அத்தினபுரியில் ஐ-இரு பதின்மர் ஐவர், என்று இரண்டு அற, தம்மில்
ஒத்தனர் மருவ, தெவ்வர் மெய் வெருவ, உளம் மகிழ் நாளில்,
மற்று ஒரு நாள்,
மைத்துனன் முதலாம் தமரையும், தக்க மந்திரத்தவரையும், கூட்டி,
எண்ணினான், இகலோன்.-திருதராட்டிரன் தருமனுக்கு முடிசூட்ட நிச்சயித்தல்.
அத்தினபுரியில் – அஸ்தினபுரத்திலே, ஐ இரு பதின்மர் ஐவர்
என்றஇரண்டு அற – நூற்றுவரும் ஐவரும் என்ற இரண்டு பகுப்பு இல்லாமல்
[அந்தநூற்றைவரும்], தம்மில் ஒத்தனர் மருவ – தங்களுள் ஒற்றுமையுடையராய்க்
கூடிவாழ,தெவ்வர் மெய் வெருவ – (அதனால்) பகைவர்கள் உடம்புநடுங்க,
உளம்மகிழ் நாளில்- (அனைவரும்) மனம்மகிழ்ந்திருந்த நாள்களில், ஒரு நாள்-
ஒருதினத்தில்,-இகலோன்- வலிமையையுடையனான திருதராட்டிரன், –
மைந்துனன் முதல் ஆம்தமரைஉம் – (தன்) மைத்துனனாகிய சகுனி முதலான
பந்துக்களையும், தக்கமந்திரத்தவரைஉம்-தகுதியையுடைய மந்திரிகளையும், கூட்டி-
ஒருங்கு வரவழைத்துச்சபை சேர்த்து (ஆலோசித்து), இ தினம்உயர்ந்த
தினம்எனமகுடம்சூட்டுதற்குஎண்ணினான் – இந்தத்தினமே உத்தமமான தினமென்று
குறிப்பிட்டு (அன்றைக்கே)தருமனுக்கு) முடிசூட்ட நிச்சயித்தான்;
மந்திரிகளுக்குத் தகுதி -அறிவு, முயற்சி, இராசகாரியங்களில் தேர்ச்சி,
அரசனுக்கு இடித்திடித்துக் கட்டுரை கூறும் வன்மை, பழுதெண்ணாமை, தவறாது
ஆலோசிக்குந்திறம் முதலியன.
செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள்’ என்று,
முழு முரசு அறைந்து, நகரி கோடித்து, முடி புனை கடி கொள்
மண்டபத்தின்
எழு முரசு அதிர, பகீரதி முதலாம் எத் துறைப் புனல்களும் இயற்றி,
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க, சுருதி மா முனிவரும்
தொக்கார்.-இதுமுதல் நான்குகவிகள்-தருமபுத்திரனது
பட்டாபிஷேகம் கூறும்.
(திருதராட்டிரன்), ‘செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு-
மாட்சிமையுடையமுரசவாத்தியத்தின் வடிவத்தையெழுதிய கொடியை உயரநாட்டிய
தருமாராசனுக்கு, இன்று – இத்தினம், திரு அபிடேகம் நாள்-சிறந்த
பட்டாபிஷேகம்செய்வதற்குஉரியநாள்,’ என்று-என்றுசொல்லி, முழுமுரசு அறைந்து-
பெரிய முரச வாத்தியங்களைஅடிப்பித்து எங்குந்தெரிவித்து, நகரி கோடித்து-
அந்நகரத்தை அலங்கரிப்பித்து, முடிபுனை கடி கொள் மண்டபத்தின்-
முடிசூட்டுதற்கு உரியவிளக்கத்தைக்கொண்ட(பட்டாபிஷேக) மண்டபத்திலே,
எழு முரசு அதிர பகீரதி முதல் ஆம் எ துறைபுனல்கள் உம் இயற்றி-ஒலியெழுகிற
முரசவாத்தியங்கள் முழங்கக் கங்கை முதலியஎல்லாப்புண்ணிய தீர்த்தங்களினின்று
நீர் கொணர்வித்து, தொழு முரசுடன் வெள்வலம்புரி முழுங்க-(யாவராலுங்)
கொண்டாடப்படுகிற முரசவாத்தியங்களுடனேவெண்மையான வலம்புரிச்
சங்குகளையும் முழங்குவிக்க, சுருதி மா முனிவர்உம்தொக்கார் –
வேதங்களையறிந்தபெரிய இருடிகளும்வந்து கூடினார்கள்;
முதலடியில், முரசு – ஆகுபெயர். முழு முரசு – முரசுக்குஉரிய
இலக்கணத்திற்குறையாத முரசு. அறைந்து, கோடித்து, முழுங்க- பிறவினைப்
பொருளில் வந்ததன்வினை. மங்கலவாத்தியம் வாசிப்போர் அதனைத்தொழுது
தொடங்கும் மரபுபற்றி, ‘தொழுமுரசு’ என்றதாகவும் கொள்ளலாம்; அன்றியும்,
வாத்தியம் வாசித்தல் என்றபொருளில் ‘வாத்தியம் சேவித்தல்’ எனப் பரிபாஷையாக
வழங்குதற்கு ஏற்ப, ‘தொழுமுரசு’ என்றதாகவுங் கொள்ளலாம்.
அத்தியின் பலகை நவமணி அழுத்தி, ஆடகத்து அமைத்து,
அரி முகத்தால்
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி, பசும் பொனின்
தசும்புகள் நிறைந்த
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர்-சோமன்
வந்து உதித்து,
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய,
வார்த்தெனவே.
வியாதன் தௌமியன் முதலோர் – வியாசனும் தௌமியனும்
முதலானமுனிவர்கள்,-அத்தியின் பலகை- அத்திமரத்தின் பலகையின்மேல்,
ஆடகத்துஅமைத்து-பொன்னினால் தொழில்செய்து, நவ மணி அழுத்தி-
நவரத்தினங்களைப்பதித்து, அரி முகத்தால் பத்தி கொள் பீடத்து-சிங்கத்தின்
முகம்தோன்ற ஒழுங்காகச்சித்திரிக்கப்பட்ட சிங்காதனத்திலே. அழகு உற இருத்தி-
(தருமபுத்திரனை)அழகாகவீற்றிருக்கச்செய்து, (அவனது முடியின்மேல்), பசும்
பொனின் தசும்புகள்நிறைந்த சுத்தம் நீர் – பசும்பொன்னாலாகிய குடங்களில்
நிறைந்துள்ள பரிசுத்தமானபுண்ணியதீர்த்தங்களை,-சோமன் வந்து உதித்து
சித்திரகிரியில் நெடு நிலாவெள்ளம்சீருடன் வழியவார்த்து என – சந்திரன்வந்து
உதித்து அழகிய மலையின்மேல் மிக்க நிலாப்பெருக்கை அழகோடு வழியும்படி
வார்த்தாற்போல, சொரிந்தனர் – சொரிந்தார்கள்;
தௌமியன் முதலியோர் பொற்குடங்களினின்று புண்ணிய தீர்த்தங்களை
அபிஷேகஞ்செய்யுமாறு ஊற்றுவது, மலையிலிருந்து எழுகின்ற உதயசந்திரன்
நிலாவைப்பொழிதலையொக்குமென்க: சந்திரமண்டலம் வெண்ணிறமுடையதாயினும்
உதிக்கும்போது செந்நிறமுடையதுபோலத் தோன்றுதல்இயல்பு. இனி, சுத்தனான
சந்திரன்-பரிசுத்தரான முனிவர்களுக்கும், நிலாப்பெருக்கு – புண்ணிய
தீர்த்தப்பெருக்குக்கும், மலை-தருமனுக்கும் உவமை யென்பாரும் உளர்;
தற்குறிப்பேற்றவணி. பீடமமைத்தற்கு அத்திப்பலகை சிறத்தலால், அதனை
யெடுத்துக்கூறினார். “ஒளதும்பரம்தத்ர நரேந்த்ரஸூநௌ-ப்ரஸ்த மாதஸ்துஷி
பத்ரபீடம்” என்றது, பாலபாரதம்.
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர்
உதயன் என்று உரைப்ப,
துதை அளி ததைந்த மாலையான் சென்னிச் சோதி மா மகுடமும் சூட்டி,
பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப, பகர் விதி முடித்தபின், பலரும்
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை
நீராசனம் எடுத்தார்.
மால் உதயம் வரையின்-பெரிய உதயகிரியின்மீது, ‘ உதயம்
ராகத்தோடும்உதித்த – உதிக்குங்காலத்து (மிக்கவிளங்குகிற) செந்நிறத்தோடு
தோன்றிய, தேர் உதயன்-(ஒற்றைத் தனியாழித்) தேரையுடைய சூரியன், ‘ என்று
உரைப்ப-என்று உவமை சொல்லும்படி, துதை அளி ததைந்த மாலையான் சென்னி-
நெருங்கிய வண்டுகள் மொய்க்கிற மாலையையுடையனான தருமபுத்திரனதுசிரசில்,
சோதி மா மகுடம்உம் சூட்டி-ஒளியையுடைய சிறந்த கிரீடத்தையும் கவித்து, பதம்
யுகம் அரசர் முடிகளால் சிவப்ப – (அவனுடைய) இரண்டுபாதங்களும் (அவற்றை
வணங்குகிற) அரசர்களுடைய முடிகள் படுதலாற் சிவக்க, பலர் விதி முடித்த பின் –
(நூல்களில்) விதிக்கப்பட்ட பட்டாபிஷேகச்சடங்கை நிறைவேற்றிய பின்பு, அமிர்தம்
மொழியவர் பலர்உம் – அமிருதம்போல் இனிய சொற்களையுடைய பல மகளிர்,
இதயம் ஒத்து – (தம்மில்) மனங்கலந்து [அன்புடனும் மகிழ்ச்சியுடனும்), அடைவே-
முறையே, இருகை – இரண்டுகைகளாலும், நீராசனம் – மங்களவாலத்தியை,
எடுத்தார்-; (எ-று.)
உதயகிரி-தருமபுத்திரனுக்கும், அதன் சிகரம்-அவனது சிரசுக்கும்.
உதயசூரியமண்டலம் – கிரீடத்துக்கும் ஒப்பு எனக்காண்க. மகுடஞ்சூட்டுதல்,
விதிமுடித்தல் இவற்றுக்கு எழுவாய் – கீழ்க்கவியில் வந்த ‘வியாதன், தௌமியன்
முதலோர்’ என்பது. மகுடமுஞ்சூட்டி, உம் – இறந்தது தழுவியது
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற, ஒரு குடை
மதி என நிழற்ற,
கொற்றவர் முன் பின் போதர, மடவார் குழுப் பொரி சிந்தி
வாழ்த்து எடுப்ப,
இற்றை நாள், எவரும், வாய்த்தவா! என்ன, ஏழ் உயர்
இராச குஞ்சரமேல்,
மற்றை நால்வரும் தன் சூழ்வர, தருமன்-மைந்தன்
மா நகர் வலம் வந்தான்.–தம்பியர் சூழ, யானைமீது தருமன் நகர் வலம் வருதல்
ஒற்றையோடு இரட்டைவலம்புரி மிழற்ற-மூவகைச் சங்க
வாத்தியங்கள் முழங்க, ஒரு குடை மதிஎன நிழற்ற-ஒற்றை வெண்கொற்றக்குடை
சந்திரமண்டலம்போல ஒளிசெய்ய, கொற்றவர் முன் பின் போதர-வெற்றியையுடைய
அரசர்கள் முன்னும் பின்னும் போக, மடவார் குழு பொரிசிந்தி வாழ்த்துஎடுப்ப-
மகளிர் கூட்டம் (மங்களார்த்தமான) நெற் பொரிகளைச்சிந்தி வாழ்த்துக் கூற,
எவர்உம்இற்றை நாள் வாய்த்த ஆ என்ன – ‘இந்தநாள் வாய்ந்த வகை
(வியக்கத்தக்கது) ‘என்று அனைவரும் கொண்டாட, மற்றை நால்வர்உம் தன்
சூழ்வர – வீமன் முதலியதம்பியர் நால்வரும் தன்னைச் சுற்றிலும்வர,
தருமன்மைந்தன் – தருமபுத்திரன்,ஏழ்உயர் இராச குஞ்சரம்மேல் –
ஏழுமுழம்உயர்ந்தபட்டத்து யானையின்மேல் ஏறி,மா நகர் வலம்வந்தான் –
பெரிய அந்நகரைப் பிரதஷிணமாகப் பவனிவந்தான்; (எ-று.)
ஒற்றையோடிரட்டை வலம்புரி-வெற்றிச்சங்கு மங்கலச்சங்குகொடைச்சங்கு
என்பன; முன்னொற்றை யிருசங்க முடனூத” என்பர், விராடபருவத்தும். இனி,
ஒற்றையோடு – ஊதுகொம்புகளுடனே, இரட்டை வலம்புரி – மங்கலச்சங்கும்
வெற்றிச்சங்கும் எனினும் அமையும். குஞ்சரம்-மலைப்புதர்களிற் சஞ்சரிப்பதென்று
உறுப்புப்பொருள்படும்; குஞ்சம் – புதர். இராசகுஞ்சரம் – அரசுவாவெனப்படும்
மா நகர் வலமாய் வந்து, தன் குரவர் மலர்ப் பதம்
முறைமையால் வணங்கி,
கோ நகர் இருக்கை அடைந்தனன்; ஒரு நாள், கொற்றவன்
ஏவல் கைக்கொண்டு,
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்காப் பிறங்கு நீள்
கானிடை அழிந்த
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று, அந்தத் தொல் நகர்
வைகுமா துணிந்தான்.-பின்பு திருதராட்டிரனேவலால் தருமன் காண்டவப்
பிரத்தம் சேரத் துணிதல்.
மா நகர் வலம் ஆய் வந்து – (இவ்வாறு பெரிய அந்நகரத்தைப்
பிரதட்சிணமாக ஊர்கோலம் வந்து, தன் குரவர் மலர் பதம் முறைமையால்
வணங்கி -தனக்குஉரிய பெரியோர்களுடைய தாமரைமலர்போன்ற பாதங்களை
முறைப்படிவணங்கி, கோ நகர் இருக்கை அடைந்தனன் – தலைமையான
அவ்வத்தினாபுரியில் அரசு வீற்றிருத்தலைப் பொருந்தினான், (தருமன்); (அவன்),
ஒருநாள் – பின்பு ஒருநாள், கொற்றவன் ஏவல் கைக்கொண்டு –
திருதராட்டிரனுடையகட்டளையைப் பெற்று, பேய் நகர் எனும் ஆறு-பேய்கள்
எவரும் சஞ்சரியாமலுள்ள,பிறங்கு நீள்கானிடை-அடர்ந்த பெரிய காட்டில்,
முன்னோர் இருந்தது அழிந்த தூநகர் ஒன்று அந்த தொல் நகர் – பழைய
அரசர்கள் இருந்ததான நல்ல நகரமொன்று(பின்பு) அழிபட்டதாக
அந்தப்பழையஊரில், வைகும் ஆக-இருக்கும்படி, துணிந்தான்- நிச்சயித்தான்;
(எ-று.)
துரயோதனாதியரின் துர்ப்போதனையினாற் பாண்டவரைக்
காண்டவப்பிரத்தத்திற்குச் செல்லுமாறு திருதராட்டிர னேவினானென்பது,
முதனூலால்விளங்கும். இங்கு ‘தன்குரவர்’ எனப்பட்டவர் – கிருபன் துரோணன்
வீடுமன்திருதராட்டிரன் விதுரன் குந்தி காந்தாரி யென்பவர். முறைமையால்
வணங்குதல்-ஒருவரை வணங்கியபின் ஒருவரையாக முறையே வணங்குதலும்,
அஷ்டாங்க முறைப்படிவணங்குதலும், மங்கலச்சடங்குமுடிந்தபின் பேரியோரை
வணங்குதலென்றவழக்கின்படி வணங்குதலுமாம்.
அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்தம்
பதியின் அங்குரித்த
செங் கண் மால் முதலாம் கிளைஞரும், வயிரத் தேர்மிசைச்
சேனையும், தாமும்,
வெங் கண் மாசுணத்தோன் எண்ணம் எத் திசையும் வெளிப்பட,
வேந்தர் ஐவரும் போய்,
தங்கள் மா தவத்தால் காண்டவப் பிரத்தம் என்னும்
அத் தழல் வனம் அடைந்தார்.-பாண்டவர் கண்ணபிரானுடன் காண்டவப்பிரத்தஞ்
சேர்தல்.
வேந்தர் ஐவர்உம்-பாண்டவராசர்ஐந்துபேரும்,-அம்கண் மா ஞாலம்
முழுவதுஉம் கொடுத்தற்கு- அழகிய இடமகன்ற பெரியபூமிமுழுவதையும் (தங்கட்குக்)
கொடுக்கும்படி, ஆயர்தம்பதியின் அங்குரித்த – திருவாய்ப்பாடியி லவதரித்த, செம்
கண்மால்-சிவந்தகண்களையுடைய திருமாலை [கண்ணனை], முதல் ஆம்-
முதலாகக்கொண்ட, கிளைஞர்உம் – சுற்றத்தார்களும், வயிரம் தேர் முதல்சேனைஉம்
வைரம்பொருந்தியதேர்முதலிய சேனைகளும், தாம்உம்-தங்களுமாக,-வெம் கண்
மாசுணத்தோன் எண்ணம் எ திசைஉம் வெளிப்பட – கொடியகண்களையுடைய
பெரும்பாம்பின் வடிவமெழுதிய கொடியையுடைய துரியோதனனது எண்ணம் எங்கும்
வெளிப்படும்படி, தங்கள் மா தவத்தால் – தாங்கள் முற்பிறப்பிற்செய்த பெருந்
தவத்தின் பயனால், காண்டவப்பிரத்தம் என்னும் அ தழல்வனம் போய்
அடைந்தார்-காண்டவப்பிரத்தமென்று சொல்லப்படுகிற அந்தக்கொடியகாட்டிற்
போய்ச்சேர்ந்தார்கள்; (எ – று.)
இனிநிகழும்மகாபாரதயுத்தத்தில்பகையெல்லாம் தொலைத்துக் கண்ணபிரான்
தருமனுக்கு நிலவுலகமுழுவதையுங் உரியதாகச் செய்தல்தோன்ற, ‘ஞாலமுழுவதுங்
கொடுத்தற்கு அங்குரித்தமால்’ என்றார். கண்ணன் திருவவதரித்தது மதுரையிலாயினும்
ஆதியிற் சிலபிராயமளவும் அத்தன்மைவெளிப்படாமலே உடனே
திருவாய்ப்பாடிசேர்ந்து அங்குப்பிறந்தவனாகவே பிரசித்தி பெற்று வளர்ந்தன
னாதலால், ‘ஆயர்பதியினங்குரித்த’ என்றார். ஆயர்பதி-கோகுலம். பாண்டவர்.
காண்டவப்பிரத்தமடைந்தபின், அதனை இந்திரப்பிரத்தமென்னுஞ் சிறந்த நகரமாக
அமைத்து அதில் வீற்றிருந்து அரசுபுரிதல், நாரதமுனிவனருள்பெற்றுக்
குடும்பகலகமின்றிவாழ்தல், அருச்சுனனது தீர்த்தயாத்திரையாலும் காண்டவ
தகனத்தாலுமாகிய பெருமைகளை யடைதல், உபபாண்டவரும் அபிமந்யுவுமாகிய
புத்திரரைப்பெறுதல். இராசசூயயாகஞ்செய்து மேம்படுதல் முதலிய
பேறுகளையடைதலால், ‘தங்கள்மாதவத்தால் அத்தழல்வனம் அடைந்தார்’ என்றார்.
மிக்கபொறாமை கொண்ட துரியோதனன் தனது சூழ்ச்சிக்கு இணங்கிய
தந்தையைக்கொண்டு ஏவி முன்பு இவர்களை வாரணாவதத்துக்கு
அனுப்பியமைபோலவேஇப்பொழுதும் காண்டவப்பிரதத்துக்குச் செலுத்தினனென்ற
கொடுமை பிரசித்தமாகவென்பது, மூன்றாமடியிற் குறித்தது. தேர்முதற்சேனை –
இரத கச துரக பதாதி. ‘வயிரத் தேர்மிசைச்சேனையும்’ என்றும் பாடம்.
போய் அவண் புகுந்த பொழுது, பைங் கடலும், பூவையும்,
புயலும், நேர்வடிவின்
மாயவற்கு, ‘எவ்வாறு, இவ்வுழி இவர்கள் வாழ்வது?’
என்று, ஒரு நினைவு எய்தி,
நாயகக் கடவுள்தன்னை முன்னுதலும், நாக நாயகனொடும் நடுங்கி,
மேய கட்புலன்கள் களித்திட, திருமுன் நின்றனன்,
விச்சுவகன்மா.-அங்கு நகர்செய்தற்குக் கண்ணன் இந்திரனோடு
விசுவகர்மனைவருவித்தல்.
போய் அவண் புகுந்தபொழுது போய் அவ்விடத்திற் சேர்ந்த
பொழுது,-பைங் கடல்உம் பூவைஉம் புயல்உம் நேர் வடிவின் மாயவற்கு-
பசியகடலையும்காயாம்பூவையும் மேகத்தையும் ஒத்த திருமேனியையுடைய
கண்ணபிரானுக்கு,இவர்கள் இ உழி வாழ்வது எ ஆறு என்று ஒரு நினைவு எய்தி-இவர்கள்இவ்விடத்தில் வாழ்வது எப்படி யென்று ஓர் எண்ணம் உண்டாக,
(அதனால் அப்பெருமான்), நாயகம், கடவுள் தன்னை முன்னுதலும் – தலைமைத்
தேவனான[தேவராசனான] இந்திரனை நினைத்தவுடனே, (அங்கு வந்துசேர்ந்த),
நாகர்நாயகனொடு-தேவர் தலைவனான இந்திரனுடனே, விச்சுவகன்மா-
விசுவகர்மாவும்,நடுங்கி-அச்சங்கொண்டு, மேய கண்புலன்கள் களித்திட திருமுன்
நின்றனன்-பொருந்திய (தனது) கண்களாகிய பொறிகள் களிப்படைய
(அப்பெருமானது) திருமுன்பே வந்துநின்றான்; ( எ- று.)
காண்டவப்பிரத்தத்தில் முன்னோர் இருந்த தொன்னகரம் முன்னமே
அழிந்துவிட்டதாதலின் அங்குப் பாண்டவர் எங்ஙனம் வசித்தற்கு இயலும் என்று
திருவுளம்பற்றிய கண்ணபிரான் அங்குத் தேவத்தச்சனான விசுவகர்மனைக்கொண்டு
காடுகெடுத்து நாடாக்கி ஒருதிருநகரஞ்செய்விக்கக்கருதி அதன் பொருட்டுத் தேவர்
தலைவனான இந்திரனைச் சிந்தித்தவளவிலே, அவன் வந்து சேர,
அவனதுபரிவாரங்களில் ஒருவனான விசுவகர்மனும் அவனுடனே வந்துநின்றன
னென்பதாம். இந்திரனுக்கும் விசுவகர்மாவுக்கும் கண்ணபிரானிடத்துஉள்ள
பயபக்திவிசுவாசங்களைக் குறிக்க ‘நாயகனொடுநடுங்கி’ என்றார். விசுவகர்மா-
அஷ்டவசுக்களில் எட்டாமவனான பிரபாசனுக்குப் பிரகஸ்பதியினுடன் பிறந்தாளிடம்
பிறந்தபிள்ளை. இவன்விசித்திரங்களான அநேகசிற்பகருமங்களை அறிந்தவனாய்த்
தேவர்களுக்குத் தச்சனாகி அநேகதிவ்வியாபரணங்களையும், விமாநாதிகளையும்
அவர்கட்கு நிருமித்துக்கொடுப்பவன்
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி
புலவனை நோக்கி,
திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான்: ‘தேவரும்
மனிதரும் வியப்ப,
மண்ணினும், புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள
உலகினும், நமதாம்
விண்ணினும், உவமை இலதென, கடிது ஓர் வியல் நகர்
விதித்தி, நீ’ எனவே,-இந்திரன் விசுவகர்மனைநோக்கி ‘இங்கு ஓர்நகர் செய்’
என்னல்.
அமரர் சேகரன்-தேவர் தலைவனாகிய இந்திரன்,
நுண்ணிதின்உணர்தோர் உணர்தரும் சிற்பம் நூல் அறி புலவனை நோக்கி-
நுட்பமாக(க்கருவி நூற்பொருள்களை) அறிந்தவர் அறியத்தக்க சிற்பசாஸ்திரத்தை
யறிந்த தேர்ந்த அறிவுடையானாகிய விசுவகர்மாவைப்பார்த்து,- ‘தேவர்உம்
மனிதர்உம் வியப்ப – தேவர்களும் மனிதர்களும் கண்டு அதிசயிக்க, மண்ணின்உம்
புயங்கர் பாதலம் முதல்ஆம் மற்று உள உலகின்உம் நமது ஆம் விண்ணின்உம்
உவமை இலது என -பூலோகத்திலும் சர்ப்பசாதியாரது பாதாளலோகம் முதலாகிய
மற்றுமுள்ள உலகங்களிலும் நம்முடையதாகிய சுவர்க்க லோகத்திலும் ஒப்பில்லை
யென்று சொல்லும்படி, ஓர் வியல் நகர்-ஒரு பெரிய நகரத்தை, நீ கடிது விதித்தி-நீ
வரைவில் இயற்றுவாயாக, ‘ என-என்று, திண்ணிதின் மொழிந்தான்-உறுதியாகக்
கட்டளை கூறினான்; ( எ-று.)
கண்ணபிரானது திருவுள்ளத்தை அறிந்து அதற்குஏற்ப இந்திரன் கம்மியர்
தலைவனுக்குக் கட்டளையிட்டன னென்க. கண்ணனதுதிருவுள்ளமுவத்தலை
வேண்டுபவனாதலின், ‘நமதாம்விண்ணினும் உவமை யிலதென
நகர்விதித்தி’ என்றான்
தேவினும், தேவ யோனியில் பிறந்த திரளினும், சிறந்த யாவர்க்கும்,
பூவினும், எவ் எவ் உலகினும், முன்னம் புந்தியால்
இயற்றிய புரங்கள்
யாவினும், அழகும் பெருமையும் திருவும் இன்பமும்
எழு மடங்கு ஆக,
நாவினும் புகல, கருத்தினும் நினைக்க, அரியது ஓர் நலம்
பெறச் சமைத்தான்.-அக்கட்டளைப்படி விசுவகர்மன் சிறந்ததொரு
நகரத்தையமைத்தல்.
தேவின்உம் – தேவசாதியிலும், தேவயோனியில் பிறந்த திரளின்உம்-
அத்தேவசாதியிற் சம்பந்தப்பட்ட [அசுரர் முதலிய) கணங்களிலும், சிறந்த
யாவர்க்குஉம்-சிறப்புற்ற (இந்திரன் முதலிய) பலர்க்கும், (பயன்படும்படி), பூவின்உம்-
பூலோகத்திலும், எ எ உலகின்உம்-மற்றும் எந்தெந்த லோகங்களிலும், முன்னம் –
முன்பு, புந்தியால் இயற்றிய-(தனது) மனத்தால்நினைத்துநிருமித்த, புரங்கள்
யாவின்உம்-நகரங்கள் எல்லாவற்றைக்காட்டிலும், அழகு உம் பெருமைஉம் திருஉம்
இன்பம்உம் எழு மடங்கு ஆக-அழகும் பெருமையும் செல்வமும்
இன்பமும்ஏழுமடங்குமிகுதியாக அமையும்படி, நாவின் புகலஉம் கருத்தின்
நினைக்கஉம் அரியது ஓர் நலம்பெற-நாவினாற்சொல்லுதற்கும்
மனத்தினால்நினைப்பதற்கும் அரியதான ஒப்பற்ற சிறப்பைப் பெற, சமைத்தான் –
(விசுவகர்மன் ஒரு நகரத்தை) உண்டாக்கினான்; (எ-று.)
நினைத்தமாத்திரத்தில் தன்சக்தியால் நிருமிக்குந்தன்மையும், தனது
புத்திவிசேஷங்களை யெல்லாங் காட்டுமாறு செய்தமையும் தோன்ற,
‘புந்தியாலியற்றிய’ என்றார். தேவயோனியிற் பிறந்ததிரள். – அசுரர் கந்தருவர்
கின்னரர் வித்தியாதரர்யக்ஷர் கருடர்கிம்புருடர் சித்தர் உரகர் முதலியோர்
மரகதம், கோமேதகம், துகிர், தரளம், வைரம், வைதூரியம், நீலம்,
எரி மணி, புருடராகம், என்று இவற்றிற்கு ஆகரம் இந்த
மா நகர்’ என்று,
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார்; ‘ஆடகப்
பொருப்பினை அழித்து,
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா!’ என்று, தபதியர்
யாவரும் வியந்தார்.-அந்நகரச்சிறப்பை அனைவருங்கொண்டாடுதல்.
மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் எரி
மணி புட்பராகம் என்றஇவற்றிற்கு-மரகதம் கோமே தகம் பவழம் முத்து வச்சிரம்
வைடூரியம் நீலம் விளங்குகிற மாணிக்கம் புட்பராகம் என்ற
இந்தநவரத்தினங்களுக்கும், இந்த மா நகர் ஆகாம் – இந்தப்பெரியநகரம்
உறைவிடமாம், ‘ என்று-என்று சொல்லி, அரி முதல் இமையோர் அனைவர்உம்
புகழ்ந்தார்: – திருமால்முதலிய தேவர்க ளெல்லோரும் கொண்டாடினார்கள்; –
ஆடகம்பொருப்பினை அழித்து – பொன்மயமான மலையாகியமகா
மேருவைவடிவழித்து,தரணியில் நகர் ஒன்று அமைத்த ஆ – பூமியில் ஒரு
நகரமாகச் செய்தவிதம்என்னே! ‘ என்று-, தபதியர் யாவர்உம் வியந்தார் –
சிற்பிகளெல்லோரும்ஆச்சரியப்பட்டார்கள்; (எ-று.)
இந்நகரம் பொன்மயமாகப் பெரிதாய் அமைந்துள்ளதனால் பொன்மலையை
யழித்துச் செய்ததென்று வியக்கவும், எல்லாவகை யிரத்தினங்களும் இந்நகரில்
எங்கும்நிறைந்திருத்தலால் நவரத்தினங்களுக்கும் ஆகரமென்று புகழவும் ஆயிற்று.
தெய்வத்தச்சன் இந்திரனேவலால் தான் வந்திருப்பதையும், இந்திரன் பாண்டவர்க்குத்
தன்பெயரால் ஒருநகரை நிருமிக்குமாறு தனக்குக் கட்டளையிட்டிருப்பதையும்
ஸ்ரீக்ருஷ்ணனிடம் தெரிவித்து, அவ்வாறே சிறப்புற நகரியற்றினானென்ற இவ்வளவே
பாரதங்களிலுள்ளது. இங்குநின்று 26-ஆம் பாடல் வரையிலுள்ள வருணனைகள்
பாலபாரதத்திலில்லை. பெரும்பாலும் வருணனைப்பகுதிகளை இந்நூலாசிரியர்
தம்கற்பனையாற் கூறுகின்றார். தபதி=ஸ்தபதி: வடசொல். ‘புருடராகம்’ , ‘நகரென்று’
என்றும் பாடம்.
என் பதி அழகு குலைந்தது’ என்று எண்ணி, இந்திரன்
வெறுக்கவும், இயக்கர்
மன், ‘பதி பொலிவு சிதைந்தது’ என்றிடவும், மற்றுள வானவர், ‘பதிகள்
புன் பதி ஆகிப் போயின’ எனவும், ‘புரை அறு புந்தியால், புவிமேல்
நன் பதி இது ஒன்று இயற்றினான்’ என்று, நாரணாதிகள் துதித்திடவும்.-அந்நகரத்தின் சிறப்பு.
இதுவும் அடுத்த கவியும் – குளகம்.
(இ-ள்.) இந்திரன்-தேவேந்திரன், என் பதி அழகு குலைந்தது என்று
எண்ணி – ‘எனது நகரமாகிய அமராவதி (இந்நகரத்துக்கு முன்) அழகுகெட்டதாம்’
என்றுநினைத்து, வெறுக்கஉம் – (அதனை) வெறுக்கும்படியாகவும், இயக்கர் மன் –
யஷர்களுக்கு அரசனான குபேரன், பதி பொலிவு சிதைந்தது என்றிடஉம் – ‘(எனது)
நகரமாகிய அளகை (இந்நகரத்திற்குமுன்) அழகுகெட்டதாகும்’ என்று
சொல்லும்படியாகவும், மற்று உள் வானவர்-மற்றுமுள்ள (வருணன் முதலிய)
தேவர்கள், பதிகள் புல் பதி ஆகி போயின எனவும் – ‘எங்கள்) நகரங்கள்
(இந்நகரத்திற்குமுன்) இழிந்தநகரங்களாய்விட்டன’ என்று சொல்லும்படியாகவும்,-
‘புரைஅறு புந்தியால் – குற்றமற்ற (தனது) மனத்தின் செயலால், புவிமேல் –
பூமியில், நல்பதி இது ஒன்று இயற்றினான் -சிறந்த இந்நகரமொன்றை (விசுவகர்மன்)
செய்தான், ‘என்று-, நாரண ஆதிகள் துதித்திடஉம் – திருமால் முதலானவர்கள்
புகழவும்,-(எ -று.)- ‘சமைத்த’ என அடுத்த கவியோடு தொடரும்.
இச்செய்யுளில் அழகுகுலைந்தது, பொலிவுசிதைந்தது, புன்பதியாகிப்போனஎன
ஒருபொருளைத்தருஞ்சொற்கள் வெவ்வேறு வந்தது பொருட்பின்வருநிலையணி.
இயக்கர்-யக்ஷர் என்ற வடசொல்லின் திரிபு, நாரணாதி – நாரயாணாதி என்ற
வடமொழித் தொடரின் விகாரம்
சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழச் சமைத்த
மந்திராதிகளும், மஞ்சமும், மதிலும், மகர தோரண மணி மறுகும்,
கொந்து இராநின்ற சோலையும், தடமும், கொற்றவன்
கோயிலும், நோக்கி,
இந்திராபதி, அவ் இந்திரன் பெயரால், ‘இந்திரப்பிரத்தம்’
என்று இட்டான்.-அந்நகரத்துக்குக் கண்ணன் இந்திரப்பிரத்தமென்று
பேரிடுதல்.
சந்திர ஆபதம்உம் – சந்திரனுக்கு ஆபத்தும், தினகர
ஆபதம்உம் -சூரியனுக்கு ஆபத்தும், இருபொழுதின்உம் எழ – (இராபகல்என்ற),
இரண்டுகாலங்களிலும் உண்டாகும்படி, சமைத்த- (விசுவகர்மன்) நிருமித்த, மந்திர
ஆதிகள்உம் – மாளிகை முதலியவற்றையும், மஞ்சம்உம் – கட்டில்களையும்,
மதில்உம்-மதில்களையும், மகர தோரணம் மணி மறுகுஉம்-மகரதோரணங்கள்
அடர்ந்த அழகிய விதிகளையும், கொந்து இராநின்ற சோலைஉம் – பூங்கொத்துக்கள்
பொருந்திய சோலைகளையும், தடம்உம் – தடாகங்களையும், கொற்றவன்
கோயில்உம்- அரசன் வசித்தற்குஉரிய அரண்மனையையும், இந்திராபதி -திருமகள்கணவனானகண்ணபிரான், நோக்கி-பார்த்து, அ இந்திரன் பெயரால்
இந்திரப்பிரசித்தம் என்றுஇட்டான் – அந்நகரத்தைச் செய்வித்த இந்திரனுடைய
பெயரினால் (அதற்கு)இந்திரப்பிரஸ்த மென்று பெயரிட்டருளினான்; (எ-று.)
பிரஸ்த மென்ற வடிசொல் – தங்குமிடமென்று பொருள்படும். இந்நகரம்
அமைத்தற்கு இந்திரன் ஏவுதற்கருத்தாவாயினாதலால், அவன்பெயரால் இதற்கு
இந்திரப்பிரஸ்த மென்று பெயரிடப்பட்டதென்க. இந்நகரத்து உபரிகைமுதலியன
மிகவும் உயர்ந்துள்ளதனால் சந்திரசூரியர்களுக்கு எப்பொழுதும் தடையுண்டாகின்ற
தென்பது, முதலடியின் கருத்து: தொடர்புயர்வுநவிற்சியணி. சந்த்ராபதம்,
திநகராபதம்,மந்திராதி, மகரதோரணம், இந்திராபதி, இந்திரன் – வடசொற்றிரிபுகள்.
திந கரன் -பகலைச் செய்பவன். மகரதோரணம் – கறாமீன்வடிவமையச்
சித்திரரிக்கப்பட்டதோரணம். கொந்து=கொத்து: மெலித்தல்
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள; இங்கு மற்று உள்ள
அமைவுறு பொருள்கள் அங்கு இல’ எனுமாறு, அமைத்த வான்
தொல் பதி அழகைச்
சமைவுற விரித்துப் புகழ்வதற்கு உன்னில், சதுர் முகத்தவனும்
மெய் தளரும்;
நமர்களால் நவில முடியுமே? முடியாது; ஆயினும், வல்லவா நவில்வாம்:-அந்நகரச்சிறப்பைக் கூறத்தொடங்கல்.
இமையவர்பதியில் உள்ளன யாஉம் – தேவலோகத்திலுள்ள
சிறந்தபொருள்களெல்லாம், இங்குஉள – இந்நகரத்தில் உள்ளன: மற்று-, இங்கு
உள்ளஅமைவு உறு பொருள்கள் – இந்நகரத்திலுள்ள சிறந்தபொருள்கள் (பல),
அங்கு இல- அத்தேவலோகத்தில் இல்லை,’ எனும் ஆறு – என்று சொல்லும்படி,
அமைத்த-உண்டாக்கிய, ‘வான் தொல் பதி – சிறந்த பெரிய அந்நகரத்தினது,
அழகை-,சமைவுஉற விரித்து புகழ்வதற்கு உன்னில் – தகுதியாக விரித்துச்
சொல்லுதற்கு எண்ணினால், சதுர்முகத்தவன்உம் மெய்தளரும் – நான்கு
முகங்களையுடையவனான பிரமனும் மனம் தளர்வான்; (அங்ஙனமாயின்),
நமர்களால் நவில முடியும்ஓ- எம்போலியரால்சொல்லமுடியுமோ? முடியாது;-
ஆயின்உம் – ஆனாலும், வல்ல ஆ – (எமக்கு) இயன்றவளவு, நவில்வாம்-
வருணித்துக்கூறுவோம்; (எ-று.)- அதனை, அடுத்தபதினொருகவிகளிற் கூறுகிறார்.
மற்று – வினைமாற்று.
மேற்கூறப்படும் நகரவருணனைக்குஇது ஓர் அவையடக்கமாய் அமைந்தது.
நான்குமுகங்களையுடையவனுக்கும் முடியாதசெயல் ஒருமுகத்தையுடைய நம்மவர்க்கு
(மனிதர்கட்கு) முடியாதுஎன்ற கருத்தை, ‘சதுர்முகத்தவன்’ என்ற பெயர்
உட்கொண்டதனால், கருத்துடையடைகொளியணி.
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர்
ஆரவம் ஒரு சார்;
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர்
ஆரவம் ஒரு சார்;
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர்
ஆரவம் ஒரு சார்;
பதிதொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு
ஆரவம் ஒரு சார்;-இதுமுதற் பதினொருகவிகள்-இந்திரப்பிரத்தவருணனை.
மறைவிதி முறையின் – வேதங்களிற்கூறிய விதிவாக்கியங்களின்
முறைமைப்படி, சாந்திசெய் – (நகரப்பிரவேசத்திற்காகச் சிலதோஷ)
சாந்திச்சடங்குகளைச் செய்கிற, கடவுள்வேதியர் – தெய்வத்
தன்மையையுடையபிராமணர்களது, ஆரவம் – மந்திர முழக்கம், ஒரு சார்-
ஒருபக்கத்திலும்,-மதி முறைதவறா -அறிவுடைமையால் நீதிதவறாத, அமைச்சர்-
மந்திரிகளுடைய, சொல் – சொற்களை, விழையும் – விரும்பிக்கேட்டொழுகுகிற,
மன்னவர் – அரசர்களுடைய, ஆரவம்-பேரொலி, ஒரு சார்-ஒருபக்கத்திலும்,- நிதி
கெழு செல்வத்து-நிதிபோல் நிறைந்த செல்வத்தையுடைய, அளகையோர் –
அளகாபுரிக்குஉரியோராகிய வைசியர்களுடைய, நெருக்கால்-நெருக்கத்தினால்,
நிறைந்த-, பேர் ஆரவம் – பெரிய ஆரவாரம், ஒரு சார்-ஒருபக்கத்திலும்,-
பதிதொறுஉம் – ஊரின்இடந்தோறும், உழவர் விளை பயன் எடுக்கும்-வேளாளர்
(ஆங்காங்கு) விளையும்பயன்களை யெடுத்துக்கொள்ளும்போது (களிப்பினால்)
முழங்குகிற, பறை-வாத்தியங்கள், கறங்கு-ஒலிக்கிற, ஆரவம்-முழக்கம், ஒரு
சார்-ஒருபக்கத்திலும், (அந்நகரிலுள்ளன); (எ-று.)- ‘உள்ளன’ என் வினைமுற்று
வருவிக்க; மேல்3-கவிகளிலும் இவ்வாறே.
கவிகள் தாம் வருணிக்கும் நாடு நகரம் மலை முதலிய இடங்களில் பலவகை
முழக்கமுள்ளன என்று வருணனை கூறுதல், ஒருமரபு. இச்செய்யுளில் அடிதோறும்
ஈறெழுத்து ஒத்துவந்தது, இயைபுத்தொடை.
இங்கே ‘சாந்தி’ என்றது, நகரப்பிரவேசகாலத்தில் தோஷநிவாரணமாகச்செய்யும்
சடங்கைக்குறிக்கும். குபேரனது இராசதானியான அளகாபுரியைச் செல்வமிகுதிக்கு
உரியவர்களாகிய வைசியர்க்கு உரியதெனக்கூறுதல், கவிசமயமாதலால், இங்குவைசியர்
‘அளகை யோர்? எனப்பட்டனர்; திருவிளையாடற்புராணத்து,வன்னியுங் கிணறு
மிலிங்கமுமழைத்தபடலத்தில் “பொன்னாட்டின் மடவாரைப்புணர்வதற்கோ
நம்மளகாபுரத்துவேந்த, னன்னாட்டின்மடவாரை மணப்பதற்கோ”
என்றதுகொண்டும் இதனையுணர்க; பந்தனந்தாதியில், பந்தனென்ற வைசியன்
“பொன்னளகைப்பந்தன்,” “அளகைகோன்,” “அளகைச்சேய்” என்று
கூறப்படுதலுங்காண்க; ஆதியில் அளகாபுரியினின்றுவைசியர்கள் பிறஇடங்கட்கு
வந்தனரென ஒருகதைகூறுதலும்உண்டு. பதிதொறும்உழவர் விளைபயன் எடுத்தல்-
“கதிர்படுவயலினுள்ள கடிகமழ்பொழிலி னுள்ள, முதிர் பலமரத்தினுள்ள, முதிரைகள்
புறவினுள்ள, பதிபடுகொடியினுள்ள படிவளர்குழியினுள்ள மது வனமலரிற்
கொள்ளும்வண்டெனமள்ளர்கொள்வார்” எனக் கம்பர்கூறியவாறுகாண்க.
அங்ஙனம்பயன்கொள்ளுபொழுது களிப்புமிகுதல்காரணமாகப்பறைகறங்குதல்
இயல்பு, நெருக்கு-நெருங்குஎன்றமுதனிலை திரிந்த தொழிற்பெயர்
தோரண மஞ்சத் தலம்தொறும் நடிக்கும் தோகையர்
நாடகம் ஒரு சார்;
பூரண பைம் பொன் கும்பமும், ஒளி கூர் புரி மணித்
தீபமும் ஒரு சார்;
வாரணம், இவுளி, தேர், முதல் நிரைத்த வாகமும்
சேனையும் ஒரு சார்;
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும்
மா தவர் ஒரு சார்;
தோரணம் – தோரணங்களையுடைய, மஞ்சம் தலம் தொறுஉம்-
மாளிகைகளின் உபரிகையிடங்களிலெல்லாம், நடிக்கும்- நாட்டியஞ்செய்கிற,
தோகையர்-அழகியமகளிர்களுடைய, நாடகம் -நர்த்தனங்கள், ஒரு சார்-
ஒருபக்கத்திலுள்ளன: பைம்பொன்பூரணகும்பம்உம்-பசும்பொன்னாலாகிய
நிறைகுடங்களும், ஒளி கூர் புரி மணி தீபம்உம்-ஒளிமிக்க அழகியஇரத்தின
தீபங்களும், ஒருசார்-ஒருபக்கத்திலுள்ளன: வாரணம் இவுளி தேர் முதல்-யானை
குதிரை தேர்முதலாக, நிரைத்த-அணியணியாகத்தொகுக்கப்பட்ட, வாகம்உம் –
வாகனங்களும், சேனைஉம் – காலாட்சேனையும், ஒருசார்-ஒரு பக்கத்திலுள்ளன:
நாரணன்-திருமாலினுடைய, வனசம் பத யுகம்- தாமரைமலர்போன்ற
திருவடியிணையை, பிரியா – இடைவிடாது தியானிக்கிற, நலம் பெறு-நன்மையைப்
பெற்ற, மா தவர்-சிறந்த தவத்தையுடைய முனிவர்கள், ஒருசார்-
ஒருபக்கத்திலுள்ளார்கள்;
தோரணம்-கட்டுவாயில்: மங்களார்த்தமாக மாவிலைமுதலியவற்றாற்
கட்டப்படுவனவுமாம். மஞ்சம் – மேனிலை. ‘நாடகம்-கதை தழுவிவருங் கூத்து’
என்பது சிலப்பதிகாரவுரை. பூர்ணகும்பமும், தீபமும் -அஷ்டமங்கலங்களிற்
சேர்ந்தவை. நால்வகைப்படையுள்முந்தினமூன்றும்முதலிற்கூறப்பட்டதனால்.
பின்புசேனையென்றது- பதாதியைக்குறிக்கும்.நாராயண னென்றதிருநாமம்-
நாரஅயநஎனப்பிரிந்து, சிருஷ்டிப்பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமான
வனென்றும், சிருஷ்டிப்பொருள்களைத் தனக்குஇருப்பிடமாகவுடையவனென்றும்,
பிரளயப்பெருங்கடலைத் தனக்குஇடமாகக்கொண்டவனென்றும்.
மற்றும்பலவாறும்பொருள்படும். வநஜம்-நீரிற்பிறப்பதெனக்காரணப்பொருள்
படுவது: தாமரைக்கும் காரணவிடுகுறி.
சிற்ப வல்லபத்தில் மயன்முதல் உள்ள தெய்வ வான்
தபதியர் ஒரு சார்;
வெற்புஅகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர்
கின்னரர்ஒரு சார்;
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை
அரம்பையர் ஒரு சார்;
பொற்புடை அமரர் புரியும் மெய்ம் மகிழ்ந்து பொழிதரு
பொன் மலர் ஒரு சார்.
சிற்பம் வல்லபத்தின்-சிற்பத்தொழில் வல்லமையையுடைய, மயன்
முதல்- மயன் முதலாக, உள்ள-, வான் தெய்வம் தபதியர் பெருமையையுடைய
தெய்வத்தச்சர்கள், ஒரு சார் – ஒரு பக்கத்திலும்,-வெற்பு அகம் மருவி-
மலையிடங்களிற் பொருந்தி, வீற்றுவீறு இருக்கும்-வெவ்வேறாகச் சிறப்புடனிருக்கிற,
விஞ்சையர்-வித்தியாதரர்களும், கின்னரர்-கின்னரர்களும், ஒரு சார்- ஒரு
பக்கத்திலும்,- அற்புதம் வடிவின்-(காண்பவர்க்கு) அதிசயத்தை விளைக்கிற
வடிவத்தையுடைய, உருப்பசி- முதல் ஆம் – ஊர்வசி முதலான, அழகுஉடை
அரம்பையர்-அழகையுடைய தேவமாதர்கள், ஒருசார்-ஒருபக்கத்திலும்,
(அந்நகரத்திலுள்ளார்கள்); பொற்பு உடை – அழகையுடைய, அமரர்-தேவர்களும்,
பதிஉம்- (அவர்கட்குத்) தலைவனான இந்திரனும், மெய் மகிழ்ந்து பொழிதரு-
மனம்மகிழ்ந்துசொரிகிற, பொன் மலர்-பொன்மயமான (கற்பக விருட்சத்தின்)
மலர்கள், ஒரு சார்-(அந்நகரத்து) ஒருபுறத்திலுள்ளன; (எ-று.)
சிற்பம்-கோயில் வீடு முதலியன கட்டுந்தொழில். மயன்-அசுரர்களதுசிற்பி.
வித்தியாதரரும் கின்னரரும் மலையில்வாழ்பவராதலால், அவர்கட்கு
‘வெற்பகமருவிவீற்றுவீற்றிருக்கும்’ என்றஅடை மொழி கொடுக்கப்பட்டது. வீற்று-
வேறுபாடு. வீறு-வேறொருவர்க்கில்லாத சிறப்பு. கின்னரர் –
கிந்நரமென்னும்வாத்தியத்தைக் கையிற்கொண்டு பாடித்திரியும்தேவசாதியார்.
ரம்பையென்று ஒரு தேவமாதின்பெயராதலால், அதன் பன்மையாகிய
அரம்பையரென்பது தேவமாதர்க்குப் பெயராக வழங்கும். பொன்னுலகமாகிய
சுவர்க்கலோகத்தில் உள்ளவை யாவும் பொன்மயமாயுள்ளவையாதலால், அங்கு
உள்ளதேவதருக்களின்மலர் பொன்மலரெனப்பட்டது. இந்நகரத்தின் சிறப்புப்பற்றி,
பலரும்தம்தம் அழகிய நகரங்களை விட்டு இதில்வந்து தங்குகின்றன ரென
அறிக.அமராபுரியும் என்றும் பாடம்.
வரை எலாம், அகிலும், சந்தனத் தருவும், மான்மத நாவியின் குலமும்;
திரை எலாம், முத்தும், பவள வண் கொடியும், செம் மணிகளும்,
மரகதமும்;
கரை எலாம், புன்னைக் கானமும், கண்டல் அடவியும்,
கைதை அம் காடும்;
தரை எலாம், பொன்னும், வெள்ளியும், பழன வேலி சூழ்
சாலியும், கரும்பும்.
வரை எலாம்-இந்நகரத்தைச்சார்ந்த)மலைகளிலெல்லாம், அகில்உம்-
அகில்மரங்களும், சந்தனம் தருஉம்-சந்தனமரங்களும், மான்மத நாவியின் குலம்உம்-
கஸ்தூரிகளின் கூட்டங்களும், திரைஎலாம்-(இந்நகரத்தைச் சேர்ந்த)
கடல்களிலெல்லாம், முத்துஉம் – முத்துக்களும், வள் பவளம் கொடிஉம்-
சிறந்தபவழக்கொடிகளும், செம்மணிகள்உம் – சிவந்தமாணிக்கங்களும், மரகதம்உம் –
பச்சையிரத்தினங்களும்,-கரை எலாம்-(அக்கடற்) கரைகளிலெல்லாம்,
புன்னைகானம்உம் – புன்னைமரங்களின் தொகுதியும், கண்டல் அடவிஉம்-
வெண்டாழைக்காடும், அம் கைதை காடுஉம் – அழகிய செந்தாழைக்காடும்,
தரைஎலாம் -(இந்நகரத்தைச் சார்ந்த) இடங்களிலெல்லாம், பொன்னும் வெள்ளியும்-,
பழனம்வேலி – (இந்நகரத்தைச்) சூழ்ந்த மருதநிலங்களிலெல்லாம், சூழ் சாலிஉம்
கரும்புஊம்- நிறைந்த நெற்பயிர்களும் கரும்புகளும் (உள்ளன): (எ-று.)
முதலடியிற் குறித்தவை-குறிஞ்சிநிலப்பொருள்கள். இரண்டு முன்றாமடிகளிற்
குறித்தவை-நெய்தல் நிலப்பொருள்கள். நான்காமடியின் இறுதியிற் குறித்தவை-
மருதநிலப்பொருள்கள். பொன்னும் வெள்ளியும் மலையில் தோன்றுதலால்
குறிஞ்சிநிலப்பொருள்களேயாயினும், அங்குநின்று யாற்றுநீர்ப்பெருக்கால்
கொணர்ந்துகொழிக்கப்பட்டனவென மருதநிலத்தைச் சார்த்திக் கூறுதலும் உண்டு.
இந்திரப்பிரஸ்தத்துக்குக் கடல் நெடுந்தூரத்திலுள்ளதாயினும், இவ்வாறு
சார்த்திக்கூறியஇதற்குக் கருத்து-இந்நகரின் எல்லை கடலினளவு மெனக்
கொள்ளவேண்டும்.கண்டல், கைதை என்பன-தாழையின் சாதிபேதம்.
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம், அவ் வயல்
புறத்து அடுத்த
சோலையில் பயிலும் குயிலையும், சுருதிச் சுரும்பையும், நிரை
நிரை துரப்ப;
வேலையில் குதித்த வாளைஏறு உம்பர் வியன் நதி கலக்கி,
வெண் திங்கள்
மாலையில் பயிலும் வானமீன் கொடிபோல், வாவியில்
குளிக்கும்-மா மருதம்.
மா மருதம் – (அந்நகரத்தைச் சார்ந்த) பெரிய மருத நிலங்களில்,-
ஆலையில்-ஆலையென்னும் யந்திரத்தில், (இட்டு ஆட்டிச் சாறுகொள்ளப்படுகிற),
கரும்பின்-கரும்புகளின், கண்களின் -கணுக்களினின்று, தெறித்த-(நெடுந்தூரமளவும்)
வெளிச்சிதறிய, ஆரம் – முத்துக்கள், அ வயல்புறத்து அடுத்த சோலையில் பயிலும்-
அந்தக்கழனிகளின் அருகிற்பொருந்தியுள்ளள சோலைகளிலிருக்கிற, குயிலைஉம்-
குயில்களையும், சுருதி சுரும்பைஉம் – சுருதிகூட்டுவது போல ரீங்காரஞ்செய்கிற
வண்டுகளையும், நிரைநிரை துரப்ப-வரிசை வரிசையாக ஓட்டுவன; வேலையில்
குதித்த-(அந்நகரத்தைச் சார்ந்த) கடலினின்று துள்ளியெழுந்த, வாளை ஏறு-சிறந்த
வாளைமீன்கள், உம்பர் வியன் நதி கலக்கி-மேலுலகத்திலுள்ள பெரிய
தேவகங்காநதியைக்கலக்கி, வெள் திங்கள் மாலையில் பரவும் வானம் மீன்கொடி
போல்-வெண்மையாகிய இளம்பிறைதோன்றுவரிசைபோல, வாவியில் குளிக்கும் –
(அந்நகரைச்சார்ந்த) தடாகங்களிலே மூழ்கும்; (எ-று.)
முதிர்ந்தஉயர்ந்தசாதிக்கரும்புகளின் கணுக்களினின்று முத்துப்பிறக்குமென்றல்,
கவிமரபு, சுருதியாவது-முதல் நாதமாகிய ஷட்ஜத்தோடு பஞ்சமமென்னுஞ் சுவரத்தை
மநோரஞ்சநமாம்படி சுத்தமாகப் பொருத்தல். கடல் நெய்தலும், வாவி-மருதமுமாம்;
கடலினின்று குதித்த வாளை வாவியிற்குளிக்கும் எனக் கூறவே, திணைமயக்கமாயிற்று.
ஏறு ஆண்மைப்பெயர்; மீனுக்கு ஏறு என்னும் பெயர் உரியதாதலை, “மீனேறுயர்த்த
கொடிவேந்தன்” என்ற சிந்தாமணியாலும் அறிக. ‘வானமீன்கொடிபோல் என்ற
உவமையால், சிலவாளைமீன்களின் பின்னே சிலவாளைமீன்களாக
வரிசையாகச்சென்றமைபெறப்படும். மாலையிற்பயிலும் எனவும் பாடம்.
புரிசையின் குடுமிதொறும் நிரை தொடுத்த பொற் கொடி
ஆடையின் நிழலைக்
கிரிமிசைப் பறக்கும் அன்னம் என்று எண்ணி, கிடங்கில் வாழ்
ஓதிமக் கிளைகள்,
விரி சிறைப் பறவின் கடுமையால் எய்தி, மீது எழும்
மஞ்சு எனக் கலங்கி,
பரிசயப்படு தண் சததளப் பொகுட்டுப் பார்ப்பு உறை
பள்ளிவிட்டு அகலா;
புரிசையின்-(அந்நகரத்து) மதில்களின், குடுமிதொறுஉம் –
சிகரங்களிலெல்லாம், நிரை தொடுத்த – வரிசையாகக் கட்டப்பட்ட, பொன் கொடி
ஆடையின்நிழலை – அழகியகொடிச்சீலைகளின் தோற்றத்தை, கிரிமிசை பறக்கும்
அன்னம் என்று எண்ணி-மலைகளின்மேற் பறக்கிற அன்னப்பறவைகளென்று கருதி,
கிடங்கில் வாழ் ஓதிமம் கிளைகள்-அகழியில்வாழ்கின்ற அன்னப்பறவைகளின்
கூட்டங்கள், விரி சிறை பறலின் கடுமையால் எய்தி-விரிந்த சிறகுகளைக்கொண்டு
பறத்தலின் விசையால் எழுந்துமேற்சென்று (அங்கு அக்கொடித்தோற்றத்தைக்
கண்டவுடனே), மீது எழும் மஞ்சு என கலங்கி – மலைமீதுஎழுகிற
வெண்ணிறமேகமென்றுஎண்ணிக் கலக்கமுற்று, பரிசயம் படு தண் சததளம்
பொகுட்டுபார்ப்பு உறை பள்ளி விட்டு அகலா – (தாம்) பழகுதல் பொருந்திய
குளிர்ந்ததாமரைமலர்களின் பொகுட்டாகிய தம்குஞ்சுகளிருக்கின்ற சயனத்தைவிட்டு
நீங்காவாயின; (எ-று.)
அந்நகரத்துமதிற்புறத்திலுள்ள அகழியில் வசிக்கின்ற அன்னப்பறவைகள்
அம்மதிலின்சிகரங்களில் அசைந்து விளங்குங்கொடிச்சீலைகளைத் தங்களினமான
அன்னப்பறவைகளென்று மாறுபடக்கருதி அவற்றோடு கூடிக்குலாவலா
மென்றகருத்தினால் சிறகுகளை அடித்துக்கொண்டு விசையோடு மேலெழுந்தன;
அங்ஙனம் சென்று நோக்குகையில் அக்கொடிவரிசையை மேகமென்று மீண்டும்
வேறுவகையாக மாறுபடக்கருதி அச்சங்கொண்டு மீண்டு தாமரைப்பொகுட்டில்
தங்குகிற தம்குஞ்சுகளை விட்டு நீங்காது காப்பனவாயின வென்பதாம்.
வெண்ணிறமேகத்தைக் கண்டு அஞ்சி யொடுங்குதல், அன்னத்திற்கு இயல்பு.
மயக்கவணி. கொடியாடையின் நிழல் – நீரிற் காணப்படும் கொடிச்சீலையின்
பிரதிபிம்பமுமாம்; மதில்மீதுள்ளகொடிச்சீலையின்சாயையை நீரிற்கண்டு
அவற்றைமலைமீதுபறக்கும் அன்னங்களின் நிழலென்று கருதின வென்க.
பறல்-பறத்தலென்பதன் விகாரம். சிறைப்பாலின் எனவும் பாடம்.
கயல் தடஞ் செங் கண் கன்னியர்க்கு இந்து- காந்த வார்
சிலையினால் உயரச்
செயல்படு பொருப்பின் சாரலில், கங்குல் தெள் நிலா
எறித்தலின் உருகி,
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன்
படிவன சகோரம்,
நயப்புடை அன்னச் சேவல், பேடு என்று நண்ணலால்
உளம் மிக நாணும்.
கயல் தட செம் கண் கன்னியர்க்கு-கயல்மீன்போலப் பிறழ்கிற
பெரியசெவ்வரிபரந்த கண்களையுடைய இளம்பெண்கள் வினையாடுதற்பொருட்டு,
வார்இந்துகாந்தம் சிலையினால் உயர செயல்படு – பெரியசந்திரகாந்தக்கற்களால்
உயரமாகச் செய்யப்பட்ட, பொருப்பின்-செய்குன்றுகளின், சாரலில் – பக்கங்களிலே,
கங்குல் – இராப்பொழுதில், தெள்நிலா எறித்தலின்-தெளிவான சந்திரகாந்தி
வீசுதலினால், உருகி – (அக்கற்கள்) உருக (அவற்றினின்று), வியப்பொடு குதிக்கும்-
(காண்பவர்) அதிசயிக்கும்படியான தன்மையோடு பாய்கிற, தாரை கொள் அருவி –
தாரையாகவுள்ள நீரருவிகளில், விழைவுடன்படிவன – விருப்பத்தோடு
முழுகுகின்றனவான, சகோரம் – சகோரபட்சிகளை, நயப்பு உடை அன்னம்
சேவல் – விருப்பத்தையுடைய ஆணன்னப்பறவைகள், பேடு என்று
நண்ணலால் – (தம்) பேடையாகிய அன்னப்பறவைக ளென்று எண்ணிச்
சமீபித்ததனால், உளம் மிக நாணும் – (அவ்வன்னங்கள்) மனம் மிகவெள்கும்;
சந்திரகாந்தம் – சந்திரனொளிபட்டதனால் நீரை யுமிழுங் கல்; சகோரம் –
நிலாவை வாயிலேற்று உண்ணும் பறவை. சகோரம் நிலவையுண்டு வாழும் பறவை
யாதலால், நிலாத்தோற்றத்தால் சந்திரகாந்தக் கல்லினின்றுபெருகும்நீரில்
களிப்போடுமூழ்கி விளையாடிக்கொண்டிருந்தன. வெண்ணிறமான அந்நீரில்படிந்து
வெண்ணிறமாகக் காணப்படுதலாலும், நீரில் விளையாடுதலாலும், அவற்றைப்
பெண்ணன்னங்களென்று ஆணன்னங்கள் மாறுபடக்கருதி ஆதரத்தோடு
அருகில்வந்து தாம் கருதிக் காதலித்த அன்னப்பேடுகளல்லவென்று
தெரிந்ததனால்,நாணமுற்றன; மயக்கவணி.
கயல் தடஞ் செங் கண் கன்னியர்க்கு இந்து- காந்த வார்
சிலையினால் உயரச்
செயல்படு பொருப்பின் சாரலில், கங்குல் தெள் நிலா
எறித்தலின் உருகி,
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன்
படிவன சகோரம்,
நயப்புடை அன்னச் சேவல், பேடு என்று நண்ணலால்
உளம் மிக நாணும்.
கயல் தட செம் கண் கன்னியர்க்கு-கயல்மீன்போலப் பிறழ்கிற
பெரியசெவ்வரிபரந்த கண்களையுடைய இளம்பெண்கள் வினையாடுதற்பொருட்டு,
வார்இந்துகாந்தம் சிலையினால் உயர செயல்படு – பெரியசந்திரகாந்தக்கற்களால்
உயரமாகச் செய்யப்பட்ட, பொருப்பின்-செய்குன்றுகளின், சாரலில் – பக்கங்களிலே,
கங்குல் – இராப்பொழுதில், தெள்நிலா எறித்தலின்-தெளிவான சந்திரகாந்தி
வீசுதலினால், உருகி – (அக்கற்கள்) உருக (அவற்றினின்று), வியப்பொடு குதிக்கும்-
(காண்பவர்) அதிசயிக்கும்படியான தன்மையோடு பாய்கிற, தாரை கொள் அருவி –
தாரையாகவுள்ள நீரருவிகளில், விழைவுடன்படிவன – விருப்பத்தோடு
முழுகுகின்றனவான, சகோரம் – சகோரபட்சிகளை, நயப்பு உடை அன்னம்
சேவல் – விருப்பத்தையுடைய ஆணன்னப்பறவைகள், பேடு என்று
நண்ணலால் – (தம்) பேடையாகிய அன்னப்பறவைக ளென்று எண்ணிச்
சமீபித்ததனால், உளம் மிக நாணும் – (அவ்வன்னங்கள்) மனம் மிகவெள்கும்;
சந்திரகாந்தம் – சந்திரனொளிபட்டதனால் நீரை யுமிழுங் கல்; சகோரம் –
நிலாவை வாயிலேற்று உண்ணும் பறவை. சகோரம் நிலவையுண்டு வாழும் பறவை
யாதலால், நிலாத்தோற்றத்தால் சந்திரகாந்தக் கல்லினின்றுபெருகும்நீரில்
களிப்போடுமூழ்கி விளையாடிக்கொண்டிருந்தன. வெண்ணிறமான அந்நீரில்படிந்து
வெண்ணிறமாகக் காணப்படுதலாலும், நீரில் விளையாடுதலாலும், அவற்றைப்
பெண்ணன்னங்களென்று ஆணன்னங்கள் மாறுபடக்கருதி ஆதரத்தோடு
அருகில்வந்து தாம் கருதிக் காதலித்த அன்னப்பேடுகளல்லவென்று
தெரிந்ததனால்,நாணமுற்றன; மயக்கவணி.
அரி மணிச் சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே
அமைத்த சாலகம்தோறு,
எரி மணிக் குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும்
மைத் தடங் கண்-
விரி மணிக் கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை
வீழும் மா நதியின்
புரி மணிச் சுழியில் துணையொடும் உலாவிப் பொருவன
கயல்களே போலும்!
அரிமணி-நீலரத்தினமாகிய, சிலையின்-கல்லினுடைய, சலாகையால்-
சலாகைகளை வைத்து, வட்டம் ஆகவே அமைத்த – வட்டவடிவமாகவே
செய்யப்பட்ட, சாலகம் தோறு-(அந்நகரத்து மாளிகைகளின்) பலகணிகள் தோறும்,
எரிமணி குழையார் வதன மண்டலத்தில்-சொலிக்கிற இரத்தினங்கள் பதித்த
குழையென்னுங் காதணியையுடைய மகளிரதுமுகமண்டலத்திலே, எழிலுடன்மிளிரும்,-
அழகோடு பிறழ்ந்து விளங்குகிற, மை தடகண்-மையிட்ட பெரியகண்கள்,-விரி மணி
கதிரோன் முன் அளிக்க – பரந்த அழகிய கிரணங்களையுடைய சூரியன்
முற்காலத்திற் பெற, களிந்த வெற்பிடை வீழும் – களிந்தமலையினின்று விழுகிற, மா
நதியின்-பெரியயமுநாநதியினது, புறமணிசுழியில்-சுற்றுதலையுடையநீலநிறமுள்ள
சுழியிலே, துணையொடுஉம் உலாவி பொருவன-ஆணும்பெண்ணுமாக
(ஒன்றோடொன்று) மோதி விளையாடுவனவான, கயல்கள்ஏ-கயல்மீன்களையே,
போலும் – ஒக்கும்; (எ-று.)
யமுநாநதியின் நீர்ப்பெருக்குக் கருதிநிறமுடைய தாதலால்,
நீலரத்தினக்கற்கொண்டு வட்டமாக அமைத்த சாளரம் யமுனையின் நீர்ச்சுழி
போலுமெனவும், அச்சாளரத்தில் விளங்கும் மகளிர் கண்ணிணை அச்சுழியில்
விளையாடும் இணைக்கயல் போலு மெனவும் வருணித்தார்: தற்குறிப்பேற்றவணி,
சலாகை-நாராசம். அரிமணி – இந்திரநீலம்: அரி – இந்திரன்
இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும், இந்திரப்பிரத்தமும்,
இரண்டும்,
தனத்தினால், உணர்வால், கேள்வியால், அழகால், தக்கது
ஒன்று யாது?’ எனத் துலைகொள்
மனத்தினால் நிறுக்க, உயர்ந்தது ஒன்று; ஒன்று மண்மிசை
இருந்தது; மிகவும்
கனத்தினால் அன்றித் தாழுமோ? யாரும் கண்டது கேட்டது
அன்று இதுவே.
இனத்தினால்உயர்ந்த – (ஒன்றுக்கு ஒன்று) இனமாய்
(மற்றையெல்லாநகரங்களினுஞ்) சிறந்த, இந்திரபுரிஉம் இந்திரப்பிரத்தம்உம்
இரண்டுஉம்- இந்திரனது அமராவதிநகரமும் இந்த இந்திரப்பிரத்தநகரமும்
ஆகிய இரண்டனுள், தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது
ஒன்று யாது – செல்வம்அறிவு நூற்கேள்வி அழகு என்னும் இவற்றுக்கு
இடமாதலால்மேன்மையுடையதுஎது? என-என்று, துலைகொள் மனத்தினால்
நிறுக்க-(இந்திரன்) தராசின்தன்மையைக்கொண்டமனத்தினால் நிறுத்துப் பார்க்க,
ஒன்று உயர்ந்தது – (அமராவதியாகிய) ஒரு நகரம் உயர்ந்தது: ஒன்று மண்மிசை
இருந்தது-மற்றொன்றாகியஇந்திரப்பிரத்தநகரம் பூமியில் தங்கியது: மிகஉம்
கனத்தினால் அன்றி தாழும்ஓ – மிகவும்பாரமுடைமையாலன்றி ஒன்று தாழ்வது
உண்டோ? இது யார்உம் கண்டது – இது எவரும் கண்ணாற்கண்டதே: கேட்டது
அன்று – காதினாற் கேள்வியுற்றதுமாத்திரமன்று;
பெரிய நகரங்கள் பலவற்றுள்ளும் சிறந்தவையென்று ஓரினப்படுத்தி ஒருங்கு
கூறப்படுகிற அமராவதி இந்திரப்பிரஸ்தம் என்ற இரண்டனுள் மகிமைவாய்ந்தது
எதுவோ என்ற தன் ஐயத்தை அகற்றக்கருதி நடுநிலைமை தவறாத இந்திரன் தன்
மனத்தையே தராசுக்கோலாக நாட்டி அதன் தட்டு இரண்டிலும் இவ்விரண்டு
நகரங்களையும் வைத்துத் தூக்கிப்பார்க்கையில், அமராவதி பெருமைக்குறைவால்
மிகஇலேசுபட்டு வானத்தின்மீது நெடுந்தூரம் உயர, இந்திரப்பிரத்தம்
பெருமைமிகுதியால் அதிககனம் பெற்று நிலத்தில் தாழ்ந்து நின்றதென்க.
இவ்விரண்டனுள் ஒன்று மேலும் ஒன்று கீழுமாக இருத்தலை ஆதாரமாகக்கொண்டு
இக்கற்பனையைக் கூறுகின்றா ராதலால், ‘மிகவுங்கனத்தினா லன்றித் தாழுமோ’
என்றார். கனம் குறையக்குறைய உயர்தலும், கனம் அதிகப்பட அதிகப்படத்
தாழ்தலுமாகிய இயல்பைவிளக்கியவாறு. பிரதியக்ஷப்பிரமாணத்தால் தெளியக்கூடியது
இது, ஆப்த வாக்கியப்பிரமாணங்கொண்டே நம்பவேண்டிய தன்று என்றபடி. ‘இது’
என்பதற்கு- மிகவும் கனத்தினாலன்றித் தாழ்தல்எனப்பொருள் கொண்டால், ‘யாருங்
கண்டது கேட்டதுஅன்று’ என்பதற்கு – (அத்தன்மை) எவரும் கண்டது மன்று
கேட்டது மன்று என்று உரை கூறலாம். இந்திரபுரி, இந்திரப்பிரத்தம் என்ற
பெயர்களில் இந்திரனது சம்பந்தத்தின் ஒற்றுமையும், மற்றை நகர மனைத்தினுஞ்
சிறந்திருத்தலும் இவ்விரண்டிற்கும் உள்ளதனால், ‘இனத்தினாலுயர்ந்த இந்திரபுரியும்
இந்திரப்பிரத்தமுமிரண்டும்’ என்றார், வசிப்பவரது உணர்வும் கேள்வியும்
நகரின்மேல்வைத்துக்கூறப்பட்டன, நிறுக்க என்றவினையைநோக்கி, மனமாகிய
துலாக்கோலினால்என்று உருவகமாகப்பெருள் காண்க. இச்செய்யுள், உருவகத்தை
அங்கமாகக்கொண்டதற்குறிப்பேற்றவணி.
நிறக்க வல் இரும்பைச் செம்பொன் ஆம்வண்ணம்
இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப,
பிறக்கமும் வனமும் ஒழித்து, அவண் அமைத்த பெரும்
பதிக்கு உவமையும் பெறாமல்,
மறக் கடுங் களிற்றுக் குபேரன் வாழ் அளகை வடக்கு
இருந்தது; நெடு வானில்
துறக்கமும் ஒளித்தது; இலங்கையும் வெருவித் தொடு
கடல் சுழிப் புகுந்ததுவே.
வல் இரும்பை – வலிய இரும்பை, நிறக்க செம் பொன் ஆம்
வண்ணம்-மாற்றுயர்ந்து சிவந்ததாய் விளங்கச்சிறந்த பொன்னாகும்படி, நிகழ்த்திய-
செய்த, இரதம்ஏ நிகர்ப்ப-இரசகுளிகையே போல, வனம்உம் பிறக்கஉம் ஒழித்து
அவண் அமைத்த- (விசுவகருமன்) காண்டவவனத்தையும் அதைச்சார்ந்த
மலையையும் அழித்து அவ்விடத்தில் தகுதியாக நிருமித்த, பெரும்பதிக்கு – பெரிய
அந்தநகரத்துக்கு, உவமைஉம் பெறாமல்-(தான்) ஒரு புடையொப்பும் ஆகமாட்டாமல்,
மறம் கடு களிறு குபேரன் வாழ் அளகை-வலிமையையுடைய உக்கிரமான
மதயானையையுடைய குபேரன் வாழ்கிற அளகாபுரி, வடக்கு இருந்தது-; துறக்கம்உம்
– சுவர்க்கலோகமும், நெடுவானில் ஒளித்தது – நெடுந்தூரத்ததான ஆகாயத்தில்
மறைந்துவிட்டது; இலங்கைஉம் – இலங்காபுரியும், வெருவி – அஞ்சி, தொடு கடல்
சுழி புகுந்தது-தோண்டப்பட்ட கடலினிடை யிடத்தை யடைந்தது; (எ-று.)
இயல்பில் வடதிசையில் நெடுந்தூரத்திலுள்ளதான அளகாபுரியையும்,
வானத்தில்நெடுந்தூரத்துக்கு அப்பாலுள்ள தாய் மனிதர் கண்ணுக்குப்புலனாகாத
அமராவதிநகரையும், தென்கடலில் நூறுயோசனைக்கு அப்பாலுள்ளதான
லங்காபுரியையும், இந்நகரத்திற்குத் தாம் ஒப்பாகமாட்டாமல் தோற்றுவெள்கி அஞ்சி
வடக்கிருத்தலும் வானத்திற்சேர்ந்துவிடுதலும் தென்கடலினி டைவிழுந்திடுதலும்
செய்தனவாக வருணித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. வடக்கிருத்தல்
என்றதொடர்-வடதிசையிலேதங்குதலென்றபொருளோடு, உயிரைத்துறப்ப
தென்றதுணிவுடன் வடதிசைநோக்கித் தருப்பைப்புல்லிற் கிடத்தலாகிய
பிராயோபவேசமென்ற பேர் பூண்டஒருவிரதத்தையுங் காட்டவல்லதாதலறிக.
இரும்பைப் பொன்னாக்குதல் -இரசவாதமென்னும்வித்தை; ஸ்பர்ஸவேதி யென்னும்
மகா மூலிகையின் இரசத்தைஇரும்பின் மேற்பிழிந்தால் அதுபொன்னாகுமென்பர்.
இரசம்=ரஸம்: சாறு.இரும்பைப்பொன்னாக்கு மிரசம் போல, வனத்தை நகராக்கின
விசுவகருமனென்க.பிறக்கம்-நெடுந்தூரத்திலுள்ளாருங் காணும்படி விளங்குவது:
மலை, ‘வடக்கிரிந்தது’ எனவும் பாடம்.
வாவியும், புறவும், சோலையும், மலர்ந்த மலர்களும்,
மணிகளின் குழாமும்,
மேவி எங்கு எங்கும் மயங்கலின் தம்தம் வேரியும்
வாசமும் தூதா,
பூஇனம் சுரும்பை அழைக்கும் வண் பழனப் புது வளம்
சுரக்கும் நாடு அனைத்தும்
ஓவியம் குறித்துப் பூமகள் வடிவை ஒப்பனை செய்தவாறு
ஒக்கும்.
பூ இனம் – பலவகை மலர்களாகிய மகளிர், தம்தம் வேரிஉம்
வாசம்உம்தூது ஆ – தம்தமது தேனையும் நறுமணத்தையும் தூதாகக்கொண்டு,
(அவற்றால்),சுரும்பை அழைக்கும் – வண்டுகளாகிய தம்கணவரை அழைக்கப்பெற்ற,
வண்பழனம்- வளப்பமுள்ள மருதநிலத்தின், புது வளம் – புதுமையான
வளப்பங்கள், சுரக்கும் -மேன்மேல் மிகப்பெற்ற, நாடு அனைத்துஉம்
அந்நாடுமுழுவதிலும்,-வாவிஉம் -குளங்களும், புறவுஉம் – கொல்லைகளும்,
சோலைஉம் – சோலைகளும், மலர்ந்தமலர்கள்உம்- மலர்ந்த பூக்களையும்,
மணிகளின் குழாம்உம் – இரத்தினங்களின்கூட்டத்தையும், மேவி – பொருந்தி,
எங்கு எங்குஉம் மயங்கலின் -எல்லாவிடங்களிலுஞ் செறிந்திருத்தலால், (அச்செறிவு),
பூமகள்வடிவை ஓவியம்குறித்து ஒப்பனை செய்த ஆறு ஒக்கும்-பூமிதேவியின்
வடிவைச் சித்திரமெழுதிஅலங்கரித்த தன்மையைப் போலும்;
அந்நாடுமுழுவதிலும், குளங்களும் கொல்லைகளும் சோலைகளும்,
பலவகைமலர்களையும் பலவகையிரத்தினங்களையும் உடையனவாயிருத்தல்,
பூமிதேவியின்வடிவத்தைச் சித்திரமெழுதி அலங்கரித்தாற்போலுமென்பதாம்:
தற்குறிப்பேற்றவணி. மணிகள், மலையருவியாற் கொணர்ந்து கொழிக்கப்பட்டவை.
தூதா அழைக்கும் என்ற சொற்களின்குறிப்பால், பூவினத்தினிடத்து மகளிரினத்தின்
தன்மையும், சுரும்பினிடத்து நாயகரின் தன்மையும் ஏற்பட்டன; இது, குறிப்புருவகம்.
தூதுபோலத் தேனும் மணமும் நெடுந்தூரமளவுஞ் செல்கின்ற வியல்பை யறிக.
பரிமள, மதுபம் முரல், பசுந் தொடையல் பாண்டவர் ஐவரும், கடவுள்
எரி வலம் புரிந்து, முறை முறை வேட்ட இன் எழில்
இள மயில் அன்றி,
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும்
மன்றல் எய்தினர்போல்,
புரி வளை தரளம் சொரி புனல் அகழிப் புரிசை
சூழ் புரம் குடி புகுந்தார்.–பாண்டவர் நகரப்பிரவேசஞ் செய்தல்.
பரிமளம்-வாசனையையுடையனவும், மதுபம் முரல் – வண்டுகள்
ஒலிக்கப்பெறுவனவும் ஆகிய, பசுந் தொடையல்-பசியபூமாலைகளையணிந்த,
பாண்டவர் ஐவர்உம் – பாண்டவர்கள் ஐந்து பேரும், கடவுள் எரி வலம் புரிந்து
முறை முறை வேட்ட இன்எழில் இள மயில் அன்றி – தெய்வத்தன்மையையுடைய
அக்கினியைப் பிரதட்சிணஞ்செய்து (அக்கினிசாட்சியாக) முறையே தாங்கள்
மணஞ்செய்துகொண்ட இனிய அழகையுடைய இளமையானமயில்போலுஞ் சாயலுள்ள
திரௌபதியையே யல்லாமல், உரிமையால் அவனி மயிலைஉம் வரிசையின் அணுகி
மன்றல் எய்தினர்போல் – உரிமையினால் பூமிதேவியையும் முறையே அடைந்து
மணஞ்செய்துகொண்டவர்போல்,-புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை
சூழ்புரம் குடி புகுந்தார் – உட்சுழிதலையுடைய சங்குகள் முத்துக்களைச்
சொரியப்பெற்ற நீர்நிறைந்த அகழியையுடைய மதில் சூழ்ந்த அந்த
இந்திரப்பிரத்தநகரத்திற்குடிபுகுந்தார்கள்; (எ- று.)
பாண்டவரைவரும் ஒருவர்பின் ஒருவராய்த் துருபதன்மகளை மணந்ததுமன்றி
மண்மகளையும் மணப்பார்போல அந்நகரினுள் முறையே பிரவேசித்தன ரென்பதாம்;
தற்குறிப்பேற்றவணி. மதுபம்-தேனைக்குடிப்பதுஎன வண்டுக்குக் காரணக்குறி.
கடவுளெரி-அக்கினிதேவன். மயில்-உவமையாகுபெயர். அகழப்படுவது அகழியெனக்
காரணக்குறி.
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அப்
புரம் குடி புகுந்து, தங்கள் பொன் எயில் கோயில் எய்த,
திரம் குடி புகுந்த கல்விச் சிற்ப வித்தகன், தன் நெஞ்சால்
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான்.-பாண்டவர்க்கு விசுவகருமன் அந்நகரத்தைக்
காட்டுதல்.
உரம் குடி புகுந்த – வலிமை (தனக்கு) இடமாகக் கொண்டு
தங்கப்பெற்ற, திண் தோள் – வலிய தோள்களையுடைய, உதிட்டிரன் முதலியோர் –
தருமபுத்திரன் முதலானவர்கள், அ புரம் குடிபுகுந்து – அந்நகரத்தில்
புதிதாகச்சேர்ந்து, தங்கள் பொன் எயில் கோயில் எய்த – பொன்மயமான
மதில்சூழ்ந்த தங்கட்கு உரிய அரண்மனையை அடைய,- திரம் குடி புகுந்த சிற்பம்
கல்விவித்தகன் – உறுதிக்கு இடமான சிற்பத்தைப்பற்றிய சாஸ்திரத்தில்
தேர்ச்சியுடையவனான விசுவகருமன், கரம் குடி புகாமல் தன் நெஞ்சால் செய்த கடி
நகர் காட்டல் உற்றான்-கையினால் தொடுதலுமில்லாமல் தனது மனத்தில்
நினைத்தமாத்திரத்தினாற் செய்த புதிய அந்நகரத்தை (அவர்கட்குக்)
காட்டுபவனானான்;
பட்டணத்தின்வளத்தைக் காண விரும்பி அரண்மனையின் மேலேறியிருந்த
தருமனாதியர்க்கு விசுவகருமன் அந்நகரத்தினழகைக் காட்டலுற்றன னென்க.
திரங்குடிபுகுந்த கல்வி-நிலைபெற்ற கல்வியுமாம்.
இதுமுதல் இச்சருக்கம்முடியுமளவும்இருபதுகவிகள்-கீழ்ச்சருக்கத்தின்
முதற்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.
நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர்,
கோபுரத்து உம்பர், மஞ்ச கோடியில் நின்று, தங்கள்
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும், மாதர்
நூபுரத்து அரவ வீதி அகலமும், நோக்கினாரே.– பாண்டவர்கள் கோபுரத்தின்மேலிருந்து அந்நகர்ச்
சிறப்பைக்காணுதல்.
நா புரப்பதற்குஏ ஏற்ற-நாவைப் பாதுகாப்பதற்கே இயைந்ததான,
நவிர்அறு வாய்மை – குற்றமில்லாத சத்தியத்தையுடைய, வேந்தர் –
அந்தப்பாண்டவராசர்கள்,- கோபுரத்து உம்பர் மஞ்சம் கோடியில் நின்று-
கோபுரத்தின்மீதுள்ள மேனிலையின்முகப்பில் நின்றுகொண்டு,- தங்கள் மா புரத்து
உள்ள எல்லை வளம் மனை யாஉம் – தங்களுடைய பெரிய அந்நகரத்தின்
எல்லையிலுள்ள வளம்பொருந்திய மாளிகைகளெல்லாவற்றையும், மாதர் நூபுரத்து
அரவம் வீதி அகலம்உம் – (சஞ்சரிக்கிற) மகளிர்களுடைய சிலம் பென்னுங்
காலணியின் ஆரவாரத்தையுடைய வீதியின்பரப்பையும், நோக்கினார்-பார்த்தார்கள்;
(எ – று.)
விசுவகர்மன் காட்டப் பாண்டவர் நகரச்சிறப்பைக் கண்டனரென்க.
பொய்ம்மைநாவை அபரிசுத்தப்படுத்த, மெய்ம்மையே நாவைப் பழுது படாமல்
தூய்தாகவைத்தலால், ‘நாபுரப்பதற்கேயேற்ற வாய்மை’ என்றார். நிகழ்ந்ததுகூறலாகிய
அவ்வாய்மை தானும் பிறஉயிர்க்குத் தீங்குவிளையாமலிருந்தால்மாத்திரமே மெய்ம்மை
யென்று கொண்டாடப்படுதலால், ‘நவிரறு வாய்மை’ என்றார். எப்பொழுதும் மகளிர்
உல்லாசமாக உலாவும் வீதி யென்பது, ‘மாதர் நூபுரத்தரவவீதி என்றதன் கருத்து.
‘அரவின் வெஞ் சுடிகை கொண்ட அவிர் மணிச் சோதி மேன்மேல்
விரவி வந்து எறிப்ப, பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக,
இரவிதன் இரதம் பூண்ட எழு பெயர்ப் பவன வேகப்
புரவியை ஐயுற்றேகொல், புரி வலம் புரிவது?’ என்பார்.-இதுமுதல் எட்டுக்கவிகளில், அந்நகரச்சிறப்பைப் பாண்டவர் பலவாறு
வியந்துகூறுதலைத் தெரிவிக்கின்றார்.
இந்நகரத்து மாளிகைகளிற் பதித்துள்ள), அரவின் வெம்சுடிகை
கொண்ட அவிர் மணி-நாகங்களின் வெவ்விய உச்சிக் கொண்டையிற் பொருந்திய
விளங்குகின்ற மாணிக்கங்களின், சோதி-சிவந்த ஒளி, மேல் மேல் விரவி வந்து
எறிப்ப- மேலும் மேலும் மிகுதியாக அடர்ந்துவந்து வீசுதலால், பச்சை மெய்
சிவப்பு ஏறிற்றுஆக-(சூரியனுடைய தேர்க்குதிரையினது) இயற்கையிற் பசுநிறமான
உடம்புசெந்நிறம்மிக்கதாய்விட, இரவி – (அச்செந்நிறத்தைக்கண்ட) சூரியன், தன்
இரதம்பூண்ட எழு பெயர் பவனம் வேகம் புரவியை ஐயுற்றுஏகொல்-தனது தேரிற்
பூட்டப்பட்டுள்ள ஏழென்னும் பெயரையுடைய வாயுவேகம்பொருந்திய குதிரையைச்
சந்தேகித்ததனாலேதானோ, புரிவலம்புரிவது-(அவன்) இந்நகரத்தைப் பிரதட்சிணஞ்
செய்வது, என்பார்-என்று சொல்வார்கள்; (எ-று.)-இதற்கு எழுவாய்-கீழ்க்கவியில்
வந்த ‘வேந்தர்’ என்பதே; அடுத்த ஏழுகவிகளுக்கும் இங்ஙனமே காண்க.
மேருமலையை வலம்வருகிற சூரியனை இந்நகரத்தின் பரப்பையுணர்த்தும்
பொருட்டு இந்நகரை வலம்வருகிறவனாகக் கற்பித்து, அங்ஙனம் வலம்வருதற்குக்
காரணம் யாதெனின்,-அவன் இந்நகரத்தின் அருகில் வரும்பொழுது
அவனதுகுதிரையினுடம்பு இயற்கையான பசுமைநிறம்மாறிச்
செந்நிறம்பொருந்தியதனால் அதனை வேறொருகுதிரை யென்றுகருதித்
தன்குதிரையைத் தேடுதற்கு இந்நகரை வலம்வருகின்றனன்போலும் என்று
உத்பிரேக்ஷித்தவாறாம்; தற்குறிப்பேற்றவணி. எழு-ஏழு என்பதன்விகாரம்; இது
‘ஸப்த’ என்னும் வடசொல்லின் பரியாயநாமமாய் நின்றது. சூரியனது தேர்க்குதிரை
ஒன்றே அதற்கு ‘ஏழு’ என்றுபெயர் என்பர் ஒருசாரர்; மற்றொருசாரார்
‘அவ்வொருகுதிரைக்கு ஏழுபெயர்க ளுள்ளன’ என்பர்; அவ்விருவகையும்
‘எழுபெயர்ப்புரவி’ என்ற தொடரில் அமையும். இந்திரப்பிரத்தத்தின் சிறப்பை
விசுவகர்மா தருமனுக்குக் காட்டுவதாகவே 10 – ஸ்லோகங்கள் இங்குப்பாலபாரதத்து
உள்ளன: ஆங்குள்ள வருணனைகளும் இதிலுள்ள வருணனைகளும்
ஒப்புமைப்பட்டவை சிலவேயாகும். விரவிவந்தெறித்து எனவும் பாடம்
அருளுடை அறத்தின் வாழ்வாம் அந் நகர் இல்லம் எங்கும்
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி,
‘உருளுடை ஒற்றை நேமி உறு பரித் தேரோன் சீற,
தெருளுடைத் திமிரம் போன சில் நெறி போலும்!’ என்பார்.
அருள் உடை அறத்தின் வாழ்வு ஆம் – கருணையையுடையதான
தருமத்தின் வாழ்க்கை யமைந்த, அ நகர் – அந்த நகரத்திலுள்ள, இல்லம்
எங்குஉம்-மாளிகைகளிற் பலவிடத்துமுள்ள, இருள் உடை இந்த்ர நீலத்து இயன்ற
சாளரங்கள்-மிக்ககருநிறமுடைய இந்திரநீலரத்தினங்களாலமைந்த பலகணிகளை,
நோக்கி-பார்த்து,- ‘உருள் உடைஒற்றை நேமி உறுபரி தேரோன் சீற-
உருளுதலையுடைய ஒற்றைச்சக்கரமமைந்த குதிரை பூண்ட தேரையுடையவனான
சூரியன் உக்கிரங்கொண்டுஅழித்தலால், தெருள் உடை திமிரம் போன –
தடுமாற்றத்தையுடைய இருள் நுழைந்துஓடிச்சென்ற, சில் நெறி போலும் சிறுவழிகள்
போலும்,’ என்பார்-; (எ- று.)
இந்திரநீலரத்தினத்தினாலாகியதனால் நீலநிறமுடையனவாயிருக்கிற
சாளரங்களை,இரவிக்கு அஞ்சி இருள் இரிந்து சென்ற சிறுவழிக ளென்று குறித்தார்;
தற்குறிப்பேற்றவணி. ‘சின்னெறி’ என்பதில், சின்மை-சிறுமை.
சமர் முகப் பொறிகள் மிக்க தட மதில் குடுமிதோறும்
குமர் உறப் பிணித்த பைம் பொன் கொடித் துகில் அசைவு நோக்கி,
‘நமர் புரக் கிழத்தி, உம்பர் நாயகன் புரத்தினோடும்
அமர் பொரப் பற் பல் கையால் அழைப்பதுபோலும்!’ என்பார்.
சமர் முகம் பொறிகள்-போர்செய்தற்குஉரிய தோற்றத்தையுடைய
யந்திரங்கள், மிக்க-நிறைந்துள்ள, தட மதில் – பெரிய அந்நகரத்து மதிலின்,
குடுமிதோறும்உம்-சிகரங்களி லெங்கும், குமர் உற பிணித்த – அழிவின்மைபொருந்த
(உறுதியாக)க் கட்டப்பட்டுள்ள, பைம் பொன் கொடி துகில்-பசும்பொற்காம்பையுடைய
கொடிச்சீலைகளின், அசைவு-காற்றிலசையுந் தன்மையை, நோக்கி-பார்த்து,-நமர் புரம்
கிழத்தி- ‘நம்முடைய இந்நகரத்துக்கு உரிய தேவதை, உம்பர் நாயகன்
புரத்தினோடுஉம்அமர் பொர-தேவராசனான இந்திரனது அமராவதிநகரத்தோடு
போர்செய்ய(க்கருதி);பற் பல் கையால் அழைப்பது போலும்-(தனது) மிகப்பலவாகிய
கைகளினால்(அந்நகரத்தை) அழைப்பதையொக்கும்,’ என்பார்-என்றுசொல்லுவார்கள்;
(எ-று.)
துவசங்களின் சீலைகள் அசைதலை, அந்நகரம் தேவநகரத்தைத் தன்னுடன்
போர்செய்ய வரும்பொருட்டுக் குறிப்புக் காட்டித்தனது கைகள் பலவற்றாலும்
அழைப்பதுபோலு மெனக்குறித்தார்; இதுவும் தற்குறிப்பேற்றவணியே. எளியாரை
வலியார் போருக்கு வலிய அழைத்தலாகிய இயல்பின்படி, இந்நகரம் தேவநகரத்தைத்
தன்னுடன் வலியப் போருக்கு அழைக்கும்கொழுமை வாய்ந்த தென்பது போதரும்.
போருக்குஉரிய பலவகையந்திரங்களை மதிலில் அமைத்துவைத்தல் இயல்பு. குமர்-
அழியாமை, நகரதேவதை பெண்பாலாயிருத்தல்பற்றி ‘புரக்கிழத்தி’ என்றார்.
தசும்பு உறும் அகிலின் தூபம், சாறு அடு கரும்பின் தூபம்,
அசும்பு அறா மடையின் தூபம், அவி பெறும் அழலின் தூபம்,
விசும்புற நான்கு திக்கும் மிசை மிசை எழுதல் நோக்கி,
‘பசும் புயல் ஏழு அன்று; இன்னும் பல உளவாகும்’ என்பார்.
தசும்பு உறும் – குடங்களிலிட்டுப் புகைக்கின்ற, அகிலின்-
அகிற்கட்டைகளினின்று எழுந்த, தூபம்-புகையும், கரும்பின் சாறு அடு –
கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுதலினா லுண்டாகிற,தூபம்-புகையும், அசும்பு அறா-
கால்வழுக்குதல்நீங்காத, மடையின் ‘மடைப்பள்ளியினின்று எழுகிற, தூபம் –
சமையற்புகையும், அவிபெறும்-அவி சொரியப்படுகிற, அழலின்-
ஓமாக்கினியின்றுஎழுகிற, தூபம் – புகையும், (ஆகிய இவை), விசும்புஉற,-
ஆகாயத்தைஅளாவ, நான்கு திக்குஉம் – எல்லாப்பக்கங்களிலும், மிசை மிசை
எழுதல்-மேன்மேல்எழுதலை, நோக்கி – பார்த்து,- ‘பசும்புயல் ஏழ்அன்று-
கருநிறங்கொண்ட மேகங்கள்ஏழுமாத்திரமே யல்ல: இன்னும்பல உள ஆகும்-,’
என்பார்-என்று சொல்வார்கள்; (எ- று.)
அந்நகரத்திற்பலவிடங்களிலும் மிகுதியாயெழுகிறபலவகைப்புகைகளைப்
பார்த்துப் பற்பலமேகங்களென மாறுபடக்கருதிக் கூறியது-மயக்கவணி. புயல்ஏழ்-
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் எனப்படும், எப்பொழுதும் சமைத்தல்தொழில் நீங்காத தென்றற்கு,
‘அசும்பறாமடை’ என்றார். அசும்பு-வழுக்குநிலம். மடை – சமைத்தல். இது –
ஆகுபெயரலாய், சமையலிடத்தைக் குறித்தது. விரைவில் புகை
தணியாதிருத்தற்பொருட்டு, அகிலைக் குடத்திலிட்டுப் புகைப்பரென்க.
அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை,
மிடுக்கினால் அனிலன் எற்றி, விசையுடன் எடுத்து மோத,
உடுக்களும் நாளும் கோளும், உள்ளமும் உடலும் சேர
நடுக்கு உறுகின்ற, இந்த நகர் வழி போக’ என்பார்.
‘அடுக்கு உற-(ஒன்றன்மே லொன்று) அடுக்காகப் பொருந்த, நிலம்
செய் – நிலைகளை யமைத்துச் செய்யப்பட்ட, மாடத்து-மளிகைகளின்மேல்,
அணிஉறு-வரிசையாகப் பொருந்திய, பெரும் பதாகை-பெரியகொடிச்சீலைகளை,
அனிலன்-வாயுதேவன், மிடுக்கினால் எற்றி-(தன்) வலிமையால் வீசி, விசையுடன்
எடுத்து மோத -வேகத்தோடு உயர்த்தியடித்தலால்,-உடுக்கள் உம் நாள்உம்
கோள்உம்-மிகப்பலவாகிய தாரகைகளும் (அசுவினி முதலிய இருபத்தேழு)
நட்சத்திரங்களும் (சூரியன் முதலிய ஒன்பது) கிரகங்களும், இந்த நகர் வழி
போக-இந்த நகரத்தின்வழியே செல்லுதற்கு, உள்ளம்உம் உடல்உம் சேர நடுக்கு
உறுகின்ற-(அச்சத்தால்) மனமும் உடம்பும் ஒருசேர நடுக்கமடைகின்றனவாம்;
என்பார்-; (எ- று.)
இந்நகரத்தின் உபரிகைகளின் மீது நாட்டிய கொடிகளின் மிக்க உயர்வை
உணர்த்துதற்கு, ‘அக்கொடிகளின் சீலைகளைக் காற்று விசையோடு வலிய அடித்து
அசைத்தலால் அவை தம் மீது தாக்கி வருத்து மென்ற கருத்தால் சகலகிரகநட்சத்திர
தாரகைகளும் இந்நகரத்தின் மேலாகச்செல்லுதற்கு அஞ்சும்’ என்றார்:
உயர்வுநவிற்சியணி. நாள்-நாளையுணர்த்துகிற நட்சத்திரத்திற்கு ஆகுபெயர்.
கோள் -(காலத்தை அளந்து) கொள்வது: கிரகம்.
துதை அளி முரலும் வாசச் சோலையின் பொங்கர்தோறும்,
விதம் உற எழுந்து, காள மேகங்கள் படிதல் நோக்கி,
‘கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின்
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்மின்!’என்பார்.
துதை அளி முரலும் – நெருங்கிய வண்டுகள் ஒலிக்கின்ற, வாசம்
சோலையின்-நறுமணமுள்ள சோலைகளின், பொங்கர்தோறும்-மரக்கொம்புகளின்மே
லெல்லாம், விதம் உற எழுந்து காளமேகங்கள் படிதல்-பலபகுப்பாக எழுந்து
கருநிறமான மேகங்கள் படிந்திருத்தலை, நோக்கி- பார்த்து,- ‘(இது), கதிர் மணி
அகழி மா மேகலை உடை நகரம் மாதின் – ஒளியைக்கொண்ட
இரத்தினங்களையுடைய அகழியாகிய பெரிய மேகலாபரணத்தை யுடைய
இந்நகரமாகிய பெண்ணினது, புகை நறு மலர் மெல் கூந்தல் போலும்
ஆ(று)-அகிற்புகையூட்டிய நறுமணமுள்ள மலர்களைச் சூடிய மெல்லிய கூந்தலை
யொத்திருக்குந் தன்மையை, காண்மின் – காணுங்கள்,’ என்பார் – என்று (தம்மில்
ஒருவரை நோக்கி யொருவர்) சொல்வார்கள்;(எ- று.)
அந்நகரத்துச்சோலைகளின் மரங்கள்மீது படிகின்ற காளமேகங்களை,
அந்நகரமாகிய பெண்ணின் கரிய கூந்தல்மயிர்கள் போலுமென்றார்;
தற்குறிப்பேற்றவணி. அகழிக்கு இரத்தினம், கரைகளிற் பதிக்கப்பட்டவை.
மேகலை-எட்டுக்கோவையுள்ள இடையணி: இடையணியென்ற மாத்திரமாய்
நின்றது.
ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற, புடைகள்தோறும்
பூட்டிய சிகரி சாலப் புரிசையின் புதுமை நோக்கி,
‘கோட்டிய நகரி என்னும் குலக் கொடி மன்றல் எய்த,
சூட்டிய சூட்டுப் போலத் துலங்குமா காண்மின்!’ என்பார்.
ஈட்டிய – தொகுக்கப்பட்ட, மணிஉம்-இரத்தினங்களையும்,
பொன்உம்- பொன்னையும், எழில்பெற – அழகு உண்டாக, புடைகள் தோறுஉம்
பூட்டிய – பக்கங்களிலெல்லாம் அமைத்து வைக்கப்பெற்ற, சிகிரி- மேலுறுப்பு,
சால்-பொருந்திய, அ புரிசையின்-அந்த மதிலின், புதுமை- அதிசயத்தை,
நோக்கி-பார்த்து,- ‘(இது), கோட்டிய நகரி என்னும் குலம் கொடி –
அலங்கரிக்கப்பட்ட அந்நகமாகிய ஓர் உயர்குலமங்கை, மன்றல் எய்த-
விவாகமடைய, சூட்டிய-(கோலஞ்செய்வார் அம்மகளின்நெற்றியிற்) சூட்டிய,
சூட்டுபோல-சூட்டென்னும்நெற்றிமாலை போல, துலங்கும்-விளங்குகிற, ஆ(று) –
தன்மையை, காண்மின்-பாருங்கள்,’ என்பார்-என்று (தம்மிற்) சொல்லிக்
கொள்வார்கள்; (எ-று.)
அந்நகரத்துமதிலின் மேலுள்ளசிகரியென்னும்உறுப்பு, பொன்மயமாய்
இரத்தினங்கள் பதிக்கப்பெற்றுவிளங்குவதை, அந்நகரமாகியபெண் அரசனாகிய
தலைமகனை மணஞ்செய்துகொள்ளுஞ் சமயமாதலால், அதற்கு ஏற்ப, அம்மகளின்
நெற்றியின் மேற்பகுதியிற் கோலஞ்செய்வார் சூட்டிய நூதலணிமாலை
போலுமென்றார்;தற்குறிப்பேற்றவணி. யிகரீ-வடசொல்.
பணைஇனம் பலவும் ஆர்ப்ப, பைங் கொடி நிரைத்த செல்வத்
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும்,
புணை வனம் நெருங்க நீடி, பொழி புயல் கிழிக்கும் சாரல்
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும்!’ என்பார்.
பணை இனம் பலஉம் ஆர்ப்ப-வாத்தியவகைகள் பலவும் ஒலிக்க,
பைங் கொடி நிரைத்த – செழுமையான துவசங்கள் அணியணியாக நாட்டப்பெற்ற,
செல்வம் – செல்வவளத்தையுடைய, துணை-(வேறுஒப்புமையில்லாமையால்)
தமக்குத்தாமே நிகரான, மணி மாடம் – இரத்தினங்கள் பதித்த [அழகிய]
மாளிகைகள்,மன்னும் – (இருபாலும்) அமையப்பெற்ற, தோரணம் வீதி யாஉம்
தோரணங்களையுடைய வீதிகளெல்லாம்- புணை வனம்நெருங்கநீடி-மூங்கிற்காடுகள்
அடர்த்தியாகவளர்ந்து, பொழி புயல்கிழிக்கும்-மழை பொழிகிற மேகங்களைக்
கிழிக்கின்ற, சாரல் – சாரலையுடைய, இணைவரை – இரண்டுமலைகளின், நடுவண் –
நடுவிலே, போதும்-பாய்ந்து வருகிற, யாறுபோல் – நதிபோல, இலங்கும்-விளங்கும்.
என்பார்-;
இருமருங்குமுள்ள ஓங்கியமாளிகைகளுக்கு -இரண்டுமலைகளையும்,
அம்மாளிகைவரிசையின் நடுவிலுள்ள வீதிக்கு -அம்மலைகளின் இடையே
வருகிற நதியையும் ஒப்புமை குறித்தார்; தற்குறிப்பேற்றவணி. மாடங்களின்
மீதுள்ள கொடிவரிசைகளுக்கு ஏற்ப மலைக்குமூங்கிற்காடு கூறினார்.
‘பணையினம் பலவுமார்ப்ப’ என்றது – செல்வ வளத்தைவிளக்கும். மூன்றாம்
அடி – அதிசயோக்தி.
கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டு கண்டு உவகை கூர,
எண் உறு கிளைஞரோடும், யாதவ குமரரோடும்,
பண் உறு வேத வாழ்நர் பலரொடும், வைகி, ஆங்கண்,
விண் உறு தபதிக்கு அம்ம, விடை கொடுத்தருளினானே.-தருமன் விசுவகருமனுக்கு விடையளித்தல்.
கண்உறு பொருள்கள்யாஉம் – எதிர்ப்படுகிறபொருள்களையெல்லாம்,
கண்டு கண்டு – பார்த்துப்பார்த்து, உவகை கூர-மகிழ்ச்சிமிக,
எண்உறுகிளைஞரோடுஉம் – பெருமைபொருந்திய (தன்) சுற்றத்தாருடனும், யாதவ
குமரரோடுஉம் – (கண்ணபிரானுடன் வந்த) யதுகுலகுமாரர்களுடனும், பண் உறு
வேதம் வாழ்நர் பலரொடுஉம் – ஸ்வரமமைந்த வேதங்களுக்கு உரியராய்
வாழ்கின்றபல அந்தணர்களுடனும், ஆங்கண் வைகி – அந்நகரினிடத்திற்சேர்ந்து
தங்கி,(பின்பு), விண் உறு தபதிக்கு விடை கொடுத்தருளினான் – தேவலோகத்திற்
பொருந்திய சிற்பியான விசுவகருமனுக்கு அருளோடு அனுமதிதந்து அவனை
அனுப்பினான்; (எ-று.)-இங்குச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தருமனென்ற எழுவாய்
வருவிக்க. அம்ம – உரையசை.
கேசவன் முதலா உள்ள கிளைஞரும், கேண்மை தப்பா
வாசவன் முதலினோரும், மன்னு தம் பதிகள் புக்கார்;
ஓச வன் திகிரி ஓச்சி, உதய பானுவுக்கும் மேலாம்
தேசவன்தானும், வையம் திசை முறை திருத்தி ஆண்டான்.-கண்ணன்முதலியோர் செல்லுதலும், தருமனது
அரசாட்சியும்.
கேசவன் முதல் ஆ (க) உள்ள – திருமாலின் திருவவதாரமான
கண்ணபிரான் முதலாகவுள்ள, கிளைஞர்உம் – சுற்றத்தார்களும், கேண்மை தப்பா
வாசவன் முதலினோர்உம் – உறவுமுறைமைக்குஉரிய உதவியில் தவறுதலில்லாத
இந்திரன் முதலானவர்களும், மன்னு தம் பதிகள் புக்கார் – நிலைபெற்ற தம் தமது
நகரங்களுக்குச் சென்றார்கள்; உதயபானுவுக்குஉம் மேல் ஆம் தேசவன்தான்உம்-
உதித்துவிளங்குகிற சூரியனினும் மேலான ஒளியையுடையவனாகிய தருமனும்.
ஓசம்வல்திகிரி ஓச்சி – ஒளியையும் வல்லமையையுமுடைய (தனது)
ஆஜ்ஞாசக்கரத்தைச் செலுத்தி, வையம்-பூமியை, திசை முறை திருததி ஆண்டான்
-எங்கும் நீதி முறைமை ஒழுங்காக நடக்கச்செய்து அரசாண்டான்; ( எ- று.)
தன்மகனான அருச்சுனனுக்கும், அவனது உடன்பிறந்தவர்களான தருமன்
முதலியோர்க்கும் உதவுமாறு. இந்திரன் நகரமமைப்பித்தமைபற்றி, ‘கேண்மைதப்பா
வாசவன்’ என்றார். கேஸவ னென்ற வடமொழி – பிரமனையும் சிவனையும் தன்
அங்கத்திற்கொண்டவ னென்றும் (க-பிரமன், ஈசன்-சிவன்) மயிரழகையுடையவ
னென்றும் (கேசம்-மயிர்), கேசியென்னும் அசுரனைக்கொன்றவனென்றும் [கேசி-
கண்ணனைக்கொல்லும்படிகம்சனால்ஏவப்பட்டுக் குதிரைவடிவத்தோடுவந்த ஓர்
அசுரன்) பொருள்படும். ஓசம், தேசு=ஓஜஸ், தேஜஸ் என்ற வடசொற்களின்
விகாரம்.கேசவன் பதி-துவாரகை. வாசவன்பதி-அமராவதி
யாய் மொழி தலைமேல் கொண்டும், இளையவர் மொழிகள் கேட்டும்,
வேய் மொழி வேய்த் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும்,
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில்,
ஆய் மொழிப் பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான்.-ஒருநாள் நாரதமாமுனிவன் அங்குஎழுந்தருளல்.
வாய்மொழி அறத்தின்மைந்தன் – உண்மைச்சொற்களையுடைய
தருமபுத்திரன் யாய்மொழி தலைமேல்கொண்டுஉம் – தாயாகிய
குந்தியினதுவார்த்தையைச்சிரமேற்கொண்டுநன்குமதித்தும், இளையவர் மொழிகள்
கேட்டுஉம் – [வீமன்முதலிய] தம்பியர்களுடைய வார்த்தையைக் கேட்டு
அவற்றின்படிநடந்தும், வேய் மொழி-அழகிய சொல்லையும், வேய்தோள்-
மூங்கில்போன்றதோள்களையுமுடைய வல்லி-பூங்கொடிபோன்ற திரௌபதியினது,
மெல்மொழி-மென்மையான சொற்களை, விரும்பல் உற்றுஉம்-விருப்பத்தோடு
கேட்டும், மா நகர்வாழும் நாளில்-பெரிய அந்நகரத்தில்வாழ்கின்ற நாட்களில்,
(ஒருநாள்),-ஆய்மொழிபாடல் – ஆராய்ந்த (சிறந்த) சொற்களையுடைய
இசைப்பாட்டைக்கொண்ட, யாழ்-மகதீயென்ற வீணையையுடைய, ஓர்
அந்தணன் – ஒருமுனிவன் [நாரதன்], ஆங்கண்வந்தான் – அவ்விடத்தில்
வந்தனன்; (எ-று.)
இம்முனிவன் நாரதனாவன். வேய்மொழி-வினைத்தொகை: வேய்தல் –
அழகுசெய்தல்; இனி, கரும்புபோல் இனியமொழியெனின், வேய்என்றசொல்-
கழையென்றதன்பரியாயமாய்க்கரும்பைக் குறித்த தென்க. ‘பாடலோடோரந்தணன்’
எனவும் பாடம்.
இந்த நாரதனைப் போற்றி, இரு பதம் விளக்கி, வாசச்
சந்தனாகருவின் தூபம் தவழ் மணித் தவிசின் ஏற்றி,
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி,
அந்த நால்வரும் அவ் வேந்தும், ஆதி வாசவர்கள் ஆனார்.- பாண்டவர் நாரதனை உபசரித்தல்.
இந்த நாரதனை போற்றி-இங்ஙனம்வந்த நாரத முனிவனை
நமஸ்கரித்து,இருபதம்விளக்கி-(அவனுடைய) இரண்டு திருவடிகளையும்
தீர்த்தங்கொண்டு) கழவி,வாசம் சந்தனம் அகரு இன்தூபம் தவழ் மணி தவிசின்
ஏற்றி-பரிமளத்தையுடையசந்தனக்கட்டையும் அகிற்கட்டையும் ஆகியஇவற்றின்
இனியபுகை யூட்டப்பெற்ற இரத்தினம்பதித்த சிங்காசனத்தில் (அவனை)
எழுந்தருள்வித்து,வந்தனாவிதியில் சற்றுஉம் வழு அற வழிபாடுஎய்தி – வழி
பாட்டுக்கு உரியவிதிமுறைமையிற் சிறிதும் தவறுதலில்லாதபடி உபசரித்தலைச்
செய்து, அந்தநால்வர்உம் அவேந்துஉம்-(வீமன் முதலிய)அந்தத்தம்பிமார்
நால்வரும்அந்தத்தருமராசனும், ஆதி வாசவர்கள் ஆனார் – (தங்கள்)
பூர்வசன்மமாகிய பழையஇந்திரர்களையே போன்றார்கள்;(எ-று.)
தேவவிருடியாகிய நாரதன் தன்பக்கல் எழுந்தருள அவனுக்கு மகிழ்ச்சியோடு
விசேஷஉபசாரங்களைச் செய்து மேன்மைபெறுதல் இந்திரனுக்கு இய்லபாதலால்,
இங்ஙனம் கூறினார். சந்தநாகரு, வந்தநாவிதி, ஆதிவாவர் –
வடமொழித்தொடர்கள்
வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப,
சரிகமபதநிப் பாடல் தண்டு தைவரு செங் கையோன்,
இரு செவி படைவீடு ஆக, எம்பிரான் அளிக்கப் பெற்ற
பெரு முனி, அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புறப் பேசுவானே:-நாரதன் அவர்கட்கு ஒருகதை கூறத்தொடங்கல்.
இங்ஙனம் வணங்கிவழிபட்ட பாண்டவர்களுடனே), வரம்
மிகுகற்பினாள்உம் – மேன்மைமிக்கபதிவிரதா தருமத்தையுடையவளான
திரௌபதியும்,மாமிஉம் – (இவளுக்கு) மாமியாரான குந்திதேவியும்,
வணங்கிநிற்ப -(அம்முனிவனை) நமஸ்கரித்துநிற்க,- சரிகமபதநி பாடல் தண்டு
தைவரு செம்கையோன் – சரிகமபதநி என்னும் ஏழுசுரங்களையும்
அமைத்துப்பாடுதற்கு உரியவீணாதண்டத்தைத் தடவி இயக்குகின்ற சிவந்த
கைகளை யுடையவனும். எம்பிரான்இரு செவி படை வீடு ஆக அளிக்கப்பெற்ற
பெருமுனி – நமக்கெல்லாந்தலைவனான திருமால் (தமது) இரண்டு
திருச்செவிகளையும் (தனது) இசைப்பாட்டிற்குத் தங்குமிடமாகக்கொடுக்கப்பெற்ற
பெருமையுடைய முனிவனுமானநாரதன், அவர்க்கு ஓர் காதை பெட்புஉற
பேசுவான் – அவர்கட்கு ஒருகதையைவிருப்பமிகக் கூறுபவனானான்; (எ-று.)-
அதனை, மேலிரண்டுகவிகளிற் காண்க. ‘ஓர்வார்த்தை’ என்றும் பாடம்.
ஸரிகமபதநி என்பன-ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம்,
தைவதம், நிஷாதம் என்ற ஏழுசுரங்களுக்கும் முறையே உரிய அக்ஷரங்களாம்.
தண்டு- தண்டமென்ற வடசொல்லின் விகாரம். படைவீடு – சேனை தங்குமிடம்;
இங்கு,தங்குமிடமென்ற மாத்திரமாய் நின்றது. ‘எம்பிரான்’ – சிவபிரானெனினுமாம்
முராரியை, முராரி நாபி முளரி வாழ் முனியை, முக் கண்
புராரியை, நோக்கி, முன் நாள், புரி பெருந் தவத்தின் மிக்கார்
சுராரிகள்தம்மில் சுந்தோபசுந்தர் என்று இருவர், தங்கள்
திராரி ஏவலினால் வந்த திலோத்தமைதன்னைக் கண்டார்.-இதுவும் அடுத்த கவியும் – சுந்தோபசுந்தர் வரலாறு.
முராரியை – திருமாலையும், முராரி நாபி முளரி வாழ்முனியை –
அத்திருமாலின் திருநாபித்தாமரைமலரில் வாழ்கிற பிரமனையும், முக்கண்
புராரியை -மூன்றுகண்களையுடையவனான சிவபிரானையும், நோக்கி – குறித்து,
முன் நாள் -முற்காலத்தில் [இளமையில்], புரி-செய்த, பெரு தவத்தில் – பெரிய
தவத்தில், மிக்கார்-சிறந்தவர்களான, சுராரிகள் தம்மில் சுந்தஉபசுந்தர் என்ற
இருவர் – அசுரர்களுள்சுந்தனும் உபசுந்தனு மென்றஇரண்டுபேர்,- தங்கள் திர
அரி ஏவலினால்வந்ததிலோத்தமைதன்னை கண்டார் – தங்களுக்குவழிப்பகையாகிய
இந்திரனதுகட்டளையினால் (தங்களெதிரில்) வந்த திலோத்தமை யென்பாளை
(ஒருசமயத்தில்)பார்த்தார்கள்; (எ-று.)
முராரி, புராரி, ஸு ராரி, ஸ்திராரி – தீர்க்கசந்திபெற்ற வட சொற்கள்.
சுந்தோபசுந்தர் – குணசந்திபெற்ற வடமொழித் தொடர்; பன்மைவிகுதிபெற்ற
உயர்திணையும்மைத்தொகை. என்றிருவர் – விகாரம். திலோத்தமை=திலோத்தமா;
உலகத்தில் அழகுடைமங்கையரது உடம்பிற் சிறந்த அழகை எள்ளளவு எள்ளளவாக
எடுத்துத் திரட்டி அதுகொண்டு அமைக்கப்பட்ட பெண்: திலம்-எள், உத்தமா-
மேலானவள்.
காண்டலும், அவள்மேல் வைத்த காதலால் உழந்து, நெஞ்சில்
ஈண்டிய துயரத்தோடும் இருவரும் நயந்த போழ்து, அப்
பூண் தகு பொலிவினாள்தன்பொருட்டு அமர் தம்மில் பூண்டு
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே?
இருவர்உம் – அந்த இரண்டு அசுரர்களும், காண்டலும் -(அவளைக்)
கண்டவுடனே, அவள்மேல் வைத்த காதலால் – அவளிடத்திற் கொண்ட
ஆசையினால், உழந்து – வருந்தி, நெஞ்சில் ஈண்டிய துயரத்தோடுஉம் -மனத்தில்
மிகுந்த காமவேதனையுடனே, நயந்த போழ்து-(ஒருங்கு அவளை)
விரும்பிவரித்தபொழுது, அபூண்தகு பொலிவினாள்தன் பொருட்டு-ஆபரணங்கள்
(தன்னால் அணியப்படுதலால்) பெருமையடைதற்குக் காரணமான
மேனியழகையுடையஅவள்பொருட்டு, தம்மில் அமர் பூண்டு – தமக்குள் போர்
புரிந்து, மாண்டனர் -இறந்தார்கள், என்னும் – என்கிற, வார்த்தை – வரலாற்றை,
மா நிலம் அறியும்அன்றே – பெரிய உலகத்திலுள்ளார் அறிவார்களன்றோ?
(எ-று.) ‘காதலாலழிந்து’ என்றும்பாடம்.
இவ்விரண்டுகவிகளிற் குறித்த கதையின் விவரம்:-இரணியகசிபு என்ற
அசுரராசனது குலத்தில் நிகும்பனென்றவனது புத்திரகளாய்த் தோன்றிய சுந்தன்
உபசுந்தன் என்ற இருவரும் தம்மில் மிக்கமனவொற்றுமையுடையராய்
எப்பொழுதும்ஒருவரையொருவர் விட்டுப்பிரியாராய்த் தமது சுகதுக்கங்களைச்
சமமாகப்பாவித்துவந்தனர். அவர்கள் இளமையில் மூவுலகத்தையும் வெல்லக்கருதி
விந்திய மலையைச்சேர்ந்து திரிமூர்த்திகளைக்குறித்து நெடுங்காலம் அரிய
பெரியதவத்தைச் செய்கையில்,அத்தவத்தின் கடுமையைக் கண்டு அஞ்சிய
தேவர்கள் மாயையினால் பல மகளிரையேவி அவர்களுடைய தவத்துக்குப்
பலவாறு பங்கஞ்செய்ய முயன்றும்முடியவில்லை. பின்பு பிரதியக்ஷமான
திருமூர்த்திகள் அச்சுந்தோபசுந்தர்வேண்டியபடியெல்லாம் அவர்கட்கு
வரங்களைக் கொடுத்து வருகையில்,அவ்வசுரர்கள் ‘நாங்கள்
எவராலும்கொல்லப்படாதவராகவேண்டும்’ என்று வரம்வேண்டினர். அதற்கு
ஆதிதேவர்கள், ‘உங்களிருவர்க்கும் பிறவுயிர்களெவற்றாலும்மரணமில்லை’
என்று வரமளித்தார்கள். பின்பு அவ்விருவரும் மிகச் செருக்கி
மூவுலகையும் வெல்லத்தொடங்கி இந்திராதி தேவர்களுக்கும், பற்பல
முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும், மற்றும் பலர்க்கும் மிக்கதுன்பத்தை
விளைத்துஅநேகம் பிராணிகளை அழித்து வந்தனர். பிறகு தேவர்களும்
முனிவர்களும்பிரமனைச் சரணமடைந்து செய்திகூற, அக்கடவுள் விசுவகர்மாவைக்
கொண்டுதிலோத்தமையை யுண்டாக்கி அவளைச் சுந்தோபசுந்தர் இருக்கிற
இடத்திற்குஅனுப்பினான். விந்தியமலையின் தாழ்வரையில் அவ்விருவரும்
உல்லாசமாகவீற்றிருக்கையில் அம்மங்கையைக் கண்டு அவளழகை வியந்து
ஒருங்கு காமுற்றுஅருகிற் சென்று அவளுடைய வலக்கையைச் சுந்தனும், இடக்கையை
உபசுந்தனுமாகப் பிடித்துக்கொண்டார்கள். இயல்பில் மிக்ககொழுப்புடைய
அவ்விருவரும் காமக்களிப்புற்றுத் தம்மில்மாறுபட்டு அண்ணன் தம்பியைநோக்கி
‘தமையனாகிய’ என்னாற் காதலிக்கப் பட்ட இவள் உனக்குத் தாய்முறையன்றோ?
இவளை நீ விரும்புதல் தகுதியோ? என்ன, அதற்கு ஏற்பத் தம்பி தமையனை
நோக்கி ‘தம்பியாகிய என்னாற் காதலிக்கப்பட்ட இவள் உனக்கு மருமகள்
முறையன்றோ? இவளை நீ வீரும்பாலாமோ?’ என்று கூறிக் கோபங் கொண்டு
தம்கையிலுள்ள கதாயுதத்தால் ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டு போர்செய்து
இருவரும் ஒருங்கே ஒருவரால் ஒருவர் அழிந்தனர் எனக் காண்க.
இவ்வரலாற்றைநாரதமுனிவன் இங்குப் பாண்டவர்க்கு எடுத்துக்கூறினது,
திரௌபதியொருத்தினிடம் காதல்கொள்ளுகிற பாண்டவரைவரும் ஒருவர்க்கொருவர்
எக்காலத்தும் மனவொற்றுமை கெடாதிருக்கும்படி ஒருநியமத்தைச்
செய்துகொள்ளவாகும்.
‘நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும், மன்றல்
ஓவியம் அனையாள்தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக
மேவினிர் புரியும்; அங்ஙன் மேவும் நாள், ஏனையோர் இக்
காவி அம் கண்ணினாளைக் கண்ணுறல் கடன்அது அன்றே.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: நாரதன் திரௌபதி
சம்பந்தமாகப் பாண்டவர்க்குக் கூறிய ஒருநியமம்.
நீவிர்-நீங்கள்ஐவிரும், உம் விதியால்-உங்கள் முற்பிறப்பின் வினையால்,
வேட்ட-(ஒருங்கு) விவாகஞ்செய்துகொண்ட, நேயம்-காதல், உண்டு ஏன்உம் –
(திரௌபதியொருத்தியினிடத்தே) உள்ளதானாலும், ஓவியம் அனையாள்
தன்னை-சித்திரத்திலெழுதிய பாவைபோல மிக்க அழகையுடையளான
அத்திரௌபதியை, ஓர் ஓர் ஆண்டு ஒருவர் ஆக மேவினிர் மன்றல் புரியும்.
ஒவ்வொரு வருடத்துக்கு (உங்களில்) ஒவ்வொருவராக விரும்பிக் கூடி வாழுங்கள்:
அங்கன் மேவும் நாள்-அவ்வாறு (ஒருத்தரோடு) சேர்ந்திருக்கும்போழுது,
ஏனையோர்-மற்றைநால்வரும், இ காவி அம் கண்ணினாளை கண்ணுறல் –
கருங்குவளைமலர்போன்ற அழகிய கண்களையுடைய இவளைக் காணுதல், கடனது
அன்று-முறைமை யுடையதன்று; (எ-று.)
எண் உறக் காணில், ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி,
புண்ணியப் புனல்கள் ஆடப் போவதே, உறுதி’ என்று,
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி, மீண்டு,
பண்ணுடைக் கீத நாத பண்டிதன் விசும்பில் போனான்.
எண் உற மனம் பொருந்த, காணில்-(அப்பொழுது இவளைக்)
கண்டால், (கண்டவர்), ஓர் ஆறுஇருதுஉம் – ஆறுஇருது (ஒரு வருஷம்) அளவும்,
வேடம் மாறி-வடிவம் மாறி, புண்ணியம் புனல்கள் ஆடபோவதுஏ –
(அத்தோஷத்துக்குப் பரிகாரமாகப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடச் செல்லுதலே,
உறுதி – நன்மையைத்தருவது, என்று-,வண்ணம் வில் திறலினார்க்கு வாய்மலர்ந்து
அருளி-அழகிய வில்லின் வலிமையையுடைய அப்பாண்டவரகட்குச் சொல்லியருளி,
மீண்டு-பின்பு, பண் உடை கீதம் நாத பண்டி தன் – சுரங்களையுடைய
பாட்டினிசையில் வல்லவனான நாரத முனிவன், விசும்பின் போனான்-ஆகாய
மார்க்கமாகச் சென்றான்; (எ-று.)
ருது – வடசொல்; இரண்டு மாதங் கொண்ட பொழுது. அது-ஆறாகும்;
அவற்றிற்கு முறையே, சித்திரை முதல் இவ்விரண்டு மாதங்கொள்க. அவை முறையே
இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி எனப்படும்.
சொன்ன நாள் தொடங்கி, ஐந்து சூரரும், தேவர் நாளுக்கு
இன்ன நாள் அவதி என்றே எண்ணி, ஆங்கு, இரதி கேள்வன்
அன்ன நாள் மலர்ப் பைந் தாமத்து அறன் மகன் ஆதி ஆக,
மின்னனாள்தன்னை வேட்ட முறையினால் மேவினாரே.-அங்ஙனம் முறைப்படி ஐவரும் மனைவியும் வாழ்தல்.
சொன்ன நாள் தொடங்கி – (இந்த நாரத மாமுனிவன்) சொன்ன தினம்
முதலாக, ஐந்து சூரர்உம்-(அந்த) ஐந்துவீரர்களும், தேவர்களுக்குஒருநாளாகிய
மானுடவருஷம்ஒன்றுக்கு இன்னநாள் எல்லை யென்று அறிந்து, அங்கு –
அவ்விடத்தில் (இந்திரப்பிரத்தத்தில்), இரதிகேள்வன் அன்ன நாள் மலர் பைந்
தாமத்து அறன் மகன் ஆதி ஆக – ரதீ தேவிக்குக் கணவனான மன்மதன் போன்ற
(மிக்கஅழகையும்) அன்றுமலர்ந்த (புதிய) மலர்களாலாகிய பசிய மாலையையு முடைய
தருமபுத்திரன் முதலாக, மின் அனாள்தன்னை வேட்ட முறையினால் மேவினார்
-மின்னல்போன்ற திரௌபதியை (த் தாம்) விவாகஞ்செய்த முறைப்படியே
கூடிவாழ்ந்தார்கள்.
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply