பாடிய இந்தப்பாரதம், வியாசபாரதத்தை முதனூலாக் கொண்டதென்று
நூலாசிரியரே கூறியிருந்த போதிலும், வடமொழியில் அகஸ்தியப்பட்ட
ரென்பவரியற்றியுள்ள பாலபாரத மென்னும் காவியத்தின் பொருளமைதியோடு
பலவிடத்தும் ஒத்திருக்கின்றது: ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இந்நூலுக்கும்
அந்நூலுக்கும் இடையிடையே பலவேறுபாடுகளும் உள்ளனவாயினும் சிற்சில
விடங்களில் இந்நூல் அந்நூலின் மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்படி
யுள்ளது’
நூலாசிரியர் வரலாறு
தமிழில் மகாபாரதமென்னும் பெருங்காப்பியம்பாடிய மகாகவி,
வில்லிபுத்தூரா ரென்பவர்; இவர் பிராமணசாதியிற் பிறந்தவர். இவருடைய மதம்
திருமண்காப்புத்தரிக்கும் வைஷ்ணவ மென்பது, இப்பாரதத்தின் முதலிலும்
இந்நூற்சருக்கங்களின் தொடக்கம் பலவற்றிலும் இவர் ஸ்ரீமகாவிஷ்ணுவின்
விஷயமாகவே பலவாறு கடவுள்வாழ்த்துக் கூறியுள்ளதனாலும், “எங்கள்மாதவன்”
என்று நூலைத் தொடங்கியிருப்பதனாலும் வில்லிபுத்தூராழ்வாரெனத்
திருநாமமுடைமையாலும், இவர் ஒன்பதாம் போர்ச்சருக்கத்துக் காப்புச்செய்யுளில்
“ஓராறுபேதசமயங்களுக்கு முருவாகிநின்ற வொருவ, னீராறு நாம முரைசெய்து
மண்கொடிடுவார்கள் காணுமிமையோர்” எனத்துவாதசோர்த்துவ புண்டரத்தைச்
சிறப்பித்துக்கூறியதனாலும், பதினைந்தாம் போர்ச்சருக்கத்துக்காப்பில்
“கொத்தவிழ்த்த சோலைமன்னு குருகையாதி நெஞ்சிலே, வைத்த முத்திநாதன்”
என நம்மாழ்வாரையும், பத்தாம் போர்ச்சருக்கத்துக் காப்பில் ‘கலிய னெங்கள்
மங்கையாதி கண்டுகொண்ட நாமமே” எனத் திருமங்கையாழ்வாரையும்
கூறியுள்ளதனாலும் தெளிவாகத் தெரியலாம்.
நடுநாடென்று சொல்லப்படுகிற திருமுனைப்பாடிநாட்டில் சனியூரிலே
பிராமணசாதியிலே வைஷ்ணவமதத்தில் வீரராகவாசாரிய ரென்பவருக்குத்
திருக்குமாரராய்த் திருவவதரித்து * வில்லிபுத்தூராழ்வாரென்று இயற்பெயர்
பூண்ட இவர் பாரதம்பாடிய காரணம்:- இவர் இளமையிலே நல்லாசிரியரை
யடுத்துக்கல்வி கற்று, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் மிகவல்லவராய்
வடமொழியிலும் மிக்கதேர்ச்சிபெற்று ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும்
நால்வகைக் கவிகளையும் மிக எளிதில் அமிழ்தினும் இனியனவாகப்
பாடவல்லவராய், சேரசோழபாண்டியரென்னும் தமிழ் நாட்டு மூவேந்தர்களாலும்
மிக்க சிறப்புடன் விரும்பியழைக்கப்பட்டு ஆங்காங்குச் சென்று தமது
கல்வித்திறத்தைப் பலவகையாலுங் காட்டி அவர்களைக் களிப்பித்து, அவர்கள்
அன்போடு அபிமானித்து மிகுதியாகவழங்கிய சிறந்த பலபெரும்பரிசுகளைப்
பெற்று, பற்பலகவிகள் பாடித் திருமாலை இரவும் பகலும் எப்பொழுதுந்
துதித்துக்கொண்டு, தமிழ்நாடு முழுவதிலும் தமது கல்விப் பெரும்புகழைப்
பரவச்செய்துவந்தார்.
அங்ஙனம் வருகையில், முற்கூறிய திருமுனைப்பாடிநாட்டிலே வக்கபாகை
யென்னும் இராசதானியில் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய கொங்கர்குலத்துத்
தோன்றிய வரபதியாட்கொண்டா னென்கிற அரசன், இவ்வில்லிபுத்தூராரது
கல்வி கேள்வித்
திறமைகளைக் கேள்வியுற்று இவரை வரவழைத்து அநேக சன்மானங்கள்செய்து
தனது ஆஸ்தாநபண்டிதராக அமைத்துவைத்து, ஒருநாள் இவரை நோக்கி
‘வடமொழியில் ஸ்ரீவேதவியாசமகாமுனிவரால் விரித்துரைக்கப்பட்ட
மகாபாரதசரித்திரத்தைச் செந்தமிழில் விருத்தப் பாடல்களினாற் சுருக்கமுற
ஒருபெருங்காப்பியமாகப் பாடித் தந்தருளல் வேண்டும்’ என்று பிரார்த்திக்க,
க்ருஷ்ணனுடைய சரித்திரம் ஆங்காங்கு வருவதுபற்றி அவ்வேண்டுகோளுக்கு
இசைந்து சொற்சுவை பொருட்சுவைகள் மிக்குவிளங்கும்படி நல்ல நடையிலே
இவ்வில்லிபுத்தூரார் நாலாயிரத்து முந்நூற்றுச் சொச்சம்பாடல்களாற் பாடினார்.
இவர், தம்காலத்திற் கல்விச்செருக்கு அடைந்திருந்த புலவர்கள் பலரையும்
தமது வித்தியாசாமர்த்தியத்தால் வென்று, அவ்வெற்றிக்கு அடையாளமாக,
தோற்றுப்போன புலவர்களின் காதுகளைத் தமதுகையிலே எப்பொழுதும்
ஆயுதமாகவைத்துக்கொண்டுள்ள துறட்டுக்கோலால் மாட்டியிழுத்து
அறுத்துவந்தன ரென்பது, “குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னீங்கில்லை
குறும்பியளவாக்காதைக் குடைந்து தோண்டி, யெட்டினமட் டறுப்பதற்கோ
வில்லியில்லை யிரண்டொன்றா முடிந்து தலையிறங்கப்போட்டு, வெட்டுதற்கோகவி
யொட்டக்கூத்த னில்லை விளையாட்டாக் கவிதைதனை விரைந்துபாடித்,
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு தேசமெங்கும் புலவரெனத்
திரியலாமே” என வழங்குந்தனிப்பாடலினால் அறியப்படும். இவர் காலத்து
அரசர்கள் இவரிடத்தில் மிகவும் அன்புவைத்திருந்ததனால், இவர் இங்ஙனஞ்
செய்ய இடங்கொடுத்து வந்தார்கள்.
இவருடைய காலம்:- பாயிரத்தில் “நான்காஞ்சங்கமென முச்சங்கத்
தண்டமிழ்நூல் கலங்காமல் தலைகண்டானே” என்று வரபதியாட்கொண்டா
னென்னும் அரசனைக் கூறியிருத்தலாலும், அவ்வரசனை இரட்டையர்களும்
பாடியிருத்தலாலும், அவ்விரட்டையராற் பாடப்பட்ட இராசநாராயணசம்புவராய
னென்பான் கி. பி. 1331 – 1383 வரை ஆட்சிபுரிந்தானென்று
சாசனவாராய்ச்சியாளர் கூறுவதாலும், இவர்காலம் பதினான்காம் நூற்றாண்டின்
இடைப்பகுதியாகுமென்றும், அருணகிரியார் காலமும் இதுவே யென்றுங் கூறுவர்.
இவ்வில்லிபுத்தூரார் சிவத்துவேஷம் பாராட்டுகிற வீரவைஷ்ணவரல்லர்;
அது – முதலில் விநாயகஸ்தோத்திரஞ் செய்திருத்தலாலும், அருச்சுனன்
தீர்த்தயாத்திரைச் சருக்கத்திலும், அருச்சுனன் தவநிலைச்சருக்கத்திலும்
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்திலும் சைவசம்பிரதாயத்துக்கு வழுவுறாதபடி
சிவபிரானைச் சிறப்பித்தும் இதரதேவர்களைத் தாழ்த்தியுங் கூறியதனாலும்
நன்கு புலனாகிறது. வைஷ்ணவராகிய இவர் சிவபிரானைத் சிறப்பிக்கு மிடத்துத்
தமது பரதேவதையாகிய திருமாலையும் தாழ்த்திக் கூறுவது – தமது காலத்திருந்த
அரசரை மகிழ்விக்கவேண்டித் தம்கொள்கையாகவன்றிப் பிறன்கோட்கூறலாகக்
கூறியதாகு மென்க. அன்றியும், வியாசர் புராணங்களில் ஒவ்வொரு தேவரை
ஒவ்வோரிடத்திற் சந்தர்ப்பத்துக்கேற்பச் சிறப்பித்துக் கூறியிருத்தல்போலவே,
இவரும் தமது நூலில் சூரியன் அக்கினி யமன் முதலிய மற்றைத்தேவர்களையும்
சமயம்வந்தவிடத்துப் பக்ஷபாதமில்லாமற் சிறப்பித்துக் கூறியிருக்கின்றார்.
தம்மையாதரித்த வக்கபாகைவரபதியாட்கொண்டானை ஆங்காங்கு உபமான
முகத்தாற் சிறப்பித்துக்கூறியுள்ளார். அங்ஙன் கூறுவதை இந்த ஆதி பருவத்தில்
காண்டவதகனசருக்கத்தில் 69 – ஆம் பாடலிலுங் காணலாம்.
கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய பெருந்தேவனாரென்பவர்
பாரதம்பாடியுள்ளார். அந்நூலுள் பழைய உரைகளிற் கிடைக்கின்ற
சிலபாடல்களன்றி, மற்றையவை காணப்படவில்லை. பிறகு ஒன்பதாம்நூற்றாண்டில்
மூன்றாம் நந்திவர்மன்காலத்திருந்தவராய்ப் பெருந்தேவனாரென்று
பெயர்வழங்கப்பெற்ற ஒருவர் மகாபாரதத்தைத் தமிழில் வசனமும் பாடலுமாக
விரவிவருகிற ‘சம்பு’ என்கிற நடையிலே பாடியிருக்கின்றனர்; பெரும்பாலும்
வெண்பாக்களால் அமைந்ததுபற்றி, அந்நூலுக்குப்பாரதவெண்பாவென்று பெயர்.
அதிற் சில பகுதிகளே இப்போது கிடைக்கின்றன. 13- ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் அரும்பாக்கத்து அருணிலை விசாகன் பாரதத்தை
இனியசெந்தமிழ்ப் படுத்தினான் என்று திருவாலங்காட்டுச்சாசனம் கூறும்;
இந்நூல் வழக்குவீழ்ந்தது போலும்.
இப்பாரதத்துக்கும் இதன்முதனூலாகிய வியாசபாரதத்துக்கும் இடையிடையே
கதையமைதிகள் சிற்சில வேறுபடுவது “முன்னோர் நூலின் முடி பொருங்கொத்துப்,
பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி, அழியாமரபினது வழிநூலாகும்” என்ற
வழிநூலிலக்கண விதிப்படி இவ்வாசிரியராற் பிறநூல் மேற்கோள்கொண்டு
அமைக்கப்பட்டதாதல்வேண்டுமென அறிக.
வில்லிபுத்தூரார் தமது பாரதத்திற் பாடியது, முதற்பத்துப் பருவமே;
மற்றை யெட்டுப்பருவங்கள் அவராற் பாடப்படவில்லை. அதற்குக் காரணம்:-
நூல் முழுவதையும் பாடினால், பாண்டவர்கள் கிருஷ்ணபகவான் என்கிற
மகாபுருஷர்களது மரணசரித்திரத்தைத் தம்வாயாற் சொல்லவேண்டுமே யென்று
கருதி, “கனை கடற்பா ரளித்து அவரு மந்நகரி லறநெறியே கருதிவாழ்ந்தார்”
என மங்களகரமாகச் சரித்திரத்தைப் பாடிமுடித்தனரெனக்கொள்வது
தகுதியுடையது. பாண்டவசரித்திரங் கூறுகிற பாரதசம்பு முதலிய சில
நூல்களிலும் பின்னிட்ட கதை காணப்படவில்லை. (கம்பர் இராமயணத்தில்
உத்தரகாண்டம்பாடாமல் விட்டதற்கும் இப்படிப்பட்ட காரணமே முக்கியமாகும்.)
இனி, இந்நூலின் பின்னைய ‘பருவங்களும் இவராற் பாடப்பட்டுப் பிற்காலத்திற்
கிடைத்தற்கு அரியவையாயின என்று கொள்வாரு முளர். “ கலியுகவியாதன்
சொல்லக் கணபதி யெழுதுபாடல், பொலிவுறு தமிழிலாறாயிரமென விருத்தம்
போற்றிச், சலிவற வில்லிபுத்தூரிறைவனாஞ்சார்வபௌம,
னொலிகெழுமறையோர்கோமா னுயர்ந்தவரு
வப்பச்சொன்னான்” என ஒருசெய்யுள் வில்லிபுத்தூரார்பாரதத்து ஏட்டுப்பிரதி
சிலவற்றில் வரந்தருவார் பாடிய சிறப்புப்பாயிரத்தினிறுதியிற் காணப்படுகின்றது:
இது, பழைய பாடலாக இருக்குமாயின், இதிற்கூறிய ஆறாயிரம் பாடல்களில்
பத்துப்பருவங்களாகவுள்ள நாலாயிரத்துமுந்நூற்றுச்சில்லறைபோக, மற்றவை
இவர் பாடிய எட்டுப்பருவங்களெனக் கொள்ளலாம்.
வில்லிபுத்தூரார் பாடியபாரதத்திலே சுருக்கமாகக் கதையைக் தொகுத்துக்
கூறும் முந்நூறு நானூறு பாடல்கள் தவிர மற்றை நாலாயிரஞ் செய்யுட்களை
யெடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை யென்பவர், புதிதாகத் தாம்
பதினோராயிரம் பாடல் பாடி இடையிடையிற் கோத்தும், இறுதியிற் சேர்த்தும்
பாரதம் பதினெட்டுப்பருவங்களையும் பூர்த்திசெய்தார்; அது ‘நல்லாப் பிள்ளை
பாரதம்’ என வழங்கும்: அந்நூலாசிரியர், இற்றைக்கு நூற்று நாற்பத்தைந்து
வருடங்கட்குமுன் இருந்தவர். இது தவிர, இற்றைக்கு, 190 வருடங்களின்முன்
இருந்த அஷ்டாவதானம் – அரங்கநாதகவிராயர் பாடியபாரதத்தின்
பிற்பகுதியும்ஒன்று உளது; அது, ஏறக்குறைய 2500 செய்யுட்களையுடையது.
இனி, மாவிந்தம் என்னும் பெயரால் தமிழில் பாரதக் கதையைச்சொல்லும் ஒரு
நூலுண்டு என்றும் கூறுப: மற்றும், பழையகாஞ்சிப்புராண ஆசிரியர் ஒரு
பாரதத்தை இயற்றியுள்ளாரென்று அப்புராணச் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கின்ற
தென்றும் அந்நூல் இப்போது கிடைக்கவில்லையென்றும் கூறுப.
இவர்மகாபாரதமொன்றுதவிர வேறுநூலெதுவும் பாடியிருப்பதாகத்
தெரியவில்லை.
இவர் தமது நூலிற் பெரும்பாலும் வடமொழிகளைத் தனி மொழியாகவும்
தொடர்மொழியாகவும் இன்னமொழியின் சம்பந்தமானதென்று எளிதில்
தெரியவொண்ணாதபடி திரித்தும் மொழிபெயர்த்தும் உபயோகித்திருக்கின்றனர்.
தமிழில் எந்தநூலாசிரியரும் வடமொழிகளை இவரளவு எடுத்துக்
கொள்ளவில்லை. வடசொற்களைத் தமிழ்க்காப்பியத்தில் நுழைக்கிற வழக்கம்
இவர் காலந்தொடங்கித்தான் அதிகமாயிருத்தல்வேண்டும். இவர் பாடல்களில்
– உவமை, உருவகம், எடுத்துக்காட்டுவமை, தற்குறிப்பேற்றம், வேற்றுப்
பொருள்வைப்பு, பிறதுமொழிதல், உயர்வுநவிற்சி முதலிய பொருளணிகள்
அமைந்திருப்பது மாத்திரமேயன்றி, மடக்கு [யமகம்], பிராசம் முதலிய
சொல்லணிகளும் ஆங்காங்கு அமைந்திருத்தலையும், இவரது செய்யுள்நடை
பலவிடத்தும் முடுகுடையதாதலையும் பலவகைச்சந்தங்கள் சந்தப்போலிகள்
வண்ணங்கள் பொருந்தியிருத்தலையும், யுத்தவருணனை எல்லா நூல்களினும்
இந்நூலிற் சிறந்திருத்தலையும் காணலாம்.
ஸ்ரீ வியாசரும் வில்லியும்
ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய வியாசர் அருளிய மஹாபாரதத்தைத் தமிழில் பாக்களாகத் தர எண்ணினார் வில்லிப்புத்தூரார்.
“குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை” என்று பின்னால் ஒரு புலவர் பாடும் அளவு புலமை இல்லாதவர்கள் பாடத் துணிந்தால் அவர்களின் காதைக் குடைந்து தோண்டி தண்டிக்கும் அளவு புலமை பெற்றவர் வில்லிப்புத்தூரார்.
வியாசர் பாடிய 18 பர்வங்களில் 10 பர்வங்களை மட்டுமே சுமார் 4350 பாக்களில் தன் காவியத்தில் பாடியுள்ளார். தர்மர் முடிசூட்டியதுடன் வில்லி பாரதம் முடிவடைகிறது.
700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் தந்துள்ளார்.
பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்
தாயொடு தந்தை, மக்கள் தாரம், என்று இவர் பால் வைத்த
நேயமும் அவன் தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்!
மாயை என்னும் ஒருத்தியிடம் மனம் என்னும் மகன் தோன்றினான். பரிசுத்தமான ஞானம் என்பவனை வெளிப்படாமல் ஆகி வைத்தான். தாய், தந்தை, மக்கள், மனைவி ஆகியோர் மீதான பாசமும் அந்த மனம் என்பவனின் எண்ணத்தாலே தான் நிகழ்ந்தது!
குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம்பொருளும் தானே
அயின்று, முக்குணங்களோடும், அறுவகைப் படைகளோடும்,
பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்குத்
துயின்ற போது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!
உடம்பில் பொருந்தியுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களும் ஊறு சுவை. ஒளி. வாசனை, ஓசை என்னும் ஐந்து புலன்களையும் தானே அனுபவித்து, சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடும் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு வகை சேனைகளோடு பழகி அரசாட்சி செய்யும் மனம் என்னும் பகைவன் தூங்கிய போது, (அவனால்) தோற்றமில்லாதவனாய் செய்யப்பட்ட அந்த நல்லறிவன் வெளிப்படுவான்.
அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்,
தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்
வந்து, அவன், தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர் ஆகி, வாழும்
பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்? நண்பு ஆர்?
அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர்களே அறிஞர் ஆவார். அந்தப் (பரம்பொருள் என்னும்) தந்தையால் வகுக்கப்பட்ட சஞ்சரிப்பதும் சஞ்சாரியாதனவும் ஆகிய எல்லாப் பொருள்களிலும் பசுவின் பாலில் உள்ளே உறைந்திருக்கும் நெய் போல, உயிர்க்கு உயிர் ஆகி, ஜீவாத்மாக்களின் உள்ளே பரமாத்மாவாக உறைந்து வாழும், (இந்த) சம்பந்தத்தை உணர்ந்து நேரே பார்க்கும் போது பகைவன் யார்? நண்பன் யார்? எவருமில்லை!
உம்பரும், முனிவர் தாமும், யாவரும், உணரா ஒன்றை
இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்,
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;
நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய் நடத்துகின்றான்!
தேவர்களும், முனிவர்களும், மற்றும் எல்லோரும் உணராத ஒன்றை, இந்த இடத்தில், இப்போது, உனக்கு நான் பொருந்தும் படி உணர்த்துகின்றேன். எல்லாப் பிராணிகளுக்கும் ஐம்பெரும் பூதங்களால் அமைந்தது உடல். அவற்றினுள்ளே ஞானியாய் இருந்து (ஒப்பற்ற கடவுளாய்) ஒருவன் தானே அனைத்துத் தொழில்களையும் செய்து நடத்துகின்றான்.
என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி
மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;
உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து மேல் நாள் –
நல் நிலா எறிக்கும் பூணாய்! – நரனும் நாரணனும் ஆனோம்
‘நல்ல சந்திரகாந்தியை ஒத்த ஒளியை வீசும் ஆபரணங்களை அணிந்துள்ள அர்ஜுனா! என்னை யார் என (உனக்கு உணர்த்துமாறு) நான் சொல்வதைக் கேள்! எல்லாப் பொருள்களிலும் பொருந்தி எல்லாப் பொருள்களுமாய் அழியாது நிலை பெற்ற பரம்பொருளும் நானே! வேதங்களுக்கு எல்லாம் முடிவான பொருளும் நானே! உன்னை என்றும் நான் பிறிந்தவன் அல்ல; முன்னொரு சமயம் நரனும் நாராயணனுமாக நீயும் நானும் அவதரித்தோம்!
பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;
இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;
நின்னிடை, மயங்கும் இந்த நேயமும் ஒழிக!” என்று,
தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.
பின்பு ஒரு அவதாரத்தில் நாமே இராமன், இலக்குவனாக அவதரித்தோம். இந்த நீண்ட அவதாரத்தில் நீ அர்ஜுனனாகவும் நான் கண்ணனாகவும் இங்கு இருக்கிறோம். உன்னிடமுள்ள திகைப்பையும் உறவினர், நண்பர் என்ற இந்த அபிமானத்தையும் நீக்குக’ என்று தன் உண்மையான விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டித் தத்துவத்தை அவம் மனம் தெளிவுறும்படி அருளினான்.
ஆஹா! என்ன அருமையான பாடல்கள்! எத்தனை எளிமையாக கீதை ஆறே பாடல்களில் எளிய தமிழில் பொருளாழத்துடனும் சொல் சிக்கனத்துடனும் சூத்திரப் பாங்குடனும் விளக்கப்பட்டுள்ளது.
இதைப் படிப்போர்கள் முழு வில்லி பாரதத்தையும் படிக்க உத்வேகம் பெறுவார்கள் என்பதில் ஐயமுண்டோ!
இந்த விளக்கத்தைப் படித்த பின்னர் மகாகவி பாரதியாரிடம் வருவோம்.
அவசர யுகம் அல்லவா! இரண்டே அடிகளில் அவன் தெள்ளத் தெளிவாக கீதையில் கண்ணன் போதித்ததை இப்படிச் சுருக்கமாகக் கூறி விட்டான்:
பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்;
பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்
மாம் அனுஸமர (என்னை நினை)
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன! (கர்மம் புரிவதற்கே உனக்கு அதிகாரம் உள்ளது; அதில் வரும் பயனில் எண்ணம் வையாதே – ஒரு பொழுதும்!)
———-
ஆதிபருவம்
பதிப்புரை
பாரத நாடெங்கும் மிகப் பழைய காலந்தொட்டுப் பரவி நிலைபெற்று வந்துள்ள கதைகள் பாரதமும் இராமாயணமும் ஆம். இந்த இரு பெரு நூல்களும் ‘இதிகாசம்’ என்று சிறப்பித்துக் கூறப்படுவன. வடமொழியில் தோன்றிய இந்தப் பெருநூல்களைப் பாரத நாட்டு மொழிகள் பலவற்றில், கவிதை வடிவிலும் பிறவாறாகவும், மொழிபெயர்த்தும், சுருக்கியும், அங்கங்கே வழங்கிய புதிய கதைகளை உடன் பிணைத்தும், நாட்டு நடப்பு, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்பச் சிற்சில மாறுதல்கள் செய்தும், புலவர் பெருமக்கள் பற்பல காலங்களில் ஆக்கிவந்துள்ளார்கள். இந் நூல்களில் அடங்கிய பல நிகழ்ச்சிகளையும் கிளைக்கதைப் பகுதிகள் சிலவற்றையும் தனித்தனி நூலாகவும் சிலர் செய்துவந்துள்ளனர்.
இவ்விரண்டிலும் பாரதக்கதைகள் நம் நாட்டில் மிகுதியாகப் போற்றப் பெற்று வந்துள்ளன. இராம சரிதத்தால் இராமாயணம் ஏற்றம் பெற்றது போலவே, கண்ணன் சரிதத்தோடு ஒன்றிப் பாரதம் ஏற்றம் பெற்றுள்ளது. ‘மகாபாரதத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது‘ என்று பெரியார்கள் கூறியுள்ளனர். ஆழ்வார்கள் முதலியோரும் கண்ணன் தூது நடந்த நிகழ்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர். பகவத் கீதையின் தோற்றத்திற்கு நிலைக்களமாய் அமைந்தது பாரதப் போர் என்பர். ‘மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமாநுசன்‘ என்பது இராமாநுச நூற்றந்தாதி (68). பாரதத்தை நான்கு வேதங்களோடு ஒக்க வைத்து ஐந்தாம் வேதம் என்று மக்கள் போற்றிவந்துள்ளார்கள். ‘பாரத: பஞ்சமோ வேத:’ என்பது ஒரு பழமொழி.
பாரதக் கதைகள் பொதுமக்களைப் பெரிதும் பிணித்து வந்துள்ளன. ஏதேனும் விரிவான கதையையோ வேறு நிகழ்ச்சியையோ மக்கள் குறிப்பிடும்பொழுது ‘இது என்ன! பாரதமாயிருக்கிறதே! என்பது உலக வழக்கு. சிவப்பிரகாசரும் தம் சகோதரரது திருமணக்காலத்தில் வாழ்த்திய வாழ்த்து ஒன்றில், ‘சிவன் ஒருவர் தூது என்ன; அத் தூது சென்ற கதை செப்பில் ஒரு பாரதம் என’ என்று பாரதம் என்பதைச் சிலேடைப் பொருள்பட அமைத்துள்ளமையும் நோக்கத் தகும். பட்டி தொட்டிகளில் வாழும் எழுத்தறிவில்லாத மாந்தரும் இக்கதையின் பல பகுதிகளை அறிவர்; இதில் வரும் முக்கியமான சில கதாபாத்திரங்களின் செயல்களையும் அறிவர். இப் பாத்திரங்களோடு தம் காலத்தவரை ஒப்பிட்டுப் பேசுதலும் உண்டு. ‘கொடைக்குக் கர்ணன்’ என்பதும், நெறி தவறா நேர்மையாளனைத் ‘தருமன்’ என்று புகழ்தலும், வலிமையிற் சிறந்த புகழுடையாரை ‘வீமவிசயர் போல’ என்று ஒப்பிடுதலும் எங்கும் உண்டு. கலகம் மூட்டித் திரியும் ஒருவனைச் ‘சகுனி மாமன்’ என்று சொல்வது பெரு வழக்கு. தருமன், விசயன், சகாதேவன், பாஞ்சாலி, திரௌபதி, முதலிய பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்குகின்றனர்.
—
இவ்வாறு மக்களிடையே இக் கதை பெரிதும் பரவவே, வியாசர் வழங்கிய பாரதமும் எங்கும் பயிலப்பெறுவதாயிற்று. இதனைப் பிரசங்கம் புரிதலையே தொழிலாக உடைய பெருமக்களும் அங்கங்கே பெருகினர். அதனால் இவவிதிகாசமும் நாளடைவில் வளர்ச்சி பெறுவதாயிற்று. இந்தப் பேரிதிகாசத்தில் இடைச் செருகல்கள் மிகப் பலவாக ஏற்பட்டுள்ளன என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவ்வக்காலங்களில் அங்கங்கே வழங்கிய பல கதைகளும் நிகழ்ச்சிகளும் வியாசர் வாக்குடன் பின்வந்தவர்களால் பாடிச் சேர்க்கப்பெற்றன. மதவாதிகளாலும் தத்துவ நூற் புலவர்களாலும் பல செய்திகள் இதனுள் புகுத்தப்பெற்றிருத்தல் இயல்பே. சிற்சில பிரதேசங்களில் மட்டும் வழங்கிய சில கதைகளும் அந்தந்தப் பிரதேச பண்டிதர்களால் பிணைக்கப்பெற்றிருக்கலாம். இதன் பகுதிகளைக் கோவில்களில் ஓதிப் பொருள் சொல்லிவந்தவர்களாலும் இதனைப் பிரசங்கித்து வந்தவர்களாலும் காலப்போக்கில் பல மாறுதல்கள் இந் நூலில் ஏற்பட்டன. இதனால் வியாச பாரதத்தில் இடைச்செருகல்கள் பல ஏற்பட்டுள்ளதோடு, நூலும் மிகமிக விரிவடைவதாயிற்று. பிரதேசத்துக்குப் பிரதேசம் நூற்பகுதிகள் வேறுபட்டுக் காண்பதோடு, பாடல்கள் பற்பல மாறுபாடுகளையும் பெற்றுள்ளன. இவ்வகை மாறுபாடுகள் எல்லாம் இந் நூல் மக்களிடையே பெரிதும் வழங்கிவந்தமையையே புலப்படுத்துகின்றன.
நம் நாட்டில் மட்டுமின்றி, சுமாத்திரா, ஜாவா, முதலிய தூரக் கிழக்குத் தேசங்களிலும் பாரதக்கதைகள் பரவியுள்ளன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சம்பா என்னும் இடத்தில் வியாச பகவானுக்குக் கோவில் கட்டியிருந்தமை சாசனங்களால் தெரியவருகிறது. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காம்போஜ நாட்டிலே பாரதம், இராமாயணம், புராணங்கள் முதலிய நூல்களைக் கோவில்களில் படிப்பதற்கு அந்த நாட்டு அரசன் ஏற்பாடு செய்திருந்தமையும் சாசனங்களால் வெளியாகிறது. எனவே, இந்திய நாட்டில் பிறந்த இக் கதை மக்களின் வாணிகம், குடியேற்றம் ஆகியவற்றால் கீழை நாடுகளில் மிக முற்பட்ட காலத்திலேயே பரவியுள்ளமை புலனாம். இப்பொழுது, இப் பெருங் கதை உலகில் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பெற்றுப் போற்றும் பெருமை எய்தியுள்ளது.
—–
பாரதம் பாடிய பெருந்தேவனார் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, என்னும் ஐந்து தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியுள்ளார். இவர் பாரதத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றினர் என்று தெரிகிறது. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியராலும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் முதலியோராலும், ‘இது பெருந்தேவனார் பாட்டு’, ‘இது பாரதப் பாட்டு‘ என எடுத்தாளப்பெறுகின்ற பாடல்கள் இந் நூலைச் சார்ந்தனவாதல் கூடும். இந் நூல் முற்றும் நமக்குக் கிடைக்கப் பெறாமையினாலே இதன் கதைப் போக்கு , நடை, முதலிய பிற இயல்புகளை நாம் தெரிந்து கொள்ளக் கூடவில்லை.
பழந் தமிழ் நூலாகிய புறநானூற்றிலும் பாரதப் போரில் தமிழரசர்கள் உதவி செய்தது பற்றி ஒருகுறிப்பு உள்ளது. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்பான் பாரதப் போரில் சோறு வழங்கினான் என்று முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர் பாடியுள்ளார்.
புறம் 366-ஆம் பாடல் தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது. அப்பாடலில் கோதமனார் தருமபுத்திரனை, ‘அறவோன் மகனே! மறவோர் செம்மால்!’ என்று விளிக்கின்றார். ‘அறவோன் மகன்’ என்பதனால் ஐவருள் ஒருவனாகிய தருமபுத்திரனைக் குறித்ததாகுமோ என்னும் ஐயுறவு எழுதல் இயல்பே. டாக்டர் உ.வே. சாமிநாதையர், ‘இவன் ஓர் அரசன்’ என்றே பாடப்பட்டோர் வரலாற்றில் குறித்துள்ளார். எனவே, தரும புத்திரனது பெயர் பூண்ட ஒரு தமிழ் மன்னன் என்றே இவனைக் கொள்ளலாம். இதனால் பாரத வீரர்களின் பெயரை மக்கள் தங்கள் பெயராக மேற்கொள்ளுதல் மிகப் பழங்காலந்தொட்டே வரும் மரபு என்பது போதரும். பெரும்பாணாற்றுப்படையில்,
விசயன் காண்டவ வனம் எரித்த செய்தியும், வீமன் வகுத்த மடைநூல் (பாக சாஸ்திரம்) நெறிப்படி பற்பல உணவு ஆக்கியமையும்,
கலித்தொகையில்உவமை வாயிலாகப் பாரதக் கதை நிகழ்ச்சிகள் பல காட்டப் பெற்றுள்ளன. அரக்கு இல்லில் ஐவரைக் குடிபுகச் செய்து துரியோதனன் அதற்குத் தீயிட்டது(25:1-4), அந்தப் பேராபத்திலிருந்து வீமன் தன் கிளைஞரைக்காப்பாற்றியது (25:5-8), துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றியது (101:18-20), அவனது நெஞ்சத்தை வீமன் பிளந்தது (101:18-20), துரியோதனன் துடையை வீமன் முறித்தது (52:2-3), பாரதப் பொருகளம்(104:57-59), முதலியவற்றைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். சிலப்பதிகாரத்தில், ‘இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேர் ஊர் செருவும், பாடி’ (26:238-239) என இராமாயண பாரதப் போர்கள் இரண்டும் சுட்டப்பெற்றுள்ளன. அன்றியும், பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தமை குறித்தும் (27:7-10), அப் போரில் சேரன் பெருஞ் சோறு அளித்தமை குறித்தும் (29:24), கண்ணன் பாண்டவர்க்குத் தூது நடந்தமை குறித்தும் (17:34,37) குறிப்புகள் வந்துள்ளன. விராடனது நகரில் விசயன் பேடியாக வாழ்ந்தமை பற்றி மணிமேகலையில் குறிப்பு உள்ளது (3:146-147).
தேவார, திவ்யப் பிரபந்தங்களிலும் பாரதக் கதை நிகழ்ச்சிகளைக் காணலாம். அருச்சுனன் பன்றியின்பொருட்டுச் சிவபெருமானுடன் போர் புரிந்ததும், அப் பெருமான் அவனுக்குப் பாசுபதம் அளித்ததும் ஆகிய நிகழ்ச்சிகள் தேவாரத் திருப் பாட்டுக்களில் உள்ளன (1,20,6;1,48,6;4,7,10;,6,34,3;7,66,4;7,98,9) திவ்யப்பிரபந்தப் பாசுரங்களிலே கண்ணனோடு இயைபுடைய பாரத சரித நிகழ்ச்சிகள் யாவுமே அங்கங்கே குறிக்கப்படுதல் காணலாம். ஐவர்க்காகக் கண்ணன் புரிந்த செயல்கள் எல்லாம் ஆழ்வார்களால் குறிக்கப்பெற்றுள்ளன. முக்கியமாகப் பெரியாழ்வார், திருமங்கை மன்னன் பாசுரங்களிலே பாரதக் கதைகள் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.
பிற்காலச் சோழர் காலத்துத் தோன்றிய கலிங்கத்துப்பரணி,
நூலாசிரியர்களைத் தவிர, பழைய உரையாசிரியர்களும் இந்த மாக் கதை பற்றிக் கூறியதோடு பழைய பாரதப் பாடல்கள் சிலவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளார்கள். நச்சினார்க்கினியர் தமது உரையில், ‘இராமாயணமும், பாரதமும் போல்வன இலக்கியம்’ என்று (புறத். 20) குறிப்பிடுகின்றார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் ‘தொன்மை’ என்னும் வனப்பிற்கு ‘பாரதமும் இராமாயணம் முதலாயினவும் கொள்க’ (95) என்று உதாரணம் காட்டுகின்றார். நச்சினார்க்கினியர் உரையில் காட்டும் பாரதப் பாட்டுக்கள் பழைய பாரதத்தைச் சார்ந்தனவாக இருத்தல் கூடும். வீரசோழிய உரையிலும் பாரதப் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப் பெற்றிருக்கின்றன. இக்கதை நிகழ்ச்சி பற்றிய தனிப்பாடல்கள் சிலவும் உள்ளன.
————–
தமிழ்ச் சாசனங்களிலும் மகாபாரதம் பற்றிய செய்திகள் வந்துள்ளன.
என்று இராசசிங்க பாண்டியன் மெய்க்கீர்த்தியிலும் (சின்னமனூர்ச் சாசனப் பகுதி) வந்துள்ள பகுதிகள் முன்னோன் செயலைப் பின்னோனாகிய பாண்டியனுக்கும் ஏற்றி மொழிந்த சிறப்புக்களாகும். தவிர, இராச சிங்க பாண்டியன் மெய்க்கீர்த்தியில், மாபாரதம் தமிழ்ப்படுத்து மதுராபுரிச் சங்கம் வைத்து என்று கூறப்பட்டுள்ளது.
இவன் மதுரையில் நிறுவிய சங்கத்தைக் குறித்தும், தமிழில் இவன் ஆக்குவித்த மகாபாரதம் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. ஒருகால் இவைகளும் இவனுடைய முன்னோரைப்பற்றிய செய்திகளாதலும் கூடும். எவ்வாறாயினும், பாண்டியன் ஒருவன் மகாபாரதத்தைத் தமிழ்ப்படுத்தச் செய்தான் என்பது உண்மை நிகழ்ச்சியாகலாம். மேலும், அருணிலை விசாகன் என்போன் பாரதத்தை இனிய செந்தமிழ்ப் படுத்திய செய்தி திருவாலங்காட்டுச் சாசனத்தால் தெரிய வருகிறது (சாஸனத் தமிழ்க்கவி சரிதம், பக். 90).
————-
தெள்ளாற்றுப் போர் வென்ற மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் காலத்தில், பெருந்தேவனார் என்பவரால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக ஒரு பாரதம் தோன்றியுள்ளது. இதில் பெரும்பாலும் வெண்பாக்களும் ஒரு சில ஆசிரியப் பாக்களும் இரண்டொரு விருத்தங்களும் உள்ளன. இதனைப் ‘பெருந் தேவனார் பாரதம்’ என்றும், ‘பாரத வெண்பா’ என்றும் வழங்கி வருகின்றனர். இவரது நூலில் இப்பொழுது உத்தியோக பருவம் முதல் துரோண பருவத்தில் பதின்மூன்றாம் நாட் போர் முடிய, 830 பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சிய பகுதிகள் இறந்துபட்டமையால், இவரது பாரத நூலில் தொடக்கம் முடிவு முதலிய கதைப் போக்குப் புலனாக இடமில்லை. ‘மாவிந்தம்’ என்னும் பெயருடைய நூல் ஒன்று தஞ்சைச் சரஸ்வதி மகால் வெளியீடாக வந்துள்ளது. இது பெருந் தேவனார் பாரத வெண்பாவின் பிற்பகுதி என்று தெரியவருகிறது. பாரத வெண்பாச் செய்யுட்களை உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். புறத்திரட்டு என்னும் செய்யுள்-தொகைநூல் செய்தவர் வெண்பாவால் ஆன பாரதப் பாடல்களை (33) நூலுள் தொகுத்துள்ளார். இவை பெருந்தேவனார் பாரத வெண்பாவைச் சார்ந்தனவாகலாம்.
வில்லிபுத்தூரர் காலத்திற்குச் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாரத வெண்பாவைச் குறித்து, அவர் தமது நூலுள் யாதும் குறிப்பிடவில்லை.
————–
வடமொழியில் உள்ள மற்றொரு நூலும் வில்லிக்கு வழிகாட்டியிருக்கின்றது. அதுவே, அகஸ்திய பட்டர் பாடிய ‘பால பாரதம்’. இப் பாலபாரதம் இருபது சருக்கங்களில் பாரதக் கதையைச் சுருக்கமாகத் தருகிறது. எளிய இனிய வடமொழி நடையை இது மேற்கொண்டுள்ளது. இந்நூலைச் சுலோகத்துக்குச் சுலோகம், சொல்லுக்குச் சொல், அப்படியே வில்லி தழுவியுள்ளார் என்றும், பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாய் அமைந்ததே வில்லிபாரதம் என்றும் சிலர் கூறிவருகின்றனர். இது முற்றிலும் உண்மை அன்று. பாலபாரதத்தின் முதல் ஆறு சருக்கங்களுக்கும் வில்லிபாரதத்துக்கும் பெரிதும் ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால், போகப் போக இரண்டும் இடையிடையே வேறுபட்டுச் சென்று, இறுதியில் முற்றும் வேறுபட்டு விடுகின்றன. எனவே, விரிந்த பாரதக் கதையைச் சுருக்கமாகத் தமிழில் அமைப்பதற்குப் பாலபாரதத்தின் சுருக்கமுறை வில்லிக்குப் பயன்பட்டிருக்கலாம். ‘வில்லி புத்தூராரின் பாரதம் முழுவதும் பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாக அமைந்தது என்று சொல்ல இயலாது’ என்று கூறி, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் தமது வில்லிபாரத உரைப் பதிப்பின் முகவுரையில் வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியர் விளக்கியுள்ளார்.
இங்கனமாக, வில்லிபுத்தூரர் பாரதம் பாடுவதற்கு முன் வடமொழியிலும் தமிழிலும் முதல் நூலை ஒட்டிச் சிற்சில நூல்கள் தோன்றி, நாட்டில் வழங்கிவந்துள்ளமையைப் பார்த்தோம். தம் காலத்து மிகுதியாகக் காப்பியங்களில் வழங்கிய விருத்த யாப்பில், பல்வேறு சந்தங்களையும் மேற்கொண்டு, சிறந்த முறையில் பாரதத்தை வில்லி அளிக்கவே, பாரத வெண்பா போன்ற முந்திய தமிழ் நூல்கள் மக்களால் பெரிதும் விரும்பிக் கற்கப் பெறவில்லை. வில்லிபுத்தூரர் காலம் முதல் வில்லி பாரதமே தமிழுலகில் தலைசிறந்து விளங்குவதாயிற்று. வில்லிபுத்தூரர் பாடல்களை அங்கங்கே பயன்படுத்திக் கொண்டு பாரதக் கதையை விரிவாகப் பாடிய நல்லாப் பிள்ளை பாரதமும், வில்லியின் நூலைத் தொடர்ந்து பாரதத்தை முற்றுவித்த அட்டாவதானம் அரங்கநாத கவிராயர் பாரதமும் வில்லிபாரதத்தைப்போல அத்துணையாகப் புலவர் பெருமக்களால் வரவேற்கப்பெறவில்லை. இங்கனமே, வேறு சிலர் பிற்காலத்துப் பாடிய பாரத நூல்கள் சில பெயரளவினால்கூட அறியப்படாது மறைந்து விட்டனவும் உண்டு. உதாரணமாகப் பழைய காஞ்சிப் புராண ஆசிரியர் இயற்றிய பாரதம், ‘மாவிந்தம்’ முதலியவற்றைக் கூறலாம். இவ்வாறு வில்லிபுத்தூரருக்கு முன்னும் பின்னும் தோன்றிய பாரத நூல்களெல்லாம் வழக்கொழியுமாறு கவிதைப் பெருமையினால் சிறந்து, இன்றும் புலவர் பெருமக்களால் போற்றப்பெற்று வருவது வில்லிபுத்தூரரின் பாரதம் ஒன்றே.
————–
வில்லிபுத்தூரரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக எடுத்தியம்புவது அவர்தம் புதல்வர் வரந்தருவார் பாடிய சிறப்புப் பாயிரம். இப்பாயிரத்துள் காணும் செய்திகளுக்கும் புலவர் புராணத்தில் வில்லிபுத்தூரர் சருக்கத்தில் காணும் வரலாற்றிற்கும் சிற்சில மாறுபாடுகள் உள்ளன. வில்லியின் வரலாற்றோடு இயைபுடைய செய்திகளைத் தெரிவிக்கும் சில தனிப்பாடல்களும் உள்ளன.
இவரது பெயரைச் சிறப்புப் பாயிரம் ‘வில்லிபுத்தூரன்’ என்றும், அரங்கநாத கவிராயர் ‘வில்லிபுத்தூராழ்வார்’ என்றும் குறித்தல் காணலாம். இவர் திருமால் பக்தர் என்பது கொண்டு வில்லிபுத்தூராழ்வார் என்று இக்காலத்தும் சிலர் வழங்குகின்றனர். தமிழ்விடு தூதும் தனிப்பாடலும் இவரை வில்லி என்றே குறிக்கின்றன.
இவர் திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் தோன்றியவர். இந் நாட்டை நடு நாடு, சேதிநாடு, மாகதக் கொங்கு, என்றும் வழங்குவது உண்டு. பெண்ணையாற்றினால் வளம் சிறத்தலின், இது பெண்ணை நாடு என்னவும் பெறும். அறநெறிச் சாரம் பாடிய திருமுனைப்பாடியார் இந்த நாட்டைச் சார்ந்தவரே. சனியூர் என்ற ஊர் எது என்பது இப்பொழுது விளங்கவில்லை. இவ்வூரில் அந்தணர் குலத்தில், வந்த வைணவராகிய வீரராகவர் என்பவரே இவர்தம் தந்தையார். வட்டமாமணி என்னும் குடியில் இவர் பிறந்தவர் என்பர். ‘வட்டமாமணியினன்’ என்னும் வரந்தருவார் பாயிரக் குறிப்பு இதனைப் புலப்படுத்தும். வில்லி திருமால் பத்தியில் சிறந்தவரே.
திருமால் பத்தியில் விஞ்சிய இவர் அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம், அருச்சுனன் தவநிலைச் சருக்கம், முதலிய பல இடங்களில் சிவ பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டுள்ளவர் போன்று துதிக்கின்றார். மும்மூர்த்திகளில் முதல்வன் சிவனே என்றும் ஒரு சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அன்றியும், சூரியன், வாயு, முதலிய தெய்வங்களையும் புகழ்கின்றார். இங்கனமாக வரும் பல குறிப்புகளினால் சைவ வைணவ சமரச ஞானியாய் இவரைப் பாரதத்தில் காண்கிறோம். எனவே, இவரை மதக் காழ்ப்பு இல்லா வைணவர் என்று கொள்ளுதல் பொருந்தும்.
இவரது பெருங் காவியத்திலிருந்து இவரது வடமொழி தென்மொழிப் புலமைத் திறம் நன்கு விளங்கும். தமிழிலுள்ள முந்து நூல்கள் பலவற்றையும் இவர் நன்கு கற்றவர். பல நூல்களிலுமிருந்து இவர் எடுத்தாளும் கருத்து, சொல், தொடர் முதலியவற்றால் இது விளங்கும். விருத்தப்பாவில் கதையின் சுதிக்கு ஏற்பப் பல்வேறு வகையான சந்தங்களை இவர் மேற்கொண்டிருப்பது இவருக்கே உரிய ஒரு தனிச் சிறப்பாகும்.
காளம் முதலிய வெற்றி விருதுகளை இவர் படைத்தவர் என்பது, ‘தீர காகளம் பெறுதலின் யாரினும் சிறந்தோன்’ என்னும் பாயிரப் பகுதியால் (17) தெரியவரும். மேலும், இவர் தமிழ் நாட்டு மூவேந்தர்களிடமும் பரிசுகள் பல பெற்றுத் திகழ்ந்தார் என்றும் பாயிரத்தால் அறிகிறோம்.
இவ்வாறு தமிழகம் எங்கும் புகழ் பரவ இவர் வாழ்ந்துவரும் காலத்தில், இவர் வாழ்ந்த நாட்டின் அதிபதியாம் குறுநில மன்னன் ஆட்கொண்டான் இவரை வரவேற்று ஆதரித்தான். இவனது தலைநகர் வக்கபாகை. எனவே, இவன் வக்கபாகை வரபதியாட்கொண்டான் என்றும் குறிப்பிடப்படுகின்றான்.
இந்த வக்கபாகை வரபதி ஆட்கொண்டான் வேண்டுகோளினாலேயே பாரதப் பெருங் கதை வில்லி வாக்கினின்று பிறந்தது. ‘
வில்லியோ தமது நூலுள் ஆசைபற்றிப் பாரதப் பெருங்கதையைப் பாட முற்பட்டதாகக் கூறுகின்றார்.
எனினும், நூலுள் நான்கு இடங்களில் தம் நன்றியைப் புலப்படுத்தும் வகையில் வரபதியாட்கொண்டானைச் சிறப்பித்துள்ளமையினால் (காண்டவ, 50, நிரைமாட்சி 103, பதினாறாம் போர் 90, பதினேழாம் போர் 33), இம்மன்னன் வோண்டுகோளும் ஆதரவும் பாரதம் பாடுவதற்குத் துணைக்காரணங்களாய் அமைந்தன என்பது தெளிவாம்.
வில்லிபுத்தூரர் புலமையில்லாத போலிப்புலவர்களோடு வாதிட்டு வென்று, அவர்கள் காதுகளைத் துறட்டினால் அறுத்து வந்தார் என்றும் ஒரு கர்னபரம்பரைக்கதை உண்டு. இதனைத் தமிழ்விடு தூதும், ஒரு தனிப்பாடலும் குறித்துள்ளன. தெய்வ பக்தியில் விஞ்சிய இப் புலவர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்றல் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஒட்டக்கூத்தர் முதலிய வேறு புலவர் சிலரைப் பற்றியும் இத்தகைய கதைகள் உண்டு. இக் கதையைக் குறிப்பிடும்,
என வரும் தமிழ் விடு தூதுப் பகுதிக்குக் குறிப்புரை வகுத்த டாக்டர் உ.வே. சாமி நாதையர், ‘இவற்றிற் கூறப்பட்ட செய்திகள், “குடடு்தற்கோ” என வரும் தனிப்பாடலை ஒட்டி எழுந்தன போலும்; பெரியோர் பலர்க்கு இக் கதைகள் உடன்பாடு அல்ல’ என்று எழுதியிருத்தலும் நோக்கத்தகும்.
————–
இனி, வில்லி வாழ்ந்த காலத்தை நோக்குவோம்; இவர் தழுவிய நூல்களுள் ஒன்றாகிய பாலபாரதம் இயற்றிய அகஸ்திய பட்டர் தெலுங்கு தேசத்தில் அரசாண்ட காகதீயப் பிரதாப ருத்திரனுடைய காலத்தில் (கி.பி. 1232-1323) இருந்தவர் என்று ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். எனவே, வில்லி இக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது போதரும்.
‘நான்காம் சங்கம் என முச்சங்கத் தண்டமிழ் நூல் தலைகண்டான்’ என்று வரந்தருவாரால் பாயிரத்துள் (18) சிறப்பிக்கப் பெறும் ஆட்கொண்டானை இரட்டைப் புலவரும் பாடியுள்ளனர். எனவே, ஆட்கொண்டான் வில்லிபுத்தூரரைத் தவிர வேறு பல புலவர்களின் மதிப்புக்கும் உரியவனாய் விளங்கியிருக்கின்றான். இரட்டையர்களால் பாடப்பெற்ற மற்றொருவன் இராசநாராயண சம்புவராயன் என்பவனாவன். இவன் கி.பி. 1331 முதல் 1383 வரை ஆட்சி புரிந்தான் என்று சாசன ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே, வரபதியாட்கொண்டானும் வில்லியும் இக்காலப் பகுதியைச் சார்ந்தவர் என்றும், வில்லி 14-ஆம் நூற்றாண்டுப் புலவராவர் என்றும் கொள்ளலாம்.
———–
வியாச பாரதம் பதினெட்டுப் பருவங்களைக் கொண்டு மிக விரிந்த நூலாய் உள்ளது. அதில் பாரதக் கதையோடு எத்தனையோ கிளைக் கதைகளும் வேறு பல இடைப்பிறவரல்களும் உள்ளன. அதனை முற்றக் கற்றுப் பாரதக் கதையைப் புரிந்து கொள்ளுதல் ஓரளவு கற்றோருக்கே அத்துணை எளிய செயலன்று. ஆகவே, பாரதக் கதையை யாவரும் எளிதில் உணருமாறு சுருக்கமாகச் செந்தமிழில் சந்த விருத்தத்தில் அமைக்க முற்பட்டுள்ளவர் வில்லியே. பாரதப் போர் முடிவது வரையிலுள்ள கதைப் பகுதி மட்டுமே இவர் கூறியுள்ளார்.
என்ற பாயிரச் செய்யுட் பகுதி (23) ஆட்கொண்டான் பாரதத்தைச் சுருக்கிப் புராண முறையில் அருளுமாறு வேண்டிக்கொண்டதாகவே கூறுகிறது. அதற்கு இசையவே வில்லியும் தமது நூலை யாத்தனர் என்பது தோன்றுகிறது. பாரதத்தைச் சுருக்கித் தந்தமை குறித்துப் புலவர்புராணத்தில் (வில்லிபுத்தூரர் சருக்கம்),
இவர் குறித்தவண்னமே ஒரு பாடலில் சில வரலாறுகளை அழகாக அமைத்துள்ளார் வில்லி; பல பொருள்களைத் தெளிவுற ஒரு பாடலில் அடக்கிப் பாடும் திறம் இவருக்கு இயல்பாய் அமைந்துள்ளது. இவர் சில செய்திகளை முன்னர்க் கூறவேண்டுமிடத்துக் கூறாது, மேல் நிகழும் நிகழ்ச்சியோடு பிணைத்துப் பின்னர்க் காட்டியும், முன் ஓர் இடத்துக் குறிப்பாகச் சுட்டியதைப் பின்பு மற்றோரிடத்தில் விளக்கியும் கதையை விடாது கொண்டு செல்கின்றார். விளக்கமாக வருவிக்கவேண்டிய இடங்களை இவர் விட்டுவிடவும் இல்லை. அவசியமாக கதைப் பகுதிகளை எல்லாம் விடாது தொடர்புபடுத்தி, சுமார் 4,000 பாடல்களிலே மாபாரதக் கதையை வில்லி தந்தது மிகவும் போற்றுதற்குரியது.
வில்லியும் வியாசரைப் போலவே பதினெட்டுப் பருவங்களையும் பாடினர் என்றும் பிற்பகுதி காலவெள்ளத்தில் மறைந்துபட்டது என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டும் பாடல் வருமாறு;
இத் தனிப்பாடல் பாரதம் முழுவதையும் ஆறாயிரம் பாடல்களில் வில்லி செய்தனர் என்று குறிக்கின்றது.
இவர் மேலே காட்டிய தனிப்பாடலை ஆதாரமாகக் கொண்டு மொழிந்தார் என்றே தோன்றுகிறது. பரிசோதித்த பாரத ஏடுகள் பலவற்றில் இத்தனிப்பாடல் காணப் பெறவில்லை. ஒருசில ஏடுகளிலேதான் இப்பாட்டும் வரந்தருவார் பாயிரத்துடன் கலந்து வந்துள்ளது. அச்சுப்பிரதிகளில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பைத் தவிர வேறு பதிப்புக்களில் இப்பாடல் தரப்பெறவில்லை. எனவே, இதனை உறுதியான ஆதாரமாகக் கொள்ளுதற்கு இல்லை.
மேலும், வில்லி பாரதத்தின் இறுதிப் பாடலில் வரும் ‘கனைகடற் பார் அளித்து, அவரும் அந் நகரில் அறநெறியே கருதி வாழ்ந்தார்’ எனவரும் ஈற்றடிக்கு, ‘கனை கடற்பார் அளித்து, அவரும் அந் நகரில் வாழ்ந்த செயல் கழறுவோமே’ என்றொரு பாடபேதம் உளதாகக் காட்டுகின்றனர். இதனால் பிற்பகுதியையும் வில்லி பாடி இருக்கவேண்டும் என்று எண்ணுவர். பாடபேதத்தைக் கொண்டு மட்டும் துணிதல் இயலாது. இப்பொழுதும் நூலின் பின் இணைப்பாக, இரண்டொரு ஏடுகளில், ‘மாதர்கள் களம் புகுந்து வான் அடைந்த சருக்கம்’, ‘முடி புனைச் சருக்கம்’, ‘முடி சூட்டுச் சருக்கம், ‘மௌவி சூட்டுச் சருக்கம்’ என்ற பெயர்களில் வேறு வேறு பாடல்கள் காணப்பெறுகின்றன. இவற்றை வில்லி வாக்கு என்றல் சிறிதும் ஒவ்வாது. இவ்வாறு கதையை வளர்த்து, கம்பன் திருமுடி சூட்டுப் படலம் அமைத்ததுபோல பாடமே ஈற்றடியில் காணும் பாடபேதம் என்பது மனம்கொள்ளத்தகும். ‘பாரத சம்பு’ முதலிய நூல்களிலும் போருக்குப் பிந்திய கதைப் பகுதி காணப்படவில்லை. இவ்வாறு பலவற்றையும் சிந்திக்கும் காலத்து, போர்ப் பகுதியோடு வில்லி தம் பெரு நூலை முற்றுவித்தார் என்று கொள்வதே உண்மை நிகழ்ச்சியாகும்.
வில்லி பாரதத்திற்குப் பல பதிப்புகள் வந்துள்ளன. இவற்றுள் முற்பட்டனவாக்க் கருதப்படுவன ஆகிய ஆறுமுகநாவலர் பதிப்பும் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை பதிப்பும் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளி வந்தன. ஏட்டுப் பிரதிகள் ஒன்றிலும் காணப்பொறாத பல செய்யுட்கள் இவர்கள் பதிப்பில் உள்ளன. எனவே, இவை பிரதிகளின்படி நன்கு பரிசோதித்து வெளியிடப் பெற்றனவாக எண்ணக்கூடவில்லை. அடுத்து, மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பைக் (1907) கூறலாம். பதினான்கு பிரதிகளைக் கொண்டு சேற்றூர் ரா.சுப்பிரமணியக் கவிராயரால் பரிசோதிக்கப்பெற்றது இப் பதிப்பு. முக்கியமான பாடவேறுபாடுகளும் சில பிரதிகளில் காணப்பெறாத செய்யுட்கள் முதலியன பற்றிய குறிப்புக்களும் அங்கங்கே அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளன. நூல் முழுமைக்கும் அரும்பதவுரை சிறந்த முறையில் உள்ளது. தவிரவும் விஷய சூசிகை, அபிதான அகராதி, தொகை அகராதி என்னும் தலைப்புக்களில் தரப்பெற்றுள்ள பொருள்களும் நூலை ஆராய்வார்க்கு அவசியமான குறிப்புக்களாகும். இங்ஙனம் பல சிறப்புக்களையும் பெற்று விளங்கும் இப் பதிப்பு மூலப்பதிப்புக்களுள் முதன்மையாக வைத்து எண்ணத் தகுவது.
இனி, தனிப்பட எடுத்துக் கூறத் தக்கது வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியரின் உரைப் பதிப்பு. வில்லி பாரதத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் வை.மு. சடகோப ராமாநுஜாசாரியராலும், சே. கிருஷ்ணமாசாரியராலும் உரைவகுக்கப் பெற்றுப் பகுதி பகுதியாக முன்னரே வெளிவந்துள்ளன. இவர்கள் உரை எழுதாத ஆதி பருவம், ஆரணிய பருவம், விராட பருவம் என்னும் பகுதிகளுக்கு வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் உரை எழுதி முற்றுவித்து, முற்குறித்த இருவர் உரைகளையும் நன்கு பரிசோதித்து, பாரதம் முழுவதற்கும் உரை நூல் அச்சிட்டுள்ளார். பதவுரை, கருத்துரை, விளக்கவுரை முதலிய பலவும் கொண்டு விரிந்த உரைநூலாய் இது அமைந்துள்ளது. பாடல்களில் பயின்றுவரும் கதைகளை அங்கங்கே விளக்கி எழுதியதோடு வியாசபாரதம், பால பாரதம் முதலியவற்றோடுள்ள ஒற்றுமை வேற்றுமைப் பகுதிகளை ஆங்காங்கே விளக்கியுள்ளார். பாட வேறுபாடுகளை அந்தந்தப் பாடல்களின் கீழ்ச் சுட்டியதோடு பிரதிகளில் காணும் பிற வேறுபாடுகள் பற்றியும் சிற்சில இடங்களில் குறிப்புத் தந்துள்ளார். அரும்பத அகராதி, அபிதான சூசிகை அகராதி, ஆகியவற்றைப் பாடல் எண் குறிப்புடன் ஒவ்வொரு தொகுதியிலும் தந்திருப்பது இப் பதிப்பிற்குரிய ஒரு தனிச் சிறப்பு.
இங்கனமாக வெளிவந்துள்ள பதிப்புக்களில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பும், வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியரின் பதிப்புமே இந்தப்பதிப்பின் பரிசோதனைக்குப் பெரிதும் பயன்பட்டன. சென்னை அடையாற்றிலுள்ள மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை அரசாங்கச் சுவடி நிலையம், தஞ்சைச் சரசுவதிமகால், மதுரைத் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரத்திலுள்ள அரசாங்க நூல் நிலையம் ஆகியவற்றில் இப்பொழுது கிடைக்கும் சுவடிகள் ஒப்பு நோக்கப்பெற்றன. இதனால், நூல் அமைப்பிலும், சருக்கங்களின் வரிசைமுறையிலும் பாடல்களின் அடைவிலும் சிற்சில மாறுபாடுகள் காணப்பெற்றன. பாட ரூப பேதங்களின் விரிவு கருதி அவை இப் பதிப்பில் தரப்பெறவில்லை.
———-
நூற் பெயர் சில ஏடுகளில் குறிக்கப்பெறவில்லை. பெரும்பாலான ஏடுகளில் பாரதம், மகாபாரதம்என்னும் பெயர்களைத் தொடக்க முடிவுகளில் குறித்துள்ளனர். முற்பதிப்பாசிரியர்கள், ‘வில்லிபுத்தூராழ்வார் இயற்றியருளிய மகாபாரதம், வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரதம், வில்லிபுத்தூரர் இயற்றிய மகாபாரதம், பாரதம்-வில்லிபுத்தூராழ்வார் இயற்றியது’ என்று இவ்வாறு நூல் முகப்பில் தந்துள்ளனர். மகாபாரதம் என்ற பெயர் முதல் நூலால் பெற்ற பெயர். ஆனால் இந் நூலை ‘வில்லி பாரதம்’ என்று குறித்தலே பெருவழக்காய்ப் புலவர்களிடையே பயின்று வருகிறது. தமிழிலுள்ள பிற பாரத நூல்களையும் பெருந் தேவனார் பாரதம், நல்லாப்பிள்ளை பாரதம் என்று இவ்வாறு ஆசிரியர் பெயருடன் இணைத்தே வழங்குகின்றனர். ஆகவே, ‘கம்ப ராமாயணம்’ என்பது போல ‘வில்லி பாரதம்’ என்பதே இப் பதிப்பில் நூற் பெயராகப் கொள்ளப்பட்டது.
நூலாசிரியர் மகனார் வரந்தருவார் பாடிய ‘சிறப்புப் பாயிரம்’ எல்லாப் பிரதிகளிலும் நூல் தொடங்குவதற்கு முன்னாகவே உள்ளது. இப் பாயிரம் ஆசிரியரைப் பற்றியும் அவர் நூல் பாடிய காரணம் முதலியன பற்றியும் விளக்கிக் கூறும் ஒரு செய்யுள் முன்னுரையாய் உள்ளமையின், ஏடுகளில் காண்கின்றபடியே நூல்-முகப்பில் மேற்கொள்ளப்பெற்றது.
————-
அச்சுப்புத்தகங்களில் பருவப் பெயர் சுட்டியிருப்பதுபோல ஏட்டுப்பிரதிகளில் பருவப்பெயர்குறிக்கப்பெறவில்லை. இது முதல் நூலை ஒட்டிப் பதிப்பாசிரியர்கள் அமைத்துக் கொண்ட புத்தமைப்பே. பதினெட்டாம் போர்ச் சருக்கத்தின் பிற் பகுதிப் பாடல்களைப் பத்தாவது சௌப்திக பருவம் எனக் கொண்டிருத்தலும், இதில் செய்யுள் எண்ணிக்கை பதினெட்டாம் போர்ச் சருக்கத்தின் தொடர்ச்சியாய் 205 முதல் தொடர்ந்து செல்லுதலும் நோக்கின், மேற்கூறியதன் உண்மை புலனாம். எனவே, இப்பதிப்பில் பருவப் பெயர்கள் கொடுக்கப்படவில்லை.
சருக்க அமைப்பு, பாடல் தொகை, முதலியவற்றில் நூல் முதலலும், ஆரணிய பருவக் கதைப் குதியிலும இந்த முதற் செய்யுள் அயன், அரி, அரன் மூவர்க்கும் பொதுவாய் அமைந்துள்ளது. பின் வரும் சருக்கங்களிலுள்ள வாழ்த்துப் பாடல்களோ திருமாலை பற்றியே கூறுகின்றன. பின் வரும் சருக்கங்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாமலும் ஒருசில ஏடுகள் உள்ளன. இராசகோபாலப் பிள்ளை பதிப்பிலேதான் எல்லாச் சருக்கங்களுக்கும் கடவுள் வாழ்த்து உள்ளது. பிற்பதிப்புகளில் இடையிடையேில சருக்கங்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் இல்லை. இங்கனம் விடுபட்ட இடங்களில் இராசகோபாலப் பிள்ளை கொடுத்துள்ள பாடலுக்குப் பிரதியாக ஒரு சில ஏடுகளில் வேறு பாடல்கள் காணப்படுகின்றன. இன்னும் சில ஏடுகள் ஒரு சருக்கத்திற்கு உரியதாகத் தந்துள்ள பாடலை வேறு சருக்கத்தின் வாழ்த்தாகவும் கொண்டுள்ளன. இவ்வகை மாறுபாடுகளினால், ‘கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் யாவும் ஆசிரியர் பாடியவைதாமா” என்னும் ஐயம் எழுகின்றது.
இனி, சருக்கங்களின் பெயர், அமைப்பு முதலியவற்றில் காணும் மாறுபாடுகளைக் கவனிப்போம். ஆரணிய பருவக் கதைப் பகுதியில் ‘முண்டகச் சருக்கம்’ என்பது ‘புட்பயாத்திரைச் சருக்கம்’ என்று அச்சுப் பிரதிகளில் உள்ளது. தாமரைப் பூவைக் கொணரவே வீமன் செல்வதாக இந்தச் சருக்கத்தின் கதை உள்ளது. இதை விளக்கும் வகையில் முண்டகச் சருக்கம் என்ற பெயர் பெரும்பான்மைப் பிரதிகளில் உள்ளமை கருதி, அப் பெயரே மேற்கொள்ளப்பெற்றது. இப் பருவத்தில் தரப் பெற்றுள்ள ‘மணிமான் வதைச் சருக்கம்’ பெரும்பான்மையான பிரதிகளில் இல்லை. முண்டகச் சருக்கத்தில் வரும் கதையே சில மாறுதல்களுடன் விரிவாக இதில் தரப் பெறுகிறது. ஆகவே, கூறியது கூறலாக வரும் இச்சருக்கம் நூலின் பகுதியாகக் கொடுக்கப்பெறவில்லை. இச் சருக்கத்தில் இறுதிப் பாடலாகப் பதிப்புகளில் காணும் ‘அப்பொழுது வானுலகம்’ என்னும் பாடல் மணிமான் வதை இன்றியுள்ள பிரதிகளில், சடாசுரன் வதைச் சருக்கத்தின் ஈற்றயல் பாடலாகப் உள்ளது. அது போன்றே இப் பதிப்பிலும் காணப்பெறும். ஆரணிய பருவத்தின் இறுதிச் சருக்கமாக அச்சுப் பிரதிகளில் காணப்பெறும் நச்சுப்பொய்கைச் சருக்கம் பல ஏடுகளில் சடாசுரன் வதைச் சருக்கத்தை அடுத்து உள்ளது. அவ்வாறே இப்பதிப்பிலும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. படை எழுச்சிச் சருக்கத்தின் பின், முகூர்த்தம் கேள்விச் சருக்கம், களப்பலியூட்டு சருக்கம், அணிவகுப்புச் சருக்கம் என்னும் மூன்று சருக்கங்கள் அச்சுப் பிரதிகளில் காணப்பெறுகின்றன. இவற்றுள் முகூர்த்தம் கேள்விச் சருக்கம் முதலிய மூன்றும் இன்றி, யாவற்றையும் படையெழுச்சிச் சருக்கமாகவே பல பிரதிகள் மேற்கொண்டுள்ளன. முகூர்த்தம் கேள்வி, களப்பலி, அணிவகுப்பு என்னும் மூன்றும் படையெழுச்சியின் அங்கங்களே. ஆதலின், இப் பதிப்பிலும் படையெழுச்சிச் சருக்கம் ஒன்றே கொள்ளப் பெற்றது.
—————-
நூல் இறுதியில் ஒரு சில ஏடுகளில் ‘மாதர்கள் களம் புகுந்து வான் அடைந்த சருக்கம்’ என்றும், முடி சூட்டுச் சருக்கம்’ என்றும், ‘மௌலி சூட்டுச் சருக்கம்’ என்றும் வெவ்வேறு வகையில் பல பாடல்கள் உள்ளன. இவை அச்சுப்பிரதிகளில் இடம் பெறாதவை. இவற்றுள் மௌலி சூட்டுச் சருக்கம் என்பது சென்னை அரசாங்கச் சுவடி நிலையத்தின் தனி வெளியீடு ஒன்றில் (1949) வெளியிடப்பெற்றிருக்கிறது. இதற்கும் முடி புனை சருக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. பெயர் ஒற்றுமை தவிர, பாடல்கள் எல்லாம் வேறு பட்டவை. இந்தச் சருக்கங்களும், மணிமான் வதைச் சருக்கப் பாடல்களும், பல பிரதிகளில் காணப்பெறாமலும் சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாமலும் அமைந்துள்ள பாடல்களும், ‘மிகைப் பாடல்கள்’ என்னும் தலைப்பின் கீழ் நூல் இறுதியில் அமைக்கப்பெற்றுள்ளன.
————-
முந்திய பதிப்புக்களில் அரங்கசாமி நாயக்கர் பதிப்பில் மட்டும் நூல் முழுவதும் பாடல்கள் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்டிருக்கின்றன. வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் பதிப்பில் ஒருசில பருவங்கள் சீர் பிரித்து அச்சிடப் பெற்றிருக்கின்றன. ஏனைய பதிப்புக்களில் அடிவரையறைப்படி பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளனவே அன்றி, அடிகளினூடே இடைவெளி சிறிதும் விடப் பெறவில்லை. இம் முறைகளினால் பாரதப் பாடல்களைப் பொருளுணர்ச்சியோடு வாசிப்பது கற்றார்கே பெரிதும் இடர்ப்பாடு தருவது ஒன்றாம். இந்தப் பதிப்பில் பாடல்கள் சந்தி பிரித்து, ஏற்ற நிறுத்தற்குறியீடுகளுடன் தரப்பெற்றுள்ளன. கதைப்போக்கை விளக்கும் வகையில் தக்க தலைப்புகளும் இடையிடையே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றால் பாடல்களின் பொருள் முதலியவற்றை எளிதில் உணர்ந்துகொள்ளலாகும். நூல் முகப்பில் காணும் உள்ளுரைப் பகுதியில் தலைப்புகள் எல்லாம் ஒருசேரத் தரப்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து வாசித்தால் வில்லியின் கதைப் போக்கு நன்கு தெளிவாம்.
——————-
திருவாளர்கள் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, வி.மு. சுப்பிரமணியம், மு.சண்முகம் ஆகிய மூவரும் பிரதிகளுடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்து வில்லி பாரதத்தை அழகுறப் பதிப்பித்துள்ளார்கள். திருவாளர்கள் பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார், கி.வா. ஜகந்நாதன், அ.ச. ஞானசம்பந்தன், சா. கணேசன், ஆகியோர் இப் பதிப்பு சம்பந்தமாகப் பற்பல ஆலோசனைகள் கூறியதோடு வேறு பல உதவிகளும் புரிந்தனர். இங்ஙனமாக, செவ்விய முறையில் இப்பதிப்பு வெளிவர உதவி புரிந்த அன்பர்கள் யாவர்க்கும் எங்கள் உளம் கனிந்த நன்றி உரியதாகுக.
சிறப்புப் பாயிரம்
பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து
இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து பேதை-
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.-1-
பேதை பாவைமருங்கிலே வளருகின்றாளென்க. ஓரேன மருப்பிலே
பயின்றபாவையென்றது – பூமிதேவியை. வராகாவதாரஞ் செய்த திருமால்
தன்கோட்டிலே பூமியை யேந்தியமை, புராணப் பிரசித்தம். பேதையென்பது –
தமிழணங்காகிய குழந்தையை. பேதை – குழந்தைப்பருவம்: அப்பருவத்துக்கு
வயதுஎல்லை – ஐந்து வயதுமுதல் ஏழுவயசுவரையிலும். தமிழைப் பேதையென்றதற்குஏற்ப, பிறவி முதலியனகூறினார். பொருப்பு – அகத்தியரின்
வாழிடமான பொதியமலை.பாண்டியரே தமிழ்வளர்த்தோ ராதலால், அவர்புகழிலே
தமிழ்ப்பேதை கிடப்பாளென்க.மதுரையில் சங்கத்தாரால் தமிழ்மொழி
வளர்க்கப்பட்டு வளர்ந்ததனால்’சங்கத்திருப்பிலேயிருந்து’ என்றது.
திருஞானசம்பந்தர் சமணருடன் வாது நிகழ்த்திப்புனல் வாதத்தில் அச்சமணரை
வெல்லுமாறு “வாழ்கவந்தணர்” என்ற பாசுரத்தைஓலையிலெழுதி நட்டாற்றில்
விட்டபோது அவ்வேடு கரையெதிரேறி வந்தது என்றசரித்திரத்தையுட்கொண்டு,’
வைகையேட்டிலே தவழ்ந்த’ என்றது. அங்ஙனமேநள்ளாற்றுப்பதிகம் எழுதிய
ஏட்டை நெருப்பிலேயிட, அப்பதிகம் வேவாதுகிடந்ததென்ற வரலாறுபற்றி,
‘நெருப்பிலே நின்று’ என்றது. கற்றோர் அத்தமிழ்மொழியைப்பயின்று வருதலால்
‘கற்றோர்நினைவிலேநடந்து’ என்றது.
அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு, அம்புசாதன்
முகத்தினில் வாழும் அந்த மொய்குழல், அருளினாலே,
பகைத்து எதிர் பொருத தெய்வப் பாரத கதை, இம் முந்நீர்ச்
செகத்தினில், விருத்த யாப்பால் செய்க!’ என, செய்தது அன்றே.-2-
அம்புசாதம் – தாமரை: அதில்தோன்றியவன் – அம்புசாதன்.
அம்புயாதன் என்று பாடம் ஓதுவாருமுளர். முகம் – ஈண்டு, முகத்திலுள்ள நா:
“கலைமகள்வாழ்க்கைமுகத்ததெனினு, மலரவன்” என்றதும் காண்க. மொய்குழல்
என்றது சரசுவதியை.பெரும்பான்மைபற்றி, விருத்தயாப்பு என்றது. பாரதகதை
செய்கெனச் செய்ததுஎன்பதை, மேலே விளக்குவர்.
தேடினார் யாவரேகொல், எழு வகையானும் சீர்த்தி’
நீடினார் அவரே! எனபர், நீள் நிலத்து உயர்ந்த மாந்தர்;
‘பாடினார் யாவர்’ யாவர் பாடுவித்தார் கொல்” என்று
நாடினார் தெளியும்வண்ணம், நவை அற, நவிலலுற்றேன்.-3-
தடாகபிரதிஷ்டை, தநநிக்ஷேபம், அக்கிரகாரபிரதிஷ்டை, தேவாலய
பிரதிஷ்டை,நந்தவன பிரதிஷ்டை, பிரபந்தநிர்மாணம், ஸத்திரபிரதிஷ்டை என்ற
இவ்வேழுவகையால் கீர்த்தியைத் தேடுவர்: இவை ‘ஸப்தஸந்தாநம்’ எனப்படும்.
இவ்வேழுவகையிற் பிரபந்தநிர்மாணத்தாலாகிய புகழ், பாடுவார்க்கு உரியதாகும்:
அப்புகழைப் பெற்றவர் இன்னா ரென்று கூறத்தொடங்கியவர் அதனைச்
செய்வித்தாராகிய பாடுவித்தாரையும் உடன்கூறலுறுகிறாரென்க. நவையற –
குற்றமில்லாமல்: செவ்வனே. நவிலல் – சொல்லுதல்.
நாள் நிரைத்து, அநேக தாரகாகணம் ஆம்
நவ மணியுடன் நவ விதம் கொள்
கோள் நிரைத்து, ஈர்-ஏழ் புவனமும் வலம் செய்
கொற்ற நேமியின் வரு கொண்டல்,
வாள் நிரைத்து இரவி விதிர்ப்பபோல் மின்னி,
வான் முகடு உற நெடும் பளிக்குத்
தூண் நிரைப்பனபோல், நந்தி மால் வரையின்
சூழலில் தாரை கொண்டதுவே.–4
நூலாசிரியர் தோன்றிய திருமுனைப்பாடிநாட்டினைப் பற்றிக்கூறலுற்று
ஆங்குப்பாயும் பெண்ணையாறு நந்திமலையில் தோன்றுவதைக் கூறுகின்றார்:
நாள் -அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களை. நிரைத்து – ஒழுங்காக
உண்டாக்கி:(அவற்றோடு), தாரகாகணம் ஆம் நவ மணியுடன் – நட்சத்திரக்
கூட்டங்களாகிய புதியஇரத்தினங்களோடு. நவமணியென முறை நவின்ற என்று
பிரதிபேதம். நவவிதங்கொள்கோள் – ஒன்பதுவகையான கிரகங்கள்: அவை –
சூரியன் முதலியன. இவற்றால்எல்லாப்பொருட்கும் ஆதிகாரணன் திருமாலே
யென்று தெரிவித்தவாறு. வலஞ் செய் -பிரதட்சிணஞ் செய்கின்ற: ஈரேழ்
புவனத்தவரும் உய்யுமாறு திருமாலைவலஞ்செய்கின்றனரென்க. நேமி –
சக்கரப்படை: அதையுடைய திருமாலுக்கு,ஆகுபெயர். திருமால்போல் வருகின்ற
கொண்டலென்க: கொண்டல் – நீரைக் கொண்டமேகம். நேமியின் வரு –
மேருமலையினின்று வருகின்ற என்றாரு முளர்,இரவிபோன்ற பேரொளி படைத்த
வாளை நிரைத்து விதிர்ப்பபோல் மின்னி யென்க.மழைத்தாரை – பளிக்குத்தூணை
யொக்கும். நந்திமால்வரை – குடகுமலை: இதுபெண்ணையாறு தோன்றும்
மலையாகும்.
வம்பு அறா மலரும், செம் பொனும், மணியும்,
மருங்கு எலாம் நெருங்கும் அக் குன்றின்.
உம்பர், ஆர்ப்பு எழ, பார் அளவும் நின்று ஒங்கி,
உள்ளுறத் துள்ளி, வீழ் அருவி-
அம்புராசியை மால் மந்தரம் சுழற்றி,
அமுது எழக் கடைந்த நாள், அதற்குத்
தம்பமாம் மதியை அதனுடன் பெயர்த்துச்
சார்த்தி வைத்தென்னலாம் தகைத்தே.–5
வம்பு – வாசனை. உம்பர்- மேலிடம். ஆர்ப்பு – ஆரவாரம். உம்பரூடெழ
என்றும்பாடம். உள்ளுற- (கண்டோர்) மதிக்க. அம்புராசி – இங்கே, பாற்கடல். மலையைச்சார்ந்த அருவி, மந்தர மலையைச்சார்ந்த
அடைதூணானமதியையொக்குமென்க: தற்குறிப்பேற்றம். வைத்து – வைத்ததால்:
எச்சத்திரிபு.
வெண்ணெயே கமழும் பவளமாய் விமலன
மெய் எனக் கருகி, மெல்லியலார்
கண்ணையே அனைய நெடுங் கடல் முகந்து,
ககனமும் திசைகளும் விழுங்கி,
பண்ணை சூழ்ந்து இலகும் திருமுனைப்பாடிப்
பழைய நாடு அனைத்தையும், ஒருதன்
பெண்ணையே கொண்டு போகம் உய்த்திடுமால்,
புயல் எனும் பெயருடையப் பெரியோன்.–6-
முகில்பெய்தலால் நந்திமலையில் அருவிபெருகிப் பின்னர்ப்
பெண்ணைமாநதியாய்அம்முனைப்பாடி நாட்டிற்பாய்வது கூறப்படுகின்றது.
மாற்புயலெனும் -கரியபுயலென்கிற. விமலன் – திருமால். ககனம் – ஆகாயம்,
திக்குத்திசைதெரியாமல்மேகம் கவிந்துகொள்வதை ‘ககனமுந்திசைகளும்விழுங்கி’
என்றார். பண்ணை – வயல்.திருமுனைப்பாடிநாடு என்றது – நடுநாடு.
பெண்ணையேகொண்டு -பெண்ணையாற்றைக்கொண்டு மகளைக்கொண்டு என்றும்,
போகம் – விளைவு இன்பம்என்றும் இருபொருள்தரும்.
தொடுத்த நாள்மலர், வேய்ந்து, அகில் அளைந்து, உந்திச்
சுழிவயின் இலங்க, மெய்த்தனங்கள்
எடுத்து மேல் வீசி, மணி மருங்கு அலைய,
இனம் கொள் வண்டொடு சிலம்பு இரங்க,
அடுத்த நீள் சுரத மகளிரின் தடங் கண்
நிறம் சிவப்புற, கரை அழிந்து,
படுத்த பேர் அணைப் போர் புரிந்ததால்- அந்தப்
பண்ணை அம் கானல் சூழ் பெண்ணை.-7-
இது அப்பெண்ணை அணைக்கட்டையுமுடையதாதல் கூறும். பண்ணை
அம் கானல்- வயல்களோடு அழகிய சோலைகளையுடைய பெண்ணையென்க.
பெண்ணைநதியைச்சுரதமகளிர்க்கு ஒப்பாகக்கூறுகின்றார்: சிலேடையுவமை:
மகளிர்க்குச்சேரும்போது,-அகில் – அகிற்புகை. உந்திச்சுழி – கொப்பூழாகிய சுழி.
வயின் – வயிறு. தனங்கள் -கொங்கைகள். மருங்கு – இடை. மருங்கு அலைய
மணி [ஆபரணங்களை]மேலெடுத்துவீசி. வண்டு – கைவளை. தடங்கண் – பெரிய
கண். கரையழிந்து -வரம்புகடந்து, அணை போர் – அணையிற் செய்யும்போர்:
கல்விப்போர்பெண்ணைநதிக்கு ஆகும் போது, அகில் – அகிற்கட்டைகள்.
உந்திச்சுழி வயின்இலங்க – உந்திபோன்ற சுழி இடங்கடோறும் இலங்க. மெய்த்
தனம் -உண்மையாகியபொன். மணி – நவமணி. மருங்கு – பக்கம். சிலம்பு
இரங்க – மலைஎதிரொலிசெய்ய. தடங்கள் – வாவிகள். கரை யழிந்து – கரை
கடந்து. படுத்த -கட்டப்பட்ட. பேர் அணை – பெரிய அணைக்கட்டு.
அவ்வை பாடலுக்கு நறு நெய் பால் பெருகி,
அருந் தமிழ் அறிவினால் சிறந்து,
பௌவ நீர் ஆடைத் தரணிமான் மார்பில்
பயிலும் உத்தரியமும் போன்று,
மொய் வரால், கெண்டை, வாளை, சேல், மலங்கு,
முதலிய சனம் எதிர்கொள்ள,
தெய்வ மா நதி நீர் பரக்கும் நாடு அந்தத்
திருமுனைப்பாடி நல் நாடு.–8-
திருமுனைப்பாடிநாடு பெண்ணை நீர்பாயப்பெறுவதென்பது.
உத்தரியம்போல்வதுபெண்ணைநதியென்க. ஒளவை பாடலுக்குப் பெண்ணைநதி நெய்பால் பெருகிய சரிதை, அருச்சுனன் றீர்த்தயாத்திரைச்
சருக்கத்து 16-ஆம் பாடலினுரையிற் கூறப்படும். ஒளவைபாடலுக்குப்
பெருகியதனால்,அருந்தமிழறிவினாற் சிறந்து என்றது. முதலிய சனம் –
முதலியவற்றின்திரள்;முதலியவற்றைச் சனங்கள் என்று கூறுதலும் ஒன்று.
பா அருந் தமிழால் பேர் பெறு பனுவல்
பாவலர், பாதி நாள் இரவில்,
மூவரும் நெருக்கி, மொழிவிளக்கு ஏற்றி,
முகுதனைத் தொழுத நல் நாடு;
தேவரும் மறையும் இன்னமும் காணாச்
செஞ் சடைக்கடவுளைப் பாடி,
யாவரும் மதித்தோர் மூவரில், இருவர்
பிறந்த நாடு, இந்த நல் நாடு.-9-
இது அந்தத் திருமுனைப்பாடி நாட்டிற்குள்ள வேறுவகைச் சிறப்பைக்
கூறுவது. பாவலரென்றது – பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்ற
மூவரை: இவர்கள் முதலாழ்வார்களென்றுங் கூறப்படுவர். இவர்கள் சரித்திரமும்
தீர்த்தயாத்திரைச்சருக்கத்து 16-ஆஞ் செய்யுளிலுள்ளது.
நான்காமடியிற்குறிக்கப்பட்ட மூவர்-தேவாரம்பாடிய திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள்.திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்திகளும்
இந்தநாட்டில் முறையே திருவதிகைதிருவெண்ணெய் நல்லூர் என்ற ஊரில்
தோன்றியவராவர். காணாச்செஞ்சுடர்க்கடவுளை என்றும் பாடம்.
அந்தத் திருநாட்டு, அந்த நதி அமுதம் பெருகி, இரு கரையும்
சந்தத்துடன் கார் அகில் கமழ, தடங் கா அகம் சூழ் தடம் நிறைப்ப,
கந்தக் குவளை மேய் பகட்டின் காலால் நெரிந்து, கதிர் முத்தம்
சிந்தச் சிந்த, கொழு முனைக்கு முன் ஏர் உழுவ, செய்ச் சங்கம்.–10-
யாற்றுநீர்பாய்வதனாலானநீர்வளவருணனை. அமுதம் – நீர். சந்தம் –
சந்தனம். தடங்காவகம் சூழ் தடம் – பெரியசோலையினுள்ளிடத்திற்
சூழ்ந்திருக்கும்தடாகம். பகடு – எருமைக்கடா. செய்ச்சங்கம் – கழனியிலுள்ள
சங்குப்பூச்சிகள்.முத்தஞ்சிந்த ஏருழுவது போல உழுவனஎன்க.
முன்னேயுழவுசெயுஞ்சங்கம் என்றும்பாடம்.
கொழு நீர் மது உண் கடைசியர் தம் குழை தோய் விழியின் எழு நிழலைக்
கழுநீர் மலர் என்று, ஒரு பகலும் காலால் மயக்கிக் களை துவைப்பார்,
முழு நீரூடு தமது நிழல் முழுதும் கண்டு, தொழுது, இறைஞ்சி,
செழு நீர் அரமங்கையர் என்று திகைப்பார், நகைப்பார், செறுவெல்லாம்,–11-
இதுவும் அது : ஒருபகலும் – களைபறிக்கும் ஒவ்வொரு பகலிலும்.
களைதுவைப்பார் – களைபறிப்பவராகியமகளிர். மயக்கித் திகைப்பாராய்
நகைப்பாரென்க.செறு – வயல்.
கரும்பும் கமுகும் தலைதெரியாக் கழனிச் செநநெற் களையாகி,
அரும்பும் குவளை நறு மலர்த் தேன் ஆறாய், எங்கும் சேறாக,
விரும்பும் சுருதி இசை கேட்டு, வேலைக் கழிக் கானல்அம் கைதை,
சுரும்பும் தும்பிகளும் அருந்த, மாறாது என்றும் சோறு இடுமால்.–12-
நீர்வளத்தாலான நிலவளம்: தலைதெரியா – வேற்றுமை தெரியாத.
கானல் – கடற்கரை.கைதை – தாழை: இதனிடத்து ஒரு பிரபுவின்தன்மை
தொனிக்கும். சுருதியிசை -சுருதியோடுகூடிய இசை. சோறு – உணவு என்ற
பொருளும்தோன்றும்: தாழையினுட்பகுதி சோறு எனப்படும்; மகரந்த மென்றாரு
முளர்.
கம்பலைக் கழனிச் சேனைக் காவலர் கரங்கள் நீக்கி,
பைம் புலத்து உழுநர் தங்கள் பல வகை விளைவும் ஈட்டி,
ஐம்புலத்தவர்க்கும் ஈந்து, ஆங்கு அறத்தினை வளர்த்தலாலே,
செம் புலக்கிழத்திக்கு ஆவி அன்னது, அச் செல்வ நாடே.–13-
நாட்டுச்சிறப்பு: சேனைக்காவலர்கரங்கள் – சேனையையுடைய
மன்னவர்க்கு உரியவரிப்பொருள்கள். ஐம்புலத்தவர் – தென்புலத்தார், தெய்வம்,
விருந்து, ஒக்கல்,தான் என்பவர். புலக்கிழத்தி – நிலமகள்.
எண்ணும் மா கடல் ஏழும் அன்று இரு கடலாக,
பெண்ணை மா நதி நெய் பால் பெருகும் அப் பழனப்
பண்ணை நீள் வளம் பல்கு சீர்ப் பழைய நல் நாட்டில்,
வண்ணம் நான்கினும் உய்ந்துளோன் ஒரு முனி வந்தான்.–14-
அந்நாட்டில் வில்லிபுத்தூரார் தோன்றியமை: வண்ணம் நான்கு –
பிராமணர்க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்பன. கடலேழு உவரி –
கருப்பஞ்சாறு தேன்நெய் தயிர் பால் நன்னீர் இவற்றின் மயமானவை.
ஐந்து பாவுடை நால் வகைக் கவிக்கு அதிபதியாய்,
வந்து, வட்டமாமணியினன் மணி முடி புனைந்து,
பைந் துழாய் முடிப் பரமனைப் பல கவித் துறையும்
சிந்தையான் மொழிந்து, அன்பர்தம் திருவுளம் பெற்றோன்;–15-
மூன்று கவிகள் வில்லிபுத்தூராரின் சிறப்பு: ஐந்துபா – வெண்பா
ஆசிரியப்பாகலிப்பா வஞ்சிப்பா மருட்பா என்பன. நால் வகைக்கவி ஆசு
மதுரம் சித்திரம்வித்தாரம் என்பன. கவிக்கதிபதியாதற்கேற்ற
முடிபுனைந்துள்ளானென்க.அன்பர்தந் திருவுளம் பெற்றோன் என்றது,
திருமாலடியார்களால் இவன் சிறந்தஅடியவனென்று மதிக்கப்பெற்றவ னென்றபடி.
தென்னர், சேரலர், செம்பியர், எனப் பெயர் சிறந்த
மன்னர் மூவரும் வழங்கிய வரிசையால் உயர்ந்தோன்;
முன்னர் எண்ணிய முத் தமிழ்ப் பாவலர் எவரும்
பின்னர் வந்து ஒரு வடிவு கொண்டனர் எனப் பிறந்தோன்;–16-
தென்னர் – பாண்டியர், கேரளரென்றும் பாடம்.செம்பியர் – சோழர்.
வரிசை -சிறப்பு. முன்னர் – முற்காலத்து.
தாரகாயண வண்டு அலை தண்டலைச் சனியூர்
வீரராகவன் அருள் பெறு வில்லிபுத்தூரன்,
ஊர் அரா முடி மண்மிசை உயர் புகழ் நிறுத்தி,
தீர காகளம் பெறுதலின், யாரினும் சிறந்தோன்.–17-
தார காயன வண்டு – தாரமென்ற இசையைப் பாடவல்ல வண்டு.
காயணவண்டுஎன்று படிப்பாருமுண்டு. தாரகாகண வண்டு என்றும் பாடம். அலை
– சஞ்சரிக்கின்ற,தண்டலை – சோலை. தீரகாகளம் – மனத்திண்மையைக் காட்டும்
வெற்றிச்சின்னம்.தகப்பனார் பெயர் வீரராகவனென்பது இதிற் பெறப்படும்.
எங்கும் இவன் இசை பரப்பி வரும் நாளில்,
யாம் உரைத்த இந்த நாட்டில்,
கொங்கர் குல வரபதியாட்கொண்டான் என்று்,
ஒரு வண்மைக் குரிசில் தோன்றி,
வெங் கலியின் மூழ்காமல், கருநடப் பேர்
வெள்ளத்து விழாமல், நான்காம்
சங்கம் என முச் சங்கத் தண் தமிழ் நூல்
கலங்காம்ல, தலைக்கண்டானே.–18-
நான்குகவிகள் வில்லிபுத்தூராரைக் கொண்டு பாரதம் பாடுவித்த
வரபதியாட்கொண்டான் சிறப்புக் கூறும்: நடுநாடு, மாகதக்கொங்கு எனப்படும்:
அதனையாண்டவர் கொங்கர்: அக் கொங்கர்குலத்துத் தோன்றியவன்
வரபதியாட்கொண்டானென்ற அரசன.. கலி – வறுமை. அடுத்துள்ள
கருநாடநாட்டினுள்வழங்கும் கன்னடபாஷையில் மனம்பதியாமல்
செந்தமிழ்ப்பாஷையிலேயே அன்னான்மனம் பதிந்ததனால், ‘கருநடப்பேர்
வெள்ளத்து விழாமல்’ என்றது.முதலிடைகடைச்சங்கமென்று மதுரையில் வழங்கிய
சங்கங்களில் அரங்கேறியதமிழ்நூல்களை நிலைகலங்காமற் பாதுகாத்துத்
தன்னாட்டில் நான்காஞ்சங்கமென்னுமாறுபுலவர் கூட்டத்தைத் திரட்டியிருந்தனன்
அந்தமன்னவ னென்க.
மற்று அவன், இப் புவி ஆளும் வளவனுக்கு
முடி கவித்து, வழுதித் தெவ்வைச்
செற்று, அவனுக்கு அவனி எல்லாம் செங்கோன்மை
நிலையிட்டு, செல்வம் எல்லாம்
கற்றவருக்கு இரு கையுடைக் கற்பகம்போல்
இனிது அளித்து, கமல மாதும்
கொற்றவையும் மனம் களிப்ப, தன் நாமம்
மேருவினும் கோட்டினானே.–19-
வழுதித்தெவ்- பாண்டியனாகிய பகைவன். கொற்றவை – வீரலட்சுமி.
கோட்டினான்-எழுதினான். இச்செய்யுளின் குறிப்பினால், சோழவரசர்க்குக்
கீழ்ப்படிந்துஅவனதுபகைவரையோட்டிய சிற்றரசன் இந்த வரபதியாட்கொண்டா
னென்பதுபெறப்படும். பகைவென்றதனால் கொற்றவையும், புலவர்க்கு வழங்குமாறு
அப்பகைவரிடத்தினின்றுபெரும் பொருளை யீட்டியதனாற் கமலமாதும்களிப்ப
ரென்க.
தென் நாட்டில், வட நாட்டில், குட நாட்டில்,
குண நாட்டில், தெவ்வர் ஒட,
கல் நாட்டி, அமர் பொருது, கங்கை நீர்
ஊட்டுவித்து, கண்டன் வேங்கை
எந் நாட்டும் எழுதி, அவன் திரு மரபோர்
பெற்ற புகழ் யாவர் பெற்றார்’
அந் நாட்டுக் கொற்றம் எல்லாம் அக் குரிசில்
புகழொடு அவதரித்தது அன்றோ.–20-
அமர்பொருது பிறகு அப்போரில் பெருவீரங்காட்டியிறந்தோர்க்கு
அவர்வடிவந்தீட்டிய கல்லைப் பிரதிஷ்டைசெய்து அதற்குக் கங்கைநீரைக்
கொண்டுஅபிஷேகஞ்செய்வித்துஎன்க. நாட்டி = நிறுத்தி. கண்டன் –
சோழனுடைய, வேங்கை -புலிக்கொடி.
ஆற்றிய மெய்ச் செல்வத்தால் அளகையை வென்று
இருங் கவினால் அமரர் ஊரை
மாற்றிய பொன் தட மதில் சூழ் வக்கபாகையின்,
அறத்தின் வடிவம் போலத்
தோன்றிய அக் கொங்கர்பிரான், சூழ் தமிழான்
ஆட்கொண்டான், சுற்றத்தோடு்
போற்றிய இப் புவி முழுதும் தன் திருப்பேர்
மொழி கொண்டே புரந்தான் அம்மா.–21-
அமரரூரைமாற்றிய – தேவரூரை மேம்பாடு இல்லாமற் செய்வித்த.
மாற்றியவக்கபாகை, பொற்றடமதில்சூழ் வக்கபாகை என்க. ஆற்றிய மெய்ச்
செல்வம்என்றதனால் தருமவழியாற் சம்பாதித்த செல்வமென்றதாயிற்று.
வக்கபாகை -வரபதியாட்கொண்டானது நகரம்.
பிறந்து, உய்யக் கொண்டவன், இப் பேர் உலகம்
பெரு வாழ்வு கூரும் நாளில்,
நிறைந்த புகழ்ச் சனி நகர் வாழ் வில்லிபுத்தூரனை
நோக்கி, ‘நீயும் நானும்
பிறந்த திசைக்கு இசை நிற்ப, பாரதமாம்
பெருங் கதையை, பெரியோர்தங்கள்
சிறந்த செவிக்கு அமுதம் எனத் தமிழ் மொழியின்
விருத்தத்தால் செய்க!’ என்றான்.–22-
வரபதியாட்கொண்டான் வில்லிபுத்தூராரைப் பாரதத்தை
விருத்தப்பாவாற்பாடுமாறுகேட்டுக்கொண்டது. பிறந்து உய்யக்கொண்டவன் –
தான் பிறந்ததனால்உலகத்தாரைஉய்யுமாறு செய்தவனாகிய ஆட்கொண்டான்.
இருக்கு ஆதி மறை மொழிந்தோன் இயம்பிய இப்
பெருங் கதையை யாரும் கேட்ப,
சுருக்காகப் புராண முறை சொல்லுக!’ என்றலின்,
அவனும் சொல்லலுற்றான்;
பெருக்காளர் முதலாய பெருங் குலத்தோர்
இக் கதையின் பெற்றி கேட்டார்;
செருக்காக அவன் மைந்தன் வரந்தருவான்
இப் பதிகம் செப்பினானே.–23–
இருக்காதி மறைமொழிந்தோன் – வியாசன். சுருக்காக – சங்கிரகமாக.
புராணமுறை – பழமையான முறைமை. என்றலின்- என்று சொன்னதனால்.
அவனும் -அந்த வில்லிபுத்தூரனும். பெருக்காளர் – செல்வப்பெருக்கமுள்ளவர்:
இச்சொல் -அறிவுச் செல்வப் பெருக்கமுடையாரையும் பொருட் செல்வப்பெருக்க
முடையாரையுங்காட்டும்.செருக்கு ஆக – கல்விச்செருக்குத் தோன்ற.
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply