தோள் கரம் புறம்தன்னில், அன்னையும், துணைவர் நால்வரும்,
தொக்கு வைகவே,
கோள் கரந்த பல் தலை அரா என, குகர நீள் நெறிக் கொண்டு
போய பின்,
தாள்களின் கதித் தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல்
மன்னினான்-
மூள் கடுங் கொடுஞ் சின அனல் கண் மா மும் மதக் களிறு
அனைய மொய்ம்பினான்.–வீமன்துணைவரையுந் தாயையும் கொண்டு ஒருவனஞ் சேர்தல்.
மூள் கடு கொடு சினம் – (மனத்திற்) பற்றியெழுகிற மிகக்கொடிய
கோபத்தையும், அனல் கண் – அக்கோபாக்கினியைச் சொரிகிற கண்களையும்,
மும் மதம் – மூன்றுவகை மதங்களையுமுடைய, மா களிறு – பெரிய
ஆண்யானையை, அனைய – ஒத்த, மொய்ம்பினான் – வலிமையையுடையவனான
வீமசேனன்,- தோள் கரம் புறம் தன்னில் – (தனது) தோள்களிரண்டிலும்
கைகளிரண்டிலும் முதுகு ஒன்றிலும், அன்னைஉம் துணைவர் நால்வர்உம்
தொக்குவைக – (தனது) தாயான குந்தியும் (தனது) உடன்பிறந்தவர் நால்வரும்
பொருந்தியிருக்க, கொண்டு – எடுத்துக்கொண்டு,- கோள் கரந்தபல் தலை அரா
என – வலிமையோடு (புற்றினுள்ளே) மறைந்து செல்லுகிற
பலதலைகளயுடையதொரு நாகம் போல, குகரம் நீள் நெறி –
மலைக்குகைபோன்ற நீண்ட சுரங்கவழியாக, போய பின் – சென்ற பின்பு,-
தாள்களின்கதி – (தனது) கால்களின் நடைவேகத்தால், தாள் பறிந்து வீழ் –
அடிபெயர்ந்து கீழ்விழப்பெற்ற, தரு – மரங்களையுடைய, வனத்தது – காட்டினது,
ஓர் சாரல் – ஒரு பக்கத்தை. மன்னினான்- சேர்ந்தான்; (எ-று.)
மூன்றாம் அடி – வீமனது வலிமையையும் விசையையுங் காட்டும், உடன்
பிறந்தவரின் தலைகளும் தாயின் தலையும் வீமன் தலையும் ஒருசேர
விளங்குகின்றமையின், பஃறலையராவை உவமை கூறினார். பாலபாரதத்தை
நோக்குமிடத்துச் சாரலென்றவிடத்துச் சரசு என்றுபாடமிருக்குமோ என்று
கருதவேண்டியிருக்கிறது. குஹரம்-வடசொல், மும்மதம்-கன்னமிரண்டு,
குறியொன்று ஆக மூன்றிடத்தினின்றும் பெருகுவன. புறந்தம்மில் என்றும்
பாடம்.
அவ் வனத்தில் வாழ் அரமடந்தை என்று ஐயம் எய்த, ஓர்
அடல் அரக்கி வந்து,
‘இவ் வனத்தில், இந் நள் இயாமம், நீ என்கொல் வந்தவாறு?
இவர்கள் யார்?’ என,
செவ் வனத்து இதழ்க் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில்
திமிரம் மாறவே,
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள், வீமசேனனோடு உரை
விளம்பினாள்.-அங்கு இடிம்பி வந்து வீமனைச் சில வினாவுதல்
வெம் அனல் சுடர்க்கு ஒத்த – வெவ்விய அக்கினியின்
சுவாலைக்குச் சமமான, ஓதியாள் – செம்பட்டமயிரையுடையவளான, ஓர் அடல்
அரக்கி – வலிமையையுடைய ஒரு இராக்கதப் பெண்,- அ வனத்தில் வாழ்
அரமடந்தை என்ற ஐயம் எய்த வந்து – அந்தக் காட்டில்வாழும் தெய்வமகளோ
வென்று (பார்த்தவர்கள்) சந்தேகமடையும்படி (அருகில்) வந்து,- செம் வனத்து
இதழ் கூர் எயிறு எழும் தெள் நிலாவினில் திமிரம் மாற – செந்நிறத்தையுடைய
வாயிதழினுள் கூரிய பற்களினின்று வெளியெழுகிற தெளிவான சந்திரகாந்தி போன்ற
வெள்ளொளியால் இருளொழிய,- ‘இ வனத்தில் இ நள் யாமம் நீ வந்த ஆறு
என்கொல் – இக்காட்டில் இந்தநடுராத்திரியில் நீ வந்தவிதம் என்ன காரணத்தாலோ?
இவர்கள் யார்-?’ என – என்று, வீமசேனனோடு உரைவிளம்பினாள் – வீமசேனனை
நோக்கி வினாவினாள்; (எ-று.)
‘வெவ்வனற்சுடர்க்கொத்த வோதியாள்’ என்றது – அவளது இயல்பாகவுள்ள
வடிவை விளக்கும். ‘அவ்வனத்தில் வாழர மடந்தை யென் றைய மெய்த வந்து’
என்றது மாயையினால் அழகிய வடிவ மெடுத்து வந்தமை விளக்கும்.
பாலபாரதத்திற்குஏற்ப, வனத்தில் வாழரமடந்தை என்பதற்கு – வனதேவதை
யென்று பொருள் கொள்ளலாம். அரமடந்தை – அமரமடந்தையென்பதன்
விகாரம். திமிரம் – வடசொல். பீமஸேநன் – பயங்கரமான
சேனைகளையுடையவன். மூன்றாமடியில், வனம் – வர்ணம்; வடசொல்
யானும் வந்தவாறு உரைசெய்கேன், நினக்கு; உரைசெய் நீ எனக்கு,
யார்கொல்?’ என்னலும்,
தானும் அங்கு அவன்தன்னொடு ஓதுவாள், தழுவும் ஆதரம்
தங்கு சிந்தையாள்:
‘ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு
இராவணியை ஒத்து உளான்;
மானுடம் கொள் மெய்க் கந்தம் ஊர்தலால், வரவு அறிந்தனன்,
வாள் அரக்கனே.-இதுமுதல் நான்குகவிகள் – வீமனுக்கு இடிம்பி கூறும்
விடை.
இதுமுதல் ஏழுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) (அதுகேட்டு வீமன் அவளை நோக்கி), ‘யான்உம் வந்த ஆறு
நினக்கு உரை செய்கேன் – நானும் இங்கே வந்தவகையை உனக்குச்
சொல்லுவேன்; நீ யார்கொல் எனக்கு உரைசெய் – நீ யார்? (அதனை) எனக்கு
முந்திச்சொல்வாய், ‘என்னலும் – என்று கூறியவளவிலே, தழுவும் ஆதரம் தங்கு
சிந்தையாள்தான்உம் – (அவனைப்) புணரும் ஆசை பொருந்திய மனத்தையுடைய
அவ்விடிம்பியும், அங்கு அவன் தன்னொடு ஓதுவாள் – அப்பொழுது
அவ்வீமனுடன் சொல்லுவாள்;- ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று –
தசையை விரும்பியுண்கிற இடிம்பனென்று பேர்பிரசித்தனாய், ஒருவன் வாள்
அரக்கன் – கொடிய ஓரிராக்கதன், இராவணியை ஒத்து – இராவணன் மகனான
இந்திரசித்தைப் போன்று, இங்கு – இவ்வனத்தில்,உளான் – இருக்கின்றான்;
(அவன்), மானுடம் மெய் கொள் கந்தம் ஊர்தலால்- மனித சரீரத்தின்
சம்பந்தமான வாசனை வீசுதலால், வரவு அறிந்தனன் – (உங்கள்) வருகையை
அறிந்தான்;
வீமனுக்கு விடைகூறலுற்றதன் காரணம், அவள் கொண்ட காதலே
யென்பது தோன்ற, ‘தழுவுமாதரந் தங்கு சிந்தையாள்’ என்றார். ராவணி –
வடமொழித் தத்திதாந்தம்; இவனது பலபாராக்கிரமங்களும், மாயைவல்லமையும்,
கொடுமையும், இராமயணத்தில் பிரசித்தம். வாள் – கொடுமைக்கு, இலக்கணை.
‘ஒருவனுண்டிராவணியை’ என்றும் பாடம்.
எம்முன் ஏவலால், யான் மலைந்திடற்கு எய்தினேன்; நினைக்
கொன்றும் என் பயன்?
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும்
நீடு ஆர மார்ப! கேள்:
‘கொம்மை வெம் முலைத் தெரிவையர்க்கு உளம் கூசும், ஆசை
நோய் கூறுகிற்பது’ என்று
எம்மனோர்களும் சொல்வர்; யான் உனக்கு எங்ஙனே கொலாம்,
இறுதி கூறுகேன்?
எம்முன் ஏவலால் – எனது தமையனான அவனது
கட்டளையினால், யான் மலைந்திடற்கு எய்தினேன் – நான் (உங்களைப்)
பொருதுகொல்லுதற்காகவே (முதலில்) வந்தேன்; நினைகொன்று உம் என் பயன்
– உன்னைக் கொல்லுதலால்தான் (நான்) அடையும் பிரயோசனம் என்ன? வெற்பு
இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆரம் மார்ப –
இரண்டுமலைகள் போன்ற அழகிய தோள்களையுடை அழகுமிக்க நீண்ட
இரத்தினமாலையை யணிந்த மார்பைமுடையவனே! கேள் – (யான் சொல்வதைக்)
கேட்பாயாக: கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு – திரட்சியுள்ள
விரும்பப்படுந் தனங்களையுடைய மகளிர்க்கு, ஆசைநோய் கூறுகிற்பது –
(தம்முடைய) காமநோயை(ப் பிறர்க்கு) எடுத்துச்சொல்லுதற்கு, உளம் கூசும் –
மனம்நாணும், என்று-, எம் அனோர்கள்உம் சொல்வர்- (நாணமில்லாத)
எம்மவர்களும் [அரக்கியர்களும்] சொல்லுவார்கள்; (அங்ஙனமாக), யான்-,
உனக்கு-, எங்ஙனே – எப்படி, இறுதிகூறுகேன்- (என்கருத்தின்) முடிவைச்
சொல்வேன்! (எ-று.)
இராமயணத்தில் “தாமுறு காமத்தன்மை தாங்களே யுரைப்பதென்பது,
ஆமென லாவதன்றா லருங்குல மகளிர்க்கம்மா” என்றது, இங்கு ஒப்பு
நோக்கத்தக்தது. அம்ம வென்பது – உரையசை. உன்னைக் கொல்லுதலன்று
யான்கருதிய பயனென்பாள் ‘நினைக்கொன்று மென்பயன்’ என்றாள்.
பெருஞ் சுழிப் படக் கரை புரண்டு எழப் பெருகும் யாறு, பின்,
பிறழ் கலங்கல் போய்,
அருஞ் சுவைப் படும் தெளிவினோடு சென்று, ஆழி வேலைவாய்
அணையுமாறு என,
பொருஞ் சினத்துடன் கொன்று தின்றிடப் போதரும் தொழில்
பேதை நான் மெலிந்து,
இருஞ் சிறைச் சுரும்பு இசைகொள் மாலையாய்! இன்ப மால் உழந்து,
உன்னை எய்தினேன்.
இருஞ் சிறை சுரும்பு இசை கொள் மாலையாய் – பெரிய
இறகுகளையுடைய வண்டுகள் கீதம்பாடப்பெற்ற பூமாலையையுடையவனே! பெரு
சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு – பெரிய சுழிகளுண்டாகவும்
கரைபுரண்டு வெள்ளமெழவும் நீர்பெருகுகிற நதியானது, பின் – பின்பு, பிறழ்
கலங்கல் போய் – மாறுபட்ட கலக்கம் நீங்கி, அரு சுவைபடும்
தெளிவினோடுசென்று – அருமையான இன்சுவை பொருந்திய
தெளிதலோடுபோய், ஆழி வேலைவாய் அணையும் ஆறு என – ஆழ்ந்தகடலிற்
சேரும்விதம் போல,- பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில்
பேதைநான் – மோதுகிற கோபத்துடனே கொன்று தின்னவந்த
கொடுந்தொழிலையுடைய அறிவில்லாமகளாகிய யான்,(பின்பு), மெலிந்து –
அக்கடுமை நீங்கி, இன்பம் மால்உழந்து – காமமோக மடைந்து, உன்னை
எய்தினேன் – உன்னை யடைந்தேன்;(எ-று.)
மழைக்காலத்திற் கலக்கத்தோடுபொருந்திய யாறு வெயிற் காலத்தில்
கலக்கம் தணிந்து கடலிற் புகுவதுபோல, கோபத்தோடு வந்தயான் பின்பு
கோபந்தணிந்து உன்னைச் சேர்ந்தே னென்றாள். எனக்கு நீயேகதியும் கொழுநனும்
என்றன ளென்க. ஆசையோடு விரைந்துசார்ந்த வண்டுகளுக்குப் பசி தாகந்தீரும்படி
தேனூட்டிக் களிப்புண்டாக்கும் மாலையுடைய நீ, ஆசையோடு விரைந்து
உன்னைச்சேர்ந்த எனக்கு இந்நோயைநீக்கி மகிழ்ச்சி யளிப்பா யென்பாள்,
‘இருஞ்சிறைச்சுரும்பிசைகொள்மாலையாய்’ என்றாள்
நீடி இங்கு நான் நிற்கின், மாரனாம் நிருதன் நிற்க, அந் நிருதன்
வெம்மையோடு,
ஓடிவந்து, எனைக் கொல்லும்; உம்மையும், ஒரு கணத்திலே
உயிர் செகுத்திடும்;
நாடி என்கொல், மற்று? உய்ந்து போகலாம்; நம்பி, என்னை நீ
நலன் உறத் தழீஇக்
கோடி; அம்பரத்திடை எழுந்து, உனைக் கொண்டு போவல், ஓர்
குன்றில்’ என்னவே.
நான் இங்கு நீடி நிற்கின் – நான் இவ்விடத்தில் நீட்டித்து நின்றால்,
மாரன் ஆம் நிருதன் நிற்க – மன்மதனாகிய இராக்கதன் (என்னைக்
கொல்லுதற்கு அமைந்து) நிற்க, (அவனுக்கும் முந்தி), அ நிருதன் – அந்த
இடிம்பனாகிய இராட்சசன், வெம்மையோடு ஓடி வந்து – கடுமையுடனே
ஓடிவந்து, எனை கொல்லும் – என்னைக் கொல்லுவான்; உம்மைஉம் ஒரு
கணத்தில் உயிர் செகுத்திடும் – உங்களையும் ஒருகணப்பொழுதிலே
உயிர்நீக்கிவிடுவான்: நாடிமற்று என்கொல் -(அதனைக்குறித்து) வேறு சிந்தித்து
ஆவதென்ன? உய்ந்து போகல் ஆம் – (ஓருபாயத்தால் நாம்) தப்பிச்செல்லலாம்:
(எங்ஙனமெனின்),- என்னை நீ நம்பி நலன் உற தழீஇக் கோடி – நீ என்னை
விரும்பி இன்பம்மிகத் தழுவிக்கொள்வாய்; அம்பரத்திடை எழுந்து உனை ஓர்
குன்றில்கொண்டு போவல் – (நான்) வானத்திலெழும்பி உன்னை
ஒருமலையினிடத்தே கொண்டுசெல்வேன், என்ன – என்றுசொல்ல,- (எ-று.)-
‘காளை இயம்பலும்(9) என்று இயையும்.
என்னை நீ தழுவுதல், மன்மதனாகியஅரக்கனினின்று நானும்,
இடிம்பனாகிய அரக்கனினின்று நீயும்நானும் ஆகிய இருவரும் தப்பியுய்தற்குக்
காரணமா மென்றாள். ‘உம்மை’ என்றது, மற்றைப் பாண்டவரையும் குந்தியையும்
உட்படுத்து மென்னலாம். நம்பி யென்பதை ஆடவரிற்சிறந்தவனே யென
அண்மைவிளியாக் கொள்ளினும் பொருந்தும். சிறிதும் இரங்காது வருந்துதலால்,
மன்மதனை ‘அரக்கன்’ என்றாள். ‘மாரனாநிருபன்’ என்றும் பாடம்.
‘இரக்கம் இன்றியே, தனி வனத்திலே இளைஞர், எம்முன், யாய்,
இவரை விட்டு, ‘எமைப்
புரக்க வல்லள்’ என்று, ஒரு மடந்தைபின், போவது ஆடவர்க்கு
ஆண்மை போதுமோ?
வரைக்கண் வாழ்வு கூர் நும்முன், எம் முனே மலைய எண்ணி,
மேல் வந்தபோது பார்!
அரக்கன் ஆகில் என்? அவுணன் ஆகில் என்? அவனை ஓர்
கணத்து, ஆவி கொள்வனே.-அவள்வேண்டுகோளை மறுத்து வீமன் தனது
ஆண்மைகூறல்.
இரக்கம் இன்றி – இரக்கமில்லாமல், வனத்தில் – காட்டிலே,
இளைஞர் எம் முன் யாய் இவரை – எமது தம்பியர்தமையன் தாய் ஆகிய
இவர்களை, தனி விட்டு – தனியே விட்டிட்டு, எமை புரக்க வல்லள் என்று ஒரு
மடந்தைபின்போவது எம்மைக்காக்கவல்லவளென்பதுபற்றி ஒரு பெண்ணின் பின்னே
செல்வது, ஆடவர்க்கு ஆண்மை போதும்ஓ – புருஷர்க்கு உரியஆண்திறமைக்குத்
தகுமோ?[தகாதென்றபடி]; வரைக்கண் வாழ்வு கூர் நும்முன் – மலையில்
வாழ்தல்பொருந்திய உன்தமையன், எம்முன் மலைய எண்ணி மேல் வந்தபோது –
எமது எதிரே போர்செய்யக்கருதி எம் மேல் எதிர்த்து வரும்பொழுது, பார் – (நீ)
காண்பாய்; அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் – இராக்கதனானாலென்ன
அசுரனானாலென்ன? அவனை ஓர் கணத்து ஆவிகொள்வன்- அவனை
ஒருகணப்பொழுதிலே உயிர்கவர்வேன்; (எ -று.)
‘அரக்கனாகிலென் அவுணனாகிலென்’ என்றது, அலக்ஷ்யத்தாற் கூறினது.
அரக்கர், அவுணர் – பதினெட்டுத் தேவகணங்களுட் கொடிய சிலவகை, ஈற்று
ஏகாரம் – தேற்றம்; மற்ற ஏகாரங்கள் – அசை
இடிம்பைதன் மனம் கொண்ட காளை, இங்கு இவை இயம்பலும்,
நவை இடிம்பனும்,
கொடும் பெருஞ் சினம் கதுவு கண்ணினன், குருதி நாறு புண்
கூர் எயிற்றினன்,
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு
வெஞ் சுடர் உதிக்கவும்,
நெடும் பிறைக் கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும்,
நின்ற நீர்மையான்.–இதுவும், அடுத்தகவியும் – இடிம்பன்தன்மையும்
வரவுங்கூறும்.
இடிம்பை தன் மனம் கொண்ட காளை – இடிம்பையினது
மனத்தை(த் தனது அழகினாற்) கவர்ந்த இளவீரனான வீமன், இங்கு இவை
இயம்பலும் – கீழ்க்கூறிய இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிரா
நின்றவளவிலே, கொடு பெருஞ்சினம்கதுவு கண்ணினன் – கொடியபெரிய
கோபக்கனல் வெளித்தோன்றும் கண்களையுடையவனும், குருதி நாறு புண் கூர்
எயிற்றினன் – இரத்தம்நாறப்பெற்ற தசைதோய்ந்த கோரதந்தங்களையுடையவனும்,
(அதனால்), ஓர் உடம்புபெற்றது இருள் – ஒருபுருஷவடிவத்தைப்பெற்ற
இருளானது, முகத்திலே – (தன்) முகத்திலே, ஓர் இரண்டு வெம்சுடர் உதிக்கஉம்
– வெவ்விய சூரியர் இருவர் தோன்றிவிளங்கவும், நெடு பிறைகொழுந்து ஓர்
இரண்டு வாள் நிலவு எறிக்கஉம் – நீண்ட இளம்பிறைகளிரண்டு ஒளியுள்ள
நிலாவை வீசவும், நின்ற – நின்றாற்போன்ற, நீர்மையான் –
தன்மையையுடையவனாகிய, நவை இடிம்பன்உம் – குற்றங்களையேயுடைய
இடிம்பனென்பவனும்,- (எ-று.) – ‘கூவிக் குறுகினான்’ என வருங்கவியோடு
முடியும்.
பின்னிரண்டடி – இல்பொருளுவமை. அவ்வரக்கனது மிகக்கரிய வடிவத்தை
உடம்புபெற்ற இருளாகவும், அவன்முகத்திலுள்ள கோபாக்கினிச் சுவாலை வீசுகிற
கொடிய சிவந்த இரண்டுகண்களை இரண்டு சூரியராகவும், அவனது கடைவாயில்
வெளிப்பட்டு விளங்குகிற வளைந்தவெண்மையான இரண்டு கோரப்பற்களை
இரண்டு பிறைகளாகவுங் குறித்தார்; இதனை, தன்மைத்தற்குறிப் பேற்றமென்னலாம்.
குருதியும்தசையும், தின்ற உடம்புகளினின்று பற்றியவை. ‘புன்கூர்’ ‘வானிலவு’
எனவும் பாடம்.
இடி படுத்து எழுந்து, எழிலி மின்னுமாறு என்ன, நீடு குன்று
எதிர் ஒலிக்கவே,
வெடி படச் சிரித்து, இரு புறத்து நா மிளிர, உள் புகைந்து,
ஒளிரும் வாயினான்,
நெடி படுத்த வெங் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான்
உற நிமர்ந்துளான்,
கொடி படுத்த நுண் இடை இடிம்பையைக் கூவி, அவ் இடைக் குறுகினான்அரோ.
எழிலி – மேகம், எழுந்து – (வானத்தில்) எழுந்து, இடி படுத்து –
இடியை வெளிப்படுத்திக்கொண்டு, மின்னும் ஆறு என்ன – மின்னும்
விதம்போல, நீடு குன்று எதிர் ஒலிக்க வெடிபட சிரித்து – பெரியமலை
பிரதித்தொனிசெய்யும்படி பெருமுழக்கமுண்டாகச் சிரித்து, இரு புறத்துஉம் நா
மிளிர – இரண்டு வாயோரங்களிலும் நாக்குப் பிறழ்ந்துதோன்ற, உள் புகைந்து
ஒளிரும் – உள்ளேபுகை கொண்டு விளங்குகிற, வாயினான்-
வாயையுடையவனாய்,- நெடில்படுத்த வெம் கானம் எங்கண்உம் – மூங்கில்கள்
அடர்ந்த வெவ்விய காடு முழுவதிலும், நிழல் படுத்தி – நிழலை
யுண்டாக்கிக்கொண்டு, வான் உற நிமிர்ந்துளான் – ஆகாயத்தையளாவ உயர்ந்து
எழுந்தவனாய்,- கொடிபடுத்த நுண் இடை இடிம்பையை கூவி – பூங்கொடியை
(த் தனக்கு ஒப்பாகாதென்று) கீழ்ப்படுத்திய நுண்ணிய இடையையுடைய
இடிம்பையைக் கூப்பிட்டுக்கொண்டு, அ இடை குறுகினான் – அவ்விடத்தில்
வந்து சமீபித்தான்; (எ-று.)
கரியபெரிய அரக்கனுக்குக் காளமேகமும், அவனது பெருஞ்
சிரிப்பொலிக்கு இடிமுழக்கமும், நா மிளிர்வுக்கு மின்னலொளியும் உவமை
யெனக்காண்க. ‘நெடிபடுத்த’ என்ற பாடத்துக்கு – சிள்வீடுகள் பொருந்திய என்க.
“கொழுநற் றொழு தெழுவாள்” என்றதில், ‘தொழுது’ என்றதற்குப்போல,
‘இடிபடுத்து, நிழல் படுத்தி ‘கூவி’ என்ற இறந்தகாலவினையெச்சங்களுக்கு
நிகழ்காலப் பொருள் கொள்ளவேண்டும். வானுற நிமிர்ந்த பெருவடிவத்தாற்
காடெங்கும் நிழலுண்டாகுமென்க, நாக்கைப் பிறழவைத்தல், கோபக்குறி.
வாயினுட் புகைதல், கொடுமைபற்றியது. அரோ- ஈற்றசை
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ, உவகை ஆசையால்
உள் அழிந்து, ‘இவன்
கணவன் ஆம்’ எனக் காதலிப்பதே! கங்குல்வாணர்தம் கடன்
இறப்பதே?
அணவு வெம் பசிக் கனல் அவிந்து போய், அநங்க வெங் கனல்
கொளும் அடல் புலிப்
பிணவை அன்பினின் கலை நயப்பதே? பேதை! மானுடன்
பேசுகிற்பதே?–இடிம்பன்வார்த்தை: தங்கையைக் கோபித்துக் கூறியது.
மூன்றுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) உணவின் ஆசையால் கொல்லவந்த நீ – உணவில் விருப்பத்தாற்
கொல்லுவதற்குவந்த நீ, உவகை ஆசையால் உள் அழிந்து – காமவிருப்பத்தால்
மனமிழிந்து, இவன் கணவன் ஆம் என காதலிப்பதுஏ – இவன் (எனக்குக்)
கணவனாவ னென்று ஆசைப்படுவதா! கங்குல் வாணர்தம் கடன் இறப்பதுஏ –
இராக்கதர்க்குஉரிய முறைமையினின்று தவறுவதா! அணவு வெம் பசி கனல்
அவிந்து போய் – பொருந்திய வெவ்விய பசித்தீ அடங்கிப் போக, அனங்க
வெம் கனல் கொழும் – வெவ்விய காமாக்கினியைக் கொண்ட, அடல் புலி பிணவு –
வலிமையையுடைய ஒரு பெண்புலி, அன்பினில் கலையை நயப்பதுஏ – ஓர்
ஆண்மானை அன்பினால் விரும்புவதா! பேதை – அறிவில்லாதவளே! மானுடன்
பேசுகிற்பதுஏ – (அரக்கியாகிய உன்னோடு) ஒரு மனிதன் பேசுவதா? (எ-று.)
முன்னிரண்டடிகட்கு ஏற்ப அடற்புலிப்பிணவைக்கலை நயப்பதே என்ற
இடத்து உருபுபிரித்துக்கூட்டப்பட்டது:எடுத்துக் காட்டுவமையணி. ஏகாரங்கள்
நான்கும் – வினாவகையால், வியப்பையும் தகுதியின்மையையும்விளக்கும்.
‘உணவினாசையாற்கொல்ல வந்த நீ’ என்றதனால் – நீ மானுடராற்சேர்த்துக்
கொள்ளத்தக்கவளல்லையென்றும், ‘கங்குல்வாணர்தங் கடனிறப்பதே’ என்றதனால்
இப்போது அரக்கராலும் பஹிஷ்காரஞ்செய்யத்தக்கவளானா யென்றும் அரக்கியை
மருட்டியவாறு. கங்குல்வாணர் – இரவில் மிக்கவலிமையுடையவராய்த் திரிபவர்:
அரக்கர்க்கு வடமொழியில் ‘நிசாசரர்’ என ஒருபெயர் வழங்குதல் காண்க. இங்கே
‘கங்குல் வாணர் கடன்’ என்றது, மனிதரை உணவாகக்கொள்ளுதலை. பிணவு –
பெண்மைப்பெயர்; இது, பிணா என்பதன் விகாரம்.
வார், அடா! உனக்கு யாதுதானர்தம் மகள் அடுக்குமோ? வான
மாதர் தோள்
சேர் அடா; மலைந்து, உயிரை, மெய்யினைத் தின்று, தேவர் ஊர்
சேருவிப்பன் யான்;
போர் அடாது, உ(ன்)னோடு; ஆளிஏறு புன் பூஞைதன்னுடன்
பொர நினைக்குமோ?
பார் அடா, என் ஆண்மையை! அரக்கர் கைப் பட்ட போதில் யார்
பாரில் வைகினார்?’–இதுவும் அது: வீமனை நோக்கிய வீரவாதம்.
வார் அடா – அடேஎ! (போருக்கு) வா; உனக்கு-, யாது தானர்தம்
மகள் – இராக்கதப்பெண், அடுக்கும்ஓ – தகுவளோ? யான்-, மலைந்து –
போர்செய்தழித்து, மெய்யினை தின்று – (உன்) உடம்பைத் தின்று, உயிரை –
(உன்) உயிரை, தேவர் ஊர் சேருவிப்பன் – தேவலோகத்திற் செலுத்துவேன்:
(அப்பொழுது அங்கு), வானம் மாதர் தோள் சேர் அடா – (உனக்கு உரியராகுந்)
தெய்வ மகளிரது தோளைத் தழுவடா; உனோடு போர் அடாது – உன்னுடன்
போர்செய்தல் (எனக்குத்) தகாது: ஆளி ஏறு புல் பூஞைதன்னுடன் பொர
நினைக்கும்ஓ – ஆண்சிங்கம் எளிய பூனையுடனே போர் செய்ய நினைக்குமோ?
என் ஆண்மையை பார் அடா – என்னுடைய வீரத்தைப்பாரடா; அரக்கர்
கைபட்ட போதில் யார் பாரில் வைகினார் – இராக்கதரது கையில்
அகப்பட்டபொழுது பூமியில் உயிருடன் இருந்தவர் ஆர்? [எவருமில்லை];
(எ-று.)
மூன்றாமடியில் எடுத்துக்காட்டுவமையணியும், நான்காமடியில்
வேற்றுப்பொருள்வைப்பணியும் காண்க. போரிற் புறங்கொடாது இறந்தவர்
வீரசுவர்க்கமடைந்து தேவமாதரைக் சேர்வரென்பது நூற்றுணிபு. வா அடா
என்பது எதுகைநோக்கி இடையில் ரகர மெய்விரிந்து ‘வாரடா’ என நின்றது.
அடா – இகழ்ச்சிவிளக்கும் இடைச்சொல்; முன்னிலையாண்பால் விளியடையாய்
வரும்; இதன் பெண்பால் – ‘அடி’. யாதுதாநர்-வடசொல். யாதுவென்னும்
ஒருபெயரையுடையவரென்று உறுப்புப் பொரு
என்று, சீறி, மற்று இவன் அடுத்தல் கண்டு, இணை இலா
விறல் துணைவர் நால்வரும்,
நின்ற யாயும், மற்று ஒரு புறத்திலே நிற்க, மையல் கூர்
நிருதவல்லியும்,
வென்றி நல்குமா வந்த விந்தைபோல், விழி பரப்ப, மேல்
வீமசேனனும்
சென்று, கைகளால் பற்கள் நாவுடன் சிதற, வாயினில் சென்று
குத்தினான்.-இதுவும் வருங் கவியும் – வீமனுக்கும் இடிம்பனுக்கும்
நிகழ்ந்த போர் கூறும்.
என்று – என்று சொல்லிக்கொண்டு, சீறி – கோபித்து, இவன் –
இந்த இடிம்பன், அடுத்தல் – சமீபித்தலை, கண்டு-, இணை இலா விறல்துணைவர்
நால்வர்உம் – ஒப்பில்லாத வலிமையையுடைய உடன் பிறந்தவர் [பாண்டவர்]
நால்வரும், நின்ற யாய் உம் – (கலங்கி) நின்ற தாயும் [குந்தியும்], மற்று ஒரு
புறத்திலே நிற்க வேறொரு பக்கத்திலே ஒதுங்கிநிற்க,-மையல் கூர் நிருத
வல்லிஉம் – காம மயக்கம்மிக்க இராக்கதப்பெண்ணும் [இடிம்பியும்], வென்றி
நல்கும் ஆ (று) வந்த விந்தைபோல்-(வீமனுக்கு) வெற்றியைக் கொடுக்கும்படி
வந்த வீரலக்ஷ்மிபோல, விழி பரப்ப – கண்களைப் பரப்பிப்
பார்த்துக்கொண்டுநிற்க,- வீமசேனனும்-, மேல் சென்று – (அவ்வரக்கனை)
எதிர்த்துச் சென்று, பற்கள் நாவுடன் சிதற- (அவனுடைய) பற்கள் நாவோடு
சிதறும்படி, கைகளால் வாயினில் சென்று குத்தினான் – (தன்னுடைய) கைகளால்
(அவனுடைய) வாயிலே நெருங்கிக்குத்தினான்; (எ -று.) மற்று – அசை.
வல்லி – பூங்கொடி; மகளுக்கு உவமவாகுபெயர். வீமனிடத்துக்
காதல்கொண்ட இடிம்பை அப்பொழுது வீமன் இடிம்பனை வெல்ல வேண்டு
மென்னுங் கருத்தோடு அவனது வெற்றியை எதிர்பார்த்து நின்றமையால்,
‘வென்றிநல்குமா வந்த விந்தைபோல் விழிபரப்ப’ என்று குறித்தார்;
தற்குறிப்பேற்றவணி. பழித்ததனால், வாயில் முதலி லடித்தான்
குத்தினான், இவன்; குணபவல்சி தன் கூர் நகக் கரம் கொண்டு
வீமன்மேல்
மொத்தினான்; முனைந்து, இருவரும் பொறார், முரணுடன்
சினம் மூளமூளவே,
தத்தினார்; பிடுங்கிய மரங்களால் சாடினார்; புய சயிலம்
ஒன்றொடு ஒன்று
ஒத்தினார்-இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து,
ஓசை மிஞ்சவே.
இவன் – வீமன், குத்தினான்-;குணபம் வல்சி – பிணங்களை
உணவாக வுடைய [அரக்கனாகிய] இடிம்பன், தன் கூர் நகம் கரம்கொண்டு –
கூரிய நகங்களையுடைய தன் கையால், வீமன்மேல் மொத்தினான் –
வீமனுடம்பில் அடித்தான்; (இங்ஙனம்), இருவர்உம் – இவ்விரண்டுபேரும்,
பொறார் – மனம்பெறாதவர்களாய், முரனுடன் முனைந்து – வலிமையோடு
முயன்று, சினம் மூள மூள – கோபம் மிக அதிகப்பட, தத்தினார்- பாய்ந்து
தாக்கினார்கள்; பிடுங்கிய மரங்களால் சாடினார் – மரங்களைப் பெயர்த்தெடுத்து
அவற்றைக்கொண்டு அடித்தார்கள்; இரண்டு அம்புதங்கள் வான்உரும் எறிந்தது
ஒத்து -இரண்டுமேகங்கள் வானத்தில் இடியிடித்ததைப் போன்று, ஓசை – விஞ்ச
– ஒலிமிக, புயம் சயிலம் ஒன்றொடு ஒன்று ஒத்தினார் – மலைகள் போன்ற
தோள்களை ஒன்றோடொன்று (படத்) தாக்கினார்கள்; (எ-று.)
குணபவல்சி யென்பது – பண்புத்தொகையன்மொழியாய், அரக்கனுக்கு
ஒருகாரணக்குறியாயிற்று; குணபம் – வடசொல்,வல்சி – சோறு. அம்புதம் –
நீரைக் கொடுப்பது, மேகம்: வடசொல்.
வளர்ந்த திண் கருங் குன்று காந்தளை மலர்வது என்னவே,
வானகம் படக்
கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன், கேத நெஞ்சினன்,
கோத வாய்மையன்,
தளர்ந்து வீழ் நிசாசரனும், ஆடகன்-தன்னை ஒத்தனன்; பின்னை
முன் உறப்
பிளந்த கோள் அரிதன்னை ஒத்தனன், பிரதை என்னும் மின்
பெற்ற காளையே.-வீமன் இடிம்பனை வதைத்தல்.
வளர்ந்த திண் கருங் குன்று – ஓங்கிவளர்ந்த வலிய கரிய
ஒருமலை, காந்தளை மலர்வது என்ன – செங்காந்தட்பூப் பூக்கப் பெற்றது
போலவே, செம் புண் நீர் பொசியும் – சிவந்த இரத்தநீர் வழியப்பெற்ற, வானகம்
பட கிளர்ந்த மெய்யினன் – ஆகாயத்தை அளாவ ஓங்கிவளர்ந்த
உடம்பையுடையவனுமாம், கேதம் நெஞ்சினன் – துன்பமுற்ற மனத்தை
யுடையவனும், கோத வாய்மையன் – பழுதுபட்ட சபதத்தையுடையவனுமாய்,
தளர்ந்து வீழ் – சோர்ந்து கீழ் விழுந்த, நிசாசரன்உம் – இராக்கதனாகிய
இடிம்பனும், ஆடகன் தன்னை ஒத்தனன் – இரணியாசுரனைப் போன்றான்:
பின்னை – பின்பு, பிரதை என்னும் மின் பெற்ற காளை – பிரதையென்னும்
பெண் [குந்தி] பெற்ற சிறந்தவீரனான வீமன், முன் உற பிளந்த கோள் அரி
தன்னை ஒத்தனன் – முற்காலத்தில் (அவ்விரணியனை) நன்றாகப் பிளந்த வலிய
நரசிங்கமூர்த்தியைப் போன்றான்; (எ-று.)
பாலபாரதத்தில் மதுவைக்கொன்ற திருமாலை வீமனுக்கு உவமையாகக்
கூறியுள்ளது. வீமனைக்கொல்வே னென்று கூறிய இடிம்பன் வார்த்தை
வீண்பட்டதனால், ‘கோதவாய்மையன்’ என்றார். குன்று (செங்) காந்தளை
மலர்வது – ஒன்றன்வினை மற்றொன்றன்மேல் ஏற்றப்பட்டது; உபசார வழக்கு,
புண் நீர் – தசையின் சம்பந்தமான நீர்.கோத – கோது என்னும்
பகுதியின்மேற்பிறந்தகுறிப்புப் பெயரெச்சம். இரணியன் என்ற பெயர் –
பொன்னிறமானவ னென்னும் பொருளதாதலால், ஆடகனென்றது – அதன்
பரியாயநாமமாய் நின்றது. ‘பிளந்தளைந்த கோளரியையொத்தனன்’ என்றும்
பாடமுண்டு. மின் – உவமவாகுபெயர்.
வன் திறல் இடிம்பனை, வயக் கையால், உடல்
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை,
அன்று கண்டனள், யாய்-அரியின் பேடு தன்
கன்று திண் கரி பொரக் கண்டது என்னவே–அத்தகைய வீமனது ஆற்றலைக் குந்தி மகிழ்ச்சியோடு
காண்டல்.
வல் திறல் இடிம்பனை – மிக்கவலிமையையுடைய இடிம்பனை, வய
கையால் – வலிய (தனதுவெறுங்) கைகளால், உடல் ஒன்று இரண்டு ஆகும் ஆறு
உடன்ற – ஓருடம்பு இரண்டு துண்டாம் படி போர்செய்துபிளந்த, மைந்தனை –
வீரனான வீமனை,- அன்று – அப்பொழுது,- யாய் – தாயாகிய குந்தி, அரியின்
பேடு – பெட்டைச் சிங்கம், தன் கன்று திண் கரி பொர கண்டது என்ன – தனது
கன்றாகிய சிங்கக்குட்டி வலிய பெரிய யானையைப் பொருது அழிக்கக்
கண்டதுபோல, கண்டனள் – (மகிழ்ச்சியோடு) கண்டாள்; (எ -று.)
கன்று – இளமைப்பெயர்; இது சிங்கத்துக்கு உரியதாதலை, “யானையும்”
என்ற தொல்காப்பியச் சூத்திரத்து ‘உரிய’ என்றதனாற் கொள்க.
இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் – கீழ்ச்சருக்கத்தின் முதற் கவி போன்ற
கலிவிருத்தங்கள்.
இளைஞரும் தம்முனும், ‘இவன் அரும் பகை
களைகுவன், இனி’ என, கண் களித்தனர்;
விளைவு உறு காதலால் மெலிந்த பாவையும்,
உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள்.-அப்போது தருமன் முதலியோர் மகிழ்ச்சியும்,
இடிம்பியின்நிலையும்.
இளைஞர்உம் – தம்பியரான (அருச்சுனன் முதலிய) மூவரும்,
தம்முன்உம் – தமையனான தருமனும், இவன் இனி அருபகை களைகுவன் என
– இவ்வீமன் இனிமேல் அரிய (நமது) பகைவர்களை அழித்திடுவா னென்று
தெளிந்து, கண் களித்தனர் – கண் களிப்படைந்தார்கள்; விளைவுறு காதலால்
மெலிந்த பாவைஉம் – மிக்க ஆசைநோயால் மெலிவடைந்து அழகிய
பெண்ணான இடிம்பையும், உளைவுடன் உவகைஉம் ஒருங்கின எய்தினாள் –
வருத்தத்தோடு மகிழ்ச்சியையும் ஒருசேர அடைந்தாள்; (எ-று.)
தருமன்முதலியோர் மிகவலிய அரக்கனைக்கொன்ற செயலைக்
கண்ணெதிரிற் கண்டதனால், வீமன் இனி அரியபெரிய பகைவரனை வரையுந்
தவறாது கொல்வா னென்று நிச்சயித்துக் களித்தன ரென்க. தமையனிறந்ததனால்
வருத்தமும், தன்னாற் கணவனாக வரிக்கப்பட்ட வீமனை இடையூறின்றிச் சேரலா
மென்னும் ஓர் கருத்தினால் மகிழ்ச்சியும் இடிம்பிக்கு ஒருங்கு நிகழ்ந்தனவென்க.
உளைவை முன்னும் உவகையைப் பின்னுமாக நிறுத்தியதனால், இவளுக்குச்
சோகம் தோன்றிக் கழிய முந்திய காதலே நிலைத்து நின்ற தென்க.
பெருந் திறல் நிசாசரப் பிணத்தை, அவ் வனத்து
இருந்துள பறவைகட்கு இருள் செய் கங்குலின்
விருந்து இடக் கொளுத்திய விளக்கு எனும்படி,
அருந் திசை பொலிவுற, அருக்கன் தோன்றினான்.-சூரியோதய வருணனை.
பேருந் திறல் நிசாசரன் பிணத்தை-வலிமையையுடைய அவ்வரக்கனது
உயிர்நீங்கியபேருடலை, அ வனத்துஇருந்துளபறவைகட்டு-அக்காட்டில்
தங்கியுள்ள (பருந்துகழுகுமுதலிய) பறவைகளுக்கெல்லாம்.இருள்செய் கங்கலின்
விருந்து இட- இருளைச்செய்கிற அவ்விராப்பொழுதிலேவிருந்துணவாக இடுதற்
பொருட்டு, கொளுத்திய – ஏற்றிய, விளக்குஎனும்படி-, அருக்கன் – சூரியன்,
அரு திசை பொலிவு உற – மேன்மையான கிழக்குத் திக்கு விளக்கமடையும்படி,
தோன்றினான் – உதித்தான்; (எ-று.)
இரவு இருக்கையில் சூரியனாகிய விளக்குக் கொளுத்தப் படவே, அது
பகலாய்விட்ட தென்க; தற்குறிப்பேற்றவணி.
கரங்களால் நிசாசர இருளைக் காய்ந்துகொண்டு,
இரங்கி, நீள் வனத்திடை இரவில் மாழ்கிய,
வரங் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால்,
உரங் கொள் வீமனுக்கு எதிர், உதய பானுவே.-வீமனைச் சூரியனோடு உவமித்தல்.
கரங்களால் – (தனது) கைகளால் [தன்கிரணங்களால்], நிசாசர
இருளை – அரக்கனாகிய இருட்டை [இரவிற்பொருந்தும் இயல்பினதாகிய
இருட்டை], காய்ந்துகொண்டு – அழித்து,- நீள் வனத்திடை இரவில் இரங்கி
மாழ்கிய வரம் கொள் தாமரை முகம் மலர்ந்தும் நீர்மையால் – பெரிய காட்டிலே
இராப்பொழுதிலே (இவனுக்கு என்னாகுமோ வென்று), பரிதபித்து வாடிய
(தருமன் முதலியோரது) மேன்மைகொண்ட தாமரைமலர் போன்ற முகத்தை
(மகிழ்ச்சியால்) மலரச்செய்யுந் தன்மையினால் [பெரியநீர் நிலையிலே இரவில்
குவிந்து வாடிய மேன்மைகொண்ட தாமரை மலர்களின் இதழை மலர்த்துந்
தன்மையினால்],- உதயம் பானு – உதித்த சூரியன், உரம் கொள் வீமனுக்கு
எதிர்- வலிமைகொண்ட வீமனுக்கு ஒப்பாவன்; (எ-று.)
இங்குச் சூரியனுக்கும் வீமனுக்கும் ஒப்புமையைச் சொற் பொதுமை
கொண்டு காட்டியதனால், செம்மொழிச்சிலேடையுவமையணி; ‘தாவதுத்திதகர:
தமோமயம் – ராக்ஷஸம்விசகலய்யபாநுமாந்” பீமஸேநஇவ பார்த்த மாநஸாநி –
அம்புஜாநி தத்ருசே விகாஸயந்” என்றது, பாலபாரதம், கரமென்பது – கையுங்
கிரணமும். வனமென்பது – காடும் நீருமாம். ‘காய்ந்து கொண்டு’ என்பதில்
‘கொண்டு’ என்பது – அசைநிலை
எண் தகு கவர் மனத்து இடிம்பை, மன்மதன்
மண்டுஎரி சுடுதலின், வாடும் மேனியள்,
கொண்ட வெங் காதலின் குறிப்பை, அவ் வழிக்
கண்டனன்-காணலற் செற்ற காளையே.-வீமன் இடிம்பையின் குறிப்பை நோக்குதல்.
மண்டு மன்மதன் எரி சுடுதலின் – மிக்க காமனாகிய அக்கினி
சுடுதலினால், வாடும் – வாட்டமுற்ற, மேனியள் – மேனியையுடையளாகிய எண்
தகு கவர் மனத்து இடிம்பை – ஆலோசனை மிக்க கவர்ந்த [சஞ்சலப்பட்ட]
மனத்தையுடைய இடிம்பை, கொண்ட – (தன்மீது) கொண்ட, வெம் காதலின் –
வெவ்விய ஆசையினது, குறிப்பை-, காணலன் செற்ற காளை – பகைவனாகிய
இடிம்பனைக் கொன்ற வீமன், அ வழி கண்டனன்-அப்போது நோக்கினான்;
(எ-று.)
தமையனைக் கொன்றபின்பும் காதல் கைவிஞ்சி ‘என்னை இவன் மணப்பனோ,
மாட்டானோ?’ என்று கவலைகொண்ட இடிம்பையின் நிலைமையை அப்போது
வீமன் கவனித்தா னென்க. காமத்துக்கு உரிய தலைவன் மன்மத னாதலால், ‘மன்
மதனெரி’ எனப்பட்டது; இச்சருக்கத்துப் பதினோராங்கவியில்
“அனங்கவெங்கனல்” என வந்ததுங் காண்க.
மாய்ந்தவன் துணைவி! கேள்: வதுவை இன்னமும்
ஏய்ந்திலன், எம்முனும்; யாங்கள் மானுடர்;
ஆய்ந்துகொள் முறைமையால் அரக்கர் பாவை நீ;
காய்ந்தமை அறிதி, முன், கணை இராமனே.-வீமன் இடிம்பையை மணம் மறுத்தல்.
மாய்ந்தவன் துணைவி – இறந்தவனான இடிம்பனது தங்கையே!
கேள்-: எம் முன்உம் – எங்கள் தமையனும், இன்னம் உம் வதுவை ஏய்ந்திலன்
– இன்னமும் மணஞ்செய்திலன்;) (அன்றியும்,) யாங்கள் மானிடர் – நாங்கள்
மனிதர்; நீ அரக்கர் பாவை – நீ இராக்கதப்பெண்: முறைமையால் ஆய்ந்து
கொள் – (இவற்றை) முறைமையால் ஆராய்ந்து (நான்உன்னைமணஞ்செய்தல்
தகுதியன்றென்று) கொள்வாய்; (மற்றும்), முன் – முற்காலத்தில், கணை இராமன் –
அம்பு செலுத்தலில்வல்ல [க்ஷத்திரியவீரனான] ஸ்ரீராமபிரான், காய்ந்தமை –
(சூர்ப்பணகை யென்னும் இராக்கதப் பெண்ணை மணம்மறுத்து) வெறுத்ததனை,
அறிதி – அறிவாயாக; – (எ-று.)- என்று இடிம்பையை நோக்கி வீமன் கூறின
னென்க.
‘மாய்ந்தவன் துணைவி’ என்ற விளி, உடன்பிறந்தவன் இறந்ததுபற்றி நீ
சோகிக்கவேண்டிய காலத்தில் அவனைக்கொன்ற என்னைக் காதலித்து
மணஞ்செய்யக் கருதுதல் அடாது என்ற குறிப்பினது. ‘தமையன்
விவாகமின்றியிருக்கையில் தம்பி விவாகஞ் செய்துகொள்ளலாகாது’ என்ற
தருமசாஸ்திரக்கொள்கையை, ‘வதுவை இன்னமும் ஏய்ந்திலன் எம்முன்’ என
எடுத்துக் கூறினான். அரக்கரை மனிதர் மணக்கலாகா தென்பதை “வருத்த
நீங்கரக்கர் தம்மின் மானுடர் மணத்தல் நங்கை, பொருத்தமன் றென்று சாலப்
புலமையோர் புகல்வர்” என்ற இராமயணத்தாலும் அறிக. ராமலட்சுமணரைக்
காதலித்த சூர்ப்பணகை அங்கபங்கப் பட்டசெய்தி, ராமாயணத்திற் பிரசித்தம்.
ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன்
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய்,
‘ஓசை கொள் மைந்தரோடு உசாவி, நண்பினால்,
ஏசு அற உரைத்தனள், இனிமை கூரவே:.-இதுவும், அடுத்தகவியும் – குளகம்: இடிம்பையை
மணக்கும்படி வீமனுக்குக் குந்தி அநுமதி செய்தல்.
ஆசை கொள் அரக்கியோடு – (தன்மீது) காதல் கொண்ட
இடிம்பையுடனே, அனிலன் காதலன் – வாயுகுமாரனான வீமன், பேசிய-, கட்டுஉரை
– உறுதிமொழிகளை, கேட்ட,- பெற்ற தாய் – (வீமனைப்) பெற்ற தாயான குந்தி,
ஓசைகொள் மைந்தரோடு உசாவி – புகழ்பெற்ற தனதுமற்றைக்குமாரர் நால்வருடனும்
கலந்து ஆலோசித்து, நண்பினால் – அன்பினால், ஏசுஅற – குற்றம் நீங்க, –
இனிமை கூர – இனிமைமிக, உரைத்தனள் – (வீமனைநோக்கிச் சில) கூறினாள்;
(எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.
நண்பினால் என்பதற்கு – அவர்களுடைய மனவொற்றுமையால் என்க.
பாலபாரதத்தில் “பாண்டுஸூநுருபலப்யமாத்ருத:*** பீமமா ப்ரஸவம் ஆதிசத்ஸு
தீ:” என்று வருவதற்கு ஏற்பவும்,” உறத்தகும் இவளை நீ யும்முன்வாய்மையால், ‘
“அன்னையுந்தம்முனுமறைந்த வாசகம்” என்று மேற்செய்யுள்களில்
வருவதற்கேற்பவும் ‘மைந்தனோடுசாவி’ என்று பாடம்இருக்கலாம்
மறுத்து உரைப்பது கடன் அன்று; மாந்தருக்கு
அறத்து இயல், ஆர்கணும் அமைதல் வேண்டுமால்;
உறத் தகும் இவளை நீ, உம்முன் வாய்மையால்;-
கறுத்தவர் உயிர் கவர் காளை!’ என்னவே.
கறுத்தவர் உயிர் கவர் காளை – கோபித்த பகைவர்களுடைய
உயிரை (உடம்பினின்று) கவர்கிற மகனே! மறுத்து உரைப்பது கடன் அன்று –
(தம்மிடத்துக் குறைவேண்டியவரை) மறுத்துப் பேசுவது முறைமையன்று;
மாந்தருக்கு ஆர்கண்உம் அறத்து இயல் அமைதல் வேண்டும் –
மனிதர்க்குஎவரிடத்தும் தருமத்தினியல்பு பொருந்தவேண்டும்; உம்முன்
வாய்மையால் இவளை நீ உற தகும் – உனது தமையன் சொற்படி இவளை நீ
மணஞ் செய்தல் தகும்,’ என்ன – என்று,- (எ-று.)- ‘உரைத்தனள்’ (22) என
கீழ்க் கவியோடு இயையும். ஆல் – ஈற்றசை.
தமையன் விவாகமின்றியிருக்கையிலும் அவன் அனுமதி செய்தால் தம்பி
மணஞ்செய்துகொள்ளலா மென்பது நூற்கொள்கையாதலால், ‘இவளை நீ
உம்முன்வாய்மையால் உறத்தகும்’ என்றாள். பகைத்தவரை அழித்தல் போலவே
அன்பு கொண்டு சரணமடைந்தவரை ஆதரித்து அருள்வதும் தகுதி என்பாள்
‘கறுத்தவருயிர்கவர் காளை மறுத்துரைப்பது கடனன்று’ என்றும்,
இம்முறைமையை அரக்கர்விஷயத்திலும் ஒழியலாகா தென்பாள் ‘மாந்தருக்கு
அறத்தியல் ஆர்கணும் அமைதல் வேண்டும்’ என்றுங் கூறினாள்.
அத் தினத்து, அவர்வயின் அவலம் நீக்குவான்,
மெய்த் தவப் பழ மறை வியாதன் வந்தனன்;
பத்தியின் சிறுவரும் பணிந்து போற்றினார்;
முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார்.-அங்கு வியாசமுனி எழுந்தருள, பாண்டவர் உபசரித்தல்.
அ தினத்து – அந்நாளில், அவர்வயின் அவலம் நீக்குவான் –
அவர்களுக்குநேர்ந்த வருத்தத்தை நீக்கும்பொருட்டு, மெய் தவம்
பழமறைவியாதன் வந்தனன் – உண்மையான தவத்தை யுடையவனும் பழமையான
வேதங்களை வகுத்தருளியவனு மாகிய வியாசமுனிவன் (அங்கு) வந்தருளினான்;
(அதுகண்டு), சிறுவர் உம் – இளம்பிள்ளைகளான பாண்டவர்களும், முத்தி
பெற்றவரின் உம் முற்றும் சிந்தையார் – மோக்ஷமடைந்தவர்களினும் (ஆனந்தம்)
மிக்கமனத்தையுடையவர்களாய், பத்தியின் பணிந்து போற்றினார் – பக்தியோடு
(அவனை) வணங்கித் துதித்தார்கள்; (எ-று.)
அவலம் நீக்குதல் – துரியோதனனது சூழ்ச்சியால் நேர்ந்த மனவருத்தத்தைத்
தணித்தல். மெய்த்தவம் – ஒழுக்கத்திலும் பயனிலும் தவறாத தவம். ‘முந்துஞ்
சிந்தையார்’ என்றும் பாடம்.
தனி வனம் இகந்து, நீர் சாலிகோத்திர
முனி வனம் சில பகல் வைகி, முந்துற,
மனன் உறப் பார்ப்பன மாக்கள் ஆகியே,
இனிமையின் வேத்திரகீயம் எய்துவீர்!‘-வியாசன் பாண்டவர்க்குக் கூறிய நன்மொழி.
இரண்டுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) நீர் – நீங்கள், தனி வனம் இகந்து – தனிமையான காட்டைக்
கடந்து, முந்துற – முந்தி, சாலிகோத்திர முனி வனம் சில பகல் வைகி –
இங்குள்ளசாலிகோத்திரனென்னும் முனிவனது வனத்தில் சிலநாள் இருந்து,
(பின்பு), மனன் உற பார்ப்பனமாக்கள் ஆகி – (கண்டார் எவரும்) மனத்தால்
நம்பும்படி பிராமண வேடங்கொண்டு, வேதத்திரகீயம் இனிமையின் எய்துவீர் –
வேத்திரகீயத்தை இனிது சேர்வீராக; (எ-று.)
தனிவனம் – மநுஷ்யசஞ்சார மில்லாத வனம், துரியோதனாதியரால் இன்னா
ரென்று அறிந்து இடரிழைக்க வொண்ணாதபடி வேற்றுவேடங்கொள்ளச் சொல்லின
னென்க. புருபுண்ணிய னென்னும் முனிவன் இல்லறம் நடத்துகையில் பிள்ளை
யில்லாக் குறையால் சாஸ்திர விதிப்படி சாலியஜ்ஞத்தைப் புரிகையில் பிரதியட்சமான
திருமாலின் அநுக்கிரகத்தாற் பிறந்த குமாரனுக்குச் சாலிகோத்திரனென்ற பெயர்
அத்திருமால் கட்டளையின் படி வைக்கப்பட்டது என வரலாறு அறிக;
சாலிஹோத்ரன் – சாலி யென்ற நெல்லின் ஹோமத்தினால் தோன்றியவன்.
எனத் தம படர் ஒழித்து, இமையவன் செல,
வனத்தை விட்டு அவ் வனம் மருவி வைகினார்-
வினைப்படுத்து, யாழினோர் முறையின் வேள்வி செய்
கனக்குழல் கன்னிதன் காதலானொடே.-பாண்டவர்கள் சாலிகோத்திரவனம் சேர்தல்.
என – என்றுசொல்லி, தம படர் ஒழித்து – தங்களுடைய
மனத்துயரத்தை நீக்கி, இமையவன் – வியாசமாமுனிவன், செல – செல்ல,-
(தருமன் முதலியோர்),- வினை படுத்து – மேற் செய்யவேண்டிய தொழிலில்
மனம்பொருந்தி,- யாழினோர் முறையின் – காந்தருவமுறைப்படி, வேள்விசெய் –
மணஞ்செய்த, கனம் குழல் கன்னி தன் – மேகம்போன்ற கரிய கூந்தலையுடைய
இளம் பெண்ணான இடிம்பியினது, காதலானொடே – கணவனானவீமனுடனே, –
வனத்தை விட்டு – அவ்விடிம்பவனத்தைவிட்டு, அ வனம் மருவி வைகினார் –
அந்தச் சாலிகோத்திரமுனிவனத்தைச் சேர்ந்து அங்கு வசித்தார்கள்;(எ-று.)
நல்வினைப்பயனால் தனியே ஒருவரையொருவர் சந்தித்துக் கூடுகிற
கந்தர்வர்களின் வழக்கத்தைத் தழுவிய மணமாதலால், இது, காந்தர்வ மென்று
பெயர்பெறும்: இதற்கு ‘யாழோர்கூட்டம்’ என்று தமிழிற் பெயர். கந்தர்வர்
வீணைகைக்கொண்டு இசை பாடுந் தன்மைய ராதலால், ‘யாழினோர்’ எனப்
பட்டனர். திருமாலினது திருவவதாரமூர்த்தி யாதலால், வியாசன், ‘இமையவன்’
என்று சிறப்பித்துக் கூறப்பட்டான். அன்றியும், சிறந்த முனிவர் சிறுபான்மை
‘கடவுளர்’ என வழங்கப்படுவர். இடிம்பை அழகிய வடிவங்கொண்டு
வந்ததனால், ‘கனக்குழற்கன்னி’ எனப்பட்டாள்.
குந்தியை, இரவும் நன் பகலும், கோது இலா
வந்தனை புரிதலின், மகிழ் இடிம்பையும்,
வெந் திறல் வீமனும் விழைந்து, வள்ளியும்,
கந்தனும் என, பெருங் காதல் கூரவே.-இதுவும், அடுத்த கவியும் – குளகம்: வீமனும் இடிம்பியும்
உல்லாசமாகக் கூடிக்குலாவல்.
இரவுஉம் – இராத்திரியிலும், நல்பகல்உம் – நல்ல பகற்
காலத்திலும் [எப்பொழுதும் என்றபடி], குந்தியை – (தனது மாமியாகிய)
குந்திதேவிக்கு, கோது இலா வந்தனை புரிதலின் – குற்றமில்லாத வந்தனை
வழிபாடுகளைச் செய்தலிலே, மகிழ் – மகிழ்ச்சி கொண்ட, இடிம்பையும்-, வெம்
திறல் – (பகைவர்க்குக்) கொடிய வலிமையையுடைய, வீமனும்,- வள்ளிஉம்
கந்தன்உம் என – வள்ளியம்மையும் முருகக்கடவுளும்போல, விழைந்து – (ஒருவரை
யொருவர்) விரும்பி, பெரு காதல் கூர – மிக்க அன்பு வளர,- (எ-று.)- ‘மணம்
புணர்ந்தனர்’ என் வருங் கவியோடு முடியும்.
முருகக்கடவுள் வள்ளிமலையில் வந்து அங்குவளர்ந்துவந்த
வள்ளியம்மையைக்காந்தருவமணம் புணர்ந்து மலைச்சாரலில் சுனைக்கரையிலும்
தினைப்புனத்திலும் மலர்ப்பொழிலிலும் அவளுடன் கூடிக்குலாவியமை,
புராணங்களிற் பிரசித்தம். வள்ளி – முருகக் கடவுளின் மனைவியரிருவருள்
ஒருத்தி; (மற்றொருத்தி – தேவயானை.) வள்ளிக்கிழங்கு தோன்றிய குழியிலே
பிறந்தமை பற்றி, இவளுக்கு வள்ளியென்று பெயர்.
மான்மதம் கமழ் கொடி மந்திரம்தொறும்,
கான் மணம் கமழ் தடங் கா அகம்தொறும்,
தேன் மிகு சுனை நெடுஞ் சிலம்பு அகம்தொறும்,
மேல் மணம் புரிந்தனர், வேட்கை விஞ்சவே.
மான்மதம் கமழ்-கஸ்தூரிமணம் வீசப்பெற்ற, கொடி மந்திரம்
தொறுஉம் – கொடிவீடுகளிலும், கான் மணம் கமழ் – மிக்க நறுமணம் வீசுகிற,
தட கா அகம் தொறுஉம் – பெரியசோலைகளினிடங்களிலும், தேன் மிகும் சுனை
– தேன்மிக்க சுனைகளையுடைய, நெடு சிலம்பு அகம் தொறுஉம் – பெரிய
மலைகளினிடங்களிலும், வேட்கை விஞ்ச – ஆசைமிக, மேல் மணம் புணர்ந்தனர்
– மேன்மையான கலவியின்பத்தை அனுபவித்தார்கள்; (எ-று.)
மான்மதம் – கஸ்தூரியென்னும் ஒருசாதிமானினது கொழுப்பு: இது, குறிஞ்சி
நிலப்பொருள்களுள் ஒன்றாதலின், இங்குக் கூறப்பட்டது. கொடிமந்திரம் –
பூங்கொடிகளின் படர்ச்சியால் வீடுபோல் அடர்ந்த இடம், லதாக்ருஹ
மெனப்படும், சுனையில்தேன், நீர்ப் பூக்களினின்றும் கரைமரங்களினின்றும்
பெருகியவை. ‘மணம் புரிந்தனர்’ என்றும் பாடம் உண்டு.
நிறம் திகழ் இருட் பிழம்பு என்ன நீண்டு, அறப்
புறம் தரும் உரோமமும், பொருப்புத் தோள்களும்,
மறம் தரு கனை குரல் வாயும், ஆகவே,
பிறந்தனன்-கடோற்கசன் என்னும் பேரினான்.-இடிம்பை கடோற்கசனென்ற மகனைப் பெறுதல்.
அற புறம் தரும் உரோமம்உம் – மிகுதியாக முதுகிலே பொருந்திய
மயிர்களும், பொருப்பு தோள்கள்உம் – மலைகள் போன்ற தோள்களும், மறம்
தரு கனை குரல் வாய்உம் ஆக – பெரு வலிமையைக் காட்டுகிற கர்ச்சிக்கும்
ஒலியையுடைய வாயும் பொருந்த,- நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்ட –
கருநிளம் விளங்குகிற இருளின் தொகுதிபோல(க் கரியதாய்) வளர்ந்த
வடிவமுடையனாய்,- கடோற்கசன் என்னும் பேரினான் – கடோத்கசனென்னும்
பெயரையுடைய மகன், பிறந்தனன் – (இடிம்பையினிடம்) தோன்றினான்;
கடம் – குடம்: உத்கசம் மயிரில்லாதது: இவனுடைய, குடம் போன்றதலை
மயிரின்றி யிருந்ததனால், கடோத்கசனென்று இவனுக்குப் பெயரிடப்பட்டதென்று
வடநூல் கூறும். ‘இருட்பிழம்பென்ன நீண்டு’ என்று அவனது கரியபெரியவடிவுக்கு
உவமைகூறினார்.
காதிய திறல் நரகாசுரன்தனை,
ஆதி வெங் கோலம், அன்று அளித்த ஆறுபோல்,
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய,
சோதி அம் புதல்வனும் தொழுது சொல்லுவான்:-கடோற்கசன் பாண்டவரை வணங்குதல்.
வெம் ஆதி கோலம் – வெவ்விய ஆதிவராகமூர்த்தி, காதிய திறல்
நரகாசுரன்தனை – (அனைவரையும்) தாக்கியழிக்கவல்ல வலிமையையுடைய
நரகாசுரனை, அன்று – அக்காலத்தில் [முன்பு] அளித்த ஆறுபோல் – பெற்ற
விதம்போல, மேதினி மதித்த போர் வீமன் நல்கிய – பூமியிலுள்ளோர் யாவரும்
கொண்டாடும் போரையுடைய வீமன்பெற்ற, சோதி அம் புதல்வன்உம் –
ஒளியையுடைய புத்திரனான கடோற்கசனும், தொழுது சொல்லுவான் –
(பாண்டவர்களை) வணங்கி (அவரைநோக்கிச்) சொல்லுவான்; (எ -று.)- அதனை,
அடுத்த கவியிற் காண்க.
பிரளயசலத்தில் முழுகியிருந்த பூமியைத் திருமால் வராகாவதாரஞ்செய்தருளிக்
கோட்டு நுனியாலே யெடுத்தபொழுது அத்திருமாலினது பரிசத்தாற் பூமிதேவியினிடம்
ஒரு குமாரன் பிறந்தனனென்றும், அஸமயத்திற் சேர்ந்து பெறப்பட்டதனால் அவன்
அசுரத்தன்மைபூண்டு நரகனென்று பெயர்பெற்று எல்லாப் பிராணிகளையும் மிகவும்
வருத்திவந்தன னென்றும், பின்பு அவனைத் திருமால்தானே
க்ருஷ்ணாவதாரத்திற்கொன்றருளின னென்றும் உணர்க. முன்னொருகாலத்திற்
சிவபிரான் அளித்த வரத்தின்படி, இராக்கத ஸ்திரீகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள்
பிறந்தபொழுது தாயினவ்வளவு பருவவளர்ச்சியுறுதலால், கடோத்கசன் பிறந்தவுடனே
பாண்டவரைத்தொழுது பேசுவானாயினனென அறிக. சோதியம் புதல்வன், அம் –
சாரியை.
நிறையுடைத் தந்தையர்! நீர் நினைத்த போது,
உறைவு இடத்து எய்தி, ஆங்கு உரைத்த செய்குவேன்;
இறைவ! இப் பணி, விடை, தருக!’ என்று ஏகினான்,
பிறை எயிற்று யாயொடும், பெற்ற பிள்ளையே.-பாண்டவரிடம் விடைபெற்றுக் கடோற்கசனும்
இடிம்பியும்சேறல்.
நிறை உடை தந்தையர் – நற்குணநிறைவையுடைய தந்தையர்களே!
நீர் நினைத்த போது – நீங்கள் (என்னை) நினைக்கும் பொழுது, உறைவு இடத்து
எய்தி – (நீங்கள்) வசிக்குமிடத்தில் (நான்) வந்து, ஆங்கு உரைத்த செய்குவேன்
– அவ்விடத்து (நீங்கள்) சொன்னவற்றைச் செய்வேன்; இறைவர் – தலைவர்களே!
இ பணிவிடை தருக – இந்தக்கட்டளையையும் விடையையும் (எனக்குத்)
தந்தருள்வீராக’, என்று – என்றுவேண்டி,- பிறை எயிறு யாயொடுஉம் –
பிறைச்சந்திரன் போன்ற கோரதந்தங்களையுடைய (தன்) தாயாகிய இடிம்பையுடன்,
பெற்ற பிள்ளை – அவள்பெற்ற மகனான கடோற்கசன், ஏகினான் –
(இடிம்பவனத்துக்குச்) சென்றான்;
வீமன், இடிம்பையை மணக்கும்போது கூறிய வாக்குப்படியே மகன்
பிறந்தபின் அவள் அவனைவிட்டு நீங்கின ளென்பதை, முதனூலால் அறிக.
இங்கே, ‘பிறையெயிற்றியாய்’ என்றது, அவளது இயல்பாகிய அரக்கிவடிவத்தை.
‘இறைவ’ என்றும், ‘இப்படி விடைதருக’ என்றும் பாடமுண்டு.
சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின்
காத்திரம் மாறி, அக் காவல் வேந்தரும்,
கோத்திரம், சூத்திரம், குடி, உரைத்துளார்,
வேத்திரகீய மா நகரில் மேயினார்.-பாண்டவர் பிராமணவேடங்கொண்டு வேத்திரகீயஞ் சார்தல்.
அ காவல் வேந்தர்உம் – (பூமிமுழுவதையுங்) காக்குந் தொழிலுக்கு
உரிய அரசர்களாகிய அந்தப்பாண்டவர்களும், சாத்திரம் மறை தெரி முனிவர்
தன்மையின் காத்திரம் மாறி – சாஸ்திரங்களையும் வேதங்களையும் அறிந்த
அந்தணர்களுடைய வேடமாக வடிவம்மாறி, கோத்திரம் சூத்திரம் குடி
உரைத்துளார்- (அவ்வேடத்திற்கு ஏற்றபடி) ஒரு கோத்திரத்தையும்
சூத்திரத்தையும் குடிப் பெயரையும் கற்பித்துச் சொல்லிக்கொண்டு, வேத்திரகீயம்
மா நகரில்-, மேயினார் – போய்ச் சேர்ந்தார்கள்; (எ-று.)
வேத்திரகீயநகரத்திற் சேர்ந்தாரென்று பாலபாரதமும் கூறும். பாண்டவர்
சேர்ந்தநகரம் ஏகசக்கரநகரமென்பதும், அங்கு இவர்களுறைந்தஇடம்
வேத்திரகீயமெனப்படுமென்பதும் வியாசபாரதத்தாற் பெறப்படும். ஆகவே,
வேத்திரகீயமா நகரம் என்பதற்கு – வேத்திரகீயம் என்ற இடத்தைத் தன்னிற்
கொண்ட ஏகசக்கரநகரமெனப் பொருள்காணலாம். சாஸ்திரம் – தருக்கம்
வியாகரணம் வேதாந்தம் முதலியன. கோத்திரம் – பாரத்வாஜம், ஆத்ரேயம்
போல்வன. சூத்திரம் – ஆபஸ்தம்பம், ஆச்வலாயநம் போல்வன. குடிப்பெயர்
ஏற்றபடி கண்டுகொள்க.
அந்தணர் ஐவரும், யாயும், அந் நகர்
வந்துழி, அதிதியர் வரவு காண்டலும்,
முந்துபு முந்துபு முகமன் கூறினார்,
செந் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே.-அவர்கள்வரவுக்கு அவ்வூரந்தணர் மகிழ்தல்.
அந்தணர் ஐவர்உம் – பிரமணராகிய பாண்டவர் ஐந்துபேரும்,
யாய்உம் – அவர்கள் தாயும், அ நகர் வந்த உழி – அந்த நகரத்திற்கு வந்த
பொழுது,- அதிதியர் வரவு காண்டலும் – அந்த விருந்தினர்களுடைய
வருகையைக் கண்டவளவிலே, செம் தழல் வேள்வி கூர் ஆதிதேவர் –
செந்நிறமான அக்கினியினிடத்து யாகஞ் செய்தலில் மிக்கவர்களான [சிறந்த]
பிராமணர்கள், முந்துபு முந்துபு முகமன் கூறினார் – ஒருவரினும் ஒருவர்
முற்பட்டு எதிர்கொண்டு வந்து உபசாரவார்த்தை சொன்னார்கள்; (எ-று.)
ஆதிதேயரே என்ற பாடத்துக்கு அதிதிபூசையைச் செய்பவரென்க.
இச்செய்யுள் வியாசபாரதத்தையொட்டி யெழுதியது.
நல் மனைவாழ்க்கையில் நயந்த சிந்தையான்,
மன் மனை அனைய தன் மனையில், ஓர் முனி,
தன்மனை, ‘அம்மனை தம்பிமாரொடும்
என் மனை வருக!’ என எதிர்கொண்டு ஏகினான்.-அவர்களை ஓரந்தணன் தன்மனைக்கு அழைத்துச் செல்லுதல்.
நல் மனை வாழ்க்கையில் நயந்த சிந்தையான் – சிறந்த
இல்லறவாழ்விலே விரும்பிய மனத்தையுடையனாகிய, ஓர் முனி – ஓர்
அந்தணன்,- தன்மனை – தருமபுத்திரனை, அம்மனை – தாயோடும்,
தம்பிமாரொடும்- என் மனை வருக என – என்வீட்டுக்கு வருவீராக
என்றுசொல்லி, எதிர்கொண்டு-எதிர்சென்று உபசரித்து, மன் மனை அனைய
தன்மனையில் – இராசமாளிகையைப்போன்ற தன்வீட்டில், ஏகினான் –
அழைத்துச்சென்றான்;(எ-று.)
இல்லறம் அனைவர்க்கும் உதவக்கூடியதாய்ச் சிறத்தலால், ‘நன்
மனைவாழ்க்கை’ எனப்பட்டது. பொருள்வளத்திலும் பெருமையிலும் மிக்க வீடு
என்றதற்கு, இராசகிருகத்தை உவமை கூறினார்.
ஒரு தினத்து அமுது என, உள்ள நாள் எலாம்,
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார்;-
அரு நெறிக் கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல்
இருபிறப்பாளருக்கு என்றும் தன்மையே.-பாண்டவர்கள் அவ்வூரில் விருந்துண்டு காலங்
கழித்தல்
ஒரு தினத்து அமிழ்து என – ஒருநாளையுணவுபெற்றாற்
போலவே, உள்ள நாள் எலாம் – மற்றுமுள்ள எல்லாநாள்களிலும், வரு முறை
படி – (பிராமணசாதிக்குத் தொன்றுதொட்டு) வருகின்ற முறைமைப்படி, விருந்து
ஆகி வைகினார் – (பாண்டவரும் குந்தியும்) விருந்தினராய் (அவ்வூரில்)
தங்கியிருந்தார்கள்; அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல் –
அருமையானவழியில் (நடந்து தேசாந்தரிகளாய்) வந்த அந்தணர்களுக்கு இனிய
உணவை உண்பித்தல், இருபிறப்பாளருக்கு என்றுஉம் தன்மைஏ –
அந்தணர்களுக்கு என்றுமுள்ள இயல்பேயாம்; (எ-று.)
ஒருநாள்போலவே அவ்வூரில் இருந்த நாள்களிலெல்லாம் அவர்கள்
ஒவ்வொருவீட்டில் ஒவ்வொருநாளைக்கு விருந்தினராய்ச் சென்று அவ்வவ்வீட்டுக்கு
உரிய அந்தணரால் உபசாரத்தோடு இன்னுண வளிக்கப்பெற்று வாழ்ந்தன ரென்ற
சிறப்புப்பொருளை, வழிப்போக்கராய்நேர்ந்த அந்தணர்க்கு விருந்திட்டு உதவுதல்
பிராமண சாதியார்க்கு இயற்கையே யென்ற பொதுப்பொருள்கொண்டு
விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. ‘வருமுறைப்படி’ என்பதற்கு –
நாள்தோறும் முறையே ஒவ்வொரு வீட்டுக்குச்சென்று என்றுமாம். பூமியில்
தேவர்போலக் கொண்டாடப்படுதலால், அந்தணர், ‘கடவுளர் எனப்பட்டனர்.
தாய்வயிற்றிற் பிறத்தலாகிய இயற்கைச் சன்மத்தோடு உபநயநச்சடங்கினால்வருகிற
ஞானசன்மமும் ஒருபிறப்பாமென்பது நூற்கொள்கையாதலால், இருபிறப்பாள
ரென்றது. அமுதென, விருந்தயின்று என்று பாடபேதங்கள்.
பொன்னகர் அணுகினர் போல நெஞ்சுற,
தம் நகர் எனும்படி, தாயும் மைந்தரும்,
இந் நகர் அநேக நாள் இருந்த எல்லையில்,
அந் நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம்:-அக்காலத்து அங்கு நடந்த ஓர்செய்தி கூறத்
தொடங்கல்: கவிக்கூற்று
தாய்உம் மைந்தர்உம் – குந்தியும் பாண்டவர்களும், தம் நகர்
எனும்படி – தங்களுடைய (சொந்த) நகர மென்றுசொல்லும்படி, இ நகர் –
இந்தவேத்திரகீயநகரத்தில், பொன் நகர் அணுகினர் போல நெஞ்சு உற –
பொன்மயமான (தேவலோகத்து) அமராவதிநகரத்தை யடைந்தவர்கள் போல
மனம்மகிழ, அநேகம் நாள் இருந்த எல்லையில்-, அ நகர் புரிந்தது ஓர்
ஆண்மை -அந்நகரத்திற்செய்த ஒருவீரத்தை,கூறுவாம்-(யாம்) இனிச்சொல்லுவோம்;
(எ-று.)- அதனை, இச்சருக்கம் முடியுமளவுங் காண்க
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர்
நெடு வன சரிதராய்,
உறையும் வள மனை உடைய மடவரல், உருகு
பிரதைதன் உயிரனாள்,
குறைவு இல் பொலிவினள்; விரத நெறியினள்; குழுவு
நிதியினள்; கொடுமையால்,
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர, எரி கொள் கொடி
என இனையினாள்.-பாண்டவர் வசிக்கிற வீட்டுக்கு உரிய பார்ப்பனி
ஒருநாள்புலம்புதல்.
அரிய குரு குல மகிபர் – அருமையான குருகுலத்து
அரசர்களாகிய பாண்டவர்கள், மறையும் உறைவினொடு – மறைந்த
வடிவத்துடனே [மாறுவேடங்கொண்டு], நெடு வனம் சரிதர் ஆய் – பெரிய
காட்டிற் சஞ்சரிப்பவர்களாகி, உறையும் – (அவ்வூரில்) வசித்திருக்கிற, வளம்
மனை – செல்வவளம்நிறைந்த வீட்டுக்கு, உடைய -உரிமையுடைய, மடவரல் –
பெண்,- உருகு பிரதைதன் உயிர்அனாள் – (கருணையால்)
மனமுருகுந்தன்மையுள்ள – குந்தியின் உயிர்போன்றவள்: குறைவு இல்
பொலிவினள் – குறைவில்லாத [நிறைந்த]அழகுடையவள்; விரதம் நெறியினள் –
நோன்புகளைத்தவறாமல் அனுட்டிக்கும் முறைமையுடையவள்: குழுவு நிதியினள்
– மிகுதியாகத் திரண்ட செல்வத்தையுடையவள்; (அவள்), கொடுமையாள் –
(பகாசுரனால்நிகழுங்) கொடுமைகாரணமாக,- இறைஉம் ஒழிவு அற இரு கண்
அறல் வர – சிறிதும் இடைவிடுதலில்லாமல் (தனது) இரண்டு கண்களினின்றும்
சோகநீர் சொரிய,- எரி கொள் கொடி என – தீப்பற்றிய பூங்கொடி போல,
(தவித்து), இளையினாள்-வருந்தினாள்;
துயருறுங் கணவனுடைய மடியிலிருக்கும் இருமக்களைத் தழுவிக்கொண்டு
அந்தணி யழ, குந்திதேவி வினாவின ளென விவரம் காண்க. பாண்டவரோடு
குந்தியைத் தன்மனையிலிருத்தி மிகவும் உபசரித்து வந்தமைபற்றிக் குந்தியினால்
உயிர்போலப் பாவித்து மிகவும் அன்புசெய்யப்பட்டு நின்றவளென்பார், ‘உருகு
பிரதைதனுயிரனாள்’ என்றார்.
இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிவந்த
எழுசீராசிரியச்சந்தவிருத்தங்கள், தனன தன தன தனன தனதன தனன தனதன
தனதனா என்பது, இதுமுதல் மூன்று கவிகளுக்குச் சந்தக்குழப்பு
மறுகி அழுவது என்? மொழிக, முனிவரன் மனைவி!’ என
இவள் வினவலும்,
குறுகி, அவளுடன் உரைசெய்குவள், உறு குறையை உளம்
நனி குறையவே:
‘முறுகு சின அனல் பொழியும் விழியினன், முகன் இல் பகன்
எனும் முரணுடைத்
தறுகண் நிசிசரன், உளன்; இவ் வள நகர் தழுவும் வனன்
உறை தகுதியான்;-இதுமுதல் ஆறுகவிகள் – ஒருதொடர்: ‘புலம்புவானேன்?’
என்று வினவிய குந்திக்குப் பார்ப்பனி
பகன் செய்தியைக் கூறல்.
முனிவரன் மனைவி – சிறந்த அந்தணனுடைய மனைவியே! மறுகி
அழுவது என் – (நீ) கலங்கிப் புலம்புவதுயாதுகாரணத்தால்? மொழிக –
சொல்வாயாக’, என -, இவள் வினவலும் – இக்குந்தி கேட்டவளவிலே,-
(அப்பார்ப்பனி), குறுகி – அருகில்வந்து, உறு குறையை – (தனக்கு) நேர்ந்த
மனக்குறையை, உளம் நனி குறைய – மனம்மிகவும் மெலிய, அவளுடன்
உரைசெய்குவள் – அக்குந்தியுடள் கூறுவாள்:- முறுகுசினம்
அனல்பொழியும்விழியினன்- மிக்க கோபாக்கினியைச் சொரிகின்ற
கண்களையுடையவனாகிய, முகன் இல் பகன் எனும் – கண்ணோட்டமில்லாத
பகனென்கிற, முரண் உடை தறுகண் நிசிசரன் – வலிமையுடைய
வன்கண்மையுள்ளவனாகிய இராக்கத னொருவன், இ வளம் நகர் தழுவும் வனன்
உறை தகுதியான் – வளன்களையுடைய இந்த நகரத்தைச்சார்ந்த காட்டில்
வசிக்கும் உரிமையுடையவனாய், உளன் – இருக்கின்றான்;
முகன் – இலக்கணையாய், அன்போடு முகங்கொடுத்தலைஉணர்த்தும். இந்நகரத்தையடுத்தயமுனைக்கரையில் அரக்கன் வசிக்கின்றா னென்று
பாலபாரதம் கூறும். வனன் =வனம்
அருள் இல் இதயமும், நெறி இல் சரிதமும், அழகு இல்
உருவமும், அதிர் குரல்
பொருள் இல் உரைகளும், உடையன்; முழுது உடல் புலவு
கமழ்தரு பொறியினன்;
மருளும் நரியொடு கழுகு தொடர்தர, வலிய பிணம் நுகர்
சுவை அறாது,
இருளின்மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு
எழும் இதழினான்;
(அவ்வரக்கன்),- அருள் இல் இதயம்உம்-கருணையில்லாத
மனத்தையும், நெறி இல் சரிதம்உம் – நல்வழியில்லாத ஒழுக்கத்தையும், அழகு
இல் உருவம்உம் – அழகில்லாதகோரரூபத்தையும், அதிர் குரல் – முழங்குகிற
கர்ச்சனையொலியையும், பொருள் இல் உரைகள்உம் – பயனில்லாத
பேச்சுக்களையும், உடையன் – உடையவன்; முழுது உடல் – உடம்பு முழுவதும்,
புலவு கமழ் தரு – புலால் நாற்றம் வீசுகிற, பொறியினன் –
அடையாளத்தையுடையவன்; மருளும்நரியொடு கழுகு தொடர்தர –
(காண்பவர்மனம்) வெருளும்படியுள்ள நரிகளும் கழுகுகளும் விடாதுதொடர,
வலிய பிணம் நுகர் சுவை அறாது – வலிய பிணங்களைத் தின்னும் உருசி
நீங்காமல், இருளின்மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவுஎழும் –
இருளின்மேல் இரண்டுபிறைகள் (விளங்கினாற்) போல வளைந்த கோரதந்தங்கள்
(இரண்டு கடைவாயிலும்) வெள்ளொளி வீசப் பெற்ற, இதழினான் –
வாயிதழையுடையவன்; (எ-று.)
தொடர்தர அறாது எழும் இத ழென்க. நரியுங் கழுகுந்தொடர்தல்,
தசையினிடத்து நசையால். கரியவடிவத்தில் விளங்கும் பற்களுக்கு,
இருளின்மிசைப் பிறைகள் உவமையாம். ‘உடல் முழுதும் புலால்நாறும் பொறி’
என்றது, உயிர்நீங்கிய உடல்களை மிகுதியாகத் தின்னும்போது அவற்றினின்று
மேலேதெறித்த இரத்தம் முதலியவற்றால் ஆகிய அடையாளங்களைக் குறிக்கும்.
பீபத்ஸரஸ மெனப்படும் இழிப்புச்சுவைக்கு இச்செய்யுள் உதாரணமாம்.
‘பொறியிலன்’ என்றும் பாடம்.
அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன், இந்த ஊர்
வந்து, குடியொடு கொன்று, பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள்,
எந்தை முதலிய அந்தணரும், அவன் இங்கு வருதொழில் அஞ்சியே,
சிந்தை மெலிவுற நொந்து, தலைமிசை சென்று குவிதரு செங் கையார்
அந்தகண்உம் மிக அஞ்சி முதுகு இடும் – யமனும் மிகப்பயந்து
(முன்நின்று எதிர்க்கமாட்டாமல்) புறங்கொடுக்கும் படியாகவுள்ள, அந்த நிசிசரன்
– அந்த அரக்கன், இந்த ஊர் வந்து – இந்த ஊரினுள்ளேவந்து, பலரைஉம் –
இவ்வூரார் பலரையும், குடியொடு- (அவரவர்) குடும்பத்துடனே, மன்ற –
மிகுதியாக, கொன்று-, மறுகிடை – தெருவுகளிலே, தின்ற நாள் – தின்ற
நாளிலே,- எந்தை முதலிய அந்தணர்உம் – எனது தந்தைமுதலான
பிராமணர்களும், அவன் இங்கு வரு தொழில் அஞ்சி – அவன் இங்கேவந்த
செயலுக்குப்பயந்து, சிந்தை மெலிவு உற நொந்து – மனம்சோர்வடைய வருந்தி,
தலைமிசை சென்று குவிதரு செம்கையார்- (அச்சமிகுதியால் தாமாகவே)
தலைமேற் சென்றுகுவிந்து தொழுகிற சிவந்த கையையுடையவர்களாய்,-(எ-று.)-
‘என்றலும்’ என அடுத்த கவியோடு குளகமாய்த் தொடரும்.
அந்தகன் – பிராணிகளுக்கு அந்தத்தைச் செய்பவன்; அந்தம் – அழிவு.
தலைமிசைக் குவி தரு செங்கையராய்ச் சென்று எனக்கூட்டி யுரைப்பினும்
அமையும். மறுகிடைதின்ற – சந்தவின்பத்திற்காக வலிமிகவில்லை.
தந்த தனதன தந்த தனதன தந்த தனதன தந்தனா என்பது, இந்தக்
கவிக்குச் சந்தக்குழிப்பாம்
‘ஒன்றுபட, எதிர் கொன்று, பலர் உயிர் உண்பது அறநெறி அன்று, நீ;
இன்றுமுதல் இனி என்றும், முறை முறை எங்கள் மனைதொறும்,
விஞ்சையோர்
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும், நம் குலம்
துன்றும் நரபலி ஒன்றும், இவை திறை தொண்டு புரிகுவம்’ என்றலும்,
‘நீ-, ஒன்றுபட – ஒருசேர, எதிர் – எங்கள் எதிரிலே, பலர் உயிர்
கொன்று உண்பது – பலருடைய உயிரைநீக்கி (உடலைப்) புசிப்பது, அறம் நெறி
அன்று – தருமமார்க்கமன்று; இன்று முதல் இனி என்றும் – இன்றைநாள்முதல்
இனிமேல் என்றைக்கும், முறை முறை எங்கள் மனைதொறுஉம் – வரிசைக்கிரமப்படி
எங்கள் வீடுதோறும், விஞ்சையோர் குன்றம் என் அறுசுவை கொண்ட ஒரு பண்டி
அடிசில்உம் – வித்தியாதரர்வசிக்கும் மலை யென்றுசொல்லும்படி அறுவகையுருசியும்
அமைந்த ஒருபண்டிசோறும், நம் குலம் துன்றும் நரன் பலி ஒன்றுஉம் – எங்கள்
குலத்திற்பொருந்திய ஒரு மனிதனாகிய பலியும், இவை – ஆகிய இவற்றை, திறை
– (உனக்குத்) திறைப்பொருளாகச்செலுத்தி, தொண்டு – அடிமையை, புரிகுவம் –
செய்வோம் ‘, என்றலும் – என்றுசொன்னவளவிலே,-(எ-று.) ‘அன்று முதல் ***
தின்றுதிரிகுவன்’ என அடுத்த கவியில் முடிபு காண்க.
நாங்களே நாளுக்குஒருவீடாக முறைவட்டம் ஏற்படுத்திக் கொண்டு
ஒருவண்டிச்சோற்றையும், ஓராளையும் உனக்கு உணவாக இடுவோமென்று
ஊரந்தணர் கூறி அவனைச் சாந்தப்படுத்தினரென்க. விஞ்சையோர்=
வித்தியாதரர்; மாயவித்தைகளைத் தரித்தவர்; இவர்கள், பதினெட்டுத்
தேவகணங்களுள் ஒரு சாதியார். இவர்களுக்கு உறைவிடம்
வெள்ளிமலையாதலை, சிந்தாமணி சூடாமணிகளிற் காணலாம். நரபலி –
வடமொழித்தொடர்.
தன்ன தனதன தன்ன தனதன தன்ன தனதன தன்னனா என்பது, இனி
மூன்று செய்யுட்களுக்குச் சந்தக்குழிப்பு.
அன்றுமுதல் அடல் வஞ்சகனும், இறை அன்பினொடு
பெறு வன்பினால்,
என்றும் நிலைபெற, உண்டியுடன் மனை எங்கும்
இடுபலி எஞ்சுறத்
தின்று திரிகுவன்; இன்று என் மனை முறை; சென்று பணி
கவர் திங்கள்போல்
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர்; நெஞ்சம் இலது, ஒரு தஞ்சமே
அன்று முதல் – அந்நாள்முதலாக, அடல் வஞ்சகன் உம் –
கொடியவஞ்சகனான அவ்வரக்கனும், இறை அன்பினொடு – சிறிது அன்புடனே,
பெறு வன்பினால் – (தான்) பெற்ற வலிமையால், என்றுஉம் நிலை பெற –
எந்நாளும் நிலையாக, மனை எங்குஉம் உண்டியுடன் இடு பலி – வீடுதோறும்
உணவோடுசெலுத்தும் நரபலியை, எஞ்சுற தின்று திரிகுவன் – ஒழியும்படி தின்று
திரிவான்; (அந்த நியமித்தின்படி, இன்ற என் மனை முறை – இன்றைக்கு என்
வீட்டின் முறை; (ஆதலால்), எனதுஉயிர்-, பணி சென்று கவர் திங்கள் போல் –
(இராகுகேதுவாகிய) பாம்பினால் (அருகிற்) சென்று பிடிக்கப்பட்ட சந்திரன்போல,
நின்று தளர்வு உறுகின்றது – தளர்ச்சி பொருந்தி நிற்கின்றது; நெஞ்சம் ஒரு
தஞ்சம் இலது – என்மனம் ஒரு பற்றுக்கோடுமில்லாதிருக்கின்றது; (எ-று.)
உயிர் அழியாது துயருறுதல்பற்றி, அதற்கு, பணிகவர்திங்கள் உவமை.
எஞ்சுற – (நாளடைவிலே ஊரில் ஆள்) குறைய என்றுமாம்.
கன்னி இவள் பிறர் பன்னி; எனது இரு கண்ணின்
மணி நிகர் சன்மனும்,
மன்னு குல முதல்; பின்னை ஒருவரும் மண்ணின்
உறு துணை இன்மையால்,
இன்னல் பெரிது உளது; என்ன புரிகுவது என்ன அறிகிலன்;
அன்னை! கேள்:
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில், இடர்
நனி துன்னுமால்.’
கன்னி இவள் – (எனது) இந்த இளம்பெண், பிறர் பன்னி –
வேறொருவரது உடைமையாகிய மனைவி: எனது இரு கண்ணின் மணி நிகர்
சன்மன்உம் – எனது இரண்டுகண்களிலுள்ள கருமணியை யொத்த அருமைப்
புதல்வனும், மன்னு குலம் முதல் – நிலையானவமிசத்துக்குஓர் அடியாயுள்ளான்;
மண்ணின்உறு துணை பின்னை ஒருவர்உம் இன்மையால் – பூமியிற் பொருந்திய
துணை வேறொருவரும் இல்லாமையால், இன்னல்பெரிது உளது – (எனக்குத்)
துன்பம்மிகுதியாயுண்டாயிற்று: என்ன புரிகுவது என்ன அறிகிலன்-யாது
செய்வதென்று அறியேன்; அன்னை கேள் – தாயே! கேள்; முன்னை மனை
நிகழ் தன்மம் முனிவனை முன்னில் – இவ்வீட்டுக்கு முதன்மையாய்
இல்லறவாழ்க்கையை நடத்துகிற (என்கணவனாகிய) அந்தணனை (ப்பலிசெலுத்த)
நினைத்தாலோ, இடர் நனி துன்னும் – துன்பம் மிகுதியாக உண்டாகிறது; (எ-று.)-
என்று பார்ப்பனி இடர்க்காரணத்தைக் குந்தியிடம் கூறிமுடித்தா ளென்க.
எனதுமகளைப் பலிசெலுத்தலா மென்றால், அவள் ஒருபுருஷனுக்கு
வாழ்க்கைப்பட்டு அவனுக்குஉரிய பொருளாய்விட்டதனால். அவளைச்செலுத்த
இடமில்லை; எனதுமகனோ, ஏகபுத்திரனாதலால் அவனைச்செலுத்திவிடின்
சந்ததியின்றி வமிசம் அழியும்: என்னையே செலுத்துவதென்றால், வேறொருவர்
உதவுவாரில்லை; அதனால், என்கணவன் விரும்பகில்லான்; என்கொழுநனைச்
செலுத்தும் விஷயத்தில் உண்டாகிற துயரத்துக்கு எல்லையில்லை என்று
பலவகையிலும் தன் துயரத்துக்குப் பரிகாரமில்லாமையைக் கூறினள். ஜந்மம் –
பிறப்பு: அதனையுடையவன், சன்மன் : மகன்.
ஏதம் அற உறவான மனைமகள் யாவும் உரைசெய, யாதவன்
தீது இல் குலமகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள்:
‘ஆதி அனுமனொடு ஓதும் உவமையன், ஆடல்
வலியுடை ஆண்மையான்,
மோதி, மிகு திறல் யாம சரிதனை, மூளை உக, உடல் கீளுமே.-இருகவிகள் – அதுகேட்டுக் குந்தி தனது மக்களில்
ஒருவனைஅனுப்பலாமென்றல் கூறும்.
நான்கு கவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) ஏதம் அற உறவு ஆன – களங்கமில்லாமல் (குந்தியோடு)
நண்புரிமைபூண்ட, மனை மகள் – அந்தவீட்டுக்குஉரிய பார்ப்பனி, யாஉம்
உரைசெய – (இங்ஙனம்) எல்லாவற்றையும் சொல்ல, யாதவன் தீது இல் குலம்
மகள் – யதுகுலத்திற்பிறந்த சூரராசனது குற்றமற்ற குலத்துக்கு உரியமகளாகிய
குந்திதேவி, ஆர்வமுடன் – அன்புடனே, அவள் தேற ஒரு மொழி கூறுவாள் –
அப்பார்ப்பனி தேறுதலடையும்படி ஒருவார்த்தைசொல்வாள்:- ஆதி அனுமனொடு
ஓதும் உவமையன்-பழமையான அநுமானோடு சொல்லத்தக்க ஒப்புமையுடையவனும்,
ஆடல் வலி உடை ஆண்மையான் – போர்வலிமையோடுகூடிய பராக்கிரமசாலியும்
ஆகிய என்மக்களில் ஒருவன், இருள் இடையாமசரிதனை – இருளையுடைய
நள்ளிரவிற் சஞ்சரிப்பவனான [இராக்கதனாகிய]அந்தப்பகனை, மோதி – தாக்கி,
மூளை உக – மூளை சிதறும்படி, உடல் கீளும் – உடம்பைப்பிளந்திடுவான்.
பாலபாரதத்திற் கூறியதற்குஏற்ப, ஆடல் வலியுடையாண்மையான்
என்பதற்கு – பௌருஷத்தோடுபகையடவல்ல மந்திரசக்தியை யுடையவனெனினுமாம்.
அனுமானது பலபராக்கிரமச்செயல்கள், இராமயணத்து மிகப்பிரசித்தம்.
இரவுக்குஉரிய நான்குயாமங்களுள் ஒருயாமகாலம் பிராணிசஞ்சாரம்
முதலியவற்றாற்பகல் போலுதலால், யாமத்தில் இப்படி விசேஷமுடைய இரவி,
யாம மெனச் சிறப்பாக வழங்கப்படும். மோதிமிகுதிறல் என்றும் பாடம்.
தான தன தன தான தனதன தான தனதன தானனா என்பது,
இதற்குச்சந்தக்குழிப்பு.
கொவ்வை இதழ் மட நவ்வி! அலமரல்; குவ்வின் அனலினும் வெவ்வியோர்,
ஐவர் உளர், சுதர்; கை வில் விறலினர்; அவ்வியமும் இலர்;
செவ்வியோர்;
இவ் இவரில் எமை உய்வு கொளும் அவன், எவ் எவ்
உலகையும் வவ்வு திண்
பௌவம் என, நனி தெய்வ முனிவரர் பைதல் அற,
நெறி செய்வனே.
கொவ்வை – கொவ்வைக்கனிபோலச் சிவந்த, இதழ் –
வாயிதழையுடைய, மடம் நவ்வி – (கண்ணின்நோக்கத்தால்) இளமையான
மான்போன்றவளே! அலமரல் – (நீ மனங்) கலங்க வேண்டா; குவ்வின் –
இந்நிலவுலகத்தில், அனலின்உம் வெவ்வியோர் – (பராக்கிரமத்தால்)
அக்கினியினும் கொடியவர்களும், கை வில் விறலினர் – கைதேர்ந்த வில்லின்
வல்லமையை யுடையவர்களும், அவ்வியம்உம் இலர் – பொறாமையில்லாதவர்களும்,
செவ்வியோர் – நற்குண முடையவர்களுமாகிய, அய்வர்சுதர் – ஐந்துபிள்ளைகள்
உளர் – (எனக்கு) இருக்கிறார்களன்றோ? இ இவரில் – இத்தன்மையான
ஐந்துபுத்திரர்களுள், எமை உய்வு கொளும் அவன் – மற்றை
யெங்களெல்லோரையும் உயிருய்யச்செய்பவனான அந்த ஒரு குமாரன், எ எ
உலகைஉம் வவ்வு திண் பௌவம் என நனி தெய்வம் முனிவரர் பையுள்அற – உலகங்களெல்லாவற்றையுங்கவர்கிற வலிய சமுத்திரம் போல (அளவின்றி)
மிகுகிற தெய்வத்தன்மையுள்ள சிறந்த அந்தணர்களுடைய வருத்தம் நீங்க, நெறி
செய்வன் – (அதற்குஉரிய) முறைமையைச் செய்வான்;(எ -று.)- ஏ – தேற்றம்.
சிஷ்டர்களாகிய முனிவர்களைப் பரிபாலிக்கும்பொருட்டுத் துஷ்டனாகிய
அவ்வரக்கனை அழித்தொழித்திடுவ னென்பதாம். இங்கு ‘அவன்’ என்றது
வீமனை. அவன் அரக்குமாளிகையினின்று தங்களையெல்லாம் உய்வித்தமையை
யுட்கொண்டு, அவனுக்கு ‘எமை யுய்வுகொளும்’ என்ற அடைமொழி
கொடுத்தாள். நவ்வி – உவமவாகுபெயர். அலமரல் – எதிர்மறை
யொருமையேவல்: அலமா – பகுதி. கு. பூமி: வடசொல். அய்வர் = ஐவர்.
இச்செய்யுள் – கீழ்க்கூறியவகையில் வகரச்சந்தத்தாற் பெரும்பாலும்
வந்தது. ‘தைய தனதன தைய தனதன தைய தனதன தையதா’ என்பது. இதற்குச்
சந்தக்குழிப்பு. ‘பைதலற’ என்ற பாடம், சந்தத்துக்குச் சிறவாது.
அவனை இடு பலி அருளுக!’ என மொழி அளவில்,
மறலியும் உளைவுறச்
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர்
நிகர் என,
தவனில் முதிர்தரு முனியும், வழுவு அறு தனது இல் அறனுடை
வனிதையும்,
துவனி அற, மன மகிழ்வொடு, இனிது அறு சுவைகொள் அமுது
அடு தொழிலராய்,–அதுகேட்டு மகிழ்ந்து அவ்வீட்டார் சமையல்செய்யத் தொடங்கல்.
அவனை – அப்புதல்வனை, இடு பலி அருளுக –
(அவ்வரக்கனுக்கு) இடவேண்டிய நரபலியாகச் செலுத்துவையாக, என – என்று,
மொழிஅளவில் – (குந்தி) சொன்னவளவில்,- மறலிஉம் உளைவு உற சிவனை
வழிபடு மகவை அருளிய செனக செனனியர் நிகர் என – யமனும் வருந்தும்படி
சிவபிரானைப் பூசித்த (மார்க்கண்டேயனென்ற) குமாரனைப் பெற்ற தந்தையும்
தாயும் போல, தவனில் முதிர் தரு முனிஉம்வழு அறு தனது இல் அறன்உடை
வனிதைஉம் – தவவொழுக்கத்தில் முதிர்ந்த (அவ்வீட்டுக்குஉடையவனான)
அந்தணனும் தவறில்லாத அவனது இல்லறவாழ்க்கையையுடைய மனைவியும்,
மனம் மகிழ்வொடு – மனமகிழ்ச்சிகொண்டவர்களாய், துவனி அற – (அழுகை)
ஒலி நீங்க, அறு சுவை கொள் அமுது இனிது அடு தொழிலர்ஆய் –
ஆறுவகைஉருசியும்பொருந்திய உணவை இனிமையாய்ச் சமைக்குந்தொழிலை
யுடையவராக,- (எ-று.)-“பண்டி கெழுமிய பண்டமே” என வருங் கவியோடு
முடியும். ஆய் – ஆக என்ற எச்சத்தின் திரிபு.
‘மறலியு முளைவறச் சிவனை வழிபடு மகவு’ என்பததிற் குறித்த கதை:-
மிருகண்டுமுனிவனது தவப்பயனால் பதினாறுபிராயமே யுடையவனாகச் சிவபிரான்
வரமளிக்கப் பிறந்த மார்க்கண்டேயன் இடைவிடாது சிவபூசனை செய்துகொண்டு
வளர்ந்து வருகையில், பதினாறுபிராயம் முற்று மளவிலே மாதாபிதாக்கள் ‘இனி
இவனுக்கு யமனால் இறுதிநேருமே!’ என்று மிகக்கலங்கிநிற்க, அந்தமார்க்கண்டேயன்
சிவபூசை செய்கையில் கூற்றுவன் வந்து காலபாசத்தாற் கட்டியிழுக்க, அவன்
அப்பொழுது பரமசிவனைச் சரணமடைய, அப்பெருமான் யமனைக் காலால்
உதைத்துத்தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறாகத் தீர்க்காயுசு
கொடுத்தருளினனென்பது. அக்குமரன் சிவானுக்கிரகத்தால் ஊழ்வினையையும் கடந்து
உய்வு பெற்றதனால், அத்தாய்தந்தையர் துயரம் நீங்கி மிகவும் மனமகிழ்வுற்றார்.
மறல் – கொடுமை; அதனையுடையவன் – மறலி. ஜநகஜநநீ என்ற
வடசொற்கள் – தமிழில் சனக சனனி எனத் திரிந்து, மோனைப் பொருத்தத்திற்காக
‘செனக செனனி’ என எகரம் பெற்றன. இல்லறம் – ‘இலறம்’ எனச் சந்தவின்பம்
நோக்கித் தொகுத்தல் விகாரப்பட்டது. இச்செய்யுள் – குறுஞ்சீர்வண்ண முடையது;
அதாவது – குற்றெழுத்துப்பயில்வது. 38,39,40, இச்செய்யுகளிலும் இதுகாண்க.
இதற்குச் சந்தக்குழிப்பு 38- ஆங் கவிக்குக் கூறியவாறே கொள்க
தண் தரள மலை, வெண் கயிலை மலை, சங்க மலை, என நங்கைமார்
மொண்டு சொரிதருகின்ற அடிசிலும், முந்து கறிகளும், வெந்த பால்,
மண்டு நறு நெ(ய்)யொடு அந்த விடலையும், மைந்தர் அனைவரும்,
உண்டு, தம்
பண்டி நிறைவுறு பின்பு, பிறிதொரு பண்டி கெழுமிய, பண்டமே.-அப்பொழுது சமைக்கப்பட்ட உணவின் மிகுதி
தண் தரளம் மலை – குளிர்ச்சியான முத்தின்மயமான தொருமலை,
வெள் கயிலைமலை – வெண்மையான [வெள்ளிமயமாகிய] கைலாசமலை, சங்கம்
மலை – சங்குமயமானதொரு மலை, என – என்று (கண்டவர் உவமை) கூறும்படி,
நங்கைமார் மொண்டு சொரிதருகின்ற – (சமையல் செய்யும்) மகளிர்
(பாத்திரங்களினின்று) முகந் தெடுத்துத் தொகுதியாய்ச்சொரிகின்ற, அடிசில்உம் –
அன்னத்தையும், முந்து கறிகள்உம் – சிறந்த கறிகளையும், வெந்த பால் மண்டு நறு
நெ(ய்) யொடு – காய்ந்த பாலோடும் மிக்க நறுமணமுள்ள நெய்யோடும், அந்த
விடலைஉம் மைந்தர் அனைவர்உம் – கீழ்க்குறித்த வீரனான வீமனும் மற்றைப்
புதல்வரெல்லோரும், உண்டு-புசித்து, தம் பண்டி நிறைவு உறுபின்பு – தங்கள்
வயிறுநிறைந்தபின்பு, பண்டம் – அவ்வுணவுப்பொருள்கள், பிறிது ஒரு பண்டி
கெழுமிய – வேறொரு வண்டி நிறைந்தன; (எ-று.) – கெழுமிய – பலவின்பால்முற்று
வெண்மையும் பெருந்தொகுதியும்பற்றி, அன்னத்திரளுக்கு முத்துமலை
வெள்ளிமலை சங்குமலைகளை உவமை கூறினார். பண்டி என்பது வயிறென்னும்
பொருளதாதலை, “உதரமோ டகடு குக்கியுடன் பண்டி வயிற்றின் பேராம்” என்ற
நிகண்டினாலும் அறிக.
இதற்குச் சந்தக்குழிப்பு – 41 – ஆங் கவியிற் கூறியதே
வையம் முழுதுடை ஐயன் இளவலும், வைகலுடன்,
மனை வைகுவோர்
உய்யும் வகை புகல் ஐயை உரையினை ஒய்யென்
விரைவொடு கைகொளா,
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின், மெய்யை எழில்
அணி செய்தனன்-
செய்ய மலர்கொடு, செய்ய துகில்கொடு, செய்ய கலவையின்
மொய் கொடே.-வீமன் சித்தனாய்த் தன்னை அலங்கரித்துக்
கொள்ளுதல்.
வய்யம் முழுது உடை – பூமிமுழுவதையும் (தனக்கு உரியதாக)
உடைய, ஐயன் – தலைவனான தருமனது, இளவல்உம் – தம்பியான வீமனும்,-
மனை வைகுவோர் உய்யும் வகை புகல் ஐயை உரையினை – (தங்கட்குத் தங்க
இடங்கொடுத்து) வீட்டிலிருப்பவர் எல்லோரும் பிழைத்திருக்கும்படி
உபாயங்கூறிய (தனது) தாயான குந்தியின் வார்த்தையை, ஒய்யென் விரைவொடு
கை கொளா – மிக்கவிரைவோடு அங்கீகரித்து,- வைகலுடன்- பொழுதோடே
[பலிசெல்லுங்காலம் கடவாமல்],- செய்ய மலர்கொடு-செந்நிறமுள்ள
பூக்களைக்கொண்டும்,செய்ய துகில் கொடு- செந்நிறமுள்ள ஆடையைக்கொண்டும்,
செய்ய கலவையின் மொய் கொடு – செந்நிறமுள்ள கலவைச்சாந்தின்
மிகுதியைக்கொண்டும்,- மெய்யை – (தன்) உடம்பை, வெய்ய பகன் உடல் பெய்த
குருதியின் – கொடியபக னென்னும் அவ்வரக்கனது உடம்பு சொரியும் இரத்தத்தால்
(பின்புபூசப்படுவது) போல, எழில் அணி செய்தனன் – அழகிய அலங்காரஞ்
செய்துகொண்டான்; (எ-று.)
செவ்வணி செய்தல், பலிப்பொருளுக்கு உரியதென அறிக. தாயின்
கட்டளையை நிறைவேற்றுதலிற் கொண்ட விரைவோடு, போர்நேர்கிறதென்ற
களிப்பினாற் கொண்ட விரைவையுங் காட்டுதற்கு, ‘ஒய்யென் விரைவு’ எனப்
பலசொல் கொடுத்தார். வீமனை ‘தருமன் தம்பி’ என்றது, தனது சிரமம் பாராமல்
நல்லோரைக் காக்கும் உதவியைச் செய்யுங் கருத்தை யுடையவ னென்று காட்டுதற்கு.
கைகொளா என்பதில், கை என்பது-தமிழுபசர்க்கம். இனிப் பெய்யுங்குருதியை
‘பெய்த குருதி’ என்றது – இயல்புபற்றிவந்த காலவழுவமைதி; தெளிவுபற்றிய
தெனினுமாம். வய்யம் = வையம். கலவை – (பலவகைவாசனைப்பொருள்களோடுங்)
கலந்த சந்தனம். பின்னிரண்டடி – தற்குறிப்பேற்றம். இக்கவி – பெரும்பாலும்
தையச் சந்தத்தால் வந்தது
துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு, ஒர் இமகிரி ஒப்பென,
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள்
உய்க்கவே,
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான்;
நெற்றிமிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பதென ஒளிர் பொற்பினான்–வீமன் சோற்றுவண்டியில் ஏறிச்செல்லுதல்.
துற்ற – மிகுதியாய்ப் பொருந்திய, பல கறி – பலவகைக் கறிகளை,
செற்றி – இடையிடையே இட்டு, அமலை செய் – பெருந்திரளாகச்செய்த, துப்பு –
சோறு, ஓர் இமம் கிரி ஒப்பு என – (வெண்ணிறத்தாலும் பெருவடிவாலும்)
இமயமலைக்குச் சம மென்று சொல்லும்படி,சற்றுஉம் இடன் அற மொய்த்த –
சிறிதும் வெற்றிடமில்லாதபடி நெருங்கப்பெற்ற, சகடு-வண்டியை, இருசக்ரம்
உருளைகள்-வட்டவடிவமான இரண்டுசக்கரங்கள், உய்க்க – இயங்கும்படி, பத்தி
பட – ஒழுங்காக, நிரை நிரை உற்ற – வரிசைவரிசையாய்ப் பொருந்திய, வலி
ஒத்த பகடுகள் – வலிமையில் ஒன்றுக்கொன்று சமமான கடாக்களை, கட்டினான்
– கட்டி,- நெற்றி மிசை- (அவ்வண்டியின்) முற்பக்கத்திலே, ஒரு கொற்றம் அடல்
அரி நிற்பது என – வெற்றியைத் தரும் ஓர் ஆண்சிங்கம் நிற்பது போல, ஒளிர்
– விளங்கி நிற்கிற, பொற்பினான் – பொலிவையுடையவனானான்; (எ-று.)
ஹிமகிரி – வடசொல். சகடு – ஸகடம்: பத்தி = பங்க்தி: வட சொல்லின்
விகாரங்கள். இரட்டையிரட்டையாய்ப் பலபகடுகள் கட்டினானென்பார் ‘நிரைநிரை
பத்திபடக் கட்டினான்’ என்றார், ‘சக்கிர வுருளை’ என்ற பாடம் சந்தத்திற்கு
முரணாம்.
தத்த தனதன தத்த தனதன தத்த தனதன தத்தனா என்றது இதற்குச்
சந்தக்குழிப்பு.
மண்டலம் கொள் வடிவுடன், அடல் பரிதி, மண்ணில்
வந்ததென, மறுகினில்
கண்ட கண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க
வரு காட்சியான்,
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கானநெறி மீது
போய், அண்டர்
அண்ட முகடு உற வளர்ந்தனன், அரக்கன் நின்ற உழி அறியவே.-வீமன் வனத்திற்சென்று பகனை நாடுதல்.
அடல்-வலிமையையுடைய, பரிதி – சூரியன், மண்டலம் கொள்
வடிவுடன் – வட்டவடிவத்தைக்கொண்ட (தனது) உருவத்துடனே, மண்ணில்
வந்தது என – பூமியில் வந்தமைபோல, மறுகினில் கண்ட கண்ட முனிகுலம்
அடங்க இரு கண் களிக்க வரு – வீதியிலே பார்த்தபார்த்த அந்தணர்கள் கூட்ட
மெல்லாம் இரண்டு கண்களுங் களிப்படையும்படி வருகிற, காட்சியான் –
தோற்றத்தை யுடையவனான வீமன்,-வெள் தரங்கம்என வீசு பேய்இரதம்விஞ்சு
கானம் நெறி மீது போய் – வெண்மையான அலைகள் வீசுவது போல்
தோன்றுகிற கானல்மிகுந்த காட்டுவழியிலே சென்று,- அரக்கன் நின்ற உழி
அறிய – பகன்நின்ற இடத்தை அறியும் பொருட்டு, அண்டர் அண்டம் முகடு உற
வளர்ந்தனன் – தேவர்கள் வசிக்கிற அண்டகோளத்தின்மேலிடத்தை அளாவ
நிமிர்ந்தான்;
திரிவிக்கிரமனைப்போலவளர்ந்தானென்றுகொள்ளற்க: அரக்கனிருக்குமிடம்
காண ஓங்கியதை உயர்வுநவிற்சியாற் கூறியதென்க. செந்நிறமுள்ள மலர் துகில்
கலவைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு விளங்குகிற வீமனுடைய
பருத்தவடிவத்துக்கு, சூரிய மண்டலம் உவமை. சூரியனுக்கு அடல் – நெடுந்தூரம்
ஒளியைச் செலுத்தி இருளை அறக்கெடுக்கும் வலிமை. கண்களாற்கண்டு
மனங்களித்தலையே கண்ணின்மே லேற்றி ‘கண்களிக்க’ என்றார்: இது,
ஒருபொருளின் வினையை மற்றொரு பொருளின்மேலேற்றிக் கூறும்
உபசாரவழக்கு. பேயிரதம் – பேய்த்தேர்.
இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினைந்து கவிகள் – பெரும்பாலும்
ஒன்று மூன்று ஐந்தாஞ்மாச்சீர்களும் ஏழாஞ்சீர் விளச்சீரும்மற்றயவை
விளங்காய்ச்சீர்களுமாகிய எழுசீராசரியவிருத்தங்கள்
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில்
ஒரு கழிமுழை,
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று, வெம் பசி
கொள் தீயினால்,
முளிந்து முற்றும் மனம் வேவவேவ, நெடு மூச்சு எறிந்து,
புகை முகனுடன்,
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று, சுழல் விழி நிரைத்து,
அயரும் வெகுளியான்.-இதுமுதல் மூன்று கவிகள் – ஒருதொடர்: வீமன் பகனைக்
காணுதலும், சோற்றை உண்ணுதலும்.
மூன்று கவிகள் – ஒரு தொடர்.
(இ-ள்.) களிந்தம் வெற்பு உதவு – களிந்தமலையினாற் பெறப்பட்ட, நீலம்
மா நதி – நீலநிறமுடைய பெரிய யமுனாநதியை, அடுத்த – அடுத்துள்ள, குன்றில்
– ஒருமலையிலே, ஒரு கழி முழை – ஒருபெரிய குகையிலே, கொள் வெம் பசி
தீயினால் – (தான்) கொண்ட கொடிய பசியாகிய வயிற்றழிலினால், தெளிந்த
பற்களொடு நாவை நனி மென்று தின்று – வெண்மையாய் விளங்குகிற
பற்களொடு நாக்கை மிகுதியாக மென்றுதின்றுகொண்டு, மனம் முற்றுஉம் முளிந்து
வேவ வேவ – (இன்னும் இரைவாராமையா லாகிய கோபத்தால்) மனம்
முழுவதும் காய்ந்து மிகவும் வேவ, நெடு மூச்சுஎறிந்து-பெரு மூச்சு
விட்டுக்கொண்டு, புகை முகனுடன் – புகை வெளிக்கிளம்பப்பெற்ற முகத்தோடு,
விளிந்தது ஒத்து வழி குழியநின்று – மறிந்தாற்போல (த் தான் செல்லும்) வழியும்
குழிபடும்படிநின்று, சுழல் விழி நிரைத்து – சுழலுகிற கண்ணின் நோக்கங்களை
எல்லாப்புறமுஞ் செலுத்தி, அயரும் வெகுளியான்-(தன்னையும்) மறந்த
கோபத்தை யுடையவனாய்,- (எ-று) “உற்றுநின்றநிலை” (53) என்க. ‘முழை’
என்றதற்கும் ‘உற்றுநின்ற’ என்பதே முடிக்குஞ்சொல்.
அரக்கன் தன்மையை இனிது வருணித்தது, தன்மைநவிற்சியணி. களித்த
மலையினின்று உற்பத்தியாதலால், யமுனைக்கு, ‘காளிந் தீ’ என்றுபெயர்;
அந்நதியின்நீர், நீலநிறமுடையது. விளிதல் – பூகம்பம் முதலிய காரணங்களால்
தரை இயல்புகெடுதல். கழி – உரிச்சொல்.
வெற்று எலும்பின் உயர் ஆசனம்தனில், விகங்க
நீழலிடை மேவர,
சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல, அல்லல்
மிகு துன்முகன்
உற்று நின்ற நிலை கண்டு, உகந்து, ‘இவனை உயிர்
ஒழிந்திட உடற்றினால்,
இற்றை உண்டி கெடும்’ என்று, பண்டியில் எடுத்த வல்சி
நுகர் இச்சையான்
வெறு எலும்பின் உயர் ஆசனந்தனில் – தசைப்பற்றிலாத
எலும்புகளினா லாகிய உயர்ந்த ஓர் ஆசனத்தில், விகங்கம் நீழலிடை – (கழுகு
பருந்து முதலிய) பறவைகளின் நிழலிலே, மேவர – (அப்பறைகள்) விரும்பவும்,
பல சம்புகங்கள் சுற்றுஉம் நின்று துதிசொல்ல – அநேக நரிகள் சுற்றிலும் நின்று
தோத்திரங்களைச்சொல்லவும், அல்லல் மிகு துன்முகன் – (காண்பவர்களுக்குத்)
துன்பம் மிகுதற்குக் காரணமான கெட்டமுகத்தையுடைய பகனென்ற
அவ்வரக்கன், உற்றுநின்ற – பொருந்திநின்ற,- நிலை- நிலைமையை, கண்டு –
பார்த்து,உகந்து – மனம்மகிழ்ந்து,- இற்றை இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால்
உண்டி கெடும் என்று – இப்பொழுதே இவனை உயிர் நீங்கும்படி கொன்றால்
பின்பு இவ்வுணவு அசுத்தமாய் வீணாய்விடு மென்று எண்ணி, பண்டியில் எடுத்த
வல்சி நுகர் இச்சையான் – பண்டியில் ஏற்றிய உணவை (அவனைக்
கொல்லுமுன்னமேதான்) உண்ணும் ஆசையை யுடையவனாய்,- (எ-று.)-
“அருந்தினான்” என அடுத்த கவியோடு முடியும்.
வெற்றெலும்பு, இவன் நாள்தோறும் கொன்றுதின்ற பிராணிகளினுடையவை.
இவனைச் சிலகொடிய பறவைகள் விரும்பிவட்டமிடுவதற்கும், பல நரிகள் சூழ்ந்து
துதித்தற்குங் காரணம் – இவன் தசை பெற்று உண்ணுங்கால் தமக்கும் ஏதேனுஞ்
சிறிது மிச்சில்கிடைக்கு மென்ற அவா. நீழல் – நீட்டல். நரிகள்
ஊளையிடுவதையே துதிகூறுதலாகக் குறித்தார். வீமன் போரின்றித் தினவு
கொள்ளுந்தோளை யுடையவனாதலால், கொடிய அவ்வரக்கனைக்
கண்டவளவிலே மகிழ்ச்சியுற்றான். ‘சுற்றின்று’ என்றும் பாடம்
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம்
உண்ட கோ,
முன் பின் ஆக உயர் சகடு இருந்து, எதிர் முகந்துகொண்டு,
வரை முழையுளே
அன்பினால் அடையும் அன்னம் என்ன, நிறை அன்னம்
முற்றவும் அருந்தினான்;
பின்பின் ஆக இது கண்டு, வெம் பசி கொள் பகனும் எய்தி,
இவை பேசுவான்:
வன்பினால் – (தனது) வலிமையைக்கண்டதனால், உரக பதி
அளித்த – சர்ப்பராசனாகிய வாசுகி (தனக்குக்) கொடுத்த, நெடுவாரி ஆர்
அமுதம் – பெரிய பாற்கடலினின்று (முன்பு) தோன்றிய பெறுதற்கரிய அமிருதத்தை,
உண்ட-, கோ அரசனான வீமன், உயர் சக – உயர்ந்த அவ்வண்டியிலே, முன்பின்
ஆக எதிர் இருந்து – முன்பின்னாகத் திரும்பியிருந்து,- வரை முழைஉளே
அன்பினால் அடையும் அன்னம் என்ன – மலைக்குகையினுள்ளே அன்போடு புகும்
அன்னப்பறவைபோல, நிறை அன்னம் முற்றஉம் முகந்து கொண்டு அருந்தினான் –
(அவ்வண்டியிலே) நிறைந்த அச்சோறுமுழுவதையும் அள்ளியெடுத்து (த் தனது
பெருவாயினுள்ளேபுகும்படி) புசித்தான்; பின் – பின்பு: வெம்பசிகொள் பகன்உம் –
கொடியபசியைக் கொண்ட பகனென்பவனும், இதுகண்டு – இவன் இவ்வாறு உண்ணு
தலைப் பார்த்து, பின் ஆகஎய்தி – வீமன்பின்னே வந்து, இவை – இச்சொற்களை,
பேசுவான்-; (எ-று.)- அவற்றை மேலே காண்க.
வெண்மையான சோற்றுத்திரளை நெடியபெரிய வாயினுள்ளே விரையச்
செல்லுதற்கு, வெண்ணிறமான அன்னப்பறவை நெடிய பெரிய
மலைக்குகையினுள்ளே விருப்பத்தோடு செல்லுதல் உவமை. வண்டியில் வீமன்
முன்பின்னாக மாறியிருந்து உண்கின்றதனால், எதிர்வந்த அரக்கன் வீமனுக்குப்
பின்னாயின னென்க. அன்னம் – பறவையைக் குறிக்கும்போது ஹம்ஸம்என்ற
வடசொல்லின் திரிபும், சோற்றைக் குறிக்கும்போது அந்நம் – என்ற
வடசொல்லின் திரிபுமாம்.
புலிதனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை
தின்னுமது போல, நீ
பலி அனைத்தையும் விழுங்கினால், இது பலிக்குமோ?
எளிமை பார்!’ எனா,
ஒலி படக் கிரியில் உரும் எறிந்ததென, ஓடி வந்து,
பிடர் ஒடியவே,
வலி படப் பணை விறல் தடக் கை கொடு மாறி
மாறி முறை வீசினான்.-பகன்வீரவாதங்கூறிக்கொண்டு வீமனைக் கைகளாற்
புடைத்தல்.
‘புலிதனக்கு இடு விடக்கை – புலிக்கென்று இட்டு வைத்த
இறைச்சியை, நின்றது ஒரு பூஜை – அருகில் நின்றதொரு பூனை, தின்னுமது
போல – தின்பதுபோல, நீ-, பலி அனைத்தைஉம் விழுங்கினால்- (எனக்கென்று
செலுத்திய) உணவுமுழுவதையும் உண்டால், இது பலிக்கும்ஓ – இது
சித்திக்குமோ? எளிமை பார் – (எனது) எளிமையைப் பார்’, எனா –
என்றுசொல்லி, ஓடிவந்து-, (பகன்), கிரியில் உரும் எறிந்ததுஎன – மலைமேல்
இடி இடித்தாற் போல, ஒலி பட – பேரோசை யுண்டாக, பிடர் ஒடிய –
(வீமனுடைய) பிடரி ஒடியும்படி, பணை விறல் தட கை கொடு – பருத்த
வலியபெரிய (தன்) கைகளால், வலி பட – பலமாக, முறை மாறிமாறி – முறையே
மாறிமாறிப் புடைத்து, சீறினான் – கோபங்காட்டினான்; (எ-று.)
நீ என்னிடத்துக் கருதிய எளிமையை எனது தொழிலால் அங்ஙனமன்றெனக்
காட்டுவே னென்பான், ‘எளிமைபார்’ என்றான்; இது – குறிப்புமொழி. கைகொடு
முறை மாறி மாறி – ஒரு கைமாற்றி ஒருகையால் விடாதுஅடித்து என்க
பக்கமும் பிடரும் ஒக்க முட்டிகள் படப் பட,
கவள பாரமாய்
விக்க நின்றன, வயிற்று இரண்டு அருகும் வீழ வீழ,
முன் விழுங்கலும்,
‘புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன்; எங்ஙன்
இவை போவது?’ என்று,
அக் கடுங் கையும் இளைத்து, வெஞ் சினமும் ஆறி
நின்றனன், அரக்கனே.–அப்புடையல்களைச் சிறிதும் இலட்சியஞ்செய்யாமல்
வீமன்புசித்துக்கொண்டிருத்தல்.
பிடர்உம் – பிடரியிலும், பக்கம் உம் – விலாப்புறத்திலும்,
முட்டிகள் – (பகனது) முட்டியாகப்பிடித்த கைக்குத்துகள், (அதனால்) கவளம்
பாரம் ஆய் விக்க நின்றன வயிறு இரண்டு அருகும் வீழ வீழ – (முன்பு) பருத்த
கவளங்களாய் (உட்புகாது) விக்கும்படி நின்றவைகள் வயிற்றின் இரண்டு
பக்கங்களிலும் விழ விழ, முன்விழுங்கலும் – (வீமன் அவற்றை) விரைவாக விழுங்கு
மளவிலே,- அரக்கன் – பகன்,- ‘புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் –
(உன்வயிற்றினுட்) புக்க உணவுகளுடனே உனது உடம்பின் தசையை யுண்பேன்:
இவை போவது எங்ஙன் – இவை எங்கே போவது?’ என்று – என்று சொல்லி, அ
கடு கைஉம் இளைத்து – (குத்திய) அந்தக் கடினமான (தன்) கைகளும்
இளைக்கப்பெற்று, (அதனால்), வெம் சினம்உம் ஆறி நின்றனன் – கொடியகோபமும்
சிறிது குறைந்து நின்றான்; (எ-று.)
கவளம் – கையளவுகொண்ட உணவு; அல்லது, வாயளவு கொண்ட உணவு.
முஷ்டிகள்படுதலாகிய தீயசெயலையே சிறிது தடைப்பட்ட கவளங்கள் எளிதில்
உட்புகுதலாகிய நன்மைக்குக் காரணமாகக் கூறியது- தகுதியின்மையணி:
வடநூலார் ‘விஷமாலங்காரம்’ என்பார். ‘புக்க பண்டமுட னுன்னுடற்றசைபுசிப்ப
னெங்ஙனிவைபோவது’ என்ற இதில், பலிபண்டங்களையுண்ட உன்னை
யுண்பதால் பண்டத்தையும் உன்னையும் தனித்தனியே புசித்தலாகிய
இரண்டுவேலையில்லாமற் போய்விடுகிற தென்று பாராட்டினமை தோன்றும்.
போவது – தொழிற்பெயர்
அச் சகட்டினில் ஒர் எள்துணைச் சுவடும் அற்றபின்,
சிறிதும் அச்சம் அற்று,
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து, அவனொடு உத்தரித்து,
உரைசெய்து ஒட்டினான்:
‘மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரமத்
திறலின் மிக்க நீ,
கச்ச கச்ச பல கத்தை விட்டு, உனது கட்டு உரத்தினொடு
கட்டுவாய்.-இதுவும், அடுத்த கவியும் – வீமன் வீரவாதங்கூறிப்
போர்தொடங்கல்.
அ சகட்டினில் – அந்தப் பண்டியிலே, ஓர் எள்துணை
சுவடுஉம்அற்றபின் – ஓர் எள்ளின் அளவு (அன்னத்தின்) அடையாளமும்
இல்லாது தீர்ந்தபின்பு, (வீமன்), சிறிதுஉம் அச்சம் அற்று – சிறிதும்
பயமில்லாமல், உச்சம்உற்ற வெயில் அர்க்கன் ஒத்து – (வானத்து)
உச்சியையடைந்த உக்கிரமான உஷ்ணகிரணங்களையுடைய சூரியன்போல
(உக்கிரங்கொண்டு எழுந்துநின்று), உத்தரித்து இவனொடு உரைசெய்துஒட்டினான்
– தருக்குக்கொண்டு பகனோடு இங்ஙன்கூறி வீரவாதஞ்செய்தான்:- மெச்சும்
மெச்சும் உலகத்து அரக்கர்களில் – (எல்லோராலும்) மிகவுங்கொண்டாடி
வியக்கப்படுகிற உலகத்துஉள்ள அரக்கர்களுள், விக்ரமம் திறலில் மிக்க –
பராக்கிரமத்தோடு கூடிய வலிமையில் மேம்பட்ட,நீ-, கச்சகச்ச பல கத்தை விட்டு
– மிகவும் வெறுக்கத்தக்க பல வேற்றொலியை [பயனில் சொற்களைப் பேசுதலை]
விட்டு, உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் – (என்னோடு)
சமமாகப்பொரும்பொருட்டு உனது கச்சுக்கட்டை வலிமையோடு கட்டிக்கொண்டு
சித்தப்படுவாய்; (எ-று.)
போர்செய்யச் சிறிதும்பின்னிடாமல் மிகஊக்கங்கொண்டென்பார், ‘சிறிதும்
அச்சமற்று’ என்றார். உத்தரித்து – (வயிற்றைத் தடவியுண்டதைச் சரித்துக்கொண்டு)
என்று கூறலுமாம்: உத்தரித்து உரைசெய்து – உத்தரமான வார்த்தையைச்சொல்லி
என்பாரு முளர். கச்சகச்ச – அடுக்கு, மிகுதிப்பொருளது: கச்ச – கைத்த என்பதன்
போலி : இனி, ‘கச்ச கச்ச’ என்பதை, வடமொழி ஒருமையேவலாகக் கொண்டு,
‘போ போ’ என்று உரைப்பாரும் உளர். கத்து – கத்துதல்: பிதற்று: முதனிலைத்
தொழிற்பெயர். கட்டு – இடைக்கட்டு.
இச்செய்யுள் – ‘தத்த தத்தனன தத்த தத்தனன தத்த தத்தனன தத்தனா’
என்ற சந்தக்குழிப்புக்கு ஏற்ப வந்தது. இதில் வல்லோசைமிக்குவந்தது –
வல்லிசை வண்ணம்.
சொல்லி என் பயன்? அரக்கன் நீ; மனிதன் யான்; உனக்கு
உரிய தொழில்களாம்
மல்லினும், படை விதத்தினும், செருவில் வல்ல வல்லன
புரிந்து, போர்
வெல்ல நெஞ்சம் உளதுஆகில், வந்து பொரு; விறல் இடிம்பனையும்
வென்று, உனைக்
கொல்ல வந்தனன்’ எனப் புகன்று, இரு கை கொட்டி,
வாகுமிசை தட்டினான்.
சொல்லி என் பயன் – வீண்வார்த்தை பேசிப் பயனென்ன? நீ
அரக்கன் – நீ (இயல்பில் வலிய) இராக்கதன்: யான் மனிதன் – யான் (இயல்பில்
எளிய) மனிதன்: (ஆயினும்), செருவில் – யுத்தத்தில், உனக்கு உரிய தொழில்கள்
ஆம்-உனக்குஉரியசெயல்களாகிய, மல்லின்உம் – மற்போர்த்தொழிலிலும்,
படைவிதத்தின் உம்- பலவகை ஆயுதத் தொழில்களிலும், வல்ல வல்லன – (நீ)
தேர்ந்தவற்றையெல்லாம், புரிந்து – செய்து, போர் வெல்ல – போரில் (என்னை)
வெல்லுதற்கு, நெஞ்சம் உளது ஆகில் – (உனக்கு) மனத்துணிவு உள்ளதானால்,
வந்துபொரு – எதிர்வந்து போர்செய்: விறல் இடிம்பனைஉம் வென்று –
வல்லமையுடைய இடிம்பனையுஞ் சயித்து, உனை கொல்ல வந்தனன் – உன்னைக்
கொல்லுதற்கு வந்தேன், என புகன்று – என்று வீரவாதங் கூறி, (அவ்வீமன்), இரு
கை கொட்டி – (தனது) இரண்டுகைகளையுந்தட்டி, மார்பின்மிசை குத்தினான் –
(பகனுடைய) மார்பிலே குத்தினான்; (எ-று.)
மனம்போனபடி வாயில்வந்தவற்றைச் சொல்லுதலிற் பயனில்லை; தொழிலில்
திறங்காட்டவேண்டு மென்பான் ‘சொல்லி யென்பயன்’ என்றான். கைகொட்டுதல்
– மற்போர் தொடங்கற்கு அறிகுறி, வந்தனனெனப்புகுந்து என்றுபாடம்
பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடைச்
சரணபற்பனும்,
நெட்டிருள்சரனும், வெற்பு வெற்பினொடு நிச்சயித்து
உடல நிற்பபோல்,
வட்டம் வட்டம் வர, ஒட்டி ஒட்டி, உறு மல் தொழில்
செருவில் மட்டியா,
முட்டி யுத்த நிலை, கற்ற கற்ற வகை முற்ற முற்ற,
எதிர் முட்டினார்.-இதுவும், அடுத்தகவியும் – இருவருஞ்செய்யும் போர்த்
திறத்தைக்கூறும்.
பட்டம் வர்த்தனர்கள் – பட்டந்தரித்து அரசாளும் அரசர்களுடைய,
பொன் சிரத்தின் – பொன்முடியையணிந்த தலைகளின்மீது. மலர் – மலர்கிற, பொற்பு
உடை சரணம் பற்பன்உம் – அழகுள்ள பாததாமரைமலரையுடையவனான வீமனும்,
நெடு இருள் சரன்உம் – நெடிய நிசிசரனாகிய பகனும்,- வெற்பு – வெற்பினொடு,
உடல் நிச்சயித்து நிற்ப போல் – மலை மலையோடு போர்செய்ய நிச்சயித்து
நிற்பதுபோல,- வட்டம் வட்டம் வர – மண்டலகுதியால் மாறி மாறி வர, ஒட்டி
ஒட்டி – (ஒருவரோடொருவர்) கலந்து கலந்து, உறு – செய்கிற, மல் தொழில்
செருவில் – மல்லுத்தொழிலாகிய போரிலே, மட்டியா – தொடங்கி, முட்டி யுத்தம்
நிலை – கைக்குத்துச்சண்டை நிலைகளில், கற்ற கற்ற வகை முற்ற முற்ற – தாம்
தாம் அறிந்த வகைகள் எல்லாவற்றாலும், எதிர் முட்டினார் – (ஒருவரையொருவர்)
எதிரே குத்தினார்கள்; (எ-று.)
பட்டாபிஷேகம் பெற்று அரசாளும் பல சிறந்த அரசர்களைப் போரில்
வென்று அவ்வெற்றிக்கு அறிகுறியாக அவர்கள் தலைமீது தன்கால்களை
வைப்பவ னென்பது, அவ்வரசர்களால் தங்கள் தலை தன்கால்களிற்படும்படி
சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கப்படுபவ னென்பதும், முதலடியின் கருத்து.
வட்டம் என்றமண்டல கதியில், வலசாரி இடசாரியாகிய கதிவிசேடங்களும்
அடங்கும். முட்டி யுத்தம் – குத்துச்சண்டை. இச்செய்யுளிலும் 57 – இல்போல
வல்லிசைவண்ணமும் சந்தப்பொருத்தமுங் காண்க
கரம் கரத்தொடு பிணங்கவும், தமது கால்கள்
கால்களொடு கட்டவும்,
சிரம் சிரத்தினொடு தாக்கவும்,-கொடிய சிங்க ஏறு
அனைய திறலினார்-
உரங்கள் இட்டும், வளர் தோள்கள் இட்டும், எதிர் ஒத்தி,
மல்-சமர் உடன்றபின்,
மரங்கள் இட்டும், உயர் கற்கள் இட்டும், நெடு வாதினோடு
இகலி மோதினார்.
கொடிய சிங்கம் ஏறு அனைய திறலினார் – கொடிய
ஆண்சிங்கத்தை யொத்த வலிமையையுடைய அவ்விருவரும்,- தமது கரம்
கரத்தொடு பிணங்கஉம் – தங்கள் கைகள்கைகளோடு பின்னவும், கால்கள்
கால்களொடு கட்டஉம் – கால்கள் கால்களோடு பிணங்கவும், சிரம் சிரத்தினொடு
தாக்கஉம் – தலை தலையோடுமோதவும், உரங்கள் இட்டுஉம் – மார்புகளைச்
சேர்த்தும், வளர்தோள்கள் இட்டுஉம் – வளர்ந்த புயங்களைச் சேர்த்தும், எதிர்
ஒத்தி – (ஒருவரை யொருவர்) எதிரிலேதாக்கி, மல் சமர் உடன்ற பின் –
மற்போரை உக்கிரமாகச் செய்தபின்பு, மரங்கள் இட்டுஉம் – மரங்களைப்
பெயர்த்து மேலெறிந்தும், உயர் கற்கள் இட்டுஉம் – பெரிய கற்களை யெடுத்து
மேல்வீசியும், நெடு வாதினோடு – மிக்க வீரவாதத்துடனே, இகலி – மாறுபட்டு,
மோதினார் – போர் செய்தார்கள்; (எ-று.)
உயர்கல்-வினைத்தொகை,வாது-வாதம் என்ற வடசொல்லின்திரிபு.
‘உடன்றுபின்’ என்றும் பாடம்.
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை
கழல் உதையினால்,
விலா ஒடிந்து, தட மார்பு ஒடிந்து, மிடல் வெரிந் ஒடிந்து,
படு வெம் பிணப்
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து, பொரு புயம் ஒடிந்து,
கடை ஒத்த வாய்
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து, செயல் இன்றி வாள்
நிருதன் நிற்கவே,-வீமன் உதைக்கப்பகன் ஒடுங்கிச் சோர்ந்து திகைத்தல்.
இதுவும் அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) உலா வரும் – (எங்குந் தடையின்றி) இயங்குந்தன்மையுள்ள, தனது
தாதை – தனது தந்தையாகிய வாயுவை, ஒத்த-, வலிமை உடைய –
வலிமையையுடைய, காளை – இளவீரனான வீமனது, கழல் – கால்களின்,
உதையினால் – உதையால்,- வாள் நிருதன் – கொடிய அவ்வரக்கன், விலா ஒடிந்து
– விலாப்புறம்முறிந்து, தடமார்பு ஒடிந்து – பரந்தமார்புமுறிந்து, மிடல் வெரின்
ஒடிந்து – வலிமையையுடைய முதுகு முறிந்து, படு வெம் பிணம் புலால் அளைந்த
இரு கவுள் ஒடிந்து – உயிரற்ற பயங்கரமான பிணங்களின் தசை பொருந்திய
இரண்டு கன்னங்களும் முறிந்து, பொரு புயம்ஒடிந்து – போர்செய்கிற தோளும்
ஒடிந்து, ஒத்த கடைவாய் நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து,- (தம்மில்
ஒன்றோடொன்று) ஒத்த கடைவாய்களில் வெள்ளொளி விளங்குகிற கோரதந்தங்கள்
முறிந்து, செயல் இன்றி நிற்க – ஒருசெயலுமில்லாமல் நிற்க,- (எ-று.)- ‘விழுத்தி’ என
வருங் கவியோடு தொடரும்.
‘விலாஒடிந்து … நிருதன் நிற்க’ – சினைவினை முதல்வினை கொண்டு
முடிந்தது. உலாவரும் = உலாவும்; வா – துணைவினை: ‘உலாவிவரும்’ என்பது
விகாரப்பட்டதெனினுமாம். விலா – வயிற்றின்பக்கம். ‘வெரிந்’, ‘புலாலளைந்த
விருகை யொடிந்து ‘, ‘கடை பொய்த்தவாய்’ என்றும் பாடம்
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடி-யுண்டு,
மெய்த் தளர்வு ஒழிந்தபின்,
மண்டியிட்டு, எதிர் விழுத்தி, மார்பின், இப மத்தகத்திடை
மடங்கலின்,
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி,
ஒரு செங் கையால்,
பண்டியில் கடிதின் இட்டு, மாருதி புகுந்தனன்,
பழைய பதியிலே.-பகனைக் கொன்று வீமன் ஊருக்கு மீளுதல்.
உண்டி அற்று அயரும் யாது தானன் – உணவில்லாமற் சோரும்
அரக்கனாகிய பகன், அடி உண்டு – (இவ்வாறு வீமனது) காலடி [உதை] பட்டு,
மெய் தளர்வு ஒழிந்த பின் – உடம்பின் சோர்வு நீங்கின பின்பு, மாருதி –
வாயுகுமாரனான வீமன், இபம் மத்தகத்திடை மடங்கலின் – யானையின்
தலையில் சிங்கம் (பாய்தல்) போல, எதிர் விழுத்தி மார்பின் மண்டி இட்டு –
(அவனை) எதிர்த்துக் கீழே தள்ளி அவன் மார்பின்மேல் மண்டியிட்டு
உட்கார்ந்துகொண்டு, ஒரு செம் கையால்- (தனது) சிவந்த ஒருகையினால், திண்
திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி – மிக்கவலிமையையுடைய
(அவனது) பெரிய கழுத்தை வலிமையோடு திருகியெறிந்து, கடிதின் பண்டியில்
இட்டு – (அவனுடைய உடம்பை) விரைவாகப் பண்டியிலே போகட்டு, பழைய
பதியில் புகுந்தனன் – பழமையான அவ்வேத்திரகீயநகரத்துக்குத் திரும்பிவந்தான்;
(எ-று.)
உணவில்லாததனாலேயே சோர்வுற்ற அவ்வரக்கன் அதன்மேல்
உதையும்பட்டுத் தளர்ந்து நிற்கிற நிலையில் அவனை மேலுந்தாக்கி வதைத்தல்
நீதியன் றென்று வீமன் சிறிதுபொழுது போரொழிந்து நின்று, அவன்சோர்வு
தீர்ந்த பின்னரே மீண்டும் எதிர்த்தன னென்க. மண்டியிடுதல் – இருகால்
முடக்கிநிற்கும் நிலை. வேத்திரகீயநகரத்திலுள்ளார் பார்த்துத் துன்பம்நீங்கி
மனம்மகிழ்தற்பொருட்டு அவ்வரக்கனுடலைப் பண்டியிலிட்டுக் கொணர்பவனானான்.
எதிர் = எதிர்த்து: வினைப்பகுதியே வினையெச்சப்பொருள்தந்தது; இனி, எதிரிலே
என்றும் பொருள்கொள்ளலாம். அடியுண்டு என்ற விடத்து ‘உதையுண்டு’ என்றும்
பாடமுண்டு.
ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில்
சாக, முட்டியின் அடர்த்து, மா முனிவர்-தம் பதிப்புறன் அடுத்தது ஓர் வே கரிக் கடு வனத்தில் இட்டு, மலர் ஓடை மூழ்க,
விறல் வீமனும்;
மோகரித்து அவுணரைத் தடிந்து, கடல், முளரி நாயகனும் மூழ்கினான்.-வீமன்மங்களஸ்நாநஞ்செய்தலும்,
சூரியன்அஸ்தமித்தலும்.
விறல் வீமன்உம் – வலிமையையுடைய வீமனும், ஏக சக்கரம்
வனத்து இருந்த திறல் யாதுதானனை – ஏகசக்கரமென்னும் பெயரையுடைய
காட்டிலிருந்த வலிமையையுடைய அரக்கனாகிய பகனை, இமைப்பினில் –
ஒருமாத்திரைப் பொழுதிலே [மிக விரைவிலே], சாக இறக்கும்படி, முட்டியின்
அடர்த்து – முஷ்டியுத்தஞ்செய்து கொன்று, (பின்பு அவனுடலை), மா முனிவர்தம்
பதி புறன் அடுத்தது வே கரி கடு ஓர் வனத்தில் இட்டு – சிறந்த அந்தணர்கள்
வசிக்கிற அந்த வேத்திரகீயநகரத்தின் வெளிப்புறத்தைச் சார்ந்ததான
(பிணங்கள்) வெந்த கரிகளையுடைய கொடிய ஒரு காட்டிலே [மயானத்திலே]
போகட்டு, மலர் ஓடை மூழ்க – பூக்களையுடைய ஒரு நீரோடையிலே
ஸ்நாநஞ்செய்ய,- முளரி நாயகன்உம் – தாமரைக்குத் தலைவனான சூரியனும்,
அவுணரை மோகரித்து தடிந்து – (மந்தேகரென்ற) அசுரர்களை
வீராவேசங்கொண்டு கொன்று, கடல் மூழ்கினான் – (மேல்) கடலில்
நீராடினான் [அஸ்தமித்தனனென்றபடி]; (எ-று.)
வீமன் அரக்கனைக் கொன்றுஓடையில்நீராடுமளவிலே, சூரியன்
அஸ்தமித்தானென்றவாறு. வீமன் பகனைப்பொருது கொன்ற பொழுது அசுத்தி
நீங்கும்பொருட்டு ஏற்றநீரில் மூழ்கியமைபோல, சூரியன் அசுரர்களைப்பொருது
கொன்றபொழுது அசுத்தி நீங்கும் பொருட்டு நீரில்முழ்குவானாயின னென
உவமையணி தொனித்தலை யுணர்க. முன்பு வீமனுக்கு உதயசூரியனையும் [செ-
19], உச்சசூரியனையும் [செ-57] உவமைகூறியவர், இங்கு அஸ்தமனசூரியனை
உவமை கூறினார். ஏகசக்கரவனம் – ஏகசக்கர நகரத்தைச்சார்ந்தவனமென்ன
இடமுண்டு.
மந்தேகாருணம் என்னும் தீவில் வாழும் மந்தேகர் என்னும் அரக்கர்கள்
உக்கிரமான தவத்தைச் செய்து பிராமனிடத்து வரம் பெற்று அதனாற் செருக்கி
எப்பொழுதுஞ் சூரியனை வளைந்து எதிர்த்துத்தடுத்துப்
போர்செய்கின்றனரென்றும், அந்தணர்கள் சந்தியாகாலங்களில் மந்திரபூர்வமாகக்
கையில் எடுத்துவிடும் அருக்கிய தீர்த்தங்கள் வச்சிராயுதம்போலாகி
அவர்கள்மேல் விழுந்துஅவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத்
தடையில்லாதபடி செய்கின்றனவென்றும், அப்படி அந்தணர்கள்செலுத்தும்
அருக்கியத்தின் ஆற்றலால் சூரியமண்டலத்தினிடையே ஒரு செந்தீ எழுந்து
சொலிக்க அத்தீயில் அவ்வரக்கர்கள் விளக்கில் விட்டில்போலவிழுந்து
ஒழிகின்றனரென்றும் நூல்கள்கூறும். ‘முளரிநாயகன் அவுணரை மோகரித்துத்
தடிந்து’ – அந்தணர்கள் அருக்கியப்பிரதானஞ்செய்ய அதனால்
தன்னிடம்எழுந்துவிளங்கும் சுவாலையைக்கொண்டு சூரியன் அவ்வரக்கர்களை
அழித்து என்க.
வாச மா மணி விளக்கு எடுப்ப, இவன் வந்து, தாம் உறையும்
மனை புகுந்து,
ஈசனோடு உமை எனத் தவம் புரியும் இருவர்
தாள்களும் இறைஞ்சியே,
நேசம் ஆன அருள் அன்னையைத் தொழுது, தம்முனைத்
தொழுது, நெஞ்சுறத்
தேசினோடு இளைஞர் தொழ, மகிழ்ச்சியொடு தழுவினான்,
முறைமை திகழவே.-வீமன், மாளிகைக்குவந்து பந்து மித்திரரோடு அளவளாவுதல்.
வாசம் – வாசனையுள்ள [நறுநெய்கொண்டு ஏற்றிய], மா மணி
விளக்கு – சிறந்த அழகிய விளக்குகளை, எடுப்ப – (நகரத்தார் எங்கும்) ஏற்ற,
இவன் – வீமன், வந்து-, தாம் உறையும் மனை புகுந்து- தாங்கள் வசிக்கும்
வீட்டிற்புக்கு,- முறைமை திகழ – (அவரவர்க்கு உரிய) முறைமை விளங்க,-
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்கள்உம் இறைஞ்சி- சிவபிரானும்
பார்வதி தேவியும் போலத் தவவொழுக்கத்தைநடத்துகிற அவ்வீட்டு அந்தணனும்
அவன் மனைவியுமாகிய இருவருடைய பாதங்களையும் நமஸ்கரித்து, நேசம்
ஆன அருள் அன்னையை தொழுது – அன்புமிக்க கருணையையுடைய தன்
தாயாகிய குந்திதேவியை வணங்கி,-தம்முனை தொழுது-தமையனாகிய தருமனை
வணங்கி, இளைஞர் தேசினோடு நெஞ்சுஉற தொழ – (தனது) தம்பியர்
பெருமையோடு மனப்பூர்வமாக (த் தன்னை) நமஸ்கரிக்க, மகிழ்ச்சியொடு
தழுவினான் – சந்தோஷத்தோடு (அவர்களைத்) தழுவினான்;(எ-று.)
இல்லறத்தில் நின்றபடியே நல்லொழுக்கத்தை மிக்கசிறப்பாக நடத்துதற்கு
ஈசனும் உவமையும் உவமைகூறப்பட்டனர். ஈசன் –
எல்லாஐசுவரியமுமுடையவன். பார்வதி ஐந்துபிராயமான வளவிலே பரமசிவனை
மணம்புரிதற்குத் தவஞ்செய்யவிரும்பியவளாய்த் தன் கருத்தைப் பெற்றோர்க்குத்
தெரிவிக்கையில், ‘உ! மா [அம்ம! வேண்டா] ‘ என்று கூறினமையால், அவளுக்கு
உமையென்று பெயராயிற்று
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும், அன்னை ஆர்வ
உரை கூறவும்,
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும்,
சமர மொய்ம்பனை,
‘சகம் மலர்ந்த திரு உந்தி மால்கொல், இவன்!’ என்று, மற்று
உள சனங்களும்,
மிக மலர்ந்து, புனல் ஓடையின் குழுமி, நனி வியந்து, இசை
விளம்பினார்.-நகரத்திலிருந்த பலரும் வீமனைப் பாராட்டியமை.
சமரம் மொய்ம்பனை – போர்வீரனானவீமனை,- முனி –
(இருந்தவீட்டிற்குஉரிய) அந்தணன், அகம்மலர்ந்து – மனங் களித்து, ஆசி
சொற்றிடஉம் – வாழ்த்துக்கூறவும்,- அன்னை – தாய் [குந்தி], ஆர்வம் உரை –
அன்பைத்தெரிவிக்கும்பேச்சுக்களை, கூறஉம் – சொல்லவும்,- உரிய துணைவர் –
உரிமைபூண்டசகாயரான உடன்பிறந்தோர், முகம்மலர்ந்து – முகமலர்ச்சிகொண்டு,
ஆண்மை நிலைமொழியஉம் – பராக்கிரமச்செயலைப்பாராட்டிக் கூறவும்,-
மற்றுஉள சனங்கள்உம் – மற்றும் அந்நகரத்திலிருந்த சனங்களெல்லாம்,- ‘இவன்-,
சகம் மலர்ந்த திருஉந்தி மால்கொல்-உலகத்தைவெளிப்படுத்திய
அழகியநாபியையுடைய திருமாலோ? ‘ என்று – என்றுசங்கித்து, மிக மலர்ந்து –
மிகவும் மனம் மகிழ்ந்து, புனல் ஓடையின் குழுமி – நீர் ஓடையில் திரளுதல்போல
ஒன்றுகூடி, நனி வியந்து – மிகவும் கொண்டாடி, இசை விளம்பினார்-
(அந்தவீமசேனனுடைய) புகழைக் கூறினார்கள்; (எ -று.)
துஷ்டநிக்கிரகஞ்செய்து சிஷ்டரைப்பரிபாலிக்குஞ் செயல்இவ்வீமனுக்கும்
இருத்தலால், ‘மால்கொல் ‘ என்றனர். ஓடையில்புனல் திரண்டு தாமரைமலர்
மலர்ந்திருத்தல்போல, இந்நகரில் சனங்கள் திரண்டு மகிழ்ச்சியால் தம் கண்கள்
மலர்ந்திருந்தன ரென்க.
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply