூக்குந்தோரணம். இந்திரவில்லில் பலவகைநிறங்களும்
இருத்தல்பற்றி, ‘சிலையாற் பஞ்சவண்ணமகர தோரணம் நாட்டி’ என்றார்.
தீபமேந்துதல்- அஷ்டமங்கலத்துள் ஒன்று. நெற்பொரி சிந்துதலும், மணத்துக்கு
உரியது. முழுப்பொரி- முரிவில்லாதபொரி. உருவகத்தை யங்கமாகக்
கொண்டுவந்த தற்குறிப்பேற்றவணி.
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில், இராமன் முதல்
யது குலத்தோர் இசையார்’ என்று,
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலிப் பரந்தாமன்தனை
நினைந்தான், பார்த்தன், ஆக,
பூங் கமல மலர் ஓடை அனையான், தானும், பொன் நெடுந்
தேர்ப் பாகனுமே ஆகப் போந்து,
நீங்கு அரிய நண்பினனாய், நெடு நாள் நீங்கு நேயத்தோன்
நினைவின்வழி நேர்பட்டானே.-அருச்சுனன் கண்ணனை நினைக்க, அப்பெருமான் அங்குத்
தோன்றுதல்.
எண்ணில் – ஆலோசிக்குமிடத்து, யாம் கருதி வரும் கருமம்
முடிப்பான் – நாம் நினைத்துவந்த காரியத்தை நிறைவேற்றுதற்கு, இராமன் முதல்
யதுகுலத்தோர் இசையார் – பலராமன் முதலிய யதுவமிசத்தரசர்கள்
உடன்படார்’, என்று- என்று ஆலோசித்து, பார்த்தன் – அருச்சுனன்,
பாங்குடனே -உரிமையுடனே, தனக்கு உயிர் ஆம் துளபம் மௌலி பரந்தாமன்
தனை நினைந்தான்ஆக – தனக்கு உயிர்போன்றவனான
திருத்துழாய்மாலையைத்தரித்த முடியையுடையஸ்ரீகிருஷ்ணனை நினைத்தானாக, பூ
கமலம் மலர் ஓடை அனையான்-பொலிவுள்ளதாமரைமலரோடையைப்
போன்றவனான அப்பெருமான், தான்உம் பொன் நெடுந் தேர்பாகன் உம் ஏ ஆக
போந்து – தானும்பொன்மயமானபெரிய (தனது) தேரைச்செலுத்துகிற சாரதியுமேயாக
(ஏகாந்தமாய்ப்) புறப்பட்டு, நீங்கு அரிய நண்பினன் ஆய்நெடு நாள் நீங்கும்
நேயத்தோன் நினைவின்வழிநேர்பட்டான் – பிரிதற்கு அரியநண்பனாய்
பலநாளாக (த் தன்னை)ப்பிரிந்திருந்த அன்புடையோனான அருச்சுனன்
நினைத்தபடியே அவனெதிரில் வந்து தோன்றினான்; (எ-று.)
பரந்தாமன் – எல்லா ஒளிகளிலும் மேம்பட்டஒளியையுடையவ னென்றும்,
எல்லாஇடங்களிலும் மேலான இடத்தை யுடையவனென்றும் பொருள்படும்.
திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் திருநாபி முதலிய பலஉறுப்புகள்
தாமரைமலர்போலிருக்கப் பசுஞ்சாமத் திருமேனிநிறம்தாமரையிலை போலுதலால்,
‘பூங்கமல மலரோடையானையான்’ என்றார். இடருற்றுத்தன்னையடைந்தோர்க்கு
அவ்விடர் தவிர்த்துக் குளிர்ந்தகருணைசெய்பவ னென்பது, ‘ஓடையனையான்’
என்றதனால் விளங்கும்.
யதி ஆகி அவண் இருந்த தோழன்தன்னை யது குல நாயகன்
பரிவோடு இறைஞ்ச, அன்பால்
அதியான நெடுஞ் சுருதி ஆசி கூறி, ஆகம் உறத் தழீஇ,
மகிழ்வுற்று, ஆல நீழல்
மதி ஆர் செஞ் சடை முடியோன் என்ன வைகி, வந்தவாறு
உரைப்ப, நெடுமாலும் கேட்டு,
துதியாடி, ‘காலையிலே வருதும்’ என்று, சொற்று, இமைப்பில்
மீளவும் போய், துவரை சேர்ந்தான்.-கண்ணன் அருச்சுனனை வந்த காரியம் வினவித்
துவாரகை சேர்தல்.
யதி ஆகி அவண் இருந்த தோழன் தன்னை – சன்னியாசியாய்
அவ்விடத்திலேயிருந்த நண்பனான அருச்சுனனை, யது குலம் நாயகன் –
யதுகுலத்துக்குத் தலைவனான கண்ணன், பரிவோடு இறைஞ்ச – அன்போடு
வணங்க,(அவ்வருச்சுனன்), அன்பால் – அன்போடு, அதி ஆன நெடுஞ் சுருதி
ஆசி கூறி -மிகுதியான பெரிய வேதவாக்கியங்களைக்கொண்டு (கண்ணனுக்கு)
ஆசீர்வாதஞ்செய்து, ஆகம்உற தழீஇ மகிழ்உற்று – (தன்மார்பிலே அவன்) மார்பு
பொருந்தத்தழுவி மகிழ்ச்சியுற்று, ஆலம் நீழல் மதி ஆர் செம் சடை முடியோன்
என்ன வைகி -ஆலமரத்தினது நிழலிலே சந்திரன் பொருந்திய சிவந்த
சடையையுடையனானசிவபிரான்போல் வீற்றிருந்து, வந்தஆறு உரைப்ப – (தான்)
வந்தகாரியத்தைச் சொல்ல, நெடுமால்உம் – மகாவிஷ்ணுவாகிய கண்ணபிரானும்,
கேட்டு -(அதனைக்) கேட்டு, துதி ஆடி – கொண்டாடி, காலையில் வருதும்
என்றுசொற்று – ‘மறுநாளுதயகாலத்தில் வருவோம்’ என்று சொல்லி, இமைப்பில்
மீளஉம் போய் துவரைசேர்ந்தான் – இமைப்பொழுதிலே திரும்பவும் சென்று
துவாரகையை யடைந்தான்;
தக்ஷிணாமூர்த்திவடிவமான சிவபெருமான் கைலாசகிரியிற் கல்லாலமரத்தின்
கீழ்வீற்றிருத்தலை நூல்கள் கூறும்.
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர்
வாழ் சனம் அனைத்தும் அந்தக் குன்றில்
மாதவனது ஏவலினால், மழைக் காலத்து, வாசவற்கு விழா
அயர்வான் வந்தகாலை,
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர,
நறுந் தார் இராமன் வந்தான்;
சூது அடர் பச்சிளங் கொங்கை, பச்சை மேனி, சுபத்திரையும்
தோழியர்கள் சூழ, வந்தாள்.-மறுநாள்விடியுமுன் அம்மலையில் இந்திரவிழவுக்காகப் பலவேந்தர்
சூழப் பலராமன் வருதலும் தோழியருடன்
சுபத்திரை வருதலும்.
ஆதவன் வந்து உதிப்பதன் முன் – சூரியன்வந்துதோன்றுவதற்கு
முன்னம் [பொழுதுவிடியுமுன்னமே], மற்றை நாளில்-, அணி நகர் வாழ்
சனம் அனைத்துஉம் – அழகிய துவாரகையில் வசிக்கின்ற சனங்களெல்லாம், அந்த
குன்றில் – அந்த இரைவதகமலையிலே, மாதவனது ஏவலினால் –
க்ருஷ்ணனுடையகட்டளையினாலே, மழைக்காலத்து வாசவற்கு விழா அயர்வான் –
மழைக்காலத்திலே செய்யப்படுகிற இந்திரபூசையைச் செய்யும்பொருட்டு, வந்தகாலை
– வந்தபோது,- யாதவரில் – யதுகுலத்தாரிலும், போசரில் – போசகுலத்தாரிலும்,
மற்றுஉள்ள வேந்தர் – மற்றுமுள்ளவேந்தரிலுமுள்ள, யாவர்உம் – எல்லோரும்,
சூழ்வர – சூழ்ந்திருக்க, நறுந்தார் இராமன் – நறுமணமுள்ள மாலையையணிந்த
பலராமன், வந்தான்-: சூது அடர் பசு இளங் கொங்கை பச்சை மேனி சுபத்திரைஉம்
– சூதாடுகருவியை வெல்லுகின்ற பசிய இளைய தனங்களையும் பசிய
உடலையுமுடைய சுபத்திரையும், தோழியர்கள் சூழ – தோழிமார்கள் சூழ, வந்தாள்
– (அங்கே) வந்தாள்; (எ -று.)
அருச்சுனன் சுபத்திரையை மணத்தல் எளிதில் நிகழ்வதற்கு ஸ்ரீகிருஷ்ணன்
இந்திரவிழா என்ற ஒருவியாஜம்வைத்து இங்ஙன் யாவரையும் கூடுமாறு
ஏவினனென்க.
முக்கோலும், கமண்டலமும், செங்கல் தூசும், முந்நூலும்,
சிகையுமாய் முதிர்ந்து தோன்றும்
அக் கோலம் அனைவரும் கைதொழுது, நோக்கி, அருள் நலம்
பெற்று அகன்றதன் பின், அனைத்து உலோகத்து
எக் கோல யோனிகட்கும் உயிராய், தோற்றம் ஈர்-ஐந்தாய்,
பாற்கடலினிடையே வைகும்
மைக் கோல முகில் வண்ணன்தானும் எய்தி, மன வணக்கம்
புரிவோனை வணங்கினானே.-அனைவரும் அருச்சுனசன்னியாசியை வணங்கின பின்பு கண்ணன்
வந்து வணங்குதல்.
முக்கோல்உம் – திரிதண்டமும், கமண்டலம்உம் – ஜலபாத்திரமும்,
செங்கல் தூசுஉம் – காவிவஸ்திரமும், முந்நூல்உம் – பூணூலும், சிகைஉம் –
குடுமியும்,(ஆகிய வைஷ்ணவசன்னியாசிகளுக்கு உரிய ஐந்து அடையாளங்களும்),
ஆய் -பொருந்தி, முதிர்ந்து தோன்றும் – பூர்ணமாய் விளங்குகிற, அ கோலம் –
அந்தத்துறவிவடிவத்தை, அனைவர்உம் -(கீழ்ச்சொன்ன பலராமன் முதலியோர்)
எல்லோரும்,நோக்கி – பார்த்து [தரிசித்து], கைதொழுது – கைகூப்பிநமஸ்கரித்து,
அருள் நலம்பெற்று – (அச்சன்னியாசியினுடைய) கருணையாகிய நல்ல
அநுக்கிரகத்தைப் பெற்று,அகன்ற தன் பின் – நீங்கின பின்பு, அனைத்து
லோகத்து – சகலலோகங்களிலுமுள்ள,எக் கோலம் யோனிகட்கும்உம் –
பலவகைவடிவமுள்ள எல்லாப்பிறப்புக்களிலும்வாழ்கிற உயிர்களனைத்துக்கும்,
உயிர் ஆய் – உயிராகி, தோற்றம் ஈர்ஐந்து ஆய் -பத்துவகைப்பிறப்புக்கள்
கொண்டு, பாற்கடலின் இடையே வைகும் – திருப்பாற்கடலின் நடுவிலே
(வியூகமூர்த்தியாய்) எழுந்தருளியிருக்கிற, மை கோலம் முகில்வண்ணன்
தான்உம் -கருநிறமான அழகிய மேகம்போன்ற திருமேனி நிறத்தையுடையவனான
ஸ்ரீகிருஷ்ணனும், எய்தி – அருகில் வந்து, மனவணக்கம் புரிவோனை
வணங்கினான் -(தன்னை) மனத்தால்வணங்குதல்செய்பவபனான அருச்சுனனை
(த்தான்காயத்தால் )வணங்கினான்; (எ-று.)
முக்கோலும் கமண்டலமும் செங்கல்தூசும் முந்நூலும்சிகையும் என்ற இவை
‘துறவிகள் பஞ்சமுத்திரை’ எனப்படும்; அங்கிராவென்னும் முனிவர் கூறின
யதிலக்ஷணம் இத்தன்மைத்தே: வட மொழி மகாபாரதத்திலும்இங்ஙனமே
யதிலக்ஷணம் கூறப்பட்டுள்ளது. ‘தோற்றமீரைந்து’ என்றது – மத்ஸயம்,கூர்மம்,
வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், தசரதராமன், பலராமன்,கிருஷ்ணன்,
கல்கி என்ற தசாவதாரங்களை யுணர்த்தும். கர்மவசத்தால்ஜீவாத்மாக்களுக்கு நேர்கிற
ஜந்மங்கள் போலன்றி இவ்வவதாரங்கள் பரமாத்மாவினால்துஷ்ட
நிக்கிரகசிஷ்டபரிபாலனத்தின் பொருட்டு இச்சாமாத்திரத்தாற் கொள்ளப்படுகின்றன
வென்பதனை யறிக. திருமாலுக்கு மற்றும் பற்பல அவதாரங்கள் நூல்களிற்
கூறப்படினும் இப்பத்துமே முக்கியவவதாரங்களாமென உணர்க. திருப்பாற்கடலி
லெழுந்தருளியிருக்கிற வியூகமூர்த்திகள் – வாசுதேவன், சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன்,
அநிருத்தன் என நான்காம்.
துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்தகாலை, சுபத்திரை
அத் தடங் குன்றின் சூழல் ஓர் சார்,
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப் படலும்,
மெய் புளகம் மேன்மேல் ஏறி,
கன்னி இளந் தளிர்க் கடம்பு மலர்ந்தது என்னக் கண்ட விழி
இமையாத காட்சி காணா,
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன்
மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே,-இதுவும், அடுத்த கவியும் – குளகம்; கண்ணன் அருச்சுனனுக்குச்
சூழ்ச்சிசொல்லிச் சுபத்திரையை அம்முனிவனுக்குப் பணிவிடை புரியுமாறு
பணித்தல்.
இருவர்உம் – (அருச்சுனன் கிருஷ்ணன் என்ற) இரண்டுபேரும்,
துன்னி- சந்தித்து, ஒருப்பட்டு – (மனம்) ஒருமைப்பட்டு, இருந்தகாலை –
(ஏகாந்தத்தில்)இருந்தபொழுது,- சுபத்திரை-, அ தட குன்றின் சூழல் ஓர்சார் –
பெரிய அந்த ரைவதகமலையின் சாரலில் ஓரிடத்தில், பைம் புயலின் மின்னிய
எழில் இரேகைபோலவெளிப்படலும் – காளமேகத்தில் மின்னிய (மின்னலின்)
அழகியதோற்றம்போலத்தோன்றியவளவில், (அருச்சுனன்), மெய் மேல்மேல்
புளகம்ஏறி- உடம்பு மேல்மேல் மிகுதியாக மயிர்ச் சிலிர்ப்புகொள்ளப்பெற்று,
கன்னி இளந் தனிகடம்பு மலர்ந்தது என்ன – மிகவும் இளமையான ஒருகடப்பமரம்
மலர்ந்தாற்போல,கண்ட விழி இமையாத – (அவளைப்) பார்த்த கண்கள்
இமையாதபடி யிருக்கிற, காட்சி- தோற்றத்தை, காணா- கண்டு,- மந்தம் மூரல்
மாதவன் – புன்சிரிப்பையுடையனானகண்ணபிரான், மைத்துனமையினால் – (தனக்கு
அவன்) மைத்துனனாகும்முறைமையினால், மகிழ்ச்சிகூர்ந்து – (அவன்விஷயத்தில்)
மகிழ்ச்சி மிகுந்து, மன்னியமா தவத்தோனை – பொருந்திய சிறந்த
தவவேடத்தையுடையனானஅவ்வருச்சுனனைநோக்கி,- (எ-று.)- ‘கூறி’ (57)
எனத்தொடரும்.
ஸு பத்ரா – மங்களகரமான நல் லிலக்கணமமைந்தவ ளென்க. மைத்துனமை –
கண்ணனுக்கு அருச்சுனன் அத்தைமகனாகும் உரிமை; அருச்சுனன் கண்ணனது
தந்தையான வசுதேவனுக்கு உடன்பிறந்தவளான குந்தியின் குமாரனாதல் காண்க.
அருச்சுனன் கொண்டுள்ள கபடசன்னியாசிவேஷத்தின்நிலைமையைத்
திருவுள்ளம்பற்றிக் கண்ணபிரான் புன்முறுவல் கொண்டனன்.
அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின்
இசையலர்; பலர் இங்கு அறிவுறாமல்,
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக!’ என்றும், ‘காவலர்க்குக்
கடன்’ என்றும், கசியக் கூறி,
கொடி இடை வெங் களப முலைக் கன்னி மானைக் கூய், ‘அணங்கே!
மெய்ம்மை உறக் கொண்ட கோலப்
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி’
என்று பணித்திட்டானே..
அடிகள் திருஉளத்து எண்ணம் – சுவாமிகளுடைய திருவுள்ளக்
கருத்தை, எம்மனோர்கள் அறியின் – எம்மவர்கள் அறிந்தால், பலர் இசையலர் –
(அதற்குப்) பலர் இணங்கமாட்டார்: (ஆதலால்), இங்கு – இவ்விடத்தில், அறிவு
உறாமல்(அவர்கள்) அறியாதபடி [ரகசியமாக], கடி அயர்வுஉற்று – (சுபத்திரையை)
விவாகஞ்செய்துகொண்டு, உம் பதி கொண்டு அடைக – உமது நகரத்துக்கு
(அவளை)உடன் அழைத்துக்கொண்டு சென்று சேர்வீராக’, என்றும்-, காவலர்க்கு
கடன்என்றும்- ‘(இங்ஙனம் பலருமறியாதபடி ஒரு கன்னிகையை மணந்து
உடன்கொண்டு செல்லுதல்)அரசர்கட்கு முறைமையே’ என்றும், கசியகூறி –
(அவ்வருச்சுனது மனம்) மகிழும்படி(ஏகாந்தத்திற்) சொல்லி,- கொடி இடைவெம்
களபம்முலைகன்னிமானைகூய் -பூங்கொடிபோன்ற [நுண்ணிய] இடையையும்
விரும்பப்படுங் கலவைச்சந்தனமணிந்ததனங்களையுமுடைய இளமையான
மான்போன்ற சுபத்திரையையழைத்து, ‘அணங்கே – பெண்ணே! மெய்ம்மை உற
கொண்ட கோலம் படிவம்முனிக்கு – உண்மையாகக்கொண்ட அழகிய
சன்னியாசிவேஷத்தையுடையஇம்முனிவனுக்கு, நீ-, இரு பருவம் – நான்கு
மாசகாலம், பரிவுடன் -அன்போடு,பணித்த ஏவல் புரி – நியமித்த குற்றேவல்களைச்
செய்வாய்,’ என்றுபணித்திட்டான்-என்று கட்டளையிட்டான்; (எ-று.)
சுபத்திரையை துரியோதனனுக்கு மணஞ்செய்விக்கவேண்டு மென்பது
மூத்தவனான பலராமனது உத்தேச மாதலால், ‘அடிகள் திருவுளத்து எண்ணம்
எம்மனோர்கள் அறியின் இசையலர்பலர்’ என்றான். கண்ணனுக்கு
அருச்சுனன்பக்கலுள்ள சினேகவாற் சலியம் விளங்க ‘கசியக்கூறி ‘ என்றார்.
ஒருநாளுக்கு மேல் ஓர் ஊரில் தங்காமல்கிராமைகராத்திரமாய்த்திரியும்
முறைமையையுடையரான சன்னியாசிகள் மழைக்காலமாகிய நான்கு மாசங்களில்
மாத்திரம் ஒரேயிடத்தில் வசித்திருக்கலா மென்பது, நூற்கொள்கை; அந்தச்
சாதுர்மாஸ்யஸங்கல்பவிதிப்படி இத்துறவி இப்பொழுது இங்கு நான்குமாசகாலம்
இருப்பா னென்றுகொண்டு, ‘இருபருவம்’ என்றான். பருவம், இருது என்ன –
ஒருபொருளன.
உள் அடங்கிய காம வெங் கனல் புறத்து ஓடிக்
கொள்ளை கொண்டு உடல் மறைத்தென, கூறையும் தானும்
மெள்ள வந்து, தன் கடி மனை மேவிய வேடக்
கள்ள வஞ்சனை அறிந்திலள், கற்புடைக் கன்னி.-சுபத்திரை அருச்சுனனுடைய கள்ளவேடத்தை
யறியாமை.
உள் அடங்கிய மனத்திற்குள் அடங்கியிருக்கிற, காமம் வெம் கனல் –
காமமாகிய கொடியநெருப்பு, புறத்துஓடி- வெளியேசென்று, கொள்ளைகொண்டு –
கவர்ந்துகொண்டு, உடல் மறைத்துஎன – உடலைமறைத்தாற்போல, கூறைஉம் –
காவிவஸ்திரமும், தான்உம் – தானுமாக, மெள்ளவந்து-, தன் கடி மனை மேவிய –
தன்னுடைய சிறப்புள்ள மனையிலேபொருந்திய, கள்ளம்வேடம்வஞ்சனை –
பொய்யாகச் சன்னியாசிவேடம்பூண்டுள்ள வஞ்சகத்தையுடையனான அருச்சுனனை,
கற்புஉடை கன்னி – கற்பினையுடைய கன்னிகையான சுபத்திரை, அறிந்திலள் –
அறித்தாளில்லை; (எ-று.)
சன்னியாசிவேடம்பூண்டுவந்துள்ளவன் அருச்சுனனே யென்பது
சுபத்திரையாலறியப்படவில்லையென்பதாம். காஷாயவஸ்திரந் தரித்திருப்பதை,
உள்ளேயிருக்கிற காமக்கனல் புறத்திலும்வந்து அருச்சுனனைக்கொள்ளை
கொண்டதோஎன்னுமாறுள்ளது எனத் தன்மைத்தற்குறிப்பேற்றவணிபடக் கூறினார்.
கனலும் காவியாடையும் செந்நிறமாதல், இங்கன் வருணித்தற்கு ஒருகாரணம்.
சுபத்திரையைப் பிறரறியாமல்மணப்பதற்கே இந்தவேடம்பூண்டிருத்தலால்,
‘கள்ளவேடவஞ்சன்’ என்றது.
இதுமுதல் இருபத்தொரு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றை மூன்றும்விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்
ஈங்கு வந்தது என் தவப் பயன்’ என்று கொண்டு எண்ணி,
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அருந் தவன் துயில,
தூங்கு கண்ணினள் சுபத்திரை, தோழியர் பலரும்
பாங்கு வைக, மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள்.-இரவில் அருச்சுனன்ஓரறையிற் படுக்க, மற்றோரறையிற்
சுபத்திரை தன்பாங்கியருடன் துயிலுதல்.
‘ஈங்கு – இங்கே, வந்தது- (சுபத்திரை) வந்தது, என்தவம் பயன்,-
‘என்றுகொண்டு எண்ணி – என்று நினைத்து, அருந்தவன் – அரிய
சன்னியாசிவேடம்பூண்ட அருச்சுனன், ஆங்கு – அங்கே, உவந்து – மகிழ்ந்து,
ஒருமனையிடை – ஓரறையிலே, துயில – நித்திரைசெய்வான்போலிருக்க,-
சுபத்திரை-,தூங்கு கண்ணினள் – நித்திரைக்குறிப்புத்தோன்றியகண்ணினளாக,
(உடனே), மற்றொருமனைபுகுந்து – வேறோரறையிலே சேர்ந்து, தோழியர்
பலரும்-, பாங்கு வைக -அருகே தங்கியிருக்க, கண்படுத்தாள் – துயில்பவளானாள்;
(எ-று.)-என்றுகொண்டுஎன்பதில், ‘கொண்டுஎன்பது அசைநிலை.
புடவி எங்கணும் புதைய, வான் பொழிதரு புனலால்,
அடவி ஆர் அழல் அவியவும், அவிந்திலது, ஐயோ!-
தடவி வாடை மெய் கொளுத்திட, தனஞ்சயற்கு அணங்கின்
விட விலோசனக் கடை தரு விரக வெங் கனலே.-இதுமுதல்மூன்றுகவிகள் – அருச்சுனனுடைய காம
தாபத்தைத் தெரிவிக்கும்.
வாடை – வாடைக்காற்று, மெய்-உடலை, தடவி-, தனஞ்சயற்கு –
அருச்சுனனுக்கு, கொளுத்திட – தாபத்தைமிகுவியாநிற்க, அணங்கின் –
தெய்வப்பெண்போன்ற சுபத்திரையின், விடம் விலோசனம்கடை – விடத்தின்
தன்மையைக்கொண்ட[வருத்துகின்ற] கடைக்கண்பார்வை, தரு – தந்த,
விரகம்வெம்கனல் – பிரிவுத்துயராலாகிய நெருப்பானது, புடவி எங்கண்உம்
புதைய -பூமிமுழுவதும்மறைந்திருக்கும்படி, வான் – மேகம், பொழிதரு – பொழிந்த,
புனலால் -நீரினால், அடவி – காட்டிலுள்ள, ஆர் அழல் – நிரம்பிய அக்கினி,
அவியஉம் -அவிந்திடாநிற்கவும், அவிந்திலது-: ஐயோ-!!(எ-று.)
மழைக்காலமாதலால் பூமியெங்கணும் நீரில் அமிழ்ந்திடா நிற்கவே
அவிதற்கரியகாட்டுத்தீயும் அவியவும், அருச்சுனனுக்குச் சுபத்திரையின்
கடைக்கண்பார்வையால்தோன்றிய காமத்தீ அவிந்திலதே! அந்தோ!! என்று இரங்கிக்
கூறியவாறு. காட்டுத்தீயும் அவியுமாறு புனல் பொழிந்திடவும், (விரக) வெங்
கனலவியவில்லை யென்ற இது – காரணமிருக்கவும் காரியந்தோன்றாமையாகிய
சிறப்புநவிற்சியணி [விஸேஷோக்தி] யாகும். ஐயோ – இரக்குக்குறிப்பு.
மதன லீலையில் பழுது அற வழிபடும் பாவை
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும், மருண்டு, அச்
சதனம் மேவரும் தபோதனன்தனக்கு, வெம் மோக
விதன வல் இருள் விடிந்திலது, ஆர் இருள் விடிந்தும்.
ஆர் இருள்விடிந்துஉம் – (கழிதற்கு) அரியதாயிருந்த கங்குற் போது
புலர்ந்தும், மருண்டு – காமமயக்கத்தைக்கொண்டு அ சதனம் மேவரும் –
அந்தமனையிலே தங்கியிருக்கிற, தபோதனன் தனக்கு – சன்னியாசிவேடம்பூண்ட
அருச்சுனனுக்கு, மதன(ன்) லீலையில் பழுது அற வழிபடும் பாவை –
மன்மதலீலையிலே குற்றமற்ற வழிபாடும் செய்தற்கும் உரியளான
சித்திரப்பிரதிமைபோன்ற சுபத்திரையின், வதனம் வாள்மதி – முகமாகியஒளியுள்ள
[பதினாறு கலைகளும் நிரம்பிய] சந்திரன், வந்து-, முன்நிற்கஉம்-, வெம் மோகம்
விதனம் வல் இருள் – கொடிய காமமோகத்தினால் நேர்ந்த விதனமாகிய கொடிய
இருள், விடிந்திலுது – நீங்கிற்றில்லை; (எ -று.)
மதிநிற்கவும்இருள்விடிந்திலது என்றது – முன்னையசெய்யுளிற் போலவே சிறப்புநவிற்சியணியாம். இதற்கு – வதனவாண்மதி, விதன வல்லிருள் என்ற உருவகவணிஅங்கமாய்வந்தது
அற்றை நாள் முதல் அநேக நாள், அகில் மணம் கமழும்
கற்றை வார் குழல் கன்னிகை வழிபடக் கருத்தால்,
‘இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம்!’ என்று என்று,
ஒற்றை அன்றில்போல் மெய்ம் மெலிந்து, உள்ளமும், உடைந்தான்.
அற்றை நாள்முதல் – அன்றைத்தினமுதல், அனேகம் நாள் –
பலநாள்,அகில் மணம் கமழும் கற்றை வார் குழல் கன்னிகை – அகிலின் வாசனை
வீசுகின்றதொகுதியானநீண்டகூந்தலையுடைய கன்னிகையாகிய சுபத்திரை,
கருத்தால் -மனப்பூர்வமாக, வழிபட – (க்ருஷ்ணன்மொழிப்படியே) வழிபாடு
செய்யாநிற்கையில்,- ‘இற்றை மா மதன் பூசலுக்கு – இப்போது கொடிய மன்மதன்
விளைக்கின்ற போருக்கு, என் செய்வோம் – என்னசெய்யக்கடவோம்?’ என்று
என்று – என்றுசிந்தைகொண்டு, (அருச்சுனன்),- ஒற்றை அன்றில் போல் –
பேடையைப்பிரிந்திருக்கும் ஆணன்றில்போல, மெய் மெலிந்து – உடல்தளர்ச்சியுற்று,
உள்ளம் உம் உடைந்தான் -மனமும் வருந்தினான்;(எ -று.)
அன்றிற்பறவையின் ஆண் தன் பேடையைக் கணப்போது பிரிந்தாலும்
அத்துயரத்தைப்பொறாமல் இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி, பின்பும்
அத்துணையைக்கூடாவிடில்உடனேயிறந்துபடும்.
நல் இலக்கணம் பலவுடை அவயவ நலத்தால்,
வில் இலக்கணத் தழும்புடைக் கரங்களால், மிகவும்
தொல் இலக்கணம் பலவுடைச் சுபத்திரை, ஒரு தன்
இல்லில் அக் கணவனை, ‘இவன் யார்கொல்!’ என்று அயிர்த்தாள்.-சில அடையாளங்களாற் சுபத்திரை
அச்சன்னியாசியைக் குறித்துச் சங்கித்தல்.
தொல் இலக்கணம் பல உடை சுபத்திரை – (நூல்களிற் கூறப்பட்டுத்)
தொன்றுதொட்டுவருகிற உத்தமஸ்திரீலக்ஷணங்கள் பலவற்றையுமுடைய
சுபத்திரையானவள்,- நல் இலக்கணம் பல உடை அவயவம் நலத்தால் –
(ஆடவர்க்குஉரிய) உத்தமலக்ஷணங்கள் பலவற்றையுமுடைய (அத்துறவியினது)
உறுப்புக்களின் அழகினாலும்,இலக்கணம் வில் தழும்பு உடை
கரங்களால் – நல்லிலக்கணமமைந்த வில்லின் தழும்புகளைக்கொண்ட
கைகளினாலும், ஒரு தன் இல்லில் அ கணவனை – ஒப்பற்ற தன் வீட்டில்
தனியனாயிருக்கிற (தனக்குக்)கணவனாகும் அவனை, இவன் யார் கொல் என்று
மிகவும் அயிர்த்தாள்- “இவன்யாரோ” என்று மிகவும் சந்தேகித்தாள்; (எ-று.)
வில்தழும்பு – சீவகசிந்தாமணியில் தடமித்தனென்னும் அரசன் சீவகனது
கைகளின் வில்தழும்புகண்டே அவனை விற்றொழிலில்வல்லவ னென்று
நன்குமதித்தமை கூறுமிடத்து ‘முன்கைச்சந்துக்கும் முழங்கைக்கும் இடையில்
முன்கைச்சந்தைச் சேர்ந்து உத்தமவிலக்கணத்தையுடைய கைவிரல்களைந்துக்கு
அருகேயானைத் தோலிற் சுண்ணாம்பையுரைத்ததுபோலக் காழ்ப்பேறி
வெண்ணிறங்கொண்டுசிறுமீன்வடிவமாய்த் தோன்றுகிற மூன்று விரல் நீளமுள்ள
சிலைத்தழும்பு’ என்றதுமுதலிய காண்க.
மங்கை, அங்கு ஒரு நாள், அவன் மலர் அடி வணங்கி,
‘எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும்,
தங்கும் மா நகர் யாது?’ என, தபோதனன்தானும்,
‘எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம்’ என்று இசைத்தான்.-இரண்டுகவிகள் – சுபத்திரைக்கும் அருச்சுனனுக்கும்
நடந்த சம்பாஷணையைக் கூறும்.
மங்கை – மங்கைப்பருவமுடையளான சுபத்திரை, அங்கு –
அவ்விடத்தில், ஒருநாள்,- அவன் மலர் அடி வணங்கி – அம்முனிவனுடைய
தாமரைமலர்போன்ற பாதங்களை நமஸ்கரித்து, வண் புனல் ஆடுதற்கு எங்குஉம்
ஏகினீர் எனின்உம் – சிறந்த புண்ணியதீர்த்தங்களில் நீராடுதற்கு எல்லாவிடங்களிலும்
சென்றீராயினும், தங்கும் மா நகர் யாது – தேவரீர் எழுந்தருளி யிருக்கும்
சிறந்தநகரம் எது? என – என்றுவினாவ,-தபோதனன் தான்உம் – அம்முனிவனும்,
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்ற இசைத்தான் – எமது சிறந்தநகரம்
இந்திரப்பிரத்த மென்று விடைகூறினான்; (எ-று.)
மங்கைப்பருவத்திற்கு வயதெல்லை- பன்னிரண்டு பதின் மூன்று பிராயங்கள்.
தபோதநன் – வடசொல்; தவத்தை தனமாக வுடையவன்; அனைவரும் செல்வத்தை
விரும்பி ஈட்டிப் பாதுகாத்தல் போலத் தவத்தை விரும்பியீட்டிப் பாதுகாப்பவன்.
என்ற காலையில், இந்திரன் மதலையை ஒழிய,
நின்ற பேரை அந் நெடுங் கணாள் வினவலும், நிருபன்,
‘வென்றி மன்னவர் யாரையும் வினவினை; மின்னே!
மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என்?’ என்றான்.
என்றகாலையில் – என்று (முனிவன்) விடைகூறிய பொழுது,- அ
நெடுங்கணாள் – நீண்டகண்களையுடையளான அச்சுபத்திரை, இந்திரன் மதலையை
ஒழியநின்ற பேரை வினவலும் – அருச்சுனனைத்தவிர மற்றைத்தருமன்
முதலியோரைக்குறித்து (யோகக்ஷேமம்) விசாரித்தவளவிலே,- நிருபன் –
அருச்சுனன்.- (அவளை நோக்கி), ‘மின்னே -மின்னல்போன்றவளே! வென்றி
மன்னவர்யாரைஉம் வினவினை – வெற்றியையுடைய அரசரெல்லோரையுங் குறித்து
வினாவினாய்; மன்றல் அம் தொடைவிசயனை மறந்ததுஎன் – வாசனையுள்ள
அழகியமலர்மாலையையுடைய அருச்சுனனை (நீ) மறந்ததுயாதுகாரணத்தால்?’
என்றான்- என்றுவினாவினான்.
யாழின் மென் மொழி, எங்கள் நாயகி இவள், அவனுக்கு
ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியள்ஆதலினால்,
வாழி வெஞ் சிலை விசயனை மறைத்தனள்’ என்னா,
தோழி நின்றவள் ஒருத்தி, கை தொழுதனள், சொன்னாள்-இதுவும் அடுத்த கவியும் – தோழிவார்த்தை.
நின்றவள் தோழி ஒருத்தி – (அப்பொழுது அங்கு) நின்ற
சுபத்திரையின் தோழியொருத்தி, கை தொழுதனள் – (துறவியைக்) கைகூப்பி
வணங்கி,- ‘யாழின் மொல்மொழி எங்கள் நாயகி இவள் – வீணையினிசைபோல
மெல்லிய [இனிய]சொற்களையுடைய எங்கள் தலைவியாகிய இவள், அவனுக்கு –
அவ்வருச்சுனனக்கு,ஊழின் அன்பு உடை மன்றலுக்கு உரியள் ஆதலினால் –
முறைப்படி யமைந்தஅன்புடைய விவாகத்துக்கு உரியவளாதலால், வெம் சிலை
விசயனை மறைத்தனள் -கொடியவில்லையுடைய அருச்சுனனைக்குறித்து
(வினவாமல்) மறைத்தாள்,’ என்னா -என்று, சோன்னாள்-; (எ-று.)
இவள் அருச்சுனனை மணஞ்செய்துகொள்ளும் விருப்புடைய ளாதலால்,
நாணம்பற்றி, அவனை வினாவில ளென்றனளென்பதாம். வாழி – அசை
‘பங்குனன் பெருந் தீர்த்த நீர் படிவதற்காகப்
பொங்கு தெண் திரைப் புவி வலம் போந்தனன்’ என்றே,
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர்; அவன் இப்போது
எங்கு உளான் எனத் தெரியுமோ, அடிகளுக்கு?’ என்றாள்.
பங்குனன் – அருச்சுனன், பெருந் தீர்த்தம்நீர் படிவதற்கு ஆக –
சிறந்தபுண்ணியதீர்த்தங்களில் நீராடும்பொருட்டு, பொங்கு தெள் திரை புவி வலம்
போந்தனன்- பொங்குகிற தெளிவான அலைகளையுடைய கடலினாற் சூழப்பட்ட
பூமியிற்பிரதக்ஷிணமாகச் சென்றனன்’, என்று-, அங்கு நின்று வந்தவர்
உரைத்தனர் -அவ்விந்திரப்பிரத்தநகரத்தினின்று வந்தவர்கள் சொன்னார்கள்;
அவன் இப்போது எங்குஉளான் என அடிகளுக்கு தெரியும்ஓ – அவன் இப்பொழுது
எவ்விடத்திலிருக்கிறானென்று சுவாமிகளுக்குத் தெரியுமோ? என்றாள்-என்றும்
வினாவினாள்;
சங்கித்த சுபத்திரையே வினவியதாகப் பாலபாரத்தி லுள்ளது. ‘என’ என்ற
செயவெனெச்சத்துக்கு ‘என்பது’ எனத் தொழிற்பெயராகப் பொருள் கொண்டு,
அதனை ‘தெரியுமோ’ என்ற வினைமுற்றுக்கு எழுவாயாக்குக
பாங்கி நல் உரை தன் செவிப் படுதலும், ‘விசயன்
தீங்கு இலன்; பல திசைகளும் சென்று, நீராடி,
கோங்கு இளங் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால்,
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன்’ என்றான்.-வினவிய பாங்கிக்கு அருச்சுனன் கூறிய விடை.
பாங்கி நல் உரை – தோழிகூறிய நல்லவார்த்தை, தன் செவி
படுதலும் -தன்காதிற் பட்டவுடனே, விசயன்- அருச்சுனன்,- பல திசைகள்உம்
சென்று நீர் ஆடி- பலதிக்குக்களிலும் சென்று புண்ணிய தீர்த்தங்களில்
ஸ்நாநஞ்செய்து, தீங்குஇலன் -யாதோரூறுபாடும் இன்றி இனிதுவாழ்பவனாகி,
கோங்கு இளங் கொழு முகை நிகர்கொங்கையாள் பொருட்டால் – கோங்கினது
இளைய வளப்பமுள்ள அரும்பையொத்ததனங்களையுடையாளின் [சுபத்திரையின்]
பொருட்டாக, ஈங்குவந்து -இந்தப்பதியிலேவந்து, நும் இல்லிடை –
உம்முடையவீட்டில்தானே, இருந்தனன்-, என்றான் – என்று உத்தரமளித்தான்;
(எ-று.)
தன்னை இன்னானென்று தெரிவித்தற்கு ஏற்றதாயிருந்ததனால் ‘நல்லுரை’
என்றார். தன்னைப்படர்க்கையாற் கூறி அருச்சுனன் தெரிவித்தா னென்க.
யதி உரைத்த சொல் கேட்டலும், யாதவி நுதல் வாள்
மதி வியர்த்தது; துடித்தது, குமுத வாய் மலரும்;
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின, புளகம்;-
பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ?-அந்தச்சொல்லால் யதியை அருச்சுனனேயென்று
அறிந்து சுபத்திரை காமக்குறிப்புக் கொள்ளுதல்.
யதி – அந்த அருச்சுன சன்னியாசி, உரைத்த – கூறிய, சொல் –
சொல்லை,கேட்டலும் – கேட்டவுடனே, யாதவி – யதுகுலத்திற் பிறந்தவளான
சுபத்திரையின், நுதல் வாள் மதி – நெற்றியாகிய ஒளியுள்ள சந்திரன், வியர்த்தது-;
வாய்குமுதம் மலர்உம் – வாயாகிய செவ்வாம்பல்மலரும், துடித்தது-; புதிய கச்சு
அணிகுரும்பைகள் – புதிய கச்சையணிந்த குரும்பை போன்ற தனங்கள், புளகம்
அரும்பின- மயிர்க்கூச்சு எறிந்தன; பதிஇடத்து – நாயகன் சமீபத்திலிருக்கும்போது,
அரிவையர்க்கு – மகளிர்க்கு, உளம் – மனம், ஆகுலம்படாதுஓ –
சஞ்சலமாதலையடையாதோ? (எ-று.)
அருச்சுனன் அருகிலிருத்தலாற் சுபத்திரையின்மனம் கலக்கமுற்றதென்று
முதல்மூன்றடிகளிற் கூறிய பொருளை ஈற்றடியிற் கூறிய பொதுப்பொருளாற்
சமர்த்தித்தார்; வேற்றுப்பொருள்வைப்பணி. நுதல் வாண்மதிவியர்த்தது,
வாய்க்குமுதமலர்துடித்தது என்பன – பரிணாமாலங்காரமென்னும் திரிபுஅணி:
நுதலைவாண்மதியாகவும் வாயைக் குமுதமாகவும் உருவகஞ்செய்தாரெனின்,
அவைவியர்த்தல் துடித்தல்என்ற தொழில்நிகழ்ச்சிக்கு ஏற்றனவாகாமை காண்க.
கச்சணிகுரும்பை – உருவகநவிற்சி.
உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர,
அகவு பச்சிளந் தோகைபோல் நின்ற அவ் அணங்கை,
மிக விருப்ப நோய் வளர்தலின், மெலிந்த தோள் விசயன்,
தகவுடைத் தன தடக் கையால் வளைக் கரம் தகைந்தான்.-அச்சமயத்தில் அருச்சுனன் சுபத்திரையைக்
கைப்பிடித்தல்.
உகவை – மகிழ்ச்சியினால், முத்தம்மெல் பவளம்உம் –
முத்துக்களையுடைய மென்மையான பவழம்போன்றசிவந்த வாயும், நீலம்உம் –
நீலோற்பலமலர்போன்ற கண்களும், ஒளிர – விளங்க, அகவு பசு இள
தோகைபோல்நின்ற – (கார்ப்பருவத்தில்) ஆடுகின்ற பசுநிறமான
இளமயில்போல (க் களித்து) நின்ற,அ அணங்கை – அந்தப்பெண்ணை
[சுபத்திரையை], விருப்பம் நோய் – மிகவளர்தலின் மெலிந்த தோள் விசயன் –
ஆசைநோய் மிகுதியாகவளர்ந்ததனாலிளைத்த தோள்களையுடைய அருச்சுனன்,
தகவு உடை தன தடகையால் – அழகையுடைய தனது நீண்ட கையினால், வளை
கரம் தகைந்தான் -வளையலை யணிந்த கையைப் பிடித்தான்;
வாயிற் பல்லினொளிசிறிது வெளித்தோன்றும்படி யுண்டான புன்னகையிலும்
பார்வையிலும் காதற்குறிப்பு நன்குவெளிப்பட வென்பது, முதலடியின் கருத்து.
‘முத்தம் ‘என்றது, பற்களை. பவளம், நீலம் – உவமையாகுபெயர்கள்.
தகைந்தபோது, உயிர்ச் சேடியர், ‘தவிர்க!’ எனச் சில சொல்
பகர்ந்து போய், ஒரு மாதவிப் பந்தரில் புகுந்து,
புகுந்த நீர்மையைத் தேவகி அறியுமா புகன்றார்;
அகைந்த பல் பெருங் கிளைஞரில் ஆர் கொலோ, அறிந்தார்?-அச்செய்தியைத் தோழியர் தேவகிக்குத் தெரிவித்தல்.
தகைந்த போது – (இவ்வாறு அருச்சுனசன்னியாசி சுபத்திரையைக்)
கைப்பிடித்த போது, உயிர்சேடியர் தவிர்க – உயிர்போன்ற தோழியரே!
(இத்தன்மையைத்) தவிர்ப்பீராக,’ என சில சொல் பகர்ந்து போய் – என்று சில
வார்த்தைகளைச் சொல்லி விலகிச் சென்று, ஒரு மாதவி பந்தரில் புகுந்து –
(அச்சுபத்திரை விசயனுடனே) குருக்கத்திப்பந்த லொன்றிலேபிரவேசிக்க, (பின்பு),
புகுந்தநீர்மையை தேவகி அறியும் ஆ புகன்றார் – நடந்தசெயலை (அவள் தாயான)
தேவகிஅறியும்படி சொன்னார்கள்; அகைந்த பல் பெரு கிளைஞரில் ஆர் கொல்ஓ
அறிந்தார்- (இங்ஙனம் நிகழ்ந்த அச்செய்கையைத் தேவகியொருத்தி அறிந்தனளே
யன்றி)நெருங்கின பல பெரியசுற்றத்தாரில் எவர்தாம் அறிந்தவர்? (எ-று.)
புகுந்து – எச்சத்திரிபு. தவிர்க=தவிர்க்க: பிறவினையில்வந்த தன்வினை. இனி,
இங்ஙன் கொள்ளாமல், உயிர்ச்சேடியர் தவிர்கெனச் சன்னியாசியை நோக்கிச்
சொல்லி,சுபத்திரையுடனே மாதவிப் பந்தரிற் புகுந்து பின்பு தேவகிக்குத்
தெரிவித்தாரென்றுஉரை கூறுவதும் உண்டு. 70-ஆம் செய்யுள் முதல்
நான்குசெய்யுள்கள்அந்தாதித்தொடையமையவுள்ளன
அறிவு உறாவகை, அலாயுதன் முதல் வடமதுரை
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து,
மறி கொள் செங் கையன் விழா அயர்வான், பெருந் தீவில்,-
உறியில் வெண் தயிர் உண்டவன்-கொண்டு சென்றுற்றான்.-அந்நாளிற் கண்ணன் யாதவர் அனைவரையும் வேறுவியாஜத்தால்
வேற்றிடத்துக்கு அழைத்துக்கொண்டு
செல்லுதல்
அறிவு உறா வகை – (இச்செய்தியை) அறியவெண்ணாதபடி,
அலாயுதன்முதல் வடமதுரை செறியும் யாதவர் யாரை உம் – பலராமன் முதலாக
வடமதுரையில்(முன்பு) இருந்தவர்களான யதுகுலத்துவீரர்களெல்லாரையும்,
தன்னுடன்சேர்த்து -தன்னோடு கூட்டி, மறி கொள் செம் கையன் விழா அயர்வான்
பெருந் தீவில்கொண்டு சென்று உற்றான் – மானை யேந்திய சிவந்த
கையையுடையனானசிவபிரானுக்குத் திருவிழாச் செய்யும் பொருட்டு மகாத்வீப
மென்ற இடத்துக்குஅழைத்துக்கொண்டுபோய்ச் சேர்ந்தான்: (யாவனெனில்),-
உறியில் வெள் தயிர்உண்டவன் -(கோபஸ்திரீகள்) உறியில் வைத்திருந்த
வெண்ணிறமான தயிரைஇளமையிற் களவாடி அமுதுசெய்தவனான கண்ணபிரான்;
(எ-று.)
‘வடமதுரை’ என்றது, தென்மதுரையினின்று பிரித்துக்காட்டுதற்கு; இனம்
விலக்கவந்த அடைமொழியடுத்த பெயர். த்வாரகையிலுள்ளார் யாவரும்
வடமதுரையினின்று வந்தவ ராத லறிக. ஈற்றடி- கண்ணபிரான் ஏமாற்றுந்
தன்மையனென்பதைத் தெரிவிக்கும்.
உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து,
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன், பெரியோன்;
சிற்றிடைப் பெருங்கொங்கையும் தம்முனைத் தியானம்
முற்ற முன்னினள்; இருவரும் முன் முன் வந்துற்றார்.-அருச்சுன சுபத்திரைகள் பிதாவையும் அண்ணனையும்
நினைக்க, இந்திரனும் கிருஷ்ணனும் அங்கு சேர்தல்.
உற்ற – பொருந்திய, கங்குலில் – அவ்விரவில், யாவர் உம்-, தணந்த
ஆறு – வேறுகாரணத்தாற் சென்றிட்டவகையை, உணர்ந்து-, பெரியோன் –
பெருமையுள்ள அருச்சுனன், பெற்ற தன்பெரும் பிதாவினை முன்னினன் –
(தன்னைப்)பெற்ற பெருமையுள்ள பிதாவாகிய இந்திரனை நினைந்தான்; சிறு இடை
பெருங்கொங்கைஉம் – சிறிய இடையையும் பெரியதனங்களையுமுடையளான
சுபத்திரையும்,தம்முனை – தன் அண்ணனாகிய க்ருஷ்ணனை, தியானம் முற்ற
முன்னினள் -தியானநிலை நிரம்ப (மனத்தினால்) தியானித்தாள்: இருவர்உம் –
(க்ருஷ்ணன் இந்திரன்என்ற) அவ்விருவரும், முன் முன்வந்து உற்றார் –
(அவ்விருவருக்கும்) முன்னாகவந்து சேர்ந்தனர்.
இந்திராணியோடு எய்திய இந்திரன்தன்னை
இந்திராபதி எதிர் கொள, துவரை மா மூதூர்ச்
சந்திராதவ மண்டபத்து இடு பொலந் தவிசில்
வந்து இரா, வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான்.-தேவேந்திரனைக் கண்ணபிரான் எதிர்கொள்ளுதல்.
இந்திராணியோடு எய்திய இந்திரன் தன்னை – இந்திராணியுடனே
வந்தஇந்திரனை, இந்திராபதி எதிர்கொள – இலக்குமிக்குக்கணவனான கண்ணன்
எதிர்கொள்ள, (அவன்), துவரை மா முது ஊர் – பெரிய பழமையான
அத்துவாரகாபுரியில், சந்திர ஆதவர் மண்டபத்து இடு பொலம் தவிசில் வந்து
இரா -சந்திரசூரியர் போல விளங்குகின்ற மண்டபத்திலே யிட்ட பொன்மயமான
ஆசனத்தில்வந்து வீற்றிருந்து, வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் – (தன்னை)
வணங்கின(தனது) சிறந்தகுமாரனான அருச்சுனனுடன் கூடி மகிழ்ந்தான்; (எ-று.)
இந்திராணி – இந்த்ராணீ: இந்திரன்மனைவி. இந்த்ரன், இந்திரா என்ற
பெயர்கள்,ஐசுவரியமுடையவ ரென்று பொருள்படும்.
பொரு அரும் புருகூதனும், புலோம கன்னிகையும்,
இருவரும் தம கலன்களால் இவர் இருவரையும்
மரு வரும்படி அணிதலின், அணி கெழு வனப்பால்,
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார்.-இந்திரனும் இந்திராணியும் தமது ஆபரணங்களினால்
முறையே அருச்சுனனையும்சுபத்திரையையும் அலங்கரித்தல்.
பொருவு அரும் புருகூதன்உம் புலோமகன்னிகைஉம் இருவர்உம் –
ஒப்பற்றவர்களான இந்திரனும் புலோமா என்பவனது மகளான இந்திராணியும்
ஆகியஇரண்டு பேரும், தம கலன்களால்- தங்கள் ஆபரணங்களினால், இவர்
இருவரைஉம் -(அருச்சுனனும் சுபத்திரையுமாகிய) இவர்கள் இரண்டுபேரையும்,
மருவரும்படிஅணிதலின் – பொருத்தமாக அலங்கரித்ததனால், (அவ்விருவரும்),
அணி கெழுவனப்பால் – (தங்கள்) இயற்கையழகின்மீது நிறைந்த செயற்கையழகினால்,
ஒருவரும் பிறர் ஒப்பு அலர் என்னும் ஆறு உயர்ந்தார் – பிறரொருவரும் (தங்கட்கு)
உவமையாகா ரென்னும்படி சிறப்புற்றார்கள்; (எ-று.)
பால், அருந் ததி, நறு நெய், ஆய்ப் பாடியில் கள்ளத்-
தால் அருந்து அதி விரகனது அருளினால், விரைவில்
சால் அருந்ததி தலைவனும், தலைபெறும் பல நுண்
நூலரும், ததி உறப் புகுந்து, ஆசிகள் நுவன்றார்.-கண்ணனது சங்கல்பத்தால் வசிஷ்டன் முதலிய
முனிவர்கள் அங்குவந்துசேர்தல்.
ஆய்ப்பாடியில் – இடைச்சேரியில், பால் – பாலையும் அருந்ததி –
அருமையான தயிரையும், நறு நெய் – நறுமணமுள்ள சிறந்த வெண்ணெயையும்
நெய்யையும், கள்ளத்தால் அருந்து – களவினா லெடுத்து உண்ட, அதிவிரகனது –
மிக்கதந்திரமுடையவனான கண்ணபிரானது, அருளினால்-, சால் அருந்ததி
தலைவன்உம் – (கற்பினால்) நிறைந்த அருந்ததியின் கணவனான வசிஷ்டனும்,
தலைபெறும் பலநுண் நூலர்உம் – தலைமைபெற்ற பல நுட்பமான நூல்களை
யுணர்ந்த முனிவர்களும்,விரைவில் – விரைவாக, ததி உற புகுந்து – கூட்டமாக
வந்து, ஆசிகள் நுவன்றார் -ஆசீர்வாதங்களைச் சொன்னார்கள்; (எ-று.)
ததி – தயிர்: தற்பவமான வடசொல். ததி – வரிசை: தற்சம வடசொல்.
இச்செய்யுளில் ‘திரிபு’ என்னும் சொல்லணி காண்க.
தொடங்கி நாத வெம் முரசுடன் சுரிமுகம் தழங்க,
சடங்கினால் உயர் ஆகுதித் தழலவன் சான்றா,
விடங்கினால் மிகு விசயன் அக் கன்னியை வேட்டான்;
மடங்கினார் தம பதிதொறும், அவ்வுழி வந்தார்.-சுபத்ராகல்யாணம்,
நாதம் வெம் முரசுடன் – ஓசையையுடைய விரும்பப்படும்
முரசவாத்தியங்களோடு, சுரி முகம் – சங்கவாத்தியங்கள், தழங்க – ஒலிக்க,
சடங்கினால்உயர் ஆகுதி தழலவன் சான்று ஆ – வைதிகச் சடங்கினாற் சிறந்த
ஆகுதியையுடைய அக்கினி தேவன் சாக்ஷியாக, விடங்கினால் மிகு விசயன் அ
கன்னியைதொடங்கி வேட்டான் – அழகினால் மிக்க அருச்சுனன் அச்சுபத்திரையை
முயன்றுமணஞ்செய்தான்; (பின்பு), அ உழி வந்தார் தம பதிதொறும் மடங்கினார் –
அவ்விடத்தில் வந்த இந்திரன் முதலியோர் தம்தம் இருப்பிடங்கட்கு மீண்டு
சென்றார்கள்; (எ-று.)
மணமுரசு என்றதற்கு, ‘வெம்முரசு’ என்றார்; ‘வெம்மை வேண்டல்’. சுரிமுகம் –
சுழிந்தமுகமுடைய தெனப் பொருள்படும் காரணக்குறி; விணைத்தொகையன்மொழி.
சடங்கினாலுயர் ஆகுதித் தழலவன் – ஓமாக்கினி.
முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன்,
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையைத் தழீஇக்கொண்டு,
‘அன்ன மென் நடை அரிவையர்பொருட்டு நீ இன்னம்
என்ன என்ன மா தவ உருக் கொள்ளுதி!’ என்றான்.-மணவினை முடித்தபின்பு கண்ணன் அருச்சுனனை
நகையாடுதல்.
முன்னம் யாவைஉம் முடித்தருள் – முன்நின்று (இவ்விவாகத்துக்கு
உரியவை) எல்லாவற்றையும் நிறைவேற்றி யருளிய, மெய் துழாய் முடியோன் –
நெருங்கிய திருத்துழாய்மாலையை யணிந்த திருமுடியையுடையவனான கண்ணன்,
கன்னன் ஆர் உயிர் கொள வளர்காளையை தழீஇக்கொண்டு – கர்ணனுடைய
அருமையான உயிரைக் கவர வளர்கிற இளவீரனான அருச்சுனனைத்
தழுவிக்கொண்டு, ‘நீ-, அன்னம் மெல் நடை அரிவையர் பொருட்டு –
அன்னப்பறையினது மந்தகதிபோன்ற மென்மையான நடையையுடைய மகளிரைத்
தழுவுதற்காக, இன்னம் என்ன என்ன மாதவம் உரு கொள்ளுதி- இன்னமும்
என்னஎன்ன பெரிய தவவேடத்தைக்கொள்வாயே?’ என்றான் – என்று நகையாடிச்
சொன்னான்; (எ -று.)
காரியத்தைமுடித்தபின்புஉண்டான களிப்பினாலும், மைத்துனமையினாலும்,
இங்ஙனம் தகுதியாகப் பரிகசித்தன னென்க. முன்னம் – எண்ணமுமாம்
காமற் பயந்தோன்தனது ஏவலின், காம பாலன்
வாமப் பதிதன்னினும் வாசவ மா பிரத்த
நாமப் பதியே திசை ஆக நடக்கல் உற்றான்,
தாமக் குழலாள் தனித் தேர் விட, சாப வீரன்.கண்ணன்கட்டளையால் சுபத்திரை தேர்செலுத்த,
அருச்சுனன் துவாரகாபுரியினின்று இந்திரப்பிரத்தநகர்
நோக்கிச் செல்லுதல்.
காமன் பயந்தோன் தனதுஏவலின் – மன்மதனைப் பெற்றவனான
கண்ணபிரானது கட்டளையினால், சாபம் வீரன் – வில்வீரனான அருச்சுனன்,-
தாமம்குழலாள் தனி தேர் விட – மாலையை யணிந்த கூந்தலை யுடையவளான
சுபத்திரைஒப்பற்ற தேரைச் செலுத்த, காமபாலன் வாமம் பதி தன்னின்உம் –
பலராமனுடையஅழகிய துவாரகாபுரியினின்றும், மா வாசவ பிரத்தம் நாமம் பதிஏ
திசை ஆக நடக்கல்உற்றான் – பெரிய இந்திரப்பிரத்த மென்னும் பெயரையுடைய
நகரமே (தான்)நோக்கிச்செல்லுந்திசையாகச் செல்பவனானான்; (எ-று.)
பலராமன் கண்ணனுக்குத் தமையனாதலாலும் கண்ணன் அவன் கீழ்
அடங்கியொழுகியதனாலும், துவாரகை ‘பலராமனுடைய ஊர்’ எனப்பட்டது.
காமபாலன்என்ற வடமொழிப்பெயர் – காமத்தை [அடியார்களுடைய
விருப்பத்தை]க்காப்பவனென்று பொருள்படும்.(ராஜஸ்திரீகள்சிலர் தேர்செலுத்த
வல்லராதலை,சம்பராசுரனோடு பொருகையில் தசரதசக்கவர்த்திக்குக் கைகேயி
தேர்செலுத்தினளென்றவரலாற்றினாலும் அறிக). மன்மதன் திருமாலின்மகனாதலும்,
மன்மதாம்சமானபிரத்யும்நன் கண்ணன் மகனாதலும் பற்றி, கண்ணனுக்கு ‘காமற்
பயந்தோன்’ என ஒருபெயர் கூறினார்.
இதுமுதல் இச்சருக்கம் முடியு மளவும் பன்னிரண்டுகவிகள் –
திரௌபதிமாலையிட்ட சருக்கத்து 73 – ஆம் கவிபோன்ற கலிநிலைத்துறைகள்
வென்றித் துவரை நகர் காவலர்தம்மை வென்று,
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி,
குன்றச் சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான்’
என்று, அப் பலற்குக் கடல்வண்ணன் இயம்பினானே.-அச்செய்தியைக் கண்ணன் பலராமனுக்கு ஒருவாறு தெரிவித்தல்.
குன்றம் சிறகர் அரிந்தோன் மகன் – மலைகளின் சிறகுகளைத்
துணித்திட்டவனான இந்திரனுடைய குமாரனாகிய அருச்சுனன், வென்றி
துவரைநகர்காவலர் தம்மை வென்று – வெற்றியையுடைய துவாரகாபுரியைக்
காவல்செய்தவர்களான வீரர்களை(ப் போரினாற்) சயித்து, மன்றல் குழலின்
இளையாளை – நறுமணமுள்ள கூந்தலையுடைய (நமது) தங்கையை, வலிதின்
எய்திகொண்டு போனான் – பலாத்காரமாகவந்துகொண்டுபோயினான்,’ என்று-,
அ பலற்கு -அந்தப்பலராமனுக்கு, கடல் வண்ணன் இயம்பினான் – கடல்
போலுங்கருநிறமுடையனான கண்ணன் செய்திகூறினான்; (எ-று.)
பலன் என்ற பெயர் – பலமுடையவ னென்று பொருள்படும். பலபத்ரன்,
பலதேவன், பலராமன் என்ற பெயர்களும் இதுபற்றியனவே.
சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே,
காலாந்தகனும் வெருவும் திறல் காளைதன்னை,
நீலாம்பரனும், யது வீர நிருபர் யாரும்,
நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து, அமர் நாடினாரே.-உடனே பலராமன் சேனையுடன் அருச்சுனனைத் தொடர்ந்து
போகுதல்.
சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்ஏ –
மத்ஸ்யாவதாரஞ்செய்தவனான கண்ணபிரான் இவ்வார்த்தையைச் சொல்லு
முன்னே[சொன்னவுடன் விரைவிலே], நீல அம்பரன் உம் – நீலவஸ்திரத்தை
யுடையவனானபலராமனும், யது வீர நிருபர் யார்உம் – (மற்றும்)
யதுகுலத்துவீரர்களானஅரசர்களெள்லோரும், நால் உம் ஆம் படையோடு –
நால் வகைப்பட்டசேனையுடனே, கால அந்தகன் உம் வெருவும் திறல் காளை
தன்னை -பிரளயகாலத்து யமனும் அஞ்சும்படியான வலிமையையுடைய வீரனான
அருச்சுனனை,எதிர் சூழ்ந்து அமர் நாடினார் – எதிர்த்துச் சூழ்ந்து போர் செய்யத்
தொடங்கினார்கள்;(எ – று.)
யாதவவீரருடன் கூடிய பலராமன் அருச்சுனனுடன் பொர வேணுமென்று
பெருஞ்சீற்றங்கொள்ள ஸ்ரீக்ருஷ்ணன்வார்த்தையாற் சாந்தநிலையை யடைந்தா
னென்றுபாரதங்கள்கூறும். முன்னொருகாலத்திலே பிரமதேவன் கண்துயிலுகையில்,
சோமகனென்னும் அசுரன் வேதங்களை யெல்லாங் கவர்ந்துகொண்டு கடலினுள்
மறைந்துசெல்ல, பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால்
ஒருபெருமீனாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப்பிடித்துக்
கொன்று, அவன் கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக்கொணர்ந்து, பிரமனுக்குக்
கொடுத்தனன் என்பது, மத்ஸ்யாயவதாரகதை. தனது நிலையைக்குலைத்தாயினும்
துஷ்ட நிக்கிரகசிஷ்டபரிபாலனஞ் செய்யும் திருவருட்சிறப்புடையா னென்பது,
‘சேலாம்பிறப்பிற்றிருமால்’ என்றதனால் விளங்கும்
அஞ்சேல்! அமரில் நுமர்தம்மையும் ஆவி கொள்ளேன்;
செஞ் சேல் அனைய விழியாய்!’ எனத் தேற்றி, அந்த
மஞ்சே அனைய தடந் தேர் அவள் ஊர, வந்த
வெஞ் சேனை முற்றும் புறம்தந்திட, வென்று, போனான்.-அருச்சுனன் சுபத்திரைக்குத் தேறுதல்கூறி
அனைவரையும் வெல்லுதல்.
செம் சேல் அனைய விழியாய் – செம்மையான சேல் மீன்போன்ற
கண்களை யுடையவளே! அஞ்சேல் – அஞ்சாதே; அமரில் – போரில், நுமர்
தம்மைஉம் ஆவி கொள்ளேன் – நின்சுற்றத்தாரையும் உயிர்கவரேன்,’ என
தேற்றி -என்று (சுபத்திரைக்குத்) தேறுதல் கூறி, அந்த மஞ்சுஏ அனைய தட தேர்
அவள் ஊர- (விரைவினாலும் பரப்பினாலும்) மேகத்தையே போன்ற பெரிய
அத்தேரைஅச்சுபத்திரையே செலுத்த, வந்த வெம் சேனைமுற்றுஉம் புறம்தந்திட
வென்றுபோனான் -(தொடர்ந்தெதிர்த்துப் போர்க்கு) வந்தபயங்கரமான அந்த
யாதவசேனைமுழுவதும் (தோற்று) முதுகு கொடுக்கும்படி (அதனைச்) சயித்துச்
சென்றான். (அருச்சுனன்);
ஒருவரையுங் கொல்லாமலே அனைவரையும் அஞ்சியோடும்படி செய்து
வெல்லும் அருந்திறமை, இங்கு விளங்கும். தனது கணவன் தனது பிறந்தகத்துச்
சுற்றத்தார் என்ற இருதிறத்தாரில் எவர்க்கேனும் தீங்குநேர்ந்திடுமே யென்று
இருதலைக்கொள்ளியினிடைப்பட்ட எறும்புபோல அஞ்சிய தனதுகாதலியினது
வருத்தத்தைத் தவிர்த்தற்கு, ‘அஞ்சேல்’ என அபயங் கூறினான். ‘நுமர் தம்மையும்
ஆவிகொள்ளேன்’ என்ற எச்சவும்மையால், எம்மையும் பாதுகாத்துக்கொள்வே
னென்றதைப் புலப்படுத்தினான்.
மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி, ஆங்கு,
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு
நடைபட்டு உருகி, எதிர்கொள்ள, நகரி புக்கான்-தருமன்முதலியோர் எதிர்கொள்ள அருச்சுனன்
இந்திரப்பிரத்தஞ் சேர்தல்.
மடை பட்ட வாளை – நீர்பாயும் மடையிற் பொருந்திய
வாளைமீன்கள்,அகில் நாறும் – அகிற்கட்டையின் நறுமணம் வீசப் பெற்ற, மருதம்
வேலி இடை -கழனிகளாகிய மருதநிலத்துக்கு இடையிலே, பட்ட – பொருந்திய,
தங்கள் வளம் நாடு -வளப்பம் மிக்க தங்கள்நாட்டை, (நெடுநாளைக்குப்பின்),
சென்று எய்தி -போய்ச்சேர்ந்து, ஆங்கு – அவ்விடத்தில், தொடை பட்ட திண்
தோள் அறன் காளைதுணைவரோடு உருகி நடைப்பட்டு எதிர்கொள்ள –
பூமாலைபொருந்திய வலிய தோள்களையுடைய தருமபுத்திரன் தம்பியர்மூவருடனே
(அன்பினால்) மனமுருகி நடந்து வந்து எதிர்கொள்ள, நகரி புக்கான் –
இந்திரப்பிரத்தநகரை யடைந்தான்;
யாற்றுநீர் மலையினின்று அகிலை அடித்து வருதலால், அந்நீர் பாயும்
மடையிலுள்ள வாளை அதன்மணம் நாறு மென்க. நியமங் கொண்டு பன்னிரண்டு
வருஷகாலம் தீர்த்தயாத்திரை செய்தனனென முதனூல் கூறும்.
முன் போர் விளைத்த முசலப் படை மொய்ம்பினானும்,
தன்போல் உயர்ந்தோர் இலன் ஆன தடங் கண் மாலும்,
பின் போய், இனிய மொழி ஆயிரம் பேசி, மன்றற்கு
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார்.-கண்ணன், பலராமனுடன்சென்ற அருச்சுனனைச் சமாதானப்படுத்தி
அந்தமணமகனுக்கும் மணமகளுக்கும் மணச்சிறப்புக்கள் கொடுத்தல்.
முன் போர் விளைத்த முசலம் படை மொய்ம்பினான் உம் –
தலைமையாய் நின்று (அருச்சுனனுடன்) போர்செய்தஉலக்கைப் படையையுடைய
பலராமனும், தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தட கண் மால்உம்
தன்னைப்போலச் சிறந்தவரை வேறு பெறாதவனான விசாலமான கண்களையுடைய
கண்ணபிரானும், பின் போய் – (அருச்சுனனுக்குப்) பின்னே சென்று, இனிய மொழி
ஆயிரம் பேசி – மிகப்பலவான இன்சொற்களைச் சொல்லி, மன்றற்கு அன்போடு
உதவும் உபகாரம் அனைத்துஉம் ஈந்தார் – விவாகத்துக்கு அன்போடு
கொடுக்குந்தன்மையனவான காணிக்கைப் பொருள்களை யெல்லாம் (அவர்கட்குக்)
கொடுத்தார்கள்; (எ-று.) (715)
மொய்ம்பு – பலம்: அதனை யுடையவன், மொய்ம்பினான்; எனவே, ‘பலன்’
என்ற வடமொழிப்பெயரின் பரியாயநாமமாயிற்று; மூசலத்தை
ஆயுதமாகவுடைமையால், பலராமனுக்கு ‘முசலீ’ என்ற ஒருபெயர் வழங்கும்.
உபகாரம் – உபஹாரம்: காணிக்கைப்பொருள்: வடசொல். உபசாரமென்றும்
பாடம்.
ஞாலத் தெரிவை களி கூர நடாத்து செங்கோல்
தாலத் துவசன் துவராபதிதன்னில் வைக,
நீலக் கடல்கள் இரண்டு ஆம் என, நெஞ்சொடு ஒத்த
சீலத்தவனோடு அவண் வைகினன், செங் கண் மாலே.பலராமன் துவாரகைக்கு மீள, கண்ணன்
அருச்சுனனுடன் இந்திரப்பிரத்தத்தில் வாழ்தல்.
ஞாலம் தெரிவை – பூமிதேவி, களி கூர – களிப்புமிகும்படி,
நடாத்து -நடத்துகிற, செம் கோல் – நீதி தவறாத அரசாட்சியையுடைய, தாலம்
துவசன் -பனைமரத்தின் வடிவ மெழுதிய கொடியை யுடையவனான பலராமன்,
துவாரபதிதன்னில் வைக – (மீண்டு சென்று) துவாரகாபுரியில் இருக்க,- செம் கண்
மால்- சிவந்ததிருக்கண்களையுடைய கண்ணபிரான், நெஞ்சொடு ஒத்த
சீலத்தவனோடு -(தன்) மனத்தோடொத்த ஒழுக்கமுடையவனான அருச்சுனனோடு,
நீலம் கடல்கள்இரண்டு ஆம் என – நீலநிறமுள்ள இரண்டுகடல்கள் போலு
மென்று (தங்கட்குஉவமை) சொல்லு மாறு, அவண் வைகினன் – அவ்விந்திரப்
பிரத்தநகரத்திலே இருந்தான்; (எ-று.)- தாலத்துவசன் – வடமொழிப்பெயர்
பல் நாள் இவர் இப் பதி சேர்ந்த பின், பங்க சாத
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான்
நல் நாளில் நன்மை தரும் ஓரையில், நல்க, வஞ்சி
அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான்.சுபத்திரையினிடமாக அபிமந்யு பிறத்தல்.
இவர் பல் நாள் இ பதி சேர்ந்த பின் – இந்தக்கிருஷ்ணார்ச்சுனர்கள்
பலநாள் இவ்விந்திரப்பிரத்தத்திலேசேர்ந்து இருந்த பின்பு,- பங்கசாதம் மின்
ஆளும்மார்பற்கு உயிர் போலும்விசயன் என்பான் – தாமரைமலரில் வாழ்கிற
மின்னல்போன்றஇலக்குமி இடமாகக்கொண்டுவீற்றிருக்கப்பெற்ற திருமார்பை
யுடையனான கண்ணனுக்கு உயிர்போன்றவனான அருச்சுனன், நல்க –
கர்ப்பாதானஞ் செய்ய, நல்நாளில் – சுபதினத்திலே, நன்மை தரும் ஓரையில் –
நன்மைவிளைக்குஞ்சுபமுகூர்த்தத்திலே, வஞ்சி அன்னாள் இடத்தில் அபிமன்னு
அவதரித்தான் – வஞ்சிக்கொடி போன்றவளான சுபத்திரையினிடத்தில் அபிமந்யு
என்னுங்குமாரன் தோன்றினான்;
பங்கஜாதம் – வடசொல்; சேற்றி லுண்டாவது. ஓரை – ஹோரா என்ற
வடசொல்லின் விகாரம். அபிமந்யு என்றவட மொழிப்பெயர்க்கு, பயமில்லாதவனும்
கோபமுடையவனு மாயிருப்பவ னென்று முதனூலிற் காரணப்பொருள்
கூறப்பட்டிருக்கிறது.
வேதம் சிறக்க, மனு நீதி விளங்க, இப் பார்
ஆதங்கம் ஆற, வரும் ஐவரின் ஐவர் மைந்தர்,
பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவாபோல்,
ஓது அங்கியில் உற்பவித்தாள்வயின் உற்பவித்தார்.-உபபாண்டவ ருற்பத்தி.
வேதம் சிறக்க – வேதங்கள் சிறப்படையவும், மனுநீதி விளங்க –
மநுதர்மசாஸ்திரத்திற்கூறிய நீதிகள்விளக்கமடையவும், இ பார் ஆதங்கம் ஆற –
இந்தப்பூமியினது துன்பம் நீங்கவும், வரும் – பிறந்த, ஐவரின் –
பஞ்சபாண்டவர்களினின்று, ஐவர் மைந்தர் – ஐந்துபுத்திரர்கள், பூதங்கள்
ஐந்துஉம்குணம் ஐந்தின் பொலிந்த ஆ போல் – பஞ்சபூதங்களும்
ஐந்துகுணங்களாற்சிறத்தல்போல, ஓது அங்கியில் உற்பவித்தாள்வயின்
உற்பவித்தார் -சிறப்பித்துச் சொல்லப்படுகிற யாகாக்கினியினின்று பிறந்த
திரௌபதியினிடமாகப்பிறந்தார்கள்; (எ-று.)
வைதிககிரியைகள் தவறாதுநடைபெறுதலால் வேதம் சிறப்புறும். தருமன்
முதலியபாண்டவரைவர்க்கும் முறையேபிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகர்மா,
சதாநீகன்,சுருதஸேநன்என்றஐவர் வருஷத்திற்கு ஒருவராய்ப் பிறந்தனரென்று
முதனூலினா லறிக.இவர்கள், உபபாண்டவரென்றும், பஞ்ச திரௌபதேயரென்றுங்
கூறப்படுவர்.பிருதிவிக்கு மணமும், அப்புக்குச் சுவையும், தேயுவுக்கு ஒளியும்,
வாயுவுக்கு ஊறுவும்,ஆகாயத்துக்கு ஒலியும் குணமாம். ‘பூதங்களைந்திற் குணமைந்தும்
பொலிந்த வா போல்’ என்றும் பாடம். வயின் – வயிறுமாம். மநுநீதி –
வடமொழித்தொடர்; மநு – அவ்வரசனாற் செய்யப்பட்டநூலுக்குக்
கருத்தாவாகுபெயர்
அம் மாதுலனும், பயந்தோரும், அழகில் மிக்க
இம் மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர்,
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும்
கைம் மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார்.-அபிமந்யுவும் உபபாண்டவர்களும் படைக்கலந்
தேர்தல்.
அழகின் மிக்க இ மா மகாருக்கு – அழகிற்சிறந்தஇந்தப்
பெருமையுடைய (அபிமந்யுமுதலிய) குமாரர்களுக்கு, இயற்றும் விதி ஏய்ந்த
பின்னர் -செய்யவேண்டிய (ஜாதகருமம் நாமகரணம் அந்நப்பிராசநம் சௌளம்
முதலிய)கடமைகள் (சாஸ்திரவிதிப்படிஉரியகாலங்களிற்) செய்து முடிந்தபின்பு, அ
மாதுலன்உம்பயந்தோர்உம் – அந்தமாமனான கண்ணனும்பெற்றதந்தையரான
பாண்டவர்களும்,தெவ் மாறு வின்மை முதல் ஆய செயல்கள் யாஉம் –
பகைவர்கள்அழிதற்குக்காரணமான வில்வித்தை முதலான ஆயுதத்
தொழில்களெல்லாவற்றையும்,கை மாறுகொண்டு நனி கை வரும் ஆறு கண்டார் –
கற்பிப்பவரிடத்தினின்று(கற்பவரிடத்தே) மாறி நன்றாகப்பழகித் தேர்ச்சியடையும்படி
செய்தார்கள்; (எ-று.)
மாதுலன் – வடசொல்; மாதாவினுடன் பிறந்தவன் – கண்ணன்
அபிமந்யுவுக்குமாதுலனாவன். கை – இடம். கை மாறுகொண்டு – ஒருவர்க்கொருவர்
போட்டிபோட்டுக்கொண்டு என்றுமாம். இனி, கைம்மாறு கொண்டு – கையிலே
பிரம்புகொண்டுஎன்றுபொருள் கொண்டால், மிக்க இளமைக்கு ஏற்ப
விளையாட்டில்ஊக்கஞ்செல்லாதிருத்தல் வேண்டியும், மாமனும் தாதையருமாகிற
நெருங்கியஉறவுரிமைகாரணமாகப் பராமுகஞ்செய்யா திருத்தல்வேண்டியும்
அச்சுறுத்தற்குக்கையில் மாறுகொண்டு கற்பித்தன ரென்க
அரிதில் பயந்த அறுவோருளும், ஆண்மைதன்னால்
இருதுக்களின்மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப,
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன், ‘வெம் போர்
விருதுக்கு ஒருவன் இவன்’ என்ன விளங்கினானே.-அவ்வறுவரில் அபிமந்யு சிறத்தல்.
இருதுக்களின்மேல் இளவேனிலின் தோற்றம் ஏய்ப்ப – ஆறுவகை
ருதுக்களுள் மேலான வசந்தருதுவினது தோற்றம்போல,- அரிதின் பயந்த
அறுவோருள்உம் – அருமையாகப்பெற்ற அந்த ஆறுபுதல்வருள்ளும், மருதுக்கு
இடைபோம் மதுசூதனன் மருகன் – (இரட்டை) மருதமரத்தினிடையே தவழ்ந்து
சென்றகண்ணனது மருமகனான அபிமந்யு, ஆண்மை தன்னால் –
ஆண்மைத்திறத்தினால்,வெம் போர் விருதுக்கு இவன் ஒருவன் என்ன
விளங்கினான் – கொடியபோர்வெற்றிக்கு இவனே ஒப்பற்றவ னென்னும்படி
(சிறப்புற்று) விளங்கினான்; (எ-று.)
மதுஸூதநன் என்ற வடமொழிப்பெயர் – மது என்ற அசுரனைக் கொன்றவ
னென்றுபொருள்படும். மருதுக் கிடை போன கதை:- கண்ணன்
குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பலதிருவிளையாடல்களைச்
செய்யக் கண்டு கோபித்த நந்தகோபர் மனைவியான யசோதை ஒருநாள்
கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஓர் உரலிலே பிணித்துவிட,
கண்ணன் அவ்வுரலை யிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை
மருதமரத்தின் நடுவிலே எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய் நின்று
இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்த வளவில்,
முன்புநாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன்
என்னுங்குபேரபுத்திரரிரு வரும் சாபந்தீர்ந்து சென்றன ரென்பதாம். இந்தக்
குபேரபுத்திரர்கள்முன்பு ஒருகாலத்திற் பலதெய்வமகளிருடனே ஆடையில்லாமல்
ஒரு நீர்நிலையிலே ஜலக் கிரீடை செய்துகொண்டிருக்கையில் நாரதமகாமுனிவர்
அங்கு எழுந்தருள,அதுகண்டு மங்கைய ரனைவரும் நாணங்கொண்டு
ஆடையெடுத்து உடுத்துநீங்க, இந்தமைந்தர்மாத்திரம் மதுபாநமயக்கத்தால்
நிர்வாணமாகவே யிருக்க, நாரதர் கண்டுகோபங்கொண்டு ‘மரங்கள்போ லிருக்கிற
நீங்கள் மரங்களாவீர்’ என்று சபித்து உடனேஅவர்கள் வேண்டியதற்கு இரங்கி
‘நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால்உங்களையடையுஞ் சமயத்தில் இவ்வடிவம்
ஒழிந்து முன்னையவடிவம் பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப்போயின ரென
அறிக
உரனால், அழகால், உரையால், மற்று உவமை இல்லா
நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான்,
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன
மரனாருடன் நண்பு இசைந்தன்று, வசந்த காலம்.-ஒருகால் இளவேனிற்பருவத்தின் வரவு.
உரனால் – வலிமையினாலும், அழகால் – அழகினாலும்,
உரையால் -சொல்லினாலும், மற்று உவமை இல்லா – (தமக்குத்
தாமேயன்றி)வேறுஉவமை பெறாத,நர நாரணர்க்கு – அருச்சுனனுக்கும்
கிருஷ்ணனுக்கு முள்ள, நலம் கூர்தரு நண்பு -நன்மைமிக்க சிநேகத்தை,
போல்வான் – ஒக்கும் பொருட்டு, வசந்தகாலம் -இளவேனிற்பருவமானது,
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆனமரனாருடன் –
சிவபிரானுடைய நெற்றிக்கண்ணால் வெந்து உடம்பு அருவமான
மன்மதனுடனே, நண்பு-, இசைந்தன்று – கூடிவந்தது; (எ-று.)
மன்மதனது முயற்சியாலாகுந் தொழிலாகிற சிற்றின்பவிளையாட்டுக்கள்
வசந்தகாலத்தில் மிகுதலால், அவன், அக்காலத்துக்கு நண்ப னெனப்படுவன்;
மன்மதனுக்கு ‘வேனிலான்’ என்று ஒரு பெயர் வழங்குதலும் காண்க. இங்ஙனம்
காமோத்தீபகமான வசந்தகாலம் இயல்பாகக் காமனோடு கூடிவருதலை,
கிருஷ்ணார்ச்சுனர்களுக்கு உள்ள சிநேகத்தை யொக்கும்பொருட்டுக் கூடிவந்த
தென்றது, தற்குறிப்பேற்றவணி. மரன் – மாரன் என்பதன் குறுக்கல்
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply