ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -02. சம்பவச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

இறந்த மைந்தனுக்கு உரிய, தென்புலத்தவர் யாவரும்
களி கூர,
சிறந்த நான்மறை விதியினால், உலகியல் செய்தபின்,
செழுந் திங்கள்
மறைந்த யாமினி நிகர் எனக் குருகுல மன் மயக்குறும்
எல்லை,
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை, மற்று
இது சொன்னாள்;-வீடுமனிடம் தாய் சத்தியவதி தேவர நீதியில் கொழுந்தியர்க்கு மகவு அளிக்கக் கூறல்–இறந்தமைந்தனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்தபின், வீடுமன் வருந்துகையில், தாய் கூறத் தொடங்கல்.

இறந்த மைந்தனுக்கு – (க்ஷய ரோகத்தால்) இறந்திட்ட
விசித்திரவீரியனுக்கு, உரிய – செய்யவேண்டிய சடங்குகளை, 
தென்புலத்தவர்
யாவர்உம் களி கூர – தென்திசையிலுள்ளவரான பிதிருதேவதைகள்எல்லாரும்
மகிழ்ச்சிமிக, சிறந்த நான்மறை விதியினால் – சிறப்புற்ற வேதவிதிப்படி,உலகு இயல்
– உலகில் நிகழும் இயல்பின்படியே, செய்தபின்-,- செழுந்திங்கள்மறைந்த யாமினி
நிகர் என – விளங்குந் தன்மையுள்ள சந்திரன் மறையப் பெற்ற இரவுஒப்பு
என்னுமாறு, குரு குலம் மன் – குருகுலத்தலைவனான வீடுமன், மயக்குஉறும்எல்லை
– சோகமயக்கத்தை அடையும்போது,- அறம்தவா வகை – (பிதாவின்விருப்பத்தை
நிறைவேற்றுதலென்ற) தருமம் தவறாதவாறு, துறந்த -(மண்பெண்ணாசைகளைத்)
துறந்தவனான, வாள் – ஒளிபொருந்திய, அரசனுக்கு -வீடுமராசனுக்கு, அன்னை –
சந்தனுவின் மனைவியான காளி. மற்று-பின்பு, இது-இவ்வார்த்தைகளை,
சொன்னாள்-; (எ -று.)- அன்னை சொல்லியதை, மேலிருகவிகளிற் காண்க.

     உரிய – பெயர்: பெயரெச்சமெனக்கொண்டு, உலகியல் – சடங்கு என்றுமாம்.
விசித்திரவீரியனிறந்த துயரினால் மயங்கும் வீடுமனுக்கு, சந்திரன் நீங்கியதனாலான
இருளினால் விளக்கமற்றிருக்கும் யாமினி உவமை. துறந்து வாழரசனுக்குஎன்றும்பாடம்.  

மைந்த! கேட்டி: நின் துணைவன் வான் அடைந்தபின்,
‘மதி முதல்’ எனத் தக்க
இந்த மா மரபு, அரும் பனிப்பகைச் சிரத்து எழிலிஒத்தது
மன்னோ!
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை
நீ உணர்கிற்றி;
எந்த நீர்மையின் உய்வது? என்று அறிகிலேன்; இடரினுக்கு
இருப்பு ஆனேன்.-இதுவும் அடுத்த கவியும் – ஒருதொடர்:காளி கொழுந்தி
யரிடத்து மகவை யுண்டாக்குமாறு வீடுமனிடம் சொல்ல,
வீடுமன் மறுத்துக்கூறலைத் தெரிவிக்கும்.

மைந்த – குமாரனே! கேட்டி – கேட்பாய்: நின் துணைவன் – உனது
உடன்பிறந்தான், வான் அடைந்தபின் – விண்ணுலகத்தை யடைந்தபின்பு, ‘மதி
முதல்சந்திரனே குலமுதல்வன்,’ என தக்க – என்று சொல்லுந் தகுதிபெற்ற, இந்த
மா மரபு – இந்தச்சிறந்தவமிசமானது, (இடையறாமைக்குக் காரணமான
புதல்வரையில்லாமையால்),எழிலி சிரத்து – முகிலின்மேல், [மேகத்தினால்
மறைக்கப்பட்ட என்றபடி], அரும்பனிபகை-சூரியனை, ஒத்தது – நீ-, முந்தை
நான்மறை முதலிய நூல்களின் முறைமைஉணர்கிற்றி-பழமையான நான்குவேதம்
முதலிய நூல்களின்முறைமையையுணரவல்லாய்: எந்த நீர்மையின் உய்வது –
எந்தமுறைமையினால்(இந்தக்குலம்) அழியாமல் நிற்கவல்லது? என்று –
என்பதைபற்றி, அறிகிலேன் -அறியும்வல்லமையில்லேன்: (அதனால்), இடரினுக்கு-
துன்பத்திற்கு, இருப்பு ஆனேன்- இருப்பிடமானேன்; (எ-று.)- மன்ஓ – அசை.

     சூரியன் மேகத்தினால் மறைப்புண்டு மழுங்கிக்கிடப்பதுபோல, உன் தம்பி
யிறந்தபின் இந்தச்சந்திரகுலம் மழுங்கிக்கிடக்கின்றதென்பது,
முதலிரண்டடியின்பொருள். “அரும்பனியச்சிரத்து” என்ற பாடத்துக்கு –
பனியைக்கொண்ட முன்பனிக்காலத்து,எழிலி [மேகத்தை] யொத்தது என்க:
முன்பனிக்காலம் பனியால்மூடி மழுங்கியிருக்குமென்க.அச்சிரம் – முன்பனிக்காலம்

‘ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மகப்
பெற, நின்னால்
வேண்டுமால்; இது, தாயர் சொல் புரிதலின் விரதமும்
கெடாது’ என்ன,
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து,
இரு செவி பொத்தி,
‘மீண்டு மா நதி வயின்மிசைப் புரியின், என் விரதமும்
தபும்’ என்றான்.

( ‘இந்த எனதுதுன்பம்நீங்க), ஈண்டு – இப்போது, தேவரநீதியின் –
தேவரனால் [கணவனுடன்பிறந்தவனால்] சந்ததியை வளர்த்தாலாகிற ஓர்
முறைமைப்படியே, நின்னால்-, கொழுந்தியர் – உடன்பிறந்தானுடையமனைவிமார்,
எழில் மக பெறவேண்டும் – அழகிய புத்திரரைப் பெறவேண்டும்: இது –
இச்செயல்,தாயர் சொல் புரிதலின் – தாய்சொல்லியதைச் செய்யுஞ்செயலாதலால்,
விரதம்உம்கெடாது – (பெண்களைமணவாமையாகிய) உன்னுடைய நோன்பும்
கெட்டிடாது,’ என்ன- என்று கூற,- வான் உருமு- மேகத்தினின்று தோன்றும்
இடி, மூண்டு-, எறிந்த-எறியப்பட்ட, பேர் அரவுஎன – பெரியசருப்பம்போல,
முரிந்து – (மனம்) கெட்டு, இருசெவி பொத்தி – (தனது) இரண்டுகாதுகளையும்
(கைகளால்) மூடிக்கொண்டு, மீண்டு மாநதி வயின்மிசை – மறுபடியும்
சிறந்தநதியாகிய கங்கையின் வயிற்றிலே, புரியின் -விரும்பிச் சென்று
பிறப்பதனால், (அப்போது), என் விரதம்உம் தபும் – இந்தஎன்விரதமும் ஒழியும்,
என்றான் – என்ற கூறினன், (வீடுமன்); (எ -று.) – ஆல் -அசை.

     பூமியிற்சென்று பெண்ணின்பமற்றிருக்குமாறு சாபம்பெற்ற நான்
பெண்ணின்பமடைந்தால், இந்தப்பிறவியால் சாபத்தின் பயனை நுகராமையால்,
சாபத்தின்பயனைப்பெறுமாறு மீண்டும் பிறக்கவேண்டுவதே யென்றனன் வீடும
னென்க. நெருப்பு தன்வெம்மையை விடுமானால் அப்போது கங்கை மகன்
தன்பிரதிஜ்ஞையைவிடுவான்என்று கூறியதாகப் பாலபாரதத்திலுள்ளது.
தேவரநீதியென்பது – கணவனையிழந்துமகப்பெறாத கைம்பெண்ணானவள்
சந்ததிவிருத்தியின்பொருட்டுத் தேவரனோடு[தேவரன் – கணவனுடன் பிறந்தவன்]
சேர்ந்து மகப்பெறலா மென்ற முறைமை.

மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி,
அவர் தம்தம்
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர்
மகவு என்பர்;
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை’
என்று இரு கையால்
தொழுது, சொன்னபின், மனம் தெளிந்து, அன்னையும்
தோன்றலுக்கு உரைசெய்வாள்:-‘முனிவரால் மகப் பேறு அடைதலே முறை’ என வீடுமன் உரைத்தல்-பரசுராமனால் க்ஷத்திரியகுலம் அற்றுப்போவதாயிருந்த நிலையில் முனிவரால் அரசமாதர் மகவைப்பெற்றாற்போற் செய்விப்பதே முறையென்று வீடுமன் தெரிவித்தல்.

மழு என்னும் படை இராமனால் – மழுவெனப்படுகின்ற
படைக்கலத்தையுடைய பரசுராமனால், மனு குலம் மடிந்தஉழி –
மனுவினிடத்துநின்றுதோன்றிய குலம் அழிந்திட்டபோது, அவர் தத்தம் பழுது
இல் -மங்கையர் – அந்தமனுக்குலத்தைச்சேர்ந்த மன்னவருடைய குற்றமற்ற
மனைவிமார்,முனிவரர் அருளினால் – முனிச்சிரேஷ்டரின் கருணையினால், மகவு
பயந்தனர் என்பர் – மகவைப் பெற்றுக்கொண்டனரென்றுகூறுவர்: எழுது –
(ஸ்மிருதிகளில்) எழுதியுள்ள, நல் நெறிமுறைமையின் – நல்லவழியின்
முறைமையினால், விளைப்பதுஏ- (சந்ததியைக்) கிளைக்கச்செய்வதே, இயற்கை –
இயற்கையானசெயலாம்: என்று-, இருகையால் தொழுது- (தன்) இரண்டுகைகளாலும்
(தாயை) வணங்கி, சொன்னபின் – சொன்ன பிறகு,- மனம் தெளிந்து –
மனந்தெளியப்பெற்று, அவனைஉம் – தாயும், தோன்றலுக்கு- விளங்குபவனான
வீடுமனுக்கு, உரைசெய்வாள் – பின்வருமாறு சொல்பவளானாள்;(எ-று.)- அன்னை
சொல்வதை, மேல் நான்குகவிகளிற் காண்க.

     இருபத்தொருகால் அரசகுலத்தைக் கருவறுத்தபரசுராமனால் மனுகுலம்
மடிவதாயிருந்த நிலையில், முனிவரரைக்கொண்டு அந்தக் குலத்தை
அழிவுறாதவாறுமகவை அரசமகளிர் பெற்றதுபோலக் குலத்தையுண்டாக்குவதே
முறை யென்றுவீடுமன் சொன்னானாக, காளியும் மனந்தெளிந்து வீடுமனிடம் தான்
கருதியதைக்கூறலாயின ளென்க. க்ஷத்திரியமகளிர் காமவிச்சையினாலன்றிக் குல
விருத்திக்காகமுனிவரைச்சேர்ந்தது சாஸ்திரசம்மதமாதலால் கற்புக்கிழுக்காகாது
ஆதலால், அவரை ‘பழுதின் மங்கையர்’ என்றது.

பருதி தந்த மா நதி மருங்கு, ஒரு பகல், பராசரன்
மகப்பேறு
கருதி வந்து, கண்டு, என்னையும் எனது மெய்க் கமழ்
புலவையும் மாற்றி,
சுருதி வாய்மையின் யோசனைப் பரப்பு எழு சுகந்தமும்
எனக்கு ஈந்து,
‘வருதி நீ’ எனப் பனியினால் மறைத்து, ஒரு வண் துறைக்
குறை சேர்ந்தான்.-சத்தியவதி தனக்குப் பிறந்த முதற் புதல்வன்
வியாதனைக் குறித்துக் கூறுதல்- மூன்றுகவிகளால், காளி தன் பாலியசரிதைசொல்லி வியாசனாற்
குலத்தையுண்டாக்கிக்கொள்ளக் கருதியமை கூறுகின்றாள்:-

நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) பரிதி தந்த மா நதி மருங்கு – சூரியன்பெற்ற சிறந்த நதியாகிய
யமுனையினருகே, ஒருபகல் – ஒருநாள், பராசரன் – பராசரனென்றமுனிவன், மக
பேறுகருதி – ஒருமகனைப்பெறுதலை யெண்ணி, வந்து-, என்னைஉம் கண்டு –
என்னைப்பார்த்து, எனது மெய் கமழ் புலவைஉம் மாற்றி – எனது உடம்பிலிருந்து
வீசுகின்ற புலால் நாற்றத்தையும் போக்கி, சுருதி வாய்மையின் – வேதம் போன்ற
(தனது) உண்மைவாக்கினால், யோசனை பரப்பு எழு சுகந்தம்உம் – யோசனை
யகலம்வீசுகின்ற நறுமணமும், எனக்குஈந்து – எனக்குக்கொடுத்து, நீ வருதி என –
நீஇங்குவருக என்று (என்னைத்தன்னருகு) அழைத்து, பனியினால் மறைத்து –
பனியினால் (பிறருக்குத் தெரியாதவாறு) மறையும்படிசெய்து, ஒரு வள்துறை குறை-
ஒருவளப்பமுள்ள நீரிறங்கு துறையோடுகூடிய திட்டில், சேர்ந்தான் – (என்னுடன்)
கலந்தான்; (எ-று.)

     மச்சத்தின்வயிற்றிற் பிறந்ததனால் மச்சகந்தியாயிருந்த என்னைப் பராசரன்
யோசனகந்தியாக்கி, என்னை யமுனைத்திட்டிற் கூடினனென்பதாம். அத்தீவு
கருநிறமுள்ளது ஆதலால், ‘க்ருஷ்ணத் வீபம்’ எனப்படும்: அந்தத்தீவில்
தோன்றியதனால், வியாசர் க்ருஷ்ணத்வைபாயநர்’ எனப்படுவர்

முரண் நிறைந்த மெய்க் கேள்வியோன் அருளினால்
முஞ்சியும், புரிநூலும்,
இரணியம் செழுங் கொழுந்து விட்டனவென இலங்கு
வேணியும், தானும்,
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன
முனி அப்போது
அரணியின் புறத்து அனல் என, என்வயின் அவதரித்தனன்
அம்மா!

முரண் நிறைந்த – வலிமை மிகுந்த, மெய் கேள்வி யோன் –
உண்மையான நூற்கேள்வியையுடையனான அந்தப்பராசரனது, அருளினால் –
கருணையினால், முஞ்சிஉம் – (இடையிற்கட்டிய) முஞ்சிப்புல்லினாலாகிய நாணும்,
புரிநூல்உம் – வெண்புரி நூலும், இரணியம் செழு கொழுந்து விட்டன என
இலங்குவேணிஉம் – சுவர்ணம் செழுமையோடு கொழுந்துவிட்டெரிகின்றன
என்றுசொல்லும்படி. விளங்குகின்ற ஜடையும், (ஆகிய இவற்றுடனே), தான்உம் –
தானுமாக,தரணி எங்கண்உம் – பூமிமுழுவதிலும், வியாதன் என்று –
வ்யாஸனென்றுபேர்சொல்லப்பட்டு, உரை கெழு – கீர்த்தி விளங்கிய,
தபோதனமுனி -தவத்தையேசெல்வமாகக் கொள்ளும் முனிவன், அப்போது-,
அரணியின் புறத்துஅனல் என – அரணிக்கட்டையின்வெளியிலே
(அதனிடத்தினின்று) அனல்தோன்றுவதுபோல, என் வயின் – என்னிடத்தினின்று,
அவதரித்தனன்-; (எ-று.)

     காளிவயிற்றினின்று வெளிப்பிறந்த வியாசனுக்கு,அரணிக்
கட்டையினின்றுதோன்றிய அனல் உவமையாகும். அரணி – தீக்கடைகோல்.
அம்மா – வியப்பிடைச்சொல்: பிறக்கும்போதே பிரமசாரியர்க்குரிய வேஷத்துடனே
அத்துணைவளர்ந்த புதல்வனாகத் தோன்றியமைபற்றி  வியந்தவாறு.

சென்னியால் எனை வணங்கி, ‘யாதொரு பகல் சிந்தி;
நீ சிந்திக்கும்
முன், யான் அருகு உறுவல்’ என்று உரைசெய, முனிமகன்;
முனி, ‘மீளக்
கன்னி ஆக’ என விதித்து, உடன் கரந்தனன்; கையறு
கனிட்டன்தன்
பன்னியானவரிடத்தினில் அவன் வரின், பலித்திடும் நினைவு
அன்றே,

முனிமகன் – அந்தப்பிறந்த ரிஷிகுமாரன், சென்னியால் – (தனது)
சிரசினால், எனைவணங்கி – என்னைப்பணிந்திட்டு, ‘யாது ஒருபகல் சிந்தி-(நான்
வரவேணுமென்று) ஏதேனும் ஒரு பகலிலே (நீ என்னைக்) கருதுவாய்: நீ
சிந்திக்கும்முன் – நீ கருதுவதற்கு முன்னம், யான் அருகு உறுவல் – நான் (உன்)
சமீபத்திலேவந்து சேர்வேன்,’ என்று-, உரைசெய – சொல்ல, முனி – பராசர
முனிவன், ‘மீள -மறுபடியும், கன்னி ஆக – கன்னிகையே யாகுவாய்,’ என -,
விதித்து -கட்டளையிட்டு, உடன் – மகனுடனே, கரந்தனன்- மறைந்திட்டான்: கை
அறு-(கணவனையிழந்ததனாலான சோகத்தினாற்) செயலற்ற, கனிட்டன் தன்
பன்னிஆனவரிடத்தினில் – (உன்) இளையோனுடைய
பத்தினிமாரானவர்களிடத்தில், அவன்வரில் – அந்த வியாசன் வருவனேயானால்,
நினைவி-(என்) எண்ணம்.பலித்திடும்-பயன் விளைத்திடும்:(எ-று)-  அன்றே-
தேற்றம்.  அன்றேபலித்திடும்-அன்றைக்கே பலிக்குமெனினுமாம்

எனக்கு, மைந்த! கேள்: நினைவு இது; உன் துணைவன் என்
ஏவலும் மறான்; இவ்வாறு
உனக்கு நெஞ்சு உற வருங்கொலோ அறிகிலேன்; உண்மை
நீ உரை’ என்ன,
‘மனக்கு இசைந்தது’ என்று, அவன் வியந்து ஏகலும், வழு
அற மனம் செய்ய,
கனக் கருங்குழல் மகிழ்வுற, முதல் பெறு காதல் மைந்தனும்
வந்தான்.-வீடுமன் ஒருப்பட, சத்தியவதி வியாதனைச்
சிந்தித்து, வரச் செய்தல்-தன்நினைவைக்கூறிய காளி வீடுமனதுஉடன்பாட்டைப்
பெற்று வியாதனைச் சிந்தித்து வரச்செய்தல்.

மைந்த – மைந்தனே! கேள் – கேட்பாயாக: எனக்கு நினைவு இது –
எனக்கு எண்ணம் இங்ஙன்செய்வது: உன் துணைவன் – உன் சகோதரனாகிய அந்த
வியாசன், என் ஏவல்உம் மறான் – என் கட்டளையையும் மறுத்துக்கூறான்; இ
ஆறு -இந்தவழி, உனக்கு நெஞ்சுஉற வரும்கொல்ஓ – உன் மனத்துக்கு ஏற்ற
தாகத்தோன்றுகின்றதோ? இல்லையோ, அறிகிலேன் – (அதனை) யான் அறியேன்: நீ
உண்மை உரை – நீ (உன்கருத்தை) மெய்ம்மையாகக் கூறுவாய், என்ன – என்று
(அந்தக்காளி) வினாவ, – மனக்கு – (என்) கருத்துக்கு, இசைந்தது – (நீ
இப்போதுகூறியது) உடன்பாடானதேயாகும், என்று-, அவன் – அவ்வீடுமன்,
வியந்து -(தாய்வார்த்தையை உடன்பட்டுக்) கொண்டாடி, ஏகலும் – சென்றவுடனே,-
கனம் கருங்குழல் – மேகம்போன்ற கரிய கூந்தலையுடைய அந்தக்காளி, வழு
அற -குற்றமில்லாமல், மனம் செய்ய – (அந்தவியாசனை) மனத்தினால்நினைக்க,-
மகிழ்வுஉற- (அன்னாள்) மகிழ்ச்சியடையும்படி, முதல் பெறு காதல் மைந்தன்உம் –
முன்னமேபெற்ற அன்பிற்கு உரிய புதல்வனாகிய வியாசனும், வந்தான்-; (எ-று.)

தொழுது, நெற்றியில் விபூதியால் அன்னைதன் துணை
அடித் துகள் நீக்கி,
விழுதுடைத் தனி ஆல் என இருந்த தொல் வியாதனை
முகம் நோக்கி,
‘பழுது பட்டது, இக் குருகுலம்; மீள நின் பார்வையால்,
கடல் ஞாலம்
முழுதும் உய்த்திடும் மகவு அருள்’ என, பெரு முனியும்
அக் குறை நேர்ந்தான்.-வந்தவியாதன் தன்தாயை வணங்கி நிற்க. தாய் ‘குரு
குலத்தை யுண்டாக்குவாய்’ என்ன, அவனும் இசைதல்.

தொழுது வணங்கி, நெற்றியில் விபூதியால் – (தன்)
நெற்றியிலணிந்துள்ளவிபூதியினாலே, அன்னை தன் – தாயினுடைய, துணை அடி
துகள் நீக்கி -உபயபாதங்களிற் படிந்துள்ள தூளியைப் போக்கி, விழுது உடை தனி
ஆல் எனஇருந்த தொல் வியாதனை – (தன்னுடைய தொங்குகின்ற சடைமுடியினால்)
விழுதைக்கொண்ட ஒப்பற்ற ஆலமரம்போல இருந்த பழமையான வியாச
முனிவனை, முகம்நோக்கி – முகத்தைப்பார்த்து, ‘இ குருகுலம் பழுதுபட்டது-
இந்தக் குருகுலமானதுகேடு அடைந்திட்டது: மீள – அந்தப் பழுது நீங்கும்படி,
நின் பார்வையால் -உன்னுடைய (கருணை கொண்ட) பார்வையினாலே, கடல்
ஞாலம் முழுதும்உய்த்திடும்-கடலாற் சூழப்பட்ட பூமிமுழுவதையும் தாங்கவல்ல,
மகவு- குமாரனை,அருள் – தந்தருள்வாய்,’ என – என்று (தன்கருத்தை அந்தக்காளி)
தெரிவிக்க,- பெருமுனிஉம்-பெருமைபெற்ற முனிவனாகிய அந்த வியாசனும்,
அகுறை நேர்ந்தான் – அந்த வேண்டுகோளை நிறைவேற்றுமாறு
ஒப்புக்கொண்டான்; (எ-று.)

     “ப்ரணாமலக்நேந லலாட பஸ்மநா – ப்ருசம் பவித்ரீக்ருத பாத பங்கஜா”
என்று பாலபாரதத்தில் வருவதற்கு ஏற்ப, ‘நெற்றியில்விபூதியால் அன்னைதன்
றுணையடித்துகணீக்கி’ என்றார்: நெற்றிவிபூதியால் அன்னையின் பாதத்தைப்
பரிசுத்தமாக்கினான் வியாசனென்பது, துணியடித்துகணீக்கி என்பதன் பொருள்

அழைத்த மா மகன், அப்பொழுது, ‘அவருழை அணுகுவம்’
எனப் போக,
தழைத்த நெஞ்சினள், அனந்தரம், இழந்த பொன்-தாலி
மாதரைத் தேற்றி,
உழைத்த துன்பமும், முன் உளோர் பலர் உலகியற்கையும்,
உறக் காட்டி,
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அந் நினைவு
இசையுமாறு இசைவித்தாள்.–காளி தன்மருமகளிரை வியாசமுனிவனாற்
சந்ததிவளர்க்க இசைவித்தல்.

அழைத்த மாமகன் – (தன் தாயினால்) அழைக்கப்பட்ட சிறப்புற்ற
குமாரனான அந்த வியாசன், அப்பொழுது-, ‘அவருழை அணுகுவம் – (உரிய
பருவத்தில்) அந்த நங்கைமாருடன் சேருவோம்,’ என – என்று சொல்லி, போக –
போய்விட,- அனந்தரம் – பிறகு, தழைத்தநெஞ்சினள் – மகிழ்ச்சியால்மலர்ந்த
மனத்தையுடைய காளி,- இழந்த பொன் தாலி மாதரை – பொற்றாலியை யிழந்த மரு
மகளிரான அம்பிகை அம்பாலிகைகளை, தேற்றி – சமாதானப்படுத்தி, உழைத்த-
துன்பம்உம் – (அப்போது) நேரிட்டுள்ள துன்பத்தையும், முன் உளோர் பலர் உலகு
இயற்கைஉம் – முன்னுளோர்பலர் நிகழ்த்திய உலகோரியற்கையையும், உற –
(அவர்கள் மனத்திற்) பதியும்படி, காட்டி – எடுத்துச்சொல்லி, இழைத்த பாவையின்
இருந்தவர்க்கு – செய்யப்பட்டுள்ள பாவை போன்று நிச்சலமாக இருந்தவரான அந்த
மகளிர்க்கு, அ நினைவு – (தான் கருதிய) அந்த எண்ணத்தை, இசையும் ஆறு-
உடன்படும்படி இசைவித்தாள் – செய்தாள்; (எ-று.)

கருத் தரிப்பதற்கு ருதுகாலமே ஏற்றதாகையால் அக்காலத்து
வருவேனென்பதுபட வியாசமுனிவன் கூறினனென்பது ‘அவருழையணுகுவ
மெனப்போக’ என்ற இடத்துப் பெறப்படும்

கனையும் நீடு இருள், அணைமிசை, இருவரும் கணவனை மறவாது
நினையும் நெஞ்சினர், பயின்றுழி, புல்மணம் நிறைந்து, ஒளி
குறைந்து ஒல்கப்
புனையும் மெய்யொடும், பொழுதொடும், புரி தவன் போதலும்,
மிக அஞ்சி,
அனைய காலையில், அம்பிகை மலர்ந்திலள், அம்பகம் ஒருக்காலும்.-அம்பிகை அச்சத்தினால் கண்மூடியவண்ணம்
வியாசனைச் சேர்தல்

கனையும் நீடு இருள் – செறிந்த மிக்க இருட்போதிலே, அணைமிசை –
படுக்கையின்மீது, இருவர்உம் – (அம்பிகை அம்பாலிகை என்ற) இரண்டு மாதரும்,
கணவனை-, மறவாது-, நினையும் நெஞ்சினர் – நினைக்கின்ற நெஞ்ச முடையவராய்,
பயின்ற உழி – தங்கியபோது,- பொழுதொடுஉம் – உரியசமயத்திலே, புல் மணம்
நிறைந்து – புல்லின் மணம்மிக்கு, ஒளி குறைந்து ஒல்க புனையும் மெய்யொடுஉம்-
ஒளிகுறைந்து சுருங்கப் பூண்ட சரீரத்துடனே, புரி தவன் – தவம் புரிபவனாகிய
வியாசமுனிவன், போதலும் – வருதலும்,- மிக அஞ்சி – மிகவும் அச்சங்கொண்டு,
அனைய காலையில் – 
அப்போது, அம்பிகை-, அம்பகம் – (தன்) கண்கள்,
ஒருக்காலும் சிறிதும், மலர்ந்திலள்- திறத்தாளில்லை; (எ-று.)

     வியாசமுனிவன்  வந்து சேரும்போது அம்பிகை அச்சத்தால் தன் கண்களை
மூடியவண்ணமே யிருந்தனளென்பதாம். புன்மணம் நிறைந்து என்பதற்கு –
கலவைச்சந்தனம் முதலியவற்றின் நன்மண மில்லாமல் என்று கருத்துக்காணலாம்:
“அஹ்ருத்யகந்தம்” என்று பாலபாரதத்திலுள்ளது. ஒளிகுறைந்தொல்கப்புனையுமெய்
என்றது- உடம்பு விளக்கமுறாதவாறு மீசை தாடி உடல்மயிர் முதலியவற்றோடு
கூடியவனாய் என்றவாறு. பொழுது – ருதுஸ்நாநம்செய்த பின் பன்னிரண்டு
நாள்களுக்குஉட்பட்ட கருக்கொள்ளுதற்கு உரியகாலம்.

பராசரன் தரு முனி நினைவொடு கருப் பதித்து, மீளவும் சென்று,
நிராசை நெஞ்சினன், ‘அவசரத்து அவளிடை நிகழ்ந்த
மெய்க் குறிதன்னால்,
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று, ஓர்
இராச குஞ்சரம் பிறந்திடும்; விழிப்புலன் இல்லை மற்று
அதற்கு’ என்றான்.-கருத்தோற்றுவித்து, வியாசன் விழிப்புலனில்லாமகவு உதிக்குமென்று
தாயினிடம் தெரிவித்தல்.

பராசரன் தரு முனி – பாராசரமுனிவன் பெற்ற புதல்வனான வியாசன்,
நிராசை நெஞ்சினன் – ஆசையற்ற மனமுடையவனாய், நினைவொடு – கருத்தோடு,
கரு பதித்து – கருப்பத்தைப் பதியச்செய்து, மீள உம் சென்று – மீண்டும்
தாயினிடம்போய், அவசரத்து – (தான்) சென்றபோது, அவளிடை-அந்த
அம்பிகையினிடத்திலே,நிகழ்ந்த-, மெய் குறி தன்னால் – உடலினடையாளத்தினால்,
‘காயம் ஒன்றினில் – தன்னோருடம்பில், கராசலம் பதினாயிரம் பெறு வலி –
பதினாயிரம் யானை கொண்டுள்ள பலத்தை, பெற்று – அடைந்து, ஓர் இராச
குஞ்சரம்- ஒரு ராஜசிரேஷ்டன், பிறந்திடும் – பிறப்பான்: அதற்கு – அந்த
அரசமகவுக்கு, விழிபுலன்இல்லை – கண்ணாகியபொறி இருக்க மாட்டாது, ‘
என்றான் – என்று கூறினான்;(எ-று.)

     நிராசைநெஞ்சினன் என்றது – தாய்மொழியின்படி நடக்கவேணு மென்பதானால்
அம்பிகையைச் சேர்ந்தானேயன்றிக் காமவசத்தனாய்ச் சேர்ந்தவனல்ல னென்பதைக்
குறிப்பிக்கும். நிகழ்ந்த மெய்க்குறி தன்னால் என்றானென்க. இராசகுஞ்சரம்
என்பதற்குஏற்ப அதற்கு என்று அஃறிணையாற் கூறினார். கராசலம் – கைம் மலை
யென்பது,பொருள்: அசலமென்பது கரமென்ற அடைமொழியின் குறிப்பால்
யானையென்றுபொருள்படும். அவஸரம் – வேளையென்று பொருளுள்ள வடசொல்:
பொற்றோளிராசகுஞ்சரம் எனவும் பாடம். 

மீளவும், தலைப்புதல்வனை நோக்கியே, மிக மகிழ்வு உறா அன்னை,
‘தூள வண் சடைத் தோன்றல்! அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க;
நாள பங்கயப் பதி என, மதி என நலம் திகழ் கவிகைக் கீழ்
ஆள அம் புவி அவன் என நினைந்து, இனி அளிக்க’
என்று, அருள்செய்தாள்.-அம்பாலிகையினிடம் பூமியைக்காக்கவல்ல
ஒருபுதல்வனைத் தருமாறு வேண்டுதல்.

தலைபுதல்வனை – (தனது) முதற்புதல்வனாகியவியாசமுனிவனை,
மீளஉம் நோக்கி – மறுபடியும் பார்த்து, மிகமகிழ்வுஉறா – (பிறவிக் குருடனாம்
புதல்வன் பிறப்பானென்ற மொழியைக்கேட்டதனால்) மிக்க மகிழ்ச்சியடையாத,
அன்னை – தாயான காளி,- ‘தூள வள் சடை தோன்றல் – தூளியைக்கொண்ட
வளப்பமுள்ள சடையையுடைய குமாரனே! அம்பாலிகை-, சுதன் ஒருவனை நல்க –
ஒரு புத்திரனைப் பெறட்டும்: நாளம் பங்கயம் பதி என – (நீண்ட) தண்டையுடைய
தாமரைக்குக் கணவனான சூரியன்போலவும், மதிஎன – சந்திரன் போலவும்
(விளக்கமுடையவனாகித்தோன்றுகின்ற),-அவன்-அப்புதல்வன், அம்புவி –
அழகியபூமியை, நலம் திகழ் – அழகு விளங்குகின்ற, கவிகைக்கீழ் – வெண்கொற்றக்
குடையின் கீழ், ஆள-ஆட்சி செய்க, என-என்று, நினைந்து-, இனி அளிக்க – இனி
அளித்தருள்வாய், ‘ என்று-, அருள்செய்தாள் – கூறினாள்; (எ-று.)

     இங்குப் பாலபாரதத்தில் “குமாரமுத்பாதய தத்ர தாத்ருசம் – விஜேஷ்யதே
பூவலயம் புஜேந ய: [தன்தோள்வலியால் பூமண்டலத்தை வெற்றிகொள்ளவல்ல
அப்படிப்பட்ட புதல்வனை அந்த அம்பாலிகையினிடம் உண்டாக்குக]” என்று
கூறியிருப்பதுகாண்க. தூள் – விபூதியுமாம். தூள – குறிப்புப்பெயரெச்சம். நல்க,
ஆள -செயவெனெச்சமாகக் கொண்டு கூறினுமாம்

கிளைத்திடும் துகிர்க் கொடி நிகர் சடையவன் கேட்டு, நுண்
இடையேபோல்
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும்,
இவனைக் கண்டு,
உளைத்திடும் கருத்துடன் வெரீஇ, வரு பயன் ஒன்றையும் நினையாது,
விளைத்திடும் கரு
விளையும் முன், மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள்.-தாய்சொற்படியே வியாசன் அம்பாலிகை மனை சேர அவள்
அம்முனிவனைக் கண்டு கருத்தோன்றுமுன் நாணத்தாலும் அச்சத்தாலும் உடல் வெளுத்தல்

கிளைத்திடும் – பலபிரிவுகொண்டு விடுகின்ற, துகிர் கொடி நிகர் –
பவழக்கொடியையொத்த, சடையவன் – சடையையுடைய வியாசன், கேட்டு – (தாய்
கூறியதைக்) கேட்டு, நுண் இடைஏ போல் இளைத்திடும் கவின் மெய் உடையவள் –
நுண்ணியஇடையே போல இளைத்துள்ள அழகிய உடம்பைக்கொண்டவளான
அம்பாலிகையின், மனை – வீட்டை, எய்தலும் – அடைந்தவுடனே,- இவனை – இந்த
முனிவனை, கண்டு-, உளைத்திடும் கருத்துடன் – (நாணத்தினால்) வருந்திய
மனத்துடனே, வெரீஇ – அச்சங்கொண்டு, வரு பயன் ஒன்றை உம் நினையாது –
தனக்கு நேரக்கூடிய பயனொன்றையும் எண்ணாமல், விளைத்திடும் – (அம்முனிவன்)
உண்டாக்கப்போகின்ற, கரு – கருப்பம், விளையும் முன் – பலிப்பதற்குமுன்னமே,
மடவரல்- அந்த அம்பாலிகையென்ற பெண், மெய்எலாம் விளர்த்திட்டாள்-
உடம்புமுழுவதும் வெளுத்திட்டாள்; (எ -று.)

     இங்குப் பாலபாரதத்தில் “விலோக்ய ஸாசைந முவாஹலஜ்ஜிதா –
விபாண்டுரத்வம் புரஏவ தௌஹ்ருதாத் [அந்த அம்பாலிகையும் இவனைப் பார்த்து
நாணமுற்றுக் கருக்கொள்ளுமுன்னமே வெண்ணிறமுடைமையை மேற்கொண்டாள்]”
என்ற கூறியிருப்பது காண்க.  

அருந் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி, அக் கணத்து ஏகி,
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து, இமையவன்
எனச் சென்றான்-
‘பெருந் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன், பெற்ற
முருந்த வாணகை மருட்சியால், விளர்த்திடும் முழுவதும்
உடல்’ என்றே.-அம்பாலிகையிடம் கருவளித்த வியாசன்
தாயினிடத்துச் சென்று அருந்திறற்குமாரன் வெண்ணிறத்
தோடு பிறப்பானென்று தெரிவித்தல்.

அருந் தபோநிதி – அரியதவத்திற்கு உறைவிடமான அந்த விசயன்,
அவளிடத்தின்உம் – அந்த அம்பாலிகையினிடத்திலும், கரு அருளி – கருப்பத்தை
யுண்டாக்கியருளி,- அ கணத்து – அந்த நொடியிலேயே, ஏகி – (தன்தாயிருந்த
இடத்துச்) சென்று, ‘பெருந் தரா தலம் – பெரியபூமியை, திறலினால் – (தன்)
வல்லமையினால், ஒரு தனி பெறும் – தன்னந்தனியே பெற்று  ஆளவல்ல,
முறையவன் – முறைமையையுடைய குமாரன், பெற்ற முருந்தம் வாள்நகை –
(தன்னை)ஈன்ற மயிலிறகினடிபோன்ற ஒளிபொருந்திய பற்களையுடையவளான
தாயின்,மருட்சியால் – மருண்டு உடல் விளர்த்த தன்மையால், உடல்முழுவதும்
விளர்த்திடும் -உடல் முழுவதும் வெளுத்திருப்பான்,’ என்றே-, இருந்த ஆறு-
(தான் சென்றபோதுஅம்பாலிகை) இருந்த வகையை, தன் அன்னையோடு – தன்
தாயினிடம், இனிதுஉரைத்து – இனிதாகச்சொல்லிவிட்டு, இமையவன் என
சென்றான் – தேவன்போலமறைந்திட்டான்; (எ-று.)

வேதபுங்கவன் அகன்றுழி, வலியுடை விழி இல்
மைந்தனும், யாரும்
பாதபங்கயம் தொழத் தகும் திறலுடைப் பாண்டு
என்பவன் தானும்,
பூதலம் பெருங் களிப்புற, குருகுலம் பொற்புற, பொழுது உற்றுச்
சாதர் ஆயினர்; அவ் இரு மகவையும் சத்தியவதி கண்டாள்.-திருதராட்டிரனும் பாண்டுவும் பிறக்க, அவர்களைச் சத்தியவதி
காணுதல்.

 வேதபுங்கவன் – வேதம்வல்ல அந்தவியாசன், அகன்ற உழி –
சென்றிட்டபின், வலி உடை – (பதினாயிரம்யானை) வலியுள்ள, விழி இல்
மைந்தன்உம்- கண்ணில்லாத குமாரனாகிய திருதராஷ்டிரனும், யார்உம் –
பாதபங்கயம் தொழ தகும்- எப்படிப்பட்ட பகைவரும் (தன்) பாததாமரையை
வணங்கத்தக்க, திறல்உடை -வலிமையையுடைய, பாண்டு என்பவன் தான்உம் –
பாண்டுவென்பவனும்,- பூதலம்பெருங் களிப்பு உற – பூமி பெருமகிழ்ச்சியடையவும்,
குருகுலம்  பொற்புஉற -குருகுலம் அழகுறவும், பொழுது உற்று- (ஈனுங்) காலம்
வரவே, சாதர் ஆயினர் -தோன்றினவரானார்கள்: அ இருமகவைஉம் – இந்த
இரண்டு புத்திரரையும், சத்தியவதி- (அப்புத்திரரின் பாட்டியான)
சத்தியவதியென்பவள், கண்டாள் – பார்த்தாள்; (எ-று.)

     சத்தியவதியென்பதும், சந்தனுவின் இரண்டாம்மனைவியாகிய யோசனகந்தியான
காளிக்குஒருபெயர். புங்கவன் – புருஷசிரேஷ்டன். ஜாதர் – வடசொல்

காணலும் பெரிது உவகை அற்று, ‘இன்னமும் கருதுதும்’
என எண்ண,
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும், சிந்தனை
உறச் சொல்ல,
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும்,
அவள் அஞ்சி,
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியைப் பூ அணை
அணைவித்தாள்.-உவகை அற்ற சத்தியவதி மீண்டும் வியாதனை
அழைத்து மகவு அருளவேண்டுதலும், அம்பிகையிடம் வியாதன் செல்ல, அவள் தனது தோழியை அனுப்புதலும்-மீண்டும் காளி வியாசனை நினைத்து, வந்த அவனிடத்துத் தன் கருத்தைச்சொல்ல, அந்தரிஷியைக் கண்டு அஞ்சிய அம்பிகை தோழியை அணையிற்செல்ல ஏவுதல்.

காணலும் – (அக்குழந்தைகளைக்) கண்டபின்பு, பெரிது உவகை
அற்று -மிக்கமகிழ்ச்சியின்றி, ‘இன்னமும்-, கருதுதும் – (நம்முதற் புதல்வனாகிய
வியாசனை)நினைப்போம்,’ என – என்று (மனத்திற்) கருதி, எண்ண-
(அவ்வாறே)நினைக்க, சேண்அடைந்த மா முனிவரன் – வெகுதூரத்துச்சென்றிருந்த
சிறந்தமுனிச்சிரேஷ்டன்[வியாசன்], வருதலும் – (தன்முன்) வந்தவுடனே,
(அந்தக்காளி),சிந்தனை – (தன்) கருத்தை, உற சொல்ல – நன்குதெரிவிக்க,- (தன்
தாயின்சொற்படியே), இவன் – இந்த வியாசமுனிவன், நாண் நலம் திகழ்
அம்பிகையிடத்து-நாணின் நன்மை விளங்குகின்ற அம்பிகை யென்பாளைச்
சேரவேண்டுமிடத்திலே,நண்ணலும் – கிட்டவும்,- அவள் – அம்பிகை, அஞ்சி –
அச்சங்கொண்டு, பூண் நலம்பெறு தோழி மற்று ஒருத்தியை –
ஆபரணங்களினாலழகு பெற்ற (தன்னினும்) வேறானஒரு தோழியை, பூ அணை
அணைவித்தாள் – பூப்போன்ற மெல்லிய படுக்கையிலேசேருமாறு செய்தாள்; (எ-று.)

     பூணலம்பெறு தோழி என்றதனால், அந்தப்பரிசாரிகைப் பெண் தன்னை
யினிதாகஅலங்கரித்துச் சென்றா ளென்பது பெறப்படும்: பாலபாரதத்தில்
“விதக்தநைபத்யவதீததந்திகம்யயௌ” என்று உள்ளது. 

வந்த காலையில் மனம் கலந்து, அநங்க நூல் மரபின்
மெய் உறத் தோய்ந்து,
சந்தனாகருப் பரிமளத் தன தடம் தயங்கு மார்பினில்
மூழ்க,
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும், இன்பம் முற்றிய
பின்னர்,
அந்தணாளன் அவ் இரவிடை மீள வந்து, அன்னையோடு
உரைசெய்வான்:–விதுரன் பிறத்தல்-அவளோடு இன்பந்துய்த்தபின் வியாசமுனி தாயினிடம் வருதல்.

வந்த காலையில் – (அம்பிகையின்தோழி) வந்தபோது, மனம் கலந்து –
மனம் (அன்னாளிடம்) பொருந்தப்பெற்று, அநங்க நூல் மரபின் –
காமசாஸ்திரத்திற்கூறிய முறைப்படி, மெய்- (அவளுடைய) உடலை, உற தோய்ந்து –
நன்கு கலந்து,- சந்தன அகரு பரிமளம் தன தடம் – சந்தனக்குழம்பு அகில்தேய்வை
இவற்றின் நறுமணம் பொருந்திய (அவளுடைய) கொங்கைத்தலம், தயங்கு
மார்பினில் -விளங்குகின்ற (தன்) மார்பிலே, மூழ்க – அழுந்த, இந்திராதிபர்
போகம் -தேவேந்திரராகிய தலைவர் நுகரும் காமவின்பத்தை, உற்று – அடைந்து,
அந்தணாளன்- வியாசன், இசைதலும் – மனம் பொருந்தியிருத்தலும், இன்பம்
முற்றியபின்னர் -அவ்வின்பம் பூர்த்தியாயின பின்பு, அஇரவிடை – அந்த இரவில்,
மீள வந்து – மீளவும்வந்து, அன்னையோடு – தாயுடனே, உரை செய்வான்-; (எ-று.)

     முதன் மூன்றடிகள் – தோழிப்பெண் அந்தமுனிவன் மனத்தைக் கவர, அவன்
பரவசனாகி இன்பமனுபவித்த தன்மையை விவரிக்கும்: “கீதத்தினால் மான்
வசப்படுவதுபோல அந்தப்பரிசாரிகைப் பெண்ணால் ஐம்புலனைவென்ற அந்த
மஹர்ஷி வசீகரிக்கப்பட்டான்” என்று பாலபாரதம் கூறும்.

அம்பிகைக்கொடி தோழியை விடுத்தனள்; அவள் புரி
தவம்தன்னால்,
உம்பரில் பெறு வரத்தினால், தருமன் வந்து உதித்திடும்
பதம் பெற்றாள்;
வெம் படைத் தொழில் விதுரன் என்று அவன் பெயர்; மேல்
இனி மகவு ஆசை
எம் புணர்ப்பினான் ஒழிக!’ என, வன நெறி ஏகினன், விடை
கொண்டே.–நிகழ்ந்தசெய்தியைத்தாய்க்குச்சொல்லி, ‘யமனமிசமாகப்பிறக்கும்
இம்மகப்பெயர் விதுரன்’ என்றும் ‘இனிப் புத்திரர் பொருட்டு என்னை
நினையற்க’ என்றும் கூறி வியாசன் செல்லுதல்.

‘அம்பிகை கொடி – அம்பிகையென்ற பெண், தோழியை
விடுத்தனள் -(என்னோடு சேரும்படி தன்) தோழியை யனுப்பினாள்: அவள்-,புரி –
(முன்)செய்துள்ள, தவந்தன்னால் – தவத்தினாலும், உம்பரில் பெறு வரத்தினால் –
தேவர்களிடத்துப் பெற்ற வரத்தினாலும், தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள்-
(தன்வயிற்றிலே) அறக்கடவுளானயமன் வந்துதோன்றும்பதவியைப் பெற்றாள்:
அவன்பெயர்-,-, வெம் படை தொழில் – கொடிய படைக்கலத்தொழிலிலேவல்ல,
விதுரன் என்று – விதுரனென்பது: இனி மேல்-, எம் புணர்ப்பினான் – எம்முடைய
சம்பந்தத்தினால், மகவு ஆசை – குழந்தையைப்பெறுதலில் ஆசையை, ஒழிக-,’ என-
என்று சொல்லி, விடைகொண்டு – (தாயிடம்) விடைப்பெற்றுக்கொண்டு,
(அந்தவியாசன்), வனம் நெறி ஏகினன் – காட்டுவழியே சென்றான்;

     ஆணிமாண்டவ்யமுனிவனதுசாபத்திற்கு விஷயமான யமன், விதுரனென்று
இந்தப்பரிசாரிகைப் பெண்ணுக்குப் பிறக்கப்போகிறானென்று வியாசமுனிவன்
கூறியதாகப் பாலபாரதத்துஉள்ளது.  

மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இம் மைந்தனும்,
முதல் பெற்ற
இருவரும், குருகுலப் பெருங் கிரிமிசை இலங்கு
முக் குவடு என்ன,
பொரு அருந் திறல் படைகளும், களிறு தேர் புரவியும்,
புவி வேந்தர்
வெருவரும்படி பல கலைவிதங்களும், வீடுமனிடம் கற்றார்.–மூன்றுபுத்திரரும் பலகலைகளையும் வீடுமனிடம் கற்றல்.

மரு வரும் குழல் – நறுமணம்பொருந்திய கூந்தலையுடைய, தாசி –
பரிசாரிகைப்பெண், பெற்று எடுத்த-, இ மைந்தன் உம் – (விதுரனென்ற)
இந்தப்புதல்வனும், முதல் பெற்ற இருவர்உம் – முன்னமே அம்பிகை
அம்பாலிகைகளாற் (பெறப்பட்ட) திருதராட்டிரன் பாண்டு என்ற இரண்டு புத்திரரும்,
குருகுலம் பெருங்கிரி மிசை – குருகுலமாகிய பெரிய மலைமீது, இலங்கும்
முக்குவடுஎன்ன – விளங்குகின்ற மூன்றுசிகரம்போல (த்தோன்றியவண்ணம்),- பொரு
அரு திறல் படைகள்உம் – ஒப்பற்றவலிமையையுடைய [வலிமை கொண்டு
பயன்படுத்தக்கூடிய] படைக்கலங்களையும், களிறு தேர் புரவிஉம் – யானை இரதம்
குதிரை என்ற இவைகளையும், புவிவேந்தர் வெருவரும்படி – பூமிக்குத்தலைவரான
அரசர் அஞ்சும்படி, பலவிதம் கலைகள்உம் -, வீடுமனிடம்-, கற்றார்-; (எ-று.)   (176)

ஆன திக்கு இரு-நாலும் வந்து அடி தொழ, அம்பிகை
மகன்தன்னை,
வான்நதித் திருமகன், ஒரு தினத்தினில் மங்கல
முடி சூட்டி,
‘பால் நிறத் திறல் பாண்டுவே சேனையின் பதி;
முழு மதி மிக்க
கான் நிறத் தொடை விதுரனே அமைச்சன், இக் காவலற்கு’
என வைத்தான்.-வீடுமன் நல்லநாளில் திருதராட்டிரனுக்கு முடிசூட்ட, பாண்டுவைச்
சேனாபதியும் விதுரனை அமைச்சனுமாக வைத்தல்

வான் நதி திரு மகன் – கங்காநதியின் புத்திரனாகிய வீடுமன்,- ஒரு
தினத்தினில் – ஒப்பற்ற சிறந்த நாளிலே, ஆன – பொருந்திய, திக்கு இரு நாள்
உம் -எட்டுத்திக்கிலுள்ளவரும், வந்து-, அடி தொழ – அடிதொழுமாறு, அம்பிகை
மகன்தன்னை – அம்பிகையின் குமாரனான திருதராட்டிரனை, மங்கலம் முடி
சூட்டி -மங்களமாகிய ராஜகீரிடத்தைக் கவித்து, ‘இ காவலற்கு-இந்தத்திருதராட்டிர
மகாராஜனுக்கு,- பால் நிறம் திறல் பாண்டுஏ – பால்போன்ற வெண்ணிறத்தையும்
பராக்கிரமத்தையுமுடைய பாண்டுவென்பானே, சேனையின் பதி – சேனாபதியாவன்:
முழு மதி மிக்க – நிரம்பிய புத்தியினால் மேம்பட்ட, கான் நிறம் தொடை
விதுரன்ஏ -நறுமணத்தையும் (கண்கவரும்) நிறத்தையுமுடைய மாலைசூடிய
விதுரனென்பானே, அமைச்சன்-,’ என – என்று, வைத்தான் – ஏற்படுத்தினான்;(எ-று.)

     திருதராட்டிரன் முடிசூட்டப்பட்டானாயினும், கண்ணில்லாதவனாதலால்,
சேனாபதியான பாண்டுவே ராஜாவாக ஆண்டனனென்று, வியாசபாரதம் கூறும்

நதிஅளித்தவன் ஏவலின், தூதர் போய் நயந்து, உடன்,
‘காந்தார
பதி அளித்த மெய்க் கன்னியைத் தருக, பூபதிக்கு’ என,
மணம் நேர்ந்தார்;
‘மதி அளித்த தொல் குலத்தவன், விழி இலா மகன்’
எனத் தமர் சொல்ல,
‘விதி அளித்தது’ என்று, உளம் மகிழ்ந்தனள், வடமீன்
எனத் தகும் கற்பாள்.– வீடுமனேவலினால் தூதர்போய்க் காந்தாரபதியைக் கண்டு எமது
அரசனுக்கு நின்கன்னியைத் தருகென, அவனும் இசைதல்.

நதி அளித்தவன் – கங்காநதி பெற்ற புதல்வனான வீடுமனுடைய,
ஏவலின் – கட்டளையினால், தூதர்,- உடன் – உடனே, போய் –
(காந்தாரதேசத்தை)அடைந்து, ‘காந்தாரபதி அளித்த மெய் கன்னியை – காந்தார
தேசத்துக்குத் தலைவனான சுபலன் பெற்ற நல்ல வடிவையுடைய காந்தாரியை,
பூபதிக்கு தருக – (எமது) அரசனுக்குத் தருக,’ என – என்று, நயந்து – இனிது பேசி,
மணம் நேர்ந்தார்- (தம்மரசன் அன்னாளை) மணஞ்செய்து கொள்ள
உடன்பட்டிருப்பதைத் தெரிவித்தனர்: ‘மதி அளித்த தொல் குலத்தவன் – சந்திரன்
தோற்றுவித்த பழையகுலத்திலே தோன்றின திருதராட்டிரன், விழி இலா மகன் –
கண்ணில்லாதமகனாவான்,’ என – என்று, தமர் – சுற்றத்தார், சொல்ல-,-
‘விதி-கடவுள், அளித்தது – கொடுத்ததாகும் (இந்தவரன்),’ என்று-, வட மீன் என
தகும் கற்பாள் – (வானத்து) வடக்கின்கண் நட்சத்திர வடிவமாக (க் கணவனைப்
பிரியாது) நிற்கும் அருந்ததியைப்போன்ற கற்பினையுடையளான அந்தக்காந்தாரி,
உளம் மகிழ்ந்தனள்-;

      ‘மணநேர்ந்தான்’ என்று பாடமாயின் காந்தாரபதி என எழுவாய் வருவிக்க.
பெருங்கற்பினளாதலால், கண்ணிலானென்று சொல்லியும் உளம் வருந்தாது
மகிழ்ந்தனள் காந்தாரியென்க.

இமைத்த கண் இணை மலர்ந்து, இனி நோக்கிலேன் யான்
ஒருவரை’ என்று,
சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையைத் தந்தையும்,
தனையோரும்,
அமைத்து, அருங் குல முனிவரும், மறை முறை அருங் கடி
விளைத்திட்டார்;
சுமைத் தராபதி மதி, இவள் உரோகிணி என்னவே
தொழத் தக்காள்.-இனி யானொருவரையும் கண்ணாற்காணேனென்று
காந்தாரி தன் கண்ணைப் பட்டத்தாற் புதைக்க, தந்தை
முதலியோர் அவளைத் திருதராட்டிரனுக்கு மணஞ்செய்வித்தல்.

யான்-, இனி-, இமைத்த கண் இணை மலர்ந்து –
இமைக்குந்தன்மையுள்ள (என்) இரண்டுகண்களை மலரவிழித்து, ஒருவரை- வேறொரு
புருஷரை, நோக்கலேன் – பாரேன்’, என்று – என்று கருதி, சமைத்த – செய்வித்த,
பட்டம் ஒன்றினில் – பொற்பட்டத்தால், பொதி – மறைத்த, பெதும்பையை –
பெதும்பைப்பருவத்தளான காந்தாரியை, தந்தைஉம் – அவள் தந்தையான
சுபலனென்றகாந்தாரபதியும், தனயோர்உம் – (அவனது புத்திரராகிய) சகுனி
முதலியோரும்,அருங்குலம் முனிவர்உம் – சிறந்தகுலத்தில் பிறந்தவரான இருடியரும்,
அமைத்து-(கலியாணத்துக்கு) வேண்டும்பொருளைச் சித்தஞ் செய்துகொண்டு,- மறை
முறை-வேதவிதிப்படி, அருங் கடி – அருமையான விவாகத்தை, விளைத்திட்டார் –
செய்துமுடித்தார்: சுமை – (பூமியைத்) தாங்குதலையுடைய, தராபதி மதி – அரசனாகிய
சந்திரனுக்கு, இவள் -, உரோகிணி என்ன தொழ தக்காள் – உரோகிணி போலக்
கொண்டாடத்தக்கவளானாள்; (எ -று.)

     சந்திரனுக்குஅசுவினி முதலிய மற்றைப் பல நட்சத்திரங்களும்
மனைவியராகஇருப்பினும் உரோகிணி சிறத்தல்போல, திருதராட்டினுக்குப் பல
மனைவி மாரிருப்பினும்காந்தாரியே யாவரினும் மிக்கவளானாளென்க. “அகச்சத்
அந்த: புரிகாஸு  முக்யதாம்” என்று பாலபாரதத்து வருவதும் காண்க

புந்தியால் அருங் கலைமகள், பொற்பினால் பூந் திரு, புனை
கற்பால் அந்திவாய் அருந்ததி,
பெரும் பொறையினால் அவனிமான், நிகர்’ என்ன,
குந்திபோசர் இல், சூரன் என்பவன் மகள் குருகுலம்
தழைத்து ஓங்க,
வந்து, யாவரும் ‘பிரதை’ என்று அடி தொழ, மதி என
வளர்கின்றாள்.-இனிக் குந்தியைப்பற்றிய சரிதை:-
சூரன்மகளாகிய குந்தி,குந்திபோசரில்லத்து வளர்தல்.

சூரன் என்பவன் மகள் – சூரனென்று ஒருபேரையுடைய யதுகுலத்தரனுடைய மகள், -புந்தியால் அருங்கலை மகள்-  புத்தியினால்
அருமையான  கலைக்குரிய மகளான சரசுவதியும், பொற்பினால் பூ திரு –
அழகினால் மலரிலுறைபவளாகிய இலக்குமியும், புனை கற்பால் –
அலங்காரத்தையுண்டாக்குகின்ற கற்பினால், அந்தி வாய் அருந்ததி – இராக்காலத்துத்
தோன்றும் வட மீனாகிய அருந்ததியும், பெரும் பொறையினால் – மிக்க
பொறுமையினால், அவனிமான் – பூமிதேவியும், நிகர் – ஒப்பாவள், ‘ என்ன – என்று
(பலரும்) சொல்லிக் கொண்டாடவும், குருகுலம் தழைத்து ஓங்க – குருகுலம் செழித்து
வளரவும், குந்திபோசர் இல் வந்து – குந்திபோசனென்பானுடைய இல்லத்திலே
(அவனுக்கு ஸ்வீகார புத்திரியாக) வந்து,  பிரதை என்று யாவர்உம் அடி தொழ –
பிரதை யென்றுபாராட்டி யாவரும் வணங்கித்தொழ, மதி என – பிறைச்சந்திரன்போல,
வளர்கின்றாள் – வளர்பவளானாள்; (எ-று.)

     அத்தைகுமாரனான குந்திபோசனுக்கு மகவில்லாக்குறையைப் போக்க,
யதுகுலத்துத்தோன்றலான சூரனென்பவன் தன் பெண்ணான பிரதை யென்பவளை
வளர்க்குமாறு கொடுத்தான் : அவளே குந்திபோசனால் வளர்க்கப்பட்டதுபற்றி,
குந்தியென்று வழங்கப்படுவாளாயினாள்.

அந்த மாது இள மட மயில் என விளையாடும்
எல்லையில், என்றும்
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அவ் வழி
வந்தான்;
வந்த மா தவன் அடி பணிந்து, ‘இவனை நீ வழிபடுக!’
என, தந்தை,
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள்.-குந்தி அங்கு அரண்மனைவந்த துருவாசமுனிவனுக்கு
வளர்ப்புத்தந்தையின் சொற்படிகுற்றேவல்புரிதல்.

அந்த மாது – அந்தப்பிரதையென்பவள், இள மடம் மயில் என –
இளமையையுடைய மடப்பங்கொண்ட மயில்போல, விளையாடும் எல்லையில் –
விளையாடுகின்ற காலத்தில்,- என்றுஉம் முந்த மாதவம் புரி – எப்போதும்
(யாவரினும்)மேற்படச் சிறந்த தவத்தைச் செய்பவனான, துருவாசமாமுனிஉம் –
துருவாசமுனிவனும்,அ வழி – அவ்விடத்து, வந்தான்-; தந்தை – குந்திபோசன்,
வந்த – (அங்கனம்) வந்த,மா தவன் – பெருந்தவத்தனான துருவாச முனிவனுடைய,
அடி – பாதங்களை, பணிந்து – வணங்கி, ‘நீ இவனை வழிபடுக -நீ இவனை
உபசரிப்பாயாக’, என – என்று(பிரதையென்பாளைநோக்கிச்) சொல்ல,- இந்த
மாதவன் மொழி படி – இந்தத்துருவாசமாமுனிவன் கூறுகின்ற மொழியின்வழியே,
புரிந்து – பணிவிடைசெய்துகொண்டு, குறு ஏவலின்வழி – (அவனுடைய) சிறிய
ஏவலின்வழியிலேயே,நின்றாள் – நடந்துகொண்டாள்; (எ-று.)

கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும், கனக மென்
கொடி ஊசல்,
வழங்கு தண் புனல், ஆடலும், துறை வரி வண்டல்
ஆடலும், மாறி
முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும்,
செய்குன்றும்,
தழங்கு செஞ் சுரும்பு எழு மலர்ச் சோலையும், தனித்தனி
மறந்திட்டாள்.-முனிவனுடைய குற்றேவலில் மனம்பதிந்த பிரதை, தன்
இளமையாடலை மறத்தல்.

கழங்கு கந்துகம் அம்மனை ஆடல்உம் – கழற்சிக்காய் பந்து
அம்மானை என்ற இவற்றை யாடுவதையும், கனகம் மெல்கொடி ஊசல் –
பொன்மயமான மெல்லியகொடிகளாலியன்ற ஊஞ்சலிலாடுவதையும், வழங்கு
தண்புனல் ஆடல் உம் – இடைவிடாது செல்கின்ற குளிர்ந்தநீரிலே
விளையாடுதலையும்,- துறை வரி வண்டல் ஆடல்உம் – நீர்த்துறைகளிலே அழகிய
மணலைக்கொண்டு (சிற்றிலிழைத்தல்முதலிய) ஆடல்புரிதலையும், மாறி – நீங்கி,-
முழங்கு சங்குஇனம் தவழ்தரு பனி நிலா முன்றில்உம் – ஒலிக்கின்ற சங்குகளின்
கூட்டம் தவழப்பெற்ற குளிர்ந்த நிலாவைக்கொண்ட வீட்டின் முன்னிடமும்,
செய்குன்றுஉம் – (வினோதார்த்தமாகச் சமைத்த) கட்டுமலைகளும், தழங்கு செம்
சுரும்பு எழு மலர் சோலை உம் – ஒலிக்கின்ற அழகிய சுரும்பினம்
மொய்த்தெழப்பெற்ற பூஞ்சோலையும், தனித்தனி-, மறந்திட்டாள்-; (எ-று.)

     வேற்றிடத்து மனஞ்செல்லாமல் திருந்திக் கடவுள் முனிவரின் பூசனையிலேயே
கருத்தாயிருந்தனள் குந்திபோசன்புதல்வியென்க. 

தொழுது, தாளினைச் செய்ய பஞ்சு எழுதினும், தோளினைச்
செழுந் தொய்யில்
எழுதினும், பொறா இளமையள், முதுக்குறைந்து, யாது
யாது உரைசெய்தான்,
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன்
மகிழ்வு எய்த,
பழுது இல் அன்புடன் இயற்றினள், ஒன்றுபோல் பன்னிரு
மதி சேர.–துருவாசன் மகிழ்வுற, பிரதை பன்னிரண்டுமாதம்
பணிவிடை புரிதல்.

தோழிமார்), தொழுது – வணங்கி, தாளினை – பாதங்களில், செய்ய
பஞ்சு எழுதின்உம் – செம்பஞ்சுக்குழம்பை யெழுதினாலும், தோளினை – தோளில்,
செழுந் தொய்யில் எழுதின்உம் – அழகிய தொய்யிலை யெழுதினாலும், பொறா –
தாங்கமாட்டாத, இளமையள் – இளமையை யுடையவளாகிய அந்தப்பிரதை,- நெஞ்சு
முழுவதுஉம் உறு கோபம்ஏ மிக மிகு முனிவரன்- நெஞ்சுமுழுவதும் மிக்ககோபமே
மிகுந்துள்ள ரிஷித்தலைவனாகிய துருவாசன், யாது யாது உரைசெய்தான் –
எதைஎதைச்சொன்னானோ, (அவற்றையெல்லாம்), மகிழ்வு எய்த – (அம்முனிவரன்)
மகிழ்ச்சியடையும்படி, முதுக்குறைந்து – பேரறிவுமிகுந்து, பழுது இல் அன்புடன் –
குற்றமில்லாத அன்புடனே, ஒன்றுபோல் – ஒரேவகையாக, சேர – பொருந்த,
பன்னிருமதி – பன்னிரண்டுமாதம், இயற்றினள் – செய்தாள்;

     யாதுயாதுஉரைசெய்தான் என்றதனால், அவனேவியசெயல் செய்தற்கரியது
என்பது பெறப்படும்: “ஸ யத்யத் ஆஜ்ஞாபய திஸ்ம துஷ்கரம்” என்று
பாலபாரதத்தில்வருவதும், மேற்செய்யுளில் “எனதேவ லரிதெனாது” என்று
வருவதும்காண்க. 

பிரதைதன்னை அத் தபோநிதி, ‘வருக!’ என, பெரிது
உவந்து, ‘எனது ஏவல்
அரிது எனாது நீ இயற்றினை; நெடுங் கடல் அவனிமேல்
யார் வல்லார்?
தெரிவை, கேள்!’ எனச் செவிப்படுத்து, ஒரு மறை, ‘தேவரில்
யார் யாரைக்
கருதி, நீ வர அழைத்தனை, அவர் அவர் கணத்து நின்
கரம் சேர்வார்;-இரண்டுகவிகள் – பிரதையின் பணிவிடையால்
மனமுவந்த துருவாசன் ஒருமந்திரத்தையுபதேசித்துச்
செல்ல, பிரதையும் தன்மனைசேர்தலைத் தெரிவிக்கும்.

அ தபோநிதி – அந்தமுனிவன், பெரிது உவந்து –
(பன்னிருமாதம் பிரதைசெய்த பணிவிடையால்) மிகவுஞ் சந்தோஷித்து, வருக என
– வருவாயாக என்றுசொல்லி, பிரதை தன்னை – அந்தக் குந்தியைநோக்கி,
‘எனது ஏவல் – என்னுடைய கட்டளையை, அரிது எனாது-, நீ-, இயற்றினை –
செய்தாய்: நெடுங்கடல் அவனி மேல் யார் வல்லார் – (உன்னைப்போற்
பணிவிடை செய்யப்) பெரிய கடலினாற் சூழப்பட்ட இந்தப்பூமியில்
யாவர்வல்லார்? தெரிவை – பெண்ணே! கேள்-,’ என – என்று, ஒரு மறை –
ஒருவேதமந்திரத்தை, செவிப்படுத்து – (அந்தப் பிரதையின்) காதிலேயோதி,
தேவரில் – தேவர்கட்குள்ளே, யார் யாரை-, கருதி-, ‘நீ-, வர அழைத்தனை –
(இந்த மந்திரத்தைச்சொல்லி) வருமாறு கூப்பிடுவாயோ, அவர் அவர் –
அந்தந்தத் தேவர், கணத்து – ஒருகணப்போதில், நின் கரம் சேர்வார் –
உன்கையைச் சேர்வார்கள் [உன்வசமாவார்கள்]; (எ-று.)

     தன்தையின் மனையில் துருவாசமுனிவரை யுபசரித்து அம்முனிவரருளைப்
பெற்ற குந்தி தனக்கென்றுள்ள செல்வமனையைச் சேர்ந்தாளென்க

தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர்; தவப் பயன்
எனப்பெற்ற இம் மறைப் பயன்
இம்மையில் உனக்கு வந்து எய்தியது’ எனக் கூறி,
அம் முனிப் பெருங் கடவுளும் தபோவனம் அடைந்தனன்;
அவளும் தன்
செம் மனத்தொடு பயின்று, அரமகள் என, செல்வ மா மனை
சேர்ந்தாள்.

அன்றியும்) தம்மை ஒப்பது – தம்மையொத்துள்ளானாகிய, ஒர்
மகவைஉம் – ஒருபுத்திரனையும், தருகுவர் – :(யான்), தவம் பயன்என பெற்ற –
தவத்தின்பயனாகு மென்னுமாறு அரிதிலடைந்த, இ-இந்த, மறை-வேதத்தின், பயன்-,
இம்மையில் – இப்பிறவியில்தானே, உனக்கு வந்து எய்தியது – உனக்கு
வந்துசேர்ந்தது,’ என கூறி – என்றுசொல்லி,- அ கடவுள் பெரு முனிஉம்- அந்தத்
தெய்வத் தன்மையுள்ள பெருமுனிவரும், தபோவனம் – (தான்) தவம்புரியும்
வனத்தை, அடைந்தனன்-; அவள்உம் – அந்தப்பிரதையும், தான்-, செம் மனத்தொடு
– நல்ல மனத்தோடு, பயின்று – பொருந்தி, அரமகள் என – தெய்வமாதுபோல,
செல்வம் மா மனை – (தனக்குரிய) செல்வமுள்ள சிறந்தமனையிலே, சேர்ந்தாள்-;
(எ-று.)

     தன்தையின் மனையில் துருவாசமுனிவரை யுபசரித்து அம்முனிவரருளைப்
பெற்ற குந்தி தனக்கென்றுள்ள செல்வமனையைச் சேர்ந்தாளென்க.

ததையும் வண்டு இமிர் கருங் குழற் கன்னி அத் தனி மறைப்
பயன் காண்பான்,
சுதை நிலா எழு மாளிகைத் தலத்திடை, தூ நிலா எழு முன்றில்,
இதைய மா மலர் களிக்க நின்று, அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி,
உதைய பானுவும், மலர்மிசை அளி என, ஒரு கணந்தனில் வந்தான்.-மறைப்பயனைக் காணக் கன்னிகை குந்தி நிலா
முற்றத்திலே அம்மந்திரத்தைச் சூரியனைக்கருதி யுச்சரிக்க, அன்னான்அங்குவருதல்.

ததையும் நெருங்கிய, வண்டு – வண்டுகள், இமிர் – ஒலிக்கின்ற,
கருங்குழல் – கரிய கூந்தலையுடைய, கன்னி-, அ தனி மறை பயன் காண்பான் –
அந்த ஒப்பற்ற வேதமந்திரத்தின் பயனை யறிய வேண்டி, சுதை நிலா எழு –
(பூசிய) சுண்ணாம்பினால் வெண்ணிலாத் தோன்றுகின்ற, மாளிகை தலத்திடை –
மாளிகையில், தூ நிலா எழு முன்றில் – பரிசுத்தமான நிலாத் தோன்றுகின்ற
முற்றத்திலே [மேன்மாடத்திலே], இதையம் மாமலர் களிக்கநின்று – இதயமாகிய
சிறந்தமலர்மகிழுமாறு இருந்துகொண்டு, (சூரியனைக்கருதி), அன்பினோடு-,
இயம்பலும்- (அந்த மந்திரத்தை) உச்சரித்தவுடனே, எதிர் ஓடி-
(அந்தப்பிரதைக்கு) எதிராகவிரைந்துவந்து, உதையம்பானுஉம் –
உதயகாலத்துச்சூரியனும், மலர்மிசை அளி என – மலரில்வண்டுமொய்ப்பது
போல,ஒரு கணந்தனில் – ஒரு கணப்போதில், வந்தான்-; (எ-று.)

    மேன்மாடத்திலே நிலாமுற்றத்திலிருந்து பிரதை துருவாச முனிவ
னுபதேசித்த வேதமந்திரத்தை யுச்சரித்து உதித்த சூரியனை நினைக்க உடனே
அங்கு அவன் தோன்றினா னென்க.

செம் பொன் ஆடையும், கவச குண்டலங்களும், திகழ்
மணி முடி, ஆரம்,
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும், பவள
மேனியும், ஆகி,
வம்பு அறாத மெய்ப் பதுமினி என, செழு மறை நுவல் மடப் பாவை
அம்புயானனம் மலர்வுறக் கரங்களால் அணைத்தனன், அழகு எய்தவந்த சூரியன் அந்தப்பிரதையை அணைத்தல்.

செம் பொன் ஆடைஉம் – செந்நிறமுள்ள பொற்பட்டாடையும்
[பீதாம்பரமும்], கவசம் குண்டலங்கள்உம்-,திகழ்மணி முடி – விளங்குகின்ற
இரத்தினகிரீடமும், ஆரம் – ஆரமும், பைம் பொன் அங்கதம் புனை
அவயவங்கள்உம்- பசும்பொன்னாலியன்ற தோள்வளையலையணிந்த புயங்களும்,
பவளம் மேனி உம் – பவழம் போன்ற செந்நிறத்திருமேனியும் ஆகி –
பெற்றுவந்து,- வம்பு அறாத மெய் பதுமினி என – நறுமணம் நீங்காத உடல்
படைத்த பதுமினியைப்போல, செழு மறை நுவல் மடம் பாவை – பயன்
விளைக்குந் தன்மையுள்ள வேதமந்திரத்தைக் கூறிய அந்த மடந்தையின்,
அம்புயம் ஆனனம் – தாமரைபோன்ற முகம், மலர்வு உற – மலர்ச்சிடைய,
கரங்களால்-, அழகுஎய்த – அழகு பொருந்த, அணைத்தனன்-;

     சூரியன் தனதுகிரணங்களால் நறுமணம்நீங்காத தாமரை யோடையின்
தாமரை முகம்மலரத் தழுவுவதுபோல, தன்னுடலில் நறுமணம்நீங்காத
பதுமினியென்னும் உத்தமசாதிமாதரான குந்தியின் தாமரைபோன்றமுகம்
மலர்ச்சியடையத் தன்கைகளாலணைத்தன னென்பதாம். சிலேடையையும்
உருவகத்தையும் அங்கமாகக் கொண்டுவந்த உவமையணி. மாதராரில், பதுமினி
சித்ரிணி அத்தினி சங்கினி என்று நான்குசாதியுள்ளன என்பதை, வாத்ஸ்யாயனம்
முதலிய நூல்களா லறியலாம். பதுமினிசாதிமாதின் உடல் நறுமணம் வீசு
மென்பது, நூற்கொள்கை.  

‘கன்னி, கன்னி; என் கை தொடேல்; மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி!’
என்ன மெய் குலைந்து, அலமர, நாணினாள்; இதயமும் வேறு ஆகி
அன்ன மென்னடை அஞ்சினள் அரற்றலும், அருகு உறான்,
விடப்போய் நின்று,
‘உன்னி என்னை நீ அழைத்தது என்பெற?’ என உருத்தனன்,
உரைசெய்வான்மடந்தையரின் கற்பை யறிபவனான நீ என்னைத்
தொடாதே’ என்று பிரதை கூற, சூரியன் கோபித்துக்
கூறலுறுதல்.

அன்னம் மெல் நடை – அன்னப்பறவையின் நடை போன்ற
மெல்லியநடையையுடையபிரதை,- மெய்குலைந்து அலமர – உடம்பு நடுங்கிக்
குலைய,- நாணினாள் – நாணங்கொண்டு, இதயம் உம்வேறு ஆகி-,- அஞ்சினள்
– அச்சங்கொண்டவளாய், ‘கன்னி கன்னி – (நான்) கன்னிகையாவேன்
கன்னிகையாவேன்: என் கை தொடேல் – என்கையைத் தீண்டாதே: மடந்தையர்
கற்பு – மடந்தைமாரின் கற்பை, நீ-, அறிகிற்றி- அறிவாயன்றோ!’ என்ன –
என்று, அரற்றலும் – கதறவும்,- (சூரியன்), அருகு உறான் – (அவளுடைய)
சமீபத்தை யடையாதவனாய்,- விட போய் நின்று – சற்ற விலகிப் போயிருந்து,
(அந்தப்பிரதையைநோக்கி),- ‘உன்னி- நினைத்து, என்னை-, நீ-, அழைத்தது-,
என் பெற – என்னபயனைப் பெறும் பொருட்டு?’ என – என்று, உருத்தனன் –
கோபித்தவனாய்,- உரை செய்வான்- (பின்னுஞ்) சொல்பவனானான்; (எ-று.)

உருக் கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது, ஒளித்து
நான் வரவே, நீ
வெருக் கொளா எனை மறுத்தனை; உனக்கு முன் மெய்ம் மறை
உரைசெய்த
குருக்கள் என்படான்? என்படாது அரிவை நின் குலம்?’ என,
கொடித் திண் தேர்
அருக்கன் மெய்யினும் மனம் மிகக் கொதித்தனன், ஆயிரம்
மடங்காக,-இரண்டுகவிகள் – சூரியன் பின்னுங்கூறியன தெரிவிக்கும்.

‘உரு கொள் சாயைஉம் – உருவத்தைக்கொண்ட சாயா தேவியும்,
உழை உம் – உஷாதேவியும், அங்கு – வானில், அறிவுறாது – அறியாதபடி,
ஒளித்த-, நான்-, வரஏ – வந்திருக்கவும்-, நீ-, வெருக்கொளா – அஞ்சி, எனை –
என்னை, மறுத்தனை – (உடன்சேரவொட்டாமல்) மறுத்திட்டாய்: உனக்கு-
(இப்படிப்பட்ட) உனக்கு, முன் – முன்பு, மெய் மறை –
தவறாமற்பலிக்குந்தன்மையுள்ள வேதமந்திரத்தை, உரைசெய்த – சொல்லிய,
குருக்கள் – குருமார், என்படார் – என்னபாடு படமாட்டார்? [நீ இப்போது
மறுத்ததன் பயனாக உனக்கு உபதேசித்த குருமாரைச் சபித்திடுவேன் என்றபடி]:
அரிவை – பெண்ணே! நின் குலம் – நீ பிறந்தகுலம், என்படாது – என்ன தீங்கை
யடைந்திடாது [என் சாபத்தினால் நின்குலமே யழிந்திடும் என்றபடி] ‘, என –
என்று, கொடி திண்தேர் அருக்கன் – கொடி கட்டிய வலிய தேரையுடைய
சூரியன், மெய்யின்உம் – தன்னுடம்பைவிட, ஆயிரம் மடங்கு ஆக-, மிக –
மிகவும், மனம் கொதித்தனன்-; (எ-று.)

     உழை சாயையென்பவர் சூரியனுடைய மனைவிமாராவர். சாயை யென்பது –
நிழலென்னும்பொருளையு முடைய தாதலால், அதனினும் வேறுபாடு தோன்ற,
‘உருக்கொள் சாயை’ என்றது. “கரோமியாவத்தவ மந்த்ரதாயிநம் – மதீய
சாபோரகவேஷ்டிதம்முநிம்” என்று பாலபாரதத்தில் வருதற்கு ஏற்ப, ‘மறையுரை
செய்தகுருக்களென்படார்’ என்பதற்குச் சாபத்தினாலழிவ ரென்று
உரைக்கப்பட்டது.  

உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ; உடன்படும்
உணர்வால். ‘நல்
வினை அளித்தது’ என்று அணைதியேல், இன்பமும்
விழைவுறும்படி துய்த்தி;
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு
இகல் மைந்தன்-
தனை அளித்தி; மற்று என்னினும் இரு நிலம் தாள்
தொழத் தக்கோனே.’

உனை அளித்தவன் – உன்னைப்பெற்றவன், முனியும்- சினப்பான்,
என்று-, அஞ்சல் – பயப்படாதே: நீ-, உடன்படும் – சம்மதிக்கின்ற, உணர்வால் –
உணர்ச்சியோடு, நல் வினை அளித்தது என்று – நல்வினை (இவனைத்)
தந்ததென்றுகருதி, அணைதி ஏல் – (என்னைச்) சேர்வையானால், இன்பம்உம்-,
விழைவுஉறும்படி- (மனத்தில்) விருப்பமுண்டாகும்படி, துய்த்தி – நுகர்வாய்:
எனை அளித்த தொல் அதிதியின்-என்னைப்பெற்ற பழமையான அதிதிபோல,
உனக்கு-, இசை – புகழ், எய்தும் ஆறு – உண்டாகும்படி, இகல்
மைந்தன் தனைஉம் – வலிமையுள்ள மைந்தனையும், அளித்தி –
உண்டாக்குவாய்: மற்று – மேலும், (அந்தப்புதல்வன்), என்னின்உம் –
என்னைக்காட்டிலும், இரு நிலம் – பெருவுலகத்தாரால், தாள் தொழதக்கோன் –
தாளில் விழுதற்குரிய மேன்மையுடையவனாவன், (என்றும் கூறினான்); (எ -று.)

      ‘உனை யளித்தவன் முனியுமென்றஞ்சல்’ என்பதற்கு – நீ
இப்போதிருப்பதுபோலவே கன்னிகையேயாய்விடுவாய் என்று கருத்துக்
காணலாம்: “ந கந்யகாபாவம் இமஞ்ச ஹாஸ்யஸி” என்று பாலபாரதத்தில்
வருவது காண்க: “சூரன தருளினாற் றுலங்கு கன்னிகையாகி” என்று இவரே
பின்னர்க் கூறுவர்.   

ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து, நூறு ஆயிரம் முகமாகப்
போய் இரந்து, இவை உரைத்தபின், மதர் விழிப் புரிவும்
மூரலும்நல்கி,
வேய் இருந் தடந் தோள் இடம் துடித்திட, மெல்லியல்,
‘மதன் வேதப்
பாயிரம்கொல்!’ என்று ஐயுற, அவனொடும் பனி மலர்
அணை சேர்ந்தாள்.-சூரியனது புகழ்ச்சியுரைகேட்டுப் பிரதை மலரணை
சேர்தல்.

ஆயிரம் கரத்து அதிபதி – ஆயிரங்கிரணங்களையுடைய
(ஒளிகட்கெல்லாம்) அதிபதியான சூரியன், நூறு ஆயிரம் முகம் ஆக புகழ்ந்து –
பலபாடியாகப் புகழ்ந்துகூறி, போய் இரந்து – மிகவும் இரந்து, இவை
உரைத்தபின் – இவ்வார்த்தைகளைக் கூறியபின்,- மெல்லியல் – அந்தப்பிரதை,
மதர் விழி பிரிவுஉம் – மதர்த்தகண்ணின் மூலமாக(த் தன்) விருப்பத்தையும்,
மூரல்உம் – புன்சிரிப்பையும், நல்கி – தந்து,- வேய் இருந் தட தோள் இடம்
துடித்திட – மூங்கில்போன்ற மிகப்பெரியதோள் இடப்புறந் துடிக்க,- ‘மதன் வேதம்
பாயிரம் கொல் – மன்மத வேதத்தின் பாயிரமோ (இது)?’ என்று-, ஐயுற – ஐயம்
மனத்திலுண்டாக, அவனொடுஉம் – அந்தச் சூரியனோடும், பனி மலர் அணை –
குளிர்ந்த புஷ்பசயனத்திலே, சேர்ந்தாள்-; (எ-று.)

     பாயிரமென்பது – நூற்குப் புறம்பானது; நூலுக்குத்தோற்றுவாயாவது.
மதன்வேதம் என்பது இங்கேயிலக்கணையால், காம சாஸ்திரத்திலுணர்த்தப்படும்
காரணங்களுக்கு ஆகுபெயர். இடந்துடித்தது. இனி விரைவிற்
புணர்வுநிகழுமென்பதைக் குறிப்பிப்பதாதலால். அது மதனவேதத்தின் பாயிரமென
ஐயுறத்தக்கதாயிற்று.   

தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக,
தன தடம் திருமார்பு உறத் தழீஇயபின், தையல் தன்
நினைவு எய்த,
மனம் மகிழ்ந்ததும், வந்ததும், மணந்ததும், வரம் கொடுத்ததும்,
எல்லாம்
கனவு எனும்படி, கரந்தனன் பெருந்தகை; கன்னியும்
கருக் கொண்டாள்.-புணர்ச்சியில் அவசமாகிய பிரதை பின் தன்வசமாக,
சூரியன் கரத்தலும் அவள் கருக்கொள்ளுதலும்.

தினகரன் – சூரியன், சுடர் வடிவம்உம் – (தன்) தேஜோ மயமான
வடிவமும், அமிர்து எழு திங்களின் வடிவுஆக – அமிருதம் தோன்றப்பெற்ற
சந்திரனுடைய வடிவுபோன்றிருக்க,- தன தடம் திரு மார்பு உற –
(அந்தப்பிரதையின்) கொங்கைத்தலம் (தன்) அழகிய மார்பிலே பொருந்த,
தழீஇயபின் – தழுவிப்புணர்ச்சி நிகழ்த்திய பின்,- தையல் – அந்தப்பிரதை, தன்
நினைவு எய்த – தன்வசத்தையடைய, – மனம்  மகிழ்ந்ததும் – (தன் இசைவால்
அந்தச்சூரியன்) மனமகிழ்ச்சி யடைந்ததும், வந்ததுஉம் மணந்ததுஉம்-வந்து
(தன்னை அச்சூரியன்) கூடியதும், வரம்கொடுத்ததுஉம் – (அந்தச் சூரியன்
கன்னிகை யாவாயென்று) வரங்கொடுத்ததும், எல்லாம்-, கனவு எனும்படி-,
பெருந்தகை – பெருமைக்குணமுள்ள அந்தச் சூரியன், கரந்தனன் – மறைந்தான்;
கன்னிஉம் – அந்தக்கன்னிகையான பிரதையும், கருக் கொண்டாள் –
கருப்பமடைந்தாள்; (எ-று.)

      தன – தன்னுடைய, தட திருமார்பு – விசாலமான அழகிய மார்பு
என்றுமாம். வரம் – துருவாசன் உபதேசித்த சிறந்த மந்திரம் என்பாருமுளர்.
பெருந்தகை – அன்மொழித்தொகை: பெருந்தகைக் கன்னி எனின், கன்னிக்கு
விசேடணம்.

அந்தி ஆர் அழல் எனப் பரிதியின் ஒளி அடைந்த பின்,
அணி மாடக்
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட
கொள்கையள் ஆகி,
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன
தரத் தக்க,
மைந்தனானவன் ஒருவனைப் பயந்தனள், மாசு இலா
மணி என்ன.-குந்தி மைந்தனொருவனைப் பெறல்.-பெற்ற மகனைக் குந்தி பெட்டியில்
பொதிந்து கங்கையில் விடுதல்

பரிதியின் ஒளி – சூரியனுடைய ஒளிமயமாகிய கருப்பம், அடைந்த
பின் – (தன்வயிற்றைச்) சேர்ந்தபிறகு, அணிமாடம் குந்தி போசன் மா மடம்
மகள் – அழகிய மாடத்திலிருந்த குந்தி போசனுடைய சிறந்த மடப்பத்தையுடைய
மகளாகிய அந்தக் குந்தி,- அந்தி ஆர் அழல் என – அந்திக்காலத்து (ச் சிகை)
நிரம்பிய அக்கினிபோல, எழில் நலம் கொண்ட – அழகின்சோபையைப் பெற்ற,
கொள்கையள் ஆகி – தன்மையை யுடையவளாய்,- இந்திர ஆதியர் அவர்
அவர் இரந்தன முகம்மலர்ந்து தரத்தக்க – இந்திரன் முதலிய அந்த அந்த
இரப்பாளர் இரந்தவற்றை முகம் மலர்ந்து கொடுத்தற்கு  உரிய, மைந்தன்
ஆனவன் ஒருவனை – ஒப்பற்ற ஒரு மைந்தனை, மாசு இலா மணி என்ன –
(சமுத்திரக்கரை) சிந்தாமணியைப்பெற்றதுபோல, பயந்தனள்- பெற்றாள்:எ-று.)
அமருண்கட்குந்தி என்றும் பாடம்.

     “அநுப்ரவேசாத் அயம் ஆத்மதேஜஸ:- சிகாமிவாக்நேரதிகோஜ்
ஜ்வாலக்ருதிம்…..  அதேப்ஸிதார்த்த ப்ரதிபாதநார்ஹதாம் – உபேயிவாம்ஸம் ஸு ர
பர்த்து ரர்த்திந: அஸூதசிந்தாமணி மூடதேஜஸம் – ஸமுத்ரவேலேவ
ந்ருபாத்மஜாஸு தம்” என்ற பால பாரதத்தால், இங்குக்கூறிய உரையைத் தெளிக.
இந்தக் கர்ணன் இந்திர னிரக்கத் தன் கவசகுண்டலங்களைக் கொடுத்த
வரலாற்றை உத்தியோகபருவத்திற் காணலாம். மாலைக்காலத்துச் சூரியனொளியை
அக்கினி பெறுகிறானென்ப.   

சூரன் மா மகள், சூரனது அருளினால், துலங்கு
கன்னிகை ஆகி,
வார மா மணிக் கவச குண்டலத்துடன் வரும் மகன்
முகம் நோக்கி,
பார மா மரபினில் பிறந்தவர் மொழிப் பழுதினுக்கு
அழுது, அஞ்சி,
பூர மா நதி, பேடகத்திடை நனி பொதிந்து, ஒழுக்கினள்
மன்னோ.-சூரன்பெண்ணாகிய குந்தி மகப்பெற்ற அப்புதல்வனை உலகப்
பழிப்புக்கு அஞ்சி ஒருபெட்டியில் வைத்து நதிப் பெருக்கிலே
விட்டிடுதல்.

சூரன் மா மகள் – சூரனுடைய சிறந்த பெண்ணாய் பிறந்த பிரதை,
சூரனது அருளினால் – சூரியனுடைய கருணையினால், துலங்கு கன்னிகை ஆகி
– விளங்குகின்ற கன்னிப்பருவத்தை யடைந்து, வாரம்- (தன்) அன்பிற்குரிய, மா
மணி கவசகுண்டலத்துடன்வரும் மகன் – சிறந்தமணிகளழுத்திய
கவசகுண்டலத்துடன் தோன்றிய மைந்தனுடைய, முகம் – முகத்தை, நோக்கி-,
பாரம் மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு – பெருமைபெற்ற
சிறந்தவமிசத்திலே பிறந்தவர் கூறும் பழிமொழிக்கு, அஞ்சி – பயந்து, அழுது-,
பேடகத்திடை நனி பொதிந்து – பெட்டியிலே வைத்து நன்குமூடி, மா நதி பூரம் –
சிறந்த நதியின் பெருக்கில், ஒழுக்கினள் – (தனக்கு அந்தரங்கரான
தோழியர்மூலமாகச்) செலுத்தினாள்; (எ-று.)

     “ஸு ரஸ்ரவந்த்யாம் அபவாதசங்கிதா – ஸகீபி ராப்தாபி ரஸாவமோசயத்”
என்று கங்கைப்பெருக்கில்விட்டதாகப் பாலபாரதமும் அசுவநதியிலே விட, அது
சர்மண்வதி நதியிலும், அது யமுனையிலும், அதுகங்கையிலும் சேர்ப்பித்தனவாக
வியாச பாரதமும் கூறும்.

குஞ்சரத்து இளங் கன்று என, சாப வெங் கோளரி என,
பைம் பொன்
பஞ்சரத்திடை வரு திரு மதலையைப் பகீரதி எனும்
அன்னை,
அம் சரத் திரைக் கரங்களால் எடுத்து எடுத்து, அசையவே
தாலாட்டி,
வெஞ் சரச் சிலைச் சூதநாயகன் பதி மேவுவித்தனள்
அன்றே.பாகீரதி அந்தப்பெட்டியைச் தலைமைச்சாரதியின்
நகரிற்சேர்ப்பித்தல்.

குஞ்சரத்து இள கன்று என – யானையின் இளங்கன்று போலவும்,
பைம் பொன் பஞ்சரத்திடை வரு சாபம் வெம்கோள் அரி என –
பைம்பொன்மயமான கூட்டினிடையே வருகின்ற குட்டியான கொடிய
கொல்லுந்தன்மையுள்ள சிங்கம்போலவும், (பெட்டியிலிருந்தபடியே வந்த),
திருமதலையை – சிறந்த அந்தக்குழந்தையை, பகீரதி எனும் அன்னை – பாகீரதி
யென்கிற தாய், அம் சரம் திரை கரங்களால் – அழகிய சலிக்குந்தன்மையுள்ள
அலையாகிறகைகளால், எடுத்து எடுத்து-, அசைய (ஊஞ்சலிலாடுவதுபோல்)
அசையுமாறு, தாலாட்டி-, என்று ஏ-(ஆற்றில்விட்ட) அந்தத்தினத்திலேயே, வெம்
சரம் சிலை சூத நாயகன் – கொடுஞ்சரங்களைக்கொண்ட வில்லை யேந்திய
தேர்ப்பாகர் தலைவனான அதிரதனென்பானுடைய, பதி – நகரத்தில், மேவுவித்தனள்
– சேர்பித்ததாள்;(எ-று.)

     பெட்டியிலிருக்கும் மதலைக்குக் கூட்டிலிருக்கும் சிங்கக்குட்டி யுவமை:
“க்ரமேணமஞ்ஜூஷிகயா த்ருதம்தயா – சிசும் ஹரே. பஞ்ச ரவர்த்திநம்யதா
தரங்கடோலாந்தரலாலிதம் சநை:- நிநாய தம்ஸூ தபுராந்திகம் நதீ” என்ற
பாலபாரதம் காண்க. சஞ்சரத்திரை என்றும் பாடம்.அன்றே – அசையுமாம்

கோடு அகப்பட வரும் புனல் விழைவினால், குளிர் துறை
மருங்கு உற்றோர்,
பேடகத்திடை ஒழுகிய தினபதி பெருங் குமரனைக் கண்டு,
சூடகக் கை அம்புய மலர் இராதையும், சூத புங்கவன்தானும்,
ஆடகக் குலம் அடைந்தது ஒத்து, அரும் பெறல் ஆதரத்தொடு
கொண்டார்.-கரைமருங்கையடைந்த சாரதியும் அவன்மனைவியும்
நதிப்பெருக்கில் வந்தபெட்டியிற் குமரனைக்கண்டு
பெருமகிழ்ச்சியடைதல்.

கோடு அகம்பட – இரு கரையும் தன்னுட்பொருந்த, வரும் –
வந்த, புனல் – நீர்ப்பெருக்கைக்காண்பதில், விழைவினால் – விருப்பினால்,
குளிர்துறை மருங்கு – குளிர்ந்தநீர்த்துறையினருகே, உற்றோர் –
அடைந்தவராகிய, சூடகம் கை அம்புயம் மலர் இராதை உம் சூதபுங்கவன்
தான்உம் – சூடகமணிந்த கையாகிய தாமரை மலரையுடைய
இராதையென்பவளும் பாகர்தலைவனாகிய அதிரத னென்பானும், ஒழுகிய –
(நதிப்பெருக்கிலே) அடித்துக்கொண்டு வரப்பெற்ற, பேடகத்திடை – பெட்டியிலே,
தினபதி பெருங் குமரனை கண்டு – சூரியனுடைய சிறந்தகுமாரனைப் பார்த்து,
ஆடகம் குலம் அடைந்தது ஒத்து – (வறியோர்) பொற்குவியலைப்பெற்றாற்
போன்று, அரும்பெறல் ஆதரத்தொடு.பெறுதற்கு அரிய பிரீதியோடு, கொண்டார்
– (அந்தப்புதல்வனையெடுத்து வளர்க்குமாறு) கொண்டார்கள்;

     இராதை – அதிரதன்மனைவி. பெட்டியில் குழந்தையுடனே ரத்னங்களையும்
வைத்து நதிப்பெருக்கிற் குந்திதேவி விட, அதிரதன் அந்தப் பெட்டியை
எடுத்தபோது இரத்தினங்களுடனே பெற்றானாதலால், அந்தப்புதல்வனுக்கு வஸு
ஷேணன் [சம்பத்தின்தொகுதியையுடையவன்] என்று பெயரிட்டான்.
குண்டலக்காதனாய்த் தோன்றியதனால், கர்ணனென்று பெயர். இப்பெயர் சூரியன்
அசரீரிவாணியாய் வழங்கியதென்பர், மேல் கிருட்டிணன் தூது சருக்கம் செய்யுள்
154-இல். 

அதிரதன் திருமனையினில் விழைவுடன் அரும்பிய பனிக் கற்றை
மதி எனும்படி வளர்ந்து, திண் திறல் புனை மழுவுடை வர ராமன்
பதயுகம் தொமூஉ, வரி சிலை முதலிய பல படைகளும் கற்று,
‘கதிரவன் தரு கன்னன்’ என்று, உலகு எலாம் கைதொழும்
கவின் பெற்றான்.-அதிரதன்மனையில் வளர்ந்த கர்ணன் பரசுராமனிடம்
வில்முதலியன கற்று விளங்குதல்.

அதிரதன் திரு மனையினில் – அதிரதனுடைய சிறந்த வீட்டிலே,
விழைவுடன் – விருப்போடு, அரும்பிய பனி கற்றை மதி எனும்படி – தோன்றிய
குளிர்ச்சியின் தொகுதியையுடைய பிறைச் சந்திரனென்னுமாறு, வளர்ந்து-, திண்
திறல் புனை – மிக்கவலிமை பூண்ட, மழு உடை – மழுப்படையையுடைய, வர
ராமன் – சிறந்த பரசுராமனது, பத யுகம் தொழூஉ – இருதாள்களிலும் வணங்கி,
வரிசிலை முதலிய பல படைகள்உம் கற்று – கட்டமைந்த வில் முதலிய பல
படைக்கலங்களையும் பயின்று, கதிரவன் தரு – சூரிய பகவான் பெற்ற, கன்னன்
என்று – கர்ணனென்று, உலகு எலாம் கை தொழும் கவின் – உலகத்தாரெல்லாராலுங்
கைகுவிக்கத்தக்க அழகை, பெற்றான்-; (எ-று.)

     இந்தக்கர்ணன் அந்தணவடிவங்கொண்டு பரசுராமனைத் தொழுது அஸ்திர
சஸ்திரங்களிற் பயின்றானென்ப. பலபடைகளும் என்ற இடத்து உம்மையை
முற்றுப்பொருளாகவன்றி எச்சப் பொருளதாகக்கொண்டு, ஏனைக்கலைகளுங் கற்று
என்ப.  

கன்னற் பயந்த கதிர் வெம் முலைக் கன்னிதன்னை
முன்னர்ப் பயந்தோன் முகவோலை உவகையோடு
மன்னர்க்கு எழுத, ‘மடப் பாவை வரிக்கும்’ என்று,
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார்.-அந்தப்பிரதைக்குச் சுயம்வரம் ஏற்படுத்தவே,
மன்னவர்திரளுதல்.

கன்னன் பயந்த – கன்னனைப்பெற்ற, கதிர் வெம்முலை கன்னி
தன்னை – ஒளிபொருந்திய விரும்பத்தக்க முலையையுடைய கன்னிகையை
[பிரதையென்பாளை], முன்னர் பயந்தோன் – முன்பு பெற்றவன், முகம் ஓலை –
[சுயம்வரத்தைப்பற்றிய] திருமுகவோலையை, உவகையோடு – மகிழ்ச்சியோடு,
மன்னவரக்கு எழுத-,- ‘மடம்பாவை – மடமைக்குணமுள்ள பாவைபோன்ற
அந்தப்பிரதை, வரிக்கும் – (நம்மை) விரும்பி மாலைசூட்டுவாள், ‘ என்று -, செல்
நல் வேல்படை முடி மன்னர் – (போரிற்) செல்லவல்ல சிறந்த
வேற்படையையேந்திய முடிசூடிய அரசர், (அந்தச் சுயம்வரத்தின்பொருட்டு),
சென்று சேர்ந்தார்-; (எ-று.)- சென்னற்படிவேல் என்றும் பாடம்.

     இதுமுதல் இருபத்துநான்கு கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
காய்ச்சீர் அல்லது கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிவந்த
கலிநிலைத்துறைகள். இந்தப் பகுப்பில் அடிக்குப் பதினான்கெழுத்துக்கள் அல்லது
பதினைந்தெழுத்துக்களைக்கொண்டு செய்யுள்கள் உள்ளன.

உருவம் சிறந்து, பல கோளும் உதிக்குமேனும்,
மருவும் குமுதம் மதி கண்டு மலருமாபோல்,
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும்
நிருபன்தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள்.-குந்தி பலமன்னரிடையே மணமாலையைப்
பாண்டுவுக்கே சூட்டுதல்.

உருவம் சிறந்து – வடிவத்தினான் மேம்பட்டு, பல கோள்உம் –
பலகிரகங்களும், உதிக்கும் ஏன்உம் – தோன்றுமானாலும்,- மருவும்-
(நீர்நிலையிற்) பொருந்திய, குமுதம் – ஆம்பல், மதி கண்டு – சந்திரனைக்
கண்டு, மலரும் ஆபோல் – மலரும் விதம் போல,- பருவம்செய்- யௌவன
பருவத்தையடைந்த, பைம் பொன் கொடி அன்னவள் – பசும்பொற்கொடி
போன்றவளான அந்தக்குந்தி, பாண்டு என்னும் – பாண்டு என்கிற, நிருபன்
தனக்குஏ – அரசன்திறத்தில்தானே, மணம் – விவாகஞ் செய்து கொள்ளுதற்கு, கூர்
மிக்க, பெருநேயம் – பெருத்த அன்பை, உற்றாள் – பொருந்தினாள்; (எ-று.

தானே உவந்து, தனித் தார் புனை தையல், வென்றி
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர்,
‘யானே தருவன்’ என, மத்திர ராசன் நல்க,
மானே அனைய விழியாளை வதுவைசெய்தான்.-மத்திரராசன் தன்புதல்வியைத் தானே தர, அவளையும் பாண்டு
மணத்தல்.

தான்ஏ – சுயமாகவே, உவந்து – மனமகிழ்ந்து, தனி தார் புனை –
ஒப்பற்ற சுயம்வரமாலையைச் சூட்டிய, தையல் – பெண்ணாகிய குந்தி, வென்றி
ஆன்ஏறு அனையான் – வெற்றிபொருந்திய இடபத்தை யொத்தவனாகிய
பாண்டுவின், உயிர்க்கு-, ஆர் அமிர்து ஆன  பின்னர் – அருமையான
அமிர்தம்போலான பிறகு,- மத்திரராசன்-, யானே தருவன் என நல்க-நானே
(என்மகளை இந்தப் பாண்டுவுக்கு மனைவியாகத்) தருவேன் என்று
சொல்லிக்கொடுக்க,- மான்ஏ அனையவிழியாளை – மானையேயொத்த
கண்ணையுடையவளான மாத்திரியையும், வதுவைசெய்தான்-(அந்தப்பாண்டு)
மணந்தான்;

     இந்த மாத்திரி மத்திரதேசாதிபதியான ருதாயன னென்பவனுக்கு மகள்:
சல்லியனுக்குத் தங்கை. பாலபாரதத்தில், வீடுமன் தன்வில்வலியாற் கவர்ந்து
கொண்டுவந்து மாத்திரியைப் பாண்டுவுக்கு மனைவியாக்கினா னென்று உள்ளது.
வியாசபாரதத்தில் வீடுமன் சென்று மாத்திரியைப் பாண்டுவுக்குத் தருமாறுகேட்க,
மத்திரபதி இசைந்தானென்று உள்ளது.  

எண் உற்ற சூரன், இகல் மத்திர ராசன், என்ன
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும்
கண் உற்ற கானில் விளையாடல் கருதி, அம் பொன்
விண் உற்ற சாரல் இமயப் புறம் மேவினானே.-பாண்டுமன்னவன் வேட்டையாடுமாறு இவ்விரு
மங்கையரோடும் இமயமலைப்புறத்தைச் சார்தல்.

கண்உற்ற – எதிர்ப்பட்ட, கானில் – காட்டிலே, விளையாடல் –
வேட்டையாடுவதை, கருதி – எண்ணி,- (பாண்டுமன்னன்),- எண் உற்ற – நல்ல
மதிப்புப் பொருந்திய, சூரன் – சூரனும், இகல்மத்திரராசன் – பராக்கிரமமுடைய
மத்திரராசனும், என்ன – என்று, மண் உற்ற சீர்த்தி வயமன்னர் – பூமியிலே
பொருந்திய கீர்த்தியை யுடையவலிமைபொருந்திய அரசரின், மகளிரோடும்-,
அம்பொன் – அழகிய பொன்னைக்கொண்ட, விண் உற்ற சாரல் –
வானத்தையளாவிய தாழ்வரையோடுகூடிய, இமயம் – இமயமலையின் – புலம் –
பக்கத்தை, மேவினான் – அடைந்தான்; (எ-று.)

     மகளிரோடும் விளையாடல் கருதி இமயமலைப்புறத்தை யடைந்தானென்று
கூறலாமெனினும், ‘ஆகேடவிஹாரகௌதுகீ – 
ஸபோஜ மத்ராதிபகந்யகாஸக:- யயௌ
வநம் ஹைமவதம் மஹா ரத:” என்று பாலபாரதத்தில் வருவதனாலும், கலைமானினம்
முதலியவற்றை வேட்டையாடினா னென்று மேற்பாடலில் வருவதனாலும்
இங்ஙன்பொருள் கூறப்பட்டது. கண்ணுற்ற – இடமகன்ற எனினுமாம். 

கானத்தில் உள்ள கலைமான்இனம், காட்சி ஆமா,
ஏனத் திரள், வெம் புலி, எண்குடன், யாளி, சிங்கம்,
தானப் பகடு, முதலாய சனங்கள் எல்லாம்
மானச் சரத்தால் கொலைசெய்தனன், வாகை வில்லான்பலமிருகங்களையும் பாண்டு வேட்டையாடுதல்.

வாகைவில்லான் – வெற்றிமாலைசூடிய வில்லையேந்தியவனாகிய
பாண்டு;- கானத்தில் உள்ள – காட்டிலிருக்கின்ற, கலை மான் இனம் –
கலைமானின் கூட்டமும், காட்சி- (கண்ணுக்கு) அழகிய, ஆ மா – காட்டுப்பசுவும்,
ஏனம் திரள் – பன்றியின்கூட்டமும், வெம் புலி – கொடியபுலிகளும், எண்குடன் –
கரடியுடனே, யாளி – யாளியும், சிங்கம் – சிங்கமும், தானம் பகடு –
மதசலத்தையுடைய களிறும், முதல் ஆய – முதலாகிய, சனங்கள் எல்லாம் –
(விலங்கின்) திரள்களையெல்லாம், மானம் சரத்தால் – பெருமைபொருந்திய
அம்பினால், கொலைசெய்தனன் – வேட்டையாடினான்: (எ-று.)- கற்கியாமா என்று
பிரதிபேதம். கூட்டமென்ற பொருளில், சனம் என்றார்.

மெய்யில் தெறித்த குருதித் துளி மேருவில்லி
சையத்து அலர்ந்த கமழ் குங்குமத் தாது மான,
கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம்,
பையத் தணித்தான், இமநாக பவனன் என்பான்.-வேட்டையிளைப்பை இமவானினின்றுதோன்றிய
வாயுபகவான்போக்குதல்.

வேட்டையாடுகையில்), மெய்யில் – உடம்பிலே, தெறித்த-, குருதி
துளி – இரத்தப்பொட்டு, மேருவில்லி சையத்து அலர்ந்த கமழ் குங்குமம் தாது
மான – மேருவைவில்லாகக் கொண்ட சிவபிரானுடைய கைலாசமலையிலே
மலர்ந்த நறுமணம் வீசுகின்ற குங்குமப்பூவின் இதழையொத்துத் தோன்ற,-
கையில் சிலையோடு உலவும் கழல் காளை – கையிலே வில்லுடனே உலாவுகின்ற
வீரக் கழலையணிந்த காளைப்பருவத்தானாகிய அந்தப் பாண்டுவின், கேதம் –
(வேட்டையாடியதனாலுண்டாகிய) இளைப்பை, இமநாகம் பவனன் என்பான் –
இமயமலையினின்றுதோன்றிய வாயுபகவான், பைய – மெல்ல, தணித்தான்-; (எ-று.)

     வெண்ணிறவுடம்பிற் செந்நிறக்குருதித்துளி சிந்தியது – வெள்ளிமயமான
கைலாஸமலையிற் குங்குமப்பூவின் தாது சிந்தியதை யொக்கும்: பவனனென்பான்,
என்பான் – முதல்வேற்றுமைச் சொல்லுருபு. பவனன் என்பதற்கு ஏற்ப,
தணித்தானென ஆண்பாற் பயனிலை வந்தது. சையம் – சைலமென்பதன் திரிபு:
ஸஹ்யமென்பதன் திரிபு என்றால், சிறப்புப்பெயர் பொதுப்பொருளில்
வந்ததென்க.  

பொன் அம் கழலான் எதிர், அவ் இடை, போகம் வேட்டு,
மன்னும் கலையும் பிணைமானும் மகிழ்ச்சி கூர,
மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில்,
முன் நின்றது, அந்த உயிர், வந்து ஒர் முனிவன் ஆகி,-மானுருவங்கொண்டு கிரீடித்த கிந்தமனென்ற
முனிவனைப்பாண்டுமன்னன் அம்பினால் விழுத்தல்.

அ இடை – அவ்விடத்து, அம் பொன் கழலான்எதிர் – அழகிய
பொற்கழலைப்பூண்டவனான அந்தப்பாண்டுவின்எதிரிலே, போகம வேட்டு –
புணர்ச்சியை விரும்பி, மன்னும் – வேடம்பூண்ட, கலைஉம் – ஆண்மானும்,
பிணைமான்உம் – பெண்மானும், மகிழ்ச்சிகூர- மகிழ்ச்சி மிகாநிற்க,- இவன் –
இந்தப்பாண்டு, மின்னும் கணையால் – ஒளிவிடுகின்ற அம்பினாலே, எய்திட –
(கலைமான்மீது) தொடுத்து விட, (அதனால்), வீழ்ந்த போதில் –
விழுந்தபொழுதில், அந்த உயிர் – இறந்திடும் அந்தப்பிராணி, ஒர் முனிவன்
ஆகிவந்து முன் நின்றது-; (எ-று.)

      ‘போகம்வேட்டு மகிழ்ச்சிகூர’ என்றமையால், அவ்விரண்டும்
புணர்ச்சியின்பத்தி லாழ்ந்திருந்த தென்பதும், வீழ்ந்தபோது முனிவனாகி
முன்னின்ற தென்றமையால், இந்தப் பாண்டுவின் அம்புபட்டது கலைமானின்மே
லென்பதும் பெறப்படும்.  

நாரிக்கு ஒரு கூறு அரனார், முதல், நல்க, எய்த
வேரிக் கணையால் மிக நொந்துழி, வேடம் மாறி,
பூரித்த காமநலம் எய்து பொழுது, நின் கைச்
சோரிக் கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன்.-இதுவும் அடுத்தகவியும் – ஒருதொடர்: மானுடவடிவம் ஆன
முனிவன் தன் வரலாறுகூறி மன்னவனைச் சபித்தமை தெரிவிக்கும்.

நாரிக்கு ஒரு கூறு அரனார் – உமாதேவிக்கு (த் தமது)
வாமபாகத்தைக் கொடுத்தவரான சிவபிரான், முதல் – முற்காலத்திலே, நல்க
(நெற்றிவிழிக்கனலால் எரிப்புண்ட மன்மதனை) அருள் செய்து பிழைப்பிக்கவே,
(அந்தமன்மதன்), எய்த-, வேரி கணையால்- தேனைக்கொண்ட மலரம்புகளினால்,
மிகநொந்த உழி – மிகவும் (உடல்) நொந்ததனால், (நான்), வேடம் மாறி –
மானுஷவேஷம்மாறி, (மான் வேஷத்தைக்கொண்டு), பூரித்த காமம் நலம் – மிக்க
காமசுகத்தை, எய்தும் பொழுது – அடைந்தபோது, நின் கை சோரி கணையால் –
உன்கையிலுள்ள இரத்தக்கறையுள்ள அம்பினாலே, அறையுண்டு – மோதப்பட்டு,
உயிர்சோர்ந்து – உயிர்தளர்ந்து [இறந்து], வீழ்ந்தேன்-வீழ்ந்திட்டேன்;(எ-று.)

     நாரிக்கொருகூறரனார் முதனல்கவெய்தவேரிக்கணை யென்றதனால்,
கடவுளரையும் மயக்கவல்லது அந்தமன்மத பாணமென்க.  

என் போல இன்பத்திடை நீயும் இறத்தி!’ என்னா,
அன்போடு இறந்தான், முதல் கிந்தமன் ஆன பேரோன்;
தன்போல் மகிழ்நனுடனே செந்தழலின் எய்தி,
பின் போயினள், மென் பிணை ஆன அப் பேதைதானும்.

என்போல – என்போலவே, இன்பத்திடை – காமவின்பத்தை
யனுபவிக்கும்போதில்தானே, நீ உம்-, இறத்தி – இறந்திடுவாய், என்னா- என்று,
அன்போடு – காதலோடு, கிந்தமன் ஆன பேரோன் – கிந்தமனென்று
பேரையுடைய அம்முனிவன், இறந்தான்-; மெல் பிணை ஆன அ பேதை
தான்உம் – (ஆண்மானான அந்தக் கிந்தமனோடு கிரீடிக்கும்பொருட்டு)
மெல்லியபெண்மானான அந்த அவன் மனைவியும், தன்போல் மகிழ்நனுடனே-
தனக்கு ஒத்த கணவனுடனே, செந் தழலின் எய்தி – செந்நிறத்தீயிற் சேர்ந்து,
பின் – (அவனைத்) தொடர்ந்தே, போயினள்-;(எ-று.)

     கிந்தமுனிவன் பாண்டுவுக்குச் சாபங்கொடுத்து இறந்தபின் அவன் மனைவி
சிதையடுக்கி அதில் அவனுடம்பையேற்றி நெருப்பு வைத்து அத்தழலில்
தன்னுடம்பை நீத்தாளென்க. கணவனுடன் தீப்பாய்ந்தவர், அவன்புக்க உலகம்
புகுவரென்பது இங்கு அறியத்தக்கது.      

நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின், நெஞ்சின் வேறு ஓர்
இனைவு அற்று, ‘நன்மை இதுவே இனி’ என்று தேறி,
மனை வைத்த காதல் மடவாருடன், மன்றல் வேந்தன்,
முனை வைத்த வாய்மை முனிக் கானம் முயன்று சேர்ந்தான்.-இதுவும் அடுத்தகவியும் – பிறகு பாண்டு பத்தினிமா
ரோடுதபோவனஞ்சேர்ந்து அருந்தவஞ் செய்தமை கூறும்.

நினைவு அற்ற – நினைவு நீங்கிய [புத்திபூர்வகமாக வல்லாமற்
செய்த செயலின் பயனாகநேர்ந்த], சாபம் நிலை – சாபத்தின் நிலைமையை,
பெற்ற பின் – அடைந்தபின்,- நெஞ்சின் – (தன்) மனத்திலே, வேறு ஓர் இனைவு
அற்று – வேறொரு வருந்தத்தக்க விஷயத்தை யெண்ணுதலைத் தவிர்ந்து, இனி
நன்மை இது ஏ என்று தேறி – இனி (நமக்கு) நன்மை தருவது இந்தத்தவநெறியே
யென்று  தெளிந்து,- காதல் வைத்த மனை மடவாருடன்- (தன்னாற்)
காதலிக்கப்பெற்ற மனைவிமாருடனே, மன்றல் வேந்தன்- (அவர்களை)
மணஞ்செய்துகொண்டவனான பாண்டுராசன், முனை வைத்த வாய்மை –
(நல்லவற்றுள்) முதன்மையாக் கணிக்கப்பட்ட மெய்ம்மையையுடைய, முனி –
இருடிக்குரிய, கானம் – காட்டை, முயன்று -(தவத்தில்)முயற்சியெடுத்துக்கொண்டு,
சேர்ந்தான்-;

     நன்மைபெறுதற்குரியமார்க்கம் தவமே யென்ற காரணத்தால், நன்மை
யிதுவேயினியென்றுதேறினான். “யாமெய்யாக்கண்டவற்றுளில்லையெனைத்
தொன்றும், வாய்மையினல்லபிற” என்ப ஆதலால், ‘முனைவைத்தவாய்மை’
என்றாரென்னலாம். “நிராசா பரமம் ஸு கம்” என்றபடி ஆசையையொழிக்கவே
துன்பம் நீங்கி இன்பமுண்டாகுமாதலால், ஆசையையொழித்து என்ற பொருளில்,
‘நெஞ்சின்வேறோரினைவற்று’ என்றது. மனைவிமாரைத்துறந்து
தவஞ்செய்யவிரும்பிய பாண்டுமன்னன் அம்மனைவியரின் வேண்டுகோளினால்
அன்னாருடன் தவஞ்செய்யச் செல்லலாயினனென்று வியாசபாரதத்தாற் பெறப்படும்.
வனைவற்றகாதல், முனைவற்ற வாய்மை என்பன பாடாந்தரங்கள்.

காண்டற்கு அரிய மணிப் பைம் பொற் கலனொடு, ஆடை,
வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி,
தீண்டற்கு அரிய திருமேனியன், தேவராலும்
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான்.-பாண்டுவின் தவ நிலை

தீண்டற்கு அரிய திரு மேனியன் – (பிறராற்) பெறுதற்கரிய
ஒளியை(த் தன்) உடம்பிற்கொண்டவனாயிருந்த அந்தப் பாண்டு,- காண்டற்கு
அரிய – காண்பதற்கு அருமையான [அருமைப்பட்டுத் தேடியடைதற்குரிய], மணி
– இரத்தினங்களினாலும், பைம்  பொன் – பசும்பொன்னினாலுமியன்ற, கலனொடு
– அணிகலன்களுடனே, ஆடை- பொற்பட்டாடையும், வேண்டற்கு அரிய –
வேண்டிப்பெறுதற்கு அருமையான, விடயங்களின் – ஐம்புலன்களினோடு, வேடம்
– (தன் அரசக்) கோலத்தையும், மாற்றி – ஒழித்திட்டு,- தேவராலும்,- பூண்டற்கு
அரிய – மேற்கொள்ளுதற்கு அருமையான, பெரு மா தவம் – பெருமைபெற்ற
சிறந்த தவத்தை, பூண்டு கொண்டான்-; (எ-று.)

     அணிகலன்களை அணிதலை யொழித்துச் சடைமுடி மரவுரி முதலிய
தவக்கோலத்தைப்பூண்டு,  பாண்டு தவஞ்செய்யலாயின னென்பதாம். பாண்டு
சதச்ருங்கபர்வத்தில் தவம்புரிந்தானென்று நூல்கள் கூறும்.    

உற்றுப் புறத்துப் பகை ஆடி உடன்ற எல்லாம்
செற்று, புவியில் தனி ஆழி செலுத்து நீரான்,
பற்று அற்ற யோகப் படையால், உட்பகைகள் ஆறும்
முற்றத் துறந்து, பெரு ஞான முதல்வன் ஆனான்.-பாண்டு ஞானமுனியாதல்.

புறத்து – வெளியிலே, பகை உற்று – பகையாகப்பொருந்தி, ஆடி –
(எதிரிலே) சஞ்சரித்து, உடன்ற எல்லாம் – மாறுபட்ட எல்லாரையும், செற்று –
அழித்து, புவியில் – பூமியிலே, தனி ஆழி – ஒப்பற்ற ஆஜ்ஞாசக்கரத்தை,
செலுத்தும் – நடத்திய, நீரான் – தன்மையனாயிருந்த பாண்டு மகாராசன்,- பற்று
அற்ற – நசையென்பதை நீக்குவதனாற் பெறுகின்ற, யோகம் படையால் –
யோகமென்று சொல்லப்படுகின்ற ஆயுதத்ததால், உட்பகைகள் ஆறுஉம் – காமம்
குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் ஆறுபகைகளையும், முற்ற
– முழுவதும், துறந்து – ஒழித்து, பெருஞானம் முதல்வன் –
பெருத்தஞானத்தைப்பெற்ற முதல்வனாக, ஆனான்-; (எ-று.)

     புறப்பகையைவென்று ஆஜ்ஞாசக்கரத்தைச் செலுத்திய தலைவனான
பாண்டு, இப்போது அகப்பகையையொழித்து ஞானத்தைச்செலுத்தும்
முதல்வனானானென்க: ஒருவனிடத்து மாறன இருநிலைதோன்றியனவெனக் கூறியது
– முறையிற்படர்ச்சியணி எனப்படும் பரியாயவணியாம் . காமம்முதலியவற்றைப்
பகையென்றதற்கு ஏற்ப, யோகத்தைப் படையென்றார்: இயைபுருவகம்

ஆரக் குழம்பில் அளைந்து, ஆரம் அணிந்து, விம்மும்
பாரக் குசங்கள் பல தைவரும் பான்மை நீங்கி,
நாரக் கமல கர சோதி நகங்கள், மீள,
ஈரக் குசங்கள் கிழிக்கும் தொழிற்கு ஏற்றவாலோ!இரண்டுகவிகள் – பாண்டுவின் தவநிலைமை கூறும்.

ஆரம் குழம்பில் – சந்தனக்குழம்பிலே, அளைந்து – துழாவி,
ஆரம் அணிந்து – முக்தாஹாரத்தை யணிந்து, விம்முன்- பருக்குந்
தன்மையுள்ள, பாரம் குசங்கள் பல – பலவான பாரமாகிய கொங்கைகளை,
தைவரும்-திளைக்கிற, பான்மை-தன்மையை,நீக்கி-,நாரம் கமலம் கரம் சோதி
நகங்கள் – நீரிலுள்ள தாமரைபோற் பொலிகின்ற கையிலேயுள்ள சோதியுள்ள
நகங்கள், மீள – மீண்டும், ஈரம் குசங்கள் கிழிக்கும் – ஈரமுள்ள
தருப்பைப்புற்களைப் பறிக்கின்ற, தொழிற்கு-, ஏற்ற – ஏற்பனவாயின; (எ-று.)-
ஆல் – வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்: நிலைமாறியது குறித்து வியந்தபடி.
இதுவும், கீழ்ச்செய்யுளிலுள்ள அணியே, குசும் – தருப்பை

நாமக் கலவி நலம் கூர நயந்து, நாளும்
காமக் கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி,
தாமக் குழலார் இருவோரொடு தானும் ஒன்றி,
ஓமக் கனலே வளர்த்தான், உணர்வு உண்மை கண்டான்

நாமம் – பிரசித்தமான, கலவி நலம் – கலவியின்பம், கூர – மிக,-
நயந்து – விரும்பி, நாள்உம் – நாடோறும், காமம் கனலை – காமாக்கினியை,
வளர்க்கின்ற-, கருத்து- எண்ணத்தை, மாற்றி – நீக்கி,- தாமம் குழலார்
இருவோரொடு – மாலையணிந்த கூந்தலையுடையரான (குந்தி மாத்திரி என்ற)
இருமனைவிமாருடனே, தான்உம்-, ஒன்றி – கூடியிருந்து, ஓமம் கனல்ஏ
வளர்த்தான் – ஓமஞ் செய்தற்குரிய அக்கினியையே வளர்த்தவனாய், உண்மை
உணர்வு – தத்துவ ஞானத்தை, கண்டான் – பெற்றிருந்தான்; (எ-று.)

     கனலைவளர்த்தது – அதனிடையிலிருந்து தவஞ்செய்ய என்னலாம்: இனி,
யோகத்துக்கு அங்கமாகச் செய்யப்படுஞ் சடங்குக்கு என்பாரு முளர்.

இவ்வாறு அரிய தவம் நாள்தொறும் ஏறும் எல்லை,
கை வாள் ஒழிந்து, சமித்து ஏந்திய காவல் மன்னன்,
மை வாள் நெடுங் கண் வர சூரன் மகளை நோக்கி,
செவ் வாய் மலர்வான், புவிமேல் உறை தெய்வம் அன்னான்இங்ஙன் தவம்புரிந்துவருகையில், ஒருகால் குந்தியை
நோக்கிப் பாண்டுமன்னவன் கூறத்தொடங்குதல்.

புவிமேல் உறை தெய்வம் அன்னான் – பூமிமீதுவாழ்கின்ற
தெய்வத்தை யொப்பவனான, கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய – கையிலே
வாட்படையை நீங்கிச் சமித்தைத் தாங்கிய, காவல் மன்னன் -காத்ததற்றொழிலை
யுடைய பாண்டுராசன்,- இ ஆறு – இவ்விதமாக, அரிய தவம் – அருமையான
தவம், நாள் தொறும் ஏறும் எல்லை – தினந்தோறும் ஏறிவருதற்கு இடனான
பொழுது,- (ஒருகால்), மை வாள் நெடுங் கண் – மை தீட்டியதும் வாள்போன்ற
வடிவினதுமாகிய நீண்டகண்ணைப்படைத்த, வர சூரன் மகளை நோக்கி –
சிறந்தவனான சூரனுக்குப்புத்திரியான குந்தியைநோக்கி, செவ் வாய் மலர்வான்-
(தன்னுடைய) சிவந்த வாயைத் திறந்து பேசுபவனானான்;

     பாண்டுமன்னவன் சதசிருங்கபருவதத்திற் கடுந்தவம் புரியா நிற்கையில்,
ஆங்குள்ள முனிவரோடும் நட்புக்கொண்டிருந்தான். ஒருகாலத்துச் சில இருடியர்
பிரமலோகத்துக்குத் திரண்டு போகலானார்கள்: அதுகண்ட பாண்டு
‘மகப்பேறில்லாதவனாயினும் நான் செய்யும் பெருந்தவத்தாற் பிரமலோகம்
புகுவேன்’ என்றானாக, அங்கிருந்த இருடியர் ‘உனக்கு மகவுண்டாகும் என்பதை
நாங்கள் ஞானக்கண்ணா லறிந்துள்ளோம்’ என்று கூறிச் சென்றனர்: பிறகு
‘முனிவனது சாபத்தைப்பெற்ற எனக்கு மகவு எப்படி யுண்டாகும்?’ என்று
பாண்டுமன்னவன் சிந்தையிலாழ்ந்திருந்தான்: அக்காலத்து வியாச முனிவரைப்
பூசித்ததன் பயனால் காந்தாரி கருக்கொண்டாள்: அதை யறிந்து பாண்டு மிக்க
வருத்தங்கொண்டு, பிறகு, புத்திரரைப் பெற வேணுமென்று விருப்பம்மிக,
பத்தினிமாரை நோக்கிச் சொல்லலானானெக் கதாசந்தர்ப்பம் காண்க

பூந் தார் வியாதமுனி தாள் இணை போற்றி, அன்பு
கூர்ந்து, ஆர்வம் முற்றி, அவன்பால் வரம் கோடல் எய்தி,
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று,
வேந்து ஆதரிக்கத் தரித்தாள், வடமீனொடு ஒப்பாள்.--இதுமுதல்மூன்றுகவிகள்-பாண்டுமன்னவன்குந்திதேவி
யினிடம்மகப்பேற்றின் சிறப்பைச் சொல்லுதலைக்கூறும்.-ஐந்து கவிகள் – ஒருதொடர்.

   (இ – ள்.) பூந் தார் வியாதமுனி தாள் இணை போற்றி – அழகிய
தாமரைமாலையையணிந்த வியாசமுனிவனுடைய உபய பாதங்களைத் துதித்து,
அன்பு கூர்ந்து -அன்பு மிக்கு, ஆர்வம் முற்றி – பக்திமிகுந்து, அவன் பால் –
அந்தமுனிவனிடத்தில், வரம் கோடல் எய்தி – வரம் பெறுதலை யடைந்து,
வடமீனொடு ஒப்பாள் – அருந்ததி போல்பவளாகிய, காந்தாரி-,-
(அவ்வரத்தின்பயனாக)-, நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று –
நூறுமகவைக்கொண்டதான ஒரு கருப்பத்தை, வேந்து ஆதரிக்க – திருதராட்டிரன்
ஆதரம்பொருந்த, தரித்தாள் – தாங்குபவளானாள்; (எ-று.)

     நீயும் அந்தக்காந்தாரிபோலவே கருப்பத்தைத் தாங்கவேணுமென்று மேலே
குறிக்கப்போவதனால், இங்கு இச்செய்தி கூறப்பட்ட தென்னலாம்.

கல்லா மழலைக் கனி ஊறல் கலந்து கொஞ்சும்
சொல்லால் உருக்கி, அழுது ஓடி, தொடர்ந்து பற்றி,
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர்
இல்லாதவர்க்கு, மனைவாழ்வின் இனிமை என் ஆம்?

கல்லா – கற்காத [இயற்கையாய்த் தோன்றுகின்ற], மழலை –
குதலைச்சொல்லை, கனி ஊறல் – கொவ்வைக்கனிபோன்ற வாயினின்று
ஊறும்சொள்ளோடு, கலந்து – சேர்த்து, கொஞ்சும் – கொஞ்சிப்பேசுகின்ற,
சொல்லால் – சொல்லினால், உருக்கி – (கேட்போரை) உருகச்செய்து, (எங்கேனும்
பெற்றோர் சென்றால் அவர்களை), அழுது தொடர்ந்து ஓடி – அழுதுகொண்டே
விரைந்து பின் சென்று, பற்றி – பிடித்துக்கொண்டு, மல் ஆர் புயத்தில் – வலிமை
பொருந்திய தோளிலே, விளையாடும் – விளையாடுவதனாலான, மகிழ்ச்சி –
சந்தோஷத்தைவிளைக்கின்ற, மைந்தர் – புதல்வரை, இல்லாதவர்க்கு –
பெறாதவர்க்கு, மனை வாழ்வின் இனிமை – இல்லற வாழ்க்கையினிமை, என்ஆம்
– யாதுஆகும்? (எ-று.)

     புத்திரரைப்பெறாதோரால் இல்வாழ்வினினிமை பெறமுடியாதென்பதாம்.
கல்லாமழலை – கற்கமுடியாத மழலை யெனினுமாம்.தன்மைநவிற்சியணி.

மெய், தானம், வண்மை, விரதம், தழல் வேள்வி, நாளும்
செய்தாலும், ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார்;
மை தாழ் தடங் கண் மகவின் முகம் மன்னு பார்வை
எய்தாது ஒழியின், பெறும் இன்பம் இவணும் இல்லை.

மெய் – உண்மையே பேசுதலும், தானம்- (சற்பாத்திரத்தில்)
கொடுத்தலும்,வண்மை விரதம் – வளப்பமுள்ள பலவகை விரதத்தை
மேற்கொள்ளுதலும், தழல்வேள்வி – அக்கினியில் யாகம்புரிதலும்,
(ஆகியசெயல்களை), நாள்உம்செய்தால்உம் – நாடோறும்செய்துவந்தாரேயாயினும்,-
ஞாலத்தவர் -இவ்வுலகத்துப்பிறந்தவர்,- மை தாழ் – அஞ்சனம் பெருகுகின்ற, தட
கண் -விசாலமான கண்களையுடைய, மகவின் – குழந்தையின், முகம் – முகத்திலே,
மன்னு – பொருந்திய, பார்வை – கண்ணின்பார்வையை, எய்தாது ஒழியின் –
அடையாமற் போவாரேயானால், (அன்னார்), நற்கதி சென்று சேரார்-; இவண்
பெறும் இன்பம்உம் – இவ்வுலகத்திற் பெறுகின்ற இன்பமும், இல்லை – (அவர்கட்கு)
உண்டாகாது;மகப்பெறாதோர் இம்மைமறுமைகளை யிழப்ப ரென்றவாறு.

மென் பாலகரைப் பயவாதவர், மெய்ம்மையாகத்
தென்பாலவர்தம் பசித்தீ நனி தீர்க்கமாட்டார்;
என்பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன்;
நின்பால் அருள் உண்டுஎனின் உய்வன், நெடுங் கண் நல்லாய்!இரண்டுகவிகள் – பாண்டு குந்தியினிடம் ‘நீ புத்திரப்
பேறுஉண்டாக்கிக்கொள்ள அருள்புரிக ‘ என்றதைத் தெரிவிக்கும்.

நெடுங் கண் நல்லாய் – நீண்டகண்களையுடைய பெண்ணே! மெல்
பாலகரை – மெல்லிய குழந்தைகளை, பயவாதவர் – பெறாதவர், மெய்ம்மை ஆக
– உண்மையாக, தென்பாலவர்தம் – தெற்கேயுள்ளவரான பிதிரர்களின், பசி தீ –
பசியாகிய தீயை, நனி – மிகவும், தீர்க்கமாட்டார்- போக்கும்
வல்லமையில்லாதவராவர்; என்பால் நிகழ்ந்த வினையால் – என்னிடம் தோன்றிய
தீவினையால், இடர் (மகப்பெறாமையாகிய) துன்பத்தை, எய்திநின்றேன்-
அடைந்துள்ளேன்; நின்பால் அருள் உண்டுஎனின் – உன்னிடம்
கருணையுண்டாகுமானால், உய்வன் – (நான்) ஈடேறுவேன்; (எ – று.)

     என்பால் நிகழ்ந்தவினை என்றது – கிந்தம முனிவரின் சாபத்தை. நான்
சாபவசத்தினனாதலால், என் அனுமதியினால், முனிவர் மூலமாகவோ
தேவர்மூலமாகவோ நீ சந்ததியை யுண்டாக்கிக்கொள்க என்றவாறு

இல்வாழ்பவர்க்கு மடவார் அலது யாவர், இன்ப
நல் வாழ்வு, தேசு, புகழ், யாவும் நடத்துகிற்பார்?
தொல் வானவரின், மறையோரின், துறக்க பூமி
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி’ என்றான்.

இல் வாழ்பவர்க்கு – கிருகஸ்தராயிருப்பவர்க்கு, மடவார் அலது –
(அவர்களுடைய) மனைவிமாரேயல்லாமல், இன்பம் – இன்பமும், நல் வாழ்வு –
நல்லவாழ்க்கையும், தேசு – ஒளியும், புகழ் – புகழும், யாஉம் – (ஆகிய)
எல்லாவற்றையும், நடத்துகிற்பார் – உண்டாக்கக்கூடியவர், யாவர் – வேறுயாவர்?
இனி-, நீ-, தொல்வானவரின் – பழமையான தேவர்களாலோ, (அல்லது), மறை
யோரின்-வேதம்வல்லோரான அந்தணராலோ,துறக்கம் பூமி செல்வார்  பெறும்
பேறு அருள்செய்தி – சுவர்க்கலோகத்தையடைபவர் பெறுகின்ற பேற்றை (நான்)
அடையும்படி செய்வாய், என்றான்-; (எ -று.)

     தேவர்மூலமாகவோ வேதியர்மூலமாகவோ நீ மகப்பெறின், அதனால் யான்
தீக்கதிசேராது நற்கதிசேரவே னாதலால், அவ்வாறு நிகழ்த்த
மனம்புரியவேண்டுமென்று பாண்டுவேண்டியவாறு.     

பொற்பாவை, கேள்வன் மொழி கேட்டலும், பொன்ற நாணி,
‘சொற்பால அல்லாப் பழி கூர் உரை சொல்வது என்னே?
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ,
இற்பாலவர்க்குப் பிறர்மேல் மனம் ஏற்பது?’ என்றாள்.–குந்தி மறுத்துக் கூறுதல்.

பொன் பாவை – பொன்னாலியன்ற பிரதிமைபோல்பவளான குந்தி,-
கேள்வன் மொழி- (தன்) கணவனுடையசொல்லை, கேட்டலும்,- கேட்டவுடனே,
பொன்ற நாணி – உயிரழிந்தான்போன்று நாணங்கொண்டு, ‘சொல் பால அல்லா –
சொல்லுதற்கு ஏற்றன வல்லாத, பழி கூர் உரை – பழி மிக்க வார்த்தையை,
சொல்வது – (நீ) சொல்லுகின்ற இது, எனே்ன – என்னோ? வெற்புஆர் நதிகள் –
மலியிற்றோன்றுதல் பொருந்திய ஆறுகள், சிறு புன்குழி – மிகச் சிறியகுட்டையில்,
மேவின் அன்றோ – பாய்ந்துநின்றாலன்றோ, இல் பாலவர்க்கு – வீட்டிலிருந்து
தொழில்பார்ப்பவரான மனைவிமார்க்கு, பிறர்மேல் – (தன்கணவர் தவிர)
மற்றையோர்மேல், மனம்-ஏற்பது – சென்றிருப்பதாம், ‘ என்றாள்- என்று
கூறினாள்; (எ-று.)

    நதிக்குக் கடலிற்புகுதலே பெரும்பாலும் இயற்கையாதல் காண்க.

பின்னும் பலகால் வருட்டி, பிறர் பெற்றி காட்டி,
மன்னன் புகல, மட மாது மறுக்கமாட்டாள்,
கன்னன் பிறந்தது ஒழிய, செழுங் கன்னி ஆகி,
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே.-பின்னும் வற்புறுத்திப் பிறர்செயலையும் பாண்டு
காட்ட,மறுக்கமாட்டாமல் குந்தி, துருவாசரிடம் பெற்ற மந்திரமேன்மை தெரிவித்தல்.

பின்னும்-, பலகால் – பலமுறை வருட்டி-வசப்படுமாறு சொல்லி,
பிறர் பெற்றி காட்டி – அயலாருடைய தன்மையையும் எடுத்துக்காட்டி, மன்னன் –
பாண்டுராசன், புகல – சொல்ல,- மடம் மாது – மடப்பமுள்ள அந்தக்குந்தி,
மறுக்கமாட்டாள் – மறுத்துச்சொல்ல முடியாதவளாய்,- கன்னன் பிறந்து ஒழிய –
கர்ணனென்பவன் (தனக்குப்புத்திரனாக விவாகம் நிகழ்வதற்கு முன்னமே)
பிறந்ததைத் தவிர்த்து, செழு கன்னி ஆகி முன்னம் பெறு மாமறை மேன்மை –
சிறந்தகன்னிகையாயிருந்து முன்புபெற்ற சிறந்த மந்திரத்தின் மேன்மையை,
மொழிந்திட்டாள் – சொன்னாள்;

     ஸௌதாஸன் மதயந்தியென்ற தன்மனைவியிடம் வசிஷ்ட முனிவர்
மூலமாய் அச்மகனென்ற புத்திரனைப்பெற்றதையும், திருதராஷ்டிரன் முதலிய
தாங்களும் வியாசர்மூலுமாகப் பிறந்ததையும் பாண்டுமன்னன் குந்திதேவிக்கு
நிதரிசனமாக எடுத்துக்காட்டினனென விவரங் காண்க. ‘பலகால்வருந்தி’ என்றும்
பாடம். ‘மொழிந்திட்டாளே’ என்பது இன்னோசையாயிராமையால் இங்கு
‘மொழிந்து நின்றாள்’ என்றாற்போன்றுபாடமிருக்கலாம்.

மரு மாலை வல்லி உரை கேட்டு, மகிழ்ச்சி கூரும்
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர், முன்னர்த்
தருமாதிபனைக் கருத்தால் மடத் தையல் உன்னி,
அரு மா மறையால் அழைத்தாள்; மற்று அவனும் வந்தான்அதுகேட்டு மந்திரத்தால் மகப்பெறுமாறு பாண்டு அநுமதிதரவே,
தருமராசனை மந்திரத்தால் குந்திதேவியழைக்க அன்னான் வருதல்.

மருமாலை வல்லி – மணம்பொருந்திய மாலையையணிந்த
கொடிபோன்ற குந்திதேவியின், உரை – வார்த்தையை, கேட்டு-, மகிழ்ச்சிகூரும் –
மகிழ்ச்சிமிக்க, பெரு மா தவத்தோன் – மிக்கசிறந்த தவமுடையவனாகிய
பாண்டுராசன், பணித்து- (தன் உடன்பாட்டைச்) சொல்லி, ஏவிய பின்னர் –
(மகப்பெற்றுக்கொள்ளக்) கட்டளையிட்டபின்பு,- முன்னர் – முதலில், மடம்
தையல் – மடமைக்குணத்தைக் கொண்ட பெண்ணாகிய குந்திதேவி,
தருமாதிபனை கருத்தால் உன்னி  – யமதருமராசனை மனத்தினாலெண்ணி, அரு
மா மறையால் அழைத்தாள் – (துருவாசமுனிவனுபதேசித்த) அரிய சிறந்த வேத
மந்திரத்தாள் கூப்பிட்டாள்: அவனும் வந்தான்-; (எ-று.)

வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி, மன்னு கேள்வற்
சிந்தித்த சிந்தையினளாய், மலர்ச் சேக்கை சேர்ந்து,
குந்தித் தெரிவை, நிறை மா மதிக் கூட்டம் உற்ற
அந்தித் தெரிவை நிகர் என்ன, அழகின் மிக்காள்.-வந்தயமதருமராசனோடு சேர்ந்து குந்திதேவி அழகுமிக்காளாதல்.

வந்தித்த – (தான் மந்திரத்தினால்) வணங்கிய, தெய்வம்-, எதிர்
வந்தஉழி – எதிரேவந்தபோது, குந்தி தெரிவை – குந்தியென்ற பெண்,- மன்னு –
பொருந்திய, கேள்வன்- (தன்) கணவனை, சிந்தித்த – எண்ணிய, சிந்தையினள்
ஆய் – எண்ணமுடையவளாய்,- மலர் சேக்கை சேர்ந்து – மலர்ப்படுக்கையிற்
சேர்ந்திருந்து,- நிறை மா மதி கூட்டம் உற்ற – பதினாறுகலைகளும் நிரம்பிய
சிறந்த சந்திரனோடு சேர்தலைப்பொருந்திய, அந்தி தெரிவை நிகர் என்ன –
மாலைச் சந்தியாகிய பெண்ணுக்கு உவமையாவளென்னும்படி, அழகில் மிக்காள் –
அழகினால் மேம்பட்டவளானாள்;(எ-று.)

சிவம் உற, முகூர்த்தம், வாரம், தினம், திதி, கரணம், யோகம்,
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில்,
‘அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும்’ என்று, அறிவின் மிக்க
தவ நெறி முனிவர் கூற, பிறந்தனன், தருமன் மைந்தன்.-தருமபுத்திரன் பிறத்தல்.

முகூர்த்தம் – முகூர்த்தமும், வாரம்-வாரமும், தினம் –
நட்சத்திரமும், திதி – திதியும், கரணம் – கரணமும், யோகம் – யோகமும்,
(ஆகிய இவை), சிவம் உற – மங்களகரமாகப்பொருந்த,- நவம் என வழங்கும் –
ஒன்பது என்று சொல்லப்படுகின்ற, கோள்உம் – கிரகங்களும், நல் நிலை நின்ற
போதில் – நன்மையைத்தரக்கூடிய இடத்திலிருக்கையில்,-அவனியை ஒரு கோல்
ஓச்சி, ஆளும் என்று அறிவின் மிக்க தவம் நெறி முனிவர் கூற – இந்தப்பூமியை
(த் தன்) ஒப்பற்ற செங்கோலைச் செலுத்தி ஆள்வான் என்று அறிவினால் மிக்க
தவநெறியையுடைய முனிவர் சொல்ல,- தருமன் மைந்தன் பிறந்தனன் –
தருமபுத்திரன் பிறந்தான்; (எ-று.)

     பாவஞ்செய்வாரை நரகத்திற்செலுத்தித் தருமத்தை நிலை நிறுத்தலால்,
யமன் தருமன் எனப்படுவான்; இந்த மகன் அந்தத் தருமனுடைய அருளாற்
பிறந்தவ னாதலால், இவனைத் தருமபுத்திரனென்றே உலகோர் வழங்குவர்:
இவன் பெயர், யுதிஷ்டிரன்: இவன், ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில்
பஞ்சமியன்று கேட்டை நட்சத்திரத்தில் அபிசித்திற் பிறந்தா னென்று முதனூல்.

     இனி முப்பத்துமூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைய மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய விருத்தங்கள்

உதிட்டிரன் பிறந்தகாலை, உலகினில் உயர்ந்தோர் யாரும்,
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும், வான் உளோரும்,
நிதிப் பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார்;
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே!யுதிஷ்டிரன் பிறந்தபோது நன்னிமித்தம் தோன்றுதல்.

உதிட்டிரன் பிறந்த காலை – யுதிஷ்டிரன் பிறந்தபோது உலகினில்-,
உயர்ந்தோர் யார்உம் – உயர்ந்தவர்யாவரும், வதிட்டனை முதல் ஆ எண்ணும்
முனிவர்உம் – வசிட்டனை முதல்வனாகக்கொண்டு எண்ணப்படுகிற இருடியரும்,
வான்உளோர்உம் – தேவர்களும், நிதிபயன் பெற்றார்போல-நிதியாகிய பயனை
யடைந்தவர்போல,நேயமோடு – சினேகத்தோடு, உவகை கூர்ந்தார் – மகிழ்ச்சி
மிக்கவரானார்கள்: மதித்த – சிறந்தனவாக எண்ணப்பட்ட, நல் நிமித்தம் யாஉம்
– நல்ல நிமித்தங்களெல்லாம், மங்கலம் நிகழ்ந்த – மங்கலமாக நேர்பட்டன;
(எ-று.) – அன்றே – ஈற்றசை: தேற்றமுமாம்.

     உதிட்டிரன் = யுதிஷ்டிரன்: போரில் நிலையாக நிற்பவன் என்று
காரணப்பொருள்படும். உயர்ந்தோரென்றது – சாமானியமாய் உலகத்து
மேன்மையுற்றோரை.  

தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே, மைந்தன்
பண்புடை வதனம் நோக்கி, பார்த்திவன் பாண்டு என்பான்,
கண் பனி துளிப்ப, நெஞ்சம் கனிந்து இனிது உருக, மேனி
வண் புளகு அரும்ப, மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான்பாண்டு, மைந்தன்முகம்நோக்கி மகிழ்தல்

தண் பிறை எழுச்சி கண்ட – குளிர்ந்த பிறைச்சந்திரனது
தோற்றத்தைக் கண்ட, சலநிதி என – சமுத்திரம்போல, மைந்தன் பண்பு உடை
வதனம் நோக்கி – குழந்தையின் நல்லிலக்கணமமைந்த முகத்தைநோக்கி,
பார்த்திவன் பாண்டுஎன்பான் – அரசனாகிய பாண்டு என்பவன், கண் பனி
துளிப்ப – (தன்) கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியவும், நெஞ்சம் இனிது
கனிந்து உருக – மனம் நன்கு கசிந்துருகவும், மேனி வள் புளகு அரும்ப – தன்
உடலில் மிக்கமயிர்க் கூச்சுதோன்றவும், வரம்பு இலா மகிழ்ச்சி – எல்லையில்லாத
மகிழ்ச்சியை, மேன்மேல் கூர்ந்தான் – மேன்மேல் மிகப்பெற்றான்; (எ-று.)

     சலநிதி =  ஜலநிதி: வடசொல். மதிகண்ட கடல் பொங்குதல் இயல்பு.
பிறையை யுவமை கூறியதால், வளருந்தன்மையனாதல் பெறப்படும். 

அற்றனள் துயரம் எல்லாம்; அருந் தவப் பயனால், மைந்தற்
பெற்றனள், குந்தி’ என்னும் பேர் உரை கேட்ட அன்றே,
உற்றனள் பொறாமை; கல்லால் உதரம் உள் குழம்புமாறு
செற்றனள், தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்.–குந்திமகப்பெற்றதைக் கேள்வியுற்ற காந்தாரி
பொறாமைகொண்டு வயிறு உள்ளேகுழம்புமாறு கல்லால் மோதிக்கொள்ளுதல்.

குந்தி-,- அரு தவம் பயனால் – அருமையான தவத்தின் பயனால்,
மைந்தன் பெற்றனள் – மைந்தனைப் பெற்றாள்: (அதனால்), துயரம் எல்லாம்
அற்றனள் – துன்பமெல்லாம் நீங்கினள், ‘ என்னும் – என்கிற, பேர் உரை –
எங்கும் பயின்ற வார்த்தையை, கேட்டஅன்றே – கேட்ட அப்போதே,-
(காந்தாரி), பொறாமை உற்றனள் – பொறாமை யடைந்தவளாய், தனது கேடுஉம்
ஆக்கம்உம் சிந்தியாதாள்- (தான் செய்யப்போகிற செயலால்) தனக்குக்  கெடுதி
நேரிடுமோ அல்லது நன்மை நேரிடுமா என்பதையும் கருதாதவளாய், – உதரம்
உள் குழம்பும் ஆறு கல்லால் செற்றனள்- (தன்) வயிறு உள்ளேகுழம்பும்வகை
(அவ்வயிற்றைக்) கல்லால் மோதினாள்; (எ-று.)

     நூறுமகவைக்கொண்ட கருப்பமாதலால் அப்பிண்டம் இரண்டு யாண்டு
சென்றும் கெட்டியாயிருக்கவே, குந்தி மகவைப்பெற்றதிற் பொறாமை கொண்டு
காந்தாரி கல்லால் வயிற்றை மோதிக்கொண்டனளென்க. 

மை அறு சுபலன் கன்னி வயினிடைக் கருப்பம், சேர,
பையொடு குருதி பொங்கப் பார்மிசை விழுந்ததாக,
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன, சென்று,
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான்.-காந்தாரியின்கரு பையோடு குருதிபொங்கப்பூமியில்
விழ, வியாசன் சென்று அதனைக் காணுதல்.

மை அறு சுபலன் கன்னி – குற்றமற்ற (கங்ந்தார தேசத்ததிபனான)
சுபல னென்பானுடைய பெண்ணின், வயினிடை – வயிற்றிலேயுள்ள, கருப்பம்-,
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர்வான் என்ன-சூரியன் அஸ்தமித்த திக்கிலே
செவ்வானந்தோன்றுவது போல, பையொடு – கருப்பப்பையுடனே, குருதி பொங்க
– இரத்தம்மேல் வழிய, பார்மிசை – பூமியின்மீது, சேர விழுந்தது ஆக –
ஒருசேரவிழுந்திட, சென்று – (கருப்பம் விழுந்த இடத்திலே) சென்று, மெய்உடை
அரிய கேள்வி வேள்வி கூர் – உண்மையையுடையவனும் அருமையான
கேள்வியையுடையவனுமாகி வேள்வியினான் மிக்கவனான, வியாதன் –
வியாசமுனிவன், கண்டான்-; (எ-று.)

     குருதிபொங்கவிழுந்த பைக்குச் செக்கர்வானம் உவமை; இவ்வுவமை
பாலபாரதத்திலும் வந்துள்ளது, இனி, செய்யவன் – சூரியனானவன், விழுந்த –
(தான்) விரும்பிய, திக்கில் – திக்கிலே, செக்கர்வான் என்ன – செக்கர்வானைக்
காண்பதுபோல, வியாதன் விழுந்த கருப்பையைக் கண்டான் என்றலும் ஒன்று.

சஞ்சலமான கோசத் தசையினைத் தாழிதோறும்
எஞ்சல ஆக நூறு கூறு செய்து, இழுதில் ஏற்றி,
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அக் குறையும் சேர்த்தி,
‘அம் சில் வார் குழலி ஆக!’ என்று ஆங்கு ஒரு கடத்தில்
வைத்தான்.–வியாசன் கோசத்தசையை நூறுகூறுசெய்து நெய்ந்
நிரம்பிய நூறு கும்பங்களிலிட்டு, மிச்சமான மாமிசப்
பகுதியை ஒருகலசப்பானையிலிட்டு வைத்தல்.

நெஞ்சு அலர் கருணை ஆளன் – நெஞ்சிலே நிரம்பிய
கருணையையுடைய வியாசன்,- சஞ்சலம் ஆன – குழம்பிப்போய்விட்ட, கோசம்
தசையினை – கருப்பையிலேயிருந்த மாமிசத்தை, எஞ்சல ஆக –
குறைதலில்லாதனவாக, நூறு கூறு செய்து – நூறு பாகமாகச் செய்து, தாழிதோறும்
– தாழிகளிலெல்லாமுள்ள, இழுதில் – நெய்யிலே, ஏற்றி-,- நின்ற அ குறைஉம் –
எஞ்சிநின்ற அந்தக் குறையும், அம் சில் வார் குழலி ஆக என்று – அழகிய
சில்லென்னும் அணியை யணிதற்குரிய நீண்ட கூந்தலைக்கொண்ட கன்னியாகுக
என்று, ஆங்கு – அங்குத்தானே, ஒருகடத்தில் – ஒருபானையிலே, சேர்த்தி
வைத்தான் – இட்டுவைத்தான்; (எ – று.)

     இதனால், இழுதைக் கொண்ட நூறு தாழியிலும் அந்தக்
கோசத்தசையினையிட்டமை பெறப்படும்.

கரு உறு தாயை நோக்கி, ‘கையறும் என்று, கன்றி
வெருவுறல், கற்பின் மிக்காய்! வேறு செய் தசைகள் யாவும்
உரு உற நிரம்பி, தாமே உற்பவிப்பளவும், கையால்
மருவுறல்; வழுவுறாது, என் வரம்’ என, வரதன் போனான்.-வியாசன் காந்தாரியைநோக்கி ‘என்வரத்தால் தசைகள்
உருவுபெற்று நிரம்பும்வரையிற்சேமித்துவை’ என்று சொல்லிப்போதல்.
   

கரு உறு தாயை நோக்கி – கருவுற்ற தாயைப்பார்த்து,
கற்பின்மிக்காய்-! கையறும் – (நம்முடைய கருப்பம்) அழிந்திடும் என்று-, கன்றி
– மனம்வாடி, வெருவுறல் – அஞ்சாதே: வேறு செய் தசைகள் யாஉம் –
நூறுகூறுசெய்த தசைகளெல்லாம், உரு உற – ரூபத்தைப் பொருந்த, நிரம்பி –
பூர்ணமாகவளர்ந்து, தாம்ஏ உற்பவிப்பு அளவுஉம் – தாமே தோற்றுங்காலம்
வரையிலும், கையால் மருவு உறல் – கையால் (அத்தசைக் கூற்றைத்) தொடாதே:
என்வரம் வழுஉறாது – என்னுடையவரம் பழுதுபடாது, ‘ என – என்று சொல்லி
விட்டு, வரதன் – வரத்தைக் கொடுத்தவனான வியாசன், போனான்;

     தாழியிற்பெய்த தசைகள் உறுப்புநிரம்பித் தாமே அந்தத் தாழியைப்
பிளந்துகொண்டு வெளிவரும் வரையிற் பாதுகாப்பாயென்று சொல்லிச் சென்றனன்
வியாசனென்க. தாய் – காந்தாரி.  

காம்பு என நிறத்த தோளாள், கரு வயிற்று இருப்பது ஒப்ப,
தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களைச் சேமமாக
ஆம் பரிவுடனே ஆற்றி, ஈற்று அளை அடைந்து வைகும்
பாம்பு எனப் பருவம் நோக்கி, இருந்தனள், பழுது இலாதாள்.-காந்தாரி தாழிகளிலிட்ட தசைக்கூறுகளைப் பாது
காத்து உற்பவிக்கும் பருவத்தை நோக்கியிருத்தல்

பழுது இலாதாள் – குற்றமற்றவளான, காம்பு என நிறத்த
தோளாள்-பசியமூங்கில்போலவுள்ள நிறத்தையுடைய தோளையுடையவளான
காந்தாரி, கரு – கருப்பம், வயிறு இருப்பது ஒப்ப – (தன்) வயிற்றில்தானே
இருப்பதையொப்ப, தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை – இனிமை
பொருந்திய நறுமணமுள்ளநெய் யூற்றிய கலங்களை, சேமம் ஆக – பத்திரமாக,
ஆம் பரிவுடன் ஆற்றி – பொருந்திய மனப்பரிவோடு பாதுகாத்து,- ஈற்று அளை
அடைந்து வைகும் – ஈன்றமுட்டையைக்கொண்ட புற்றையடைந்து தங்குகின்ற,
பாம்பு என – பாம்புபோல, பருவம் நோக்கி இருந்தனள்-; (எ-று.)

     உவமையாற் கொடுமை தொனிக்கும். ஈற்று – ஈனப்பட்டது:
செயப்படுபொருள் விகுதி புணர்ந்துகெட்டுத் திரிந்த பெயர்

ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே, யாதவன் மகளை நோக்கி,
பாண்டுமன் இரந்து பல்கால் பணித்தலும், பவனன்தன்னை
மீண்டும் அம் மறையால் உன்னி, அழைத்தனள்; விரைவின் ஓடி,
ஆண்டு வந்து, அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான்.-அதனையறிந்தபாண்டு குந்தியைமீண்டுபலமுறை
இரந்துவேண்ட, அன்னாள்மீண்டும் மந்திரத்தால் வாயு தேவனை வரவழைத்துக்கூடுதல்.

ஈண்டு – இங்கே [காந்தாரியிடத்தில்], உறு – நடந்த, நிகழ்ச்சி –
செய்தியை, கேட்டு – கேள்வியுற்று,- பாண்டு மன் – பாண்டுராசன்,- யாதவன்
மகளை நோக்கி – யதுகுலத்தில் தோன்றிய [சூரன் மகளான] குந்தியைப்பார்த்து,
பல் கால் இரந்து பணித்தலும் – பல முறை வேண்டி (த் தன் கருத்தை)ச்
சொல்லுதலும்,- (குந்திதேவி), – பவனன் தன்னை – வாயுதேவனை, மீண்டுஉம்-,
அ மறையால் – (முன்பு தருமராசனையழைத்த) அந்தமந்திரத்தினால், உன்னி-
நினைத்து, அழைத்தனள்-: ஆண்டு – அப்போது அங்கே, அவன் உம் –
அந்தவாயுதேவனும், விரைவின் ஓடி வந்து-, பூத்த கொடி அனாள் –
பூத்தக்கொடிபோன்றவளான குந்தியின், ஆகம் – மார்பில், தோய்ந்தான் –
படிந்தான்; (எ-று.)

நெஞ்சு உற மணந்து, மீள நெடுங் கலைவாகன் ஏக,
செஞ் சுடர் உச்சி எய்திச் சிறந்தது ஓர் முகூர்த்தம்தன்னில்,
அஞ்சனை அளித்த பொன்- தோள் அனுமனே உவமை என்ன,
வெஞ் சின வீமன்தன்னைப் பயந்தனள், விரதம் மிக்காள்நல்லமுகூர்த்தத்தில் வீமனைப் பெறுதல்.

நெஞ்சு உற – மனம்பொருந்த, மணந்து – (அந்தக் குந்தி
தேவியைக்) கூடி, நெடுங் கலை வாகன் – பெருமைபெற்ற ஆண்மானை
வாகனமாகவுடைய அந்தவாயுதேவன், மீள ஏக – மீண்டு செல்ல,- விரதம்மிக்காள் –
சிறந்தநோன்பினை நோற்றிருப்பவளான குந்திதேவி,- செஞ் சுடர் உச்சி எய்தி
சிறந்தது ஓர் முகூர்த்தம் தன்னில் – செவ்வியசுடரையுடைய சூரிய தேவன்
உச்சியையடைந்ததனாற் சிறந்த ஒரு முகூர்த்தத்தில், அஞ்சனை அளித்த
பொன்தோள் அனுமன்ஏ உவமை என்ன – அஞ்சனாதேவி பெற்ற அழகிய
தோள்வலிமையுடைய அனுமனே உவமையாவனென்று (உலகோர்) சொல்லுமாறு,
(பெருவலிபடைத்த), வெம்சினம் வீமன் தன்னை – கொடிய சினத்தையுடைய
வீமசேனனை, பயந்தனள் – பெற்றாள்; (எ-று.)

     செஞ்சுடருச்சி யெய்திச்சிறந்த முகூர்த்தம்- ‘அபிஜித்’ எனப்படும்: “அபிஜித்
ஸர்வதோஷக்ந:” என்ற மேற்கோள் இங்குக்காணத்தக்கது.அஞ்சனை –
கேசரியென்னும் வானரராசன் மனைவி: அந்த அஞ்சனையோடு வாயுதேவன்
கலந்துபெற்ற வானரப்புதல்வன் அனுமான். இவன் பிறந்தபோது பசியால்
இளஞ்சூரியனைக் கனியென்று கருதிப் பாய்ந்து இந்திரனால் தாக்கப்பட்டு முறிந்த
கவுளையுடைய னானதனால், ‘அனுமான்’ எனப்பட்டான்.

தண் பரிமளம் மென் சாயல் தந்தையும், திசைகள்தோறும்
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச,
நண்புடை அனலன்தானும், நலம் மிகு நண்பு தோன்ற,
பண்பு உற வலம் வந்து ஓங்கி, பரிவுடன் விளக்கம் செய்தான்.-அப்போது நன்னிமித்தந் தோன்றுதல்.

தண் பரிமளம் மெல் சாயல் – குளிர்ந்த நறுமணத்தையும் மெல்லிய
பரிசத்தையுமுடைய, தந்தைஉம் – வாயுதேவனும், திசைகள் தோறுஉம் –
திக்குகள்தோறும், எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் – (மதியாற்றலுடையனவான)
மதிக்கப்படுகிற பிராணிகட்கெல்லாம் [மனிதர்கட்கெல்லாம்], இதம் உறு
பொலிவின் வீச – இனிமையாகத் தோன்றுமாறு நன்குவீச,- நண்பு உடை
அனலன் தான் உம் – (அந்தவாயுதேவனோடு) நட்பையுடைய அக்கினிதேவனும்,
நலம் மிகு நண்பு தோன்ற – நன்மைமிகுந்த நட்புத் தோன்றும்படி, பண்புஉற –
நல்லநிமித்தமாக, வலம்வந்து ஓங்கி-வலப்புறமாகச்சுழலும் சுவாலையுடன்கிளர்ந்து,
(ஆங்காங்கு ஓமஞ்செய்பவர் மனையில்), பரிவுடன் – அன்போடு,
விளக்கம்செய்தான் – விளங்குதலைப் பொருந்தினான்;(எ-று.)

     இனிதுகாற்றுவீசுதலும், அக்கினிவலப்புறமாகச்சுழலும்  சுவாலையைப்
பெற்றிருத்தலும் நன்னிமித்தங்களாம். ‘வலந்திரியாப்பொங்கி,’ (200) என்றது
புறப்பொருள் வெண்பா மாலை.

அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக, அற்றை
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்தன்னில்,
‘இன்ன நாள் உருவம் முற்றி, எழில் பெறும்’ என்று, முன்னோன்
சொன்ன நாள் வழுவுறாமல், சுயோதனன் தோன்றினானேவீமசேனன்தோன்றியதற்கு முன்னாளில் இழுதுதாழியி
லிட்டதசை முற்றித் துரியோதனன் தோன்றுதல்,

அன்ன நாள் – அந்த [ச்சிறந்த] நாளில், அனிலன் மைந்தன்
பிறந்தனன்ஆக – வாயுதேவனுடையபுத்திரன் பிறந்தானாக,- அற்றை முன்னை
நாள் -அன்றைக்கு முன்னாளில், அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தந்தன்னில்-
சூரியன் கடலிலே முழுகின [அஸ்தமித்த] முகூர்த்தத்தில், இன்ன நாள் உருவம்
முற்றி எழில் பெறும் என்று முன்னோன் சொன்ன நாள் வழுஉறாமல் –
இந்தநாளிலே உருவம் முற்றுப்பெற்று அழகிய குழந்தையாகுமென்று
வியாசமுனிவன் சொன்னநாள் தவறாதபடி, சுயோதனன்,- தோன்றினான்-;

     இதனால், தருமபுத்திரனுக்குப்பின் வீமசேனனுக்குமுன் தோன்றியவன்,
துரியோதன னென்க. ஸு யோதநன் என்ற வடசொல் – நன்கு[வெற்றியுண்டாகப்]
பொருபவ னென்று பொருள்படும்.  

வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல்
ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின; இடங்கள்தோறும்
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே,
சோரி அந்தரத்தினின்றும் சொரிந்தது, சோனை மேகம்.–துரியோதனன் தோன்றியபோது தீநிமித்தங்கள்
தோன்றுதல்.

வாரியின் – கடல்போல, அதிர்ந்து விம்மும் – அதிர்ந்துஒலிக்கின்ற,
மங்கலம்முழவம் – மங்கலமுரசு, மேன்மேல்-, ஓரியின் குரலால் – நரியின்
ஊளையிடுங்குரலினால், ஓதைஒடுங்கின – ஓசையடங்கின; இடங்கள்தோறும்-
(அஸ்தினாபுரியின்) பல இடங்களிலும், பாரிய குலத்தோர் கண்ணின் –
பெருமைபெற்ற குலத்தவரின் கண்களிலே, உவகை நீர் பனிக்கும் முன்னே –
ஆனந்தக் கண்ணீர் துளிக்கும் முன்னே, சோனை மேகம் – (உற்பாதமாகத்
தோன்றி) இடைவிடாமற் பொழியும் மேகமானது, அந்தரத்தில் நின்றும் சோரி
சொரிந்தது – ஆகாசத்திலிருந்து இரத்தத்தைப் பொழிந்தது;(எ-று.)

     பாரிய, ‘பருமை ‘ என்றபண்பின்மேல் வந்த குறிப்புப்பெயரெச்சம்.
‘ஓதையடங்கின ‘ எனவும் பாடம். 

கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்தன்னில்,
தேள்களின் கொடிய மற்றைச் சிறுவரும் சேர, ஓர் ஓர்
நாள்களில் பிறந்த பின்னர், நங்கையும் ஒருத்தி வந்தாள்,
தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள்.-மற்றும் துரியோதனன்தம்பியரும் துச்சளையும்
தோன்றுதல்.

கோள்களின் நிலையால் – கிரகங்கள் நிற்கின்ற நிலைமையினால்,
தீமைகொண்டன – தீங்கைக்கொண்டனவான, முகூர்த்தந் தன்னில் –
முகூர்த்தங்களிலே,- தேள்களின் கொடிய மற்றை சிறுவர்உம் –
தேளைக்காட்டிலும் கொடுமையையுடைய மற்றைத்தம்பிமாரும், சேர – அடுத்து,
ஓர் ஓர்நாள்களில் பிறந்த பின்னர் – ஒவ்வொருநாளிற் பிறந்தபின்பு, தோள்களின்
கழையை வென்ற துச்சளை என்னும் பேராள் நங்கை ஒருத்திஉம் –
தோள்களினால் மூங்கிலை வென்ற துச்சளையென்னும் பேரையுடைய
ஒருபெண்ணும், வந்தாள் – தோன்றினாள்; (எ-று.)

    இதனால், துரியோதனன் தம்பிமாரெல்லாம் வீமசேனனுக்குப் பின்
பிறந்தவராவரென்பதை யறியலாம். துரியோதனன் பிறந்த நாளுக்கு அடுத்தநாள்
துச்சாதனன் அடுத்தநாள் மற்றொருவன் இவ்வாறாகத் துரியோதனன் தம்பிமார்
தொண்ணூற்றொன்பதின்மரும் தோன்றினரென்க, 

பின்னிய புதல்வராலும், பிறந்த மென் புதல்வியாலும்,
துன்னிய மகிழ்நனாலும், துலங்கிய சுபலன் பாவை
தன் நிகர் பரிதியாலும், சத இதழாலும், செம் பொன்
கன்னிகையாலும், சோதி கலந்த செங் கமலம் போன்றாள்.–காந்தாரி பெருமகிழ்ச்சிகொண்டு விளங்குதல்.

பின்னிய புதல்வரால்உம் – நெருங்கிய பலபுத்திரராலும், பிறந்த
மெல் புதல்வியால்உம் – பிறந்த மென்மையான புத்திரியாலும், துன்னிய
மகிழ்நனால்உம் – நெருங்கியகணவனாலும், துலங்கிய – விளங்கிய, சுபலன்
பாவை – சுபலனுடைய பெண்ணாகிய காந்தாரி, தன் நிகர் பரிதியால்உம் –
தனக்குத்தானே ஒப்பான சூரியனாலும், சதம் இதழாலும் – (தான் பெற்றுள்ள)
நூறுஇதழ்களாலும், செம் பொன் கன்னிகையால்உம் – செம்பொன்னிறமான
பொகுட்டாலும், சோதி கலந்த – ஒளிபொருந்திய, செம் கமலம் – செந்தாமரையை,
போன்றாள் – ஒத்தாள்;(எ-று.)

     சதவிதழ் புதல்வர்க்கும், கன்னிகை புதல்விக்கும், பரிதி மகிழ்நனுக்கும்,
கமலக்கொடி காந்தாரிக்கும் உவமை யெனக் காண்க. கன்னிகை – கர்ணிகா:
தாமரைப்பூவினிடையிலுள்ள பொகுட்டு எனப்படும்உறுப்பு. பாலபாரதத்தில் “ஸு ப
லஸ்ய கந்யகா ஆமுக்த பார்ச்வஸ்திதி ராத்மஜைர்பபௌ – சதேநபத்ரை
ரிவபத்மகர்ணிகா” என்று காந்தாரிக்குக் கர்ணிகையும், புதல்வர்கட்கு
இதழ்களுமே உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

பால்மொழிக் குந்தி மீண்டும் பாண்டுவின் ஏவல் பெற்று,
வான் மொழி மறையால் உன்னி, வானவர்க்கு அரசை நோக்க,
மேல் மொழிவது மற்று என்கொல்? விடுவனோ? விரைவின் வந்து, அத்
தேன்மொழித் தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்கச் சேர்ந்தான்மீண்டும் பாண்டுவின் ஏவற்படி மந்திரத்தாற் குந்தி
இந்திரனையெண்ண, அவன் அவளைக் கூடுதல்.

பால் மொழி குந்தி – பால்போலினிய பேச்சையுடைய
குந்தியென்பாள், மீண்டும்உம் – மறுபடியும், பாண்டுவின் ஏவல்பெற்று –
பாண்டுமன்னவனுடைய ஏவலையடைந்து, வான் மறை மொழியால் – சிறந்த
வேதமந்திரச் சொல்லால், வானவர்க்கு அரசை உன்னி நோக்க – தேவேந்திரனை
(மனத்தினாற்) சிந்தித்துப்பார்க்க,- மற்று- இனி, மேல் மொழிவது என்கொல் –
(நாம்) மேலே நிகழ்ந்ததைச் சொல்லவேண்டுமோ? விடுவன்ஓ –
(மறைமொழியாற்சிந்தித்து நோக்கியபின் அந்தத்தேவேந்திரன் வாராது) விடுவனோ?
விரைவின் வந்து-, தேன் மொழி தெரிவை – தேன்போன்ற பேச்சையுடைய
அந்தப்பெண்ணின், மெய்உம்சிந்தைஉம்களிக்க-, சேர்ந்தான்-; (எ-று.)- ‘
‘வந்தத்தேன்மொழி’ எனவும் பாடம்.

எங்கும் நல் நிமித்தம் செல்ல, இரு நிலம் மகிழ்ச்சி கூர,
பங்குனி, நிறைந்த திங்கள் ஆதபன் பயிலும் நாளில்,
வெங் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான்; வென்றிப்
பங்குனன் என்னும் நாமம் பகுதியால் படைத்திட்டானேபங்குனியுத்தரத்தில் அருச்சுனன் பிறத்தல்.

எங்குஉம் – எல்லாவிடத்திலும், நல் நிமித்தம் செல்ல- நல்ல
நிமித்தங்கள்தோன்றவும்,இரு நிலம் மகிழ்ச்சிகூர – பெரிய நிலவுலகத்திலிருப்பவர்
மகிழ்ச்சி மிகவும், பங்குனி – பங்குனிமாதத்தில், நிறைந்த திங்கள் –
பதினாறுகலைகளோடும் நிரம்பிய சந்திரனைக் கொண்ட, ஆதபன் பயிலும்
நாளில் – சூரியன் தோன்றிய நாளில் [பங்குனியுத்தரநாளில்], வெம் குனி வரி
வில் வாகை விசயன்உம் – கொடிய வளையுந்தன்மையுடைய கட்டமைந்த
வில்லை யேந்திய வாகைப்பூமாலையைச் சூடிய அருச்சுனனும், பிறந்தான்-:
வென்றி பங்குனன் என்னும் நாமம் – வெற்றியையுடைய பல்குனன் என்னும்
பேரை, பகுதியால் – (பிறந்ததினத்தின்) தன்மையால், படைத்திட்டான் – (பிறந்த
அக்குமரன்) பெற்றான்;  (எ-று.)

     பங்குனியுத்தரத்திற் பிறந்ததனால், பிறந்த அக்குமரனுக்குப் பல்குநன் என்று
பேராயிற்று: பல்குநன் என்ற இச்சொல். பங்குனன் என்ற இச்சொல், பங்குனன்
என்று திரித்து வரும். உத்தரத்துக்குச் சூரியன் தேவதையாதலால், அந்நாளை
‘ஆதபன் பயிலுநாள்’ என்றார். ‘வரிவில் வாழ்க்கை’ எனவும் பாடம்

கற்பக மலர்கள் சிந்திக் கடவுளர் கணங்கள் ஆட,
வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட,
பொற்பு அக முழவு விம்ம, புரி வளை முழங்கி ஆர்ப்ப,
‘நற் பகல் இது!’ என்று எல்லா உலகமும் நயந்த அன்றே.-அப்போது பல நன்னிமித்தங்கள் தோன்றுதல்.

கடவுளர் கணங்கள் – தேவர்களின் திரள், கற்பகம் மலர்கள்
சிந்தி-, ஆட – ஆனந்தக்கூத்தாடவும்,- வெற்பு அகம் முனிவர் ஈண்டி –
(அருச்சுனன்பிறந்த) மலையினிடத்தே இருடியர் திரண்டு, மங்கலம் வேதம்பாட –
மங்கலமானவேதங்களைப்பாடவும்,- பொற்பு அகம் முழவு விம்ம – அழகைத்
தம்மிடத்துக்கொண்ட முரசங்கள் ஒலிக்கவும், புரி வளை முழங்கி ஆர்ப்ப –
உட்சுழிவுள்ள சங்கவாச்சியங்கள் பேரொலிசெய்து ஒலிக்கவும், இது  நல் பகல்
என்று – இது நல்ல பகற்காலமென்று, எல்லாம் உலகம்உம் –
உலகத்தவரெல்லாம், நயந்த – (அந்நாளை) விரும்பிக்கொண்டாடினர்; (எ -று.)

     வேதத்தில் மங்களமான பகுதி, ஸ்வஸ்திவாசனம் போல்வன. பாண்டு
தவஞ்செய்த சதச்ருங்கமலையில்தானே இந்தப் பாண்டு புத்திரர் தோன்றினரென
அறிக.அன்றே – ஈற்றசை; தேற்றமுமாம்.

இறைவனும் மகிழ்ந்து, பின்னும் யாதவிக்கு உரைப்ப, அந்த
மறையினை முறையின் பெற்ற மத்திர ராசன் கன்னி,
‘குறைவு அற இருவர் வேண்டும், குமரர்’ என்று உன்னி நின்றாள்;
நிறையுடை இரவி மைந்தர் இருவரும் நினைவின் வந்தார்மன்னன் கட்டளைப்படி குந்தி அந்த மந்திரத்தை
மாத்திரிக்கு உபதேசிக்க, அவள் வேண்டியபடி அசுவினீ தேவர்கள்வருதல்.

இறைவன்உம் – பாண்டுராசனும், மகிழ்ந்து – மகிழ்ச்சி கொண்டு,
பின்னும் – மேலும், யாதவிக்கு உரைப்ப – குந்திதேவியினிடம் (அந்த
மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசிக்குமாறு) சொல்ல, – அந்த மறையினை – அந்த
வேதமந்திரத்தை, முறையில் பெற்ற- முறைமையாக அடைந்த, மத்திரராசன்
கன்னி – மத்திரராசனுடைய பெண்ணான மாத்திரி, ‘குறைவு அற – குறைநீங்க,
குமரர் இருவர் வேண்டும் – இரண்டு குமாரர்வேண்டும் ‘, என்று-, உன்னி
நின்றாள் – (அசுவினீதேவர்களை) நினைத்து நின்றாள்: நிறை உடை –
(நற்குணங்கள்) நிறைதலையுடைய, இரவி மைந்தர் இருவர்உம் – சூரியகுமாரரான
அசுவினீதேவதைகளிரண்டுபெரும், நினைவின் வந்தார்- (அந்த மாத்திரியின்)
நினைவின்படியே வந்தார்கள்; (எ-று.) – அசுவினீதேவர்கள், இரட்டையரானவர்.

மரு வரும் குழலி ஆயும் மறையினால், வரிசை பெற்ற
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில்,
பருவரல் யாதும் இல்லாப் பாலகர் இருவர் சேரக்
கரு விளைந்து உதித்தார்; யாரும் கண் எனக் காணும் நீரார்.-மாத்திரிக்கு இரண்டுபுத்திரர் ஒருசேரப் பிறத்தல்.

மரு வரும் குழலி – நறுமணம் பொருந்திய கூந்தலை யுடையளான
மாத்திரி, ஆயும் மறையினால் – தியானித்துக் கூறிய வேதமந்திரத்தினால், வரிசை
பெற்ற இருவர்உம் – சிறப்புப்பொருந்திய (தேவவைத்தியர்களாகிய) அசுவினீதேவ
ரிரண்டுபேரும், ஒருவர் போல – ஒருத்தர்போல (வந்து), இன்புறமணந்த போதில்
– (மாத்திரி) இன்பமடைய (அவளைச்) சேர்ந்தசமயத்தில், பருவரல் யாதுஉம்
இல்லா – துன்பமென்பது சிறிதுமில்லாமல், பாலகர் இருவர்சேர கரு
விளைந்துஉதித்தார்-இரண்டு குழந்தைகள் ஒரு சேரக் கருப்பத்திலே முதிர்ந்து
வெளிப்பட்டார்கள்: யார்உம்கண் என காணும் நீரார் – (அந்தக் குழந்தைகள்)
யாவராலும் கண்ணெனக் கருதும்படியான நற்குணமுள்ளவர்; (எ-று.)

சசி குல நகுலன் என்றும், தம்பி சாதேவன் என்றும்,
விசயனோடு எண்ணும் வீமன், மேதகு தருமன் என்றும்,
அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும்,
வசை அறு தவத்தின் மிக்கான், மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான்.–ஐந்துமைந்தரால் பாண்டு மகிழ்ச்சியடைந்து வாழ்தல்.

சசிகுலம் – சந்திரகுலத்துத்தோன்றிய, நகுலன் என்று உம் தம்பி
சாதேவன் என்றுஉம் – (அவன் ) தம்பியாகிய சகதேவனென்றும், விசயனோடு –
அருச்சுனனுடனே, எண்ணும் – (யாவராலும்) மதிக்கப்படுகின்ற, வீமன் – வீமனும்,
மேதகு தருமன் என்றுஉம் – மேன்மைபெற்ற தருமபுத்திரனும் என்றும், அசைவு
அறு சிங்கசாபம் அனையவர் ஐவரால்உம் – சோர்தலில்லாத சிங்கக்குட்டியை
யொத்தவரான ஐந்துகுமாரர்களாலும், வசை அறுதவத்தின் மிக்கான் – குற்றமற்ற
தவத்தினால் மிக்கவனான பாண்டு, மகிழ்ச்சியால் – மகிழ்ச்சிகொண்டு, வாழ்வு
பெற்றான்-; (எ-று.)

தாதியர் மருங்கும், தந்தை தட மணி மார்பும், பெற்ற
பேதையர் கரமும், நீங்காப் பெற்றியின் வளர்ந்த பின்னர்,
போதகம், மடங்கல், புல்வாய், புலி, முதல் விலங்கொடு ஓடி,
வேதியர் முன்றில்தோறும் விழை விளையாடல் உற்றார்குமாரர்கள் விளையாடுதல்.

(சிலகாலத்தில்), தாதியர் மருங்குஉம் – செவிலித்தாயரின்
இடுப்பையும், (சிலகாலத்தில்), தந்தை தட மணி மார்புஉம் – தந்தையாகிய
பாண்டுவின் விசாலமான அழகியமார்பையும், (சிலகாலத்தில்), பெற்ற பேதையர்
கரம்உம் – (தம்மைப்) பெற்ற பேதைமைக் குணமுடையவரான
தாய்மாரின்கையையும்,  நீங்கா – நீங்காத, பெற்றியின் – தன்மையோடு,
வளர்ந்தபின்னர் – வளர்ந்த பின்பு,- போதகம் – யானைக்கன்றும், மடங்கல் –
சிங்கமும், புல்வாய் – மானும், புலி – புலியும், முதல் – முதலிய, விலங்கொடு –
மிருகங்களுடனே, ஓடி- (தொடர்ந்து) விரைந்து சென்று, வேதியர் முன்றில்
தோறுஉம் – பிராமணருடைய வீட்டின் முன்னிடங்கடோறும், விழை – (கண்டவர்)
விரும்புகின்ற, விளையாடல் – விளையாடலை(ச்செய்தற்கு), உற்றார் – (அக்குமாரர்)
தொடங்கினார்கள்;(எ-று.)

     குழந்தைகள் நடக்கும் பருவத்திற்கு முன்னே வளர்ந்தமையை
முன்னிரண்டடிகள் தெரிவிக்கும், நடக்கும்பருவத்தில்தானே அக்குழந்தைகள
மிக்கவீரமும் சுறுசுறுப்பும் பெற்றிருந்தமையைப் பின்னிரண்டடிகள் தெரிவிக்கும்:
மருங்கு-இடை, இடுப்பு; “எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்” என்றதும்
காண்க. இனி, மருங்கு – சமீபம் எனினுமாம். 

செய் தவ முனிவர்தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி,
கைதவம் இன்றி எண்-எண் கலைக் கடல் கரையும் கண்டு,
மெய் தவம் விளங்க, வேழவில்லியும் விழைந்து நோக்க,
மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார்.–அக்குமாரர்கள் பூணூல்பூண்டு விச்சைபயின்று
யௌவனபருவத்தை யடைதல்.

செய் தவம் முனிவர் தம்மால் – செய்த தவத்தையுடைய
முனிவரால், சிகையுடன் – குடுமிவைக்குஞ் சடங்குடனே, புரிநூல் சாத்தி –
வெண்புரிநூலும் அணிவிக்கப்பெற்று, (அக்குமாரர்கள்), கைதவம் இன்றி
வஞ்சனையில்லாமல், எண் எண்கலை கடல் கரைஉம் – அறுபத்துநான்கு
கலைகளாகிய கடலின் கரைகளையும், கண்டு-, மெய்தவம் விளங்க –
உண்மையான தவம் விளங்க, வேழம் வில்லிஉம் விழைந்து நோக்க –
கரும்பைவில்லாகவுடைய மன்மதனும் விரும்பிப்பார்க்க,- மை தவழ் சிகரி அன்ன
வளர்ச்சியின் – மேகந் தவழ்கின்ற மலையையொத்த வளர்ச்சியோடு, வனப்பின்
மிக்கார் – அழகில் மிக்கவரானார்கள்; (எ -று.)

     முற்பிறவியிற்செய்த நல்வினையினாலேயே இப்பிறவியில் கல்வி முதலியன
கைகூடு மாதலால் ‘கலைக்கடற்கரையுங்கண்டு மெய்தவம் விளங்க’ என்றது.
செய்யுணோக்கி, ‘மெய்தவம்’ என்றது இயல்பாயிற்று. மலைபோன்ற பெருந்தோற்ற
முடையவராய் வளர்ந்து யௌவனப்பருவம் வந்ததனால் அழகினால்
மிக்கவரானார், அந்தப் பாண்டு புத்திரர்க ளென்க. “க்ரமேணதேஷாம்-
ப்ரஸாதயாமாஸவ பூம்ஷி யௌவநம்” என்றது, பாலபாரதம்

மார்பினும் அகன்ற, கல்வி; வனப்பினும் நிறைந்த, சீர்த்தி;
போர் வரு தெரியல் மாலைப் புயத்தினும் உயர்ந்த, கொற்றம்;
சீர் தரு வாய்மை மிக்க, கண்ணினும்; செங் கை வண்மை
பார் வளம் சுரக்கும் செல்வப் பரப்பினும் பரந்த அன்றே.-ஐம்புதல்வரிடத்தும் தோன்றிய நற்பண்புகள்.

கல்வி – (அந்தப்பாண்டு புத்திரர்களுடைய) கல்வியானது,
மார்பின்உம் – (அவர்களுடைய) மார்பைக்காட்டிலும் அகன்ற-; சீர்த்தி –
சீர்த்தியானது, வனப்பின்உம் – (அவர்களுடைய) அழகைக்காட்டிலும், நிறைந்த –
நிறைந்தன: போர் வரு தெரியல் மாலை புயத்தின்உம் – போரிற் பூணப்படுகின்ற
விளங்குதலையுடைய வெற்றிமாலையையணிந்த புயத்தைக்காட்டிலும், கொற்றம்
உயர்ந்த – (அவர்களது) வெற்றி மிக்கன: சீர்தரு வாய்மை – சிறப்புப் பொருந்திய
சத்தியமானது, கண்ணின்உம் மிக்க – (அவர்களின்) கண்ணைக் காட்டிலும் மிக்கன:
செங் கை வண்மை-(அன்னாரின்) செவ்விய கையினாற் செய்யப்படும் தானம், பார்
வளம் சுரக்கும் செல்வம் பரப்பின்உம் – பூமியிலே செழிப்பினாலுண்டாகின்ற
செல்வப்பரப்பைப் காட்டிலும்,  பரந்த – மிக்கன; (எ-று.)

     அகன்றமுதலியவை – பலவின்பால் முற்றுக்கள்: ஐவர்மாட்டும்
உளவாதற்கேற்ப வந்தன. “சீர்த்திமிகுபுகழ்.” கண்ணின் மிகுதல் –
அருமைகொண்டு பாராட்டுதல்.   

ஆரமும், ஆரச் சேறும், அரும் பனிநீரும், பூவும்,
ஈர வெண் மதி நிலாவும், இதம் பெறு தென்றற் காலும்,
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம்,
மாரனை மகுடம் சூட்ட, வந்தது, வசந்தகாலம்.–வசந்தகாலம் வருதல்.

ஆரம் உம் – முக்தாஹாரமும், ஆரம் சேறுஉம் – சந்தனக்
குழம்பும், அரும்பனி நீர்உம் – அருமையான பனிநீரும், பூஉம் – புஷ்பங்களும்,
ஈரம் வெள் மதி நிலாஉம் – குளிர்ச்சிபொருந்திய வெண்ணிறமுள்ள
சந்திரனுடைய நிலவும், இதம் பெறு தென்றல் கால்உம்- இதமாக வீசுதல்
பொருந்திய தென்றற்காற்றும், ஓர் உயிர் இரண்டு மெய் ஆய் உருகுவார் –
ஓருயிரும் இரண்டுமெய்யுமாகி(க் காதலுடையராய்க் கூடாது பிரிந்து)
மனங்கசிந்துநிற்பவர், உருகும் வண்ணம் – பின்னும் உருகும்படி, மாரனை
மகுடம் சூட்ட – மன்மதனை மகுடஞ் சூட்டுமாறு, வசந்தகாலம் வந்தது-;

     பிரிந்திருப்போர் மிகவும் மனம்உருக வசந்தகாலம் வந்தது; வசந்தகாலம்
வரவே,  மன்மதன் முடிசூடித் தன்செங்கோலைச் செலுத்தலாயினன்.
மூன்றாமடிக்கு – ஓருயிர் இரண்டு சரீரத்திலும் பொருந்த உருகுகின்ற
ஆடவர்களும் மகளிரும் கலவிவேட்டுருகும் படி என்று உரைத்தலும் ஒன்று.

விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற, வண்டு
புதுமையின் முரன்று மொய்ப்ப, புது மணம் பரந்து உலாவ,
கதுமெனத் தலை நடுங்க, கால் தடுமாறிற்று அம்மா!-
மது அயர்ந்தவரில் யாவர், மண்ணின்மேல் மயக்குறாதார்?-மூன்றுகவிகள் – வசந்தகாலத்துச் சோலைவருணனை.

விது – சந்திரனால், நலம் பெறு – நன்மைபெற்ற,கா சோலை,
எங்குஉம் மெய்சிவப்புஏற – எல்லாவிடங்களையும் தன்னுடலிலே (புதுத்தளிர்
வெடித்தலால்) செந்நிறம்மிகவும், வண்டு – வண்டென்னும்பறவை, புதுமையின்
முரன்று மொய்ப்ப புதுமையினலொலித்து மொய்க்கவும், புது மணம் பரந்து உலாவ
மணம் பரவியுலாவவும், கதுமென தலைநடுக்க – விரைவாக மேலிடம் நடுங்கவும்,
கால் தடுமாறிற்று – கால் தடுமாறலாயிற்று மேல் – பூமியின்மீது, மது அயர்ந்தவரில் –
கள்ளைப்பருகியப் பருகியவரில், மயக்குறாதார் யாவர்-? (எ -று.) – அம்மா –
வியப்புக்குறிக்கும்.

     காவினிடத்துக் கள்ளுண்டவரின் தன்மை ஏற்றிக் கூறப்பட்டது. மதுவயர்தல் –
வேனிற்பருவத்தைப் பெறுதலும், கட்பருகுதலும்: தலைநடுங்குதல் – மேலிடம்
நடுங்குதலும், தலையென்ற உறுப்பு நடுங்குதலும்: கால்தடுமாறல் –
காற்றுவீசுதலும், காலென்னும் உறுப்புத் தடுமாறலும். கட்பருகுவோர்க்கு உடலில்
சிவப்பு நிறந் தோன்றுதலும், கள்ளின் புதுமணத்திற்காக வண்டு மொய்த்தலும்,
புதுமணம் உலாவுதலும், தலைநடுங்குதலும், கால் தடுமாறுதலும் நிகழ்வதுபோல,
வேனிற்பருவத்தைப்பெற்ற காவுக்குப் புதுத்தளிரால் மெய்சிவப்பேறுதலும்,
புதுத்தேன் பொருட்டு வண்டு மொய்த்தலும், புத்தரும்புகள் அலர்வதால்
புதுமணம் பரந்துலாவுதலும், மேற்புறம் அசைதலும், கால்தடுமாறலும் [காற்றுத்
தடுமாறுதலும்] தோன்றினவென்க. இச்செய்யுள் – சிலேடையை
யங்கமாகக்கொண்டுவந்த வேற்றுப்பொருள்வைப்பணியாகும்

பைந் தடந் தாளால் முன்னம் பருகிய புனலை, மீளச்
செந் தழல் ஆக்கி, அம் தண் சினைதொறும் காட்டும் சீரால்,
முந்திய அசோகு, சூதம், முதலிய தருக்கள் எல்லாம்,
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ!

பைந் தட தாளால் முன்னம் பருகிய புனலை மீள செந்தழல்
ஆக்கி – பசிய பெரிய தாளினால் முன்பு உட்கொண்ட நீரை மீளவும்
செந்நிறத்தழலாகச்செய்து, அம் தண் சினை தொறு உம் காட்டும் சீரால் –
அழகிய குளிர்ந்த கிளைதோறும் காட்டுகின்ற சீர்மையினால், முந்தியஅசோகு
சூதம் முதலிய தருக்கள் எல்லாம் – (சோலையில்) முற்பட்டுள்ள அசோகு மா
முதலிய விருட்சங்கள்யாவும், இந்திரசாலம்வல்லோர் இயற்கையின் – இந்திரசால
வித்தையில் வல்லவர்கள் செய்யும் தன்மைபோல, இயற்றும் – தொழிலைச்
செய்வனவாம்: (எ -று.) ஆல்ஓ – வியப்பைக் குறிக்கும் இடைச்சொற்கள்.

     தாளாலுண்டபுனலைக் கிளைதோறும் செந்தழலாக்கிக்காட்டுவதால்,
இந்திரசாலம்வல்லோர்செய்கைபோலும் இத்தருக்களின் செய்கையென்றார்.
இந்திரசாலம் – மாயவித்தை. கிளைதோறும் செந்நிறத்தளிர்கள் தோன்றியதைச்
செந்தழலாக்கிக்காட்டுஞ்சீர் என்றது – தற்குறிப்பேற்றவணி. ‘மீள’
என்றசொல்லாற்றலால், ‘அக்நேராப:’ [தீயிலிருந்து நீர்] என்ற
காரணகாரியமுறைமாறியமைதொனி.

பரந்து எழு சூத புட்ப பராகம், நல் இராகம் மிஞ்ச,
முரண்படு சிலை வேள் விட்ட மோகனச் சுண்ணம் போன்ற!
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக, தொட்ட
அருந் தழல் கணைகள் போல அலர்ந்தன, அசோக சாலம்!

பரந்து எழு – பரவியெழுகின்ற, சூதபுட்ப பராகம் – மாம்பூவின்
தூளிகள், நல் இராகம் மிஞ்ச – சிறந்த காதல் விஞ்சும் படி, முரண்டு படு சிலை
வேள் – மாறுபட்ட வில்லையேந்திய மன்மதன், விட்ட – (யௌவனப்
பருவத்தையுடையார்மேல்) எய்த, மோகனம் சுண்ணம்போன்ற – மோகனாஸ்திரத்தின்
பொறியைப்போலும்: அசோககாலம் – அசோகமலர்த்திரள்,- புரிந்த தொல் யோகம்
மாக்கள் – செய்த சிறந்த பழமையான யோகத்தையுடைய மானுடர், புந்தி நின்று
உருக – அறிவு குன்றியுருகும்படி, தொட்ட – (மன்மதன்) தொடுத்துவிட்ட, அரு
தழல் கணைகள் போல – அரிய ஆக்நேயாஸ்திரத்தைப்போல, அலர்ந்தன –
மலர்ந்தன;

     மோகனச்சுண்ணம் – மேலேபட்டமாத்திரத்தில் மோகத்தை யுண்டாக்குஞ்
சூர்ணமெனினுமாம். அசோகம் யோகிகட்கும் காமத்தை யுண்டாக்கிற்றென்பது
பின்னடிகளின் பொருள். இனி, யோகம் என்பதை வியோகமென்பதன் முதற்குறை
எனக்கொண்டு, பிரிவு என்று உரைப்பினுமாம்: பாலபாரதத்தில் “புஷ்பம்
அசோகசாகிந: ப்ரஸூநபாணேந ருஷா வியோகிஷி – ப்ரயுக்தம் ஆக்நேய
மிவாஸ்த்ரம் ஆபபௌ” என்றது காண்க. யோகம் – புணர்ச்சியென்பாருமுளர்.
இதுவும் – தன்மைத்தற்குறிப்பேற்றவணியே.

வேனிலின் விளைவினாலும், வேனிலான் விழவினாலும்,
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும்,
தான் நலம் உறுதல் எண்ணி, சாபமும் மறந்து, மற்று அப்
பானல் அம் கண்ணாளோடும் பாண்டுவும் பரிவு கூர்ந்தான்.-அப்போது மாத்திரியினிடத்துப் பாண்டு
காதல்பூணுதல்.

வேனிலின் விளைவினால்உம் – இளவேனிற்காலந்
தோன்றியதனாலும், வேனிலான் விழவினாலும் – மன்மதன் காதல் நோயை
விளைத்தலாலும், மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினால்உம் – மிக்க
அழகினால் விளங்குகின்ற புன்சிரிப்பையுடைய மாத்திரியின் அழகினாலும்,- தான்
நலம் உறுதல் எண்ணி – தான் காமவின்பத்தையடையவெண்ணி,- சாபம்உம்
மறந்து – (கிந்தம முனிவன்) சாபத்தையும் மறந்து, மற்று – பின்னும், அ பானல்
அம் கண்ணாளோடுஉம் – கருங்குவளை மலர்போன்ற அழகிய
கண்களையுடையவளான அந்த மாத்திரியினிடம், பாண்டுவும்-, பரிவு கூர்ந்தான் –
காதல்மிகுந்தான்; (எ-று.) – பாண்டுவும் என்ற உம்மை –  உயர்வுசிறப்போடு
எச்சப் பொருளுமுடையது.

அருந் தளிர் நயந்து நல்கி, அலகுடன் அலகு சேரப்
பொருந்தும் முன் அவசம் ஆகி, போகம் மென் குயிலும் பேடும்
இருந்து மெய் உருகும் காவில், இரதியும் மதனும் என்ன,
வருந்திய காதலோடும் மாதவிப் பந்தர் சேர்ந்தார்சோலையில் பாண்டுவும் மாத்திரியும் மாதவிப்பந்தர் சேர்தல்.

அருந் தளிர் – அருமையான தளிரை, நயந்து நல்கி – விரும்பி
(த்தன்) பேடைக்குக் கொடுத்து, அலகுடன் அலகுசேர – (பெட்டையின்)
அலகுடனே (ஆண்பறவையின்) அலகுசேரா நிற்க, பொருந்து முன் – கூடும்
முன்னே, [கூடியவுடனேயென்றபடி], அவசம் ஆகி – பரவசமாகி, போகம் மெல்
குயில்உம் பேடுஉம் – போகத்தினால் இளகிய ஆண்குயிலும் அதன் பேடையும்,
இருந்து-, மெய் உருகு- உடலுருகுகின்ற, காவில் – சோலையிலே, இரதிஉம்
மதன்உம் என்ன – ரதிதேவியும் மன்மதனும்போல, வருந்திய காதலோடு –
வருத்தமுறுதற்குக்காரணமான காமவிச்சையுடனே, மாதவிபந்தர் – குருக்கத்திக்கொடி
பந்தர்போற் படர்ந்திருந்த இடத்தை, சேர்ந்தார் – (பாண்டுவும் மாத்திரியும்)
அடைந்தார்கள்; (எ-று.)

     இவர்கள் கொண்ட காதல் பின் வருத்தமுறுதற்கு ஏதுவாதல் காண்க

பஞ்சின் மெல் அடியினாளும் கணவனும், பழங் கணோட்டம்
நெஞ்சினை நலிய, மேன்மேல் நேயம் உற்று உருகி, ஆங்கண்,
‘எஞ்சிய காலம் எல்லாம் என்செய்தேம்!’ என்று என்று எண்ணி,
வெஞ் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே.–அங்கேஇருவரும் இன்பமனுபவித்தல்.

பஞ்சின் மெல் அடியினால்உம் – பஞ்சுபோல்மெல்லிய
பாதங்களையுடையளான மாத்திரியும், கணவன்உம்-, (தாம்கொண்டிருந்த),
பழங்கணோட்டம் – பழமையான [நெடுநாளாகவுள்ள] இச்சை, நெஞ்சினை –
மனத்தை, நலிய – வருத்த,- மேல்மேல் நேயம் உற்று- மேலும்மேலும் அன்பு
பூண்டு, உருகி-, ஆங்கண் – அந்த வனத்திலே ‘எஞ்சிய – கீழேகழிந்திட்ட,
காலம் எல்லாம்-, என்செய்தேம் – என்ன செய்திட்டோம்! [இவ்வாறு
இன்பமனுபவியாது வாளாகழித்திட்டோம்!],’ என்று என்று எண்ணி – என்று
பலமுறையெண்ணமிட்டு, வெம் சிலை அநங்கவேதம் – கொடிய
வில்லையுடையனான மன்மதனுடைய வேதத்திற்சொல்லிய கரணங்களை,
முறைமையால்-, மேவினால் – நுகரலானார்கள்; (எ-று.)

     வேதம் – வேதத்திற்கூறிய கரணங்களுக்கு இலக்கணை. கண்ணோட்டமென்பது
– இங்கே, விருப்பமென்றபொருளது. அநங்க வேதம் – காமசாஸ்திரம். 

பூ இயல் அமளி பொங்க, புணர் முலை புளகம் ஏற,
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி,
காவி அம் கண்ணி, கேள்வன் கமழ் வரை மார்பின், அன்போடு,
ஓவியம் எனவே, உள்ளம் உருகினள், அயர்ந்து வீழ்ந்தாள்மாத்திரி அவசையாகிப் பாண்டுவின்மார்பிலே வீழ்தல்.

பூ இயல் அமளி பொங்க – பூவினாலியன்ற படுக்கை பொலிவு
பெறவும், புணர் முலை புளகம் ஏற – நெருங்கியுள்ள கொங்கைகளில்
மயிர்க்கூச்சு மிகவும், மேவிய – நுகர்ந்த, கலவி இன்பம் – புணர்ச்சியின்பத்தினால்,
மெய் உறு மகிழ்ச்சி முற்றி – உடம்பிலே பொருந்திய மகிழ்ச்சி முதிர்ந்து,- காவி
அம் கண்ணி – கருங்குவளை மலர்போன்ற அழகியகண்களையுடையாளான மாத்திரி,
கேள்வன் – (தன்) கணவனாகிய பாண்டுவின், கமழ் வரை மார்பின்- (கலவைச்
சாந்தின்நறுமணங்) கமழ்கின்ற மார்பிலே, அன்போடு – அன்புடனே, ஓவியம்
என்ன – சித்திரப்பதுமைபோல, உள்ளம் உருகினள் – மனமுருகி, அயர்ந்து –
பரவசையாகி, வீழ்ந்தாள்-; (எ-று.)

அரும்பிய விழியும், தொண்டை அமுது உறு பவள வாயும்,
விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும், ஆகி,
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல, மன்றல்
சுரும்புஇனம் இரங்கி ஆர்ப்ப, தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான்பாண்டு சாபத்தினால் உயிர்சோர்ந்துவிழுதல்.

அரும்பிய விழிஉம் – சிறிதுமலர்ந்த கண்ணும், தொண்டை அமுது
உறு பவளம் வாய்உம் – தொண்டையிலுள்ள நீர் வெளியேயூறுகின்ற பவழம்போன்ற
வாயும், விரும்பிய சுரதம் போகம் மேவரு குறிப்புஉம் – (தான்) விரும்பின புணர்ச்சி
பற்றிச் செல்லுகின்ற எண்ணம் புலப்படுகின்ற முகக்குறிப்பும், ஆகி –
உடையவனாகி,- பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன்போல-
போர்செய்கின்ற மன்மதனுடைய அம்பினால் உயிர் நீங்கினவன் போல, மன்றல்
சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப – மணத்திற்செல்லும் வண்டுகளின்கூட்டம்
இரக்கங்கொண்டு ஒலிப்பதுபோல் ஒலிக்க,- தோன்றல்உம்- பாண்டுராசனும்,
சோர்ந்து – உயிரொடுங்கி, வீழ்ந்தான்;

     இறந்தபோதைய பாண்டுவின்நிலை, இங்கு இனிது கூறப்பட்டிருத்தல்
காண்க. புணர்ச்சியே இந்தப்பாண்டுவின் உயிரொழிவுக்குக் காரணமாதலால்,
‘பொரும்படைமதனனம்பாற் பொன்றினன்போல’ என்றது;
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.   

கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால்,
எஞ்சினன் நராதிபதி; ஈது என வியப்போ?
அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம்;
நஞ்சும் அமுது ஆம், உரிய நல் வினையின் மாதோ!பாண்டு காமவின்பத்தாலிறந்ததுபற்றிய கவிக்கூற்று.

கொஞ்சு கிளி அன்ன மொழி – கொஞ்சுகின்ற கிளியை யொத்த
மொழியையுடையளான மாத்திரியின், குமுதம் இதழ் அமுதால் –
ஆம்பல்மலர்போன்ற வாயிதழினின்றுதோன்றிய அமிருதத்தினால், நர அதிபதி –
பாண்டுமகாராசன், எஞ்சினன் – உயிரொடுங்கினான்: ஈது என வியப்புஓ – இது
என்ன ஆச்சரியமோதான்! அஞ்சு தரு தீவினையின் – அஞ்சத்தக்க
தீவினையினால், ஆர் அமுதுஉம் நஞ்சு ஆம் – அருமையான அமிருதமும்
விஷமாகும்: உரிய நல்வினையின்- உரிமையாகக்கொள்ளத்தக்க
நல்வினையினாலே, நஞ்சுஉம் அமுது ஆம் – நஞ்சமும் அமிருதமாகும்; (எ-று.)

     முன்னிரண்டடியை மூன்றாமடி சமர்த்தித்துநின்றது: சிறப்புப் பொருளைப்
பொதுப்பொருளாற் சமர்த்தித்துநின்ற வேற்றுப்பொருள்வைப்பணி. தீவினையால்
அமுதமும் நஞ்சாம்என்று கூற வந்தவர், நான்காமடியால் அதன்
மறுதலைப்பொருளையும் உடன் கூறினார். நர அதிபதி – மனிதர்க்குத்தலைவன்.
மாதோ – ஈற்றசை.

     இதுமுதற் பதினொருகவிகள் பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் காய்ச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்

சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா,
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள்,
முத்திரை உணர்ந்திலள், ‘முயக்கம் உறும் இன்ப
நித்திரைகொலாம்!’ என நினைந்து, அருகு இருந்தாள்.-மாத்திரி பாண்டுநித்திரையிலிருப்பதாகவே நினைத்தல்.

சித்திரை – சித்திரைமாதத்தில், வசந்தன் – வசந்தருதுவினால், வரு
– தோன்றுகின்ற, செவ்வியுடன் – அழகோடு, மகிழா – (கணவனுடன்) மகிழ்ந்து,
மத்திரிஎனும் – மாத்திரியென்கிற, கொடியவாள் கண்விடம் அன்னாள் –
கொடியவாள்போன்ற கண்களையுடைய விடத்தையொத்தவள், முத்திரை
உணர்ந்திலள் – (பாண்டுவுக்கு) இறப்புக்குறிதோன்றியதை யறியாதவளாய்,
(இந்நிலை), முயக்கம் உறும் இன்பம் நித்திரை கொல் ஆம் – தழுவுதலா லுண்டான
இன்பவசத்தால் தோன்றிய நித்திரைபோலும், என – என்று, நினைந்து-, அருகு
இருந்தாள் – சமீபத்திலேயிருந்தாள்;

     மத்திரி – குறுக்கல். மன்னவனிறப்புக்குக் காரணமானதனால்,
‘விடமன்னாள்’ என்றது.   

செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான்
உயிர்த்திலன், விழித்திலன், உணர்ந்தும் இலன்’ என்னா,
அயிர்த்தனள்; அழைத்தனள் அரற்றினள்; இரங்கா,
வயிர்த்தனள், நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள்.–பின்புகணவன் இறந்தான்போலுமென்று மாத்திரி அரற்றுதல்.

செயிர்த்தவரை – பகைவரை, ஆவி கவர் – உயிரைக் கவர்கின்ற,
தீ உமிழும் வேலான் – நெருப்பைக்கக்குகின்ற வேற்படையையுடையவனான
பாண்டுராசன், (இத்துணைநேரமாயும்), உயர்த்திலன் – மூச்சுவிட்டானில்லை:
விழித்திலன் – கண்களைத் திறந்தானில்லை, உணர்ந்துஉம்  இலன் –
உணர்ச்சிபெற்றானுமில்லை, என்னா – என்றுகருதி, அயிர்த்தனள் –
(உயிரொழிந்தானோ என்று) சந்தேகித்தாள்: அழைத்தனள் அரற்றினள் –
கூவியழுதாள்: இரங்கா – இரக்கமிக்கு, நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள்
– மண்ணுலகில் தான்இருப்பதைவிட மேலிடத்துள்ள வானத்திற்செல்வதை
இனிதெனக்கருதுபவளாகி, வயிர்த்தனள்- (இறப்பதாகத்) தீர்மானங்கொண்டாள்;
(எ-று.)

     மாத்திரி ரிஷியின் சாபத்தை நினைந்து தடுக்கவும், வலியக் கூடிப் பாண்டு
உயிரிழந்தானாக, உணர்ந்த மாத்திரி கோவென்று கதறி யழுததாகப் பாலபாரதம்
கூறும்.  

புந்தி இலள், மன்றல் பெறு, பூவை குரல் கேளா,
‘முந்திய கடும் பழி முடிந்ததுகொல்!’ என்னா,
குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள்,
அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள்அரற்றொலிகேட்டகுந்தி புத்திரருடன் அங்குவருதல்.

புந்தி இலள் – (சாபத்தைப்பற்றிய) அறிவு இல்லாதவளாய், மன்றல்
பெறு – (கணவனோடு) சேர்க்கையைப்பெற்ற, பூவை – நாகணவாய்ப்
பறவைபோன்ற மாத்திரியின், குரல் – குரலை, கேளா – கேட்டு,- ‘முந்திய –
முற்பட்டுநேர்ந்துள்ள, கடும்பழி – கொடிய சாபம், முடிந்தது கொல் – (இன்று)
பயனைவிளத்திட்டதோ?’ என்னா – என்று சங்கைகொண்டு,- குந்திஉம் –
குந்திதேவியும், விரைந்து-, தன் குமாரரொடு – தன்புத்திரிருடனே, அந்தி
அரவிந்தம் என அணிகுலை முகத்தாள் – மாலைக்காலத்துத்தாமரை போல
அழகுகுறைந்த முகத்தையுடையவளாய், புக்காள் (அங்கு வந்து) சேர்ந்தாள்;
(எ-று.)

உற்றதும், அருங் கொழுநன் உயிர் உறும் நலத்தால்
இற்றதும், உணர்ந்து, இவள் இரங்கி அழும் எல்லை,
குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும்
நல் தவர் புகுந்து, உருகி, நைந்து, உளம் நெகிழ்ந்தார்.-குந்தியென்பாள் அழும்போது நற்றவரும் உருகி
உளம்நெகிழ்தல்.

உற்றதுஉம்- (தனக்கு) நேர்ந்ததாகிய கைக்மையையும், அருங்
கொழுநன்உயிர் – (தன்னுடைய) அரிய கணவனுயிர், உறும் நலத்தால் – (தான்)
அனுபவித்தஇன்பத்தினால், இற்றதுஉம் – அழிந்ததையும்,உணர்ந்து-, இரங்கி-,
இவள் – இந்தக் குந்தி, அழும் எல்லை- அழும்போது,- குற்றம் அகலும்படி –
குற்றம்தீரும்படி (நோற்று), குணங்களை நிறுத்தும் – குணங்களை (த் தம்மிடத்து)
நிலை நாட்டும், நல் தவர் – சிறந்த தவத்தையுடைய முனிவர், புகுந்து – (அங்கு)
வந்து, உளம் – மனம், நைந்து-, உருகி-, நெகிழ்ந்தார் – இளகப்பெற்றார்;
(எ-று.)

அழு குரல் விலக்கியபின், ஐம் மகவையும் கொண்டு,
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய,
புழுகு கமழ் மைக் குழலி, பொற்புடை முகத்தாள்,
முழுகினள் அனற்புனலில், மொய்ம்பனை விடாதாள்.–புதல்வரைக்கொண்டு முனிவர் அந்திமக்கடனை நடத்தலும்,
மாத்திரி சிதையனலிற் குளித்தலும்

(வந்தமுனிவர்), அழு குரல் – அழுகுரலை, விலக்கிய பின் –
தவிர்த்தபிறகு, ஐ மகவைஉம் கொண்டு – ஐந்துபுத்திரரையுங் கொண்டு, எழு
கடல் நிலத்து அரசை – ஏழுகடலைக்கொண்ட பூமிக்கு அரசனான
பாண்டுமன்னவனுக்கு, ஈமம் விதி – அந்திமக்கடனை, செய்ய-,- புழுகு கமழ் மை
குழலி – புழுகுமணம்வீசுகின்ற கறுத்த கூந்தலையுடையவளும், பொற்பு உடை
முகத்தாள் – அழகையுடைய முகத்தையுடையவளுமான மாத்திரி, மொய்ம்பனை
விடாதாள் – (தன்) கணவனைப் பிரிந்திருக்கமாட்டாதவளாய், அனல் புனலின்
முழுகினள் – சிதையனலாகிய நீரிலே முழுகினாள்; (எ-று.)

     நீர்க்கயத்துமுழுகுவதுபோல் மனமகிழ்ச்சியோடுதீயிற்குளித்திட்டாள் மாத்திரி
யென்க. “காதலன்வீயக்கடுந்துயரெய்திப், போதல் செய்யா வுயிரொடு புலந்து,
நளியிரும்பொய்கையாடுநர் போல, முளியெரிபுகூஉம்முதுக்குடிப்பெண்டிர்,”
“பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற, வள்ளிதழவிழ்ந்ததாமரை,
நள்ளிரும் பொய்கையுந்தீயுமோரற்றே” என்பன காண்க. தன்பிழையால் கணவன்
இறந்திட்டதுபற்றி, மாத்திரி, தன் புதல்வரையும் காக்குந் தொழிலைமேற்கொண்டு
இருக்குமாறும் தான் அனலிற் குளிக்குமாறும் குந்திதேவியிடம்
அநுமதிவேண்டிப்பெற்று, புதல்வரைத் தழுவி உச்சிமோந்து அந்தக்குந்தியின்
கையிலொப்பித்து மகிழ்வோடு தீப்பாய்ந்தன ளென்று பாலபாரதம் கூறும். செய்ய
= செய்விக்க: பிறவினையில்வந்ததன்வினை

தங்கை அவள், வான் உலகு தலைவனுடன் எய்தி,
கங்கை வனம் மூழ்கி, உயர் கற்பவனம் வைக,-
பங்கய நெடுந் துறை படிந்து, தன் மகாரால்,
மங்கை இவளும், கடன் முடித்தனள், வனத்தேமாத்திரிசுவர்க்கம்புக, குந்தி கணவனதுஈமக்கடனை முடித்தல்.

தங்கையவள் – தனக்குப்பின் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவளான
மாத்திரி, வான் உலகு – சுவர்க்கலோகத்தை, தலைவனுடன் – கணவனுடனே,
எய்தி – அடைந்து, கங்கை வனம் மூழ்கி – ஆகாச கங்கையின் நீரிலே முழுகி,
உயர் கற்பவனம் வைக – சிறந்த (வானுலகத்துக்) கற்பகவனத்து நிழலிலே
தங்கினளாக,- மங்கை இவள்உம் – குந்தியென்கிற இந்த மடத்தையும், பங்கயம்
நெடுந் துறைபடிந்து – தாமரையையுடைய பெரிய நீர்த்துறையிலே மூழ்கி, தன்
மகாரால் – தன் புத்திரரைக்கொண்டு, வனத்தே – அந்தக்காட்டில், கடன் – (தன்
கணவனுடைய) ஈமக்கடனை, முடித்தனள் – நிறைவேற்றினாள்; (எ – று.)

     மாத்திரி கங்கைநீரில்மூழ்கிக் கற்பகவனத்தே தங்க, குந்தியும்
பங்கயத்துறைநீரில் மூழ்கி வனத்தே தங்கினா ளென ஒரு நயந்தோன்றக்
கூறியவாறு.     

காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால்,
ஆசி பெறும் அப் புதல்வர் ஐவரொடும் அன்றே,
ஏசு இல் பிரதைக் கொடியை இறை நகரின் உய்த்தார்-
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர்.–சதசிருங்கமுனிவர்கள் குந்தியை மக்களோடு
அஸ்தினாபுரியிற் சேர்த்தல்.

தேசிகரின் – ஆசிரியரைப்போல, முன் தொழுதகும் –
முதலில்தொழத்தக்க, சதசிருங்கர் – சதசிருங்கபருவதத்தில் வசிப்பவரான,
காசிபன் முதல் கடவுள் வேதியர் – காசிபன் முதலாகிய கடவுளர் போன்ற
அந்தணர்,- கருத்தால் – (தம்) மனப் பூர்வமாகக் கூறும், ஆசி வாழ்த்தை,
பெறும் – பெற்ற, அ புதல்வர் ஐவரொடுஉம் – அந்த ஐந்துபுத்திரரோடும்,-
ஏசுஇல் பிரதைகொடியை- குற்றமற்ற கொடி போன்ற பிரதையென்பாளை, இறை
நகரின் – அரசனுடைய அஸ்தினாபுரியிலே, உய்த்தார் – கொண்டுசேர்த்தார்;
(எ-று.)

     சதசிருங்கரென்பார் புத்திரரோடு பிரதையை வேதியர்கருத்தால்
அத்தினபுரியில் உய்த்தாரென்று இச்செய்யுளுக்குப் பொருள் கூறுதல்
முதனூலுக்குப்பொருந்தாது. அன்றே – ஈற்றசை: பாண்டுவின் அந்திமக்கடன்
முடிந்த அன்றைக்கே எனினுமாம். பாண்டவர் அத்தினாபுரியைச் சேர்ந்தபோது
தருமபுத்திரனுக்கு வயசு பதினாறு, வீமனுக்குப் பதினைந்து, அருச்சுனனுக்குப்
பதினான்கு, இரட்டையர்க்குப் பதின்மூன்று என்றும், பாண்டுவின் தகன
ஸம்ஸ்காரமே சதசிருங்கபர்வதத்தில் நடந்ததாக மற்றை உத்தரகிரியைகள்
அஸ்தினாபுத்திலே திருதராஷ்டிரன் முதலியோராற் செய்விக்கப்பட்டன வென்றும்
வியாசபாரதத்தால் விளங்கும்.

இறந்த துணைவற்கு உளம் இரங்கும் நிலமன்னன்
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து,
புறம் தழுவி, அப்பொழுது புண்ணிய நலத்தால்,
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான்.–திருராஷ்டிரன் வணங்கிய புத்திரரையெடுத்துத் தழுவிமகிழ்தல்.

இறந்த – உயிர்நீங்கிய, துணைவற்கு – தம்பியான பாண்டுவின்
பொருட்டு, உளம் இரங்கும் – மனத்தில் இரக்கங்கொண்ட, நிலம் மன்னன் –
நிலத்துக்குஉரியமன்னனான திருதராட்டிரன்,- சிறந்த சரணத்தில்-(தன்னுடைய)
சிறப்புற்ற பாதங்களிலே, விழு – வீழ்ந்து வணங்கிய, சிறுவரை – புதல்வரை,
எடுத்து-, அப்பொழுது-, புறம் தழுவி- (அவர்களுடைய) முதுகைத்
தடவி,புண்ணியம் நலத்தால் பிறந்த – புண்ணியப்பயனால் அவர்கள் பிறந்த,
பொழுது – வேளையை, ஒத்து – ஒப்ப, மகிழ் பெற்றியினன் ஆனான் –
மகிழ்ச்சியுற்ற தன்மையனானான்; (எ -று.)

     தம்பியின்மரணத்தால் வருந்துகின்ற அந்தத்திருதராஷ்டிரன்
அத்தம்பியினுடைய குமாரர் தன்பாதங்களில் விழ, அவர்களை யெடுத்து
அணைத்து அவர்கள் பிறந்தபோது பெற்றோர் அடைந்த மகிழ்ச்சியொப்ப
மகிழ்ச்சி  யடையலாயின னென்பதாம். மகிழ் – முதனிலைத் தொழிற்பெயர்.

வியன் நதிமகன், சிலை வல் விதுரன், முதல் உள்ளோர்,
பயனுடை விசும்பு பயில் பாண்டுவை நினைந்தும்,
சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும்,
நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார்.–வீடுமன் முதலியோர் பாண்டுவையும் அவன்
மக்களையும் நினைந்து இருவகைக்கண்ணீரைச் சொரிதல்.

வியன் நதி மகன் – கங்கைநதியின் மகனாகிய வீடுமன், சிலை வல்
விதுரன் – வில்லில்வல்ல வலியவிதுரன், முதல் – முதலாக, உள்ளோர்-,- பயன்
உடை விசும்பு – புண்ணியப்பயனாக அடைதலையுடைய சுவர்க்கத்தில், பயில் –
சென்ற, பாண்டுவை நினைந்துஉம் – பாண்டுவைச் சிந்தித்தும், சயம் நிலைபெறும்
தகைய தனயரைஉகந்து உம் – வெற்றிநிலைபெறுந் தன்மையையுடைய
(அந்தப்பாண்டுவின்) புதல்வரைக்கண்டு மகிழ்ந்தும், நயனம்- (தம்) கண்களில்,
இரு பைம் புனல்உம் நல்கினர் – (சோகக்கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்ற)
இருவகையான புதிய கண்ணீர்களையும் விட்டவராய், நயந்தார் – (தம்முடைய)
விருப்பத்தைக் காட்டினார்; (எ-று.)

     ஆகாசம் என்று பொருளுள்ள வியத் என்பது வியன் என்று திரிந்தது:
வியன்+நதி = வியனதி: வானதி கங்கை. வியன் – பெருமையெனக்கூறித்
தமிழ்ச்சொ லென்றலும் ஒன்று.   

அனுச நிருபன் புதல்வர் ஐவரும், மகீபன்
தனயர் ஒரு நூற்றுவரும், அன்பினொடு தழுவி,
கனகுலம் முகந்து பெய் கருங் கயம் நெருங்கும்
வனசமலரும் குமுதமலரும் என வளர்வார்.பாண்டுபுத்திரரும் திருதராட்டிரன் புத்திரரும்
ஓரிடத்துவளர்தல்.

அனசநிருபன் புதல்வர் ஐவர்உம் – (திருதராட்டிரனுடைய)
தம்பியான பாண்டுமன்னவனுடைய புத்திரர் ஐந்து பேரும், மகீபன் தனயர் ஒரு
நூற்றுவர்உம் – திருதராட்டிர மன்னவனுடைய புத்திரர் நூறுபேரும்,-
அன்பினொடு தழுவி – அன்போடு தழுவிக்கொண்டு,- கன குலம் முகந்து பெய்
– மேகக்கூட்டம் (கடலில்) முகந்துகொண்டு பெய்வதனால் நிறைகின்ற, கருங்
கயம் – பெரிய நீர்நிலையிலே, நெருங்கும் – நெருங்கியுள்ள, வனச மலர்உம்
குமுதமலர் உம் என – தாமரைமலரும் ஆம்பல்மலரும்போல, வளர்வார்
வளர்பவராயினர்; (எ-று.)

     சிறந்துதோன்றும் தாமரைமலர் பாண்டவர்க்கும், குமுதமலர்
துரியோதனாதியர்க்கும் உவமை.   

இன்னணம் வளரும்காலை, எறி கடல் உடுத்த அல்குல்,
மின் எனும் மருங்குல், கொங்கை வெற்புடை, வேய் கொள்
மென் தோள்,
பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள்-
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனைத் தந்த கோமான்,–இதுவும் அடுத்தகவியும் – ஒருதொடர்: வசுதேவன்
முதலியோர் அத்தினாபுரிக்கு வருதலைத் தெரிவிக்கும்.

இன்னணம் – இவ்வாறு, வளரும்காலை – (பாண்டவரும்
துரியோதனாதியரும்) வளராநிற்கையில்,- எறி கடல் உடுத்தஅல்குல் –
அலைவீசுகின்ற கடலை உடையாகச் சுற்றியுள்ள நிதம்பதேசத்தையும், மின் எனும்
மருங்குல் – மின்னலென்னும் இடையையும், வெற்பு கொங்கை – வெற்பாகிய
கொங்கையையும், வேய்கொள் மெல்தோள் – மூங்கிலினாற்கொண்ட
மெல்லியதோளையும், உடை – உடைய, பொன் எனும் நிறத்தினோடு பொற்புஉம்
அழி – பொன்னெனத்தக்க நிறுத்தினோடு தன் அழகும் அழிந்ததனால்,
ஆகுலத்தாள் தன் – துன்பமடைந்தவளான பூமிதேவியினுடைய, எ(ண்)ணம் –
(பாரந்தீர்க்கவேண்டுமென்று கருதிய) எண்ணத்தை, முடிப்பான் –
முடிப்பதன்பொருட்டே, வந்த – (பூமியிலே) அவதரித்தவனாகிய, தலைவனை –
தலைவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை, தந்த – பெற்ற, கோமான் – தலைவனாகிய
வசுதேவனும்,- (எ-று.)- இச்செய்யுளில் ‘வளருங்காலை’ என்பது,
அடுத்தசெய்யுளில் ‘அத்தினாபுரிவந்துற்றார்’ என்பதனோடு இயையும்.

     இதுமுதல் எட்டுக்கவிகள்- இச்சருக்கத்து 67 – ஆங் கவி போன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்.

குந்திபோசன்தன் தெய்வக் குலத்துளோர்களும், அநேக
இந்திரர் அவனிதன்னில் எய்தினர் ஆகும் என்ன,
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும்,
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன, அத்தினாபுரி வந்து உற்றார்

குந்திபோசன் தன் தெய்வம் குலத்துஉளோர்கள் உம் –
குந்திபோசனும் அவனுடையசிறப்புற்ற குலத்துத்தோன்றியவர்களும், அனேக
இந்திரர் – அனேக இந்திரர்கள், அவனிதன்னில் – பூமியிலே, எய்தினர் –
வந்துள்ளார், என்ன – என்று சொல்லுமாறு, கந்தம் வான் கொன்றை தோயும்
கங்கையாள் குமரன் – நறுமணமுள்ள சிறந்த கொன்றைமலரிற் படிந்த
கங்காதேவியின் குமாரனான வீடுமன், வைகும் – தங்கியுள்ள, அந்தம் இல்
சுவர்க்கம் அன்ன – அழிதலில்லாத சுவர்க்கலோகத்தையொத்த, அத்தினாபுரி –
அத்தினாபுரியை, வந்துஉற்றார் – வந்துசேர்ந்தார்; (எ-று.)-ஆகும் – அசை.

     பாண்டுஇறக்க, குந்தியும் அவளுடைய புத்திரரும் அவனுடைய அந்திம
கருமங்களைச் செய்துமுடித்திட்டுக் காட்டிலிருந்து நாட்டில் இப்போதுதான் வந்து
சேர்ந்தன ராதலால், உறவின் முறையாரான வசுதேவன் முதலியோர் அவர்களைக்
காணுமாறு வந்தனரென்க.    

வெண் நிற மதியம் அன்ன விடலையும், கரிய மேக
வண்ணனும், வள்ளல்தன்னைத் திரு வயிற்று உதித்த மாதும்,
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி, எல்லாப்
புண்ணிய நலமும் எண்ணி, பூமி ஆள் முறையும் கோத்தார்.-கிருஷ்ணன்முதலியோரும் குந்தியைக்கண்டு புண்ணியநலனை
யெண்ணிப் பூமியாளும்முறையையும் ஆலோசித்தல்.

வெள் நிறம் மதியம் அன்ன விடலைஉம் – வெண்ணிறமுடைய
சந்திரனை யொத்த ஆண்களிற் சிறந்தோனாகிய பலராமனும், கரிய மேகம்
வண்ணன்உம் – கருநிறமுள்ள மேகநிறத்தனாகிய க்ருஷ்ணனும், வள்ளல்தன்னை
திரு வயிறு உயிர்த்த மாதுஉம் – அந்த ஸ்ரீகிருஷ்ணனை (த் தன்) திருவயிற்றிலே
தோன்றுமாறு செய்த பெண்ணாகிய தேவகியும், எண் இலா உவகையோடுஉம் –
அளவில்லாத மகிழ்ச்சியுடனே, குந்தியை எய்தி – குந்தியையடைந்து, புண்ணியம்
நலம்எல்லாம்உம் எண்ணி – புண்ணியத்தினால் விளைந்த நன்மைகளையெல்லாம்
கருதிப்பார்த்து, பூமி ஆள் முறைஉம் – (இனிப்) பூமியையாள வேண்டியமுறையையும்,
கோத்தார் – கருதினார்கள்; (எ -று.)

பாண்டு சாபவசத்தனானபின்பும் அவனுடைய சந்ததியற்றுப் போகாமல்
தேவர்களருளால் முளைத்தது புண்ணியத்தினால் விளைந்த நன்மையாதல்
காண்க. பூமிபாரம்  தீர்ப்பதற்கே திருவவதரித்த க்ருஷ்ணன், பூமியாள் முறையை
உடனிருந்துகருதியமை ஏற்றதாதல் காண்க

எம்பிரான், ஆதிமூலம், இந்திரன் முதலோர்க்கு எல்லாம்
தம்பிரான், பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி,
‘அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே,
இம்பர் நோய் அகற்றி, எல்லா எண்ணமும் முடித்தும்’ என்றான்தருமபுத்திரனைநோக்கி ஸ்ரீக்ருஷ்ணன் கூறியது.

எம்பிரான் – எமதுசுவாமியும், ஆதிமூலம் – மூலப்பொருள்கட்கும்
மூலமானவனும், இந்திரன் முதலோர்க்கு எல்லாம் தம்பிரான் – இந்திராதியர்க்கும்
சுவாமியுமான ஸ்ரீக்ருஷ்ணன், பாண்டு ஈன்ற – பாண்டுமகாராசனுக்குப்
புத்திரனாகப்பிறந்த, தருமதேவதையை நோக்கி – தருமதேதையான யுதிஷ்டிரனைப்
பார்த்து,- அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்துஉம் – சமுத்திரத்துக்கு
உட்பட்ட பூமிமுழுவதையும்பற்றி, இம்பர் நோய் – இங்குவரக்கூடிய துன்பத்தை,
அகற்றி – போக்கி, எல்லாம்எண்ணம்உம் – எல்லாவெண்ணத்தையும், நாம்ஏ
முடித்தும் – நாமே தீர்த்துவைப்போம், என்றான்-; (எ-று.)

     எல்லாவெண்ணமும் என்றது – பூபாரந் தீர்க்கவேணுமென்று தான்
கருதியிருப்பதும், பாண்டவர்க்கு ஞாதியரால் நேரக்கூடியனவாகக்கருதும்
பலவகையிடையூறுகளும் ஆகிய பலவற்றையும் காட்டும். தர்மிஷ்டனாதலால்
தருமபுத்திரனை, ‘தருமதேவதை’ என்றார். இம்பரேயகற்றி யென்றும் பாடம்.

முகுரவானனனும், வேத்து முனிவனும், மனம், சொல், காயம்,
பகிர்வு இலா விதுரன்தானும், பாந்தள் ஏறு உயர்த்த கோவும்,
நிகர் இலாத் துணைவர்தாமும், நீரொடு நீர் சேர்ந்தென்ன,
தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே.திருதராஷ்டிரன் முதலியோர் வந்தவரோடு
அளவளாவுதல்.

முகுரவானனன்உம் – திருதராட்டிரனும், வேந்து முனிவன்உம் –
அரசனாயிருந்தே முனிவனாயிருக்கும் வீடுமனும், மனம் சொல் காயம் பகிர்வு
இலா விதுரன்தான்உம் – மனசு வாக்கு காயம் என்னும் திரிகரணங்களும்
வேறுபடுதலில்லாத [ஒன்றுபட்டுள்ள] விதுரனும், பாந்தள் ஏறு உயர்த்த கோஉம்
– சர்ப்பத்தை உயரக் [கொடியிற்] கொண்டவனாகிய துரியோதனனும், நிகர் இலா
துணைவர்தாம்உம் – ஒப்பற்றவரான அவனுடைய தம்பிமாரும், நீரொடு நீர்
சேர்ந்துஎன்ன – நீரோடு நீர் சேர்த்தாற்போல (வேறுபாடின்றி ஒரு
தன்மையராய்), தகைவு இலா அன்பினோடுஉம் – தடைப்படுதலில்லாத
அன்புடனே, தழுவினர் – (வந்த அந்தவசுதேவன் முதலியோரைத்)
தழுவினவராய், கெழுமினார் – உரிமை பாராட்டினார்கள்; (எ-று.)

     முகுரவானனன் என்றபெயர்க்கு – கண்ணாடிபோன்ற முகமுடையவனென்று
பொருள்: முகுரம் – கண்ணாடி: ஆனனம் – முகம்: கண்ணாடி தான்
பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சியில்லாதுபோல,
தான்பிறராற் காணப்பட்டுப் பிறரைத் தான் காணாத பிறவிக்குருடான முகத்தை
யுடையவனென்றவாறு: இனி, கண்ணாடிபோல விளக்கமுடைய
முகமுடையவனென்றுமாம்: “வயக்குறுமண்டிலம் வடமொழிப்பெயர்பெற்ற,
முகத்தவன்” என்றார், கலித்தொகையிலும். ‘நீரொடுபால்சேர்ந் தென்ன’ என்றும்
பாடம். 

தன் பதி வந்தோர்தம்மை, தாதைதன் தாதை ஆன
முன்புடைக் கங்கை மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம்,
அன்பொடு கண்டு கண்டு, கண் களித்து, ஆர்வம் மிஞ்சி,
மன்பதை மகிழ்ச்சி கூர, வரம்பு இலா விருந்து செய்தார்.–வந்தவர்க்கு வீடுமன் முதலியோர் விருந்துசெய்தல்

தன் பதி வந்தோர் தம்மை – தருமபுத்திரனுடைய நகராகிய
அத்தினபுரத்தை வந்தடைந்தவராகிய வசுதேவர்முதலியோரை, தாதை தன்
தாதைஆன – பாட்டன் முறையாகுபவனான, முன்பு உடை கங்கை மைந்தன்
முதலிய – வலிமையையுடைய கங்கா புத்திரன் [வீடுமன்] முதலான, முதல்வர்
எல்லாம் – முதன்மைபெற்றவரெல்லாம், அன்பொடு – அன்போடு, கண்டு கண்டு
– பார்த்துப் பார்த்து, கண்களித்து – கண்கள் மகிழ்வுறப் பெற்று, ஆர்வம் விஞ்சி
– பிரீதிமிகுந்து,- மன்பதை மகிழ்ச்சி கூர – (செய்யும் உபசாரத்தைக்கண்ட)
மனிதர்திரள் மகிழ்ச்சிமிக, வரம்புஇலா விருந்துசெய்தார் – மிக அதிகமாக
விருந்தினர்க்குச் செய்யும் உபசாரத்தைச் செய்தார்கள்; (எ-று.)

நூற்றுவர், ஐவர், என்னும் நுதியுடைச் சமர வை வேல்
கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடுங் கடும்
போரில் ஆற்றார்;
ஆற்றுவரேனும், உங்கள் உதவி உண்டு; அருளும் உண்டு;
தோற்றமும் உண்டு; நுங்கள் சுமை, இவர் சுமையும்’ என்றார்.வீடுமன் முதலியோர் வந்த அவர்களிடம் கூறிய
முகமன்.

நூற்றவர் ஐவர் என்னும் – நூற்றுவரும் ஐவரும் என்று
சொல்லப்படுகின்ற, சமரம் வை நுதி உடை வேல் கூற்றுவர் அனையோர்க்கு –
போர்க்குரிய கூரிய நுனியைக்கொண்ட வேற்படையையுடைய யமனை
யொத்தவர்கட்குமுன்னே, யார்உம்-, கொடும் கடும் போரில் ஆற்றார் – கொடிய
கடியபோரைச்செய்யும் வல்லமையுள்ளவரல்லர்: ஆற்றுவர்ஏன்உம் –
(எவரேனும்துணிவு கொண்டு) போர்செய்வாரேனும், உங்கள் உதவி உண்டு –
உங்களுடைய உதவி (இவர்கட்கு) உண்டு: அருள்உம்உண்டு – அருளும்
இருக்கின்றது: தோற்றஉம் உண்டு – (உங்கள்சம்பந்தத்தினாலான) மேன்மையும்
உண்டு: இவர் சுமைஉம் – இவர்களுடைய பாரமும், நுங்கள் சுமை –
உங்கள்பாரமே, ‘ என்றார் – என்று முகமனுரை கூறினார்கள்; (எ-று.)

      ‘கங்கைமைந்தன் முதலிய முதல்வரெல்லாம்’ என்று கீழ்ச் செய்யுளில்
வந்ததே, இச்செய்யுளில் ‘என்றால்’ என்பதற்கு எழுவாய்

இனிமையின் பலவும் மாற்றம் யாவர்க்கும் யாவும் சொல்லி,
தினகரன்-தொழுத பின்னர், தேர், பரி கரிகள்தோறும்
மனன் உறத் தக்க செல்வம் வகைதொறும் வழங்கி, அன்றே
தனதனைப் போல்வார்தம்மைத் தம் பதி அடைவித்தாரேவந்தவரை வீடுமன் முதலியோர் உபசரித்து
விடைகொடுத்தனுப்புதல்.

யாவர்க்குஉம் – வந்தவர் எல்லோர்க்கும், இனிமையின் –
இனிமையாக, பல மாற்றம்உம் யாஉம் – பலவார்த்தைகளையும் மற்றுஞ்
சொல்லவேண்டுவனவற்றையும், சொல்லி-,- தினகரன் தொழுத பின்னர் –
சூரியனை நமஸ்கரித்தபின்பு,- தேர் பரி கரிகள் தோறுஉம் – இரதம் குதிரை
யானை என்னும் இவைகளிலெல்லாம், மனன் உற தக்க செல்வம் – மனசு
விரும்பத்தக்க செல்வத்தை, வகை தொறும் – பலவகையிலும் வழங்கி –
கொடுத்து, தனதனை போல்வார்தம்மை – குபேரனைப்போலப் பெருஞ்செல்வரான
அந்த வசுதேவன்முதலியோரை, தம் பதி அடைவித்தார் – தமது ஊருக்குச்
செல்லுமாறு விடைகொடுத்து அனுப்பினார்கள்; (எ -று.)

     பலவும், உம் – அசையென்னலாம். மனனுறத்தக்கசெல்வம் – தேர்பரிகரி
முதலியவை யென்று கொள்ளலும் இரத்தினம் முதலியவை யென்று கொள்ளலும்
ஆம். தினகரற்றொழுதல் – சூரியோபஸ் தாநம் என்னலாம்

எயில் நலம் புனை கோபுர மா புரத்து, எழுது மாளிகைதோறும்,
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில், விலாசம்
உற்றிடும் நாளில்,
பயினன் மேல் வரு கல் எனச் செறிந்த மெய்ப் பவனன்
மைந்தனும் ஒத்தான்,
வயினதேயனை; காத்திரவேயரை, மன்னன் மைந்தரும் ஒத்தார்.துரியோதனாதியரும் பாண்டவரும் சிறுவராய்
விளையாடுகையில், வீமசேனன் துரியோதனாதியரோடு
மனவொற்றுமையின்றி யிருத்தல்.

நலம் எயில் புனை – அழகிய மதிளால் அலங்கரிக்கப் பெற்ற,
கோபுரம் – கோபுரங்களையுடைய, மா புரத்து – பெரிய அந்த அத்தினாபுரியிலே,
எழுது – கட்டப்பட்டுள்ள, மாளிகைதோறுஉம்-, வெயில் நிலா உமிழ்-
(பதித்துள்ள மணிகளினொளியால்) வெயில் போன்ற ஒளியையும் நிலாப்போன்ற
ஒளியையும் வெளிப்படுத்துகின்ற, கனகம் நீள் வீதியில் – பொன்மயமான
அல்லது பொன்னணிகளைக்கொண்ட நீண்டவீதியிலே, விலாசம் உற்றிடும் நாளில்
– (பாண்டவரும் துரியோதனாதியரும்) விளையாடல்களைச் செய்துவரும்
நாளிலே,- பை இனன் மேல் வரு கல்என செறிந்த மெய் பவனன் மைந்தன்உம்
– படங்களின் திரள் (தன்மீது) வரப்பெற்ற (மேருஎன்ற) மலைபோல
அழுத்தமுள்ள உடலைப்படைத்த வாயுகுமாரனான வீமனும், வயினதேயனை –
கருடனை, ஒத்தான்-: மன்னன் மைந்தர்உம் – திருதராட்டிரனுடைய குமாரரான
துரியோதனாதியரும், காத்திரவேயரை – கத்துருவின்புத்திரரான நாகங்களை,
ஒத்தார்-; (எ-று.)

     உவமையால், வீமனுக்கும் துரியோதனாதியர்க்கும் பகைமை
தோன்றியமையும், துரியோதனாதியர் வீமனைவெல்லும் ஆற்றலில ரென்பதும்
பெறப்படும். வயினதேயன் = வைநதேயன்: விநதையின் புதல்வனான கருடன்:
காத்திரவேயர்= த்ரவேயர்: கத்துருவின்புத்திரரானநாகர்கள்: இவையிரண்டும்
தத்திதாந்தம்: பை – படம் கல் – மலைக்கு, இலக்கணை.ப[பை] யினன்
மேல்வருகல் – பசுமையான [இளைய] சூரியன் தன்மேல் உதயமாகிவரப்பெற்ற
உதயமலை யென்றலும் ஒன்று.

     காசிபமுனிவருடைய மனைவிமாருள் விநதையென்பாளுக்கும் கத்துரு
வெண்பாளுக்கும் வானத்துச்சென்ற உச்சைக்சிரவமென்னும்
குதிரையின்நிறத்தைப்பற்றி விவாதமுண்டாக, கத்துரு தன் புத்திரனான
கருநாகங்களை அந்த உச்சைச்சிரவமென்னும் குதிரையின் உடலைச்
சுற்றிக்கொள்ளுமாறு ஏவி அதனால் அந்த விநதையையும் விநதைகுமாரனையும்
அடிமையாக்கிகொள்ள, அந்த அடிமைத் தன்மையினின்று தம்மை
விடுவித்துக்கொள்ளுமாறு கருடன் அந்நாகங்களின் மொழிப்படியே அமிருதத்தைக்
கொணர்ந்ததோடு, அந்நாகங்களை யுண்ணுமாறும் தேவேந்திரனிடம் வரம்பெற்று
வந்து அடிமையினின்று நீங்கி, அந்நாகங்களை அமிருதத்தை யுண்ணும் பொருட்டு
நீரில்மூழ்கிவருமாறு தந்திரமாகச்சொல்ல, அவ்வேளையில் தேவேந்திரன்
அமிருதத்தைக் கவர்ந்து சென்றான்: பிறகு அமிருதகலசம் வைத்திருந்த
தர்ப்பையை நக்கியதனால் அந்நாகங்களின் நாக்குப் பிளவுண்டன என்ற
சரித்திரமும், ஒருகால் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தம்முள் யார்
பலசாலியென்று விவாதமுண்டாக, அப்போது தனது ஆயிரம்படங்களாலும்
ஆதிசேஷன் மேருவின் ஆயிரங்கொடுமுடிகளையும் கவிந்துகொண்டு நிற்க,
வாயுபகவான் அந்த மேருவின் ஆயிரஞ்சிகரங்களுள் மூன்று சிகரங்களைப்
பறித்திட்டான் என்பதும் இங்கு அறியத்தக்கன.

     இச்செய்யுள் – முதற்சீர் மாச்சீரும் ஈற்றுச்சீர் காய்ச்சீரும் மற்றைநான்கும்
விளச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரியவிருத்தம்.

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading