ஆங்கு அவர் அம் முறை அயரும் ஆயிடை,
தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன்,
‘பாங்கு இவன், நமக்கு’ எனப் பரிதி மைந்தனை
வாங்குபு, தழீஇயினன், வலிமை கூரவே.-துரியோதனன் கர்ணனைத் தனக்கு உற்றதுணையாகக்
கொள்ளுதல்.
ஆங்கு – அவ்விடத்தில் [அஸ்திநாபுரியில்], அவர் – அவர்கள்
[பாண்டவர்களும் துரியோதனாதியர்களும்], அ முறை – அவ்வாறு, அயரும் –
விளயைாடுகிற, அ இடை – அப்பொழுது,- தீங்கு ஒரு வடிவம் ஆம் திறல்
சுயோதனன் – தீக்குணமே ஒரு மனித வடிவங்கொண்டாற் போன்ற
[மிகக்கொடிய] வலிமையையுடைய துரியோதனன், வலிமைகூர – (தனக்கு)
வலிமை மிகும்படி, பரிதி மைந்தனை – சூரியனுடைய மகனான கர்ணனை, இவன்
நமக்கு பாங்கு என – இவன் நமக்கு உரியநண்ப னென்று கருதி, வாங்குபு
தழீஇயினன் – அழைத்துச் சேர்த்துக்கொண்டான்; (எ-று.)
வீமனுடைய வலிமைக்கு ஆற்றாத துரியோதனன், தங்களுக்குப் பக்கபலம்
மிகுதற்பொருட்டு, பலபராக்கிரமங்களிற்சிறந்த கர்ணனை வரவழைத்துத் தனக்கு
ஏற்றதுணைவனாக்கிக்கொண்டனன் என்பதாம். வாங்குபு – செய்பு என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சம்.
ஒரு பகல், நிலமகள் உய்ய, மங்குலின்
வரு பகீரதிநதி வாச நீர் படிந்து,
இரு திறப் புதல்வரும் இயைந்த கேண்மையால்,
கரை அடைந்தனர், இளங் கடவுளோர் அனார்.–பாண்டவரும் துரியோதனாதியரும் கங்கையில் நீர்
விளையாட்டு நிகழ்த்தல்.
இளங் கடவுளோர் அனார் – தேவகுமாரர்கள் போன்றவர்களாகிய,
இரு திறம் புதல்வர்உம் – (பாண்டு திருதராஷ்டிரன் என்பவர்களின்)
புத்திரர்களான இரண்டுவகுப்பினர்களும்,- இயைந்த கேண்மையால் – பொருந்திய
நண்புடனே,- ஒருபகல் – ஒருநாள்,- நிலமகள் உய்ய மங்குலின் வரு பகீரதி நதி –
பூமிதேவி வாழ்வுபெறும்படி ஆகாயத்தினின்றுவந்த கங்காநதியினது, வாசம் நீர் –
நறுமணமுடைய தீர்த்தத்திலே, படிந்து – தோய்ந்து விளையாடி, கரை
அடைந்தனர் – (பின்பு அந்நதியின்) கரையை அடைந்தார்கள்; (எ-று.)
கங்கைக்கு ‘நிலமகளுய்யவரு’ என்ற அடைமொழிகொடுத்தது,
பூலோகத்தவர்கள் தன்னில் நீராடி அருவினைதீர்ந்து உயர்கதி பெறும்படி வந்தது
என்ற கருத்தது. கங்காநதியின்நீர் பற்பல திவ்வியமலர்களை அடித்துக்கொண்டு
வருதலால், அதன் நீர் ‘வாசநீர்’ எனப்பட்டது: “பத்மகந்திநி” என்றது,
பாலபாரதம். வாஸம் – வடமொழி. குருகுலகுமரர்க்குத் தேவகுமாரருவமை
சிறப்பிற்கும் ஒளிக்கும் இன்பத்திற்கு மென்க.
தைவரும் நவமணிச் சயிலம் என்னவே
ஐவகை நிறங்களும் அமைத்து இயற்றிய
தெய்வ ஆடக மனை, செல்வப் போனகம்
கைவர நுகர்ந்த பின், கண்ணும் துஞ்சினார்.-பாண்டவ கௌரவரது உண்டாட்டு.
(அன்றியும்), தைவரு – (மாசுதீரத்) துடைக்கப்பட்ட, நவமணி –
ஒன்பதுவகை யிரத்தினங்களையுடையதொரு, சயிலம் என்னவே – மலை யென்று
(கண்டவர்) சொல்லும்படியாகவே, ஐவகை நிறங்கள்உம் அமைத்து இயற்றிய –
ஐந்துவகை நிறங்களையும் பொருத்திச் செய்யப்பட்ட, தெய்வம் ஆடகம் மனை –
தெய்வத்தன்மையையுடைய [மிகச்சிறந்த] பொன்னின்மயமான மாளிகையிலே,
(இருதிறப்புதல்வர்களும்), செல்வம் போனகம் – செல்வச்சிறப்புக்கு உரிய சிறந்த
உணவை, கைவர நுகர்ந்த பின் – கையார உண்ட பின்பு, கண்உம் துஞ்சினார் –
நித்ரையையுஞ்செய்தார்கள்; (எ-று.)
நவமணி – கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம்,மரகதம், மாணிக்கம்,
முத்து, வைடூரியம், வைரம் என்பன. ஐவகைநிறம் – பஞ்சவர்ணம்; அவை –
கருமை, செம்மை, பசுமை, பொன்மை, வெண்மை, ஐவகை நிறங்களும்
அமைத்தியற்றிய ஆடகம்மனை – ஐந்துவகை நிறங்களையுடைய
ஆடைகளாலமைத்துப் பொன்னணியணியப்பெற்ற மாளிகையெனினுமாம். சயிலம்
– முதற்போலி: சைலமென்பது, சிலைமயமான தெனக் காரணப்பொருள்படும்:
சிலை – கல். போனகம் = போஜநம்
கண்படைக் கங்குலில், கன்ன சௌபலர்,
எண் படைக் குமரனோடு எண்ணி, பாவகன்
நண்பன் மெய்ப் புதல்வனை, நார் கொள் வல்லியால்,
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்தபின்.-தூங்குகின்ற வீமனைத் துரியோதனாதியர்
கொடிகளாற் கட்டுதல்.
இதுவும், அடுத்த கவியும்-குளகம்.
(இ – ள்.) கண் படை கங்குலில் – நித்திரைசெய்கின்ற இரவிலே, கன்ன
சௌபலர் -கர்ணனும் சகுனியும், எண் படை குமரனோடு எண்ணி –
எண்ணங்களின்தொகுதியையுடைய இராசகுமாரனான துரியோதனனோடு
ஆலோசித்து, (பிறகு), பாவகன் நண்பன் மெய் புதல்வனை – அக்கினியின்
தோழனான வாயுவினது மெய்யன்புக்கு உரிய மகனாகிய வீமனை, நார்கொள்
வல்லியால் – கயிற்றின் தன்மையைக்கொண்ட நீண்டகொடிகளால், திண் பதத்தொடு
புயம் சிக்க யாத்தபின் – வலிய கால்களும் கைகளும் இறுகும்படி கட்டிய பின்பு,-
(எ-று.)- ‘பெருநதியூடு வீழ்த்தினான்’ என வருங்கவியோடு முடியும்.
கண்படை – கண்டுபடுதல், கண்மூடியுறங்குதல். எண்படைக்குமரன்
என்பதற்கு – எண்ணத்தக்க தம்பிமாரின் தொகுதியையுடைய துரியோதனனென்று
உரைத்தலுமொன்று. நெருப்புப் பற்றியெரிதற்குக் காற்று உதவியாதல்பற்றி,
காற்றுக்கு அக்கினிசகாய னென்று ஒருபெயர் வழங்கும். சிக்க – திசைச்சொல்.
‘ஆர்த்தபின்’ என்றும் பாடமுண்டு.
அரவினில் பிணித்து, எழும் அரவம் பொங்கிட,
உரனுடைப் பொருப்பை, அன்று, உம்பர் நாயகன்
பரவையில் செறித்தென, பயன் இல் செய்கையால்,
விரவும் அப் பெரு நதியூடு வீழ்த்தினார்.–துரியோதனன் வீமனைக் கங்கையில் எறிதல்.
உம்பர் நாயகன் – தேவர்களுக்கெல்லாந் தலைவனான திருமால்,
அன்று – முன்னொருகாலத்தில், உரன் உடைபொருப்பை – வலிமையையுடைய
மந்தரமலையை, அரவினில் பிணித்து – (வாசுகி யென்னும்) பாம்பினாற் கட்டி,
எழும் அரவம் பொங்கிட – மிக்க ஓசை யுண்டாம்படி, பரவையில் செறித்து என
– (பாற்) கடலில் இட்டாற்போல,- (வீமனை), பயன் இல் செய்கையான் –
பிரயோசன மற்ற செயலையுடைய துரியோதனன், விரவும் அ பெருநதியூடு
வீழ்த்தினான் – பொருந்திய அந்தப் பெரிய கங்கை நதியின் நடுவிற்
போகட்டான்; (எ-று.)
“ஆயதாபிரஹிதம் ஸு யோதந:-தம்ஸு ஸு ப்தமவபத்யவல்லிபி;
போகிபத்தமிவ மந்தரம் ஹரி:- ஸிந்துகர்ப்பபயஸிந்யபாதயத்” என்றதற்கு ஏற்ப –
உம்பர்நாயகன்-திருமால் எனப்பட்டது. மேல் வீமன் தனது வலிமையால்
தப்பியெழுதலின் ‘பயனில் செய்கையான் வீழ்த்தினான்’ என்றரென்னலாம்.
‘ஆர்வம்பொங்கிட’ ‘பயனில்செய்கையால்’, ‘வீழ்த்தினார் என்றும் பாடம்
வீழ்ந்தவன்,-அனந்தரம் நிமிர்ந்து, மெய் உறச்
சூழ்ந்த அப் பிணிகளைத் துணிகள் ஆக்கியே,
ஆழ்ந்திலன், ஏறி, மீண்டு, அவசத்தோடு அவண்
தாழ்ந்திலன்;-இராகவன் தம்பி போன்று உளான்.-வீமன் கட்டு விடுவித்துக் கரையேறுதல்.
இராகவன் தம்பி போன்றுஉளான் – இராமனது தம்பியான
இலக்குமணனையொத்துள்ளவனாகிய, வீழ்ந்தவன் – (கங்கைப் பெருக்கில்)
விழுந்தவீமன்,- அந்தரம் நிமிர்ந்து – மேலெழுந்து, மெய் உற சூழ்ந்தன
பிணிகளை துணிகள் ஆக்கி – (தன்) உடம்பை அழுந்தச்சுற்றியுள்ள கட்டுக்களை
(த் தன் உடல்வலியால்) துண்டுகளாக்கிவிட்டு, ஆழ்ந்திலன் – (அந்தநீர்ப்பெருக்கில்)
ஆழாமலே ஏறி – கரையேறி, மீண்டு – திரும்பி, அவசத்தோடு –
(துயில்மிகுதியாலாகிய) பரவசத்துடனே, அவண் தாழ்ந்தனன் – அங்குதானே
படுத்தான்;(எ-று.)
இராமராவண யுத்தத்தில் இந்திரசித்தினது நாகபாசபந்த்தினின்று விடுபட்டு
எழுந்த இலக்குமணண்போல, இப்பாசபந்தத்தினின்று விடுபட்டு வீமன்
பிழைத்தெழுந்தன னென்னுங் கருத்துப்பட, இவ்வுவமை கூறினரென்னலாம்.
ராகவன் என்ற வடசொல்லுக்கு ரகுவென்னும் அரசனது குலத்திற் பிறந்தவ
னென்று பொருள்; தத்திதாந்தநாமம்- ‘அனந்தர நிமிர்ந்து’ என்றும், ‘தாழ்ந்திலன்’
என்றம், ‘இராவணன் றம்பி’ என்றும்பாட முண்டு
வாள் இரவியை ஒளி மறைக்கும் வெஞ் சினக்
கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன்,
நீள் அரவுஇனங்களால், நித்திராலுவை
மீளவும் கொல்லுவான், வீரன் ஏவினான்.-பின்பு துரியோதனன் வீமன்மேற் பாம்புகளைக்
கடிக்கவிடுதல்.
வாள் இரவியை ஒளி மறைக்கும் – ஒளியை [கிரணங்களை]
யுடைய சூரியனது ஒளியை மறைக்கின்ற, வெம்சினம் கோள் அரவினை –
கொடியகோபத்தையுடைய கிரகமாகிய (இராகு கேது என்னும்) பாம்பை, அன –
ஒத்த, கொடிய நெஞ்சினன் – கொடு மனத்தையுடையவனாகிய, வீரன்
துரியோதனன்,- நித்திராலுவை – தூங்கிக்கொண்டிருக்கிற வீமனை, நீள் அரவு
இனங்களால் – நீண்ட பாம்புகளின் கூட்டத்தைக்கொண்டு, மீளஉம் கொல்லுவான்
– மீண்டுங் கொல்லத்துணிபவனாய், ஏவினான்- (அவன்மேல் அவற்றை)
ஏவினான்; (எ-று.)
வீமன்மீது பாம்புகளைக் கடிக்கவிட்டு அவனைக் கொல்லுமாறு பிடாரர்களை
ஏவினானென்பது கருத்து. பாம்புவடிவமான இராகுகேது வென்னுங் கிரகத்தின்
வாய்ப்பட்ட சூரியன் விரைவில் அத்துயரொழிந்து எளிதில்வெளியப்படுதல்போல,
பாம்பின்வாய்ப்பட்ட வீமன் உடனே அத்துய ரொழிந்து அழிவின்றி
இனிதுஎழுந்தன னென்னுங் கருத்துப்படவந்தது இவ்வுவமை. வீரத்தாலன்றி
வஞ்சனையால் வீமனைக் கொல்லத்துணிந்தவனை, ‘வீரன்’ என்றது,
இகழ்ச்சிக்குறிப்பு. ரவி, நித்ராலு, வீரன் – வடசொற்கள். ‘கோளரவனையன
கொடியநஞ்சின’ என்றும் பாடம்.
கடித்தன பன்னகம், நகம் கொள் கைகளால்,
துடித்திட, மற்குணத் தொகுதிபோல் பிசைந்து,
இடித்திடும் முகில் என எழுந்து, மா நகர்
வடித்த வேல் துணைவரோடு எய்தி, மன்னினான்.-பாம்புகளை அழித்திட்டு வீமன் உயிர்பிழைத்தல்.
கடித்தன பன்னகம் – (அவ்வேவலின்படி தன்னைக்) கடித்திட்ட
பாம்புகளை, (வீமன்), நகம் கொள் கைகளால் – (கூரிய) நகங்களைக்கொண்ட
(தன்) கைகளால், துடித்திட – துடிக்கும்படி, மற்குணம் தொகுதிபோல் பிசைந்து –
மூட்டுப்பூச்சிக்கூட்டங்களைப் போல (எளிதிலே) பிசைந்தொழித்துக்கொண்டே,
இடித்திடும் முகில் என எழுந்து – இடியிடிக்கிற மேகம்போல (முழக்கஞ்செய்து
கொண்டு) எழுந்து, வடித்த வேல் துணைவரோடு எய்தி – கூரிய
வேலாயுதத்தையுடைய அந்த உடன்பிறந்தவர்களுடனே கூடி, மா நகர் மன்னினான்
– பெரிய அஸ்திநாபுரியைச் சேர்ந்தான்;
தூங்கும்போது கடிக்கும் மூட்டுப்பூச்சிகளைப் பிசைந்திடுவது போலப்
பாம்புகளை வீமன் பிசைந்தா னென்க. பந்நகம் என்ற வடமொழி – பத் ந கம்
எனப்பிரிந்து, கால்களால் நடவாதது [மார்பினாற்செல்வது] என்றும், பந்நம் கம்
எனப்பிரிந்து, வளைந்து வளைந்து செல்வதென்றும் அவயவப்பொருள்படும்.
மற்குணம், மா, நகர் – மத்குணம், மஹா, நகரம் என்ற வடசொற்களின் திரிபு.
வடித்தல் – நெருப்பிலிட்டுக்காய்ச்சி யடித்துக் கூராக்குதல்.
வேறு ஒரு பகல், கழு நிரைத்து, வீமனோடு
ஆறு பாய்ந்து, இருவரும் ஆடும் வேலையில்,
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால்,
ஏறினான் கடந்து, அரிஏறு போன்றுளான்.-துரியோதனன் வீமனைக் கழுவில்விழுத்த அவன் அறிந்துஉய்தல்.
வேறு ஒரு பகல் – மற்றொருநாளில், தேறலான் – பகைவனான
துரியோதனன், கழு நிரைத்து – (வெளித்தெரியாதபடி நீரினுள்ளே) கழுக்களை
வரிசையாக நாட்டி, வீமனோடு – வீமனுடனே, ஆறு பாய்ந்து – கங்காநதியிலே
குதித்து, இருவர்உம் ஆடும் வேலையில் – இவ்விருவரும்
விளையாடும்பொழுதில்,- அரி ஏறு போன்றுளான் – ஆண்சிங்கத்தை
யொத்துள்ளவனான வீமன்,- வஞ்சகம் வண்டினால் தேறி – (அவன்செய்த)
வஞ்சனையை (க் கழுமுனையில் தங்கிய) வண்டுகளினால் அறிந்து, கடந்து –
(அக்கழுவைக்) கடந்து குதித்து, ஏறினான் – கரையேறினான்; (எ-று.)
மற்றொருநாள் துரியோதனன் கங்கைத்துறையில் இரும்பினாலும்
செம்மரத்தாலும் கூரிய கழுக்களை நீரின்மேல்தோன்றாதபடி உள்நாட்டச்செய்து
வீமனை ‘நீரில்விளையாடலாம் வா’ என்று வஞ்சனையாக அழைத்துப்போய்
‘இங்கிருந்து நீ நீரில் குதிக்கிறாயா பார்ப்போம்’ என்ன, அப்பொழுது கண்ணன்
கருவண்டினுவருவங் கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க, வீமன்
அதனை நோக்கி ‘இதுஎன்ன நீரோட்டத்தில் வண்டுகள்
உட்கார்ந்திருக்கின்றனவே!’ என்று உற்றுப்பார்க்கும்போது அவற்றின்கீழ் வசிகள்
நாட்டியிருக்கக்கண்டு் தன்சங்கேதப்படி அவைநாட்டியிராத இடம் பார்த்துக்
குதித்துக் கரையேறி மீண்டானென்பது, இங்குக் குறித்த வரலாறு. இந்தவிடத்து
இவ்வரலாறு மாகாபாரதத்திலாவது பாலபாரதத்திலாவது காணப்படவில்லை.
பாய்ந்து ஆடுதலாகிய வினை துரியோதனனுக்கும் உள்ளதனால், ‘நிரைத்து’ என்ற
செய்தெனெச்சத்தைத் தன்கருத்தாவின் வினைகொண்ட தென்னலாம்,
‘கடகரியேறு’ என்றும் பாடம்.
பின்னரும் ஒரு பகல், பெற்றம் பெற்றவன்-
தன்னை, அம் மகீபதி தனயன், ஆதரித்து
இன் அமுது அருத்துவான் போல, யாவையும்
துன்னிய விடங்களால் துய்ப்பித்தான்அரோ.-மற்றொருநாள் துரியோதனன் வீமனுக்குவிஷமூட்டுதல்.
பின்னர்உம் – பின்பும், ஒரு பகல் – ஒருநாள், அ மகீபதி தனயன்
– திருதராட்டிரமகாராசனுக்குக்குமாரனான அத்துரியோதனன், பெற்றம் பெற்றவன்
தன்னை – வாயுதேவனாற் பெறப்பட்ட குமாரனான வீமனை, ஆதரித்து இன்
அமுது அருத்துவான்போல – அன்புகொண்டு இனியநல்லுணவை
உண்பிப்பவன்போல, துன்னிய விடங்களால் யாவைஉம் துய்ப்பித்தான் – செறிந்த
நஞ்சுகளோடு எல்லாவுணவுகளையும் உண்பித்தான்; (எ-று.)
உண்பன தின்பன பருகுவன நக்குவன எனப் பலவகைப்படுகிற சோறு கறி
பாயசம்முதலிய உணவுகளிலெல்லாம் வீமனுக்குத் தெரியாதபடி மிக்க
விஷங்கலந்து உண்பித்தனனென்பார், ‘யாவையுந் துன்னியவிடங்களால்
துய்ப்பித்தான்’ என்றார். கருப்பம் ஆடவர்வயிற்றில் இரண்டுமாதம் தங்கிப்
பின்னர் பெண்டிர் வயிற்றில் சேர்கிறதென்னும் நூல்வழக்குப்பற்றியும், ஒருவனது
மனைவியின் வயிற்றில்தோன்றியவரை அவன்வயிற்றில் தோன்றியவரென்னும்
வழக்குப்பற்றியும் ‘பெற்றம்பெற்றவன்’ என்றார் ‘அரோ – ஈற்றசை.
விடத்திலே அழிந்து, அறிவு ஒழிந்த வீமனை,
வடத்திலே பிணித்தனன், கங்கை வாரியின்
இடத்திலே அமிழ்த்தினன்-இதயம் ஒத்தவர்
திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால்.-துரியோதனன் வீமனைக்கயிற்றாற்கட்டிக்
கங்கையில் அமிழ்த்துதல்.
விடத்தில் அழிந்து அறிவு ஒழிந்த வீமனை – நஞ்சுண்டதனால்
நிலைகுலைந்து அறிவழிந்த வீமசேனனை, (துரியோதனன்),- இதயம் ஒத்தவர் –
(தன்) கருத்துக்கு ஒத்தகருத்துடையவர்களான, திடத்தில் முதிர்ந்த கிங்கரர்
திறங்களால் – வலிமையில் மிக்க வேலைக்காரர்களுடைய
கூட்டங்களைக்கொண்டு, வடத்தில் பிணித்தனன் – கயிற்றாற்கட்டி.
கங்கைவாரியின் இடத்தில் அமிழ்த்தினன் – கங்கை நீரிலே அமிழப்பண்ணினான்;
(எ-று.)
துரியோதனன் நூற்றுக்கணக்கான சூலங்களைநாட்டிய கங்கையின் நீரிலே
விஷவேகத்தால் மயங்கியுள்ள வீமனைக் கயிற்றாற்கட்டிக் கிங்கரரைக்கொண்டு
வீழ்த்தினனாக, ஊழ்வினையின் வலியால் சூலமுனையாற் புண்படாமல்
பாதாளஞ்சேர்ந்தானென்று பாலபாரத்திலுள்ளது: வியாசபாரதம் இங்ஙனே கூறும்.
தனது அந்தரங்கமான செயல்களைப் பிறர்க்கு வெளியிடாதவரென்பது,
‘இதயமொத்தவர்’ என்பதனாற் பெறப்படும். ‘திடத்திலே முதிர்ந்த’ என்ற
அடைமொழி, உடல்வலிமைமிகுதியோடு நெஞ்சுறுதியின் மிகுதியையுங்
காட்டும்.
ஓத வான் கடலிடை ஒளித்த வெற்பு எனப்
பாதலம்தனில் விழு பவன சூனுவை,
வேதனைப்படுத்தினர், விடம் கொள் கூர் எயிற்று
ஆதவப் பண மணி அரவின் அம் சிறார்.-பாதாளஞ்சென்ற வீமனை அங்குள்ள நாகங்கள்
கடித்தல்.
ஓதம் வான் கடலிடை ஒளித்த வெற்பு என – அலைகளையுடைய
பெரியகடலிலே மறைந்த மலைபோல, பாதலந்தனில் விழு – (கங்காநதியிலுள்ள
பிலத்துவாரத்தின் வழியாய்ப்) பாதாளலோகத்திற் போய்விழுந்த, பவன சூனுவை
– வாயுகுமாரனான வீமனை,- (அங்குள்ள), விடம்கொள் கூர் எயிறு –
விஷம்பொருந்திய கூரிய பற்களையும், ஆதவம் பணம் மணி – சூரியகாந்திபோல
விளங்குகிற படத்திலுள்ள மாணிக்கத்தையுமுடைய, அரவின் அம்சிறார் –
நாகர்களின் அழகிய பிள்ளைகள் [பாம்புக்குட்டிகள்], வேதனைப்படுத்தினர் –
கடித்துவருத்தினார்கள்; (எ-று.)
ஆதவம்= ஆதபம்; வெயில். நாகராவார் – படமும் வாலுமுடையராய்
மனிதவடிவமுந் தெய்வப்பிறப்புமானதொரு சர்ப்பசாதியார்.
முற்படு கொடு விடம், முளை எயிற்று உகும்
பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின்,
மல் படு புயகிரி வடப் பிணிப்பும் அற்று,
அல் படும் இருள் புலர் அலரி ஆயினான்.-அப்பாம்புகளின் விஷத்தால் முந்தின விஷம்
நீங்குதல்.
முன் படு கொடு விடம் – (வீமனுடம்பில்) முன்பு பொருந்திய
கொடிய (உணவின்) விஷம், முளை எயிறு உகும் பின் படு விடத்தினால் –
(சிறுநாகங்களின்) முளைத்த பற்களினின்று சொரிந்த பிந்தின விஷத்தால்,
பெயர்ந்து போதலின் – நீங்கிப் போனதனால்,- (வீமன்),- மல் படு புயம் கிரி
வடம் பிணிப்புஉம் அற்று- வலிமை மிக்க மலைகள்போன்ற (தனது) தோள்களிற்
கயிற்றாற்கட்டிய கட்டும் (தனது உடல்வலிமையால்) துணிபடப்பெற்று, அல் படும்
இருள் புலர் அலரி ஆயினான் – இரவில் உண்டாகும் இருளைக்கெடச்செய்த
சூரியன் போன்றான்; (எ-று.)
கொடுவிடமும் கடும்பிணிப்பும் அற விளங்கிய வீமனுக்கு, இருளறவிளங்கிய
சூரியனை உவமைகூறினார். ஸ்தாவரவிஷமான நஞ்சுணவிற்குச் சங்கம விஷமான
அரவினங்கடித்துஏற்றிய விஷம் மாற்றாயிற்றென்க. புயகிரி –
முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை. ‘முனையெயிற்று’ என்றும் பாடம்.
வாசுகிதனக்கு இவன் வரவு உணர்த்தலும்,
ஆசுகன் மதலை என்று அறிந்து, மற்று அவன்
தேசு உறு பொற்குடம் தெரிந்து, பத்தினால்,
ஏசு அறும் அமுது எலாம் இனிதின் ஊட்டினான்–வீமனுக்கு வாசுகி அன்போடு அமிருதமூட்டுதல்
வாசுகிதனக்கு இவன் வரவு உணர்த்தலும் – (நாகராசனான)
வாசுகிக்கு இந்த வீமனது வருகையை (நாகங்கள்) அறிவித்தவுடனே,- அவன்-
அந்த வாசுகி, ஆசுகன் மதலை என்று அறிந்து – (இவனை) வாயுவின்
குமாரனென்று அறிந்துகொண்டு, தேசு உறு பொன்குடம் தெரிந்து – ஒளிமிக்க
பொன்மயமான (அமிருத) கலசங்களைத் தேர்ந்தெடுத்து, பத்தினால் –
அக்குடங்கள் பத்திலேயுள்ள, ஏசு அறும் அமுது எலாம் – குற்றமில்லாத
அமிருதம் முழுவதையும், இனிதின் ஊட்டினான்-இனிமையாக உண்பித்தான்;
(எ-று.)
குந்தியின் தாய்மரபினரோடு வாசுகிக்கு உறவுமுறைமை உள்ளதனால்,
ஆர்யகனென்ற நாகமாதாமகனான அரசன் மொழிப்படி, வாசுகி வீமனுக்கு
ஆயிரம்யானைவலிமைதரவல்ல திவ்யரசத்தைப் பானஞ் செய்வித்தனனென்று
வியாசபாரதத்திற் கூறியுள்ளது. தன்சாதியாகிய பாம்புகளுக்கு உணவாய் அவற்றை
வளர்க்கிற வாயுவின் மகனென்ற சம்பந்தத்தாலும், பல நாகங்கள் கடித்தும்
விஷம் உறைக்காத அவனது உடல் வலிமையைக் கண்டதனாலாகிய
ஆச்சரியத்தாலும், வீமனுக்கு வாசுகி அமிழ்து ஊட்டின னென்பாருமுளர்.
‘பற்றினால்’ என்றும் பாடம்.
வெங் கனல் கொளுந்தலின் வெந்த வான் புலம்
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறுபோல்,
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல்,
இங்கு அமுது அருத்தலால், எழில் புரிந்ததே.-அமிருதமுண்டதனால் வீமனது உடல் எழிலுறுதல்.
வெம் கனல் கொளுந்தலின் வெந்த – வெவ்வியநெருப்புப்
பற்றுதலால் எரிந்துபோன, வான் புலம் – பெரிய காடு, மங்குல் பெய் மாரியால் –
மேகம்பொழிந்த மழையால், வயங்கும் ஆறுபோல் – தழைத்து
விளங்குந்தன்மைபோல,- அங்கு ஏரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் –
அவ்விடத்தில் [துரியோதனனிடத்தில்] கொடியவிஷத்தை யுண்டதனால் தன்
நிலைகுலைந்த (வீமனது) பெரிய உடம்பு, இங்கு அமுது அருத்தலால் எழில்
புரிந்தது – இவ்விடத்தில் அமிருதம் உண்பிக்கப்பெற்றதனால் அழகுசெய்தது;
முதலிரண்டடிக்கு – உஷ்ணமான நெருப்புப்போன்ற சூரியகிரணஞ்
சுடுதலால் தீந்துபோனபெரியபயிர்நிலம் மழையால் தழைத்துச் செழித்தல்போல என்றுமாம். ‘கொளுத்தலின்’ எனவும்பாடம்.
ஆயிரம் பதின் மடங்கு அரசுஉவாக்களின்
மா இருந் திறல் வலி மலிந்த மேனியான்,
ஏய் இருந் தவப் பயன் என்ன, எண் பகல்
மேய் இருந்தனன், பணிவேந்தன் கோயிலே.-வீமன் வாசுகியின் மாளிகையில் எட்டுநாள்
தங்கியிருத்தல்.
ஆயிரம் பதின் மடங்கு அரசு உவாக்களின் – பதினாயிரம்
அரசயானைகளினுடைய, மா இரு திறல் வலி – மிகவும் அதிகமான பெரிய
வலிமை, மலிந்த – பொருந்திய, மேனியான் – உடம்பை யுடைய வனானவீமன்,
ஏய்இரு தவம் பயன் என்ன-பொருந்திய மிக்க தவத்தின் பயனினாற்போல,
பணிவேந்தன் கோயில்-நாகராசனான வாசுகியினது சிறந்தமாளிகையிலே, எண்பகல்
மேய் இருந்தனன்-எட்டு நாள் தங்கியிருந்தான்; (எ-று.)
இன்பத்திற்சிறந்த நாகலோகத்தில் மனிதவுடம்போடு சென்று சிலநாள்
தங்குதல்அரிதிற்செய்த பெரியதவயோகத்தின் சித்தியினாலன்றி இயலாதாதலால்,
‘ஏயிருந்தவப்பயனென்ன’ என்றார். அரசு உவா – சிறந்தயானை; சிறந்ததை
அரசென்றல், மரபு. உவா – யுவா என்ற வடசொல் விகாரப்பட்டது. அரசுவாவின்
இலக்கணம் – நான்கு கால்களும் துதிக்கையும் கோசமும் வாலுமாகிய ஏழுறுப்பு
நிலத்தில் தோய்ந்து, பாலையும் சங்கையும் போன்ற வெண்ணிறம் வாய்ந்த கால்
நகமுடையதாய், நான்கு கால்கள் துதிக்கை உடம்பு வால் தந்தம் இரண்டு ஆகிய
ஒன்பது உறுப்புக்களாலுங் கொல்லவல்லதாய், ஏழு முழம் உயர்ந்து ஒன்பதுமுழம்
நீண்டு பதின்மூன்று முழச்சுற்றளுவுடையதாகி, தீயுமிழுஞ் சிறிய கண்களையும்
சிவந்தபுள்ளிகளையுமுடைத்தாய், முன்பக்கம் உயர்ந்து பின்பக்கம்
தாழ்ந்திருப்பதாம். மாயிரு – உரிச்சொற்புணர்ச்சி. திறல்வலி –
ஒருபொருட்பன்மொழி
இவனை அந் நதியிடை இட்ட பாவியும்,
தவனனை உததியில் சாய்த்த மாலைபோல்,
அவனிபன் நகரியின் அரச வெள் வளைத்
துவனி செந் தழல் விளக்கு எடுப்பத் துன்னவே,-வீமனின்றித் துரியோதனன்மாத்திரம் நகர் சேர்தல்.
இதுவும், அடுத்தகவியும் – குளகம்.
(இ-ள்.) இவனை அ நதியிடை இட்டபாவிஉம் – வீமனை அங்கங்கா
நதியின் நடுவிலே போகட்ட தீவினையுடையவனான துரியோதனனும்,- தவனனை
உததியில் – சாய்த்தமாலை போல் – சூரியனைக் கடலில்வீழ்த்திய
மாலைக்காலம்போல,- அரசர் வெள் வளைதுவனி – அரசர்களுக்குரிய
வெண்மையான சங்கத்தின் முழக்கத்தோடு, செம் தழல் விளக்கு எடுப்ப –
சிவந்த அக்கினியினாலாகிய தீபத்தை (நகரத்தவர்) எடுக்காநிற்க,- அவனிபன்
நகரியின் துன்ன – திருதராட்டிர மகாராசனுடைய நகரத்தில் [அத்தினாபுரியில்]
சேர்ந்திடவே,- (எ-று.)- குந்தி கண்டிலள் விண்டிலளென வருங் கவியோடு
முடியும்.
துரியோதனன் மாலைப்பொழுதில் அத்தினாபுரிக்கு வந்தானென்பது, இதன்
கருத்து. செந்நிறமுடைய சூரியன் கடலில் மறைந்திடுதற்குக் காரணமான கரிய
இருட்பொழுதாகியமாலையை, செம்மையுடைய வீமன் கங்கைப்பெருக்கில்
மூழ்கியிடுதற்குத் தூண்டுகோலான கறுத்த களங்க சித்தமுடைய துரியோதனனுக்கு
உவமைகூறினமை நன்குபொருந்தும். அன்றியும், சூரியனைக் கடலிற் சாய்த்த
மாலை அவன் அழியாதுநிற்கச் சிறிதுபொழுதிலேதான் அழிதல்போல, வீமனை
நதியில் ஆழ்த்திய துரியோதனனும் அவன் இறவாதுநிற்கத் தானே விரைவில்
அழிந்திடுதலையும் நோக்குக. காலை மாலையாகிய இரண்டு சந்தியிலும்
இராசநகரியிற் சங்கொலித்தலும், மாலையில் விளக்கு எடுத்தலும் இயல்பு.
இராசகுமாரனான துரியோதனன் நகர்க்கு மீளுகையில் அங்குள்ளார் அவனுக்கு
மரியாதையாக மங்களசங்கத்தை முழக்குதலும், அஷ்டமங்கலத்துள் ஒன்றான
விளக்கை ஏந்துதலும் இயல்பே.
கண்டிலள், உதிட்டிரன் கனிட்டற் கண் உற;
உண்டிலள்; தரித்திலள்; ஓர் இராவினும்
கொண்டிலள், துயில்; இளங் குமரர்தம்மொடும்
விண்டிலள் உரை;-உளம் விம்மு குந்தியே.-வீமனைக் காணாது குந்தி மிகவருந்துதல்.
உதிட்டிரன் கனிட்டன் – தருமபுத்திரனது தம்பியான வீமனை, கண்
உற கண்டிலள்- (தன்) எதிரில்வரக் காணாதவளாய் உளம் விம்மு – மனம்
ஏங்குகிற, குந்தி – குந்திதேவியானவள், – உண்டிலள் – உணவு நுதர்ந்திலள்:
தரித்திலள்- (மகப்பிரிவினாலான துன்பத்தைச்) சிறிதும் பொறுக்கமாட்டிற்றிலள்;
ஓர் இராவின்உம்-(அவனைக்காணாத தினங்களுள்) ஓரிரவிலாயினும், துயில்
கொண்டிலள்-நித்திரைகொண்டிலள்; இள குமரர்தம்மொடுஉம் உரை விண்டிலள் –
இளமைப்பருமுடைய (தனதுமற்றைக்) குமாரர்களுடனும் யாதொரு பேச்சும்
பேசிற்றிலள்; (எ-று)
வீடினன் ஆம்’ எனத் துணைவர் வேறுவேறு
ஓடினர்; கான், நதி, ஓடை, எங்கணும்
தேடினர்; ‘காண்கிலம்; செய்வது என்?’ என,
நாடினர்; நடுங்கினர், நடுக்கு இல் சிந்தையார்.-தருமன் முதலிய நால்வரும் வீமனைத் தேடிக்காணாது
வருந்துதல்.
நடுக்கு இல் சிந்தையார் – கலக்கமற்ற மனத்தை யுடையவர்களான,
துணைவர் – (யுதிட்டிரன் முதலிய) உடன்பிறந்த நால்வரும், வேறுவேறு ஓடினர்
– வெவ்வேறாய் ஓடிச்சென்று, கான் நதி ஓடை எங்கண்உம் தேடினர் – காடு நதி
ஓடை ஆகிய எவ்விடங்களிலுந் தேடி, காண்கிலம் செய்வது என் என நாடினர் –
‘(எங்குங்) காண்கின்றிலோம்: இனிச்செய்யக்கடவதுஎன்ன!’ என்று சிந்தித்து,
வீடினன் ஆம் என (வீமன்) இறந்தான் போலுமென்று சங்கித்து, நடுங்கினர் –
மிகவும் அஞ்சினார்கள்;(எ-று.)
“காநநேஷு ஸரஸீஷு ஸிந்துஷு ” என்று பாலபாரதத்தில் வருதற்கு ஏற்ப,
கான் – காட்டில் எனப்பட்டது.
கூற்று அன சுயோதன குமரனே, இவன்
ஆற்றலின் வெரீஇ, அழுக்கற்ற சிந்தையான்;
ஏற்றதை உணர்கிலம்’ என்று, தந்தையாம்
காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார்.-தருமன் முதலியோர் சிந்தைப்படும் விதம்.
கூற்று அன – யமனையொத்த, சுயோதன குமரன்ஏ –
துரியோதனனாகிய இராசகுமாரனே, இவன் ஆற்றலின் வெரீஇ –
இவ்வீமனுடைய வலிமையினின்று அஞ்சி, அழுக்கற்ற – (இவனிடம்)
பொறாமைப்பட, சிந்தையான் – மனத்தையுடையவன்: (இவ்வளவேயன்றி),
ஏற்றதை உணர்கிலம் – (வீமனுக்கு) நேர்ந்த நிலையை அறியோம்’, என்று –
என்று எண்ணி, தந்தை ஆம் காற்றின்உம் அலமரும் கருத்தர் ஆயினார்-
(தருமன் முதலிய நால்வரும் அவ்வீமனது) தந்தையாகிய காற்றைக்காட்டிலும்
விரைந்து சுழலுகின்ற மனத்தையுடைவரானார்கள்;(எ-று.)- இக்கவிக்கு எழுவாய்,
கீழ்க்கவியில் வந்த ‘துணைவர்’ என்பதே.
துரியோதனனே இவன்மேற் பொறாமையுடையவனாதலால், அவன் இவனை
யாதுசெய்தனனோ என்று சங்கித்தன ரென்பதாம். சிறிதேனும் ஒருநிலை
நில்லாமல் எப்பொழுதுஞ் சஞ்சரிக்குந் தன்மையையுடைய காற்றினும் மிகுதியாக
மனஞ்சலித்தன ரென்பது, ஈற்றடியின் கருத்து. பிராணிகளின் உடம்பையும்
உயிரையும் வெவ்வேறு கூறாகப் பிரித்தலால், யமனுக்குக் கூற்று என்று பெயர்;
இதற்கு – பொதுப்படச்செல்லுங்காலத்தைப் பிராணிகளுக்கு ஏற்பக் கூறுபடுத்துபவ
னென்று காரணப்பொருளுரைத்தலும் உண்டு. அழுக்கறுத்தல் – பிறராக்கம்
பொறாமை. அழுக்கறு என்பது – ஒருசொல்; இனி, அழுக்கு அறுஎனப்பிரிந்து,
குற்றம் நீங்குதலென்று பொருள்படும். இது, குற்றமுடைமையாகிய பொறாமைக்கு
எதிர்மறையிலக்கணையாய் வழங்கியதென்றலும் ஒன்று. இது முதனிலைதிரிந்த
தொழிற்பெயராய் அழுக்காறு எனநிற்கும்.
ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய
தாதை இல் சிறுவரை, தாதைதாதைபால்,
கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும்,
‘வாதை இன்று அவற்கு’ என வருத்தம் மாற்றினான்.-மக்களுடன் வருந்திய குந்திக்கு வீடுமன் தேறுதல்
கூறல்.
ஊதை இல் பூதம் ஒத்து – வாயுவையொழிந்த மற்றை நான்கு
பூதங்கள் போன்று, உள்ளம்வெம்பிய – (வீமனைக்காணாது) மனந்தவித்த, தாதை
இல் சிறுவரை – தந்தையை யிழந்த மைந்தரான (தருமன் முதலிய) நால்வரையும்,
கோதை இல் குழலினாள் – (அமங்கலியாதலால்) மாலையில்லாத கூந்தலையுடைய
குந்திதேவியானவள், தாதை தாதைபால் – (அக்குமாரர்களின்) தந்தையான
பாண்டுவினது (பெரிய) தந்தையாகிய வீடுமனிடத்தில், கொண்டு சேறலும் –
அழைத்துக்கொண்டு போனவளவிலே,- (அவ்வீடுமன்), அவற்கு வாதை இன்று
என – அவ்வீமனுக்கு வருத்தமொன்று மில்லையென்று (தன் ஞானக்கண்ணால்
உணர்ந்து)கூறி, வருத்தம் மாற்றினான் – (அவர்களடைய) துன்பத்தை நீக்கினான்;
(எ-று.)
ஒன்றற்கொன்று தொடர்புடைய ஐம்பெரும்பூதங்கள் தம்மில் ஒன்றாகிய
வாயு ஒழிந்தால் தமது நிறைவு குறைந்து நான்காய் நிற்றல்போல, உள்ளும்
புறமும் ஒத்த உடன்பிறந்தவரான பஞ்சபாண்டவர்கள் தம்மில் ஒருவனான
வீமனை யிழத்தலால் குறைகொண்டு நின்றன ரென்பது, ‘ஊதையில் பூதமொத்த
சிறுவர்’ என்பதன் கருத்து. இங்கே, பூதம் – நிலம், நீர், தீ, வானம்.
வாயுகுமாரனுக்கு அவ்வாயுவையே உவமை கூறினார். இனி, ஊதையில் பூதமொத்த
சிறுவர் – உயிர்ப்பில்லாத பிராணிகள் போன்று வீமனை யிழத்தலால் அழிவடைந்த
மற்றைநால்வரென்றலும் ஒன்று. ‘தாதைதாதைபால் சிறுவரைக் கொண்டு சேறலும்’
என்றமையால், வீமனில்லாக் குறையைத் தெரிவித்தமை பெறப்படும்
தரும மன்னனும், நகர்ச் சனங்கள் யாவையும்,
தெருமரல் தேற்றவும், தெய்வம் கூறவும்,
பெருமித நிமித்தங்கள் பெற்றி பேசவும்,
‘வரும், வரும்!’ என மனம் மறுகி, வைகினாள்.-பலருந் தேற்றவும் குந்தி தேறாதுநிற்றல்
வரும் வரும் என – (வீமன்) வருவான் வருவானென்று கூறி,
தருமமன்னன்உம் – யம தருமராசனது அமிசமான விதுரராசனும், நகர் சனங்கள்
யாவைஉம் – பட்டணத்துச் சனங்களெவையும், தெருமரல் தேற்றஉம் –
மனக்கலக்கத்தைத் தெளிவிக்கவும், தெய்வம் – தெய்வங்கள், கூறஉம் –
ஆவேசப்பட்டுச் சொல்லவும், பெருமிதம் நிமித்தங்கள் – நல்ல சகுனங்கள்,
பெற்றி பேசஉம்- (அவன் வருவதற்கு உரிய) அடையாளங்களைக் கூறவும்,
(குந்திதேவி), மனம் மறுகிவைகினாள் – (தேறாமல்) மனங்கலங்கியே இருந்தாள்;
(எ-று.)
விதுரன் யம தருமராசனது அமிசமாதலைக் கீழ்ச் சம்பவச் சருக்கத்தில்
வந்ததனால் அறிக. சனமென்றது – பொருளால் உயர்திணையாயினும் சொல்லால்
இருதிணைக்கும் பொதுவாதலால், ‘சனங்கள் யாவையும்’ என
அஃறிணைப்பாற்படுத்துக் கூறினார். பெரும் இதம் நிமித்தங்கள் எனப்பிரித்து –
மிக்க நன்மைக்கு உரிய சகுனங்களெனினுமாம். பேச – உணர்த்த என்றபடி: இது
– ஒருவகை உபசாரவழக்கு. வரும்வரும் என்ற அடுக்கு – துணிவையும்
விளக்குவது. ‘வைகுநாள்’, ‘வைகினார்’ என்றும் பாடம்.
இருந்து, இளைப்பு அகன்றபின், இவனை மற்றை நாள்,
அருந் திறல் போகிகள், அரசன் ஏவலால்,
வருந்தி உற்று எடுத்து, முன் வந்த நீர் வழிப்
பொரும் திரைக் கங்கையின் கரையில் போக்கவே.-வீமனை நாகங்கள் சுமந்து கங்கைக்கரையிற்கொண்டு சேர்த்தல்
இதுமுதல் மூன்று கவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) இருந்து – (வீமன் வாசுகியின் மாளிகையில் எட்டுநாள்)
தங்கியிருந்து, இளைப்பு அகன்றபின் – இளைப்பாறியபின்பு, மற்றைநாள் –
அடுத்தநாளில், அரு திறல் போகிகள் – (பிறவுயிர்க்கு) அரிய
வலிமையையுடையநாகங்கள், அரசன் ஏவலால் – (தங்கள்) அரசனான
வாசுகியினது கட்டளையினால், இவனை வருந்தி உற்று எடுத்து – இவ்வீமனை
வருந்திச் சுமந்தெடுத்து, முன் வந்த நீர் வழி – முன்பு (இவன்) வந்த நீரின்
வழியாய்க் (கொண்டுவந்து), பொரும் திரை கங்கையின் கரையில் போக்க –
மோதுகின்ற அலைகளையுடைய கங்கா நதியின் கரையிலே செலுத்திவிட,-
(எ-று.) -“மேனியான் [வீமன்] ஆயினான்” என 26- ஆங் கவியோடு முடியும்.
இக்கவி, கீழ்ப்பதினேழாங்கவியோடு தொடர்புடையது. வீமன் பதினாயிரம்
அரசயானைகளின் வலிமையுடையவனாதலால், அருந்திறற்போகிகள் வருந்தியுற்று
எடுத்தனவென்க. போகீ என்ற வடசொல் – போகத்தையுடையதென்று
பொருள்படும்; போகமென்று பாம்பினுடலுக்குப்பெயர்
பாழி அம் புய கிரிப் பாண்டவன் தனைச்
சூழ் இகல் பணிக் குலம் சுமக்க வல்லவோ?-
வாழி அக் குலங்களின் மன்னன் அல்லனோ,
ஏழ்-இரு புவனமும் இனிதின் ஏந்துவான்!–கவிக்கூற்று: வீமனைச் சுமக்கும் ஆற்றல் நாகங்கட்கு
உண்டுஎன்றல்.
பாழி – வலிமையையுடைய, அம் – அழகிய, புய கிரி – மலைகள்
போன்ற தோள்களையுடைய, பாண்டவன்தனை – வீமனை, சூழ் இகல் பணிகுலம்
– மண்டலமிடுந்தன்மையுள்ள வலிமையையுடைய பாம்புகளின் கூட்டங்கள்,
சுமக்க வல்லஓ – சுமத்தற்கு வல்லமையுடையனவோ? (எனின்),- ஏழ் இரு
புவனம்உம் இனிதின் ஏந்துவான்- பதினான்கு உலகங்களையும் எளிதாகச்
சுமப்பவனான ஆதிசேடன், அ குலங்களின் மன்னன் அல்லன்ஓ –
அப்பாம்புக்கூட்டங்களின் அரசனல்லனோ? (எ-று.)- ஆதலால், அவைகளும்
இவனைத் தாங்கவல்லன என்பதாம். வாழி – அசை.
வீமனைச்சுமக்கவல்ல வலிமை நாகங்கட்கு உள்ளது என்ற கருத்தைக் கவி
தாமே தடைவிடைகளால் விளக்கினார். பாண்டவன் – பாண்டுவின் மகன்;
வடமொழித்தத்திதாந்தநாமம். இப்பொதுப்பெயர் – சிறப்பாய், இங்கே வீமனை
யுணர்த்திற்று. ஏழிரு புவனம் – பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம்
மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம் என்ற
மேலேழுலகங்களும், அதலம் விதலம் சுதலம் தராதலம் ரஸாதலம் மஹாதலம்
பாதாளம் என்ற கீழேழுலகங்களும். சர்ப்பராசனான ஆதிசேஷன் உலகங்களின்
கீழிலிருந்து அவற்றைத் தாங்குகின்றன னென்பது, நூற்கொள்கை.
கீழ்ச்செய்யுளில், ‘இவனைப் போகிகள் எடுத்து’ என வந்ததன்கண் உண்டான
ஐயத்தை அகற்றுதலால், இச்செய்யுள் – இடைப்பிறவரலாய்,
குளகச்செய்யுள்களின் நடுவில் நின்ற தென்று உணர்க. ‘பாண்டுமைந்தனை’
எனவும்பாடம்.
விதியினால் ஒளித்தலின் உயங்கி, மீளவும்
நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான்,
பதியினால் விளங்கும் மென் பங்கயங்களும்,
மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான்.-வீமன் முன்னினும் மிகவிளங்குதல்.
விதியினால் – (முற்பிறப்பிற்செய்த) வினையின் பயனால்,
ஒளித்தலின் – (யாற்றில் தள்ளப்பட்டு) அழுந்தியதனால், உயங்கி –
வாட்டமுற்று, மீளஉம் நதியினால் வருதலின் நலம் கொள் – பின்பு
அந்நதியின்வழியால் மீண்டுவந்ததனால் நல்லவிளக்கத்தைக் கொண்ட,
மேனியான் – உடம்பையுடையவனான வீமன்,- பதியினால் விளக்கும் மெல்
பங்கயங்கள்உம் – (தனது) தலைவனான சூரியன் (மறைதலாற் குவிந்து அவன்)
உதித்தலால் மலர்ந்த மெல்லிய தாமரைமலர்களும், மதியினால் குளிர் நெடு
வான்உம் ஆயினான் – (சூரியனால் வெப்பமடைந்து) சந்திரனாற் குளர்ச்சியடைந்த
பெரிய ஆகாயமும் போல்ஆனான்; (எ-று.) – பங்கயங்கள் என்ற பன்மைக்குப்பயன்
இல்லை.
சூரியன்கண்டபொழுது தாமரை மலர்தலும் காணாதபொழுது குவிதலுமாகிய
இயல்புபற்றி, தாமரையாகியபெண்ணுக்குச்சூரியனைக் கணவனென்ப.
நலங்கொள்மேனியாள்….. வானுமாயினாள்என்றும் பாடம்.
வேதியர், குரவர், வில் விதுரன், வீடுமன்,
ஆதியர், துணைவர் அந் நகர் உளார்கள் என்று
ஓதிய சனங்களுக்கு உவகை நல்கினான்-
ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே.-வீமன் உற்றார்க்கு மகிழ்ச்சியையும் உறாதார்க்கு அச்சத்தையும்
விளைத்தல்.
(இத்தன்மையனான வீமன்),- ஞாதியர்கிளைக்கு எலாம் நடுக்கம்
நல்கி – பங்காளிகளாகிய துரியோதனாதியரது கூட்டத்துக்கெல்லாம் மிக்க
அச்சத்தைக்கொடுத்து,- வேதியர் – பிராமணர்களும், குரவர் – (தாயும்
தமையனும்முதலிய) பெரியோர்களும், வில் விதுரன் வீடுமன்ஆதியர் –
வில்வித்தையில் தேர்ந்த விதுரன் பீஷ்மன் முதலானவர்களும், துணைவர் –
(தனது) தம்பிமாராகிய (அருச்சுனன்முதலிய) மூவரும், அ நகர் உளார்கள் –
மற்றும் அந்நகரத்திலுள்ளவர்களும், என்ற ஓதிய – என்று சொல்லப்பட்ட,
சனங்களுக்கு – சனங்களுக்கெல்லாம், உவகை நல்கினான் – மகிழ்ச்சியைக்
கொடுத்தான்; (எ-று.)
குரவர் என்பதற்கு – ஐம்பெருங்குரவரிற்சேர்ந்த தாயும் தமையனும்
குலகுருவும் கொள்க. உவகைநல்கினான் நடுக்க நல்கி – தொடைமுரண்
குந்தியை மகிழ் உரை கூறி, கற்பினால்
அந்திமீன் அனையவள் அருளின் வாழ்த்தவே,
செந் திருமகள் உறை செல்வ மா நகர்
வந்து, இவன் முன்புபோல் வளரும் நாளிலே,-வீமன் அத்தினாபுரிசேர்ந்து தாயைத் தேற்றி வாழ்தல்.
இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) இவன் – இந்த வீமன்,- செம் திருமகள் உறை செல்வம் மாநகர்
வந்து – செம்மையுடைய இலக்குமி வசிக்கின்ற செல்வங்கள் நிறைந்த பெரிய
அத்தினாபுரிக்கு வந்து, குந்தியை மகிழ்உரை கூறி – (தனது தாயாகிய)
குந்தியைநோக்கி (அவளுக்கு) மகிழ்ச்சியைத்தரும் இனியவார்த்தைகளைச்
சொல்லி, கற்பினால் அந்தி மீன் அனையவள் அருளின் வாழ்த்த –
பதிவிரதாதருமத்தால் அருந்ததியையொத்த அக்குந்திதேவி அருளோடு(தன்னை)
வாழ்த்த, முன்பு போல் வளரும் நாளில்ஏ – முன்போல வளர்கின்ற காலத்திலே,
– (எ-று.) – “கிருபனென்றுளான் (29) “இவன் குருகுலருமாரரை சிலையும் வேலும்
வாளமும் பயிற்றினான்” (30) என முடியும்.
கோதமன் மகன் மகன், குனி வில் ஆதியாம்
மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம்
மா தவன்வயின் பயில் வரதன், வன் திறல்
கேதம் இல் சிந்தையான், கிருபன் என்று உளான்.-கிருபாசார்யனது வரலாறு.
கோதமகன் மகன் மகன் – கோதமமுனிவனது குமாரனாகிய
சரத்துவான் என்னும் முனிவனதுபுத்திரன்,- குனிவில் ஆதி ஆம் –
வளைக்கப்படுகின்ற வில் முதலாகிய, மே தகு படைக்கலம் யாஉம் –
மேன்மைமிக்க ஆயுதங்களையெல்லாம், வீறொடு – மிக்க சிறப்போடு, அ
மாவதன்வயின் பயில் – பெருந்தவமுடைய அச்சரத்துவந்த முனிவனிடத்துக்
கற்றுத்தேர்ந்த, வரதன் – (தன்னை வேண்டினார்க்கு) வரம் அருளத்தக்க
சிறப்புடையவனும், வல் திறல் – மிக்க வலிமையையும், கேதம் இல் சிந்தையான்
– களங்கமில்லாதமனத்தையு முடையவனும் ஆகிய, கிருபன் என்று –
கிருபாசாரியனென்று பெயர் கூறப்பட்டு, உளான் – (ஓர் அந்தணன்) உள்ளான்;
(எ-று.)
கோதமனென்னும் முனிவனது குமாரனும், தான்பிறந்த பொழுது
அம்புகளுடனே பிறந்ததனால் ‘சரத்வாந்’ என்ற பெயர் பெற்றவனுமான (சரம் –
அம்பு) முனிவன் இளமையில் வேதமோதுதலினும் வில்வித்தை தேர்தலில் மிக்க
விருப்புற்று அதில் நன்குதேர்ந்து பின்பு பெருந்தவஞ்செய்துவருகையில், தனது
தவத்தைக் கெடுத்தற்பொருட்டு இந்திரனா லேவப்பட்டுவந்த ஜாநபதீயென்னும்
தேவகன்னிகையைக் கண்டு காமுற்றதனால், அவன்விருப்பத்திற்கு ஏற்ப
அருகிலுள்ள நாணற்கட்டையில் ஓராண்மகவும் ஒருபெண்மகவும் உண்டாயின.
தனது தவநிலை குலைந்ததற்குக்கழிவிரக்கங்கொண்ட அம்முனிவன் உடனே அக்
குழந்தைகளையும் தனதுவில் அம்புகளையும் அங்கே விட்டிட்டு
அப்பாற்சென்றான். பின்பு வேட்டைக்குச் சென்ற சந்தனுமகாராஜன் கதியற்றிருந்த
அக்குழந்தைகளைக் கிருபையோடு எடுத்துவந்து வளர்த்ததனால், அவர்கட்கு
முறையே கிருபனென்றும் கிருபியென்றும் பெயர்கள் உண்டாயின. பிறகு ஒருகால்
அந்தச் சரத்வானென்ற முனிவன் அத்தினாபுரிக்குவந்து தன் மகனான
கிருபனுக்கு வில்வித்தை முழுவதையும் கற்பித்துக் கொடுத்துச்சென்றா னாதலால்,
கிருபன் சிறந்த வில்லாசிரியனாய் அங்கு விளங்கின னென வரலாறு அறிக.
கௌதமகுலத்தார் ஆதியில் க்ஷத்திரியசம்பந்தமுடையராதலால், க்ஷத்திரியத்
தன்மையோடு கூடின பிராமணர்களா யிருந்தார்களாதலின், வில்முதலிய
படைக்கலங்கட்கு உரியராயினரென அறிக.
மற்று இவன் சந்தனு மைந்தன் ஏவலால்,
கொற்றவர் அருள் குருகுல குமாரரை
வெற்றி கொள் சிலையும், வெவ் வேலும், வாளமும்,
பற்றலர் வெருவரும்படி பயிற்றினான்.-கிருபன் கௌரவர்க்கும் பாண்டவர்க்கும் வில்வித்தை பயிற்றல்.
இவன் – இந்தக்கிருபன்,- சந்தனுமைந்தன் ஏவலால் –
சந்தனுவென்னும் அரசனது குமாரனான வீடுமனது கட்டளையால், கொற்றவர்
அருள் குருகுல குமாரரை – வெற்றியையுடைய (திருதராட்டிரன் பாண்டு என்ற)
அரசர்கள் பெற்ற குருகுலத்துக்கு உரிய மக்களாகிய நூற்றைவரையும்,
வெற்றிகொள் சிலைஉம் வெம் வேல்உம் வாளம்உம் – சயத்தைக் கொள்ளுகிற
விற்படையையும் கொடிய வேற்படையையும் வாட்படையையும்,
பற்றலர்வெருவரும்படி பயிற்றினான் – பகைவர்கள் அஞ்சும்படி கற்பித்தான்;
(எ-று.)
பரிவுடன் இவன் படை பயிற்ற, பின்னரும்,
குருபதி வேறு ஒரு குருவைத் தேடினான்;-
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும்,
பரிதியை நயக்கும், இப் பரவை ஞாலமே.-வீடுமன் கிருபனினுஞ் சிறந்த ஒரு குருவை நாடுதல்.
இவன் – இந்தக்கிருபன், பிரிவுடன் – அன்புடனே, படை பயிற்ற –
ஆயுதவித்தையைக் கற்றுக் கொடுத்துவரவும், பின்னர் உம் – பின்பும், குருபதி –
குருகுலத்துக்குத் தலைவனான வீடுமன், வேறு ஒரு குருவை தேடினான் –
(இவனினுஞ் சிறந்த) வேறோராசிரியனைத் தேடுபவனானான்; மதி – சந்திரன்,
இருள் அற நிலவு எறித்தது ஆயின்உம் – இருளொழியும்படி (தனது) ஒளியை
வீசிவந்ததாயினும், இ பரவை ஞாலம் – கடல்சூழ்ந்த இந்நிலவுலகம், பரிதியை
நயக்கும் – (அச்சந்திரனினும் மிக்க வொளியையுடைய) சூரியனை விரும்பு
மன்றோ! (எ-று.) – இச்செய்யுள் – எடுத்துக்காட்டுவமை
பரத நாத வேத பரத்துவாசன் என்பான்,
விரத வேள்விதன்னில், மேனகையால் ஆன
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்தன்னில்,
வரதன் ஒருவன் வந்தான், வசிட்ட முனியை ஒப்பான்.-இதுவும், அடுத்த கவியும் – துரோணன்வரலாறு.
பரதம் – தாளவகையோடு சம்பந்தமுடைய, நாதம்-
இசையோடுபொருந்திய, வேதம் – வேதங்களைவல்ல, பரத்துவாசன் என்பான் –
பரத்துவாச னென்னும் முனிவன், விரதம் வேள்வி தன்னில் – விரதானுட்டானத்தோடு
கூடிய யாகஞ் செய்துகொண்டிருக்கையில், மேனகையால் – மேனகையென்னுந்
தேவமாதைக்கண்டு காமுற்றதனால், ஆன – ஆகிய, சுரத தாது – இன்பமயமான
வீரியம், வீழ்ந்த – விழப்பெற்ற, துரோணகும்பந்தன்னில் – பதக்களவு
கொண்டதொரு பாத்திரத்தினின்று, வசிட்டமுனியை ஒப்பான் வரதன் ஒருவன்
வந்தான் – வசிஷ்டமகாமுனியைப் போன்ற ஒரு முனிவன் தோன்றினான்; (எ-று.)
அங்கிரஸ் என்னும் முனிவனது குலத்தில் தோன்றிய பரத்துவாசமாகாருஷி
கங்கைத்தலைப்பில் யாகஞ்செய்துகொண்டிருக்கையில் அங்கு நீராடவந்த
ஒருதேவமாதின் கட்டழகைக் கண்டு காதல்கொண்டு நெகிழ்ந்து உருக, அவனது
விருப்பத்தால் ஒருதுரோண கலசத்திலிருந்து ஒருகுமாரன் பிறந்தான்; அவனுக்குத்
துரோணனென்று பெயராயிற்று என்று அறிக. அந்தத் தேவமாதின் பெயர்
கிருதாசி என்ற வடநூல்கூறும். பரதநாதவேத பரத்வாஜன், வ்ரதம், மேநகா,
ஸுூரததாது, த்ரோணகும்பம், வரதன்,வசிஷ்டமுநி – வடசொற்கள். பரதமென்ற
நாட்டியசாஸ்திரத்தின் பெயர் – இங்கே இலக்கணையாய், நாட்டியத்தின்
அங்கமான தாளத்தைத் குறித்தது. வேதம் – உதாத்தம் முதலிய நால்வகை
சுவரத்தோடு கூடியிருத்தலேயன்றி ‘வேத கீதம், ‘ஸாமகாநம்’ என்றபடி மற்றும்
இசை வகைக்கும் உரியதாய் நிற்றலால், ‘நாதவேதம்’ எனப்பட்டது.
பரத்வாஜன்என்ற பெயருக்கு – பிரசைகளைப் பாதுகாப்பவ னென்று பொருள்
கூறுவர்; பரத் – பரிப்பவன், வாஜம் – ஜனம். துரோணம் – இரண்டு மரக்கால்.
வசிஷ்டன் என்பதற்கு – (இந்திரியங்களை) வசப்படுத்தியவ னென்பது உற்பத்தி
யருத்தம். முநி – மநநசீலன்: எப்பொழுதுங் கடவுளைத் தியானஞ் செய்பவன்.
மேனகையான் மெலிந்து என்றும் பாடம்.
இதுமுதற் பதினாறு கவிகள் – எல்லாச்சீரும் மாச்சீர்களாய்வந்த
கழிநெடிலடிநான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்
ஈர்-ஏழ் விஞ்சைத் திறனும் ஈன்றோன்தன்பால் எய்தி,
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன்,
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்தன்பால்
ஓர் ஏழ் பகலின், உலகுக்கு ஒருவன் என்ன, கற்றான்.
அந்தத்துரோணன்),- ஈர் ஏழ் விஞ்சை திறன்உம் – பதினான்கு
வித்தைகளின் வகைகளையும், ஈன்றோன் தன்பால்எய்தி (தனது) தந்தையான
பரத்துவாச முனிவரிடத்திலே பெற்று [கற்றறிந்து], நீர் ஏழ்என்ன கேள்வி யாஉம்
நிறைந்தநெஞ்சன – ஏழு கடல்போல நூற்கேள்விக ளெல்லாம் நிரம்பின
மனத்தையுடையவனாய், பரசுராமன் தன்பால் – பரசுராமனிடத்தில், பார் ஏழ்
எண்ணும் படைகள் – ஏழுலகத்தாரும் மதிக்கத்தக்க அஸ்திரங்களை, ஓர் ஏழ்
பகலின் – ஏழுநாளிலே, உலகுக்கு ஒருவன் என்ன கற்றான் – உலகத்திற்கு
(இவன்) ஒருவனேயென்று சொல்லும்படி பயின்று தேர்ந்தான்; (எ-று.)
இந்தத்துரோணன் அக்நிவேசனென்னும் முனிவனிடத்தும் படைக்கலந்
தேர்ந்தன னென்பது, மேல் 38-ஆங் கவியில் விளங்கும். (“இடையிருவகையோ
ரல்லது நாடிற், படைவகை பெறாஅரென் மனார்புலவர்” என்ற
தொல்காப்பியச்சூத்திரத்தின் உரையில் ‘நாடின் என்பதனால் ஒருசார் அந்தணரும்
படைக்கு உரியரென்பது கொள்க: அவர் இயமதங்கியாரும், துரோணனும், கிருபனும்
முதலாயினாரெனக் கொள்க’ என்றது காண்க. பதினான்கு வித்தைகள் – ருக் யசுஸ்
சாமம் அதர்வணம் என்ற வேதம் நான்கு, சிஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம்
சோதிடம் கல்பம் என்ற வேதாங்கம் ஆறு, மீமாம்சை தர்க்கம் புராணம்
தர்மசாஸ்திரம் என்ற உபாங்கம் நான்கு என இவை. விஞ்சை = வித்யா:
வடசொல் – பரசுராமன் – கோடாலியை ஆயுதமாகவுடைய இராமன். ராமனென்ற
வடமொழி – (தனது குணஞ் செயல்களால் உலகத்தைக்) களிப்பிப்பவ னென்று
காரணப்பொருள்படும். வில்லையும் கலப்பையும் ஆயுதமாகவுடைய தசரதராம
பலராமர்களினும் வேறுபாடு விளங்கப் பரசுராமனென்று பெயர்பெற்ற இவன்,
விஷ்ணுவின் ஆறாம் அவதாரம்; ஜமதக்னி முனிவனது குமாரன்: மூவுலகையும்
வென்ற இராவணனைச் சயித்திட்ட கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றவன்;
உலகத்துச் செருக்குக்கொண்ட அரசர்பலரையும் அழித்தொழித்தவன்
வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால்,
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அவ் ஆசான்,
கற்பின் பன்னியோடும், கையின் மதலையோடும்,
பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான்.–வீடுமன் துரோணனை வரவழைத்தல்.
அற்பின் மிக்க சிந்தை – அன்பினால் நிறைந்த மனத்தையும்,
அறம் சால் மொழி – தருமம்நிறைந்த சொல்லையுமுடைய, அ ஆசான் – அந்தத்
துரோணாசாரியன், வெற்பின்வலிய திண் தோள்வேந்தன் ஏதும் தூதால் –
மலையினும் மிகவலிய தோள்களையுடைய வீடுமராசன் அனுப்பின தூதனால்,-
கற்பின் பன்னியோடுஉம் – கற்பையுடைய தன் மனைவியாளுடனும், கையின்
மதலையோடுஉம்- சிறுமையையுடைய குழந்தையோடும், பொற்பின் அமராவதிஏ
போலும் நகரி புக்கான் – அழகினால் அமராவதி நகரத்தையே போன்ற
அஸ்திநாபுரியை அடைந்தான்; (எ-று.)
இச்செய்யுள், கீழ் முப்பத்தோராஞ்செய்யுளோடு கதைத்
தொடர்புடையதாதலால் இங்கே ‘வேந்தன்’ என்ற பொதுப் பெயர் –
வீடுமனைக்குறித்தது. துரோணன்மனைவி கிருபி; மதலை அசுவத்தாமன். கை –
சிறுமை மேலது: கையின் மதலை – சிறுவன்: மேல் 42, 59- ஆம்
பாடல்களையூன்றிப்பார்த்தால், கையின் மதலை – கைக்குழந்தை யென்றல்
பொருந்தாமை புலப்படும். குருகுலகுமாரர்களைப்பின்னும்
பயிற்றுவித்தற்பொருட்டுத் துரோணனை வீடுமன் வரவழைக்க வேணுமென்று
விரும்பியபோது, அந்தத்துரோணன் தானே அத்தினாபுரியைச்சேர்ந்தானென்று
பிறநூல்கள் கூறும். ஆசான், பன்னி = ஆசார்யன், பத்நீ: வடசொற்கள். பொற்பு
– பொன் பு எனப்பகுதியும் விகுதியுமாகப் பிரிந்து, பொன்னின் தன்மையெனக்
காரணப்பொருள்படும். அமராவதீ என்பதற்கு – தேவர்களைத் தன்னிடத்தில்
உடையதென்பது ஏதுப்பொருள்; இது, சுவர்க்கலோகத்து இராசதானி
வந்தான் வரதன் எனலும், மந்தாகினியாள் மைந்தன்,
பைந் தார் அசைய எதிர் போய், பணிந்து, பூசை பண்ணி,
சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி,
‘எந்தாய்! வர நீ, அடியேன் என்ன தவத்தேன்!’ என்றான்.வீடுமன் துரோணனை எதிர்கொண்டு உபசரித்தல்.
வரதன் வந்தான் எனலும் – துரோணாசாரியன் வந்தா னென்று
(தூதர்) சொல்ல அறிந்தவுடனே,- மந்தாகினியாள் மைந்தன் – கங்காதேவியினது
குமாரனான வீடுமன், பைந் தார் அசைய எதிர்போய் – பசுமையான (தனது)
பூமாலை அசைய எதிர் கொண்டு சென்று, பணிந்து – வணங்கி, சிந்தாசனத்தோடு
ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி – (தனது) மனமாகிய ஆசனத்தோடு ஒத்ததொரு
சிங்காசனத்திலே (அவனை) எழுந்தருளப்பண்ணி, பூசை பண்ணி – பூசித்து,-
எந்தாய் – சுவாமி! நீ வர -நீ (இங்கே) எழுந்தருளுதற்கு, அடியேன் என்ன
தவத்தேன் – நான் என்ன தவஞ் செய்திருந்தேனோ!’ என்றான் – என்று
(உபசாரமொழி) கூறினான்; (எ-று.)
வீடுமன் துரோணனை வில்வித்தையில் மிகச்சிறந்தவனென்று நன்கு
மதித்துஎப்பொழுதுஞ் தனதுமனத்தில் நீங்காது வைத்திருந்தனன் என்பதுபற்றி,
அவ்வீடுமன் துரோணனுக்குச் சமர்ப்பித்த சிங்காதனத்துக்கு அவன் மனமாகிய
ஆசனத்தை உவமைகூறினார். இதுவரையிலுந் தன்மனத்தில் வைத்திருந்தது
போல, அப்பொழுது சிங்காசனத்தில் வைத்தன னென்க. தேவலோகத்திலுள்ள
கங்கைக்கு மந்தாகினியென்றும், பூலோகத்தில் வந்ததற்குக் கங்கையென்றும்,
கீழுலகத்திற் பாய்வதற்குப் போகவதி யென்றும் பெயரென அறிக
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை,
வாசி வான் தேர், வெம் போர், மன்னர் மன்னன்தன்னை,
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி
ஆசி அன்பால் ஓதி, அருள்செய்து, இருந்த பின்னர்,-துரோணன் வீடுமனுக்கு வாழ்த்துக் கூறல்.
இதுவும் அடுத்த கவியும்-குளகம்.
(இ-ள்.) வண்டு மூசி மொய்க்கும் – வண்டுகள் நெருங்கி மொய்க்கப்பெற்ற,
முருகு ஆர் செவ்வி மாலை – தேன்நிறைந்த அழகிய பூமாலையைத்தரித்த, வாசி
மான் தேர் வெம் போர் மன்னர்மன்னன் தன்னை – குதிரையாகிய
விலங்குபூண்ட தேரையுடையவனும் கொடிய போரைச் செய்யவல்லவனும்
அரசர்கட்கு அரசனாகிய வீடுமனை, ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் –
குற்றமில்லாத தெய்வத்தன்மையையுடைய சத்தியமானவேதமந்திரங்களைக்
கொண்டு, எண் இல் கோடி ஆசி அன்பால் ஓதி அருள் செய்து – அளவற்ற
கோடிக்கணக்கான ஆசீர்வாதங்களை அன்போடு சொல்லி அனுக்கிரகித்து,
இருந்தபின்னர் – வீற்றிருந்தபின்பு,- (எ-று.)-“வேதமுனிவன் . . . புன்மை
மொழியென்றுரைப்பான்” என வருங் கவியோடு முடியும்.
வாஜிஎன்ற வடசொல் திரிந்துவந்தது. வாசிமான் – இருபெயரொட்டு.
ஆசிஸ் என்ற வடசொல், ஆசியென விகாரப்பட்டது
வேத முனிவன், இருந்த வேத்து முனியை நோக்கி,
பூதம்தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான்:
‘ஏதம் மெய் பெற்றனைய யாகசேனன் என்பான்,
போதம் இல்லான், என்பால் பூட்டும் நண்பு பூண்டான்;–இதுமுதல் ஒன்பது கவிகள் – ஒருதொடர்: துருபதன்
செய்தியைத் துரோணன் வீடுமனுக்குக் கூறல்.
வேதம் முனிவன் – வேதம்வல்ல அந்தணனாகிய துரோணன்,
இருந்த வேந்து முனியை நோக்கி – (தனது) அருகிலிருந்த ராசருஷியான
வீடுமனைநோக்கி, பூதந்தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் –
கழிந்தகாலத்தில் நடந்த எளிமையைப் புலப்படுத்தும் ஒருசொல்லைச்
சொல்பவனானான்:- ஏதம் மெய் பெற்று அனைய – தீமைதானே ஒருவடிவ
மெடுத்தாற் போன்ற, யாகசேனன் என்பான் – யாகசேன னென்னும்
பெயரினனான, போதம் இல்லான் – அறிவில்லாதவன், என்பால் – என்னிடத்தில்,
பூட்டும் நண்பு பூண்டான் – தொடர்பையுண்டாக்கும் நட்பைப்பொருந்தினான்;
யாகசேனன் – பாஞ்சாலதேசத்து அரசன்: துருபதனென்னும்
மறுபெயருடையவன்; சோமகனது மகனான பிருஷதனென்பவனது குமாரன்.
பரத்துவாசமகாமுனிவனும் பிருஷதமகாராஜனு ஒருவர்க்கொருவர் மனங்கலந்த
நண்பராதலால், பரத்துவாசகுமாரனான துரோணனிடத்துப் பிருஷத குமாரனான
துருபதன் இளமையில் நண்புகொண்டிருந்தானென அறிக
யானும் அவனும், முறையால், இளையோம் ஆன எல்லை,
பானு நிகர் தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து,
வானும் மண்ணும் வியக்க, மற வெம் படைகள் கற்று,
தானும் வல்லன் ஆகி, தன்போல் என்னை வைத்தான்.
யான்உம் அவன்உம் – நானும் அந்த யாகசேனனும், இளையோம்
ஆன எல்லை – இளமைப்பருவமுடையோமா யிருந்தகாலத்தில், பானு நிகர்
தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து – (பிரமதேஜசினால்) சூரியன்போல
விளங்குகின்றபழைய அக்கினிவேசனென்னும் முனிவனது திருவடிகளை வணங்கி,
வான்உம் மண்உம் வியக்க – விண்ணுலகத்தோரும் மண்ணுலகத்தோரும் கண்டு
அதிசயிக்கும்படி, மறம் வெம் படைகள்- வலிமையையுடைய கொடிய
படைக்கலங்களை, முறையால் – முறைமைப்படி, கற்று – பயின்றுவர,-
(அவ்யாகசேனன்), தான்உம் வல்லன் ஆகி – (என்னைப்போலவே) தானும்
வல்லவனாய், தன்போல் என்னை வைத்தான் – (இராசகுமாரனாகிய) தன்னைப்
போலவே (எளியவனாகிய) என்னையும் பாவித்தான்; (எ-று.)
அங்கிவேசன் – வடமொழித்திரிபு; இவன் அக்கினியினின்று பிறந்தவ
னென்றும், பரத்துவாச முனிவனிடமிருந்து ஆக்நேயாஸ்திரம் பெற்றுப் பின்பு
அந்த அஸ்திரத்தைத் துரோணனுக்குக் கொடுத்தன னென்றும்வடநூலால்
விளங்கும், ‘சொல்லங்கிவேசன்,’ ‘மறைவெம்படைகள்’ என்றும் பாடம்.
பின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,
‘என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனால்,
உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி’ என்றான்.
பின்னை – பின்பு, இரவுஉம் பகல்உம் – எப்பொழுதும்’ பிரியேம்
ஆகி திரிய – (நாங்கள் ஒருவரையொருவர்) பிரியாதவர்களாய் ஒழுக,-
(அவ்யாகசேனன்), தன்னை அடைந்த நண்பின் தகவால் – தன்னை (நான்)
அடைந்த சிநேகத்தின் விசேடத்தால், மிக ஆதரியா – (என்னிடத்து) மிகவும்
அன்புகொண்டு, (என்னைநோக்கி), ‘என் ஐ வானம்எய்தி – என்தந்தை
சுவர்க்கமடைய [இறந்த பின்பு], யான்ஏ இறைவன் ஆனால் – நானே
அரசனானால், (அப்பொழுது), உலகில் பாதி ஆள உன்னை வைப்பேன் –
(எனது) நாட்டிற் பாதியை (நீ) அரசாளும்படி உன்னை அரசனாக்கிவைப்பேன்,’
என்றான் – என்று சொன்னான்; (எ -று.)
நன்று, நன்று! உன் வாய்மை, நன்று ஆம் நண்புக்கு இனியாய்!’
என்று போந்து, நானும் இயன்ற தவத்தின் இருந்தேன்;
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து,
சென்று, வானம் புகுந்தான்; சிறுவன் தலைவன் ஆனான்.
அப்பொழுது), நானும்-, (அவனைநோக்கி) ‘நன்று ஆம் நண்புக்கு
இனியாய் – நல்லதான சினேகத்திற்கு இனியவனே! உன் வாய்மை நன்று நன்று
– உன்வார்த்தை நல்லது நல்லது!’ என்று – என்று (உபசாரமொழி) கூறி, (பின்பு),
போந்து – (குருவினிடத்தை விட்டுத் தனியே) சென்று, இயன்ற தவத்தின்
இருந்தேன் – (எனதுசாதிக்குப்) பொருந்தின தவத்தைச் செய்தலில் இருந்து
விட்டேன்: வேந்தன் – (யாகசேனனுடைய தந்தையான) பிருஷதமகாராசன்,
வென்று கொண்ட புவியை- (பகைவரை) வென்ற அரசாண்டுவந்த இராச்சியத்தை,
மகவுக்கு அளித்து – (தன்) மகனுக்குக் கொடுத்து, சென்று வானம் புகுந்தான் –
இறந்து சுவர்க்கத்தை யடைந்தான்: (ஆகவே), சிறுவன் தலைவன் ஆனான் –
யாகசேனன் அரசனானான்; (எ-று.)- சிறுவனென்றது, அவனது இளமையோடு
இழிகுணத்தையும் உணர்த்தும்.
தனத்தில் ஆசை இன்றி, ‘தவமே தனம்’ என்று எண்ணி,
வனத்தில் உண்டி கொண்டே, மகிழ்வுற்று, ஒரு சார் வைகி,
சனத்தில் அருளால், இல் வாழ் தருமம் தவறாவண்ணம்
இனத்தில் மிக்க கிருபற்கு இளையாள் இவளை வேட்டேன்
தனத்தில் ஆசை இன்றி – செல்வத்தினிடத்து ஆசை இல்லாமல்,
தவம்ஏ தனம் என்று எண்ணி – தவத்தையே செல்வமென்று நினைத்து,
வனத்தில் உண்டி கொண்டே – காட்டிற்கிடைக்கிற உணவுகளை உட்கொண்டே,
மகிழ்உற்று – திருப்தியடைந்து, ஒருசார் வைகி – (அக்காட்டில்) ஓரிடத்திலிருந்து,
சனத்தில் அருளால் – சனங்களிடத்தில் நிகழ்ந்த கருணையினால், இல் வாழ்
தருமம் தவறா வண்ணம் – இல்லறவாழ்க்கை தவறாதபடி, இனத்தில் மிக்க கிருபற்கு
இளையாள் இவளை வேட்டேன் – குலத்திற் சிறந்த கிருபனது தங்கையாகிய இவளை
விவாகஞ் செய்து கொண்டேன்; (எ-று.)
பிரமசாரி வாநப்பிரஸ்தன் ஸந்யாஸீ என்ற மற்றை மூன்று
ஆச்சிரமத்தார்க்கும், கதியற்றவர் ஏழைகள் முதலானவர்களுக்கும் உணவு இடம்
முதலிய வேண்டுவன கொடுத்து உதவுதற்கு உரிமை கிருகத்தாச்சிரமத்தினர்க்கே
இருக்கின்றமையைக்கருதி அதனிமித்தம் இல்வாழ்க்கை பூண்டேனென்பான்,
‘சனத்திலருளால்’ என்றான். “துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்,
மற்றையவர்கள் தவம்” என்ற குறளை நோக்குக.
கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால்,
வந்த மகவு இம் மகவும், வறுமை வளர, வளர்ந்தான்;
இந்த மகவும் ஐஆண்டு இளமை அறியாது; எனலால்,
தந்த மகவை நோக்கி, தாயும் பெருகத் தளர்ந்தாள்.
இ மகவுஉம் – இந்தக் குழந்தையும், கந்தன் மகவை ஈன்ற காள
கண்டன் அருளால் வந்த மகவு – முருகக்கடவுளாகிய மைந்தனைப் பெற்ற
சிவபிரானது கருணையினாற் பிறந்த குழந்தை: இந்த மகவுஉம் – இக்குமாரனும்,
வறுமை வளர – தரித்திரம் அதிகப்பட, ஐ ஆண்டு – ஐந்து பிராயமளவும்,
இளமை அறியாது – இளமைப் பருவத்துக்கு உரிய யாதோரின்பத்தையும்
அறியாமலே, வளர்ந்தான்-: எனலால் – இக்காரணத்தால், தந்த மகவை நோக்கி
தாய் உம் பெருக தளர்ந்தாள்- (தான்) வளர்த்துவந்த பிள்ளையைப் பார்த்துத்
தாயும்மிகவருந்தினாள்;(எ-று.)
குழந்தைப்பருவத்துக்கு இன்றியமையாத பசுவின்பால் முதலிய.
நுகர்ச்சியொன்றையும் அறியானென்பதுபட ‘இளமையறியாது வளர்ந்தான்’
என்றது. இளமை – அப்பருவத்து நுகர்ச்சிக்குப் பண்பாகுபெயர். காளகண்டன் –
வடசொல்: (விடமுண்டதனாற்) கறுத்த கழுத்தையுடையவன். மூன்றாமடியில்
‘இன்மையறியாது’ என்றும் பாடம்.
துரோணன் மனைவியாகிய கிருபியின் கட்டழகைக்கேட்டும் ஒரு கால்
கண்டும் அவளிடம் மிகக்காமுற்ற சிவபிரானது அருளினால் ஒரு
குதிரையினிடமாக ஒரு ஆண்குழந்தை தோன்றிற்றென்றும், அதன்பெயர்
அசுவத்தாமனென்றும் அறிக. துரோணனுக்குக் கிருபியினிடம்
சிவாமிசமாகப்பிறந்த பிள்ளை அசுவத்தாமனென்றும் நூற்கொள்கை உண்டு.
கந்தன் + மகவு= கந்தமகவு: “சிலவிகாரமாமுயர்திணை.” கந்தன் –
ஸ்கந்தனென்ற வடசொல்லின் திரிபு: இதற்கு – (பகைக்கடலை) வற்றச்செய்பவ
னென்றும், உமாதேவியினாற் சேர்க்கப்பட்டவனென்றும், பிறவாறும் பொருள்
உரைக்கப்படும்: சூரபதுமன் முதலிய அசுரர்கள் செய்துவந்த உபத்திரவங்களைப்
பொறுக்க மாட்டாத தேவர்கள் முதலியோரது வேண்டுகோளால் அவ்வசுரர்களை
அழிக்கும்பொருட்டுச் சிவபிரான் தனது அமிசமாகக் குமாரக்கடவுளைத்
தோற்றுவித்தன னென அறிக. தருதல் -வளர்த்தற்பொருளதாயிற்று
மாவின் பாலே அன்றி, மரபுக்கு உரிய மைந்தன்,
ஆவின் பால் கண்டு அறியான்; அதனால் வருந்தி, அந்தக்
கோவின்பால் எய்துதலும், கோமான், ‘யார் நீ?’ என்ன,
நாவின்பாலால், நடுங்கி, ‘நான் உன் நண்பன்’ என்றேன்.
மரபுக்கு உரிய மைந்தன் – (எனது) வமிசத்துக்கு உரிய
அப்புதல்வன், மாவின் பால்ஏ அன்றி – மாப்பாலையே யல்லாமல், ஆவின் பால்
கண்டு அறியான் – பசுவின்பாலைக் கண்டும் அறியான்: அதனால் –
அந்தக்காரணத்தால், (நான்), வருந்தி – மனம்வருந்தி, அந்த கோவின்பால்
எய்துதலும் – (ஒருபசுப்பெற்றுவரக்கருதி) அந்த யாகசேனராசனிடத்திற்
சென்றவளவிலே, கோமான் – அவ் வரசன், யார் நீ என்ன – ‘நீ யார்?’ என்று
(முகமறியாதவன் போல என்னை) வினவ,- (அதுகேட்டவுடனே), நடுங்கி –
மிகக்கூசி, நாவின் பாலால் நான் உன் நண்பன் என்றேன்- (எனது) வாயால்
‘நான் உன் சிநேகிதன்’ என்று சொன்னேன்; (எ-று.)
மாவின்பால் – மாவைக் கரைத்துக் காய்ச்சிப் பால்போலச் செய்த உணவு;
ஒருவகைக் கஞ்சி: முதனூலிலும் ‘பிஷ்டரஸம்’ என்றே கூறப்பட்டிருக்கின்றது.
‘நாவின்பாலால்’ எனவேண்டாது கூறியது, என் நா இங்ஙன் எளிமை கூறுதற்கு
உரியதன் றெனற்கு: இனி, நாவின்பாலால் நடுங்கி எனஎடுத்து, இங்ஙன் பேசின
அவனது நாவின் செயலால் யான் நடுங்கி யெனவுமாம்.
‘ ‘மன்னன் யான்; நீ முனிவன்; மரபால் எனக்கும் உனக்கும்
என்ன நண்பு உண்டு?’ என்ன ஏசி, நகைசெய்து, இகழ்ந்தான்;
அன்ன துருபன்தன்னை அவையில் அரசர் கேட்ப,
‘சொன்ன வாய்மை நீயே சோர்ந்தாய்; யானோ சோரேன்;
இதுவும் அடுத்த கவியும் – குளகம்
(இ – ள்.) (அதுகேட்டு அந்தயாகசேனன் என்னை நோக்கி). ‘மரபால் –
சாதியினால், மன்னன் யான் – நானோ அரசன்: நீ முனிவன் – நீயோ
அந்தணன்: எனக்குஉம் உனக்குஉம் என்ன நண்புஉண்டு – எனக்கும் உனக்கும்
என்னசிநேகம் இருக்கிறது?’ என்ன – என்றுசொல்லி, ஏசி – பழித்து, நகை
செய்து – சிரித்துப் பரிகாசம் பண்ணி, இகழ்ந்தான் – அலட்சியஞ் செய்தான்:
அன்ன துருபதன் தன்னை – அந்தத் துருபதராசனை நோக்கி, (நான்), அவையில்
அரசர் கேட்ப – அவன் சபையிலுள்ள அரசர்களெல்லாங் கேட்கும்படி,
‘சொன்ன வாய்மை நீஏ சேர்ந்தாய் – சொன்னவார்த்தையை நீயே தவறினாய்:
யான்ஓ சோரேன் – நானோ தவறேன்; (எ-று.) – இச்செய்யுளில் ‘துருபன்
தன்னை’ என்பதும், ‘கேட்ப’ என்பதும், அடுத்த செய்யுளில் வரும் ‘என்றேன்’
என்னும் முற்றைக் கொள்ளும்.
நீ முன்பு எனக்குப் பாதியரசுகொடுப்பதாக வாக்குத்தத்தஞ் செய்ததைத்
தவறினையே யாயினும், நான் இப்பொழுது உன் விஷயமாகச் சொல்லும்
சபதத்தைத் தவறாது நிறைவேற்றுவேன் என்பது, ஈற்றடியின் கருத்து:
துருபதனென்பது, யாகசேனனுக்கு வழங்கும் வேறொருபெயர். துருபன் =
துருபதன்: விகாரம். ஏ – பிரிநிலை. ஓ – தெரிநிலை. ‘அன்ன நிருபன்’ எனவும்
பாடம்.
‘புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;
அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி’ என்றேன்’ என்று,
சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான்.–44
அகன்ற மெய்ம்மை உடையாய் – நீங்கின உண்மை யுடையவனே!
புகன்ற படி- (நீ முன்பு எனக்குச்) சொன்னபடி, நீ ஆளும் புவிஉம் பாதி
கொள்வேன் – நீ அரசாளும் நாட்டிலும் பாதியைக் கைக்கொள்வேன்:
(அன்றியும்), இகன்ற சமரில் – பகைமை கொண்டுசெய்யும் போரில், உன்னை
இரதத்துடனே கவர்வேன் – உன்னைத் தேர்க்காலுடனே கட்டிக்
கைக்கொள்வேன்; அறிதி – (இதனை) அறிவாய், என்றேன் – என்று சொல்லிச்
சபதஞ்செய்தேன், என்று-, சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல –
சுகமுனிவனுக்குஉள்ள தத்துவ ஞானம்போன்ற தத்துவஞானத்தைப்பெற்றவனான
துரோணாசாரியன் சொல்ல, கேட்டான் ;(எ-று.)
அகன்றமெய்ம்மையுடையாய் என்றது, வடமொழிநடை; சத்தியத்தை
விட்டவனே யென்று கருத்து. துரோணன் தன் வரலாறு கூறும்முகத்தால், தான்
அந்நகரியிலிருக்க உடன்பட்டதைக் குறிப்பித்தானென்க. சுகன் –
வியாசமுனிவனது புத்திரன்: அவ்வியாசபகவானின்மேம்பட்டவைராக்கியத்தையும்
உண்மையுணர்வையும் உடையவன்; பகவானது அமிசமானவன்;
பரமபாகவதர்களில் ஒருவன்; சுகப்பிரஹ்மமென்று சிறப்பித்துக் கூறப்படுபவன்.
“சுகனிகர் துரோணனொடு” என்பார், மேற்பதின்மூன்றாம்போர்ச் சருக்கத்திலும்.
இவர்க்குப் படைக்கலப் பயிற்சி அளித்து, உன்
வஞ்சினமும் முடி’ என்று கூறி, துரோணனுக்கு
அரசர்க்கு உரிய வரிசைகள் அளித்தல்
கேட்ட அரசன் அழைக்க, கிருபனுடன் வந்து இறைஞ்சும்,
பூட்டு வரி வில் தடக் கைப் புதல்வர் புதல்வர்தம்மைக்
காட்டி, ‘நீயே இவரைக் கடிதில் படைமைக் கல்வி
மூட்டி, நின் வஞ்சினமும் முடித்தி’ என்று மொழிந்தான்–கௌரவ பாண்டவரை வீடுமன் துரோணனிடம்
ஒப்பித்தல்.
கேட்ட – (இங்ஙனந் துரோணன் சொல்லக்) கேட்ட, அரசன் –
வீடுமன், அழைக்க – வரவழைத்ததனால், கிருபனுடன் வந்து இறைஞ்சும் –
(ஆசிரியனாகிய) கிருபாசாரியனுடனே வந்து வணங்கின, பூட்டு வரி வில் தட கை
புதல்வர் புதல்வர்தம்மை – நாணேற்றிய கட்டமைந்த வில்லையேந்திய பெரிய
கையையுடைய தனது பேரப்பிள்ளைகளை, காட்டி – (அவ்வீடுமன்
துரோணனுக்குக்) காண்பித்து, ‘நீயேஇவரை கடிதில் படைமை கல்வி மூட்டி –
(இனி) நீயே இவர்களுக்கு விரைவில் ஆயுதவித்தையைக் கற்றுக் கொடுத்து, நின்
வஞ்சினம்உம் முடித்தி – (இவர்களைக்கொண்டு) உன்சபதத்தையும்
முடித்துக்கொள்வாய்,’ என்று மொழிந்தான் – என்ற சொன்னான்; (எ-று.)
புதல்வர் புதல்வர் – தன் தம்பியாகிய விசித்திரவீரியனது குமாரர்களாகிய
திருதராட்டிரன் பாண்டுஎன்பவரது புத்திரர்கள். படைமை, ‘மை’ – பகுதிப்பொருள்
விகுதியாம். வஞ்சினம் – துருபதனரசிற் பாதிகொள்ளலும், அவனை உயிரோடு
கட்டிக்கொணர்தலும்.
‘முனி நீ, ஐயா! இதற்கு முன்னம்; இன்று முதலா,
இனி, இவ் உலகுக்கு அரசாய், எம்மில் ஒருவன் ஆகி,
குனி வில் வலியால் அமரும் கோடி’ என்று கொடுத்தான்-
பனி வெண் குடையும், நிருபற்கு உரிய வரிசை பலவும்.-அரசர்க்கு உரிய வரிசைகளை வீடுமன் துரோணனுக்கு அளித்தல்.
‘ஐயா – சுவாமீ! இதற்கு முன்னம் முனி நீ – இதற்கு முன்பு நீ
அந்தணன்: இன்று முதல் ஆ – இன்றைத்தினம் முதற்கொண்டு, இனி –
இனிமேல், (நீ), இ உலகுக்கு அரசு ஆய் – இந்த இராச்சியத்துக்குத்
தலைவனாய், எம்மில் ஒருவன் ஆகி – எங்களில் ஒருத்தனாய், குனி வில்
வலியால் அமர்உம் கோடி – வளைந்தவில்லின் வலிமையாற் போர்செய்தலையும்
மேற்கொள்வாய்,’ என்று – என்று சொல்லி, (வீடுமன் துரோணனுக்கு), பனி
வெள்குடைஉம் – குளிர்ச்சி தரும் வெண்கொற்றைக் குடையையும், நிருபற்கு
உரிய வரிசை பல உம் – (மற்றும்) அரசர்க்கு உரிய பல சிறப்புச்
சின்னங்களையும், கொடுத்தான்-; (எ-று.)
‘மாணாக்கரது உடைமை யெல்லாம் குருவுக்கு உரியன’ என்ற கருத்தால்,
‘இவ்வுலகுக்கு அரசாய்’ என்றான். ‘குருகுலத்தவர்க்கு இராச்சியம் முதலிய
செல்வம் எவ்வளவு உண்டோ அவ்வளவுக்கும் நீயே அரசன்’ என்று வீடுமன்
துரோணனுக்கு உபசாரமொழிகூறினதாக முதனூல் கூறுவதையும் உணர்க. வரிசை
பல – தேர், கொடி விருது, கழல் முதலியன. “படையுங்கொடியும் குடையும்
முரசும், நடை நவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன
பிறவும்… செங்கோலரசர்க்குஉரிய” என்றது காண்க.
அன்று முதலாக வரி வெஞ் சிலை முதல் படைகள் ஆனவை
அனைத்தும், அடைவே,
தொன்று படு நூல் முறையின், மறையினொடு, உதிட்டிர சுயோதனர்கள்
ஆதி எவரும்,
ஒன்றிய துரோணன் அருளாலும், வலியாலும், முயல் உணர்வு
உடைமையாலும், முதலே
நின்ற குறையாலும், ஒருவர்க்கு ஒருவர் கல்வியின் நிரம்பினர்-
வரம்பு இல் நிதியோர்.- கௌரவபாண்டவர் அன்றுமுதல் துரோணனிடம் கல்விதேர்தல்.
வரம்பு இல் நிதியோர் – எல்லையில்லாத செல்வங்களை
யுடையவர்களான, உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவர்உம் – தரும புத்திரனும்
துரியோதனனும் முதலிய ஐவரும் நூற்றுவரும்,- அன்று முதல் ஆக – அந்த
நாள் முதலாக, ஒன்றிய துரோணன் அருளால்உம் – (தங்களிடத்துப்)
பொருந்திய துரோணசாரியனது கருணையினாலும், வலியால்உம் – (தங்கள்)
உடல் வலிமையாலும், உயர் உணர்வு உடைமையால் உம் – (தாங்கள்) சிறந்த
இயற்கை யறிவை யுடைமையாலும், முதல்ஏ நின்ற குறையால்உம் –
முற்பிறப்பிலே கற்றுநின்ற சேஷத்தாலும்,- வரி வெம்சிலைமுதல் படைகளானவை
அனைத்துஉம் – கட்டமைந்த பயங்கரமான வில் முதலிய ஆயுதங்களெல்லாவற்றிலும்,
கல்வியின் – (அவற்றின்) சாஸ்திரத்திலும், தொன்று படுநூல் முறையின் –
பழமைபொருந்திய நூல்களிற்கூறிய முறைப்படியே, மறையினொடு –
(அஸ்திரங்களுக்கு உரிய) மந்திரங்களோடு, அடைவே – முறைமையாக, ஒருவர்க்கு
ஒருவர் நிரம்பினர் – ஒருத்தர் போலவே அனைவரும் தேர்ச்சியுற்றார்கள்; (எ-று.)
பிரயத்தின பூர்வமாக மறைக்கத்தக்கதாதலால், மந்திரம், மறையென்று
பெயர்பெறும்; செயப்படுபொருள்விகுதி புணர்ந்து கெட்டது. ‘முயலுணர்வு’ என்ற
பாடமோதி, ஊக்கம் விளைவிக்கும் அறிவென்று உரைப்பாருமுளர்.
கல்விமுற்றக்கற்றல் முற்பிறப்பிற் பரிசயமுடையார்க்கன்றிமுடியாதாதலால்
‘முதலேநின்ற குறையாலும்’ என்றார்; இனி, இதற்கு – முதலிற்
கிருபாசாரியனிடத்துக் கற்றுநின்ற சேஷத்தாலும் என்று உரைத்தலும் ஒன்று,
‘கல்வியு நிரம்பினர்’ என்ற பாடத்துக்கு – இயல்பிலே பொருட் செல்வம்
நிறைந்தவர் இப்பொழுது கல்விச்செல்வமும் நிறைந்தனரென்க.
இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் முதலைந்துசீர்கள்
விளங்காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.
வெஞ் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும்’ என விசயன்
விசயத்தின் மிகவே,
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள், இரவி எதிர்
மின்மினிகள்போல்;
அம் சொல் முனிதானும், இவன்மேல், எவரினும் பெருக
அன்புடையன் ஆகி, அகலான்;-
நெஞ்சு உற அருங் கலைகள் கற்குமவர்தம் அளவில் நேயம்
நிகழாதவர்கள் யார்?–அவர்களில் அருச்சுனன்சிறந்து குருவுக்குப்பிரியனாதல்.
விசயன் – அருச்சுனன்,- வெம் சிலையினால் இவன் இராகவனை
ஒக்கும் – என கொடிய வில்லின் தேர்ச்சியால் இவன் (பகைவர்க்கு)
இராமபிரானைப்போல்வா னென்று (அனைவரும்) சொல்லும் படி,
விசயத்தில்மிகஏ – கல்வித்தேர்ச்சியில்மேம்படவே,- (அதுகண்டு), எஞ்சிய
குமாரர்கள்- ஒழிந்த துரியோதனாதியர்கள், இரவி எதிர் மின் மினிகள்போல் –
சூரியனெதிரில் மின்மினிப்பூச்சிகள் போலாகி, பொறாமையில் மிகுந்தனர்கள் –
(இவனிடத்துப்) பொறாமைகொள்ளுதலில் மேம்பட்டார்கள்: அம்சொல் முனி
தான்அம்- அழகிய சொற்களையுடைய துரோணாசாரியனும், எவரின்உம்பெருக
இவன்மேல் அன்பு உடையன் ஆகி – மற்றை மாணாக்க
ரெல்லோரிடத்தினும்பார்க்க இவ்வருச்சுனனிடத்தில் மிக அம்புடையவனாய்,
அகலான்- (அந்த அன்பினின்று என்றும்) நீங்காதவனானான்; அரு கலைகள்
நெஞ்சு உற கற்குமவர் தம் அளவில் – அரியகல்விகளை மனத்தில் ஊன்றப்
படிக்குமவரிடத்து, நேயம்நிகழாதவர்கள் – அன்புகொள்ளப்பெறாத ஆசிரியர்,
யார் – யாவர்? (எ-று.)
மற்றையோரினுங் கல்வியில் நன்கு தேர்ந்த அருச்சுனனிடம் துரோணன்
மற்றையோரிடத்தினும் மிக்க அன்பு வைத்தானென்ற சிறப்புப் பொருளை,
நன்றாகக் கல்விதேர்பவரிடம் அன்பு கொள்ளுதல் ஆசிரியர்க்கு இயல்பேயென்ற
பொதுப்பொருள் கொண்டு விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. விசயன்
தனக்கு உரிய விசயத்தில் மிக, துரியோதனாதியர் தமக்குஉரிய பொறாமையில்
மிக்கார்கள் என அவரவரியல்பு தோன்ற வேறுபாடு எடுத்துக் காட்டியவாறு.
ஏற்புழிக்கோடலென்ற உத்தியால், ‘எஞ்சியகுமாரர்கள்’ என்றது,
துரியோதனாதியரையே குறிக்கும். ‘இரவியெதிர் மின்மினிகள் போல் பொறாமையில்
மிகுந்தனர்கள்’ என்றது, தமக்கும் அவனுக்கும் சிறிதும் ஒப்புமை யில்லாமல்
மிக்கவேறுபாடு இருக்கையிலும் பொறாமையுற்ற தன்மையை உணர்த்தியபடி.
விஜயன் – விசேஷமான வெற்றியையுடையவன் என்று காரணப்பொருள்படும்.
மின்மினி – காரணப்பெயர். விசயன் வினயத்தின்மிகவே என்று பிரதிபேதம்
ஏகலைவன் என்று ஒரு கிராதன், முனியைத் தனி இறைஞ்சி, இவன்
ஏவலின் வழான்-
ஆகலை அடைந்து, மிகு பத்தியொடு, நாள்தொறும் அருச்சுனனை
ஒத்து வருவான்,
மேகலை நெடுங் கடல் வளைந்த தரணிக்கண் ஒரு வில்லி என
வின்மை உடையான்,
மா கலை நிறைந்து, குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல்
வழங்கியுளனால்.–ஏகலவ்ய னென்ற வேடனது செய்தி.
ஏகலைவன் என்ற ஒரு கிராதன் – ஏகலவ்யனென்ற
பெயரையுடைய ஒருவேடன், முனியை தனி இறைஞ்சி – துரோணாசாரியனைத்
தனியே வணங்கி, மிகு பத்தியொடு – மிக்கபக்தியுடனே, இவன் ஏவலின் வழான்
ஆகலை அடைந்து – இத்துரோணனது கட்டளையினின்று தவறாதவனாயிருத்தலை
அடைந்து, (அவ்வழிபாட்டின் பயனால்), நாள்தொறுஉம் அருச்சுனனை
ஒத்துவருவான் – தினந்தோறும் (கல்வித்தேர்ச்சியில்) அருச்சுனனை
ஒத்துவருபவனாய், மேகலை நெடு கடல் வளைந்த தரணிக்கண் ஒரு வில்லி என
வின்மை உடையான் – மேகலையென்னும் இடையணியாகப் பெரிய கடலாற்
சூழப்பட்ட பூமியிலே ஒப்பற்ற தனி வில்வீரனென்று (அனைவரும் தன்னைச்)
சொல்லும்படியே விற்றொழிலில் வன்மையுடையவனாகி, மா கலை நிறைந்து –
பெரிய தநுர்வித்தை முழுவதும் நிரம்பப்பெற்று, (பின்பு), குரு தக்கிணை –
அந்தக்குருவுக்குத் தக்ஷிணையாக, வலக்கையினில் வல் விரல் – (தனது) வலக்கைப்
பெருவிரலை, வழங்கி உளன் – கொடுத்திட்டான்; (எ – று.)- ஆல் ஈற்றசை.
கீழ்க்கூறியபடி துரோணன் அருச்சுனனிடத்து மிக்க அன்பு கொண்டு
அவனைநோக்கி ‘உன்னினும் மேம்பட்டமாணாக்கர் எனக்கு எவரும் இல்லை’
என்றுகூறி அனைவர்க்கும் கல்விகற்றுக்கொடுத்து வருகையில் இரணியதநுஸ்
என்ற வேடர் தலைவனது குமாரனான ஏகலவ்யனென்பவன் துரோணனையடுத்து
‘எனக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கவேண்டும்’ என்றுகேட்க, அக்குரு
இல்வேட்டுவக் குமரனைக் கற்பித்தால் இவன்மாணாக்கரெவரினும்
மேம்படுவனென்று அவனுக்குக் கற்பிக்க விரும்பாமல், ‘பயிற்சியில் மேம்படும்
நீ என் மாணாக்கனே: உனக்கு அனுமதிகொடுத்தேன்: போகலாம்’ என்று
சொல்ல, அவன்வணங்கி விடைபெற்றுத் தான்இருக்கும் வனத்திற் சென்று
தன்குடிசையில் துரோணனைப்போல் ஒரு பிரதிமை செய்து வைத்து அவ்வுருவையே
துரோணனாகப் பாவித்துக் குருவாகக் கொண்டு மிகுந்தபக்தியோடு
அவ்விக்கிரகத்துக்குப் பூசைபண்ணி அப்பூஜையின் பலனால் அஸ்திர சஸ்திரப்
பயிற்சிவகை யனைத்தும் தன் மனத்தில் தானே தோன்றப்பெற்றுத் துரோணனுக்குத்
தெரியாமலே வில்வித்தையில் அருச்சுனனினும் தேர்ந்துவந்தான்; இங்ஙனம்
இருக்கையில், துரோணன் கட்டளைப்படிவேட்டைக்குச்சென்ற குருகுலகுமாரர்கள்
தம்முடன்சென்ற ஒரு நாயின்வாயில் குரைக்க முடியாதபடி ஒருவனால் ஒருங்கே
ஏழம்புகள் பிரயோகிக்கப்பட்டமையைக் கண்டு வியந்து நாணி அங்ஙனம்
பிரயோகித்தவனை நாடிக் கண்டு விசாரித்துத் துரோண சிஷ்யனென்று அறிந்து
மீண்டும் நகருக்குவந்து நிகழ்ந்தசெய்தியனைத்தையுங் குருவினிடம் கூறினர்; பின்பு
அருச்சுனன் ஏகலவ்யனையே சிந்தித்தவனாய் ஏகாதந்தத்தில் துரோணனையடுத்து
‘என்னினும் மேம்பட்ட சிஷ்யன் இருக்காமல் என்னைக்கற்பிப்பதாக முன்பு நீர்
சொல்லியிருக்க, இங்ஙனம் ஒருவன் உளனே’ என்று குறைகூற, துரோணன்
சிறிதுசிந்தித்துத்தேர்ந்து அருச்சுனனை அழைத்துக்கொண்டு ஏகலவ்யனிடம் வந்து,
தன்னை வணங்கி யுபசரித்த அவனைநோக்கி ‘சிஷ்யனாகிய நீ குருவாகிய எனக்குத்
தக்ஷிணை கொடுக்கக்கடவாய்’ என்ன, அதற்கு அவன் ‘என்ன வேண்டும்?
கட்டளையிட்டது எதுவாயினும் கொடுப்பேன்’ என்ற வளவிலே, துரோணன் ‘உன்
வலக்கைக் கட்டைவிரலைக் கொடுப்பாய்’ என்றுகூறு, ஏகலவ்யனும்
வாக்குத்தவறாமல் மகிழ்ச்சியோடு அவ்விரலைத் துணித்துக் குருதக்ஷிணை
கொடுத்தனன்; பின்பு அவன் மற்றைவிரல்களால் அம்புதொடுக்கலானானாயினும்
முன்போலச்சிறப்புறானாயினான்; அதனால் அருச்சுனன் மகிழத் துரோணனும்
அருச்சுனனுக்கு முன்புசொன்னசொல் தவறாதவனாயினன் என வரலாறு அறிக.
அருச்சுன னென்பதற்கு – வெண்ணிறமுடையவ னென்று பொருள்; இது –
முதலில், இந்நிறமுடைய கார்த்தவீரியமகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு,
அவனைப்போன்ற சௌரியதைரியங்களை யுடைய இப்பார்த்தனுக்கு
இட்டுவழங்கப்பட்டது: பார்த்தன் கருநிறமுடையவ னாதலால், அவனுக்கு
அருச்சுனனென்பது நிறம்பற்றி வந்த இயற்பெயரென்றல் பொருந்தாது. இனி,
அருச்சுனன் என்பதற்கு – பசுமைநிறமுடையோனென்று பொருள் கூறுவாருமுளர்.
அன்றியும், பார்த்தன்,(பார்வதிபோலப்) பிறந்தபொழுது
வெண்ணிறமுடையவனாயிருந்தது பின்பு கருநிறமடைந்தா னென்று கூறலும்
உண்டு, கடலை, பூமியாகிய பெண்அணியும் மேகலையணி ளெனக் கூறதல்,
கவிமரபு.
அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ, அந்த முனி,
‘தேடுமின்’ என,
புங்கமொடு புங்கம் உற எய்து, இவன் எடுத்தமை புகன்று, அருகு
நின்றவரை, ‘நீர்
இங்கு இதன் இலைத் தொகைகள் யாவும் உருவப் பகழி ஏவுமின்’
எனாமுன், விசயன்,
துங்க வில் வளைத்து, ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன்,
இலக்கு இல் தொடையால்.-அருச்சுனனது வில்திறத்தின் சிறப்பு.
அங்குலிகம்ஒன்று – மோதிரமொன்று, புனல் ஆழ் தரு கிணற்றில்
– ஆழ்ந்தநீரையுடையதொரு கிணற்றிலே, விழ – விழுந்திட,- அந்தமுனி –
துரோணாசாரியன், தேடுமின் என – (குருகுல குமாரரை நோக்கி அதனை
நீங்கள்) தேடியெடுங்களென்றுசொல்ல, -(மற்றையோரால் இயலாமற்போகவே),
இவன் புங்கமொடு புங்கம் உற எய்து எடுத்தமை – அருச்சுனன் அம்புடனே
அம்பு பொருந்தும்படி பாணப்பிரயோகஞ்செய்து (அதனால் இம்மோதிரத்தை)
எடுத்தமைக்கு, புகன்று – மகிழ்ந்து,- (துரோணன் பின்பு), அருகு நின்றவரை –
பக்கத்தில்நின்ற அம்மாணாக்கரனைவரையும்நோக்கி, ‘நீர் – நீங்கள், இங்கு –
இங்குஉள்ள, இதன் – இந்த ஆலமரத்தினது, இலை தொகைகள் யாஉம் –
இலைகளையெல்லாம், உருவ – ஊடுருவித்துளைக்கும்படி, பகழி ஏவுமின் –
அம்புதொடுங்கள்’, எனாமுன் – என்று கட்டையிடும்முன்னே [கட்டளையிட்டவுடனே,
விரைவில் என்றபடி], (மற்றையோரால் ஆகாமற்போகவே), விசயன் – அருச்சுனன்,
துங்கம் வில் வளைத்து – சிறந்த (தனது) வில்லைவளைத்து, இலக்கு இல்
தொடையால் – எதிரில்லாத அம்பைஎய்து அதனால், ஒரு கணத்தினில் வடத்து
இலை துளைத்தனன் – ஒருகணப்பொழுதிலே அவ்வால மரத்தின்
இலைகளெல்லாவற்றையும் துளைப்படுத்தினான்; (எ -று.)
பாஞ்சாலனோடு மாறுபட்ட துரோணாசாரியன் அத்தினபுரியில் பிறரா
லறியப்படாது வசிக்கையில், ஒருகால் விளையாடச்சென்ற குருகுலக்குமரர்
கிணற்றில் வீழ்ந்திட்ட மோதிரம் பந்து இவைகளை யெடுக்கத் தெரியாமல்
விழிக்க, அருகு இருந்த இந்தத்துரோணன் தான் கற்ற இஷீகாஸ்த்திரத்தின்
வல்லமையால் அவற்றையெடுக்க, அவர்கள் வியப்புற்றுப் பணிந்து அவரை
இன்னாரென்று அறிந்து வீடுமனிடம் தெரிவிக்க, பின்பு ஆசிரியரானாரென்பதும்:
மாணாக்கர்க்குப் பயிற்சிமுற்றியபின் ஒருகால் ஒருமரத்தில் பாஸமென்ற
பட்சியையமைத்து அந்தக் குருகுலக்குமரரை யெய்யுமாறு துரோணாசார்யர்
கட்டளையிட, எய்யவேண்டிய நிலையில் மற்றையோர் மரத்தையும் குருவையும்
உடன்காண்பதாக ஆசிரியரிடஞ்சொல்லி ஆசிரியரால் அவமதிப்புப்பெற,
அருச்சுனன்மாத்திரம் எய்யும் நிலையில் பாஸபட்சியின் சிரசையே
காண்பதாகக்கூறி ஆசிரியரின்கட்டளைப்படி இலட்சியத்தை வீழ்த்தினா
னென்பதும் வியாசபாரதத்திலுள்ளவை: இப்பாடலிற்குறித்தவை
பாலபாரதத்திலில்லை.
அங்குலிகம் – அங்குலீயக மென்றவடசொல்லின் திரிபு; விரலில்
அணியப்படுவ தென்பது அவயவப்பொருள்: அங்குலி – விரல். புங்கம், துங்கம்,
வடம் – வடசொற்கள்
முத்தி முனி தாள் இணையை, நீர் படி தடந் துறையில்,
முதலை கவர்வுற்றது’ எனலும்,
சித்திர வில் வீரர் பலரும் தம வெறுங் கையொடு சென்று,
அருகு நின்று விடவே,
பத்தியின் விரைந்து, பொதுவே இபம் அழைக்க ஒரு பறவைமிசை
வந்த நெடுமால்
கைத் திகிரிபோல் கணையின், விசயன், அதனைப் பழைய கார்
முதலையின் துணிசெய்தான்.–அருச்சுனன் துரோணனை முதலையினின்று உய்வித்தல்.
முத்தி முனி – வீடுபெறுதற்குஉரிய [ஞானவொழுக்கங்களிற் சிறந்த]
துரோணாசாரியன், நீர் படி தட துறையில்- நீராடுகிற பெரிய நீர்த்துறையிலே,
தாள் இணையை – (தனது) கால்களிரண்டையும், முதலை கவர்வுற்றது –
ஒருமுதலை பிடித்துக் கொண்டது, எனலும் – என்று சொன்ன வளவிலே,- சித்திரம்
வில் வீரர் பலர்உம் – அழகிய வில்லை யேந்திய வீரர்களான குருகுல
குமாரர்கள் எல்லோரும், தம வெறு கையொடு – தங்கள் வெறுங்கைகளுடனே,
அருகு சென்று – பக்கத்திற் போய் நின்று, விட- (திகைத்துச்) சும்மாநின்றுவிட,
விசயன் – அருச்சுனன்,- இபம் – ஒருயானை [கஜேந்திராழ்வான்], பத்தியின் –
பக்தியோடு, விரைந்து – விரைவாக, பொதுவே அழைக்க – (ஆதிமூலமேயென்று)
பொதுவாகக் கூப்பிட, (அதனைப் பாதுகாக்கும்பொருட்டு), ஒரு பறவைமிசை
வந்த – ஒப்பற்ற கருடவாகனத்தின் மேல் ஏறிவந்த, நெடு மால் –
பெருமைக்குணமுடைய திருமாலினது, கை – கையினால் எறியப்பட்ட, திகிரி –
சக்கராயுதத்தை, போல் – ஒத்த, கணையின் – ஒருபாணத்தால்,- அதனை-
அம்முதலையை, பழைய கார் முதலையின் – (அச்சக்கரம் பிளந்த) பழைய கரிய
முதலையைப்போல, துணி செய்தான் – பிளந்து தள்ளினான்; (எ -று.)
ஒருநாள் துரோணன் மாணாக்கர்களுடனே சென்று கங்கைத் துறையில்
நீராடுகையில் வலியதொருமுதலை அவனது பாதங்களை முழங்காலளவும்
பிடித்துக்கொள்ள, அவன் அதனை விடுவித்துக் கொள்ள வல்லவனாயினும்,
சிஷ்யர்களைப் பரீட்சிக்கும் பொருட்டு அவர் அனைவரையும் நோக்கி
‘முதலையைக்கொன்று என்னை விடுவியுங்கள்’ என்று விரைந்துகூற,
மற்றையாவரும் இன்னது செய்வதென்று அறியாமல் திகைத்துநிற்க, உடனே
அருச்சுனன் கூரிய சிறந்த அம்பு தொடுத்து முதலையைக் கொன்று குருவைக்
காத்தனனென அறிக. முதலைவாய்ப்பட்ட காலுக்கு யாதொரூறுபாடுஞ் செய்யாது
அதனைப் பற்றிய முதலையின் வாயையே துணித்துக் குறிக்கொண்டு காத்த
திறத்தை வியந்து ‘மால்கைத்திகிரிபோல் கணை’ என்று கூறினார்.
சிலைக் குரு, ‘விறல் குருகுலக் குமரருக்கு வரு சிரம நிலை காண்மின்’
எனவே,
அலைத் தலை நிலா எழு சரித் புதல்வனுக்கும் நல் அறக்
கடவுளுக்கும் உரையா,
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின்மிசை நிகழ் பலி
கொடுத்து, அரியுடன்
கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது, புக்கனன் -அகத்து உணர்வு
மிக்க கலையோன்.-துரோணன் மாணாக்கர்கல்வியை அனைவர்க்குங் காட்டலுறல்.
அகத்து உணர்வு மிக்க – மனத்தில் அறிவுமிகுந்த, கலையோன் –
எல்லாக்கல்வியையு முணர்ந்தவனாகிய, சிலை குரு – வில்லாசிரியனான
துரோணன்,- ‘விறல் குருகுலம் குமரருக்கு வரு – வலிமையையுடைய குருகுல
குமாரர்களுக்குக் கைவந்த, சிரமம் நிலைஆயுதப் பயிற்சியின் நிலைமையை,
காண்மின் – பாருங்கள்’, என – என்று அலை தலை நிலா எழு சரித்
புதல்வனுக்குஉம் – அலைகள் ஒரு நிலையில் நில்லாமல் (மேன்மேல் மிக்கு)
எழப்பெற்ற கங்காநதியினது குமாரனான வீடுமனுக்கும், நல் அறம்
கடவுளுக்குஉம் – சிறந்த யமதருமராசனது அமிசமான விதுரனுக்கும், உரையா –
சொல்லி,- நிலைப்படு விசாலம் மணி அணி திகழ் அரங்கின்மிசை – நிலையாகப்
பதிக்கப்பட்ட பெரிய இரத்தினங்கள் அழகுவிளங்கப்பெற்ற யுத்தரங்கத்திலே,-
நிகழ் பலி கொடுத்து – கொடுத்தற்கு உரிய பலியைக் கொடுத்து,- அரியுடன்
கலை புரவி ஊர் திருவைஉம் தொழுது – சிங்கத்துடனே கலைமானாகிய
வாகனத்தை ஏறிநடத்துகிற துர்க்கையை வணங்குதலுஞ் செய்து, புக்கனன் –
பிரவேசித்தான்; (எ-று.)
அரங்கு – ரங்க மென்ற வடசொல்லின் திரிபு: இது – படைக்கலத் திறங்
காட்டுதற்கு நிருமிக்கப்பட்ட இடம். துர்க்கை படைக்கலங்கட்கும் போருக்கும்
உரிய தலைவி யாதலால்,யுத்தரங்க பூமியிற்புகும்போது வேண்டியபலி கொடுத்துத்
துர்க்கையை வணங்கிச் செல்லுதல், மரபு. பலிகொடுத்துத் துர்க்கையை வணங்கியதாக
இங்குக் கூறியது, பாரதங்களில்லை. துர்க்கைக்குச் சிங்கமும் கலை மானும்
வாகனமாம். ‘மகளிர்யாவரும் இலக்குமியின் சொரூபம்’ என்ற சித்தாந்தத்தைத்
தழுவி, துர்க்கையை ‘திரு’ என்றார்: திரு என்ற பெயர் மகளென்றமாத்திரமாய்
நின்றதென்றுங் கொள்ளலாம்: அன்றியும், துர்க்கைக்கு வீரலக்ஷ்மி யென்று
ஒருபெயரும் உண்டு. ‘அலைக்கலை நிலாவெழு கதிர்ப்புதல்வருக்கும்’ என்ற
பாடத்துக்கு – (தனக்கு உரிய பதினாறு) கலைகளோடும் (தனது) ஒளியாகிய
நிலாவினுடனும் கடலினின்றுஉதிக்கிற சந்திரனென்னுஞ்சுடரினது குலத்திற் பிறந்த
குமாரர்களான வீடுமனுக்கும் திருதராட்டிரனுக்கும் எனப் பொருளாம்.
புரியில் அறிவோர், சனபதத்தில் அறிவோர், புவி புரக்குமவர்தம்மில்
அறிவோர்,
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த
பொழுதில்,
தெரிவுறு விமானமனைதோறும் உறை தேவர் பலர், சித்தர், முதலோர்,
பரனொடும்
கரிய நெடுமால், பிரமன், இந்திரன், முதல் பலர் கலந்த அகல்
வான் நிகருமே.–அந்த யுத்தரங்கபூமியில் அனைவரும் வந்துசேர்தல்.
புரியில் அறிவோர் – நகரத்திலுள்ள அறிஞர்களும், சனபதத்தில்
அறிவோர் – நாட்டிலுள்ள அறிஞர்களும், புவி புரக்குமவர் தம்மில் அறிவோர் –
பூமியை ஆளும் அரசர்களில் அறிஞர்களாயுள்ளவர்களும், (ஆகிய
அனைவரும்), வரி பட வயங்கு கொடி மஞ்சம் விதம் எங்கண்உம் –
(அந்தரங்கபூமியில் அமைக்கப்பட்டு) வரிசைப்பட விளங்குகிற ஒழுங்கான
ஆசனங்களின் வகைகளிலெல்லாம், வனப்பு உற இருந்த பொழுதில் –
அழகுபொருந்த வீற்றிருந்த சமயத்தில்,- (அச்சபையானது),- தெரிவுறுவிமானம்
மனைதோறுஉம் – விளங்குகிற விமானங்களாகிய மாளிகைகளில், உறை –
வசிக்கிற, தேவர் பலர் – தேவர்கள்பலரோடும், சித்தல் முதலோர் பலரோடுஉம் –
சித்தர்கள் முதலிய தேவகணத்தவர் பலரோடும், கரிய நெடுமால் பிரமன்
இந்திரன் முதல் பலர் – கருமைநிறமும் பெருமைக்குணமுமுடைய திருமாலும்
பிரமனும் இந்திரனும் முதலிய பல சிறந்த தேவர்கள், கலந்த – வந்து
செறியப்பெற்ற, அகல் வான் – பரந்த ஆகாயத்தை, நிகரும் – ஒக்கும்; (எ -று.)
ஜநபதம் – வடசொல்; சனங்கள் வசிக்குமிடம் மென்று பொருள்படும்.
‘அறிவோர்’ என்றது, இங்கு, யானை குதிரை தேர் படைக்கலம் என்றவற்றின்
நூல்களை யறிந்தவரைக் குறிக்கும். சித்தர் – அணிமா முதலிய யோக
சித்திகளைப் பெற்றவர். ‘புரிவிலறிவோர்’ என்றும், ‘இயங்குகொடி’ என்றும்
பாடம். ‘பலரொடும்’ என்ற விடத்து, ‘பரரொடும்’ என்று பிரதிபேதம்
ஆற்றின் வழுவா மனுமுறைத் தருமன் மைந்தன் முதல் ஆகிய
குமாரர் அடைவே,
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும், அன்பின் உயர் பூசை பல
செய்து, புரி நாண்
ஏற்றிய சராசனம் வணக்கி, வடி வாளியின் இலக்கம்அவை
நாலு வகையால்,
மாற்றினர், பிளந்து-பெரு வண்மை, சிறு நுண்மை, சலம், நிச்சலம்,
எனச் சொல் வகையே.-யுதிட்டிரன் முதலியோர் தம்தமது வில்திறங் காட்டுதல்.
ஆற்றின் வழுவா – நல்நெறியில் தவறாத, மனுமுறை மநுதர்ம
சாஸ்திரத்திற் சொல்லப்பட்ட நீதியையுணர்ந்த, தருமன் மைந்தன் –
தருமபுத்திரன், முதல் ஆகிய – முதலான, குமாரர் – குரு குல குமாரர்கள்,
அடைவே – முறையே,- அடல் ஆசிரியர் இருவரை உம் – வலிமையையுடைய
(கிருபன் துரோணன் என்னும் தமது) ஆசிரியர் இருவரையும், போற்றி வணங்கி,
அன்பின் – அன்போடு, உயர் பூசை பல செய்து – சிறந்த பூசைகள்
பலவற்றைச்செய்து, புரி நாண் ஏற்றிய சராசனம் வணக்கி – முறுக்குள்ள
நாணியை ஏற்றும்படி வில்லை வளைத்து, வடி வாளியின் – கூரிய
அம்புகளைக்கொண்டு, பெருவண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்
வகை இலக்கம் அவை நால்உம் – பெருவண்மையும்சிறு நுண்மையும் சலமும்
நிச்சலமும் என்று சொல்லப்பட்ட நான்குவகை லக்ஷியங்களை யெல்லாம்,
வகையால் பிளந்து மாற்றினர் – (அதற்குஉரிய) வகைப்படி பிளந்து
தள்ளினார்கள்; ( எ-று.)
பெருவண்மை – மிகப்பெரிய இலக்கு. சிறுநுண்மை – மிகச்சிறிய இலக்கு.
சலம் – அசையும் இலக்கு. நிச்சலம் – அசையாத இலக்கு. அம்பைக்
கையாளும்வகை – எடுத்தல் தொடுத்தல் விடுத்தல் மீட்டல் என நான்கு: இனி,
மேனோக்கியெய்தல் நேரேயெய்தல் எனச் சில வகைகளும் கூறுப.
‘நாலுவகையான்’ என்று பிரதிபேதம்.
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனைப் பலவும் அழகுற
இயற்றியும், மதம்
பாயும் இபம், மா இரதம், வாசி, ஒருவர்க்கு ஒருவர் பல கதி
வரக் கடவியும்,
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம்
மகிழ்ந்து, ‘நவை தீர்
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல!’ என வல்லன
புரிந்தனர் அரோ.–மற்றும் படைக்கலத்திறமும், யானைதேர்குதிரை
நடத்துந்திறமுங் காட்டுதல்.
எனை அநேகவிதம் ஆனவை – மற்றும் பலவகைப்பட்டவையான,
ஆயுதம் பலஉம் – படைக்கலங்களை யெல்லாம், அழகு உறஇயற்றிஉம் –
அழகாக உபயோகித்தும்,- சேய் உயரும் – மிகவும் உயர்ந்துள்ள, மாடம் நிலை
– மாளிகைகளின் உபரிகைகளிலும், தெற்றியின் – மண்டபங்களிலும், இருந்தவர் –
(இக்காட்சி காண்டற்கென்று) வந்திருந்தவர்கள், தெளிந்து – கண்டு, உளம்
மகிழ்ந்து-, நவை தீர் வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என – (இக்கதி
விசேடங்கள்) குற்றமற்ற வாயுவுக்குஉரிய கதிகளே யல்லது மனிதர்களுக்கு உரிய
கதிகளல்லவென்று சொல்லும்படி,- மதம்பாயும்இபம் – மதசலம் பெருகப்பெற்ற
யானைகளையும், மா இரதம் – பெரிய தேர்களையும், வாசி – குதிரைகளையும்,
ஒருவர்க்கு ஒருவர் – ஒருவரினும் ஒருவர் மிகுதியாக, பல கதி வர –
அநேகவிதமான நடைவிகற்பங்கள் உண்டாக, கடவிஉம் – செலுத்தியும்,- வல்லன
புரிந்தனர் – (தாம்) தேர்ந்த கல் வித்திறங்களைச் செய்து காட்டினார்கள்; (எ-று.)-
அரோ – ஈற்றசை.
எனை – ஏனை யென்னும் இடைச்சொல்லின் குறுக்கல். கீழ்க்கவியில் வில்
கூறியதனால், மற்றையபடைக்கலங்களைக் குறித்தற்கு ‘ஏனை’ என்றார்.
‘மாடநிலைதோ’ றவையிருந்தவர் ‘ என்ற பாடத்துக்கு – மாடங்களினிடந்தோறும்
கூடியிருந்த பெரியோர்களென்க. மனித்தர் = மநுஜர்: வடசொல். தெற்றி –
சித்திரகூடமுமாம்
ஒத்த வலியோர் வலியும், ஒத்த திறலோர் திறலும், ஒத்த வினையோர்
வினையும், வன்
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து, அரசன் மகனும்,
அனிலன் சிறுவனும்,
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர்-களிப்புடன்,
இரண்டு தறுகண்
மத்த கயம், வேரொடு மராமரம் எடுத்து, அமர் மலைந்தனைய
கோல மறவோர்.-துரியோதனனும் வீமனும் கதைப்போர் தொடங்குதல்.
வலிஉம் – உடல்வலிமையைக் குறித்து நோக்கினாலும், ஒத்த
வலியோர் – (ஒருவர்க்கொருவர்) சமமான தேகபலமுடையவர்களும், திறல்உம் –
பராக்கிரமத்தை யுடையவர்களும், வினைஉம் – படைக்கலத் தொழில்வகைகளைக்
குறித்து நோக்கினாலும், ஒத்த திறலோர்-சமமான பராக்கிரமத்தை
யுடையவர்களும், வினைஉம்- படைக்கலத் தொழில்வகைகளைக் குறித்து
நோக்கினாலும், ஒத்த வினையோர் – சமமான தொழில்திறமுடையவர்களும்
ஆகிய, அரசன் மகன்உம் அனிலன் சிறுவன்உம் – திருதராட்டிர மகாராசனது
புத்திரனான துரியோதனனும் வாயுகுமாரனான வீமனும், தறுகண் மத்த கயம்
இரண்டு – அஞ்சாமையையுடைய மதம்பிடித்த யானைகள் இரண்டு, களிப்புடன் –
அம்மதக்களிப்புடனே, மராமரம் வேரொடு எடுத்து – மராமரங்களை வேருடனே
(துதிக்கையாற்) பெயர்த்து எடுத்துக்கொண்டு, அமர் மலைந்து அனைய –
(ஒன்றோடொன்று) போர்செய்தாற்போன்ற, கோலம் மறவோர் – காட்சியையும்
யுத்தாவேசத்தையுமுடையவர்களாய்,- வல் சித்தம் அனல் மூள – வலிய தங்கள்
மனத்திலே கோபாக்கினி எழுந்துபொங்க, முக அம்புயம் மலர்ந்து – (தங்கள்)
முகமாகிய தாமரைமலர்கள் மலரப்பெற்று, கைத்தலம் அமர்ந்தகதைகொண்டு
எதிர்நடந்தனர் – கைகளிற் பொருந்திய கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு
(ஒருவரையொருவர்) எதிர்த்துச் சென்றார்கள்;
இருவரும் பதினாயிரம் யானைபலம்கொண்டவராதலால், ‘ஒத்த வலியோர்’
எனப்பட்டனர்: (துரியோதனன், வீமன், கீசகன், சராசந்தன், பகாசுரன் என்ற
இவ்வைவரும் சமபலமுடையவரென்பதை அறிக.) கதாயுதத்தைக்கொண்டு நிற்கும்
இவ்விருவர்க்கு, ஸாலவ்ருட்சத்தைக்கொண்டு நிற்கும் மதக்களிறுகள்உவமை
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்தனைய
தன்மையொடு உடற்ற, விலகு
மண்டல விதங்களும் வியப்புற நடந்தபின், மறத்தொடு செயிர்த்து,
வயிரம்
கொண்டு, இருவரும் பொருதல் உன்னுபொழுதத்து, அவர் குறிப்பினை
இமைப்பு அளவையில்
கண்டு, குருவின் சிறுவன், வன்பொடு விலக்கினன், மெய் கல்வி
கரை கண்ட பெரியோன்.-அவர்கள் போரில்மிகுதலை அசுவத்தாமன் விலக்குதல்.
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று-கதையின் நுனி
ஒன்றோடொன்று, உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற – இடியிடித்தாற்
போன்ற தன்மையோடு தாக்க, விலகு மணடல விதங்கள்உம் – (அக்கதைகள்
தம்மேல் தாக்காதபடி) விலகுகிற மண்டலகதிவகைகளும், வியப்புற நடந்தபின்-
(காண்பவர்) அதிசயிக்கும்படி நிகழ்ந்தபின்பு, இருவர்உம் – (துரியோதனன்
வீமனென்னும்) இரண்டுபேரும், மறத்தொடு செயிர்த்து வயிரம் கொண்டு –
வீரத்தோடு கோபித்து உட்பகைமைகொண்டு, பொருதல் உன்னு பொழுதத்து –
போர்செய்யக்கருதியபொழுது,- அவர் குறிப்பினை – அவர்களுடைய
உட்கருத்தை, இமைப்பு அளவையில் கண்டு – ஒரு மாத்திரைப்பொழுதிலே
அறிந்து,- மெய் கல்வி கரை கண்ட பெரியோன் குருவின் சிறுவன் –
உண்மையான கல்விகளை முழுவதும் அறிந்த பெருமையுடையவனாகிய
குருபுத்திரனான அசுவத்தாமன், வன்பொடு விலக்கினன் – வலிமையோடு
விலக்கினான்; (எ-று,)
மண்டலவிதம் – வலசாரி, இடசாரி, மண்டலம், பவுரி என்பன.
செய்யுளோசையின்பம் நோக்கி, மெய்கல்வி, என வலியியல்பாய் நின்றது: இனி,
மெய்யுங் கல்வியுமாகியவற்றைக் கரைகண்ட என்றும் உரைக்கலாம்.
‘அன்பொடுவிலக்கினன்’ என்றும் பாடம்.
மீளி மகவான் மதலை ஆயுதபுரோகிதன் விலோசனம் உணர்ந்து,
அவன் மலர்த்
தாளில் முடி வைத்து, எதிர் தரித்தனன், இடங்கை வரி சாப
கவசத்தினன், இபம்,
யாளி, அரவம், கருடன், வன்னி, சலிலம், திமிரம், இரவி,
இவையே கடவுளாம்
வாளியின் வினோதம் உற எய்தனன், இருந்த முடி மன்னவர்
மதிக்கும் வகையே.–அருச்சுனன் தனது வில்லின் திறமையைக் காட்டுதல்.
மீளி – வீரத்திற் சிறந்தவனான, மகவான் மதலை – இந்திர
குமாரனாகிய அருச்சுனன்,- ஆயுத புரோகிதன் விலோசனம் உணர்ந்து –
ஆயுதவித்தைக்குக் குருவான துரோணாசாரியனது கண்ணின்குறிப்பை யறிந்து,
அவன் மலர் தாளில் முடிவைத்து – அவனுடைய தாமரை மலர்போன்ற
திருவடிகளிலே தனது தலையை வைத்து [சாஷ்டாங்கமாக விழுந்து தண்டனிட்டு],
எதிர் – அவனெதிரிலே, இடம் கை வரி சாபம் தரித்தனன் – இடக்கையில்
கட்டமைந்த வில்லை ஏந்தியவனாய், கவசத்தினன் – (உடம்பில் தரித்த)
கவசத்தையுமுடையவனாய், இபம் யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம்
இரவி இவைஏ கடவுள் ஆம் வாளியின் – யானையும் (அதற்குப்பகையான)
சிங்கமும் பாம்பும் (அதற்குப் பகையான) கருடனும் அக்கினியும் (அதற்குமாறான)
ஜலமும் இருளும் (அதற்குமாறான) சூரியனும் ஆகிய இவற்றின் விதமான
தெய்வத்தன்மையுள்ள அம்புகளினால் [ஒன்றற்கொன்று பகையாகிய பல திவ்விய
அஸ்திரங்களால்], வினோதம்உற -(காண்பவர்க்கு) வியப்புஉண்டாக, இருந்த
முடிமன்னவர் மதிக்கும் வகை – (அவ்வரங்கத்தில்) இருந்த கிரீடத்தாரிகளான
அரசர்கள் (தன்னை) நன்குமதிக்க, எய்தனன்-; (எ -று.)
முன்பு தானே ஓர் அஸ்திரத்தை எய்து அதன்திறத்தை வெளிக்காட்டி
வியப்பு உண்டாக்கி உடனே அதற்குப் பகையான அஸ்திரத்தைக் கொண்டு
தணித்து இங்ஙனமே மிக்கவிநோதக் காட்சிகளைவிளைத்தன னென்க. மகவாந்
என்ற வடசொல் – யாகங்களை யுடையவனென்று பொருள்படும்; நூறு
அசுவமேதயாகங்களைச் செய்து இந்திர பதவிபெறுதலால் அவனுக்கு இப்பெயர்.
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே,
அம் கண் வான மீனம் என்ன, அவை இருந்த அரசர்முன்,
சிங்கம் என்னுமாறு எழுந்து, சிங்கநாதமும் செய்தான்-
பங்கசாத பரிமளம் கொள் பானுராச சூனுவே.-அப்பொழுது கர்ணன் எழுந்து சிங்கநாதஞ் செய்தல்.
மங்குல் சூழ் விமானம் முன்றில் – மேகங்கள் படியப் பெற்ற
(மேல்நிலையையுடைய) மண்டபத்தின் முன்னிடத்திலுள்ள, மஞ்சம் கோடி –
மஞ்சங்களின் வரிசை, திகழ – (தாம்வீற்றிருத்தலால்) விளங்கும்படி, (அந்த
மஞ்சங்களில்), அம் கண் வானம் மீனம் என்ன – அழகிய இடத்தையுடைய
வானத்திற்பொருந்திய நக்ஷத்திரங்கள் போல,அவை இருந்த -சபையாகத்
திரண்டு வீற்றிருந்த, அரசர் முன் – அரசர்களுடையமுன்னிலையிலே,-
பங்கசாதபரிமளம்கொள் பானுராச சூனு – தாமரைமலர்களை
மலர்த்துந்தன்மையுள்ள சூரியனாகிய தலைவனது மகனான கர்ணன்,- சிங்கம்
என்னும் ஆறு எழுந்து – சிங்கம் (தனக்கு உவமை) என்று சொல்லும்படி
(கம்பீரமாக) எழுந்து, சிங்கநாதம்உம் செய்தான் – சிங்கநாததத்தையுஞ் செய்தான்;
சிங்கநாதத்தையுஞ் செய்தான்;
இங்கே, விமானம் – மண்டபத்தின் மேல்நிலையையும், முன்றி லென்றது –
வடமொழியில் ப்ரேக்ஷாகார மெனப்படும் காட்சிச்சாலையின் முன்னிடத்தையும்
காட்டும். அலர்த்தலாகிய காரணம், பரிமளங் கொள்ளுதலாகிய காரியமாக
உபசரிக்கப்பட்டது. பரிமளங்கொள் பாநு – தாமரைகள் மலர்ந்து
வாசனைவீசுதற்குக் காரணமாகுஞ் சூரிய னென்க. ஓர் உத்தமபுருஷன் உயர்ந்த
பதுமினி சாதிஸ்திரீயின் மேனிநறுமணத்தை மோந்து உட்கொள்ளல் போல,
சூரியனாகிய தலைவன் தனது தலைவியாகிய தாமரையின் மணத்தைக்
கொள்ளுகின்றனனென்பது தொனிக்கும். கோடி, ஸிம்ஹநாதம், பங்கஜாத பரிமளம்,
பாநுராஜஸூநு – வடமொழித்தொடர்கள். ‘விசாலமுன்றில்’ என்றும் பாடம்.
இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும், மற்றையாறும் மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.
இவற்றை, முதல் ஆறு சீர்களையும் மூன்று பெருஞ் சீராகப் பிரித்துக் கலிவிருத்த
மென்னவேண்டுமென்பது, ஒருசாரார் கொள்கை
சிந்தை அன்புடன் பணிந்து, தேசிகேசன் அருளினால்
வந்து, வெஞ் சராசனம் வணக்கி, வீர வாளியால்,
இந்திரன் குமாரன் முன் யாது யாது இயற்றினான்,
அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான்.-அருச்சுனனினும் சிறப்பாகக் கர்ணன் தனது
வில்திறங்காட்டுதல்.
தேசிக ஈசன் அருளினால் வந்து – (அவ்வரங்கிற்குத் தலைவனாக
விளங்கும்) குருசிரேஷ்டனான அந்தத் துரோணனது அனுமதிபெற்று (அதனால்)
வந்து, சிந்தை அன்புடன் பணிந்து – (அவனை) மனப்பூர்வமான பக்தியோடு
வணங்கி, வெம் சராசனம் வணக்கி – கொடிய வில்லை வளைத்து,-
இந்திரன்குமாரன் முன் வீரவாளியால் யாது யாது இயற்றினான் அந்த அந்த
நிலைஉம் ஏஉம் அவனின் விஞ்சல் ஆயினான் – இந்திரனது மகனான
அருச்சுனன் முன்பு திறமையுடைய அம்புகளால் எந்தெந்தவகைத்தொழிலைச்
செய்தானோ அததற்குஉரிய நிலையிலும் அந்தந்த அம்பைச் செலுத்துதலிலும்
அவ்வருச்சுனனினும் மேம்படுதலை உடையவனானான்; (எ-று.)
“அர்ச்சிதேந குருணாநுமோதிதோ – தாரயந் தநு ரதிஜ்யதாம் கதம்
அத்புதம் வ்யதித யத்யத் அர்ஜு ந:- தத்த தப்யதிகம் ஆததாந ஸ:” என்ற
பாலபாரதத்தை யொட்டி இப்போது கூறிய பொருளே யேற்றதாதலறிக.
தேசிகன் -பரசுராமனென்பாருமுளர்.
கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு, கண் களித்து,
‘இணை இல் வீரன்’ என்றது, அன்று இருந்த ராச மண்டலம்;
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான்,
துணைவரோடு வரி கழல் சுயோதனன் களிக்கவே.-அதுகண்டு அனைவரும்வியக்கத் துரியோதனன்களிக்க
அருச்சுனன்நாணுதல்.
கணைகள் – (கர்ணனுடைய) பாணங்கள், போய் – சென்று, இலக்கு
அடைந்த- (குறித்த) இலக்கில் தவறாதுபட்ட, உறுதி – திறத்தை கண்டு –
பார்த்து,- அன்று இருந்த ராசமண்டலம் – அப்பொழுது (அச்சபையில்) இருந்த
அரசர்களதுதிரள், கண்களித்து – கண்கள் களிப்பப்பெற்று, இணை இல் வீரன்
என்றது- (அவனை) ஒப்பற்றவீரனென்று கொண்டாடிற்று: (அதனால்), வரி கழல்
சுயோதனன் – கட்டிய வீரக்கழலையுடைய துரியோதனன், துணைவரோடு –
(தனது) தம்பிமார்களுடனே, களிக்க – களிப்படைய,- பிணையல் மாலை விசயன்
– பின்னல்மாலையைத் தரித்த அருச்சுனன், அண்ணல் பெற்றி பற்றி நாணினான்
– பெருமையிற்சிறந்தவனான அக்கர்ணனது திறமையைக்குறித்து
வெட்கமடைந்தான்; (எ-று.)
“தம்மினுங், கற்றாரைநோக்கிக் கருத்தழிக கற்றவெல்லாம், எற்றேயிவர்க்கு
நாமென்று” என்றபடி, வில்திறத்தில் தேர்ந்த அருச்சுனன் தன்னினும் மேம்பட்ட
கர்ணனதுதிறத்தைக் கண்டு நாணங்கொண்டன னென்க. இலக்கு= லக்ஷ்யம்.
அண்ணல் – (தனது) தமையன் எனக்கொள்ளினுமாம்.
மருவ நின்று அருக்கன் மைந்தன், வானநாடன் மகனை, ‘நாம்
இருவரும் தனுக் கொள் போர் இயற்ற வம்மின்’ என்றலும்,
குருகுலம் தழைக்க வந்த குமரன், அன்பு கூரவே
உருகி, ‘நன்று!’ எனத் தழீஇ, உகந்து, உளம் தருக்கினான்.-கர்ணன் அருச்சுனனைத்தன்னோடு தொந்தயுத்தஞ்
செய்யஅழைத்தல்.
அருக்கன் மைந்தன் – சூரியபுத்திரனான கர்ணன், மருவநின்று –
சமீபமாக வந்துநின்று, வானநாடன் மகனை – தேவலோகத்துக்குத் தலைவனான
இந்திரனது குமாரனாகிய அருச்சுனனைநோக்கி, நாம் இருவர்உம் தனுகொள்
போர் இயற்ற வம்மின் என்றலும்- ‘நாம் இரண்டுபேரும் விற்போர்செய்யுமாறு
(நீர்) வருக’ என்று கூப்பிட்டவளவிலே,- குருகுலம் தழைக்க வந்த குமரன் –
குருவென்னும் அரசனது குலம் செழிக்கும்படி பிறந்த மகனான துரியோதனன்,
அன்பு கூர – அன்புமிக, உருகி – (அந்தக்கர்ணன் விஷயத்தில்)
மனவுருக்கங்கொண்டு, நன்று என – இதுநல்லதென்று (அவன்செயலைக்)
கொண்டாடி, தழீஇ – (அவனைத்) தழுவியணைத்து, உளம் உகந்து –
மனமகிழ்ந்து, தருக்கினான் – பெருமை பாராட்டினான்; (எ -று.)
துரியோதனனை ‘குருகுலந்தழைக்கவந்த குமரன்’ என்றது,
நூற்றுவரெனத்தொகையால் மிக்கதனாலேயே யென்க.
அனந்தரம், ‘பொரற்கு நீகொல் அந்தரம் எனக்கு?’ எனா,
தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு, தபனன் மைந்தன் மீளவும்,
‘முனைந்த போரின் முடி துணித்து, உன் முக சரோருகத்தினால்,
சினம் தணிந்து, அரங்க பூசை செய்வன்’ என்று சீறினான்.-அருச்சுனனுக்கும்கர்ணனுக்கும் நிகழும் வீரவார்த்தை.
அனந்தரம் – பின்பு, தனஞ்சயன் – அருச்சுனன்,
(கர்ணனைநோக்கி), ‘பொரற்கு – போர்செய்தற்கு, நீ கொல் எனக்கு அந்தரம் –
நீயாஎனக்கு எதிர்? ‘ எனா – என்றுசொல்லி, செயிர்த்தல் – கோபித்தலை, கண்டு
– பார்த்து,- தபனன் மைந்தன் – சூரியபுத்திரனான கர்ணன்,- மீளஉம் – பின்பும்,
‘முனைந்த போரில் – பகைத்துச் செய்யும் போரிலே, முடி துணித்து – (உன்)
தலையை வெட்டி, சினம் தணிந்து- (அதனால் எனது) கோபமாறி, உன் முக
சரோருகத்தினால் -உனது முகமாகிய தாமரைமலரைக்கொண்டு, அரங்கபூசை
செய்வன்- யுத்தரங்கத்துக்குப் பூசைசெய்வேன், ‘ என்று – என்று சொல்லி,
சீறினான் – மிகவுங் கோபித்தான்; (எ-று.)
தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்யவேண்டியபொழுதில், அருச்சுனன்
வடக்கிற்சென்று பல அரசர்களைச் சயித்து அவர்கள் செல்வத்தைத்
திறைகொணர்தலால், அவனுக்குத் தநஞ்சய னென்று ஒருபெயர்; இனி,
இப்பெயர்க்கு – வெற்றியைச் செல்வமாகவுடையவனென்றும் ஒருபொருள்
கொள்ளலாம். ஸரஸ் + ருஹம்= ஸரோருஹம்; குளத்தில் முளைப்பது:
தாமரைக்குக் காரணவிடுகுறி
அதிருகின்ற எழிலிபோல் அருச்சுனன்தனைக் குறித்து
எதிருகின்ற வன்மை கண்டு, யாவரும் திகைக்கவே,
முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன்,
உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன, உரைசெய்வான்:-அதுகண்டு அனைவருந் திகைக்கக் கிருபன் நீதிகூறத்
தொடங்குதல்.
அதிருகின்ற எழிலி போல் – இடிமுழங்குகின்ற மேகம் போல,
அருச்சுனன்தனை குறித்து எதிருகின்ற – அருச்சுனனைக் குறித்து (க் கர்ணன்)
எதிர்த்து நிற்கிற, வின்மை – வில்வலிமையை, கண்டு – பார்த்து, யாவர்உம் –
எல்லோரும், திகைக்க – பிரமித்து நிற்க, – முதிருகின்ற மெய்யன் ஆகி முன்
இருந்த கௌதமன் – மூப்படைந்த உடம்பையுடையவனாய் (அச்சபையில்) முன்னே
வீற்றிருந்த கிருபாசாரியன், உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான்
– சிந்துகிற அமிருதத்துளிகள்போலு மென்னும்படி சொல்பவனானான்; (எ-று.)-
அவற்றை. அடுத்த கவியிற் காண்க.
இப்பொழுது கிருபன் பேசும் பேச்சு, துரியோதனன் முதலிய சில
தீயோர்க்கு வருத்தம் விளைப்பினும், நீதிமுறைமையுணர்ந்த நல்லோர்பலர்க்கும்
இன்பத்தை விளைத்தல்பற்றி, அச்சொற்களுக்கு அமிருதத்துளிஉவமை.
வன்மைகண்டு என்றும் பாடம்.
சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம்
நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ?
ஏதம் உண்டு சால’ என்ன, ராசராசன் இகலி, அக்
கோதமன்தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான்:-கிருபன் நீதிகூறத் துரியோதனன் அதனை மறுக்கத் தொடங்குதல்.
சூதன் மைந்தன் – தேர்ப்பாகனது மகன், வேலை ஏழு சூழும்
மேதினிக்கு எலாம் நாதன் மைந்தனுடன் – ஏழுகடல்கள் சூழ்ந்த பூமி
முழுதுக்கும் அரசனது குமாரனோடு, வெகுண்டு நவிலுதற்கு நண்ணும் ஓ –
கோபித்து வீரவாதம் பேசுதற்குத் தகுமோ? [தகாது என்றபடி]; சால ஏதம் உண்டு
– (இங்ஙனம் பேசுதல்) மிகவுங்குற்றமுடைத்து, ‘என்ன – என்று (கிருபன்)
சொல்ல,- ராச ராசன் – அரசர்க்கரசனாகிய துரியோதனன், – இகலி – மாறுபட்டு,-
அ கோதமன் தனக்கு உளம் கொதிக்கும் ஆறு கூறுவான் –
அந்தக்கிருபாசாரியனுக்கு மனம் கொதிக்கும்படி (மறுமொழி) கூறுபவனானான்;
(எ-று.)- அவற்றை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.
நவிலுதற்கு என்ற குகரவீற்று வினையெச்சம், தொழிற்பெயர்த்
தன்மைப்பட்டு ‘நண்ணும்’ என்ற முற்றுக்கு எழுவாயாய்நிற்கும். கோதமன் என்றது,
கௌதம னென்ற வடசொல்லின் விகாரம்.
கற்றவர்க்கும், நலம் நிறைந்த கன்னியர்க்கும், வண்மை கை
உற்றவர்க்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக்
கொற்றவர்க்கும், உண்மையான கோது இல் ஞான சரிதராம்
நற்றவர்க்கும், ஒன்று சாதி; நன்மை தீமை இல்லையால்.-துரியோதனன் மறுமொழி: இன்னாரின்னார்க்குச்
சாதிபேதம்கருதத்தக்கதன் றென்றல்.
மூன்றுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) கற்றவர்க்குஉம் – படித்தவர்களுக்கும், நலன் நிறைந்த
கன்னியர்க்குஉம்- அழகுநிறைந்த கன்னிகைகளுக்கும், வண்மைகை உற்றவர்க்குஉம்
-ஈகைக்குணம் கைவந்தவர்களுக்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்குஉம் –
வீரர்களென்று சிறப்பாக மதிக்கப்பட்டவர்களுக்கும், வாழ்வு உடைகொற்றவர்க்கும்உம்
– செல்வவாழ்க்கையையுடைய அரசாட்சி பூண்டவர்களுக்கும், உண்மை ஆனகோது
இல் ஞானசரிதர் ஆம் நல் தவர்க்குஉம் – உண்மையானகுற்றமற்ற தத்துவ
ஞானத்தையும் (அதற்குஏற்ற) ஒழுக்கத்தையும் உடையவர்களாகிய நல்ல
தவஞ்செய்யும் முனிவர்களுக்கும், ஒன்று சாதி – சாதி ஒன்றே; நன்மை தீமை
இல்லை – (அதில்) உயர்வு தாழ்வு என்னும் பகுப்பு இல்லை; (எ-று.)- ஆல் –
ஈற்றசை; தேற்றமுமாம்.
எந்தச்சாதியிற்பிறந்திருப்பினும் கற்றவர் முதலியோர் மேன்மைபெறக்
கல்லாதவர் முதலியோர் கீழ்மையுறுவராதலால் இவர்கட்குச் சாதிவேற்றுமை
குறிக்கத்தக்க தன்றென்பது இதன் கருத்து.
‘அரி பிறந்தது, அன்று, தூணில்; அரனும் வேயில் ஆயினான்;
பரவை உண்ட முனியும், இப் பரத்துவாசன் மைந்தனும்,
ஒருவயின்கண், முன் பிறந்தது; ஒண் சரத்தின் அல்லவோ,
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே?‘-இதுவும் அது: பிறப்பினால் இழிவின்மைக்குச் சில உதாரணம்.
அன்று – முற்காலத்தில், அரி பிறந்தது – திருமால் அவதரித்தது,
தூணில் – தூணினிடத்தேயாம்; அரன்உம் – சிவபிரானும், வேயில் ஆயினான் –
மூங்கிலில் தோன்றினான்; பரவை உண்ட முனிஉம் – கடலைப்பருகிய
அகத்தியமகாமுனிவனும், இ பரத்துவாசன் மைந்தன்உம் – பரத்துவாசமுனிவனது
குமாரனான இந்தத்துரோணாசாரியனும், முன் பிறந்தது – முன்பு தோன்றினது,
ஒருவயின்கண் – (கும்பமாகிய) ஓரிடத்திலேயாம்; அரிய வென்றி முருகவேள்உம்
– (பிறரால்வெல்லுதற்கு)அரிய வெற்றியையுடைய முருகக்கடவுளும், அடிகள்உம்
– தேவரீரும், பிறந்தது – தோன்றினது, ஒள் சரத்தின் அல்லஓ – விளங்குகின்ற
நாணலிலே யன்றோ?
மேன்மையுடைய திருமால் முதலியோர் பிறந்த இடங்காரணமாக
இழிக்கப்படாமை போலவே, இக்கர்ணனும் சாதிபற்றிஇழித்தற்கு உரியனல்ல
னென்க. திருமால் தூணில்தோன்றினது, நரசிங்காவதாரகாலத்தில்.
சிவபிரான் மூங்கிலில் தோன்றிய கதை:- எல்லாம் அழியும்
பிரளயகாலத்தில் தமக்கும் அழிவுநேரிடுமென்று கவலையுற்று வேதங்கள் பலநாள்
சிவனைக்குறித்துத் தவம்புரிந்து அப்பிரானது தரிசனத்தைப்பெற்று ‘பிரளய
காலத்தில் நீ தாமிரசபையில் நின்று செய்யுந் திருநடனத்தை நாங்கள்
தரிசிக்கவேண்டும்; பிரளயத்திலும் அழிவில்லாத அத்தலத்தில் நாங்கள்
மூங்கிலாய் நின்று எப்போதும் நிழலைச் செய்ய, நீ எங்களிடம்
முத்தாய்த்தோன்றி எங்களுக்குப் பிள்ளையுமாகவேண்டும்’ என்று வரங்கேட்க,
சிவபிரான் அதற்கு இணங்கித் திருநெல்வேலியில் வேணுவனத்தில் மூங்கில்
முத்தாகி அம்மூங்கிலின்கீழ் எழுந்தருளியிருக்கின்றன னென்பதாம். இதனால்,
அத்தலத்துச் சிவபிரானுக்கு வேணுவன நாதனென்று திருநாமம்.
ஏககாலத்தில் ஊர்வசியைக்கண்டு அவளிடங் காதல் கொண்ட மித்திரன்
வருணன் என்னுந் தேவர் இருவரது விருப்பத்தால் அருகிலிருந்ததொரு
குடத்தினின்று பிறந்தவர் அகஸ்தியரென அறிக. (அதனால், கும்பசம்பவர்,
கலசயோநி என்றபெயர்கள் அவர்க்கு வழங்கும்.) துரோணர்
துரோணகும்பத்திற்பிறந்து அது காரணமாகப் பெயர்பெற்றமை, கீழ்க்கூறப்பட்டது.
(கும்பசம்பவர், கலசயோநி என்று துரோணரை வழங்குதலும் உண்டு.) தேவர்கள்
வேண்டியபடி சூரபதுமன் முதலிய கொடிய அசுரர்களை அழித்தற்பொருட்டு ஒரு
குமாரனை யுண்டாக்கக்கருதிய சிவபிரானது திருமேனியினின்று வெளிப்பட்ட
திவ்வியதேஜசை அக்கினியும் வாயுவும் கங்கையிற் செலுத்த, அதனது ஒரு மடுவாய்
நாணற்காட்டை யடுத்துள்ள சரவணப்பொய்கையினின்று சுப்பிரமணியமூர்த்தி
தோன்றினனென வரலாறு அறிக. கிருபர் நாணற்கட்டையிற் பிறந்தமை,
முன்கூறப்பட்டது. நாணலிற் பிறந்ததனால், முருகனுக்கும் கிருபனுக்கும் ‘சரஜந்மா ‘
என்று பெயர். உயர்ந்தோரை ‘அடிகள்’ என்றல், மரபு.
அகத்தியர் கடல் குடித்த கதை:- இந்திரன் முதலிய தேவர்கள் தம்
பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும்பல அசுரர்களுடனே கடலிற்புக்கு
ஒளித்துக்கொண்டபோது, அகத்தியமகாமுனிவனையடைந்து பிரார்த்திக்க, அவன்
அக்கடல்நீரைத் தனது ஒரு கையால் முற்றும் முகந்து பருகியருளி, உடனே
ஒளித்திருந்த அவ்வசுரனை இந்திரன் கொன்றபின், தேவர்கள்
வேண்டுகோளின்படி நீர்முழுவதையும் உமிழ்ந்தன னென்பதாம்.
என்று நல்ல உரை எடுத்து இயம்பி, ஏனை இழிவினோடு
ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறுபோல்,
அன்று சூதன் மதலைதன்னை அங்க ராசன் ஆக்கினான்,
மின் தயங்கு முடி கவித்து, வேந்து எலாம் வியக்கவே–துரியோதனன் கர்ணனை அங்கதேசத்துக்கு
அரசனாக்குதல்.
என்று நல்ல உரை எடுத்து இயம்பி – என்று இவ்வாறு நல்ல
வார்த்தைகளை எடுத்துச்சொல்லி,- (துரியோதனன்),- ஏனை இழிவினோடு ஒன்றி
நின்ற ஆடகத்தை ஓட வைக்கும் ஆறு போல் – மற்றையிழிந்தலோகம்
முதலியவற்றோடு கலந்து நின்ற பொன்னைப் புடமிட்டுச் சுத்தமாக்குந்
தன்மைபோல,- அன்று- அப்பொழுது, சூதன் மதலை தன்னை – தேர்ப்பாகன்
மகனான கர்ணனை,- வேந்து எலாம் வியக்க- அரசர்களெல்லாருங்
கொண்டாடும்படி, மின் தயங்குமுடி கவித்து – ஒளிவிளங்குகின்ற கிரீடத்தைச்
சூட்டி, அங்கராசன் – அங்கதேசாபதியாக, ஆக்கினான்-; (எ-று.)
‘அருச்சுனன் அரசனுடனேயே போர்செய்தற்கு உரியா னென்று
கருதுகின்றதனால், அதன்பொருட்டு, கர்ணனை இக்கணத்திலேயே
அரசனாக்குகிறேன்’ என்று சொல்லித் துரியோதனன், மாசுநீங்கித் தூயதாய்
ஒளிமிகும்படி பொன்னைப்புடமிடுதல்போல, தேர்ப்பாகன் மகனான கர்ணனை
அவ்விழிவு தீர்ந்து பெருமையுறுமாறு முடிசூட்டினன். நல்லவுரை – கர்ணனுக்கும்
தனக்கும் அனுகூலமான நீதிவார்த்தை. சிவபிரானால் எரிக்கப்பட்ட மன்மதனது
அங்கம் விழுந்த இடம், அங்கதேசமாயிற்று. இழிவு ஆகுபெயர்.
தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின்மேல்,
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி, வண்டு சூழ்
தேன் இருந்த மாலை வாகு சிகரம்மீது, தெண் திரைக்
கான் இருந்த மண்டலம், கருத்தினால், இருத்தினான்.-துரியோதனன் கர்ணனுக்கு அர்த்தாசனங்
கொடுத்தல்.
(இ-ள்.)(துரியோதனன்),- தான் இருந்த – தான் வீற்றிருந்த, அரிமுகம் செய்
தாள் சுமந்த தவிசின்மேல் – சிங்கத்தின் வடிவந் தோன்றச் சித்திரித்துச்
செய்யப்பட்ட கால்கள் சுமந்த பீடத்தின் மேல்[சிங்காதனத்தின்மீது], ஊன்
இருந்த படையினானை – (பகைவரது) தசைதோய்தற்குஉரிய (வேல் முதலிய)
ஆயுதங்களையுடைய கர்ணனை, உடன் இருத்தி – தன்னுடன் ஒருங்கு
வீற்றிருக்க வைத்து, – வண்டு சூழ் தேன் இருந்த மாலை வாகு சிகரம்மீது –
வண்டுகள் சூழுந் தேன்பொருந்திய மாலையை யணிந்த (அவனுடைய)
தோள்களாகிய மலையின்மேல், தெள் திரை கான் இருந்த மண்டலம் –
தெளிவான அலைகளின் தொகுதியையுடைய கடலின் நடுவிலேயுள்ளதான
பூமியின் பாரத்தை, கருத்தினால் – (தன்) மனக்கருத்தோடு இருத்தினான்-;
(எ -று.)
தன் ஆசனத்தில் அர்த்தாசனமளித்து அதில் தன்னுடன் இருத்துதல்,
அரசர்செய்யும் ஒருபெருமரியாதை, தோள்வலிமையால் பெரிய இராச்சியத்தை
அரசாள வைத்தன னென்பது, பின்னிரண்டடியின் கருத்து. துரியோதனன்
கர்ணனுதவியைக்கொண்டு பின்பு பாண்டவரைவென்று
தனியரசாட்சிசெய்யலாமெனக் கருதினனென்பது விளங்க ‘கருத்தினா
லிருத்தினான்’ என்றார். இனி, இச்செய்யுளுக்கு – (துரியோதனன்) தானிருந்த
தவிசில் கர்ணனை உடன் இருத்திக் கௌரவித்து (அதனாற்) கடல்சூழ்ந்த
நிலவுலகத்து அரசாட்சிமுழுவதையும் தன்தோளில் இருப்பதாகக் கருதினான்
என்று பதவுரைகூறினும் அமையும். பாஹு சிகரம் – வடமொழித்தொடர்.
‘தெண்டிரைக்கான் ‘- அன்மொழித்தொகையாய், கடலைக்குறித்தது.
தவனன் மைந்தனும் சுயோதனனும் இசைந்து, தனதனும்
சிவனும் என்ன நண்பு கொண்டு, திறலுடன் சிறந்துளார்;
பவனன், உம்பர் நாயகன், பயந்த வீரர் அஞ்சவே,
‘அவனி எங்கும் நமது’ எனக் கொள் பெருமிதத்தர் ஆயினார்.-கர்ணனும் துரியோதனனுங் கூடிச் செருக்குறுதல்.
தவனன் மைந்தன்உம் – சூரியன்மகனான கர்ணனும்,
சுயோதனன்உம் – துரியோதனனும்,- இசைந்து – கலந்து, தனதன் உம் சிவன்உம்
என்ன நண்புகொண்டு – குபேரனும் சிவபிரானும் போலச் சினேகங்கொண்டு, –
திறலுடன் சிறந்துளார் – வலிமையிற் சிறந்தவர்களாய்,- பவனன் உம்பர்நாயகன்
பயந்த வீரர் அஞ்ச – வாயுவும் தேவேந்திரனும் பெற்ற வீரர்களாகிய வீமசேனனும்
அருச்சுனனும் அஞ்ச, அவனி எங்குஉம் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார்
– பூமிமுழுவதும் இனி நம்முடையதேயென்று எண்ணிய செருக்கை
யுடையவராயினார்கள்; (எ-று.)
குபேரன் முன்னொருகாலத்தில் கைலாசகிரியின் ஒருசாரலிலிருந்து
பெருந்தவஞ்செய்து சிவதரிசனம்பெற்று அப்பிரானருளால் அவனுக்கு
நண்பனாயினன். கொடையாளியாகுங்கர்ணனுக்கு – தனதனாகியகுபேரனும்,
கர்ணனுக்கு அரசு அளித்த ராசராசனான துரியோதனனுக்கு – குபேரனுக்கு
வரமளித்த தலைவனான சிவபிரானும் உவமை. முறைநிரனிறைப்பொருள்கோள்.
ஆன காலை, ‘எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும்,
யானை, வாசி, இரதம், ஆன யானம் உள்ள யாவையும்,
சேனையோடு தெவ்வரைச் செகுக்க வல்ல வீரமும்,
மான வீரர் வல்லர்’ என்று, மறைவலாளன் மகிழ்வுறா,-கௌரவ பாண்டவர்களது திறங்கண்டு துரோணன்
மகிழ்தல்.
இதுவும், மூன்று கவியும் – குளகம்.
(இ-ள்.) ஆனகாலை – (இவையெல்லாம்)நிகழ்ந்த அப்பொழுது,-
மறைவலாளன் – வேதம்வல்லவனான துரோணாசாரியன்,- எண்ணுகின்ற
ஆயுதங்கள் யாவைஉம் – எண்ணப்படுகிற படைக்கலங்களெல்லாவற்றிலும்,
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவைஉம் – யானை குதிரை தேர்
ஆகிய வாகனங்களாயுள்ளவை எல்லாவற்றிலும், சேனையோடு தெவ்வரை
செகுக்கவல்ல வீரம் உம் – சேனையுடனே பகைவர்களை யழிக்கவல்ல
வீரத்திலும், மானம் வீரர் – மானத்தையுடைய இந்தவீரர்கள், வல்லவர் –
தேர்ந்தவர், என்று-, மகிழ்வு உறா- மகிழ்ச்சியடைந்து,- (எ-று)- ‘இயம்ப’ (75) என்ற
எச்சத்தைக் கொள்ளும்.
ஆயுதங்கள்என்றது – அவற்றை உபயோகித்தலையும், யான மென்றது –
அவற்றைச் செலுத்துதலையுங்குறிக்கும்: இலக்கணை.
வம்மின், ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள்!
தம்மின் நாளையே, எமக்கு அளிக்க நின்ற தக்கிணை;
எம் இனான் ஒருத்தன், வேறு, யாகசேனன் என்று உளான்;
நும்மின் நாடி, அவனை இம்பர் நோதல் செய்து, கொணர்மினே.’-துரோணன் அவர்களிடம் தனக்குஉரிய குருதட்சிணை
இன்னதெனல்.
ஆதி குருகுலம் தழைக்கவந்த மைந்தர்காள்- முதன்மை பெற்ற
குருகுலம் செழிப்படையும்படி வந்துதோன்றிய குமாரர்களே!-வம்மின் –
வாருங்கள்: எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – எமக்கு (நீங்கள்)
கொடுக்கும்படியுள்ள குருதட்சிணையை, நாளைஏ தம்மின்- நாளைக்கே
தாருங்கள்: (அத்தக்கிணை), வேறு- வேறு வகைத்து; (அது என்னவெனின்),-
யாகசேனன் என்று எம் இனான் ஒருத்தன் உளான் – யாகசேனனென்று
எம்பகைவனொருவன் இருக்கிறான்; அவனை-, நும்மில் நாடி – உங்களுள்
(யாவரேனும்) சென்று, நோதல் செய்து – (கொல்லாமல்) வருத்தி [போரில்
உயிருடனே தேரோடு பிணித்து], இம்பர் கொணர்மின் – இவ்விடத்திற்குக்
கொண்டுவாருங்கள்: (இவ்வளவே); (எ -று.)- ‘என்றுஇயம்ப’ என அடுத்த
கவியோடு தொடரும்.
தக்கிணை=தக்ஷிணா: வடசொல். இனான் = இன்னான்:
இனியவனல்லாதவனென்று பொருள். நாளையே என்றது, விரைவு குறித்தற்கு.
என்று தம் சிலைப் புரோகிதன் கனன்று இயம்பவே,
அன்று அவன் பதம் பணிந்து, அளித்த சொல் தலைக்கொளா,
வென்றி நீடு படைகளோடும், விரவும் அங்கம் நாலொடும்,
சென்று, தங்கள் நாடு அகன்று, தெவ்வு நாடு குறுகினார்.-அதனைமுடித்தற்கு அக்குமாரர்கள் பாஞ்சாலநாடு
செல்லுதல்.
என்று-, தம் சிலை புரோகிதன் – தங்கள் வில்லாசிரியனாகிய
துரோணன், கனன்று இயம்ப – (யாகசேனன்மீது) கோபங்கொண்டு சொல்ல,-
(அக்குருகுல குமாரரனைவரும்), அன்று- அப்பொழுது, அவன் பதம் பணிந்து –
அத்துரோணனது பாதங்களை வணங்கி [விடைபெற்று], அளித்த சொல் தலைக்
கொளா – (அவன்) கட்டளையிட்டருளிய வார்த்தையைத் தலைமேற்கொண்டு
[மிகவும் நன்குமதித்து], வென்றி நீடு படைகளோடுஉம் – வெற்றி மிக்க
ஆயுதங்களோடும், விரவும் அங்கம் நாலொடுஉம் – பொருந்திய சதுரங்க
சேனையோடும், சென்று – புறப்பட்டு, தங்கள் நாடு அகன்று –
தங்களுடையகுருநாட்டை நீங்கி, தெவ்வு நாடு குறுகினார் – (தமது
குருவுக்குப்பகைவனாதலால் தமக்கும்) பகைவனான யாகசேனனது
பாஞ்சாலதேசத்தைச்சமீபித்தார்கள்; (எ-று.)- அங்கம் நால் – யானை தேர்
குதிரை காலாள். தங்கள்நாடு – குருநாடு. ‘தெவ்வனாடு’ என்றும் பாடம்
ஆளி மொய்ம்பர் அம் முனைக்கண் ஆன போது, அனீகினித்
தூளி கண் புதைத்த, சென்று; செவி புதைத்த, துவனி போய்;
ஒளி கொண்ட செம் பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலிபோல்,
வாளி கொண்ட விருதர், மா மதில் புறம் புதைக்கவே.-அக்குமாரர்கள் பாஞ்சாலனரண்மனையை முற்றுகை செய்தல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) ஆளி மொய்ம்பர் – சிங்கம்போலும் வலிமையுடையவர்களாகிய
அக்குமாரர்கள், அ முனைக்கண் ஆன போது – போர்செய்தற்குரிய
அவ்விடத்திலே சென்று சேர்ந்தபொழுது,- அனீகினி தூளி – (அவர்களுடைய)
சேனையால் மேலெழுப்பப்பட்ட (பூமியின்) துகள், சென்று – முன்சென்று கண்
புதைத்த – (யாகசேனனது) கண்களை மறைத்தன: துவனி – (சேனையின்)
போராரவாரங்கள், போய் – முன்சென்று, செவி புதைத்த – (அவனது) காதுகளை
அடைத்தன; (பின்பு), செம் பொன் வெற்பின் உடல் புதைத்த – சிவந்த
பொன்மயமான மேருமலையின் வடிவை மூடிய, ஓளிகொண்ட எழிலி போல் –
வரிசைப்பட்ட மேகங்கள் போல, வாளிகொண்ட விருதர் – அம்பு
கைக்கொண்ட (அக்குருசேனை) வீரர்கள், மா மதில் புறம் புதைக்க – (அவ்
யாகசேன நகரத்தின்) பெரியமதிலில் வெளியிடத்தை நெருங்கிச் சூழ்ந்திட,- (எ-
று.)- “வளைத்த” என வருங்கவியோடு தொடரும்.
இவர்கள் செல்லுமுன்னே இவர்கள் சம்பந்தமான தூளியும் தொனியும்
சென்று அவனுக்கு இடர்விளைத்தன எனச் சமத்காரந் தோன்றக் கூறினார். ஓளி
– ஒழுங்கு; இனி, நீட்டல் விகாரமாக, ஒளியெனினுமாம்.
வளைத்த சேனை, யானை, வாசி, வாயில் நின்று குமுறவே,
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறுபோல்,
திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும்,
இளைத்த நெஞ்சன் அன்றி, நீடு புரிசை வாயில் எய்தினான்–அதனையுணர்ந்து யாகசேனன் போருக்கு வருதல்.
வளைத்த – (இங்ஙனம் மதிற்புறத்து) முற்றுகைசெய்த, சேனை –
குருசேனையிலுள்ள, யானை வாசி – யானைகளும் குதிரைகளும், வாயில் நின்று
– (யாகசேனநகரத்து) வெளிவாயிலில்நின்று, குமுற – ஆரவாரஞ்செய்ய,-
உளைத்து – கர்ச்சித்துக்கொண்டு, முழையை விட்டு எழுந்து உடன்ற – (தான்
இருக்கிற) மலைக்குகையை விட்டுப் புறப்பட்டுக் கோபித்துவருகிற, சிங்கம்
ஏறுபோல் – ஆண்சிங்கம் போல, மோக யாகசேனன்உம் – மிக்க
ஆசையையுடைய துருபதராசனும், இளைத்த நெஞ்சன் அன்றி – சோர்வடைந்த
மனத்தை யுடையவ னாகாமல், திளைத்த தன்பதாதியோடு – நெருங்கிய தனது
சேனையோடு, நீடு புரிசை வாயில் எய்தினான் – உயர்ந்த மதில்வாயிலை
அடைந்தான்; (எ-று.)
பதாதி – காலாட்படை; இங்கே, சேனையென்றமாத்திரமாய் நின்றது.
கொடுப்பதாகச்சொன்ன அர்த்தராச்சியத்தைக்கெடாமல் அதில் ஆசை
கொண்டதனால், ‘மோகயாகசேனன்’ என்றார்.
சோமகர்க்கும், முடுகு சேனை சூழ வந்த குருகுலக்
கோமகர்க்கும், வெஞ் சமர் விளைந்தது, ஆண்மை கூரவே;
பூமகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம்
மா மகற்கும், விசயனுக்கும், மன்னு போர் வயங்கவே,-சோமகரோடு கௌரவர்க்கும், யாகசேனனோடு
அருச்சுனனுக்கும் போர் நிகழ்தல்.
இதுவும் அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) சோமகர்க்குஉம் – சோமககுலத்து அரசர்களுக்கும், முடுகுசேனை
சூழவந்த குருகுலம் கோ மகர்க்குஉம் – விரைந்து நெருங்கிய சேனைகள் சூழ
வந்த குருகுலவரசகுமாரர்களுக்கும், ஆண்மை கூர – வலிமைமிக, வெம் சமர்
விளைந்தது – கொடிய போர் உண்டாயிற்று; பூமகற்குஉம் மிக்க மாமுனிக்கு –
பிரமதேவனினும் மேம்பட்ட பெருமையையுடைய துரோணாசாரியனுக்கு,
வாய்மை பொய்த்த – சொன்ன வாக்குத் தவறின, அ மா மகற்குஉம் – அந்தச்
செல்வ மகனான யாகசேனனுக்கும், விசயனுக்குஉம் – அருச்சுனனுக்கும், மன்னு
போர் வயங்க – பெரும்போர் மிக,- (எ-று.)- ‘குமரர் நகரி நோக்கினார் ‘ என
வருங்கவியோடு முடியும்.
பாஞ்சாலராசர்கள், சோமகனென்னும் அரசனது குலத்தவராதலால்,
சோமகரெனப்பட்டனர்; சோமகன் – துருபதனது பாட்டான்
தூறு கொண்டு கணை பொழிந்து சோமகேசர் பொருதலால்,
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார்;
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால்,
வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே.-துரியோதனாதியர் பின்னிட அருச்சுனன்துருபதனை
அகப்படுத்தல்.
சோமக ஈசர் – சோமக குலத் தலைவர்கள், தூறு கொண்டு –
கூட்டமாகத் திரண்டு, கணை பொழிந்து – அம்புமழையைச் சொரிந்து,
பொருதலால் – போர்செய்ததனால்,- நூறு கொண்ட குமரர் – நூறு என்னும்
எண்ணைக் கொண்ட குருகுல குமாரர்களான துரியோதனாதியர், தங்கள் நகரி
மீள நோக்கினார் – (தோற்று முதுகுகொடுத்துத்) தங்கள் நகரத்துக்குத் திரும்பிப்
போனார்கள்; மாறு கொண்டு விசயன் வீசு – பகைமைகொண்டு அருச்சுனன்
வீசிய, வண்ணம்வாளி வலையினால் – மேன்மைபெற்ற அம்புகளாகிய
வலையினால், வீறுகொண்டு எதிர்ந்த மன் விலங்கர் – மிக்கபெருமிதங்கொண்டு
வந்து எதிர்த்த யாகசேனராசனாகிய சிங்கம், ஈடுபட்டது –
அகப்பட்டுக்கொண்டது; (எ-று.)
எண்ணில் மிக்கிருப்பினும் ஆற்றலில் மிக்கிலர் என்ற இகழ்ச்சி விளங்க,
‘நூறுகொண்டகுமரர் தங்கள்நகரி மீள நோக்கினார்’ என்றார். ஈடுபட்டது
என்பதற்கு – வலியழிந்தது என்ற பொருளும் உண்டு. வாளிவலையினால்
மன்விலங்கர் ஈடுபட்டது – உருவகவணி. விலங்கு – விலங்கர் என,
மென்றொடர்க் குற்றியலுகரத்துக்கு ‘அர்’ வந்தது.
தகப் படும் சராசனத் தனஞ்சயன் கை வாள் வெரீஇ,
அகப்படும் தராதிபன்தன் அற்ற வில்லின் நாணினால்,
மிகப் படும் தடங் கொள் தேர்மிசைப் பிணித்து, விசையுடன்,
நகப்படும் செயற்கை செய்து, குருவின் முன்னர் நணுகினான்–அருச்சுனன் யாகசேனனைக் கட்டிக் குருவின்முன் கொணர்தல்.
தக படும் சராசனம் – தகுதியாகப் பொருந்திய
[பெருமைபொருந்திய] வில்லையுடைய, தனஞ்சயன் – அருச்சுனன்,- கை வாள்
வெரீஇ – (தனது) கையிற்கொண்ட படைக்கு அஞ்சி, அகப்படும் –
அகப்பட்டுக்கொண்ட, தரா அதிபன் தன் – யாகசேனராசனது, அற்ற வில்லின்
நாணினால் – (தனது அம்புகளால்) துணிபட்ட வில்லின் நாணியைக் கொண்டே,
மிக படும் தட கொள் தேர்மிசை பிணித்து – மிகுதியாகப்பொருந்திய
பெருமையைக் கொண்ட(தனது) தேரிலே கட்டி, நகப்படும் செயற்கை செய்து-
(பலராலும் அவமதித்துச்) சிரிக்கப்படுஞ் செய்கையைச் செய்து, விசையுடன் –
வேகத்தோடு, குருவின் முன்னர் நணுகினான் – துரோணன் முன்னிலையில்
வந்தான்; (எ -று.)
அவன்கையில்நாணைக்கொண்டே அவனைக் கட்டின னென, அருச்சுனனது
திறத்தை எடுத்துக் கூறினார். வாள் – இங்கு ஆயுதமென்றபொருளது.
இனி, ‘தராதிபன்றனைத் தன்வில்லினாணினால்’ என்றும் பாடமுண்டு
முறுவல் கொண்டு, கண்ட சாப முனியும், ‘நாண, எம்மை, நீ
உறுவது ஒன்றும் உணர்கலாது, உரைத்த புன் சொல் அறிதியே?
மறு இல் அந்தணாளன் யானும்; மன்னன் நீயும்; வாசவன்
சிறுவன் வென்று உனைப் பிணித்த சிறுமை என்ன பெருமையோ?–துரோணன் யாகசேனனைப் பரிகசித்தல்.
இரண்டுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) கண்ட சாபம் முனிஉம் – (அருச்சுனன் துருபதனைக்
கட்டிக்கொணர்ந்ததைக்) கண்ட வில்லாசிரியனான துரோணாசாரியனும், முறுவல்
கொண்டு – இகழ்ச்சிச்சிரிப்புக் கொண்டு, (அவனை நோக்கி), ‘நீ-, உறுவது
ஒன்றுஉம் உணர்கலாது – பின்புநேரும் பயனைச் சிறிதும் அறியாமல், நாண
எம்மை உரைத்த – வெட்கப்படும்படி எம்மை அவமதித்துப்பேசிய, புல் சொல் –
இழிமொழியை, அறிதிஏ – அறிவாயன்றோ? யான்உம் மறு இல் அந்தணாளன்-
நானும் குற்றமற்ற பிராமணன்: நீ உம் மன்னன் – நீயும் க்ஷத்திரியன்: வாசவன்
சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை – இந்திரனது மகன்[அருச்சுனன்]
உன்னைச் சயித்துக் கட்டினஎளிமை, என்ன பெருமைஓ- (உனக்கு)
என்னபெருமையோ! (எ-று.)- ‘முறுவல் கொண்டு’ என்றது, அடுத்த கவியில் வரும்
‘என்ன உயிரும் வாழ்வும் உதவினான்’ என்பதைக் கொண்டு முடியும்.
‘மறுவிலந்தணாளன் யானும் மன்னன்நீயும்’ என்றது – க்ஷத்திரியனென்று
பெருமைபாராட்டிய உன்னை அந்தணனென்று உன்னால் இகழப்பட்ட யான்
மாணாக்கனைக்கொண்டு வென்று கவர்ந்து சபதத்தை நிறைவேற்றிக்
குறைவற்றவனான திறத்தைப் பார் என்று அவன்மனத்தில் உறைக்க ஏசியவாறாம்.
தனக்கு அடைமொழி கொடுத்துக்கூறி, அவனுக்கு ‘மன்னன் நீயும்’ என்று
வாளாகூறினதில், நீ சொன்ன வாய்மைதவறி இங்ஙனந் தோல்வியுமுற்று
க்ஷத்திரியாதமனாயினை யென்ற இகழ்ச்சிதோன்றும்
‘அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று
இன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;
குன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே!
உன்தனக்கு வேண்டும்’ என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.-துரோணன் துருபதனுக்கு உயிர்வாழ்க்கையோடு
பாதியரசும்அளித்தல்.
குன்று என குவிந்து இலங்கு – மலைபோலந் திரண்டு விளங்குகிற,
கொற்றம் வாகு – வெற்றிபொருந்திய தோள்களையுடைய, வீரனே-! நீ அன்று
எனக்கு இசைந்த – நீ முன்பு எனக்குத் தருவதாக உடன்பட்ட, அவனி பாதி –
பாதியிராச்சியம், அமையும்- (எனக்குப்) போதும்: மற்று நின்ற பாதி –
(எஞ்சிநின்ற) மற்றொரு பாதி யிராச்சியத்தை, இன்று-, உனக்கு-, யான்-, வரைந்து
தருகுவன் – பங்கிட்டுக் கொடுப்பேன்; (அன்றியும்), உயிர் உம் வாழ்வுஉம்
உன்தனக்கு வேண்டும் – உன் உயிரும் வாழ்க்கையும் உனக்கு
இருக்கவேண்டும்,’ என்ன – என்றுசொல்லி, உதவினான் – (அம்மூன்றையும்
துரோணன் அவனுக்குக்) கொடுத்தான்;
இப்பொழுது என் மாணாக்கனைக்கொண்டு வென்றதனால், உன்
இராச்சியமுழுவதும் எனக்கு உரியதே யாய்விடினும்,” சொன்ன வாய்மை நீயே
சோர்ந்தா யானோ சோரேன்”, “புகன்றபடி நீ யாளும் புவியும் பாதி கொள்வேன்”
என்று நான் சபதங் கூறியதனால், அந்த வாக்குத்தவறாமல் ஒருபாதியையே
கொண்டு மற்றப்பாதியை உனக்கே பிரித்துக் கொடுத்திடுவேன் என்பது,
முன்இரண்டடியின் கருத்து. பாஞ்சாலதேசத்தில் கங்காநதியின்
தெற்கிலுள்ளபகுதியைத் துருபதனுக்குக்கொடுத்து வடக்கிலுள்ள பகுதியைத்
துரோணன் தனக்கு உரியதாகக் கொண்டனனென முதனூலால் அறிக. அன்று –
அங்கிவேசமுனிவனிடத்துக் கல்வி கற்றகாலத்து. ‘கொற்ற வாகுவீரனே ‘- இகழ்ச்சி.
வாகு வீரவேகு எனவும் பாடம்
புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான், மீண்டு, பூசுரன்தன்
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி,
தயங்கும் சிலைக் கை வாள் விசயன் சயமும், பிறர் முன் தான்
அகப்பட்டு
உயங்கும் செயலும், நினைந்து நினைந்து, உள்ளம் சுடப் போய்
ஊர் சேர்ந்தான்.–யாகசேனன் விடுபட்டு அவமானத்தோடு ஊர்சேர்தல்.
புயங்கம்- (இராகு கேது வென்னும்) பாம்பினால், பருகி- விழுங்கி,
உமிழ் -(உடனே மீண்டும்), வெளியுமிழப்பட்ட, மதியம் – சந்திரனை, போல்வான்
– ஒப்பவனாய், (யாகசேனன்),- பூசுரன் தன் – துரோணாசாரியனது, வயங்கும்
சுருதி வாய்மையினால் – விளங்குகிற வேதம்போன்ற தவறாத வாய்மொழியினால்,
மன்னும் குருக்கள் பதி நீங்கி – நிலைபெற்ற குருகுலத்தாரது
நகரத்தை[அஸ்தினாபுரியை] விட்டு நீங்கி,- தயங்கும் சிலை கை வாள் விசயன்
சயம்உம் – விளங்குகின்ற வில்லையேந்திய கையையும் ஒளியையுமுடைய
அருச்சுனனது வெற்றியையும், பிறர் முன் தான் அகப்பட்டு உயங்கும் செயல்உம்
– பிறர் முன்னியிலையே தான் (அவனிடத்து) அகப்பட்டுக்கொண்டு வருந்திய
செய்கையையும், நினைந்து நினைந்து – நினைத்து நினைத்துக் கொண்டே,
உள்ளம் சுட – (அந்நினைவு) தன் மனத்தைத் தபிக்க, மீண்டுபோய் ஊர்
சேர்ந்தான்-;(எ-று.)
அருச்சுனனாற்கட்டுண்டு பின்பு அதுநீங்கியமைபற்றி, புயங்கம் பருகி
உமிழ்மதி, யாகசேனனுக்கு உவமையாயிற்று. பருகி – இங்கே ‘உண்டு ‘ என்ற
பொருளது. வில்லைக்கொண்டுவென்று வாளைக்கொண்டு அச்சுறுத்திக்
கைப்பற்றியமைபற்றி, ‘தயங்குஞ் சிலைக் கை வாள் விசயன் சயம் ‘ என்ற
தென்பாருமுளர்.
இதுமுதற்பன்னிரண்டுகவிகள் – பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான், எதிர் வணங்கி,
முறுகிப் புரி வெங் கலைக்கோட்டுமுனியே போலும் முனிவரரை,
தறுகண் குருவின் தலை துணிக்கத் தக ஓர் மகவும்,
தனஞ்சயன் தோள்
உறுகைக்கு ஒரு பூங் கன்னியையும், பெறுவான் வேண்டி
உற்று இரந்தான்.-துரோணனைக்கொல்ல ஒருமகனையும், அருச்சுனனை
மணக்கஒருமகளையும் துருபதன் வேண்டுதல்
மறுகில் – வீதிகளிலே, பணிலம் தவழ் – சங்குகள் தவழும்படியான,
பழனம் வளம் – கழனிகளின் நீர்வளத்தையுடைய, நாடு – பாஞ்சாலதேசத்தை,
உடையான் – உடையவனான யாகசேனன்,- தறுகண் குருவின் தலைதுணிக்க தக
– வன்கண்மையையுடைய துரோணாசாரியனது தலையை வெட்டுதற்குத்
தகுதியாக, ஓர்மகஉம் – ஓர் ஆண்பிள்ளையையும், தனஞ்சயன்தோள் உறுகைக்கு
(தக)- அருச்சுனன் தோள்களை அணைதற்குத் தகுதியாக, ஒரு பூ கன்னியைஉம்
– அழகிய ஒரு பெண்ணையும், பெறுவான் – பெற, வேண்டி – விரும்பி,- முறுகு
புரி வெம் கலைக்கோட்டு முனிஏ போலும் முனிவரரை- மிகவும் முறுக்குள்ள
அழகிய கலைமானினது கொம்பு போன்ற ஒரு கொம்பைத் தலையிலுடைய
ரிசியசிருங்கமுனிவனையே யொத்த சிறந்தமுனிவர்களை, உற்று – நாடியடைந்து,
எதிர்வணங்கி- (அவர்களை) எதிரிலே நமஸ்கரித்து, இரந்தான் – பிரார்த்தித்தான்;
தனது முகத்தின்மேலே மான்கொம்பு போன்ற கொம்பொன்றையுடைய
ஒருமுனிவர்க்கு, அக்காரணத்தால், வடமொழியில் ரிச்யச்ருங்கரென்றும், தமிழிற்
கலைக்கோட்டுமுனி யென்றும்பெயர்; அவர் – காசியபமுனிவனது குமாரர்களுள்
ஒருவராகிய விபாண்டகரென்பவரது குமாரர்; கல்விகேள்விகளிலும்
தவவொழுக்கத்திலும் வைராக்கியத்திலும் மிகச்சிறந்தவர்: கோசலதேசத்தில்
அயோத்தியாநகரத்தில் அறுபதினாயிரம் வருஷம் அரசாண்ட தசரதசக்கரவர்த்தி
புத்திரபாக்கியமின்றி வருந்தியபொழுது, தனது குலகுருவாகிய வசிஷ்டர்
சொன்னபடி அக்கலைக்கேட்டு முனிவரைக் கொண்டு அசுவமேதயாகம்
புத்திரகாமயாகமுஞ் செய்விக்க, அம்முனிவரருளால் சக்கரவத்திக்கு இராமபிரான்
முதலிய சிறந்த குமாரர் நால்வர்தோன்றின ரென்ற வரலாறு, இராமாயணத்திற்
பிரசித்தம். அம்முனிவர்போலவே உயர்ந்த மக்களை யாக மூலமாக
உண்டாக்கவல்ல மகாமுனிவர்களைநாடி வேண்டின னென்பார்,
‘கலைக்கோட்டுமுனியேபோலுமுனிவரரை யுற்றிரந்தான்’ என்றார்; அம்முனிவர்கள்
பெயர், அடுத்த கவியில் விளங்கும். ‘மறுகிற் பனிநித்திலந்தவழும் வளநாடு’ என்றும்
பாடம்.
ஆறுமுகனைப் பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில்,
ஈறு இல் தவத்தோர் உபயாசன், யாசன், எனும் பேர் இருவோரும்,
கூறும் முறையில் சடங்கு இயற்றி, கோவின் வழக்கப் பெரு வேள்வி,
நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய, புரிவித்தார்.-உபயாசனும் யாசனும் துருபதனுக்காக வேள்விசெய்தல்.
ஆறுமுகனை பயந்த நதி – ஆறுமுகங்களையுடைய சுப்பிரமணிய
மூர்த்தியைப் பெற்ற கங்காநதியினது, அலையால் – அலைகளினால், குளிர்வது –
குளிர்ச்சிபெறுவதான, ஒருகானில் – ஒரு காட்டில், ஈறுஇல் தவத்தோர் –
எல்லையில்லாத தவத்தைச் செய்பவர்களான, உபயாசன் யாசன் எனும்பேர்
இருவோர்உம் – உபயாசனென்றும் யாசனென்றும் பெயரையுடைய இரண்டு
முனிவர்களும், கூறும் முறையின் சடங்கு இயற்றி – (வேதசாஸ்திரங்களிற்) கூறப்பட்ட
விதி முறைப்படிஉரிய சடங்குகளைச் செய்து, கோவின் வழக்கம் பெரு வேள்ளி –
அரசர்க்குஉரிய வழக்கமாகிய பெரியபுத்திரகாமயாகத்தை, நூறு மகத்தோன் நிகர்
அரசை – நூறு அசுவமேதயாகங்களைச் செய்தவனான தேவேந்திரனைப் போன்ற
யாகசேனராசனை, நோன்மைக்கு இசைய புரிவித்தார் – அவன் பெருமைக்குத்
தக்கபடி [மிகச் சிறப்பாகச்] செய்வித்தார்கள்; (எ -று.)
கங்காதீரத்திலுள்ள அந்தணர் பலர் வசிக்கும் இடத்தில் யாஜன் உபயாஜன்
என்ற இரண்டு பிரமவிருடிகள் தவவொழுக்கத்திற் சிறந்து இருந்தனரென்றும்,
அவர்களுள் மூத்தவனான யாஜன் தலைவனாய் நின்று, இளையவனான
உபயாஜனைப் புரோகிதனாகக் கொண்டு, யாகஞ்செய்வித்தன னென்றும்
முதனூலால் விளங்கும். சடங்கு என்பது – ஷடங்க மென்னும் வடசொல்லின்
விகார மென்றும், (வேதத்தின்) ஆறு அங்கங்களிற்கூறிய முறைக்கு ஏற்பச்
செய்யப்படுந் தொழிலென்று ஏதுப்பொருள் படுமென்றுங்கூறுவர்
புரிந்த மகப்பேற்று அழல் வேள்விப் பொன்றா ஓமப்
பொருள் மிச்சில்,
பரிந்து, விபுதர் அமுது ஏய்ப்பப் பைம் பொற் கலத்தில்
நிறைத்து, ஆங்குத்
தெரிந்த மணிப் பூணவன் தேவிக்கு அளிக்க, தீண்டாள் ஆகியபின்,
சொரிந்து கனலின், உபயாசன், இமைப்பில் சுதனைத் தோற்றுவித்தான்–உபயாசன் புத்திரகாமயாகத்தை முடித்தல்.
புரிந்த – இவ்வாறுசெய்த, மகப்பேறு வேள்வி – புத்திரகாம
யாகத்தில், அழல்ஓமம் – அக்கினியில் ஓமஞ்செய்த, பொன்றா பொருள் –
குறைபாடில்லாத பொருளினது [ஹவிஸ்என்னும் தேவருணவினது], மிச்சில் –
சேஷத்தை, விபுதர் அமுது ஏய்ப்ப – தேவாமிருதத்தைப்போல, பைம்பொன்
கலத்தின் நிறைத்து – பசிய பொன்னினாலாகிய பாத்திரத்திலேவைத்து, ஆங்கு –
அப்பொழுது, தெரிந்த மணி பூணவன் தேவிக்கு பரிந்து அளிக்க –
தேர்ந்தெடுத்த இரத்தினாபரணங்களை யணிந்த அவ்யாகசேனராசனது
மனையாளுக்கு அன்போடு கொடுக்கப்புக, தீண்டாள் ஆகிய பின் – (அவள்
அதனைச் செருக்கினால்) வாங்கிக்கொள்ளாதவளாக அதன் பின்பு, உபயாசன்-,
கனலின் சொரிந்து – (சேடித்த அந்த ஹவிஸையும்)அக்கினியிலே ஆகுதிசெய்து,
(அதனால்), இமைப்பில் – ஒரு நொடிப்பொழுதிலே, சுதனை தோற்றுவித்தான் –
புத்திரனைப் பிறப்பித்தான்; (எ-று.)
ஓமசேடத்தைக் கொடுக்குஞ்சமயத்தில் அரசன்மனைவி செருக்குக்கொண்டு
அவனை வாங்கியுண்ணுதற்கு மறுக்க, முனிவன் மந்திரசுத்தமான அந்த ஹவிசை
அனலிற்பெய்து அங்குநின்று மகனை யுண்டாக்கலானா னென்க. முதனூலிற்குஏற்ப,
இவ்வாறு பொருள்கொள்ளப்பட்டது. பாலபாரதத்தும் இவ்வாறே உள்ளது.
இச்செயலை யாஜன்செய்ததாகமுதனூல்கூறுகின்றது. தீண்டாள் ஆகியபின்
என்பதற்கு – பூப்படைந்தாளாக அதன்பின் என்று கூறுவாருமுளர், விபுதர் –
விசேஷ புத்திமான்க ளென்று காரணப் பெயர்.
வலையம் பிறழ, முடி தயங்க, மணிக் குண்டலம் பேர் அழகு எறிப்ப,
சிலையும் கையும், மெய்யும் வயம் திகழ் போர் வயிரக் கவசமுமாய்,
கொலை வெஞ் சிங்கக் குருளை பொலங் குன்றின்புறத்துக்
குதிப்பதுபோல்,
தலைவன் களிக்க, தடந் தேர்மேல் தனயன் ஒருவன்
தலைப்பட்டான்.-திருஷ்டத்யும்நன் தோன்றுதல்
வலையம் பிறழ – தோள்வளைகள் விளங்கவும், முடிதயங்க –
கீரீடம் பிரகாசிக்கவும், மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – இரத்தின
குண்டலங்கள் மிக்க அழகைச் செய்யவும், சிலைஉம் கை உம் – வில்லும்
கையுமாய், மெய்உம் வயம் திகழ் போர் வயிரம் கவசம்உம் ஆய் – உடம்பும்
வீரம் விளங்கும் போருக்குஉரிய வச்சிரகவசமும் பொருந்தி, பொலம் குன்றின்
புறத்து குதிப்பது கொலை வெம் சிங்கம் குருளை போல் – பொன்மயமான
மேருமலையின்மீது குதிப்பதொரு கொலைத்தொழிலில்வல்ல கொடிய
சிங்கக்குட்டிபோல, தட தேர்மேல் தனயன் ஒருவன் – பெரிய தேரின்மீது ஒரு
குமாரன், தலைவன் களிக்க தலைப்பட்டான் – யாகசேனராசன் களிப்பை
யடையுமாறு (ஓமாக்கினியினின்று) வெளிப்பட்டான்; (எ -று.)
கையில் வில்லேந்திக் கவசந்தரித்த உடம்புடன் என்பது, இரண்டாமடியின்
பொருள். பொற்றேராதலால், பொன்மலை உவமை.
தேரோடு அருக்கன் அருண மணிச் சிமயத்து உதிப்ப, செவ்வியுடன்
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து
நின்றனபோல்,
வீரோதயன் வந்து உதிப்பளவில், மேன்மேல் மகிழ்ந்து,
மெய் சிலிர்த்து,
பாரோர் கண்கள் களித்தனவால், பார்க்கும்தோறும் பரிவுற்றே.-அதுகண்டு அனைவருங் களித்தல்.
அருக்கன் – சூரியன், தேரோடு – தேருடனே, அருணம் மணி
சிமயத்து – சிவந்த அழகிய உதயகிரியில், உதிப்ப – உதிக்க, (அதனால்),
நீர்ஓடையில் – நீர்நிலைகளிலே, செம் தாமரைகள் – செந்தாமரைமலர்கள்,
செவ்வியுடன் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் – அழகுடனே நிறத்தையும்
பெற்று மலர்ந்துநிற்பனபோல,- வீர உதயன் வந்து உதிப்பு அளவில் –
வீரத்தன்மை உதித்தற்கு இடமாயுள்ள அக்குமாரன் (தேரோடு சிவந்த
ஓமாக்கினியினின்று மேலெழுந்து) வந்து தோன்றியவளவிலே,- பாரோர் –
பூமியிலுள்ளவர்கள், பார்க்கும் தோறுஉம் பரிவு உற்று- (அக்குமரனைப்)
பார்க்குந்தோறும் அன்புமிக்கு, மேல் மேல் மகிழ்ந்து – மிகவும் அதிகமாக
மகிழ்ச்சிகொண்டு, மெய் களித்து – மனம்களிக்க, கண்கள் களித்தன- (அவர்கள்)
கண்கள் களிப்புத்தோன்ற மலர்ந்தன; (எ – று.)
மெய்களித்து – உடல்பூரித்து என்றுமாம்; அப்பொழுது, களித்தல்-
காரியத்தைக் காரணத்தாற் கூறிய உபசாரவழக்கு; மெய் சிலிர்த்து
என்றுங்கூறலாம். ஆல் – ஈற்றசை: தேற்றமுமா
சங்கச் சங்கம் மிக முழங்க, சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து,
துங்கக் கொடியும் தோரணமும் தொடையும் பரப்பி, சோமகன் நாடு
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதிபோல் ஆர்வம் எழ,
திங்கட் குழவி உற்பவித்த திசை போன்றன, எண் திசை எல்லாம்–நாடெங்கும் விழாக்கொண்டாடுதலும்,
திசைவிளங்குதலும்.
சோமகன் நாடு – சோமககுலத்தானான யாகசேனனது
பாஞ்சாலதேசம்,- சங்கம் சங்கம் மிக முழங்க – சங்குக்கூட்டங்கள்
மிகுதியாகஒலிக்க, சாந்துஉம் புழுகுஉம் எறிந்து ஆர்த்து – சந்தனக் குழம்பையும்
புழுகெண்ணெயையும் (ஒருவர்மேல் ஒருவர்) வீசி ஆரவாரித்து, துங்கம்
கொடிஉம் தோரணம்உம் தொடைஉம் பரப்பி – உயர்ந்த துவசங்களையும்
தோரணங்களையும் மாலைகளையும் மிகுதியாக அமைத்து (அலங்கரித்து), அம்
கண் சயந்தன் அவதரித்த அமராவதிபோல் – அழகிய கண்களையுடைய
சயந்தன் [தேவேந்திர குமாரன்] அவதரிக்கப்பெற்ற அமராவதிநகரம்போல,
ஆர்வம் எழ – அன்பு மிக,- எண் திசை எல்லாம் – எட்டும்
திக்குகள்முழுவதும், திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன – இளம்பிறை
உதிக்கப் பெற்ற திக்குக்கள்போலத் தாமாக விளங்கின; (எ -று.)
இந்திரகுமரன் பிறந்தபொழுது அமராவதிநகரத்தில் தேவர்கள் களிப்புற்று
விழாக்கொண்டாடியதுபோல, துருபதகுமாரன் தோன்றியபொழுது
பாஞ்சாலநகரத்துச்சனங்கள் மகிழ்ச்சிமிக்கு விழாக் கொண்டாடினரென்பது
மூன்றாமடியின்கருத்து. சாந்தும் புழுகும் போல்வனவற்றை மகிழ்ச்சிக்களிப்பால்
ஒருவர்மேல் ஒருவர் தூவி உத்ஸவங் கொண்டாடுதல் இயல்பு. சங்கம் என்பது –
சங்கைக் குறிக்கும்போது சங்கமென்றவடசொல் திரிந்ததும், கூட்டத்தைக்
குறிக்கும்போது ஸங்க மென்ற வடசொல் திரிந்ததுமாம்.
பின்னும், கடவுள் உபயாசன் பெருந் தீப்புறத்து, சுருவையினால்,
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால்,
மின்னும் கொடியும் நிகர் மருங்குல், வேய்த்தோள், முல்லை
வெண் முறுவல்
பொன்னும் பிறந்தாள், கோகனகப் பூமீது எழுந்த பொன்
போல்வாள்.-பின்பு திரௌபதி தோன்றுதல்.
பின்னும் – அதன்பின்பும், கடவுள் உபயாசன் – தெய்வத்
தன்மையையுடைய உபயாசனென்னும் அம்முனிவன், பெருந் தீப்புறத்து- பெரிய
யாகாக்கினியிலே, சுருவையினால் – சுருவை யென்னும் ஓமத்துடுப்புக்கருவியைக்
கொண்டு, மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு – பெருமைபொருந்திய
பாற்கடலில் தோன்றிய அருமையான அமிருதம்போல ஆகுதிசெய்த
[மிகஇனியதேவருணவாகிய], சுருதி அவி – வேதமுறைமை தவறாத
அவிர்ப்பாகத்தினது, நலத்தால் – நற்பயனால்,- மின்உம் கொடிஉம் நிகர்
மருங்குல் – மின்னலையும் பூங்கொடியையும் போன்ற இடையையும், வேய்
தோள் – மூங்கில் போன்ற தோள்களையும், முல்லை வெள் முறுவல் –
முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுமுடைய, பொன்உம் –
பொன்போல் அருமையான அழகிய ஓர் பெண்ணும், கோகனகம்மீது எழுந்த
பொன்போல்வாள் – செந்தாமரைமலரினின்று மேலெழுந்த திருமகளை
யொப்பவளாய், பிறந்தாள் – தோன்றினாள்; (எ-று.)
கோகநதமென்ற வடசொல் திரிந்தது; கோகம் – சக்கரவாகப் பறவைகள்,
நதம் – கூவியொலித்தற்கு இடமானது என்று பொருள்படும் . செல்வத்துக்குரிய
தலைவியாதலாலும், பொன்னிறமுடைமையாலும், பெறுதற்கருமையாலும், பொன்
என்று திருமகளுக்கு ஒரு பெயர். சுருவையினால் வழங்கு என்றும், நலத்தாற்
பிறந்தாளென்றும் இயையும்.
மண்மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாளப் பிறந்தாள்;
வாமன் நுதல்
கண்மேல், இன்றும் இவள் பிறந்தாள், கழல் காவலர்தம்
குலம் முடிப்பான்;
எண் மேல் என்கொல் இனி?’ என்று, ஆங்கு எவரும் கேட்ப,
ஒரு வார்த்தை
விண்மேல் எழுந்தது, அவன் புரிந்த வேள்விக் களத்தினிடை
அம்மா!–அப்பொழுது ஆகாயத்திலெழுந்த ஓர் அசரீரிவாக்கு.
‘ஒருத்தி – ஒருபெண், அரக்கர் குலம் மாள – இராக்கதர் குலம்
அழியும்படி, மண்மேல் பிறந்தாள்- (முன்பு) பூமியினின்று தோன்றினாள்;
இன்றுஉம் – இப்பொழுதும், இவள் – இப்பெண், கழல் காவலர்தம் குலம்
முடிப்பான் – வீரக்கழலையணிந்த அரசர்களுடைய குலத்தை
அழிக்கும்பொருட்டு, வாமன் நுதல் கண்மேல் – சிவபிரானது நெற்றிக்கண்ணாகிய
அக்கினியினின்றும், பிறந்தாள்; இனி மேல் எண் என்கொல் – இனிமேல்
ஆலோசனை யாதுஉளது?’ என்று-, ஒரு வார்த்தை – ஓர் அசரீரிவாக்கு, ஆங்கு
– அப்பொழுது, அவன் வேள்வி புரிந்த களத்தினிடை எவரும் கேட்ப –
அந்தயாகசேனன் யாகஞ்செய்த சாலையிலுள்ள எல்லோரும் கேட்க, விண்மேல்
எழுந்தது – ஆகாயத்தில் உண்டாயிற்று: அம்மா – ஆச்சரியம்! (எ-று.)
சனகமகாராசா யாகஞ்செய்தற்பொருட்டுச் சாலையமைத்தற்காகக்
கலப்பையைக்கொண்டு பூமியை உழுதபொழுது அவ்வுழு படைச்சாலினின்று
பூமியில் தோன்றிய பெண்ணான சீதையால் ராக்ஷசகுலம் முழுவதும்
நாசமாயிற்றென்பது, இராமாயணத்தில் பிரசித்தம். அங்ஙனமே, யாகாக்கினியில்
தோன்றிய இந்தத் திரௌபதி ஒருசமயத்தில் துரியோதனனைப் பரிகசித்து
இகழ்ச்சி தோன்றச் சிரித்ததனால் அவன்மனத்திற் பெருஞ்சினத்தைமூட்டி
அதுகாரணமாக அவனால் சபையில் மானபங்கப்படுத்தப்பட்டுப் பின்பு அது
நிமித்தமாகப் பாரதயுத்தத்தில் பல அரசர்களும் பந்துமித்திரபரி வாரங்களுடன்
இறத்தற்கு மூலமாய் நிற்றல், பாரதத்தில் பிரசித்தம். ‘இனிமேல் எண் என்கொல்’
என்றது, இந்நிகழ்ச்சி எவராலுந் தடுத்தற்கரியதெனத் தேற்றக் கருத்தை
விளக்கும். அம்மா – வியப்பிடைச்சொல். வாமன்-அழகியவனென்று
பொருள்படும். வலக்கண் சூரியனும், இடக்கண் சந்திரனும், நெற்றிக்கண்
அக்கினியுமாக இறைவனுக்குக் கண் மூன்றும் முச்சுடராதலால், நெருப்பை,
‘வாமனுதற்கண்’ என்றது. ‘கண்மேனின்றும்’ என்றும் பாடம்.
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு
முடிவும், அவன்
பின் தோன்றிய அக் கன்னிகையால் விசயன் தனக்குப்
பெரு நலமும்,
உற்று ஓர்ந்து, உள்ளம் மிகத் தருக்கி, உவந்து ஆங்கு
அமைந்தான்;-உயர் மகத்தால்
பெற்றோன் பெற்ற பேறு, மகப் பெற்றார் தம்மில் பெற்றார் யார்?–மகனையும் மகளையும்பெற்றதனால் துருபதன்
மனமகிழ்தல்.
உயர் மகத்தால் பெற்றோன் – சிறந்த யாகஞ்செய்ததனால்
(இப்படிப்பட்ட பிள்ளைகளைப்) பெற்ற யாகசேனன்,- முன் தோன்றிய
தன்குலம்முதலால் – முதலிற்பிறந்த தனது குமாரனால், முரண் போர் முனிக்கு
முடிவுஉம் – வலிய போரையுடைய துரோணாசாரியனுக்கு அழிவுஉண்டாதலையும்,
அவன் பின் தோன்றிய அ கன்னிகையால் -அவனுக்குப்பின்புபிறந்தஅப்
பெண்ணால், விசயன் தனக்கு பெரு நலம்உம் -அருச்சுனனுக்குச் சிறந்த
இன்பமுண்டாதலையும், உற்று ஓர்ந்து – (கருத்தில்)ஊன்றி ஆராய்ந்து, ஆங்கு –
அதனால், உள்ளம் மிக தருக்கி – மனம்மிகக்களித்து, உவந்து அமைந்தான் –
மகிழ்ந்துநிரம்பிநின்றான்[திருப்திபெற்றான்]: பெற்ற பேறு-(அவன்) பெற்ற
பாக்கியத்தை,மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – பிள்ளைகளைப்
பெற்றவர்களுள்அடைந்தவர் எவர்?
துருபதன் தான் கருதியபடி பகைவெல்லுதற்கு மகனையும் மணம்
முடித்தற்கு மகளையும் தகுதியாகப்பெற்றான் என்ற பொருளை, ‘பெற்றபேறு
மகப்பெற்றார் தம்மிற்பெற்றார் யார்’ என்று விளக்கினார்
கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்பால்,
கனல் பயந்தோன்,
சரண மலர் தன் தலைக் கொண்டு, ‘தனுநூல் எனக்குத் தருக!’
என்றான்;
‘மரணம், இவனால் தனக்கு’ என்பது உணர்ந்தும், குருவும் மறாது, அளித்தான்;-
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனைச் செகுப்பது அழல்
அம்மா!-திட்டத்துய்மனுக்குத் துரோணன்வில்வித்தை முற்றக் கற்பித்தல்
கனல் பயந்தோன் – அக்கினியிற் பெறப்பட்டவனான
அக்குமாரன்,- கரணம் மறு அற்று இலங்கு – அந்தக்கரணமான மனத்தில்
களங்கமில்லாது தூய்மையுடையவனாய் விளங்குகிற, திறல் – வல்லமையிற்
சிறந்த, கலச உற்பவன்பால்-கலசத்தினின்று தோன்றியவனான
துரோணாசாரியனிடத்தில் (சென்று), சரணம் மலர் தன் தலைக்
கொண்டு- (அவனது) திருவடித் தாமரை மலர்களைத் தன்
தலையின்மேற்கொண்டு [காலில் விழுந்து வணங்கி], எனக்கு தனுநூல் தருக
என்றான் – ‘எனக்கு வில்வித்தையைக் கற்பித்துக் கொடுப்பாயாக ‘ என்று
வேண்டினான்; (வேண்ட,) குரு உம் – அந்தத் துரோணாசாரியனும், இவனால்
தனக்கு மரணம் என்பது உணர்ந்துஉம் – இவனால் தனக்கு மரணம்
நிகழுமென்பதை யறிந்தும், மறாது அளித்தான் – மறுக்காமல் (தனுர்வித்தையைக்)
கற்பித்துக் கொடுத்தருளினான்; அழல் அரணியிடத்தில் செறிந்து அன்றுஓ
அதனை செகுப்பது – நெருப்பு அரணிக்கட்டையினின்று பிறந்தன்றோ அதனை
அழிப்பது! அம்மா – ஆச்சரியம்! (எ-று.)
அரணி – தீக்கடைகோல்; அத்திக்கட்டை முதலிய சில. ‘நெருப்பு
அரணியினின்று தோன்றியே அவ்வரணியை அழிக்கின்ற தன்றோ? என்ற
உபமானம், திட்டத்துய்மன் துரோணனிடத்தினின்று வில்வித்தை கற்றே பின்பு
அவனை அழிப்பவனாகிறான் என்ற உபமேயக் கருத்தை விளக்குதலால்,
பிறிதுமொழிதலென்னும் அணி. சிறப்புப் பொருளைப் பொதுப்பொருள்
சமர்த்திப்பதாக இல்லாமையால், இது, வேற்றுப்பொருள்வைப்பணியாகாது.
துரோணன் தனக்குத் திட்டத்துய்மனால் மரண மென்று தெரிந்தும், விதிப்பயன்
தவறாதென்பதை நோக்கியும், அவனுக்குத்தான் கல்வி கற்பித்துக்
கொடுக்கமாட்டே னென்றால் அவனுக்கு அஞ்சினானென்ற பழிமாத்திரமே
மிஞ்சுமென்று கருதியும் மனத்திற்களங்கமின்றி அவனுக்கு வில்வித்தை
முழுவதையுங் கற்பித்தன னென்க. ‘கலைசொல்பவன்பால்’ என்றும்பாடம்
இவ்வாறு அமைந்து, ஆங்கு ஐவருடன் ஈர்-ஐம்பதின்மர் நனி வளர,
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சிப் புடை சூழ,
தெவ் ஆறிய வெம் பெருஞ் சேனைத் திருதராட்டிரனும், தம்பியும், ‘மற்று
ஒவ்வார் இவற்கு’ என்று, உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால்
உட்கொண்டார்.–திருதராட்டிரனும் விதுரனும் தருமனை இளவரசுக்கு உரியனென
மதித்தல்.
இ ஆறு அமைந்து – (யாகசேனனுடைய செயல்கள்) இங்ஙனம்
நிகழ,- ஆங்கு – அவ்விடத்தில் [அஸ்தினாபுரியில்], ஐவருடன் ஈர் ஐம் பதின்மர்
– பஞ்சபாண்டவர்களும் துரியோதனாதியர் நூற்றுவரும், நனி வளர – நன்றாய்ச்
செழித்து வளர்ந்துவர,- மைவான் மீனின் – கருநிறமுள்ள வானத்திற்
காணப்படும் நக்ஷத்திரங்கள் போல, பல்கோடி மன் – அநேக கோடிக்கணக்கான
அரசர்கள், வந்து இறைஞ்சி புடை சூழ – திரளாகவந்து வணங்கிப் பக்கங்களிற்
சூழ்ந்து நிற்க, தெவ் ஆறிய வெம் பெரு சேனை – பகைவர்கள்
அடங்குதற்குக்காரணமான கொடி பெரிய சேனையையுடைய, திருதராட்டிரனும்-,
தம்பிஉம்- அவன் தம்பியான விதுரனும், இவற்கு மற்று ஒவ்வார்என்று –
இவனுக்கு வேறு எவரும்ஒப்பாக மாட்டாரென்று, உதிட்டிரனை –
தருமபுத்திரனை, ஒழுக்கத்து அழகால் உள்கொண்டார் – (அவனது)
நல்லொழுக்கத்தின் அழகினால் மதித்தார்;
அமைந்து – அமைய: எச்சத்திரபு. ஐவர், ஈரைப்பதின்மர் –
தொகைக்குறிப்பு. ‘தெவ்வாற்றிய’, ‘திருதராட்டிரனுந்தந்தையும்’ என்றபிரதிபேதம்
பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு
ஆதிபன் ஆகி, அநங்கனை வென்றோன்,
‘நீதியினாலும் நிறைந்தனன், நுண் நூல்
ஓதிய கேள்வி உதிட்டிரன்’ என்னா,-வீடுமன் தருமபுத்திரனை மதித்தல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) பூதி நலம் திகழ் – செல்வமும் மற்றைநன்மையும் விளங்கப்பெற்ற,
பூரு – பூருவென்னும் அரசனது, குலத்திற்கு – வமிசத்திற்கு, ஆதிபன் ஆகி –
தலைவனாய், அனங்கனை வென்றோன் – (பெண்ணாசையை ஒழித்ததனால்)
மன்மதனை வென்றவனான வீடுமன்,நுண் நூல் ஓதிய – நுட்பமாகச்
சாஸ்திரங்களைக் கற்றறிந்த, கேள்வி – நூற்கேள்விகளையுமுடைய, உதிட்டிரன் –
தருமபுத்திரன், நீதியினால்உம் நிறைந்தனன் – நீதியாலும் நிறைந்தவன், என்னா –
என்று எண்ணி,- (எ-று.)- ‘அளித்தான்’ என வருங் கவியில் முடியும்.
பூதி – ஐசுவரியம்: வடசொல். தன் தந்தை மகிழ்ந்து அளித்த வரத்தின்படி
அரசாட்சிச்செல்வத்துக்குத் தலைமைபூண்டதனால், பூரு, ‘பூதி நலந்திகழ் பூரு’
எனப்பட்டான்.
இதுமுதல் பதினான்கு கவிகள் – பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்
மைந்தருடன் செயல் வழு அற எண்ணி,
குந்தி பயந்தருள் குரிசிலை, ‘இவனே
இந்த நிலக்கு இனி இளவரசு’ என்று, ஆங்கு
அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான்.
மைந்தருடன் – (உடன்பிறந்தவனது) மக்களாகிய திருதராட்டிரன்
விதுரன் என்பவர்களோடு, செயல் வழு அற எண்ணி – செய்யவேண்டிய
காரியத்தைத் தவறில்லாதபடி ஆலோசித்து,- குந்தி பயந்தருள் குரிசிலை – குந்தி
அன்போடுபெற்ற தலைப்பிள்ளையான தருமனை (நோக்கி), இவன் ஏ இனி இந்த
நிலக்கு இளவரசு என்று-, ஆங்கு – அப்பொழுது, அம் தண் மதி குடை
முடியொடு அளித்தான் – அழகியகுளிர்ந்த பூரணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையும் கிரீடத்தையும் கொடுத்தான்; (எ-று.)- ஆங்கு –
அசையுமாம். நிலக்கு என்றதில், அத்துச் சாரியை தொக்கது.
சந்தனுவின் திரு மரபு தயங்க,
செந் திரு மேவரு சிறுவனும், அப்போது,
இந்துவொடு ஆதபன் இருவரும் அன்பால்
வந்து தழீஇ, மெய் வயங்கினன் ஒத்தான்.-தருமபுத்திரன் குடையும் முடியும் பெற்று விளங்குதல்.
சந்தனுவின் திரு மரபு தயங்க – சந்தனுவினது மேன்மையான
குலம் விளங்க, செந் திரு மேவரு – செந்நிறமுடைய திருமகளோடு [இளவரசாட்சிச்
செல்வத்தோடு] கூடிய, சிறுவன் உம் – இராசகுமாரனான தருமபுத்திரனும்,-
அப்போது-, இந்துவொடு ஆதபன் இருவர்உம் அன்பால் வந்து தழீஇ மெய்
வயங்கினன் ஒத்தான் – (குடையையும் முடியையும் பெற்றதனால்) சந்திரனும்
சூரியனுமாகிய இருவராலும் அன்போடு வந்து தழுவப் பெற்று மேனி விளங்குபவன்
போன்றான்; (எ-று.)
சந்தனுவமிசம் அநீதியுடைய துரியோதனனால் விளங்காது, நீதிநெறியுடைய
தருமனாலேயே விளங்குவது பற்றி, ‘ ‘சந்தனுவின் திருமரபு தயங்கச்
செந்திருமேவருசிறுவன்’ என்றார். தழீஇ-காரணப்பொருட்டு.
துன்மதியான சுயோதனன்-மாழ்கி,
தன் மதியால், அருள் தந்தையை எய்தி,
புன் மதி ஆம் உரை சிற்சில் புகன்றான்-
மன் மதி யாதும் மதித்தல் இலாதான்.-அதுகண்டு துரியோதனன் மிகப் பொறாமை
கொள்ளுதல்.
துன்மதி ஆன – துர்ப்புத்தியைக்கொண்ட, சுயோதனன்-, மாழ்கி –
(தருமனது யுவராச பட்டாபிஷேகத்தைக்கண்டு) வருந்தி, மன் மதி யாதுஉம்
மதித்தல் இலாதான் – இராசநீதியைச் சிறிதும் ஆலோசியாதவனாய், அருள்
தந்தையைஎய்தி – (தன்னைப்) பெற்ற தந்தையான திருதராட்டிரனை அடைந்து,
தன் மதியால் – தனது எண்ணத்திற்கு ஏற்ப, புல்மதி ஆம் உரை சிற்சில்
புகன்பவனானான்;(எ-று)- அவற்றை, அடுத்த கவியிற்காண்க. துர்மதி –
வடசொல். மதி – நீதிக்கு, ஆகுபெயர்.
‘உன் பதம் யாவும் உதிட்டிரனுக்கே
மன்பதையோடு வழங்கினை, எந்தாய்!
அன்புஅது இலா அவன் அனுசர் மதத்தால்,
என் பதம் அம்ம இறந்ததை இன்றே!‘-துரியோதனனது பொறாமைவார்த்தை
எந்தாய் – எமது தந்தையே! உன் பதம் யாஉம் – உனது
அரசாட்சி யுரிமையெல்லாவற்றையும், உதிட்டிரனுக்குஏ – தருமபுத்திரனுக்கே,
மன்பதையோடு – மக்கட்பரப்புடனே, வழங்கினை – கொடுத்திட்டாய்: அவன்
அன்புஅது இலா அனுசர் மதத்தால் – அவனுடைய அன்பு இல்லாத தம்பியரின்
செருக்கினால், என்பதம் இன்றுஏ அம்ம இறந்தது – எனது நிலைமை
இன்றைக்கே அந்தோ அழித்திட்டது! (எ -று.)-” என்றலும்” என அடுத்த
கவியோடு தொடரும்.
இன்றே யிறந்தது – விரைந்துணிவும்பற்றிய காலவழுவமைதி. ஏ –
பிரிநிலை. அம்ம – இரக்கக்குறிப்பு.ஐ – அசை.
என்றலும், மைந்தனை, ‘இந்து குலத்தோய்!
நின்றிலையால், மனு நீதியில், ஐயா!
பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே
அன்றி, நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ?–இரண்டுகவிகள் – அதற்குத் திருதராட்டிரன் கூறும் சமாதானம்.
என்றலும் – என்று (துரியோதனன்) சொன்ன வளவிலே,-
மைந்தனை- (தன்) மகனான அவனை நோக்கி,- (திருதராட்டிரன்), ‘இந்து
குலத்தோய்- சந்திரகுலத்தவனே! ஐயா-! மனு நீதியில் நின்றிலை –
மனுதர்மசாஸ்திரத்திற்கூறப்பட்ட நீதி முறைமையில் நீ நின்றாயில்லை; பொன்றிய
எம்பி பதம் – இறந்துபோன எமது தம்பியான பாண்டுவுக்கு உரியதாயிருந்த
இராச்சியத்தை, அரசு ஆளுதல்-, புதல்வர்க்குஏ அன்றி – அவன்பிள்ளைகளான
பாண்டவர்க்கே யல்லால், நுமக்கு – (என்மக்களான) உங்கட்கு, ஆம்ஓ – தகுமோ?
(எ-று.)- இக்கவியில், ‘என்றலும்’, ‘மைந்தனை’ என்றவை ‘என்றான்’ (101)
என்றமுற்றைக் கொள்ளும். ஆல் – ஈற்றசை.
தான் பாண்டுவினும் மூத்தவனாயினும் ‘மூத்தவன் அங்க வீனம் முதலிய
குறைபாடுடையவனா யிருந்தால் அரசுரிமை அவனை விட்டு அவன் தம்பியைச்
சாரும்’ என்ற நீதிநூல் முறைமைப்படி, அரசாட்சி பிறவிக்குருடனான தனக்கு
உரியதன்றித் தன் தம்பியான பாண்டுவுக்கே உரியதானதனால், திருதராட்டிரன்
‘பொன்றியவெம்பிபதம்’ என்றான். தொன்றுதொட்டு உலகத்தில் மிகப்பிரசித்தமான
சந்திரகுலத்திற் பிறந்திருந்தும் இராசாங்கநீதிமுறையில் நீ நிலை நின்று
பேசினாயில்லை யென்ற இழிவு விளங்க, ‘இந்துகுலத்தோய்! மனுநீதியில்
நின்றிலை’ என்றான்
நீதி இலா நெறி எண்ணினை, நீ; இங்கு
ஓதிய வாய்மையின் உறு பொருள் இன்றால்;
ஆதிபர் ஆயவர் ஐவரும் நீரும்
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு’ என்றான்.
நீ-, நீதி இலா நெறி – நியாயமில்லாத வழியை, எண்ணினை –
நினைத்தாய்: இங்கு ஓதிய வாய்மையின் – (அவ்வாறு எண்ணி) இப்பொழுது (நீ)
சொன்ன வார்த்தையில், உறு பொருள் இன்று – பொருந்திய சாரமொன்றும்
இல்லை; (ஆகவே இனி), ஆதிபர் ஆயவர் ஐவர்உம்- (அரசாட்சிக்குத்)
தலைவர்களான அப்பஞ்சபாண்டவர்களும், நீர்உம் – நீங்களும், (ஒற்றுமைப்பட்டு,
மேதினி ஆளுதல் – பூமியை ஆளுதலே, வேந்து இயல்பு – இராசநீதிமுறைமை, ‘
என்றான் – என்று கூறினான்; (எ-று.)- வேத்தியல்பு. மென்றொடர்
வன்றொடராயிற்று.
இகல் மிகு கன்னனும், என் இளையோரும்,
சகுனியும், உண்டு, தகும் துணை; நெஞ்சில்
உகவை இலாரொடு உறேன் இனி’ என்றே,
முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான்.-அதனை மறுத்துத் துரியோதனன் கூறுதல்.
இகல் மிகு – வலிமைமிக்க, கன்னன்உம் – கர்ணனும், என்
இளையோர்உம் – எனது தம்பிமார்களும், சகுனிஉம் – (என்மாமனான) சகுனியும்
ஆகிய, தகும் துணை – தக்க துணை, உண்டு – (எனக்கு) உண்டு; (ஆதலால்,
யான்), நெஞ்சில் உகவை இலாரொடு இனி உறேன்-மனத்தில் (என்பக்கல்)
நண்பில்லாத அப்பாண்டவர்களோடு இனிச் சேரமாட்டேன், என்று-, முகம்
முகுரம் புரை முதலொடு சொன்னான்-முகம் கண்ணாடியையொத்த தனது
தந்தையான திருதராட்டிரனுடனே (துரியோதனன்) கூறினான்; (எ-று.)
பகையொழிக்கக் கர்ணனும், கூடிக்குலாவி இன்புறத் தம்பியரும், சமயத்துக்கு
ஏற்ற புத்தியுக்திகளைத் தந்திரமாகக்கூறச் சகுனியும் தக்கதுணையாயுண்டு
என்றனனென்க. ஏ – தேற்றம். நான்காமடி – ‘மகன்முதிரம்பிகைமகனொடு
சொன்னான்’ என்று சில ஏடுகளிற் காணப்படுகின்றது. முதல்= முதல்வன்.
பாதகன் அன்று பகர்ந்த மொழிக்கே
பேதகன் ஆன பிதா மருள் எய்தா,
மேதக வாழ்வுறு வில் விதுரற்கும்,
நா தகு நல் உரை நதிமகனுக்கும்,-திருதராட்டிரன் மனம் மாறுபடுதல்.
இதுமுதல் நான்கு கவிகள்-குளகம்
(இ-ள்.) பாதகன் – பாவியான துரியோதனன், அன்றுபகர்ந்த- அப்பொழுது
சொன்ன, மொழிக்குஏ – சொல்லினாலே, பேதகன் ஆன – மனம்)
மாறுபட்டவனாய்விட்ட, பிதா – அவன்தந்தையான திருதராட்டிரன்,- மருள்
எய்தா- (இன்னது செய்வதென்று அறியாமல்)திகைப்படைந்து,- மேதக வாழ்வுறு
வில் விதுரற்குஉம் – மேன்மைமிக வாழுகின்ற வில்வித்தையில்தேர்ந்த
விதுரனுக்கும், நா தகு நல் உரை நதிமகனுக்குஉம் – நாவில் தக்க
நல்லவார்த்தைகளையே யுடைய கங்காபுத்திரனான வீடுமனுக்கும்,- (எ-று.)- 106-
ஆங் கவியில் வரும் ‘கூறலும்’ என்றதைக் கொள்ளும்.
இங்கிருந்து 125 – ஆம் பாடல்வரையில் பாலபாரதத்துக்கும் இதற்கும்
வேறுபாடு காண்கின்றது: புரோசனனோடு ஆலோசித்த விவரமும், தபதி கூறிய
செய்தியும் அதிற் குறிக்கப்படவில்லை. இவ்விடம், வியாசபாரதத்தைப்
பெரும்பாலும் ஒட்டிக்கூறப்பட்டுள்ளது. மேதகு என்றும் பாடம்
ஈண்டு இனி என் செய்வது? எண்ணுமின்!-இங்ஙன்
பாண்டவரோடு பயின்று உறையாது,
தூண்டு பரித் துரியோதனன் முதலோர்
பூண்டனர் வெம் பகை, வாழ்வு பொறாதார்.-இரண்டுகவிகள் – திருதராட்டிரன் விதுரனிடத்தும் வீடுமனிடத்தும்
கூறும் வார்த்தை.
தூண்டு பரி துரியோதனன் முதலோர் – விரைவாகச்
செலுத்தப்படுங் குதிரையையுடைய துரியோதனன் முதலிய என் பிள்ளைகள்,
இங்கன் – இங்கே, பாண்டவரோடு பயின்று உறையாது – பாண்டுகுமாரர்களோடு
கலந்திராமல், வாழ்வு பொறாதார் – (அவர்களுடைய) செல்வவாழ்க்கையைப்
பொறுக்கமாட்டாதவர்களாய், வெம் பகை பூண்டனர் – (அவர்களிடத்துக்)
கொடிய பகைமையைக் கொண்டார்கள்; ஈண்டு இனி செய்வது என் – இங்கே
இப்பொழுது (நாம்) செய்யவேண்டுவது யாது?; எண்ணுமின் – ஆலோசனை
செய்யுங்கள்; (எ-று.)- வாழ்வு- பாண்டவரில் மூத்தவன் இளவரசனானமை
ஒரு திறன் இந் நகர் உறைதரின் ஒன்றாது,
இரு திறன் மைந்தரும் இகலுவர், மேன்மேல்;
அருகு அணுகாவகை அகல இருந்தால்,
மறுவுறும் நண்பு வளர்ந்திடும்’ என்றே,
இரு திறன் மைந்தர்உம் – (துரியோதனாதியரும் பாண்டவருமாகிய)
இரண்டு வகைப் புதல்வர்களும், இ நகர் – இந்த நகரத்தில், ஒரு திறன்
உறைதரின் – ஒருசேர வசித்தால், ஒன்றாது – ஒற்றுமைப்படாமல், மேல்மேல்
இகலுவர் – மேலும்மேலும் பகைமை கொள்வார்கள்; அருகு அணுகாவகை –
(ஒருதிறத்தாரோடு மற்றொரு திறத்தார்) சமீபத்தில் நெருங்காதபடி, அகல
இருந்தால்- (இரு திறத்தாரும்) தூரத்தில் வெவ்வேறாக இருந்தால், மருவுறும்
நண்பு வளர்ந்திடும் – மனங்கலக்கிற சினேகம் (அவர்கட்குள்) வளரும், என்று-,-
(எ-று.)- ‘கூறலும்’ என வருங்கவியோடு தொடரும்.
‘சேரவிருப்பிற் செடியும்பகை’, ‘அகலவிருக்கிற் பகையும் உறவாம்’ என்பன
– பழமொழிகள். ஒருதிறலென்றும் பாடம்
இம் மொழி கூறலும், இருவரும் எண்ணி,
‘தெம் முறை ஆயினர், சிறு பருவத்தே;
எம் உரை கொள்கலர்; இனி அவர் மதி ஏது,
அம் மதியே மதி ஆகுவது’ என்றார்.–அதற்கு அவர்கள் கூறும் விடை.
இ மொழி கூறலும் – இந்த வார்த்தையை (த் திருதராட்டிரன்)
சொன்னவளவிலே,- இருவர்உம்- (விதுரன் வீடுமன் என்ற) இரண்டுபேரும்,
எண்ணி – ஆலோசித்து,- ‘சிறு பருவத்து ஏ தெவ் முறை ஆயினர் –
(துரியோதனாதியர்கள்) இளம்பிராயத்திலேயே பகைத்தன்மை கொண்டிட்டார்கள்;
எம் உரை கொள்கலர் – எங்கள் வார்த்தையைக்கேட்டு நடக்கமாட்டார்கள்: இனி
– இனிமேல், அவர் மதி ஏது அ மதிஏ மதி ஆகுவது – அவர்களறிவு எதுவோ
அந்த அறிவே (அவர்கட்கு உரிய) அறிவாவது’, என்றார்-; (எ-று.)
‘எம்முறைகேளார்’ என்றபாடத்துக்கு – நாங்கள் சொல்லும் நீதி
முறைகளைக் கேட்கமாட்டார்களென்று பொருளாம். தெவ் + முறை = தெம்முறை:
“தெவ்வென்மொழியே தொழிற்பெயரற்றே, மவ்வரின் வஃகான்
மவ்வுமாகும்.”அவர்மதிஏது அம்மதியே ஆகுவது: (இதனை நீ) மதி என்றுமாம்.
விதுரனும், வார் கழல் வீடுமனும், தம்
இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர்,
பொதுமை இலாத புரோசனன் என்னும்
மதியுடை மந்திரி, ‘வருக!’ என வந்தான்–பின்பு திருதராட்டிரன் புரோசனனென்னும்
மந்திரியை வருவித்தல்.
விதுரனும்-, வார் கழல் – நீண்ட வீரக்கழலையுடைய வீடுமனும்-,
தம் இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர் – தங்கள் மனத்தில் தோன்றிய
கருத்தைச்சொன்னபின்பு, (திருதராட்டிரன்),- பொதுமை இலாத புரோசனன்
என்னும் மதி உடை மந்திரி – நடுவுநிலைமையில்லாத புரோசநனென்னும் பேருள்ள
அறிவுடைய மந்திரியை, வருக என – வருவாயாகவென்று அழைக்க, வந்தான் –
(அவன் அருகில்வந்து) சேர்ந்தான்; (எ -று.)
பொதுமை – பகைவர் நண்பர் அயலார் என்னும் முத்திறத்தாரிடத்தும்
தருமத்தின் வழுவாமல் ஒப்பநிற்கும் நிலைமை. ‘மதியுடைமந்திரி’ என்றது,
வஞ்சனையாகத்தொழில் செய்தற்குஉரிய தந்திரங்களை அறிந்தவ னென்றவாறு
வந்த அமைச்சனும், மைந்தனும், மற்று அத்
தந்தையும், அங்கு ஒரு தனிவயின் எய்தி,
சிந்தனை செய்தனர், தீமை மனத்தோர்-
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே.-திருதராட்டிர துரியோதனர் புரோசனனுடன்
சதியாலோசனை செய்தல்.
வந்த அமைச்சன்உம் – வந்த மந்திரியான புரோசனனும்,
மைந்தன்உம் – இராசகுமாரனான துரியோதனனும், அ தந்தைஉம் – அவன்
தந்தையான திருதராட்டிரனும், தீமைமனத்தோர் – கொடிய மனத்தை
யுடையவர்களாய், அங்கு ஒரு தனிவயின் எய்தி – அவ்விடத்தில்
[அரண்மனையில்] ஏகாந்தமான ஓரிடத்தை யடைந்து, குந்தி மகார் உயிர்
கோடல்புரிந்து – பாண்டவர்களுடைய உயிரைக் கொள்ளவிரும்பி,
சிந்தனைசெய்தனர்-;
நகுலசகதேவர்களையும் சேர்த்து ‘குந்திமகார்’ என்றது குந்தி மாத்திரிக்குச்
சொல்லிக்கொடுத்த மந்திரத்தின் பலத்தினாலேயே அவ்விருவரும் பிறந்தன
ராதலாலும், குந்தியேவளர்த்து வந்தன ளாதலாலுமாம். மற்று – அசை
ஆரணாதிபர் ஆரும் புகழ்வது,
நாரணாதியர் நண்ணும் சிறப்பது,
தோரணாதி துலங்கு பொன் கோபுர
வாரணாவத மா நகர்; அங்கணே,-இரண்டுகவிகள் – குளகம். அவர்கள் செய்த
துராலோசனைமுடிவு.
ஆரண அதிபர் ஆர்உம் புகழ்வது – வேதங்கட்குத்
தலைவர்களான அந்தணர்களெல்லோராலும் புகழப்படுவதும், நாரண ஆதியர்
நண்ணும் சிறப்பது – திருமால் முதலிய தேவர்கள் எழுந்தருளிவாழும்
மகிமையையுடையதும், தோரண ஆதி துலங்கு – தோரணம் முதலியவை
விளங்கப்பெற்றதும், பொன் கோபுரம் – பொன்னாலாகிய
கோபுரத்தையுடையதுமான, வாரணவதம் மாநகர் அங்கண்ஏ –
வாரணவதமென்னும் பெரிய நகரத்தினிடத்திலே,- (எ-று.)- ‘சென்றிருக்கத்
திருவாய்மலர்க’ என அடுத்தகவியோடு தொடரும். வாரணாவதம் – காசியென்ப.
இதுமுதல் ஒன்பதுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.
சென்று இருக்கத் திருவாய் மலர்க!’ என,
ஒன்றுபட்டு, மகன் தொழுது ஓதினான்;
அன்றுதொட்டு உயிர் அன்ன அமைச்சனால்,
நன்று பட்டது, அந் நல் நகர் எங்குமே
சென்று இருக்க – போய் வசித்திருக்கும்படி, திருவாய் மலர்க –
(பாண்டவர்க்கு) கட்டளை கூறியருள்வாயாக, என – என்று மகன் –
துரியோதனன், தொழுது ஓதினான் – (தன் தந்தையான திருதராட்டிரனை)
வணங்கிச் சொன்னான்; ஒன்றுபட்டு – (அதற்கு அவன்) உடன்பட,
அன்றுதொட்டு – அன்றைத்தினம்முதல், அ நல் நகர் எங்குஉம் – சிறந்த அந்த
வாரணாவதநகரமுழுவதும், உயிர் அன்ன அமைச்சனால் – (திருதராட்டிரனுக்கும்
துரியோதனனுக்கும்) உயிர் போன்ற மந்திரியான அப்புரோசனனால்,
நன்றுபட்டது-நன்றாகப் புதுப்பிக்கப்பட்டது; (எ-று.)
சிற்ப நூலில் திருந்திய மாக்களால்,
பொற்பு அமைந்து பொலிந்தது, அப் பொன் நகர் –
கற்பகாடவி அல்லது, கண்டவர்,
‘அற்பம்’ என்ன, அமராவதியையே.-வாரணாவதநகரம் விசேஷமாக
அலங்கரிக்கப்பட்டமை.
கண்டவர் – பார்த்தவர்கள், கற்பக அடவி அல்லது –
கற்பகச்சோலையொன்றினா லல்லாமல், (மற்றையவற்றால்), அமராவதியை அற்பம்
என்ன – (தேவலோகத்து) அமராவதிநகரத்தை (இந்நகரத்தினும்) இழிவானது
என்று சொல்லும்படி,- அ பொன் நகர் – (இயல்பிலேயே) அழகுடைய
அவ்வாரணாவதநகரமானது,- சிற்பம் நூலில் திருந்திய மாக்களால் –
சிற்பசாஸ்திரத்திற் கைதேர்ந்த மனிதர்களால், பொற்பு அமைந்து பொலிந்தது –
(புதுப்பக்கப்பட்டுச்) செயற்கையழகு பொருந்தி விளங்கிற்று; (எ – று.)
கற்பகச்சோலையையுடைமை ஒன்றே யன்றி மற்றைப்படி செல்வவளம்
முதலிய எவற்றாலும் அமராவதி வாரணாவதத்தினுந் தாழ்ந்ததே யென்று
கண்டவர் சொல்லும்படி அப்பொழுது அந்நகரம் புதுப்பிக்கப்பட்ட தென்பதாம்.
இக்கவி – உயர்வுநவிற்சியணி.
அறத்தின் மைந்தனுக்கு, ஆங்கு ஒரு நாள், அவைப்
புறத்து இருந்து, புகன்றனன், காவலன்-
‘திறத்து நின் இளையோரொடும் சென்று, தோள்
மறத்தினால், தனி வாழுதி’ என்னவே.-திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதஞ் செல்லச்சொல்லுதல்.
ஆங்கு – அதன்பின்பு, ஒரு நாள் – ஒருதினத்தில், காவலன் –
திருதராட்டிர மகாராசன்,- அவைப்புறத்து இருந்து – சபையில் வீற்றிருந்து,
அறத்தின் மைந்தனுக்கு – தருமபுத்திரனை நோக்கி, ‘திறத்து நின்
இளையோரொடும் – வல்லமையுடைய உன் தம்பிமார்களுடனே, சென்று – போய்,
தோள் மறத்தினால் – புயவலிமையினால், தனி வாழுதி – தனித்து
(வாரணாவதநகரத்தில்) வாழ்வாயாக’, என்ன – என்று, புகன்றனன் –
சொன்னான்; (எ-று.)
உனக்குத் தம்பியர்வலிமையும் தோள்வலிமையையும் மிக்கிருத்தலால்
அவையேபோதும்; வேறுசேனைமுதலியனவும் மிகுதியாக வேண்டா என்பது,
உட்கோள். தருமத்தினின்று தவறினவர்களுக்குத் தக்க தண்டனை செய்து
தருமத்தைக் காத்தலால், யமனுக்கு ‘தருமன்’ என்று பெயர்: அப்பெயரே இங்கு
அறமெனக் குறிக்கப்பட்டது; ‘தேவர்களை இருதிணையாலுங் கூறலாம்’ ஆதலால்,
இங்கு அஃறிணையாற் கூறினார்.
புகன்ற கேள்விப் புரோசனன்தன்னை, ‘இம்
மகன்தனக்கு நீ மந்திரி ஆகியே,
இகன்றவர்ச் செற்று, இனியோர்க்கு இனிமை செய்து,
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய்.‘-திருதராட்டிரன் புரோசனனைத் தருமனுக்கு
மந்திரியாக்குதல்.
இதுவும்அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) (இங்ஙனம் சொன்னபின்பு திருதராட்டிரன்), புகன்ற கேள்வி
புரோசனன் தன்னை – சிறப்பித்துச்சொல்லப்பட்ட நூற்கேள்வியையுடைய
புரோசனனை நோக்கி,- ‘நீ-, இ மகன் தனக்கு மந்திரி ஆகி –
(இனி)இத்தருமபுத்திரனுக்கு மந்திரியாய், இகன்றவர் செற்று – (இவனது)
பகைவர்களை அழித்து, இனியோர்க்கு இனிமைசெய்து- (இவனது) நண்பர்களுக்கு
நன்மையைச் செய்து, அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – பரந்த
நிலவுலகத்தை இவன்வழிப்படுத்துவாய் ‘,- (எ-று.)- ‘என்ன’ என வருங் கவியோடு
இயையும்.
இனி, பின்னிரண்டடிகளுக்கு வேறொருபொருள் வருமாறு:- இகன்றவர்ச்
செற்று – பகைவர்களான அப்பாண்டவர்களை அழித்து, இனியோர்க்கு
இனிமைசெய்து – வேண்டியவர்களான துரியோதனாதியர்க்கு நன்மைசெய்து,
அகன்ற ஞாலம் – பரந்த இராச்சியம் முழுவதையும், இவன்வழி ஆக்குவாய்-
இத்துரியோதனனுக்கு உரியதாம்படி செய்திடுவாய் என்பதாம். இங்ஙன் இரு
பொருள்படக்கூறினன் திருதராட்டிர னென்க.
என்ன, ஆங்கண் இறைஞ்சி, அனந்தரம்
சொன்ன சொற்படி, சூழ் படை வேண்டுவ
என்னவும் கொண்டு, இளவரசோடும் அப்
பொன் நகர்க் கொடு போயினன் என்பவே.-புரோசனன் பாண்டவருடன் வாரணாவதஞ் செல்லுதல்.
என்ன – என்றுசொல்ல,- (புரோசனன்), ஆங்கண் – அப்பொழுது,
இறைஞ்சி – (அத்திருதராட்டிரனை) வணங்கி, அனந்தரம் சொன்ன சொல்படி
சூழ்படை வேண்டுவ என்னஉம் கொண்டு – பின்பு (அத்திருதராட்டிரன்) சொன்ன
சொல்லின்படி சூழ்ச்சிசெய்தற்குரிய ஆயுதங்களிலும் சேனை முதலிய
பரிவாரங்களிலும் வேண்டியவை யெல்லாவற்றையும் உடன்கொண்டு,-
இளவரசோடுஉம் – இளவரசனான தருமனுடனே, (மற்றை நால்வரையுங்
குந்தியையும்), அ பொன் நகர் கொடு போயினன் – அழகிய அந்த
வாரணாவதநகரத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றான்;
என்ப – அசை. மூன்றாமடியிலுள்ள ‘என்ன’ என்பது – எவன் என்ற
அஃறிணைப்பொதுவினாப்பெயரின் விகாரம்: அது இங்கே எஞ்சாமை யுணர்த்தும்.
தலைமைபற்றி இளவரசைக் கூறினும் மற்றையோரையுங் குறிக்கும்.
ஆர மார்புடை ஐவரும், குந்தியும்,
பூர ஞான புரோசன நாமனும்,
சேர வெண் பிறைச் செஞ் சடை வானவன்
வாரணாவதம் சென்று வணங்கினார்.-பாண்டவரும் குந்தியும் புரோசனனுடன்
வாரணாவதஞ்சென்று சிவதரிசனஞ் செய்தல்
ஆரம் மார்பு உடை ஐவர்உம் – மாலையையணிந்த மார்பையுடைய
பஞ்சபாண்டவரும், குந்தியும்-, பூரம் ஞானம் புரோசனன் நாமன்உம் – நிறைந்த
அறிவையுடைய புரோசனனென்னும் பெயருள்ள அம்மந்திரியும், சேர – ஒருசேர,
வெண்பிறை செம் சடை வானவன் வாரணாவதம் சென்று – வெண்மையான
கலை குறைந்த சந்திரனை யணிந்த சிவந்த சடையையுடைய தேவனான
சிவபிரான் எழுந்தருளியிருக்கிற வாரணாவதநகரத்திற்போய், வணங்கினார் –
(அக்கடவுளைத்) தொழுதார்கள்; (எ-று.)
வாரணாவதநகரத்தில் பிரசித்தமாகக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கிற
சிவபிரானது திருவிழாவைத் தரிசிக்கவேண்டுமென்ற ஒருவிருப்பம்
தருமபுத்திரன்மனத்தி லுண்டாம்படி துரியோதனன் சில மந்திரிகளைக்கொண்டு
தூண்ட, அங்ஙனமே தருமன் அங்குச்செல்ல விருப்பங்கொண்டதுவே
வியாஜமாகக் திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதத்துக்குச்
செலுத்தினனென்ப. ஆரம் – பதக்கம்: சந்தனமுமாம். ‘ஆரவெண்குடை’
என்றும்பாடம்.
அங்கு அவன்தன் அருள் பெற்று, அமைச்சன் அங்கு
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார்-
சங்கம் விம்ம, முரசம் தழங்கவே–பாண்டவர் வாரணாவதத்திற் கிருகப்பிரவேசஞ்
செய்தல்.
அங்கு அவன் தன் அருள் பெற்று-அவ்வாரணாவத
நகரத்திலெழுந்தருளியுள்ள அச்சிவபிரானது கருணையைப் பெற்று, அமைச்சன்
அங்கு இங்கிதத்தொடு இயற்றிய – புரோசனன் அவ்விடத்தில் (தங்களைக்
கொல்லவேண்டு மென்னும்) குறிப்போடு கட்டியமைத்துவைத்த, நீள் கொடி
மங்குல் தோய்மணி மாளிகை- உயர்ந்த துவசங்களில் மேகங்கள்படியப்பெற்ற
இரத்தினங்கள் பதித்த மாளிகையை,- சங்கம் விம்ம முரசம் தழங்க எய்தினார் –
சங்குகள் ஒலிக்கப் பேரிகைகள் ஆரவாரிக்க (ப்பாண்டவர்கள்) அடைந்தார்கள்;
(எ-று.) – அருள்பெற்றழகுற என்று பிரதிபேதம்.
ஆவி அன்ன அமைச்சன் மொழிப்படி
மேவி, அத் திசை வேந்தர் குழாம் தொழ,
கோவின் ஆணை நடத்தி, குவலயத்
தேவி மெய் களிக்க, சிறந்தார்அரோ.-பாண்டவர் அங்கு அரசுவீற்றிருத்தல்.
ஆவி அன்ன அமைச்சன் மொழி படி – உயிரை யொத்த
(புரோசன னென்னும்) அந்த மந்திரியின் சொற்படி, மேவி – (அம்மாளிகையிற்)
சேர்ந்து,- அத்திசை வேந்தர் குழாம் தொழ- அந்தத்திக்கிலுள்ள அரசர்களுடைய
கூட்டம் (தம்மை) வணங்க, கோவின் ஆணை நடத்தி – அரசாட்சிக்கு உரிய
கட்டளையைச் செலுத்திக் கொண்டு, குவலயம் தேவி மெய் களிக்க சிறந்தார் –
பூமிதேவி உடம்புகளிப்படையும்படி (பாண்டவர்கள்) சிறப்புற்றிருந்தார்கள்; (எ-று.)
பாண்டவர் தன்னை மிக இனியனென்று கருதும்படி தந்திரமாக
நடந்தமைபற்றி, ‘ஆவியன்னவமைச்சன்’ என்றார். அரோ – ஈற்றசை
மன்னர் ஐவரும் வாரணாவதம்தனில் மருவி,
துன்னலார் தொழத் தொல் நிலம் புரந்திடும் நாளில்,
பின்ன நெஞ்சுடைப் புரோசனன் பேது உறு மதியால்,
முன்னமே இனிது அமைத்திடும் மனைச் செயல் முன்னா–மூன்றுகவிகள் – குளகம்: பாண்டவர் அரக்கு மாளிகையைக்
கவனித்துப் புரோசனன்மீது சங்கை கொள்ளுதலைக் கூறும்.
மன்னர் ஐவர்உம் – பாண்டவராசர் ஐந்துபேரும்,
வாரணாவதந்தனில் மருவி – அவ்வாரணாவதநகரத்தில் வசித்து, துன்னலார்
தொழ – பகைவர்கள் வணங்க, தொல் நிலம் புரந்திடும் நாளில்,-
தொன்றுதொட்டு வந்த இராச்சியத்தை அரசாளும் நாளில்,- பின்னம் நெஞ்சு
உடை புரோசனன் – மாறுபட்டமனத்தையுடைய புரோசனன், பேது உறு மதியால்
– மாறுபாடுகொண்ட (தன்)அறிவினால்,முன்னம்ஏ இனிது அமைத்திடு-(தாங்கள்
அந்நகரத்துக்கு வரும்) முன்னமே (தங்களுக்கென்று) அழகிதாகக்கட்டி
யமைத்துவைத்த, மனை – அரக்குமாளிகையின், செயல் அமைப்பை, முன்னா –
கருதி,- (எ-று.)-“என்றார்” என் 120- ஆங் கவியோடு முடியும்.
பாண்டவர்கள் அரக்குமாளிகை யமைப்பை நுட்பமாக ஊகித்து உணர்ந்து
அதனால் புரோசனன்வஞ்சனையை அறியலானாரென்க. பிந்நம் – வடசொல்.
பின்னநெஞ்சு – புறமாகிய சொற்செயல்களோடு ஒற்றுமைப்படாத அகம்.அமைத்த
மன் என்று பிரதிபேதம்.
இதுமுதல் இச்சருக்கமுடியுமளவும் – பெரும்பாலும் முதற்சீரும்
ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்
மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே;
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே;
எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே;
தொழுத கையுளும் படை உள; சூழ்ச்சியும் பெரிதால்.
மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததுஉம் விரகுஏ –
நமக்கு(இவன்) மெழுகினால் சிறந்தமாளிகையை அமைத்து வைத்ததும்
வஞ்சனையேயாம்; ஒழுகுகின்ற தன் ஒழுக்கம்உம் வஞ்சனை ஒழுக்குஏ –
(இனியவன்போல) ஒழுகுகிற இவனுடைய ஒழுக்கமும் வஞ்சகமான
நடத்தையேயாம்: எழுகடல் படை யாவைஉம் இவன் வழியனஏ –
ஏழுசமுத்திரம்போன்ற [மிகவும் அதிகமான] சேனைகளெல்லாம் இவன்
வசத்திலுள்ளனவே: தொழுத கையுள் உம் படை உள – (பகைவர்களுடைய)
குவித்து அஞ்சலிசெய்கிற கைகளினுள்ளம் ஆயுதங்கள் இருக்குமன்றோ!
சூழ்ச்சிஉம் பெரிது – (அவர்களுடைய) சதியாலோசனையும் மிக்கதேயாம்;
“தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா, ரழுதகண்ணீரு
மனைத்து” என்ற திருக்குறளும், ‘பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும்
அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க வென்பதாம்’ என்ற
பரிமேலழகருரையும், “தொழுததங்கையினுள்ளுந் துறுமுடியகத்துஞ் சோர,
அழுதகண்ணீரினுள்ளு மணிகலத்தகத்தும் ஆய்ந்து, பழுதுகண் ணரிந்து
கொல்லும்படையுடனொடுங்கும் பற்றா, தொழிக யார்கண்ணுந் தேற்றந்
தெளிகுற்றார் விளிகுற்றாரே” என்ற சீவகசிந்தாமணியும் உணரத்தக்கன.
ஆல் -அசை.
சங்கை உண்டு; இனி, உண்டியும், சாந்தமும், பூணும்,
பொங்கு நுண் இழைத் துகிலும், அம் தாமமும், பூவும்,
இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம்’ என்றார்-
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார்.
சங்கை உண்டு – (இவனிடத்து நமக்குச்) சந்தேகமுள்ளது: இனி –
இனிமேல், இங்கு இவன் பரிந்து இயற்றிய – இவ்விடத்தில் இவன் (நம்பக்கல்)
அன்புடையான்போன்று அமைக்கின்றவான, உண்டிஉம் – உணவுகளையும்,
சாந்தம்உம் – சந்தனத்தையும், பூண்உம் – ஆபரணங்களையும், பொங்கு நுண்
இழை துகில்உம் – சிறந்து விளங்குகின்ற நுண்ணிய நூலினாலாகிய
ஆடைகளையும், அம் தாமம்உம் – அழகிய மாலைகளையும், பூஉம் –
மலர்களையும், கோடலம் – (ஆராயாது) கொள்ளோம்,’ என்றார் – என்று
(தமக்குள்) நிச்சயித்தார்கள்: (யாவரெனில்),- கங்கை நீர் தவழ் கழனி சூழ்
பழனம் நாடு உடையார் – கங்காநதியின்நீர் பாய்கிற கழனிகள் சூழ்ந்த
மருதநிலத்தையுடைய குருநாட்டுக்கு உரியவர்களான பாண்டவர்கள்; (எ-று.)
அடிசில் நீர்முதலிய உண்ணப்படும் பொருள்களில், தீங்கு வராமற்
காத்தற்குஅவற்றைக் கருங்குரங்கிற்கு இட்டு ஆராய வேண்டுமென்றும்,
சந்தனம் முதலியவற்றை அரசவன்னப் பறவையின் கண்ணிலும்
சக்கரவாகப்பறவையின் முகத்திலும் உறுத்தித் தூய்மைகண்டல்லது
கைக்கொள்ளலாகாதென்றும், நஞ்சுகலந்திருப்பின் குரங்கு உண்ணாது, அன்னம்
கண்களினின்று இரத்தஞ்சொரியும், சக்கரவாகம் முகங்கடுக்கும் என்றும், இன்னும்
இதுபோலவும் சிந்தாமணி முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ள விஷயம் இங்கு
அறியத்தக்கது. (“பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம், ஆய்ந்தளந்
தியற்றப்பட்டவடிசில்நீ ரின்னவெல்லாம், மாந்தரின் மடங்க லாற்றற் பதுமுகன்
காக்கவென்றாங், கேந்துபூண்மார்ப னேவ வின்னண மியற்றி னானே” என்ற
சீவகசிந்தாமணிச் செய்யுள், இங்கு ஞாபகத்துக்கு வருகின்றது.
ஐயம் உற்று இவர் இருப்புழி, மயனினும் அதிகன்,
சையம் ஒத்த தோள் வலனுடைத் தபதியன் ஒருவன்,
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி,
‘ஐய! பட்டதை அறிந்தருள், ஆம் முறை!’ என்றான்–சிற்பியொருவன் வீமனிடம் வந்து ஒரு செய்தி
சொல்லத்தொடங்கல்.
இவர் – இந்தப் பாண்டவர்கள், ஐயம் உற்று இருப்பு உழி –
(இவ்வாறு புரோசனனிடத்திற்) சந்தேகங் கொண்டிருக்கும் பொழுது,- மயனின்உம்
அதிகன் – (சிற்பத்தில் அசுரத்தச்சனான) மயனைக்காட்டிலும் மேம்பட்டவனான,
சையம் ஒத்த தோள் வலன் உடை தபதியன் ஒருவன் – மலைபோன்ற
தோள்களின் வலிமையையுடைய சிற்பியொருத்தன், வையம் முற்று உடை
வீமனை ஒரு தனி வணங்கி – பூமிமுழுவதையும் ஆளுதற்கு உரியவனான
வீமனை ஏகாந்தமான இடத்தில் (தான்) தனியனாய்வந்து கண்டு வணங்கி, – ‘ஐய
தலைவனே! பட்டத்தை – நடந்ததொருசெய்தியை, ஆம்முறை – நடந்தபடியே,
அறிந்தருள் – (நான் சொல்லக்கேட்டு) அறிந்தருள்வாயாக, ‘என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)- அச்செய்தி, அடுத்த மூன்றுகவிகளில் விவரமாகக்
கூறப்படும்.
ஸ்தபதி யென்ற வடசொல், தபதியென விகாரப்பட்டது; அதன்மேல் அன் –
ஆண்பால்விகுதி. பாண்டவர்க்கு அனுகூலமாக விதுரனிட்ட கட்டளையைப் பிறர்
அறியாமல் நிறைவேற்றிய வல்லமையையுடைய சிற்பியாதலின், இவனை,
‘மயனினுமதிகன்’ என்று விசேடித்துக்கூறினார். ‘வையமுற்றுபடை’ என்று
வீமனுக்குக்கொடுத்த அடைமொழியால், ஆற்றலிற் சிறந்த அவனே
பாண்டவரைவரையுங் காக்கும் உபாயத்தைக் கூறக்கேட்டற்கு உரியவ னென்பது
தோன்றும்.
‘நுந்தை ஏவலின், கம்மியர் நூதனமாக
இந்த மா நகர்த் திருமனை இயற்றிடு நாளின்,
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து, அறன் வடிவாம்
தந்தை என்னையும் ஏவினன், தன்மையின் உணர்ந்தே.-இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்: அச்சிற்பி
கூறும்விவரம்
நுந்தை – உமது பெரிய தந்தையாகிய திருதராட்டிரனது, ஏவலின் –
கட்டளையினால், கம்மியர் – சிற்பிகள், நூதனம் ஆக – புதுமையாக, இந்த மா
நகர் திரு மனை இயற்றிடு நாளின் – பெரிய இந்த வாரணாவதநகரத்திலே
அழகிய இந்த மாளிகையைச்செய்தபொழுது, அறன் வடிவு ஆம் தந்தை –
தருமசொரூபியாகிய (உமது) சிறிய தந்தையான விதுரன், வந்த மந்திரி வஞ்சனை
அறிந்து – (மாளிகை கட்டுவித்தற்கு) வந்த புரோசனனென்னும் மந்திரியினது
வஞ்சனையை அறிந்து, என்னைஉம் தன்மையின் உணர்ந்து ஏவினன் –
என்னையும் என்குணத்தால் நம்பத்தக்கவனென்று அறிந்து (இம் மாளிகையமைக்குஞ்
சிற்பிகளுள் ஒருவனாயிருந்து தொழில் செய்யும் படி) கட்டளையிட்டனுப்பினான்:
(எ-று.)
‘அறன்வடிவாம்’ என்றது – யமனது அமிசமானவனென்ற கருத்தையும்
விளக்கும். கர்மம் – சிற்பம் முதலிய தொழில்: அதனையுடையவன், கர்மீ: இது
திரிந்து பலர்பாலில் கம்மியரென வந்தது
அடியனேனும், மற்றவருடன், அரக்கு மாளிகை இப்
படியினால் இயற்றிய தொழில் பயன் எலாம் குறித்து,
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய்
முடியுமாறு, ஒரு மண்டபம் கோட்டினேன், முழைபோல்
அடியனேன்உம் – (உங்கட்கு) அடியவனானநானும்,
மற்றவருடன் – மற்றைய சிற்பிகளுடனிருந்து, அரக்கு மாளிகை இ படியினால்
இயற்றிய தொழில்பயன் எலாம் குறித்து – அரக்கினால் ஒருமாளிகையை
இவ்வாறு செய்த தொழிலினால் இனிநிகழும் பயன்களை யெல்லாம் ஆலோசித்து,
நீள் நிலவறை நெறி முழை போல் போய் நெடிய கானகத்து அளவு முடியும்
ஆறு- நீண்ட நிலவறையின் வழி மலைக்குகைபோலச் சென்று நீண்ட
காட்டினிடம் வரையில் முடியும்படி, ஒரு மண்டபம் கோட்டினேன் –
(இந்தமாளிகையில்) ஒருமண்டபத்தைச் செய்தேன்; (எ-று.)
நிலவறைநெறி – பிறர் அறியாதபடி தரையினுள் அமைந்த சுரங்க வழி.
இம்மாளிகையில் பாண்டவர்களை நம்பிக்கையுடன் இனிதுவீற்றிருக்கச்செய்து
பின்பு தீப்பற்றவைத்து அழிக்கக்கருதிய கருத்தை அறிந்தேனென்பான்,
‘தொழிற்பயனெலாங்குறித்து’ என்றான்.
வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால், ஒரு தூண்,
மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன்;
தேறுதற்கு இது தகும் எனத் திருவுளத்து அடக்கி,
ஊறு பட்டபோது எழுந்தருள்க!’ எனப் பணிந்து உரைத்தான்
வேறு ஒருத்தர்உம் அறிவுறா விரகினால் – மற்றுஒருவரும்
அறியாத உபாயத்தால், ஒரு தூண் – (அம்மண்டபத்தில்) ஒரு துணை, நீ
மாறுபட்டு பறிக்கல் ஆம் வகை – நீ வலிமைகொண்டு பெயர்த்தெடுத்து
விடும்படி, வழிவகுத்தேன் – அந்நிலவறைவழியைச் சார
அமைத்துவைத்துள்ளேன்; இது தேறுதற்கு தகும் என திரு உளத்து அடக்கி –
இச்செய்தி நம்பத்தக்கதென்று (உனது) திருவுள்ளத்திலே கொண்டு,
ஊறுபட்டபோது எழுந்தருள்க – தீங்கு நிகழ்ந்தபொழுது (அவ்வழியாகத்
தப்பியுய்ந்து) சென்றருள்வாயாக, என – என்று, பணிந்துஉரைத்தான் –
வணங்கிச்சொன்னான், (அந்தச்சிற்பி); (எ-று.)
மூன்றாம்அடியில், எளிய இந்த எனதுவார்த்தை இகழத்தக்கதன்றென்றும்,
இவ்வுபாயம் அலட்சியஞ்செய்தற்கு உரியதன்றென்றும், இதனைப் பிறர்
அறியாதபடி இரகசியமாக வைத்திட வேண்டுமென்றுங் கூறியவாறாம்
தச்சரில் பெருந் தலைவனுக்கு, உரிமையின், தனங்கள்
பிச்சரின் கொடுத்து, அவன் விடைகொண்டதன் பின்னர்,
அச்சம் அற்று, ‘இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும்;
நிச்சம்; இன்றுகொல், என்றுகொல்?’ என நினைந்து இருந்தான்–வீமன் அவனுக்குப் பரிசளித்துப் பின்
ஜாக்கிரதையுடையனாயிருத்தல்.
(வீமன்), தச்சரில் பெருந் தலைவனுக்கு – (இவ்வாறு உய்யும்வழி
கூறிய) சிறந்த அச்சிற்பிக்கு, உரிமையின் – தகுதியினால், தனங்கள் –
செல்வங்களை, பிச்சரின் கொடுத்து – பித்தர்போலத் தலைதெரியாது
(மிகுதியாகக்) கொடுத்து,- அவன் விடை கொண்டதன் பின்னர் – அச்சிற்பி
விடைபெற்றுக்கொண்டு சென்றபின்பு,- அச்சம் அற்று – பயம் ஒழிந்து,- ‘இவன் –
இப்புரோசனன், நம் மனைக்கு அம்மனை வழங்கும் – நாம் வசிக்கும் இந்த
மாளிகையில் அக்கினியை வைப்பான்: நிச்சம் – (இது) நிச்சயம்: இன்று கொல்
என்று கொல் (இது செய்யும் நாள்) இன்றைக்கோ என்றைக்கோ? ‘ என
நினைந்துஇருந்தான் – என்று எண்ணிக்கொண்டு கவனிப்புடன் இருந்தான்;
(எ-று.)
தச்சர் – இச்சிறப்புப்பெயர், சிற்பிகளென்றபொருளில் வந்தது.
அம் மனைக்கு – நெருப்பிற்கு, அ மனை – அந்த மாளிகையை, வழங்கும் –
ஒப்பிப்பான் என்று கூறுதலும் ஒன்று. அம்மனையென்பது- (அம் – நீர், மனை –
இடம்) நீர் பிறத்தற்குக் காரணமாயுள்ளதென்ற பொருளால்,
நெருப்பிற்குவந்ததோர் ஏதுப்பெயராம்; நெருப்பினின்று நீர் தோன்றியதென
வேதமுங் கூறும்.
விடவி வன் சினை நெடுங் கொடி தழுவலின் மிடைந்த
அடவி எங்கணும், வேட்டையால், தங்கள் பேர் ஆண்மை
நடவி, நன் பகல் இரவு கண் துயிலலர், நடந்தார்-
புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர்.-பாண்டவர் பகலில் வேட்டையாடி இரவில்
விழிப்புடன் இருத்தல்.
தங்கள் வெள் குடை நிழல் – தங்கள் வெண்கொற்றக் குடையின்
நிழலினால், புவி குளிரும் ஆ – பூமிமுழுவதுங்குளிர்ச்சியடையும்படி, புரப்போர்
– பாதுகாக்கவல்லவரான பாண்டவர்கள்,- நல் பகல் – நல்ல பகற் காலத்தில்,
விடவி வல் சினை நெடுகொடி தழுவலின் மிடைந்த அடவி எங்கண்உம் –
மரங்களின்வலிய கிளைகளிலே நீண்டகொடிகள் தழுவிப்படர்தலால்,
அடர்ந்துள்ள காடு முழுவதிலும், வேட்டையால் – வேட்டையாடுதலால்,
தங்கள்போர் ஆண்மை நடவி – தங்களுடைய சிறந்த ஆண்தன்மையை [பல
பராக்கிரமங்களை]ப் பரவச்செய்து, இரவு – இராத்திரியில், கண்துயிலலர் நடந்தார்
– கண்மூடி யுறங்காதவர்களாய் ஒழுகினார்கள்; (எ-று.)
வேட்டையென்ற வியாஜத்தினாற் பகலையும், கண்விழிப்பினால் இரவையும்
போக்கினார் பாண்டவரென்க: இங்ஙன் இவர் செய்தது, எக்காலத்துப்
புரோசனனால் தீங்குவிளையுமோ என்ற அச்சத்தினாலாகும் விடவி= விடபீ:
விடபம் – கிளை: அதனையுடையது விடபீ. பெண்பாலாகிய கொடி
ஆண்பாலாகிய மரத்தின்கிளையைக் கொள் கொம்பாகக் கொண்டு தழுவும்
இயல்பை முதலடிவிளக்கும். ‘துயிலற’ என்றும் பாடம் உண்டு.
பாந்தளோடு ஒரு மனைவயின் பயில்பவர் போல,
வேந்தர் ஐவரும், மந்திர வலியினால் மிக்கோர்,
காந்து நெஞ்சுடை அமைச்சனைக் கைவிடார் அணுகி,
தாம் தம் மெய் என உயிர் எனத் தனித்தனி சார்ந்தார்.-சிலகாலம் புரோசனனுடன் பாண்டவர் வசித்தல்.
மந்திரம் வலியினால் மிக்கோர் – ஆலோசனை வலிமையினால்
மேம்பட்டவர்களாகிய, வேந்தர் ஐவர்உம் – பாண்டவராசர் ஐந்துபேரும்,-
பாந்தளோடு ஒரு மனைவயின் பயில்பவர் போல – பாம்புடன் ஒருவீட்டில்
வசிப்பர்போல, காந்தும் நெஞ்சு உடை அமைச்சனை கைவிடார் அணுகி –
கொதிக்கிற மனத்தையுடைய அந்தமந்திரியை விலக்கிவிடாமல் அருகிற்கொண்டு,
தாம் தம் மெய்என உயிர் என தனி தனி சார்ந்தார் – தங்களில் தாங்கள்
உடம்பும் உயிரும் போல ஒருவரோடொருவர் கலந்திருந்தார்கள்; (எ-று.)
ஒருவருர்க்கொருவர் இன்றியமையாத அன்பின ரென்பது நான்காமடியின்
கருத்து. மந்திரவலிமிக்கவர், பாம்போடு ஒருமனையிற் பயிலக் கூடு மென்க,
“உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள், பாம்போடுடனுறைந் தற்று” என்ற
குறள் கருத்து, முதலடியிற் காணத்தக்கது.
ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து, நீடு அரசியல் உசாவி,
‘ஈங்கு, நீ துயில் வைகுதி, எம்முடன்’ என்ன,
பாங்கர் மெல் அணைப் பள்ளியும் பரிவு உற வழங்கி,
தாங்களும் பொலஞ் சேக்கையில் தங்கினர் அன்றே.-பாண்டவர் ஒருநாளிரவிற் புரோசனை அருகிற்
படுக்கவைத்தல்.
ஆங்கு-அங்ஙனம்நிகழும் நாள்களுள், (பாண்டவர்கள்), – ஓர்
கங்குலின் – ஓர் இரவில், அழைத்து – (புரோசனனை) அழைத்து, நீடு
அரசுஇயல் உசாவி – பெரிய அரசாட்சிமுறைமையைக் குறித்து (வெகுநேரம்
அவனுடன்) ஆராய்ந்து,(பின்பு), நீ ஈங்கு எம்முடன் துயில் வைகுதி என்ன – ‘நீ
இவ்விடத்தில் எங்களோடு நித்திரை செய்வாய்’ என்றுசொல்லி,- பாங்கர் –
(தங்கள்) பக்கத்தில், மெல் அணை பள்ளிஉம் பரிவு உற வழங்கி – மெல்லிய
மெத்தைப்படுக்கையையும் அன்புமிகக்கொடுத்து, தாங்களும்-, பொலம்
சேக்கையில் தங்கினர் – அழகிய படுக்கையிற் படுத்தார்கள்;(எ-று.)
காரணமின்றி யழைத்து ‘எம் அருகிற் பள்ளிகொள்க’ என்று கூறின்
ஐயமுறுவா னென்றுகருதி, அரசியலுசாவுவார் போன்று அழைத்து நெடும்பொழுது
உசாவிப் பின்பு அங்ஙன் கூறினரென்க.
உணர்வு அறத் துயில் உற்ற போது, அற்றம் அங்கு உணரா,
துணைவரை, ‘திருத் தாய் பதம் தொழுக!’ எனச் சொல்லி,
அணி கொள் கோயிலைத் தாதை நண்பனுக்கு இரை அளித்தான்-
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான்–வீமன் அரக்குமாளிகையில் தீப்பற்றவைத்தல்.
உணர்வு அற துயில் உற்ற போது – (புரோசனன்) உணர்ச்சி நீங்க
நித்திரை செய்தபொழுது,- இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து
இருந்தான் – ஒப்பற்ற அமிருதத்தைச் சர்ப்பராசனான வாசுகியினிடத்தில் (பெற்று)
உண்டு (அவன்நகரத்திற் சிலநாள்) இருந்தவனான வீமசேனன்,- அங்கு அற்றம்
உணரா – அப்பொழுது சமயமென்று அறிந்து,- துணைவரை திருதாய்பதம் தொழுக
என சொல்லி – (தனது) உடன்பிறந்தவர்களைச் சிறந்த தாயாகிய குந்தியினது
பாதங்களை வணங்குவீராக வென்று சொல்லி, – அணிகொள் கோயிலை –
அழகுபொருந்திய அந்த மாளிகையை, தாதை நண்பனுக்கு இரை அளித்தான் –
தனது பிதாவாகிய வாயுவினது சிநேகிதனான அக்கினிதேவனுக்கு உணவாகக்
கொடுத்தான்; (எ-று.)
எரித்தா னென்ற பொருளை ‘தாதைநண்பனுக்கு இரையளித்தான்’ என
வேறு வாய்பாட்டாற் கூறினது, பிறிதினவிற்சியணி. தனது தந்தையின்
ஒருநண்பனான வாசுகியினிடத்து அமிருதம் பெற்று உண்ட வீமன் அத்தகைய
கடப்பாடுவழுவாமல் தனது தந்தையின் மற்றொரு நண்பனுக்கு
உணவளித்தனனென ஒருவகைச் சமத்காரம் நிகழக் கூறுவார், ‘தாதைநண்பனுக்
கிரையளித்தான் இணையிலா வமுது உரகர்கோனிடை நுகர்ந்திருந்தான்’ என்றார்.
தனது உடன்பிறந்தவர் நால்வரையும் தாயையும் ஒருங்கே உடன்கொண்டு
வெளிச்செல்லக் கருதின னாதலின், தனித்தனி படுத்திருந்த அவர்களை ஒருங்கே
தாயிருக்குமிடத்திற் சேர்த்தற்கு, ‘தாய்பதந்தொழுக’ என்றுசொல்லினான்
முடியுடைத் தடங் கிரியினை முளி கழைதொறும் உற்று,
அடிநிலத்து உறச் சூழ்வருமாறுபோல், அழலோன்,
கொடி நிரைத்த பொன் கோபுரப் புரிசை சூழ் கோயில்
இடி இடித்தென வெடிபடச் சிரித்து எழுந்து, எரித்தான்.-அரக்குமாளிகை எரிந்தொழிதல்.
அழலோன் – அக்கினிதேவன்,- முடி உடை தட கிரியினை –
சிகரத்தையுடைய பெரியமலையை, முளி கழைதொறும் உற்று – (அதிலுள்ள)
உலர்ந்த மூங்கில்களி லெங்கும்பொருந்தி, அடி நிலத்து உற – அடிப்பரப்பிலே
பொருந்த, சூழ்வரும் ஆறு போல் – சூழ்ந்திடும் விதம்போல,- கொடி நிரைத்த
பொன் கோபுரம் புரிசை சூழ் கோயில் – கொடிகள் வரிசையாகக் கட்டப்பட்ட
அழகிய கோபுரத்தையுடைய மதில்சூழ்ந்த அந்த இராசகிருகத்தை, இடி இடித்து
என வெடி பட சிரித்து எழுந்து எரித்தான் – இடியிடித்தாற்போலப்
பேரொலியுண்டாக நகைத்து எழுந்து எரித்திட்டான்;
மலையின் தாழ்வரையில் சுற்றிலுமுள்ள காய்ந்த மூங்கிற்காட்டில் தீப்பற்றி
யெரிதல்போல், உயர்ந்த அம்மாளிகையைச் சுற்றிலுமுள்ள கொடிகள் கட்டிய
மதில்களி லெங்கும் தீப்பற்றி யெழுந்து அம்மாளிகையை எரித்ததென்க.
அங்ஙனம் எரிக்கையில் உண்டாகிற போரொலியையே வீரத்தெழுந்த
வெகுளிநகையாகக் கற்பித்து வருணிப்பார், ‘இடியிடித்தென வெடிபடச்
சிரித்தெழுந்தான்’ என்றார்; தற்குறிப்பேற்றம்.
அக் கணத்திடை, அன்னையில் அணுகி, ஆங்கு அவரை,
தொக்க சித்திரத் தூண் அடித் துவாரமே வழியா,
பொக்கெனக் கொடு போய், அகல் வனத்திடைப் புகுந்தான்-
முக் கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான்.-வீமன் துணைவரையுந் தாயையும் உடன்கொண்டு செல்லல்.
முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் – மூன்று
திருக்கண்களையுடைய விசித்திரசக்தியுடையவனான சிவபிரான் கோபித்து எரித்த
திரிபுரத்தில் (எரியாது தப்பிய) மூன்று அரசர்களோடு ஒப்பவனாகிற வீமசேனன்,
அ கணத்திடை – அந்தக் கணப்பொழுதிலே, அன்னையில் அணுகி –
தாயினிடஞ்சென்று, ஆங்கு அவரை – அவ்விடத்திலுள்ள அவரெல்லோரையும்,
பொக்கென கொடு – விரைவாக உடன்கொண்டு, தொக்க சித்திரம் தூண் அடி
துவாரம்ஏ வழி ஆ போய்-மிக்க சித்திரங்களையுடைய ஒரு தூணின் கீழுள்ள
சுரங்கமே வழியாகச் சென்று, அகல் வனத்திடை புகுந்தான் – பரந்த
இடிம்பவனத்திற் சேர்ந்தான்; (எ-று.)
அவரைக் கொடுபோய் அகல்வனத்திடைப் புகுந்த விவரம் அடுத்த
சருக்கத்தின் இரண்டாங்கவியில் விளங்கும். சிவபிரான் திரிபுரசங்காரஞ்
செய்தபொழுது மற்றை யசுரர்கள்போலச் சினனது உபதேசத்தாலும் புத்தனது
போதனையாலும் சிவத்துவேஷிகளாகாமல் சிவபக்திமுதிர்ந்திருந்ததனால் சுதர்மன்
சுசீலன் சுபுத்தி என்ற மூன்று அசுரர்கள் அந்நகைத்தீக்கு இலக்காகாமல் தப்பிப்
பிழைத்துச் சிவபிரானை வேண்டி அக்கடவுளருளால் அவனது கோயில்வாயில்
காக்கும் பணியைப் பெற்றன ரென்று அறிக. “முப்புரங்களை முக்கணன்
முனிந்தநாள் மூவரம்முழுத்தீயில், தப்பினருளார்” என்பர், மேல்
காண்டவதகனச்சருக்கத்தும். அம்மூவர் திரிபுரத் தெரியினின்று தப்பியுய்ந்தமை
போல, வீமன் அரக்கு மாளிகைத்தீயினின்று தப்பியுய்தலால், ‘முக்கணற்புதன்
முனிந்தவூர் மூவரோடொப்பான்’ என்றார்.
புரிந்த தீயினைக் கண்ணின் நீர் அவித்திடப் புகுந்து,
பரிந்த நெஞ்சினை மீண்டும் அப் பாவகன் சுடவே,
கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர்,
‘எரிந்து வீழ்ந்தனர், ஐவரும் யாயும், ஈண்டு’ என்றார்.-கண்டவர் பாண்டவரும் குந்தியும் எரிந்தன
ரென்றல்.
கார் இருள் புலர்ந்த பின் – கரிய இருள் நீங்கிப்
பொழுதுவிடிந்தபின்பு-, புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட-பற்றிய
நெருப்பை(த் தங்கள்) கண்களினின்று பெருகும் சோகநீர் தணிக்கும்படி,
கரிந்தகோயிலில் புகுந்து – தீந்துபோன அம்மாளிகையினுள்ளே பிரவேசித்து,-
மீண்டுஉம் – அங்ஙனம் அவிந்தபின்பும், அ பாவகன் – அந்த அரக்குமாளிகை
நெருப்பு, பரிந்த நெஞ்சினை – (பாண்டவர்பக்கல்) அன்புகொண்ட (தங்கள்)
மனத்தை, சுட – வருத்த, கண்டோர் – பார்த்தவர்களெல்லோரும்,- ஐவர்உம்
யாய்உம் ஈண்டு எரிந்து வீழ்ந்தனர் என்றார்- ‘பஞ்சபாண்டவர்களும் அவர்கள்
தாயான குந்தியும் இங்கு எரிந்தொழிந்தனர்’ என்றே சிந்தித்தார்கள்; (எ-று.)
பொழுதுவிடிந்தபோது எரிந்துபோன மாளிகையை வந்து பார்க்கையில்,
ஊரவர்களின் கண்களினின்று பெருகிய நீரினால் அந் நெருப்பு அவிந்தது என்ற
உயர்வுநவிற்சியணியால், பாண்டவர்கள் பக்கல் மிக்க அன்பு கொண்ட
அந்நகரத்துச் சனங்களது சோகக்கண்ணீர்ப்பெருக்கின் மிகுதியைக்கூறியவாறு.
வேடர் ஐவரும் அவர்கள் தாயும் எரிந்துகிடந்ததைக்கண்டு பாண்டவரைவரும்
குந்தியும் எரிந்து கிடந்தன ரென்று கருதின ரென்க; அத்தன்மை, அடுத்த கவியில்
விளங்கும். இறந்தனரென்ற பொருளில் ‘வீழ்ந்தனர்’ என்றது, மங்கலவழக்கு.
இரண்டாம் அடிக்கு – நெருப்பு மாளிகையைச் சுட்டதன்றி, மீண்டும் இரங்கிய
தம்மனத்தைச் சுட என்று நயந்தோன்றக்கூறினார்.
விருந்தராய், விடம் இடச் செல் ஐவேடரும், தாயும்,
இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார்,
திருந்து மா மதிப் பாண்டவர் செயலும் மற்று அறியார்,
வருந்தினார், தமது உயிர் இழந்தென-புவி மன்னர்.-இச்செய்தியறிந்து அரசர்கள்பலரும் வருந்துதல்.
புவி மன்னர் – பூமியிலுள்ள அரசர்கள்,- விருந்தர் ஆய் விடம்
இட செல் – புதியவர்களாய் (த் துரியோதனன் கட்டளையின்படி பாண்டவர்க்கு)
விஷங்கொடுக்க வந்த, ஐ வேடர்உம் – ஐந்து வேடர்களும், தாய்உம் –
(அவர்கள்) தாயான வேட்டுவச்சியும், இருந்த தீ மதி அமைச்சனோடு –
(முன்னமே அங்கு) இருந்த துர்ப்புத்தியுடைய மந்திரியாகிய புரோசனனுடனே,
இறந்தமை – மரித்ததை. உணரார் – அறியாவர்களாய்,- மற்று -மற்றும், திருந்து
மா மதி பாண்டவர் செயல்உம் அறியார் – திருத்தமுற்ற சிறந்த அறிவையுடைய
பாண்டவரது செய்கையும் அறியாதவர்களாய், – தமது உயிர் இழந்து என
வருந்தினார் – (பாண்டவரை யிழந்தோ மென்றே கருதியதனால்) தமது உயிரை
யிழந்தாற்போல வருந்தினார்கள்;
பாண்டவர்க்கு விஷங்கலந்த தேனைக் கொடுத்துக் கொல்லும் படி
துரியோதனனால் அனுப்பப்பட்ட ஐந்து வேடர்களும் அவர்கள் தாயும் அன்று
அங்கு வந்திருந்து தீயின்வாய்ப்பட்டு இறந்தன ரென்பதை இதனால் அறிக.
விருந்தர் = விருந்தினர். மற்று – வினை மாற்றுமாம். பாண்டவர்செயல் –
அரக்குமாயிகையைத் தீக்கொளுவித் தப்பிச்சென்று உய்ந்தமை
போது பட்டு, இருள் புகுந்து, ஒளி போன வானகம்போல்,
மாது பட்ட பார்மடந்தைதன் மதிமுகம் மழுங்க,
தீது பட்டது, குருகுலச் செல்வம்!’ என்று இரங்கி,
ஏது பட்டன, முனிவரர் முதலினோர் இதயம்!-–இச்செய்தியறிந்த முனிவர்கள் முதலியோர் வருத்தம்.
முனிவரர் முதலினோர் இதயம் – சிறந்த இருடிகள்
முதலானவர்களுடைய மனங்கள், ‘போது பட்டு – பொழுது சாய [சூரியன்
அஸ்தமிக்க], இருள் புகுந்து – இருள் வர, ஒளி போன – ஒளி நீங்கிய, வான்
அகம் போல்-ஆகாயம்போல, மாது பட்ட பார் மடந்தை தன் மதி முகம் மழுங்க
– அழகுபொருந்திய பூமிதேவியினது சந்திரன்போன்ற முகம் ஒளிமழுங்கும்படி,
குருகுலம் செல்வம் தீதுபட்டது – குருகுலத்தினது செல்வம் பழுதுபட்டது,’
என்று-, இரங்கி – விசனமுற்று, ஏது பட்டன – என்ன பாடுபட்டன! (எ-று.)
பாண்டவர் அழிவை, குருகுலச்செல்வம் அழிந்ததெனக் குறித்தார்; செல்வம்
– சிறந்தசந்ததி. பட்டு, புகுந்து – எச்சத்திரிபு.
கொட்பு அனல் சுட இறந்தமை கேட்டலும், குருக்கள்
துட்பதத்துடன் அழுதிடும் சுயோதனன் முதலோர்,-
உள் பனித்து, மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார்-
பெட்பு உறப் புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர்.-இச்செய்தியறிந்த துரியோதனாதியர் நிலை.
கொட்பு அனல் சுட – சூழ் தலையுடையதீ எரிக்க, இறந்தமை –
(பாண்டவர்) இறந்த செய்தியை, கேட்டலும் – கேட்டறிந்தவுடனே, –
துட்பதத்துடன் அழுதிடும் – கொடிய கோட்பாட்டோடு புலம்புகின்ற, சுயோதனன்
முதலோர் குருக்கள் – துரியோதனன் முதலியகுருகுலகுமாரர்கள்,- பெட்பு உற
புவிமுழுவதுஉம் பெறும் கருத்து உடையோர் – ஆசைமிகப் பூமிமுழுவதையும்
பெறும் எண்ணத்தை யுடையவர்களாய், வெயில் உற உள் பனித்து மேல்
வெதும்பும் நீர் ஒத்தார்- (மேலே) வெயில்படுகையில் உள்ளே குளிர்ந்து
மேலேசுடும் இயல்பையுடைய நீரைப் போன்றார்கள்;
துரியோதனாதியர் அகத்தில் மகிழ்ச்சிகொண்டு புறத்தில் தபிப்புக்காட்டினர்
என்பதாம். அப்பொழுது அவர்கட்கு மகிழ்ச்சி இயற்கையும், சோகம்
செயற்கையுமாய் நின்றமை, உவமையால் விளங்கும். துஷ்பதம் -வடசொல்–
பொன் நலம் கொள, மெழுகினால் ஆலயம் புனைந்து,
துன்னு வெங் கதைப் படை மருச் சுதனையே சுடுவான்,
என்ன ஆண்மைகொல் எண்ணினான்? எண்ணினும், சுடுமோ,
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே?—உண்மையிற்பாண்டவர் எரிந்திடாமைப்பற்றிய
கவிவர்ணனை.
பொன் நலம் கொள – (வெளியே)பொன்னுக்குஉரிய அழகு
விளங்கும்படி, மெழுகினால் ஆலயம் புனைந்து – அரக்கினால் மாளிகையைச்
செய்து, துன்னு வெம் கதை படை மருத் சுதனைஏ சுடுவான் – பொருந்திய
கொடிய (சத்துருகாதினியென்னும்) கதாயுதத்தையுடைய வாயுகுமாரனாகிய
வீமனையே சுடும்படி, எண்ணினான் – (துரியோதனன்) கருதினான்: (அங்ஙனங்
கருதியது), என்ன ஆண்மைகொல் – என்ன ஆண்திறமையோ? எண்ணின்உம் –
(அவ்வாறு அவன்) நினைத்தாலும், வன்னி – அக்கினி, தன் பெயர் மருத்தசகன்
என்பது மறந்து – தனது பெயர் காற்றின் சகாயனென்பதை மறந்து, சுடும்ஓ –
(அவ்வாயுகுமாரனை) எரித்திடுமோ? (எ-று.)
துரியோதனனுக்கு நேரெதிரியான வீமன் தப்பியுய்ந்தன னென்ற
உண்மையை, காற்றின் நண்பனான அக்கினிதேவன் அக்காற்றின் மகனை
எரித்திடானென வருணித்தார்; இது – ஏதுத்தற்குறிப்பேற்றவணியின் பாற்படும்.
மருத்ஸு தன், மருத்ஸக: என்ற வடமொழிப்பெயர்கள் திரிந்தன.
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply