நனி ஆடல் அனற்கடவுள், யமன், நிருதி, நண்ணு திசை,
நாள்கள்தோறும்
முனியாமல் நடந்து இளைத்து, ‘முன்னையினும் பரிதாபம்
முதிர்ந்தது’ என்று,
தனி ஆழித் தனி நெடுந் தேர்த் தனிப் பச்சை நிறப் பரியை,
சயில ராசன்
பனியால் அவ் விடாய் தணிப்பான், பனிப்பகைவன் பனி
செய்வோன் பக்கம்சேர்ந்தான்.-சூரியன் தட்சிணாயனத்தைவிட்டு உத்தராயணத்தில்
வருதல்.
பனி பகைவன் – பனிக்குப் பகைவனாகிய சூரியனானவன்,- நனி
ஆடல்- மிக்ககொடுமையையுடைய, அனல் கடவுள் – அக்கினியும், யமன் –
யமனும், நிருதி- நிருருதியும், (என்னும் இவர்கள்), நண்ணா – பொருந்திய, திசை –
(தெற்குத்) திக்கில்,நாள்கள் தோறுஉம் – தினந்தோறும், முனியாமல்நடந்து –
வெறுப்புக்கொள்ளாமல்நடந்ததனால், (தனதுதேர்க்குதிரை),முன்னையின்உம்
இளைத்து பரிதாபம் முதிர்ந்தது -வெப்பம் அதிகப்பட்டு முன்பு இருந்த
நிலையினின்று மாறிச்சோர்வடைந்து விட்டது,என்று – என்று எண்ணி, – தனி
ஆழி தனி நெடு தேர் தனி பச்சை நிறம் பரியை -ஒற்றைச் சக்கரத்தையுடைய
ஒப்பற்ற பெரிய (தனது) தேரிற்பூட்டியதனித்தபசுமைநிறத்தையுடைய
அக்குதிரையை, சயிலராசன் பனியால் அ விடாய் தணிப்பான் -மலையரசனாகிய
இமயமலையிலுள்ளபனியினால் அந்தத் தாபந்தணியச்செய்தற்பொருட்டு, பனி
செய்வோன்பக்கம் சேர்ந்தான் – பணியைச்செய்பவனானஅவ்விமய
மலையிருக்கிறவடக்குப்பக்கத்தை யடைந்தான்; (எ-று.)
ஆடிமாசமுதல் மார்கழிமாசம் வரையில் ஆறுமாசம் தக்ஷிணாயனமும்,
தைமாசம்முதல் ஆனிமாசம்வரையில் ஆறுமாசம் உத்தராயணமுமாம். சூரியன்
தென்புறமாகச்சஞ்சரிக்கும் காலம், தக்ஷிணாயனம். அவன் வடபுறமாகச்சஞ்சரிக்கும்
காலம், உத்தராயணம். ஆயினும், வடக்கினின்றுமீண்டு தென்புறமாகவும்
தெற்கினின்றுமீண்டு வடபுறமாகவும் வரும்போது தெற்குத்திசைப்பாகமாகவேனும்
வடக்குத்திசைப்பாகமாகவேனும் ஒதுங்காமல் இடையில் நிற்குங்காலம் விஷு வ
மெனப்படும். சித்திரைமாதத்திற்கு உரிய மேஷராசியிற் சூரியன் வருகையிலும்,
ஐப்பசிமாதத்துக்கு உரிய துலாராசியிற் சூரியன்வருகையிலும், விஷு வமென்கிற
காலம் உண்டாகின்றது; அதுதான், ஏற்றத்தாழ்வில்லாத இராப்பகல்களையுடையது.
இளவேனிற்பருவம் வரலாயிற் றென்று கீழ்ச்சருக்கத்தின் முடிவிற் கூறினவர்,
அந்தப்பருவத்தின் ஆரம்பமான சித்திரைமாதத்தொடக்கத்தை இங்குக்கூறுகிறாரென
அறிக.
தைமாசமுதல் தெற்கினின்று ஒதுங்கிவந்த சூரியன் உத்தராயணத்தின்
மத்தியபாகமாகிய சித்திரைமாசத் தொடக்கத்தில் நடுவில் வந்து அதுமுதல்
வடபுறமாகஒதுங்குகின்றனன்: இங்ஙனம் இயல்பாற் சூரியன் தென்திசையினின்று
வடதிசையிலொதுங்குதற்குக் கவி தானாக ஒரு காரணத்தைக் கற்பித்துக்
கூறியதனால், இச்செய்யுள்- ஏதுத்தற்குறிப்பேற்றவணி; அக்கினி தென்கிழக்குத்
திக்குப் பாலகனாகவும்,பிராணிகளையெல்லாம் கண்ணோட்டமின்றிக் கொல்லுகிற
யமன்தெற்குத்திக்குப்பாலகனாகவும், இராக்கதர்குலத்துக்கு ஆதிபுருஷனாதலாற்
கொடியவனாகிற நிருருதி தென்மேற்குத்திக்குப் பாலகனாகவும் அமைந்துள்ளதனாற்
கொடியதாகிற தென்திசையிற் பலநாள் நடந்ததனால் தனதுதேர்க்குதிரை மிக்க
தாபமடைந்து இயல்பாகவுள்ளவலிமை குன்றிச் சோர்ந்துவிட்டது என்று எண்ணிச்
சூரியன் இனி அக்குதிரையை இமயமலையிலுள்ள பனியைக்கொண்டு அத்தாபத்தைத்
தணிக்கக்கருதி அம் மலையிருக்கிற வடபுறத்தைச்சேரலாயின னென்றார். பகற்
சஞ்சாரம் தக்ஷிணாயனத்தில் விரைவாகவும் உத்தராயணத்தில் மந்தமாகவும்
இருத்தல்,இயல்பு; அது, தக்ஷிணாயனத்தில் பகற்பொழுது குறைவாகவும்
உத்தராயணத்தில்பகற்பொழுது மிகுதியாகவும் இருத்தலால் விளங்கும். இங்ஙனம்
தக்ஷிணாயனத்திலுள்ளவேகம் பின்பு குறைதல், கொடியவர்கள் பொருந்திய கொடிய
தென்திசையிற் பலநாள்வெறுப்பின்றி நடந்ததனால் தனதுகுதிரை தாபமுதிர்ந்து
முன்னையினும்இளைத்ததென்று சூரியன் கருதியதற்குக் காரணமென்னலாம்.
ஆடல் – அடலென்பதன் நீட்டல்விகாரம். அனற்கடவுள் – அக்கினிதேவன்.
சூரியனது தேர் சம்வற்சரரூபமான ஒற்றைச்சக்கரத்தையுடைய தென்று புராணம்கூறும்.
சூரியனது தேர்க்குதிரைகள் ஏழு என்பர், ஒருசாரார்; மற்றொருசாரார், ஏழு [ஸ்ப்த]
என்று பெயர்பெற்ற குதிரை ஒன்றே யென்பர்; இக்கொள்கையே இங்குக்
கொள்ளப்பட்டது. பரிதாபம் – பெருவெப்பம்: வடசொல், “பரிதாபம்
ராதவாஜிநாம்நிஜாநாம் ஹிமவத்பவநைரிவாபநேதும் – திநநாதோ திஸமுத்தராம்
ப்ரதஸ்தே” என்றது பாலபாரதம்.
இதுமுதற்பத்தொன்பதுகவிகள், பெரும்பாலும் முதல்நான்கு சீரும்
காய்ச்சீர்களும்,மற்றை இரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.
கலக்கம் உற, இள வேனில் கலகம் எழுந்திடும் பசுந் தண்
காவு தோறும்,
சிலைக்கு அணி நாண் முறுக்குவபோல் தென்றலின் பின்
சூழல் அளிகள் சேர ஓட,
உலைக் கனலில் கருங் கொல்லன் சிறு குறட்டால் தகடு
புரிந்து ஒதுக்கி, மாரன்
கொலைக் கணைகள் சமைப்பனபோல், குயில் அலகால்
பல்லவங்கள் கோதுமாலோ!-வசந்தகால வருணனை.
கலக்கம்உற – கலக்கம் மிகுதியாக உண்டக, இளவேனில் கலகம்
எழுந்திடும் – வசந்தகாலத்துக்குஉரிய போர் மூளுதற்கு இடமான, பசுந் தண் காவு
தோறுஉம் – பசுமையானகுளிர்ந்த சோலைகளிலெல்லாம்,- சிலைக்கு அணி நாண்
முறுக்குவ போல் – (மன்மதனுடைய) வில்லுக்கு அழகிய நாணியை முறுக்குதல்
போல,சுழல் அளிகள் தென்றலின் பின் சேர ஓட – சுழலுந்தன்மையனவான
வண்டுகள்தென்றற்காற்றின்பின்னே ஒரு சேர ஓட, – கரு கொல்லன் –
கருநிறமுடையகொல்லனானவன், உலை கனலில் – உலைக்களத்துள்ள
நெருப்பில், தகடு புரிந்து -தகடுகளைச் செய்து, (அவற்றை) சிறு குறட்டால்
ஒதுக்கி – சிறிய குறடுஎன்னுங்கருவியினால் ஒதுக்கி, மாரன் கொலை கணகள்
சமைப்பன போல் -மன்மதனுக்குஉரிய கொலைத்தொழிலைச்செய்யும் அம்புகளைச்
செய்தல்போல, குயில் -குயில்கள், அலகால் – (தம்) வாயலகினால், பல்லவங்கள்
– தளிர்களை, கோதும்-; (எ-று.)
இங்ஙனங் காமனோடு நண்புகொண்ட வசந்தகாலத்துக்கு உரிய போராவது –
அக்காலத்தில் மன்மதன் ஸ்திரீபுருஷர்களைச் சிற்றின்பவசப்படுமாறு தூண்டுதல்.
அதற்கு இடமான சோலை யென்றது – மைந்தரும் மகளிருங் காதல்கொண்டு
கூடிவிளையாடுதற்கு ஏற்ற ரமணீயமான சோலை யென்றவாறாம். அச்சோலைகளில்
வசந்தகாலத்திலே நறுமணமளாவி உலாவுகிற தென்றலின் பின்னே அதனை
நுகர்தற்குச்சுழலுமியல்போடுசெல்லுகிற கருநிறமான வண்டுகளின் ஒழுங்கை,
மன்மதனதுவில்லின்நாணியாதற்கு முறுக்கியகயிறு போன்ற தென்றார். மன்மதனது
கரும்பு வில்லுக்குவண்டொழுங்கு நாணி யெனப்படுதலை “ஆலைக் கரும்பு சிலை
ஐங்கணை பூ நாண்சுரும்பு” என்ற இரத்தினச்சுருக்கத்தாலும் அறிக. ‘கலக்கம் உற’
என்றது -ஸ்திரீபுருஷர்களுடைய மனத்திட்டம் நிலைகுலைய என்றபடி.
பின்னிரண்டடியில்கருநிறமுடைய குயிலுக்கு – கருங்கொல்லனும், அதன்
அலகுக்கு – சிறு குறடும்,தளிராற்செம்மைபெற்ற மரச்செறிவுக்கு – உலைக்கனலும்,
விரிந்த தளிர்க்கு – பரந்ததகடும், அலகினால் அதனைச் சுருட்டிக் கோதுதற்கு –
குறட்டினால் தகட்டை ஒதுக்கிஅம்புவடிவாக அமைத்தலும் ஒப்புஆம்;
தற்குறிப்பேற்றவணி. இங்ஙனம் கசி தன்மனோபாவத்தால் அமைத்துக்கூறுவதை
உவமையணி யென்னலாகாது.வணிடினொழுங்கும், குயிலும் தளிரும் தம்மைக்
காண்பவர்க்கு வேட்கை விளைக்குங்காமோத்தீபகப்பொருள்களாதலால், இங்ஙனங்
கூறப்பட்டன.
செங் காவி, செங் கமலம், சேதாம்பல், தடம்தொறும் முத் தீக்களாக,
பைங் காவின் நெடுஞ் சினைக் கை மலர் நறுந் தேன்
ஆகுதிகள் பலவும் வீழ்க்க,
உங்கார மதுகரங்கள் ஓங்காரச் சுருதி எடுத்து ஓத, வேள்வி
வெங் காமன் இரதியுடன் புரிந்து, தன தென்றல் அம் தேர்மேற்
கொண்டானே!-மன்மத னுலாவல்.
செங் காவி – செங்கழுநீர்மலரும், செங் கமலம் – செந்தா
மரைமலரும்,சேது ஆம்பல் – செவ்வாம்பல்மலரும், (ஆகிய இவை மூன்றும்),- தடம்
தொறுஉம் -நீர்நிலைகளாகிய குண்டந்தோறும் முத் தீக்கள் ஆக – காருகபத்தியம்
ஆகவனீயம்தட்சிணாக்கினி என்ற மூன்று அக்கினிகளாகவும், பைங் காவின் –
பசுமையானசோலையின், நெடுஞ் சினை – நீண்டகிளைகளாகிய, கை – கையின்,
மலர் – மலர்களினின்று,நறுந்தேன் – நறுமணமுள்ளதேனாகிய, ஆகுதிகள் பல
உம் – ஓமங்கள்பலவற்றையும்,வீழ்த்த – வீழுமாறுசெய்யவும், உங்காரம் மதுகரங்கள்
– உங்காரத்தைச் செய்கின்றவண்டுகள், ஓங்காரம் சுருதி எடுத்துஓத – ஓங்காரமாகிய
சுருதியை எடுத்துச்சொல்லவும், வேள்வி – யாகத்தை, வெங் காமன் – விருப்பத்தை
யுண்டாக்கவல்லமன்மதன், இரதியுடன் – இரதீதேவியுடனிருந்து, புரிந்து –
செய்துவிட்டு, தன தென்றல்அம் தேர் மேற்கொண்டான் – தனது தென்றலாகிய
அழகியதேர்மேலேறிக்கொண்டான்; (எ-று.)
முத்தீவளர்த்து ஆகுதிசெய்து வேள்வியை முடித்தபின்பு யாகஞ்செய்தவன்
தன்பத்தினியோடு தேர்மீது ஏறி யாகசாலையினின்று இருப்பிடத்துக்குச்
செல்லுவதுபோல, மன்மதன் ரதீ தேவி யுடனே பட்டணப்பிரவேசஞ்
செய்யப்புறப்பட்டா னென்பதாம். காவி முதலியவற்றை முத்தீமுதலியனவாக
உருவகஞ்செய்ததனால் மன்மதனையும் இரதீதேவியையும் யஜமாநனும் யாக
பத்தினியுமாகஉருவகஞ் செய்யவேண்டிற்று: இது அவயவஉருவகம். தடம் –
நீர்நிலையாகியகுண்டமெனச் சிலேடையுருவகம். சினையைக் கையென்றதற்கு
ஏற்ப, மலரைக்கைத்தலமாகவும் தேனை நெய்யாகவும் கொள்க.
தேவியரும் திருமாலும், செழு மலர்த் தார்த் தனஞ்சயனும்
தேவிமாரும்,
மேவி, அனந்தரம், வேனில் விழவு அயர்வான் முரசு
அறைந்து, வீதிதோறும்,
ஓவியமும் உயிர்ப்பு எய்த, உபேந்திரனும் இந்திரனும்
உவமை சால,
பூஇனமும் சுரும்பும் எனப் புரம் முழுதும் புறப்பட,
வண் பொங்கர் சேர்ந்தார்.-கிருஷ்ணார்ச்சுனர் வேனில்விழாவயரத்
தேவியரோடுஞ் சோலைசேர்தல்.
திருமால் உம் – ஸ்ரீக்ருஷ்ணனும், தேவியர்உம் – (அவனுடைய)
தேவிமாரும், செழு மலர் தனஞ்சயன்உம் – செழிப்புள்ள மலர்கொண்டு
தொடுக்கப்பட்ட மாலையையணிந்த அருச்சுனனும், தேவிமார்உம் – (அவனுடைய)
தேவிமாரும், மேவி – மனமொன்றி, அனந்தரம் – பிறகு, வேனில் விழவு
அயர்வான் -வசந்தோற்சவம் கொண்டாடும்படி (கருதி), முரசு அறைந்து –
பேரிகையறைந்து(நகரிற்செய்திதெரிவித்து), வீதிதோறும்உம்-, ஓவியம்உம்உயிர்ப்பு
எய்த -சித்திரப்பதுமைகளும் பெருமூச்சுவிடும்படி,- உபேந்திரன் உம் இந்திரன்உம்
உவமைசால – உபேந்திரனும் இந்திரனுமே உவமையாகப்பொருந்த, பூஇனம்உம்
சுரும்புஉம்என புரம்முழுதுஉம் புறப்பட – பூவின் தொகுதியும்
வண்டுமேயென்னுமாறுநகரத்தவரனைவரும் புறப்பட, வண் பொங்கர் சேர்ந்தார் –
வளப்பமுள்ள சோலையையடைந்தார்கள்;(எ-று.)
க்ருஷ்ணார்ச்சுனர்கட்கு உபேந்திரனும் இந்திரனும் உவமையாவர். பூவினம்
உள்ளஇடத்தைநாடிச் சுரும்புகள்தொடர்வதுபோல க்ருஷ்ணார்ச்சுனர் தேவிமாருடன்
இருக்குமிடத்தை நாடிப் புரமுழுதும் புறப்பட்டதென்க. அவர்களின் அழகைக்கண்டு
இவ்வாறு நமக்கு அழகு வாய்க்கவில்லையே யென்று கருதிச் சித்திரம் பெருமூச்சு
விடுவதாயிற் றென்க; இனி, ஜநங்களின் உற்சாக மிகுதியை விளக்குவார்
‘ஓவியமுமுயிர்ப்பெய்த’ என்றாரென்பாருமுண்டு. சோலை யமுனைக்கரையிலுள்ள
தென்பது, பிறநூலாற் புலப்படும்
கொண்டல் எழ, மின் நுடங்க, கொடுஞ் சாபம் வளைவுற,
செங் கோபம் தோன்ற,
வண் தளவும் நறுங் குமிழும் வண்டு அணி காந்தளும்
மலர, மலைகள்தோறும்
தண் தரள அருவி விழ, தையலார் வடிவுதொறும்-சாயல்
தோகை-
கண்டு, ‘நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது’ எனக்
களிக்குமாலோ!-இளவேனிலில் மயில்களித்தல்.
சாயல் தோகை – மகளிரின் சாயலையுடைய மயில்கள்,- கொண்டல்
எழ- மேகங்களெழுவதையும், மின் நுடங்க – மின்னல் சலித்துத் தோன்றுவதையும்,
கொடுஞ் சாபம் வளைவுஉற – கொடிய வில் வளைவுபொருந்தி நிற்பதையும், செங்
கோபம் தோன்ற – செந்நிறமுள்ள இந்திரகோபப்பூச்சிகள் தோன்றுவதையும்,
வண் தளவுஉம் நறுங்குமிழ்உம் வண்டு அணி காந்தள்உம் மலர – வளப்பம்
பொருந்தியமுல்லையும் நறுமணமுள்ள குமிழமலரும் வண்டுகளாலலங்கரிப்பப்
பெற்றகாந்தள்மலரும் மலர்வதையும், மலைகள்தோறும் – மலைகளிலெல்லாம், தண்
தரளம்அருவி விழ – குளிர்ந்த முக்தா ஹாரம் அருவி போலவிழுவதையும்,
தையலார்வடிவுதொறுஉம் கண்டு – மடவாரின் வடவுகளிலெல்லாங்கண்டு,
நமக்கு-,இளவேனில் – இளவேனிற் காலமானது, கார்காலம் ஆனது –
கார்காலமாயிற்று,என-,களிக்கும்-; (எ-று.)- ஆல் வியப்பைக்குறிக்கும்.
மடவாரின் கூந்தல் தோற்றம் கொண்டலெழுதலையும், இடை நுடக்கம் மின்
நுடங்குதலையும், புருவவளைவு சாபம்வளைவுறுதலையும், இதுழின்தோற்றம்
செங்கோபந்தோன்றுதலையும், பற்கள் மூக்கு கைகள் என்ற இவற்றின் மலர்ச்சி
தளவுகுமிழ் காந்தள் என்ற இவற்றின் மலர்தலையும், தனங்களில் முத்தமாலை
தொங்குவதுமலைகடோறும் அருவிவிழுதலையும் போலுதலால், அவற்றைச்
சோலையிற் கண்டமயில்கள், இளவேனிலே நமக்குக் கார்காலத் தோற்றமானதெனக்
கருதிக்களிக்குமென்றார்; இது மயக்கவணி. கொண்டலெழுதல் முதலியன,
கார்காலத்துக்குஉரியன. கோபம்= இந்திரகோபம்: முதற்குறை
பாராமல், நகையாமல், பாடாமல், ஆடாமல், பாதம் செங்கை
சேராமல், முக ராகம் வழங்காமல், இகழாமல்,
செவ் வாய் ஊறல்
நேராமல், நிழல் அதனை நிகழ்த்தாமல், மலர்ந்து, அழகு
நிறைந்த நீழல்
ஆராமம்தொறும், தங்கள் அவயவம் போல்வன கொய்தார்-
அணங்கு போல்வார்.-மகளிர் பூக்கொய்தல்.
அணங்கு போல்வார் – தெய்வமகளிர் போன்ற மாதர்கள்,- பாராமல்-
(தாங்கள்) பாராமலும், நகையாமல் – சிரியாமலும், பாடாமல் – இசைபடாமலும்,
ஆடாமல் – நர்த்தனம் ஆடாமலும், பாதம் செம் கை சேராமல் – காலையும்
சிவந்தகையையும் சேராமலும், முக ராகம் வழங்காமல் – நட்புச்செய்யாமலும்,
இகழாமல் – இகழாமலும், செம் வாய் ஊறல் நேராமல் – சிவந்தவாயினால்
எச்சிற்படச்சுவையாமலும், நிழலதனை நிகழ்த்தாமல் – நிழலைச்
செய்யாமலுமிருக்கையிலே, மலர்ந்து-, அழகு நிறைந்த நீழல் ஆராமம் தொறும்
தங்கள் அவயவம் போல்வன-அழகுநிறைந்த நிழலையுடைய சோலைகளிலெல்லாம்
தங்களுடைய உறுப்புக்கள் போலஉள்ளனவான மலர் அரும்பு தளிர் முதலியவற்றை,
கொய்தார் – பறித்தார்கள்; (எ-று.)
உத்தமவிலக்கணமுடைய மகளிர் பார்க்க மாமரமும், அவர்கள் நகைக்க
முல்லையும், பாடக் குருக்கத்தியும், ஆடப் புன்னையும், உதைக்க அசோகமும்,
அணைக்கக் குராவும், நட்புற ஏழிலைம்பாலையும், நிந்திக்கப் பாதிரியும், சுவைக்க
மகிழும், நிழல்படச் சண்பகமும் தளிர்த்து அரும்பிப் பூப்பன வென்றல், கவிஞர்மரபு.
இவை மகளிரால்மலர்மர மெனப்படும். “ஏடவிழ்மகிழ் சுவைக்க வேழிற்பாலை
நண்புகூடப், பாடல நிந்திக்கத் தேம்படிமுல்லை நகைக்கப் புன்னை, ஆடநீள்குரா
வணைக்க வசோகுஉதைத்திட வாசந்தி, பாடமாப் பார்க்க வார்சண்பக நிழற்படத்
தளிர்க்கும்” என்ற சூடாமணிநிகண்டையுங் காண்க. இங்கு அம்மரங்கள்
மகளிர்பார்த்தல் முதலியன செய்யாமலிருக்கையிலேயே இயல்பாய்த் தளிர்த்து
அரும்பிப்பூத்துச்செழித்தன, இளவேனிலாதலி னென்க. பாதம்சேராமல் செங்கை
சேராமல் எனத்தனித்தனி யியைத்து, உதையாமலும் அணையாமலும் எனப்
பொருள்கொள்க. முக ராகம் வழங்குதல் – முகமலர்ச்சி காட்டி அன்புபாராட்டுதல்;
எனவே, நண்பு செய்தலாயிற்று: ராகம் – ஆசை. தளிர் அரும்பு பூ என்பவை
நிறமும்மேன்மையும் அழகும் பற்றி, மகளிர் உறுப்புக்கு உவமையாம். அவ்வுபமான
உபமேயத்தன்மையைமாற்றி ‘தங்கள் அவயவம்போல்வன’ என்றது –
எதிர்நிலையணி. ‘தங்கள்அவயவம் போல்வன கொய்தார்’ என்றதொடரின்
போக்கினால், ஒப்பற்ற தங்கள்அவயவங்கட்குப் போலியாதல் பற்றிப் பகைத்து
அவற்றைப் பறிப்பராயின ரென்றபொருள் தொனிக்கும்
மாற்றாத பனிநீரால், மான்மத குங்கும மலய வாசச் சந்தின்
சேற்றால், அச் சோலை எலாம், செங்கழுநீர்த் தடம் போன்ற;
சிந்தைத் தாபம்
ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால், அடர்ந்த பூகத்
தாற்றால், அம் மரகதச் செந் துகிரால், அப் பொழில்போன்ற,
தடங்கள் எல்லாம்.சோலை நீர்நிலைஎன்ற இவற்றின் வருணனை.
அ சோலைஎலாம் – அவர்கள்சென்ற அந்தச்சோலை முழுதும்,
மாற்றாதபனிநீரால் – மாறுபடுத்தாத [சுத்தமான]பனி நீராலும், மான்மதம் குங்குமம்
மலயம்வாசம் சந்தின் சேற்றால் – கஸ்தூரி குங்குமம் மலயமலையில் தோன்றிய
நறுமணமுள்ள சந்தனம் என்ற இவற்றின் சேற்றினாலும், செங்கழுநீர் தடம்
போன்ற – செங்கழுநீர்தோன்றப்பெற்ற நீர்நிலையை யொத்தன: தடங்கள் எல்லாம் –
நீர்நிலைகளெல்லாம்,- சிந்தை தாபம் ஆற்றாத காதலருக்கு- மனத்திற்கொண்ட
தாபத்தைத் தாங்கமாட்டாத காதலைக்கொண்ட ஆடவருக்கு, அமுது ஆன –
அழுதம்போலினிமையான, இளநீரால் – இளநீரினாலும், அடர்ந்த பூகம் தாற்றல் –
நெருங்கிய கமுகங்குலையினாலும், அம் மரகதம் செந்துகிரால் – அழகிய
மரகதத்திற்கலந்திருக்கிற செம்பவழத்தாலும், அ பொழில் போன்ற – அந்தச்
சோலையையொத்தன; (எ-று.)
சோலை தடத்தையும், தடம் சோலையையும் போலுமென்று, ஒன்றன்
தன்மையைமற்றொன்று மாற்றிக்கொண்டாற்போலக் கூறிய நயம் பாராட்டுதற்கு
உரியது. தடத்திற்குநீரும் சேறும் உரியன. சோலையில் ஆடவரும் மடவாரும்
ஒருவர்மீது ஒருவர் தூவியபனிநீரும், மான்மதச்சேறுமுதலியனவும் கீழேசிந்துதலால்,
சோலை நீரையும்சேற்றையுமுடையதாயிற்றென்க. பொழிலுக்கு உரியவை,
இளநீர்முதலியன.மடவார்தடங்களிற் குடைந்து புனலாடுகையில், அவர்களுடைய
கொங்கைள்முதலியவற்றைத்தட மெல்லாம் பெறுதலால். அவை பொழில்போன்ற
என்றார்.தனங்கள் இளநீரையும், கூந்தல் பூகத்தாற்றையும், மரகதமேனியிலுள்ள
செவ்வாயிதழ்மரகதச்செந்துகிரையும் போலுமென்க: சோலைக்கு மரகதச் செந்துகிர்,
பசுமையிற்செந்நிறமும்படவெடிக்கும் இளந்தளிரென்க; பொழிலைச்சேருமிடத்தும்
மரகதச்செந்துகிரென்றது- ஆகுபெரேயாம்
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல்
மேன்மேல் நோக்கும்
மை கொண்ட குழல் ஒருத்தி, மற்று அவன் செங் கையில் சிவிறி
மழை கண்டு அஞ்சிப்
பொய்கொண்டு வகுத்தனைய மருங்கு அசைய, தனபாரம் புளகம் ஏற,
கைகொண்டு முகம் புதைத்து, தன் விரல் சாளரங்களிலே
கண்கள் வைத்தாள்.-இதுமுதல் ஐந்துகவிகள் – அருச்சுனனும் அவனது தேவியரும்
நீர்விளையாடுதலைக் கூறும்.
மெய் கொண்ட மொழி – உண்மையைக் கொண்ட பேச்சையுடைய,
விசயன் – அருச்சுனனது, மெய்யின் – உடம்பின், எழில் – அழகை, இமையாமல் –
கண் கொட்டாமல், மேல்மெல் நோக்கும் – பின்னும்பின்னும் பார்க்கின்ற, மை
கொண்டகுழல் ஒருத்தி – கருநிறத்தைக்கொண்ட கூந்தலையுடைய ஒருத்தி, அவன்
செங்கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – அந்த அருச்சுனனுடைய
செங்கையிலுள்ள(நீரை விசிறவீசுங்கருவியான) துருத்தியினின்று வெளிப்படும்
நீர்த்தாரையைக்கண்டுபயந்து, பொய் கொண்டு வகுத்து அனைய மருங்கு
அசைய -பொய்யைக்கொண்டு வகுத்தாற்போன்ற [இல்லையென்றுசொல்லும்
நிலையையடைந்துள்ள] இடை நுடங்காநிற்கவும், தனபாரம் புளகம் ஏற –
கொங்கையாகிய சுமையிலே மயிர்ச்சிலிர்ப்புமிகவும், கைகொண்டு முகம் புதைத்து –
(தன்) கையினால் (தன்) முகத்தைமூடிக்கொண்டு, தன் விரல் சாளரங்களில் –
(அங்ஙன்மூடிய) கையின் விரல்களினிடைவழியாக, கண்கள் வைத்தாள் – (தன்)
கண்பார்வையை வெளியேசெலுத்தினாள்; (எ-று.)
அருச்சுனன் சிவிறியால் நீரைத்தூவ அது தன்முகத்தில் நேரே விழும்போது
அவனைக் காணவெட்டாமற் செய்வதால், ஒருத்தி அந்நீர்வீழ்ச்சிக்கு அஞ்சித்
தன்முகத்தைத் தன்கையால் மூடியவண்ணம் விரற்சந்தினால் அவ்வருச்சுனனழகைப்
பார்க்க லாயின ளென்பதாம். மருங்கசைதலும் தனபாரம் புளகமேறுதலும்
நீர்வீழ்ச்சியினா லாயினவை.
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல
மதியாய் நடுங்குமாறு
பங்குனன் தன் திருச் செங் கைப் பங்கயத்தின் சிவிறியினால்,
பரிவு கூர,
குங்குமம் கொள் புனல் விடவும், இமையாமல், புனல்வழியே
கூர்ந்த பார்வை
செங் கலங்கல் புதுப் புனலுக்கு எதிர் ஓடி விளையாடும்
சேல்கள் போலும்!
அங்கு அவ்விடத்தில் [அப்பொழுது], கொடி அனையாள் –
பூங்கொடிபோன்றவளான, ஓர் நங்கை – ஒரு சிறந்தமகளினது, வதனம் மதி –
முகமாகிய சந்திரன், சலம் மதி ஆய் – நீரினுள்ளே தோன்றுஞ் சந்திரபிம்பத்தைப்
போன்று, நடுங்கும் ஆறு – மிக அசையும்படி, பங்குனன் – அருச்சுனன், தன் திரு
செம்கை பங்கயத்தின் சிவிறியினால் – தனது அழகிய சிவந்த தாமரை மலர்போன்ற
கையிலுள்ள நீர்த்துருத்தியைக்கொண்டு, பரிவுகூர- (அவட்கு) வருத்தம்மிகும்படி,
குங்குமம் கொள் புனல் விடஉம் – குங்குமத்தைக் கரைத்த நீரை விசையோடு
மேல்வீசவும், இமையாமல் – இமைகொட்டாமல், புனல் வழிஏ கூர்ந்த –
நீரினிடையேநுண்ணிதாய்ப்பார்த்த, பார்வை – (அவளுடைய) கண்கள், செம்
கலங்கல் புதுபுனலுக்கு எதிர்ஓடி விளையாடும் சேல்கள் போலும் – சிவந்த
கலக்கமுள்ள புதியநீர்வெள்ளத்துக்கு எதிரே ஓடிவந்து விளையாடுகிற சேல்
மீன்களை ஒக்கும்; (எ-று.)
அருச்சுனன் ஓர் மெல்லியலாளின் முகத்தின்மேல் துருத்தி கொண்டு
விசையாகக்குங்குமங் கலந்த நீரைத் தூவினான்; அதைப் பொறுக்கமாட்டாமல்
அவள் முகத்தைமிகுதியாக அசைக்கலானாள்; அச்சமயத்தில், சந்திர மண்டலம்
போன்ற அவளுடையமுகமண்டலம் நீரினுள்ளே நடுங்கியது, நீரினுள்ளே
காணப்படுகிற சந்திரமண்டலத்தினதுபிரதிபிம்பம் அந்நீரின் அசைவினால்
அசைந்து தோன்றுவதைப் போன்றது; இங்ஙனம்தனக்கு வருத்தம் மிகுமாறு
அருச்சுனன் மேல்மேல் நீர்வீசிக்கொண்டிருக்கவும் அவள்அவன்பக்கலுள்ள
ஆசையாற்கண்கொட்டாமல் அவனைப் பார்த்தபடியே யிருந்தாள்;அவ்வாறுநீரிற்கு
எதிராக நுட்பமாய்ப் பார்வையைச் செலுத்துகிற அவளுடையகண்கள்,செங்கலங்கற்
புதுவெள்ளத்திற்கு எதிரோடி விளையாடுஞ் சேல்மீன்கள் போன்றனஎன்பதாம்;
தற்குறிப்பேற்றவணி. பரிவு கூர என்பதற்கு – ஆசைமிக என்று
பொருள்கொள்ளினும் அமையும்; அருச்சுனன் தனக்கு அவளிடம்
ஆசைமிகுதலால்அவள்மேற் புனல்வீசின னென்றும், தனது காதலனான அவன்
கைச்சிவிறிகொண்டுவீசியநீர் தன் உடலிற்பட்டபோது அவள் அவன்கையால்
தீண்டினாற் போலஇன்பமிக்கனளென்றும் கொள்க.
நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான
நரனார் செங் கை,
உறையும் மலர்ச் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள்
ஒரு பொற்பாவை
நெறி தரு பைங் குழலின்மிசை வீசிய நீர், பெருக்கு ஆற்றின்
நிறை நீர் வற்றி,
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு
அமைந்தது அம்மா.
நறை கமழ் – வாசனை வீசுகிற, தண் – குளிர்ச்சியான, துழாய்
மாலை -திருத்துழாய்மாலையையுடைய, நாரணற்கு – நாராயணனது
திருவவதாரமானகண்ணபிரானுக்கு, நண்பு ஆன – சிநேகிதனான, நரனார் –
அருச்சுனன், செம் கை -(தனது) சிவந்த கையினால், மலர் உறையும் செம்திருஉம்
ஒவ்வாத பொற்பு உடையாள்- செந்தாமரைமலரில் வாழ்கிற செந்நிறமுள்ள
இலக்குமியும் ஒப்பாகாத அழகையுடையவளாகிய, ஒரு பெண்பாவை –
பொன்மயமான பிரதிமையைப் போன்ற ஒருபெண்ணினது, நெறி தரு
பைங்குழலின்மிசை – நெறித்த கருநிறமான கூந்தலின்மேல்,வீசிய-, நீர்- நீரானது-
பெருக்கு ஆற்றில் நிறை நீர் வற்றி – வெள்ளப்பெருக்கையுடைய நதியில் நிறைந்த
நீர் குறைந்துபோக, அறல் படு நுண் கருமணலின் அரித்துஒழுகும் – அறுப்புப்
பொருந்திய நுண்ணிய கருமணலில் அரித்துப் பாய்கிற, சில்நீரோடு – சொற்பமான
நீரோடு, அமைந்தது – ஒத்தது; (எ-று.)
தற்குறிப்பேற்றவணி. நெறித்தகருநிறமான கூந்தல் அறல்பட்ட நுண்ணிய
கருமணலையும், அக்கூந்தலின்மேல் வீசிய நீர் அக்கருமணலில் அரித்தொழுகுஞ்
சொற்பநீரையும் போலு மெனக் காண்க. பசுமை, கருமை நீலம் என்ற நிறங்களில்
ஒன்றற்கொன்றுள்ள சிறிதுவேறுபாட்டை முக்கியமாகக்கொள்ளாமல் அவற்றை
அபேதமாகக்கூறுவது கவிமரபு ஆதலால், கருங்குழல் ‘பைங்குழல்’ எனப்பட்டது.
அம்மா – ஈற்றசை.
முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவருக்கும்
விளக்கும்பொருட்டு நாராயணனென்னுங் குருவும் நரனென்னுஞ் சிஷ்யனமாகப்
பதரிகாச்சிரமத்தில் தோன்றிச் சீடனுக்குக் குரு தத்துவப்பொருள்களை
உபதேசிக்கின்றதன்மையாய் வீற்றிருக்கிற திருமாலின் இருமூர்த்திகள்தாமே இங்கு
முறையே கண்ணனும் அருச்சுனனுமாக அவதரித்ததனால் ‘நாரணற்கு நண்பான
நரனார்’ என்றார். ‘நரனுநாரணனுமானோம்’ என முதற் போர்ச்சருக்கத்தும் கூறுவர்.
விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி,
நெடு வேயும் பாகும்
சுளிந்து வரும் கட களிற்றுச் சுவேதவாகனன் கடகத்
தோளின் மீது,
தெளிந்த நறுங் கத்தூரிச் சேறு படு சிவிறியின் நீர்
சிந்தும் தோற்றம்,
களிந்த கிரிமிசைக் கடவுள்-காளிந்தி பரந்ததெனக்
கவினும் மாதோ!
மயில் விளிந்து புறம் கொடுக்கும் – மயில் (ஒப்பாக முன்னிற்க
மாட்டாமல்) தோற்று முதுகுகாட்டிச் செல்லும்படியான, மெல் இயலாள் –
மென்மையான சாயலை யுடையவளாகிய, ஒருத்தி – ஒரு பெண், நெடுவேய்உம்
பாகுஉம் சுளிந்து வரும் – நீண்ட முட்கோலையும், பாகனையும் (துரத்திலே
கண்டாலுங்)கோபித்து வருகிற, கடகளிறு – மதங்கொண்ட ஆண்யானைபோன்ற,
சுவேத வாகனன் – அருச்சுனனது, கடகம் தோளின்மீது – கடகமென்னும் வளையை
யணிந்ததோள்களின்மேல், நறு கத்தூரி சேறு படு தெளிந்த நீர் – நறுமணமுள்ள
கஸ்தூரிக்குழம்பு கலந்த தெளிவான நீரை, சிவிறியின் சிந்தும் – துருத்தியைக்
கொண்டுதூவிய, தோற்றம் – காட்சியானது,- களிந்த கிரிமிசை – களிந்தமென்னும்
மலையின்.மேல், கடவுள் காளிந்தி பரந்தது என – தெய்வத்தன்மையையுடைய
யமுனாநதிபரவியதுபோல, கவினும் – அழகியதாய்விளங்கும்; (எ-று.)
தற்குறிப்பேற்றவணி. கருநிறமுடைய அருச்சுனனது வலியபெரிய
தோளுக்கு – கருநிறமுடையவலிய பெரிய களிந்தகிரியும், கஸ்தூரிக் குழம்பு
கலந்ததனாற் கருநிறம்மிக்க தெளிவான நீர்க்கு- கருநிறமுள்ள தெளிந்தயமுனா
நதியின்நீர்ப்பெருக்கும் ஒப்பா மெனக் காண்க. மயில் விளிந்து புறங்கொடுக்கும்
மெல்லியலாள்- மயிலினதுசாயலினும் மிக அழகியதாய்ச் சிறந்த சாயலையுடையாள்
என்றபடி.கத்தூரி-கஸ்தூரியென்னும் ஒருவகைமானினதுபெயர். அதன் வயிற்றினின்று
எடுக்கப்படுங் கொழுப்புக்கு முதலாகுபெயராம். தோன்றுவது தோற்றம்.
யமுனாநதிக்குத்தெய்வத்தன்மை – தன்னிடத்தில் நீராடியவரது அருவினை
தொலைத்து அவர்களைநற்கதியிற் செலுத்துதலும் கண்ணபிரான் திருவிளையாடல்
செய்யப்பெற்றபாக்கியமுடைத்தாதலும், மாது, ஓ – ஈற்றசைகள். அருச்சுனன்
தேவியர்மீதுநீர்சிந்தியதை வருணித்தவர், தேவியர் அருச்சுனன்மீது நீர்சிந்துவதை
இருகவிகளில்வருணிக்கின்றார்.
பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி,
பிடித்த செங்கை
நறை கமழும் பொலஞ் சிவிறி நண்ணிய செஞ் சிந்தூர
நாரம் வீச,
அறை கழல் வெஞ் சிலைத் தடக் கை அருச்சுனன்தன் திரு
முகத்தில் ஆனபோது,
நிறைமதிமேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவபோல்
நிறத்த மாதோ!
பிறை அனைய – இளஞ்சந்திரன் போன்ற, திலகம் நுதல் –
திலகத்தையணிந்த நெற்றியையுடைய, இளம் பிடி – இளமையான பெண்யானை
போன்றவளாகிய, பேதை ஒருத்தி – ஒரு பெண், செம் கை பிடித்த – (தனது)
சிவந்தகையிற் பிடித்த பொலம் சிவிறி – அழகிய துருத்தியில், நண்ணிய –
பொருந்திய, செம்சிந்தூரம் நறை கமழும் நாரம் – சிவந்த சிந்தூரப்பொடியைக்
கரைத்த வாசனைவீசும்நீரை, வீச – சிந்த,- (அந்நீர்ப்பெருக்குக்கள்),- அறை கழல்
வெம் சிலை தட கைஅருச்சுனன்தன் திரு முகத்தில் ஆன போது –
ஆரவாரிக்கின்ற வீரக்கழலையும்பயங்கரமான வில்லை யேந்திய பெரிய
கையையுமுடைய அருச்சுனனது அழகியமுகமண்டத்தின்மேற் சென்று
பொருந்தியபொழுது, வாள் இரவி கரங்கள் நிறை மதிமேல் நிரைத்து ஓடுவ போல்
நிறத்த – ஒளியையுடைய சூரியனது கிரணங்கள் பூர்ணசந்திரன்மேல் வரிசையாக
ஓடுவன போல விளங்கின; (எ-று.)
தற்குறிப்பபேற்றவணி. அருச்சுனனது முகமண்டலத்துக்கு –
சந்திரமண்டலமும்,அதன்மேற் சிந்தூரங்கலந்தநீர் மேன்மேற் செல்லுதற்கு-சந்திர
மண்டலத்தின்மேற்செந்நிறமான சூரியகிரணங்கள் வரிசையாகச்சென்று பாய்தலும்
ஒப்பா மெனக் காண்க.சூரிய கிரணங்கள் மேன்மேற்பாய்ந்து சந்திரனது
ஒளியைநிறைக்கின்றவென்பது, நூற்கொள்கை. குளிர்ந்த ஒளியும், அழகும், வளைந்த
வடிவமும் பற்றி, மகளிர்நெற்றிக்குப் பிறை உவமம். நுதற்குத் திலகங் கூறினதற்கு
ஏற்ப, பிறைக்குக்களங்கம் கொள்க.
பாண்டு மதலையும் காதல் பாவையரும், துழாயோனும்
பாவைமாரும்
ஈண்டு பெருஞ் சனத்துடனே இவ்வண்ணம் இடம்தோறும்
இனிதின் ஆடி,
ஆண்டு, வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப,
அழகு கூர,
மீண்டு, தம மனைதோறும் நிரை நிரை வாள் விளக்கு
ஏந்த மேவினாரே.-கிருஷ்ணார்ச்சுனர் மகளிர்விளக்கேந்தமடவாரோடு
தம்மனைக்குச் செல்லுதல்.
பாண்டு மதலைஉம் – பாண்டுவின் புதல்வனாகிய அருச்சுனனும்,
காதல்பாவையர் உம் – (அவனுடைய) அன்பிற்கு உரியரான மகளிரும்,
துழாயோன்உம் -திருத்துழாய்மாலைக்கு உரிய திருமாலின் அவதாரமான
ஸ்ரீகிருஷ்ணனும்,பாவைமார்உம் (அவனுடைய அன்பிற்குஉரிய) மகளிரும், ஈண்டு
பெருஞ் சனத்துடனே- நெருங்கிய நகரத்துச்சனங்களுடனே, இ வண்ணம் –
இவ்வாறு, இடந்தோறு உம் -(அச்சோலையிலுள்ள) நீர்த்தடங்களிலெல்லாம்,
இனிதின் ஆடி – இனிதாக நீராடி,ஆண்டு – அங்கே, வரி சிலை மதன்உம் –
கட்டமைந்த வில்லையுடைய மன்மதனும்,அவன் படைஉம்- அவனுடைய
பரிவாரமாகிய மகளிரும், சேவிப்ப – அந்தவசந்தோத்ஸவத்தைக் கண்டு களிக்க,
அழகு கூர – அழகுமிக, மீண்டு -(அச்சோலையினின்று) திரும்பி, நிரை நிரை
வாள்விளக்கு ஏந்த -(போகும்வழியிடையே) வரிசை வரிசையாக (ப் பணிப்
பெண்கள்) ஒளிபொருந்தியவிளக்கை யேந்திநிற்க, தம மனை தோறுஉம் –
தம்தமக்குரிய வீடுதோறும், மேவினார்- சென்று சேர்ந்தார் (எ-று.)
வாள்விளக்கேந்த என்பதற்கு ஏற்ற எழுவாய் வருவிக்க. தம – ஆறனுருபு
ஏற்றபெயர். தம்மனையென்றது – யமுனைக்கரையில் அவரவர்கட்கு என்று
அமைத்தமனையை
நெடு வேனில் புகுதர மேல், இளவேனில் அகன்றதற்பின்,
நிகர் இல் கஞ்சப்
படு ஏய் வெள் வளையமும், தண் பட்டு ஆலவட்டமும்,
செம்படீரச் சேறும்,
உடு ஏய் நித்திலத் தொடையும், ஊடு உறு மண்டபத் தடமும்,
ஒழுகி நீண்ட
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன,
வான்மனைகள் எல்லாம்.-இதுமுதல் மூன்றுகவிகள் – முதுவேனிற்பருவ வருணனை.
இளவேனில் அகன்றதன் பின் – இளவேனிற்பருவங் கழிந்ததன்பின்பு,
மேல் நெடுவேனில் புகுதர – அதற்கு அடுத்ததான முததுவேனிற் பருவம் வர,- படு
ஏய் – நீர்நிலைகளில் உண்டாகிற, கஞ்சம் – தாமரையினது, நிகர் இல் – ஒப்பில்லாத
[மிகச் சிறந்த], வெள் வளையம்உம் – வெண்ணிறமான இளந்தளிர்ச்சுருள்களும், தண்
பட்டு ஆலவட்டம்உம் – குளிர்ச்சியான பட்டினாற்செய்த பெருவிசிறிகளும், செம்
படீரம் சேறுஉம் – செஞ்சந்தனக்குழம்பும், உடு ஏய் நித்திலம் தொடைஉம் –
நக்ஷத்திரகணத்தை யொத்த முத்து மாலைகளும், ஊடு உறு மண்டபம் தடம்உம் –
நடுவிற் பொருந்திய மண்டபத்தையுடைய தடாகங்களும்,- ஒழுகி நீண்ட வடு ஏய்
கண் மடந்தையர்க்குஉம் மகிழ்நருக்குஉம் – நெடுந்தூரமளவும் நீண்ட
மாம்பிஞ்சினுட்பிளவை யொத்த கண்களையுடைய மாதர்களுக்கும் அவர்கள்
கணவரான ஆடவர்களுக்கும், வான் மனைகள் எல்லாம் அமைந்தன – உயர்ந்த
வீடுகள்தோறும் (சீதோபசாரத்தின்பொருட்டு) அமைக்கப்பட்டன; (எ -று.)
இளவேனில் – இளமையான வெயில்வெப்பத்தையுடைய காலம்;
நெடுவேனில் -முதிர்ச்சியானவெயில்வெப்பத்தையுடைய காலம். கிரீஷ்ம
காலமென்றும்கோடைகாலமென்றுங் கூறப்படுகிற முதுவேனிற்கு உரிய மாதங்கள் –
ஆனியும்ஆடியும். வெப்பம்மிக்க அப்பருவம் வந்தவுடனே அதன்தாபத்தைத்
தணித்துக்குளிர்ச்சிசெய்தற்பொருட்டுச் சீதளகரமான தாமரையுட்சுருள் முதலியன
வீடுகள்தோறுஞ்சித்தஞ்செய்யப்பட்டன வென்பதாம். காலவியல்பை
வருணித்ததனால்,தன்மைநவிற்சியணி. ஆலவட்டம் – ஆலிலைபோன்ற
வடிவமுள்ள ஒருவகைவிசிறி:இனி, தாலவ்ருந்தம் என்பதன் சிதைவு என்ப. ஊடுறு
மண்டபத்தடம் – நீராழிமண்டபத்தைநடுவிலேயுடைய தடாகங்கள்; அத்தடாகத்தி
னிடையிலுள்ள மண்டபத்தில்வசித்தல், வெப்பந்தீர்ந்து தட்பம் பெறுதற்குக்
காரணமாம். வடு – மாவடு; இங்கு,அதனுட்பிளவுக்கு ஆகுபெயர்: அது –
மகளிர்கண்ணுக்கு வடிவிலுவமம்.
ஒழுகி நீண்ட – ஒருபொருட்பன்மொழி; மிகநீண்ட என்றபடி: “தண் செவியுறப்
போந்தகன்றனவே” என்றபடி காதளவும் நீண்டோடிய என்க.
திலக நுதல் குறு வியர், தம் செவிப் பூவில்
அளிஇனத்தின் சிறகர்க் காற்றால்
புலர, மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல்
புதிதின் மாந்தி,
இலகு பரிமள புளக ஈர முலைத் தடம் மூழ்கி,
இரதி கேள்வன்
கலகமிடும் பரிதாபம் அகற்றினார்-இனிமையுடன்
கலந்த கேள்வர்.-கணவர் மடவாரைக் கலத்தல்.
இனிமையுடன் – இன்பம்பெற, கலந்த – மடவாரைக் கூடின,
கேள்வர் -கணவர்,- திலகம் நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின்
சிறகர் காற்றால்புலர மது நுகர் மாதர்- திலகந்தீட்டிய நெற்றியிலே தோன்றிய
அற்பமாகிய வேர்வைநீர்தம்முடைய செவியிலணிந்த பூவிலே மொய்க்கின்ற
வண்டுக்கூட்டங்களின்சிறகுகளிலிருந்து தோன்றுஞ் சிறுகாற்றால் உலராநிற்க
மதுவைப்பருகுகின்றமாதராரின்,புல்முறுவல் இதழ் ஊறல் – புன்சிரிப்பைக் கொண்ட
வாயிதழினின்று ஊறும்நீரை,புதிதில் மாந்தி – புதுமைபெறப்பருகி, இலகு பரிமளம்
புளகம் ஈரம் முலை தடம் மூழ்கி- விளங்குகின்ற நறுமணத்தையுடைய
மயிர்க்கூச்சைக் கொண்டு ஈரமுள்ளமுலையாகிறதடத்திலே படிந்து, இரதிகேள்வன்
கலகம் இடும் பரிதாபம் – இரதிக்குக் கணவனாகியமன்மதன் மலரம்புகொண்டு
பொருதலினாலாகிய துன்பத்தை, அகற்றினார் -போக்கினார்; (எ-று.)
ஆடவரும் பிரிந்தநிலையில் வருந்திய மடவாரும் ஒன்று கூடி
அவ்வருத்தம்நீங்கி இனிது இன்பந் துய்த்தனரெனபதாம்.
மார வசந்தனை அகன்று, வயங்குறு வெங் கோடையினால்
மறுகி, ஆற்றாது,
ஆர் அமளி மது மலரில், ஆர வடங்களில், பனிநீர்
ஆரச் சேற்றில்
ஈர நெடுங் குழல் இசையில், இயங்கிய சாமரக் காற்றில்,
இள நிலாவில்,
பேர் அழலும் புகுந்தது எனப் பிணங்கினார்-தம்
கேள்வர்ப் பிரிந்த மாதர்.பிரிந்தமகளிர்.
தம் கேள்வர் பிரிந்த மாதர் – தம்கணவரைப்பிரிந்த மகளிர்,-
மாரவசந்தனை அகன்று – மன்மதனுக்குத் தோழனான வசந்தனை [இளவேனிற்
பருவத்தை] நீங்கி, வயங்குஉறு வெம் கோடையினால் – விளங்கித் தோன்றிய
கொடியகோடைக்காலத்தினால் [முதுவேனிற்பருவத்தால்], மறுகி – கலங்கி,
ஆற்றாது -வெம்மையைத் தாங்கமுடியாமல்,- அமளி ஆர் மது மலரில்[மது மலர்
ஆர்அமளியில்]- தேன்கொண்ட பூக்களாலான படுக்கையிலும், ஆரம் வடங்களில்-
முத்தாஹாரங்களிலும், பனிநீர் ஆரம் சேற்றில் – பனிநீர்கலந்த சந்தனச்சேற்றிலும்,
ஈரம்நெடுங் குழல் இசையில் – மனக் கசிவையுண்டாக்கும் பெருமைமிக்க
புள்ளாங்குழலிசையிலும், இயங்கிய சாமரம் காற்றில் – சஞ்சரித்தலையுடைய
சாமரங்களினின்று வெளிப்படும் காற்றிலும், இளநிலாவில் – தோன்றிய நிலாவிலும்,
(குளிர்ச்சியேயன்றி), பேர் அழல்உம் – பெரிய அனலின் பிணங்கினார் –
மாறுபட்டார்;(எ-று.)
கலந்தார்க்குக் குளிர்ந்தே தோன்றும் மலரமளிமுதலியவற்றைக் குறித்து,
அவற்றிலும் இக்காலத்தின்வெம்மை புகுந்திட்டது என்று கலந்தவரோடு
மாறுபடக்கூறினர் பிரிந்தமகளி ரென்க.
கோடை வெயில் சுடச் சுட மெய் கொளுந்தி இறந்தன
போல, கொண்டல், கோடை,
வாடை, சிறு தென்றல், எனும் மாருதங்கள் எம் மருங்கும்
வழக்கம் இன்றி,
ஆடையில், வெண்சாமரத்தில், ஆலவட்டத்தினில், உயிர்ப்பில்,
அழகு ஆர் நெற்றி
ஓடை முக மத கயத்தின் தழை செவியில், பல் இறகில்,
ஒளித்தமாதோ.-கோடைக்காலத்திற் காற்றில்லாமை.
கொண்டல் கோடை வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் –
கீழ்காற்று மேல்காற்று வடதிசைக்காற்று இளந்தென்றங்காற்று என்கிற
நாற்றிசைக்காற்றுக்களுக்கும்,- கோடை வெயில் சுட சுட மெய் கொளுந்தி இறந்தன
போல – அக்கோடைக் காலத்து வெயில் மிகச்சுடுதலால்உடல்கொளுத்தப்பட்டு
ஒடுங்கின போல, எ மருங்குஉம் – எந்தப்பக்கத்திலும், வழக்கம்இன்றி –
இயங்குதல் இல்லாமல்,- ஆடையில் – வஸ்திரத்திலும், வெள் சாமரத்தில் –
வெண்ணிறமான சாமரத்திலும், ஆலவட்டத்தினில் – ஆலவட்டத்திலும்,
உயிர்ப்பில் -சுவாசத்திலும், அழகு ஆர்நெற்றி ஓடைமுகம் மத கயத்தின் தழை
செவியில்- அழகுமிக்க நெற்றிப் பட்டத்தை யணிந்த முகத்தையுடையமத
யானையினது தழைத்தகாதுகளிலும், பல் இறகில் – பலவகைப்பட்ட பறவை
இறகுகளிலும், ஒளித்த -ஒளித்தன; (எ-று.)- மாது, ஓ – ஈற்றசைகள்.
மாருதங்கள் இறந்தனபோல வழக்கமின்றி ஒளித்தன என இயையும்:
ஆடைமுதலிய இவற்றின்றுமாத்திரமே காற்று இயங்கின என்பதாம். ஆடையையும்
சாமரத்தையும் ஆலவட்டத்தையும் வீசும்போதும், சுவாசம் விடும்போதும், யானைகள்
தமது பெரிய காதுகளை இயல்பாக அசைக்கும்போதும் பறைவைகள் பறத்தற்கு
இறகுகளைப் பரப்பி அடித்துக்கொள்ளும்போதுமே காற்று வெளியெழுதலால்
அவற்றில்ஒளித்தன வென்றார். ‘கோடை வெயில்
சுடச்சுடமெய்கொளுந்தியிறந்தனபோல’ என்றது, தற்குறிப்பேற்றவணி. மந்தகதியாக
வீசுதல் தென்றலின் இயல்பாதலால், ‘சிறுதென்றல்’ எனப்பட்டது.
தாழி நறுங் குவளை அம் தார்த் தருமன் மகன் அருட்
புனலும், தரங்க வேலை
ஊழி நெடும் பெரும் புனலும், உடலில் உறு வெயர்ப்
புனலும், ஊறி ஊறிப்
பாழிதொறும் இறைக்கின்ற பைம் புனலும், அல்லது,
வெம் பருவம்தன்னால்
பூழி படு கமர் வாய நானிலத்துப் புகலுதற்கு ஓர்
புனலும் உண்டோ?-அக்கோடைக்காலத்து நீர்வறட்சி.
தாழி – நீர்நிலைகளிலுண்டாகிற, நறு – வாசனைவீசுகிற, குவளை –
குவளைமலர்களினாலாகிய, அம் தார் – அழகிய மாலையை யணிந்த, தருமன்
மகன் -யமதருமராசனது புத்திரனான யுதிட்டிரனது, அருள் புனல்உம் –
அருளாகியநீர்ப்பெருக்கும், தரங்கம் வேலை – அலைகளையுடைய கடலி லுள்ள,
ஊழி நெடும்பெரும் புனல் உம் – யுகாந்தகாலத்திலும் வற்றாத மிக்க நீரும்,
உடலில் உறு – உடம்பில்மிகுதியாக உண்டாகிற, வெயர் புனல் உம் –
வியர்வைநீரும், பாழி தொறுஉம் ஊறிஊறி இறைக்கின்ற – நீரூற்றுக்
குழிகளிலெல்லாம் மேன்மேலூறி இறைக்கப்படுகின்ற,பைம் புனல்உம் – புதிய
தண்ணீரும், (என்னும் இவையே), அல்லது – அல்லாமல்,வெம் பருவம் தன்னால்
பூழி படு கமர் வாய நால் நிலத்து – வெவ்வியகோடைக்காலத்தாற் புழுதிபட்டதும்
வெடிப்பைத் தன்னிடத்திலுடையதுமான(பூமியிலுள்ள) நால்வகை நிலங்களிலும்,
புகலுதற்கு ஓர் புனல்உம் உண்டுஓ -எடுத்துச்சொல்லுதற்கு வேறொருநீரும்
உள்ளதோ? [இல்லை யென்றபடி]; (எ – று.)
அருள், நீர்போலக் குளிர்ந்து பிறருடைய தாபத்தைத் தணிக்குந்தன்மைய
தாதலால், அதனை, உருவகவகையால் ‘அருட்புனல்’ என்றார். காப்பியத்தலைவனான
தருமபுத்திரனது அருள் மிகச் சிறத்தலாலும், என்றும் மாறாததாலும், அது இங்கு
எடுத்துக் கூறப்பட்டது. அவ்வருட்புனல் முதலிய நால்வகைப்புனலுமேயன்றி
உலகத்தில்நால்வகைநிலத்திலும் எங்கும் வேறுபுனல் இல்லையென்பதாம்.
நால்வகைநிலங்கள் -முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல் என்பன. பாலைநிலம்,
பிராணிசஞ்சாரத்துக்குஉரியதன் றாதலால் விலக்கப்பட்டது. அன்றியும், பாலைக்குத்
தனியே நிலமில்லையென்றும், மற்றை நான்குநிலங்களும்தம் இயல்புதிரிந்தவிடத்தே
பாலையாமென்றுங்கொள்கை யுண்டு. தாழ்ந்துள்ளது தாழி எனக் காரணக்குறி;
(தாழ்தல் – ஆழ்தல்.) இனி,தாழிக் குவளை யென்பதற்கு – சாடியிலுண்டாக்கப்பட்ட
குவளை யென்றலும் ஒன்று; “தாழிவாய மறைக்குந் தண்ணென் தடம்பெருங் குவளைக்
கண்ணார்” என்றார் சிந்தாமணியாரும்.பைம்புனல் என்பதில், பசுமை – புதுமையின்
மேலும், குளிர்ச்சியின்மேலும் நின்றது. ‘தாழினறுங்குவளை’, ‘நானிலத்தும்’ என்றும்
பாடம்.
நீகாரம் மழை பொழிய, நித்தில வெண் குடை நிழற்ற,
நீல வாள்-கண்,
பாகு ஆரும் மொழி, மடவார் மணிக் கவரி இரு
மருங்கும் பயில வீச,
கார்காலம் புகுந்து செழுங் காள முகில் இரண்டு
ஒருபால் கலந்ததென்ன
ஆகாரம் அழகு எறிப்ப, இருவரும் ஆங்கு உடன் இருந்தார்,
ஆவி போல்வார்.-கண்ணனும் அருச்சுனனும் ஒருசேர இருத்தல்.
நீகாரம் மழை பொழிய – பனிநீர்மழை சொரியவும்,- வெள் நித்திலம்
குடை நிழற்ற – வெண்ணிறமான முத்துக்குடை நிழச்செய்யவும்,- நீலம்வாள்கண் –
கருங்குவளைமலர் போன்ற பிரகாசமான கண்களையும், பாகு ஆரும் மொழி –
கருப்பஞ்சாற்றுப்பாகை யொத்த இன்சொல்லையுமுடைய, மடவார்- இளமகளிர், மணி
கவரி – அழகிய சாமரங்களை, இருமருங்குஉம் – இரண்டு பக்கத்திலும், பயில வீச-
பொருந்த வீசவும்,- ஆவி போல்வார் இருவர்உம் – (ஒருவர்க்கொருவர்)
உயிர்போன்றநண்பர்களான கிருஷ்ணார்ச்சுன ரிரண்டு பேரும், கார் காலம்
புகுந்து செழு காளம்முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன – கார்காலம் வரச்
செழுமையான காளமேகங்களிரண்டு ஓரிடத்துக் கலந்தாற் போல, ஆகாரம் அழகு
எறிப்ப – உடம்புஅழகை வீச,- ஆங்கு – அவ்விடத்தில் [அவ்யமுனைக்கரையின்
சோலையில்], உடன்இருந்தார் – ஒருங்கு இருந்தார்கள்; (எ-று.)
நீகாரமழைபொழிதல் முதலிய மூன்றும், அக்கோடைக்காலத்து வெப்பத்தைத்
தணிக்கும் சைத்தியோபசாரமாக நிகழ்ந்தன வென்க. நீஹாரம் – வடசொல்: பனி
யென்று பொருள். ‘நீகார மழை பொழிய’ என்றது – பனிநீரென்னும் ஒருவகை
வாசனைநீரைச்சொரிய வென்றவாறு. பயில வீசுதல் – வெப்பந்தணித்தற்கு வேண்டிய
காற்று உண்டாகும்படி இடைவிடாது விசையோடுவீசுதல். கார் காலத்து நீர்கொண்ட
கருநிறமான மேகம் – கிருஷ்ணார்ச்சுனரது வடிவத்துக்கு நிறத்தால் உவமம்.
கார்காலம்’ என்பது – ரகரம் இடையிட்டு வந்த ஆசெதுகை. ‘கார்காலம்’ என
வலிமிகாதது, வருமொழி வடமொழியாதலி னென்க.
இச்சருக்கத்தில் இதுவரை கிருஷ்ணார்ச்சுனர்களுடையசெய்தி கூறும்
முகத்தால்ருதுவர்ணனை, பொழில்விளையாட்டு, நீர்விளையாட்டு, பூக்கொய்தல்
என்னும்பெருங்காப்பிய இலக்கணங்களைக் கூறினர்; இச்சருக்கத்தில் எடுத்துக்
கொண்டபொருளான காண்டவதகனவரலாறு இனிக் கூறப்படுகிறது. அதற்குத்
தோற்றுவாய்செய்தவாறாகும் இச்செய்யுள்.
—————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply