இங்கு, இவர், இவ்வாறு இந்த இருக்கையில் இருக்கும் நாளில்,
அம் கண் மா ஞாலம் எங்கும், ‘அரக்கு மாளிகையின் வீந்தார்,
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர்’ என்று மாழ்க,
துங்க வேல் துருபதன்தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம்:-கவிக்கூற்று: சருக்கத்துக்குத் தோற்றுவாய் செய்தல்.-துருபதன் தன் மகளுக்குச் சுயம்வரநாள் குறித்தலும்,
அரசிளங் குமரர் வந்து திரளுதலும்
இவர் – இப்பாண்டவர்கள், இ ஆறு – இந்தவிதமாய், இங்கு –
இவ்விடத்தில் [வேத்திரகீயத்தில்], இந்த இருக்கையில் – கீழ்க்கூறிய அந்தணன்
மாளிகையில,் இருக்கும் நாளில் – தங்கியிருகுங் காலத்தில்,- அம்கண் மா ஞாலம்
எங்கும் – அழகிய இடமகன்ற பெரிய பூமிமுழுவதிலுமுள்ளோரெல்லோரும்,
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் அரக்குமாளிகையில் வீந்தார்
என்றுமாழ்க – ‘குற்றமற்ற நற்குணங்களாற்சிறந்த பாண்டவர்கள் அரக்கு
மாளிகையில் இறந்தார்கள்’ என்றுகருதி மனம்வருந்த,- துங்கம் வேல் துருபதன்
சூழ்ந்தது – சிறந்த வேலாயுதத்தையுடையதுருபத
“குண்டலமிலங்கச்சங்குமாழியுங்குலவுகாந்தி
மண்டலந்துதிக்குந்திங்களிரவிமேல்வடிவந்தூண்ட
விண்டலத்திலங்குபீதவவுணனைவெறுத்துவீழ்த்த
புண்டரிகங்கள்பூத்தபுயலினைப்போற்றிசெய்வாம்”
என்கிற செய்யுளொன்று, இச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தாகச் சிலபிரதிகளிற்
காணப்படுகிறது. மகாராசன் ஆலோசித்துச்செய்த செயலை, சொல்லல் உற்றாம் –
இனிச்சொல்லத்தொடங்கினோம்; (எ-று.)- அதனை, அடுத்தகவி முதற் காண்க.
தான் – அசை.
இதுமுதல் முப்பத்தொரு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய
விருத்தங்கள்.
வரத்தினால் பிறந்தவாறும், வான்மொழி புகன்றவாறும்,
சிரத்தினால் வணங்கிக் கேட்பத் தேசிகன் உரைத்தவாறும்,
உரத்தினார் கெடாதவாறும், உணர்ந்து, தன் பேதை இன்னம்
சரத்தினால் உயர்ந்த வின்மைத் தனஞ்சயற்கு உரியள்’ என்னா,-துருபதனது உட்கருத்து.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) (துருபதமகாராசன்),- வரத்தினால் பிறந்தஆறுஉம் – (தான்)
வரம்வேண்டியபடி (திரௌபதி) தோன்றிய தன்மையையும், வான் மொழி புகன்ற
ஆறுஉம் – (அங்ஙனந்தோன்றிய (பொழுது) ஆகாயவாணி சொன்ன
தன்மையையும், சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்த ஆறுஉம் –
(தனது) தலையால் வணங்கி வினாவ (அதற்குத் தன்) குரு சொன்னதன்மையையும்,
உரத்தினார் கெடாத ஆறுஉம் – வலிமையையுடைய பாண்டவர்கள் இறவாத
தன்மையையும், உணர்ந்து – ஆலோசித்து,- ‘ தன் பேதை – தனது மகளான
அத்திரௌபதி, இன்னம் – இன்னமும், சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு
உரியள் – அம்பினாற் சிறந்த வில்லின் தொழிலில் வல்ல அருச்சுனனுக்கே
உரியவளாவள், ‘ என்னா – என்று கருதி,- (எ-று.)- “காவலர்க்கோலை போக்க”
என அடுத்த கவியோடு தொடரும்.
இக்குளகச்செய்யுள்களில் ‘உணர்ந்து’, ‘என்னா’, ‘போக்க’ என்ற
வினையெச்சங்களுக்கு, ‘துருபதன்’ என்றுதோன்றாஎழுவாய் வருவிக்க.
‘அருச்சுனனுக்கு மணஞ்செய்து கொடுத்தாற்பொருட்டு ஒருபுத்திரிவேண்டும்’
என்று யாசன்உபயாசன் என்னும் முனிவர்களிடம் துருபதன் வரம்வேண்ட,
அப்படியே அவர்கள் அநுக்கிரகித்துப் புத்திரகாமயாகஞ் செய்வித்ததனால்
திரௌபதி தோன்றியமை, பிரசித்தம். அக்காலத்தில் தெய்வத் தன்மையுள்ள
அசரீரி வாக்கு ‘இவள் பாண்டவர்க்கு உரியளாய்ப் பல அரசர் இறத்தற்கு
மூலமாவாள்’ என்று வானத்தில் உரைத்தமையும்; பாண்டவர் மூலமாவாள்’ என்று
வானத்தில் உரைத்தமையும்; பாண்டவர் அரக்குமாளிகையில்
இறந்துபோயினரென்ற உலகவதந்தியைக் கேட்டவுடனே மிகவுங்கவலைகொண்ட
துருபதன் தன்குவைச்
* “மறைவழாமுனிவர்நின்றமரபினைநோக்கிமன்னன்
இறையெனுமைவர்மாண்டாரேந்திழைக்கினிமைகூர்தன்
முறைமையாதென்னப்பொய்யார்முந்துவரைவரென்னக்
குறைவிலதென்னவிண்ணின்வாணியுங்கூறக்கேட்டான்”
என்கிற செய்யுளொன்று, இச்செய்யுளுக்குமுன் சில ஏட்டுப்பிரதிகளிற்
காணப்படுகிறது. சரணமடைந்து ‘இனி என் செய்வது?’ என்று வினாவ, அவன்
தனது ஞானக்கண்ணால் உண்மையையுணர்ந்து ‘அவர் இறந்திலர்’ என்று கூறித்
துருபதனைத் தேற்றியமையும்; பாண்டவர்மிக்க பலசாலிகளாதலால் பகைவர்களால்
எவ்வகையாலும் எளிதில் அழிக்கப்படுவரல்ல ரென்று துருபதன் துணிந்தமையும்
– இங்குக் குறிக்கப்பட்ட விஷயங்கள். ‘இன்னம்’ என்றதனால், துருபதன் செய்த
முயற்சி ஒன்றினாலும் அவர்கள் கிடைத்தில ரென்பது பெறப்படும்.
இங்ஙனமிருக்கவும் துருபதன் ஆஸ்திக னாதலால், வரம், வான் மொழி,
குருமொழி இவற்றில் மிக்கநம்பிக்கை கொண்டு அதனால் இன்னும் இவள்
அருச்சுனனையே மணஞ்செய்து பெயர் – உலூகமுனிவனென்ப. ‘வான்மொழிகேட்ட
வாறும்,’ ‘தேசிகருரைத்தவாறும்,’ ‘உரத்தினாற் கெடாதவாறும் என்று பிரதிபேதம்
‘தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை’ என்று,
கான் வரிச் சுரும்பு உண் மாலைக் காவலர்க்கு ஓலை போக்க,
மான் வரிக் கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள், மலர் பூஒன்றைத்
தேன் வரித்தென்ன வந்து, திரண்டது, குமரர் சேனை–துருபதன் சுயம்வரநாள் குறித்தலும், அரசர் திரளலும்.
என் தனயை – எனதுமகள், தான்வரித்தவற்குஏ எய்தஉரியன் –
(சுயம்வரத்தில்) அவள் தானாக விரும்பிக்கொள்ளும் புருஷனுக்கே பெறுதற்கு
உரியள், ‘ என்று-, கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலைபோக்க-
இசைப்பாட்டையும் உடம்பிற் புள்ளிகளையு முடைய வண்டுகள் (மொய்த்துத்)
தேனுண்ணுகிற பூமாலையைத் தரித்த அரசர்களுக்கு (த் துருபதன்) திருமுகம்
அனுப்ப,- மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் – மானின் பார்வைபோன்ற
செவ்வரிபரந்த கண்களையுடைய அத்திரௌபதிக்கு இயைந்த அந்தச் சுயம்வர
தினத்தில்,- மலர் பூ ஒன்றை தேன் வரித்து என்ன – மலர்ந்த ஒருபூவை
வண்டுக்கூட்டம் (தனித்தனி தம்தமக்கென்று கொண்டு)
விரும்பிவந்துமொய்த்தாற்போல, குமரர்சேனை – இராசகுமாரர்களுடையகூட்டம்,
(திரௌபதியொருத்தியை விரும்பி), வந்துதிரண்டது -; (எ-று.)
திரௌபதிக்குச் சுயம்வரமென்று உலகமெங்குந்தெரிவித்தால் அவளைப்
பெறும்விருப்பத்தாற் பலரும் வரும்போது பாண்டவரும் வருவ ரென்று கருதிச்
சுயம்வரம்நாட்டி அதற்குஉரிய பத்திரிகையைத் தூதர்மூலமாக
எல்லாத்தேசத்தரசர்க்கும் அனுப்பினனென்க. சுயம்வரமாவது – (ஓர்
இராசகன்னிகை ஓரிடத்திலே வருவித்துச் சேர்க்கப்பட்ட இராசகுமாரர்பலருள்
தனக்குப்பிரியமான ஒருவனைத்) தானே கணவனாக ஏற்படுத்திக்கொள்ளுதல்.
பெருந்திரளென்பதை உணர்த்தற்கு ‘சேனை’ என்றார்
ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம், அந்தணன் ஒருவன் வந்தோன்
ஈங்கு இவர்க்கு உரைப்ப, மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு,
பாங்குடைப் பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடும்
தாங்க அருங் கொடிய கானம், தம் மனத் தேரில் போனார்.-சுயம்வரத்தைச் செவியுற்றவுடன் பாண்டவர்
பிரயாணப்படுதல்
ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் – அவ்விடத்தில்
[பாஞ்சாலநகரத்தில்] அந்தச்சுயம்வரம் அமைந்த செய்தியை, வந்தோன்
அந்தணன் ஒருவன் ஈங்கு இவர்க்கு உரைப்ப – (அங்கு நின்று) வந்தவனாகிய
ஒருபிராமணன் இவ்விடத்தில் [வேத்திரகீயத்தில்] இருக்கிற இந்தப்பாண்டவர்க்குச்
சொல்ல,- மைந்தர் ஐவர்உம் யாய்உம் கேட்டு – குமாரர்களாகிய பாண்டவர்
ஐவரும் அவர்கள் தாயான குந்தியும் (அச்சொல்லைச்) செவியுற்று,- பாங்கு
உடை பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடுஉம் – அழகுள்ள அவ்வூரில்
வாழ்கிற பிராமணர்களுடனே (புறப்பட்டு), தாங்கு அரு கொடிய கானம் –
பொறுத்தற்கு அரிய கொடுமையையுடைய காட்டு வழியிலே, தம் மனம் தேரின்
போனார் – தங்கள்மனமாகிய தேரிற் சென்றார்கள்; (எ-று.)
ஒருவர் பலவிடத்தும் திரிதற்குத் தேர் துணையாவதுபோல மனத்தைப்
பலவிடத்தும் செல்லும்படி ஆசை செய்தலால், அவ்விருப்பத்துக்கு ‘மநோரதம்’
என்று வடமொழியிற்பெயர்: அச் சொற்பொருளைத் தழுவி, தம்இச்சைப்படி
விரைவாகச்சென்றார்க ளென்றபொருளில் ‘தம்மனத்தேரிற்போனார்’ என்றார்:
திரௌபதியைத் தாம்பெறலாகுமென்றகாதல்தூண்டச் சென்றனரென்று கருத்து.
இக்கருத்தை யுட்கொண்டு, அந்தணவடிவத்தோடு மறைந்துவசிக்கிற இவர்கள்,
திரௌபதிவிவாககாலத்தில் நடக்கும் போசனத்தையுண்டு அங்குக்கொடுக்கிற
தட்சிணையைப்பெற்று அங்குநிகழும் பலவகைவிநோதங்களைக் கண்டு மகிழலா
மென்ற கருத்துடன் புறப்பட்ட அந்தணர்களுடனே பிரயாணமாயின ரென்க.
தாங்கு – முதனிலைத்தொழிற்பெயர். ‘ஐவரும்யாவுங்கேட்டு’, ‘தாங்களும்’ என்று
பிரதிபேதம்.
சார தந்திரத்தில் மிக்க தபோதனன், சதுர் வேதங்கள்
பாரதம்தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி,
நாரத முனியை ஒப்பான், நராதிபர் நடந்து செல்லும்
நீரத நெறியில், வாவி நிறைந்த நீர் என்ன, நின்றான்.-அவ்வனத்தில் பாண்டவரெதிரில் வியாசமுனிவன்
வந்து தோன்றல்.
சாரம் தந்திரத்தில் மிக்க – சாரமான நூலறிவிற் சிறந்தவனும்,
தபோதனன் – தவத்தையே செல்வமாகவுடையவனும், சதுர் வேதங்கள் – நான்கு
வேதங்கள், பாரதந்தன்னோடு ஐந்துஆம் படியினால் – பாரதத்தோடு சேர்ந்து
ஐந்தாகும்படி, பகர்ந்த – (அவ்வேதங்களைவகுத்துப் பாரதத்தைச்)
சொல்லியருளிய, மூர்த்தி – பெரியோனும், நாரதமுனியை ஒப்பான் –
நாரதமுனிவனை யொப்பவனுமாகிய வியாசமுனிவன்,- நர அதிபர்
நடந்துசெல்லும் நீரதம் நெறியில் – அரசர்களாகிய அப்பாண்டவர்கள்
நடந்துசெல்லும் நீரற்ற அக்காட்டுவழியில், வாவி நிறைந்த நீர் என்ன –
குளத்தில் நீறைந்தநீர்போல, நின்றான்; (எ-று.)
நீரற்றகாட்டுவழியிற் செல்வோர்க்கு நீர்நிறைந்ததொருகுளம் எதிரில்
தோன்றினால் மிக்கமகிழ்ச்சியைத்தந்து அவர்களுடைய தாகத்தைத்
தணிவித்து ஆற்றுவதுபோல, பாண்டவர்க்கு மகிழ்ச்சியைவிளைவித்து வருத்தத்தை
ஆற்றுபவனாய் வியாசன் வந்து நின்றன னென்க. வேதங்களிலுள்ளவைபோன்ற
சாரமான பலவிஷயங்கள் பொருந்துதலால் அனைவரும் ‘ஐந்தாம் வேதம்’ என்று
கொண்டாடும்படி இவன் பாண்டவ சரித்திரத்தைப் பாரதம் என்ற இதிகாசமாகச்
செய்தது பாண்டவர்காலத்தின் பின் நடந்த செயலாயினும், பிற்பட்டவராகிய கவி,
அதனையுஞ் சேர்த்து ‘சதுர்வேதங்கள் பாரதந்தன்னோ டைந்தாம்படியினாற் பகர்ந்த
மூர்த்தி’ என்றார். சாரதந்திரம் – எல்லாச் சாஸ்திரங்களினுஞ் சிறந்ததான வேதாந்தம்.
பிரமனது மனத்தினின்று தோன்றிய குமாரனாய்த் தேவவிருடியாகியநாரதன்
தத்துவஞானத்திலும் தவவொழுக்கத்திலும் லோகோபகாரஞ் செய்தலிலும்
மிகச்சிறந்ததலால், வியாசனுக்கு அவனை உவமைகூறினார். நாரதர் என்ற பெயர்-
ஆத்தும ஞானத்தை உபதேசிப்பவனென்றும், மனிதர்களுக்கு உள்ள
ஒற்றுமையைக்கெடுப்பவ னென்றுங் காரணப்பொருள்படும். நரன்-ஆத்மா,
அதற்குஉரிய ஞானம் – நாரம்; த-கொடுத்தல், நீரஸம்-நிர்+ரஸம், ரஸம் -நீர்: அது
இல்லாதது, நீரஸம்: வடமொழிப்புணர்ச்சி: அது நீரதம் எனத் திரிந்தது,
வணங்கலும், வாழ்த்தி, ‘முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர்;
இணங்கி, நும் கேண்மை கொள்வான் இச்சையால், யாகசேனன்,
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான்; அந்தச்
சுணங்கு அணி முலையாள் நாளைச் சூட்டுவள், தொடையல் மாதோ.-வியாசன் பாண்டவர்க்கு இனி நடக்குஞ்செய்தியைக்
குறிப்பாகக்கூறல்.
இதுவும், அடுத்த கவியும்-ஒருதொடர்.
(இ-ள்.) வணங்கலும்-(அப்பெழுது பாண்டவர்கள்) வணங்கினவுடனே,-
(வியாசமுனிவன்), வாழ்த்தி- ஆசீர்வாதஞ்செய்து, (அவர்களைநோக்கி), ‘நீர் முந்த
வந்து வாழ்வு செய்தீர் – நீங்கள் முன்னேவருதலால் வாழ்வுபெற்றீர்கள்; யாகசேனன்
– துருபதராசன், இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் – (உங்களோடு)
சம்பந்தஞ்செய்து உங்களுறவைக் கொள்ளக்கருதிய விருப்பத்தால், அன்று-
அக்காலத்தில், வேள்வி அழலிடை- யாக அக்கினியிலே, அணங்கினை-சிறந்தமகளை
(திரௌபதியை), அளித்தான் – பெற்றான்; அந்த சுணங்கு அணி முலையாள் –
தேமல் படர்ந்த தனங்களையுடைய அக்கன்னிகை, நாளை – நாளைக்கே,
தொடையல் சூட்டுவள் – மணமாலையைச் சூட்டுவாள்; (எ-று.)-மாது, ஓ –
ஈற்றசைகள்.
‘முந்தவந்து நீர் வாழ்வு செய்தீர்’ என்பதற்கு – திரௌபதி மணமாலை
சூட்டும் தினம் நாளைக்கே யாதலால் நீங்கள் முந்திவந்ததனால்வாழ்வுபெற்றவராவீர்
என்பது கருத்து. வாழ்வுசெய்தீர் என்றது, எதிர்காலம் இறந்தகாலமாகக்
சொல்லப்பட்ட காலவழுவமைதி, அணங்கு – மோகினி யென்னும் பெண்தெய்வம்;
இச்சொல்-இலக்கணையாய், அழகிற்சிறந்த பெண்ணை யுணர்த்தும், சுணங்கு –
நிறவேறுபாடு: பொன்னுரைபோலச் சிறிதும் பெரிதுமாகப் படர்வது
இப் பகல் இரவும் வைகாது ஏகி, ஆங்கு எய்தும்; அங்கண்,
அப் பகல் மன்றல் பெற்றால், தோற்றுதல் ஆண்மை’ என்று,
செப்பியே முனிவன் போக, சிறுவரும் பெரிய கங்குல்,
மைப் புறப் பார்த்தன் செங் கை மணி விளக்கு ஆர, போனார்.
இ பகல் இரவுஉம் வைகாது – இன்றைப் பகலும் இராத்திரியும்
எங்குந்தங்காமல், ஏகி – விரைவாகநடந்து, ஆங்கு எய்தும் – அவ்விடத்துக்கு
[சுயம்வரமண்டபத்துக்கு)ப் போய்ச்சேருங்கள்; அங்கண் – அவ்விடத்தில், அ
பகல் -அத்தினத்தில், (நாளைக்கு), மன்றல் பெற்றால்-(திரௌபதியின்)
மணமாலையைப்பெற்றபின்பு, தோற்றுதல் – (அங்கு உங்கள் உண்மைவடிவத்துடன்)
வெளிப்படுதல்,ஆண்மை – ஆண்தன்மைக்குஉரிய செயலாம், என்று செப்பி-
என்றுசொல்லி,-முனிவன் – அவ்வியாசமுனிவன், போக-செல்ல,-சிறுவர்உம் –
யௌவனபருவமுடையவராகிய பாண்டவர்களும், பெரிய கங்குல் – நீண்ட
அவ்விராப்பொழுதில், மைபுறம் பார்த்தன் செம் கை மணி விளக்கு
ஆரபோனார் – கருநிறமானஉடம்பையுடைய அருச்சுனனது சிவந்தகையில்
அழகியவிளக்குப் பொருந்தச்சென்றார்கள்; (எ-று.)
அவ்விரவில் மிக்கதைரியசாலியான அருச்சுனன் வெளிச்சத்துக்காகக்கையில்
தீக்கோல்பிடித்து முன்னேவழிகாட்டிக்கொண்டு செல்ல, மற்றையோர் அவன்பின்
சென்றன ரென்பதாம், நீங்கள் அந்தணவேடத்தோட சென்று வில்வளைத்து
இலக்கைஎய்து திரௌபதியின்மணமாலையைப்பெற்றால்,
அவ்விஷயத்திற்பொறாமை கொண்டவராய் அரசரனைவரும் எதிர்த்துப்
பொருவராதலின் அவர்களைவென்றபின்னரே வெளிப்படுதல், நெடுநாளாக
மறைந்திருந்தஉங்களது ஆண்மைஉங்கள் பகைவர்முதலியோர்க்கு நன்கு
புலப்படுதற்கு ஏற்றவழி யென்னுங் கருத்தால், ‘அப்பகல்மன்றல் பெற்றால்
தோற்றுதலாண்மை’ என்றான். திரௌபதியின் மணத்திற்கருத்தூன்றிய அவர்கட்கு
இடையேநேர்ந்த அவ்விராப் பொழுதுநீட்டித்ததாகத்தோன்றிய தென்பதுபட,
‘பெரியகங்குல்’ என்றார். இங்கே, ‘சிறுவர்’ என்றது -இளமைப்
பருவமுடையோரென்றபொருளோடு, அவ்வியாசமுனிவனது பௌத்திர
ரென்ற கருத்தையுங் காட்டும். மன்றல்-விவாகம்; இலக்கணையாய்
அதைநிச்சயித்தற்குஉரிய சுயம்வரமாலையை உணர்த்திற்று
புத்திரன் பேரர், கங்கைப் பூந் துறை அடைந்த போதில்,
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி, வெங் கொடும் போர் செய்ய,
சித்திரத்தேரோன்தன்னை, தேவர் கோன் மதலை, செந் தீ
அத்திரத்து, இருந்தைத் தேரோன் ஆக்கினன், இமைப்பின் அம்மா!–சித்திரரதனென்னும்கந்தருவனை அருச்சுனன்
வெல்லுதல்.
கங்கை பூ துறை-கங்காநதியினது பொலிவுள்ள நீர்த்துறையை, புத்திரன்
பேரர்-(அக்கங்கையினது) குமாரனாகிய வீடுமனுடைய பௌத்திரராகிய
அப்பாண்டவர்கள், அடைந்த போதில் -அடைந்தசமயத்தில்,-குத்திரம் விஞ்சை
வேந்தன் – வஞ்சனையையுடைய மாயவித்தையையுடைய தலைவனாகிய
(சித்ரரதனென்னும்) கந்தருவன், குறுகி – நெருங்கிவந்து, வெம் கொடு போர் செய்ய-
மிகக்கொடியபோரைச் செய்ய,-(அப்போரில்), தேவர் கோன் மதலை – தேவர்கட்கு
அரசனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன், இமைப்பின் – ஒருமாத்திரைப்
பொழுதிலே, சித்திரம் தேரோன் தன்னை-அழகிய தேரையுடைய
அந்தச்சித்திரரதனை,செம் தீ அத்திரத்து-சிவந்த நெருப்பு மயமான ஆக்கி
நேயாஸ்திரத்தினால், இருந்தைதேரோன் ஆக்கினன்-கரிபட்ட
தேரையுடையவனாகச்செய்தான்[அவனதுதேரைக்கரியாகுமாறு எரித்தான்
என்றபடி]; (எ-று.) – அம்மா – வியப்பிடைச்சொல்,
பாண்டவர் கங்கையைச்சார்ந்து அதன் துறையிலிறங்குமளவில், அங்குப்
பலமகளிருடனே ஜலக்கிரீடை செய்துகொண்டிருந்த சித்திரரத னென்னும்
மறுபெயர்கொண்ட அங்காரபர்ணனென்னும் கந்தர்வன், இவர்கள்வருகை தன்
நீர்விளையாட்டுக்குத் தடையாதலை நோக்கிக் கோபங்கொண்டவனாய், இவர்களை
‘இங்கு வரலாகாது’ என்று தடுத்து வீரவாதங்கூறி மாயப்போர் தொடங்க,
அப்போரில்முன்நின்ற அருச்சுனன் ஆக்கிநேயாஸ்திரத்தால் அவன்மாயைகளை
ஒழித்ததோடுஅவனதுதேரையும் கரியாக்கின னென்பதாம். “ஸ்த்ரைணக்லுப்த
ஜலகேலிம் உத்த தம்-தத்ரசித்ரரத மாஹி தாஹவம் – ஆததாந தநயஸ் ஸசீபதே:-
ஆஸு தக்தரதம்அஸ்த்ரவஹ்நிநா” என்றது பாலபாரதம். இவனை மாயவித்தை
வல்லவனென்றும்கந்தர்வனென்றும் வியாசபாரதங் கூறுவதற்கு ஏற்ப,
விஞ்சைவேந்தனென்பதற்கு -வித்தியாதர ராசனென்று கொள்ளாமல்
மாயவித்தையில்வல்ல கந்தர்வ ராஜனென்றுபொருள் கூறப்பட்டது. இருந்தை-
கரி.
தோற்றவன் திரிந்து மீண்டு, தோழன் அவ் விசயற்கு ஆக,
ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி,
சாற்றும் உற்கச தீரத்துத் தௌமிய முனியைக் கண்டு,
போற்றி, மற்று அவன்தனோடும் புன் நெறிப் புறம் விட்டாரே–சித்திரரதன்சொற்படி பாண்டவர் தௌமியனுடன்
வழிகடத்தல்
தோற்றவன்-(இவ்வாறு அருச்சுனனிடம்) தோல்வியடைந்த சித்திரரதன்,
மீண்டு திரிந்து-பின்பு பகைமை நீங்கி, அ விசயற்கு தோழன் ஆக – அந்த
அருச்சுனனுக்கு நண்பனாக,-(அதன்பின் பாண்டவர்கள்), ஆற்று அரு புனல்உம்
யாறுஉம்- கடத்தற்கு அரிய நீர்நிலைகளையும் நதிகளையும், அவன் துணை ஆக
நீந்தி – அந்தச்சித்திரரதனைத் துணைவனாகக்கொண்டு அவனுதவியாற்கடந்து,-
சாற்றும் உற்கசதீரத்து தௌமியமுனியை கண்டு போற்றி -(அந்தக்கந்தர்வனாற்)
கூறப்பட்ட உற்கசதீர்த்தத்தின் கரையிலே தௌமியனென்னும் முனிவனைக்
கண்டுவணங்கி, மற்று – பின்பு, அவன்தனோடுஉம் புல் நெறி புறம் விட்டார் –
அந்தத்தௌமியனுடனே சென்றுசிறிதுமிச்சமாய்நின்ற வழியினெல்லையைக்
கடந்தார்கள்; (எ -று.)
அருச்சுனன் சித்திரரதனது தேரைக் கரியாக்கியபின் அந்த
அஸ்திரத்தினாலேயே அவனது அம்புகளையும் உடல்வலிமையையும் ஒடுங்கச்செய்து
அவனைத் தலைமயிர்பற்றியிழுத்துவந்து தருமபுத்திரனது பாதத்திற்போகட,
தருமபுத்திரன் அவன்மனையாளான கும்பீநசியின் வேண்டுகோளின்படி
அருள்கொண்டு அவனை விடுவிக்க, அவன் இவர்கள் பாண்டவரென்று அறிந்து
தன்பிழையைப் பொறுக்கும்படி வேண்டிச் சரணமடைந்து அபயமளிக்கப்பெற்றபின்
நண்புபூண்டு சிறந்த ஐந்நூறு குதிரைகளைக்கொடுப்பதாக வாக்களித்துத் தானறிந்த
மாயவித்தையை அருச்சுனனுக்குக் கற்றுக்கொடுத்து அதற்கு ஈடாக அவனிடமிருந்து
ஆக்கிநேயாஸ்திரத்தை உபதேசம்பெற்று அதன்பின் அவர்களைநோக்கி
‘உங்களுக்குப் புரோகிதனொருவன் இருத்தல் வேண்டும்’ என்று சிலகதைகளை
யெடுத்துக்காட்டிக் கூறி, ‘அதற்கு ஏற்றவன் நீங்கள் செல்லும்வழியிலுள்ள
உற்கசமென்னுந் தீர்த்தத்தின் கரையி லிருக்கிறவனும் தேவலமுனிவனது தம்பியுமான
தௌமியமுனிவனே’ என்றும் சொல்லி, இடையிலுள்ள ஆற்று நீர்ப்பெருக்கைக்
கடத்தற்குவெண்டியநாவாயையும் உதவி, அப்பாற் செல்லுதற்கு நல்வழியையும்
அடையாளத்தோடுசொல்லி அனுப்பியபின், அவ்வாறே, பாண்டவர் இடைவழியில்
அம்முனிவனைக் கண்டு வணங்கித் துதித்து வேண்டிப்புரோகிதனாகக்கொண்டு
அப்பால் அவன் வழிகாட்டிக்கொண்டு முன்செல்ல அவனைத்தொடர்ந்து
நடப்பாராகிஅவன் கூறும் இனியவார்த்தைகளால் வழிநடை வருத்தந் தெரியாமலே
அரியவழியை எளிதிற்கடந்து சென்றனரென்ற விவரத்தைப் பிறநூல்களால்அறிக.
‘திரிந்து ‘என்றவிடத்து ‘தெரிந்து’ என்றும்படமுண்டு
புலர்ந்தன, கங்குல் போதும், பொழிதரு பனியும்; சேர
மலர்ந்தன, மனமும் கண்ணும்; வயங்கின, திசையும் பாரும்;
அலர்ந்தன, தடமும் காவும்; ஆர்த்தன, புள்ளும் மாவும்;
கலந்தன, குருகும் பேடும்; கலித்தன, முரசும் சங்கும்.-சூரியோதய வருணனை.
கங்குல் போதுஉம்-இராப்பொழுதும், பொழிதருபனிஉம்-(அவ்விரவிற்)
சொரிகிற பனியும், சேர புலர்ந்தன-ஒழுங்கு நீங்கின;(அப்பொழுது), மனம்உம்
கண்உம்- (நிலவுலகத்தாரது) மனமும், கண்களும், மலர்ந்தன-மலர்ச்சிபெற்றன;
திசைஉம்பார்உம்-எட்டுத்திக்குக்களும் பூமியும், வயங்கின – விளக்கம்பெற்றன;
தடம்உம்காஉம்-தடாகங்களும் சோலைகளும், அலர்ந்தன – மலர்ச்சி
பெற்றுவிளங்கின; புள்உம்மாஉம் – பறவைகளும் விலங்குகளும், ஆர்த்தன –
ஆரவாரஞ்செய்தன; குருகுஉம்பேடுஉம்-சக்கரவாகப் பறவைகளும் அவற்றின்
பேடைகளும், கலந்தன-(ஒன்றோடொன்று) கூடின; முரசும் சங்கும்-, கலித்தன-
முழங்கின; (எ-று.)
கங்குற்போதுக்குப் புலர்தல்-விடிதல். பனிக்குப் புலர்தல்- அழிதல். மனத்துக்கு
மலர்ச்சி-உணர்வுறுதல், கண்ணுக்கு மலர்ச்சி – விழிப்பு. திசைகளுக்கும் பாருக்கும்
வயங்குதல்-வெளிச்சம்பெறுதல். தடாகம் அலர்தல்-சூரியனுதித்தவளவிலே
தாமரைமலரப்பெறுதலும், நீர்தெளிவும், சோலையலர்தல் – ஒடுக்கமொழிதல்.
சக்கரவாகப்பறவை இரவில் ஆணும் பெண்ணும் பிரிந்திருந்து பகலிற் கூடும்
இயல்பின தாதலால், அத்தன்மையை ‘கலந்தன குருகும் பேடும்’ என்றார்.
உதயகாலத்தில் மங்களகரமாக முரஜ சங்கங்களை முழக்குதல், இயல்பு.
இரண்டிரண்டுபொருளின் வினைகளுக்கு உடனிகழ்ச்சி கூறியது- உடனவிற்சியணி.
இதனோடு தன்மைநவிற்சியணி கலந்துவந்தது. இதுமுதல் குலாலனது இருக்கையைச்
சேர்தற்குமுன் வரையிலுள்ள வருணனைகள் பாலபாரதத்தில் இல்லை
குன்றமும் கொடிய கானும், கூர் இருள் கங்குல், நீங்கி,
நன்றுநன்று, உதவ வந்தீர்; நடந்து, நீர் இளைத்தீர்போலும்!’
என்று கொண்டு, உவகையோடும், இன் மலர்க் கழுநீர் வாச
மன்றல் அம் தென்றல் வீசி, வழி விடாய் தணித்தது அன்றே.-உதயகாலத்துத் தென்றல் இனிமையாக வீசுதல்
மன்றல் அம் தென்றல் – நறுமணத்தையுடைய இனிய
தென்றற்காற்றானது, – (பாண்டவர்களைநோக்கி), ‘கூர் இருள் கங்குல்-
மிக்கஇருளையுடைய இரவிலே, குன்றம்உம் கொடிய கான்உம் நீங்கி-மலைகளையும்
கொடுமையையுடைய காடுகளையுங் கடந்து, உதவ வந்தீர்-(எனதுநண்பனாகிய
அக்கினியின் மகளான திரௌபதியை மணம்புரிந்து). உதவுதற்கு வந்தீர்கள்; நன்று
நன்று-(உங்கள்வரவு) மிகவும்நல்லது; நீர் நடந்து இளைத்தீர்போலும் – நீங்கள்
வழிநடந்துவருவதால் இளைப்படைந்தீர்போலும்’, என்று கொண்டு – என்று
சொல்லிக் கொண்டு, உவகையோடும் – மகிழ்ச்சியுடனே, இன் மலர் கழுநீர் வாசம்
வீசி-இனிய செங்கழுநீர்மலர்களின் வாசனையை மேல்வீசி, வழிவிடாய் தணித்தது-
(அவர்களுடையவழிநடைவருத்தத்தைத் தணியச்செய்தது;
காலையில் இயல்பாக மந்தகதியோடு இனிது வீசுகிற தென்றலை, பாண்டவர்
வழிவிடாயைத் தணித்தற்கென்றே வீசுவதாக ஒருபயனைக்கற்பித்துக்கூறியது –
பயன்தற்குறிப்பேற்றவணி. இங்ஙன்இனியதென்றல்வீசியது. பாண்டவர்க்குச்
சுபசூசகம்.நன்று நன்று-அடுக்கு, மகிழ்ச்சிபற்றியது. அன்று, ஏ – ஈற்றசைகள்
வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கிச் சுற்றும்
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க,
வண்டு ஒன்று
இறகரால் வீசி, உள் புக்கு, இன் மது நுகர்தல் கண்டு,
நெறியில் நல் நிமித்தம் ஆக, நெஞ்சுற நினைந்து, சென்றார்.-ஐந்துகவிகள்-பாண்டவர்க்குநிகழும் நன்னிமித்தங்
கூறும்.
வெறி படு – தேன்பொருந்திய, முளரி மொக்குள் – தாமரையரும்பு,
விரிபதன் – மலருஞ் சமயத்தை, நோக்கி – எதிர் பார்த்துக்கொண்டு, பொறி வரி
வண்டின் ஈட்டம்-உடற்புள்ளிகளையும் இசைப்பாட்டையுமுடைய வண்டுகளின்
கூட்டங்கள், புறத்து சுற்றுஉம் இருந்து இரங்க-வெளியிலே சுற்றிலும் இருந்து
ஆரவாரிக்க,-வண்டு ஒன்று -ஒருவண்டானது, இறகரால் வீசி உள்புக்கு-(தன்)
சிறகுகளால் (அத்தாமரையரும்பின் இதழ்களை) நெகிழ்த்தி அதனுள்ளே புகுந்து,
இன் மது நுகர்தல் – இனிய தேனையுண்ணுதலை, கண்டு – (பாண்டவர்கள்) பார்த்து,
– நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சு உற நினைத்து சென்றார்-(அதனைத் தமக்கு)
வழியிலே நேர்ந்த நற்குறியாக மனத்திற்பொருந்த நினைத்து வழிச்சென்றார்கள்;
(எ-று.)
திரௌபதியைக் கருதி வந்த பலர் வாளாசூழ்ந்துநிற்கத்தாம் தடையறச்
சென்றுஅவளைப் பெறுதல் கூடு மென்பதற்கு, வண்டின்செயலை ஓர் அறிகுறியாக
எண்ணிச்சென்றனரென்க
வண் துறை மருங்கின், ஆங்கு, ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே,
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த,
விண்டு உறை கிழிய ஓடி, வென்று, ஒரு வாளை தன் வாய்க்
கொண்டு உறை வலிமை நோக்கி, குறிப்பினால் உவகை கூர்ந்தார்.
ஆங்கு-அவ்வழியிலே வண் துறை மருங்கின்-செழிப்பான ஒரு
நீர்த்துறையின் ஓரத்திலே, ஓர் மாங்கினி வீழ்தல் -ஒரு மாம்பழம் விழுந்ததை,
கண்டு-,தண் துறை மீன்கள் எல்லாம்-குளிர்ச்சியான அந்நீர்த்துறையிலுள்ள
மீன்கள்யாவும்,தம் தமக்கு இரை என்று எய்த-(அதனைத்) தங்கள் தங்களுக்கு
இரையாகக்கடவதென்று எண்ணி(க் கவர்தற்கு) வர, ஒரு வாளை – ஒரு
வாளைமீன், உறைவிண்டு கிழிய ஓடி – நீர் கிழிந்துபிரியும்படி ஓடிவந்து, வென்று-
(அம்மீன்களையெல்லாம்) பயன் பெறாதொழியச்செய்து, தன் வாய் கொண்டு உறை-
(அம்மாங்கனியைத்) தன் வாயினாற் கவர்ந்துகொண்டிருந்த, வலிமை-வல்லமையை,
நோக்கி-(பாண்டவர்கள்) பார்த்து,-குறிப்பினால் – அந்தக்குறிப்பினால், உவகை
கூர்ந்தார்-; (எ-று,)
திரௌபதியைக்குறித்துத் தம் தமக்கு உரியளாகக்கடவளென்ற விருப்பத்தோடு
பற்பல அரசர்வந்து சூழ்ந்துநிற்கத் தாம் தடையறச்சென்று அவர்களைப்
பயன்பெறாதொழிபவராக்கி அவனைக் கைக்கொண்டு கவலையற நுகர்ந்து வாழலா
மென்பதற்கு, மாங்கனியை மீன்களுக்குஇல்லாமல் வாளைமீன் கவர்ந்த இச்செயலைச்
சூசகமாகக்கண்டு மிகமகிழ்ந்தனர்.
‘மாக் குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண,
தாக்கு உரல் அடி கொள் யானைத் தரணிபர் எவரும் வந்தார்;
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர்! விரைவுடன் வம்மின்!’ என்று,
கூக்குரல் விளிப்ப போலும், கோகிலக் குரலும் கேட்டார்.
மா-கருநிறமான, குரல் அளகம் – கூந்தலையுடைய, வல்லி-
பூங்கொடிபோன்ற திரௌபதியினது, வதுவையின் அழகு-கலியாணக்காட்சியை, காண
– காணுதற்கு, தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவர்உம் வந்தார் –
(பகைவரைத் தாக்குகின்ற உரல்போன்ற கால்களைக் கொண்ட யானைச்
சேனையையுடைய அரசர்களெல்லோரும்வந்தார்கள்; வீக்கும் நல் மிளிர் பொன்
பூணிர்தரித்த நல்ல விளங்குகிற பொன்னணிகளையுடையர்களே! விரைவுடன்
வம்மின் – (நீங்கள் அவளைமணஞ்செய்தற்கு) விரைவாக வாருங்கள், ‘என்று-,
கூக்குரல் விளிப்ப போலும் – உரத்துக்கூவுகிற குரலால் (தம்மை) அழைப்பன
போன்ற, கோகிலம் குரல்உம் – குயில்களின் குரலையும், கேட்டார் –
(பாண்டவர்கள்) கேட்டார்கள்;
இது, தற்குறிப்பேற்றவணி. பாண்டவர்தவிர மற்றைய அரசர்களின்
வருகைதிரௌபதியை மணஞ்செய்துகொள்ளுதற்கன்றி அவளது மணக்கோலத்தைப்
பார்த்தற்காகவே முடிவதனால், ‘வதுவையினழகு காணத் தரணிபரெவரும், வந்தார்’
எனப்பட்டது. ‘வீக்குநன்மிளிர்பொற்பூணீர்’ என்றது, முன்னையநிலைமையைப்பற்றியது.
மா-கருமை. குரலளகம்-ஒருபொருட்பன்மொழி; இரண்டும், பெண்மயிரென்னும்
பொருளன. மாக் குர லளகம் – வண்டுகள் ஒலிசெய்யும் கூந்தலெனினுமாம்
நீடுதல் இல்லை; இன்றே, நிருபதி கன்னி மன்றல்
கூடுதல் இவர்க்கு உண்டாகும்; கொற்றவர் குறை பொறாதே,
ஓடுதல் உண்மை’ என்னா, தோகைகள் ஓகையோடும்
ஆடுதல் நோக்கி நோக்கி, அகம் மகிழ்ந்து, ஏகினாரே.
நிருபதி கன்னி மன்றல்-(பாஞ்சால) ராசனுடைய புத்திரியான
திரௌபதியின் விவாகம், நீடுதல் இல்லை-நீட்டித்தவில்லை; இன்றுஏ-இன்றைக்கேயாம்;
இவர்க்கு கூடுதல் உண்டாகும் – இப்பாண்டவர்கட்கு (அவ்விவாகம்)
கைகூடும்;(அதனால்), கொற்றவர்-மற்றையரசர்கள், குறை பெறாது-(தமக்கு நேர்ந்த)
அவமானத்தைப் பொறுக்காமலே, ஓடுதல் – ஓடிப்போதல், உண்மை – நிச்சயம், ‘
என்னா-என்றுகருதி, (அதனால்), தோகைகள்-மயில்கள், ஓகையோடும் ஆடுதல் –
மகிழ்ச்சியோடு கூத்தாடுதலை, நோக்கி நோக்கி, ‘ (பாண்டவர்கள்) அகம் மகிழ்ந்து
ஏகினார்-மனமகிழ்ந்து சென்றார்கள்; (எ – று.) நிருபதி=ந்ருபததி.
இதுவும்-தற்குறிப்பேற்றவணியே. மயில்கள் ஆடுதலை, இங்ஙனம்
கருதியாடுவனவாக இவர்கள்கொண்டனரென்க. நோக்கி நோக்கி-அடுத்தடுத்துப்
பலவிடத்தும் உற்றுப்பார்த்து என்றபடி.
பூ எலாம் சுரும்பு மொய்ப்ப, புனல் எலாம் புள்ளு வைக,
மா எலாம் துணையின் மேவ, மரன் எலாம் வல்லி புல்ல,
ஏ எலாம் பயின்ற விற் கை ஏற்று இளஞ் சிங்கம் போல்வார்
கா எலாம், மருங்குதோறும் கண்டு, கண் களித்துப் போனார்.
கா எலாம்-(இடைவழியிலுள்ள) சோலைகள்யாவும், மருங்கு
தோறுஉம் -தம் இடங்களிலெல்லாம், பூ எலாம் சுரும்பு மொய்ப்ப –
மலர்களிலெல்லாம் வண்டுகள்மொய்க்க, புனல் எலாம் புள்ளு வைக-நீரிலெல்லாம்
பறவைகள் தங்க, மா எலாம்துணையின் மேல்-விலங்குகளெல்லாம் (தத்தமக்குரிய)
துணியான பெண்பாலுடனேபொருந்த, மரன் எலாம் வல்லி புல்ல –
மரங்களிலெல்லாம் கொடிகள் தழுவ,-ஏஎலாம் பயின்ற வில் கை ஏறு
இளஞ்சிங்கம் போல்வார் – அம்புத்தொழில்களை யெல்லாம்பழகியவில்லை
யேந்துங்கையையுடைய, இளமையான ஆண்சிங்கத்தைப்போன்ற பாண்டவர்கள்,-
கண்டு-(அவற்றைப்) பார்த்து, -கண் களித்து நின்றார்- (சுபசூசகமாகக் கருதியதால்)
கண்கள் களிப்படையப்பெற்று நின்றார்கள்; (எ-று.)
வண்டு மலரில்மொய்த்துத்தேனையுண்ணுதலையும், பறவைகள் நீரிற் குடைந்து
விளையாடுதலையும்,விலங்குகள் துணையோடு மேவுதலையும், மரங்களைக் கொடிகள்
தழுவுதலையும், தாம் திரௌபதியைப்பெற்றுக் கூடிக்கலந்து இன்பமனுபவித்தலை
முந்தித்தெரிவிக்கும் நன்னிமித்தமாகக்கொண்டனர், ‘ஏவெலாம்’ -பெயர்ச்சொல்
ஏகாரத்தின்முன் வகரவுடம்படுமெய் தோன்றிற்று. பாண்டவர் ஐவராதற் கேற்ப
நன்னிமித்தங்கூறும் பாடல்களும் (செ.12-16) ஐந்தாக அமைத்தார்போலும்
வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போலப்
பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேசஅருஞ் சிறப்பிற்று ஆகி,
பூரண கும்பம், பொற் கோபுரங்களால் பொலிந்து தோன்றும்,
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார்.-பாண்டவர் பாஞ்சாலநகரத்தின் மதிலைக் காணுதல்.
வாரணம் மாயை சூழ்ந்த – (பொருள்களை) விளங்கவொட்டாது)
மறைக்குந்தன்மையுள்ள மாயையாற்சூழப்பட்ட, மாயவன் தோற்றம்போல-
திருமாலினதுசொரூபம்போல, போ ஒளிபம்பி-மிக்கஒளிசிறந்து, யார்க்குஉம் பேசு
அரு சிறப்பிற்றுஆகி-எத்துணைவல்லோர்க்கும் சொல்லுதற்கரியசிறப்பையுடையதாய்,
பூரண கும்பம்பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் – பூர்ண
கும்பங்களினாலும் அழகியகோபுரங்களினாலும் விளக்கமுற்றுத் தோன்றுகிற,
ஆரவம் மிகுந்து பல் புள்அகழி சூழ் புரிசை-ஆரவாரம் மிக்க பல
நீர்ப்பறவைகளையுடைய அகழியினாற்சூழப்பட்டதான் (அந்நாகரத்தின்) மதிலை,
கண்டார்-(பாண்டவர்கள்)பார்த்தார்கள்;
ஒளிமயமாய் மனமொழிமெய்களுக்கு எட்டாததாய் எங்கும் வியாபகமாயிருப்பது,
பரப்பிரமமென்கிற திருமாலினுடைய சொரூபம், மூலப்பிரகிருதியும் சீவனும் காலமும்
பிரபஞ்சமும் சராசரங்களும், அந்தப்பகவானுடைய உருவங்களாம்.
தத்துவங்களையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கிற அந்தப்பரமாத்மாவினது
பிரபஞ்சவடிவமான சொரூபத்தை, மாயையென்றும் அவ்யக்தமென்றும்
பிரதானமென்றும் மறுபெயர்களையுடையபிரகிருதிசூழ்ந்திருக்கின்றதென்ப. இங்கு,
சர்வவியாபகமான பகவானது சொரூபத்தை- மிகவுயர்ந்த மதிலுக்கு உவமையாகவும்,
வியக்தமான பிரபஞ்சசொருபத்தைச் சூழந்த அவ்யக்தமான பிரகிருதி சொரூபத்தை-
அம்மதிலை அடிப்புறத்திலேசூழ்ந்துள்ள அகழிக்குஉவமையாகவும் கூறினார்.
அன்றியும், எம்பெருமானது திவ்வியசொரூபத்தை அனைவரும் எளிதில்
அடையவொண்ணாதபடி சூக்ஷ்மரூபமான மாயை இடைநின்று
தடைசெய்கின்றதுபோல, மதிலை அனைவரும் எளிதிற் சேரவொண்ணாதபடி
தடைசெய்கின்றது அகழியென்றுங் கொள்ளலாம்; வாரணம் – தடை அலங்காரஞ்
செய்யப்பட்டகுடங்களை நீர்நிறைத்து மங்களகரமாக முன்வைத்தல் மரபு.
மங்கல முழவம் விம்ம, மன்னு பல் இயங்கள் ஆர்ப்ப,
சங்குஇனம் முழங்க, எல்லாத் தானையும் பரந்து சூழ,
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும்,
துங்க வேல் துருபதன்தன் தொல்லை மா நகரி புக்கார்.-பாண்டவர் பாஞ்சாலநகரத்தினுட் புகுதல்.
மங்கலம் முழவம் விம்ம – மங்கள முரசங்கள் ஒலிக்க, மன்னு
பல்இயங்கள் ஆர்ப்ப-(மற்றும்) பொருந்தியபலவகைவாத்தியங்கள் முழங்க, சங்கு
இனம் முழங்க – சங்குக்கூட்டங்கள் ஆரவாரிக்க, எல்லாம் தானைஉம் பரந்து சூழ-
நால்வகைச்சேனையும்பரவிச் சூழ்ந்துநிற்க, எங்கண்உம் நெருங்கி வைகும்-
அந்நகரத்தில் எல்லாவிடத்திலும் நெருங்கியிருக்கின்ற, இராச மண்டலங்களோடுஉம்-
அரசர்கூட்டங்களுடனே, (பாண்டவர்களும்), துங்கம் வேல் துருபதன்தன் தொல்லை
மா நகரி புக்கார்-சிறந்தவேலையுடைய துருதனது பழைய பெரிய அந்நகரத்தினுட்
சென்றார்கள்; (எ-று.)
பல்இயம்-கொட்டுவன ஊதுவனமுதலியன. விம்மஆர்ப்பமுழங்க என்று
ஒருபொருளிற்பன்மொழிகள்வந்தமை, பொருட்பின்வருநிலையணி.
தொடங்கியும், தொடக்கம் தொட்டுத் துகள் அற வளர்ந்தும், மீள
மடங்கியும், செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம்,
முடங்கிய சார்ங்கச் செங் கை முகுந்தன் வாய்ப் புகுந்து காலத்து,
அடங்கிய உதரம் போன்றது, அந்த மா நகரி அம்மா!–அந்நகரம் அப்பொழுது இருந்த தோற்றம்.
அந்த மா நகரி-பெரிய அந்தப்பாஞ்சாலநகரமானது, தொடங்கிஉம் –
தோன்றியும், தொடக்கம் தொட்டு துகள் அறவளர்ந்துஉம்-அத்தோன்றிய
காலம்முதல்பழுதறவளர்ந்தும், மீளமடங்கிஉம் – பின்பு அழிந்தும், செல்லுகின்ற-
(இவ்வாறு)நடைபெற்றுவருகிற, மன் உயிர் – மிக்க பிராணிகளையுடைய, உலகம்
எல்லாம் -உலகங்கள் யாவும், முடங்கிய சார்ங்கம் செம் கை முகுந்தன் வாய்
புகுந்த காலத்து -வளைந்து சார்ங்கமென்னும்வில்லையேந்திய சிவந்த
திருக்கையையுடைய திருமாலினதுவாயினுட் புகுந்த பொழுது, அடங்கிய-
(அவையாவும்) அடங்கப்பெற்ற,உதரம்-(அவ்வெம்பெருமானது) திருவயிற்றை,
போன்றது – ஒத்தது; (எ-று.)
அம்மா – வியப்பிடைச்சொல். யாவும் அழியும் யுகாந்த காலத்திலே,
பிரளயசமுத்திரத்திலே மகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றிற்கொண்டு
சிறுகுழந்தைவடிவமாய் ஆதிசேஷனது அமிசமானதோ ராலிலையின்மீது
பள்ளிகொண்டிருந்த பின்பு பிரளயம் நீங்கியவுடன் அவ்வுலகங்களை யெல்லாம்
வெளிப்படுத்தியருளுகின்றன னென்பது, வரலாறு. அப்பொழுதுஉலகத்திலுள்ள
சகலசராசரங்களும் அடங்குகின்ற திருமாலின் திருவயிற்றை, உலகத்து உயிர்கள் பல
வந்து கூடி நெருங்கியுள்ள பாஞ்சாலநகருக்கு உவமை கூறினார். காலவசத்தால்
சிருஷ்டி ஸ்திதி சங்காரங்கள் பிரவாகம் போல அவிச்சிந்நமாக நடந்து வருதலும்,
உயிர்கள் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து இருந்து இறத்தலும், முன் இரண்டு
அடிகளில் விளங்கும். முகுந்தன்- முத்தியுலகவின்பத்தையும் இவ்வுலகவின்பத்தையும்
(தன் அடியார்க்குத்) தருபவ னென்று பொருள்படும்.
குழைப் புறம் கடந்த செங் கண், குறு நகை,
கொவ்வைச் செவ் வாய்,
இழைப் பொலி, முலையினாளுக்கு இற்றைநாள் வதுவை’ என்று,
மழைப் புற மாடம் ஏறி, வருநரை மலர்க் கை காட்டி,
அழைப்பன போன்ற, வீதி அணி கொடி ஆடை எல்லாம்.-அந்நகரத்து வீதிகளில் நாட்டிய துவசங்களின்
வருணனை.
வீதி அணி கொடி ஆடைஎல்லாம் – அந்நகரத்து வீதிகளின்
அலங்காரமாக நாட்டப்பட்ட துவசங்களின் சீலைகளெல்லாம்,-குழை புறம் கடந்த –
காதின்புறத்தைக் கடந்து சென்ற [மிகநீணட,]. செம் கண் – சிவந்தகண்களையும்,
குறுநகை – புன்சிரிப்பையும், கொவ்வை செம்வாய் – கொவ்வைப் பழம்போலச்
சிவந்த வாயையும், இழை பொலி முலையினாளுக்கு -(தம்மிடத்து அணிந்த)
ஆபரணங்கள் விளங்குதற்குக் காரணமான தனங்களையுமுடைய திரௌபதிக்கு,
இற்றை நாள் வதுவை என்று-இன்றைத்தினம் சுயம்வரமென்று தெரிவித்து, மழை
புறம் மாடம் ஏறி – மேகங்களைத் தம்மேலுடையனவான [மிகவுயர்ந்த]
மேல்மாளிகைகளின்மீது ஏறி, வருநரை மலர் கை காட்டி அழைப்பன போன்ற-
(அவ்விவாகத்தின்பொருட்டு) வருகின்றபாண்டவர்களை (விரைந்து வருமாறு)
மலர்போன்ற கைகளைக்காட்டியழைப்பன போன்றன;
இங்கு ஆடைகளைக் கைகளாகவும், கொடிகளை அக்கைகளையுடையராகவும்
கொள்க. தற்குறிப்பேற்றவணி. திரௌபதியின் கண்கள் மிக நீண்டுள்ளன என்ற
கருத்தை விளக்க, ‘குழைப்புறங் கடந்த செங்கண்’ என்றார். குழை-ஒருவகைக்
காதணி; இலக்கணையாய், காதை யுணர்த்திற்று.
விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல்,
மண்டு அகில் புகையில் மூழ்கி, ஆவண மறுகில் செல்வம்
கண்டு கண்டு, அரிஏறு ஆனின் கவினுடை நெடுந் தோல்
போர்த்துக்
கொண்டன செயலார், ஆங்கு, ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார்.-பாண்டவர் அவ்வூரில் ஒருகுயவன்வீட்டில்
இடங்கொள்ளுதல்.
அரி ஏறு – ஆண்சிங்கம், ஆனின் கவின் உடை நெடு தோல்
போர்த்துக்கொண்டு அன-பசுவினுடைய அழகுள்ள நெடியதோலைப்
போர்த்துக்கொண்டாற் போன்ற, செயலார்-செய்கையையுடையவர்களாகிய
பாண்டவர்கள்,- விண்தலம்புதைத்த- ஆகாயத்தினிடம்முழுதையும் மூடிய, பைம்
பொன் துகில் – பசும்போன்சீலையினால், இடு – இடப்பட்ட,விதானம் மேற்கட்டியின்
நீழல்-நிழலிலே (கடந்துசென்ற), மண்டு அகில் புகையில் மூழ்கி- (அங்கு)
நெருங்கியஅகிற்புகையிலே, முழுகி, ஆவணம் மறுகில் செல்வம் கண்டு கண்டு –
கடைவீதியிலுள்ள செல்வங்களைப் பார்த்துக்கொண்டே, ஆங்கு ஓர் குலாலனது
இருக்கை சேர்ந்தார் – அந்நகரில் (பார்க்கவனென்னும்) ஒரு குயவனுடைய வீட்டிற்
சேர்ந்தார்கள்; (எ-று.)
‘அந்தணர் குயவர்மனையில் தங்கலாம்’ என்பது, நூற்கொள்கை.
பராக்கிரமம்மிகுந்த பாண்டவர் அத்திறத்தை வெளிக்காட்டாது
நீறுபூத்தநெருப்புப் போல உள்ளடக்கிச் சாந்தகுணமுடைய அந்தணர்களின்
வடிவத்தைமேற்கொண்டுள்ளாராதலின், சிங்கம் பசுவின்தோலைப் போர்த்தாற்
போன்றசெய்கையரென்றார்.
ஆங்கண், நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி, மைந்தர்
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்தம்மோடு எய்தி,
தூங்கணங்குரீஇயின், மஞ்சத் தலம்தொறும் தூங்குகின்ற
தேம் கள் மாத் தெரியல் வேந்தர் சேர்ந்த
பேர் அவையில் ஆனார்.-பாண்டவர் சுயம்வரமண்டபஞ் சேர்தல்.
மைந்தர் – புதல்வர்களாகிய பாண்டவர்கள், நல் தவத்தால் மிக்க
அன்னையை – சிறந்த தவத்தினால் மேம்பட்ட தங்கள் தாயான குந்திதேவியை,
ஆங்கண் இருத்தி-அவ்விடத்திலே (அக்குயவன்வீட்டிலே) இருக்கச்செய்து,-
தாங்கள்-,துணை ஆய் முன் வந்த தாபதன்தன்னோடு எய்தி – (தங்களுக்குத்)
துணையாய் முன்னேவந்ததௌமியமுனிவனுடனேகூடி,- தூங்கணங்குரீஇயின் மஞ்சம்
தலம்தொறும் தூங்குகின்ற தேம் கள் மா தெரியல்வேந்தர் சேர்ந்த பேர் அவையில்
ஆனார் – தூக்கணங்குருவி (ஒடுங்கியிருத்தல்) போலச் சிங்காசனங்களில்
(வேட்கைமிகுதியாற்) சோர்வுற்றிருக்கிற இனியதேனையுடைய சிறந்தமாலையைத்
தரித்த அரசர்கள் கூடிய பெரிய சுயம்வரசபையிற் சென்று சேர்ந்தார்கள்;
தாபதர் தம்மோடெய்தி என்ற பாடத்துக்கு-முன்னமேதொடங்கித் தமக்குத்
துணையாய்வந்த வேத்திரகீயநகரத்து அநதணர்களோடு கூடி யென்று உரைக்க.
ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம்’ என்று
ஓதிய விதியினால், நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள்;
‘சோதிடம் பொய்யாது’ என்றும், ‘தோன்றுவர், உரியோர்’ என்றும்,
தாதியர் தேற்றத் தேற்ற, தன் மனத் தளர்வு தீர்வாள்;-பாண்டவர்க்காக இரங்குகிற திரௌபதி, தாதியரால்
தேறுதல்.
நான்குகவிகள்-ஒருதொடர்.
(இ – ள்.) ஆதியில் – முன்பு, குந்திமைந்தர் ஐவர்க்குஉம்உரியள் ஆம் என்று
ஓதிய – குந்தியின் குமாரர்களான பாண்டவரைவர்க்கும் (இவள்) உரியவளாவளென்று
(தன்னைக்குறித்துச் சோதிடர்) கூறிய, விதியினால் – அச்சாஸ்திரப்பயனைத் தான்
கேட்டதனால், நெஞ்சுஉலப்புறா உவகை கூர்வாள்-(அதுமுதல்) மனத்தில்
நீக்கமில்லாதமகிழ்ச்சி மிகுபவளும்,-சோதிடம் பொய்யாது என்றுஉம்-(பாண்டவர்
அரக்குமாளிகையில் இறந்தில ரென்று ஆய்ந்து கூறிய) சோதிடசாஸ்திரக்கொள்கை
பிழைபடா தென்றும், உரியோர் தோன்றுவர் என்றுஉம் – (உனக்கு) உரிய
கொழுநராகிய அவர் வந்து தோன்றுவ ரென்றும், தாதியர் தேற்ற தேற்ற –
(தனது) தோழியர் அடிக்கடி தேறுதல்கூறுதலால், தன் மனம் தளர்வு தீர்வாள்-
(பாண்டவர் அரக்குமாளிகையில் இறந்தனரென்று கேள்வியுற்றதனால்)
தன்மனத்திற்கொண்ட தளர்ச்சி நீங்குபவளும்,-(எ-று.)-கூர்வாள், தீர்வாள் என்ற
இரண்டும், 26-ஆம் கவியில்வரும் ‘நுதலாள்’ என்பதற்கு அடைமொழி: அடுத்த
இரண்டுகவிகளிலும் இவ்வாறே.
இந்தக் குளகச்செய்யுள் திரௌபதியின் தன்மையைத் தெரிவிக்கும்,
ஆதிமுதல்திரௌபதி பாண்டவரிடம் காதல்கொண்டிருந்தமையும், அவர்க்கு
அபாயம்நேர்ந்ததென்று கேள்வியுற்ற பின்பும் அந்தஅன்பு குறையாதிருந்தமையும்,
இதில்நன்கு விளங்கும். சோதிடம் – சூரியன்முதலிய கிரகங்கள் அசுவினி முதலிய
நட்சத்திரங்கள் என்பவற்றின் சஞ்சாரத்தைக்கொண்டு பயன்வகுத்துக் கூறும் நூல்;
ஜ்யோதிஸ் – ஒளி.
சூட்டிய தொடையல் மாலைத் தோழியர், வைகல்தோறும்,
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள,
கோட்டிய சிலையினோடும், கொடி மணித் தேரினோடும்,
காட்டிய கோலம் அன்றி, பிறிது ஒன்றும் காண்கிலாதாள்;-திரௌபதி அருச்சுனன்மீது காதல்கொண்டிருத்தல்.
சூட்டிய-(கூந்தலிற்) சூட்டப்பட்ட, தொடையல்மாலை-தொடுத்த
பூச்சரங்களையுடைய, தோழியர் – தோழிகள், வைகல் தோறுஉம்-நாள்தோறும்,
தீட்டிய-எழுதிய, படங்கள்உம்-சித்திரப்படங்களும், தம் சிந்தைஉம்-
(அவற்றையெழுதிக்காட்டுகிற) அவர்களுடைய உள்ளக்கருத்துக்களும், பொலிவு
கொள்ள – மிகுதியடைய,–(அந்தப்படங்கள்பலவற்றுள்ளும்), கோட்டியசிலையினோடு
உம் கொடி மணி தேரினோடுஉம் காட்டிய கோலம் அன்றி-வளைத்தவில்லோடும்
கொடிகட்டிய அழகிய தேரொடும் காண்பித்த (அருச்சுனனுடைய)
வடிவமொன்றையேயன்றி, பிறிதுஒன்று உம் காண்கிலாதாள்-வேறு எந்த
வடிவத்தையும்ஆசையோடுபாராதவளும்,-
திரௌபதிக்கு விவாகத்திற்குஉரிய பருவம் வந்தவளவிலே அவளுடைய
தோழிகள் அநேக அரசர்களின் உருவத்தைப் படத்திற் சித்திரித்து அவளுக்குக்
காட்டினராக, அவற்றுள் அருச்சுனனொருவனது உருவத்திலேயே திரௌபதி
அன்புநோக்கைச் செலுத்தினாளென்பதாம். அங்ஙன் மிகப்பல உருவங்களையெழுதிக்
காட்டுவாரது கருத்தும் அதற்கு ஏற்ப மிகப்பலவா மாதலால், ‘படங்களுந்
தஞ்சிந்தையும் பொலிவுகொள்ள’ என்றார். ‘மாலை தோழியர்’ எனவும்
பாடம்
‘ஆண்டு, எரிப் பிறந்த போதே, அன்பினால் எந்தை நேர்ந்த
பூண் தெரி மார்பன், இன்று, இப் பொன் அவை பொலியத்
தோன்றி,
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற, வேட்டிலானேல்,
மீண்டு எரி புகுவன்’ என்னும் எண்ணமே விழையும் நீராள்;-அருச்சுனனையன்றிப் பிறரைமணஞ்செய்யேன்’
என்று திரௌபதி துணிவுகொண்டிருத்தல்.
ஆண்டு – அக்காலத்தில், எரி பிறந்த போதுஏ- (நான்)
யாகாக்கினியில்தோன்றியபொழுதே, அன்பினால் எந்தை நேர்ந்த – அன்போடு
எனது தந்தை(எனக்குக் கொழுநனாக) நிச்சயித்த, பூண் தெரி மார்பன் – ஆபரணம்
விளங்குதற்குக்காரணமான மார்பின்பொலிவையுடைய அருச்சுனன், இன்று –
இன்றைத்தினத்தில், இ பொன் அவை பொலிய தோன்றி – இந்த அழகிய
சுயம்வரசபைபொழிவடையும்படி (இதில்) வந்து தோன்றி, மன்னர் இழிவு உற-மற்றையரசர்கள்அவமானமடைய, ஈண்டுஎரிமுன்னர் வேட்டிலான் ஏல்-சொலிக்கிற
அக்கினியின்முன்னிலையிலே (என்னை) விவாகஞ்செய்யாதொழிவனானால், மீண்டு
எரி புகுவன்-திரும்ப நான் அக்கினியிலே பிரவேசித்துவிடுவேன், ‘ என்னும்-
என்றுதுணிகிற,எண்ணமே-நினைப்பே, விளையும்-முதிர்கிற, நீராள்
தன்மையையுடையவளும்,-(எ-று.)- “(ஆகிய) பிறை நுதலாடன்னை” (26) என்க.
எரியினின்று பிறந்தவ ளாதலால், ‘மீண்டு எரிபுகுவன்’ என்றாள்.
அக்கினிசாக்ஷியாக விவாகஞ்செய்தல், மரபு.
கோண் பிறை நுதலாள்தன்னைக் கோதையர் பலரும் கூடி,
சேண் புனல் பல கொண்டு ஆட்டி, செழுந் துகில்
தொழுது சேர்த்தி,
பூண்பன இசையப் பூட்டி, புகை கமழ் தாமம் சூட்டி,
காண்பவர் ஆண்மை தேய, காமவேள் கலகம் செய்தார்.-தோழியர் திரௌபதிக்கு அலங்காரஞ்செய்தல்.
கோண் பிறை நுதலாள் தன்னை- வளைவாகியபிறைச் சந்திரன்
போன்றநெற்றியையுடையளான திரௌபதியை, கோதையர் பலர்உம்கூடி-
தோழிப்பெண்கள்பலருஞ் சேர்ந்து, சேண்புனல் பல கொண்டு ஆட்டி-சிறந்த பல
நதிகளினின்று(கொணர்ந்த) புண்ணியதீர்த்தங்களைக்கொண்டு ஸ்நாநஞ்செய்வித்து,
செழுதுகில்தொழுது சேர்த்தி-சிறந்த புதிய பட்டாடையை வணக்கத்தோடு (அவட்கு)
உடுத்தி,பூண்பன இசைய பூட்டி – பூணுதற்கு உரிய ஆபரணங்களை (அவட்கு)த்
தகுதியாகஅணிவித்து, புகை கமழ் தாமம் சூட்டி – (அகிற்) புகை மணம்வீசுகிற
மலர்மாலையை(அவட்கு முடியிற்) சூட்டி,- காண்பவர் ஆண்மை தேய
காமவேள்கலகம் செய்தார்-(அவளைக்) காணும் ஆடவர்கள் ஆண்தன்மை
குறையும்படி மன்மதனது போரைவிளைத்தார்கள்; (எ-று.)
அவளது இயற்கையழகோடு செயற்கையழகின் பொலிவையும் காணும்
ஆடவர்கள் அவளிடத்தே காதல்மிக்கு அதனால் அறிவு முதலிய
ஆண்மைக்குணங்கள் குன்றும்படி அலங்கரித்தன ரென்பதாம். ஆண்மை – அறிவு
நிறை ஓர்ப்பு கடைப்பிடி யென்பன; இவை, ஆடூஉக்குணம் எனப்படும்.
வந்தனர் குமரர் யாரும் வருக!’ என மகிழ்ந்து போற்றி,
சந்து அணி முலையினாளை, தாயினும் பரிவு கூர்ந்தோர்,
கந்தனும் உவமை ஆற்றாக் காவலர் காமத் தீயில்
இந்தனம் இடுவது ஏய்ப்ப, வேத்தவை ஏற்றினாரே.-திரௌபதியைச் செவிலித்தாயர் சுயம்வர
மண்டபத்துக்கு அழைத்து வருதல்.
தாயின்உம் பரிவு கூர்ந்தோர்- (அவளிடத்துப்) பெற்றதாயினும்
அன்புமிக்கவர்களான செவிலியர்,-சந்து அணிமுலையினாளை –
சந்தனக்குழம்பையணிந்த தனங்களையுடைய அத்திரௌபதியை,-குமரர் யார்உம்
வந்தனர் வருக’ என மகிழ்ந்து போற்றி – ‘இராசகுமாரரெல்லோரும்
(சுயம்வரமண்டபத்திற்கு) வந்துசேர்ந்தார்கள்: – (நீயும்) வருவாயாக’ என்று
மகிழ்ச்சியோடு உபசாரமாகக்கூறி,-கந்தன்உம் உவமை ஆற்றா காவலர் காமம் தீயில்
இந்தனம் இடுவது ஏய்ப்ப – முருகக்கடவுளும் ஒப்பாகாத (மிக்க அழகையும்
ஆற்றலையுமுடைய) அரசர்களுடையகாமாக்கினியில் விறகிடுதலைப்போல, வேந்து
அவை ஏற்றினார் – (அவளை) இராசசபையில் அழைத்துக்கொண்டு வந்து
சேர்ந்தார்கள்; (எ-று.)
பாஞ்சாலியின் அழகுமிகுதியைக் கேள்வியுற்றதனாலேயே மிக்க காதல்
கொண்டுள்ளஅரசர்கள் அவ்வழகை நேரே கண்டு பின்னும் மிக்கமோகத்தை
யடையும்படிசெவிலியர் அவர்களெதிரிற் கொணர்ந்தன ரென்பார், ‘காவலர்காமத்தீயில்
இந்தனமிடுவதேய்ப்ப வேத்தவை யேற்றினார் என்றார்.
வெங் கழல், படைக் கை, வேந்தர் விழிகளால், விளங்கும் மேனிப்
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினைப் பொலிய நோக்கி,
பைங் கழைத் தனுவோன் செங் கைப் பகழியால் பாவம் எய்தி,
அங்கு அழல் பட்ட நெய்போல் அனைவரும் உருகினாரே.-திரௌபதியைக் கண்டவளவிலே அரசர்கள்
மோகித்தல்.
வெம் கழல்-(பகைவர்க்கு) அச்சந்தருகிற வீரக்கழலையும், படை
கை – ஆயுதங்களையேந்திய கையையுமுடைய, வேந்தர் அனைவர்உம் –
அரசர்களெல்லோரும்,-விளங்கும் மேனி- ஒளி வீசிவிளங்குகிற வடிவத்தையுடைய,
பொங்கு அழல் பிறந்தபாவை-சொலிக்கிற யாகாக்கினியில் தோன்றிய
சித்திதரப்பதுமைபோன்ற திரௌபதியினது, பொற்பினை – அழகை, விழிகளால்
பொலிய நோக்கி-(தங்கள்) கண்களால் நன்றாகப் பார்த்து, அங்கு – அப்பொழுது-
பைங் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி – பசிய கரும்பை
வில்லாகவுடைய மன்மதனது சிவந்த கையினாலெய்யப்பட்ட அம்புகளினால்
நிலைவேறுபாட்டை யடைந்து, அழல் பட்ட நெய்போல்-தீப்பட்டநெய்போல
(நேகிழ்ந்து), உருகினார்-;(எ-று.)
பாவம்-பாவம்: வடசொல்; அதாவது மெய்ப்பாட்டுக்குறிப்பு; இங்கு சிந்தனை,
அசைவின்றி நிற்றல், தோள்மெலிதல், ஒடுங்கல், நெஞ்சழிதல், மயிர்சிலிர்த்தல்,
உடல்வியர்த்தல், நிறம்வேறுபடுதல், நெடுமூச்செறிதல், மொழிபலபிதற்றல், கலக்கம்
முதலிய காமவிகாரத்தாலாகுஞ் செய்கைகள். மன்மதனுக்குக் கரும்பு வில்லென்றும்,
தாமரை முதலிய மலர்கள் அம்புகளென்றும் கூறுப. வேந்தர்களுடைய வெம்மையைக்
கழலின்மெலேற்றி ‘வெங்கழல்’ என்றார்; இது; ஒருவகை உபசாரவழக்கு,
அழலிற்பிறந்தபாவையைக் கண்டவுடனே அழற்பட்டநெய்போ லாயின ரெனச்
சமத் காரந்தோன்றக் கூறியவாறு.-
மங்குலின் மங்குல் மூடி, வயங்கு ஒளி மறைந்து தோன்றாச்
செங் கதிர்ச் செல்வன் போல, சீர் கெழு வடிவம் மாறி,
அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ-செறிந்த பொய்கைப்
பங்கயம் போன்றதால், அப் பரிவுறு பாவை பார்வை?–திரௌபதி அச்சபையில் பாண்டவர்வரவை
எதிர்பார்த்தல்.
மங்குலின் – வானத்தில், மங்குல் – மேகம், மூடி – மூடுதலால்,
வயங்குஒளி மறைந்து-விளங்குகிற (தனது) ஒளி மறைபட்டு, தோன்றா-
வெளித்தோன்றாத,செம் கதிர் செல்வன் போல- சிவந்தகிரணங்களின்
வளத்தையுடைய சூரியன்போல,அவர்-அப்பாண்டவர்கள், சீர் கெழு வடிவம்
மாறி – சிறப்புமிக்க (தங்கள்)உருவம்மாறி, அங்கு இருந்த தன்மை-அச்சபையில்
வந்து வீற்றிருந்த தன்மையை, அபரிவு உறு பாவை பார்வை – (அவர்களிடம்)
அன்புமிக்க அந்தத்திரௌபதியினுடைய கண், அறிந்ததுஓ-தெரிந்துகொண்டதோ?
செறிந்த பொய்கைபங்கயம் போன்றது – நீர்நிறைந்த தடாகத்திலுள்ள
தாமரைமலரை யொத்திருந்தது;(எ-று.)-ஆல்-ஈற்றசை.வானத்தில் மேகம் படர்ந்து
மறைத்தலால் விளங்காமல் மறைந்து நின்றாலும், தாமரைஅச்சூரியன்
உதயமாகித்தோன்று தலையே எதிர்பார்த்திருக்கும்; அவ்வாறேதிரௌபதியின்
பார்வை தனக்குஉரிய கணவராகிய பாண்டவர் உண்மைவடிவத்துடன்
அங்கு வெளிப்படுதலை எதிர்நோக்கியிருந்த தென்க.
மனக் கடுங் காதல் விம்ம, மாலை தாழ் புயங்கள் வாட,
‘எனக்கு எனக்கு’ என்று என்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி,
சினக் கடம் ஒழுகும் கன்னக் களிற்றினான் திட்டத்துய்மன்,
நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே:-அப்பொழுது திருஷ்டத்யும்நன் ஒன்றுகூறுத்
தொடங்குதல்.
மனம் கடு காதல் விம்ம – மனத்திற் பேராசை மிக, மாலை தாழ்
புயங்கள் வாட-(அதனால்) மலர்மாலைதொங்கும் தோள்கள் மெலிய, எனக்கு எனக்கு
என்று என்று ஏமாந்து இருந்த – ‘(திரௌபதி) எனக்கு (உரியளாக்கடவள்) எனக்கு
(உரியளாகக்கடவள்)’ என்று தனித்தனி (கருதி) மிகுகளிப்புக்கொண்டிருந்த, காவலரை
நோக்கி – (சுயம்வரத்துக்குவந்த) அரசர்களைப்பார்த்து, சினம் கடம் ஒழுகும் கன்னம்
களிறு அனான் திட்டத்துய்மன்- சீற்றத்தையும் மதசலம்ஒழுகுங்
கன்னங்களையுமுடைய ஆண்யானையைப் போன்றவனான திருஷ்டத்யும்நன்,
நினைக்கஉம் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வான் – நினைத்தற்கும்
அரிய ஒரு வார்த்தையைக் கருத்தோடு சொல்பவனானான்; (எ-று.)-அதனை அடுத்த
கவியிற் காண்க.
இவன் கூறிய வார்த்தை சுயம்வரத்திற்குவந்த அரசர்கள் சிறிதும் எதிர்பாராத
தென்பதும், பாண்டவரை உளரோ இலரோ எனக் காணுங் கருத்தோடு ஏற்படுத்திக்
கூறிய தென்பதும் விளங்கும். த்ருஷ்டத்யும்நனென்றபெயர் – காம்பீரியமும்
பாதுகாத்தல்தொழில்வன்மையு முடையனாய் ஆற்றல் முதலியவற்றோடு
சிறப்பாகப்பிறந்தவனென்னுங் காரணம் பற்றியதென்று வியாச பாரதம் கூறுகின்றது,
‘களிற்றினான்’ என்றும் பாடம்.
சிலை இது; சிலீமுகங்கள் இவை; கடுந் திரிகை வேகத்து
இலை முகத்து உழலுகின்ற எந்திரத் திகிரி நாப்பண்
நிலை இலா இலக்கும் அஃதே; நெஞ்சுற யாவன் எய்தான்,
கலை வலீர்! அவற்கே அந்தக் கன்னியும் உரியள்’ என்றான்.-குறியைத்தவறாது எய்தாற்குத் திரௌபதி
உரியள்’ எனல்.
கலை வலீர்-கலைஞானங்களில் வல்லவர்களே! சிலை இதுவில்
இதோஇருக்கிறது; சிலீமுகங்கள் இவை – அம்புகள் இதோ இருக்கின்றன; கடுந்
திரிகைவேகத்து – முறுக்கிவிட்டவிசையையுடைய (குயவனது) சக்கரத்தின்
வேகம்போன்றவேகத்தோடு, இலைமுகத்து உழலுகின்ற-ஆர்களின் நுனியமைந்த
விளிம்பிற்சூட்டையுடையதாய்ச் சுழலுகின்ற, எந்திரம் திகிரி – சக்கரவடிவமான
யந்திரத்தினது,நாப்பண்-நடுவிலே, நிலைஇலா – நிலைப்படாமலிருக்கிற, இலக்குஉம்
-குறியும்,-அஃதுஏ – இதோகாணப்படுகிறது; (அந்த இலக்கை), நெஞ்சுஉற
யாவன்எய்தான் – மனம்அமைய (உங்களில்) எவன் எய்துவீழ்த்துவனோ,
அவற்குஏ – அவனுக்கே இந்தகன்னிஉம் உரியள்-கன்னிகையான இத்திரௌபதியும்
உரியவளாவள், ‘ என்றான்-; (எ-று.)
பதினெட்டு வித்தைகளுள்ளும், அறுபத்து நான்கு கலைகளுள்ளும்
வில்வித்தைஒன்றாதலால், அதில் தேர்ந்தவர்களேயென்று உயர்த்திவிளிப்பான்
‘கலைவலீர் ‘என்றான். வில்லேற்றினான் இவளை எய்துமென்றஇது, எண்வகை
மணத்துள்ஆசுரமாம். சிலீமுகம் – வடசொல்; கூர்மையுள்ள நுனியை
யுடையதென்பது பொருள்,திரிகை-திரியுந்தன்மையது. ‘எய்தான்’ – இயல்பினால்வந்த
காலவழுமைதி ‘வேகத்திலையமொத்து’ என்று பாடம்
இச் சொல் பழனப் பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன்
இயம்புதல் கேட்டு,
அச் சொல் தம்தம் செவிக்கு உரும்மேறு ஆகக் கலங்கும்
அரவு அன்னார்,
கச்சைப் பொருது, புடை பரந்து, கதித்து, பணைக்கும், கதிர் ஆரப்
பச்சைக் குரும்பை இளமுலைமேல் பரிவால், நாணம் பிரிவுற்றார்.-இரண்டுகவிகள்-அதுகேட்டு அரசர்கள் கலங்கினும்
ஆசையொழியாமை கூறும்.
இ சொல் – இந்தவார்த்தையை, பழனம் பாஞ்சாலர்க்கு இறைவன்
புதல்வன்- கழனிகள் சூழ்ந்த பாஞ்சாலதேசத்திலுள்ளார்க்கு அரசனான துருபதனது
குமாரனாகிய திட்டத்துய்மன், இயம்புதல் – சொல்லியதை, கேட்டு-செவியுற்று,
அச்சொல்தம் தம் செவிக்கு உரும் ஏறு ஆக கலங்கும் -அந்த வார்த்தை தம்
தம்காதுகளுக்குப் பேரிடிபோலாக (அதனாற்) கலங்கிய, அரவு அன்னார் –
பாம்புபோன்றவர்களாகிய அரசர்கள்,-கச்சைபொருது-கஞ்சுகத்தை மொதி, புடை
பரந்து – பக்கங்களிற் பரந்து, கதித்து – வளர்ந்து, பணைக்கும் – பருத்துள்ள, கதிர்
ஆரம் பச்சைகுரும்பை இள முலைமேல் – ஒளியையுடைய முத்தாரங்களை யணிந்த
பசிய தென்னங்குரும்பைபோன்ற இளைய தனங்களையுடையதிரௌபதியினிடத்துக்
கொண்ட, பரிவால் – ஆசையினால், நாணம்பிரிவுற்றார் – வெட்கம்நீங்கினார்கள்;
(எ-று.)
இடியோசையைக் கேட்டவளவில் நாகம் அஞ்சுதல் இயல்பு; அதுபோல
அவன்கம்பீரமாக உரத்தகுரலோடுசொன்ன இச்சொல்லைக் கேட்டு அரசர்கள்
அஞ்சினர்.அங்ஙன் அஞ்சினும் ‘ஆசை வெட்கமறியாது’ என்றவாறு
அரியகுறியைஎய்யத்தமக்கு இயலாதாயின் மானக்கேடு நேருமே யென்பதைச்
சிறிதும் ஆலோசியாமலேதிரௌபதியினுடங் கொண்ட காதல்மிகுதியால்
அரசர்களெல்லோரும் அந்தஇலக்கைஎய்ய முயலுங் கருத்தின ராயின் ரென்பதாம்.
த்ருஷ்டத்யும்நன்அங்ஙன்சொல்லிவிட்டுத் திரௌபதிக்கு ஆங்குவந்திருந்தத
மன்னரைக்காட்டினானென்று பாரதங்களிற் காண்கின்றது.
இதுமுதற்பதினாறு கவிகள் – பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையவைமாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்
கண்போல் அம்பும் நுதல் போலும் கடுங் கார்முகமும்,
காண்தொறும், அத்
திண் போர் வேந்தர் மனக் கலக்கம் செப்பும் தகைத்து அன்று;
ஆனாலும்,
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து, வீழ்த்தி,
மலர்ப்
பெண் போல்வாளைக் கைப்பிடிக்கும் பேராசையினால், பேதுற்றார்.
கண் போல் – (திரௌபதியின்) கண்பார்வை போன்ற, அம்புஉம் –
அம்புகளையும், நுதல் போலும் – (அவளுடைய) புருவம் போன்ற, கடு கார்முகம்உம்
– வலியவில்லையும், காண்தொறும்-பார்க்குந்தோறுஉம். அ திண் போர் வேந்தர்-
வலிய போர் செய்யவல்ல அவ்வரசர்களுக்கு உண்டான. மனக்கலக்கம்-, செப்பும்
தகைத்து அன்று – (எவராலும்) சொல்லுந்தன்மையுடைத்தன்று (மிக அதிகமானது
என்றபடி); ஆனால் உம் – அங்ஙனமிருக்கவும், (அவர்கள்), விண் போய் உழுன்று
சுழல் இலக்கை -மிக்கவுயரத்திற்பொருந்தி விரைவாகக் சழல்கிற அக்குறியை, எய்து
மெய்ஏ வீழ்த்தி – (அம்பு) எய்து தவறாது வீழ்த்தி, மலர்ப்பெண் போல்வாளை கை
பிடிக்கும் -தாமரைமலரில் வாழுந் திருமகள்போன்ற அத்திரௌபதியை மணஞ்செய்து
கொள்ளவேண்டுமென்ற, பேர் ஆசையினால்,- பேது உற்றார் – மதிமயங்கி
அம்முயற்சியை மேற்கொண்டார்கள்; (எ-று.)
இங்கே பேதுறுதல் – இயலாதகாரியத்தை ஆலோசியாது செய்யத்
தொடங்குதல். சுயம்வரத்தில் தன்னடைவிலே மணஞ்செய்து கொள்ளலாமென்றுகருதி
வந்த அரசர்கட்கு அக்கருத்து நிறைவேறுதற்கு இடையூறாய் நிற்றலால்,
அம்பும்வில்லும் வருத்தஞ்செய்தலே யன்றி, அவை பாஞ்சாலியின் கண்போலவும்
நுதல்போலவும் இருத்ததாலும் வருத்தஞ் செய்தன என நயந்தோன்றக் கூறினார்.
‘கண்போலம்பும் நுதல்போலுங் கடுங்கார்முகமும்’ என்றது-எதிர்நிலையணி
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலித் தாயர்,
கடல் கடைந்து
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில்போல் கொண்டு,
மன் அவை புக்கு
இருந்தார், இருந்த காவலரை, ‘இன்னோர் இன்னோர் இவர்’ என்று,
முருந்து ஆர் பவளத் துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு
மொழிகின்றார்:—செவிலித்தாயர் திரௌபதிக்கு அரசர்களை இன்னா
ரின்னாரென்று கூறத்தொடங்கல்.
கடல் கடைந்து வருந்தா-(சிரமப்பட்டுப்) பாற்கடலைக்கடையாமலே
பெற்ற, அமுதம்-அமிருதத்தை, நிகர்வாளை-ஒப்பவளான அத்திரௌபதியை, மயில்
போல் கொண்டு-மயில்போல அழைத்துக்கொண்டு, மன் அவை புக்குஇருந்தார்-
இராசசபையிற் சென்று சேர்ந்தவர்களாகிய, திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின்
செவிலித்தாயர்-ஒழுங்காக அலங்கரித்தல் அமைந்த நறுமணமுள்ள கூந்தலையுடைய
அவளது செவிலித்தாய்மார்,- இருந்தகாவலரை-(அங்கு) வீற்றிருந்த அரசர்களை,
இவர்இன்னோர் இன்னோர் என்று-இவர் இன்னார் இன்னாரென்று, பவளம் துவர்
இதழ்வாய் முருந்து ஆர் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார்-பவழம் போலச்
சிவந்த இதழ்களையுடைய வாயையும் மயிலிறகின் அடிக்குருத்தையொத்த
முல்லையரும்புபோன்ற ஒள்ளியபற்களையுமுடைய அவளுக்கு (ச் சுட்டிக்காட்டி)ச்
சொல்லுகின்றவரானார்கள்; (எ-று.) -அதனை மேலிற்காண்க. திருந்து-
முதனிலைத்தொழிற்பெயர்.
மாற்றம் பிறிது ஒன்று உரையான், இவ் வன் போர் வில்லின்
வலி நோக்கி,
சீற்றம் சிந்தை கொண்டு அழல, பொய்யே மலர்ந்த
திருமுகத்தான்,
‘ஏற்றம்தன்னில் வேறு ஒருவர் இப் பேர் உலகில் இலர்’ என்னத்
தோற்றம் படைத்தோன்தனைக் காட்டி, ‘துரியோதனன், மற்று
இவன்’ என்றார்.-இது, துரியோதனனைக் குறித்தது.
‘இ பேர் உலகில்-இந்தப்பெரிய உலகத்திலே, தன்னில் வேறு ஒருவர்
ஏற்றம் இலர்-தன்னைப்போல வேறொருத்தர் உயர்வுள்ளவர் இல்லை,’ என்ன-என்று
தோற்றம் படைத்தோன்தனை-எண்ணங்கொண்டவனான வணங்காமுடிமன்னனை,
காட்டி-(செவலித்தாயர் திரௌபதிக்குச்) சுட்டிக்காண்பித்து,-இ வல் போர் வில்லின்
வலி நோக்கி-வலியப்போருக்குஉரிய இந்த வில்லின் வலிமையைப்பார்த்து, சிந்தை
சீற்றம் கொண்டு அழல – (அதனையெடுத்துவளைக்குந் திற மில்லாமையால்) மனம்
கோபங்கொண்டு கொதிக்க, மாற்றம் பிறிது ஒன்று உரையான்-
யாதொருவார்த்தையையுஞ் சொல்லாதவனாய், பொய்ஏ மலர்ந்த திருமுகத்தான் –
(திறமையுடையான்போலப்) பொய்யாக மலர்ச்சிகொண்ட அழகிய
முகத்தையுடையவனாகிய, இவன்-, துரியோதனன்-, என்றார்-;
சுயம்வரத்திற்கு என்று சபைகூட்டியவிடத்தில் குறியெய்வதென்ற
ஒருசெயலைக்குறித்துக் கூறியது தகுதியன்றென்றுகூறக் கருதினனாயினும், அங்ஙனம்
தான் மாறுகூறினால் மற்றோர் யாது கருதுவார்களோ என்று ஒன்றுஞ்சொல்லாது
சும்மாஇருந்தனனென்பது, ‘மாற்றம் பிறிதொன் றுரையான்’ என்றதன் கருத்து.
தன்மனத்திலுண்டான எண்ணத்தை மறைக்கவேண்டு மென்ற கருத்தோடு முகத்தில்
பொய்யாக மலர்ச்சிகாட்டுகின்றன னென்பதும், அந்த அசட்டுத்தனத்தைக்
குறிப்பறியவல்ல செவிலித்தாயர் அறிந்தாரென்பதும் இங்கு விளங்கும். பொய்யே
மலர்ந்த திரு முகத்தான்-பொய்யையேபேசும் வாயையுடையான்என்றுமாம்
மணியின் கிரண வெயில் எறிப்ப, மண் ஏழ் தாங்கும்
நச்சு எயிற்றுப்
பணியின் முடி நாயகத் தலையின் பாங்கே நிரைத்த
பல் தலைபோல்,
துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர், துச்சாதனன்
முதலோர்,
அணியும் கழற் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர்,
இவர்’ என்றார்.-இது. துரியோதனன் தம்பியரைக்குறித்தது.
மணியின் கிரணம் வெயில் எறிப்ப – (தம்மிடத்து உள்ள)
மாணிக்கங்களின்ஒளியாகிய வெயில் வீச, மண் ஏழ் தாங்கும் நஞ்சு எயிறு
பணியின்முடி நாயகம்தலையின் பாங்கு நிரைத்த- ஏழுலகங்களையும்(கீழிருந்தும்)
தாங்குகிறவிஷமுள்ளபற்களையுடைய ஆதிசேஷனது சுடிகையையுடைய
பிரதானமானதலையினதுபக்கங்களில் வரிசையாகவுள்ள, பல் தலைபோல்-
பல தலைகள்போல,அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் –
அணிகிறவீரக்கழலையுடைய காலையுடைய துரியோதனனுக்குப்பக்கத்து
ஆசனங்களில்வீற்றிருக்கின்றவர்களான, இவர்-இவர்கள், துணியும் கொடுமை வகிர்
அன்னதுணைவர்- துணிபட்ட கொடுமையின் துண்டுகள் போன்ற அவன்
தம்பியராகிய,துச்சாதனன்முதலோர்-, என்றார்-; (எ-று.)
ஆதிசேஷனது நடுநாயகத்தலை துரியோதனனுக்கும், அதனையடுத்துள்ள
மற்றைத்தலைகள் அவனையடுத்துள்ள அவன்தம்பியர்தொண்ணூற்றொன்பதின்
மருக்கும் உவமை. இவ்வுவமையால், அவர்களுக்குள்இருக்கிற ஒற்றுமை
விளங்கும். மண் ஏழ் – ஏழு தீவுகளாகவுள்ள பூமியென்றுமாம்.ஆதிசேஷன்
தலைக்குச்சுடிகை போல அரசர்கள் தலைக்குக் கீரீடம் அமையும்.
துரியோதனன் தம்பிமார் கொடியவர்களாதலால், கொடுமை பல துண்டுகளாகத்
துணிப்பட்டதுபோன்றவ ரெனப்பட்டார்; தற்குறிப்பேற்றவணி. துச்சாதனன்
முதலியோரின் கொடுமையைக் கற்போர்க்கு அறிவிக்கக் கவி கூறியதன்றிச்
செவிலியர் ‘கொடுமைவகிரன்னதுணைவர் ‘ எனக்கூறினாரெனக் கொள்ளற்க
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா, நிலம்
கீண்டு, உதவு குலக்
கலை, வன் பலவின் சுளை கீறி, களிப்போடு அளிக்கும் காந்தாரத்
தலைவன் சகுனி இவன் கண்டாய்; தக்கோர் ஆடாச் சூதுக்கும்,
நிலை வஞ்சனைக்கும், தரணிபரில் யாரே இவற்கு நிகர்?’ என்றார்–இது, சகுனியைக் குறித்தது.
உலைவந்து அயரும்-மெலிந்து தளர்கிற, சூல்மந்திக்கு-கருப்பம்முதிர்ந்த
பெண்குரங்குக்கு, உருகா – மனமுருகி, உதவு-(இரை தேடிக் கொணர்ந்தளித்தல்
முதலிய) உதவிசெய்கிற, குலம் கலை – உயர்ந்த சாதி ஆண்குரங்கு, நிலம் கீண்டு –
தரையைத்தோண்டி, வல் பலவின் சுளை கீறி – வலிய பலாப்பழத்தைக் கீண்டு
(அதன்) சுளையையெடுத்து, களிப்போடு அளிக்கும் – களிப்போடு கொடுக்கிற,
காந்தாரம் – காந்தாரதேசத்துக்கு, தலைவன் – அரசனாகிய, சகுனி – சகுனியென்றும்
பெயருடையான், இவன்-, கண்டாய் – அறிவாய்; தக்கோர் ஆடா சூதுக்குஉம் –
பெரியோர் ஆடாத சூதாட்டத்திலும், நிலை வஞ்சனைக்குஉம் – நிலையான
வஞ்சனைசெய்வதிலும், தரணிபரில் இவற்கு யார்ஏ நிகர் – அரசர்களுள் இவனுக்கு
எவர்தாம் ஒப்பாவர், என்றார்-; (எ – று.)
முன்னிரண்டடிகளிற் கூறிய நாட்டின் வருணனையால், காந்தாரநாட்டரசனான
இவன் தனக்குரிய மகளிர்பால் மிக்கஅன்புடையா னெனத் தொனிப்பித்தவாறாம்.
ஆயினும் அவன் தீக்குணங்களின் மிக்கா னென்றது, இறுதிவாக்கியம். இங்கு, பலா-
வேர்ப்பலா. நிலைவஞ்சனை- எவராலும் மாற்றமுடிகளாத வஞ்சனை
பேசாது ஒடுங்கும் பேர் அறிவால், பெரும் போர் வலியால்,
பிறப்பால், மெய்த்
தேசால், இயற்றும் பல படையால், திண் தோள் வலியால்,
செஞ் சிலைக் கை
ஆசான் மைந்தன் இவன்தனக்கு இங்கு, யாரே உவமை? அமரரிலும்
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம்; அல்லது இலை’ என்றார்.-இது, அசுவத்தாமனைக் குறித்தது.
பேசாது – (பயனில்லாதபலவார்த்தைகளைப்) பேசாமல், ஒடுங்கும் –
அடங்கியிருக்கிற, பேர் அறிவால் – மிக்க அறிவினாலும், பெரு போர்வலியால்-
பெரியபோரைச் செய்யும் வல்லமையினாலும், பிறப்பால்-பிறப்பின் சிறப்பினாலும்,
மெய்தேசால்-உடம்பின் ஒளியாலும், இயற்றும் பல படையால் – செய்யும் பல
படைக்கலத்தொழிலினாலும், திண் தோள் வலியால் – உறுதியுள்ள தோள்களின்
வலிமையினாலும்,செம் சிலை கை ஆசான் மைந்தன் இவன் தனக்கு இங்கு
ஆர்ஏ உவமை -சிறந்தவில்லையேந்திய கையையுடைய துரோணாசாரியனது
குமாரனாகிய இந்தஅசுவத்தாமனுக்கு இவ்வுலகில் எவர்தாம் ஒப்பாவர்?
அமரில்உம் -(அவ்வுலகத்திலுள்ள) தேவர்களுள்ளும், ஈசானனை ஒரு சிறிது ஒப்பு
எனல் ஆம்அல்லது – சிவபிரானை (இவனுக்கு) ஒருசிறிது ஒப்பாவனென்று
கூறலாமே யல்லாமல்,மற்றுஇலை-வெறுஒப்பவர் இல்லை, என்றார் – என்று
சொன்னார்கள்; (எ-று.)
இவன் பிராமண சாதியனாயினும், இவன் தந்தையான துரோணன்
அரசன்போலஒழுகியதனாலும், தன்மாணாக்கனாகிய அருச்சுனனைக்கொண்டு
வெல்லப்பட்டதுருபதனுடைய இராச்சியத்திற்பாதியைக் கைக்கொண்டு அதற்குத்
தலைமைபூண்டதனாலும், அரசரிடை இவனைக் கூறினார்.
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே! பேர் உலகில்
உண்மைக்கு இவனே; வலிக்கு இவனே; உறவுக்கு இவனே;
உரைக்கு இவனே;
திண்மைக்கு இவனே; நெறிக்கு இவனே; தேசுக்கு இவனே;
சிலைக்கு இவனே;
வண்மைக்கு இவனே;-கன்னன் எனும் மன்னன் கண்டாய்
மற்று இவனே!—இது, கர்ணனைக் குறித்தது.
பெண்மைக்கு – பெண் தன்மையில், இரதி என-ரதீ தேவிபோல்வா
ளென்று சொல்லும்படி, வந்த – தோன்றிய, பெண் ஆர் அமுதே-பெண்களுள்
பெறுதற்கு அரிய அமிருதம்போலச் சிறந்தவளே! பேர் உலகில் – பெரிய உலகத்தில்,
உண்மைக்கு-சத்தியத்துக்கு, இவனே-; வலிக்கு – பலத்துக்கு, இவனே-; உறவுக்கு-
சிநேக தருமத்துக்கு, இவனே-; உரைக்கு-புகழுக்கு, இவனே-; திண்மைக்கு –
கலங்காத நெஞ்சுறுதிக்கு, இவனே-; நெறிக்கு-; நல்லொழுக்கத்திற்கு, இவனே-;
தேசுக்கு – ஒளிக்கு, இவனே-; சிலைக்கு – விற்றொழிலுக்கு, இவனே-; வண்மைக்கு-
தானத்துக்கு, இவனே-;- இவன்-, கன்னன் எனும் மன்னவ-கர்ணனென்று
சொல்லப்படும் அரசன்; கண்டாய் – காண்பாய் (என்றுசொன்னார்கள்); (எ-று.)-மற்று-
அசை.
‘என்றார்’ என்பதை வருவித்துக்கொள்க; இன்னும் சிலசெய்யுள்களுக்கும் இது
கொள்க. செய்யுளாதலின், ‘இவன்’ என்ற சுட்டுப்பெயர் ‘கன்னன்’ என்ற
இயற்பெயரின்முன் வந்தது; “செய்யுட்குஏற்புழி” என்றார், நன்னூலார்.
இவனேயென்பதற்கு-இவனே சிறந்தவ னென்றும், இவனல்ல தில்லை யென்றுங்
கருத்து.
அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி,
பிளப்புண்ட
சலத்தால் யமுனை பிணித்ததெனத் தயங்கும்படி சேர்
தானையினான்,
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன், களபக் கொங்கையர்
மெய்ந்
நலத்தால் மகிழும் சிந்தையினான், நறுந் தார் இராமன் இவன்’
என்றார்.-இது, பலராமனைக் குறித்தது.
யமுனை – யமுநாநதி, முன்னம் அலத்தால் பிளந்த பகை
அடர்ப்பான்கருதி – முன்பு (தன்னை இவன்) கலப்பையைக்
கொண்டுபிளந்தபகைமைக்குஎதிர்செய்து வெல்லக்கருதி, பிளப்புண்ட சலத்தால்
பிணித்தது – பிளவுபட்ட நீரினால்(இவனைச்) சூழ்ந்திட்டது ‘, என-என்று
சொல்லும்படி, தயங்கும் படி சேர்-(நீலநிறமாய்)விளங்குந் தன்மையைக் கொண்ட,
தானையினான் – ஆடையையுடையவனாகிய,இவன்-, குலத்தால் உயர்ந்த
வசுதேவன் குமரன் – குடிப்பிறப்பினாற் சிறந்தவசுதேவனுடைய புத்திரனும்,
களபம் கொங்கையர் மெய் நலத்தால் மகிழும்சிந்தையினான்-
கலவைச்சந்தனத்தையணிந்த தனங்களையுடைய மகளிரது உடம்பைத்
தழுவும் இன்பத்தால் மகிழும் மனத்தையுடையவனுமாகிய, நறுந் தார் இராமன் –
நறுமணமுள்ளமாலையையணிந்த பலராமன் என்றார்-; (எ – று.)
பலராமன் – கண்ணனுக்குத் தமையன்; திருமாலின் எட்டாம் அவதாரம்.
வசுதேவனுடைய பத்தினியருள் தேவகியின் கருப்பத்தில் ஆறுமாசமும்,
ரோகிணியின்கருப்பத்தில் ஆறுமாசமும் இருந்து பிறந்தவன். இவன், நீலநிறமான
ஆடையை யுடுப்பவனாதலால் நீலாம்பர னென்று பெயர்பெறுவன், இவன், ஒரு
சமயத்தில் துவாரகையினின்று கோகுலத்துக்கு எழுந்தருளி, தன்னிடங் காதல்
கொண்டகோபஸ்திரீகளுடன் விளையாடுபவனாகி யமுநாநதிக்குச் சமீபத்திலுள்ள
ஒருசோலையைச் சேர்ந்து, வருணனால் அனுப்பப்பட்ட வாருணியென்னும்
மதுவைப்பானஞ்செய்து களித்தவனாய், ஜலக்கிரீடை செய்யக்கருதி,
பக்கத்திலோடுகின்றயமுநாநதியைநோக்கி ‘ஓ யமுனாய்! நீ இங்கே வா, என்று
அழைக்க, அவ்யமுனை ‘இவன்மதுபானவெறியால் இப்படிச்சொல்லுகின்றான்’ என்று
அக்கட்டளையைப்பொருள்செய்யாது அங்கேவாராதொழிய, இவன் வெகுண்டு தனது
கலப்பையின் நுனியால் அந்நதியை இழுக்க, அந்த ஆறு மீறிப்போகும்
ஆற்றலில்லாமையால் தான் செல்லும் வழியை விட்டு அவன் எழுந்தருளியிருக்கும்
வனத்தில் வந்துபெருகியதன்றித் தன்னுடைய தெய்வவடிவத்தோடு அவனெதிரில்
வந்து தன்பிழையைப் பொறுக்கும்படி மிகவும்பிராத்தித்துத் திவ்வியமான
ஒருமாலையையும் இரண்டு நீலவஸ்திரங்களையுங் சமர்ப்பிக்க, பின்பு இவன்
கோபந்தணிந்து நீராடியபின் அந்நதியை விட்டிட்டன னென்பது, வரலாறு.
இங்ஙனம்பலராமனால் வெல்லப்பட்ட யமுனாநதி தன்னைவென்ற அவனைத்
தான்வென்றுபழிதீர்த்துக்கொள்ளக் கருதி இரண்டுபிரிவாகப் பிரிந்து
அவனுடம்பை வளைந்துகொண்டாற் போன்றது, அவன் அரையிலும் மேலும்
சாத்திய நீல ஆடைகளெனவருணித்தவாறு; யமுநாநதியின்நீர் கருநிறமுடைய
தாதலால், இங்ஙனம்கற்பிக்கப்பட்டது; தற்குறிப்பேற்றவணி,
சலம்=ஜலம்; சலம் என்ற வடசொல்லின் திரிபுஎனக்கொண்டால், கோபமாம்.
வசுதேவன்-யதுகுலத்தில் சூரனென்பவனது குமாரன். வசுதேவன் என்பது –
ஐசுவரியங்களால் விளங்குபவனென்று பொருள்படும்.
இந்தக் குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு
வந்து உற்பவித்து, பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன்;
முந்த, கஞ்ச மாமன் உயிர் முடித்தான்; இவற்கு முகில் ஊர்தி
அந்தப் புரத்தில் ஆராமம், அந்தப்புரத்துக்கு ஆராமம்.-இது, கண்ணபிரானைக் குறித்தது.
இந்த குரிசில்-இந்த உத்தமபுருஷன், யது குலத்துக்கு எல்லாம்
திலகம்எனும் ஆறு வந்து உற்பவித்து – யதுவமிசமுழுவதுக்கும் ஒரு திலகமென்று
சொல்லும்படி அலங்காரமாய் அக்குலத்தில் வந்து திருவவதரித்து, பொதுவருடன்
வளரும் – இடையர்களுடனே வளர்ந்த, கள்ளம் மா மாயன்-(எவரும்)
அறியவொண்ணாத பெரிய மாயையையுடைய கண்ணபிரான்; முந்த முன்னமே
(இளம்பருவத்திலேயே), கஞ்சன் மாமன் உயிர் முடித்தான் இவற்கு – கம்சனாகிய
மாமனுடைய உயிரை யொழித்தவனாகிய இவனுக்கு, முகில் ஊர்தி அந்த புரத்தில்
ஆராமம்-மேகங்களை வாகனமாகவுடையவனான இந்திரனது அந்த
அமராவதிநகரத்திலுள்ள கற்பகச்சோலை, அந்தப்புரத்தில் ஆராமம் – (தனது
மனையாள்வசிக்கும்) அந்தப்புரத்திலிருக்குஞ் சோலையாம்.
திலகம் நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, கண்ணன் யதுகுலத்துக்குச்
சிறப்புத்தந்தன னென்க. வசுதேவனும் தேவகியும் கம்சனால் வடமதுரையில்
தளைபூண்டிருக்கையில் திருமால் தேவகியினிடம் எட்டாவதுகருப்பத்திற்
கண்ணனாய்அவதரிக்க, அந்தக் குழந்தையைக் கம்சன் கொல்லக்கூடுமென்கிற
அச்சத்தால்தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின் அனுமதிபெற்று அந்தச் சிசுவை
அதுபிறந்தநடுராத்தியிலேயே திருவாய்ப்பாடியிலிருக்கிற
நந்தகோபனதுதிருமாளிகையில் இரகசியமாகக் கொண்டுசேர்த்துவிட்டு, அங்கு
அவன்மனைவியான யசோதைக்கு மாயையின் அமிசமாய்ப் பிறந்திருந்ததொரு
பெண்குழந்தையையெடுத்துக்கொண்டு வந்துவிட, அதுமுதல்
கம்சனைக்கொல்லுகிறவரையில் கண்ணபிரான் அக்கோகுலத்திலேயே
இடையர்களுடன் திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தருளினன். கம்ஸன் –
தேவகிக்குத் தமையனாதலால், கண்ணனுக்கு மாமனாவன். தன்னைக்கொல்லப்
பிறந்ததேவகீ புத்திரன் யசோதையினிடம் ஒளித்துவளர்தல் முதலிய
விருந்தாந்தங்களைநாரதர் சொல்லக் கேட்டுக் கம்சன் அதிககோபங்கொண்டு
கிருஷ்ணனைக்கொல்லநிச்சயித்து வில்விழாவென்கிற வியாஜம்வைத்து
வடமதுரைக்கு வரவழைத்துப்பலவகையில் வதைக்க வழிதேடுகையில்,
கம்சசபையில்கிருஷ்ணபகவான் வேகமாகஎழும்பிக் கம்சனது மஞ்சத்தின்மேலேறி
அவனதுகிரீடம் கழன்றுகீழேவிழும்படிஅவனைத் தலைமயிரைப் பிடித்துத் தரையில்
தள்ளி அவன்மேல் தான் விழுந்துஅவனைக் கொன்று ஒழித்தன னென்பது,
மூன்றாமடியிற் குறித்த கதை.
ஈற்றடியிற் குறித்த கதை;- கண்ணன் நரகாசுரனையழித்தபின்பு அவனால்
முன்புகவர்ந்துபோகப்பட்ட (இந்திரன் தாயான) அதிதிதேவியின் குண்டலங்களை
அவளுக்குக் கொடுக்கும்பொருட்டுச் சத்தியபாமையுடனே கருடன்தோளின்மேலேறித்
தேவலோகத்துக்குச் செல்ல, அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச்
சகலஉபசாரங்களைச்செய்தும் தேவர்க்கேயுரிய பாரிஜாதபுஷ்பம் மானுடப்
பெண்ணாகியஇவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள்
அதனைக் கண்டுவிருப்புற்றவளாய்ச் சுவாமியைப் பார்த்து ‘பிராணநாயகனே!
இந்தப் பாரிசாததருவைத்துவாரகைக்குக் கொண்டுபோகவேண்டும்’ என்ன,
கண்ணன் உடனேஅந்தவிருட்சத்தை வேரோடு பெயர்த்துக் கருடன் தோளின்மேல்
வைத்தருளி, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால்வந்து மறித்துப்
போர்செய்த இந்திரனைச்சகலதேவசைனியங்களுடன் சங்கநாதத்தினாலே
பங்கப்படுத்தி, பின்புபாரிசாதமரத்தைத் துவாரகைக்குக்கொண்டுவந்து
சத்தியபாமைவீட்டுப் புறங்கடைத்தோட்டத்தில் நாட்டியருளின னென்பதாம்.
இச்செய்யுளின் ஈற்றடியில் அந்தப்புரம் என்பது வெவ்வேறு பொருளில்
வந்தது,மடக்கு என்னுஞ் சொல்லணி
தண்ணம் துளவோன்தனக்கு இளவல் இவன்காண்-மின்னே!-
சாத்தகி என்று
எண்ணும் போச குலத் தலைவன், எவரும் சூழ
இருக்கின்றான்;
கண்ணன்தன்னை அவமதித்துக் கழறும் புன்சொல்
கார்முகத்தைத்
திண்ணென் கருத்தான், ஈங்கு இவன்காண் சேதிப் பெருமான்,
சிசுபாலன்.–இது, சாத்தகியையும் சிசுபாலனையும் குறித்தது.
மின்னே-மின்னல்போன்றவளே! இவன்-,- தண் அம்துளவோன்
தனக்குஇளவல் – குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையையுடைய
கண்ணபிரானுக்குத்தம்பியாகிய, சாத்தகி என்று எண்ணும் போசகுலம் தலைவன் –
சாத்தகியென்று(எவராலும்) நன்குமதிக்கப்படுகிற போசகுலத்துக்குத்தலைவன்,
காண் – அறிவாய்:ஈங்கு – (அவனுக்கு) இப்பால், எவர்உம் சூழ இருக்கின்றான்- பல
அரசர்கள்(தன்னைச்) சுற்றிலும் இருக்க இடையில் வீற்றிருக்கின்றவனாகிய, இவன்,-
கண்ணன்தன்னை அவமதித்து கழறும் – கிருஷ்ணனை அவமதித்துச் சொல்லுகிற,
புன்சொல் – இழிவான சொற்களாகிய, கார்முகத்தை – வில்லை, திண்ணென் –
வலியதென்று எண்ணுகிற, கருத்தான் – எண்ணத்தையுடையவனும், சேதி பெருமான் –
சேதி தேசத்து அரசனுமாகிய, சிசுபாலன்-; காண் – அறிவாய்; (எ-று.)
சாத்தகி – ஸாத்யகி: சத்தியகனது புத்திரன். யதுகுலத்தரசர்களுள்
வசுதேவனுக்கு உடன்பிறந்தமுறையாகிறவனும் சினியென்பானது மகனுமான
சத்தியகனது குமாரனான சாத்தகி, பிராயத்திற் கண்ணனினும் இளையவனாதலால்,
கண்ணனுக்குத் தம்பி முறையாவன். இவனுக்குச் சிலதலைமுறைகளுக்குமுன்
இக்குலத்தில் தோன்றின மகாபோசனென்கிற அரசன் அதிக
தருமிஷ்டனாயிருந்தனால்அவன்வமிசத்திற்பிறந்தவர்கள் போசரென்று
பிரசித்திபெறுவர்.
பாலபாரதத்தில் பகதத்தனைக்கூறியபின் சிசுபாலன் கூறப்பட்டுள்ளான்.
சிசுபாலன் – வசுதேவனது உடன்பிறந்தவளும், சேதி தேசத்து அரசனாகிய
தமகோஷனுக்குப் பத்தினியுமாகிய சுருதசி-வை யென்பவளுடையமகன்.-
திருமாலினதுவைகுண்டலோகத்தின் துவராபாலகராகிய ஜயவிஜயரென்பவர்
ஒருசமயத்தில் ஆங்குஉட்செல்லவந்த சநகாதியோகிகளைத் தடுத்தமைபற்றி
அவர்கள் வெகுண்டுகூறியசாபமொழியால் மூன்றுபிறப்புத் திருமாலுக்குப்
பகைவராய்ப் பூமியிற் பிறப்பெடுத்துஅத்திருமாலின் கையாலிறப்பவராகி முதலில்
இரணிய இரணியாக்ஷராகவும், அதன்பின்இராவண கும்பகர்ணராகவும், அப்பால்
சிசுபால தந்தவக்கிரராகவும் தோன்றினரெனஅறிக: இச்சிசுபாலன், பிறந்தபொழுது,
நான்கு கைகளையும் மூன்றுகண்களையுமுடையவனாயிருந்தான்; அப்பொழுது
ஆகாயவாணி ‘யார் இவனைத் தொடுகையில்இவனது கைகளிரண்டும்,
மூன்றாம்விழியும் மறைகின்றனவோ, அவனால் இவனுக்குமரணம்’ என்று கூறிற்று;
அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும்கண்ணும், கண்ணபிரான்
தொட்ட வளவிலே மறைபட்டன; அதனால், இவனைக்கொல்பவன்
கண்ணனேயென்று அறிந்த இவன் தாய் ‘யாதுசெய்யினும் என்மகனைக்
கொல்லலாகாது ‘ என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு
ஒருசார் இணங்கிய கண்ணன் ‘இவன் எனக்கு நூறுபிழை செய்யுமளவும்
இவன்பிழையை நான்பொறுப்பேன்’ என்று கூறியருளினன். பின்பு சிசுபாலன்,
தனக்குக் கண்ணன் சத்துருவென்பதை இளமையிலேயே அறிந்து அதனாலும்
முந்தினசன்மங்களின் தொடர்ச்சியாலும் மிக்கபகைமையைப் பாராட்டி எப்பொழுதும்
அவ்வெம்பெருமானை நிந்திப்பதே தொழிலாகஇருந்தான். இவன், தான் கண்ணன்
விஷயமாகப் பலவாறுகூறம் தூஷணைச்சொல்லையே அவனை வெல்லப் போர்
தொடுக்கும் வலிய கருவியாகக் கருதியிருந்தனனென்பதுதோன்ற, ‘கண்ணன்
தன்னையவமதித்துக் கழறும் புன்சொற் கார்முகத்தைத் திண்ணென்கருத்தான்’
எனப்பட்டான்
தார் வண்டு இமிரத் தேன் ஒழுகும் தடந் தோள் வீரன்
சராசந்தன்,
போர் வெஞ் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றிப்
போகாதான்;
சீர் வண் மதுராபுரி விடுத்து, துவாரகையினில் சென்று ஒதுங்க,
கார்வண்ணனையும் நெடுங் காலம் வென்றான், இவன்காண்!’
என்றாரே.-இது, சராசந்தனைக் குறித்தது.
தார் – மாலையில், வண்டு இமிர – வண்டுகள் ஒலிக்க, தேன்
ஒழுகும்-(அதனினின்று) தேன்வழியப்பெற்ற, தட தோள்-பெரிய தோள்களையுடைய,
வீரன் – இந்தவீரன், போர் – போரில், வெம்சரத்தால் – கொடிய அம்புகளால்,
யாவரைஉம் – எதிரிகளெல்லோரையும், புறம்கண்டு அன்றி –
முதுகுகொடுக்கச்செய்தல்லாமல், போகாதான் – (அப்போரினின்று)
மீண்டுசெல்லாதவனான, சராசந்தன்-; கார் வண்ணனைஉம் – காளமேகம் போலும்
திருநிறமுடைய கண்ணனையும், சீர் வள் மதுராபுரி விடுத்து துவராபதியில் சென்று
நெடு காலம் ஒதுங்க – சிறந்த அழகிய மதுராபுரியைவிட்டுத் துவாரகையிற் போய்
நெடுங்காலம் ஒதுங்கும்படி, வென்றான் – சயித்தவன், இவன்-; காண்- அறிவாய்;
என்றார் – என்று (செவிலித்தாயர்) சொன்னார்கள்; (எ-று.)
மகததேசத்து அரசனான பிருகத்ரத னென்பவன் மைந்தனில்லாக்குறையால்
வனத்திற்சென்று சண்டகௌசிக முனிவனைவணங்கி வரம்வேண்ட, அவன்
மாமரத்தின் கனியொன்றைக் கொடுக்க, அதனை அவ்வரசன்
தன்மனைவியரிருவர்க்கும் பகிர்ந்து கொடுத்தான். அதனால் அவ்விருவரிடத்தும்
பாதிபாதியாகக் குழந்தை பிறந்தது. அவற்றை அவன் ஊர்ப்புறத்தி லெறிந்து
விடும்படிகட்டளையிட, அங்ஙனம் எறியப்பட்ட அப்பிளவுகளை
அந்தக்கிராமதேவதையாகியஜரையென்பவள் இரவில் ஊர்வலம் வருகையில் கண்டு
எடுத்துப் பொருத்திப்பிழைபித்து, தன்னாற் பொருத்தப்பட்ட காரணத்தால் ஜராசந்த
னென்று பெயரிட்டுவளர்க்கும்படி அக்குழந்தையைத் தந்தையினிடம் கொடுத்துப்
போயினள். அங்ஙனம்வளர்ந்து, அந்நாட்டில் கிரிவிரசமென்னும் நகரத்தில்
அரசாண்டு செருக்குக் கொண்டுபற்பல அரசர்களைப் போரிற் கொன்று அநேக
அரசர்களை வென்று சிறையில்வைத்திருந்த சராசந்தன், அஸ்தி, பிராஸ்தி
யென்னும் தனது பெண்களிருவரைக்கண்ணனதுமாமனாகுங் கம்சனுக்கு
மணஞ்செய்வித்திருந்தான். பின்பு கண்ணன்கம்சனைக்கொன்றது காரணமாகச்
சராசந்தன் வெகு கோபங்கொண்டு கிருஷ்ணனை வமிசத்தோடு கொல்ல
வேண்டுமென்று அநேகம்பெருஞ்சேனையோடு எதிர்த்து வந்து கண்ணன்
எழுந்தருளியிருந்த மதுராபுரியை வளைத்துப் பெரும் போர்செய்து
பலராமகிருஷ்ணர்களாலும் யாதவசேனையாலும் தானும் தன்சேனையும்
வெல்லப்பட்டவனாய் ஓடிப்போயினான்; இங்ஙனம் பதினெட்டுமுறை மீண்டும்
வருவதுபொருவது தோற்பது ஓடுவதாய்ப் பங்கப்பட்டபின் கோபாவேசமுற்றுப்
பலமானபெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு ஒருகால் போருக்கு வந்தான்.
அச்சமயத்திலேயே, யவன தேசாதிபதியான காலயவனன் பலபராக்கிரமங்களாற்
செருக்குக்கொண்டு கிருஷ்ணபல ராமர்களையே தான் எதிர்த்தற்குஏற்ற
பலவான்களென நாரத முனிவரால் அறிந்து சேனையைச் சித்தஞ்செய்துகொண்டு
போரின் பொருட்டு மதுரைக்கு வந்தான். அப்பொழுது கண்ணன் ஏக காலத்தில்
இருதிறத்தாரோடு பெரும்போர்செய்தால் யாதவ சேனைக்கு நாசமுண்டாகக்
கூடுமென்று நினைத்துச் சமுத்திரராசனைப் பன்னிரண்டுயோசனை தூரம்
இடம்விடும்படி கேட்டு மேல்கடலிடையே பகைவர் உட்புகவொண்ணாதபடி
மிகவும் பாதுகாவலுடையதான துவாரகாநகரத்தை நிருமித்து மதுரையிலிருந்த
சனங்களை யெல்லாம் அந்நகரத்திற்கொண்டுசேர்த்துத் தானும் துவாரகைசேர்ந்து
அங்கேயே எழுந்தருளியிருந்தன னென்பது வரலாறு. கண்ணன் இங்ஙன் செய்தது,
பகைக்குப்பயந்து பங்கப்பட்டதாகவே முடிதலால், சராசந்தனுக்கு அஞ்சிக் கண்ணன்
மதுரைவிட்டுத் துவாரகைக்கு ஓடின னென்று ஓரபவாதம் பரவியது.
மது என்னும் அரசனால் முதலிற் சீர்திருத்தி யாளப்பட்டதாலும், கண்ணுக்கு
இனியதாயிருத்தலாலும், மதுரா என்று பெயர். இங்குக் குறித்தது,வடமதுரை.த்வாரவதீ
என்ற வடசொல், துவாரபதி யெனவிகாரப்பட்டது. (துவரை எனவும் திரியும்.)
இவையிரண்டும் முத்திதரும் நகரினுட்சேர்ந்தவை. ‘போர்வந்தெதிர்த்தால்’ என்பதும்,
‘துவாரகையினில்’ என்பதும் பாடம்.
பனைக்கைப் பிறை வெண் கோட்டு அயிராபதமே போலும்
பகட்டில் இவன்
வினைக்கண் புகுந்தால், எதிர் நின்று வேறு ஆர் இவனை
வெல்கிற்பார்?
முனைக்கண் செங் கண் தீ உமிழும் முகத்தான்-மாதே!-
பகதத்தன்;
தனக்குத் தானே நிகர் என்னத் தருக்கொடு ஈண்டே
இருக்கின்றான்.-இது, பகதத்தனைக் குறித்தது.
மாதே-அழகியபெண்ணே! தனக்கு தான்ஏ நிகர் என்ன –
தனக்குத்தானே ஒப்புமை (தனக்கு ஒப்பாவர் யாருமில்லை) என்று எண்ணி,
தருக்கொடு – செருக்குடனே, ஈண்டுஏ இருக்கின்றான் – இங்கே இருக்கின்றவன்,
பகதத்தன்-; முனைக்கண்-போர்க்களத்திலே, செம் கண் தீ உமிழும் – (மிக்க
கோபத்தாற்) சிவந்தகண்களினின்றும் நெருப்புப்பொறியைச் சொரிகின்ற, முகத்தான்-
முகத்தையுடையவனாகிய, இவன்-, பனை கை – பனைமரம்போன்ற துதிக்கையையும்,
பிறை வெள் கோடு – பிறைச்சந்திரன் போன்ற வெண்மையான தந்தங்களையுடைய,
அயிராவதம்ஏபோலும் – ஐராவதமென்ற அரசயானையையே ஒத்த, பகட்டில்-
யானையின் மேலேறி, வினைக்கண் புகுந்தால் -போர்த்தொழிலிலே பிரவேசித்தால்,
வேறு எதிர் நின்று இவனை வெல்கிற்பார் ஆர் -இவனுக்குப் பகையாய்
இவனெதிரில்நின்று இவனைவெல்லவல்லவர் யாவருளர்?
பகதத்தன்-நரகாசுரனதுமகன்; கண்ணன் நரகாசுரனைக்கொன்றபின்
அப்பெருமானால் அவனது பிராக்சோதிஷமென்னும் பட்டணத்தில்
இராச்சியப்பட்டாபிஷேகஞ் செய்யப்பட்டவன். ஒருகாலத்தில் தேவாசுர யுத்தத்தில்
தோல்வியடைந்த தேவேந்திரன், இவனைத் துணைவேண்ட, இவன் சென்று பொருது
அசுரரை யொழித்து இந்திரனுக்கு அரசாட்சியை நிலைநிறுத்தினன். அக்காலத்தில்
நூறாயிரம்யானை பலமுடைய சுப்பிரதீகமென்னும் தெய்வயானை இந்திரனால்
இவனுக்கு அளிக்கப்பட்டதென்றும் அதனைப்பதினாயிரம் யானையை
யொத்தவனாகிய இவன் பட்டத்துயானையாகக் கொண்டுஅதன்மேல்
ஏறிப்பொருது தவறாதுபகைவென்றுவந்தனனென்றும் அறிக. இவன்,
யானைப்போரில் வல்லவன். ஐராவதமென்பது – இந்திரனது பட்டத்துயானை;
வெண்ணிறத்தையும் நான்குதந்தங்களையும் உடையது, எட்டுத்திசையானைகளுள்
கீழ்திசைக்கு உரியதும் இதுவே
இவன், சல்லியன் என்று உரை சான்ற, இகல் வேல்
மன்னர்க்கு ஏறு அனையான்;
இவன், தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும்
எழில் நீலன்;
இவன், தண் தமிழ் தேர் அடல் வழுதி; இவன், தேர்
இரவிகுல வளவன்;
இவன், செந் தழலோன் மரபு ஆகி, ஈர்-ஏழ் உலகும்
புகழ் சேரன்.-இது சல்லியனையும் நீலனையும் சேரசோழ
பாண்டியரையும் குறித்தது.
இவன்;- சல்லியன் என்று உரை சான்ற – சல்லியனென்று பேர்பெற்ற,
இகல்வேல் மன்னர்க்கு ஏறு அனையான் – வலியவேலாயுதத்தையுடைய
அரசர்களுக்குச்சிங்கம்போன்றவன்; இவன்;-, தன் பகைவர் யாவரைஉம் இமையோர்
ஆக்கும்-தன்பகைவர்களெல்லோரையும் தேவர்களாகச்செய்கின்ற, எழில் நீலன் –
அழகையுடையநீலனென்பவன்; இவன்-; தண்தமிழ் தேர் அடல் வழுதி-இனிய
தம்ழிப்பாஷையைஆராய்ந்துதேர்ந்த வலிமையையுடைய பாண்டியன்; இவன்-,
தேர் இரவிகுலம்வளவன் – தேரையுடைய சூரியனது குலத்தில் தோன்றிய சோழன்;
இவன்-,செம் தழலோன்மரபு ஆகி ஈர் ஏழ் உலகுஉம் புகழ் சேரன்-சிவந்த
அக்கினியினதுகுலத்தில் தோன்றியவனாய்ப் பதினான்கு உலகத்தாரும் புகழ்ப்பெற்ற
சேரன்; (எ-று.)
சல்லியன் – (பகைவர்க்கு) அம்பு நுனிபோல் (வருத்தஞ்செய்)பவன்; சல்யம் –
அம்புமுனை. இவன் மத்திரிநாட்டரசன்; பாண்டுமகாராசனது இரண்டாவது
மனைவியாகிய மாத்திரிக்கு உடன் பிறந்தவன், நீலனென்பவன் பிரசித்தரான
அரசர்களில் ஒருவனாக முதனூலிலுங் குறிக்கப்பட்டுள்ளான். இவனை
மாஹிஷ்மதீநாதனென்று பாலபாரதம்கூறுகிறது. போரிற் புறங்கொடாது. இறந்தவர்,
உடனே தேவர்களாகி வீரசுவர்க்கம் புகுகின்றனரென்பது நூல்துணிபாதலால்,
பகைவர்களைத் தவறாதுகொல்கிற என்ற பொருளில் ‘இமையோர்க்கும்’ என்றார்;
இது, பிறிதினவிற்சியணி. பாலபாதத்தில் தமிழ்மன்னரைக் கூறவில்லை.
வில் ஆண்மையினால் வெங் கருப்பு வில்லோன்தனக்கே
நிகர் என்னப்
பல்லார் புகழும் பான்மையினால், பதினெண் புவிக்கும்
பதியாய
எல்லா அரசும், நின்பொருட்டால், ஈண்டே திரண்ட-இன்
அமுதச்
சொல்லாய்! நல்லாய்! மென் பூவாய்! தோகாய்! பாவாய்!
துரௌபதியே!–இதுபல அரசர்களைப் பொதுப்படக் குறித்தது.
இன் அமுதம் சொல்லாய்-இனிய அமிருதம்போன்ற
சொற்களையுடையவளே!நல்லாய்-அழகையும் நற்குணநற்செய்கைகளையு
முடையவளே! மெல் பூவாய்-(இன்குரலாற் பேசுதலில்) மெல்லிய நாகணவாய்ப்புள்
போன்றவளே! தோகாய் -(சாயலில்) மயில்போன்றவளே! பாவாய் – (அழகில்)
சித்திரப் பதுமையையும்(அருமையில்)கண்மணிப்பாவையையும் (மோகிப்பித்தலில்)
கொல்லிப்பாவையையும்போன்றவளே1 திரௌபதியே-! வில்ஆண்மையினால் –
விற்கொண்டு போர்செய்யுயுந்திறத்தினால், வெம் கருப்பு வில்லோன் தனக்கே
நிகர் – கொடிய கரும்புவில்லையுடைய மன்மதனுக்கே ஒப்பு, என்ன-என்று, பல்லார்
புகழும் பான்மையினால்- பலரும் புகழுந் தன்மையோடு, பதினெண் புவிக்கும் பதி
ஆய எல்லா அரசுஉம் -பதினெட்டுத்தேசங்களுக்கும் தலைவர்களாகிய
எல்லாவரசர்களும், நின்பொருட்டால்-ஈண்டேதிரண்ட-இங்கே வந்து கூடியுள்ளார்;
(எ-று.)
எளியகரும்பை வில்லாக்கொண்டு அதில்மெல்லியமலரம்புகளைத்
தொடுத்துஎய்து காமப்போரை நடத்திப் பிரமன்முதல் எறும்புஈறாக
எல்லாவுயிர்களையும் தன்வசப்படுத்துதலால், மன்மதன், சிறந்தவில்வீர
னெனப்படுவன்.கருப்புவில்லோன் றனக்கே, ஏ – உயர்வுசிறப்போடு பிரிநிலை.
பதினெட்டுத்தேசங்கள்திரவிடம், சிங்களம் சோனகம், சாவகம், சீனம், துளுவம்,
குடகம், கொங்கணம்,கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம்,கங்கம்
மகதம், கடாரம், கௌடம், குசலம் என்பன; பிறவாறும் உரைத்தல் உண்டு. புவி –
வடசொல்; இதுஅந்தப்பாஷையில் ஏழாம்வேற்றுமைவிரியாயினும்
தமிழில்பெயர்மாத்திரமாய் நிற்கும்,
இவரில், தனது தோள் வலியால் அரிஏறு என்ன
எழுந்திருந்து, அத்
தவரில் புரி நாண் உற ஏற்றி, தழல் கால் முனை
வெஞ் சாயகத்தால்
பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய்த் திகிரிப்
பயில் இலக்கைக்
கவரின், செழுந் தார் புனைந்து அவனைக் கைக்கொண்டிடு
நீ கடிது’ என்றார்.-இவர்களுள் இலக்குஎய்பவன் உனக்கு உரியான்’
எனல்.
இவரில் – இந்த அரசர்களுள், (எவனாயினும்), அழ ஏறு என்ன
எழுந்திருந்து – ஆண்டுசிங்கம்போல எழுந்து, தனது தோள் வலியால்- தன்னுடைய
புஜபலத்தால், அ தவரில் – அந்த வில்லில், புரி நாண் உற ஏற்றி-நாணிக்கயிற்றைப்
பொருந்தப் பூட்டி, தழல் கால் முனை வெம் சாயகத்தால் – நெருப்பைச் சொரிகிற
நுனியையுடைய கொடிய அம்பினால், பவரின் செறிய நிரைத்து உருளும் பல்
வாய் திகிரி பயில் இலக்கை – ஆர்களால் நெருங்க நிரைக்கப்பட்டு உருளுகின்ற
பலநுனிகளையுடைய யந்திரசக்கரத்திற் பொருந்திய இலட்சியத்தை, கவரின் –
எய்துதள்ளினால், செழு தார் புனைந்து – செழிப்பான மணமாலையை (அவனுக்கு)ச்
சூட்டி, அவனை நீ கடிது கைக்கொண்டிடு – அவனை நீ விரைந்து (கணவனாகக்)
கைக்கொள்வாய், என்றார்-என்று (செவிலித்தாயர்) சொன்னார்கள்; (எ-று.)
முத்த நகை, பவள இதழ், குளிர் வெண் திங்கள் முகத்தாளைக்
கைத்தாயர் மொழிந்தகாலை,
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து, தம்தம் பைம் பொன் திகழ்
அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர்;
அத் தனுவின் பெருமையையும், இலக்கத்து உள்ள அருமையையும்,
கருதாமல் ஆண்மை கூறி,
எத்தனை எத்தனை வேந்தர், ஆசை கூர, ‘யான், யான்’ என்று
எழுந்திருந்தார், யானைபோல்வார்!–சில அரசர்கள் சோர்வுறச் சில அரசர்கள்
ஊக்கங்கொண்டு எழுதல்.
முத்தம் நகை – முத்துப்போன்ற பற்களையும், பவளம் இதழ் –
பவழம்போன்ற வாயிதழையும், குளிர் வெள் திங்கள் முகத்தாளை – குளிர்ந்த
வெண்ணிறமான பூர்ணசந்திரன் போன்ற முகத்தையுமுடைய திரௌபதியைநோக்கி,
கைத்தாயர் – செவிலித் தாய்மார், மொழிந்த காலை – (இவ்வாறு) சொன்னபொழுது,-
சிற் சில் வேந்தர் – (அந்தச்சுயம்வரசபையிலிருந்த) சில சில அரசர்கள்,
(அவ்வில்லின்வலிமையையும் இலக்கின் அருமையையும் ஆலோசித்து), உணர்வு
அழிந்து -அறிவுஒடுங்கி, சித்திரம் ஒத்து- சித்திரப்பதுமை போன்றவர்களாய்
(செயலற்று), தம்தம் பைம் பொன் திகழ் அரி ஆசனத்து இருந்தார் –
பசும்பொன்னாற் செய்யப்பட்டுவிளங்குகிற தங்கள் தங்கள் சிங்காசனங்களில்
இருந்தபடியே இருந்தார்கள்; (இதுநிற்க); யானைபோல்வார்-யானைபோலக்
கொழுத்தவர்களாகிய, எத்தனைஎத்தனை வேந்தர்-எத்தனை எத்தனை அரசர்கள்,
ஆசை கூர -(திரொபதியின்மேல்) ஆசை மிகுதலால், அ தனுவின்
பெருமையைஉம் இலக்கத்துஉள்ள அருமையைஉம் கருதாமல் – அந்த வில்லின்
பெருமையையும்அக்குறியிலுள்ள எய்தலில் அருமையையும் ஆலோசியாமல்,
ஆண்மை கூறி -வீரவார்த்தை சொல்லிக்கொண்டு, யான் யான் என்று
எழுந்திருந்தார் – யான் யான்என்று சொல்லி (ஒருவர்முன் ஒருவர்)
எழுந்திருந்தார்கள்! (மிகப்பலர் எழுந்தனர்); (எ -று.)
மதயானை களிப்புமிகுதியால் செய்வது தவிர்வது அறியாது அடக்கமின்றி
ஒன்றைச்செய்யத்தொடங்கி அழிவதுபோல, இவர்களும் வேட்கை விஞ்சுதலால்
ஆலோசியாமல் துணிந்தெழுந்து விற்றிறங்காட்டத்தொடங்கிப் பங்கப்படுதலால்;
‘யானைபோல்வார்’ எனப்பட்டார்.
இதுமுதற் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் ஒன்றுஇரண்டு ஐந்து
ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையநான்கும் மாச்சீர்களுமாகியகழிநெடிலடி
நான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள்.
தனு எடுத்து, நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில்
அவனிபரைத் தடுத்து, வேதப்
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்விப் பார்ப்பன
மாக்களின் இடையே, பாண்டு மைந்தர்
அனு உருக்கொண்டு, உரு மாறி, இருந்த தன்மை அறிந்தருளி,
அலாயுதனோடு அருளிச்செய்தான்-
மனு முறைக்கு வரம்பு ஆகி, வருத்தம் வீட, மா நிலமீது
அவதரித்த வாசுதேவன்.-கண்ணன் பலராமனுடன்சொல்லித் தன்குலத்தாரைத்
தடுத்தல்.
மனு முறைக்கு வரம்பு ஆகி – மனுதர்மசாஸ்திரத்திற் கூறப்பட்ட
நீதிநெறிக்கு எல்லையாகி, மா நிலம்மீது – பெரிய பூமியின்மேல், வருத்தம் வீட-
(அப்பூமிதேவியின்) துன்பம் நீங்க, அவதரித்த-தோன்றியருளிய, வாசுதேவன் –
வசுதேவகுமாரனான கண்ணபிரான்,-வேதம் பனுவலுக்குஉம் தவத்தினுக்குஉம் உரிய-
வேதங்களாகிய, நூல்களுக்கும் தவத்துக்கும்உரிய, வேள்வி – யாகங்களையுடைய,
பார்ப்பன மாக்களின் இடையே – அந்தணர்களின் நடுவே, பாண்டு மைந்தர் –
பாண்டவர்கள், அனு உரு கொண்டு-(அந்த அந்தணர்களுக்கு) ஒத்த
உருவத்தைக்கொண்டு, உரு மாறி இருந்த தன்மை – தம்வடிவம்மாறி வீற்றிருந்த
தன்மையை, அறிந்து அருளி-, தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளராநின்ற தன்
குலத்தில் அவனிபரை தடுத்து – வில்லையெடுத்து நாணியைப்பூட்டுதற்கு
ஊக்கங்கொண்டெழுகிற தனது (யது) குலத்து அரசர்களை (நீங்கள்
எழவேண்டாவென்று) தடுத்து, அலாயுதனோடு அருளிச்செய்தான்-
(பாண்டவர்கள்மாறுவேடங்கொண்டு வந்திருக்கிற தன்மையைப்) பலராமனுடன்
கூறினார்; (எ-று.)
கூறுதலென்ற பொருளில் அருளிச்செய்தல் என்றல், ஒரு வகை மரபு.
துஷ்டர்கள் மிக்கதனால் உண்டான பூமிபாரத்தைநிவிருத்திசெய்யும்பொருட்டும்,
அவர்களால் உலகத்தில் வரம் பழிந்த தருமத்தை நிலைநிறுத்தற்பொருட்டும்,
திருமால்வசுதேவகுமாரனாய்க் கண்ணனாகத் திருவவதரித்தானாதலறிக. அநு
ரூபம்என்றவடமொழி, அனுவுரு எனச் சிதைந்துவந்தது; ஒத்த வடிவமென்பது
பொருள். ஹலாயுதன் – கலப்பையை ஆயுத மாகயுடையவன்,
பலரும் உடன் அகங்கரித்து, மேரு சாரப் பார வரி சிலையின்
நிலை பார்த்து மீண்டார்;
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமைதனைக்
குறித்து, மனம் பதைக்கப் போனார்;
பலரும் மலர்க் கைப் படுத்திப் பெயர்க்க மாட்டார், பணைத்
தோள் நொந்து, ‘அமையும்’ என, பயந்து நின்றார்;
பலரும் எடுத்து, அணி மணி நாண் பூட்ட வாராப் பரிசொடு
மற்று அதன் வலிமை பகர்ந்தே, விட்டார்.-பல அரசர்கள் விற்றிறங்காட்டமுயன்று மாட்டா
தொழிதலை, இது முதல் நான்குகவிகளிற் கூறுகிறார்.
பலர்உம் – பல அரசர்கள், உடன் – ஒருசேர, அகங்கரித்து-
செருக்குக்கொண்டு, (அருகில் வந்து), மேரு சார் பாரம்வரி அ சிலையின் நிலை
பார்த்து மீண்டார்-மகாமேருகிரியையொத்த பாரமான கட்டமைந்த அந்தவில்லின்
தன்மையைப் பார்த்து (அஞ்சி)த்திரும்பினார்கள்; பலரும் – பல அரசர்கள், ஒரு
கையின் பிடிக்க அடங்கா வில்லின் பருமைதனை குறித்து-ஒரு கையினாற்
பிடித்தற்கு அடங்காத அவ்வில்லின் பருத்ததன்மையைக்கருதி, மனம் பதைக்க
போனார் – (தம்தம்) மனம் திடுக்கிடத் திரும்பிப் போய்விட்டார்கள்; பலரும் – பல
அரசர்கள், மலர் கை படுத்தி – தாமரைமலர்போன்ற (தம்) கைகளாற் பிடித்து,
பெயர்க்க மாட்டார் – அசைக்கவும் மாட்டாதவர்களாய், பணை தோள் நொந்து –
பருத்த தோள்கள் நோவப்பெற்று, அமையும் என பயந்து நின்றார்-இதுபோதுமென்று
அஞ்சி நின்றார்கள்; பலரும் -பல அரசர்கள், எடுத்து-(அவ்வில்லைக் கையாற்
பிடித்து) நிலைபெயரச்செய்து, (அவ்வளவிலே), அணி மணி நாண் பூட்ட வாரா
பரிசொடு அதன் வலிமை பகர்ந்தே -அழகிய உறுதியான நாணியைப்பூட்ட (த்
தம்மால்) இயலாத தன்மையையும் அவ்வில்லின்வலிமையையுஞ் சொல்லிக்கொண்ட,
விட்டார் -(அம்முயற்சியைக்) கைவிட்டார்கள்; (எ- று.)-மற்று – அசை;
வினைமாற்றுமாம்.
இதுமுதல் நான்கு கவிகளில், மேன்மேலுயர்ச்சியணி தோன்ற
ஒன்றன்மேலொன்று உயர்த்திச்சொல்லிக்கொண்டு செல்கின்றனராதலால்,
அதற்குஇணங்க, ‘எடுத்து’ என்பதற்கு-நிலைபெயர்த்து என்று உரைத்து, அதனை
‘பகர்ந்து’ என்பதனோடு இயைக்க. இச்செய்யுளின் முதலடியிற் கூறியவர்,
செருக்கிச்சென்று அந்தவில்லின் நிலைமையைப் பார்த்தமாத்திரத்தோடுமீண்டவர்;
இரண்டாமடியிற் கூறியவர், பார்த்துக் கையிற்பிடிக்கக்கருதி அதன்
கைக்கடங்காப்பருமையைக்குறித்து மனம்வருந்தி மீண்டவர்; மூன்றாமடியிற் கூறியவர்,
கைகளாற்பிடித்து அதனை நிலைபெயர்க்க மாட்டாமல் தோள்நொந்து அஞ்சி
மீண்டவர்; நான்காமடியிற் கூறியவர், கைகளாற்பிடித்து நிலைபெயர்த்துப் பின்பு
யாதொன்றுஞ் செய்யமாட்டாமையால் தமதுவலிமையின்மையையும் அதன்
வலிமையையுங் கூறிக்கொண்டே கைவிட்டவர் எனக்காண்க
வல்லியம்போல் நடந்து, தனு இரு கையாலும் வாரி எடுத்து,
எதிர் நிறுத்தி, மல்லல் வாகுச்
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது, அந்தத் தனுவுடனே
தன் தனுவும் தகர, வீழ்ந்தான்;
வில்லியரில் முன் எண்ணத் தக்க வின்மை வேந்து அடு
போர்ப் பகதத்தன், வில் வேதத்தில்
சொல்லியவாறு எடுத்து ஊன்றி, மற்றைக் கையால் தொல்
வலி நாணியும் எடுத்து, தோளும் சோர்ந்தான்.
மல்லல் – வலிமையைக்கொண்ட, வாகு-தோள்களையுடைய,
சல்லியனும்-, வல்லியம் போல் நடந்து – புலிபோல (வலிமையோடு) சென்று, தனு-
வில்லை, இருகையால்உம் வாரி எடுத்து எதிர் நிறுத்தி – இரண்டுகைகளாலும்
வாரியெடுத்து (த் தன்) எதிரிலே நிற்கச்செய்து, (அதன்மேல்), நாண் ஏற்ற
முடியாது -நாணியைப்பூட்ட முடியாமல், அந்த தனுவுடனே-அவ்வில்லுடனே, தன்
தனுஉம் தகரவீழ்ந்தான் – தனது உடம்பு நொருங்கக் கீழ் வீழ்ந்திட்டான்;
வில்லியரில் முன்எண்ணத்தக்க வின்மை – வில் வீரர்களுள் முதலில்வைத்து
எண்ணத்தக்க வில்லின்திறமையையும், வேந்து அடு போர்-அரசர்களை
அழிக்கின்ற போரையுமுடைய,பகதத்தன்-, வில் வேதத்தில் சொல்லிய ஆறு
எடுத்துஊன்றி- தனுர்வேதத்திற்சொல்லியுள்ளபடி ஒருகையால் (வில்லை) எடுத்து
நிறுத்தி, மற்றை கையால் தொல்வலி நாணிஉம் எடுத்து – மற்றொருகையினால்
முதிர்ந்தவலிமையையுடைய நாணியையும்எடுத்து, தோள்உம் சோர்ந்தான் –
(அவ்வளவில்) கைசோர்ந்து விட்டிட்டான்;
சல்லியன் தன்வலிமையைக்கொண்டு இரண்டுகைகளாலும் அவ்வில்லைத்
தழுவியெடுத்து எதிர்நிறுத்தியிட்டன னாயினும் அதன்பின் ஒருகையில் விற்பிடித்து
மற்றொருகையால் நாணியை எடுத்து ஏற்ற இயலாமல் அதற்கு உரிய முயற்சி
செய்தவளவிலே வில்லோடு வீழ்தலால் தன் உடம்பு நன்கு நொருங்கும்படி
சாய்ந்திட்டா னென்றும். பின்பு பகதத்தன் ஒருகையால் வில்லை யெடுத்து நிறுத்தி
மற்றொருகையால் நாணியையும் எடுத்து அவ்வளவில் தோள்சோர்ந்தான் என்றும்
மேன்மேலுயர்ச்சியணி காண்க. தனுர் வேதமாவது -ஆயுதங்களிற்பயிலும்
வகைகளையும், பகை வெல்லுதற்கு உரிய மந்திரம்முதலியவற்றின்
பிரயோகங்களையும் தெரிவிக்கிற சாஸ்திரம். தனு – வில்என்றபொருளில் தநுஸ்
என்ற வட சொல்லின் விகாரமும், உடம்பைக்குறிக்கும்போது தநு
என்ற வடசொல்லின் விகாரமுமாம். ‘வேந்தடுபோர்ச்சராசந்தன்’ என்ற பாடம்
பொருந்தாது, அடுத்தசெய்யுளில் ‘மாகதன்’ எனப்படுபவன் சராசந்த னாதலால்.
தனுவும் உம்மை-அசைநிலை: உயர்வு சிறப்புமாம். எச்சவும்மையாக, வில்லுந்தகரஎன
உரைத்தலாகாது தனுவுடனே வீழ்ந்தானென இயையும்.
பூ கதன் ஆகிய அன்றே, பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து,
உலகு ஆளப் புனைந்த மௌலி
மாகதனும் வில் எடுத்து, வரி நாண் வில்லின் மார்பளவும்
போக்கினான்; வன் போர் நீலன்,
‘சாகதன்’ என்று அவை துதிக்க, நெடு நாண் கொற்றத் தனு ஒரு
சாண் எனக் கொணர்ந்தான்; ‘சாணே அல்ல,
வேக தனு நால் விரல்’ என்று உரைக்க, நாணி வீக்கினான்,
வலம்புரித் தார் வேந்தர் வேந்தே.
பூ கதன் ஆகிய அன்றுஏ – பூமியைஅடைந்தவனான
அப்பொழுதே(பிறந்தபொழுதே தொடங்கி என்றபடி), பகைவர் எல்லாம் போற்ற –
பகைவர்களெல்லோரும் கீழ்ப்படிந்துவணங்கித் துதிக்கும்படி, வளர்ந்து-, உலகு
ஆள-உலகத்தை அரசாளுமாறு, புனைந்த – அணிந்த, மௌலி-கிரீடத்தையுடைய,
மாகதன்உம் – மகததேசத்து அரசனான சராசந்தனும்,வில்எடுத்து-(ஒரு கையால்)
வில்லையெடுத்து நிறுத்தி, (மற்றொருகையால்), வரி நாண்- நீண்ட நாணியை,
வில்லின் மார்பு அளவுஉம் போக்கினான் – அவ்வில்லின் நாணிபூட்டுங் கோடியின்
ஒருமார்புதூரம்வரையிலும் கொண்டுபோய் அதற்குமேல் இயலாதவனானான்;
வல்போர் நீலன்- வலிய போரையுடைய நீலனென்னும் அரசன், சாகதன் என்று
அவை துதிக்க – அருஞ்செயல்செய்பவ னென்று சபையிலுள்ளோர் தன்னைக்
கொண்டாடும்படி, நெடு நாண் – நீண்டநாணியை, கொற்றம் தனு ஒரு சாண் என
கொணர்ந்தான் – வெற்றியையுடைய அவ்விற்கோடி ஒருசாண்தூரத்திலுள்ளதென்ற
அளவும் கொண்டுபோய் அதற்குமேல் இயலாதவனானான்: வலம்புரி தார்வேந்தர்
வேந்து – நஞ்சாவட்டைப் பூமாலையையணிந்த அரசர்க்கரசனாகிய துரியோதனன்,
வேகம் தனு – உக்கிரமானஅவ்வில்லின் கோடி, சாணே அல்ல – ஓருசாணளவுதூரமு
மில்லை, நால் விரல்-நாலுவிரல்தூரமே யுள்ளது, என்று உரைக்க- என்று
சொல்லுமளவும், நாணி வீக்கினான் – நாணியைக் கொண்டுபோய் அதற்கு
மேல்இயலாதவனானான்; (எ – று.)
சராசந்தனது நாடு-மகதமும், நகரம்-கிரிவிரசமும்;மேல் சபாபருவத்தில்
“கிரிவிரசநக ரெய்திக்கிரித்தடந்தோள் மகதேசன்கிளருங்கோயில்” என்பதனாலும்
உணர்க. சாகதன்=ஸாஹஸன்: ஸாஹஸத்தையுடையவன்; ஸாஹஸம்-துணிச்சலான
அருஞ்செயல்.
கலை வருத்தம் அறக் கற்ற கன்னன் என்னும் கழற் காளை,
அரன் இருந்த கயிலை என்னும்
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன, மன் அவையில்
வலியுடனே வந்து தோன்றி,
நிலை வருத்தம் அற நின்று, பரிய கோல நீள் வரி நாண்
மயிர்க்கிடைக்கீழ் நின்றது என்ன,
சிலை வருத்தம் அற வளைத்து, வளைந்த வண்ணச் சிலைக் கால்
தன் முடித் தலையைச் சிந்த, வீழ்ந்தான்.
கலை – நூல்களை, வருத்தம், அற கற்ற-வருத்தமில்லாமல் கற்றறிந்த,
கன்னன் என்னும் – கர்ணனென்கிற, கழல் காளை – வீரக்கழலையுடைய இளவீரன்,-
அரன் இருந்த-சிவபிரான் வீற்றிருக்கிற, கயிலை என்னும் மலை – கைலாசமென்னும்
மலையை, வருத்தம், அற எடுத்த -வருத்தமில்லாமல் (எளிதில்) பெயர்த்தெடுத்த,
நிருதன் என்ன- அரக்கனாகிய இராவணன் போல, மன் அவையின் வலியுடன்ஏ
வந்து தோன்றி – இராசசபையினின்று வலிமையோடு எழுந்து முன்வந்து, நிலை
வருத்தம் அற நின்று – (வில்வீரர்க்குஉரிய) நிலையிலே வருத்தமில்லாமல்
நிலைநின்று, பரிய கோலம் நீள் வரி நாண்-பருத்த அழகையுடைய
நீண்டமுறுக்குள்ளநாணி, மயிர்க்கிடை கீழ் நின்றதுஎன்ன-ஒருமயிரினளவுதூரத்தின்
கீழ்நின்றதென்றுசொல்ல, (அதுவரையிலும்), சிலை வருத்தம் அற வளைத்து –
வில்லைவருத்த மில்லாமல் (எளிதில்) வளைத்து நின்று, (அவ்வளவிலே), வளைந்த
வண்ணம்சிலை கால் தன் முடி தலையை சிந்த-வளைத்த அழகிய அவ்வில்லின்
கால்(நிமிர்ந்து) தனது கிரீடமணிந்த தலையைத் தாக்க, வீழ்ந்தான்-; (எ- று.)
கர்ணன் அவ்வில்லை எளிதில் எடுத்துவளைத்து நாணேற்றி விரைவாக
அம்பைத்தொடுத்து எய்யச் சித்தனானவளவில் திரௌபதி உரத்தகுரலோடு ‘நான்
பாகன்மகனை விவாகஞ்செய்துகொள்ளேன்’ என்று மறுத்துக் கூறவே, அவன்
உடனேவருத்தத்தோடு வில்லை எறிந்துவிட்டு மீண்டன னென முதனூல்கூறும்.
“சாபம்மஹாந்தம் தபநஸ்யஸூநௌ – அதிஜ்யமாதந்வதி ரோமமாத்ரே ஸ தம்
விசிக்ஷேப” என்றது, பாலபாரதம். நிருதன் – நிருருதியென்னுந் திக்பாலகியினது
மரபினன். மகாபலசாலியான கர்ணனுக்கு ராக்ஷசராசனான இராவணனும், இவன்
எளிதாக எடுத்தபருத்த பாரமான வில்லுக்கு அவன் எளிதில் எடுத்து பெரிய
கைலாசகிரியும்உவமை. இராவணன் தனது பலத்தால் அலட்சியமாகக்
கைலாசத்தைப்பெயர்த்துஎடுத்தபொழுது உடனேபங்கப்பட்டமை போல, இவனும்
அலட்சியமாகவில்லையெடுத்து வளைத்தபொழுது உடனே பங்கப்படுதலால்,
உவமை ஏற்கும். நிலை- அம்புஎய்வார் நிற்றற்குஉரிய நிலை: அது-பைசாசம்,
மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு. இவற்றுள், ஒருகால்நின்று
ஒருகால்முடக்கல்-பைசாசநிலை: இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல் –
மண்டலநிலை; வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல் – ஆலீடநிலை;
வலக்கால்முந்துற்று இடக்கால்மண்டலித்தல்-பிரதியாலீடநிலை
அரவ நெடுங் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும்
அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி,
உரவு மெலிந்து, எழில் மாழ்கி, செயல் வேறு இன்றி, உள்ளம்
அழிந்து, இருந்ததன்பின், உரும் ஏறு என்ன,
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்றக் கரு முகில்
வாகனன் புதல்வன், கரிய மேனி
இரவிகுலச் சிறுவனைப்போல் எழுந்து, மன்றல் இளங்கொடி
தம்முனை நோக்கி, இயம்பினானே:-அந்தணவடிவங்கொண்டிருந்த அருச்சுனன்
எழுந்துபேசலுறல்.
அரவம் நெடு கொடி உயர்த்தோன் முதல் ஆ உள்ள அனைவர்உம்
– பாம்பின்வடிவமெழுதிய நீண்டகொடியை உயரநாட்டிய துரியோதனன் முதலாக
அங்குஉள்ள அரசர்கள் எல்லோரும், அங்கு-அவ்வாறு, ஒரு தனுவுக்கு ஆற்றார்
ஆகி – ஒப்பற்ற அவ்வில்லில் திறங்காட்டமாட்டாதவர்களாய், உரவு மெலிந்து –
வலிமை குன்றி, எழில் மாழ்கி-மனவெழுச்சி சோர்ந்து, செயல் வேறு இன்றி –
ஒன்றுஞ்செய்யமாட்டாமல், உள்ளம் அழிந்து இருந்ததன் பின்-மனமழிந்து
இருந்தபின்பு,- அந்தணர் நாப்பண்- பிராமணர்களுக்கு நடுவிலே, கரவுடன் இருந்த –
மறைந்தவடிவத்தோடு வீற்றிருந்த, கொற்றம் – வெற்றியையுடைய, கரு முகில்
வாகனன் புதல்வன் – கருநிறமுள்ள மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனது
குமாரனாகிய அருச்சுனன்,- இரவி குலம் கரிய மேனி சிறுவனை போல் எழுந்து –
சூரியகுலத்தில் திருவவதரித்த கரிய திருமேனியையுடைய இராசகுமாரனான
இராமபிரான் போலஎழுந்து நின்று, மன்றல் இள கொடி தம்முனை நோக்கி –
விவாகத்துக்கு உரிய இளமையான பூங்கொடிபோன்ற திரௌபதியினது தமையனான
திட்டத்துய்மனைப் பார்த்து, உரும் ஏறு என்ன இயம்பினான் – சிறந்த இடிபோலக்
கம்பீராமான உரத்தகுரலோடு ஒன்று சொல்வானானான்; (எ-று.)-அவ்வார்த்தையை,
அடுத்த கவியிற் காண்க.
மன்றல் என்பதற்கு – நறுமணமென்றும் பொருள்கொள்ளலாம்; அது –
உபமானமாகியபூங்கொடிக்கும், உபமேயமாகிய திரௌபதிக்கும் ஏற்கும்: திரௌபதி
உத்தமஸ்திரீசாதிலக்ஷணமான நறுமணத்தைத்தன்உடம்பில் மிகுதியாகவுடையளாயி
ருந்தனளென்று பலவிடத்தும் முதனூல் கூறும்.
‘மன் மரபில் பிறந்து, இரு தோள் வலியால், இந்த மண் ஆளும்
அவர்க்கு அன்றி, மறை நூல் வாணர்
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால், சூட்டுமோ
தொடையல், இளந்தோகை?’ என்ன,
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன், ‘தகவு அன்றோ?
மன்றலுக்குத் தாழ்வோ?’ என்றான்;
வில் மரபில் சிறந்த நெடு வில்லை, ஈசன் மேரு கிரி
எடுத்ததென, விரைவில் கொண்டான்.-அருச்சுனன் திட்டத்துய்மனிடம்அநுமதிபெற்று
வில்லையெடுத்தல்.
மன் மரபில் பிறந்து – க்ஷத்திரியசாதியிலே பிறந்து, இரு தோள்
வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி – (தங்கள்) தோள்களிரண்டின்
வலிமையினால் இந்தப்பூமியை ஆளுகிற அரசர்களுக்கே யல்லாமல், மறை நூல்
வாணர் தொல் மரபில் பிறந்தவர் உம் இலக்கு வீழ்த்தால் – வேதங்களாகிய
நூல்களுக்கு உரிமை பூண்டஅந்தணர்களுடைய தொன்றுதொட்டுவருகிற சாதியிலே
தோன்றியவர்களும் குறித்த இலக்கைஎய்துவிழுத்தினால், (அவர்க்கும்,) இள
தோகை -இளமையானமயில்போன்றசாயலுள்ள திரௌபதி, தொடையல் சூட்டும்ஓ –
சுயம்வரமாலையைச் சூட்டுவளோ? என்ன – என்று (அருச்சுனன்) வினாவ,-
தன்மரபுக்கு அணிதிலகம் ஆன வீரன் – தான்பிறந்த சோமககுலத்துக்கு
அழகியதிலகம்போல மேன்மைவிளைப்பவனான வீரனாகிய திட்டத்துய்மன்,
‘மன்றலுக்கு தாழ்வுஓ – (அது) விவாகத்துக்குக் குறைவோ? தகவு அன்றுஓ- (அது)
பெருமையன்றோ? என்றான் – என்று சொன்னான்; (உடனே அருச்சுனன்), வில்
மரபில் சிறந்த நெடு வில்லை – வில்லின் இனங்களுட் சிறந்த நீண்ட அவ்வில்லை,
ஈசன் மேருகிரி எடுத்தது என – சிவபிரான் மகாமேருமலையாகிய
வில்லைஎடுத்ததுபோல, விரைவில் கொண்டான் – விரைவில் எடுத்தான்; (எ-று.)
அந்தணன் இராசகன்னிகையை மணத்தல் அப்பெண்ணின் குலத்தார்க்குப்
பெருமையாகுமே யன்றி இழிவாகா தென்று சொல்லித் திட்டத்துய்மன்
அருச்சுனனதுகொள்கையைமகிழ்ச்சியோடு அங்கீகரித்தன னென்க. ஈசன்
மேருகிரியெடுத்தது, திரிபுரசங்காரகாலத்தில்.
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக,
தனி நெடு நாண் கிளர ஏற்றி,
தளர்வு அறு சாயகம் தொடுத்து, கற்றோர் யாரும், ‘தனு நூலுக்கு
ஆசிரியன் தானே’ என்ன,
உளர் திகிரிச் சுழல் இலக்கை, அவையோர்தங்கள் ஊக்கமுடன்
விழ, எய்தனன் உரவுத் தோளான்.
வளரும் அருந் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார்; வாச நறு மலர்
சொரிந்து, வானோர் ஆர்த்தார்.–அருச்சுனன் இலக்கைஎய்ய, முனிவரும் தேவரும்
மகிழ்தல்.
உரவு தோளான் – வலிமையையுடைய தோள்களையுடையவனான
அருச்சுனன்,- கிளர் மகுடம் வய வேந்தர்நாண்கள் எல்லாம் கீழ் ஆக தனி நெடு
நாண் கிளர ஏற்றி – விளங்குகிற கிரீடத்தை யணிந்த வலிமையையுடைய
அரசர்களின்நாண்களெல்லாம் கீழ்ப்பட்ட ஒப்பற்றநீண்டநாணியைமேலாம்படி
உயரப்பூட்டி, தளர்வுஅறு சாயகம்தொடுத்து-தளர்ச்சியில்லாத(மிகவலிய)
அம்பைத்தொடுத்து, கற்றோர்யார்உம் தனு நூலுக்கு ஆசிரியன் தான் ஏ என்ன –
படித்தவர்களெல்லோரும் ‘வில்வித்தைக்கு ஆசாரியன் இவனே’ என்று
(தன்னைக்குறித்துக்கூறிக்) கொண்டாடும்படி, உளர்திகிரி சுழல்இலக்கை
அவையோர் தங்கள் ஊக்கமுடன் விழ எய்தான்-சுழலுகிறயந்திரசக்கரத்திற்
பொருந்திச் சுழல்கிறஇலக்கை அச்சபையிலுள்ள அரசர்களுடைய உற்சாகத்தோடு
கீழ்விழும்படி அடித்துத்தள்ளினான்; (அதுகண்டு), வளரும் அரு தவம் வேள்வி
முனிவர் ஆர்த்தார் – (மேன்மேல்) வளர்கிற அரிய தவத்தையும். யாகத்தையு
முடைய அந்தணர்கள் (மகிழ்ந்து) ஆரவாரித்தார்கள்; வானோர் – தேவர்களும்,
வாசம் நறு மலர் சொரிந்து-பரிமளமுள்ள நல்ல பூக்களை மேற்சொரிந்து,
ஆர்த்தார்-; (எ- று.)- ‘தழல் வேள்வி’ எனவும் பாடம்.
இலக்கைத் தங்கள் சாதியானொருவன் எய்துவீழ்த்தியப்பெருமையுற்றன
னென்றுகருதியதனால், அந்தணர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தார்கள். நிலவுலகத்தில்
விசேஷமான செய்கைகள் நடக்கும்போது அவற்றை மேலிருந்துகாணுதலும்
மலர்மாரிசொரிதலும், தேவர்களியல்பு. இரட்டுறமொழிதல் என்னும் உத்தியால்
முதலடிக்கு – கீழ் அரசர்கள் விற்கோடியை யெட்ட நாணியைக் கொண்டுசென்ற
மார்பளவு சாணளவு விரலளவு மயிரளவு என்னும் எல்லைகளெல்லாம் கீழ்ப்பட்ட
அவற்றின்மேல் உரிய இடத்தில்தான் நாணியைப்பூட்டியென்றும், அவ்வரசர்களுடைய
நாணங்கள் இழிவு பெற (அவர்கட்கு மானபங்க முண்டாம்படி) தான் நாண்பூட்டி
யென்றும் கருத்துக்கொள்க. அரசர்களால் எய்துவிழுத்த முடியாத இலக்கை இவன்
எய்து வீழ்த்துமளவிலே அவர்களுடைய மனவெழுச்சி ஒழிதலால், ‘இலக்கை
யவையோர் தங்களூக்கமுடன் விழவெய்தான்’ என்றார்; இது, புணர்நிலையணி.
‘ஆர்த்தார்’ என்ற சொல் ஒருபொருளிலேயே மீண்டுவந்தது.
சொற்பொருட்பின்வருநிலையணி.
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான்’ என்று, தரணிபர்தம்
முகம் கருக, தனுவினோடும்
பூஞ் சாரல் மணி நீல கிரிபோல் நின்ற பூசுரனை, ‘இவன்
அவனே போன்ம்’ என்று எண்ணி,
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செங் கண் பங்கயத்தால்
பாங்காகப் பரிந்து நோக்கி,
தேம் சார நறுங் கழுநீர்ச் செய்ய தாமம் செம் மணி கால்
அருவிஎனச் சேர்த்தினாளே.-திரௌபதி அருச்சுனனுக்கு மணமாலை சூட்டுதல்.
தாம் சாரற்கு அரிய – தாங்கள் அருகிற்செல்லுதற்கு அருமையான,
தனு – வில்லை, வளைத்தான்-(இவன்) வளைத்திட்டான், ‘ என்று – என்ற
காரணத்தால், தரணிபர் தம் முகம் கருக – அரசர்கள் தங்கள்முகம் கருகிவாட,
தனுவினோடுஉம்- (கையிற்பிடித்த) வில்லுடனே, பூ சாரல் மணி நீலகிரி போல்நின்ற-
பொலிவுள்ள சாரல்களையுடைய அழகிய நீலமலைபோல நின்ற, பூசுரனை – அந்த
அந்தணனை, பாஞ்சாலர்பதி கன்னி – பாஞ்சாலதேசத்தார்க்கு அரசனாகிய
துருபதனுடைய பெண்ணான திரௌபதி, இவன் அவன்ஏ போன்ம் என்று எண்ணி-
`இவன் அந்த அருச்சுனனேயாவன்’ என்று நினைத்து, இரு தனசெம் கண்
பங்கய்ததால் பாங்கு ஆக பரிந்து நோக்கி – தாமரைமலர்போன்ற சிவந்ததனது
இரண்டு கண்களாலும் நன்றாக அன்புகொண்டு பார்த்து, தேம் சாரம் நறு கழுநீர்
செய்ய தாமம்-இனிய தேனையுடைய வாசனை வீசுகிற செங்கழுநீர் மலர்களால்
தொடுக்கப்பட்ட சிவந்த மாலையை, செம்மணி கால் அருவி என – சிவந்த
மணிகளைக் கொழித்துக்கொண்டுவருகிற மலையருவிபோலத்தோன்ற,
சேர்த்தினாள்-(அவன் மார்பில்) இட்டாள்; (எ-று.)
மாலைக்கு அருவியை உவமைகூறியதற்கு ஏற்ப, தோளையும் மார்பையும்
மலையெனக்கொள்க, நீலகிரிபோல்நின்ற பூசுரன்’ என்றதுங் காண்க. இவன் நின்ற
நிலையைக் காண்கையிலேயே அரசர்கள் முகம் கருகுதலை இவனது மேனியின்
நீலநிறம் மேல்விழுதலாற் கருகுவதுபோலுமென்ற கற்பனை தொனிக்க, ‘தரணிபர்
தம்முகம்கருக நீலகிரிபோல்நின்ற’ என்றார். பூஸு ரன் – வடசொல், சாரம்=ஸாரம்:
தேன்புஷ்பத்தின் சாரமாதல் காண்க.
அந்தர துந்துபி முழங்க, சங்கம் ஆர்ப்ப, ஆனக துந்துபி
முதல்வன் ஆதி ஆக
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி, மாலை இடு
பசுஞ் செம்பொன் மாலையோடும்,
சந்திரனும் உரோகிணியும் என்ன, முன்னர், தான் வளைத்த
தடஞ் சிலை கைத்தலத்தில் ஏந்தி,
இந்திர சூனுவும் எழுந்து, ஆங்கு ஏகலுற்றான்- இரு புறமும்
துணைவர் வர, இணை இலாதான்.-அருச்சுனன் திரௌபதியோடும் உடன்பிறந்தாரோடும்
செல்லல்.
அந்தரம் துந்துபி முழங்க – வானத்தில் (தேவர்கள் முழக்கிய)
துந்துபிவாத்தியம் ஆரவாரிக்க, சங்கம், ஆர்ப்ப – சங்க வாத்தியங்கள் ஒலிக்க,
இந்திரசூனுஉம் – இந்திரனதுகுமாரனான அருச்சுனனும், ஆனகதுந்துபி புதல்வன்
ஆதிஆக வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி – வசுதேவகுமாரனான
பலராமன்முதலாக வந்திருந்த பெரிய அந்தச்சபையிலுள்ளோரை மதியாதவனாய்,
மாலை இடுபசு செம் பொன்மாலையோடுஉம் – (தனக்கு) மணமாலையையிட்ட
பசிய சிறந்தபொன்னலாகிய மாலைபோல் விளங்குகிற திரௌபதியுடனே,
சந்திரன்உம்உரோகிணிஉம்என்ன -சந்திரனும் (அவன்மனைவியாகிய)
உரோகிணிதேவியும்போல,முன்னர் தான் வளைத்த தட சிலை கைத்தலத்தில்
ஏந்தி – முன்பு தான் வளைத்தபெரிய அந்தவில்லைக் கையிலெடுத்துக்கொண்டு,
துணைவர் இரு புறம்உம் வர-(தனது) உடன்பிறந்தவர்நால்வரும் தனது
இரண்டுபக்கத்திலும் உடன்வர, இணைஇலாதான் – ஒப்பில்லாதவனாய், ஆங்கு
எழுந்து ஏகல் உற்றான் -அவ்விடத்தினின்று புறப்பட்டுச் செல்லத்தொடங்கினான்;
(எ- று.)
‘ஆனக துந்துபி புதல்வன்’ என்பதற்கு – கண்ணன் என்று உரைத்தலும்
ஒன்று ‘ஆனகதுந்துபி முதல்வன்’ என்றும் பாடமுண்டு; அப்பொழுது தனது
நிசரூபத்தைமறைத்து வேற்று வடிவங் கொண்டிருத்தலால், கண்ணனையுமுட்பட
மதியாதுசென்றான், வெளிப்படாதிருத்தல் வேண்டியென்க. வசுதேவர் பிறந்த
காலத்தில்,தேவர்கள், பின்பு இவரிடத்துத் திருமால் கண்ணனாகத்திருவவதாரஞ்
செய்வதையறிந்து,ஆனகம் துந்துபி என்கிற வாத்தியங்களை முழக்கினார்க
ளாதலால், வசுதேவர்க்கு ‘ஆனகதுந்துபி’ என்று ஒருபெயராயிற்று. சீவசிந்தாமணியில்
“செம்பொன்வரைமேற்பசும்பொன் னெழுத் திட்டதே போல்” என்ற இடத்து,
ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘செம்மை பசுமை – தொடை முரண்; ஈண்டு
வண்ணவேறுபாடு இன்று’ என்றுஉரைத்தது, இங்கு ‘பசுஞ் செம்பொன்மாலை’ என்ற
விடத்துங் கொள்ளத்தக்கது.பசுஞ்செம்பொன்மாலை – உவமையாகுபெயர்
பார்ப்பான் வந்து, ஒரு கோடி அரசைச் சேரப் பரிபவித்து,
பாஞ்சாலன் பயந்த தெய்வச்
சீர்ப் பாவைதனை வலியால் கொண்டுபோக, செயல் இன்றி
இருந்தீர்! என் செய்தீர்?’ என்று,
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி, விழியிலான் மகன்
கழற, வெகுண்டு, மேன்மேல்,
ஆர்ப்பாகக் கொதித்து எழுந்தது, உகாந்த காலத்து ஆர்க்கும்
மகராலயம்போல், அரசர் ஈட்டம்.-துரியோதனன் தூண்டுதலால் அரசர்கள் போர்க்கு
எழுதல்.
விழி இலான் மகன் – கண்களில்லாத (பிறவிக்குருடனாகிய)
திருதராட்டிரனது புத்திரனான துரியோதனன், வேர்ப்பு ஆடுநுதல் சிவந்த விழியன்
ஆகி – (பொறாமையாலாகிய கோபத்தால்) வேர்வைநீர் தளும்புகிற நெற்றியையும்
சிவந்தகண்களையுமுடையவனாய், (மற்றையரசர்களைநோக்கி), ‘பார்ப்பான்-
பிராமணனொருவன், வந்து-,ஒருகோடி அரசை-கோடிக்கணக்கான (மிகப்பல)
அரசர்களை, சேர பரிபவித்து-ஒருசேர அவமானப்படச்செய்து, பாஞ்சாலன் பயந்த
தெய்வம் சீர் பாவைதனை- பாஞ்சாலராஜன்பெற்ற தெய்வத்தன்மையுள்ள சிறந்த
பாவைபோன்ற திரௌபதியை, வலியால் கொண்டு போக-(தன்) வலிமையால்
உரிமையாக்கிக்கொண்டு செல்ல, செயல் இன்றி இருந்தீர்- (அதற்கு மாறான)
செய்கை யொன்றுஞ்செய்யாமல் இருந்தீர்கள்; என்செய்தீர்-என்ன
காரியஞ்செய்தீர்கள், என்று-, கழற – உறுத்திக்கூற,-(அத்தூண்டுதலால்,
அரசர்ஈட்டம் – அரசர்களுடையகூட்டம், வெகுண்டு – கோபங்கொண்டு, உக
அந்தகாலத்து ஆர்க்கும் மகராலயம்போல்- கல்பாந்தகாலத்திற் கொதித்தெழுந்து
ஆரவாரிக்கிற கடல்போல, மேல்மேல் ஆர்ப்பு ஆக கொதித்து எழுந்தது-
மேல்மேல் ஆரவாரமுண்டாக (மனங்) கொதித்து (ப்போருக்கு) எழுந்தது; (எ- று.)
‘பரிவித்து’ என்னும் பாடத்துக்கு வருத்தி யென்றுபொருள்.
சுயம்வரத்தில்மாலைசூட்டியபின் மற்றையோர் மணமாலை பெற்றவனை
எதிர்த்துப்பொருதலும், அங்ஙன் பொருவாருள் எவனேனும் அவனை
வெல்வானாயின் அவன் அக்கன்னிகைக்கு உரியனாதலும், அங்ஙனம்
பொருவாரையெல்லாம் வென்றிபின்பே மாலைசூட்டப்பெற்றவன் அவளை
மணஞ்செய்துகொள்ளுதலும், இயல்பு,
முருத்து வாள் நகை, துவர்வாய், முகத்தினாளை மூத்தோன்
பின் நிறுத்தி, அமர் முருக்குமாறு,
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே
புரிந்திட்டார்; மறையோர் உள்ளார்
உருத்து, வாய் மடித்து எழுந்து, கோகு தட்டிட்டு, ஊன்றிய தண்டு
எதிர் ஓச்சி, உடன்ற வேந்தர்
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓட ஓட, கை உரம் காட்டினர்,
வளர்த்த கனலே அன்னார்.-வீமனும், அருச்சுனனும் அரசர்களை எதிர்க்க
இருக்கையில், அந்தணர் போர்செய்யத்தொடங்கல்.
முருந்து – மயிலிறகின் அடிக்குருத்தைப் போன்ற, வான் நகை-
ஒள்ளிய பற்களையும், துவர்வாய்-பவழம்போன்றவாயையுமுடைய, முகத்தினாளை –
முகத்தையுடையவளான திரௌபதியை, மூத்தோன் பின் நிறுத்தி – தமையனாகிய
தருமனுக்குப் பின்னேநிற்க வைத்து, மருத்துவான் திருமகன்உம் மருத்தின்செல்வம்
மைந்தன் உம்ஏ-இந்திரனது சிறந்தகுமாரனாகிய அருச்சுனனும் வாயுவினது
செல்வப்பிள்ளையான வீமனும் ஆகிய இருவருமே, அமர் முருக்கும் ஆறு
புரிந்திட்டார்-போர்செய்து (அப்பகைவர்களை) அழிக்கும்படி சித்தரானார்கள்;
(அதற்குள்ளே), மறையோர் உள்ளார் – (அங்கு) உள்ளவர்களான
அந்தணர்கள்,உருந்து-கோபங்கொண்டு, (அக்கோபமிகுதியால்), வளர்த்த கனல்ஏ
அன்னார்-(தாந் நாள்தோறும் வைதிகமாக நெய்ம்முதலியன கொண்டு வளர்க்கிற
அக்கினியையே போன்றவர்களாய், வாய் மடித்து-உதட்டைமடித்துக்கொண்டு
எழுந்து- போர் செய்யப்புறப்பட்டு, கோகு தட்டிட்டு – (வீராவேசத்தால்)
தோள்தட்டிஆரவாரஞ்செய்துகொண்டு, ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி – (தாங்கள்)
ஏந்தியதண்டங்களை எதிரேஉயரஎடுத்து, உடன்ற வேந்தர் கருத்து வார் தக வெரு
கொண்டுஓட ஓட – பகைத்த அரசர்கள் மனத்தில் மிகுதியாக அச்சங்கொண்டு
விரைந்தோடும்படி, கை உரம் காட்டினர் – (தங்கள்) கைவலிமையைக் காட்டத்
தொடங்குபவரானார்கள்; ( எ- று.)
ஓரந்தணன் கன்னிகையைக் கைக்கொண்டதற்காகப் பொறமைகொண்டு
அரசர்கள் போர்க்குஎழுவதை நோக்கி, சாதியபிமானத்தால் அந்தணரெல்லாரும்
கோபங்கொண்டு அரசரை எதிர்ப்பாராயினரென்க. கோகுஎன்பது புயமென்ற
பொருளில்வருதலை “கொற்றவன்றன் கோகின்மேல் வீரவாளின் வீசினான்”
என்றசூளாமணியிலும் காண்க. இனி கோகு தட்டிட்டு – தங்கள் குடுமியைத்
தட்டிமுடிந்துகொண்டு என்று உரைப்பாருமுளர். அந்தணர் கோபாவேசங்
கொள்ளுங்கால் தமது சிறியகுடுமிநெகிழ்ந்து அவிழ்தலைத் தட்டி உறுதியாக
முடிந்துகொண்டு எதிர்க்கச்செல்லுதல் சாதியியல்பு, வளர்த்தகனலேயன்னார்’ – தாம்
வளர்க்கிற ஆகவனீயம் காருகபத்தியம் தக்ஷிணாக்கினி என்ற வைதீக அக்கினிகள்
போலப் பரிசுத்தமூர்த்திகளாகிய என்றுஉரைத்த, மறையோர்க்கு
அடைமொழியாக்கினுமாம். மருத்வான் – தேவர்களை யுடையவனென்று
உறுப்புப்பொருள்படும் வடசொல். மருத்-தேவர்.
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி, வென்று எடுத்த
வில் தடக் கை விசயன், சற்றே
நகைத்து நகைத்து, அவர் அவரை விலக்கி, ‘என் முன் நமன்
வரினும் பிளப்பல்’ என நவிலாநின்றான்;
புகைத்த கனல் விழிக் கன்னன் தருக்கால் எள்ளி, பூசுரன் என்று
அவமதித்து, புனை வில் வாங்கி,
உகைத்த பகழியும் உகைத்தான்; உரனும், தன் கை ஒரு கணையால்
உடன் பிளந்தான், உரும்ஏறு ஒப்பான்.-அந்தணரை விலக்கி அருச்சுனன் கர்ணனை வெல்லல்.
உரும் ஏறு ஒப்பான் – (பகைவர்க்குப்) பேரிடிபோல்பவனாகிய,
வென்றுஎடுத்த வில் தட கை விசயன் – (எல்லா வரசர்களையுங்) கீழ்ப்படுத்தித்
தான்எடுத்த வில்லையேந்திய பெரிய கையையுடைய அருச்சுனன்,-மிகைத்த
முனிவரர்முனிந்த உறுதி நோக்கி-மிக்க அந்தப்பிராமணசிரேஷ்டர்கள்
கோபங்கொண்டதுணிவைப் பார்த்து, சற்றுஏ நகைத்து நகைத்து – சிறிது சிரித்துச்
சிரித்து, அவரவரைவிலக்கி – அவர்களையெல்லாம் தடுத்து, என் முன் நமன்
வரின்உம் பிளப்பல் எனநவிலாநின்றான் – ‘என்எதிரிலேநமன் (போர்க்கு) வந்தாலும்
(அவளை நான்) பிளந்துவிடுவேன் ‘ என்று (அவர்கட்குத் துணிவு) கூறிநின்றவனாய்,
– புகைத்த கனல் விழி கன்னன் – புகைகின்ற கோபாக்கினியை வெளிப்படுத்துகின்ற
கண்களையுடைய கர்ணன், தருக்கால்எள்ளி-செருக்கினால் இகழ்ந்து, பூசுரன் என்று
அவமதித்து – பிராமணனென்று(தன்னை) அலட்சியஞ்செய்து, புனை வில் வாங்கி-
அழகியவில்லை வளைத்து,உகைத்த- (தன்மேற்) செலுத்தின, பகழிஉம் –
அம்புகளையும், உகைத்தான் உரன்உம்- (அம்பு) செலுத்தினவனான அவனுடைய
மார்பையும், தன் கை ஒரு கணையால் -தனதுகையினா லெய்யப்பட்ட
ஓரம்பினால், உடன் பிளந்தான் – ஒருசேரப்பிளந்திட்டான்; (எ-று.)- ‘மிகைத்து’
என்றும் பாடம்; அளவுகடந்து என்றுபொருள்.
குன்றால் மெய் வகுத்தனைய வீமன், தன்மேல் கொல்
இயல் செய் சல்லியனைக் குத்தி வீழ்த்தி,
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன, கால்
முடியோடு உற வளைத்து, வான்மேல் வீசி-
நின்றான்; மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து, நெஞ்சு
ஒடிந்தான்; இருவரும் முன் நில்லார் ஆகி,
‘வென்றாலும், தோற்றாலும், வசையே, வெம் போர்
வேதியரோடு உடற்றல்!’ என, மீண்டு போனார்.-வீமன் சல்லியனை வெல்ல, அவனும் கர்ணன்
போலவே ஓடுதல்.
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் – மலையினால் உடம்பைச்
செய்தமைத்தாற்போன்ற (மிகவலிய பேருடலையுடைய) வீமசேனன், தன்மேல் கொல்
இயல் செய் சல்லியனை குத்திவீழ்த்தி – தன்னைஎதிர்த்துப் பெரும்போரைசெய்த
சல்லியனைக் (கையினாற்) குத்திக்கீழேதள்ளி, கன்றால்முன் விளவுஎறிந்த
கண்ணன்என்ன – (முன்பு பசுவின்) கன்றைக்கொண்டு விளாமரத்தின்மே லெறிந்த
கிருஷ்ணன் போல, கால் முடியோடு உற வளைத்து வான்மேல் வீசி நின்றான் –
கால்தலையோடு பொருந்த அவனுடம்பை வளைத்து அதனை வானத்தில்
வீசிநின்றான்;(அதனால்), அவன் – அச்சல்லியன், அயல் தெறித்து வீழ்ந்து –
பக்கத்திலே தெறித்துவிழுந்து, நெஞ்சு ஒடிந்தான் – நெஞ்சமுறிந்தான்: (உடனே),
இருவர்உம் -(அந்தக்கர்ணண்சல்லியன் என்ற) இரண்டுபேரும், முன் நில்லார்
ஆகி – எதிரில்நிற்கமாட்டாதவர்களாய், வென்றால்உம் தோற்றால் உம்
வெம்போர் வேதியரோடுஉடற்றல் வசைஏ என – ‘சயிப்பதானாலும்
தோற்பதானாலும் கொடியபோரைஅந்தணர்களோடுசெய்தல் இகழ்ச்சியேயாம்’
என்றுசொல்லிக் கொண்டே,மீண்டுபோனார் – திரும்பிச்சென்றார்கள்; (எ-று.)-
மற்ற – அசை.
அந்தணவடிவத்தி லிருக்கும் வீமார்ச்சுனரிடம் தம்வலிமையைக்
காட்டமாட்டாதுதோற்ற சல்லியகர்ணர்கள் வெம்போர் வேதியரோடுடற்றலால்
வென்றாலும் தோற்றலும்வசையே என்று முன் நில்லாராகிச் சென்றனரென்க.
‘குன்றால் மெய் வகுத்தனைய’ என்றது – தன்மைத்தற்குறிப்பு. ‘கொல்லியல்’
என்றது – கொல்லுந்தன்மையுடையதென வினைத்தொகையன்மொழியாய்ப்
போரைக் குறிக்கும். இங்குப்பாலபாரதத்தில், கர்ணனோடு அருச்சுனனும்
சல்லியனோடு வீமனும்,பொருகையில், மற்றையரசர் அவர்கள் திறத்தைக்
கொண்டாடியவண்ணம்வானவரைப்போலப் போரைக் காண்பவரானார்க்
ளென்றுஉள்ளது. கன்றால் விளவெறிந்த கதை – கம்சனால் ஏவப்பட்ட
கபித்தாசுரன், விளாமரத்தின்வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்போது தான்
மேல்விழுந்து கொல்வதாக எண்ணிவந்துநிற்க, அதனையறிந்து கிருஷ்ணபகவான்
அவ்வாறே தன்னை முட்டிக்கொல்வதாகக் கருதி ஒருகன்றின் வடிவங்கொண்டு தான்
மேய்க்குங் கன்றுகளோடு கலந்திருந்த வல்ஸாசுரனைப் பின்னங்கால்களைப்பிடித்து
எடுத்துச்சுழற்றி விளாமரத்தின்மேலேறிய, இருவரும் இறந்து தமது அசுரவடிவத்துடன்
விழுந்திட்டனரென்பதாம்.
வண்ண நூல் முனிவர் அல்லர்; மருத்துவான், மருத்து, நல்கும்
அண்ணல் அம் குமரர் ஆம்’ என்று அயிர்ப்புறும் அரசர் யாரும்,
கண்ணனால் விலக்கப்பட்டு, கடி நகர்தோறும், தங்கள்
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ.-கண்ணன்விலக்கவே, மற்றையரசர்கள் தம்தம்ஊர்
சேர்தல்.
இவ்விருவரும்), வண்ணம் நூல் முனிவர் அல்லர் – அழகிய
பூணூலையுடைய அந்தண ரல்லர்; மருத்துவான் மருத்து நல்கும் அண்ணல் அம்
குமரர் – இந்திரனும் வாயுவும் பெற்ற பெருமையையுடைய அழகிய புத்திரர்களாகிய
அருச்சுனனும் வீமனுமாவர்,’ என்று-, அயிர்ப்பு உறும் – சற்தேகங்கொண்ட, அரசர்
யார்உம் – மற்றையரசர்களெல்லோரும், (பின்பு), கண்ணனால் விலக்கப்பட்டு –
கிருஷ்ணனால் (இனிப் போர்வேண்டாவென்று) விலக்கப்பட்டு, தங்கள் எண்ணம்உம்
பயன்உம் வேறு ஆ – தங்கள் நினைப்பும் அதன் பயனும்வேறாக, கடிநகர்
தோறுஉம் எய்தினர் – பாதுகாவலையுடைய தம்தம் நகரத்திற் சென்று
சேர்ந்தார்கள்;(எ-று.)-என்ப, மன் ஓ – அசைகள்,
திரௌபதியைச் சுயம்வரத்தில் மணஞ்செய்துகொள்ள விரும்பிவந்த தங்கள்
எண்ணமும், இங்குத் தங்களுக்குநேர்ந்த அவமானமும் மாறுபாடுடைமையால்,
‘எண்ணமும் பயனும்வேறா’ என்றார். மன்னவர்கள் துருபதனோடு பொருமாறு
மாறுபட, போரக்குச் சித்தராகி அருச்சுனனும் வீமனும் கர்ணசல்லியரைவெல்ல,
தருமன் முதலியோர் துரியோதனாதியரை வென்றனராக, மீண்டும் அரசர்கள்
குழுமிப்போர்வளைக்க முனைகையில் ஸ்ரீக்ருஷ்ணபகவான் அப்போரை
விலக்கினனென்றுவியாசபாரதம் கூறும்.
இதுமுதல் பத்துக் கவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.
அன்று இலக்கு எய்த கோவும், துணைவரும், ஆன வெம் போர்
வென்று, கொற்றவையோடு ஒக்கும் மின்இடைப் பொன்னும் தாமும்
சென்று, மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி,
‘இன்று பெற்றனம், ஓர் ஐயம்; என் செய்வது, இதனை?’ என்றார்.-பாண்டவர் குந்தியிடஞ்சென்று ‘இன்று ஒருபிச்சை
பெற்றோம்’ எனல்.
அன்று இலக்கு எய்த கோஉம் – அன்றைத்தினத்தில் இலக்கையெய்த
சிறப்புள்ள அருச்சுனனும், துணைவர்உம் – மற்றை அவனுடன்பிறந்தவர்களும், –
ஆன வெம் போர்வென்று-நிழந்தத கொடிய போரிற்பகைவென்றபின்,
நோற்றவையோடுஒக்கும் மின் இடை பொன்உம் தாம்உம் – வீரலஷ்மியோடு
ஒத்தமின்னல்போன்ற இடையையுடைய செல்வப் பெண்ணான திரௌபதியும்
தாங்களும், சென்று – போய், மண் கலம் செய் கம்மி செழுமனை முன்றில் எய்தி –
மட்பாத்திரங்களைச்செய்யுந்தொழிலையுடையகுயவனது செழுமையான வீட்டின்
முற்றத்தை யடைந்து, (அவ்வீட்டினுள்ளே யிருந்த தங்கள் தாயைக் குறித்து), ‘இன்று
ஓர் ஐயம் பெற்றனம் – இன்றையத்தினத்தில் நுகரப்படும்பொருளொன்றைப்
பெற்றுவந்தோம்; இதனை என் செய்வது – இதனைஎன்ன செய்வது?’ என்றார்;(எ-று.)
சிலகாலமாய் அந்தணவடிவங்கொண்டுள்ள இவர்களில் அருச்சுனனும்
வீமனும்நாள்தோறும் வெளிச்சென்று தமது சாதிக்கு உரிய இரத்தல் தொழிலால்
உணவைஈட்டிக்கொணர்ந்து மீண்டுவந்தடனே தம்தாயை நோக்கி
‘இன்றுபிக்ஷைகொணர்ந்தோம்’ என்றுசொல்லி அவளனுமதிபெற்று அதனைத்
தமையன் தம்பியருடன் உண்ணும் வழக்கத்தின்படி, திரௌபதியைக் கொணர்ந்த
தினத்தலும் கூறுகின்றார்களாதலால், ‘இன்று பெற்றனமோரையம் ‘ என்றார்.
பகைவென்று கைக்கொள்ளப்பட்டமையின் திரௌபதிக்குக் கொற்றவை உவமை
கூறப்பட்டனள்,- ‘கன்மிசெழுமனை’ என்றும்பாடம்.
உள் இருந்து, அன்னை, மைந்தர் உரைத்த சொல் கேட்டு, ‘தேவர்
தெள் அமுது என்ன, மக்காள்! சேர நீர் அருந்தும்’ என்னா,
புள்ளினம் ஒடுங்கும் மாலைப் பொழுது இவள் புறம்பர் எய்தி,
கள் அவிழ் கூந்தலாளைக் கரும்பு என விரும்பி, கண்டாள்.-அதனை அனைவரும் உண்ணும் ‘ என்று கூறியபின், குந்தி
திரௌபதியைப் பார்த்தல்.
மைந்தன் உரைத்த சொல் – (தன்) பிள்ளைகளான பாண்டவர்கள்
சொன்ன வார்த்தையை, அன்னை – தாயாகியகுந்தி, உள் இருந்து கேட்டு –
(தான்) உள்ளே யிருந்துகொண்டே கேட்டு, (அப்பிள்ளைகளை நோக்கி),
‘மக்காள் – புத்திரர்களே! நீர் – நீங்கள், தெள்தேவர் அமுது என்ன –
தெளிவானதேவாமிருதத்தைப்போல (மிகவும் இனிமையாக), சேர அருந்தும் –
ஒருங்குஉண்ணுங்கள்,’ என்னா -என்றுசொல்லி, (பின்பு), அவள்-அந்தக்குந்தி
தேவியானவள், புள் இனம் ஒடுங்கும் மாலைபொழுது – பறவைக்கூட்டங்கள்
(தம் தம் கூடுகளில்) ஒடுங்கும்படியான (அந்த) மாலைக்காலத்திலே, புறம்பர்
எய்தி – (உள்ளிருந்து) வெளியே வந்து, கள் அவிழ்கூந்தலாளை –
(சூடியமலர்களின்று) தேள்சொரியுங் கூந்தலையுடைய திரௌபதியை, கரும்பு என –
கரும்பைப்போல, விரும்பிகண்டாள் – மகிழ்ந்துகாண்பவளானாள்; (எ-று.)
‘பொழுதிவன்’ என்றும்பாடம்.
‘என் நினைந்து, என் சொன்னேன்! மற்று என் செய்தேன்!’
என்று சோரும்
அன்னையை வணங்கி, ‘நின்சொல் ஆரணப் படியது ஆகும்;
நின் நினைவு அன்றால்; எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு’
என்றான் –
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர்த் தருமன் என்பான்.-கழிவிரக்கமுற்ற குந்திக்குத் தருமன்தேறுதல்கூறல்
என் நினைந்து-என்ன நினைந்து, என் சொன்னேன் –
யாதுசொன்னேன்! என் செய்தேன்-என்னகாரியஞ்செய்திட்டேன்,’ என்று –
என்றுசொல்லி, சோரும்-(பின்பு மனந்) தளர்கிற, அன்னையை – தாயான குந்தியை,
தன்நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான்- தனக்கு ஒப்பில்லாத
நூற்கேள்விமிக்க புகழையுடைய தருமபுத்திரன், வணங்கி-நமஸ்கரித்து, (அவளை
நோக்கி), நின் சொல்-உனது வார்த்தை, ஆரணம் படியது ஆகும் – வேதத்தின்
தன்மையதாம்; ‘நின் நினைவு அன்று – (இது) நீ நினைத்துக் கூறியது அன்று
(தற்செயலாய் உன்வாயில்வந்த வார்த்தை); (அன்றியும்), எங்கள் நெஞ்சில்உம்
நினைவுஉண்டு-எங்கள்மனத்திலும் இந்த எண்ணம் உண்டு,’ என்றான் – என்று
சொன்னான்; (எ- று.)
‘என்செய்கேன்’ என்றும் பாடம். தாய்வார்த்தை வேதவாக்கியம்போலக்
காரணங்கருதாமலே விதிரூபமாக அங்கீகரிக்கத்தக்கதென்பான், ‘நின்சொல்
ஆரணப்படியதாகும்’ என்றான். சாஸ்திர விரோதமானதைச் சொல்லத்தக்கவனல்லாத
தருமன் ஒரு பெண்ணை நாங்கள் ஐவரும் மணஞ்செய்துகொள்ளக்
கருதுகின்றோமென்றல் அப்பெண்ணினிடத்து வைத்த காதல்பற்றியேயன்று
விதிவயத்தனா யென்பது விளங்க, ‘தன்னிகரிலாதகேள்விசான்ற சீர்த்தருமனென்பான்’
என்றார். மற்று-அசை; விளைமாற்றுமாம்,
பார் அனைத்தினும் தன் நாமம் பரப்பிய பார்த்தன் என்னும்
வீரனைப் பயந்த பாவை, ‘விதிவழி இது’ என்று எண்ணி,
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும், அந்தக்
கார் இருள் கங்குல், மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள்.-குந்தி ஒருவாறுதேறுதலும், இரவுகழிதலும்.
பார் அனத்தின்உம் – பூமி முழுவதிலும், தன் நாமம் – தனது
பெயரை,பரப்பிய – (புகழாற்) பரவச்செய்த, பார்த்தன் என்னும் வீரனை-
அருச்சுனனென்கிறவீரனை, பயந்த-பெற்ற, பாவை-பெண்ணாகியகுந்திதேவி, இது
விதிவழி என்று எண்ணி – (தான் கூறியதும் தருமன் கூறுகிறதுமாகிய இச்செயல்)
ஊழ்வினைவசத்ததாமென்று நினைத்து,-மாரனுக்கு அரசு நல்கும் மங்கைஉம்
தான்உம்-மன்மதனுக்கு அரசாட்சியைக்கொடுக்கின்ற இளம்பெண்ணான
திரௌபதியும்தானுமாக, அந்த கார் இருள் கங்குல்- கரிய இருளையுடைய
அவ்விரவில், மைந்தர்கட்டு உரை கசிந்துகேட்டாள் – தன்) பிள்ளைகளான
அப்பாண்டவர்கள் கூறும்பொருளுள்ள மொழிகளை அன்புகொண்டு கேட்டாள்;
(எ-று.)
விற்றிறம் போர்த்தொழில் முதலிய வீரர்க்குஉரிய வார்த்தைகள் பலவற்றை
அவர்கள் இரவிற் சொல்லிக்கொண்டிருக்க, அவற்றைக் குந்தியும் திரௌபதியும்
கேட்டனரென்க. பாவைதானும் மங்கையும் கேட்டாள்-இரண்டு
பெண்பாற்பெயர்கள்சிறப்பினால் ஒரு முடிபை ஏற்றன; (நன் பொது-27.)
பொன் தொடி, கனக மாலை, பொலங் குழை, பூவைதன்னைப்
பெற்ற பூபதி அவ் வீரர் பெருமித வாய்மை எல்லாம்
ஒற்றரால் உணர்ந்து, நெஞ்சத்து உவகையோடு, ஐயம் இன்றி,
மற்றை நாள் வந்து, கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான்.–அங்குநிகழ்ந்த செய்திகளைத் துருபதன் ஒற்றரால் அறிந்து
மறுநாள் அவர்களைத் தன்மனைக்கு அழைத்தல்.
பொன் தொடி – பொன்னலாகிய தொடியென்னும் வளையையும்,
கனகம் மாலை-பொன்னாலாகிய ஆரத்தையும், பொலம்குழை – பொன்னலாகிய
குழையென்னுங் காதணியையுமுடைய, பூவைதன்னை – பூவைபோன்ற திரௌபதியை,
பெற்ற-, பூபதி – அரசனாகிய யாகசேனன், அ வீரர் பெருமிதம் வாய்மை எல்லாம்-
அந்தப்பாண்டவர்களுடைய வீரத்தைவிளக்கும் வார்த்தைகளையெல்லாம், ஒற்றரால்
உணர்ந்து – ஒற்றர்களால் அறிந்து, ஐயம் இன்றி-சந்தேகமில்லாமல், நெஞ்சத்து
உவகையோடு – மனமகிழ்ச்சியுடனே, மற்றை நாள் – மறுநாளில், வந்து -(அவர்கள்
தங்கியிருக்கும் இடம்) வந்து, கொற்றம் வாழ் மனை கொண்டு புக்கான் –
வெற்றியையுடைய (தான்) வாழ்கிற மாளிகைக்கு (அவர்களை) உடன்கொண்டு
சென்றான்; (எ- று.) -வாண்மனை என்றுமாம்.
ஒற்றராவார் – வேண்டிய இடங்களில் உரியபடி சென்று உள்ளபடி
செய்தியறிந்துவந்துகூறுபவர். திருஷ்டத்யும்நன் தானே மறைவாக அவர்கள்
பின்சென்று பதிவிருந்து அங்குநிகழ்ந்தவையனைத்தையும் அறிந்துவந்து தந்தைக்குக்
கூறின னென்றும், பின்னும் ஐயந்தீர்தற்பொருட்டுத் துருபதன் தனதுபுரோகிதனை
அனுப்பிப் பின்பு தூதன்மூலமாக அவர்களைத் தன்மனைவிக்கு வருவித்தானென்றும்
முதுனூல் கூறும். அரசனது வெற்றியை அவனது அரண்மனைமேலேற்றி
‘கொற்றமனை ‘ என்றார்.
அடுத்த பல் பொருளும் வைக்க, ஆயுதம் அன்றி வேறு ஒன்று
எடுத்திலர் என்றும், வேத முனிவரர் அல்லர் என்றும்,
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணித் தவிசின் ஏற்றி,
தொடுத்த தார்க் குருக்கள் என்றே துணிந்தனன், யாகசேனன்.-அவர்களைச் சோதனையால் துருபதன் பாண்டவர்களென்றே
நிச்சயித்து உபசரித்தல்.-
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) அடுத்த பல் பொருள்உம் வைக்க-பொருந்திய பல பொருள்களையும் (கொணர்ந்து அவர்கள் முன்னிலையில்) வைக்க, (அவர்கள்), ஆயுதம் அன்றி வேறு
ஒன்று எடுத்திலர் – ஆயுதங்களையேயன்றி வேறொருபொருளையும்
எடுத்தார்களில்லை, என்றும்-, (அதனால்), வேதம் முனிவரர் அல்லர் என்றுஉம்-
வேதத்துக்கு உரிய அந்தணர்களல்லரென்றும், (அறிந்து),-யாகசேனன் – துருபதன்,-
தொடுத்த தார் குருக்கள் என்றுஏதுணிந்தனன்-தொடுக்கப்பட்ட மாலையையணிந்த
குருகுலகுமாரர்களாகிய பாண்டவர்களென்றே (அவர்களை) நிச்சயித்து,
கொடுத்தனசிறப்பினோடுஉம் – (தான்) கொடுத்த பலவகைச்சிறப்புக்களுடனே,
குருமணிதவிசின் ஏற்றி-நிறம் விளங்குகிற இரத்தினங்கள் பதித்த ஆசனத்தில்
(அவர்களை) வீற்றிருக்கச்செய்து,-(எ-று.)- ‘என்ன’ (70) என்க.
துருபதன் பின்னும்தெளிந்து கொள்ளுதற்பொருட்டுத்தனது பரிசனர்களை
யேவி அவர்களெதிரில்பலவகைப் பொருள்களைக் கொணர்ந்துவைக்கச் சொல்ல,
அவர்கள் அவற்றில் படைக்கலங்களைத் தவிர வேறொன்றையும் எடுத்துக்
கொண்டிலராக, அச்செய்தியை அறிந்தபின் அரசன் அவர்களைப்பாண்டவரென்றே
துணிவு கொண்டனனென்க. பின்பு அவர்களும் துருபதனது வேண்டுகோளின்படி
தாம் இன்னாரென்று உள்ளபடி உணர்த்தித் தமது நிஜரூபத்தைக் கொண்டு
அரக்குமாளிகை யிருப்பின்பின் நிகழ்ந்த வரலாற்றை அவனுக்குக் கூறின ரென
முதனூலால் அறிக.
கை வரு சிலையின் வென்று கைப் பிடித்தவனுக்கு இன்றே
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும்’ என்ன,
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி, ‘யாங்கள்
ஐவரும் வேட்டும்’ என்றான், அசைவு இலா அறத்தின் மைந்தன்.-துருபதன்மணவினைதொடங்க, தருமன் ‘நாங்கள் ஐவரும்
இவளை மணப்போம்’ என்றல்.
கை வரு சிலையின் -(தனக்குக்) கைவந்த விற்நொழிலினால்,
வென்று-(பிறரைக்) கீழ்ப்படுத்தி, கை பிடித்தவனுக்கு – கைப்பற்றின அருச்சுனனுக்கு,
இன்றே -இன்றைத்தினமே, மைவரு கண்ணினாளை – மையிட்ட கண்களையுடைய
திரௌபதியை, வதுவை செய்திடுதும் – கலியாணஞ்செய்விப்போம்,’ என்ன – என்று
(யாகசேனன்) சொல்ல,-அசைவு இலா அறத்தின் மைந்தன் – (தருமத்தினின்று)
சோர்தலில்லாத தருமபுத்திரன், நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை
நோக்கி – நெய்பூசிய நுனியைக் கொண்ட கூரியவேலாயுதத்தையுடைய
அவ்வரசனைநோக்கி, யாங்கள் ஐவர்உம் வேட்டும் என்றான்- ‘நாங்கள்
ஐந்துபேரும்(இவ்வொருத்தியை) மணஞ்செய்துகொள்வோம்’ என்று சொன்னான்;
யாங்கள் ஐவர்-தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி: ‘யாங்கள்ஐவேம்’
என்று இருப்பின் வழாநிலையாம்,
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை, ‘மாலை
நிருப! நின் மனத்தில் ஐயம் நீக்குக! நீக்குக!’ என்னாத்
துருபதன் முன்னர் வந்து தோன்றினன்- சுருதி யாவும்
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான்.-அதற்குஉடன்படாத துருபதனுக்கு வியாசர்
அறிவுறுத்தலுறல்.
தருமன் மா மதலை சொல்லால் – (இங்ஙனம்கூறிய) யமதருமராசனது
சிறந்த புத்திரனாகிய யுதிட்டிரனது வார்த்தையைக்கேட்டதனால், தளர்வுஉறு காலை-
(துருபதன்) வருத்தமடைந்த சமயத்தில்,- ‘மாலை நிருப – மாலையையணிந்த
அரசனே! நின்மன்றத்தில் ஐயம்நீக்குக நீக்குக-உன் மனத்தில் சந்தேகத்தை
நீக்குவாயாகநீக்குவாகாயக,’ என்னா-என்றுசொல்லிக்கொண்டே, விரைமலர்விதியின்
மிஞ்ச சுருதியாஉம் விதித்து அருள்வியாதன் என்பான்-வாசனையையுடைய
(திருமாலின் நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனினும் மேலாக
வேதங்களையெல்லாம் வகுத்தருளியவியாசனென்று பெயர்பெற்ற முனிவன்,
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் – அந்தத்துருபதராசனுக்கு எதிரிலே
வந்துதோன்றினான்; (எ-று.)
நீக்குக நீக்குக – அடுக்கு, துணிவுப்பொருளது, ஸ்ருதி என்ற வடசொல் –
எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்ய கிரமத்திலே கர்ணபரம்பரையாக வழங்குவ தென்று
காரணப் பொருள்படும்.
தொழுது பொன்-தவிசின் ஏற்றி, சூழ்ந்தனர் இருந்து கேட்ப,
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான்,
‘பழுது அறு கன்னிதன்னைப் பாண்டவர் ஐவருக்கும்
எழுதஅரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ:-ஒருத்தியை ஐவர்மணத்தற்குக் காரணங் கேட்பாயென்று
வியாசர் கூறலுறல்.
பதினாறுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.) (இங்ஙனம் எழுந்தருளிய வேதவியாசமுனிவனைத் துருபதராசன்),
தொழுது – நமஸ்கரித்து, பொன் தவிசின் ஏற்றி- பொன்மயமான சிங்காசனத்தில்
எழுந்தருளப்பண்ணி, சூழ்ந்தனன் இருந்து-(அவனைப்) பிரதக்ஷிணஞ்செய்து
இருந்துகொண்டு, கேட்ப-கேட்க,-முழுது உணர் கேள்வி ஞானம் முனி குலத்து
அரசுபோல்வான் – எல்லாவற்றையும் அறிந்த நூற்கேள்வியையும்
தத்துவஞானத்தையுமுடைய முனிவர்கூட்டத்துக்கு ஓர் அரசன்போல்
தலைமைபெற்றவனான அம்முனிவன்,-பழுது அறு கன்னிதன்னை – குற்றமற்ற
கன்னிகையான இந்தத்திரௌபதியை, பாண்டவர் ஐவருக்குஉம் – பாண்டவர்கள்
ஐந்துபேருக்கு, எழுது அரு மறையின் – எழுதுதற்கு அரிய (எழுதாக்கிளவியாகிய)
வேதத்தின் விதிப்படி, வேள்வி இயற்றுதற்கு – மணஞ்செய்வித்தற்கு(க்காரணமான),
இயற்கை – இயல்பை, கேண்மோ – கேட்பாயாக; (எ- று.)- ‘சூழ்ந்தனரிருந்து’ என்றும்
பாடம்.
இச்செய்யுளில், கேட்ப, போல்வான் என்றவற்றிக்கு முடிக்குஞ்சொல்,
மேல் 87-ஆங்கவியில் வருகிற ‘என்று’ என்பது
மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள், முன் பவத்தில்,
நாளாயணி என்று உரை சால் பெரு நாமம் மிக்காள்;
வாள் ஆர் தடங் கண் அவட்கு, ஆரணவாணர்க்கு என்றும்
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன், கேள்வன் ஆனான்.-இனி, 15-கவிகள்-திரௌபதியின் முற்பிறப்புவரலாறு
கூறும்.
மூள்-மூண்டெரிகிற, ஆர்-நிறைந்த, அழல்-யாகாக்கினியில்,
உற்பவித்தாள் – தோன்றியவளான, இவள் – இத்திரௌபதி, முன் பவத்தில்-
முற்பிறப்பில், நாளாயணி என்று உரை சால் பெரு நாமம்மிக்காள் –
நாளாயணியென்றுபுகழ் நிறைந்தபெருமையையுடைய பெயரினாற் சிறந்தவள்; வாள்
ஆர் தட கண் அவட்கு – வாட்படைபோன்றபெரிய கண்களையுடைய அவளுக்கு,
ஆரணவாணர்க்கு என்றும் ஆன மௌற்கல்லியன் என்பவன் – அந்தணர்களுக்கு
எப்பொழுதும் தலைவனான மௌத்கல்ய னென்னும் முனிவன், கேள்வன் ஆனான்-
கணவனாயினான்; (எ – று.)
உரைசால்பெருமை-கற்பினாலாகிய புகழ்ச்சி; “தகைசான்ற சொற்காத்துச்
சோர்விலாள் பெண்” என்றது காண்க.
இதுமுதல் இருபத்தைந்து கவிகள்-பெரும்பாலும்மூன்றாஞ்சீர் மாங்கனிச்சீரும்,
மற்றையவை மாச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.
காதில் கலந்த கடைக் கண்ணிதன் கற்பும் அன்பும்
சோதித்தல் உன்னி, தணியாத துவக்கு நோயன்,
கோதித்த நெஞ்சன், பெரு மூப்பினன், கூர்ந்து நாளும்
வாதித்தல் அன்றி, மகிழா மனை வாழ்வு பூண்டான்.
(அவன்), காதில் கலந்த கடைக்கண்ணிதன் – காதையளாவிய
கண்ணின்கடையையுடைய அம்மனைவியினது, கற்புஉம்-பதிவிரதாதருமத்தையும்.
அன்புஉம்-(தன்னிடம்அவளுக்கு உள்ள) அன்பையும், சோதித்தல் உன்னி-(தான்)
பரிசோதித்தறியநினைத்து, தணியாத துவக்கு நோயன்-குறையாத (மிக்க)
குட்டநோயைக்கொண்டவனும், கோதித்த நெஞ்சன்-(எப்பொழுதும்)
கோபத்தையேகொண்டமனத்தையுடையவனும், பெருமூப்பினன் – முதிர்ந்த
முதுமையையுடையவனுமாய்,-நாள்உம் – தினந்தோறும், கூர்ந்து வாதித்தல் அன்றி-
மிகுதியாக (மனையாளை)வருத்தப்படுத்துதலேயல்லாமல், மகிழா-
(ஒருபொழுதாயினும்) மகிழ்ச்சிக்குஇடமில்லாத,மனை வாழ்வு-இல்லறவாழ்க்கையை,
பூண்டான்-மேற்கொண்டான்;
அந்த மௌற்கலியன், அவளதுகற்பின் உறுதியையும், அன்பின்நிலையையும்
சோதிக்கக்கருதி, மிகுந்த குஷ்டநோயும், அதனாற் சிதைந்த வடிவமும், மிக்க
கிழத்தனமும், எப்பொழுதும், பெருங்கோபமும், உடம்பில் துர்க்கந்தமு
முடையவனாகக் தன்னைக் காட்டியதோடு மனையாளை மிகவும்
வருத்துதலுஞ்செய்தனன் என்பதாம். துவக்குநோய்- உடல்நோய்: த்வக் – வடசொல்;
தோல்: உடம்புக்கு இலக்கணை. கோதித்த-க்ரோதம் என்ற வடசொல்லின் திரிபான
கோதம்என்பதனடியாப்பிறந்த பெயரெச்சம். “குழைப்புறங்கடந்த செங்கண்”
என்றார்போல, ‘காதிற்கலந்த கடைக்கண்ணி’ என்றார்; “கண் செவியுறப்போந்
தகன்றனவே” என்றார் சிந்தாமணியாகும்.
கச்சிற்கு அடங்கா முலையாள்-அக் கணவன் உண்ட
மிச்சில்புறத்து விரல் வீழவும், வீழ்தல் மிஞ்சி,
குச்சித்தல் இன்றி, நுகர்ந்தாள்-கொடுங் காம நோய்கொண்டு
இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள்.
கொடுங் காமம் நோய் கொண்டு இச்சித்தஇன்பம் நுகராமல் இளைத்த
மெய்யாள்-கொடிய காமநோயைப் பொருந்தி விரும்பிய சிற்றின்பத்தை
அனுபவியாமல்மெலிந்தஉடம்பையுடையவளான, கச்சிற்கு அடங்காமுலையாள்-
கச்சுக்குஅடங்காத(பருத்த) தனங்களையுடைய அந்த நாளாயணி, அ கணவன்
உண்ட மிச்சில் புறத்துவிரல் வீழஉம்-அந்தக்கணவன் உண்ட அந்நசேஷத்தில்
(அவன்) கைவிரல்அழுகிவிழுந்துகிடக்கவும், குச்சித்தல் இன்றி-
அருவருப்புக்கொள்ளுதலில்லாமல்,வீழ்தல் மிஞ்சி நுகர்ந்தாள்- விருப்பம்மிக்கு
(அந்தச்சேடித்த அன்னத்தை) உண்டாள்;( எ- று.)
மௌற்கல்யன் அங்ஙன் பலவாறு கொடுமைசெய்யவும் நாளாயணி
அவன்பக்கல் அன்புசிறிதுங்குறையாமல் பலவகை உபசாரங்களையும் வழுவாது
நன்மனத்தோடு புரிந்து முறைப்படி அவன் உண்டுமிகுந்த எச்சிலைத்தான் உண்டு
வாழ்ந்திருக்கையில்ஒருநாள் அவன்உண்ட மிச்சிலில் அவனுடைய கைவிரலொன்று
அற்றுவிழுந்துகிடக்கக் கண்டும் சிறிதும் அருவருப்புக்கொள்ளாமல் அவ்வுணவை
அன்போடு உண்டனளென்பதாம்.
அன்பன் தெரிவை வழிபாடு கண்டு, ஆர்வம் எய்தி,
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி,
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும்
வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான்
அன்பன்-கணவனான அம்முனிவன், தெரிவை வழிபாடு கண்டு-(தன்)
மனைவி (தன்னை) வழிபட்டுவந்த விதத்தைப் பார்த்து, ஆர்வம் எய்தி-(அவளிடத்து)
அன்புபொருந்தி, துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி-துன்பத்தைத்தந்த
பெருவியாதியினால் இயல்பழிந்த தன்வடிவத்தை மாற்றி, ஈசன் முன் தன் பங்கை
திறை நல்க சாபம் வாங்கும் வன்பன் தனக்குஉம் கிடையாத வடிவு கொண்டான்-
சிவபிரான் முன்பு தன் வாம பாகத்தை(த்தன்மனைவியான பார்வதிக்கு)
உரியபொருளாகக் கொடுக்கும்படி (தன் கரும்பு) வில்லை வளைத்துப் போர்செய்த
வலிமையையுடைய மன்மதனுக்கும் பெறுதற்கு அரிய (மிக்க அழகையுடைய)
வடிவத்தைக் கொண்டான்; ( எ- று.)
அங்ஙனம் அவள் நிலைகுலையாது வழிபட்டுவந்ததை அவன் பார்த்து மிகுந்த
திருப்பதிகொண்டு தனதுநோய்வடிவத்தை யொழித்துத் தவமகிமையாற் காமனினுஞ்
சிறந்த கட்டழகுடைய வடிவத்தைக் கொண்டனனென்பதாம். மன்மதன் சிவபிரான்
நெற்றிக் கண்ணினால் எரிபட்டானாயினும், பின்பு அக்கடவுள் பார்வதியினிடம்
காதல்கொண்டு அவளை மணம்புணர்ந்து அவளை என்றும் பிரியாது
அர்த்தநாரீசுவரமூர்த்தியாயினமைபற்றி, ‘தன்பங்கை யீசன் திறை நல்க
முன்சாபம்வாங்கும் வன்பன்’ என்றார். சிவபிரான் உமைக்குக் கொடுத்த
இடப்பாகம்,மன்மதனுக்குத் தோற்றுத்தந்த திறைப்பகுதியாகக் கற்பிக்கப்பட்டது.
“மின்னே! உனக்கு மிகு கற்புடை மீனும் ஒவ்வாள்;
இன்னே, வரம் வேண்டுவ வேண்டுக, ஈண்டை!’ என்ன,
‘நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க!’ என்றாள்,
தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள்.
மின்னே – மின்னல்போன்றவளே! மிகு கற்பு உடைமீன்உம் –
மிக்கபதிவிரதாதருமத்தையுடைய நக்ஷத்திரரூபமுள்ள அருந்ததியும், உனக்கு
ஒவ்வாள்- நினக்கு(க் கற்பில்) நிகராகாள்; இன்னே – இப்பொழுதே, ஈண்டை
இவ்விடத்தில்,வேண்டுவரம் வேண்டுக-(நீ) விரும்பும் வரங்களை (என்னிடம்)
வேண்டிப்பெற்றுக்கொள்வாயாக,’ என்ன – என்று (மௌற்கலியன் நாளாயணியை
நோக்கிச்)சொல்ல,- தன் நேர் இலாத மனை வாழ்வில் தவத்தில் மிக்காள். தனக்கு
ஒப்பில்லாத இல்லறவாழ்க்கையிலிருந்து செய்யுந்தவத்திற் சிறந்தவளான அவள், நின்
நேயம் என்றுஉம் பிரியாநலன் நேர்க என்றாள் – உனதுஅன்பு எந்நாளும்
நீங்காமையாகிய நல்லவரத்தை (எனக்கு) உடன்பட்டுத் தருவாயாக ‘என்று
(கணவனை வரம்) வேண்டினாள் (எ – று.)
அவன் மிக்க அன்போடு அவளைக் கொண்டாடி ‘நினக்கு வேண்டும் வரம்
வேண்டுவாயாக’ என்று சொல்ல, அவள் வேறொருவரத்தையும் வேண்டாமல் ‘உன்
அன்பு எப்பொழுதும் நீங்காதாகுக’ என்று வேண்டினள் என்பதாம்.
குன்றும் நதியும், மரனும் பைங் கொடியும், ஆகி,
துன்றும் துணையாய்ப் பல யோனிகள்தோறும் எய்தி,
நின்றும், சரித்தும், அரும் போகம் நெடிது துய்த்தார்,
என்றும் பிரியாது இருவோரும் இதயம் ஒத்தே.
அவன் அங்ஙனம் வரங்கொடுத்தபின்பு), -இருவோர் உம்-
(கணவனும்மனைவியு மாகிய) அவ்விருவரும், ‘இதயம் ஒத்து-மனங்கலந்து,
குன்றுஉம் நதிஉம்மரன்உம் பைங்கொடிஉம் ஆகி-மலையும் (அதனைச்சார்ந்து
பெருகுகிற) நதியும்மரமும் (அதன்மேற்படரும்) பசியபூங்கொடியுமாய்,
துன்றும்துணை ஆய் பலயோனிகள் தோறும் எய்தி – இங்ஙனமே இன்றியமையாது)
பொருந்திய துணையாகிப்பலவகையுருவங்களிற் பொருந்தி, நின்றுஉம் சரித்துஉம் –
(ஓரிடத்து) நின்றும்(பலவிடங்களிற்) சஞ்சரித்தும், என்றுஉம் பிரியாது –
எப்பொழுதும் (ஒருவரையொருவர்) பிரியாமல், நெடிது – நெடுங்காலம், அரு
போகம்-அரிய இன்பத்தை,துய்த்தார் – அனுபவித்தார்கள் (எ – று.)
அவன் குன்றாக வடிவுகொள்ள இவள் நதியாகவடிவுகொண்டு அதனைச்
சார்ந்தும், அவன் மரவடிவுகொள்ள இவள் கொடிவடிவு கொண்டு அதனைத்
தழுவியும், இவ்வாறு பற்பல யோனிபேதங்களிற் புக்கு அவ்விருவரும் சுகானுபவஞ்
செய்தன ரென்க.
இந்தப் பிறப்பில் நலம் எய்தி, இறந்த பின்னும்,
சிந்தித்தவண்ணம் இவள் இந்திரசேனை ஆகி,
அந்தப் பதியை அடைந்தாள்; மற்று அவனும் அஞ்சி,
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான்.
இந்த பிறப்பில் – (நாளாயணயாகிய) இந்தச்சன்மத்திலே, நலம்
எய்தி-(இப்படிப் பலவாறு) இன்பத்தை அனுபவித்து, இறந்த பின்னும்-, இவள்-,
சிந்தித்தவண்ணம்-நினைத்தபடியே, இந்திரசேனை ஆகி-(அடுத்தபிறப்பில்)
இந்திரசேனை யென்பவளாய், அந்த பதியை அடைந்தாள் -(முன்பிறப்பிற்
கணவனான) அந்த மௌத்கலியனையே அடுத்தாள்; (அப்பொழுது) அவனும்-,
அஞ்சி- (முத்திப்பேரின்பத்தில் விருப்பத்தால் இவளைச்சேர்ந்து சிற்றின்பம்
நுகர்தற்குப்) பயந்து, வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான்-
(கடவுளை)வணங்கிச் செய்கிற தொன்றுதொட்டு வருகிற அரியபெரிய
தவவொழுக்கத்திற்பொருந்திநின்றான்; (எ- று.) மற்று – வினைமாற்று.
உடம்புநீங்குங்காலத்து அடுத்த வினையும், அதுகாட்டுகங் கதி நிமித்தங்களும்,
அக்கதியினிடத்து அவாவும், உயிரினிடத்துமுறையேவந்து உதிக்க, அறிவை மோகம்
மறைக்க, அவ்வுயிரை அவ்வவா அக்கதியிற் கொண்டுசெலுத்து மாதலால், ‘சிந்தித்த
வண்ணம் அந்தப்பதியையடைந்தாள்’ என்றார். மௌத்கல்யன் இல்லறவாழ்க்கைக்கு
அஞ்சித் துறவறஞ்சேர்ந்தன னென்க.
அன்னோன் அகல, அவன்மேல் அவள் ஆசை விஞ்சி,
‘என்னோ புரிவது, இனி?’ என்றலும், ஏந்தல் கூற்றால்,
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும்
முன்னோனை நோக்கித் தவம் செய்தனள், மூரல் வாயாள்.
அன்னோன் அகல-(தன்கருத்துக்கு இணங்காமல்) அந்த
மௌத்கல்யன் விலகிச்செல்லுமளவில்,- அவள் – அந்த இந்திரசேனை, அவன்மேல்
ஆசைவிஞ்சி-அவனிடம் விருப்பம் மிக்கு, இனிபுரிவது என்னோ என்றலும்,-
(உன்னைப்பிரிந்து) இனி (நான்) செய்வது யாதோ?’ என்று வினாவிய வளவிலே,-
ஏந்தல் கூற்றால், அக்கணவன்சொன்ன வார்த்தையின்படி, மூரல் வாயாள்-
புன்சிரிப்புக்கொண்டவாயையுடைய அவள், தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல்
ஆளும் முன்னோனை நோக்கி-தனது ஒருவடிவத்திலே ஒருபாதியில் ஒருபெண்ணை
(அம்பிகையை)க்கொண்டுள்ள கடவுளான சிவபிரானைக் குறித்து, தவஞ்செய்தனன்-;
(எ- று.)
தவத்திற்கு இடையூறாக இந்திரசேனை தன்னைமணந்து கொள்ளுமாறு
வேண்டவே, அன்னோன் ‘நீ என்தவத்திற்கு இடையூறுபுரிவதனால்
துருபதபுத்திரியாய்ப் பிறக்க, உன்னை ஐவர் மணப்பர்’ என்று சபித்தானாக, பிறகு
சிவனை நோக்கித்தவம்புரிந்தாளென்று வியாசபாரதமும், தவம்புரியுமாறு
மௌத்கல்யன் கூறியதாகப் பாலபாரதமும் கூறும். மிஞ்சி என்றும் பாடம்
ஐந்து ஆனனத்தோன் அருள் செய்ய, அழகில் மிக்காள்,
ஐந்து ஆன சொல்லால், ‘கணவன்-தருக, ஐய!’ என்றாள்;
ஐந்து ஆன சொல்லான் அளித்தான், மற்று அவனும்-முன் நாள்,
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே.
ஐந்து ஆனனத்தோன்-ஐந்துமுகங்களையுடையவனான சிவபிரான்,
அருள் செய்ய-கருணைசெய்ய (பிரசன்னனாய்ப் பிரதியக்ஷமாக), அழகில் மிக்காள் –
அழகிற் சிறந்தவளான இந்திரசேனை, ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய
என்றாள் – ‘சுவாமி! (எனக்குக்) கணவனைத் தருவாயாக’ என்று ஐந்துமுறை சொல்லி
வேண்டினாள்; அவன்உம்-பஞ்சாநந மூர்த்தியான அச்சிவபிரானும், இவள் முன்
நாள் ஐந்து ஆன போகம் எய்திய ஆறு அறிந்து- இவள் முற்பிறப்பில் (தன்
புருஷனது) ஐந்துவடிவங்களோடுகூடி இன்பம் அனுபவித்த தன்மையைத்
திருவுள்ளத்திற் கொண்டு, ஐந்து ஆன சொல்லான் அளித்தான் – ‘அங்ஙனமே
ஆகுக’ என்று ஐந்துமுறைகூறி அருள்செய்தான்; (எ-று.)-மற்று – அசை.
இவள் தவத்துக்குஉகந்த அப்பிரான் கட்புலனாக, இவள் ‘எனக்குஏற்ற
கணவனைத் தருக’ என்று ஆதரத்தால் ஐந்துதரம் அடுக்கிச்சொல்லிவேண்ட,
சிவபிரானும் ‘அப்படியே ஆகுக’ என்று ஐந்துதரம்கூறி, அவள் ஐந்துகொழுநரைப்
பெறும்படி அனுக்கிரகித்தனன் என்பதாம். ‘வேண்டும் வரம் வேண்டும்’ என்று
மௌற்கலியன் சொன்னபோது ‘ஐந்து’ வடிவுகொண்டு கிரீடிப்பாய்’ என்று நாளாயணி
வரம் வேண்ட, மௌற்கலியன் அவ்வாறே கிரீடித்தா னென்பதை முதனூலா
லறியலாம். சதாசிவமூர்த்தியாகிய சிவபிரானுக்குச் சத்தியோசாதம், வாமதேவம்,
அகோரம், தற்புருடம், ஈசாநம் என் ஐந்துமுகங்க னென்று அறிக.
முன் நின்ற தேவன் மொழியின்படி, கங்கை மூழ்கி,
தன்னந்தனி நின்று அழுகின்ற அத் தையல் கண்ணீர்
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி,
‘என்?’ என்று, இவளை இமையோர் பதி எய்தினானே.
முன் நின்ற தேவன் மொழியின்படி – தனக்கு முன்னே
எழுந்தருளிநின்றுகாட்சி தந்த சிவபிரான் கட்டளை கூறியபடி, கங்கை மூழ்கி-
கங்காநதியில் நீராடி,தன்னந் தனி நின்று அழுகின்ற – ஒரு துணையுமில்லாமல்
தனியேநின்று அழுகின்ற,அதையல் – அந்தப்பெண்ணினுடைய, கண் நீர்,
கண்களினின்று சொரியும்நீர்த்துளிகள், பொன் அம் கமலம் வனம்ஆன –
பொன்மயமான அழகியதாமரைமலர்களின் தொகுதியாய்ப் பரிணமித்த, புதுமை-
அதிசயத்தை, நோக்கி-பார்த்து, இமையோர் பதி-தேவராசனான இந்திரன், என்
என்று இவளை எய்தினான் -இது என்னவென்று வினவிக்கொண்டே இவளைச்
சமீபித்தான்; (எ – று.)
சிவபிரான் ஐந்துகொழுநரைப் பெறும்படி அனுக்கிரகித்ததற்கு இவள் மகிழாமல்
தக்கஒருநாயகனைப் பெறும்படி பிரார்த்திக்க, பரமசிவன் ‘நீ ஐந்துதரம் வேண்டியபடி
நான் உனக்கு ஐந்துதரம் அருளியது தவறாது; ஆனால் அவ்வரத்தை மறுபிறப்பில்
அனுபவிக்கும்படி அருள்செய்கிறோம்’ என்று அனுக்கிரகித்து அவளைக்
கங்காநதியில் மூழ்கிவரும்படியும் அங்ஙனம்மூழ்கி வரும்பொழுது
எதிரில்தோன்றும் புருஷனைத் தன்னிடம் அழைத்துவரும்படியும் கூறியனுப்ப,
அவ்வாறே சென்ற அவள் அப்பொழுதே ஒருபதியைப் பெறாமல் மறுபிறப்பில்
ஐந்துபதிகளைப் பெறவேண்டுமேயென்று கொண்ட சோகத்தோடு கங்கையில்
முழுகியெழுகையில், அவளது விழிகளினின்றுபெருகிய கண்ணீர் கங்கையில்விழுந்து
பொற்றாமரையானசெயலை அங்குவந்ததேவேந்திரன் பார்த்து ‘இது என்ன?’ என்று
வினாவிக்கொண்டு அவளை அடுத்தனனென்பதாம்.
முன்னொருகாலத்தில் நைமிசாரணியத்திலே தேவர்கள் யாகஞ்செய்கையில்,
யமன்தீட்சிதனாய் நெடுநாள் வைதிகச்சடங்கிலிருந்ததனால் தனது அதிகாரத்
தொழிலைச்செலுத்தாதொழியவே, பூமியில் சனங்கள் மரணமில்லாமல்
மிகுதிப்பட்டுக் கொழுத்திட,அதுகண்டு அஞ்சிய இந்திரன் சந்திரன் வருணன்
குபேரன் முதலிய தேவர்கள்பிரமனைச் சரணமடைந்து செய்தி கூறலும், அக்கடவுள்
‘உங்கள் வீரியத்தால்வளர்ந்த யமனுடைய வேறொரு சொரூபம் அச்சனங்களைக்
கொல்லும்’ என்றுகூறியனுப்பியவுடனே அவர்கள் மேலுலகிலிருந்து பூலோகத்து
நைமிசாரணியத்தைக்குறித்து வருகையில் கங்கையிலே ஒரு பொற்றாமரைமலரைக்
கண்டு அதிசயிக்க, அவர்களுள் இந்திரன் அம்மலரினருகில்நின்ற மங்கையைநோக்கி
‘இதுஎன்?, என்று வினாவினா னென முதனூலால் விவரம்உணர்க.
அவனை, ‘ தொடர்பால் வருக!’ என்ன, அவனும், ஆங்கண்
சிவனைச் சிறிதும் மதியாது, எதிர் சென்றகாலை,
‘இவனுக்கு என் மேன்மை?’ எனச் சீறலும், எஞ்சினான்போல்,
புவனத்து எவரும் நகையாட, புலம்பி வீழ்ந்தான்.
அவனை – அங்ஙனம் தன்முன்வந்த இந்திரனை, தொடர்பால் வருக
என்ன – என்பின்னே வருவாயாக என்று (இந்திரசேனை) அழைக்க, அவன்உம் –
அவ்விந்திரனும், ஆங்கண்-அவ்வாறே அவளைத்தொடர்ந்து சென்றஇடத்தில்,
சிவனைசிறிதுஉம் மதியாது – (எதிர்பட்ட) சிவபிரானைச் சிறிதும்இலட்சியஞ்
செய்யாமல்,எதிர் சென்ற காலை – அவனெதிரிலே சென்ற பொழுது,
(அப்பெருமான்), இவனுக்குமேன்மை என் என சீறலும்- ‘இவனுக்கு இவ்வளவு
செருக்கு என்ன?’ என்று கருதிக்கோபங்கொண்ட வளவிலே, (அவ்விந்திரன்),
எஞ்சினான் போல் – இறந்தவன்போல,புவனத்துஎவர்உம் நகையாட
புலம்பிவீழ்ந்தான் – உலகத்திலுள்ளோரெல்லோரும்(தனதுநிலையைக் கண்டு)
பரிகசிக்கும்படி வருந்திக் கீழ்விழுந்தான்; ( எ- று.)
அங்ஙனம்வினாவியவனை அவள் தன்னுடன்வந்து செய்தியறிந்துகொள்ளும்படி
சொல்லி அழைக்க, அவ்வாறே அந்த இந்திரன் அவளைத் தொடர்ந்து
செல்லுகையில், அங்கு மனைவியுடன் சூதாடிக்கொண்டிருந்த சிவபிரானை மதியாது
அலட்சியஞ்செய்து செருக்கிப்பேச, உருத்திரமூர்த்தி கோபித்துச் சிரித்துக்கொண்டே
அவனைநோக்கிய மாத்திரத்தில் அவன் தபிக்கப்பட்டவனாய் மரம்போல நின்றிட,
பின்பு சிவபிரான் சூதாட்டம்முடிந்தவுடன், அழுது கொண்டுநின்ற இந்திரசேனையை
நோக்கி ‘இவனை அருகிற்கொண்டு வா; இனி, இவன் செருக்குறான்’ என்றுகூற
அங்ஙனமே அவள் போய் அவ்விந்திரனைத் தொட்டவளவில், அவன்
உடல்நடுங்கித்தரையில் விழுந்திட்டன னென்பதாம்.
வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன்
இவ்வாறு வீழ, மழுவாளி, இமைப்பில் மீண்டும்,
அவ் வாசவற்குப் பிலம் ஒன்றில் அடைத்த வச்ரக்
கை வாசவர்கள் ஒரு நால்வரைக் காட்டினானே.
வெம் ஆயுதங்கள் உதவாமல் – கொடிய (வச்சிரம் முதலிய தனது)
ஆயுதங்கள் ஒன்றும் பயன்படாமலே, விபுதநாதன்-தேவராசனான இந்திரன்,
இமைப்பின் – ஒருமாத்திரைப் பொழுதிலே, இ ஆறு வீழ-இப்படிக் கீழ்விழுந்திட,-
மழுஆளி-மழுவையுடையவனாகிய சிவபிரான்,-மீண்டுஉம்-பின்பு, அ வாசவற்கு-
அவ்விந்திரனுக்கு, பிலம் ஒன்றில் அடைந்த வச்ரம் கை வாசவர்கள் ஒரு
நால்வரை- ஒருபிலத்தினுள் (முன்புதான்) அடைத்து வைத்திருந்த வச்சிரமேந்திய
கையையுடைய இந்திரர் நால்வரை, காட்டினான்-காண்பித்தான்; (எ – று.)
சிவபிரான் இந்திரனை நோக்கி ‘இனி இப்படி ஒருபொழுதும் உபேக்ஷை
செய்யாதே’ என்று அறிவுகூறி ஒருமலையிடையிலுள்ள ஒருகுகையைக் காட்டி
‘உன்னைப்போன்றவர்கள் அடங்கிய இதற்குள் நீயும் செல்’ என்றுசொல்ல, அவன்
அப்பிலவாயிலைத்திறந்து அதனுள் அடைபட்டிருப்பவர்களை நோக்கி ‘நான்
இங்ஙனம் ஆகாதிருக்க வேண்டும்’ என்று கருதுமளவிலே, உருத்திர ‘மூர்த்தி
சினங்கொண்டு உறுக்கி விழித்துப்பார்த்து ‘நீ இளமையினால் என்னை
அவமதித்ததுபற்றி, இதற்குள் நுழை’ என்று அதட்டி வலியப்புகுத்த,
கூப்பியகையனாய்அவன் உட்புகுவானாயினன் என முதனூலில் விவரம் காண்க.
பிலம்-பாதாளஅறை.
வன் பாதலத்தில் வரு நால்வரும், வானின் வந்த
புன் பாகசாதனனும், தன் அடி போற்றி நிற்ப,
‘அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர்!’ என்று,
மென் பாவை பங்கன் விதிக்க, புவிமீது வந்தார்.
வல் பாதலத்தில் வரும்-கொடியபிலத்தில் முன்னமே பொருந்திய,
நால்வர்உம்-நான்குஇந்திரர்களும், வானில் வந்த புல் பாகசாதனன்உம் –
(அப்பொழுது) சுவர்க்கலோகத்தினின்று வந்த எளிமையையுடைய இந்திரனும், தன்
அடி போற்றி நிற்ப – தனது திருவடிகளை வணங்கிநிற்க, மெல் பாவை பங்கன்-
மென்மையையுடைய அழகிய உமாதேவியை வாமபாகத்திலுடைய
சிவபெருமான், (அவர்களை நோக்கி), அன்பால் ஐவர்உம் இவட்கு மகிழ்நர்
ஆதிர்என்று விதிக்க – ‘அன்போடு நீங்கள் ஐந்துபேரும் இவளுக்குக் கணவராவீர்’
என்று கட்டளையிட, (அவ்வாறே அந்தஐந்து இந்திரர்களும்), புவிமீது வந்தார்-
பூமியில் வந்து பிறந்தார்கள்;
அங்ஙனமே அந்த இந்திரர்கள் ஐவரும் பிறப்பவராயின ரென்பதாம்.
அங்ஙனம்பிலத்தினுட் புகுகிற இந்திரன் சிவபிரானைத் துதிக்க, அப்பெருமான்
அவனையும்மற்றைநால்வரையும் நோக்கி, “என்னைமதியாத குற்றத்தால்,
நீங்களைவரும்பூலோகத்தில் மனுஷ்யராசராய்ப் பிறந்து, இராசகன்னிகையாக
மறுபிறப்பெடுக்கும்இவளொருத்தியை மணம்புரிந்துகொண்டு,
துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனஞ் செய்துகுற்றந்தீர்ந்து மீண்டும்
விண்ணுலகமடைவீர்” என்று கட்டளையிட,அவ்விந்திரர்ஐவரும் ‘நாங்கள்
மானுடப் பிறப்பெடுக்கையில் எங்கட்கு யமனும்வாயுவும் இந்திரனும்
அசுவிநீதேவர்களும் தந்தையராகுக’ என்றுவேண்ட, முக்கட்கடவுள் அங்ஙனமே
அருள்செய்து அவர்கட்கு இம்மங்கையைமனையாளாகுமாறு நியமித்தான் என்ற
விவரத்தை முதனூலிற் காணலாம். முந்தியஇந்திரர்நால்வர் விஸவபுக், பூததாமா,
ஸிபி, ஸாந்தி எனபவர்; பிந்திய இந்திரன் பெயர்,தேஜஸ்வீ என்பது. பாகஸாஸநன்
என்ற பெயர்-பாகனென்ற அசுரனைஅழித்தவனென்று பொருள்படும்;
பாகன் விருத்திராசுரனுடன் பிறந்தவன்.
தருமன், பவனன், தினநாதன் தனயர்தம்பால்
வரும் இந்த நால்வர், அவர் நால்வரும்; மாலை மார்பா!
தெருமந்த இந்தச் சிலை வீரன், இத் தேவர்க்கு எல்லாம்
பெரு மன்; பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான்.
மாலை மார்பா-மாலையையணிந்த மார்பையுடைய துருபதராசனே!
தருமன் – யமதருமராசனும், பவனன்-வாயுதேவனும், தினம் நாதன் தனயர் தம்பால்-
பகற்பொழுதுக்குத் தலைவனாகிய சூரியனுடைய புத்திரர்களான அசுவினீதேவர்களும்
ஆகிய இந்நால்வர்களின் சம்பந்தத்தால், வரும்-பிறந்த, இந்த நால்வர் -யுதிட்டிரன்
வீமசேனன் நகுல சகதேவர்கள் என்கிற நான்குபேரும், அவர் நால்வர்உம்-முன்னமே
பிலத்தில் அடைபட்டிருந்த அந்த நான்கு இந்திரர்களுமாவர்; தெருமந்த இந்த சிலை
வீரன்-(பகைவர்மனம்) சுழலுதற்குக் காரணமான இந்த வில்லைக் கையிலேந்திய
வீரனான அருச்சுனன், இ தேவர்க்கு எல்லாம் பெருமன்-கீழ்க்கூறிய
தேவர்களுக்கெல்லாம் அரசனான இந்திரன்: பிறப்பிற்கு – இவன் பிறந்ததற்கு
அவனே-இந்திரனே, முன்-முன்பு, பிதாஉம் ஆனான்- தந்தையுமாயினான்;
(எ- று.)
தேவவைத்தியர்களாகிய அசுவினீதேவர், பெண்குதிரைவடிவங் கொண்டு
வனத்திலொளித்திருந்த சமிஜ்ஞைஎன்னும் மனைவியினிடத்துக் குதிரைவடிவமாய்ச்
சேர்ந்த சூரியனுக்குப் பிறந்த இரட்டைப்பிள்ளைகளாதலால், ‘தினநாதன்தனயர்’
எனப்பட்டனர். ‘தம்மால்’ என்றும் பாடம் உண்டு.
இம் மாது, தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட
அம் மாது; இவள் காதலர் ஐவரும் ஆக!’ என்று,
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான்.
இ மாது-இந்தப் பெண் (திரௌபதி),-தொல்லை-முற்பிறப்பில்,
அரு மாதவத்து எல்லை கண்ட-அரிய பெரிய தவத்தின் எல்லையைக் கண்ட
(தவத்தைமுற்றுஞ்செய்த), அ மாது- அந்த இந்திரசேனையென்னும் பெண்ணாவள்:
(ஆதலால்),ஐவர்உம்-இந்தப்பாண்டவர் ஐந்துபேரும், இவள் காதலர் ஆக-
இவளுக்குக்கணவராகக்கடவர், என்று-என்று சொல்லி, தெவ் மாதர் முன் பூண்
கவர் மன்னன்தெளியும் ஆறு-பகைவர்களுடைய மனைவியர்களின், மங்கலநாணைக்
களைகின்றபாஞ்சாலராசன் நன்குதெளியும்படி, வெம்மாதவத்தோன்-
கொடிய(செய்தற்கரிய)பெருந்தவத்தைச்செய்தவனான அந்த வியாசமுனிவன்,
பெருஞான விழிஉம் ஈந்தான் – (அவ்வரசனுக்குச்) சிறந்தஞானக்கண்ணையுங்
கொடுத்தருளினான்;
பாண்டவரைவரும் திரௌபதியும் என்ற இவர்களது முற்பிறவி வரலாற்றை
வியாசன் துருபதனுக்கு எடுத்துக்கூறித் தெளிவித்ததுமல்லாமல், இவ்வுண்மையை
அத்துருபதன் தானே தெளிந்துகொள்ளும்படி அவனுக்குத்திவ்வியமான
ஞானக்கண்ணையும் தனது தவமகிமையால் அருளின னென்பதாம். இவ்வரலாறு
முழுதையும் வியாசன் துருபதனைத் தனியே அழைத்துச் சென்று
அவனுக்குமாத்திரமே கூறின னென முதனூல் தெரிக்கும்.
மாங்கலியசூத்திரம் ‘முற்பூண்’ எனப்பட்டது. பகைவர்களைத் தவறாது
கொல்பவனென்ற பொருளில் ‘தெம்மாதர்முற்பூண் கவர் மன்னன்’ என்றது –
பிறிதினவிற்சியணி. ‘மெய்ம்மாதவத்தோன்’ என்றும் பாடம்
ஓதாது உணர்ந்து, மறை நாலும் உருவு செய்த,
வேதாவும் ஒவ்வா, வியாதன் மொழி வெள்ள நீரால்,
கோதான நெஞ்சைக் குளிப்பாட்டினன்; கோடி கோடி
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன்.-வியாசர்வார்த்தையால் துருபதன் மனந்தெளிதல்.
ஓதாது உணர்ந்து-(எவரிடத்தும்) கற்காமலே(எல்லாநூல்களையும்)
தானாகஅறிந்து, மறைநால்உம்-நான்குவேதங்களையும், உருவுசெய்த-(வகுத்து)
ஒழுங்குபடுத்திய, வேதாஉம் ஒவ்வாவியாதன்-பிரமனும் உவமையாகமாட்டாத
வியாசமுனிவனுடைய, மொழி-வார்த்தையாகிய, வெள்ளம் நீரால் –
நீர்ப்பெருக்கினால்,- தோது ஆன கோடிகோடி வண்டு துதை மாலைகொள்
சோமகேசன் – வரிசையாகவருகின்ற பலகோடிக்கணக்கான வண்டுகள் நெருங்கிய
பூமாலையைத் தரித்த சோமககுலத்தார்க்குத் தலைவனாகிய துருபதன், கோது ஆன
நெஞ்சை குளிப்புஆட்டினன் – களங்கங்கொண்ட (தன்) மனத்தை
நன்றாகக்கழுவினான்; ( எ- று.)
மாசுபடிந்த உடம்பை நீரினாற்குளிப்பாட்டித் தூயதாக்குதல் போல,
கலக்கங்கொண்ட தன்மனத்தை வியாசர்வார்த்தையாற் சீர்ப்படுத்தி் அக்களங்கத்தை
யொழித்தன னென்பதாம்; உருவகவணி, வியாதன் வகுத்த மறைவகுப்புக்களின் பெயர்
– இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்என்றும், இவன்வகுத்தற்கு முன் தைத்திரியம்,
பௌடியம், தலவகாரம், சாமம்என வேதம் நான்காகவழங்கிய தென்றும் கூறுப.
உலகோருணரும்படி வேதத்தைப்பகுத்துக் கொடுத்ததனால், வியாதனுக்கு வேதாவும்
ஒவ்வானென்க, ‘தூதானவண்டு’ எனப் பாடமோதி-இவனிடத்துக் காதல்கொண்ட
மகளிர் தூதாக அனுப்பிய வண்டுகளெனப் பொருள் உரைத்தலும் ஒன்று.
வியப்போடு தொல்லை முனி சொல் தலைமீது கொண்டு,
பயப்போன், மகள்மேல் புரிகின்ற பரிவினுக்கும்,
வயப் போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும், ஈடா,
நயப்போடு மன்றல் அயர்வித்தனன், நன்கு ஓர் நாளில்.-துருபதன் தன்மகளை ஐவர்க்கும்மணம்புரிவிக்கத்
தொடங்கல்.
பயப்போன் – (திரௌபதியைப்) பெற்றவனான யாகசேனன்,
தொல்லைமுனிசொல்-பழமையான வியாசமுனிவனுடைய வார்த்தையை, வியப்போடு
தலைமீதுகொண்டு-ஆச்சரியத்தோடு (தனது) முடியின் மேற்கொண்டு [நன்குமதித்து],
மகள்மேல்புரிகின்ற பரிவினுக்குஉம் – (தனது) பெண்ணாகிய அத்திரௌபதியினிடம்
(தான்)வைத்திருக்கிற அன்புக்கும், வயம் போர் நிருபர் பெருமைக்குஉம்-
வெற்றியையுடையபோர்செய்யவல்ல அரசர்களாகிய அப்பாண்டவர்களுடைய
பெருமைக்கும்,வலிக்குஉம் – (தனது) சக்திக்கும், ஈடு ஆ-தகுதியாக, நன்கு ஒர்
நாளில் – நல்ல ஒருசுபதினத்தில், நயப்போடு மன்றல் அயர்வித்தனன் –
விருப்பத்தோடுவிவாகஞ்செய்விப்பவனானான்; (எ-று.)
பாடும் சுருதி மறைவாணரும், பாரில் உள்ள
சூடும் கனக முடி வேந்தரும், தொக்கு நிற்ப,
நீடும் கதிர் மா மணித் தூண்கள் நிரைத்த பத்தி
ஆடும் கொடி மண்டபம் எய்தினர், அண்டர் போல்வார்.-பாண்டவரைவரும் கலியாணமண்டபஞ் சேர்தல்.
பாடும்-ஸ்வரத்தோடு சொல்லுகிற, சுருதி-வேதங்களையுடைய, மறை
வாணர்உம் – வைதிகபிராமணர்களும், பாரில் உள்ள – பூமியிலுள்ள, சூடும் கனகம்
முடி வேந்தர்உம் – தரித்த பொன்மயமான கிரீடத்தையுடைய அரசர்களும், தொக்கு
நிற்ப – திரண்டுநிற்க,-அண்டர் போல்வார்-தேவர்கள்போன்ற பஞ்சபாண்டவர்கள்,-
நீடும் கதிர் மா மணி, தூண்கள் நிரைத்த பத்தி – நெடுந்தூரஞ்சென்றுவிளங்குகிற
ஒளியையுடைசிறந்த இரத்தினங்கள் பதித்ததூண்களைவரிசையாகவைத்த
ஒழுங்கையுடைய, ஆடும் கொடி மண்டபம் – அசைகின்றகொடிகள் கட்டிய
மண்டபத்தை, எய்தினர் – அடைந்தார்கள்; (எ-று.)- ‘கனமாமணி’ என்றும்பாடம்.
குறிக்கும் பணிலம் முதல் ஆயிரம் கோடியாகப்
பிறிக்கும் கருவி இடம்தோறும் பிளிறி ஆர்ப்ப,
செறிக்கும் கழற் கால் அறன் மைந்தனைச் செம்பொன் வேதி
எறிக்கும் கிரண மணிப் பீடம்அது ஏற்றினாரே.-தருமனுக்கும் திரௌபதிக்கும் நடந்த விவாகத்தை இதுமுதல்
ஐந்து கவிகளிற் கூறுகிறார்.
குறிக்கும் பணிலம் முதல் – ஊதப்படுகிற சங்கவாத்தியம்முதலாக,
ஆயிரம் கோடி ஆக பிறிக்கும் கருவி – மிகப்பலவாகப் பகுக்கப்படுகிற
வாத்தியங்கள், இடம் தோறுஉம் பிளிறி ஆர்ப்ப – பலவிடங்களிலும் மிகுதியாக
முழுங்க,-செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை – உறுதியாக அணிந்த
வீரக்கழலையுடைய பாதத்தையுடைய ‘தருமபுத்திரனை, செம்பொன் வேதி- சிவந்த
பொன்னினாற் செய்யப்பட்ட விவாகவேதிகையிலுள்ள, எறிக்கும் கிரணம் மணி
பீடம்அது -வெளிவீசுகிற கிரணங்களையுடைய இரத்தினங்கள் பதித்த ஆசனத்தில்,
ஏற்றினார்-இருக்கவைத்தார்கள்;
இதற்குஎழுவாய், முன்நின்று மணத்தைநடத்தும் புரோகிதன் முதலியோர்:
அடுத்தகவியில் “வலத்தில் வைத்தார்” என்பதற்கும் 94-ஆம் கவியில்
“தீவலஞ்செய்வித்தார்” என்பதற்கும், இங்ஙனமே காண்க. கருவி – தோற்கருவி,
துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரப்புக்கருவி என நால்வகைப்படும்
இடத் தோள் இவட்கும், வலத் தோள் இவ் இறைவனுக்கும்,
திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய,
விடத்தோடு அமுதம் கலந்தென்ன மிளிரும் வேற்கண்
வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார்.
இவட்கு இடம் தோள்உம் – இந்தத்திரௌபதியின் இடத்தோளும்,
இ இறைவனுக்கு வலம் தோள்உம்-இந்தத் தரும புத்திரனது வலத்தோளும்,
திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து – உறுதியாகச்சொல்லப்பட்ட
உத்தமஇலக்கணங்களுக்கு உரிய பயனை யடைந்து, தோய -(ஒன்றோடொன்று)
பொருந்தும்படி,-விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும்வேல்கண் வடத்தோடு
விம்மும் முலையாளை – விஷத்துடனே அமிருதங் கலந்தாற்போலவிளங்குகிற
வேல்போலுங் கண்களையும் ஆரத்தோடுபூரிக்கிற தனங்களையுமுடையவளான
திரௌபதியை, வலத்தில் வைத்தார்-(தருமபுத்திரனது) வலப்பக்கத்தில்
இருக்கவைத்தார்கள்; (எ- று.)
மணமகனது வலப்பக்கத்தில் மணமகள் இருக்கும்போதுமணமகனது
வலத்தோளும் மணமகளது இடத்தோளும் ஒன்றோடொன்று பொருந்துகிற
இயல்பைவிளக்குவார், ‘இடத்தோளிவட்கும் வலத்தோளிவ்விறைவனுக்குந்தோய
முலையாளைவலத்தில்வைத்தார்’ என்றார். ஆடவருக்கு வலப்பக்கத்து
உறுப்புக்களிலும் மகளிர்க்குஇடப்பக்கத்து உறுப்புக்களிலும் உத்தமவிலக்கணம்
சிறத்தலாகிய இயல்பின்படிஇவர்கள்தோள்களிற் காணப்பட்ட நல்லிலக்கணங்கள்
இப்பொழுது பலிக்க என்றது, ‘குறியின் பயன்சேர்ந்து’ என்றதன் கருத்து. திடத்தோடு
உரைத்த குறி-சாமுத்திரகசாஸ்திரலக்ஷணம் அறிந்தவர்கள் நன்குஆராய்ந்து இவை
இன்னபயன்தருமென்று எடுத்துக்கூறியஉத்தமலக்ஷணங்கள். கண்களிற் சுற்றிலு
மிருக்கிறவெண்ணிறத்தையும், இடையிலுள்ள விழியின் கருநிறத்தையுங் கருதி,
‘விடத்தோடமுதங்கலந்தென்ன மிளிருங் கண்’ என்றார்.
கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத
வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி,
மூள்வித்த செந் தீக் கரி ஆக, முரசு உயர்த்த
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான்.
கேள்விக்கு – நூ£ற்கேள்வியில், ஒருவன் எனும் –
ஒப்பில்லாதவனென்று சொல்லப்படுகிற, தௌமியன் – தௌமியமுனிவன்,-கீதம்
வேதம் வேள்விக்கு வேண்டுவன யாஉம்-சுவரங்களோடுகூறப்படுகிற வேதங்களின்
விதிப்படி செய்யப்படுகிற விவாகத்துக்கு வேண்டுவனவான பொருள்களை யெல்லாம்,
விதியின் ஈட்டி – சாஸ்திரவிதிப்படி தொகுத்துவைத்துக்கொண்டு, மூள்வித்த செம் தீ
கரி ஆக – (மந்திரபூர்வமாகச்) சுவலிக்கச்செய்த சிவந்த அக்கினி சாட்சியாக
(ஓமாக்கினியின் முன்னிலையிலே), முரசுஉயர்த்த தாள் வித்தகற்கு-முரசவாத்தியத்தின்
வடிவத்தையெழுதினகொடியை உயரநாட்டிய முயற்சியையும்
ஞானத்தையுமுடையவனான தருமபுத்திரனுக்கு, வரம் ஆன சடங்கு செய்தான் –
மேன்மையான விவாகத்துக்கு உரியதான மங்கலச்சடங்கைச் செய்வித்தான்; (எ- று.)
வேள்விக்கு வேண்டுவன – சமித், தர்ப்பம், பொரி, தீர்த்தம், நெய், அக்ஷதை,
அம்மி, பாலிகை முதலியன. வாள்வித்தகற்கு எனவும்பாடம்
பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை
நல் மங்கலப் பூண் துகிலோடு நயந்து சாத்தி,
தன்மம் கலந்த மனத்தோனை அத் தையலோடும்
தொல் மங்கலச் செஞ் சுடர்த் தீ வலம் சூழுவித்தார்.
பல் மங்கலம்உம்-பலமங்களங்களும்,உடன் வைகிய-ஒரு சேரத்
தங்கிய,பண்பினாளை – தன்மையையுடையளான திரௌபதிக்கு, துகிலோடு –
புதியபட்டாடையுடனே, நல் மங்கலம் பூண் – திரு மங்கலியத்தை, நயந்துசாத்தி –
விரும்பியணிவித்து, தன்மம் கலந்த மனத்தோனை -தருமம்
பொருந்தியமனத்தையுடையனான தருமபுத்திரனை, அ தையலோடுஉம் –
அந்தப்பெண்ணினுடனே, தென்மங்கலம்செம்சுடர் தீவலம்செய்வித்தார்-
அழகியமங்களகரமான சிவந்த சுவாலையையுடைய
ஓமாக்கினியைப்பிரதட்சிணஞ்செய்வித்தார்கள்;
பாணிக்கிரகணத்தின்பின் மணமகன் தன்கையால்மணமகளது
கையைப்பற்றிக்கொண்டு அக்கினியை வலம்வருதல், ஒருசடங்கு. துகில்-
கூறையென்றுசிறப்பித்துச்சொல்லப்படும். சாத்தி-சாத்துவித்து, ‘தென்மங்கலஞ்
செஞ்சுடர்தீவலஞ்சூழுவித்தார்’ என்றும், ‘தொன்மங்கலச்
செஞ்சுடர்த்தீவலஞ்சூழுவித்தார்’ என்றும்பாடம்.
கங்குல், பவள வனம்மீது கடல் தரங்கம்
பொங்கி, தரளத் திரள் சிந்திப் பொழியுமாபோல்,
அங்கிப் புறத்து, திருக் காப்பு அணி அம் கை ஏந்தி,
செங் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே.
கங்குல் – இராப்பொழுதில், கடல் தரங்கம் – கடலின் அலை,
பொங்கி- பொங்கியெழுந்து, பவளம் வனம்மீது-பவளக்கொடிகளின்தொகுதியின்மேல்,
தரளம்திரள் – முத்துக்களின் கூட்டத்தை, சிந்தி பொழியும் ஆபோல்-
வீசிச்சொரியும்விதம் போல,-செம்கண்கரிய குழலாள் – சிவந்தகண்களையும்
கரியகூந்தலையுமுடையளான திரௌபதி, திரு காப்பு அணி அம்கைஏந்தி –
மங்கலகரமான ரக்ஷாபந்தனத்தை யணிந்த அழகிய (தன்) கைகளில் எடுத்து,
அங்கிப்புறத்து பொரிசிந்தினாள் – அக்கினியில் நெற்பொரியைச்சொரிந்தாள்;
(எ- று.)
லாஜஹோமம் (பொரிகொண்டு ஓமஞ்செய்தல்) என்றவிவாகச்சடங்கு, இதிற்
கூறப்பட்டது. கருநிறமுடைய திரௌபதிசெந்நிறமுடைய தீயில்
வெண்ணிறமுடையபொரியைக்கையாற்சொரிதற்குக் கருங்கடல் பவளக்காட்டில்
முத்துத்திரளை அலையாற் சொரிதலை உவமைகூறினார். திருக்காப்பு – கங்கணம்.
காப்பு – காவல்; பாதுகாவலுக்காக அணியப்படுவதான விவாககங்கணத்துக்கு இங்கு
ஆகுபெயர். ‘கங்கிற் பவளவனம்’ என்றும் பாடம்.
இவ்வாறு மன்றல் அயர்வித்தபின், ஈன்ற காதல்
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற,
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார்.-இவ்வாறே பின்பு திரௌபதிக்கும் வீமன் முதலிய நால்வர்க்கும்
தனித்தனிநிகழ்ந்த விவாகச் சடங்குகளை இதில் கூறுகிறார்.
இ ஆறு – இவ்வாகையாய், மன்றல் அயர்வித்த பின்- (தருமனுக்கும்
திரௌபதிக்கும்) விவாகஞ்செய்வித்தபின்பு. – (திரௌபதி), ஈன்ற காதல் வெவ் ஆர்
அழலில் – (தன்னைப்)பெற்றதான அன்பையுடைய வெவ்வியநிறைந்த ஓமாக்கினியில்,
முறை மூழ்கினள் – முறையே மூழ்கி, மீண்டுதோன்ற-மீண்டும்எழுந்துவர, மை வார்
அளகம் வடமீன் நிகர் கற்பினாளை – கரிய நீண்ட கூந்தலையுடைய அருந்ததி
போன்ற கற்புநிலையையுடையளான திரௌபதியை, அ ஆறு – கீழ்க்கூறியபடியே,
மற்றை ஒருநால்வர்உம் – (வீமன் முதலிய) மற்றைநான்குபாண்டவர்களும், அன்று –
அன்றைத்தினத்திலேயே, வேட்டார்-மணஞ்செய்துகொண்டார்கள்;
‘முறை’ என்றதனால், நால்வரையும் மணஞ்செய்யும்போது ஒவ்வொருவர்க்கு
ஒவ்வொருமுறை அக்கினிபிரவேசஞ்செய்து மீண்டு எழுந்தனளென்க.
அக்கினிபிரவேசஞ்செய்து மீண்டசெய்கை, வியாசபாரதத்திலாவது
பாலபாரதத்திலாவதுகாணப்படவில்லை. “பபூவகந்யைவகதேகதேஹநி” என்று
வியாசபாரதத்தில்வருவதையொட்டி இங்ஙன்கூறினர்போலும். ஒவ்வொருவரையும்
மணஞ்செய்யும்போது கன்னிகையாயிருத்தல் வேண்டுமாதலால், அதன் பொருட்டு,
தீக்குதித்து எழுந்தன ளென்க. முன்பு தீயினின்றுபிறந்தவள் மீண்டு மீண்டும்
தீயினின்றே – பிறந்த தன்மை தோன்ற ‘ஈன்ற அழல்’ எனப்பட்டது. இவள்
தீக்குதித்தபொழுது இவளுடம்பைத் தீ எரித்துஒழித்திடாமைபற்றி, ‘காதலழல்’
என்றார்.பல ஆடவரை மணஞ்செய்தவிடத்தும் அதனால் அவள்கற்பிற்குக்
குறைவில்லையென்பார்’ வடமீனிகர்கற்பினாள்’ என்றார்.
மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால்
ஈரம் புலராக் கரத்தோருக்கு, யாகசேனன்,
‘தேரும், பரியும், களிறும், திரள் சேனை யாவும்,
பாரும், தனமும், உமது’ என்று பலவும் ஈந்தான்.-துருபதன், மருமக்களுக்குப் பலவகைவரிசைகளை
அளித்தல்.
மாரன் கரும்பு வளரும்படி – மன்மதனுடைய(வில்லாகிய) கரும்பு
வளரும்படி,வார்த்த – (தான்) தாரைவார்த்துத் தத்தஞ்செய்து, நீரால் – நீரை
ஏற்றுக்கொள்ளுதலால், ஈரம் புலரா-ஈரம் நீங்காத, கரத்தோருக்கு – கையையுடைய
பாண்டவர்க்கு, யாகசேனன் – துருபதன், தேர்உம் – தேர்த் தொகுதியையும்,
பரிஉம் -குதிரைக்கூட்டத்தையும், களிறுஉம் – யானைத்திரளையும், திரள்சேனை –
திரண்டகாலாட்சேனையையும், யாஉம் – ஆகச் சதுரங்கசேனைகளையும், பார்உம் –
பூமியையும், தனம்உம்-செல்வத்தையும், பலஉம்-மற்றும் பலவற்றையும், உமது
என்று – உங்கட்கு உரிய தென்று (தனித்தனி) கூறி, ஈந்தான் – கொடுத்தான்;
(எ- று.)
கன்னிகையின் தந்தை மந்திரபூர்வமாகத் தானநீரைத் தன்கையால் மருமகன்
கையில் வார்த்துக் கன்னிகா தானஞ்செய்ய, அதனை அவன் ஏற்றல் இயல்பு. ஒருவன்
தன்மகளை ஒருவனுக்குக் கன்னிகாதானஞ்செய்தபின், அவர்கள் தம்மிற்கூடி
வாழ்தலால், ‘மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீர்’ என்றார்; மன்மதனது
வில்லின்தொழில், வாழ்க்கையின்பமாம்.
ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார், இகல்
பாண்டு மைந்தர்’ எனும் சொல் பரவலும்,
தாண்டு வெம் பரித் தேர்த் தார்த்தராட்டிரர்
மீண்டும் வந்து, அவர்மேல் வினை செய்யவே.-பாண்டவரின் செய்தியை யறிந்த துரியோதனாதியர் மீண்டுவந்து
அவரோடு பொருதல்.
இதுவும், அடுத்த கவியும்-குளகம்.
(இ-ள்.) ‘இகல் பாண்டு மைந்தர்-வலிமையையுடையபாண்டுவின் குமாரர்கள்,
ஆண்டு – அவ்விடத்தில் (பாஞ்சாலநகரத்தில்), மன்றல் பெற்று-விவாகத்தைப்
பெற்று,அங்குரித்தார்-(மீண்டும்) முளைத்துத் தோன்றினார்கள்,’ எனும்-என்கிற,
சொல்வார்த்தை, பரவலும்-(எங்கும்) பரவியவளவிலே,-தாண்டு வெம் பரி தேர்
தார்த்தராட்டிரர்-தாவிச்செல்லுகிறவேகமுள்ள குதிரைகள்பூண்ட தேரையுடைய
திருதராட்டிரன் பிள்ளைகள் (துரியோதனாதியர்), மீண்டும்உம் வந்து – திரும்பி
வந்து ‘அவர்மேல் வினைசெய்ய – அப்பாண்டவர்கள்மேல் போரைத் தொடங்கிச்
செய்ய,-(எ-று.)- ‘வென் கண்டது’ என அடுத்த கவியோடு முடியும்.
தார்த்தராஷ்ட்ரர் – வடசொல்; த்ருதராஷ்ட்ர னென்பதன்மேல் வந்த தந்தி
தாந்தநாமம்.
இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும்-பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகியகலிவிருத்தங்கள்
சென்ற சேனையும், திட்டத்துய்மன்னுடன்
நின்ற சேனையும், நேர் உறு பூசலில்,
கொன்ற சேனை ஒழி குரு சேனையை
வென்ற சேனை வெகுண்டு, வென் கண்டதே.-துருபதன்சேனை துரியோதனன்சேனையை வெல்லல்.
சென்ற சேனைஉம் – (துரியோதனாதியர் கொண்டு) சென்ற (கௌரவ)
சேனையும், திட்டத்துய்மன்னுடன் நின்ற சேனைஉம்-(துருபதகுமாரனான)
திருஷ்டத்யும்நனுடனே நின்ற(பாஞ்சால) சேனையும், நேர்உறு-(தம்மில்)
எதிர்த்துச்செய்த, பூசலில் – பெரும்போரில், கொன்ற சேனை ஒழி குரு சேனையை
-கௌரவசேனையில் கொல்லப்பட்ட பகுதியொழிய எஞ்சிநின்ற பகுதியை, வென்ற
சேனை வெகுண்டு வென் கண்டது-வெற்றி கொண்ட பாஞ்சால சேனை
கோபங்கொண்டு முதுகு கொடுக்கச்செய்தது; ( எ- று.)
திட்டத்துய்மன் சேனைத்தலைவனாய்ப் போர்நடத்தியதனால்,
‘திட்டத்துய்மன்னுடன் நின்ற சேனை’ எனப்பட்டது. திட்டத்துய்மன்னுடன்,-
விரித்தல், ‘கண்டவே’ என்றும் பாடம்.
சாலும் வஞ்சச் சகுனியொடு எண்ணிய
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும்,
வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும்,
ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே.-துரியோதனாதியர்தொகுதிக்குப் பாம்பின்வடிவோடு
ஒப்பு.
சாலும் வஞ்சம்-மிக்க வஞ்சனையையுடைய, சகுனியொடு-சகுனியுடன்,
எண்ணிய-(சேர்த்து) எண்ணப்படுகிற, நாலுமைந்தர்உம்-நான்கு வீரர்களும் (சகுனி
கர்ணன் துரியோதனன் துச்சாதனன் என்ற நால்வரும்), நஞ்சு எயிறு ஆகஉம்-
விஷப்பற்களாகவும், வருக்கங்கள்-(துரியோதனனது) மற்றைத்தம்பியர்வரிசை,
மெய்உம்வால்உம் ஆகஉம்-உடம்பும் வாலுமாகவும், ஆலும்வெம்பகை-
ஆரவாரிக்கின்றகொடிய பகைவர்தொகுதி, ஆடு அரவு ஏ ஆனது-படமெடுத்து
ஆடுகின்றநாகப்பாம்பையே போன்றது;
உருவகவணி, நாகம் பிறரைவருத்துதற்குக் காளி காளாத்திரி யமன்
யமதூதிஎன்ற நான்கு விஷப்பற்களே கருவியாதல் போல, சகுனி முதலிய
துஷ்டசதுஷ்டர்களே இத்தொகுதிக்குத்தலைவராய் நிற்றலால், ‘நாலு மைந்தரு
நச்செயிறு’ எனப்பட்டது. வருக்கம்- அணிவகுப்பு என்றாருமுளர். ஆனதே, ஏ-
தேற்றம். ‘வரூதினியாகவும்,’ வெம்படை என்றும் பாடம்.
அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம்
சிந்த, மேல் விடு சீற்றமும் தோற்றமும்,
முந்த, வார் சிலைக் கைம் முகில் வாகனன்
மைந்தன் வாளி மழைகளின் மாய்ந்தவே.-அப்பகைத்தொகுதியை அருச்சுனன் சிதறடித்தல்
அந்த நாகம் -(கீழ்க்கூறியபகைத்தொகுதியாகிய) அப்பாம்பு, அழல்
உமிழ் கண் விடம் சிந்த-நெருப்பைக்கக்குகிற கண்கள் விஷத்தைச்சொரிய, மேல்
விடு- எதிரிகளின்மேல்வெளியிட்ட, சீற்றம்உம்-கோபமும், தோற்றம்உம்-
(அதன்பயங்கரமான) தோற்றப்பொலிவும், (ஆகிய இரண்டும்), வார் சிலை கை
முகில்வாகனன் மைந்தன் வாளி மழைகளின் முந்த மாய்ந்த – நீண்ட வில்லைக்
கையிலேந்திய மேகவாகனனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன் (முன்நின்று
விரைவாகச் சொரிந்த) அம்புமழைகளினால் உடனே அழிந்தன; ( எ- று.)
இடியோடு மேகம் சொரியும் மழையினால் நாகம் உக்கிரம் அழிந்து
ஒடுங்குதல்போல, அருச்சுனன் சொரிந்த அம்புத்தொகுதியால் அப்பகைத்திரள்
ஆற்றலொடுங்கி உறுதிநிலை கெட்ட தென்க; உருவகவணி. திருஷ்டி
விஷமென்னும்நாகசாதி கண்விழித்து விஷத்தை வெளிப்படுத்தி
அவ்விஷப்பார்வையாற்பிறரையழிக்கும் தன்மையை தாதலால், ‘நாக மழலுமிழ்
கண்விடஞ் சிந்த மேல்விடுசீற்றம்’ என்றார். தோற்றம் வலிமையுமாம். நாகம்
என்றவடசொல்-நகத்தில்வாழ்வதென்று பொருள்படும்; நகம் – மரமும், மலையும்,
‘மேலிடு’ என்றும் பாடம்.
சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன்
குமரனால் என, கோ நகுலன்தனால்,
அமரில் யானை அணி முகத்தோடு மெய்
தமர் பட, புறம்தந்தனன், கன்னனே– நகுலன் கர்ணனைப் புறங்கொடுத்தோடச்செய்தல்.
குமரனால் – முருகக்கடவுளால், சமரம் வேழம் முக(ம்) அசுரன் –
போர்வல்லயானைமுகத்தையுடைய தாரகாசுரன், சாய்ந்தனன் என-அழிந்தாற்போல,
கோநகுலன்தனால் – தலைமையையுடைய நகுலனால், கன்னன் – கர்ணன், அமரில்
-போரிலே, யானை அணி முகத்தோடு மெய் கமர் பட – (தான் முற்செலுத்திய)
யானையின் அழகிய முகமும் தன்உடம்பும் பிளப்படைய, புறந்தந்தனன்-
முதுகுகொடுத்தான்; (எ-று.)
அசுரேசன்மகளாகிய மாயை யென்னும் பெயர்பெற்று சுரசையென்பவள்
காசியபமகாமுனிவரைக்கூடிப்பெற்ற புத்திரர்களாகிய சூரபதுமன் சிங்கமுகன்
தாரகன்என்ற மூவரும் பற்பலவகையாக உலகத்தை வருத்தினவளவில்,
அத்துன்பம்பொறுக்கமாட்டாத தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபிரான்
குமாரக்கடவுளைஉண்டாக்கி யனுப்ப, அக்கடவுள் தனக்கு உரிய கணங்களுடனே
புறப்பட்டுப்போருக்குச்செல்லும் வழியில், யானைமுகமுள்ளவனான தாரகாசுரன்
கிரௌஞ்சகிரியில் நின்றுமாயையாற் கடும்போர்செய்ய, முருகமூர்த்தி,
அவ்வசுரனது துதிக்கையையும் தந்தங்களையும் துணித்து முடிவில்
அவ்வசுரனையும்அழித்தனன் என்பது, இங்குக் குறித்த வரலாறு;காசியபமுனிவனும்
அவனுக்குமனைவியான மாயையும் ஆண்யானை பெண்யானைவடிவங் கொண்ட
காலத்தில் அவர்களுக்குப்பிள்ளையாய் யானைமுகத்தோடுபிறந்தவனாதலால்,
தாரகன் ‘வேழமுகாசுரன்’ எனப்பட்டான். தமர்பட, சமர்படஎன்றும் பாடம்.
முன்னிடச் சமர் மோதும் சகுனியை,
மின்னிடைப் புயங்கம் வெருக் கொண்டென,
தன் இடக் கைத் தனுவொடும் தேரொடும்
பின்னிடப் பொருதான், அவன் பின்னவன்–சகதேவன் சகுனியைப் புறங்கொடுத்தோடச்
செய்தல்.
அவன் பின்னவன் – (கீழ்க்கூறிய) நகுலனது தம்பியான சகதேவன்,-
முன் இட சமர் மோதும் சகுனியை – முற்படப்போர்செய்த சகுனியை, மின் இடை
புயங்கம் வெரு கொண்டுஎன- மின்னலினால் (இடியினால்) பாம்பு
அச்சங்கொண்டாற்போல, தன் இடக்கை தனுவொடுஉம் தேரொடுஉம் பின்னிட –
தனது இடக்கையிலேந்தியவில்லோடும் தேரோடும் புறங்கொடுக்கும்படி,
பொருதான் -போர்செய்தான்; ( எ- று.)
மின்னிடை, இடை – மூன்றனுருபின்பொருளில் வந்தது; உருபுமயக்கம்
தண் மதிக் குடைத் தம்முனும், தம்பியும்,
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும்,
கண் உறக் களம் காணும் முன், தீயினால்
வெண்ணெய் ஒத்து உடைந்தார், விறல் வீமனால்.-துரியோதனாதியர் நூற்றுவரையும் வீமன் வெல்லல்.
தண் – குளிர்ந்த, மதி – சந்திரமண்டலம்போன்ற, குடை –
ஒற்றைவெண்கொற்றக்குடையையுடைய, தம்முன்உம் – தமையனான துரியோதனனும்,
தம்பிஉம் – (அவனுக்கு) அடுத்த தம்பியாகிய துச்சாதனனும், எண்ணும் மற்றை
இளைஞர்கள் யாவர்உம் – மற்றும்(வரிசையாக) எண்ணப்படுகிற
தொண்ணுற்றெட்டுப்பேரும்,-கண்உற களம் காணும் முன்-கண்களினால் நன்றாகப்
போர்க்களத்தை (எதிரிற்) காண்பதற்குமுன்னே, விறல் வீமனால் –
வலிமையையுடையவீமசேனனால், தீயினால்வெண்ணெய் ஒத்துஉடைந்தார்-
நெருப்பினால் வெண்ணெய்உடையுந்தன்மைபோல உடைந்தோடினார்கள்; (எ-று.)
நெருப்பு அடுத்தவுடனே வெண்ணெய் உடைந்து நெகிழ்ந்து
உருகியோடுதல்போல, வீமன் அருகில்வந்தவுடனே துரியோதனாதியர் உறுதிகெட்டு
நெகிழ்ந்துஓடின ரென்பதாம்; உவமையணி. அத்தன்மையையே,
கண்ணுறக்களங்காணுமுன் உடைந்தாரென்று அதிசயோக்திதோன்றக்
கூறினார்.
விரோசனக் கதிர் மைந்தனும், வேந்தனும்,
சரோசனத் திறல் தம்பியும், மாமனும்,
புரோசனப் பெயர்ப் புன்மதிதன்னை நொந்து,
அரோசனத்துடன் அத்தினம் நண்ணினார்.-இங்ஙனந் தோற்ற பகைவரனைவரும் தம்ஊருக்கு
மீளுதல்.
விரோசனன் கதிர் மைந்தன்உம் – விரோசனனென்று
ஒருபேரையுடைய சூரியனது மகனான கர்ணனும், வேந்தன்உம்-இராசராசனான
துரியோதனனும், சரோசனன் திறல் தம்பிஉம் – கோபத்தோடுகூடிய
வலிமையையுடைய தம்பியான துச்சாதனனும், மாமன்உம் – (துரியோதனாதியர்க்கு)
மாமனான சகுனியும்,-புரோசனன் பெயர் புன்மதி தன்னை நொந்து –
புரோசனனென்னும்பெயருள்ள துர்ப்புத்தியையுடைய மந்திரியை வெறுத்துக்
கொண்டே,அரோசனத்துடன் – பிரகாசமில்லாமையோடு, அத்தினம் நண்ணினார்-
அத்தினாபுரியைஅடைந்தார்கள்; (எ-று.)- ‘அந்நகர்கண்ணினார்’ என்றும் பாடம்.
பாண்டவர்களை அரக்குமாளிகையில் எரிக்கும்படிஏவியனுப்பப்பட்ட
புரோசனனென்ற துர்மந்திரி அங்ஙனஞ்செய்துமுடிக்காமல் அஜாக்கிரதைப்பட்டு
இறந்துபோய்விட்டதைப்பற்றி இப்பொழுது துரியோதனாதியர்கள் கழிவிரக்கத்தோடு
வெறுப்பாராயினர். மனவருத்தத்தாலும் உடல் புண்பட்டதனாலும்
ஒளிமழுங்கச்சென்றனரென்க. துஷ்டசதுஷ்டர் நகர்கண்ணியதையே தலைமைபற்றி
இங்குக்கூறின ராயினும், மற்றைத் தம்பியர் நகர்நண்ணியதையும் இங்குத் தம்பி
என்றதில் உபலக்ஷணத்தால் அடக்கிக்கொள்க, விரோசனன் + கதிர்=
விரோசனக்கதிர்; புரோசனன் + பெயர் = புரோசனப் பெயர். விரோசநனென்ற
வடமொழிப்பெயர்-விசேஷமாய் விளங்குபவ னென்று அவயவப்பொருள்படும்.
கதிர் – சினையாகுபெயராய், கதிரோனை யுணர்த்தும். ரோஷணம்-கோபித்தல்;
அதனோடு கூடுதல்-ஸரோஷணம்; அது தமிழில் சரோசனம்எனத் திரிந்தது.
ரோசநம்-பிரகாசித்தல்: அதன்எதிர்மறை – அரோசனம். அரோசனத்துடன்
என்பதற்கு – மகிழ்ச்சியின்மையோடு எனினுமாம்.
முந்து போரில் முதுகிடும் வேந்தரால்,
விந்தைதன்னையும் மேதக வேட்டபின்,
அந்த மா நகர் ஐவரும், மாமனும்,
வந்த கண்ணனும், அன்புடன் வைகினார்.-பாண்டவர் பாஞ்சாலநகரிற் சிறப்புட னிருத்தல்.
முந்து போரில் – எதிர்த்துச்செய்த யுத்தத்திலே, முதுகு இடும்-
புறங்கொடுத்த, வேந்தரால் – (துரியோதனன் முதலிய) அரசர்களால்,
(பாண்டவர்கள்),விந்தைதன்னைஉம்-ஜயலஷ்மியையும், மேதக வேட்டபின்-
மேன்மைபொருந்தமணஞ்செய்தபின்பு, ஐவர்உம் -அந்தப்பஞ்சபாண்டவர்களும்,
மாமன்உம் -அவர்கள்மாமனான துருபதனும், வந்த கண்ணன்உம் – (அன்போடு
பாண்டவர்களிடம்) எழுந்தருளிய கண்ணபிரானும், அந்த மாநகர்-
அந்தப்பெரியபாஞ்சாலநகரில், அன்புடன் வைகினார் – (ஒருவர்க்கொருவர்)
அன்போடு பொருந்தி யிருந்தார்கள்; (எ- று.)
துருபதன் கொடுக்கத் திரௌபதியைப் பெற்று மணஞ்செய்தாற்போலத்
துரியோதனாதியர் கொடுக்கச் சயலஷ்மியைப் பெற்று மணஞ்செய்தன ரென்பது
முன்னிரண்டடிகளின் கருத்து ‘வன்புடன்’ என்றும் பாடம்,
தும்பை சூடிய வேல் துரியோதனன்
வெம்பு போரில் முதுகிட்டு மீண்டபின்,
தம்பி கூறு தருமனுக்கு ஈயுமாறு,
அம்பிகேயன் அமைச்சரொடு எண்ணினான்.-பின்பு திருதராட்டிரன் தருமனுக்கு அரசளிக்கக்
கருதுதல்.
தும்பை – தும்பைப்பூமாலையை, சூடிய – தரித்த, வேல் –
வேலாயுதத்தையுடைய, துரியோதனன்-, வெம்பு போரில்-கொடிய போரிலே,
முதுகுஇட்டு – (பாண்டவர்க்குப்) புறங்கொடுத்து, மீண்டபின் – திரும்பிவந்தபின்பு,
-அம்பிகேயன்-அம்பிகையின்மகனான திருதராட்டிரன், தம்பிகூறு தருமனுக்கு
ஈயும்ஆறு- (தன்) தம்பியாகிய பாண்டுவினது (இராச்சிய) பாகத்தை
(அவன்மகனான)தருமபுத்திரனுக்குக் கொடுக்கும்படி, அமைச்சரொடு எண்ணினான்-
(தன்)மந்திரிகளுடனே ஆலோசித்தான்;
தும்பைப்பூமாலை, போர்செய்வார்க்கு உரிய அடையாளப்பூ மாலையாம்.
தம்பிகூறு – பாதிராச்சியம்: இங்ஙனமே பாலபாரதத்தும் வியாசபாரத்தும் உள்ளது.
அம்பிகேயன் – வடமொழித் தத்திதாந்தநாமம்.
தாதினால் பொலி தார் வரை மார்பரை,
தூதினால், தங்கள் தொல் பதி சேர்த்தினான்-
‘காதினால் பயன் இன்று’ என, கண்கள்போல்
கோதினால் தெரியா மனக் கோளினான்.-திருதராட்டிரன் பாண்டவர்களை அத்தினாபுரிக்கு
வரவழைத்தல்.
கண்கள் போல் – (தன்) கண்கள் (இயல்பில் எவற்றையும்
உணராமை)போலவே, கோதினால் தெரியா – குற்றமுடைமையால் (நன்மை
தீமைகளைப்)பகுத்தறியாத, மனம் கோளினான் – மனத்தின்தன்மையை
யுடையவனானதிருதராட்டிரன்,-தாதினால் பொலி தார் வரை மார்பரை –
பூந்தாதினாற்பொலிகின்றமாலையை யணிந்த மலைபோன்ற மார்பையுடைய
பாண்டவர்களை, காதினால் பயன்இன்று என – கொலைசெய்ய முயலுதலாற்
பயனில்லையென்று (எந்தஉபாயத்தினாலும்வெல்லத்தக்கவரல்லரென்று) நிச்சயித்து,
(தருமபுத்திரனை அவனுக்கு உரியஅர்த்தராச்சியத்திற் பட்டாபிஷேகஞ்செய்யத்
தீர்மானித்து), தூதினால் தங்கள் தொல்பதி சேர்த்தினான் – தூதனைக்கொண்டு
தங்களுடைய பழமையான அத்தினாபுரிக்குவருவித்தான்; (எ-று.)
விதுரனையனுப்பி வரவழைத்ததாகப் பாரதங்களி லுள்ளது.
வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க, அந்
நாடு முற்றும் நரபதி நல்கவே,
ஆடு பொற்கொடி அந் நகர் வைகினார்-
நீடு வில்-திறலோர் நெடுங் காலமே.–பாண்டவர் அரசுபெறுமாறு அத்தினாபுரியில்
நெடுநாள் வாழ்தல்.
நர பதி – திருதராட்டிமகாராசன், வீடுமற்குஉம் விதுரற்குஉம்
ஏற்க -வீடுமனுக்கும் விதுரனுக்கும் இயைய, அ நாடு முற்றுஉம்நல்க –
(பாண்டவர்க்குஉரிய)அந்நாட்டின்பகுதிமுழுவதையும் (அவர்கட்குக்)
கொடுக்குமாறு,-நீடு வில் திறலோர் -நீண்ட வில்லின் வலிமையையுடைய
அவர்கள், ஆடு பொன் கொடி அ நகர்நெடுங்காலம் வைகினார்-அசைகிற
அழகிய கொடிகளையுடைய அந்தஅத்தினாபுரியில் நெடுங்காலம் இருந்தார்கள்;
(எ – று.)
வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க – அவ்விருவர்மனத்திற்கும் திருப்தியாக
என்றபடி;இதனால், திருதராட்டிரன் அவர்களுடைய மனக்கருத்திற்கு ஏற்பப்
பாண்டவர்க்குஅரசு தரப்போகிறானே யன்றித் தன்மனமொப்பித் தருபவனல்ல
னென்பதுதொனிக்கும். இனி, இப்பாடலுக்கு – திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு
மீண்டும்இளவரசுகொடுத்தானென்று முதலிரண்டு அடிகள் கூறும் என
உரைவகுப்பாருமுளர்.ஏகாரம் இரண்டும்-ஈற்றசை.
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply